Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16818 articles
Browse latest View live

கோதானம்

$
0
0

1

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

கோதானம் நாவல் படித்து முடித்தவுடன் இம்மின்னஞ்சலை தங்களுக்கு எழுதுகிறேன்.

இந்த நாவல் காட்டும் இந்திய கிராமத்தின் சித்திரம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. அடுத்தவேளை உணவு பற்றி மட்டுமே சிந்தனை செய்து செய்து வாழ் நாளை கடத்துவது எத்தனை கொடுமையானது. எத்தனை கோடி ஹோரிராம்கள் இம்மண்ணில் இருக்கிறார்கள். இந்த கொடுமையான சூழலிலும் ஹோரி தனக்கென சில கடமைகளை மனதில் நிறுத்தி நெஞ்சில் அபரிமிதமான வலிமையோடு தன் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறான். குடும்ப வாழ்க்கை அளிக்கும் மனவலிமை எத்தனை அசாதரணமானது.

ஆங்கிலேயரின் கொடுமையான வரிவிதிப்பு நம் கிராமங்களை எப்படி வெறித்தனமாக உறிஞ்சி இருக்கின்றன. பெரிய பஞ்சங்கள் தவிர்த்து வெயில் காலங்களில் வெறும் கிழங்கிற்கும் பிடி அரிசிக்கும் எத்தனை போராட்டம் நடந்திருக்கிறது. அதே வேளையில் இப்போது இந்தியாவில் வீணடிக்கப்படும் அல்லது வெறித்தனமாக உண்ணப்படும் (நான் உட்பட) உணவறைகள் ஒரு வித குற்ற உணர்வை ஏற்படுத்துகின்றது

3

ஹோரி முழுமையாக தன்னை சமூகத்திற்கு ஒப்படைத்தவன். சமூகம் கிழித்த கோட்டை தாண்டாதவன் .தனியா கலகக் குரல். தன்னால் முடிந்த வரை வெற்று பெருமையும் அநியாயத்தையும் எதிர்த்து தன் குடும்பத்தை நடத்த முயல்கிறாள். கோபர் நிலவுடமை சமூகத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு இந்தியா வைத்த முதல் அடி. இன்று வரையில் முற்று பெறாத ஒரு முயற்சி. போகிற போக்கில் இது சரியான நகர்வு தானா என்ற கேள்வியும எழுகிறது. தன்னிறைவு கிராமங்கள் பெற்று காந்திய பாதைக்கு திரும்ப இயலுமா என்ற ஆசையும்.

மேஹ்தா மாலதி ஆண் பெண் விவாதங்கள், ஒரு ஆணோ பெண்ணோ தன் கடமையை, தன்னை உணர வேண்டிய அவசியத்தை , பிரசார அல்லது புத்திமதி கூறும் தொனி இல்லாது யதார்த்தமாக, அவற்றைப் பற்றி பேசுகின்றன .ராய் சாஹாபின் குற்ற உணர்ச்சிக்கும் இந்த நாவலில் இடம் இருக்கிறது அதுவே இந்த நாவலை முழுமையடைய செய்கிறது. மிர்சா சாகிப் ஒரு zorba. ஒரு கனவின் இடம் இவருக்கு.

koodhanam-1-600x600

என்னை மிகவும் நெகிழ வைத்த கட்டங்கள், மேஹ்தாவிடம் மலைப் பெண் காட்டும் அன்பு, தனியா,ஹோரி ஜுனியாவை ஏற்கும் தருணங்கள், சுஹியாவின் முலை சுரக்கும் தருணங்கள். இந்த மண்ணில் என்றும் இருக்கும் தாய்மையே நம்மை வாழ வைக்கும், புற பொருளாதார விஷயங்கள் ஓரளவே மனிதனை நெருக்கும். ஆனால் அவன் அதையும் மீறி ஒளிர்வான். இந்த நாவல் என்னுள் ஏற்படுத்தும் நம்பிக்கையை என்றும் தக்க வைக்க முயல்வேன்.

தங்கள் கட்டுரை மூலமே இந்த நாவல் அறிமுகம் ஆனது. சரஸ்வதி ராம்நாத் மிகுந்த அர்ப்பணிப்புடன் மொழிபெயர்த்திருக்கிறார்.

அன்புடன்,
மணிகண்டன்

முன்ஷி பிரேம்சந்த்

காலத்தைவென்ற கதைகள்

தொடர்புடைய பதிவுகள்


தேவதச்சன்,விஷ்ணுபுரம் விருது- நவீனப்படிமம் என்பது…

$
0
0

1

ஜெ

தேவதச்சனின் இந்தக்கவிதை என்னை ஒருவகை சோர்வுக்கும் பின்பு ஒரு நிம்மதிக்கும் தள்ளியது.

இந்த நீலநிற பலூன்

இந்த நீலநிற பலூன் மலரினும்

மெலிதாக இருக்கிறது. எனினும்

யாராவது பூமியை விட கனமானது

எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன்.

நீங்களாவது கூறுங்களேன், இந்த

நாற்பது வயதில் ஒரு பலூனை

எப்படி கையில் வைத்திருப்பது என்று…

பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது

காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது

பலூன்கள் கொஞ்சநேரமே இருக்கின்றன.

எனினும் சிறுவர்கள் கொஞ்சத்தை ரொம்ப நேரம்

பார்த்து விடுகிறார்கள்.

அருகிலிருக்கும் குழந்தையின் பலூன் ஒன்று

என்னை உரசியபடி வருகிறது. நான்

கொஞ்சம் கொஞ்சமாக பலூன் ஆகிக் கொண்டிருக்கிறேன்.

*

இந்தக்கவிதையை நான் என் சொந்த அனுபவத்திலிருந்தே பார்க்கிறேன். நீண்டநாட்களுக்குப்பின்னர் சென்னை கடற்கரைக்குப்போயிருந்தேன். என்னால் சிரிக்கவும் குதூகலமாக இருக்கவும் முடியவில்லை. உண்மையிலேயே அங்கே பலூன்களைப்பார்த்தேன். அவை போல பறக்கமுடியாமல் என்னை கட்டி வைத்திருப்பது எது என்று நினைத்தேன். என்னுடைய அதுவரைக்குமான வாழ்க்கையின் சுமைகள், அவற்றைப்பற்றிய ஞாபகங்கள்தான்

நான் ஒருசில பலூன்களை வாங்கி கையில் வைத்திருந்தேன். சில பலூன்களை பறக்கவிட்டேன். கொஞ்சநேரம் கழித்து நான் சிரிப்பதை நானே உணர்ந்தேன். பலூனின் எடையில்லாத இயல்ல்பு அவ்வளவு சந்தோஷத்தை தந்தது. நானே சின்னப்பெண்ணாக ஆகிவிட்டதைப்போல இருந்தது.

அதே அனுபவத்தை ஒருவர் கவிதையாக எழுதியிருப்பதைப்பார்க்கையில் சந்தோஷமாக இருந்தது. நினைத்து நினைத்து மகிழ்ந்துகொண்டிருந்தேன். கவிதை இந்தமாதிரி எழுதப்படும்போதுதான் அது நமக்கு நெருக்கமாக ஆகிறது

எஸ்.கலையரசி

அன்புள்ள கலையரசி,

அன்றாட வாழ்க்கையில் இருந்து எடுக்கப்படும் காட்சிகளை படிமமாக ஆக்குவதன் பெயரே நவீன கவிதை.

இக்கவிதை எனக்கு ஒரு இந்திக்கவிதையை நினைவுறுத்தியது. கவிஞர் நினைவில்லை. தோராயமாக என் வரிகளில் சொல்கிறேன்

*

பலூன்கள்

மென்மையானவை
எடையற்றவை
கைநீட்டி வானை நோக்கி எழுபவை
கடற்கரை முழுக்க
அவை பறந்தலைகின்றன
சிரித்து
கூச்சலிட்டு
இதோ
கடற்காற்றில் நடுங்க
கட்டிவைத்து
குறிபார்த்துச் சுட்டுக்கொண்டிருக்கிறார்கள்
நானும் சுட்டேன்
மென்மையான
எடையற்ற
வானத்தில் எழக்கூடிய
பறந்தலையக்கூடிய
நான்கை
பின்பு
மௌனமாக
எடைமிகுந்து
வீடுதிரும்பினேன்

*

ஒரு கவிதையில் இருந்து நினைவு வழியாக இன்னொரு கவிதை நோக்கிச் செல்வது மிகச்சிறந்த வாசிப்பனுபவம். இரு கவிதைகளையுமே தெளிவாக்கிவிடும் அது.

ஜெ

================================================================================================

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

======================================================================================

தேவதேவன் உருவாக்கும் பேருணர்வு

தேவதச்சன் சில கவிதைகள் அழியாச்சுடர்களில்

தேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

தொடர்புடைய பதிவுகள்

கல்புர்கி கொலை- கடிதம்

$
0
0

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

வழக்கமாக வெகு நிதானித்தே சரியான கருத்தை சொல்லும் நீங்கள் இந்த விசயத்தில் அவசரப்பட்டு விட்டீர்களோ என நினைக்கிறேன். எல்லாவகையிலும் இது ஓர் அரசியல்படுகொலை என்ற முடிவிற்கு அதற்குள் எப்படி வந்து விட்டீர்கள்?.”ஆனானப்பட்ட ” தி ஹிந்து நாளிதழே
( ஏனெனில் ‘ஹிந்துத்துவா கும்பல்’ இதில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்பதே அவர்களுக்கு மிகவும் உவப்பான செய்தி) இந்த கொலைக்கு சொத்து தகராறும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று செய்தி வெளியிட்டு இருக்கும்பொழுது நீங்கள் ஏன் இப்படி ஒரு முன் முடிவுக்கு வந்தீர்கள்?.
The police said that preliminary investigations had revealed that Kalburgi had intervened in a property dispute within the close family circle
மேலும் அரசு அளித்துள்ள போலீஸ் பாதுகாப்பையும் சில நாட்களுக்கு முன் அவரே வேண்டாம் என்று மறுத்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.

‘ஹிந்துத்துவா கும்பலை’ சற்றேனும் நியாய படுத்தும் எண்ணம் எனக்கு இதில் இல்லை ஆனால் நீங்கள் மற்றவர் முன்னால் தேவை இல்லாத விமர்சனத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்ற ஆதங்கத்தில்தான் இந்தக் கடிதம்…

அன்புடன்,

அ .சேஷகிரி.

அன்புள்ள சேஷகிரி

சிலவருடம் முன்பு வேலூரில் இந்து முன்னணிதலைவர் வெள்ளையன் கொலைசெய்யப்பட்டார். அது முழுக்கமுழுக்க தனிப்பட்ட தொழில்விரோதத்தால் நிகழ்ந்த கொலை என்று போலீஸ்தரப்பில் சொல்லப்பட்டது. வழக்கும் முடிக்கப்பட்டது. ஒருவருடம் கழித்து இன்னொரு வழக்கில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினர் கைதுசெய்யப்பட்டபோது வெள்ளையன் கொலையை அவர்கள் செய்ததை அவர்களே ஒப்புக்கொண்டனர். இப்போது வழக்கு அவர்கள்மேல் திரும்பியிருக்கிறது

ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் கொலைசெய்யப்பட்டபோது அவரது தனிப்பட்ட ஒழுக்கம் நேர்மை ஆகிய அனைத்தையும் பழித்துரைத்து செய்திகள் கசியவிடப்பட்டன. அவரை ஒரு நிழல் உலக தாதா அளவுக்கு ஊடகங்களும் ஃபேஸ்புக் போராளிகளும் வசைபாடினர். அவரைப்பற்றி நான் தனிப்பட்ட முறையிலும் அறிவேன். அரசியலை விடுங்கள். தனிமனிதர் என்ற வகையில் கருணையும் சேவைமனநிலையும் கொண்ட அற்புதமான மனிதர் அவர். நம்மூரில் அரசியல் பேசுபவர்களிலேயே அவருக்கு நிகரான நேர்மையும் கருணையும் கொண்டவர்கள் மிகச்சிலரே.

ஓர் அரசியல்கொலை நிகழும்போது கொல்லப்பட்டவரை எதிர்மறையாகக் காட்ட முயல்வதும், தனிப்பட்ட காரணங்களால் அது நிகழ்ந்தது என வாதிடுவதும், அரசல்புரசலான ஐயங்களைக் கிளப்பிவிடுவதும் பொதுத்தளத்தில் மிகமிக தவறான விஷயங்கள். அது தனிப்பட்ட கொலைதான் என ஐயம்திரிபற ஆகும்வரை அதை அரசியல்கொலை என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.அதுவே நியாயம்

இங்கே கல்புர்கி கொலைக்காகக் கொதிப்பவர்கள் அனைவருமே முன்பு ஆடிட்டர் ரமேஷ் முதலியவர்கள் கொலைசெய்யப்பட்டபோது அக்கொலைகளை அரசியல்கொலைகள் அல்ல என்று காட்டவும். குற்றவாளிகளை நியாயப்படுத்தவும் என்னென்ன செய்யமுடியுமோ அதைத்தான் செய்தார்கள். ஏனென்றால் அது அவர்களின் எதிர்தரப்பு. அதைக்கண்டு கொதித்தவர்கள் தங்களின் எதிர்தரப்பு கொலைசெய்யப்படும்போது அதே நிலைபாட்டை எடுப்பது எவ்வகையிலும் முறையல்ல.

உண்மையில் ஆடிட்டர் ரமேஷ் முதலியவர்கள் கொல்லப்பட்டபோது அதை அரசியல்கொலை என்று பார்த்தது நியாயம் என்றால் கல்பூர்கி கொலையையும் அவ்வாறே பார்க்கவேண்டும் என எனக்கே சொல்லிக்கொண்டேன். கல்பூர்கியின் அரசியல் எனக்கு உடன்பாடானதல்ல என்பதனால் முன்பு ஆடிட்டர் ரமேஷ் கொலையில் அவரது எதிர்தரப்பினர் செய்த அவதூறுப்பிரச்சாரம் மற்றும் மழுப்பல்களை நான் செய்யக்கூடாதென்று உறுதிகொண்டேன்

போலீஸ் பலகோணங்களில் விசாரிக்கட்டும். அது தனிப்பட்ட காரணங்களால் நிகழ்ந்த கொலை என நிறுவப்படுவது வரை அரசியல் தளத்தில் செயல்பட்ட ஒருவரின் கொலை அரசியல்கொலையே. அதை மழுப்ப, அவரை எதிர்மறையாகக் காட்ட முயல்வதைவிட அதை வன்மையாகக் கண்டிப்பதும் அதை ஆதரிப்பவர்களை எதிர்ப்பதும் உண்மை வெளிவரவேண்டுமென போராடுவதும்தான் நாம் செய்யக்கூடுவது.

நியாயம் என நாம் நம்புவதை நமக்கே நெறியாக ஆக்கிக்கொள்ளவேண்டும் அல்லவா?

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

லாரிபேக்கர் –வாழ்க்கைப்படம்

$
0
0

Backer

ஜெ

லாரி பேக்கரின் பேரன் வினீத் ராதாக்ருஷ்ணன் எடுக்கும் பேக்கர் பற்றிய bio-pic செய்தி (Build it like Baker) இங்கே இன்றைய இந்துவில் .

Uncommon Sense: The Life and Architecture of Laurie Baker

படத்தின் 6 நிமிட முன்னோட்டம் இந்த தளத்தில் - http://www.lauriebaker.net/

செய்தி இங்கே – http://www.thehindu.com/news/national/laurie-baker-biopic-build-it-like-baker/article7584219.எசே

லாரி பேக்கர் என்ற பெயர் இனிமையான நினைவுகளைக் கொண்டு வருகிறது.

மங்கை

முந்தையவை

லாரி பேக்கர்

லாரிபேக்கர் கடிதங்கள்

பேக்கர் வீடு ஒரு மறுதரப்பு

பேக்கர்

ஜெயஸ்ரீயின் வீடு

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஒப்பிலக்கியம்

$
0
0

பல்கலை சார்ந்த தமிழ் இலக்கிய ஆய்வுகளின் தொண்ணூறு விழுக்காடு ஒப்பிலக்கிய [Comparative Literature] ஆய்வுகளே. இந்தியா பன்முகப் பண்பாடும் பல மொழிச்சூழலும் கொண்ட ஒரு தேசம் என்பதனால் ஒப்பிலக்கியம் இந்தியாவின் சிந்தனைச் சாராம்சத்தை கண்டறியவும் முன்னெடுக்கவும் மிகவும் உதவியானது என்ற எண்ணம் அறுபதுகளில் மத்திய சாகித்ய அக்காதமியால் முன்வைக்கப்பட்டது. இந்தியப் பல்கலைகளில் ஒப்பிலக்கியத்துக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது

இந்திய இலக்கியங்களை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்த முன்னோடியாகிய டாக்டர் கெ.எம்.ஜார்ஜ் ஒப்பிலக்கியத்திற்கு இன்றளவும் உதவும் மாபெரும் தொகைநூல்களை உருவாக்கியிருக்கிறார். கோபிசந்த் நாரங்க் இந்திய மொழி இலக்கியங்களைப்பற்றி பல ஒப்பிலக்கிய நூல்களை உருவாக்கியிருக்கிறார்.

இந்தியாவின் முதன்மையான படைப்பாளிகள் அனைவருமே ஒருவரோடொருவர் ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள். பாரதி வள்ளத்தோள், ஆசான், பாரதி, குவெம்பு வள்ளத்தோள் என பலவகையான ஒப்பீட்டாய்வுகளை நாம் ஆய்வேட்டுத்தொகைகளில் காணலாம். ஆனால் இவற்றில் பொருட்படுத்தத்தக்கவை மிகக் குறைவு என்பதே உண்மை. பெரும்பாலான ஆய்வுகள் இலக்கிய ஆக்கங்களில் வெளிப்படையாகப் பேசப்படும் பொருட்களை மட்டுமே கணக்கில் கொண்டு மேலோட்டமான தகவல் ஒப்புமைகளைச் செய்வதுடன் நின்றுவிட்டன. கெ.எம்.ஜார்ஜின் தொகைநூல்களும் அப்படிப்பட்டவையே

ஏனென்றால் இங்கே ஒப்பிலக்கிய ஆய்வுகளைச் செய்தவர்கள் பல்கலைகழக ஆய்வாளர்கள் என்பதுதான். அவர்களுக்கு இலக்கியம் என்ற துறைமேல் தனி ஈடுபாடோ அதை உணரும் நுண்ணுணர்வோ பொதுவாக இருப்பதில்லை. சுந்தர ராமசாமியின் சொற்களில் இவர்களின் ஆய்வுகளை ‘குமாஸ்தாயிசம்’ என்று சொல்லலாம்.  பட்டியல்போடுதல், அவ்வளவுதான்

ஆனால் உண்மையில் ஒப்பிலக்கியம் உலக அளவில் மிகமுக்கியமான ஆய்வுக்கருவியாக இன்றும் உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் உலக இலக்கியங்கள் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட காலம் முதல் இது ஆரம்பித்தது. கிழக்கின் இலக்கியங்களும் மேலை இலக்கியங்களும் அக்காலத்திலேயே மிக விரிவான ஒப்பீட்டுக்கு ஆளாகி உள்ளன. அவை பல முக்கியமான கருத்தியல் திறப்புகளுக்குக் காரணமாகி இருக்கின்றன. இன்றும் அந்த் ஆய்வு தொடர்கிறது.

படைப்புகளை நாம் அகவயமாகவே அறிகிறோம். அந்த அகவய அறிதலை விமர்சனத்தில் புறவயமாகச் சொல்லவேண்டியிருக்கிறது. அதற்காக இலக்கிய விமர்சனம் பலவகையான வெளிப்பாட்டுக்கருவிகளை உருவாக்கியிருக்கிறது. ஓர் இலக்கிய ஆக்கத்தை இன்னொன்றுடன் , ஓர் இலக்கியச் சூழலை இன்னொன்றுடன் ஒப்பிடுவது அதில் மிக முக்கியமானது. அது இரு ஆக்கங்களிலும் உள்ளுறைந்துள்ள அகவய அம்சங்களை ஒன்றை இன்னொன்றில் பிரதிபலிப்பதன் வழியாக வெளிப்படுத்தக்கூடியது.

உதாரணமாக, தல்ஸ்தோயின் நிதானமே அவரது அழகு என்று சொல்லும்போது தஸ்தயேவ்ஸ்கியின் கட்டற்ற மனப்பாய்ச்சல்களுடன் அதை ஒப்பிட்டுக்காட்டலாம். இது எல்லா திறனாய்வாளர்களும் இயல்பாகவே செய்வது. எல்லா வாசகர்களும் சாதாரணமாகச் செய்துகொண்டிருப்பது. ஆகவே ஒப்பிலக்கிய ஆய்வை ஓர் இயல்பான இலக்கிய ஆய்வுமுறை என்றே சொல்லலாம்.

*

உலக இலக்கியங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டு இலக்கியத் திறனை நிறுவுதலும் வெளிப்பாட்டமைதியை ஆராய்தலும் தனித்தன்மைகளையும் பொதுக்கூறுகளையும் அடையாளம் காணுதலும் ஆகிய பணிகளை ஆற்றும் இலக்கிய ஆய்வு மரபு.

1892ல் பிரெஞ்சு ஆய்வாளர் ஆபேல் வில்லேமான் (Abel-Francois Villemain) என்பவரால் இந்தச் சொல் உருவாக்கப்பட்டு பயிலப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட உலக இலக்கியங்களை ஒப்பிட்டு ஆராய்வது ஒரு பெரிய அலையாக இருந்தது. அந்த ஆய்வுமுறையை வில்லேமான் இவ்வாறு வரையறை செய்தார்.

இருபதாம் நூற்றாண்டில் மொழிபெயர்ப்புகள் தகவல் தொடர்பு ஊடகங்கள் ஆகியவை பெருகியதன் விளைவாக பெரும்பாலான வாழும் மொழிகளில் பிற உலக மொழிகளில் இருந்து முக்கியப் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு எல்லா மொழிகளிலும் உலக இலக்கியங்களுக்கு ஒரு மாதிரிக்கட்டுமானம் உருவாயிற்று.  இந்த நூல்தொகை உலக இலக்கியம் எனப்பட்டது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகளில் உலகஇலக்கியம் பிரம்மாண்டமான அளவில் உருவாகியது. இதன் விளைவாக இவ்வாக்கியங்களை ஒப்பிட்டு ஆராயவும் ஆய்வுமுறை வளர்ச்சியடைந்தது. பெரும்பாலும் இது கல்வித்துறை சார்ந்துதான் நடந்து வருகிறது. ஒப்பிலக்கியம் என்பது பொதுப்பெயராலும் நடைமுறையில் வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்த படைப்புகளையும் படைப்பாளிகளையும், படைப்புப் போக்குகளையும் ஒப்பிட்டு ஆராய்வதே ஒப்பிலக்கியம் என்று கூறப்படுகிறது.

ஒப்பிலக்கியம் அமெரிக்கக் கல்வித்துறையில் 1950களில் பெரும் ஆர்வத்தை உருவாக்கியது. உலக மொழிகளின் இலக்கியங்களை ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம் உலகளாவிய இலக்கியப் போக்குகளை மட்டுமல்ல பண்பாட்டுக் கூறுகளையும் உளவியல் கூறுகளையும், சமூகவியல் கூறுகளையும் அடையாளம் காணமுடியும் என்று கண்டடையப்பட்டதும்; இந்தக் கண்டடைதல்களை வணிகம், அரசியல் மேலாதிக்கம் ஆகியவற்றின் கருவிகளாகப் பயன்படுத்தலாம் என்று பெறும் வணிக நிறுவனங்களும் அரசியல் நிறுவனங்களும் உணர்ந்து இவ்வாய்வுகளுக்கு விரிவான நிதியுதவி செய்யத் தலைப்பட்டதும் ஒப்பிலக்கியம் திடீரென்று பெருவளர்ச்சி அடையக் காரணமாயிற்று. ஒப்பிலக்கிய ஆய்வுகள் திரட்டிய தகவல்களில் இருந்தே அடுத்தகட்டத்தில் உலகளாவிய செல்வாக்குப் பெற்ற கலையிலக்கியக் கோட்பாடுகளும் மொழியியல், குறியியல் போன்ற துறைகளின் புதிய வளர்ச்சிப் போக்குகளும் உருவாயின.

இந்தியா பலதரப்பட்ட மக்களும் அவர்களுடைய மாறுபட்ட மொழிகளும் புழங்கும் தேசமாகையால் ஒப்பிலக்கியம் இங்கு மிக முக்கியமான பங்கை ஆற்றமுடியும் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே உணரப்பட்டுவிட்டது. குறைவான மொழிபெயர்ப்புகளும் நூல் வெளியீடுகளும் குறையாக இருந்த அக்காலத்திலேயே பலமொழி அறிஞர்கள் முக்கியமான ஒப்பாய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூல் தென்னிந்திய மொழிகளின் பொதுவான அடித்தளத்தை வெளிக்கொணர்ந்தது. இப்போக்குகளுக்கு ஊக்கம் ஏற்றியது.

இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய மொழிகளுக்கு இடையேயான ஒப்பிலக்கிய ஆய்வுகளுக்கு அரசு ஊக்கம் அளித்தது. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஒப்பிலக்கியத் திணைக்களங்கள் உருவாக்கப்பட்டன. ஒப்பிலக்கிய ஆய்வு மூலம் இந்திய மொழி இலக்கியங்களுக்குள் உள்ள பொதுக்கூறுகளை கண்டடையவும் அதன்மூலம் இந்திய இலக்கியம் என்ற கருதுகோளை வலுப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

முனைவர் கைலாசபதி ஒப்பியல் இலக்கியம் என்ற நூலை 1969ல் எழுதினார். இன்றும் தமிழ் ஒப்பியல் ஆய்வுக்கு இதுவே வழிகாட்டி நூலாகும். ‘ ஒப்பியல் ஆய்வின் மூலமாகவே ஒரு பொருளின் தனிப்பண்புகளை திடமாகக் கூறமுடியும். ஒற்றுமைகளுக்கு மத்தியிலும் நுண்ணிய வேறுபாடுகள் காணப்படும். அவற்றினை ஆதாரமாகக் கொண்டே ஒரு பொருளின் தனிச்சிறப்பினை அறிதல்கூடும். அதாவது இரு இலக்கியங்களை ஒப்பிடும்போது அவற்றின் பொதுப்பண்புகள் யாவை சிறப்புப் பண்புகள் யாவை என்பது தெளிவாகிறது. இத்தெளிவு வரலாற்றடிப்படையிலான இலக்கிய ஆரய்ச்சிக்கு ஏதுவாக அமைகிறது’ என்கிறார் கைலாசபதி

ஆனால் ஒப்பியல் ஆய்வு படைப்பின் உள்ளுறைகளுக்குச் செல்லும் நுண் வாசிப்பாக அமையாது போனால் அது படைப்பை அவமதிப்பதாக ஆகலாம். படைப்பின் மேலோட்டமான அம்சங்களை முன்னிறுத்துவதாக அமையலாம். ஆரம்பகாலத்தில் இருந்தே தமிழில் ஒப்பீட்டாய்வுகள் நிகழ்ந்துள்ளன. வவெசு அய்யர் கம்பனையும் ஷேக்ஸ்பியரையும் ஒப்பிட்டிருக்கிறார். ஆனால் வ.ரா போன்றவர்கள் ‘மானாங்காணியாக’ ஒப்பிடப்போக கடுப்பான புதுமைப்பித்தன் இவ்வாறு எழுதினார்

ஏன் அது மேல்நாட்டுடன் ஒப்பிடவேண்டிய காரியமோ தெரியவில்லை. நம்மூர் நாயர் ஓட்டல் இட்லியையும் பரமசிவம்பிள்ளை ஓட்டல் தோசையையும் ஹட்ஸின் பாமர்ஸ் பிஸ்கோத்துடன் ஒப்பிட்டு எளிவரும் கருத்துக்களைக் காணப்பெறும் பாக்கியம் எனக்கு இதுவரை சித்திக்கவில்லை’

தமிழில் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘கம்பனும் மில்டனும் – ஒரு புதியபார்வை [1978]’ ஒப்பிலக்கிய ஆய்வுகளில் ஒரு பேரிலக்கியம் என்று கருதப்படுகிறது. [மீனாட்சி புத்தக நிலையம்]

 

 

முதற்பிரசுரம் Dec 15, 2010 மறுபிரசுரம்

தொடர்புடைய பதிவுகள்

ஜிப்மர்தினங்கள் -கடலூர் சீனு

$
0
0

செய்க தவம், அன்பிற்சிறந்த தவமில்லை.

-சுப்ரமண்ய பாரதி-

இனிய ஜெயம்,

தங்கைக்கு எடை மிக குறைவாக இருக்கிறது. எடை கூட்டும் முயற்சிகள், மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. விரைவில் அவளுக்கு அறுவை சிகிச்சை நடைபெறும். காலை டாக்டர் ”நீங்கதான் உங்க தங்கச்சிக்கு கான்பிடன்ட் அப்டின்னு பாத்தாலே தெரியுது. கொஞ்சம் கூடவே இருங்க” என்றுவிட்டு சென்றார். வேறு எங்கே போகப் போகிறேன்? அவள் வலியில் கொஞ்சத்த வாங்கிக்கங்க என்று சொன்னால்தான் சிக்கல். அம்மா தங்கைக்கு துணையாக உடன் இருக்கிறார்கள். அம்மா யாருக்கும் கிடைக்காத என் அபூர்வ அம்மா. இந்த ஜிப்மர் தினங்களில் என் அம்மா இன்னும் அணுக்கமாகத் தெரிகிறார்கள். நேற்று அம்மா வீட்டில் இருக்கும் தங்கை குழந்தைகளுக்கு [மகள் ஐந்தாவது, மகன் இரண்டாவது படிக்கிறார்கள்] கடிதம் எழுதித் தந்தார்கள். பதிலுக்கு குழந்தைகள் அம்மாவுக்கு கடிதம் எழுதித் தந்தார்கள். அந்தக் கடிதம் இப்படி முடிகிறது. பாட்டிக்கு உம்மா உம்மா உம்மா. எழுத்து முத்தத்தின், அன்பின் ஈரம் சுமந்த கடிதம். ஜிப்மரில் அம்மா எப்போதும்போல தனது அன்பு ராஜாங்கத்தை ஸ்தாபித்து விட்டார்.

தங்கை வார்டில் வசிக்கும் அத்தனை நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் இப்போது அம்மாவின் நண்பர்கள். நர்சுகள் டாக்டர்கள் என அனைவருக்கும் அம்மாவின் மீது தனி கரிசனம். காரணம் நர்சுகளுக்கு துணையாக நோயாளிகளை பராமரிப்பது, பணியாளர்களுக்கு துணையாக அவர்கள் பணிகளை பகிர்ந்துகொள்வது என அம்மா அவர்களின் இயல்பால் அங்குள்ளோருக்கு நெருக்கமாக ஆகி விட்டார்கள்.பாண்டேஜ் துணிகள் வெட்டுவது, குப்பைக் கூடைக்கான பாலித்தின் பைகளை மடிப்பது, வலியில் முனகும் குழந்தயை உறங்கவைப்பது, அதன் அம்மாவுக்கு ஆறுதல் சொல்வது, ஏதேனும் முதியவருக்கு மருந்தளிப்பது என நான் பார்க்கும்போதெல்லாம் அம்மா எதோ ஒரு பணியை செய்துகொண்டிருக்கிறார்கள். ஜிப்மர் இந்தியாவின் பெரும்பான்மை நோயாளிகள் வந்து கூடும் இடம். எத்தனை பணியாளர்கள் இருந்தாலும் போதாது.

தினமும் எதோ ஒரு மக்கள் வரிசையில், எதோ ஒரு பரிசோதனை அறிக்கையை வாங்கவோ, அப்பாயின்மென்ட் வாங்கவோ, விண்ணப்பத்தை அனுப்பவோ மணிக்கணக்காக நிற்கிறேன். நின்றுகொண்டே வாசிக்கிறேன். பொதுவாக இருளை நோக்கி நிற்கையில் சுந்தர ராமசாமி வசீகரமாக இருக்கிறார். சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய உள் கட்டமைப்பில் மிக முக்கிய சாதனை இந்த ஜிப்மர். இத்தனை கடன் உள்ள ஒரு தேசம், இத்தனை ஊழல் மிகுந்த தேசம், இத்தனை கருப்புப்பணம் பதுக்கப்படும்,புழங்கும் தேசம்,இத்தனை ஏழைகள் உள்ள தேசம் இதில் கிடைக்கும் வரியில் இதனை பெரிய அரசு நிர்வாகம் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கிறது, அதுவும் மிக மிக வெற்றிகரமாக என்பது எந்த தேசத்துடன் ஓப்பு நோக்கினாலும் இணையற்ற செயல்.

ஜிப்மர் அமைய வேண்டிய இடத்தை அரவிந்த அன்னைதான் குறிப்பிட்டுத் தந்தார் என சிவாத்மா சொன்னார். இந்தியாவில் மொழிகளும், கலாச்சாரமும் மட்டும்தான் வேறு. நோயும் வலியும் நம் பண்பாடு போல , இந்தியாவின் மொத்த மொழிகளையும் சில தினங்களில் ஜிப்மரில் கேட்டுவிட முடியும். [சில தினங்கள் முன்பு வார்டில் அம்மா, சும்மா விளையாட்டுக்கு ஒரு குழந்தையை ஏமி காவலா? என்று கொஞ்சினார்கள். புதிதாக வந்திருக்கும் ஹைதிராபாத் டாக்டர் நூவு தெலுகா என்றபடி ஆவலுடன் ஓடி வந்தார்]. நோயில் இணையும் குட்டி இந்தியா. பா மா கா அரசியல் மீது பூ தூவுவது போல இருந்தாலும், இதை சொல்லாமல் இருக்க முடியாது இன்று ஜிப்மரில் இருக்கும் பல வசதிகள் ,புற்றுநோய் சிகிச்சைக்கான தனி கட்டிடம் உட்பட பலவற்றை , அன்புமணி அவர்கள் பதவியில் இரும்போது தனது தனி ஈடுபாடு வழியே கொண்டுவந்தார்.

தினமும் புதிய புதிய மனிதர்கள், புதிய புதிய முகங்கள், புதிய புதிய நோய்கள். மனிதர்கள் கூட, காத்திருக்க, கழிப்பறை வசதி கொண்ட ஒரு பெரிய திடல். திடல் முழுக்க, உணவுக் குப்பைகளும், துப்பிய எச்சிலும், அதன்மீதே அட்டை விரித்து அமர்ந்து, படுத்து, குழந்தைகள் தவழ்ந்து…. இத்தனைக்கும் திடலை சுற்றி எண்ணிப் பார்த்தேன் பிரும்மாண்டமான ஆறு குப்பைத் தொட்டிகள். இந்தியர்களுக்கு, எங்கே ருசியுள்ள ,காசு குறைவான உணவு கிடைக்கும் என்று தெரிகிறது, கீழே விழுந்த உணவை நாய் மட்டுமே தின்னும், நாம் தின்னக்கூடாது என்று தெரிகிறது, ஆனால் உண்ட மிச்சிலை எழுந்துசென்று குப்பைத் தொட்டியில் போடத் தெரியாது . இது அறியாமை அல்ல. நாய்க்கும் லபிக்காத தடித்தனம். இந்த வார விகடனில் சென்னை கொடுங்கையூர் பகுதியில் மலை போல் குவிந்த குப்பைகளால் பாதிக்கப்பட்டு கதறும் ஏழை மக்கள் குறித்து அறம் பொங்கும் கட்டுரை ஒன்று வந்துள்ளது. இன்று சொல்கிறேன் இந்த தடித்தனம் நம்முள் உறைந்திருக்கும் வரை, குப்பைகளால் வரும் நோயில் நாம் சாவது சாலவும் சரியே. முந்தா நாள் எவனோ கழிப்பறை கோப்பையில் சாராய போத்தலை உடைத்து குமித்து வைத்திருந்தான். நேற்று ஒருவன் தனது உள்ளாடையை கோப்பைக்குள் செருகி வைத்து மொத்த கழிவும் வெளியேறா வண்ணம் கழிப்பிடத்தை முடக்கினான். இத்தனைக்கும் மேல் மருத்துவம் வேண்டி காத்திருக்கும் மக்கள்.

உறுப்பிலிருந்து நீளும் குழாயின் முனையில் தொங்கும் தனது மூத்திரப் பையை இடதுகையில் பற்றியபடி வலது கையில் உணவு உண்ணும் முதியவர், வயிற்றில் நேரடியாக துளை போட்டு உணவுகள் கரைக்கப்பட்டு இறங்கும்
தொண்டை நோயாளி, வேதனை முனகல்கள் வேதனையின் உச்சத்திலும், உவகையின் உச்சத்திலும் உடல் ஒரே விதமாகத்தான் முனகுகிறது. நேற்று காலை ஒருவரை பார்த்தேன். தனது மகளை அழைத்து வந்திருந்தார். இருபது வயது இருக்கும். இடது கண், கை, கால் யாவும் ஊனம், மூளை வளர்ச்சி குறைவு. ஆகவே அத்தகையோருக்கு இருக்கும் அபரிமிதமான ஆற்றலும் உடல் பலமும் கொண்டவள். மகளுக்கு ஐஸ் க்ரீம் வாங்கித் தந்திருந்தார். முகத்தில் ஐஸ் க்ரீம் வழிய சிரித்தபடி, அப்பாவின் தலையை வலதுகையால் மாறி மாறி தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் . பின்பு மருத்துவமனைக்குள் சென்றனர். மாலை ஒரு மருத்துவரின் அறையில் அவர்களை பார்த்தேன். எதோ சிகிச்சை. அது அந்த மகளுக்கு பிடிக்கவில்லை. அமானுஷ்யமாக கிரீச்சிட்டு ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தால். செக்யுரிட்டி இருவர் பிடித்தும் அவளை சமாளிக்க முடியவில்லை. அவர்களிடமிருந்து துள்ளி துள்ளி அப்பாவை வலதுகையால் அவரது தலையில் அடித்துக் கொண்டிருந்தாள். விளைந்த மரத்தில் கட்டையால் அடித்தால் எழுவதுபோல ஒலி எழுந்தது. அப்பா தடுக்கவோ எதிர்க்கவோ இல்லை. வெறுமனே குனிந்து அமர்ந்து அழுதுகொண்டு இருந்தார்.

நேற்று ஒரு நண்பர் கேட்டார். இந்த நாட்களை எப்படி கடக்கிறீர்கள் என்று. ஒன்று. அவ்வப்போது மொபைலை எடுத்து நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை வாசித்துக் கொள்வேன். இரண்டு, ஏதேனும் வாசித்துக் கொண்டிருப்பேன். மூன்று பிடித்த பணியை எந்த மடையனும் செய்வான். பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும் ,சிறப்பாகவும் முழுதாகவும் செய்தே ஆக வேண்டியது கடமை. கடமை தவம் போன்றது. கடமையை செய்ய வாருங்கள் சகோதரர்களே இது விவேகானந்தர் சொன்னது. அல்லது அப்படி அவர் சொன்னதாக நான் நம்புவது. அதை மனதுக்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொள்வேன். நான்கு கொஞ்சம் நடந்து அடுத்த கட்டிடம் சென்றால் பிரசவ கட்டிடம். மாலையில் புல்வெளியில் மூச்சு சீற, கீழ் உதட்டை மடித்துக் கடித்தபடி நிறைசூலிகள் நடை பயிலுவார்கள், ஏதேதோ பாட்டிகளும், அப்பாக்களும் அன்றலர்ந்த குழந்தைகளை சுமந்தபடி , ஓரிடம் விட்டு வேறிடம் செல்வார்கள், அந்த நிறை சூலி முகங்களையும், குழந்தைகளின் முகங்களையும் அள்ளி அள்ளி என் அகத்துக்குள் பதுக்கிக் கொள்வேன். ஐந்து. இந்த பிரும்மாண்ட நோய் வெளிக்குள் உள்ளே எங்கோ என் அம்மா எங்கோ எவருக்கோ ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அன்பே தவமாகக் கொண்ட அம்மா. அவர்களை நினைத்துக் கொள்வேன்.

கடலூர் சீனு

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மலையுச்சியில்

$
0
0

இந்திரநீலம் முடிந்ததும் ஆரம்பத்திலிருந்தே நாவலை நினைவில் ஓட்டினேன். நான் செவ்வியல் ஒழுங்கில் நம்பிக்கை கொண்டவன். வெண்முரசு நாவல் வரிசையும் செவ்வியல் படைப்புகள்தான். ஆனால் முற்றிலும் திட்டமிடாமல்தான் அத்தனை நாவல்களும் எழுதப்படுகின்றன. முதலில் ஒரு திட்டம் இருக்கிறது, தொடங்குவதற்கான ஒரு தைரியத்துக்காக மட்டுமே அது தேவைப்படுகிறது. தொடங்கியபின் அது தன்பாட்டுக்கு இழுத்துச்செல்கிறது. கதைப்போக்கை, படிமக்கோப்புகளை, மொழியை என்னால் எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடிவதில்லை.

ஆகவே அதில் திட்டமிடல், விவாதம் எதற்கும் இடமில்லை. உண்மையில் நாவல் எழுந்துவிட்டபின் எழுதுவதைப்போல சுலபமான வேலையே வேறில்லை. மூச்சுபோலத்தான். ரயில்நிலையங்களில், விமானநிலையங்களில் எங்குவேண்டுமானாலும் எழுதலாம். முந்தைய அத்தியாயம் முடிந்ததுமே அடுத்த அத்தியாயம் வந்து நின்று துடிக்கும். எழுதாமல் தவிர்த்து அடுத்தவேலைக்குப்போவது மட்டுமே இம்சை. அமெரிக்கப்பயணம் முழுக்க வெண்முரசு உள்ளே வந்து நின்று இழுத்துக்கொண்டே இருந்தது. நண்பர்கள், நிலக்காட்சிகள் அனைத்திலும் என்னை இழுத்துப்பிடுங்கி செலுத்திக்கொள்ளவேண்டியிருந்தது. ஓரளவு அரைக்கவனமாகவே எப்போதும் இருந்தேன்.

ஆனால் ஒரு நுணுக்கமான தெளிவான திட்டம் என் ஆழ்மனதுக்கு இருந்திருக்கிறது என்பதை நாவல் முடிந்தபின் உணர்கிறேன். முதலிலேயே விருத்தகன்யகையின் தவம் வந்துவிட்டது. ஆகவே இது கண்ணனுக்கான தவத்தின் கதை மட்டுமே என என் அகத்துக்குத்தெரியும். ஒவ்வொரு பகுதியும் நுணுக்கமாக ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருக்கிறது. இறுதி அத்தியயாங்களில் ஸ்ரீசகஸ்ரத்தில் பாற்கடலில் இருக்கிறார் கிருஷ்ணன். அலைகடல்கொந்தளிப்பு பால் பால் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறது. அதைவிட முக்கியமாக அதை நெருங்கும்போது ஆக்ஞா சக்கரத்தில் உருவாகும் கள்வெறி , மதுநமக்கு மதுநமக்கு என பாரதி பாடிய நிலை, அமைந்திருக்கிறது. அதை வெளியாகி இருநாட்கள் கழித்தே நானே அறிகிறேன்

இவ்வாறு அமைவது பெரும் கொந்தளிப்பை அளிக்கிறது. ஆனால் என்ன பிரச்சினை என்றால் அதிலிருந்து இறங்கியதுமே மீண்டும் அமையுமா என்னும் பதற்றம் வந்து சூழ்ந்துகொள்கிறது. அமையாவிட்டால் ஒன்றுமே செய்யமுடியாது. இது முழுக்கமுழுக்கத் தற்செயலான ஒன்று, கனவுபோல. இதை நான் நிகழ்த்தமுடியாது. என் திறமை பயிற்சி என எதற்குமே இங்கு பங்கேதுமில்லை. அப்படியென்றால் வராமலாகிவிட்டால் என்ன செய்வது? ஒன்றும் செய்யமுடியாது என்ற உணர்தலில் எழும் பதற்றம் இனிமேல் வராதோ என்னும் ஐயமாக மாறுகிறது. ஓரிருமுறை முயன்று தோற்றுவிட்டால் பிறகு எழுத அமர்வதற்கே பயமாகிவிடும். அதைத்தவிர்க்கவே தோன்றும்.

கிருஷ்ணனிடம் பேசினேன். ‘எழுதுங்க ஜெ, இதுவரை வந்தது இனிமேலா வராம இருந்திரப்போகுது” என்றார். நான் சொன்னேன், ;மலையுச்சியிலிருந்து குதிக்கவிருக்கிறேன். நூறடியில் வலுவான வலை இருக்கிறது என புத்திக்குத்தெரியும். ஆனால் அதை கண்ணால் பார்க்கமுடியவில்லை. அந்தத் தயக்கம்தான். புத்தி மனதை சமாதானப்படுத்தவேண்டும். அது முடியாது. சிறந்த வழி கண்ணைமூடிக்கொண்டு குதிப்பதுதான்’

ஆகவே முதலில் தலைப்பை வைத்துவிட்டேன். தினமும் கணிப்பொறி முன் அமர்ந்து ஆனால் உள்ளே நுழையாமல் திரும்பிக்கொண்டிருக்கிறேன். பதற்றமும் எரிச்சலும் தனிமையும் பயமுமாக அலைக்கழிகிறேன். இந்த பத்துப்பதினைந்துநாள் இருட்டைக் கடந்துவிட்டால் எல்லாம் வெளிச்சம்தான்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’–நூல் எட்டு- காண்டீபம்

$
0
0

வெண்முரசு நாவல் தொடரின் எட்டாவது நாவலாக காண்டீபம் என்னும் தலைப்பில் எழுதிக்கொண்டிருக்கிறேன். செப்டெம்பர் 15 அன்று வெளிவரத்தொடங்கும். அதன் கதைமையம் அர்ஜுனன். அவனுடைய பயணங்கள். எவ்வகை நாவலாக இருக்கும் என இப்போது சொல்லத் தெரியவில்லை. ஆனால் குழந்தைத்தன்மை கொண்ட மிகைகற்பனைகள் நிறைந்த ஒரு நாவலாக அமையவேண்டுமென விரும்புகிறேன்

தொடர்புடைய பதிவுகள்


ரசனையும் பட்டியலும்

$
0
0

ஜெயமோகன்,

பிரமாதமான கட்டுரை.

இருபத்தைந்து, இருபத்தாறு வருஷங்களுக்கு முன்னால் படித்திருக்கிறீர்களா என்ற புத்தகத்தைப் படித்தேன். சாண்டில்யனும் சுஜாதாவும் கல்கியுமே தமிழ் வாசிப்பு என்று கொஞ்சம் இளக்காரமாகப் பார்த்தவனுக்கு அது ஒரு பெரிய கண் திறப்பு. பின்னாளில் அவர் குறிப்பிட்டிருந்த புத்தகங்கள் பல பில்டப் அளவுக்கு இல்லாமல் ஏமாற்றம் அளித்தன (இதயநாதம், நாகம்மாள், மு.வ.வின் ஏதோ ஒரு புத்தகம், எஸ்விவியின் உல்லாச வேளை) என்றாலும் இப்படி இலக்கியமும் நிறைய இருக்கிறது, தேடிப் பிடித்து படிக்காதது என் தவறு எனக்கு உணர்த்தியது அந்தப் புத்தகம்தான்.

க.நா.சு.வின் அணுகுமுறையும் எனக்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது. இலக்கியக் கோட்பாடு போன்றவற்றில் எனக்கு பெரிதாக ஆர்வமில்லை. ரசனையைச் சார்ந்து மட்டுமே இலக்கியம் படிக்கப்பட வேண்டும், வேறு வழியே கிடையாது என்று உறுதியாக நம்புகிறேன். (அதனால்தான் உங்கள் திறனாய்வாளர் பட்டியல் உங்கள் ரசனையின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது) வாசிப்பு அனுபவத்தை விளக்க முடியாது, இலக்கிய விமர்சனம் என்பது அடிப்படையில் சாரமற்றது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. காலப்போக்கில் பொது ரசனை (Wisdom of the Crowds) உருவாகி நல்ல இலக்கியத்தை நமக்கு அடையாளம் காட்டுகிறது என்று நம்புகிறேன்.

அவரைப் போலவே எனக்கும் மிகவும் பிடித்த தீனி வறுக்கப்பட்ட வேர்க்கடலைதான். பேர் வேறு சுப்ரமணியன். என்ன, அவரைப் போல எழுதத்தான் இன்னும் வரவில்லை…

அன்புடன்
ஆர்வி

அன்புள்ள ஆர்வி

ஏற்கனவே இதை நான் உங்களிடம் தெளிவாக்கியிருக்கிறேன் என நினைக்கிறேன்

கநாசு முன்வைத்தது ஓர் இலக்கிய வரலாறு அல்ல. அது ரசனைப்பட்டியல் மட்டுமே. அவ்வகை ரசனைப்பட்டியலிலேயே கூட அவரது கறாரான ரசனை இல்லை, தமிழ் ரசிகனுக்கு பொதுவாக வாசிக்கவேண்டியவற்றையே அவர் சொல்கிறார். அவர் சுட்டிக்காட்டிய சில படைப்புகள் தமிழுக்கு முக்கியமானவை, தனக்கு அல்ல என்று அவரே சொல்லியிருக்கிறார். பின்னாளில் இலக்கிய வரலாற்றுக்குறிப்புகளாக எழுதியபோது அவர் இலக்கியப்பங்களிப்பை பொதுவாகவே கருத்தில் கொண்டார், சிபாரிசுப் பட்டியலில் இல்லாத பலர் அவ்வரிசையில் இருந்தனர். இதை அன்று அவரது முரண்பாடாக சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார்கள்

நான் என் ரசனை சார்ந்து விமர்சனம் எழுதும்போது, தேர்வுகள் செய்யும்போது அந்த அளவுகோல் ஒன்று. ஓர் இளம் வாசகனுக்காக தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்யும்போது இங்கு இலக்கியத்தளத்தில் என்னென்ன நிகழ்ந்தது என்று சொல்லமுற்படுகிறேன். அந்த அளவுகோல் இன்னொன்று. அந்நூலகளிலேயே அவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, முற்போக்கு இலக்கியம் என் ரசனைக்கு பொருந்துவதல்ல. ஆனால் அவர்களை விலக்கி ஓர் இலக்கியவரலாற்றை எழுதினால் அதன் மதிப்பென்ன?

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

பேராசிரியரின் குரல்

$
0
0

img_1820

தமிழ்ப்பண்பாட்டில் கல்லூரிப்பேராசிரியர்களின் பங்களிப்பென்ன என்று ஒரு பொதுவினாவை எழுப்பிக்கொள்ள வாய்ப்பளித்தது அ.ராமசாமியின் இந்தக் கட்டுரைத்தொகுதி. பேராசிரியர்கள் பலவகை. இந்திய சுதந்திரப்போராட்டம் என்பது பெரும்பாலும் வழக்கறிஞர்களாலும் கல்லூரிப்பேராசிரியர்களாலும் முன்னெடுக்கப்பட்டது. அக்காலத்தில் பேராசிரியர்கள் காந்தியவாதிகளாக, தேசியவாதிகளாக இருப்பது வழக்கம். க.சந்தானம், தி.செ.சௌரிராஜன், சுத்தானந்தபாரதியார் போன்றவர்களின் சுயசரிதைகளில் அன்று அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த பல்வேறு பேராசிரியர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன.

மரபிலக்கிய மீட்பில் பேராசிரியர்களின் பங்களிப்பு அதிகம். ஏட்டுப்பிரதிகளைப் பதிப்பிப்பது, உரை எழுதுவது போன்றவற்றில் ஈடுபட்டவர்களின் ஒரு பட்டியலை அளிக்கமுடியும். பெயர்களைச் சொல்வது நீளும் என்றாலும் அபிதானசிந்தாமணியை ஆக்கிய சிங்காரவேலுமுதலியார், தமிழ்ப்பேரகராதியைத் தொகுத்த எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியவர்களை குறிப்பிடாமல் மேலே செல்லமுடியாது.அதன்பின்பு உருவான திராவிட அரசியல் அலையிலும் பேராசிரியர்களின் பங்களிப்பு மிகுதி.

இன்றைய நவீன சிந்தனைக்களத்தில் நேரடியாகப் பாதிப்பு செலுத்திய முதன்மையான சிலபெயர்களை குறிப்பிடவிரும்புகிறேன். பேராசிரியர் ரா.ஸ்ரீ.தேசிகன் நவீனத்தமிழிலக்கியம் உருவான காலகட்டத்தில் இலக்கியவிமர்சனக் கருத்துக்களை கட்டமைப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். ஒருவகையில் தமிழின் ரசனைவிமர்சனத்தின் பிதா அ.ஸ்ரீனிவாசராகவன் மரபிலக்கியம் மீதான நவீன நோக்கை உருவாக்கிய முன்னோடி ரசனைவிமர்சகர். அவர். பேராசிரியர் நா.வானமாமலை இன்றைய பண்பாட்டுவிமர்சன மரபின் முன்னோடி. மார்க்ஸிய சிந்தனைகளை தமிழில் உருவாக்கிய முன்னோடிகள் கைலாசபதியும் சிவத்தம்பியும்.

சமகாலத்தில் தமிழவன், ராஜ்கௌதமன், க.பூரணசந்திரன்,எம்.வேதசகாயகுமார், அ..மார்க்ஸ் போன்றவர்களின் தொடர்ச்சியான பங்களிப்பு இலக்கியத்திலும் அரசியல்சிந்தனைத் தளத்திலும் இருந்துவந்துள்ளது. ஒப்புநோக்க புதியதலைமுறையில் ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்களின் பங்களிப்பு குறைவு என்ற ஒரு மனப்பிம்பம் எழுகிறது. விதிவிலக்குகளாகவே டி.தருமராஜ்,ஆ.இரா வெங்கடாசலபதி, ப.சரவணன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

அ.ராமசாமி அடிப்படையில் தமிழாசிரியர். ஆனால் அவரது புலம் விரிவானது. ஊடகவியல் மற்றும் நாடகவியலில் ஆய்வு செய்திருக்கிறார். ஆகவே வழக்கமாகத் தமிழாசிரியர்கள் கொண்டுள்ள அரசியல், இலக்கிய நோக்குகளிலிருந்து பெரிதும் வேறுபட்டிருக்கின்றன இவரது அணுகுமுறைகள்.

மிகச்சுருக்கமாக இப்படி வரையறுக்கலாமென இக்கட்டுரைகளை ஒட்டிச் சொல்லத்தோன்றுகிறது. தமிழாசிரியர்களின் சிந்தனை என்பது ‘பண்பாட்டுமீட்பு அரசியல்’ சார்ந்ததாகவே பெரும்பாலும் இருக்கும். அ.ராமசாமியின் பார்வை ‘பண்பாட்டு விமர்சன நோக்கு’ கொண்டதாக இருக்கிறது.

[ 2 ]

கல்வித்துறை சார்ந்த பயிற்சி என்பது ஒருவரின் சிந்தனைகளில் என்னவகையான மாற்றத்தை உருவாக்குகிறது, அல்லது உருவாக்கவேண்டும்? பொதுவாகச் சொன்னால் கல்வித்துறைச் சிந்தனைகள் சககல்வியாளர்களின் கூர்நோக்குக்கு எப்போதும் ஆட்பட்டிருப்பவை எனலாம். அவை peer reviewed thoughts ஆக இருந்தாகவேண்டும்.

ஆனால் தமிழில் சமகாலச் சிந்தனைகளுடன் உரையாடலில் உள்ள கல்வியாளர்கள் மிகமிக அபூர்வம் என்பதனால் அவ்வாறு சிந்தனைத்தளத்திற்கு வரும் கல்வியாளர்கள் பிற பொதுச்சிந்தனையாளர்களுடன்தான் விவாதிக்கநேர்கிறது. ஆகவே கல்வியாளார்களுக்கு இருக்கவேண்டிய முறைமை, புறவயத்தன்மை, சமநிலை ஆகியவற்றை அவர்கள் காலப்போக்கில் இழக்கிறார்கள்.

உதாரணமாக அ.மார்க்ஸ் எழுத்துக்களில் அவர் ஒரு கல்வித்துறையாளர் என்ற தடையமே இருக்காது. எப்போதுமே அவை முச்சந்தி அரசியலின் உணர்ச்சிகரமும் சமநிலையின்மையும் தகவல்செறிவின்மையும் கொண்டவை. மாறாக ராஜ்கௌதமனின் பண்பாட்டு விமர்சனநூல்களில் கல்வித்துறை சார்ந்த ஆய்வு ஒழுங்கும் தர்க்கமுறைமையும் அபாரமான விளைவுகளை உருவாக்குவதைக் காணலாம் அவரது பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் எனும் இரு நூல்களும் தமிழ்ப்பன்பாட்டு ஆய்வுத்தளத்தின் செவ்வியல் ஆக்கங்கள் என்றே சொல்வேன்.

இத்தொகுதியின் கட்டுரைகள் அ.ரா தொடர்ந்து ஈடுபட்டுவரும் மூன்று தளங்களைச் சேர்ந்தவையாக உள்ளன. ஒன்று பொதுவான அரசியல் விமர்சனம். இரண்டு கல்வித்துறை சார்ந்த விமர்சனம். மூன்று இலக்கிய அரசியல் சார்ந்த விமர்சனம். இம்மூன்று தளங்களிலும் அ.ராவிடம் கல்வித்துறைக்குரிய சமநிலைகொண்ட நோக்கும் புறவயத்தன்மையும் இருப்பதைக் காண்கிறேன். ஏற்பதும் மறுப்பதும் வேறுவிஷயம். உரையாடுவதற்கான தளம் உள்ளது என்பதே முக்கியமானது.

நமதே நமது- பின்காலனியத்தின் நான்காவது இயல் என்னும் முதல்கட்டுரையில் அ.ரா இந்தியாவின் வரலாற்றுப்பரிணாமத்தின் கோட்டுச்சித்திரம் ஒன்றை முன்வைக்கிறார். அவரது அரசியல் –வரலாற்று நோக்கை தெளிவாக வெளிக்காட்டுகிறது அக்கட்டுரை. அதன்படி அவரது அரசியல்கோணம் என்பது மார்க்ஸிய அடிப்படை கொண்டது. நிலப்பிரபுத்துவ காலத்தில் இருந்து காலனியாதிக்கம் வழியாக இன்றைய காலம் நோக்கிய நகர்வை காலனியாதிக்கத்தில் இருந்து நவீன பொருளியல் மேலாதிக்கம் நோக்கிய நகர்வாகவே அக்கட்டுரை அடையாளம் காண்கிறது.

கலப்புப் பொருளியல் சோஷலிசம் என்னும் இலக்குகளைக் கொண்ட நேருவின் காலகட்டம், மையத்திட்டமிடலும் மைய ஆதிக்கமும் கொண்ட இந்திராகாந்தியின் காலகட்டம், தாராளமயமாக்கம் உலகமயமாக்கம் ஆகியவற்றை கொண்ட மன்மோகன் சிங் வரையிலான காலகட்டம் ஆகியவற்றைக் கடந்து இன்று நான்காவது இயலாக முழுமையான முதலாளித்துவ பொருளியலை நோக்கி மோதியின் அரசு செல்வதாக அ.ரா எண்ணுகிறார்.

மோதியின் இந்த அரசியலின் மையச்சிக்கலாக அ.ரா எண்ணுவது ஒரு முக்கியமான சிக்கலை என்பதே இக்கட்டுரையை ஆழமானதாக ஆக்குகிறது. மோதியின் பொருளியல் நோக்கு என்பது முழுமையாகவே பண்பாட்டுவெளியில் இருந்து துண்டித்துக்கொண்டு லாபம் மட்டுமே குறியாகச் செயல்படும் முதலாளித்துவம். அவரது பண்பாட்டு நோக்கு என்பது பழமைவாத மீட்பு. இவ்விரு இலக்குகளும் ஒன்றுடன் ஒன்று முரண்படுபவை. ஒருவர் ஒரேசமயம் இருதிசைகளில் போகமுடியுமா என அ.ரா ஐயம்கொள்கிறார்.

“ஒரு தேசம் – அதன் பொருளாதார அடித்தளத்தை ஒன்றாகவும், அவற்றால் உண்டாக்கப்படும் கல்வி, கலை, பண்பாடு போன்ற மேல்தள நடவடிக்கைகளை நேரெதிர்த் திசையிலும் அமைத்துக்கொள்ளல் சாத்தியமா என்பது மிகப்பெரிய கேள்வி” என்று சொல்லும் அ.ரா “சாத்தியமாகாததைச் சாத்தியமாக்குவதற்காகத்தான் சக்திமான்கள் தேவைப்படுகிறார்கள்” என தொடர்கிறார்.

ஆனால் அ.ராவின் நோக்கு நம் வழக்கமான மார்க்ஸிய அரசியல் சொல்லாடல்களுக்குள் நின்றுவிடுவதாகவும் இல்லை. அவரது மார்க்ஸிய அணுகுமுறை என்பது வரலாற்றையும் பொருளியலையும் பகுப்பாய்வுசெய்வதற்கான கருவி மட்டுமாகவே உள்ளது. மார்க்ஸியத்தின் எளிய வாய்மொழிகளுக்கு எதிரான யதார்த்தத்தின் தரிசனம் அவருக்கு அவர் போலந்தில் பணியாற்றியபோது கிடைத்ததை பிறிதொரு கட்டுரையில் அவர் குறிப்பிடுகிறார்.

முதலாளித்துவ அமைப்புக்கு அதற்கே உரிய வல்லமைகளும் ஒழுங்கும் உண்டு என்றும் இந்தியா அந்த அமைப்பையும் முற்றாக ஏற்காமல் அரைவேக்காட்டு நிலையில் இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். ”முதலாளித்துவ அரசியல்வாதி தனிநபர்களின் உரிமைகளையும் நாட்டின் சட்டங்களையும் ஓரளவு மதிக்க நினைப்பான். சட்டத்திற்குக் கிடைக்கும் மரியாதை அரசு அமைப்புகளின் மீது நம்பகத்தன்மையை உண்டாக்கும்” என்று அவர் சொல்லும் வரிகள் முக்கியமானவை.

இக்கட்டுரைகள் காட்டும் அ.ராவை சுதந்திரவாத நோக்கு கொண்ட ஒரு இடதுசாரி என்று காட்டுகின்றன. அவருக்கு ஐரோப்பாவில் உள்ள தாராளவாத- சுதந்திரவாத முதலாளித்துவம் உவப்பாக இருக்கிறது. அமெரிக்கபாணி ஏகாதிபத்திய முதலாளித்துவமே கசப்பை அளிக்கிறது ”ஐரோப்பியப் பெருமுதலாளிகளின் வருகைக்கு அனுமதி அளித்துள்ள போலந்து இன்னும் அமெரிக்காவின் வால்மார்ட்டை அனுமதிக்கவில்லை. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வால்மார்ட்டின் பேரங்காடிகள் இல்லை என்பதையும் இந்தியர்கள் கவனிக்க வேண்டும்” என்ற வரி எனக்கு அவ்வாறான மனச்சித்திரத்தையே அளித்தது

அ.ரா அரசியல் குறித்து எழுதினாலும் அவரது அடிப்படை என்பது இலக்கியம் என்பதை இந்நூலின் எல்லா கட்டுரைகளும் காட்டுகின்றன. பொருளியல் கொள்கைகளை விமர்சிக்கும் கட்டுரைகளில்கூட அவர் சமூக மாற்றங்களின் சித்திரங்களை புதுமைப்பித்தன் முதல் இன்றுவரையிலான இலக்கியவாதிகளின் நூல்களில் இருந்தே எடுத்துக்கொள்கிறார். இந்நூலின் முக்கியமான கவர்ச்சி என்பது இலக்கியப்பிரதிகளை அவர் இந்தக்கோணத்தில் வாசிக்கும் முறை. க.நாசுவின் நாவல்கள் முதல் பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை வரை ஆராய்ந்து தமிழ்ச்சமூகத்தின் இடப்பெயர்வின் சித்திரத்தை அவர் அளிக்கும் விதத்தை உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம்.

வெவ்வேறு இலக்கியச் சர்ச்சைகளை ஒட்டி அ.ரா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ஜோ.டி.குரூஸின் கொற்கையை தடைசெய்யவேண்டுமென எழுந்த கோரிக்கையை புதுமைப்பித்தனின் நாசகாரகும்பலை சென்னைப் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திலிருந்து விலக்குவதற்கு முடிவெடுத்ததை இணைத்துக்கொண்டு ஆராய்கிறார். பெருமாள் முருகனின் நாவலை தடைசெய்யக்கோரி எழுந்த கலகத்தை தன் சொந்த அனுபவங்களுடன் இணைத்துக்கொண்டு ஆராய்கிறார். இலக்கிய விவாதங்களில் அ.ராவின் பார்வை என்பது எப்போதும் சுதந்திரமான கருத்துவெளிப்பாடு மற்றும் பண்பாட்டுவிவாதத்திற்கான குரலாகவே உள்ளது. அதேசமயம் நிதானமான வாதங்களுடன் முன்வைக்கப்படுகிறது

இந்நூலில் அ.ரா விரிவாக விவாதிப்பவை தமிழ்க்கல்விச்சூழலின் சவால்களும் சரிவுகளும். தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் என்னும் கனவுத்திட்டம் தமிழ்நாட்டுக் கல்விச்சூழலின் பல்வேறு சிக்கல்களில் சிக்கில் மெல்லமெல்லச் சரியும் சித்திரம் பல யதார்த்தங்களை நோக்கித் திறக்கக்கூடியது. அ.ரா தமிழ்ப்பற்று தேசப்பற்று போன்ற தீவிர உணர்ச்சிநிலைகள் கல்விப்புலத்தை சீரழிக்கக்கூடியவை என நினைக்கிறார். புறவயமான தர்க்கத்தை முன்னிறுத்தும் போக்குகளுக்காக வாதாடுகிறார்.

தமிழ்க் கல்விப்புலம் பற்றிய கூர்மையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைக்கும் இக்கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தெரிவதையும் கண்டுகொண்டேன்.

[ 3 ]

இது இணையக் காலகட்டம். கருத்துக்கள் பதினைந்து நிமிடங்களுக்குள் எதிர்வினைகளை உருவாக்கி ஓரிருநாட்களில் காணாமலாகும் சூழல். அ.ராமசாமி நிதானமாகவும் தர்க்கபூர்வமாகவும் வரைந்துகாட்டும் கருத்துக்களம் என்பது பொறுமையான விவாதத்திற்குரியது. நூல்வடிவில் இக்கட்டுரைகளை வாசிக்கையில் உருவாகும் முதன்மையான எண்ணம் இதுவே, கல்விப்புலத்தின் நெறியொருமை கொண்ட மேலும் பலகுரல்கள் தமிழில் ஒலித்தாகவேண்டும்

அ.ராமசாமி எழுதிய ’மறதிகளும் நினைவுகளும் (காலனியம் – மக்களாட்சி – பின்காலனியம்) நூலுக்கான முன்னுரை

தொடர்புடைய பதிவுகள்

வெடிக்கக் காத்திருக்கும் ஒரு சூழியல் பேரழிவு

$
0
0

http://www.ndtv.com/tamil-nadu-news/from-tamil-nadu-an-environmental-crisis-in-your-wardrobe-foreign-media-1213020?pfrom=home-lateststories

வழக்கமான கழிவு நீர்த் தொழில் நுட்பங்கள் அனைத்தும், கழிவு நீரை நுண்ணியிரிகள் உண்ணும் ஒரு கட்டமைப்பு அமைத்து, அதன் பின்னர் எஞ்சும் திடக் கழிவை வடிகட்டி, அதன் வேதி பின்புலத்துக்கு ஏற்ப, அத்திடக் கழிவை வெளியில் அனுப்புவார்கள். எடுத்துக்காட்டாக, உருளைக்கிழங்கு பதனிடும் கழிவு எனில், அதில் பெரும்பாலும், உருளைக்கிழங்கில் இருந்து வரும் ஸ்டார்ச் மற்றும் அதனோடு ஒட்டியிருக்கும் மண்ணும் திடக் கழிவுகளாக எஞ்சும். இதில், ஸ்டார்ச்சை முன்பே வடிக்கட்டி, மறு சுழற்சி செய்வார்கள். மண் கழிவு இறுதியில் எஞ்சி, மண்ணுக்கு உரமாகப் போகும்.

ஆனால், திருப்பூர் சாயக் கழிவுகள் எதுவுமே அப்படி உபயோகப்படுத்த முடியாத வகை. அவை “சிவப்பு” என்று வகைப்படுத்தப் பட்டு, தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் ஆழமாகக் குழி தோண்டிப் புதைக்கப் பட வேண்டிய அபாயகரமான வேதிப் பொருள்.

பல முறை மக்கள் போராட்டத்துக்குப் பிறகு, நீதி மன்ற தீர்ப்ப்புக்கு பிறகு, திருப்பூரின் தொழிலதிபரக்ள், கொஞ்சம் முன்னெடுத்து, கழி நீர் பதப் படுத்தும் ஆலைகளைக் கட்டினார்கள். இதில், ஆலைகள் எவ்வளவு செலவு பிடிக்குமோ, அவ்வளவு செலவு தினமும் கழிவு நீர் பதப்படுத்துவதும். எனவே, ஆலைகள் மட்டும் கட்டப்பட்டன – கழிவு நீரை, அனைவரும் ஒன்று கூடி, விதிகளை மீறி வெளியே அனுப்பி விடுவர்.. இறுதியில் அது நொய்யலில் சேரும்.. (மிகச் சிறந்த விதி விலக்குகள் உள்ளன. அவை மைனாரிட்டி).

இதற்கு ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு நியாயம் சொல்வார்கள். தொழிலத்பர்கள் கழிவு பதப்படுத்தும் செலவினால், அவர்களால் பங்களாதேஷ் உற்பத்தியாளர்களால் போட்டி போட முடியவில்லை என்பார்கள். மாசு கட்டுப் பாட்டு அதிகாரிகள், நாங்கள் 24 மணி நேரமும் கவனிக்க முடியாது எனச் சாக்குச் சொல்வார்கள்.. ஆனால், ஒரு ஐந்து ஆண்டுகள் நேர்மையான மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இருந்தால், இவ்விடம் மீளும் சாத்தியம் இருக்கிறது.

net net என்ன ஆகியிருக்கிறது எனில், திருப்பூரின் சுற்று வட்டாரம் முழுதும் நிலத்தடி நீர் எந்த உபயோகத்துக்கும் ஆகாது போயிருக்கிறது.. ஈரோட்டுக் காவிரியின் சிறு மின்சார உற்பத்திக்காகத் தேக்கி வைத்திருக்கும் நீர் கருநீல நிறத்தில் இருக்கிறது..

முற்பகலே விளைந்து விடும் போலிருக்கிறது. இன்று காந்தி இருந்திருந்தால், திருப்பூரில் போராடியிருந்திருப்பார்.

பாலா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கடலடியில்

$
0
0

இருபதாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விவாதம் இது. ஒரு பெண்ணெழுத்தாளரைப் பற்றிய விமர்சனத்தில் சு.சமுத்திரம் எழுதினார் ‘இப்போதெல்லாம் பெண்ணெழுத்தாளர்கள் தலைப்பிலேயே முந்தானை விரிக்கிறார்கள்’. கீழ்த்தரமான உள்ளர்த்தம் கொண்ட வரி. நான் அப்போதைய இந்தியா டுடேயில் அதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றினேன்.

தமிழிலக்கியத்தின் ஆயிரமாண்டுக்கால வரலாற்றில் சங்ககாலம் தவிரப் பெண்கள் எப்போதுமே தீவிரமாக எழுதியதில்லை. ஔவையும் ஆண்டாளும் காரைக்காலம்மையும் விதிவிலக்குகள். ஔவை முதுமையைத் தருவித்துக்கொண்டார். ஆண்டாள் இளமையை அடையவேயில்லை. காரைக்காலம்மை பேயுருக்கொண்டார். நவீன இலக்கியம் உருவானபின்னரும் பெண்கள் அதிகம் எழுதவரவில்லை. எல்லா மொழிகளிலும் இதுவே நிலை.

இந்தியவரலாற்றில் அரசியலிலும் பொதுவாழ்க்கையிலும் பெண்களுக்கு கௌரவமான ஒரு நுழைவாயிலைத் திறந்தது காந்திய இயக்கம்தான். அதிலும் குறிப்பாக காந்தி பெண்களை நோக்கி நேரடியாக அறைகூவல் விடுப்பவராக இருந்தார். பெண்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவராமல் இந்தியா விழிக்காது என ஆத்மார்த்தமாக நம்பி அதற்காகத் தொடர்ந்து முயன்ற ஒரே இந்தியத்தலைவர், அனேகமாக  கடைசித்தலைவர், அவர்தான்

இந்தியா எங்கும் அதிகமான பெண்கள் பொதுவெளியில் அறிமுகமானது காந்திய அலையின்போதுதான். இந்தியாவில் இன்றும் புகழ்மிக்க சாதனையாளர்களாக விளங்கும் பெண்எழுத்தாளர்கள் பாடகிகள் கலைஞர்கள் சமூகசேவகிகள் அதிகபட்சம் முப்பதாண்டுக்காலம் நீடித்த அந்த அலையில் எழுந்து வந்தவர்கள் மட்டுமே. தமிழகத்திலும் அதுதான் வரலாறு. வை.மு.கோதைநாயகி அம்மாள், லட்சுமி போன்ற எழுத்தாளர்கள், பட்டம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற பாடகிகள், சௌந்தரம் ராமச்சந்திரன், கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் போன்ற சமூகசேவகர்கள்,ருக்மிணி அருண்டேல் முதலிய கலைஞர்கள் என ஒரு நூறுசரித்திரநாயகியரை நாம் பட்டியலிடலாம்.

பின்னர் உருவான கம்யூனிச இயக்கமும் அதன்பின்னர் வந்த திராவிட இயக்கமும் பெண்களுக்கான இடத்தை மிகமிகக் குறைவாகவே அளித்தன. அந்த தரப்புகளில் இருந்து பெண் ஆளுமைகளை மிக அரிதாகவே காணமுடியும். அதன்பின் இன்றுவரை பெண்கள் பொதுவெளிக்கு வருவது பெரிய அளவில் நிகழ்வதுமில்லை. நவீன இலக்கியத்திலேயேகூட பெண்களின் பங்களிப்பு ஒப்புநோக்க குறைவுதான். தொண்ணூறுகளில்தான் பெண்கள் ஒரு சிறிய அலைபோல இலக்கியத்துக்குள் நுழைந்தனர். அதிகமும் எளிய கவிதைகள் எழுதிக்கொண்டு.

அவரது தரமற்ற சொற்களால் சமுத்திரம் அவமதித்தது அந்த சிறிய அலையைத்தான். நான் அதற்குக் கடுமையாகவே எதிர்வினையாற்றியிருந்தேன். அதில் சாகித்ய அக்காதமி ’வாங்கிய’ சமுத்திரம் என்ற ஒரு வரி இருந்தது. அது சமுத்திரத்தைக் கடுமையாகப் புண்படுத்தியது. அவர் வேறு ஒரு இதழில் என்னை மேலும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதன்பின் அவர் நினைத்து நினைத்துப்பார்த்தபோது என்பெயர் தட்டுப்பட்டது.

எங்கிருந்தோ என் விலாசத்தைத் தேடி எடுத்து அவர் எனக்கு பதில் போட்டிருந்தார். ‘டேய் நான் சாகித்ய அக்காதமிக்குத் தகுதியற்றவன் என்று சொல் . ஆனால் வாங்கியவன் என்று சொல்லாதே. நான் எப்போதும் எதற்கும் அலைந்தவன் கிடையாது. திமிராக இருக்கவேண்டும் என்றே திமிராக இருந்து கிடைத்தவற்றைக்கூட இழந்தவன் நான். திமுக தலைவருக்கே நெருக்கமானவன். ஆனால் அவரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள மறுத்தவன் ’ என்று ஆரம்பித்து ஒரு நீண்ட வசை

‘நீ யார்? நீ என் கதைகளை வாசித்து வளர்ந்தவன். ஒரே –யில் இருந்து பிறந்தவர்கள் நாம். நீ இளையவன் நான் மூத்தவன். பெரிய — போல பேசினால் பத்மநாபபுரத்த்துக்குத் தேடிவந்து உதைப்பேன். எனக்கு உன் வீடு விலாசம் எல்லாம் தெரியும். எனக்கு எல்லா இடத்திலும் ஆளிருக்கிறார்கள்’ என்று சமுத்திரம் எழுதியிருந்தார். நான் அவருக்கு சுருக்கமாக ‘எல்லாரையும் உருவாக்கும் அந்த — பற்றிய உணர்வு உங்களுக்கும் இருந்தால் சரி’ என்று எழுதி விட்டுவிட்டேன்.

ஏழெட்டு மாதம் கழித்து கோவையில் விஜயாபதிப்பகத்தின் ஒரு புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். விஜயாவேலாயுதம் வந்து ‘இப்பதான் சமுத்திரம் வந்துட்டு போனார். அந்தப்பக்கம் நிக்கிறார்’ என்றார். ‘என்னைப்பார்த்தாரா?’ என்றேன். ‘பாத்ததனாலதானே போனார்’ என்றார். ”போய்ப்பேசலாமா?” என்றேன். ’கண்டிப்பா. அவரு நல்ல மனுஷனுங்க’ என்றார் வேலாயுதம்

நான் நேராக சமுத்திரம் நின்றிருந்த இடத்தை நோக்கிப்போனேன். எனக்குப் பின்பக்கம் காட்டி எவரிடமோ பேசிக்கொண்டிருந்த சமுத்திரத்தின் அருகே சென்று ’அண்ணாச்சி’ என்று அழைத்தேன். அவர் திரும்பியதும் ‘அண்ணாச்சி, நான் ஜெயமோகன். ஒரு காலத்திலே உங்க எழுத்துக்களை வாசித்து உருவானவன்’ என்றேன்.

‘டேய் நீ என்னடா பெரிய -யா?’ என சமுத்திரம் ஆரம்பித்தார். நான் சிரித்துக்கொண்டு ‘விடுங்கண்ணாச்சி, நான் கணக்குப்படி உங்க தம்பியில்ல? தம்பி அண்ணனை ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா? மன்னிச்சிருங்க’ என்றேன். சமுத்திரம் சட்டென்று என்னை அப்படியே கட்டிக்கொண்டார். ‘டேய் நீ என் தம்பிடா…இப்ப சொன்னியே இது போரும்’ என்றார்.

சமுத்திரம் கரிய நெடிய மனிதர். ஏதோ கரிசல்காட்டு விவசாயி என்று தோற்றமளிப்பார். ஆனால் எப்போதும் சஃபாரிதான் உடை. எண்ணைபூசிப் படிய வைத்த சுருள்முடி. எச்சில்தெறிக்கும் உரத்த பேச்சு. கிட்ட்டத்தட்ட கத்தல்தான் அது. ஒரு விரோதம் என்றால் அவரிடமிருக்கும் எல்லா முட்களும் சிலிர்த்துக்கொள்ளும். அவரளவுக்கு ஆவேசமான உயிராற்றல் கொண்ட மனிதரை நான் பார்த்ததே இல்லை. அன்று நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். ‘சாயங்காலம் நீ என்னைப் பாக்க வரே’ என்றார். ‘இல்லை, நான்…’ என்றேன். ‘டேய் எதுத்துப்பேசாதே’ என்றார்

மாலை அவர் தங்கியிருந்த விடுதிக்குப் போனேன். சஃபாரியைக் கழட்டிவிட்டு பனியனுடன் இருந்தார். நான் மது அருந்துவதில்லை என அறிந்து மனமுடைந்தார். எனக்காக அவரும் குடிக்கவில்லை. பேசிக்கொண்டே இருந்தார். அவருக்கு அந்தரங்கமென்பதே இல்லை. விமர்சனங்கள் ,கோபங்கள், நக்கல்கள் எனக் கொட்டிக்கொண்டே இருந்தது. பேசப்பேச நெருங்கி வந்து, ஒரு கட்டத்தில் நம் ஆன்மாவில் அவரே ஒரு நாற்காலியை பயங்கர சத்தத்துடன் இழுத்துப்போட்டு அமர்ந்து , காலைத்தூக்கி சப்பணம் போட்டுக்கொண்டு நம்மை அதட்ட ஆரம்பிக்கும் மனிதர் அவர்.

’டேய் நான் சரியான கரிசல்காட்டான். எங்க தலைமுறையிலேதான் படிச்சு பரீட்சைகள் எழுதி இந்தா இப்டி வந்து சேர்ந்திருக்கோம்.நீ சும்மா குமாஸ்தா வேலைசெய்றே. உனக்கு சொன்னா புரியாது. ஆபீசரா இருந்தா தெரியும்…டேய், நம்மள பாக்குற ஒவ்வொருத்தனும் வீட்டுக்குள்ள நுழைஞ்ச நாய பாக்கிற மாதிரி பாப்பானுங்க. நம்ம கலரு நம்ம உருவம் எல்லாம் அதுக்கேத்தமாதிரி இருக்கு…நல்ல அவமானம்லாம் பட்டிருக்கேன். செருப்ப கழட்டி மூஞ்சியில அடிச்சதுமாதிரி பேச்சுகேட்டிருக்கேன்.டேய் காறி மூஞ்சிலே துப்புற மாதிரி பேச்சு கேட்டிருக்கேன் தெரியுமா…’

‘சீனியர்கிட்ட கேட்டாக்க பணிஞ்சுபோன்னு சொன்னாங்க. நம்ம காலம்னு ஒண்ணு வாரது வரை எல்லாத்தையும் தாங்கிட்டுபோன்னு சொன்னாங்க. மனசிலே குறிச்சு வச்சுகிட்டு சிரிச்சுட்டு இருன்னு அட்வைஸ் பண்ணினாங்க…..அது நம்ம சாதிக்குள்ள புத்தி இல்ல. எனக்கு அதெல்லாம் சரிவராது…குமுறிட்டிருந்தப்ப ஒருவாட்டி அய்யா வைகுண்டர் கோயிலுக்கு உங்கூருக்கு வந்தேன். அப்ப ஒரு வெளிச்சம் கிடைச்சுது. நான் எப்டியோ அதுதான் என் வழின்னு தெரிஞ்சுட்டுது…அதோட ஆளே மாறிட்டேன்’’

‘பாத்தியா சஃபாரி….இதைத்தான் போடுவேன். எனக்கு என்ன மரியாதையோ அதைக் குடுத்தாகணும். இல்லேன்னா அவன் நார்நாரா ஆகிற வரைக்கும் விடமாட்டேன். என் பேரைக்கேட்டாலே அலற வச்சிருவேன்…சமுத்திரமா அவன் ஓநாய்லான்னு சொல்லுவானுக…பணிஞ்சு போக மாட்டேன். ஒரு இஞ்சுகூட விட்டுக்குடுக்க மாட்டேன்…. அப்டி ஒரு ஆங்காரத்த மனசிலே ஏத்திக்கிட்டேன்.. எத்தன பேர கதறிட்டு ஓட அடிச்சிருப்பேன். சர்வீஸிலே கையில கருக்குமட்டையோட அலைஞ்சவன் நான்…எவ்வளவு டிரான்ஸ்பர்.எவ்வளவு சஸ்பென்ஷன்… என்னை ஒரு மண்ணும் செய்யமுடியாதுன்னு காட்டினேன்’

‘ஆனா நானே உருவாக்கிக்கிட்ட அந்த ஆங்காரத்த என்னாலேயே தாங்கமுடியல்லை. ஒரு கட்டத்திலே எப்ப பாத்தாலும் கால்படி வத்தல மென்னுட்டிருக்கிற மாதிரியே இருந்தது. அலைமோதிட்டிருந்தேன். அப்ப நான் செண்டிரல் கவர்மென்ட் செர்வீஸிலே இருந்தேன். நெறைய வாசிப்பேன். எனக்கு புதுமைப்பித்தன்தான் ஆதர்சம். ஒருநாள் ஒரு கதை எழுதினேன். கடல்மணிங்கிற பேரிலே அதைக் குமுதத்துக்கு அனுப்பினேன். அப்டியே பிரசுரமாச்சு. அதான் என் மொதல் கதை…’

நான் புன்னகைசெய்தேன். ‘அந்தக்கதைக்கு எட்டு லெட்டர் வந்திச்சு. ஒரு சின்னப்பையன் லெட்டர் போட்டிருந்தான். அஞ்சாம்கிளாஸோ ஆறாம்கிளாஸோ படிக்கிற பையன்…கொழந்தைமாதிரி கையெழுத்து. நல்லா இருக்கு கதைன்னு. லெட்டர கையிலே வச்சுகிட்டு நான் அழுதேன்’

நான் சிரித்தேன். ‘ -க்காளி நீ எழுதின லெட்டர் அது’ என்றார் சமுத்திரம் . ’கதை எழுதல்லேன்னா எவனையாவது வெட்டிப்போட்டுட்டு ஜெயிலிலே இருந்திருப்பேன். எழுதி எழுதி ஆத்திக்கிட்டு இதுவரை வந்துட்டேன். எனக்கு எலக்கியம் ஒரு மண்ணும் தேவையில்ல. என் எழுத்து வேற…’

இளமையில் சமுத்திரத்திற்கு நான் நிறைய வாசகர்கடிதங்கள் எழுதியிருக்கிறேன். தொடர்சியாகப் பல வருடங்கள். ஆச்சரியமென்னவென்றால் கடல்மணியும் சமுத்திரமும் ஒருவரே என்றுகூட ஊகித்து எழுதியிருந்தேன். அவரது கதைகளின் முகத்திலறையும் அப்பட்டம் எனக்கு மனவிலகலைக் கொடுத்தது. ஆனால் அவற்றின் நேர்மையான உணர்ச்சிவேகம் இன்றும் என்னைக் கவர்கிறது.

சமுத்திரம் மறுமுறை நாகர்கோயில் வந்தபோது சதங்கை ஆசிரியர் வனமாலிகை என்னைக் கூப்பிட்டனுப்பினார். நான் வனமாலிகையுடன் மீனாட்சிபுரம் ஆசாரிமார் சாலையில் சமுத்திரம் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றேன். செல்லும்வழியில் ’அண்ணாச்சிக்கு நீங்கதான் என்னோட அட்ரஸைக் குடுத்ததா?’ என்றேன். ’ஆமா, ஏன் கேக்கிறியோ?’ என்றார்.

இரவு ஏறுவது வரை சமுத்திரத்திடம் பேசிக்கொண்டிருந்தேன் என்றால் அது பிழை. அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நள்ளிரவில் திரும்பிக்கொண்டிருந்தபோது வனமாலிகை சொன்னார் ‘தப்பா நினைச்சுக்கிடாதீய…அவரு இப்பிடித்தான். ஆனா நல்ல மனுசனாக்கும்’ .நான் புன்னகைசெய்தேன். மறுநாள் அவர்கள் சாமிதோப்புக்குச் செல்வதாக இருந்தது.

அதன்பின் பலமுறை நான் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் அவர் வரும்போது வனமாலிகைதான் தகவல் தருவார். பின்னர் அவர் நாகர்கோயில் வருவது நின்றுபோனது. விஷ்ணுபுரம் நாவலை ஒரு பிரதி அனுப்பி வைத்தேன். ’பசிச்சு எலையிலே ஒக்காந்திட்டிருக்கிறப்ப ஆத்துமணலக் கொண்டாந்து முன்னால வச்ச மாதிரி இருக்கு’ என்று சொல்லிக் கடுமையாகத் திட்டி போன்செய்துவிட்டு அதையே எழுதி ஒரு கடிதமும் அனுப்பியிருந்தார்

அதன்பின்னர் ஒருமுறை நான் எங்கோ படிமம் என்று சொன்னதை வாசித்துவிட்டு ‘படிமம்னா என்ன? அக்கானி காய்ச்சுறப்ப அடியிலே தங்குறத நாங்க படிமம்னு சொல்லுவோம். அதுவா? இதெல்லாம் பம்மாத்து. ஏழைகளை ஏமாத்துற பசப்பு. சொல்றதுக்குண்டானத வெட்டித்தெறந்து சொல்லாம என்ன படிமமும் மத்ததும்?’ என்று ஃபோனில் சத்தம்போட்டுவிட்டு அதை ஏதோ இதழில் எழுதவும்செய்தார்.

‘வாயாடியாக இருந்த என்னை சில பத்திரிகையாசிரியர்கள் ஊமையாக்கிவிட்டார்கள்’ என்று தொண்ணூற்றி மூன்றில் எனக்குக் கடிதம் எழுதினார் சமுத்திரம். ஆனால் கொஞ்சநாள் கழித்து ஆனந்த விகடனில் அவர் வாடாமல்லி என்ற நாவலை எழுதினார். சமுத்திரத்தின் கதைகளில் மனித இயல்புமீதான அவதானிப்புகளோ வாழ்க்கை நுட்பங்களோ இருக்காது. சமூகப்பிரச்சினைகளின் கொந்தளிப்பான வெளிப்பாடுதான் அவரது கலை. அவ்வகையில் வாடாமல்லிதான் அவரது நல்ல படைப்பு.

அந்நாவலை நான் 2000 த்தில் புத்தக வடிவில்தான் வாசித்தேன். என் எண்ணத்தை எழுதி அனுப்பினேன். உணர்ச்சி மேலிட்டு எனக்கு ஃபோன் செய்தார். ‘நீ இந்த மாதிரி ஒண்ணு எழுதணும்…நம்ம நாட்டு பஞ்சப்பராரிகளப்பத்தி எழுதணும்… கலைன்னா அதுதான்யா’ என்றார். அதுதான் நான் கடைசியாக அவரிடம் பேசியது..

திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் அருகே திப்பண்ணம்பட்டி என்ற சின்ன கிராமத்தில் 1941இல் பிறந்தவர் சமுத்திரம்.மக்கள் தொடர்பாளராக மத்திய அரசில் பணியாற்றினார். கொஞ்சகாலம் திட்டம் என்ற மத்திய அரசின் செய்தி இதழின் ஆசிரியராக இருந்தார். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் வேலைபார்த்தார். அடிப்படையில் அவர் காங்கிரஸ்காரர். திமுகவிலும் கம்யூனிஸ்டுக்கட்சியிலும் அவருக்கு நண்பர்கள் அதிகமிருந்தாலும் குடும்பப் பாரம்பரியம்போல காங்கிரஸ்பற்றைப் பேணிவந்தார்

2003இல் ஒருநாள் தினமணியில் செய்தி வாசித்துத்தான் சமுத்திரம் காலமான தகவலை அறிந்தேன். உடனே இதழாளர்களான நண்பர்களிடம் விசாரித்து நடந்ததைத் தெரிந்துகொண்டேன். சென்னையில் ஒருசாலை விபத்தில் சிக்கிய சமுத்திரம் சாலையில் நெடுநேரம் நினைவிழந்து ரத்தம்பெருகக் கிடந்திருக்கிறார். அவரை அருகே இருந்த ஆஸ்பத்திரியில் கொண்டுசென்று சேர்த்திருக்கிறார்கள். அவர் யாரென்று தெரியவில்லை என்பதனால் அவரிடம் கட்டணம் வசூலிக்கமுடியாது என எண்ணி அவசியமான அறுவைசிகிழ்ச்சை செய்யாமல் இரண்டரை மணிநேரம் சும்மாவே ஒரு கட்டிலில் போட்டிருக்கிறார்கள். உறவினர்கள் வந்து பார்க்கும்போது அவர் இறந்திருந்தார்.

சமுத்திரத்தின் கதைகளில் வருவது போன்ற ஒரு நிகழ்ச்சி. மனித மனத்தின் சிறுமையை, நம் அமைப்புகளின் ஈவிரக்கமற்ற தன்மையைப் பிடித்து நிறுத்திக் கன்னத்திலறைவதுபோன்ற நடையில் எள்ளலும் எரிச்சலுமாக எழுதியவர் அவர். வாசக ஊகத்துக்கோ கற்பனைக்கோ ஒரு துளிகூட மிச்சம் வைப்பதில்லை. பல கதைகள் ரத்தம் கொதிக்கச்செய்பவை. ஊமை ஜனங்கள், கைவிடப்பட்ட மக்கள் – அவருடைய மொழியில் சொல்லப்போனால் சோற்றுப்பட்டாளம்- தான் அவருடைய கதைமனிதர்கள். ஒவ்வொரு கதையும் அந்த மனிதர்களுக்காக நரம்பு புடைக்க தொண்டை தெறிக்கக் குரலெழுப்புகிறது. அவர் கடைசிவரை அவர்களில் ஒருவராகவே இருந்தார்.

‘நான் காட்டானாக்கும் தம்பி’ கைகளை முஷ்டி பிடித்து சமுத்திரம் சொல்வார். ‘நம்ம பாட்டு காட்டான் பாட்டாக்கும். இதிலே பல்லவி அனுபல்லவி சங்கீதம் ஒண்ணும் கெடையாது…’அவரைக் கோவையில் சந்தித்த முதல்நாள் முதல் நான் கேட்க முனைந்து இடைவெளியே கிடைக்காமல் தவித்ததை நாகர்கோயிலில் சந்தித்த முதல்நாள் கேட்டேன். ‘அண்ணாச்சி , நீங்க எழுதினது சரியா? பொண்ணுங்க இப்பதானே எழுதவே வராங்க?’

சமுத்திரம் எந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்பவரல்ல. உரத்த குரலில் கத்த ஆரம்பித்தார். ‘மனுசன் செத்திட்டிருக்கான் தம்பி…வாங்க காயாமொழி இட்டமொழிக்கு வந்து பாருங்க…முள்ள நட்டு வெள்ளாம பண்றான். கரி எடுத்து வித்துக் கஞ்சி குடிக்கான். இவளுக என்னத்த எழுதறாளுக? எனக்குப் பத்தலைன்னு எழுதறாளுக”

மீண்டும் கொஞ்சம் இடைவெளி கிடைத்தபோது நான் சொன்னேன் ‘ நீங்க எழுதறது உங்க பிரச்சினை அண்ணாச்சி, ஏன் அது அவங்க பிரச்சினையா இருக்கக்கூடாது?’

‘கொழுப்பு. நல்ல கருக்கு மட்டையால குண்டியிலே போட்டா புத்திவரும்’ என்று மேலும் கத்தினார் சமுத்திரம்.

‘அண்ணாச்சி மனுஷனுக்கு வயிறு நெறைஞ்சா அடுத்த பிரச்சினை ஆண்பெண் உறவுதானே? அது அவங்களுக்குப் பெரிய விஷயமா தோணினா அவங்க ஏன் அதை எழுதக்கூடாது?’

‘அப்ப நீ ஏண்டா அதை எழுதல?’

நான் சிரித்து ‘அது எனக்குப் பெரிய விஷயமா இல்லியே’.

அவர் அதைப்பிடித்துக்கொண்டார்.’பாத்தியா நீயே சொல்லிட்டே”

ஒருவழியாக அவர் கத்தவேண்டியதை எல்லாம் கத்தியபின் நான் கிளம்பும்போது கார் பார்க்கிங்கில் அரை இருட்டில் வைத்துக் கேட்டேன் ‘சரி அண்ணாச்சி, எண்ணைக்காவது நம்ம சோத்துப்பட்டாளத்துக்கு வயிறு நெறைஞ்சபிறவு நம்ம பொண்ணுக இதை எல்லாம் எழுதினா என்ன சொல்லுவீங்க?’

சமுத்திரம் சட்டென்று என் தோளைப் பிடித்தார். இருட்டில் ஈரக்கரிய முகம் மிளிரச் சொன்னார். ‘தம்பி,டேய், நம்ம சனம் சோத்தைவிட அதைப் பெரிய பிரச்சினையா நினைக்கிற அளவுக்கு ஆயிடுச்சின்னா அதைவிட அண்ணனுக்கு என்னடா வேணும்?’

Aug 15, 2012 முதற்பிரசுரம்/ மறுபிரசுரம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மதங்களும் ஏற்றத்தாழ்வும்

$
0
0

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம். கிறித்தவம் மற்றும் முகமதிய மதங்கள் பிறப்பால் ஏற்றத்தாழ்வு கொள்ளாத போது இந்துத்துவம் மட்டும் ஏன் பிறப்பால் ஏற்றத்தாழ்வு கொள்கிறது என்று சிலர் வினா எழுப்புகிறார்கள். கிறித்தவமும் முகமதியமும் பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது என்று கூறும் மதங்களா ?
நன்றி

ரா.ஜேம்ஸ்ராஜா

அன்புள்ள ஜேம்ஸ்ராஜா

பொதுவாக மதப்பிரச்சாரங்களை ஏதேனும் வகையில் பொருட்படுத்துபவர்கள் அறிவார்ந்த இயக்கத்துக்கு வெளியே நிற்பவர்கள். மதப்பிரச்சாரம் இரண்டுவகை. ஆதரவுப்பிரச்சாரம், எதிர்ப்புப் பிரச்சாரம். இரண்டுமே ஒரேவகையான அசட்டுத்தனங்கள்தான். தன் மதத்தை ஆதரித்துப்பிரச்சாரம் செய்பவர்கள் அதேமூச்சில் ஏதேனும் ஒருவகையில் இன்னொரு மதத்தைப்பற்றிய வெறுப்புப் பிரச்சாரத்தையும் மேற்கொள்வார்கள்.

இந்துமதத்தைப் பொறுத்தவரை இங்கு பல்வேறு அரசியல்குழுக்களாலும் மிகப்பெரிய அளவிலான வெறுப்புப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இப்பிரச்சாரங்கள் வழியாக இந்து மதத்தையோ இந்துதத்துவமரபையோ அறியமுயல்வது மிகவும் பிழையானதாகவே அமையும். அவற்றுடன் உரையாடும்போதே நமது அணுகுமுறை சீரழியத்தொடங்குகிறது. அவற்றை முற்றிலும் பொருட்படுத்தாமல் நேரடியாக அறியமுயல்வதே சரியானது.

ஆனால் நம் சூழலில் அது சாத்தியமல்ல. ஆகவே ஒரு தொடக்கக் கேள்வியாக மட்டுமே இந்தவகையான வெறுப்புப் பிரச்சார -அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துக்களை எடுத்துக்கொண்டு சுயமான தேடலை நோக்கிச் செல்வதே சரியானதாக இருக்கும். அத்தகைய அணுகுமுறை கொண்டவர்களையே நான் அறிவுஜீவிகள் என எடுத்துக்கொள்கிறேன்.

மதம் என்பது எப்போதும் இரண்டு அடுக்கு கொண்ட ஓர் அமைப்புதான். ஒன்று அதன் தத்துவ- ஆன்மீகத் தளம். இன்னொன்று அதன் சமூகத்தளம். பெரும்பாலும் எந்த மதத்திலும் அதன் தத்துவ- ஆன்மீக தளத்தில் மானுட ஏற்றத்தாழ்வு குறித்த செய்திகள், ஆணைகள் நேரடியாக இருக்காது. பிரபஞ்ச இயக்கத்தை, மானுடவாழ்க்கையின் அறம் பொருள் இன்பம் போன்றவற்றை தத்துவார்த்தமாகத் தொகுத்துக்கொள்ளவும் படிமங்கள் மூலம் முன்வைக்கவும் முயல்வதாகவே அவை இருக்கும்.

இரண்டாவது அடுக்கில் எந்த மதமும் ஒரு சமூகக் கட்டமைப்பை உருவாக்கி நிலைநிறுத்தவே முயல்கிறது. ஆகவே அது உருவான காலகட்டத்திலிருந்த சமூகப்போக்குகளை ஒட்டியே அதன் நோக்கு அமையும். எல்லா மதங்களுமே நிலப்பிரபுத்துவ காலகட்டத்தைச் சேர்ந்தவைதான். நிலப்பிரபுத்துவம் [ஃப்யூடலிசம்] என்பதே உறுதியான மேல்-கீழ் அடுக்குமுறையை அமைத்து அதன்மேல் சமூகத்தை உறுதியாக கட்டி நிறுத்தி அதனூடாகச் செயல்படுவதுதான்.

பிறப்பு அடிப்படையிலான மாறாத அதிகார அடுக்கு அமைப்புதான் நிலப்பிரபுத்துவத்தின் ஆதாரமே. ஆகவே நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் உருவான எந்தமதமும், எந்த நீதிமுறையும் பிறப்பு அடிப்படையிலும் தொழில் அடிப்படையிலும் ஏற்றத்தாழ்வுகளை வலுவாக நிலைநாட்டும்போக்கையே கொண்டிருக்கும். இஸ்லாம், கிறிஸ்தவம், இந்துமதம், பௌத்தமதம், சமணமதம் எவையுமே விதிவிலக்கு அல்ல. காலத்தால் முந்தைய மதங்களில் இது இன்னும் வலுவாக இருக்கும்.

எந்த மதத்தினரானாலும் இந்த ஏற்றத்தாழ்வு அம்மதத்தின் சமூகத்தளத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டினால் உடனே அதன் தத்துவ -ஆன்மீக தளத்தில் அது இல்லையே என்ற பதிலையே சொல்வார்கள். அதெல்லாம் மூலநூலில் இல்லை என்பார்கள். ஆனால் மதத்தை அது என்ன சொல்கிறது என்று மட்டும் புரிந்துகொள்ளக்கூடாது, என்ன செய்திருக்கிறது என்பதைக்கொண்டுதான் புரிந்துகொள்ளவேண்டும்

இந்துமதத்தின் நூல்கள் இருவகை. சுருதிகள், ஸ்மிருதிகள். சுருதிகள் என்பவை மூலநூல்கள். அவை அழியாத ஞானத்தைச் சொல்லக்கூடியவை, காலமாற்றத்திற்கு அப்பாற்பட்டவை என்பார்கள் இந்துமதத்தினர். ஸ்மிருதிகள் சமூக மேலாண்மைக்கு உரியவை, அதாவது சட்டநூல்கள். ஆகவே காலந்தோறும் மாறக்கூடியவை. சுருதிகள் மானுடரிடையே ஏற்றத்தாழ்வைச் சொல்பவை அல்ல. ஸ்மிருதிகளே அவற்றைச் சொல்கின்றன. இதை விவேகானந்தர் முதல் பலர் விரிவாக எழுதியிருக்கிறார்கள். காந்தி நாராயணகுருவை வந்து சந்தித்து மூலநூல்கள் மானுடரிடையே ஏற்றத்தாழ்வை சொல்லவில்லை என்று தெளிவடைந்தார் என்பதை அறிந்திருப்பீர்கள்.

ஆனால் ஸ்மிருதிகள் மனிதரை பலவகையாகப்பிரித்து ஒருவருக்குமேல் ஒருவராக அடுக்கி அவர்களுக்குரிய கடமைகளை வகுத்து அவற்றை கண்டிப்பாக ஆற்றியாகவேண்டும் என்றே வகுக்கின்றன.மனுஸ்மிருதி அவற்றில் கடைசியானது. ஆனால் அவற்றை இறையாணைகளாகக் கருதவேண்டியதில்லை என்று சொல்லப்பட்டிருப்பதனால் அவற்றைக் கடந்துசெல்வதும் இந்துமதத்தால் முடியக்கூடியதாகவே உள்ளது.

இஸ்லாம் அராபிய இனமேன்மையின் அடிப்படையில்தான் இன்றும் செயல்படுகிறது என்பதை அறிய எழுதப்படிக்கத் தெரிந்தாலே போதும். ஒருபோதும் அது மானுடரை நிகராகக் கருதியதில்லை. உருவான நாள் முதல் இன்றுவரை அதற்குள் சமூகப்போரின் குருதி உலர்ந்ததே இல்லை. இன்றுவரை அது அடிமைமுறையை வலியுறுத்துகிறது. போகோ ஹராம், தாலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புகள் அடிமைமுறையை இஸ்லாமின் அடிப்படை வணிகமுறையாகவே சொல்லி வருகின்றன.

கிறிஸ்தவம் சமேரியரின் மேன்மையைச் சொல்வதாகவே எழுந்தது. பைபிளிலேயே அத்தகைய வரிகள் உண்டு. பின்னாளில் உலகமதமாக அது ஆனபின்னரும்கூட உலகமெங்கும் சென்று பழங்குடிகளை முற்றாக அழித்தொழித்தது. மிஷனரிகள் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள பழங்குடிகளை ‘ஆன்மா அற்ற’ மக்கள் என்று எண்ணி செய்த அழிவுகள்தான் மானுட வரலாற்றின் மிகப்பெரிய கொடுமைகள். அவற்றை இன்று அந்நாடுகள் முழுக்க ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்கள்

கிறிஸ்தவப் புனிதர்களான புனித தாமஸ் அக்வினாஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்ற பெரும்பாலானவர்கள் மானுடரின் ஏற்றத்தாழ்வைப்பற்றி மிகத்தீர்க்கமாகப் பேசியிருப்பதையும் அவர்களின் அக்கருத்துக்கள் பலநூறாண்டுக்காலம் நாவிதர், தச்சர் போன்ற பலவகையான மக்களை அடிமைவாழ்க்கைக்குத் தள்ளியதைப்பற்றியும் ஐரோப்பிய வரலாற்றை வாசித்தால் அறியலாம். கத்தோலிக்கத் திருச்சபை பலநூறாண்டுக்காலம் நிலஅடிமைமுறையைப்பேணி நிலைநிறுத்தியது.ஆனால் கிறிஸ்துவின் அடிப்படைச்செய்தி என்பது ஆன்மிகமானது என்பதையும் காணலாம்.

இதெல்லாம் மதங்கள் உருவாகி நிலைபெற்ற நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தின் இயல்புகள் என்றே கொள்ளவேண்டும். ஆகவே எந்த மதமாக இருந்தாலும் அதை அறிவார்ந்த முறையில் பகுத்து ஆராய்வதே உகந்தது. அதற்குத்தேவை மதங்களை வரலாற்றுரீதியாகப் பார்ப்பது. முழுக்க முழுக்க நம்பிக்கை, பற்று ஆகியவற்றின் அடிப்படையில் அணுகாமலிருக்கும் தெளிவு. அத்தகைய நம்பிக்கைமட்டும் கொண்டவர்களை முழுமையாகப் புறக்கணிப்பதே உகந்தவழி.

மதங்கள் வெறுமே கடவுள் நம்பிக்கையை உருவாக்கி நிலைநிறுத்துபவை அல்ல. சமூக உருவாக்கத்தில் அவற்றுக்குப் பெரும்பங்கு உள்ளது. அவை பல்வேறுவகையான இறைநம்பிக்கைகளை ஒன்றாகத் தொகுக்கின்றன. மையத்தை உருவாக்குகின்றன. அதனடிப்படையில் பல்வேறு மக்களை இணைத்து வலுவான சமூகக்கட்டமைப்பை எழுப்புகின்றன. நாம் வாழும் இச்சமூகம் அவ்வாறுதான் உருவாகிவந்துள்ளது. வெவ்வேறு பண்பாடுகள், வாழ்க்கைமுறைகள் மதங்களின் மூலமே ஒன்றாகத் திரள்கின்றன. ஒன்றை ஒன்று வளர்த்துக் கொள்கின்றன

நாம் இவ்வுலகில் காணும் வளர்ச்சியடைந்த அத்தனைச் சமூகங்களுக்கும் அவ்வளர்ச்சிக்குக் காரணமாக பெரிய மதங்கள் உள்ளதை கண்டறியலாம். அவை சமூகங்களை தொகுத்து நிலைநிறுத்தும் தன்மைகொண்ட மதங்களாக இருக்கும். ஆகவே அவற்றின் மையமாக தத்துவமும் விளிம்பில் சமூகநடைமுறை சார்ந்த நெறிகளும் ஆசாரங்களும் காணப்படும். அந்நெறிகள் பலசமயம் அவை உருவான காலகட்டத்திற்குரியவையாக இருக்கும்.

அவ்வாறு பெருமதங்கள் உருவாகாத நாடுகள் எப்படி இருக்கும் என்தற்கு நாம் நம் நாட்டின் வடகிழக்கை, அல்லது ஆப்ரிக்காவை உதாரணம் காட்டலாம். பழங்குடிகள் ஒருவரோடொருவர் பூசலிட்டு ஒவ்வொரு நாளும் என கொன்றுகொண்டிருப்பார்கள். சமூக உருவாக்கமே நிகழ்ந்திருக்காது. ஆகவே வேளாண்மை, வணிகம் எவையும் வளர்ந்திருக்காது. பஞ்சம் வந்து கூட்டம் கூட்டமாக மக்கள் செத்து அழிவார்கள்

மறுபக்கம் வரலாற்றில் மதப்பூசல்களால் மக்கள் செத்து அழிந்திருப்பதைக் காணலாம். இதை எப்போதும் நாத்திகர்கள் சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் மதப்பூசல் என்பது மேலோட்டமான தோற்றம்தான். மதம் வழியாக வலுவாக தொகுக்கப்பட்டு அரசியல் வல்லமை கொண்ட சமூகங்கள் நிலம் மற்றும் வளங்களுக்காக நிகழ்த்திக்கொள்ளும் போர்கள் அவை என்பதே உண்மை. மனிதனுக்கு முன் வரலாற்றில் இரண்டே தேர்வுகள்தான் இருந்தன. மதத்தால் வளர்ச்சி அடைந்த நிலப்பிரபுத்துவகாலப் பேரரசுகளின் போர்களா, பழங்குடிப்போர்களா எது தேவை என்பது. பழங்குடிப்போர்கள் சமூகங்களை வளச்சிக்கு அனுமதிப்பதே இல்லை. நிரந்தரமாக தேக்கநிலையில் வைத்துவிடுகின்றன என்பதே நடைமுறை யதார்த்தம்

மதங்களினால் ஆக்கமும் உண்டு, அழிவும் உண்டு. மதங்கள் சென்றகாலகட்டத்தில் சமூகத்தில் இருந்த மேலாதிக்கத்தை உருவாக்கி நிலைநிறுத்தின. மதப்போர்களை உருவாக்கின. இவை இன்றைய நம் நோக்கில் எதிர்மறையானவை. மதங்கள் பண்பாடுகளை தொகுத்தன. ஒன்றோடொன்று உரையாடவைத்தன. மதங்கள் தத்துவத்தை உருவாக்கி நிலைநிறுத்தின. மதங்கள் சமூகத்தை தொகுத்து உள்முரண்பாடுகளை அழித்து வளர்ச்சியை உருவாக்கின. இவை சாதகமான அம்சங்கள்

ஒருநவீன மனிதன் இந்த இருபக்கங்களையும் பார்க்கக்கூடியவனாக இருப்பான். அவ்வகையில் உலகம் முழுக்க மதங்களின் கொடை என்ன என்பதை அறிந்திருப்பான். மதங்களில் இருந்து எவை களையப்படவேண்டும், எவை வளரவேண்டும் என தெளிவுகொண்டிருப்பான்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மின் தமிழ் இதழ் 3

$
0
0

cover

சி.சரவணக்கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துள்ள மின்தமிழ் இதழ் பெருமாள் முருகன் சிறப்பிதழாக அமைந்திருக்கிறது. பலகோணங்களில் பெருமாள்முருகனைப்பற்றிய் ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன. மாதொரு பாகன் பற்றிய சரவணக்கார்த்திகேயன் கட்டுரையும் நிழல்முற்றம் பற்றிய லேகா ராமசுப்ரமணியம் கட்டுரையும் கூளமாதாரி பற்றி கிருஷ்ணப்பிரபு கட்டுரையும் தெளிவான நோக்குகளை முன்வைக்கக்கூடியவையாக இருந்தன. ஒரு படைப்பாளியைப்பற்றிய இந்த விரிவான ஆய்வுக்கோவை முக்கியமான முயற்சி.

ஆனால் புனைவுகளும் கவிதைகளும் பெரும் சோர்வையே அளித்தன. விபச்சாரியைப்பற்றி கவிதை எழுதுவதெல்லாம் எண்பதுகளிலேயே சிறுபத்திரிகைகளில் சலித்துப்போன விஷயங்கள். கதைகளை எழுதியவர்கள் இலக்கிய அறிமுகமில்லாதவர்களாக, விகடன் குமுதம் கதைகளில் இருந்து உருவாகி வந்தவர்களாகத் தெரிகிறார்கள். உரையாடல்களையும் விவரணைகளையும் அமைத்திருக்கும் விதமும் கதைக்கட்டுமானமும் எல்லாம் வாரஇதழ்களில் எண்பது தொண்ணூறுகளில் புழங்கியவை. இத்தகைய இதழ்கள் இலக்கியத்திற்கான இடங்களாக இருக்கவேண்டுமென்பதே என் எதிர்பார்ப்பு. விகடனுக்குச் செல்லும் வழியாக இவற்றை பயன்படுத்துபவர்களை ஆசிரியர் தவிர்ப்பது நல்லது. விகடனே இருக்கும்போது ஏன் அங்கு செல்வதற்கான பயிற்சிக்கையேட்டை மெனக்கெட்டு வாசிக்கவேண்டும் என ஒரு வாசகன் கேட்கலாமில்லையா?

இதழை இங்கே காணலாம்: http://tamizmagazine.blogspot.in/2015/08/2015.html

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும்—ராஜகோபாலன்.

$
0
0

(சந்திரிகா – மலையாள இலக்கிய இதழுக்காக நண்பர் ராஜகோபாலன் எழுதிய கட்டுரை)

400 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரே கலாசாரத்தைக் கொண்டிருந்த தமிழும், மலையாளமும் சகோதர மொழிகளாக மாறியது புவியியல், அரசியல் காரணங்களால். ஆனாலும் தமிழுக்கும், மலையாளத்துக்குமான ஒற்றுமைக் கூறுகள் கலாசாரரீதியில் இன்றும் தொடர்ந்து வருபவை. பழந்தமிழர் மரபின் அனைத்து சிறப்பு தினங்களும் கேரளத்தில்தான் இன்றும் கொண்டாடப்படுகின்றன. பழந்தமிழின் அற்புதமான வேர்சொற்கள் இன்றும் மலையாளத்தின் பயன்பாட்டு மொழியில் காணக்கிடைப்பது , சற்று மொழியைக் கவனிப்பவர்களுக்கும் தெரியும். 400 ஆண்டுகளில் மலையாளம் என்ற மொழி தனக்கென உருவாக்கிக்கொண்ட ஒரு பாரம்பரியமும், மொழியில் செய்யப்பட்ட சாதனைகளும் பாராட்டத்தக்கவை. அப்படி உருவாக்கிக்கொண்ட விரைவு இன்னும் வியப்பானது.

em eS

எம் .எஸ் [எம்.சிவசுப்ரமணியம்]மொழிபெயர்ப்பாளர்.

இந்தியாவின் நவீன இலக்கியம் சற்றேறக்குறைய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து ஆரம்பமாவதாக சொல்லலாம். நவீன இலக்கியத்தின் அனைத்து கூறுகளையும் வெகு விரைவாக தம் மொழிக்குள் கொண்டுவந்த பெருமை வங்காளம், மலையாளம் , தமிழ் ஆகிய மொழிகளுக்கு உண்டு. உலக இலக்கியத்தின் செவ்வியல் படைப்புகள் அனைத்துமே இந்த மூன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கிடைத்தன. அதிலும் முன்னணியில் இருந்த மொழிகள் வங்கமும், கேரளமும். நான் இங்கே இரு மொழிகளிலும் உள்ள வாசிப்பின் , வாசகர்களின் அடிப்படையிலேயே பேசுகிறேன்.

சி. ஏ பாலன்

சி. ஏ பாலன்

[மொழிபெயர்ப்பாளர் சி ஏ பாலன். தகழியின் ஏணிப்படிகள், கயிறு போன்ற நாவல்களை மொழியாக்கம் செய்தவர்]

தமிழில் மலையாள இலக்கியத்தின் பாதிப்புகள்

1960 களில் தொடங்கி 1990 களின் மத்தி வரையிலான 35 வருட காலம் தமிழில் மலையாள இலக்கியத்தின் பாதிப்பு மிக அதிகம். மலையாள இலக்கியத்தின் பிதாமகர்கள் என அறியப்படும் அனைவருமே தமிழில் கிடைத்தார்கள். தமிழ் இலக்கியத்தின் பிதாமகர்கள் வரிசையில் அவர்களுக்கும் முக்கிய இடம் இன்றளவும் கொடுக்கப்படுகிறது. இன்னும் சொல்வதென்றால், தமிழில் ஒருவர் இலக்கிய வாசகர் என்றால் அவருக்கு பஷீரும், எம்.டி. யும், பால்சக்கரியாவும், பி.கே.பாலக்ரிஷ்ணனும்,தகழியும், கேசவதேவும், பாலசந்திரனும் தெரிந்திருக்கவேண்டியது கட்டாயம். அவர்களைப் படிக்காமல் தமிழில் ஒருவன் தன்னை தமிழ் இலக்கிய வாசகன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுவான். ரஷ்ய இலக்கியங்கள் படிக்காத ஒருவனுக்கு தமிழில் இலக்கிய வாசகன் எனும் பதத்தை உச்சரிக்கக் கூட அனுமதி இல்லை.

இன்றளவும் தமிழில் மலையாளத்தின் சிறப்பான படைப்புகள் என்று கருதப்படும் பெரும்பான்மைப் படைப்புகள் தொடர்ந்து கிடைக்கின்றன. இன்று எழுதிக்கொண்டிருக்கும் கல்பற்றா , மனோஜ் குரு , கெ .ஆர்.மீரா , ஷிகாபுதீன் வரையிலான படைப்பாளிகளின் எழுத்துகள் வரை தமிழ் இலக்கிய உலகம் தொடர்ந்து மலையாள இலக்கிய உலகை சுவிகரித்துக் கொண்டே இருக்கிறது. அழுத்தமான இலக்கியப் படைப்புகள் மட்டுமல்லாது வணிக எழுத்து வகையை சேர்ந்த கோட்டயம் புஷ்பநாத் ம் கூட தொடர்ச்சியாக தமிழின் வணிக எழுத்து வாசகனுக்குக் கிடைக்கிறார்.

நிர்மால்யா, மொழிபெயர்பபளர்.,

தமிழும், மலையாளமும் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்கள் ஆரம்பத்தில் துடிப்புடன் செயல்பட்டு மலையாள இலக்கியத்தின் முக்கியப் படைப்புகளை தமிழுக்குக் கொணர்ந்திருக்கிறார்கள். தகழியை தமிழுக்குக் கொண்டுவந்த சுந்தரராமசாமி தமிழின் முக்கிய படைப்பாளி. அவரைத் தொடர்ந்து ஆ .மாதவன் என்று அந்த மரபு , மலையாளத்தின் இன்றைய இலக்கியப் போக்குகளை தமிழுக்கு அறியக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஜெயமோகன் வரை இன்றும் விடாமல் தொடர்கிறது.

தேர்ந்த இலக்கிய வாசகர்களாக அறியப்பட்ட மூன்று தலைமுறையினர் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியினை இடைவிடாமல் செய்து வருகிறார்கள். சி.ஏ.பாலன், நாகர்கோவிலின் எம்.எஸ்.(எம்.சுப்பிரமணியம் ) தொடக்கி குளச்சல் எம்.யூசுப் வழியாக கே.வி.ஷைலஜா வரையிலான தலைமுறைத் தொடர்ச்சி மலையாள தமிழ் மொழிபெயர்ப்புகளில் இடைவிடாமல் இயங்கிவருகிறார்கள். மலையாளத்தின் இலக்கியப் பிதாமகர்கள் தமிழ் இலக்கியத்திலும் அதே மரியாதையுடனும், மதிப்புடனும் வைத்து வாசிக்கப்படுகிறார்கள்.

index

[குறிஞ்சிவேலன். மொழியாக்கத்திற்காக திசை எட்டும் எனும் இதழை நடத்துகிறார். எம்.டி.வாசுதேவன் நாயரின் இரண்டாமிடம்]

மலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும் – வளர்ச்சிப் போக்கு :

மலையாள இலக்கியம் என்பது எழுத்தச்சன் தொடங்கி நவீன மலையாளம் வரும்வரை பெருமளவு பக்தி இயக்கம் சார்ந்துதான் இருந்துள்ளது எனலாம். ஆனால் நவீன காலக்கட்டத்தை மலையாளம் சுவிகரித்துக் கொண்டு வளர்ந்த வேகத்தைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. தமிழைப் பொருத்தவரை மலையாளத்தின் தோற்றத்துக்கு முன்பே இலக்கணம் தொடக்கி பக்தி , காவியம் வரை நீண்ட பயணத்தை தமிழ் மேற்கொண்டுவிட்டது . ஆனால் நவீன இலக்கியக் காலக்கட்டம் என்று வரும்போது மலையாளத்தை தமிழ் துரத்திக் கொண்டுதான் செல்லமுடிந்தது. வாசிப்பின் முறைகள் , வாசக விரிவு ஆகிய இடங்களில் மலையாளம் பாய்ச்சல்களை நிகழ்த்தியிருக்கிறது . 20 ஆண்டுகள் முன்பு வரை தமிழின் இலக்கிய வாசகர்களுக்கு மலையாள இலக்கியமே ஒப்பீட்டு அளவுகோல் .

மலையாளத்தில் இப்படி பாய்ச்சல் நிகழ அதன் அரசியல், சமூக காரணிகள் முக்கியப் பங்காற்றியிருப்பதாக நான் நினைக்கிறேன் . மலையாள மொழி தனது நவீன காலகட்டத்தை அடைந்த அதே காலத்தில் , கேரளத்தின் அரசியல், சமூக சூழலின் மாற்றங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். கேரளத்தின் சமூக மாற்றத்திலும், அரசியலிலும் பெரும் மாற்றங்களைத் தோற்றுவித்த கம்யூனிச இயக்கங்கள் வாசிப்பினை தமது முக்கிய கருவிகளில் ஒன்றாகக் கொண்டிருந்ததன . அதன் சித்தாந்தங்கள் மட்டுமல்லாமல் அதனை ஒட்டிசெல்லும் அனைத்து இலக்கியப் படைப்புகளும் வாசிப்பிற்கு பரிந்துரை செய்யப்பட்டன. பெருமளவு பேசப்பட்டன. ஆழமான முறைகளில் விவாதிக்கப்பட்டன.

elam

[இளம்பாரதி, மொழிபெயர்ப்பாளர்,

மலையாள நவீன இலக்கியம் இந்த மேடையை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. கேரளத்தின் சமுக, அரசியல் இயக்கங்களின் வளர்ச்சி என்பதும், மலையாள நவீன இலக்கியத்தின் வளர்ச்சி என்பதும் ஒன்றோடொன்று பிணைந்தவை. ஒன்றை மறுத்து மற்றொன்றை பேசிவிட இயலாத அளவு நவீன மலையாள இயக்கமும், கேரள அரசியல்-சமூக இயக்கங்களும் இரண்டறக் கலந்தவை. அந்த வாசிப்புப் பழக்கத்தில் வந்த மலையாள தலைமுறைதான் இன்றும் மலையாள இலக்கிய உலகின் வாசகத் தலைமுறையாகத் தொடர்கிறது.

மாறாக தமிழுக்கு இப்படியான அரசியல், சமூக காரணிகள் எவையும் மேடை அமைத்துக் கொடுத்ததில்லை. சமூக இயக்கமாக உருவாகி வந்த காங்கிரஸ் இயக்கம் கூட விடுதலைப் போராட்ட காலத்தின் லட்சியவாதத்தை தமிழின் இலக்கியகர்த்தாக்களுக்குக் கொடுத்ததேயன்றி வாசிப்பின் பரவலுக்கு எதுவும் செய்ததில்லை. விடுதலை கிடைத்த கையோடு அதுவும் முடிந்தது. தமிழில் பெரும் செல்வாக்குடன் உருவாகி வந்த திராவிட இயக்கங்களும் பரப்பிலக்கியம் என்ற வகையில்தான் தமிழ் மொழியைக் கையில் எடுத்ததேயன்றி தமிழின் நவீன இலக்கியத்திற்கு எந்த பங்களிப்பையும் தரவில்லை. தமிழைப் பொறுத்தவரை அதன் இலக்கியம் என்பது இலக்கியத்தாலேயே வளர்ந்த ஒன்று.

தமிழ் இலக்கியத்தின் ஆரம்பகர்த்தாக்கள் தமது பொருள், உழைப்பு , நேரம் என தம்மிடமிருந்த அனைத்தையும் இலக்கியத்திற்காகவே அர்ப்பணித்து எந்த பலனும் எதிர்பாராமல் உரமாகிப் போனார்கள். அந்த மரபு இன்று வரை தொடர்கிறது. சி.சு. செல்லப்பாவும், க.நா.சுப்ரமணியனும் தொடக்கி வளர்த்த தனிநபர் இலக்கிய இயக்கங்களே தமிழில் நவீன இலக்கிய வாசகனின் வாசல். சிறுபத்திரிக்கை மரபு வழியாக இதைத் தொடங்கிய முன்னோடி இலக்கியகர்த்தாக்களின் மரபு இன்றும் தமிழில் வெளிவரும் 15 சிறுபத்திரிக்கைகள் மூலம் தொடர்கிறது. இந்த பிடிவாதமான இலக்கிய வெறிதான் இன்று தமிழின் முக்கிய எழுத்தாளர்களாக அறியப்படும் ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற ஆளுமைகளை உருவாக்கி எடுத்தது. தமிழின் நவீன இலக்கிய வாசகப் பரப்பு அளவில் குறைந்ததென்றாலும் ஆழமும், வீச்சும் நிரம்பப் பெற்றது .

index

[குளச்சல் மு யூசுப், மொழிபெயர்ப்பாளர். புனத்தில் குஞ்ஞ்சப்துல்லாவின் மீசான் கற்கள், திருடன் மணியன்பிள்ளையின் கதை ]


மலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும் – இன்றைய யதார்த்தம்:

1990 கள் வரையிலும் கூட மலையாள இலக்கிய உலகத்தின் பாய்ச்சல் தமிழுக்கு ஏக்கமாகத்தான் இருந்தது. ஆனால் 90களின் மத்தியில் இருந்து தமிழ் இலக்கியத்தின் போக்கு துரிதமாகத் தொடங்கியது. இன்டர்நெட்டின் வளர்ச்சி தமிழ் இலக்கியத்தின் புதிய பரிணாமமாக மாற ஆரம்பித்தது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை மிகத் துரிதமாகப் பயன்படுத்திக் கொண்டது தமிழ். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது தமிழ் மொழி பேசும் மக்கள் பெருவாரியாக உலகின் பல பாகங்களுக்கும் செல்ல ஆரம்பித்ததுதான். தகவல் தொழில் நுட்பமும், ஸாப்ட்வேர் நிறுவனங்களின் வளர்ச்சியும் இமட்டும் இதற்கு காரணம் அல்ல. அதற்கும் முன்பே தலைமுறைகளாக உலகெங்கும் விரிந்திருந்த தமிழ் பேசும் மக்களின் கூட்டமும் தான். இதனுடன் இலங்கையிலிருந்து அயல்நாடுகளுக்கு சென்று தங்களது வருவாயை ஸ்திரப்படுத்தி மேலெழுந்து வந்த இலங்கைத் தமிழர்களும் ஒரு காரணம். அதே வேளையில் தமிழில் சிறு பத்திரிகைகள் வாயிலாக பெருமளவு வாசகர்களை அடைந்த ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் 2000 களின் தொடக்கத்தில் இணையத்திற்கு வந்தனர். இன்று தமிழில் செயலுடன் இருக்கும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் இணையத் தளம் உண்டு. அவற்றுக்கு கணிசமான வாசகர்களும் உண்டு. இந்த வாசகர்கள் உலக அளவில் இருப்பவர்கள்.

Jayashri-1

[கே வி ஜெயஸ்ரீ, மொழிபெயர்ப்பாளர்]

இன்று தமிழின் மிக முக்கிய படைப்பாளியாக இருக்கும் ஜெயமோகனுக்கு வியாசனின் பாரதத்தை தமிழில் மறு ஆக்கமாக உருவாக்கும் படைப்பூக்கம் இந்தத் தளத்திலிருந்துதான் கிடைக்கிறது. 10 வருடங்களுக்கும் மேலாக தினமும் நீடிக்கப் போகும் இத்தகைய முயற்சி எதுவும் அச்சு வடிவில் இன்று சாத்தியமே இல்லை. இணையம் தரும் அனைத்து சாத்தியக்கூறுகளையும் இன்றைய தமிழிலக்கியம் எடுத்துக் கொள்கிறது. இதன் வெகு முக்கிய பலன் இன்று தமிழ் இலக்கிய உலகத்திற்கு கிடைத்திருக்கும் புதிய வாசகர்களின் பரப்பு. 30 வயதிற்கு உட்பட்ட பெரும் இளைஞர் கூட்டம் உலகளாவிய அளவில் தமிழ் இலக்கியத்திற்கு இன்று கிடைத்திருக்கிறது. நவீன தமிழிலக்கிய உலகிற்கு இன்றிருப்பதைப் போன்ற இளைய வாசகர் கூட்டம் இதற்கு முன்பு இருந்ததில்லை. தமிழ் இலக்கியத்தின் முந்தைய தலைமுறை, மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளிகள் கூட இன்று இந்த வாசகர்களால் ஒளியுடன் எழுந்து வருகிறார்கள்.

images

[கே வி ஷைலஜா, மொழிபெயர்ப்பாளர். கல்பற்றா நாராயணனின் சுமித்ரா போன்ற நூல்கள்]

ஒப்புநோக்க மலையாள இலக்கிய உலகம் இன்னும் அச்சுப் பதிப்புகளை விட்டு வெளியே வரவில்லையோ எனும் சந்தேகம் பலமாக எழுகிறது. சொல்லப்போனால் தமிழர் அளவுக்கே அல்லது தமிழரை விட அதிக நாடுகளில் பரந்திருப்பவர்கள் மலையாளிகளே . தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை சாத்தியமாக்கிக் கொண்டதில் மலையாளிகளுக்கும் பங்குண்டு. ஆனால் மலையாள இலக்கிய உலகத்தின் புதிய தலைமுறையினரை சந்திப்பதில் , புதிய தொழில்நுட்பமான இணையத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் மலையாள இலக்கிய உலகம் சற்று பின்தங்கி இருக்கிறதோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. இணையத்தின் வழியே வாசிப்பினைத் தொடக்கும் ஒரு தமிழனுக்கு இறக்கும் இலக்கிய வாசிப்பின் சாத்தியங்கள் , மலையாள இலக்கியங்களைத் இணையத்தில் தேடும் ஒரு மலையாளிக்கு குறைவே.

இன்னும் அடுத்த கட்டம் நோக்கி நிற்கும் தமிழும், மலையாளமும் இனி தொழில்நுட்பத்தால் ஒரே எழுத்துருவை சந்திக்கப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அன்று தமிழிலக்கியம், மலையாள இலக்கியம் என்ற பிரிவிற்கு பொருளேதும் இருக்கப்போவதில்லை. அதுவரை காத்திருப்பதை விட நாம் இப்போதே சொல்லிக் கொள்வோம் – நாமெல்லாம் இலக்கிய வாசகர்கள் , இலக்கியம் தமிழில் ஆனாலும், மலையாளத்தில் ஆனாலும்.

எம்.எஸ் அவர்களுக்குப் பாராட்டுவிடா 2003

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மதங்கள்- கடிதம்

$
0
0

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

////கிறிஸ்தவம் சமேரியரின் மேன்மையைச் சொல்வதாகவே எழுந்தது. பைபிளிலேயே அத்தகைய வரிகள் உண்டு. பின்னாளில் உலகமதமாக அது ஆனபின்னரும்கூட உலகமெங்கும் சென்று பழங்குடிகளை முற்றாக அழித்தொழித்தது. மிஷனரிகள் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள பழங்குடிகளை ‘ஆன்மா அற்ற’ மக்கள் என்று எண்ணி செய்த அழிவுகள்தான் மானுட வரலாற்றின் மிகப்பெரிய கொடுமைகள். அவற்றை இன்று அந்நாடுகள் முழுக்க ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்கள்//

சமேரியர் என்பது சமாரியர்கள் எனில் இது தவறான தரவு. அவர்கள் கீழ்மக்களாக காணப்பட்டனர். யூதர்களல்ல என ஆச்சார வாத/சமாரியரல்லாத யூதர்கள் அவர்களை கருதினர். எனவேதான் ஏசு சமாரியர் பட்டணங்களுக்கு செல்லாமல் காணாமல் போனவராகிய இஸ்ரவேல் தேசத்தவரிடம் மட்டும் செல்லுங்கள் என கூறுகிறார். சமாரிய பெண்ணிடம் ஏசு பேசுவது அன்றைய சமாரியரல்லாத யூத பார்வையிலிருந்துதான். ஏசுவின் ‘நல்ல சமாரியன்’ (அந்த தலைப்பு ஏசுவுடையதில்லை என்ற போதிலும்…) கதை கூட அடிப்படையில் சமாரியனின் கீழ்மைநிலையினை axiomatic ஆக கொண்டுதான் சொல்லப்படுகிறது. இன்று பரிசேயர் என்பது மத அதிகாரத்தின் குறியீடாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் ஏசு வாழ்ந்ததாக கருதப்படும் வரலாற்று காலகட்டத்தில் பரிசேயர் என்பவர்கள் நிறுவன மதத்தின் கலகக்குரல்கள். பிறப்படிப்படையிலான யூத மத குருமார்களை எதிர்த்தவர்கள். இவர்களை ஏசு எதிர்ப்பதாக காட்டுவதில் பொருள் உண்டு. ஏசுவின் மெசாயத்துவமே பிறப்படிப்படையில் -தாவிதின் வம்சத்தில்- முன்னறிவிக்கப்பட்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆக ஏசு எதிர்த்ததாக காட்டப்படுவது மத அதிகாரத்துக்கு எதிரான கலக குரலை. ஆனால் வரலாற்றின் போக்கில் சந்தைப்படுத்தலின் அவசியங்களில் ஏசு கலகக்குரலாகவும் பரிசேயர் இறுகிய மதபீடமாகவும் மாற்றப்பட்டது ஒரு முரண்நகை.

சமேரியர் என வேறெவரையும் குறிப்பிடும் பட்சத்தில் அப்படி ஒன்றை சொல்ல தரவுகள் அல்ல என்றே என் இந்துத்துவ சிற்றறிவுக்கு தெரிந்தவரை நினைக்கிறேன். யூத விவிலியத்தில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அவர்களுக்கான வாக்களிக்கப்பட்ட பூமி ஆகிய படிமங்கள் பின்னால் கிறிஸ்தவத்தில் தம் விரிவாதிக்கத்துக்கான இறையியல் நியாயங்களாக்கப்பட்டன. இன்றும். மண்டைக்காட்டு திருவிழாவில் ‘விக்கிரகவழிபாட்டை’ விபச்சாரத்துக்கு இணையான பாவமாக சொல்லும் பிரசுரத்தை அளிக்கும் ’ஊழியக்காரர்’ வாக்களிக்கப்பட்ட பூமியான விக்கிரக ஆராதனையாளனின் ஆத்மாவில் ‘கானான் தேச விக்கிரகங்களை’ அடித்துடைப்பதை தம் இறை உரிமையாகவே நினைக்கிறார். வலிமை சேரும் போது விக்கிரக ஆராதனையாளர்கள் அழிக்கப்படுவார்கள். திரிபுராவில் ஜமாத்தியாக்கள் கொல்லப்படுவதை போல. ஆனால் அவை குறித்து எவரும் பேசுவதில்லை. ஏனெனில் நம் பாவ்லாவிய எதிர்வினை கற்பிதங்கள் அப்படி.

//அவ்வாறு பெருமதங்கள் உருவாகாத நாடுகள் எப்படி இருக்கும் என்தற்கு நாம் நம் நாட்டின் வடகிழக்கை, அல்லது ஆப்ரிக்காவை உதாரணம் காட்டலாம். பழங்குடிகள் ஒருவரோடொருவர் பூசலிட்டு ஒவ்வொரு நாளும் என கொன்றுகொண்டிருப்பார்கள். சமூக உருவாக்கமே நிகழ்ந்திருக்காது. ஆகவே வேளாண்மை, வணிகம் எவையும் வளர்ந்திருக்காது. பஞ்சம் வந்து கூட்டம் கூட்டமாக மக்கள் செத்து அழிவார்கள்//

இதுவும் தவறான கருத்து என்றே நினைக்கிறேன். ஒருவரோடொருவர் பூசலிட்டு மடியும் ஆப்பிரிக்க பழங்குடிகள் என்பது ஒரு காலனிய சித்திரம். ஆப்பிரிக்க ஆன்மிக மரபுகள் திட்டமிட்டு காலம் காலமாக கீழ்மைப்படுத்தப்பட்டுள்ளன. வூடோ போன்ற செழுமையான ஆன்மிக மரபுகள் கொச்சைப்படுத்தப்பட்டன. அஷாந்தேக்கள் முதல் ஸூலுக்கள் வரை அவர்களின் பண்பாடும் ஆன்மிகமும் சிறப்பானது. ஏன் காலனிய மிஷனரி காலகட்டத்துக்கு முன்னால் அராபிய மேன்மைவாத இஸ்லாத்துக்கு முன்னால் இந்த இருமதங்களையும் கூட தம் பண்பாட்டுவயமாக்கியுள்ளன ஆப்பிரிக்க பண்பாடுகள். பெருமதங்களில்லாத ஆனால் ஆன்மிக மரபுகள் உள்ள ஆப்பிரிக்க சமுதாயங்களில் காலனியாதிக்கத்துக்கு எதிராக கிளர்ச்சிகள் உருவாகின. அவை அனைத்துமே காட்டுமிராண்டிகளின் ரத்தவெறியாட்டமாக காட்டப்பட்டன. உண்மையில் ஆப்பிரிக்காவின் மிக மோசமான இனப்படுகொலைகள் ஹுட்டு-டட்ஸிகள் பெரும் பேரழிவு கிறிஸ்தவ மிஷினரிகள் இனவாத கோட்பாடுகளை புகுத்திய பின்னரே -அதன் காரணமாகவே- நிகழ்ந்தன. ஆனால் பழி என்னவோ ஆப்பிரிக்க பழங்குடி சமுதாயங்களின் ‘பண்பாடற்ற’ தன்மை மீது சுமத்தப்படும்.

இந்தியாவின் வடகிழக்கிலும் விஷயம் அப்படி ஒன்றும் வேறுபட்டது அல்ல. மிஸோக்கள் ‘தலைவாங்கி‘ பண்பாட்டாளர்களாக இருந்த போது ரியாங்கு எனும் சிறுபான்மை வனவாசி சமுதாயம் ஒழிக்கப்படவில்லை. இன்று அவர்கள் மிஸோரமிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். தம் சமுதாயமே அழிந்து போகும் அழிவின் எல்லையில் உள்ளார்கள். (இவர்கள் பட்டியல் வகுப்பு வனவாசிகள் .செழுமையான பாரம்பரியமும் நுண் கலைவடிவங்களும் அவர்கள் சமுதாயத்தில் உள்ளன. என்றாலும் எந்த ஞானமரபாளர்களின் கருணையின் சிறுதுளியும் இவர்கள் மீது தெறித்திடவும் இல்லை. மாறாக ஞானமரபாளர்களால் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் இந்துத்துவ மூர்க்க வெறுப்பு ஆசாமிகள்தான் தொடர்ந்து இவர்களுக்காக குரல் எழுப்புகிறார்கள்; நீதி மன்றங்களுக்கு சென்று இவர்களுக்காக அல்லாடுகிறார்கள் என்பது இன்றைய காந்திய முரணியக்கமாகக் கூட இருக்கக்கூடும்.)

நாக்டோக்கள், ஜமாத்தியாக்கள், நாகர்கள், மிஸோக்கள் இவர்கள் அனைவருமே பஞ்சம் என்பதை அறியாதவர்கள். பெருமதங்கள் இந்த பிரதேசங்களுக்கு நுழைவதற்கு முன்னர் அங்கிருந்த குழுப்பன்மை பண்பாட்டு மரபுப்பன்மை இன்று என்னவாயிற்றூ என்பதை பார்த்தாலே இது புரியும். பிரதேச சச்சரவுகளும் பகைமைகளும் இருந்தாலும் இன ரீதியிலான அழிப்பொழிப்பை சிந்திக்காதவர்கள். ஆனால் இன்று ஒவ்வொருவரும் தம்மை ஒரு தேசமாகவும் தனி இனமாகவும் கருதி அடுத்தவரை அழித்தொழிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த கருத்தியலை இவர்கள் வந்தடைவதில் வினையூக்கியாக இருந்த பெருமதவாதிகள் எவர் என கூறினால் இக்கடிதமே இந்துத்துவ வெறுப்பை கக்கும் ஒன்றாக முத்திரை குத்தப்பட்டுவிடும். (இல்லாவிட்டாலும் அந்த முத்திரை விழத்தான் செய்யும் என்பது வேறு விஷயம்.)

சுருக்கமாக பண்பாடு, வர்த்தகம், வேளாண்மை ஆகியவற்றுக்கும் பெருமதங்களுக்கும் உள்ள தொடர்பு அவசியம் என்பது ஆதாரமற்றது. அவ்வளவுதான். இன்னும் சொன்னால் முக்கியமான பெருமதங்களின் பரவலுக்கு முன்னரே சமுதாயங்கள் வேளாண்மை, அரசு நிர்வாகம், வர்த்தகம் , அறக்கோட்பாட்டு சிந்தனைகள் ஆகியவற்றில் முக்கிய இடங்களுக்கு வந்துவிட்டிருக்கின்றன.

//கிறிஸ்தவப் புனிதர்களான புனித தாமஸ் அக்வினாஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்ற பெரும்பாலானவர்கள் மானுடரின் ஏற்றத்தாழ்வைப்பற்றி மிகத்தீர்க்கமாகப் பேசியிருப்பதையும் அவர்களின் அக்கருத்துக்கள் பலநூறாண்டுக்காலம் நாவிதர், தச்சர் போன்ற பலவகையான மக்களை அடிமைவாழ்க்கைக்குத் தள்ளியதைப்பற்றியும் ஐரோப்பிய வரலாற்றை வாசித்தால் அறியலாம். கத்தோலிக்கத் திருச்சபை பலநூறாண்டுக்காலம் நிலஅடிமைமுறையைப்பேணி நிலைநிறுத்தியது.ஆனால் கிறிஸ்துவின் அடிப்படைச்செய்தி என்பது ஆன்மிகமானது என்பதையும் காணலாம்.///

தாமஸ் அக்வினாஸ் பொதுவாக அகஸ்டைனின் நிலைபாட்டையே ஏற்றுக்கொண்டார். அடிமைமுறையை ஆதிபாவத்துடன் தொடர்பு படுத்தி அதற்கான இறையியல் நியாயப்படுத்துதலை அளித்தவர் புனித அகஸ்டைன். மார்ட்டின் லூதர் கிங் காந்திய கிறிஸ்தவ கறுப்பின இறையியலாளர். போராளி. மார்ட்டின் லூதரே மிக மோசமான உழவர் எதிர்ப்பும் யூத எதிர்ப்பும் கொண்டவர். வேகத்தவறென நினைக்கிறேன்.

ஞானமரபு தவறுகளை இந்துத்துவ ’கீழ்மகன்’களின் (உங்கள் வார்த்தைதான்) குரல்கள் சுட்டிக்காட்டுவது தவறுதான். என்ன செய்ய கலிகாலம். ’வென்று கடந்துவிடு’ங்கள்.

மரியாதையுடன்

அரவிந்தன் நீலகண்டன்

அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன்,

இரு சொற்பிழைகளையும் சரிசெய்து விட்டேன்.நன்றி. யூத இனம், மார்ட்டின் லூதர்.

மற்றபடி நீங்கள் பழங்குடிச்சமூகங்களைப்பற்றிச் சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆப்ரிக்க, வடகிழக்குப் பழங்குடிகளின் பரஸ்பர ஒழிப்பு மனநிலையை அவர்களின் வரலாற்றை புறவயமாக அறியும் எவரும் உணரமுடியும். நேரிலேயே காணவும் முடியும். நிலம் அளவில்லாது இருந்து வாழ்க்கைத்தேவைகள் குறைவாக இருந்த காலத்தில் அப்போர்களின் அழிவுக்கு அப்பால் அவ்வினங்கள் நீடிக்கவும் பழங்குடிப் பண்பாடுகளை உருவாக்கிக்கொள்ளவும் முடிந்தது. ஆனால் வளர விரிய அவை முயலவில்லை. அவற்றைவைத்து அவை உயர்பண்பாடுகளை கட்டி எழுப்பியிருந்தன என வாதாடுவதெல்லாம் மிகை.

நவீனயுகம் பழங்குடிகளின் தேவைகளை, தகவல்தொடர்புகளை, பயணங்களுக்கான வசதிகளைப் பெருக்கும்போது அம்மோதல்கள் மேலும் தீவிரமடைகின்றன. மேலும் அழிவுத்தன்மைகொள்கின்றன. அம்மனநிலை பழங்குடிகளின் பண்பாட்டிலேயே வேரூன்றியது. வலுவான பெருமதங்களால் தத்துவ அடிப்படையில் அவை தொகுக்கப்பட்டால் மட்டுமே பழங்குடிச்சமூகங்கள் தேசமென்ற அடுத்த கட்ட நிலையை அடைகின்றன. வடகிழக்கில் பௌத்தம் வேரூன்றிய மாநிலங்களுக்கும் வேரூன்றாத மாநிலங்களுக்கும் இடையே இருக்கும் இந்த மாபெரும்வேறுபாட்டை பலமுறை கண்கூடாகவே கண்டிருக்கிறேன். பொதுவாக என் கருத்துக்கள் நான் செய்யும் பயணங்களிலிருந்து உருவாக்கப்பட்டவை. நூல்களைத் துணைகொள்கிறேன், அவ்வளவுதான்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

சீனுவுக்கு- கடிதங்கள்

$
0
0

அழுந்தி பகிர வேண்டி பரவி வந்த எழுத்துக்கள்…

“வேதனையின் உச்சத்திலும், உவகையின் உச்சத்திலும் …” முனகல் மட்டும் அல்ல. உள்ளே உறையும் நிசப்தம் கூட. வலியின் மற்றும் மகிழ்வின் உச்சத்தில் தனித்து நிற்கையில் வரும் ரீங்கரிக்கும் நிசப்தம். பேருந்து எனும் பெரு வாழ்வில் ஏறி மற்றும் இறங்கி சென்றபடி இருக்கும் பயணிகள் போல வார்டுகளில் நோயாளிகள். வினை பயன் தீர்க்க வேண்டி வந்தது போல கிடந்தது இருந்து வலித்து அழுது அலர்ந்து செல்கையில் பிரசவ வார்டில் புதிய தளிர்களின் வரவுகள் தரும் வானவில்களின் கலவைகள்.

அவரின் அம்மாவை பற்றிய வரிகள் நெகிழ்வு தந்தது. பழைய தலைமுறையின் கடைசி நூல் முடிச்சு. பாசம் எனும் தோணி கொண்டு சொர்க்கம் செல்லும் ஆசிர்வாதங்கள். மக்கள் எனில் தனது வேறா பிறர் வேறா என்ன அவர்களுக்கு? சில அம்மக்களின் கைகள் ஏந்துவதற்கும் விரல்கள் விழி நீரை சுண்டி விடுவதற்கும் வரம் வாங்கி வந்தவை…

நீள் பயண பேருந்தில் பக்கத்துக்கு இருக்கையில் சுகமான துணை ஆள் அமைவது போன்றது சீனுவின் வரிகள். கேட்டதாக கூறவும்

அன்புடன்,
லிங்கராஜ்

*

பிரிய ஜெ,

கடலூர் சீனுவின் கடிதம் படித்தேன். துயரநேரத்தில் அவர் சுற்றியிருக்கும் அனைத்தையும் அவதானிப்பதும் தன் மகள் துயரம் தாண்டி அன்னை அனைவரிடமும் அன்புடனிருப்பதும் படிக்க நெகிழ்ச்சியாக இருக்கிறது. துயரங்களில் அன்னைகள் தன் மகளை மட்டும் மனிதப்பிறவியாகவும் மற்ற அனைவரையும் வேற்று கிரகத்தினர் போல் பார்ப்பதையே இதுவரை பார்த்திருக்கிறேன். அவருடைய நல்ல மனம் அவருக்கு ஆறுதலையும் திடத்தையும் தருவதாக. அவருடைய தங்கை விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

அன்புடன்
மீனா

*

அன்பு ஜெயமோகன்,

உங்கள் மின்னஞ்சலுக்குக் கடிதம் எழுதி நீண்ட நாட்களாகி விட்டன. வெண்முரசுவைத் தொடர்ந்து வாசிக்க இயலாத சூழல். ஆகவே, கடிதங்களுக்கு வாய்ப்பு அமையவில்லை. மற்றபடி, தங்கள் இணையதளக் கட்டுரைகளையும், பதிவுகளையும் படிக்கத் தவறுவதில்லை. இன்று(செப் 3, 2015) வெளியாகி இருந்த கடலூர் சீனுவின் மருத்துவமனை அனுபவங்கள் என்னைச் சில மணிநேரங்கள் உலுக்கி எடுத்துவிட்டன. மேலும், உள்ளுக்குள் ஒருவிதக் குடைச்சம் தொடர்ந்தபடியே இருந்தது. இக்கடிதத்த்தைத் துவங்கியபொழுதில் கொஞ்சம் ஆசுவாசம் கிட்டியது.

செய்க தவம் எனும் எளிய வரியுடன் துவங்கி இருந்தார் கடலூர் சீனு. அவ்வரியின் தொடர்ச்சி மிக முக்கியம். செய்க தவம்; அன்பிற்சிறந்த தவமில்லை. பாரதியை நான் சரியாகப் படிக்கவில்லையோ எனும் குற்ற உணர்வை ஏற்படுத்தும்படியான வரிகளை அவ்வப்போது யார் மூலமாவது எதிர்கொள்வதுண்டு. இப்போது சீனுவின் முறைபோல் தெரிகிறது. நம் மரபின் ஆணிவேர் சரியாகத்தான் இருந்திருக்கிறது. “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள்” எனும் வள்ளுவனில் துவங்கி “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே” எனும் வள்ளலாரின் காலம் வரை அன்பை முன்னிறுத்திப் பேசாத சான்றோர் இல்லை. நம் சமயத்தின் பக்தி(உணர்வு) மற்றும் சித்தி(அறிவு) தளங்களிலும் அன்பே வியந்தோதப்படுகிறது. ”அன்பே தகளியாய்” என்று பூதத்தாழ்வாரும், “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிகிலர்” என்று திருமூலரும் பாடியதை நினைவுக்குக் கொண்டு வருவோம்.

தவம் எனும் சொல்லை துறவறத்தோடு முடிச்சு போட்டே நாம் பழகிவிட்டோம். அங்குதான் ஒரு மாற்றுப்பார்வையை பாரதி முன்வைக்கிறான். செய்க தவம் எனச் சொல்லும் அவன் அன்பையே தவமாக பின் அடையாளம் காட்டுவது திடும்மென நிகழ்ந்த ஒன்று அல்ல என்றே நான் கருதுகிறேன். அக்கருத்து ஒரு மறைசரடாக நம் மரபில் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன். ”உற்றநோய் நோன்றல்”, “உயிர்க்கு உறுகண் செய்யாமை” போன்றவற்றைத் தவத்தின் உருக்களாக அன்றே வள்ளுவன் சொல்லி இருக்கிறான். பாரதிக்கும் ஒருபடிமேலாக தவத்தின் உருவாக “உற்றநோய் நோன்றலை” வள்ளுவர் முன்மொழிவதை ஆழ்ந்து யோசிக்க வேண்டும். நோய் என்றவுடனே நாம் அய்யோ, குய்யோவென்று கூப்பாடு போடுகிறோம். நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று வெந்து குமைகிறோம். உற்றநோய் நோன்றல் எனும் வாக்கியத்தின் அர்த்தம் விளங்கிக்கொள்ளும் ஒருவனுக்கு நோய்கள் பெரிதான சுமையாக இராது. மேலும் சமயத்தின் மையப்பொருளை நெருங்கும் ஒருவனுக்கு அவனின் உடல் மனநோய்களுக்கான மருந்தாக அதுவே இருப்பது புரியவரும். கொஞ்சம் கொஞ்சமாக அறிவுவழிப்பட்டிருக்கும் சிகிச்சை உணர்வுவழிக்கு நகரும்போது சிகிச்சை இயல்பாக அமையும் அற்புதமும் நிகழ்கிறது. வெப்பு நோய், குட்ட நோய் போன்ற கொடிய் நோய்கள் சிகிச்சையின்றியே நம் சமயத்தில் குணமாகி இருக்கின்றன என்பது இன்றைய தலைமுறை அறிந்திராத செய்தி.

“கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்” எனும் வரியை நேரிடையாக ’பகுத்தறிவு’ அர்த்தம் கொண்டு விளங்கிக்கொள்ளக் கூடாது. நம்பிக்கை எனுஞ்சொல் புறவயமானதன்று; முழுக்க அகவயமானது. அதனால்தான் தங்கள் “கடவுள் இல்லை” எனும் நம்பிக்கையில் உயிர்ப்புடன் இருக்கின்றனர் நாத்திகர்கள். “கடவுள் இருக்கிறார்” என்பது எப்படி ஒருவித நம்பிக்கையோ அப்படி “கடவுள் இல்லை” என்பது அதற்கு எதிரான நம்பிக்கை. அவ்வளவே. இரண்டிலும் நம்பிக்கைதான் அடிப்படை. அந்நம்பிக்கைக்கு வர குறைந்தபட்ச அறிவும் அவசியம். அதற்கு மேற்கொண்டு அறிவால் நமக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. நம் அறிவுத்துறையில் நிகழ்ந்த மாற்றங்கள்தான் நம் உடல் மன நோய்கள் அதிகரிப்புக்கான காரணம் என்பது என் தீர்மானமான கருத்து. உயிர் – உடல் – மனம் எனும் படிநிலையில் நம் சமயம் உயிரை முதன்மைப்படுத்துவதன் ஊடாக நம் அச்சத்தையும் நோய்களையும் களைந்தது. அறிவுத்துறைகளோ உடல்-மனம் என்பதாக மட்டும் நம்மை அடையாளப்படுத்தி நம்மைப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. திரும்பவும் சொல்கிறேன். சமயம் என்பது முட்டாள்தனமன்று; பொதுப்படையான பொருள் கொள்ளக்கூடியதும் அன்று. ஒரு குறிப்பிட்ட நிலத்தின் மரபும் வாழ்வியலுமே சமயமாக உருக்கொண்டிருகிறது. அதன் அடித்தளத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த முன்னோர்களின் நல்வாழ்வு உயிர்ப்போடு இருக்கிறது. அதைக் கண்டு தெளிபவனே சமயி. கடவுளை நம்புங்கள், நம்ப வேண்டாம் என ஒரு சம்யி வலியுறுத்துவதில்லை. மாறாக, தனிமனிதனை “நீ யார் என ஆயத்துவங்கு” எனத் தூண்டுவதே அவன் வேலையாய் இருக்கும். ”தம்மை உணரார் உணரார்” என்பது மெய்கண்டாரின் தரிசனம்.

”நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” எனும் சிந்தனையை அப்படியே நேரடியாக புரிந்து கொள்ளாமல் நம் உற்சாகத்துக்கு வலுசேர்க்கும் சக்தியாக எடுத்துக் கொள்கிறோமோ அப்படித்தான் கடவுள் நம்பிக்கையும். ”கடவுளை முழுதாக நம்பி அவனிடம் தன்னை ஒப்படைக்கும் ஒருவன் காப்பாற்றப்படுகிறான்” என்பதும் அப்படியான உந்துசக்தியே. அப்படியான நம்பிக்கை இல்லாமலேயே என்னால் வாழ்ந்துவிட முடியும் என்று சொன்னால் அவனையும் சம்யம் அணைத்துக்கொள்கிறது. சமயம் முன்வைப்பது எப்போதும் காரணம் அற்று மகிழ்ச்சியாய் இருக்கும் ஒருவித ஆனந்த்த்தையே. எவ்வழியில் நாம் அதை அடைந்தாலும் சமயம் மறுதலிப்பதில்லை. அதேநேரம், அவ்வானந்த்த்தை உடலுக்கும் மனதுக்கும் ஊறுவிளைவிக்கும் செயற்கைக்காரணிகள்(போதைப்பொருட்கள்) வழி அடைய நினைப்பதும் முட்டாள்தனம். அது வருவிக்கப்பட்ட ஆனந்தமாக இருக்குமே ஒழிய், இயல்பான ஆனந்தமாக இராது. நம் சமயம் வலியுறுத்துவது இயல்பான ஆனந்த்த்தை. நடராசப்பெருமானின் ஆனந்த நடனமும், முல்லைத் திருமாலின் குழலூதும் இசையும் அவ்வியல்பையே காட்சிப்படுத்தி இருக்கின்றன. சிலநேரங்களில் உயிர்க்கு நேரும் உறுகண் கண்டு நம்மில் வெளிப்படும் அழுகையும் சமயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. “கசிந்துருகி கண்ணீர் மல்கி” எனும் சொல்லாடல் இறைவனை மனதில் கொண்டு மட்டுமன்று.

எதையோ சொல்ல வேண்டும் என்று துவங்கி எங்கேயோ சென்றுவிட்டது என்பது போலிருக்கிறது. என்றாலும், நான் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டதான நிறைவு உள்ளுக்குள் முகிழ்த்திருக்கிறது. அந்நிறைவின் ஓரமாய் அழுதபடி நின்றிருக்கும் என்னைக் காண நீங்கள் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. உடம்பின் இடது பாகங்கள் முழுக்கச் செயலிழந்த நிலையில் மனவளர்ச்சி அற்ற இருபது வயதுப் பெண்ணின் முகத்தை மனதுக்குள் கொண்டு வாருங்கள்; போதும். செய்க தவம். அழுகையிற் சிறந்த தவமில்லை.

முருகவேலன்,

படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,

கோபிசெட்டிபாளையம்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தன்வரலாறுகள்

$
0
0

குழுமத்தில் நண்பர் ஒருவர் தமிழின் சிறந்த அபுனைவுகள் பற்றிக் கேட்டிருந்தார். அதற்காக நான் தன்வரலாறுகளின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தேன்.  பாரதி, வ.உ.சி ஆகியோர் செய்யுளில் தன்வரலாறுகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றைத் தவிர்த்துவிட்டேன்.

என் பார்வையில் தமிழில் நல்ல தன்வரலாறுகள் மிகமிகக் குறைவு. சுயசரிதையை எழுதுபவர் தான்வாழ்ந்த காலகட்டத்தை நேர்மையாகப் பதிவு செய்திருந்தாலே அது முக்கியமான நூலாகிறது. ஆனால் பெரும்பாலும் அது நிகழ்வதில்லை. அதற்கு அவருக்குத் தன்னைவிட்டு வெளியே பார்க்கத் தெரிந்திருக்கவேண்டும். பல பிரபலங்களால் அது முடிவதில்லை

சிறந்த உதாரணங்கள், எம்.ஜி.ஆர் எழுதிய ‘நான் ஏன் பிறந்தேன்?’ மு.கருணாநிதி எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’.இரண்டுமே வீங்கிப் போன அகந்தை மட்டுமே மாறுவேடமிட்டு ஆடும் மோசமான நூல்கள். தமிழின் பெரும்பாலான தன்வரலாறுகள் இந்த வகையானவை.

இன்னொன்று, ஒரு காலகட்டத்தை ஒரு பெரிய வாழ்க்கைப் பரப்பை எழுதுகிறோம் என்ற பொறுப்பே இல்லாமல் போகிற போக்கில் எழுதுபவை. சிறந்த உதாரணம் கண்ணதாசனின் ’வனவாசம்’.

நல்ல  தன்வரலாறு, ஒரு ஆளுமை தன் வாழ்க்கையைப் பற்றி எழுதும் போக்கில் வரலாற்றின்,பண்பாட்டின் ஒரு காலகட்டத்தையே எழுதிவிடுபவைதான். தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளை நுட்பமாகப் பார்த்துச் சொல்லும் ஒருவராலேயே அது சாத்தியமாகிறது.

முட்டிமோதி என் தேர்வுக்குச் சிக்கும் 12 முக்கியமான  தன்வரலாறுகளைச் சொல்லியிருக்கிறேன்

1. என் சரித்திரம் -உ.வே.சாமிநாதய்யர்

2. ஜீவித சரிதம்- ரெட்டைமலை சீனிவாசன்

3. என் கதை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை

4. வாழ்க்கைக்குறிப்புகள்-திரு.வி.க [இருபகுதிகள்]

5. எனது வாழ்க்கைப்பயணம்- கோவை அய்யாமுத்து

6. என் வாழ்க்கை – ந. சுப்புரெட்டியார்

7. எனது நாடகவாழ்க்கை – அவ்வை டி.கே. சண்முகம்

8. நினைவுகள்- க.சந்தானம்

9. உலகம் சுற்றும் தமிழன் – ஏ.கே.செட்டியார்

10. எனது வாழ்க்கை அனுபவங்கள்- ஏ.வி.மெய்யப்பச்செட்டியார்

11. நினைவலைகள் -தி .செ. சௌ. ராஜன்

12. நினைவலைகள் – நெ.து.சுந்தரவடிவேலு

மறுபிரசுரம். முதற்பிரசுரம் -Aug 9, 2011

தொடர்புடைய பதிவுகள்

மதங்கள்- இன்னொரு கடிதம்

$
0
0

அன்புள்ள ஜெ,

நண்பர் அரவிந்தன் நீலகண்டனின் கடிதம் கண்டேன். ஒரு சில தெளிவுகளை முன்வைக்க விரும்புகிறேன். கிறித்துவம் முதன்முதலில் யூத மதத்திலிருந்து பிரிந்த சிறு யூத குழுவாகவே அமைந்தது. ஆனால் பிற இனத்தவரையும் சேர்த்துக்கொள்ளவேண்டும் எனும் முடிவு பீட்டர் பவுலின் காலத்திலேயே முடிவு செய்யப்பட்டது மட்டுமல்ல மிக முக்கியமான ‘ஜென்டைல்’ திருச்சபைகள் உடனடியாகவே உருவாகி வளரவும் செய்தன. சில ஆதாரங்களின்படி இந்த பிற இன திருச்சபைகள் உருவாகும் முன்னரே ‘சமாரிய கிறித்துவம்’ இருந்தது. பிலிப் என்பவர் சமாரியர்களின் மத்தியில் ஏற்கனவே இருந்த சில கிறித்துவர்களுடன் இணைந்து சமாரிய கிறித்துவத்தை வளர்த்தார் என்பது அப்போஸ்தலர் பணியில் குறிப்பிடப்படுகிறது. இயேசு சமாரியர்களை வெறுத்தார் அல்லது வெறுக்க சொன்னார் என்பதற்கு எந்தவித நேரடி ஆதாரங்களும் கிடையாது. இயேசு ‘சமாரியனே நல்லவனாய் இருக்கும்போது நீங்கள் ஏன் இருக்க முடியாது’ என்று சொல்வதாக எடுத்துக்கொண்டாலும் அது ஒரு இனத்துக்கு எதிரான நேரடியான அறைகூவலெல்லாம் அல்ல. அது ஒரு கதை என்கிறவகையில் எப்படி வேண்டுமானாலும் புரட்டி பொருள்கொள்ள முடியும். அதற்கு ‘நல்ல சமாரியன்’ என கிறித்துவர்கள் பெயர் வைத்துக்கொள்வதிலும் நண்பருக்கு இருக்கும் வயித்தெரிச்சலை புரிந்துகொள்ளமுடியவில்லை. ஏனென்றால் இனத்தூய்மை பேசிய இயேசுவின் பிள்ளைகள் பைபிளை திரித்து அதை ஒரு அற்புதமான மானுட அனுபவத்தின் கதையாக மாற்றிவிட்டதில் ஆச்சர்யம்தான்.

கிறித்துவின் பிறப்பு இனத்தூய்மைவாதத்தில் அமைந்தது என்பது புரட்டு என்றே சொல்லலாம். பொதுவாக கிறித்துவம் என நாம் பரவலாக அறிந்திருக்கும் எந்த அமைப்புமே இனத்தூய்மைவாதத்தின் அடிப்படையில் அமைந்ததே இல்லை. இன்றளவும் அப்படி ஒரு திருச்சபையில் இந்த இனத்தவர்தான் இந்தப் பதவியில் இருக்க முடியும் என்றெல்லாம் ஒட்டு மொத்த திருச்சபையின் பதவிகளுக்கும் எந்த அமைப்பும் இல்லை. தனது ஆரம்ப காலத்திலேயே அது பல்வேறு இனங்களின் அமைப்பாக மாறியது. புனித பால் ஒரு மூன்றாம் பாலினத்தவரை மதம் மாற்றியதாகவும் பைபிளில் படிக்க முடிகிறது. இயேசுவின் பிறப்பு தாவீதின் வழியில் சொல்லப்படுவது மெசியாவின் பிறப்பை ஒட்டிய முன்னறிவுப்புகளை (Prophecies)பூர்த்தி செய்யும் விதமாக அன்றி வேறொன்றும் அதிலிருந்து பெறுவதற்கில்லை. கிறித்துவமும் அதை இனத்தூய்மைக்கான முகாந்திரமாய் எடுத்துக்கொள்ளவுமில்லை என்பது மிக அப்பட்டமான உண்மை..

அடிமை அமைப்பை உருவாக்கியதில் கிறித்துவத்துக்கு மிக வருந்தத்தக்க வகையில் ஒரு பங்கு இருந்தது என்றாலும் அதே அடிமைகள் அடிமைகளாய் இருக்கையிலேயே கிறித்துவர்களாக இருக்கவும் முடிந்தது என்றால் எங்கே வருகிறது கிறீத்துவ இனத்தூய்மைவாதம். இயேசுவே பிற இனத்தவருடனும் பாவிகளுடனும் நேர‌டியாக உறவாடியவர் என பைபிள் குறிப்பிடுகிறது.

பரிசேயர்கள் அன்றைய பிரபுக்களான சதுசேயர்களுடன் உடன்படாமல் விவாதித்திருக்கலாம் ஆனால் அவர்கள் பழைய சட்டத்தின்படி வாழ்ந்தவர்களே, ஆசாரங்களை பின்பற்றிய யூதர்களே. அவர்கள் இயேசுவைப்போல ஒரு உலகளாவிய சகோதரத்துவத்தை போதித்தவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதுவே இயேசு அவர்களை மறுப்பதற்கான முகாந்திரமும். அவர்கள் போதிப்பதை செய்யுங்கள் ஏனனில் அவர்கள் மோசேயின் சட்டத்தை போதிக்கிறார்கள் ஆனால் அவர்கள் நடந்துகொள்வதை பின்பற்றாதீர்கள் என்பதே இயேசுவின் போதனை.

அக்குவினாசும் அகஸ்டினும் அவரவர் காலத்தில் இருந்த அடிமை அமைப்பை உருவாக்கவில்லை. அவர்கள் அதற்கான இறையியல் காரணங்களை தேடினார்கள். அவர்களின் வழக்கப்படி அவர்களது இறையியல் பார்வைகளை முன்வைத்தனர். அக்குவினாஸ் பிளேட்டோவால் மிகவும் இன்ஸ்பையர் ஆனவர். பிளேட்டோவின் இயற்கையிலேயே சிலர் ஆளவும் பிறர் ஆட்டுவிக்கவும் பிறப்பிலேயே முடிவானது போன்ற கருத்தை அக்குவினாஸ் இறையியலாக்கினார். பாவத்தை தவிற வேறெதுவும் இப்படி ஒரு நிலைக்கு விளக்கமாக அமையாது என அவர்கள் கருதினர். கிறீத்துவம் உலகின் பல்வேறு சிந்தனை மரபுகளுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருப்பது. அது மிக பலமான அமைப்பாக அரசியல் பலத்துடன் அமைந்தபோது சகிக்கமுடியாத பல தவறுகளையும் செய்துள்ளது. ஆனால் இயேசுவின் போதனைகளின் அடிப்படை விழுமியங்கள் ஒருபோதும் வெறுப்போ, இனவாதமோ அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கும் பல புனிதர்களையும் சேவகர்களையும் உருவாக்கி உலகுக்களித்தது. வெறும் சேவையை மட்டும் மனதில் கொண்டு எல்லா இன மக்களுக்காகவும் தன்னலமின்றி உழைத்து நம்பிக்கையிழந்த இனங்களுக்கெல்லாம் கருணையின் சிறு கீற்றால் ஒளிகாட்டிச் சென்ற லட்சக்கணக்கான கிறீத்துவ பாதிரியர்கள், கன்னியர்கள், போதகர்கள், சேவகர்கள் அனைவரும் அடிப்படையில் ஒரு இனவெறியரை, இனவெறுப்பை போதித்த ஒருவரை பின்பற்றியிருக்கிறார்கள் என்பது அரவிந்தன் நீலகண்டன் உண்மையில் நம்புவதுதானா?

அன்பிற்காகவன்றி வேறெந்த குறிக்கோளுடனும் பைபிளை விளக்கக்கூடாது என அகஸ்டின் சொன்னதை எல்லா மத புத்தகங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் நாம் எடுத்துக்கொள்வோமானால் உலகம் எத்தனை அற்புதமானதாயிருக்கும்.

சிறில் அலெக்ஸ்

தொடர்புடைய பதிவுகள்

காடு- கடிதம்

$
0
0

அன்புள்ள ஜெயமோகன்,

அன்றும் இன்றும் என்னை ஈர்ப்பது காடு நாவலின் சூழல்தான். அயனி மரம், மிளா, வேங்கை மரம், பாறை, குட்டப்பன், சிநேகம்மை, ஜோடி எருமை, தேவாங்கு, நீலி…. இப்படி சூழலிலிருந்து ஒரு விலகல் என்னிடம் இல்லை. என்னை உள்ளிழுப்பதாகவும், நான் விரும்பி உள் நுழைவதாகவும் உள்ளது. மறு பக்கம் நகர்- கிரியின் அம்மா, அப்பா, மாமா, வேணி, மாமி, போத்தி, கண்டன் புலையன், அம்பிகா அக்கா….நாவல் நிகர் வாழ்க்கைதானே! நாவலின் பல இடங்கள் பக்கம் புரளும் உணர்வின்றி ஆக்கின. நீலியை சந்திக்கச் செல்லுமிடம், மழையின் வருகை, குறிஞ்சி மலர், மீண்டும் அப்பூவில் தேனெடுக்க நூறு தலைமுறை காத்திருக்க வேண்டியதை அறியா வண்டு, கீரக்காதன், கம்பன், கபிலன்…

என் பார்வைக்கு காடு நாவலில் பிரதானமாகத் தொனிப்பது, காட்டிற்கும் நகருக்குமான வேறுபாடு. காடு நேரடித்தன்மை கொண்டதாக இருக்கிறது. எல்லா உணர்வுகளும் கட்டற்றதாக மூர்க்கமானதாக வெளிப்பாடு கொள்கிறது. நகரம் சிறுமைகளால் கொப்பளிக்கிறது-காரணம் அங்கு பலதும் ஒளிக்கப்படுகிறது. காட்டில் மிஷன் ஆஸ்பத்திரியிலிருந்து கிரி தன் மாமாவின் இறப்புக்கு வரும் இடம் நேரிடையாக காட்டை நகரத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. காடு பிரம்மாண்டமான எளிமையுடன் இருக்கிறது. எதையும் பெரிதாக காடு சட்டை செய்வதில்லை. அது பாட்டுக்கு தேமேனென்று இயங்குகிறது. அதன் மனிதர்கள் அதன் பிரம்மாண்டத்தால் ஆணவம் நசுக்கப்பட்டதாலோ என்னவோ, நேரிடையாக உள்ளனர், மிருகங்களின் நேரடித்தன்மை. சிநேகம்மையிடம் கிரி “இது தப்பில்லையா” எனக் கேட்கும் போது “ஆரயும் நம்பவச்சு ஏமாத்துனா தப்பு ஏமான்” என்கிறாள். ராசப்பன் எதிர் குடிலில்தான் தங்கியிருக்கிறான்.

இரட்டையர்களின் உறவு, அவர்கள் சண்டையிடுதல், ஆஸ்பத்திரி வரை சுமந்து செல்லும் மூர்க்கம்…இப்படி காட்டின் கட்டற்ற தன்மையுடனேயே அதன் மனிதர்களும் இருக்கிறார்கள். காடும் அதன் மனிதர்களும் இயற்கையின் கட்டுகளால் பிணைக்கப்பட்ட கட்டற்றவர்கள்தாம்… நகர் ஒழுங்கை உருவாக்கிய வண்ணம் உள்ளது. தெரு வீடு என எல்லாம் ஒழுங்கை நோக்கிய முயற்சிதான். நாவலில் வரும் உறவுகள் மிக சிதைந்ததாகவே உள்ளது. ஒளிவு மறைவுகள் துரோகம் என ஒழுங்கு நடிக்கப்படுகிறது. நகர் பெருங்கூச்சலுடன் நடிக்கிறது. காடு அமைதியாக இயல்புடன் உள்ளது.

காடு- எளிமை. நகர்-சிக்கல். இப்படித்தான் சொல்ல முடிகிறது என்னால். நகர் காடு என இரண்டு சித்திரங்கள் என்னுள் எஞ்சியுள்ளது. காட்டில் மரணம் கூட எளிமையாக நிகழ்ந்து விடுவதாகத் தோன்றுகிறது. நகரில் எல்லாம் சிடுக்குப்பிடித்து கிடக்கிறது. நகரத்தில் தொலைந்து போவது பற்றிய பயம் எனக்கு நிறைய. நாவல் வாசித்து முடித்து மனம் ஓய்ந்த பின் வழக்கமாக எனக்குத் தோன்றும் எண்ணம் எழுந்தது “மனுஷங்ககிட்ட என்னமோ ஒரு தப்பு இருக்குப்பா” என்று. ஒரு பதட்டத்தையே காடு நாவல் எனக்கு அளிக்கிறது. அமைதியாக எனக்கு ஒரு பிழையைச் சுட்டுகிறது. பிழை இருப்பது உறுதி. அது ஏதென்று அறியேன் அடியேன். சுயநலத்திலிருந்து தியாகத்திற்கு, காமத்திலிருந்து காதலுக்கு, வன்முறையிலிருந்து வீரத்திற்கு இன்னும் நாம் முழுமையாக தாண்டவில்லை.

காமம் காமம் என்ப…நான் இன்னும் இந்த வரியைக் கடக்காதவன். அது அணங்கோ பிணியோ அன்று என்பது சற்று ஆறுதலாக இருக்கிறதே ஒழிய, என்னால் ஏற்க முடியவில்லை. காமம் என் வரையில் தவிப்புதான். காதல், நீலிமீது வருவது. காமம், மாமி மீது வருவது. இரண்டும் தாபம்தான். அவற்றிற்கிடையேயான வேறுபாடு நாவலில் தெளிவுறத் தொனிக்கிறது. மாமியை வேங்கை மரம் கீழ் தங்க நிறப் பூக்கள் சொறிய நிற்க வைத்து கற்பனை செய்தால் அதன் அபத்தம் புரியும். காமத்திற்கு காதலுக்கும் தெளிவான வேறுபாடு என்ன?… அய்யரைப் போல்தான் பதில் சொல்ல முடியும் “அதை எப்டி சொல்றது….லீவிட் ப்ளீஸ்”.

அடுத்து காலம்… கொற்றவை விஷ்ணுபுரம் இரண்டிலும் காலம் என்னை அழுத்தியது. வெண்முகில் நகரத்தில் சம்படை காலமெனெ உறைந்து இன்னும் அதே சாளரம் அருகே அமர்திருக்கிறாள். மிளாவின் காலடித் தடமாக காலம் தலைக் காட்டுகிறது. கீரக்காதனின் தலையாகப் பாடமாகியுள்ளது. மற்ற உங்கள் படைப்புகளில் போல் காலம் காடு நாவலில் பூதாகரம் கொள்ளவில்லை.

காடு நாவல் ஒரு தட்டில் நகரின் சிக்கலையும் மறு தட்டில் காட்டையும் அதன் எளிமையையும் எதார்த்தத்தையும் அழகையும் வைக்கிறது. இதனை ஒரு மனிதனுள் உரையும் இயற்கைக்கும், அவன் உருவாக்க விழையும் ஒழுங்குக்கும் இடையேயான முரணாகவே கொள்கிறேன். மேலும் பேச்சி மலையின் உச்சியில் வாழும் அனைத்துமறிந்த பறவை போல் ஏதோ ஒன்றையும் நாவல் குரலில்லாமல் சொல்கிறது.

நன்றி,
இப்படிக்கு
மோட்டார் ஸ்ரீநிவாஸ்

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16818 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>