Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16850 articles
Browse latest View live

மழைப்பயணம் –கடிதங்கள்

$
0
0

அன்புள்ள ஜெ,

மழைப்பயணம் பற்றிய கட்டுரை வாசித்தேன். இந்த சூழலில் இப்படி பயணம் செய்யக்கூடாது. உருமாறிய வைரஸ் எப்படி இருக்கிறது என்று தெரியாது. நோய் வந்து சென்றதோ அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டதோ உறுதியான பாதுகாப்பை அளிப்பது அல்ல. ஆனால் நீங்கள் பயணம் செய்யாமலும் இருக்க முடியாது. சாவு என்றாலும்கூட பயணத்தைத் தேர்வுசெய்வீர்கள் என்று தெரியும். ஆகவே உங்கள் மனநிலையையும் புரிந்துகொள்கிறேன்.

அர்விந்த்குமார்

***

அன்புள்ள ஜெ

நலமா?

குதிரேமுக் டிரெக்கிங் பற்றிய குறிப்பை வாசித்தேன். எட்டு ஆண்டுகளுக்கு முன் நான் நண்பர்களுடன் சென்றிருந்தேன். ஆனால் கோடைகாலத்தில். அப்போதும் பசுமையாகவே இருந்தது. ஆனால் மழை இல்லை.

மழைக்காலத்தில் குதிரேமுக் டிரெக்கிங் ஆபத்தானது என்று அப்போது சொன்னார்கள். பாறைகள் உருள்வதுண்டு. மழைநீர் பாதை வழியாகவே பெரிய காட்டாறாக வருவதும் உண்டு. அங்கே மேகக்கிழிசல் போல ஒரே இடத்தில் சட்டென்று தீவிர மழை பொழியும். மிகப்பெரிய விசையுடன் காட்டாறு உருவாகி வரும். கர்நாடகத்தின் மலநாடு தென்னகத்திலேயே அதிக மழைபெறும் இடம். துங்கா, பத்ரா, காவேரி போன்ற பெரிய ஆறுகளும் ஏராளமான நடுத்தர ஆறுகளும் உருவாகும் இடம் அந்த மலைப்பகுதிதான். அங்கே திடீர் வெள்ளங்கள் சகஜம். சிருங்கேரியில் அப்படி ஒரு திடீர்வெள்ளத்தில்தான் எழுத்தாளர் ஆதவன் மறைந்தார். கவனமாகச் சென்றிருக்கவேண்டிய பயணம்.

அட்டைக்கடியின் அரிப்பிலிருந்து விடுபட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்

ஆர்.ராஜகோபால்

***

அன்புள்ள ஜெ,

ஆகும்பே ராஜநாகம் மழை என்று எல்லாமே ஒரு கனவுபோல இருக்கிறது. நானே ஆகும்பே பற்றி ஒரு கற்பனை வைத்திருக்கிறேன். முடிந்தால் நல்ல மழைக்காலத்தில் அங்கே சென்று ஒருநாள் மழையோசையைக் கேட்டுக்கொண்டு தங்கியிருக்கவேண்டும்.

ஜெயக்குமார் ராமநாதன்

நிலவும் மழையும்- 4
நிலவும் மழையும்- 3
நிலவும் மழையும்-2

நிலவும் மழையும்-1


தனிமை -ஆனந்த்குமாரின் மூன்று கவிதைகள்

$
0
0

ஆனந்த் குமார் கவிதைகள் இணையப்பக்கம்

தனிமையைக் கவிஞர்கள் எழுதத்தொடங்கி எத்தனை காலமாகிறது. கவிதை என ஒன்று இருக்கும் வரை அதை எழுதிக்கொண்டிருப்பார்கள் போல. கவிதையே தனிமையை எழுதும்பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு கலைவடிவம்தானா? கவிதையே தனிமையை உருவாக்கிவிடுகிறதா என்ன? மெலிந்து மெலிந்து திரையென்றாகி விட்ட சுவர்.ஆயினும் அதை விலக்கியாகவேண்டும். ஆயிரம் அகச்சுவர்களைக் கடந்து.

உறுதியான கதவல்ல

வாசலில் நெகிழ்வதோர் திரை.

நீ நினைத்தால்

உள்ளே வந்துவிடலாம்

அழைப்பு மணி ஏதுமில்லை

ஒரு தாழ்ப்பாள் போலுமில்லை

திறந்து வருதல் அத்தனை எளிது.

உன் வருகையை

அது எனக்கு அறிவிப்பதில்லை

ஒத்துக்கொள்கிறேன்

எப்படியும் அதை விலக்கித்தான்

என்னிடம் நீ வரவேண்டியிருக்கிறது.

நான் காத்திருக்கிறேன்

வாசலின்

அத்தனை வாசல்களிலும்.

சிறிய காற்றிற்கு

எழுந்து வருகிறது,

பின்

தொடாமல் மீள்கிறது

ஒரு மெலிந்த அலை.

அந்தக் கவிதையில் அலையென நெளியும் திரையே இந்தக் கவிதையில் நாவென ஆகி உலகத்தால் பார்க்கப்படாத தீவை நக்கி நக்கி உவர்ப்பு கொள்கிறது. குருதிப் புண்ணை நக்கி நக்கி பெரிதாக்கும்  ஊனுண்ணிவிலங்குபோல. அச்சுவை அதற்கு போதையும் வெறியும் ஏற்றுகிறது. புண்ணை நக்கும் விலங்கு தன் சாவை நக்கி நக்கி அருகே கொண்டுவருகிறது.

அந்தத் தனித்தீவின்

பெருங்கடலுக்கு வயதாகிறது

இன்னும் யாரும் வந்து

பார்க்கவில்லை

காதலரும் முன்அமர்ந்து

பேசவில்லை

ஒருசொல்லும் முன்நின்று

எழவில்லை

ஒருவன் கண்ணீர்கூட

அதில் சேரவில்லை

நாவை

நீவி நீவி விடுகிறது

வெண்மணலில்.

தன்னை சுவைத்துத்

தானெனக்கிடந்த

அதற்கு

அத்தனை உவர்ப்பு.

அகன்று செல்லும் பாதைகள் அளிக்கும் தனிமையை ரயில் பயணங்களில் காணமுடியும். எவரெவரோ நடந்த பாதை. ஒரு நினைவு வடு. எல்லா வடுக்களும் தனிமையையே அடையாளப்படுத்துகின்றன

புழுவென
நெளிந்து எழுந்து
வளைந்து சென்ற
பாதை
விடியலில்
கொஞ்சம் நின்றது.

பாதை கடந்து
அலையென நீண்டு மேடேறிச்
செல்கிறது
விடியல்.

விடியலைச்
சுமந்து செல்லும்
பாதை
இப்போதொரு நத்தை

மொக்கவிழ்தலின் தொடுகை

வரவிருக்கும் படங்கள்

$
0
0

பொன்னியும் கோதையும்

ஒரு சினிமாவின் அறிவிப்பு வந்ததுமே தமிழ்ரசிகர்கள் கொள்ளும் உற்சாகம் சினிமா மேல் மங்காத நம்பிக்கையை அளிப்பது. வெற்றிமாறனின் விடுதலை அறிவிப்பு வந்ததுமே என்னுடைய துணைவன் கதைக்கான விசாரிப்புகள் பெருகின. இப்போது பொன்னியின் செல்வன் பற்றிய செய்தியும் மறுநாளே வெந்து தணிந்தது காடு அறிவிப்பும் வந்துள்ளது. மின்னஞ்சல்பெட்டி நிறைய அதைப்பற்றிய கேள்விகள்தான். சம்பந்தமே இல்லாதவர்கள். எனக்கு இணையதளம் ஒன்று இருப்பதே பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

ஒரு சினிமா தயாரிக்கப்பட்டு அரங்குக்கு வர மாதக்கணக்கிலாகிறது. அதுவரை அதுபற்றிய செய்திகள் ரகசியமாகவே இருக்கும். அப்போதுதான் சினிமா புதியதாக இருக்கும்.ஆகவே சினிமா சார்ந்த எவருக்குமே ரகசியக்காப்பு உறுதிப்பாடு அளிக்கும் கடமை உண்டு. எனவே பெரும்பாலும் வாய்திறக்கவே மாட்டார்கள். இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆகவே கடிதங்கள் வழியாகச் செய்திகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.

பெரும்பாலானவர்கள் கேட்கும் கேள்விகளில் பதிலளிக்கத் தக்கவையாக சிலவே உள்ளன.

பொன்னியின்செல்வன் கல்கியின் நாவலை அடியொற்றியே எடுக்கப்படுகிறது. தேசிய அளவில் ராஜராஜ சோழன் என்ற ஆளுமையை, சோழப்பேரரசின் சித்திரத்தை கொண்டுசெல்வதே நோக்கம். இந்தியாவில் தமிழகத்திற்கு வெளியே ராஜராஜசோழன் நேரடியாக ஆட்சி செய்த கேரளத்திலும் கர்நாடகத்திலும் கூட அவர் பெயர் எவருக்கும் தெரியாது. ஆய்வாளர்கள்கூட மேலோட்டமாகவே தெரிந்துவைத்திருக்கிறார்கள். நாம் அசோகரையோ ஹர்ஷவர்த்தனரையோ தெரிந்து வைத்திருப்பது போல அவர்கள் நம்மை தெரிந்துவைத்திருக்கவில்லை. அதற்குரிய காரணங்கள் பல.

ஒரு வரலாற்று ஆய்வேடு அல்லது ஆவணப்படம் வழியாக ராஜராஜசோழனை, சோழப்பேரரசை இந்தியாவெங்கும் மக்களிடையே கொண்டுசெல்லமுடியாது. ஓர் பண்பாட்டு அடையாளமாக நிலைநாட்டவும் முடியாது. பலகோடிப்பேர் பார்க்கும் ஒரு வணிகப்பெரும்சினிமாவாலேயே அதற்கு இயலும். பொன்னியின்செல்வன் அத்தகைய கதை.அது குழந்தைகளுக்குரிய உற்சாகமான சாகச உலகமும், மர்மங்களும், உணர்ச்சிகரமான நாடகத்தருணங்களும் வரலாற்றுப்பின்புலமும் கலந்த ஒரு கதை. அந்த கலவை வெகுஜனங்களுக்குரியது. ஆகவே பொன்னியின்செல்வன் எடுக்கப்படுகிறது. சோழர்காலம், ராஜராஜ சோழன் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களும் ரசிக்கும்படியாக எடுக்கப்படுகிறது. இந்தியாவெங்கும் சென்றுசேரும்படியாக.

பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக மூன்றும் மூன்றுமாக ஆறுமணிநேரம் அமையலாம். நாடகத்தனம், நிறைய வசனங்கள் கொண்ட வழக்கமான சரித்திரசினிமா அல்ல. காட்சிவிரிவு மேலோங்கிய சினிமா. நாவலின் காட்சிப்படுத்தல் அல்ல சினிமா. சினிமா தனக்குரிய அழகியல் கொண்ட ஒரு தனிக்கலை. பொன்னியின் செல்வன் பெரும் செலவில், பெரும் உழைப்பில் எடுக்கப்படுகிறது. இதுவரை இந்தியாவில் எடுக்கப்பட்ட சினிமாக்களிலேயே இதுதான் செலவில் மிகப்பெரிய படம். ஒவ்வொரு பைசாவாக எண்ணி எண்ணிச் செலவிட்டு எடுக்கும் மணிரத்னம் எடுக்கும்போதேகூட.

பொன்னியின் செல்வனின் நடிகர்கள் பற்றி வரும் செய்திகள் ஏறத்தாழ உண்மை. ஆனால் அவர்களின் தோற்றம் ஆனந்தவிகடனால் வரையப்பட்டது. அப்படி மிகையான ஆடையாபரணங்களுடன் இன்றைய சினிமா இருக்கமுடியாது. எந்த சினிமாவும் கதாபாத்திரங்களின் தோற்றத்தை இத்தனை முன்னரே வெளியிடாது.

பாடல்களை இளங்கோ கிருஷ்ணன் எழுதுகிறார். மணிரத்னம் புதிய சொற்சேர்க்கை தேவை என்று சொன்னதனால் நான் சிபாரிசு செய்தவர் அவர். மரபிலக்கியம் அறிந்த நவீனக்கவிஞர் தேவைப்பட்டார், இளங்கோவே தமிழில் என் முதல் தெரிவு. ஆனால் அவருடைய அத்தனை கவிதைகளையும் படித்து, பலமணிநேரம் காணொளிகளை பார்த்து அவரை மதிப்பிட்டு அறுதி முடிவெடுத்தவர் மணி ரத்னம். அதனாலேயே அவர்மேல் பெருமதிப்பு கொண்டவராகவும் ஆனார். இளங்கோ ஒரு கவிஞராக அவர் அடைந்த உச்சகட்ட மதிப்பை இந்த சினிமாக்களத்திலேயே பெற்றிருப்பார்.

என்னுடைய நீலம் நாவலின் சிலபகுதிகளை பாடலாக ஆக்க மணி ரத்னத்திற்கு எண்ணமிருந்தது. நீலம் நாவல் அவருக்கு மிக உவப்பான ஒன்று. அது வெளிவந்தகாலத்திலேயே அவருடைய கடிதம் வந்திருக்கிறது. ஆனால் அப்பகுதிகள் இசைக்குள் சரியாக அமையவில்லை. இசையுடன் அவற்றை இணைக்கும் பணி என்னால் இயல்வது அல்ல. நீலம் நாவலை ஒட்டி வெண்பா கீதாயன் எழுதிய குறிப்புகளின் அடிப்படையில் அவருடைய வரிகள் இசையமைக்கப்பட்டன.

பொன்னியின் செல்வன் சாதாரண சினிமா அல்ல. இத்தகைய படங்கள் பொழுதுபோக்கு என்பதைக் கடந்து பண்பாட்டு முகத்தை உருவாக்குகின்றன. மிகவிரிந்த காட்சியமைப்பு கொண்ட பெரிய படங்களே நம் இறந்தகாலம் பற்றிய சித்திரத்தை உருவாக்கி நம் இளைய தலைமுறையின் நினைவில் நிறுத்தமுடியும். நம் பெருமையை வெளியே கொண்டுசெல்லமுடியும் பாகுபலி வெறும் ஒரு ராஜாராணி கதை. பொன்னியின் செல்வன் வரலாறும்கூட. தமிழ்ப்பண்பாட்டின் உச்சக் காலகட்டத்தின் சித்திரம் அது.

எனக்கு பெரிய ‘செண்டிமெண்ட்’ எல்லாம் இருக்கவில்லை. ஆனால் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளில் ரத்தமும் புகையுமாக புலிக்கொடி மெல்ல ஏறி மேலே பறக்கும் காட்சியில் சட்டென்று உளம்பொங்கி மெய்சிலிர்ப்பு அடைந்து கண்கலங்கிவிட்டேன். இது நம்முள் நம் முன்னோர் பற்றி நாம் கொண்டுள்ள பெருமிதம். அந்தப்பெருமிதம் சற்றேனும் உள்ளவர்களையே பொன்னியின் செல்வன் தன் முதன்மைப் பார்வையாளர்களாகக் கொண்டுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ முதலில் நதிகளில் நீராடும் சூரியன் என்று பெயரிடப்பட்டிருந்த படம்தான். அந்தக்கதை மென்மையான நகர்ப்புறக் காதல்கதை. அதுவும் பின்னர் படமாகவே வாய்ப்பு. சிலம்பரசன் இப்போது உடல்மெலிந்து, மென்மீசையுடன் மிக இளைஞராக, கிட்டத்தட்ட சிறுவன் போல இருக்கிறார். அவருக்கு பொருந்தும் கதை என்பதனால் இது தெரிவுசெய்யப்பட்டது. அவருக்காக கதை உருவாக்கப்படவில்லை, கதைக்காக அவரே தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார்.

அசுரன் அல்லது கர்ணன் போன்ற கிராமப்புறக் கதை அல்ல இது. கிராமப்புறமும் உண்டு. பரபரப்பான, ஆனால் மிகையான சாகசங்கள் ஏதும் இல்லாத நம்பகமான சினிமா. வேறு படங்களின் சாயல் ஏதும் இல்லாதது. கௌதம் வாசுதேவ் மேனனின் ஸ்டைலான படமாக்கல் உடையது. ஆனால் rustic என்று சொல்ல்லப்படும் கரடுமுரடான அழகியல் கொண்டது.

இந்தப்படங்களில் என் பணி முடிந்தபின்னரே படங்கள் ஆரம்பிக்கின்றன. நான் கௌதம் வாசுதேவ் மேனனின் அடுத்தபடம், வசந்தபாலனின் அடுத்த திட்டம் என முன்னகர்ந்துவிட்டேன்.

நன்றி. மேற்கொண்டு சினிமா பற்றிய பேச்சுக்கள் இல்லை.

பொன்னி,கோதை – கடிதங்கள்

பொன்னியின் செல்வன், ஒரு கடிதம்

குருகுலம் என்பது…

$
0
0

சொல்முகம் வாங்க

அன்புள்ள ஜெ

சொல்முகம் நூலில் நீங்கள் சிலாகித்திருக்கும் துறவு இன்றுகூட பெண்களுக்கு உரியதாக இல்லை. நீங்கள் சொல்லும் குருகுலத்தில் இருக்கும் அர்ப்பணிப்புடன் ஒரு மாணவப்பருவம் இருக்க வேண்டும் என்பது சிறப்புதான். ஆனால் குருகுலத்தின் மாடல் பழைய குருகுலத்தின் மாடலாக இருக்க கூடாது. நீங்கள் குருகுலம் என்று சொன்னவுடன் பழைய மாடலுக்கு மாற்றான என்ன மாதிரியான குருகுலத்தை முன்வைக்கிறீர்கள் என்பதையும் எங்காவது குறிப்பிடுங்கள். யாருக்குத் தெரியும், இன்றில்லாவிட்டாலும் என்றாவது புதிய குருகுலங்கள் உருவாகலாம்.

புதிய மாதவி

மும்பை

அன்புள்ள புதிய மாதவி,

துறவு இன்றும்கூட இந்துமதம், சமண மதம் உட்பட பல மதங்களில் பெண்களால் இயல்பாக ஏற்கப்படுகிறது. அவர்களுக்குரிய நெறிகள் சற்றுக் கடுமையானவையாக உள்ளன என்பது உண்மை. அதற்கு அவர்கள் பெண்கள் என்பது மட்டும் காரணமல்ல. நம் சமூகத்தின் ஒட்டுமொத்தமான பார்வையே காரணம்.

ஏனென்றால் ஒடுங்குதலே துறவு. பெண்கள் உடலை ஒடுக்கவேண்டும் என்றால் அவர்களின் உடல் பார்க்கப்படலாகாது, பாராட்டப்படலாகாது என சமணமும் பௌத்தமும் இந்துமதமும் கிறிஸ்தவமும் எண்ணுகின்றன. பெண்கள் உறவுகளை இயல்பாக உருவாக்கிக்கொள்பவர்கள், ஆகவே அவர்களின் தொடர்புகள் வெட்டப்படுகின்றன. சரியா தவறா என நான் விவாதிக்க மாட்டேன். அது அவர்களின் வழி.

நான் குருகுல முறையைப் பற்றிச் சொல்லும்போது சென்றகாலத்து நெறிகள் ஆசாரங்களை குறிப்பிடவில்லை. ஓர் ஆசிரியனுக்கும் மாணவனுக்குமான நேரடியான, நெருக்கமான, தொடர்ச்சியான உறவையே குறிப்பிட்டேன். அந்த உறவு இருந்தால் அது இயல்பாகவே குருகுலமே.

நான் அத்தகைய குருகுலத்தில் [ஸ்ரீநாராயண குருகுலம், ஊட்டி] என் மெய்யான கல்வியைப் பெற்றவன் என்பதனால் அதை முன்வைக்கிறேன். அது மரபான கல்விமுறையை கடைப்பிடிக்கும் அமைப்பு. ஆனால் மரபிலிருந்த சாதிமுறை, மூடநம்பிக்கை, பொருளில்லா ஆசாரங்கள் அனைத்துக்கும் எதிரானது.

இயல்பாகவே ஒன்றை நாம் கவனிக்கலாம். நாம் எல்லா கல்வியையும் சில குருநாதர்களிடம் இருந்தே பெற்றிருப்போம்.கல்விநிலையங்களிலேயே அப்படி சில குருக்கள் இருப்பார்கள். அதன்பின் தொழில் தளங்களில் ஆசிரியர் கிடைப்பார்கள்.கலையிலக்கியத் தளத்து ஆசிரியர்கள் வருவர். ஞானாசிரியர் அமைவர்.

ஏனென்றால் மனிதன் மனிதனிடமிருந்தே கற்றுக்கொள்ள முடியும். அமைப்புகளிடமிருந்து அல்ல. தன்னை அறிந்த ஒரு மனிதனிடமிருந்து அவர் உவந்து அளிப்பவற்றை பெற்றுக்கொள்கையிலேயே பிழையறக் கற்கிறோம். அன்பே கல்விக்கான ஊடகம். கல்வி எந்நிலையிலும் ஒரு பெருங்களியாட்டாகவே இருக்க முடியும்.

அத்தகைய கல்வி உண்மையில் நடக்கும்போது நாம் அதை உணர்வதில்லை. ஆகவே அதன்பொருட்டு நேரம் ஒதுக்குவதில்லை. அது முக்கியமானதென்னும் எண்ணமும் இருப்பதில்லை. அதை எவ்வகையிலும் முறைப்படுத்திக்கொள்வதில்லை. ஆகவே அது பெரும்பாலும் அரைகுறையாக நிகழ்கிறது. பின்னாளில் நினைத்து ஏக்கமும் வருத்தமும் அடைகிறோம்.

அத்தகைய கல்வியை அடையாளம் கண்டு அதற்கான அமைப்புக்களை உருவாக்குவதைப் பற்றி மட்டுமே பேசுகிறேன். பழமையான அமைப்புக்களை திரும்ப உருவாக்குவது பற்றி அல்ல. பழைய சம்பிரதாயங்கள், ஆசாரங்கள், மனநிலைகளை மீட்பதைப் பற்றி அல்ல. அவையெல்லாம் தேவை இல்லை. குருகுலத்தின் கல்விமுறை, அதற்கான உளவியல் மட்டுமே தேவை

அதுவும் அந்தக் கல்வி அனைவருக்குமான பொதுக்கல்விக்கு உகந்தது அல்ல. அதற்கு இன்றிருக்கும் கல்விமுறையே உகந்தது. தனித்திறன் வெளிப்படும் துறைகளுக்கான கல்வியிலேயே குருகுல முறை தேவை. ஒருவன் ஓவியனாகவேண்டும் என்றால் ஓவிய அடிப்படைகளை ஓவியக்கல்லூரியில் கற்றுக்கொள்ளவேண்டும். அதன் பின் ஓவியர் சந்துருவுடன் அவருடைய குருநிலையில் சென்று தங்கி உடன் வாழவேண்டும். அது ஒரு குருகுலம், நான் சொல்வது அதைத்தான்.

ஜெ

குருகுலமும் கல்வியும்

மணிமேகலை சீவகசிந்தாமணி- காவியங்களை வாசித்தல்

கற்றல்- ஒரு கடிதம்

வெண்முரசு கேட்க…

$
0
0

ஆசானுக்கு வணக்கம் ,

வெண்முரசு கூடுகையின் போது தமிழ் பேச மட்டும் தெரிந்தவர்கள் எவ்வாறு வெண்முரசினை வாசிப்பது என்ற கேள்விக்கான விடை, ஒலி வடிவில் கேட்கலாம் என்று உங்கள் நண்பர் கூறினார்.

Youtube- ல் பொருட்செவியின் இலக்கிய ஒலிதம் எனும் தளத்தில் இதனை சிறப்பாக செய்கின்றனர். ஆங்காங்கே சிறு நெருடல்கள்  இருப்பினும் இதனை விடாது செய்கின்றனர். ஒரு தவம் போல.

தங்கள் தளத்தில் வெளியிட்டால் சரி எனில் பகிரவும்.

உங்கள் கவனத்திற்கு கொண்டு வர ஆசைப்பட்டேன்.


முதற்கனல்
https://www.youtube.com/playlist?list=PLvWdiqurBsAB03rVav_bjC7WrEAVHV5F0

மழைப்பாடல்
https://www.youtube.com/playlist?list=PLvWdiqurBsACId-UV2Fw21VaQoGQpjMjj

வண்ணக்கடல்

வண்ணக்கடல்

https://www.youtube.com/playlist?list=PLvWdiqurBsADJBSkIhpaE9KoNHvy4nJ07

லெக்ஷ்மிநாராயணன்
திருநெல்வேலி

ஈரோடு ஜெயபாரதி –மாற்றுக்கல்விக்கென ஒரு வாழ்க்கை

$
0
0

கூட்டுறவு மக்கள் மருத்துவமனைகளின் தந்தையென கருதப்படுகிற சேவைமருத்துவர் ஈரோடு ஜீவானந்தம் அவர்களின் தங்கை ஜெயபாரதி. ஈரோடு சித்தார்த்தா பள்ளியின் தாளாளர். 34 வருடகால கல்வியப்பயணம் இவருடையது. சூழலியப் போராட்டத்தின் முன்மாதிரி வடிவமென, இவருடைய பள்ளிக்கூடத்துக் குழந்தைகளை ஈரோட்டிலிருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணமாகச் செல்லவைத்தது; வெவ்வேறு சூழலியப் போராட்டங்களை குழந்தைகளை உரியவாறு ஈடுபடவைத்தது என பல்வேறு முன்னெடுப்புகள் இவரால் செயல்படுத்தப்பட்டன. முப்பது வருடங்களுக்கு முன்பு, இந்தியளவில் முன்முயற்சியாக இத்தகைய குழந்தைகள்சார் முன்னெடுப்புகளை ஜெயபாரதி அவர்கள் நிகழ்த்தியிருக்கிறார் என்பது வியக்கவைக்கிறது.

இந்தியாவின் மிக முக்கிய சூழலிய வெற்றிப்போராட்டமான விஸ்கோஸ் ஆலையை மூடவைத்ததில் இவருடைய பள்ளிக்குழந்தைகளின் களப்பயண போராட்டமும், ஊரூராகச் சென்று நிகழ்த்திய நாடகங்களும் முதன்மையானவை. இவை எல்லாவற்றையும் தாண்டி, இவருடைய  உறவுகளின் பின்னணி என்பது பெரும் அர்ப்பணிப்பும் தியாகமும் கொண்ட வரலாறுடையது.

ஒரு பெண் குழந்தைக்கு பால்யத்தில் அவளின் பெற்றோர் அளிக்கிற சுதந்திரமும் நம்பிக்கையும் நல்லெண்ணங்களும் அவளை என்னவாக மாற்றுகிறது என்பதற்கு பேருதாரணம் ஜெயபாரதி அவர்கள். காந்தியத்தையும் மார்க்சியத்தையும் இறுகப்பிடித்து வாழ்ந்துமறைந்த தன் தந்தையின் சொல் இவரை இவ்வாறாக வார்த்தது என்பதும் உண்மை.

கல்வியாளர் ஜெயபாரதி அவர்கள் ‘சுயகல்வியைத் தேடி’ ஆவணப் பயணத்திற்காக ஆற்றிய உரையாடல் இது. இரு பகுதிகளாக அமைந்துள்ள காணொளிப்பதிவின் முதற்பகுதியாக இது வெளிவருகிறது. நிறைய இடங்களில் உணர்ச்சிவசமடைந்து கண்களை கலங்கச்செய்கிற இந்த ஆவணப்பதிவு நம் அகநம்பிக்கைகான பெருங்குறியீடு. பாரதி கோபால், அய்யலு குமரன், அங்கமுத்து, கோகுல், மதுமஞ்சரி, சிவகுருநாதன் இவர்களின் கூட்டுழைப்பில் எழுந்துநிற்கிறது இக்காணொளி.

‘நம் ஆன்மாவைப் பற்றியிருக்கும் ஆணவ அழுக்கை நீக்குவதுதான் கல்வியின் வேலை’ என்றொரு வரியை இலங்கை ஜெயராஜ் அய்யா அடிக்கடி உரைப்பதுண்டு. அவ்வகையில், சிலருடைய வாழ்வைப்பற்றி நாம் அறிவதுகூட நமக்கான ஆணவ-அழிப்புக் கல்வியாகத் திறவுகொள்ள முடியும். அத்தகைய ஆசிரியமனதைச் சுமந்து அமைதியில் மலர்கிற பேருள்ளம் கல்வியாளர் ஜெயபாரதி அவர்கள்.

எத்தகைய நற்கூறுகளைச் சொல்லி தங்களது குழந்தையை வளர்க்க வேண்டும் என அகம்விழைகிற ஒவ்வொரு பெற்றோரும் நிச்சயம் காணவேண்டிய காணொளி இது.

ஸ்டாலின்

கருப்பட்டிக் கடலைமிட்டாய்

bstalin99@gmail.com

சினிமாவில் எழுத்தாளன்

$
0
0

வரவிருக்கும் படங்கள்

அன்புள்ள ஜெ

ஆனந்தவிகடன் பேட்டியில் சொல்லியிருந்தீர்கள் ஒரு சினிமாவுக்கு நீங்கள் அளிப்பது கதைத் தொழில்நுட்பத்தை மட்டும்தான் என்று. உண்மையில் ஒரு சினிமாவில் இங்கே எழுத்தாளனின் பங்களிப்புதான் என்ன? இந்த சினிமாக்களை பற்றி எழுதியிருந்தீர்கள். அந்த சினிமாக்களில் எவை உங்கள் சினிமா என்று சொல்லமுடியும்?

ஆனந்த்

அன்புள்ள ஆனந்த்,

தமிழ்சினிமாவில் திரைக்கதை என்பது இயக்குநரின் கையில் இருக்கும் ஒரு முன்வடிவம் மட்டுமே. அது எடுக்க எடுக்க மாற்றி எழுதப்படும். படப்பிடிப்பு முதல் கடைசிக்கணம் வரை உருமாறிக்கொண்டும் இருக்கும். ஆகவே திரைக்கதையை ஒட்டி சினிமாக்கள் அமைவது மிக அரிது.

கதை -திரைக்கதையில் பணியாற்றும் எழுத்தாளன் ஒரு ‘சேவை வழங்குநர்’ மட்டுமே. அவன் தன் கதைக்கட்டுமான அறிவை இயக்குநருக்கு, அவருடைய தேவைக்கு ஏற்ப வழங்குகிறான். ஒளிப்பதிவாளர், அரங்க அமைப்பாளர் போல.

ஓர் அரங்க அமைப்பாளர் என்னதான் அரங்கம் அமைத்தாலும் இயக்குநர் வைக்கும் படச்சட்டத்திற்குள் வருவதே படத்தில் இருக்கும். படத்தொகுப்பாளர் கடைசியாக தெரிவுசெய்யும் படச்சட்டங்களே படத்தில் எஞ்சும். பலசமயம் அரங்குக்குச் சென்றுதான் என்னென்ன காட்சிகள் எப்படி இருக்கின்றன என்று தெரிந்துகொள்ளவேண்டியிருக்கும். எழுத்தாளனும் அப்படித்தான்.

இருபதுநாட்கள் ஒரு சினிமாவில் நடித்துவிட்டு ஒரே ஒரு காட்சியில் மின்னிச்செல்லும் நடிகர்கள் இங்குண்டு. சினிமா அவர்களுக்குத் தெரியுமென்பதனால் அவர்கள் கவலைகொள்வதில்லை.

இது ஏன் நிகழ்கிறதென்றால் தமிழ் சினிமா ஒரு பெரும்கலவை. அதில் சாகசம், நகைச்சுவை, சோகம், அரசியல் என எல்லாமே இருக்கவேண்டும். இருபது நிமிடத்தில் பாட்டு வரவேண்டும். அரைமணிநேரத்திற்குள் செண்டிமெண்ட் வரவேண்டும். படத்தின் கதைக்கட்டமைப்பு என்ன என்பது இங்கே கடைசியில் எடிட்டிங்கில்தான் முடிவாகிறது.ஏனென்றால் இங்கே கலவையின் சரிவிகிதம் மிக முக்கியமானதாக இருக்கிறது.

ஆகவே இங்கே எந்த சினிமாவும் முழுக்க முழுக்க இயக்குநர் சினிமாதான். நான் பங்கேற்ற எந்த படமும் என்னுடைய படம் அல்ல. என் பங்களிப்பு என்பது எவ்வகையிலும் பெரியதென நான் எண்ணுவதில்லை. என் படம் என சொல்லிக்கொள்வதுமில்லை.

மிகக்கறாராக திரைக்கதையை ஒட்டியே எடுக்கப்படும் மலையாளப்படங்களில்கூட நடிகர்தேர்வு, நடிப்பு எல்லாம் இயக்குநர் கையில் உள்ளது. நன்றாக எழுதப்பட்ட ஒரு காட்சி ஒரு நடிகர் சரியாகச் செய்யவில்லை என்றால் எந்த விளைவையும் தராமலாகிவிடக்கூடும் என்பது சினிமாவின் விந்தை. அங்கும் நல்ல திரைக்கதை என்பது நல்ல சினிமாவுக்கான ஒரு சாத்தியக்கூறு மட்டுமே.

இங்கே இயக்குநர் என்பவர் கதைத் தெரிவில் இருந்து போஸ்டர் டிசைன் வரை செய்யவேண்டியவர். அவரே சினிமாவின் ‘ஆசிரியர்’. அவரே டிவியில் வந்து சினிமாவை விளம்பரமும் செய்தாகவேண்டும் என்பதே சூழல்.

சினிமாவில் நான் என்னிடம் கோரப்பட்டவற்றைச் செய்பவன், அதை மிகச்சிறப்பாகச் செய்து அளிப்பவன், அதற்கப்பால் எந்த உரிமையும் கோராதவன். அது என் தொழில், அவ்வளவுதான். ஆகவேதான் சினிமா பற்றி நான் பேசுவதில்லை. இதழ்களில், காட்சி ஊடகங்களில் கேட்டுக்கொண்டே இருப்பார்கள், மென்மையாக மறுத்துவிடுவேன். இங்கே நீங்கள் என் வாசகர் என்பதனால் சொல்கிறேன். ஆனால் இதையும் மீளமீளச் சொல்லிக்கொண்டிருக்க விரும்பவில்லை. நன்றி.

ஜெ

விகடன் பேட்டியின் நிறைவு

ஞானி நினைவுகள் –மீனாம்பிகை

$
0
0

ஞானி நூல் வாங்க

2013-ல் நான் என் முகநூல் நண்பரான யுகமாயினி சித்தன் அவர்களை நேரில் சந்தித்தேன். என்னுடைய குடியிருப்புப்பகுதியில் வசித்தார். சில நாட்கள் மாலை நடை சேர்ந்து போவதுண்டு. அவர் அப்போது பகிர்ந்துகொள்ளும் எழுத்தாளர்கள் ஒரு கருத்தியல் சார்ந்து இயங்கியவர்கள். என் இளமை முதலே நான் எதையாவது வாசித்துக்கொண்டிருந்தாலும் வாசிப்பு என்பதே எனக்கு அதிலுள்ள தகவல்களை, மனித இயல்பை, அகத்தை அறிந்து கொள்ளும் ஒன்றாகவே இருந்தது, அதற்கப்பால் இருந்த கருத்தியல்கள் நிலைபாடுகள் எனக்கு அந்நியமாக இருந்தன. காதல் போல ஈர்ப்பும், விலக்கமுமாக அறிந்து கொள்ள விரும்பியும், புதியவற்றின்மீது சலிப்புமாக தொடர்ந்து வாசித்துக் கொண்டும் இருந்தேன்.

இணைய வழி வாசிப்புகளின் அறிமுகம் இருக்கவில்லை. வாசிப்பதை வகைப்படுத்திக் கொள்ளவும், அதன் நுட்பங்களை அறிந்துகொள்ள வழிப்படுத்தும் ஆசிரியர்களை கண்டடையவும் இல்லை. ஜெயமோகன் என்ற பெயர் முகநூல் வம்புகளில் கண்டிருந்தாலும் அத்தகைய விவாதங்களில் ஈடுபாடற்றிருந்ததனால் அவற்றின் பின்சென்று அது என்ன என்று படிக்கவும் இல்லை. முழுநேர வேலையை விட்டபின் எப்படி வாசிப்பது என்றும் எதை வாசிப்பது என்றும் பள்ளிக்கூடம் போல எவரிடமாவது முறையாகப் பயில வேண்டுமென்ற ஆவல் எழுந்தது.

முகநூல் வழியாக அறிந்த பொன் இளவேனில், இளஞ்சேரல் ராமமூர்த்தி அவர்கள் நரசிம்மலுநாயுடு பள்ளியில் நடத்திக்கொண்டிருந்த மாதாந்திர இலக்கியக்கூட்டத்திற்கு 2012-ல் சென்றேன். என்னுடைய முதல் இலக்கியக்கூட்டம் அது. இன்று நான் அறிந்த பல நண்பர்களை அன்றுதான் சந்தித்தேன். அந்தக்கூட்டங்களுக்கு அப்போது ஞானி வந்து கொண்டிருந்தார். அன்று தமயந்தி என்பவர் சிறப்புப் பேச்சாளர். தன்னை எழுதக்கூடாது என்று தன் வீட்டினர் விரல்களை ஒடித்ததைப்பற்றி அவர் சொன்னதும் இடைமறித்து ஞானி “எந்த வயதில்?” என்று கேட்டார். அவர் பத்தாவது படிக்கும்போது என்று சொன்ன நினைவு. அந்தக்கேள்வியும் அதன் பின் வந்த அமைதியும் அவர் என்ன எண்ணுகிறார் என்று புரியாமல் மயங்கச்செய்திருந்தன. அதே கூட்டத்தில் நாஞ்சில் நாடனும், ஃபிர்தௌஸ் ராஜகுமாரனும் பேசினார்கள். எனினும் எவரையும் சந்தித்து அறிமுகப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு வாசித்திருக்கவில்லை என்று எண்ணியதால் அருகில் சென்று பேசவில்லை.

ஒருமுறை மாலை நடையில் சித்தனிடம் பேசும்போது அவர் மறுநாள் ஞானியை சந்திக்கப் போவதைப் பற்றிச் சொன்னார். நான் ஞானியின் அருகில் இருந்தால் அல்லது அடிக்கடி சந்தித்தால் எதையாவது கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அவரைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னேன். அவர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்தவர் என்பது எனக்கு ஆறுதலான தகவலாக இருந்தது. சித்தன் அழைத்துச் செல்வதாகச் சொன்னார்.

மறுநாள் கிளம்பியபோது ஒரு எழுத்தாளரை, ஒரு முதியவரை சென்று பார்க்கப் போகிறேன் என்ற பதற்றம் மட்டுமே இருந்தது. எவ்வகையிலும் அவரிடம் உரையாடும் அளவுக்கு எதையும் வாசித்திருப்பதாக நான் எண்ணவில்லை. இருப்பினும் ஓர் ஆர்வத்தில் கிளம்பியிருந்தேன். இருவரும் பேருந்தில் ஏறி அவரது குடியிருப்புப்பகுதியில் இறங்கினோம். மேடும் பள்ளமுமான மழைநீர் தேங்கி நின்றிருந்த மண் சாலையில் நடந்து இரண்டு திருப்பங்களுக்குப்பிறகு அவர் வீட்டை அடைந்தோம்.

வாசலில் செருப்புச் சத்தத்ததை அவர் கேட்டிருக்கவேண்டும். உள்ளறையிலிருந்து மிக மெலிதாகக் குரல் கொடுத்தார். செருப்பைக் கழற்றியபடி சித்தன் பதில் சொன்னார். அன்று அவர் மட்டும் தான் வீட்டிலிருந்தார். வாங்க என்றழைத்தபடி உள்ளிருந்து எழுந்து முன் அறைக்கு வந்தார். தூய வெண்ணிற சட்டை வெண்ணிற வேட்டி அணிந்திருந்தார். ஒடுங்கிய உடல். சிந்தனையா, புன்னகையா என்று வகைப்படுத்திக்கொள்ள இயலாத முகம். அவரது துணைவியார் மறைவுக்குப்பின் மனம் நலிந்திருக்கிறார் என்று சித்தன் சொல்லியிருந்தார். நலம் விசாரித்தபின் ஞானி அவரை நாற்காலியில் அமரும்படி நாற்காலி இருந்த திசையில் கைகாட்டினார். அங்கு நான்கு ப்ளாஸ்டிக் நாற்காலிகள் இருந்தன. நான் வேகமாக உள்நுழைந்து அந்த நாற்காலிகளை எடுத்துப் போடப்போனபோது சித்தன் என்னை மெதுவாக அவர் கைகாட்டிய இடத்தில் போடும்படி சொன்னார். மெல்ல நடந்து அவற்றில் ஒன்றில் நாற்காலியின் கைபற்றி ஞானி அமர்ந்தார். அவருக்கு அருகில் அமர்ந்தபடி சித்தன் என்னை அறிமுகப்படுத்தினார். நான் கைகூப்பி வணக்கம் சொன்னேன்.

“நீங்களும் மீனாவா?” என்று ஞானி சிரித்தார். அவருடைய உதவியாளர் பெயரும் மீனா என்று அறிந்தேன். சித்தன் என்னை அவர் கைகளைப் பற்றும்படி ஜாடை காட்டினார். நான் அப்போதுதான் அவர் அந்த உணர்தலின் வழியாகவே அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும் என்று உணர்ந்து திகைத்தேன். அருகில் சென்று என் கைகளை அவர் கையின் மேல் வைத்தேன். அவர் தன் இன்னொரு கையை என் கைகளின் மேல் வைத்தார். மிக மென்மையான வெம்மையான கைகள், சிறுகுழந்தையின் கைகள் போல. என் முரட்டுக் கைகளைப்பற்றிச் சற்று வெட்கமடைந்தேன். “உக்காருங்கம்மா” என்று சொன்னார். “கீழ உக்காந்துக்கறேன்” என்று அமரப்போன என்னை நாற்காலியில் அமரும்படி மீண்டும் சொன்னார். அங்கு புழங்குவதன் அச்சம் மீதூற நாற்காலியில் அமர்ந்தேன்.

என்னுடைய வேலை படிப்பு குடும்பம் பற்றி மெல்லிய குரலில் கேட்டார். என் வாசிப்புப் பற்றிக் கேட்டார் நான் பாலகுமாரனை ஜெயகாந்தனை அசோகமித்திரனை வாசித்திருந்தேன், சொன்னேன். சில கவிஞர்கள் முகநூலில் படித்தவர்களை சொன்னேன். அவருடன் அன்று நான் எதுவும் சரியாக உரையாடவில்லை. அன்று பாலகுமாரன் என்னுடைய பிடித்த எழுத்தாளராகவும் ஜெயகாந்தன் பிடித்தவராக, புதிரானவராகவும் இருந்தனர். அந்த வாசிப்புகளின் மீதான என்னுடைய அறிதல்களை வரையறுத்து அவரிடம் சொல்ல எனக்குத் தெரியவில்லை. சித்தன் அவரிடம், தான் கொண்டு வந்திருந்த காகிதங்களை படித்துக்காட்டி விவாதித்துக் கொண்டிருந்தார். அது இலக்கியம் சார்ந்ததாக இருந்தாலும், அரசியல் விவாதம் போல எனக்குத் தோன்றியது. எஸ்.பொ என்கிற பெயரை அங்குதான் கேட்டேன்.

நாங்கள் சென்று அமர்ந்த முன்னறையில் ஒரு உணவருந்தும் மேசையும் நாற்காலிகளும் இருந்தன. அவ்வறையில் கட்டப்பட்ட கொடியில் அவரது உலர்ந்த துணிகள் போடப்பட்டிருந்தன. அவரது அந்நிலையில் அந்த வெண்ணிற துணிகளை அணிவதும் அதை அவ்விதமே பேணுவதும் வியப்பாக இருந்தது. மேசையின் இறுதியில் சமையலறை. முன்னறையின் வலதுபுறம் திரும்பினால் ஒரு படிப்பறை இருந்தது. அதில் மரத்திலும் இரும்பிலுமான அலமாரிகள் முழுக்க புத்தகங்கள் நிறைந்திருந்தன. தரையிலிருந்து இடையளவு உயரத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. படிப்பறை நடுவில் மேசை போடப்பட்டிருந்தது. அதன் இருபக்கமும் இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மேசைமீது அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள் இருந்தன, பாதி வேலை செய்து எழுந்து போகும்போது வகைப்படுத்தி எடுத்து வைத்தவை போல. ஷெல்புகளுக்கும் மேஜை நாற்காலிகளுக்கும் இடைப்பட்ட இடங்கள் முழுக்க தரைமீது புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. பெரிய புத்தகங்களினாலான அடுக்கு இடைவரை இருந்தது. சிறிய புத்தகங்களின் அடுக்கும் முழங்காலுக்கும் மேல் வந்தது. புத்தகங்களாலான ஒரு குளம் நடுவே இடம் தெரிந்து போடப்பட்டவை போல மேஜை நாற்காலிகள் அமைந்திருந்தன.

அவர்களின் உரையாடல் முடிந்து கிளம்பும்போது அவரது உதவியாளர் விடுப்பு எடுக்கும் நாட்களில் நான் வந்து அவருக்கு பத்திரிக்கைகள் படித்துக்காட்ட விரும்புகிறேன் என்று சொன்னேன். எப்படியும் படித்துக்காட்டும்போது அவர் அதைப்பற்றிப் பேசுவார் என்றும் எனவே எனக்கு இலக்கியம் புரிய வாய்ப்பிருக்கும் என்றும் எண்ணினேன். நான் சொன்னதும் “அவர் உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? நீங்கள் அவ்வளவு தூரத்திலிருந்து இங்கு இதற்காக வரவேண்டும்” என்றார். நான் மீண்டும் வற்புறுத்தியபின் சரி என்றார். என் குரல் அவருக்குப் பிடித்திருந்தது என்று சொன்னார். அவரை இணக்கமானவராக உணர்ந்தேன்.

சில நாட்கள் கழித்து மீனா, தான் ஒரு நாள் விடுப்பு எடுப்பதாகவும் அன்று நான் வரமுடியுமா என்றும் போனில் கேட்டார். சிறு பதற்றத்துடன் வருகிறேன் என்று சொன்னேன். என் வீட்டுக்கும் அவரது வீட்டுக்கும் 10.கி.மீ தூரம். என்னுடைய டி.வி.எஸ் 50 வண்டியில் கிளம்பி கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கழித்து சென்று சேர்ந்தேன். (அப்போதுதான் வண்டி ஓட்டப் பழகியிருந்தேன்.) நான் சென்றபோது அவர் மட்டுமே இருந்தார். நான் வாசலில் நின்று வணங்கி வந்துவிட்டதைச் சொன்னேன். கைகளைப்பற்றி வரவேற்றார். அன்று ஹாலிலேயே அமர்ந்து படித்தோம். அவரது படிப்பறையில் முந்தின நாள் வேறு வேலைகள் செய்து கொண்டிருந்ததை மீனா அப்படியே விட்டுச்சென்றிருந்தார். அதைக்கலைக்க வேண்டாம் என்று ஹாலிலேயே அமர்ந்தோம்.

அன்று வந்திருந்த பத்திரிக்கைகளையும் முந்தின நாள் மீனா எடுத்து வைத்திருந்த புத்தகங்களையும் எடுத்து வைத்தேன். அவர் என்னை முதலில் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும்படி சொன்னார். சற்று நேரத்தில் அவர் அமர்ந்திருந்த நாற்காலி அருகில் தரையில் அமர்ந்தேன். நாற்காலியில் அமரச்சொல்லி வற்புறுத்தினார். எனக்கு தரை வசதி என்பதால் தரையில் அமர்ந்தேன். நான் தலைகுனிந்து படிக்க அவருக்கு அது சரியாகக் கேட்காமல் பிறகு அவருக்கு என் குரல் கேட்கும்படி உயரத்தில் அமர்ந்தேன். அவரே ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுத்து படிக்கும்படி சொன்னார். நான் புத்தகத்தை எடுத்து முதல் கட்டுரையின் முதல் பக்கத்தை படிக்கத் துவங்கியதும் என்னைத் தடுத்து அது எந்தப் பதிப்பகம் என்றும் யாருக்கு சமர்ப்பிக்கப்பட்டது என்று விவரங்களையும் படிக்கச் சொன்னார். நான் படிக்கத் துவங்கியதும் “மெதுவாக நிறுத்திப் படிங்க” என்றார். மிக மெதுவாகப் படித்தபோது  “இப்படி இல்ல…” என்று சொல்லி திருத்தினார். நான் பதறிய குரலில் வாசிக்க என்னை சமனப்படுத்தினார்.

ஹாலில் நாற்காலியில் அமர்ந்து நான் படிப்பதைக் கேட்கும்போது தரையைப் பார்த்தபடி முன்சாய்ந்து அமர்ந்து காதைச் சற்றே சரித்துக் கேட்டுக்கொண்டிருப்பார். கைகள் இரண்டையும் நாற்காலியின் கைப்பிடியில் வைத்தபடி அல்லது ஒற்றைக்கையை மடக்கித் தாடையில் வைத்தபடி கேட்டிருப்பார். அப்படி அமர்ந்திருக்கையில் அவருடைய முகபாவனைகளை நாம் முழுவதும் பார்க்க முடியாது. சற்றே அருகமர்ந்து முன்சாய்ந்து அமர்ந்திருக்கும் அவர் முகத்தை நாம் பார்க்கலாம். ஆனால் எப்போதும் நாம் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே நம்முடைய அசைவுகளைத் தீர்மானிக்கிறது. அவரிடமும் கூட அவர் நம்மைப் பார்ப்பதில்லை என்பதை மறந்துவிடுவேன். எனவே பார்வையுடையவர்கள் முன்பு எப்படி நடந்து கொள்வேனோ அதைப்போலத்தான் நடந்து கொள்வேன்.

அவருக்காக மேசையின் ஃப்ளாஸ்கில் மூன்று டம்ளர் பாலும் சர்க்கரையும் இல்லாத காபி வைக்கப்பட்டிருந்தது. அதைத் தனக்கு ஒரு டம்ளரில் ஊற்றித் தருமாறும், எனக்கு மேசை மேல் இருந்த சர்க்கரையை கலக்கிக் கொள்ளும்படியும் சொன்னார். மிக மெதுவாக சுவரைப்பிடித்தபடி நடந்து உள்ளறைக்குச் சென்று வந்தார். விழியற்றவரின் உலகத்தில் வேறு துணைகளின்றி பொருந்த முடியாத பதற்றம் எனக்கு இருந்தபடியே இருந்தது.

பிறகு சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தார். முகநூல் பற்றி பேசிய நினைவு. எந்த வகையான எழுத்துக்கள் பதிவாகின்றன என்றும் முகநூலின் சாத்தியங்கள் பற்றியும் பேசிய நினைவு. பிறகு ஒரு கதைப்புத்தகம் படித்தேன். அதுவும் சில அத்தியாயங்கள். அதன்மீதான விவாதங்களென எதுவும் நினைவில்லை. என் மனநிலைக்கு முற்றும் அயலான ஒன்றையே வாசித்துக்கொண்டிருந்தேன்.

மதிய உணவு பற்றி நான் எதுவும் எண்ணியிருக்கவில்லை. நான் வெளியே செல்கிறேன் என்றபோது தடுத்து அவருக்கு வந்திருந்த உணவையே இருவரும் பகிர்ந்து உண்ணலாம் என்றார். எழுந்து சென்று கைகழுவி வந்து நாற்காலி பற்றி அவரே அமர்ந்து கொண்டார். அங்கிருக்கும் பாத்திரங்களில் என்ன உணவு வைக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டார். சாதம், குழம்பு, பொரியல், ரசம் இருந்தது. அவருடனே அமர்ந்து உண்ண வற்புறுத்தினார். நோய் காரணமாக மிகக்குறைவான உணவு உண்டார். அவர் உதவிக்கு ஆட்களில்லாமல் தனியாகத் தானே இவற்றை கையாள்வதைப் பற்றிய எண்ணமும் பதற்றமும் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. உண்டபின் தட்டுகளைக் கழுவ சமையலறைக்குச் சென்றேன். அப்போது அங்கு சமையல் நடக்கவில்லை என்றாலும் நேர்த்தியாக ஒருவர் கையாண்ட அறை என்பது அதன் அமைப்பிலிருந்து தெரிந்தது. சிறிது நேரத்தில் அவர் ஓய்வெடுக்கச் செல்லவும் நான் கிளம்பினேன்.

திரும்பும்போது அவருக்கு உகந்தவாறு அன்றைய நாளை அமைத்துக்கொள்ளத் தவறியதன் குற்ற உணர்ச்சியே இருந்தது. அவருக்கு வாசித்துக் காட்டிய எல்லாமே வெறும் வார்த்தைகளாகவே இருந்தன. ஒரு கருத்தாக எதையும் நான் தொகுத்துக் கொள்ளவில்லை. பிறகு சிலமுறை அழைப்பின் பேரிலும் அழைப்பில்லாமல் நானே அழைத்து அனுமதி பெற்றும் அங்கு சென்று கொண்டிருந்தேன். எதையாவது அடைந்தேன் என்று அல்ல, ஆனால் வெறுமே அவர் அருகே இருக்க விரும்பிச் சென்றேன். ஒரு பெரிய மனிதரை மரியாதை நிமித்தம் சந்திப்பதாகவே அவை அமைந்தன.

பிந்தைய சந்திப்புகளில் அவரது மனைவி பற்றிச் சொன்னார். ‘அவங்க’ என்ற விளியில் தான் பேசினார். அவர் கண்கள் பார்வை குன்றியதைப்பற்றி அவர் மனைவி, அவர் மீது கொண்டிருந்த அக்கறை பற்றி, அவரது பள்ளி நாட்கள் பற்றிப் பேசியது நினைவிருக்கிறது. அவரது முதல் நினைவு நாளையொட்டி வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றை எனக்களித்து அடுத்த முறை வரும்போது அதைப்படித்துவிட்டு என் கருத்தைச் சொல்லும்படி சொன்னார். அவர் தன் சகியாகத் தன் மனைவியை எண்ணியிருந்தார் என்பது அவர் பேச்சில் தெரிந்தது. ஒருபோதும் தன்னிரக்கம் கொண்ட வார்த்தைகளை அவர் சொன்னதில்லை என்று இன்று நினைவுறுகிறேன். சில நேரங்களில் நாம் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எச்சரிக்கையுடனே அவர் முகபாவம் இறுகி இருக்கிறதோ என்று நான் எண்ணியிருக்கிறேன்.

கவிதைகள் மீது மிக அதிக ஆர்வம் கொண்டிருந்தார். கவிதைகளை வாசித்துக் காட்டும்போது முகம் மலர்ந்திருக்கும், முகம் பரவசமும் ஆர்வமும் கொண்டதாக இருக்கும். எனக்குப் பிடித்த கவிதைகளையும் அன்று நான் கவிதை என்று எண்ணி எழுதியவற்றையும் அவருக்கு வாசித்துக் காட்டியிருக்கிறேன். அதிலிருந்த உணர்வுகளைப் பற்றி, எழுத நேர்ந்த மனநிலை பற்றி பேசியிருக்கிறார். சாம்ராஜ் எழுதிய ஒரு கவிதை பற்றிச் சொன்னார். என் முகநூல் நண்பர் என்று சொன்னபோது அவரைச் சந்திக்க விரும்புவதாக என்னிடம் சொன்னார். நான் சாம்ராஜிடம் பேசும்போது சொன்னேன். பிறகொருமுறை அந்த சந்திப்பும் நிகழ்ந்தது.

அவர் நாம் படிப்பதற்கு உடனே எதிர்வினையாற்றுபவர் அல்ல. அவர் நாம் வாசிப்பதன்பின் நமது கருத்தென்ன என்றுதான் முதலில் கேட்பார். பிறகு அதைப்பற்றிய அவர் கருத்தை சொல்வார் என்று எதிர்ப்பார்க்கும்போது மேல படிங்க என்பார். அவருக்குகந்த பதிலை அல்லது அவர் பதிலுரைக்கத்தக்க கருத்தை நான் சொல்லவில்லை என்று புரிந்துகொள்வேன். அவருடன் உரையாடும் அளவுக்கு நான் படித்திருக்கவில்லை, அறிந்திருக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இருந்தது. ஆனால் அவர் கருத்துக்கு ஒட்டியவர்களை மட்டுமே பாராட்டுவார் என்றும் மற்றவர்களை நிராகரிப்பார் என்றும் என்னுடைய மற்ற நண்பர்கள் சொன்னபோது எனக்கு அது சமாதானமாகவே இருந்தது. அவர் ஒரு விரிந்த நிலையில் அனைத்தையும் ஏற்றுக்கொள்பவரல்ல என்ற எண்ணத்தை அன்று ஏற்படுத்தியது. இன்று ஞானி தொகுப்பை படிக்கையில் அவரை நான் புரிந்துகொள்ளத் தவறியது தெரிகிறது.

அவருக்கு உவப்பான எதையாவது படித்து ஒருமுறையாவது அவரிடம் உரையாட விரும்பினேன். என் தோழி சுஜாதா, தான் வாசித்த ஒரு நாவலைப்பற்றி என்னிடம் பேசினார். நான் அந்த நாவலை அவரிடமிருந்தே வாங்கிப் படித்தேன். அடுத்த முறை ஞானியைச் சந்திக்கச் சென்றபோது அந்த நாவலைப் பற்றிச் சொன்னேன். கொண்டு வந்திருந்தால் வாசிக்கும்படி சொன்னார். அவர் முதல் மூன்று நான்கு பக்கங்கள் வாசிக்கக் கேட்டார். பின்னர் பத்து பக்கங்கள் தள்ளிப் படிக்கும்படி சொன்னார். ஒரு ஐந்து பக்கங்களுக்கு பிறகு மீண்டும் சில பக்கங்கள் தள்ளிப் படிக்க சொன்னார். பிறகு மீண்டும் ஒரு கற்றை தள்ளிப் படிக்க சொன்னார். நாவலின் த்வனி மாறியிருக்கவில்லை. காதலிக்காக ஏங்கும் ஒரு ஏழைப் பத்திரிக்கையாளனைப் பற்றிய கதை. ஓர் இரவில் தான் இருக்குமிடத்திலிருந்து காதலியின் இல்லம் வரை தரையை முத்தமிட்டுக்கொண்டே செல்வதாக அதில் வரும். அத்துடன் அந்த நாவலை நிறுத்தச்சொன்னார்.

“பின்னர் நீங்களும் ஒரு பெண், இந்தக்கதையில் வரும் நாயகியின் இடத்தில் நீங்கள் இருந்தால் இப்படி ஒருவரை நீங்கள் காதலராக ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்டார். எனக்குப் பின்னந்தலையில் அடித்தது போல இருந்தது. ஒருபோதும் அப்படி ஒருவரை பொருட்படுத்த மாட்டேன் என்றும் முழுக்க முழுக்க அவரைப் புறக்கணிப்பேன் என்றும் சொன்னேன்.

எனக்கு அது ஒரு திறப்பு. அவரிடம் அன்றுதான் உண்மையில் நான் கற்க ஆரம்பித்தேன் என்று இன்று அறிகிறேன். அதுவரை ஒரு நாவலை என் வாழ்க்கையில் நான் போட்டுப் பார்த்தது கிடையாது. அது எவருடையவோ சாத்தியமான வாழ்க்கை என்ற நிலையில்தான் படித்துவந்தேன். அந்த நாவல் என் அறிதலை எவ்வாறு மேம்படுத்துகிறது என்று எண்ணிப் பார்த்ததில்லை. அதுவரை நான் வாசித்த அத்தனை கதைகளுமே பிறருடையவை, பிறர் வாழ்க்கையில் நடந்தவை. அவற்றை நான் யாரோவாக நின்று அவர்களைப் பார்த்தேன்.

அதற்குப்பிறகு வாசித்த அத்தனை கதைகளுமே என் கதைகள். அவற்றில் நாயகியோ நாயகனோ வில்லனோ அல்லது ஏதேனும் விலங்கோ இருந்தால் கூட அது நானே. கதைசொல்லியும் நானே. வெவ்வேறு வேடங்களை போட்டுக்கொள்வது போல ஒவ்வொரு இடத்திலிருந்தும் அக்கதாபாத்திரத்தின் கருத்துக்களை வகைப்படுத்திக் கொண்டேன். வெளியே நின்று பார்வையாளனாகவும் அதைப் புரிந்துகொண்டேன். ஏதேனும் ஒரு அறிதல் சாராத, உணர்வுகள் மட்டுமே வெளிப்படுத்தப்பட்ட நூல்களைத் தவிர்க்க அந்த உரையாடல் வழியமைத்தது என்று இன்று உணர்கிறேன். அதன் பிறகு நிறைய வாசித்தேன். அவை எனக்குள் புதிய விவாதங்களை தோற்றுவித்தன. அவற்றுடன் பேசிப்பேசி என் அறிதலை மேம்படுத்திக்கொண்டேன். ஏற்கனவே படித்திருந்தவையும் விரியத்தொடங்கியிருந்தன. தனிப்பட்ட முறையில் ஒன்றிரண்டு நண்பர்களுடன் வாசிப்பது பற்றி விவாதித்தாலும் நிறைவுறாமல் சுழன்றுகொண்டிருப்பதும் நிகழ்ந்துகொண்டிருந்தது.

இச்சம்பவத்துக்குப் பிறகு எனக்கு ஞானியைப் புரிந்துகொள்ள முடியும், கற்றுக்கொள்ளமுடியும் என்று தோன்றியது. சில நாள் மீனா இருக்கும் போதே செல்வதுண்டு. ஈஷா பற்றி அவரிடம் சிலமுறை பேசியிருக்கிறேன். அவர்களின் வழிபாட்டு முறைகள் பற்றி அனைவரும் பேதங்களற்ற முறையில் நடத்தப்படுவது பற்றி பேசியிருக்கிறேன். அவர் கடவுள் பற்றி பிறர் எனக்குச் சொன்னது இல்லாமல் நான் உண்மையில் என்ன நினைக்கிறேன், என்ன அறிந்திருக்கிறேன் என்று கேட்டார். என்னுடைய ஒரு அனுபவத்தைச் சொன்னேன். அதையொட்டி என்னுடைய எண்ணத்தையும் சொன்னேன். சிறிது நேரம் அமைதியாக இருந்தார். நான் பேச முற்பட்டபோது தடுத்தார். என் சொற்கள் ஒலித்தபோது தாக்கப்பட்டது போல பதறினார். நான் பேசுவதை அவர் கைநீட்டி தடுத்தபோது அவரது தோல் மயிர்க்கூச்செறிந்திருப்பதைக் கண்டேன். மிக நுட்பமான ஒரு மனநிலைக்குள் சென்றுவிட்டிருந்தார் என்று தோன்றியது. பிறகு சிறிதுநேர அமைதிக்குப்பின் அவரவர் அனுபவங்களை தமக்குத்தாமே மறுதலித்துக் கொள்ள முடியாது. பிற்பாடு அதற்கு அறிவியல் ஏதேனும் பொருள் கொடுப்பினும் இவை அதற்கும் மேல் நிற்கும் என்று சொன்னார்.

இன்று நினைத்துப் பார்க்கும்போது இவ்விரு சந்திப்புகளே மிக முக்கியமான சந்திப்புகளாக என் பொருட்டு, என் கற்றலின் பொருட்டு நினைவு கூர்வனவாக இருக்கின்றன. பிறகொருமுறை நான் வேறு வேலைக்குச்சென்ற பின் அவரைச் சென்று பார்த்தேன். அன்று அவருடைய மகன் பாரி இருந்தார். அவர் அன்று புகைப்படக் கலைஞராக இருந்தார். என்னை ஞானியுடன் நிறுத்தி அவரது படிப்பறையில் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பிக் கொடுத்தார். வேறு ஊர்களுக்கு வேலைக்குச் சென்றதும் என்னுடைய போதாமையின் அளவை உணரத்தொடங்கியதும் அவரைச் சந்திக்க முடியாமலாக்கின. எனினும் முடிந்தபோது போனில் அவரும் பேசுவார், நானும் அழைத்திருக்கிறேன். “இங்க வந்தா வாங்க” என்பார்.

உங்களை வாசிக்கத் தொடங்கியபின் அவரைச் சந்திக்க விரும்பினேன். அப்போது நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். ஒரு வாசகியாக அவரை சந்திக்க உரையாடத் தகுதி கொண்டிருக்கிறேன் என்று நினைத்தேன். அவருடைய உடல்நிலை காரணமாக எவரையும் அவர் சந்திகாமலாகிவிட்டிருந்தார். அன்று முயன்று சந்திக்காதது இன்று ஒரு இழப்பாக சுமையாகக்கூட என்னுள் இருக்கிறது.

உங்கள் ஞானி தொகுப்பை முழுமையாக இன்று படிக்கையில் என் குலமூதாதை ஒருவரின் இழப்பு போல கனமாக அந்த இழப்பு உள்ளத்தில் படிந்திருக்கிறது. நான் படிக்க அவர் அமர்ந்து கேட்பதும் சிரிப்பதும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது. அவருடைய இறப்பு செய்திகேட்டு போனபோதும் மிக சம்பிரதாயமான ஒன்றாக இல்லாமல் எனக்கு அணுக்கமான ஒருவரின் இழப்பாக ஒரு நிஜத்துயரமாகத்தான் அது இருந்தது.

விழாக்களில்  சந்திக்கும்போது கூட கைகளைப்பற்றிக் கொள்வார். இன்று ஆசிரியரென அவரை எண்ணி நெகிழும் இப்பொழுதில் அந்த வெம்மையான மென்மையான கைகள், என் நினைவில் அழுந்தப் பதிகின்றன.

மீனாம்பிகை

ஞானி முன்னுரை

தொழில், இலக்கியம்

$
0
0
வி.ஜீவானந்தம், ஈரோடு

வணக்கம் ஜெ,

நலம் தானே!

நான் இலங்கையை சேர்ந்தவன். தொழில்முறையில் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். உங்களிடமிருந்து இதுவரை எனக்குள் எழுந்த அதிகமான கேள்விகளுக்கு பதில் கிட்டியிருக்கிறது.அதனாலேயே நீங்கள் என் ஆசானாகிப்போனீர்கள். சில மாதங்களாக என் மனதை நெருடும் இந்தக்கேள்விக்கு உங்களிடம் பதில் கேட்க விழைகிறேன்.

எதையாவது வாசித்தால் தான் தூக்கம் வருவது சிறுவயதிலிருந்து எனக்கு ஒரு பழக்கமாகிப்போனது. அப்பாவின் நூலகத்தில் இருந்தே என் வாசிப்பும் ஆரம்பமானது. ஆங்கில இலக்கியத்தில் பரீட்சயம் அதிகமாகவும் இருந்தது. இங்குள்ள கல்விமுறையில் வருடாந்தம் விவாதப்போட்டிகள் நடக்கும்.அதில் பங்குபற்றி பேசவே தமிழ் இலக்கியம் கற்கலானேன். பிறகு கல்லூரி நாட்களில் கூட நேரம் வகுத்து அதிகம் வாசிக்கப்பழகிப்போனேன். கல்லூரியிலிருந்து வெளியாகுகையில் தமிழின் செவ்வியல் வரிசையை ஓரளவு வாசித்து முடத்துவிட்டதாக மூளை சொல்லியும் மனம் ஏற்கவில்லை. இதுவரைக்கும் என் வாசிப்பு நீண்டுகொண்டே செல்கிறது.

நா.மகாலிங்கம்

(விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைப்போல) ஆரோக்கியமான உரையாடல்களை நடாத்த இங்கு இலக்கிய வட்டம் ஒன்று இல்லை என்ற எண்ணம் மேலெழ நண்பர்கள் சிலர் சேர்ந்து வாசகர் குழுமம் ஒன்றை தொடங்கி பேசலானோம். அதன் கூடுகைகள் வழியாக இலக்கியப்புரிதலை ஒரு எல்லைவரை கண்டுகொள்ள முனைகிறோம். அதற்கு மேலாக புத்தகங்களாக வாங்கி குமிக்கலானேன். தினசரி வாசிக்கவேண்டும் என்ற வேட்கை உண்டாகிற்று. தினமும் வைத்தியனுக்கு ஏன் இலக்கியம்? இலக்கியம் பேச உனக்கு என்ன தகுதியிருக்கிறது? என்ற கேள்விகள் என் குடும்பமட்டத்திலேயே வலுப்பெறத்துவங்கிவிட்டன.

முதலில் அவற்றை கடந்து வந்த போதிலும் இப்போதெல்லாம் சற்று முடியாதுள்ளது. அப்படியாக இலக்கியம் பேச ஏதாவது தகுதி வேண்டுமா? இவர்கள் தான் பேசவேண்டும் என்ற வகையறா உள்ளதாக எனக்கு தெரியவில்லை. என் மனம் ஒரு சிறுகதையாவது எழுத வேண்டும் என்ற உணர்வு மேலெழும் போது மனதில் மேலும் இரண்டு கேள்விகள் உருவாகின்றன. ஒன்று இவ்வளவு காலமும் தமிழில் எழுதப்படாத ஒன்றையா நான் எழுதிவிடப்போகிறேன் என்பது மற்றையது நான் எழுதுவதை மருத்துவனுக்கு எழுத்து ஒரு கேடா என்று சமூகம் நச்சரிக்குமா என்பது? . உங்களிடமிருந்து இந்த குழப்பத்திற்கு அவசியம் பதில் கிட்டும் என நம்புகிறேன்.

நன்றி

அன்புடன்,

ஷாதீர்

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன்

அன்புள்ள ஷாதீர்,

எவருக்கானாலும் இரண்டு வாழ்க்கை உண்டு. அகவாழ்க்கை, புறவாழ்க்கை. புறவாழ்க்கை எனும்போது தொழில், சமூகம் என பல தளங்கள் அதற்கு. அகவாழ்க்கை என்னும்போது காதல்ம் காமம், குடும்பம் போன்றவற்றைச் சொல்கிறார்கள். ஆனால் அது பழைய வரையறை. ஏனென்றால் இன்று அவையும் புறவாழ்க்கையென ஆகியிருக்கின்றன. அதற்கப்பாலுள்ள அகவாழ்க்கை ஒன்று உண்டு. அது நமக்கு மட்டுமே உரியது. நம் புறவாழ்க்கையிலுள்ள இடைவெளிகளை நிறைவுசெய்வது.நம் புறவாழ்க்கையைச் சமன்செய்வது.

அந்த அகவாழ்க்கையை நீங்கள் மதத்தைக் கொண்டு நிறைவுசெய்யுங்கள், எவரும் எதுவும் சொல்லமாட்டார்கள். மருத்துவனுக்கு இறைவழிபாடு எதற்கு என்று கேட்கமாட்டார்கள். ஏனென்றால் அதன் தேவையென்ன முக்கியத்துவமென்ன என அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. இலக்கியத்தின் தேவை என்ன முக்கியத்துவம் என்ன என்று தமிழ்ச்சமூகத்திற்குப் பொதுவாகத் தெரியாது. அதை பொழுதுபோக்குக்குக் கதைபடித்தல் என்றுதான் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆகவேதான் இந்த குற்றச்சாட்டு எழுகிறது.

புறவாழ்க்கை மட்டுமே கொண்டவர்களைக் கூர்ந்து பாருங்கள். சட்டென்று அவர்கள் ஒரு பெரும் சலிப்பிற்குள் சென்று விழுவதைக் காண்பீர்கள். அச்சலிப்பை வெல்ல அவர்கள் பெரும்பாலும் குடிக்கிறார்கள். பலவகை கேளிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். சம்பந்தமில்லாத தொழில்களில் ஈடுபடுகிறார்கள்.முதலீடுகளால் விளையாடுகிறார்கள். என்ன செய்தாலும் அந்தச் சலிப்பு நீங்குவதில்லை. டாக்டர்களில்தான் அப்படி முழுக்கச் சலிப்படைந்தவர்களை நிறையப் பார்த்திருக்கிறேன்.

இயகக்கோ சுப்ரமணியம்

அகவாழ்க்கை அப்படி சலிப்படையாமல் காக்கும். மேலைநாடுகளில் ஒவ்வொருவருக்கும் அப்படி ஒரு அகவாழ்க்கை இருக்கவேண்டுமென்னும் கருத்து உண்டு. அவர்களுக்கே உரிய உலகம் அது. ஒரு மருத்துவரைச் சந்தித்திருக்கிறேன், அவருடைய உலகம் வண்ணத்துப்பூச்சிகளை சேகரிப்பது. உலகம் முழுக்கச் சென்று. அவருடைய தொழிலின் சலிப்பை வெல்ல, தொழிலில் ஆர்வம் குறையாமல் தொடர அது அவருக்கு உதவுகிறது.

இலக்கியம், கலை, இசை போன்றவை இன்றைய வாழ்க்கையில் நெருக்கடியும் போட்டியும் மிக்க சூழலில் மிகமிக இன்றியமையாதவை. அவை உண்மையில் போட்டிநிறைந்த புறவாழ்க்கைக்கு எதிரானவை அல்ல, உதவியானவை. அவை கவனத்தை திசைதிருப்பி தொழில்திறனை அழிக்கும் என்பது பழைய நம்பிக்கை. இன்று அத்தகைய அகவாழ்க்கையின் பயன்களை உளவியலாளர்களே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்

கொரோனா காலகட்டத்தில் கடும் உள அழுத்தத்திற்கு ஆளான மருத்துவர்கள் பலரை எனக்கு தெரியும் சிலர் மிகை வேலையால். சிலர் வேலையில்லாமல் சும்மா இருந்தமையால். உளவியலாளர்கள் அவர்களிடம் புத்தகம் படிக்கும்படிச் சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கு படிக்கும் வழக்கமே இல்லை. புதிதாக தொடங்க முடியவில்லை. எனக்கு நாலைந்து கடிதங்கள் வந்தன, எப்படி இலக்கியம் படிக்க ஆரம்பிப்பது என்று.

இச்சூழலில் ஏற்கனவே படிக்கும் வழக்கம் இருப்பது, அந்த மனநிலை நீடிப்பது பெரிய வரம். அதை எவருக்காகவும் கைவிட வேண்டியதில்லை. அது வாழ்க்கையை எத்தனையோ சோர்வுகள், கசப்புகளில் இருந்து காப்பாற்றுவது. அதை வாழ்வின் இறுதிநாட்களில் உணர்வீர்கள்.

அத்தனைக்கும் அப்பால் ஒன்றுண்டு. முதுமை. இறுதிநாள் வரை எவரும் தொழில்செய்யப்போவதில்லை. அப்போது இருக்கும் தனிமையில் அகவாழ்க்கை மட்டுமே எஞ்சியிருக்கும். அதுவரை எதுவும் பழகாதவர் அப்போது புதியதாக எதையும் தொடங்கிவிட முடியாது. ஆழமான , நேர்நிலையான எதையும் செய்யமுடியாத முதுமையில் ஆண்கள் அரசியல்சார்ந்த காழ்ப்புகளிலும் பெண்கள் குடும்பக்காழ்ப்புகளிலும் தொலைக்காட்சிச்தொடர்களின் காழ்ப்புகளிலும் மூழ்கி வாழ்க்கையை கசப்பால் நிறைத்துக்கொள்கிறார்கள்.

ஷண்முக சிவா

தொழிலுக்கு இலக்கியம் தடையென ஆகுமா? அதை அகவாழ்க்கை என வைத்துக்கொண்டால் ஆகாது. அதை தனியாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும். அது எந்தவகையிலும் தொழிலுடன் ஊடாடக் கூடாது.அதை தொடர்பில்லாத எவரிடம் பகிரவும்கூடாது. அதை நம் அகத்தே வைத்துக்கொள்ளவேண்டும். எனில் அது நம் தொழிலுக்கு உதவியானதே

நான் நன்கறிந்த பெருந்தொழிலதிபர்கள் ‘சக்தி நிறுவனங்கள்’ நா. மகாலிங்கம் முதல் இயகாக்கோ சுப்ரமணியம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் வரை தொடர்ந்த இலக்கிய வாசிப்பு கொண்டவர்கள்தான்.

மருத்துவர்களில் உதாரணம் அளிக்கவேண்டுமென்றால் மலேசியாவின் சண்முக சிவாவையும் ஈரோடு வி.ஜீவானந்தம் அவர்களையும் குறிப்பிடுவேன். அவர்கள் தலைசிறந்த மருத்துவர்கள். இலக்கிய வாசகர்கள்.  அதற்குமேல் மிகப்பெரிய அளவில் சமூகசேவையிலும் ஈடுபாடுள்ளவர்கள்.

சண்முக சிவா மலேசிய நவீன இலக்கியத்தை ஓர் இயக்கமாக முன்னெடுத்த முன்னோடி. கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக கல்வியகங்களை உருவாக்க முயல்பவர். ஜீவானந்தம் மயக்கவியல் மருத்துவர் மட்டுமல்ல, குறைந்தசெலவுள்ள மக்கள் மருத்துவமனைகளை உருவாக்கி நிலைநிறுத்திய ஒருங்கிணைப்பாளரும்கூட.

அனைத்தையும் அவர்களால் செய்ய முடிந்தது. ஏனென்றால் அவர்கள் ஒவ்வொன்றையும் அதனதன் தளத்தில் பிரித்து வைத்துக்கொண்டனர். ஒன்று இன்னொன்றை சிறப்புற ஆற்றும்படிச் செய்வதை அதன் வழியாகக் கண்டடைந்தனர்

ஜெ

இருட்கனி வரவு

$
0
0

அன்புள்ள ஜெ,

இருட்கனி செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் கூரியரில் வந்து சேர்ந்தது. நன்றி! (இருட்கனி வந்து சேர்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும் இல்லையா ?)

நூலைக் கையில் எடுத்ததும் என் இரு பெண்களிடமும் தனித்தனியே காட்டி, அட்டையிலிருப்பது யார் என்று கேட்டேன். இளையவள் உடனே கர்ணன் என்று சொன்னாள். மூத்தவள் சற்று நேரம் யோசித்தபின் கர்ணன்தானே என்று கேட்டாள். இருவரும், கர்ணனின் ஒளிவீசும் மார்புக்கவசத்தைக் கொண்டே அடையாளம் கண்டதாகக் கூறினர். மனைவிடம் காட்டினேன். கர்ணன்தானே என்று கேட்டு உறுதிசெய்துகொண்டபின், முதலில் அது துரியோதனன் என்று நினைத்ததாகவும், பின்பு கவசத்தைக்கொண்டே அது கர்ணன் என்று ஊகித்ததாகவும் கூறினாள்!

அர்ஜுனன், கண்ணன், கர்ணன் இவர்களை வைத்து ஒரு சிறுகதையோடு ஆரம்பிக்கும் நாவல், இறுதிவரை கர்ணன் எவ்வாறு பிறருக்காகக் கனிந்து கொடையளித்துக்கொண்டே இருக்கிறான் என்று நேரடியாகவும், மறைமுகமாகவும்  நுட்பமாக விவரித்துக்கொண்டே செல்கிறது. குழந்தையில் படகை உதைத்துத் தன்னை விடுவித்துக்கொள்வதன்மூலம் தாயின் வாழ்வைத் திருப்பி அளிப்பதில் தொடங்கும் கர்ணனின் கொடை, சிதையில் மனைவிக்குச்  சத்திரிய அரசி என்ற அந்தஸ்த்தை ஈட்டிக்கொள்ள உதவுவது வரை தொடர்கிறது. கொடிய யுத்தம்கூட அவனிடம் பிறர் உயிர்க்கொடை பெறுவதற்காகவே நடைபெறுவது போல் உள்ளது.

எவரிடமும் எதையும் பெரும் அவசியம் இல்லாதவன். தந்தையின் கொடைகூட அவருக்கே திரும்பிச்செல்கிறது. தானத்தின் பலன்களும் கொடையளிக்கப்படுகின்றன. அனைத்தையும் கொடையளித்தபின் கர்ணன் போர்க்களம் புகும் காட்சி:

// “கர்ணன் மீது விண்ணிலிருந்து பொன்னிற ஒளி ஒன்று இறங்கியிருந்தது. அவன் அணிந்திருந்த கவசங்களும் அணிகளும் விழிமலைக்கும்படி மின் கொண்டிருந்தன. அவன் புரவியின் கடிவாள மணிகளும் சேணத்தின் பித்தளை வளையங்களும் அது அணிந்திருந்த வெள்ளி அணிகளும்கூட பொற்சுடர் பெற்றிருந்தன. புரவியின் கால்கள் நிலம் தொடுவதுபோல் தோன்றவில்லை. அவை காற்றைத் துழாவி சென்றுகொண்டிருந்தன. முகில் ஊர்வது போல் அவன் படைகளின் நடுவே சென்றான்.” //

தந்தையை நோக்கும் விருஷசேனன் ஆச்சரியப்படுகிறான்:

//”தேவதேவனுக்கு அளிக்கப்பட்ட மணிக்குண்டலங்களும் கதிர்க்கவசமும் மீண்டு வந்துவிட்டனவா? இப்படை வீரர்கள் எதை பார்க்கிறார்கள்?”//

எந்த அணியம் இல்லாவிடினும் அவனைச் சூழ்ந்து ஒளிர்வது அறத்தின் கடமையல்லவா?

எவரிடமும் எதையும் பெரும் அவசியம் இல்லாத பெருங்கொடையாளியும் மைந்தர்களிடம் பெற்றே ஆகவேண்டும். நூலிலிருந்து:

//“நீங்கள் இப்புவியிலிருந்து எதையும் கொள்ளவில்லை, தந்தையே. ஆனால் எங்களிடமிருந்து நீங்கள் அவ்வண்ணம் ஒழிய முடியாது. நாங்கள் அளிப்பதை நீங்கள் மறுக்கவே இயலாது” என்றான் விருஷசேனன். “உங்களுடன் சேர்ந்து போருக்கெழுவோம். உங்களுக்காக உயிர்கொடுப்போம். நாம் வென்று மீண்டு நாடாண்டால் உங்களுக்கு அன்னமும் நீரும் அளிப்போம். உங்களுக்கு கொடுக்கும் நிலையில் இருப்பவர் நாங்கள் மட்டுமே. எந்த தந்தையும் மைந்தரிடமிருந்து கொள்ளமாட்டேன் என்று சொல்ல இயலாது. அது தெய்வ ஆணை!” என்ற விருஷசேனன் புன்னகைத்து “கொள்க, தந்தையே!” என்றான். கர்ணன் விழிகளில் நீர் வழிய சிரித்தபடி இரு கைகளையும் விரித்தான். விருஷசேனன் எழுந்து அவனை தழுவிக்கொண்டான். மைந்தர்கள் அனைவரும் சேர்ந்து தந்தையை தழுவிக்கொண்டார்கள்.//

யுத்தகளத்தின் நடுவில் உரைக்கப்பட்ட கீதையைப்போல, சிதைக்களத்தில் சூதர்கள் பாடல்கள் வழியாகக்  கர்ணனின் வீரமும், அறமும், கொடையும், கனிவும் நிரம்பிய வாழ்வைப் பாடும் இருட்கனிக்காக நன்றி!

அன்புடன்,

S பாலகிருஷ்ணன், சென்னை

புனைவும் தொன்மமும் மாடத்தியும் –கடிதங்கள்

$
0
0

புனைவில் தொன்மங்கள் தேவையா?

அன்புள்ள ஜெ

புனைவில் தொன்மங்கள் தேவையா என்னும் கட்டுரை வாசித்தேன். நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். புனைவில் வரும் தொன்மங்கள்தான் அதை நீண்ட மரபுடனும், வரலாற்றுடனும் இணைக்கின்றன. ஆழ்மன அர்த்தங்களை விரிக்கின்றன.

அத்துடன் இன்னொன்றும் உண்டு. எனக்கு ஒரு கதையை வாசித்ததுமே அதிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று தோன்றும். வெளியேறி வேறு விரிவுக்குச் சென்று அங்கிருந்து அந்தக்கதையை பார்க்கவேண்டும். அந்தக்கதை அப்போதுதான் விரிவடைகிறது. அதற்கு மிக உதவியாக இருப்பது அக்கதையில் இருக்கும் அந்த தொன்ம அம்சம்தான்.

ராஜகோபால் ஜி

***

அன்புள்ள ஜெ

சமீபத்தில் இரு சினிமாக்கள் வந்தன. ஒன்று கர்ணன், இன்னொன்று மாடத்தி. இரண்டுமே சமூகப்பிரச்சினைகளுக்கு தொன்மங்களை எடுத்தாண்டிருந்தன. நம் இடதுசாரிகள் கர்ணனைக் கொண்டாடினர். மாடத்தியை விமர்சித்தனர். மாடத்தி மனிதப்பிரச்சினையை தொன்மமாக ஆக்கி கீழிறக்குகிறது என்றனர். கர்ணன் அவ்வாறு செய்வதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

அதற்கு லீனா மணிமேகலைமேல் அவர்களுக்கிருந்த தனிப்பட்ட காழ்ப்புதான் காரணம். ஏனென்றால் இடதுசாரிகளால் கலையை அல்லது கருத்தை புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் ஆளைப்பார்த்தே முடிவுசெய்கிறார்கள்.நம்மவரா இல்லையா என்பதுதான் கேள்வி.

ஆனால் இன்னொன்றும் உண்டு. மாடத்தியில் படிமங்கள் மேலே செல்கின்றன. கற்பனையில் விரிகின்றன. கர்ணனில் அவை திட்டவட்டமான வெறும் அடையாளங்களாகவே உள்ளன. ஆகவே நம்மூர் இரும்புத்தலை ரசிகர்களுக்கு இலக்கணப்படி ரசிக்க முடிவதாக உள்ளது. இந்த வேறுபாடு முக்கியமானது என நினைக்கிறேன்.

ஆனந்த்

***

அறியப்படாத தீவின் கதை, உஷாதீபன்

$
0
0

அறியப்படாத தீவின்கதை வாங்க

றியப்படாத தீவு – என்ற தலைப்பே நம்மைக் கவனிக்க வைக்கிறது. அப்படியெனில் ஒரு தீவு உள்ளது என்றும், அது இப்பொழுதும் அறியப்படாமல் கிடக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம். இதுவரை அறியப்படாத ஒன்றை அப்படிப் பெயரிட்டு அழைப்பதுதானே முறை.

அப்படியான தீவு ஒன்றை அறிய முற்பட்டு ஒரு படகு வேண்டி அரசனிடம் போய் நிற்கிறான் ஒருவன். (இங்கே முனிசிபாலிட்டியிலும், பஞ்சாயத்திலும் அல்லது மாநகராட்சியிலும் சொல்லி எந்தப் பயனும் இல்லை என்று கருதி நேரடியாக சீஃப் மினிஸ்டர் செல்-லுக்கே எழுதுவதில்லையா? அப்பொழுதுதான் காரியம் ஆகும் என்று கோரிக்கையைக் கவனத்திற்குக் கொண்டு செல்வதில்லையா?) அதுபோல அரசனிடம்தான் தன் கோரிக்கையை நேரடியாக அவரிடம்தான் சொல்ல வேண்டும் என்கிறான் அந்தப் பிரஜை. வாயிற்காப்போனிடம் சொல்லி, பிறகு கீழ்நிலைப் பணியாளனிடம் அதைப் பகிர்ந்து, அவன் மூலம் அடுத்தடுத்த படி நிலைகளைக் கடந்து கடைசியாக அரசனுக்குப் போய்ச் சேருவதுபோல, கோட்டை வாயிலில் கட்டப்பட்டிருக்கும் மணியை இழுத்து அடித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதைப்போல  என்றெல்லாம் அல்லாமல்  நேரடியாக மன்னனிடம்தான் சொல்லுவேன் என்று நிற்கும் ஒருவனை என்னதான் செய்வது?

நாடும் சமூகமும் அளித்த பெருங்கொடையின் நிமித்தமாக அல்லது அவனுக்கென்று அளித்துள்ள சிறப்புச் சலுகைகளின் வழி அரசன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கும் நிலையில், விண்ணப்பங்களுக்கான கதவுகளும் அவ்வப்போது தட்டப்படும், அந்த வாசலும் எப்போதாவது திறந்து மூடப்பட வேண்டிய அவசியம் நேரும் என்பதை உணர நேரும் இக்கட்டான நிலை. சலுகைகளையே அனுபவித்து அதிலேயே சந்தோஷித்து வாழும் அரசனின் பொறுப்பு வாய்ந்த கடமைகளுக்கும் அவ்வப்போது நெருக்குதல் ஏற்பட்டுப் போகும் என்பதுதானே யதார்த்தம்?

அந்த விசித்திர மனிதன் கேட்பதென்ன? ஒரு படகு. எதற்காக? அறியப்படாத தீவு ஒன்றினைக் கண்டறிவதற்காக. அறியப்படாத தீவுகள் என்று ஏதுமில்லை. எல்லாமும் அறியப்பட்டுவிட்டன. வரைபடங்களை நன்றாக அறியட்டும். அதில் அப்படி ஒன்று இருக்கிறதா என்பதைத் தேடட்டும். அப்போது இந்த உண்மை புலப்படும். இது அரசனின் பதிலாக இருக்கிறது.

அதை அந்த எளிய மனிதன் ஏற்றுக் கொள்கிறானா என்ன? அப்படி இருப்பதற்கு சாத்தியமேயில்லை. அறியப்படாத தீவு என்று ஏதேனும் ஒன்று இருந்தே தீரும்.அறியப்படாத ஒன்றின் அறிதலே இப்போதைய  என் பணி. அது என் மூலமாக முற்றுப் பெற வேண்டும் என்பதே என் கனவு. எனவே அதை அறிவதற்கு எனக்குப் படகு தந்து உதவுங்கள் என்று வேண்டி நிற்கிறான். அவனது தொடர்ந்த நச்சரிப்பின் காரணமாக மக்களின் ஆதரவுக் குரல் அதிகரிப்பதைக் கண்ணுற்று, அந்த உதவியை அளிக்காமல் அவனை அங்கிருந்து நகர்த்த முடியாது என்கிற உணர்தலில் துறைமுகத்திலிருந்து அவனுக்கு ஒரு பாய்மரக்கப்பல் படகு அளிக்க உத்தரவிடப்படுகிறது.

அது வெகு காலத்திற்குப் பயன்படுத்தப்படாது உபயோகமின்றி சிதிலமடைந்த, பழைய படகாக இருப்பதைக் கண்டு இரக்கமுற்று ஒரு  கடைநிலைப் பணிப்பெண் உதவுகிறாள். அவன் கோரிக்கையோடு வந்து நின்ற நாள் முதலாய் அவனைக் கவனித்து வருபவள். அவன் மீது உண்டான இரக்கம் அவளை அந்த உதவிக்குத் தூண்டுகிறது. ஆனால் அவனோடு பயணிக்க எந்த மாலுமிகளும் மனமுவந்து வரச் சம்மதிக்கவில்லையே? அவனின் அந்த முயற்சியின் மீது எவருக்கும் நம்பிக்கை எழவில்லையே? பின் அவன் எப்படித் தன் பயணத்தை மேற்கொள்ளுவான்?எப்படிப் படகினை இயக்குவான்? எவரெவரின் ஒத்துழைப்பில் அந்த அறியப்படாத தீவினைக் கண்டறிவான்? கலங்கி நிற்கும் ஒவ்வொரு முயற்சியிலும் மனம் தளராது தன் சிந்தையில் அந்த லட்சியத்தைச் சுமந்து கொண்டேயிருக்கிறான் அவன்.

அறியப்படாத தீவினை அறிய முயலுதல், அதற்காகப் படகு ஒன்று வேண்டும் என்று அரசனிடம் போய் நிற்றல், படகைப் பெறுவதற்காக துறைமுகத் தலைவனிடம் விவாதித்தல், அளிக்கப்பட்ட பழைய படகை முழுமையாகச் சுத்தம் செய்து அவன் பயணத்திற்கு உதவுகையில் அந்தப் பணிப்பெண் அவன்பால் ஈர்க்கப்படுதல், என்று வெவ்வேறு படிநிலைகளில் நாவல் புரியும் விவாதப் பயணம், அந்த மனிதனின் கனவு மெய்ப்பட வேண்டும் என்கிற ஆர்வத்தை நமக்கு ஏற்படுகிறது. அவனோடு சேர்ந்து நாமும் பயணிக்க யத்தனிக்கிறது. இந்த வாழ்க்கையின் உன்னதமான பயணத்தை இந்த நாவல் அடியாழமாக உணர்த்திச் செல்கிறதோ என்கிற புரிதலில் நாம் வியந்து நிற்கிறோம்.

அன்றிரவு அவன் காணும் அரிய கனவு ஒன்றே அவனை அந்த அறியப்படாத தீவிற்கு அழைத்துச் செல்கிறது. அதில் அவனோடு  பலரும் பயணம் செய்கிறார்கள்.  விவாதித்த மனிதர்கள், கேலி செய்த மாலுமிகள், உடன் வர மறுத்த பணியாளர்கள் என்று பலர் மற்றும் நிறையப் பெண்கள் அவனோடு பயணிக்கிறார்கள். கோழி. மாடு,கழுதை, குதிரை, வாத்து என்று பலவும் அந்தப் பயணத்தில் பங்கு கொள்கின்றன. அறியப்படாத தீவினைத் தேடிக் கிளம்பிய அந்தக் கப்பலே மெய்ம்மையான அந்தப் புது உலகில் ஒரு சிறிய தீவாக  மாறிப் போகிறது. வாழ்க்கைப் பயணத்தின் புத்தம் புதிய அனுபவங்கள்.

…இந்தப் பயணத்திற்கு பேருதவியாய் இருந்த, அவன் மனதிற்குகந்த, அன்பின்பாற்பட்ட அந்தப் பணிப்பெண் என்ன ஆனாள்? அவளைக் காணவில்லையே? அவனோடு வந்தாளா என்றால் இல்லை. கரையிலேயே ஒதுங்கி விட்டாளே அவள்? அவன் கவனம் முழுதும் அவள் மீதே நிலைத்து விடுகிறது. அவளின் அளப்பரிய பணியை நினைத்து நெஞ்சம் உருகுகிறது. அவள் தன் பயணத்திற்குப் பேருதவியாய் இருந்திருக்கிறாள். தன் கனவுகளின், லட்சியங்களின், செயல்பாடுகளின் ஆணி வேராய் நின்று பணியாற்றியிருக்கிறாள். என் முனைப்பான முயற்சிக்குத் தன் முனைப்பாய் நின்று உதவியிருக்கிறாள். அவளோடு உயிரும், உடலுமாய் கலந்து அந்தக் கனவுலகில் பயணிக்கிறான் அவன். அதுவே அவனை வெற்றி கொள்ள வைத்து விடுகிறது.

கப்பல் தானாகவே ஒரு தீவினைச் சென்றடைந்து விடுகிறது. உடன் பயணித்தவர்கள் எல்லோரும் இறங்கிப் போய் விடுகிறார்கள். அவன் அவளோடு, அவளுடனான கனவுகளோடு தனித்து விடப்படுகிறான். படகிற்கு வர்ணம் பூசும் நிகழ்வின்போது அந்த வண்ணங்களின் கலவையில் அந்தப் படகே அழகிய தீவாய் புதிய உருப்பெற்று விடுகிறது.

ஒரு தீவைத் தேடிப் பயணம் புரியும் சின்னஞ் சிறு தீவு அளவிற்கான மிகச்சிறிய குறுநாவலே இது. அந்தப் பெண்ணிற்கும் ஆணிற்குமான உறவின், அன்பின் ஆழங்களை, அதன் உள்ளார்ந்த மெய்யுணர்வை ஆத்மார்த்தமாய் உணர்த்தி செல்லும் ஒரு இனிமையான பயணமாக அமைகிறது இந்தச் சிறு நாவல். அந்த ஆணோடு கலந்த அந்தப் பெண்ணின் பயணம், அவள் அவனுக்கு ஒத்துழைப்பாக இருந்து அவனை வழி நடத்திச் செல்லுதல், அவனின் பயணத்தை இனிமையாக்குதல், வாழ்க்கைப் பயணங்களில் சோர்வடையாத நிலையில் இருத்தல்…என்பதாக இந்த வாழ்க்கையின் பல படிநிலைகளை உணர்த்துவதாகவே நாம் இந்த நாவலைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு பெண்ணோடு இணைந்து கொண்ட இந்த வாழ்வில் நம்மால் அதுவரை அறியப்படாத வாழ்வின் வெவ்வேறு விதமான அனுபவங்களை எதிர்கொள்வதும் அதன் மூலம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்வதுமான மெய்யான உணர்வுகளை எய்த முடியும் என்பதாக இந்த நாவல் நமக்கு உணர்த்துகிறது என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தச் சிறு நாவலின் முன்னுரையில் இப்படிச் சொல்லப்படுகிறது.

“மொழி பெயர்த்தல் என்பது மற்றொரு சுயமான  படைப்பை உருவாக்கும் செயலுக்கு ஒப்பானதாகும். மூலத்திற்கு இணையானதாகவும், நியாயம் செய்வதாகவும் இருக்க வேண்டியதாயிருக்கிறது. ஒரு சித்திரத்தைப் பார்த்து வரையும் இன்னொரு சித்திரம் எனலாம். சில வண்ண மாற்றங்களும், வடிவ மாற்றங்களும் மூல சித்திரமாகவும், அதே நேரம் சுயமானதாகவும் இருக்க வேண்டும்”

ஆனந்த அவர்களின் இந்த நாவலுக்கான மொழி பெயர்ப்பு அந்த உணர்வை நமக்கு முழுமையாக ஏற்படுத்துகிறது. மொழி பெயர்ப்பில் தெளிவான ஒரு வாசிப்பு அனுபவத்தை நமக்குத் தரும் சின்னஞ்சிறிய சிறப்பான நாவல் இந்த “அறியப்படாத தீவின் கதை”.

எங்கள் ஒலிம்பிக்ஸ்

$
0
0

அன்புள்ள ஜெ

நலம்தானே?

உங்கள் இணையதளத்தில் விளையாட்டு செய்திகளே இல்லை. ஒலிம்பிக் செய்திகள் இல்லை. நாம் தங்கம் வென்றபோதாவது ஏதாவது போடுவீர்கள் என்று நினைத்தேன். வேண்டுமென்றே விளையாட்டுக்களை ஒதுக்குகிறீர்களா?

டி.ராஜ்குமார்

***

அன்புள்ள ராஜ்குமார்

நீங்கள் புதுவரவு. நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். உண்மையிலேயே எனக்கு எந்த விளையாட்டைப்பற்றியும் எதுவும் தெரியாது. கிரிக்கெட் ஹாக்கி ஃபுட்பால் எதைப்பற்றியும் அடிப்படைகளே அறிமுகமில்லை. இதுவரை ஒரு முறைகூட இவற்றை ஆடியதில்லை. ஒருநாள்கூட இவ்விளையாட்டுக்களை டிவியில் பார்த்ததில்லை. இத்துறைகளில் எந்த செலிபிரிட்டிகளையும் அறிமுகமில்லை.

சினிமாவுக்கு வந்தபின் பல முன்னாள் இன்னாள் விளையாட்டுத் துறை நட்சத்திரங்களை பார்ட்டிகளில் சந்திப்பேன். பெரும்பாலானவர்களை டிவியின் விளம்பர மாடல்கள் என என் மூளை பதிவுசெய்து வைத்திருக்கும். டிவியே இருபதாண்டுகளாகப் பார்ப்பதில்லை என்பதனால் அதுவும் மங்கல்தான். ஆகவே மையமான ஒரு புன்னகையுடன் சமாளித்துச் சென்றுவிடுவேன். தங்களை இன்னொரு மனிதருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை என அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதனால் எந்தச் சிக்கலும் வருவதில்லை.

எனக்கு விளையாட்டு ஆர்வமிருந்தது எல்லாம் 20 வயது வரை. ஆனால் அது வேறொரு உலகம், வேறொரு காலம். தமிழ்நாட்டில் குமரிமாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம் தாலுகாக்கள் கேரளத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெடுமங்காடு, காட்டாக்கட, நெய்யாற்றின்கரா ஆகிய மூன்றுமாவட்டங்கள் சேர்ந்த ஒரு கலாச்சார மண்டலம் உண்டு. அதுவே எங்கள் வட்டம். வெளியே ஓர் உலகமிருக்கும் செய்தியே தெரியாது.

இங்கே புகழ்பெற்ற விளையாட்டுக்கள் மூன்று. கிளியந்தட்டு, கபடி, ஓணப்பந்து. கிளியந்தட்டு ஒரு கேளிக்கை விளையாட்டு. ஒரு ஆறடுக்கு களத்தில் முதற்களம் முதல் கடைசிகளம் வரை ஆட்களை ஏமாற்றியபடியே தாண்டிச்செல்லவேண்டும். எல்லா களத்தில் தடுக்க ஆளிருக்கும்.

போட்டி விளையாட்டுக்கள் கபடியும் ஓணப்பந்தும். கபடி ஆற்றுமணலில் விளையாடப்படுவது. மற்ற ஊர் கபடி போலில்லாமல் கொஞ்சம் மல்யுத்தமும் கலந்திருக்கும். ஓணப்பந்து இப்பகுதிக்கே உரிய ஆட்டம். கிரிக்கெட் பந்து அளவிலுள்ள தோல்பந்தை கையால் அடித்து வீசி, காலால் தடுத்து ஆடப்படுவது. இருபக்கமும் 12 பேர் இருப்பார்கள்.

இதில் கபடியில் ஒருகாலத்தில் அறியப்பட்ட சாம்பியனாக பரிசுகள் பெற்றிருக்கிறேன். ஓணப்பந்தும் விளையாடுவேன். கபடித்தழும்புகள் இப்போதும் கால்முழுக்க உண்டு.

ஜூனில் இடவப்பாதி மழை தொடங்கி ஜூலை முதல்வாரத்தில் முடிந்ததும் போட்டிகள் ஆரம்பிக்கும். இளம்சாரலும் குளிர்காற்றும் ஓணம் வரை இருக்கும் என்பதனால் நாளெல்லாம் விளையாடலாம். விவசாய வேலைகள் இருப்பதில்லை என்பதனால் எல்லாருமே வந்துவிடுவார்கள். ஓணத்தின்போதுதான் வானம் தெளிந்து வெயில் தலைகாட்டும்

ஊருக்கு ஊர் கபடி, ஓணப்பந்து அணிகள் உண்டு.  அக்காலத்தில் ஓணப்பந்தில் முழுக்கோடு, காட்டாக்கடை, மஞ்சாலுமூடு நெடுமங்காடு அணிகள் முந்தியவை. ஆகஸ்டில் ஓணத்திற்கு முந்திய நாள் கடைசிப்போட்டி. சாம்பியன் அணிக்கு சுழற்கேடயம். திருவிதாங்கூர் மகாராஜா அளிப்பது. உண்மையாகவே பொன்முலாம் பூசியது. மகாராஜா அல்லது அவரது பிரதிநிதியால் அளிக்கப்படும்.

தொண்ணூறுகள் வரைகூட இப்போட்டிகள் நடந்தன. பின்னர் இல்லாமலாயின. இன்று சில இடங்களில் சும்மா வேடிக்கைக்காக ஆடிப்பார்க்கிறார்கள். ஓணப்பந்து என இணையத்தில் தேடினால் நானே பேசிய தொலைக்காட்சிக் காணொளிகளே வந்து நிற்கின்றன. ஒரு வீடியோவில் பயல்கள் காமாசோமாவென விளையாடுகிறார்கள். விளையாட்டே வேறுமாதிரி இருக்கிறது.

இன்று தனித்த கலாச்சார மண்டலங்களே மறைந்துவிட்டன. உலகமே ஒற்றைப் பண்பாட்டால் இணைக்கப்பட்டுள்ளது.  போலித்தேசியவெறிகள் விளையாட்டு என்ற பேரில் வளர்க்கப்படுகின்றன. இதன்மூலம் உருவாகும் இழப்புகள் திகைக்கச் செய்கின்றன.

முதல்விஷயம் சமூகக்கொண்டாட்டம் என்பதே இல்லாமலாகிவிட்டது. வாழ்க்கை என்பது வேலை மற்றும் வீட்டில் தனிமையில் ஓய்வு மட்டுமே என்பதாக மாறிவிட்டது. என் நினைவில் முன்பெல்லாம் ஆண்டில் நூறுநாட்கள் ஏதேனும் சமூகக் கொண்டாட்டங்கள் இருக்கும். அத்தனை பேரும் கொண்டாடும் விளையாட்டுக்கள், விழாக்கள். வறுமையிலும் அது மகிழ்ச்சியான வாழ்க்கையோ என்று இன்று தோன்றுகிறது.

ஓணப்பந்தும் கபடியும் ஒவ்வொருநாளும் ஆடுவோம். ஓணத்தையொட்டி கிட்டதட்ட இரண்டு மாதகாலத் திருவிழா. என் பார்வையில் விளையாட்டு என்பது அதுதான். அதிலிருக்கும் கொண்டாட்டம்தான். எங்கோ எவரோ விளையாடுவதை டிவியில் பார்த்து ஃபேஸ்புக்கில் கூச்சலிடுவதில் எனக்கு ஆர்வமில்லை. இன்று அனைவருமே பார்வையாளர்களாக ஆகிவிட்டனர். ஆட்டக்காரர்கள் அதிபயிற்சி பெற்ற சில நிபுணர்கள் மட்டுமே.

நான் என் நினைவின் உலகில் வாழவே விரும்புகிறேன். அதை இன்றைய ஊடகக் கொண்டாட்டங்களைக்கொண்டு அதை அழித்துக்கொள்ள விரும்பவில்லை.

ஜெ

எழுத்தாளன் என்னும் நிமிர்வு

$
0
0

அன்புள்ள ஜெ

நேரடியாக இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு தயங்குகிறேன். இருந்தாலும் என் நட்புவட்டாரத்தில் கேலியும் கிண்டலுமாக பலர் பேசுவதனாலும், இலக்கியரீதியாக பொருட்படுத்தத்தகாத சிலர் முகநூலில் வம்பு பேசுவதனாலும் இதைக் கேட்கிறேன்.

நீங்கள் ஓர் இலக்கியவாதியாக உங்களுடைய இடத்தையும் தகுதியையும் முன்வைத்துப் பேசுகிறீர்கள். தயங்காமல் உங்களை உயர்த்திச் சொல்கிறீர்கள். இப்படி இலக்கியவாதிகள் சொல்வதில்லை என்று சொல்கிறார்கள். தமிழில் மட்டுமே இப்படிச் சொல்வதுண்டு என்கிறார்கள். இப்படிச் சொல்லலாமா? இதற்கு முன்னுதாரணங்கள் உண்டா?

எஸ்.திவ்யா

***

அன்புள்ள திவ்யா,

இந்தக் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் என் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பவர் என்றால் என் சாயல்கொண்ட ஒரு நல்ல மொழிநடை உருவாகியிருக்கும். இக்கேள்வியை என்னைப் படிக்க ஆரம்பிக்கும் ஒருவரின் மொழிநடை என்று எடுத்துக்கொள்கிறேன்.

பொதுவாக ஓர் ஆலோசனை, ஒருபோதும் தன்னளவில் எதையாவது பொருட்படுத்தும்படி எழுதாத ஒருவரின் கருத்துக்களை கருத்தில்கொள்ள வேண்டியதில்லை. இன்று சமூகவலைத்தளம் எந்த முட்டாளும் கருத்து உதிர்க்க வாய்ப்பை அளிக்கிறது. முக்கியமானவர்கள் மேல் அவன் கசப்பை கக்கினான் என்றால் அவனை கவனித்து ‘ஆகா’ போட ஒரு கூட்டம் உள்ளது. அது அவனுக்கு ஒரு மேம்போக்கான முக்கியத்துவத்தை அளிக்கிறது.

தமிழ்ச்சமூகத்தில் வாசகர்கள் மிகக்குறைவு. ஆகவே சமூக ஊடகத்தளத்திலும் வாசகர்கள் மிகமிக அரிதானவர்கள். எஞ்சியவர்கள் வெறுமே பெயர் தெரிந்து வைத்திருப்பவர்கள். பண்பாட்டுப்பயிற்சி அற்ற சமூகம் எப்போதுமே அதிகாரத்தையே அஞ்சி வழிபடும். அரசியலாளர், செல்வந்தர்களை மிதமிஞ்சி வணங்கும். ஆனால் அறிவுச்செயல்பாடுகளை அஞ்சும், அருவருக்கும்.

ஓர் அறிவியக்கவாதி என்ன செய்கிறான் என பாமரனுக்கு தெரியாது. ஆகவே அவர்களையும் தன்னைப்போன்ற ஒரு சாமானியனாக நினைத்துக்கொள்கிறான். தன்னைப்போன்ற ஒரு சாமானியனுக்கு தன்னைவிட அதிக கவனம் ஏன் கிடைக்கிறது என்று அவனுக்குப் புரிவதில்லை. ஆகவே அறிவியக்கவாதிமேல் காழ்ப்பும் கசப்பும் ஏளனமும் கொண்டிருக்கிறான்.

இங்கே எழுத்தாளனைப் பற்றிப்பேசும் எந்த ஒரு பாமரனும் அவனை தன்னைப்போல நினைத்து, தன் நிலையில் வைத்து பேசுவதை, எள்ளிநகையாடுவதை காணலாம். ஓர் அறிவியக்கவாதியின் படிப்பும் உழைப்பும்கூட அவனுக்கு ஒரு பொருட்டாக தோன்றுவதில்லை. ஆனால் ஓர் அரசியல்வாதியை, செல்வந்தரை கும்பிட்டுத்தான் பேசுவான். ஆகவே எழுத்தாளனை ஏகடியம் செய்தோ வசைபாடியோ ஏதாவது சொன்னால் உடனே பலநூறுபேர் வந்து கூடி கும்மியடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இச்சூழலில் எழுத்தாளர்கள் பற்றி வரும் எதிர்மறைக்கருத்துக்கள், அசட்டு விமர்சனங்கள், நகையாடல்களுக்கு இலக்கிய ஆர்வமோ அறிவியக்க ஈடுபாடோ கொண்டவர்கள் செவிகொடுக்கலாகாது. அதைப்போல அறிவையும் பொழுதையும் வீணடிப்பது பிறிதில்லை.

*

உலகமெங்கும் எழுத்தாளர்கள் தங்கள் இடமென்ன, தகுதி என்ன என்று தேவையான இடங்களில் சொல்லாமலிருந்தது இல்லை. அப்படிச் சொல்லாத ஒரேயொரு இலக்கியமேதையைக்கூட சுட்டிக்காட்டமுடியாது.

தன் பெருமையை உணராமல் அளிக்கப்பட்ட பரிசை பெற மறுத்த பெருங்கவிஞர்களின் வரிசையை நாம் சங்கப்பாடல்களில் காணலாம். என்னை விரைந்தேற்றுக்கொள்ளாத வேந்துண்டோ என்று பாடியவனும் கவிராஜன் தமிழ்நாட்டுக்கு இல்லை என்னும் வசை என்னால் கழிந்தது என்று பாடியவனும் தமிழ்க்கவிஞர்கள்தான்.

தன் தகுதியையும் இடத்தையும் அதை உணர்ந்தாகவேண்டியவர்கள் முன் தெளிவாக எடுத்துச் சொல்வது எழுத்தாளனின் கடமை. அதிலும் இலக்கியரசனையோ, மெய்யான வாசிப்போ இல்லாத பாமரர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் நம் பொதுச்சூழலில், அவர்களின் அசட்டு அரசியல்க் காழ்ப்புகள் எழுத்தாளர்கள் அனைவரையுமே சிறுமை செய்து கொண்டிருக்கும் நிலையில், அவற்றுக்கு மேல் எழுந்து நின்று, தருக்கி தலைநிமிர்ந்து, நான் இன்னார், எனக்குரிய இடம் இது என்று சொல்வது அவன் ஆற்றும் சமூகக்கடமை. மெய்யான இலக்கியம், மெய்யான அறிவியக்கம் நோக்கி மக்களை ஆற்றுப்படுத்தும் செயல் அது.

ஒரு நல்ல படைப்பை எழுதியதுமே எழுத்தாளனுக்கு தெரிந்துவிடுகிறது அவன் வெற்றியடைந்துவிட்டான் என. அவ்வாறு அவன் அடைந்த வெற்றிகளை கொண்டு அவன் தன் தகுதியையும் மதிப்பிட்டிருப்பான். அவன் பிற இலக்கியப்படைப்புகளையும் வாசிப்பவன் என்பதனால் தன் இடத்தையும் ஐயமற அறிந்தவனாகவே இருப்பான். அந்த அறிதலே எழுத்தின் வழியாக அவன் அடையும் பயன். அவனுடைய நிமிர்வின் ரகசியம் அது. எழுத்தையும் இலக்கியத்தையும் அறியாப் பாமரர்களின் புறக்கணிப்பு ,எள்ளல் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் காலத்தின்முன் நிற்கும் நிமிர்வை அவனுக்கு அளிப்பது அது.

அவ்வண்ணம் தன்னுணர்வுடன் பேசிய தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி. பால்ஸாக், தாமஸ் மன் என நூற்றுக்கணக்கான இலக்கியமேதைகளின் வரிகளை எடுத்துச் சொல்லமுடியும். அவர்களில் பலர் உலகப்புகழ் பெற்றவர்கள். உலகமறியாத மேதைகளிடும் நாம் அதே நிமிர்வை காணமுடியும்.

ஆனால் இன்னொரு பக்கமும் உண்டு. அது எழுத்தாளன் தன்னிரக்கத்தில், சோர்வில் மூழ்கும் தருணங்களால் ஆனது. எந்த எழுத்தாளனும் அவன் எண்ணியதை எழுதியிருக்கமாட்டான். எய்தியதை விட மிகமிக அப்பால்தான் அவன் கனவு இருந்துகொண்டிருக்கும். அது ஓரு சோர்வலையென எழுந்து அவனை மூடும். அப்போது தன்னைத்தானே நிராகரித்து அவனே பேசவும்கூடும்.

அதேபோல தான் எழுதியவற்றிலிருந்து விடுபடுவதும் எழுத்தாளனுக்கு பெரும் சவால். எழுதியநூல்கள் ஒரு பெரிய வேலியென அவனைச் சூழ்ந்து முன்னகர்வை தடுக்கின்றன. குறிப்பாக அவை பெரும்புகழ் பெற்றுவிடுமென்றால் அவன் அவற்றை நிராகரித்தேயாகவேண்டும். மேலைச்சூழலில் வெற்றிபெற்ற எழுத்தாளனைச் சுற்றி அவன் எழுதிய பழைய நூல்களைப் பற்றி பேசுபவர்கள் நிறைந்திருப்பார்கள். அவன் அவர்களை, அந்நூல்களை மூர்க்கமாக உதறிப்பேசுவது அடிக்கடி நிகழ்வது.

இலக்கியப் படைப்பாளியின் உள்ளம் செயல்படுவதற்கு இலக்கணம் வகுக்க எவராலும் முடியாது. அவன் எங்கே எப்படித் தன்னை முன்வைக்கிறான் என அவனே உணர்வதில்லை. ஒருசமயம் காலத்தின் குழந்தையாக, மறுசமயம் உலகால் புறக்கணிக்கப்பட்டனவனாக அவன் உணரக்கூடும். இலக்கிய அறிமுகம் சற்றேனும் உள்ள எவரும் இலக்கியவாதி இப்படித்தான் பேசவேண்டும், இதுதான் நாகரீகம் அல்லது மரபு என்றெல்லாம் சொல்ல முன்வரமாட்டார்கள்.

எனக்கு என் எழுத்தைப் பற்றிய தன்னம்பிக்கை என்றும் உண்டு. என் முதல்நாவல் ரப்பர் வெளியீட்டு விழாவிலேயே அதைச் சொன்னேன். ‘தமிழின் முதன்மையான நாவல்களை நான் எழுதுவேன்’ என. விருதுபெற்ற அந்நாவலை நிராகரித்து மேலே செல்வேன் என்று சொன்னேன். விஷ்ணுபுரம், அதன்பின் பின்தொடரும் நிழலின் குரல், அதன்பின் கொற்றவை, அதன்பின் வெண்முரசு என என் உச்சங்களை அடைந்து அதன்மேல் ஏறிச் சென்றுகொண்டிருக்கிறேன்.

அதை வாசகர்களிடம் சொல்கிறேன். அதற்கு ஒரு துணிவுவேண்டும். வாசிக்காதவர்களிடம் வாசித்துப்பார் தெரியும் என்று சொல்வதற்கான துணிவு. வாசித்தவர்களின் முகம் நோக்கி அதைச் சொல்லும் துணிவு. அத்துணிவுள்ளவர் சொல்லவும் தகுதிபெற்றவர்.

எழுத்தாளனின் தகுதி, அவன் செயல்படும் விதம், அவனுடைய இடம் ஆகியவற்றைப்பற்றி தமிழில் பேசப்படும் இத்தகைய கருத்துக்கள் எவற்றையும் வேறெந்த உலகமொழிகளிலும் பேசவேண்டிய தேவை இல்லை. மலையாளத்தில் இந்த எந்தக் கட்டுரையையும் எழுதவேண்டியதில்லை. அங்கே இவை அனைவரும் அறிந்த பொதுக்கருத்துக்கள்.

ஆனால் தமிழ்ச்சூழலில் எழுத்தாளன் என்னும் ஆளுமையையே மிகப்பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. பண்பாட்டில் அவன் இடமென்ன என்றே தெளிவில்லை. வாசிப்பவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்குக் கூட அந்த எளிமையான அடிப்படைகள் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இன்னும் ஒரு தலைமுறைக்காலம் அதைச் சொல்லிக் கொண்டேதான் இருக்கவேண்டும்.

தெளிவாக உதாரணம் சொல்கிறேன். வெண்முரசின் சில பகுதிகளை மலையாள இதழாளர், விமர்சகர் சிலர் தமிழிலேயே படித்திருக்கிறார்கள். ஆனால் வெண்முரசு எழுதப்படுவது, முடிவடைந்தது பற்றி மாத்ருபூமி இரண்டு அட்டைப்படக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளது. பாஷாபோஷிணி இரண்டு அட்டைக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளது. மூன்று தொலைக்காட்சி நிகழ்வுகள் வந்துள்ளன. வரவிருக்கின்றன.

தமிழில் எந்த ஊடகமும் வெண்முரசு முடிந்தது பற்றி ஒரு வரிச் செய்தி வெளியிடவில்லை. இங்குள்ள பெரும்பாலான எழுத்தாளர்கள் வெண்முரசு என்ன என்றே அறியாதவர்கள். பலர் செவிச்செய்திகளாகவே வெண்முரசை அறிந்தவர்கள். அது இயல்பு, தமிழில் அவ்வளவுதான் எதிர்பார்க்கமுடியும். நானறிந்த இதழாளர்கள் எவருக்கும் அன்றாட அரசியல் வம்பு, சினிமாவுக்கு அப்பால் ஏதும் தெரியாது. விமர்சகர்களுக்கும் அன்றாட அரசியலும், சில எழுத்தாளர்களின் பெயர்களும் அன்றி ஒன்றும் தெரியாது.

இச்சூழல் என்னிடம் மறைமுகமாகச் சொல்வதென்ன?  ‘எழுதிவிட்டு பேசாமல் இரு, நாங்களும் கவனிக்கமாட்டோம்’ என்றுதானே? ஆகவே நான் என் எழுத்தைப்பற்றிச் சொல்லியாகவேண்டும். ஏன் பாரதி “நவகவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை” என தன் கவிதைபற்றிச் சொல்லவேண்டியிருந்ததோ அதே காரணம்தான்.

அதைக்கேட்டு தமிழகப் பெருந்திரளில் நூறுபேர் குழம்புவார்கள், பத்து அசடுகள் நையாண்டி செய்வார்கள், ஒருவர் என்னை அறிந்து வாசிக்க வருவார். அவரையே நான் சென்றடையவேண்டும். அவ்வாறே என்னுடைய வாசகர்வட்டத்தை அடைந்திருக்கிறேன். எந்த ஊடகத்தாலும் அல்ல. என் ஊடகத்தை நானே உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் இருந்த அதே நிலைதான் இது. இந்நிலை மலையாளத்தில் இல்லை, உலகமொழிகள் எதிலும் நானறிந்து இல்லை. ஆகவே இக்குரல்.

*

ஆனால் என்னை வேறு களங்களில் அப்படிச் சொல்லிக்கொள்ள மாட்டேன். நான் ஆன்மிகமான தேடலும் பயணங்களும் கொண்டவன். ஆனால் ஆன்மிகமான தகுதி கொண்டவன் என்று ஒரு கணமும், ஒரு மேடையிலும் சொல்ல மாட்டேன். அவ்வண்ணம் என்னை கருதுபவர்களிடம் அதை உறுதியாக மறுப்பேன்.

ஏனென்றால் வெண்முரசு எழுதும் நாட்களில் நான் கொண்ட கொந்தளிப்பை நானே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். மாபெரும் உளச்சோர்வுக்குள் சென்றிருக்கிறேன். என்னுடைய காம குரோத மோகங்கள் கொந்தளித்து எழுவதைக் கண்டேன். அடித்தட்டின் சேறு அனைத்தையும் கிளறிவிட்டுவிட்டேன் என உணர்ந்தேன். தன்னிரக்கம் மிகுந்து தற்கொலையின் விளிம்பில் பலநாட்கள் அலைந்திருக்கிறேன்.

அன்று வேண்டுமென்றே உலகியலை அழுந்தப் பற்றிக்கொள்ள முயன்றேன். இங்கே என்னை பிடித்து வைத்திருக்கும் விஷயங்களை தேடினேன். மாதக்கணக்கில் வெறிகொண்டு போர்ன் சைட்கள் பார்த்திருக்கிறேன். படுகொலை வீடியோக்களை மனநிலை பிசகியவன்போல பார்த்திருக்கிறேன். அத்துடன் பலவகைச் சண்டைகள், பூசல்கள். முழுமையான தூக்கமின்மை பலநாட்கள் தொடர்ந்திருக்கிறது. என்னென்னவோ உளச்சிக்கல்கள். வேண்டுமென்றே, ஓர் இழப்பு ஏற்பட்டால் நான் அதைப்பற்றி கொஞ்சநாள் கவலைப்பட்டு உலகியலில் இருப்பேன் என்று எண்ணியே, கொஞ்சம் பணத்தை தப்பாக முதலீடு செய்து அழித்திருக்கிறேன்.

அந்நாட்கள் இன்றும் அச்சமூட்டுகின்றன. அர்த்தமில்லாத சொற்பெருக்கு பொங்கி நிறைந்து சட்டென்று ஒரு சொல்கூட இன்றி அப்படியே அணைந்துவிடும். மண்டையால் முட்டித் திறக்க வேண்டியிருக்கும். திறந்தால் அதுவாகவே வழிந்து படைப்பாக ஆகிவிடும். ஒவ்வொரு அத்தியாயமும் அடுத்து ஒன்று வருமா என்ற திகைப்பிலேயே முடியும். ஒரு நாவல் வந்த சில நாட்களிலேயே அது பின்னகர்ந்து மறைய வெறுமையும் கசப்பும் எஞ்சியிருக்கும்.

அதைவிட மோசமானவை உச்சநிலைகள். Bliss என ஆங்கிலத்தில் சொல்லும் பெரும் பரவசத்தருணங்கள். அவை தற்செயலாக உருவாகும் பேரொளி போன்றவை. ஏன் வருகிறதென தெரியாது, ஏன் அணைகிறதென்றும் தெரியாது. அணைந்தபின் வரும் கடும்இருட்டை கையாளவும் முடியாது. அதன்பொருட்டு இசை. நாட்கணக்கில். இடைவெளியே இல்லாமல் 36 மணிநேரம் இசைகேட்ட நாட்களுண்டு.

என் அகத்திறனால் அல்ல, என் நல்லியல்பாலும் அல்ல, என் குருவருளாலேயே கடந்துவந்தேன் என உணர்கிறேன். ஆகவே நான் என்னை அறிந்தவிந்தவனாக, அடங்கியவனாக நினைக்கவில்லை. வெண்முரசு முடிந்தபின் விடுதலை பெற்றுவிட்டேன். இன்று உள்ளம் அமைதி கொண்டிருக்கிறது. தெளிவடைந்திருக்கிறது. ஆனால் என் ஆழத்தின் இருளை எல்லாம் நன்கு அறிந்துவிட்டேன். அதைக்கடந்து செல்ல நெடுநாட்களாகும். கடக்காமலும் போகலாம்.

எனவே ஒருபோதும் வெண்முரசை வைத்து எனக்கு வரும் வணக்கங்களை ஏற்றுக்கொள்வதில்லை. என் குருவின் பெயரால் அன்றி என் பெயரால் எவரையும் வாழ்த்துவதுமில்லை. ஒருவேளை என் எழுத்தை மொத்தமாக நான் நிராகரித்துக் கடந்துசெல்லவும்கூடும். இதுவும் ஒரு தன்னுணர்வே. இது செயற்கையான எளிமை அல்ல. எழுத்தாளன் என்னும் நிமிர்வின் மறுபக்கம். எழுத்தின் இருவேறு பேறுகள்.

இதை என் வாசகர்களிடம் மட்டுமே பகிர்ந்துகொள்கிறேன். என் வாசகர்களன்றி எவரும் இவற்றைப் புரிந்துகொள்ளவும் முடியாது.

ஜெ

எழுத்தாளனின் மதிப்பு
எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும்
எழுத்தாளனின் ஞானம்
எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2
எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா?

பிரயாகையின் துருவன் –இரம்யா

$
0
0

துருவனில் தொடங்கி துருவனில் முடியும் ஒரு நாவலாக பிரயாகை அமையப் பெறுகிறது. ”சொற்கனல்” பகுதி வாசிப்பிற்குப் பின்னர் ஒவ்வொரு நாளும் எழமுடிந்த நேரமெல்லாம், துருவன் தெரியும் அதிகாலை, அதி-இரவு நேரத்தில் துருவனை நோக்கி மனதுருகிக் கொண்டிருந்தேன். நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருப்பது சிறுவயதிலிருந்தே பிடிக்குமெனக்கு. அதனுடன் பேசிக் கொண்டிருக்கும் ஓர் பித்து வாய்க்கப்பெற்றிருக்கிறது. புதிதாக எங்கு சென்றாலும் அங்கு தங்க நேரும் சமயங்களில் முதலில் நான் காண்பது வானைத்தான். எனக்கு அணுக்கமான மூன்று நட்சத்திரங்களைக் கண்டதும் ஒரு அமைதி கொள்வேன். அது தவிர அதிகாலையும் அந்தி மாலையும் மேற்கு வானில் தெரியும் வெள்ளியான சிரஸை மிகப்பிடிக்குமெனக்கு. அவர்கள் இருவருமே பொறாமை கொள்ளுமளவு நான் துருவனை நாவலில் ரசித்திருந்தேன் உங்களின் வார்த்தையின் துணை கொண்டு.

”வடமீனாக எழுந்த சிறுவனை வணங்குக. அவன் அடைந்த நிலைபேற்றையே ஊழ்கத்திலமர்வோர் ஒவ்வொருவரும் இலக்காக்குக. கன்னியர் அவன் பெயர் சொல்லி கற்பில் அமைக! கற்றறிந்தோர் அவனை எண்ணி விவேகத்தில் அமைக. படைக்கலம் கொண்டோர் அவனைநோக்கி விழிதூக்கி அறம் உணர்க!” என்ற உங்களின் வரி கொண்டு தான் அவனைக் கண்டடைந்து முதலில் தொழுதேன்.

வானத்து அதிசயக் காட்சிகள் தோன்றுந்தோறும் பிரமித்து “நான் காணும் இந்தக் காட்சிகளை ஏதோவோர் நிகழ்த்தகவில் என் முன்னோர் கண்டிருப்பார்களா?” என்று நினைத்ததுண்டு. ஆனால் வாய்ப்பில்லை என்றும் தோன்றும். ஒவ்வொரு நாளும் வானம் வேறு வேறு உடையை உடுத்திக் கொள்கிறது. நட்சத்திரங்கள் வேறு வேறு காலத்தினின்று புன்னகை செய்கின்றன. அதனால் தான் எத்தனை முறை கண்டாலும் வானம் எனக்கு சலிப்பூட்டுவதில்லை.

ஆனால் துருவனை, நிலைபெயராதவனை, காலத்தில் நின்று, மானுடர்களுக்கு “காலம்” எனும் பரிமாணத்தை உண்டாக்கியவனை, நான் கண்ட அதே அவனை, எனக்கு முன் அதைக் கண்டறிந்த காலத்திலிருந்து கண்டுகொண்ட மானிடனைப் போலவே நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணமே சிலிர்ப்பைத் தந்தது. என்னைப்போல எனக்குப் பின்னும், இன்னும் இந்த மானுடமே நுரைத்துக் குமிழ்ந்து வெடித்தாலும் எஞ்சியிருப்பவனை வணங்கினேன்.

”ஒரு கண்ணிமைப்பால் அடையக்கூடுவனவற்றில் என்னைப்போன்றவர்களின் சித்தம் தங்காது.” என்று துருவன் சொல்லும்போது நான் இந்தப் புவியில் அடைய வேண்டியவை என நான் வகுத்துக் கொண்ட யாவும் என்னை விட சிறு குமிழிகளாக நின்று என்னைப் பார்த்து சிரிப்பது போலத் தோன்றியது. ஒன்றில் அமைந்து விட்டால் அதையே பெரியதென நினைத்து ஓடி அடைந்து விட்டால் கிடைக்கும் வெறுமையை நினைத்துப் பார்த்தேன். எதிலுமே அமைந்து விடாமல் செயல்! செயல்! என்று முன்னோக்கி செல்ல வேண்டும் என்று சென்று கொண்டிருக்கும் உங்களை நினைத்துக் கொண்டேன். “ஒரு போதும் சென்றடையவில்லை எனும் நிறைவின்மையை அடைக!” என்பதை மீண்டும் கண்டடைந்தேன். மானுடர்கள் கை கொள்ள வேண்டியது அதுவாகத்தானே இருக்க முடியும்.

துருவனை வைத்து ஞானத்தைப் பற்றிச் சொன்ன வரிகள் மேலும் திறப்பைத் தந்தன ஜெ. “எந்த அறிதலும் அறியப்படும் அத்தருணத்துக்கு மட்டும் உரியதே. நிலையான ஞானம் என்பது விண்ணில் இல்லை என்பதனால் மண்ணிலும் இயல்வதல்ல. இதோ இந்த ஒற்றைவிண்மீன் மட்டும் நிலையானது என்றால், இதை வைத்து நாம் வகுத்து அறியும் ஞானமும் இதைப்போல நிலையானதாகவே இருக்கும். இது காலத்தாலும் இடத்தாலும் மாறாதது என்றால் நாம் உருவாக்கும் ஞானமும் எதிர்காலத்தின் முடிவின்மை வரை நீடிக்கக்கூடியதே” என்று மானுடம் உணர்ந்த தருணம் நிலையான ஞானத்தைப் பற்றிய திறப்பைத் தந்தது. சங்க காலம் தொடங்கி இன்று வரை தாம் கண்ட நெறிகளை சான்றோர் பின் வரும் தலைமுறைகளுக்காக எழுதி வைத்திருக்கின்றனர். வாய் மொழியாக, பழமொழியாக, கதைகளாக, திருவிழாவாக, சடங்காக என அவை நம்மைப் பின் தொடர்ந்து வருகின்றன. ஆனால் இன்று இங்கு இலக்கியத்தில் ஒரு நவீன வாசகனாக நின்று கொண்டே அவற்றை இக்காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போல வாசிக்க வேண்டியிருக்கிறது. இங்கிருந்து இந்தக்கணத்துக்காகவே நான் சிந்திக்கிறேன். ஞானம் நிலையானது என்பதையும் உணர்கிறேன்.

”அன்றுவரை அந்தந்தக் கணத்துக்காகவே மானுடம் சிந்தித்தது. அந்நாளுக்குப்பின் எதிர்காலத்துக்காகச் சிந்தித்தது. கோடிச்சிதல்கள் சேர்ந்து கட்டும் புற்று போல ஞானம் துளித்துளியாகக் குவிந்து வளர்ந்தது. பேருருவென எழுந்து பிரம்மத்தை நோக்கி கைநீட்டியது.” என்ற வரிகளை அணைத்துக் கொள்கிறேன். நீங்கள் எப்பொழுதும் சொல்லும் எறும்புப் புற்று உவமை நினைவில் எழுந்து ‘நம்மால் அறிய முடியாத மாபெரும் செயல் திட்டத்தின் சிறுபகுதிதான் நாம்’ என்ற வரியைக் கொண்டு என்னை நிறைத்தது.

பிரயாகை

சொற்கனல் பகுதி துருவனை அறிமுகப்படுத்தியபின் வரும் பகுதிகளில் துருவன் பிரயாகையின் மாந்தர்களை நிலைத்து நின்று பார்த்துக் கொண்டிருப்பவனாய், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளில் அமைபவனாய் காட்சியளிக்கிறான்.

துரோணர் தன் மாணாக்கர்களுக்கு துருவனை அறிமுகப்படுத்தி, “அதோ தெரிகிறான் துருவன். பரம்பொருளுக்கும் கிடைக்காத நிலைபேறு அவனுக்குக் கிடைத்தது என்கிறார்கள் ரிஷிகள். அவனை மையமாக்கியே வானமும் பூமியும் இயங்குகின்றன. ஒளிமிகுந்த பால்வழியில் விஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்திருக்கிறான். யோகியர் ஒவ்வொரு மாதமும் துருவனை பார்த்தாகவேண்டும். கற்புள்ள மங்கையர் ஒவ்வொரு வாரமும் அவனைப் பார்க்கவேண்டும். படைக்கலமேந்திய வீரன் ஒவ்வொருநாளும் அவனைப்பார்க்கவேண்டும்.” என்று கூறுகிறார். துரோணர் அர்ஜூனனைப் பிரியும் ஒரு தருணம் நிலையழிந்தவனாக பிரிவாற்றவியலாமல் தவிக்கிறான். அவனுடைய அன்பை உணர்ந்தவனாக துரோணர் அவன் விடை பெறுகையில் ”இனி உன்னுடன் நான் இருக்கமாட்டேன். எப்போதும் என் வடிவாக துருவன் உன்னுடன் இருப்பானாக!” என்கிறார்.

அஸ்தினாபுரியின் இன்னொரு ஆசிரியரான கிருபர் சொல்லும்போது “வடமீன் பகலிலும் தெரியும் நாளில் குருகுலநிறைவு கொண்டாடப்படவேண்டும் என்பது ஆன்றோர் முறை. இன்று அதோ விண்ணில் துருவன் தெரிகிறான். ஞானம் என்பது நிலைபெறுநிலை. துருவன் அருளால் அது கைகூடுவதாக! ஆசிரியரையும் துருவனையும் வணங்கி அருள்கொள்ளுங்கள்” என்று வாழ்த்துகிறார். இங்ஙனம் ஆசிரியர் வாழ்த்தும் ஒளிப்புள்ளியாக துருவன் அமையப் பெறுகிறான்.

துருவனை நோக்கும் போதெல்லாம் நம்மை வந்து அழுத்தும் சொற்கள் தருமனுடையவை. துருவனை நினைவு கூறும்போதெல்லாம் பாண்டுவும் தருமனும் வந்து புன்னகைக்கிறார்கள். அர்ஜூனனிடம் தருமன் கூறும்போது “அறத்தில் வாழ நினைப்பவன் முடிந்தபோதெல்லாம் துருவனைப் பார்க்கவேண்டும் என்பார் என் தந்தை. அறக்குழப்பம் வரும்போதெல்லாம் தனித்துவந்து வான் நோக்கி நின்றால்போதும், துருவன் அதைத் தெளியச்செய்வான் என்றார்.” என்று துருவனை அறத்தின் செல்வனாக தருமன் நமக்குக் காட்டுகிறார்.

பத்ரர் கூறும்போது “அலையடிக்கும் நெஞ்சுக்கு துருவன் நிலையை அளிப்பான் என்பார்கள். ஆனால் அலையடிக்கும் நெஞ்சு கண்களை அலையடிக்கச் செய்கிறது. எதையும் நிலையாக பார்க்கவிடாமலாக்குகிறது.” என்று துருவனை மறைக்கும் கண்ணைப்பற்றிச் சொல்கிறார். துருவனைப் பார்க்கத் தேவையான நிலையை நமக்குச் சொல்கிறார்.

அவமானங்களுக்கு ஆட்பட்டு உக்கிரமான நிலையை அடைந்த துருபதன் துருவனை நினைத்துக் கொள்ளும் தருணம் ஒன்று சொல்லப்பட்டுள்ளது. தெளம்ரர் சொன்ன வரிகளாக “துருவனை தனிமையின் ஒளிப்புள்ளி என்று சொல்வேன். இத்தனை பெரிய இருள் சூழ்ந்திருக்கையில்தான் அந்தத் தனிமையின் ஒளியின் அழுத்தம் கூடுகிறது. தனித்திருப்பதன் குளிர். சொல்லின்மையின் எடை.” நினைவுகூர்கிறார். ”வானில் தனித்திருப்பது எப்படிப்பட்டது? தெரியவில்லை. ஆனால் மண்ணில் தனித்திருப்பதைக் கொண்டு அதைப்புரிந்துகொள்ளமுடியும்.” என்று தன் தனிமையை துருவனால் நிறைத்துக் கொள்கிறார்.

நாவலின் இடையில் மதுக்கோப்பையை ஏந்திய கிழவர் கூறும்போது “திசைகளில் முதன்மையானது வடதிசை. மானுடன் முதலில் வகுத்த திசை அதுவே. அங்கேதான் விண்ணின் மாறாத மையப்புள்ளியாக துருவன் நிலைகொள்கிறான். வடதிசையை ஆள்பவர் எங்கள் தெய்வம் குபேரனே. வணிகர்களே, ஒன்றை அறிந்துகொள்ளுங்கள். என்றும் மாறாத நிலைபேறுள்ளவர் இருவரே. துருவனும் அவன் திசையை ஆளும் குபேரனும்.” என்கிறார்.

யாதவஅரசி அஸ்தினாபுரியின் பேரரசியாக இருப்பதை ஒப்பு நோக்கும் இடத்தில் இவ்வாறு சொல்லப்படுகிறது ”அவர்கள் பேரரசி என்ற பெயரைத்தான் அறிகிறார்கள். அதனுடன் இணைந்துள்ள பெரும் புராணக்கதைகளை அறிகிறார்கள். அந்த அரசி ஒரு யாதவப்பெண் என்பதை அவர்களால் எண்ணிப்பார்க்கக்கூட முடிவதில்லை. அதில் வியப்பதற்கென்ன உள்ளது என்று குலப்பாடகர் களமர் சொன்னார். மண்ணில் பிறந்த துருவன் விண்ணுக்கு மையமாக அமைந்திருப்பதையும்தான் காண்கிறோமே” என்று குந்தி துருவனின் சிறப்புக்கு ஒப்பு நோக்கப்படுகிறார்.

விதுரர் அலைக்கழிந்தவராக இருக்கும் தருணத்தின் போது துருவனை நோக்குகிறார். ”விழிகளை விலக்கவே முடியவில்லை. ஆவல், அச்சம், அமைதியின்மை ஏதுமற்ற நிலைப்பு. தான் மட்டுமே தன்னுள் நிறைந்திருப்பதன் முழுமையான தனிமை.” என்று நினைத்துக் கொள்கிறார்.

இங்ஙனம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளில், ஒவ்வொருவரின் நினைவாக, நிலைகொள்ள முடியாத உணர்ச்சிகளை போக்குபவனாக, நிலை பெயராதவனாக துருவன் நின்று நாவலில் ஒளிர்கிறான்.

”நிலைபெயராதவன்” என்ற சொல் எனக்கு கண்ணனை நினைவுபடுத்தியது ஜெ. தன் நிலைபெயராமையை கணந்தோறும் உணர்ந்தவன் அவனே தான். ஒளிரும் புன்னகை ஒன்றாலேயே யாவற்றையும் எதிர்கொள்கிறவன். விதுரரைக் கடிந்து கொள்ளும்போதும் அந்தப் புன்னகை இருக்கிறது. போருக்கான திட்டங்களை வகுக்கும் போதும் அந்தப் புன்னகை இருக்கிறது. அர்ஜூனன் அந்தப் புன்னகையை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நோக்கிக் கொண்டிருக்கிறான். கண்ணனின் மேலான உச்ச கட்ட வெறுப்பிலிருந்து அவனை அந்தப் புன்னகை வழியாகத்தான் விதுரர் கண்டடைகிறார். ”அவன் புன்னகையை கண்முன் கோட்டைச்சுவரை நிறைத்து வரையப்பட்ட பேரோவியம் போல கண்டார். ஒளிமிக்க உதயம் போல. அல்லது அலையடிக்கும் ஆழ்தடாகம் போல. உள்ளிழுத்து மூழ்கடித்துவிடும் புன்னகை.” என்று அந்தப் புன்னகையை தரிசிக்கிறார்.

கர்ணன் அந்தப் புன்னகையை தரிசிக்கும் போது திகைக்கிறான். “இல்லாமலிருக்கக் கற்றவன் என்று எண்ணம் தோன்றியதுமே சித்தம் பல்லாயிரம் காதம், பல்லாயிரம் ஆண்டுக்காலம் கடந்து பின்னால் விரைந்தோடி அந்த விழிச்சந்திப்பை மீண்டும் அடைந்து திகைத்து நின்றது. யாதவனின் விழிகளின் ஆழத்தில் ஒரு புன்னகை இருந்தது. இருண்ட குளிர்ச்சுனையின் அடியில் கிடக்கும் நாணயம்போல. என்ன சொல்கிறான்? எதையும் சொல்லவில்லை. சொல்லுமளவுக்கு நெருங்கவில்லை. ஒரு சொல்லுக்கு அப்பால்தான் நின்றிருக்கிறான். எதையோ அறிந்திருக்கிறான். எதை? இங்கிருக்கும் எவரும் அறியாத ஒன்றை. நிகழும் கணத்தில் நின்று நிகழவிருக்கும் கணத்தை கண்டவனின் விழியொளி.“ என்று கர்ணன் வியப்படையும் அந்தப் புன்னகை நம்மை திகைக்கச் செய்கிறது. கர்ணன் ஐந்தாவது கிளியை அம்பெய்ய முடியவில்லையெனினும் பல அவச்சொல்லுக்கு அப்பால் ஒரு முது சூதனின் வாழ்த்தொலி எழுகிறது. ”கர்ணன் திரும்பி அப்பால் தெரிந்த இளைய யாதவனின் முகத்தை பார்த்தான். அந்தப்புன்னகை அங்கிருந்தது. அறிந்தது. அன்னையின் கனிவென குளிர்ந்தது.” என்ற வரிகளில் அந்தப் புன்னகை கலங்கச் செய்கிறது.

இறுதியாக கேசினி அன்னையை வணங்கி வெளிவந்தபின்பு திரெளபதி தன்னை மீறி அழுகிறாள். அந்த அழுகையிலேயே அவள் மணத் தன்னேற்பில் எடுக்கப்போகும் இறுதி முடிவு விளங்கி விடுகிறது. அதன்பின் கண்ணனின் கண்களல்லாமல் அவனின் மயிற்பீலியே அவளைச் சந்திக்கிறது. மனத்தன்னேற்பில் கண்ணன் கிந்தூரத்தை எடுக்கும் போது அவள் அடைந்த ஒரு அலைபாய்தல், நிலைகொள்ளாமையுங்கூட மேலும் அவள் முடிவு என்ன என்பதை உறுதிபடுத்தியது. ஐந்தாவது கிளியான கேசினி முன்பு கண்களை மூடி ஏதோ முடிவெடுத்தவனாக கிருஷ்ணன் தன் கிந்தூரத்தை வைத்துவிட்டு அமர்ந்து கொள்கிறான். முதன்முறையாக திரெளபதியின் விழிகள் அர்ஜுனனின் விழிகளை சந்தித்தபோதே அன்னை கணிந்து கங்கையாக மாறுவதற்கான பிரயாகை உருவாகப் போவது புரிந்து விட்டது.

“நிலைகொள்ளலும் அலைபாய்தலும் இரு பக்கங்களாக அமைந்ததே முழுமை என்று உணர்க. செயலின்மையும் செயலூக்கமும் ஒன்றை ஒன்று நிறைப்பதே லீலை” என்ற வரிகள் வந்து முன் நின்று துருவனையும்-கங்கையையும்; கண்ணனையும்-திரெளபதியையும் ஒப்பு நோக்கச் செய்தது. ”அவளுக்குள் நின்றிருக்கிறது நிலைமாறாத வடமீன் என்றறிக” என்று கங்கைக்கு சொன்ன வரிகளை நினைவு கூர்ந்தேன்.

ஆறுகள் ஒன்றோடொன்று கலக்கும் புள்ளியை பிரயாகை அல்லது ஆற்றுச்சந்தி என்கிறோம். அப்படி பாகீரதி, அலக்நந்தா, மந்தாகினி, பிந்தர், தெளலிகங்கை ஆகிய ஆறுகளுடன் கலந்து முறையே தேவ, ருத்ர, கர்ண, விஷ்ணு, நந்த் ஆகிய பஞ்சபிரயாகைகளைத் தோற்றுவித்து கங்கையாக மண்ணை செழிப்புரச் செய்யும் அன்னையைப் பற்றிய புனைவையல்லவா பிரயாகை நாவலாக வடித்திருக்கிறீர்கள். பல யுகங்கடந்து நிலைபெயராமை நிகழாமை என்றுணர்ந்த துருவன் பரம்பொருளிடம் தன் இருப்பை உணரச் செய்ய மன்றாடுகிறான். அதன் பொருட்டு கொந்தளிப்பையும் பாய்ச்சலையும் துள்ளலையும் அலைகளையும் ஒளிர்தலையும் கொண்டவளாக பிறப்பெடுத்தவளே கங்கை.

“நூறு மகாயுகங்கள் நீ உன் காமத்தில் அலையடிப்பாய். கர்மத்தில் சுழல்வாய். கருணையில் கனிவாய். கன்னியும் அன்னையுமாய் முடிவிலாது நடிப்பாய். உன் சுழற்சி முடிவுறும்போது மீண்டும் ஒரு துளியாக மீண்டு பாற்கடலில் உன்னை அழிப்பாய். ஓம் அவ்வாறே ஆகுக” என்று கூறி ஆசியளித்த விஷ்ணுவிடம் ”என்னை இழந்துகொண்டே செல்லும் அப்பெரும்பயணத்தின் இறுதியில் எப்படி நான் இங்கு மீள்வேன்?”  என்று கங்கை அன்னை வினவுகிறாள்.

“அவன் பெயர் துருவன். அழியாதவன். பெருவெளி நிலைமாறினும் தான் மாறாதவன். எப்போதும் உன்னை நோக்கிக்கொண்டிருப்பவன் அவன். நீ அவனை நோக்கிக்கொண்டிரு. நிலைகொள்ளாமையே நீ. உன் நிலைபேறென அவனைக் கொள்!” என்ற வரிகளின் வழி துருவனை முதலில் சந்திக்கிறாள் கங்கை. அவனை வணங்கி  “மூத்தோனே, என் சஞ்சலங்களில் துணைநிற்பாயாக. என் வழிகளில் நான் திகைக்கும்போதெல்லாம் உன் விழி வந்து என்னைத் தொடுவதாக.” என்று கூறி பஞ்சபிரயாகையோடிணைந்து கங்கையாகிறாள்.

கன்னியாக துள்ளலுடன் இருந்த திரெளபதி ஐவரை மணந்து கொற்றவையாக மாறும் ஒரு தருணத்தில் துருவனின் காட்சியோடு தான் அத்தியாயம் முடிகிறது. என்றும் நிலை கொள்ளாதவளாக அமையப் பெறும் திரெளபதிக்கு துருவனாக அமையப் பெறப் போவது கண்ணனாகவே இருக்க முடியும் என்று எண்ணிக் கொண்டேன். பிரயாகை நாவலின் ஒப்பற்ற நாயகியாக கங்கை-திரெளபதி –ம் கதையின் நாயகனாக நிலைபெயராதவனாகிய துருவன்-கண்ணன் -ம் அமையப் பெறுகிறார்கள்.

என் வரையில், நான் காணும் துருவனில் அமையப் பெறுவது நீங்கள் தான். உங்கள் சொற்கள் தான். துருவனைக் காணும்போதெல்லாம் உங்களின் சொற்கள் என் முன் வந்து நிற்கிறது. நாவல் எழுதி முடித்த பின்னர் அதிலிருந்து நான் வெளிவந்து விடுவேன் என்றும் “அது நானல்ல” என்று நீங்கள் சொல்வதையும் என்னால் இன்று முழுதுணர முடிகிறது ஜெ. ஏனென்றால் நான் துருவனில் தரிசிப்பது வெண்முரசு எழுதும்போது இருந்த ஜெ –வை தான். நான் உரையாடி சிலாகித்திருப்பது அவருடன் தான். நீங்கள் எழுதிக் கொண்டிருந்தபோதும், நான் இப்போது படித்துக் கொண்டிருக்கும்போதும், இனி எப்போதும், தன் நிலைபெயராமையை உணர்ந்து கொண்டு நிலைபெயராமல் தானே துருவன் அமர்ந்து கொண்டிருந்திருப்பான். காலமே அற்றவனும் பிறிதென ஏதுமற்றவனும் பிரம்மமே பற்றுக்கோளாகக் கொள்பவனும், மாயையும் அளப்பவனுமாகிய அவனை வணங்குகிறேன். ஓம்! அவ்வாறே ஆகுக!

பிரேமையுடன்

இரம்யா.

***


குக்கூவில் சில நாட்கள்…

$
0
0

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் குக்கூ காட்டுப்பள்ளியால் ஜுலை 20 முதல் 24ம் தேதி வரை நடத்தப்பட்ட “Niyathi-Tools for transformation” நிகழ்வில் கலந்துகொண்டேன். அதைப்பற்றிய எனது அனுபவ பகிர்தலே இந்த கடிதம். குக்கூ காட்டுப்பள்ளி, அதன் மனிதர்கள், அவர்கள் ஆற்றும் செயல்கள் அனைத்து குறித்தும் தங்களின் இணையதளம் வாயிலாகவே அறிந்துகொண்டிருந்தேன். அவர்களின் தயாரிப்புகள் மற்றும் புத்தகங்களை வாங்கி பயன்பெற்றிருக்கிறேன். காந்தி மீயூசியத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘கல்லெழும் விதை’ நிகழ்வில்தான் அவர்கள் அனைவரையும் அருகமர்ந்து பார்த்தேன்.

‘நியதி’ நிகழ்வில் 18 முதல் 25 வரையுள்ள வயதினரே கலந்துகொள்ள முடியும் என கண்டும், ஏதோ ஒருஉந்துதலில் விண்ணப்பித்தேன். அழைப்பும் விடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையிலிருந்து 4 கி.மீ. வடக்கே சென்றால் புளியனூர் கிராமம் அதன் அருகில் ஜவ்வாதுமலையடிவாரத்தில் குக்கூ காட்டுப்பள்ளி  அமைந்துள்ளது. அந்நிலத்திற்கு 20ஆம் தேதி மதியம் 12 மணிக்குசென்று சேர்ந்தேன்.

அகன்று திறந்திருந்த அதன் வாயிலுக்கு உள்ளிருந்து ஓடி வந்தது ஒரு நாய்க்குட்டி- சக்தி (நாங்கள் இட்டபெயர்). அது வாலை ஆட்டியபடியே என்னை மேலும் கீழும் கூர்ந்து பார்த்துவிட்டு உள்ளே வரவேற்று அழைத்துச்சென்றது. மரங்களும், செடிகளும், மலர்களும் சூழ குழந்தைமை மனங்கள் வரைந்த ஓவியங்களை போன்று ஆங்காங்கே முளைத்திருந்தன வாழிடங்கள். அவை உறுத்தலின்றி அந்த சூழலுடன் இயைந்து அதன்பகுதியாகவே இருந்தன. எங்கு திரும்பினும் பட்டாம்பூச்சிகளின் வர்ணஜாலம், அந்த நிலத்திற்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் ஓடைஎழுப்பும் வெண்கல கழுத்து மணிச்சத்தம், மலைமேல் மோதி திரும்பி வரும் தென்றலின் தீண்டல், கணத்திற்குள்மாறும் காலநிலை.  எந்நேரமும் குதியாட்டம் போட்டுக்கொண்டிருக்கும் குழந்தைகள், ஒரு கரிய நாய், இருசெவலை நாய்குட்டிகள், சாம்பல் வெள்ளை பூனை, பல வண்ண புறாக்கள், அகவும் தோகை மயில்கள், சாணம்மொழுககப்பட்ட தரைகள், உதிர்ந்து கிடக்கும் பழங்கள், அடுக்கி வைக்கப்பட்ட உருளைக்கற்கள், ஊன்றிநிறுத்தப்பட்ட கல் தூண்கள், இரவில் மிளிரும் நட்சத்திர கூட்டம், ஊர்சுற்றி அலையும் மின்மினிகள், ஓயாமல்ரீங்கரிக்கும் வண்டுகள் அதனுடன் இயைந்து  அதன் பகுதியாகவே வாழும் மனிதர்கள்  என ஒற்றைபெருநிலையான சூழல் எனவே அதன் தீவிரம் நம்மையும்  அதற்குள் கரைத்துவிடுகிறது.

அங்கு குப்பைகளே இல்லையா எனக்கேட்டால், நாம் அந்த நிலத்திற்கு வெளியே கொட்டிக்கொண்டிருக்கும் அனைத்து குப்பைகளும் அங்கும் இருக்கிறது. ஆனால், அவையெல்லாம் அழகும், நேர்த்தியும் கொண்ட பொம்மைகளாகவும், கலை பொருட்களாகவும், பயன்பாட்டு பொருட்களாகவும் உருமாறியபடியே உள்ளன. அங்கே செல்லும்/சென்ற இன்னொரு மனம் இவற்றையெல்லாம் பார்த்து உணர தவறலாம். ஆனால், அதற்கான அகக்கண்களை எனக்கு அளித்தது நீங்களும், உங்கள் எழுத்துகளும்தான். அதற்கு நன்றிகள் கோடி. அந்த நிலத்தில் பல விதமான மனிதர்களும் வாழ்கிறார்கள், பலர் வந்து கூடி கலைகிறார்கள். இருப்பினும், அனைவரும் ஒற்றை ஆன்மாவாக பிணைந்து தங்கள் நோக்கத்தினை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்கு நாம் கலை, இலக்கியம், சினிமா, தத்துவம், அறிவியல், தொழில், மருத்துவம், விவசாயம் என மானுட சிந்தனைகள் எதைப்பற்றி வேண்டுமானாலும் விவாதிக்கலாம். அதற்கான எல்லா வாசல்களும் அங்கே திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்தையும் தாண்டி அவர்கள் முதன்மையாக முன்வைப்பது அர்ப்பணிப்பையும், செயலையுமே. தங்களையே அர்ப்பணித்து ஒரு மாபெரும் லட்சியத்திற்காக செயலாற்றிக் கொண்டிருக்கும் சாட்சி மனிதர்களைத்தான் அந்நிலத்தில் சந்தித்தோம்.

அவர்கள் அங்கே நிகழ்த்திக் கொண்டிருப்பது மானுடத்திற்கு மட்டுமான கனவு அல்ல. ஒட்டு மொத்த உயிர்களின் நல்வாழ்வுக்கான கனவு. அந்த நிலத்திற்கு இனம், மொழி, நாடு என்ற எந்த அடையாளமும் கிடையாது. அதனாலேயே அதன் ஆற்றலும் அளப்பரியது. நான் அவர்களின் பெயர்களையும், ஆற்றும் செயல்களையும் பட்டியலிட விரும்பவில்லை. ஏனெனில் அந்த நிலமும், மனிதர்களும்நம் கண் முன்னே சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறார்கள். தேடல் உள்ளவர்கள் அவர்களை தேடி கண்டடைவார்கள். அந்த நிலத்திற்கு சென்று உணர்ந்து வருவார்கள். அந்த நிலம் நிச்சயமாக அவர்களுக்குள்ளும் அதன் விதையை விதைக்கும். அவர்களும் முளைத்தெழுவார்கள்.

நான் இதுநாள் வரை என்னவென்று தெரியாத ஒன்றை தேடி எங்கெங்கெல்லாமோ அலைந்திருக்கிறேன். எங்குசென்று வந்தாலும் நிறைவின்மை மட்டுமே எஞ்சியது. குக்கூ காட்டுப்பள்ளியில் நுழைந்த அக்கணமே, இதுநாள்வரை நான் தேடிக்கொண்டிருந்த நிலம் இதுதான் என்றும், இந்நிலம் காந்தியும், நித்ய சைதன்ய யதியும் கலந்தகலவை என்பதையும் உணர்ந்துகொண்டேன். அங்கு இருந்த ஒவ்வொரு கணமும் மொட்டின் மலர்தலைப்போல நிகழ்ந்து கொண்டிருந்தேன். பசித்து அழுது உருகிக்கொண்டிருக்கும் என்னை, மடியில் ஏந்தி மார்போடு அணைத்து பாலூட்டும் அன்னையென அந்நிலத்தை உணர்ந்தேன்.

குருபூர்ணிமா நாளன்று, என்னை கைப்பிடித்து அந்நிலத்திற்கு அழைத்துச்சென்று இறக்கிவிட்ட தந்தையென உங்களை உணர்ந்தேன். என்வாழ்வில் இதுநாள் வரை நடந்ததனைத்தும் அந்த நிலத்திற்கு சென்று சேர்வதற்காகவே என்று உறுதியா கநம்பினேன். ஐந்து நாட்கள் நடந்த இந்நிகழ்வுக்கு  முன்வரைவு, திட்டங்கள் என எதுவும் இருக்கவில்லை. இயற்கை எப்படி அதன் போக்கில் நிகழ்கிறதோ, அவ்வாறே  இந்நிகழ்வும் நடந்து முடிந்தது. இன்று எண்ணுகையில் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றைவிட பலமடங்கு ஒத்திசைவோடும், நேர்த்தியோடும் இந்நிகழ்வு இருந்திருப்பது வியப்பையளிக்கிறது.

இந்நிகழ்வில் என்னவெல்லாம் நிகழ்ந்தது மற்றும் கற்றுக்கொண்டோம் என்று கேட்டால் என்னால் வகுத்து கூறிவிடமுடியாது. ஒரு சொல் எப்படி செயலாக மாறியது என்று கண்முன்னே சொல்லியும், செய்தும் காட்டினார்கள். நாங்களும் சிலவற்றை செய்து பார்த்தோம் அவற்றை கருப்பட்டி கடலை மிட்டாய், ராட்டையில் நூல் கோர்தல், மூலிகை சேகரித்து மருந்து காய்ச்சுதல் என்று பட்டியலிடலாம் ஆனால் நான் ஒவ்வொரு நாள் காலையிலும் சமையல் கூடத்திற்கு அருகிலிருந்த அத்தி மரத்திலிருந்து விழுந்து கிடக்கும் ஐம்பது பழங்களையாவது பொறுக்கி எடுத்து வைப்பேன், குரு பூர்ணிமா நாள் விடியலில் ஒரு பழம் கூடதரையில் விழுந்திருக்கவில்லை

இந்த கற்றலை நான் எப்படி வகுப்பது. அங்கு நிகழ்ந்ததை இப்படி சொல்லலாம், அந்நிலத்தில் அவர்களுடன் எங்களை இருக்க அனுமதித்தார்கள், கற்றல் தானாகவே நிகழ்ந்தது. நாங்கள் அந்த நிலத்தில் எங்கு இருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும் குறைந்தது இரு குழந்தைகள் மற்றும் ஒரு நாயின் அருகாமையை உணர்ந்தபடியே தான் இருந்தோம். காட்டிற்குள் நடந்து செல்கையில், பாதையில் கிடந் தநத்தையை நாங்கள் அனைவரும் பார்த்துவிட்டு கடந்து செல்ல அதை கையில் எடுத்து பாதையை கடத்தி விட்டசலோ பாப்பா, காற்றை கையில் பிடித்து எறிந்து விளையாடும் ஜூபி பாப்பா, எங்கு சென்றாலும் எஙகளுக்கு வழிகாட்டியாக முன்னால் சென்ற நாய் ஜோர்டான்.  அவர்கள் தந்த இன்பம்  சொல்லில் அடங்காதவை. நான் அவற்றையே அதிஉன்னதமான கற்றலாக நினைகிறேன்.

அனைத்தையும் தாண்டி அந்நிலத்திலிருந்தவர்கள் எங்களிடம் முன்வைத்தது ஒன்றைத்தான், “இயற்கையோடு முரண்படாமல் அதன்முன் பணிந்து உங்களை அதற்கு ஒப்படைத்து செயலாற்றுங்கள். இப்பிரபஞ்சம் உங்களுக்கான அனைத்தையும் கரம் சேர்க்கும்”. இதையே ‘எல்லாம் செயல் கூடும்’ என்ற பிரார்த்தனையாகவும் அவர்கள் முன்வைக்கிறார்கள். அங்குள்ள அனைவரும் அந்நிலம் இன்னும் பத்து வருடத்தில் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சுட்டிக்காட்டப்படும் ஒன்றாக மாறி நிற்கும் என்று தீர்க்கமாக நம்பி செயலாற்றுகிறார்கள். நானும் பரிபூரணமாக அதை நம்புகிறேன். அந்நிலத்தின் கனவு அளவுக்கு பிரமாண்டமானதே அது சந்திக்கும் நெருக்கடிகளும். அந்த நிலத்தை உருவாக்கஅனைவரும் தங்கள் உயிராற்றலை செலவு செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.

சஞ்சீவிமலையை தூக்கிய அனுமனாக இருக்க முடியவில்லை என்றாலும், ராமன் இலங்கைக்கு செல்ல பாறைகளைகடலில் போட்டு பாலம் அமைத்து தந்த வானரங்களில் ஒன்றாக இருக்கவேண்டும் என்றுமுடிவெடுத்துக்கொண்டேன். எனவே, நான் எனது பங்களிப்பாக என்னுடைய மாத வருமானத்திலிருந்து ஒரு சிறுபகுதியை அந்நிலத்திற்கு அளிக்க முடிவெடுத்துள்ளேன். ஏனென்றால் நானும் அந்நிலத்தின் ஒரு பகுதியே.

இறுதியாக ஒரு நிகழ்வை சொல்லி முடிக்கிறேன், குரு பூர்ணிமா நாளில் நாங்கள் சுமார் முப்பது நபர்கள்புல்தரையில் பாய்விரித்து வட்டமிட்டு அமர்ந்திருக்க நடுவிலிருந்து அவலும், பழங்களும் பரிமாறப்பட்டது. தட்டுடன் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து ஜவ்வாது மலைக்கு பின்னால்  விரிந்திருந்த கருநீல வானின் தாரைகூட்டங்களையும் அதன் நடுவில் வீற்றிருந்த முழுநிலவையும் ரசித்தபடி  நிலாச்சோறு உண்டுகொண்டிருந்தோம். அப்போது ஒரு குரல் “மலையின் விளிம்பில் விளக்கு எரிகிறதே!” என்று கேட்க, மற்றொரு குரல் “அங்குமனிதர்களே இல்லையே, எப்படி விளக்கு வந்தது?” என்று வினவிய வேளையில் அந்த விளக்கொளி மெல்லமேலேறியது. அனைவரும் அகன்ற விழிகளில் அதையே கூர்ந்து நோக்கி கொண்டிருக்க, அவ்வொளி இன்னும்சற்று மேலே சென்று  ஐந்து கைககளை விரிந்து ஒளியே உடலென ஆகி குழ்ந்தையைப்போல கண்கள்சிமிட்டியது. அப்போது பின்னாலிருந்து  வந்த கணத்த குரல் “It’s a rising star” என கூற, சிறிது நேரம் அக்குரல் காற்றில்கரையாமல் அங்கேயே உறைந்து நின்றது. அங்கிருந்த அனைவரும் முகம்மலர, தலையசைத்து, பெருமூச்செறிந்து அக்குரல் எங்கிருந்து வந்ததென ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

பணிவன்புடன்,

வேலாயுதம் பெரியசாமி

பின்குறிப்பு: ‘நியதி’ நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பிய சகோதரி அபர்ணா காயத்ரி அவர்கள் வரைந்த ஓவியத்திற்குநண்பர் இழ செழியன் கொடுத்த பாரதியாரின் வரிகள் மிக பொருத்தமாக குக்கூ காட்டுப்பள்ளியை அடையாளம் காட்டக்கூடியது. “முப்பது கோடி முகமுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள்”

இந்த ஓவியம் குக்கூ காட்டுப்பள்ளியின் ‘விஜய் நோயல் கார்கி’ என்ற ஓவியரின் காபி தூள் பயன்படுத்தி வரையும் நுட்பத்தை பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது. புகைப்படஙகங்கள் எடுத்து, அதனை எனக்கு அனுப்பிவைத்த காந்திகிராம் மோகன்  மற்றும் நோயல் கார்கிஅண்ணா அவர்களுக்கும் நன்றி.

லாலேட்டனோ இக்காவோ?

$
0
0

மூன்றுநாட்களாக சினிமாக் கதாநாயகனின் வாழ்க்கை. வழக்கமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலையாளத் தொலைக்காட்சிகள் என்னைப்பற்றி ஓர் ஆவணப்படம் வெளியிடுவதுண்டு. இதுவரை நான்கு ஆவணப்படங்கள் வந்துள்ளன. என் வீடு, எழுத்தறை, முகப்பு, என் சூழல், வேளிமலை, ஏரிகள் எல்லாமே காட்சிப்படுத்தப்படும். என் கருத்துக்கள், உணர்ச்சிகள் எல்லாமே பதிவாகும்.

இம்முறை மீண்டும் ஆசியானெட் டிவியில் இருந்து கேட்டார்கள். வெண்முரசு முடிந்ததை ஒட்டி ஓர் ஆவணப்படம் செய்ய கேட்டிருந்தனர். நடுவே கோவிட் தொற்று. ஆகவே கொஞ்சம் பிந்திவிட்டது. இங்கே ஒருவாரமே இருப்பேன் என்பதனால் நெருக்கமாக தேதி கொடுத்திருந்தேன். ஆகவே ஏழாம் தேதி முழுக்க ஆசியாநெட்டுக்காக நடித்தேன். ஒன்பதாம் தேதி நானா பத்திரிகையின் நிருபருக்கு நீண்டபேட்டி. இன்று, பத்தாம்தேதி கைரளி டிவிக்காக.

எழுத்தாளனாக நடிப்பது என்று கேலியாகச் சொல்லிக்கொண்டாலும் இது செயற்கையான அனுபவமாக இருக்கவில்லை. சொல்லப்போனால் ஓராண்டு முழுக்க நான் வாழும் வாழ்க்கையைச் சிலமணி நேரங்களில் மீண்டும் நிகழ்த்துவதுதான். உண்மையில் மிக நிறைவாகவே உணர்ந்தேன். என் உள்ளத்திற்கு இனிய வேளிமலை அடிவாரம், என் அகத்தில் என்றும் தித்திக்கும் என் இல்லமும், அறையும்.

கேரளத் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை எழுத்தாளர்களை ஸ்டுடியோவுக்கு வரவழைத்து பேட்டி எடுப்பதைவிட அவர்களின் எழுத்துக்குப் பின்புலமாகும் இடத்தில் எடுப்பதையே விரும்புவார்கள். அரிதாக ஓர் ஆழமான உரையாடல் மட்டுமே வேண்டும் என்றால் மட்டுமே ஸ்டுடியோ. நானும் கல்பற்றா நாராயணனும் கவிதையின் அழகியலை பற்றி மட்டுமே உரையாடிய ஒருமணிநேரப் பேட்டி முன்பு அமிர்தா டிவியில் வந்திருக்கிறது. மிக கவனிக்கப்பட்ட, பேசப்பட்ட, ஓர் உரையாடல் அது.

மலையாளத் தொலைக்காட்சிகளில் எப்போதும் ஒவ்வொன்றுக்கும் அதற்கான தேர்ச்சிகொண்ட நிருபர்கள் இருப்பார்கள். இதழ்களிலும் அவ்வாறே. அரசியல் பேட்டி என்றால் ஒருவர் செல்வார். கதகளி போன்ற மரபுக்கலைகள் என்றால் இன்னொருவர் செல்வார். நவீன ஓவியத்திற்கு ஒருவர் இருப்பார். சினிமாவுக்கு ஒருவர் இருப்பார். இலக்கியத்திற்கென்றே ஒருவராவது இருப்பார்கள். அவர்களே இலக்கியவாதிகளைப் பேட்டி எடுக்க வருவார்கள்.

அவர்கள் பேட்டிக்கென்றே தயாரித்துக் கொள்வதில்லை. இயல்பாகவே நல்ல வாசகர்களாக இருப்பார்கள். அவர்களே இலக்கியவாதிகளாக இருப்பதும் உண்டு.  அவர்களில் இருந்து ஆர்.உண்ணி போன்ற பெரிய இலக்கியவாதிகள் பின்னாளில் எழுந்து வந்திருக்கிறார்கள். ஆகவே பேட்டி எப்போதுமே உற்சாகமானது. பேட்டிக்குப் வெளியே நிகழும் உரையாடல் மேலும் இனியது.

கைரளி டிவியின் வினேஷ் வடகேரளத்தின் பையன்னூர்க்காரர். எனக்குப் பிரியமான மலபார். பையன்னூரின் என் நண்பர்கள் பலரும் அவருக்குத் தெரிந்தவர்கள்தான். மலையாளத்தில் நான் எழுதிய எல்லாவற்றையும் அப்போதே படித்திருந்தார். அவற்றைப் பற்றிய கருத்துக்களையும் சொன்னார்

வெயில் இருந்தாலும் ஆடிக்காற்று வீசிக்கொண்டிருந்தமையால் தெரியவில்லை. காற்றுக்கு எதிராக நின்று மைக்கில் முழக்கம் இல்லாமல் பேசவேண்டியிருந்தது. வேட்டியை தூக்கிக்கொண்டு நடந்தபோது கதாநாயகனாக உணர்ந்தேன்.

திரும்பி வந்தபோது அருண்மொழி கேட்டாள். “எப்படி இருந்தது பேட்டி?”

நான் சொன்னேன். “ஹீரோவா ஆஃப் டே கால்ஷீட் குடுத்தது மாதிரி…”

உடனே மெல்லிய நையாண்டி. “ஆரா தான்? லாலேட்டனோ இக்காவோ?”

ஆமாம் யார்? குழப்பமாக இருந்தது. “ஏஷியானெட்டில் லாலேட்டன். கைரளியில் மம்முக்கா” என்றேன்

“ரொம்பதான்” என்றாள்.

 

 

துளிக்கும்போதே அது துயர்

$
0
0

போகன் தனிவாழ்க்கையில் உடல்நலச்சிக்கல்கள் வேலைப்பளு உளச்சோர்வு கொண்ட மனிதர். அவற்றை நிகர்செய்ய ஒரு சிரிப்பை தக்கவைத்திருப்பவர். கவிதைகளில்  பெரும்பாலும் அந்தச் சிரிப்பு மட்டுமே வெளிப்படுகிறது, பகடியாக. அவருடைய கவிதைகளில் பகடி இயல்பாக குவிந்து ஒரு sublime ஐ தொட்டுவிடும் கவிதைகளை மட்டுமே நான் பரிந்துரைக்கிறேன்.

சமீபத்தில் என் கவனத்திற்கு வந்த அவருடைய இரு கவிதைகளிலும் அந்த இயல்பான நகை இல்லை. உயர்தருணமும் இல்லை. ஆனால் நேரடியான வலி இருக்கிறது. கவிதையை அது கூரிய பொருள் போல ஆக்கிவிடுகிறது. தொடமுடியாத இடத்தில் இருந்தாலும்கூட எங்கோ எவரையோ கீறிவிடுமென எண்ணச்செய்கிறது

தெருநாய்களின் உடல்மொழியை கவனித்திருக்கிறேன். உலகமே தங்களுக்கு எதிராக வஞ்சம் கொண்டிருப்பதாக அவை எண்ணுகின்றன. எவர் அணுகினாலும் சட்டென்று ஒரு முழுப்பணிவை உடலில் காட்டுகின்றன. கெஞ்சல், மெல்லிய உறுமல், விழிதாழ்த்தி வால் ஒடுக்குதல். எத்தனை துன்புற்றிருக்கவேண்டும் என எண்ணிக்கொள்வேன். எத்தனை கொடியது முழு உலகமும் எதிரியாவது என்று தோன்றும்.

அவளுக்கு
ஏதோ ஒரு சந்தோஷம்
என்னைக் கேலி செய்கிறவர்கள்
எல்லோருடனும் சேர்ந்துகொள்கிறாள்.
ஒவ்வொரு முறை
அதை அவள் செய்கிறபோதும்
உன்னை நான் எவ்வளவு நேசித்தேன்
என்று சொல்லிக் காட்டுகிறாள்
என்று தோன்றும்.

யாருக்கோ கொடுத்திருக்க வேண்டியது
உனக்கு கொடுத்தேன்
என்ற வெறுப்பின் இளிப்பு
என்றும் தோன்றும்.

அல்லது
இருக்கும்போது நீடித்த
அந்த நேசத்தின் மதுரத்தை
இந்த கசப்புகளின் மூலம்
கரைக்கப் பார்க்கிறாளோ?
அதற்கு எவ்வளவு கசப்பு தேவைப்படுகிறதோ

அவ்வளவுக்கு
அவள் என்னை நேசித்தாள்
என்றிருக்கட்டும்
என்றும் நினைத்துக் கொள்கிறேன்.

இனி என்ன செய்வது?
ஓடம்
நதியைக் கிழித்துச்
சென்ற பாதையை
நதி மீண்டும் மூடிவிட்டது.

சம்பந்தமில்லாத வரிகள் இறுதிப்படிமத்தில் இணையும் இக்கவிதை பலமுறை ஒடிந்து கட்டுபோட்டு குணமாகி இணைந்த எலும்பு போலிருக்கிறது என போகனுக்கு எழுதினேன். இந்த மொழி, கொடும் அநீதி இழைக்கப்பட்டவன் அளிக்கும் வாக்குமூலம்போல சொல் சொல்லாகச் சொட்டும் தயங்கிய நடை இதை முக்கியமான கவிதையாக ஆக்குகிறது.

இந்த வீட்டில்
என் படுக்கையறையின்
வசதியான மூலையை அறிய
எனக்கு
இரண்டு வருடங்கள் தேவைப்பட்டன.
எந்த வீட்டிலும்
நான் அப்படித்தான்.
நான்
என் உலகத்தை
மிக மெதுவாகவே சுற்றிப்பார்க்கிறேன்.
உன் உலகம் மிக வேகமாக சுழல்கிறது.
என் பக்கம் சுழலும்போது
அதன் பாலைவனங்களின் பருவம்
வந்துவிடுகிறது.

இத்தகைய கவிதைகளுக்குப் படிமங்கள் தேவையில்லை. அணிகளும் தேவையில்லை. வெறும் அறிக்கையிடல்களாக அமைந்தாலே போதும். எந்த அளவுக்கு குறைவாக, உணர்ச்சியின்றி சொல்கிறோமோ அந்த அளவுக்கு அதிகமாக குறிப்புணர்த்தி கவிதைகளாகிவிடுகின்றன. “எல்லா பெருமூச்சுகளிலும் கொஞ்சம் கவிதையின் பூச்சு உண்டு” ஆற்றூர் பேச்சுநடுவே சொன்ன ஒரு வரி.

மூன்று விதமான பெண்கள்
என் வாழ்வில் வந்துகொண்டே இருந்தார்கள்.
ராஜசத்தின் பெண்கள்
என்னை
ஒரு நகையாகவோ
பத்திரமாகவோ ஆக்கி
ஒரு பெட்டியில்
என்னைப் பூட்டி வைத்தார்கள்
அதிலிருந்து தப்பித்துப் போக
நான் முயலும்போது மட்டுமே
அவர்கள் என்னை நினைவு கூர்ந்து
சில மிட்டாய்களை எனக்கு அளிப்பார்கள்.
அவர்களது உடல்கள் அவற்றில் ஒன்று
அவர்களது
உடமையுணர்வின்
விஷம் தடவிய மிட்டாய்களுக்கு
நான் மயங்காவிட்டால்
கடும் தண்டனைகளை
அவர்கள் எனக்கு அளிப்பார்கள்.
தாமசத்தின் பெண்களுக்கு
எப்போதும் ஏதோ ஒரு நோய் இருந்தது.
ஆற்ற முடியாத ரணம் இருந்தது.
அவர்கள் தங்கள் புண்களை நக்கிக் கொண்டே இருந்தார்கள்.
அவர்கள் என்னை ஒரு மருந்து போல் பாவித்தார்கள்.
அல்லது போதை மருந்து.
நான் அவர்களுக்கு செவிலியாய் இருந்து களைத்துப் போனேன்.
அப்போதெல்லாம்
என் கருணையின்மையை அவர்கள் சுட்டிக்காட்டத் தவறுவதேயில்லை.
இவர்கள் முன்னவர் தரும் கசந்த மிட்டாய்களைக் கூடத் தருவதில்லை.
அவர்கள் தங்களுக்கே கூட
அந்த
மிட்டாய்களைத் தந்துகொள்வதில்லை.
மிக அரிதாக
என் வாழ்வில்
சத்துவத்தின் நிதானம் கொண்ட பெண்கள்
வந்ததுண்டு.
அவர்கள் போய்விட்ட பிறகுவரை
நான் அவர்களைக் கவனித்ததில்லை.
அவர்களது பதில் வேண்டா
அன்பின் சொற்களை
வருடங்களுக்குப் பிறகே
என் குப்பைத் தொட்டியில்
நான் கண்டுபிடிக்கிறேன்.
மறைந்து போனபிறகு
ஒரு வானவில்லைப் பார்க்கப் போன
ஒரு முட்டாள்ச்
சிறுவன் போல் உணர்கிறேன்.

 

சுருள்வில் – போகன் சங்கர்.
தீபம்- போகன் சங்கர்
மழை இருகவிதைகள்:போகன் சங்கர்
தீர்வுகள் – போகன்

நுரைக்குமிழி- சிறுகதை

$
0
0

பர்ஸை எடுக்க ஹாண்ட்பேகில் கைவிட்டாள். என்னவோ குறைவது போல் தோன்றியது. இனம்புரியாத படபடப்புடன் விரல்களால் துழாவினாள். ஒரு மின்னல் போல அது என்னவென்று அவளுக்குப்புரிய அவள் உடம்பு அதிர்ந்து குலுங்கியது. ஒருகணம் மூச்சே நின்று போய்விட்டது.

“என்னம்மா என்ன ஆச்சு?” கண்டக்டர் சில்லறைக்காக நீட்டி கை அப்படியே நிற்கக்கேட்டான்.

“பர்ஸ்…” என்று மூச்சுத்திணறலுக்கு இடையே சொன்னாள். உடம்பெங்கும் வியர்வை ஆறாக ஓடியது.

“பர்ஸ் எடுக்க மறந்துட்டியா? வீட்டிலெ வெச்சிருப்ப… எறங்கணுமா?” என்றான்

“ம்”

“உய்”

பஸ் நின்றது. இறங்கிக்கொண்டாள். வியர்வையில் ஈரமான உடம்பு குளிர ஆரம்பித்தது. ஹாண்ட் பேக்கைத்திறந்து தேடினாள். உள்ளே டிபன்பாக்ஸ் இருந்தது, பர்ஸ் இருந்தது ,கர்சீஃப் இருந்தது…

மூச்சிரைக்க வீட்டுப்படி ஏறினாள். ஓசைப்படாமல் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே போனாள். ஹாலில் ஹாண்ட் பேக்கை முன்னம் வைத்திருந்த மேஜைமேல் புத்தகங்கள் குவிந்து கிடந்தன. படபடவென்று தேடினாள். ஓரத்து அறையின் கதவு லேசாக ஒருக்களித்திருந்தது. சிகரெட் மணம் வந்தது.

மணிகண்டன் உள்ளே இருக்கிறான். இந்த வாரக்கடைசியில் அவன் விடுமுறை முடிகிறது. ராணுவத்தில் கேப்டனாக இருக்கிறான். அவள் விரல்கள் கட்டுப்பாடின்றி நடுங்கின. புத்தகங்களில் தேடுவது மிகவும் சிரமாக இருந்தது. எங்கே வைத்தேன் அதை? ஞாபகமில்லை. கைத்தவறுதலாக ரவியின் புத்தகங்களில் எதிலாவது வைத்துவிட்டேனா? அந்தப்பெண் மீனா ஹாண்ட்பேக்கை திறந்து பார்க்குமே அது எங்காவது எடுத்திருக்குமோ? முருகா…!

“என்னது திரும்பி வந்துட்ட?”

அடிபட்டதுபோல் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அறைவாசலில் கதவில் கைஊன்றியபடி மணிகண்டன் நின்றிருந்தான். அவன் கண்கள் அவள் மேல் ஊன்றியிருந்தன.

”ஒண்ணுமில்ல.. நான்…”

“என்ன தேடறே?” அவன் குரல் இறுக்கமாக இருந்தது. அவள் தன் கால்கள் நடுங்குவதை உணர்ந்தாள். ஏதாவது பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆனால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் அவளை உற்றுப்பார்த்தான்.

“என்னமோ ரொம்ப அவசரமாத் தேடற மாதிரி இருக்கு. என்னது?”

“அதுவந்து…”

“ஏதாவது கடுதாசா?”

பளீரென்று நெற்றிப்பொட்டில் ஒரு ஒளி வெடித்து போல் தோன்றியது அவளுக்கு. ஒருகணம் அவன் விழிகளை அவள் விழிகள் வெட்டின. அவளுக்குப்புரிந்தது. அவன் எல்லாவற்றையும் அறிந்தாகிவிட்டது. கடித்தை அவன் பார்த்துவிட்டான்.

விழுந்துவிடுவோம் என்று தோன்றியது அவளுக்கு.

”உள்ளே வா, உன்கூட கொஞ்சம் பேசணும்” அவன் உள்ளே போனான்.

ஹாலிலிருந்து அறைவரை நடக்க அவளால் முடியவில்லை. உடம்பே அவள் பிடியிலிருந்து நழுவிப்போவது போல் இருந்தது. விழாமலிருக்க கதவை இறுகப் பிடித்துக்கொண்டாள். அவன் தன் வழக்கமான நாற்காலியில் காலை நீட்டி அமர்ந்து, ஜன்னலுக்கு வெளியே வெறித்துப்பார்த்தபடி இருந்தான். ஆனால் அவன் பார்வை தன் மேல் கூர்மையாகப் பதிந்திருப்பது போன்ற உணர்வுதான் அவளுக்கு இருந்தது.

சட்டென்று திரும்பி அவளைப்பார்த்தான்.

“எத்தனை நாளா நடந்திட்டிருக்கு இது?”

என்னென்னவோ பதில்கள் அவளுக்குள் பொங்கின. ஆனால் மொழியே மறந்துவிட்டது போலிருந்தது.

“சொல்லுடி, யார் இவன்?”

தன் இதயத்துடிப்பைத்தவிர வேறெதையும் கேட்க முடியவில்லை அவளால்.

“யாருடி இந்த ராஜகோபால்…?”

“இல்லை…. இல்லை…” என்று சம்பந்தமின்றி உளறியபடி விம்மினாள்.

மணிகண்டன் மிகுந்த சிரமப்பட்டுத்தன் ஆவேசத்தை விழுங்கிக்கொண்டான். முடிந்தவரை தாழ்ந்த குரலில் “நான் இப்ப என்ன பண்ணணும்? டிவோர்ஸ் வேணுமா உனக்கு? இல்லை, தீர்த்துக்கட்டிடறதா தீர்மானிச்சிருக்கிங்களா?” என்றான்.

அடிவயிற்றிலிருந்து பீறிட்டு ஒரு கேவலாய் வெடித்த அழுகையுடன், பிடித்துத் தள்ளப்பட்டவளைப்போல அவள் ஓடி அவன் கால்களில் மடங்கி விழுந்தாள். எல்லா உணர்வுகளையும் வெளிக்கொட்டுபவளைப்போல பொங்கிப் பொங்கி அழுதாள்.

அவள் அழுகை ஒருகணம் அவனை இளக வைத்தது. மறுநிமிடம் ஆவேசத்தை வரவழைத்துக் கொண்டவனாக அவன் அவளை நெட்டித்தள்ளிவிட்டு எழுந்தான். நாற்காலி கிரீச்சென்று பின்னால் நகர்ந்தது.

“ச்சீ முப்பது வயசில, ரெண்டு பெத்துக்கு அப்புறம் உனக்குக் கள்ளக்காதல்… அல்ப ஜென்மம், உன்னை…. உன்கூட.…”

எந்த வார்த்தையும் வெளிவராமல் சிவந்த முகத்துடன் நின்று திக்கித் திணறித்துடித்தான். சட்டென்று கொடியிலிருந்து சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டான். செருப்பில் கால் நுழைத்து, லுங்கியை மடித்துக்கட்டியபடி அவளைப் பார்த்துப் பதறிய குரலில் சொன்னான்.

“போயிடு, உன் காதலன் கூட. என் கொழந்தைங்களை நான் பார்த்துக்கறேன். நான் திரும்பி வர்றதுக்குள்ள பெட்டியைக் கட்டிட்டு அவன்கூடவே போயிடு…”

தடதடவென்று இறங்கி அவன் போனபின் அவள் வெறும் தரையில் குப்புறப்படுத்து விம்மி, குலுங்கி அழுதாள். வெகுநேரம் அழுது முடித்து விம்மல்கள் ஓய்ந்தபிறகு அவள் மனத்தில் பயங்கரமான சூன்ய உணர்வு குடியேறியது.

கதகதப்பான ஓர் உறவு முடிந்துவிட்டது போலவும், இனி ஒருபோதும் அவனது அன்பும் அணைப்பும் தனக்குக் கிடைக்கப்போவதில்லை என்றும் அவளுக்குத் தோன்றியது. ஒருவேளை அவன் இனி திரும்பி வரவேமாட்டானோ என்று தோன்றியபோது வயிறு சில்லிட்டது.

அந்தப்பீதியிலும் விரக்தியிலும் கூட ஓர் ஓரத்தில் ஒரு நம்பிக்கை மின்னியது அவளுக்கு. தான் தப்பு செய்யாத வரைக்கும் பயப்பட வேண்டியதில்லை என்று நினைத்தாள். அத்தனை அநியாயமாகத் தன்னைக் கடவுள் தண்டித்துவிடமாட்டார் என்று சொல்லிக்கொண்டாள். அதையே மீண்டும் மீண்டும் நினைத்து நம்பிக்கையைப் பெருக்கிக் கொள்ளப் பாடுபட்டான். அவள் சொன்னால் அவன் புரிந்துகொள்வான். அவனை அத்தனை எளிதாக வெறுத்துவிட அவனால் முடியாது. பீதியும் விரக்தியும் நம்பிக்கையுமாய் அவள் மனம் அலைபாய்ந்தது.

மதியம் அவள் சாப்பிடவில்லை. அவன் வரமாட்டான் என்று தான் நினைத்தாள். மாலையில் குழந்தைகள் திரும்பி வந்தன. மாலை சரியச் சரிய அவள் மனம் மீண்டும் கொந்தளிக்க ஆரம்பித்தது. வருவானா? முருகா! வராமலே இருந்துவிட்டால்… யோசிக்கும்போதே ‘பகீர்’ என்றது. வாசலில் அசையும் ஒவ்வொரு நிழலும் நம்பிக்கை அளித்து, பின்பு ஏமாற்றியது. இருள் கனக்கக் கனக்க அவள் மனம் பீதியில் நிறைந்தது.

ஒன்பது மணிக்கு அவன் வந்தான். அந்தப் பழக்கமான காலடியோசை அவள் உடலைப் புல்லரிக்க வைத்தது. அவள் நெஞ்சைக் கையால் அழுத்தியபடி “முருகா!” என்றாள். அவளைக் கவனிக்காத மாதிரி அவன் நடந்து அறைக்குள் புக முயன்றான்.

“சாதம் போடவா?” என்றாள்.

“ச்சீ” என்று அவன் சீறினான்.

அவன் அறைக்குள் நுழைந்தபின் கதவைத் தடாலென்று மூடிக்கொண்டான். அவள் தரையில் அமர்ந்தாள். அவளை அறியாமலேயே அழுகை வந்தது. இருளில் தனிமையில் அழுதாள். அந்த ஓசையற்ற அழுகை – தேற்ற ஆளில்லாத நிராதரவான அந்த அழுகை, அது அவளுக்கு வினோதமான ஒரு சுகத்தைக்கூட அளித்தது.

கதவைத்தட்டி அவனை எழுப்பி எல்லாவற்றையும் கூறிவிடவா? தன்னால் முடியாது. அப்போதும் தன்னால் அழமட்டும் தான் முடியும். அந்த எண்ணமே அவளுக்கு மூச்சுத்திணற வைத்தது. மெல்லத் தூங்கிப்போனாள். தூக்கமல்ல, அரை மயக்கம்… காற்றின் ஒலியும் கடிகார டிக்டிக்கும் கேட்டுக்கொண்டிருந்தன. — கிரீச். கதவு திறந்தது.

திடுக்கிட்டு எழுந்து அவள் நிதானிப்பதற்குள் மணிகண்டன் அவளைக் கடந்து சென்றிருந்தான். இரவு வெகு நேரமாகியிருக்கக்கூடும்.

பாத்ரூம் போய்விட்டு அவன் திரும்பி வந்தபோது அவள் அறைவாசலில் நின்றிருந்தாள். அவன் அவளை உற்றுப் பார்த்தான். அவன் முகம் இப்போது அத்தனை இறுக்கமானதாக இல்லை.

அவள் மூக்கு துடிக்க அழ ஆரம்பித்தாள்.

“வழியை விடு” என்றான்.

அவள் விலகினாள். அவன் அவளைக் கடந்து சென்று அறைக்குள் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

“பானு” என்றான்.

அவன் குரலில் ஒரு மென்மை இருந்தது. அவன் மனம் மெல்ல அமைதி அடைந்தது.

“வா, இங்கே”

அவனருகே சென்றாள். அவன் காலடியில் அமர்ந்தாள். அவன் கால்களில் முகம் புதைக்க மனம் திமிறியது. ஆனால் அவனைத் தொட அவளுக்குத் துணிச்சல் வரவில்லை.

அவன் அவள் தலையில் கை வைத்தான். அவளது காதோர மயிர் இழைகளில் அவன் கைகள் மெல்லத் துழாவின. சுற்றி இறுக்கின.

அந்த ஸ்பரிசமும் – வலியும் அவளை அப்படியே நெகிழ வைத்தன. தன் முதுகின் மேலிருந்த ஒரு பெரிய பாரத்தை யாரோ இறக்கி வைத்தது போல் அத்தனை எளிதாக உணர்ந்தாள்.

“பானு”

”ம்”

“யார் அந்த ராஜகோபால்?”

அவள் தொண்டை அடைத்தது. “அவன் எங்க ஆபீஸ்ல…”

“உன்கூட வேலை செய்றவனா?”

“ம்”

”ரொம்பச் சின்னப்பையனா இருப்பான் போல இருக்கு. அத்தனை அசட்டுத்தனமா எழுதியிருக்கான். எத்தனை வயசிருக்கும் அவனுக்கு? ஒரு இருபத்தஞ்சு இருக்குமா?”

“ம்”

”அவனுக்கு ஏன் இப்படித் தோணுச்சு? நீ அவன்கூடக் கொஞ்சம் ஃப்ரீயா பழகுவியா?”

“இல்லை, சத்தியமா இல்லை. எல்லார்கிட்டயும் பேசறமாதிரிதான் பேசுவேன்.”

“அவன் உன்கிட்டே கொஞ்சம் உரிமை எடுத்துப்பானா?”

”ம்”

”உரிமைன்னா ட்ரெஸ் பண்ணிட்டு வந்தால் பாராட்டாக ஏதாவது சொல்றது, அழகைப்பற்றி முகஸ்துதி செய்யறது…”

அவள் உதட்டைக் கடித்தாள். கண்கள் மறுபடியும் நிறைந்தன.

”பரவாயில்லை. இதெல்லாம் எந்தப்பொண்ணுக்கும் பிடிக்கிற விஷயம் தான். நீ சந்தோஷப் படறதை அவனுக்குக் குடுக்குற அனுமதியா அவன் நெனச்சிருப்பான். உன்னை வளைச்சிட்டதா தப்பா கற்பனை பண்ணியிருப்பான்.”

”என்னை மன்னிடுங்க. நான் தப்புப்பண்ணிட்டேன். என்னை என்ன வேணும்னாலும் செய்ங்க”

”நான் உன்னை இப்ப விசாரணை பண்ணலை. இந்த விஷயத்தைக் கிளியராகப் பேசிடறது நல்லது. இந்த லெட்டரை எப்பக்குடுத்தான்?”

“போன திங்கட்கிழமை”

“நேரில் குடுத்தானா?”

”இல்லை மேஜை டிராயரில் கிடந்தது.”

“படிச்சிட்டு நீ புகார் எதுவும் பண்ணலையா? பண்ணத் தோணலியா உனக்கு?”

”நான் அவனைக் காண்டீனுக்குக் கூப்பிட்டுப் பேசினேன். இந்த மாதிரி எண்ணத்தோட என்கிட்டே இனிமேல் பழகவேண்டாம்னு சொன்னேன். இந்த ஒரு தடவை விட்டுடறேன். இனிமேல் இப்படி செஞ்சா மானேஜர்கிட்டே கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன் அப்படீன்னேன்.”

“அவன் ரொம்ப ஆடிப்போயிருப்பானே?”

“ரொம்ப… கண்ணீர்விட்டு அழவே ஆரம்பிச்சிட்டான். ‘என்னமோ ஒரு வேகத்துல எழுதிட்டேன் ஸிஸ்டர். இப்ப அதை நெனச்சு வருத்தப்படறேன் ஸிஸ்டர். எழுதினதுக்கு அப்புறம் தூங்கவே இல்லை ஸிஸ்டர்’ அப்படீன்னு ஆயிரம் ஸிஸ்டர் போட்டான்.”

“அது நடிப்பில்லை பானு. அந்த வயசில ஒரு தடவையாவது புத்தி அப்படிப்போகும். நான் எம்.ஏ படிக்கிறப்ப இப்படி ஒரு லவ் லெட்டர் எழுதினேன். யாருக்குத்தெரியுமா? கூடப்படிக்கிற ஸ்டூடண்டுக்கு இல்லை, புரொபசருக்கு. ஒரு வயசான அம்மாள். அப்பவே என்னைவிடப் பெரிய பையன் இருந்தான். அவங்களுக்கு” மணிகண்டன் ‘ஹஹஹஹா’ வென்று சிரித்தான்.

“ஸ்ஸ்… மெள்ள குழந்தைங்க பயந்துக்கப்போவுது”

“சரி, அந்தக் கடிதாசை நீ ஏன் கிழிச்சுப்போடலை?”

அவள் கண்கள் தாழ்ந்தன.

“நான் சொல்லட்டுமா? அந்தப்பயல் சகட்டுமேனிக்கு உன்னைப் புகழ்ந்திருக்கான். அதை வாசிக்கிறதுல உனக்கொரு ‘த்ரில்’-என்ன? சரி சரி மறுபடியும் அழ ஆரம்பிச்சிடாதே. இதுக்காக உன்னை யாரும் தூக்கில் போடப்போறதில்லை.”

அவள் அவன் கால்களின் மேல் முகம் புதைத்துக்கொண்டாள். அவன் அவளை தலைமயிரில் முத்தமிட்டான்.

“இதோ பார் பானு, நமக்குக் கல்யாணமாகி ஏழெட்டு வருஷங்களாகுது. நமக்குள்ளே இருந்த வேகமெல்லாம் தணிஞ்சாச்சு. லைஃப் இப்ப ஒருமாதிரி போர்தான். உனக்கு என்மேலயோ எனக்கு உன்மேலயோ அலுப்புக்கூடத் தட்ட ஆரம்பிக்கலாம்…”

“அய்யோ… நான்…”

”சரி சரி, இல்லைங்கலை. ஆனால் இருபது வயசில் நம் உறவில் இருந்த வேகம் இப்ப இல்லை, இருக்க முடியாது. மறுபடியும் அதைக் கொண்டுவரவும் முடியாது. இப்ப மனசு கொஞ்சம் பரபரப்பா ஒரு விஷயத்துக்கு ஆசைப்படலாம். மனசைப்படபடக்க வைக்கிறதா, ராத்திரி தூக்கத்தைக் கெடுக்கறதா ஒரு அனுபவத்துக்கு மனசு ஏங்கலாம். மனசு அப்படித்தான். அதுக்கு தர்மம் நியாயமெல்லாம் தெரியாது. ஆனால் மனசை மனசின் போக்குக்கு விட்டுட்டா என்ன ஆகும்? உன் பேரில் ஒரு சின்னக் களங்கம் வந்தால் அது என்னை எப்படிப்பாதிக்கும்? நம்ம தாம்பத்யமே குலைந்து போகும். அதனால் பாதிக்கப்படறது நம்ம குழந்தைங்க. நம்ம சந்தோஷத்துக்கு அவங்களை பலி கொடுக்கலாமா? ஆணும் பெண்ணும் சுகமா இருக்கிறதுக்காக மட்டுமே பெரியவங்க குடும்பம்னு ஒண்ணை ஏற்படுத்தலை. புதிய தலைமுறையோட பாதுகாப்புக்காகவும் இப்படி ஒரு ஏற்பாட்ட செய்தாங்க…”

தன் பேச்சு நீண்டுவிட்டது என்று உணர்ந்து ஹாஸ்யமாகச்சிரித்தபடி “என்ன பரவால்லயா? நம்ம சொற்பெருக்கு…?” என்றான்

அவள் “என்னை மன்னிச்சிடுங்க” என்றாள்.

“சரி, மன்னிச்சாச்சு நம்ம அந்த சம்பவத்தையே மறந்துடலாம் என்ன?”

ஒரு வேகத்துடன் அவள் அவன் முகத்தைப் பார்த்தாள். “மறந்துடுவிங்களா? எல்லாத்தையும் மறந்துடுவீங்களா?”

அவள் தலைமேல் முத்தமிட்டபடி அவன் சொன்னான். “சத்தியமா…”

அவள் அவனுடன் ஒட்டிக்கொண்டாள். பரிச்சயமான இழைதல், வெப்பம் மிகவும் அறிமுகமான அந்த மணம். அரைமயக்கத்திலும் ‘மறந்துடுவிங்களா? மறந்துடுவிங்களா?’ என்றுதான் கேட்டுக்கொண்டிருந்தாள்.

துயில் கலைந்த ஒரு நிமிடம் அவள் திகைத்தாள். அவளருகே அவன் இல்லை. அறை இருட்டாக இருந்தது. ஹாலில் இருந்து வெளிச்சம் உள்ளே வந்தது. உடைகளை உடுத்திக் கொண்டு எழுந்து மெல்ல நடந்து ஹாலில் எட்டிப்பார்த்தாள். விளக்கு மிகப்பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தது. சோபாவில் சாய்ந்து இருளை வெறித்தபடி மணிகண்டன் அமர்ந்திருந்தான். அவன் கையில் சிகரெட் அனாதையாய்ப் புகைந்தது.

தரையில் சிகரெட் சாம்பலும் மிச்சங்களும் கிடந்தன. அவன் முகத்தில் மனப்போராட்டம் தெரிந்தது. நெற்றியிலும் கன்னத்திலும் கவலையின் கோடுகள். இனி ஒருபோதும் திரும்பி வராதபடி எதுவோ ஒன்று தன்னை விட்டு விலகிப்போய்விட்டதை அவள் உணர்ந்தாள். அவள் மனம் எல்லையற்ற சூனிய வெளியில் திசை தவறியது.

(1987 ஜுலை 12, கல்கியில் வெளிவந்த சிறுகதை)

 

1986-ல் நான் காசர்கோட்டில் இருந்தபோது எழுதிய இந்தக்கதை 1987ல் வெளியாகியது. 1987ல் கணையாழியில் எழுதிய நதி என்ற கதையைத்தான் நான் என் முதல் கதையாக கொண்டிருக்கிறேன். அதைத்தான் சிறுகதைத் தொகுதியில் சேர்த்திருக்கிறேன். அதற்குமுன் பிரபல வணிக இதழ்களில் எழுதிய கதைகளை தொகுப்புகளில் சேர்க்கவில்லை. என்னிடம் அவற்றின் பிரதிகளும் இல்லை. இது சமீபத்தில் அழிசி ஸ்ரீநிவாசனால் கண்டெடுக்கப்பட்ட கதை. பரவாயில்லை, 1986 ல் என் 24 ஆவது வயதிலேயே தாம்பத்தியப் பிரச்சினைகளை எல்லாம் எழுதியிருக்கிறேன் 

வெண்முரசு ஆவணப்படம் போர்ட்லாண்ட் திரையிடல்

$
0
0

இனிய ஜெ,

வணக்கங்கள்!

அமெரிக்க நகரங்களின் வெண்முரசு ஆவணப் படத்தின் பத்தாவது திரையிடல் போர்ட்லாண்டில் இனிதே நடந்தது. வெண்முரசு குறித்த ஆவணப் படம் ஒன்றை அமெரிக்காவில் உள்ள விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் தயாரித்திருப்பதை முதலில் கலிப்போர்னியாவில் வசிக்கும் நண்பர் விசு ஜூன் மாதம் கூறக் கேட்டேன். அப்போது ஆவணப்படத்தை கலிப்போர்னியாவின் வளை குடா பகுதியில் திரையிடும் முயற்சியில் அவர் இருந்தார்.  நான் போர்ட்லாண்டிலும் திரையிட முயற்சி செய்கின்றேன் என்றதும் ஆஸ்டினில் வசிக்கும் நண்பர் செளந்தருடன் எனக்கு தொடர்பு ஏற்படுத்தி தந்தார்.

செளந்தருடன் பேசுகையில் தான் ஆவணப் படத்தின் தயாரிப்பிற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தெரிந்தது. கோவிட் தொற்றின் ஊரடங்கு காலத்தில் இப்படத்தினை தயாரித்திருக்கிறார்கள். அதுவும் அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தியாவிலும், பிற நாடுகளிலும் உள்ள வெண்முரசு வாசகர்களின் நேர்காணல்களை ஒருங்கினைத்து சேகரித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. அதற்கு உதவிய ஆனந்த் மற்றும் பிற நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

செளந்தர் ஆவணப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர் இராஜன் சோமசுந்தரத்துடன் அறிமுகம் செய்து வைத்தார். இராஜன் அவர் அமைத்திருந்த, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடலுக்கான இசை மற்றும் இன்னும்  பிற சங்கப்பாடல்களுக்கு அவர் அமைத்திருந்த இசைகளின் வாயில்களாக அறிமுகமாகி இருந்தார்.அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. அவர்கள் இருவரும் திரையரங்குகளை அணுகுவதற்கான வழிமுறைகளை பகிர்ந்து உதவினர்.

சான் பிரான்ஸிஸ்கோ, நியு ஜெர்சி போன்ற நகர்களுடன் ஒப்பிடுகையில் போர்ட்லாண்ட் சிறிய நகரம். வெறும் இருபது நிமிடத்தில் நகரின் ஒரு எல்லையில் இருந்து மறு எல்லைக்குச் சென்று விடலாம். நான் வசிப்பது நகர் எல்லைக்குள். இங்கு இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். பெரும்பாலான இந்தியர்களும், தமிழர்களும் புறநகர் பகுதிகளில் தான் வசிக்கின்றனர். அது இயல்பானதே. புறநகர்களில் தான் தொழில் நுட்ப பணியிடங்கள் பெரும்பாலும் இருக்கின்றன. வெண்முரசு ஆவணப்படத்தின் திரையிடலை எங்கு ஏற்பாடு செய்வது என்ற கேள்வி எனக்கு இருந்தது.

நான் அறிந்தவரை ஏதேனும் பெரிய பல்கலைக் கழகங்கள் இருந்தால் அன்றி அமெரிக்காவின் புறநகர்கள் பெரும்பாலும் தனித்து உறங்கும் இடங்கள் தான். வருடத்திற்கு ஓரிரு கலாச்சார நிகழ்வுகளே அவற்றில் நடைபெறும். இலக்கிய நிகழ்வுகள் எல்லாம் வாய்ப்பே இல்லை. கலாச்சார நிகழ்வுகளும் கூட அந்த குழுக்களுக்குள்ளே நடந்து முடிந்து விடும். நம் கலாச்சார நிகழ்வுகளில் பிறரை பெரும்பாலும் அரிதாகவே பார்த்திருக்கின்றேன். இதே போல் தான் பிற இனத்தவர்களின் மரபார்ந்த கலச்சார நிகழ்வுகளிலும்.

இதற்கு விதி விலக்கென்றாள் ஹாலிவுட் திரைப்படங்களையும், பாலிவுட் திரைப்படங்களையும் தான் கூற வேண்டும். அவற்றைப் பற்றி பெரும்பாலானவர்களுக்கு பரிச்சயம்  உண்டு . மேலும் புறநகர் பகுதியில் இருக்கும் திரையரங்குகள் முற்றிலும் பெறு நிறுவனங்களின் தொடர் அரங்குகள். நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அவை ஒன்று போலத் தெரியும். அவற்றில் திரையிடப்படும் படங்களும் தான்.

மாறாக போர்ட்லாண்டின் நகர் பகுதிகளில் பல சிறிய திரையரங்குகள் உள்ளன.  அவற்றின் உரிமையாளர்கள் இந் நகரைச் சேர்ந்த சிறு தொழிலாளர்கள். பலருக்கு இந்த திரையரங்குகள் மட்டும் தான் தொழில். அத்திரையங்குகளில் கலைத் திரைப்படங்களையும், சுயாதீனத் திரைப்படங்களையும் தொடர்ந்து திரையிட்டு வருகின்றனர். அவற்றில் சத்திய ஜித் ரேயின் சாரு லதா, தி மியூசிக் ரூம்,  தார்காவ்ஸ்கியின் ஆண்டரே ரூப்லாவ், தி சாக்கிரிபைஸ், இங்கமர் பெர்க்மனின் பெர்சோனா போன்ற படங்களில் இருந்து தெரன்ஸ் மாலிக்கின் பேட் லாண்ட்ஸ், நயிட் ஆப் கப்ஸ் போன்ற திரைப் படங்கள் வரை பார்த்திருக்கின்றேன். இங்கு வரும் பார்வையாளர்கள் படம் முடிந்த நிமிடம் எழுந்து செல்பவர்கள் அல்ல. அப்படத்தை பற்றி சிறிதேனும் விவாதித்த பின்னரே செல்வர். ஒருமுறை தெரன்ஸ் மாலிக் படங்களில் வரும் ஹைடிகரின் தத்துவப் போக்குகளையும், அவரது திரைப்படங்களில் வரும் இயற்கை குறித்த கருத்துக்களை ரூசோவின் சிந்தனையுடனும் ஒப்பிட்டும் மறுத்தும் விவாதித்திருப்பதைக் கண்டு வியந்திருக்கின்றேன்.

ஆவணப்படத்தின் திரையிடலை நகர் பகுதியில் இருக்கும் திரையரங்கம் ஒன்றில் அமைப்பது தான் சரி எனத் தோன்றியது. ஆர்வமுள்ள தமிழ் மக்கள் பதினைந்து நிமிடம் பயணிப்பதை பெரிய பொருட்டாக கருத மாட்டார்கள். போர்ட்லாண்டில் வசிக்கும் நண்பர் ஜானி ஸ்டாலிங்க்சை அழைத்து ஆவணப்பட திரையிடல் குறித்து பேசினேன். ஜானி சேக்ஸ்பியர் நாடக இயக்குனரும், நடிகரும். இப்போது ஓய்வு பெற்று விட்டார்.  எழுபதுகளின் தொடக்கத்தில் முதலாம் ஆண்டிலேயே கல்லூரியில் இருந்து drop out ஆகி வியட்னாம் போர் எதிர்ப்பு, சூழலியல் பாதுகாப்பு போன்ற செயல்களில் ஈடுபாடு கொண்டு ஹிப்பியாக வாழ்ந்தவர் குரு நித்யாவின் பகவத் கீதை வகுப்பகளைக் கேட்ட பின் இந்தியா கிளம்பி வந்து வர்கலையில் நடராஜ குருவை சந்தித்திருக்கிறார். குருகுலத்தில் ஒரு வருடம் நடராஜ குருவுடன் தங்கி இந்தியத் தத்துவங்கள் பயின்றிருக்கிறார். நடராஜ குரு The Integrated Science of the Absolute புத்தகத்தை முடித்து விட்டு சௌந்தர்ய லஹரிக்கான உரையை தொடங்கிவிட்டிருந்த காலம் அது. ஜானி குருகுலத்தில் தங்கி இருந்த முதல் ஆறு மாத காலத்தில்  நடராஜ குருவின்  செளந்தர்யலஹரிக்கான உரை  நிறைவுற்றதாக குறிப்பிடுகிறார். அப்போது நடராஜ குரு காளிதாசரையும் தினம் வாசித்திருக்கின்றார். தொடர்ந்து நடராஜ குருவின் சமாதிக்கு முந்தைய ஓரிரு மாதக் காலம் வரை குருவின் அறையிலேயே தங்கி உதவியாளராக இருந்தவர் ஜானி. பிறகு, நெடுங்காலம் குரு நித்யாவின் மாணவராக பயின்றவர்.

(ஜானி ஸ்டாலிங்க்ஸ், சேக்ஷ்பியர் நாடக இயக்குனர்)

வெண்முரசு குறித்து முன்பே அவரிடம் பேசியிருக்கின்றேன். ஜானி ஆவணப்பட திரையிடலை போர்ட்லாண்டிலேயே ஏற்பாடு செய்யலாம் என்றார். அவர் தான் கிளிண்டன் திரையரங்கை பரிந்துரைத்தது. கிளிண்டன் திரையரங்கம் 1915 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, நூறு வருடங்களாக தொடர்ந்து செயல் பாட்டில் உள்ள திரையரங்கம். அமெரிக்காவில் உள்ள பழமையான திரையரங்குகளில் ஒன்று. எழுபதுகளில் ஹிப்பிக்கள் போர்ட்லாண்ட் நகரில் அவர்களது கலை நிகழ்வுகளுக்கு பயன்படுத்திய இடம். அவற்றைத் தொடர்ந்து கலைப் படங்களும், சுயாதீனப் படங்களுக்குமான திரையரங்கமாக செயல்பட்டு வருகின்றது. சென்ற ஆண்டு கோவிட் தொடங்கியதும் தான் முதல் முறையாக சில மாதங்கள் மூடப்பட்டது. இந்த ஆண்டின் துவக்கத்தில் பரவலாக வாக்சின் வந்த பிறகு மீண்டும் அரங்கை திறந்திருந்தனர்.

கிளிண்டன் திரையரங்கின் உரிமையாளர்கள் தொடர்பு கொண்டதுமே திரையிடலுக்கு ஒப்புக் கொண்டனர். ஆனால், ஆகஸ்டில் தான் தேதி கிடைத்தது. நான் உடனே பதிவு செய்து விட்டேன். சில நாட்களிலேயே விசு செளந்தர் அனுப்பிய Blu-Ray disk ஐ எனக்கு அனுப்பி வைத்தார்.  Blu-Ray வேலை செய்கின்றதா, குறிப்பாக Subtitles சரியாக வருகின்றதா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக ஜூலை மாத ஆரம்பத்தில் திரையரங்கம் சென்றேன். அதன் உரிமையாளர் லானி ஜோ வாசலில் வந்து என்னை திரையரங்கிற்குள் அழைத்துச் சென்றார். மொத்த திரையரங்கும் காலியாக இருந்தது. ஆவணப்படத்தின் முதல் அரைமணி நேரத்தையும், இராஜன் இசை அமைத்திருந்த நீலத்தீன் கவிகளையும் இரு நூறு பேர் வரை அமரும் வசதி கொண்ட திரையரங்கின் மத்தியில் நான் மட்டும் தனியாக அமர்ந்து ரசித்தேன்.

திரையரங்கத்தின் உள் நுழைந்ததுமே டிக்கட் விற்கும் மேசையில் “Unfit”  என்று தலைப்பிட்ட புத்தகம் ஒன்று வைக்கப்பட்டிருப்பதை கவனித்திருந்தேன். அட்டையில் ஒரு பதின் பெண்ணின் படம் இருந்தது. அவள் இளவயது லானியைப் போல் தெரிந்தாள். அரங்கை விட்டு  வெளி வருகையில் லானியிடம்,  ‘அது நீங்கள் தானா? நீங்கள் எழுதிய புத்தகமா?’ என்று விசாரித்தேன். அந்த புத்தகம் லானியின் ‘memoir’.  நாற்பது ஆண்டுகளாக எனக்குள் நானே புதைத்து வைத்திருந்த நிகழ்வுகள். இப்போது தான் எழுத முடிந்தது என்றார்.

லானி ஓக்லஹாமா மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவின் தெற்கில் இருக்கும் மாகாணமது. கிறிஸ்துவம் சார்ந்த பழமைவாத விழுமியங்களை தீவிரமாக பின்பற்றும் மாகாணங்களில் ஒன்று. லானி ஜானியை விட சற்றே இளையவர். அவர்களது கால கட்ட அமெரிக்காவைப் பற்றி பொதுவாக வெளி உலகிற்கு தெரிந்தது, அது ஹிப்பிக்களின் காலகட்டம் என்பது தான்.  பீட்டில்சின் இசை, Psychedelics, மகரிஷி மகா யோகியின் Transcendental meditation, பகவான் ரஜினிஷ், பாலியல் சுதந்திரம் என மேற்குக் கடற்கரை நகர்களில் வசிக்கும் ஹிப்பிக்கள் அன்றைய அமெரிக்காவின் பழமைவாத விழுமியங்களுக்கு எதிராக பயணிக்கத் தொடங்கிய தலைமுறை. இவற்றில் முக்கியமானது பெண்களுக்கான பாலியல் சுதந்திரம். 1962 ஆம் ஆண்டு Birth Pill அமெரிக்காவில் புழக்கத்திற்கு வருகின்றது. அது பாலுறவிற்கும், கர்பத்திற்கும் இடையே ஆன பினைப்பை மானுட வரலாற்றிலேயே முதல் முறையாக அறுக்கின்றது. அதன் பின்புலத்தில் இளமையை வாழத்துவங்கும் முதல் தலைமுறைப் பெண்கள். அவர்கள் கட்டுடைத்து உணரத் தொடங்கும் சுதந்திரம்.

அதே தலைமுறையைச் சேர்ந்த லானியின் இளமையோ இதற்கு நேர் எதிரானது. தனது பதினாறாவது வயதில் கர்ப்பம் அடைகின்றாள் இளம் லானி ஜோ. அவள் குடும்பத்தார்கள் கருக்கலைப்பிற்கு எதிரானாவர்கள். கருக்கலைப்பு அமெரிக்காவில் மதம் சார்ந்த பெரிய விவாதத்துக்குரிய விஷயம். இன்று அது அரசியலாக்கப்பட்டு விட்டது. அவள் கர்பமாக இருப்பதை அறிந்த உடனே குடும்பத்தார்கள் அவளை பக்கத்து மாகாணமான லூசியானாவில் உள்ள தேவாலயத்தைச் சேர்ந்த மகப்பேறு இல்லம் ஒன்றிற்கு அனுப்பி வைக்கின்றார்கள்.  திருமணம் ஆகா பெண்களுக்கு மட்டுமே ஆன மகப்பேறு நிலையம்.  பெற்றோர்கள் கைவிட்ட வருத்தத்தில் இருக்கும்  லானி தன்னை ஒத்த வயதுடைய இளம் கர்பினிகளிடம் தோழமையை உணர்ந்து மகிழ்வுடன் வாழத் தொடங்குகின்றாள். அன்னையாக உணரும் நொடிக்கான ஆவல் நிறைந்த நாட்கள் விரைந்து கரைகின்றன.

லானி மகனுக்கு பிறப்பளிக்கின்றாள். மகன் பிறந்த வாரத்தில் குடும்பத்தார்களிடம் இருந்து மகப்பேறு இல்லத்திற்கு செய்தி வருகின்றது. அதை அறிந்தவள் மேலும் மகிழ்வுறுகின்றாள். ஆனால், அவர்களோ லானி ஜோவை அவ்வாரத்திலேயே மகனைத் தத்துக் கொடுக்கச் சொல்லி செய்தி அனுப்புகின்றனர். வேறு வழியறியாது மகனை தத்துக் கொடுக்கும் இல்லம் ஒன்றில் ஒப்படைத்து விட்டு தனியளாக வீடு திரும்புகின்றாள் லானி. அவளை ஒன்றும் நிகழாதது போல இயல்பான வாழ்க்கையை வாழச் செய்கின்றனர். மகனைப் பிரிவுற்ற அவ்வன்னையின் பெருவலியின், நாற்பது வருடங்களாக அவனைக் கண்டு கொள்ள விழையும் அனையா தவிப்பின் நினைவுக்குறிப்புகள் தான் ‘Unfit’.  நான் குந்தியின், கர்ணனின் கதைகளை லானியிடம் கூறினேன்.

அவருடனான இந்த உரையாடல் வெண்முரசு திரையிடலுக்கான சரியான அரங்கம் ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்கின்றேன் என்ற உறுதியை அளித்தது.  சமீபத்தில் தன் மகனை கண்டடைந்து விட்டதாக லானி மகிழ்வுடன் சொன்னார். மனம் சற்று எளிதாக உணரத் தொடங்கியது. லானியிடம் திரையிடலன்று சந்திக்கிறேன் என்று விடைபெற்றுக் கொண்டேன்.

நான் ஒருங்கிணைக்கும் முதல் இலக்கிய நிகழ்வு இது. வெண்முரசிற்கான நிகழ்வாக அமைந்ததில் மகிழ்வு. போர்ட்லாண்டு  திரையிடல் குறித்த செய்தி உங்கள் தளத்தில் வெளி வந்ததும் வெண்முரசு வாசகர்கள் சிலர் தொடர்பு கொண்டிருந்தனர். ஜானியின் நண்பர்களும், குரு நித்யாவின் மாணவர்களுமான தெபோரா புக்கானன், ஸ்காட் டைட்ஸ்வொர்த், ஆண்டி லார்க்கின் ஆகியோரும்,  மகாபாரதம் என்ற பெயரையே முதல் முறையாக கேள்விப்படும் நண்பர்கள் சிலரும் வெண்முரசு ஆவணப்படத்தைக் காண விருப்பம் தெரிவித்திருந்தனர். வாசகர் முத்தையா இராஜ கோபாலன் அவர்களும், அவரது மகள் சஹானாவும் நிச்சயம் வருவதாகச் சொன்னார்கள். சஹானா பனிமனிதன், யானை டாக்டர் போன்ற கதைகளின் வாயில்களாக உங்கள் படைப்புலகை அறிமுகம் செய்து கொண்டிருந்தார். முத்தையா அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைக்க இறுதிவரை உதவியாக இருந்தார்.

அனைவருக்கும் ஏற்றார் போல மகாபாரதம் குறித்தும், உங்களது எழுத்துலகம் குறித்தும்,வெண்முரசு குறித்தும் மூன்று நிமிடங்களுக்குள் அடங்கும்  சிறிய அறிமுக உரை ஒன்றை அளித்தபின் ஆவணப் படத்தை தொடங்குவதாக திட்டம். உரையைத் தயாரிக்க கடலூர் சீனு உதவினார். சென்னை விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர் இராஜகோபாலனும், தோழி கரினாவும் ஆங்கில உரையின் பிழைத்திருத்தங்கள் செய்யவும், நிகழ்வை சீராக ஒருங்கிணைக்கும் வழிமுறைகளையும் அளித்து உதவினர்.  இலக்கிய நண்பர்கள் பாசிலும், ஜேக்கப்பும் நிகழ்வன்று உதவினார்கள்.

(ஶ்ரீனிவாசன் சடகோபன், சுப்பு தியாகராஜன்,ஶ்ரீனிவாசன் சங்கரன், சஹானா)

விருப்பம் தெரிவித்திருந்த அனைவரும் இன்ன பிற நண்பர்களும் திரையிடலுக்கு வந்திருந்தனர்.  வெண்முரசு வாசகர்கள் ஶ்ரீனிவாசன் சங்கரன், சுப்பு தியாகராஜன் மற்றும் ஶ்ரீனிவாசன் சடகோபன் ஆகியோர் சியாட்டலில் இருந்து கிட்டதட்ட இரு நூறு மைல்கள், நான்கு மணி நேரம் பயணம் செய்து வந்திருந்தார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி. அனைவருக்கும் ஆவணப் படம் பிடித்திருந்தது.

‘கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்? ‘  இன் இசை அமைப்பு ஆவணப் படத்தின் உச்சம். மகாபாரதத்திற்கான theme music சிறப்பாக இருந்தது. நண்பர்கள் நிச்சயம் திரையரங்கங்களில் சென்று அவற்றைக் கண்டும் கேட்டும் ரசிக்க  வேண்டும்.

புதியவர்களுக்கு மகாபாரதத்தையும், காப்பியத் தன்மை கொண்ட ஒரு மாபெரும் சமகால இலக்கியப் படைப்பையும் அறிமுகம் செய்து கொண்டதில் பேர் உவகை. இது உலகின் நீளமான நாவல் என்பது மட்டும் அல்லாது அதன் பிற முக்கியத்துவங்களை குறித்தும் கலந்துரையாடினோம்.

உலக இலக்கிய வரலாற்றை எடுத்துக் கொண்டோம் என்றால் சார்லஸ் டிக்கின்ஸ், தாஸ்தாவெஸ்கி போன்றவர்களின் நாவல்கள் வார இதழ்களில் தொடர் பிரசுரமாக வெளி வந்துள்ளன. ஆனால், தினம் ஒரு அத்தியாயம் என ஆசிரியர் எழுதுவதை ஒட்டியே வாசகர்களும் பின் தொடர்ந்து வாசித்தல், அதுவும் இணையதளத்தில் இலவசமாக, என்பது உலக இலக்கிய வரலாற்றில்  வெண்முரசிற்கு முன் நிகழ்ந்தது இல்லை என்பதை அமெரிக்க நண்பர்கள் கூறினர்.

மேற்குலகம் ஒற்றை ஆண் கடவுளே போதும் என்றும் பெண் தெய்வங்களே வேண்டாம் என்றும் என்றோ முடிவு செய்து விட்டதன் விளைவுகள் குறித்தும், இந்தியப் பண்பாடு பல்வகைத் தெய்வங்களை இன்றும் வழிபட்டு வருவதன் முக்கியத்துவத்தையும்  பேசினார்கள்.

உலகிற்கு இந்திய மரபின் மிக முக்கியமான கொடைகள் என்றால் புத்தரும், போதிசத்வரும், கிருஷ்ணனும் தான் என்று ஜானி கூறினார்.  அவர், ‘எங்கள் கடவுள்  சிலுவையில் அரையப்பட்டு நிற்கின்றான். உங்களவன் புல்லாங்குழல் இசைத்து, கோபிகைகள் சூழ வாழ்வை ரசித்தவாறு நிற்கின்றான். கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்’ என்றவாறு புன்னகைத்தார். தொடர்ந்து, ‘கிருஷ்ணனின் குறியீட்டிற்கு சற்றேனும் அருகில் வரும் மேற்கின் ஒரு ஆளுமை என்றாள் அது வால்ட் விட்மென் மட்டும் தான். உண்மையில் அவரை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று எங்களவர்களுக்கு நீண்ட காலம் விளங்கவில்லை. இப்போது தான் சிறிதேனும் விட்மனை புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளோம்’ என்றார்.

திரையிடல் முடிந்த பின் குறைந்தது அரை மணி நேரமாவது உரையாடி பிறகு தான் கலைந்து சென்றனர். நிறைவான மாலை.

பிரபு போர்ட்லண்ட்

Viewing all 16850 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>