Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 17146 articles
Browse latest View live

தனிமையின் புனைவுக் களியாட்டு

$
0
0

 

நண்பர்களுக்கு,

பெரும்பாலானவர்கள் சொந்தவீட்டில் சிறையில் இருக்கும் நேரம் இது. இச்சூழலில் கருத்துக்கள் எதிர்க்கருத்துக்கள் போலச் சோர்வுறச் செய்பவை வேறில்லை. ஆகவே புனைவில் திளைக்கலாமென்று ஓர் எண்ணம்.

நண்பர்கள் எழுதும் புனைகதைகளை ஒவ்வொருநாளும் வெளியிட நினைக்கிறேன்.நானும் முடிந்தால் எழுதலாம் என்றும் திட்டம்.

ஆனால் இந்தப் புனைகதைகளுக்குச் சில நிபந்தனைகள் உண்டு, அவை சிடுக்கானமொழியுடன் புதிரான வாசிப்பை அளிப்பதாக இருக்கலாகாது.யதார்த்தத்தைச் சொல்கிறேன் என்ற பேரில் செயற்கையான கொடூரங்களைச் சொல்வனவாகவும் இருக்கக் கூடாது. ஒழுக்கான நடையுடன், கதைத்தன்மையுடன் அமையவேண்டும். அன்றாட யதார்த்தத்தையும் உலகியல்நுட்பங்களையும் சொல்வனவோ அரசியலை முன்வைப்பனவோ வேண்டாம். அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

பொதுவாக மாயயதார்த்தம் – மிகுபுனைவுக் கதைகள் சிறந்தவை என்பது என் எண்ணம். எனக்கு உண்மையில் இங்கிருந்து எங்காவது கிளம்பிப் பயணம் செய்யும் அனுபவத்தை அளிக்கும் கதைகளே இப்போதைய மனநிலையில் பிடித்திருக்கின்றன

ஒரு பதினைந்துநாட்களை புனைவுக்களியாட்டாக ஆக்கிக்கொண்டால் என்ன?

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

போகன் சங்கருக்கும், சங்கர் கணேஷுக்கும் கண்ணதாசன் விருது

$
0
0

எழுத்தாளர் போகன் சங்கருக்கும் இசையமைப்பாளர் சங்கர் கணேஷுக்கும்  2020 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருது வழங்கப்பட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசன் நினைவாக கோவையில் இருந்து வழங்கப்படும் இவ்விருது ஒரு திரைக்கலைஞருக்கும் ஓர் இலக்கியவாதிக்கும் வழங்கப்படுகிறது.

 

இவ்வாண்டுக்கான கலை விருதைப் பெறும் சங்கர் கணேஷ் என் விருப்பத்திற்குரியவர். ஆச்சரியமென்னவென்றால் நேற்று மாலைதான் நான் குழந்தைகளுடன் அமர்ந்து சங்கர் கணேஷ் இசையமைத்த பாடல்களை தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.எனக்குப் பிடித்தமான பல பாடல்கள் அவருடையவை. நான் என் பள்ளிப்பருவத்தில் கேட்ட ‘செந்தாமரையே செந்தேனிதழே’ முதல் ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது’ வரை

 

போகன் சங்கர் தமிழில்  அடுத்த தலைமுறையினரில் அன்றாடஉலகியல் – அரசியல் என்பதற்கு அப்பால் செல்லும் படைப்புக்களை எழுதும்  மிகமிகச் சிலரில் ஒருவர் மேலையிலக்கியம் அறிந்தவராயினும் அதன்மீது மிகையான மோகம் கொண்டு பின்தொடர முயலாதவர்- அதுவும் நவீன தமிழிலக்கியத்தில் தலைமுறைக்கு ஒருவர் இருவர் அன்றி பிறரிடம் காணாத இயல்பு.

 

போகன் சங்கர், சங்கர் கணேஷ் இருவருக்கும் வாழ்த்துக்கள்

boganath@gmail.com  போகன் சங்கர்

 

கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் கண்ணதாசன் விருதுகள் 2020.

இசையமைப்பாளர் (சங்கர் )கணேஷ் படைப்பாளர்போகன் சங்கர் ஆகியோருக்கு கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் கண்ணதாசன் விருதுகள் 2020.வழங்கப்படவுள்ளன.

 

ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் பாராட்டுப் பட்டயமும் வழங்கப்படும். ஜூன் மாதம் இந்த விழா நிகழும். தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த விருதினை கண்ணதாசன் கழக நிறுவனர் திரு.வி. கிருஷ்ணகுமார் நிறுவியுள்ளார்.

இதற்கு முன் கண்ணதாசன் விருது பெற்றோர் விபரம்:

எழுத்தாளர்கள் திரு.அசோகமித்திரன்,திரு.வண்ணதாசன்,திரு.ஜெயமோகன்,கவிஞர் சிற்பி,திரு.கலாப்ரியா,திரு.நாஞ்சில்நாடன்,திரு.எஸ்.ராமகிருஷ்ணன், திரு.மாலன் திரு. சாரு நிவேதிதா ஆகியோர்.

 

கலைத்துறையில் பாடலாசிரியர் முத்துலிங்கம், பாடகர்கள் திருமதி.பி.சுசீலா, எல்.ஆர் ஈஸ்வரி திருமதி .வாணி ஜெயராம், திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியம், திரு.பி. ஜெயச்சந்திரன் திரு.சீர்காழி சிவசிதம்பரம்,திருமதி. டி.ஆர்.எம்.சாவித்திரி பதிப்பாளர் திரு பி.ஆர்.சங்கரன்,கவிஞரின் உதவியாளர் திரு.இராம.முத்தையா ஆகியோர்

 

-மரபின் மைந்தன் முத்தையா
அமைப்பாளர்
கண்ணதாசன் கழகம் கோவை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை –4

$
0
0

பகுதி இரண்டு : நீலச்சிறுபீலி – 2

இளைய யாதவர் குடிலின் அறைக்குள் வந்து அங்கிருந்த மென்மரத்தாலான மணை மீது கால் மடித்து அமர்ந்து, மூங்கில் தட்டியால் ஆன சுவரில் சாய்ந்து, மடிமேல் கைகளைக் கோத்து வைத்துக்கொண்டு புன்னகையுடன் “கூறுக!” என்றார். அங்கு வந்தபோதிருந்த அனைத்து உளநிலைகளும் மறைந்து அதுவரை குழந்தைகளுடன் ஒளிந்து விளையாடி, கூவிச் சிரித்து அடைந்த அனைத்து மலர்வுகளுடன் அர்ஜுனன் அவர் முன் அமர்ந்தான். தொடர்ந்து விளையாட்டைப் பற்றியே பேசவிருப்பவன்போல “மிகத் துடிப்பான குழந்தைகள். அவர்களின் ஒளிந்துகொள்ளும் திறன் வியப்பூட்டுவது” என்றான்.

“எல்லாக் குழந்தைகளும் ஒளிந்துகொள்ள விரும்புகின்றன, கண்டுபிடிக்கப்படுகையில் மகிழ்ச்சி கொள்கின்றன” என்று இளைய யாதவர் சொன்னார். “சிறு விலங்குகள் கூட.” அவர் விழிகள் சிரிப்பில் இடுங்கின. “சிற்றகவையில் நான் விரும்பி ஆடியது இது. மதுவனத்தில் நான் ஒளிந்துகொள்ளாத இடங்களே இல்லை என்பார்கள். பானைகளுக்கு உள்ளேயும் மண்ணிலிருக்கும் சிறு பிளவுகளுக்குள்ளும் கூட ஒளிந்துகொள்வேன். கட்டாந்தரையில் மறைபவன், காற்றில் ஊறி எழுபவன் என என்னைப்பற்றி பாடுவார்கள். அசைவிலாதிருப்பேன். என்னை அங்கில்லை என எண்ணிக்கொள்வேன். எங்குமில்லை என உளம் அமைவேன். இல்லாமலாவேன். என் அருகிருப்பவர்கூட என்னை உணரமுடியாது.”

“ஆயர்பாடியே என்னைத் தேடி அலையும். நூற்றுக்கணக்கான குரல்கள் என் பெயர் சொல்லி அழைக்கும். ஆடல் முடிந்துவிட்டது, பொழுதிறங்குகிறது கண்ணா, வந்து விடு என்று என் அன்னை அழைப்பாள். எங்கிருக்கிறாய், என்ன செய்கிறாய் என்று கூவுவாள். வெண்ணை இருக்கிறது, வெல்லம் இருக்கிறது என்பாள். வராவிட்டால் இருட்டறையில் அடைப்பேன், மத்துப்பிடியால் அடிப்பேன் என அச்சுறுத்துவாள். முதலில் சிரித்தபடி, பின் பதறியபடி, பின்னர் எப்போதோ அதில் அழுகை கலக்கத்தொடங்கும். உரிய அளவு அவர்கள் அழுதுவிட்டார்களா என்று நான் பார்த்துக்கொண்டிருப்பேன். என் பொருட்டு அழுவதில் எவருக்கெல்லாம் முந்தியிருக்கிறார்கள் என்று பார்ப்பேன். முதலில் சிரிப்பேன். பின்னர் என் பொருட்டு அழுபவர்களுடன் நானும் இணைந்து அழுவேன். என்னை அவர்கள் கண்டெடுக்கையில் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பேன். அவர்கள் என்னை தழுவுகையில் நான் அவர்களை தழுவிக்கொள்வேன்.”

“அன்று ஒரு சிறுவனாக என்னில் ஓடியது என்ன என்று இன்று கணிக்க முடிவதில்லை. ஆனால் தேடுந்தோறும் அருகணைவதில் ஒரு அழகு உள்ளது என்று எனக்குத் தோன்றும். திரும்பி அவர்களை நோக்கி நான் செல்கையில் என்னை மிகவும் தேடி மிக உளம் உருகி தவித்தவர்களே பேரின்பத்தை அடைகிறார்கள் என்பதை கண்டேன். ஓடிவந்து என் அருகே விழுந்து அள்ளி நெஞ்சோடணைத்து உடலெங்கும் முத்தமிட்டு கண்ணீருடன் என் மார்பிலும் முகத்திலும் முகம் சேர்த்துக்கொள்ளும் அன்னை அடையும் அந்தப் பேரின்பத்தை அவளுக்கு அளிக்க விரும்புவேன். நான் அடையும் இன்பமென்பது அவர்களுக்கு அளித்து அவ்வின்பத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் பங்கு மட்டும்தான்.”

அவர் உரக்க நகைத்து “இழந்ததைப் பெறுவதொன்றே புவியில் இன்பமென்று எஞ்சியிருக்கிறது மானுடருக்கு என்று பின்னாளில் சாந்தீபனி குருநிலையின் ஆசிரியர் எனக்கு கற்பித்தார். விழிநீரும் வியர்வையும் சிந்தி உழைத்து, உளமொருக்கி தவம் செய்து செல்வங்களென, சிறப்புகள் என மானுடர் பெறுவன அனைத்தும் குழவியாக இங்கு வருகையில் அவர்களுக்கு அளிக்கப்பட்டவை. அவர்களைச் சூழ்ந்து அமைந்திருந்தவை. அவர்கள் புதிதாக அடைவதில்லை, மீளப்பெறுகிறார்கள். அவற்றை முன்னர் அறிந்திருக்கிறார்கள் என்பதனால்தான் அடைந்ததுமே நிறைவுகொள்கிறார்கள். மானுடர் அடையும் அனைத்து இன்பங்களின்போதும் அவர்கள் குழவியராகிறார்கள். நடத்தையில், பேச்சில், எண்ணத்தில் குழவிகளென துள்ளுகிறார்கள்” என்றார்.

“இங்கு இக்குழவியருடன் அமர்ந்து விளையாடுவதை நெடுங்காலத்துக்குப் பிறகு கூர்ந்து பார்த்து ஆசிரியர் சொல் எவ்வளவு உண்மை என்று வியந்துகொண்டிருக்கிறேன். இச்சிறு ஊரில் குழந்தைகள் மலைகளையும் ஆறுகளையும் தங்கள் களத்தில் எடுத்து வைத்து விளையாடுகின்றனர். ஒரு கூழாங்கல் மலையாகிறது. ஒரு தளிர்க்கொடி ஆறாகிறது. அவர்கள் விண்மீன்களையும் விண்விற்களையும் எடுத்தாள்கின்றனர். அவர்களின் களத்தில் பிரம்மம் அமைத்த பெருஞ்செல்வங்கள் அனைத்தும் விளையாட்டுப் பாவைகளென வந்து அமைந்திருப்பதை பார்க்கிறேன். அவை அவர்களுக்கு அளிக்கும் பேரின்பத்தை அவற்றை இழந்து பின்னர் பிறிதொரு வடிவில் எப்போதோ கண்டடைகிறார்கள். கடலை இழந்து துளியைப் பெற்று கடலை கற்பனை செய்து களிப்படைகிறார்கள். கடலில் திளைக்கிறார்கள் சிறுமைந்தர்.”

“ஆகவேதான் சொல் முதிரா சிறு குழவியர்கூட மெய்மையின் சொற்களை கூறிவிடுகிறார்கள். நேற்று ருத்ரன் கைநீட்டி புல்வெளியை நோக்கிக்கொண்டு என்னிடம் சொன்னான். நான் அங்கு சென்று அந்தப் புல்லை மேய்ந்தபோது தலையாட்டினேன், என்மேல் ஒரு நீலக் குருவி வந்து அமர்ந்தது என்று. அக்குருவி அமர்ந்த தடத்தை அவன் உடலில் பார்க்க முடியுமென்று தோன்றியது. இரண்டின்மை என்பதை குழவிகள் மிக இயல்பாக அடைகின்றன. அவை அறிவதில்லை, ஆகின்றன. வளர்கையில் இரண்டில் ஒன்றெனத் திரண்டு தானென அமைந்த பின்னர் அடைந்த அனைத்தையும் இழந்து இழந்து மீண்டும் அப்பெருநிலையை நோக்கி செல்லத்தவிக்கிறார்கள் மானுடர்.”

அர்ஜுனன் அவர் பேசுவதை வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான். அவர் சொல்லடங்கி நெடுநாட்களாகிறது. ஒவ்வொன்றையும் அறிந்தவரின் சலிப்பு. அப்போது ஒவ்வொன்றையும் புதிதாகக் கண்டடைவதன் கிளர்ச்சி அடைந்திருந்தார். அவன் விழிகளைப் பார்த்தபின் சிரித்து “நன்று, இத்தனை தொலைவு விலகி வந்து இங்கு தங்கியிருப்பதும் உகந்ததே” என்றார். அர்ஜுனன் “இங்கு எவரேனும் வருவதுண்டா?” என்றான். “மிக அரிதாக. துவாரகையில் இருப்பவர்களுக்கு நான் இங்கு தங்கியிருப்பது தெரியாது. சாத்யகி ஒருவேளை ஒற்றர்கள் வழியாக அறியக்கூடும்” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் “நான் சூதர்களிடம் கேட்டு அறிந்தேன்” என்றான்.

“ஆம், சூதர்கள் எவ்வண்ணமோ அறிந்திருக்கிறார்கள். தங்களுக்குள் மந்தணச் செய்தியாக இதை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். எனக்குச் சொல்லியாக வேண்டுமெனத் தோன்றும் கதைகள் தங்களிடம் இருந்தால் நெடுந்தொலைவு நடந்து இங்கு வருகிறார்கள். இங்கு அவர்களுக்குக் கொடுப்பதற்கு பரிசுகள் எதுவும் இல்லை. வெறுங்கையுடன் திரும்ப விருப்புள்ளவர்கள் வந்தடைகிறார்கள். நீ அறிந்திருப்பாய், இச்சிற்றூரில் பணம் என்பது இல்லை. ஆகவே பொன்னும் வெள்ளியும் மதிப்பு கொண்டது அல்ல. இங்குள்ளோருக்கு அருமணிகளும் உலோகங்களும் பயன்பாட்டுப் பொருட்கள் மட்டுமே. ஆகவே இங்கு இரும்புக்கு இருக்கும் மதிப்பு செம்புக்கு இல்லை, செம்பின் மதிப்பு வெண்கலத்திற்கு இல்லை, வெண்கலத்தின் மதிப்பு பொன்னுக்கு இல்லை” என்றார் இளைய யாதவர்.

“மெய்யாகவே இங்கே ஒரு குழந்தை கேட்டது, இரும்பைவிட மென்மையான பொன்னை எப்படி மதிப்பு மிக்கதென்று மலைகளுக்கு அப்பால் உள்ளவர்கள் கருதுகிறார்கள் என்று. இவர்கள் இங்கிருந்து கிளம்பி மலைப்பகுதிகளின் காடுகளுக்குச் சென்று அலையும் குடிகளாகத் தங்கி மீண்டு வந்தவர்கள். அவர்களின் மைந்தர்கள் இங்கு பிறந்தவர்கள். இங்கு வந்தவர்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களை, வந்த வழிகளை முற்றாகவே மறந்துவிட்டிருக்கின்றனர். இங்கு இந்த மலைக்குகைக்குள் மழை கடுகி இறங்குகிறது. ஆகவே இங்குள்ளோர் பெருங்குடியென திரண்டிருக்கிறார்கள். இவர்கள் விழைவன அனைத்தும் இங்குள்ளன. ஆகவே விற்பதற்கும் வாங்குவதற்கும் ஏதுமில்லை. வணிகர்கள் இங்கு தேடி வருவதுமில்லை” என்றார் இளைய யாதவர். “எனவே இங்கே ஒவ்வொன்றும் இங்குள்ள மதிப்பையே அடைகின்றன. வெளியுலகின் மதிப்புகள் இங்கில்லை.”

அவர் இளைஞனைப்போல பேசிக்கொண்டே இருக்க விழைந்தார். “வணிகம் என்பது என்ன? ஒவ்வொன்றுக்கும் மதிப்பளிக்கும் செயல் அது. ஒப்பிட்டு ஒப்பிட்டு அம்மதிப்பை அது அளிக்கிறது. ஒன்றை பிறிதொன்றுடன். ஓர் ஊர் மதிப்பை பிறிதொரு ஊருடன். ஒவ்வொன்றையும் உலகத்துடன். ஒப்பிட ஏதுமில்லாதபோது மதிப்பிட இயலாது நின்றுவிடுகிறது.” அவர் தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பதாக அவனுக்குப் பட்டது. “வணிகம் எங்கும் சென்று தொட்டுவிடுகிறது. உலகம் வணிகமென்னும் பல்லாயிரம் கைகளால் ஒவ்வொன்றையும் இழுத்துக்கொண்டிருக்கிறது. சொல்லையும் அது விட்டுவைப்பதில்லை” என்றார்.

“ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒன்றுக்கு ஒன்று பொருள் அளித்தே சொற்கள் இங்கே திகழ்கின்றன. ஒரு சொல்லுக்கு மொத்த மொழியும் பொருளை அளிக்கிறது என்பார்கள். எழுகையில் சொல் அனைத்தும் வேதமே என்று ஒரு கூற்று உண்டு. வேதச்சொல் என்பது மின்மினிபோல. ஒளியை ஏந்தியிருக்கும் எளிய சிறுபூச்சி. அதன் கால்கள், சிறகுகள், கண்கள், வயிறு, வாய் அனைத்துமே அவ்வொளிக்காக. அவை இல்லையேல் அவ்வொளி பறக்க இயலாது. ஒரு நாவால் சொல்லப்பட்டு இன்னொரு செவியால் கேட்கப்படுகையிலேயே வேதம் மானுடத்தன்மை கொள்ளத் தொடங்கிவிடுகிறது. அது வணிகக் களத்தில் வந்தமைந்து ஒப்பீட்டு மதிப்பை பெறத் தொடங்கிவிடுகிறது. ஒருபுறம் இன்மையின் அமைதியும் மறுபுறம் முளைத்தெழும் பொருளின் முடிவிலியும் கொண்டது நாம் அறியும் வேதச்சொல். இணைகையில் பொருள்செறிகையில் அது இவ்வுலகுக்குரியது. மலையிறங்கும் நதி மாசுபடுகிறது. மலையிறங்கா நதி பயனற்றது. தன்னை மாசுபடுத்தி மன்பதைக்கு ஊட்டுவதே அன்னைப்பெருக்கு…” அவர் கண்களை மூடி கைகளைக் கட்டி அமர்ந்திருந்தார். பின்னர் “அவ்வண்ணமே அது ஆகும். அதன் நெறி அது” என்றார்.

சற்றுநேர அமைதிக்குப் பின் “இங்குள்ளோர் தங்களை அறிந்திருக்கவில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். இளைய யாதவர் உரக்க நகைத்து “அன்றி மெய்யாகவே அறிந்திருக்கிறார்களா? என் மேல் சுமத்தப்பட்ட அனைத்தையும் கழற்றிவிட்டு முற்புலரி கருவறைத்தெய்வமென அணியிலியாக அமர்ந்திருக்கிறேனா?” என்றார். சில கணங்களுக்குப் பின் அர்ஜுனன் “ஆம்” என்றான். “நன்று சொன்னாய். நீ என்னைத் தேடி வந்தது எதன்பொருட்டு?” என்றார் இளைய யாதவர்.

“யாதவரே, அஸ்தினபுரி பெருவேள்விக்குப் பின் மக்கள் செறிந்து வணிகம் பெருகி வளம் நிறைந்து வாழத் தொடங்கிவிட்டது. ஆனால் அங்கிருந்து நாங்கள் ஒவ்வொருவராக கிளம்பிக்கொண்டிருக்கிறோம். அந்நகரில் எங்கள் எவராலும் வாழ முடியவில்லை. ஒவ்வொருவரும் கையில் அடைந்தவற்றை கண்ணெதிரே தூக்கி நோக்குகையில் இதன் பொருட்டா என்ற துணுக்குறலை அடைகிறோம். சொல்லொணா விலை கொடுத்துப் பெற்ற பயனற்ற சிறு பொருளெனத் தோன்றுகின்றன அஸ்தினபுரியின் மணிமுடியும் செங்கோலும். அனைத்தும் செழிக்கும் நகரில் அரசன் செய்வதற்கொன்றுமில்லை என்பார்கள். அங்கு மூத்தவரும் வாளாவிருக்கிறார்” என்று அர்ஜுனன் சொன்னான்.

“அவர் நெறிசூழ்வதை விட்டுவிட்டார். வகுக்கப்பட்டுவிட்ட நெறிநூல்களை அவர் தன் உள்ளத்திலிருந்தே விலக்கிவிட்டிருக்கிறார். அதை ஒருநாள் அவரிடம் நானே கேட்டேன். நான் இதுகாறும் நெறிசூழ்ந்தது, எண்ணி எண்ணி வந்தடைந்தது இரு பெரும் நூல்தொகைகளைத்தான். அவை இனி இங்கிருக்கும், என் செங்கோல் அதை நிறுவிவிட்டது. அந்நூலை கையில் வைத்து சொல்லாள்பவன் எவனாயினும் தருமனே. நான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றார். நான் ஒருநாள் சென்றபோது அவர் தனிமையில் அமர்ந்து சூதாடிக்கொண்டிருந்தார். நாற்களத்தில் கருக்களென எவையுமில்லை என்பதை கண்டேன். விந்தை என எண்ணி அருகே சென்றேன்.”

“அவர் என்னை திரும்பி நோக்கி, கருக்கள் வைக்காமல் ஆடும் ஆடல் ஒன்று உண்டு. உள்ளத்தால் தொட்டுத் தொட்டு ஆடுவது என்றார். தனிமையில் நாற்களம் ஆடுகையில் எப்போதும் எதிர்த்தரப்பில் என் எதிரியை கற்பனை செய்து நிறுத்துவேன். அவ்வண்ணம் நிலைகொள்ளும் எதிரியும் நானே என பின்னர் உணர்ந்தேன். எதிரியை வெறுத்தேன், எனவே என்னை வெறுத்தேன். என்னை விரும்பினேன், எனவே எதிரியை விரும்பினேன். என் இடைவெளிகளை எதிரியென்றாகி நிறைத்துக்கொண்டேன். என் எல்லைகளை எதிரியினூடாகக் கடந்தேன். என்னை நானே வென்றும் தோற்றும் ஆடினேன். இப்போதுதான் முதல்முறையாக எதிர்ப்பக்கம் எவருமில்லாமல் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றார்.”

“என்னால் அவர் சொல்வதென்ன என்று புரிந்துகொள்ள முடியவில்லை. எதிர்த்தரப்பின் காய்நகர்த்தலை எவரென்று அமைந்து செய்வீர்கள் என்று கேட்டேன். எதிர்த்தரப்பில் காய்நகர்த்தப்படுவதில்லை என்றார். அதெப்படி என்றேன். இளையோனே, இது ஒற்றைத்திசை நகர்வுகள் மட்டுமே கொண்ட ஆட்டம் என்றார். அவர் உளம் கலங்கியிருக்கிறாரோ என்றுகூடத் தோன்றியது. அவர் சிரித்து என் உளம் தெளிவாகவே இருக்கிறது. இவ்வகையிலும் ஆடக்கூடும். ஏன் ஆட்டம் என்பது இருமையாலானதாக இருக்கவேண்டும் என்றார்.”

“எனில் ஆட்டநெறிகள் அனைத்தும் மறைந்துவிடுகின்றன அல்லவா? அந்நெறிகள்தானே ஆட்டம் எனப்படுகின்றன என்றேன். இல்லை, நெறிகள் சற்றே திரிபு கொள்கின்றன, அவ்வளவுதான் என்றார். நான் புரியாமல் நின்றிருப்பதைக் கண்டு உன்னிடம் புரியவைக்க இயலாது. நீயே கண்டடையவேண்டியதுதான் என்றார். நான் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. ஆனால் அவரை நோக்கிக்கொண்டே இருந்தேன். அவர் சொல்லடங்கிவிட்டிருந்தார். இருக்கையில் இல்லாமலாகி மீண்டார். அவைகளில் அமர்ந்திருக்கையில் அவர் அங்கில்லை என்பதை உணர்ந்தேன், பிறரும் அவ்வுணர்வை அடைந்தார்கள் என அறிந்தேன்.”

அஸ்தினபுரியில் என் உடன்பிறந்தார் ஒவ்வொருவரும் தங்கள் உலகுக்குள் சுருங்கிவிட்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் அவர்களுக்குரியது எது எனக் கொண்டிருந்தார்களோ அதை இழந்துவிட்டிருந்தனர். பீமசேனன் கதையை தொடவில்லை. காடுகளில் அவரை குரங்குகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் காட்டுக்குள் சென்று அவ்வப்போது மட்டுமே மீண்டார். அவரிடம் பிறர் பேசியே நெடுநாட்களாகின்றது என்றார்கள். நகுலன் புரவிகளையும் சகதேவன் நிமித்தநூல்களையும் மறந்தனர். அவர்கள் எங்கே வாழ்கிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. யாதவரே, அவ்வப்போது அரண்மனை இடைநாழிகளில் அவர்களை நேருக்குநேர் சந்திப்பேன். முற்றிலும் அயலவர்போல் விழிதொட்டுக்கொள்வோம். வெற்றுச் சொல் எடுத்து பேசிக்கொண்டு உடனே விலகிச் செல்வோம்.

நான் திரௌபதியை ஒரே ஒருமுறை, துர்க்கையன்னையின் ஆலயத்துப் பூசனையின்போது மட்டுமே பார்த்தேன். அவள் என்னை அறியவில்லை என்று தோன்றியது. நான் நோக்கிய அந்த முதிய பெண்மணி நான் எவ்வகையிலும் அறிந்தவள் அல்ல. அவள் நீள்குழல் முற்றிலும் நரையோடி வெண்ணுரை என தோளில் வழிந்திருந்தது. உடல் மெலிந்து தளர்ந்திருந்தது. ஆகவே அவளுடைய பெரிய எலும்புக்கூட்டு வடிவம் மேலும் துலங்கியது. கண்கள் நோக்கிழந்தவை என, உள்திரும்பியவை என தோன்றின. அவள் முன் நிற்கையில் அமைதியிழந்தேன். ஆகவே என்னை பின்னிழுத்துக்கொண்டேன்.

நான் சுபத்திரையை மீண்டும் பார்க்கவே இல்லை. அவள் துவாரகையில் இருக்கிறாள் என்றும், அஸ்தினபுரியுடனான அனைத்து உறவுகளையும் துணித்துக்கொண்டுவிட்டாள் என்றும் அறிந்தேன். அஸ்தினபுரியிலிருந்து எச்சொல்லும் தனக்கு வரலாகாது என ஆணையிட்டிருந்தாள். துவாரகையில் இளமைந்தன் பரீக்ஷித் இருப்பதுவரை சற்றேனும் தொடர்பிருந்தது. அவனை இங்கே கொண்டுவந்த பின்னர் அதுவும் அறுபட்டு மறக்கப்பட்டது. மைந்தன் உடல்தேறிவிட்டான், ஆனால் நலம்பெறவில்லை. அவனைப் பார்ப்பவர்கள் அவனுடைய மூதாதை பாண்டுவைப் போலவே இருப்பதாகச் சொன்னார்கள். குருகுலத்தின் ஊழ் துரத்துகிறது என்றார்கள். பாண்டுவும் விசித்திரவீரியனும் தேவாபியும் என தொடரும் அறியமுடியாத ஒரு கதைச்சரடு.

“முதலில் நான் அங்கிருந்து கிளம்பினேன்” என்று அர்ஜுனன் தொடர்ந்தான். “ஏன் கிளம்பினேன் என்று சொல்லத் தெரியவில்லை. அங்கே இருக்கமுடியவில்லை. அங்கே என்னை இருத்திக்கொள்ள பலவாறாக முயன்றேன். அது என் இடம், நான் வென்றெடுத்தது, எனக்குரிய கடமைகள் கொண்டது என்று என்னுள் வாழ்ந்த ஷத்ரியனிடம் சொல்லிச் சொல்லி சலித்தேன். அருகிருக்கும் காடுகளில் சென்று மீளலாம் என என்னுள் வாழும் வில்லவனுக்குச் சொல்லி ஓய்ந்தேன். என் உடன்பிறந்தார் உறவினர் அனைவருமே அயலார் எனத் தோன்றினர். அவர்களின் ஒவ்வொரு சொல்லும் வேறெவரை நோக்கியோ சென்றன. நான் வெற்றுவிழிகளுடன் நிற்பதைக் கண்டு அவர்கள் ஒன்றை மீண்டும் மீண்டும் சொன்னார்கள். அதைக் கேட்டு எரிச்சலுற்று நான் கூச்சலிட்டேன். அத்தனை பேரிடமும் பூசலிட்டேன். என் நரம்புகள் இழுபட்டு நின்றன. நான் அதிர்ந்துகொண்டே இருந்தேன்.”

அவ்வரண்மனை, அந்நகரம், அங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் எனக்கு அலுப்பூட்டின. அவை மாறா வடிவு கொண்டிருந்தன. ஆகவே வளராப் பொருள் கொண்டிருந்தன” என்றான் அர்ஜுனன். “ஒருநாள் என் அறையில் அமர்ந்திருந்தேன். எதிரே மரத்தாலான பீடம் ஒன்று இருந்தது. அதன் முழுமைவடிவு, அவ்வடிவில் அது தன்னை அமைத்துக்கொண்டு அங்கிருந்தமையில் இருந்த நாணின்மை என்னை கூசவைத்தது. இரும்பைக் கடிப்பதுபோல. சில கணங்களில் எழுந்து வெளியே ஓடி முற்றத்தில் உருவற்ற முகில்களின் கீழே நின்றேன். இவ்வுணர்வை நான் எவரிடமும் சொல்லிவிட முடியாது, யாதவரே. இது வெறும் உளக்குழப்பமாகக் கூட இருக்கலாம். ஆனால் இதை நான் உணர்கிறேன். என்னுள் இரும்பு உரசிக்கொள்வதுபோல ஓர் ஒவ்வாமையின் ஓசையே எழுகிறது. என் அகச்சொற்களில் எல்லாம் அவ்வோசைதான்.

ஒருநாள் காலையில் எழுந்தேன். ஓர் எண்ணமும் எழவில்லை, ஆனால் நான் கிளம்பிக் கொண்டிருந்தேன். கிளம்புகிறேன் என எண்ண எண்ண உவகை கொண்டேன். விடுதலையை என் உடல் உணர்ந்தது. என் நடையும் முகமும் மாறிவிட்டன. மூத்தவரைச் சென்று பார்த்தேன். என் எண்ணத்தைச் சொன்னதும் அவர் திகைப்பின்றி, ஆர்வமும் இன்றி, சோர்வுடன் “எங்கு செல்கிறாய்?” என்று கேட்டார். “திசைப்பயணம் ஒன்று செய்யலாம் என்றிருக்கிறேன்” என்றேன். அவ்வெண்ணமே அப்போதுதான் தோன்றியது. “நாம் பாரதவர்ஷத்தை வென்றுவிட்டோம், முழுதாள்கிறோம். இனியென்ன?” என்றார். “இனி நாம் வென்றுவிட்டோம் என்னும் எண்ணம் நம்மையும் பிறரையும் ஆளவேண்டும். நம் முதல் தோல்வியை எத்தனை ஒத்திப்போடுகிறோமோ அத்தனை நன்று.”

நான் தயங்கி “இல்லை. என்னால் இங்கு நிலைகொள்ள இயலவில்லை” என்றேன். “ஒவ்வொரு நாளும் நான் முற்றாக அறிந்திராத புதிய ஊரில் துயில் விழித்தால் மட்டுமே என்னை நான் தொகுத்துக்கொள்ள இயலும். நான் மலையேறிக் கொண்டிருப்பவன், எடை உதிர்த்து முன் செல்ல வேண்டியவன். என்னை வாழ்த்துங்கள்” என்றேன். அவர் என்னை நெடுநேரம் நோக்கிக்கொண்டிருந்தார். அவர் என்னிடம் வந்துசேர அத்தனை தொலைவு இருந்தது. அவருடன் இருக்கையில் நானும் நெடுந்தொலைவிலேயே இருந்தேன். யாதவரே, அஸ்தினபுரியில் இருக்கும் மூத்தவரை எனக்கு அணுக்கமானவராக உணரவே இயலவில்லை. அவரை எங்கள் கடந்தகாலங்களில், காட்டில் வைத்துப்பார்க்கையிலேயே என் உடன்பிறந்தார் என எண்ணமுடிகிறது.

மூத்தவர் நீள்மூச்சுடன் “இது இவ்வாறே ஆகுமென்று எனக்குத் தோன்றியிருந்தது. நினைவறிந்த நாள் முதலே நாம் நாடோடிகளாக வாழ்ந்திருக்கிறோம். இன்று இங்கு வந்து இவ்வண்ணம் அமையவேண்டும் என்று எண்ணியிருந்தோம். ஆனால் அமைவது நமக்கு பழக்கமில்லை. நம்முடையவை நின்ற கால்கள் அல்ல. அரண்மனை மஞ்சத்தறைகளைவிட வழியோரத்து மரத்தடிகளையே நாம் மிகுதியும் அறிந்திருக்கிறோம்” என்ற பின் “செல்க! உன்னில் இருந்து தேடும் ஒன்று முழுதமையுமெனில் எங்கேனும் நீயும் அமரமுடியும். அதுவரை சென்றுகொண்டிருப்பாய். கடல்வரை நதி நிற்பதில்லை என்பார்கள்” என்றார்.

நான் அவர் கால் தொட்டு வாழ்த்து பெற்றேன். “இளையோனே, நீ மகிழ்வுடன் இருப்பாய் எனில் என்னையும் இளையோரையும் இந்நிலத்தையும் நீ துறப்பதிலும் பிழையில்லை. நீ திரும்பி வரவேண்டும் என்னும் ஆணையை ஒரு தோள்சுமையென உனக்கு நான் அளிக்கப்போவதில்லை” என்றார். நான் என் கைவில்லை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன். தாங்கள் எங்கு இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களை தேடிவரவேண்டும் என்னும் எண்ணமும் எனக்கு இருக்கவில்லை. ஆனால் அஸ்தினபுரியில் இருந்து கிளம்பியதுமே என் அகம் உங்களை நாடுவதை நான் உணர்ந்துகொண்டேன்.

“யாதவரே, நீங்கள் இருக்கக்கூடும் என்று எண்ணி எண்ணி நான் தேடி வந்த இடங்களிலெல்லாம் இருந்தீர்கள். ஆனால் நான் முன்னரே அறிந்த ஒரு வடிவில். எனக்கு அருளும் விழிகளுடன். இப்போது நான் முற்றிலும் அறியாத ஓர் இடத்தில் எனக்குத் தெரியாத ஒரு முகம் சூடி நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திலேயே நீங்கள் மெய்யாக இருக்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றியது. அதை எவ்வண்ணம் கண்டுபிடிப்பதென்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் உங்களை எண்ணி எண்ணி என் எல்லைகளைக் கடந்து இத்தொலைவை வென்றேன். இந்தப் பாதை நான் எனக்குள் அமைத்து நீட்டி நீட்டி வந்தடைந்த ஒன்று” என்று அர்ஜுனன் சொன்னான்.

“இங்கு வந்து உங்களைப் பார்க்கையில் உணர்கிறேன். நீங்கள் இருக்கும் நிலையை முன்னர் அறிந்திருக்கிறேன். ஆனால் உங்களைப் பார்க்கும் என்னை இந்நிலையில் நான் உணர்ந்ததே இல்லை” என்று அர்ஜுனன் சொன்னான். இளைய யாதவர் புன்னகை செய்தார்.

தொடர்புடைய பதிவுகள்

வைரஸ்,யுவால் நோவா ஹராரி -கடிதம்

$
0
0

அன்புள்ள ஜெ,

வைரஸ் அரசியல் கட்டுரை இந்தத் தருணத்தில் முக முக்கியமானது நன்றி. அதீத செயல்பாடுகளால் வரும் பிரச்சனைகளையும், அந்தச் செயல்பாட்டுக்கு காரணமான சில்லறை அரசியல் பற்றியும் நீங்கள் எழுதியிருந்தது தெளிவைத் தந்தது.
எந்த ஒரு நிகழ்வையும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு, வரும் தேர்தல் ஓட்டுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்று திரித்து அரசியல்வாதிகள் யோசித்தால் கூட பரவாயில்லை, ஒவ்வொருருவருமே அப்ப்டி யோசிக்கப் பயிற்றுவிக்கப்பட்டுவிட்டனர் என்ற நிலை அச்சமூட்டுகிறது.
பொழுதுபோக்கு ஊடகமான சினிமா கூட இந்த ஒற்றை அரசியல் கண்ணால் தான் பார்க்கப்படுகின்றது என்பது சமீபத்தில் வந்த இரு அரசியல் திரைப்படங்க்கள் பெருமளவில் முனைப்படுத்தப்பட்ட இந்த இரு  குழுக்களால் பேசப்பட்டது ஆனால், அரசியல் இல்லாத கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படம் தான் உண்மையில் திரையரங்குகளில் மக்களால் பார்க்கப்படுகிறது. ஆனால் அவ்விரு படங்க்கள் தான் தமிழகமே பேசுவதாக இவர்கள் ஒரு  மாயையை உருவாக்குகிறார்கள்.
இன்னொரு ஆச்சர்யம்.. பொதுவாகவே எதிர்மறையாக சொல்கிறார் என விமர்சகர்களால் சொல்லப்படும் யுவால் ஹராரி இந்தத் தருணத்தில் உலகம் பதறி தனிமைப்படுத்தப்பட்டால் பொருளாதாரம் மீள் முடியாமல் சரியும், அதனால் நோய்களை நாம் எதிர்கொள்ளும் திறனும் குறையும். எனவே இந்தத் தருணத்தின் தேவை எதிர்மறை பிரச்சாரமும் தனிமைப்படுத்துதலும் அல்ல. ஒத்துழைப்பே இப்போது முக்கியம் என்றும் எழுதியிருகிறார்.

https://time.com/5803225/yuval-noah-harari-coronavirus-humanity-leadership/ 

உங்கள் கட்டுரையும், யுவாலின் கட்டுரையும் இந்தத் தருணத்திற்கான சிந்தனையாள்ர்களின் பங்களிப்பு. அதற்கு நன்றிகள்.
அன்புடன்
சுரேஷ் பாபு.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-6

$
0
0

 

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

இனிய ஜெயன்,

 

சர்வஃபுதேஷூ அமைதியாக ஆரம்பித்து கொஞ்சம் பதட்டம் உண்டாக்கி பின் அமைதி படுத்தியது.

 

”ஆனால் அவளுக்கு வியாகூல மாதாவின் முகம் இருக்கிறது. ஒரு அங்கியை போட்டு அமரவைத்தால் மடியில் சிலுவையிலேறிய ஏசுவை போட்டுவிடலாம்”

இது புரிந்த பின் அவர்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லைதான்.

 

ஒரு மூலிகைக் குளியல் போல் கதை மனசுக்கு மிக இதமாக இருந்தது.

 

நன்றி ஜெயன்.

 

அன்புடன்

சந்தானகிருஷ்ணன்.

அன்புள்ள ஜெயமோகன்,

 

எத்தனை கோணங்களில் யா தேவி விரிகிறாள். இலக்கியமும் ஒரு பராசக்தி. கடிதம் ஒன்பதுவரை படித்துவிட்டேன். மீதி கடிதங்களை படிப்பதற்குமுன் என் எண்ணங்களையும் சொல்லிவிடுகிறேன்.மீதி கடிதங்களை படித்தபின் அவள் எப்படி விரிவாளென பார்க்கும் அவளுண்டு. உடல்தான் தான் என்ற எண்ணம் பத்துவயதில் எல்லாவிற்குவந்திருக்கும். அதற்குப்பின் தன் உடலின் வல்லமை, அதைக்கொண்டு ஆணின்மேல் செலுத்தும் அதிகாரம், ஆண்தரும் முக்கியத்துவத்தின் ஆணவம் எல்லாம் அவளை கட்டமைத்துவிட்டது.

 

பாலியல் நடிகையாய்  அவளை பலபேர் பார்க்கும்போது, ஆணின் வெறியை அறியும்போது அவள் ஆணவம் பெருகிக்கொண்டே செல்கிறது. தன் உடலை ஆணின் ரசனைக்கென்ற மாற்றி மாற்றி தன் ஆணவத்தை பெருக்குகிறாள். முதல் முறை அவள் பொம்மை விற்கும்போது அதை பலபேர் புணர்வார்களென்ற எண்ணம் அவளுக்கு கிளர்ச்சியை தந்திருக்கும். பொம்மையாயிருந்தாலும் அவள் உடலில்லையா.அந்த கிளர்ச்சியின் விளைவாய் அடுத்த இரண்டு பொம்மைகளையும் விற்க அனுமதிக்கிறாள். அவள் உடலின் ஆணவம் உச்சத்திலிருந்த காலங்கள்.பாலியல் படங்களில் நடைத்தவரை அவள் உடல் அவள் வசம்.  ஒரு புள்ளியில் உணர்ந்திருப்பாள் பொம்மை என் உடல் ஆனால் அதன்மேல் உரிமையில்லை. தன் உடலை அடுத்தவர் கட்டுப்படுத்துவதைப்போல வேற துயரமுண்டா?. அந்த துயரை தன் கற்பனை மூலம் வளர்த்துக்கொள்கிறாள்.அந்த உச்சியிலிருந்து சரிகிறது அவள் ஆணவம்.

 

வழிதெரியாதவர்கள் செல்லும்பாதை போதை. போதையில் எதற்கும் வழியில்லையென்று அகத்தின் குரலுக்குத் தெரியும். அந்தக் குரல் வலுவாய் ஒலிக்கும்போது உழிச்சில் சிகிச்சைக்கு வருகிறாள்.அவளுக்கு முதலில் தேவை கலைந்த உள்ளத்தை  கட்டமைப்பது. ஸ்ரீதரன் அவளுக்கு அளிப்பது நீ உடல்மட்டுமல்ல. இறங்கிய சரிவை அப்போதுதான் முதலில் உணர்கிறாள். உன் பொம்மைகள் உன்னிலிருந்து உதித்த அவதாரங்கள். ஆனால் நீ முழுமுதல். எவ்ளோ பெரிய விடுதலை.

 

பொம்மைலிருந்து மீண்டாலும் அவளுடல் இன்னும் அவளோடதுதான் உள்ளது. அதற்க்கு இன்னும் வல்லமையுள்ளதாவென அவன் மூலம் சோதிக்கிறாள். ஸ்ரீதரன் சக்தி மந்திரத்தை அப்போது சொல்லியதாய் கேட்கும்போது நிறைவடைகிறாள். மூன்று உணர்தல்கள்  : உடல்தான் நீ, உடல்ல நீ, உடலும் சேர்ந்தது நீ.

 

பிற்சேர்க்கை : எல்லா சிகிழ்ச்சைக்கு வராமல் கிருஷ்ணனை பார்த்திருந்தால், அவளைமீட்டு பொம்மை தன் வாழ்வின் ஒருபகுதி, தன்னால் கட்டுப்படுத்த முடியாத ஒரு நிகழ்வென உணர்த்தியிருப்பான்.கூடவே அதை வேடிக்கை பார்க்கவும் கற்றுக்கொடுத்திருப்பான்.அவளும் பொம்மையின் அடுத்த பாதிப்பை கொண்டுவந்திருப்பாள்.

 

 

அன்புடன்,

மோகன் நடராஜ்

அன்புள்ள ஜெ

 

எல்லா ஆன்ஸெல் தமிழ்ச் சிறுகதையின் ஒரு மறக்கமுடியாத கதாபாத்திரமாக ஆகிவருகிறாள். முதல்கதையில் அவள் ஒரு கருவிதாந் அவள் மூலமாக ஸ்ரீதரன் கண்டுகொண்டதுதான் முக்கியமானது. இரண்டாம் கதையில்தான் நாம் அவளைக் கண்டு கொள்கிறோம். இந்த உலகுடன் சம்பந்தப்படாத ஒரு கதாபாத்திரமாகவும் இங்கே எல்லா இடங்களிலும் இருக்கும் கதாபாத்திரமாகவும் எல்லா தோற்றமளிக்கிறாள்.

 

இதுவரை நம் மனதைக் கவர்ந்த பெண் கதாபாத்திரங்கள் எல்லாம் மனுசிகள். இவள் ஓரு ஐக்கான் மாதிரி இருக்கிறாள். நாம் கொடுக்கும் அர்த்தங்களை எல்லாம் அவளே ஏற்றுக்கொள்கிறாள். அவளுக்கென ஒன்றுமே இல்லாமலிருக்கிறாள். இந்த வாசிப்புகள் எல்லாமே எல்லா ஆன்ஸெலின் பொம்மைகள் மாதிரித்தானே?

ஸ்ரீனிவாசன்

தொடர்புடைய பதிவுகள்

பழையது மோடை- கோகுலரமணன்

$
0
0

 

அப்பா விழித்தது முதலே அமைதியின்மையுடன் காணப்பட்டார். அம்மா காப்பி கொண்டுவந்து கொடுத்தபோது ராத்திரி தூக்கமே இல்ல சொப்பனமே சரியில்ல என்றார். அம்மா நேத்திக்குமா என்றாள்.

ஒரு வாரமாவே தூக்கம் இல்ல அதே திரும்பி திரும்பி கனவுல வருது

பழையது மோடையா ?

ஆமா, அந்த கல்லு ரெண்டையும் கட்டிண்டு தூங்கறா மாதிரி அப்பறோம் அதுல ஒன்ன மட்டும் கட்டிண்டு அழறேன்.அந்த அழுகை இன்னும் அப்டியே ஞாபகம் இருக்கு .நிஜத்துல அழுதாமாதிரி இப்போகூட தேம்பறது  . முந்தாநாள் என்னடானா ஒன்னு எரியர்து ஒண்ணுலேர்ந்து தண்ணி வருது. அத தலைல வச்சிண்டு எங்கியோ போறேன் .

என்னால முடியல.

அய்யய்யோ இது என்ன வம்பா போச்சி. நேத்திக்கும் சொன்னிங்க .ரொம்ப அத பத்தி யோசிக்காதிங்க. நீங்க தானே செட்டியாருக்கு குடுத்தீங்க இப்போ என்னடானா கனவு வருது சொப்பனம் வருதுண்றீங்க.

அது ரொம்ப காலமா நம்மாத்துலயே இருந்தது. எங்கப்பா ஒக்கரை வாத்தியார்டேந்து  வாங்குனது.

சரி நான் இன்னைக்கு செட்டியார போய் பாத்து அத திருப்பி எடுத்துண்டு வந்துடறேன்.

ஐயோ அவரு என்ன நெனைப்பாரு

அத நான் பாத்துக்கறேன்.

 

பழையது மோடை என்பது இரண்டு கருங்கற்கள் , அச்சு வெல்லத்தை கவிழ்த்து வைத்தது போன்ற உருவம் கொண்டவை . ஆமாம்  அச்சு வெல்லத்திற்கு எது மேல் பக்கம் எது அடிப்பக்கம்.

முதல் கல்லில் பக்கவாட்டில் வரிவரியாக கோடுகள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கும் இரண்டாவதில் வளையங்கள். இரண்டு கல்லிலுமே மேல் பரப்பில்  அழகான சிறிய குழி செதுக்கப்பட்டிருக்கும்( பாத்திரம் நிற்பதற்காக ).அவற்றிக்கு இடையில் ஒரு இன்ச் கூட இடைவெளி இருக்காது.அப்படிதான் எப்போதும் வைக்கப்பட்டிருக்கும்.

எங்கள் வீட்டு சமையலறையில் ஒரு ஓரமாக அவ்விரண்டு கற்களும் ஒன்றன் மீது ஒன்று ஒட்டிக்கொண்டு நிற்கும். அதில் தான் முந்தையதினம் மீந்து போன

பதார்த்தங்கள் வைக்கப்பட்டிருக்கும். அதை சுற்றி தரையில் எறும்பு பௌடர் போடப்பட்டிருக்கும். இந்த முழு அமைப்பிற்கும் பெயர் தான் பழையது மோடை.

 

அவற்றை தொட்டாலோ அல்லது அருகில் சென்றாலோ சர்வ நிச்சயமாக கை அலம்பவேண்டும்.கூடுமானவரை மிச்சம் மீறாமல் பார்த்துக்கொண்டாலும் வாரத்திற்கு இரண்டு மூன்று முறை அதில் சாதம் குழம்பு கரியமுது அதாவது பொரியல் ஏறிவிடும். ஒரு கல்லில் சாதம் ஒரு கல்லில் குழம்பு அதிகப்படியான நாட்களில் நிறைய மிச்சம் என்றால் அம்மா அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக  அடுக்கி வைத்திருப்பாள் ..அவற்றை விரத நாட்கள் அல்லாத அதாவது சனி, அம்மாவாசை ஏகாதசி போன்ற தினங்களை தவிர்த்து அப்பா சாப்பிடுவர் எப்போதும் அம்மாவும் நாங்களும் சாப்பிடுவோம்.பாட்டி அந்த பக்கமே வருவதில்லை.நன்றாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் இல்லையென்றால் அனைத்தும் ஊசி போயிருக்கும் ஒன்று நன்றாக இருந்து ஓன்று கெட்டுப்போனதாக இருந்ததே இல்லை.அதனால் அம்மா ஒரு பதார்த்தத்தை எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டு எல்லாவற்றையும் பரிமாறுவாள்.தனித்தனியாக சோதிப்பதில்லை.

 

இருபது நாட்களுக்கு முன்பு நாங்கள் பழைய வீட்டை காலி செய்து புதிய வாடகை வீட்டிற்கு வந்தோம்.இது கொஞ்சம் சிறிய வீடு எங்களுக்கு கொஞ்சம் பொருட்கள் ஜாஸ்தி.அதனால் சிலவற்றை கழித்து கட்ட முடிவு செய்தோம்.அதில் ஒரு மர பீரோவும் இரண்டு தகர ட்ரம்கள் ஒரு பாதி உடைந்த மர செல்ப் மற்றும் இந்த கற்களும் அடங்கும்.அம்மாவிற்கு மனதே இல்லை. ஆனால் அப்பா புதிதாக பார்க்கப்பட்டிருத்த வீட்டில் சமையலறை சிறியது அதில் இதை எல்லாம் வைத்துக்கொண்டிருக்க முடியாது என்று வாதம் செய்தார்.

வீடு காலி செய்யப்போவதற்கு முதல் நாள் அப்பாவின் நண்பர் மளிகை கடை செட்டியார் செல்வேந்திரன் வந்திருந்தார்.நீண்ட நேரம் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.சாமான்களை பார்த்துவிட்டு

 

ஒரு டெம்போ பத்தாது போலிருக்கே.நம்ம சரவணன் வண்டி சொல்லிக்கலாம் அது கூண்டு வச்ச வண்டி கொஞ்சம் பெருசு. ஆனா அந்த வீடு உங்களுக்கு பத்துங்களா முரளி கொஞ்சம் சின்னதா இருக்காப்ல இருக்கே

 

ஆமா என்ன பண்றது பள்ளிக்கூடத்து பக்கதுல வேற வீடு கெடைக்கல. இந்தாள் வேற காலிபண்ண சொல்லிட்டான். இதுல பாதி சாமான் எங்க அப்பா காலத்தது. அதான் கொஞ்சம் கழிச்சி கட்டலாம்னு இருக்கேன். இந்தா இந்த பீரோ அப்பறோம் இந்த செல்ப் இந்த மோடை

 

என்னது மோடையா

 

ஆமா அது பேர் அதான்

என்று பேசிக்கொண்டே வந்து மீண்டும் சேரில் அமர்ந்தார்கள்.

 

ஒரு சிறிய மௌனம் பரவியது

 

நான் வேனா இந்த ஒரு கல்ல எடுத்துக்கவா

 

ஒரு சிறிய அதிர்ச்சியுடன் அப்பா அவரை பார்த்தார், அவர் மனதில் என்ன தோன்றியது என்று தெரியவில்லை.

 

சரி எடுத்துக்கோங்க நான் அப்டியே விட்டுட்டு போய்டலாம்னு நெனச்சேன். யாருக்காவது பயன்பட்டால் சரி.

 

ஓகே நான் வரேன் முரளி.நாளைக்கு சரவணன் வண்டிய அனுப்பிச்சிட்டு நானும் பின்னாடி வறேன். சாமான் தூக்குற ஆளுங்கள பத்து மணிக்கு வர சொல்லிருக்கேன்

 

சரி செட்டியாரே பாப்போம்.

 

மறுநாள் முழுவதும் வீடு மாற்றும் படலம் நடந்தது அப்பா அணுக முடியாதவராக காணப்பட்டார்.செட்டியார் ஏறக்குறைய அன்று முழுவதும் எங்களோடே இருந்தார் அவர் கிளம்பும்போது அப்பா

 

செட்டியாரே இந்த கல்லு வேணும்னு கேட்டிங்களே எடுத்துட்டு போங்க என்றார்.அவரும் அந்த கோடு போட்ட கல்லை ஒரு பெரிய நாயை தூக்கி செல்வது போன்று எடுத்துச்சென்று அவர் ஸ்கூட்டியின் முன்னாள் வைத்துக்கொண்டு புறப்பட்டார்.

 

அதுவரை வாயே திறக்காமல் இருந்த பாட்டி அது ஒரு ஜோடி டா என்றார்.

 

அம்மாவின் நீண்ட பிடிவாதத்திற்கு பிறகு அப்பா அந்த ஒரு கல்லை எடுத்துவர சம்மதித்தார்.அதை நன்றாக கழுவி தற்போது

இந்த வீட்டில் அது பாத்திரம் தேய்க்கும் இடத்திற்கும் கிரைண்டருக்கும் இடையில்  வைக்கப்பட்டது. மாவு அரைத்துவிட்டு குழவியை அதில் இறக்கி பின்பு அதிலிருந்து தேய்க்கும் இடத்திற்கு அம்மா கொண்டு செல்கிறாள்.

 

இந்த நிலையில் தான் அப்பாவிற்க்கு தொடர் கனவுகள் வந்துகொண்டிருந்தன.

 

அது எங்க அப்பா காலத்துதா அதான் ஒரு மாதிரி இருக்குபோல என்று சொல்லிக்கொண்டு எழுந்தார்.மளமளவென குளித்து விட்டு சட்டையை மாட்டுக்கொண்டு சைக்கிளை எடுத்தார்.

 

அம்மா, செட்டியார்ட்ட கேக்க போறிங்களா என்றாள் .

 

ஆமா கேக்க போறேன் அவரு ஒன்னும் நினைச்சுக்க மாட்டாரு.

 

சரி இவனையும் கூட்டிண்டு போங்க அவரு வண்டில கொண்டுபோய்ட்டாரு நீங்க எப்புடி கொண்டுவருவீங்க இவன பின்னாடி உக்காரவச்சி புடிச்சிக்க சொல்லுங்க.

 

அதுவே சரியான வெயிட்டு இதுல இவன் வேற வந்தான்னா மிதிக்க முடியாது என்றார்.

 

 

 

என்ன நினைத்தாரோ தெரியவில்லை சரி வரட்டும் என்றார். நானும் அப்பாவும் செட்டியார் கடைக்கு சென்றோம். அவர் அங்கே இல்லை. கடை ஆளிடம் அப்பா விசாரித்தார் சாப்பிட சென்றவர் இன்னும் வரவில்லை என்றார் அந்த ஆள்.

 

நேராக செட்டியார் வீட்டிற்கு சென்றோம் இரும்பு கேட் சாற்றியிருந்தது. அதை திறக்கும்போது பூதாகாரமாக ஒலி எழுப்பியது. அவர் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். கேட் சத்தம் கேட்டவுடன் திரும்பி வாங்க முரளி சாமி என்றார். வீட்டிற்கு உள்புறம் திரும்பி முரளி சாமி வந்திருக்காங்க பார் தண்ணி கொண்டா என்றார்.

 

சற்றுநேரம் ஏதேதோ பேச்சுகள் ஓடின யார் வாழ்கிறார்கள் யாரெல்லாம் நொடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பல. பின்பு அப்பா மெதுவாக ஆரம்பித்தார்

 

அந்த கல்லு எடுத்துட்டு வந்திங்கள்ள அத என்ன செஞ்சிங்க

 

அதுவா சாமி அது ஒரு கத, அத நான் தண்ணி பானை வச்சிக்கலாம்னுதான் தூக்கிட்டு வந்தேன்.அதுல பாத்தீங்கன்னா பான ஒக்காறவே இல்ல. கல்லு நொடிச்சிகிட்டே இருந்துச்சி. வச்சி வச்சி பாத்தேன் அப்பறோம் ஒன்னும் சரிவர்லனு வீட்டுக்கு வெளில வச்சிருந்தேன்

 

அப்பறம்

 

நாம்ம செந்தில் இருக்கான் பாருங்க

 

யாரு

 

அதான்க ஓட்ட செட்டி செந்தில், இந்த செப்டிக் டேங்க் கிளீன் பண்ணுவானே நாம்ம ஊட்டுக்கு கூட ஒருதரம் அனுப்புச்சேன்.

 

ஆமா ஆமா சொல்லுங்க

 

அவன் அன்னைக்கு கிளீன் பண்ண வந்தான், முடிச்சிட்டு போறப்ப இது என்ன கல்லுனு கேட்டான், நான் உள்ளத சொன்னேன்.அவன் இப்போ இது உங்களுக்கு தேவபடலியானு கேட்டான், ஆமான்னேன் அப்ப நான் எடுத்துக்கவான்னு கேட்டான் கொஞ்சம் யோசனையா இருந்துச்சி அப்பறோம் எடுத்துக்கடாடேன். தூக்கிட்டு போய்ட்டான்.

 

அப்பாவின் முகம் கூம்பியது ஆனால் எதுவும் பேசாமல் அமர்திருந்தார்.

 

ஏன் முரளி என்ன ஆச்சி என்று அப்பாவை கேட்டார் அப்பா தனக்கு வரும் கனவுகள் பற்றி சொன்னார் செட்டியார் மிரண்டுவிட்டார்.

 

அதான் முரளி ரொம்ப காலமா இருந்த பொருள்லாம் யாருக்கும் குடுக்கக்கூடாது.அது வீட்ல ஒரு ஆள் மாதிரி அது தேவையோ இல்லையோ ஒரு ஓரத்துல கெடக்கட்டும்னு விட்டுரனும். சரி இப்போ என்ன பண்றது.

 

தெரியல

 

சரி நம்ம ஒன்னு பண்ணுவோம், நாம ரெண்டுபேரும் செந்தில் வீட்டுக்கு போவோம் அவன்ட கேட்டு தூக்கிட்டு வந்துருவோம். அவனும் அவன் சம்சாரமும் எங்கயாவது வேளைக்கு போயிருத்தத்தான் பிரச்சனை. ஒரு எட்டு போய் பாப்போம் இல்லனா நாளைக்கு போவோம்.

 

செந்தில் வீட்டுக்கு போவது என்று முடிவாகி அப்பாவும் நானும் செட்டியாருட்டம்மா கொடுத்த கொய்யா துண்டங்களில் சிலவற்றை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வெளியே வந்தோம்.

 

செட்டியார் ஸ்கூட்டியில் என்னை ஏற்றுக்கொண்டு  முன்னாள் செல்ல அப்பா பின்னால் வந்தார்.நிறைய சந்துகள் தாண்டி சென்றோம் ஒரு வழியாக செந்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

அந்த கல் அவர் வீட்டின் முன்னாள் உள்ள காவேரி பைப்புக்கு கீழே வைக்கப்பட்டிருந்தது. நிறைய கற்கள் அடுக்கப்பட்டு அதன் மேல் இந்த கல் நின்றுகொண்டிருந்தது .அந்த தண்ணி பைப் டிஸ்கவரி சேனலில் காட்டிய கிங் கோப்ரா போல விரைப்பாக  நின்றுகொண்டிருத்தது .இப்போது அப்பாவிற்கு முகம் சற்று இளகியது ஆனால் என்ன நினைக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை .

 

செட்டியார் வீட்டின் அருகே சென்று செந்திலு ஏய் செந்திலு என்றார். லுங்கியும் முண்டா பனியனுமாக செந்தில் வெளியே வந்தார் உள்ளே ஏதோ சினிமா ஓடிக்கொண்டிருந்தது.

 

வாங்க அண்ணே

 

இந்தப்பாரு சாமி வந்துருக்காப்டி

 

வாங்க சாமி, என்னண்ணே இவ்ளோ தூரம் அதுவும் சாமியோட நம்ம வீட்டுக்கு வந்துருக்கீங்க

 

அது ஒன்னும் இல்ல, நான் ஒனக்கு ஒரு கல்லு குடுத்தேன்ல அது சாமியோடதுதான். அவருக்கு இந்த கல்லு ஏதோ கனவுல  வந்து அழுவுதான் அதான் அத எடுத்துட்டுபோலாம்னு வந்தோம்.

 

அதுக்கென்னங்க எடுத்துட்டு போங்க நான் இந்த பைப்புக்கு கீல போட்ருக்கேன் கொடம் வச்சி புடிக்க . கொடத்த கொண்டாந்து வச்சா நீக்கவே மாட்டேங்கிது அப்பறோம் கொஞ்சம் மண் அடிச்சி ஊண்டி வச்சிருக்கேன்.

 

சரி வுடு , நீங்க எடுத்துக்கோங்க சாமி என்றார் செட்டியார், அப்பா சற்று நேரம் முழித்துக்கொண்டிருந்தார்.

அதற்குள் இந்தோ நானே வந்து எடுத்து தரேன் சாமி என்று செந்தில் லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு முன்னாள் வந்தார். பைப்பிற்கு கீழே இருந்து செந்தில் அந்த கல்லை தூக்கினர். காலுக்கடியில் இருந்து ஏதோ வழ வழவென்று தட்டுப்பட செந்தில் அந்த கல்லை திடீர் என்று கீழே போட்டார் நாங்கள் அனைவரும் பயந்து பின்னால் இரண்டடி வைக்க நான் ஓட எத்தனித்தேன். கடைசியில் அது ஒரு சிறிய தவளை.அனைவரும் அசடுவழிந்து பின் செந்தில் அந்த கல்லை தூக்க முற்பட்டபோதுதான் எல்லோரும் கவனித்தோம் அந்த கல் இரண்டாக உடைந்து கிடைத்தது. சரியாக அந்த கோட்டு வரியில் உடைத்திருந்தது.

 

செட்டியார் டேய்  என்றார். அப்பாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை அதிர்ந்துவிட்டார் .

சற்றுநேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்.

 

அது நமக்கில்லைன்னு முடிவாய்டிச்சி போல செட்டியார் வாங்க போலாம் என்று சைக்கிளை நோக்கி அப்பா வேகமாக சென்றார் பின்னால் செட்டியார் செந்திலை திட்டுவது கேட்டது நான் அப்பா பின்னாலேயே ஓடினேன். உட்காரு என்று ஒரே சொல். சைக்கிளை கிளைப்பிக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்தார்.

 

புதுவீட்டின் முன் அப்பா சைக்கிளை நிருத்தி பூட்டினார். உள்ளிருந்து  அக்கா ஓடிவந்தாள்

 

அப்பா சமையக்கட்டுல வந்து பாரேன்…..

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சக்தி ரூபேண! [சிறுகதை]

$
0
0

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

 

சாந்தம்மா மேலும் ஒரு கோப்புடன் வந்து “இது நாராயணன் மாஸ்டர் கொடுத்தனுப்பியது” என்றாள். விதவிதமான ரசீதுகளை ஓர் அட்டையில் சேர்த்து பிடிப்பான் போட்டு வைத்த கோப்பு

 

நான் கோபத்துடன் நிமிர்ந்து “எல்லாவற்றையும் சேர்த்தே கொண்டுவந்தால் என்ன? நான்குநாட்களாக கேட்கிறேன். கடைசிநிமிடத்தில்தான்  கொண்டு வருவீர்களா? நோயாளி போனபிறகு கொண்டுவாருங்கள். நான் போய் வாரியரின் காலைக்கழுவுகிறேன். அறிவே இல்லை” என்றேன்

 

சாந்தம்மா என்னிடம் இத்தகைய தருணங்களில் எப்போதும் காட்டும் எனக்கென்ன என்ற முகபாவனையுடன் அதை மேஜைமேல் வைத்தாள். நான் அதை கைகளால் ஒருமுறை அளைந்துவிட்டு “இதெல்லாம் என்ன?” என்றேன்

 

“அவள் சாப்பிட்டது…”

 

அதில் ஒரு ரசீதை எடுத்துப் பார்த்தேன். ராயல் பேக்கரியின் பில். இன்னொன்றும் அதுதான். “அப்படியென்றால் இவள் இங்கே சாப்பிடவே இல்லையா?”

 

சாந்தம்மா “அவளுக்கு சோறு குழம்பு எதுவும் பிடிக்கவில்லை. காரம் காரம் என்று சொல்கிறாள். கஞ்சியைக்கூட காரம் என்றுதான் சொல்கிறாள்”

 

“அப்படியென்றால் நம் சாப்பாட்டுக்கு ஏன் பில் போடுகிறீர்கள்?”

 

“அதை அவள் வாங்கினாளே”

 

‘அதை யார் சாப்பிட்டார்கள்?” என்றேன்.

 

“மாத்தன் இருக்கும்வரை அவன் சாப்பிட்டான். இப்போது அதை வாங்கிச் சாப்பிட இரண்டுபேர் இருக்கிறார்கள். ஷெனாய் எது கிடைத்தாலும் தின்கிறார்”

 

சரி என நான் தலையசைத்து அவளைப் போகச் சொன்னேன். பெருமூச்சுடன் கணிப்பொறியைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். ஆரம்பத்திலிருந்தே மறுபடியும் கணக்குகளை ஏற்றவேண்டும். இதை ஒற்றைவிரலால்தான் நான் செய்யவேண்டும். இருபதாண்டுகளாக அப்படித்தான். விசைப்பலகையை பார்த்தால் திரையை பார்க்கமுடியாது. அவற்றில் ஒன்றை பார்த்தால் வேறு எதையும் பார்க்கமுடியாது. ஆகவே முதலில் ரசீதுகளைப் பார்த்து எண்களை மனப்பாடம் செய்து அவற்றை விசைப்பலகையில் தட்டி திரையை பார்த்து அதுதான் அச்சாகியிருக்கிறதா என்று பார்த்தபின் ரசீதுகளை ஒப்பிட்டுப் பார்த்து உறுதிசெய்துகொள்ளவேண்டும்.

 

நான் இதை முடிக்க அந்தியாகிவிடும். வழக்கமாக மாதவிதான் செய்வாள். அவள் ஏழு நாட்களாக லீவு. ஏழுநாட்களுக்கெல்லாம் இன்னொரு வேலையாளை அமர்த்தமாட்டார் வாரியர். கேட்கலாம், பதிலுக்கு ஏதாவது சம்ஸ்கிருத ஸ்லோகம் சொல்வார். சமாதானங்கள் சொல்வதற்கென்றே ஃபர்த்ருஹரி நிறைய சுபாஷிதங்களை எழுதி வைத்திருக்கிறார்.

 

என் செல்பேசி அதிர்ந்துகொண்டிருந்ததை அப்போதுதான் பார்த்தேன். கையை உதறி இயல்படைந்தபின் அதை எடுத்து “அல்லோ” என்றேன். மறுபக்கக் குரல் புரியவில்லை. எனக்கு செல்பேசியில் யார் பேசினாலும் குரல் தெளிவாகி சொற்கள் பிடிபட நாலைந்து சொற்றொடர்கள் தேவைப்படும்

 

“நான் ஸ்ரீதரப்பொதுவாள்… ஆமாம், ஸ்ரீதரப்பொதுவாள். யார் வேணும்? இது ஸ்ரீகார்த்திகா விலாசம் வைத்யாலயம். யார் வேணும்? நீங்கள் யார்?”

 

மெல்ல தெளிவடைந்தது. அது தனியார் தபால் கொண்டுவரும் பையன். “நாஸரா? டேய் நீ நாஸர் தானே? நாஸராடா? டேய், மாப்பிளை என்னடா?” என்றபின் மேலும் தெளிவுகொண்டு “நீ வேறா? என்ன பெயர்? ராமன்குட்டியா? நாஸர் என்ன ஆனான். அவனுக்கு கொட்டம்சுக்காதி எடுத்து வைத்திருக்கிறேனே” என்றேன்.

 

ராமன்க்குட்டி புதியவன் “நாஸர் இல்லை. இது பெரிய கொரியர். ஆட்டோவில் கொண்டுவருகிறோம். ஆட்டோவுக்கான செலவை நீங்கள் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் வந்து எடுத்துக்கொண்டு போங்கள்”

 

நான் “மருந்தா?” என்றேன்.

 

“இல்லை, ஒரு பெட்டி…”

 

“அது ஹிமாலயன் கம்பெனி மருந்து… பத்திரமாக…”

 

“மருந்து இல்லை. இது வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறது”

 

“வெளிநாட்டில் இருந்தா? யார் பெயருக்கு?”

 

“வைத்யாலயம் பெயருக்கு…உரிமையாளர், ஸ்ரீதரப் பொதுவாள்”

 

“நான் உரிமையாளர் இல்லை”

 

“பரவாயில்லை. ஆட்டோ கட்டணத்தை கொடுப்பீர்களா இல்லையா?”

 

“கொண்டு வா… கொடுக்கிறேன்… ஆனால் ஐம்பது ரூபாய்தான். அதற்குமேல் என்றால் வேண்டாம்”

 

“ஐம்பதுதான்…”

 

”சரி”

 

நான் மீண்டும் கணக்குகளைப் பார்த்தேன். ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டது. ஆனால் வெளிநாட்டிலிருந்து என்ன பொட்டலம்? எங்கள் வைத்தியநிலையத்தில் அப்போது பன்னிரண்டு வெளிநாட்டு நோயாளிகள் இருந்தனர். எட்டுபேருக்கு உயர் மனஅழுத்தம், போதைப்பழக்கம். எஞ்சியவர்களுக்கு கீல்வாதம், மூட்டு இறுக்கம்.

 

எழுந்து சென்று வேப்பமரத்தடியில் நின்று வெற்றிலைபோட்டுக்கொண்டேன். மெல்ல பதற்றங்கள் அடங்கின. வெற்றிலையை துப்பிவிட்டு மீண்டும் வந்து அமர்ந்தபோது ஆட்டோ வந்தது. உள்ளிருந்து சந்தனக் கீற்று அணிந்த முப்பது வயதான ராமன்குட்டி இறங்கி வந்து “வைத்யாலயம்தானே?” என்றான்

 

“ஆமாம், நான்தான் ஸ்ரீதரப்பொதுவாள்” என்றேன்

 

“வைத்யரே, ஒரு பெட்டி. பெரிய எடையில்லை. ஆனால் பிளாஸ்டிக் டப்பா . உள்ளே ஏதாவது விலைமதிப்புள்ள பொருள் இருக்கப்போகிறது என்று தோன்றியது. ஆட்டோக்காரன் அறுபது ரூபாய் கேட்கிறான்”

 

நான் கோபத்துடன் “நான் உன்னிடம் சொன்னேன். ஐம்பதுரூபாய்க்கு ஒரு பைசா கூடாது… பத்துரூபாய் நீ கொடுடா”

 

“வைத்தியரே இந்த வைத்யாலயம் கடலோரமாக இவ்வளவு தள்ளி இருக்கிறது என்று அவனுக்கு தெரியாதாம். அங்கே சாலையில் இருக்கும் போர்டைத்தான் அவன் பார்த்திருக்கிறான்… உள்ளே தனி சாலையே இருக்கிறது என்கிறான்”

 

“ஐம்பது ரூபாய்…. மேலே கிடையாது. முடியாது என்றால் நீ திரும்பிக் கொண்டுபோ… பத்து ரூபாய் சும்மாவா கிடைக்கிறது?”

 

ராமன்குட்டி “இதெல்லாம் பிச்சைக்காரத்தனம்” என்றான்

 

“பிச்சைக்காரன் உன் தந்தை… டேய், அந்த மாப்பிள்ளை எவ்வளவு நல்லவன்… அவன் அல்லாவுக்கு விசுவாசமானவன்”

 

“விசுவாசத்தை நான் பார்த்துக்கொள்கிறேன். பணத்தை எடுடா அம்பலவாசி… இல்லாவிட்டால் நீ ஜங்ஷனுக்கு வராமலா போய்விடுவாய்… என்னடா நினைத்தாய்? பணத்தை எடு”

 

“பணம் உன் தந்தை தருவான், போடா”

 

அவன் அந்தப் பெட்டியை தூக்கி வெளியே போட்டான்.  “எடுடாம் எழுபது ரூபாய் எடு… “

 

“எழுபதா!”

 

“பின்னே ? உன் உணக்கை பெட்டியை கொண்டு இவ்வளவு தூரம் வருவதற்கு நான் என்ன உன் பெண்டாட்டியிடம் தொடுப்பா வைத்திருக்கிறேன்”

 

“எனக்கு பெண்டாட்டி இல்லை”

 

“பணத்தை எடுடா தைலக்கார நாயே… தொழிலாளிகளிடம் விளையாடுகிறாயா? பிற்போக்கு மூராச்சி?” அவன் கையை ஓங்கி “பணத்தை கொடுக்காவிட்டால் எண்பது ரூபாய் சாமான் எதையாவது எடுத்துக்கொண்டு போகிறேன்…” என்றான்

 

நான் எழுபது ரூபாயைக் கொடுத்தேன். அவன் தரையில் சற்றே துப்பிவிட்டு “திமிர் காட்டுகிறான்கள், பூர்ஷுவா நாய்கள்” என முணுமுணுத்து ஆட்டோவில் ஏறிக்கொண்டான். அது வட்டமிட்டு சென்றது. மணலில் தென்னை மரங்களின் நடுவே அந்த ஆட்டோவின் சக்கரங்களின் கோடுகள் ஒன்றையொன்று வெட்டிச் சென்றதை பார்த்துக்கொண்டிருந்தேன்

 

மீண்டும் கணக்கை தொடர்வோமா அல்லது அந்தப் பெட்டியை திறந்து பார்ப்போமா என்று குழம்பினேன். வாரியர் எதையாவது வாங்கியிருப்பாரோ? சமீபகாலமாக அவருக்கு இணையத்தில் கிடைக்கும் பொருட்களை வாங்குவதில் ஆர்வம். பெரும்பாலான நேரம் வீட்டில் வெட்டியாக இருப்பதன் விளைவு. சென்றவாரம் தொப்பையை குறைக்கும் பெல்ட் என்று ஒரு ரப்பர் பட்டையை நாலாயிரம் ரூபாய்க்கு வாங்கினார். அதை வைத்து அவர் மனைவில் பசுவை கட்டுகிறாள்.

 

நான் அந்தப் பெட்டியை உருட்டிப் பார்த்தேன். விலாசத்தை பார்த்ததும் தெரிந்துவிட்டது. சாந்தம்மாவை மணி அடித்து கூப்பிட்டேன். அவள் கையை துடைத்தபடி வந்தாள்

 

“எல்லா எங்கே?”

 

“அறையில் இருக்கிறாள்”

 

“அவளை வரச்சொல்”

 

சாந்தம்மா அந்தப் பெட்டியை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டுச் சென்றாள். நான் அதை புரட்டிப் பார்த்தேன். உள்ளே ஏதோ எலக்ட்ரானிக் பொருள் இருப்பதாகத் தோன்றியது

 

எல்லா கையில் புத்தகத்துடன் வந்தாள். திருவனந்தபுரத்தில் இருந்து மாத்தன் அவளுக்கு வாங்கிக்கொண்டு கொடுத்த நூல்கள்தான் அவளுடைய இப்போதைய வாசிப்பு. பெரும்பாலும் வெவ்வேறு சாமியார்கள் இந்திய ஆங்கிலத்தில் எழுதிய ஆன்மிக விளக்கங்கள். கீதை, பிரம்மசூத்திரம், தேவிபாகவதம்.

 

“அப்படி எல்லாவற்றையும் கலந்துகட்டி வாசித்தால் குழப்பம்தான் மிஞ்சும், ஒன்றை மட்டும் படி” என்று நான் சொன்னேன். “எனக்கு எல்லாமே ஒன்றாகத்தான் தெரிகிறது” என்று அவள் சொன்னாள். நான் “அப்படியென்றால் சரி” என்றேன். “உண்மையாகவே” என்றாள். “ஏன்?” என்று கேட்டேன். “ஒருவேளை எல்லாமே எனக்கு புரியாதவை என்பதனால் இருக்கலாம்” என்று சிரித்தாள்.

 

எல்லா அருகே வந்து “வந்துவிட்டதா?” என்றாள்.

 

“இது என்ன?” என்றேன்

 

“சொல்கிறேன்… உங்களுக்காக நான்தான் வரவழைத்தேன்” என்று அவள் புத்தகத்தை மேஜைமேல் வைத்தாள். சௌந்தரிய லஹரி. விஷ்ணுமங்கலம் நீலகண்டன் நம்பூதிரிப்பாடு உரையுடன். அதன் அட்டையில் வெண்கலச் சிலை ஒளியுடன் தெரிந்தது

 

“ஒரு கத்தரிக்கோல்.. ஏய் ஷாண்ட்!”

 

சாந்தம்மா எட்டிப்பார்த்தாள். எல்லா கைவிரலை வெட்டுவதுபோல் காட்டி கத்தரிக்கோல் என்றாள்

 

“இது என்ன?” என்றேன்

 

“இது பொம்மை, நான் சொன்னேனே. என் பொம்மை”

 

“உனக்கேது பொம்மை?”

 

“இது என் வடிவப் பொம்மை”

 

“இது எதற்கு?”

 

“நீங்கள் இங்கே உழிச்சில் சொல்லிக்கொடுப்பதற்கு ஒரு மரப்பொம்மையை வைத்திருக்கிறீர்கள். நேற்றுகூட அந்த அமெரிக்கக்காரிக்கு எப்படி உழிச்சில் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க அந்த மரப்பொம்மையை வைத்து பெண்களிடம் விளக்கிக் கொண்டிருந்தீர்கள்”

 

“அதனாலென்ன?”

 

“அது சரியான அளவுகளிலேயே இல்லை. சொல்லப்போனால் அது பொம்மையே அல்ல, மரக்கட்டை. அதில் இடங்களை அடையாளப்படுத்தியிருக்கிறீர்கள். அவையும் தவறாகவே இருக்கமுடியும்…”

 

“என்ன சொல்லவருகிறாய்?”

 

“நான் என் பொம்மைகளில் ஒன்றை இந்த வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக தருகிறேன்”

 

“இங்கே அந்தமாதிரி பொம்மைகள் தேவையில்லை”

 

“இது மிகச்சரியானது, துல்லியமாக என் உடல்போலவே இருக்கிறது. அத்தனை உறுப்புகளும் உண்மையானவை”

.

“ஆம், அதனால்தான்..”

 

“பல மருத்துவமனைகளில் மனிதச் சடலத்தையே பயன்படுத்துகிறார்கள்”.

 

நான் தயங்கி  “ஆனால் இங்கே அவ்வழக்கம் இல்லை” என்றேன்

 

நீங்கள் அஞ்சுகிறீர்களா?”

 

“அச்சமா?”

 

“இல்லையென்றால் மருத்துவர்கள் ஏன் உடலை ஒதுக்கவேண்டும்?”

 

“அதுவும் சரிதான்”

 

“அது மிகமிகச் சிறந்த உடல்… இலட்சிய உடல். அதுதான் கற்பிப்பதற்கு மிகச்சிறந்தது. எல்லா அடையாளங்களையும் அதைக்கொண்டே சொல்லமுடியும். ஒவ்வொரு நரம்பையும் அதைக்கொண்டு காட்டிவிடமுடியும்”

 

நான் பெருமூச்சுவிட்டேன்

 

“என்ன, சொல்லுங்கள்”

 

“சரி” என்றேன்

 

“மருத்துவர்களுக்கு மட்டும்தான். அந்த அறையிலேயே அது இருக்கலாம்”

 

“எல்லா”

 

“சொல்லுங்கள்”

 

“நீ ஏன் இதை இங்கே கொடுக்கிறாய்?”

 

“நான் இங்குள்ள பகவதி ஆலயத்திற்கு கொடுக்கலாமென்று நினைத்தேன். அங்கே இருக்கும் கற்சிலை அத்தனை உயிர்ப்புள்ளது அல்ல. இதை வைத்தால் பகவதி நேரில் வந்ததுபோல் இருக்கும்”

 

“விளையாடாதே”

 

அவள் தலையை பின்னால்தள்ளி சிரித்து “சரி, சும்மாதான். தோன்றியது. உண்மையில் என் உடலை இங்கே இவர்கள் உழியும்போது என்னை  நானே கற்பனையில் பார்த்துக்கொண்டிருப்பேன்.  ஆகவே மரப்பொம்மையை உழிவதைப் பார்த்தபோது தவறாகத் தோன்றியது” என்றாள். நன்றாகவே தேறிவிட்டாள். அவள் முகம் பளபளப்பாக இருந்தது. கண்களில் இளமை மீண்டுவிட்டிருந்தது.

 

“அது பல ஆண்டுகளாக இங்கே இருக்கிறது”

 

“ஆம், அது ஒரு தெய்வம்போல ஆகிவிட்டது. அந்த பொம்மை எத்தனை பெண்களின் உடலாக ஆகியிருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். உங்கள் கைகள் வழியாக அது பெண்களின் உடல்களுக்குச் செல்கிறது”

 

“நீ நாளை கிளம்புகிறாய், அதற்குமுன் இதை இங்கே விட்டுச்செல்ல விரும்புகிறாய்”

 

“இருக்கலாம். ஸ்ரீ, நான் இங்கே மகிழ்ச்சியாக இருந்ததைப்போல என் வாழ்க்கையில் எப்போதும் எங்கும் இருந்ததில்லை. நான் இங்கே மீண்டும் வருவேன்”

 

“வெறுமே விருந்தாளியாக வா”

 

“இல்லை வேலைக்குச் சேர்ந்துவிடவா? என்னால் உழிச்சில் கற்றுக்கொள்ள முடியும்”

 

நான் சிரித்தேன்

 

“மெய்யாகவே… ஒன்று சொல்லவா? என் அம்மா ஸ்வீடன்காரி. எங்களூரில் குழந்தைகளை தடவிக்கொடுக்கும் ஒரு மருத்துவமுறை உண்டு. பழைய மந்திரச்சடங்குகளில் இருந்து வந்தது. நோயுற்ற குழந்தைகளை என் அம்மா மடியில் போட்டு மெல்ல வருடுவாள். அரைமணிநேரம் அல்லது ஒரு மணிநேரம். உண்மையாகவே குழந்தைகள் நோய் தீர்ந்து எழுந்துவிடுகின்றன. நானே பலமுறை பார்த்திருக்கிறேன். பல நாட்களாக அழுதுகொண்டே இருக்கும் குழந்தைகள் அவை. பல மருந்துகளாலும் நோய் தீராதவை. என் அம்மா ஏதோ மந்திரங்களைச் சொல்வாள்”

 

“புனிதர்களுக்கான மந்திரங்களா?

 

“இல்லை, அவை பழைய பாகன் மதத்தின் மந்திரங்கள். ஒருவகை ஓசைகள், அவ்வளவுதான்”

 

“இங்கேயும் அவ்வழக்கம் உண்டு, அதையும் உழிச்சில் என்றுதான் சொல்வார்கள். நிறையக் குழந்தைபெற்று முதிர்ந்த பெண்கள் செய்வார்கள். ”

 

“என் அம்மாவுக்கு நிறைய குழந்தைகள்”

 

“முலைகளில் பாலாக ஊறுவது அன்னையின் உயிர்தான். நாங்கள் அதைச் சைதன்யம் என்கிறோம். முதிய அன்னையின் பத்துவிரல்களும் முலைக்கண்களாக ஆகிவிடுகின்றன”

 

“நான் ஊருக்குச் சென்று அதைப் பயிலவேண்டும் என நினைத்தேன்”

 

“உன் அம்மா இருக்கிறார்களா? ”

 

அவள் கண்களைச் சரித்து “இருக்கக்கூடும்” என்றாள்

 

“தொடர்பே இல்லையோ?”

 

“நெடுநாட்களாக தொடர்பில்லை”

 

“அவர்கள் உயிருடன் இருக்கவே வாய்ப்பு…. எளிதாகக் கண்டுகொள்ளலாம்” என்றேன்

 

“ஆனால் நான் குழந்தை பெறவில்லை… இப்போது எனக்கு கருப்பையும் இல்லை”

 

“அதனாலென்ன?”

 

அவள் மெல்ல தனக்குள் “ஆம், அதனாலென்ன?” என எழுந்துகொண்டாள்

 

சாந்தா கத்தரிக்கோலுடன் வந்தாள். அவள் அதை வாங்கி பொட்டலத்தைப்  பிரித்தாள். உள்ளே இருந்தது உரித்த ஆட்டுத்தோலை திருப்பி வைத்ததுபோன்று கொழகொழவென்ற ரப்பர் குழம்பல்.

 

“இதுவா?”

 

“இதுதான், காற்று அடிக்கவேண்டும்… இதிலேயே பம்ப் உண்டு… மின்சார இணைப்பு கொடுத்தால் அதுவே காற்றை நிறைத்துக்கொள்ளும்”

 

“உள்ளே கொண்டுபோவோம்”

 

அவள் அதை அறைக்குள் கொண்டுவந்தாள். அதன் மின்இணைப்புகள் எல்லாம் உடன் இருந்தன. பயனர் வழிகாட்டி, பயன்பாட்டுறுதி ஆகியவை ஒரு தனி தோல்பையில் இருந்தன.

 

மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அவள் அதன் பித்தானை அமுக்கியதும் ர்ர்ர்ர் என்று அதன் மோட்டார் ஓட தொடங்கியது. அது உயிர்பெறுவதுபோல காற்று கொண்டது. அதன் முகம் விந்தையாக சுருங்கி சுளிவுகொண்டு மானுட முகமென்றே தோன்றாதபடி இருந்தது. அதில் விதவிதமான அசைவுகள் தோன்றின. அது அருவருப்பு கொண்டது, சீற்றம்கொண்டது, எதையோ சொல்லவந்தது, உதடுகள் விரிய புன்னகைத்தது. துயில்புன்னகை. பற்கள் தெரியாத புன்னகை, ஆழத்து நினைவொன்றால் இனிதாக ஊறி எழுவது.

 

அதன் கைகளும் கால்களும் உயிர்பெற்றன. உடல் முழுமையடைந்தது. சற்று தொட்டால் எழுந்துவிடும் என்பதுபோல.

 

“தொடுங்கள்”

 

நான் தயங்கினேன்

 

“நானே சொல்கிறேன், தொடுங்கள்”

 

நான் அதன் காலை தொட்டேன். அதன் கண்கள் திறந்தன. அது பற்கள் தெரிய புன்னகைத்தது

 

“நீங்கள் மொழியை தேர்வுசெய்யலாம். என்னென்ன நடத்தைகள் வேண்டும் என்பதை இதற்கு ஆணையாக அமைக்கலாம்”.

 

“நடத்தை என்றால்?”

 

“சிலர் நாணம் கனிவு போன்றவற்றை விரும்புவார்கள். சிலருக்கு வெறியும் வேகமும் வேண்டும்”

 

“எனக்கு மொழியே தேவையில்லை”

 

“அசைவுகள்?”

 

“இயல்பான அசைவுகள்போதும்”

 

அவள் “நான் இதை பின்னர் முழுமையாகவே அமைத்துத் தருகிறேன்” என்றாள்

.

நாங்கள் வெளியே வந்தோம். நான் “இதை இனிமேல் பூட்டி வைக்கவேண்டும்” என்றேன்

 

“ஏன்?”

 

“இந்தப் பொம்மை… இதை யாராவது தவறாக பயன்படுத்தலாம்… திருடக்கூடச் செய்யலாம்”

 

“தவறாக என்றால்?”

 

நான் “அதற்காக” என்றேன்

 

“அப்படி யாராவது கேட்டால் கொடுத்துவிடுங்கள். நான் வேறு அனுப்புகிறேன்” என்றாள்

 

“அதில்லை”

 

“இங்கே இத்தனை பெண்கள்… ஒரு பொம்மை பாதுகாப்பாக இருக்காதா என்ன?”

 

“உனக்குப் புரியாது” என்றேன்

 

“உண்மையாகவே எனக்குப் புரியவில்லை. பெண்களுக்கு ஏன் இத்தனை பாதுகாப்பு கெடுபிடிகள் இங்கே? ”

 

“இங்குள்ள வழக்கம் அப்படி. ”

 

அவள் “நான் வெளியே செல்லலாம் என நினைக்கிறேன்” என்றாள்

 

“எங்கே?” என்றேன்

 

“கோயிலுக்கு”

 

“யார் கூட வருகிறார்கள்?”

 

“இதோ இங்கிருந்தே தெரிகிறது பகவதிகோயில். கடற்கரை வழியாகப்போனால் மிக பக்கம். நானே போய்விட்டு வருவேன்”

 

நான் “தனியாகவேண்டாம். இப்போது மாலைநேரம்” என்றேன்

 

“மாலைநேரம்தான் கடற்கரை வழியாகச் செல்லமுடியும். பகலில் வெயில் தீ போல் எரிகிறது”

 

நான் “நீ தனியாகச் செல்லவேண்டாம்” என்றேன்

 

“இன்று ஒருநாள்…” என்று கெஞ்சினாள்

 

‘இன்றுதான், நீ நாளை கிளம்பப்போகிறாயே”

 

“ஆம், நாளை…. ஆகவேதான் பகவதிகோயிலுக்குச் செல்கிறேன். ஒரு நன்கொடை வாக்குறுதி அளித்திருக்கிறேன்”

 

“மாத்தன் எப்போது வருவான்?”

 

“காலை எட்டுமணிக்கு. எனக்கு விமானம் மறுநாள் விடியற்காலை மூன்றுமணிக்கு. நான் மாத்தனின் வீட்டுக்குச் செல்கிறேன்”

 

“சரி”

 

அவள் தன் அறைக்குச் சென்றாள். நான் சமையற்கட்டுக்குச் சென்றபோது அவள் கடலோரமாக கைப்பையுடன் நடப்பதை சன்னல்வழியாகப் பார்த்தேன்

 

சாந்தம்மா “நிறைய பணம் வைத்திருக்கிறாள்” என்றாள்

 

நான் ‘ஆம்” என்றேன்

 

கணக்குகளை முடிக்க நெடுநேரமாகியது. அதன்பின் ஓர் உழிச்சல். அது முடிந்து நான் வரும்போது சாந்தம்மா எதிரே வந்தாள்

 

“அந்த பிரெஞ்சுக்காரி திரும்ப வரவில்லை”

 

“அப்படியா?” என்றேன். அந்தி இருட்டிவிட்டிருந்தது.

 

“அவளை தேடிப்பார்க்க சுகுவை அனுப்பவா?”

 

“அனுப்பு… கடலோரமாகவே போகச் சொல்…கடல்வழியாகத்தான் வருவாள்”

 

சுகுவை சாந்தம்மா அனுப்பினாள். நான் என் அறைக்குச் சென்றேன். குளித்து ஈர உடையுடன் சில வழிபாடுகள், தியானங்கள் என் வழக்கம். ஆடைமாற்றிக்கொண்டு வந்தபோது மேலும் ஒன்றரை மணிநேரம் ஆகிவிட்டிருந்தது

 

சாந்தம்மா திகிலுடன் எனக்காகக் காத்து நின்றிருந்தாள். “அவள் அங்கே இல்லை” என்றாள்.

 

“யார்?”

 

“எல்லா”

 

“ஓ’ என்றேன். எனக்கு முதலில் ஒன்றும் தோன்றவில்லை. “கோயிலில் இல்லையா?”

 

“சுகு வந்து சொன்னான்…அவள் அங்கே சென்றுவிட்டு உடனே திரும்பிவிட்டாள் என்று போற்றி சொல்லியிருக்கிறார். வேறு எவரும் அவளைப் பார்க்கவில்லை”

 

“திருவனந்தபுரம் போயிருப்பாளோ?”

 

“அப்படி போகமாட்டாளே”

 

“அவளை செல்ஃபோனில் கூப்பிட்டாயா?”

 

“நூறுமுறை கூப்பிட்டுவிட்டேன். முதலில் அழைப்பு சென்று ஓய்ந்தது.இப்போது அணைந்துவிட்டது”

 

எனக்கு பதற்றம் ஏற்பட்டது. ஆனால் எல்லா சற்று ஊகிக்கமுடியாத நடத்தை கொண்டவள். வெள்ளைக்காரர்களே அப்படித்தான். வெள்ளைக்காரப் பெண்களுக்கு இந்தியாவில் எப்படி பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதே தெரியாது

 

நான் மின்கலக் கைவிளக்கை எடுத்துக்கொண்டேன். “நான் பார்த்துவருகிறேன்” என்று கிளம்பினேன்

 

கடல் வெண்ணுரை மட்டுமே தெரிய கொந்தளித்துக்கொண்டிருந்தது. அலையோசை, காற்றில் உப்புநீர் துமிகள். பாறைகளுக்கு அப்பால் அலை பொங்கிப்பொங்கி எழுந்தது. கடற்கரை மணலில் எவருமில்லை. கூர்ந்து நோக்க நோக்க மண் தெளிந்தது. பாறைகள் வடிவு துலங்கின

 

நான் பகவதி கோயிலுக்குச் சென்றேன். நடைபூட்டியிருந்தது. மங்கலான விளக்கு எரிந்தது. கோயிலைச்சுற்றி வீடுகள் ஏதுமில்லை. ஒற்றையடிப்பாதை ஜங்ஷனுக்குச் சென்றது. அங்கே சென்று சேரும் வழியின் இருபக்கமும் தென்னைத்தோப்பு. விளக்கை சுழற்றி சுழற்றி வீசி தேடிக்கொண்டே போனேன். என் கண்ணே எழுந்து பறந்து தென்னை தென்னையாக தொட்டு மீள்வதுபோல் இருந்தது.

 

ஜங்க்‌ஷனில் சிவராமன் நாயர் கடை சாத்திக்கொண்டிருந்தார். எதிர்ப்பக்கம் சுப்ரமணியனின் கடையில் இருவர் நின்றிருந்தனர். சிவராமன் நாயர் என்னிடம் புன்னகைத்து “என்ன வேண்டும்?” என்றார்

 

”இங்கே எங்கள் நோயாளி ஒருத்தி வந்தாளா? வெள்ளைக்காரி?”

 

“இல்லையே”

 

‘பஸ் ஏறியோ ஆட்டோவிலோ போனாளா?”

 

“இல்லையே… இங்கே யாரையுமே பார்க்கவில்லையே. யார்? எல்லாவா?”

 

“அவளை தெரியுமா?”

 

“நன்றாகவே தெரியுமே? நல்ல பெண்…ஸ்ரீத்துவம் உள்ளவள்… இங்கே பகவதியை கும்பிட வருவாள்…”

 

நான் “ஓ” என்றேன்

 

“அவளா திரும்பி வரவில்லை? இந்தவழியாக பஸ் ஏறவில்லை. உறுதியாகச் சொல்கிறேன்”

 

சுப்ரமணியனுக்கும் அவன் கடையில் பீடி பிடித்துக்கொண்டிருந்த இரண்டு மீனவர்களுக்கும்கூட எல்லாவை தெரிந்திருந்தது. அவள் அவ்வழியாகச் செல்லவில்லை என்றார்கள்.

 

என்ன செய்வதென்று தெரியவில்லை.அப்போதுதான் மாத்தன் நினைவு வந்தது. அவனைக் கூப்பிட்டுப் பார்க்கலாமா? அவனை பயமுறுத்துவது ஆகுமா? ஆனால் கேட்பதே நல்லது. அவள் அவனிடம் பேசியிருக்கலாம்

 

நான் இரண்டாம் முறை கூப்பிட்டபோதுதான் மாத்தன் எடுத்தான். “வைத்தியரே, நான் வைன் குடித்தேன். நல்ல பிரெஞ்சு ஒயின்…போர்டியாக்ஸ் ரெட்…”

 

“எல்லா ஃபோன் செய்தாளா?”

 

“ஆமாம், நாளை காலை வரச்சொன்னாள். அவள் சொன்ன டிரெஸ் கூட எடுத்துவிட்டேன்”

 

“இல்லை, மாலையில் ஃபோன் செய்தாளா? ஐந்துமணிக்கு மேல்?”

 

“இல்லையே”

 

“அவள் இன்று எங்காவது போவதாகச் சொன்னாளா?”

 

“இல்லையே. ஏன்?”

 

“இல்லை கேட்டேன். ஒன்றுமில்லை”

 

என் பதற்றம் கூடிக்கூடி வந்தது. மீண்டும் தென்னந்தோப்பு நோக்கிச் செல்ல திரும்பினேன். சிவராமன் நாயரின் கடைமுன்  டிவிஎஸ் 50 யில் வந்திறங்கிய ராமன்குட்டி என்னை பார்த்து “என்ன பொதுவாளே, சாயங்காலம் ஒரு லார்ஜ் ஏற்றும் வழக்கம் உங்களுக்கும் உண்டா?” என்றான்

 

நான் ஒன்றும் சொல்லாமல் திரும்பினேன். சிவராமன் நாயர் அவனிடம் நான் எல்லாவை தேடுவதைச் சொன்னார். அவன் என் பின்னால் டிவிஎஸ் 50யில் காலை தரையில் உதைத்து உதைத்து வந்தான்.

 

“உண்மையா சிவராமன் நாயர் சொன்னது? அந்த பிரெஞ்சுக்காரியை காணவில்லையா?”

 

“இல்லை. அவளை உனக்குத்தெரியுமா?”

 

“இங்கே எல்லாருக்குமே அவளை தெரியும்… யார் பேசினாலும் சிரித்துப்பேசுவாள். அவசியமென்றால் பணமும் தருவாள்… சந்தனப்பொட்டு போட்டு குங்குமம் வைத்திருப்பாள். கூந்தல் மட்டும் செம்பட்டையாக இல்லை என்றால் யாரோ மேனோன்வீட்டு பெண் என்று சொல்லிவிடலாம்… அவள் எங்கே?”

 

“அவளைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்”

 

“எங்கேயும் போயிருக்க மாட்டாள். நீங்கள் வண்டியில் ஏறுங்கள். நாம் கடற்கரை வழியாக சுற்றிப்பார்ப்போம்… நல்ல பெண். ஆனால் கொஞ்சம் மரைகழன்றவள். அனேகமாக ஏதாவது பாறைமேல் கடலைப் பார்த்துக்கொண்டிருப்பாள்”

 

நான் விளக்கைச் சுழற்றி அடித்துக்கொண்டு பின்னால் அமர்ந்திருந்தேன். ராமன்குட்டி “ஈரமணலில்தான் வண்டி புதையாமல் ஓடும். நீங்கள் கரையோரத் தென்னைகளைப் பாருங்கள்” என்றான்

 

ஒளி பாறைகள் மேல் தாவித்தாவி அமர்ந்தது . வருடி சுழன்று வந்தது. அவள் தென்படவில்லை.

 

“பொதுவாளே, அவள் தற்கொலை செய்துகொள்ள மாட்டாள் அல்லவா?”

 

“வாய்ப்பில்லை, அவளுக்கு குணமாகிவிட்டது”

 

“குணமானால்தான் தற்கொலைசெய்யத் தோன்றுமோ என்னவோ. அவளுக்கு என்ன நோய்?”

 

“நரம்புச்சிக்கல்”

 

‘பத்து ரூபாய்க்கு பேரம்பேசுகிற பொதுவாள் நீங்கள்… உங்களுக்கே ஏதோ நரம்புச்சிக்கல் உண்டு”

 

“பத்துரூபாய் கம்யூனிஸ்டுகளுக்கு பெரிய தொகை இல்லை”

 

“கம்யூனிஸத்தை தொட்டுவிளையாடவேண்டாம்… நான் வேறுமாதிரி ஆள்”

 

அவள் எங்குமே இல்லை. நாங்கள் எட்டு கிலோமீட்டர் வரை சென்றோம். அதற்கப்பால் கோவளத்தின் விடுதிகள். அங்கே பெரிய கட்டிடங்களின் சன்னல்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. கடலோரம் குடைகள் பலவண்ணங்களில் ஒளிவிட்டன. இசை காற்றில் அலையலையாக வந்தது

 

“அங்கே சென்றிருப்பாளோ?” என்றேன்

 

“இந்தவழியாக அங்கே செல்ல முடியாது. பெரிய முள்கம்பிவேலி இருக்கிறது. ரோடுவழியாகச் சென்று ஈத்தைமுக்கு ஜங்ஷனில் இறங்கித்தான் அங்கே போகமுடியும்… அந்த வேலிவரை வேண்டுமென்றால் போய் பார்ப்போம்”

 

வேலி அருகில் செல்லமுடியவில்லை. அங்கே கடலில் இருந்து ஒதுங்கிய குப்பைகள் குவிந்து கிடந்தன. ராமன்குட்டி வண்டியை திருப்பியபடி “எதற்கும் மறுபக்கம் ஒரு நான்கு கிலோமீட்டர் போய் பார்ப்போம்” என்றான்

 

“எங்கே போயிருப்பாள்?”

 

“நான் சொல்லவா? நாம் தேடிபோகிறோம். அவள் கன்யாகுமரி தேவி போல ஒரு பாறைமேல் ஒற்றைக்காலை ஊன்றி நின்று தவம்செய்துகொண்டிருப்பாள். நாம் அருகே சென்று தேவியை வணங்குகிறோம்… ”

 

“உளறாதே”

 

நான் செல்போனில் சாந்தம்மாவை அழைத்து  “எல்லா கூப்பிட்டாளா?” என்று கேட்டேன்

 

“இல்லை வைத்யரே, ஒரு செய்தியும் இல்லை. நான் இன்னும் வாரியரிடம் சொல்லவில்லை”

 

“சொல்லவேண்டாம்… நானே கூப்பிடுகிறேன்”

 

மறுபக்கம் நெடுந்தொலைவுக்கு வெறும் மணல். அப்பால் மீனவர்களின் படகுகள் கரையில் நின்றிருந்தன. ஒவ்வொரு படகின் அடியிலும் நான் விளக்கை ஏவி நோக்கினேன்

 

“இந்தக் கடற்கரையில் இல்லை… அவளை யாரோ வண்டியில் கூட்டிச் சென்றிருக்கவேண்டும்…” என்று ராமன்குட்டி சொன்னான்.

 

“இல்லை, அவளுக்கு அப்படி யாரும் இல்லை” என்றேன்

 

“இல்லாவிட்டால் அவளுக்கு இங்கே யாரோ தொடர்பு இருக்கிறார்கள். அவர்களுடன் சென்று இரவில் ஒரு நல்ல மேகத்தை இழுத்து கொண்டாடிவிட்டு காலையில் வந்துசேர்வாள்”

 

நான் “என்ன செய்வது?” என்றேன்

 

“காலையில் ஒரு பத்துமணிவரை பார்ப்போம். வரவில்லை என்றால் போலீஸுக்கு போவோம்” என்றான் ராமன்குட்டி

 

“இப்போதே சொன்னால் என்ன?”

 

“புகார் கொடுக்க முடியாது… செய்தியாக ஆனால் கெட்டபெயர்… தங்கச்சன் என்று ஒரு நண்பன் எனக்கு இருக்கிறான். கான்ஸ்டபிள். அவனிடம் சொன்னால் அவன் சும்மா விசாரித்துப் பார்ப்பான். ஆயிரம் ரூபாயாவது கொடுக்கவேண்டியிருக்கும்”

 

‘ஆயிரமா?”

 

“போலீஸ்காரர்கள் பெற்ற தாயிடம் பணம் கேட்பவர்கள். இந்த தங்கச்சனும் எங்கள் தோழர்தான். ஆனால் அது வேறு…”

 

“ஆயிரம் என்றால்..”

 

‘அதையும் அந்த பிரெஞ்சுக்காரியிடமே கேட்டு வாங்கிக்கொள்ளும் பொதுவாளே… என்ன இது?”

 

“சரி” என்றேன்

 

நாங்கள் வைத்தியசாலைக்கு வந்துசேர்ந்தோம். நான் இறங்கிக்கொண்டேன். மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை

 

”இனி என்ன செய்வது?” என்று அவனிடமே கேட்டேன்

 

“காலைவரை காத்திருக்கவேண்டியதுதான்…முடிந்தால் தூங்குங்கள். அல்லது தூக்கம்வரவில்லை என்றால் திரிபலாதி அரிஷ்டம் ஒரு துடம் குடியுங்கள்… எனக்கு வேறு அரிஷ்டம் இருக்கிறது”

 

நான் தலையசைத்தேன்.

 

அவன் வண்டியை எடுத்து ஒளி அலைபாய தென்னைமரங்கள் நடுவே சென்றான். அவன் மறைந்ததும் நான் என் அறைக்குச் சென்றேன்

 

யாரும் இல்லை. சாந்தம்மாவும் தூங்கியிருப்பாள் என்று தெரிந்தது. நான் வெறுமே அமர்ந்திருந்தேன். எண்ண எண்ண சலிப்பாக இருந்தது. எல்லா மேல் கோபம் வந்தது. என்ன இப்படிப் படுத்துகிறாள் என முனகிக்கொண்டேன். எழுந்து அறையை திறந்தேன். அவள் காற்று செலுத்தி வைத்த அந்த பொம்மை மேஜைமேல் கிடந்தது.உழிச்சிலுக்கு கிடப்பதுபோல. முதற்கணம் என் அகத்தை பதைக்கச் செய்தது அது, அங்கே மெய்யாகவே ஒரு பெண் கிடப்பதுபோல. இல்லை, பெண் கிடப்பதுபோல அல்ல, பெண்ணின் சடலம் கிடப்பதுபோல.

 

இந்த மனநிலையில் அப்படித் தோன்றுகிறதா? கண்களை மூடிக்கொண்டு அந்த அறைக்குள் என்ன உணர்வு ஏற்படுகிறது என்று பார்த்தேன். உண்மையாகவே அந்த நுண்ணுணர்வே வந்தது. நான் அறியாத ஒரு சடலம். கண்களைத் திறந்து பார்த்தேன். மனித உடலேதான். தோலின் வண்ணம், தோலின் பல்வேறு நுணுக்கமான தோற்றங்கள். வரிகள், கோடுகள்.

 

அதை அருகே சென்று பார்த்தேன். அந்த மெய்த்தோற்றம் வருவது அவர்கள் மெய்யான தோலை படமெடுத்து அதை அப்படியே அமைத்திருந்தமையால் என்று தெரிந்தது. மனிதத் தோல் பிளாஸ்டிக் அல்லது ரப்பர் போல பளபளப்பு கொண்டது அல்ல. அதன்மேல் மென்மயிர் பரவல் உண்டு. வரிகள் புள்ளிகள் உண்டு. அதெல்லாமே அப்படியே இருந்தது. ஆகவேதான் அது உடல் என்று கண் சொல்ல உள்ளம் ஏற்றுக்கொண்டது. ஆனால் அதில் உயிர் இருப்பதை என் உள்ளம் ஏற்க மறுத்தது.

 

நான் அது எல்லாதான், வாழும் உடல்தான் என்று என் உள்ளத்திற்குச் சொல்ல முயன்றேன். பிடிவாதமாக நம்ப மறுத்தது என் உள்ளம். கல்லை எடுத்து உணவு என்று சொல்லி வாயில் இட்டால் உடல் மறுப்பதுபோல.கண்களை மூடிக்கொண்டேன். அவள் உடலின் மச்சங்கள், வடுக்கள். ”யா தேவி, சர்வஃபூதேஷு சக்திரூபேண சம்ஸ்திதா. யாதேவி சர்வ ஃபூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா. யா தேவி, யாதேவி சர்வஃபூதேஷு அன்னரூபேண சம்ஸ்திதா! சர்வஃபூதேஷு வாக்ரூபேண சம்ஸ்திதா!” ஆனால் அச்சொற்கள் வேறெங்கோ ஒலித்தன. அந்த உடலை அறியாதவையாக

 

நான் வண்ணப்பேனாக்களை எடுத்துவந்து நீலத்திலும் சிவப்பிலுமாக அதன் உடல்மேல் நரம்புப்புள்ளிகளை வரையத்தொடங்கினேன். சுழிமுனைகளை, முடிச்சுகளை, கரவுமையங்களை அடையாளப்படுத்தி எண்களை இட்டேன். ஓர் ஓவியத்தை மிகமிக கூர்ந்து வரைவதைப்போல. அது என்னை மனம்குவியச் செய்தது.  அதுவரை இருந்த அலைபாய்தல்கள் மறைந்தன.

 

வரைந்து முடித்து அந்த உடலை நோக்கியபடி நின்றேன். இப்போதும் அது சடலம்தான், ஆனால் நான் அறிந்த சடலம். புன்னகையுடன் கைகளை கட்டிக்கொண்டு அவள் முகத்தைப் பார்த்தேன். பின்னர் குனிந்து அந்தப்பொம்மையின் பித்தானை இயக்கினேன். “ஹாய்” என்று சொல்லி கண்களை திறந்து, விழியுருட்டி என்னைப் பார்த்தது. பற்கள் தெரிய புன்னகை செய்து “ஹாய் தேர்!” என்றது.

 

என் தொண்டை அடைத்தது. நான் அதன் உடலை பார்த்தேன். மெய்யாகவே என்னிடம் பேசுகிறது. எல்லாவின் அதே குரல், அதே பாவனை, எல்லாவேதான்.

 

நான் அதன் கால் பாதத்தைத் தொட்டேன். “ஆ” என்று சிரித்து சிணுங்கினாள். உள்ளங்காலில் நரம்புப்புள்ளியை அழுத்தினேன். “நீ என்னை சிறுமியாக ஆக்குகிறாய்” திடுக்கிட்டு கையை எடுத்துக்கொண்டேன்.

 

மெய்யாகவே அது சொன்னதா? எல்லா சொன்னதா? எப்படி அது சொல்ல முடியும்? சற்று தயங்கிவிட்டு அதன் உள்ளங்காலில் வயிற்றுக்குரிய இடத்தை தொட்டேன். “ஆ, எனக்கு பசிக்கிறது!”

 

மூச்சுவாங்க என் கையை விலக்கிக் கொண்டேன். அதைக் கூர்ந்து நோக்கிக் கொண்டு நின்றேன். என்னிடம் எவராவது விளையாடுகிறார்களா? எல்லாவின் வேடிக்கையா இது? நான் சொன்னதைக்கொண்டும் அவள் உணர்ந்ததைக் கொண்டும் இதையெல்லாம் புரிந்து எழுதியனுப்பி இதைச் செய்யவைத்திருக்கிறாளா?

 

மெல்ல அதன் மற்ற நரம்புமுனைகளை தொட்டேன். அது மிகச்சரியாக எதிர்வினையாற்றியது. மெய்யாகவே அங்கே ஒரு பெண் இருப்பதைப்போல. மெல்ல அவள் முழங்கால்களை வயிற்றை நெஞ்சை தோளை தொட்டேன். நான் வரைந்து அடையாளப்படுத்தியிருந்த நரம்புமுனைகளை தொடத்தொட சரியான முகச்சுளிப்புகளை, கூச்சங்களை, துடிப்பை அவள் வெளிப்படுத்தினாள்

 

பெருமூச்சுடன் அடங்கி அவளை நோக்கினேன். அது வழக்கமான பொம்மைதான். ஆனால் மிகமிகச் சிறந்த தொழில்நுட்பம் கொண்டது. அதற்குள் இருக்கும் மின்னணு அமைப்பும் அவற்றை இணைக்கும் மென்பொருளும் மிகநவீனமானவை. மானுட உடலை காமம் வழியாகவே அறிந்தவர்களால் உருவாக்கப்பட்டவை. நானும் என் மரபினரும் மானுட உடலை வலி வழியாக அறிந்தவர்கள். இரு சாராரும் அறிந்தது ஒன்றே

 

என் செல்பேசி அதிர்ந்தது. அந்த ஒளியில் எல்லாவின் உடல் நிறம் மாறியது. அறியாத எண்

 

“அல்லோ” என்றேன்

 

‘பொதுவாளே இது நான், ராமன்குட்டி. திரும்பி வரும் வழியில் நான் குஞ்ஞச்சனிடம் பேசினேன். அவன் இரவு டியூட்டி. அவன் உடனே ஸ்டேஷனுக்கு வரச்சொன்னான். வந்துவிட்டேன். சங்கதி நாம் நினைப்பதுபோல எளிமையானது அல்ல என்று குஞ்ஞன் சொல்கிறான். அங்கே கடற்கரையில் கஞ்சா விற்கும் ஒரு பெரிய கும்பல் உண்டு. எல்லாருமே பொறுக்கிகள். எல்லா ஏழுமணிக்குமேல் தனியாக கடற்கரைக்குச் சென்றிருக்கிறாள்…”

 

நான் மூச்சு திடுக்கிட,என் நெஞ்சை செவிகளில் கேட்டபடி “ம்” என்றேன். மறுகணம் இவர்கள் மிகைப்படுத்துகிறார்கள், அவள் வந்துவிடுவாள் என்று சொல்லிக்கொண்டேன்

 

“குஞ்ஞச்சனும் நானும் மூன்று போலீஸ்காரர்களும் மீண்டும் கடற்கரைக்குச் சென்றோம். அங்கே எங்கும் அவள் இல்லை. ஆனால் பகலில் தேடவேண்டும். அந்த கும்பலில் சிலரை பிடிக்க போலீஸ் போயிருக்கிறது. நான் இங்கேதான் இருக்கிறேன். எங்கள் ஏரியா செகரட்டரி தோழர் செறுகுந்நும் இங்கேதான் இருக்கிறார். நீங்கள் உடனே வந்து ஒரு புகார் எழுதி தரவேண்டும்…”

 

“புகாரா?”

 

“யோவ் அசட்டுப் பொதுவாள், பெண் காணாமலாகியிருக்கிறாள். போலீஸில் புகார் செய்யவேண்டாமா? இரவு ஒன்பது மணிக்கே எழுதித்தந்ததுபோல எழுதி தரவேண்டும்… அவளுடைய பாஸ்போர்ட், போட்டோ இருக்கிறதா?”

 

“பாஸ்போர்ட் இருக்கும். எங்கள் ஃபைலில் ஃபோட்டோ உண்டு”

 

‘உங்கள் ஆதார்கார்டையும் எடுத்துக்கொண்டு உடனே கிளம்பி போலீஸ் ஸ்டேஷன் வாருங்கள்…”

 

இன்னொருவர் ஃபோனை வாங்கி “வைத்தியரே, நான் சப் இன்ஸ்பெக்டர் செறியான் தாமஸ். உடனே வாருங்கள்” என்றார்.

 

“வருகிறேன்” என்றேன்

 

மீண்டும் ராமன்குட்டி ஃபோனை வாங்கி “எப்படி வருவீர்கள்?” என்றான்

 

“சந்திரனின் பைக் இங்கே நிற்கிறது. அவனை கொண்டுவிடச் சொல்கிறேன்”

 

“சீக்கிரம்…அவளுடைய நல்ல போட்டோ வேண்டும். உங்களிடம் வாட்ஸப் இருக்கிறதா?”

 

“இருக்கிறது”

 

“அதை மட்டும் உடனே அனுப்பிவிடுங்கள். அதை எல்லாருக்கும் அனுப்பவேண்டியிருக்கிறது. போலீஸ்காரர்கள் கிளம்பிச் சென்றிருக்கிறார்கள்”

 

நான் கம்ப்யூட்டரை திறந்தேன். கோப்புகளில் எல்லாவின் படம் இருந்தது. ஆனால் பாஸ்போர்ட்டில் இருந்த அதே படம். மங்கலானது. பாஸ்போர்ட் நகலும் இருந்தது.

 

அவள் பாஸ்போர்ட்டையும் படத்தையும் என் செல்பேசியில் நகல் செய்தேன். அவற்றை ராமன்குட்டினுக்கு வாட்ஸப் செய்தேன்.

 

ராமன்குட்டி திரும்பவும் கூப்பிட்டான். ஆனால் பேசியது எஸ்.ஐ.செறியான். “அந்தப் படம் தெளிவாக இல்லை. நல்ல தெளிவான படம் தேவை. சமீபத்தில் இங்கே எடுத்த படம்”

 

“இருக்கிறதா பார்க்கிறேன்”

 

ஆனால் அப்படி எந்தப் படமும் இல்லை. மாத்தன் எடுத்திருக்கலாம். அல்லது வேறு எவரேனும். ஆனால் இந்த விடியற்காலையில் எங்கே செல்வது படத்திற்கு?

 

ஓர் எண்ணம் வந்தது. மீண்டும் அறையை திறந்து உள்ளே சென்றேன். எல்லாவின் பொம்மை கண்கள் திறந்து சிரித்தபடி கட்டிலில் கிடந்தது. அறைவிளக்குகள் அனைத்தையும் போட்டேன். அதை ஒரு படம் எடுத்தேன். அந்தப்படத்தை வாட்ஸப்பில் அனுப்பினேன்

 

”நல்ல படம்” என்று எஸ்.ஐ சொல்வதாக ராமன்குட்டி வாட்ஸப்பில்  சொன்னான். “உடனே கிளம்பி வாருங்கள். உங்கள் புகாரை எழுதி வாங்கியபின் அதை டி.எஸ்.பிக்கு உடனே அனுப்பவேண்டும்… எஸ்.ஐ. காத்திருக்கிறார்”

 

நான் உள்ளறையில் தூங்கிய சந்திரனை எழுப்பி என்னை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுசெல்லும்படிச் சொன்னேன். சந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. “போலீஸ் ஸ்டேஷனுக்கா? எதற்கு?”

 

“கிளம்புடா நாயே’

 

அவன் அதிர்ந்துவிட்டான்

 

நான் அமைதியடைந்து “ஒரு வேலை… அவசரம்” என்றேன்

 

அவன் முகம்கழுவி சட்டை போட்டுக்கொண்டு வந்து பைக்கை உதைத்து கிளப்பினான். நான் பின்னால் ஏறிக்கொண்டேன்.

 

விடியற்காலை இருட்டில் தென்னைகள் நிழல்களாக கடந்து பின்னால் சென்றன. முகப்பொளியில் தெருநாய்கள் பம்மின. நல்ல குளிர். நான் தும்மல் போட்டேன்.சாலையில் மெல்லிய டீசல் மணம்

 

போலீஸ் ஸ்டேஷன் விளக்கொளியில் கல்யாண வீடு போல தோன்றியது. அங்கே நடமாடுபவர்களின் நிழல்கள் அசைவதை தொலைவிலேயே கண்டேன்

 

அருகே சென்று பைக்கை நிறுத்தியதும் சந்திரன் “நான் உள்ளே வரவேண்டுமா?” என்றான்.

 

“வேண்டாம், நீ இங்கேயே நில்” என்றேன். தயங்கிய காலடிகளுடன் உள்ளே சென்றேன்

 

என்னை எதிர்பார்த்து ராமன்குட்டி பெஞ்சில் அமர்ந்திருந்தான். அவன் எழுந்து வந்தான்

 

“பொதுவாளே இப்படி வாரும்…ஆதார் எங்கே?”

 

‘செல்போனில் இருக்கிறது…”

 

“ஓ… அதை பிரிண்ட் எடுக்கவேண்டும். இப்போதைக்கு நம்பர் போதும்”

 

உள்ளிருந்து எஸ்.ஐ வந்தார். கூடவே வத்ஸன் செறுகுந்நும் வந்தார்

 

ராமன்குட்டி “சார், இவர்தான் பொதுவாள் வைத்தியர்” என்றான்

 

“நீங்களா? அந்த பெண் பெயர் என்ன?” என்றார் எஸ்.ஐ.

 

“எல்லா ஆன்ஸெல். பிரெஞ்சுக்காரி”

 

“சரி, அவளை தேடிக்கொண்டிருக்கிறோம். ஒன்றும் ஆகவில்லை என்றால் நல்லது. ஏதாவது ஆயிருந்தால் பெரிய சிக்கல். வெளிநாட்டுக் குடிமகள், வெள்ளைக்காரி…”

 

நான் படபடப்புடன் உதடுகளை அழுத்தியபடி நின்றேன்

 

செறுகுந்நு “ஒன்றும் ஆகியிருக்காது. வெள்ளைக்காரிகள் கிறுக்கிகள். எங்கேயாவது நின்றிருப்பாள்… ஆனால் நாம் தேடிவிடுவோம். இது நம் ஊரின் கௌரவம்” என்றார். “ஒன்றும் பயப்படவேண்டாம். ஒரு புகார் எழுதி கொடுங்கள்… ரைட்டர் சொல்வார், அதைப்போல எழுதினால்போதும்”

 

“சரி’ என்றபோது நான் நடுங்கிக்கொண்டிருந்தேன்

 

ராமன்குட்டி என்னை பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றான். அங்கே பெரிய தொப்பையுடன் சால்வையை போர்த்திக்கொண்டு குரங்குக்குல்லா வைத்த ரைட்டர் இருந்தார்

 

“மீரான் பிள்ளை, புகார் எழுதிக்கொள்ளுங்கள்” என்றார் எஸ்.ஐ

 

ரைட்டர் என்னிடம் அமரும்படி சொன்னார். “எனக்கு இழுப்பு இருக்கிறது வைத்தியரே. நல்ல சூரணம் லேகியம் ஏதாவது உண்டா?”

 

‘அதை நன்றாக பார்த்துத்தான் தரமுடியும்… வைத்யசாலைக்கு வாருங்கள்”

 

“எங்கே நேரம்? நான் ரிட்டயர் ஆக இன்னும் ஏழு மாதம்…” அவர் தாள்களை எடுத்து வைத்து பேனாவை அதன்மேல் வைத்தார். ‘நான் சொல்வதை எழுதிக்கொள்ளுங்கள்”

 

அவர் சொல்லச்சொல்ல நான் எழுதினேன். பழைமையான மலையாளம். சம்பிரதாயமான சொற்கள். “ எஜமான் சமக்ஷம் சங்கடம் போதிப்பிச்சு கொள்ளுந்நு”

 

“கையெழுத்து போடுங்கள்”

 

நான் கையெழுத்திட்டேன். அவர் அதை வாங்கிக்கொண்டார்.

 

“நான் போகலாமா?”

 

“இருங்கள்… ஒருவேளை டிஎஸ்பி வருவார்…”

 

நான் வெளியே சென்று பெஞ்சில் அமர்ந்தேன்

 

தோழர் செறுகுந்நு அங்கே அமர்ந்திருந்தார். “ஏதாவது நடந்தால் என் யூனிட்டுக்கே கெட்டபெயர். பஞ்சாயத்து தேர்தலில் எல்.டி.எஃப் ஜெயிக்க வாய்ப்பிருக்கும் மண்டலம் இது” என்றார்

 

ராமன்குட்டி “நாம்தான் ஜெயிப்போம் தோழர்” என்றான்

 

நான் பெருமூச்சுவிட்டேன். என் செல்ஃபோனை பார்த்தேன். எப்போதுவேண்டுமென்றாலும் அது அடிக்கும். எல்லா அதில் தோன்றுவாள். “ஸ்ரீ நான் இங்கே வந்துவிட்டேன்”

 

உண்மையாகவே அவள் அப்படிச் சொன்னாள். ஆனால் வாய் ஊறிவழிய விழித்துக்கொண்டதும் அது கனவு என உணர்ந்தேன். பத்துநிமிடம் தூங்கியிருப்பேன்

 

போலீஸ் ஸ்டேஷன் கணிப்பொறியில் எல்லாவின் வண்ணப்புகைப்படம் ஒளியுடன் நின்றது. நான் அனுப்பியது. அவளுடைய பொம்மையின் படம். அதன் பிரதிபலிப்பு கதவின் வார்னீஷ் பரப்பில், சன்னல், கண்ணாடிகளில் செறுகுந்நின் மூக்குக் கண்ணாடிச்சில்லுகளில் எதிரொளித்தது. அப்போதுதான் பார்த்தேன். என் அருகே இருந்த போலீஸ்காரரின் செல்பேசியிலும் அந்தப்படம். இன்னொரு கணிப்பொறி ஒளிகொண்டது. அதிலும் அவள் படம். இந்நேரம் பலநூறு செல்பேசிகளில் கணிப்பொறிகளில் அவள் பிறந்தெழுந்து பெருகிக்கொண்டே இருப்பாள்

 

இன்ஸ்பெக்டர் ஒரு ஜீப்பில் வந்திறங்கினார். சற்று முதியவர், தளர்ந்த நடையுடன் படி ஏறிவந்து “என்ன ஆயிற்று? என்றார். அனைவரும் எழுந்து நின்றனர். என் அருகே நின்ற போலீஸ்காரர் “பிரபாகரனும் நாராயணனும் மூர்த்தியும் குஞ்ஞச்சனும் போயிருக்கிறார்கள் சார்” என்றார்

 

நான் வணங்கினேன். செறுகுந்நு வணங்கி அருகே சென்று தாழ்ந்த குரலில் அவரிடம் பேசினார். ராமன்குட்டி என்னிடம் “இங்கே பிரச்சினை என்றால் எல்லா சுற்றுலா தொழில்காரர்களுக்கும் பிரச்சினை… நீங்கள் வைத்யசாலையை அப்படி ஒதுக்குபுறமாக கொண்டு வைத்திருக்கிறீர்கள்” என்றான்

 

நான் “அவள் வைத்யசாலையில் இருந்து வெளியே சென்றாள்” என்றேன்

 

“அதைத்தான் நான் சொன்னேன்” என்றான் ராமன்குட்டி

 

சந்திரன் உள்ளே வந்து என்னிடம் “என்ன செய்ய?” என்றான்

 

“கொஞ்சம் பொறு” என்று நான் சொன்னேன்

 

அதற்குள் சாந்தம்மாவின் அழைப்பு.  “என்னாயிற்று பொதுவாள் மாஸ்டரே? எங்கே இருக்கிறீர்கள்?”

 

நான் குரல் தாழ்த்தி “போலீஸ் ஸ்டேஷனில்… தேடிக்கொண்டிருக்கிறார்கள். உனக்கு ஏதாவது செய்தி வந்ததா” என்றேன்

 

“இல்லை” என்றாள்

 

நான் செல்பேசியை அணைத்தேன். ராமன்குட்டி “நாம் போய் ஒரு சாயா குடிக்கலாம். மாதவன் கடை திறந்துவிட்டான்” என்றான்

 

நாங்கள் வெளியே சென்றோம்.சாலையில் காலை விடிந்த மந்தமான ஒளி. புழுதியின் மணம். பாலீதீன் குப்பைகள் கடற்காற்றில் அலைபாய்ந்தன. மாதவனின் டீக்கடையில் பால் கொதிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. ஒரு கான்ஸ்டபிளும் இரண்டு உள்ளூர்க்காரர்களும் டீ குடித்துக்கொண்டிருந்தார்கள்.

 

ராமன்குட்டி டீ போடச் சொன்னான். நான் டீ சாப்பிடுவதில்லை. சீனி இல்லாமல் பால் சொன்னேன்.

 

ராமன்குட்டி “யோசித்துப்பார்த்தால் பயமாகத்தான் இருக்கிறது. நம் வாழ்க்கை பகல்வெளிச்சத்தில்தான். இருட்டு வந்துவிட்டால் இங்கே என்ன நடக்கிறதென்றே தெரியாது” என்றான். “சின்னவயதில் ஒருமுறை வீட்டை விட்டு இருட்டில் வெளியே வந்துவிட்டேன். அப்போது தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டு. பொதுவாளே, வீட்டு முற்றத்தில் சீங்கண்ணி நிற்கிறது… வாயைப்பிளந்து. நல்லவேளை அப்பா பின்னால் வந்து காப்பாற்றினார்”

 

கான்ஸ்டபிள் “சீங்கண்ணி என்றால்?” என்றார்

 

ராமன்குட்டி  “முதலை” என்றான்

 

கான்ஸ்டபிள் “உங்கள் வீட்டருகே ஆற்றங்கழி உண்டோ?” என்றார்

 

உள்ளிருந்து செறுகுந்நும் இன்ஸ்பெக்டரும் வெளியே சென்று ஜீப்பில் ஏறிக்கொண்டனர். எஸ்.ஐ வெளியே வர கான்ஸ்டபிள் அவரை நோக்கி ஓடினார். எஸ்.ஐ என்னை பார்த்தார். அருகே வரச்சொல்லி கை காட்டினார்

 

நானும் ராமன்குட்டிவும் ஓடி அருகே சென்றோம்.

 

“அவள் கிடைத்துவிட்டாள்”

 

“எங்கே?” என்றேன்.

 

“அந்த பயல்களில் நான்குபேரை பிடித்து அங்கேயே போட்டு சவிட்டிக் குழைத்தோம். ஒருவன் சொல்லிவிட்டான். அந்தக் கடற்கரையில்தான்… பாறைகளின் இடுக்கில் உடல் கிடக்கிறது”

 

“உடலா?” என்றேன்

 

“எட்டுபேர்  சேர்ந்து கற்பழித்திருக்கிறார்கள். கடைசியில் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொன்று பாறையிடுக்கில் செருகிவிட்டு கிளம்பிவிட்டார்கள். எல்லாருமே கஞ்சாப்போதையில் இருந்திருக்கிறார்கள்”

 

நான் ஏதோ சொல்ல முயன்றேன். சட்டென்று என் உடல் இடப்பக்கமாகச் சரிந்தது. ராமன்குட்டி பிடித்துக்கொண்டான்

 

கான்ஸ்டபிள் “தண்ணீர்!” என்றார். மாதவன் நீர்க்குவளையுடன் வருவதற்குள் நான் நிலைமீண்டுவிட்டேன். ஆனால் குளிர்ந்த நீர் என் நெஞ்சுக்குள் ஆறுதலை உருவாக்கியது

 

“நான் வந்தால்போதாதா? இவர் எதற்கு?” என்றான் ராமன்குட்டி

 

“இவர்தான் அடையாளம் காட்டவேண்டும். இவர்தான் புகார் தந்தவர்…மெல்ல கூட்டிக்கொண்டு வா… ஆட்டோவில் வாருங்கள்” என்றபின் எஸ்.ஐ கிளம்பிச் சென்றார்

 

நான் அருகே இருந்த கல்லில் அமர்ந்தேன். மாதவனே ஆட்டோவை கூப்பிட்டு கொண்டுவந்தான்

 

நாங்கள் ஏறிக்கொண்டோம். “பைக்கை தொடர்ந்து போ” என்றான் ராமன்குட்டி

 

சிவராமனின் கடைவழியாக இடைவழியில் இறங்கி தென்னந்தோப்பு நடுவே சென்ற பாதை வழியாக பகவதிகோயிலை அடைந்து முற்றம்வழியாகச் சுற்றிக்கொண்டு கடற்கரை நோக்கிச் சென்றோம். ஆட்டோ மணல்விளிம்பில் நின்றுவிட்டது. பைக்கை நிறுத்திவிட்டு எஸ்.ஐ இறங்கி சென்றார். அதற்கு அருகே ஜீப் நின்றது

 

அப்பால் காக்கி உடைகள் தெரிந்தன. ஓரிரு உள்ளூர் மீனவர்கள் லுங்கியை கட்டிக்கொண்டு சட்டை இல்லாமல் நின்றனர்.

 

நான் மணலில் தள்ளாடி நடந்தேன். என் உடல் எடைமிகுந்திருந்தது. ஆனால் உள்ளம் அமைதியாக இருந்தது. ராமன்குட்டி “ஊருக்கே கெட்டபெயர்… எல்லாம் போலீஸின் தவறு. இந்த கும்பலை அப்போதே அடித்து உள்ளே போட்டிருக்கவேண்டும்…கட்சிக்கும் கெட்டபெயர்” என்றான்

 

அருகே செல்லச்செல்ல மேலும் காட்சிகள் துலங்கின. பாறை இடுக்கில் கிடந்த உடலை சூழ்ந்து நின்றிருந்தனர். உடல் தெரியவில்லை

 

ராமன்குட்டி “இந்த கஞ்சா நாய்களை வளர விடுவதே ரிசார்ட்காரர்கள்தான். வெள்ளைக்காரர்கள் பாதிப்பேர் கஞ்சாவுக்காகவும் சின்னக்குழந்தைகளுக்காகவும்தான் வருகிறார்கள். அரசாங்கம் என்ன செய்ய முடியும்? சுற்றுலா வருமானம் வேண்டுமே. கடைசியில் கட்சிக்கும் முதலமைச்சர் தோழருக்கும் கெட்டபெயர்” என்றான்

 

பாறையை அணுகியதும் மேலே நின்ற எஸ்.ஐ ஒரு கான்ஸ்டபிளிடம் என்னை தூக்கி மேலேற்ற கைகாட்டினார்.நான் அவர் கையைப் பிடித்து மேலே சென்றேன். ‘இங்கே வாருங்கள் பொதுவாளே… இவள்தானா?” என்றார் இன்ஸ்பெக்டர்

 

இரண்டு பெரிய பாறைகள் நடுவே சிறிய இடுக்கு. அதில் கடல் அலையில் அடித்துக்கொண்டுவந்த பழைய செவ்வண்ணப் புடவை சுருண்டு கிடப்பதுபோல முதலில் எனக்குத் தோன்றியது. பிறகுதான் அது எல்லாவின் உடல் என்று அடையாளம் கண்டேன். எப்படி அடையாளம் கண்டேன் என்று தெரியவில்லை, ஆனால் அவள்தான் என உறுதியாகத் தெரிந்தது

 

வெற்றுடல். பாறாங்க்கல்லைப் போட்டு தலையைச் சிதைத்திருந்தனர். முகம் ஒரு குருதித்தசைக் குழம்பலாக தெரிந்தது. மேலே நின்று மேலும் பல பாறாங்கற்களை போட்டிருந்தார்கள். ஆகவே தோள்களும் இடையும் நசுங்கியிருந்தன. கைகள் உடைந்து திரும்பியிருந்தன.

 

“இவள்தானா?” என்றார் இன்ஸ்பெக்டர்

 

“ஆமாம்’ என்றேன்

 

“என்ன அடையாளம்” என்றார்.

 

அவள் உடலில் சிதையாமல் எஞ்சியிருந்தது தொடைகள் மட்டும்தான். “உள்தொடையில் உள்ள அந்த மச்சமும் வடுவும் அடையாளங்கள்” என்றேன்

 

“உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றார் எஸ்.ஐ

 

“அவள் என் நோயாளி… ” என்றேன்

 

“சரி, இனி இங்கே நிறைய சடங்குகள் உண்டு. உடலை ஜி.எச்சுக்குக் கொண்டுபோவோம். அங்கே நீங்கள் வரவேண்டியிருக்கும். நிறைய வேலைகள் உண்டு. இப்போது நீங்கள் வைத்தியசாலைக்குத் திரும்பிச் செல்லலாம். ஓய்வெடுத்து அங்குள்ள வேலைகளுக்கு வேறு ஏற்பாடுகள் செய்துவிட்டு மத்தியான்னம் ஜி.எச்சுக்கு வாருங்கள்…” என்று இன்ஸ்பெக்டர் சொன்னார்

 

நான் தலையசைத்தேன்

 

என்னுடன் ராமன்குட்டி வந்தான். “கொடுமை…” என்றான். “வெறிபிடித்து இதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் கஞ்சாவெறி இப்படிச் செய்ய வைக்கும். அவர்களைப் பார்த்துக் குரைத்த ஒரு நாயை இதைப்போல அடித்து கொன்று கல்லைவீசி நசுக்கி சிதைத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களால் நிறுத்தவே முடியவில்லை. வெறி ஏறிக்கொண்டே போயிற்று. அது செத்துவிட்டதுகூட அவர்கள் மூளைக்குள் செல்லவில்லை”

 

நான் ஆட்டோவில் ஏறிக்கொண்டேன்

 

ராமன்குட்டி “நீங்கள் போங்கள் பொதுவாளே…நான் கொரியர் ஆபீஸுக்கு போய்விட்டு ஜிஎச்சுக்கு வருகிறேன்” என்றான்

 

ஆட்டோ ஓடியபோது காற்று என்மேல் பட்டது. அப்போதுதான் என் உடல் வியர்வையில் மூழ்கியிருப்பதை உணர்ந்தேன். கண்களை மூடிக்கொண்டேன். குருதிப்படலம் விழிக்குள் அலைபாய்ந்தது. சற்று தூங்கியிருப்பேன். எல்லா என்னிடம் ஏதோ சொன்னாள். ஆட்டோ நின்றது. என் மண்டை கம்பியில் மோதியது

 

நான் ஆட்டோவை அனுப்பிவிட்டு முற்றத்தில் நின்றேன். சாந்தம்மா திண்ணையில் நின்றாள். கார்த்தியாயினி என்னிடம் “என்ன ஆயிற்று” என்றாள்

 

அவர்களுக்கு செய்தி வந்துவிட்டிருந்தது. “அவள்தான்” என்றேன்

 

சாந்தம்மா “அய்யோ”என்றாள்

 

“நான் கொஞ்சம் ஓய்வெடுக்கவேண்டும். எனக்கு ஒரு கோப்பை பால் வேண்டும்” என்றேன்

 

“நீங்கள் படுத்துக்கொள்ளுங்கள் பொதுவாளே…வேண்டுமென்றால் கொஞ்சம் அரிஷ்டம் சாப்பிடுங்கள்.. கொஞ்சம் ஓய்வெடுங்கள்”

 

‘எனக்கு பால் போதும்” என்றேன்

 

என் அறைக்கு செல்லும்பொருட்டு மெல்ல நடந்தேன். சுவரில் கையால் உரசிக்கொண்டே அடிமேல் அடிவைட்hதேன்.

 

‘நோயாளிகள் அனைவரையும் அவரவர் அறைகளில் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டேன். சுபத்ரா தங்கச்சியும் பார்கவியும் அருணாவும் பார்த்துக்கொள்கிறர்கள். சிவன்பிள்ளையும் பிரேமன் நாயரும் அவசியமான உழிச்சில்களை மட்டும் செய்வார்கள். சந்த்ரப்பனும் நாராயணன் நாயரும் இன்னும் வரவில்லை” என்றாள் கார்த்தியாயினி

 

நான் தலையசைத்தேன். என் வலக்கைப் பக்கம் அந்த அறை. ஒரு கணம் நின்றேன்.  “நீ போ” என்று கைகாட்டிவிட்டு கதவைத் திறந்து உள்ளே சென்றேன்.

 

எல்லா கட்டிலில் படுத்திருந்தாள். என் காலடியோசை கேட்டு திரும்பி நோக்கி புன்னகைத்து “ஹாய் டியர்!” என்றாள்.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 5

$
0
0

பகுதி இரண்டு : நீலச்சிறுபீலி – 3

அர்ஜுனன் சொன்னான். அஸ்தினபுரியிலிருந்து கிழக்கே சென்று மகதத்தினூடாக வங்கத்தில் இறங்கி கலிங்கத்தை அடைந்தேன். அங்கிருந்து மேற்காகத் திரும்பி விதர்ப்பத்தினூடாக மாளவம் நோக்கி சென்றேன். செல்லும் வழியில் நான் கிளம்பிய ஓரிரு நாட்களுக்குப் பின்னர் மூத்தவர் பீமசேனன் அவ்வாறே வடதிசை நோக்கி சென்றுவிட்டதை அறிந்தேன். அவர் வெள்ளிப் பனிமலை அடுக்குகளின் எல்லையை கண்டுவிட்டார், அதைக் கடந்து அப்பால் செல்லாது அவரால் அமைய இயலாது. அவர் பீதர் நாட்டை நோக்கி சென்று கொண்டிருப்பார், அங்கு அவர்களுடன் இயல்பாகக் கலக்க அவரால் இயலும், ஒருவேளை மீண்டு வராமலே ஆகக்கூடும்.

மேலும் சில நாட்களுக்குப் பிறகு சகதேவன் தெற்கு நோக்கி சென்றான் என்னும் செய்தியை அறிந்தேன். நகுலன் மேற்கு நோக்கி என்று பின்னர் கேட்டேன். மூத்தவர் அவர்களை வாழ்த்தி அனுப்பியிருப்பார். அவர்கள் மூவரும் முன்னரே அவர்கள் சென்ற பயணத்தையே மீளவும் செல்கிறார்கள். கொடியும் படையும் கொண்டு சென்றபோது தவறவிட்டவற்றை தன்னந்தனியாக சென்று தொட்டெடுக்க விழைகிறார்கள் போலும். மூத்தவர் யுதிஷ்டிரனும் அவ்வண்ணமே, அவர் சென்ற பயணங்களில் பிறிதொருவராக மீண்டும் செல்கிறார். எனில் நானும் கிழக்கு நோக்கித்தானே செல்ல வேண்டும்? கிழக்கே செல்லவே என் உள்ளம் விழைந்தது. என்றும் கிழக்கே என் திசை. என் தெய்வத்தந்தைக்குரியது அது.

மாளவத்திலிருந்து தெற்கு நோக்கி வரும்போது காட்டில் ஒரு சூதனை கண்டேன். அந்த மரத்தடியில் அவனுடன் ஏழெட்டு வணிகர்கள் மட்டும் இருந்தனர். தன் கிணையையும் யாழையும் மீட்டிப் பாடிய அவன் அஸ்தினபுரியின் பெருவேள்வியின் கதையை சொன்னான். அவன் அதை முடித்தபோது சொன்ன கதை அதுவரை கேட்டிராதது. அஸ்தினபுரியிலிருந்து கதைகள் கிளம்பி நாடெங்கும் சென்றுகொண்டிருந்தன. யாதவரே, இன்று அஸ்தினபுரிக்கு நாடெங்கிலுமிருந்து கதைகள் வந்து சேர்ந்துகொண்டிருக்கின்றன. அவ்வண்ணம் கூறப்பட்ட ஒரு கதை அது. பாதி பொன்னுடலான ஒரு கீரியின் கதை. அதை நான் அப்போதுதான் அறிகிறேன். அஸ்தினபுரியை கதைகளின் வழியாக திரும்பத் திரும்ப கண்டடைந்துகொண்டே இருக்கிறேன்.

அவன் அக்கதையை சொல்லி முடித்து வணங்கினான். சூழ்ந்திருந்தவர்கள் அஸ்தினபுரியைப் பற்றி பேசலாயினர். அப்பெரும்போரை, அதில் திரண்டெழுந்த வேதத்தை. பாற்கடல் கடைந்த அமுதென்று எழுந்தது அது என்றார் ஒருவர். யாதவரே, நான் கேட்டது பிறிதொரு போர். தெய்வங்கள் ஆட மானுடர் அவற்றின் கையில் திகைத்து அமர்ந்திருந்தனர் அதில். அனலைச் சூழ்ந்து அனைவரும் படுத்துக்கொண்ட பின்னர் நான் விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தேன். அரைத்துயில் வந்து என்னை மூடியபோது என் உள்ளம் எழுந்து அக்கதை காட்டிய வழியினூடாகச் சென்று அம்முதுமகள் அனல் மூட்டிய அடுப்பை வந்தடைந்துவிட்டது. அந்த அடுப்பின் அருகே ஒரு சிறுகுடிலில் தாங்கள் அமர்ந்திருந்தீர்கள்.

“எவ்வண்ணம்?” என்று இளைய யாதவர் கேட்டார். அர்ஜுனன் புன்னகைத்து “யாதவரே, தாங்கள் ஒருவயதுக் குழந்தையாக இருந்தீர்கள். பூழியில் விளையாடி மண்மூடிய உடல்கொண்டிருந்தீர்கள். மண்ணில் இருந்து ஒரு விதையை என ஒரு முதுமகள் தங்களை தூக்கி எடுத்தாள். நீங்கள் கால்களை உதறி திமிறிக் கூச்சலிட்டுத் துடிக்க பற்றி இழுத்து தூக்கிச்சென்றாள். குடிலுக்குப் பின்புறம் வெந்நீர் கலத்தின் அருகே கொண்டுசென்று நிறுத்தி இரு கைகளையும் பிடித்து சேர்த்து வைத்து உங்களை நீராட்ட முயன்றாள். நீங்கள் கூச்சலிட்டு துள்ளிக்கொண்டிருந்தமையால் ஒரு காலால் உங்கள் இரு கால்களையும் சேர்த்துப் பிடித்து நிலத்தோடு பதித்தபின் வலக்கையால் மரக்குடுவையில் அள்ளி இளவெந்நீரை உங்கள் மேல் ஊற்றினாள்” என்றான்.

நீங்கள் அந்த நீரை வாயில் உறிஞ்சி அவள் மேல் துப்பி கூச்சலிட்டு அழுதீர்கள். அவள் அதை மகிழ்ந்து சிரித்து ஏற்று நீரை அள்ளி விட்டு உங்களை கழுவினாள். நீர் உடலில் விழுந்து சற்று நேரம் கழிந்ததுமே நீங்கள் அதில் மகிழ்ந்து அவள் கையை உதறி மீண்டு அத்தோண்டியை வாங்கி நீங்களே நீரள்ளிவிட்டு குளிக்கத்தொடங்கினீர்கள். உங்கள் சிரிப்பை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். மேல்வாயில் இரு பால்பற்கள். அகன்ற செவ்விதழ்கள். தலையில் சூட்டப்பட்ட பீலியில் நீர்த்துளிகள். முதலில் அது அனிருத்தனின் மைந்தன் வஜ்ரநாபன் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. பின்னர் அறிந்தேன், அது தாங்களே என்று. யாதவர்களில் தலையில் பீலிவிழி சூடுபவர் தாங்கள் ஒருவரே. புழுதியிலாடி மறைந்திருக்கையிலும் பீலி நீலச்சுடர் எனத் தெரிந்ததை எண்ணினேன். எங்கும் அப்பீலியைக்கொண்டே உங்களை அறிந்துகொள்ள முடியும்.

நீங்கள் என்னை நோக்கி கைநீட்டி “விளையாட வா!” என்றீர்கள். நானும் அப்போது அதே அகவை கொண்ட குழவியாக இருந்தேனா? தெரியவில்லை. “விளையாட வா!” என்று மீண்டும் அழைத்தீர்கள். உங்கள் சொற்களை கேட்டேன். “என்ன விளையாட்டு?” என்று நான் கேட்டேன். “இங்கே விளையாட்டு…” என்றீர்கள். விழித்துக்கொண்டேன். இருளை நோக்கி படுத்திருந்தேன். ஒளிரும் நீல விண்மீன் ஒன்று மிக அருகே என தொங்கிக்கொண்டிருந்தது. அதை நோக்கிக்கொண்டிருக்கையில் நான் துயரற்றிருந்தேன். இனிமையே என ஆகிவிட்டிருந்தேன். இழந்தவை அனைத்தையும் கடந்து மறுகரையில் நின்றிருந்தேன்.

சூதனின் ஆடையின் ஓசை கேட்டு நான் எழுந்து அமர்ந்தேன். அனலுக்கு அப்பால் அச்சூதனும் எழுந்து அமர்ந்திருந்தான். என்னை நோக்கி புன்னகைத்து “ஒரு கனவு” என்றான். “எவரிடம் சொல்ல என எண்ணினேன், விழித்துக்கொண்டேன்.” நான் “கூறுக!” என்றேன். “அங்கே அன்னத்தால் வேள்வி நிகழ்ந்த அடுப்பருகே நான் மகாருத்ரனை கண்டேன். நெற்றியில் அனல்விழி எழுந்த கோலம். விழிமணி மாலைகள். முப்புரி வேல். நஞ்சுண்ட கழுத்து. ஆனால் விந்தை, ஓர் அகவை மட்டுமே கொண்ட சிறுவனென அமர்ந்திருந்தார் சங்கரன். புலித்தோலாடை அணிந்து இடையில் உடுக்கை தொங்க. விந்தையான கனவு என கனவுக்குள்ளேயே எண்ணிக்கொண்டேன், எழுந்தேன்” என்றான். “எண்ணி எண்ணி குழைகின்றேன். எவ்வண்ணம் இக்கனவை பொருள்கொள்வேன்?” என்றான் சூதன். “பொருள்கொள்ளாச் சொற்கள் சூதர்களிடம் இருக்கலாகாது என்பார்கள்.”

நான் அவனிடம் “அவ்விழி சென்ற யுகங்களில் பகை முடிக்க, அறம் திகழ, இறையருள் பொலிய வெங்கனல்கொண்டு திறந்தது. இது கலியுகம். ஒவ்வொருவரும் தங்கள் நன்மைகளினூடாக, கனிவினூடாக கற்றுக்கொள்ளும் காலங்கள் அவை. பிழைகளினூடாக, வஞ்சத்தினூடாக கற்றுக்கொள்ளும் ஒரு காலம் எழுந்துள்ளது. இக்காலத்திற்குரிய தோற்றம் பிறிதொன்று. அந்த நுதல்விழி இன்று வண்ணம் பெற்று பீலிவிழி என்றாகியுள்ளது போலும்” என்றேன். நான் கூறியது அவனுக்குப் புரிந்தது என்று அவன் விழிகள் காட்டின. எழுந்து “வாழ்த்துக, சூதரே!” என்று அவன் கால் தொட்டு வணங்கினேன். “வெல்க!” என்று அவன் கூறினான். அந்த மரத்தடியிலிருந்து இங்கு வந்தேன்.

இளைய யாதவர் அவனை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். “இங்கு வரும்போது ஏன் வருகிறேன் என்று தெளிவுகொண்டிருக்கவில்லை. இங்கு வந்தபின்னும் எனக்கு தெரியவில்லை. ஆனால் இங்கிருந்தும் செல்லவே வந்திருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “மீண்டும் பார்க்கவேண்டும் என்று தோன்றியது எதற்காக? மீளவும் என்னிடம் எதையேனும் கேட்க விழைகிறாய் என்றால் நான் கூறியனவற்றை நீ மறுக்கிறாய், அன்றி கடந்துசெல்கிறாய்” என்றார் இளைய யாதவர். “உனக்குரிய சொற்கள் அனைத்தையும் நான் முன்னரே உரைத்துவிட்டேன். அவை உன்பொருட்டே சொல்வடிவானவை.”

அர்ஜுனன் “ஆம், இங்கு வரை வரும்போது நான் அதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். இன்னும் ஏதேனும் நீங்கள் கூற இயலுமா என்று. நீங்கள் எனக்குரைத்தவை என்றுமென நின்றிருக்கும் சொற்கள். அவை வளர்பவை, காலம் நீளும் தோறும் முடிவிலாது பெருகுபவை. வேதங்களென, மெய்நூல்களென, காவியங்களென நிறைபவை. இங்கு என்றும் அவை நின்றிருக்கும், வடமாமலைகளைப்போல. எனினும் அச்சொற்கள் என்னை வந்தடைந்தபின்னர் நான் எவ்வண்ணம் அவற்றை எதிர்கொண்டேன்? விண்ணிலிருந்து செம்முகிலொன்று பொற்குவையென மாறி விழுந்து கையை அடைந்ததுபோல் வந்தது இறைப்பாடல். ஆனால் அக்கணத்திலிருந்து ஒவ்வொரு சொல்லாக நான் இழக்கத்தான் தொடங்கினேன்?” என்றான்.

குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் பதினெட்டு நாட்களில் எனக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு சொல்லையும் நான் முற்றிலும் இழந்தேன். பதினெட்டாவது நாள் போர் முடிவில் வெற்றி வெற்றி என பெருமுரசம் ஒலித்தபோது ஒரு சொல் எஞ்சா உள்ளத்துடன் அங்கு நின்றிருந்தேன். உளமேங்கி அழுதேன். ஒரு சொல்லின் இறப்பென்பது அவ்வளவு எளிதல்ல. யாதவரே, ஒரு சொல் முடிவிலா பொருள் கொள்ளும் தகைமை கொண்டது. அதுவே அதன் உயிர். பொருளை அளிக்கும் தன் திறனை அது இழக்கையிலேயே சொல் உதிர்கிறது. வைரமென திரும்பித் திரும்பி பல்லாயிரம் பட்டைகளைக் காட்டி ஒளிவிடுகிறது, இழந்து கல்லாகிறது. அத்தனை சொற்களையும் இழந்தவன் தீயூழ் கொண்டவன். தெய்வங்களால் கைவிடப்பட்டவன். தன்னை தானே கைவிட்டவன்.

அங்கிருந்து நான் அஸ்தினபுரிக்கு மீண்டபோது என் உள்ளமெங்கும் சொல்லின்மை நிறைந்திருந்தது. உங்களுடன் பேசுவதற்கு ஒன்றும் இருக்கவில்லை. திசைவெற்றிகாக என்னை பணித்தார் மூத்தவர். நான் கிழக்கு நோக்கி கிளம்பியபோது “இந்திரனின் திசை நோக்கி செல்கிறாய். உன் தந்தை விரித்த கைகளுடன் அங்கு உன்னை எதிர்பார்த்து காத்திருப்பார். செல்க!” என்றார். “ஆம்” என்று நான் உரைத்தேன். “இந்திரனை வென்றவன் துணை உன்னுடன் இருக்கட்டும்” என்றார் மூத்தவர். அத்தருணத்தில் ஒரு விந்தையான உணர்வு எனக்கு ஏற்பட்டது. சிற்றிளமையில் நீங்கள் இந்திரனை வென்று மந்தரமலையைத் தூக்கி குடையாக்கினீர்கள் என்று சூதர்கள் பாடுவதுண்டு, யாதவ நிலமெங்கும் இந்திர ஆலயங்கள் இல்லாமல் ஆயிற்று. மந்தரமலையே தெய்வமென ஆக்கப்பட்டது. வென்ற இந்திரனை தோழனென ஆக்கி உடன் வைத்துக்கொண்டீர்களா? அவனுடன்தான் அத்தனை நாள் விளையாடிக் கொண்டிருந்தீர்களா? நீங்கள் கூறிய அத்தனை சொற்களும் இந்திரனுக்குரியவையா?

அன்று உங்கள் மேல் அடைந்த சினமும் கொந்தளிப்பும் நினைவுள்ளது. உங்களிடம் வாழ்த்து பெறாமலே கிழக்குத்திசை வெல்ல கிளம்பினேன் என்பது நினைவுக்கு வந்தது. செல்லும்போது உங்களிடம் இருந்து எப்போதைக்குமென கிளம்பிச்செல்கிறேன் என்றே தோன்றியது. இனி அஸ்தினபுரிக்கு திரும்பி வரக்கூடாது என்றே எண்னினேன். ஆனால் நகர் எல்லையைக் கடந்ததுமே தனிமைகொள்ளத் தொடங்கினேன். மேலும் மேலும் என வந்தமைந்த வெறுமையால் உடல் வீங்கிப்பெருத்து எடைகொண்டு அசைவிலாதாகியது. தேரில் வெற்றுச் சடலமென என் உடல் அமைந்திருந்தது. முற்றிலும் உயிர் இழந்துவிட்ட ஓர் இரவு சூழ்ந்திருந்தது.

அன்று என் உடலிலிருந்து பிரிந்து நான் என்னை பார்த்துக்கொண்டிருந்தேன். தேரிலிருந்து அசைந்துகொண்டிருந்த வீங்கிப்பெருத்த அவ்வுடலிலிருந்து புழுக்கள் நெளிவதுபோல் தோன்றியது. உடலின் பெரும்பகுதி அசைவை இழந்தது. என் சுட்டுவிரலை நான் பார்த்தேன். அதில் சற்று உயிர் இருந்தது. அவ்விரலை என் கைகளால் இறுகப் பற்றினேன். உடலெங்கும் உயிர் பரவ கண்விழித்து எழுந்து என்னை நோக்கி புன்னகைத்து “யாதவரே, என்னுடன் இருங்கள்” என்று என் உடல் கூவியது. “நான் உன்னுடன் இருப்பேன், நீ விழைந்த வடிவில்” என்றபடி அவ்வுடலின் அருகே நான் அமர்ந்தேன். விழித்துக்கொண்டபோது என் முகம் புன்னகைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

தேர் சென்றுகொண்டிருந்தது. என்னருகே உங்களை உணர்ந்தேன். அருஞ்சொல் ஆற்றியமைந்த கோலத்தில் அல்ல. தேரோட்டியாகவும் அல்ல. நாம் முதலில் கண்டபோது இருந்த அந்த இளந்தோழனாக. பொருளற்ற சொற்களை அள்ளி ஒருவரோடொருவர் இரைத்து விளையாடி மகிழ்ந்திருந்த காலங்களில் இருந்த அந்த முகத்துடன், அவ்விளமைச் சிரிப்புடன். கூச்சல்கள், கொந்தளிப்புகள், இளமையின் மந்தணங்கள், களியாட்டுகள், இளிவரல்கள். யாதவரே, நான் விடுபட்டேன். அப்பயணம் முழுக்க நீங்கள் என்னுடன் இருந்தீர்கள். என்னுடன் விளையாடிக் கொண்டிருந்தீர்கள். வழிகாட்டினீர்கள். இளைஞனென கீழ்த்திசை சென்றேன். வென்று மீண்டபோது பிறிதொருவனாக இருந்தேன்.

யாதவரே, மீண்டும் அஸ்தினபுரி வந்து உங்களை அணைந்தபோது இருந்தவன் அவ்விளைஞன். நீங்கள் அளித்த மெய்மையின் ஒரு சொல் கூட எஞ்சாதவன், எனில் உங்களை அணுக்கன் என உணர்ந்தவன். இன்று அங்கிருந்து கிளம்பியவனும் அவனே. இப்போது உங்களை உடன் கொண்டுசெல்ல விரும்புகிறேன். உங்கள் ஒரு சொல், ஒரு பொருள் எனக்குத் தேவை. அது உடனிருக்குமெனில் இந்த நீள் பயணம் எனக்கு ஒன்றும் இடர் கொண்டதல்ல. நாளும் புத்தொளியுடன் விரிவது, புதியவை தேடிவருவது. எனக்கென ஒரு சொல் உரையுங்கள், பெற்றுக்கொண்டு நாளை காலையில் இங்கிருந்து கிளம்புகிறேன்.

இளைய யாதவர் நகைத்து “இங்கு நான் வெற்றிருப்பென அமர்ந்திருக்கிறேன். எவரிடமும் பெற்றுக்கொள்வதற்கும் எவருக்கும் அளிப்பதற்கும் எதுவும் இல்லை. இப்புவியில் நான் எழுந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. இயற்றுவதற்கொன்றுமில்லை. காத்திருப்பதற்கே ஒன்றுள்ளது” என்றார். அவர் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனன் “தங்கள் சொற்கள் பெரும்பாலும் எனக்கு புரிவதில்லை. எனினும் என்றேனும் இது புரியுமென்று எண்ணிக்கொள்கிறேன்” என்றான். பின்னர் சிரித்து “நான் இங்கு வந்தபோது எண்ணிவந்த ஒன்று உண்டு. வெறும் அறிவின்மை என இப்போது படுகிறது” என்றான். “என்ன?” என்றார் இளைய யாதவர். “இளிவரலாகிவிடும், வேண்டாம்” என்றான் அர்ஜுனன்.

“சொல்” என்றார் இளைய யாதவர். “நீங்களே அறிவீர்கள்” என்றான் அர்ஜுனன். “நான் உங்கள் அழியாச் சொல்லை மீண்டும் எனக்கெனச் சொல்லமுடியுமா என்று கேட்க விழைந்தேன். நீங்கள் எனக்குக் காட்டிய அப்பேருருவை மீண்டும் காண ஏங்கினேன்.” இளைய யாதவர் நகைத்து “அதை மீண்டும் சொல்லிவிட்டேன். பேருருவையும் பார்த்துவிட்டாய்” என்றார். அவன் அவர் சொல்வதென்ன என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

வாயிலில் அச்சிற்றூரின் மூன்று சிறுமியர் வந்து நின்றிருந்தனர். தயை மூங்கிலைப்பற்றி காலை ஊசலென ஆட்டியபடி “உங்கள் இருவரையும் அன்னம் கொள்வதற்கு அழைத்து வரும்படி அன்னை சொன்னாள்” என்றாள். இன்னொரு பெண் எலிபோல் குரலெழுப்பி “அதற்குள் வானில் விண்மீன் எழுந்துவிடும், ஆகவே பிந்தவேண்டாம் என்று சொல்லச் சொன்னார்கள்” என்றாள். தயையை சுட்டிக்காட்டி “இவள் அதை மறந்துவிட்டாள், நான்தான் சொன்னேன்” என்றாள். இன்னொரு பெண் முன்னால் வந்து உள்ளே எட்டிப்பார்த்து “நல்ல அன்னம் இனிப்பானது. தேன்!” என்றாள்.

“இதோ வருகிறேன்” என்று இளைய யாதவர் எழுந்துவிட்டார். அர்ஜுனனும் எழுந்து அப்பெண்கள் அருகே சென்று அவள் தோளில் கைவைத்து “இங்கே தேன் எங்கிருந்து கிடைக்கிறது?” என்றான். “அங்கே உயர்ந்த மலைமீது… அங்கே கனிகளாக காய்த்துத் தொங்குகிறது. இங்கிருந்து பார்த்தால் தெரியும்” என்றாள் தயை. இன்னொருத்தி வந்து “அது பசுவின் அகிடுபோல மலையின் அகிடு என்று என் பாட்டி கூறினார்” என்றாள். “தேன் விண்ணவரின் உணவு. கந்தர்வர்கள் சிறகுடன் பறந்து தேனை அருந்துகிறார்கள்” என்றாள் தயை.

அவர்களுக்கு உணவிட ஒரு சிறு குடில் ஒருக்கப்பட்டிருந்தது. இரவானதால் தேன் கலந்த கஞ்சியும் பழக்கூழும். இளைய யாதவர் ஒவ்வொரு துளியையாக சுவைத்து தலையை அசைத்து உண்டார். இல்லத்து இளம்பெண் அவருக்கு அன்னம் அளிக்கையில் உளம் நெகிழ்ந்து விழி கனிந்து உடலெங்கும் ஓர் ஒளி பரவி நிற்பதுபோல் தோன்றினாள். உள்ளிருக்கும் அனலால் உருகும் பொன் என்று எங்கோ ஒரு சூதன் பாடியதை அர்ஜுனன் நினைவுகூர்ந்தான். அவர் உண்டு முடித்து “நன்று, இனிமை என் உடலெங்கும் நிறைந்துள்ளது. இவ்விரவெங்கும் என் உடன் நிற்பது இது” என்றார். அவள் உடல் தாழ்த்தி பெருமூச்சுவிட்டாள். இளைய யாதவர் நிலம் தொட்டு வணங்கி எழுந்துகொண்டார்.

சொல்லமைந்து அரையிருளில் அவருக்குப் பின்னால் நடந்த அர்ஜுனன் தன் புரவியை எண்ணி புல்வெளியை பார்த்தான். எங்கோ அது தன் சுற்றத்துடன் சேர்ந்திருக்கும் என்று எண்ணி திரும்பியபோது திடுக்கிடல்போல் ஓர் உணர்வு எழுந்தது. அவனருகே அவரில்லை என்று. விழிக்கு முன் பருவுடலுடன் அவர் தோன்றிக்கொண்டிருந்தார். ஆனால் உள்ளம் அவர் இல்லை என்றே உணர்ந்தது. அந்த மாயை அவனை திடுக்கிடச் செய்ய அவன் அவர் அருகே மேலும் நெருங்கி சென்றான். அவர் குடிலுக்குள் நுழைந்து தன் பாயையும் மரவுரியையும் எடுத்து விரித்து மரத்தாலான தலையணையைப் போட்டு கைகூப்பியபடி மல்லாந்து படுத்தார். “தேவி!” என்றார். உடனே முற்றிலும் அணைந்து துயில்கொண்டார்.

எப்போதுமே இரு கைகளையும் இருபுறமும் வைத்து உடலை நேராக்கி விழிகள் மேல் நோக்கி திறந்திருக்க மெல்ல இமை மூடி அக்கணமே துயில்வது அவர் வழக்கம் என அவன் எண்ணிக்கொண்டான். சீரான மூச்சு வந்துகொண்டிருந்தது. அவர் அங்கு இல்லை என்ற உணர்வையே மேலும் மேலும் உள்ளம் உணர்ந்தது. கை நீட்டி அவர் உடலை தொட்டால் அங்கு இன்மையையே உணரமுடியும் என்று தோன்றியது. அவன் அவர் அருகே கண்மூடி படுத்துக்கொண்டான். கண்களை மூடிய பிறகு அவ்வுடலும் அங்கு இல்லை என்றாயிற்று. திடுக்கிட்டு எழுந்து ஒருக்களித்து மீண்டும் அவரை பார்த்தான். சீரான மூச்சுடன் அவர் அங்கு துயின்றுகொண்டிருந்தார். அந்த இன்மை உணர்வை அகற்றவே இயலவில்லை.

அவன் கண்களை மூடிக்கொண்டு நெடுநேரம் படுத்திருந்தான். அவ்வப்போது எழுந்து அவரை பார்த்தான். முற்புலரியில் எழுந்து ஓசையிலாது வெளியே சென்று முகம் கை கழுவி வந்தான். வாசலில் நின்று துயின்றுகொண்டிருந்த அவரை பார்த்தான். பின்னர் நடந்து சென்று ஒற்றையடிப்பாதையில் நின்று மெல்லிய சீழ்க்கை ஓசை எழுப்பினான். விழியொளித் துளிகளாக புல்வெளியில் நிறைந்து நின்றிருந்த புரவிகளின் கூட்டத்திலிருந்து கனைப்பொலி எழுப்பியது அவன் புரவி. புல்நடுவிலூடாக குளம்படி ஓசையுடன் அவனை நோக்கி வந்தது. அவன் உடல்மேல் தன் உடலை உரசி தலையை தோளின் மேல் வைத்தது. அவன் அதன் கழுத்தைத் தட்டி காதுகளைத் தட்டி அசைத்த பின்னர் சேணத்தை மாட்டி கடிவாளத்தைப் பொருத்தி கால் சுழற்றி ஏறி அமர்ந்து “செல்க!” என்றான். வந்த வழியே அது சீரான காலடி ஓசைகளுடன் கடந்து சென்றது. இம்முறை தன்னந்தனியாக ஒரு பயணம் செய்கிறோம் என்று எண்ணிக்கொண்டான்.

தொடர்புடைய பதிவுகள்


கோகுலரமணனின் கதை- ஓர் உரையாடல்

$
0
0

 

அன்புள்ள  கிருஷ்ணன் அவர்களுக்கு,

வணக்கம்

நான் சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு வாசகர் சந்திப்பில் கலந்துகொண்டவன். அதன் உந்துதலால் ஒரு சிறுகதை ஒன்றை எழுதி இத்துடன் இணைத்துள்ளேன். தங்களின் கருத்துக்களையும்/விமர்சனங்களையும்  நான் மிகமுக்கியமானதாக உணர்கிறேன், கதையும் நானும் தேறுவோமா என்று தெரியவில்லை. தங்களின் கருத்துக்களை பகிருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த கதையை ஜெயமோகன் அவர்களுக்கும் ஒரு சிறிய கடிதத்தோடு அனுப்பியுள்ளேன்.

எழுத்துப்பிழைகளை பொருத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

நன்றியுடன்,
இல. கோகுலரமணன்

ஆசிரியருக்கு,

 

 

இது ஒரு தீவிர இலக்கிய வகைமைக்குள் நிற்கும் நல்ல சிறுகதை. எனக்கு பிடித்திருந்தது. இது போல புலன் ஆகாத மெல்லிய விந்தை நிகழ்வை தொட்டு  காண்பிப்பதும், பருப்பொருளின் மனித தன்மையை பரிசீலிக்க வைப்பதும் ஒரு சிறுகதை நிகழக் கூடிய களம் தான்.

 

இந்த ஜோடி கற்கள் படிமமாக மனதில் வளரும் வாய்ப்புண்டு,  தன்னளவிலேயே இது ஒரு வலிமையான படிமம். சமையல் அறையில் இருந்து செப்டிக் டேங்க் தொழிலாளி வீடு வரை ஒரு நகர்வு உள்ளது. இது கனவில் தோன்றுவது ஒரு நுண்ணிய அனுபவம்.

 

இக்கதையில் இணையான வாழ்கை நிகழ்வு  இல்லாததால் இந்த கற்கள் வளரும் படிமமாவதில்லை.

 

ஆனாலும் ஒரு நல்ல கதையை படித்த நிறைவு எனக்குள்ளது.

 

இவர் இந்த ஆண்டு ஈரோடு  புதிய வாசகர் சந்திப்பு நிகழ்வுக்கு வந்து சென்ற பின் எழுதியது. இது கோகுல் ரமணன் எழுதிய முதல் கதை. சாத்தியமென்றால் நமது தளத்தில் வெளியிட வேண்டுகிறேன்.

 

கிருஷ்ணன்,

ஈரோடு.

 

 

அன்புள்ள கிருஷ்ணன்

 

ஒருவரின் முதற்கதை இது என்றால் இது மிக முக்கியமான படைப்பு. இரண்டு கூறுகள். ஒன்று அறிந்த, கேட்ட யதார்த்தத்தை ‘அப்படியே’ எழுதத்தான் பெரும்பாலான புதிய படைப்பாளிகள் முயல்வார்கள். படைப்பின் அடிப்படை கற்பனை. அது இக்கதையில் உள்ளது

 

இரண்டு, இவ்வாறு கதை எழுதத் தொடங்கும்போது முடிவை அளிப்பதிலும் சரி தொடங்குவதிலும் சரி, உரையாடல்கள் வழியாக ஒரு செய்தியைச் சொல்வதிலும் சரி ஒரு ‘பழகிப்போன’ பாதை இருக்கும். அது முழுமையாகவே இக்கதையில் தவிர்க்கப்பட்டுள்ளது. அதுவும் நன்று

 

கதை  ஒரு கவித்துவத்தை அடையத்தான் செய்கிறது. அந்த பிளப்பு. அதைவிட கதையில் சொல்லப்படாத ஒன்று நிகழும் அந்த முடிவு.  கற்பனையைத் தூண்டும் நல்ல படைப்பு

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

எண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-1

$
0
0

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

நீங்கள் எழுதும் கதைகளில் ஒரு குறிப்பிட்ட வகையான கதைகள் தொடர்ச்சியாக நினைவில் வருகின்றன. பெரும்பாலும் உண்மை மனிதர்கள். பெரும்பாலும் உண்மை நிகழ்வுகள். அந்த சந்தர்ப்பம் மட்டும் கொஞ்சம் பிக்‌ஷனைஸ் பண்ணப்பட்டிருக்கும். அதுகூட டிரமட்டைஸ் பண்ணப்படாமல் ஒரு உண்மையான வாழ்க்கைச் சித்திரத்தை மட்டும் தொட்டுக்காட்டிவிட்டு மேலே முடிவோ கருத்தோ சொல்லாமல் நின்றுவிடும்.

 

இருவர் அப்படிப்பட்ட ஒரு கதை. தேவதை நினைவுக்குவரும்  இன்னொரு கதை. சமீபத்தில் பேசப்பட்ட நீரும்நெருப்பும் கூட அப்படிப்பட்ட கதைதான். எண்ண எண்ணக் குறைவது -ம் அப்படிப்பட்ட கதைதான்.

 

என்னால் உண்மையான கதாபாத்திரங்களை முழுக்க ஊகிக்க முடியவில்லை. ஆனால் ஓரளவு மலையாளம் வாசிப்பவன் என்ற முறையில் கதையின் நாயகனை ஊகிக்க முடிகிறது. எம்.ராய், இ.எம்.எஸ் என்ற இரண்டு க்ளூவும் உள்ளது. அவருடைய கடைசிநாள். அது தற்கொலையாக இருக்கலாம். ஏன் தற்கொலை செய்துகொண்டார்? ஒரு பாஸிட்டிவான தற்கொலை இன்றைய சூழலில் சாத்தியமா? சாத்தியம் என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது?

 

மேலைநாட்டுச் சிந்தனையில் தற்கொலை பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். பல எழுந்த்தாளர்களும் சிந்தனையாளர்களும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்போதுகூட தற்கொலை எதிர்மறையாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. டிப்ரஸிவான முடிவுதான் அது. அந்த டிப்ரஸிவான முடிவுதான் மனிதர்களுக்கு இயல்பானது, அதுதான் உண்மையானது எனேன்றால் வாழ்க்கை அப்படி டிப்ரஸிவானதுதான் – இப்படித்தான் அவர்கள் சொல்கிறார்கள்.

 

நேர்மாறாக வாழ்க்கையின் நோக்கம் முடிந்ததும் முடித்துக்கொள்வதும் நிறைவானதாக பாஸிட்டிவானதாக இருக்க முடியும் என்பது ஒரு இந்தியச் சிந்தனை. இஸ்லாமியம் கிறிஸ்தவம் ஆகிய இரு மத அடிப்படையாலும் அதைப் புரிந்துகொள்ளவே முடியாது. ஒரு சிந்தனையாளனின் சிந்தனையின் முடிவாக தற்கொலையைப் பார்க்கமுடியுமா என்பது இந்தக்கதை எழுப்பும் கேள்வி என நினைக்கிறேன்.

 

இயல்பான உரையாடல்கள் வழியாக ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்து அப்படியே முடிகிறது இந்தக்கதை

 

பாஸ்கர் எம்

 

அன்புள்ள ஜெ,

 

எண்ண எண்ணக் குறைவது கதை சமீப காலத்தில் ரொம்பவே தொந்தரவு படுத்திய கதை. ஏனென்றால் அது எழுப்பிய கேள்வி எனக்கும் உள்ளது. நம்முடைய நவீன மருத்துவம் நம்மிடம் சொல்லிக்கொண்டே இருப்பது என்னவென்றால் வாழ்க்கையின் கடைசிக்கணம் வரை வாழ்வதற்காக போராடிக்கொண்டே இருக்கவேண்டும். விட்டே கொடுக்கக்கூடாது. மனிதனின் வாழ்க்கை என்பதே சாவுடன் போராடுவதுதான் இந்தக் கொள்கையால்தான் இங்கே மனிதர்களில் 90 சதவீதம்பேரும் கிழட்டுப்பருவத்தில் பூமியில் பெருஞ்செலவில் நிலைநிறுத்தப்படுகிறார்கள். அதற்கான தேவை என்ன என்று எனக்குப் புரியவில்லை  ஆனால் அந்த ஆசை உயிரின் அடிபப்டையான will. அதை கடந்துவிடமுடியும் என்றும் படவில்லை.  இந்தக்கதை நிறைவான ஒரு முழுமையாக சாவை காண்பதைப் பற்றிச் சொல்கிறது. யோகிகளாக வாழ்ந்தவர்கள் அல்லாமல் எவருக்கும் நிறைவான மகிழ்ச்சியான முதுமை சாத்தியமில்லை என்று சொல்கிறது. பலகோணங்களில் குழம்ப வைத்த சிறுகதை

 

சந்தானகிருஷ்ணன் டி.எம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-7

$
0
0

 

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

வணக்கம் ஜெ

சில சமயங்களில் ஏதுமறியாமல் ஏதோ ஒன்று மனதை ஆட்கொண்டுவிடுகிறது. ஒரு பாடல் வரியோ கவிதையோ இசையோ கோர்ப்போ. சில முறை முன்னரே பார்த்துள்ள ஓவியமோ சிற்பமோ அன்று மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும். அவ்வாறு சென்ற வாரம் என்னுள் இருந்துகொண்டிருந்தது மிக்கலேஞ்சிலோவின் தி பியட்டா.

அச்சிற்பத்தை பற்றி ப்ராய்ட் எழுதியதை படிக்க தொடங்கி மிக்கலேஞ்சிலோவின் சில குறிப்புகளை படித்து இத்தாலியின் உயர் மறுமலர்ச்சி (high renaissance), டா வின்சியின் குறிப்புகள்( நாம் அறிந்த டாவின்சி ஓவியங்களின் முன் வடிவங்கள் மற்றும் கோட்டோவியங்கள் அபாரமானவை, லேடாவின் தலைமுடி ஓடும் நீர் போன்ற கோட்டோவியங்கள் ஒன்றோடு ஒன்று சம்மந்தம் உடையவை என தோன்றசெய்பவை),  பின் பெர்னினி பரோக் ரோகோகோ என்று சென்றமைந்தது.

இதனைத்திற்குப்பிறகும் யேசுவை ஏந்திய அந்த முகம் என் நினைவிலிருந்து நீங்கவில்லை. எப்போதும் போல் அதை வரைவது வழியே என்னுள்ளிருந்து வெளிகொண்டுவர முயன்றேன்.

இன்று தளத்தில் வந்த சிறுகதையின் இறுதியில் மீண்டும் அம்முகம். மீண்டும் பியட்டா. எல்லோரிடத்திலும் உறைந்திருக்கும் தேவி. யா தேவி சர்வ பூதேஷூ..

ஸ்ரீராம்

பி.கு. அடுத்த வெண்முரசு வெளிவருவதற்குள் இதுபோன்ற மேலும் சிறந்த சிறுகதைகள் பல வரவேண்டும்.

***

 

அன்புள்ள ஜெ

சர்வ ஃபூதேஷு வாசித்தேன். அதில் கதை என என்ன உள்ளது? சில நிகழ்ச்சிகள். அதிலும் விசித்திரமாக ஒன்றுமில்லை. சில உரையாடல்கள். அவையும் உணர்ச்சிகரமானவை ஒன்றும் அல்ல. மிகமென்மையாகச் சொல்லப்பட்டவை. விரைவான பென்சில் கீறல்கள்போன்ற சில ஓவியங்கள் அவ்வளவுதான்

இரு கதைகளையும் வாசித்தபின்னர் இந்தக் கதைகள் ஏன் இத்தனை ஈர்ப்பை அளிக்கின்றன என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். அதற்கு காரணம் என எனக்குத் தோன்றியது சில படிமங்கள்தான் என்று. இந்த படிமங்கள் ஏற்கனவே மரபில் உள்ளவைதான். துர்க்கை, சக்தி, மேரி, வியாகூல மாதா எல்லாமே. அவற்றை சார்ந்து நம் உணர்ச்சிகளும் உள்ளன. இந்தக்கதை அவற்றை முற்றிலும் புதிய ஒரு வழியில் காட்டும்போது ஓர் அதிர்ச்சி உருவாகிறது. ஒரு பரபரப்பு. நாம் அந்தப் படிமங்களைப் புதியதாக கண்டடைகிறோம். அப்போது மீண்டும் அந்தக் கொந்தளிப்பு நிகழ்கிறது

முழுக்க முழுக்க கவிதைபோல படிமங்களையும் உருவகங்களையும் மட்டுமே வைத்து எழுதப்பட்ட கதைகள் இவை

ஜெயராமன் எஸ்

***

தொடர்புடைய பதிவுகள்

புனைவுக் களியாட்டு- சிறுகதைகள் பற்றி…

$
0
0

தனிமையின் புனைவுக் களியாட்டு

 

தனிமையின் புனைவுக் களியாட்டு அறிவிப்புக்குப் பின் இளம் வாசகர்கள் எழுதிய பல கதைகள் வந்தன. எல்லா கதைகளையும் வாசித்துவிட்டேன். நானே எழுதிக்கொண்டிருப்பதனால் எல்லாருக்கும் தனித்தனியாகப் பதில்களை விரிவாகப் போடவில்லை. எழுதவிருப்பவர்களுக்கும் சேர்த்து இந்தக்குறிப்பை பொதுவாக எழுதுகிறேன்.

 

அ. சிறுகதை ஒரு சவுக்குச் சொடுக்குபோல ஆரம்பிக்கவேண்டிய கதைவடிவம்

 

எனக்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான கதைகள் மிகமிகத் தயக்கமாக ஆரம்பிக்கின்றன.“அவன் இப்படி நினைத்தான். இப்படித்தானோ என்று தோன்றியது. இப்படி நினைவுகூர்ந்தான்’ என்றவகையில் முதல் இருநூறு வார்த்தைகள் வரைக்கூட வெறுமே சிந்தனைகள், எண்ண ஓட்டங்கள் ஆகியவை வருகின்றன. ஆசிரியரின் எண்ண ஓட்டங்கள் வரும் கதைகளும் உண்டு. ஒரு கதையை எப்படி வேண்டுமென்றாலும் தொடங்கலாம். ஆனால் அது என்ன விளைவை உருவாக்குகிறது என்ற எண்ணம் ஆசிரியனுக்கு வேண்டும். ஒரு சிறுகதையில் கதாபாத்திரங்களும் சூழலும் அறிமுகமாகாதபோது, வாசகன் அதற்குள் சென்று சேராதபோது வரும் சிந்தனைகளும் எண்ணங்களும் வெறும் சொற்களாகவே இருக்கும். வாசகனால் அவற்றுடன் தொடர்புகொள்ளவே முடியாது.

 

சிறுகதையில் கதை உடனடியாகத் தொடங்கப்படவேண்டும் என ஏன் சொல்லப்படுகிறது என்றால் அதில் வாசகன் உள்ளே வருவதற்கு அதிக இடம் இல்லை என்பதனால்தான். உள்ளே இழுக்கும் தொடக்கம் கதைக்கு முக்கியம். உள்ளே எப்படி இழுப்பது என்பது கலைஞனின் திறமை சார்ந்தது. கதையின் மையத்தையே சொல்லலாம். கதாபாத்திரத்தின் தனித்தன்மையைச் சொல்லலாம். கூரிய சொற்றொடரிலிருந்து ஆரம்பிக்கலாம். ஆனால் இத்தனைதூரம் இதெல்லாம் பேசப்பட்டபின்னரும்கூட பல கதைகள் பல பக்கங்களுக்கு வெறும் எண்ணங்களாகவே தொடங்கி நீள்வது ஆச்சரியமாக இருக்கிறது. சிறுகதை முன்னோடிகளின் கதைகளை படியுங்கள். அவை எப்படி தொடங்கியிருக்கின்றன என்று பாருங்கள்.

 

ஆ. சிறுகதை சுருக்கமானது

 

பல சிறுகதைகளை பார்க்கையில் மிகநீளமான ஒரு கதையை சுற்றிச்சுற்றி அடுக்கியிருப்பது தெரிகிறது. சிறுகதை என்பது அதன் உச்சத்தை ஒரே புள்ளியில் குவிப்பது. அங்கேதான் உண்மையான கதை உள்ளது.அதை வலுவாகச் சொல்வதற்காகவே மற்ற பகுதிகள். ஆகவே அந்தப் பகுதிகள் தேவையான அளவுக்கு மட்டுமே இருக்கவேண்டும். சுருக்கமாக சுவாரசியமாக. நாவலில் வருவதுபோல மீட்டிமீட்டி கொண்டுசெல்லக்கூடாது. ஒவ்வொரு விஷயத்திற்கும் பல நினைவுகள் பல துணைக்கதைகள் வரவேண்டியதில்லை.

 

இ. சிறுகதை என்பது ஒரு கதைதான்

 

ஒரு கதைக்குள் ஏன் அத்தனை கதைகளைச் சொல்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. கதைகளுக்குள் கதை என்பது ஓர் உத்தியாகச் சிலரால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். சிறுகதையின் இலட்சிய வடிவம் என்பது தேர்ந்த ஓவியன் மிகவிரைவாக வரையும் கோட்டோவியம்போன்றது. எளிதாக ஒரு கீச்சுபோல நிகழ்ந்தால்தான் அது அது அழகு. அப்படி இல்லை என்றால் அதற்கான நியாயம், தேவை இருக்கவேண்டும்.

 

இ. சிறுகதை என்பது இயல்பான மொழியால் ஆனது

 

வர்ணனைகள் விவரிப்புகள் கதைநிகழ்ச்சிகளைச் சொல்வது ஆகியவற்றின் வழியாக கதை ஓடலாம். ஆனால் அவையெல்லாம் இயல்பான, சரளமான மொழியால் ஆகியிருக்கவேண்டும். சிக்கலான சிடுக்கான மொழி சிறுகதையின் அழகை பெரும்பாலும் இல்லாமலாக்கிவிடுகிறது

 

உ. சிறுகதை நிகழ்வது, நினைவுகூரப்படுவது அல்ல

 

எனக்கு வந்த பாதிக்கதைகள் நினைவுகளில் நடக்கின்றன. பெரும்பாலான சம்பவங்கள் யாராவது ஒருவரின் நினைவில் நடக்கின்றன. என்று நினைத்துக்கொண்டான், என்று ஞாபகம் வருகிறது- என்றபாணியில். இது ஏன் என்றால் கதையை எழுதும் ஆசிரியன் அப்படி நினைவுகூர்வதை எழுத முயல்கிறான். ஆகவே அதே பாணியில் எழுதுகிறான். நினைவுகூரும் விஷயங்கள் கதையில் தகவலாகவே வரமுடியும். சுருக்கமாக. செய்தியாக. கதை நிகழ்வதுதான்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

“ஆனையில்லா!” [சிறுகதை]

$
0
0

 

செய்தி கேள்விப்பட்டு அப்பா ‘என்னது?”என்றார்.

 

“ஆமாம் ஏமானே, உள்ளதாக்கும். வந்து பாக்கணும் அந்த கெரகக்கேட்ட… உள்ளதச் சொல்லப்போனா தெருவுநாயெல்லாம் சுத்தி நிண்ணு பல்லக்காட்டிச் சிரிக்குது” என்றான் தவளைக்கண்ணன்.

 

அப்பா துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு கிளம்புவதற்குள் நான் பின்பக்கம் வழியாக பாய்ந்து, தென்னந்தோப்பில் புகுந்து குறுக்குவழியாக ஓடி, ஓடையை பனந்தடிப் பாலம் வழியாகக் கடந்து, பாடச்சேரியை அடைந்து ,அப்பால் ஏறி எராளி ஐயப்பனின் வீட்டை அடைந்தேன். செய்தி உண்மைதான்.

 

கோபாலகிருஷ்ணன் எராளி ஐயப்பனின் வீட்டுக்குள் நுழைந்து நின்றிருந்தான். பாகன் ராமன் நாயர் வெளியே நின்று “ஆனை பொறத்தே! ஆனை பொறத்தே!” என்று கூவிக்கொண்டிருந்தார்.

 

கோபாலகிருஷ்ணனுக்கு வெளியே வரத்தான் விருப்பம். ஆனால் முடியவில்லை.செருகப்பட்ட ஆப்பு போல இறுகிநின்றிருந்தான் நான் வாய்பிளந்து மாமரத்தின் அடியில் நின்றேன்.

 

“எளவு என்னலே இது!” என்று எனக்குப் பின்னால் ஓடிவந்து நின்ற எசக்கியேல் சொன்னான். “எலிப்பொறியிலே பெருச்சாளி சிக்கின மாதிரில்லா நிக்குவு!”

 

உண்மைதான். கோபாலகிருஷ்ணனின் கரிய பெரிய புட்டம் குறிய வாலுடன் வாசல்கதவுக்கு வெளியே புடைத்திருந்தது. வால் பரிதவித்தது. ஐயப்பனின் மரத்தாலான வீடு சிறியது, அதற்குள் அது நுழைந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டிருந்தது.

 

நான் சுற்றிக்கொண்டு பின்னால் சென்று பார்த்தேன். வீட்டுப்பெண்களெல்லாம் வெளியே நின்று நரியைக் கண்ட கோழிகள் போல கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள். மொத்தக்கூச்சலில் சொற்கள் தனித்து கேட்கவில்லை.

 

யானை முகப்புக் கூடத்தில் நின்றிருந்தது. அதன் துதிக்கை பின்பக்கம் சாய்ந்து இறக்கப்பட்ட சமையலறைக்குள் நெளிந்துகொண்டிருப்பதை அங்கிருந்தே காணமுடிந்தது. இரு தந்தங்களில் ஒன்றும் சமையலறைக்குள் நீட்டியிருந்தது.

 

“எப்டிலே உள்ள போச்சு?” என்று எனக்குப்பின்னால் வந்த எசக்கியேல் கேட்டான்.

 

“ஏசுவே, மாதாவே, உலகம் அளியப்பட்ட நாளுல்லா வந்திருக்கு!” என்று எசிலிக் கிழவி சொன்னாள்.

 

அப்பா வந்துசேர்ந்தார். கூடவே அவருடைய நண்பர் தங்கையா நாடாரும் நேசையன் டீக்கனாரும் இருந்தனர். பெரிய மனிதர்கள் வந்ததும் பெண்கள் “எனக்க தெய்வமே, இந்தக் கோலத்த கண்டுதியளா! எனக்கு வய்யாமே! எனக்க சீவன் போகமாட்டேங்கே!” என்று கதறிக்கூச்சலிட்டு ஓடிவந்து நெஞ்சிலறைந்து அழுதனர்.

 

அப்பா “போரும்!”என்று அதட்டினார். ஐயப்பனின் மனைவி சந்திரி “ஓ!”என்று பணிவுடன் சொல்லி உடனே அழுகையை நிறுத்தி மூக்கை ரீச் என்று சிந்தி வேட்டி நுனியால் துடைத்தாள். கண்களை துடைத்துக்கொண்டு தன் மகள் நாராயணியிடம் “ஏம்டி, சட்டியும் கலமும் வச்ச இடத்திலே நிக்கச் சொன்னேனே. உள்ள அரிசியையும் பருப்பையும் இதுக்கு எடையிலே வல்ல அறுதலியும் வாரிக்கிட்டு போயிடுவாளுக… போடீ” என்றாள்.

 

என்னுடன் பள்ளியில் படிக்கும் நாராயணி என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு நெளிந்தாள். வீட்டுக்குள் யானை புகுந்தது பள்ளியில் அவளுக்கு பெருமை சேர்ப்பதா இழிவை கொண்டுவருவதா என்பதை அவள் இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று தெரிந்தது.

 

ஐயப்பன் அப்பா அருகில் வந்து நின்றான். ”என்ன கைப்பள்ளியே, என்னவாக்கும் சங்கதி!” என்றார் அப்பா.

 

“வீட்டுக்குள்ள ஆன கேறிப்போட்டுது” என்றான் ஐயப்பன்.

 

“அதை இந்நா கண்ணு முன்னாலே காணுதோம்ல… ஏல, என்ன நடந்ததுண்ணு சொல்லுலே எரப்பாளி” என்றார் டீக்கனார்.

 

“காலம்பற நான் சந்தைக்குபோகணுமிண்ணு இவளுக்க கிட்ட சொன்னப்பம்…” என்று ஐயப்பன் தொடங்கினான்

 

சந்திரி இடைமறித்து “ஓ, இவரு இப்பிடியே சொல்லி விடிய வைப்பாரு… ஏமானே, வீட்டுக்குள்ள காலம்பற எண்ணை அரைக்கதுக்குள்ள கொப்பரத்தேங்காய கடவத்திலே வச்சிருந்தது…நாலஞ்சுநால் வெயிலிலே காஞ்சு நல்ல எண்ணப்பதம் வந்த கொப்பரையாக்கும். நாயரு நேத்து ராத்திரி ஆனையை அந்தால காலாயம்வீட்டு வெளையிலே கெட்டிருந்திருக்காரு. அது சங்கிலிய அவுத்துப்போட்டு மணம்பிடிச்சு வந்திருக்கு. வீட்டுக்குள்ள கேறிப்போட்டுது” என்றாள்

 

“முற்றத்திலே நிண்ணு அருமையாட்டு கைய நீட்டி கேட்டுது… ஏட்டி ஒரு கொப்பரையை குடுக்கட்டான்னு கேட்டேன். அதுக்கு இவ என்னைய நாறவாக்கு சொன்னா… இப்பம் என்ன ஆச்சு? கண்டியளா? கிண்ணத்திலே எலி விளுந்த கணக்காட்டு நிக்குது” என்றான் ஐயப்பன்.

 

“வாய மூடும்வே… மோரையிலே வச்சு சாத்தீருவேன்.. ஆனைக்கு கொப்பர குடுக்கதுக்கு இங்க பொன்னு கூட்டியில்லா வச்சிருக்கு.. உள்ளது எட்டுகிலோ கொப்பரை. அதில காக்கா கொண்டுபோனது குருவி கொத்தினது போக மிச்சம் இருக்கப்பட்டது இம்பிடு… ஆனைக்கு கொப்பரை குடுக்காராம்…ஆனைய தூக்கி மடிமேலே வையும்வே… வாறாரு”

 

“நீ சும்மா கெடந்து கீறாதே… அவன் சொல்லுகதும் காரியமாக்கும்” என்றார் அப்பா.

 

“என்ன காரியம்? இந்த காலமாடன என்னையக் கெட்டினப்பம் எனக்க குடியிலே மூதேவி வந்து கேறினதாக்கும்.. இந்நா இப்பம் ஆனையும் வந்து கேறியாச்சு… ”

 

“ஆனை ஐசரியமாக்கும்டீ..”

 

“ஆமா, ஐசரியம்… ஏமானே இருக்கது இந்த மரப்பெட்டிவீடு. இதை உடைச்சு போட்டா பிறவு எங்கபோயி அந்தி உறங்குகது? தெருவிலே துணிவிரிச்சு கெடக்கணுமா? எனக்க மேலாங்கோட்டு பகவதீ, உனக்கு கண்ணில்லாம போச்சே… ”

 

“வாய சாத்துடீ… ஏலே உனக்க கெட்டினவள கூட்டிட்டுபோ. எளவு, ஆனைக்கு பீ எளகினது மாதிரில்லா வார்த்தைய போடுதா…”

 

“அவ எப்பமும் அப்டியாக்கும். கல்யாணத்திலே தாலிகெட்டுத மணையிலே வச்சு என்னைய நாயேன்னு சொன்னவளாக்கும்”

 

ஐயப்பனின் வீடு பழைய மரக்கட்டிடம். அந்தக்காலத்தில் கைப்பள்ளிகள் செயலாக இருந்தபோது கட்டியது. நல்ல உறுதியான தேக்கில் உத்தரங்கள், தேக்குப் பலகையால் ஆன சுவர்கள். பித்தளைக் குமிழ் வைத்த தடித்த கதவுகள். ஆனால் கதவும் சன்னலும் மிகச்சிறியவை. தட்டும்நிரையும் என்று அந்தவகை வீடுகளைச் சொல்வார்கள். யானை வசமாகச் சிக்கிக் கொண்டிருந்தது

 

”இப்பம் என்ன செய்யுகது?”என்றார் அப்பா. “யானை சிக்கில்லா நின்னிட்டிருக்கு”

 

ராமன் நாயர் அருகே வந்து “நான் நல்லா விளிச்சு பாத்தாச்சு. அவனால முடியல்ல… பயந்திருக்கான் பாத்துக்கிடுங்க”

 

“ஏம்வே ஆனை உள்ளே கேறியிருக்குல்லா? பின்ன எப்டி வெளிய வராம போவும்?” என்றார் டீக்கனார்.

 

“ஆனை பயந்தாலோ ,சீறினாலோ கொஞ்சம் உப்பி பெரிசாயிப்போடும் பாத்துக்கிடுங்க… அதாக்கும்”

 

“இதென்னவே புதிய கதையாட்டு இருக்கு. ஆனை என்னவே சுண்ணியா, பெரிசாகுததுக்கு?” என்றார் தஙகையா நாடார்.

 

அப்பா “நாம என்ன கண்டோம்…. அவன் ஆனைக்காரன்…” என்றபின் “நல்லா விளிச்சுப்பாரும்வே… வல்ல வாழைக்குலையோ கருப்பட்டியோ காட்டிப்பாரும்”

 

“பதிநாலு கருப்பட்டியும் ஏளு வாளைக்குலையும் குடுத்தாச்சு. தும்பிக்கை நீட்டி வாங்கி திங்குதான். அசைய முடியல்ல…”

 

“ஒருவேளை இப்டியே வீட்டோட நிக்கிலாம்னு ஐடியா இருக்கோ என்னமோ? ஒருநாளைக்கு பதினாலு கருப்பட்டீன்னாக்க நல்ல ஏவாரம்னு நினைச்சிருப்பான்’

 

”களியாக்கப்பிடாது தம்புரானே. அவன் ஆளு டீசண்டு பார்ட்டியாக்கும். இண்ணைக்கு வரை ஒரு வம்புக்கும் வளக்குக்கும் போனவன் இல்ல பாத்துக்கிடுங்க. ஆத்திலே பொம்புளையாளுக குளிக்குத எடத்தில எறங்க மாட்டான்…”

 

“ஆனா ஆம்புள குளிக்கப்பட்ட எடத்திலே  கலப்பைய காட்டிட்டு நிக்கது உண்டு” என்றான் லாரன்ஸ்

 

“லே, இது சிவன்கோயில் ஆனையாக்கும். வேதக்காரனுகளுக்கு என்னலே காரியம்?”

 

“வேதக்காரங்களுக்கும் அது கலப்பை காட்டுகதுண்டு… ”

 

“லே நீ போறியா இல்லியா?”

 

அப்பா யானையை கூர்ந்து பார்த்தபடி சுற்றிவந்தார். “ஒண்ணும் சொல்லுகதுக்கில்ல… எப்டி உள்ள போச்சுண்ணே தெரியல்லியே.. உள்ள போக முடியாதே… வாய்ப்பே இல்லியே”

 

‘உள்ள போயிருக்குல்லா… இந்நா கண்ணுமுன்னால தெரியுதே”

 

“எப்டிலே அதுக்கு தோணிச்சு உள்ள போகணும்னு?” என்றார் அப்பா “ஆனைக்கு அதுக்குன்னு ஒரு கணக்கு உண்டுல்லா?’’

 

ராமன்நாயர் “சில ஆனைக அப்ப்டியாக்கும். வளந்து போனதை சிலசமயம் மறந்துபோடும்”

 

ஆசாரி பிரமநாயகம் “மேலே அப்டியே வச்சு வீட்டை கெட்டினதுமாதிரி தோணுது” என்றார்.

 

அவர் அப்படிச் சொன்னதுமே எனக்கு யானை ஒரு பெரிய நத்தை போல தோன்றத் தொடங்கியது. “சின்ன வீடுதானே. அது ஆனைக்க மேலே அப்டியே இருந்தா என்ன?”என்றேன்.

 

“போயி சொல்லணும்… அப்பா கிட்ட சொல்லணும்” என்றான் ஸ்டீபன்.

 

“இல்ல”என்று தயங்கினேன். அவர்களின் கண்களைப் பார்த்தேன்.

 

“நல்ல ஐடியால்லா? ஆனைக்கு மளை நனையாது… போய் சொல்லிப்போடணும் கொச்சேமானே” என லாரன்ஸ் என்னை ஊக்குவித்தான்

 

நான் தயங்கி “அடிப்பாரு” என்றேன்.

 

ஸ்டீபனும் அவன் நண்பர்களும் சிரித்தனர். அப்பா திரும்பிப்பார்த்து முறைத்தார்.

 

“என்னமாம் வளியுண்டாவே ஆசாரி?”என்று டீக்கனார் கேட்டார்.

 

“நல்ல உறப்புள்ள பளைய தேக்குமரமாக்கும். பொளிச்சு எடுக்கணுமானாக்கூட குறே நேரமாவும்” என்றார் ஆசாரி.

 

”அய்யோ எனக்க பகவதியே!” என்று சந்திரி கூச்சலிட்டு தலையில் அறைந்துகொண்டாள்.

 

ஐயப்பன் “வீட்டை உடைக்கணுமானா..” என்று தயங்கினான்

 

அப்பா “ஏலே மோணையா. இப்பம் அதுவே உடைச்சுக்கிட்டு வந்திரும்… நாம உடைச்சா பலகையாவது மிஞ்சும்… இல்லேன்னா வெறகுல்லா?”என்றார்.

 

”வீட்டை உடைக்காண்டாம் ஏமானே. எனக்க வீட்டை உடைக்காண்டாம் ஏமானே” என்று சந்திரி அலறி அழுதாள்.

 

“ஏட்டி பொத்துதியா இல்லியா? கெட்டினவன் செத்தது மாதிரில்லா தொண்டைய தொறக்கா”

 

“ஆமா, இந்த மொண்ணையன் செத்தா நான் அளுதேன்… வேற சோலி இல்ல”

 

அப்பா அருகே சென்று பார்த்து “வெளியே வர முடியாதுண்ணுதான் தோணுது. நல்லா கார்க்கு மாதிரி இறுகியிருக்கு” என்றார்.

 

அதைக்கேட்டதும் எனக்கு அரிஷ்டக் குப்பியை மூடிய கரிய கார்க் நினைவுக்கு வந்தது. அப்பா முன்பு செய்ததுபோல ஏன் எண்ணை போட்டுப்பார்க்கக்கூடாது?. “எண்ணைபோடலாமே” என்றேன்.

 

‘என்னது?”என்றார் அப்பா. நான் தயங்க அப்பா “போடா, வீட்டுக்கு போடா. என்னாண்ணு தெரியாமலேயே எறங்கி வந்தாச்சு…” என்று கையை ஓங்கினார்

 

தங்கையா “அவரு சொல்லுகதிலே காரியமுண்டு… எண்ணைய போட்டுப்பாக்கலாம்…” என்றார்.

 

“அதுக்கிப்பம் எண்ணைக்கு எங்க போவ?”என்றார் அப்பா.

 

“வீட்டை உடைக்கத விட எண்ணை லாபமுல்லா…லே, எண்ணை ஒரு நாலு டின்னு வேணும். போங்கலே”

 

”எண்ணை உலந்துபோவும். கிரீஸாக்கும் நல்லது” என்று ஸ்டீபன் சொன்னான்

 

“ஓ” என்றார் அப்பா

 

“கிரீஸ் எளுப்பத்திலே உலராது…ஆனைக்க உடம்பிலே எண்ணை நிக்காதுல்லா?”

 

“அப்பம் ரெண்டு டின்னு கிரீஸு… லே தவளைக்கண்ணா, நீயும் லாரன்ஸும் ஸ்டீபனும் போங்க”

 

“எண்ணைண்ணா ஒரு புண்ணியமுண்டு.. ஆனை கணபதில்லா, எண்ணை அபிசேகம் நல்லதாக்கும்”என்றார் படுகிழவரான பாச்சுபிள்ளை.

 

அப்பா குழப்பத்துடன் அவரைப் பார்த்தார் “எதுக்கும் நீ இன்னொரு தடவை விளிச்சுப்பாருடே” என்றார்

 

ராமன்நாயர் யானையை “எனக்க செல்லம்ல? எனக்க மக்க இல்ல? வாடே… வெளியே வாடே… ஆனை புறத்தே… ஆனை புறத்தே” என்றார்.

 

“நீ இப்டி ஆனை புறத்தேன்னு சொல்லுகதினாலத்தான் பிரச்சினைன்னு நினைக்கேன். அதுக்கு புறத்தால வர முடியல்ல… ஆன வெளித்தேன்னு சொல்லு… அப்டியே முன்னாடி போய் வெளியே வந்திரும்” என்றார் அப்பா

 

ராமன்நாயர் “அடுக்களை இடிஞ்சிரும்லா?”என்றார்

 

“அடுக்களைதானே”என்றார் அப்பா

 

“அய்யோ எனக்க அடுக்களையே! பகவதியே, எனக்க அருமந்த அடுக்களையே!”

 

“சீ சும்மா கெடட்டி… லே, இவள கொண்டுபோய் அந்தால போடு…பாரச்சனி, கெட்ட கூப்பாடுல்லா போடுகா”

 

”ஆனை வெளித்தே!” ஆனை வெளித்தே!”

 

யானை பர்ரீங் என பிளிறி சற்றே அசைய வீடு திடுக்கிட்டது. பல இடங்களில் விரிசலோசைகள். விளிம்புகளில் இருந்து புழுதி உதிர்ந்தது

 

“ஏமானே எனக்க வீடு! எனக்க வீடு ஏமானே”

 

“இருடே, எலைக்கும் கேடில்லாம முள்ளுக்கும் கேடில்லாம எடுக்கணும்லா?”

 

யானை வாலைத்தூக்கி கூழ்போல கழித்தது. “பதினாலு கருப்பட்டி… ஏலே, ஒரு சாராயமணம் வருதுல்லா பிண்டத்திலே?”

 

கிரீஸ் வருவது வரை ராமன்நாயர் யானையை அழைத்துக் கொண்டிருந்தார். அது மெல்ல காலெடுத்து வைத்து முன்னால் நகர்ந்தது. வீடு கிரீச்சிட பயந்து நின்றது. பின்கால் எடுத்து வைத்தபோது அதுவே அஞ்சி நின்றது

 

“ஆடாம நின்னா ஆனை வீங்கிப்போகும்”என்றார் சுப்பு பிள்ளை

 

கிரீஸ் டப்பாக்களுடன் நான்கு சைக்கிள்கள் வந்தன. “நல்ல ஒரிஜினல் கிரீஸாக்கும். எதுக்கு இவ்ளவு கிரீஸ்னு நாகப்பன் கேட்டான். ஆனைக்கு குண்டியிலே பூசுகதுக்குன்னு சொன்னேன். நான் அவனை நையாண்டி பண்ணுதேன்னு நினைச்சு அடிக்க வாறான்…” என்றான் லாரன்ஸ்

 

“இப்பம் இது பளகி இவன் இனி நாளை முதல் குண்டிக்கு கிரீஸ் கேட்டா வலிய செலவுல்லாவே?”

 

“சத்தம் வேண்டாம்” என்றார் அப்பா “வே இதை ஆனைக் குண்டியிலே பூசும்வே”

 

“இல்ல… இதுவரை ஆனைக்கு நான் கிரீஸு போட்டதில்லை” என்றார் ராமன் நாயர்

 

“ஆனை இதுக்கு முன்னாடி வீட்டுக்குள்ள கேறிட்டுண்டாவே?”

 

“இல்ல”

 

“பின்ன?”

 

”ஆனைக்கு பிடிக்கல்லேண்ணா…”

 

“பிடிக்கும்… லாரிக்கே போடுதோம் ஆனைக்கு என்ன? லே போங்கலே. போயி பூசி விடுங்கலே”

 

லாரன்ஸ், ஏசுவடியான், தாணப்பன், அணப்பன் வேலு, தவளைக்கண்ணன் ஆகியோர் முன்வந்தனர். கிரீசை அள்ளி யானையின் புட்டத்தில் பூசினர். அது பளபளப்பாக கருமையாக ஆகியது

 

”நல்ல மினுப்புண்டு… “என்றார் டீக்கனார்

 

“என்ன மினுப்பு? நம்ம மேக்கரை காளியம்மைக்க பிருட்டத்த நீரு பாக்கணும்” என்றார் தங்கையா

 

அப்பா என்னை பார்த்தார். நான் அப்பால் பார்த்தேன்

 

“மேலே வளிச்சு விடுங்கலே”

 

கிரீஸை யானையின் மேலிருந்தே கொட்டினார்கள். அதன்பின் யானையை பல்வேறு சொற்களால் ராமன் நாயர் அழைத்தார். அது முன்னும் பின்னும் அசைந்தது. ஆனால் வெளிவரமுடியவில்லை.

 

“நல்லா விளியும்வே..”

 

“ஆனை புறத்தே! ஆனை வலத்தே! ஆனை வெளித்தே!”

 

ஆனால் யானை பின்னடி எடுத்து வைத்தபோது கிரீஸில் கால் வழுக்கி திடுக்கிட்டு நிலைகொண்டு பர்ரோங் என ஓலமிட்டது. புட்டம்நடுங்க வால் சுழித்து அசையாமல் நின்றுவிட்டது

 

பூசாரி அப்பு வந்து அப்பாவிடம் “நம்ம கடுவா மூப்பிலை  விளிச்சா என்ன?”என்றார்

 

“என்னத்துக்கு? ஆனைக்கு தாயத்து ஜெபிச்சு கெட்டுகதுக்கா?” என்றார் அப்பா “வெள்ளியிலே அரைநாண் கெட்டணும்னு சொன்னான்னா பொத்திக்கிட்டு போவவேண்டியதுதான்”

 

“இல்ல, இனி மந்திரவாதத்திலே வல்ல வளியும் உண்டோண்ணு…”

 

“ஆனைய புகையாட்டு ஆக்கி அப்டியே வெளியே எடுத்திருவாரு.. .இல்லியாவே?”

 

“அவரு கடுவாதெய்வத்துக்க உபாசனை உள்ளவராக்கும்… தெய்வதோஷம் சொல்லக்கூடாது”

 

“போனவருசம் குளக்கரை கொச்சம்மிணி காசு குடுக்கேல்லண்ணு சொல்லி அவனுக்க மூணையும் சேத்து பிடிச்சு நிறுத்தினாள்லாலே, அப்பம் கடுவாதெய்வம் வந்து காப்பாத்தல்லியே?

 

”அதெல்லாம் வேற… ஆணுங்களுக்கு அப்டி பலதும் நடக்கும். அதெல்லாம் ஒரு ஐசரியமுல்லா? இது வேற.இது அவனால முடியும்”

 

நான் அப்பாவிடம் “குடைய மடக்குத மாதிரி ஆனைய மடக்கினா எளுப்பமாக்கும்” என்றேன்

 

“வீட்டுக்குப்போடா நாயே… அடிச்சு செவுள பேத்திருவேன்” என்றார் அப்பா.

 

நான் எனக்கு டீக்கனார் உதவுவார் என அவரைப் பார்த்தேன். அவர் சிரித்தார். “உள்ளதாக்குமே. ஆனை ஒரு கறுப்பு குடையில்லா?’ என்றபின் “ஆனா இது மடக்குகுடை இல்லை கேட்டுதா?”என்றார்.

 

தங்கையா “நான் என்ன சொல்லுதேண்ணா இப்பம் நாம இருக்கப்பட்ட நெலைமையிலே மந்திரம்ணா மந்திரம்…”

 

“மந்திரமா, வேய் பெருவட்டரே உமக்கு தலைக்கு சூடுண்டா வேய்? ஆனைய மந்திரத்திலே வெளியே எடுக்குததா? என சொல்லுதீரு?”

 

“என்னமாம் செய்யணும்லா?”

 

“அதுக்காக? வீட்டை உடைப்போம்… ஆசாரி வே வீட்டை ஒடையும்வே”.

 

“அய்யோ எனக்க வீடே! எனக்க வீடே! எனக்க பொன்னு பகவதியே!”

 

“இவள கெட்டி கொளத்திலே தாழ்த்துங்கலே… செவிய கீறுதாளே”

 

எனக்குப்பின்னால் ஓடிவந்து சேர்ந்துகொண்ட கோலப்பன் “என்னவாக்கும் காரியம்! அய்யோ, என்னலே இது!” என்றான்  “எப்பிடிலே?”

 

“ஐயப்பனுக்க வீட்டைக்கண்டு கோபாலகிருஷ்ணன் அது பிடியானைன்னு நினைச்சுப்போட்டு… அந்தாலே கேறி லாக் ஆகி நிக்குது” என்றான் லாரன்ஸ்.

 

“அய்யோ உள்ளதா?”

 

அப்பா வெறியேறி “போலே, லே தாயோளி அவனை வெட்டுலே” என்று கூச்சலிட்டார்

 

டீக்கனார் “நில்லும்வே பிள்ளைவாள்… பயக்க அப்டித்தான் நாக்க சுத்துவானுக… நாம செய்யவேண்டியதைச் செய்வோம்”

 

“என்னமாம் செஞ்சு எளவெடுங்கலே….நான் போறேன்” என்றார் அப்பா “ஆனா ஆனைக்கு ஒண்ணு நடந்தா பின்ன நம்ம ஊரு அளிஞ்சுபோயிரும் பாத்துக்கிடுங்க. ஆனைக்கு அபமிருத்யூ வந்த நாட்டிலே கஜலச்சுமி போயிடுவா. அட்டலச்சுமியிலே ஒருத்தி போனா அவளுக மிச்ச ஏளுபேரும் கூடப்போயிருவாளுக. அவளுக ஒரு கூட்டமாக்கும்”

 

“மேரியும் ஒரு லெச்சுமியாக்கும்” என்றான் ஸ்டீபன் “ஒன்பதாம் லெச்சுமி”

 

‘லே, இந்த  தாயோளிய வெட்டுங்கலே! ஏலே வெட்டுங்கலே!”

 

ஸ்டீபன் கூ கூ என்று கூவிச் சிரிக்க , செயல்மறந்த அப்பா கண்ணீர் மல்கி நடுங்கினார்.

 

“பிள்ளைவாள் அடங்கணும்…சின்னப்பய அவனுக்க கிட்ட சண்டையப் போட்டுட்டு” என்றார் டீக்கனார் “இப்பம் இவருல்லா எலிப்பொறியிலே பண்டத்த விட்டுக்கிட்டமாதிரி துடிக்காரு… லே, கடுவாயை விளிலே.. போ… சைக்கிளிலே போங்க”

 

கடுவா மூப்பில் எனப்படும் சிண்டன் காணி எங்கள் ஊருக்கு அப்பால் மூக்கன்மலை அடிவாரத்தில் குடியிருந்தார். அவருடைய வீட்டைச்சுற்றி  பெரிய கரிய மலைப்பாறைகள். அவற்றின் இடுக்கில் கடுவா, கராளன், குட்டன் ஆகிய மலைத்தெய்வங்கள் மண்ணில் செய்து வைக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றுக்கும் பெரிய கண்களும் பெரிய வாயும் மிகப்பெரிய ஆண்குறியும் உண்டு. “கடுவா சாமிக்க பண்டத்தைக் கண்டாக்கும் மனுசன் கலப்பைய கண்டுபிடிச்சது” என்று என்னிடம் லாரன்ஸ் ஒருமுறை சொன்னான். கடுவா காட்டை உழுவது தன் பண்டத்தை வைத்துத்தான்.

 

அப்பா தளர்ந்து சென்று ஒரு கவிழ்க்கப்பட்ட தொட்டிமேல் அமர்ந்தார்.  இப்போது அந்த வட்டாரத்தில் செல்லக்கூடாது என்று நான் அறிந்திருந்தேன். அங்கிருந்த எவரையாவது அவர் அடிக்கமுடியும் என்றால் என்னைத்தான்.

 

சிண்டன் காணி வருவது வரை ராமன் நாயர் யானையிடம் மன்றாடி பார்த்தார். “லே மக்கா, மானத்தை வாங்காதலே. இந்தா பாரு ஆரு வந்திருக்குன்னு. ஆதாரமெளுத்து கரடிநாயரு வந்திருக்காரு… தங்கையா பெருவட்டரு உண்டு. நேசையன் டீக்கனாரு உண்டு… காலெடுலே செல்லம்!”

 

யானை எழுப்பிய சத்தம் சற்றே பெரிய பூனைச்சத்தம்போல் இருந்தது

 

கடுவா சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்து சேர்ந்தார். குள்ளமான உருவம். என்னளவே இருப்பார். ஆனால் நல்ல உறுதியான பெரிய தோள்களும் முண்டா புடைத்த கைகளும் கொண்டவர். தலையில் முடியே இல்லை. ஆனால் தாடி சடைக்கற்றைகள் கலந்து மார்பில் கிடந்தது. உரச்சாக்கு வெட்டித் தைத்த பையில் பூசைக்குரிய பொருட்கள்.

 

சைக்கிளில் இருந்து தெறித்து இறங்கி கொஞ்சதூரம் ஓடி, அதன் பின் நிதானமாகி கம்பீரமாக நடந்து பெருவட்டரிடம் வந்து ‘என்னவாக்கும்?”என்றார்

 

“பாத்தா தெரியல்லியா? ஆனைய வெளியே எடுக்கணும்”

 

“வீடு உடையுமே”

 

“வீட்டை உடைச்சு எடுக்க நீரு என்னத்துக்குவே?”

 

“பாப்பம் ,கடுவா என்ன சொல்லுதான்னு” என்றார் கடுவா.

 

பையை கீழே வைத்தபின் மோவாயை வருடியபடி சுற்றிவந்து யானையை கூர்ந்து பார்த்தார். திரும்பி வந்து “எடுத்துப்போடலாம்… ஒரு மந்திரம் உண்டு” என்றார்

 

“என்ன மந்திரமானாலும் ஆனைக்கும் வீட்டுக்கும் சேதம் வரப்பிடாது” என்றார் அப்பா

 

“நாயர்மார் விலகி நிக்கணும்… இது மலைதெய்வங்களுக்க வெளையாட்டாக்கும்”

 

“நாயர் கொஞ்சம் மலையெல்லாம் கண்டதுண்டுடே காணி”

 

“இது நாயர் கண்ட மலை இல்லை… அந்தாலே போவும்வே”

 

அப்பா “டேய்” என்று கையை ஓங்கினார். நேசையன் அவர் கையை பிடித்தார். “அவன் மந்திரவாதியாக்கும்… ஒண்ணுகெடக்க ஒண்ணுண்ணா ஆரு வச்சு ஊதுகது… விடும்வே”

 

அப்பா “உன்னைய எடுத்துக்கிடுதேம்லே, காணி” என்றபின் அப்பால் சென்று அமர்ந்தார்

 

“நான் பல நாயன்மாரையும் பிள்ளைமாரையும் இதேமாதிரி பொறியிலே இருந்து எடுத்து விட்டிட்டுண்டு…. கூவே, கரடி, கூவே…என்னவே நாக்கு கேறி அண்ணாக்கிலே வளைஞ்சு போச்சோ? வேய் கரடி…

 

அப்பா வேறுபக்கம் திரும்பிக்கொண்டார்

 

தங்கையன் “விடும்வே. வந்த வேலையப் பாரும்” என்றர்.

 

“இது எளுப்பம்… ஆனையை சுருக்கிச் சின்னதாக்கக்கூடிய மந்திரம் உண்டு…” என்றார் கடுவா

 

‘ஆனையச் சின்னதாக்குத மந்திரமா? என்னவே சொல்லுதீரு?”

 

“எல்லாத்தையும் சின்னதாக்கலாம், வேணுமானா பெரிசாக்கலாம். வேய், பெரிசும் சின்னதும் நமக்க கையிலே உள்ள கலையில்லா?”

 

“இவரு ஆனையப்பத்தித்தானே பேசுதாரு?” என்றான் லாரன்ஸ்

 

“லே, நீ அந்தாலே போ” என்றார் டீக்கனார்

 

கடுவா “இந்நா கரடி நாயரு இருக்காரு… நம்ம அப்பன் காலத்திலே நாம இப்டி ஒரு வார்த்த சொல்ல முடியுமா? வாள உருவிரமாட்டானுகளா? இப்பம் ரெத்தம் கிட்டாத்த அட்டைய மாதிரில்லா இருக்கானுக…”

 

“வேற உவமை உண்டு” என்றான் லாரன்ஸ்

 

“லே, உனக்க கிட்ட அந்தால போவச்சொன்னேன்”

 

‘ஆனைய சுருக்கலாம்.. சுருக்கிச் சுருக்கி இந்தா இந்த வண்டு மாதிரி ஆக்கலாம். நகத்திலே கிள்ளி எடுத்து உள்ளங்கையிலே வைக்கலாம். வைச்சு காட்டவா?”

 

“வேண்டாம்லே… உள்ளங்கையிலே ஆனைய வச்சா அதுக்க சொந்தக்கார ஆனை வந்து நம்மள குத்திக்கொன்னாலும் கொல்லும்… நீ இந்த ஆனையை வெளியே எடு பாப்பம்”

 

“இது எளுப்பம்லா… சின்ன வேல… இருங்க”

 

கடுவா தன் இடையில் செம்பட்டை கட்டிக்கொண்டார். தலையிலும் செம்பட்டு முண்டாசு. பூசாரி அப்பு அவருடைய உடுக்கையை எடுத்து நீட்ட வேண்டாம் என்று விலக்கினார். கையில் ஒரு பிரம்பை மட்டும் எடுத்துக்கொண்டார்.

 

கைசுட்டி ராமன் நாயரை அழைத்துக்கொண்டு அப்பால் சென்றார். அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினார்.பின்னர் அவரிடம் விலகிப்போகும்படி ஆணையிட்டார். அவர் விலகி மிக அப்பால் சென்று மாமரத்தடியில் நின்றார். கடுவா கைவீசி டீக்கனாரை அழைத்து ஆணைகளை இட்டார். டீக்கனார் தலையசைத்தபின் திரும்ப ஓடிவந்தார். ஆள்கூட்டத்தை பார்த்து கைவீசி ஆணையிட்டார்.

 

“எல்லாரும் மாறி நிக்கணும்… நல்லா மாறிநிக்கணும். மந்திரம் வேலை செய்யுதது நூறடி வட்டத்திலேயாக்கும். நூற்றெட்டு அடி எடம் விட்டு மாறுங்க”

 

எல்லாரும் விலக, வட்டம் அகன்று விரிந்தது. வீடு தன்னந்தனியே நடுவே நின்றது

 

”என்ன செய்யுதான்?”என்றார் அப்பா

 

“மந்திரம் சொல்லுதான்”

 

யானையைச் சுற்றிச் சுற்றி வந்து கடுவா எதையோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் யானையிடம் பேசுவதுபோலவும் ,யானையிடம் ஆணையிடுவது போலவும், அதை அழைப்பது போலவும், அதனுடன் கொஞ்சுவதுபோலவும் தோன்றியது.

 

“இவன் நம்மள மடையனாக்குதான்” என்றார் அப்பா

 

“நீரு சும்மா நில்லும்வே கரடி…”

 

நெடுநேரம் ஆகியது. கடுவா பொறுமையாக, சீராக யானையிடம் மந்திரம் போட்டுக்கொண்டே இருந்தார். யானையிடம் அவர் நீண்ட உரையாடலில் ஈடுபட்டிருப்பதுபோல தோன்றியது.

 

“யானை உள்ளதாட்டு கொஞ்சம் சின்னதா ஆயிட்டுதோ?”என்றார் டீக்கனார் “இல்ல எனக்கு அப்டி தோணுதா?”

 

”ஆனை சின்னதாவுதா? வேய்…”என்றர் அப்பா

 

தங்கையா பெருவட்டர் “ஆனை சின்னதாயிட்டே வருது… உள்ளதாக்கும்” என்றார்

 

“ஏசுவே! கர்த்தாவே!”என்று டீக்கனார் சொன்னார்.

 

“எனக்க மாதாவே, ஆனை சின்னதாகுத காலம் வந்துபோட்டே!” என்றார் ஞானகுருசு.

 

“நோவாவுக்க பெட்டகத்திலே சின்னதாக்கித்தான் ஏத்துவானுக…”

 

அப்பாவே கொஞ்சம் திகைப்புடன் பார்த்தார். கூட்டத்தில் அமைதி உருவாகியது. பலர் அதைச் சுட்டிக்காட்டி சொன்னார்கள்

 

யானையின் மத்தகம் தாழ்ந்தது. நன்றாகவே இடைவெளியை காணமுடிந்தது

 

“கோபம் வந்தாலோ பயந்தாலோ ஆனை நல்லா காலை நீட்டி முதுகை நிமித்தி நிக்கும்… இப்பம் அது நல்லா களைச்சு போட்டு. அதனாலே காலை கொஞ்சம் வளைச்சு முதுகை தாழ்த்துது, அவ்ளவுதான்” என்றார் அப்பா

 

“சும்மா இரும்வே…” என்றார் டீக்கனார். “அவனுக்க மந்திரம்லா?”

 

“எல்லாம் கடுவாய்க்க மாயம்னா நீரு வேதம் மாறி வாரும்வே… நீரு சத்ய கிறிஸ்தியானில்லா”

 

“அது வேற”

 

“என்ன வேற?”

 

“சும்மா கெடவும்வே… நாயரிலே இப்டி உண்டா  ஒரு எரணம்கெட்ட  நாயரு?”

 

யானை நன்றாக காலை மடித்து நிலத்தோடு வயிற்றை சேர்த்து தவழ்ந்து பின்னால் வந்தது. வீட்டின் கதவின் சட்டகத்திலேயே அதன் உடல் படவில்லை

 

மக்கள் ஆர்ப்பரித்தனர். பலவகையான கூச்சல்கள், கூவலோசைகள்

 

மேலும் மேலும் பின்னகர்ந்து வந்து அப்படியே மண்ணில் படிந்து அமர்ந்திருந்தது. துதிக்கை குளத்திலிருந்து நீர் இறைக்கும் ரப்பர் குழாய் போல கிடந்தது

 

“அந்தாலே ஆனையச் சுருக்கி ஒரு தவளை சைசுக்கு ஆக்கட்டா? என்ன சொல்லுதீரு?”என்றார் கடுவா

 

“வேண்டாம்வே, பாவம்லா” என்றார் டீக்கனார்

 

“வீட்டுக்குள்ள விட்டு வளக்கலாம். ராத்திரியிலே கரிச்சட்டியிலே போட்டு மூடி வைக்கணும்… நாய் எடுத்துக்கிட்டு போயிரப்பிடாது”

 

”வேண்டாம்வே” என்றார் தங்கையா பெருவட்டர் “என்ன இருந்தாலும் ஆனைக்கு ஒரு இது உண்டுல்லா? நாம அதை வச்சு ஒருபாடு வெளையாடக்கூடாது”

 

வீட்டுக்குள் இருந்து ஐயப்பனின் அம்மா நீலி உலர்ந்த முலைகள் தொங்க மெலிந்த கைகளை விரித்தபடி வெளியே வந்து “அய்யோ அய்யோ! ஆனை வந்துபோட்டே! ஆனை வீட்டுக்குள்ள வந்துபோட்டே!”என்று அழுதாள். அவள் ஓசை பெரிதாக எழவில்லை. அவளுக்குள் காற்று குறைவாகவே இருந்தது

 

“அது செரி, அப்ப கிளவி இதுவரை உள்ளயாக்கும் இருந்திருக்கு” என்றான் தாணப்பன்

 

“ஆனைக்க காலுக்க கீள இருந்திருக்கா! நல்ல யோகம்!” என்றான் தவளைக்கண்ணன் “கலப்பை நல்ல ஐசரியமுள்ள கணியாக்கும்”

 

”ஐயப்பா, லே, உனக்க அம்மையில்லா உள்ள இருந்திருக்கா… நீ சொன்னியாலே?’ என்றான் லாரன்ஸ்

 

“நான் மறந்துபோட்டேன்” என்றான் ஐயப்பன்

 

“லெச்சணம்தான்”

 

கடுவா கைகாட்ட ராமன் நாயர் யானையை நோக்கி ஓடினார். அவர் அருகே சென்றதும் யானை பிளிறியது. “எனக்க அப்போ, எனக்கு வய்யாவே” என்று அது கதறுவதுபோலிருந்தது

 

ராமன் நாயர் அதன் காதைப் பிடித்து ஆறுதல் சொன்னார். அதன் மத்தகத்தை தட்டினார். அவர் பலவாறாக ஆணையிட அது மெல்ல எழுந்தது. தனக்கு கால்கள் இருப்பதையே அப்போதுதான் உணர்ந்துகொண்டதுபோல மெல்ல தூக்கி வைத்தது. துதிக்கையை நிலத்தில் ஊன்றி எழுந்து நின்று தள்ளாடியது. பின்னர் காதுகளை முன்னால்கோட்டி துதிக்கையை வளைத்து நெற்றிமேல் வைத்து தலையை குலுக்கி சங்கொலி எழுப்பியது

 

“ராமன் நாயரே இது உள்ளதாட்டு ஆனையாக்குமா? கொஞ்சநேரம் முன்ன பூனைக்க சத்தமாக்கும் கேட்டுது” என்றான் லாரன்ஸ்.

 

”சீ, போலே நாயிக்கமோனே… வந்து தொட்டு பாருலே… ஆனைக்க வீரியம் என்னான்னு வந்து தொட்டு பாத்து சொல்லுலே…லே, அருகிலே வந்து பாருலே”

 

“தொட்டா என்னவே செய்வீரு? ஆனைய நான் ஓட ஓட வெரட்டினா என்ன தருவீரு?”

 

“பத்து ரூவா… ஏல, பத்து ரூவா பந்தயம்”

 

லாரன்ஸ் முன்னால் சென்று ஐயப்பனின் வீட்டுமுன் கிடந்த ஒரு கொப்பரையை எடுத்துக்கொண்டு யானையை நோக்கிச் சென்றான். கோபாலகிருஷ்ணன் துதிக்கை நீட்டி அதை மோப்பம் பிடித்தது. அதன் உடல் நடுங்கியது. புட்டத்தில் ஒரு விதிர்ப்பு. காதுகள் மடங்கின

 

துதிக்கையை இழுத்துக்கொண்டு லாரி ஆரன் அடிப்பதுபோல அலறியது. உடலை சுருட்டிக்கொண்டு பதுங்கி மறுபக்கம் நகர்ந்து மீண்டும் அலறியபடி ஓடியது

 

“டேய் கோபாலா நில்லு…. கோபாலா நில்லு” என்றபடி ராமன் நாயர் பின்னால் ஓடினார்

 

“ராமன் நாயரே பத்து ரூபா! பத்து ரூபா நாயரே! நாயரே கூ!” லாரன்ஸின் நண்பர்கள் கூச்சலிட்டார்கள். சிரிப்பு ஆர்ப்பாட்டம்

 

அப்பா “இவனுக நாட்டிலே ஒரு ஆனையை மானம் மரியாதையா ஜீவிக்க விடமாட்டானுக… விருத்திகெட்டவனுக” என்றார்

 

“நீரு வீட்டுக்குப் போவும் வேய்….நான் விளைக்கு போயிட்டு வாறேன்” என்றார் டீக்கனார்

 

கடுவா “எனக்கு ஒரு அம்பது ரூபாயும் கடுவாய்க்கு ஒரு கோளியும் வேணும்.. கோயிலுக்கு குடுத்தனுப்புங்க…:என்றபின் “எங்கலே சைக்கிளிலே வந்தவன்?”என்றார்

 

தாணப்பன் வந்து “ஏறுங்க மூப்பிலே” என்றான்

 

கடுவா அப்பாவைப்பார்த்து “நம்ம கையிலே நாயர்மாரை சுண்டுவிரல் சைசுக்கு ஆக்கப்பட்ட மந்திரமும் உண்டு… பின்ன நம்மாலே எதுக்கு? பாவப்பெட்ட கூட்டம்லா? ”என்றபடி சைக்கிளில் ஏறிக்கொண்டார்

 

“எரப்பாளி”என்றார் அப்பா அவர் போவதைப்பார்த்து

 

“ஆளு தெய்வகிருபை உள்ளவனாக்கும்.. கர்த்தாவான ஏசுவுக்கும் அவனை ஆளு தெரிஞ்சிருக்கும்”என்றார் டீக்கனார்.

 

தங்கையா பெருவட்டர் “ஐயப்பா உனக்கு யோகமுண்டு கேட்டியா… வீடு திரும்ப கிட்டியிருக்கு”

 

ஐயப்பன் “சந்தைக்கு போணும்” என்றான், பொதுவாக அவன் எதையும் முழுமையாக புரிந்துகொண்டிருக்கவில்லை. முயற்சி தொடங்கப்பட்டிருந்தது, அவ்வளவுதான்.

 

அப்பால் சந்திரி “அய்யோ எனக்க எட்டு பானையை உடைச்சுப்போட்டே… எளவெடுத்த ஆனை எனக்க பானைகள எல்லாம் உடைச்சுப்போட்டே… அய்யோ பகவதியே!”என்று ஓலமிட்டு அழுதுகொண்டிருந்தாள்

 

லாரன்ஸ் “கிரீஸுக்குண்டான பைசா?”என்றான்

 

“தாறம்லே… ஆருலே இவன்… கிடந்து துடிக்கான்!”

 

நான் யானைக்கு பின்னால் ஓடினேன். அது அப்பு பெருவட்டரின் தோப்புக்குள் சென்று தாழைப்புதர்கள் நடுவே ஒளிந்து நின்றிருந்தது. ராமன் நாயர் அதை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார்

 

நான் அருகே சென்று “நல்லவேளை, ஆனைக்கு ஒண்ணும் ஆகல்ல” என்றேன்

 

“மயிரு… இதுக்க குண்டியிலே இருந்து கிரீசை களுவி எடுக்கணும்… அதுக்கு ஒரு வாரம் ஆகும்… என்னால முடியாது… அப்டியே விட்டுட்டு திற்பரப்பு போனா எனக்க மக எனக்கு அருமையாட்டு கஞ்சி ஊத்துவா”

 

“கடுவா என்னவாக்கும் கேட்டாரு?” என்றேன்

 

“என்ன?”

 

“உம்ம கிட்ட கேட்டாருல்லா?”

 

“அவரா? நாகப்பனுக்க எஸ்டேட்டிலே குட்டியானை இருக்குல்லா, கொச்சுகேசவன். அவனை எப்டி விளிப்பீருண்ணு கேட்டாரு. சொன்னேன்”

 

“ஆ!” என்றேன். “அவரு சொன்ன மந்திரம் அதாக்கும்!”

 

“என்ன மந்திரம்!”

 

“அவரு நம்ம கோபாலகிருஷ்ணனை பாத்து சின்ன குட்டிய விளிக்குத மாதிரி விளிச்சாரு… சின்னக்குட்டிக்கிட்ட பேசுத மாதிரி பேசினாரு… இவன் அதைக்கேட்டு அப்டியே நம்பி சுருங்கி சின்னக்குட்டியா ஆயிட்டான்”

 

ராமன் நாயர் திரும்பி கோபாலகிருஷ்ணனைப் பார்த்தார். அவன் கண்ணீரும் கம்பலையுமாக ஒரு தாழை மடலை துதிக்கையால் பற்றி சுருட்டிக்கொண்டிருந்தான். ராமன் நாயர் தன்னை முறைக்கிறாரோ என்று எண்ணி அதை அப்படியே விட்டுவிட்டு துதிக்கை தாழ்த்தி நல்லபிள்ளையாக செவிமடித்து நின்றான்.

 

“அப்டி விளிக்கலாமோ?” என்றார் ராமன் நாயர்

 

‘நீரு விளிக்கவேண்டாம். இவன் சின்னப்பிள்ளையா விளுந்து கெடந்தான்னா நீயாவே பீய அள்ளுவீரு?”

 

“அது உள்ளதாக்கும்”என்றார் ராமன் நாயர் “ஆன எடத்தே”

 

==========================================================================================================

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து –கல்பொருசிறுநுரை– 6

$
0
0

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 1

சாத்யகி மலைப்பாதைகளினூடாக ஏழு நாட்கள் பயணம் செய்து மந்தரத்தை அடைந்தபோது இளம்புலரி எழுந்திருந்தது. இரவெலாம் அவனது புரவி தன் விழியொளியாலேயே வழி தேர்ந்து அங்கு வந்து சேர்ந்திருந்தது. தரையில் முகர்ந்து முன்னர் சென்ற புரவிகளின் மணம் பெற்றுக்கொண்டு, அவ்வப்போது மூக்கு சீறியும், சினைத்தும், குளம்புகளால் காலைத் தட்டியும் அது நடந்தது. இரவில் நிலவொளி எழுந்திருந்தது அதற்கு உதவியாக இருந்தது. புரவியின் மீது கடிவாளத்தை தளரப்பற்றி தோள் தழைய அரைத்துயிலிலென சாத்யகி அமர்ந்திருந்தான். சுற்றிலும் விரிந்திருந்த முட்புதர்ப் பெருநிலம் பல்லாயிரம் பூச்சிகளின் குரல்கள் இணைந்து உருவான முழக்கமாக இருந்தது. விண்மீன்கள் சிதறி வானில் பரவியிருந்தன. காற்று எல்லா திசைகளிலிருந்தும் மாறி மாறி வீசிக்கொண்டிருந்தது.

அவ்வப்போது வானை நோக்கி செல்லும் திசையை அவன் உறுதி செய்துகொண்டான். அங்கு திசை தவறுவதற்கான வாய்ப்புகளே இருக்கவில்லை. புரவிக்குளம்புகளாலான ஒற்றைப் பாதை வளைந்து ஏறி இறங்கி, மலைஇடுக்குகளில் புகுந்து வெளிவந்து, தனி ஓடைபோல் சென்றுகொண்டிருந்தது. புதர்க்காடுகளுக்குள் சிறு விலங்குகள் சலசலத்து ஓடின. இரு முறை அவன் கூட்டமாக செல்லும் யானைகளை பார்த்தான். இருட்குவைகள் எழுந்து எழுந்து இருளுக்குள் செல்வதுபோல் அவை அகன்றன. அவன் வருகையை முன்னரே உணர்ந்துவிட்டிருந்த அன்னை யானை சிறிய பிளிறல்களால் பிற யானைகளுக்கு அறிவுறுத்தியது. பிறிதொரு மந்தை சரிவுக்குக் கீழே நிற்பதை அங்கிருந்து எழுந்த குரல் காட்டியது. அவன் புரவி குளம்புகளால் தரையைத் தட்டியபடி அவை சாலையைக் கடந்து மறுபக்கம் செல்லும்பொருட்டு காத்து நின்றது. அவை சென்றபின் பெருமூச்சுடன் காலெடுத்து வைத்து நடந்தது.

வழியில் அவன் எங்கோ சற்று துயின்றிருக்கவேண்டும். விழித்தபோது விண்மீன்கள் இடம் மாறியிருந்தன. விழி துழாவி தேடியபடி வழியை கண்டடைந்தான். பெருமூச்சுடன் கைகளைத் தூக்கி உடலை நிமிர்த்தி சோம்பல் முறித்தான். புலரும்போதேனும் அம்மலையிடுக்குத் தாழ்வரை துலங்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். புரவி இரு மலைகளின் இடைவெளியினூடாக விளிம்பை சென்றடைந்தபோது எதிரே கீழிருந்து குளிர்காற்று வந்து அறைந்தது. கீழே கண் துலங்கும்படி வெளிச்சம் பரவியிருந்தது. அதில் பசுமை நிறைந்து காற்றில் கொப்பளித்தது. சூழ்ந்திருந்த வானம் மெல்லிய வெளிச்சத்துடன் முழுவட்டமெனத் தெரிந்தது. தாழ்வரையின் நடுவே மந்தரத்தை அவன் கண்டான். அக்காட்சியில் தன்னை மறந்தவனாக நெடுநேரம் அமர்ந்திருந்தான்.

மலைகளுக்கு அப்பால் கதிர்முகம் எழுந்தது. அனைத்து முடிப்பாறைகளும் ஒரு பக்கம் பொன்னாக மாறின. பறவைகள் தெளிந்த வானில் சிறகுலைத்து சுழன்று சுழன்று எழுந்தமர்ந்தன. அங்கிருந்து ஓசைகள் எதுவும் கேட்கவில்லை. உயிர்களின் ஓசைகள் நெடுந்தொலைவு கேட்பதில்லை. படைக்கலன்களும் கருவிகளும் எழுப்பும் ஓசைகளே காற்றைக் கடந்தும் சென்று சேர்கின்றன. அவை உயிர்க்குலங்களுக்கு அப்பால் என எழும் விழைவு கொண்டவை. உயிர்க்குலங்களின் ஓசைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவையும்கூட. அவன் புரவியைத் தட்டி அதை புழுதி படிந்த பாதையினூடாக கீழே இறக்கிக்கொண்டு சென்றான். வளைந்து வளைந்து இறங்கியபோது தன்னை ஒரு பருந்தென உணர்ந்தான்.

பச்சைப்புல் இடைவரை செழித்துப் பரந்து கிடந்த நிலத்தை அடைந்ததும் அவன் புரவி காலை ஊன்றி நின்றுவிட்டது. “செல்க! செல்க!” என்று அவன் அதை தட்டினான். அது தலையை அசைத்து ஓசை எழுப்பியது. அவன் அச்சிற்றூருக்கு இருக்கும் தொலைவை பார்த்த பின்னர் கடிவாளத்தையும் சேணத்தையும் கழற்றி அங்கிருந்த சிறிய மரத்தின் மீது தொங்கவிட்டான். அதன் பின்பக்கம் தட்டி “செல்க!” என்றபின் நடந்து மந்தரத்தை சென்றடைந்தான். நீர் நிரம்பி ஓடிக்கொண்டிருந்த ஓடைக்கு அருகே வந்து குனிந்து கைகால்களை கழுவிக்கொண்டு மறுபக்கம் கால் வைத்து மரப்பாதையிலேறி ஊருக்குள் நுழைந்தான்.

எதிரே கையில் கூடையுடன் வந்த முதுமகள் அவனிடம் இயல்பாக “வடநிலத்து முனிவரை பார்க்க வந்திருக்கிறீர்களா?” என்றாள். பிறிதெவரும் அங்கு வருவதில்லை என்று அவ்வினாவிலிருந்து உணர்ந்து அவன் புன்னகையுடன் “ஆம், அன்னையே. வணங்குகிறேன்” என்றான். அவளுக்கு முகமன் உரைக்கத் தெரியவில்லை. வெறுமனே தலையசைத்தாள். அவள் “அங்கு மரத்தடியில் அமர்ந்திருக்கிறார். செல்க!” என்றாள். அவன் இளைய யாதவரின் குடில்வாயிலை வந்தடைந்தான். உள்ளே எவரும் இருப்பதுபோல் தெரியவில்லை. உள்ளே பொருளென எதுவுமே இல்லை என்று தோன்றியது. திரும்பிப் பார்த்தபோது குறுங்காட்டின் விளிம்பில் மரத்தடியின் வேரில் இளைய யாதவர் அமர்ந்து குழலூதிக்கொண்டிருப்பதை கண்டான். அருகணைந்து சற்று அப்பால் நின்றான்.

மரக்கூட்டங்களின்மேல் புலரியொளி எழுந்திருந்தது. பறவைகள் பறந்திறங்கி புற்பரப்பில் அமர்ந்து எழுந்தன. அவன் வருவதை எவரும் உணரவில்லை. அவரைச் சூழ்ந்து குழந்தைகள் அமர்ந்திருந்தன. பெரும்பாலும் பெண் குழந்தைகள். இளைய யாதவர் விழிமூடியிருந்தார். சற்றே பெரிய குழந்தைகளின் நீண்ட விழிகள் இசையில் மயங்கி சிவந்து வெறிப்பு கொண்டிருந்தன. துயிலென இமை தழைந்திருக்க முகம் தழைந்து கனவில் குழைந்திருக்க அமர்ந்தும் படுத்தும் இளம்குழவிகள் இசையில் அமைந்திருந்தன. ஒவ்வொரு முகமாக நோக்கியபடி அவன் நின்றான். மானுடர் பிறிது எவரேனும் இசையில் அத்தனை தோய இயலுமா? பெண்களைப்போல ஆண்கள் இசைக்கு முழுதளிக்க இயலுமா? பெண்களும் குழவிப்பருவத்திலன்றி இசையே என்றாக முடியுமா?

குழலிசையே பெண்களுக்குரியது. சுழன்று சுழன்று இனிமை மேலும் இனிமை என்று செல்வது. குழைந்து மன்றாடி உருகி திளைத்து எழுந்து ஒளிர்ந்து பொலிந்து மீண்டும் எழுவது. பெண்டிர் மட்டுமே அதை முழுதுணர முடியும். அதன் அத்தனை அசைவுகளிலும் பெண்மை இருந்தது. சிற்றோடைகளில், தளிர்க்கொடிகளில், புகைச்சுருள்களில், பட்டின் நெளிவுகளில், மெல்லிறகுகளில் எழும் பெண்மை. பாலைநிலத்து அலைகளில், நீர் நுரையில் , திசைவளைவில் தோன்றும் மென்மை. அவன் பெருமூச்சுடன் மீண்டபோது விழிநீர் வழிந்து மார்பை நனைத்திருந்தது. இரு கைகளையும் மார்பில் சேர்த்து வைத்து தலைகுனிந்து நின்றிருந்தான்.

குழலை உதட்டிலிருந்து எடுத்தபின் விழிதிறந்த இளைய யாதவர் அவனை நோக்கி “வருக!” என்றார். அவன் அச்சொல்லை நெடுந்தொலைவில் என கேட்டான். “எப்போது வந்தாய்?” என்றார் இளைய யாதவர். அவன் முழந்தாளிட்டு மண்ணில் அமர்ந்து தலைவணங்கினான். “என்ன நிகழ்வு?” என்று அவர் கேட்டார். “எத்தனை காலமாகிறது இக்குழலோசை என் செவியில் கேட்டு!” என்றான். “இங்கு ஒவ்வொரு நாளும் இசைக்கிறேன். நாளில் பெரும்பகுதி குழலிசையும் விளையாட்டும்தான்” என்றார். “ஆம், குடிலுக்குள் பார்த்தேன். நூலென எதுவுமில்லை” என்று அவன் சொன்னான்.

பெண் குழந்தைகள் இசை நின்றுவிட்டதை அறியாதவைபோல் அங்கு பரவியிருந்தன. அவன் நோக்குவதைப் பார்த்து இளைய யாதவர் புன்னகைத்து “தேனீக்கள்போல இசை கேட்க வேண்டும் என்பார்கள். தேனில் பிறந்து உடல்கொள்கின்றன. தேனையே சிறகாகக்கொண்டவை அவை எனப்படுகின்றன. அவற்றின் அசைவு தேனின் நடனம். அவற்றின் இசை தேனின் ஓசை” என்றார். சாத்யகி “இவ்விசை பெண்டிருக்குரியது என்று எனக்குத் தோன்றியது” என்றான். “ஆம், அவர்களை அணுகியறியும் ஆண்களால் இசைக்கப்படவேண்டியது” என்று இளைய யாதவர் கூறினார். சாத்யகி புன்னகைத்தான்.

அவர் அவன் தோளில் கைவைத்து எழுந்துகொண்டு குழலை இடைக்கச்சையில் செருகியபடி நடந்தார். அவன் பெருமூச்சுகளை விட்டுக்கொண்டு உடன் நடந்தான். “கூறுக!” என்றார் இளைய யாதவர். “அரசே, தாங்கள் நகர் திரும்ப வேண்டும்” என்று அவன் சொன்னான். “அதைக் கூறவா இத்தனை தொலைவு வந்தாய்?” என்றார். “ஆம், அதை கூறுவதற்காக மட்டுமே தேடி வந்தேன்” என்று சாத்யகி சொன்னான். “தாங்கள் அறியாதது எதுவும் இன்றில்லை. எனினும் அறிய வேண்டியவற்றை அறிவிப்பது என் கடமை என்பதனால் வந்தேன்.” அவர் ஒன்றும் சொல்லவில்லை. “என் சொற்கள் சொல்லப்பட்டன என்றாகவேண்டும், சொல்லியிருக்கலாம் என்று தோன்றலாகாது. ஆகவேதான்” என்றான்.

“சொல்” என்றார். “துவாரகை இன்று எந்நிலையில் இருக்கிறது என்று அறியவேண்டும். ஒருவேளை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தோன்றுகிறது. ஏனெனில் மைந்தரைப்பற்றி தீயவை எதையும் தந்தையர் அறிவதே இல்லை. அவர்களின் அகத்திலிருந்து ஒன்று எழுந்து அவற்றை விலக்குகிறது. ஆகவே அவர்களின் விழி காண மறுக்கிறது” என்றான். இளைய யாதவர் ஒன்றும் சொல்லாமல் தலைகுனிந்து நடந்தார். “அஸ்தினபுரியிலிருந்து அரசரிளையோர் நால்வரும் கிளம்பிச்சென்றுவிட்டனர் என்று தாங்கள் அறிந்திருப்பீர்கள். சில நாட்களுக்கு முன் அரசர் யுதிஷ்டிரனும் அரசியுடன் கானேகினார். அஸ்தினபுரியின் அரசு இன்று அவர் குடியின் இளையவர் யுயுத்ஸுவிடம் அளிக்கப்பட்டுள்ளது. யுயுத்ஸு மணந்த சூதப்பெண் சம்வகையால் அப்பேரரசு இன்று நடத்தப்படுகிறது” என்றான்.

இளைய யாதவர் கேட்டுக்கொண்டு நடந்தார். “துவாரகையிலிருந்து பரீக்ஷித்தை இந்திரப்பிரஸ்தத்துக்கு கொண்டுசென்றுவிட்டார்கள். அவனுக்கு பதினெட்டு ஆண்டு அகவை நிறையும்போது மணிமுடியை அவனிடம் அளித்துவிட்டு அரசு ஒழியவேண்டும் என்பது யுயுத்ஸுவுக்கு அரசர் இட்ட ஆணை. அதுவரை யுயுத்ஸுவின் சொல்லே அஸ்தினபுரியை ஆளும். அச்சொல்லுக்கு மெய்ச்சொல் சாந்தி நூல்களும் அனுசாசன நூல்களும் நிலைகொள்கின்றன.” இளைய யாதவர் ஒன்றும் சொல்லவில்லை என்று கண்டு அவன் தொடர்ந்தான். “அஸ்தினபுரி சம்வகையால் முறையாகவே ஆளப்படுகிறது. அரசி என்றும் அன்னை என்றும் கொல்வேல் கொற்றவை என்றும் அவரை மக்கள் வணங்குகிறார்கள். சத்யவதியின் வடிவம் அவர் என்கிறார்கள். யுயுத்ஸு நெறி நோக்க அந்நெறிகளை செயலாக்குகிறார். சொல்லும் பொருளுமென அவர்கள் இணைந்துள்ளார்கள் என்று சூதர்கள் பாடுகிறார்கள்.”

“ஆனால் ஏழு முறை நான் சென்று பார்த்தபோது அஸ்தினபுரியின் அவையிலும் அரசரிடமும் நான் ஒன்று உணர்ந்தேன். அது சம்வகையில் இருந்து உருவான கொள்கை என தெளிந்தேன்” என சாத்யகி தொடர்ந்தான். “அவர்களுக்கு இன்று துவாரகையுடனோ பிற துணைநாடுகளுடனோ நேரடித் தொடர்புகள் ஏதுமில்லை. அங்கநாடும் இடும்பநாடும் மட்டுமே தன் குருதித் தொடர்பு நாடென்று அரசி எண்ணுகிறார். கர்ணனின் மைந்தன் முடி சூடி அதை ஆள்கிறான். பார்பாரிகனின் இளையோன் இடும்பநாட்டை ஆள்கிறான். பிற நாடுகள் எதன் உட்சிக்கல்களிலும் அஸ்தினபுரி தலையிடுவதில்லை. நான் அனுப்பிய தூது எதற்குமே முறையான மறுமொழி வரவில்லை. துவாரகையிலிருந்து செல்லும் செய்திகள் எதையுமே ஓரிரு சொற்களுக்கு மேல் அரசி செவிகொள்வதில்லை என்று தூதர் உரைத்தனர்.”

துவாரகையின் நிலையை அரசி கருத்தில் கொள்ளவேண்டுமென்று சொல்வதற்காக முதல்முறையாக நான் அங்கு சென்றேன். என்னை ரிஷபவனத்தின் அரசன் என்ற நிலையில் அரசி அவையில் வரவேற்றார். என் தூதை சொல்லும்படி ஆணையிட்டார். நான் “அரசி, துவாரகைப் பெருநகர் குடிப்பூசல்களாலும் முடிப்பூசல்களாலும் அழிந்துகொண்டிருக்கிறது. அஸ்தினபுரியை ஆக்கியவர் துவாரகையின் அரசராகிய இளைய யாதவர். அவரே அஸ்தினபுரிக்கும் காவலர் என அறிவீர்கள். இளைய யாதவரின் நகரை தாங்கள் அழியவிடலாகாது. படையுடன் வந்து அங்கு நெறி நிலைநாட்டவேண்டும்” என்றேன். அவையினர் அரசியின் சொற்களுக்காகக் காத்து அமர்ந்திருந்தனர்.

சற்றுநேரம் எண்ணம்சூழ்ந்த பின் அரசி என்னிடம் “எதை நிலைநாட்டவேண்டும்?” என்று கேட்டார். “குலத்தார் நடுவே ஒருமையை. அரியணையில் அரசை. குடிகளிடையே நம்பிக்கையை” என்றேன். “அங்கு அரசரால் முடிசூட்டப்பட்டவர் யார்?” என்று சம்வகை கேட்டார். “அரசர் இருக்கையிலேயே ருக்மிணியின்  மைந்தர் சாருதேஷ்ணன் பட்டத்து இளவரசராக அவையமர்ந்தது உண்டு” என்றேன். “அப்போது பிரத்யும்னன் சம்பாசுரரின் அரண்மனையில் இருந்தார்.” சம்வகை “ஆம், ஆனால் யாதவக் குடியவைகளில் பட்டத்து இளவரசர் என அமர்ந்திருந்தவர் சத்யபாமையின் மைந்தரான பானு” என்றார். “ஆம், ஆனால்…” என்றபின் நிறுத்திக்கொண்டேன். “ஆனால் பின்னாளில் படைகொண்டு சென்று வென்றவர்கள் ருக்மிணியின் மைந்தர் பிரத்யும்னனும் ஜாம்பவதியின் மைந்தர் சாம்பனும். அவர்கள் படைநிலங்களில் பட்டத்து இளவரசர்களாக அமர்ந்ததுண்டு” என்றார்.

அவர் சொல்லவருவது என்ன என்று எனக்கு புரிந்தது. “ஆம், அதனால்தான் இத்தனை குழப்பங்களும். அதன்பொருட்டே தங்கள் உதவியை நாடி வந்தேன்” என்றேன். “குடிப்பூசல் எவரிடம்?” என்று சம்வகை கேட்டார். அவர் அனைத்தும் அறிந்திருந்திருக்கிறார் என்று தெரிந்தது. ஆனால் நான் சொல்லவேண்டும் என எதிர்பார்க்கிறார். நான் குறைத்துச் சொல்ல முடியாது, பெருக்கவும். ஆகவே நிகழ்வதை சொன்னேன். “அரசி, அங்கே மூன்று குலக்குழுக்கள் என மக்கள் பிரிந்திருக்கின்றனர். ஏனென்றால் அரசகுடியினர் அவ்வண்ணம் பிரிந்திருக்கிறார்கள். துவாரகையின் மக்களில் பெரும்பகுதியினர் யாதவர்களே. அவர்கள் சத்யபாமையின் மைந்தர் பானுவை அரசனாக எண்ணுகிறார்கள்.”

“இன்னொரு சாரார் ஷத்ரியர்கள். வெவ்வேறு காலங்களில் துவாரகைக்கு வந்தவர்கள். பெரும்பாலும் அரசர் மணம்கொண்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள். அரசுப்பொறுப்புகளையும் படைப்பொறுப்புகளையும் நடத்தியவர்கள். அவர்கள் ருக்மிணிதேவியின் மைந்தர் பிரத்யும்னனையே தங்கள் அரசர் என எண்ணுகிறார்கள். ஷத்ரியர்களில் பெரும்பாலானவர்கள் ருக்மிணிதேவியின் விதர்ப்பநாட்டவர். அரசி நக்னஜித்தியின் கோசலநாட்டினரும், மித்ரவிந்தையின் அவந்தியினரும், பத்ரையின் கேகயத்தினரும் பிரத்யும்னனை ஆதரிக்கிறார்கள். ஷத்ரியர்களின் எண்ணிக்கை வலுவானதாகவே உள்ளது” என்றேன்.

“எஞ்சியோர் நிஷாதர், அசுரர்” என்றார் சம்வகை. “ஆம், அரசி. ஆனால் அவர்களின் எண்ணிக்கையும் சிறிதல்ல” என்றேன். “நிஷாதகுடியினரான ஜாம்பவதியின் மைந்தர் சாம்பர் பெருவீரர். அவருடன் காளிந்தியின் மைந்தர்கள் சுருதனும் பிறரும் நின்றிருக்கிறார்கள். மத்ரநாட்டு அரசி லக்ஷ்மணை ஷத்ரியர்களுடன் நின்றிருக்க விரும்பினார்கள். ஆனால் அவைகளில் அவர் மைந்தர்கள் நிஷாதர்களாகவே நடத்தப்பட்டனர். ஆகவே சென்ற சில மாதங்களாக அவர்கள் சாம்பனின் ஆதரவாளர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள். துவாரகையில் நிஷாதர், அரக்கர், அசுரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே முன்பு இருந்தது. ஆனால் இப்போது வெவ்வேறு நிலங்களில் இருந்து வந்து குடியேறி நிறைந்திருக்கிறார்கள். யாதவர்களிலும் ஷத்ரியர்களிலும் பலர் குருக்ஷேத்ரப் போரில் கொல்லப்பட்டுவிட்டனர். ஆகவே ஏனையோர் பெருகித்தெரிகிறார்கள்.”

நான் மேலே சொல்வதற்காக அரசி காத்திருந்தார். “யாதவர்களிடையே குடிப்பூசல் உள்ளது. விருஷ்ணிகளும் போஜர்களும் அந்தகர்களும் முரண் கொண்டு நின்றிருக்கின்றனர். விருஷ்ணிகள் தங்களுடையதே துவாரகை என எண்ணுகிறார்கள். அந்த எண்ணம் பிற யாதவர்களை ஒவ்வாமைகொள்ளச் செய்கிறது. சததன்வாவின் கொலைக்கு பழிவாங்கும் வெறி இன்னும் அந்தகர்களிடையே உள்ளது. குருக்ஷேத்ரப் போரிலிருந்து திரும்பி வந்த கிருதவர்மன் அந்தகர்களின் தலைவனாக ஆகிக்கொண்டிருக்கிறார். அவர் இன்னும் துவாரகையை வந்தடையவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்றும் எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அவரைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்கள். போஜர்கள் விருஷ்ணிகள் மீதான ஐயத்தால் அந்தகர்களுடன் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்.”

“இன்று தேவை துவாரகையின் குடிகளிடையே ஒத்திசைவை உருவாக்கி அரியணையை உறுதி செய்தல். இளைய யாதவர் அமர்ந்த அரியணையில் உரிய அரசரை அமர்த்தி, அவருடைய கோலுக்கு அஸ்தினபுரியின் வாள் துணையாகும் என அறிவித்தல். அதை செய்தாகவேண்டும் அஸ்தினபுரியின் அரசர்” என்று உரைத்தேன். சம்வகை “நன்று, அவ்வண்ணம் ஒருவரை நான் அரியணையில் அமர்த்துகிறேன். அதன் பின் நான் என்ன செய்யவேண்டும்? அவரை பிறர் ஏற்கவில்லை எனில் என்ன வழி?” என்றார். “அஸ்தினபுரியின் பெரும்படை அவ்வரசருக்கு துணை இருக்கிறதென்று குடிகள் அறிந்தால் போதும்” என்றேன்.

அரசி சற்றே புன்னகைத்து “அப்பெரும்படை இங்கிருந்து கிளம்பிச்சென்று பெரும்பாலை நிலங்களுக்கு அப்பால் துவாரகையில் நெடுங்காலம் தங்க இயலாது. பூசலொன்று வருமெனில் இங்கிருந்து கிளம்பி அங்கு வரை செல்வதும் எளிதல்ல. யாதவரே, துவாரகை பாரதவர்ஷத்திலிருந்து விரிந்த வெறுநிலங்களால் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே பாரதவர்ஷத்தின் எந்த நாடும் அதை ஆள இயலாது. முன்பு அந்நிலத்தை இளைய யாதவர் தெரிவு செய்ததே பாரதவர்ஷத்தின் கைகள் அங்கு செல்லக்கூடாதென்பதற்காகத்தான். இன்று அதுவே எதிர்விளைவை உருவாக்கியுள்ளது. அஸ்தினபுரியல்ல, எந்த நாடும் துவாரகையை முழுதும் கட்டுப்படுத்த இயலாது” என்றார்.

“துவாரகை தன் நெறிகளை தானே கண்டடைய வேண்டும். தன் அரசரை அதுவே தெரிவு செய்யவேண்டும். அஸ்தினபுரி உண்மையில் அங்கே செய்வதற்கொன்றுமில்லை” என்றார் சம்வகை. “அரசி, அவ்வண்ணம் தாங்கள் எங்களை கைவிடலாகாது” என்றேன். “இது கைவிடுவதல்ல. இயலாத ஒன்றை பொறுப்பேற்றுகொள்ளலாகாது என்பது அரசுசூழ்தலின் நெறிகளில் ஒன்று. தொடங்காதிருக்கையில் அச்சமேனும் எஞ்சும், தொடங்கி தோல்வியடைந்தால் அது வீழ்ச்சியின் தொடக்கம் என்று ஆகக்கூடும்” என்றார் சம்வகை. “நேரடியாகவே சொல்கிறேனே, அங்கே இரு மாவீரர்கள் உள்ளனர். அனிருத்தனும் சாம்பனும்தான் பாரதவர்ஷத்தில் இன்றிருக்கும் போர்வீரர்களில் முதன்மையானவர்கள். அஸ்தினபுரியில் இன்று ஐந்து அரசர்களும் இல்லை. அவர்களின் மைந்தர்களும் களம்பட்டுவிட்டனர். அனிருத்தனுக்கும் சாம்பனுக்கும் எதிராக நாங்கள் எவரை படைமுகம் கொள்ளச் செய்யமுடியும்?”

நான் திகைத்துவிட்டேன். அரசி தன் நுண்மாண் நுழைபுலத் தேர்ச்சிக்கு அடியில் எளிய பொதுக்குடிப் பெண்ணே என்பதை அந்த நேரடிச்சொல் காட்டியது. ஆனால் அவர் மேலும் பேசியபோது கடந்து காணும் கண்கொண்ட பேரரசி அவர் என்று தெரிந்தது. “யாதவரே, இன்று அஸ்தினபுரி பாரதவர்ஷத்தின் மாபெரும் பேரரசு. அரசுகளும் அமைப்புகளும் வளர்வதில் எப்போதும் ஒரு முறைமை தெரிகிறது. அவை வளர வளர அவற்றில் உள்ள ஒவ்வொன்றும் வளர்கின்றன. அவற்றைச் சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றும் அதேயளவு வளர்கின்றன. பிழைகள் வளர்கின்றன, முரண்பாடுகள் வளர்கின்றன, அன்றாடச் சிக்கல்கள் ஒவ்வொன்றும் பேருருக் கொள்கின்றன. ஒரு சிறுநாட்டில் ஒரேநாளில் முடியும் ஒரு சின்னஞ்சிறு இடர் பேரரசில் பல மாதங்கள், பல ஆண்டுகள் நீளக்கூடும். ஏனென்றால் ஒவ்வொன்றுடனும் அப்பேரரசின் பேரமைப்பில் உள்ள ஒவ்வொன்றும் வந்து சேர்ந்துகொள்கிறது. சினங்கள், ஐயங்கள், கசப்புகள், குழப்பங்கள், பிழைகள் எல்லாம் வந்தமைந்து ஒவ்வொரு புள்ளியும் பேருருக்கொண்டு பேரெடைகொண்டு வீங்கிப் பெருத்து எழுகிறது.”

“ஆனால் விந்தை என இன்னொன்றும் உண்டு. அப்பேரரசின் ஆட்சியமைப்பு அவ்வண்ணம் பெரிதாக வளர்ந்துசெல்வதில்லை. அது நுரைபெருப்பதுபோல நோக்க நோக்கப் பெருகி வியனுருக் கொள்ளும். அதன் உட்கூறுகள் வளர்ந்து விரிந்து செல்லும். அவற்றுக்கிடையே எண்ணி எண்ணித் தொடமுடியாத தொடர்பாடல்முறைமைகள் அமையும். மானுட உருவாக்கமா தெய்வப்படைப்பா என்று உணரமுடியாத அளவுக்கு நுண்ணியதும் சிக்கலானதும் பேருருக்கொண்டதுமான ஓர் ஆட்சியமைப்பு சில ஆண்டுகளில் தன்னைத்தானே கட்டிக்கொண்டு வளர்ந்து தலைக்குமேல் என எழுந்து நிற்கும்.”

“ஆனால் அவ்வளர்ச்சிக்கு ஓர் எல்லை உண்டு. அங்கே அது உறைந்து நிற்கத் தொடங்கும். புற்றென வளர்ந்து பாறையென ஆகிவிட்டதுபோல. அதன்பின் அதனால் எழமுடியாது. ஆனால் பேரரசோ முந்தைய விரைவிலேயே பெருகிக்கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் ஆட்சியமைப்பு அதன்முன் திகைத்து நிற்கும். அது நிலைக்கத் தொடங்கியதுமே செயலிழக்கவும் தொடங்கும். ஏனென்றால் செயலாற்றும்பொருட்டு உருவானவை அதன் அமைப்புகளும் நெறிகளும். வளர்ந்துகொண்டே இருக்கும் ஒன்றின் முறைமைகள் அதிலுள்ளவை. நிலைகொண்டதுமே அதன் கூறுகள் ஒன்றுடன் ஒன்று முட்டி உரசிப் பின்னி சிடுக்காகும். அதன் ஆற்றல் அழியலாகும். அது வளர்ந்ததைவிட மேலும் விரைவாக அது அழியத்தொடங்கும். நெரிபடும் ஒலிகள் கேட்கும். ஒரு கணத்தில் யானையைக் கட்டிய சங்கிலிபோல ஆட்சியமைப்பு உடைந்து தெறிக்கும். அப்பேரரசு சரியும்” என்று அரசி சொன்னார்.

“யாதவரே, அடித்தளம் மீது அமைக்கப்பட்ட எந்தக் கட்டடமும் ஒருநாள் விரிசலிட்டு மண்மேல் விழும் என்பார்கள் சிற்பிகள். ஒவ்வொரு கட்டடத்தையும் மண் இழுத்துக்கொண்டிருக்கிறது. எடையென ஒவ்வொரு பொருளிலும் அவ்விழைவே திகழ்கிறது. ஒரு கட்டடம் கட்டப்பட்டு மிகச் சில நாட்களுக்குள்ளாகவே அதில் முதல் விரிசல் தோன்றிவிடுகிறது. எத்தனை அடைத்தாலும் எவ்வளவு திருத்தினாலும் அந்த விரிசல் பெரிதாகிக்கொண்டேதான் இருக்கும். ஏனென்றால் அது மண்ணின் விசை. மண்ணின் பேருருவுக்கு முன் மலைகள் சிறுபூழித்துணுக்குகள்தான். விரிசலை மறைக்கலாம். அவ்விரிசலை ஏற்றுக்கொண்டே மேலே செல்லலாம். ஆனால் உறுதியாக, மாற்றே இன்றி விரிசல் அக்கட்டடத்தின்மேல் படரும், பிளந்து வீழ்த்தும்.”

“பேரரசின் வளர்ச்சியும் எங்கோ நின்றுவிடும். நிலத்தின் இயல்பால் அது கட்டுப்படுத்தப்படும். படைகள் செல்லும் தொலைவு என்னும் எல்லை எப்படியாயினும் அதற்குண்டு. ஆனால் அப்பேரரசு உருவாக்கும் அச்சமும் ஐயமும் அதன் மீதான காழ்ப்பும் பெருகிக்கொண்டே செல்பவை. ஒன்று பிறிதை வளர்க்க அவை இருளென எழுந்து சூழ்ந்துகொள்பவை. ஆகவே என்றேனும் ஒருநாள் எந்தப் பேரரசுக்கும் அதன் எதிரிகள் மும்மடங்கென ஆவார்கள். அவர்களால் அப்பேரரசு வெல்லப்படும். அதன் மீதிருக்கும் அச்சமும் ஐயமும் காழ்ப்பும் பகைவெறியாக மாறி அதை முற்றழிக்கும். இம்மண்ணில் அவ்வண்ணம் அழிந்து மறைந்த பேரரசுகள் மண்ணில் பூழியென கரைந்தன. சொல்லில் கனவென நிலைகொள்கின்றன.”

“ஆகவே இங்கே நான் ஒவ்வொரு நாளையும் அடியொழுக்கு நிறைந்த ஆற்றை என கடக்கிறேன். ஒவ்வொரு காலடியையும் சேற்றுநிலத்து யானை என வைக்கிறேன். இன்று நான் செய்யும் ஒரு சிறுபிழை போதும், பெருகிப்பெருகி இப்பேரரசை அது வீழ்த்திவிடும். என் கண்முன்கூட அது நிகழலாம். ஆகவே நான் துவாரகையில் தலையிடப்போவதில்லை” என்று சொல்லி அரசி கைகூப்பினார். “அரசி, துவாரகையின் இடர் என்பது…” என நான் மேலும் தொடங்க அரசி “சேற்றுநிலம் என நான் சொன்னதே துவாரகையைத்தான், யாதவரே” என்றபின் எனக்கான அவைச்சொல் முடிந்துவிட்டதைக் காட்டும்பொருட்டு மறுபக்கம் திரும்பிக்கொண்டார். நான் எழுந்து தலைவணங்கி வெளிவந்தேன்.

முற்றத்தில் நின்று பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்த சாத்யகி “தாங்கள் அமரலாமே?” என்று இளைய யாதவரிடம் சொன்னான். “ஆம்” என்று அவர் சென்று திண்ணையில் இடப்பட்ட ஈச்சம்பாயில் அமர்ந்துகொண்டார். சாத்யகி அவர் அருகே வந்தான். அவன் கீழே அமரப்போக அவர் அவன் தோளைப் பற்றி இழுத்து தன் அருகே தனக்கிணையாக அமரச்செய்தார். அவன் உடல் குறுகினான். “இங்கே மேல்கீழ் என ஏதுமில்லை. மானுடரிலும் பொருட்களிலும்” என்று இளைய யாதவர் சொன்னார். சாத்யகி தலையசைத்தான்.

தொடர்புடைய பதிவுகள்

எண்ண எண்ணக் குறைவது-கடிதங்கள்-2

$
0
0

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

ஜெ

 

கதையை வாசித்தபோது அது கதையா இல்லை உண்மையான நிகழ்ச்சியின் நேர்ப்பதிவா என்ற சந்தேகம் வந்தது. அதிலுள்ள முக்கியமான கதாபாத்திரமான சிந்தனையாளரைப் பற்றி ஏற்கனவே எழுதிவிட்டீர்கள். ஆகவே அவரைப்பற்றிச் சொல்லி கதையை காஸிப் ஆக ஆக்க விரும்பவில்லை. கதையின் மையம் ஒன்றுதான், பாஸிட்டீவான தற்கொலை ஒன்று இருக்க முடியுமா?

 

உண்டு என்றுதான் இந்துமரபு சொல்லும். கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் கதை முதல் நாம் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தவாழ்க்கை ஒரு நோக்கம் கொண்டது. அது முடிந்தது என்று உள்ளத்திற்கு தோன்றியதும் ஜலசமாதி, அக்னிசமாதி, உண்ணாவிரதம் மேற்கொள்வது நமக்கு மரபு. கதையிலேயே அது உள்ளது

 

ஆனால் தற்கொலை தப்பு, தற்கொலைக்கு மீட்பே இல்லை என்று நமக்கு இன்றைய வாழ்க்கை கற்பிக்கிறது. ஆகவே அதை நாம் ஒரு பெரிய சூத்திரமாகவே சொல்லிக்கொண்டிருக்கிறோம்

 

இங்கே உள்ள கேள்வி அதைவிட ஆழமானது. ஹமீது கேட்கிறார். ஒருவன் தற்கொலை செய்துகொண்டான் என்றால் அவனுடைய சிந்தனைகளுக்கு என்னதான் மதிப்பு என்று. அவன் அதைத்தான் உபதேசிக்கிறான் என்று பொருள் இல்லை. அது அவன் வாழ்க்கைக்கு முடிவு அவனுடைய சிந்தனைகளின் முடிவு அது அல்ல

 

பலகோணங்களில் ஆழமாகச் சிந்திக்கவைத்த கதை

 

ஸ்ரீனிவாஸ்

 

அன்புள்ள ஜெ சார்,

கல்பொருசிறுநுரையின் துவக்கத்தில் எண்ண எண்ணப் பெருகுவது அறம் என்று வருகிறது. அப்படியானால் எண்ண எண்ணக் குறைவது என்ன? ஆசைகளையும் பந்தங்களையும் வள்ளுவர் என்னவென்று நோக்கினால் நீங்குவது என்கிறார். இந்த கதையை மீண்டும் வாசித்து தொகுத்து கொள்ள முயலுகிறேன், ஆனால் தகவல் ரீதியாக ஒரு ஐயம். திரு. எம். கோவிந்தன் அவர்களை ஏன் எம்.கே என்று அழைக்கிறார்கள்? அல்லது கதையின் நாயகர் வேறோர் ஆளுமையா?

அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-8

$
0
0

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

ஒரு பெண்ணின் பல உருவங்கள் என்ற ஒற்றை வரி அளிக்கும் உணர்வுகளைச் சூழ்ந்தே இருகதைகளும் இருக்கின்றன. அந்தக் கரு அளிக்கும் திகைப்புதான் முதல் கதை. எத்தனை உருவங்கள் என்ற வியப்பு மட்டும். இரண்டாவது கதை அத்தனை உருவங்களுக்கும் மையமாக ஒரு மாறா உருவம் இருக்கக்கூடுமா என்பது. அதைப்புரிந்துகொள்கையில் அக்கதை விரிவடைகிறது. சர்வஃபூதேஷுவை வாசிக்கையில் அவளை அறிய காமம் அல்லது அறிவு வழியல்ல எளிமையும் அர்ப்பணிப்புமே வழி என்று தோன்றுகிறது. மாதவாகவோ தேவியாகவோ வந்துவிடுவாள். குழந்தையே அன்னையை மிக அணுக்கமாக அறியமுடியும். அவள் தன்னை முழுமையாகக் காட்டுவதும் அதற்குத்தான். பூதாகரமான குழந்தையாகிய மாத்தன் மிக எளிதாக அவள் அருகே சென்றுவிடுகிறான்

 

பலவகையான நிலைகுலைவுகளை உருவாக்குகிறது, வெவ்வேறு கோணங்களில் சிந்தனைசெய்யவைக்கிறது என்பதே இந்தக்கதைகளிலிருந்து வரும் அனுபவம். கதை என்ற அனுபவம் பெரிதாக இல்லை. ஒரு நிகழ்ச்சியை வாசித்ததுபோல் இருக்கிறது. வாசித்து முடித்ததுமே ஒரு வகையான எரிச்சலோ ஒவ்வாமையோ உருவாகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதெல்லாம் அடங்கியபின்னர் நாம் கதையை மிக ஆழமாக யோசிக்க ஆரம்பிக்கிறோம்.

 

இரண்டு வகையான யோசனைகள். இந்தக் கதாபாத்திரங்களை ஆசாபாசங்கள் கொண்ட மனிதர்களாக எடுத்துக்கொண்டு இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்றெல்லாம் வாசிக்கப்போனால் ஒரு எளிமையான வாசிப்பே கிடைக்கிறது. இவற்றை தத்துவவிவாதத்தின் துளிகளாக எடுத்துக்கொண்டு வாசித்தால் வேறுவகையில் கதை விரிகிறது. புதிய புதிய கேள்விகள் எழுகின்றன. பெண்ணின் தோற்றங்கள் விரிவதும் நாம் அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்வதும் ஒரு பக்கம். பெண்ணை நாம் பலவாகப் பிரித்து அறிகிறோமா என்பது இன்னொரு பக்கம். பெண்ணே இப்படியெல்லாம் விளையாடுகிறாளா என்று தோன்றும். அப்படித்தானே அத்தனைபேரும் விளையாடுகிறோம் என்று பார்க்கும்போது இது உறவுகளின் மாயங்களைத்தான் சொல்கிறதா என்றும் படுகிறது

 

சுவாமி

 

ஜெ,

 

சர்வ  ஃபூதேஷு கதையையும் வாசகர்கள் அக்கு வேறு ஆணி வேறாக அலச ஆரம்பித்து விட்டார்கள். என் பங்குக்கு ஒரு சிறு கல்லை இந்த பானைக்குள் போடவே இந்தக் கடிதம்.

 

இது வரை வந்த கடிதங்கள் மாத்தனையும், எல்லாவுடனான அவனது உறவின் பரிமாணங்களையும் பேசுகின்றன. ஆனால், எனக்கு அதையும் மீறி என் வாசிப்பில் முக்கியமாகப் பட்டது கதை சொல்லியாகிய வைத்தியர் ஸ்ரீதரினின் ஆளுமையில் வந்துள்ள மாற்றம். ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு “missing the forest for a tree” என்று. ஒருவேளை என் வாசிப்பிலும் அது தான் சம்பவித்ததோ என்னமோ, ஆனாலும் அதைப் பற்றி சில வரிகள்.

 

‘யா தேவி’-யில் நாம் கண்ட ஸ்ரீதருக்கும் இப்போது நாம் காணும் ஸ்ரீதருக்கும் பல வித்தியாசங்கள். எல்லாவை முதலில் சந்திக்கும் போது வைத்தியர் மிக நிதானமான மனிதர். தான் எடுத்த நோன்பில் சற்றும் பிறழாதவர். தான் இவ்வுலக இச்சைகளுக்கும் மேலே சென்று விட்டதை உணர்ந்தவர். அதற்குரிய கர்வமும் கொண்டவர்.

 

இப்போதும் அவர் அப்படித்தான். ஆனால் அவரது ஆளுமையில் ஒரு சிறிய ஊசலாட்டம் கதை முழுவதும் காணக் கிடைக்கிறது. கதை முழுவதும் அவருக்கு எல்லாவுடன் ஒரு உரையாடல் கூட இல்லை. ஆனால் மாத்தனுடனான உரையாடல்கள் மூலமாகவும், அவரது எண்ண ஓட்டங்கள் மூலமாகவும், எல்லாவைக் குறித்த அவரது உணர்வுகள் சிறிது சிறிதாக மாறி வருவது போன்ற ஒரு பிரமை. அது இரக்கமா, பொறாமையா, காதலா, காமமா, அல்லது இது எல்லாம் சேர்ந்த ஒரு கலவையா என்று வரையறுக்க முடியவில்லை.

 

மாத்தனை அவனது மனக்குழப்பங்களிலிருந்து  விடுபட அவர் சரியான ஆலோசனைகள் சொல்லும் போதும், அவரது சொல்லிலும் செயலிலும்  சற்று நாரதத்தனம் (அல்லது வில்லத்தனம்?!) உள்ளது போன்ற ஒரு உணர்வைத் தடுக்க முடியவில்லை. காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாகத் தெரிவது போல், என் மனதில் உள்ள காமாலை தான் இப்படிப் பார்க்க வைக்கிறதோ?!

 

ஆனால் வைத்தியரின் நோய்க்கு இங்கு நோயாளியாகிய மாத்தன் வைத்தியம் பார்க்கிறான், அவனது வெள்ள்ந்தியான குணத்தால். எனக்கு ஒரு விதத்தில் மாத்தன் கடல் திரைப்படத்தில் வரும் பியாட்ரீஸை ஞாபகப் படுத்துகிறான். அவன் எல்லாவின் நகல் பொம்மையான ஆலீசைப் புணர்ந்தவன் ஆனாலும், தன் குழந்தைத் தனத்தால் எல்லா வேறு, அவள் போட்ட வேடம் வேறு என்று எளிதில் புரிந்து கொள்கிறான். வைத்தியருக்கு எல்லா முதலில் ஒரு பாலியல் நடிகை, பிறகு தான் மற்றவை (அதை மாத்தனிடம் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே சொல்லவும் அவர் தயங்குவதில்லை). ஆனால் மாத்தனுக்கோ, அவள் அன்னை மேரியின் வடிவம், அவனது இறந்து போன தாயைப் போன்ற ஒரு பெண். அவள் எப்படிச் சீரழிந்து போயிருந்தாலும் அவளுக்குள் இருக்கும் அன்னை மரியை அவனால் எளிதில் கண்டு கொள்ள முடிகிறது.

 

கடைசி காட்சியில் எல்லா மடியில் மாத்தன் தூங்கும் காட்சி, எனக்கு அன்னை மரியின் மடியில் மரித்துக் கிடக்கும் மனித குமாரனை ஞாபகப்படுத்தியது. ஒரு வேளை ஸ்ரீதரன் கண்டதும் அதைத் தானோ? அது தான் அவர் மனமாற்றத்துக்குக் காரணமோ?

 

கடைசியாக, நான் எங்கோ படித்த ஒரு குட்டிக் கதை. ஒரு குருவும், அவரது சீடனும் யாத்திரை போகிறார்கள். வழியில் ஒரு காட்டாறு குறுக்கிடுகிறது. கரையில் ஒரு இளம்பெண், ஆற்றைக் கடக்க வழி தெரியாமல் கலங்கி நிற்கிறாள். பிரம்மசாரிய விரதம் பூண்ட குருவோ, சற்றும் யோசிக்காமல், அவளை தன் தோளில் ஏற்றி ஆற்றைக் கடந்து இறக்கி விட்டுப் போகிறார். சீடனுக்குக் கேட்க பயமாயிருந்தாலும், சில நாழிகைகள் கடந்த பின் பொறுக்க முடியாமல் கேட்டே விடுகிறான், எப்படி ஒரு பிரம்மசரிய விரதம் பூண்ட குரு ஒரு இளம் பெண்ணைத் தொட்டு தூக்கலாம் என்று. அதற்கு குருவின் பதில், “நான் அந்தப் பெண்ணை ஆற்றைக் கடந்த போதே இறக்கி விட்டு விட்டேன். நீ ஏன் இன்னும் அவளை மனதில் சுமந்து கொண்டு இருக்கிறாய்?”

 

சற்று தொடர்பில்லாத கதை தான். ஆனால் என்னமோ இந்தக் கதையில் மாத்தனை குருவாகவும், ஸ்ரீதரனை சீடனாகவும் மனம் கற்பனை பண்ணிப் பார்க்கிறது!

 

பல நாட்கள் அசைபோட மீண்டும் ஒரு அருமையான படைப்பைத் தந்ததற்கு நன்றி!

 

அன்புடன்,

 

சிஜோ

அட்லாண்டா.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பழையது மோடை –கடிதங்கள்

$
0
0

பழையது மோடை- கோகுலரமணன்

அன்புள்ள ஜெ,

 

கோகுலின் பழையது மோடை கதை வாசித்தேன். மோடையை வெற்றிகரமாக ஒரு குறியீடாக இக்கதையில் அவரால் பயன்படுத்த முடிந்திருக்கிறது. ஒரு வகையில் பிராமண சமூகத்திற்கே உரிய பிரத்யேக சிக்கல்‌ . நூற்றாண்டுகளாக வெவ்வேறு எழுத்தாளர்களால் திரும்ப திரும்ப எழுதப்படுவதும் கூட‌. ரா. கிரிதரனின் தர்ப்பை கூட இவ்வரிசையில் உள்ள கதை தான். பழையது, வழிவழியாக கையளிக்கப்பட்டது, பிராமண குடும்பத்திற்கு வெளியே தேவையில்லாதது, வேறு எங்கும் பொருந்தாதது, பயன்படாது, புதிய இடத்திற்கு செல்லும்போது கொண்டு செல்ல விரும்பாது, இடத்தை அடைப்பது ஆனால் விட்டு விலகவும் முடியாதது, குற்ற உணர்வை கிளர்த்துவது. ஜோடியில் ஒன்றை ஒருவழியாக கொடுத்தாலும் இறுதியில் ஒன்றாவது எஞ்சும் என எண்ணும்போது இரண்டுமே அழிகிறது. மரபுக்கும் நவீனத்துக்குமான குறிப்பாக மரபை கைவிட்டு புதியதை ஏற்பதில் உள்ள சிக்கலை கோரா தொடங்கி இன்று கோகுல் வரை பேசியபடிதான் இருக்கிறார்கள். ஒரு வகையில் சென்ற தலைமுறையின் கதை என்பதை தவிற வேறு குறைகள் என எதையும் சொல்ல முடியவில்லை. வாழ்த்துக்கள்

 

சுனீல் கிருஷ்ணன்

 

அன்புள்ள ஜெ

 

கோகுலரமணன் கண்டிப்பாக இலக்கியத்திற்கு புதுவரவு. முதற்கதை என்று தெரியவில்லை. அழகாக எழுதியிருக்கிறார்.சரியாகத் தொடங்கவும் அளவாகச் சொல்லவும் தெரிந்திருக்கிறது. கதையின் குறியீட்ட்டை விளக்காமல் குறிப்பாகச் சொல்ல முடிந்திருக்கிறது.

 

இரட்டையில் ஒன்றை பிரிக்கக்கூடாது, அது குடும்பத்திற்கு நல்லது அல்ல என்ற எண்ணம் எல்லா குடும்பங்களிலும் உண்டு. இரட்டைநாழி இரட்டை கோப்பை எதையும் பிரிக்கமாட்டார்கள். மோடையை பிரித்ததும் ஒன்று உடைந்துவிடுவது அழகான ஓர் இடம். நான் இன்னொன்றும் உடைந்துவிடும் என நினைத்தேன். ஆனால் முடிவு சொல்லப்படாமல் அப்படியே விட்டுவிடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த முடிவில் உள்ள மகிழ்ச்சியான அழைப்பு இனிமையான ஒரு முடிவையே காட்டியது. இன்னொரு மோடை வந்து ஜோடியாகிவிட்டது என்று எண்ணிக்கொண்டேன்

 

மகாதேவன்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சக்தி ரூபேண- கடிதங்கள்-1

$
0
0

சக்தி ரூபேண! [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

சக்தி ரூபேண வாசித்ததும் உள்ளம் சோர்ந்துவிட்டது. முதல் இரு கதைகள் அளித்த மன எழுச்சிக்கும் நம்பிக்கைக்கும் நேர் எதிரான கதை. ஆனால் இதுதான் உங்கள் அசல் கதைக்கரு என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

 

இணையத்தில் தேடியபோது இந்தச் சம்பவம் கேரளத்தில் திருவனந்தபுரம் அருகே கோவளம் என்ற ஊரில் நடந்திருப்பதை கண்டேன். [நீங்கள் கதை எழுதியிருக்கும் அதே லேன்ட்ஸ்கேப். நானும் அங்கே போயிருக்கிறேன்] அங்கே நடந்த அந்தச் சம்பவத்தில் இருந்துதான் கதைக்கு வந்திருக்கிறீர்கள். ஆனால் கதையை அவ்வளவு தள்ளி அவ்வளவு கவித்துவமான ஒரு இடத்திலிருந்து எப்படி தொடங்கமுடிந்தது என்பதுதான் முக்கியமான கேள்வி என நினைக்கிறேன்

 

சக்திரூபேண கதை முந்தைய இருகதைகளுக்கு ஒரு எதிர்முடிவாக இருக்கிறது. எல்லா ஆன்ஸெல் நோய் குணமாகி ஊருக்கே திரும்பிச் சென்றிருந்தால் இந்தக்கதை என்ன ஆகியிருக்கும். இப்போது எழும் கேள்விகளுக்கு இடமிருந்திருக்காது. இந்தக்கேள்விகள் மேலும் முக்கியமானவை. இந்த கேள்விகளுக்காகவே இந்தக்கதைகள் எழுதப்பட்டிருக்கினன என நினைக்கிறேன்

 

அருண்ராஜ்

 

அன்புள்ள ஜெ

எல்லா கேட்கும் இரண்டு கேள்விகள். அவை அருகருகே அளிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று, ஏன் பெண்களுக்கு இந்த அளவுக்கு காவல் இங்கே? ஏன் பொம்மையைக்கூட பூட்டிவைக்கவேண்டிய நிலை. பொம்மைக்குக் கூட ஏன் இங்கே கற்புக்கு பாதுகாப்பில்லை? ஏன் பகவதிகோயிலில் உண்மையான பெண்ணின் உடல்வடிவம் இல்லை?

இந்தியா பற்றி வெள்ளையர் கேட்கும் கேள்விகள் இவை. அதாவது நல்லெண்ணம் கொண்ட வெள்ளைக்காரர்கள் கேட்பது. சக்தி வடிவமாக பெண்களைக் கும்பிடும் நாடு ஏன் பெண்களை இப்படி நடத்துகிறது? எதற்காக இத்தனை கொடூரமான வன்முறை? இவ்வளவு பாலியல்சுதந்திரம் உள்ள நாடுகளில்கூட பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதெ, இங்கே ஏன் இல்லை?

இந்தக்கேள்விதான் முக்கியமானது. ஸ்ரீதரன் முதல் கதையில் சொல்லும் சக்திவழிபாட்டில் இருந்து நாம் வந்துசேரும் இந்த இடம்தான் இந்த மூன்றுகதைகளுக்கும் அடிப்படையானது. முதல் இரண்டு கதைகளை வாசித்துவிட்டு இந்தியாவைத் தூக்கிப்பிடிக்கும் கதை என்று ஒரு பேராசிரியர் எழுதினார். டெம்ப்ளேட் வாசிப்புகளை கடந்து இந்தக்கதைகள் செல்வது இந்த இடம் வழியாகவே

 

ராஜ்குமார்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வருக்கை [சிறுகதை]

$
0
0

 

கண்ணன் பார்பர் ஷாப்பில் எனக்காக ஏழுபேர் காத்திருந்தனர். நான் அருகிலிருந்த சண்முகத்தின் வெற்றிலைபாக்குக் கடையில் “ஒரு பாக்கெட் வாசனை ஜிண்டான்”என்று சொன்னேன்.

 

சண்முகம் “பிள்ளை இண்ணைக்கு பள்ளிக்கூடம் லீவா?”என்றார்.

 

அதற்குள் அப்புப் பாட்டா என்னிடம் “பிள்ளை இஞ்ச வாரும்… தந்தியிலே பேச்சிப்பாறை வெள்ளம் என்ன மட்டம்னு பாத்துச் சொல்லும்” என்றார்.

 

நான் தந்தியை வாங்கிக் கொண்டேன். அது ஏற்கனவே பலரால் பலகோணங்களில் படிக்கப்பட்டு ஆறிப்போன அப்பளம் போலிருந்தது. ஒய்.விஜயாவின் முலைமேல் எவரோ வடையை வைத்திருந்தார்கள். அதன் உட்பக்கத்தில் சினிமாச் செய்திகளை புரட்டி ஒருமுறை பார்த்தேன்.

 

“பிள்ள வெள்ளத்தை பாத்துச் சொல்லணும்”.

 

“பாக்குதேன்”என்றேன்.

 

“வெள்ளம் எறக்காண்டாமா?”என்றார் மாசிலாமணி நாடார்.

 

நான் செய்திகளை மேலோட்டமாக பார்த்தேன். பேச்சிப்பாறையில் நீர்மட்டம் இருபத்திரண்டு அடி. அதைச் சொன்னேன். உண்மையில் ஊரில் தேவையான ஒரே செய்தியை வாசித்தாகிவிட்டது. மிச்சமிருக்கும் தேவையில்லாத செய்திகளை இனிமேல் வரிவரியாக வாசிக்கவேண்டும். விடமாட்டார்கள். குறிப்பாக மழை இல்லாத கோடைநாட்களில்

 

“கருணாநிதிக்கு எம்ஜியார் மூக்கறுப்பு” என்று நான் வாசித்தேன்.

 

கொச்சு மூத்தான் “உள்ளதாக்குமா?” என்றார், ஆவலாக..

 

“இவனுக தினமும் அறுக்குகதுக்கு மூக்கு இந்திரனுக்கு சாமான் மாதிரி மேலெங்கும் காய்ச்சு தொங்குதாலே? நூஸ் போடுதான் பாரு..’ என்றார் சுப்ரமணியநாடார். ‘மத்த நூஸை படியும்”.

 

நான் “நாளை முதல் கத்திரிவெயில்…” என்றேன்.

 

“அய்யோ, இவனுக சொல்லேல்லண்ணா நாளைக்கு மளையில்லா அடிச்சு நனைக்கப்போவுது. அறியாம கேக்கேன், இனியிப்பம் நம்ம வீட்டிலே மரச்சீனி மயக்கிட்டுண்டான்னு இவனுக எளுதி நாம வாசிப்போம்னுல்லா தோணுது…” என்றார் அருமைநாயகம்

 

அப்போதுதான் கள்ளன் தங்கன் கடைநோக்கி வந்தான். “கள்ளனுக்க நடையப்பாருலே, எம்ஜியாருண்ணாக்கும் நினைப்பு…” என்றார் கொச்சு மூத்தான்

 

“அவன் செமினில்லா”

 

எனக்கு தங்கனின் நடை ரவிச்சந்திரன் போல இருப்பதாக ஒரு நினைப்பு. கொஞ்சம் கோணலாக தோளைத் தூக்கியபடி நடப்பான். நிற்பதும் ஒசிந்துதான். எங்கோ ஒரு போக்கிரித்தனம் செய்தபின் போடா என்று எழுந்து நடந்துவரும் பாவனை. அவன் முகமும் ரவிச்சந்திரன்போல நீளம். நல்ல சிவப்பு. அவனுக்கு முப்பது வயது பக்கத்தில் இருக்கும், ஆனால் பூனைமுடிதான் மீசை. சிவந்த சிறிய உதடுகளுக்கு அது பொருத்தமாகவும் இருக்கும். கண்களில்  கொஞ்சம் பூனைச்சாயல் உண்டு. அதிலும் பக்கவாட்டில் நின்று பார்த்தால்.

 

தங்கன் “அம்மாச்சோ, நூஸ் என்னவாக்கும்?”என்றபடி பார்பர் ஷாப் திண்ணையில் அமர்ந்தான்.

 

“உன்னை போலீஸு பிடிச்ச நூஸு உண்டாண்ணு பாக்குதோம்” என்றார் அருமைநாயகம்.

 

“என்ன என்னத்துக்கு போலீஸு பிடிக்குது? நான் சோலி செய்து சீவிச்சுதவனாக்கும்”.

 

“வக்காவோளி, சோலீங்குத வார்த்தைய நீ சொல்லப்பிடாது. சவிட்டி கொடல எடுத்துப்போடுவேன்” என்று சுப்ரமணிய நாடார் சீறினார்.

 

“இங்கிண செய்தாத்தான் சோலியா? நான் நாலு ஊரிலே சோலி செய்யப்பட்டவன்” என்றான் தங்கன்

 

“என்ன சோலி? ஏலே, சொல்லுலே என்னலே சோலி?”.

 

அவன் என்னைப் பார்த்து கண்ணடித்து “பல சோலிகள்” என்றான்.

 

“என்ன ஜோலி, ஒரு சோலியச் சொல்லு பாப்பம்”

 

அவன் “சொன்னா மரியாதையா இருக்காது….நாளைக்கு பின்ன நாம பாக்கணும்லா?” என்றான்.

 

“உன்னாலே இந்த ஊருக்குத்தான் கெட்டபேரு…ஏலே உன்னைத்தேடி எட்டுதடவ போலீஸு வந்தாச்சு. ஊருக்குள்ள திருடீட்டு கெடந்தே. இப்பம் கிட்டமட்ட ஊருகளிலேயும் சோலிய தொடங்கியாச்சு”.

 

தங்கன் “பிசினெஸு டெவெலெப் ஆகணும்லா?” என்றான்.

 

தங்கையா டீக்கனார் ‘இவன்கிட்ட பேசுததுக்கு சுவரிலே முட்டுகது மேலு” என்றார்.

 

அருமைநாயகம் “லே நீ திருடுகதுதான் திருடுதே. அந்தால சத்தம் காட்டாம போயி நாகருகோயிலு திருவனந்தபுரம்னு திருடினா என்னலே? அவனுக அங்க தள்ளில்லா கெடக்கானுக… உன்னை அவனுகளுக்கு தெரியாதுல்லா?” என்றார்.

 

அவன் தீவிரமான முகத்துடன் “ஏசு என்ன சொன்னாரு? வேய் டீக்கனாரு சொல்லும்வே. என்ன சொன்னாரு?  நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். சொன்னாரா இல்லியா?”

 

டீக்கனார் “அதிப்பம், ஏசு சொன்னாருண்ணு…” என்றார்.

 

“ஏசு சொன்னா கேக்கப்பிடாதா? நீரு கிறிஸ்தியானிதானே? வேய், சொல்லும்வேய். நீரு கிறிஸ்தியானிதானே? ஏசு சொன்னா கேக்கணுமா வேண்டாமா?”

 

அவர் மேலும் தழைந்து, துணைக்கு அழைப்பதுபோல அருமைநாயகத்தைப் பார்த்தபின் “கேக்கணும்”என்றார்.

 

அவன் என்னை நோக்கி “வயசாகுதே தவிர ஒரு விசுவாசம் இல்லை. கர்த்தராகிய ஏசு சும்மாவா சொன்னாரு? அதை ஒருத்தன் சோலிமெனக்கெட்டு பைபிளிலே எளுதியும் வச்சிருக்கான். அதை இங்க ஒரு பாஸ்டர் மளைகிட்டா தவளை மாதிரி கெடந்து ள்ளா ள்ளாணு ஞாயித்துக்கிளமை தோறும் விளிச்சு கூவுதான். ஒண்ணையும் மனசிலே நிறுத்துகதில்லே” என்றான்.

 

அவர் குற்றவுணர்வுடன் “நம்மால முடிஞ்சத செய்யுகதுதான்”என்றார்.

 

“முடிஞ்சா போதாது. ஏசுவ அடுத்து அறியணும். காணாமல் போன ஆடுகள் உள்ள ஊருக்கு ஏன் போகணும்னு சொல்லுதாரு? சொல்லும்வே. பைபிளை தூக்கீட்டு அலையுதீருல்லா?”.

 

டீக்கனார் “பைபிளுக்க அர்த்தம் ஆழமானதாக்குமே” என்று பொதுவாகச் சொன்னார்.

 

“நான் இப்பம் ஒரு ஊரிலே ஒரு ஆட்டை திருடீட்டு வாறேன். அப்பம் அந்த ஊர என்னன்னு சொல்லுவேரு?” அவன் கேட்டான்.

 

அவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.

 

“ஆடு காணாமல்போன ஊருண்ணுதானே?” அவன் கேட்டான்.

 

“ஆமா’என்றார் அவர்.

 

“பின்ன?”என்றான் தங்கன்.

 

“ஆமால்லா?”என்றார் டீக்கனார்.

 

நான் புன்னகைத்தேன். அவன் என்னை நோக்கி கண்ணடித்து  “எம்ஜியார் சினிமா வந்திட்டுண்டா? பாத்து சொல்லு பிள்ளே” என்றான்.

 

நான் “நினைத்ததை முடிப்பவன் ஓடுது”என்றேன்.

 

‘அது நாலுமட்டம் பாத்தாச்சுல்லா? வேற?”.

 

“வேறயா? இப்பம்தானே இது எறங்கிச்சு?”.

 

“செமினி படம் உண்டோ?”என்றார் சுப்ரமணியநாடார்.

 

‘டி.ஆர்.மகாலிங்கம் படம் எறங்கீட்டுண்டு”என்றான் தங்கன்.

 

“உள்ளதா? உள்ளதா பிள்ளே?”என ஆவலாக என்னிடம் சுப்ரமணிய நாடார் கேட்டார். நான் புன்னகைசெய்தேன்.

 

“மகாலிங்கம் ஆளு என்னா ஒரு இது… நல்ல வாயிலே தாம்பூலத்த போட்டுக்கிட்டு ஐசரியமாட்டுல்ல இருப்பாரு…”

 

“எட்டுகட்டையாக்கும்” என்றார் சுப்ரமணிய நாடார்

 

“அவருக்க பேட்டரிய நீரு எங்கவே பாத்தீரு?”

 

“பேட்டரியா, வே சாரீரத்த சொன்னேன்”

 

”சாரீண்ணா?”

 

“உம்ம அம்மைக்க தேங்கா… போவும்வே”

 

அச்சு ஆசான் தடியூன்றி மெல்ல கடைக்கு வந்தார். “ஒரு கெட்டு பீடி வேணுமே சம்முகம்” என்றார்.

 

“பீடிக்கு விலைண்ணு ஒண்ணு உண்டு”என்றார் சண்முகம்.

 

“அது இல்லாமல் இருக்குமா? இந்த உலகத்திலே தெய்வத்துக்க ஞானம் மட்டும்தான் வெலையில்லாத்தது” அவர் என்னைப் பார்த்து “நீ கரடிநாயருக்க மகன்லா?” என்றார்.

 

நான் “ஆமாம்’என்றேன்.

 

“மிச்சம் உண்டெங்கி ஒரு அம்பதுபைசா குடும். அப்பா கேட்டா ஆசான் கேட்டாரு குடுத்தேண்ணு சொல்லும்”

 

நான் ஐம்பது பைசாவை சண்முகத்திடம் கொடுத்தேன். ஆசான் பணம் கேட்டால் கொடுத்துவிடலாம் என்று அப்பா சொல்லியிருந்தார். அவர்  பீடிச்செலவுக்கும் டீச்செலவுக்கும் மேல் கேட்பதில்லை. அவர் அடிமுறை ஆசான். மாட்டு சாஸ்திரமும் படித்தவர்

 

ஆசான் பீடிக்கட்டை வாங்கி ஒன்றை உருவி கயிற்று அனலில் ஊதிப்பற்றவைத்து கன்னம் குழிவிழ இழுத்து புகையை மூக்குவழியாக விட்டபடி பழுத்த கண்களால் தங்கனை பார்த்தார். “லேய், நீ அருணாச்சலத்துக்க மகன்லா? உன்னைய போலீஸு தேடிச்சுண்ணு சொன்னாவ”

 

தங்கன் “ஆமா, ஏட்டு நம்ம ஆளாகும். கருங்கொரங்கு லேகியம்போட ஒரு நல்ல மூத்த கருங்கொரங்கு வேணும்னு கேட்டாரு”.

 

அச்சு ஆசான்   “அதுக்கு இங்க கருங்கொரங்கு எங்க?”என்றார்.

 

“நீரு எப்டி வீட்டுக்குப் போவீரு? எந்த வளியாட்டு?” என்றான் தங்கன். ‘மூத்த கருங்கொரங்கு நெய்யெடுக்க நல்லதாக்கும்”

 

“ஆமா போறேன்… இனி நமக்கு ஒத்த வளியாக்கும்”என்று அச்சு ஆசான் கவனமில்லாமல் சொன்னார். நான் சிரித்தேன்.

 

ஆசான் என்னை புரியாமல் பார்த்துவிட்டு அவனிடம் “மக்கா திருடுகது செரி. நானும் நல்ல பிராயத்திலே நெறைய திருடீட்டுண்டு. அதுக்கு ஒரு இது வேணும்… அறைக்கல் வீட்டு வலிய நெலவறையை குத்தித்தெறந்து உள்ளபோயி எட்டு நிலைவிளக்க எடுத்து கொண்டுபோனேன். அஞ்சுமாசம் களிஞ்சு அதை கொண்டுபோயி அறைக்கல் வீட்டிலேயே வித்தேன். அம்பதுரூபா. அதைவச்சுக்கிட்டாக்கும் டி.ஆர்.ராஜகுமாரியப்பாக்க பட்டணத்துக்கு போனது. அவளுக்க மேக்கப்புகாரிய பாத்தேன், நம்ம வண்ணாத்தி ராஜம்மை மாதிரி இருந்தா. அதை விடு. என்னண்ணா எல்லாத்துக்கும் ஒரு பதம் வேணும் கேட்டியா” என்றார்.

 

“அது என்னத்துக்கு திருடினத அங்கிணயே வித்தீரு?” என்றார் தங்கையா டீக்கனார்.

 

‘பின்ன பித்தள நெலவெளக்க வாங்குகதுக்கு உண்டான ஆளை இந்த ஊரிலே வேற எங்க போயி தேடுகது? வெளியே கொண்டுபோனா போறது நாலாளுக்கு தெரிஞ்சிரும்லா? அறைக்கல் அம்மச்சிக்கு அவங்களுக்க நெலவறையிலே என்ன இருக்குண்ணு தெரியாது. எங்கலே திருடினேன்னு கேட்டா. நான் பூதப்பெரை நாயருக்க வீட்டிலேன்னு சொன்னேன். நாலிலே ஒரு வெலையில்லா. வாங்கினா. அப்டி பதினெட்டு தடவை அவங்களுக்க நெலவறையிலேயே திருடி அவங்களுக்கே வித்தேன். ஒருதடவை அதிலே அவங்களுக்க குடும்பப்பேரு எளுதியிருந்தது. நமக்கென்ன எளுத்தா படிப்பா? அதை கொண்டுபோயி அவங்களுக்கு வித்தப்பம் பிடிச்சுப்போட்டாக. கெட்டிவச்சு அடி…”

 

அவர் பீடியை ஆழ இழுத்து “ஆனா அதுக்குப்பிறவாக்கும் இங்க ஊரிலே நமக்கு டிமாண்டு. ஒருமாதிரிப்பட்ட எல்லா பெண்டுகளும் நம்மள விளிச்சிட்டுண்டு…”

 

நான்  “எதுக்கு?”என்றேன்.

 

“ஏ? மச்சம் எண்ணுகதுக்கு” என்றார் ஆசான்.

 

நான் “மச்சத்தை ஏன் எண்ணணும்?”என்றேன்.

 

தங்கன் “கள்ளன் எண்ணினாத்தான் செரியா எண்ண முடியும்” என்றான். “கணக்கு நெறையணும்லா?”

 

“எதுக்கு எண்ணணும்?”என்றேன்.

 

தங்கன் ‘அதுவா, அது ஒரு சாஸ்திரம். ஒரு பொண்ணு அவளுக்க உடம்பிலே எம்பிடு மச்சமிருக்கோ அந்த அளவுக்கு ஆம்புளைங்கள அணைஞ்சாள்னா அதோட மோட்சமாக்கும்… அவளுக்க  ஆத்மா நிறையும். நேராட்டு சொற்கம். ஒண்ணு குறைஞ்சாலும் மறுஜென்மம் உண்டு”

 

சுப்ரமணிய நாடார் ‘மக்களே தங்கா, நீ இந்த ஆத்மான்னு சொல்லுகது எதையாக்கும்?” என்றார். அனைவரும் சிரித்தனர்.

 

“சின்னப்பையனைச்  சீரளிக்காண்டாம் கேட்டியா? ஏமான் வீட்டுக்குப் போகணும்” என்றார் டீக்கனார்

 

சுப்ரமணிய நாடார் “ஆசான் அந்தக்காலத்திலே காத்துமாதிரி நுளைஞ்சு காத்துமாதிரி காணாம போயிருவார்ணு பேச்சு” என்றார்

 

“அது சொல்லப்போனா, காத்தடிச்சாத்தானே நெல்லும் பலாவும் எல்லாம் சினைப்பிடிக்கும்?ஹெஹெஹெ!” என்றார் மூத்தார்.

 

“இல்லேண்ணாலும் கள்ளனைக் கண்டா பெண்ணடிகளுக்கு ஒரு இதாக்கும்” என்றார் தங்கையா டீக்கனார்

 

“கிருஷ்ணன் கள்ளன்லா? ” என்றார் சுப்ரமணிய நாடார் ‘நல்ல வரிக்கைக் கள்ளன்”

 

நான் எட்டுகரையானின் மளிகைக்கடை முன் காளை மாணிக்கம் உக்கிரமாக கைவீசி பேசிக்கொண்டிருப்பதை கண்டேன். தங்கையா டீக்கனார் குனிந்து பார்த்து “அது நம்ம காளை மாணிக்கம்லா? என்றார்

 

டீக்கனார் “என்னண்ணு நிண்ணு சத்தம்போடுதான்? காலம்பற வெள்ளம் அடிக்க மாட்டானே?” என்றார்

 

மூத்தார் “அவனுக்கு இண்ணு காளைச்சந்தை உண்டுல்லா?” என்று கேட்டார்

 

காளை மாணிக்கம் மாட்டு வியாபாரி. வாரம் முழுக்க ஊரெல்லாம் சென்று காளை பசு எருமை கன்று ஆகியவற்றை வாங்குவான். வியாழக்கிழமை சாயங்காலம் மந்தையை ஓட்டிக்கொண்டு தொடுவட்டி காளைச்சந்தைக்குச் செல்வான். வெள்ளிக்கிழமை சந்தை முடிந்து சனிக்கிழமை காலையில் கிளம்பி மதியம் வந்துசேர்வான்.

 

“அவனுக்கு நேத்து காலிலே ஒரு ஆணி கேறிப்போட்டு. ஓட்டைக்கலம் மாதிரி ரெத்தம்… பப்பன் கம்பவுண்டர்கிட்ட ஊசி போட்டுக்கிட்டு வந்தான்” என்றார் டீக்கனார்

 

காளை மாணிக்கம் நொண்டி நொண்டி பார்பர் கடை நோக்கி வந்தான். கண்மேல் கைவைத்து கடைத்திண்ணையில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பார்த்தான் நல்ல தடியன். காளை மாதிரி கனமான கழுத்து. சின்ன கண்கள்.

 

தங்கன் ”நல்ல மனுசனாக்கும்…நேத்தும் பாத்தேன்” என்றான். “ஆசானே ஒரு பீடி எடும்வே…”

 

ஆசான் கொடுத்த பீடியை அவன் பற்றவைத்தபோது காளை மாணிக்கம் அருகே வந்துவிட்டான். தங்கனைப் பார்த்தபின் கட்டுப்போட்ட காலை வீசி வீசி வைத்து நடந்துவந்தான். வரும்போதே “லேய், தங்கா . லே தாயளி, நில்லுலே. ஓடாதே. நில்லு… இண்ணைக்கு நாம கணக்கு தீத்திருவோம்லே” என்று கூவிக்கொண்டிருந்தான்

 

தங்கன் “ஆமா, கணக்கு கணக்காட்டு இருக்கணும்லா?”என்றான்.

 

‘நீ எதுக்குலே அந்த பாவத்துக்கிட்ட கணக்கு தொறக்குதே?”என்றார் சுப்ரமணிய நாடார்.

 

காளை மாணிக்கம் அருகே வந்து கையிலிருந்த அலுமினிய சம்புடத்தை நீட்டிக்காட்டி “லேய், வக்காவோளி, லேய், இது என்னலே? என்னலே சொல்லுலே…. ஆம்புளைன்னா சொல்லுலே” என்றான்.

 

தங்கன்  “போணில்லா” என்றான்.

 

“என்ன போணி… சொல்லு….எனக்க முகத்தப்பாத்துச் சொல்லு. என்ன போணி?”

 

“அலுமினியப் போணி”

 

“அது தெரியும்.. அது எப்டிலே எனக்க கையிலே வந்தது? சொல்லுலே”

 

சுப்ரமணிய நாடார் “லேய் காளை, கொஞ்சம் அமையும்வே… கெடந்து துள்ளுதீரு… சொல்லும். என்னவாக்கும் சங்கதி?”என்றார்

 

காளை மாணிக்கம் “லேய்! நான் ஆளு வேறயாக்கும்…எனக்ககிட்ட களி வேண்டாம்” என்றான்.”எனக்க கிட்ட களிச்சா வச்சு கேற்றீருவேன்… வச்சு கொத்தீருவேன்… லேய்! லேய்!”

 

“சொல்லும்வே, என்னவாக்கும் சங்கதி?” என்றார் டீக்கனார். காளையிடம் “வே சும்மா இரும்… கேக்கேன்ல என்னாண்ணு”

 

“அப்டி கேளுங்க. ஊரிலே நாலு பெரிய மனுசன் இருந்து கேளுங்க”

 

“கேக்கேன். நீரு சும்மா இரும்வே” என்றார் சுப்ரமணிய நாடார் ‘சொல்லுடே தங்கா என்னவாக்கும்?”

 

தங்கன் “ஒண்ணுமில்லை.அண்ணனுக்கு நான் நேத்து வரிக்கைச் சக்கை சுளை கொண்டுபோயி குடுத்தேன்…அதைச்சொல்லுதாரு”

 

“ஏன் ஓய், பலாப்பளம்தானே குடுத்திருக்காரு?”என்றார் பார்பர் கண்ணன்.

 

“நீ வாய நீட்டாதே. நீ பாண்டித் தமிளன்… வரத்தனுக்கு இதிலே வார்த்தை இல்லை”என்று காளை மாணிக்கம் கூவினான். “அண்ணா கேளுங்க, மாமா கேளுங்க. இந்த தாயளி எனக்கு வரிக்கச்சக்கச் சுளை கொண்டு வந்து குடுத்தான். உள்ளதாக்கும்”

 

”குடுத்தாச்சு செரி… நீ தின்னியா?

 

“ஆமா தின்னேன்”

 

“பிறவு என்ன?” என்றார் தங்கையா டீக்கனார்.

 

“எப்பம் குடுத்தான்? அதைக்கேளுங்க… இவன் எப்பம் கொண்டாந்து குடுத்தான்… அதைக்கேளுங்க” என்று காளை மாணிக்கம் கூச்சலிட்டான். “நடுராத்திரி… மாமா, கேளுங்க. நடூ ராத்திரி ஒருமணிக்கு. நான் பாயப்போட்டு கெடந்து உறங்குதேன். காலுவேதனையாலே நல்ல உறக்கம் இல்ல. அப்பம் ஒரு சத்தம். என்ன சத்தம்ங்குதீக? புறவாசல் கதவுக்கு புறத்தால ஆரோ நிக்குதான். கைய கதவுக்க மேலே விட்டு சுத்திச்சுத்தி கொண்டிய நீக்குதான்… நான் எந்திரிச்சுப்போட்டேன். ஆருலே இவன் எண்ணு நினைச்சு நிக்குதேன். கதவைத்திறந்து இவன் உள்ள வாறான். இந்த தாயளி…”

 

“பிடிச்சிட்டேரே” என்றார் மூத்தார்.

 

“பின்னே? நான் லைட்ட போட்டேன். இவன் என்னையக் கண்டு அப்டியே வெள்ளெண்ணு சிரிச்சுட்டு அண்ணா, சொவமா இருக்கியளா, இந்தாருங்க வரிக்கச்  சக்கைச் சுளைன்னு சொல்லி இந்த போணிய நீட்டுதான். நானும் கொண்டாலேன்னு சொல்லி வாங்கிக்கிட்டேன். எங்கலே வாங்கினே பலாப்பளம்னு கேட்டேன். நம்ம மூலைக்கரை ஏமானுக்க விளையிலே நிக்கப்பட்ட பலாமரமாக்கும். நல்ல தேன்வரிக்கை. தின்னுங்கண்ணு சொன்னான். பிறவு வாறேன் அண்ணாண்ணு அருமையாட்டு சொல்லிட்டு அந்தாலே போனான். நானும் கதவ கொண்டிபோட்டுட்டு இருந்து சக்கைச்சுளையை தின்னேன். எனக்க பெஞ்சாதி அந்தால கெடந்து உறங்குதா. ஏட்டி, உனக்கு வேணுமாட்டி சக்கைச்சுளைன்னு கேட்டேன். அவ நல்ல உறக்கம். கண்ணே திறக்கேல்ல. செரீன்னு நான் அம்புட்டையும் தின்னேன்” என்றான் காளை மாணிக்கம்

 

சுப்ரமணிய நாடார் “நல்ல ருசியாக்கும் இந்தமாதிரி சக்கைச்சுளைக்கெல்லாம்” என்றார். அருமைநாயகம் கெக் கெக் கெக் என்று சிரித்தார்.

 

” சத்தியமாட்டு மாமா, காலம்பற எந்திரிச்சு பல்லு தேய்க்கும்பம்தான் ஒரு நினைப்பு. எளவு, இவனுக்கு நம்ம வீட்டிலே பாதிராத்திரியிலே என்ன சோலி? நான் சந்தைக்கு போகாம வீட்டிலே இருப்பேண்ணு இவனுக்கு எப்டி தெரியும்? அந்தால போணிய எடுத்துட்டு வாறேன்.. இவன் ஆருண்ணு நினைச்சான்? என்னைய ஏமாத்திப்போடலாம்ணு நினைச்சனா? ஏலே வாலே, ரெண்டுலே ஒண்ணு பாப்பம்.. எறங்கி வாலே”

 

“சவம் தன் குண்டிய நோண்டி தானே மணத்துப் பாத்ததும் இல்லாம நம்மளையும்  மணத்துப் பாக்க வச்சிட்டானே” என்றார் தங்கையா டீக்கனார்.

 

தங்கன் “இப்பம் என்னவாக்கும்? எதுக்கு போட்டு செலம்புதீரு? ஒரு சக்கைச்சுளை கொண்டுவந்து குடுத்தா தப்பா? இல்ல தப்பா வேய்? சொல்லும்வே ,தப்பா?”என்றான்.

 

அவன் கையை ஓங்கிக்கொண்டு செல்ல காளை மாணிக்கம் அறியாமல் பின்னடைந்து “தப்புண்ணாக்க… ராத்திரியிலே கொண்டாந்து குடுத்து…”என்றான்

 

“நீரு எப்பம்வே வீட்டுக்கு வந்தீரு?”

 

“சாயங்காலம்”

 

“செரியா சொல்லணும்’

 

“ஏளு மணிக்கு”

 

“எப்பம் கஞ்சி குடிச்சீரு?”

 

‘ஒம்போது மணிக்கு”

 

“கஞ்சி குடிச்சு எம்புடுநேரம் களிஞ்சு சக்கைச்சுளை திங்கணும்? வேய் ஆசான் , சொல்லும் வேய்”

 

ஆசான் கன்னம் குழிய பீடியை இழுத்து “கஞ்சி குடிச்சா பிறவு ஒரு ரெண்டுமணிக்கூறெங்கிலும் ஆகணும் சக்கைச்சுளை திங்குததுக்கு” என்றார் “வாயுக்குத்து உள்ள ஐட்டமாக்கும்”

 

“கேளும் வேய்… வயசும் பக்குவமும் உள்ளவரு ஆசான். நாலு எடத்திலே நட்டு வச்சவரு…அவரு சொல்லுதத கேளும். சும்மா மாட்டை ஓட்டிட்டு போனா செரியாவாது”

 

“இல்ல ராத்திரிலே…”

 

“ராத்திரியிலே சக்கைச்சுளை திங்கலாமா? ஆசான், வேய், சொல்லும் வேய்”

 

“தின்ன சோறு செமிச்ச பிறவு திங்கலாம்” என்றார் ஆசான்

 

“பிறவென்ன? என்னவாக்கும் உமக்கு பிரச்சினை? எதுக்கு ரோட்டிலே கிடந்து சத்தம்போடுதீரு?”

 

‘உனக்க சக்கைச்சுளை எனக்கு வேண்டாம்லே”

 

‘செரி, அப்பம் பைசாவ குடுத்துப்போடும், அம்பிடுதானே?”

 

“பைசாவச் சொல்லு”

 

“ரெண்டுரூபா… ரொக்கம் ரெண்டு ரூவா.. இருக்கா.. இருக்காவே ?  இருந்தா எடும் வேய்.. இப்ப எடும் வேய். ஆம்புளைன்னா பைசாவ வச்சுட்டு பிறவு பேசணும்.. மானம் மரியாதை இருந்தா கணக்க தீத்துட்டு நின்னு பேசணும்”

 

“லேய், ரண்டு ரூவா எனக்க மீசைக்க மயிராக்கும்.. நாலு உண்டை சாணிய வித்தா வரும்லே எனக்கு ரெண்டு ரூபா…. திருட்டுத் தாயோளி….  த்தூ… இந்தாலே உனக்க பைசா…எடுத்துட்டு ஓடுலே”

 

காளை மாணிக்கம் ரூபாயை மடியிலிருந்து எடுத்து தங்கனின் முகத்தில் வீசினான். அது கீழே விழுந்ந்தது. தங்கன் கடும் கோபத்துடன் கையை ஓங்கிக்கொண்டு போய் கூச்சலிட்டான்

 

“வேய்,  மகாலச்சுமிய மூஞ்சியிலே எறியுதியா? மூஞ்சியிலே மகாலெச்சுமிய எறியுதியா? ஆசான், இதைப் பாத்தேரா? பாத்துட்டு சும்மாவா இருக்கேரு? மகாலெச்சுமி இந்நா மண்ணிலே கெடக்கா… வேய் டீக்கனாரு, நியாயத்தச் சொல்லும்வேய்… என்ன வேய் , பிறவு என்ன மசுத்துக்கு ஊரிலே பெரிய ஆளுகண்ணு சொல்லி அலையுதீக?”

தங்கையா டீக்கனார் “லேய் தங்கா, எண்ணிப்பேசு. வார்த்தை மீறுது கேட்டியா?”

 

“எனக்கு மேலும் கீளும் இல்லை. என்னை இந்தா நடுரோட்டிலே வச்சு அவமானப்பெடுத்தியாச்சு… இந்தா லச்சுமி ரோட்டிலே கெடக்கா. எனக்க லெச்சுமியாக்கும்…”

 

”இப்பம் உனக்கு என்ன வேணும்? ஏன் கெடந்து செலம்புதே?” என்றார் டீக்கனார்.

 

“லே அடங்குலே” என்றார் சுப்ரமணிய நாடார்.

 

“ரோட்டில கெடக்குதது எனக்க மகாலெச்சுமியாக்கும்.. இப்பம் இவன் இந்த எடத்திலேயே இதை எடுத்து பொடிதட்டி எனக்க கையிலே தரணும்… எனக்க வலது கையிலே எனக்க மகாலச்சுமிய தரணும்”

 

“எனக்க நாயி எடுத்து தரும். போலேய். லேய், நீ என்னைய ஆள மனசிலாக்கல்லே. உனக்க வெரட்டலு எனக்க கிட்ட வேண்டாம் கேட்டியா?” என்றான் காளை.

 

“எடுத்து என் கையிலே குடுக்கல்லேண்ணா நீரு இந்த எடத்த விட்டு போகமாட்டேரு”

 

“இந்தா போறேம்லே… நீ ஆனத பாத்துக்க”

 

“போய் பாரும் வேய்.. போய்ப்பாரும் வே”

 

‘இந்நா போறேன்… நீ என்னைய நொட்டுவே”

 

“போய்ப்பாரும் வே…”

 

“இந்நா போறேன்லே… நீ என்னை மசுத்துவே”

 

”நீரு போனா உனக்க பைசா இந்தா இங்க கிடக்கும்…நான் தொடமாட்டேன்”

 

“நீ தொடல்லேண்ணா நாயி திங்கட்டும்…போலே. உனக்க மிரட்டலுக்கு வேற ஆளப்பாரு… இந்தாலே உனக்க போணி”

 

சம்புடத்தை வீசி எறிந்துவிட்டு காளை மாணிக்கம் திரும்பி நடந்தான்

 

தங்கன் அந்த இரண்டு ரூபாயை எடுத்து சுருட்டி காதில் வைத்துக்கொண்டு “வேய், இந்நா இந்த ரூபாயை எடுக்கேன். எனக்க கையாலே எடுக்கேன்… வேய் ,அம்மை சத்தியமாட்டு உலக்கை மாடசாமி சத்தியமாட்டு சொல்லுதேன், இந்த ரெண்டு ரூபாய்க்கு சமானமா நீரு இருபது ரூபா எனக்கு குடுப்பீரு…எனக்க வலதுகையிலே எண்ணி எண்ணி குடுப்பீரு” என்றான்

 

“லே நீ சுணையுள்ள ஆம்புளைன்னா எனக்க கையிலே இருந்து ரெண்டு பைசாவ வாங்கிப்பாருலே…. ஏல வாங்கிப்பாருலே”

 

“வாங்குதேம்வே… பாரும்வே”

 

“நீ நொட்டுவே… நீ இதுவரை ஆம்புளைங்கள பாத்ததில்ல… போலே”

 

“வந்து ரூபாய தருவீரு, பாரும்வே வருவீரு”

 

“போலே மயிராண்டி…வாறாக….நீ  வளியப்பாத்துட்டு இருந்துக்கோ .. மாமா நீங்க சாட்சி. இந்த நாயி எனக்கு மசிருக்கு சமானமாக்கும்”

 

‘ஏய் என்னவே சொன்னீரு?”

 

“நீ திருட்டுத் தாயோளீன்னு சொன்னேன்லே… என்னலே செய்வே”

 

தங்கன் சீறி முன்னால் சென்றான்

 

“லே தங்கா வேண்டாம்…லே வேண்டாம்… வயசுக்கு மூத்தவனாக்கும்” என்றர் சுப்ரமணிய நாடார்

 

”வயசப்பாத்து விடுதேன்… போவும்வே”

 

“ஆ, அப்ப பயம் இருக்குல்லா? திருட்டுநாயே… அந்தாலே அடங்கி இருந்துக்கோ… வாறான். நம்மகிட்டையாக்கும் வெளையாட்டு… த்தூ”

 

காளை மாணிக்கம் சென்றபின் ஆசான் கெக்கெக் என்று சிரித்தார்.

 

தங்கன் ”அவ நல்ல குட்டியாக்கும் ஆசானே” என்றார்

 

ஆசான் “நல்ல குட்டிகளுக்க சொபாவமாக்கும் அது” என்றார்

 

“ஆசானுக்கு ஒரு பீடிக்கெட்டு”என்றபின் தங்கன் என்னிடம் திரும்பி “பிள்ளே, பிள்ளை காளை அண்ணனுக்க வீட்டு வளியாட்டுல்லா போவுதது?”என்றான்

 

“ஆமா”

 

“அப்பம் இந்த போணிய அவருக்க வீட்டிலே குடுத்திருங்க…”

 

“போணி கோமதியக்காவுக்க வீட்டிலே உள்ளதா?”

 

”ஆமா, குடுங்க”

 

சண்முகத்திடம் ஜிண்டான் பொட்டலத்தை வாங்கிக்கொண்டு நான் நடந்தேன்.

 

முக்குத் திருப்பத்தில் காளை மாணிக்கத்தின் வீடு. திண்ணையில் அமர்ந்து அவன் பனைநாரால் மூக்கணாங்கயிறை முறுக்கிக்க்கொண்டிருந்தான்.

 

நான் கொல்லைப் பக்கம் போய் ஓலைப்படல் வழியாக எட்டிப்பார்த்தேன். அம்மியில் ஏதோ அரைத்துக்கொண்டிருந்த கோமதியக்கா என்னைப் பார்த்தாள். ‘என்ன பிள்ளே?” அவளுடைய இரட்டை மூக்குத்தியில் கற்கள் உப்புப்பரல்கள் போல ஒளிவிட்டன. சிறிய மூக்கு. மிகச்சிறிய வாய், உருண்டையான முகம். நெளிநெளியான கூந்தல். எனக்கு கோமதியக்காவை பிடிக்கும். அவளுக்கும் என்னை பிடிக்கும்.

 

“இந்த போணிய இங்க குடுக்கச் சொன்னாரு”

 

‘ஆரு?”

 

“அவரு”

 

“கள்ளனா?”

 

அதைச் சொன்னபோது அவள் முகம் ஏன் அப்படிச் சிவக்கிறது என்று எனக்கு புரியவில்லை

 

“ஆமா” என்றேன்

 

அவள் சம்புடத்தை வாங்கி திறந்து மணம்பிடித்தாள்

 

“வரிக்கச் சக்கைச் சுளைக்க மணம்” என்றேன்

 

அவள் மேலும் சிவந்து ,கண்கள் சுருங்கச் சிரித்து, “ஆமா” என்றாள்.

 

============================================================================================

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 7

$
0
0

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 2

சாத்யகி சொன்னான் “அரசவையிலிருந்து வெளியே வந்தபோது உளம்சலித்திருந்தேன். அவ்வண்ணமே திரும்பி ரிஷபவனத்திற்குச் சென்றுவிடவேண்டும் என்றும், என் ஆநிரைகளுடன் அறியாக் காடொன்றில் அமர்ந்திருக்கவேண்டும் என்றும், காட்டுவிலங்குபோல அங்கேயே இறந்து மண்ணாகி மறைந்துவிடவேண்டும் என்றும் விழைந்தேன். ஆனால் என்னால் அது இயலாதென்றும் அறிந்திருந்தேன். அரசே, என் பற்று உங்கள்மேல் மட்டும் அல்ல. நான் இளைஞனாக வந்து இந்த ஐந்து அனல்முத்திரைகளை பெற்றுக்கொண்ட நாளில் கண்ட பொன்பொலிந்த துவாரகை என் கண்ணிலும் கனவிலும் திகழ்கிறது. என் கண்முன் அது சரியலாகாது என்பதே என் விழைவு. எனக்குப் பின் அது என்னவாகும் என்று எண்ண முடியவில்லை. ஆனால் அன்று நான் செய்வதற்கொன்றுமில்லை. இன்று நான் செய்யக்கூடுவன சில உண்டு. அவற்றை செய்யாதொழிந்தால் நான் சென்றமைய எங்கும் நிலைகொண்ட மண்ணிருக்க முடியாது. வேறுவழியே இல்லை.”

ஆம், இப்புவியில் உலகியலில் திளைப்பவர் அனைவரும் அடையும் முதுமைத்துயர் இதுவே. உலகியலில் ஈட்டிய அனைத்தையும் எட்டுக் கைகளாலும் கட்டித்தழுவிக்கொண்டு அசைவிலாது கிடக்கவே அவர்கள் விழைகிறார்கள். எத்தனை இறுக்கினாலும் அது கரைந்தழியும் என்ற உண்மையை அவர்களால் ஏற்கவே முடிவதில்லை. தன் மைந்தரிடமும் அரசை அளிக்கமுடியாத முதிய அரசர்கள் பலர் உண்டு. தன் பெயரர்கள் முதுமக்களாகும் வரை அரியணையில் அமர்ந்தவர்களும் உண்டு. அவர்களை இயக்குவது பொருள்விழைவல்ல, ஆதிக்கவெறியும் அல்ல. தானறிந்த உலகில் தான் ஈட்டியவற்றை அழியாது வைத்துக்கொள்ளவேண்டும் என்ற வீண்எண்ணமே. ஆனால் அதை அறிந்தாலும் அதிலிருந்து என்னால் வெளியேற முடியவில்லை.

அரசரை அவர் தனியறைக்குள் சென்று கண்டேன். அவ்வறைக்குள் இருந்தவர் யுதிஷ்டிரன் என்றே முதலில் நினைத்தேன். யுயுத்ஸு சூழ அமர்ந்த புலவர்களுடன் நூலாய்ந்துகொண்டிருந்தார். குறுகி தழைந்த தோள்கள், தாழ்ந்த தலை. என் சொல்கேட்டு உள்ளே சென்ற ஏவலன் மீண்டுவந்து நுழைவொப்புதலை அறிவிக்க நான் சென்று தலைவணங்கினேன். “அஸ்தினபுரியின் அரசருக்கு வணக்கம். நான் துவாரகையிலிருந்து வருகிறேன்” என்றபோதுதான் அவர் சொற்களின் சூழ்கையிலிருந்து விடுபட்டு என்னை நோக்கி வந்தார். “வருக, யாதவரே! ரிஷபவனத்திலிருந்து வருகிறீர்களா?” என எழுந்து என்னை வரவேற்றார். பீடம் அளித்தார். “நான் துவாரகையிலிருந்து வருகிறேன். அரசுச்செய்தி ஒன்றுடன்” என்றேன். “நீங்கள் அரசியை சந்திக்கவேண்டும்” என்றார்.

நான் ஏற்கெனவே அரசியை சந்தித்ததையும் அவரிடம் கூறியதையும் முழுக்க மீண்டும் உரைத்தேன். கேட்டு முடித்தபின் அவர் விழிகளை சற்று தாழ்த்தி அமர்ந்தபின் “நான் இங்கிருந்து நெறியை மட்டுமே கூற முடியும். அரசி கூறுவதுதான் நடைமுறை மெய்மை. நூல்நெறிகளின் படி பிறிதொரு அரசின் முடிசூழ் உரிமையில் ஓர் அரசன் தலையிடுவதென்றால் மூன்று சூழ்நிலைகள் அமையவேண்டும். தலையிடும் அரசனும் அவ்வரசனும் ஒற்றைக்குருதி கொண்டவர்களாக இருக்கவேண்டும். அதுவே முதன்மைநெறி. அதை சாத்விகம் என்கிறார்கள். அல்லது அவர்கள் ஒரு நதிநீரை பகிர்ந்துகொண்டவர்களாக இருக்கவேண்டும். ஒரு நிலப்பாதையை பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும் அந்நிலையில் தலையிடுவது மத்திமம் எனப்படுகிறது. அவ்வரசன் தன் எதிரிகளுடன் சேர்ந்து ஆற்றல் பெற்றவனாக ஆகும் வாய்ப்பிருக்கும்போது முந்திக்கொள்வது அரசுசூழ்தலில் உகந்தது, அறத்தின்படி அதகம் எனப்படுகிறது” என்றார்.

“யாதவரே, துவாரகையுடன் நமக்கு இம்மூன்று வகையிலும் உறவில்லை. எனில் எவ்வண்ணம் நாம் இதில் தலையிட இயலும்?” என்றார் யுயுத்ஸு. சிற்றவையென சூழ்ந்து அமர்ந்திருந்த புலவர்களில் ஒருவர் “வரலாற்று நூல்களின்படி அஸ்தினபுரிக்கு துவாரகையுடன் எந்த அரசாடலும் இருக்க இயலாது” என்றார். நான் சினத்துடன் எழுந்து தலைவணங்கி “இனி இந்நகருக்குள் இதன்பொருட்டு நான் வரமாட்டேன்” என்று சொல்லி வெளிவந்தேன். ஆனால் அவ்வண்ணம் சொன்னது யுயுத்ஸுவை ஆறுதல்கொள்ளச் செய்வதையே கண்டேன். அவர் “தாங்கள் சினம் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நான் இங்கே அரசன் என அமர்ந்திருக்கவில்லை. தொகுக்கப்பட்ட இரு நெறிநூலடுக்குகளின் காவலன் என என்னை நிறுத்திச் சென்றிருக்கிறார் மூத்தவர்” என்றார்.

அன்றே அஸ்தினபுரியிலிருந்து நீங்கினேன். இன்றைய அஸ்தினபுரி நாம் அறிந்த நகரல்ல. அது பலமுறை சுழற்றிவிடப்பட்ட சூதுச்சகடம்போல் விழிகளை குழப்பியது. நான் பல முறை வழி தவறினேன். அந்தணர் ஒருவரிடம் வழி உசாவியே என்னால் வெளிவர முடிந்தது. முற்றிலும் அயல் முகங்கள். முகங்கள் இடங்களை அயலாக ஆக்கிவிடுகின்றன. தொலைவிலிருந்து பார்த்தபோது அந்நகரின் ஓசையே அயலெனத் தோன்றியது. அதன் கோட்டை பகலொளியில் கண்கூச சுடர்விட்டுக்கொண்டிருந்தது. ஒளியே நம்மை குருடாக்கும் என அங்கே அறிந்தேன். அக்கோட்டையை வெட்டவெளி என எண்ணி அருகணைந்தபின் திகைத்தேன். வழி மீண்டு என் புரவியில் தனித்து துயருற்று மீண்டும் துவாரகைக்கே சென்றேன்.

செல்லும் வழியில் சினம் ஓய்ந்து சொல் தெளிந்தபோது ஒன்று உணர்ந்தேன். அரசே, சம்வகை கூறியது உண்மை, இனி எந்த நாடும் துவாரகையின் அரசியலில் தலையிடப்போவதில்லை. சிந்துநாடு உட்பூசல்களில் சிக்கிக் கிடக்கிறது. கூர்ஜரம் ஒடிந்து கிடக்கிறது. மாளவம் சுருங்கி செயலற்றுவிட்டது. பிற நாடுகள் அனைத்தும் நெடுந்தொலைவில் எங்கோ உள்ளன. குருக்ஷேத்ரப் பெரும்போருக்குப் பின் ஒவ்வொரு நாடும் ஆற்றல் அழிந்துவிட்டிருக்கிறது. ஆற்றல்மிக்க அரசுதான் நாடுகளுக்குள் சிற்றரசர்களையும் குடித்தலைவர்களையும் அடக்கி கோன்மையை நிலைநாட்டியிருக்கிறது. அரசன் தளர்கையில் பூசல்கள் வெடிக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் துவாரகையின் கதையே நிகழ்கிறது. ஆகவே ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டில் பூசல்கள் நிகழ்வதில் ஆறுதல் கொள்கிறது. முடிந்தால் ஒற்றர்கள் வழியாக பூசல்களை வளர்க்கிறது.

பூசல் நிகழும் நாட்டில் முதலில் வீழ்ச்சியடைவது வணிகம். நிலைகொண்ட கோல் இல்லை என்னும் செய்தியல்ல ஐயமேகூட வணிகர்களை விலக்கிவிடுகிறது. அங்கே காவல் இல்லை. கள்வர்களை அச்சுறுத்தும் சொல் இல்லை. அரசனில்லா நாட்டில் நின்ற தூணும் வரி கேட்கும் என்று வணிகர்களிடையே ஒரு சொல் உண்டு. இன்று துவாரகையின் நிலையும் அதுவே. அங்கே உங்கள் மைந்தர்கள் அனைவருமே வரி கொள்கிறார்கள். குடித்தலைவர்கள் தனித்தனியாக வரி கொள்கிறார்கள். ஒருவர் வரி கொண்டார் என்றால் அந்த அளவுக்கு அவர் தன்னை மிஞ்சிவிட்டார் என்று உணர்பவர் தானும் வரி கேட்டு வணிகன் முன் வாளுடன் நிற்கிறார்.

துவாரகைக்கு கரைவணிகர்கள் வராமலாயினர். ஆகவே துறைமுகத்தை கடல்வணிகர்கள் தவிர்க்கத் தொடங்கினர். நாளுக்கு நூறு கலம் வந்த துறைமேடையில் இன்று ஒரு கலம் வந்தணைந்தால் அரிது. வருபவர்களிடமும் தோன்றியபடி வரி கொள்ளப்படுகிறது. வணிகர்கள் ஐயங்களால் ஆட்டுவிக்கப்படுபவர்கள். ஐயங்களை பரப்புபவர்கள். துவாரகையின் தெருக்கள் ஒழிந்துகிடக்கின்றன. பண்டநிலைகள் உப்பு உதிர்ந்து பாழடைகின்றன. ஆயினும் குடிகள் எதையும் உணரவில்லை. அவர்களிடம் சென்றகாலத்துச் செல்வம் எஞ்சியிருக்கிறது. அதைக்கொண்டு முன்பெனவே உண்டு குடித்து களியாடி பூசலிட்டு வாழ்கிறார்கள். அரசே, எக்குடியாயினும் எவ்வரசாயினும் ஒருதலைமுறைக்கு மேல் செல்வம் பெருகிச் செல்லக்கூடாது. களஞ்சியத்தில் நெல் இருப்பவன் வயலில் கிளியிறங்குவதை காண்பதில்லை.

உண்மையில் துவாரகை என்ற பெயரையே பாரதவர்ஷத்தின் மக்கள் மறந்துவிட்டிருக்கிறார்கள். எவரேனும் இயல்பாக அச்சொல்லை சொல்லிக் கேட்பதே அரிதாக இருப்பதை நான் அவ்வாறு எண்ணியபோதுதான் தெளிவுற உணர்ந்தேன். இத்தனை எளிதாக எங்கள் பெருநகர் மறக்கப்படுமென்பதை எண்ணிப்பார்க்க இயலவில்லை. துவாரகைக்குச் செல்லும் வழியில் சிற்றூர் ஒன்றின் அருகே பெருஞ்சாலையோரம் சூதர் குழுவினருடன் அமர்ந்திருக்கையில் பேச்சினூடாக “நான் துவாரகையிலிருந்து வருகிறேன்” என்றபோது ஒருவன் “துவாரகையா? அது அஸ்தினபுரியின் அருகில் அல்லவா உள்ளது?” என்றான். பிறிதொருவன் “இல்லை, தண்டகாரண்யத்திற்கு கிழக்கே” என்றான். இன்னொருவன் “அது முன்பிருந்த ஒரு நகரம், இன்றில்லை” என்றான். ஒருவன் “இன்று அவ்வாறு பல சிற்றூர்கள் உள்ளன” என்றான்.

உடனே ஓர் இசைச்சூதன் கதை சொன்னான். “அறிக, இளைய யாதவரால் கடல்நுரைகளைக் கொண்டு பாறைகள்மேல் உருவாக்கப்பட்டது துவாரகை!” அரசே, அவன் சொன்ன கதை இது. மதுராபுரியை வென்றபின் மூத்தவராகிய பலராமருடன் முடியுரிமைக்காக பூசலிட்டீர்கள். குடிவழக்கப்படி முடியுரிமை மூத்தவருக்கே என்றனர் குடிமூத்தோர். ஆகவே நீங்கள் விலகிச் சென்றீர்கள். தொலைநிலத்துக் கடல்முனை ஒன்றை அடைந்தீர்கள். உங்கள் மாயக்குழலை மீட்டியபடி கரைப்பாறையில் நின்றபோது இசைகேட்டு கடல் கொந்தளித்தது. பொங்கிய அலைகளில் இருந்து வெண்ணுரை கிளம்பி வந்து குவிந்தெழுந்து அந்நகரமாகியது. அதன் குடிகளும் படைகளும் ஏவலரும் காவலரும் உங்கள் குழலிசை உருவாக்கும் மாயையே. “அந்நகர் அவர் கண்ட கனவு. அங்கே குழலிசை கேட்டுக்கொண்டே இருக்கும். ஒருகணம் அதை கேட்காமலாகிறவர்கள் அங்கே நகரமே இல்லை, வெறும் பாறைகள்தான் உள்ளன என்று கண்டு திகைப்பார்கள்” என்றான். சலிப்புடன் நான் எழுந்துவிட்டேன்.

எவ்வண்ணம் ஒரு நகரை இப்படி மறக்கிறார்கள்? அரசே, ஒரு நகர் பாரதவர்ஷத்தின் ஓர் உறுப்பு. அங்கே குருதி என வந்து சென்றுகொண்டிருப்பவர்கள் வணிகர்கள். மூச்சு என வந்து செல்பவர்கள் சூதர்கள். பல்லாயிரம் சிற்றூர்கள் துவாரகைக்காக பொருட்களை செய்தன. பலநூறு நகர்களிலிருந்து அங்கு செல்லும் வண்டிகளும் படகுகளும் கிளம்பின. பல்லாயிரம் பல்லாயிரம் அங்காடிகளில் துவாரகையின் பொருட்கள் விற்கப்பட்டன. கைகளில் திகழ்ந்தன. நாவுகளில் அப்பெயர் ஒலித்தது. சூதரும் வணிகரும் வராதாகும்போது மெல்ல மெல்ல அந்நகர் உயிரற்றதாகிறது. உயிரிழக்கும் உறுப்பு உதிர்வது உடலின் நெறிகளில் ஒன்று. துவாரகையை பாரதவர்ஷம் உதிர்க்க ஒருங்கிவிட்டது. அதில் மீண்டும் உயிர் எழவில்லை எனில் மீள முடியாமல் ஆகும்.

ஆனாலும்கூட சூதர்கள் அதை எவ்வண்ணம் மறக்கிறார்கள்? எண்ணி எண்ணி வியக்கிறேன். இப்புவியில் துவாரகை அளவிற்கு பாடப்பட்ட பெருநகர் பிறிதொன்றுண்டா என்ன? உண்மையில் பாடிப் பாடித்தான் அதை மறக்கிறார்கள். சொல் சேர்த்து சொல் சேர்த்து அதைப் புனைந்து பிறிதொன்றாக்கி விண்ணுக்கு எழுப்பி தங்கள் சொல்லுலகில் கொண்டுசென்று நிறுத்திக்கொண்டார்கள். காவியங்களில் துவாரகை என்றும் இருக்கும். நாவுகளில் என்றும் திகழும். அது பிறிதொரு நகர், அதற்கு மண்ணோ கல்லோ தேவையில்லை. மானுடரோ அரசோ மணிமுடியோ அங்கே இல்லை. அதற்கு காலமில்லை. ஒருவேளை அங்கு ஒளியுடன் அந்நகர் திகழ வேண்டுமெனில் இங்கு இந்நகர் மண்ணில் உதிர்ந்து மறைந்தாகவேண்டும் போலிருக்கிறது.

மானுடர் தங்கள் கனவிலிருந்து எழுப்பிக்கொள்ளும் அப்பெருநகரை எவரேனும் இங்கு வந்து கல்லிலும் மண்ணிலும் கண்டால் சலிப்புறுவார்கள் போலும். அக்கற்பனை மேல் உள்ள வெறுப்பாலேயே இந்நகரை உதறுகிறார்களா? பெருவீரர்கள் இளமையிலேயே உயிர்துறக்க வேண்டுமென்பது ஒரு காவிய நெறி. இருந்து இயலா உடலுடன் அவர்கள் வாழ்வார்கள் எனில் அவர்களின் கதைகள் பொருளிழக்கும். அதுவே துவாரகையின் ஊழா? பாரதவர்ஷமே அவ்வண்ணம் விழைகிறதா? அவ்விழைவுதான் தீச்சொல் என எழுந்து அந்நகரை மூடியிருக்கிறதா? எண்ணும்போது கருநாகம் பாதி விழுங்கிய வெண்பறவை என்றே துவாரகை என் கற்பனையில் எழுகிறது.

எண்ணி எண்ணி சலிக்கிறேன், எவ்வண்ணம் சொற்கூட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை. தாங்கள் தங்கள் கனவிலிருந்து உயிர்கொடுத்து அமைத்த அம்மாநகர் அழிந்துகொண்டிருக்கிறது. துவாரகையின் தெருக்களில் இன்று நிகழ்வதென்ன என்று கூற விழைகிறேன். அரசே, துவாரகை தொலைவிலிருந்து நோக்கும்போதுதான் ஒன்று. அது உள்ளே மூன்று துண்டுகளாக ஆகிவிட்டிருக்கிறது. நகரின் கடலோரத் தென்பகுதியை சத்யபாமையின் மைந்தர்கள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இளவரசர் ஃபானு அங்கே ஒரு யாதவப் படைப்பிரிவை சூழ நிறுத்தி பதினெட்டு துணைமாளிகைகளை தன் ஆட்சியில் வைத்திருக்கிறார். துறைமுகமும் சூழ்பகுதியும் சாம்பனின் ஆணையில் உள்ளன. துறைமுகம் முதல் பண்டநிலை வரை சாம்பன் தனது அசுரப் படைகளை நிறுத்தியிருக்கிறார்.

அரசே, துவாரகையை பிற நிலங்களுடன் இணைக்கும் நான்கு பெருவழிப் பாதைகளையும், அவற்றுக்கு நடுவே உள்ள பாலைவனப் பகுதியையும் ருக்மிணியின் மைந்தர்கள் ஆட்சி செய்கிறார்கள். பிரத்யும்னனின் படைகளின் பாடிவீடுகள் அங்கே அமைந்துள்ளன. சத்யபாமையின் மைந்தர் ஃபானுவின் தலைமையில் அந்தகர்கள் ஒருங்கிணைய போஜரும் விருஷ்ணிகளும் தங்கள் குடித்தலைவர்களின் தலைமையில் அவருடன் முரண்பட்டும் பூசலிட்டும் உடனிருக்கிறார்கள். இன்றுள்ள அரசியல் நாளொரு நிலை என மாறிக்கொண்டிருக்கிறது. சாம்பனும் பிரத்யும்னனுமே முதன்மை எதிரிகள். யாதவர்கள் எப்பக்கம் சேர்வார்கள் என்பதே வினா. ஷத்ரியர்களின் பக்கம் சேர்வார்கள் என்றால் யாதவர்கள் அங்கே இரண்டாம் குடிகள். நிஷாதர்களுடன் சேர்ந்தால் என்றென்றும் தாங்களும் நிஷாதர்களாக கருதப்படுவார்கள். ஆகவே அவர்கள் அந்திப்பறவைகள் என அலைபாய்கிறார்கள்.

அந்த அல்லலை வளர்க்கிறார்கள் பிரத்யும்னனும் சாம்பனும். ஒருவேளை யாதவர்கள் மறுபக்கம் செல்வார்கள் என்றால் தங்களுக்கு ஆதரவாக அக்குடிகளில் ஒன்றை பிரித்தெடுத்துக்கொள்ளும் திட்டம் இரு சாராருக்குமே உள்ளது. ஆகவே இரு சாராருமே யாதவர்களிடையே பூசலை வளர்க்கிறார்கள். உண்மையில் யாதவர் நடுவே இருக்கும் இப்பூசலே இன்று துவாரகையில் இன்றுநாளை என போரை ஒத்திப்போட்டு செயற்கையான அமைதியை உருவாக்கியிருக்கிறது. யாதவர் ஒருங்கிணைந்து ஒருபக்கம் சென்றால் போர் தொடங்கிவிடும். சாம்பனும் பிரத்யும்னனும் போரிட்டால் இரு பக்கமும் அழிவே எஞ்சும். நிஷாதர்கள் எண்ணிக்கை வல்லமை கொண்டவர்கள், ஷத்ரியர்கள் போரில் வெறிகொண்டவர்கள். நடுவே யாதவர்களோ பூசலிடும் விழைவை வெல்லத் தெரியாதவர்கள்.

அரசே, யாதவர் நடுவே சிறிய சண்டைகள் ஓய்ந்த நாளே இல்லை. நான் கிளம்பும் அன்று கூட அந்தகர்களின் குழு ஒன்று சென்று போஜர்களின் குடிகளைத் தாக்கி படைக்கலங்களையும் செல்வங்களையும் கொள்ளையடித்து மீண்டது. போஜர்கள் அந்தகர்களை தாக்கினார்கள். எந்த நோக்கமும் இல்லாமல் விருஷ்ணிகளில் சிலரும் சேர்ந்து அந்தகர்களை தாக்க ஃபானுவின் படை வந்து போஜர்களை மட்டும் தாக்கி துரத்தியது. விருஷ்ணிகளை அரசப் படைகள் தாக்கவில்லை என்ற செய்தி பரவியபோது போஜர்களும் அந்தகர்களும் இணைந்துகொண்டனர். அவர்கள் விருஷ்ணிகளை தாக்க முற்பட்டனர். நான் என் படைகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டு நிறுத்தி இரு யாதவநிரைகளையும் பிரித்து இரவெலாம் பேசிப் பேசி சொல்லமையச் செய்தேன்.

துவாரகையின் அரியணைப் போட்டியில் அயலவர் இன்னமும் நேரடியாக பங்கெடுக்கவில்லை. ஆனால் எப்போது வேண்டுமென்றாலும் படையுடன் வந்து துவாரகையைச் சூழ்ந்துகொள்ளச் சித்தமாக இருப்பதாக விதர்ப்பத்தின் ருக்மி பிரத்யும்னனுக்கு செய்தி அனுப்பியிருக்கிறார். அவர் உண்மையில் துவாரகைக்கு அரசராக வேண்டுமென விழைவது சாருதேஷ்ணனைத்தான். பிரத்யும்னனின் குருதியில் வந்த மைந்தர் அனிருத்தன் பாணாசுரரின் மகள் உஷையை மணந்திருக்கிறார். அவரே பிரத்யும்னனுக்குப் பின் அரசராகக்கூடும். அனிருத்தனின் மைந்தர் வஜ்ரநாபனின் படைக்கலம்கொள்ளல் சடங்கை பெருவிழாவாகவே பிரத்யும்னன் எடுத்தார். அது ருக்மியை சினம்கொள்ளச் செய்திருக்கிறது. அது ஒரு சிறு தயக்கமாக எஞ்சியிருக்கிறது.

ஆனால் அந்தகர்களின் தரப்பில் கிருதவர்மன் களமிறங்குவார் என்றால் ஐயமே இன்றி உடனே ருக்மி படைகொண்டு வருவார். மதுராபுரியிலிருந்து பலராமரின் படைகள் துவாரகைக்கு வருமென்றாலும் ருக்மியின் படை நகருக்குள் நுழையும். அசுரர்களின் ஆதரவு எவருக்கு என்பது இன்னும் தெளிவாகவில்லை. பாணாசுரரின் குடியின் ஆதரவு அனிருத்தனுக்கே என எண்ணப்படுகிறது. சம்பாசுரரும் ஹிரண்யநாபரும் பிரத்யும்னனையே ஆதரிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் நிஷாதராகிய சாம்பனை ஆதரிக்கும் வாய்ப்பும் உண்டு. துவாரகை அயல்நிலத்துப் படைகளின் ஆடற்களமாக எக்கணமும் ஆகக்கூடும். அரசே, உச்சிக்கோடையில் புல்வெளி என இருக்கிறது துவாரகை. இளவரசர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களில் பற்றி எரியும் நெருப்பை அணைக்கும் பதற்றத்தில் இருக்கிறார்கள்.

அரசியர் எண்மரும் இந்த அரசியலிலிருந்து முற்றாக விலகிவிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் இந்நகரத்தை ஆண்ட பேரரசி சத்யபாமை முற்றிலும் துறவு பூண்டதுபோல் கடலோரத்தில் சிறுமாளிகையில் தனித்து வாழ்கிறார். ஒருநாளும் தன் மைந்தர்கள் தன்னை வந்து சந்திக்கலாகாதென்று ஆணையிட்டிருக்கிறார். செய்திகள் எதையும் எவரும் அங்கே கொண்டுசென்று சேர்க்க கூடாதென்று சொல்லப்பட்டிருக்கிறது. யாதவ அரசி பாமைக்கு ஒவ்வொரு சொல்லுக்கு எதிர்ச்சொல் வைத்தவர் ஷத்ரிய அரசி ருக்மிணி. எண்ணத்திற்கு எதிரெண்ணம் என நிகழ்ந்தவர். இன்று செயலோய்ந்து மைந்தருடன் தங்கியிருக்கிறார். அவரும் அவ்வண்ணமே அரசு செய்திகள் எதையுமே கேட்டு அறிவதில்லை.

ஒருவகையில் அவர்களின் விலக்கமும் நகருக்கு நன்றென்று தோன்றுகிறது. அவர்கள் சொல் எவ்வகையிலும் பொருள்கொள்ளப்போவதில்லை. மைந்தர் வளர்ந்து அவர்களின் கைகளை கடந்துசென்றுவிட்டிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் கண்காணிக்கிறார்கள். எதிரிகள் குறித்த செய்திகளை நாளுக்கு நூறுதடவை கேட்டு அறிந்துகொள்கிறார்கள். எதிரிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். எண்ணுகிறார்கள், கனவுகாண்கிறார்கள். அங்கே பிறிதொரு சொல்லோ எண்ணமோ கனவோ இல்லை. ஒருவர் கொள்ளும் வஞ்சம் அவர் எதிரியிலும் அதே வகையில் வஞ்சத்தை எழுப்புகிறது என்பதை இப்போது கண்டேன். வஞ்சம்போல் பிரதிபலிப்பது வேறொன்றும் இல்லை. வஞ்சம் இலாத ஒருவரேனும் துவாரகையில் உண்டா என்பதே ஐயமாக இருக்கிறது.

வஞ்சச் சூழல் பிறரை அங்கே வாழமுடியாமலாக்குகிறது. நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் திரிந்தே பொருள்படுகிறது. எவரிடமும் விழிநோக்கி பேசமுடிவதில்லை. மெல்லமெல்ல நாமும் சொற்களை எண்ணித்தெரிந்து சொல்லத் தொடங்குகிறோம். நம் உள்ளமும் சூழ்ச்சி கொள்கிறது. எண்ணினால் விந்தை, மொழி இத்தனை ஆழ்ந்த பள்ளங்கள் கொண்டது, இத்தனை அவிழ்க்க முடியாத சிடுக்குகள் கொண்டது என இன்றே அறிந்தேன். அதைவிடவும் விந்தை ஒன்றுண்டு. நற்பொழுதுகளில் மொழியை இனிதாக்கும் கவிதைகளும் பாடல்களும் வஞ்சச் சூழல்களில் எரியை காற்றென ஐயங்களையும் குழப்பங்களையும் பகைமையையும் மூட்டிவிடுகின்றன. அரசே, இன்று துவாரகையில் வஞ்சம் அணையாது திகழ்வது சூதர்களால்தான்.

அங்கு இனி திகழும் சொல்லென ஒன்றே எஞ்சுகின்றது. தங்கள் ஆணை. தாங்கள் வந்தாகவேண்டும். நகர்புகுந்து தந்தை என எழுந்து தங்கள் மைந்தருக்கு ஆணையிடுக! அந்நகர் மேல் தங்கள் கோல் எழவேண்டும். தாங்கள் அங்கு மீண்டும் அரியணை அமராவிடில் அந்நகர் அழியும், ஐயமில்லை. அதை கூறவே இங்கு வந்தேன். தாங்கள் அந்நகரை ஆக்கியது இத்தகைய கீழ்மை நிறைந்த அழிவின் பொருட்டல்ல அல்லவா? உங்கள் சொல்லுக்கு நிகராக துவாரகை என்னும் பொருளும் அங்கே நிலைகொள்ளவேண்டும் அல்லவா? அரசே, ஆக்கப்பட்ட அனைத்தும் அழியும் என்பதை அறிந்திருப்பீர்கள் என்பதை அறியாதவனல்ல நான். ஆனால் அவை தன் கண்ணெதிரிலேயே அழியவேண்டுமென்று விழைபவர் எவரும் இருக்கமாட்டார்கள். மைந்தர் சாவை கண்முன் காண்பதைப்போல் தந்தைகொள்ளும் பெருந்துயர் வேறேது?

ஆம், நீங்கள் அளித்த பெருஞ்செல்வத்தை யாதவர் இழந்துவிட்டனர். பேரருவி முன் கைக்குவை நீட்டி நீர் அருந்துபவர்கள் அவர்கள். அவர்களின் விடாயளவே அவர்களுக்குத் தேவை. தங்கள் சிறுமையை அவர்கள் இன்னும் உணரவில்லை. அச்சிறுமையையே படைக்கலம் என, பீடமெனக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை நீங்கள் அறியமாட்டீர்களா என்ன? அறிந்த பின்னர் நீங்கள் அளித்ததுதானே அந்நகர்? அரசே, இன்று அவர்கள் சிறியோர் ஆக இருக்கலாம். அவர்களின் குருதியில் பெருமைமிக்க மைந்தர் எழக்கூடுமே? அவர்களின்பொருட்டு அந்நகர் அங்கே நின்றிருக்கலாகுமே? அந்நகரை அவர்கள் இழந்தால் எழும் மைந்தர் இடிபாடுகளை அல்லவா அடைவார்கள்? இன்மைகூட நன்று, அங்கே கனவுகள் எழமுடியும். அரசே, இடிந்தவை மாபெரும் சுமை. அவற்றைக் கடந்து முளைத்தெழுவது பற்பல தலைமுறைகளால் இயல்வது அல்ல.

சாத்யகியின் குரல் எழுந்தது. அவன் குனிந்து இளைய யாதவரின் கால்களை பிடித்துக்கொண்டான். “எழுக அரசே, தங்கள் குடி காக்க எழுக! எங்கள் கொடிவழியினருக்காக எழுக! உங்கள் அடிவணங்கி இதுநாள்வரை வாழ்ந்தவன். என் குருதிவழியின் இறுதித்துளியையும் தங்கள்பொருட்டு அளித்தவன். என் விழிநீர் கண்டு இரங்குக! அங்கு நீங்கள் எழுந்தருளுவதொன்றே போதும். தங்களால் ஒரு சொல்லில் ஒரு விரலசைவில் அந்நகரை மீட்க இயலும். பிற எவரையும்விட அதை நன்கு அறிந்தவன் நான். தெய்வமொன்றே எங்களை காக்கமுடியும், பிறிதொரு தெய்வம் எங்களுக்கு இல்லை. தெய்வமெழுந்தும் எங்கள் குலம் அழியுமென்றால் இப்பாரதவர்ஷத்தின் குலங்களில் கீழ்க்குலம் என்றே நாங்கள் அறியப்படுவோம். அருள்க!”

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 17146 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>