Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16724 articles
Browse latest View live

ஆத்மாநாம் விருதுகள்

$
0
0

கவிஞர் ஆத்மாநாம் பெயரில் வழங்கப்படும் கவிதைவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிதைக்கான விருது பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்புக்காகக் கவிஞர் அனார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது

anar

மொழியாக்கத்திற்கான விருது தாகங்கொண்ட மீனொன்று தொகுப்புக்காக என்.சத்யமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது

ஈழப் பெண்கவிஞர்களில் ஆழியாள், அனார், பஹீமா ஜகான் ஆகிய மூவரும் முக்கியமானவர்கள் என்பது என் எண்ணம். அவர்களில் அனார் மிகுந்த தீவிரத்துடன் தொடர்ந்து எழுதிவருகிறார். அனார் குறித்து முன்னரும் எழுதியிருக்கிறேன்

என்.சத்யமூர்த்தி ஜவகர்லால்நேரு பல்கலை மாணவராக இருக்கையிலேயே எனக்கு அறிமுகமாகி இன்றும் நீடிக்கும் நண்பர். அவருடைய தாகங்கொண்ட மீனொன்று மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்ட சிறந்த மொழியாக்கம்

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

***

மறுபக்கத்தின் குரல்கள் :மூன்று ஈழப்பெண்கவிஞர்கள்

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 44

$
0
0

43. காகச்சிறகுகள்

flowerதிரௌபதி தன் அறைக்குள் ஆடை மாற்றிக்கொண்டிருந்தபோது வெளியே கதவை மெல்ல தட்டி “தேவி” என்று பிரீதை அழைப்பது கேட்டது. அவள் சேலையை வயிற்றில் செருகிவிட்டு “உள்ளே வருக!” என்றாள். உள்ளே வந்த பிரீதை சுவரோரமாக தயங்கி நின்றாள். காதோரம் குழலை பின்னால் தள்ளி குத்தியிருந்த ஊசிகளை எடுத்தபடி “சொல்!” என்றாள் திரௌபதி. “என்னிடம் மீண்டும் கேட்டுவரச் சொன்னார்” என்றாள். “நான் இந்த வாரம் முழுக்க அரசியுடன் கொற்றவை பூசனைகளில் ஈடுபடவேண்டும்” என்றாள் திரௌபதி.

“அப்படியென்றால் அடுத்த வாரம் என்று சொல்லவா?” என்றாள். திரௌபதி “அடுத்த வாரம் குடியவைகள் தொடங்கிவிடுகின்றன. அதன்பின் மழைநோன்பு வருகிறது” என்றாள். பிரீதை பேசாமல் நின்றாள். “என்ன?” என்றாள் திரௌபதி. “நான் என்ன சொல்வது?” திரௌபதி ஊசிகளை அடுக்கி சிறிய பேழையிலிட்டபின் மஞ்சத்தில் அமர்ந்து “நான் சொன்னதையே சென்று சொல்” என்றாள். பிரீதை அசையாமல் அங்கேயே நின்றாள். “என்ன?” கழுத்தைச் சரித்து கூந்தலிழைகளை கைகளால் நீவியபடி திரௌபதி கேட்டாள். இல்லை என அவள் தலையசைத்தாள். “போ” என்றாள் திரௌபதி. “என்மேல் சினம் கொள்கிறார், தேவி” என்றாள் பிரீதை. திரௌபதி புன்னகைத்து “என்னை குறைசொல்லி அதன்பின் நான் சொன்னதை சொல்” என்றாள்.

மேலும் சில கணங்கள் நின்று திரௌபதி குழல்நீவுவதை நோக்கியபின் நீள்மூச்சுடன் பிரீதை வெளியே சென்றாள். அதுவரை இருந்த பொருட்டின்மை முகம் மாற சலிப்புடன் அவள் வெளியே செல்வதை திரௌபதி நோக்கினாள். நான்கு வாரம் முன்பு ஒருநாள் பிரீதை படிகளில் பாய்ந்து ஏறி மூச்சிரைக்க உடல் வியர்வை பரவ ஓடிவந்து அவள் கதவை தட்டாமலேயே உள்ளே நுழைந்து “பெரும்படைத்தலைவர் உன்னை உடனே கிளம்பி அவர் அரண்மனைக்கு செல்லும்படி சொன்னார்” என்றாள். நள்ளிரவில் அதற்கு சற்றுமுன்னர்தான் திரௌபதி திரும்பி வந்திருந்தாள். சுவடி நோக்கிக்கொண்டிருந்தவள் புருவம் சுளிக்க “என்னையா? அவரா? எதற்கு?” என்றபடி எழுந்தாள்.

சிரித்தபடி “எதற்கா? நல்ல வினா” என்றாள் பிரீதை. “மற்போருக்கு” என்றபோது அவள் முகம் சிவந்தது. “ஆம், அவர் அழைப்புக்குச் சென்று மீளும் பல பெண்கள் ஒரு வாரம் எழுந்து அமரமுடியாது…” மேலும் உரக்க நகைத்து “சென்ற மாதம் அணிச்சேடி சப்தையை அழைத்துச்சென்றார். சொல்லப்போனால் தூக்கிச்சென்றார். அவள் அங்கே நீராழியில் குளித்துக்கொண்டிருந்தாள். படைத்தலைவரின் தெற்கு உப்பரிகையில் நின்றால் நீராழியில் நீராடுபவர்களை நன்றாக பார்க்கமுடியும். அங்கிருந்து அவரே நேரடியாக இறங்கிவந்து அவளை நீரிலிருந்து இழுத்து எடுத்து தோளில் போட்டுக்கொண்டு சென்றார். நல்ல மதுமயக்கு. யானைபோல பிளிறிக்கொண்டே சென்றார். அவள் பாவம் சிறுமி. இன்னும் மருத்துவநிலையில் இருந்து எழவில்லை…” என்றாள்.

பிரீதை அவளை கூர்ந்து நோக்கி “ஆனால் நீ நிகராக மற்போரிட முடியும் என நினைக்கிறேன்” என்றாள். திரௌபதி உதடைச் சுழித்தபடி மீண்டும் சுவடியை எடுத்தாள். “கிளம்பு” என்றாள் பிரீதை. அவளை நோக்காமல் “எனக்கு இன்று சோர்வாக இருக்கிறது” என்றாள் திரௌபதி. “சோர்வா? என்ன சொல்கிறாய்? வந்திருப்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு என அறிவாயா? அவருக்கு உன்மேல் விருப்பம் நீடித்தால் நீ மாளிகையில் வாழலாம்.” திரௌபதி “என்னால் செல்லமுடியாது” என்றாள். “ஏன்? மறுக்கும் உரிமை சூதப்பெண்களுக்கும் சேடியருக்கும் இல்லை, அறிவாயா?” என்றாள். “என்னால் மூன்று நாட்களுக்கு செல்லமுடியாது” என்றாள் திரௌபதி.

அவள் சோர்ந்து “ஓ” என்றாள். பின்னர் “சரி, நான் இதை சொல்கிறேன். அவர் காத்திருப்பார்” என்றாள். பின் குரலைத் தாழ்த்தி “வழக்கமாக ஆணையிடுவார். இம்முறை கனிந்து சொன்னார். உன்மேல் காதல்கொண்டிருக்கிறார். ஐயமே இல்லை. நீ அவர் நெஞ்சில் குடிகொள்கிறாய். உன் தெய்வங்கள் உன்மேல் கனிந்துள்ளன” என்றாள். திரௌபதி ஒன்றும் சொல்லாமல் சுவடியை நோக்கிக்கொண்டிருந்தாள். “சுவடியில் நீ கற்றதை எல்லாம் அவரிடம் சொல்லாதே. அவருக்கு படிப்பவர்களை பிடிக்காது” என்றாள் பிரீதை. மேலும் திரௌபதி பேசாமலிருக்கவே “அவரிடம் என்னைப்பற்றி சொல். நான் உனக்கு இப்போது மிக அணுக்கமாகவே இருக்கிறேன்” என்றாள்.

மீண்டும் வந்தபோது அவள் முகம் மாறிவிட்டிருந்தது. “என்ன சொல்கிறாய்? இன்று நீ வருவாய் என நான் அவரிடம் சொல்லிவிட்டேனே?” என்றாள். அவள் அப்போது அரசியுடன் கலைக்கூடத்துக்குக் கிளம்ப அணிசெய்துகொண்டிருந்தாள். “அலுவல் உள்ளது, சொன்னேனே?” என்றாள். “அலுவலா? படைத்தலைவர் ஆணையிட்டால் அரசரே அவையலுவல்களை விட்டுவிட்டு கிளம்பிச்செல்வார்” என்றாள் பிரீதை. “ஆம், ஆனால் நான் ஆணையின்றி கிளம்ப முடியாது” என்றபின் திரௌபதி வெளியே சென்றாள். “நான் அரசியிடம் சொல்லச் சொல்கிறேன்” என்றபடி பிரீதை பின்னால் வந்தாள்.

மெல்ல மெல்ல பிரீதையின் குரல் மாறியது. “உன்னை அழைத்துவராவிட்டால் என்னை சவுக்காலடிப்பார். என்னை சவுக்கடி படவைப்பதுதான் உன் நோக்கமா?” என்றாள். சீற்றத்துடன் “நான் அப்படி எளிதாக தோற்றுச்செல்பவள் அல்ல. நீ அவரிடம் செல்லாவிட்டால் உன்னை முச்சந்தியில் கழுவேற்ற வைப்பேன்” என்றாள். “நீ என்னதான் எண்ணுகிறாய்? நீ ஒன்றும் இளவரசி அல்ல. அழகிதான். ஆனால் நடு அகவை கடந்தவள். இன்னும் எத்தனை நாள் உன் அழகு நீடிக்குமென நினைக்கிறாய்? கனிந்திருக்க கொய்யப்படாத பழம் உதிர்ந்து அழுகும் என்று அறிக!” என்றாள். “சொன்னால் புரிந்துகொள், அவர் இந்நாட்டை மெய்யாகவே ஆள்பவர். சினம்கொண்டால் காட்டுவேழம் போன்றவர்.”

ஒரு கட்டத்தில் அவள் தணியத் தொடங்கினாள். “நீ இத்தனை மிஞ்சியும் அவர் கெஞ்சுகிறார் என்றால் உன்மேல் அத்தனை காதல்கொண்டிருக்கிறார் என்று பொருள். அதை நீ இழுக்கலாம், அறுத்துவிடக்கூடாது” என்றாள். “நீ விழைவதென்ன? அதைமட்டும் சொல். அதை நான் குறிப்புணர்த்தினாலே போதும், அவர் பெருகி எழுவார்.” திரௌபதி சலிப்புடன் “நான் அதை எண்ணவில்லை. என் சிக்கல்களை சொல்லிவிட்டேன். இப்போது விழாக்காலம். இது முடியட்டும்” என்றாள். பிரீதை எரிச்சலுடன் “விழா முடிந்ததும் மழைக்காலம்” என்றாள். “ஆம்” என்றாள் திரௌபதி சினத்துடன். “நான் சொல்கிறேன், இந்த ஆணவத்தின்பொருட்டு நீ கழுவில் அமர்வாய். அன்று என் சொற்களின் பொருள் உனக்குப் புரியும்” என்றாள்.

தயங்கிய காலடிகள் சுபாஷிணி வருவதை காட்டின. இருமுறை கதவை கையால் சுண்டிவிட்டு உள்ளே வந்தாள். புன்னகையுடன் “என்ன சொல்லிவிட்டுச் செல்கிறாள் அண்டா?” என்றாள். திரௌபதி புன்னகைத்தாள். “அண்டா இப்போதெல்லாம் ஒழிந்துகிடக்கிறது” என்றபடி அவளருகே அமர்ந்த சுபாஷிணி “நீங்கள் சென்றிருக்கவேண்டும், அக்கா. சென்று அந்த தசைக்குன்றின் கன்னத்தில் நான்கு அறை வைத்திருக்கவேண்டும்” என்றாள். “மற்போரா?” என்றாள் திரௌபதி சிரித்தபடி. “உண்மையைச் சொன்னால் மற்போரில் அவன் உங்களை வெல்ல முடியாது. அவன் கைகள் வெறும் மலைப்பாம்புகள். உங்கள் கைகள் அரசநாகம்” என்றாள் சுபாஷிணி. திரௌபதி “என்ன, இன்று அலுவல்கள் முடிந்துவிட்டனவா?” என்றாள்.

“அலுவலுக்கு முடிவேது? நான் அப்படியே விழிகளில் இருந்து மறைந்துவிடுவேன். என்னிடம் கேட்பார்கள், எங்கே சென்றாய் என்று. நான் இங்கேதான் இருந்தேன் என்பேன். அவர்களால் ஒன்றும் சொல்லமுடியாது.” அவள் சிரித்து “நேற்று என்ன சொன்னேன் தெரியுமா? நான் கந்தர்வன் ஒருவனுடன் இருந்தேன் என்று” என்றாள். திரௌபதி அவள் கையை பற்றி “கந்தர்வர்கள் எவரேனும் வந்துவிடப்போகிறார்கள்” என்றாள். “வந்தால் நான் உங்களை முதலில் சந்திக்கும்படி சொல்வேன்” என்றாள் சுபாஷிணி. “நேற்று என்னிடம் சந்திரை சொன்னாள், நான் உங்களைப்போல நடப்பதாக. சேடியரைப்போல நிலம்நோக்கி நட என்று என்னிடம் அவள் சொன்னாள். நான் விழிதூக்கி நடக்கிறேன் என்று எனக்கே தெரியாது. நான் அப்படி நடந்ததே இல்லை.”

“நான் அப்படி நடக்க முயன்றேன்” என்றாள் சுபாஷிணி. “ஆனால் அப்படி நடந்தாலும் வேறுபாடு தெரியவில்லை. உடலில் வெளிப்படுவது உள்ளே வாழ்வதுதான்.” அவள் மேலும் நெருங்கி அவளருகே அமர்ந்து “என் உடலுக்குள் என்ன வாழ்கிறது?” என்றாள். “சின்னஞ்சிறிய சிட்டுக்குருவி ஒன்று” என்றாள் திரௌபதி. அவள் முகம் மலர்ந்து “ஆம், உண்மை. நான் சிட்டுக்குருவிகளை கனவில் காண்பேன்” என்றாள். பின்னர் “நீங்கள் கரவுக்காட்டுக்கு செல்கிறீர்கள் அல்லவா?” என்றாள். “எவர் சொன்னது?” என்றாள் திரௌபதி. “பேசிக்கொண்டார்கள். அரசி செல்கிறார்கள். காவலுக்கு நீங்களும் செல்கிறீர்கள்.” மேலும் குரலைத் தழைத்து “என்னையும் உடனழைத்துச் செல்லுங்கள்” என்றாள்.

“நீ எதற்கு?” என்றாள் திரௌபதி. “நான் இதுவரை இந்த அரண்மனையைவிட்டு வெளியே சென்றதே இல்லை. ஒரு காட்டை பார்த்துவிட்டால் அதன்பின் நான் திரும்பிவரவே மாட்டேன். அங்கேயே பறந்து பறந்து அலைவேன்.” திரௌபதி “நீ வந்து என்ன செய்யப்போகிறாய் என்று சொல்ல?” என்றாள். “உங்களுக்கு உதவியாக” என்றாள் சுபாஷிணி. “நன்று, இதுவரை சேடியருக்கு சேடியர் அமைந்ததில்லை உலகில்” என்றாள் திரௌபதி. சுபாஷிணி முகம் கூம்பி “உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வேண்டாம்” என்றாள். திரௌபதி “அழைத்துச் செல்கிறேன்…” என்றதும் எழுந்து “மெய்யாகவா?” என்றாள். “நீ வருகிறாய்” என்றாள் திரௌபதி.

அவள் “அய்யோ” என்று கூவியபின் நின்று நாக்கைக் கடித்து ஐயத்துடன் “சந்திரை என்ன சொல்வாள்?” என்றாள் சுபாஷிணி. “நான் ஆணையிடுகிறேன்.” அவள் நெஞ்சில் கைவைத்து “அய்யோ!” என ஏங்கினாள். பின்னர் குதித்தபடி “நான் இதை உடனே ஆதிரையிடமும் சாமையிடமும் சொல்லவேண்டும்…” என்றாள். ஓடி வெளியே போய் உடனே திரும்பி வந்து “நான் எவரிடமும் இப்போது சொல்லமாட்டேன்” என்றபின் மீண்டும் ஓடிச்சென்றாள். புன்னகையுடன் மீண்டும் சுவடியை படிக்க முயன்றபின் திரும்ப கட்டிவைத்துவிட்டு திரௌபதி மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள்.

flowerகாலையில் திரௌபதி அரசியின் அறைக்கு சென்றபோது சற்று பிந்திவிட்டிருந்தது. அவள் முந்தையநாள் இரவு சரியாக துயிலவில்லை. நெடுநேரம் எண்ணங்களில் உழன்றுகொண்டிருந்தாள். எண்ணங்கள் ஒருபோதும் அத்தனை பொருளற்றதாக, முன்பின் உறவற்றவையாக இருந்ததில்லை. துயிலுக்குள் அவள் கரு உந்தி குருதி ஒழுகிக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு மருத்துவம் பார்த்தாள். குழந்தை வெளிவந்து குருதியில் நனைந்த துணி எனக் கிடந்தது. அதை எடுத்துப்பார்த்தாள். அதன் விழிகள் இறந்து திறந்திருந்தன. ஓர் அசைவை உணர்ந்து அவள் திடுக்கிட்டாள். அதன் தொப்புள்கொடி நாகமென நெளிந்தது. நாகமேதான். குருதி நனைந்த நாகம் அந்தத் தொப்புளை கவ்வியிருந்தது.

இடைநாழியின் மறுஎல்லையில் அவள் கீசகனின் பேருருவை கண்டுவிட்டாள். நடையை சீராக்கி தன் கால்களை மட்டுமே நோக்கி நடந்தாள். கால்கள் ஒன்றன்மேல் ஒன்றென அமைந்து முன்செல்ல தொலைவென்பதே இல்லாமல் ஆகியது. அவள் அவன் குரலை கேட்டாள். “தேவி, நில்!” அவள் நின்று தன் கால்களை நோக்கிக்கொண்டிருந்தாள். “நான் அனுப்பிய செய்திகள் வந்தனவா?” என்றான். “ஆம்” என்றாள். “அவள் மூடப்பெண். நான் சொன்னவற்றை சரியாகச் சொல்லியிருப்பாளா என்னும் ஐயம் எழுந்தது. ஆகவேதான் நானே நேரில் வந்தேன்” என்றான்.

அவள் “அவள் அனைத்தையும் சொன்னாள்” என்றாள். “பெண் எனக்கு புதிதல்ல. ஆனால் உன்னைக் கண்டதுமே நான் உணர்ந்தேன், பிறிதொரு பெண்ணை நான் எண்ணியும் பார்க்கமுடியாது என. நம் இருவரையும் அருகருகே நோக்கும் எவரும் அதை உணரமுடியும், நீயும் நானும் இணையானவர்கள் என்று” என்றான். “நான் எளிய புரவிகளில் ஊர முடியாது. நான் ஏகும் யானையே இந்நகரில் மிகப் பெரியது… நான் இப்புவியில் மிகப் பெரிய உடல்கொண்டவன். எனக்கு நிகரானவன் பாண்டவனாகிய பீமன். அவன் இறந்துவிட்டான்” என்றான் கீசகன். “நீ இப்புவியிலேயே பெரியவள்… ஐயமே இல்லை. உன்னைக் கண்ட நம் நிமித்திகன் ஒருவன் இதை சொன்னான்.”

திரௌபதி “நான் செல்லவேண்டும்” என்றாள். “உனக்காக காலையிலேயே எழுந்து வந்து காத்திருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும், சொல்! பொன்னா? மணியா? கருவூலச்செல்வமா? அரசமாளிகையா? என்னை நீ புறக்கணிப்பது ஏன்? அதை சொல்!” அவள் “நான் புறக்கணிக்கவில்லை” என்றாள். “நீ சூதர்மகள் அல்ல என நான் அறிவேன். நீ யாரென்று நான் கேட்கவில்லை. எனக்கு உன் அருள் வேண்டும். நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது… அதை ஒவ்வொரு கணமும் உணர்கிறேன்” என்றான் கீசகன். “ஒரு பெண்ணின்பொருட்டு நான் முழு இரவும் துயில்நீப்பேன் என சென்ற ஆண்டு நிமித்திகன் சொல்லியிருந்தால் அவன் தலையை வெட்ட ஆணையிட்டிருப்பேன். ஆனால் நான் துயின்று பல நாட்களாகின்றன.”

“உண்மை” என்று கீசகன் சொன்னான். “உன் எண்ணம் மட்டுமே என் உள்ளே ஓடிக்கொண்டிருக்கிறது. எந்தப் பெண்ணும் முதலசைவில் உன்னை போலிருக்கிறாள். எப்போதும் போர்க்களத்திற்குச் செல்வதற்கு முந்தைய கணத்தின் பதற்றமும் இனிய கிளர்ச்சியும் என் உடலில் இருந்துகொண்டே இருக்கின்றன… துயில்வது இருக்கட்டும், என்னால் எங்கேனும் நிலையாக அமரக்கூட முடியவில்லை.”

திரௌபதி “நீங்கள் அரசமகளிரை மணக்கவிருப்பதாக சொன்னார்கள்” என்றாள். அவன் “ஆம், ஷத்ரிய அரசகுலத்தில் பெண்கொள்வது என் அரசியல் எண்ணங்களுக்கு உகந்தது. ஆகவேதான் இதுவரை நான் எப்பெண்ணையும் மணக்கவில்லை” என்றான். உடனே உணர்ந்துகொண்டு “ஆம், நான் உன்னை அரசியாக்க இயலாது. நான் அரசனாகும்போது நீ அரியணை அமர்வதென்றால்…” என்று தடுமாறினான். அவள் ஆடையை பற்றிக்கொண்டு “நேரமாகிறது. அரசி எனக்காக காத்திருப்பார்கள். நான் செல்கிறேன்” என்றாள். அவன் “நில், நீ விழைந்தால் உன்னை மணம்கொள்கிறேன். பட்டத்தரசியாகவே அமரச்செய்கிறேன்” என்றான்.

திரௌபதி “எனக்கு நடு அகவை கடந்துவிட்டதே?” என்றாள். “இல்லை, நீ மாறாத கன்னி. உன்னைப் பார்த்த நிமித்திகன் சொன்னான், நீ அனல்போல என்றும் புதியவள் என்று. உன்னில் எதுவும் ஆகுதியாகுமே ஒழிய கலக்கவியலாதென்று. உன் ஒரு மயிரிழையை கொண்டுசென்று விழியிழந்த முதுநிமித்திகர் சுக்ரரிடம் அளித்தேன். தொட்டு நெறிநோக்கியதுமே இவள் அனல்மகள் என்றார். இவள் உடல் பிழையற்ற முழுமைகொண்டது, இவள் கை பற்றி உடனமர்வோன் பாரதவர்ஷத்தை ஆள்வான் என்றார்.”

திரௌபதி புன்னகையுடன் அவனை நோக்கி “அதுவா உங்கள் இலக்கு?” என்றாள். “ஆம், நீ பாரதத்தை ஆள்வாய் என்கிறார் சுக்ரர். ஐயமே வேண்டியதில்லை, இது கோல்தாங்கும் கை என்கிறார். நீ இன்று குடியோ படையோ இன்றி தனியளாக இருக்கிறாய். நான் உன் படைக்கலமாக ஆவேன். என்னைப்போன்ற வீரன் உதவியுடனேயே நீ நாடாள முடியும்” என்றான் கீசகன். “நான் உன்மேல் பித்துகொண்டிருக்கிறேன் என்று அறியமாட்டாயா? உன் காலடியில் கிடப்பேன். உன் சொல்லை தலைக்கொள்வேன்.” திரௌபதி “மச்சகுலத்து இளவரசர் பேசும் பேச்சா இது?” என்றாள். “பித்தன் என்றே கொள். என்னால் தாளமுடியவில்லை… வேறேதும் எண்ண முடியவில்லை. உன்னை இழந்தால் நான் அனைத்தையும் இழந்தவனாக ஆவேன்” என்றான் கீசகன்.

“நான் என் நிலையை சொல்லிவிடுகிறேன், இளவரசே” என்றாள் திரௌபதி. “நான் ஐந்து கந்தர்வர்களுக்கு கட்டுப்பட்டவள். அவர்களை மீறி எதையும் எண்ணமுடியாதவள்” என்றாள். “கந்தர்வர்களா? ஆனால் அத்தனை பெண்களும் கந்தர்வர்களுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்லவா? மணவினை என்பதே கந்தர்வர்களை விட்டு பெண்ணை விடுவிப்பதுதானே?” என்றான் கீசகன். “இவர்கள் வேறுவகை கந்தர்வர்கள். பிறர் பெண்ணை அந்தந்த பருவங்களுக்கு மட்டும் உரிமைகொள்பவர்கள். இவர்கள் என்னை இறப்புவரை விடமாட்டார்கள். ஏனென்றால் இவர்கள் இங்கே இருக்கவேண்டுமென்றால் என்னை பற்றிக்கொள்ளவேண்டும். ஒவ்வொருநாளும் நான் இவர்களுக்கு அளிக்கும் மலரும் நீரும்தான் இவர்களின் அன்னம்” என்றாள் திரௌபதி. “இன்றுவரை என்னை அணுகிய அத்தனை மானுடரையும் இந்த கந்தர்வர்கள் கொன்றிருக்கிறார்கள். ஆகவேதான் நான் அஞ்சுகிறேன்.”

“கந்தர்வர்களே அஞ்சும் தெய்வம் ஒன்றின் அடியவன் நான்” என்றான் கீசகன். “பிறர் அறியாத ஒன்று அது. இன்று இந்நகரில் அனைவரும் வழிபடும் தெய்வம் மலைநின்ற இந்திரன். நானும் அவனை வழிபடுவதுண்டு. ஆனால் உளம்கொண்டிருப்பது தென்மேற்குக் காட்டில் உறையும் கலிதேவனை. அனலுறங்கும் விழியன், இருள் என பேருரு கொண்டவன். அவன் பெயரைச் சொன்னால் அஞ்சாத தேவர்கள் இல்லை. நான் சனிதோறும் கலிக்கு குருதிபலியிட்டு பூசனை செய்கிறேன். என் படைக்கலங்களை அவன் காலடியில் வைத்து வணங்கியே கையிலெடுக்கிறேன். ஆகவேதான் இன்றுவரை நான் எந்தப் போரிலும் தோற்றதில்லை.”

“என் உடலில் எப்போதும் அவனருள் இருந்துகொண்டிருக்கிறது” என்று கீசகன் தன் மணிக்கட்டிலிருந்த கரிய சரடை காட்டினான். “அவன் காலடியில் வைத்தெடுத்த கருங்காப்பு. என்னுடன் வா, அவன் காலடி பணிந்தெழு, உன் கைகளிலும் ஒன்றை கட்டுகிறேன். கந்தர்வர்கள் மட்டுமல்ல, அவர்களின் பேரரசனாகிய இந்திரனே அஞ்சி விலகிச்செல்வான்.” திரௌபதி “எங்குள்ளது அந்த ஆலயம்?” என்றாள்.

“மாமன்னர் நளன் மீண்டும் அரசுகொண்டபோது அவ்வாலயம் ஆதரவிழந்தது. ஆண்டுக்கொருமுறை மட்டுமே பூசனை பெறுவதாக மாறியது. பின்னர் காட்டுக்குள் இடிந்து கற்குவியலாக புதர்மூடிக் கிடந்தது. நிமித்திகர் ஒருவர் நூல்நோக்கி சொல்ல இங்கு கலியின் ஆலயமிருப்பதை அறிந்தேன். நானே தேடிக் கண்டடைந்தேன். அதை எடுத்துக்கட்டி நாள்பூசனைக்கும் ஒழுங்கு செய்தேன்” என்றான் கீசகன்.

திரௌபதி “என்னை ஆள்பவர்களில் முதல்வர் காற்றின் மைந்தர். கலி அவரை எண்ணினாலே அஞ்சுவான்” என்றாள். “எவர் சொன்னது?” என்று கீசகன் இரு கைகளையும் ஓங்கி அறைந்தபடி கூவினான். தன் மேலாடையை விலக்கி நெஞ்சைக் காட்டியபடி முன்னால் வந்தான். அதில் காகக்குறியும் சூலமும் பச்சை குத்தப்பட்டிருந்தன. இரு தோள்களிலும் காகச்சிறகுகளை பச்சை குத்தியிருந்தான், அவன் கைவிரிக்கும்போது அவை பறப்பதுபோல் தோன்றுவதாக. “பார், நான் அவன் அடியவன். அவன் குறியை நெஞ்சில் தாங்குபவன். அவனே நான். உன் கந்தர்வனுக்கு ஆண்மையிருந்தால் வந்து என்னை எதிர்கொள்ளச் சொல்… ஆம், நான் அவனை அறைகூவுகிறேன் என்றே சொல்.”

அவள் அதை நோக்கியபின் விழிவிலக்கி “இதை இங்கு எவரும் பார்த்ததில்லையா?” என்றாள். “இது என் குடிக்குறி என நினைக்கிறார்கள். நான் எவர் என்பதை அறிந்தவள் உன் அரசி மட்டுமே” என்றான் கீசகன். “நீ அஞ்சவேண்டியதில்லை. இப்புவியிலுள்ளோர் அனைவரும் எண்ணி அஞ்சும் ஒருவன் உன் அன்பைக் கோருகிறேன்.” திரௌபதி “நான் என் கந்தர்வனிடம் சொல்கிறேன். அவன் உங்களை எதிர்கொள்ள அஞ்சுவான் என்றால் மாற்று எண்ணுகிறேன்” என்றாள். “சொல், அவனை என்னிடம் வரச்சொல்” என்றான் கீசகன். “எனக்கு பொழுதாகிறது” என்றபடி அவள் முன்னால் சென்றாள்.

flowerஅரசி அறைக்குள் எரிச்சலுடன் நின்றிருந்தாள். திரௌபதி உள்ளே வந்ததுமே “எங்கே சென்றாய்? உனக்காக நான் காத்திருக்கவேண்டுமா?” என்றாள் சுதேஷ்ணை. “வழியில் உங்கள் இளையோனை கண்டேன்” என்றாள் திரௌபதி. முன்னரே கீசகனின் காதல் கோரிக்கையை அவள் அரசியிடம் சொல்லியிருந்தாள். அவள் முகம் மாறியது. “என்ன சொன்னான்? மிரட்டினானா? இன்று இவ்வரசே அவன் கையில் இருக்கிறது” என்றாள். “அதை முன்னரே அந்தச் சேடியிடம் சொல்லி அனுப்பியிருந்தார். விரும்பாதது நிகழுமென்றால் என் கத்தியால் கழுத்து நரம்பை அறுத்துக்கொள்வேன் என்று அவளிடம் சொல்லி அனுப்பினேன்” என்றாள் திரௌபதி.

“விலங்கு… காமம் கொண்டால் மதயானை கற்பாறையில் மத்தகத்தை முட்டிக்கொள்ளும் என கேட்டிருக்கிறேன்” என்றாள் அரசி. “அவரது எண்ணம் பிறிதொன்று. என்னை மணப்பவன் பாரதவர்ஷத்தின் தலைவனாவான் என நிமித்திகன் சொல்லியிருக்கிறான்” என்றாள். அரசி வாயைப் பொத்தி ஒருகணம் அமைந்தபின் “இருக்கும்… உன்னைப் பார்த்தால் எனக்கே அப்படி தோன்றுகிறது” என்றாள். பின்னர் “நீ அவனை எதன்பொருட்டும் ஏற்றுக்கொள்ளாதே” என்றாள். “என் கந்தர்வர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்றாள் திரௌபதி.

“ஆம், அவர்கள் உனக்கு காப்பு. உன் காற்றுமைந்தனிடம் சொல், இந்தக் கீழ்மகனின் நெஞ்சை பிளக்கவேண்டும் என்று” என்றாள் சுதேஷ்ணை. “கீசகர் மாருதரை அறைகூவியிருக்கிறார்” என்று திரௌபதி சொன்னாள். “இப்போது எனக்கு எழும் ஐயம் வேறு. இந்த ஊன்குன்று ஒருவேளை உன் மாருதனையும் வென்றுவிடக்கூடும்.” திரௌபதி புன்னகைத்து “அவரை வெல்ல அவரது மூத்தவராகிய ஹனுமானால் மட்டுமே முடியும், அரசி. அச்சம் வேண்டாம்” என்றாள்.

பெருமூச்சுடன் அரசி தணிந்தாள். “இன்று ஏழு பூசனைகள், நான்கு அயல்நாட்டார் சந்திப்பு… அரசியாக நடித்து சலித்துவிட்டேன். எங்காவது எளிய ஷத்ரியனுக்கு மனைவியாகி அடுமனை வேலையும் அகத்தள வம்புமாக வாழ்ந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்” என்றாள். திரௌபதி புன்னகை செய்தாள். “கரவுக்காட்டுக்கு உத்தரன் கரிய புரவியில் வருகிறான். அதன் பெயர் காரகன். அவனே என்னிடம் வந்து சொல்லிவிட்டுச் சென்றான், தெரியுமா?” என்றாள் அரசி. “அவன் அந்த ஆணிலியை வேவுபார்க்கவும் அனைத்து ஒருக்கங்களையும் செய்துவிட்டான். நான் சொன்னால் அதை அரசாணையாகக் கொள்பவன் அவன் மட்டுமே. அவனை இங்கே பிற அனைவரும் இளக்காரமாகவே பார்க்கிறார்கள்.”

திரௌபதி மீண்டும் புன்னகைத்தபின் அறைக்குள் இருந்த சுவடிகளை அடுக்கி வைக்கத்தொடங்கினாள். சுதேஷ்ணை அருகே வந்து “அவனுக்கு அவன் விரும்பும்படி கலிங்க இளவரசி மணமகளாக அமைந்துவிட்டாள் என்றால் இளவரசுப்பட்டம் கட்டவேண்டும் என்று அரசரிடம் கோருவேன். அவர் இன்றிருக்கும் நிலையில் அந்தக் கிழநரி குங்கன் சொல்லாமல் எதுவும் நடக்காது. நீ அந்த சூதாடியை சென்று கண்டு அவன் என்ன எண்ணுகிறான் என்று கேட்டுப் பார்” என்றாள். திரௌபதி “அவரை நான் எங்கே சந்திப்பது?” என்றாள். “அவனையும் கூட்டிக்கொண்டுதான் அரசர் கரவுக்காட்டுக்கு வருகிறார். அங்கே அமர்ந்து சூதாடுவார்கள். வேறென்ன தெரியும் அவர்களுக்கு?” என்றாள் அரசி.

திரௌபதி புன்னகையுடன் “கேட்டுப் பார்க்கிறேன்” என்றாள். “வெறுமனே கேட்காதே. அவனுக்கு என்ன தேவை என்று கேள். அதை நான் அளிப்பேன். தேவைப்பட்டால் மெல்ல அவன் உள்ளத்தில் கீசகன் பற்றிய அச்சத்தை உருவாக்கு. என்ன இருந்தாலும் கீசகன் தன்னை அரசுசூழ்பவன் என எண்ணிக்கொண்டிருப்பவன். பிறிதொருவன் தன்னை விஞ்சுவதை அவன் ஒப்பமாட்டான். என்றைக்கானாலும் குங்கனின் தலையை கீசகன் வெட்டுவது உறுதி. அந்த அச்சம் அவனுக்கே இருக்கும். அதை உறுதிசெய்வதுபோல உன் ஐயத்தை மட்டும் சொல். ஐயம் எழுந்துவிட்டால் போதும், அது வளர்ந்தே தீரும்” என்றாள்.

உடனே மேலும் சொற்கள் எழ குரல் தாழ்த்தி “ஆனால் என் மைந்தன் எளிய உள்ளத்தவன். அவன் அரசனென்றானால் குங்கன் அவனுக்கு முதன்மை அரசுமதியாளனாக உடனிருக்கலாம்” என்றாள். மேலும் குரல் தழைய “உண்மையில் குங்கனே கோல்கொண்டு நாடாளலாம் என்று சொல். குங்கனைப் போன்றவர்கள் பொதுவாக எளியவர்களையே விழைவார்கள். அவர்களின் களத்தில் காயென அமைய அவர்களே உகந்தவர்கள்” என்றாள்.

திரௌபதி “ஏன் நாம் அவரை இப்படி வென்றெடுக்கவேண்டும்?” என்றாள். “உனக்கென்ன அறிவே இல்லையா? இன்று இந்நகரில் அறிவின் வல்லமை கொண்டவன் அவன் மட்டுமே. தீயவன் என்றாலும் ஆற்றல்மிக்கவன். அவன் நம் பக்கம் இருந்தால் நமக்கு பெரும்படைக்கலம். கீசகனை வீழ்த்தி உத்தரனை அரசமர்த்த அவனே போதும்” என்றாள் அரசி. திரௌபதி “ஆம், மெய்தான்” என்றாள்.

தொடர்புடைய பதிவுகள்

தீவிரம்!

$
0
0

kartoon

ஜெ,

தீவிர இலக்கியம் பற்றிய சந்தோஷ் நாராயணனின் நக்கல் இது. உங்கள் பார்வைக்காக

மதன்

 

அன்புள்ள மதன்,

 

தீவிரம் எப்போதும் கிண்டலுக்குள்ளாகிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது போலித்தனமாக ஆகிவிடும். கிண்டலைக் கடந்துசெல்லும்போதே அது உண்மையான தீவிரம். வுடி ஆலனின் கிண்டல்கள் வழியாக இலக்கியம் ஒருவகையில் கொண்டாடப்படுகிறதென்றே சொல்லலாம்

 

அதோடு ஒன்று, இலக்கியத்தை இத்தனை கூர்ந்து கவனித்துக் கிண்டல்செய்வதும்கூட ஒரு இலக்கியத்தீவிரம்தான்.இதில் கிண்டலின் உச்சம் என்பது விமர்சன மதிப்பீடு வரும் வழி..

 

சந்தோஷுக்கு பாராட்டுககள்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பச்சைக்கனவு -கடிதங்கள்

$
0
0

1

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

பருவ மழைப்பயணம். நினைவில் அகலாத மலைகள், தழுவிச் செல்லும் முகில்கள், பச்சைப் படாம் போர்த்த வெளிகள், அடர்ந்த பல்வகைத் தாவரங்கள், மலர்கள், பெருமரங்கள், நீரோடைகள், ஓயாது ஓசையிடும் அருவி, தொடர்ந்து வரும் மழை, மனதில் இன்னும் உலராத ஈரம். இரவு வீடு திரும்பினேன் உடல் சோர்வடையவில்லை அதனால் உறக்கம் உடனடித் தேவையாக இல்லை. மனம் உவகையில் இருந்தது. நீர்க்கோலத்தின் விடுபட்ட நான்கு அத்தியாயங்களைப் படித்து முடித்தேன். “மூன்றுநாள் மழை அனைவருக்கும் உடலோய்ந்த உள்வாழ்க்கை ஒன்றை அளித்திருந்தது. விழிகள் ஒளிக்கு கூசின. புறவுலகை மறுத்தது உள்ளம்” – நீர்க்கோலத்தின் வரிகள், புகைமூட்டம் என நகர்ந்து, முகிலென மலை தழுவி, துளிகள் என நழுவி, அருவி என ஓசையிட்டு வீழ்ந்து ஓடையென ஆறென பெருகிய நீர்கோலங்கள் கண்டு வந்த பின், உவந்தது. சிறு மாற்றம், உள்வாழ்க்கை அளித்தது ஆனால் உடல் ஓயவில்லை. விழிகள் ஒளிக்கு கூசவில்லை. புறவுலகை மறுக்கிறது உள்ளம் -ஆம் அவ்வாறே. இயற்கை எங்கேயும் தீவிரம் கொண்டே இருக்கிறது என்னும் போதும் சில இடங்களில் மட்டுமே உணர்ந்தே தீர வேண்டும் என்னும் அளவிற்கு தீவிரம் கொண்டுள்ளது என்று எண்ணுகிறேன்.

உணர்கொம்புகள் இழக்கப்படவில்லை அவை இருப்பதே மறக்கப்படும் அளவிற்கு வாழ்க்கையைச் சுருக்கினோம் என்றும் எண்ணுகிறேன். இயற்கையின் தீவிரம் அங்கு எங்கும் இருந்தது. பயணம் கொண்டோர் அனைவரிடமும் ஏதோ ஒரு வகையில் தீவிரம் இருந்தது. ஒருவர் போல் ஒருவர் இல்லை ஆனால் அன்பு அனைவரிடமும் இருந்தது. கண்கள் அதைத் தெரிவித்தவாறே இருந்தது. முதல் நாளில் அந்த நள்ளிரவில் தன் குடும்பத்தினர் அனைவரையும் விழிக்கச் செய்து அன்புடன் உபசரித்த தங்கள் வாசகர் – எத்தகையதொரு அன்பு அவருக்கு உங்கள் மீது?. மறுநாள் இரவில் தரையின் குளிருக்கு விரிப்புகள் பரப்பிய தங்கள் அன்பு. பேசிய போதும் பேசாதிருந்த போதும் ஒருவித தீவிரம்-தவிப்பு உங்களிடம் எப்போதும் இருப்பது போல் தோன்றியது. அந்த அன்பினைப் போற்றுகின்றேன்.

இதெல்லாம் அருள் அருளேதான்.

விக்ரம்,

கோவை

***

2

ஜெ அவர்களுக்கு

வணக்கம்.. அருமையான மலை& மழைப்பயணம் சென்று வந்திருக்கிறீர்கள்.. அதை உங்கள் வார்த்தைகளில் படிக்கும் போது, நானே சென்று வந்ததாய் உணர்கிறேன்..

பச்சைக்கனவு தலைப்பை படித்ததுமே, அலைபாயுதே படத்தில் வரும் பச்சை நிறமே! பச்சை நிறமே! பாடல் தான் நினைவுக்கு வந்தது. அப்பாடலைப் பார்க்கும் பொழுதெல்லாம் மனதுக்குள் பல விதமான பச்சைநிறங்கள் அடுக்கடுக்காய் விரியும்.. வெகு நேரம் மனதில் பச்சை நிறம் ததும்பி நிற்கும்…

அது போல் தான் உங்கள் பயணமும்.. பச்சைக்கனவு படித்ததும் என்னால் அப்பச்சைப்புல்வெளியை உணர முடிந்தது.. நீங்கள் கூறியபடி, அடுத்த வருடம் பிசா, பர்கர் எல்லாம் கிடைக்கும் போல… வாகமன் பைன் ஃபாரஸ்ட் அருகில் எத்தனை கடைகள்..புல்வெளி அருகிலும் கூட.. பருந்துப் பாறையும் அப்படி ஆகிக் கொண்டிருக்கிறது.. நிரந்தரக்கடைகள் இல்லை என்பது ஆறுதல்..

உங்கள் வாசகரின் அன்பு ஆச்சரியம்.. அழகு.. வழியில் எதிர்பாரா உபசரிப்பு பயணத்தை சுவாரஸ்யமாக்கும்..

உச்சியில், பாறைமேல் மல்லாந்து படுத்து வான் நோக்குவதை விட வேறு என்ன பெரு மகிழ்வை நாம் இப்புவிவாழ்வில் பெறப் போகிறோம்?

நீங்கள் பயணித்தது மகிழ்வு,.. அதைவிட உங்கள் வாசகர்கள் எல்லோரையும் அதில் பயணிக்க வைத்து விட்டீர்கள்..

நன்றி

பவித்ரா

3

உறுத்தல் தரும் ஈர உடைகள் உவகை தருவனவாய் மாறிய பயணம். திருச்சியிலிருந்து பைக்கில் வீடு திரும்புகையில், அணியா ஆடைகளை புறந்தள்ளி, ஈரம் உலராத  பேண்ட் ஒன்றை அணிந்து பயணித்தேன்.

நன்றி!!!. பயணத்தை இனிய நினைவாக்கிய நண்பர்கள் அனைவருக்கும்.

-யோகேஸ்வரன்.

ஜெ

பச்சைக்கனவு பற்றி எழுதியிருந்தீர்கள். லா.சராவின் அந்தக்கதை இணையத்தில் கிடைக்கிறதா?

ஜெயராம்

***

இணைப்பு

பச்சைக்கனவு -லா.சராவின்  கதை 

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

காடு, நிலம், தத்துவம்

$
0
0

அன்புள்ள ஜெ.,

நலமாயிருக்கிறோம்.

இசையும் மொழி

தங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஊக்கம் தருகின்றன. நனி நன்றி.

கடந்த இரு மாதங்களாகத் தங்கள் எழுத்துக்களுடன் அல்லது தங்கள் எழுத்துக்கள் வழி உங்கள் அகத்துடன் நான் கொண்டிருக்கும் தொடர்பு அற்புதமான ஒன்று.

ஏப்ரல் இறுதியில் ”காடு” படித்தேன். இன்னமும் அந்த ‘வறனுறல் அறியாச் சோலை’யை விட்டு நான் வெளியே வந்ததாகத் தெரியவில்லை. மிக நுட்பமாக என் மனத்தையே ஒரு பெருங்காடாக விரித்துக் கொடுத்த வியத்தகு பனுவல் அது. அதன் பாயிரம் சொல்வது போல் நீர் தமிழீன்ற ’ராட்சஸக் குழந்தை’தான்.

மே மாத நடுவில் பன்னிரு நாட்களில் ”விஷ்ணுபுரம்” வாசித்து முடித்தேன். இன்னொரு பரிமாணத்தில் ஓர் அகப்பயண அனுபவமாயிற்று. அது முன்வைக்கும் சமய விவாதங்களின் முடிவு தர்க்க வழியிற் செயல்படும் தத்துவச் சிந்தனையின் போதாமையை அஜிதன் உணர்ந்து காட்டுக்குள் சென்று மிருகநயனியின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய கொள்ளும் முயற்சி ஆகியவற்றை ஒருபக்கமும், விஷ்ணுபுரத்தின் இறுதி ஞானியாகச் சிலை வடிக்கப்பட்டிருந்த, புதினத்தில் ஒரு சொல்லும் பேசாத, பித்தனைப் போல் குழந்தையைப் போல் தோன்றுகின்ற, இயற்கையில் முற்றும் இயைந்து வாழுகின்ற (பெருவெள்ளம் அவனை மூழ்கடித்து அழிக்கவில்லையே, ஒரு தவளை போல் தாவிப் பாறைமீது ஏறிவிடுகிறானே!) தேவதத்தனைக் குறியீடாக மறுபக்கமும் வைத்து ஒப்பிட்டு நோக்கும்போது தத்துவ விவாதங்களில் வெல்பவர் தோற்பவர் இருவரிடமுமே சமயத்தன்மை இல்லை என்று சுட்டிக்காட்டுவதும் தத்துவத்திலிருந்து தியானத்திற்கு, பௌத்தத்திலிருந்து ஜென்னுக்கு என்னும் தாவலும் இருப்பதாகப் புரிந்துகொண்டேன். இதை நான் சொல்வது விஷ்ணுபுரத்தின் தத்துவப் பகுதிகளை எல்லாம் முழுமையாய் விளங்கிவிட்டேன் என்று சொல்வதற்கல்ல. அப்படிச் சொன்னால் அது பொய். ஆனால் தத்துவங்களை விளங்கிக்கொள்ளப் மூளையைக் கசக்கிப் பிரயத்தனம் செய்யும் பண்பு என்னிடம் இல்லை. அவை தாமாகத் திறந்துகொடுக்க வேண்டும். அதற்காக மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டுமானால் செய்வேன். அவரவர்க்கு ஒவ்வொரு நிலையில் விளங்கட்டுமே, தவறென்ன?

2010-இல் “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” வாங்கிப் படித்தேன். இப்போது விஷ்ணுபுரத்தைப் படித்தபோது அதன் “கௌஸ்துபம்” பகுதிக்காக நீங்கள் செய்த ஹொம் ஒர்க்கின் பதிவாக அந்நூல் படுகிறது. புனைவிலக்கியம் எத்தனைப் பெரிய தயாரிப்புக்களைக் கோருகிறது என்பதற்கான சிறந்த சான்றாக இதனைக் காண்கிறேன்.

காடும் விஷ்ணுபுரமும் என் மனைவி எனக்கு அன்பளிப்பாகத் தந்தவை. அதே காலத்தில் அவ்விரு நூற்களையும் என் தோழர், உடன்பிறவா அண்ணன் கரிகாலன் (தமிழ் உதவிப்பேராசிரியர், அரசுக் கல்லூரி, அரியலூர்) அவர்களுக்கு நான் அன்பளிப்புச் செய்தேன்.

இவ்விரு நூற்களுக்கு இடையில் ‘அனல் காற்று’ வாசித்தேன். ஏற்கனவே உங்களின் சிறுகதைகளை முழுமையாக வாசித்திருக்கிறேன். (என் மாணவர் ஒருவருக்கு “ஜெயமோகன் சிறுகதைத் திறன்” என்னும் தலைப்பை முனைவர் பட்ட ஆய்வுக்குக் கொடுத்திருக்கிறேன். இனிமேல்தான் ஆய்வுப் பணியைத் தொடங்க இருக்கிறார். ஓர் எச்சரிக்கையாக, முன்கூட்டி இப்போதே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்!) கட்டுரை நூற்களும் வாசித்திருக்கிறேன். நவீன இலக்கியம் பற்றிய உங்கள் நூலை எம்.ஃபில். தாளொன்றுக்குப் பாடமாக வைத்திருக்கிறேன். ஒரு வகையில் நீங்கள் எனக்கொரு முதுபேராசிரியர்.

விஷ்ணுபுரம் முடித்த சில நாட்கள் கழித்து “நிலம் பூத்து மலர்ந்த நாள்” வாசித்தேன். அதைப் பற்றி “காடு பூத்த தமிழ் நிலத்தில்…” என்னும் தலைப்பிலொரு பின்னூட்டக் கட்டுரை எழுதி எனது வலைப்பூவில் (pirapanjakkudil.blogspot) பதிவிட்டேன் (20 மே, 2017). அதனைப் படித்துப் பார்த்துவிட்டு ஓரிரு வரிகள் பதில் எழுதுமாறு கேட்டுத் திருமதி கே.வி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். சுத்தம்.

அடுத்து “கொற்றவை” வாசிக்க நாடியுள்ளேன்.

நீங்களும் தமிழுக்குக் கிடைத்தவொரு ”வறனுறல் அறியாச் சோலை”தான்.

மீண்டும் நன்றிகள்.

ரசிகன்,

ரமீஸ் பிலாலி.

***

அன்புள்ள ரமீஸ் அவர்களுக்கு,

அந்தக்கட்டுரையை நானும் தவறவிட்டுவிட்டேன். நல்ல கட்டுரை. இணைப்பு அளித்திருக்கிறேன். முக்கியமான நூல், பரவலாக இன்னமும் கவனிக்கப்படவில்லை. உட்குறிப்புகள் வழியாகச் செயல்படுவது. இன்றைய முகநூல் சூழலில் செறிவான உரைநடையை வாசிக்கும் மனநிலையை கணிசமானவர்கள் இழந்துவிட்டார்களோ என்ற ஐயமும் எழுகிறது

*

விஷ்ணுபுரத்தைப் பொறுத்தவரை அதில் தத்துவங்கள் அல்ல, அவைபற்றிய குறியீடுகளே பெரிதும் கையாளப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாகத் தெரிந்துகொண்டு அதை உணரவேண்டும் என்பதில்லை. தத்துவம் அதன் உச்சத்தில் அடையும் ஒருவகை அசைவின்மையை, வெறுமையை உணரமுடிந்தால்போதும்.

 

சமீபத்தில் என் மகன் சொல்லி பிபிஸியின் தத்துவம் பற்றிய டாகுமெண்டரி ஒன்றைப்பார்த்தேன். அதில் அறுபதுகளில் logical positivism சார்ந்து நடந்த அதியுக்கிரமான தத்துவமோதல்களைப்பற்றி பேசப்படுகிறது. அன்று அதன் முகமாக அறியப்பட்ட ஏ.ஜி.அயர் சற்றே கசப்புடன் சிரித்தபடி “நாங்கள் லாஜிக்கல் பாஸிடிவிஸத்தைக் கொண்டு அன்றுவரை பேசப்பட்ட அத்தனை தத்துவநிலைபாடுகளையும் உடைத்தோம். எஞ்சியது இடிபாடுகள். எங்களால் எதையும் உருவாக்க முடியவில்லை. அழகியலையோ அறவியலையோ” என்கிறார்

”தன்னையே உடைக்கும் தருக்கம், தர்க்கம் மட்டுமான தர்க்கம்’ என்று விஷ்ணுபுரத்தின் சுடுகாட்டுச் சித்தன் சொல்கிறான். அதைத்தான் நினைவுகூர்ந்தேன். தொடர்ந்து மேலைச்சிந்தனையில் இந்த இடிப்புதான் நடந்துகொண்டிருக்கிறது. எஞ்சும் வெறுமை மிக மிக படைப்பூக்கம் கொண்டது. அதிலிருந்து அடுத்தது முளைக்கிறது

ஜெ.

***

இசையும் மொழி

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

காடு பூத்த தமிழ்நிலம்

$
0
0

manoj

இந்த மலைப்பரப்புக்களை எல்லாம் இக்கதை மாந்தர்கள், பாணரும் கூத்தரும் பொருநருமான கலைஞர்கள், நடையாய் நடந்தலைந்து கடக்கின்றார்கள் என்பதான காட்சிகளைப் படிக்கப் படிக்க என் அகநிலத்தில் நானும் அவர்களுடன் நடந்திருந்தேன். விடுமுறை நிமித்தமாய்க் குடும்பத்துடன் இங்கே பயணித்தலைந்த பசுமையான ஊர்களெல்லாம் அதன் ஈராயிரம் ஆண்டுகள் தாண்டி இப்போது வெளியே பிரதிபலிப்பதாகத் தோன்றிற்று

nilam

மனோஜ் குறூர் எழுதிய நிலம்பூத்து மலர்ந்தநாள் நாவலைப்பற்றி ரமீஸ் கஸாலியின் மதிப்புரை

ramez

காடு பூத்த தமிழ் நிலத்தில்…

=========================================================

நிலம் பூத்து மலர்ந்த நாள் – கடலூர் சீனு

 

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 45

$
0
0

44. நாத்தழல்

flowerஅடுமனையின் பின்பக்கம் நீள்வட்ட வடிவில் குளம் ஒன்று வெட்டப்பட்டிருந்தது. அடுமனையிலிருந்து அங்கு செல்வதற்குரிய சற்று சரிவான கல் பதிக்கப்பட்ட பாதையினூடாக உணவொழிந்த பெருங்கலங்களை அடுமனைப் பணியாளர்கள் உருட்டிக்கொண்டு வந்து நீருக்குள் இறக்கினர். சம்பவன் அடுமனைத் தோழனாகிய மேகனுடன் இணைந்து நிலவாய் ஒன்றை இரு காதுகளிலும் கயிறுகள் கட்டி தோளில் மாட்டி தூக்கிக்கொண்டு இறங்கினான்.

நீருக்குள் முதலைகள் போலவும் எருமைகள் போலவும் கரி படிந்த அடிக்குவைகள் தெரிய உருளிகளும் அண்டாக்களும் பாதி மூழ்கிக் கிடந்தன. குளத்தைச் சுற்றி கல்லடுக்கி எல்லா பக்கமிருந்தும் இறங்கும்படியாக மிகச்சரிவாக கரை அமைக்கப்பட்டிருந்தது. கோதையின் கிளையாறாகிய சபரியிலிருந்து வெட்டிக் கொண்டுவரப்பட்ட கால்வாய் அதில் நீரை நிரப்பி மறுபக்கம் எழுந்து வழிந்து சென்று அங்கிருந்த காய்கறித் தோட்டத்துக்குள் மறைந்தது.

அடுமனையாளர்கள் உரத்த குரலில் ஒருவரை ஒருவர் அழைத்துப் பேசியும், ஆணைகளை இட்டும், சிரித்து நகையாடியும்  பணியாற்றிக்கொண்டிருந்தனர். நிலவாயை நீருக்குள் இறக்கியபின் கைதூக்கி சோம்பல் முறித்து சம்பவன் மேகனிடம் “இனி அங்கிருப்பவையெல்லாம் சிறிய கலங்கள். அவற்றை அவர்களே கொண்டு வந்துவிடுவார்கள்” என்றான். மேகன் அங்கிருந்த வேர்ப்புடைப்பொன்றில் அமர்ந்து கைகளை விரித்து உடலை ஒடுக்கி “அடுமனைப்பணி ஒப்பு நோக்க எளிது. கலங்களைக் கழுவுவதுபோல் கடினமானது பிறிதில்லை” என்றான். சம்பவன் அவனுக்கெதிராக அமர்ந்து இடையில் அமைந்த பொதியிலிருந்து பாக்கொன்றை எடுத்தான். இயல்பாக மேகன் கைநீட்ட துணியை வைத்து அப்பாக்கை கடித்து இரண்டாக உடைத்து பாதியை அவனிடம் கொடுத்தான்.

அதை வாயில் போட்டு சற்று மென்று அதன் துவர்ப்பூறலை வாயில் நிறையவிட்டு எச்சில் வழியாதிருக்க வாயை சற்று தூக்கி இலக்கிலாமல் நோக்கியபடி சுவையுணர்ந்து அமர்ந்திருந்தான் மேகன். பாக்கு அவன் நரம்புகளில் ஊறி உடலில் பரவியிருந்த இறுக்கத்தை மெல்ல மெல்ல தணிக்கத் தொடங்கியது. துயில் வந்து மூடுவதைப்போல கண்கள் இமை சரிந்தன. சம்பவன் “இன்று கலங்கள் இருமடங்கு. உண்பவர்கள் குறைவென்றாலும் வறுக்கும் உணவு மிகுதி என்றால் கலம் சேர்ந்துவிடுகிறது” என்றான்.

மேகன் இரு விரல்களை வாயில் அழுத்தி நீட்டி மரத்தடியில் துப்பிவிட்டு “இங்கு அடுமனைப்பணிக்கு வரும் எவருக்கும் முதலில் அளிக்கப்படுவது கலம் கழுவும் வேலைதான். தோள் வலிமை உடையவர்கள் செய்ய வேண்டியது. நான் வந்து இரண்டாண்டுகளாகி விட்டன. இதுவரை அடுமனைப்பணியில் பெரும்பாலும் நான் செய்தது இதுதான்” என்றான். “நானும் கலம் கழுவுவதிலேயே தொடங்கினேன்” என்று சம்பவன் சொன்னான். மேகன் “ஆனால் நீ அடுமனைத் தொழிலை கற்றுத் தேர்ந்தவன் என்றனர் உன் குடியினர். வலவர் கலம் கழுவுவதற்கு உன்னை அனுப்பியது விந்தையாகத் தோன்றியது. உனது ஆசிரியர் உனது திறனில் மதிப்பு கொள்ளவில்லை போலும்” என்றான்.

சம்பவன் புன்னகைத்து “அத்தனை எளிதாக ஒருவர்மேல் மதிப்பு கொள்ளும் ஒருவர் நான் இத்தனை தவமிருந்து தேடி அணுகும் தகுதியுடையவராக இருக்க வாய்ப்பில்லை அல்லவா?” என்றான். மேகன் சிரித்து “இது மானுட உள்ளங்களின் இயல்பு. ஒருவர்மேல் பற்று கொண்டுவிட்டால் பின்னர் குற்றமும் குறையும் கண்ணுக்குப் படுவதேயில்லை. சொல்பவர்மேல் சினம் வரும்” என்றான். சம்பவன் “அத்தகைய பெரும்பற்று இல்லாமல் காதல் கொள்ள முடியாது, மைந்தரை வளர்க்க இயலாது, எதையும் கற்றுக்கொள்வதும் நடவாது” என்றான். “அவர் நம்மேல் கனியவில்லை என்றால்? நம்மை அவர் அறிந்துகொள்ளவில்லை என்றால்?” சம்பவன் “நீ கேட்ட இரு வினாக்களிலும் உள்ள நான் என்னும் சொல் மிகப் பெரிய தடை, அன்பு கொள்வதக்கும் பணிவதற்கும். அச்சொல்லே இல்லா நெஞ்சுடன் அணுகுபவர்களே அதை அடையமுடியும்” என்றான்.

“அங்கென்ன செய்கிறீர்கள்? கலங்கள் ஊறிக் காத்துக்கிடக்கின்றன. இன்று முழுக்க கழுவினாலும் பொழுது விடிவதற்குள் முடிக்க முடியாது போலிருக்கிறது” என்று கீழிருந்து அவர்களின் குழுத்தலைவனாகிய பிரமோதன் அழைத்தான். எழுந்து மீண்டும் துப்பிவிட்டு பாக்கை கன்னத்தில் அதக்கியபடி “வா” என்று மேகன் சரிவிலிறங்கி நடந்தான். இருவரும் இடையளவு நீரிலிறங்கி அங்கு ஊறி மூழ்கிக்கிடந்த பெரிய உருளியொன்றைத் தூக்கி கரைநோக்கி இழுத்தனர். எருமைக்கன்றுபோல அது நழுவி அடம்பிடித்தது. அதன் காதுகளைப்பற்றி இழுத்து கரை கொண்டுவந்து ஓரிடத்தில் அதன் விளிம்பை காலால் மிதித்து உள்ளிருந்த நீரை சரித்து,  தரைக்கல்லில் வைத்து மும்முறை சுழற்றி கரையேற்றி வைத்தான் சம்பவன்.

மேகன் புன்னகையுடன் “இதிலும் ஒரு கலை உள்ளது. இத்தனை எளிதாக இப்பெருங்கலத்தை கரை ஏற்றும் ஒருவரை நான் பார்த்ததில்லை” என்றான். சம்பவன் “பணியென்று எதைச் செய்தாலும் அதில் நுட்பத்தை கண்டடைய முடியும் அந்நுட்பத்தை மட்டும் கையாள்பவன் அதை கலையென்றாக்குகிறான்” என்றான். “நீ நூல் கற்றிருக்கிறாய்” என்றான் மேகன். “இல்லை, நான் கற்றவை எல்லாம் என் ஆசிரியரின் சொற்களென என்னை வந்தடைந்தவை மட்டுமே” என்றான் சம்பவன். “உன் ஆசிரியர் பாண்டவராகிய பீமசேனர். அவர் இறந்துவிட்டார் என்கிறார்கள்” என்று மேகன் சொன்னான். “அவர் இறக்கவில்லை. வலவன் அவரே” என்றான் சம்பவன். “என்ன சொல்கிறாய்?” என்றான் மேகன். “மெய்யறிந்தோர் தங்கள் வழித்தோன்றல்களில் வாழ்கிறார்கள். வலவன் அவருடைய வடிவம் என்றே எனக்குத் தெரிகிறார்.” மேகன் “ஆம், அவருடைய தோள்கள் கீசகரின் தோள்களைவிடப் பெரியவை” என்றான்.

“இத்தனை தொழில் கற்ற பின்னரும் உன்னை இப்பணிக்கு அனுப்பிய வலவரை எண்ணி வியக்கிறேன். உன் கையில் அன்று நீ கற்றவை வெளிப்படவில்லையா என்ன?” என்றான் மேகன். “முதல்நாள் அவர் கேட்டபோது  நான் காய்ச்சிய புளிக்காய்ச்சலை நீ உண்டாயல்லவா? நீ என்ன நினைக்கிறாய்?” என்றான் சம்பவன். “உண்மையாகவே சொல்கிறேன் சற்று முன்வரை இந்த அடுமனையில் நான் உண்ட உணவுகளில் மிகச் சிறந்த ஒன்று அந்தப் புளிக்காய்ச்சல். இந்த அடுமனையில் இன்று வலவர் அன்றி எவரும் அதற்கிணையான ஒரு புளிக்காய்ச்சலை செய்துவிட முடியாது. உன்னை அப்படியே அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக்கொள்வார் என்று எண்ணினேன். அவர் ஒரு சொல்லும் உரைக்காமல் இங்கனுப்பியது பெருவிந்தையென எனக்குத் தோன்றியது. எனக்கு எண்ண எண்ண ஆறாமலிருப்பதும் அதனால்தான்” என்றான். சம்பவன் புன்னகை செய்தான்.

flowerவிராடபுரியில் நுழைந்த முதல்நாள் அந்தி இருளில் அவர்களின் குழு அடுமனையை நோக்கி வந்தபோது எதிரே இரு உதவியாளர்கள் தொடர்ந்து வர பெருந்தோள் மல்லர் ஒருவர் வருவதைக் கண்டு விகிர்தர் கைகூப்பி நின்றுவிட்டார். சம்பவன் முதலில் பின்னால் அடுமனை முகப்பில் எரிந்த பந்த ஒளியில் ஒரு மனிதனின்  நிழல் விரிந்த தோற்றம் என்றே எண்ணினான். அருகணைந்தபோது அம்மனிதன் மார்புக்கூட்டுக்குள் தன் மொத்த உடலும் ஒடுங்கிவிடும் என உணர்ந்தான். இரு கைகளும் இரு துணைவர் என மருங்கமைந்தன. விகிர்தர் இரு கைகளையும் தலைமேல் கூப்பியபடி அணுகி “அடுமனைத் தொழில் அறிந்தவர் நாங்கள். கலிங்கத்துச் சூதர். இங்கு அத்தொழிலுக்கு சூதர்கள் தேவை என்பதை அறிந்து வந்துள்ளோம்” என்றார்.

தோள்மேல் விரிந்த குழலும் அடர்வற்ற கூர்மீசையும் மென்புல்போல் தாடியும் கொண்டிருந்த அகன்ற மஞ்சள் முகத்தில் விரிந்த புன்னகை சிறுவனுக்குரியது என சம்பவன் நினைத்தான். அப்பெருமானுடன் அவர்களை ஒருகணம் ஒருமுறை நோக்கியபின் “வந்து அமர்ந்து உணவருந்துங்கள். பிற அனைத்தும் பின்னர்… வருக!” என்றான். “நாங்கள் பணி கோரி வந்தோம்” என்றார் விகிர்தர். “இனி எதற்கும் அஞ்சவேண்டியதில்லை. உணவருந்தலாம்” என்று சொல்லி அவன் தன் பெரிய கையை சம்பவனின் தோளில் வைத்து “நீ அடுமனையாளனா?” என்றான். “ஆம், தொழில் கற்றிருக்கிறேன்” என்று சம்பவன் சொன்னான். “எவரிடம்?” என்று பேருடலன் கேட்டான்.

“நானே கற்றேன். நான் இளைய பாண்டவர் பீமனை என் ஆசிரியனாகக் கொண்டேன். அவரைக் குறித்த செய்திகள் வழியாக என்னை வளர்த்துக்கொண்டேன்” என்றான். புன்னகையுடன் “நன்று! அடுமனைத் தொழிலை கைப்பழக்கமாகவே செய்ய முடியும். ஒருபோதும் குறையாத சுவையொன்றை அது அளிக்கும். அடுதொழில் செய்பவர்களில் பல்லாயிரத்தில் ஒருவரே அதற்கு உளம் அளிப்பவர்கள். அகம் அளிக்கத் தொடங்கினால் அது முடிவிலாது விரிவடைவதை அறிவாய். எந்த மெய்யறிவையும்போல அதுவும் மானுடனை பிரம்மத்திடம் இட்டுச் செல்லும்” என்றான்.

வலவனின் கைகளின் எடையால் முதுகு வளைந்து எலும்புகள் வலிக்க தோள் தொய்ய “ஆம், அடுமனைத் தொழிலை கலையென்று பயிலவும் யோகமென்று இயற்றவும் நான் விழைகிறேன்” என்றான். “வருக” என்று புன்னகையுடன் சொன்னபடி அவர்களை ஊண்கூடம் நோக்கி அழைத்துச் சென்றான். அவன் நீராடியிருந்தாலும் பேருடலர்களுக்குரிய மெல்லிய வியர்வைமணம் இருந்தது. நீணாள் முன் உயிர்நீத்த தந்தையின் நினைவை அது சம்பவன் உள்ளத்தில் எழுப்பியது. முதிய சூதர்  சுந்தரர்  “நாங்கள் நெடுந்தொலைவு பயணம் செய்து வந்திருக்கிறோம். இன்னும் நீராடவில்லை” என்றார். அவன் உரத்த குரலில் “நீராடாமல் உணவுண்ணும்படி நான் ஆணையிடுகிறேன்” என்றான்.

அவர் “நாங்கள்…” என்று தொடங்க “ஆணைகளை மீறுவதை நான் விரும்புவதில்லை” என்றான் வலவன். “அவ்வாறே” என்று  சுந்தரர் சொன்னார். “என் பெயர் வலவன். நான் ஷத்ரியன். இந்த அடுமனையில் முதன்மைப் பொறுப்பில் இருக்கிறேன்” என்றான். மிருகி “நீ எங்கள் வயிற்றை முதலில் பார்த்தாய், மைந்தா. பசித்து நடைதளர்ந்திருக்கிறோம்” என்றாள். வலவன் புன்னகையுடன் “பசி நல்லது. அடுமனையாளர்கள் போற்றும் தெய்வம் அது” என்றான். “நாங்கள் அங்கு சென்று தாங்கள் சொன்னதாகச் சொல்லி உணவுண்கிறோம்” என்றார் குடித்தலைவர். “வேண்டாம். முதல் உணவை என் கைகளாலேயே விளம்புகிறேன். முட்டப்பசித்தவருக்கு அன்னம் பரிமாறும் பேரின்பத்தை ஒருபோதும் நான் இழப்பதில்லை” என்று வலவன் சொன்னான்.

உணவுக்கூடத்தின் முன் அவர்கள் அனைவரும் பெட்டிகளையும் பொதிகளையும் வைத்துவிட்டு கைகளை உதறி மூச்சுவிட்டு இளைப்பாறினர். சிறுவர்களும் சிறுமியரும் அவனைப் பார்த்ததுமே சொல்லடங்கி விழிகள் கனவிலென வெறிக்க நடந்தனர்.  பெரிய மரத்தொட்டியிலிருந்த நீரைச்சுட்டி “கைகால் கழுவிவிட்டு வந்தமருங்கள்” என்றான் வலவன். “இது இடைப்பொழுது. இரவுணவுக்கான பந்திகள் தொடங்க நெடுநேரமாகும் அல்லவா?” என்று சம்பவன் கேட்டான். “ஆம், இன்னும் நான்கு நாழிகை உள்ளது” என்று சொல்லி வலவன் உள்ளே சென்றான். அவனைத் தொடர்ந்து சென்ற சம்பவன்  “விளம்புவதற்கு நானும் உதவுகிறேன்” என்றான். “நீ சென்று அமர்ந்து உண். பசித்திருக்கிறாய்” என்றான் வலவன்.

சிறுவர்கள் ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளியபடி ஓடிச்சென்று அமர்ந்தனர். அவர்கள் சூதர்களுக்குரிய முறையில் கால்களை நிலைமடித்து  அரைவட்டமாக அப்பெருங்கூடத்தின் மூலையில் அமர்ந்துகொண்டனர். பெண்கள் ஒருகால் நீட்டி மறுகால் நிலைமடித்து அமர்ந்தனர். வலவனும் உதவியாளர்களும் தலைவாழை இலைகளை கொண்டுவந்து அவர்கள் முன் பரப்பினர். சம்பவனின் அருகே இருந்த சுந்தரர் “உச்சிப்பொழுது உணவு எஞ்சியதைத்தான் அளிக்கப்போகிறார்கள். அதற்கு தலைவாழை இலை எதற்கு?” என்றார். விகிர்தர் “மிஞ்சியிருக்கும்” என்றார். அதற்குள் அடுமனைக்குள்ளிருந்து புதிய உணவின் நறுமணம் எழுந்தது. “அடுமனையில் புதிய உணவு ஒருங்குகிறது. சற்று பசிபொறுத்திருந்தால் அதையே உண்டிருக்கலாம்” என்றார்.

வலவன் இரு கைகளிலும் பிடிகலங்களில் உணவை எடுத்துக்கொண்டு வந்தான். அவனுக்குப் பின்னால் ஏவலர்கள் அப்பங்களும் குழம்புகளும் கனிச்சாறுகளும் கொண்டு வந்தனர். “புதிய உணவு இன்னும் எவரும் உண்டிருக்க வாய்ப்பில்லை” என்றான் அஸ்வகன். உணவை வைத்து திரும்பிய வலவன் கருவுற்ற வயிற்றை தரையமையச் சரித்து கால் மடித்து அமர்ந்திருந்த சிம்ஹியை பார்த்தான். அவளருகே சென்று  “சற்று விலகிச்சென்று அங்கு அமர்ந்துகொள்” என்றான். அவள் வியர்வைபூத்த மேலுதடுகளும் வெளுத்த கண்களுமாக மேலே நோக்கி “நான் களைத்திருக்கிறேன்… என் உடல்…” என்று சொல்ல அவன் ஒருகையால் அவள் வலத்தோளையும் பிறிதொரு கையால் அவள் இடக்காலையும் பற்றி குழவியைப்போல தூக்கி மறுபக்கம் சுவர் சாய்ந்து அமரவைத்தான்.

அவளுக்கு முன் முதலில் இலையிட்டு ஊன்கொழுப்பில் வெந்த அப்பத்தை வைத்தான். அவள் கைநீட்டித் தடுத்து “என்னால்  உணவுண்ண முடியவில்லை, மூத்தவரே…” என்றாள்.  “நீ உண்பாய். அதற்கு முன் உனக்கு நான் ஒரு மருந்து தருகிறேன்” என்று சொன்ன வலவன் எழுந்து அடுமனைக்குள் சென்று இரு கைகளிலும் எதையோ எடுத்து வந்தான். அவர்கள் அதில் இஞ்சியும் கிராம்பும் வெந்தயமும் மணப்பதை உணர்ந்தனர். “வாயை திற!” என்றான். அவள் வாயை திறக்க ஒரு கையால் அதை நன்கு பிழிந்து அச்சாற்றை அவள் வாயிலிட்டான். “விழுங்கு” என்றான். அவள் விழுங்கி உடல் உலுக்கினாள் மறுகையிலிருந்த பொருட்களைக் கசக்கி “வாய் திற” என்று சொல்லி அச்சாற்றை அவள் வாயில் விட்டான். எரியும் பச்சிலை மணம் எழுந்தது.

அவள் உடல் கசப்பில் உலுக்கிக் கொண்டது. “விழுங்கு” என்றான். இருமுறை குமட்டியபின் அதையும் விழுங்கினாள். “வெந்நீர் சிறிது அருந்து. உன் முன் இலையிலிருக்கும் இந்த ஊன்சோற்றைப் பார்த்தபடி இவர்கள் உணவுண்டு முடிப்பதுவரை அமர்ந்திரு. அதன் பிறகு நான் அளிக்க அளிக்க நீ உண்ண முடியும்” என்றான். கடுங்கசப்பில் விழிகள் நிறைய அவள் தலையசைத்தாள். “உன்னுள் ஓநாய் ஒன்று எழுவதை நீயே உணர்வாய்” என்றபின்  மலையஜையை நோக்கி “நீயே உண்பாய் அல்லவா?” என்றான். அவள் “ஆம்” என்றாள்.  அவன் கையசைத்து ஆணையிட்டுவிட்டு பிறருக்கு பரிமாறலானான்.

சிறுவர்களும் சிறுமியரும் அதுவரை விழிவிரித்து வலவனை நோக்கிக்கொண்டிருந்தனர். “உண்க!” என்று அவன் சொன்னதும் தயங்கியபடி கைநீட்டி உணவை எடுத்து வாயில் வைத்தனர். சுவை அவர்களை முற்றிலும் உணவை மட்டுமே உணர்பவர்களாக ஆக்கியது. அவர்களின்  விழிகள் சுவையில் கூர்ந்தன. உடல் நீர்ப்புழு என சுவையில் திளைக்கலாயிற்று. விகிர்தர் “வலவரே, இது இரவு விருந்துக்கான புதிய உணவு என்று தோன்றுகிறது” என்றார். “ஆம், இன்னும் அடுப்பிலிருந்து இறங்கவில்லை” என்றான் வலவன். “அதை முதலில் சூதர்களுக்கு அளிப்பதென்றால்…” என்றார். “இங்கு என் சொல்லுக்கு மாற்றுச்சொல் எவரும் எடுப்பதில்லை” என்றான் வலவன். “பசித்திருப்போர் உண்டு நிறைந்து வாழ்த்திய  உணவு அவிமிச்சம் போன்றது. தேவர்களால் தூய்மைப்படுத்தப்பட்டது. உண்ணுக!” என்றான்.

அவர்கள் தயங்கி மெல்ல ஒருவரை ஒருவர் நோக்கினர். மிருகி ஆவலுடன் அள்ளி உண்ண பிறரும் உண்ணத்தொடங்கினர். பதற்றத்தில் அள்ளி உண்டு பசியை காட்டிக்கொள்ளகூடாதென்று ஒவ்வொருவரும் முன்னரே முடிவு செய்திருந்தனர். ஆனால் சுவை மிக விரைவில் அனைத்தையும் மறக்க வைத்தது. சூழல், தருணம் அனைத்தையும் கடந்தவர்களாக ஒவ்வொன்றையும் எடுத்து எடுத்து சுவைத்தனர். வாயூற, உளம் நிலைமறக்க, முகம் மலர்ந்திருக்க அள்ளி அள்ளி உண்டனர். உறிஞ்சினர், மென்றனர்,  தலையாட்டினர், மெய்மறந்து சிலகணங்கள் அமைந்தனர். மீண்டும் கைநீட்டி “மேலும்…” என்றனர். அவற்றை கொண்டுவருவதற்குள்  “இங்கு! இங்கு!” என்று தவித்தனர்.

அங்கு அவர்கள் அனைவர் உடலையும் விறகென ஆக்கி எரித்து எழுந்தது தொன்மையான வேள்வித்தீ ஒன்று. மூவெரி முன் அமர்ந்தவர்கள் என விரைவுடனும் பணிவுடனும் அள்ளி அள்ளி விளம்பினர் வலவனும் அவன் உதவியாளரும். மெல்ல தீ அணைந்து உடல் தளர்ந்து அவர்கள் நிறைந்தனர். ஒவ்வொரு உறுப்பும் உணவை நிறைத்துக்கொண்டதுபோல் எடை மிகுந்து நிலம்படிந்தது. “போதும்” என்று ஒருவர் சொன்னபோதுதான் அவ்வண்ணம் ஒரு சொல்லிருப்பதை பிறர் உணர்ந்தனர். “போதும்! நிறைந்தோம்! முழுமை அடைந்தோம்” என்று பரிமாற வந்தவர்களை கைநீட்டி மறுத்தனர். “இன்னும் சிறிது… இன்னும் ஒரு வாய்” என்று அவர்கள் வற்புறுத்த “போதும்… இதற்குமேல் உண்டால் உணவுச்சுவையை மறந்துவிடுவோம்” என்றார் விகிர்தர்.

சம்பவன் உண்டு முடித்து இலையை மடிக்காமல் ஊழ்கத்திலென அமர்ந்திருந்தான். முதிய சூதரான சுந்தரர்  “உண்டு முடித்தோர் எழுக!” என்று கைகாட்டினார். அனைவரும் ஓரிரு அசைவுகளுடன் எழுந்தனர். ஒரு சொல்கூட பேசிக்கொள்ளாமல் நடந்து நீர்த்தொட்டி அருகே சென்று கை கழுவினர். எவர் உள்ளத்திலும் சொல்லென ஏதும் இருக்கவில்லை. அதுவரை சுவை என்று அறியப்பட்ட ஒன்று அப்போது நிறைவு என்ற முற்றிலும் பிறிதொன்றாக மாறிவிட்டிருந்தது. எந்தத் தருணத்தில் அந்த மாறுதல் நிகழ்ந்ததென்று உணரமுடியவில்லை.

அவர்கள் திரும்பி வந்தபோது சிம்ஹியின் அருகே வலவன் குறுபீடம் ஒன்றை இட்டு அமர்ந்து “நான் அளிக்கிறேன். உண்ணமுடியுமா என்று பார்” என்றான். சிம்ஹி  நாவால் உதட்டை வருடியபடி “ஆம், இதுவரை அறியாத பசி என்னுள் எழுகிறது” என்றாள். “உன் உதடுகளே சொல்கின்றன. அவை முன்பு உலர்ந்திருந்தன” என்றான் வலவன். “உன்னுள் வளரும் அந்த மாமல்லனுக்கு என் பசியில் ஒரு பகுதியை அளித்திருக்கிறேன். இனி நீ அவனுக்காகவே  உண்ணவேண்டும்” என்றான்.

அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அடக்க முயன்று மீறி வந்த விம்மல்களுடன் தலைகுனிந்து மேலாடையால் முகத்தை மூடிக்கொண்டாள். வலவன் அவள் தோள்களில் கைவைத்து “என்ன?” என்றான். “இல்லை” என்றாள். “சொல்” என்றான். “வழியில் ஓர் அன்னை என்னிடம் சொன்னாள், என்னை காக்கும் தெய்வத்தை நான் இங்கு காண்பேன் என்று” என்றாள். அவளால் பேசமுடியவில்லை. நெஞ்சு உலைய தோள்கள் அதிர்ந்தன. அவன் அவள் தலையை வருடி “உண். இனி எதைப்பற்றியும் அச்சம் கொள்ளாமலிரு” என்றான்.

“இல்லை, இனி நான் அஞ்சுவதற்கு ஏதுமில்லை” என்றாள் அவள். “நிழலுருவாக தாங்கள் வந்தபோது நான் கண்டது என்ன தெரியுமா?” “என்ன?” என்று வலவன் கேட்டான். “மாமல்லரே, விண்ணளாவிய உருவம்கொண்டு அஞ்சனைமைந்தர் ஹனுமான் வந்ததுபோல நான்  கண்டேன். விழிமாயம் அல்ல, நான் அத்தனை தெளிவாக கண்டேன். இரு கைகளையும் கூப்பி என் தேவா உன் கால்பொடி என் தலையில் விழவேண்டும். ஒருபோதும் அச்சமெனும் நோய் இனி என்னை பற்றலாகாது என்று வேண்டினேன். அப்போதுதான் யாரோ ஏதோ கேட்டதற்கு தாங்கள் ஆம் என்றீர்கள். இப்பிறவியில் எனக்கு அச்சொல் ஒன்று போதும். பிறிதொரு தெய்வம் வேண்டியதில்லை” என்றாள்.

வலவன் அவள் தலையை தன் கையால் உருட்டினான். அவன் ஐந்துவிரல் விரிவுக்கு உள்ளே அடங்குமளவுக்கு இருந்தது அவள் தலை. அவள் செவிகளைப்பற்றி மெல்ல உலுக்கி “இந்த விழிநீர் இனி எப்போதும் விழலாகாது. உணவுக்குமுன் முகம் மலரவேண்டும். பிறிதொரு உணர்வை  பார்க்க அன்னத்தை ஆளும் அன்னைதெய்வங்கள் விரும்புவதில்லை” என்றான். “ஆம்” என்றாள். “உண்க!” என்றபின் அவன் அந்த ஊன்அப்பங்களில் ஒரு துண்டைப் பிய்த்து அவள் வாயில் வைத்து “இது என் கொடை உனக்கு” என்றான். அவள் அதை வாயால் வாங்கி புன்னகையும் நாணமும் விழிநீருமாக மென்றாள்.

அப்பால் நோக்கி நின்றிருந்த சூதர்குழுவினர் அனைவருமே விழிநீர் உகுத்துக்கொண்டிருந்தனர். விசும்பல்களும் அடக்கிய விம்மல்களுமாக தன்னைச் சூழ்ந்திருப்பதை சம்பவன் உணர்ந்தான். தொட்டபோது அவன் கண்களிலும் விழிநீர் நிறைந்திருந்தது. வலவன் எழுந்து அவர்கள் அருகே வந்தபோது ஒவ்வொருவரும் தங்கள் கண்களை துடைத்தபின் தலைகுனிந்து விழிகள் நோக்கு விலக  நின்றனர்.  வலவன் அவர்களை அணுகி “நீங்கள் இங்கு தங்கலாம். உங்கள் விழைவுக்கும் தகுதிக்கும் தக்க பணிகள் இங்குள்ளன” என்றான்.

அறியாது எழுந்த ஓர் உந்துதலால் சம்பவன் முழந்தாளிட்டு அவன் காலடியில் அமர்ந்து தலையை அக்காலடிகளில் வைத்து “நல்லாசிரியரே, தாங்கள் யாரென்று நான் அறிந்தேன். அவ்வெளிய பெண் பார்த்ததை என் ஆணவத்தால் இத்தனை பொழுதுகடந்து நான் உணர்கிறேன். என்னை ஆட்கொள்ளுங்கள். சுவையென எழுந்த தெய்வங்களுக்கு முன் படையலுடன் நிற்கும் எளியவனாக என்னை ஆக்குங்கள்” என்றான். வலவன் குனிந்து அவனை இரு தோள்களைப்பற்றி தூக்கிநிறுத்தி “நன்று. நீ என்னுடன் பரிமாற வந்ததே உன்னை காட்டியது” என்றான்.

“நான் நன்கு சமைப்பேன்…” என்றான் சம்பவன். வலவன் புன்னகையுடன் “சரி, உன் அடுமனைத் திறனை காட்டு” என்றான். “என்ன சமைக்க வேண்டும்? ஆணையிடுங்கள், இப்போதே செய்கிறேன்” என்றான். “மிக எளிது என ஒன்றை செய்” என்றபின் அவன் தோளைத் தட்டி “ஓரு புளியுப்புக் கரைசல் காய்ச்சு” என்றான். “இதோ…” என்றான் சம்பவன். “புளிக்காய்களும் உப்பும் அங்குள்ளன.” சம்பவனின் கைகள் பரபரத்தன. சில கணங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிட்டுக்குருவிபோல அங்குமிங்கும் உடல் பரபரத்தது. பின்னர் பாய்ந்து சென்று உப்பை எடுத்தான். திகைத்து அதை போட்டுவிட்டு மூச்சிரைத்தான்.

தன்னை திரட்டிக்கொண்டான். சில கணங்கள் விழிமூடி அத்தருணத்தில் தன்னை குவித்து பின் திறந்தபோது உடல் அமைதிகொண்டிருந்தது. உள்ளம் அந்த அமைதியை வாங்கி அலையவிந்தது. சிறிய மண்கலத்தில் புளிக்காய்களை எடுத்து உடைத்து உப்பும் மிளகும் சேர்த்து நீர் ஊற்றாமல் அடுப்பில் வைத்தான். கலம் சூடாகி புளியின் பச்சைமணம் எழுந்தது. மெல்ல ஓசை எழுந்து புளி வேகும் மணம் வந்தபோது எடுத்து இறக்கிவைத்து ஒரு கரண்டி நல்லெண்ணையை அதில் ஊற்றி மூடிவைத்தான். அடுப்புநெருப்பை அணைத்துவிட்டு “நோக்குக, ஆசிரியரே” என்றான்.

வலவன் “திற” என்றான். அவன் மூடியைத் திறந்தபோது அங்கிருந்த அனைவரையும் வாயூறச்செய்யும் புளிக்காய்ச்சலின் மணம் எழுந்தது.  வலவன் உதவியாளனிடம் “நோக்குக!” என்றான். அவன் “மணம் சுவை நிகழ்ந்ததை காட்டுகிறது” என்றபடி குனிந்து அதில் ஒரு சொட்டு எடுத்து நாக்கில் விட்டு “இனி ஒரு புளிக்காய்ச்சலைச் செய்ய தங்களால் மட்டுமே முடியும், வலவரே” என்றான். வலவன் புன்னகையுடன் “கொடு” என்றான். சம்பவன் மரக்கரண்டியில் புளிக்காய்ச்சலில் சிறிது எடுத்து நீட்டினான். அதை நாவில் விட்டபின் “நன்று” என்றான் வலவன். சம்பவன் கைகூப்பினான்.

“நீ என்னுடன் இரு. என்ன செய்யவேண்டும் என்று இவனிடம் சொல்கிறேன்” என்றபின் வலவன் சிறுவர்களைப் பார்த்து கைவிரித்து கண்சிமிட்டினான். அதுவரை அவனை அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அவர்கள் முகம் மலர்ந்து ஒருவரை ஒருவர் நோக்கினர். இளையவன் பாய்ந்து சென்று தாவி அவன் மேல் தொற்றிக்கொள்ள மற்ற குழந்தைகளும் கூச்சலிட்டபடி அவன் உடலில் சென்று விழுந்து பற்றி மேலேறின. தோள்களிலும் தலையிலும் இடையிலும் குழந்தைகளுடன் அவன் சிரித்தபடி உள்ளே சென்றான்.

தொடர்புடைய பதிவுகள்

பச்சைக்கனவு கடிதங்கள் 2

$
0
0

Monsoon_Trip_Day_01-1200367

வணக்கம்

உங்களின் மழை அனுபவப்பதிவை நேற்று வாசித்தேன். வழக்கம் போலவே எங்களையும் உடன் அழைத்துச்சென்றிருக்கிறீர்கள். பல வருடங்களாக இதை தொடருகிறீர்கள் எனபது எப்போதும் போலவே பொறாமையை தருகிறது. Comfort zone என்ற பெயரில் நாங்களெல்லாம் உண்மையில் சிறையில் இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டேன், அதுவும் குறிப்பாய் மழையில் நனைந்து கொண்டே சாப்பிட்ட அந்த ஐஸ்கிரீம்!! இது இன்னும் ஆண்கள் உலகுதான் இல்லையா சார்?

வக்கீலை stand up comedian உடன் ஒப்பிட்டது உங்களின் signature பகடி.

நல்ல வேளையாக எங்களுக்கேல்லாம் வாசிக்கும் பழக்கமும் அதற்கு அனுமதியும் இருப்பதால் உங்கள் உலகை வெளியிலிருந்து பார்க்கவாவது முடிகிறது.

இங்கு ஒரு புத்தாக்கப்பயிற்சியின் பொருட்டு கோவை பாரதியார் பல்கலையில் 1 மாதத்திற்கு வந்திருக்கிறேன். முதல் நாளான நேற்று என்னுடன் இது போன்ற ஒரு பயிற்சிக்கு முன்பு திருவனந்தபுரம் வந்திருந்த ஒரு திருநெல்வேலி கிருத்துவ பேராசிரியை என்னைக்கண்டதும் முகம் மலரந்து என் கைகளை பிடித்துக்கொண்டு ‘’ அப்புறம் சும்மா இருக்கியளா?’’என்றதும் நான் திடுக்கிட்டு ’’இல்லைங்க காலேஜ் போயிட்டுதான் இருக்கேன்’’ என்றேன் அவர் அதை கடந்து ‘’சார் பிள்ளைக எல்லாம் சும்மா இருக்காங்களா ‘’ என்றதும் தான் அவர் நல்லா இருக்கீங்களா என்று கேட்கிறார் என்பதை அறிந்தேன்.

 

Monsoon_Trip_Day_01-1200299

பிறகே உங்களின் மழை அனுபவங்களை வாசித்ததும் இப்படி பொள்ளாசி கோவையிலேயே குதிரை ஓட்டிக்கொண்டிருந்தால் பக்கத்து ஊரின் பேச்சு வழக்கு கூட தெரியாமல்தான் இருக்கும் என் நினைத்து இன்னும் வருத்தப்பபட்டேன்,

இடி விழுந்த பின்னரான பச்சைக்கண்ணின் காட்சிகள் என்னவோ வருத்தமளிப்பதற்கு பதில் மகிழ்வாகவே இருந்தது. இனி அழிந்த பின்னர் பார்க்கவே முடியா பச்சையை எப்போதும் கண்ணில் நிறுத்துமல்லவா இப்படி ஒரு இடி!

புட்டு பரோட்டா ஆகி இனி பீட்சாவாகவும் ஆகிவிடும் விரைவில். பின் காடுகளையெல்லம் அழித்து சுற்றுலா விடுதி கட்டி அதையே வேடிக்கை பார்க்க வருவார்களாய் இருக்கும், இந்த இடத்தில் முன்பு ஒரு காடும் மழையும் மலையும் ஆறும் இருந்தது என பிள்ளைகளுக்கு காட்டித்தர. வயிற்றைப்பிசைந்தது வாசிக்கையில்

இந்த புட்டிலிருந்து பீட்சா succession நீங்கள் வேடிக்கையாக எழுதவில்லை என்பதே இன்னும் வருத்தமாக இருக்கிறது.

நன்றியுடன்

லோகமாதேவி

 

Monsoon_Trip_Day_01-1200390

அன்புள்ள ஜெ.,

மழைப்பயணம் முடித்த என் மழைச்சட்டை இன்னும் ஈரம் காயவில்லை. பாலக்காட்டிலேயே பிழிந்து அனுப்பப்பட்ட காற்று கோவையின் ஈரத் துணிகளை உலர்த்த போதுமானதாக இல்லை போலும். அடுத்த மழை வரும் வரை இடுக்கியின் ஈரம் கொஞ்சம் இருக்கட்டும் என்று நானும் விட்டு வைத்திருக்கிறேன். அவ்வளவு பெரிய திறந்த புல்வெளிகளில் மழையில் நின்றிருப்பது கடற்கரையில் மழையில் நனையும் ப்ரம்மாண்டத்திற்க்கு ஒப்பானது. வாகமன்னிலும் பச்சை கடல் அலைகளின் மேல் நின்று கொண்டிருப்பதைப் போலத்தான் இருந்தது.
மூன்று நாட்களுமே மழையில் நடை. அருகிருப்பவர் பேசுவது கூட கேட்காதளவு மழை, மண் இனங்களோடு சேர்ந்தெழுப்பிய பேரிரைச்சல். மழைக்கு பச்சையடித்த புற்களைப் போல இம்மழைப் பயணத்தை நிலைத்திருக்கும் இனிய நினைவாக மாற்றியது நீங்களும் நண்பர்களும்.

பருந்துப்பாறையின் உச்சியில் அமர்ந்துக்கொண்டிருந்தோம். தூரத்து சிகரங்களில் அருவி கொட்டிக்கொண்டிருந்தது. கண் முன்னே சற்று நின்று மயக்கி அடுத்த மேடுகளுக்கு கடந்து சென்றது அரேபிய கடற் மேகங்கள். இடமிருந்து வலமாக கண்ணில் தென்படும் அத்தனை காட்சிகளையும் எப்படி உள்வாங்கி நிலைப்படுத்திக்கொள்வது என்று குரு நித்யா சொன்னதாக நீங்கள் வெகுகாலம் முன்பு எழுதியதிலிருந்து நான் எப்போதும் பின்பற்றுவது அது. அத்தனை காட்சிகளையும் சிறு மர அசைவு முதற்கொண்டு கவனத்தில் வாங்கிக்கொள்வது. விலகிப்போகும் மனதை அதன் போக்கிலேயே சென்று மீண்டும் கண்களில் நிகழும் காட்சிக்கு கொண்டு வருவது. இதை நீங்களே நினைவுகூர்ந்து அங்கே அதை செய்து பார்க்க சொன்னது என்னை உற்சாகம் கொள்ளச் செய்தது.

மலையருவி, மலை மேகங்கள், பச்சை புற்கள் இவற்றை பார்க்கும்போது உங்கள் நினைவில் எழும் கவிதை வரிகளையோ குறைந்தபட்சம் சினிமா பாடல் வரிகளையோ கூறுங்கள் என நீங்கள் கேட்டபோதுதான் தூரத்து அருவி என் தலையில் கொட்டியது. சட்டென சூழலுக்கு ஏற்ற ஒரு கவிதையையோ, கதைச் சம்பவத்தையோ, பாடலையோ கூட திருப்பி எழுப்ப இயலவில்லை. பக்கம் பக்கமாக படித்தவைதான். கறுத்து திரண்டு கொழுத்த மேகங்கள் கொட்டியதெல்லாம் எந்தப் பள்ளத்தில் விழுந்தது என்றே தெரியவில்லை. இத்தனைக்கும் இதை அவ்வபோது செய்பவன்தான் நான்.

 

Monsoon_Trip_Day_01-1200441

3 கி.மீ.

அந்த ஊருக்கு
இந்த வழியே
3 கி.மீ. எனக் காட்டிக்கொண்டு
நிற்கும்
கைகாட்டி மரத்திற்கு
அவ்வூரை பார்க்கும்
ஆசை வந்துவிட்டது ஒரு நாள்

வாஞ்சை கொண்டு
கிளம்பிய மரம்
நடையாய் நடந்துகொண்டிருக்க

3 கி.மீ. 3 கி.மீ எனத்
தன்னை பின்னோக்கி
இழுத்துக் கொள்கிறது
அவ்வூர்.

இசையின் இந்த கவிதையை காரில் போகையில் மைல் கல்லை காணும்போதெல்லாம் உடன்வருபவர்களிடம் சொல்லுவேன். இலக்கிய பரிச்சயமே சுத்தமாக இல்லாதவர்களோடு கூட இது கவிதையா வெறும் ஜோக்கா என்ற ரீதியிலாவது கவிதையை நோக்கி ஒரு பேச்சு தொடங்கும். அதற்க்கு பிறகு மூன்று என்ற எண்ணிட்ட மைல்கல்லும் அதற்கு பின்னால் சிறிது சிறிதாக கூடி பெருகி பிரியும் ஊரும் முன்பு பார்த்ததை போல இருக்காது.

ஊட்டி முகாமில் கவிதைகளை மேலும் மெருகூட்டுவதும் நினைவு கூர்வதற்கும் இன்றைய காட்சி ஊடங்கங்கள் எவ்வாறு உதவுகின்றன என்ற விவாதத்திற்குப் பிறகான பேச்சில், உண்மையில் நேரில் காணும் காட்சிகளினூடேதான் கவிதை வரிகளை ஒரு அதிர்வுடன் அகம் எதிர்கொள்கிறது என்று கூறியிருந்தீர்கள்.

மிகச் சாதாரண ஒரு நிகழ்வை அதற்கு தோதான ஒரு இலக்கிய வரியை அப்படியே நினைவில் கொண்டு வருவதன் மூலம் மேன்மையானதாக ஆக்க கூடுமென்றும் ஆன்மிகமான ஒரு சூழலில் பொருந்தி வரும் ஒரு சாதாரண சினிமா பாடல் கூட ஒரு உச்சத்தை நெருங்கக் கூடுமென்றும் நீங்கள் சொன்னதை ‘இலக்கியத்தின் பயன்மதிப்பு” என்ற தலைப்பில் மலேசியாவில் நீங்கள் விளாசிய உரையின் பிற்சேர்க்கையாகவே சேர்த்துக் கொள்ளவேண்டும். ரசித்து லயித்து வாசித்தவற்றை சரியான நேரத்தில் எழுப்பி கொண்டு வருவதையும் இலக்கிய பயிற்சியாகவே புரிந்துக்கொள்கிறேன்.

இப்போதைக்கு என் அறையில் மழைக் கவிதைகளையும் கதைகளின் மழை சம்பவங்களையும் சேகரித்து சுற்றி வைத்து வாசித்துக்கொண்டே நம் மூன்று நாள் மழையை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறேன்.

அன்புடன்,
நரேன்

 

பச்சைக்கனவு

பச்சைக்கனவு கடிதங்கள் 1

 

 

 

தொடர்புடைய பதிவுகள்


கலையை கையாளுதல் பற்றி …

$
0
0

aaAndy Warhol – Marilyn Monroe

1a Banksy’s appropriation of Andy Warhol’s appropriation of a Marilyn Monroe photograph.

ஜெ,

வேதா நாயக் குறித்த உங்கள் குறிப்பை படித்தேன். அவர் உபயோகப்படுத்தி இருக்கும் பெரும்பாலான புகைப்படங்கள் மற்றும் ஒவியங்கள் அவருடையது அல்ல. அவற்றின் உண்மையான படைப்பாளிகளின் பெயர்கள் எங்கும் குறிப்பிடப் படவில்லை. இந்த படங்கள் அவருடையது என்று அவர் எங்கும் குறிப்பிடவில்லையெனினும், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவர் எடுத்ததாகவோ, வரைந்ததாகவோதான் தோன்றும். அந்தக் கடிதத்தை எழுதிய வாசகர் கூட அப்படித்தான் எண்ணியிருக்க வேண்டும். தமிழ் படைப்புகளின் பெயர்களையும், இந்த படங்களையும் இணைப்பதே வேதா நாயக்கின் பங்களிப்பு.[அப்படி ஏதும் இருக்குமெனில்.]

கலையில் appropriation க்கு தனி இடம் உண்டு. Appropriation art என்ற தனி வகையே கூட உண்டு. Originality குறித்து Walter benjamin துவங்கி Richard prince வரை விரிவாகவே விவாதிக்கப்பட்டிருக்கின்றது. அவையெல்லாம் அந்த துறையின் உள்ளே நிகழ்பவை. ஒரு விவாதத்தில் முன்பு சொல்லப் பட்ட ஒன்றை மேற்கோள் காட்டப்படுவதைப் போல. புதிய கவிஞன் சங்க கவிதையின் வரிகளை எடுத்தாள்வதை போல.அதன் உத்தேச வாசகன் இலக்கிய வாசிப்புக்கு உள்ளே உள்ளவன், எடுத்தாளப்படுவதன் நுட்பமும், அதன் மூலமும் அறிந்தவன்.

அட்டை வடிவமைப்பு போன்ற, அந்த குறிப்பிட்ட கலைக்கு வெளியே இருக்க கூடிய, வடிவமைப்பு துறையில் எடுத்தாளும் பொழுது ஒரு புகைப்படம் புகைப்பட உலகில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு “உபயோக படுத்தபடுகிறது”. எனவே குறைந்த பட்சம் அது எடுக்கப்பட்ட இடத்தையும் மூல கலைஞரின் பெயரும் குறிப்பிடப்பட வேண்டும், அவர்களின் அனுமதியும் பெற வேண்டும். இல்லையெனில் அது ஒரு வகை திருட்டே. இதை சொல்லப் போனால், அது நான் உருவாக்கியது என்று எங்குமே குறிப்பிடவே இல்லையே என்று பதில் வரும். நன்றாக இருக்கிறது என்றால் நன்றி என்பார்கள்.

ஷண்முகவேலின் ஒவியம் ஒரு மஹாபாரத நாவலுக்கு பொருத்தமாக இருந்த ஒரே காரணத்தால் “சிறப்பாக” எடுத்து உபயோகப்படுத்தப் பட்டு, அதற்கு பெயரும் பணமும் வாங்கிக் கொண்ட “மகத்தான கலைஞனுக்கு” எதிராக, நம்முடைய “கலையறியா” நான்கு நண்பர்கள் [என்னையும் சேர்த்து] இரண்டு மாதமாக அமேசானுடன் போராடிக்கொண்டிருக்கிறோம். அதையும் அமேசான் கற்பனை சுதந்திரம் என்றே கூறி வருகிறது. இப்பொழுதுதான் ஒரு வழியாக உடனே மாற்றக் கூடிய digital edition களில் ஷண்முகவேலுக்கு credit ம், இனி வரக் கூடிய பதிப்புகளில் இந்த ஒவியத்தை நீக்கி விட்டு புதிதாக ஒரு ஒவியத்தை உருவாக்கி சேர்ப்பதாக உறுதியும் அளித்திருக்கிறார்கள். நிகழ்ந்த தவறுக்காக கௌரவ தொகையும் தர முன் வந்திருக்கிறார்கள். இப்படித்தான் இது நிகழ வேண்டும். இதுவே உலக நடைமுறை. இது ஒரு நிகழ்வே, தமிழிலேயே ஷண்முகவேலின் ஒவியங்களை எந்த வகையான அனுமதியும் இன்றி பல்வேறு பதிப்பகங்கள் பயன்படுத்தியதை பார்க்க கிடைக்கிறது.

ஏற்கனவே இங்கு புகைப்படமும் ஒவியமும் பெயர் குறிப்பிட கூட தகுதி அற்ற கலை வடிவமாக கருதப்படுகிறது. இந்த சூழலில் நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. நீலத்திற்கு என்று குறிப்பிடப்பட்டிருக்கும் படம் K.M. Asad என்பவரால் எடுக்கபட்டு National Geographic நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப் பட்டது. ரப்பருக்கு என்று குறிப்பிட்டிருக்கும் படம் Johnson Tsang எனும் சிற்பியுடையது. வேதா நாயக் உபயோகப்படுத்தி இருக்கும் எல்லா புகைப்படங்களும் அப்படி எடுத்தாளப்பட்டதே. உலகெங்கும் சிற்பிகளும் ஒவியர்களும் தங்கள் படைப்பை காட்சிப் படுத்தும் பொழுது “தங்கள் சிற்பத்தை / ஒவியத்தை” புகைப்படமாக எடுத்தவருக்கு கூட creative credit தர வேண்டும். Johnson tsang கே அவருடைய சிற்பத்தை புகைப்படம் எடுத்தவருக்கு கூட credit கொடுத்திருப்பார்.

வாழ்நாளெல்லாம் கொடுத்து ஒரு கலையில் தேர்ச்சி அடையும் ஒருவனின் படைப்பை எடுத்து, இதை பார்க்கும் பொழுது எனக்கு இந்த நாவல் நினைவுக்கு வருகிறது என்று போட்டுக் கொண்டு “கலைஞனாக” அறியப்பட்டு வலம் வர முடிவதே முக நூலின் தனிச் சிறப்பு. தமிழுக்கே உரிய பெருமையும் கூட. உண்மையில் படமெடுத்த புகைப்பட கலைஞனையும், அந்த சிற்பியையும் எண்ணி கொஞ்சம் பாவமாக இருக்கிறது.

இந்தக் கடிதத்துக்கே உன்மையான கலைஞனை அவமதித்து விட்டேன் என்றும் கலை என்றால் என்ன என்று தெரியுமா உனக்கு என்றும் வசைகள் வரக் கூடும் பாருங்கள். முக நூல் ஒரு “பொன்னகரம்”.

http://yourshot.nationalgeographic.com/photos/4248402/

https://www.designswan.com/archives/surreal-porcelain-sculptures-by-johnson-tsang.html

https://www.theguardian.com/environment/2014/jun/26/-sp-atkins-ciwem-environmental-photographer-of-the-year-2014-winners-in-pictures

ஏ.வி.மணிகண்டன்

www.manikandanav.com

***

அன்புள்ள மணி

நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் அவர் அதை ஒரு கலைவெளிப்பாடாக, தொழிலாகச் செய்திருந்தால் அவ்வாறு சொல்லலாம். அவர் ஒரு விளையாட்டாக தன் இணையதளத்தில் அதைச்செய்திருக்கிறார். சுவாரசியமாக இருக்கிறதே, இலக்கியம் குறித்த எந்த உரையாடலும் நல்லதுதானே என்னும் கோணத்தில் நான் அதை கவனித்தேன். அவ்வளவுதான்.

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

நம் நாயகர்களின் கதைகள்

$
0
0

 

 

sta

ஸ்டாலின் ராஜாங்கத்தின் “எழுதாக்கிளவி வழிமறிக்கும் வரலாற்று ஆவணங்கள்” என்னும் நூலை கையிலெடுத்தபோது படித்து முடிக்க குறைந்தது ஒருவாரம் ஆகும் என்று நினைத்தேன். அதன் தலைப்பு உருவாக்கிய சித்திரம் அது. அன்று மத்தியானத்திற்குள் அந்த நூலை படித்து முடித்தபோது ஒரு வியப்பு ஏற்பட்டது. சென்ற பல ஆண்டுகளில் ஒரு கட்டுரை நூலை இத்தனை ஆர்வத்துடன் நான் படித்ததில்லை.

கட்டுரை நூல்கள் பொதுவாகவே சற்று சலிப்பை ஊட்டலாம், அறியும் பொருட்டு நாம் அவற்றை படிக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கிருந்தது. ஆனால் நான் படித்த மிகச் சிறந்த கட்டுரைநூல்கள் அனைத்துமே எந்த புனைவு நூலுக்கும் நிகராக என்னை ஆழ்த்தி வைத்திருந்தவை என்பதை நினைவு கூர்கிறேன். பொதுவாக கட்டுரை நூல்கள் சலிப்பூட்டுவதற்கான காரணம் என்பது சொற்றொடர்களின் திருகலே. ஒவ்வொரு சொற்றொடரையும் ஊன்றிக்கவனித்து மீண்டும் நினைவில் மீட்டி நீவிஎடுத்துப் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும்போது மட்டும் தான் கட்டுரை நூல்கள் மிகச்சலிப்பூட்டுகின்றன. அரிதாக கருத்துக்களின் செறிவோ புதுமையோ நம்மை வெளியே தள்ளிவிடுகிறது. நமக்குநாமே விவாதிக்கச்செய்கிறது.

ஸ்டாலின் ராஜாங்கத்தின் இந்நூலின் மிகச்சிறந்த அம்சமென்பது கூரிய அழகிய உரைநடை. தேவையற்று சொற்களை முன்வைக்காதது, அதேசமயம் தேவையானவற்றை மிகச்சரியாக சொல்வது. அதனாலேயே இது ஒரு நேர் உரையாடலை அவருடன் நிகழ்த்தும் அனுபவத்தை அளிக்கிறது. இது ஒரு தேர்ச்சி அல்ல. மொழித்திறன் அல்ல. உரைநடை என்பது கைப்பழக்கம் அல்ல. அது சிந்தனைத் தெளிவுதான். ஸ்டாலின் ராஜாங்கத்தின் முதல் தகுதியே அவர் தனது அனுபவத்திற்கும் அறிவுக்கும் முற்றிலும் விசுவாசமாக இருக்கிறார் என்பதும் அறிதலுக்கும் விளக்குவதற்கும் மட்டுமே கோட்பாடுகளையோ கொள்கைகளையும் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதும்தான். தன் அறிவைக்  காட்டுவதற்காகவோ, கல்வித்துறை சார்ந்த பின்புலத்தை காட்டுவதற்காகவோ அவர் மெனக்கெடுவதில்லை. ஒற்றை வரிக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு எளியவிவாதங்கள் கிளப்பப்படும் இன்றைய முகநூல் சூழலில் இந்நூல் உருவாக்கும் பொறுப்பான விவாதம் மிக முக்கியமானது.

stal

ஸ்டாலின் ராஜாங்கத்தின் இந்நூல் முழுக்க மறுதரப்பையும் கருத்தில் கொள்ளும் நிதானமும், எவரையும் புண்படுத்தும் அல்லது சீண்டும் நோக்கமற்ற முதிர்ச்சியும், அதேசமயம் தன் தரப்பை வலுவாக முன் வைக்கும் அறப்பற்றும் செயல்படுகின்றன. ஐயமே இன்றி இந்த தலைமுறையின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் என்று ஸ்டாலின் ராஜாங்கத்தை இந்நூலை மட்டுமே ஆதாரமாக்கிச் சொல்ல முடியும்.

இந்நூலில் உள்ள ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரைகளுக்கு பொதுவாக ஓர் அமைப்பு உள்ளது. நேரடியான களச்செயல்பாடுகளிலிருந்து கிடைத்த ஒரு அனுபவத்தை, ஒரு திறப்பை முதலில் புனைவுக்குரிய ஒருமையுடன் விவரிக்கிறார். அதிலிருந்து ஒரு சமூக எதார்த்தத்தை நோக்கியோ ஒரு அரசியல் கருத்தை நோக்கியோ விரிந்து செல்கிறார். இது புனைவிலக்கியத்தின் கட்டமைப்பை கட்டுரைகளுக்கு வழங்குகிறது. வாசகனின் ஆர்வம் தூண்டப்பட்டு வெவ்வேறு கோணங்களில் அவனுடைய சிந்தனை விரித்து எடுத்துக் கொண்டு செல்லப்படுகிறது.

உதாரணமாக, சிந்து சிலைச் சின்னம் சாதி எதிர்ப்புப்போராட்டங்களின் வட்டார வரலாறு என்னும் கட்டுரை இப்படி தொடங்குகிறது. “1928ம் ஆண்டு ஆகஸ்டு 11-ம் நாள் காஞ்சிபுரத்துக்கு அருகே இருந்த அங்கம்பாக்கம் கிராமத்தின் சேரிக்குள் அதிகாலை ஒரு கும்பல் நுழைந்தது. 70க்கும் மேற்பட்டவர்களை கொண்டிருந்த அக்கும்பல் அங்கிருந்த தலித் மக்களை கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கியது. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடத்தொடங்கினர். தாக்குதலை முடித்தகும்பல் குடிசைகளைக் கொளுத்திவிட்டு அங்கிருந்து குப்புசாமி என்பவரின் வீட்டை நோக்கி முன்னேறியது

அதிலிருந்து விரியும் கட்டுரை தங்கள் வாழ்வுரிமைப் போரில் மாண்டவர்களும் , தலைமைதாங்கியவர்களும் அடித்தள மக்களின் நினைவில் எப்படியெல்லாம் நிலைநிறுத்தப்படுகிறார்கள் என்பதை விளக்கிச் செல்கிறது. சிந்து முதலிய பாடல்கள், வாய்மொழியாக உலவும் அனுபவக் கதைகள், முதியவர்களின் நினைவுகள், குழந்தைகளுக்குப் பெயர்கள், அரிதாகச் சிலைகள் என அந்நினைவுப்பேணல் பலமுகம் கொள்கிறது. போராட்டநினைவுகளை பேணிக்கொள்வதே ஒருவகை போராட்டம். அது போராட்டத்திற்கான உணர்வுக்குவியம்.

பிறிதொரு கட்டுரை தங்கை வீரம்மாளும் தமையன் வீராச்சாமியும் இப்படித் தொடங்குகிறது திருச்சி விமான நிலையத்துக்கு அருகே உள்ள சாலையில் சென்று அன்னை ஆசிரமம் என்று கேட்டால் எவரும் வழி சொல்கிறார்கள். மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, திக்கற்ற குழந்தைகள் காப்பகம், தொழில் பயிற்சி பள்ளி போன்றவை அமைந்திருக்கும் வளாகத்திற்குதான் அன்னை ஆசிரமம் என்று பெயர்என்று தொடங்குகிறது. சென்றகாலத்தைய தலித் போராளிகள் இருவரின் வாழ்க்கையும் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் வழியாக அன்றைய அரசியல்சூழலும் விவரிக்கப்படுகின்றன

ஒவ்வொரு கட்டுரையிலும் முன் முடிவுகள் இல்லாத ஒரு பயணம் நிகழ்வதனால் பிற தலித் எழுத்தாளர்களின் கட்டுரைகளில் இருக்கும் குறுகிய அரசியலை இத்தொகுதியில் பார்க்க முடியாது. அதாவது அரசியல் வழியாக இந்த களயதார்த்தங்களை ஸ்டாலின் பார்க்கவில்லை, மாறாக கள யதார்த்தம் வழியாக ஓர் அரசியலை வந்தடைகிறார். உதாரணமாக ,பல கட்டுரைகளில் தமிழக தலித் இயக்கத்திற்கு காந்தியம் அளித்த கொடையை ஸ்டாலின் ராஜாங்கம் பதிவு செய்கிறார். காந்தியம் பற்றிய வழக்கமான தலித்திய கசப்புகளோ முன்முடிவுகளோ அவருக்கு இல்லை. அது யதார்த்தத்தை மறைக்கவுமில்லை.

.

swami_ananda_thirtha

சுவாமி ஆனந்தத் தீர்த்தர்

 

உண்மையில் ஸ்டாலின் காந்தியத்தின் தலித் முன்னேற்றப்பணியின் விரிவு பற்றி முன்னரே அறிந்திருக்கவில்லை என நூல் சொல்கிறது. அவ்வரலாறு தமிழகத்தில் ஒருபக்கம் இடதுசாரிகளாலும் மறுபக்கம் திராவிட இயக்கத்தினாலும் பிற்காலத்தில் தலித் இயக்கத்தினாலும் மறைக்கப்பட்டதென்றே அவர் அடையாளம் காட்டுகிறார். அம்பேத்காரின் செயல்பாடுகளின் மூலம் சீண்டப்பட்டுதான் காந்தியின் தீண்டாமை ஒழிப்பு இயக்கமும் தாழ்த்தப்பட்டோ முன்னேற்ற இயக்கமும் தொடங்கியதென்று அவர் நினைக்கிறார். ஆனால் மதுரைச் சுற்றுப்புறங்களில், ஒட்டியுள்ள மாவட்டங்களில் திட்டமிட்ட வகையில் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்காகவும் அம்மக்களின் கல்விக்காகவும் நிகழ்ந்த முதல் பேரியக்கம் என்பது காந்திய இயக்கமே என்பதை இக்கட்டுரைகளில் பல இடங்களில் அவர் கள ஆய்விலிருந்து பதிவு செய்வதை பார்க்கலாம்.

இந்நூல் இரண்டு முகங்கள் கொண்டது. ஒன்று அறியப்படாத தலித் களப்பணியாளர்கள் மற்றும் களப்பலியாளர்கள் எப்படி வரலாற்றால் மறக்கப்பட்டாலும் மக்களின் வாய்மொழி மரபில் தொடர்ந்து உயிர்வாழ்கிறார்கள் என்பதை கண்டடைந்து பதிவு செய்கின்றன பல கட்டுரைகள்.  உதாரணமாக கேரளத்தை சேர்ந்தவரும் காந்திய இயக்கத்தின் பிரதிநிதியாக மதுரை மக்களிடையே மிகப்பெரிய கல்விப்பணி ஆற்றியவருமாகிய ஆனந்த தீர்த்தருடைய பெயர் ஸ்வாமி என்றும் ஆனந்த தீர்த்தர் என்றும் தலித்துகளுக்கிடையே புழங்குவதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சுவாமி ஆனந்ததீர்த்தர் பிராமணராகப் பிறந்தவர், காந்தியால் ஈர்க்கப்பட்டு பொதுப்பணிக்கு வந்தார். நாராயணகுருவால் துறவு அளிக்கப்பட்டு ஆனந்த தீர்த்தராக மாறினார். நடராஜகுருவுக்கு மூத்தவர். தலைச்சேரியில் பிறந்து மதுரை மேலூர் உட்பட பல ஊர்களில் தாழ்த்தப்பட்டோரின் மேம்பாட்டுக்காக உழைத்தவர். வைக்கம் போராட்டம் குருவாயூர் ஆலயநுழைவுப்போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டவர். தாழ்த்தப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் மிக கடுமையாக தாக்கப்பட்டவர். அவருடைய மதுரை மாவட்டத்துப் பணிகளைப்பற்றி ஸ்டாலின் பதிவுசெய்ததை வாசிக்கையில் பெரும் மனநிறைவு எழுந்தது.

காங்கிரஸ் இயக்கத்தவரான ஜார்ஜ் ஜோசப் போன்று தலித் பணியாற்றியவர்கள் காலத்தால் மறக்கப்பட்டு அடையாளம் காணப்படாத சிலைகளாக எஞ்சுவதையும் விவரிக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். பாரிஸ்டர் பட்டம் பெற்றபின் காந்தியால் ஈர்க்கப்பட்டு தேசியப்போராட்டத்தில் ஈடுபட்டவர் ஜார்ஜ் ஜோசப். வைக்கம் போராட்டத்தில் காந்தியின் அணுகுமுறையால் மனவேறுபாடுகொண்டு காந்தியிடமிருந்து பிரிந்துசென்றாலும் காங்கிரஸ்காரராக நீடித்தார் [வைக்கம் போரில் பிற மதத்தவர் ஈடுபடக்கூடாது என காந்தி விலக்கினார். அந்தப்போராட்டமே கிறித்தவர்களின் தூண்டுதலால் நிகழ்வது என்னும் பிரச்சாரம் அன்று நிகழ்ந்ததே காரணம். ஆனால் தான் எந்த மதத்தையும் சேர்ந்தவர் அல்ல என்றும் வைக்கத்தின் தீண்டாமைப்பிரச்சினை மதப்பிரச்சினை அல்ல என்றும் ஜார்ஜ் ஜோசப் கருதினார்.

 

 

george joseph

ஜார்ஜ் ஜோசஃப்

தலித் களப்பலிகளான பாண்டியன், கந்தன் போன்றவர்கள் மக்களின் நினைவில் நின்றிருப்பதை அவர் விவரிக்கும் இடம் முக்கியமானது. அவர்களை எழுத்தில், நூலில் கொண்டுவருவதனூடாக ஒரு பொதுமொழிப்பெருக்கில் நிலைநிறுத்துகிறார். இந்நூலின் பணிகளில் முக்கியமானது இது. வரலாறு என்ற பொதுவான புனைவுக்கு நிகராக ஒரு மாற்று புனைவை தலித்துகள் தங்களுக்காக உருவாக்கி அதை தக்க வைதிருக்க்கிறார்கள். வரலாறு என்பதுஒரு சமரசப் புனைவு மட்டுமே. ஒவ்வொருவரும் தங்கள் தரப்பை முன்வைக்க, அவற்றுக்கிடையே ஒரு ஒத்திசைவாக ஒரு பொதுப்புனைவு என உருவாவது அது. அதில் தங்களுடைய தரப்பை முன்வைத்து வெற்றிகொள்ள தலித்துக்களால் இயலாவிட்டாலும் தங்களுக்குள் வரலாற்றுநினைவுகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள். தலித்துகளின் இந்த வரலாற்று நினைவை பதிவு செய்வதும் அதன் இயங்கு விதிகளைக் கண்டடைவதும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஆய்வுகளில் முக்கியமான போக்காக அமைகிறது.

எம்.சி ராஜா

இன்னொரு பகுதி அவரே ஒரு மாற்று வரலாற்றாளராக மாறி எழுதுவது. தமிழக தலித் இயக்கத்தின் பல்வேறு ஆளுமைகள் எப்படியெல்லாம் மறக்கப்பட்டார்கள் அல்லது அவர்களது பங்களிப்பு எப்படி வரலாற்று உருவாக்கத்தின்போது திரிக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து பதிவு செய்கிறார். உதாரணமாக எம்.சி.ராஜா எப்படி அவருடைய அனைத்து தலைமைப்பண்புகளுக்கும் சேவைகளுக்கும் அப்பால் வெறுமொரு துரோகியாக நீதிக்கட்சியாலும் அவர்களை அடியொற்றிச் சிந்தித்த பிற்கால தலித் இயக்கத்தினாலும் முத்திரை குத்தப்பட்டார் என்பதை விளக்கும்போதும் சரி, ஆனந்த தீர்த்தரைப்போல தலித் இயக்கத்திற்கு பெரும்பங்கு வகித்த ஒருவர் எப்படி எந்த வரலாற்று பதிவுகளும் நினைவுகளும் இல்லாமலானார் என்பதை குறிப்பிடுவதிலும் சரி, ஒரு மாற்று வரலாற்று ஆசிரியருக்குரிய குரல் அவரிடம் ஒலிக்கிறது.

அதே சமயம் கவனிக்கப்படாதவற்றை முன்வைக்கும் குரலுக்கு வழக்கமாக இருக்கும் மிதமிஞ்சிய வேகமும் அவரிடம் இல்லை. தெளிவான ஆதாரங்களுடன் வரலாற்று இயக்கத்தை புரிந்துகொண்டு கல்வியாளனின் நிதானத்துடன் அந்த தரப்பை முன்வைக்கிறார். ஆகவே அவற்றின் கனமும் விசையும் மேலும் அதிகமாகிறது

இந்த நூல் எனக்களித்த உளச்சித்திரம் ஒன்றுண்டு பொதுவாகக் கொந்தளிப்புகள் அதிரடிகள் போன்றவை தீவிரமாக நம் நினைவில் நிற்கின்றன. ஏனென்றால் அவற்றைப்பற்றி பிறர் அதிகம் பேசுகிறார்கள். பரபரப்பான செய்திகளால் வரலாறு கட்டமைக்கப்படும்  காலகட்டத்தில் இத்தகைய செயல்பாடுகளின் இடம் மிகப்பெரிதாக ஆகிவிட்டது. ஆனால் சமூகத்தில் ஆக்கப்பூர்வமான மாறுதலை உருவாக்குவதென்பது தொடர்ச்சியான ,சீரான, சலிக்காத களப்பணிகள் மூலமே.

தங்கை வீரம்மாளும் தமையன் வீராச்சாமியும் என்ற கட்டுரை அவ்வகையில் மிக முக்கியமானது. இரண்டு வகையான களப்பணிகளை அதில் திறம்பட ஒன்றிணைத்துக்காட்டுகிறார் ஸ்டாலின் ராஜாங்கம். ஒன்று, தனது எல்லைகளை வரையறுத்துக்கொண்டு தனது திறன்களை முழுக்க ஒருங்கிணைத்து கல்விப்பணியில் முழுவீச்சாக செயல்பட்ட வீரம்மாளின் பாணி. இன்னொன்று கொப்பளிப்பும் கொந்தளிப்புமாக பல்வேறுஇடங்களில் முட்டி மோதி பலவகையான பணிகளை ஆற்றிய வீராச்சாமியின் பாணி. வீராச்சாமி எதையும் செய்து முழுமைசெய்யாதவராக ,அவரது நோக்கத்தின் நேர்மையால் மட்டுமே நினைவு கூரப்படுபவராக, இருக்கும் போது வீரம்மாள் ஆல் மரம்போல வேரும் விழுதும் பெருகி நிற்கும் பெருநிறுவனம் ஒன்றின் மூலம் இரண்டு தலைமுறைகளுக்கு வாழ்வளித்தவராக மாறியிருக்கிறார்.

அரசியல் பணி என்பது ஆக்கப்பணியாக ஆக முடியும் என்பதற்கான உதாரணமாக ஸ்டாலின் வீரம்மாளைக்குறிப்பிடுகிறார். வீரம்மாள் அந்த உளநிலையை அவர் பின்பற்றிய காந்தியிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கலாம். குறுகிய காலம் ஈ.வே.ராவுடன் இணைந்துசெயல்பட்டாலும் அவரால் ஈவேராவின் அதிரடி அரசியலுடன் ஒன்ற முடியவில்லை. விலகி விடுகிறார். இவ்விரு ஆளுமைகளை ஒப்பிட்டுக் காட்டும் இக்கட்டுரை ஒரு பெரிய புனைகதை அளிக்கும் உளவிரிவை அளிக்கிறது. ஒரு நாவலாகவே இவ்விரு வாழ்க்கையையும் எழுதிவிடமுடியும் என தோன்றுகிறது.

அர்ப்பணிப்புடன் ஆற்றப்படும் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட பௌர்ணமி குப்புசாமி ,பொன்னுத்தாயி போன்றவர்களை ஸ்டாலின் ராஜாங்கம் விவரிக்கும் இடங்கள் பலவகையான திறப்புகளை அளிப்பவை. இரண்டு வகையான பணிகள் இவை. பொன்னுத்தாயி பல்வேறு இடர்களுக்கு நடுவே ஒரு பள்ளியை தொடர்ந்து நடத்தி தன் சமூகத்து மக்களுக்கு கல்விப்பணியாற்றுகிறார். பௌர்ணமி குப்புசாமி தன் மக்களுக்கு பௌத்தத்தின் மெய்ச்செய்தியை எடுத்துச் சொல்லும்பொருட்டு அர்ப்பணிப்புடன் நீண்ட காலப்பணியை ஆற்றுகிறார். இவ்விரு பணிகளும் இரண்டு வகையில் முக்கியமானவை. வயிற்றுக்கும் ஆன்மாவுக்கும் சோறிடுவது போல என்று சொல்லலாம்.

இத்தகைய பணிகளின் மதிப்பை ஆய்வாளர்கள் கூட புரிந்துகொள்ளாத காலம் இது ஏனெனில் சமூகம் கவனித்த ஒன்றில் மேலும் நுட்பங்களைக் கண்டுபிடிக்கும்போது ஆய்வாளனுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் அறியப்படாத பணிகளை தேடிச் செல்லும் போது வருவதில்லை. மிகையோ உணர்வெழுச்சியோ இல்லாமல் ஸ்டாலின் இப்பணிகள் நிகழ்ந்த வரலாற்றையும் அவை இன்று சென்றகாலமாக மாறிவிட்டதையும் சொல்லிச்செல்கிறார்

இத்தகைய பணிகளை பல்லாண்டுகாலம் செய்தவர்கள் எத்தகைய நம்பிக்கை இழப்பை,சோர்வை, தனிமையை சந்தித்திருப்பார்கள்; எந்த அளவுக்கு தங்கள் ஆன்மாவின் விசையைத் திரட்டிக்கொண்டு மீண்டும் மீண்டும் களப்பணிக்கு வந்திருப்பார்கள் என்பது சற்று கற்பனை உள்ளவர்களுக்கே வசப்படும். இவர்கள் கொண்ட லட்சியவாதம் என்பது எரிந்தணைவதல்ல நின்று சுடர்வது. எரிந்தணைவதற்கு மிகக்குறைவான எரிபொருள் போதும் நெடுங்காலம் நின்று சுடர்வதற்கு எரிபொருள் உள்ளே ஊறிக்கொண்டிருக்க வேண்டும் எந்த தியாகியை விடவும் மகத்தானவர்கள் நின்று நெடுங்காலம் பணியாற்றியவர்கள் .நமது சூழலில் இவர்களைப்பற்றிய கவனமே அற்றுப்போயிருக்கும்போது இந்நூல் அவர்களை அடிக்கோடிடுவது மிகுந்த மனஎழுச்சியை உருவாக்கக்கூடியதாக இருக்கிறது.

இன்னொரு வகையில் இந்நூல் எம்.சி.ராஜா, டி.எம்.மணி போன்ற வரலாற்றால் மறுஎல்லைக்குத் தள்ளப்பட்ட மிகச்சிலரை மிகக்கூர்மையாக அவதானித்து அவர்களின் சித்திரத்தை காரணகாரிய அடுக்குகளுடன் முன்வைத்து மதிப்பிட்டு மீட்க முயல்கிறது.

இந்த நூலை ஒரு வகை வீரகதைப்பாடலென்று சொல்ல தயங்கமாட்டேன். சென்ற கால லட்சியவாதத்தின் முன் ஸ்டாலின் ராஜாங்கம் சென்று நிற்கிறார். சமகால அரசியலில் லட்சியவாதத்தை விட நடைமுறை நோக்கும் அடக்கத்தை விட ஆர்ர்ப்பாட்டமும் அர்ப்பணிப்பைவிட தந்திரங்களும் முக்கியத்துவம் பெறும் சூழலில் பெரும் கனவுகள் நிகழ்ந்த சென்ற காலத்தை நோக்கிச் செல்லும் ராஜாங்கத்தின் உள்ளம் செல்வது என்னால் மிக அணுக்கமாக புரிந்துகொள்ள முடிவதாக இருக்கிறது. நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் எழுந்து வரும் சென்றகாலத்து மாமனிதர்கள் ஒவ்வொருவரின் முன்னாலும் நின்று பணிந்துதான் மேலே சென்றேன்.

கவிஞனின் பணி என்பது தன்னை எழுதுவது மட்டுமல்ல தன்னை விடப்பெரியவற்றின் முன் சென்று நின்று தன்னை இழப்பதும் கூடத்தான். வரலாற்று ஆசிரியனின் பணியும் அதுவே. வரலாற்றை மாமனிதர்களினூடாக வாசிக்கப்புகுந்த நூல் என்று இதைச்சொல்லலாம். இந்நூல் அளிக்கும் ஆளுமைச்சித்திரங்களுக்காகவே இதை ஒரு இலக்கிய சாதனை என்றும் தயங்காமல் சொல்வேன்.

[எழுதாக்கிளவி – வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள். ஸ்டாலின் ராஜாங்கம். காலச்சுவடு வெளியீடு]

***

ஜார்ஜ் ஜோசப் குடும்ப இணைய தளம்

http://josephclan.com/barristergjpartone.htm

ஸ்டாலின் ராஜாங்கம் இணையதளம்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 46

$
0
0

45. நீர்ப் பசுஞ்சோலை

flowerசோலைத்தழைப்புக்கு மேல் எழுந்துநின்ற தேவதாருவின் உச்சிக்கவட்டில் கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தில் மடியில் வில்லையும் இடக்கையருகே அம்புத்தூளியையும் வைத்துக்கொண்டு கஜன் பின்உச்சிவெயில் நிறம் மாறுவதை பார்த்துக்கொண்டிருந்தான். காற்றில் அக்காவல்மாடம் மெல்ல ஆடியது. அவன் அங்கு அமர்ந்த முதல் நாள் காடு கோதையில் செல்லும் பெருங்கலம்போல் மெல்ல அசைவதாகத் தோன்றி உளநடுக்கு கொண்டான். எழுந்து நின்று கண்கள் சுழல தலை நிலையழிய இருமுறை குமட்டினான். அவன் அருகே நின்றிருந்த தீர்க்கன் தன் பெரிய கைகளால் அவன் புயங்களைப்பற்றி “எதையாவது பற்றிக்கொள். காட்டிலிருக்கும் ஏதேனும் ஒரு புள்ளியை கூர்ந்து நோக்கு” என்றான்.

அப்பால் தெரிந்த பிறிதொரு தேவதாருவை கூர்ந்து பார்த்தபோது தன்னுடைய காவல்மாடம் அசைவதாகத் தெரிந்தது. அக்கணமே அவன் உடலுக்குள் இருந்த நீர்த்துளிகள் உணர்ந்த நிலையழிவு சீரமைந்தது. சற்று நோக்கியபின் ஒவ்வொன்றும் அவன் சித்தத்திற்கு தெளிவாயின. “அமர்ந்துகொள்” என்று தீர்க்கன் சொன்னான். அவன் அமர்ந்தபின் புன்னகைத்து “விந்தை” என்றான். “நாம் வெளியே பார்க்கும் ஒவ்வொன்றையும் இப்படித்தான் ஒப்பீடுகளாக அறிந்துகொண்டிருக்கிறோம் என்று சொல்வார்கள்” என்று தீர்க்கன் சொன்னான்.

கஜன் “இங்கிருந்து கைகளை விரித்தால் பறவையாக மாறி இந்த பச்சை அலைகளுக்கு மேல் பறந்து போய்விட முடியுமென்று தோன்றுகிறது” என்றான். “அதுவும் இங்கு வரும் பெரும்பாலானவர்க்கு தோன்றுவதே. முன்பு ஓரிருவர் அவ்வாறு பாய்ந்து உயிர் துறந்ததுண்டு” என்றான் தீர்க்கன். கஜன் தன் அடிவயிற்றில் ஒரு அதிர்வை உணர்ந்து காவல்மாடத்தின் மூங்கில் விளிம்பிலிருந்து சற்று உள்ளே நகர்ந்துகொண்டான். “அந்த அச்சம் இருக்கும்வரை நீ பாய்ந்துவிடமாட்டாய். அல்லது இவர்களிடமிருந்து அகிபீனா வாங்கி இழுத்தால் அது நிகழலாம்” என்றான்.

கஜன் “அகிபீனாவா? இவர்களா?” என்றான். “அகிபீனா உண்டு, சிவமூலியும் உண்டு” என்றான் தீர்க்கன். அவன் “காவலர்கள் அதையெல்லாம் இழுக்கலாமா?” என்று கேட்டான். “கூடாது. ஆனால் இப்புவியில் ஒப்புக்கொள்ளப்பட்ட செயல்கள் மட்டும்தான் நிகழ்கின்றனவா என்ன? அவ்வாறென்றால் இப்புவி எத்தனை சலிப்பூட்டுவதாக இருக்கும்? இத்தனை மீறல்களுக்குப் பிறகும் இங்கு பெரிதாக செய்வதற்கொன்றுமில்லை” என்று தீர்க்கன் சொன்னான். “ஏன் இவர்கள் உளம்மயக்குப் பொருட்களை நுகர்கிறார்கள்?” என்று கஜன் கேட்டான். தீர்க்கன் இதழ்கள் கோட “சின்னாள் இங்கு இரு, அப்போது தெரியும்” என்றான்.

“ஏன்? இங்கு அச்சமூட்டும் ஏதேனும் உண்டா?” என்று கஜன் கேட்டான். “அச்சமூட்டும் ஏதேனும் இருந்திருந்தால் இவர்களுக்கு இந்த உளமயக்குகள் தேவைப்பட்டிருக்காது. இங்கு எதுவுமே இல்லை” என்றான் தீர்க்கன். “வானம். கீழே இந்தப் பசுமை. ஒவ்வொரு நாளும் கதிரெழுதல், கதிரமைதல். மாதங்களில் பாதி நாள் நிலவு. எஞ்சிய நாட்கள் விண்மீன். எப்போதும் காற்று. பிறகென்ன வேண்டும்?” என்று கஜன் கேட்டான். தீர்க்கன் “இளையவனே, இவையனைத்தும் ஒவ்வொரு மானுடருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. எந்த மானுடனாவது இவற்றில் நிறைவடைந்திருக்கிறானா? இவற்றை பொருட்படுத்துபவர்கள் மிகச் சிலரே. பிறருக்கு வேறேதோ தேவைப்படுகிறது. காமம், செல்வம், வெற்றி, புகழ். வாளில்லாமல் வாழத்தெரிந்தவர்கள் இங்கு மிக அரிது” என்றபின் “கையிலோ உள்ளத்திலோ” என்று முனகிக்கொண்டன்.

“ஆனால் எனக்கு இந்த இடம் பிடித்திருக்கிறது” என்றான் கஜன். பெருமூச்சுடன் “அது நன்று” என்று தீர்க்கன் சொன்னான். “அந்த உவகை எஞ்சியிருக்கும்வரை இங்கிரு. அதில் ஒரு துளி குறையத்தொடங்கினாலும் உடனே கிளம்பிவிடு.” குழப்பத்துடன் “எங்கு?” என்று கஜன் கேட்டான். “எங்கு மறுகணம் உன் தலையை எவரேனும் வெட்டிவிட வாய்ப்பிருக்குமோ, எங்கு சற்று தேடினால் ஒரு பெரும்புதையல் கிடைக்கும் வாய்ப்புள்ளதோ அங்கு. குறைந்தது அங்கு ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் நிகழாத ஒன்று நிகழும் வாய்ப்பிருக்க வேண்டும். அங்கு. அங்கு மட்டும்தான் மானுடர் மகிழ்ச்சியாக வாழமுடியும்” என்றான் தீர்க்கன்.

கஜன் திரும்பி பச்சை இலைகளின்மேல் காற்று செல்லும் ஒழுக்கை நோக்கியபின் திரும்பி “ஏன் இவற்றைப் பார்த்தபடி வாழ்ந்துவிட முடியாதா என்ன?” என்றான். “முடியும்… கவிஞர்களால், முனிவர்களால் முடியும் என்று சொல்லப்படுகிறது. அப்படி எவரையும் நான் பார்த்ததில்லை” என்றபின் தீர்க்கன் எழுந்து சோம்பல்முறித்து “நான் சென்று ஓய்வெடுக்கிறேன். நீ இங்கிரு” என்றான். “நானா?” என்றான் கஜன். “ஏன்?” என்று தீர்க்கன் கேட்டான். “நான் இப்போதுதான் வந்திருக்கிறேன்.” கஜன் தோளில் தட்டி “நீயே மிகை இங்கு” என்றபின் தீர்க்கன் இறங்கிச்சென்றான்.

அன்றுமுதல் கஜன் அங்கே அமர்ந்திருக்கலானான். அவனுக்கு காவல்பரணில் அமர்ந்திருப்பது பிடித்திருக்கிறது எனத் தெரிந்ததும் அவனை ஒவ்வொருவரும் விரும்பி அழைத்து அமரச்செய்தார்கள். அவனுக்கு நல்லுணவு கொண்டுவந்து அளித்தனர். அவன் கீழே இறங்கவே விரும்பவில்லை. கொட்டகைகளில் துயில்கையிலும் உச்சிமாடத்தையே கனவு கண்டான். புலரியையும் அந்தியையும் ஒருபோதும் தவறவிடவில்லை.

அன்று அந்தி முதல் அங்கு அரசகுடிகளின் நிலவாடல் நிகழுமென்று பத்து நாட்களுக்கு முன் காவலர்தலைவர் சொன்னபோதுதான் அவன் அறிந்தான். அப்போது அவனுக்கு அது பெரிதாகத் தோன்றவில்லை. ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்த அவர் ஒருகணம் அவனை கூர்ந்து பின்னர் “உனக்கு அளிக்கப்பட்ட காவல்மாடம் எது?” என்றார். “மூன்றாவது காவல்மாடம்” என்று அவன் சொன்னான். “நன்று, அங்கிரு. பிறிதொருவர் வந்து உன்னை விடுவிக்கும்வரை மாடத்திலிருந்து எதன்பொருட்டும் கீழிறங்காதே” என்றபின் அவர் திரும்பிக்கொண்டார்.

திரும்பிச் செல்லும்போது தீர்க்கனிடம் “நிலவு நாட்களில் இங்கு அரசியும் இளவரசியும் வருவதுண்டா?” என்று கேட்டான். தீர்க்கன் “இங்கா?” என்றபின் அவன் என்ன கேட்கிறான் என்று புரிந்துகொண்டு சிரித்தான். “இளையவனே, இந்தக் காவல்மாடம் அமைக்கப்பட்டபின் மிக அரிதாகவே எவரேனும் இதற்குள் நுழைந்திருக்கிறார்கள். நான் அறிந்து இருமுறை மச்ச இளவரசர் உள்ளே வந்திருக்கிறார். இளவரசர் உத்தரர் அவருடைய கனவுகளில் இங்குதான் இருக்கிறார் என்று நினைக்கிறேன். சென்ற முறை இளவரசி இங்கு வந்து பாம்பால் கடிபட்டார் என அறிந்திருப்பாய். அதன்பின் இனி எவருமே இங்கு வரமாட்டார்கள் என்றுதான் நினைத்தேன். மீண்டுமொரு களியாட்டு இங்கு இத்தனை விரைவில் ஒருங்கு செய்யப்படுமென்று எண்ணவில்லை” என்றான்.

உடன்வந்த கீரகன் “நாமறியாத ஏதோ விந்தை இதற்குள் உள்ளது” என்றான். “இது அந்த ஆணிலியின் ஏதோ சூழ்ச்சி என ஐயுறுகிறேன்” என்றான் தீர்க்கன். காமிகன் கஜனின் தோளைத் தட்டி “நீ நல்லூழ் கொண்டவன். நீ வந்த உடனே இப்படி ஒரு வாய்ப்பு அமைகிறது. வழக்கமாக இங்கு காவல் பணி என்று படைக்கலம் தூக்கி வரும் இளைஞர்கள் விழி விரித்து வெறுமையைப் பார்த்து சலித்து எதைப் பார்த்தாலும் எதுவும் சித்தத்தில் பதியாதவர்களாக மாறி அகிபீனாவுக்குப் பழகி நடக்கும் பிணமென்று மாறி இங்கிருந்து செல்வார்கள். உனக்கு சொல்வதற்கு ஒரு நிகழ்வாவது வாழ்க்கையில் எஞ்சுகிறது” என்றான்.

“என்ன நிகழும்?” என்று கஜன் கேட்டான். “கொலை” என்று அவன் சொன்னான். கஜன் அவன் கையை பற்றி ஆர்வத்துடன் “கொலையா?” என்றான். அவன் நகைத்து தீர்க்கனின் தோளில் முட்டி “கறந்தபால்போல வெண்மையாக இருக்கிறானே இவன்?” என்றபின் அவனிடம் “இளையவனே, இங்கு நிகழவிருப்பது ஒன்றே ஒன்றுதான். இங்குள்ள அத்தனை உயிர்களும் அன்றாடம் செய்துகொண்டிருப்பது. அவர்கள் அளவுக்கு உளம் உவந்து உடல் விடுதலைகொண்டு அதைச் செய்ய மனிதரால் இயலாது. நகரங்களில் அறவே இயலாது என்று அறிந்திருக்கிறார்கள். ஆகவே காட்டில் அதை முயலலாமே என்று நினைக்கிறார்கள். ஆனால் நகரங்களில் இருக்கையில் அவர்கள் அகம் காடாக இருக்கிறது. இங்கு காட்டிலிருக்கையில் அவர்கள் அகம் நகரமாக இருக்கும்போலும்” என்றான்.

ஒவ்வொரு நாளும் முழுநிலவை கஜன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். நோக்கி நோக்கியே நிலவை முழுமைப்படுத்திவிடமுடியும் என்பதைப்போல. தீர்க்கனிடம் “இன்னும் எத்தனை நாட்கள்?” என்று கேட்டான். “நிலவை வைத்தே கணக்கிடு” என்று தீர்க்கன் சொன்னான். “நிலவில் இந்தக் காடு எப்படி இருக்குமென்று எண்ணிப்பார்க்க விந்தையாக இருக்கிறது. நிலவில் நாம் நன்கறிந்த முற்றத்து மரம்கூட ஆழமான அறியமுடியாமை ஒன்றை சூடிக்கொள்கிறது. அறியமுடியாமையால் ஆனது இக்காடு…” பின்னர் தனக்குள் என “ஒருவேளை தன்னை இது அப்போது ஒவ்வொரு இதழாக விரித்துக்கொள்ளத் தொடங்கிவிடுமோ?” என்றான். தீர்க்கன் “கனவுகாண முடிந்தால் கரும்பாறையையே ஊடுருவி உள்ளே சென்றுவிடலாம். அதற்குரிய அகவை உனக்கு” என்றான்.

முழுநிலவு நாளன்று அவன் காலையில் விழிப்புணர்ந்ததே உள்ளத்தில் எழுந்த முரசொலியுடன்தான். “ஆம்!” என்று அவன் சொல்லிக்கொண்டான். பாய்ந்து எழுந்து கொட்டகையைவிட்டு வெளியே சென்று முகம் கழுவிக்கொண்டிருந்த சக்ரரிடம் “இன்று முழுநிலவு” என்றான். “ஆம், அதற்கென்ன?” என்றார். “இன்று அரசகுலத்தார் கானாட வருகிறார்கள்” என்றான். “ஆம், நமக்கு சற்று பணி மிகுதி… எவருக்கும் இன்று துயில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்” என்றபடி அவர் கொப்பரையுடன் சென்றார். சூனரிடம் “இன்று அரசர் வருவாரா?” என்று அவன் கேட்டான். “அவர் எப்போதும் கள்நிறைந்த காட்டில் வாழ்பவர்” என்ற சூனர். “எவர் வந்தால் நமக்கு என்ன? சவுக்கடி படாமல் ஒழிந்து இந்நாளை கடந்தோம் என்றால் நாளை வழக்கம்போலத்தான்” என்றார்.

எவரும் அவன் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளவில்லை. ஆண்டுக்கணக்கில் எதுவும் நிகழாமல் சலிப்படைந்திருந்தவர்கள் அது நிகழ்ந்தபோது பதற்றமும் எரிச்சலும் கொண்டார்கள். அதை எவ்வகையிலேனும் கடந்துசெல்ல விழைந்தார்கள். அவர்கள் அந்த செயலின்மைக்கு பழகிவிட்டிருந்தனர். அவர்களின் உடல்கள் இறந்த மரத்தில் முளைத்த காளான்கள்போல வெளுத்திருந்தன. “அந்த ஆணிலி ஏதோ செய்கிறான். அவன் எவருமறியாமல் இரவுகளில் இக்காட்டுக்குள் உலவுகிறான் என்கிறார்கள்” என்றார் தப்தர். “யார்? அவளா?” என்றான் கஜன். “இக்காட்டுக்குள் அவள் ஆணென்றாகிவிடுவதாக சொல்கிறார்கள். அவள் இங்கே அரசநாகத்தின் விரைவுகொண்ட கைகளுடன் நாணலையே அம்புகளாக்கி வேட்டையாடுவதை கண்டிருக்கிறார்கள்.”

தாழ்ந்த குரலில் சூரர் “அது மானுடப்பிறவி அல்ல. ஏதோ கந்தர்வன். அவர்களால் மட்டுமே ஆணென்றும் பெண்ணென்றும் ஆகமுடியும்” என்றார். அனைவரும் அமைதிகொண்டனர். கஜன் “அது ஏன் நம் நகர்புகுந்திருக்கிறது?” என்றான். “நம் இளவரசியை அது கைப்பற்றிவிட்டது. இங்கு இத்தனை காவலுக்குப் பின்னும் இளவரசியை கடித்த நாகம் எப்படி வந்தது? இங்கே காட்டின் ஆழத்திலிருந்து அந்த கந்தர்வன் எப்படி தோன்றினான்?” கஜன் “இளவரசி அவனுக்கு எதற்கு?” என்றான். நாமர் சிரித்து “மூடா, கந்தர்வர்களுக்கு மானுடப்பெண்கள்மேல் காமம் உண்டு. ஒருநாள் பருந்து கோழிக்குஞ்சை என இளவரசியை கவ்விக்கொண்டு அவன் சிறகுவிரிப்பான்…” என்றார்.

அன்று பரண்மேல் ஏறியபோது கஜனின் கால்கள் நடுங்கி வழுக்கின. இருமுறை அவன் சறுக்கி கீழே வந்தான். அவனைக் கண்டதும் சலிப்புடன் எழுந்து உடல்வளைத்து கோட்டுவாயிட்ட தீர்க்கன் “முன்னரே வந்துவிட்டாயா? நன்று” என்றபடி வில்லை ஒப்படைத்தான். கஜன் தயங்கியபடி “இன்று பகல் முழுக்க எனக்கு இங்கே காவல்பணி உள்ளது. அந்தியில் என்னை விடுவிப்பார்கள். அந்திக்குப்பின் நான் காட்டுக்குள் செல்ல முடியுமா?” என்று கேட்டான். “காட்டுக்குள் செல்ல உனக்கு அரசக் காவலர்களின் ஒப்புதல்குறி தேவை. அது இல்லாது காட்டில் செல்லும் எவரையும் வெட்டி வீழ்த்துவதற்கு ஆணை உள்ளது” என்றான். கஜன் “நான் கேட்டுப்பார்க்கலாமா?” என்றான்.

“நம் காவலர்கள் எவரையும் வெட்டப்போவதில்லை. அவர்கள் படைக்கலத்தை முதுகு சொறிவதற்கு மட்டுமே நெடுங்காலமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் வருபவர்கள் அப்படி அல்ல. இந்த நாட்டில் எவருக்கேனும் இன்னமும் படைவீரர்களுக்குரிய சீற்றமும் இறுக்கமும் உண்டென்றால் அது அரச மெய்க்காவலர்களுக்குத்தான். கீசகருடன் வரும் மெய்க்காவலர்களை எதன்பொருட்டும் அணுகாதே. அவர்கள் ஒவ்வொருவரும் குருதி அளித்து பயிற்றுவிக்கப்பட்ட புலிகளைப்போல” என்றான் தீர்க்கன். கஜன் தலையசைத்து பேசாமல் இருந்தான். “இதற்குள் என்ன நிகழ்ந்தால் உனக்கென்ன? பேசாமல் கொட்டகைக்குச் சென்று மரவுரியை இழுத்து தலைக்குமேல் போர்த்திக்கொண்டு படுத்து துயில். கனவில் இதைவிட அடர்ந்த காடொன்றை காண்பாய்” என்றான் தீர்க்கன். இதழ்கள் வளைய நகைத்து “வெளியே சொல்ல முடியாத அளவுக்கு இனிய நிகழ்வுகள் அங்கு நிகழும்” என்றபின் அகிபீனா சுருட்டிய இலை ஒன்றை பந்தத்தின் கங்கில் பற்றவைத்து புகையை இழுத்தான்.

கஜன் அவனிடமிருந்து நோக்கை விலக்கி காட்டை பார்த்தான். இத்தனை அழகிய காட்டின் மடியில் இந்த அளவுக்கு உளம் கசந்தவர்களாக மானுடர்கள் மாறுவதேன் என்று எண்ணிக்கொண்டான். பின்னர் தோன்றியது, அது சமைத்துக் குவிக்கப்பட்ட அறுசுவை உணவின்முன்பு அமர்ந்து ஒரு துளியேனும் எடுத்து அருந்துவதற்கு ஒப்புதலில்லாமல் வாழ்வதன் வஞ்சம் என. ஒருபோதும் மீட்பில்லாமல் சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒருவன் வெறியனோ பேதையோதான் ஆகமுடியும்.

கஜன் அப்போதே முடிவெடுத்துவிட்டான், காட்டிற்குள் சென்று பார்ப்பது என. அடுத்த கணம் தலை போகும் வாழ்க்கை என்று தீர்க்கன் அவனிடம் சொன்ன சொல் எண்ணத்தில் எழுந்தது. அதை இந்தக் காட்டிலேயே நான் அடையப்போகிறேன். அவ்வெண்ணம் வந்ததுமே அவன் முகம் மலர்ந்துவிட்டது.

அதை பார்த்த தீர்க்கன் “அழகிய இளம்பெண்ணொருத்தியை நான் இப்போது பார்க்கிறேன்” என்றான். கஜன் “எங்கே?” என்றான். “உன் உள்ளத்தில் நீருக்கடியில் கிடக்கும் பொன்நாணயம்போல தெரிகிறாள்” என்றான். கஜன் முகத்தை விலக்கிக்கொண்டு சிரிப்பை அடக்கினான். “அது நன்று. உண்மையில் பெண்களை அடைவதைவிட இவ்வாறு எண்ணிஎண்ணி மகிழ்வது இனிது. என்னிடம் பிரம்மன் கேட்டிருந்தால் ஊனுடலுடன் பெண்ணை படைத்திருக்க வேண்டாம். ஆண்களுக்கு எழும் வெறும் கனவாகவே அவர்களை விட்டிருக்கலாமென்று சொல்லியிருப்பேன். இன்னும் பல நூறுமடங்கு காவியங்களும் பாடல்களும் எழுதப்பட்டிருக்கும்” என்றபின் தீர்க்கன் சரடில் தொற்றி இறங்கினான்.

flowerதொலைவில் முரசு ஒலியும் கொம்பின் ஒலியும் எழுவதை கஜன் கேட்டான். வில்லை கையிலெடுத்துக்கொண்டு மூங்கில் விளிம்பைப் பற்றியபடி நோக்கினான். முதல் காவல்மாடத்திலிருந்த காவலன் தன்னுடைய கொம்பை எடுத்து ஊதி இளவரசர் உத்தரர் வருவதை அறிவித்தான். அவன் திரும்பி மேற்கு வானை பார்த்தான். வான் வளைவில் நீலத்தாலம்போல விளிம்புகளில் வெண்சுடர் அதிர சூரியன் தெரிந்தது. அந்தியிறங்க இன்னும் நெடுநேரம் ஆகும். அதற்குள்ளாகவே இளவரசர் வந்துவிட்டாரா அல்லது அவரது வருகையை அறிவிக்கிறார்களா? ஆனால் தொலைவில் அவன் உத்தரனின் கொடியை பார்த்தான். முதற்கணம் அங்கிருந்து எங்காவது ஒளிந்துகொள்ள வேண்டுமென்று தோன்றியது. பின்னர் நேருக்கு நேர் நின்று முகம் காட்டினால்கூட உத்தரன் தன்னை அடையாளம் கண்டுகொள்ளப் போவதில்லை என்று எண்ணிக்கொண்டான்.

உத்தரனின் கொடியுடன் குதிரை வீரனொருவன் முன்னால் வர தொடர்ந்து கொம்பூதியும் முரசறிவிப்பாளனும் இரு புரவிகளில் வந்தனர். பெரிய கரிய புரவியொன்றில் உத்தரன் அமர்ந்து வந்தான். முதலில் கஜனால் அதை விழி ஏற்க முடியவில்லை. உத்தரனின் கால்களை கீழே புரவியுடன் சேர்த்துக் கட்டியிருக்கிறார்களா என்றுதான் அவன் பார்த்தான். உத்தரனின் கால்கள் புரவி பயின்றவனின் கால்கள்போல அதன் விலாவை கவ்வியிருக்கவில்லை. வலது கால் கலைந்த காக்கைச்சிறகில் ஒற்றைஇறகுபோல பிசிறி நீட்டி அவ்வழியிலிருந்த இலைகளிலும் புதர்களின் கிளைநீட்சிகளிலும் முட்டிக்கொண்டு வந்தது. கடிவாளத்தையும் மணிக்கட்டில் இருமுறை சுழற்றி வைத்திருந்தான். புரவியின் அசைவுக்கும் அவன் உடல் அசைவுக்கும் தொடர்பே இருக்கவில்லை. ஆனால் அந்தப் பெரும்புரவி அவனை ஆய்ச்சியர் தலையில் பாற்குடம் என மிக இயல்பாக ஏந்திக்கொண்டு வந்தது.

அதற்குப் பின்னால் ஒரு கபிலநிறப் புரவியில் தோள்வரை குழல் சரிந்த கரிய உடல்கொண்ட ஒருவன் வந்தான். தொலைவிலேயே அவன் சிற்பங்களுக்குரிய, நன்கு செதுக்கி அமைக்கப்பட்ட முகம் கொண்டிருப்பதை கஜன் கண்டான். அவன் முகத்திலிருந்தும் தோள்களிலிருந்தும் விழிகளை விலக்க முடியவில்லை. அணுக அணுக மேலும் அழகுகொண்டு திருமகள் ஆலயங்களில் முகமண்டபத்தில் செதுக்கி வைக்கப்பட்டிருக்கும் உருவெனத் தோன்றினான். அவர்களுக்குப் பின்னால் மேலும் எட்டு புரவிகளில் காவல் வீரர்கள் வந்தனர். அவர்கள் நாண் இழுத்து அம்பு தொடுக்கப்பட்ட விற்களையும் நீண்ட வேல்களையும் ஏந்தியிருந்தனர். தொடர்ந்து ஏவலர்கள் எளிய புரவிகளில் மூட்டைகளும் பொதிகளுமாக வந்தனர்.

உத்தரன் காட்டின் முகப்பு முற்றத்தை அடைந்ததும் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து உரத்த குரலில் “ஹேய் ஹேய்” என்று கூச்சலிட்டு அதை நிறுத்தினான். தவறாக இழுக்கப்பட்டமையால் தலைவளைத்து மெல்லச் சுழன்று இருமுறை பொய்யாக காலெடுத்து வைத்து உடலை ஊசலாட்டியபின் புரவி நின்றது. இருமுறை தும்மி பிடரிகுலைத்தபின் தலைதூக்கி விழிகளை உருட்டி அச்சூழலை நோக்கியது. பின்னால் வந்த அழகன் குதித்து ஓடி வந்து கரிய பெரும்புரவியின் பின்பக்கத்தை மெல்லத் தட்டி ஏதோ சொன்னான். புரவி இரு கால்களையும் சற்று அகற்றி உடலை தாழ்த்தியது. காலை தூக்கிச் சுழற்றி இறங்கிய உத்தரன் நிலையழிந்து விழப்போனான். அவனை அவ்வழகன் பற்றிக்கொண்டான்.

நெடுந்தொலைவு புரவியில் அமர்ந்து வந்தமையால் இரு கால்களும் உளைச்சலெடுக்க உத்தரன் அவற்றை நன்கு அகற்றி வைத்து தவளை எழுந்து நடப்பதுபோல நடந்து அருகிலிருந்த சாலமரத்தின் வேர்ப்புடைப்பை நோக்கி சென்றான். இரு புரவிகளையும் அவ்வழகன் கொண்டுசென்று வேரில் கட்டி அவற்றின் கழுத்தையும் காதுகளையும் கைகளால் நீவி சீராட்டினான். அவை திரும்பி அவனை தங்கள் வாழைமடல்போன்ற நாக்குகளால் நக்கின. ஏவலர் புரவிகளிலிருந்து இறங்கி ஓடிச்சென்று உத்தரன் அருகே பணிந்து நிற்க அவன் கையசைத்து ஆணைகளை இடத் தொடங்கினான்.

மரப்படிகள் ஒலிக்க மேலே ஏறி வந்த தீர்க்கன் “அதற்குள் வந்துவிட்டார்” என்றான். “ஆம், இன்னும் மாலையொளியே மங்கவில்லை” என்று கஜன் சொன்னான். “இங்கே இப்போது என்ன செய்யப்போகிறார்?” என்றான் தீர்க்கன். கஜன் சிரித்து “அந்தியில் கிளம்பினால் அங்காடிகள் வழியாக வரமுடியாது. அந்தக் கரிய புரவியில் அவர் ஏறிச் செல்வதை நகர் மக்கள் அனைவரும் பார்க்கவேண்டும் என்பதற்காக உச்சிப்பொழுதிலேயே கிளம்பியிருப்பார். பெரும்பாலும் நகரத்தின் அனைத்து தெருக்கள் வழியாகவும் சுற்றித்தான் இங்கு வந்திருப்பார்” என்றான். தீர்க்கன் புன்னகைத்து “அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தாலே தெரிகிறது” என்றான்.

“இன்று நகர் முழுக்க இதைப் பற்றித்தான் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள்” என்றான் கஜன். தீர்க்கன் அவன் வில்லை வாங்கிக்கொண்டான். “நான் கிளம்பலாமா?” என்று கஜன் கேட்டான். “ஆம், கிளம்பு” என்றபின் “அங்கு சென்று அரசகுலத்தோர் வருவதை வேடிக்கை பார்க்கவேண்டியதில்லை. கொட்டகைக்குள் சென்று உணவருந்திவிட்டு உறங்கு. எவரும் பார்க்கமாட்டார்கள். உன் மூத்தவனாக இதை சொல்கிறேன்” என்றான். கஜன் சரி என்று தலையசைத்துவிட்டு முடிச்சுகளில் கால்வைத்து கயிற்றினூடாக கீழிறங்கி தரையை அடைந்தான். தரையில் ஒரு மெல்லிய ஆட்டம் இருப்பதை உணந்ததும் உடல் தரையை அறிந்து காவல்மாடத்தின் ஆட்டத்தை உதறி நிலைகொண்டது.

காட்டின் காவல்முற்றத்தை அடைந்தபோது அங்கு பணியாளர்கள் பொதிகளையும் மூங்கில்பெட்டிகளையும் இறக்கி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவன் நேராக உத்தரன் அருகே சென்று வணங்கி “நிஷத இளவரசருக்கு அடியவனின் வணக்கம்” என்றான். உத்தரன் புருவம் சுருக்கி அவனைப் பார்த்து “இந்தக் காட்டிற்குள் யானைகள் உண்டா?” என்றான். கஜன் “இல்லை. இங்கு கொலைவிலங்குகள் எதுவும் இல்லை” என்றான். இதழ்களை வளைத்த உத்தரன் “கொலைவிலங்கில்லாத காடு காடல்ல, வெறும் சோலை. காடு ஒரு கண்ணென்றால் யானை அதன் கருவிழி. புரிகிறதா?” என்றான்.

கஜன் “ஒரு காட்டிற்கு ஒரு யானை போதுமென்கிறீர்களா?” என்றான். உத்தரன் கையை ஓங்கி “எதிர் சொல்லெடுக்கிறாயா? கவிச்சொல்லை புரிந்துகொள்ளும் அறிவில்லாத மூடா, விலகிச்செல்” என்றான். அதற்குள் அப்பால் நின்ற அந்தக் கரிய அழகன் அவனை கைகாட்டி அழைத்து “புரவிக்கான புல் இங்கு எங்கே இருக்கிறது?” என்றான். “இங்கு புல்லை வெட்டி வைக்கும் வழக்கமில்லை. இந்தக் காடு முழுக்க புல்தான். புரவியை அவிழ்த்துவிட்டால் அது மேயுமல்லவா?” என்றான். “இரவில் அறியா நிலத்தில் புரவிகள் புல் மேய்வது அரிது” என்றான் அக்கரியவன். “நான் புல் அரிந்துகொண்டு வந்து போடுகிறேன்” என்று கஜன் சொன்னான். “நான் பிறரிடம் சொல்லிக்கொள்கிறேன், நீர் என்னுடன் இரும்” என்றான் கரியவன். “என் பெயர் கிரந்திகன். புரவிச்சூதன்.” கஜன் தன்னை அறிமுகம் செய்துகொண்டான்.

“இந்தக் காட்டில் எத்தனை காலமாக பணியாற்றுகிறீர்?” என்று கிரந்திகன் கேட்டான். “நானா?” என்றபின் “நெடுங்காலமாக” என்றான். “உம்மைப் பார்த்தால் நெடுங்காலமாக இப்புவியில் வாழ்பவர் போலவே தோன்றவில்லையே?” என்று கிரந்திகன் சொன்னான். பின்னாலிருந்த புரவியிலிருந்து இறங்கி அருகே வந்த முக்தன் “இங்கு வந்துவிட்டாயா? தீர்க்கன் எங்கிருக்கிறான்?” என்றான். முகம் மாறி சிறிய பதற்றத்துடன் “அவர் மேலே, காவல்மாடத்தில்” என்று திக்கினான் கஜன். “சென்ற வாரம்வரை இளவரசரிடம் ஊழியனாக இருந்தான். அங்கு இருந்து பித்துப்பிடிக்கிறது என்று சொன்னதனால் இவனை இங்கு பணிக்கு அனுப்பினேன்” என்றான். “நெடுங்காலம் என்றால் ஒரு வாரம் என்று பொருளா?” என்றான் கிரந்திகன். முக்தன் சிரித்து “இங்கமர்ந்திருந்தால் ஒவ்வொரு நாளும் ஒரு ஆண்டுக்கு நிகர்” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்

பச்சைக்கனவு –கடிதங்கள் 3

$
0
0

3

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு அன்புடன் நான்…

பச்சைக்கனவு என்று தலைப்பைப் பார்த்ததுமே லா.ச.ராவின் கதையில் சென்றது என் எண்ணம். திருக்குறள் உரையில் “விசும்பின் துளி’ என்ற குறளை விளக்கும்போது வாகமனைப்பற்றியும் உங்கள் மழைப்பயணம் பற்றியும் கூறியிருப்பீர்கள். அப்போதிருந்தே அதன் பசுமை மனதில் குடிகொள்ளத்தொடங்கியது. உங்களின் பயணக்கட்டுரை என் இந்த நாளை பலமணி நேரம் பசுமையோடு தேக்கி என்னைத் தன்னுள் வைத்துக்கொண்டிருக்கிறது. அந்த மகத்தான அனுபவம் தந்தமைக்கு நன்றி.
அன்புடன்
நா. சந்திரசேகரன்

***

அன்புள்ள சந்திரசேகரன்

பச்சைக்கனவு ஒரு அருமையான கதை.சிக்கலாக ஒன்றுக்குள் ஒன்றெனச் செல்லும் நிகழ்வுகள். கதையாகவும் வெறும் உருவகமாகவும். பச்சை என்னும் சொல்லைக்கொண்டு லா.ச.ரா விளையாடியிருக்கிறார்

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன் அவா்களுக்கு,

வணக்கம். நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். ஏனென்றால் அது தேவையில்லை என்று எண்ணுபவள், காரணம் வாசிப்பின் வழியாக அடையும் நெருக்கம் கலைய நான் விரும்புவதில்லை. உங்களை நான் எப்படி உணா்கிறேன் என்பதை உங்களிடமே கூட என்னால் முழுமையாக சொல்லிவிட முடியாது. இதுவரை நோிடையாக சந்திக்கவோ, பேசவோ, அவ்வளவு ஏன் இப்படி ஒருத்தி இருக்கிறேன் என்றே தொியாத ஒருவா் மேல் அன்பும், மதிப்பும் வரக்கூடும் என்பதே ஆச்சாியமாக தான் உள்ளது. அன்பும் மதிப்பும் பலரிடம் இருந்தாலும் பொறாமையை வரவழைத்தது நீங்கள் தான் சாா். கட்டுரைகள், கதைகள் என தொடர்ந்து வாசித்தாலும் எழுத துணிந்ததில்லை ஆனால் இப்போது நீங்கள் சென்று வந்த மழைபயணம் எல்லாவற்றையும் உடைத்துவிட்டது. அந்த கட்டுரையை வாசித்த போது ” சே…என்ன மாதிாி ஒரு ஆசிா்வதிக்கபட்ட வாழ்க்கை” என்று தான் சத்தியமாக தோன்றியது. உங்களின் மற்ற செயல்பாடுகளை விட நீங்கள் மேற்கொள்ளும் பயணமே நான் ஆா்வமுடன் கவனிப்பது. சைக்கிளிலோ, பேருந்தோ, இரயிலிலோ போயிட்டே இருப்பது எப்போதுமே உவகையளிக்க கூடியது. ஆனால் நிஜத்தில் அதிகம் பயணம் செய்யாதவள், அதற்கான வாய்ப்பு மிக குறைவு எனக்கு. அதனால் தான் உங்கள் மேல் பொறாமை அதுவும் இந்த மழையில் நனைந்துக்கொண்டே செல்லுவதை பாத்தவுடன் பல மடங்கு அதிகமாகிவிட்டது. அந்த குழுவில் ஒரு பெண் கூட இல்லையே?

நீங்களும் பெண்களை பாரமாக நினைக்கீறீர்களா சாா்? இல்லை தொல்லையா?. மழை எனக்கு எப்பவுமே நெருக்கமானதாக இருக்கிறது அது கொண்டு வரும் மகிழ்ச்சியை அளவிட முடியாது அது எப்போதும் நினைவுகளை கிளா்த்துவதாகவே இருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும் நினனவுகள். ஆச்சாிய நிகழ்வாக இதை எழுதும் இத்தருணத்திலும் வெளியே மழை. மழை ஒா் ஆசிா்வாதம் அது உங்களுக்கு நிறையவே வாய்த்திருக்கிறது. நான் வேறு என்ன சொல்ல? நல்லா இருக்கனும் சாா் நீங்க ரொம்ப…….ரொம்ப காலத்துக்கு.

“மழையின் மேற்கூரையிலிருந்து

விழும் இந்த மழைத்துளிகள்

ஏனோ எனக்கு பியோனோ

இசையை நினைவுட்டுகிறது,
மனம் தானே உன் விரல்களை

பற்றி எண்ணிக்கொள்கிறது,
வெளவால் வீச்சம் நிறைந்த

அந்த கோவிலின் உட் பிராகாரத்தில்

இருக்கும் சிலையின் விரல்களோடு

ஒப்பிட்டு சொன்னபோது நீ புன்னகைத்தாய்

இனிய சாரல் போல…”
மிக்க அன்புடன்,

தேவி. க,

***

அன்புள்ள தேவி

நேரடியாகச் சொல்லவேண்டும் என்றால் எங்களுடைய பயணங்களில் பெண்களைச் சேர்த்துக்கொள்வது மிகக்கடினம். இருமுறை முயன்றோம், கட்டுப்படியாகவில்லை. ஒன்று, மிகமிகக்குறைவான செலவில் பயணம் செய்கிறோம். 15 பேர் ஒருநாள் தங்க மொத்த வாடகை 1500 ரூபாய் என்றால் எப்படி என எண்ணிப்பாருங்கள்.

அதோடு முன்னதாக வகுக்கப்படாத பாதைகளில் பயணம் செய்கிறோம். பெண்கள் வருவார்கள் என்றால் தங்குமிடம் வசதியாக அமையவேண்டும். பயணம் முறையாகத் திட்டமிடப்படவேண்டும். திட்டமிட்டாலும்கூட சரியாக அமைவதில்லை. சென்ற கேதார் பயணத்தில் 7 மணிக்குச் சென்றடைவோம் என எண்ணிய இடத்துக்கு விடிகாலை 2 மணிக்குச் சென்று சேர்ந்தோம். மிகமிக மோசமான சாலை. எந்த வகையான மானுட நடமாட்டமும் இல்லாத மலைப்பாதை. அப்போது வண்டி ஏதேனும் பிரச்சினை ஆகிவிடக்கூடாது என்ற படபடப்பு மட்டுமே இருந்தது. இந்தியா பெண்கள் இப்படி ஒரு பயணம் செய்யும் அளவுக்கு இந்தியா இன்னும் முதிரவில்லை.

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

குமரகுருபரன் -சில குறிப்புகள்

$
0
0

4

குமரகுருபரனின் இந்த தனிப்பட்ட குறிப்புகளை ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார். வாசிக்கையில் ஒரு பெரிய தனிமையை அடைந்தேன். முப்பதாண்டுகளுக்கு முன் ஆற்றூர் சொன்னார். ‘உன்னைவிட இளையவர்கள் சென்று கொண்டிருப்பதை காண ஆரம்பிப்பாய் என்றால் முதுமை அறிவிக்கப்பட்டுவிட்டது என்று பொருள்’ அந்த துயரை இப்போது மிக அறிகிறேன். ஒருவகையான குற்றவுணர்ச்சியும் கசப்பும் சூழ்கிறது

இக்குறிப்புகளில் தெரியும் குமரகுருபரனை நான் சந்தித்ததே இல்லை. பிரியமோ மரியாதையோ கொண்ட ஓரு விலக்கம். ஓரிரு சொற்கள், புன்னகைகள். நான் அவரை இனி எங்கேனும் சந்திக்க முடியலாம். நான் நம்பவில்லை. ஆனால் என் ஆசிரியர்களென நான் கருதும் அனைவருமே அதை நம்புகிறவர்கள். காந்தி, அம்பேத்கர், நடராஜகுரு, நித்யா. மறுபடியும் ஒன்று இருக்கலாம்.

அன்று அவரிடம் நான் சொல்ல விழைவது நானும் இதே மனநிலையில்தான் என்று. மொழியினூடாகவே பேருருக் கொள்கிறேன் என்று. களம்நின்று பணியாற்றுபவர்களின் குன்றா ஊக்கத்தை அதனால்தான் பக்தியுடன் அணுகுகிறேன் என்று. யானை டாக்டரையோ கெத்தேல்சாகிபையோ பூமேடையையோ நேரில் கண்டிருந்தால் கால்தொட்டு சென்னிசூடியிருப்பேன் என்று.

வந்து சூழும் மெய்யின் இருளை கனவின் ஒளியை ஊதி ஊதிப்பெருக்கி எதிர்கொள்கிறேன் என்று.

ஜெ

***

2

எனது கனவுகள் சிதைந்த என் மனச் செதில்களில் போய் சேகரமாகிக் கொண்டே இருக்கின்றன. அந்த செதில்கள் நிறமற்றவை. நிஜம் அறியாதவை.அவற்றில் ஒரு செதில் கூட துணையுடனில்லை. தனித்த கழுதையின் காதுகள் போல விடைத்தபடி கனவுகளைச் சுமந்தபடி நிற்கும் அவற்றிற்கு தினமும் சாராயம் அளித்து கதகதப்பு உண்டு பண்ணுகிறேன். என் அன்பிற்குரியவர்கள் சிரமப்படும்போது அந்த செதில்களில் சிலவற்றை தீயிலிட்டு அவர்களுக்கு சேமத்தை உண்டு பண்ணுகிறேன். நான் செதிலாக மாறி இருப்பது நான் கனவாக மாறியிருப்பது நான் நிஜத்தை அறியாதது எதுவும் தனித் தனியே அல்ல என்று ஒரு குரல் கூவிக் கொண்டே இருக்கிறது. அக்குரலை நீங்கள் என் பெயரிட்டு அழைக்கிறீர்கள். உண்மையில் அக்குரல் அப் பெயரினுடையது அல்ல. தனிமையில் மடிந்த காலத்தின் அரசர்களது கடைசி விருப்பங்கள்.

என்றும் என்னுடனிருக்கும் ஜெயமோகன், சுதிர் செந்தில் மற்றும் என் ஆரம்பம் அந்திமழை இளங்கோவனுக்கு எப்போதும் என் தட்சணை உண்டு.

யார் இருந்தாலும் ஜெயமோகன் இல்லையெனில் நீங்கள் பார்க்கிற குமரகுருபரன் இல்லை.

அவரிடம் நான் கற்றுக் கொண்டது சார்ந்திருக்கலாகாது என்பதை மட்டுமே.

அதனாலேயே அவர் ஆசான்.

November 28, 2015 ·

 

3

ஜெயமோகனிடம், கலை, அரசியல், சித்தாந்த, தத்துவ விசாரங்களின் அடிப்படையில் நமக்கு அளவற்ற வேறுபாடும், அதிகபட்சமாக கொலைவெறிக் கோபமும் இருக்கலாம். ஆயினும், எழுத்தும் பேச்சுமாக, அவர் எடுத்துக்காட்டும் ஒரு இலக்கியம், அல்லது இலக்கியவாதியின் உன்னதம் இன்று வேறு யாரும் செய்யாதது. அவருடைய இலக்கிய வாசிப்பின் நுட்பம் அவருடைய எழுத்தைக் காட்டிலும் நுட்பமானது. இன்று பூமணி குறித்த அரங்கில் அவர் அளித்த வெக்கை குறித்த நுட்பம் நூறு எஸ்ரா நாவல்களுக்கு சமம். எனினும் ஜெமோ அதை இன்னமும் இலக்கிய ரீதியில் எழுதவில்லை.

அவரின் ஒவ்வொரு வரிகளும், இரண்டு வரிகள் அளவுக்காவது நம்மை புதிதாக எழுதவும், எழுத பிரயத்தனப்படவும் வைக்கின்றன என்பதே அவரை நிகழ் தமிழ் இலக்கியத்தில் உன்னதம் பெற வைக்கின்றன.

அவர் விருதுகள் அளிக்கிற இடத்தில் இன்று இருக்கிறார்.

அந்த இடத்திற்கு செல்வது தான் எனக்கான நியாயம்.

நிறுவனங்களுக்கு எதிரான வாழ்க்கையின் ஒரே முன்னோடி அவரே.

Cool.

January 11, 2015 ·

***

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இடங்கை இலக்கியம்

$
0
0

Jeyakanthan

 

முப்பதாண்டுகளுக்கு முன் ஆவேசமாக இலக்கியம் பேசி விடியவைத்த நாட்களில் ஒரு முறை ஒரு நண்பர் பூமணி ஒரு இடதுசாரி எழுத்தாளர் என்றார். அறையில் அமர்ந்திருந்த பிறிதொரு நண்பர் மெல்லிய மதுமயக்குடன் எழுந்து ஆவேசமாகக் கூச்சலிடத்தொடங்கினார். “எந்த அடிப்படையில் அவரை இடதுசாரி என்று சொல்கிறீர்கள்? அவர் என்ன வேலை செய்கிறார் தெரியுமா? அவர் கூட்டுறவுத்துறையில் அதிகாரி” என்றார்.

நான் “ஏன், அதிகாரிகள் இடதுசாரிகளாக முடியாதா?” என்றேன். அவர் என்னை நோக்கி மேலும் ஆவேசமாக அணுகி “இருக்கலாம். ஆனால் தொழிலாளர்களுக்கு சாதகமாக இருக்கவேண்டும். இவர் சிறிய தவறுகள் செய்யும் தொழிலாளர்களுக்கெல்லாம் கடுமையான தண்டனை அளிக்கிறார். இவர் ஒரு பூர்ஷ்வா அவர் எழுதுவது இடது சாரி இலக்கியமல்ல என்றார். “சரி, யார் யார் இடதுசாரி எழுத்தாளர்கள்?” என்று அவரிடம் கேட்டேன்.

அந்தக் கேள்வியின் எடையால் கொஞ்சம் தளர்ந்து நாற்காலியில் அமர்ந்து விரல்விட்டு எழுத்தாளர்களின் பட்டியலை சொல்லத்தொடங்கினார். பெரும்பாலும் அனைவருமே மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள். மேலும் சில பெயர்களை சுட்டிக்காட்டிக் கேட்டேன். சற்றுத் தயங்கியபின் “அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்” என்றார்.. அவர்கள் வலது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

“சரி, ஜெயகாந்தன்?” என்றேன். மீண்டும் கடும் சினத்துடன் இருகைகளாலும் நாற்காலியின் கைப்பிடியை அறைந்து எழுந்து “ஜெயகாந்தனை எப்படி இடதுசாரி எழுத்தாளர் என்று சொல்ல முடியும்? அவர் எழுதிய ’ஜெய ஜெய சங்கர” நாவலை நீங்கள் படித்திருக்கிறீர்களா? அதை எழுதியவர் எப்படி இடது சாரியாக முடியும்?” என்று கூவினார். அழுகை வேறு வந்துவிட்டது. விவாதம் அவர் மேலும் குடிக்க ஆரம்பிக்கவே முடிவுக்கு வந்தது.

யார் இடதுசாரி எழுத்தாளர்? எழுத்து என்ற இந்தக்குழப்பம் எப்போதும் இலக்கியச்சூழலில் உள்ளது. கட்சி சார்பானவர்களுக்கு எந்தக்குழப்பமும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் கட்சியைச் சார்ந்தவர்கள் இடதுசாரி எழுத்தாளர்கள். கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாலோ விலகிச் சென்றாலோ வலதுசாரி எழுத்தாளர்க்ளாகிவிடுவார்கள். கட்சிக்கு வெளியே இருப்பவர் அனைவரும் வலதுசாரிகள் தான்.

Poomani

இங்கே நான் முற்போக்கு என்ற சொல்லை தவிர்க்கிறேன். அது இடதுசாரி எழுத்தாளர்கள் தங்களைத் தாங்களே சொல்லிக்கொண்ட ஒரு சொல். எல்லா படைப்பாளிகளும் முற்போக்காளர்களே. எல்லா படைப்பும் மானுடப்பண்பாட்டில் முன்னகர்வையே நிகழ்த்துகிறது. ஆகவே இலக்கியமே முற்போக்குச் செயல்பாடுதான்.

உண்மையில் கருத்தியல் சார்ந்தும் அழகியல் சார்ந்தும் இடதுசாரி எழுத்து என்றால் என்ன என்று ஒரு வரையறையை நிகழ்த்திக்கொள்ள வேண்டுமென்றால் படைப்பின் இயல்புகளின் அடிப்படையில் சில நெறிமுறைகளைக் கண்டடைய வேண்டியுள்ளது. என்னுடைய பார்வையில் தமிழ் இலக்கியப்பரப்பு உருவாக்கிய மிகச்சிறந்த் இடதுசாரி எழுத்தாளர் ஜெயகாந்தனே அவரை ஒரு அடையாளமாகக்கொண்டு இடது சாரி எழுத்தென்றால் என்ன என்று நான் வரையறுப்பேன்.

ஒன்று: பொருளியல் அடிப்படையில் பண்பாட்டு சமூகவியல் மாற்றங்களை பார்க்கும் மார்க்ஸியப் பார்வை இருக்கவேண்டும். இதை பொருளியல்வாதம் என்கிறேன்.

இரண்டு: மனிதனை பிரபஞ்சத்தை புரிந்துகொள்வதற்கான அடிப்படை அலகாகக் கொள்ளுதல். மனிதனின் வெற்றிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் தன் சிந்தனையை முதன்மையாகச் செயல்படுத்துதல் இதை மனிதமையநோக்கு என்கிறேன்.

மூன்று: புதுமை நோக்கிய நாட்டம். உலகம் மேலும் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை. பழமையிலிருந்து புதுமைக்குச் செல்வதை வளர்ச்சியென்றும் மானுடத்தின் வெற்றியென்றும் கருதும் பார்வை. எதிர்காலம் மீதான நம்பிக்கை. வரலாறு மானுடனையும் சமூகத்தையும் முன்னெடுத்தே செல்கிறது என்னும் தர்க்கபூர்வ நிலைபாடு. இதை மார்க்ஸிய வரலாற்றுவாதம் என்கிறேன்.

இந்த மூன்றுகூறுகளும் கொண்ட ஒரு படைப்பாளி இடதுசாரித் தன்மை கொண்டவரே. அவர் கட்சி சார்ந்து இருக்கலாம், சாராமலும் இருக்கலாம். பெரும்பாலும் முதன்மையான படைப்பாளிகளுக்கு ஏதேனும் ஒரு இயக்கம் சார்ந்தோ, அமைப்பு சார்ந்தோ தங்களை கட்டுப்படுத்திக்கொள்வது இயல்வதில்லை. அவர்களின் சுதந்திரமான சிந்தனைக்கும் பேச்சுக்கும் வெளியே இருந்து ஒரு கட்டுப்பாடு விதிக்கப்படுவது அவர்களைக் குறுகச் செய்வதாக உணர்கிறார்கள். இந்தியாவின் முக்கியமான இடதுசாரி எழுத்தாளர்களாகக் கருதப்படுபவர்கள் பெரும்பாலும் அனைவருமே கட்சி அமைப்புக்குள்ளிருந்து வெளியேறியவர்களே. முல்க்ராஜ் ஆனந்த், யஷ்பால், பிமல் மித்ரா, தகழி சிவசங்கரப்பிள்ளை, பி கேசவதேவ், நிரஞ்சனா என உதாரணங்களை அடுக்கலாம்.

மேலே கூறப்பட்ட மூன்று அடிப்படை விதிகளும் ஜெயகாந்தனுக்கு எச்சமின்றி பொருந்துவதைப் பார்க்கலாம். அதற்கு மேல் அவருடைய பேச்சோ, அரசியல் நிலைபாடுகளோ, எழுத்தாளனுக்குரிய சஞ்சலங்களோ அவரை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் அல்ல. ஜெயகாந்தன் ஒருதருணத்திலும் பொருளியல்வாதத்திற்கு அப்பாற்பட்ட உளவியல், இறையியல் கூறுகளை மனித வாழ்க்கையை புரிந்துகொள்வதற்கு பயன்படுத்தியவரல்ல. மனிதனை மையமாக்கியே அவருடைய சிந்தனைகள் எழுந்தன. மானுடம் முன்னேறுகிறது என்பதில் அவருக்கு எந்த ஐயமும் இல்லை. அவருடைய பொற்காலங்கள் வருங்காலத்தில்தான் நிகழ்ந்தன. சென்ற காலத்தில் அல்ல.

இந்த அளவுகோலை வைத்துப்பார்க்கையில் யார் யார் இங்கு இடதுசாரி எழுத்தாளர்கள் என்று ஒருவாறு வகுத்துச் சொல்லமுடியும். புதுமைப்பித்தன் அல்ல. புதுமைப்பித்தனிடம் மனிதனை மையமாக்கிய நோக்கு இருந்ததில்லை. வரலாற்றின் பெரும் ஒழுக்கில் மனிதனை ஒரு சிறுகூறாகவே அவர் பார்க்கிறார். உண்மையில் மனித இனம் வளர்கிறதா என்பதில் அவருக்கு ஐயமே இருந்தது பொருளியல் அடிப்படையில் மனித வாழ்க்கையை வகுப்பது குறுக்கல்வாதம் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததை அவரது கதைகள் காட்டுகின்றன. அவருடைய இயல்பான அவநம்பிக்கையும் கசப்பும், நையாண்டியும் இடதுசாரி எழுத்துக்குரிய குணங்கள் அல்ல.

கு.ப.ராஜகோபாலன்.பிச்சமூர்த்தி, லா.ச,ரா போன்றவர்கள் ஒருபோதும் இடதுசாரிகள் அல்ல. அவர்களின் கனவுகளில் பெரும்பகுதி இறந்தகாலத்தில் இருந்தது. கடந்தகால விழுமியங்களை நோக்கி அவர்களின் ஆழ்மனம் ஏங்கிக்கொண்டிருந்தது. மௌனி? அவர் கடந்த காலத்திலிருந்து வெளிவரவே இல்லை.

 

sundara ramasamy

 

kiraa

 

தமிழில் இடதுசாரி இலக்கியத்தின் முதல் நான்கு வான்மீன்கள் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன். ஜி.நாகராஜன்.மூவருமே கட்சியில் இருந்திருக்கிறார்கள். வெவ்வேறு காலகட்டங்களில் வெளியேறியிருக்கிறார்கள். சுந்தர ராமசாமி தனது வெளியேற்றத்துக்கான சூழலை விரிவாகவே பதிவு செய்திருக்கிறார். அது மார்க்சியச் செயல்த் திட்டம் மற்றும் உலகநோக்கு மீதான அவநம்பிக்கையையே வெளிப்படுத்தியது. மனிதனை அவனுடைய பொருளியல் காரணிகளைக் கொண்டு முழுமையாக மதிப்பிட்டுவிடலாம் என்ற எண்ணத்தை அவர் உதறுவது அதில் தெரிகிறது. அந்த விலக்கத்திற்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி அந்தக்காலகட்டத்தில் ஒரு காரணமாக இருந்தார். தனது குழந்தையின் இறப்பைப் புரிந்துகொள்வதற்கு ஒரு தந்தைக்கு மார்க்சியம் எவ்வகையிலும் உதவாது என்று புரிந்துகொண்டபோது அதிலிருந்து தன் உள்ளம் விலகத் தொடங்கியது என்று சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். அந்த வரி முக்கியமானது. இங்கு மனிதர்களின் உள்ளத்தைத் தீர்மானிக்கும் அடிப்படைகளில் ஒன்று இறப்பு. பிறிதொன்று ஊழ். இரண்டையுமே மார்க்சியம் விளக்காது என்பது இடதுசாரி எழுத்துக்களிலிருந்து விலகச்செய்தது அவரை. ஆனால் சுந்தர ராமசாமி இறுதி வரைக்கும் மானுட மையநோக்கு கொண்டிருந்தார். மானுடம் வளர்கிறது என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது .அவ்விரு கூறுகளால் அவர் வலதுசாரிகளை விட இடதுசாரிகளுக்கு அணுக்கமான எழுத்தாளராக இருந்தார். ஆயினும் அவருடைய பிற்கால படைப்புக்களை வைத்து அவரை இடதுசாரி எழுத்தாளர் என்று சொல்வது கடினம்.

கி.ராஜநாராயணன் இடதுசாரிக் கருத்தியலுக்குள் எப்போதுமே  சென்றவர் அல்ல. ஒரு சமூக மாற்றத்துக்கான அலை என்று நம்பி அவர் இடது சாரி இயக்கத்தில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அவருக்கு நன்கு பழகிய இடதுசாரி பின்புலம் கொண்ட கிராமிய வாழ்க்கை, சரியாகச் சொல்லப்போனால் நிலப்பிரபுத்துவ காலகட்டத்து வாழ்க்கை, அவரை கவர்ந்து உள்ளிழுத்து வைத்துக்கொண்டது. அவர் பொருளியல்வாதத்தை நம்பியவர். அவருடைய படைப்புகளில் மானுடமைய நோக்கு உண்டு. ஆனால் மார்க்ஸிய வரலாற்றுவாதம் இல்லை. நிலப்பிரபுத்துவ வாழ்க்கை மீதான மோகம் ஒரு முழுமையான இடதுசாரி எழுத்தாளராக ஆக முடியாமல் கி.ராவை தடுக்கிறது. வாழ்க்கை முன்னேறுகிறது என்பதை விட விழுமியங்களில், வாழ்க்கைத்தரத்தில் ஒரு சரிவையே அவர் உள்ளம் காண்கிறது. ஆயினும் கூட அவரிடமிருக்கும் மானுடமைய நோக்காலும், பொருளியல்வாதத்தாலும் இடதுசாரிகளுக்கு அணுக்கமான படைப்பாளியாகவே கிரா இருக்கிறார்.

ஜி.நாகராஜன் கட்சி ஊழியராக இருந்து வெளியேறியவர். இடதுசாரி கொள்கைகளைக் கற்றவர். அவருடைய எழுத்தில் பொருளியல்வாதமும், மானுடமையநோக்கும் இருந்தாலும் மார்க்சியத்தின் இலட்சியவாதத்தில் அவர் பின்னாளில் நம்பிக்கை இழந்தார். அதன் வரலாற்றுவாதத்தை எள்ளலுடன் அணுகுவதை நாளை மற்றுமொரு நாளே நாவலில் காணலாம். ஆயினும் அவர் இடதுசாரிகளுக்கே நெருக்கமானவர். தமிழ் இடதுசாரி எழுத்தை இந்நால்வரையும் கொண்டு முழுமையாக மதிப்பிடுவது நல்ல தொடக்கமாகும். ஒவ்வொரு பிற்காலப் இடதுசாரிப் படைப்பாளியும் இந்த பட்டியலில் எவருடைய சாயல்கொண்டவர் என்பது ஒரு நல்ல கேள்வி.

tho mu si

தொ.மு.சி.ரகுநாதன்

 

மறுபக்கம் கட்சி எழுத்தாளர்கள். தொ.மு.சிதம்பர ரகுநாதனை தமிழ் இடதுசாரி எழுத்தின் முதன்மையான ஆளுமை என்றும் அவருடைய பஞ்சும் பசியும் நாவலே தமிழ் இடதுசாரி எழுத்தின் தொடக்கம் என்றும் கூறுவது வழக்கம். மர்க்சிம் கார்க்கியின் எழுத்துக்களை முன்மாதிரியாகக்கொண்டு உருவாக்கப்பட்ட படைப்புகள் அவை அன்றைய சோவியத் ரஷ்யாவின் கோட்பாட்டாளர்கள்  அறைகூவிய சோஷலிச யதார்த்தவாதம் என்னும் அழகியல் முறையை வழிகாட்டு நெறியாகக்கொண்டவை.

தொ.மு.சிதம்பர ரகுநாதனுக்குப்பிறகு கெ.முத்தையா [விளைநிலம், உலைக்களம்] டி.செல்வராஜ் [தேனீர்,தோல்], கு.சின்னப்பபாரதி [தாகம்] பொன்னீலன் [கரிசல், புதியதரிசனங்கள்] என்னும் நால்வரைச் சொல்லலாம். கட்சியின் செயல்த்திட்டத்தை ஒட்டி எழுதப்பட்ட பிரச்சாரப் படைப்புக்கள் இவை. ஆயினும் மானுடவாழ்க்கையின் சித்திரத்தை அளிப்பதனாலேயே தவிர்க்கமுடியாத இலக்கிய முக்கியத்துவம் கொண்டவை.

ke mu

கே.முத்தையா

di se

டி செல்வராஜ்

ku si

கு.சின்னப்ப பாரதி

pon

பொன்னீலன்

 

அதன்பின் இடதுசாரி எழுத்தாளர்களின் நிரை இங்கு உருவாகி வந்தது. அவர்கள் அனைவருமே சோஷலிச யதார்த்தவாதம் எனும் அழகியல் வடிவை ஏற்றுக்கொண்டவர்கள். ஸ்டாலினால் முன்வைக்கபட்ட அந்த அழகியல் கொள்கை  அதன் எதிரிகளால் கோவேறு கழுதை என்று வர்ணிக்கப்பட்டது. குதிரைக்கும் கழுதைக்குமான புணர்வில் பிறந்தது. மறு உற்பத்தி செய்யும் திறனற்றது. உண்மையில் இரு பொருந்தாச் சொற்கள் இணைவதே  சோஷலிச யதார்த்தவாதம் என்பது . சோஷலிசம் என்பது அரசியல் கொள்கை. யதார்த்தவாதம் என்பது அழகியல்முறை.

நடைமுறையில் சோஷலிச யதார்த்தவாதம் என்பது ஒருவகை யதார்த்த எழுத்து. தன் அரசியல் நம்பிக்கையாக சோஷலிசத்தை முன்வைப்பது. சமூகஆய்வுக்கருவியாக மார்க்சியத்தின் பொருளியல்வாதத்தையும் வரலாற்றுவாதத்தையும் கையாள்வது. மானுடமையநோக்கை இலட்சியவாதமாகக் கொண்டது.  நேரடியாகச் சொல்லப்போனால் இங்கே இருந்த இடதுசாரிக்கட்சிகளில் ஒன்றின் அரசியல் செயல்திட்டத்தை ஒட்டி எழுதப்படும் யதார்த்தநோக்குள்ள படைப்பே சோஷலிச யதார்த்தவாதம் என கூறப்ப்பட்டது. பிற அனைத்து படைப்புகளையும் கட்சி அதன் எழுத்தாளர் அணியினூடாக கடுமையாக எதிர்த்து நிராகரித்தது.

இடதுசாரிக் கட்சியின்  சித்தாந்திகள் தங்கள் படைப்புகளை முன்னிறுத்தவும் மற்ற படைப்புகளைக் கீழிறக்கவும் கருத்தியல் போரொன்றையே ஐம்பதாண்டுகள் இங்கு நிகழ்த்தியிருக்கிறார்கள். ஒருகாலகட்டத்தில் இங்கு சிந்தனையை வடிவமைக்கும் ஒரு முக்கியமான தரப்பாக இந்த அரசியல் -இலக்கிய கூட்டணி செயல்பட்டிருக்கிறது. அதன் முன்னோடிச் சிந்தனையாளர்கள் மீண்டும் நால்வர். வி.ஜீவானந்தம் ,ஆர்.கே.கண்ணன், எஸ்ராமகிருஷ்ணன், நா.வானமாமலை. எழுத்தாளன் சமூகத்தை எப்படி பார்க்கவேண்டும். அவன் படைப்பின் இயல்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை தொடர்ச்சியான வகுப்புகளூடாகவும் கட்டுரைகளினூடாகவும் இவர்கள் நிலை நிறுத்தினார்கள்.

அழகியல் ரீதியாக யதார்த்தவாதம் என்பது ‘உள்ளது உள்ளபடி கூறுவது’ என்பதுதான். ஆனால் இலக்கியம் ஒருபோதும் அப்படி கூறிவிட முடியாது. இதுவே யதார்த்தமென்று வாசகனை நம்பச்செய்யும் எழுத்துமுறை என அதை மறுவரையறைச் செய்யலாம்.

கைலாசபதி

கைலாசபதி

கா சிவத்தம்பி

 

நா. வானமாமலை

 

thikasi

தி.க.சிவசங்கரன்

 

அடுத்த தலைமுறையில் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி சி.கனகசபாபதி, தி.க.சிவசங்கரன் ஆகிய நால்வரையும் இங்கு இடதுசாரி அழகியலை வலியுறுத்திய விமர்சகர்கள் என்று சொல்லலாம். இவர்களில் இலங்கையைச் சேர்ந்த  கைசலாசபதி ,சிவத்தம்பி இருவரும் இலங்கையின் ஒட்டுமொத்த இலக்கிய சூழலையே பத்துப்பதினைந்து ஆண்டுகாலம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இலங்கையின் இடதுசாரி எழுத்தின் முதன்மையான படைப்பாளி வ.அ.ராசரத்தினம்தான். கைலாசபதி இலங்கையின் செ.கணேசலிங்கன், செங்கை ஆழியான் போன்ற படைப்பாளிகளே சோஷலிச யதார்த்தவாத நோக்கில் எழுதிய முதன்மையான படைப்பாளிகள் என்று முன்வைத்தார். இவர்களில் இருவருமே எவ்வகையான அழகியல் அம்சமும் இல்லாத வெறும் கருத்துப்பிரச்சாரகர்கள். எளிய அரசியல் விவாதச் சூழலுக்கு வெளியே அவர்களால் கவனத்தை ஈர்க்க முடியவில்லை.

இச்சூழலில்தான் தமிழில் நவமார்க்ஸியக் குரல்கள் எழுந்து வந்தன. அவை மார்க்ஸியத்தின் எளிமையான பொருளியல்வாதத்தை மறுபரிசீலனை செய்தன. பண்பாட்டுக்கு அதற்குரிய தனித்த இயங்குமுறைகள் உண்டு என்று வாதிட்டன. மார்க்ஸிய வரலாற்றுவாதத்தை மிகவிரிவான தளத்தில் முன்வைத்து பண்பாட்டை ஆராய முற்பட்டன. அதற்கு ஐரோப்பிய நவமார்க்ஸிய கொள்கைகளை கையாண்டன. எஸ்.என்,நாகராசன் அக்குரலை முன்வைத்த முன்னோடி மார்க்ஸியக் கோட்பாட்டாளர். அதை இலக்கியத் தளத்தில் விரித்தவர் ஞானி. அவர்கள் நடத்திய புதிய தலைமுறை, நிகழ் போன்ற இதழ்கள் இடதுசாரிகளின் நேரடியரசியல் சார்ந்த இலக்கிய அணுகுமுறையை மாற்றியமைத்தன.

vijaya

‘சரஸ்வதி’ விஜயபாஸ்கரன்

sa

எஸ்.ஏ.பெருமாள்

arunan

அருணன்

தமிழ் இடதுசாரி எழுத்தில் சில இதழாளர்களின் பங்களிப்பை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். விஜயபாஸ்கரன் இடதுசாரி எழுத்து தமிழில் வேரூன்ற அடித்தளம் அமைத்த முன்னோடிஅவருடைய சரஸ்வதி இதழில்தான் சுந்தர ராமசாமி ஜெயகாந்தன் போன்றவர்கள் அறிமுகமானார்கள். முற்போக்கு இலக்கியத்தின் முதல் இதழ் என்றே அதைச் சொல்லமுடியும்.வி.ஜீவானந்தம் தொடங்கிய தாமரை பின்னர் தி.க.சிவசங்கரன் ஆசிரியத்துவத்தில் இடதுசாரி எழுத்துக்களை உருவாக்கியது. எஸ்.ஏ,பெருமாள், அருணன் ஆகியோர் இடதுசாரி இதழியலில் முக்கியமான பங்களிப்பாற்றியவர்கள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றம் ஆகிய இரு அமைப்புக்களும் இடதுசாரி எழுத்துக்களை தொடர்ந்து பரப்ப முயன்று வருகின்றன. அமைப்பாக இணைவது எழுத்தாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் பெரிதாக உதவுவதில்லை. ஆனால் அவர்களின் எழுத்துக்கள் வெளிவரவும் பரவலாகச் சென்றுசேரவும் அவை காரணமாக அமைகின்றன.

tharma

நா தர்மராஜன்

 தமிழ் இடதுசாரி இலக்கியத்தில் சில மொழிபெயர்ப்பாளர்களின் பங்கு முக்கியமானது. நா.தர்மராஜன் ரா.கிருஷ்ணையா, பூ.சோமசுந்தரம் போன்றவர்கள் ரஷ்யப் பதிப்பகங்களுக்காக மொழியாக்கம் செய்த ரஷ்ய இலக்கியங்கள் இங்கே இடதுசாரி எழுத்துக்களை பெரிதும் வடிவமைத்தன. ஆனால் டி.எஸ்.சொக்கலிங்கம், க.சந்தானம் போன்றவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட தல்ஸ்தோயின் படைப்புக்கள் பெரிய செல்வாக்கை செலுத்தவில்லை. தமிழக இடதுசாரிகளை பெரிதும் கவர்ந்தவர்கள் சிக்கலற்ற இடதுசாரி எழுத்தாளர்களான லிர்மன்ந்தேவ், சிங்கிஸ் ஐத்மாத்தவ் போன்றவர்களே.

ராஜேந்திரசோழன்

ambai

அம்பை

gand

கந்தர்வன்

 

அடுத்த தலைமுறையின் முதன்மையான இடதுசாரி நால்வர்   பூமணி, ராஜேந்திரசோழன், கந்தர்வன். அம்பை. முதலில் குறிப்பிட்ட மூன்று வரையறைகளையும் கொண்டு பார்க்கையில் பூமணி எல்லா வகையிலும் ஒரு இடதுசாரி எழுத்தாளர்.  பொருளியல் நோக்கு மானுட மைய நோக்கு வரலாற்றுவாதம் ஆகிய மூன்றும் ஒருபோதும் பிறழாமல் அவர் படைப்புகளில் உள்ளன. ஒருவகையில் ஜெயகாந்தனுக்குப்பிறகு தமிழில் மிகச்சிறந்த இடதுசாரி எழுத்தாளர் என்று பூமணியை நான் சொல்லத்துணிவேன்.

ராஜேந்திரசோழன் இடதுசாரிக் கட்சி ஒன்றின் செயல் வீரராகவே வாழ்ந்தவர். ஆனால் அவருடைய படைப்புகளில் இடதுசாரி நோக்கின் அடிப்படையான பொருளியல்வாதம் பெரும்பாலும் இல்லை. அவை ஃப்ராடிய உளவியல் நோக்கி செல்கின்றன. ஃப்ராய்டிய அணுகுமுறை தன்னளவில் மார்க்சிய நோக்குக்கு எதிரானது. மனித உள்ளமென்பது பொருளியல்  அடிப்படையிலான உற்பத்தி – நுகர்வு ஆகியவற்றால் ஆன  நீண்ட வரலாற்றால் கட்டமைக்கப்பட்டது என்பதே மார்க்சிய நோக்காக இருக்கமுடியும். பண்பாட்டால் அடக்கப்பட்ட அடிப்படை உணர்வுகளின் வெளிப்படையாக மானுட உள்ளத்தைப்பார்க்கும் ஃப்ராய்டியம் மார்க்சியத்துக்கு எதிரான ஒரு கொள்கை. ஆகவே செவ்வியல் மார்க்சியர்களால் அது எப்போதும் எதிர்க்கப்பட்டே வந்துள்ளது.மார்க்சியத்துக்கும் ஃப்ராய்டியத்துக்குமான ஒருவகை ரகசிய உறவு நிகழ்ந்தவை என்று ராஜேந்திரசோழனின் படைப்புகளைக்கூறலாம்.  இக்காரணத்தால் இங்கு அவை மார்சியர்களால் மிகக்க்டுமையாக எதிர்க்கப்பட்டன. ஆனால் அதை ஃப்ராய்டிய மறுப்பாக முன்வைக்காமல் வெறும் ஒழுக்கவாதமாகவே இங்குள்ள மார்க்சியர்கள் முன்வைத்தனர்.

கந்தர்வன் மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தொழிற்சங்கத்தில் இருந்தவர் வாழ்நாளின் கடைசியில் அதிகாரியாக பதவி உயர்வு பெறுவதனால் கட்சி அணியினரால் விலக்கப்பட்டார். அவருடைய ஆரம்பகால எழுத்துக்கள் சம்பிரதாய மார்க்சியப் பிரச்சாரத் தன்மையையே கொண்டிருந்தன. எளியோரின் வாழ்க்கைச் சித்திரங்களை உருவாக்குவதாக அவை நின்றுவிட்டிருந்தன. பின்னாளில் அவை மார்க்சியச் சட்டகத்தை உதறி நுட்பமான மானுடக் கணங்களை அவதானிப்பவையாக மாறின. அதன் பின்னரே அவர் ஒரு முக்கியமான படைப்பாளியாக எழுந்தார். தமிழிலக்கியத்தில் கந்தவர்வனுக்கு முக்கியமான இடம் உண்டு. ஆனால் இடதுசாரிஎழுத்துக்களால் அல்ல.

அம்பை இடதுசாரி நோக்கு கொண்ட எழுத்தாளராக அறிமுகமானவர். பின்னர் பெண்ணியக் கருத்துக்களின் பிரச்சாரகராக ஆனார். அவருடைய பெண்ணிய நோக்கு மார்க்ஸியத்தையே ஆண்மைய தத்துவம் என்ற பார்வை நோக்கிக் கொண்டுசென்றது. நேரடியான பிரச்சாரத்தன்மை கொண்ட. அவதானிப்புகளும் கொண்ட,கலையம்சம் குறைவான படைப்புக்கள் அவருடையவை.

vindan

விந்தன்

su

இடதுசாரிப் பார்வை கொண்ட படைப்பாளிகளில் ஒருசாரார். வெகுஜன ஊடகங்களில் தீவிரமாக இறங்கி எழுதினார். அவர்களை சரியான அர்த்தத்தில் இலக்கிய உலகுக்குள் நிறுத்த முடியாது. ஆனால் அவர்களின் இலக்கிய பங்களிப்பை புறக்கணிக்கவும் முடியாது. அவர்களின் முன்னோடி என்று விந்தனைத்தான் சொல்ல வேண்டும். கல்கியால் கண்டெடுக்கப்பட்ட விந்தன் பின்னர் பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதினார். முறையான மார்க்சிய அறிவு ஏதும் அவருக்கில்லை. கருத்தியல் ரீதியாக அவர் ஈ.வெ.ராவை சார்ந்தவர்தான். ஈ.வெ..ரா முன்வைத்த ஒருவகையான ஒழுக்கவியலும் மூர்க்கமான எதிர்ப்புணர்வும் அவரிடம் இருந்தது. ஆயினும் பொருளியல்வாதம், மனிதமைய நோக்கு ஆகியவை அவரை இடதுசாரிகளுக்கு அருகே நிறுத்துகின்றன.

விந்தனுக்கு அடுத்த தலைமுறையில் சு.சமுத்திரம் விந்தனின் இயல்பான கசப்பு நிறைந்த அங்கதத்தையும் கரடுமுரடான எதார்த்த சித்தரிப்பையும் நேரடியான  தாக்கும் தன்மையையும் கொண்ட படைப்புகளை எழுதினார். இடதுசாரிகளின் வரலாற்றுவாதத்துக்கு அவர் அணுக்கமானவரல்ல. ஆனால் மனிதமைய நோக்கும் பொருளியல்வாதமும் அவரை இடதுசாரி எழுத்தாளரென்று அடையாளப்படுத்த வைக்கின்றன. தனுஷ்கோடி ராமசாமியை கட்சிசார்பான  எழுத்தை பிரபல ஊடகங்களுக்காக எழுதியவர் என்று கூறலாம்.

 

satami

ச தமிழ்ச்செல்வன்

meelaan

மேலாண்மை பொன்னுச்சாமி

இடதுசாரி எழுத்தின் மூன்றாவது தலைமுறை தமிழ்ச்செல்வன் மேலாண்மை பொன்னுச்சாமி என இருமுகம் கொண்டது. இவர்கள் எழுந்து  வந்த காலத்தில் சோவியத் ரஷ்யா வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதை ஒட்டி உருவான விவாதங்கள் இடதுசாரிகள் மத்தியில்பெரிய அதிர்வலைகளை உருவாக்கின. அன்றுவரை கண்மூடித்தனமான நம்பிக்கைகளுடன் ஒளிமிக்க எதிர்காலத்தை கற்பனைசெய்து கொண்டிருந்தவர்கள் செல்லும் வழி சரிதானா என்ற ஆழமான ஐயத்தையும் அடையத் தொடங்கினார்கள். செவ்வியல் மார்க்சியம் பெரிய அளவில் அடிவாங்கத் தொடங்கியது. சோவியத் ரஷ்யாவிலிருந்து வந்த மொழிபெயர்ப்பு நூல்களினூடாக உருவாக்கப்பட்ட அவர்களின் அழகியல் மறுபரிசீலனை செய்யப்படவேண்டுமென்ற கட்டாயத்தை நோக்கிச் சென்றது.

அந்தக் கருத்தியல் அழுத்தம் இடதுசாரி எழுத்தை இரண்டாகப்பிரித்தது. தீவிரமான கட்சிச் சார்பும் பழகிப்போன வழிகளில் மேலும் கண்மூடித்தனமான நம்பிக்கையுடன் செல்வதும் ஒரு தரப்பாக வெளிப்பட்டது. அதன் முகம் என்று மேலாண்மை பொன்னுச்சாமியைச் சொல்லலாம். அடித்தள மக்களின் வறுமை, அவ்வறுமையிலும் வெளிப்படும் அவர்களின் பண்பாட்டுச் செழுமை ,அரசியல் படுத்தப்பட்ட அவர்கள் அடையும் சமூகப்பார்வை ஆகியவற்றை திரும்ப திரும்ப மேலாண்மை பொன்னுச்சாமி எழுதினார். தேனி சீருடையான், சோலை சுந்தரப்பெருமாள், இரா.தே.முத்து, போன்றவர்களை அவ்வரிசையைச் சேர்ந்தவர்கள் எனலாம்.

gnanani

ஞானி

எஸ்.என்.நாகராசன்

 

மறுபக்கம் தமிழ்ச்செல்வன் முதலியோர் முன்வைத்த இலக்கியப்பார்வை மார்க்சியத்தை ஒரு வழிகாட்டு நெறியாக எடுத்துக்கொண்டு மானுட வாழ்க்கையின் அனைத்துத் தளங்களையும் ஓரளவு சுதந்திரமாக எதிர்கொள்ள முடியுமா என்று  பார்ப்பதாக அமைந்தது தமிழ்ச்செல்வனின் படைப்புகளை சரியான அர்த்தத்தில் மார்க்சியச் சட்டகத்தில் அடக்க முடியாது .மார்க்சியப் பார்வைகொண்ட ஒருவரின் பொதுவான உலகியல் நோக்கு என்று அதை சொல்லலாம். மானுடமையநோக்கும் வரலாற்றுவாதமும் அவற்றில் திகழ்ந்தாலும் கூட அவற்றில் பொருளியல் அடிப்படைவாதம்  எப்போதும் அப்படியே இருந்ததென்று சொல்ல முடியாது. அவருடைய முன்னுதாரணமான பலகதைகள் , உதாரணமாக வெயிலோடு போய் போன்றவை மரபான பண்பாட்டுநோக்கு  கொண்டவைதான்.

தமிழ்ச்செல்வன் அடுத்த கட்ட இடதுசாரி எழுத்தாளர்கள் நடுவே ஆழமான ஒரு செல்வாக்கை உருவாக்கினார். தமிழ்செல்வன் இலக்கியவாசிப்பு குறைவுடையது. கோட்பாட்டு அளவில் அவருடைய புரிதல் மேலும் எளியது. ஞானி முன்வைத்த ஐரோப்பிய நவமார்க்சிய கொள்கைகள் ,மார்க்சிய அமைப்புவாதம் ஆகியவற்றுடன் அவருக்கு எந்தவிதமான அறிமுகமும் இருக்கவில்லை. ஆனால் மாற்றுத்தரப்புகளை சற்று திறந்த மனத்துடன் நோக்கும் நெகிழ்வு அவரிடமிருந்தது. ஆகவே அவரால் ஒரு விவாதக்களத்தை உருவாக்க முடிந்தது.

இடதுசாரி இலக்கியத்தில் திருவண்ணாமலை ஒரு முக்கியமான மையமாக இருந்தது. 1990 களில் திருவண்ணாமலையை மையமாக்கி எழுந்த கலை இலக்கிய இரவு இடதுசாரிப் பார்வை பிற இலக்கிய போக்குகளை உள்ளிழுத்துக்கொண்டு தன்னை விரிவாக்கம் செய்ய களம் அமைத்தது. அதன் மையவிசையாக  விளங்கியவர் பவா செல்லதுரை. நாட்டாரியல் கதைகளின் விந்தைகளை புனைவுகளில் இணைத்துக்கொண்ட பவா செல்லத்துரையின் படைப்புக்கள் சோஷலிச யதார்த்தவாததை மீறிச்சென்றன. ஆனால் அனைத்துவகையிலும் முற்போக்குப் படைப்புக்களாகவும் அமைந்தன.

 

uthaya

உதயஷங்கர்

 

bava_2

பவா செல்லத்துரை

suvee

சு வெங்கடேசன்

 

அன்று தொடங்கியவர்களில் பலர் நின்றுவிட்டனர். தொடர்ந்து எழுதியவர்களில் உதயஷங்கர் முக்கியமானவர். எச்.ஜி.ரசூல், மீரான் மைதீன் என ஒரு நிரை உண்டு.  அடிப்படையில் மார்க்ஸிய நோக்கை ஏற்றுக்கொண்டு சற்று சுதந்திரமான அழகியல்கொள்கைகளுடன் எழுதியவர்கள் இவர்கள் எனலாம். மார்க்ஸிய தத்துவச் சட்டகமான வரலாற்றுவாதத்தை விரிவான தளத்தில் விவரித்த சு.வெங்கடேசன் இன்றைய இடதுசாரி எழுத்தாளர்களில் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர். காவல் கோட்டம்  நாவல் வரலாறு தன்னியல்பான பொருளியல் விசைகளின் மோதல்களினூடாக முன்னகர்ந்து மேலும்மேலும் சிறந்த சமூக அமைப்பு உருவாக்குவதைக் காட்டுகிறது.

yamuna

யமுனா ராஜேந்திரன்

மார்க்ஸியக் கோட்பாட்டாளராக தொடர்ச்சியாக செயல்பட்டுவரும் யமுனா ராஜேந்திரன் இலக்கியக்கருத்துக்களை முன்வைத்தாலும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு எதையும் உருவாக்க அவரால் இயலவில்லை. இலக்கியச் செயல்பாட்டை எளிய அரசியல்செயல்பாடாகப் பார்க்கும் எழுபதுகளின் மனநிலையை மூர்க்கமாக முன்வைப்பவர். ஆகவே பெரும்பாலும் கசப்புகளையே அவர் வெளிப்படுத்துகிறார்.இடதுசாரி எழுத்துக்கள் மேல் வாசக கவனத்தை கொண்டுசெல்ல, புதிய வாசிப்புக்களை உருவாக்க அவர் முயல்வதில்லை.

இன்றைய இளம் எழுத்தாளர்கள் இடதுசாரி எழுத்தாளர் என்று எவரையேனும் சொல்ல முடியுமா என்று பார்த்தேன். அவ்வாறு தெளிவாகச் சொல்ல எவருமில்லை. ஆனால் புதுக்கவிதையில் இடதுசாரிகளின் இருப்பு குறிப்பிடத்தகுந்தது. இடதுசாரிகள் புதுக்கவிதையை மிக வன்மையாக எதிர்த்தது வரலாறு. புதுக்கவிதை கட்டற்ற அராஜகப்போக்கின் வெளிப்பாடென்றே ஆரம்பகால மார்க்சியர் கருதினார்கள் பின்னர் வானம்பாடி இயக்கம் எழுந்தபோது அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். வானம்பாடி இயக்கத்தினர் நேரடியாக வெளிப்படுத்திய முற்போக்குக்கருத்துக்களே அவ்வேற்புக்கு காரணமாயின.

வானம்பாடிக்கவிஞர்கள் முற்போக்கு கருத்துக்களையும் திராவிட இயக்க மொழியையும் இணைத்தவர்கள். அப்துல் ரகுமான் மீரா, நா. காமராசன் கங்கைகொண்டான் போன்ற படைப்பாளிகளை இடதுசாரிகள் தொடர்ந்து ஏற்றுக்கொண்டாலும் கூட அப்படைப்புகளில் மார்க்சியப் பார்வை என்பது மிக மங்கலாகவே வெளிப்படுகிறது பெரும்பாலும் வெற்று உணர்ச்சிகளாகவே அவற்றை இன்று காண முடிகிறது.

yavanika

யவனிகா ஸ்ரீராம்

lipi

லிபி ஆரண்யா

தொண்ணூறுகளில் மார்க்சிய லட்சியவாதத்தின்  வீழ்ச்சிக்குப்பிறகு இடதுசாரிக் கவிஞர்களின் ஓர் அணி தமிழில் உருவாகியது. அவர்கள் லட்சியவாத்தை உணர்ச்சிகரமாக கூவி முன் நிறுத்தவில்லை. அறைகூவும் தோரணை அவர்களிடமில்லை.  அவர்களை பெரிதும் பாதித்த கவிஞர்கள் ஆத்மா நாம் போன்ற இருத்தலியலை எளிய விளையாட்டுத்தனம் மூலம் முன்வைத்தவர்கள். மொழியாக்கம் வழியாக வந்த ழாக் பிரெவர் போன்ற ஐரோப்பியக் கவிஞர்கள். யவனிகா ஸ்ரீராம், லிபி ஆரண்யா இருவரையும் அவர்களில் முதன்மையானவர்களாகச் சுட்டிக்காட்டலாம்.

இடதுசாரிக் கட்சி அரசியல் அதன் இடத்தை மெல்ல இழந்துவருகிறது. அதன் பொருளியல்வாதம் இலக்கியத்தில் வெகுவாக மறுக்கப்பட்டுவிட்டது. ஆனால்  மானுடமையநோக்கு ஓர் உயர் இலட்சியவாதமாகவே நீடிக்கும் என நினைக்கிறேன். அதன் வரலாற்றுவாதம் ஒரு தத்துவக் கருவியாக இன்னும் நெடுங்காலம் சிந்தனையில் வாழும். ஆகவே இடதுசாரி எழுத்து உருவாகி வந்துகொண்டேதான் இருக்கும்.

நன்றி அந்திமழை July  2017

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 47

$
0
0

46. கான்நுழைவு

flowerஇரண்டு ஒற்றைக்காளை வண்டிகளிலாக நூறு பேருக்கு சமைப்பதற்குரிய பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. அடுமனைக் கருவூலத்திலிருந்து அவற்றை ஏவலர் சிறிய இருசகட வண்டிகளில் கொண்டுவந்து முற்றத்தில் வைக்க சம்பவனும் அடுமனையாளர் நால்வரும் அவற்றை எடுத்து அடுக்கினர். அரிசியும் வெல்லமும் கிழங்குகளும் முதலிலும் காய்கறிகள் இறுதியிலுமாக அடுக்கப்பட்டன. நெய்க்குடங்களை வைப்பதற்கு முன் அவற்றின் மூடி தேன்மெழுகால் இறுக பொருத்தப்பட்டிருக்கிறதா என்று பார்த்தான். தேன் நிறைந்த குடுவைகளையும் யவன மது நிறைக்கப்பட்ட பீதர்நாட்டு வெண்களிமண் கலங்களையும் கொண்டு வந்து வண்டிகளில் ஏற்றிக்கொண்டிருந்தான் அஸ்வகன். அவர்கள் உரக்கக் கூவி ஆணையிட்டு சிரித்து அத்தருணத்தை கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். சம்பவன் அடுமனைக்குள் வாழ்பவர்களுக்கு எந்தப் பயணமும் கேளிக்கைதான் என நினைத்துக்கொண்டான்.

மதுக்கலங்கள் இறுக மூடப்பட்டிருந்தாலும்கூட ஒவ்வொன்றிலிருந்தும் மெல்லிய மணம் கமழ்ந்துகொண்டிருந்தது. அந்த மணங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து இனிய புதிய மணம் ஒன்றை உருவாக்கின. அவை அத்தனை மென்மையாக இருப்பதனால்தான் இயல்பாக ஒன்றுகலக்க முடிகிறது என்று எண்ணிக்கொண்டான். குறைவாக இருப்பதன் பெயர் மணம். மிகையே கெடுமணம் என்ற வரி நினைவிலெழுந்தது. யவன மது நிறைக்கப்பட்டு தேன்மெழுகாலும் அரக்காலும் நன்கு மூடப்பட்ட களிமண் கலத்திற்குள் இருந்து எப்படி அந்த மணம் எழுகிறதென்பதை தன் மூக்கை வைத்து பார்த்தான். மூக்கை அதன் மேல் வைக்கும்போது அந்த மணமே ஒரு உளமயக்குதானோ என்று தோன்றியது. அதில் யவன மது இருப்பது தெரியாவிட்டால் அந்த மணம் சித்தத்திற்கு தெரியாதோ? ஆனால் அப்படி அல்ல என்று மீண்டும் அவன் மூக்கு சொன்னது. மிகத் தொலைவில் கேட்கும் குரல்போல மிக மெல்ல வந்து காற்றில் தொட்டு மறையும் குழலிசைபோல அந்த மணம்.

அவன் முகர்ந்து பார்ப்பதைக் கண்ட விகிர்தர் புன்னகையுடன் “மது அருந்தியவர்களைப்போலவே கலங்களாலும் அதன் மணத்தை மறைக்கமுடியாது” என்றார். “உள்ளிருக்கும் எந்த மணமும் வெளிவந்தே தீரும். மணத்திற்கு பல்லாயிரம் வாயில்கள்” என்றார் சுந்தரர். அவன் யவன மதுவை ஒரே ஒருமுறை ஒரு சிமிழ் அளவுக்கு நாவில் விட்டு சுவைத்திருந்தான். பெருவணிகன் ஒருவன் சுவைத்து விட்டுச்சென்ற கோப்பையில் எஞ்சியது அது. அதற்குமுன் பலமுறை கலிங்க மதுவை அருந்தியதுண்டு. அது வாள் என எண்ணங்களுக்குள் பாய்ந்து பலநூறு துண்டுகளென அதை வெட்டிச் சிதறடித்தது. அலையில் நீர்ப்பாவை என சித்தம் நெளிந்தது.

ஆனால் யவன மது, மது கலக்கப்பட்ட பழச்சாறென்றே தோன்றியது. நாவில் அது கடிக்கவில்லை. தொண்டையை கரிக்கவும் இல்லை. உடலுக்குள் சென்றதும் நீர்த்துளி விழுந்த கொதிக்கும் எண்ணைபோல உடல் உலுக்கி எதிர்வினையாற்றவில்லை. அந்த மணம் தன் வாயில் எஞ்சியிருப்பதற்காக பிறிதெதையும் உண்ணாமல் மூச்சை மூக்கு வழியாக வெளிவிட்டுக்கொண்டிருந்தான். தனக்குள் என்ன நிகழ்கிறதென்று பார்த்தான். எதுவுமே நிகழவில்லை. நோக்கிச் சலித்தபின் சூழ்ந்திருந்த பிற அடுமனையாளர்களையும் மிக அப்பால் கேட்டுக்கொண்டிருந்த விறலியின் குரலையும் நோக்கி சித்தத்தை திருப்பினான். விறலி தேவயானியின் கதையை சொல்லிக்கொண்டிருந்தாள். கசன் தேவயானியை பார்க்கும்பொருட்டு கையில் தாமரை மலருடன் சுக்ரரின் குடிலுக்குள் நுழையும் காட்சி.

பாய்ந்து வந்த புலிகளை ஒரு கையால் அடித்து வீழ்த்தி மறுகையில் இருந்த தாமரை இதழ்குலையாமல் உள்ளே சென்றான். இதழ்குலையாத தாமரை என்று அவள் பாடினாள். ‘அந்தத் தாமரை இதழ்குலைந்ததே இல்லை. இதழ்குலையாத தாமரை கொண்டவர்களுக்கு துயரமில்லை. துயரற்றவர்களுக்கு காதலும் இல்லை.’ நெடுநேரம்  அவள் பாடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. உடலில் மெல்லிய அலுப்பும் தசைகளில் தளர்வும் எழுந்தது. அவள் மிகமிக இனிமையாக பாடிக்கொண்டே இருந்தாள். பல நாட்களாகிவிட்டன. மரங்கள் வளர்ந்து இலைதழைத்தன. வெளியே மழை பெய்து வெயில் எழுந்து இருண்டு மீண்டும் புலர்ந்தது. அவள் முகம் மிக அருகே வந்துவிட்டதாகத் தோன்றியது. பிறகு அது அந்த மதுமயக்கால்தான் என்று உணர்ந்து, அவ்வுணர்வை அடைந்ததுமே தன்னை விடுவித்துக்கொண்டான்.

மீண்டும் அந்த இனிய உணர்வை அடையவேண்டுமென முயன்றபோது சித்தம் முற்றிலும் விழித்துக்கொண்டது. மது குருதியில் சிறிய குமிழிகளாக மிதந்து அலைந்து ஒவ்வொன்றாக வெடித்து மெல்லிய வெம்மையுடன் கலந்து மறைந்தது. பின்னர் யவன மதுவின் மெல்லிய மணம் அவனுக்கு இதழ்நலுங்காத தாமரை என்ற சொல்லாகவே நினைவில் நின்றது. அது அலைபாயும் துலாத்தட்டுகளுக்கு நடுவே அசையாமல் நின்றிருக்கும் முள் போலும்.

வலவன் இரு கைகளிலும் இரு பெரிய மதுக்கலங்களை தூக்கிக்கொண்டு வந்து வண்டியின் பின்பக்கம் வைத்துத் தள்ளி உள்ளே செலுத்தியபின் அவனை நோக்கி “முதல் வண்டியில் நீ ஏறிக்கொள்” என்றான். மதுக்கலங்களின் எடையை அறிந்திருந்த சம்பவனுக்கு அந்தக் காட்சியே தசைகளை இழுபட்டுத் தெறிக்கச் செய்தது. “ஏறு” என்றான் வலவன். விழித்துக்கொண்டு “நானா?” என்று சம்பவன் கேட்டான். “ஆம், அங்கு இன்று சமைக்கவேண்டுமல்லவா?” என்றான். சம்பவன் “என்னை தாங்கள் சரியாக நினைவுகூரவில்லையென்று நினைக்கிறேன்” என்றான். “மூடா, நீ கலிங்க நாட்டுச் சம்பவன்… அதற்குமேல் உன்னிடம் நினைவுகூர என்ன உள்ளது?” என்றான் வலவன்.

மேலும் தயங்கி “ஆசிரியரே, நான் அடுமனையாளன். ஆனால் என்னை கலங்களைக் கழுவும்படி ஆணையிட்டீர்களல்லவா?” என்றான். வலவன் முகம் மலர்ந்தது. “ஆம், எந்த அடுமனைக்குச் சென்றாலும் முதலில் அங்குள்ள கலங்களைக் கழுவுவதே அடுதிறவோன் செய்யவேண்டியது. அப்போதுதான் அந்த அடுமனையின் இயங்குமுறையென்ன என்று உனக்குத் தெரியும். சொல், இங்கு மிகுதியும் எந்தக் கலத்தில் உணவு சமைக்கப்படுகிறது?” சம்பவன் “செம்புக் கலங்கள்” என்றான். “அரிதாக பித்தளைக் கலங்கள். சிறிய சமையல்களுக்கு மண் கலங்கள். வெம்மைநின்று வற்றியாறவேண்டிய உணவுகளுக்கு கல்லுருளிகள். இரும்புக் கலங்களும் ஓரிரண்டு உள்ளன.”

வலவன் எடைமிக்க கலங்களை எடுத்து உள்ளே வைத்தபடி அவனை நோக்காமல் “எந்தக் கலம் அதிகமாக அடிப்பற்று கொண்டுள்ளது? எது கருக்குகிறது?” என்றான். மலர்ந்த முகத்துடன் அருகே சென்று ஒரு குடுவையை எடுத்துவைத்த சம்பவன் “ஆம், நான் அவற்றை உற்று நோக்கினேன். இங்கே அடிப்பற்று மிகுதி. இரும்புக் கலங்களின் வெளிவட்டத்தில் எப்போதும் உணவு கருகியிருக்கிறது. செம்புக்கலங்களின் அடிவட்டத்தில் பற்று படிந்துள்ளது…” என்று சொல்லத்தொடங்க வலவன் குறுக்கிட்டு “இந்த அறிதல் உனக்குள் இருந்தால் மட்டுமே அடுதொழில் கைவரும்” என்றான். “ஆம்” என்றான் சம்பவன். “ஏன் இங்கே அடிப்பற்று மிகுதி?” என்றான் வலவன். “இங்கே உள்ள விறகுகள் எளிதில் எரியும் தைல மரங்களுடையவை. அனல்நிற்கும் செறிமர விறகுகள் தேவை. அல்லது நல்ல கரி” என்றான் சம்பவன்.

“நன்று!” என புன்னகைத்த வலவன் கயிறு சுற்றப்பட்ட யவன மதுப்புட்டிகளை பெட்டியில் அடுக்கி “இவை கீசகருக்கானவை. ஈரப்பஞ்சால் பொதியப்பட்டுள்ளன. சென்றதுமே குளிர்நீரோடைக்குள் இறக்கி வைக்கவேண்டும்” என்றான். சம்பவன் “எனது சமையல் தங்களுக்கு உகக்கவில்லையோ என்று தோன்றியது, ஆசிரியரே” என்றான். தன் பெரிய கையை அவன் தோளில் வைத்து இழுத்து மார்புடன் அணைத்து வலவன் சொன்னான் “அடுதொழில் என்பது ஒன்றிற்கொன்று மாறுபட்ட சுவைகள்கொண்ட பொருட்களை உகந்த முறையில் கலப்பதுதான். உப்பையும் புளியையும் காரத்தையும் கலக்கத் தெரிவது மொழியின் இலக்கணத்தை கற்றுக்கொள்வதுபோல. அதன்பின் சிறிய நுட்பங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் அவை முடிவிலாமல் கற்கத் தகுந்தவை. உன் கைக்கலவை நன்று.”

சம்பவன் முகம் மலர்ந்தான். “நான் அங்கிருந்தோரின் சுவையறிதலைத்தான் பார்த்தேன். என் நாவைவிட உண்டு நிறைந்த அவர்களின் நாக்கு கூறுவதே மேலும் சரியானது” என்றான் வலவன். “ஆகவேதான் புளிக்காய்ச்சல் செய்யச்சொன்னேன். நிறைந்த வயிறுகொண்டவர்களின் நாக்குக்கு வேறெந்த சுவையும் உறைக்காது.” சம்பவன் கண்கலங்கிவிட்டான். “அவ்வளவுதான் என நினைக்கிறேன். ஒருமுறை அனைத்தையும் பார்த்துவிடு” என வலவன் உள்ளே சென்றான். சம்பவன் மறுபக்கம் நோக்கித் திரும்பி கண்களை விரல்களால் அழுத்தித் துடைத்தான்.

flowerசுபாஷிணி கால்சிலம்புகள் ஒலிக்க இடைநாழியில் ஓடிவந்து பாவாடைமுனையை பிடித்தபடி படிகளில் துள்ளி இறங்கினாள். அப்போது தன்னை எவரும் பார்த்துவிடக்கூடாதென்ற எச்சரிக்கையும் பல்லாயிரம்பேர் பார்க்கவேண்டும் என்ற விழைவும் அவளிடமிருந்தது. சிலம்பு ஒலிக்க ஆடை சரசரக்க அப்படி இறங்கவேண்டும் என்பது அவள் இளமைமுதலே எண்ணிவந்த விழைவு. இறுதிப்படிக்கு சென்றபின் மீண்டும் மேலே வந்தாள். மேலாடையை சீரமைத்தபின் மீண்டும் உடலை நெளித்து தோள்களை அசைத்து நடந்துவந்து வேறு ஒருமுறையில் ஆடைநுனி பற்றி படிகளில் இறங்கினாள். அவளே மகிழ்ந்து சிரித்துக்கொண்டு மீண்டும் படி ஏறலாமா என எண்ணியபோது பிரீதையை கண்டாள். அவள் அப்பால் கண்களைச் சுருக்கி நோக்கியபடி நின்றிருந்தாள்.

சுபாஷிணி தலைகுனிந்து நின்றபின் திரும்பிவிடலாமா என மேலே பார்த்தாள். பிரீதை “என்ன செய்கிறாய்?” என்றாள். அப்போது அவளை சிறுக்க வைக்கும் வினா அதுவே என அவள் நன்கறிந்திருந்தாள். ஆனால் அந்த வினா அவளை பொருந்தாத எவரோ தொட்டதுபோல சினந்து சீறச்செய்தது. பிரீதையின் விழிகளை நோக்கியதுமே அவளை சிறுக்க வைப்பதென்ன என்று தெரிந்தது. “தேவி என்னிடம் அவர்களுக்குரிய பொருட்கள் எல்லாம் எடுத்து வைக்கப்பட்டுவிட்டனவா என்று பார்த்துவரச் சொன்னார்” என்றாள். பிரீதையின் விழிகளில் சினம் வந்து மறைந்தது. “இளவரசியா? அவர்கள் இங்கிருந்தா கிளம்புகிறார்கள்?” என்றாள்.

அந்த நச்சுமுள்ளை உணர்ந்தாலும் அதை அறியாதவள்போல “இல்லை, சைரந்திரி தேவி” என்றாள் சுபாஷிணி. “பேரரசியுடன் அவர்கள் பல்லக்கில் செல்லவிருக்கிறார்கள் அல்லவா? அனைத்தும் உடனிருக்கவேண்டுமே?” பிரீதையின் விழிகளில் மீண்டும் சினம் வந்து அணைந்தது. விராடபுரியின் வரலாற்றில் பேரரசியுடன் எவரும் பல்லக்கில் ஏறியதில்லை. சேடியரைச் சுமக்க சூதர்குலத்து போகிகள் ஒப்புக்கொண்டதில்லை. அவளுடைய உள்ளம் தயங்குவதை உணர்ந்ததுமே மேலும் முன்னேறி “தேவியும் இன்று அருமணி நகைகளும் பீதர்நாட்டுப் பட்டாடைகளும் அணிந்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் பல்லக்கில் ஏறுவதுவரை நானும் ஆடைபற்றி பின்செல்லவேண்டும்…” என்றாள்.

“சேடிக்கு ஒரு சேடி. நன்று” என்று தனக்குள் என முனகிக்கொண்ட பிரீதை “சென்று பார்! எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டேன்” என்றாள். “எனக்கென்ன தெரியும்…? வந்து காட்டுங்கள்” என்றபின் அவளை நோக்காமல் பாவாடையை சற்றே தூக்கிப்பிடித்தபடி தலைதூக்கி சுபாஷிணி முன்னால் சென்றாள். இடையை அசைத்தபோது அது ஓரிரு முறைக்குப்பின் மறந்துபோய்விட இயல்பாக தாவிச்சென்றாள். தன் இடை இன்னும் சற்று பெரிதாக இருந்திருக்கலாமோ என எண்ணிக்கொண்டாள். பிரீதை அவளுக்குப் பின்னால் வருவதை காலடியோசையாக கேட்கமுடிந்தது.

அவளருகே வந்த பிரீதை “வெள்ளிச் சிலம்புகளை சேடியர் அணிய இங்கே நெறி இல்லை” என்றாள். “பட்டுப்பாவாடை அணிய மட்டும் ஒப்புதல் உண்டோ?” என்றாள் சுபாஷிணி. பிரீதை வாயை அழுத்திக்கொண்டாள். “இதோ, தோடு அணிந்துள்ளேன். மணிமாலை, இடையில் சரமேகலை. இதெல்லாம் சேடியர் அணியலாமா?” பிரீதை தலையை திருப்பிக்கொள்ள “எனக்கு இதை அளித்தவர் தேவி… நீங்கள் அவர்களிடமே கேட்கலாம்” என்றாள் சுபாஷிணி. பிரீதை கடுகடுப்புடன் “பார், அரசிக்குரிய அனைத்தும் சித்தமாக உள்ளன. செல்லும் வழியில் அருந்துவதற்குரிய இன்னீர், பழங்கள். ஆடைகள் அந்தப் பிரம்புக்கூடையில் உள்ளன… கலங்கள் அனைத்தும் தொடர்ந்துவரும் வண்டிகளில் ஏற்றப்பட்டுள்ளன…” என்றாள். சுபாஷிணி “ஒவ்வொன்றாக சொல்லுங்கள், நான் சரிபார்க்கிறேன்” என்றாள்.

ஒன்றுக்கு இருமுறையாக அவள் பொருட்களை சரிபார்த்தாள். “நான் செல்லலாமா? எனக்கு அங்கே பணிகள் மிகுதி” என்றாள் பிரீதை. புன்னகையுடன் முகத்தை அவளுக்குக் காட்டாமல் நின்றிருந்த சுபாஷிணி வாயை இறுக்கியபடி திரும்பி “தேவி தன் அறையிலிருந்து அரசியின் அகத்தளத்திற்கு சென்றுவிட்டார்கள். அங்கிருந்து அவர்கள் இருவரும் வருவார்கள். அவர்கள் வந்தபின் நீங்கள் செல்லலாம். ஏதேனும் கேட்டாலும் கேட்கக்கூடும் அல்லவா?” என்றாள். பிரீதை தலையசைத்தபின் நோக்கை விலக்கிக்கொண்டாள்.

உள்ளிருந்து அரசியின் அகம்படிச் சேடியர் வெளியே வந்தனர். அவர்கள் கொண்டுசெல்லவேண்டிய கூடைகளையும் தோல்பொதிகளையும் கையில் எடுத்துக்கொண்டு ஓரமாக நிரைவகுத்து நின்றனர். ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசிக்கொண்டும் அவ்வப்போது ஓசையெழாது சிரித்துக்கொண்டும் இருந்தனர். வண்ண ஆடைகளும் பொன்னணிகளும் அணிந்து பெரிய வலம்சரிவுக் கொண்டையில் மலர்ச்சுருள் சூடியிருந்தனர். அவர்களில் பலர் தன்னை நோக்குவதை விழியசைவால் உணர்ந்த சுபாஷிணி கொண்டையை சீரமைத்து தலையைத் தூக்கி நின்றாள். ஆனால் சற்றுநேரத்திலேயே இடை வலித்தது. எங்காவது சாய்ந்து ஒசிந்து நின்றுதான் தனக்குப் பழக்கம் என அவள் எண்ணிக்கொண்டாள்.

அரண்மனைக்குள் கொம்பு முழங்கியது. உடன் சங்கோசையும் மணிமுழக்கமும் கலந்தன. அணிச்சேடியர் உடலசைந்து ஒழுங்கமைந்தனர். அப்பால் விலகி உடல்சேர்ந்து நின்றிருந்த பல்லக்குத்தூக்கிகள் வந்து இரு நிரைகளாக நின்றனர். அவர்களை அப்போதுதான் அவள் பார்த்தாள். வெளியே செல்லும் பாதையில் காவலர்தலைவன் உரத்த குரலில் ஆணை முழக்க காவல்வீரர்கள் வலக்கையில் வேல்களுடனும் விற்களுடனும் தங்கள் புரவிகளின் கடிவாளங்களை இடக்கையால் பற்றியபடி சீரமைந்தனர். அந்த முற்றமே கல்விழுந்த குளமென அலைகொள்வதை அவள் வியப்புடன் நோக்கினாள். அங்கு வந்தபின் பெண்களை அன்றி எதையுமே தான் பார்க்கவில்லை என்பதை அதன்பின் நினைவுகொண்டாள்.

கேகயத்தின் எருதுக்கொடியுடன் இரும்புக்கவசம் அணிந்த காவல்வீரன் குறடுகள் மரத்தரையில் ஒலியெழுப்ப சீர்நடையிட்டு வந்தான். தொடர்ந்து சூதர்கள் கொம்புகளும் முழவுகளும் மணியும் சங்கும் முழக்கியபடி நடந்து வந்தார்கள். வாழ்த்தொலிகளும் குரவையொலிகளும் எழுந்தன. அரசியின் சேடியர் மூவர் மங்கலத் தாலங்களுடன் வருவதைக் கண்டதும் சுபாஷிணி ஓடிச்சென்று வாயிலருகே நின்றாள். அரசி வருவது தெரிந்தது. அவள் கவலைகொண்டு எதையோ பேசிவந்து சற்றுமுன் நிறுத்திக்கொண்டவள்போலத் தோன்றினாள். வாயைச் சூழ்ந்து சுருக்கங்களும் கோடுகளும் இருந்தன. கண்களுக்குக் கீழே கருகிய மென்தசை வளையங்களாக இழுபட்டிருந்தது. காதோரத்திலும் முன்நெற்றியிலும் முடி நரைத்திருக்க கன்னத்தில் மென்மயிர்ப்பரவல் பொன்னிறமாகத் தெரிந்தது. முதிய பெண்களுக்கு ஏன் உதடுகள் அப்படி சற்று தொங்குகின்றன என சுபாஷிணி எண்ணிக்கொண்டாள்.

அரசிக்குப் பின்னால் இடையில் நீண்ட உடைவாளுடன் சைரந்திரி வந்தாள். அவள் விழிகள் சுபாஷிணியை வந்து தொட்டு என் பின்னால் வா என ஆணையிட்டன. ஆம் என விழியுணர்த்திய சுபாஷிணி அவர்கள் தன்னை கடந்துசென்றபோது வணங்கி நின்று பின்னர் சைரந்திரியின் பின்னால் சென்றாள். அவள் நீளாடை நெகிழ்ந்து கிடக்க அதைப் பற்றி தூக்கிக்கொண்டாள். அவர்கள் முற்றத்திற்குச் சென்றதும் காவலர்தலைவன் நீள்நடையிட்டு அருகணைந்து உருவிய வாளைத் தாழ்த்தி அரசியை வணங்கினான். பல்லக்குதூக்கிகளை நடத்தும் முதியவராகிய நிலைச்செயலர் வணங்கி “கேகயத்து மாதரசிக்கு வணக்கம். தங்கள் பல்லக்கு காத்திருக்கின்றது” என்றார். அரசி சைரந்திரியிடம் “வாடி” என்று சொன்னபின் ஏறிக்கொண்டாள்.

சுபாஷிணியிடம் திரும்பி சைரந்திரி “நீ வண்டியில் வா… அங்கே காட்டுமுற்றத்தில் என்னுடன் வந்து சேர்ந்துகொள்” என்றபின் பல்லக்கில் நுழைந்தாள். பல்லக்கு மெல்ல எழுந்து தோள்களில் மிதந்தது. பின்னர் காற்றால் கொண்டுசெல்லப்படுவதுபோல ஒழுகியது. சுபாஷிணி ஓடிச்சென்று பின்னால் நின்றிருந்த அணிச்சேடியருடன் இணைந்துகொண்டாள். “நீ அரசியின் சேடியா?” என்றாள் ஒருத்தி. “ஆம், என் பெயர் சுபாஷிணி…” என்றாள் சுபாஷிணி. “இந்த அணிகளை அரசி அளித்தார்களா?” என்றாள் இன்னொருத்தி. “ஆம்” என்றாள் சுபாஷிணி. “நன்று, விரைவிலேயே அரச மஞ்சத்துக்குச் சென்றுவிடுவாய்.” சுபாஷிணியின் உடல் குளிரில் என சிலிர்த்தது. “பலியாட்டுக்கு அரளிமாலை அணிவித்துவிட்டார்கள்” என்று ஒருத்தி சொல்ல அவர்கள் சேர்ந்து நகைத்தனர்.

அவர்கள் செல்வதற்கு மூடுதிரையிட்ட வண்டி வந்தது. ஒற்றைப்புரவி இழுத்த அவ்வண்டியில் உடல்பிதுங்கி நெரிய அமரவேண்டியிருந்தது. அப்பெண்களின் வியர்வையும் அவர்கள் அணிந்த மலர்களும் நறுமணச்சாந்தும் குழலில் இட்ட அகிலும் சேர்ந்து கெடுமணமாக ஆகி காற்றில் நிறைந்து குமட்டலெடுக்கச் செய்தன. அவள் திரைச்சீலையை சற்று விலக்கி வெளியே பார்த்தாள். மணியோசையுடன் வண்டி கிளம்பியபோது சற்று காற்று உள்ளே வந்தது. அப்பெண்கள் எவரும் வெளியே பார்க்கவில்லை. இடைவெளியே இல்லாமல் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். ஆண்களின் மஞ்சத்தை அன்றி பிறிதெதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்று சுபாஷிணி உணர்ந்தாள். அவர்களின் செய்திகளும் வம்புகளும் நகையாட்டும் அனைத்தும் அதைப்பற்றி மட்டுமே அமைந்திருந்தன. நகையாடல் இழிவுகொள்ளும்தோறும் அவர்கள் மகிழ்ந்து சிரித்தனர்.

அவர்களிடமிருந்து எழுந்த அந்தக் கெடுமணம் அவர்களின் சொற்களிலும் இருந்தது. அவர்களுடன் ஒருத்தியாக அங்கிருப்பதை எண்ணி அவள் கூசினாள். அதை எவரும் அறியலாகாது. ஆனால் அவள் அந்த வண்டியில் இருந்து அவர்களுடன் சேர்ந்துதான் இறங்கவேண்டும். அதை எத்தனைபேர் பார்ப்பார்கள்? வழியிலேயே ஏதேனும் சொல்லி இறங்கிவிடமுடியுமா? வேறேதாவது வண்டியில் படைவீரர்களுடன் ஏறிக்கொள்ளமுடியுமா? அது இயலாதென்று அறிந்திருந்தாள். அது அவளை நீள்மூச்செறியச் செய்தது. வேறுவழியில்லை என்றானதும் வெளியே தெரிந்த நகர்க்காட்சிகளை நோக்கலானாள். பெருந்தெருவும் அங்காடிச்சாலையும் கோட்டைமுகப்பும் புறக்கோட்டை பெருமுற்றத்தின் வணிகர்கொட்டகைகளும் இருபுறமும் சோலைக்காடு செறிந்த பெருஞ்சாலையும் அவளை ஈர்த்துக்கொண்டன.

காடு அவளை மெல்ல விடுவித்தது. உடல் இயல்பாகத் தளர அரைத்துயிலில் என உள்ளம் அமைதிகொண்டது. காட்டில் தனித்தனியாக மரங்களைப் பார்ப்பதில் பொருளில்லை. காடு என்பது ஒற்றைப்பெரும் பரப்பு. ஒரு சூழ்கை. ஓர் அமைதி. அலைகளின் அசைவின்மை. அவள் நெடுநேரம் கழித்து தன்னை உணர்ந்தபோது உள்ளம் துயிலெழுந்த இனிய அமைதியால் நிறைந்திருந்தது. அவர்கள் அப்போதும் ஆண்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் அப்போது முதலில் எழுந்த அருவருப்பு தோன்றவில்லை. அவர்கள் ஆண்களை ஒரு சில உறுப்புகளாக, மிகச் சில அசைவுகளாக ஆக்கிக்கொண்டனர். குடிப்பெருமை, செல்வம், அரசிருப்பு அனைத்தையும் களைந்து ஆண்மையையும் அகற்றி வெறும் அசையும் தசைகள் என்றாக்கி எடுத்து அடுக்கினர். அவளுக்கு அச்சொல்லாடல் மெல்லிய உவகை ஒன்றையே அளித்தது.

கரவுக்காட்டுக்கு முன்னால் இருந்த முற்றத்தில் அவர்களின் வண்டி நின்றது. காவலர்களின் அறிவிப்புகளும் முரசுகளும் கொம்புகளும் இணைந்து எழுந்த பேரோசையுமாக வெளியுலகம் அவளை அடைந்தது. அரசியை வாழ்த்தி காவலர்கள் குரலெழுப்பினர். ஒரு காவலன் அவர்களின் வண்டிக்கு அருகே வந்து “நிலைகோள்!” என்று கூவினான். திரைவிலக்கி மூத்த சேடி இறங்கினாள். தொடர்ந்து ஆடைதிருத்தியபடி ஒவ்வொருவராக இறங்கினர். தரையில் நின்று குழலையும் அணிகளையும் சீரமைத்தனர். அவள் இறங்கியதும் நேராக சைரந்திரியை நோக்கி சென்றாள். அரசிக்குப் பின்னால் நின்றிருந்த சைரந்திரி அவளிடம் “என்னுடன் வா” என்றாள்.

முன்னரே உத்தரையும் அகம்படியினரும் வந்து அங்கே ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களுடன் வந்த காவலர்கள் புரவிகளை அவிழ்த்துக் கட்டி காட்டுக்காவலர்கள் தலைச்சுமையாக கொண்டுவந்த புல்கட்டுகளை அவிழ்த்து புரவிகளுக்கு முன்னால் குவித்தனர். கழுத்துமணி ஓசையுடன் அவை புல் தின்றன. அவற்றின் வால்கள் அசைவது காற்றில் புதர்மலர்கள் ஆடுவதுபோலத் தெரிந்தது. உத்தரை அரசியைக் கண்டதும் எழுந்து அருகே வந்தாள். அவளுடன் அவளுடைய அணுக்கச்சேடியும் வந்து அப்பால் நின்றாள். உத்தரை முகமன் சொல்லி தாயை வணங்கினாள்.

அரசி முகம் சுளித்து “முன்னரே வந்துவிட்டாயா?” என்றாள். “சற்றுமுன்” என்றாள் உத்தரை. அன்னையும் மகளும் விழிதொட்டுக்கொள்ளவில்லை. உத்தரையின் நிற்பிலும் முகத்திலும் அன்னையை புறக்கணிக்கும் அசைவுகள் இருந்தன. “உத்தரன் முன்னரே வந்துவிட்டதாகச் சொன்னார்கள்” என்றாள் அரசி. “ஆம், காட்டுக்குள் சென்றுவிட்டார்” என்றாள் உத்தரை. “இளையவன் வந்துகொண்டிருப்பதாக அறிந்தேன்” என்ற அரசி இயல்பாகக் கேட்பதுபோல “உன் ஆசிரியர் எங்கே?” என்றாள். அந்த வினா உத்தரையின் உடலை புகையைக் காற்று என மெல்ல உலையச்செய்தாலும் அவள் அது ஒருபொருட்டே அல்ல என்பதுபோல “அவர்கள் எப்போது வருவார்கள் என்று தெரியாது… நேற்று மாலையே அரண்மனையை விட்டு கிளம்பிவிட்டார்கள் என்று அறிந்தேன்” என்றாள்.

மேலும் ஏதோ பேச உடல்தவித்தபின் பெருமூச்சுடன் அமைந்த அரசி சைரந்திரியிடம் “நாம் உள்ளே செல்வோமே” என்றாள். “இங்கே ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம் என்றார்கள்” என்றாள் சைரந்திரி. “வேண்டாம்… காட்டுக்குள் குடில்கள் மேலும் சிறப்பானவை… நான் சற்றுநேரம் படுக்கவேண்டும்” என்றாள் சுதேஷ்ணை. சைரந்திரி சுபாஷிணியை நோக்கி “நீ இளவரசியுடன் இருந்துகொள்…” என்றாள். உத்தரை திடுக்கிட்டுத் திரும்பி சுபாஷிணியை பார்க்க “இளையவள். உங்களுக்கு உகந்த துணையாக இருப்பாள்” என்றாள் சைரந்திரி. அவள் விழிகளை ஒருகணம் நோக்கியபின் உத்தரை சரி என தலையசைத்தாள். அவள் உள்ளூர நிலைகொள்ளாமலிருப்பதை சுபாஷிணி உணர்ந்தாள். ஓடும் வண்டிக்குள் இருக்கும் குடுவைக்குள் நீர் குலுங்குவதுபோல என எண்ணிக்கொண்டாள். அவளருகே வண்டியில் ஒரு நீர்க்குடுவை இருந்ததை நினைவுகூர்ந்தாள்.

காவலர்தலைவன் வந்து அப்பால் நின்று தலைவணங்கினான் உத்தரை திரும்பி நோக்க “இளவரசி விழைந்தால் காட்டுக்குள் செல்லலாம்” என்றான். “செல்வோம்” என்று சொல்லி உத்தரை அன்னைக்கு மீண்டும் தலைவணங்கி முன்னால் செல்ல விழிகளால் சைரந்திரியிடம் விடைபெற்று சுபாஷிணி அவளுக்குப் பின்னால் சென்றாள்.

உத்தரை தன்னந்தனியாக நடப்பவள்போல செல்ல அவள் அகம்படியினரும் சேடியரும் உடன் நடந்தனர். அவர்கள் சொல்வனவற்றை அவள் இரண்டாவது முறைதான் கேட்டாள். ஒற்றைச் சொல்லில் மறுமொழி உரைத்தாள். அவள் முகம் சிடுசிடுப்புடன் இருந்தது, எவரிடமோ எரிச்சல் கொண்டவள்போல. ஒவ்வாத நினைவொன்றை சுமப்பவள்போல. தன்னை அவள் ஒருமுறைகூட ஏறிட்டுப் பார்க்கவில்லை என்பதை சுபாஷிணி உணர்ந்தாள். அவளுக்கு தன் முகம் நினைவில் நிற்கவே வாய்ப்பில்லை. ஏன் அவளை எண்ணிக்கொண்டிருக்கிறேன், நான் வந்தது காட்டைப் பார்க்க என்று அவள் தன்னை திருப்பிக்கொண்டாள். அந்தி இருண்டுகொண்டிருக்க காட்டுக்குள் இருள் நிறைந்திருந்தது. சீவிடுகளின் ஒலி வலுத்து அத்தனை ஒலிகளையும் ஒரு சரடெனக் கோத்து சூழ்ந்திருந்தது.

உத்தரை எதிரே வேலுடன் வந்து வணங்கி அப்பால் வழிவிலகி நின்ற இளம்காவலனிடம் “நீ இங்குள்ள காவலனா?” என்றாள். அவன் தலைவணங்கி “ஆம், இளவரசி” என்றான். அவனுக்கு மீசைகூட அரும்பவில்லை என்பதை சுபாஷிணி நோக்கினாள். மெல்லிய பாசிப்படர்வுபோல மேலுதடு கருமைகொண்டிருந்தது. கண்களில் எப்போதுமென ஒரு நகைப்பின் ஒளி. “உன் பெயரென்ன?” என்று உத்தரை கேட்டாள். அவன் பணிந்து “கஜன், மூன்றாம் காவல்மாடத்தவன்” என்றான். “இங்கே நேற்று எவரேனும் வந்தார்களா?” என்றாள் உத்தரை. “இல்லை, இளவரசி. இக்காட்டுக்குள் எவரும் நுழையமுடியாது, கடுமையான காவல் உள்ளது” என்றான் கஜன்.

உத்தரை உதட்டைச் சுழித்தபின் “இரவில் எவரேனும் நுழைந்தால்?” என்றாள். “இரவிலும் காவலுண்டு… அத்துடன் இது நிலவுப்பொழுது” என்றான். உத்தரை “நீங்கள் அறியாமல் எவரேனும் உள்ளே நுழைந்தால் புள்ளொலியோ பூச்சியொலியோ மாறி அதை காட்டித்தருமா?” என்றாள். அவன் “அறியேன், இளவரசி… ஆனால்…” என்று சொல்ல அவள் செல்க என கையசைத்தபின் முன்னால் சென்றாள். அவன் வணங்கி விலகி நிற்க அவர்கள் அவனைக் கடந்து சென்றனர். அவன் விழிகளை சந்தித்த சுபாஷிணி திடுக்கிட்டு விலகிக்கொண்டாள். பின் நெடுநேரம் அவள் உள்ளம் படபடத்துக்கொண்டே இருந்தது.

தொடர்புடைய பதிவுகள்


கலையின் உலை

$
0
0

 muva

மு.வ கட்டுரை

அன்புள்ள ஜெ,

உங்கள் மு.வ மீள்பிரசுரக் கட்டுரை சில எண்னங்களைத் தூண்டியது.

மூத்த சிங்கை எழுத்தாளர் ஒருவரிடம் நேற்றிரவு நெடுநேரம் இலக்கின்றி, தாவித்தாவிப் பலவிஷயங்களும் பேசிக்கொண்டிருந்தபோது அதில் முவ பற்றிய பேச்சும் வந்தது.

முவவைத் தன் மானசீக குருவாக பதின்ம வயதில் ஏற்றதாக அவர் சொன்னார். அந்த வயதில், குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்த சூழலில் முவ எழுத்துக்களைப் பற்றுக்கோலாகக் கொண்டுதான் தன்னால் ஒழுக்கத்தை ஒரு நெறியாகக் கடைப்பிடிக்க முடிந்தது என்றார்.

வாழ்க்கை தடம்புரண்டு போவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்த புறச்சூழல், அந்த வயதுக்கேயுரிய இயற்கையின் உந்துதல் உச்சத்தில் இருக்கும் அகச்சூழல் – இவையிரண்டையுமே எதிர்த்து நின்று போராடும் அளவுக்கு ஓர் எழுத்து உத்வேகத்தைத் தரக்கூடும் என்றால் அதுவே முவ எழுத்துக்களின் ஆகப்பெரிய பங்களிப்பு என்று கருதுகிறேன்.

இந்த இடத்தில் முன்பு ஓஷோ-காந்தி இருவரின் எழுத்துக்களைக் குறித்தும் அவர்களைப் பின்பற்றியவர்கள் சென்றடைந்த வாழ்க்கை நிலையைக் குறித்தும் நீங்கள் எழுதிய ஒரு கட்டுரையும் நினைவுக்கு வந்தது.

ஆன்மிகத் தருணங்களை அளிக்கவல்ல ஓஷோவின் பேச்சுகள் அதைக்கேட்டவர்களை செயலின்மைக்கும் கட்டுப்பாட்டற்ற வாழ்க்கையால் உண்டான சக்தி விரயத்துக்கும் தள்ளியபோது, காந்தியின் உணர்ச்சியற்ற அழகியலைப் புறந்தள்ளிய பேச்சும் எழுத்தும் தீவிரமான ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு உந்தியதை அதில் பதிவு செய்திருந்தீர்கள்.

ஆனால் இலக்கியம் என்று வரும்போது இன்னொன்றையும் யோசித்துப்பார்க்கிறேன். Goodness is nothing in the furnace of art என்பார்கள். கலையின் உலை உக்கிரமானது. கட்டுப்பாடுகளை விறகாக எரித்துத்தான் அவ்வுலை தகிக்கிறது. அந்த வகையில் ஒழுக்கம் என்ற கட்டுப்பாடும் அடிபட்டுப்போகிறது என்பது என் பார்வை.

நவீன இலக்கியத்தைப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்துவைக்க தயங்குவதற்குப்பின்னால் புரியவில்லை, நேரவிரயம், கவனச்சிதறல் போன்ற காரணிகள் சொல்லப்பட்டாலும் கலையின் இந்தக்கட்டுப்பாடற்ற தன்மையைக் குறித்தான அச்சமே அது என்று நினைக்கிறேன்.

சிவானந்தம் நீலகண்டன்

சிங்கப்பூர்

siva

அன்புள்ள சிவானந்தம்

 

ஒருவகையில் நீங்கள் சொல்வது உண்மை. அற இலக்கியம் நம்பிக்கை ஊட்டுகிறது. இலட்சியங்களை அளிக்கிறது. சீரான வாழ்க்கையை அளிக்கிறது. நவீன இலக்கியம் கொந்தளிப்பை அளிக்கிறது, அலைக்கழிக்கிறது. நிலைகுலையச்செய்கிறது

ஆகவே மாணவர்களுக்கு சரியான பொருளில் நவீன இலக்கியம் அறிமுகம் செய்யப்படுவது சரியில்லை என்று நீங்கள் சொன்னபோதுஅது உண்மை என்றே முதலில் தோன்றியது. ஆனால் என்னை எடுத்துக்கொண்டேன். என் இளமையில் நான் அற இலக்கியத்துடன் நின்றிருப்பேனா|? நான் மு.வ வை வாசிக்கையில் எனக்கு 15 வயது. அன்று நான் அறிந்த வாழ்க்கையைக்கொண்டே அந்த எழுத்து போதாது, அது உண்மையைச் சொல்லவில்லை என உணர்ந்தேன். மேலும் மேலும் என தேடிச்சென்றேன்.

இப்படிச் சொல்லலாம், ஓர் இளைஞன் மு.வவுக்குள் நிறைவடைவான் என்றால் அவனுக்கு அவரே போதும். மேலே அவன் வாசிப்பது ஆபத்து.அவனை அவர் வழிகாட்டிச்செல்வார். ஆனால் அவன் மிகச்சம்பிரதாயமான ஒர் ஆளுமையாக அமைவான். சமூகத்தின் நோக்கில் சரியான மனிதனாக ஆவான்,.எளிய வாழ்க்கைவெற்றிகளைப் பெறுவான்.

தமிழ் எழுத்தாளர்களிலேயே மிகப்பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளைகளை இலக்கியவாசனையே இல்லாமல்தான் வளர்த்திருக்கிறார்கள். அவர்களை உலகியலில் நிலைநிறுத்துவதை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்தார்கள். விதிவிலக்குகள் மிகச்சிலவே. ஆனால் அந்த பிள்ளைகளைப் பார்க்கையில் அவர்கள் அவ்வளவுதான், அவர்களின் தந்தையர் விரும்பினாலும் மேலே கொண்டு சென்றிருக்க முடியாது என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது.

மேலும் மேலும் என தேடும் இளைஞனுக்கு மு.வ போதாது. அவனிடம் மு.வவுடன் நிறுத்திக்கொள் என்றாலும் அவன் நிற்கமாட்டான். அவன் முரண்படுவான். குழம்புவான், அலைவான். மெல்ல தன்னைக் கண்டடைவான்.

என்ன கவனிக்கவேண்டும் என்றால் இங்கே கலையில், இலக்கியத்தில், அரசியல், சமூகப்பணியில் தனித்துவம் கொண்டு முன்னெழுந்த அத்தனைபேருமே இரண்டாம் வகையினர்தான்

அகஆற்றல், படைப்பூக்கம் போன்றவை பிறவியிலேயே அமைபவை. அந்த விசைதான் இளைஞர்களை தேடல் கொண்டவர்களாக ஆக்குகிறது, அலைக்கழிக்கிறது. அந்த அக ஆற்றல் கொண்ட ஒருவரை மு.வவில் ஊறப்போட்டு வளர்த்தால் என்ன ஆகும்? அவருடைய அக ஆற்றல் வெளிப்பட வழியே இல்லாமல் தேங்கும். அவர்களே பலவகையான மீறல்களை நோக்கிச் செல்கிறர்கள்.

கல்லூரிநாட்களில் போதைப்பழக்கத்திற்கு ஆளாகும் இளைஞர்களைப் பாருங்கள், ஒருவர் மிச்சமில்லாமல் அத்தனைபேருமே அசாதாரணமான அறிவாற்றலும் கற்பனையும் கொண்டவர்கள்.

உங்கள் துறையில் குடிகாரராக, அராஜகம் நிறைந்தவராக, வீணகிப்போனவராக ஒருவர் இருப்பார். கவனியுங்கள், அவர்தான் உங்கள் துறையிலேயே ஆற்றல்மிக்கவர், நுண்மையானவர். அவருக்கு அந்தத்துறை போதவில்லை. யானைகளை ஆடுப்பட்டியில் கட்டமுடியாது. அதைப்போலவே ஆடுகளை கொண்டுசென்று யானைக்கொட்டிலிலும் அடைக்கமுடியாது

இயல்பான அகஆற்றல், தேடல் கொண்ட குழந்தைகளுக்கு இலக்கியம், தத்துவ, கலை, அறிவியல் என அவர்களின் இயல்புக்குரிய வெளிப்பாட்டுத்தளம் அளிக்கப்படவேண்டும். மற்றவர்களுக்கு ‘எல்லாரையும்போல’ இருப்பதற்கான பயிற்சி, சராசரி வாழ்க்கையில் அமைவதற்கான கல்வி, போதும். மு.வ போதும் .

தந்தையரால் செலுத்தப்பட்டு சராசரி வாழ்க்கையில் அமைக்கப்பட்ட பலர் சலித்து சீற்றம்கொண்டு அதை உதறி இலக்கியம் பக்கம் வருகிறார்கள். அவ்வாய்ப்பு அமையாமல் சோர்வில் அழிபவர்களும் உண்டு. அவ்வாறு சராசரியை மீறி செல்லும் தன்மைகொண்டவர்கள் அதிகபட்சம் பத்துசதவீதம்பேர்.

அவர்களுக்குரியதே நவீன இலக்கியம். இளையோரை அது அலைக்கழிய வைக்கலாம். ஆனால் ஆற்றலை கூர்தீட்டி முன்செல்ல வைக்கும். அவர்கள் சிதறி வீணாவதைவிட அது நல்லதுதானே?

ஜெ

 

மு.வ கட்டுரை

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

“கெரகம்!”

$
0
0

sura

 

உயிர் எழுத்து ஜூலை 2017 இதழில் நஞ்சுண்டன் பிழைதிருத்தல், பிரதிமேம்படுத்துதல் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  ‘கால்திருத்தி’ என்னும் தலைப்பில்.

 

பொதுவாக இந்த க்ரியா வகை ‘பிரதிமேம்படுத்தல்’ பற்றி எனக்கு ஆழமான சந்தேகம் உண்டு. வாழ்க்கையையோ இலக்கியத்தையோ அறியாமல், மொழியின் விதிகளை இயந்திரத்தனமாகப்போட்டுச் செய்யப்படும் இத்தகைய ’மேம்படுத்தல்கள்’ ஒரு இலக்கியப்பிரதியை சித்திரவதை செய்பவை. மொழியின் சாவி தங்களிடம் இருப்பதாகவும் இமையம், பூமணி போன்ற நாட்டுப்புற கலைஞர்களை தங்கள் மெய்ஞானம் மூலம் தாங்கள் உயர்கலைஞர்களாக ஆக்குவதாகவும் ஒரு பாவனை இவர்களிடம் இருக்கும்.

 

உதாரணமாக, இமையத்தின் ஆறுமுகம் நாவலுக்கு க்ரியா எழுதிய பதிப்பாளர் குறிப்பில் க்ரியாவின் மொழிக்கொள்கைக்கு ஏற்ப அந்நூல் செம்மை செய்யப்பட்டது என

கூறப்பட்டிருந்தது.. திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அத்தனை ஆசிரியர்களின் நடையையும் தனித்தமிழுக்கு மாற்றி வெளியிடும். அதை உலகின் எந்தப்பதிப்பகமும் அதற்கு முன் செய்ததில்லை. அதற்கு நிகரான் கீழ்மை அச்செயல். அன்று என்னிடம் உருவான ஒவ்வாமை இன்றுவரை அப்பதிப்பகம் மீது குறைந்ததில்லை.

 

மொழி என்பது இவர்கள் அறிந்த விதிகளும் சொற்களும் அல்ல, அது பண்பாட்டின் வடிவம். பண்பாட்டை அறியாமல் மொழியை அறிய எவராலும் இயலாது. பண்பாட்டுக்கு அன்னியமாகி அறைக்குள் இருப்பவர்களின் மொழி என்பது ஒரு பயனற்ற இயந்திரம்.

 

புனைவுமொழி என்பது அந்த ஆசிரியனின் ஆழ்மனம் வெளிப்படும் ஒரு கட்டற்ற பீரிடல். அது முடிவிலாத வண்ண வேறுபாடுகள் கொண்டது. மீறல்கள் கொண்டது. அறிந்தும் அறியாமலும் விரிவு கொள்ளும் பண்பாட்டு உட்குறிப்புகளின் பெருந்தொகை அது.அதிலுள்ள பிழைகளும் கூட சிலசமயம் படைப்பூக்கவெளிப்பாட்டின் பகுதிகளாக அமையமுடியும். [தன் எழுத்தை பிழைதிருத்த முயன்ற தம்பியிடம் வைக்கம் முகமது பஷீர் சொன்னது நினைவுக்கு வருகிறது] இவர்களுக்கு அது பிடிகிடைப்பதில்லை

 

இங்குள்ள எழுத்தாளர்கள் நூலை ’எடிட்’ செய்ய ஒப்புவதில்லை என பரவலாகச் சொல்லப்படுவதுண்டு. நம் ‘எடிட்டர்’களின் தரம் அத்தகையது. புனைவுமொழியின் முன் கொள்ளவேண்டிய தன்னடக்கமோ நுண்ணுணர்வோ இல்லாத இலக்கண இயந்திரங்கள் அவர்கள். எம்.எஸ் போன்ற மிகச்சிலரிடமே அந்த பண்புகளை நான் கண்டிருக்கிறேன்.

 

இவர்கள் ஒருவகை சராசரிகள். அந்த சராசரி நோக்கி அவர்கள் கலைஞனை இழுக்கிறார்கள். புனைவுமொழி என்பது எப்போதும் சராசரியிலிருந்து மீறி எழுவது. நல்லவேளை லா.ச.ராவோ, கி ராஜநாராயணனோ ப.சிங்காரமோ, இவர்களின் கைகளுக்குச் சிக்கவில்லை

 

நஞ்சுண்டன் ஜே ஜே சிலகுறிப்புகளில் ஒரு பத்தியைப்பற்றிச் சொல்கிறார்.  “செம்மையாக்கத்தில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்த காலம் அடிக்கடி என் நினைவுக்கு வந்த வார்த்தை ‘கால்திருத்தி’. ஜே ஜே சிலகுறிப்புகளில் வரும் அந்த சொல்லாட்சியைப்பற்றி அவர் நிறைய ‘உழைத்திருக்கிறார்’

 

’ ஒரு வயோதிக அறிஞர் சோடைதட்டாத குரலில் பேசிக்கொண்டிருந்தார். இவரை எனக்கு மிக நன்றாகத்தெரியும். இந்துமதத்தையும் அக்டோபர் புரட்சியையும் கால்திருத்தி சம்மேளிக்கச் செய்தவர்”

 

என்ற வரியில் வரும் கால்திருத்தி என்ற சொல்லுக்கு என்ன பொருள் என தெரியாமல் நெடுங்காலம் உழன்றபின் இவரே ஒருபொருளை கொள்கிறார். தமிழில் உள்ள கால் [நெடில் அடையாளம்] என்று. அதாவது,வணாக்கம்  என்பதை  வணக்கம் என்று திருத்துவதுபோல. அந்த அறிஞர் இந்துமதத்துக்கும் அக்டோபர் புரட்சிக்கும் உள்ள மேம்போக்கான வேறுபாடுகளை திருத்தி அல்லது களைந்து அவற்றை திறம்பட ஒப்பிட்டவர் என்று சுரா சொல்வதாக புரிந்துகொள்கிறார் நஞ்சுண்டன்

 

கடைசியில்—ஆம்,கட்டக்கடைசியில் – அதைப் பதிப்பித்தவரான க்ரியா ராமகிருஷ்ணனிடமே கேட்கிறார். ’தமிழில் மிகவிரிவான செம்மையாக்கத்துக்கு உட்பட்ட நாவல் இது’ என்பதனால் அந்த செம்மையாக்கத்தைச் செய்த க்ரியா ராமகிருஷ்ணனிடமே அவ்விளக்கத்தைக் கேட்கிறாராம்.அவர் விளக்கினாராம்

 

ஜேஜே சிலகுறிப்புகளில் இதுபோன்று ஏராளமான வாக்கியங்கள் இருப்பதாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் கால்களை இணைத்துவிட்டால் அவர்களுக்குள் உடல்சேர்க்கை சாத்தியம் என்னும் நோக்கில் இந்த வாக்கியத்தைப்புரிந்துகொள்ளவேண்டும் என்றும் குறிப்பளித்தார்” என்கிறார் நஞ்சுண்டன்.

 

அவர் சொன்ன நோக்கில் [கண்களை மேலே சொருகி] நஞ்சுண்டன் கற்பனை செய்கிறார். “திரைப்படங்களில் வன்புணர்ச்சிக் காட்சிகளில் ஆண் பெண்ணின் கால்கள் பின்னிக்கொள்வதாகக் காட்டி அவர்களுக்குள் உடலுறவு நிகழ்ந்து விட்டதாக காட்டுவது சாதாரணம். இப்போது கால்திருத்தியை புரிந்துகொள்ள முடிந்தது

 

நஞ்சுண்டன் ‘ராம் அவர்களுக்கு நன்றி. இதுபோன்ற விளக்கங்களை வேண்டும் ஏராளமான வாக்கியங்கள் ஜே.ஜே. சிலகுறிப்புகளில் உண்டு” என்கிறார். அதோடு நில்லாமல் தீவிர மேம்படுத்தலார்வத்துடன் மொழியாக்கம் செய்த .இரா.வேங்கடாசலபதியை உசாவுகிறார்.  He was the one effected a marriage between Hinduism and October Revolution  என அவர் மொழியாக்கம் செய்திருக்கிறார்.  “மூலத்திற்கு எந்த பங்கமும் இல்லை’ என நஞ்சுண்டன் மகிழ்கிறார். ஆ.இரா வெங்கடாசலபதியும் க்ரியா ராமகிருஷ்ணனிடம் கலந்தாலோசித்திருக்கலாம்

 

எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. இதையெல்லாம் இவர்கள் ’சீரியஸா’கத்தான் செய்துகொண்டிருக்கிறார்களா? இல்லை நீயும் மொக்கை நானும் மொக்கை என கும்மிகொட்டி  விளையாடுகிறார்களா?

 

சுந்தர ராமசாமியின் ‘நோவெடுத்து சிரமிறங்கும் வேளை கால்கள் பிணைத்துக்கட்ட கயிறுண்டு உன் கையில்’ என்ற வரியில் இருந்து இந்த பொருளை ‘கொண்டுகூட்டி’ எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். இங்கே தழுவுதல்,கட்டுதல் என்றெல்லாம் இல்லையே, திருத்துதல் என்று இருக்கிறதே, அதையாவது யோசித்துப்பார்த்திருக்கலாம் அல்லவா?

 

இருவரை வலுக்கட்டாயமாக உடலுறவுகொள்ளச் செய்ய அவர்களின் கால்களை சேர்த்து கட்டுவார்களாம். அதை கால்களை திருத்துவது என்பார்களாம்.ஆணையும் பெண்ணையும் ஒன்றாகக் காலைக்கட்டி போட்டால் உடலுறவு கொண்டே ஆகவேண்டுமாம். புதுவிதமான சித்திரவதை!ஹாலிவுட் கதையாக சொன்னால் காசுதேறும்.

 

நாகர்கோயிலில் எந்த ஒரு சாதாரண வழிப்போக்கரிடம் கேட்டிருந்தால்கூட கால்திருத்துவது என்றால் வயலுக்கு வாய்க்கால் வெட்டி நீரைக் கொண்டுவருவது என்று பொருள் சொல்லியிருப்பாரே. விவசாயவேலைகளில் கால்திருத்துவது முக்கியமான பணி.கால் என்றால் வாய்க்கால். அல்லது சிற்றோடை. திருத்துவது என்றால் வெட்டிக்கொண்டுசெல்வது, கால் ஒருக்குவது என்றால் கரையின் புல்லைச் செதுக்குவது.புல்லும் வளரியும் நிறைந்து நீர்வழி அடைந்து கிடக்கும் கால்வாயை திருத்துவது அது. குமரிமாவட்டத்தில் கால் என்றாலே கால்வாய்தான். தேரேகால்புதூர், கன்னடியன்கால் என பல பெயர்களை இங்கு காணலாம்

 

அட, வையாபுரிப்பிள்ளை அகராராதியையாவது பார்த்திருக்கலாமே? கால் என்றால் வழி என்ற அர்த்தமாவது வந்திருக்கும். வழிதிருத்தி என்ற பொருளையாவது எடுத்திருக்கலாம்.

 

இங்கே சு.ரா கிண்டலாக சொல்கிறார் என்பதுகூட இவர்களுக்குப் புரியவில்லை.சம்பந்தமில்லாதவற்றை நெடுந்தொலைவுக்கு வழிதிருப்பி கொண்டுசென்று இணைப்பது என்று இங்கே பொருள். சம்மேளிப்பது என்னும் மலையாளச் சொல்லையும் அந்த நக்கலுடன்தான் சொல்கிறார். நாகர்கோயில் பேச்சுவழக்கிலேயே ஒரு பேச்சை சம்பந்தமில்லாத இடத்துக்குக் கொண்டுசெல்வதௌ ‘கால்திருத்தி கொண்டுட்டு போறான்’ என்பதுண்டு.

 

சொல்லப்போனால் கால்திருத்துவது என்பது அன்னியநிலம் வழியாக வாய்க்கால் வெட்டி தன் வயலுக்குத் தண்ணீர்கொண்டு வருவதைக் குறிக்கும் உள்ளூர் அர்த்தமும் கூடியது. சு.ரா இந்தமாதிரியான நக்கல்களை எல்லாம் பதிவுசெய்துகொள்ளும் செவிகொண்டவர்.

 

”கெரகம்” என்று சொல்லி தலையிலடித்துக்கொள்ளலாம். அதற்கும் அச்சமாக இருக்கிறது. அது செவ்வாய்க்கிரகத்தைக் குறிக்கிறது, செவ்வாய் தோஷத்தை சுட்டுகிறது என ஆரம்பித்துவிட்டால் என்ன செய்ய?

மொழியாக்கச் சிக்கல்களும் தமிழும்

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 48

$
0
0

47. நிலவெழுகை

flowerகாட்டுமுகப்பில் நின்ற வண்டியில் இருந்து பொதிகளை இறக்கிக்கொண்டிருக்கும்போது தொலைவில் கொம்பொலி எழுவதை முக்தன் கேட்டான். இரு பெரிய பித்தளை அண்டாக்களை ஒன்றுக்குள் ஒன்றெனப்போட்டு தோளிலேற்றி கொண்டு சென்று அடுமனைக்கென அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள் வைத்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்த வலவன் நின்று இரு கைகளையும் இடையில் வைத்தபடி அத்திசையை நோக்கினான். கையில் எடுத்த கலத்துடன் என்ன செய்வது என்று அறியாமல் சம்பவன் முன்னும் பின்னுமெனத் ததும்பினான். கொம்போசை மீண்டும் எழ காவல் மாடங்கள் அனைத்திலும் கொம்புகள் ஏற்று ஒலித்தன. முரசுகள் இணைந்துகொண்டன. மாபெரு யானைத்திரள் ஒன்று மிரண்டு ஓடிவந்து அப்பகுதியைச் சூழ்ந்துகொண்டதுபோலிருந்தது.

நான்கு முழுத்த ஆண் புரவிகள் முழு விரைவில் குளம்படி தாளத்துடன் வந்து முற்றத்தை அடைந்து அரைவட்டமாகச் சுழன்று நிற்க அங்கே நின்றிருந்த பிற புரவிகள் அனைத்தும் குளம்புகள் மாற்றிவைத்து நின்று கழுத்தைத் திருப்பி விழியுருட்டி நோக்கின. ஓரிரு பெண்புரவிகள் கனைத்தன. முதற்புரவிமேல் இருந்த தோற்கவச வீரன் தன் கையிலிருந்த நீண்ட வேலால் அங்கு நின்றிருந்த அடுமனையாளன் ஒருவனை தோளில் குத்தி “வண்டிகளனைத்தும் விலகவேண்டும். இக்கணமே… எந்த வண்டியும் இங்கு நிற்கக்கூடாது. எந்தப் பொருளும் இந்த முற்றத்தில் இருக்கக்கூடாது. விலகுக… விரைவில்!” என்றான். அவன் கைகூப்பி வாய்திறந்து நின்று நடுங்கினான்.

வலவன் அங்கிருந்து ஓடிவந்து “வண்டிகள் அனைத்திலும் பொருட்கள் இருக்கின்றன, வீரரே. அவற்றை இறக்கி வைக்காமல் வண்டிகளை அப்பால் கொண்டு செல்ல இயலாது” என்றான். “இயலாதா? யாரிடம் சொல்கிறாய்? இழிமகனே, எடுடா வண்டியை” என்றான் அவ்வீரன். “வண்டிக்காளைகளை அவிழ்த்துவிட்டோம். மீண்டும் அவற்றைக் கொண்டுவந்து கட்டி வண்டிகளை அகற்ற பொழுதில்லை” என்றான் வலவன். “பேச்செடுக்கிறாயா? அடுமடையா, எடுடா வண்டியை… இக்கணம் வண்டிகள் இங்கிருந்து அகலவில்லை என்றால் உங்கள் தலைகள் உருளும்” என்றான் வீரன். இன்னொருவன் சவுக்கைச் சுழற்றி வீசி படீர் என ஓசையெழுப்பினான்.

“நான் வேண்டுமென்றால் வண்டியை சற்று நகர்த்தி ஓரமாக வைக்கிறேன், வேறுவழியில்லை” என்றான் வலவன். “பேசாதே… எடு வண்டியை” என்றான் ஒரு வீரன். இன்னொருவன் “அனைவரும் சேர்ந்து இழுங்கள் வண்டியை…” என்று கூவினான். “வேண்டியதில்லை” என்றபின் வலவன் குனிந்து வண்டியின் நுகத்தை இரு கைகளாலும் தூக்கி ஒரே உந்தலில் சகடத்தை அசையச்செய்து இழுத்து சென்று ஓரமாக நிறுத்தினான். அவன் தசைகள் புடைத்து இறுகியெழுந்தது பாய்மரம் காற்று கொள்வதைப்போலத் தோன்றியது. தரையில் இறக்கி போடப்பட்டிருந்த கலங்களையும் உருளிகளையும் சிறு விளையாட்டுப்பொருட்களை என ஒற்றைக்கையால் எடுத்து அடுக்கி வைத்தான். புரவிக் காவலர்களும் அடுமனையாளர்களும் ஏவலர்களும் திகைப்புடன் அவனைப் பார்த்து நின்றனர்.

காவலர்தலைவன் குரல்மீள சற்று பொழுதாகியது. ஒருவன் “இவன் யார்?” என மூச்சுக்குள் சொன்னான். காவலர்தலைவன் கைசுட்டி வலவனை அருகே அழைத்து “வா இங்கு… நீ யார்? சூதனா?” என்றான். “இல்லை, நான் ஷத்ரியன். ஆனால் அடுமனைத் தொழில் செய்கிறேன்” என்றான் வலவன். “ஷத்ரியன் ஏன் அடுமனைத் தொழில் செய்ய வேண்டும்?” வலவன் “நான் குலவிலக்கு செய்யப்பட்டேன்” என்றான். காவலன் அவன் கைகளைப் பார்த்து “நீ கதாயுதம் பயின்றிருக்கிறாய்” என்றான். “ஆம். ஆனால் போர்த்தொழிலில் இறங்குவதில்லையென்று என் குடித்தெய்வத்திடம் ஆணையிட்டிருக்கிறேன்” என்றான். “ஏன்?” என்றான் அவன். “உணவு சமைத்து என் கைகளால் ஒவ்வொருவருக்கும் உயிரூட்டிக்கொண்டிருக்கிறேன். ஆகவே எவரையும் கொல்ல என்னால் இயலாது.”

வீரன் நகைத்து “இந்த ஈட்டியால் நான் இப்போது உன்னைக் கொன்றால் நீ என்ன செய்வாய்?” என்றான். பீமன் “ஒவ்வொரு நாளும் பல ஆடுகளையும் பன்றிகளையும் உணவுக்காகக் கொல்கிறேன்” என்றான். அவன் சொல்வதை காவலர்தலைவன் புரிந்துகொள்ளவில்லை. பின்னால் நின்ற துணைவன் சிரித்தபோதுதான் அதன் பொருள் புரிந்தது. வெறிகொண்டு இரும்பாலான வேலைச் சுழற்றி வலவனை அடித்தான். மிக எளிதாக இடக்கையால் அதைப்பற்றி சற்றுத் திருப்பி காவலர்தலைவனை நிலையழியச் செய்து நாணல் ஒன்றை கொய்வதுபோல அவன் கையிலிருந்து அதைப் பிடுங்கி ஒற்றைக்கையால் நிலத்தில் ஊன்றி கொடியை என வளைத்து அப்பால் தூக்கிப்போட்டான். உலோக ஓசையுடன் சென்று விழுந்தது வேல்தண்டு.

விலங்கெனக் கூச்சலெழுப்பியபடி காவலர்தலைவன் வாளை உருவினான். அவனைத் திரும்பிக்கூட நோக்காமல் “செல்லுங்கள், வீரரே. ஓர் அடி தாங்குமளவுக்குக்கூட உங்கள் உடம்போ புரவியோ இல்லை” என்று வலவன் சொன்னான். குதிரையிலிருந்த அனைவருமே மெல்லிய விதிர்ப்பு கொள்வதை சம்பவன் பார்த்தான். “ம்ம்” என்றான் வலவன். அவன் தோள்தசை விழித்தெழும் மலைப்பாம்புபோல மெல்ல அசைந்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு புரவிகளை தட்டி விலகிச்சென்றனர்.

இரண்டாவது காவலர் அணி “விலகுங்கள், விலகுங்கள், இளவரசர் வருகிறார்” என்று கூவியபடி வந்தது. அவர்கள் புரவிகளை வலையென விரித்து அக்காவல்முற்றத்தின் விளிம்புகளென்றாகி வேலுடன் வேல் தொட்டு வேலி அமைத்தனர். அடுமனையாளர்களும் காவலர்களும் வணங்கி உடல்வளைத்து நிற்க அடுத்த குழு பெருகிபெய்யும் குளம்போசையுடன் வந்து நின்றது. “என்ன செய்கிறீர்கள் இங்கே? இளவரசர் வந்துகொண்டிருக்கிறார்” என்றான் அதன் தலைவன்.

மச்சநாட்டின் துள்ளும்மீன் பொறிக்கப்பட்ட கொடியுடன் கரிய புரவியொன்று வந்தது. கொடியை ஏந்தியிருந்த புரவி வீரனுக்குப் பின்னால் வந்தவன் உருவிய வாளுடன் “விலகுங்கள், விலகுங்கள்” என்று கூவிக்கொண்டிருந்தான். கொடிப்புரவி வந்து முற்றத்தின் நடுவே நிற்க அதைத் தொடர்ந்து வந்த புரவிகளில் கொம்புகளும் முரசுகளும் ஏந்தியவர்கள் வந்தனர். கொம்பூதி முற்றத்திற்கு வந்து மும்முறை முழங்க காவல் மாடங்கள் அனைத்திலிருந்தும் மறு பிளிறல் எழுந்தது.

“யாருடைய பல்லக்கு அது? இங்கே பல்லக்கை நிறுத்தியது யார்?” என்று காவலர்தலைவன் கூவினான். “யாருடைய புரவி அது?” என்று பல குரல்கள் எழுந்தன. “அது இளவரசர் உத்தரர் ஏறி வந்த புரவி” என்றான் அங்கிருந்த கானகக் காவலர்தலைவன். “உத்தரர் அந்தப் புரவியில் ஏறி வந்தாரா?” என்றான் காவலர்தலைவன். “ஆம், அதில்தான் வந்தார்” என்றான் கானகக் காவலர்தலைவன். அதை நோக்கியபின் “அந்தப் புரவியிலா?” என்று அவன் மீண்டும் கேட்டான். “ஆம்” என்றபின் “அப்புரவியைப் பழக்கும் ஒருவன் வந்திருக்கிறான். கிரந்திகன் என்னும் சூதன். அவன் சொல்லுக்கு அது குழவியென கட்டுப்படுகிறது” என்றான். “கடிவாளத்தை அவன் பற்றியிருந்தானா? ” என்றான் இன்னொரு காவலன். இரு வீரர்கள் நகைத்தனர்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே எட்டு வேலேந்திய வீரர்களும் எட்டு வில்தொடுத்த வீரர்களும் புரவிகளில் முன்னால் வர தொடர்ந்து கீசகனின் புரவி வந்தது. யவனநாட்டைச் சேர்ந்த எடைமிக்க பெரிய புரவியின் காலடி ஓசை தனியாகவே ஒலித்தது. அதன் குளம்புகள் கொல்லன் உலைக்களத்து கூடம்போலிருந்தன. கணுக்கால்களில் காகச்சிறகுபோல மயிர்க்கொத்து கொண்டிருந்தது. பிடரிமயிர் வளர்ந்து நாணல்பூபோல தழைந்திருந்தது. அவனுக்கு இருபுறமும் இரும்புக் கவசமணிந்த இரு வீரர்கள் நீண்ட வேல்களுடன் யவனப் பெரும்புரவிகளில் வந்தனர். காவல் வீரர்கள் விரிந்து இரு நண்டுக்கொடுக்குள்போல் ஆகி விலக மார்பில் ஆடிவளைவென மின்னிய இரும்புக்கவசமும் கைகளிலும் கால்களிலும் தோற்கவசங்களும் அணிந்து தன் புரவியிலிருந்து கால் சுழற்றி இறங்கினான். அவனது எடை மண்ணைத் தொடும் ஓசை அனைவருக்கும் கேட்டது.

வலவன் உடல் பணிந்து காவல்நிரைக்குப் பின்னால் மறைந்தவனாக நின்றான். கீசகனின் சிறிய கண்கள் உணவு வண்டியைப் பார்த்தன. “இதை அப்பால் கொண்டு சென்று நிறுத்த முடியாதா உங்களால்?” என்றான். காவலர்தலைவன் “இங்கு முற்றம் இவ்வளவுதான், படைத்தலைவரே” என்றான். கீசகன் விழிகள் உலவிச்சென்று வலவனைப் பார்த்தன. காவலர்தலைவன் அதை உணர்ந்து “அவன் ஷத்ரியன். ஆனால் அடுமனைத் தொழில் செய்கிறான்” என்றான். “ஆம், நான் அவனை அறிவேன்” என்றான் கீசகன். “தனியொருவனாக இந்த வண்டியை இவனே அப்பால் நகர்த்தி வைத்தான்” என்றான் காவலர்தலைவன்.

கீசகன் திகைப்புடன் இடையில் கைவைத்து வலவனை சற்று நேரம் நோக்கி நின்றான். பின்னர் மெல்ல புன்னகைத்து “இந்த வண்டியையா?” என்றான். “ஆம், இளவரசே.” கீசகன் மீண்டும் வலவனை நோக்கிவிட்டு ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றான்.

flowerமுதிய காவலர்தலைவர் புஷ்பர் கையசைத்து உரத்த குரலில் “மூடா, என்ன அங்கே செய்கிறாய்? என்னடா செய்கிறாய்? அறிவிலியே” என்றார். முக்தன் அவரை நோக்கி ஓடி “வணங்குகிறேன், தலைவரே” என்றான். “செவிட்டில் அறைவேன்… கீழ்பிறப்பே. என்ன செய்கிறாய் நீ? நீ நின்று காற்று நுகர்வதற்கா இங்கே அணிக்காடு அமைந்துள்ளது?” என்று அவர் மூச்சிரைத்தார். “அரசருக்குரிய குடிலில் தூபக்கலங்களில் ஒன்று குறைகிறது… ஓடிச்சென்று பொருள்நாயகத்திடம் கேட்டு அதை உடனே கொண்டு வைக்கச்செய்.” முக்தன் “நான் உடனே…” என்று தொடங்க “பேசாதே… பேசினால் உன் நாவை அரிவேன்” என்றார் அவர்.

அவன் தலைவணங்கி மூச்சிரைக்க ஓடினான். அவனிடம் உத்தரையின் ஆடைப்பெட்டிகளில் ஒன்று சென்று சேரவில்லை என்று சொல்லப்பட்டிருந்தது. ஆடைகளுடன் வந்த ஏவலர்கள் முன்னரே அவற்றை இறக்கி மறுதிசைக்குக் கொண்டுசென்றுவிட்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் காட்டில் ஒவ்வொரு மூலையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அரசிக்கு தென்மேற்கு. உத்தரைக்கு தென்கிழக்கு. வடமேற்கு உத்தரனுக்கு. வடகிழக்கு அரசருக்கு. மையப்பகுதி முழுக்க கீசகனுக்கு. அடுமனையாளர்கள் காட்டின் நுழைவாயிலில் தெற்கேயும் ஏவலர்கள் மேற்கேயும் கொட்டகை அமைத்திருந்தனர். காட்டுமுகப்பில் இருந்த பெருமுற்றம் வண்டிகளாலும் காவலர்களாலும் நிறைந்து அலைநிறைச்சுனை என வண்ணம் சுழித்தது.

எதிரே ஓடிவந்த இளைஞனை எங்கோ கண்டிருந்தான். “நில்!” என்றான். அவன் நின்றதும்தான் பெயர் நினைவுக்கு வந்தது. “நீ கஜன் அல்லவா?” என்றான். “ஆம், மூத்தவரே” என்ற கஜன் அதன்பின்னர்தான் முக்தனை அடையாளம் கண்டுகொண்டு “தாங்களா?” என்றான். கஜன் வண்ணத்தலைப்பாகையும் மேலாடையும் அணிந்திருந்தான். “பொறுத்தருள்க மூத்தவரே, இருளில் அடையாளம் தெரியவில்லை.” முக்தன் “எங்கிருந்து பெற்றாய் இந்த தலைப்பாகையையும் அணியையும்?” என்றான். “இங்கே அத்தனை அரச காவலரும் வண்ணத்தலைப்பாகை அணிந்திருக்கிறார்கள். ஆகவே தலைப்பாகை இல்லாமல் உள்ளே வரமுடியாதென்று தோன்றியது. உத்தரரின் சால்வை ஒன்றை வண்டியில் இருந்து எடுத்து தலைப்பாகையாக ஆக்கிக்கொண்டேன். இன்னொன்றை மேலாடையாக… நன்றாக உள்ளதா?”

“இதன்பொருட்டு நீ கொலைக்களம் போவாய்” என்றான் முக்தன். “அவர் இதை அளித்தாரே?” என்றான் கஜன் “அப்படி சொன்னால் பிறர் மறுக்கமுடியாது. அவர் எதையுமே மறுக்கமுடியாது.” முக்தன் சிரித்து “நான் உடனே அரசரின் ஏவலரை நோக்கிச் செல்லவேண்டும். நீ இளவரசி உத்தரையின் ஆடைப்பெட்டிகளை வைத்திருக்கும் ஏவலரைக் கண்டு பெட்டிகள் அனைத்தும் சென்று சேரவில்லை என்று சொல். மேலாடைப்பெட்டி ஒன்று குறைகிறது” என்றான். “உடனே செல்… வழியில் ஏதும் வேடிக்கை பார்க்காதே.” கஜன் “வேலை இல்லாமலேயே காட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறேன். வேலை இருந்தால் ஓடமாட்டேனா?” என்றான்.

அவனுக்கு மறுமொழி சொல்லாமல் முக்தன் ஓடி வெளியே சென்றான். அரசரின் பெரிய வெள்ளிப் பல்லக்கு வந்து நின்றிருந்தது. அதன் போகிகள் பதினெண்மர் அப்பால் கரிய தசைத்திரள்கள் ததும்ப ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசியபடி நின்றிருந்தார்கள். அரசரை அவன் விழிகள் தேடி ஆலமரத்தடியில் கண்டுகொண்டன. அவர் பலகை ஒன்றில் விரிக்கப்பட்ட மரவுரியில் மல்லாந்து படுத்து துயில்கொண்டிருந்தார். அருகே ஆற்றை நோக்கியபடி ஒரு வேர்ப்புடைப்பில் குங்கன் அமர்ந்திருந்தான். அவன் தாடியில் அந்தியின் செவ்வொளி சுடர்வதை முக்தன் கண்டான். சற்றுநேரம் நோக்குநிலைக்க உளமழிந்து நின்றான்.

ஏதோ அருகே விழும் ஒலி கேட்டு திடுக்கிட்டு திரும்பினான். வண்டியில் இருந்து ஒரு பொதி கீழே விழுந்தது. “அப்பால் சென்று நில்… தலையில் விழுந்தால் உடலை இழுத்துபோடக்கூட இங்கே எவருக்கும் பொழுதில்லை” என்றான் பொதியை தள்ளியவன். “நான் அரசரின் பொருள்நாயகத்தை தேடிவந்தேன்… அவருக்கான தூபங்களில் ஒன்று குறைகிறது” என்றான் முக்தன். “அங்கே சென்று அந்த பொன்னிறத் தலைப்பாகைக்காரரிடம் கேள். அவர்தான் பொருள்களவுநாயகம்… சிறந்தவர்.” முக்தன் திரும்பியபோது இன்னொரு பொதியை தள்ளிவிட்டு நிமிர்ந்த அவன் “பொருள்நாயகத்தை காணவந்தவன் எதற்கு சூதுநாயகத்தைப் பார்த்து நின்றாய்? கூர்ந்து நோக்காதே. அவன் கலிவடிவன்…” என்றான். முக்தன் “இல்லை…” என்று தயங்க “அவனை சாவின் தெய்வங்கள் சூழ்ந்துள்ளன. அரசரை எட்டுக் கைகளால் கவ்வி அணைத்துவிட்டான் என்கிறார்கள்” என்றான்.

“மாகரே, சொல் காக்க. தலைகாப்பதன் முதல் படி அது” என்றான் பின்னால் நின்றவன். “நான் இனி இந்தத் தலையைக் காத்து என்ன செய்ய? நா அதன்பாட்டில் நெளியட்டும்” என்றான் மாகன். முக்தன் பொருள்நாயகத்திடம் சென்று “அரசரின் குடிலில் ஒரு தூபம் குறைகிறது” என்றான். “அங்கே எதற்கு தூபம்? இவர் புகைக்கும் அகிபீனாவில் கொசுக்கள் மயங்கி உதிருமே” என்றார் பொருள்நாயகம். அருகிருந்தவர்கள் உரக்கச் சிரிக்க இடம்கொடுத்தபின் “இதோடு ஏழுபேர் வந்து சொல்லிவிட்டார்கள். அனுப்பிவிட்டேன். செல். சென்று அந்த கிழவனிடம் மேலும் ஆட்களை அனுப்பவேண்டாம் என்று சொல்” என்றார். கொசுவை அடித்தபடி “அவன் பெயர் என்ன?” என்றார். முக்தன் “புஷ்பர்” என்றான். “அவருக்கு க்ஷணர் என்று பெயர் இட்டிருக்கலாம்… முந்தைய கணத்தை மறந்து அக்கணத்தில் வாழ்கிறார் மனிதர்” என்றார் பொருள்நாயகம். சூழ சிரிப்பொலி. அவர்கள் அதன்பொருட்டே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் போலும்.

முக்தன் செல்வதற்காகத் திரும்பினான். பொருள்நாயகம் “கிழவர்களை வீட்டுக்கு அனுப்புவதேயில்லை இந்த அரசில். அவர்கள் வேலோடு சாக இங்கே போரும் நிகழ்வதில்லை. ஆகவே அரண்மனையிலும் அலுவல்நிலையிலும் எச்சில் ஒழுகும் பொக்கைவாய்களே நிறைந்துள்ளன” என்றார். மீண்டும் சிரிப்பு. ஒருவன் மூச்சிரைக்க ஓடிவந்து “பொருள்நாயகரே, அரசருக்குரிய தூபக்கலங்களில் ஒன்று குறைகிறது… உடனே” என்றான். பொருள்நாயகம் முக்தனிடம் “நீ செல்லும் வழியில் எதிரே வரும் அத்தனை பேரிடமும் தூபக்கலம் சென்றுவிட்டது என்று சொல்லிக்கொண்டே ஓடு… போ” என்றார். அவரைச்சூழ்ந்திருந்தவர்கள் பேரொலி எழுப்பி நகைத்தனர்.

காட்டுக்குள் செல்கையில் முக்தன் குங்கனைப்பற்றி எண்ணிக்கொண்டான். அவனை தீமையின் உருவென்றும் சூழ்ச்சியில் திளைப்பவன் என்றும்தான் அனைவரும் சொன்னார்கள். ஆனால் அந்தக் கோணத்தில் உருகும் பொன்னால் ஆன சிலை என்றிருந்தான். அது உருவின் அழகு மட்டும் அல்ல. இளவெயில் பட்டால் அனைவரும் அப்படி பேரழகு கொள்வதில்லை. அவர் ஒரு முனிவர், ஏதோ நோக்கத்துடன் இங்கு வந்து கலியுருக் கொண்டுள்ளார் என அவன் சொல்லிக்கொண்டான். ஆம், அல்லது அவர் ஒரு கந்தர்வர். அவனுக்கு ஏனோ கிரந்திகன் நினைவு வந்தது. அவனும் சூதனைப்போல் மாற்றுருக் கொண்டுவந்தவனாகவே தோன்றினான். ஆழ்ந்தும் உயர்ந்தும் சென்றவர்கள் உடலை பொருந்தா உருவென்று சூடியிருக்கிறார்களா என்ன?

அவன் ஒரு பெண் துள்ளித்துள்ளி ஓடுவதைக் கண்டான். “ஏய் நில்… யார் நீ?” என்றான். அவள் நின்று மிடுக்குடன் திரும்பி “நீ யார்?” என்றாள். “உனக்கு சொல்முறைமை தெரியாதா?” என்றான். “நீ முதலில் என்னிடம் பேசும் முறையைப் பேணிக்கொள்.” அவன் அவள் அரசகுடிப்பெண்ணோ என்று தயங்கினான். ஆனால் அல்ல என்றே உறுதியாகத் தோன்றியது. முதல் தோற்றங்கள் பெரும்பாலும் பிழையாவதில்லை. சேடியருக்கு மட்டுமே அமையும் தோள்கள் இவை. கன்னங்களில் உயர்குடியினருக்குரிய பளபளப்பு இல்லை. கண்களில் இயல்பான அச்சமின்மை இல்லை. “நீங்கள் யார்?” என்றான். “நான் அரசியின் அணுக்கப்பெண். என் பெயர் சுபாஷிணி. உனக்கு என்ன வேண்டும்?”

அவன் புன்னகையுடன் அப்படியா என உள்ளூர எண்ணிக்கொண்டான். “வணங்குகிறேன், சுபாஷிணியாரே. தாங்கள் இங்கே இப்படி மான்போல தாவுவது ஏன்?” என்றான். அவள் நாணத்துடன் புன்னகைத்து “வெறுமே” என்றாள். “வெறுமே என்றால்?” என அவன் அவள் விழிகளுக்குள் நோக்கினான். “இப்படியே…” என்றபின் அவள் நோக்கை விலக்கிக்கொண்டாள். “இப்படி தாவுவார்கள் என கவிதைகளில் கேட்டீர்கள் இல்லையா?” அவள் “இல்லை” என முகம் சிவந்தாள்.

அவள் நாணியது அவனை ஆண் என ஆக்க “நீங்கள் அந்த சிற்றாடையை விரித்துத் தாவுகையில் தோகைமயில் எனத் தோன்றுகிறீர்கள்” என்றான். அவள் அவனை நீரில் மீனெழுவதுபோன்ற விழியசைவால் நோக்கிவிட்டு “இப்படி நீங்கள் என்னிடம் சொன்னீர்கள் என்பதை அரசியிடம் சொல்லட்டுமா?” என்றாள். “அய்யோ” என்று அவன் மெய்யாகவே பதற அவள் சிரித்தாள். அவன் ஆறுதல் கொண்டு “அஞ்சிவிட்டேன்” என்றான். அவள் “சூதர்களிடம் எதையாவது கேட்டு அதை அப்படியே பெண்களிடம் சொல்லிவிடுவது, என்ன?” என்றாள். “நான் இதுவரை பெண்களிடம் பேசியதே இல்லை” என்றான். “பெண்களிடமா?” என்றாள். “அதாவது, உங்களைப்போன்ற பெண்களிடம்” என்றான். அவள் விழிசரித்து “பேசும்போது இதைச் சொல்லலாம் என தெரிந்து எடுத்து வைத்திருந்தீர்களா?” என்றாள்.

அவன் சிரித்தபின் “முதலில் பார்த்தபோது இப்படி பேசக்கூடியவர் நீங்கள் என தோன்றவில்லை” என்றான். “ஓ, பார்த்ததுமே பெண்களை மதிப்பிட்டுவிடுவீர்கள் அல்லவா?” என்றாள். “இல்லை, அம்மணி. விடுங்கள். எனக்கு பேசத் தெரியவில்லை. போதுமா?” அவள் சிரித்தபின் “நான் செல்லவேண்டும். அரசியின் தேவியுடன் வந்தேன்” என்றாள். “சைரந்திரி என்றார்களே, அவர்களுடனா?” என்றான். “ஆம், நான் வருகிறேன்” என்றாள். “இப்படி காட்டில் சுற்றி அலையக்கூடாது. அதைச் சொல்லவே அழைத்தேன்” என்றான். அவள் அருகிருந்த கொடியின் நுனியைப் பற்றியபடி “ஏன்?” என்றாள்.

“இன்று தங்களைப்போன்ற பெண்கள் இங்கே உலவக்கூடாது, அறிவீர்களா?” என்றான். அவள் “ஏன்?” என்றாள். புருவங்கள் சுளிக்க அவள் முகம் குழந்தையுடையதாகியது. “இன்றிரவு இங்கே விண்ணிலிருந்து கந்தர்வர்களும் கின்னரர்களும் வித்யாதரர்களும் இறங்கி வருவார்கள். அரசகுடியினர் அவர்களுடன்தான் கானாடுவார்கள்.” அவள் அவனை பொருள்விளங்கா விழிகளுடன் நோக்கி “மெய்யாகவா?” என்றாள். பேச்சில் துடுக்கு இருந்தாலும் அவள் சற்று அறிவுகுறைவானவள் என அவன் எண்ணிக்கொண்டான். ஆனால் அவ்வெண்ணம் அவளை மேலும் இனியவளாகவே உணரச்செய்தது.

“நீங்கள் கேட்டதே இல்லையா?” என்றான் . “சொன்னார்கள்…” என அவள் இழுத்தாள். “மேலே நிலவு எழுந்ததும் அவர்கள் முகில்களிலிருந்து சிலந்திவலைபோன்ற மெல்லிய ஒளிச்சரடு வழியாக வழுக்கி இறங்கி வருவார்கள். கந்தர்வர்கள் பொன்வண்டுகளாகவும் கின்னரர் தும்பிகளாகவும் வித்யாதரர் வண்ணத்துப்பூச்சிகளாகவும் மாறி இக்காட்டுக்குள் பறப்பார்கள். அழகிய பெண்களைக் கண்டால் கந்தர்வர்கள் மானுட உருவம் கொள்வார்கள்.”

அவள் “அய்யோ” என்றாள். “அஞ்சவேண்டியதில்லை. அவர்கள் அப்பெண்ணுக்கு மிகமிகப் பிடித்த ஒருவரின் தோற்றம் கொள்வார்கள்.” அவள் “அவர்களுக்குத் தெரியுமோ?” என்றாள். “ஆம், உண்மையில் நமக்குத் தெரியாததேகூட அவர்களுக்குத் தெரியும். நாம் கனவில் விரும்புவதை அவர்கள் நனவில் காட்டுவார்கள்.” அவள் தலைசரித்து “மெய்யா?” என்றாள். “ஆம், கந்தர்வர்களால் அடையப்பட்ட பெண் கனவில் இருப்பதுபோல இங்கிருப்பாள். அதன்பின் அவள் உள்ளம் பிறழ்ந்துவிடும். கந்தர்வனை மட்டுமே எண்ணிக்கொண்டிருப்பாள். பிற ஆண்களை பொருட்படுத்த மாட்டாள்.”

“கந்தர்வன்?” என்றாள். “அவர்கள் வேறு பெண்களைத் தேடிச் சென்றுவிடுவார்கள்.” அவள் இமைசரித்து மெல்ல தளர்ந்தாள். சிறிய முலைகள் எழுந்தமைந்தன. பின்னர் இமைவிரிய முகத்தை சற்று தூக்கி “அப்படியென்றால் அரசகுடிப் பெண்கள்?” என்றாள். “அவர்களுக்கு அரசர் என்ற காப்பு உள்ளது… அவர்கள் கந்தர்வனுடன் களியாடிவிட்டு அப்படியே மறந்து இங்கிருந்து சென்றுவிடுவார்கள். இது ஒரு கனவாக அவர்களிடம் எஞ்சும். எப்போதாவது துயிலில் எழுந்துவரும். மற்றவர்கள் கனவிலிருந்து மீளமுடியாது.”

அவள் பெருமூச்சுவிட்டாள். அவள் கன்னத்தில் சிறிய ஒரு பரு சிவந்து திரண்டிருந்தது. அவள் முகம் கொள்ளும் அத்தனை உணர்ச்சிகளும் அப்புள்ளியில் மையம் கொண்டன. வாய்நீர் விழுங்கியபோது மெலிந்த நீள்கழுத்து மெல்ல அசைந்தது. தலைதிருப்பி காட்டை பார்த்தாள். “ஆகவே தனியாகச் செல்லவேண்டாம்…” என்றான். அவள் அடைத்த குரலை தீட்டியபின் “ஆண்களுக்கு?” என்றாள். “என்ன?” என்றான். “ஆண்களுக்கு கந்தர்வ கன்னிகள் வருவார்களா?” அவன் “ஆம்” என்றான். “அப்படியென்றால் நீங்கள்?” என்றாள். “என்ன?” என்றான்.

அவள் சிரித்து “அப்படியென்றால் உங்களுக்கு அச்சமில்லையா?” என்றாள். “என்ன அச்சம்? கந்தர்வ கன்னி வந்தால் நல்லதுதானே?” என்றான். “ஏன்?” என்றாள். “வெளியே என்ன வாழ்க்கை இருக்கிறது காவலனுக்கு? பொருளற்ற நாளிரவுகள்தானே? அதில் சென்று தேய்ந்து அழிவதற்கு இங்கே கனவில் சுடர்ந்து மறைவது மேல்தானே?” அவள் கன்னங்களில் நீள்வாட்டில் குழி விழுந்தது. “ஆம்” என்றபின் “எனக்கும் அப்படித்தான்” என்றாள். “என்ன?” என்றான். “கந்தர்வர்கள் வரட்டுமே” என்றபின் “அரசியின் குரல் கேட்கிறது!” என்று கூறி விரைந்து புதர்களுக்குள் சென்று மறைந்தாள்.

அவள் சென்றபோது அசைந்த புதரிலைகளை நோக்கியபடி அவன் புன்னகையுடன் சற்றுநேரம் நின்றான். செறிந்த மரங்களுக்குள் இருள் நிறைந்திருந்தது. தொலைவில் எங்கோ இறுதிச் செங்கதிர் ஒரு மரம் விழுந்த இடைவெளி வழியாக சரிந்து விழுந்திருக்க அங்கிருந்த அத்தனை இலைப்பரப்புகளும் செந்நிறம் வழிய அசைந்தன. அவன் நோக்கி நிற்கவே அது திரிதாழ்த்தப்பட்ட அகலின் ஒளி அவிவதுபோல மறைந்தது. அது மறைந்த அக்கணம் இலைகளுக்குள் இருந்த பல பறவைகள் ஒரே ஒலியாக கலைந்தொலித்தன. குரங்கு ஒன்று கிளைவழியாகத் தாவி மேலே செல்ல மான்கூட்டம் ஒன்று செவியடித்து கனைப்பொலி எழுப்பியது. அவையனைத்தும் அந்தப் பொன்னொளியில் மயங்கி நின்றிருந்தன என்று தோன்றியது.

அவன் அந்நாளின் கதிரமைவைக் காண விரும்பினான். அருகே நின்றிருந்த நெடிய மரத்தில் அடிமரம் பற்றி தொற்றி மேலேறிச் சென்றான். முதல் இலைத்தழைப்புத் தொகையைக் கடந்ததும் தன்னைச் சூழ்ந்து விழியறிந்ததோ உளமுணர்ந்ததோ என மயங்கச் செய்யும் ஒரு மென்மிளிர்வு பரவியிருப்பதைக் கண்டான். இலைகள் ஒன்றுடனொன்று இணைந்து ஒற்றைப்பரப்பெனத் தெரிய சிலந்தியிழைகள் மட்டும் செந்நிறக் கம்பிபோல ஒளிவிட்டன. அடுத்த இலைப்பரப்பை அடைந்ததும் தொலைவுத் தீயின் எதிரொளிப்பு என இலைநுனிகள் கூர்கொண்டிருப்பதை, மரவளைவுகள் சிவந்திருப்பதை கண்டான். மேலும் கடந்து நுனிக்கிளையை அடைந்தபோது கண்கள் கூச வானம் வந்து நிறைந்தது.

கிளைக்கவர்மேல் காலிட்டு அமர்ந்தபடி கண்ணீர் வழிந்த கண்களை கைகளால் மூடிக்கொண்டான். மெல்ல திறந்தபோது மேற்குப்புறம் சிவந்து எரிய கிழக்கில் கருகியணைந்த முகில்குவைகள் பரந்த வானம் தலைக்குமேல் வளைந்து நின்றிருக்கக் கண்டான். அதில் நீந்திச் சென்றுகொண்டிருந்தன நாரைகள். வானத்தின் அலகின்மை அவை ஒரே புள்ளியில் சிறகசைப்பதாக எண்ணச்செய்தது. அப்போதும் தாவித்தாவி பூச்சிகளை வேட்டையாடின எய்பறவைகள். காட்டுக்கு அப்பால் தொலைவில் எழும் இடியோசை என முரசுகள் முழங்கின. அறியா பறவைகள்போல கொம்புகள் அழைத்தன.

தொலைவில் மேலைவளைவில் சூரியவட்டத்தின் மேல்விளிம்பு தெரிந்தது. அனலும் கரிக்குவை நடுவே தழல் என. திரும்பி நிலவை பார்த்தான். ஒளியற்ற முழுவட்டம் வானில் மிகவும் மேலேறியிருந்தது. அதைச் சூழ்ந்திருந்த முகில்கள் இருண்டிருந்தமையால்தான் வானில் அதைக் காணவே முடிந்தது. அதைச் சூழ்ந்திருந்த முகில்கள் அதை அறியவே இல்லை என எண்ணிக்கொண்டான். நிலவுக்குள் தெரிந்த கருநிழல் அதன் ஓட்டைகள் வழியாகத் தெரியும் அப்பால் இருக்கும் வானெமெனத் தோன்றியது. நிலவை மறித்தபடி வெளவால்கூட்டம் ஒன்று சுழன்று பறந்துகொண்டிருந்தது.

ஒவ்வொன்றும் மெல்ல அடங்கி அமைதிநோக்கிச் செல்வதாகத் தோன்றியது. ஆனால் கூர்ந்தபோது ஓசைகள் பெருகிக்கொண்டே இருப்பதாகவும் பட்டது. அவன் பெருமூச்சுவிட்டுக்கொண்டான். ஏன் இந்த மரத்தின்மேல் ஏறினேன்? இந்தக் காடு நான் நோக்கிச் சலித்த ஒன்று. ஒருமுறைகூட காவல்மாடத்தின்மேல் நின்று நிலவை முழுமையாக நோக்கியதில்லை. அந்தியெழுகையில் படைஎடுக்கும் கொசுத்திரளைப் பற்றிய எச்சரிக்கையே எப்போதும் எண்ணத்திலிருக்கும். காவல்மாடத்தில் அந்திக்கு முன்னரே வேப்பிலையிட்ட தூபச்சட்டி புகையத் தொடங்கிவிடவேண்டும். கொசுக்கள் வந்துவிட்டால் புகை காற்றில் விலகும்போதே வந்து படர்ந்துவிடும். இன்று எனக்கு ஏதோ ஆகிவிட்டது. அவன் புன்னகைத்தான். அங்கே எவரேனும் அதைப் பார்க்கிறார்களா என்பதுபோலச் சுற்றிலும் பார்த்துக்கொண்டான்.

கதிர்வட்டம் மெல்ல அமிழ்ந்தது. அங்கே நீர் அலையடிப்பதுபோலவும் அது அசைந்தசைந்து மூழ்குவதுபோலவும் தோன்றியது. எக்கணம் அது மறையும் என எண்ணியிருந்தபோது அது மறைந்தது. வில்லில் இருந்து அம்பு என ஒரு பறவை விண்ணில் செங்குத்தாக எழுந்து சுழன்று ரீக் என ஓசையிட்டது. தொடர்ந்து பல்வேறு பறவைகளின் ஒலி எழுந்தது. ஓசைகள் பெருகிச்செல்வதைப்போல தோன்றிக்கொண்டிருந்தபோதே அவை அணையலாயின. முகில்களின் சிவப்பு அழுத்திப் பிழியப்பட்டதுபோல வழிந்து மறைய அவை கருமைகொண்டன. விழிநோக்கு மறைவதைப்போல தோன்றியது. குனிந்து இருண்ட காட்டை நோக்கிவிட்டு மேலே பார்த்தபோது வானில் ஒளி தெரிந்தது.

இறங்கிவிடலாம் என எண்ணி அவன் எழுந்தான். தன் நிழல் முன்னால் இலைத்தழைப்பின் திரையில் நீண்டுசரிந்திருப்பதைக் கண்டு வியந்து திரும்பி நோக்கினான். நிலவு வெண்ணிற ஒளி கொண்டிருந்தது. அதன் விளிம்புவட்டம் மெல்ல அதிர்வதாகவும் அது முகில்களை கூர்வளைவால் கிழித்தபடி எழுவதாகவும் தோன்றியது. இலைகள் அனைத்தும் தளிர்களாகிவிட்டன என விழிமயக்கம் கொண்டான். மரக்கிளைகளின் பட்டைப்பொருக்குகள் முழுத்து எழுந்திருந்தன. கிளைபற்றி இறங்குகையில் காட்டுக்குள் நிலவொளியின் வெண்குழல்கள் இறங்கியிருப்பதைக் கண்டான்.

தொலைவில் நிலவிரவின் தொடக்கத்தை அறிவித்து கொம்புகளும் முழவுகளும் முழக்கமிட்டு ஓய்ந்தன. அவன் உள்ளம் திடுக்கிட்டது. அவ்வறிவிப்புக்குப்பின் அரசகுலத்தாரும் சேடியரும் அரசக் கணையாழி அளிக்கப்பட்ட அணுக்கரும் அன்றி காட்டுக்குள் இருக்கும் எவருக்கும் இறப்புத்தண்டனை ஆணையிடப்பட்டுள்ளது. மேலே இருந்தபோது கேட்ட முரசொலிகளும் கொம்போசைகளும் அதைத்தான் ஆணையிட்டனபோலும். கீழே இறங்கிச் செல்வதென்பது சாவை எதிர்கொள்வது. அவன் கிளையிலேயே அமர்ந்தான். இவ்விரவை இக்கிளையில் கழிக்கவேண்டியதுதான்.

நிலவு ஒளிகொண்டு வருகிறது, மேலே சென்று தழைப்புக்குள் பதுங்கிக்கொண்டால் மட்டுமே விழிகளிலிருந்து ஒழிய முடியும். நிலவிரவில் பந்தங்களோ விளக்குகளோ ஏற்றமாட்டார்கள். ஆனால் குரங்குகளும் பறவைகளும் காட்டிக்கொடுத்துவிடக்கூடாது. அவன் மேலேறி மரக்கிளையின் நுனிக்குச் சென்று நன்றாக ஒளிந்துகொண்டான். கொற்றவையின் ஆலயத்தில் ஆயிரம்விளக்கு வழிபாட்டின்போது ஏற்றப்படும் அகல்கள் என அவனைச் சூழ்ந்து ஒவ்வொரு இலையாக சுடர்கொண்டபடியே வந்தது.

தொடர்புடைய பதிவுகள்

சிறிய மனங்கள்

$
0
0

a

ஜெ,

உங்கள் இரு கட்டுரைகளைப்பற்றி முகநூலில் வந்த இரு எதிர்வினைகள். மன்னிக்கவும் உங்களை இந்த எல்லைக்கு இழுக்கவில்லை. ஆனால் நீங்கள் எங்கோ ஒருபக்கம் கடுமையான உழைப்புடன் , சொந்த அவதானிப்புகளுடன் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். மறுபக்கம் அது இப்படித்தான் வாசிக்கப்படுகிறது. இதை நான் உங்கள் கவனத்திற்குக்கொண்டுவருவது இதனால்தான்

ரவிச்சந்திரன்

*

இந்த நபர் எவ்வளவு அற்பன் என்பதற்கு இந்தச் சொல்லாட்சி ஒரு சான்று. ஏலவே ‘இடதுசாரி’ என வழங்கிவரும் ஒன்று ஏன் ‘இடங்கை’ என ஆகிறது? இனி பொச்சுக் கழுவப் பயன்படும் ‘பீச்சாங்கை’ இலக்கியம் என இந்த வெறியன் எழுதக் கூடும். பீ கழுவுவது இழிவு அன்றோ? இந்த ஆளின் முகத்தில் இடங்கையில் ஒரு கூடை பீயை அள்ளிப் பூச வேண்டும் போல இருக்கிறது. எத்தனை வெறி கொண்ட மனம்!

யமுனா ராஜேந்திரன்

*

கட்டுரை சிறப்பாக இருக்கிறது. புத்தகத்தை படிக்கத் தூண்டுகிறார் ஜெயமோகன்.

அதே நேரத்தில் தனது சூட்சும கிள்ளுதலையும் செய்கிறார்.

1ஒன்று, ஸ்டாலின் ராஜாங்கம் ஒரு தலித் எழுத்தாளர் என நிறுவுகிறார் .

பிராமணர்களுக்காகவும், இந்து அரசுக்காகவும் பரிந்து பேசும் ஜெயமோகன் ஒரு பொது எழத்தாளராக இருக்கும்போது இந்துக்கள் இடையில் இருக்கும் மனித உரிமை மீறல் என்னும் முரண்பாட்டை பேசுபவர் தலித் எழுத்தாளராகி விடுகிறார். நுட்பமான வகைபடுத்தல் இது.

இரண்டாவது, அம்பேத்கரை பாமரன்கள் இழித்துப் பேசுவதைப்போல ” அம்பேத்கார்” என்று குறிப்பிட்டு சாதி இந்துக்களுக்கு தனது நுட்ப எள்ளலை ரசிக்கத் தருகிறார்.

மூன்றாவது, அம்பேத்கரியலின் தத்துவார்த்த முன்னெடுப்பக்களின் போதெல்லாம் அவர்களின் செயல்களை காந்தியின் சிறுபிள்ளைத் தனங்களோடு பொருத்திப் பார்த்து அவர்களை சாதீயத் தனங்களாக சுருக்கி சித்தரிக்கும் நரித்தன அரசியல் செய்வது.

இவை மூன்றையும்தான் ஜெயமோகன் தனக்கே உரிய பாணியில் இந்தக் கட்டுரையில் செய்திருக்கிறார்.

மா. தொல்காப்பியன்

*

அன்புள்ள ரவி,

இடங்கை வலங்கைப்பிரிவினை என்பது தமிழகத்தில் 10 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய சமூகப் பிரிவுமுறை. அதில் இடங்கைப்பிரிவு பொதுவாக அடித்தள மக்களை, உழைப்பாளிகளை குறிக்கிறது.

ஸ்டாலின் ராஜாங்கத்தை ஐயமே இன்றி இந்த தலைமுறையின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் என்று ஸ்டாலின் ராஜாங்கத்தை இந்நூலை மட்டுமே ஆதாரமாக்கிச் சொல்ல முடியும்.என்றுதான் கட்டுரை சொல்கிறது

இவை மிகச்சிறிய மனங்கள். சிறியவற்றில் திளைப்பவை.காழ்ப்பை உண்டு காழ்ப்பில் நெளிந்து அதிலேயே மடிபவை.எளிய வரலாற்றைக்கூட இவற்றுக்கு எவரும் புரியவைத்துவிடமுடியாது

ஜெ

***

இடங்கை இலக்கியம்
நம் நாயகர்களின் கதைகள்

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சீ முத்துசாமி நேர்காணல் -நவீன்

$
0
0

si muthu

2017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் மலேசியப்படைப்பாளி சீ. முத்துசாமியின் நேர்காணல். நவீன் எடுத்தது.

சமீபத்தில் இலக்கியவாதிகளிடம் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த நேர்காணல் என்று இதைத்தான் சொல்வேன். அந்த இலக்கியச்சூழலை, அதன் வரலாற்றை, அவ்விலக்கியவாதியின் பங்களிப்பையும் குறைகளையும் நன்கு உணர்ந்து எடுக்கப்பட்ட நேர்காணல் இது

“எளிய வாசிப்புத்தளத்தைத் திருப்திப்படுத்த நகர்த்தப்படும் எழுத்து நீர்த்துப்போவதை தவிர்க்கவியலாது” – சீ.முத்துசாமி

================================================

சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது
—————————————————————————————————
சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன்
சீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்
சீ முத்துசாமியின் மண்புழுக்கள் –ரெ.கார்த்திகேசு
சீ முத்துசாமியின் மொழி கே.பாலமுருகன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16724 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>