Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 17216 articles
Browse latest View live

வணிகக்கலையும் கலையும்

$
0
0

1

அன்புள்ள ஜெ,

 

வணிகக்கலைக்கு எதிரானவர் என்று ஒரு சித்திரம் உங்களுக்கு இருந்தது. திடீரென்று வணிகக்கலை கேளிக்கைக்குத் தேவைதான் என்று ஆரம்பித்திருக்கிறீர்கள். ஏன் இந்த பல்டி என்று கேட்டால் கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

 

கோபிநாத்

 

அன்புள்ள கோபிநாத்,

 

நான் 1990 வாக்கில் சுந்தர ராமசாமி சுஜாதாவை [காலச்சுவடு ஆண்டு மலர் மீதான சுஜாதாவின் விமர்சனத்தில் என நினைக்கிறேன்] வணிகச்சீரழிவின் நாயகன் என்று சொன்னதற்கு எதிராக எழுதிய குறிப்பில் தொடங்கி எப்படியும் நூற்றைம்பது முறை இதை விளக்கியிருப்பேன். மீண்டும் விளக்குகிறேன். வேறுவழி?

 

வணிகக் கலை அல்லது எழுத்து சமூகவிரோத சக்தியோ சீரழிவோ ஒன்றும் அல்ல. அது ஒரு சமூகத்தேவை. நிறுவனப்படுத்தப்பட்டதும், படைப்பூக்கம் இல்லாத உழைப்பு கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளதுமான இன்றைய சமூகத்தில் அந்த வெறுமையை வெல்லும்பொருட்டு கேளிக்கைகள் பேருருவம் கொள்கின்றன.இது மார்க்ஸில் இருந்து ஆரம்பித்து அல்தூஸர் வழியாக விரிவடைந்த  அன்னியமாதல் கோட்பாடுகளால் விளக்கப்பட்டுள்ளது.

 

வணிகக்கலை மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது. அவர்கள் நாடு சிறிய மகிழ்ச்சிகரமான இடைவேளையை அளிக்கிறது. அவர்கள் தங்கள் பண்டைய தொகுப்படையாளங்களில் இருந்து தனிமைப்பட்டிருக்கிறார்கள். கேளிக்கைகள் வழியாக அவர்கள் மீண்டும் பெருந்திரளாக ஆகிறார்கள். அதை எவ்வகையிலும் தவிர்க்கமுடியாது. அது இல்லாத லட்சிய சமூகத்தை கற்பனைசெய்யலாம். ஆனால் இந்தச்சமூக அமைப்புக்குள் அதைத் தடுப்பது சாத்தியமல்ல.

 

ஆகவே கல்கியோ சாண்டில்யனோ சுஜாதாவோ , எம்.கெ.தியாகராஜபாகவதரோ ,எம்.ஜி.ஆரோ ரஜினிகாந்தோ அவர்களுக்குரிய பங்களிப்பை சமூக இயக்கத்தில் ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே சரியான புரிதல். அது பெருவாரியான மக்களால் பங்கெடுக்கப்படுவதனால், பெரும்பணம் புரள்வதனால் ஒரு தொழில். ஒரு வணிகம். அவ்வளவுதான். அதற்கு அப்பால் ஒன்றுமல்ல.

 

வணிக எழுத்து அல்லது வணிகக்கலை அல்லது  இலக்கியம் அல்லது கலையாக முன்வைக்கப்படும்போது மட்டுமே அது எதிர்க்கப்படவேண்டியதாகிறது. அதுவும் வணிகக்கலையை இகழ்ந்தோ அதில் ஈடுபடுவதை கண்டித்தோ அல்ல. அதற்கும் இலக்கியத்திற்கும் கலைக்கும் உள்ள வேறுபாட்டை அழுத்தமாக முன்வைப்பதன் மூலமே. சரியான இலக்கியத்தை, உண்மையான கலையை அடையாளம்காட்டலாம். அதன் இயல்புகளை வரையறைசெய்து விவாதிக்கலாம். அதன் இலக்கணத்தையும் வரலாற்றையும் கற்பிக்கலாம். அதுவே ஆக்கபூர்வமான பணி

 

இலக்கியமும் கலையும் வணிகத்திற்கு எதிர் சக்தி அல்ல. அவை செயல்படும் தளமே வேறு. சாண்டில்யனுக்கும் ஜானகிராமனுக்கும் இடையே போட்டியே இல்லை.  சுஜாதாவை நான் தேர்ந்த கதைசொல்லி என்றும் சிறந்த சித்தரிப்பாளர் என்றும் சொல்வேன். அவர் தமிழின் கேளிக்கை எழுத்தின் முதன்மைச் சாதனையாளர் என்பேன். ஆனால் அவரது நாடகங்கள், சில சிறுகதைகள் அன்றி அனைத்துமே வணிக எழுத்து என்றும் சொல்வேன். அவரை சீரழிவு எழுத்தாளர் என்று சொல்லமாட்டேன். அதேசமயம் இலக்கியவாதி என்று ஏற்கவும் மாட்டேன்.

 

இலக்கியத்தை முன்வைக்கையில் கூடவே வணிகக்கலைகளை, கேளிக்கை எழுத்தை நிராகரித்து வசைபாடும்போது ஒரு இருமை உருவாகிறது. மக்களால் ரசிக்கப்படுவதற்கு எதிரானதே கலையும் இலக்கியமும் என்னும் மனநிலை வந்துவிடுகிறது. கலையும் இலக்கியமும் ஒருவகை மேட்டிமை அடையாளங்கள் என்றாகி விடுகிறது. அது நிகழலாகாது. கலையும் இலக்கியமும் ஓர் ஆசிரியனின் அகம் வெளிப்படும் தளங்கள். அவனூடாக அச்சமூகத்தின் ஆழம் வெளியாகும் வாயில்கள். ஆகவே  அச்சமூகத்தின் அனைவருக்கும் உரியவை, அவர்களில் சிலரே அங்கு வருகிறார்கள் எனினும்.

 

எந்த ஒரு சமூகத்திலும் வணிகக்கேளிக்கைக் கலையும் எழுத்தும் இருந்துகொண்டுதான் இருக்கும். அவை  மக்களின் களியாட்டவெளி. கூடவே கலைக்கும் இலக்கியத்திற்கும் வருவதற்கான ஒருவகைப் பயிற்சிக்களங்களாகவும் உள்ளன.இன்று தமிழில் வணிக எழுத்து அருகிவருவதனால் பொதுவான வாசிப்பே குறைந்துவருகிறது என்பதை பலமுறை எழுதியிருக்கிறேன்.

 

இலக்கியம் அல்லது கலை பரப்பியக்கமாக ஆக முடியாது. பல லட்சம்பேர் அதில் ஈடுபடுவது உலகின் எப்பகுதியில் இதுவரை நிகழ்ந்ததில்லை. பரப்பியக்கமாக அமையக்கூடியது வணிகக் கேளிக்கைக் கலையும் இலக்கியமும்தான். ஏனென்றால் அவற்றுக்கு மக்களிடம் சொல்வதற்கு என ஏதுமில்லை. கேட்பவர்களின் ரசனைக்கும் தேவைக்கும் ஏற்பவே  அவை பேசுகின்றன. அவை மக்களை நோக்கி திருப்பிவைக்கப்பட்ட கண்ணாடிகள். அவை வெறும் எதிரொலிகள். ஆகவே அவை இலக்கியத்தைவிட மக்களை நேரடியாக பிரதிபலிக்கின்றன என்று அண்டோனியோ கிராம்சி சொல்கிறார்.

 

இலக்கியமும் கலையும் அவற்றை ரசிப்பதற்கான பயிற்சியையும் மனநிலையையும் எதிர்பார்க்கின்றன. இல்லாதவர்களை வெளியே தள்ளுகின்றன. அவற்றின் அடிப்படையிலேயே தனக்குரியவர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளும், வடிகட்டி இருக்கிறது. ஆகவே அவை எந்நிலையிலும் எந்தச்சமூகத்திலும் பெரும்பான்மையினருக்குரியவையாக ஆக முடியாது

 

அந்நிலையில் வணிகக்கலையும் எழுத்துமே ஒருசமூகம் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் பொதுப்பேச்சைத் தீர்மானிக்கின்றன. வணிகக்கலையும் இலக்கியமும் அழியும் என்றால் அந்த உரையாடல் நிகழாமலாகும். ஜெர்மானிய, பிரெஞ்சு, ஜப்பானிய வணிகசினிமா அழிந்த இடத்தில் ஹாலிவுட் சினிமாதான் சென்று அமர்ந்தது. அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ஊடகம் இல்லாமலாகியது. அதேசமயம் அவர்களின் கலைப்பட இயக்கம் சிறிய ஓடையாக  தன் தடத்தில்தான் சென்றுகொண்டிருக்கிறது.

 

இந்தியாவில் தமிழ்போன்ற வட்டார வணிக சினிமாக்கள் இந்தப் பண்பாடு தன்னைப்பற்றி தன்னுடன் பேசிக்கொள்ளும் பொதுவடிவமாக இன்றுள்ளன. ஆகவேதான் இந்த மண்ணைவிட்டுச்சென்றவர்களுக்கு அவையே ஒரே இணைக்கும்பாலமாக உள்ளன.

 

தமிழின் முக்கியமான முன்னோடி இலக்கியவாதிகள் பலரும் வணிகக்கேளிக்கை எழுத்தின் ரசிகர்களாகவே இருந்துள்ளனர். புதுமைப்பித்தன்,க.நா.சு, வல்லிக்கண்ணன் போன்றவர்கள் துப்பறியும்நாவல்களின் பரம ரசிகர்கள். நானும் அவ்வப்போது உணர்வுரீதியான இடைவெளிகளை அவற்றைக்கொண்டே நிரப்புகிறேன்.

 

ஆகவே வணிகக்கலையை சீரழிவு என்று நான் சொல்வதில்லை. அது ஒரு பரப்பிய இயக்கம். அது ஒரு வணிகம்.  அதேசமயம் அதை கலையிலிருந்து வேறுபடுத்திப்பார்ப்பதையும் எப்போதும் வலியுறுத்துவேன்.

 

 

ஜெ

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 5

$
0
0

[ 5 ]

சௌனகர் தருமனின் அரண்மனைக்குச் செல்வதற்குள் அரசாணை வந்துவிட்டிருந்தது. அவர் தேரிறங்கி அரண்மனை முற்றத்தை அடைந்தபோது அங்கே அரசப்படையினர் நின்றிருப்பதை கண்டார். அங்கே நின்றிருந்த நூற்றுவர்தலைவனிடம் “என்ன நிகழ்கிறது?” என்றார். அவன் “அமைச்சரே, அரசருக்குரிய தொழும்பர்களை அழைத்துச்சென்று தொழும்பர்குறி அளித்து அவர்களுக்குரிய கொட்டிலில் சேர்க்கும்படி ஆணை. அதற்கென அனுப்பப்பட்டுள்ளோம்” என்றான்.

சௌனகர் மறுமொழி சொல்லாமல் அரண்மனைக்கூடத்திற்குள் நுழைந்தார். எதிரே வந்த ஏவலனிடம் “அரசரும் தம்பியரும் எங்கே?” என்றார். “அவர்கள் மாடியில் இருக்கிறார்கள். ஆயிரத்தவனும் வீரர்களும் மேலே சென்றிருக்கிறார்கள்” என்றபடி அவன் உடன் வந்தான். “என்ன நிகழ்கிறது அமைச்சரே?” என்றான். “சுரேசர் எங்கே?” என்றார் சௌனகர். “அவர் அரண்மனைக்கு சென்றிருக்கிறார். இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வந்த அனைவரும் உடனே அரண்மனைக்குச் செல்லும்படி ஆணை வந்தது.”

மாடிப்படிகளில் ஏறி இடைநாழி வழியாக விரைந்து மூச்சிரைக்க கூடத்தை அடைந்த சௌனகர் அங்கே நின்றிருந்த காவலனிடம் “அமைச்சர் சௌனகர். அரசரை நான் பாக்கவேண்டும்” என்றார். “அரசரா? இங்கே ஒருவரே அரசர். அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் அரசர் அவர்.” அத்தகைய செயல்களுக்கு உரியவன் அவன் என்று சௌனகர் எண்ணிக்கொண்டார். அங்கு வந்திருந்த அத்தனை படைவீரர்களின் முகங்களும் ஒன்றுபோலிருந்தன, கீழ்மைகளில் மட்டுமே உவகை காணக்கூடியவர்கள். ஆகவே தங்கள் ஆழத்தில் தங்கள் மேலேயே மதிப்பற்றவர்கள். அதை வெல்ல தங்களைச் சுற்றி மேலும் கீழ்மையை நிரப்பிக்கொண்டு கீழ்மையில் திளைப்பவர்கள். ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரியவர்களை அரசு எங்கோ சேமித்து வைத்திருக்கும். கொல்லனின் பணிக்களத்தின் வகைவகையான கருவிகள் போல, அவர்கள் மட்டுமே ஆற்றும் தொழில் ஒன்று இருக்கும்.

“நான் அஸ்தினபுரியின் பேரமைச்சர் விதுரரின் ஆணையுடன் வந்தவன்” என்றார் சௌனகர். அவர் அருகே வந்த இன்னொருவன் சிரித்து “விதுரர் அமைச்சராக நீடிக்கிறார் என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது, அந்தணரே…” என்றான். இன்னொருவன் அருகே வந்து “இந்திரப்பிரஸ்தத்தின் அமைச்சர்கள் அனைவரும் உடனே அரண்மனைக்குச் செல்லும்படி ஆணையிருந்ததே! ஏன் செல்லவில்லை நீர்? இதன்பொருட்டே உம்மை சிறைப்படுத்த வேண்டியிருக்கிறது” என்றான். சௌனகர் “நான் செய்தி சொல்ல வந்தது இந்திரப்பிரஸ்தத்தின் அரசரிடம். அச்செய்தி விதுரரால் அனுப்பப்பட்டது. அதைச் சொல்லவில்லை என்றால் அதன் பொறுப்பு என்னுடையது அல்ல” என்றார்.

அவர்களின் கண்கள் சுருங்கின. நீண்டநாள் கீழ்மை அவர்களை கீழ்மையின் வழிகளில் மட்டும் கூர்மைகொண்டவர்களாக ஆக்கியிருந்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். அந்த நேரடியான கூற்றை அவர்களால் வளைக்காமல் புரிந்துகொள்ளமுடியவில்லை. அந்தச் சிக்கலை கண்டதும் எரிச்சலடைந்த காவலன் “உள்ளே சென்று செய்தியை சொல்லும். சொன்னதுமே நீர் அஸ்தினபுரியின் அரசரவைக்கு சென்றாகவேண்டும்” என்றான். “நன்று” என்று சொல்லி சௌனகர் உள்ளே சென்றார்.

தருமன் மரவுரி அணிந்து நின்றிருக்க அருகே கொழுத்த உடலும் தடித்த கழுத்தில் அமைந்த மடிப்புகள் கொண்ட மோவாயுமாக ஆயிரத்தவன் உள்ளே நோக்கியபடி நின்றிருந்தான். காலடியோசை கேட்டு திரும்பி சௌனகரை நோக்கிவிட்டு அவர் வருகையை சித்தம்கொள்ளாமல் மீண்டும் உள்ளே நோக்கி “எத்தனை பொழுதாகிறது? விரைவில்…” என உரக்க குரல்கொடுத்தான். அவன் தன் முகத்தை சற்று மேலே தூக்கி வைத்திருந்த முறையே அவன் அத்தருணத்தைவிட தாழ்ந்தவன் என்பதை காட்டியது. அதை வந்தடைய தன் உள்ளத்தை அவன் தூக்கி எழுப்ப முயல்கிறான் என சௌனகர் எண்ணினார். உள்ளிருந்து நகுலனும் சகதேவனும் மரவுரிகளுடன் வெளியே வந்தனர். “அணிகளென எதையும் அணிந்திருக்கலாகாது, அனைத்தும் அரசருக்குரியவை…” என்ற ஆயிரத்தவன் திரும்பி சௌனகரை நோக்கி “நீர் யார்?” என்றான்.

சீரான குரலில் “இவர்களை தொழும்பர்களென அழைத்துச்செல்ல ஆணையிட்டவர் யார்?” என்றார் சௌனகர். அவன் “நான் ஆயிரத்தவன்” என்று சொன்னபின்னர் அச்சொற்களைக் கேட்டு அவனே சினம்கொண்டு “முதலில் நீர் யார்? எப்படி உள்ளே வந்தீர்?” என்றான். “நான் அமைச்சர் விதுரரின் செய்தியுடன் வந்திருக்கிறேன். இன்னும் சற்றுநேரத்தில் உமக்குரிய அரசாணை வரும்… அதுவரை பொறுத்திரும்” என்று சௌனகர் சொன்னார். அவன் பெருமூடன் என்பது எதையும் இயல்பாக உள்வாங்காத விழிகளிலிருந்து தெரிந்தது. ஆனால் மூடத்தனத்திற்கும் அரசுப்பணியில் பெரும் பயனுண்டு. அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு வைப்பில் இருந்தாகவேண்டிய படைக்கலங்கள். அவர்களின் அர்ப்பணிப்பு ஐயத்திற்கிடமற்றதாக இருக்கும். ஆணைகளை தடையற்ற கண்மூடித்தனத்துடன் அவர்களால் நிறைவேற்றமுடியும். நோக்கமோ விளைவோ அவர்களுக்குள் நுழையாது.

“எனது ஆணை இளவரசர் துச்சாதனரிடமிருந்து மட்டுமே… விதுரருக்கும் எனக்கும் சொல்லே இல்லை” என்று அவன் சொன்னான். ‘ஆனால் அவர்களை எளிதில் குழப்பமுடியும்’ என சௌனகர் எண்ணிக்கொண்டார். “ஆம், ஆனால் எனக்கும் விதுரருக்கும் உறவிருக்கிறது. அவரது ஆணையை நான் உம்மிடம் கூறலாம் அல்லவா?” அவன் அருகே நின்றவனை நோக்கிவிட்டு “அதை எப்படி நான் நம்புவது?” என்றான். அருகே நின்ற காவலனின் கண்கள் பளிச்சிட்டன. அவன் மூடனல்ல என்று சௌனகர் உடனே உணர்ந்தார். இத்தகைய மூடர்கள் ஒரு கூரியவனை அருகே வைத்திருப்பார்கள். அவனை நம்பி செயல்படுவார்கள். அவனை அஞ்சிக்கொண்டும் அவன் மேல் வஞ்சம்கொண்டும் துன்புறுவார்கள்.

“நம்பவேண்டியதில்லை… ஆனால் நம்பாமலிருப்பதன் பொருட்டு நீர் கழுவிலேறுவீர் என்றால் அது உம் பொறுப்பே” என்றார் சௌனகர். அவன் மீண்டும் திரும்பி அருகே நின்ற காவலனை நோக்கினான். அவன் உதவ வராமல் கண்களில் சிரிப்பு உலோக முள்முனையென ஒளிர நின்றிருந்தான். ஆயிரத்தவன் திடீரென எழுந்த சினத்துடன் “என்ன செய்கிறீர்கள் அங்கே? நேரம் பிந்தினால் உங்களை சட்டகத்தில் கட்டி ஆடை அவிழ தெருவில் இழுத்துச்செல்வேன்…” என்று கூவி தன் கையிலிருந்த சவுக்கைத் தூக்கி சொடுக்கினான். தருமன் வேண்டாம் என்றார். அவரது உதடுகள் மட்டுமே அசைந்தன. கண்கள் களைத்து உதடுகளுக்கு இருபக்கமும் ஆழமான கோடுகள் மடிந்து தோலில் சுருக்கங்கள் படிந்து அவர் மிகமுதியவராகிவிட்டிருந்தார்.

சௌனகர் “நீர் துச்சாதனரிடம் ஒரு சொல் கேட்டுவருவதே மேல்” என்றார். குரலைத் தூக்கி “எனக்கிடப்பட்ட ஆணைகள் தெளிவானவை… நான் எவருக்கும் மறுமொழி சொல்லவேண்டியதில்லை” என்றான் அவன். சௌனகர் வியப்புடன் ஒன்றை உணர்ந்தார். அறிவற்றவர்கள் உரக்கப்பேசும்போது உள்ளீடற்ற கலத்தின் ஓசைபோல அந்த அறிவின்மை முழங்குகிறது. அது எப்படி என்று அவர் உள்ளம் தேடியது. அவர்கள் மெதுவாக பேசும்போது அறிவின்மையை எப்படி மறைக்கமுடிகிறது? மறுகணமே அவர் அதை கண்டடைந்தார். அறிவிலியர் இயல்பாக மெல்ல பேசுவதில்லை, அதை அவர்கள் பிறரிடமிருந்து போலி செய்கிறார்கள். எப்போதும் சொல்தேர்ந்துபேசும் சூழ்ச்சியாளர்களையே அவர்கள் பின்பற்றுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் அல்லும்பகலும் அஞ்சுவது சூழ்ச்சியாளர்களையே.

உள்ளிருந்து பீமனும் அர்ஜுனனும் மரவுரியாடைகளுடன் வெளியே வந்தனர். ஆயிரத்தவன் அவர்களைக் கண்டதும் பற்கள் தெரிய, சிறிய விழிகள் இடுங்க நகைத்து “கிளம்புங்கள்! உங்களுக்குரிய இடம் காத்திருக்கிறது” என்றான். தழும்புகள் நிறைந்த கொழுத்த முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை சௌனகர் வியப்புடன் நோக்கினார். எதன்பொருட்டு மகிழ்கிறான்? அவன் ஆற்றிய பெருஞ்செயல் என எண்ணுகிறானா? அவர்கள் அடையும் சிறுமை கண்டு களிப்பு கொள்கிறானா? இல்லை என்று தோன்றியது. அது நடப்பவர் தடுக்கி விழக்கண்டு சிரிக்கும் சிறுவனுடையது. மிகமிக எளியது. எளிய விலங்கு. இழிவு என்பது எளியவர்களுக்குரியது. உயரிய இன்பங்கள் எதையும் அடைய முடியாதவர்களுக்காக தெய்வங்கள் வகுத்தது.

“நில்லும்!” என உரத்த குரலில் சௌனகர் சொன்னார். “இச்செயலை நிறுத்தும்படி விதுரரின் ஆணை வந்துள்ளது. நீர் அதை மீறுகிறீர். அதை உமக்கு அரசுமுறையாக சொல்ல விழைகிறேன்.” அவன் மீண்டும் அருகே நின்ற காவலனை நோக்க அவன் இம்முறை உதவிக்கு வந்தான். மெல்லிய குரலில் “அரசாணை என்றால் அதற்குரிய ஓலையோ பிற சான்றோ உங்களிடம் உள்ளதா, அந்தணரே?” என்றான். “என் சொற்களே சான்று. நான் அமைச்சன்” என்றார் சௌனகர். ஆயிரத்தவன் போலிசெய்யும் மென்குரல் இவனுடையது என எண்ணிக்கொண்டார். அவன் “ஆம், ஆனால் அஸ்தினபுரியின் அமைச்சர் அல்ல” என்றான்.

‘இன்னும் சற்றுநேரம்’ என சௌனகர் எண்ணிக்கொண்டார். “என்ன வேண்டும் உனக்கு? சொல், விதுரர் உனக்கு ஆணையிட முத்திரைக்கணையாழியை கொடுத்தனுப்பவேண்டுமா? எந்த ஆயிரத்தவன் அரசாணைக்கு இதற்குமுன் சான்று கோரியிருக்கிறான்?” அது பொருளற்ற பேச்சு என்று உணர்ந்தமையால் அவர் பேசிக்கொண்டே சென்றார். “நான் கேட்கிறேன். விதுரரின் ஆணையை மறுப்பவன் எவன்? அவன் பெயர் எனக்கு வேண்டும். ஏனென்றால் நான் அவரிடம் என்ன நடந்தது என்று சொல்லியாகவேண்டும்.”

ஆனால் அருகே நின்றவன் பேச வாயெடுப்பதற்குள் ஆயிரத்தவன் பெரும்சினத்துடன் “விதுரர் எவரென்றே நான் அறியேன். நானறிந்தவர் இளையவர் மட்டுமே. சென்று சொல்லும்! எனக்கு எவரும் ஒரு பொருட்டல்ல” என்றான். சௌனகர் மேலும் உரத்தகுரலில் “இளையவர் விதுரரின் ஆணையை மீறுவார் என்றால் அவரும் தண்டிக்கப்படுவார். ஆனால் அவர் அரசகுருதி. நீர் கழுவேறுவீர்” என்றார். அச்சொல் அவனை திகைக்கச்செய்தது. அவன் உள்ளம் தளர்வது உடலசைவில் தெரிந்தது. “நான் எனக்கிடப்பட்ட ஆணையை…” என்றான். “ஆணை, இதோ என்னிடமிருந்து வருவது” என்றார் சௌனகர்.

“வேண்டாம், அமைச்சரே! அவர் தன் பணியை செய்யட்டும்” என்று மெல்லிய குரலில் தருமன் சொன்னார். அத்தனை நிகழ்ச்சிகளுக்குப்பின் அக்குரலை முதன்முறையாக கேட்கிறோம் என சௌனகர் எண்ணினார். அது மிகவும் தளர்ந்து தாழ்ந்திருந்தது, பசித்துக் களைத்தவனின் ஓசைபோல. அந்த ஒற்றைச் சொற்றொடரின் இடைவெளியில் இறுதிவிசையையும் திரட்டி ஆயிரத்தவன் தன்னை மீட்டுக்கொண்டான். நெஞ்சைப் புடைத்தபடி முன்னால் வந்து “எனக்கு எவர் ஆணையும் பொருட்டல்ல. நான் இளையவரின் பணியாள். அவரது சொல் ஒன்றே எனக்கு ஆணை…” என்றபின் திரும்பி “கிளம்புங்கள் தொழும்பர்களே… இனி ஒரு சொல்லை எவர் எடுத்தாலும் சவுக்கடிதான்… கிளம்புங்கள்!” என்றான்.

அவனைப்போன்றவர்களின் ஆற்றல் என்பது எல்லை கடக்க முடியாதபோது எழும் எதிர்விசையில் உள்ளது என சௌனகர் எண்ணினார். தருமன் சௌனகரிடம் விழிகளால் விடைபெற்றுவிட்டு முன்னால் சென்றார். இளையவர்கள் தொடர்ந்தனர். அவர்கள் இடைநாழியை நோக்கி செல்ல உளப்பதைப்புடன் சௌனகர் பின்னால் சென்றார். என்ன செய்யலாம் என்று எண்ணியபோது சித்தம் கல்லெனக் கிடந்தது. ஒரு கணத்தில் அனைத்தும் தன்னை கைவிட்டுவிட்டதைப்போல உணர்ந்தபோது கால்கள் தளர்ந்தன. ஏதோ ஒன்று நிகழவிருக்கிறது என அவர் உணர்ந்த அக்கணத்தில் ஆயிரத்தவன் தருமனின் பின்கழுத்தில் ஓங்கி அறைந்து “விரைந்து நடடா, அடிமையே!” என்றான்.

தருமன் சிற்றடி எடுத்துவைத்து தள்ளாடி தலையை பிடித்துக்கொண்டார். நால்வரும் ஒலிகேட்ட காட்டுவிலங்குகளென உடல்சிலிர்த்து அசைவிழந்தனர். “என்னடா நின்றுவிட்டீர்கள்? …ம்” என்று அவன் நகுலனை அறைந்தான். அவன் கன்னத்தைப் பற்றியபடி முன்னால் சென்றான். சௌனகர் கால்கள் நடுங்க நின்றுவிட்டார். அவர் அஞ்சியது அதைத்தான் என்பதை அப்போதுதான் உணர்ந்தார். பீமன் பெருமூச்சுடன் “செல்வோம்!” என்றபடி நிமிர்ந்த தலையுடன் நீண்ட பெருங்கைகள் ஆட நடந்தான். அர்ஜுனன் அவனை தொடர்ந்தான். தருமனின் முகம் அமைதிகொண்டுவிட்டதை சௌனகர் கண்டார். அதுவரை இருந்த களைப்பும் சோர்வும் அகன்று அது இனியநினைவொன்று எழுந்ததுபோல மலர்ந்திருந்தது.

இடைநாழியின் மறு எல்லையை அவர்கள் அடைவதற்குள் வெளியே ஓசை கேட்டது. அந்த மழுங்கலான பேச்சொலியில் இருந்தே சௌனகர் அதை உணர்ந்துகொண்டார். “மூடா, அதோ வருகிறது அரசாணை. கேள்… உன் கழுமரம் சித்தமாகிவிட்டது” என்று கூவினார். ஆயிரத்தவன் தயங்கியபோது படிகளில் ஏறிவந்த படைத்தலைவன் “கீர்மிகா, இது பேரரசரின் ஆணை! அவர்களை விட்டுவிடுக! இந்திரப்பிரஸ்தம் அவர்களுக்கு அரசரால் திருப்பியளிக்கப்பட்டுவிட்டது” என்றான்.

ஆயிரத்தவன் தலைவணங்கி “ஆம், படைத்தலைவரே” என்றான். அவனுக்கு ஒரு சொல்லும் புரியவில்லை என்பது தெரிந்தது. அவன் அருகே நின்ற காவலன் “நாங்கள் செய்தவை அனைத்தும் இளையகௌரவரின் ஆணைப்படியே” என்றான். ஒருகணத்திற்குள் அவன் வெளியேறும் வழியை கண்டுபிடித்ததை உணர்ந்த சௌனகர் ஏன் அவன் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறான் என்பதை புரிந்துகொண்டார். உரத்தகுரலில் “ஆம், அது முன்னரே விதுரருக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. அதை நான் இவர்களிடம் சொன்னேன். விதுரரின் ஆணையை இவன் மீறினான். அதை நானே அவரிடம் சொல்லவும் வேண்டியுள்ளது” என்றார்.

படைத்தலைவன் “அதை அரசரோ அமைச்சரோ உசாவட்டும். என் பணி செய்தியை அறிவிப்பதே. பேரரசரின் ஆணை முறைப்படி அறிவிக்கப்பட்டுவிட்டது” என்றபின் தருமனை நோக்கி தலைவணங்கி “செய்தியை தங்களிடம் அமைச்சரே வந்து அறிவிப்பார், அரசே” என்றான். திரும்பி ஆயிரத்தவனிடம் “செல்க!” என்று ஆணையிட்டான். நகுலன் தருமனின் கைகளைத் தொட்டு “உள்ளே செல்வோம், மூத்தவரே” என்றான். தருமனின் தலைமட்டும் நடுங்கிக்கொண்டிருந்தது. “ஆம்… ஆம்…” என்றபின் நகுலனின் கைகளைப்பற்றியபடி உள்ளே சென்றார். சகதேவனும் அவர்களுடன் செல்ல அர்ஜுனன் பீமனிடம் “வருக!” என்று சொல்லி தோளை தொட்டான்.

பீமன் ஆயிரத்தவனை அறையக்கூடும் என்ற எண்ணம் சௌனகர் உள்ளத்தில் எழுந்தது. ஆனால் அவன் இயல்பாகத் திரும்பி உள்ளே சென்றபோதுதான் ஒருபோதும் களத்தில் நிகர்வல்லமை கொண்டவர்களை அல்லாது பிறரை பீமன் அடித்ததில்லை என்று நினைத்துக்கொண்டார். மறுகணமே அந்த எளிய காவலர்தலைவனை அவன் மறந்துவிடக்கூடும். அவர்கள் உள்ளே சென்றதும் கணத்தில் அவருள் பெருஞ்சினம் எழுந்தது. ஆயிரத்தவனிடம் “வீணனே, நீ இன்று செய்ததற்காக கழுவில் அமர்வாய்… “ என்று பல்லைக் கடித்தபடி சொன்னார்.

அவன் சிறியவிழிகள் சுருங்கி ஒளிமங்கலடைய “என் கடமையை செய்தேன்… நான் காவலன்” என்றான். அவரது உணர்வுகள் அணைந்தன. அவனைப்போன்றவர்கள் கற்பனைசெய்ய முடியாதவர்கள். ஆகவே அவர்களின் அச்சம் பெருகுவதன் பெருவலி இல்லை. கழுவிலேற்றப்படுவான் என்றால்கூட அந்தத் தருணத்தின் விலங்குத்துயரம் மட்டுமே. அவன் முற்றிலும் வெல்லப்படமுடியாதவன்போல் தோன்றினான். வடிவற்ற அசைவற்ற பாறை. அவர் பெருமூச்சுடன் திரும்பிக்கொண்டார்.

[ 6 ]

சௌனகர் உள்ளே சென்றபோது யுதிஷ்டிரர் பீடத்தில் தலையை கைகளால் பற்றியபடி அமர்ந்திருக்க தம்பியர் வெவ்வேறு இடங்களிலாக சுவர்சாய்ந்தும் தூண்பற்றியும் நின்றனர். சாளரம் வழியாக வெளியே நோக்கியபடி அர்ஜுனன் நின்றிருந்தான். அரைக்கணம் அப்படி அவன் நின்றது கர்ணனோ என எண்ணச்செய்தது. சௌனகர் அமைதியாக தலைவணங்க யுதிஷ்டிரர் மெல்ல எழுந்து அவருக்கு பீடம் காட்டி அவர் அமர்ந்தபின் தான் அமர்ந்துகொண்டார். சௌனகர் பீமனை மீண்டும் நோக்கிவிட்டு கைகளை மார்பில் கட்டிக்கொண்டார்.

நகுலன் அமைதியை உடைத்தான். “நாம் கொடையாக அரசை ஏற்கத்தான் வேண்டுமா, அமைச்சரே?” என்றான். சௌனகர் “நான் விதுரருடன் சென்று பேரரசரை பார்த்தேன். என் முன்னால்தான் அனைத்து உரையாடல்களும் நிகழ்ந்தன. நான் சான்றாக வேண்டுமென்பதற்காகவே என்னை விதுரர் அழைத்துச்சென்றிருக்கிறார் என இப்போது உணர்கிறேன்” என்றார். அவர் அங்கே நிகழ்ந்தவற்றை சொன்னபோது அர்ஜுனன் அச்சொற்களை கேட்டதுபோலவே தோன்றவில்லை. “அவர் உங்களுக்கு அறக்கொடை அளிக்கவில்லை, தந்தை என அளிக்கிறார்” என்றார் சௌனகர்.

“ஆம், என்னை தன் முதல் மைந்தன் என அவர் சொன்னார் என்று கேட்கையில்…” என்று சொல்லவந்த யுதிஷ்டிரர் மேலே சொல்லெழாது நிறுத்தி தன்னை அடக்கிக்கொண்டார். “அவர் இத்தருணத்தில் ஒரு தந்தையென்றே திகழ்கிறார். அவர் எப்போதுமே அது மட்டும்தான்” என்றார் சௌனகர். “பேரரசி காந்தாரி அதற்கும் அப்பால் சென்று இக்குலம் ஆளும் பேரன்னை வடிவமாகி நின்றார்.” தருமன் கைகூப்பினார். கண்களில் நீர் எழ பார்வையை திருப்பிக்கொண்டார். “நம் அரசி இன்னமும் அங்கே காந்தாரியருடன்தான் இருக்கிறார்” என்று சௌனகர் சொன்னார்.

பீமன் உரத்த குரலில் “அது மூத்ததந்தையின் ஆணை என்பதை மட்டுமே நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அதை அவர் மைந்தர்கள் ஏற்கவேண்டுமென்பதில்லை” என்றார். “அவர் சூதாட்டநிகழ்வுக்கு முந்தையநாள் மைந்தனைக் கண்டு மன்றாடியதாகவும் அவன் அவரை மறுதலித்ததாகவும் சொல்கிறார்கள்.” சௌனகர் “உண்மை” என்றார். “ஆனால் மரபுப்படி இந்த அரசு பேரரசருக்குரியது. அவரது கொடையாகவே மைந்தர் அதை ஆள்கிறார்கள்.”

பீமன் “நான் கேட்பது அதுவல்ல. அரசை அவர்கள் அளிக்கவில்லை என்றால் இவர் என்ன செய்வார்?” என்றான். “கொல்ல ஆணையிடுவாரா? நாடுவிட்டு துரத்துவாரா? மாட்டார். அவர் அருந்தந்தை என்றீர்கள் அல்லவா, அது உண்மை. அவரது பெருமையும் இழிவும் அங்கிருந்து பிறப்பதே. தந்தையாகவே அவரால் செயல்படமுடியும். பேரரசர் என்று ஒருபோதும் தன்னை உணரமுடியாது. அவர் எந்நிலையிலும் தன் மைந்தரை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. அதை அவர்களும் அறிவார்கள்.” புன்னகையில் உதடுகள் வளைய “அவர்கள் அறிவார்களோ இல்லையோ சகுனி அறிவார், கணிகர் மேலும் நன்றாகவே அறிவார்” என்றான்.

சௌனகர் “அவரது ஆணை பிறந்ததுமே இந்திரப்பிரஸ்தம் நம்முடையதென்றாகிவிட்டது. நம் படைகள் இன்னமும் நம்முடன்தான் உள்ளன” என்றார். யுதிஷ்டிரர் “அவரது ஆணை எதுவோ அதற்கு கட்டுப்படுவோம்” என்றார். “நாம் அரசுகொள்ள அவர்கள் விடப்போவதில்லை” என்று பீமன் உரக்கச் சொன்னான். “கணுக்கணுவாக ஏறி அவர்கள் வந்தடைந்த உச்சம் இது. ஒற்றை உலுக்கலில் அவர்களை வீழ்த்த ஒப்புவார்களா என்ன?”

சௌனகர் “ஆனால் அவர்களுக்கு வேறுவழியில்லை. பேரரசரின் சொல் இன்னும் குடிகளிடையே செல்லும்” என்றார். கடும் சினத்துடன் உறுமியபடி அவரை நோக்கி வந்த பீமன் “குடிகளா? எவர்? பன்னிருபடைக்களத்தில் விழிவிரித்திருந்தார்களே, அந்தக் கீழ்விலங்குகளா? அவர்களா இங்கே அறம்நாட்டப்போகிறார்கள்?” என்றான். சௌனகர் “ஆம், அவர்கள் அங்கே இழிவை காட்டினார்கள். அதனாலேயே அவர்கள் இத்தருணத்தில் எதிர்நிலை கொள்ளக்கூடும். அத்தகைய பல நிகர்வைப்புகள் வழியாகவே மானுடர் முன்செல்கிறார்கள்” என்றார்.

“நாம் ஏன் இதைப்பற்றி இப்போது பேசவேண்டும்?” என்று சகதேவன் தணிந்த குரலில் சொன்னான். “அவர்கள் இறுதி முடிவெடுக்கட்டும். நாம் காத்திருப்போம்.” தருமன் திரும்பி நோக்கி “ஆம், இளையோன் சொல்வதே முறையானது. நாம் செய்யக்கூடுவது காத்திருப்பது மட்டுமே” என்றார். பின்பு கைகளை பீடத்தின் கைப்பிடிமேல் வைத்து மெல்ல உடலைஉந்தி வயோதிகர்கள் போல எழுந்தபடி “நான் சற்று இளைப்பாறுகிறேன்” என்றார். அவர் மீண்டும் முதியமுகம் கொண்டுவிட்டதை சௌனகர் கண்டார்.

சுரேசர் வாயிலில் வந்து நின்று தலைவணங்கினார். தருமன் திரும்பி நோக்கி “என்ன?” என்றார். சௌனகர் அவரை அருகே வரும்படி தலையசைத்தார். சுரேசர் தருமனை வணங்கிவிட்டு சௌனகரிடம் “அஸ்தினபுரியின் அமைச்சர் தங்களை அமைச்சுநிலைக்குச் செல்லும்படி கோரியிருக்கிறார்” என்றார். நெஞ்சு அதிர “ஏன்?” என்றார் சௌனகர். “அரசர் தன் தந்தையை ஏற்கமுடியாதென்று அறிவித்திருக்கிறார். வேண்டுமென்றால் போருக்கும் சித்தமாக இருப்பதாகவும் தன்னுடன் காந்தாரத்தின் படைகள் இருப்பதாகவும் சொல்லிவிட்டார்.”

பீமன் உரக்க நகைத்தபடி கூடம் நடுவே வந்தான். “ஆம், எண்ணினேன். இதுவே நிகழும். வேறொன்றும் நிகழ வழியில்லை… அவர்கள் ஓர் அடிகூட இனிமேல் பின்னால் வைக்கமுடியாது. அமைச்சரே, பெரிய இழிசெயல் ஒன்றை செய்தவர்கள் பின்னகர்ந்தால் இறந்தாகவேண்டும். ஆகவே அவர்கள் அவ்விழிவை முழுமையாக பற்றிக்கொள்வார்கள். மேலும் மேலும் இழிவை சூடிக்கொள்வார்கள்.”

சௌனகர் சினத்துடன் ஏறிட்டு நோக்கி “இவ்வாறு நிகழவேண்டுமென்று நீங்கள் விழைந்ததுபோல் தோன்றுகிறதே!” என்றார். “ஆம், அதிலென்ன ஐயம்? நான் விழைந்தது அதைத்தான். இவர்கள் கொடையெனத் தரும் அரசை ஏற்று அங்கே முடிசூடி அமர இவரால் இயலலாம். சிறுமைசெய்யப்பட்ட என் குலக்கொடியை மீண்டும் முகம்நோக்க என்னால் இயலாது.” அவன் இருகைகளையும் ஓங்கி அறைந்தான். “என் வஞ்சினம் அங்கேயே இருக்கிறது. என் மூதாதையர் வாழும் மூச்சுலகில். அந்த இழிமகன்கள் அனைவரையும் களத்தில் நெஞ்சுபிளந்து குருதிகொள்ளாது அமையப்போவதில்லை.”

5

“இளையவரே, அங்கே புஷ்பகோஷ்டத்தில் வாழும் முதியவரை அவரது மைந்தர் மறந்ததைப்போலவே நீங்களும் மறந்துவிட்டீர்கள். அவரோ ஒரு தருணத்திலும் அவர்களில் இருந்து உங்களை பிரித்துநோக்கியவரல்ல” என்றார் சௌனகர். “அவைநடுவே அவரது நூறுமைந்தரை நெஞ்சுபிளந்து குருதியுண்பதாக நீங்கள் அறைகூவினீர்கள். அதற்குப்பின்னரும் உங்களை தன் மைந்தர் என்றே அவர் சொன்னார். அவர் மைந்தர் வென்ற அனைத்தையும் திருப்பியளித்தார். உங்களை நெஞ்சோடணைத்து பொறுத்தருளக் கோருவதாக சொன்னார். உங்கள் அரசியின் கால்களை சென்னிசூடுவதாக சொல்லி அவர் கண்ணீர்விட்டபோது நான் விழிநனைந்தேன்.”

“ஆம், அவர் அத்தகையவர். எந்தையின் மண்வடிவம் அவரே” என்றான் பீமன். “ஆனால் இது ஊழ். அமைச்சரே, நீங்களே அறிவீர்கள். சொல்லப்பட்டவை பிறந்து நின்றிருக்கும் தெய்வங்கள். அவை எடுத்த பிறவிநோக்கத்தை அடையாது அமைவதில்லை. நான் அவைநடுவே சொன்ன சொற்களால் ஆனது இனி என் மூச்சு.” சௌனகர் ஏதோ சொல்லவர கையமர்த்தி “நான் பொறுத்தமையப்போவதில்லை. நடந்தவற்றின்மேல் மானுடர் எவருக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. என் குலமகள் அவைநடுவே நின்றாள். அதன்பொருட்டு அவர்கள் என் கையால் இறந்தாகவேண்டும்…” என்றான்.

சௌனகர் பெருமூச்சுடன் அமைதியானார். நகுலன் பேச்சை மாற்றும்பொருட்டு “காந்தாரர்களை சகுனி வழிநடத்துகிறாரா?” என்றான். “இன்று நகரில் காந்தாரர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களின் படைப்பிரிவுகள் அனைத்தும் மேற்குக்கோட்டைமுகப்பில் ஒன்றுகூடியிருக்கின்றன. தெற்குக் கோட்டைவாயிலும் அப்பால் புராணகங்கையின் குடியிருப்புகளும் முன்னரே அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அஸ்தினபுரியின் பாதிப்பங்கு காந்தாரர்களிடம் இருக்கிறது” என்றார் சௌனகர். “ஜராசந்தனுக்காகவும் சிசுபாலனுக்காகவும் சினம்கொண்டுள்ள ஷத்ரியர்களும் அரசருக்கு துணைநிற்கிறார்கள்.”

தன் உணர்ச்சிகளிலிருந்து மெல்ல இறங்கித்தணிந்த பீமன் பெருமூச்சுடன் கைகளை உரசிக்கொண்டான். சௌனகரை நோக்காமல் “துரியோதனனின் படைகளும் கர்ணனின் படைகளும் இணைந்தால் மட்டும் போதும். விழியிழந்தவருக்கு ஆதரவு என்றே ஏதுமிருக்காது. சில முதியகுலத்தலைவர்கள் ஏதாவது சொல்லக்கூடும்…” என்றான். நகுலன் “படைகளை கர்ணன் நடத்துவான் என்றால் அவர்கள் வெல்லற்கரியவர்களே” என்றான்.

“பீஷ்மர் இருக்கிறார்” என்றார் சௌனகர். “அவர் ஒருநிலையிலும் பேரரசரை விட்டு விலகமாட்டார். குடிநெறிகள் மீறப்படுவதை இறுதிவரை ஏற்கவும் மாட்டார்.” பீமன் “ஆம், ஆனால் அவர் எந்தப் படைகளை நடத்தப்போகிறார்?” என்றான். சௌனகர் “இல்லை இளவரசே, பீஷ்மர் எந்த நிலை எடுக்கப்போகிறார் என்பதை ஒட்டி அனைத்துக் கணக்குகளும் மாறிவிடும்” என்றார். “பார்ப்போம். சென்று அங்கே என்ன நிகழ்கிறது என்று எங்களுக்கு சொல்லுங்கள்” என்றான் பீமன்.

சௌனகர் தருமனிடம் தலையசைவால் விடைபெற்று திரும்பினார். தருமன் மெல்லிய தளர்ந்த குரலில் “அமைச்சரே” என்று அழைத்தார். “அங்கே என் தரப்பாக ஒன்றை சொல்லுங்கள். பிதாமகர் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் மறுசொல்லின்றி முழுமையாக கட்டுப்படுவேன். அதுவன்றி சொல்ல எனக்கு ஏதுமில்லை.” அவர் விழிகளை நோக்காமல் தலையசைத்துவிட்டு சௌனகர் வெளியே நடந்தார்.

தொடர்புடைய பதிவுகள்

சிங்கப்பூர் பயணம் -கடிதங்கள் 2

$
0
0
1[எல். என். சத்யமூர்த்தி]

அன்புள்ள ஜெயமோகன்,

இரண்டு மாதங்கள் மொழி,இலக்கிய, வாசிப்பு தொடர்பான பணியின் பொருட்டு சிங்கப்பூர் செல்கிறீர்கள். மகிழ்ச்சி.

மொழியையும், வாசிப்பையும் புறக்கணித்ததால் ஏற்பட்டிருக்கும் விபரீத விளைவுகளை இந்தியா எப்போது உணரப்போகிறதோ!

நான் ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றிய காலங்களில் வாசிப்புப்  பழக்கத்தை மாணவர்களிடையிலும், ஆசிரியர்களிடையிலும் உருவாக்கவும், வளர்க்கவும் நிறைய முயற்சி செய்திருக்கிறேன். அது தொடர்பான என் புரிதல்கள் சில:

  1. ஆசிரியர்களும், பெற்றோரும் வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தால், தாம் வாசித்தவை பற்றி குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டால் வாசிப்புப் பழக்கம் அவர்களிடம் உருவாகும், வளரும். ஆனால், பெரும்பாலான ஆசிரியர்களிடம் வாசிப்புப் பழக்கம் இல்லை. அதை உருவாக்கிக் கொள்ளும் ஆர்வமும் இல்லை. பெற்றோர்களும் அப்படித்தான். (ஒரு சில சந்தர்ப்பங்களில் அடுத்த கூட்டத்தில் படித்த புத்தகங்களைப் பற்றி கேட்பேன் என்று ஆசிரியர்களை மிரட்டக் கூட செய்திருக்கிறேன்)
  2. வாசிப்புப் பழக்கம் உள்ள ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களை வாசிக்கத்தூண்டுவார்கள். குழந்தைகளுக்கு வாசிப்புத் தூண்டுதலே அருகிப் போனது.
  3. ஒவ்வொரு ஆண்டும் புதிய நூல்களை வாங்கி பள்ளி நூலகத்தில் சேர்ப்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் நிதி உண்டு. வருடந்தோறும் புதிய புத்தகங்கள் வாங்கப்படுகின்றன. அவை எத்தகைய புத்தகங்கள், எவ்வாறு வாங்கப்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். குப்பைப் புத்தகங்களும் வணிக நூல்களுமே வாங்கப்படுகின்றன. வாங்கிய நூல்களே திரும்பத் திரும்ப வாங்குவதும் உண்டு. அத்தகைய நூல்களைப் படிக்க நேரும் குழந்தைகள் ஏற்கனவே உள்ள சிறிதளவு வாசிப்பு ருசியையும் இழந்து விடுவார்கள்.
  4. அனைவருக்கும் கல்வி,அனைவருக்கும் இடை நிலைக் கல்வி இயக்கங்களின் மூலம் புத்தகங்களும், இதழ்களும் வாங்க நிதி அளிக்கப்படுகிறது. ஆனால் அவை பல பள்ளிகளில் முறையாகப் பயன்படுத்தப் படுவதில்லை.
  5. சில பள்ளிகளில் ஆங்கில நாளிதழின் நான்காம் பக்கத்தில் ஒரு நூறு ரூபாய் நோட்டை காலையில் வைத்து விட்டு மாலையில் திறந்து பார்த்தால் பணம் பத்திரமாக இருக்கும். ஆங்கில நாளிதழ்கள் திறக்கப்படுவதே இல்லை. கிளார்க்குகளாகப் பயன்படுத்தப் படும் தலைமை ஆசிரியர்களுக்கு அதைப் பார்ப்பதற்கு நேரமும் இல்லை.

சில பக்கங்கள் கூட வாசிக்கவோ எழுதவோ முடியாத சில தலைமுறைகளை உருவாக்கி நாசம் செய்திருக்கிறோம்.

சிங்கப்பூர் செயல்பாடுகள் பயனுற அமைய வாழ்த்துக்கள்!

அன்புடன்,

ஜெ.சாந்தமூர்த்தி,

மன்னார்குடி

***

அன்புள்ள ஜெ.மோ. அண்ணா,

உங்கள் சிங்கப்பூர் பயணம் இனிதே நிகழவும், புதிய பணி சிறக்கவும் வாழ்த்துகள்.

தமிழகத்தில் நீங்கள் செய்ய வேண்டிய கல்விப்பணியை சிங்கப்பூர் அரசாவது புரிந்துகொண்டதே என்பதில் மகிழ்ச்சி. அந்த அனுபவம் நமது நாட்டுக்கு நீங்கள்  திரும்புகையில் நமது மாணவர்களுக்கும் உதவக்கூடும்.

நன்றி.

என,

வ.மு.முரளி

***

சார் வணக்கம்

சிங்கப்பூரில் இரு மாதம். சிங்கப்பூர் அரசு பணி. கேட்பதற்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும்  உள்ளது. இங்கே சென்னையில் நாங்கள் பெரிய நூலகம் கட்டி அதை யாரும் பயன்படுத்தாதவாறு பார்த்துக்கொள்கிறோம். :)

அன்புடன்

க.ரகுநாதன்

***

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் சிங்கப்பூர் பணி சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வகுத்து கொடுக்க கூடிய பாதைகளை பொறுத்தமட்டில், உங்களின் சிந்தனைகளும் எழுத்துகளும் பெரிய திறப்பாக இருக்கிறது. என்னளவில் இங்கிருக்ககூடிய பல தாக்கங்களையும் தாண்டி, குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஒரு சூழ்நிலையை பற்றிய முடிவுகளை நிதானமாகவும் நமபிக்கையுடனும் எடுக்க உங்கள் எழுத்துக்கள் உதவி இருக்கின்றன. அந்த வகையில் உங்களின் சிங்கப்பூர் பணி பற்றிய குறிப்புகளை உற்சாகத்துடன் எதிர்பார்க்கிறேன்.

நான் சமீபத்தில் தாகூர் எழுதிய கோராவின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்து முடித்தேன். அதில் வரும் பாத்திரங்கள் இளைஞர்களாக இருந்த போதிலும் மிக ஆழமான சம்பாஷணைகளில் ஈடுபடுகிறார்கள். விவாதங்களின் போது அவர்களின் கருத்துக்கள் தீர்க்கமாகவும் தெளிவாகவும் இருந்தது. இதில் ஆச்சர்யம் சுசரிதாவின் வயது பதினைந்து இருக்கலாம் என்று தெரிகிறது. கோராவும் பினாயும் இருபத்தியிரண்டு வயதானவர்கள். ஒரு புனைவே ஆனாலும் அந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட விரிந்த சிந்தனையும் கருத்தாக்கமும் பெரும்பான்மையானவர்களுக்கு சாத்தியமாக இருந்ததா? அல்லது இவர்கள் எல்லாம் விதிவிலக்குதானா? சரித்திரத்தில் வெகு இளைய வயதில் சாதித்த சிந்தனாவாதிகளெல்லாம் அபூர்வமான அறிவுஜீவிகள் மட்டும்தானா அல்லது  சிறந்த சிந்தனைசக்தியை பயிற்றுவிக்கும் முறை காலப்போக்கில் தேய்ந்து விட்டதா ?

நேரமிருக்கும்போது உங்கள் கருத்துக்களை எழுதவும்.

அன்புடன்

கோகுல்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இறந்தவனின் இரவு

$
0
0

1

 

வெளிநாடு போவதற்காக செல்பேசியை எடுத்து எண்களை பார்த்துக்கொண்டிருந்தேன். குமரகுருபரனின் எண் இருந்தது. அழிக்கவில்லை. ஜெயகாந்தன் எண் இதில் இருக்கிறது. பாலு மகேந்திராவின் எண் இருக்கிறது. ஒரு எண்ணாக அவர்கள் எப்போதும் என் மனதில் இருந்ததில்லை. ஆனால் இறந்தபின்னர் எண்ணில் அவர்கள் எஞ்சியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

 

குமரகுருபரனை அவர் இருந்தபோது நான் இத்தனை விரும்பியதில்லையா? அவர் இருந்தபோது இன்னும்கொஞ்சம் தொலைபேசியில் அழைத்துப்பேசியிருக்கலாமோ? நான் பேசும்போதே நாணிக்குழற தொடங்கியிருக்கும் அவரது குரலை நினைவுகூர்கிறேன். இன்னும் கொஞ்சம் அணுகியிருக்கலாமோ? இருப்பவர்களிடமிருந்தெல்லாம் இத்தனை அகல்வதனால்தான் நான் இறந்தவர்களிடம் அத்தனை அணுக்கமாக ஆகிறேனா என்ன?

 

இறந்தவர்களை அத்தனைபேரும் மெல்லமெல்ல மறந்துவிடுவதைக் காண்கிறேன். இன்று ஒவ்வொருநாளும், ஒருநாள்கூட விடாமல், லோகித தாஸை நான் நினைப்பதுபோல அவர் மைந்தர்களோ மனைவியோ நினைக்கிறார்களா? இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் சுந்தர ராமசாமி எனக்கு ஒரு வாழும் ஆளுமையாகவே எஞ்சுகிறார். ஒருமணிநேரம் உரையாடலென்றால் அவர் வராமலிருக்கமாட்டர் என்கிறார்கள் நண்பர்கள்

 

நான் இறந்தவர்களின் உலகில்தான் கூடுதலாக வாழ்கிறேனா என்ன? கடந்தகாலங்கள். செறிவான உணர்வுகள் கூடியவை. நிகழ்காலத்தின் அலைவுகளும் மறைவுகளும் அற்றவை. குமரகுருபரன் இப்போதிருக்கும் உலகிலிருந்துகொண்டு என்னை மேலும் அணுக்கமாக அறிவார் என்று தோன்றுகிறது. இந்த நள்ளிரவில். இந்தத்தனிமையில் குமரகுருபரனுக்காக ஒரு நீண்ட மூச்சு.

 

ஆனால் நான் அழுததே இல்லை. தற்கொலைசெய்துகொண்ட அன்னைக்காக, தந்தைக்காகக்கூட. சுந்தர ராமசாமியின் சடலத்தின் முன் கதறிவிட்டு மீண்டுவந்த யுவன் சொன்னான்,  ‘போய்ப்பார்த்துவிட்டுவா. அழுதிருவே. அவ்ளவுதாண்டா. ஒருதடவ அழுறதுக்கப்பால வாழ்க்கையிலே மரணத்துக்கு பெரிய மதிப்பெல்லாம் கெடையாது’ நான் சென்றுபார்க்கவில்லை. அழவும் இல்லை

 

குமரகுருபரனுக்காகவும் ஒருதுளிக் கண்ணீர்விடவில்லை. ஒரு மெல்லிய நடுக்கமாக மட்டும் அவர் இறப்புச்செய்தியை அறிந்தேன். சாத்தியமான அனைத்துச் சொற்களையும் அள்ளி அவர் மேல் போட்டுமூடிக்கொண்டேன். இவ்விரவில் இந்தத்தனிமையில் மிக அந்தரங்கமாக குமரகுருபரனைத் தொடுகிறேன். இரவுகளில் வாழ்பவர்களால் இறப்புகளைக் கடந்துசெல்லமுடியாது..

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 6

$
0
0

[ 7 ]

சௌனகர் அமைச்சு மாளிகையை அடைந்தபோது அங்கே வாயிலிலேயே அவருக்காக கனகர் காத்து நின்றிருந்தார். “அமைச்சர் சினம் கொண்டிருக்கிறார்” என்றார். சௌனகர் உள்ளே செல்ல அவர் உடன் வந்தபடி “அவர் இதை இத்தனை கடுமையாக எடுத்துக்கொள்வார் என்றே நான் நினைத்திருக்கவில்லை… பேரரசருக்கு ஆதரவான படைகளைத் திரட்டி அரசரை தோற்கடித்து சிறையிடுவதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்” என்றார். சௌனகர் திகைத்து திரும்பி நோக்க “ஆம், அவருடைய இயல்பான உளநிகர் முழுமையாக அழிந்துவிட்டது” என்றார் கனகர்.

அமைச்சு அறைக்குள் விதுரர் உரக்க கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். அவர் அருகே நின்றிருந்த சிற்றமைச்சர்கள் அவருக்கு எதிர்ச்சொல் எடுக்காமல் நோக்கி நின்றனர். சௌனகரைக் கண்டதும் திரும்பி “வருக!” என்றார் விதுரர். “இந்திரப்பிரஸ்தத்திற்கு ஆதரவாக யாதவர்களின் படைகள் வருமல்லவா? பாஞ்சாலப்படைகளும் உடனிருக்கும்… நமக்கு இன்று அத்தனை படைப்பிரிவுகளின் ஆதரவும் தேவை” என்றார். சௌனகர் அமைதியாக அமர்ந்துகொண்டு “என்ன நிகழ்கிறது, அமைச்சரே?” என்றார்.

“என்ன நிகழ்கிறது? பேரரசரின் ஆணையை கால்கீழ் போட்டு மிதித்திருக்கிறான் அந்த இழிபிறவி. இந்த மண்ணில் அவரது சொல்லுக்கு அப்பால் பிறசொல் என ஒன்றில்லை… அவ்வாறு ஒரு மீறலை எந்நிலையிலும் நான் ஒப்ப மாட்டேன். அதன்பின் நான் இங்கு உயிர்வாழ்வதிலேயே பொருளில்லை” என்றார் விதுரர். “அவர்களிடம் படைகள் உள்ளன என்கிறார்கள். நகரத்தை காந்தாரப்படைகளைக்கொண்டு கைப்பற்றிவிடலாமென்று எண்ணுகிறார்கள். சிந்துநாட்டின் படைகளும் சேதிநாட்டுப்படைகளும் துணைநிற்கின்றன. பிற ஷத்ரியர்களையும் திரட்டிவிடலாமென்று சகுனி எண்ணுகிறார்…”

“இதெல்லாம் நம் கற்பனையாக இருக்கலாம் அல்லவா? அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையை எடுத்தார்கள்? தந்தை சொல்லை மைந்தர் ஏற்கமுடியாது என்று சொல்லியிருக்கலாம். அது ஒருகட்டத்தில் எந்த மைந்தரும் சொல்வதே. அதை நெருங்காமலிருப்பதே தந்தையர் அறிந்திருக்கவேண்டியது” என்றார் சௌனகர். “ஏன் அப்படி சொல்கிறான்? எந்த உறுதியில்? அதைத்தான் நான் பார்க்கிறேன். அவர்களது படைகளின் வல்லமை என்ன? அமைச்சரே, அரசரின் சொல் என்பது ஒருபோதும் வீணாகலாகாது. அது வாளால் காக்கப்படவேண்டும். குருதியால் நிலைநாட்டப்படவேண்டும். ஒருமுறை சொல் வீணாகிவிட்டதென்றால் அவ்வரசன் எப்போதைக்குமாக இறந்துவிட்டான் என்றே பொருள்…”

விதுரர் மூச்சிரைத்தார். “ஆகவே மறுசொல்லே இல்லை. எந்தச் சொல்லாடலுக்கும் இங்கே இடமில்லை. பேரரசரின் சொல் இங்கே நின்றிருக்கும். அதற்கு எதிராக எழுபவர்கள் வாளால் வெல்லப்பட்டாகவேண்டும்.” சௌனகர் “பேரரசர் அதை விரும்புகிறாரா என்று அறியவிழைகிறேன்” என்றார். “விழைகிறார். இன்று அவரிடம் பேசிவிட்டுத்தான் வருகிறேன். சற்றுமுன்னர் அவரை சந்தித்தேன். பேரரசரின் ஆணை எழுந்த மறுநாழிகையிலேயே அரசன் அதை புறக்கணிப்பதாக ஏடுவழியாக அறிவித்துவிட்டான். அதைக் கண்டதும் அவர் எழுந்து வேல்பட்ட வேழம்போல அமறினார். இசையவையின் தூண்களை அடித்து உடைத்தார். அருகிலிருந்தவர்கள் ஓடி உயிர்தப்பினர். அவரை நான் சென்று அழைத்து படுக்கவைத்துவிட்டு வருகிறேன். அவர் தன் கைகளால் மைந்தரை கொல்லவிழைகிறார். ஆம், அதுதான் அவர் இப்போது கோருவது.”

உடலை மெல்ல அசைத்து அமர்ந்து கனகரை நோக்கியபின் சௌனகர் “அவ்வாறென்றால் படைக்கணக்கு எடுக்கவேண்டியதுதான்” என்றார். “ஆம், அதைத்தான் நானும் சொல்கிறேன். நம் தரப்பில் படைகொண்டு எழுபவர்கள் எவர்?” ஒர் ஓலையை எடுத்து அதில் எழுதப்பட்டிருப்பனவற்றை அவர் வாசிக்கத் தொடங்கினார். “பாஞ்சாலர், திரிகர்த்தர்…” உடனே ஓலையை வீசிவிட்டு “இவர்களெல்லாம் யார்? ஒரே ஒருவர் மட்டுமே இங்கே பேசப்படவேண்டியவர். இளைய யாதவர் படைகொண்டு வருவாரா? அதைமட்டும் கேட்டுச் சொல்லுங்கள்” என்றார். சௌனகர் “கேட்கவேண்டியதே இல்லை. அவர் இளைய பாண்டவரின் மறுபாதி. ஒருபகுதி மட்டும் போருக்கு வருவது இயல்வதல்ல” என்றார்.

“அப்படியென்றால் என்ன? போர் முடிந்தே விட்டது. அவ்விழிமகனை என் மூத்தவரின் காலடியில் வீழ்த்துகிறேன்… என்னவென்று நினைத்தான் வீணன்!” என்றார் விதுரர். “போர் நிகழவேண்டியதில்லை. போர் நிகழுமென்றால் என்று கணக்கிடத்தொடங்கினாலே அனைத்தும் நிகர்நிலைப்புள்ளி நோக்கி வரத்தொடங்கிவிடும்” என்று சௌனகர் சொன்னார். “அவர்களிடம் சொல்லுங்கள், ஒவ்வொரு கணமும் தவிர்க்கப்பட்டு முன்னகர்வதனாலேயே இந்தப் போர் மேலும்மேலும் பேருருவம் கொண்டு நம்மை சூழ்ந்திருக்கிறது என்று. குருதிப்பெருக்கு தேவையில்லை என்றால் பேரரசரின் ஆணை நிறைவேற்றப்பட்டாகவேண்டும்.”

“அதை நான் அவர்களுக்கு தெரிவித்துவிட்டேன்” என்றார் விதுரர். “எளிய போர் அல்ல இது என்று அவர்களுக்கே தெரியும். இன்று அவர்கள் நம்பியிருப்பது அங்கனை. அஸ்தினபுரியின் அரசனைவிட வஞ்சம் கொண்டவனாக அவன் ஆகியிருக்கிறான்.” சௌனகர் “அனைத்து வஞ்சங்களும் குருதியால் கழுவப்படட்டும்… அவர்கள் விழைவது அதுவென்றால் அவ்வாறே நிகழட்டும்” என்றார். “நாம் அறியவேண்டியது ஒன்றே” என கனகர் ஊடே புகுந்தார். விதுரர் எரிச்சலுடன் அவரை நோக்க கனகர் “பீஷ்மபிதாமகர் என்ன சொல்கிறார்?” என்றார்.

“அவர் என்ன சொன்னால் என்ன? பிதாமகராக அவர் தன் கடமையை ஆற்றட்டும். மைந்தர் தந்தையின் சொல்லை மீறலாகாதென்று அறிவிக்கட்டும்” என்று விதுரர் சொன்னார். “ஆம், பீஷ்மர் என்ன நிலைபாடு கொள்கிறார் என்பது இப்போது மிகமுதன்மையான வினா. அவர் பேரரசரை ஆதரித்தால் அனைத்தும் எளிதாகிவிடுகின்றன. இல்லையேல்…” என்றார் சௌனகர். “இல்லையேலும் ஒன்றுமில்லை. அவர் சென்று அவர்களுக்கு படைத்தலைமைகொள்ளட்டும். அவரை வெல்ல அர்ஜுனனால் இயலும். இளைய யாதவன் களமிறங்கினால் பீஷ்மர் வில்லேந்திவந்த சிறுவன் மட்டுமே… போர்நிகழட்டும்…” விதுரர் உளவிரைவு தாளாமல் எழுந்து நின்றார். “போர்தான் ஒரே வழி. நான் அதை தெளிவாக காண்கிறேன். போரில் மட்டுமே இவை முற்றுப்பெற முடியும்.”

“போர் நிகழ்வதென்றால் அது இறையாணை. நாம் செய்வதற்கொன்றுமில்லை” என்றார் சௌனகர். “ஆனால் அமைச்சர்களாக நமது பணி என்பது போரைத் தடுப்பது மட்டுமே…” விதுரர் “நாம் போரைத்தடுக்க முயலலாம். ஆனால் இவர்களின் உடலுக்குள் கொந்தளிக்கும் குருதி போர் போர் என்று எம்பிப் பாய்கிறது… அதை நாம் தடுக்க முடியாது” என்றார். சௌனகர் “நான் கிளம்பும்போது என்னிடம் இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் சொன்னது ஒன்றே. அவர் பீஷ்மபிதாமகரின் சொல்லுக்கு முழுமையாக கட்டுப்படுகிறார். மறு எண்ணமே இல்லாமல்” என்றார்.

விதுரர் மெல்ல தளர்ந்து கையிலிருந்த எழுத்தாணியை கீழே போட்டார். “மூடர்கள்… ஒவ்வொருவருக்கும் தேவை ஒரு தோற்றம் மட்டுமே” என்றார். தலையை அசைத்தபடி “இவ்வகையான எல்லைகடந்த சொற்கள் வழியாக ஒவ்வொருமுறையும் சிக்கிக்கொள்கிறான் அவன். அறிவிலி. அறம் என அவன் பேசுவதெல்லாம் தன் இயலாமையையே தகுதியாகக் காட்டுவது மட்டுமே” என்றார். சௌனகர் “ஆனால் அவர் அரசராகவும் குலமைந்தராகவும் அதைத்தான் சொல்லமுடியும். அவர் பிதாமகரின் சொற்களுக்கு கட்டுப்பட்டவர் மட்டுமே” என்றார்.

“மூடத்தனம்” என்று விதுரர் கூவினார். “மானுடர் அக்கணத்துக் காற்றுக்கேற்ப வடிவம் அமையும் அகல்சுடர் போன்றவர்கள். பிதாமகரென்றும் குடிமூத்தாரென்றும் அவர் தெரிவது ஒரு தருணம் மட்டுமே. மானுடர் உள்ளுறையும் காமகுரோதமோகங்களால் ஆயிரம் தோற்றங்களை அவர் எடுக்கக்கூடும். அவன் கண்ட அந்த ஒரு தோற்றத்திற்கு முன் குனிந்து தலைகொடுக்கையில் அவன் அவரது அத்தனை தோற்றங்களுக்கும் தன்னை அளிக்கிறான். தன்னை மட்டும் அல்ல, தன் குடியை, அரசை, குலவரிசைகளை. காலத்தின்பெருக்கில் உருமாறும் மானுடரை நம்பி என்றைக்குமான சொற்களைச் சொல்பவனைப்போல மூடன் பிறிதெவன்?”

விதுரர் மெல்ல தணிந்தார். “காலத்தில் நின்று முழங்கும் சொற்களைச் சொல்லவேண்டும் என்னும் பேரவாவால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் கவிஞர்களும் அரசர்களும். காலம் என்பது நாம் ஒருபோதும் முற்றறிய முடியாத பெரும்பெருக்கு… தாங்கள் சொன்ன சொற்களைப் பற்றிக்கொண்டு அதில் நின்று அழிகிறார்கள். அவர்களின் அழிவாலேயே அவர்களின் சொற்கள் நினைக்கப்படுகின்றன…” தலையை அசைத்து “பீஷ்மபிதாமகர் என்ன சொல்கிறார் என்று கேட்டுவாருங்கள்” என்றார்.

சௌனகர் “அதை நீங்களும் வந்து கேட்டுச்செல்வதே நன்று” என்றார். விதுரர் “நான் உங்களை வரச்சொன்னது நீங்கள் கௌரவர்களை சந்திக்கவேண்டும் என்பதற்காக. பாண்டவர்களின் முதன்மைப் பெருவல்லமை என்பது துவாரகை என்பதை அந்த மூடர்களுக்கு சொல்லுங்கள்” என்றார். “போர் என எழுந்துவிட்ட உள்ளங்களுக்கு எதிரி வல்லமை மிக்கவன் என்னும் செய்தி மேலும் ஊக்கத்தையே அளிக்கும்” என்று சௌனகர் சொன்னார். “அவர்களை எவ்வகையிலும் அச்சுறுத்த இயலாது.”

விதுரர் “அவ்வண்ணமெனில் நமக்கு என்னதான் வழி?” என்றார். “அங்கே பேரரசர் கொந்தளித்துக்கொண்டிருக்கிறார். அவரது சொல்பிழைக்கும் என்றால் அதன்பின் அவர் உயிர்வாழமாட்டார்.” சௌனகர் “அனைத்துக்கும் ஒரே இறுதி, பீஷ்மபிதாமகர் எடுக்கும் முடிவு மட்டுமே” என்றார். “அவர் பேரரசரை ஆதரிப்பார் என்றால் அதன்பின் எழுந்து தருக்கி நிற்க துரியோதனர் துணியமாட்டார் என நினைக்கிறேன். அவ்வண்ணம் துணிந்தால்கூட அது மிக எளிதில் கொய்து களையப்படும் சிறிய நோய் மட்டுமே.”

விதுரர் பெருமூச்சுடன் “ஆம்” என்றார். தளர்ந்து பீடத்தில் பின்னால்சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார். “வேறு ஒன்றையும் எண்ணவேண்டியதில்லை” என்றார் கனகர். “மாறாக எழுகிறது பிதாமகரின் ஆணை என்றால் அதற்கு பேரரசர் கட்டுப்படலாம். அது அவருக்கு இழிவும் அல்ல. அதற்கு இந்திரப்பிரஸ்தத்தின் அரசரும் கட்டுப்படுவார்.” சௌனகர் கசப்புடன் சிரித்து “அனைத்துப் பழிகளையும் ஒரு முதியதந்தை ஏற்பார் என்றால் நாம் விடுதலை கொள்ளலாம், அல்லவா?” என்றார். கனகர் “ஒருவகையில் ஆம். நாம் உலகுக்குக் காட்ட மீறமுடியாத சொல் ஒன்று தேவையாகிறது” என்றார்.

[ 8 ]

அந்தியில் பீஷ்மரின் படைக்கலச்சாலையின் முகப்பை அடைந்தபோது சௌனகரையும் விதுரரையும் அவரது முதன்மை மாணவன் விஸ்வசேனன் வரவேற்றான். “என்ன செய்கிறார்?” என்றார் விதுரர். “அம்புபயில்கிறார்” என்று சொல்லி அவன் புன்னகை செய்தான். விதுரர் “அவையிலிருந்து நேராக இங்குதான் வந்தார் என்று அறிந்தேன்” என்றார். “ஆம், இதுவரை உணவுண்ணவில்லை. நீர் அருந்தவில்லை. அரசரை தன்னை வந்து சந்திக்கும்படி சொல்லியனுப்பினார். அவர்கள் இதுவரை வரவில்லை” என்றான் விஸ்வசேனன். “இப்போது வருவார்கள்” என்று சௌனகர் சொன்னார். விஸ்வசேனன் அவரை திரும்பிப்பார்த்தான். ஏதோ சொல்லவந்தபின் “வருக!” என்றான்.

அவர்கள் உள்ளே சென்று சிறிய கூடத்தில் அமர்ந்தனர். மூங்கில்கழிகளின்மேல் மரப்பட்டைக்கூரை மிக உயரத்தில் நின்றிருந்தது. அங்கே சிறிய குருவிகள் கூடுகட்டியிருந்தன. அவை அம்புமுனைதீட்டும் ஓசையுடன் பேசியபடி சிறிய நார்களை கவ்விக்கொண்டுவந்தும் சிறகுசொடுக்கி பறந்து திரும்பிக்கொண்டும் இருந்தன. சாம்பல்நிறமான சிறகுகளும் வெண்ணிற அடிப்பக்கமும் கொண்டவை. சௌனகர் அவற்றை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார்.

அவற்றை வேறேதோ வடிவில் பார்த்திருக்கிறோம் என்ற எண்ணம் வந்தது. பின்னர் அவை உலர்ந்த பாக்குபோலிருப்பதை கண்டடைந்தார். முகம் மலர்ந்து அதை விதுரரிடம் சொல்ல வாயெடுத்தபின் அமைந்தார். அவை பாக்கு போலிருப்பதை அவை அறியுமா என்ற எண்ணம் எழுந்தது. அப்படியென்றால் மானுடர் எதைப்போலிருக்கிறார்கள்? இதென்ன எண்ணம்? ஆனால் மீண்டும் அவ்வெண்ணமே எழுந்தது. மானுட உடல் எதைப்போலிருக்கிறது?

பின்பக்கம் கதவு ஒலிக்க பீஷ்மர் வந்த கணத்தில் அவரது சித்தம் மின்னியது. மனிதர்கள் பச்சைமரங்களைப்போல என்று எண்ணினார். அவ்வெண்ணம் உடனே காட்சியாகியது. நீரில் மிதந்துசெல்லும் ஒரு மனித உடலை மரமென்றே எண்ணமுடியும். பீஷ்மர் அவர்களருகே வந்தபோது எழுந்து நின்று வணங்கி முகமனுரைத்தபோது அவர் உள்ளம் அச்சொற்றொடராக இருந்தது. அவர் பீடத்தில் நீண்டகால்களை கோணலாக வைத்துக்கொண்டு அமர்ந்தபோது அவர் மட்கிய மரக்கட்டை என எண்ணி உடனே அவ்வெண்ணத்தை அகற்றினார்.

பீஷ்மரின் விழிகளுக்குக் கீழே சேற்றுவளையங்கள் போல இரு மெல்லிய தசைத் தொய்வுகளிருந்தன. பெருமூச்சுடன் “என்ன?” என்றார். “அரசாணை ஒன்று வந்திருப்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள், பிதாமகரே” என்றார் விதுரர். “நான் எதையும் அறியவில்லை” என்று பீஷ்மர் கசப்புடன் சொன்னார். அவரது சித்தம் நிலைகொள்ளவில்லை. உடலை அசைத்து பார்வையை விலக்கி விஸ்வசேனனிடம் “என்ன அங்கே ஓசை?” என்றார். “மேலே குருவிகள்…” என்று அவன் சொன்னான். “ஆம்” என்றபின் அவர் திரும்பி விதுரரிடம் உரக்க “என்னை ஏன் கேட்கவருகிறீர்கள்? இந்த அரசுக்கும் எனக்கும் என்ன உறவு?” என்றார்.

விதுரர் “நீங்கள் பிதாமகர். அனைத்தையும் முடிவுசெய்யவேண்டியவர்” என்றார். “நான் இனி எதையும் முடிவுசெய்யப்போவதில்லை. நான் இறந்துவிட்டேன். மட்கி அழிந்துவிட்டேன். ஈமக்கடன்களை செய்யுங்கள்… சென்று சொல் உன் தமையனிடம்… என்னை தூக்கிப்புதைத்துவிட்டு ஈமக்கடன் செய்துவிட்டு மறந்துவிடச்சொல். காத்திருக்கும் இருண்டநரகத்தில் சென்று விழுகிறேன்.” அவர் கைகளை வீசி “எனக்கு எவரும் நீர்க்கடன் அளிக்கலாகாது. சொல்லிவிட்டேன். இக்குடியிலிருந்து ஒருபிடி சோறோ நீரோ எனக்கு அளிக்கப்படலாகாது” என்றார்.

வெளியே ஓசைகேட்டது. “யார்? யாரவர்கள்?” என்றார் பீஷ்மர். அவரது மெலிந்து நீண்ட உடல் பதறிக்கொண்டிருந்தது. வளைந்த மூக்குக்குக் கீழே வாய் திறந்து தாடை தொங்கியது. கழுத்தில் இரு வரிகளாக தளர்ந்து தொங்கிய தசைநார்களில் ஒன்று சுண்டப்பட்டு துடித்தது. விஸ்வசேனன் “அரசரும் அங்கரும்” என்றான். “அவன் வருகிறானா? காந்தாரன்?” என்றபடி பீஷ்மர் எழுந்தார். “இல்லை” என்றான் விஸ்வசேனன். “மூடா, நான் வரச்சொன்னது அவனை… அவனை வரச்சொன்னேன்” என்று விதுரர் கூவினார். விஸ்வசேனன் ஒன்றும் சொல்லாமல் தலைவணங்கி விலகினான். விதுரரும் சௌனகரும் எழுந்து நின்றனர். பீஷ்மர் “அவர்கள் எங்கே?” என்று வெளியே செல்ல காலெடுத்தார்.

“பிதாமகரே…” என்றார் விதுரர். நின்று “ஏன், நீ எனக்கு அறிவுரை சொல்லப்போகிறாயா?” என்று பீஷ்மர் கூவியபடி விதுரரை நோக்கி திரும்பினார். “அறிவுரை சொல்லி என்னை செம்மைசெய்யப்போகிறாயா? உன் அவைக்கு வந்து நான் பாடம் கேட்கட்டுமா?” விதுரர் ஒன்றும் சொல்லாமல் கைகட்டி நின்றார். பீஷ்மர் திரும்ப வந்து தன் பீடத்தில் அமர்ந்து கால்களை ஒன்றன்மேல் ஒன்றாகப்போட்டு கைகளை கைப்பிடிகள் மேல் வைத்துக்கொண்டார். தலையை அசைத்தபடி “இழிமக்கள்… தனயர் இழிந்தோர் என்றால் அது தந்தையரின் இழிவே…” என்றார்.

வீம்பு தெரியும்படி முகத்தைத் தூக்கியபடி துரியோதனன் அவைக்குள் நுழைந்தான். அவனுக்குப் பின்னால் கர்ணன் வந்தான். அவர்களின் காலடிகளைக் கண்டதும் அவர் நிமிர்ந்து நோக்கினார். தலை ஆடியது. உதடுகள் எதையோ மெல்வதுபோல அசைய கழுத்துத்தசைகள் இழுபட்டு ஆடின. ஒருகணம் திரும்பி சௌனகரை நோக்கியபோது அவரது வலக்கண் மிகவும் கீழிறங்கியிருப்பதாகத் தோன்றியது. துரியோதனன் “வணங்குகிறேன், பிதாமகரே” என்றான்.

அக்குரல் கேட்டதும் அவரது உடல் நீர்த்துளி விழுந்ததுபோல சிலிர்ப்புகொண்டது. அந்த முதிய உடலில் எதிர்பார்க்கவே முடியாத விரைவுடன் பாய்ந்தெழுந்து “இழிபிறவியே!” என்று கூவியபடி அவனை நோக்கிப்பாய்ந்து அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அவன் அதை எதிர்பாராததனால் சற்று பின்னடைந்தான். அவர் அவன் தலைமயிரைப்பற்றிச் சுழற்றி இழுத்து மேலும் அறைந்தார். சௌனகர் அறியாது முன்னகர விதுரர் விழிகளால் அதை தடுத்தார். தன் உடலில் எழுந்த எதிர்ப்பசைவை அடக்கி கர்ணனும் நோக்கி நின்றான்.

உறுமியபடி பீஷ்மர் துரியோதனனைத் தூக்கி காற்றில் சுழற்றி தரைமேல் ஓங்கி அறைந்தார். அந்த அதிர்வில் மேற்கூரையிலிருந்து தூசு உதிர்ந்தது. அவன் நெஞ்சை மிதித்து கைகளைப்பற்றி முறுக்கி காலால் மூட்டுப்பொருத்தில் ஓங்கி உதைத்தார். எலும்பு ஒடியும் ஓசையைக் கேட்டு சௌனகரின் நரம்புகள் கூசின. துரியோதனன் மெல்ல முனகினான். அவர் அவனை மீண்டும் தூக்கி அருகே நின்ற தூண்மேல் அறைந்தார். பிளவோசையுடன் அது விரிசலிட்டது. அவன் கீழே விழுந்து புரள அவன் மறுகையைப்பற்றி ஓங்கி மிதித்து வளைத்து எலும்பை ஒடித்தார். அந்த ஒலிக்காக தன் புலன்கள் அத்தனை கூர்ந்திருப்பதை உணர்ந்து சௌனகர் பற்களை கிட்டித்துக்கொண்டார்.

6

துரியோதனனை தூக்கிச் சுழற்றி மீண்டும் நிலத்தில் அறைந்தார் பீஷ்மர். அவன் தலையில் அவரது அடிவிழுந்த ஓசையை தன் முழு உடலாலும் சௌனகர் கேட்டார். சிம்மம்போல உறுமியபடி அவர் அவன் நெஞ்சை மிதித்தார். அவன் அவரது கைகளில் துணிப்பாவைபோல் துவண்டுவிட்டிருந்தான். அவனைச் சுழற்றி இடக்கால் பாதத்தை கையால் பற்றித் திருப்பி தொடைப்பொருத்தில் ஓங்கி மிதித்தார். மரம் முறிவதுபோல எலும்பு நொறுங்கியது. துரியோதனன் விலங்குபோல அலறியபடி துடித்தான். அவர் அவன் கழுத்தில் தன் காலை வைத்தபோது விஸ்வசேனன் வந்து அவர் கைகளைப் பற்றினான். தணிந்த குரலில் “போதும்” என்றான்.

“விலகு! விலகு…” என்று பீஷ்மர் மூச்சிரைத்தார். “போதும்” என விஸ்வசேனன் குரலை உயர்த்திச் சொன்னான். அவர் அவன் விழிகளை ஏறிட்டுப்பார்த்தார். நரைத்த புருவத்தின் வெள்ளைமயிர் ஒன்று அவர் விழிகள் மேல் விழுந்திருந்தது. நெற்றிவியர்வை மூக்கில் வழிந்து சொட்டிநின்றது. அவர் கைகள் தளர்ந்தன. தள்ளாடும் கால்களுடன் வந்து அவர் பீடத்தில் விழுந்தார். விஸ்வசேனன் கர்ணனிடம் “அரசரை கொண்டுசெல்லுங்கள்” என்றான். கர்ணன் அதுவரை ஒரு தசைகூட அசையாமல் நின்றிருந்தான். மெல்ல தலையாட்டிவிட்டு துரியோதனனைத் தூக்குவதற்காக குனிந்தான்.

“சூதன்மகனே, இவையனைத்திற்கும் நீயே முதல்” என்றார் பீஷ்மர். “உன்னை நான் கொல்லலாகாது. புழுக்களை சிம்மம் கொல்லும் வழக்கமில்லை.” கைகள் நடுங்க கர்ணன் நிமிர்ந்தான். அவன் ஏதோ சொல்லப்போகிறான் என்ற விழியொளி ஏற்பட்டது. ஆனால் அவன் மீண்டும் குனிந்தான். “நீ இதை எதன்பொருட்டு செய்கிறாய் என நான் அறிவேன். நீ ஷத்ரியர்களை அடுத்துக்கெடுக்கும் வஞ்சகன். உன் இழிந்த நாகவேதத்தின்பொருட்டு போர்மூட்டி அழிவை கொண்டுவருகிறாய்” என்று சொன்னபடி பீஷ்மர் எழுந்தார்.

“சொல் இந்த இழிமகனிடம்! இவனை நான் கொல்லாமல் விடுவது என் நேர்க்குருதியில் பிறந்தவனல்ல இவன் என்பதனால் மட்டுமே. இவன் ஆற்றிய இழிவுக்காக ஒருநாள் இவன் பாண்டுவின் மைந்தன் கையால் நெஞ்சுபிளக்கப்படுவான் என்று சொல்… யயாதியின் ஹஸ்தியின் குருவின் விசித்திரவீரியனின் பெயரை இவன் இனி ஒருமுறை சொன்னான் என்றால் இவன் வாயை கிழிப்பேன்… இழிமகன்… கீழ்மையில் திளைக்கும் புழு…” கர்ணன் துரியோதனனை முதுகுக்குப்பின் கையைவைத்து கையையோ காலையோ இழுக்காமல் தூக்கி தன் தோளிலிட்டுக் கொண்டான்.

“நீ இதன்பொருட்டு சாவாய்… சூதன்மகனே, நீ கற்றவையும் கொடுத்துப்பெற்றவையும் உன்னுடன் இருக்கப்போவதில்லை. இவ்விழிவின் பெயரால் உன் தெய்வங்கள் அனைத்தும் உன்னை கைவிடும்” என்று சொன்னபோது பீஷ்மரின் குரல் உடைந்தது. கைகளால் தன் தலையை தட்டிக்கொண்டார். புதிதாகப் பார்ப்பவர்போல சௌனகரைப் பார்த்து புருவத்தை சுழித்தார். கர்ணன் வெளியே செல்லும் காலடியோசையை சௌனகர் கேட்டுக்கொண்டிருந்தார். எடைகொண்ட காலடிகள். அப்போதுதான் அவர்கள் வரும்போது ஒலித்த காலடிகள் நினைவில் எழுந்தன. அவை இணையான எடைகொண்டவை.

பீஷ்மர் எழுந்துகொண்டு “நான் நீராடவிரும்புகிறேன்…” என்றார். விதுரரும் எழுந்துகொண்டார். “நீ எதற்காக என்னை பார்க்கவந்தாய்?” என்றார் பீஷ்மர். “தங்களைப்பார்க்க வரும்படி அழைத்தீர்கள்” என்றார் விதுரர். “நானா?” என்று பீஷ்மர் புருவம் சுழித்து கேட்டார். உடனே அவரது சித்தம் திசைமாறியது. திரும்பி விஸ்வசேனனிடம் “மூடா, என்ன செய்கிறாய் அங்கே? எங்கே காந்தாரன்? இப்போதே அவன் இங்கு வந்தாகவேண்டும்!” என்றார். மீண்டும் திரும்பி விதுரரிடம் “எதற்காக வந்தாய்?” என்றார்.

“பிதாமகரே, காந்தாரப்படைகள் அரசுக்கு எதிராக எழுந்துள்ளன” என்றார் விதுரர். புருவம் அசைய “எப்போது?” என்றார் பீஷ்மர். “நம் மக்கள் அவைமுடிந்ததும் சில காந்தாரப்படைவீரர்களை தாக்கியிருக்கிறார்கள். அது அவர்களை கிளர்ந்தெழச் செய்துள்ளது. உண்மையில் இந்நகரின் பாதிப்பங்கு இப்போது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது” என்று விதுரர் சொன்னார். “கொல்ல ஆணையிடு… அத்தனைபேரும் தலைகொய்யப்படட்டும்… உடனே” என்று பீஷ்மர் உரக்கக் கூவினார். நடுங்கும் குரலில் “இங்கே என்ன நடக்கிறது? இங்கே ஆள்பவன் யார்?” என்றார்.

“பேரரசர் திருதராஷ்டிரரின் ஆணைகள் மீறப்படுகின்றன. இந்நகரில் அரசாணைகள் மீறப்பட்ட வரலாறே இல்லை. அது நிகழத்தொடங்கிவிட்டது.” பீஷ்மர் “நிகழாது. நான் இருக்கும்வரை இங்கே ஹஸ்தியின் கோல் நின்றிருக்கும்” என்றார். “அந்நம்பிக்கையே எங்களை இங்கே வரச்செய்தது, பிதாமகரே” என்றார் விதுரர். “பேரரசரின் சொல்லுக்கு தங்கள் ஆணையே காப்பாக நின்றிருக்கவேண்டும்.” பீஷ்மர் உறுமியபடி மீண்டும் சௌனகரை நோக்கினார். அவரை அவர் அடையாளம் காணவில்லை என்று தோன்றியது. பின்பு “நான் நீராடச்செல்கிறேன்… மூடா” என்றார்.

விஸ்வசேனன் “ஆணை, ஆசிரியரே” என்றான். “நீராடவேண்டும்… நான் நாளையே கிளம்புகிறேன்” என்றார் பீஷ்மர். அதை அவர் எண்ணிச்சொல்லவில்லை. சொன்னபின் அதை பற்றிக்கொண்டது அவர் உள்ளம் எனத்தெரிந்தது. “ஆம், இனி நான் இங்கிருக்கலாகாது. இவ்விழிமகன்களின் மண்ணில் எனக்கு இடமில்லை. இந்நகர் எரியுறும். இதன் மாடங்கள் அழியும். மங்கையர் பழிச்சொல் விழுந்த இடம் உப்பு விழுந்த நிலம்போல…” விதுரர் “பிதாமகர் தன் வாயால் அதை சொல்லலாகாது” என்றார். அவரையே அடையாளம் தெரியாதவர் போல நரைத்த விழிகளால் சிலகணங்கள் நோக்கிவிட்டு “மூடா, எங்கே போனாய்?” என்றார் பீஷ்மர்.

விஸ்வசேனன் ஓடிவந்து அவர் கைகளை பற்றிக்கொண்டு “வருக!” என்று அழைத்துச்சென்றான். விதுரர் “முன்பு ஹரிசேனர் என்று ஒருவர் இருந்தார். என் இளவயதில் அவரை பீஷ்மபிதாமகர் என்றே பலமுறை மயங்கியிருக்கிறேன். இவனும் அவரைப்போலவே பிதாமகரின் அசைவுகளையும் முகத்தையும் பெற்றுவருகிறான்” என்றார். “தந்தையர் மைந்தர் குருதியில் நீடிப்பார்கள். ஆசிரியர்கள் மாணவர் சொல்லில்” என்றார் சௌனகர். அந்தச் சிறிய சொல்லாடல் வழியாக அந்த உளநிலையை கடந்துவந்ததும் சௌனகர் “நாம் அனைத்தையும் பேசவில்லை, அமைச்சரே” என்றார்.

விதுரர் புன்னகைத்து “பேசவேண்டியதில்லை… அனைத்தும் முடிவாகிவிட்டன” என்றார். சௌனகர் ஏதோ சொல்லவந்தார். “சொல்லுங்கள்” என்றார் விதுரர். “தந்தையரின் உள்ளம் செல்லும் திசை ஒன்றே. இப்போது பீஷ்மர் துரியோதனரை அடித்தமைக்காக வருந்தத் தொடங்கியிருப்பார்.” விதுரர் கண்கள் மங்கலடைய அதைப்பற்றி எண்ணிப்பார்த்தபின் “ஆம், அது உண்மை. ஆனால் அவர் ஒருதருணத்திலும் குலமுறைமையை மீறமாட்டார். அது இன்று உறுதியாயிற்று” என்றார். சௌனகர் “இருக்கலாம்” என்றார். “அத்துடன் அவர் நாளை காலையிலேயே செல்லப்போவதாகச் சொன்னார். சென்றுவிட்டாலே போதும், நாம் வென்றவர்களாவோம்” என்றார் விதுரர்.

ஆனால் படைக்கலச்சாலையிலிருந்து கிளம்பி தேரிலேறிக்கொண்டபோது விதுரர் அந்நம்பிக்கையை இழந்துகொண்டிருப்பதை சௌனகர் உய்த்தறிந்துகொண்டார். கைகளால் மேலாடையை திருகியபடி அவர் சாலையோரக் காட்சிகளை நோக்கிக்கொண்டே வந்தார். அஸ்தினபுரி அமைதிக்கு மீண்டிருந்தது. பெருந்துயரம் ஒன்று நிகழ்ந்தபின்னர் உருவாகும் ஓசையின்மை தெருக்களில் பிசின்போல படிந்திருந்தது. பறவைகள் அதில் சிறகுகள் சிக்கிக்கொண்டவைபோல தளர்ந்து பறந்தன. இலைகள் மெல்ல அசைந்தன. நிழல்கள்கூட மிகமெல்ல அசைந்தன.

தொடர்புடைய பதிவுகள்

தாயுமாதல் -கடிதங்கள்

$
0
0

 

11

வணக்கம் .

“தாயுமாதல்” படிக்கத் தொடங்கிய போது, தங்களின் புறப்பாடு தொகுப்பின் தொடர்ச்சியாகத்தான் நினைத்தேன். வர்ணனைகள், உணவு குறித்த குறிப்புகள் என்று வரிகளில் லயித்துக்கொண்டிருந்தேன். “அவள் என்னுடைய மனைவி தான்” என்ற வரியில் நின்றுவிட்டேன். முழுதும் படித்து முடித்துவிட்டு வெளியே சென்று கடலை நோக்கிக் கொண்டிருந்தேன். மழைப்பாடல் சதஸ்ருங்கம் நினைவில் வந்தது. பாண்டு நினைவில் வந்தார்… அத்தந்தையினுள் உள்ள தாய்மை, ஏற்றுக்கொள்ளும் தன்மையை மூர்த்தியினுள்ளும். கொல்லிமலைச் சந்திப்பில் நீங்கள் கூறிய தந்தையால் மட்டுமே கொடுக்கவியலும் அம்சங்கள் மற்றும் அவரால் தாயின் இடத்தை நிரப்ப முடியுமென்றதையும் எண்ணிக்கொண்டேன்.

நன்றி.

மகேஷ்.

(காங்கோ)

***

அன்பு ஜெ,

தன்னுள் இருக்கும் தாய்மையை தேடித் தேடி தான் பல வகையான ஓட்டம் பெண்கள் பின்னாடி என தோன்றியது. தாய்மை தான் நிறைவும் பொருளும் தரும் இல்லையா? அந்த நிறைவு பத்தாமல் காதலாலும் பெண்கள் அண்மையாலும் எவ்வளவு முயற்சிகள்? அர்ஜுனன் சித்ராங்கதை, சுபத்ரா என தேடியபடி சென்றதும் அவன் சொல்லிக் கொண்டது போல அனைத்து பெண்களிடம் அவன் காணுவது இவனின் ஒன்றையே என்றானதும்,  பின் அவன் மலர்ந்து நின்றுவிடுவது அபிமன்யு வந்த பின் என்பதும் இந்த தாயுமாதல் தானோ?

அப்படி தீராத அந்த வெம்மையின் வெற்றிடம், தன் பிள்ளைகளுக்கு பிறகு அதுவும் மகள்களுக்கு பின், அந்த தாய்மையை கூடுதலாக நெருங்கி கொண்டது போல பட்டது. நீங்கள் சொன்ன “நான்கள்” அந்த கனிதல்  என்பது இந்த பருவங்களுக்கு பின் வருகிறதோ? அப்படி ஒரு தகப்பன் தாய்மையை விட முடியாமல் தான் action hero biju படத்தில் வரும் ஒரு காட்சி (ஒரு தந்தை ஓடி போன தான் மனைவியிடம் தன் பெண்ணை கொடுத்து விட போலீஸ் ஸ்டேஷனில் கேட்பது )

பயணத்திற்கு வாழ்த்துக்கள். அரிபரி இன்றி மெதுவாக, கோபமின்றி செல்லவும்…

http://www.happytrips.com/bali/travel-guide/10-must-see-hindu-temples-in-bali/gs53004655.cms

Regards

Lingaraj

***

அன்புள்ள ஜெ

தாயுமாதல் ஒரு சுருக்கமான அழகிய வாழ்க்கைச்சித்திரம். மிகத்தட்டையான மொழியில் வெறும் அனுபவப்பதிவு போலச் சொல்லப்பட்டிருப்பதனால் அது நமக்குள் விரியத்தொடங்குகிறது. அதன் உள்ளே உள்ள மடிப்புகள் விரிகின்றன.

இக்கதையின் சாயல் கொஞ்சம் கிறுக்கனாசாரி வரும் அம்மையப்பம் கதையில் உண்டு. நீங்கள் எழுதிய முக்கியமான கதைகளில் ஒன்று அது. படைப்புமனத்தின் பெரும்துயரமும் தனிமையும் எந்தவிதமான மேலதிக அழுத்தமும் இல்லாமல் போகிறபோக்கிலே பதிவான கதை அது

ஆர். பிரபாகர்

***

அன்புள்ள ஜெ,

மணமாகவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். [தாயுமாதல்] அப்படியென்றால் நீங்கள் புறப்பாடு காலகட்டத்தில் செய்த பயணமா அது?

மாரிமுத்து

அன்புள்ள மாரிமுத்து,

இல்லை. 1986ல் ஜவகர் யாத்ரி டிக்கெட் எடுத்துக்கொண்டு நான் செய்த இரு நீண்ட இந்தியப் பயணங்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். அதில் நிகழ்ந்தது இது

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பியுஷ் மனுஷும் எதிர்க்குரல்களும்

$
0
0

index

 

ஜெ

பியுஷ் மனுஷ் பற்றி அவதூறும் வசையும் ஐயங்களுமாக இணையத்தில் பேசிக்கொண்டிருப்பவர்களில் சிறுபான்மையினர் இந்துத்துவர்கள். முக்கியமான தரப்பு எம்.எல் இயக்கத்தவர். அவர்கள் அவரை பூர்ஷுவா என்றும் தரகர் என்றும் பெண்பித்தர் என்றும் பலவாறாக பிரச்சாரம் செய்கிறார்கள். பல்வேறு பெயர்களில் வந்து பின்னூட்டங்களில் அவதூறு செய்பவர்களின் புரஃபைலைச் சென்று பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் எம்.எல் கோஷ்டியாகவே இருக்கிறார்கள்

சரி, பீயுஷா பியுஷா எது சரி?

மகாதேவன்

***

அன்புள்ள மகாதேவன்

பீயூஷ்தான் சரி. தேன் என்று பொருள். ஆனால் அவர் பியுஷ் என்றுதான் எழுதுகிறார்

இந்துத்துவர்கள். அவர்களுடையது ஒரு மூர்க்கமான அரசியல். அவர்களின் தரப்பை ஏற்று அவர்கள் கக்கும் வெறுப்பை தானும் கக்கி, அவர்கள் இடும் கூச்சல்கள் அனைத்தையும் தாங்களும் இடாத அனைவருமே அவர்களுக்கு எதிரிகள்தான். வெறுக்கத்தக்கவர்கள், ஒழித்துக் கட்டப்படவேண்டியவர்கள். பீயூஷ் இடதுசாரி கருத்துக்களைக் கொண்டவராம், பிள்ளையார் சிலைகளை ஏரியில் கரைப்பதை எதிர்த்தவராம். ஆகவே அவர் சிறையில் கிடப்பது நாட்டுக்கு நல்லது, அவரது சாதனைகள் எல்லாம் நடிப்புகள் என்கிறார்கள்.  இவர்களை வழக்கமான தெருமுனை அரசியல் என்று சொல்லி முழுமையாகவே புறக்கணிக்க வேண்டியதுதான்.

‘தீவிர’ இடதுசாரிகள் நம் சூழலின் ஒரு சிறிய தரப்பு. ஆகவே ஓங்கி கூச்சலிடுபவர்கள். இவர்கள்தான் நம் சூழலின் முதன்மையான நாசகார சக்திகள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. கருத்துச்சுதந்திரம்,ஜனநாயகம் மனிதஉரிமை, சூழியல் அனைத்துக்கும் முதன்மை எதிரிகள் இவர்கள். எந்தமக்களுக்காகப் போராடுகிறோம் என்கிறார்களோ அவர்களைச் சுரண்டி உண்டு அவர்களை அழித்துக்கொண்டிருக்கும் வைரஸ்கள்.

ஆனால் இளைஞர்களின் நடுவே இவர்களுக்கு ஒரு வகை இலட்சியவாத முகம் உள்ளது. ஆயிரந்தான் இருந்தாலும் இவர்கள் ஒரு கொள்கைக்காகப் போராடுபவர்கள் என்னும் நம்பிக்கையும் இங்கே பரவலாக உள்ளது. இவர்களை தியாகிகள் என சிலர் சொல்லும்போதுதான் சிரிப்பு வரும். என்னதான் தியாகம் செய்தார்கள் என்று நான் கேட்பதுண்டு. அதற்கு எவருமே பதில்சொன்னதில்லை

சென்ற முப்பதாண்டுக்காலமாக இவர்கள் செயல்படும் விதத்தை மட்டும் கூர்ந்து பார்த்தால் உண்மையில் இவர்கள் யார் என்று தெரியும். நம் சூழலில் எழும் எந்த ஒரு மக்களியக்கத்தின் கோஷங்களையும் இவர்கள் தாங்கள் ஏற்றுக்கொள்வார்கள். மேலும் உரக்க,உச்சகட்ட வன்முறை தெறிக்க அந்த கோஷங்களை எழுப்புவார்கள். இறால்பண்ணை ஒழிப்பு, தனியார்கல்வி எதிர்ப்பு, மணல்கொள்ளை எதிர்ப்பு, டாஸ்மாக் மூடல் என அது அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும்.

அப்படி அந்தக்கோஷங்களை கையில் எடுத்ததும் இவர்களின் இலக்கு களத்தில்நின்று போராடுபவர்கள்தான். உண்மையான மக்கள் எதிரிகளை வெறுமே பொதுவாக ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவ சக்திகள் என வசைபாடுவதுடன் சரி. உண்மையில் அந்த கோஷங்களை எழுப்பி களத்தில் நின்று மெல்ல மெல்ல  மக்கள்சக்தியைத் திரட்டும் செயல்வீரர்களைத்தான் இவர்கள் அவதூறு செய்வார்கள். தனிப்பட்ட நேர்மையை இகழ்ந்து இழிவுசெய்வார்கள்.

அவர்களை கைக்கூலிகள், போலிகள் என அவதூறுசெய்வார்கள். தாங்களே உண்மையில் போராடுவதாகவும் அவர்கள் ஐந்தாம்படையினர் என்றும் அத்தனை ஊடகங்களிலும் கூச்சலிடுவார்கள். அப்படி எங்கே அவர்கள் களமிறங்கி செயலாற்றினார்கள் என்று பார்த்தால் அதிகபட்சம் ஒரு இருபதுபேர் கூடி ஒரு பொது ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அப்பால் எதுவுமே செய்திருக்கமாட்டார்கள்.

அந்த உண்மையான மக்களியக்கம் மெல்ல பலவீனப்பட்டு அழிந்தால் இவர்களும் தங்கள் பணிமுடிந்தது என விலகி அடுத்ததற்குச் சென்றுவிடுவார்கள். உதாரணமாக  இப்போது டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான காந்திய இயக்கங்களின் களப்பணியும் போராட்டமும் நிகழ்கிறது. சசிப்பெருமாள் ஆரம்பித்து வைத்தது அது. அவரது இறப்பு வழியாக மக்களிடம் செல்வாக்குபெற்றது. இன்று இவர்கள் அந்தக் கோஷத்தைக் கையில் எடுத்துக்கொண்டு டாஸ்மாக்கை உடைப்போம் என்று போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். வன்முறை தெறிக்க கூச்சலிடுகிறார்கள். கூச்சல் மட்டுமே இவர்கள் அறிந்தது. சசிப்பெருமாள் மதுமுதலாளிகளின் கைக்கூலி என்று இங்கே ஒரு எம்.எல்காரர் மேடையில் முழங்குவதைக் கேட்டேன்.

இவர்களின் வன்முறைமுழக்கம் காவல்துறைக்கு மிக வசதியானது. மக்கள் போராட்டத்தை வன்முறை என முத்திரைகுத்தி எளிதாக ஒடுக்கமுடியும். ஆனால் வன்முறைக்கும் வழக்குக்கும் ஆளாகிறவர்கள் எப்போதுமே உண்மையான களப்பணியாளர்கள் மட்டுமே, இந்த போலிப்புரட்சியாளர்கள் மிக எளிதாகத் தப்பிவிடுவார்கள். உண்மையில் எப்போதுமே காவல்துறையின் செல்லப்பிள்ளைகள் இவர்கள்.

இவர்களுக்கு அத்தனைபேருமே எதிரிகள்தான். காந்தியவாதிகளும்  சூழியலாளர்களும் மட்டும் அல்ல, இடதுசாரிக் கட்சிகள்கூட. இடதுசாரித் தீவிரவாதக் குழுக்களில் இவர்கள் தவிர அனைவருமே துரோகிகள்தான். இவர்கள் தமிழக அளவில் ஒரு நூறுபேர் இருப்பார்கள். அந்த நூறுபேர்தான் யோக்கியர்கள். அவர்களும் அமைப்பை விட்டு வெளியேறிவிட்டால் ஒழித்துக்கட்டபடவேண்டிய துரோகிகள்.

இவர்கள் எதையுமே செய்யமாட்டார்கள். ஒரு சாதாரண மக்கள் போராட்டத்தைக்கூட தொடர்ச்சியாக செய்யமாட்டார்கள். அதன்மேல் ஊடகக் கவனம் இருக்கும்வரைத்தான் இவர்களும் இருப்பார்கள். உண்மையில் இவர்கள் பல்வேறுவகையில் இவர்களைப் பயன்படுத்துபவர்களின் கைக்கூலிகள் மட்டுமே. பெரும்பாலான தொழிற்சாலைகளில் இடதுசாரித் தொழிற்சங்கம் வல்லமையுடன் இருந்தால் அவர்களை அவதூறுசெய்ய இவர்களை முதலாளிகள் ஊக்குவிப்பார்கள்.

இந்தக் கட்சிகள் நகரப்பேருந்துக்களைப்போல. ஐம்பதுபேர் ஏறுவார்கள். ஐம்பதுபேர் இறங்குவார்கள். எண்ணிக்கை அப்படியே இருக்கும். ஓட்டுநரும் நடத்துநரும்தான் அப்படியே இருப்பார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக அப்படியே இருக்கிறார்கள்.  இந்தச் சிறுகும்பல்தான் பல்வேறு பெயர்களில் பல்வேறு ஆட்கள் வழியாக அனைத்து ஆக்கபூர்வ செயல்பாடுகளையும் இழிவுசெய்கிறது.

இவ்வாறு இழிவுசெய்வது இவர்களுக்கு தவறும் அல்ல. உண்மை, அறம் என்பதெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. இவர்கள் தங்கள் வழிமுறையை ‘புரட்சிகர அறம்’ என்பார்கள். தங்கள் குழு ஆட்சியைக் கைப்பற்றி அரசமைத்தபின்னர் அந்த அறத்தை நடைமுறைப்படுத்துவார்களாம். அதுவரை ஆட்சிக்கு வருவதற்காக எதையும் பேசலாம், செய்யலாம், அதுவே புரட்சிகர அறம்.

இவர்கள் உருவாக்கும் நச்சுப்பிரச்சாரத்தை இருவகையினர் நம்பி ஏற்பார்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் தனிப்பட்ட அயோக்கியத்தனத்தை மறைக்க கருத்துவெளியில் புரட்சிவேடம் போடும் அற்பர்கள். பிறரை வசைபாடுவது மட்டுமே இவர்களின் புரட்சிச்செயல்பாடு. இன்னொரு வகையினர் சாகசத்தை விரும்பும், இலட்சியவாத வாழ்க்கையை கனவுகாணும், அவ்வளவாக வாசிப்போ உலக அனுபவமோ இல்லாத கிராமப்புற இளைஞர்கள். எப்போதும் பலியாவது இவர்கள்தான்

இவர்களின் பேருந்திலிருந்து இறங்கும்போது பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை அழிந்திருக்கும். சென்ற காலங்களில் அப்படி பலர் அந்த சுழியிலிருந்து மீண்டு வர நண்பர்களுடன் கூடி பொருளியலுதவி செய்திருக்கிறேன். அதெல்லாமே பெரும் துயரக்கதைகள்.

இலட்சியவாத வாழ்க்கை என்பது மாளாப்பொறுமையுடன், அனைத்து எதிர்ப்புகளையும் பின்னடைவுகளையும் எதிர்கொண்டு, நீண்டகால அளவில் சிலவற்றைச் செய்துகாட்டுவது. கூச்சலிடுவதும் எம்பிக்குதிப்பதும் அல்ல. அப்படிச் செய்துகாட்டியவர்கள் நம் வழிபாட்டுக்குரியவர்கள். அவர்களை நாம் நம் சந்ததியினருக்குச் சுட்டிக்காட்டினாலொழிய அந்த விழுமியங்கள் பெருக வாய்ப்பில்லை

ஆம், நாம் சில்லறை சுயநலக்காரர்கள். பலவீனர்கள். ஆனால் குறைந்தபட்சம் இலட்சியவாதம்மீது நம் கீழ்மையை அள்ளிக் கொண்டு சென்று பூசாமலிருக்கும் நல்லுணர்வாவது நம்மிடம் வேண்டும். இல்லையேல் நமக்கு மீட்பில்லை

ஜெ

 மருதையப்பாட்டா

மருதையன் சொன்னது

சாரைப்பாம்பின் பத்தி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 7

$
0
0

[ 9 ]

நள்ளிரவில்தான் சௌனகர் பாண்டவர்களின் மாளிகைக்கு திரும்பிவந்தார். விதுரரின் அமைச்சு மாளிகைக்குச் சென்று அவருடன் நெடுநேரம் அமர்ந்திருந்தார். அங்கே சுரேசரை வரச்சொல்லி நடந்தவற்றைப்பற்றி தருமன் கேட்டால் மட்டும் சொல்லும்படி சொல்லி அனுப்பினார். சுரேசர் திரும்பி வந்து பாண்டவர்கள் ஐவருமே துயின்றுவிட்டதாக சொன்னார். சௌனகர் நம்பமுடியாமல் சிலகணங்கள் நோக்கி நின்றார். “ஐவருமேவா?” என்றார்.

“ஆம், அமைச்சரே. முதலில் துயிலறைக்குச் சென்றவர் அரசர்தான். அவர் சென்றதுமே இளைய பாண்டவர் பீமன் உணவறைக்குச் சென்றார். பார்த்தன் வழக்கமான விற்பயிற்சிக்குச் சென்றார். சிறிய பாண்டவர் நகுலன் புரவிச்சாலைக்குச் சென்றார். சகதேவன் சற்றுநேரம் சுவடி ஆராய்ந்துகொண்டிருப்பதைக் கண்டேன். நீராடி உணவருந்திவிட்டு அரசர் உடனே படுத்துக்கொண்டார். அவர் உண்மையிலேயே துயில்கிறாரா என நான் ஏவலனிடம் கேட்டேன். அவர் படுத்ததுமே நீள்மூச்சுகள் விட்டார். சற்றுநேரத்திலேயே ஆழமான குறட்டையொலி எழத்தொடங்கிவிட்டது என்றான். திரும்பிவரும்போது பயிற்சிமுடித்து பார்த்தன் நீராடச்செல்வதை கண்டேன். அவர் முகம் அமைதியுடன் இருந்தது.”

“நான் சுவடியறையில் அமர்ந்து ஓலைகளை சீரமைத்தேன். பதினெட்டு செய்திகள் அனுப்பவேண்டியிருந்தது. இரவு ஒலிமாறுபாடு கொள்ளத்தொடங்கிய நேரத்தில் இளையோர் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டு பேரரசியின் தூதன் வந்தான். நான் எழுந்துசென்று நோக்கியபோது இளவரசர் நகுலன் முற்றத்தில் ஒரு புரவிக்குட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அவர் சிரிக்கும் ஒலி கேட்டது. பீமன் உணவுண்டு கைகளைக்கூட கழுவாமல் அப்படியே உணவறைக்குள் படுத்திருந்தார். நிறைவுடன் உணவுண்டால் அவர் முகம் தெய்வச்சிலைகளுக்குரிய அழகை கொண்டுவிடும். அருகே ஒழிந்த பெருங்கலங்கள் கிடந்தன. அவற்றை ஓசையில்லாது எடுத்து அகற்றிக்கொண்டிருந்தனர்.”

“ஐவரும் துயில்வதற்காக காத்திருந்தேன். அவர்கள் துயில்வதைக் கண்டபின் அவர்கள் ஆழ்ந்து துயின்றுவிட்டார்கள் என்று குந்திதேவிக்கு செய்தியனுப்பினேன்” என்றார் சுரேசர். சௌனகர் “பேரரசி துயிலமாட்டார்” என்றார். சுரேசர் புன்னகை செய்தார். சௌனகர் “எப்படி துயில்கிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது!” என்றார். விதுரர் “அவர்கள் எதிலிருந்தோ விடுதலைகொண்டிருப்பார்கள்…” என்றார். சௌனகர் அவரை ஒருகணம் அசைவிலா விழிகளுடன் நோக்கினார். “எத்தனை உருமாற்றுகளில் இன்று புகுந்து நடித்திருக்கிறார்கள். அனைத்து வண்ணங்களையும் அகற்றிவிட்டு ஆன்மா ஓய்வெடுக்க விழையும் அல்லவா?” என்றார் விதுரர். அவர் சொல்வதை புரிந்துகொள்ளாமல் “ஆம்” என்றார் சௌனகர்.

விதுரர் நிலையழிந்தவராக அனைத்துச் சுவடிகளையும் தன் முன் போட்டு கையால் அளைந்துகொண்டிருந்தார். எந்தச் சுவடியையும் அவர் வாசிக்கவில்லை என்று தெரிந்தது. சிற்றமைச்சர் பார்க்கவர் வந்து தலைவணங்கியபோதுதான் சௌனகர் துரியோதனனை நினைத்துக்கொண்டார். அரசனைப் பற்றிய எண்ணங்களை விலக்கிக்கொள்ளத்தான் விதுரரும் தானும் வேறுபேச்சுகளில் ஈடுபட்டோமா என எண்ணினார்.

பார்க்கவர் “அரசரை ஆதுரசாலைக்கு கொண்டுசென்றிருக்கிறார்கள்” என்றார். விதுரர் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து ஒரு ஓலையை கையால் சுண்டிக்கொண்டிருந்தார். “எலும்புகள் பல முறிந்துள்ளன. அரசர் நெடுநாட்கள் ஆதுரசாலையிலேயே இருக்கவேண்டியிருக்கும்…” என்றார் பார்க்கவர். விதுரர் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. “பேரரசருக்கு செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் சொன்னபோது விதுரர் நிமிர்ந்து நோக்கினார்.

“செய்தியுடன் சென்றவர் பால்ஹிகநாட்டு இளவரசர் பூரிசிரவஸ்” என்று பார்க்கவர் சொன்னார். “ஆம், அவர் வந்திருப்பதாக சொன்னார்கள்” என்றார் விதுரர். “படைக்கூட்டு குறித்து பேசுவதற்காக அங்கர் அவரை அழைத்திருந்தார். சொல்தேர்ந்தவர் என்பதனால் அவரையே பேரரசரிடம் அனுப்பியிருக்கிறார்கள். அரசருக்கு நிகழ்ந்தவற்றை அவர் சொல்வதைக்கேட்டு பேரரசர் வெறுமனே அமர்ந்திருந்தார். பின்னர் ஒரு சொல்லும் பேசாமல் சூதர்களிடம் இசையைத் தொடரும்படி ஆணையிட்டுவிட்டு பால்ஹிகர் செல்லலாம் என்று கையசைத்தார். பால்ஹிகர் தலைவணங்கி வெளியேறினார். அரசர் இப்போதும் இசைகேட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.”

விதுரர் ஓலைச்சுவடியை சுழற்றிக்கொண்டு சிலகணங்கள் இருந்துவிட்டு “இந்திரப்பிரஸ்தத்தின் அரசி என்ன செய்கிறார் என்று பார்த்து வாரும்” என ஒற்றர் கைவல்யரை அனுப்பினார். அவர் திரும்பி வந்து “அரசி அந்தியிலேயே காந்தார அரசியர்மாளிகையில் துயில்கொண்டுவிட்டார். அங்கே பிற பெண்களெல்லாம் விழித்திருக்கின்றனர்” என்றார். விதுரர் “பேரரசிக்கும் நிகழ்ந்தவை தெரியுமல்லவா?” என்றார். “அங்கே அனைவருக்கும் தெரியும்” என்றார் கைவல்யர். “பேரரசி அதை செவிகொடுத்துக் கேட்கவில்லை. அரசரின் இரு தேவியர் மட்டும் கிளம்பி ஆதுரசாலைக்கு சென்றுள்ளனர். அங்குள்ள பெண்கள் எவரும் அரசர் புண்பட்டிருப்பதை ஒரு பொருட்டாக எண்ணுவதாகத் தெரியவில்லை.”

“என்ன நிகழ்கிறது அங்கே?” என்றார் விதுரர். “நாளை காலை கொற்றவை ஆலயத்தில் ஏழு எருமைகளை பலிகொடுக்கவேண்டுமென பேரரசி ஆணையிட்டிருக்கிறார்களாம். எருமைகள் வந்துவிட்டன. அவற்றுக்கான பூசனைகள் நிகழ்கின்றன. அவற்றுக்கு பூசைசெய்ய தென்னாட்டுப் பூசகிகள் பதினெட்டுபேர் அங்கே வந்துள்ளனர்.” “ஏழு எருமைகளா?” என்றார் விதுரர். “ஏழா?” திரும்பி சௌனகரை நோக்கிவிட்டு “அது பெருங்குருதிக்கொடை அல்லவா?” என்றார்.

சௌனகர் “நான் கேள்விப்பட்டதே இல்லை” என்றார். “கொற்றவை நம் குலம் மீது பெருஞ்சினம் கொண்டிருந்தால் பழியீடாக அளிக்கப்படும் பலி அது. ஏழு எருமைக்கடாக்களின் குருதியால் அன்னையை நீராட்டுவார்கள். அவள் காலடியில் அக்கடாக்களின் தலைகள் வைக்கப்படும். பின்னர் அவற்றின் கொம்புகள் வெட்டப்பட்டு ஊதுகருவிகளாக்கப்படும். அவை காலம்தோறும் அன்னையிடம் பொறுத்தருள்க தேவி என்று முறையிட்டபடி இருக்கும்” என்றார் விதுரர். பின்பு தலையை அசைத்தபடி “முன்பெல்லாம் இட்டெண்ணித் தன்தலை கொடுக்கும் வழக்கம் இருந்தது. இப்போதுகூட தென்னாட்டில் அவ்வழக்கம் உள்ளது” என்றார்.

அச்சொற்கள் சௌனகரின் உள்ளத்தில் மெல்லிய நடுக்கத்தை உருவாக்கின. “தென்னாட்டில் இளம்பெண் ஒருத்தியை கொற்றவையென மாற்றுரு அணிவிப்பார்கள். அவளுக்குப் புலித்தோலாடை அணிவித்து கையில் முப்புரிவேல் அளிப்பார்கள். நுதல்விழி வரைந்து நெற்றியில் பன்றிப்பல்லை பிறையெனச் சூட்டுவார்கள். வேங்கைப்புலியின் குருளைமேல் அவளை அமரச்செய்து மன்றுநிறுத்தி அவள் காலடியில் தலைவெட்டி இட்டுவிழுவார்கள்.” சௌனகர் “குலப்பழிக்காகவா?” என்றார். “ஆம், பெண்பழியே பெரும்குலப்பழி என்பது தென்னாட்டவர் நம்பிக்கை.” சௌனகர் “இவர்கள் காந்தாரர்கள்” என்றார். “வேதம்பிறக்காத காலத்திலேயே காந்தாரத்து மக்கள் தென்னகம் புகுந்துவிட்டனர் என்பது நூல்கூற்று. அவர்களின் முறைமைகள் நிகரானவை” என்றார் விதுரர்.

“அங்கே விறலியர் அமர்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று கைவல்யர் சொன்னார். “கொற்றவையைப் பற்றிய பாடல்கள். வேட்டுவவரி என்று அதை சொன்னார்கள். கற்பாறைகள் உருள்வதுபோன்ற தாளம். வெடித்தெழுவதுபோன்ற சொற்கள்… அதைக் கேட்டுநிற்பதே கடினமாக இருந்தது.” விதுரர் “பேரரசியின் உள்ளம் கொதித்துக்கொண்டிருக்கிறது” என்றார். “ஆறிவிடும். ஏனென்றால் அவர் அன்னை” என்றார் சௌனகர். “இல்லை, அமைச்சரே. பேரரசரின் உள்ளம் ஆறும். அவர் தன் மைந்தரை ஒருபோதும் துறக்கமாட்டார். அதை இப்போது தெளிவுறவே காண்கிறேன். ஆனால் பேரரசி அமைதியுறவே போவதில்லை… இனி அரசருக்கு அன்னையென ஒருவர் இல்லை.”

சௌனகர் நெஞ்சுக்குள் திடுக்கிட்டார். “ஏன்?” என்ற கேள்வி பொருளற்றது என அவரே உணர்ந்திருந்தார். “பெண்கள் இங்கு அணியும் அனைத்து உருவங்களையும் களைந்துவிட்டுச் சென்றடையும் இடம் ஒன்றுண்டு” என்றார் விதுரர். மெல்ல அங்கே ஆழ்ந்த அமைதி உருவாகியது. சௌனகர் எழுந்து “நான் அரண்மனைக்குச் செல்கிறேன். நானும் துயில்கொள்ளவேண்டும்” என்றார். விதுரர் “என்னால் துயிலமுடியுமென தோன்றவில்லை. இவையனைத்தும் முடிவுக்கு வரும்வரை என் நரம்புகள் இழுபட்டு நின்றிருக்கும்” என்றார்.

தளர்ந்த காலடிகளுடன் சௌனகர் அரண்மனைக்கு வந்தார். அரசரும் தம்பியரும் முழுமையான துயிலில் இருப்பதாக ஏவலன் சொன்னான். ஒற்றர்களை வரவழைத்து துரியோதனன் எப்படி இருக்கிறான் என்று தெரிந்துகொண்டார். அவன் எலும்புகள் சேர்த்துக்கட்டப்பட்டு உடல்முழுக்க தேன்மெழுகும் வெண்களிமண்ணும் கலந்து பற்று போடப்பட்டிருப்பதாகவும் நெஞ்சுக்குள் நுரையீரல் கிழிந்திருப்பதனால் மூச்சுவழியாக குருதி தெறிக்கிறது என்றும் அகிபீனா மயக்கில் துயில்கொண்டிருப்பதாகவும் ஒற்றர்கள் சொன்னார்கள். கௌரவர்கள் அனைவரும் ஜயத்ரதனும் பூரிசிரவஸும் ஆதுரசாலையில்தான் அப்போதும் இருந்தார்கள்.

களைப்புடன் அவர் படுக்கைக்கு சென்றார். கண்களுக்குமேல் மெழுகை அழுந்தப் பூசியதுபோல துயிலை உணர்ந்தார். படுத்துக்கொண்டதும் மெல்லிய ரீங்காரமென அன்று நிகழ்ந்த அத்தனை பேச்சுக்களும் கலந்து அவர் தலைக்குள் ஒலித்தன. மயங்கி மயங்கிச் சென்றுகொண்டிருக்கையில் அவர் ஒரு துணுக்குறலை அடைந்து உடல் அதிர எழுந்து அமர்ந்தார். அன்று நிகழ்ந்தவை உண்மையிலேயே நிகழ்ந்தனவா? உளமயக்கு அல்லவா? கனவுகண்டு விழித்துக்கொண்டது போலிருந்தது. ஆனால் கனவென ஆறுதல்கொள்ளமுடியாதது அது. அது உண்மையில் நிகழ்ந்தது.

உண்மையில் நிகழ்ந்திருக்கிறது! உண்மைநிகழ்வு என்பது தெய்வங்களால்கூட மாற்றிவிடமுடியாதது. கற்பாறைகளைப்போல அழுத்தமாக நிகழுலகில் ஊன்றி அமைவது. எத்திசையில் எப்படி அணுகினாலும் அது அங்கே அப்படித்தான் இருக்கும். அவர் பெருமூச்சுவிட்டார். மீண்டும் படுத்துக்கொண்டபோது உள்ளம் எதிர்திசையில் திரும்பியது. கனவுகளும் கற்பனைகளும்தான் மேலும் அஞ்சத்தக்கவை. அவை வளர்ந்து பெருகுகின்றன. அவை விதைகள். உண்மைநிகழ்வென்பது கூழாங்கல். அது முடிவுற்றது. அதன்மேல் ஆயிரம் எண்ணங்களையும் சொற்களையும் ஏற்றலாம். அவை ஆடைகள்போல. மலைமேல் முகில்கள் போல. அடியில் அவை மாறாமல் அப்படித்தான் இருக்கும். அந்நிகழ்வு இனிமேல் எவராலும் எவ்வகையிலும் மாற்றத்தக்கதல்ல. ஆகவே அதை இனிமேல் முழுநம்பிக்கையுடன் கையாளமுடியும். எண்ணங்கள் கரைந்துகொண்டே இருக்கையில் ஏன் அந்த ஆறுதலை அடைகிறோம் என அவரே வியந்துகொண்டார்.

 

[ 10 ]

காலையில் வழக்கம்போல முதற்பறவைக்குரல் கேட்டு எழுந்துகொண்டு கைகளை விரித்து அங்கு குடிகொள்ளும் தேவர்களை வழுத்திக்கொண்டிருக்கையிலேயே வாயிலில் சுரேசர் நின்றிருப்பதை சௌனகர் கண்டார். அது நற்செய்தி அல்ல என்று உடனே உணர்ந்துகொண்டார். “ம்” என்றார். “நேற்று பின்னிரவே பீஷ்மபிதாமகர் தன் முடிவை அறிவித்துவிட்டிருக்கிறார். பேரரசரிடம் விடிகாலையில் அது தெரிவிக்கப்பட்டுவிட்டது” என்றார் சுரேசர். “ம்” என்றார் சௌனகர். “பிதாமகர் அரசரையே ஆதரிக்கிறார்.” அதை எதிர்பார்த்திருந்தாலும் சௌனகர் உடலில் ஒரு துணுக்குறல் அசைவு நிகழ்ந்தது. “ம்” என்றபின் கண்மூடி குருவணக்கத்தை முடித்துக்கொண்டு மெல்ல முனகியபடி எழுந்தார்.

சுரேசர் அங்கேயே நின்றிருந்தார். “அரசரிடம் தெரிவித்துவிட்டீர்களா?” என்றார் சௌனகர். “இல்லை, அவர் இன்னும் விழித்தெழவில்லை.” “நான் சென்றபின் தெரிவியுங்கள்…” என்றபின் சௌனகர் பெருமூச்சுடன் நீர்த்தூய்மைக்குச் சென்றார். சித்தமாகி திரும்பிவந்து ஒற்றர்களின் ஓலைகளை விரைந்து நோக்கிவிட்டு இந்திரப்பிரஸ்தத்திற்கு ஒரு செய்தியை அனுப்பினார். குந்தியிடமிருந்து வந்த செய்தியில் அவள் திருதராஷ்டிரரை நம்பாமல் பீஷ்மர்மேல் நம்பிக்கை வைத்து எழுதியிருந்தாள். அதற்கு மறுமொழியாக பீஷ்மரின் முடிவைப்பற்றி ஒருவரி அனுப்பினார்.

அவர் தருமனின் அரண்மனையை அடைந்தபோது கூடத்தின் வாயிலில் சுரேசர் நின்றிருந்தார். “எழுந்துவிட்டாரா?” என்றார் சௌனகர். “சித்தமாக இருக்கிறார்” என்றார் சுரேசர். “அவருக்குச் செய்தி சென்றுவிட்டதா?” என்றார் சௌனகர். “இல்லை, ஓலைகள் அனைத்தும் என்னிடமே உள்ளன.” சௌனகர் “நன்று” என உள்ளே சென்றார். அவரைக் கண்டதும் தருமன் புன்னகையுடன் எழுந்து “ஆசிரியருக்கு வணக்கம்” என்றார். நற்றுயிலில் அவரது முகம் மிகவும் தெளிந்திருந்தது. கண்களுக்குக் கீழிருந்த வளையங்கள் மறைந்திருந்தன. நீர்வற்றிய தசைகள் மீண்டும் குருதியொளி அடைந்திருந்தன.

அவரை வாழ்த்தியபின் சௌனகர் அமர்ந்துகொண்டு “நேற்று நாங்கள் பிதாமகரை பார்த்தோம். அச்செய்தியை அறிவிக்க சுரேசரை அனுப்பினேன். தாங்கள் துயின்றுவிட்டீர்கள்” என்றார். “ஆம்” என்ற தருமன் “என்ன நிகழ்ந்தது? பிதாமகர் என்ன சொன்னார்?” என்றார். சௌனகர் ஒரு கணம் தயங்கிவிட்டு நிகழ்ந்ததைச் சொல்லி முடித்தார். தருமன் முதலில் இயல்பான மலர்ச்சியுடன் கேட்கத்தொடங்கி மெல்லமெல்ல பதற்றம் அடைந்து இறுதியில் கொந்தளிப்புடன் பீடத்தின் கைப்பிடியை தன் கைகளால் பற்றிக்கொண்டார். அவர் சொல்லத்தொடங்கியபோது உள்ளே வந்த நகுலனும் சகதேவனும் மெல்ல அருகே வந்து உடல் விரைக்க நின்றனர். முடித்ததும் நகுலன் தருமனின் பீடத்தின் மேல்வளைவை நடுங்கும் கைகளால் பற்றிக்கொண்டான்.

“அவர் அதைச் செய்வார் என்று எண்ணினேன்” என்றார் தருமன். “துச்சாதனனை அழைத்துச்செல்லும் எண்ணம் அவர்களுக்கு வராதிருந்ததை நல்லூழ் என்றே சொல்வேன்.” “ஆம்” என்றார் சௌனகர். தருமன் “நானும் அவர் முன் செல்லவேண்டும். அவர் என்னையும் அவ்வாறு அடித்து தூக்கிப்போடவேண்டும். உயிர்பிரியுமென்றாலும் அது நல்லூழே. வலித்தும் விழிநீர் உகுத்தும் அவரது தண்டனையைக் கடந்துவருகையில் தூயவனாக இருப்பேன்” என்றார். சௌனகர் பெருமூச்சுடன் நகுலனை நோக்க அவன் உடனே புரிந்துகொண்டு “பிதாமகர் அரசாணை குறித்து என்ன சொன்னார்?” என்றான்.

“அதைத்தான் நான் புரிந்துகொள்ளமாட்டாது தவிக்கிறேன். சொல்லவந்ததும் அதுவே” என சௌனகர் தொடங்கினார். “இன்று காலையில் செய்தி வந்தது, பீஷ்மபிதாமகர் துரியோதனனை ஆதரிக்கிறார் என்று.” தருமன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை என விழிகள் ஒருகணம் அதிர்ந்தது காட்டியது. உடனே அவர் மீண்டு “அது அவரது ஆணை என்றால் அவ்வாறே ஆகுக!” என்றார். “பிதாமகரின் ஆணையை ஓலையால் அரசருக்கு அறிவித்திருக்கிறார்கள்…” என்றார் சௌனகர். “அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்று எண்ணக்கூடவில்லை… ஆனால் அதை நான் ஓரளவு உணர்ந்திருந்தேன். அவ்வாறு தாக்கியபோதே அவர் உள்ளம் உருகியிருக்கும். அவர் இக்குடியின் முதற்றாதை.”

“இல்லை, அதற்கப்பால் அவர் ஏதோ எண்ணியிருப்பார்” என வாயிலில் வந்து நின்றிருந்த அர்ஜுனன் சொன்னான். அவன் வந்ததை உணர்ந்திராத சௌனகர் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தார். “எதுவானாலும் இந்தச் சிறிய நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது. நாம் அடிமைகளாவோம். சற்றுகழித்து அந்த ஆயிரத்தவன் சவுக்குடன் திரும்ப வருவான்.” சௌனகர் நிலையழிந்தவராக “அவ்வாறல்ல… அது அத்தனை எளிதல்ல. பிதாமகர் அதையெல்லாம் எண்ணியிருக்கமாட்டார்” என்றார். “எண்ணினாலும் அன்றேலும் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. இனி அதைப்பற்றிய சொல்லாடல் தேவையில்லை” என்றார் தருமன்.

தருமன் முகம் மீண்டும் மலர்ந்துவிட்டதை சௌனகர் கண்டார். “அது பிதாமகர் நமக்கு அளித்த தண்டனை. தந்தையரின் தண்டனைகளிலும் அவர்களின் அருளே உள்ளது” என்றார். அர்ஜுனன் உரக்க “தாங்கள் அடிமைப்பணி செய்வதென்றால்…” என்று தொடங்க “நான் இயற்றிய பிழைக்கு அதுகூட ஈடாகாது” என்றார் தருமன். “ஆம், அதை செய்வோம். ஆனால் இங்கே நம் அரசியும் தொழும்பியாகியிருக்கிறாள்” என்றான் அர்ஜுனன். “அந்த இழிமக்களின் அரண்மனையில் அவள் ஏன் ஏவற்பணி செய்யவேண்டும்?” தருமன் தலையை அசைத்து “ஆம், ஆனால் அவள் நம் மனைவி. அதன்பொருட்டு அவள் அடையும் துயர்கள் அனைத்தும் அவளுடைய ஊழே” என்றார்.

“மடமை” என்றபின் அர்ஜுனன் “நான் இதில் ஒன்றும் சொல்வதற்கில்லை. எது நிகழ்கிறதோ அதுவே அமைக!” என்று கூறி வெளியே சென்றான். தருமன் “மடமை என்பதில் ஐயமில்லை. ஆனால் மடமையில் திளைப்பதாகவே எப்போதும் இதெல்லாம் அமைகிறது” என்றார். சௌனகர் “ஆம்” என்றபின் எழுந்து “நான் விதுரரை பார்த்துவிட்டு வருகிறேன்” என்றார். தருமன் “இனி அரசுசூழ்தல்கள் தேவையில்லை, அமைச்சரே. அஸ்தினபுரியின் குடியாக நீங்கள் இப்போது மாறிவிட்டீர்கள். இனி நீங்கள் ஆற்றும் எச்செயலும் அரசவஞ்சனையாக கொள்ளப்படும்” என்றார். சௌனகர் “ஆம்” என்றபின் எழுந்து தலையசைவால் விடைபெற்றார்.

வெளியே நின்றிருந்த சுரேசரிடம் “இளையவர் எங்கே?” என்றார். “உணவுச்சாலையில் இருக்கிறார்” என்றார் சுரேசர். “அவர் தொழும்பராக இருந்தாலும் மகிழ்ந்திருப்பார். அடுமனைப்பணியோ யானைக்கொட்டில் ஊழியமோ அமைந்தால் போதும்” என்றார் சௌனகர். சுரேசர் புன்னகை செய்தார். அவர்கள் நடக்கும்போது சுரேசர் “தொழும்பர் பணிக்கு இப்போதே அரசர் ஒருங்கிவிட்டார் எனத் தோன்றுகிறதே?” என்றார். “அவர் துயரத்தை தேடுகிறார். எங்காவது தன்னை ஓங்கி அறைந்து குருதியும் நிணமுமாக விழாமல் அவர் உள்ளம் அடங்காது” என்றார் சௌனகர்.

விதுரரின் அமைச்சுநிலையில் அவர் முந்தையநாள் இருந்த அதே பீடத்தில் அதே ஆடையுடன் இருந்தார். விழிகள் துயில்நீப்பினால் வீங்கிச்சிவந்திருந்தன. உதடுகள் கருகியவை போல் தெரிந்தன. அவர் வருவதை காய்ச்சல் படிந்த கண்களுடன் நோக்கி எழுந்து வணங்கிவிட்டு திரும்பி கனகரிடம் “என் சொற்கள் அவை என்று சொல்க!” என ஆணையிட்டார். சௌனகர் அமர்ந்ததும் “செய்தி அறிந்திருப்பீர்கள்” என்றார். “ஆம்” என்றார் சௌனகர். “இப்போது அனைத்தையும் நேரடியாக காந்தாரரே ஆடத்தொடங்கிவிட்டார்.”

“எவருக்காக?” என்று கசப்புடன் சௌனகர் கேட்டார். “அவரது தமக்கைக்காகவா? அவரை தமக்கை முகம்நோக்கி ஒரு சொல் எடுப்பார்களா இன்று?” விதுரர் கசப்புப் புன்னகையுடன் “அதெல்லாம் இனி எதற்கு? தொடங்கிய ஆடல், அதில் இனி வெற்றிதோல்வி மட்டுமே இலக்கு” என்றார். “என்ன சொல்கிறார் அரசர்? இன்னும்கூட எதுவும் முடியவில்லை. அவரது படைகள் எழுந்தால் அஸ்தினபுரி பணிந்தே ஆகவேண்டும். இளைய யாதவர் ஒரு சொல் சொன்னால் போதும்.” சௌனகர் பெருமூச்சுடன் “அமைச்சரே, பிதாமகரின் சொல்லே இறுதியானது என்று முன்னரே அரசர் சொல்லிவிட்டார்” என்றார்.

“இன்னமும் பேரரசரின் ஆணை மாறவில்லை… அவர் பிதாமகருக்காக தன் ஆணையை திரும்ப எடுத்துக்கொள்ளவில்லை” என்றார் விதுரர். “பேரரசரின் ஆணைப்படி இந்திரப்பிரஸ்தம் திருப்பி அளிக்கப்பட்டுவிட்டது. பாண்டவர்கள் அதன் அரசகுலம். அஸ்தினபுரியின் அரசர் அவர்களை தொழும்பராகக் கொள்ளமுயன்றால் அது படையெடுப்பேதான்…” சௌனகர் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் கொடையாக அளிக்கப்பட்ட நாட்டை மறுத்துவிட்டு தானே தொழும்பனாக வந்து நின்றால் என்ன செய்யமுடியும்?” என்றார். “என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சித்தம்பிறழ்ந்தவர்களின் உலகு போலிருக்கிறது” என்றார் விதுரர்.

“அவர் பிழையீடு செய்ய எண்ணுகிறார். பிதாமகரின் கைகளால் அடிபட்டு விழுந்திருக்கவேண்டும் என உண்மையான உள எழுச்சியுடன் சொன்னார்” என்றார் சௌனகர். போகட்டும் என்று விதுரர் கையசைத்தார். சௌனகர் “பிதாமகர் எங்கே?” என்றார். “நாளைமாலை அவர் கிளம்பவிருக்கிறார் என்றார்கள்” என்று விதுரர் சொன்னார். “அவரைச் சந்தித்து அவரது முடிவின் விளைவென்ன என்று தெரியுமா என கேட்கலாமென்று எண்ணினேன். என்னால் என்னை தொகுத்துக் கொள்ளமுடியவில்லை.” சௌனகர் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசி தொழும்பியாக வேண்டுமா?” என்றார். “அதை தன் தாயிடம் சென்று சொல்லட்டும் அரசர்” என சிவந்த முகத்துடன் விதுரர் சொன்னார்.

சௌனகர் “உண்மையில் இனி நாம் என்ன செய்யவிருக்கிறோம்?” என்று கேட்டார். “இன்னமும் பேரரசர் தன் ஆணையை மாற்றிக்கொள்ளவில்லை. அவர் அதை செய்யப்போவதுமில்லை” என்றார் விதுரர். “இன்றே துரியோதனனின் மணிமுடியை விலக்கி அரசாணை வரும். ஆதுரசாலையையே சிறைச்சாலையாக ஆக்கிக்கொள்ளலாம். அங்கனோ காந்தாரனோ எதிர்த்தால் அவர்கள் பேரரசரின் படைகளுடன் போரிட வரட்டும். குருதியால் இது முடிவாகுமென்றால் குருதியே பெருகட்டும்.” சௌனகர் “ஆனால் இந்திரப்பிரஸ்தம் போருக்கு எழாது” என்றார். “ஆம், ஆகவேதான் துவாரகைக்கு செய்தியறிவித்திருக்கிறேன்” என்றார் விதுரர். “இளைய யாதவர் எங்களுடன் நின்றால் மட்டும் போதும்…”

சுருங்கிய கண்களுடன் சௌனகர் நோக்கிக்கொண்டிருந்தார். மெல்ல இறங்கி தழைந்த குரலில் “வேறுவழியில்லை, அமைச்சரே. இல்லையேல் தருமனும் இளையோரும் தொழும்பராக நிற்பதை நான் காணவேண்டியிருக்கும். ஆயிரத்தவன் ஒருவன் அவனை சவுக்காலடித்தான் என்று கேட்டபோது நான் அக்கணம் இறந்துமீண்டேன்…” சௌனகர் “அவன் என்ன ஆனான்?” என்றார். “நான் உயிருடனிருக்கையில் அது நிகழாது…” என்றார் விதுரர். “அந்த ஆயிரத்தவன் தண்டிக்கப்பட்டானா?” என்றார் சௌனகர்.

“விலங்கு… இழிந்த விலங்கு” என்று சொன்ன விதுரர் “நான் இக்கணம் அஞ்சுவதெல்லாம் அவரைத்தான். கணிகரை வென்றாட இளைய யாதவரால் மட்டுமே முடியும். அதைத்தான் செய்தியாக அனுப்பினேன். அவர் ஏன் விலகி நிற்கிறார் என்பதே எனக்குப் புரியவில்லை” என்றார். “அவர் துவாரகையில் இல்லை என்றார்கள். அவரது சாந்தீபனி கல்விநிலைக்குச் சென்றிருப்பதாக அறிந்தேன்” என்றார் சௌனகர். “எங்கிருந்தாலும் என்ன நிகழ்கிறதென்றறியாமல் இருப்பவர் அல்ல அவர். வேண்டுமென்றே விலகி நிற்கிறார்.”

கைகளை விரித்து “உளச்சோர்வின் ஒரு தருணத்தில் இது அவர் ஆடும் ஆடலே என்றுகூடத் தோன்றுகிறது. இங்கே என்ன நிகழவேண்டுமென்பதை அவர் கணித்து காய்நகர்த்துகிறார் என்று… ஆனால் உளம் மீளும்போது தலை வெம்மைகொண்டு கொதிக்கிறது. நேற்றிலிருந்து ஒருகணமும் துயில் கொள்ளவில்லை நான்…” என்றவர் பெருமூச்சுடன் எழுந்து தொடர்ந்தார் “நாம் பேரரசரைச் சென்று பார்ப்போம். யுதிஷ்டிரன் சொன்னதை நீரே பேரரசரிடம் சொல்லும். அவரது ஆணை இன்று வந்ததென்றால் அனைத்தும் நன்றே முடிந்துவிடும்.”

சௌனகர் “என்ன நிகழும்? பீஷ்மர் அவர்களுக்காக படை நடத்துவாரா?” என்றார். “நடத்தட்டும்…. பிதாமகரைக் கொன்றால்தான் இங்கே அறம் திகழமுடியும் என்றால் அதுவும் நிகழட்டும்” என விதுரர் கூவினார். மெல்ல உடல் நடுங்கி பின்பு சற்றே தன்னை குளிர்வித்து “துவாரகையிலிருந்து ஒரு செய்தி வந்தால் போதும். பீஷ்மருக்கு நிகராக நாம் மறுபக்கம் வைக்கவேண்டிய கரு அது மட்டுமே… அதை இன்றுமாலைக்குள் எதிர்பார்க்கிறேன்” என்றார். “நீங்கள் சற்று ஓய்வெடுக்கலாம், அமைச்சரே” என்றார் சௌனகர். “இல்லை, ஓய்வுகொள்ள இயலாது என்னால். முகம்கழுவி வருகிறேன்” என்று சொல்லி எழுந்த விதுரர் சற்று தள்ளாடினார். பீடத்தின் விளிம்பைப் பற்றியபடி நிலைகொண்டுவிட்டு நடந்தார்.

கனகரிடம் மெல்லிய குரலில் “அந்த ஆயிரத்தவன் என்ன ஆனான்?” என்றார் சௌனகர். “அவனை கழுவிலேற்றிவிட்டார் அமைச்சர்” என்றார் கனகர். சௌனகர் மெல்லிய உளநடுக்குடன் “எப்போது?” என்றார். “இன்றுகாலை. நானே சென்று அந்த ஆணையை நிறைவேற்றினேன். கௌரவர்களின் அரண்மனைக்கு முன்னால் கோட்டைக்காவல்மேடைக்கு அருகே கழுநடப்பட்டு அவனை அமரச்செய்யவேண்டுமென எனக்கு ஆணையிடப்பட்டிருந்தது” என்றார் கனகர். “அவன் எளிதில் சாகலாகாது, உச்சகட்ட வலி அவனுக்கு உறுதிசெய்யப்படவேண்டும் என்றார் விதுரர். பெருஞ்சினத்துடன் அவன் சாகும் கணத்தில் வந்து அவனைப் பார்ப்பேன். அவன் விழிகளை நான் இறுதியாகப்பார்த்து ஒரு சொல் சொல்வேன். நான் இன்னும் இங்கு சாகாமலிருக்கிறேன் என்று என்றார்.”

“அவனை பிடிக்கச் செல்லும்போது அஞ்சி நடுங்கி தன் இல்லத்தில் ஒளிந்திருந்தான். இருண்ட உள்ளறையிலிருந்து அவனைப் பிடித்து இழுத்துவந்தபோது அவன் துணைவியும் இரு இளமைந்தரும் கதறியபடி உடன் வந்தனர். காவலர்களின் காலில் விழுந்து அந்தப் பெண் கதறினாள். மைந்தர்கள் முற்றத்தில் விழுந்து அழுதனர். அஞ்சாதே, நமக்கு இளையவர் துணையிருக்கிறார். இவர்கள் என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று அவன் சொன்னான். ஆனால் நம்பிக்கையுடன் அதைச் சொல்ல அவனால் இயலவில்லை. குரல் உடைந்து தழுதழுத்தது” என்று கனகர் தொடர்ந்தார்.

SOLVALAR_KAADU_EPI_07

“அவனை இழுத்து கழுமுற்றத்திற்கு கொண்டுவந்தபோதுதான் நிகழப்போவதை உணர்ந்தான். என்னை இளையவரிடம் கொண்டுசெல்லுங்கள். இளையவர் உங்களை விடமாட்டார். நான் எனக்கிட்ட ஆணையைத்தான் செய்தேன் என்றெல்லாம் கூச்சலிட்டான். அவன் ஆடைகளைக் களைந்து கழுவில் அமரச்செய்ய தூக்கியபோது என்னை நோக்கி கைகளை நீட்டி கதறி அழுதான். என் ஆணையைத்தான் நான் ஆற்றினேன், அமைச்சரே என்றான். நான் அவனிடம் இழிமகனே, ஒருகணமேனும் அச்செயலுக்காக நீ மகிழ்ந்தாய் அல்லவா? அதற்காகவே நீ கழுவில் அமரவேண்டியவனே என்றேன். அவன் நான் இளையவரின் அடிமை. அறியாது செய்த பெரும்பிழை என்றான். ஆம், ஆனால் அரசர் மேல் சவுக்கு வீசிய ஒருவன் உயிர்வாழ்வதென்பது அரசக்கோலுக்கே இழிவாகும்… செல்க, உனக்குரிய பலியும் நீரும் வந்துசேரும் என்றேன்.”

“அவன் அலறல் கேட்டு கௌரவர் அரண்மனை வாயிலில் வந்து குழுமினர். அவர்களை நோக்கி இளவரசே, என்னை காப்பாற்றுங்கள். நான் எளிய அடிமை என அவன் கூச்சலிட்டு அழுதான். உப்பரிகைமுகப்பில் மீசையை முறுக்கியபடி நின்ற துச்சாதனன் ஒருகட்டத்தில் நிலையிழந்து இறங்க முயன்றபோது சுபாகு அவரைப் பற்றி நிறுத்தி உள்ளே அழைத்துச்சென்றார். மாளிகையின் வாயில்களும் சாளரங்களும் மூடப்பட்டுவிட்டன” என்றார் கனகர். “ஆயிரத்தவன் இன்னமும் சாகவில்லை. பெருங்குரலில் அலறிக்கொண்டிருக்கிறான். இன்றுமாலைக்குள் அவன் தொண்டை உடைந்துவிடும். அதன்பின்னர் ஒலியிருக்காது.”

சௌனகர் பெருமூச்சுவிட்டார். “அவன் தருமனுக்கு எதிராக சவுக்கைத் தூக்கியபோதே இது முடிவாகிவிட்டது. விதுரர் ஒருபோதும் பொறுத்தருளாதவை சில உண்டு. அதை அறியாதவர் எவரும் இங்கில்லை” என்றார் கனகர். சௌனகர் மீண்டும் பெருமூச்சுவிட்டார். கனகர் “ஐயமே வேண்டாம், அமைச்சரே. ஒருநாள் கணிகரையும் கழுவில் அமரவைப்பார் விதுரர்… அது ஊழென வகுக்கப்பட்டுவிட்டது” என்றார்.

தொடர்புடைய பதிவுகள்


பியுஷ்- கடிதங்கள்

$
0
0
1
அன்புள்ள ஜே ,
பியூஸ் அவர்களை பற்றிய உங்கள் கட்டுரை மிகவும் முக்கியம் வாய்ந்தது .அனைத்து தளங்களிலும் அவரை பற்றி விவாதிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது .
தமிழ் நாட்டில்  ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்து கான்க்ரீட் கட்டிடங்கள் கட்டும் தொழிலதிபர்கள் அவர்களுக்கு துணை போகும் அரசியல் வாதிகள்,அரசு அதிகாரிகள் ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் நம் கண் முன்னே நடக்கும் இயற்கை வள கொள்ளை ,காடுகளை அளித்தல் ,மரங்களை அழித்தல் என எதையுமே கண்டு கொள்ளாமல்  நடிகர்கள் பின்னாலும் ,கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகள் பின்னாலும் சுற்றி திரியும்,அதை தட்டி கேட்க வக்கில்லாத மக்கள் .
இத்தனைக்கும் நடுவில் ராஜஸ்தானில் இருந்து வந்து தான் வாழும் மண்ணிற்க்காக மண்ணின் மைந்தர்களை விட பல மடங்கு உழைத்த ஒரு சமூக ஆர்வலரை தேசிய  கொடி எரித்ததாக பொய் காரணம் சொல்லி 30 காவல் துறையினர் கடுமையாக தாக்கி உள்ளனர் .நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது .அறம் என்ற ஒன்று நம் அதிகாரிகளிடம் உண்டா .
தமிழ் நாட்டில் நீங்கள் நல்லது செய்தால் 10,000 கேள்விகளும் ,நக்கலான விமர்சனங்களும் வரும்.ஏரிகள் சுத்தம் செய்தால்,அட அதுக்கு பக்கத்துல எடம் வாங்கி போட்டிருப்பான் அதான் இதை செய்யுறான் .காடுகளை உருவாகினால் ,அட அவன் லாபம் பாத்து விக்கறதுக்கு இதெல்லாம் பன்றான்.சேட்டு பசங்க எப்பிடீன்னு நமக்கு தெரியாதா .
வினுப்ரியா என்ற பெண்ணின் ஆபாச புகை படத்தை லஞ்சம் வாங்கி கொண்டும் குறிப்பிட்ட நேரத்தில் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்காத காவல்துறையின் மெத்தன போக்கை கண்டித்தவரும் இந்த வட நாட்டு சேட்டு தான்.தமிழன் தமிழன் என்று முழங்கும் எந்த கொம்பனும் தான் கண் முன்னே நடந்த கொடூரத்தை கேள்வி கேட்கவில்லை .ஆனால் சமந்தா கடை திறப்பு விழாவிற்கு வந்தால் லட்ச கணக்கில் திரள்வார்கள் .
இப்படிப்பட்ட சொரணை கெட்ட  தமிழ் மக்களுக்காக பியூஸ் போன்றவர்கள் போராடி சிறையில் உதை படுவது மனதை மேலும் வேதனை படுத்துகிறது .அவருக்கு  குடும்பம் உண்டு.இது போன்ற காட்டு மிராண்டி தனமான செயல்களால் பியூஸ் குடும்பம் நிலை குலைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நம்மாழ்வாரை இழந்தோம் ,சசி பெருமாளை இழந்தோம் ,நிறைய RTI போராளிகளை இழந்தோம்.மனுஷயும் நாம் இழந்து விட கூடாது .இவரது இந்த கைது மூலம்  ஓர் ஆறுதல்;சமூக வலைதளங்கள் மற்றும் தனியார் செய்தி நிறுவனங்கள் மூலம் பியூஸ் கைது செய்ய பட்ட செய்தி காட்டு தீ போல் பரவியது.இணையம் மூலம் பெட்டிஷன் போட பட்டு 12,000 மேல் கையெழுத்து இட்டனர்.
இவருக்கு ஏற்பட்ட கொடுமை மற்ற சமூக போராளிகளுக்கு ஏற்பட கூடாது என்பதே அனைவரின் கவலை.அதற்கு பியூஸ் போன்றோர் தனியா போராடாமல் ,அவருக்கு ஓர் பிரச்சனை என்றால் அனைத்து சூழியல் போராளிகளும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும்.இந்த முறை அதை ஓரளவு காண முடிந்தது .இது தொடர்ந்தால் மகிழ்ச்சி .மேலும் பல பியூஸ் உருவாவார்கள் .
நன்றி ,
சம்பத்
அன்புள்ள ஜெ,பியூஷ் பற்றிய எனது பதிவினை உங்கள் தளத்தில் வெளியிட்டதற்கு நன்றி.

என்னைப் பற்றிய வரிகள் ஒரு புறம் மிகுந்த உற்சாகத்தையும் மறு புறம் கூச்சத்தையும் அளித்தன. ஆனாலும், நீங்கள் பகிர்ந்துகொண்டதால், இப்பிரச்சனை மீது மேலும் அதிக கவனம் குவிந்தது.

‘ பியுஷ் மனுஷ்- நம் அறத்தின் முன்பாக’ என்ற உங்களுடைய பதிவும், தவறான சந்தர்ப்பத்தில் வரும் பியூஷ் பற்றிய விமர்சனங்களுக்கும், அவதூறுகளுக்கும் வலுவான பதிலாக அமைந்தது.

அடுத்த முறை கோவை வரும்போது, எங்கள் தோட்டத்துக்கு அவசியம் வாருங்கள். கிராமத்தில் நாங்கள் நடத்தும் பயிலகத்தின் மாணவர்களுக்கு உங்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் பல புதிய திறப்புகள் கிடைக்கும். நன்றி.

அன்புடன்
த.கண்ணன்

அன்புள்ள கண்ணன்
பியுஷை எனக்குத் தனிப்பட்ட் முறையில் தெரியாது. ஆனால் என் நண்பர்கள் ஷாஜி சென்னை,  ‘கெவின்கேர்’ பாலா போன்றவகளுக்கு நெருக்கமானவர் அவர்
சந்திப்போம்
ஜெ
அன்புள்ள ஜெ
பீயுஷ் பற்றிய உங்கள் ஆணித்தரமான வாதங்கள் அவர்மேல் உதிரிகளால் முன்வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களுக்கும் தெளிவான பதிலாக அமைந்தது. தி இந்து நாளிதழிலும் அவற்றை போட்டிருந்தனர் நன்றி
வழக்கமாக உடனடியாக எதிர்வினையாற்ற மாட்டீர்க்ள். இம்முறை எதிர்வினையாற்றியது ஆச்சரியம்
ஜெயராஜ்
அன்புள்ள ஜெயரான்
கொஞ்சம் பொறுக்கலாம் என்பதே எப்போதும் என் எண்ணம்
ஆனால் இம்முறை அது என் நண்பர் பாலாவின் ஆணை
ஜெ
ஜெ,

நேரடியாக ஒரு ஏள்வி. நீங்கள் பியுஷ் மனுஷ் பற்றி உங்கள் நல்லெண்ணத்தை, ஆதரவை வலிமையாகத் தெரிவிகிறீர்கள். அதேபோல இயங்கிவரும் பூவுலகின் நண்பர்கள் என்னும் அமைப்பைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன?

ஜெயராமன்

அன்புள்ள ஜெயராமன்,

எந்த அடிப்படையில் பியுஷ் மனுஷ் ஒரு முக்கியமான களப்பணியாளர் என்று சொல்கிறேனொ அந்த அடிப்படையில் பூவுலகின் நண்பர்கள் ஒரு மோசமான சந்தர்ப்பவாதிகளின், சுயலாப நோக்குள்ள ஒரு சிறு குழுவின் அமைப்பு என்று நம்புகிறேன்

சென்ற காலங்களில் இவர்களைப்பற்றி அறியவந்தவை எல்லாமே கசப்பானவை. உண்மையான களப்பணிகளை இம்மாதிரி நச்சுக்காளான்கள் இழிவுசெய்கின்றன

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சென்னை முதல் சிங்கப்பூர் வரை –பரபரப்புக்குக் குறைவில்லை

$
0
0

1

 

இன்று காலை பத்துமணி வாக்கில் சிங்கப்பூர் வந்துசேர்ந்தேன். சென்னையில் இருந்து இண்டியன் ஏர்லைன்ஸ் விமானம். திருச்சிவழியாக சுற்றிக்கொண்டு வந்து சேர்ந்திருக்கவேண்டும். நான் வழியில் எங்கும் கண்ணே திறக்கவில்லை. ‘செம’ தூக்கம்.

 

காரணம் இருந்தது. நான் 23 அன்றே காலையில் சென்னை வந்துவிட்டேன். தொடர்ச்சியான சினிமாச் சந்திப்புகள். மாலையில் சைதன்யாவையும் அஜிதனையும் வெளியே கூட்டிக்கொண்டுசெல்வதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் சங்கர் அலுவலகத்தில் இருந்து கிளம்பவே 5.30 ஆகிவிட்டது. காரிலிருந்து காருக்கு தாவி அவர்களுடன் கிளம்பினேன்

 

பெசண்ட் நகர் பீச்சுக்குச் சென்றோம். அதுதான் நாற்றம் இல்லாமல் இருக்கும், மெரினா சாக்கடைவாசம் அடிக்கும் என்றார்கள். எனக்கு மெரினா பழைய நினைவுகளின் தொகுப்பு. கடற்கரையில் அமர்ந்துபேசிக்கொண்டிருந்தோம். அதன்பின் அங்கெயே சாப்பிட்டோம்

 

செல்லும்போது ஊபர். திரும்பிவர முயன்றால் ஊபர் செயலி  சுற்றிக்கொண்டே இருந்தது. என்னிடம் சாதாரண நோக்கியா செல்பேசி தான். அஜிதனிடம் அதைவிட பாழடைந்த சாம்சங். சைதன்யாதான் ஸ்மார்ட் ஃபோன்காரி. அவளிடம் வேறு டாக்ஸி எண் அல்லது செயலி இல்லை

 

ஆகவே அவளுடைய தோழியை தொலைபேசியில் அழைத்துச் சொல்லி ஓலா பதிவுசெய்தோம். ஓட்டுநர் எண் வந்தது. அழைத்தால் சைதன்யாவின் தங்குமிடம் இருக்கும் தாம்பரத்துக்கு அப்பால் உள்ள பகுதிக்கு வண்டி வராது என்றார். ஏன் வராது என்று கேட்டால் ‘வராதுசார் சொல்லிட்டேன்ல? அவ்ளவுதான்’ என்றார். ‘ஏன் வராது?” என்று மீண்டும் கேட்டேன். “மீட்டர் மேலே எவ்ளவு குடுப்பே?’ என்றார்

 

வெட்டிவிட்டு என்ன செய்வதென்று யோசித்தோம். இரவு ஒன்பதரை மணி. மீட்டர்மேலே கொடுத்திருக்கலாம். ஆனால் இந்த நவீன டாக்ஸி சேவைகள் நடுத்தரவர்க்கத்திற்குப் பெரிய உதவி. இவற்றையும் இந்தமாதிரி வீணர்கள் சீரழிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று தோன்றியது

 

கெ.எஃப்.சி பக்கத்தில் ஒரு ஃபாஸ்ட் டிராக் காலியாக நின்றது. கேட்டபோது மீட்டருக்கு வருகிறேன் என்றார். அதில் ஏறி சைதன்யாவைக் கொண்டுசென்று அவள் குடியிருப்பில் விட்டுவிட்டு திரும்ப என் விடுதிக்கு வரும்போது பதினொன்றரை. அதன்பின் அஜிதனிடம் கொஞ்சம் அரசியல், கொஞ்சம் இலக்கியம்

 

மறுநாள் காலையிலேயே எழுந்து எழுதினேன். சுகா வந்தார். சினிமாப்பணிகள் ஆரம்பித்தன. கே.பி.வினோத்துடன் மாலையில் பிஹைண்ட் வுட்ஸ் நடத்திய சினிமாவிழாவுக்குச் சென்றேன். சிறந்த வசனத்திற்கான விருது சுபாவுக்கும் ஜெயம்ராஜாவுக்கும் அளிக்கப்பட்டது. அப்பதக்கக்களை அளித்தேன்.

 

ஒட்டுமொத்த சாதனைக்கான பாலசந்தர் விருது சங்கருக்கு. விருதுபெற்ற சங்கரைப் பாராட்டி ஓரிரு சொற்கள் சொன்னேன்.  “அமெரிக்காவில் நான் டெஸ்லாவின் புதிய காரைப்பார்த்தேன். ஒரு தொழில்நுட்பச்சாதனை . கூடவே அது ஒரு கலைப்படைப்பு. மைக்கேல் அஞ்செலோ ஓவியம்போல. கலை என்பது உயர்தொழில்நுட்பமும் கூட. டெஸ்லா கார் தானியங்கி வண்டிகளின் நூறு ஆண்டுக்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சம். அதேபோலத்தான் சங்கர். தமிழ் சினிமாத்தொழில்நுட்பங்களின் உச்சத்தைத் தொகுத்து தன் படைப்புகளை உருவாக்குபவர். திரைக்கதையும் ஒரு தொழில்நுட்பமே என அவரிடம் கற்றேன்”

 

அங்கிருந்தே நேராக விமானநிலையம். அங்கே ஒரு பெரும் குளறுபடி. ’செக் இன்’ செய்து பெட்டிகளை ஒப்படைத்துவிட்டு குடிபெயரல் படிவத்தை நான் நிரப்பிக்கொண்டிருந்தபோது புர்க்கா போட்ட ஏழெட்டு பெண்கள் வந்து எழுதித்தரும்படிச் சொன்னார்கள். எழுதிக்கொடுத்துவிட்டுச் சென்று வரிசையில் நின்று அதிகாரிமுன் சென்றபோது தெரிந்தது விசா காகிதங்கள் அடங்கிய கோப்பை காணோம்

 

பதறியடித்து திரும்பிவந்தால் படிவம் நிரப்பிக்கொண்டிருந்த மேஜையில் அது இல்லை. அந்தப்பெண்களே கைமறதியாகக் கொண்டுசென்றுவிட்டனர். தேடிச்சலித்து ஏர்இண்டியா ஊழியர்களிடம் சொன்னேன். விசா என் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டது. ஒரு அச்சு எடுத்தால்போதும். ஆனால் வெளியே போக அனுமதி இல்லை என்றார்கள். விசா தொலைந்துவிட்டதைச் சொன்னேன்.

 

அவர்களில் ஒருவர் என் பெட்டிகளை நிறுத்திவைக்கச் சொன்னார். என்னை வெளியே கொண்டுசென்று விட்டு அக்பர் டிராவல்ஸில் சென்று கேட்கும்படிச் சொன்னார். அங்கே அச்சு எடுக்க ஒரே இடம் அதுதான்.

 

அக்பர் டிராவல்ஸில் ஒரே ஊழியர். அவரைசூழ்ந்து பெரும் கூட்டம். டிக்கெட் கேட்பவர்கள். மின்னஞ்சலில் இருந்து அச்சு எடுக்க முண்டுபவர்கள். ஒருவழியாக அரைமணிநேரத்தில் என் முறை வந்தது. என் மின்னஞ்சலை திறந்து கடிதத்தை எடுத்து அச்சுக்குக் கொடுத்தால் இரண்டு பக்கம் அச்சானதும் அச்சுப்பொறி நின்றுவிட்டது.

 

மீண்டும் மீண்டும் அச்சுப்பொறி நின்றது. பாவம், பொறுமையான பாய். ‘ஸாரி ஸார்” என்று சொல்லிக்கொண்டு முயற்சி செய்தபடியே இருந்தார். நேரம் ஆகிவிட்டது. சரிதான் விமானம் போய்விட்டது என்றே முடிவுசெய்தேன்.

 

ஒருவர் வந்து இன்னொரு அச்சு எடுக்கக் கேட்டார். என் காகிதம் அச்சான பின்னரே அதைச்செய்யமுடியும் என்றார் பாய். அவரும் பாய்தான். உள்ளே சென்று தடதடவென ஏதோ செய்தார். அவருடைய பக்கம் அச்சாகிவந்தது

 

மீண்டும் என் பக்கங்கள். அவை அச்சாகவில்லை. எனக்கு ஓர் எண்ணம் பளிச்சிட்டது பிடிஎஃப் வடிவில் 12 பக்கம். அதனால்தான் தடங்கலா? ஒவ்வொரு பக்கமாக அச்சிடச் சொன்னேன். வந்தது. அதற்குள் ஏழெட்டுமுறை ஏர் இண்டியா ஊழியர்கள் அழைத்துவிட்டனர். ‘சார் வருகிறீர்களா இல்லையா?”

 

மூச்சுவாங்க ஓடி அவர்களைச் சென்றடைந்தேன். ஒருவர் என்னைக் கூட்டிச்சென்று எல்லா வரிசைகளையும் கடந்து குடிபெயர்வை அடையச்செய்தார். சோதனை முடிந்து உள்ளே சென்றபோது விமானம் சித்தமாக இருந்தது.

 

ஏறி அமர்ந்தால் எப்படி தூக்கம் வராமலிருக்கும்? சிங்கப்பூர் வந்துவிட்டது என என் பக்கத்தில் இருந்த இன்னொரு பாய்தான் சொன்னார். ’குடுத்துவச்சவிக சார். என்னா தூக்கம்!” என்றார். “மனசு சுத்தமா இருந்தா நல்லா தூக்கம் வரும் பாய்” என்று சொல்லியிருக்கலாம். சும்மா புன்னகைத்து வைத்தேன்.

 

விமானநிலையத்தில் பேராசிரியர் சிவக்குமாரும் நண்பர்களும் வந்திருந்தனர். எனக்கு இங்கே ஒரு அப்பார்ட்மெண்ட் குடியிருப்பாக அளிக்கப்பட்டிருக்கிறது. பெரிய இரு படுக்கையறைகள், சமையலறை, கூடம், சோபா எல்லாம் உண்டு. எல்லா அறைகளையும் என் இருப்பால் நிறைக்கவேண்டும்

 

அறையில் சரவணன் விவேகானந்தன் காத்திருந்தார். புன்னகையுடன் ‘வெல்கம் டு சிங்கப்பூர்’ என்றார். நான் சிங்கப்பூருக்கு வந்துவிட்டேன் என அப்போதுதான் முழுநம்பிக்கை வந்தது

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 8

$
0
0

[ 11 ]

உணவுக்கூடத்திற்கே திருதராஷ்டிரர் தங்களை வரச்சொன்னது சௌனகரை வியப்பு கொள்ளச்செய்தது. அவர்கள் உள்ளே சென்றபோது தரையில் அமர்ந்து இடையளவு அமைந்திருந்த பீடத்தின்மேல் பொற்தாலத்தில் அடுக்கப்பட்டிருந்த அப்பங்களை திருதராஷ்டிரர் உண்டுகொண்டிருந்தார். அவர் மெல்லும் ஒலியும் கூடவே எழுந்த முனகல் ஓசையும் பரிமாறுபவர்களின் மெல்லிய கிசுகிசுப்புகளும் தாலங்களும் தட்டுகளும் அகப்பைகளும் முட்டிக்கொள்ளும் ஒலியும் மட்டும் அந்தப் பெரிய கூடத்தில் நிறைந்திருந்தன. அப்பால் சாளரத்தில் திரைச்சீலை மெல்ல நெளிந்த ஒளிமாறுபாடு அவர் மேல் வண்ண அசைவை உருவாக்கியது. அப்பங்களிலிருந்து ஆவியுடன் நெய்மணம் எழுந்தது.

திருதராஷ்டிரர் அவர்களின் காலடியோசையைக் கேட்டு “ம்ம்ம்” என உறுமினார். விதுரர் வணங்கி அருகே போடப்பட்ட பீடத்தில் அமர்ந்தார். திருதராஷ்டிரர் சௌனகரை நோக்கி தசைக்குழி விழிகளைத் திருப்பி “அமர்க!” என்றார். சௌனகர் தயக்கத்துடன் அமர்ந்தார். தலையைத் திருப்பி அவர்களுக்கு செவியைக் காட்டியபடி “ம்ம்” என்றார் திருதராஷ்டிரர் மென்றபடி. சௌனகர் அடுமனையாளர்களை பார்த்தார். அவர்கள் அவரையன்றி எவரையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அப்பால் கரவுப்பாதை வழியாக ஓசையின்றி உருண்டுவரும் வெண்கலச் சகடங்கள் கொண்ட வண்டிகளில் உணவுப்பானைகள் வந்துகொண்டிருந்தன.

திருதராஷ்டிரர் உண்பதை சௌனகர் திகைப்புடன் நோக்கினார். இருகைகளாலும் அவர் அப்பங்களை எடுத்தார். எளிய உணவுண்பவருக்கு ஓர் அப்பமே ஒருவேளைக்கான உணவாகும் என்று தோன்றியது. அவர் ஓர் அப்பத்தை இரண்டாக ஒடித்து பருப்பில் தோய்த்து வாயில் இட்டு மென்று உண்டார். அந்த அசைவுகள் ஒவ்வொன்றிலும் நிகரற்ற பெரும்பசி தெரிந்தது. அவரது வலக்கைப்பக்கம் பொரித்த முழுப்பன்றியின் சிவந்த தசைப்பரப்பில் நெய் சூடாகப் பொரிந்து வற்றிக்கொண்டிருந்தது. அவரது இடக்கைப்பக்கம் திரிகர்த்தநாட்டு எரிமது பெரிய பீதர்நாட்டு வெண்குடுவையில் நுரைசூடி காத்திருந்தது. அதன் குமிழிகள் வெடிக்கும் ஒலி நத்தை ஊர்வதுபோல கேட்டது.

விதுரர் “பீஷ்மபிதாமகரின் ஓலை தங்களுக்கு வந்திருக்கும், மூத்தவரே” என்றார். “ஆம்” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் “அவர் தங்கள் ஆணையை ஏற்கவில்லை. அரசனென துரியோதனனையே ஏற்கிறார்” என்றார் விதுரர். “அறிந்தேன்” என்று திருதராஷ்டிரர் சொல்லிவிட்டு பன்றியூனில் ஒரு கீற்றைப்பிய்த்து எலும்புடன் வாயிலிட்டு மென்றார். எலும்பு அவர் வாய்க்குள் உடைபட்டு நொறுங்கும் ஒலியை மெல்லிய அதிர்வுடன் சௌனகர் கேட்டார். “பிதாமகர் மரபுமுறைகளை ஒருபோதும் மீறாதவர் என்பதே என் எண்ணமாக இருந்தது. அவர் ஏன் இவ்வண்ணம் செய்தார் என்பதை எத்தனை எண்ணியும் என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை” என்றார் விதுரர்.

திருதராஷ்டிரர் “அவர் விருப்பம் அது. நான் என் ஆணையை தெரிவித்துவிட்டேன்” என்றார். விதுரர் “பிதாமகரின் அந்த ஓலையை தங்களிடம் கொண்டுவரவேண்டாம் என்றே எண்ணினேன். ஆனால் நானறியாமல் ஒற்றர்கள் கொண்டுவந்துவிட்டனர்” என்றார். திருதராஷ்டிரர் “காலையில் படைபயில்கையில் கொண்டுவந்தனர். என் உள்ளம் கொந்தளித்தது. ஆனால் அதை பொருட்படுத்தவேண்டியதில்லை என பின்னர் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இளையோனே, இன்று காலை எனக்குத் தோன்றியது ஒன்றே. நான் இனி என் அரசிக்கு மட்டுமே கடமைப்பட்டவன். அவள்முன் நின்றுபேசும் தகுதியை மட்டுமே நான் ஈட்டிக்கொள்ளவேண்டும். என் இளையோன் மைந்தரையும் அவர் அரசியையும் தொழும்பராக்கிவிட்டு நான் அவளருகே செல்லமுடியாது” என்றார்.

பெருமூச்சுடன் அவர் மதுவை எடுத்துக் குடித்தார். குடம்நிறையும் ஒலி எழுந்து அடங்கியது. நீள்மூச்சுடன் குடத்தை வைத்துவிட்டு “அறிந்திருப்பாய், இன்று காலை அத்தனை பெண்களும் கொற்றவை ஆலயத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கே செங்கழலன்னைக்கு ஏழு மகிடங்களை குருதிபலியாக அளித்திருக்கிறார்கள். அதன் பொருளென்ன தெரியுமா? மகிடங்கள். நீயும் நானும் பிதாமகர் பீஷ்மரும் அனைவருமே மகிடங்கள். நம் குருதியில் குளிக்கிறாள் கொற்றவை… நம் குடிசெய்த பெரும்பிழைக்கு ஈடாக அவள் காலடியில் வைக்கப்படுகின்றன மகிடங்களின் தலைகள்… அவற்றின் கொம்புகள்…” என்றார். கைகளை வீசி தலையை அசைத்தார். “இனி எப்போதேனும் என்னால் கொம்பொலியை ஒரு கதறலாக அன்றி கேட்கமுடியுமெனத் தோன்றவில்லை…”

விதுரர் “ஆம், நாம் நம் கடமையை செய்தாகவேண்டும். நாம் விண்புகும்போது நம்மை தந்தையர் வந்து சூழ்வார்கள். அவர்களின் விழிகளை எதிர்கொள்ளவேண்டும்” என்றார். “வேறுவழியே இல்லை. ஆதுரசாலையில் இருக்கும் துரியோதனனைச் சிறையிட்டு அரசப்பொறுப்பை நீங்கள் முழுமையாக ஏற்கவேண்டிய தருணம் இது. பிதாமகர் பீஷ்மர் எதிர்ப்பார் என்றால் அவருடனும் போருக்கு நாம் சித்தமாகவே இருக்கிறோம்…” திருதராஷ்டிரர் “வெல்வதைப்பற்றி நான் எண்ணவில்லை. நான் செய்யவேண்டியதை செய்தாகவேண்டும். நான் உயிருடனிருக்கும்வரை என் இளையோன்மைந்தர் தொழும்பராகமாட்டார். மூதாதையர் மேல் ஆணை” என்றார்.

விதுரர் விழிகாட்ட சௌனகர் “ஆனால் எதுவானாலும் பிதாமகரின் ஆணையையே சென்னிசூடுவதாக அரசர் சொல்கிறார்” என்றார். “யார் தருமனா? ஆம், அவன் அவ்வாறுதான் சொல்வான்” என்றார் திருதராஷ்டிரர். “ஆனால் இந்நாடு என்னுடையது. அவன் இம்மணிமுடியின் தொழும்பன். ஆனால் அவனை மைந்தன் என்று மட்டுமே அது கருதும்.” அவர் உண்பதை நிறுத்தவே இல்லை. இரு ஏவல் விலங்குகள் என அக்கைகள் அவர் வாயை ஊட்டிக்கொண்டே இருந்தன. நெடுங்காலமாக அக்கைகளுடன் ஒத்துழைத்துப் பழகிய அடுமனையாளர்கள் விரைந்த அசைவுகளுடன் உணவை கொண்டுவந்து வைத்துக்கொண்டிருந்தனர். கரிய அவருடல் ஆழமான குழிபோல் தோன்றியது. உணவு அதற்குள் சென்றுகொண்டே இருந்தது.

மெல்லிய குரலில் “இன்றே அரசாணையை பிறப்பித்துவிடுகிறேன்” என்றார் விதுரர். “சொற்றொடர்களை சஞ்சயன் உங்களுக்கு வாசித்துக்காட்டுவான். இங்கே கோல் ஒன்றே. அது ஹஸ்தியின் கையில் இருந்தது. அறமெனச் சொல்லி இம்மண்ணில் நாட்டப்பட்டது அது. அது நின்றாகவேண்டும்.” திருதராஷ்டிரர் தலையை அசைத்து “ஆம், அது அனைவரையும் கட்டுப்படுத்தும். இளையோனே, அரசர்கள் அரியணை அமர்வது வாழ்பவர்களுக்காக மட்டும் அல்ல, மண்மறைந்த மூதாதையருக்காகவும்தான்” என்றார். அவர் குரல் எழுந்தது. “பிதாமகர் பீஷ்மர் நாளை காலையிலேயே காடேகட்டும். அவரது சொல் எனக்கு எதிராக எழுமென்றால் என் படைகள் அவரையும் சிறையிடட்டும்” என்றார்.

விதுரர் முகம் மலர “ஒரு படைப்பூசல் எழுமென்றால் நம்முடன் இளைய யாதவரின் படைகள் நிற்கக்கூடும். அதற்கென தூதனுப்பியிருக்கிறேன்” என்றார். சௌனகர் அக்குறிப்பை உணர்ந்து “இளைய பாண்டவர் தொழும்பராவதை ஒருபோதும் இளைய யாதவர் ஏற்கப்போவதில்லை. அவர் படைநடத்துவார் என்றால் இங்கே எவரும் எதிர்நிற்கப்போவதில்லை” என்றார். “ஓலை இன்றே அவரிடம் கிடைத்துவிடும். அவர் படைகொண்டுவருவார் என்னும் செய்தியே நமக்குப் போதும்” என்றார் விதுரர்.

“எவரையும் நம்பி நானில்லை. வேண்டுமென்றால் களத்திற்குச் சென்று அங்கே உயிரிழக்கவும் நான் சித்தமாக இருக்கிறேன். எதுவானாலும் சரி, என் இளையோன்மைந்தர் ஒருபோதும் அடிமைப்படமாட்டார்கள். அதில் மறு எண்ணமே எவருக்கும் தேவையில்லை” என்றார் திருதராஷ்டிரர். “நான் இருக்கும்வரை அது நிகழாது. விண்ணேகிய என் இளையோனை இதோ என்னருகே உணர்கிறேன். அவன் மூச்சுக்காற்று என்மேல் படுவதுபோல் தோன்றுகிறது” என்றார். விதுரரும் உளம்நெகிழ்ந்து “ஆம் மூத்தவரே, நேற்றிரவு முழுக்க மூத்தவர் பாண்டுவின் அருகிருப்பையே நானும் உணர்ந்துகொண்டிருந்தேன்” என்றார்.

பெருமூச்சுடன் தட்டை கையால் தட்டினார் திருதராஷ்டிரர். அடுமனையாளர்கள் இருவர் வந்து அவர் தோளைப்பற்றினர். “நான் இனி சொல்வதற்கேதுமில்லை. அரசன் என என் ஆணையையே பிறப்பித்திருக்கிறேன்” என்றார். அவர் எழுந்து நின்றபோது குரல் வானிலிருந்தென ஒலித்தது. “இவ்வரசு நான் அளித்தது. என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதை எவரும் மறக்கவேண்டியதில்லை” என்றபின் தன் கைகளை நீட்டினார். இருவர் பித்தளை அகல்பாத்திரத்தில் கொண்டுவந்த நறுமணநீரால் அவர் கைகளை கழுவினர். ஒருவர் அவர் வாயை துடைத்தார்.

சொல்முடிந்தது என திருதராஷ்டிரர் தலையசைக்க விதுரர் வணங்கிவிட்டு திரும்பினார். அவர்கள் வாயிலை அடைந்தபோது உள்வாயிலை நோக்கிச்சென்ற திருதராஷ்டிரர் திரும்பாமலேயே “விதுரா” என்று அழைத்தார். அக்குரல் மாறுபட்டிருந்ததை சௌனகர் உணர்ந்தார். “மூத்தவரே” என்றார் விதுரர். “எப்படி இருக்கிறான்?” விதுரர் ஒருகணம் கடந்து “பிழைத்துக்கொண்டார் என்றார்கள்” என்றார். “நீ பார்த்தாயா?” விதுரர் “இல்லை” என்றார். “சென்று பார்…” என்றார் திருதராஷ்டிரர். ஒருகணம் கழித்து “பார்த்துவிட்டு வந்து என்னிடம் சொல்” என்றார். “ஆணை” என்றார் விதுரர். திருதராஷ்டிரர் மெல்ல கனைத்தார். உள்ளத்தை மடைமாற்ற விழைகிறார் என சௌனகர் உணர்ந்தார். மீண்டும் இருமுறை கனைத்தபின் எடைமிக்க காலடிகளுடன் அவர் நடந்து சென்றார்.

 

[ 12 ]

“அவ்வாணை ஒன்றே இங்கே பிழையொலி” என்றார் விதுரர். “எப்போதும் மிகமெல்லிய பிழையொலிகள் தவிர்க்கப்பட முடியாதவை. அவை பெருகும்தன்மை கொண்டவை.” ஆதுரசாலைக்கான இடைநாழியில் அவர்கள் நடந்தனர். ஆதுரசாலையின் முகப்பிலிருந்து இரு ஏவலர் அவர்களை நோக்கிவருவதை சௌனகர் கண்டார். அப்பால் கர்ணனின் அணுக்கரான சிவதர் நின்றிருந்தார். சௌனகர் “அவர் தன் மைந்தனை இன்னமும் வந்து பார்க்கவில்லை அல்லவா?” என்றார். “வரமாட்டார். அவரே முன்பு அரசரை அறைந்து வீழ்த்தியபோதும் வரவில்லை” என்றார் விதுரர். “ஆனால் அவர் கேட்ட அவ்வினா எளிய ஒன்றல்ல.”

“மூத்தவரின் உள்ளம் முதல்மைந்தனை விட்டு விலகாது என்பதற்கான சான்று அது…” தலையை அசைத்தபடி “அனைத்தையும் திசைதிருப்புவது பிதாமகரிடமிருந்து துரியோதனன் பெற்ற தண்டனை… அது பிதாமகரை மாற்றியது. தந்தையின் உள்ளத்தையும் சென்றடைந்துவிட்டது” என்றார் விதுரர். சௌனகர் “நான் அதை அப்போதே எண்ணினேன்” என்றார். “நானும் அன்றிரவு அதை எண்ணினேன். ஆனால் அப்போது என்னுள் ஓர் உவகையே எழுந்தது” என்றார் விதுரர். “எத்தனை சிறிய உணர்வுகளால் ஆனவன் நான் என்று உணரும் தருணங்களில் ஒன்று அது. நான் அடித்த அடிகள் அவை ஒவ்வொன்றும்.”

சிவதர் அவர்களைக் கண்டதும் தலைவணங்கினார். விதுரர் “அங்கர் உள்ளே இருக்கிறாரா?” என்றார். “இருக்கிறார்” என்ற சிவதர் மேலும் தாழ்ந்த குரலில் “அவர் இங்கிருந்து செல்வதேயில்லை” என்றார். “அறிந்தேன்” என்று விதுரர் அவரை நோக்காமலேயே சொன்னார். “இளைய பால்ஹிகரும் உடனிருக்கிறார்” என்றார் சிவதர். “நன்று” என்ற விதுரர் அவரது வருகையை அறிவித்து மீண்ட ஏவலனிடம் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றார்.

சௌனகர் ஆதுரசாலை குளிர்ந்திருப்பதாக உணர்ந்தார். பித்தளைக்குமிழ்கள் நீர்த்துளிகள் போல் கனிந்து துளித்திருந்தன. தூண்களின் மெழுகுவளைவுகளில் ஒளி வண்ணங்களாக அசைந்தது. அங்கே மூலிகைமணம் நிறைந்திருந்தது. உள்ளே நின்றிருந்த மருத்துவர் விதுரரைக் கண்டதும் அணுகி வணங்கி “பன்னிரு எலும்புமுறிவுகள். மூன்று மூட்டு முறிவுகள்… உள்ளே பல இடங்களில் புண்கள். ஆறுமாதங்களாகும் எழுந்து அமர” என்றார்.

“தன்னினைவிருக்கிறதா?” என்றார் விதுரர். “ஆம், உச்சகட்ட வலி. உடலை அசைக்கலாகாது. ஆயினும் அமைதியாகவே இருக்கிறார்.” விதுரர் “யானைகள் வலிதாங்கும் திறன் கொண்டவை” என்றபின் சௌனகரை நோக்கி தலையசைத்துவிட்டு உள்ளே சென்றார். அவர்களைக் கண்டதும் துரியோதனனின் படுக்கையருகே அமர்ந்திருந்த கர்ணன் எழுந்து நின்றான். அவன் எழுந்ததைக் கண்டபின்னரே அப்பால் ஏதோ சுவடியில் ஆழ்ந்திருந்த பூரிசிரவஸ் அவர்கள் வருவதை உணர்ந்தான். அவனும் எழுந்தான். இருவரும் தலைவணங்கினர்.

“வருக, அமைச்சரே” என்றான் துரியோதனன். அவன் குரல் நோயுற்ற ஓநாயின் முனகல்போல் ஒலித்தது. “ம்” என விழிகளால் அமரும்படி சுட்டிக்காட்டினான். விழிகளை மட்டும் திருப்பி சௌனகரிடம் “நல்வரவாகுக, அந்தணரே” என்றான். அவர் தலைவணங்கி அமர்ந்தார். “உடல்நிலைகுறித்து மருத்துவர் சொன்னார்” என்றார் விதுரர். “ஆம், ஆறுமாதங்களுக்குமேல் ஆகும் மீள. கதை எடுத்துச் சுழற்றமுடியுமா என்று அதன்பின்னரே சொல்லமுடியும்” என்றான் துரியோதனன். விதுரர் சிலகணங்களுக்குப்பின் “தந்தையர் சிலசமயம் அப்படித்தான்…” என்றார். “காட்டுப் பிடியானை தன் வேழமைந்தனை சிலசமயம் மிதித்துவிடுவதுண்டு என்பார்கள்.”

அந்த முறைமைப்பேச்சுக்கு துரியோதனன் மறுமொழி சொல்லவில்லை. “நான் பேரரசரை பார்க்கச் சென்றிருந்தேன்” என்றார் விதுரர். “உங்கள் நலம் என்னவென்று கேட்டார். உங்களை வந்து பார்க்கும்படி அவர் என்னிடம் ஆணையிட்டார்.” கர்ணன் சற்றே அசைவதைக் கண்டதும் விதுரரின் புலன்கள் கூரடைந்தன. “அவரது செய்தியைச் சொல்லவே வந்தேன். உடன் பாண்டவர்களின் தரப்பு என இவரையும் அழைத்து வந்தேன்.” துரியோதனன் சொல்லலாம் என விழியசைத்தான். “அரசே, தங்கள் அரசு இன்றும் தங்கள் தந்தையின் கொடையே. அவர் இருக்கும்வரை அவ்வண்ணமே அது இருக்கும். அவரது ஆணைப்படி இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் இழந்தவை அனைத்தும் அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படுகின்றன.”

“ஆம், ஆனால் வென்றவர் அரசர். அவருக்கு தனிப்பட்ட உரிமையான தொழும்பர்கள் அவர்கள். அஸ்தினபுரியுடன் எவற்றையெல்லாம் பேரரசர் தன் மைந்தருக்கு அளித்தாரோ அவற்றையெல்லாம் அவர் திரும்பக் கொள்ளட்டும்” என்றான் கர்ணன். இதழ்வளைய வெறுப்புடன் விதுரர் “இது அரச உரையாடல். இங்கு உங்கள் இடமென ஏதுமில்லை, அங்கரே” என்றார். “நான் இன்று அஸ்தினபுரியின் நால்வகைப் படைகளின் பெரும்படைத்தலைவன். அரசர் படுக்கைவிட்டு எழுவதுவரை அரசு என் சொல்லில்தான் இருக்கும். அரசாணையை உங்களுக்கும் அனுப்பியிருந்தோம்” என்றான் கர்ணன்.

“இது எங்கள் குடிக்குள் நிகழும் சொல்கொள்ளல்” என்றார் விதுரர். “உங்கள் சொல் கோரப்படும்போதன்றி எழவேண்டியதில்லை.” கர்ணன் சினத்துடன் “இல்லை, இது அரச மணிமுடியின் உரிமைகுறித்தது. படைத்தலைவனாக நான் அதை அறிந்தாகவேண்டும்” என்றான். “அரசரின் சொல் இதுவே. சென்று உரையுங்கள். தந்தை அளித்தவற்றை மைந்தர் திருப்பி அளிப்பார்கள். தாங்கள் வென்றதை அவர்கள் அளிக்கவேண்டியதில்லை.”

“மூடச்சொல்லுக்கு மறுமொழி இல்லை. அவ்வண்ணமென்றால் அரசர் ஆண்டபோது ஈட்டிய செல்வமெல்லாம் எவருடையவை? அவர் கொண்டுள்ள அனைத்தும் இவ்வரசின் அரியணையில் அமர்ந்து ஈட்டியவை. பசு அது பெறப்போகும் கன்றுகளாலும் ஆனதே” என்றார் விதுரர். கர்ணன் “இச்செல்வம் அஸ்தினபுரியின் செல்வத்தைக்கொண்டோ படைவல்லமை கொண்டோ ஈட்டப்பட்டது அல்ல… எந்த மன்றிலும் இந்தச் சொல் நிற்கும்” என்றான்.

“நான் சொல்லாடவில்லை” என்றான் துரியோதனன். அவன் உடலின் ஒவ்வொரு கணுவும் வலியால் அதிர்வதை கண்ணால் பார்க்கமுடிந்தது. நெற்றியிலும் கன்னங்களிலும் நரம்புகள் பாறைமேல் மாணைநீர்க்கொடி என புடைத்து நின்றன. கைவிரல்களின் நுனிகள் வெட்டுபட்ட தசைபோல அதிர்ந்து அதிர்ந்து இழுத்தன. அவன் பேச முயன்றபோது இதழ்கள் கோணலாகின. “பேசவேண்டியதில்லை, அரசே” என்றான் கர்ணன். “ம்” என்று துரியோதனன் அமைதியானான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து காதுகளை நோக்கி சென்றது. பூரிசிரவஸ் எழுந்து வந்து அதை துடைத்தான்.

“நான் தெளிவாகவே சொல்லவிழைகிறேன். ஒருநிலையிலும் உங்கள் உடன்பிறந்தோரை தொழும்பரெனக் காண உங்கள் தந்தை சித்தமாக மாட்டார். அவரது நூற்றொரு மைந்தரையும் கொன்றாலும்கூட… அதை அவர் வாயிலிருந்து கேட்டபின் இங்கு வந்துள்ளேன்” என்றார் விதுரர். “அதைவிட உங்கள் அன்னையின் முன்சென்று இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை தொண்டுமகளாக கொண்டுவர முயல்வதென்பது தெய்வங்களுக்கும் அரிது.” துரியோதனன் முனகினான். விதுரர் “ஆகவே, வேறுவழியே இல்லை. அரசாணையின்படி இந்திரப்பிரஸ்தம் பாண்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் இழந்தவை அனைத்தும் திருப்பிக்கொடுக்கப்படும்” என்றார்.

“இல்லை. அது நடவாது” என்றான் துரியோதனன். அச்சொற்களின் வலியை அவன் உடல் அதிர்ந்து அதிர்ந்து அடைந்தது. கட்டைவிரல் சுழித்தது. கழுத்துத்தசைகள் இழுபட்டு விம்மின. மெல்ல தளர்ந்து “அதற்கு நான் ஒப்ப இயலாது” என்றான். “அப்படியென்றால் அது போருக்கு அறைகூவுவதே. உங்களையும் உங்களுக்கு ஆதரவாக வருபவர்களையும் சிறையிட அரசாணை வரும்” என்றார் விதுரர். “பேரரசர் ஆணையிட்டுவிட்டார். அதை ஓலையாக்குவதற்கு முன் பேசிவிட்டுச்செல்லலாம் என்றே நான் வந்தேன்.”

“ஆம், அவர் அதையே சொல்வார் என நான் அறிவேன்” என்றான் துரியோதனன். “ஆனால் சரியோ பிழையோ இனி பின்னகர்தல் இல்லை. இனி நான் சூடும் பெரும்பழி என பிறிதில்லை. இப்பாதை சென்றுசேருமிடம் களப்பலி என்றால் அவ்வாறே ஆகுக! அக்களத்தில் நான் பெறுவது தந்தையைக் கொன்ற பழி என்றாலும் எனக்குத் தயக்கமில்லை.” விதுரர் தளர்ந்த குரலில் “அரசே” என்றார். “நான் இப்பிறவியில் இனியொரு முடிவை எடுக்கப்போவதில்லை. என் குலம் மட்டுமல்ல இந்நாடே அழியினும் சரி, எரிமழை எழுந்து இப்புவியே அழியினும் சரி” என்று துரியோதனன் சொன்னான். “இனியில்லை. இதுவே என் முடிவு. ஒரு சொல் மாற்றில்லை.”

“அரசே, என்ன சொல்கிறீர்கள் என்று உணர்கிறீர்களா? இன்னமும்கூட நீங்கள் திரும்பிவர வழியிருக்கிறது.” துரியோதனன் தன்னையறியாமல் சிரித்துவிட்டான். உடனே வலியுடன் உடலை இறுக்கி கண்களை மூடினான். இமைகள் வண்ணத்துப்பூச்சி சிறகுகள் போல அதிர்ந்தன. திறந்து விழிகள் சிவந்து கலங்கி வழிய “என்ன வழி? தருமன் என் பிழைபொறுத்தருள்வான். அவன் கருணையை ஏற்று இங்கு நான் வாழவேண்டும் அல்லவா? அமைச்சரே, இனி வளைதல் இல்லை. இறப்புவரை… இறப்பும் அவ்வண்ணமே” என்றான்.

அவன் உடல் உச்சவலியில் துள்ளத்தொடங்கியது. “ஆ” என விலங்குபோல முனகியபடி தலையை அசைத்தான். உதடுகளைக் கடித்த பற்கள் ஆழ்ந்திறங்க குருதி கனிந்து முகவாயில் வழிந்தது. “மருத்துவர்…” என்று கர்ணன் சொன்னான். பூரிசிரவஸ் எழுந்து வெளியே ஓடினான். மூச்சிறுகிச் சாகும் விலங்கின் ஒலியில் முனகியபடி துரியோதனன் துவண்டான். மருத்துவர்கள் மூவர் செம்புக்கலத்துடன் அருகே வந்து அகிபீனா புகையை அவன் முன் வைத்து தோல்குழாயை அவன் மூக்கில் பொருத்தினார்கள். மூச்சிழுத்து விட்டு அவன் இருமினான். ஒவ்வொரு இருமலுக்கும் உடல் துள்ளி அமைந்தது. பின் இருமலுடன் குருதித்துளிகள் தெறிக்கத்தொடங்கின. மார்பிலும் தோளிலும் போடப்பட்டிருந்த வெண்ணிறமான கட்டுகள் மேல் கருமை கலந்த கொழுங்குருதிச் சொட்டுகள் விழுந்து ஊறி மலர்ந்தன.

மெல்ல அவன் விழிகள் மேலே செருகிக்கொண்டன. கைவிரல்கள் ஒவ்வொன்றாக விரிய கால் தளர்ந்து இருபக்கமும் விழுந்தது. தாடை தொங்க வாய் திறந்து பற்களின் அடிப்பக்கம் தெரிந்தது. மருத்துவர்கள் குருதிபடிந்த அவன் வாயையும் மூக்கையும் துடைக்கத் தொடங்கினர். அவன் மூச்சு சீரடைவதை விதுரர் நோக்கிக்கொண்டிருந்தார். பின்பு பெருமூச்சுடன் எழுந்தார். கர்ணன் “சென்று தந்தையிடம் சொல்லுங்கள் அமைச்சரே, போரில் அவர் வெல்லமுடியாதென்று. அவரைச் சிறையிட்டுவிட்டு இந்நகரை அரசர் ஆள்வார். அந்த இழிமக்கள் இங்கே தொழும்பர்பணி செய்வார்கள்… ஐயம் வேண்டியதில்லை” என்றான்.

“நீ விரும்புவதுதான் என்ன?” என்று வெறுப்பால் சுருங்கிய முகத்துடன் விதுரர் கேட்டார். “கீழ்மகனே, உனக்கு சூதர்சொல்லில் அமையவிருக்கும் இடமென்ன என்று அறிவாயா?” கர்ணன் “எதுவானாலும் சரி, அது என் தோழனுக்கும் உரியதே. நான் இங்கு அவருடன் இருப்பேன். மூன்று தெய்வங்களும் வந்து எதிர்நின்றாலும் சரி” என்றான். விதுரர் மீண்டும் தளர்ந்து “இதெல்லாம் என்ன என்று புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்குச் சிற்றறிவு இல்லை” என்றார்.

“அமைச்சரே, நீங்கள் இங்கு வந்தது ஏனென்று தெரியும். பிதாமகர் பீஷ்மர் எங்களை ஆதரித்துவிட்டார். ஆகவே உங்களுக்கு வேறுவழியில்லை” என்றான் கர்ணன். “மூடா” என்று சினத்துடன் சொன்ன விதுரர் மீண்டும் தணிந்து “பிதாமகர் அல்ல, முக்கண்ணனே போர்முகம் கொண்டாலும் இளைய யாதவரை வெல்லமுடியாது…” என்றார். கர்ணன் புன்னகை விரிய “அதை களத்தில் பார்ப்போம்” என்றான். “பரசுராமரின் வில்லுக்கும் போரில் நின்றாடும் கலை தெரியும் என உலகம் அறியட்டும்.”

விதுரர் “போர்தான் தீர்வென்றால் அதுவே நிகழட்டும்” என்றபின் வெளியே நடந்தார். கர்ணன் அவருக்குப் பின்னால் “துவாரகையில் இளைய யாதவர் இல்லை என்பதையும் நான் அறிவேன், அமைச்சரே. நீங்கள் அனுப்பிய செய்தி அங்கே சென்றுசேர்வதற்கே நாளாகும். அது இளைய யாதவரைச் சென்றடைந்து மீள மீண்டும் நாட்களாகும்” என்றான். அவர் திரும்பிப் பார்க்கவில்லை. கர்ணன் உரக்கச் சிரித்து “அதை அறிந்தே இளைய யாதவர் அகன்றிருக்கிறார் என்று அறியமுடியாத அளவுக்கு அறிவிலிகள் அல்ல நாங்கள்” என்றான்.

அவன் சொற்களைக் கேளாதவர் போல விதுரர் வெளியே சென்றார். வெளியை அடைந்ததும்தான் அறைக்குள் சூழ்ந்திருந்த மூலிகைக்காற்று தன்னை அழுத்திக்கொண்டிருந்ததை சௌனகர் உணர்ந்தார். “தெய்வங்களுக்குரிய உறுதி…” என்றார் சௌனகர். “ஆம், என்னை அச்சுறுத்துவது அதுவே” என்றார் விதுரர். “கற்களிலேயே தெய்வங்களை அமைக்கவேண்டும் என்று சொல்லப்படுவது ஏன் என்று ஒருமுறை கலிங்கச் சிற்பி சொன்னார். கல்லென்று காலத்திலும் எண்ணத்திலும் நிலைகொண்டவை அவை. நிலைகொள்ளாமையே மானுடம். நிலைபேறு எதுவென்றாலும் அது தெய்வத்தன்மையே.”

SOLVALAR_KAADU_EPI_08

“நாம் செய்வதற்கொன்றே உள்ளது” என்றார் அவரைத் தொடர்ந்துசென்ற சௌனகர். “பிதாமகரிடம் பேசுவோம். அவர் புரிந்துகொண்டார் என்றால் போதும்.” விதுரர் “இல்லை, அவரிடம் பேசமுடியாது” என்றார். “முதியவர்கள் ஒருகட்டத்திற்குமேல் செவியிலாதோர் ஆகிவிடுகிறார்கள்.” சௌனகர் “ஆம், எந்த ஒரு மறுமொழியையும் அவர் முதலிரு சொற்களுக்குமேல் கேட்பதில்லை. பொறுமையிழந்து அவர் விழிகள் அசையத் தொடங்கிவிடுகின்றன” என்றார். “நாம் சந்திக்கவேண்டியவர் கணிகர்தான்” என்றார் விதுரர். அவரே மேலே சொல்லட்டுமென சௌனகர் காத்திருந்தார். “அவரது காலடிகளில் விழுவோம்… அவர் அருள்புரியட்டும்” என்றபின் விதுரர் “செல்வோம்” என்றார்.

தொடர்புடைய பதிவுகள்

உலோகம்- சாகசம் மர்மம்

$
0
0

1

 

நான் படித்த நிறைய கதைகளில் பலர் ஆங்கிலம் பேசுவார்கள், முக்கியமானவர்கள் அழகாக இருப்பார்கள், பொதுவாக திறமைசாலிகள். எல்லாம்-என்னால்-முடியும் என்கிற மனப்போக்கு. அஞ்சு பக்கத்திற்கு ஒரு முறை யாராவது காணாமல் போய்விடுவார்கள், கூடவே மூச்சிரைத்து கொண்டு ஓடி வர வேண்டும், செக்ஸ் ஜோக்கு சொல்ல வேண்டும். கொஞ்சம் செக்ஸ். அப்புறம் அவ்வப்போது கொலை.

உலோகத்தின் பலம் இதை எல்லாம் தவிர்த்ததே. தமிழில் நல்ல ஒரு சாகச கதை.

 

 

உலோகம் நாவல் குறித்த ஒரு மதிப்புரை.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பியுஷ் –இந்துவெறுப்பாளரா?

$
0
0
 Photo for Repoter Jayaprakash Story.Photo/U K Ravi

 

அன்புள்ள ஜெ

பியுஷின் சமூகப் பணிகளும் மக்கள் நலனுக்காக அவர் ஆற்றி வரும் தொண்டினையும் மிகவும் வியந்து போற்றி அவருடைய விடுதலைக்காக குரல் கொடுத்ததுடன் பிரார்த்தனையும் செய்தோம். ஆனால் எல்லாம் இந்த வீடீயோவை பார்க்கும் வரை..(https://youtu.be/2wXg6mCYlKc) அவருக்கு ஏன் இந்த சாதி துவேஷம்? பெரும்பாலான மக்களின் நம்பிக்கையான கோவில்களையும் வழிபாடுகளையும் அவருடைய பேச்சுகளில் ஏன் கேவலப்படுத்துகிறார்?

இங்கு இயற்கை வளங்களை காயப்படுத்துவது யார்? மாரியாத்தா கோவில்களில் வழிபடும் சாமனிய மக்களா இல்லை அரசியல்வாதிகளும் வணிக முதலைகளுமா? சாமானிய மக்களிடமும் பள்ளிச் சிறார்களிடமும் ஏன் கோவில்களைப்பற்றியும் விக்கிரக வழிபாடுகள் பற்றியும் விமர்சனம் செய்கிறார்? அவருடைய சமூகப்பணிகள் பின்னால் ஏதோ hidden agenda இருப்பதாகத் தோன்றுகிறது.

அவருடைய நோக்கத்தை புரிந்து கொண்டதனாலோ என்னவோ பகுத்தறிவாளர்களும் இந்து மத எதிர்ப்பாளர்களும் இந்து மதத்தை விமர்சனம் செய்ததனால்தான் அவர் கைது செய்யப்பட்டதாக வலைத்தளங்களில் எழுதிவருகிறார்கள். உண்மையான சமூக ஆர்வலர் என நினைத்து ஆதரித்த எங்களைப் போன்றவர்களுக்கு அவருடைய இம்மாதிரியான பேச்சுக்கள் கவலை அளிக்கிறது.

கொ.வை. அரங்கநாதன்

அன்புள்ள அரங்கநாதன்

உண்மை. இந்த வகையில் பியுஷ் பேசும் பல பதிவுகளை நான் பார்த்துள்ளேன். இதைப்பற்றி கெவின்கேர் பாலாவிடம் விவாதித்ததும் நினைவில் உள்ளது.

பொதுவாக செயல்பாட்டாளர்கள் அனைவருமே ஒருமுனைப்பட்ட நோக்குள்ளவர்கள். ஆகவே ஒற்றைப்படையான பார்வை கொண்டவர்கள். விவாதித்து, பலபக்கங்களையும் கணக்கில்கொண்டு, நிதானமான நிலைபாடு எடுப்பவர்கள் அல்ல. அப்படி விவாதிப்பவர்கள் பலசமயம் ஒன்றும் செய்வதுமில்லை. ஆகவே அவர்களை சிந்தனையாளர்கள் என்றல்ல செயல்வீரர்கள் என்றே பார்க்கவேண்டும்.

இந்தியாவின் களப்பணியாளர்கள் பெரும்பாலும் ஒரே நாற்றங்காலில் உருவாகி வருபவர்கள். அவர்களிடம் இடதுசாரிக் கருத்துக்கள் மேலோங்கியிருப்பது இயல்பானதே. பலர் ஐரோப்பியச் சார்புகொண்டவர்களும்கூட. அவர்களில் பெரும்பாலானவர்கள் ‘அமைப்புக்கு எதிர்ப்பு’ என்னும் மனநிலை கொண்டவர்கள். அரசாங்கத்தைப்போலவே பெரும்பான்மை மதத்தையும், அதன் நம்பிக்கைகளையும் அவர்கள் எதிர்நிலை எடுத்தே பார்க்கிறார்கள்.

இவர்களின் சிந்தனைகள் நம் சூழலில் ஏற்கனவே கிடைக்கும் எளிமையான ‘டெம்ப்ளேட்’களில் அமைந்தவை. இங்கே இந்திய அரசு, இந்தியப் பண்பாடு, இந்து மரபு ஆகியவற்றை ஒற்றை அமைப்பாகவும், எதிர்க்கவேண்டிய ஒன்றாகவும் உருவகித்துக்கொள்வது என்பது கிட்டத்தட்ட நூறாண்டுக் காலமாக மெல்லமெல்ல உருவாக்கிக்கொண்ட ஒரு சிந்தனை.

அந்தக் கண்ணோட்டம் உருவாகி வந்த வரலாற்றை அறியாமல் வெறுமே ஒருவர் பேசுவதைக் கேட்டு கொந்தளிப்பது ஒருவகை அசட்டுத்தனம். இந்தியப்பாரம்பரியத்தை தேங்கி உயிரிழந்த ஓர் அமைப்பு என உருவகிப்பது இங்கே காலனியாதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்டது . ஓரியண்டல் என்னும் சொல்லுக்கே அதுதான் நேர்ப்பொருள்

அந்த காலனியாதிக்கக் காலகட்டத்து உருவகத்துக்கு எதிராகவே இங்கே இந்துமறுமலர்ச்சி இயக்கங்களும் அவற்றின் ஒட்டுமொத்த விளைவாக தேசிய இயக்கமும் உருவாகிவந்தன. விவேகானந்தர் முதல் நாராயணகுரு வரை, திலகர் முதல் காந்தி வரை அந்த எழுச்சியின் விளைவுகள்.

அந்த தேசிய இயக்கத்திற்கு எதிராகவே இங்கே இடதுசாரிக்கருத்துக்கள் உருவாகி வந்தன. இடதுசாரிக்கருத்தியலின் ஆழத்தில் உள்ளது ஐரோப்பிய வழிபாடுதான். ஆகவே அவர்கள் காலனியாதிக்கவாதிகளின் தரப்பை தாங்களும் எடுத்துக்கொண்டனர். அதை வளர்த்தெடுத்தனர்

காலனியாதிக்கவாதிகளுக்கு இந்தியாவின் மரபு என்பது தேங்கிப்போன மூடத்தனம், கூடவே இந்தியாவின் அடித்தள மக்களும் வெறுக்கத்தக்க இழிசினர்தான். இடதுசாரியினர் அடித்தள மக்களை உழைப்பாள வர்க்கம் என்று மாற்றிக்கொண்டனர். இந்திய மரபு அம்மக்களுக்கு எதிரானது என கட்டமைத்தனர். ஏனென்றால் அவர்கள் காலனியாதிக்கவாதிகளின் ஐரோப்பிய மேட்டிமைவாதப் பார்வையையை தாங்களு இந்துமரபின்மேல் செலுத்தினர்.

எம்.என்.ராய் முதல் இந்த சிந்தனை ஆரம்பிக்கிறது. இந்தியாவின் மகத்தான சிந்தனையாளர்கள் கணிசமானவர்கள் இந்த மரபைச்சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்தமான மரபுஎதிர்ப்பில் இருந்து கொஞ்சம் வெளிவந்து பௌத்தம் சமணம் போன்ற அழிந்துபட்ட சிறுபான்மை மதங்களை ஏற்றுக்கொண்டனர் சிலர். இந்துமத அமைப்பில் உள்ள பழங்குடி அம்சத்தை, வெகுஜன அம்சத்தை மட்டும் ஏற்றுக்கொண்டனர் இன்னும் சிலர்

ஆனால் ஒட்டுமொத்தமாக இந்துப்பண்பாட்டுக்கான எதிர்ப்பு என்பது இந்த இடதுசாரிச் சிந்தனையாளர்கள் அனைவரின் மூளைக்குள்ளும் ஒரு வைரஸ் போல பதிந்துள்ளது. அது நூறாண்டுக்கால வரலாறு கொண்டது. ஆகவே அதை எளிதில் வெல்லவோ மாற்றவோ முடியாது. மாபெரும் கருத்துச்செயல்பாடு மூலம் இன்னொரு நூறாண்டுக்காலத்தில் அதை மாற்றமுடியலாம்.

காந்திய இயக்கத்திற்குப்பின் உண்மையில் இடதுசாரிகளின் அந்த சிந்தனைக்குறுக்கத்தை எதிர்கொண்டு விவாதித்து மாற்றியமைக்கும் வல்லமை கொண்ட சிந்தனை இயக்கங்கள் இங்கே இல்லை. நாராயணகுருவின் இயக்கம் ஒரு சிறிய வட்டத்திற்குள் அதை இன்றுவரைச் செய்துகொண்டிருக்கிறது. நான் என்னையும் அந்நீட்சியில் சேர்த்துக்கொள்வேன்.

அதற்கு மாறாக, இடதுசாரிகளின் அத்தரப்பை வெறும் வெறுப்பரசியல் மற்றும் வசைபாடல்கள் வழியாக எதிர்கொள்பவர்களே எப்போதும் இருந்தார்கள். அரசியல் ரீதியாக அவர்கள் இன்று அதிகரித்திருக்கிறார்கள். அவர்களால் இடதுசாரிகளின் அறிவுத்தரப்பை எதிர்கொள்ளமுடியாது. எந்த ஓர் அறிவுத்தரப்பையும் தொடர்ச்சியான நிதானமான சமநிலைகொண்ட விவாதம்மூலம், கருத்துச்செயல்பாடு மூலம் மட்டுமே எதிர்கொள்ளமுடியும்.

இந்துமரபை தங்கள் கீழ்த்தரமான சாதிவெறிக்கும், மூடநம்பிக்கைகளுக்கும், மானுடவிரோதமான சமூகப்பழக்கவழக்கங்களுக்கும் ஆதரவாக நிறுத்தும் தரப்பு எப்போதும் இருந்தது. இன்றும் உள்ளது. அவர்களின் விளக்கங்களும் விரித்துரைகளும் இங்குள்ள இடதுசாரிகளின் இந்துமரபு எதிர்ப்புக்கான நியாயமான அடிப்படை ஒன்றை தொடர்ச்சியாக அளித்து வருகின்றன என்பதையும் எவரும் காணமுடியும்.
பியுஷ் எளிதாக அந்த ‘டெம்ப்ளேட்’டில் சென்று விழுந்ததில் ஆச்சரியமில்லை. அவர் சிந்தனையாளர் அல்ல. மனசாட்சியின் குரலால் இயக்கப்படும் களப்பணியாளர். அவரது அந்த நிலைபாட்டுக்குரிய அனைத்து நியாயங்களையும் இங்குள்ள குறுகிய மதவெறியர்கள், சாதியவாதிகள், அரசியலாளர்கள் அளித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

இன்று குஜராத்தில் தலித்துக்களுக்காகப் போராடும் ஒருவர் அங்குள்ள பழமைவாத மத அமைப்புகள் இந்தியப்பண்பாட்டின் பன்மைத்தன்மையையோ, சமூகப்பழக்கவழக்கங்களின் வரலாற்றையோ அறிந்துகொள்ளாமல் மாட்டிறைச்சி விஷயத்தில் எடுத்துக்கொண்டுள்ள மூர்க்கமான நிலைபாட்டை எதிர்க்காமலிருக்கமுடியுமா என்ன?

நீங்களே பார்க்கலாம், ஒவ்வொரு ஊரிலும் களப்பணியாளர்களின் எதிரிகளாக எழுந்து வருபவர்கள் மத,சாதிய மேலாண்மைகொண்டவர்கள் அல்லவா? அவர்களுக்கு எதிரான செயல்பாடு மெல்ல மதத்திற்கும் பாரம்பரியத்திற்கும் ஒட்டுமொத்தமாகவே எதிரானதாக ஆவது என்பது ஒன்றும் வெறும் காழ்ப்பின் விளைவு அல்ல.

அதெல்லாம் இல்லை, அனைத்தும் இங்கு நன்றாகவே உள்ளன என்று நீங்கள் வாதிட வருகிறீர்கள் என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

இத்தகைய ஒற்றைப்படை நிலைபாடுகள் சரியா, இவர்களின் பணிக்கு உதவியானதா என்பது இன்னொரு கேள்வி. ஆனால் இவர்கள் இப்படிச் சொல்வதனாலேயே இவர்களின் பங்களிப்பையும் சாதனைகளையும் ஏற்கமறுப்பது வெறும் அரசியல்காழ்ப்பு மட்டுமே. பியுஷ் அல்லது உதயகுமாரின் இந்தவகையான ஒற்றைப்படை நிலைபாடுகளையும் பேச்சுக்களையும் அவர்களின் பங்களிப்பை ஏற்றுக்கொண்டு மறுப்பவனாகவே என்னை வைத்துக்கொள்வேன்.

இவர்களின் ஒற்றைப்படையான நிலைபாட்டை விமர்சிக்கலாம். ஆனால் அதற்கு நிகரான பொதுநலப்பணிகளையும் ஆற்றியாகவேண்டும்.அப்படி ஆற்றும் காந்தியவாதிகள் உள்ளனர். அண்ணா ஹசாரே போல. அவர்களே எனக்கு என்றும் முதன்மை முன்னுதாரணங்கள். இந்துத்துவ அரசியல் சார்ந்து வனவாசி கல்யாண் கேந்திரம் போன்றவற்றில் செயல்படுபவர்களும் உள்ளனர். இந்துத்துவத் தரப்பிலிருந்து எழுந்துவநத நானாஜி தேஷ்முக் போன்ற மாபெரும் இலட்சியவடிவங்கள் உள்ளனர்.

ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அடித்தள மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட மக்களுக்காகவும் இடதுசாரிகள் அல்லாதவர்களின் செயல்பாடுகள் மிகமிகக்குறைவாகவே உள்ளன என்பதே நடைமுறை உண்மை. இன்று இந்துத்துவர்களின் அடிப்படையையே அழிப்பது அடித்தள மக்களின் மதமாற்றம். அந்த உணர்வுடனாவது அடித்தள மக்களிடையே சேவை செய்யும் அமைப்புக்கள் இங்கு எத்தனை உள்ளன?

அடித்தளமக்களுக்கான உரிமைப்போரில் இதுவரை எத்தனை குரல்கள் இவர்களில் இருந்து எழுந்துள்ளன? சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டல்களுக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் இவர்களால் நடத்தப்பட்டுள்ளன? பெரும்பாலும் அமைப்புகளுக்கு ஆதரவான மூர்க்கமான நிலைபாடுகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன என்பதுதானே உண்மை?

இந்நிலையில் களத்தில் நின்று போராடும் பியுஷ் போன்றவர்கள் நம் சமூகத்தின் இன்றியமையாத தேவையாக உள்ளனர். இலட்சியவடிவங்களாக தெரிகின்றனர். அவர்களின் அனைத்து அரசியல்நிலைபாடுகளையும் கடந்து அவர்கள் கொண்டாடப்படவேண்டியவர்கள். அவர்களின் அரசியல் ஒவ்வாமையை அளித்தால் அவர்களின் பங்களிப்பை கடந்து மேலும் பெரிய பங்களிப்பை உங்களைப்போன்று இந்துமரபில் நிற்பவவர்கள் ஆற்றலாம். அதன்பின் அவர்களின் அரசியலை விமர்சனம் செய்து நிராகரிக்கலாம்.

எவராக இருந்தாலும் என்னென்ன செய்தாலும் என் மதத்தையோ சாதியையோ விமர்சனம் செய்தால் நான் ஏற்கமாட்டேன், வெறுப்பேன் வசைபாடுவேன் என்பதற்கு அடிப்படைவாதம் என்று பெயர்

பி.கு

பியுஷை எதிர்ப்பவர்களில் இந்துத்துவர்களுக்கு மேலாகவே தீவிர இடதுசாரிகளே உள்ளனர்.அவரைப்பற்றிய அவதூறுகள் பெரும்பாலும் அவர்களால் பரப்பபடுபவை.
ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 9

$
0
0

[ 13 ]

சகுனியின் அரண்மனைமுகப்பில் தேர் நின்றதும் விதுரர் “நான் அவரிடம் நேரடியாகவே பேசப்போகிறேன். சூழ்ச்சிகள் அவரிடம் வெல்ல முடியாது. அவரைப்போல மானுட உள்ளங்களின் உள்ளறிந்தவர் சிலரே” என்றார். “அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார் சௌனகர். “அவர் நாமறியும் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர். தெய்வங்களைப்போல குனிந்து மானுடப்பெருக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்” என்றார் விதுரர். காவலன் வந்து வணங்க தன் வரவை அறிவிக்கும்படி கோரினார் விதுரர்.

ஏவலன் வந்து அழைத்துச்செல்ல அவர்கள் மேலேறிச்சென்றபோது அந்த அரண்மனை குளிர்ந்து அமைதியில் மூழ்கிக்கிடப்பதை உணர்ந்தனர். எதிரொலிகள்கூட தூண்களிலும் சுவர்களிலும் நிறைந்திருந்த தண்மையில் முட்டி மறைந்தன. எங்கோ எவரோ பேசுவது மெல்லிய முணுமுணுப்பாக கேட்டது. சகுனியின் அறைக்குள் இருந்து வந்த ஏவலன் செல்லும்படி கைகாட்டினான். அவர்கள் உள்ளே சென்றதும் “வருக!” என்றார் சகுனி. கணிகர் மெல்ல முனகியபடி அசைந்தமர்ந்து “வருக, அமைச்சர்களே” என்றார்.

அமர்ந்ததும் விதுரர் நேரடியாக “நான் உங்களிருவரிடமும் முறையிடுவதற்காக வந்தேன்” என்றார். மெல்ல சிரித்து “ஆம், அங்கிருந்து இங்குதான் வருவீர்கள் என எண்ணினேன்” என்றார் கணிகர். “நாங்கள் செல்வதற்கு வேறு இடமில்லை” என்றார் விதுரர். “ஆம், பீஷ்மபிதாமகரிடம் நீங்கள் சென்று சொல்வதற்கேதுமில்லை” என்று கணிகர் சொன்னார். விதுரர் “அவர் முதிர்ந்து விலகிவிட்டார். இம்முடிவை ஏன் எடுத்தாரென அவரால் சொல்லமுடியுமென நான் நினைக்கவுமில்லை” என்றார்.

“இல்லை. இப்போதுதான் அவரால் தெளிவாக சொல்லமுடியுமென நினைக்கிறேன்” என்றார் கணிகர். “ஏனென்றால் அம்முடிவை எடுத்தமை குறித்து எண்ணி எண்ணி சொல்சேர்த்துக் கொண்டிருப்பார். அவற்றைச் சொல்ல ஆள்தேடிக்கொண்டுமிருக்கக்கூடும்.” சகுனி புன்னகைபுரிந்தார். விதுரர் பேச்சை மாற்றும்பொருட்டு சுற்றிலும் நோக்கி “நீங்களிருவரும் பகடைக்களம் ஆடாதிருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்” என்றார். சகுனி “நான் நேற்றிரவே பகடைகளை நெருப்பில் வீசிவிட்டேன். இனி அவற்றுக்கு பணி ஏதுமில்லை” என்றார். கணிகரும் சிரித்தபடி “ஆம், எனக்கும் எதிரியிலாது ஆடுவதில் ஆர்வமில்லை” என்றார்.

விதுரர் இயல்புநிலையை அடைந்து “காந்தாரரே, தங்கள் தமக்கை என்ன உளநிலையில் இருக்கிறார் என்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன்” என்றார். சகுனி வெண்பளிங்குக் கூழாங்கல்போன்ற விழிகளை அவர் மேல் பதித்து அமர்ந்திருந்தார். “இன்று கொற்றவைக்கு ஏழு எருமைகள் பலிகொடுக்கப்பட்டு பிழையீட்டுப் பூசனை செய்யப்பட்டுள்ளது” என விதுரர் தொடர்ந்தார். “யாருக்காக நீங்கள் வஞ்சினம் கொண்டு வந்தீர்களோ அவரே நீங்கள் அடைவன அனைத்தையும் இடக்காலால் எற்றித்தள்ளிவிட்டு அங்கே அமர்ந்திருக்கிறார்.”

“ஆம்” என்று சகுனி சொன்னார். விழிவெண்கற்கள் மார்கழிப்பனியில் குளிர்ந்தவை போலிருந்தன. “ஆனால் எதையும் தொடங்கத்தான் நம்மால் முடியும். இன்று இது என் தமக்கைக்காக அல்ல. எனக்காகக்கூட அல்ல. எதற்காகவும் அல்ல.” விதுரர் அந்த வெறித்த விழிகளில் இருந்து தப்ப தன் விழிகளை விலக்கிக்கொண்டு “தங்களுக்கு பாண்டவர்கள்மேல் என்ன வஞ்சம்?” என்றார். சகுனி மெல்லியகுரலில் “உண்மையிலேயே வஞ்சமென ஏதுமில்லை, விதுரரே. ஒருவேளை நீர் வியக்கலாம், என் மருகன் மீது அன்பும் இல்லை” என்றார்.

தனக்குத்தானே தலையசைத்துவிட்டு “இப்போது எவரிடமும் அணுக்கமோ விலக்கமோ முற்றிலும் இல்லை. நான் வேறெங்கோ இருந்து இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இறந்துபோனவர்கள் வாழ்க்கையை பார்ப்பதுபோல” என்றார் சகுனி. “உங்கள் உணர்வுகள் எனக்குப்புரியவில்லை காந்தாரரே” என்றார் விதுரர். “நான் என் பெருங்கனவால் இவையனைத்தையும் தொடங்கிவைத்தேன். அதற்கென்றே வாழ்ந்தேன். இன்று அறுபதாண்டுகாலம் ஆகிறது. ஒரு முழு மானுட வாழ்நாள். திரும்பிப்பார்க்கையில் அனைத்தும் முழுமையாக பொருளிழந்துவிட்டிருக்கின்றன.”

சிரிப்பதுபோல சகுனியின் சிவந்த சிறிய உதடுகள் வளைந்தன. “நேற்று திரும்பிவந்ததும் என் பகடைக்காய்களை தூக்கி வீசினேன். முதலில் ஆடலாமென்றுதான் அவற்றை எடுத்தேன். களம்பரப்பி அமர்ந்தபோது அக்களம் என் விழிகளுக்கு முற்றிலும் அறிமுகமற்றதுபோல் தோன்றியது. பகடைக்காய்களை கையில் எடுத்தபோது அவற்றை முதல்முறையாக எடுப்பதுபோல் உணர்ந்தேன். நினைவு அறிந்திருந்த ஒன்றை உடலும் உள்ளமும் அறிந்திருக்கவில்லை. அந்தத் துன்பம் தாளாமலான கணத்தில் ஏவலனை கூவி அழைத்து அவற்றை எடுத்துச்சென்று அனலில் இடச்சொன்னேன்.”

“அவன் அவற்றை எடுத்துச்செல்வதைக் காணும்போது என் உள்ளம் என்ன உணர்கிறது என்று பார்க்கலாம் என்று காத்திருந்தேன். ஒன்றுமில்லை. வேறேதோ நிகழ்வதுபோல. நான் அங்கில்லை என்பதுபோல. அவன் அவற்றை கொண்டு சென்றபின் இதோ செல்கிறது என் நாற்பதாண்டுகாலத் தவம் என்று சொல்லிக்கொண்டேன். மீண்டும் ஒரு பகடையாடல் நிகழுமென்றால் என்ன செய்வேன் என வலிந்து கேட்டுக்கொண்டேன். உள்ளம் தொடப்படவே இல்லை. பகடையை நான் ஆடிய நினைவுகூட மீளவில்லை.”

“பின்னர் எழுந்து சென்று அடுமனையை அடைந்து எங்கே எரிகிறது என் பகடை என்று கேட்டேன். அவர்கள் சுட்டிக்காட்டிய அடுமனை அடுப்பின் முன் நின்று அவை அனலில் பொசுங்குவதை நோக்கினேன். வெறுமைநிறைந்த உள்ளத்துடன் வெறித்து நின்றேன். அவை தந்தத்தால் ஆன பகடைகள். எரிந்தணையும்போது மெல்லிய சிதைமணம் வந்தது. அவை வளைந்து பொசுங்கி உருகி வழிந்து நீலச்சுடராகி மறைந்தன.”

SOLVALAR_KAADU_EPI_09

“எரியும் எலும்பின் மணம் எஞ்சியிருந்த மூக்குடன் திரும்பி வந்தேன்” என்று சகுனி தொடர்ந்தார். “எங்காவது செல்லவேண்டுமெனத் தோன்றியது. ஆனால் உடல் முழுமையாகத் தளர்ந்திருந்தது. இவ்விருக்கையில் வந்து அமர்ந்தேன். வெளியே அந்திமறைவதை நோக்கிக்கொண்டிருந்தேன். ஆம் முடிந்தது, அவ்வளவுதான் என்று சொல்லிக்கொண்டேன். பின்னர் அச்சொற்களை சூழ்ந்திருந்த அனைத்தும் என்னைநோக்கி சொல்லத் தொடங்கின.”

“அச்சொற்கள் அளித்த விடுதலையை என்னால் சொல்லி விளக்கமுடியாது. முன்னிரவிலேயே துயிலச்சென்றுவிட்டேன். இந்தப் பீடத்திலிருந்து எழுந்து படுக்கைவரை செல்வதுகூட கடினமாக இருந்தது. என் உடல் எடைமிகுந்து கால்கள் குழைந்தன. கண்ணிமைகள் சரிந்து பாதிமூடியிருந்தன. படுக்கையில் விழுந்ததும் மிதக்கும் உணர்வைப் பெற்றேன். ஒருசொல் இல்லாத அமைதி.” சகுனியின் குரல் தணிந்து வந்தது. துயிலுக்குள் இருந்தே அவர் பேசிக்கொண்டிருப்பதுபோல.

“விதுரரே, நான் நினைவறிந்த நாள்முதல் அப்படி ஒரு அமைதியான முன்துயில்பொழுதை அறிந்ததில்லை. மெல்லிய ரீங்காரத்துடன் ஒவ்வொன்றும் உருகியிணைந்துகொண்டிருந்தன. ஆழ்ந்த உறக்கம். இன்றுகாலை நன்கு பொழுதுவிடிந்தபின் கணிகர் வந்து அழைத்தபோதுதான் விழித்துக்கொண்டேன்” என்றார் சகுனி. “என் வாழ்க்கையின் ஒரு பகுதி முடிந்தது. அப்பகுதியின் உணர்வுகளும் இலக்குகளும் எதுவும் இங்கு ஒரு பொருட்டல்ல. இங்கிருக்கையில் எனக்கு ஒன்றே முதன்மையானது. நான் இருக்கிறேன். இதுவாக, இவ்வாறாக. இந்தப் பீடம் பீடமாக இருப்பதுபோல, அந்த மரம் மரமாக இருப்பதுபோல. நான் சகுனி. என் இயல்பெதுவோ அதுவாக இங்கிருக்கவே வந்தேன். இதன் இயல்பும் இலக்கும் என்னால் புரிந்துகொள்ளக்கூடியவையே அல்ல. நான் முழுமையாக இருப்பது மட்டுமே என்னால் செய்யக்கூடுவது.”

“ஆகவே நான் சகுனியாகவே இருப்பேன். எதன்பொருட்டும் துயர்கொள்ளப்போவதில்லை. இரக்கமோ அச்சமோ அறவுணர்வோ என்னுள் எழப்போவதில்லை. ஏனென்றால் நான் சகுனி. என் செயல்கள் என்னுடையவை அல்ல. ஓநாய் ஊன்கிழித்து உண்பதுபோல, கரையான் மாளிகைகளை கரைத்தழிப்பதுபோல இது என் கடன். எனவே நான் பழிசூடவோ இழிவடையவோ தயங்கவும் போவதில்லை.”

அவர் எவரிடமோ பேசுவதுபோலிருந்தது. குளிர்விழிகள் அசையாது நாட்டியிருந்தன. சௌனகர் அவற்றைத் தவிர்த்து வெளியே பொழிந்துகொண்டிருந்த வெயிலை நோக்கிக்கொண்டிருந்தார். வெள்ளிப்பெருக்காக பின்காலை. வழக்கமாக அஸ்தினபுரி செயல்வெறிகொள்ளும் நேரம். ஆனால் நகரம் அமைதியாகக் கிடந்தது. இறப்புநிகழ்ந்த வீட்டின் இரண்டாவதுநாள் வெறுமை திகழ்ந்தது தெருக்களில்.

சகுனி அமைதி அடைந்ததும் அறைக்குள் ஒலியின்மை பெருகி எடைகொண்டது. அசைந்து அதை கலைத்து “தங்கள் செயல்களுக்குப் பொருளில்லை என்றால் இனி ஏன் இவற்றை செய்யவேண்டும்? இந்த ஆடலில் இருந்து விலகிக்கொள்ளுங்கள். நீங்கள் விலகிக்கொண்டாலே அனைத்தும் முழுமைபெற்றுவிடும்” என்றார் விதுரர். “இல்லை, இந்த ஆடலே நான். ஆடாதபோது நான் இல்லை என்றுபொருள். உயிருடலுடன் எஞ்சுவது வரை முழுவிரைவுடன் இவ்வாடலிலேயே இருப்பேன்” என்று சொல்லி சகுனி மீண்டும் இதழ்வளைய புன்னகைசெய்தார்.

“என்ன செய்யவிருக்கிறீர்கள்?” என்றார் விதுரர் சினத்துடன். “என் இலக்கு அவ்வாறேதான் இருக்கிறது. அதை நான் மாற்றமுடியாது, ஏனென்றால் என் உடலையும் உயிரையும் அந்த அச்சிலேயே வார்த்து இறுக்கி எடுத்திருக்கிறேன்” என்று சகுனி சொன்னார். “என் மருகன் பேரரசன் ஆகவேண்டும். பாரதவர்ஷத்தை ஆளவேண்டும்.” விதுரரின் உடலில் வந்த அந்த மெல்லிய அசைவை அச்சமென சௌனகர் அறிந்தார். சகுனி எவ்வுணர்ச்சியும் தெரியாத குரலில் தொடர்ந்தார் “அவன் எதிரிகள் முற்றழியவேண்டும்… தடம்கூட எஞ்சாது. எவராக இருப்பினும்.”

விதுரர் தன்னிலை மறந்து உரக்க “அது நிகழப்போவதில்லை. கேட்டீரல்லவா, பீமனின் வஞ்சினத்தை. உம் மருகன் உடல்பிளந்து களம்படுவான். அவன் நூற்றுவர் உடன்பிறந்தாரும் குருதிகொட்டி மடிவார்கள். வெறும் அழிவு… அதுமட்டுமே எஞ்சப்போகிறது. காந்தாரரே, சில சொற்கள் இதழ்மீறி வெளிவருகையிலேயே தெய்வங்களாகி நிலைகொள்ளத் தொடங்கிவிடுகின்றன. அத்தகைய சொற்கள் அவை. அதை உணராத ஒரு மானுட உள்ளமேனும் அவையில் இருந்திருக்குமென நான் எண்ணவில்லை.”

“அதுநிகழ்ந்தாலும் எனக்கு எந்த்த் துயருமில்லை” என்று சகுனி விழியின் ஒளி கூர்ந்து நிற்க மெல்லியகுரலில் சொன்னார். “நான் என் பணியை செய்கிறேன். அதன் பயனை முடிவுசெய்யவேண்டியது பெருவெளியை ஆளும் வல்லமைகள்.” அவர் இதழ்கள் மீண்டும் இளநகையில் வளைந்தன. “கேட்டிருப்பீர்கள், வேதாந்திகளின் சொற்றொடர் அது. நான் என் செயலை பற்றின்றி ஆற்றுபவன். எனவே யோகி.”

விதுரர் பெருமூச்சுடன் மெல்ல தளர்ந்தார். கணிகர் இருமும் ஒலி அக்கூடத்தை நிறைத்தபடி ஒலித்தது. கால்களை நீட்டி உடலை இயல்பாக்கிக்கொண்டு சௌனகரை நோக்கினார். “இவரை முன்னரே அறிமுகம் செய்திருப்பீர்கள் கணிகரே, இந்திரப்பிரஸ்தத்தின் அமைச்சர்” என்றார். கணிகர் “நாம் ஓரிரு சொற்கள் பேசவும் வாய்ப்பு கிடைத்தது” என்றார். சௌனகர் “ஆம்” என்றார். “காந்தாரரின் ஆசிரியரை சந்திக்கும் பேறு பெற்றேன்.”

“கணிகரே, இனி நீங்கள் முடிவுசெய்யவேண்டும்” என்றார் விதுரர். “போர் ஒன்று நிகழவேண்டும் என நீங்கள் விழைந்தால் அதுவே நிகழட்டும். ஆனால் நீங்கள் அறிந்த ஒன்றுண்டு, எங்கள் தரப்பில் இளையபாண்டவர் களமிறங்கினால் பீஷ்மரே ஆயினும் நீங்கள் வெல்ல இயலாது.” கணிகர் சிரித்து உடல்குலுங்கினார். “அவர் களமிறங்கவேண்டுமென்றால் நேற்றே இங்கு வந்திருக்கவேண்டும்… நேற்று அவைகூடுவதற்கு முன்னரே” என்றார். கண்கள் இடுங்க விதுரரை நோக்கி “களமிறங்கவும் செய்தார். நுண்ணிய கண்களால் நான் அவரைக் கண்டேன்” என்றார்.

சௌனகரின் உள்ளம் சிலிர்ப்பு கொண்டது. “ஆனால் இப்போரில் அவர் இல்லை… அவரை நம்பி நீங்கள் படை திரட்டவேண்டியதில்லை” என்றார். அதை முன்னரே உணர்ந்திருந்தவர் போல விதுரர் பெருமூச்சுடன் பேசாமலிருந்தார். “நீங்கள் இங்கு வருவதற்கு முன்னரே பேரரசரின் தூதனாக யுயுத்ஸு என்னிடம் வந்திருந்தார்” என்றார் கணிகர். விதுரர் திகைப்புடன் நிமிர்ந்து நோக்கினார். “பாண்டவர்கள் அடிமையாவதை எவ்வகையிலும் ஏற்கமுடியாது என்று பேரரசர் என்னிடம் சொன்னார். அதைமட்டும் தவிர்த்து எதைச்செய்வதாக இருந்தாலும் தனக்கு ஒப்புதலே என்றார்.”

“இல்லை, என்னிடம் பேரரசர் சொன்னது அதுவல்ல” என்றார் விதுரர். “அவர்கள் நாடாளலாகாது என்பதே அஸ்தினபுரியின் அரசரின் திட்டம் என்று நான் சொன்னேன். அவர்களை அடிமைகொள்ளும் அத்தருணம் மட்டுமே தேவை. அது நிகழ்ந்துவிட்டது. வெற்றி முழுமையாகிவிட்டது. இனி அவர்களை விடுதலைசெய்வதுதான் நல்லது என்பதே என் எண்ணம்” என்றார் கணிகர். “ஏனென்றால் அவர்கள் அரசகுலத்து அடிமைகள். இனி அவர்களை தொழும்பர்மன்றில் பேணுவதென்பது இடர்களையே உருவாக்கும். அவர்களை தொழும்பர்களின் உடையில் தொடர்ந்து மக்கள் பார்ப்பது மக்கள் உள்ளங்களை அவர்கள்பால் திரும்பச்செய்யும்.”

விதுரரின் முகம் வெறுப்புடன் சுருங்கியிருந்தது. கைகளால் பீடத்தின்பிடியை இறுகப்பற்றிக்கொண்டு மறுகணம் எழப்போகிறவர் போலிருந்தார். கணிகர் “ஆனால் படைக்கலப்பயிற்சி கொண்ட அடிமைகளை விடுதலைசெய்யும்போது சில நெறிகள் கடைபிடிக்கப்படுவதுண்டு. அவர்கள் காடுகளுக்குள் சென்று அங்கே தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். மக்கள்வாழும் பகுதிகள் எங்கும் தென்படக்கூடாது. நால்வருணத்திற்குரிய தொழில்களில் எதையும் அவர்கள் செய்யலாகாது” என்றார். “ஏனென்றால் எங்கு எதைச்செய்தாலும் அவர்களின் படைக்கலம் அவர்களை ஷத்ரியர்களாகவே ஆக்கும்.”

விதுரர் மெல்ல கைப்பிடியை விட்டு தோள்தளர்ந்தார். அனைத்தையும் அவர் புரிந்துகொண்டதாகத் தோன்றியது. சௌனகர் அவர்கள் இருவரையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தார். கணிகர் சௌனகரிடம் “என்ன செய்யலாம், அமைச்சரே? அரசர் அவர்களை விடுதலை செய்வார். அதற்கு நான் அவரிடம் கருத்துரை அளிக்கிறேன். விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுக்குரிய வாழ்க்கையை அவர்கள் வாழவேண்டும், அவ்வளவுதான்” என்றார். சௌனகர் விதுரரை நோக்க அவர் “எத்தனை காலம்?” என்றார்.

கணிகர் “எத்தனை காலம் என்றால், அடிமைகள் வாழ்நாள் முழுக்க அவ்வண்ணமே வாழவேண்டும் என்பதே நெறி” என்றார். விதுரர் சினத்துடன் ஏதோ சொல்ல கையெடுக்க “பொறுங்கள். வாழ்நாள் முழுக்க பாண்டவர் கான்புகவேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. லகிமாதேவியின் ஸ்மிருதியின்படி ஒருமுறை வியாழன் சுற்றிவருகையில் மானுடரின் ஒரு வாழ்நாள் நிகழ்ந்து முடிகிறது. ஆகவே பன்னிரு ஆண்டுக்காலம் என்பது ஒருவகை வாழ்நாளே” என்றார் கணிகர். “பத்து வியாழவட்டக்காலம் வாழ்பவரே புவிநிறைவை அடைகிறார் என்கின்றது ஸ்மிருதி.”

“ஒரு வியாழவட்டம் அவர்கள் காட்டில் வாழ்ந்தால் போதும்” என்று கணிகர் மீண்டும் சொன்னார். “அதன்பின்?” என்று விதுரர் கேட்டார். “அவர்கள் மறுபிறப்பெடுக்கிறார்கள். அதன்பின் ஓராண்டுகாலம் அவர்களுக்கு இரண்டாவது குழந்தைப்பருவம். ஓராண்டு முடிந்து மீண்டும் காயத்ரி பெற்று உபநயனம் செய்துகொண்டு அவர்கள் ஷத்ரியர்களாக ஆகலாம். அதன்பின் அவர்கள் தங்கள் நாட்டை அரசரிடம் வந்து கோரலாம். அவர் மறுப்பாரென்றால் படைகொண்டுவந்து பொருதலாம். வென்றால் நாடாளலாம்.” அவரது புன்னகை விரிந்தது. “விரும்பினால் மீண்டும் சூதாடவும் அமரலாம்.”

“அந்த ஓராண்டுகாலம்…” என்று சௌனகர் சொல்லத் தொடங்க “ஆம், வேட்டைக்கழுகுகள் குழவிகளையே கவ்விச்செல்லும். அன்னை உயிர்கள் அவற்றை பொந்துகளுக்குள் ஒளித்துவைக்கும்…” என்றபடி மெல்ல உடல்குலுங்க நகைத்தார் கணிகர். “குழவியர் ஒளிந்துவாழ்வதே முறை. குழிகளுக்குள் வளைகளுக்குள் புதர்களுக்குள்… அப்பருவத்தில் அவர்களைத் தேடி வேட்டையாடி அழிக்க அரசப்படைகளுக்கு உரிமையுண்டு. அவர்கள் மறைந்து வாழ்ந்து ஓராண்டைக் கடந்து உபவீதம் அணிந்து எழுந்து வரட்டும். அது அனைத்து உயிர்களுக்கும் உரிய இயற்கையின் நெறி அல்லவா?”

விதுரர் எழுந்தார். “அது நடவாது…” என்றார். “நான் யுயுத்ஸுவிடம் சொல்லி அனுப்பிவிட்டேன். பிறிதொரு வழியும் என் முன் இல்லை என்றேன். என் சொற்களின் பொருளை பேரரசர் அறிவார்” என்றார் கணிகர். “இல்லை, இது நடவாது. அவர்கள் நாடாள்வார்கள். ஐயமே தேவையில்லை. அதன்பொருட்டு இங்கே குருதிபெருகினாலும் சரி” என்று விதுரர் எழுந்துகொண்டார். கணிகர் சௌனகரிடம் “நான் சொன்னவற்றுக்கு நீங்களும் சான்று அமைச்சரே. யுதிஷ்டிரரிடம் சொல்லும்…” என்றார். சௌனகர் “ஆம், அது என் கடமை” என்றார்.

 

[ 14 ]

சகுனியின் அரண்மனையிலிருந்து வெளியே வரும்போதே விதுரர் கொதிக்கத் தொடங்கிவிட்டிருந்தார். “என்ன வஞ்சம்… எத்தனை ஆணவம்! யாரிடம் கட்டளையிடுகிறார் முடவர்? நாடாண்ட என் மைந்தர் காடுபுகுவதா? அமைச்சரே, ஒருநாள் இச்சொற்களை என்னிடம் சொன்னதன் பொருட்டு இவரை கழுவில் அமரச்செய்வேன். தெய்வங்கள் துணைநிற்கட்டும். என்னை ஆளும் மூதாதையர் சொல் உடன்வரட்டும். இவன் கழுவிலமர்ந்திருப்பதை என் விழிகளால் பார்ப்பேன்…”

அச்சத்துடன் அவரை நோக்கியபடி சௌனகர் நடந்தார். தேரிலேறிக் கொண்டதும் விதுரர் “பேரரசரின் அவைக்கு” என்றார். சௌனகர் தொண்டையைக் கனைத்தபடி “அமைச்சரே, நாம் அமைச்சர்கள். ஒருபோதும் நிலையழியலாகாது. அரசர்களுக்கு மாறாநெறியை சொல்லவேண்டியவர் நாம். எனவே நமக்கு வஞ்சமும் சினமும் இருக்கலாகாது” என்றார். சினத்துடன் திரும்பிய விதுரர் “ஆம், ஆனால் நான் அமைச்சன் அல்ல. நான் பாண்டவர்களின் தந்தை” என்றார். சௌனகர் “அவ்வண்ணமென்றால் நீங்கள் கௌரவர்களுக்கும் தந்தை அல்லவா?” என்றார்.

அதிர்ந்து விழிதிருப்பிய விதுரர் கையை வீசி அவர் சொல்லவந்ததை விலக்கினார். “சுருதை இறந்தபின் அனைத்திலிருந்தும் விலகிவிட்டிருந்தேன். எனக்கென்ன என்று நான் இருந்திருக்காவிட்டால் இந்தச் சூதே நிகழ்ந்திருக்காது. சௌனகரே, இந்நிகழ்வுகளுக்கு முதல்பொறுப்பு நானே. நான் சென்று அழைத்திராவிட்டால் யுதிஷ்டிரன் சூதுக்களத்திற்கு வந்தமைந்திருக்கமாட்டான்…” சௌனகர் “இனி அப்படி எண்ணங்களை ஓட்டுவதில் பொருளே இல்லை. இவை இவ்வண்ணம் நிகழ்ந்தன என்பதனாலேயே இது ஊழ் என்றாகிறது” என்றார்.

“நான் இதை விடமுடியாது… அவைநிகழ்வுக்குப்பின் மீண்டும் பழைய விதுரனாக ஆகிவிட்டேன்” என்றார் விதுரர். “இல்லை அமைச்சரே, நீங்கள் முந்தைய விதுரர் அல்ல. உங்கள் விழிகளில் நான் எப்போதும் கண்டிருந்த அந்த புன்னகை மறைந்துவிட்டிருக்கிறது. இந்தக் கொந்தளிப்பும் நடுக்கமும் முன்பு உங்களிடம் இருந்ததில்லை.” விதுரர் பெருமூச்சுடன் “ஆம்” என்றார். “அவைநிகழ்வு என்னை சிதைத்துவிட்டது. அதன்பின் இதுவரை நான் ஒரு கணமும் துயிலவில்லை. இனி என்னால் துயிலமுடியுமா என்றே உள்ளம் மயங்குகிறது.”

அவர் விழிகளை மூடி நெற்றிப்பொட்டை அழுத்திக்கொண்டார். “அந்த அவைநடுவே… அங்கு நானும் இருந்தேன், இறந்து மட்கிய உடலாக” என்றார். சிவந்த விழிகளுடன் சௌனகரை நோக்கி “அக்காட்சி என்னுள் ஓயாது நிகழ்கிறது, அமைச்சரே. நடக்கும்போதும் உரையாடும்போதும் உள்ளத்தின் ஒருபகுதியில் அது இருந்துகொண்டே இருக்கிறது. இனி என் வாழ்வில் அதிலிருந்து எனக்கு விடுதலை இல்லை.”

‘தேரின் சகட ஒலி சீரான தாளமாக இருப்பதுதான் எத்தனை ஆறுதல் அளிப்பது!’ என சௌனகர் எண்ணிக்கொண்டார். ஒவ்வொன்றும் சிதறிக்கிடக்கின்றன. நகரமல்ல இது, மாபெரும் இடிபாடு. விண்ணிலிருந்து விழுந்து உடைந்து பரவியது. பொருளற்ற வடிவங்கள். கட்டிடங்கள், சாலைகள். எங்கும் உயிரசைவு இருக்கவில்லை. உச்சிவெயிலில் பறவைகள் கிளைகளுக்குள் மறைந்துவிட்டிருந்தன. கூரைவிளிம்புகள் கூர்நிழலாக மண்ணில் விழுந்துகிடந்தன. அத்தனை வாயில்களுக்கு அப்பாலும் இருள். இந்நகரில் இன்னமும் மானுடர் வாழ்கிறார்கள். இன்னமும் உண்டு உறவாடி துயின்று விழிக்கிறார்கள். இன்னமும் ஆலயக்கருவறைகளில் தெய்வங்கள் விழிகொண்டு படைக்கலம் பூண்டு அமர்ந்திருக்கின்றன.

தேர் நின்ற ஒலிகேட்டு சௌனகர் தன்னிலை மீண்டார். விதுரர் விழித்துக்கொண்டு “எங்கு வந்துள்ளோம்?” என்றார். “புஷ்பகோஷ்டம்” என்றார் சௌனகர். “ஆம், மூத்தவரை பார்க்கவேண்டும்…” என்றபின் சால்வையை சீரமைத்தபடி எழுந்தார் விதுரர். “மூத்தவர் ஒருபோதும் இளையோர் காடேகவேண்டுமென ஆணையிடமாட்டார். அதன் பொருளென்ன என்று அவர் அறிவார்.” சௌனகர் அவரை நோக்க “அமைச்சரே, பன்னிரு வருடங்கள் என்றால் என்ன? முற்றிலும் புதிய ஒரு தலைமுறை உருவாகி வந்துவிடும், புதியநோக்குகள், புதிய வழிகள். மீள்பவர்கள் அனைவரும் மறந்துபோய்விட்ட ஓர் இறந்தகாலத்தில் இருந்து எழுந்து வருகிறார்கள்.”

“அத்துடன் இன்று முனைகொண்டிருக்கும் அத்தனை அரசியல் இக்கட்டுகளும் இயல்பாக முட்டி மோதி முடிவுகண்டிருக்கும். வென்றவரும் தோற்றவரும் வகுக்கப்பட்டிருப்பார்கள்” என்றார் சௌனகர். “ஆம்” என்றபின் விதுரர் “அதை நான் ஒப்புக்கொள்ளப்போவதில்லை. ஒருபோதும் என் மைந்தர் காடேகமாட்டார்கள். அவர்களின் மண் அவர்களுக்குரியதாகவே இருக்கும்” என்றார்.

இசைக்கூடத்தில் திருதராஷ்டிரர் இருந்தார். ஏவலன் அவர்கள் உள்ளே செல்லலாம் என்று சொன்னபோது விதுரர் “நான் பேசுகிறேன். நீங்கள் தருமனின் செவி என உடனிருந்தால் போதும்” என்றார். சௌனகர் தலையசைத்தார். மெத்தைவேய்ந்த தரையில் அவர்கள் தளர்ந்த கால்களுடன் நடந்தனர். இசைச்சூதர் மூவர் யாழும் குழலும் மீட்டிக்கொண்டிருக்க பீடத்தில் சாய்ந்தமர்ந்து விழிமூடி திருதராஷ்டிரர் கேட்டுக்கொண்டிருந்தார். அவர்கள் சென்று ஓசையிடாமல் பீடங்களில் அமர்ந்தனர். இசைக்கு ஏற்ப திருதராஷ்டிரரின் உடலில் மெல்லிய அலையெழுவதை சௌனகர் நோக்கிக்கொண்டிருந்தார்.

பண்நிரவல் முடிந்ததும் முதற்சூதர் தலைவணங்கினார். “நன்று…” என்று திருதராஷ்டிரர் முனகினார். “காத்திருங்கள், பாணரே. சற்றுநேரம், இப்பேச்சை முடித்துக்கொள்கிறேன்” என்றார். அவர்கள் இசைக்கலங்களை அங்கேயே விட்டுவிட்டு ஆடையோசையுடன் எழுந்து விலகினர். அவர்கள் வெளியே சென்று கதவுமூடும் ஒலி கேட்டதுமே விதுரர் உரத்த குரலில் “மூத்தவரே, நான் கணிகரை பார்க்கச் சென்றிருந்தேன். இங்கிருந்து யுயுத்ஸு ஒரு செய்தியுடன் சென்றதாகச் சொன்னார்” என்றார். அவரை கையசைத்து மறித்த திருதராஷ்டிரர் “ஆம், நானே அனுப்பினேன். ஒரு வெளியேறும் வழியை கண்டடையும்படி சொன்னேன்” என்றார்.

“ஆனால் அவர் சொல்வது…” என உரக்க மறித்த விதுரரை திருதராஷ்டிர்ர் மீண்டும் கையசைத்து தடுத்தார். “அவர் சொல்வது மட்டுமே இப்போது ஒரே வழி… அவர்கள் காடுபுகட்டும்,” விதுரர் “மூத்தவரே…” என்றார். “வேறு வழியில்லை. அவர்கள் இங்கே தொழும்பராக இருப்பதை என்னால் ஏற்கமுடியாது. பன்னிரு ஆண்டுக்காலம் அவர்கள் இங்கில்லை என்றால் அனைத்தும் இயல்பாகவே அடங்கிவிட்டிருக்கும். அடுத்த தலைமுறை மேலெழுந்து வந்திருக்கும்… அதுவன்றி வேறேதும் உகந்தவழியென எனக்குத் தெரியவில்லை” என்றார் திருதராஷ்டிரர்.

சினமெழுந்தவரைப்போல பல்லைக்கடித்து “எத்தனைகாலம்! சொல்லப்போனால் இவர்கள் பிறப்பதற்கு முன்னரே இந்தப்பூசல் தொடங்கிவிட்டது. இயன்ற அனைத்தையும் செய்துவிட்டேன். ஒவ்வொருநாளும் இதை அஞ்சி தெய்வங்களிடம் மன்றாடியபடியே வாழ்ந்துகொண்டிருந்தேன். என்ன செய்தாலும் எரியில் எண்ணை என இதை வளர்க்கவே செய்கிறது” என்றார். “ஆம், வேறுவழியே இல்லை. பதின்மூன்று ஆண்டுகாலம் இருதரப்பினரும் முழுமையாகவே விலகியிருக்கட்டும். ஒருவருக்குப் பிறர் இல்லையென்றே அமையட்டும். அது ஒன்றே வழி.”

விதுரர் “பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்?” என்று உரக்கக் கூவினார். “பன்னிரண்டு ஆண்டுகாலம் புடம்போட்ட நஞ்சாக அது எழும்… எரியை அணைக்கவேண்டும். மூடிவைப்பது அறிவின்மை.” திருதராஷ்டிரர் “ஆம், நான் அறிவேன். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகள் நான் உயிருடனிருக்கமாட்டேன். நான் சென்றபின் என்ன நடந்தால் என்ன? என் மூதாதையருக்கும் இளையோனுக்கும் நான் மறுமொழி சொல்லவேண்டியதில்லை…” சோர்ந்து குரல்தழைய “இளையோனே, இதற்கப்பால் என்னால் எண்ண முடியவில்லை. என் முன் எஞ்சியிருப்பது இவ்வழி ஒன்றே.”

விதுரர் உடைந்த குரலில் கூவியபடி திருதராஷ்டிரரை நோக்கி சென்றார் “நான் ஒப்ப மாட்டேன். ஒருபோதும் அவர்கள் கானேகப்போவதில்லை… இது சூது… மூத்தவரே. அவ்விழிமக்களின் சூதுக்கு இரையாகிவிட்டீர்கள். நான் ஏற்கமாட்டேன்.” திருதராஷ்டிரர் “நான் ஆணையிட்டுவிட்டேன். யுயுத்ஸுவிடம் ஓலையெழுதச் சொல்லிவிட்டேன்” என்றார். “உங்களுக்கே தெரிகிறது இது நெறியின்மை என்று… ஆகவே என்னிடமும் மறைத்தீர்கள்.” திருதராஷ்டிரர் “ஆம், நீ ஏற்கமாட்டாய் என நான் அறிவேன். ஆனால் எனக்கு வேறுநெறி தெரியவில்லை” என்றார். “இது கீழ்மை… மூத்தவரே, அஸ்தினபுரியின் மதவேழம் இழிசேற்றில் விழுந்துவிட்டது…”

“நான் அச்சத்தின் குழியில் விழுந்து நெடுநாட்களாகிறது. பன்னிரண்டு ஆண்டுகாலம் நிம்மதியாகத் துயிலமுடியும் என்றால் அதுமட்டும் போதும் எனக்கு” என்றார் திருதராஷ்டிரர். “சௌனகரே, தருமனிடம் நான் ஆணையிட்டதாகச் சொல்லுங்கள். அனைவரிடமும் இந்தக் கானேகல் அவனே விரும்பி ஏற்றுக்கொண்டதாகவே அவன் சொல்லவேண்டும். பூசலைத்தவிர்க்கும்பொருட்டு அவனே இம்முடிவை முன்வைத்ததாகவே காந்தாரி அறியவேண்டும்…” சௌனகர் “ஆணை” என்றார். “தருமனிடம் என் சொற்களை உரையுங்கள். அவனுக்கு அவன் தந்தையின் நெஞ்சுருகிய நல்வாழ்த்து என்றும் உடனிருக்குமென அறிவியுங்கள்.” “அவ்வாறே” என்றார் சௌனகர்.

அவர் செல்லலாம் என்று திருதராஷ்டிரர் கையசைத்தார். தலைவணங்கி சௌனகர் திரும்பி நடந்தார். விதுரர் “இது கீழ்மை… மூத்தவரே, கீழ்களின் நெறி இது. ஏன் இப்படி வீழ்ந்தீர்கள்?” என்று அழுகையென கூவுவதை அவர் கேட்டார். “பிறிதொன்றும் இங்கு நிகழாது, இளையோனே” என்றார் திருதராஷ்டிரர். “நான் இதை ஏற்கமாட்டேன். என் சொல் இதற்கு உடன்நிற்காது” என்று விதுரர் மேலும் கூவினார். பின் உடைந்து இழுபட்ட குரலில் “நான் முன்னரே எண்ணினேன்…. இதை முன்னரே ஐயப்பட்டேன். உங்களை அறியாமல் உங்கள் உள்ளம் மாறிக்கொண்டிருந்தது… வேண்டாம், மூத்தவரே” என்று அழுதார்.

தொடர்புடைய பதிவுகள்

தேசம் -கடிதம்

$
0
0

 

1

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

அறம் கதைகள் மூலம் தாங்கள் எனக்கு அறிமுகமாகி உங்களை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். நான் பெரிய இலக்கிய வாசகன் இல்லை. இன்னும் சொல்லப்போனால் உங்கள் தளத்தை மட்டுமே பெரும்பாலும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் தளத்தில் அனுபவம் என்னும் சுட்டியின் கீழ் உள்ள கட்டுரைகளை வாசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் அனுபங்களை என் கணினியின் மூலமே இலவசமாக பெற்றுக்கொண்டு விசாலமடைந்து கொண்டிருக்கிறேன்.

அன்னையின் சிறகுக்குள் வாசித்தேன். என் வாழ்வின் கனவுகளில் ஒன்று இந்தியா முழுவதும், ஒவ்வொரு ஊருக்கும் பயணம் செய்ய வேண்டுமென்பது. அவ்வாறு சிந்திக்கையில் என்ன வாகனம் வாங்கிக்கொள்ளலாம் எவ்வளவு பணம் சேர்த்துக்கொள்ளலாம் எவ்வளவு நாட்கள் விடுமுறை வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதுண்டு. ஆனால் தாங்கள் ஹல்த்வானியில் வெறும் 5 ரூபாய்க்கும் கீழாக வைத்துக்கொண்டு சாலைகளில் அலைந்ததை படித்து வியக்காமல் இருக்கமுடியவில்லை.

ஒரு துறவிக்கு சாத்தியமான மனநிலை தங்களுக்கும் சாத்தியமாக இருந்திருக்கிறது என்னும்போது வியக்காமல் இருக்கமுடியவில்லை. நான் இதை எழுதுவதற்கு காரணம் உங்களுக்கு நன்றி கூறவே. உங்கள் எழுத்துக்களால் என் மனம் நிம்மதியும் விசாலமும் கொள்கிறது என்று கூறவே.

நன்றியுடனும், அன்புடனும்,

முருகன்.

 

அன்புள்ள முருகன்

நான் எப்போதும் சொல்வது ஒன்றுண்டு, நேரடியான இந்திய தரிசனம் என்பது ஒருவகையில் சுயதரிசனமேதான்

இங்கு பேசப்படும் அனைத்து பிரிவினை வாத குறுகிய அரசியலையும் கடந்து நம் இறந்தகாலத்தையும் பண்பாட்டையும் முழுமையாகவே பார்த்துவிடமுடியும்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தேசிய கல்விக்கழகத்தில்

$
0
0

1

 

சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலையும் தேசியக் கல்விக்கழகமும் ஒரே வளாகத்திற்குள்தான் உள்ளன. சிவக்குமாரனுடன் இந்த வளாகத்திற்குள் நுழையும்போது நான் முன்னரே கண்டிருந்த ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள்தான் நினைவுக்கு வந்தன. மாதவனுடனும் அரவிந்துடனும் எம்.ஐ.டி ஹார்வார்டுக்கும் திருமலைராஜனுடன் பெர்க்லி பல்கலைக்கும் வேணுதயாநிதியுடன் மினசோட்டா பல்கலைக்கும் பழனிஜோதியுடன் பிரின்ஸ்டனுக்கும் சென்றிருக்கிறேன். இந்தியப் பல்கலைக்கழகங்களில் இல்லாத ஒன்றை அங்கெல்லாம் கண்டிருக்கிறேன். அதை என் மனப்பிரமை என எவரேனும் சொன்னால் அதை மறுக்கவும் மாட்டேன்.

நம் பல்கலைகளில் ஒரு பள்ளிக்கூடத்தன்மை உண்டு. இங்குள்ள ஐ.ஐ.டி போன்ற அமைப்புகள் மேலும் மோசமான பள்ளிக்கூடங்கள்தான். மேலைநாட்டுப் பல்கலைகளில் நான் கண்ட அந்த உணர்வை உயர் கல்விநிலைகளுக்குரிய சுதந்திரமும் தீவிரமும் கலந்த மனநிலை எனச் சொல்வேன். அதை மாணவர்களின் முகங்களில், கல்லூரி அறைகளில், அறிவிப்புப்பலகைகளில் எங்கும் காணலாம்.

 

2 (2)

 

நான்யாங் பல்கலையில்தான் சரவணன் வேலைபார்க்கிறார், முதுநிலை அறிவியலாளராக. அவருடன் அவரது ஆய்வுக்கூடத்தைப்பார்க்க முன்னரே வந்திருக்கிறேன். இப்போது இங்கே ஒரு ‘ஊழியராக’ வருகிறேன். ஒருகுழப்பமான மனநிலை. மோசமான மாணவன் என்று பெயர் பெற்றவன் நான். கல்லூரி பற்றிய நல்ல நினைவுகள் ஏதும் கைவசமில்லை. அந்தச்சூழல் ஒருவகை கிளர்ச்சியையும் பதற்றத்தையும் அளித்தது.

பல்கலையில் என் அறை பெரிய மேஜையும் சிவப்பு மெத்தை நாற்காலிகளும் கொண்டது. அரசு அதிகாரிகளுக்குரிய அறை. இங்கேதான் நான் இருக்கவேண்டும், மாணவர்கள் வந்து சந்திக்கலாம். முதல்நாள் பொறுப்பேற்றுக்கொண்டேன். இணையவசதி, ஊழியர் அட்டைபெறுதல் என சின்னச்சின்ன வேலைகளில் இன்றும் போயிற்று. உண்மையில் வேலை நாளைமுதல்தான்.

எனக்கான வீடு நாலைந்துபேர் வசதியாகத் தங்க ஏற்றது. சோபா மற்றும் மரச்சாமான்களுடன் கூடிய பெரிய கூடம். படுக்கையறைகள் இரண்டு. சமையலறை. இரு குளியலறைகள். ஏசி சற்று ‘மக்கர்’ செய்தது. கூப்பிட்டு சொன்னதும் ஆளனுப்பிச் சரி செய்து கொடுத்தார்கள். பெரிய குடியிருப்பு வளாகம் இது. என் அடுக்குமாடிக்கட்டிடத்தின் கீழேயே ஒரு சீன உணவகமும் ஒரு மலாய் உணவகமும் இருக்கின்றன. சாலை தொடங்கும் இடத்தில் மளிகை மற்றும் பொருட்களை விற்கும் நான்கு பெரிய கடைகள். நேற்று சென்று சில அவசியப்பொருட்களை வாங்கிக்கொண்டேன்.

 

3 (2)

 

தனிமை. நான் ஊரிலும் மாடியறையில் தனிமையில்தான் இருக்கிறேன் என்றாலும் கீழே ஆளிருக்கிறது என்னும் உணர்வு இருந்தது, அதாவது தெய்வங்களுக்கு இருக்கும் பாதுகாப்புணர்வு. லண்டனில் ராய் மாக்ஸம் தனியாக இருப்பதைப் பார்த்தபோது ஓர் ஆசை எழுந்தது. வயதான காலத்தில் தனியாக இருக்கவேண்டும் என. எவரிடமும் கருணையையோ உதவியையோ நாடக்கூடாது. அதிலும் எக்காரணத்தாலும் பெண்களிடம் உதவிகோரக்கூடாது. பெண்கள் ஒரு வயதுக்குமேல் ஆண்களை வெற்றுச்சுமைகளாக உணர்வார்கள். சரியாக அந்தக் காலகட்டத்தில்தான் ஆண்கள் பெண்களைச் சார்ந்தும் இருப்பார்கள். கம்பீரம் தோரணை எல்லாம் போய் ‘பேச்சுகேட்க’ ஆரம்பிக்கும் காலம் அது.

ஆகவே இந்தத் தனிமையைப் பயன்படுத்தி வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் என எண்ணியிருந்தேன். ஒரு குடியை அமைப்பது மூளையை விண் விண் என தெறிக்கச் செய்கிறது. வாங்கவேண்டிய பொருட்களை கடைக்குச் சென்றதுமே மறந்துவிட்டேன். சம்பந்தமே இல்லாமல் ஒரு பெட்டி பேப்பர் கைக்குட்டைகள் வாங்கிக்கொண்டு திரும்பி வந்தேன். வாங்கச்சென்றது துணிதுவைக்கும் சோப்புத்தூள், பற்பசை முதலியவை.

 

IMG_0613

பரவாயில்லை, ஒருமாதிரி பயிற்சியால் சமாளித்துவிடலாம். நண்பர் கிருஷ்ணன் காலையில் எழுந்ததும் ஒருமணிநேரத்தில் சோறு குழம்பு ரசம் பொரியல் என விரிவாகச் சமைத்துவிட்டு நீதிமன்றம் செல்கிறார். அவரது அம்மா சென்ற வருடம் இறப்பது வரை அவருக்கு வெந்நீர் வைக்கக்கூடத் தெரியாது. அம்மா நாளெல்லாம் செய்யும் வேலையை ஒருமணி நேரத்தில் அவர் செய்கிறார். என்னைப் பொறுத்தவரை நான் அறிவித்துக்கொண்ட ஆணாதிக்கவாதி என்பதனால் எந்தவேலையும் பெண்களைவிட ஆண் சிறப்பாகச் செய்யமுடியும், செய்யவேண்டும் – பிள்ளைபெற்றுக்கொள்வதைத் தவிர.

இரவு வெண்முரசு எழுதிவிட்டு ஒன்றரை மணிக்கு தூங்கினேன். என் உடலுக்கு அப்போது பதினொன்றரை மணிதான். காலையில் உடம்பு ஐந்து என்னும்போது கடிகாரம் ஏழரை என்கிறது. அதைத்தான் கொஞ்சம் சமாளிக்கவேண்டும்.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11

$
0
0

[ 17 ]

புஷ்பகோஷ்டத்தின் முகப்பில் கனகர் நின்றிருந்தார். யுதிஷ்டிரரும் தம்பியரும் அணுகுவதைக் கண்டதும் அவர் முன்னால் வந்து சொல்லின்றி வணங்கினார். முதலில் வந்த சௌனகர் “பேரரசர் இருக்கிறார் அல்லவா?” என்றார். கனகர் “ஆம், அமைச்சரே” என்றார். “இசை கேட்கிறாரா?” என்றார் சௌனகர். “ஆம்” என்றார் கனகர். அவர்களை அணுகிய யுதிஷ்டிரர் “இசை மட்டுமே இப்போது அவருடன் இருக்கமுடியும்” என்றார். கனகர் பெருமூச்சுடன் “ஆம்” என்றார்.

அவர் திரும்பி ஆணையிட ஏவலன் ஒருவன் யுதிஷ்டிரரையும் தம்பியரையும் வணங்கி மேலே அழைத்துச்சென்றான். சௌனகர் பின்தங்கி கனகரிடம் “விதுரர் எங்கே இருக்கிறார்?” என்றார். “அவரது மாளிகையில்தான்… அவர் உள்ளேயே இருந்திருக்கிறார். இருண்ட உள்ளறைக்குள் தன்னை தாழிட்டுக்கொண்டிருக்கிறார். அதை எவரும் காணவில்லை” என்றார் கனகர். “பேரரசர் அவரை அழைத்துவரச் சொல்லவில்லையா?” கனகர் “பலமுறை” என்றார். “தூதர்கள் சென்றனர். நானே இருமுறை சென்றேன். யுயுத்ஸுவும் சஞ்சயனும் சென்றனர். எவரையும் அவர் பார்க்க ஒப்பவில்லை.”

தலையசைத்தபின் சௌனகர் முன்னால் செல்ல கனகர் பின்னால் வந்தபடி “அரசி யாதவப்பேரரசியின் வாழ்த்துக்களைப் பெறச் சென்றிருக்கிறார். அங்கிருந்து இங்கேயே வருவதாக சொல்லப்பட்டது” என்றார். சௌனகர் “ஆம், பேரரசரின் வாழ்த்தும் அவர்களுக்குத் தேவை அல்லவா?” என்றார். கனகர் அந்த முறைமைச் சொற்றொடரை ஓரவிழியால் சற்று வியப்புடன் நோக்கிவிட்டு உடன்வந்தார். இசைக்கூட வாயிலில் நின்ற காவலன் உள்ளே சென்று அறிவித்துவிட்டு வெளியே வந்தான். அவன் தலைவணங்கி ஆற்றுப்படுத்தும் கையசைவைக் காட்ட யுதிஷ்டிரர் தன் மரவுரி மேலாடையை சீரமைத்தபடி உள்ளே சென்றார்.

உள்ளே அமர்ந்திருந்த சூதர்கள் முன்னரே இசையை நிறுத்தி எழுந்துவிட்டிருந்தனர். அவர்கள் தலைவணங்கி பின்னால்செல்லும் ஓசையுடன் அவர்களின் காலடிகளின் ஓசையும் கலந்து காற்று இலைகளை அசைப்பது போல ஒலித்தது. சஞ்சயன் மெல்லிய குரலில் அவர்களின் வருகையை திருதராஷ்டிரருக்கு சொல்லிக்கொண்டிருந்தான். அவன் இதழ்கள் அசைவது மட்டுமே தெரிந்தது. திருதராஷ்டிரரின் செவிகள் அவன் உதடுகளுடன் காணாக்காற்று ஒன்றால் இணைக்கப்பட்டிருப்பதுபோல் தோன்றியது. திருதராஷ்டிரர் தலையை வலிகொண்டவர் போல அசைத்தபடியே இருந்தார். சற்று அப்பால் யுயுத்ஸு நின்றிருந்தான்.

யுதிஷ்டிரர் அவரை அணுகி கால்தொட்டு தலைவைத்து “வாழ்த்துங்கள், தந்தையே” என்றார். திருதராஷ்டிரர் அசையாமல் அமர்ந்திருந்தார். அவருடைய பெருங்கைகள் செயலற்று இருபக்கமும் பீடத்தின் கைப்பிடியில் கிடந்தன. யுதிஷ்டிரர் “தங்கள் சொற்கள் என் தந்தையின் துணை என உடனிருக்கவேண்டும்” என்றார். யுயுத்ஸு அருகே வந்து “தந்தையே, வாழ்த்துங்கள்!” என்றான். திருதராஷ்டிரர் தன் வலக்கையைத் தூக்கி யுதிஷ்டிரர் தலைமேல் வைத்து “நலமே விளைக!” என்றார். அர்ஜுனனும் பீமனும் நகுலனும் வணங்கியபோதும் பாவைபோல தலைதொட்டு அச்சொற்களை சொன்னார். சகதேவன் வணங்கியபோது பெருமூச்சுவிட்டு சிலகணங்கள் கடந்து அச்சொற்களை சொன்னார்.

செல்லலாம் என யுயுத்ஸு விழிகாட்டினான். தருமன் புன்னகையுடன் தலையசைத்துவிட்டு திரும்பியபோது வெளியே இருந்து ஏவலன் வந்து வணங்கி திரௌபதி வந்திருப்பதை திருதராஷ்டிரருக்கு அறிவித்தான். அவர் அறியாமல் பீடம் விட்டு எழுந்து பின்பு அமர்ந்து “ம்ம்ம்” என உறுமினார். அவருடைய கைகள் இருக்கையின் பிடியை இறுகப்பற்றியிருந்தன. நரம்புகள் தெறித்து நிற்க பெரிய தோள்தசை இரையுண்ட மலைப்பாம்பு போல புடைத்து அசைந்தது.

சௌனகர் வாயிலையே தன்னைமறந்து நோக்கிக்கொண்டிருந்தார். அவைநிகழ்வுக்குப்பின் அவர் திரௌபதியை பார்த்திருக்கவில்லை. ஓசையில்லாது கதவு திறக்க செந்நிற மரவுரியாடை அணிந்த திரௌபதி செம்போத்தின் இறகுபோல காற்றில் மிதந்து வந்தாள். தலை நிமிர்ந்திருந்தது. ஐந்துபுரிகளாக நீள்கூந்தல் இறங்கி தோளில் பரவியிருந்தது. தயக்கமற்ற விழிகளுடன் அவர்களைப் பார்த்தபடி அணுகினாள். அவளை உற்று நோக்குவதை உணர்ந்த சௌனகர் விழிவிலக்கிக்கொண்டார். உடனே யுதிஷ்டிரரைப் பற்றிய எண்ணம் எழ திரும்பி நோக்கினார். அவரும் அவளையே விரிந்த விழிகளுடன் புதிய ஒருத்தியை என நோக்கிக்கொண்டிருந்தார்.

திரௌபதி திருதராஷ்டிரரின் அருகே வந்தபோது சஞ்சயனின் சொற்றொடர்களில் ஒன்றை உதடசைவாக சௌனகர் உணர்ந்தார். “வஞ்சமே அற்ற விழிகள்.” அவர் திடுக்கிட்டு அவன் உதடுகளையே நோக்கினார். அவை சொன்ன பிற சொற்கள் புரியவில்லை. உண்மையா, அல்லது தன் சித்தமயக்கா? அக்கணம் அடுத்த சொல்லாட்சியை அவரது அகம் அறிந்தது. “எரிமீண்ட பொன்னின் ஒளி.” அவர் படபடப்புடன் சஞ்சயனின் உதடுகளையே நோக்கிக்கொண்டிருந்தார். அவை மிக அருகே வந்து விழிநிறைத்தன. வெறும் அசைவு. மலர்கள் போல. அவற்றின் மலர்வும் குவிவும் அசைவும் ஒளியும் மானுடர் அறியமுடியாத மொழி பேசுபவை. உண்மையில் அவன் பேசிக்கொண்டிருக்கிறனா?

திரௌபதி அரிவையருக்குரிய கார்வைகொண்ட இன்குரலில் “தாள்பணிகிறேன், தந்தையே” என்றாள். அவள் குனியப்போகும் கணம் திருதராஷ்டிரர் கைநீட்டி அவளைத் தடுத்து “வேண்டாம்” என்றார். “நீ என்னைப் பணியவேண்டியவள் அல்ல. நான்…” என்றபின் தத்தளித்து கையை அசைத்து “ஆற்றுவதென்ன என்பது உனக்குத் தெரியும். உன் முன் நான் மிகமிக எளியவன். இங்குள்ள பிற அனைவரையும்போல…” என்றார். சொற்கள் எழாமல் முழு உடலும் தவிக்க “இங்கு நிகழ்வதென்ன என்று எனக்குத் தெரியவில்லை. நான் வெறும் விலங்கு… உணர்வுகளால் கொண்டுசெல்லப்படுகிறேன்” என்றார்.

“முறைமை என ஒன்றுள்ளது, தந்தையே” என்றாள் திரௌபதி. “இங்கு நான் என் கணவர்களின் மனைவியென வந்துள்ளேன்.” குனிந்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினாள். “நீ உள்ளே வந்ததை இவன் சொன்னான். நான் உன்னை பார்த்துவிட்டேன்… முழுமையாக” என்றார் அவர். “சொல்லில் இருந்தே அத்தனை தெய்வங்களும் விழியுருக்கொண்டு எழுகின்றன…” அவர் கைகளைக் கூப்பி தலையை சரித்து “என் மைந்தன்… அவனும் என்னைப்போலவே மூடன். என் மைந்தர்களை என் இருளில் இருந்து இழுத்தெடுத்து வெளியே விட்டேன். மிகமிக எளியவர்கள்…” என்றவர் கூப்பிய கைகளை தலைக்குமேல் தூக்கி “அதற்கப்பால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை…” என்றார்.

“உங்கள் வாழ்த்துக்களுடன் காடேகி மீள்கிறோம், தந்தையே” என்றாள் திரௌபதி. யுதிஷ்டிரர் “தங்கள் வாழ்த்துக்கள் போதும்” என்றார். திருதராஷ்டிரர் மெல்லிய குரலில் விசும்பினார். தலையை கைகளால் தாங்கிக்கொண்டு பெருந்தோள்கள் தசைபுடைக்க குறுகி அதிர மெல்ல அழத்தொடங்கினார். யுயுத்ஸு அவர் தோள்களில் கையை வைக்க அதை தன் இருகைகளாலும் பற்றி தன் தலைமேல் வைத்துக்கொண்டு அவர் அழுதார். அகன்ற முகத்தில் கண்ணீர் வழிந்து தாடியின் மயிரிழைகளிலும் மார்பின் கருந்தோல்பரப்பிலும் சொட்டியது. சௌனகர் யுதிஷ்டிரரின் தோளைத் தொட்டு ‘செல்வோம்’ என்று கைகாட்டினார்.

பெருமூச்சுடன் யுதிஷ்டிரர் திரும்பினார். அவர்கள் சற்று நடந்ததும் பீமன் நின்று திரும்பி திருதராஷ்டிரரை நோக்கினான். சௌனகர் “செல்வோம், இளவரசே” என மெல்லிய குரலில் சொன்னார். பீமனின் பெரிய கைகள் எழுந்தன. எதையோ அவை சொல்லப்போகின்றன என்று தோன்றியது. அவை பின்பு தளர்ந்து விழுந்தன. அவன் தலையை அசைத்துக்கொண்டு வெளியே சென்றான். அவர்கள் வெளியே சென்று வாயில் பின்பக்கம் மூடப்பட்டதும் யுதிஷ்டிரர் “பெரியதந்தை வருந்துகிறார். கனகரே, நான் விரும்பியே காடேகிறேன் என அவரிடம் சொல்லுங்கள்” என்றார். “பலமுறை அதை சொல்லிவிட்டோம், அரசே” என்றார் கனகர். “தேறிவிடுவார். அவருக்கு இசை இருக்கிறது…” என்ற தருமன் “விந்தைதான். இசை இறந்தகாலத்தில் மட்டுமே இருக்கிறது. நிகழ்வதையும் வருவதையும் அது முழுமையாகவே அழித்துவிடுகிறது” என்றார்.

விழிகளால் அப்பால் நின்றிருந்த சுரேசரிடம் பேசிவிட்ட சௌனகர் “அரசே, நாம் காந்தார மாளிகைக்குச் சென்று பேரரசியிடம் விடைகொள்ளவேண்டும்” என்றார். “இப்போதே பொழுது இறங்கத் தொடங்கிவிட்டது. அந்திக்குள் நாம் கோட்டையை கடக்கவேண்டும்…” யுதிஷ்டிரர் “ஆம், விரைந்துசெல்வோம்” என்றார். திரௌபதி எதையும் கேட்காதவள் போலிருந்தாள். பாண்டவர்கள் ஐவருமே அவளை நோக்கவில்லை. ஆனால் அவர்களின் உடல்கள் அவளை அறிந்துகொண்டே இருந்தன என்பது தெரிந்தது.

இடைநாழி வழியாக அவர்கள் நடந்தபோது காவலர்களும் ஏவலர்களும் சுவர்களிலும் தூண்களிலும் முதுகு ஒட்டி நின்று கைகூப்பி அவர்களை நோக்கினர். பலர் விழிகள் நீர் நிறைந்து ஒளிகொண்டிருந்தன. கடந்துசென்றபின் விசும்பல்களை கேட்க முடிந்தது. அவர்களின் வருகையை அறிவிக்க சுரேசர் முன்னால் ஓடினார். அவரது காலடியோசை எழுந்து அடங்கியது. பின்னர் அவர்களின் காலடியோசை மட்டும் ஒலித்தது. மாறாச்சொற்றொடர்போல முதலில் கேட்டது. பின்னர் அதுவே மெல்லிய உரையாடலாக கேட்டது. பின்னர் சௌனகர் அறிந்தார், திரௌபதியின் காலடியோசை மட்டும் தனித்துக் கேட்பதை. சீரான தாளமாக அது ஒலிக்க பிற அனைவரின் காலடிகளும் தயங்கியும் சீர்பிறழ்ந்தும் உடன் சென்றன.

காந்தார மாளிகையில் அவர்களை வரவேற்க சத்யசேனை வந்து வெளியே நின்றிருந்தாள். உடன் அசலையும் தசார்ணையும் நின்றனர். யுதிஷ்டிரர் சத்யசேனையை வணங்கி “அன்னையிடம் விடைபெற்றுச்செல்ல வந்தோம், இளைய அன்னையே” என்றார். “காத்திருக்கிறார்” என்றாள் சத்யசேனை. திரௌபதி அருகே வர சத்யசேனை அவள் தோளை வளைத்து மெல்ல அணைத்துக்கொண்டாள். தசார்ணையும் அசலையும் அவள் கைகளை பற்றிக்கொண்டார்கள். அவர்கள் சற்று பின்னடைய தசார்ணை மெல்லிய குரலில் திரௌபதியிடம் “என்னடி சொன்னார்கள் யாதவஅரசி?” என்று கேட்பது காதில் விழுந்தது. திரௌபதி உரைத்த மறுமொழி செவியை அடையவில்லை.

கூடத்தின் மையத்தில் பீடத்தில் காந்தாரி அமர்ந்திருந்தாள். அவளருகே பானுமதியும் சத்யவிரதையும் நின்றிருக்க அப்பால் இளையகாந்தாரியரும் அவர்களின் மருகியரும் நின்றிருந்தனர். அத்தனைபேர் இருந்தும் அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது. பெண்திரளின் வியர்வையும் மலர்மணங்களும் சுண்ணப்பொடிமணங்களும் கூந்தல்தைலமணங்களும் கலந்து காற்றில் நிறைந்திருந்தன. ஆடைகள் காற்றிலாடும் மெல்லிய ஒலி. எழுந்தமரும் கைகளின் வளையல்களின் கிலுக்கம். தொலைவில் மரக்கிளைகளைக் குலுக்கியது காற்று. இரு காகங்கள் சிறகசைவொலியுடன் காற்றலைமேல் ஏறிக்கொண்டன.

யுதிஷ்டிரர் காந்தாரியின் அருகே சென்று குனிந்து கால்தொட்டு தலையில் வைத்து “வாழ்த்துங்கள், அன்னையே. பூசல்களில் இருந்து விலகிச்செல்ல விரும்பினேன். ஆகவே காடேகலாம் என்று முடிவெடுத்தேன். என் உளமுகந்த அறநிலைகளில் சென்று சொல்லாய்ந்து மீளலாமென எண்ணுகிறேன்” என்றார். காந்தாரி பெருமூச்சுடன் “அனைத்தையும் நான் அறிவேன்” என்றாள். யுதிஷ்டிரர் “தங்கள் வாழ்த்து என்னுடன் இருக்கவேண்டும்” என்றார். “அறம் என்றும் எங்கள் அன்னையரால் வாழ்த்தப்படுவது. அவ்வாழ்த்து உடனிருக்கட்டும்” என்றாள் காந்தாரி.

அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் அவள் கால்தொட்டு வணங்க “நன்று சூழ்க!” என்று சொல்லி வாழ்த்தினாள். பீமன் நோக்கு மங்க வேறெதையோ எண்ணுபவன்போல நின்றிருந்தான். “இளவரசே” என்றார் சௌனகர். அவன் மீண்டு சூழலை உணர்ந்தபின் சென்று குனிந்து கால்களைத் தொட்டு வணங்கினான். ஒன்றும் சொல்லாமல் அவள் அவன் தலையை மட்டும் தொட்டாள். சௌனகர் அவள் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தார். அவள் வெண்முகம் குருதிநிறைத்த கலம்போலிருந்தது. மூக்கும் செவிமுனைகளும் கன்னவளைவும் குருதியென்றே தோன்றின. கன்னங்களில் நீலவலைபோலப் பரவிய நரம்புகள் இணைந்து கழுத்தில் புடைத்து இறங்கின. பீமன் எழுந்து விலகியதும் அவள் மெல்ல முனகியபடி அசைந்து அமர்ந்தாள்.

திரௌபதி வணங்கியபோது காந்தாரி அவள் நெற்றிப்பொட்டில் குங்குமத்தை வைத்து “வெல்க!” என்று மட்டும் சொன்னாள். திரௌபதி எழுந்து இளையகாந்தாரியரை கால்தொட்டு வணங்கி வாழ்த்துபெற்றாள். பானுமதியை அவள் அணுகி “வருகிறேனடி” என்றபோது அவள் திரௌபதியை தோள்சுற்றி அணைத்துக்கொண்டாள். யுதிஷ்டிரர் மெல்லியகுரலில் “நாம் கிளம்பியாகவேண்டும்” என்றார். “ஆம்” என்ற சௌனகர் “நாம் கிளம்பும்நேரம் அரசி” என்றார். திரௌபதி பானுமதியின் வெண்சங்குவளையிட்ட கைகளை மீண்டும் பற்றி “வருகிறேனடி, மைந்தர்களை பார்த்துக்கொள்” என்றாள். பானுமதி விழிகளில் நீர் நிறைந்திருக்க தலையசைத்தாள்.

[ 18 ]

அரண்மனைவளாகத்திலிருந்து யுதிஷ்டிரரும் இளையவர்களும் கிளம்பியபோது அரசகுடியினர் எவரும் வழியனுப்ப வரவில்லை. தௌம்யர் தன் மாணவர்களுடன் வந்திருந்தார். அவர்கள் கங்கைநீரை மரக்குவளைகளில் கொண்டுவந்திருந்தனர். “தௌம்யரே, நான் இன்று விடுபட்ட அடிமை, குடிகளுடன் வாழ நெறியொப்புதல் இல்லாமல் காடேகுபவன்” என்றார் யுதிஷ்டிரர். “வைதிகர் என்னை வாழ்த்தலாமா என்றறியேன்.” தௌம்யர் சிரித்துக்கொண்டு “அரசே, நீங்கள் சத்ராஜித்தாக மணிமுடி சூடி அரசமர்ந்திருந்தபோது பொற்குடங்களில் கொண்டுவரப்பட்ட அதே கங்கைநீர்தான் இதுவும்” என்றார்.

“வைதிகன் எரிபற்றி ஏறிய விறகு. அவன் ஊழை எரியே வகுக்கிறது. எனக்கு ஆணையிட அழியாச்சொல் அன்றி மண்ணிலும் விண்ணிலும் எவருமில்லை” என்றார் தௌம்யர். “நானும் என் மாணவர்களும் உங்களுடன் சௌனகக்காடு வரை வருவதாக திட்டமிட்டிருக்கிறோம்.” மாவிலையால் கங்கைநீர்தொட்டுத் தெளித்து வேதமோதி அவர் யுதிஷ்டிரரை வாழ்த்தினார். பாண்டவர்கள் அவரது கால்களைத் தொட்டு வணங்கியபோது “தெய்வங்களைப் பேணுக! தெய்வங்கள் உங்களைப் பேணும். அறத்தைப் பேணுக. அறம் உங்களைப் பேணும். சொல்லைப் பேணுக. சொல் உங்களைப் பேணும். ஒருவரை ஒருவர் பேணுக! ஒன்றாகத் திகழ்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என வாழ்த்துரைத்தார்.

மரவுரி ஆடையை இடையில் நன்றாகச் சுற்றியபடி யுதிஷ்டிரர் முதலில் நடந்தார். தொடர்ந்து திரௌபதி சென்றாள். பீமனும் அர்ஜுனனும் தொடர்ந்து செல்ல நகுலனும் சகதேவனும் அவர்களுக்குப்பின்னால் சென்றனர். முகப்பில் தௌம்யர் தன் மாணவர்களுடன் நடந்தார். இறுதியில் சௌனகர் சென்றார். அரண்மனையின் அனைத்துச் சாளரங்களிலும் உப்பரிகைகளிலும் முகங்கள் செறிந்திருந்தன. கீழே இடைநாழியில் தோளோடுதோள் ஒட்டி காவலரும் ஏவலரும் நின்றிருந்தனர். முற்றத்தின் ஓரங்களில் அசைவற்ற குறுங்காடு போல அரண்மனைச்சூதர் நெருங்கி நின்றனர்.

குதிரைகளின் மணிகள் குலுங்குவதும் சாளரக்கதவுகள் காற்றில் ஆடுவதும் மட்டும் அமைதிக்குள் கேட்டன. எவரோ ஒருவர் தும்மிய ஒலிகேட்டு பலர் திரும்பிப்பார்த்தனர். பாண்டவர்கள் மரக்குறடுகள் ஒலிக்க கல்பாவிய தரையில் நடந்து முற்றத்தைக் கடந்ததும் ஒற்றைப்பெருமூச்சு ஒலிக்க அரண்மனைவளாகமே உயிர்த்தது. பின்னர் மெல்லிய ரீங்காரமாக பேச்சொலிகள் எழுந்தன. எவரோ அதட்டும் குரலில் அனைவரையும் பணிக்கு மீளும்படி ஆணையிட்டனர். அவர்கள் கலைந்தபோது பறவைகள் சேக்கேறிய மரமென அரண்மனை ஓசையிட்டது.

அவர்கள் அரண்மனை முற்றத்திலிருந்து பெருஞ்சாலைக்குள் நுழைந்ததும் இயல்பாகவே யுதிஷ்டிரரின் செவி முரசொலியை எதிர்பார்த்தது. அது எழாமை கண்டு திகைப்புடன் விழிதூக்கியபோது முரசருகே தன்னையறியாமல் கழிதூக்கிய முரசறைவோன் திகைப்புடன் ஓங்கிய கழி காற்றில் நிற்க திறந்தவாயுடன் விழிவெண்மை ஒளிர நின்றிருப்பதைக் கண்டார். புன்னகையுடன் நோக்கை தாழ்த்திக்கொண்டார். சௌனகர் அந்த முரசறைவோன் தளர்ந்து தூணைப்பற்றிக்கொண்டு கீழே நோக்கி நிற்பதை கண்டார். அவன் தோழன் அவனுடைய தோளில் கைவைத்தான்.

அரசப்பாதையில் அதற்குள் மக்கள் கூடத்தொடங்கியிருந்தனர். அவர்கள் அவ்வழி செல்லக்கூடுமென முன்னரே அவர்களுக்கு தெரிந்திருந்தது. அவர்களைப் பார்த்தவர்கள் குரல்கொடுக்க வீடுகளுக்குள் இருந்தும் ஊடுபாதைகளுக்குள்ளிருந்தும் மக்கள் வந்து கூடினர். கூப்பியகைகளுடன் நீர் வழியும் விழிகளுடன் வெறுமனே அவர்களை நோக்கி நின்றனர். அவர்களின் நோக்குகளுக்கு நடுவே யுதிஷ்டிரர் கைகளைக் கூப்பியபடி தலைகுனிந்து நடந்தார். அவர் மாலைவெயிலில் தழல்போல சுடர்விட்ட தாடியுடன் தெய்வமுகம் கொண்டிருந்தார். திரௌபதி எதிர்வெயிலுக்கு விழிகூச மரவுரியால் தன் முகத்தை மறைத்துக்கொண்டு நடந்தாள். தொலைவுப்புள்ளி ஒன்றை நோக்கியவனாக அர்ஜுனன் செல்ல பீமன் சிறிய விழிகளால் இருபக்கமும் நோக்கி கைகளை ஆட்டியபடி கரடியைப்போல நடந்தான்.

அவர்கள் செல்லச்செல்ல இருபக்கமும் செறிந்த கூட்டம் அணுகி வந்தது. ஓசைகளும் கூடின. அவர்கள் ஒருவரை ஒருவர் முட்டி முன்னால் வர பூசலும் உதிரிச்சொற்களும் விம்மல்களும் தேம்பல்களும் கலந்து ஓசையாயின. ஒரு முதியவள் கூட்டத்திலிருந்து கிளம்பி கைகளை விரித்து “பெண்பழி சூடிய இந்நகர் கல்மீது கல்நிற்காது அழிக! என் கொடிவழியினரும் இதற்காகப் பழிகொள்க!” என்று கூவியபடி திரௌபதியை நோக்கி ஓடிவந்தாள். காலிடறி அவள் சாலையிலேயே குப்புற விழ தொடர்ந்து வந்த இரு பெண்கள் அவளை தூக்கிக்கொண்டனர். முதியவள் மண்படிந்த முகத்தில் பல் பெயர்ந்து குருதிவழிய “கொற்றவையே! அன்னையே! உன் பழிகொள்ளுமாறு ஆயிற்றே” என்று கூச்சலிட்டாள். சன்னதம் கொண்டவள்போல அவள் உடல் நடுங்கியது. அப்படியே மண்டியிட்டு திரௌபதியின் கால்களை பற்றிக்கொண்டாள்.

மேலும் மேலும் பெண்கள் அழுதபடி, கைவிரித்துக் கூவியபடி, வந்து திரௌபதியை சூழ்ந்துகொண்டார்கள். அவள் மரவுரியாடையைத் தொட்டு கண்களில் ஒற்றினர். அவள் காலடியில் தங்கள் தலைகளை வைத்து வணங்கினர். அவள் கைகளை எடுத்து சென்னிசூடினர். அவள் அவர்கள் எவரையும் அறியாமல் கனவில் இருப்பவள் போலிருந்தாள். சற்றுநேரத்தில் பாண்டவர் ஐவரும் விலக்கப்பட்டு அவள் மட்டும் மக்களால் சூழப்பட்டிருந்தாள். அவளைச் சூழ்ந்து பெண்களின் உடல்கள் வண்ணங்களாக கொந்தளித்தன. குரல்கள் பறவைப்பூசலென ஒலித்தன.

SOLVALAR_KAADU_EPI_11

அப்பால் விலகி விழிகள் மட்டும் வெறித்திருக்க பாண்டவர் நின்றனர். சூழ நின்றிருந்த குடிமக்களில் ஆண்களின் முகங்கள் அனைத்தும் அவர்கள் முகங்களைப்போலவே இருந்தன. சில முதியவர்கள் கைகூப்பியிருந்தனர். தௌம்யர் உரக்க “வழிவிடுங்கள்… அவர்கள் அந்திக்குள் வாயிலை கடந்தாகவேண்டும்!” என்றார். அவரது மாணவர்கள் பெண்களை விலக்கி திரௌபதி முன்னகர வழியமைத்தனர். அவள் புழுதியில் கால்வைத்து நடக்க பெண்கள் அரற்றியழுதபடி அவளை தொடர்ந்துவந்தனர்.

கோட்டைமுற்றத்தை அவர்கள் சென்றடைவதற்குள் பல இடங்களில் நிற்கவேண்டியிருந்தது. மெல்ல தருமனையும் இளையவர்களையும் சூழ்ந்து மக்கள் நெரிக்கத் தொடங்கினர். “அனைத்தும் ஊழ்! நஞ்சில் பெருநஞ்சு ஊழே! ஆலகாலமும் அதன்முன் பனித்துளியே!” என்று ஒரு சூதன் கூவினான். “அரசே, முடிசூடினாலும் இல்லாவிடினும் நீங்கள் அரசர். எங்கிருந்தாலும் எங்கள் உளமுறைபவர்” என்று ஒரு முதியவன் தருமனின் கைகளைத் தொட்டு கண்களில் ஒற்றியபடி சொன்னான். “பழிசெய்து வாழ்ந்தவர் என எவருமில்லை. புராணங்கள் பொய் சொல்வதில்லை” என்றார் இன்னொரு முதியவர். “அயோத்தியின் ராமன் மானுடனாகக் காடேகி தெய்வமென மீண்டான்!” என்றார் ஒரு வணிகர்.

கண்ணீர் நிறைந்த பார்வையுடன் கைகூப்பி ஒன்றும் சொல்லாமல் கூட்டத்தால் முட்டப்பட்டு தள்ளாடியபடி யுதிஷ்டிரர் சென்றார். கோட்டைமுகப்பில் அவர்கள் சூழப்பட்டார்கள். கோட்டையின் அத்தனை மேடைகளிலும் படைவீரர்கள் வௌவால்கள்போல செறிந்து நின்று விழிமின்ன நோக்கிக்கொண்டிருந்தனர். “வழிவிடுக! விலகுக!” என தௌம்யர் கூவிக்கொண்டிருந்தார். சௌனகர் “விலகுங்கள்! அந்தியாகிறது!” என்றார். கூட்டம் விலகவில்லை. பீமன் “நீங்கள் பேசுங்கள், மூத்தவரே, அவர்கள் காத்திருப்பது அதற்காகவே” என்றான். யுதிஷ்டிரர் வெறுமனே நோக்கினார். “பேசுங்கள், அரசே!” என்றார் தௌம்யர்.

யுதிஷ்டிரர் இருமுறை தொண்டையை கனைத்தார். உதடுகள் மட்டும் அசைந்தன. “அன்புக்குரியவர்களே!” என அவர் அழைத்தது ஒலியாகவில்லை. மீண்டும் அழைத்தபோது அக்குரல்கேட்டு அவரே திடுக்கிட்டார். பின்பு “நான் விடைபெறுகிறேன். எங்கிருந்தாலும் உங்களுடன் இருப்பேன்” என்றார். “அரசே! நாங்களும் உங்களுடன் வருகிறோம். நீங்கள் இருக்குமிடமே எங்கள் ஊர்” என்று ஒரு குடித்தலைவர் கூவினார். “இல்லை. அது நான் பூண்ட நெறிக்கு மாறானது. மானுடர் வாழும் ஊர்களில் நான் வாழக்கூடாது. காடுகளில் அறவோருடன் வாழவே நானும் விழைகிறேன்” என்றார் யுதிஷ்டிரர்.

“இவையனைத்தும் என் பிழையால் விளைந்தவை. தந்தையருக்கும் குலப்பெண்டிருக்கும் பழிகொண்டு வந்தேன். அதை அறவோர் காலடியில் அமர்ந்து பிழைநிகர் செய்கிறேன். தூயவனாக திரும்பி வருகிறேன். அதுவரை இந்நகரை ஆள்பவர்களை உங்கள் தந்தையெனக் கருதுக! அவர்களின் ஆணைகள் தெய்வச்சொல் என ஆகுக! இங்கே என் பெரியதந்தை வாழ்கிறார். அவர் அறச்செல்வர். அவரது நெஞ்சக்கனல் தென்னெரி என எரிகையில் இந்த நகர் வேள்விக்குண்டம் என்றே தூய்மைகொண்டிருக்கும். ஆம், அவ்வாறே ஆகுக!”

குனிந்து அஸ்தினபுரியின் மண்ணைத் தொட்டு சென்னிசூடியபின் கைகூப்பி யுதிஷ்டிரர் கோட்டைவாயிலை நோக்கி சென்றார். “அரசே! அரசே!” என்று கூவியபடி கூட்டம் கைகூப்பி கண்ணீர்விட்டு நின்றது. எவரோ “குருகுலமுதல்வர் வாழ்க! மூத்த பாண்டவர் வாழ்க!” என கூவினார். “அறச்செல்வர் வாழ்க! அஸ்தினபுரியின் மைந்தர் வாழ்க!” என கூட்டம் வாழ்த்தொலி எழுப்பியது.

வாழ்த்தொலி நடுவே நடந்த தருமன் கோட்டைவாயிலை அடைந்து அதைக் கடந்ததும் ஒரு முதிய முரசறைவோன் வெறிகொண்டு ஓடிச்சென்று முழைத்தடிகளை எடுத்து முரசொலிக்கத் தொடங்கினான். ஒருகணம் திகைத்த வீரர்கள் ஒற்றைக்குரலில் “குருகுலமூத்தோர் வாழ்க! அறச்செல்வர் வாழ்க!” என வாழ்த்தினர். நூற்றுவர்தலைவர்கள் கைநீட்டி கூச்சலிட்டு அவர்களை தடுக்கமுயன்றனர். மேலும்மேலும் கோல்காரர்கள் சென்று முரசுகளை முழக்கினர். சற்றுநேரத்தில் நகரமெங்கும் முரசொலிகள் எழுந்தன. அஸ்தினபுரி பெருங்களிறென பிளிறி அவர்களுக்கு விடையளித்தது.

தொடர்புடைய பதிவுகள்

டி.எம்.கிருஷ்ணா -கடிதங்கள்

$
0
0
imagesஅன்புள்ள ஜெ,

நலம் தானே. தங்களது சிங்கப்பூர் assignment அங்குள்ள மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என உளமார நம்புகிறேன். உங்களுக்கும் ஒரு இனிய அனுபவமாக இருக்கட்டும்.. இன்று டி.எம் கிருஷ்ணாவிற்கு, விருது கிடைத்தது பற்றிய தங்களது பதிவினைப் பார்த்தேன்.

உங்கள் கருத்துக்கள் சரியானதே. உலகமெங்கும் விருதுகள் வழங்கப்படுவது இப்படித்தான். தகுதியானவர்கள் புறக்கணிக்கப்படுவதும், விளம்பர வேடதாரிகளுக்கு விருதுகள் அளிக்கபபடுவதும் வாடிக்கை தானே. ஆனால் உங்களது பதிவு மிகவும் கூர்மையாக இருப்பதாக எனக்கு நெருடுகிறது.

மகாபாரதத்தில், வேதத்தின் பொருளை, உபநிடதத்தின் சாரத்தை, அளித்துவரும் தாங்கள், சொல்லின் வலிமை பற்றி அறிவீர்கள். வெண்முரசு தொடரில், பல இடங்களில், இது பற்றி தாங்களே விளக்கியுள்ளீர்கள். தங்களது கருத்துக்களை சிறிது மென்மையாக பதிவு செய்யலாமே. தங்களது இணைய பக்கங்களை தினமும் படித்துவரும் ஆயிரக்கணக்கான என் போன்றோர், நீங்கள் சிறிது கோடி காட்டினாலே புரிந்து கொள்வோம். இந்தக் கோபமும், சீற்றமும், கூர்மையான சொற்களும் எதற்கு?. மீண்டும் மீண்டும் எதற்கு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்? இது உங்களது உளநிகர் நிலையை பாதிக்காதா? இதை நீங்கள் அங்கதமாகவே பதிவு செய்திருக்கலாம்.

இது எனது வேண்டுகோள்.

அன்புடன்

சுந்தரம் செல்லப்பா

***

அன்புள்ள ஜெயமோகன்

சரியாக சொன்னீர்கள், இப்படிப்பட்ட பிரசித்தி பெற்ற பரிசுகள் தகுதியில்லாதவர்களுக்கு, ஏதோ vested interest ரகசிய நகர்வுகளால் கிடைத்தது என்று.

மக்சாசே பரிசு அரசு சேவை, பொதுமக்கள் சேவை, சமுதாயத் தலைமை, பத்திரிக்கை வேலை/இலக்கியம், தொடர்பு சேவை, சமாதானம், சர்வதேச இணக்கம், தலைமைத் ததுதி ஆகியவற்றிற்க்காக நிறுவப்பட்டு, இப்போது முதல் ஐந்து பகுப்புகளும் நிறுத்தப்பட்டதாக தெரிகின்றது. எப்படிப்பார்த்தாலும் கிருஷ்ணாவிற்க்கு ஏன் கிடைத்தது என்ற ஆச்சரியம் நிற்கத்தான் செய்கிறது.

கடைசி வரியில் நோபல் பரிசே ஊடக அழுத்தங்களுக்கு சாய்ந்து உண்மை ஆக்கங்களை உதாசீனம் செய்யலாம் என்றீர்கள். அது ஏற்கனவே நடந்து விட்டது. மலாலா யூசப்சாய் என்ற 15 வயது பாகிஸ்தானிய பெண் இப்படித்தான் ஊடக உந்துததலில் நோபல் சமாதான பரிசை பெற்றாள். 2012ல், பாகிஸ்தானிய தலிபான் அவளை சுட்டனர், அவள் உயிருக்கு ஊசலாடி இங்கிலாந்திற்கு எடுத்து செல்லப்பட்டு, இங்கிலாந்து டாக்டர்களால் பிழைத்தார். அதிலிருந்து இங்கிலாந்தில் வசிக்கிறார், ஏனெனில் பாகிஸ்தானில் தாலிபான் அவளை கொன்றுவிடுவார்களாம்,

மேலும் இங்கிலாந்திலும் பாகிஸ்தானிய சமூகத்திலிருந்து தனியாக பலத்த பாதுகாப்புடன் பள்ளியில் படிக்கறாள், அங்கேயும் தலிபான் செல்வாக்கினால் கொல்லப்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு.. அதே சமயம் உலகப்பிரச்சினைகளுக்கு திருவாய் மலர்ந்து, ஸ்டேட்மெண்டுகளை கொடுக்கிறாள். இந்த “சமாதான முயற்சி”களால் நோபல் சமாதானப் பரிசு இந்தியாவின் கைலாஷ் சத்யார்தியுடன் கூட்டாக கிடைத்தது. சத்யார்தி பல வருஷங்கள் உண்மையிலேயெ பலத்த எதிர்ப்பு, உயிர் மிரட்டல்கள் நடுவில் காணாமல் போன குழந்தைகள், கடத்தப்பட்ட குழந்தைகள் தொழில்களில் சுரண்டப்படும் குழந்தைகளுக்கு நிவாரண சேவை செய்பவர். அவருக்கு நோபல் சமாதானப் அரிசு கிடைத்ததில் அர்த்தம் இருக்கின்றது. ஆனால் மலாலாவுக்கு நோபல்? மலாலா ஊடக பிம்பம், முக்கியமாக பிபிசியின் செல்லக் குழந்தை. அதனாலேயெ நோபல் சமாதான பரிசும் கிடைத்துள்ளது.

அதுதான் உலகம்.

மதிப்புடன்

வன்பாக்கம் விஜயராகவன்

***

அன்புள்ள ஜெ,

நோபல் பரிசு பெற்ற பத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளை சந்தித்திருப்பேன். அவர்களுடன் உரையாடவும் உணவருந்தவும் காப்பி குடிக்கவும் வாய்த்திருக்கிறது. மேலும் கல்லூரியிலிருந்தே நெடுங்காலமாக தொடர்ந்து இப்பரிசின் வரிசையை கவனித்திருக்கிறேன் என்பதாலும் இதை சொல்லலாம் என நினைக்கிறேன்.

சற்றும் எதிர்பாராதவர்கள், தகுதியில் குறைந்தவர்கள் பரிசு பெறுவது, முழுத்தகுதியும் உடையவர்கள் (ஒரு பரிசை மூன்று பேருக்கு மேல் பகிர முடியாது என்ற காரணத்தால்) பரிசில் சேர்க்கப்படாமல் விடுபடுவது, கடைசி நேரத்தில் ஏற்படும் எதிர்பாரா மாற்றங்கள் குளறுபடிகளின் சர்ச்சைகளை அணுக்கமாக கேள்விப்படும்போது ஆயாசமே மிஞ்சுகிறது. பெரும் தொகை என்பதால் பள்ளிக்கூடத்தில் இந்த பரிசை பற்றி நமக்கு சற்று அதீதமாக சொல்லிக் கொடுத்துவிட்டார்களோ என்று எண்ண தோன்றுகிறது. நோபல் பரிசின் குளறுபடிகள் நம் ஊர் பிலிம்பேர் அல்லது மாநில அரசு விருதுகளுக்கு சற்றும் குறைந்ததல்ல என்ற புரிதல் சற்று அதிர்ச்சியானதுதான்.

அமைதிக்கான நோபல் பரிசை பாருங்கள். இந்த பரிசுக்கு தகுதி கொள்ளும் அளவுக்கு ஒபாமா அப்படி என்னதான் செய்துவிட்டார்? இது மோகன்தாஸ் காந்திக்கு தரப்படமுடியாத பரிசு என்பது இன்னொருபுறம். சமீபத்தில் பரிசு பெற்ற நம் ஊர் கைலாஷ் சத்யார்த்தியை நம்மில் பெரும்பாலோர் அதுவரையிலும் பெரிய அளவில் கேள்விப்பட்டது கூட இல்லை. இதுவே பெரும் பரிசுகளின் உண்மை நிலை. இதேபோன்ற கருத்தை நீங்களே கூட வேறு விவாதத்தில் சொல்லியிருக்கிறீர்கள்.

இப்போது விஷயத்துக்கு வருகிறேன். டி.எம். கிருஷ்ணா மகசேசே விருதுக்கு தகுதியானவரா என்பது நிச்சயம் கேள்விக்குரியதுதான். இந்த பரிசை பெறுமளவுக்கு அவர் இதுவரையிலும் ஆற்றிய களப்பணிகள் என்னென்ன என்பதும் விரிவான விவாதத்திற்குரியது. அவர் இந்த பரிசை பெறாமல் மறுத்திருந்தால் அவர் மேல் உள்ள மரியாதை இன்னும் உயர்ந்திருக்கும்.

ஆனால் இந்த காரணத்திற்காக ஒரு வேகத்தில் அவரின் தகுதியை மிகவும் தாழ்த்தி சொல்லிவிட்டீர்களோ என அஞ்சுகிறேன். ஒரு பாடகனானக, கலைஞனாக, புகழின் உச்சியில் கர்நாடக இசையின் அதிகார மையத்தில் உள்ள நபராக கர்நாடக இசையை கீழ்த்தட்டு மக்களுக்கும் எடுத்துசெல்ல வேண்டும் என்று ஆசைப்பட, அதை செயல்படுத்த அவர் முற்றிலும் தகுதியானவரே.

அவரின் அதிரடி செயல்பாடுகள், அரசியல் நிலைப்பாடுகளில் எனக்கு முற்றிலும் ஒப்புமை உண்டு என்று சொல்லமுடியாது. ஆனால் இசையின் முகவராக, ரசிகராக உபாசகராக, கர்நாடக இசை அதன் குறுகிய விளிம்புகளைத்தாண்டி ஏழை எளிய மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற கிறுக்கில் உள்ள நேர்மையையும், செயல்பாட்டின் தைரியத்தையும் அதன் பின்னுள்ள நல்லெண்ணத்தையுமாவது நாம் பாராட்டலாம் என நினக்கிறேன். இது ஏற்கனவே பலர் வேறு வகைகளில் முயன்று செய்ததுதான் என்றாலும்.

மேலும் அவர் இசையை, இசையின் இலக்கணத்தை, அடிப்படைகளை நன்றாக கற்றறிந்தவர், விரிவாக விவாதிக்கவும் தெரிந்தவர். நல்ல பாடகரும் கூடத்தான். இதையெல்லாம் இது போன்ற காணொளிகளை வைத்து ஒரு இசை ரசிகன் என்ற எல்லைக்குள் நின்றபடி நான் சொல்வது மட்டுமே.

https://www.youtube.com/watch?v=fzzyMq49LKM&list=PLqO4IxQaExl7C0JJp5KbGBnvpYtqEky2G

என்னைவிட மேலும் நன்கு இசையறிந்த நண்பர்கள் இன்னும் விரிவாக சொல்லக்கூடும்.

வேணு தயாநிதி

***

அன்பின் ஜெ..

மகசேசே விருது, அவரது சங்கீதத் திறமைக்காகக் கொடுக்கப்படவில்லை. எனவே, உங்களது ஒப்பீடு சரியில்லை.

அவர் மிகவும் பிரபலமான வித்வான். உலகெங்கும் சென்று கச்சேரிகள் செய்து, பணம் பண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால், அதை விடுத்து, தான் பணம் செய்யும் நேரத்தை, தான் சரியென்று நம்பும் காரணத்துக்காக அவர் செய்து கொண்டிருக்கிறார்.

மிக முக்கியமாக வெளியில் தெரியும் செயல்பாடு, அவர் ஊரூர் ஆல்காட் குப்பத்தில் நடத்தும் மார்கழிக் கலை விழா. ம்யூசிக் அகாடமியிலும், நாரத கான சபாவிலும் நடத்துவதை விட்டு விட்டு, ஆல்காட் குப்பத்தில், மற்ற கலைகளோடு ஒன்றாகச் செய்கிறார். வெறுமே, கலை மக்களுக்குப் போக வேண்டும் எனப் பிரச்சாரம் செய்ய வில்லை. அதற்காக, உழைக்கிறார்.

இலங்கையில், போர் முடிந்ததும், யாழ்ப்பாணத்திற்குச் சென்று இசைக் கச்சேரி செய்த முதல் இசைவாணர் அவர்தான்.

பல முயற்சிகளை, தன்னார்வ நிறுவனங்களை துவங்கி நடத்தி வருகிறார். அவற்றில், பல, கர்நாடக இசையை, இப்போது இருக்கும் தளங்களில் இருந்து வெளியே கொணரும் முயற்சிகள். வெளியில் இருந்து திறமைகளை அடையாளம் கண்டு கொணர்வதும் அதில் உள்ளடக்கம்.

இதில் எதுவுமே அவருக்குப் பணம் கொண்டு வரப் போவதில்லை. புகழுக்காகச் செய்கிறார் எனச் சொல்லலாம். செய்யட்டுமே. புகழ் வருகிறது என்கிற காரணத்துக்காக, ஆல்காட் குப்பத்தில் கச்சேரி செய்யட்டுமே – என்ன இப்ப?

கைலாஷ் சத்யார்த்தி போன்ற போலிகள் செய்தது போல, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்து விட்டு, நோபல் பரிசு வாங்கி விடவில்லை.

சாதிய அடையாளத்தை மறைக்க, அதிக சத்தம் போடுவதால் அதிக சந்தேகம் என்கிறீர்கள். பின் அவர் என்ன செய்ய வேண்டும்? நான் அய்யங்கார், எல்லாரும் நாலடி த்ள்ளி நிற்க வேண்டும் எனப் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா?

எனக்கு அவரின் உழைப்பின் திசை புரிகிறது. அதற்காக அவர் செலவிடும் நேரமும் அதன் டாலர் மதிப்பிழப்பும் தெரிகிறது. நீங்கள் அதைச் சந்தேகப்படுகிறீர்கள். அதைப் பற்றி இந்துவில் வரும் செய்திகள் மட்டுமே உங்களின் கூசலுக்கு ஆதாரம் எனில், வருத்தம்.

என்னதான் பிரச்சினை எனப் புரியவில்லை

பாலா

***

ஜெ,

இனிமேல் டி எம் கிருஷ்ணாவை ஒன்றும் செய்ய முடியாது. சிந்தனையாளர்கள் வண்டியிலே ஏறியாச்சு

டி.எம்.கிருஷ்ணா, பார்ப்பன வெறியராக இருந்திருந்தால் அவருக்கு மகசேசே விருது கிடைத்ததை ஜெயமோகன் கொண்டாடியிருப்பார். அம்மாதிரி வெறியர்களை கொண்டாடுவதை கடமையாகவே வைத்திருக்கிறார். குறிப்பாக பார்ப்பனரல்லாத தீவிர பார்ப்பனீய சிந்தனையாளர்களை அவர் உச்சிமுகர்ந்து பாராட்டுவதை நுணுக்கமாக கவனித்தால் உணரலாம்.

கிருஷ்ணாவோ பார்ப்பன சாதியில் பிறந்து பார்ப்பனீயத்தை பல்வேறு தளங்களில் அம்பலப்படுத்தும் பணியை செய்துவருகிறார். எனவேதான் ஜெயமோகனால் இழிவுப்படுத்தப் படுகிறார். ஏற்கனவே இதுபோல அய்யா சின்னக்குத்தூசி அவர்கள் மறைந்தபோதும் இதே ஜெயமோகன் அவரை இப்படிதான் நடத்தினார். ஜெயமோகனின் இந்த பழிவாங்கும் பட்டியலில் இன்னும் கமல்சார் மட்டும்தான் மாட்டவில்லை. ஒருவேளை அதுவும் எதிர்காலத்தில் நடக்கலாம்.

டி.எம்.கிருஷ்ணா பற்றி பெரிய புரிதல் இல்லாததால் (சங்கீத சப்தம் என்னைப் போன்ற கழுதைகளின் காதுகளை ஈர்க்காது என்பதால்) இதுவரை எனக்கு பெரியளவில் எந்த மதிப்புமில்லை. ஜெயமோகன் புண்ணியத்தால் என்னைப் போன்ற ஆயிரக் கணக்கானவர்களின் உள்ளத்தில் கிருஷ்ணா இனி உயர்வார்.

யுவகிருஷ்ணா

மூத்த கிருஷ்ணாவுக்கு யுவகிருஷ்ணாக்கள் இனிமே பரதனாகவும் சத்ருக்கனனாகவும் இருந்து தொண்டுசெய்வார்கள் என எதிர்பார்க்கலாம்

ஜெயராமன்

***

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

நேரில் நீங்கள் இருந்தால் உங்கள் கையை பிடித்து முத்தமிட்டிருப்பேன்! சமீபத்தில் மிகக்கூசிய ஒருதருணம் இது

இந்த வார்த்தையைக் காட்டிலும் இதை இத்தனை தெளிவாக யாராலும் விளக்கியிருக்கமுடியாது. நானும் ‘ஹிந்து ‘பத்திரிகையின் தொடர் வாசகன் மேலும் இந்த பத்திரிகையின் எங்கள் ஊருக்கான விநியோகஸ்தரும் கூட.

நீங்கள் மிகச் சரியாக கணித்தபடி “ஆக, அவருடைய தி இண்டு பின்னணி மட்டுமே இவ்விருதுக்கான தகுதியை உருவாக்கியிருக்கிறது”. என்பதில் எந்த சந்தேகமும் என்னைப் பொறுத்தவரை இல்லை.பாரதி கூறியபடி இன்று இங்கு “சிறுமையைக் கண்டு பொங்குவதற்கு உங்களை விட்டால் ஆளில்லை” என்பது நிதர்சனமான உண்மை.

அன்புடன்,

அ. சேஷகிரி.

***

ஜெமோ,

டி.எம் கிருஷ்ணாவுக்கு விருதுகிடைத்ததைப்பற்றிய உங்கள் தாக்குதல்களை வாசித்தேன். எவருக்கு விருது கிடைத்தாலும் வயிறு எரிபவர் நீர் என்பதை உணர்ந்துகொண்டேன். உமக்கு விருது என்றால் மட்டும் இனிப்பாக இருக்கும் இல்லையா?

இந்துத்துவ வெறி தலைக்கு ஏறினால் இப்படித்தான்

அ.நடராசன்

***

ஜெமோ

உங்கள் கட்டுரை சாதிவெறியுடன் எழுதப்பட்டிருக்கிறது. ஒருவரைச் சாதிசொல்லி விமர்சிப்பதென்பது அறிவீனம் என்று உங்களைப்போன்றவர்கள் எப்படி புரிந்துகொள்ளப்போகிறீர்கள்?

ஸ்ரீனிவாசன் எம்

***

அன்புள்ள ஜெ,

இது உங்கள் நண்பரின் எதிர்வினை.

ஜெயமோகனை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஒருவர் நிதானமிழக்கும்போது எந்த அளவிற்கு செல்வார் என்பதற்கு திரும்பத் திரும்ப காணக்கிடைக்கும் உதாரணமாக அவர் இருக்கிறார். டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேசே விருது அளிக்கப்பட்டதை அவர் கடுமையாக தாக்குகிறார். ’’சஞ்சய் சுப்ரமணியம் அமர்ந்து எழுந்த நாற்கலியில் அமரும் தகுதிகூட இல்லாதவர்’’ என்று எழுதுகிறார். ஜெயமோகனை போலவே எனக்கும் இசை பற்றி எதுவும் தெரியாது என்பதால் இதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை.

ஆனால் இந்த விருது இசையில் டி,.எம் கிருஷ்ணா நிகழ்த்திய சாதனைகளுக்காக அல்ல மாறாக ஒரு பிரபல இசைக்கலைஞராக சமூக நல்லிணகத்திற்காகவும் நீதிக்காகவும் பொது வெளியில் அவர் எழுப்பிய குரலுக்காகவே இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதிற்கு எல்லாவிதத்திலும் தகுதியானவர் டி,எம் கிருஷ்ணா. சஞ்சய் சுப்பிமணியம் போன்றவர்கள் உன்னதமான சாஸ்திரிய சங்கீதத்திற்காக ஆற்றும் உன்னதமான பணிக்காக மட்டுமே வழங்கபடக்கூடிய பல விருதுகளை பெறக்கூடும். அப்போது டி,எம். கிருஷ்ணாவின் ஆதரவாளர்கள் யாரும் கோவித்துக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் இந்தியாவையே பதட்டமடையச் செய்த பல பிரச்சினைகளில் எத்தனை பிரபல கலை ஆளுமைகள் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள்? பல சமயங்களில் தங்கள் ஸ்தானங்களுக்கோ வாய்ப்புகளுக்கோ எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்று மெளனமாக கடந்து போயிருக்கிறார்கள். இந்த சூழலில் டி.எம் கிருஷ்ணா போன்ற நிலைப்பாடுகளைக்கொண்ட அதை துணிச்சலாக வெளிப்படுத்தக் கூடிய கலைஞர்கள் அபூர்வமாகவே இங்கு இருக்கிறார்கள். கமல் போன்ற முற்போக்குவாதிகள் மோடியின் ஸ்வட்ச் பாரத்தில் இணைந்து குப்பை அள்ளிப்போடும் புனிதப்பணியை செய்துகொண்டிருந்த காலத்தில் மோடியின் மதவாத நோக்கங்களை டி.எம் கிருஷ்ணா கடுமையாக எதிர்த்தார்.

டி.எம்.கிருஷ்ணா மோடியின் வகுப்புவாத அணுகுமுறைகளை பகிரங்கமாக எதிர்த்தார் என்பதுதான் ஜெயமோகன் உட்பட பலருக்கும் இங்கு பிரச்சினை. எங்களைப்போன்ற மிலேச்சர்களோ, சூத்திரர்களோ மோடியை எதிர்ப்பது இயல்பானதுதான். ஆனால் டி.எம். கிருஷ்ணா போன்ற ஒரு கர்நாடக இசைக்கலைஞர் இந்தியாவில் இந்துத்துவா பெரும்பான்மை வாதத்தை எதிர்க்கிறபோது அவர்கள் கட்டமைக்க விரும்புகிற பண்பாட்டு அதிகாரத்தில் ஒரு ஓட்டை விழுகிறது. அதனால்தான் வேறு யார்மீதும் வருகிற கோபத்தைவிடவும் கிருஷ்ணா மீது அதீதமான வெறுப்பு ஏற்படுகிறது. எதிரியை மன்னிக்கலாம். துரோகியை மன்னிக்கலாமா? டி,எம். கிருஷ்ணா போன்ற சொந்த சாதிய மதிப்பிடுகளுக்கு துரோகம் செய்யக் கூடியவர்கள்தான் நம்பிக்கைகுரிய சக்திகள்.

ஜெயமோகன் தன் குறிப்பை இப்படி முடிக்கிறார்: ‘’தமிழின் பண்பாட்டியக்கத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர் அவர். மிக எளியமுறையில்கூட தமிழக இலக்கியம், கலைமரபு பற்றிய அறிமுகமே இல்லாத ‘பெரியவீட்டுப்பிள்ளை’. பொத்தாம்பொதுவான ஒரு மொழியில் எது பொதுவெளியில் ‘அதிர்வு’களை உருவாக்குமோ அதைமட்டும் பேசும் காலி டப்பா. ஆக, அவருடைய தி இண்டு பின்னணி மட்டுமே இவ்விருதுக்கான தகுதியை உருவாக்கியிருக்கிறது. இந்த விருது மட்டும் இல்லையென்றால் இந்தக்குறைகுடத்தைப்பற்றி என் தகுதிகொண்ட ஒருவர் பேசவே தேவையில்லை.’’

இந்தியாவில் மனித உரிமை சார்ந்த, கருத்து சுதந்திரம் சார்ந்த, ஜனநாயகம் சார்ந்த பல போராட்டங்களில் இந்தியாவின் மத்தியதர வர்க்கத்தினரும் சில சமயம் ’எலைட்’ என்று சொல்லக்கூடிய மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்களும் முக்கியமான பங்கை செலுத்தியிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் இந்தியாவின் மிகப்பெரிய ’எலைட் ’புரட்சியாளர்கள் காந்தியும் நேருவும்தான். போகிற போக்கில் ஏழை- பணக்காரன் வித்தியாசத்தை அடித்துவிட்டால் அது உண்மையாகிவிடுமா?

சரி ஒரு எலைட் புரட்சியாளரைப் பற்றி இவ்வளவு தாக்குகிற ஜெயமோகன் கையால் மலம் அள்ளும் அவலத்திற்கு எதிராக போராடி வரும் பொசவாடா வில்சனுக்கும் மகசேசே விருது கிருஷ்ணாவோடு சேர்த்து வழங்கபட்டிருகிறதே.. அந்த ஒடுக்கப்பட்ட சமூக புரட்சியாளனை வாழ்த்தி இரண்டு வரி எழுதியிருக்கலாமே.

‘’இந்தக்குறைகுடத்தைப்பற்றி என் தகுதிகொண்ட ஒருவர் பேசவே தேவையில்லை’’ என்று ஜெயமோகன் எழுதுகிறார். ஆனால் இரண்டு நாளைக்கு எண்ணற்ற குறை குடங்கள் தன்னைப்பற்றி பேசவேண்டும் என்பதற்குத்தானே இந்த provoking ?

ஜெயமோகனின் இந்தக் குறிப்பு ஏற்படுத்தும் உணர்வு அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதானால் ‘’ சமீபத்தில் மிகக்கூசிய ஒருதருணம் இது.’’

மனுஷ்யபுத்திரன் முகநூல் பக்கத்தில் )))

ஜெயராமன்

***

அன்புள்ள ஜெயராமன்,

டி எம் கிருஷ்ணாவைவிட கடுமையான விமர்சனங்களை இந்துமரபு மேல் மோடி மேல் பீயுஷ் மனுஷ் வைத்திருக்கிறார். ஆனால் அவர் செய்துகாட்டிய சாதனையாளர்

நான் வேறுபாடு காண்பது செயலில்தான். இது மனுஷ்யபுத்திரனுக்குப்புரியும். அவர் இன்று எடுத்திருக்கும் ஜூனியர் வெற்றிகொண்டான் வேஷத்துக்குப் புரியவைப்பது கடினம்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

காட்சன் சாமுவேல் எங்களுடன் கல்லூரியில்- லோகமாதேவி

$
0
0

1

 

திரு ஜெயமோகன் அவர்களுக்கு

லோகமாதேவி எழுதுவது. உங்கள் வலைத்தளத்திலிருந்து காட்சன் சாமுவேல் அவர்களின் பனை இந்தியா குறித்த 3 பகுதிகளை படித்தபின்னர், சாமுவேலின் வலைப்பூவிற்கு சென்று 37 பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்தேன் 10 நாட்களுக்கு முன்னர்..

பின் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன் (மின்னஞ்சல்) தாவரவியலாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாங்கள் கரும்பலகையில் எழுதித்தீர்ப்பதோடு சரி ஆனால் அவர் பணி மகத்தானது?

அவர் பதில் அளித்தார் கூடவே தான் தமிழகம் வருவதாகவும் நான் பணிபுரியும் கல்லூரிக்கு வந்து பனைஓலைப்பயன் பொருட்கள் குறித்த பயிலரங்கமும் நடத்தித்தரமுடியுமென்றார். இது நான் கொஞ்சமும் எதிர்பாராதது. 60 வருட பாரம்பரியம் உள்ள கல்லூரி எனினும் காட்சன் சாமுவேல் போன்றவர்களை, அதுவும் மும்பையிலிருந்து வருபவரை சரியாக முறையாக கவனிக்க முடியுமா என ஒரே கவலையாக இருந்தது

முதல்வர் துறைத்தலைவர் எல்லாரிடமும் சாமுவேலின் பனைஇந்திய பயணம் குறித்து விவரித்து அனுமதி பெற்று, பில்ளைகளை கூட்டிக்கொண்டு பனம்பழங்கள். ஓலைகள், மட்டைகள் என்று 3 நாட்களாக சேகரித்து நேற்று சாமுவெல் அவர்கள் வந்து. மிக அருமையானதோர் உரையும் மிக மிக பயனுள்ள ஒர் பயிற்சியும் எங்கள் தாவரவியல் மாணவர்களுக்கு வழங்கினார்.

அவர் விரல்களின் லாவகமும் கரும்பலகையில் அவர் வரையும் வேகமும் ஆச்சர்யம் அவர் வரைந்த்த .குத்து விளக்கும் மெழுகுவர்த்தியும் இன்னும் இருக்கிறது அழிக்கப்படாமலேயே கரும்பலகையில்.

காய்ந்த ஓலை பானையானது, பச்சை ஓலை அதில் செருகிய இலைகளானது, குருத்தோலை இலைகளின் மேல் தெரியும் சின்ன சின்ன நட்சத்திரங்களைபோன்ற மலர்களானது

அரங்கு முழுக்க அவருக்கான கைதட்டல்களாலும், வாழ்த்தொலிகளாலும், வியப்பொலிகளாலும் நிரைந்த்தது.

நான் மிக அழகாக என் துறை சார்ந்த சித்திரங்களை வரைபவள் என்று இது நாள் வரை பெருமைப்பட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் அது பல வருட பயிற்சியிலும், கொடுக்கப்பட்ட வர்ணசாக்கட்டிகளாலும் சாத்தியமானது. சாமுவேல் அவர்களின் கைகளில் இருப்பது அப்படியான பயிற்சி அல்ல

அது இறைக்கொடை மற்றும் இறையருள்.

பொள்ளாச்சியை சுற்றியிருக்கும் பல கிராமங்களில் இருந்து வந்து பயிலும் ஏழை மாணவர்கள் பலருக்கு இந்த பயிற்சி பயனுள்ளதாக இருந்தது. அனைவரிடமும் விடை பெறுகையில் சாமுவேல், ஜெயமோகன் அவர்களால் தான் இது சாத்தியமாயிற்று எனவே அவருக்கு தன் மனமார்ந்த நன்றியை தான் தெரிவிப்பதாக சொன்னார். பத்திரிக்கை தொலைக்காட்சி நண்பர்களும் வந்து அவரை மொய்த்துக்கொண்டனர். இன்றைய பத்திரிக்கைகளில் பயிலரங்கம் குறித்து செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்

இது அவரை உலகிற்கு காட்டவேண்டும் என நினைத்து நீங்கள் அவரை அறிமுகப்படுத்தியதாலேயே நடந்தது.

என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிங்கப்பூரில் முக்கியப்பணியில் இருக்கும் உங்களுக்கு இத்தனை நீண்ட கடிதம் எழுதுவது சரியில்லைதான் எனினும் சாமுவேலின் வரவு குறித்த உணர்வெழுச்சி அப்படியே இருக்கையிலேயெ உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்து எழுதிவிட்டேன். நன்றி

அன்புடன்

லோகமாதேவி

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சாதி, சங்கீதம், டி.எம்.கிருஷ்ணா

$
0
0

images (1)

 

 

ஜெ,

வணக்கம். இன்று டி எம் கிருஷ்ணா விருது பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையைப் படித்தேன். ஈரோடு புதியவர்கள் சந்திப்பில் கிருஷ்ணா பற்றி பேச்சு எழுந்த போதும் ஒரு காட்டமான பதிலையே அளித்தீர்கள். என் கேள்வி இந்த விருது பற்றியோ, கிருஷ்ணாவின் இசை பாண்டித்தியம் பற்றியோ அவர் இந்துவில் எழுதும் கட்டுரைகள் பற்றியோ அல்ல. கேள்வி இதன் அடி ஆழத்தில் இருக்கும் பிரச்சனை மீது.

கிருஷ்ணா ஏன் இப்படிச் செய்கிறார்? இன்று தமிழகத்தில் கர்நாடக சங்கீதம் முழுவதும் மெட்ராஸ் பிராமணர்கள் கையிலேயே உள்ளது. பிராமணர் அல்லாத பிறர் திறமை இருப்பினும் ஒரு கச்சேரி ஸ்லாட்டையோ ஒரு குறைந்த பட்ச அங்கீகாரத்தைப் பெறுவது மிக மிகக் கடினம். இது அனைவரும் அறிந்ததே. இதையே தான் கிருஷ்ணாவும் சொல்கிறார். இதைக் களைய அவர் கையெடுக்கும் முறைகளைப் பற்றி எனக்கும் விமர்சனங்கள் உண்டு. ஊரூர் ஆள்காட் குப்பத்தில் நடு ரோட்டில் அமர்ந்து கச்சேரி செய்வது எந்த அளவுக்கு அந்த மக்களுக்கு கர்நாடக சங்கீதத்தின் மேல் ஆர்வத்தை உண்டு செய்யும் என்பது எனக்கும் புரியவில்லை. பாட்டைக் கேட்பவர்களை விட வேடிக்கை பார்ப்பவர்கள் தான் அதிகம் இருப்பர்.

ஆனால் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதையே பலர் ஓரிரண்டு பிராமணர் அல்லாதவர்களை உதாரணம் காட்டி வசதியாக மறைத்துவிடுவார்கள். இந்தப் பிரச்னையை தெரியச்செய்ய எதாவது செய்யவேண்டும். முதலில் கூச்சல் போட வேண்டும்; கேள்வி கேட்க்க வேண்டும். குறைந்த பட்சம் கிருஷ்ணா அதைச் செய்கிறார். பல பாடகர்களுக்கு இந்தப் பிரச்சனை பற்றிய புரிதல் உள்ளது. சஞ்சய் சுப்ரமணியமும், தான் இரண்டு ஓதுவார் மாணவர்களுக்கு சங்கீதம் சொல்லித் தருவதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

கேரளத்தில் கர்நாடக சங்கீதம் பிற பல சாதியினருக்கும், கிருத்துவர்களுக்கும் கூடப் போய்ச் சேர்ந்திருக்கிறதே. ஒரு கலை எல்லா வகுப்பினருக்கும் போய்ச் சேர்ந்தால் தானே அதற்குரிய அர்த்தத்தைப் பெறும். தமிழகத்தில் இந்த நிலை வர இது எங்கிருந்தாவது தொடங்கியாக வேண்டும். அப்படித் தொடங்கினால் அது பிராமணர்களிடத்திலிருந்து தான் தொடங்க வேண்டும். இன்றும் பிடிவாதமாக பிராமணர் அல்லாதவர்களுக்கு மட்டுமே இசை கற்பிக்கும் பல பிராமணர்கள் உள்ளனர்.

கிருஷ்ணா போன்றவர்கள் இதைச் செய்கையில் பிறர் கவனம் குவிவது ஒரு வகையில் நல்லது தானே? என்ன சொல்கிறீர்கள்.

நன்றி

கிஷோர்

***

அன்புள்ள கிஷோர்,

நான் என் குறிப்பிலேயே சொல்லியிருந்தேன். அது ஆழமான எரிச்சல் மட்டுமே. அது விமர்சனம் அல்ல. அது ஒரு மோசடி. அதைப்பற்றிய எரிச்சலை மட்டுமே பதிவுசெய்யவேண்டும் என எண்ணினேன்

அத்துடன் இது ஓர்அன்றாடக்குறிப்பு அல்ல. இது என் நூல்களில் பதிவாகும். இன்னும் ஒருநூறாண்டுக்காலம் வாசிப்பிலும் இருக்கும். டி.எம்.கிருஷ்ணா எவரென்று தெரியாத காலத்தில் அடிக்குறிப்புடன் வாசிக்கப்படும். புதுமைப்பித்தன் அன்றைய இசைக்கலைஞர் பற்றி ஒரு வரி எழுதியிருந்தால் புதுமைப்பித்தனாலேயே அவர் இன்று நினைவுகூரப்படுவார், அதுபோல. எழுத்து என்றுமிருப்பது. இப்படி ஒரு கடும் எரிச்சல் இந்த மோசடி நிகழ்ந்தபோதே பதிவாகியது என தலைமுறைகள் அறியவும் வேண்டும். ஆகவேதான் அப்படி எழுதினேன்

இந்தக்குறிப்பின் வன்மையோ, இதன் வாசிப்புவட்டமோ, டி.எம்.கிருஷ்ணாவுக்குத் தெரியப்போவதில்லை என எனக்குத்தெரியும். அவருக்கு இங்கே தமிழ் என்னும் மொழியில் ஏதாவது எழுதப்படுகிறதா என்றே தெரிந்திருக்க நியாயமில்லை. அவர் எழுத்தில் அதற்கான தடயம் இல்லை. ஆகவே இது முழுக்கமுழுக்க நான் எதிர்நோக்கும் வாசகச் சூழலுக்காக, எதிர்காலத்துக்காக. புதுமைப்பித்தனோ சுந்தர ராமசாமியோ எழுதாத கடுமை ஒன்றும் அல்ல இது. பொதுப்பத்திரிகை வாசகர்களுக்குப் புதிதாக இருக்கலாம்.

எந்த ஒரு பண்பாட்டு விருதுக்கும் peer review எனப்படும் பிறபண்பாட்டு செயல்பாட்டாளர்களின் கண்காணிப்பும் விமர்சனமும் முக்கியம். அந்த அழுத்தமே தரத்தை நிலைநாட்டுகிறது. உலகம் முழுக்க அப்படித்தான். இங்கு ‘ஏதோ ஒருத்தனுக்கு ஒரு பரிசு கெடைச்சிருக்கு. வாழ்த்திட்டு போய்ட்டே இருப்போம்” என்றும் அதை எதிர்ப்பவர்களை “இவனுக்கு கிடைக்கலை போல” என்றும் மொண்ணையாகப்புரிந்துகொள்ளும் பொதுப்புத்திக்கு அப்பால் எவரும் சிந்திப்பதில்லை. ஆனால் என் தரப்பு எனக்கு முக்கியம், வேறு எவருக்கு இல்லை என்றாலும். அதைநான் பதிவிட்டே ஆகவேண்டும்

இந்த எதிர்ப்பு இங்கே இணையத்தில் மட்டுமே எழ முடியும். எந்தப் பெரிய இதழிலும் அச்சாக முடியாது, இந்தத்தலைமுறையின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவனாக நான் இருந்தாலும்கூட. இப்படி ஒரு குரல் எழுந்தமையே நம் சூழலில் எவராலும் கவனிக்கப்படாது. தன் வன்மையாலேயே இவ்வெதிர்ப்பு சற்றேனும் பேசப்படும். அதுதான் நம் பண்பாட்டுச்சூழலின் மேலாதிக்கம் என்பது. இது அதற்கு எதிரான குரல்

மேலும், எழுத்தாளன் எழுதும்போது இடக்கரடக்கல்களைக் கவனிக்கவேண்டியதில்லை என்பது என் கருத்து. சொல்லப்படவேண்டியதை, பிறர் சொல்லத் தயங்குவதைச் சொல்வதே அவன் கடமை.

டி.எம்.கிருஷ்ணா விருதுபெற்றமை குறித்து என் எதிர்ப்புக்கான காரணங்களை முன்னரே சுருக்கமாகச் சொல்லிவிட்டிருந்தேன். ஆனால் என் கருத்து எதுவும்விவாதமாகிறது. நான் முழுமையாக விளக்காமல் பின்னகர முடிவதில்லை. ஆகவே மீண்டும்.

முதலில், நம் மரபிசைச்சூழலில் சாதியம் ஒரு முதன்மையான விசையாக இருக்கிறது என்பதை நானே பலமுறை பதிவுசெய்திருக்கிறேன். உண்மையில் அது பிராமண மேலாதிக்கம் அல்ல, ஒருவகையில் அய்யர் மேலாதிக்கம். இங்கல்ல எந்த மரபுசார் அமைப்பிலும் இப்படி சில மேலாதிக்கங்கள் இருக்கும். அதற்கான சமூகப்பின்னணியும் இருக்கும். டி.எம்.கிருஷ்ணாவின் குரல் அதற்கு எதிரான அய்யங்கார் ஆற்றாமை என எடுத்துக்கொள்ளலாம். இதை இசையுலகை கொஞ்சமேனும் கவனிப்பவர் அறிவார்கள்.

அவர் அதை தலித் ஆதரவு, ஒடுக்கப்பட்டோர் சார்பு, முற்போக்கு, புரட்சிகர இசைச்செயல்பாடாக ஆக்கிக்கொள்வது கூட என்னால் புரிந்துகொள்ளப்படுவதாகவே உள்ளது. அதை ஆங்கிலத்தில் நாளிதழ்க் கட்டுரைகளில், மாதந்தோறும் பிரசுரிக்கப்படும் அவரது ஆங்கிலப் பேட்டிகளில் உச்சகட்ட விசையுடன் கூச்சலிடுகிறார். அதனாலும் ஏதாவது பயன் இருக்கக்கூடும்தான்.

ஆனால் ‘செயல்பாடு’ என்பது என்ன? ஒருவர் ‘முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்’ என்பது ஒரு செயல்பாடா என்ன? இங்கே எவர் பேசவில்லை முற்போக்கு? இவர் பேசும் முற்போக்குக்கு மகஸேஸே விருது என்றால் இங்கே மாதம் முப்பதாயிரம் மகஸேஸே விருதுகளை ரேஷன்கடை வாயிலாக வினியோகம் செய்யவேண்டியிருக்கும்.

சமூகச்செயல்பாடு அல்லது பண்பாட்டுச்செயல்பாடு என்பது என்ன? ஒருவர் தான் ஏற்றிருக்கும் கொள்கைக்கு உகந்த சமூகப் பணியை, பண்பாட்டுச்சேவையை அணையாத பொறுமையுடன் நெடுங்காலத்தவமாக ஆற்றி விளைவுகளை உருவாக்குவது. நாம் சமூகப்பணியாளர் என ஏற்றுக்கொண்டிருக்கும் அத்தனைபேரும் அத்தகையவர்களே.

ஆம், செய்துகாட்டும்போதுதான் அது சமூகப்பணி அல்லது பண்பாட்டுப்பங்களிப்பு. சும்மா சொல்லிக்கொண்டிருப்பது அல்ல. சத்தம்போடுவது அல்ல. ஊடகங்களை பணபலத்தாலோ குடும்பப்பின்னணியாலோ ஆக்ரமித்துக்கொள்வது அல்ல

டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசைச்சூழலின் சாதியத்தைச் சுட்டிக்காட்டி கட்டுரைகள் எழுதினார். நாலைந்து முறை சில ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் குடிசைப்பகுதிகளுக்கு சென்று சாலையில் அமர்ந்து பாடினார். அந்த மக்கள் அதை ரசித்தார்களா? அவர்களிடம் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா? அவர்கள் அந்த இசைக்குஅருகே வந்தார்களா?

அவரே அதைச் சொல்லியிருக்கிறார். என்னவென்றே தெரியாமல் நாலைந்துபேர் வேடிக்கைபார்த்தார்கள், அவ்வளவுதான் என்று. அப்படியென்றால் ஏன் அதைச் செய்தார்? வெறும் ஊடகக் கவன ஈர்ப்பு. அதற்குமேல் ‘நீ என்னை மதிக்கவில்லை என்றால் நான் உன் இசையை குப்பையில் வீசுவேன்’ என அந்த இசை மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களிடம் சொல்லும் முனைப்பு. அவர்களைச் சீண்டுவது மட்டுமே அவரது நோக்கம்.

இவ்வாறு குப்பத்தில் பாடுவதென்பது உண்மையில் அவருக்கு குப்பத்தின்மீதிருக்கும் இழிவான எண்ணத்தையே காட்டுகிறது.உண்மையிலேயே டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆர்வமிருந்தால் தலித்துக்கள், பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இசை கற்பிக்க ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கவேண்டும். அவர்களில் ஒரு நூறுபேருக்காவது இசையைக் கற்பித்து ஒரு ஐந்து பாடகர்களாவது அவர்களிடமிருந்து எழுந்து வந்திருக்கவேண்டும். அதுதான் சமூகப்பணி,பண்பாட்டுப்பங்களிப்பு.

அது எளிய செயல் அல்ல. பெரும் அர்ப்பணிப்பும் சலிப்படையாத ஊக்கமும் தொடர்ச்சியான செயல்பாடும் அதற்குத்தேவை. செய்யத் தொடங்கியபின்னர்தான் அதிலுள்ள சிக்கல்கள் ஒவ்வொன்றாக எழுந்து முன்னால் வரும். அனைத்தையும் எதிர்கொண்டு வென்று சாதிப்பதற்கு எளியவர்களால் முடியாது. அழுத்தமான கொள்கை உறுதி தேவை.

அப்படிச் செய்து காட்டிய ஒவ்வொருவரும் நம் சூழலில் வாழும் தெய்வங்களே. நான் அவர்கள் அனைவரையும் தாள்தொட்டு வணங்கத் தயாராக இருப்பவன். ஏனென்றால் என்னால் அதை நினைத்தே பார்க்கமுடியாதென அறிவேன். நான் எளியவன். ஆகவே அவர்கள்முன் பணிந்து என்னை நிறைவுசெய்துகொள்கிறேன்.

திருப்பூரில் காதுகேளாதோர் பள்ளி ஒன்று உள்ளது. அதில் ஒரு விழாவுக்காகச் சென்றிருந்தேன். அதன் நிறுவனர் முருகசாமியும் காதுகேளாதவர்தான். பெரும் உழைப்பில் பொறுமையாக பல்லாண்டுக்காலம் முயன்று அந்த அமைப்பை உருவாக்கி முன்னெடுப்பவர் அம்மாமனிதர். அவரது அமைப்புக்கு ஒரு நன்கொடை அளிக்கவேண்டியிருந்தது. அதை கொடுக்கக்கூடாது என்று பட்டது. கால்தொட்டு வணங்கி படைத்துவிட்டு வந்தேன்.

டி.எம்.கிருஷ்ணா அவர் சொல்வதில் ஒரு சிறுபகுதியை செய்துகாட்டியிருந்தால் அவர் என் ஆதர்ச புருஷன். அவர் செய்வது வெறும் வசைபாடல். தமிழ்ச்சூழலில் வசைபாடிகளுக்கா பஞ்சம்? எதையும் எப்படியும் ஏதேனும் காரணம் சொல்லி வசைபாடினால் நீங்கள் சிந்தனையாளர், சமூகசேவகர், பண்பாட்டுச் செயல்வீரர்.

நாலைந்து தெருக்களில் பத்துப்பதினைந்துபேர் முன் அவர்களுக்கு என்னவென்றே தெரியாத பாடல்களை கொஞ்சநேரம் பாடிவிட்டு அதை உரியமுறையில் ஊடக விளம்பரம் செய்து ஒருவர் மகஸேஸே போன்ற பெரும் விருதை சென்றடைய முடியும் என்றால் அதன்பின் இங்கே சமூகசேவை, பண்பாட்டுச்சேவை என்பதற்கெல்லாம் என்ன பொருள்?

இப்படி மதிப்பீடுகளைச் சிதைப்பவர்கள் உண்மையில் சேவை என்பதன் பொருளை அல்லவா அவமதிக்கிறார்கள்? தன் வாழ்க்கையை அர்ப்பணித்து சேவை செய்பவர்களைச் சிறுமை செய்கிறார்கள் அவர்கள். நமக்கு ஏன் இந்த வேறுபாடு புரியவில்லை?

டி.எம்.கிருஷ்ணாவிடம் ‘சரி, நீ என்ன செய்து காட்டினாய்?” என்று ஒருவராவது கேட்கவேண்டாமா என்ன? சரி, தொலையட்டும். இனிமேலாவது அவர் கூச்சலிடுவதில் ஒரு சிறுபகுதியையாவது செய்து காட்டட்டும். ஒரு பத்துவருடம், இந்த மண்ணில் இறங்கி மனிதர்களுடன் வாழ்ந்து அவர்களுக்கு பணியாற்றட்டும். பத்துவருடம் கழித்து வந்து ‘ஆம், நான் சொன்னது தவறு’ என மன்னிப்பு கேட்கிறேன்.

எனக்குக் கடிதம் எழுதியவர்களில் பாதிப்பேர் டி.எம்.கிருஷ்ணா சொல்லும் கருத்துக்களில், அவரது அரசியலில் உடன்பாடு கொண்டவர்கள். ஆகவே அவர் பெரிய சமூகசேவகர், அவரை ஆதரிப்போம் என்கிறார்கள். அவரை எதிர்த்தால் அதை அரசியலாக பொருள் கொள்வோம் என்கிறார்கள். தெருமுனை அரசியல் அப்படித்தான். ஆனால் கொஞ்சம் படித்தவர்கள் அதைச் சொல்லும்போது கசப்பு ஏற்படுகிறது.

இங்கே இப்படி விருதுபெற்று ஏணியில் ஏறுபவர்கள் அத்தனைபேரும் ஆரம்பத்திலிருந்தே இந்தக் ‘கப்பங்’களைஒழுங்காகக் கட்டியவர்கள் என்பதுகூடவா இவர்களுக்குத் தெரியவில்லை? அரசியல் சரிநிலைகளை ஒழுங்காக எடுக்காமல் இதற்கு இறங்குவார்களா இத்தகையவர்கள்? பலர் டி.எம்.கிருஷ்ணா மோடியை எதிர்த்தமைக்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லியே அவரை மூர்க்கமாக ஆதரிப்பதைப் பார்க்கிறேன். வேடிக்கைதான்.

சரி, இது இவரது உண்மையான அரசியல் என்றே கொள்வோம். அதற்காக சமூகசேவைக்காகவும் பண்பாட்டுச்சேவைக்காகவும் விருது பெறுபவர் செய்த உண்மையான சமூகப்பண்பாட்டுப்பணி என்ன என்று கேட்கக்கூடாதா என்ன? அந்தக்கேள்வியை ஒருவராவது கேட்டாகவேண்டும் நண்பர்களே . இல்லையேல் இங்கே வெறும் அரசியல் ஆதரவும் அரசியல் எதிர்ப்பும்தான் இருக்கிறது, பண்பாட்டுச்செயல்பாடு இல்லை என்றே பொருள்.

இத்தனைக்கும் அப்பால் இதை வெறும் அரசியலாக மட்டுமே பார்க்கும் ஆத்மாக்களை நான் மன்னிக்கிறேன். அவர்களின் உலகம் வேறு.

டி.எம். கிருஷ்ணாதான் இசையில் சாதியமேலாதிக்கத்தை ஒழிக்க வந்த அவதாரமா? சென்ற நூறாண்டுக்காலமாக இங்கே எத்தனைபெரிய பண்பாட்டியக்கம் நிகழ்ந்திருக்கிறது என அவருக்குத் தெரியுமா? அவரே சொல்கிறார். அவர் மரபிசை பாடியபோது மக்கள் வேடிக்கைபார்த்ததுபோல அவர்களின் நாட்டாரிசையை அவரும் ஒன்றும் தெரியாமல் வேடிக்கைபார்த்தாராம்.

அவர்கள் வேடிக்கைபார்த்தது இயல்பு. ஏனென்றால் செவ்வியல் இசை என்பது அதை சற்றேனும் பயின்று செவியைப் பழக்கப்படுத்திக்கொள்பவர்களுக்குரியது. ஆனால் இவருக்கு நாட்டாரிசை வேடிக்கையாக இருந்தது என்றால் அது அறியாமையின் உச்சம். ஏனென்றால் அந்த இசையிலிருந்துதான் அவர் பாடும் இசை உருவாகி வந்தது.

எந்தச் செவ்வியல்கலையையும் பொதுமக்களிடம் அப்படியே சும்மா எடுத்துக்கொண்டு போக முடியாது. அப்படி ஒருவர் கிளம்பினால் அவரை காலிடப்பா என்று சொல்வதுதான் சரியான மதிப்பீடு.சாதாரண மக்களால் செவ்வியல் கலையை உடனே ரசிக்கமுடியாது. அந்த செவ்வியல் இசை அவர்களிடமிருக்கும் இசையில் இருந்து உருவாகி வந்ததுதான். ஆனால் அது ஒரு மிக நீளமான பண்பாட்டுப் பரிணாமம். அதைக் கொஞ்சமேனும் உணர்ந்த ஒருவர் இந்தவகையான அசட்டு அபிப்பிராயங்களை உதிர்க்கமாட்டார்

தமிழின் தொன்மையான பண்ணிசையிலிருந்து உருவாகி வந்தது கர்நாடக சங்கீதம் என நாம் சொல்லும் தென்னிந்திய இசை. அது உருவாகி வந்த பதினாறு பதினெழாம் நூற்றாண்டில் தென்னகம் கர்நாடகம் என்றே பொதுவாகச் சொல்லப்பட்டது, ஒட்டுமொத்தமாக நாயக்கர் ஆட்சி இருந்தமையால். ஆகவே அப்பெயர் அதற்கு அமைந்தது

இசையின் பரிணாம வளர்ச்சி உலகம் முழுக்க ஒன்றுதான். வாழ்க்கையில் இருந்து இயல்பாக அது உருவாகிறது. கட்டற்றதாக இருக்கிறது. இலக்கணம் இருப்பதில்லை.ஆகவே அதைப் பாடுவதற்கான பயிற்சியும் இருப்பதில்லை. சிறு இனக்குழுக்கள் நடுவே அது பாடப்படுகிறது. அதை பிறர் ரசிக்கமுடிவதில்லை. தொழில், விருந்து, சடங்கு, வழிபாடு ஆகியவற்றுக்காக அது இசைக்கப்படுகிறது.

சமூக உருவாக்கத்தின் போக்கில் அந்த சிறு சிறு இசை மரபுகள் இணைகின்றன. அவை ஒட்டுமொத்தமாக ஒரு தன்னிச்சையான இசைப்பெருக்காக ஆகின்றன. அதையே நாம் நாட்டார் இசை என்று சொல்கிறோம். அது என்றுமுள பெருக்கு. நதிகளைப்போல

அதிலிருந்து இலக்கணம் வகுக்கப்பட்டு உருவாவதே செவ்வியல் இசை. இலக்கணம் வகுக்கப்பட்டதும்தான் அதில் புறவயமான கல்வி சாத்தியமாகிறது. அதில் நிபுணர்கள் உருவாகி வருகிறார்கள். தன்னிச்சையான வெளிப்பாடு என்பதற்குப் பதிலாக தொடர்ச்சியாக தன்னை மேம்படுத்திக்கொள்ளும் இசைமுறைமை உருவாகி வருகிறது. உணர்வெழுச்சிக்குப் பதிலாக நுட்பம் முக்கியமானதாக ஆகிறது.

அதைப் பாடுவது மட்டுமல்ல கேட்பதும் பயிற்சியினால்தான் சாத்தியம் என்றாகிறது. ஆகவே அது அனைவருக்கும் உரியதல்ல என்று ஆகிறது. அதற்கான வாழ்க்கைமுறையும் அதற்கான மனநிலையும் தேவையாகிறது. பிற செவ்வியல் மரபுகளுடன் அது உரையாடுகிறது . கொண்டும் கொடுத்தும் அது மேலும் மேலும் வளர்கிறது. உலகமெங்குமுள்ள அத்தனை செவ்வியல் கலைகளின் வளர்ச்சியும் இப்படித்தான் நிகழ்கிறது.

பண்ணிசை தமிழகத்தின் நாட்டார் மரபில் இருந்து உருவான தொன்மையான மரபிசை. அது நடுக்காலத்தில் அழிந்து சோழர் காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மறுமலர்ச்சி அடைந்தது. நீலகண்ட யாழ்ப்பாணரில் இருந்து தமிழ்ப்பண்கள் மீட்டெடுக்கப்பட்டன என்று தொல்வரலாறு சொல்கிறது. அதன்பின் மீண்டும் அது மையத்தை விட்டு மறைந்தது. தெலுங்கு மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வடக்கத்திய இசைமரபுகளுடன் இணைந்து அது மறுபிறப்பெடுத்தது. அதுவே கர்நாடக இசை. மிகச்சுருக்கமான வரலாறு இது

மறுபக்கம் நாட்டாரிசை பல்வேறு மாற்றங்களுடன் இங்கே இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதை மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் பாடிக்கொண்டும் ரசித்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள்.

ஆகவே, டி.எம்.கிருஷ்ணா நினைப்பதுபோல இங்கே பிராமணரல்லாதவர்கள் இசை இல்லாமல் வாடிக்கொண்டிருக்கவில்லை. அவர் சொற்கத்திலிருந்து நெருப்பைக்கொண்டு வந்த புரமித்யூஸ் போல அவர்களுக்கு இசையைக் கொண்டுவந்து கொடுக்கவுமில்லை. அவர்களிடமிருப்பது வேறு இசை. அவர்களுக்கு அன்னியமாக இருப்பது தமிழ்ச்செவ்வியலிசையின் இரண்டாயிரம் வருடத்தைய இலக்கணமரபுதான். அதை அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்காமல் செவ்வியலிசையை அவர்கள் முன் பாடி அவர்களைச் சிரிக்கவைத்திருக்கிறார். ஆனால் அதை சாதகமாகப்பயன்படுத்தி மகஸேஸே விருதை வென்று கடைசிச் சிரிப்பை அவர் சிரித்துவிட்டார்.

கர்நாடக இசையே கூட பிராமணர் அல்லாத பிறரிடம் இருக்கவில்லை என்பதும் வரலாற்றுப்பொய்யே. இசைவேளாளர் இன்றும் மிக முக்கியமான இசைமரபை கொண்டிருக்கிறார்கள். பிற சாதியினரும் இசைப்பயிற்சி கொண்டிருந்தனர். இன்று பிராமணர்களில் ஒரு சிறுசாரார் தவிர பிறர் இசைப்பயிற்சியைக் கைவிட்டுவிட்டனர் என்பதனால் அவர்களிடம் மட்டும் அது எஞ்சியிருக்கிறது என்பதுதான் உண்மை. கேட்பவர்கள் அய்யர்களே அதிகம் என்றிருக்க பாடுபவர்களிலும் அமைப்புகளிலும் அய்யர்களுக்கு மேலாதிக்கம் இருப்பது தவிர்க்கமுடியாதது

சென்ற நூற்றாண்டில் தமிழிசை இயக்கம் இங்கே வீச்சுடன் எழுந்தது. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அதன் முதற்புள்ளி. தண்டபாணி தேசிகர், குடந்தை சுந்தரேசனார் , சேலம் ஜெயலட்சுமி வரை தமிழிசை ஆய்வாளர்களின் நீண்ட வரிசை ஒன்று உள்ளது. [நான் நண்பர்களுடன் நடத்திய சொல்புதிது மும்மாத இதழில் 2000 தில்தமிழிசைச் சிறப்பிதழ் ஒன்று வெளியிட்டோம்]

தமிழிசை இயக்கத்தின் நோக்கங்கள் இரண்டு. ஒன்று, தமிழ்ச் செவ்வியல் இசையின் வரலாற்றை எழுதுவது . இரண்டு, மக்களிடம் பரவலாக மரபிசையைக் கொண்டுசெல்வது. இதில் முதல்பணி மிகவெற்றிகரமாகவே முடிந்திருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் வாசிக்க எப்படியும் நூறு நூல்களைச் சுட்டிக்காட்டமுடியும். ஆனால் மக்களிடையே கொண்டுசெல்லும் பணி நேரடியாக பெரும்பாலும் வெற்றிபெறவில்லை

அதற்கான காரணங்கள் பல. முதன்மைக்காரணம், மரபிசையின் சாரமாக இருந்த பக்தி.மாறிவந்த வாழ்க்கைச்சூழலில் பக்திக்கான இடம் குறைவே. ஆகவே மரபிசையும் பக்தி இசையாகச் சுருங்கியது. அதைத்தவிர்க்கவே ‘தாமரைபூத்த தடாகமடி’ [தண்டபாணி தேசிகர்] போன்ற இசைப்பாடல்கள் இங்கே உருவாயின. [இதைத்தான் 2015ல் டி.எம் கிருஷ்ணா புதியதாகக் கண்டுபிடித்து ஆக்ரோஷமாக தி இண்டுவில் பேட்டி கொடுத்தார்]

பலவகையான முயற்சிகள் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான தமிழிசைப்பாடல்கள் உருவாக்கப்பட்டன.மறைந்துபோன தமிழிசை மூவரின் பாடல்கள் மீண்டும் ஸ்வரப்படுத்தப்பட்டு பாடப்பட்டன.

அவை மொழிவெறியால் உருவாக்கப்பட்டவை அல்ல, மொழிவெறி கலையை உருவாக்காது. அவை மக்கள் பேசும் மொழியில் அவர்கள் வாழும் வாழ்விலிருந்து இசை உருவாகவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவை. அவை பலவகையிலும் மக்களிடம்கொண்டுசெல்லப்பட்டன தமிழிசைமன்றங்கள் அவ்வாறு உருவானவைதான்

நேரடியாக அல்லாவிட்டாலும் தமிழிசை இயக்கத்தின் பணியால்தான் இன்று மக்களிடையே மரபிசை நீடிக்கிறது. தமிழிசைப்பாடல்களை சற்று இசையார்வமுள்ளவர்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள். மதுரை சோமு,மகாராஜபுரம் சந்தானம் முதல் இன்று சஞ்சய் சுப்ரமணியம் வரை தமிழிசைப்பாடல்களை புதிது புதிதாக பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்

இவ்வளவு பெரும்பணி நடந்திருக்கிறது இங்கே. மகத்தான முன்னோடிகள் பலர் இதில் செயல்பட்டிருக்கிறார்கள்.அத்தனைக்குப் பின்னரும் மரபிசை போதிய அளவில் பரவவில்லை என்றால் அதற்கு மேலும் நுட்பமான பண்பாட்டுக்காரணிகள் இருக்கலாம். களத்தில் இறங்கிப் பணியாற்றுபவர்கள் மட்டுமே அதைக் கண்டறிய முடியும், கடக்கமுடியும். அது ஒரு பெரும்பணி. சவாலான பணி.

மரபிசையை சாமானிய மக்கள் ரசிக்கமுடியாது. ஆனால் அனைத்து மக்கள்தரப்பிலிருந்தும் மரபிசையை பாடவும் ரசிக்கவும் கூடிய ஒரு தரப்பை உருவாக்கி எடுக்கமுடியும். அப்படி உருவாகி வந்தால்மட்டுமே மரபிசை அது இன்றிருக்கும் பஜனைமடச் சூழலில் இருந்து, சாதி அடையாளத்தில் இருந்து வெளிவர முடியும்

அதற்கு மரபிசையின் இலக்கணத்தை, ரசனைமுறையை தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் ஆர்வமுடையவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அமைப்பு ரீதியான தொடர் முயற்சிகள் தேவை.

அனைத்துக்கும் அப்பால் ஒன்றுண்டு. மரபிசையின் வளர்ச்சிப்போக்கில் அது மேலும் மேலும் இலக்கணமாகக் குறுகி சிறிய வட்டத்திற்குள் சென்றுவிட்டது. அதற்கும் நாட்டார் மரபுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. ஆகவே அது முற்றிலும் அன்னியமாக உள்ளது மக்களின் செவிகளுக்கு. அந்த இடைவெளியை படைப்பூக்கத்துடன் நிரப்பியாகவேண்டும். அதைச்செய்ய தமிழிசை இயக்கத்தால் முடியவில்லை. அது போதிய அளவு வெற்றிபெறாது போனது இதனால்தான் என்பதுஎன் எண்ணம்.

இது எல்லா செவ்வியல்கலைகளுக்கும் நிகழ்வதே. நம் கவிமரபையே பாருங்கள். சங்ககாலத்தில் இறுதியில் செய்யுள்வடிவம் இறுகியது. இலக்கணமாக ஆயிற்று. சிலப்பதிகாரம் அதை உடைத்து கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை என நாட்டார் வடிவங்களை உள்ளே கொண்டுவந்தது. தமிழ்மரபு மீண்டும் புத்துயிர் பெற்றது.

இறுதியாக பாரதியின் காலகட்டத்தில் கவிராயர்களால் செய்யுள் என்பது யமகம், மடக்கு, சித்திரகவி, இரட்டுற மொழிதல் என்றெல்லாம் கணக்கு வழக்காக ஆக்கப்பட்டிருந்தது. வாராது வந்த மாமணி என வந்தவன் அதை உடைத்தான். நாட்டுப்புறவழக்கிலேயே கவிதை எழுதி மீண்டும் நம் மரபுக்கு உயிர்கொடுத்தான்.

ஆக, வரலாற்றின் போக்கில் இருபெரும் இசை மரபுகளுக்கிடையே உருவான பெரிய இடைவெளியே பிரச்சினை. சபாவில் வந்து பாட்டுகேட்க குப்பத்து மக்களால் முடியவில்லை என்பதல்ல. அய்யரும் அய்யங்காரும் வந்து தெருவில் பாடவில்லை என்பதும் அல்ல. நுண்ணிய கள ஆய்வு மூலம், முழுமையான மரபுப்பயிற்சி மூலம், ஒட்டுமொத்தப் பண்பாட்டுப் பார்வைமூலம் சீர்செய்யவேண்டியது அது.

இதை எதையுமே உணராமல் ஒருவர் காலையில் எழுந்து சென்னை குப்பத்தில் ஒரு சாலையில் குந்தி தொடையில் தட்டி சபா சங்கீதத்தைப் பாடுகிறார். கர்நாடக இசையை மக்களிடம் கொண்டுசெல்கிறேன் என குடும்பநாளிதழில் ஆங்கிலக்கட்டுரை எழுதுகிறார். இசைமூலம் சமூகப்பிளவை இணைத்த சமூகப்பணிக்காக உலகப்புகழ்பெற்ற பரிசை ‘வென்றெடுக்கிறார்’. தமிழிலன்றி வேறெங்காவது இந்த அபத்தம் நிகழுமா என்ன?

உண்மையான பண்பாட்டு அக்கறை இருந்தால் சிலநாட்களிலேயே தெரிந்துகொள்ளக்கூடிய வரலாற்றுப்பின்னணி இது. களமிறங்கி ஏதேனும் செய்யத்தொடங்கினால் மிக எளிதில் கைகூடும் தெளிவு இது. அது ஏதுமில்லாமல் பிராமண உட்சாதி அரசியல், சுயமுன்னேற்ற உத்திகள் , ஊடகவெறி என சென்றுகொண்டிருக்கும் ஒருவரிடம் இதையெல்லாம் சொல்லிப்புரியவைக்க என்னைப்போன்ற ஒருவரால் முடியாதுதான். மேலும் டி.எம்.கிருஷ்ணா செல்லும்பாதை இந்தியாவில் மிகவெற்றிகரமானது என நிரூபிக்கப்பட்டது. அவருக்கு வானமே எல்லை. என்ன செய்யமுடியும்?

ஜெ

 

 

பழைய கட்டுரைகள்

தமிழிசை இருபார்வைகள்

தமிழிசை மேலும் ஒரு கடிதம்

தமிழிசையா?

தமிழிசையும் ராமும்

தமிழிசை காழ்ப்பே வரலாறாக

தமிழிசையும் ஆபிரகாம் பண்டிதரும்

கர்நாடக சங்கீதம் சுருக்கமான வரலாறு

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 17216 articles
Browse latest View live


Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>