Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16891 articles
Browse latest View live

அசோகமித்திரனின் இருநாவல்கள்- சுபஸ்ரீ

$
0
0

asokamithran

அசோகமித்திரனின் சில படைப்புகளை மீள் வாசிப்பு செய்தும், தவறவிட்ட பல நாவல்களைப் புதிதாக வாசித்தும் அவரது எழுத்துலகை அணுகிக் கொண்டிருக்கிறேன். அவ்வகையில் சமீபத்தில் வாசித்த இரண்டு நாவல்கள் ஏற்படுத்திய அலைகளைக் கீழே தொகுத்திருக்கிறேன். நீங்கள் அசோகமித்திரன் குறித்து எழுதிய பல கட்டுரைகளையும் வாசித்தும் இருக்கிறேன். அதன் தாக்கம் இருக்கலாம், இது  விமர்சனமாகவோ நூலாய்வாகவோ  தெரியவில்லை. இது என்னில் அவர் எழுத்து ஏற்படுத்தும் அலைகளின் பிரதிபலிப்பு முயற்சியே, அல்லது இவ்விதமாக நான் இந்த எழுத்தைப் புரிந்து கொள்கிறேன் எனத் தொகுத்துக் கொள்கிறேன்.

கரைந்த நிழல்கள், மானசரோவர் இரண்டு நாவல்களுமே திரைத் துறையைக் களமாகக் கொண்டவை.
எனில் அது மட்டுமே இதன் பொதுமைத் தன்மை. அந்தக் களத்தில் இரு வேறு வகையான உறவுத் தளங்களை அசோகமித்திரன் வரைந்தெடுக்கிறார்.

karai

கரைந்த நிழல்கள்

அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் வாசித்துச் செல்லும் போது உருவாகி வரும் உளச்சித்திரம் இது. பயணத்தில் எதிர்திக்கிலிருந்து அணுகி மறையும் காட்சிகள் போல இக்கதையில் நிகழும் சம்பவங்கள் கண்முன் உயிர்த்து, நிகழ்ந்து, கடந்து செல்கின்றன. முன் பின் காரணிகளின்றி துண்டுக்காட்சிகள் போலத் தோன்றி மறைகின்றன, எனில் வெவ்வேறு கதை மாந்தர்களின் வழி கதை தொடர்கிறது. ஒரு நெடும் பயணத்தின் போது சில நிமிடத்துளிகளில் ஓடி மறையும் காட்சிகளே அகவயமாய் பயணம் எனும் ஒட்டுமொத்த நினைவுகளாய் நம் மனதில் பதிகின்றன. அதுபோன்ற அனுபவம் இது. முற்றுப்புள்ளியிலல்ல, தொக்கி நிற்கும் வார்த்தைகளிலேயே மொழி பயணிக்கிறது.

திருவிழாக்களுக்கு முன்னர் மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றியுள்ள ஆடி வீதிகளை, பிரகாரங்களை நிறைக்கும் பெரும் கோலங்களைப் பல பெண்கள் கூட்டாக வரைவார்கள். நூற்றுக்கணக்கான ஊடுவரிசைப் புள்ளிகளை மிக நேர்த்தியாகப் பல திசைகளிலிருந்து பல கைகள் சுழித்தும் வளைத்தும் அணுகிப் பெருந்தேரோ கொடிப் பந்தல்களோ ஊஞ்சலோ நம் கண்முன் எழும். அதுபோல திரைத்துறையெனும் பல கரங்கள் சேர்ந்தெழுதும் சித்திரத்தின் உயிர்விசையே கதையின் சரடு. பலர் தனித்தனியே இயங்கினாலும் ஒன்றென விரியும் கோலத்தை சிறு விரல்களின் இயக்கங்களைக் காட்டுவதன் வழியே இவரால் உணர்த்திவிட முடிகிறது.

ஒளியின் மீது பயணிக்கும் திரைத்துறை நிழல்களால் ஆனது. நிழல்கள் கரைவது முழு இருளிலும், ஒளி வெள்ளத்திலும். அவ்விருளையும் ஒளியையும் அங்குமிங்குமாகக் காட்டுகிறார்.

ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் கதையொன்றின் நடுப்பக்கம் போல, அன்றாடத்தின் அவசரகதியில் புரொடக்ஷன் மேனேஜர் நடராஜனின் பார்வையில் கதை தொடங்குகிறது. கதை அங்கு தொடங்கவில்லை, ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் நாம் அங்கு கதவைத் திறந்து நுழைகிறோம்.

டைரக்டர் ஜகந்நாத் ராவ், இதர ஓட்டுநர்கள், நடன இயக்குநர், துணை நடனப் பெண்கள் என விரைந்து திரையில் தேர்ந்த ஓவியனின் கையசைவுகளில் உருவாகும் கோட்டுருவங்களென சித்திரம் உருவாகிறது.

அச்சில் வேகமாக சுழலும் இப்புவி தனது ஓட்டத்தை ஒருக்கால் நிறுத்தினால் கண்ணுக்குப் புலனாகாத எத்தனையோ விசைகளால் புவிசார் அனைத்தும் திக்கெங்கும் சிதறிப் போக நேரிடலாம். அதுபோல பலருக்கும் வீடாக இருக்கும் ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், ஒரு திரைப்படம் இறுதிக் கட்டத்தில் நின்று போய் வீழத் தொடங்க, அது சார்ந்த பல்வேறு நிலையிலுள்ள பல கலைஞர்கள் திசைக்கொருவராக சுழற்றி எறியப்படுகிறார்கள்.

கதையின் தொடக்கத்தில் புரொடஷன் மேனேஜர் நடராஜன் அலையின் மீதிருந்து கதை முடிவில் ஆழத்தில் எங்கோ தொலைந்து போகிறான். சம்பத் கதையின் முதற்பகுதியில் சாதாரணமாக வருகிறான். வெளியிலிருந்து  இந்த பளபளப்பான இந்திரபுரியைக் கனவுகாணும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தனது உறவினர்களை படப்பிடிப்பு காண அழைத்து வருகிறான். இன்று வெற்றிப் படங்களில் ஏறி நின்று வாழ்வை சுவைத்துக் கொண்டிருக்கிறான். புகழின், அதிகாரத்தின் உயரத்தில் நின்று நடிகையை வீடு புகுந்து மிரட்டக்கூடிய தயாரிப்பாளர் ரெட்டியார் அதே நடிகையின் ஒத்துழைப்பில்லாமல் படம் நின்று போய்த் தலைமறைவாகிறார்.எந்த விநாடியும் கரணம் தப்பி விடக்கூடிய உச்சத்தில் நின்று கொண்டிருக்கும் தயாரிப்பாளர் ராம ஐயங்காரும், திரைப்படத்துறையால் முற்றும் கைவிடப்பட்ட நடராஜனும், நொடிந்து போகும் ராஜ்கோபாலுமாக பல சாத்தியங்கள் விரவியதே வாழ்க்கை.

இது திரைத்துறையின் கதை மட்டுமல்ல. திரைத்துறை எனும் தான் நன்கறிந்த வரைதிறையில் இம்மானுட வாழ்வை வரைந்தெடுக்கிறார் அசோகமித்திரன். முன்பின் தொடர்பற்றது போன்ற இவ்வாழ்வின் நிகழ்வுகள் மிகக்கச்சிதமான காரண காரியங்களாகப் பிண்ணிப் பிணைந்து, நிகழக்கூடிய பல்லாயிரம் சாத்தியக்கூறுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து முன்னகர்வதில் உள்ள அர்த்தத்தையும் வியர்த்தத்தையும் வெளிப்படுத்தும் சித்திரம். அதன் தரிசனம் என அவர் அடைவதென்ன எனில் முதற்பார்வைக்கு ஒரு முடிவில்லாத வெறுமை தெரிகிறது. அதன் பிறகு கேரம் விளையாட்டுப் பலகையின் மையத்தில் அடுக்கி வைக்கப்பட்ட காய்கள் சுண்டப்பட்ட கணத்தின் அடுத்த விநாடி போல ஒரு சித்திரம் எழுகிறது. அடுத்த சுண்டுதல் எந்தக் காயை நகர்த்தப்போகிறது என ஆடும் கரங்களும் முன் நொடியில் அறிவதில்லை. அது ஒரு முடிவை நோக்கிய தெரிவேயன்றி வேறெதுவும் இல்லை. ‘இது இவ்வாறு இங்கு நிகழ்கிறது’ என்பதே இவர் எழுத்து சொல்லும் காட்சி. சாட்சியாயிருப்பதைத் தவிர மானுடன் வாழ்விலும் செய்யக்கூடவதென்ன? களக்காய்களின் அனைத்து நிகழ்தகவுகளையும் நிகழ்த்திப் பார்த்தாலும் அடுத்தாக தெரிவு செய்வதற்கு ஒரு வாய்ப்பே இருக்கிறது, அதுவும் வெளிக்கரங்களால் நிகழ்த்தப்படுகிறது எனும் போது உளம் ஒரு விடுதலையை உணர்கிறது.

ஏற்கனவே உயிர்ப்போடு சுழன்று கொண்டிருக்கும் புவியிலேயே உயிர் தன் முதல் மூச்சை சுவாசித்து கால்பதிக்கிறது. அவ்வுயிரின் இறுதி சுவாசத்தின் பிறகும் கருணேயேயின்றியோ, அல்லது மிகு கருணையாலோ, பூமி தன் ஓட்டத்தைத் தொடர்கிறது. நாம் வாழும் காலம் என்பது ஒரு துண்டுக் காட்சி, எனில் மிகப் பெரும் கண்ணியில் தனது பங்கை ஆற்றிவிட்டு ஒவ்வொரு மனிதனும் வெளியேறுகிறான்.

இக்கதையில், நெருக்கடிகளில் மனித மனம் கொள்ளும் நடிப்புகளில் சிலவற்றை அசோகமித்திரன் காட்டுகிறார்.
பிரபல தயாரிப்பாளர் ரெட்டியார் இறங்குமுகத்தில் இருக்கிறார். வங்கியிலும் வெளியிலும் அவரது சொல் செலவாகாத நிலை. அவரது வீடு தனது உச்சகட்ட மேன்மைகளை இழந்தவடுக்களோடு இருக்கிறது, இருப்பினும் எதற்கும் நிதானமிழக்காத மகன் இருக்கிறான். அவரை அது மேலும் அலைக்கழிக்கிறது. இது மிக நுண்ணிய சித்திரம். நமது தள்ளாட்டத்தின் போது அதிநிதானமாக அருகே நிற்கும் ஒருவன் நம்மை மேலும் நிலைகுலையச் செய்வதுண்டு. ஏதோ விதத்தில் அது நமது தடுமாற்றத்தை ஏளனத்துக்குள்ளாக்குகிறது என்பதால் இருக்கலாம்.

அதே நேரம், உதவி இயக்குனர் ராஜ்கோபாலுக்கு படம் நின்று போன பிறகு கையில் பணி ஏதுமில்லை, திருமணமான அண்ணனோடு வாழும் வீட்டில் மரியாதை இல்லை, இந்நிலையில் அம்மா அவனது திருமணத்துக்குப் பெண் பார்க்கிறாள். பலரிடம் சிபாரிசுக்காக சென்று அவமானங்களை அடைகிறான். ராஜ்கோபால் பசியோடு அலைகிறான். போதையில் நண்பர்களைத் திட்டுகிறான். வீட்டை அடைந்து அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுகிறான். அவன் அலைந்து திரிந்து அடைந்த களைப்பைக் காட்டிலும், வீட்டில் அடைந்து கிடந்து உழைக்கும் அவள் களைப்பு அதிகமாகத் தோன்றுகிறது, எனில் அவள் நிலை சிதறாமல் இருக்கிறாள்.

ரெட்டியாரின் மகனின் நிதானம் போல இதுவும் வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக்கொள்பவர்களின் நிதானம். சில பொழுதுகளில் அந்த நிலைகுலையாமை நம்மை ஆறுதல் படுத்தவும் கூடும். ஒரு வேளை தன்னை விட இளைய சந்ததியிடம் காணும் நிலைகுலையாமை நம்மை சலனப்படுத்துவதாகவும், தாய் அல்லது மூத்தோரிடம் நாம் காணும் நிதானம் அமைதியளிப்பதாகவும் இருக்கிறதோ!

கதை நெடுகிலும், நெருக்கடிகளிலும் பிழைப்புக்காகவும் மனிதர்களும் காட்டும் சிறுமைகளின் சுயநலத்தின் இயலாமையின் தெறிப்புகள்.விசுவநாத சாஸ்திரி தயாரிப்பாளர் ரெட்டியாரிடம் தன் தம்பிக்காக சிபாரிசுக்கு வருகிறார். அதற்காக தேவேந்திரன் என்றெல்லாம் ரெட்டியாரைப் புகழ்கிறார். ரெட்டியார் இறங்குமுகத்தில் இருக்கிறார், எனில் அதை அவர் ஒப்புக்கொள்வதாயில்லை, முதற்கட்ட புறக்கணிப்புகளுக்குப் பிறகு தன்னை வந்து பார்க்கும்படி சாஸ்திரியிடம் சொல்கிறார். அது அவர் அகம் அறிந்த நிழலை முகம் காட்டாது மறைப்பதுதானே. கதையெங்கும் சிபாரிசுகளுக்கான காத்திருத்தல், பல விதங்களில் வருகிறது. அதன் பொருளின்மையும், இருந்தும் அதைத் தொடர்ந்து முயற்சிப்பவர்களும், எங்கேயோ நீளும் கை ஒன்றைப் பற்றி ஏறிவிடுபவர்களுமாகிய, ஏறும் தருவாயில் உதறிவிடுபவர்களுமாக ஒரு நெடுவரிசை.

 

வேலையில்லாத உதவி இயக்குனர் ராஜ்கோபால் பசியோடு உதவி எடிட்டர் சிட்டியைச் சென்று இன்னொரு இயக்குநர் ராம்சிங்கிடம் சிபாரிசுக்காகப் பார்க்கிறான். மற்றுமொரு சிபாரிசுக்கான காத்திருப்பு, ஏமாற்றம். அவன் முன்பு எண்ணாது செய்த ஒரு நுண்ணிய ஏளனத்துக்காக அவமதிக்கப்படுகிறான்.

 

தன்னோடு வேலை பார்த்த சம்பத்தை அன்று புதிதாகத் தொடங்கிய ஜமால் பிக்சர்ஸில் பார்க்கிறான். தண்ணீர் கேட்கும் ராஜ்கோபாலுக்கு இடத்தை மட்டும் கைகாட்டிவிட்டு சம்பத் விரைகிறான். நின்று பேசினால் சிபாரிசுக்கு வந்துவிடுவானோ என்ற பதற்றமாக இருக்கலாம், அல்லது தனது புதிய வாய்ப்பை ராஜ்கோபால் அறிந்துவிடக்கூடாதென்பதாக இருக்கலாம். ஒரு கூரிய புறக்கணிப்பு, ஒரு சிறிய ஆனால் கூர்கொண்ட கத்தி. ராம்சிங்குக்காக காத்திருக்கையில் நடிகை ஜயசந்திரிகா ராஜ்கோபாலிடம் பேசுகிறாள். நிறைய மனிதர்கள் இருக்குமிடத்தில் அதிகம் லட்சியம் செய்ய வேண்டியிராதவரிடம் அசாதாரணக் கவனம் காட்டுவது அவளது இயல்பு என்கிறார். இது கவனம் செலுத்துவதுபோல செய்யும் நுண் அவமதிப்பு.

 

இதுபோன்ற சித்தரிப்புகள் நாம் தினமும் கண்டாலும் தவறவிட்டுவிடக்கூடிய நொடிகள்; எனில் மனதின் நுகரி அவற்றைத் தவறவிடாது முகர்ந்து சேர்த்துவைக்கும். அத்தகைய சிறு நொடிகளின் அதிர்வுகளிலேயே கதையை மீட்டிச் செல்ல அவருக்கு இயல்பாக இயல்கிறது.

இக்கதையில் கைவிடப்படும் புறக்கணிக்கப்படும் அனைவரும் எதிர்கொள்ளும் மனிதர்கள் அற்றநீர் குளத்து அறுநீர் பறவைகளா எனில் அதுவுமல்ல.தயாரிப்பாளர் ராம ஐயங்காரின் வாழ்க்கை, அனைத்தும் நிறைந்திருந்தும் வெறுமையான வீடு, விலகி நிற்கும் குடும்பம். மெல்ல மெல்ல முன்னேறி எந்நேரமும் சறுக்கக்கூடும் எனும் உச்சியின் தனிமை. கைவிடப்பட்ட படத்தை முழுமை செய்து வெளியிடும் முயற்சியில் இருக்கிறார். எத்தனையோ இக்கட்டுகளுக்கிடையே தன்னை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கும் மகனைச் சென்று பார்க்கிறார். குடித்து விட்டுத் தனிமையில் இருக்கும் மகனிடம் பேச முற்படுகிறார். ஒருவரையொருவர் அணுக முடியாத விலக்கம் நடுவில் நிற்கிறது, வார்த்தைகளால் காயப்படுத்திக்கொள்கிறார்கள். இறுதியாக தன்னை, தான் வாழ்க்கையில் அடைந்த அறிதலை அவன் முன் வைக்கிறார்.மற்ற கதைமாந்தர்களுக்கு தோல்வியால் விலகிடும் உறவுகள் எனில் ராம ஐயங்காருக்கு அவரது வெற்றியே அவரது குடும்பத்தை அவரை விட்டு விலகச் செய்கிறது.

எளிமையான சொற்களுக்கடியில் திறமையாக தன்னை மறைத்துக் கொள்ளும் இலக்கியவாதி அசோகமித்திரன்.
திரைத்துறையின் ஒளிவெள்ளத்தில் கரைந்து போன நிழல் வாழ்க்கையை சிறுவரிகளில் சொல்லி கடந்து செல்கிறார். வாசகன் கவனித்துவிட்டானா என்ற கவலை அவருக்கில்லை.

ஓரிடத்தில் ராஜ்கோபால் குழு நடனப் பெண்களோடு வேனில் ஏற்றிக் கொள்கிறான். ஆடுவதற்கு முன்பே வியர்வை நாற்றமெடுக்கும் பெண்கள். ‘ஒவ்வொருத்தியும் கோஷ்டி நடனப்பெண் என்ற நிலையிலிருந்து பிரபல நடிகை ஆவது வரை நாற்றத்தைத் தடுக்க முடியாது’ என்ற ஒற்றை வரியில் அந்தக் இருளின் மீது ஒளிக்கீற்று ஒன்றை ஊடுருவப் பாய்ச்சுகிறார்.

நின்று போன சந்திரா கிரியேஷன்ஸ் சாமான்கள் கிடக்கும் பூட்டிய அறையைத் திறந்து சிமெண்ட் மூட்டைகளை அடுக்குகிறார்கள். தூக்கியெறியப்படும் பழைய போட்டோ ஆல்பத்தையும் கிளாப் பலகையையும் சந்திரா க்ரியேஷன்ஸில் முன்பு வேலை பார்த்த முனுசாமி பிடுங்கிக் கொள்கிறான். ஏதோ ஒரு வகையில் நின்று போன படத்தில் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களுக்குள்ளும் அந்தப் படம் இன்னும் மிச்சமிருக்கிறது. திரைப்படம் என்பது அதில் பங்குபெறும் ஒவ்வொருவருக்கும் அவர்களது பணி எவ்வளவு சிறியதாயிருப்பினும் அவர்களது கலைப்படைப்பாகவே உணர்வதைக் காட்டும் ஒரு சிறு நிகழ்வு.

திரைத்துறையின் அங்கதங்களும் அபத்தங்களும் கூட கதையெங்கும் வருகிறது.உதாரணமாக செக்கோஸ்லோவாக்கியா நாட்டிலிருந்து வந்தவர்களை தென்னிந்திய வர்த்தக சபைத் தலைவர் வழக்கமான ‘டெம்ப்ளேட் வார்த்தைகளில்’ வரவேற்பது, இந்தியாவுக்கும் செக்கோஸ்லோவாக்கியாவுக்குமான ‘இரண்டாயிரம் ஆண்டு கலாசாரத் தொடர்பு’ குறித்து அபத்தமாகப் பேசுவது, தலைசிறந்த படம் என நற்சான்றிதழ் வாங்கிய படத்தை வெளியே எங்கும் போக முடியாத நிலையிலிருந்த செக்கோஸ்லோவாக்கியர்கள் பார்க்கிறார்கள் எனக் காட்டுவது என்று அந்த ஒரே பகுதியில் எத்தனை அங்கதங்கள்.

வாசித்து முடித்ததும் எழும் அகக்காட்சி, இக்கதை எங்கோ முன்னரும் நிகழ்ந்து கொண்டிருந்தது, இந்நாவல் முடிந்த பின்னரும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. இந்தப் நாவல் திறந்து காட்டும் சாளரம் வழியாக ஒரு துண்டு வாழ்க்கை வாசகனுக்குக் கண்ணில் படுகிறது. அந்தத் துளிகளில் ஒவ்வொன்றிலும் ஒரு துளி தரிசனம் இருக்கிறது.
வாழ்க்கை அவ்விதமே நிகழ்கிறது, தொகுத்து பெருந்தரிசனமாக ஆக்கிக் கொள்வது அனைவருக்கும் நிகழ்வதல்ல.

வானிலிருந்து தொடங்கி ஊற்றுமுகம் வெளிப்பட்டு நிலம்பல கடந்து கடல் சேர்ந்து வானேறும் ஒரு பெரு வளையமென ஆற்றைப் பார்ப்பது ஒரு பெருந்தரிசனப் பார்வை. துளிகளைத் துய்த்து அது ஒவ்வொன்றையும் நதியென உணர்வதும் ஒரு தரிசனம்தான். எனில்தான் ஏந்திச் செல்லப்படும் நதி துளிகளால் ஆனது எனும் பிரக்ஞையின்றியே நதியை அளைவதையே சாமானியனின் வாழ்வு அனுமதிக்கிறது. அதை சித்தரிக்கும் கதையாக கரைந்த நிழல்கள் இருக்கிறது.

manasarovar

மானசரோவர்

திரைத்துறையின் களத்தில் அமைந்தாலும் இது கோபால் சத்யன்குமார் என்ற இரு நண்பர்களுக்கிடையேயான உறவையும் அவர்களின் தேடல்களையும் பேசுகிறது. அவரது யதார்த்தவாத எழுத்துகளின் மத்தியில் ஒரு அறிவுகடந்த மறைஞானத் தேடல் கொண்ட மனிதனின் சித்தரிப்பு இந்நாவலை தனித்துக் காட்டுகிறது.

உண்மையில் அவர்களிடையே வரும் நட்பும் வழக்கமான ஒன்றல்ல. பம்பாய்த் திரை உலகின் மிகப் பெரும் திரை நட்சத்திரம் சத்யன் (திலிப்குமார் வாழ்க்கையை பிரதிபலிக்கக்கூடிய கதாபாத்திரம், கதையின் காலகட்டமும் அதுவே). தமிழ்த் திரைத்துறையின் மிக எளிதில் கடந்து போய்விடக்கூடிய திரைக்கதையாசிரியர் கோபால். எழுத்தாளனின் கனவுகளோடு தொடங்கி திரைக்கதை எழுதி எழுதி எழுத்தின் கனவுகளை ஆழப் புதைத்தவர்.

கோபால் அசோகமித்திரன் எழுதும் கீழ்தட்டுநடுத்தர வர்க்கத்தின் முகம். பொருளாதாரச் சிக்கல்கள், உள்ளமும் உடலும் சிதைவுற்ற மனைவி, இளம் வயதிலேயே குழந்தைகளை நோய்க்கு பறிகொடுத்த துயரம், புதிதாக மணமாகி சொல்லாத துயரோடு வளைய வரும் மகள் காமாட்சி, இவை அனைத்துக்கும் நடுவே டாக்டர் ஜிவாகோ படிக்கும் கோபால்.

திரைத்துறை வெளிச்சத்தின் உச்சத்தில் நிற்கும் சத்யன்குமார், பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் பெஷாவரிலிருந்து புலம்பெயர்ந்தவர். ரத்த உறவுகளைப் பிரிவினைக்குப் பிறகு அடையாளம் காண முடியாது தனிமையாகிப் போனவர், வீடு முழுக்க பல்வேறு மனிதர்கள் ஒட்டுண்ணிகளாக வாழ இடம்கொடுத்தும் அதீத தனிமையில் உழலும் நடிகர்.

கோபாலின் அணுகமுடியாத மௌனத்தில், தன்னை நட்சத்திரம் என்பதற்காக அணுகாத அவரது ஆளுமையில் தான் கண்ட மெஹர் பாபாவின் சாயலைக் கண்டு ஒருவித பக்திபோன்ற நட்பை அடைகிறார்.

இருவர் பார்வையிலும் கதை மாறி மாறிப் பயணிக்கிறது. சத்யனின் வருகை கோபாலின் மனைவிக்குப் பிடிப்பதில்லை. கடும் காய்ச்சலில் பதினான்கு வயது மகனும், பெரும் உளச்சிதைவில் மனைவியும் இருக்கிறார்கள். மனைவியின் மனவாதை மிகுந்த ஒரு நாளில் மகன் இறக்கிறான்.

இரு வேறு குணநிலைகள்.அதீத மன அழுத்தம் தரக்கூடிய நிலைமையிலும் கலங்காது நிதானமாகப் பேசும் கோபால், கோபாலது இழப்புக்காக கண்ணீர் விடும் சத்யன்குமார். அவருக்கு அந்த மகனின் இழப்பு, தன் பெற்றோரைப் பிரிந்து பெஷாவரை விட்டுக் கிளம்பிய இளமை நினைவுகளைக் கிளர்த்தி விடுகிறது.
சிதறிய குடும்பத்தை விட்டு இலக்குகள் தீர்மானிக்காத பயணத்தை கோபால் மேற்கொள்கிறார். சத்யன் கோபாலின் திடீர் தலைமறைவில் அலைக்கழிக்கப்படுகிறார். கோபால் படப்பிடிப்புகளுக்கு வருவதில்லையென்று அறிந்த சத்யன் அவரைத்தேடி பம்பாயிலிருந்து மதராஸ் வருகிறார்.

இங்கு நுண்ணிய காட்சி ஒன்றைக் காட்டுகிறார். சத்யன் நடிகை ஜெயசந்திரிகா வீட்டில் நேரு மறைவு செய்தியைக் கேட்டு மனம் கலங்கி, அவர்களைக் கடந்து செல்லும்போது தாய், மகள் இருவரும் சற்றே முகம் சிவந்ததாக அவருக்குப் படுகிறது. ஆண்-பெண் உறவுகளின் எல்லையற்ற பரிணாமங்களை அந்த ஒரு நொடி காட்டப் போதுமானதாக இருந்தது என்ற ஒற்றை வரியில் கடந்து செல்வதில் அசோகமித்திரம் தெரிகிறது.
கதையின் முடிச்சை, சத்யனின் மனநிலையை ஒரு காட்சியில் உருவகப்படுத்திவிட்டு அப்படியே எதேச்சையாக அவ்வழி வந்த வழிப்போக்கன் போல கடந்தும் செல்கிறார்.

கோபாலைத் தேடி மனம் தளர்ந்து ஊருக்கு நடுவே இருந்த கைவிடப்பட்ட பூங்காவில் சிறிது நேரம் புகைபிடித்தபடி அமர்ந்திருக்கிறார் சத்யன். சிகரெட்டை தூர எறிந்துவிட்டு இன்னொன்றைப் பற்ற வைத்துக் கொள்கிறார். தான் முன்னர் எறிந்த சிகரெட் துண்டு அணையாதிருந்தால் சருகுகள் பற்றிப் பெரிய தீ விபத்தாகிவிடக் கூடும் என்று சட்டென உணர்கிறார். உலர்ந்த இலைகளைக் காலால் கிளறி அதைத் தேடுகிறார். அவர் தேடுவதைக் கண்டு அணுகி விசாரிக்கும் டிரைவரிடம் வெள்ளி மோதிரம் விழுந்துவிட்டதென சொல்கிறார். அவனும் ஏதோ ஒரு பித்தளை மோதிரத்தைக் கண்டெடுத்துக் கொடுக்கிறான்.

இந்த சம்பவம் ஒரு விதத்தில் கதைக்கான மொத்த படிமமாகவும் தோன்றுகிறது. அவன் அறியாது பற்றி எறிந்துவிட்ட அக்கினித் துணுக்கு கோபால் வாழ்வைத் தீக்கிரையாக்கியிருக்குமோ எனும் பதற்றமே சத்யனது உள்மனத் தவிப்பு. பிறரது பார்வைக்கு அவன் தேடும் மோதிரமே ஏனைய அலைக்கழிப்புகள்.

ஆழத்தை மறைத்து அமைதி காட்டும் அலையற்ற கடல் போலவே கோபால் இருக்கிறார். அவரது தேடல் அவரை சித்தர் ஒருவரிடம் சென்று சேர்க்கிறது. அவர் உள்நோக்கிய பயணமொன்றைத் தொடங்குகிறார்.

பல்வேறு அலைச்சலுக்குப் பிறகு சத்யன்குமார் உடல்நிலை சரியில்லாத நிலையில் அலைந்து கோபாலின் இருப்பிடத்தைக் கண்டடைகிறார். பயணத்தில் சித்தரையும் அவர் சித்தர் என்றறியாது சந்திக்கிறார்.

அவரைத் தேடியடைந்த சத்யன் கோபாலிடம் ஒரு உண்மையைக் கூறித் தன் பளுவை இறக்கிவிடத் தத்தளிக்கிறார். அங்கு ஓடும் ஆற்று நீரில் சத்யனைக் குளிக்கச் சொல்லிவிட்டு சித்தர் செல்கிறார். அதுவே அவரது மானசரோவர் என்று கோபாலை விளக்கச் சொல்கிறார்.

“வடக்கே பனி சூழ்ந்த ஹிமாலய மலைகளுக்கு நடுவே ஓர் ஏரி. அங்கே குளித்து வந்தால் மனம் சுத்தமாகிவிடும். மனம் சுத்தமானால் யோகம் சித்திக்கும். யோகமெல்லாம் நமக்கெதற்கு? மனம் சுத்தமானால் போதாதா?” என்று கோபால் சொல்கிறார்.

வாழ்வில் நமது செயல் களத்திற்கு அப்பால் நின்று நமை இயக்கும் சக்திகளின் விசை கண்டு திகைக்கிறோம். செல்திசையறியாது ஒரு அடைபட்ட பாதையில் சென்று முட்டிக்கொள்கிறோம். தத்தளிப்புகளில் தவிப்புகளில் நமை வழிநடத்தும் ஒருவர் குருவாக அமைவது பெருவாய்ப்பு. அதுவே அவரவருக்கான மானசரோவருக்கான வழி. அதற்கான தேடல் ஒவ்வொருவருக்கும் முற்றிலும் தனியானதே. கோபால் அடைந்து விட்ட மானசரோவரை சத்யன் அடைவதற்கு அவர் சுயமாக அலைந்து திரிந்தே ஆக வேண்டும். ஒரே சாலையில் பயணித்தாலும் ஒரே சமயத்தில் இலக்கு சென்றடைய முடியாத பாதை இது. இக்கதையில் திரைத்துறை வெறும் களம் மட்டுமே. இது எங்கும் நிகழ்ந்து விடக்கூடிய ஒரு கதை, எனில் களத்தை உயிர்ப்போடு சித்தரிக்க திரைத்துறை எனும் பிண்ணனி உதவுகிறது.

நாம் தினமும் பயணிக்கும் பாதையில் போகிறபோக்கில் கேட்கும் ஒரு பாடல் அன்றைய தினத்தை முழுமையாக நிறைத்துக் கொள்வதைப்போல, அசோகமித்திரன் சொல்லிச் செல்லும் அன்றாட வாழ்வு அதுவரை நாம் இனம் காணாத ஒரு தத்தளிப்பை, இயலாமையை, நிதர்சனத்தை நம்முள் மிக அனிச்சையாக உணர்த்திவிட்டுப் போகிறது.

இரண்டு நாவல்களும் திரைத்துறை சார்ந்தது என்று பொதுமைப்படுத்தி விட முடியாது. இது அவரது களம். அதிலிருந்து மனித உறவுகளை, வாழ்வின் ஆதாரம் குறித்த கேள்விகளை மௌனமாக எழுப்புகிறார். கண்முன் காணும் உலகியல் வாழ்க்கை, எளிய மனிதர்களின் அன்றாடப்பாடு, அதன் வேதனைகள் என சராசரிக் கவலைகள் இலக்கியமா என்ற கேள்விக்கு, அந்தத் தூரிகையைக் கொண்டு அவர் எழுதும் சித்திரம் தனது எல்லைகளை உணரும் மானுடத்தின் வலி என்ற வகையில் இலக்கியமாகிறது. அது ஒட்டுமொத்தத்தின் கூட்டு அறிதலாயன்றி தனிமனித அறிதலாயிருப்பினும் வாசகன் ஒவ்வொருவரும் அதை சென்றடைய முடிவதாலேயே அது கூட்டு அறிதலின் உச்சத்தில் நிற்கிறது.

 

மிக்க அன்புடன்,

சுபஸ்ரீ

suba

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கதைக்கலை

$
0
0
மாலியின் கைவண்ணத்தில் மாங்குடி சிதம்பர பாகவதர்

மாலியின் கைவண்ணத்தில் மாங்குடி சிதம்பர பாகவதர்

அன்புள்ள ஜெ.,

 

மாங்குடி சிதம்பர பாகவதர்(1880-1938) பற்றி உங்கள் தளத்தில் ஏற்கனவே கட்டுரைகள் படித்திருக்கிறேன். சுந்தா எழுதிய “பொன்னியின் செல்வர்” பழைய கல்கி பைண்டு புஸ்தகத்தில் சமீபத்தில்அவர் பற்றி கல்கி எழுதியதைப் படித்தேன். அவர் எழுதுகிறார் “அவருடைய தோற்றமே ஹாஸ்யத் தோற்றம். சார்லி சாப்ளின் முதலிய பெயர் பெற்ற ஹாஸ்யக்காரர்களே கூடத் தங்கள் இயற்கை வேஷத்தை மறைத்து வெளிவேஷம் போட்டுக்கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் நமது பாகவதருக்கு அத்தகைய வெளிவேஷங்கள் அவசியமில்லை. அவருடைய இயற்கை உருவத்தைப் பார்த்தாலே போதும். “குப் குப்” என்று சிரிப்பு வருகிறது. பிறகு அவருடைய ஒவ்வொரு சைகையும் சிரிப்புத் தருவதாய் இருக்கிறது. அவர் விசுப் பலகையில் உட்காருவது ஒரு வேடிக்கை, எழுந்து நிற்பது ஒரு வேடிக்கை. நடனம் செய்யத் தொடங்கினாலோ அளவிலா வேடிக்கை. இவ்வளவும் போதாதென்று ஹாஸ்யப் பேச்சுக்கள் மற்றும் உபகதைகள் வேறு..

 

 

இயற்கையாகவே அவர் நகை பூத்த வசீகர முகம் உடையவர். ஹாஸ்யமாகப் பேசத் தொடங்கியதும் மற்றவர்களுடன் சேர்ந்து தாமும் சிரித்து மகிழ்கிறார்…கதையின் மத்தியில், ஹாஸ்ய ரசம் பொருந்திய ஒரு கட்டத்தின் போது, தற்செயலாக, சபையில் உட்கார்ந்திருந்தோரின் முகத்தோற்றத்தின் மேல் என் கவனம் சென்றது என்ன அற்புதமான காட்சி! சூர்யோதயத்தில் பூரணமாய் மலர்ந்துள்ள பூக்கள் நிறைந்த தாமரைத் தடாகம் ஒன்றைத்தான் அக்காட்சிக்கு ஒப்பிடக்கூடும்” (பாயசம் கதையில் தி ஜானகிராமன் எழுதிய பற்கள் பற்கள்..எங்கும் பற்கள் என்ற கல்யாணக் காட்சி நினைவுக்கு வருகிறது) ஏறக்குறைய பரிபூரண சங்கீதத்திற்குரிய அம்சங்கள் எல்லாம் அவர் பாடலில் பொருந்தியிருப்பதாக் கூறும் கல்கி அவருடைய குறையாகச் சொல்வது அவர் அதிகமாக “அவனாகப்பட்டவன்,இவனாகப்பட்டவன்” போன்ற வார்த்தைகளை உபயோகிப்பதை. “வாலியாகப்பட்டவன் சுக்ரீவனாகப்பட்டவனைப் பார்த்துச்சொல்லுவான். லங்கையாகப்பட்டது இங்கிருந்து பல காத தூரம் இருக்கப்பட்டதனாலே…” என்பது போல ஏகப்பட்ட ஆகப்பட்டதுகள். வேடிக்கைதான்.

 

 

அப்பொழுதெல்லாம் இன்று போல பெண்கள் வேலை, படிப்பு என்று வெளிவராத காலம். ஆண்களை முழுதும் அண்டி வாழ்ந்த காலம். சினிமா, டிராமா போன்றவை செலவு பிடிக்கும் விஷயங்கள். கோயில் மற்றும் பெரிய வீட்டுக் கல்யாணங்களில் வாரக்கணக்கில்,மாதக்கணக்கில் நடக்கும் இது போன்ற உபன்யாசங்கள்தான் ஒரே  புகலிடம். வீட்டுக்குள்ளேயே புழங்கிக் (புழுங்கிக்) கொண்டிருந்த பெண்களுக்கு, காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கும் வயதானவர்களுக்கு(இவர்கள் அந்தக்காலகட்டத்தில் குறைவுதான்) , விதவைகளுக்கு(இவர்கள் அதிகம்)   இது எவ்வளவுபெரிய விடுதலையைக் கொடுத்திருக்கும் என்று  இந்த மூச்சுமுட்டும் கேளிக்கை உலகத்திலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளை சிரமப்பட்டுத் தள்ளும் நாம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். கல்கி எழுதுகிறார் “அந்தக் காலத்தில் ஒரு பெரிய மனிதர் வீட்டுக் கல்யாணமென்றால் அநேக மைல் தூரங்களுக்கு, கொஞ்ச நாட்களுக்கு அதைப்பற்றிய பேச்சாகத்தான் இருக்கும். “கல்யாணம் அபாரமாகச் செய்தான். கோனேரிராஜபுரம் வைத்யநாதய்யர் பாட்டு, அழக நம்பியாபிள்ளை மிருதங்கம், பஞ்சாபகேச சாஸ்திரிகள் கதை, செம்பனார்கோவில் ராமசாமி மேளம், அடடடா, என்ன மோக்ளா, கொன்னுட்டார்கள் போ” இது போன்ற பேச்சு கல்யாணம் நடந்த ரெண்டு மாதங்களுக்கு சுற்றுவட்டாரத்தில் நடந்துகொண்டிருக்கும். கச்சேரிகள் நடக்கும் பெரிய கல்யாணங்களுக்கு அழைத்தால்தான் போகிறது என்ற நியதி சங்கீதப் பிரியர்களுக்குக் கிடையாது.”சங்கீதம் என்ன இவன் அப்பன் வீட்டுச் சொத்தா? நாம் என்ன இவன் வீட்டுச் சாப்பாட்டுக்கா உட்காரப்போகிறோம்? என்று கல்யாண வீட்டு எஜமானனைத் திட்டிக் கொண்டே கச்சேரிகளுக்குப் போவார்கள்.  நானும் பல கச்சேரிகளுக்கு என்னை நானே அழைத்துக்கொண்டு போவதுண்டு”

 

 

அவ்வளவு பெரிய உடம்பைத் தூக்கிக்கொண்டு மணிக்கணக்காக நின்று கொண்டு கதைசொல்வது சாதாரணமான விஷயமல்ல. நிச்சயமாக “வெரிகோஸ் வேய்ன்ஸ்” வந்திருக்கும். அந்தக் காலத்தில் எல்லோரும் நின்று கொண்டுதான் கதை சொல்லிருக்கிறார்கள். ஒருவேளை ஆண்டவனைப் பற்றிப் பேசும்போது உட்கார்ந்து கொண்டிருப்பதை அவமரியாதையாக  நினைத்திருக்கலாம். நான் பார்க்க உட்கார்ந்துகொண்டு கதை சொல்ல ஆரம்பித்தது கிருபானந்தவாரியார்தான் என்று நினைக்கிறேன். அத்துறையில் அவரே 70 மற்றும் 80 களில் “சூப்பர் ஸ்டார்”.ஒவ்வொரு நவராத்திரியிலும் இவர் கதை ஒன்பது நாட்களும் மதுரை மீனாட்சிஅம்மன் கோயில் ஆடி வீதியில் நடக்கும். வீட்டில் அடைந்து கிடைக்கும் பெண்கள் அவர் கதை சொன்ன விதத்தைப்பற்றி மாதக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள்  (என் அத்தைகள் உட்பட)  சினிமாவில் எப்படி பாடல்கள் கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்ததோ, அதேபோல் கதாகாலட்சேபங்களிலும் பாட்டு குறைந்தது. கிருபானந்தவாரியார் திருப்புகழ், கம்பராமாயணம் போன்றவற்றிலிருந்து பாடல்களை ஒரு மாதிரி ராகத்தோடு ஓங்கிச் சொல்லுவார். அதுவே கேட்பதற்கு அருமையாக இருக்கும்.ராமாயணமோ, பாரதமோ அந்தந்தப் பாத்திரமாகவே மாறி நடித்துக் காண்பிப்பார்.அவர் அடிக்கிற “கமெண்ட்”டுகளுக்கும், “பஞ்”சுகளுக்கும் (ராமன் பாணம் விட்டா, ஒண்ணு ரெண்டாகும். காமன் பாணம் விட்டா ரெண்டு ஒண்ணாகும்) கூட்டம் கடைசிவரை சிரித்துக் குலுங்கிக்கொண்டேதான் இருக்கும்.  புராணங்களிலிருந்து அவ்வப்போது கேள்விகள் கேட்டு பதில் சொல்லும் குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுப்பார். திருவேடகம் விவேகானந்தா கல்லூரி என் எஸ் எஸ் தன்னார்வலராக மீனாட்சியம்மன் கோயில் நவராத்திரி விழாவிற்குச் சென்ற போது அவருடைய பேச்சுக்களை ஆடி வீதியில் ஒன்பது நாளும் கேட்க வாய்த்தது. கடைசி நாளன்று எல்லோருக்கும் நெற்றியில் திருநீறு பூசிவிட்டார்.

சிறு வயதில் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் “சுந்தர காண்டம்” கதாகாலட்சேப கேசட்(சித்த சிரிச்சாளாம்..சித்த அழுதாளாம்…சித்த த்யானம் பண்ணினாளாம்…என்பார் அசோகவனச் சீதை குறித்து) கேட்டது ஞாபகத்திற்கு வருகிறது.

 

 

கதாகாலட்சேபத்தின் முன்னோடியான தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர், அறுபத்துமூவர் சரித்திரத்தை அற்புதமாய் எடுத்துச்சொன்ன சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர், நிறைய சொந்த சாகித்யங்களையும், நகைச்சுவையையும் நிரவிக் கதை சொன்ன ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், திருப்பழனம் பஞ்சாபகேச பாகவதர், தில்லைஸ்தானம் நரசிம்ம பாகவதர் முதலியோரும் மாங்குடியார் காலத்தில் கதை சொன்னவர்களே. கதா காலட்சேபம் என்பது இலக்கியச் சொற்பொழிவுகளானது கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ காலத்தில்தான். அ ச ஞானசம்பந்தன், நீதிபதி மு.மு. இஸ்மாயில் முதலியோர் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் செய்தனர். கிருஷ்ணப்ரேமி வைணவர் வரிசையில் ஒரு முக்கியமான கதைஞர். இன்றும் விகாசா ஹரி(கிருஷ்ணப்ரேமி யின் மருமகள். சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட். அந்தக்காலம் போலவே நிறையப் பாடிப் பேசுகிறார்), ரங்கன்ஜி(கிருஷ்ணப்ரேமியின் மகன்),வேளுக்குடி கிருஷ்ணன் என்று அவருடைய வழித்தோன்றல்கள். கதை சொல்லல் என்பது குறைவாகவும், “ஆத்ம விசாரம்” அதிகமாகவும் உள்ள வகையில் தற்காலத்தில் நொச்சூர் வெங்கட்ராமன் சிறந்த சொற்பொழிவுகளை தமிழ் மற்றும் மலையாளத்தில் அளித்துக்கொண்டிருக்கிறார்.

 

அன்புள்ள,

 

கிருஷ்ணன் சங்கரன்.

 

 

அன்புள்ள கிருஷ்ணன்,

 

கதாகாலக்ஷேபம் என்னும் கலை  ஒருவகை நாட்டார்கலைதான். இத்தகைய கலைகள் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுசூழலில், அதற்குரிய உளநிலைகளை ஒட்டி மட்டுமே வாழும். அப்பண்பாடும், உளநிலைகளும் அழிகையில் தானுமழியும். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. கதாகாலக்ஷேப நிகழ்ச்சிகளை நான் இளமையில் நாகர்கோயிலில் என் அக்காவீட்டருகே உள்ள அக்ரஹாரத்தில் கேட்டிருக்கிறேன். அவற்றின் உள்ளடக்கம் புராணகதைகள். ஆனால் மொழி பிராமண வட்டாரவழக்கு. ஆகவே பிறருக்கு அதிலுள்ள நுட்பங்கள் பிடிகிடைக்காது, சுவைப்பதுமில்லை.

 

அது மட்டுமில்லாமல் அந்த உள்ளடக்கமும் இக்காலகட்டத்திற்குரியது அல்ல. முதல்விஷயம் அதில் பேசப்படும் பாவபக்தி என்பது இன்றைய காலகட்டத்திற்கு மிக அன்னியமானது. இன்று வயதானவர்களிலேயேகூட சிலர்மட்டுமே அதை ரசிக்கின்றார்கள். விசாகா ஹரியின் காலக்ஷேப நிகழ்ச்சிகளை கேட்டுள்ளேன். மிகச்செயற்கையான மிகைநடிப்பு கொண்டவை. அதேசமயம் கிருஷ்ணபிரேமியின் கதாகாலக்ஷேபத்தில் அவ்வப்போதாயினும் வரும் வேதாந்தக் கருத்துக்களோ, காவியச்சுவையோ ஒருபோதும் அமைவதுமில்லை

 

ஆனால் அனைத்தையும் விடமுக்கியமானதாகச் சொல்லவேண்டியது அவற்றிலுள்ள சாதிய உளநிலை. சென்றகாலகட்டத்தின் சாதியமேட்டிமைத்தனம் அவற்றில் உறைகிறது. இன்று கதாகாலக்ஷேபம் செய்பவர்களில்கூட அதுவே வெளிப்படுகிறது. குறிப்பாக நகைச்சுவைகளில். கீழ்நிலையிலுள்ள மக்கள் பகடி செய்யப்படுவது மிகச்சாதாரணமாகக் காணக்கிடைக்கிறது. நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் ஒரு கதாகாலக்ஷேபநிகழ்ச்சியில் ‘வண்டிக்காரன்’ என்ற கதாபாத்திரம் மிக மோசமான சாதியப்பகடிக்கு ஆளாக்கப்படுவதைக் கேட்டு கொதித்தது நினைவுக்கு வருகிறது

 

கதாகாலக்ஷேபம் போன்ற கலைகள் சாதிய வட்டத்திற்குள் மதம், பக்தி என்றபேரில் சாதிமேட்டிமை என்னும் கீழ்மையை வெளிப்படுத்தும் வரை அதை கலை என கொள்ள முடியாது. சென்றகாலகட்டத்தின் கெடுமணத்துடன் நம் வீட்டு முற்றத்தில் கிடக்கும் குப்பை என்றே கொள்ளமுடியும்.

 

அது கலை என்றால் பிற கலைகளைப்போல நவீன ஜனநாயகப் பண்புநலன்களை தானும் கொள்ளவேண்டும். நவீன உலகின் மானுட அறத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். நகைச்சுவை, நடிப்புத்திறன் , இசைத்திறன் ,அறிவுவெளிப்பாடு ஆகியவற்றுக்கும் மேலாக முதன்மையாக இதையே இக்கலையை மதிப்பிடும் அளவுகோலாக இன்று நாம் கொள்ளவேண்டும்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சென்னையில்…

$
0
0

phoro

 

நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சென்னை திரும்பிவிட்டோம். ஃப்ராங்க்ஃபர்ட்டில் இருந்து காலை பதினொரு மணிக்குக் கிளமபி பத்து மணிநேரப் பயணம. நண்பர் சண்முகம் வீட்டில் தங்கியிருக்கிறேன். இன்று மாலை கன்யாகுமாரி எக்ஸ்பிரஸில் நாகர்கோயில்

 

பயணம் உத்வேகமூட்டுவதாக இருந்தாது. நண்பர்கள் முத்துக்கிருஷ்ணன், சுசித்ரா, செந்தில்குமார் தேவன் மிகச்சிறப்பான ஏற்பாடுகள் செய்து பயணத்தை ஒருங்கிணைத்திருந்தார்கள். அனோஜன் பாலகிருஷ்ணன்[ லண்டன்] பிரபு[லண்டன்] சிறில் அலெக்ஸ் [லண்டன்], மாதவன் இளங்கோ [பெல்ஜியம்]  ஆகியோர் வழியில் வந்து கலந்துகொண்டார்கள்

 

இப்பயணத்தில் ஈழ எழுத்தாளர் சயந்தனை[ ஆதிரை, ஆறாவடு] சுவிட்சர்லாந்திலும் பொ.கருணாகரமூர்த்தியையும் [ஓர் அகதி உருவாகும் நேரம், பெர்லின் நினைவுகள்] சுசீந்திரனையும் பெர்லினிலும் சந்தித்தேன்.

 

ஐரோப்பா எப்போதும் ஒரு பெரிய கனவினூடாகச் செல்லும் நிறைவை அளிப்பது. இனி மெல்லத்தான் மண்ணில் கால்வைக்கவேண்டும்.

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு புதுவை கூடுகை

$
0
0
ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் .
நிகழ்காவியமான “வெண்முரசின் 18 வது கலந்துரையாடல் ” ஆகஸ்ட்  மாதம்  23-08-2018 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..
இம்மாதக் கூடுகையின் பேசுப்பகுதி
வெண்முரசு நூல் 2 மழைப்பாடல்
பகுதி 14:  களிற்று நிரை மற்றும்
பகுதி 15 :  தென்றிசை மைந்தன்
69 முதல் 77 வரையுள்ள பகுதிகளைக் குறித்து
நண்பர் திரு.ஆனந்தன் அவர்கள் உரையாற்றுவார்.
நாள்: 23-08-2018 வியாழக்கிழமை  மாலை 6 மணி முதல் 8.30 வரை.
இடம்:
கிருபாநிதி அரிகிருஷ்ணன்,
 “ஸ்ரீ நாராயணபரம்”,
முதல்மாடி, எண் 27,
       வெள்ளாழர் வீதி,
புதுச்சேரி 605001
தொடர்புக்கு :
9943951908 ; 9843010306.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 82

$
0
0

tigகதிர் இறங்கிய பின்னரும் மண்ணில் வான்வெளிச்சம் எஞ்சியிருந்தது. உலோகப்பரப்புகளில் ஒளி ததும்பியது. சாத்யகி தன் புரவியில் களத்தினூடாகச் சென்று திரண்டு மீண்டும் நிரைகொண்டுவிட்ட பாண்டவப் படைகளின் நடுவே மையப்பாதையில் நுழைந்தான். புண்பட்ட வீரர்களை கொண்டுசெல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய பலகைப்பாதைகளினூடாக ஒற்றை அத்திரிகள் இழுத்த இருசகட வண்டிகள் நீண்ட நிரையாக சென்றுகொண்டிருந்தன. தோளுடன் தோள் என இணையாக அடுக்கப்பட்டிருந்த வீரர்கள் குருதி வழிய முனகிக்கொண்டும் அரற்றிக்கொண்டும் இருந்தனர். வண்டிகளில் இருந்து சொட்டிய குருதியால் பலகை சிவந்து தசைக்கதுப்புபோல் ஆகிவிட்டிருந்தது. வண்டிகள் சென்றவழியெங்கும் குருதி ஊறி வழிந்தது. சாலையின் பலகைப்பொருத்துக்களில் சகடம் விழ வண்டி அதிர்ந்தபோது புண்பட்டவர்கள் உடல் உலைந்து அலறினார்கள்.

சாத்யகி முகங்களை நோக்கிக்கொண்டு சென்றான். புண்பட்டவர்களில் சிலர் பித்துநிறைந்த கண்களுடன் வெறித்து நோக்கினர். சிலர் காய்ச்சல்கண்டவர்களாக நடுங்கிக்கொண்டிருந்தார்கள். சிலர் தங்களுக்குள் மென்குரலில் அரற்றினார்கள். சிலர் அருகே செல்பவர்களை நோக்கி “வீரர்களே! தலைவர்களே!” என கூவி அழைத்தனர். அவர்களில் சிலர் ஏற்கெனவே இறந்துவிட்டிருந்தனர் என்பது நிலைத்த விழிகளில் இருந்து தெரிந்தது. ஒன்றன்பின் ஒன்றாக வண்டிகள் முடிவிலாது சென்றுகொண்டே இருந்தன. அவற்றை ஓட்டிச்சென்றவர்களும் குருதியில் நனைந்திருந்தார்கள். போர் நிகழ்ந்த பகல் முழுக்க குருதிமணம் நிறைந்திருந்த காற்று சித்தத்தை அடையவில்லை. விழிகளும் செவிகளும் விழிசெவியென்றான உடலும் மட்டுமே புலன்களென்றிருந்தன. போர் அணைந்த மறுகணமே மூக்கு உயிர்கொண்டது. வானும் மண்ணும் குருதிவாடையால் மூடப்பட்டன.

களத்தில் இருந்த அனைத்தும் வெட்டிவைத்த தசைகளின் வாடைகொண்டிருந்தன. காற்று சுழன்றடிக்கையில் குமட்டல் எழுந்தது. அறியாமல் வயிறு அதிர வாய் ஊறிக்கொண்டே இருந்தது. அங்கிருந்த அனைவருமே காறிக்காறி துப்பினர். களத்தில் விரிந்து கிடந்த சடலப்பரப்பை அவன் இடையில் கைவைத்து நின்று விழியோட்டி நோக்கினான். உடல் வலிப்புகொண்டமையால் முகம் கோணலாகி உதடுகள் இழுபட பற்கள் வெறித்து அவை நகைப்பவைபோல் தோன்றின. வெட்டுண்ட தலைகளில் மட்டும் விழிமூடிய ஆழ்ந்த அமைதி தெரிந்தது. உடலின் பொறுப்பிலிருந்து விடுபட்டமையின் அமைதியா அது?

ஒருவன் அலறிக்கொண்டே இருந்தான். அவனை நோக்கியபின்னரே அந்த அலறல் காதில் விழுந்தது. அவன் எவரையும் நோக்கி அழவில்லை. வானிடம் இறைஞ்சிக்கொண்டிருந்தான். புண்பட்ட அனைத்து விலங்குகளுமே வானிடம்தான் முறையிடுகின்றன. அங்கு எவரேனும் இருக்கிறார்களா? தேவர்கள், தெய்வங்கள், அலகிலியாகிய பிரம்மம்? இல்லை என்றால் இந்தக் கண்ணீருக்கும் முறையீட்டுக்கும் என்ன பொருள்? எதற்குத்தான் பொருள்? அன்பு, அளி, மானுடம் அனைத்தும் போர் தொடங்குவதற்கு முன்னரே பொருளிழந்து உதிர்ந்துவிடுகின்றன. நெறி, அறம் என ஒவ்வொன்றாக உடைந்து களத்தில் சரிகின்றன. வெற்றி என்ற சொல் மட்டுமே எஞ்சியிருக்கிறது. தெய்வங்களே, மூதாதையரே, இறுதியில் அச்சொல்லேனும் பொருளுடன் எஞ்சவேண்டும்.

உயிர்நோக்கிகள் நீண்ட ஈட்டிகளுடன் சடலங்களின் நடுவே கால்தூக்கி வைத்து நடமிடுபவர்கள்போல சென்றனர். கீழே கிடந்த உடல்களைப் புரட்டி நோக்கி உயிரில்லை என்றால் அப்பால் சென்றனர். தேறும்புண்பட்டு உயிர் எஞ்சியிருப்பதைக் கண்டால் அவ்வுடல் மேல் வெண்சுண்ணத்தால் வட்டமுத்திரை ஒன்றை பதித்தபின் அருகே ஒரு சிறிய வெண்கொடி கட்டப்பட்ட மூங்கிலை நட்டுவிட்டு முன்னால் சென்றனர். சிறுவிரல் அளவுள்ள மூங்கில்களின் கீழ்நுனியில் இரும்புக்கூர் இருந்தது. குருதி நனைந்து ஊறிய தரையில் அதை எளிதில் குத்தி நிறுத்த முடிந்தது.

அவர்களுக்கு அப்பால் வந்துகொண்டிருந்த களக்காப்பர்கள் அந்தக் கொடிகளை அடையாளமாகக் கொண்டு அணுகி புண்பட்டவர்களின் அருகே குருதியில் ஊறி துளிசொட்டிக்கொண்டிருந்த மரவுரியை விரித்து உடல்களை புரட்டி அதிலிட்டு இருபுறமும் பற்றித்தூக்கி சகடப்பரப்பில் வைத்தபின் மரவுரியை உருவி எடுத்தனர். உடலில் தைத்திருந்த அம்புகளை அவர்கள் பிடுங்கவில்லை. அம்புகள் அசைந்தபோது புண்பட்டோர் முனகினர், விழித்தவர்கள் கூச்சலிட்டனர். விழுந்த மரங்களில் எழுந்த தளிர்கள் என அவன் உடல்களில் நின்ற அம்புகளைப்பற்றி எண்ணினான். பின்னர் அவ்வெண்ணத்திற்காக நாணி அகம் விலக்கிக்கொண்டான்.

அலறிக்கொண்டிருந்தவனை அணுகிய உயிர்நோக்கிகளில் ஒருவர் குனிந்து அவன் உடலை நோக்கினார். அவன் வயிற்றில் பெரிய வாய் ஒன்று திறந்திருந்தது. உள்ளே செக்கச்சிவந்த நாக்கு ஒன்று தவித்தது. அவன் “மூத்தோரே மூத்தோரே” என்று கூவினான். உயிர்நோக்கி முதிர்ந்தவராக இருந்தார். விழிகள் விலங்கு விழிகள் என உணர்வற்று மானுடரை அறியும் மொழியொளி அற்று இரு வெறிப்புகளாக தெரிந்தன. அவர் கையை அசைக்க பின்னால் வந்த வீரன் ஈட்டியை ஓங்கினான். அவர் தலையசைத்ததை உணர்ந்த புண்பட்டவன் “வீரரே! தந்தையே” என்று கூவி கையை நீட்டி தடுக்க அவன் மிக இயல்பாக, செயல்தேர்ந்த கையசைவின் பிழையின்மையுடன் ஈட்டியால் அவன் நெஞ்சில் இரு விலாவெலும்புகளுக்கு நடுவே குத்தி இறக்கி சற்றே சுழற்றினான். ஈட்டியை உருவியபோது குருதி சொட்டியது. அதை அப்புண்பட்டவனின் உடையிலேயே துடைத்தபின் அவன் முன்னால் சென்றான்.

நெஞ்சக்குமிழை ஈட்டிமுனை வெட்டியதனால் இருமுறை உடல் உலுக்கிக்கொண்டு புண்பட்டவன் வாய்திறந்து ஒலியிலாச் சொல் உரைத்து உறைந்தான். உயிர்நோக்கிகள் அவனை திரும்பி நோக்காமல் முன்னால் சென்றனர். இன்னொருவனை குனிந்து நோக்கி மீண்டும் தலையசைத்தார் முதியவர். மூண்டும் ஈட்டி மேலெழுந்து இறங்கியது. அதே விலாவெலும்பின் இடைவெளி. அதேபோன்ற ஆழ்நடுகை. அவர்களின் ஒவ்வொரு செயலிலும் தேர்ச்சியின் முழுமை இருந்தது. இக்களத்தில் இன்று பல்லாயிரம்பேர் விழுந்திருக்கக்கூடும். மானுடருக்கும் உடல்களுக்கும் நடுவே மெல்லிய வேறுபாடு மட்டுமே. அதை அவர்கள் அறிவார்கள். அவர்களின் விழிகள் அதை மட்டுமே அறியும்.

tigசாத்யகி திருஷ்டத்யும்னனின் கூடாரத்தை அணுகியபோது மிகவும் தளர்ந்திருந்தான். வெளியே தோல்வார்கள் இழுத்துக் கட்டிய உயரமற்ற கட்டிலில் ஆடையில்லாமல் திருஷ்டத்யும்னன் படுத்திருந்தான். அவன் உடலில் இருந்து அம்புமுனைகளையும் உடைந்த தேர்ச்சிம்புகளையும் மருத்துவர் பிடுங்கிக்கொண்டிருந்தனர். அவன் அவ்வப்போது நடுங்கி முனகிக்கொண்டிருந்தாலும் சூழ்ந்து நின்றிருந்த துணைப்படைத்தலைவர்களுக்கு ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தான். படைத்தலைவன் சிம்மவக்த்ரன் பாண்டவப் படைகளின் இழப்பை சொல்லிக்கொண்டிருந்தான். “இன்னும் கணக்கு எடுக்கப்படவில்லை. இறந்தவர்களை முத்திரை நோக்கி கணக்கிட ஏவலர்களை அனுப்பியிருக்கிறோம். ஆனால் விழிநோக்கிலேயே தெரிகிறது நம் இழப்பு அரை அக்ஷௌகிணிக்கு குறையாது…” பின்னர் தயங்கி “ஒருவேளை ஓர் அக்ஷௌகிணிகூட இருக்கலாம்” என்றான்.

திருஷ்டத்யும்னன் “ஆம், இருக்கும். பீஷ்மர் இன்று ஆடிய கொலைத்தாண்டவம் எண்ணற்கும் அரிது” என்றான். “இத்தனை நாள் இரவும்பகலும் அவர் பயின்ற வில் இதன்பொருட்டே போலும்… இளமைந்தர்களின் குருதியாட!” கசப்புடன் சிரித்து “இறந்த மைந்தர்களின் ஆத்மாக்கள் இன்று அவர் துயிலும் கூடாரத்தை சூழ்ந்திருக்கும்… நன்கு உறங்கட்டும் பிதாமகர்” என்றான். சாத்யகியை கண்டதும் “யாதவரே, நமது பிணங்களை முறைப்படி விண்ணேற்றும் பொறுப்பை உம்மிடம் அளிக்கிறேன். எரியேற்றுவதும் புதைப்பதும் அந்தந்தக் குடிகளின் முறைமைப்படி நிகழ்க! சுடலைப்பொறுப்பை மூத்தவர் சிகண்டி ஏற்றுக்கொண்டிருக்கிறார்” என்றான். “முறைப்படி அதை செய்ய ஈராயிரம் ஏவலர்களை எட்டு பிரிவுகளாக அமைத்துள்ளேன். ஆயிரம் வண்டிகள் அதற்கென்றே அனுப்பப்பட்டுள்ளன. நள்ளிரவுக்குள் மானுடர் அனைவரும் மண்ணோ எரியோ புகுந்தாகவேண்டும். அதன்பின் விலங்குகள். விடிவதற்குள் மீண்டும் களம் தூய்மையடையவேண்டும்” என்றான்.

சாத்யகி தலையசைத்தான். “ஒருவர் உடல்கூட முறைப்படி இறுதிச்செயல்கள் இன்றி செல்லக்கூடாது. அதை உறுதிசெய்க! இறந்தவர்களின் எண்ணிக்கை புலரிக்கு முன் என் கைக்கு வரவேண்டும். முற்புலரியில் அரசர் அவைகூடும்போது நான் அதை அளிக்கவேண்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆணை!” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் அருகே நின்றிருந்த படைத்தலைவன் சிம்ஹநேத்ரனிடம் “எனக்கு ஒவ்வொரு படைப்பிரிவிலும் எஞ்சியுள்ளோரின் கணக்கு இன்று இரவு எழுவதற்குள் வந்தாகவேண்டும். நள்ளிரவுக்குள் தேய்ந்துவிட்ட படைப்பிரிவுகளுக்கு புதிய வீரர்களை அனுப்பவேண்டும்” என்றான். சாத்யகி தலைவணங்கி விடைகொண்டான்.

மீண்டும் புரவியை அடைந்தபோது அவன் இறப்பின் தருணம் என களைத்திருந்தான். எங்காவது விழுந்து மண்ணில் உடல்பதித்து மறந்து உறங்கவேண்டும் என விழைந்தான். புரவிமேல் உடல் கோணலாக அமைய தளர்ந்த தோள்களுடன் அமர்ந்திருந்தான். எச்சில் மார்பில் விழுந்தபோதுதான் விழித்துக்கொண்டான். புரவி குளம்புகள் செந்தாளம் இட சீராக சென்றுகொண்டிருந்தது. அவன் தன் சித்தத்துக்குள் பெரும்போர் ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்ததை எண்ணி பெருமூச்சுவிட்டான். அங்கிருந்து நோக்கியபோது எறும்புநிரை என புண்பட்டோரை ஏற்றிய அத்திரிவண்டிகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கியபடி மருத்துவநிலை நோக்கி செல்வதை கண்டான். ஒழிந்த வண்டிகள் இன்னொரு சாலையினூடாக மீண்டும் களம்நோக்கி சென்றன. நீர் இரைக்கும் சகடக் கலநிரை என அவ்வரிசை சுழன்றுகொண்டிருந்தது.

அவன் எரிநிலையை சென்றடைந்தபோது அங்கே சிகண்டி இருக்கவில்லை. அவருடைய துணைப்படைத்தலைவன் காதரன் “பாஞ்சாலர் தெற்குக் காட்டுக்குள் சென்றிருக்கிறார், யாதவரே” என்றான். “நான் அரக்கு கொண்டுசெல்லும் வண்டிகளை கணக்கிட்டு செலுத்தும்பொருட்டு இங்கே அமைக்கப்பட்டுள்ளேன்.” சாத்யகி தெற்கே விரிந்திருந்த குறுங்காட்டுக்குள் சென்றான். தொலைவிலேயே பேச்சொலிகள் கேட்டன. அவன் உள்ளே நுழைந்தபோது சிகண்டியின் அணுக்கக் காவலன் வணங்கி எதிர்கொண்டான். சாத்யகி “மூத்த பாஞ்சாலரை பார்க்கவந்தேன்” என்றான். அக்காவலனுக்கும் சிகண்டியின் உயிரிழந்த விழிகள் இருந்தன. அவன் சொல்லில்லாமல் தலைவணங்கி அவனை உள்ளே அழைத்துச் சென்றான்.

குறுங்காட்டில் நீர் வழிந்தோடி உருவான ஆழமான பள்ளத்திற்குள் பத்து பெருஞ்சிதைகள் ஒருக்கப்பட்டுக்கொண்டிருந்தன. எருதுகள் இழுத்த வண்டிகளில் கொண்டுவரப்பட்ட எடைமிக்க விறகுக் கட்டைகள் பள்ளத்திற்குள் உருட்டப்பட்டன. அங்கிருந்தவர்கள் அவற்றை பிடித்துத் தூக்கி அடுக்கினர். இரண்டு சிதைகள் அடுக்கப்பட்டு இறுதிநிலையில் இருந்தன. மேலே அரக்குக் கட்டைகளை அடுக்கி அவற்றின்மேல் மெல்விறகை நிரப்பினர். சிகண்டி அப்பால் ஏவலருடன் பேசிக்கொண்டு நின்றிருந்தார். அவன் அருகே சென்று தலைவணங்கினான். “சொல்!” என்று அவர் சொன்னார். “பாஞ்சாலரே, இறந்தவர்களின் மொத்தக் கணக்கு நாளை காலைக்குள் அரசருக்கு அளிக்கப்படவேண்டும் என்றார் படைத்தலைவர்” என்றான் சாத்யகி. “கணக்கிடாமல் இங்கே எரிப்போம் என எவர் சொன்னது?” என்றார் சிகண்டி. அவருடைய எரிச்சலை நோக்கி மேலும் பணிவுகொண்டு “இல்லை, பாஞ்சாலரே. நீங்கள் முறையாகவே செய்வீர்கள் என அறிவேன். அனைத்தையும் ஒருங்கிணைப்பது மட்டுமே என் பணி” என்றான் சாத்யகி.

“பிணக்கணக்கு குறிப்பதற்கு அறுபது பேரை அமரச்செய்துள்ளேன். இறந்தவரின் பெயர், குலம், படைப்பிரிவு, நாடு ஆகியவை முறையாக பதிவுசெய்யப்படும். கிளம்பும்போதே அனைத்துச் செய்திகளும் ஏடுகளில் பதிவுசெய்யப்பட்டிருந்தன. அச்சுவடிகளின் பிறிதோலைகள் அனைவரிடமும் அளிக்கப்பட்டுள்ளன. நோக்கி கண்டு பதிவுசெய்வார்கள்” என்று சிகண்டி சொன்னார். சாத்யகி “நன்று” என்றான். “எங்களுக்கிருக்கும் மிகப் பெரிய இடர் பிழையாக அடையாளம் காணப்பட்டு கௌரவர் தரப்பினரின் உடல்கள் இங்கு வந்துவிடுவது. அவற்றை மீண்டும் திரும்ப கொண்டுசெல்வது பெரும்பணி. அங்கு சென்று அடையாளம் காணும் பணிகளை மேலும் செம்மை செய்க… இதுவரை எழுபது உடல்கள் வந்துவிட்டன” என்றபின் அவன் செல்லலாம் என கைகாட்டியபடி சிகண்டி அப்பால் சென்றார்.

சாத்யகி அருகே நின்ற சூதரை நோக்கி புன்னகைத்தான். அவரும் புன்னகைக்கும் வழக்கம் இல்லாதவராக, இறந்த விழிகொண்டவராக தோன்றினார். எதையாவது பேசவேண்டும் என்பதற்காக “ஏன் குழிகளில் சிதைகள் ஒருக்கப்படுகின்றன?” என்றான் சாத்யகி. “மேட்டில் என்றால் சிதை மேலும் மேடாகும். விறகுகளைத் தூக்கி மேலே கொண்டுசென்று அடுக்கவேண்டியிருக்கும். சிதையடுக்க யானைகளை கொண்டுவரும் வழக்கமில்லை” என்றார் சூதர். சினம் எழுந்தாலும் அவன் அதை அடக்கிக்கொண்டான். “நன்று” என்றபடி நடந்தான்.

சிதைகளை அடுக்கிக்கொண்டிருந்தவர்கள் பெரும்பாலும் படைவீரர்கள். பிறப்பால் இடுகாட்டுத்தொழில் செய்பவர்கள் அங்கே மேல்நோட்டப் பொறுப்புகளை மட்டுமே ஆற்றினர். சிதைகளின் அளவை அப்போதுதான் அவன் நோக்கினான். ஒவ்வொன்றும் மூன்று ஆள் உயரம் இருக்கும். இருபது வாரை நீளமும் இரண்டுவாரை அகலமும் கொண்ட விறகுக்குவைகள். “ஒவ்வொன்றிலும் எத்தனை பேரை எரிப்பார்கள்?” என்றான். மேல்நோட்டக்காரர் திரும்பி “ஒன்றில் இருநூறுபேர் வரை அடுக்கலாம்” என்றார். அவன் உள்ளத்தில் ஓடிய எண்ணத்தை உணர்ந்து “குருதியும் சலமும் நிறையவே இருக்கும். ஆகவேதான் இத்தனை விறகு. அரக்கும் இருப்பதனால் விறகு எளிதில் எரிந்தேறும். ஆனால் பேரனல் எழுந்துவிட்டதென்றால் வாழைத்தண்டையும் விறகாக்கலாம்” என்றார்.

அப்பால் நின்றிருந்த முதிய சிதைக்காரர் ஈறிலிருந்து நீண்டு நின்ற பற்களைக் காட்டி சிரித்து “முதல் நூறு எரிந்துகொண்டிருக்கையிலேயே அடுத்த நூறை உள்ளே செலுத்துவோம். பின்னர் விறகே தேவையில்லை. உடல் உருகும் கொழுப்பே எரியுணவாகும். ஒரு பிணம் இன்னொரு பிணத்துக்கு விறகாகும்” என்றார். அவன் அவர்களின் முகங்களை மாறிமாறி நோக்கினான். அவற்றில் ஓர் அறியவொண்ணா நுண்களிப்பு இருக்கிறதா? அது தங்கள் பணியை திறம்படச் செய்பவர்களுக்கு உருவாகும் நிறைவா? அடுமனையாளர் விழவூட்டுகளில் அடையும் உவகை. அன்றி வேறேதுமா? அவனுக்கு சிதையில் ஊனுண்ண வரும் பாதாள தெய்வங்களைக் குறித்த சூதர்பாடல்கள் நினைவிலெழுந்தன. அத்தெய்வங்கள் இவர்களில் குடியேறியுள்ளனவா?

அவன் சிதைகளில் இருந்து விலகிச்சென்றான். சிற்றமைச்சர் ஜலஜர் சாலமரத்தடியில் நிற்பதை கண்டான். அவனைக் கண்டதும் அவர் தலைவணங்கினார். அவன் அருகணைந்து “தாங்கள் இங்கு பொறுப்பிலிருக்கிறீர்களா, உத்தமரே?” என்றான். “இல்லை, இங்கு நிகழவேண்டிய வைதிகச் சடங்குகளுக்கு மட்டுமே நான் பொறுப்பு” என்றார். “நாங்கள் நூறு அந்தணர் இங்கு வந்துள்ளோம். வைதிக முறைப்படி இறந்தவர்களுக்கு அவர்களின் மைந்தர்களோ தந்தையோ ஆசிரியரோ எரியூட்டி இறுதிச்சடங்கு இயற்றலாம். ஆசிரியர்களாக நின்று நாங்கள் அதை செய்வோம்.” அப்பால் ஒரு கூண்டு வண்டியில் இருந்து வைதிகர்கள் இறங்கி வெண்ணிற ஆடைகள் அந்திவெளிச்சத்தில் துலங்கித்தெரிய கைகளில் தர்ப்பையும் மரக்கமண்டலங்களுமாக ஓசையில்லாமல் நடந்து வந்தனர்.

“தாங்கள் இங்கே பொறுப்பு கொள்கிறீர்களா?” என்றார் ஜலஜர். “ஆம், இவையனைத்தையும் ஒருங்கிணைக்க என்னிடம் பணித்துள்ளனர். ஆனால் இங்கே நான் செய்வதற்கென்ன உள்ளது என்றுதான் புரியவில்லை” என்றான் சாத்யகி. ஜலஜர் “ஆம், பாஞ்சாலர் இங்கு வருவதற்குமுன் உபப்பிலாவ்யத்திலேயே இங்கு எத்தனை பேர் இறக்கக்கூடும் என மதிப்பிட்டிருந்தார். இன்று போர் முடிந்ததுமே எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என முழுமையாக கணக்கிட்டுவிட்டார். விறகு, அரக்கு வண்டிகள், அத்திரிகள், அந்தணர் என அனைத்தையும் முன்னரே முடிவுசெய்துவிட்டார்” என்றார். “மெய், நான் அவரிடம் ஒரு சொல்லும் உசாவமுடியாது என்றும் உணர்ந்துகொண்டேன்” என்றான் சாத்யகி. “புதைப்பவர்களை என்ன செய்கிறார்கள் என்று மட்டும் நோக்கிவிட்டால் களத்துக்கு செல்வேன்.”

ஜலஜர் “முன்னரே பாஞ்சாலர் இக்களத்திற்கு வந்து நோக்கி புதைப்பதற்கு உரிய எளிய வழிகளை கண்டடைந்துவிட்டிருக்கிறார். இங்கே மண்ணுக்குள் மாபெரும் வெடிப்புகளும் பிலங்களும் உள்ளன. அவ்வெடிப்புகளில் உடல்களைப் போட்டு மண்ணிட்டு மூடுகிறார்கள். மண்ணுக்குள் ஓடும் பிலங்களுக்குமேல் சிறு குழிகளை தோண்டி அத்துளைகளினூடாக பிணங்களை உள்ளே போட்டு துளையை மூடுகிறார்கள்” என்றார். “இல்லாவிடில் இத்தனைபேருக்கும் குழிகள் தோண்டுவது போரைவிட பெரிய பணி. நள்ளிரவுக்குள் பிணங்கள் முழுமையாகவே மறைந்துவிடும். நாளை களம் தூய்மையாக இருக்கும்.” அவர் பற்கள் தெரிய சிரித்து “உண்ட தாலத்தை அடுத்த உணவுக்கு கழுவி வைப்பதுபோல” என்றார்.

சாத்யகி “முன்பும் இவ்வாறுதான் செய்தார்கள் போலும்” என்றான். அங்கே பெரும்பாலானவர்கள் எதையாவது சொல்லி சிரிப்பதை அவன் உணர்ந்தான். அச்சிரிப்பு அவர்களின் உள்ளம் கொள்ளும் இறுக்கத்தை நிகர்செய்யும் வழியா? அதனூடாக அவர்கள் உடையாது தங்களை தொகுத்துக்கொள்கிறார்களா? அன்றி அவர்களில் வந்தமர்ந்து அறியாத்தெய்வங்கள்தான் மானுடரை நகையாடுகின்றனவா? ஜலஜர் “ஆம், பெரும்பாலான பிளவுகளுக்குள் நொதிக்கும் செஞ்சேறு குருதி என நிறைந்துள்ளது. ஓரிரு நாட்களில் உடல்களை செரித்துக்கொள்ளும் பசி கொண்டவை அவை. பிலங்கள் அடியிலிபோல் ஆழமானவை. இங்குள்ள முழுப் படையினரையும் உள்ளே செலுத்தினாலும் நிறையாதவை” என்றார். சாத்யகி பெருமூச்சுவிட்டான். “பிலங்களுக்குள் பல்லாயிரமாண்டு எலும்புகள் குவிந்திருப்பதாகவும் பலகோடி பேய்கள் வாழ்வதாகவும் கதைகள் உள்ளன, யாதவரே” என்றார் ஜலஜர்.

மீண்டும் புரவியிலேறி குறுங்காட்டின் மறுபக்கம் வழியாக அவன் வெளியே சென்றான். அங்கே உடல்களை ஏற்றிய வண்டிகள் எருதுகளால் இழுக்கப்பட்டு நீண்ட நிரையாக வந்து வளைந்து நின்றன. அவற்றிலிருந்து பிணங்களை இறக்கி நீண்ட பன்னிரு வரிசைகளாக அடுக்கி நிரத்தினர் வீரர்கள். தோளோடு தோள் ஒட்டி மல்லாந்துகிடந்த உடல்களில் அறுபட்ட தலைகளை பொருத்தாமல் சற்று அப்பால் தனியாக வைத்தனர். வெட்டுண்ட கைகளையும் கால்களையும் வயிற்றின்மேல் வைத்தனர். உடல்களை அடையாளம் காண்பதற்குரிய முத்திரைகளையும் படைக்கலங்களையும் பிறபொருட்களையும் மார்பின் மேல் சீராக அமைத்தனர். அங்கிருந்து நோக்கியபோது ஒரு பெரும்படையை கிடைமட்டமாக பார்ப்பதுபோல் தோன்றியது. அவர்களனைவரும் எங்கோ போருக்கு சென்றுகொண்டிருப்பதுபோல.

துணைக்கணக்கர்கள் ஒவ்வொரு சடலத்தையாக நோக்கி அடையாளங்களைக் கொண்டு குலத்தையும் பெயரையும் படைப்பிரிவையும் நாட்டையும் அடையாளம் கண்டு உரக்க கூவிச் சொன்னார்கள். “கிருவிகுலத்தைச் சேர்ந்த முத்ரன். எட்டாவது பாஞ்சாலப் படைப்பிரிவு.” அந்த இளைஞனின் தலை தனியாக தரையில் மல்லாந்து விண்நோக்கி வெறித்திருந்தது. வெண்பற்களுடன் அவன் எதையோ சொல்ல விழைவதுபோல. அவனுடைய உடல் அந்த ஓசைக்கு அப்பால் வெறும் பருப்பொருளாக கிடந்தது. விழிகள் இருந்தமையால் அந்தப் பெயரை அவன் தலை அறிந்தது, ஆனால் அதற்கு எதிர்வினை ஆற்றவில்லை. அந்தப் பெயரையும் குலத்தையும் படையையும் நாட்டையும் கேட்டு அது திகைப்பதுபோல தோன்றியது. பெயர்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. “துர்க்ரும குலத்து அகாதன். மூன்றாவது விராடப் படைப்பிரிவு.” அவன் கண்மூடி துயின்றுகொண்டிருந்தான். சூழ நிகழ்வதை அவன் கேட்பதுபோல, அவன் கனவுக்குள் வேறொன்றாக அதை அறிந்துகொண்டிருப்பதுபோல.

மீண்டும் செல்லத்தொடங்கியபோதுதான் ஏன் தலைகள் இணைத்து வைக்கப்படவில்லை என்பதை சாத்யகி எண்ணி புரிந்துகொண்டான். வெட்டுண்ட தலை சேர்க்கப்பட்டால் பாதாள உயிர்கள் அவ்வுடலில் குடியேறிவிடக்கூடும். புதிய விழிகளுடன் எழுந்து நிற்கக்கூடும். ஏனென்றறியாமல் அவன் உடல் மெய்ப்பு கொண்டது. தன் உடலெங்கும் வந்து மொய்த்த அறியா விழிகளின் நோக்கை அவன் உணர்ந்தான். இறந்தவர்களின் விழிகள்! காற்றில் எழுந்த அவர்களின் ஆத்மாக்களின் மூச்சு அவன் மேல் மெல்லிய காற்றென தொட்டது. அவன் புரவிக்கு வலப்பக்கம் முடிவிலாது பிணங்களின் அடுக்கு வந்தபடியே இருந்தது. அது முடிந்ததை விழிதிருப்பாமலேயே கண்டு அவன் நீள்மூச்சுவிட்டு எளிதானான்.

தென்மேற்கே ஏழு ஆழ்ந்த நிலவெடிப்புகள் உண்டு என அவன் கேட்டிருந்தான். புரவியை அவன் செலுத்தாமலேயே அது அத்திசை நோக்கி சென்றது. அங்கேயும் பிணங்களின் நீண்ட நிரை உருவாகிக்கொண்டிருந்தது. அவன் சென்று இறங்கி அங்கே நின்றிருந்த துணைப்படைத்தலைவனிடம் “பாஞ்சாலர் ஆணைப்படி கணக்குகள் பதிவாகின்றன அல்லவா?” என்றான். அத்துணைப்படைத்தலைவனின் முகமும் சிகண்டியின் முகம்போலவே இருந்தது. எப்போதோ உள்ளூர இறந்துவிட்ட முகம். “ஆம், இப்போதுதான் தொடங்கியிருக்கின்றன” என்று அவன் சொன்னான். சாத்யகி உள்ளே சென்றான்.

அங்கே நிலப்பிளவின் விளிம்பில் படைவீரர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் அனைவருமே நிஷாதர்களும் கிராதர்களும் அரக்கர்களும் அசுரர்களும்தான் என்பதை கண்டான். அகன்ற பலகைகள் சாலையென வந்து உடைந்த பாலம்போல பிலத்தின் விளிம்பில் நீட்டி நின்றன. நிரையிலிருந்து ஓர் உடலை ஒருவர் சிறு நடைவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டுவந்து அந்தப் பலகையில் வைத்தார். குடிமூத்தார் ஒருவர் தலையில் கழுகிறகு சூடி குடிக்கோலை இடக்கையில் ஏந்தி நின்றிருந்தார். அவருக்கு உதவ இருவர் தாலங்களில் காட்டு மலர்களுடன் பின்னால் நின்றனர். குடிமூத்தார் “சூக குலத்து காரகனே, மூதாதையருடன் மகிழ்ந்திரு! உனக்கு அங்கே நிறைவுண்டாகுக! உன் கொடிவழியினருக்கு நீ வேரென்றாகுக! மண்ணுக்கு அடியில் இருந்து உயிரும் உப்புமென எழுந்து நீ மீண்டும் வருக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார். அவ்வுடல்மேல் ஒரு மலர் வைக்கப்பட்டதும் ஏவலன் பலகையை சரித்தான். உடல் சரிந்து ஆழத்தில் சென்று விழுந்தது. அடுத்த உடல் கைவண்டியில் அருகணைந்தது.

சாத்யகி அதை நோக்கியபடி நின்றான். இருபது இடங்களில் அவ்வாறு நீப்புச்சொற்களுடன் உடல்கள் மண்ணுக்குள் செலுத்தப்பட்டன. பசிஅணையா வாய் ஒன்றுக்கு ஊட்டிக்கொண்டே இருந்தனர். எடைகொண்டு குளிர்ந்திருந்த கால்களை உந்தி நீக்கியபடி நடந்து அவன் மீண்டும் புரவியை அணுகினான். துணைப்படைத்தலைவனிடம் “நான் புலரிக்குமுன் வந்து இந்த பெயர்பதிவை பெற்றுக்கொள்கிறேன்” என்றபின் கிளம்பினான். இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது. அவன் படைமுகப்பு நோக்கி செல்லத் தொடங்கியபோது தொலைவில் ஒரு சங்கொலி கேட்டது. மணியோசையும் வாழ்த்துக்குரல்களும் உடன் எழுந்தன. அவன் நின்று செவிகூர்ந்தான். பின்னர் அத்திசைநோக்கி புரவியை செலுத்தினான்.

அப்பகுதி குறுங்காட்டில் தனியாக காவலிட்டு பிரிக்கப்பட்டிருந்தது. அவன் அணுகியபோது அங்கிருந்த காவலர்தலைவன் தலைவணங்கி உள்ளே செல்ல ஒப்புதல் அளித்தான். உள்ளே மேலும் காவலர்கள் தென்பட்டனர். சிற்றமைச்சர் சந்திரசூடர் அங்கே நின்றிருந்தார். அவனைக் கண்டதும் அருகணைந்து தலைவணங்கினார். “என்ன நிகழ்கிறது?” என்றான். “இங்கே அரசகுடியினருக்கான எரியூட்டல் நிகழ்கிறது. இளவரசர் அரவான் முதலில் சிதைகொள்கிறார்” என்றார். தயக்கத்துடன் “அந்த உடல் இங்குதான் உள்ளதா?” என்றான் சாத்யகி. “ஆம், யாதவரே. பிற இளவரசர்களின் உடல்கள் அவர்களின் படைப்பிரிவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. அங்கே அரசகுடியினருக்குரிய நீப்புச்சடங்குகள் நிகழ்கின்றன. அவை இங்கே நள்ளிரவுக்குப் பின்னர்தான் ஒவ்வொன்றாக வந்துசேரும்” என்றார் சந்திரசூடர். “இந்நாளில் பெரும்பலி விராடர்களுக்கும் குலாடர்களுக்கும்தான். அவர்களின் உடல்கள் அங்கே குடிச்சடங்குகளுக்காக வைக்கப்பட்டுள்ளன. அரசரும் உடன்பிறந்தாரும் அங்கு சென்றுள்ளனர்.”

பின்னர் குரல் தாழ்த்தி “இது அரவானின் உடல் மட்டுமே. முறைப்படி நாகர்குடிக்குரிய சடங்குகள் அந்த தலைக்குத்தான் செய்யப்படும். இதை வெறுமனே எரித்துவிடும்படி ஆணை” என்றார். “எச்சடங்கும் இன்றியா?” என்றான் சாத்யகி. அவருடைய விழிகள் மேலும் சுருங்கின. “சடங்கு என்றால்…” என்றபின் “அந்த ஆணிலி வந்திருக்கிறாள். அவள் அவரை தன் கணவன் என்கிறாள். அவருடன் சிதையேறுவேன் என்று சொல்கிறாள். அதை ஒப்புவதா என்று அறியாமல் குழம்பி அரசருக்கே செய்தியனுப்பினோம். அவள் விருப்பம் நிறைவேறுக என ஆணை வந்துள்ளது” என்றார்.

சாத்யகி புரவியில் இருந்து இறங்கி குறுங்காட்டின் சிறு பாதையினூடாக நடந்தான். அவன் உடல் ஓய்ந்து தசைகள் உயிரற்றவைபோல தோன்றின. கண்ணிமைகள் அவனை மீறி மூடிமூடி எழுந்தன. ஒருசில கணங்கள் எண்ணங்கள் சூழலிழந்து எங்கோ அலைந்து மீண்டன. சற்று பள்ளமான இடத்தில் ஓர் ஆள் உயரமுள்ள நீண்ட சிதை ஒருக்கப்பட்டிருந்தது. அதன்மேல் அரக்குபொழிந்த விறகு அடுக்கப்பட்டு அரவானின் தலையிலாத உடல் வெண்கூறை மூடி வைக்கப்பட்டிருந்தது. அவன் கீழே செல்ல எண்ணினாலும் உடலை அசைக்காமல் மேலேயே மகிழமரத்தின் அடியில் நின்று நோக்கிக்கொண்டிருந்தான். அரவானுக்கான சிதைநெருப்பை வைக்கும் அந்தணர் தெற்குமூலையில் அமர்ந்து சடங்குகளை செய்துகொண்டிருந்தார். அங்கிருந்து நோக்கியபோது அவர் செய்வதென்ன என்று தெரியவில்லை. அவர் அருகே முழவும் மணியும் சங்கும் கொண்டு மூவர் நின்றிருந்தனர்.

கீழே சிதையின் கால்பகுதியில் கைகளைக் கூப்பியபடி ரோகிணி நின்றிருப்பதை கண்டான். அவள் அருகே குலாடகுடியின் இரு படைத்தலைவர்கள் உருவிய வாளுடன் நின்றனர். அவள் செந்நிறமான புத்தாடை சுற்றி கழுத்தில் செம்மலர்மாலை அணிந்திருந்தாள். குழலிலும் மலர்களை சூடியிருந்தாள். முகம் சிலைபோல் உறுதிகொண்டிருந்தது. முழவொலியும் சங்கொலியும் மணியோசையும் எழ அந்தணர் சடங்குகளை முடித்து கையில் அனற்கலத்துடன் எழுந்தார். அவருக்கு முன்னால் சங்கூதியபடி ஒருவன் சென்றான். அவர் மும்முறை சிதையை வலம் வந்து அதன் காலடியை வணங்கியபின் நெஞ்சில் அனல்கலத்தை வீசினார். மீண்டும் மும்முறை வணங்கிவிட்டு திரும்பிப்பாராமல் நடந்து அப்பால் சென்றார். முழவும் மணியும் உச்சவிசைகொண்டு ஓசையெழுப்பி ஓய்ந்தன. சங்கை மும்முறை ஊதியபின் அவர்கள் சென்று ரோகிணியின் அருகே நின்றனர்.

அரக்கில் நெருப்பு பற்றிக்கொண்டு செவ்விதழ்களாகப் பெருகி கொழுந்துவிட்டு எரிந்து மேலேறுவதை சாத்யகி கண்டான். அவன் உள்ளம் எந்தப் பரபரப்பும் இன்றி உறைந்து கிடந்தது. இப்பெரும்போருக்குப் பின் அன்றி வேறெப்போதாவது இந்நிகழ்வை பார்த்திருந்தால் உடலும் உள்ளமும் பதறித் துடித்திருக்கும் என்று எண்ணிக்கொண்டான். மீண்டும் சூதர்கள் முழவுகளையும் மணிகளையும் முழக்கத் தொடங்கினர். மும்முறை சங்கு முழங்கியது. ரோகிணி சிதையின் எரியும் கால்பகுதியை வணங்கி கைகளை கூப்பியபடி மும்முறை சுற்றிவந்தாள். முழவோசை தேம்பல்போல ஒலித்தது. மூன்றாவது சுற்றுக்குப்பின் அவள் சற்றே பின்னகர்ந்து பாய்ந்து சென்று சிதைமேல் ஏறி கைகளை விரித்தபடி அரக்குடனும் விறகுடனும் உருகி உடைந்து பொசுங்கி கொழுந்தாடி எரிந்துகொண்டிருந்த அரவானின் உடல்மேல் விழுந்தாள். அவள் உடல் அங்கே இருமுறை துள்ளியது. பின்னர் தழல்கள் அவளை முழுமையாக மூடிக்கொண்டன.

சாத்யகி தழலை நோக்கிக்கொண்டிருந்தான். அதற்குள் அவள் உடலின் அசைவுகள் தெரிவன போலவும் அது தழலாட்டம் மட்டுமே என்றும் தோன்றியது. பின்னர் பெருமூச்சுடன் திரும்பியபோது இடக்கால் செயலிழந்ததுபோல மண்ணில் பதிந்திருந்தது. அவன் காலை இழுத்து நடந்தபோது ஒரு தசைமட்டும் விதிர்த்தபடியே இருந்தது.

tigபூரிசிரவஸ் கௌரவப் படைகளினூடாக புரவியில் செருமுகப்பு நோக்கி சென்றான். படைகள் முற்றமைந்துவிட்டிருந்தமையால் மரத்தாலான பாதையில் அவனால் விரைந்து செல்ல முடிந்தது. வானில் வெளிச்சம் மீதியிருந்தது. தொலைவில் மருத்துவநிலைகளில் மட்டும் நெய்விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. அடுமனை நெருப்புகளை தொலைவில் காணமுடிந்தது. அந்தச் செவ்வெளிச்சத்தை பார்த்ததுமே பசி பொங்கி எழுந்தது. சூடான ஊன்கஞ்சி, இப்பொழுதை நிறைக்கவல்லது அதுதான். இப்போது இங்கிருக்கும் வீரர் அனைவருக்கும் பிற எவற்றையும்விட முதன்மையானது சூடான புத்துணவு.

பிறிதெப்போதும் உணவு இத்தனை சுவைகொள்ள வாய்ப்பில்லை. உணவு என உருக்கொண்டு மண் தன் அத்தனை சுவைகளுடன் சூழ்ந்துகொள்ளும். வானம் அத்தனை மணங்களுடன் அணைத்துக்கொள்ளும். உயிர் “ஆம், இதோ நான்” என்று உணவிடம் சொல்லும். உணவு “ஆம், இதோ நீ” என்று உயிரிடம் சொல்லும். நல்லுணவுக்குப்பின் மல்லாந்து மண்மேல் படுத்து விண்ணைநோக்கும் வீரன் நிறைவுடன் புன்னகைப்பான். ஒவ்வொருநாளும் மரங்கள் விண் நோக்கி அடையும் விரிவை முதல்முறையாக தானும் அடைவான்.

பூரிசிரவஸ் படைமுகப்பை அடைந்தபோது மெல்லிய பாடலோசை கேட்டது. அதை முதலில் அழுகையோசை என்றுதான் பழகிப்போன செவி புரிந்துகொண்டது. மேலும் அணுகியபோதுதான் அது பலர் இணைந்து மெல்லிய குரலில் பாடுவது என்று புரிந்தது. அவன் புரவிமேல் தளர்வாக அமர்ந்து அப்பாடலை கேட்டுக்கொண்டே சென்றான். சொற்கள் புரியவில்லை. ஆனால் சீரான தாளத்துடன் அது அமைந்திருந்தது. அதில் துயரில்லை என்பது முதலில் தெரிந்தது. மெல்லிய களியாட்டு இருப்பது பின்னர் புரிந்தது. மேலும் அணுகியபோதுதான் அது செருகளத்தின் பிணக்குவியல்களின் நடுவிலிருந்து ஒலிப்பதை அவன் புரிந்துகொண்டான்.

செருகளம் முதற்பார்வைக்கு பெருவெள்ளம் வடிந்தபின் சேற்றை நிறைத்துப் பரவியிருக்கும் மட்கிய மரக்கட்டைகளின் குவியல்போல தெரிந்தது. இடைவெளியே இல்லாமல் உடல்கள். மனிதர்கள், புரவிகள். நடுவே பாறைகள் என ஆங்காங்கே யானைகள். அவற்றின் நடுவே அலைநீரில் ஆடுபவைபோல சிறிய நெய்விளக்குகள் அலைந்தன. அவற்றின் பின் அவற்றை ஏந்தியவர்களின் நிழல்கள் எழுந்து ஆடின. சிறுகுழுக்களாக அவர்கள் செருகளத்தில் பரவியிருந்தனர். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அப்பாடலை பாடிக்கொண்டிருந்தார்கள். பிணங்களின் நடுவே காலடி வைத்து நடக்கும்போதும் பிணங்களை குனிந்து நோக்கும்போதும் அவர்களின் உடல்கள் இயல்பான தாளத்துடன் அசைய அந்தப் பாடல் எழுந்தது.

விளக்கொளியால் பிணங்களின் அடையாளங்களை நோக்கி கண்டடைந்ததும் “யானை!” என்றோ “எருது!” என்றோ கூவினர். யானை என்பது கௌரவப் படையை குறிக்கிறது என்று அந்த உடல் உடனே அங்கிருந்து தூக்கப்பட்டு கிழக்குப் பக்கமாக ஒதுக்கப்படுவதிலிருந்து பூரிசிரவஸ் அறிந்தான். ஒதுக்கி வைக்கப்பட்ட பிணங்களை அவை அணிந்திருந்த ஆடையால் தலையும் உடற்பகுதிகளும் சேர்த்து தரையிலிட்டு உருட்டி சுற்றிக் கட்டினர். அவற்றை இருவர் தூக்கி சிறிய கைவண்டிகளில் வைக்க ஒருவர் தள்ளிக் கொண்டுவந்து செருகளத்தின் விளிம்பில் மரப்பாதைமேல் நின்றிருந்த பிணவண்டிகளில் அடுக்கினர். விறகுபோல ஒன்றன் மேல் ஒன்றென வண்டி நிறைந்து கவியும் அளவுக்கு அடுக்கியதும் அது முன்னகர அடுத்த வண்டி வந்து நின்றது. வண்டியோட்டிகளும் அப்பாடலை மெல்ல பாடிக்கொண்டிருந்தார்கள்.

பூரிசிரவஸ் அங்கே நின்று அவர்களின் பணியை நோக்கிக்கொண்டிருந்தான். மேலும் சற்று தொலைவில் நின்று அந்த இடத்தை நோக்கினால் அங்கே உளம்நிறைவடையச் செய்யும் இனிய சடங்கொன்று நிகழ்வதாகவே எவருக்கும் தோன்றும் என எண்ணிக்கொண்டான். அந்தப் பாடல் கொஞ்சுவதுபோலவும் வேடிக்கையாக ஊடுவதுபோலவும் ஒலித்தது. ஆனால் மென்முழக்கமாக ஒலித்தமையால் சொல் புரியவில்லை. அந்தப்பாடலில் அவர்கள் வானிலிருந்து தொங்கும் சரடு ஒன்றில் ஆடிச் சுழலும் பாவைகள் என ஆனார்கள். சற்றுநேரம் கழித்தே அவர்கள் ஒரே திரளாக பணியாற்றுவதை அவன் உணர்ந்தான். அவர்களில் இரு தரப்பிலும் இருந்து வந்த ஏவலர் இருந்தனர். ஓர் உடலை மேற்கே இழுத்து விலக்கிவிட்டு இன்னொன்றை கிழக்கே கொண்டு சென்றனர்.

அப்பால் புரவியில் வருவது சாத்யகி என அவன் புரவியில் அமர்ந்திருந்ததில் இருந்தே உணர்ந்தான். சாத்யகி புரவியை இழுத்து நிறுத்தி அவர்களை நோக்கினான். அவன் தன்னை பார்த்துவிட்டதை பூரிசிரவஸ் உணர்ந்தான். “அவர்கள் கழையர்கள், முரசும் கொம்பும் ஒலிக்கும் அறிவிப்பாளர்கள்” என்று அவன் வேறெங்கோ நோக்கியபடி சொன்னான். அது அவனை நோக்கி சொல்லப்படாததனாலேயே விந்தையானதோர் அழுத்தம் கொண்டிருந்தது. சற்றுநேரம் கழித்து “ஆம்” என்றான். “அவர்கள் போரின் நடுவே இருக்கிறார்கள். ஆனால் போரிடுவதில்லை. முழுப் படையையும் பறவைநோக்கில் பார்க்கிறார்கள். அவர்கள் பார்க்கும் படையை பிற எவரும் பார்ப்பதில்லை” என்று சாத்யகி மீண்டும் சொன்னான். அப்பேச்சு ஏன் என அவனுக்கு புரியவில்லை. சாத்யகி பேசவிழைகிறான் என்று மட்டும் புரிந்தது. ஆனால் அதன்பின் நெடுநேரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

மீண்டும் பேசியபோது சாத்யகியின் குரல் மாறிவிட்டிருந்தது. “வலுவான புண்களேதும் இல்லையே?” என்றான். “இல்லை, தங்களுக்கு?” என்றான் பூரிசிரவஸ். “இல்லை” என்று சாத்யகி சொன்னான். படைகளில் பந்தங்கள் எழத்தொடங்கின. சற்றுநேரத்தில் நெடுந்தொலைவு வரை செந்தழல்களின் நிரை எழுந்தது. சாத்யகி “இன்னும் சில நாழிகைகளில் மனித உடல்கள் அகற்றப்பட்டுவிடும்” என்றான். “ஆம், ஆனால் அதன்பின்னர் புரவிகளும் யானைகளும் உள்ளன. தேர்களின் உடைவுகளை நீக்கவே நெடும்பொழுதாகும்” என்றான். சாத்யகி “யானைகளை அரசன்போலவும் புரவிகளை வீரன்போலவும் எரியூட்டவேண்டும் என்று நெறி” என்றான்.

பூரிசிரவஸுக்கு அது புதிய செய்தியாக இருந்தது. “மெய்யாகவா?” என்றான். “ஆம், யானைகள் கான்வேந்தர் என்றே நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. யானைகள் இறந்தால் அரசனின் ஓலை படிக்கப்பட்டு முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு சிதையேற்றப்படவேண்டும். ஏழாண்டுகள் நீர்க்கடன் அளிப்பார்கள்” என்றான் சாத்யகி. “புரவிகள் இறந்தால் புதைக்கலாம். ஆனால் அவற்றுக்கு நடுகல் நிறுத்தப்படும். ஓராண்டு நிறைவில் கள்ளும் மலரும் படைத்து வணங்கி விண்ணேற்றுவார்கள்.”

மீண்டும் அவர்கள் சொல்லின்மையை அடைந்தனர். பூரிசிரவஸ் சிலமுறை பேச எண்ணினான். ஆனால் சொற்கள் எழவில்லை. பின்னர் அவன் அம்முயற்சியை கைவிட்டு அமைதியிலாழ்ந்தான். சாத்யகியும் பிறகு பேசமுற்படவில்லை. ஆனால் அருகருகே இருக்க விழைந்தனர். களம் முழுக்க ஒலித்துக்கொண்டிருந்த அந்தப் பாடலை கேட்டபடி நின்றிருந்தார்கள்.

[செந்நா வேங்கை நிறைவு]

தொடர்புடைய பதிவுகள்

ஏழாம் உலகம் -கடிதம்

$
0
0

23beger

 

ஏழாம் உலகம் மின்னூல் வாங்க

ஏழாம் உலகம் வாங்க

 

ஒருமுறை நான் சென்னைக்குச் சென்றிருந்தேன் முதன்முதலாக. சரவணா ஸ்டோர்ஸ்க்கு அழைத்துச் சென்றார்கள். நான் திரும்பும்பொழுது பை கொடுத்த அக்காவிடம் நீங்க உட்காருவீங்களா உட்கார விடுவாங்களா என்று கேட்டேன். நான் படத்தில் பார்த்தேன் அது உண்மைதானா என்று கேட்டேன். இல்லை என்று சொன்னார்கள். அங்காடித்தெரு பார்த்திருந்தேன். நான் கடவுள் நான்கு நாள்களுக்குமுன்  பார்த்தேன். ஒரு காட்சியைப் பார்த்தேன் அப்படியே தொடர்ந்துவிட்டேன். அதன்பிறகு ஏழாம் உலகம். நேற்று இரவு வாசித்துமுடித்துவிட்டேன். உடனே எழுதலாம் என்று எடுத்தபொழுது மிகவும் சோர்வாக இருந்தது. படம் என்வாசிப்பை நிறைய குலைத்துவிட்டது. இனி படம் பார்க்கமாட்டேன். இடங்களும் மாங்காண்டிசாமியும் அப்படியே ஞாபகம் வந்தார்கள். எரிச்சலாக இருந்தது.

 

படங்களுக்கென சில விஷயங்கள் இருக்கும். அதைமட்டுமே பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஏழாம் உலகம்

 

ராமப்பனிடமிருந்து குருவியைப் பிரிக்கிறார்கள் முத்தம்மையினை அவளுடைய உதிரப்போக்குடன் தூக்கி செல்கிறார்கள் குழந்தையை வெயிலில் காயவிடுகிறார்கள் எருக்குவை மலமள்ளும் வண்டியில் சாக்கால்பொத்தி தள்ளிவருகிறார்கள். மனிதர்கள் என்றே இவர்கள் பார்க்கப்படுவதில்லை. இவர்களுக்கு ஆன்மாவோ உணர்வுகளோ மதிக்கப்படுவதில்லை. நீங்கள் ஒரு உரையில் உர்சுலா குயின் என்பவருடைய ஒரு கதையை சொன்னீர்கள். குய்யானின் குதூகலங்கள் பயங்கள் அழுகைகள். என்னையும் கொஞ்சம் காணமுடிந்தது. குருவி குழந்தைகளைப் பார்த்தாலே வெறியாகி விடுவாள் என்று வரும் அது ஒரு ஏக்கம்தான் என்று தோன்றியது. திருவண்ணாமலைக்கும் பழனிக்கும் தோழியுடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நான் போகவில்லை. இனி சென்றால் அங்கு உட்காராமல் வரமாட்டேன் என்று நினைக்கிறேன்.

 

சு வேணுகோபால் அவர்களின் முன்னுரை நன்றாக இருந்தது. நான் அவருடைய புத்தகங்கள் நிறைய வைத்திருக்கிறேன். ஒன்றும் வாசிக்கவில்லை. தமிழினி வசந்தகுமார் எனக்கு இருபத்தைந்து புத்தகங்கள் இலவசமாக வழங்கினார் அதில் அவருடையவும் உண்டு. குய்யான் மாங்காண்டி சாமியின் பாடலைக்கேட்டு புன்னகைக்கிறான் தாயின் அன்புபோல. அங்குதான் இந்த உலகம் இன்னும் இப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறது. உயிர்களிடமிருந்து நாம் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு முறை நான் என் ஊர் பேருந்து நிலையத்தில் ஒரு நாயைக் கண்டேன் அதேபோல ஒரு நாயை திருவட்டாறு பேருந்து நிலையத்திலும் பார்த்தேன். என் வீட்டு அழிசி நான் தூக்கிவந்த புதிதில் மேலெல்லாம் பூச்சியாக இருந்தது. என்னவென்று தெரியவில்லை. அது ஒரு நிலையிலேயே இருக்க முடியவில்லை. அதுடைய நிலை. வாசிக்கும்பொழுது நினைவு வந்தது. எளிமையான இந்த மனிதர்களிடம் உறவுகளும் அவ்வளவு சகஜமாக நிகழ்கின்றன. ஆழமாகவும். ராமப்பன் குருவி குய்யான் முத்தம்மை மாங்காண்டி சாமி அயமது இவர்களுடைய பிணைப்பு பண்டாரத்திற்கும் அவர் பிள்ளைகளுடன் இருக்கும் பிணைப்பு இரண்டையும் பார்க்கிறேன். முத்தம்மையை பன்னின்னு நினைத்தேன் என்று சொல்லுமிடங்கள் அவளுடைய கதறல்கள் தொடர்ந்த எதிர்வினைகள் எல்லாம் அவளை அந்த மனிதர்கள் மிகையாக உருவகிப்பதுபோல தோன்றியது.  ஆனால் அது உண்மை. உண்மையை மோசமான கீழான நிலையை சொல்லும் தீவிரமான உண்மைகள் மிகையாகத்தான் சொல்லப்பட வேண்டும் என்று தோன்றியது.

 

Empathy என்று பாடம் சொன்னார்கள். Difference between the sympathy and empathy என்று. இந்தபுத்தகத்தை ஒரு தோழியிடம் ஒரு மாணவனிடம் கொடுக்கலாம். ஆனால் அது இருந்தால்தான் இந்த மனிதர்களை வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். ஊழல் பேராசைகள் பொறாமை ஈர்ப்புகள் அதிகம் புழங்கும் இந்த என் அருகாமைகளில் இவர்களுக்கு இந்த வாழ்வு தெரியுமா. ஒரு முறை பேருந்து நிலையத்தில் ஒரு குழந்தை என்னிடம் வந்து அக்கா வடை வாங்கித்தாங்க என்று கேட்டாள். சாப்பிட்டாள். பின்பு இன்னொருவரிடமும் சென்று கேட்டாள். குழந்தைகள் பசியில்லாமல் இருக்கவேண்டும் அவ்வளவுதான் என்று தோன்றுகிறது. சம்பந்தமில்லாமல் ஒரு விஷயம் வந்துவிட்டது.

 

லக்ஷ்மி

 

ஏழாம் உலகம் விமர்சனங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

காவேரி –வெள்ளமும் வறட்சியும்

$
0
0

Tamil-image

அன்பின் ஜெயமோகன்,

காவிரி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஆனால் காவிரி டெல்டாவின் பெரும்பாலான குளங்கள் இன்னும் நிரம்பாமல் இருக்கின்றன. இன்னும் பல பகுதிகளுக்குக் காவிரி நீர் சென்று சேரவில்லை என்பதே கள நிலவரம். ஆற்றின் மீதும் ஆற்று நீரின் மீதும் நீர் மேலாண்மை மீதும் மிகப் பெரும் அலட்சியம் இம்முறை காட்டப்பட்டுள்ளது. காவிரி டெல்டாவின் நீர் மேலாண்மை என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. சோழர்கள் தங்கள் தொலைநோக்கால் உருவாக்கிய மாபெரும் பொறியியல் அற்புதம். நிலத்தடி நீரை பூமியின் மேல்மட்டத்திலிருந்து சில அடி ஆழங்களில் தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறை.

இந்த ஆண்டு ஏரி, குளங்களில் மேல்மட்டத்திலிருந்து மூன்று அடி ஆழம் வரை உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் தூர் வாரி விவசாய நிலங்களில் இட்டுக் கொள்ளலாம் என மாநில அரசாங்கம் அனுமதி அளித்தது. டெல்டாவில் ஒவ்வொரு குளமும் ஆற்றுநீரைக் கால்வாய்கள் மூலம் பெற்று நிரம்பும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். மலைப்பகுதிகளிலிருந்து மண்ணை அரித்துக் கொண்டு வரும் ஆற்று நீர் குளங்களில் நிரம்பி மண் துகள்கள் அடியில் படிந்து பின்னர்த் தெளியும். பல ஆண்டுகள் இவ்வாறு படிந்தால் குளத்தின் மேற்பரப்பில் படிந்திருக்கும் களிமண் ஈரத்தில் இறுகிக் குளத்து நீரை பூமிக்கு அடியில் செல்ல அனுமதிக்காது. அவ்வாறு படிந்த வண்டல் மண்ணை மட்டுமே சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நீக்க வேண்டும். குளங்களைத் தூர்வாரிக் கொள்ள என்று ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த நிதி தூர்வாரப் பயன்படுத்தப்பட்டதாய்க் கணக்கு காட்டப்பட்டு அரசியல்வாதிகளாலும் அதிகாரிகளாலும் பங்கு பிரித்துக் கொள்ளப்படும். இந்த ஆண்டு மேலதிக மோசடியாக வண்டல் மண் எடுக்க அனுமதி என்ற பெயரில் அரசியல்வாதிகள் மேல்மட்டத்தில் இருந்த வண்டலை எடுத்ததுடன் அதன் கீழ் இருக்கும் சவுட்டு மணலை ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் எடுத்து வணிக நோக்கத்தில் கட்டுமானத் தேவைக்கு Filling Sand ஆக டிப்பர் மூலம் விற்பனை செய்தனர். அனுமதிக்கப்பட்ட மூன்று அடியைத் தாண்டி ஆறு அடி முதல் பத்து அடி வரை சென்று சவுட்டுமணலை எடுத்து விற்றுள்ளனர். அவ்வாறு எடுக்கப்பட்ட சவுட்டுமணல் அளவில் சிறிய குளம் என்றால் ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் நடுத்தரமான குளங்கள் எனில்  இருபது லட்ச ரூபாய்க்கும் பெரிய குளங்கள் எனில் ஐம்பது லட்ச ரூபாய் வரைக்கும் விற்பனை நடந்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. அவற்றில் விற்கப்பட்டிருக்கும் சவுட்டுமணலின் மதிப்பு இருநூறு கோடி ரூபாய்க்கும் மேலாக இருக்கும். இது ஒரு குறைந்தபட்ச கணக்கீடு. உள்ள நிலை இதை விடப் பல மடங்கு அதிகமாகவே இருக்கக் கூடும்.

ஊருக்காகக் குளம் வெட்டுவதை ஒரு புண்ணியச் செயல்பாடாக நினைத்த ஒரு நாட்டில் குளங்களின் ஆன்மாவைச் சிதைக்கும் இந்த அழிவுச் செயல் நிகழ்ந்துள்ளது. ஒரு குளம் வெட்டப்படும் போது, குளம் வெட்டும் இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு மரபான பல தெரிவு முறைகள் உள்ளன. அக்குளத்தின் நீர் ஊர்மக்களுக்கு உச்சபட்சமான அளவில் பலவிதங்களிலும் பயன்பட வேண்டும் என்ற உணர்வுடன் குளங்களை உருவாக்கியிருப்பர். நிலத்தடி நீரை மேல்மட்டத்திலேயே பராமரிக்க இந்தச் சவுட்டுமணலே காரணம். இவை நீர் உறிஞ்சிகளாய்ச் செயல்பட்டுத் தண்ணீரைத் தன் ஆழத்தில் தக்க வைத்துக் கொள்ளும். அந்த மணல்பரப்பே குளங்களின் ஜீவன். நூற்றாண்டுகளாய் தங்கள் உயிர்ப்பைத் தக்க வைத்துக் கொண்ட குளங்கள் இந்த ஒரே ஆண்டில் சாகடிக்கப்பட்டுள்ளன.

காவிரியில் வரும் நீரைப் பயன்படுத்துவதற்காக ஆயத்தமாயிருந்திருக்க வேண்டிய அரசுத் துறைகள் எந்த முன்னேற்பாடும் இல்லாமல் இருந்தன. பல கால்வாய்களுக்குத் தண்ணீர் வரவில்லை. சில கிளை நதிகளிலேயே காவிரி நீர் பாயவில்லை. தண்ணீர் முழுதும் கடலில் சென்று கலந்து கொண்டிருந்தது.

காவிரிக்காகப் பல ஆண்டுகள் நடக்கும் நீதிமன்ற வழக்கின் நோக்கம் என்ன? காவிரி நீர் டெல்டா மாவட்டங்களின் விவசாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்பது தானே? நீர் சேமிக்கப்படாமல் – நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தாமல் – விவசாயத்துக்குப் பயன்படாமல் – கடலில் கலக்கும் என்றால் அதன் பயன்தான் என்ன? மத்தியப்பிரதேசத்தில் பல கிராமங்களில் வெறும் பத்துக் குடும்பங்கள் பாலிதீன் ஷீட்டைப் பத்தடிக்கு பத்தடி பரப்புள்ள  வீட்டின் கூரையாகக் கொண்டு வற்றிய உடலுடன் சோளம் பயிரிட்டு வாழ்வதைக் கண்டிருக்கிறேன். ஆற்றுப் பாசனத்திற்கோ கால்வாய்ப் பாசனத்திற்கோ வாய்ப்பே இல்லாத நிலப்பரப்புகள்தான் இந்திய மண்ணில் நிரம்பியிருக்கின்றன.

காவிரி டெல்டாவில் காவிரி நீரும் வடகிழக்குப் பருவமழையால் பெறப்படும் மழைநீரும் இருக்கும் நீர்நிலைகளில் முறையாகச் சேமிக்கப்படுவதும் நிலத்தடி நீர் மேல்மட்டத்தில் பராமரிக்கப்படுவதும் துல்லியமான நீர் மேலாண்மையுமே இப்பகுதியின் முன்னேற்றத்துக்கு இப்போது தேவைப்படுவது. அரசியல் கூச்சல்கள் பயனற்றவை; அழிவை உருவாக்குபவை.

அன்புடன்,

பிரபு மயிலாடுதுறை

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது?

$
0
0

buddha-street-art-The-Tattooed-Buddha

 

நெடுஞ்சாலைப் புத்தர் 

நேற்று நான்
நெடுஞ்சாலையைக் குறுக்கே கடக்கும்
புத்தனைக்கண்டேன்

சாயங்காலப் பரபரப்பில்
கடக்க முடியாமல்
இப்பக்கம்
வெகுநேரமாக நின்றிருந்தேன்

ஐம்பதோ
அறுபதோ
எழுபதோ
வருடம் நீளமுள்ள வாழ்வில்
எப்படிப் பார்த்தாலும் ஒரு ஒன்றரை வருடம்
நாம் இப்படி கடக்க முடியாமல்
காத்து நிற்கிறோம்
என்று எண்ணியபடி …

அப்போது ஒருவன்
சற்றும் தயங்காமல்
மெதுவாக நெடுஞ்சாலையை கடப்பதைக் கண்டேன்
அவனைப் பின் தொடரத் தொடங்குகையில்
ஒரு வண்டி
குரோதத்துடன் என்னை நோக்கி வந்தது

ஒரு வண்டியும்
அவனுக்காக வேகத்தைக் குறைக்கவில்லை
இயல்பான
அகன்ற
தனித்த
எப்போதும் அங்கிருக்கும் பாதையில்
அவன் நடந்து மறுபக்கம் சேர்ந்தான்.

kalpa

‘நெடுஞ்சாலை புத்தர்’ என்ற கல்பற்றா நாராயணன் இந்தக் கவிதை எனக்கு ஆழமான ஓர் அனுபவத்தை அளிப்பதாக இருந்தது. அந்தச் சொற்சேர்க்கையே ஒரு ‘ஜென் தன்மை’ வாய்ந்தது. நெடுஞ்சாலையில் புத்தர். புத்தர் என்றாலே அமைதி முழுமை கம்பீரம்- ஓங்கி விண்தொடும் மலைச்சிகரங்கள் போல. அஜந்தாகுகைகளின் கருவறை ஆழத்தில் இருக்கும் புத்தர்ச் சிலைகளைப்பார்க்கும்போது அவை மலைகளின் அங்கம் என்ற எண்ணமே என்னை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. அம்மலைகளிலிருந்து வழியும் ஆறுகளின் கருணையாலானது நம் கலாச்சாரம். அம்மலைகளின் மரங்கள் அம்மலைகளின் மருந்துகள்…. அம்மலைகளை உடைத்து நாம் வீடுகட்டிக் கொண்டு குடியிருக்கிறோம். நம் நாகரீகமே மலைகளின் மடியில் நடந்துகொண்டிருக்கும் ஒரு சில்லறை செயல்பாடு. புத்தர் இந்நாகரீகங்கள் எழுவதையும் விழுவதையும் பார்த்தபடி மேகமுடிசூடி அப்பால் அமர்ந்திருக்கும் மகாமௌனம்.

மௌனத்துக்கும் நிம்மதிக்கும் நேர் எதிரான சொல் நெடுஞ்சாலை. நம் நாகரீகத்தின் இதயம். ஒரு கணம்கூட ஓயாத துடிப்பு. உலோகம், சத்தம், புகை , வேகம், போக்கு, வரவு , போட்டி …. அதுதான் புதுமைப்பித்தன் சொல்வானே, ‘மகா மயானம்’ அல்லது ‘ டிராம் நாகரீகம் ‘ . இந்நூற்றாண்டைப் பற்றி பேசவந்த பல எழுத்தாளார்கள் கலைஞர்கள் நெடுஞ்சாலையை அதன் குறியீடாகச் சொல்லியிருக்கிறர்கள். அங்கே ஓடாத முட்டிமோதாத எதற்குமே இடமில்லை.

நாராயணனின் கவிதையில் நெடுஞ்ச்சாலையில் சட்டென்று வந்துவிடும் புத்தர் தரும் அனுபவம் அலாதியானது. ‘இவர் எங்கே இங்கே?” என்ற எண்ணத்துக்குப் பதிலாக “ஆம் இங்கும் இவர் உண்டு ” என்ற மனம்நிறைந்த புன்னகையையே இக்கவிதை உருவாக்குகிறது . எந்த ஓசைவெளியிலும் மௌனத்துக்கு இடம் உண்டல்லவா? ஓசைகளெல்லாம் உண்மையில் அந்த மௌனம் மீது நிகழ்வனதானே ? அத்தனை ஓசையையும் தன் மீது அசையும் நிழல்கள் போல எடுத்துக் கொண்டு நதிபோல அந்த மௌனம் காலத்தில் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது அல்லவா? மலை உச்சியில் நின்று பார்க்கும்போது இதே நகரத்து நெடுஞ்சாலை எத்தனை அமைதியுடன் உள்ளது. நீலம் போர்த்தி அமர்ந்திருக்கும் அந்த சிகர புத்தர் எப்போதும் கண்ணுறும் நம் நகரம் அமைதி மிக்கதுதானா?

கல்பற்றா நாராயணன் கவிதையில் இரைந்து வழிந்தோடும் வண்டிகளில் எதிலும் மோதாமல் இயல்பாகச் சாலையை கடக்கிறார் புத்தர் ‘ அவன் காட்டில் நுழையும்போது இலைகள் அசைவதில்லை. அவன் நீரில் இறங்கும்போது அலைகள் எழுவதில்லை’ அத்தனை சாதாரணமாக. சேற்றில் உந்தி நிற்கும் கற்கள் மீது மட்டும் கால்வைத்து மறுபக்கம் செல்வதுபோல அவன் அந்த நெடுஞ்சாலை களேபரத்திற்குள் தேங்கியுள்ள மௌனத்திலும் அசைவின்மையிலும் மட்டும் காலெடுத்துவத்து மறுபக்கம் சென்றுவிட்டான். எப்போதும் அங்கிருக்கும் பாதை அது. எதனாலும் கலைக்கமுடியாத ஒன்று..

கல்பற்றா நாராயணன், அன்வர் அலி, அனிதா தம்பி , டி பி ராஜீவன், வீரான்குட்டி, பி ராமன், பி பி ராமசந்திரன் ஆகிய ஏழு கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய இத்தொகைக்காக கவிதைகளைப் படிக்கையில் நெடுஞ்சாலை புத்தர் என்ற படிமமே பொது அடையாளமாக மாறியது என் மனதுக்குள். இவை அனைத்திலும் நாம் காண்பது சமகால வாழ்க்கையின் ஓசைப்பெருநதியின் மீது அதன் மௌனத்திட்டுகள் மீது மட்டும் காலெடுத்துவைத்து மெல்ல அப்புறம் கடக்க முயலும் கவிமனங்களை என்று பொதுவாகச் சொல்லலாம். இந்த மௌனத்தை ஓசையினூடாகக் கண்டுகொண்டமையினால்போலும் இவற்றில் வீரான்குட்டி கவிதைகள் தவிர பிற அனைத்திலும் ஆழமான ஒரு நகைச்சுவை இருப்பதைக் காணாலாம். மற்றபடி உத்திகள் கூறுமுறை அனைத்திலுமே இவை வேறுபாடுகள் கொண்டவை.

மலையாளக் கவிதையின் மாறிய முகத்தை நாம் இக்கவிதைகளில் காணலாம். சச்சிதானந்தன், பாலசந்திரன் சுள்ளிக்காடு போன்ற முந்தைய கவிஞர்களின் குரல் ஓசைக்கு எதிரான இன்னொரு ஓசை. கலகம், கோபம் கொண்ட குரல். அரசியல் சார்ந்த கோபம் . அறம் சார்ந்த கோபம். அவர்கள் எழுதிய கவிதைகளில் மௌனங்கள் இல்லை. மௌனத்துக்கான தேடலும் அவற்றில் இல்லை. அவர்கள் கண்டது ஒருபக்கம் ஓசை, மறுபக்கம் ஆழ்ந்த தர்மசங்கடமான அமைதி. இந்த சமநிலையின்மைக்கு எதிரான பொறுமையிழப்பே அவர்களைக் கவிஞர்களாக்கியது. ‘ஓசை எழுப்புங்கள் ஓசை எழுப்புங்கள்’ என்று அவை மௌனமான அத்தளம் நோக்கி அதட்டின, மன்றாடின, அறைகூவின.

கடம்மனிட்ட ராமகிருஷ்ணனின் கவிதையில் நீண்ட வரலாறு முழுக்க குரல் இல்லாமல் இருந்த காட்டாளன் ‘ நெஞ்சில் ஒரு பந்தம் குத்தி’ வந்து நின்று ‘நீங்கள் என் கரிய குழந்தைகளை சுட்டு தின்றீர்கள், நீங்கள் அவர்களின் கரிய கண்களை தோண்டியெடுத்தீர்கள்!’ என்று முழங்கினான்.[ காட்டாளான். பார்க்க தற்கால மலையாளக் கவிதைகள். மொழியாக்கம் ஜெயமோகன்] கெ ஜி சங்கரப்பிள்ளை தன் கவிதையில் மௌனம் பூண்ட நடுத்தர வற்கத்தை நோக்கி ‘ சகோதரா அச்சம் காரணமாக ஒரு நாய் கூட தான் கண்டதை சொல்லமல் இருப்பதில்லை ‘ என்று குத்தி ‘ நொண்டிச்சாக்குகளின் சிதையின்மீது நம்முடைய வாழ்நாள்நீளும் எரிந்தடங்கலை’ சித்தரித்துக் காட்டினார்.

இது வரும் புரட்சியின் எழுபதுகளும் வராதுபோன புரட்சியின் எண்பதுகளும் சென்று மறைந்த பிறகு உருவான தலைமுறை . இது ஊடகங்கள் சமைக்கும் அன்றாடப் புரட்சிகளின் அலைவந்து அடிக்கும் கரை. இங்கே எவருக்குமே குரல்கள் இல்லாமல் இல்லை. எல்லா குரல்களுமே ஒன்றுக்குப் பத்தாகப் பெருகிவிட்டன. எழுபதுகளின் புரட்சிக் கவிஞர்கள் தொலைக்காட்சிகள் வழியாக நம்மைநோக்கி கர்ஜித்துக் கொண்டிருக்கும் காலம். இது ஓசைகளின் நெடுஞ்சாலை. பிம்பங்களின் நெடுஞ்சாலை. படிமங்களின் நெடுஞ்சாலை. இங்கே புத்தரைத் தேடும் அந்தரங்கமான யத்தனமாக மாறியிருக்கின்றது இன்றைய கவிதை. மிக மௌனமான தேடல். சொற்களால் கூட அல்ல, சொற்கள் அமர்ந்து நீங்கிய இடத்தில் எஞ்சும் மெல்லிய தடங்களால் எழுதப்பட்ட கவிதைகள் இவை . அந்தரங்கமான வலிகளால் தனக்குத்தானேகூட சொல்லிக் கொள்ள தயங்கும் உவகைகளால் ஆன கவிதைகள்.

இக்கவிதைகள் பொதுவாக கவிதைகளில் காணப்படும் போலியான துக்கங்களைச் சுமக்கவில்லை என்பதை முதலில் கவனிக்கலாம். தத்துவார்த்தமான பெரிய அல்லல்களை இவை அடையவில்லை. பெரிய வினாக்களை எழுப்பிக் கொண்டு காலம் மற்றும் வெளிக்கு முன் பதைத்து நிற்கவில்லை. தமிழ்க் கவிதைகளுடன் ஒப்பிடும்போது நாம் முதலில் காணும் வேறுபாடே இவை தத்துவார்த்த மொழியை முற்றாக உதறிவிட்டிருக்கின்றன என்பதே. நம் கவிதைகள் ‘பெரிய’ விஷயத்தை சொல்ல முனையும் முகபாவனையுடன் தொடங்குகின்றன. இவையோ ‘ஒன்றுமில்லை , ஒரு சின்ன விஷயம்;’ என்ற இலகுவான பாவனையுடன் தொடங்குகின்றன. மீண்டும் மீண்டும் அன்றாட அனுபவங்களை தஞ்சமடைகின்றன. முற்றம் கூட்டிப் பெருக்குதல். பேருந்து பிடித்தல் போல. பெரிய கோட்பாடுகளை எழுதவில்லை, சாதாரணமாக பூனைக்குட்டிகளைப் பற்றி எழுதுகின்றன. இந்த அன்றாட எளிமை வழியாக ஆழத்தில் ஓடும் மௌனநதியை காட்டிவிட முயல்கின்றன இவை. நிறமற்ற , தூய வெண்ணிற மலர்களையே புத்தரின் காலடியில் வைக்கவேண்டும் என்பார்கள். இவை அத்தகையவை.

இக்கவிதைகள் எதிலுமே படிமங்களும் உருவகங்களும் அடைந்து கிடக்கவில்லை என்பதை நாம் கவனிக்கலாம். எண்பதுகளின் இறுதியில் எழுதப்பட்ட கவிதைகள் படிமங்கள் மூலமே தங்கள் இயக்கத்தை நிகழ்த்துவனவாக இருந்தன. இக்கவிதைகளில் அபூர்வமாகவே படிமங்கள் வருகின்றன. உருவகங்கள் அதைவிட அபூர்வமாக. இவை ஒரு குறிப்பிட்ட முறையில் சொல்வதன்மூலம் தங்கள் கவித்துவ சலனத்தை நிகழ்த்துவனவாக உள்ளன. உதாரணம் ‘காலத்தின் தலைவன்’ ‘கனம்’ .காரணம் நவீன ஊடகங்கள் மூலம் படிமங்கள் நுரைக்குமிழிகள்போல ஊதி பெருக்கப்பட்டு காற்றை நிரப்பும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே. படிமங்கள் மழையாகப் பெய்யும் எம் டி வி யின் பத்துபாடல்களை பார்த்தால் பிறகு நம்மால் எளிதில் படிமங்களில் ஈடுபடமுடியாது. கவிதை என்பது சமகால அதி ஊடகங்களின் அராஜகத்துக்கு எதிரான செயல்பாடாக மாறியுள்ள இன்று இயல்பாகவே இக்கவிஞர்கள் படிமங்களை உதறி விட்டு மொழியின் நுட்பமான வண்ணமாற்றங்களை நோக்கிச் சென்றுவிட்டிருக்கிறார்கள். டி பி ராஜீவனின் ‘மனசாட்சிக் காவலர்களிடம்..’ என்ற கவிதை உதாரணம். அதில் உள்ள் கவித்துவக்கூறு அதன் மொழியாட்சி மூலமே உருவாகக் கூடியது. காட்சி ஊடகத்தால் தீண்டப்பட இயலாத ஒன்று அது.

அன்றாட வீட்டு உபயோகப்பொருள் போல இருப்பதே இவற்றின் முக்கியத் தனித்தன்மை .நதி , கடல் போன்ற எக்காலத்துக்கும் கவிதைக்கு உரிய ‘மிகப்பெரிய’ உருவகங்களை எடுத்துக் கொள்ளும்போதுகூட அவை உருவாக்கும் தத்துவார்த்த கனத்தை இயல்பான நகைச்சுவை மூலம் இல்லாமலாக்கி விடுகின்றன இக்கவிதைகள் . அதாவது முற்றாகக் கனமற்று காற்றில் மிதக்கும் ஒரு இறகு போல ஆவதற்கு முயல்கின்றன .மிதக்கும் இறகு தன் ஒவ்வொரு அசைவின் மூலமும் காற்று மண்டலத்தைக் காட்டுகிறது. தன் உடல் மூலம் பிரம்மாண்டமான ஒரு மொழியை அது பேசிக் கொண்டிருக்கிறது. அந்த லாவகத்தை அடைய முயல்கின்றன இக்கவிதைகள் எனலாம். உதாரணமாக பி பி ராமசந்திரனின் கனம் என்ற கவிதை. எத்தனை உக்கிரமான அனுபவம் அது. ஆனால் அதை ஒரு மெல்லிய நகைச்சுவைக்குள் பொதிந்து முன்வைக்கிறார். கிழவியை அதட்டும் மதிய சூரியன் கூட செல்லமாகவே அப்படி செய்கிறது. ஆனால் சென்ற காலக் கவிதைகளின் ஓசைக் கொந்தளிப்பை விட பல மடங்கு ஆழமாக நம் மனசாட்சியை ஊடுருவுகிறது இக்கவிதை. இந்த மௌனவலிமையே மலையாளக் கவிதைகளின் சிறந்த பிரதிநிதிகளான இவர்கள் இப்போது அடைந்துள்ள சிறப்பம்சம் என்று எனக்குப் படுகிறது.

*** *** ***

இத்தொகுதி 2004 மே மாதம் 21,22,23 நாட்களில் ஊட்டியில் நாராயணகுருகுலத்தில் நித்ய சைதன்ய யதி நினைவாக நடத்தப்படும் தமிழ் மலையாளக் கவிதை அரங்குக்காக மொழிபெயர்க்கப் பட்டது. தமிழில் இருந்து எம் யுவன், கலாப்ரியா, தேவதேவன், மனுஷ்யபுத்திரன், முகுந்த் நாகராஜன், நாஞ்சில்நாடன், சூத்ரதாரி, க.மோகனரங்கன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். கவிதைகளை இரு மொழிக்கும் மாற்றி ஏற்கனவே மொழிபெயர்த்து வைத்துக் கொண்டு அவற்றை வாசித்துப் பேசுவது வழக்கம் . 1999 நவம்பரில் 20,21,22 தேதிகளில் குற்றாலத்தில் கவிஞர் கலாப்ரியாவுக்குச் சொந்தமான வீட்டில்முதல் கூட்டம் நடந்தது. ஏறத்தாழ இதே கவிஞர்கள்தான் பங்கெடுத்தார்கள். அதன் பிறகு ஊட்டியில் ஒருமுறை , ஒகேனெக்கலில் ஒன்று, குற்றாலத்தில் ஒன்று என மொத்தம் நான்கு சந்திப்புகள் இதேபோல தமிழ் மலையாளக் கவிதைப் பரிமாற்றத்துக்காக ஏற்பாடு செய்திருந்தோம்.

இக்கவிதைப்பரிமாற்ற அரங்கில் ஆரம்பத்தில் கவிதை குறித்த கடுமையான முரண்பட்ட கருத்துக்களும் பூசல்களும் நட்பு எல்லை மீறாமல் நிகழ்ந்தன. மலையாளக் கவிஞர்களில் ஒருசாரார் எழுதியிருந்த கவியரங்கத்தன்மை கொண்ட கவிதைகள் பலவாறாக சர்ச்சைக்கு உள்ளாயின. பின்பு அவ்விவாதம் மாத்யமம் , பாஷாபோஷிணி போன்ற இதழ்களுக்கும் பரவியது. விவாதங்களைத் தொடக்கிவைத்த கல்பற்றா நாராயணன் தவிர பிற கவிதை ஆர்வலர்கள் பலரும் கருத்துக்களை எழுதினர். பாஷா போஷ்ணியில் நான் மலையாளாக் கவிதைகளின் கட்டுப்பாடற்ற வடிவம் மற்றும் செய்ற்கை ஓசைத்தன்மை ஆகியவற்றை கடுமையாக விமரிசித்து எழுதிய கட்டுரை பலவாறாக விமரிசிக்கப்பட்டது. பற்பல வசைக் கவிதைகள் என்னைப்பற்றி எழுதப்பட்டன. என் கருத்துக்கள் ‘சுத்த கலைவாதம்’ என்று விமரிசிக்கப் பட்டன. அந்நோக்குடன் உடன்பாடு கொள்ளுதலை ‘குற்றாலம் இ·பக்ட்’ என்றே சிலர் சொன்னார்கள்

எந்த விவாதமும் வெறுமே ஒற்றைப்படையாக நிகழ்வது இல்லை. வருத்தங்கள் கோபதாபங்கள் திசை திரும்பல்கள் எல்லாம் நிகழும். கவிதை விவாதம் ஒரு கட்டத்தில் தமிழ் மலையாள விவாதமாக திசை திரும்பியது. ஆனால் இப்போது ஐந்துவருடம் கழித்து இக்கவிதைகளை தொகுத்துப் பார்க்கையில் குற்றாலம் கூட்டம் தொடங்கி வைத்த விவாதம் ஆக்கபூர்வமான ஒரு மாற்றத்தை உருவாக்கியிருப்பதையே காண்கிறேன் . இதுகுறித்து சற்றுப் பெருமிதம் கொள்ள எனக்கு உரிமை உள்ளது என்றும் படுகிறது. இன்றைய மலையாளக் கவிதையில் முன்பிருந்த ‘தசை இறுகி நிற்கும்’ போக்கும், அனாவசியமான இசைத்தன்மையும் இல்லை என்றே படுகிறது. நுட்பமான அக மௌனத்தால் ஆனவையாக இக்கவிதைகள் உள்ளமை என் எதிர்பார்ப்பை நிறைவு செய்கின்றன.

அதைவிடமுக்கியமானது இச்சந்திப்புகள் மூலம் தமிழ் மலையாளக் கவிஞர்கள் இடையே உருவாகி பல தளங்களுக்கு நீடித்து வளாரும் தனிப்பட்ட நட்பு எனலாம். இவ்வரங்குகளுக்கு வெளியே அவர்கள் விவாதித்துக் கொள்வதும் இருமொழி இலக்கியப்போக்குகளுக்கும் பெரிதும் உதவியானதே. பெரிய அமைப்புகள் உருவாக்கும் அரங்குகள் உருவாக்க முடியாத திட்டவட்டமான மாற்றத்தை குறைந்த அளாவு பணவசதியுடன் நிகழ்த்திய இக்கூட்டங்கள் உருவாக்கியிருப்பதை ஆத்மார்த்தத்தின் வெற்றி என்றே எண்ணுகிறேன்.

ஆரம்பம் முதலே இந்த கூட்டங்களை அமைப்பதில் எனக்கு உதவிய என் ஆத்ம நண்பரும் மொழிபெயர்ப்பாளாருமான நிர்மால்யா [ மணி ]க்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன்

[தமிழினி வெளியீடாக வந்துள்ள ‘நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் ‘ மலையாளக் கவிதைகள் மொழிபெயர்ப்பின் முன்னுரை]

 

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Mar 31, 2008 

 

கல்பற்றா நாராயணன் கவிதைகள்

http://jeyamohan.in/?p=341

http://jeyamohan.in/?p=331

நெடுஞ்சாலை புத்தரும் ஒரு பாதசாரியும்

 

தொடர்புடைய பதிவுகள்


‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – ‘திசைதேர் வெள்ளம்’

$
0
0

bllood

 

வெண்முரசு நூல்நிரையின் அடுத்த நாவல் திசைதேர் வெள்ளம். செப்டெம்பர்10 முதல் தொடங்கலாம் என நினைக்கிறேன். போர்தான். பீஷ்மரின் வீழ்ச்சி வரை என திட்டம். தொடங்குமிடம், தொடங்கும் வண்ணம் எதுவும் உள்ளத்தில் இல்லை. முந்தைய நாவல்களில் இருந்து முற்றாக விடுவித்துக்கொண்டே எப்போதும் அடுத்த நாவலை எழுதுகிறேன். இப்போதும் அது நிகழவேண்டும்

 

ஜெ

 

வெண்முரசு விவாதங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இந்திய உளநிலை -கடிதங்கள்

$
0
0

imageproxy

நைபால் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

 

நைபால்-கடிதங்கள்” உங்கள் பதில் வாசித்தேன்.

 

//”இந்தியாவின் பொது உளவியலில் உள்ள சிறுமையும் ஒழுங்கின்மையும் மேலும் மேலும் உறுத்துகிறது. தனிநபர்களாக self esteem  எனும் உணர்வு அற்றவர்கள் நாம்.

ஒரு போலீஸ் நம்மை அதட்டினால் கூசுவதில்லை. அவர் அதட்டிவிடுவார் என அஞ்சி சட்டத்தை மதிப்பதுமில்லை.

முடிந்தவரை குறுக்குப்பாதையில் நுழைகிறோம். முட்டி மோதுகிறோம். களவாக ஒன்றைச் செய்ய தயங்குவதே இல்லை

 

 

இந்தியாவில் என்று மட்டுமில்லை – எங்கு சென்றாலும் நம்மவர்களின் இயல்பே இதுதான்.

 

இவர்களையே கடந்த ஒன்றரையாண்டு அமெரிக்க வாழ்க்கையில் சந்தித்து வருகிறேன்.

 

இந்த சிறுமையும் ஒழுங்கின்மையும்  சுயமரியாதையின்மையும், களவும், குறுக்குவழிக்கான அலைச்சலும்  – இங்குள்ள பெரும்பாலானான (படித்த, நன்கு சம்பாதிக்கக்கூடிய) நம்மவர்களிடம்  இயல்பாக காணக்கிடைப்பது தான். இவர்களில் சிலர் ஆண்டுக்கணக்கில் இங்கிருப்பவர்கள்.  ஆனால் இவைகளை ஒரு புத்திசாலித்தனம் / சாமர்த்தியம் என்றே பெருமைகொள்கிறார்கள்.

 

சில எடுத்துக்காட்டுகள்.

 

  1. இங்கு நகரப் பேருந்துகளில் / ரயிலில் பயணிக்க கைப்பேசிApp வழியாக பயணச்சீட்டு வாங்கலாம். பயணம் தொடங்குவதற்கு முன் அதை  Activate செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்பட்ட சீட்டு அந்த நாள் முழுமைக்கும் செல்லும். நம்மவர்கள்  ஒரு பயணச்சீட்டு வாங்குவார்கள் ஆனால் அதை Activate செய்யமாட்டார்கள் – வாரக்கணக்கில் – மாதக்கணக்கில் – பரிசோதிப்பவர் வந்தாலொழிய. ஒரே சீட்டு – 2.5 டாலர் – ஒரு மாதப் பயணம். ஏறும்பொழுது ஓட்டுனரிடம் 2 நொடிகளுக்கும் குறைவாகக் காட்டிவிட்டு உள்ளே விரைய வேண்டும்.

 

Activate செய்யப்படாத சீட்டைச் சுற்றி சாம்பல் வண்ணமும்,  செய்யப்பட்ட சரியான சீட்டைச் சுற்றி பச்சை வண்ணமும் இருக்குமாறு App இல் ஒரு சிறு மாற்றம் செய்தார்கள். தகவல்களைப் படித்து சோதிக்கத் தேவையின்றி இவ்வண்ணங்களைக் கொண்டு எளிதாகப் பிரித்து விடுவார் ஓட்டுனர். “எப்படின்னு தெரியல, இப்பெல்லாம் கரெக்டா புடிச்சுர்ராங்க” என்று இரண்டு மூன்று நாள் புலம்பல். ஆனால் இச்சிறு மாற்றத்தை கவனிக்கும் திறன் இல்லை. ஆனால் தெரிந்தவுடன் மூளை சுறுசுறுப்பாகிவிடும். அதே போல் ஒரே சீட்டு – ஒருமுறை Activate – ஒரு screen shot – அதையே ஒரு மாதம் காட்ட வேண்டியது.

 

மாலைகளில், ஓட்டுனரிடம் பணம் செலுத்தி வாங்கும் பலரிடம் – வீட்டிற்குத்தான் செல்கிறீர்கள் எனில் சீட்டு வேண்டாம் என்று அவரே மறுத்து இலவசப் பயணம் அளித்ததைக் கண்டிருக்கிறேன். இவர்களிடம்தான் நாம் இப்படி நடந்துகொள்கிறோம்.

 

  1. இங்குள்ளMultiplex Cinema Mallகளில் டிக்கெட் பரிசோதிக்கும் இடம் நுழைவாயிலிலேயே இருக்கிறது. அங்கேயே நமது அரங்கு எண் சொல்லி உள்ளே அனுப்பிவிடுகிறார்கள். எந்த அரங்க வாயிலிலும் சோதனை கிடையாது. போதாதா நமக்கு. இந்திய மொழித் திரைப்படங்களுக்கு விலை அதிகம் –  எனவே ஏதாவது ஒரு விலை மலிவான ஆங்கில படத்திற்கு டிக்கெட் எடுக்க வேண்டியது – உள்ளே நுழைந்தவுடன் விரும்பிய அரங்கிற்குள் நுழையவேண்டியது. இன்னும் சிலர் அந்தப் படம் முடிந்தவுடன், அடுத்ததடுத்த அரங்கிற்குள்ளும் நுழைந்து கொள்கிறார்கள். சிறு வெட்கமோ தயக்கமோ கிடையவே கிடையாது.

 

  1. SSN, ஓட்டுனர் உரிமம், வருமான வரி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களில் ஆவணங்களை முழுமையாகப் பரிசோதிக்கிறார்கள். சிறு விடுபடலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. என்ன ஆவணங்கள் தேவை என்ற முன்னறிவிப்பு,முன்பதிவு வசதி எல்லாம் உண்டு. எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில், வேலை உடனே முடிந்துவிடுகிறது. யாரையும் “கவனிக்க”வோ காவடி தூக்கவோ வேண்டாம். ஆனால் நம்மவர்களுக்கு இந்த பெரிய வரிசையும், மெதுவாக வேலை செய்யும் முறையும், எல்லாவற்றையும் சரிபார்ப்பதும் எண்ணவே முடியாத சலிப்பைத் தருகிறது. வேறு (குறுக்கு) வழிகளே இல்லாமைவேறு கடும் எரிச்சல் கிளப்புகிறது.“இதுவே நம்மூரா இருந்தா 2000 கொடுத்தா வீட்டுக்கே வந்து கொடுத்துட்டு போவாங்க” என்ற பொருமல் வேறு. இவர்களே தான் பிறிதொரு சமயத்தில் இந்தியாவின் ஊழலை குறைகூறுகிறார்கள்.

 

  1. தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி போன்றவற்றைக் கருத்தில் கொண்டு – நாம் வாங்கிய எந்தப் பொருளையும் குறிப்பிட்டக் காலத்தில் திரும்பக் கொடுத்துவிட்டு பணம் திரும்பப் பெறலாம் என்ற ஒரு வசதி இங்கே உண்டு. அதை நம்மவர்கள் உபயோகிக்கும் முறை மயிர்கூர்செரிய வைக்கும். தான் வாங்கும் எல்லாப் பொருட்களுக்கும் திரும்பத்தரும் கடைசி தேதி எதுவென்றுகுறித்துக்கொண்டு – Reminder வைத்துக் கொண்டு – அதைக் திரும்பக் கொடுத்துவிட்டு மீண்டும் அதே பொருளைப் புதிதாக எடுத்துக்கொண்டு வரும் ஒரு “சாமர்த்தியசாலி” எங்கள் அலுவலகத்தில் உண்டு.

 

  1. அலுவலகம் அளிக்கும் மதிய உணவிற்கு சென்றால் இரவுணவுக்கும் பார்சல் செய்துகொள்வது, அடுத்தவேளை உணவு என்பது இன்னும் ஓராண்டு கழித்து தான் என்பது போல் உண்பது என்பது போல இன்னும் பல.

 

நேராகவே இருக்கும்போதிலும், வரிசையில் இவர்களுக்குப்பின் சென்று ஓட்டுனரையோ – அரசு அலுவலரையோ – கடை பணியாளரையோ நேர் பார்வை பார்க்க கூசத்தான் செய்கிறது. இத்தனைக்கும் உங்களைவிட இருபது வயது இளையவன் தான் நான். மீதிக்காலத்தை நினைத்து அச்சமாகவேயுள்ளது.

 

என்றென்றும் அன்புடன்,

மூர்த்தி

டாலஸ்

 

அன்புள்ள மூர்த்தி

 

அமெரிக்காவில் இந்தியர்கள் விமானநிலைய வரிசையில் ஊடுபுகுவதை, முண்டியடிப்பதைக் கண்டிருக்கிறேன். விமானத்தில் ஒயின் தேவையில்லை என்று சொன்ன என்னிடம்  “வாங்கி எனக்குக் கொடு” என்று அனத்த ஆரம்பிப்பார்கள். இது இந்தியாவிலிருந்து கிளம்பும்போதே ஆரம்பமாகிவிடும்

 

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்

 

நைபால் பற்றிய கட்டுரையில் இந்தியர்களின் பொதுக்குணம் பற்றி சொல்லியிருந்தீர்கள். மிகமுக்கியமான அம்சம் தூய்மையைப் பற்றிய அலட்சியம். சின்ன வயதிலேயே தூய்மைசெய்வது என்பது இழிவான பணி என்று சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார்கள். ஆகவே எங்கும் எதிலும் தூய்மைசெய்வது நம்மவர் வழக்கமே இல்லை. குறிப்பாக வடஇந்தியாவில் உள்ளவர்கள் இதில் உச்சகட்ட நம்பிக்கை கொண்டவர்கள். எங்கும் துப்புவார்கள். எங்கும் குப்பை வீசுவார்கள். நான் வேலைசெய்யும் இடங்களில் இதைக்கேட்டேன். “அதெல்லாம் குப்பை பொறுக்குபவர்கள் தூய்மை செய்துகொள்வார்கள்” என அலட்சியமாகப் பதில் சொன்னார்கள். இந்த்யாவில் கிராமங்களில் இருக்கும் அளவுக்கு குப்பை மலை இன்றைக்கு உலகில் எந்த நாட்டிலும் இல்லை. நம்மைவிடப் பரிதாபமான பொருளியல் கொண்ட பர்மாகூட பொது இடங்களில் இந்தக்குப்பை இல்லை.

 

ஆர். ராஜேந்திரன்

 

 

அன்புள்ள ராஜேந்திரன்,

 

இந்த மனநிலைக்கு எதிரான பயிற்சியைத்தான் காந்தி தன் அரசியல்நுழைவின் முதல்நடவடிக்கையாகக் கொண்டார். நாறிக்கொண்டிருந்த காங்கிரஸ் மாநாட்டுக் கழிப்பறைகளை தூய்மைசெய்ய முற்பட்டதே அவருடைய முதல்அரசியல் நடவடிக்கை. காந்தியக் கல்விமுறை இருந்த கல்விநிலைகளில் தூய்மைசெய்தலை ஒருவகை கல்வியாகவே கற்பித்தனர். அதற்கு எதிராக தங்கள் பிள்ளைகளை போர்டிங் பள்ளிகளுக்குக் கொண்டுசென்றார்கள் நம்மூர் செல்வந்தர்கள். இன்று இந்தியா முழுக்க எங்கும் அக்கல்வி இல்லை. அதைக் கற்பிப்பது பிள்ளைகளை அவமதிப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழகத்திலேயே மாணவர்களிடம் வகுப்பைத் தூய்மைசெய்யச் சொன்ன ஆசிரியர்களுக்கு எதிராக பெற்றோரின் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. அவர்கள் மேலதிகாரிகளால் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். [தலித் மாணவர்களை மட்டும் தூய்மைசெய்யச்சொல்லி அந்தக் கல்விக்கு மேலதிக ‘வண்ணம்’ சேர்ப்பவர்களும் உண்டு]

 

ஜெயமோகன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அமெரிக்கக் கவிமாநாடு

$
0
0

அன்புள்ள ஜெ,

தங்களின் ஐரோப்பிய பயணம் பற்றி மகிழ்ச்சி. அமெரிக்காவில் எந்த மூலைக்குச் சென்றாலும் மெக்டானல்டின் அதே பர்கரும் கோக்கும் கிடைக்கும் என்றாலும் ஒரு குறிப்பிட்ட ஊர் மெக்டொனால்டில் பர்கரும் நல்லா இருந்தது கோக்தான் சரியில்லை என்று சலித்துக்கொள்வது அமெரிக்கர்களின் வழக்கம். ஐரோப்பா நேர் எதிர். பல்லாயிரம் இனங்குழுக்களும் மதங்களும் மக்களும் பண்பாடுகளும் பிணைந்து பிரவாகமாக நிறையும் வாழ்க்கை ஏறக்குறைய இந்தியாவுக்கு இணை வைக்கதக்கதுதான் இல்லையா…
அமெரிக்க தேசிய அளவிலான கவிஞர்களின் மாநாட்டில் பங்கெடுத்த என் அனுபவத்தை சிறு கட்டுரையாக எழுதியிருக்கிறேன், அதன் சுட்டி கீழே.
இன்னும் எழுதவும் விவாதிக்கவும் நிறைய இருக்கிறது. தொகுத்துக்கொண்டபின் எழுதுகிறேன்.
அன்புடன்,
வேணு

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இருளும் ஒளியும்

$
0
0

devil

தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் அமேசானில் வாங்க

நான் சிறுவனாக முழுக்கோடு என்ற ஊரில் வளர்ந்தேன். அன்றெல்லாம் அங்கே நிறையபேர் அம்பாடி ரப்பர் எஸ்டேட்டின் ஊழியர்கள். அது அன்று மதிப்புமிக்க வேலை. ஏனென்றால் நிரந்தரமான மாதஊதியம். அத்துடன் ரப்பர்பால்சீவி சேர்த்து ஒப்படைத்துவிட்டு திரும்பிவரும்போது சைக்கிள் நிறைய விறகோ பச்சைப்புல்லோ கொண்டுவரலாம். அது அன்றாடச்செலவுக்கு.

ஆனால் ஒரே சிக்கல் அதிகாலை மூன்றுமணிக்கே கிளம்பிச்செல்லவேண்டும். ஐந்துமணிக்கெல்லாம் வேலையை தொடங்கிவிடவேண்டும். ரப்பர் மரங்களை வெயில் எழுவதற்கு முன்னரே பட்டைசீவி பால்வடித்துவிடுவார்கள். வெயில் வந்துவிட்டால் பால் உலர்ந்து மேற்கொண்டு ஊறாமலாகிவிடும். காலை பத்துமணிக்கெல்லாம் பாலைச்சேர்த்து கொண்டுசென்று மையத்திற்குக் கொடுத்துவிட்டு கிளம்பிவிடலாம். வழியிலேயே புல்லறுப்பதென்றால் மீண்டும் ஒருமணி நேரம். இரண்டுமணிக்கு மதியச்சாப்பாட்டுக்கு திரும்பிவிடலாம்.

மதியம் ஒரு நீண்ட தூக்கம்போட்டபின் சிவந்த கண்களுடன் சாயங்காலம் டீக்கடைகளில் காணப்படுவார்கள் அம்பாடி ஊழியர்கள். எங்களூரில் அவர்கள்தான் கருக்கிருட்டுக்கு முன்னரே விழிப்பவர்கள். அவர்கள் காணும் காட்சிகள் வழியாக தெரியவரும் ஊரே வேறு. ஆகவே அவர்களின் பேச்சுக்களில் ஒரு தனி ஆர்வம் டீக்கடைக்காரர்களுக்கு உண்டு. அப்பு அண்ணன் சொல்லும் பேய்க்கதைகளை டீக்கடையில் கூடியவர்கள் விழிபிதுங்கி கேட்டிருப்பார்கள்.

அப்போதெல்லாம் எந்த ஆர்வமும் இல்லாமல் ஓரமாக அமர்ந்து குழிந்த கன்னம் மேலும் குழிய டீ குடிப்பவர் கிருஷ்ணபிள்ளை மாமா. பழுத்த யதார்த்தவாதியாதலால் எப்போதும் எதையும் உற்சாகமாகவோ உத்வேகமாகவோ அவர் சொல்லிக் கேட்டதில்லை. அப்புவண்ணனின் பேய்க்கதை வர்ணனைகள் முடிந்தபின்னர் சிலசமயம் கிருஷ்ணபிள்ளை மாமாவிடம் “சங்கதி உள்ளதா பிள்ளேச்சா?” என்று சிலர் கேட்பார்கள். “என்னமோ அவனுக்குத் தோணுது” என்பார். “பிள்ளை கண்டதுண்டா பேயை?”. அவர் பீடியை இழுத்து புகைவிட்டு இல்லை என தலையாட்டுவார்

ஒருநாள் நான் டீக்கடைக்குச் சென்றபோது அப்பு அண்ணன் உற்சாகத்தில் பெஞ்சில் அமர்ந்தபடியே துள்ளிக்கொண்டிருந்தார். “இனி யாருக்குடே திருட்டாந்தம் வேணும்? நம்பாதவன் ஆருடே?” என்றார். நான் அருகே நின்ற சின்னமுத்தனிடம் “என்னவாக்கும் சங்கதி?” என்றேன். “கிருஷ்ணபிள்ளைய பேய் அடிச்சுப்போட்டு” நான் திகைத்தேன்.”அல்ல காய்ச்சல். ஜன்னி வரை வந்துபோட்டு. ஆஸ்பத்திரியில கெடக்குதாரு” என்றான் சின்னமுத்தன்

”பேயில்லடே, ஒடி! ஒடியாக்கும்!” என்றார் அப்பு அண்ணன். நான் பெஞ்சில் அமர்ந்தேன். அப்பு அண்ணன் நடந்ததைச் சொன்னார். காலையில் அப்பு அண்ணானும் கிருஷ்ணபிள்ளையும் நேசமணினும் பிறரும் ஒரு பெரிய திரளாகச் சேர்ந்துதான் அம்பாடிக்குச் செல்வார்கள். வழக்கமாக முதலில் எழுபவன் நேசமணி தான். அவன் சாலையில் நின்று “கூவே! கூவே! கூ!” என்று உரக்கக் கூச்சலிடுவான். அந்த ஒலிக்குப்பழகிப்போய்விட்ட பால்வெட்டுக்காரர்கள் பாயிலிருந்து முனகியபடி எழுந்து முகம் கழுவி முந்தையநாள் மிஞ்சிய மயக்கிய மரவள்ளிக்கிழங்கும் மீன்கறியும் போட்டு கலத்திலிட்டு கனல் அடுப்பில் வைத்திருக்கும் கஞ்சியை மனைவியை எழுப்பாமல் தாங்களே எடுத்துக்குடித்துவிட்டு சைக்கிளில் கிளம்பிவிடுவார்கள்.

கூவியபடியும் சைக்கிள் மணியை ஒலித்தபடியும் கிராமத்துத் தெருக்களில் அவர்கள் செல்லும் ஒலிகேட்டு ஒவ்வொருவராகச் சேர முழுக்கோடு எல்லை கடந்து புண்ணியம் விலக்கை அடையும்போது பதினெட்டுபேர் சேர்ந்துவிடுவார்கள். அதன்பின் சைக்கிளில் ஏறி மிதிக்கத்தொடங்கினால் ஐந்துமணிக்கு ஆலஞ்சோலை கடந்து அம்பாடி எஸ்டேட்டுக்குள் நுழையமுடியும். சைக்கிளில் ஏறியபின்னர் அவர்கள் பேசிக்கொள்ளமுடியாது. எதிரில் ரப்பர்தடி ஏற்றிக்கொண்டு லாரிகள் வரும். வழியில் மாடுகள் நிற்கும். முழுக்கவனமும் சாலையில் இருக்கவேண்டும்.

கிருஷ்ணபிள்ளையின் வீடு கடைசியாக இருந்தது. அவரது வீட்டுக்குமுன்னால் நின்று மணியடித்து அழைத்தபோது அவரது மனைவி ஜானு எழுந்து வந்து “அவ்வோ கெடப்பாக்கும். நல்ல காய்ச்சலு உண்டு பாத்துக்கிடுங்க. இண்ணைக்கு வரேல்லன்னு சொல்லிப்போடுங்க” என்றிருக்கிறாள். சரி என்று சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செல்லும் சைக்கிள் ஓசையைக்கேட்டு அரைக்காய்ச்சலில் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை பாய்ந்து எழுந்தார். வழக்கமாகச் செய்வதுபோல பாய்ந்தோடி உமிக்கரி எடுத்து பல்தேய்த்து முகம் கழுவி அடுப்பில் கிடந்த மீன்கஞ்சியைக் குடித்துவிட்டு சைக்கிளில் ஏறி சாலைக்கு வந்தார்

சாலையில் எவருமில்லை. அப்போதுதான் அவர் தூக்கத்திலிருந்தே முழுமையாக விழித்தெழுந்தார். முந்தையநாள் நல்ல காய்ச்சல் இருந்தமையால் கொஞ்சம் சாராயம் வாங்கி அதில் எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டுவிட்டுப் படுத்தவர்தான். தலைசுழன்றாலும் எப்படியாவது மிதித்து நண்பர்களைச் சந்தித்து சேர்ந்துவிடலாம் என்று நினைத்து ஏறிக்கொண்டார். சைக்கிளை மிதிக்க மிதிக்க குளிர்காற்று கொஞ்சம் ஊக்கத்தைத் தந்தது.

அன்றெல்லாம் களியல் என்னும் ஊரைத் தாண்டினால் காடும் ரப்பர்த்தோட்டங்களும்தான். இருபக்கமும் இருட்டு ஊறிக்குவிந்துகிடப்பதுபோல மரக்கூட்டம். வானத்தில் மேகங்கள் நிறைந்து மெல்லிய மின்னல்கள் வெட்டிக்கொண்டிருந்தன. நிலவொளியோ விண்மீன் ஒளியோ இல்லை. கண்பழகிய வெளிச்சத்தில் சாலை மட்டும் தெரிந்தது. அச்சாலைக்கு அவரது சைக்கிளே நன்றாகப் பழகியிருந்தது.

அவர்சென்று கொண்டிருக்கையில் தொலைவில் நாய்கள் பெருங்குரலெடுத்துக் குரைப்பதைக் கேட்டார். அப்பகுதியில் நாய்கள் இல்லையே என எண்ணிக்கொண்டார். காட்டுநாய்கள் அப்படிக் குரைப்பதில்லை. நெருங்கும்தோறும் சாலையில் நிறைய நாய்கள் வால்களை விடைத்து காதுகளை முன்குவித்து கால்களை மாற்றி மாற்றி வைத்து பதறிக்கொண்டும் குரைத்துக்கொண்டும் நிற்பதைக் கண்டார்

அவையெல்லாம் களியலுக்கு இப்பால் திற்பரப்பு சாலைச்சிந்த்ப்பைச் சேர்ந்த தெருநாய்கள் என்று தெரிந்தது. பலநாய்களை அவaரால் அடையாளம் காணவும் முடிந்தது. அவை உச்சகட்ட அச்சத்தில் கழுத்துமயிர் சிலிர்த்திருக்க நின்றுகொண்டிருந்தன. இன்னும் கொஞ்சம் துணிந்த நாய்கள் முன்னால் சென்று நின்றிருந்தன. திடீரென்று ஒரு நாய் கடுமையாகக்குரைக்க மற்றநாய்களும் பெருங்குரலில் சேர்ந்துகொண்டன. நாய்கள் மேல் மோதாமலிருக்க சைக்கிளை திருப்பித்திருப்பிச் சென்றார்.

அங்கே சாலையோரமாக பள்ளத்தில் ஒரு நாய் நின்றிருப்பதைக் கண்டார். கன்னங்கரிய நாய். மற்றநாய்களை விட ஒரு மடங்கு பெரியது. அது சினத்துடன் தலையை நன்றாகத் தாழ்த்தி வாலை நீட்டி மெல்ல உறுமியபடி நின்றது. அதைச்சூழ்ந்து நின்றிருந்த தெருநாய்கள் அதை தப்பவிடாமல் குரைத்துக்கொண்டிருந்தன. ஊருக்குள் நுழைந்த அந்த நாயை அவர் குரைத்து துரத்தி காட்டின் எல்லை வரைக் கொண்டுவந்து விட்டிருக்கின்றன என்று அவர் ஊகித்தார்

என்ன நாய் அது என்று தெரியவில்லை. உள்ளூர் நாய் இல்லை. எஸ்டேட்டில் யாராவது வளர்க்கும் வெளிநாட்டு நாயாக இருக்குமா என்று தோன்றியது. தெருநாய்கள் அதைக் கடித்துக்கொன்றுவிடும் என்று நினைத்து சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு கல்லை எடுத்தார். அதற்குள் அந்த கரிய நாய் மெல்ல மெல்ல உறுமியபடி நகர்ந்து காட்டுக்குள் சென்றது.ஏதோ ஓர் எல்லையை கடந்தது போல திடீரென்று அதன் தோரணை மாறியது. பெருங்குரலில் கர்ஜித்தபடி ஒரு தெருநாயின்மேல் பாய்ந்து கழுத்தைக் கடித்து தூக்கி உதறி வீசியது. மற்றநாய்கள் ஊளையிட்டபடி சிதறி ஓடின. கடிபட்ட நாய் எழமுயன்று கீழே விழுந்து துடித்தது. அதன் கால்கள் மண்ணைப்பிராண்ட வால் புழுதியில் அளைந்தது.

மற்றநாய்கள் ஊளயிட்டபடி விலகி தொலைவுக்குச் சென்றன. அங்கே நின்றபடி ஓலமிட்டு கதறியழுதன. கரியநாய் சாலைக்கு வந்து நின்று தலையை தூக்கி அவற்றை நோக்கி மீண்டும் உறும அவை அஞ்சி அழுதபடி ஓடி இருளுக்குள் மறைந்தன. கிருஷ்ணபிள்ளை தன் உடல் அச்சத்தில் விதிர்த்து செயலற்று நிற்பதை உணர்ந்தார். சைக்கிள் இல்லாவிட்டால் அவர் விழுந்திருப்பார். ஏனென்றால் அந்தக் கரிய நாய் கடைசியாக உறுமியபோது மனிதக்குரலில் வசைச்சொல் ஒன்றைச் சொல்வதாக அவர் கேட்டார்

அந்த நாய் அவரை நோக்கித் திரும்பியது. அதன் கண்கள் இரு செங்கனல் துண்டுகள் போலிருந்தன. அது வாயைத்திறந்து நாவால் மோவாயை நக்கியபடி அருகே வந்தபோது “யார்நீ?” என்று அடிக்குரலில் உறுமியது. ”எனக்க தெய்வங்களே! எனக்கம்மே” என்று அலறியபடி கிருஷ்ணபிள்ளை திரும்பி சைக்கிளில் ஏறிக்கொண்டு வெறியுடன் மிதித்தார். அவருடைய பழகிப்போன கைகால்கள் அதைச்செய்தமையால் அவர் தப்பினார். அவரைத்தொடர்ந்து கால்நகங்கள் தரையில் பிராண்டும் ஒலியுடன் அந்த நாய் துரத்திவந்தது. ஆனால் குரைக்கவில்லை.

இருமுறை திரும்பிப்பார்த்த அவர் அதன் அனல்விழிகளை மிக அருகே எனக் கண்டார். சைக்கிள் பெடலை அவரது கால்கள் இயந்திரம் போல மிதித்தன. உடலில் இருந்து வியர்வை வழிந்து உடைகள் நனைந்து காற்றில் படபடத்து துளிகள் தெறித்தன. எத்தனை தூரம் அப்படிச்செல்ல முடியும் எனத் தெரியவில்லை. சாலையில் வெண்ணிறமாக ஏதோ ஒன்று தெரிந்தது. காட்டுமாடு. அதை கடந்துசெல்லமுடியுமென்று தோன்றவில்லை. தெய்வங்களே என்று கூவியபடி அவர் சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தார். முற்றிலும் மூளை செயலற்றிருந்தமையால் சைக்கிளை நிறுத்தக்கூட தோன்றவில்லை

அது ஒரு வெண்ணிறமான மாடு. அதன் மேல் முட்டி அவர் அதன் முதுகின் மேல் உருண்டு மறுபக்கம் போய் விழுந்தார். சைக்கிள் காளைக்கு அப்பால் தரையில் கிடந்து சக்கரம் சுழன்றது. கரிய நாய் ஓடிவந்த வேகத்தில் சைக்கிள் அருகே நெருங்கி கால்களை ஊன்றி நின்றது. தலையைத்தாழ்த்தி உறுமியது. அதன் கண்களைத்தான் அவர் கடைசியாகப் பார்த்தார்.

காலையில் அவ்வழிச்சென்ற ஒரு லாரிக்காரன் அவரைக் கண்டடைந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்றான். அங்கே அவர் கண் விழித்ததும் அஞ்சி நடுங்கி எழுந்து அமர்ந்து அலறினார். நர்ஸைக் கண்டதும் படுக்கையிலிருந்து எழுந்து ஓடி சன்னல்வழியாக வெளியே குதிக்கப்பார்த்தார். அவரை மயக்க ஊசிபோட்டு தூங்க வைத்தனர். உடல் மின்சாரம் பாய்ந்ததுபோல துடித்துக்கொண்டே இருந்தது. சாயங்காலம் கொஞ்சம் நினைவு வந்தபோதுதான் நடந்தவற்றைச் சொன்னார்

“அது ஒடியாக்கும் மாப்பிள” என்றார் அப்பு அண்ணா. ஒடி என்றால் என்ன என்று அவர் விளக்கினார். மலையாளக் குறவர்களின் மாந்திரீக முறைகளில் முக்கியமானது அது. பிறரும் அவர்களிடமிருந்து அதைக் கற்றுக்கொள்வதுண்டு.மலைக்குறவர்களுக்கு பலவகையான காட்டுத்தெய்வங்கள் உண்டு. அவை காட்டில் கண்ணுக்குத்தெரியாத வடிவில் வாழ்கின்றன. அவர்கள் அவற்றை பூசை செய்து வசப்படுத்தி மாந்திரீகத்திற்கு கையாள்கிறார்கள்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு வடிவம் உண்டு. சிலதெய்வங்கள் கழுகுகளைப்போன்றவை. அவை காற்றுடன் கலந்திருப்பவை. காற்றில் அவற்றின் சிறகோசையைக் கேட்கமுடியும். அவற்றின் சிறகுகளின் காற்று வந்து நம் உடலைத் தொட்டுச்செல்வதை உணரமுடியும். சில தெய்வங்கள் யானைகளைப்போல. அவற்றை முகில்களில் காணமுடியும். சில தெய்வங்கள் பன்றிகள். அவற்றை நாற்றமாக மட்டுமே உணரமுடியும். சிலதெய்வங்கள் மான்கள். அவற்றை நீரில் நிழலாட்டமாக காணலாம். சிலதெய்வங்கள் கிளிகள். அவை காட்டின் இருளுக்குள் மனிதர்களைப்போல சிரிக்கும், அல்லது அழும் அல்லது பேசும்

அந்தத்தெய்வங்களை பூசைசெய்து மகிழ்ச்சிப்படுத்தி அருளைப்பெறும் மலைக்குறவன் அவற்றின் வடிவை தான் எடுக்கமுடியும். அப்படி கழுகாக, பன்றியாக மானாக கிளியாக உருமாறும் கலையைத்தான் ஒடிவித்தன் என்கிறார்கள். ஒடியாக மாறி வரும் மிருகத்தை மனிதர்கள் அடையாளம் காணமுடியாது. பிறமிருகங்கள் கண்டுகொள்ளும். மாடுகள் மிரண்டு விலகி ஓடும். மான்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளாது. பன்றிகள் சூழ்ந்து தாக்க முயலும். ஒடியாக வந்து எதிரியை கொன்றுவிட்டு திரும்பிச்செல்வார்கள் தீயமந்திரங்களைச் செய்யும் மந்திரவாதிகள். காசுவாங்கிக்கொண்டு கொலைகளைச் செய்வதுமுண்டு.

அப்படி எவரையோ கொல்ல ஊருக்குள் வந்த ஒடிமிருகம் அந்த நாய் என்றார் அப்பு அண்ணா. “அந்த நாய்க்க உயரத்தைப்பற்றி பிள்ளைவாள் சொன்னப்பமே தெரிஞ்சுபோச்சுல்லா?” என்றார்

“ஒடிகிட்டயிருந்து எப்டிடே தப்பினாரு?” என்று நெல்சன் தாத்தா கேட்டார்.

“அது லக்கு. அவரு போய் முட்டினது எதுக்கமேலேன்னு தெரியுமா?” என்றார் அப்பு அண்ணா

“எதுக்குமேலே?” என்றேன்

“நல்ல வெள்ளைக்காளை. சுமார் ஆறடி உயரம். சைக்கிளிலே போன அண்ணன் சொல்லுதாரு அவருக்கு நெஞ்சு அளவுக்கு அந்தக்காளைக்கு உயரம்னுட்டு. காளைக்கு அந்த அளவு உயரம் உண்டா? சொல்லும்”

“இல்லை” என்றேன்

“வெள்ளைக்காளையாக்கும். காட்டிலே ஏது வெள்ளைக்காளை?”

நான் பதில் சொல்லவில்லை

“அதும் ஒடியாக்கும்.இது நாயி. அது வெள்ளைக்காளை. இருட்டிலே இருந்து தப்பி வெளிச்சத்துக்குமேலே போய் முட்டியிருக்காரு”

யாரோ நல்ல மந்திரவாதி வெள்ளைக்காளையாக எங்கோ செல்லும்போது சென்று முட்டியிருக்கிறார். காளையை எதிர்கொள்ள நாயால் முடியவில்லை. நான் பெருமூச்சுவிட்டேன்.

இந்துமதத்தில் எருது, நாகம், யானை, மயில், சேவல், போன்று பல மிருகங்கள் தெய்வங்களாக உள்ளன.மிருகங்கள் தெய்வங்களாக வழிபடப்படுவதை இந்துமதத்தை ஆராய்ந்த ஆரம்பகால மேல்நாட்டு அறிஞர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆப்ரிக்காவிலும் பிறபகுதிகளிலும் உள்ள பழங்குடிகளின் பழக்கவழக்கங்களை இங்கும் பொருத்திப்பார்த்து அதைப்புரிந்துகொள்ள முயன்றனர்.

அங்குள்ள பழங்குடிகள் தங்களை சில விலங்குகளின் வழித்தோன்றல்கள் என எண்ணிக்கொள்ளும் வழக்கம் இருந்தது. முதலை, ஆமை, எருது, கரடி போன்ற பலவிலங்குகள் அவ்வாறு மூதாதையாக எண்ணிக்கொள்ளப்பட்டன அவ்வாறு தங்களை ஒரு விலங்கின் மக்கள் என எண்ணும் பழங்குடியினர் அதை தங்கள் குலஅடையாளமாகக் கொண்டனர். இந்த குல அடையாளங்கள் டோட்டம் [totem] எனப்பட்டன.

இந்தக்குல அடையாளங்களை காலப்போக்கில் அவர்கள் தெய்வங்களாக ஆக்கினர். பலியும் படையலுமிட்டு வணங்கினர். அம்மிருகங்களின் வேடம்புனைந்தவரை தெய்வமாக எண்ணி வழிபட்டனர். பின்னர் அத்தோற்றத்தை மரத்திலும் கல்லிலும் செதுக்கி தெய்வமாக வழிபட்டனர். இதை வெள்ளையர் totem worship என்றனர்

இந்துமதத்தின் விலங்குத்தெய்வங்களை இதேபோல குலக்குறித்தெய்வங்கள் என்று அவர்கள் அடையாளப்படுத்தினர். ஆனால் முற்றிலும் தவறான ஒரு புரிதல் அது. இந்தியாவில் எங்கும் எந்தப்பழங்குடியும் தன்னை விலங்குகுலத்தைச் சேர்ந்ததாக அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. விலங்குகள் குலச்சின்னமாக எங்கும் இல்லை.

அப்படியென்றால் ஏன் விலங்குகள் தெய்வமாகின்றன? மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பழங்குடிமக்களின் வழிபாடுகளையும் சரி தொன்மையான நம்பிக்கைகளையும் சரி ஒருவகையான இளக்காரத்துடன் குனிந்து கீழே பார்க்கிறார்கள். அவை அம்மக்களின் அறியாமையால் உருவானவை என்றுதான் விளக்குகிறார்கள்

மாறாக அவை அம்மக்களின் நுண்ணுணர்வால் உருவானவையாக இருக்கவே வாய்ப்பு அதிகம். இப்பிரபஞ்சத்தை விளக்க தொன்மையான மக்கள் அறிவியலை பயன்படுத்தவில்லை. கவித்துவத்தையே பயன்படுத்தினர். அந்தக் கவித்துவப்புரிதல்களில் இருந்து உருவானவையே இயற்கைவழிபாடும் விலங்குத்தெய்வங்களும் எல்லாம்

தொன்மையான மனிதர்கள் புயலையோ சூரியனையோ அஞ்சியோ புரிந்துகொள்ளாமலோ வழிபடவில்லை. அவற்றை கவித்துவமான குறியீடுகளாகவே வழிபட்டனர். இந்தப்பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் அலவிடமுடியாத ஆற்றலையே சூரியனாகவும் புயலாகவும் அவர்கள் கண்டனர். சூரியனையும் வாயுவையும் பற்றிய நம் பக்திப்பாடல்களில் உள்ள வர்ணனைகளை பார்த்தாலே அதைக் காணலாம். அவர்கள் தெய்வத்தை கோடிச்சூரியன் என்று வாழ்த்துவதை நாம் அறிவோம்

அதை உணராமல் பண்டைய மனிதர் சூரியனைக் கண்டு அஞ்சினார்கள். ஆகவே சூரியனை தெய்வமாகக் கும்பிட்டார்கள் என்று சொல்வது மடைமை. அதேபோன்றுதான் விலங்குகளை வழிபடுவதை குலக்குறி வழிபாடு என்று சொல்வதும். இன்றைக்கும் நம் கல்லூரிகளில் நாட்டாரியல் என்றபேரில் வெள்ளையர்கள் அரைவேக்காட்டுத்தனமாக எழுதி வைத்தவற்றையே பேராசிரியர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள்

விலங்குகள் அனைத்தும் பல்வேறு விஷயங்களின் குறியீடுகள்தான். நாய் மரணத்தின் இருட்டின் குறியீடு என்றால் காளை வெளிச்சத்தின் குறியீடு. மிகப்பெரிய ஆற்றல் மிக மெல்ல வெளிப்படுவதே காளை என்பது. மிகவிரைவாக அணுகும் இருட்டே நாய். இப்படித்தான் நம்முடைய அத்தனை விலங்குத்தெய்வங்களும் பொருள்படுகின்றன. ஆரம்பித்தால் உங்களுக்கே தெரியும் முருகனின் கையில் உள்ள செந்நிறமான சேவல் தீயின் அடையாளம். நீலமயில் நீரின் அடையாளம்.

கிருஷ்ணபிள்ளை ஒரு நாயை சாலையில் பார்த்திருக்கலாம். நாய்களின் கண்கள் இருட்டில் ஒளிவிடும். அவை உறுமுவது மனிதர்கள் பேசுவதுபோலிருக்கும். பயந்து ஓடிப்போய் காளையில் முட்டி விழுந்தார். ஒரு குறியீடு பயமுறுத்தியது. இன்னொன்று காப்பாற்றியது. தெய்வங்கள் அக்குறியீடுகள்தான்.

 

[அமேசான் வெளியீடாக வந்துள்ள  தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் நூலில் இருந்து ]

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சாகித்ய அக்காதமி நாவல்கள்

$
0
0

 

pannalaal

பன்னலால் பட்டேலின் வாழ்க்கை ஒரு விசாரணை

பன்னலால் பட்டேல்

 

ஜெ

 

சாகித்ய அகாடமி பதிப்பகம் .முப்பது ஆண்டுகள் கழித்து தாகூரின் சோக்கர் பாலியை மறு பதிப்பு செய்திருக்கிறது .

 

அதாவது பரவாயில்லை .ஐம்பது ஆண்டுகள் கழித்து மண்ணும் மனிதரும் நாவலை[ இரண்டாம் பதிப்பு ] மறு பதிப்பு செய்திருக்கிறது .  முதல் பதிப்பு வெளியாகும் போது உங்களுக்கு ஐந்து வயது :)

 

சில ஆண்டுகள் முன்பு அகாடமி , வாழ்க்கை ஒரு நாடகம் நாவலை ,மனோதிடம் என்ற பெயரில் வெளியிட்டது . ஏன் பெயர் மாற்றமோ  தெரியவில்லை . தள்ளுபடி விலையில் அனைத்தும் விற்று தீர்ந்தது .  அந்த நாவல் வாழ்க்கை ஒரு நாடகம் நாவல்  என  எத்தனை பேர் அறிவாரோ .

கடலூர் சீனு

 

அன்புள்ள சீனு,

பொதுவாகவே நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அக்காதமி வெளியீடுகளுக்கு இச்சிக்கல் உண்டு. அவை மறுபதிப்பு வெளியாவதே இல்லை. பெரும்பாலான நூல்கள் நெடுங்காலம் தவமிருந்து அச்சாகின்றன. நிதி ஒதுக்கீடும் அதைத்தொடர்ந்த பணிகளும் அரசுக்கே உரிய முறையில் மெல்லமெல்ல நிகழும். ஒரு பதிப்பு வருவது ஒரு அரசாங்க ‘பிராஜக்ட்’ நிறைவேறுவதற்குச் சமம். ஒரு மேம்பாலத்தை கட்டி முடித்ததும் இடித்துவிட்டு மீண்டும் கட்டுவதுபோன்றது மறுபதிப்பு வருவது. அனேகமாக அது நிகழ்வதேயில்லை. இந்நூல்கள் வெளிவந்திருப்பது மிக நன்று

ஜெ

thuruvan

அன்புள்ள ஜெ

 

சாகித்ய அக்காதமி சமீபமாக வெளியிட்டுள்ள நாவல்களில் அமர் மித்ராவின் துருவன் மகன் முக்கியமான நாவல். இங்கே எடுத்துச் சொல்லாவிட்டால் பலர் வாசிக்கமாட்டார்கள். வரலாற்றுநாவல். உஜ்ஜயினி நகரத்தின் பின்னணியில் அமைந்த நாவல். முதல் விஷயம் பெ பானுமதியின் மொழியாக்கம் சரளமாக வாசிக்கும்படி உள்ளது. இரண்டாவதாக தொடர்ச்சியாகக் கடைசிவரை வாசிக்கவைக்கும் கதையோட்டம் கொண்டது. நாம் வரலாற்றை இப்படிக் கதையாக வாசித்தால்மட்டுமே நினைவில் நிறுத்திக்கொள்ளமுடியும். துருவன் மகன் வாசித்தபின் நமக்கு உஜ்ஜயினி மிகத்தெரிந்த ஊராக ஆகிவிடும்

 

சிவராமகிருஷ்ணன்

 

Amar_Mitra

Amar_Mitra

அன்புள்ள சிவராம கிருஷ்ணன்

 

நான் அந்நாவலை சென்ற ஆண்டு வாங்கினேன். அருண்மொழி வாசித்துவிட்டு மிகச்சிறப்பான நாவல் என்று சொன்னாள். இன்னும் வாசிக்கவில்லை

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கம்போடியா: அங்கோர் தாம், பிற கோவில்கள்-சுபஸ்ரீ

$
0
0
Baphuon 1

Baphuon 1

 

 

கம்போடியா – ஒரு கடிதம், சுபஸ்ரீ

கம்போடியா- பாயோன் – சுபஸ்ரீ

 

 

அன்புநிறை ஜெ,

 

கம்போடிய பயணத்தின் மூன்றாவது பகுதி.
23/07/18 – இரண்டாவது நாளாக மீண்டும் அங்கோர் தாம்; முதல்நாள் பாயோன் மட்டுமே பார்க்க முடிந்தது. அது தவிர ஏனைய கோவில்கள் அன்றைய திட்டம்.

காற்றில் இருக்கும் மழையீரத்தில் நனைந்த காலை நேர நாளவன் மிக மெதுவாக வனங்களிடையே ஒளிந்து உடன் வந்து கொண்டிருக்க,  டுக்டுக் அங்கோர் தாம் நோக்கி சென்றது.  அவசரங்களின் அணிவகுப்பே வாழ்வு எனும் நிலைக்கு இன்னும் சியாம் ரீப் வரவில்லை, எதுவும் இங்கு விரைவதில்லை. ஒரு காலை விடிவதன் அமைதியைக் காண நொடிகளில்லாத வாழ்வுக்கு நடுவே இந்த கம்போடிய பயணம் கோடையின் குளிர்நிழல்.  பாதையோரங்களில் முழுதாக எழுந்திராது பரந்து நின்ற மூங்கில் புதர்களைப் பார்க்கும்போது, எங்கோ வரலாற்றுள் இன்றும் பொதிந்திருக்கும் சியாம் ரீப், விரைத்து நிற்கும் அன்றாட வாழ்வெனும் மூங்கில் தளரும் இரவின் மடி எனத்தோன்றியது.

Baphuon 2

அங்கோர் தாம் வாயிலில் அணி நிரக்கும் பாற்கடல் கடையும் சிற்பங்கள், தரையில் நீண்டு கிடக்கும் கல் ஆரமென காலை வெயிலில் கருமை மின்னியது. அமுதம் தேடும் முயற்சியில் அழிவின் வடுக்களை சுமந்த அமரர் முகங்கள். சிதறிப் பரந்து கிடந்த சிலைகளை எடுத்து மீட்டமைத்திருப்பதால் கருத்த உடலும் மிக வெண்மையாக பொருந்தாத் தலை கொண்ட சிற்பங்கள் இருக்கின்றன. ஒருவர் தலையைப் பிறிதொருவர் அணிந்து கொண்ட திகைப்பு விழிகளில் தெரிகிறது.

வனத்துள் வகிடு கிழித்து செல்லும் மையச் சாலை, அங்கோர் தாமின் நடுவில் எரிமலையின் எஞ்சி உருகிய கரும்பாறை மலை எனத் தோற்றமளிக்கும் பாயோனைக் கடந்து மற்றொரு பேரலாயமான பாபுவன் (Baphuon) வரை சென்றது.

Baphuon 5

Baphuon 5

பாபுவன்  

 
பாபுவன் இரண்டாம் உதயாதித்தவர்மனின் அரச ஆலயம். சிவனுக்கு கட்டப்பட்டது. பின் வந்த நூற்றாண்டுகளில் பௌத்த ஆலயமாகி சயனிக்கும் புத்த பிரானும் அங்கே குடிகொண்டிருக்கிறார்.  மலையைப் பெயர்த்தெடுத்து மானுடன் உருவாக்கிய நிகர்மலை. பெரும்பரப்பில் மண்நிரப்பி மேலே கற்களை அடுக்கிக் கட்டப்பட்டிருக்கிறது. மண்ணின் தன்மையாலும் பெருங்கற்களின் எடையாலும் பலமுறை மீண்டும் மீண்டும் சேதமடைந்து எடுத்துக் கட்டப்பட்டிருக்கிறது. 1960களில் தடைப்பட்ட சீரமைப்புப்  பணி, 1995-ல் மீண்டும் தொடங்கப்பட்டு 2011ல் முடிவடைந்திருக்கிறது. தொல்லியல் துறையினர் அடர் கானகத்திடையே கற்குவியலாக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட சிதறிய கற்களாக இக்கோவிலைக் கண்டடைந்திருக்கிறார்கள். உலகின் மாபெரும் முப்பரிமாண புதிராக, முன்னூறுக்கும் மேற்பட்ட நபர்களின் கூட்டு முயற்சியில் பதினாறு ஆண்டுகால உழைப்பில் எழுந்து நிற்கிறது பாபுவன்.

Baphuon Buddha face

அவலோகிதேஸ்வர முகக்கோபுரம் கொண்ட நுழைவுவாயில்.  மரங்களிடையே நடந்து சில மரப்படிகள் மேலேற, வரிசையாக நடப்பட்ட தூண்களின் மீது நீண்டு செல்லும் நுழைவுப் பாதை. காற்றில் சருகுகள் பறந்து கலைகின்றன. நில்லாது வளரும் காலப் பெருவனத்தின் உதிர்ந்து போன நிமிடங்கள். தூண்களால் தாங்கப்பட்ட மையப்பாதை, இருபுறமும் நீர் நிறைந்த கடந்தகாலத்தை மனதுள் விரித்துவிட நுழைவில் இருக்கும் கோபுரத்தை தலைகீழ் நீர்பிம்பங்களாக அகக்கண் விரித்துக் கொண்டது. முதல்வாயிலுள் நுழைந்ததும் உள்ள சாலை கோபுரங்கள் கூண்டு வண்டியின் வடிவில், சிதம்பரம் போன்ற கோபுரங்களை நினைவுபடுத்துகிறது.

Baphuon8

நடுவே நாற்புற பட்டை வடிவான கூம்பென எழுந்து நிற்கிறது 82 அடி உயரமான பாபுவன். இது மூன்றக்குகள் கொண்ட பிரமிடு வடிவம். நான்கு புறமும் உச்சியை நோக்கி மேலேறும் செங்குத்தான படிகள். அதன் ஒவ்வொரு அடுக்கிலும் நுழைவுவாயிலென உயர்ந்து நிற்கும் உச்சிக்கமலம் சூடிய கோபுரம். சுற்றிவர தூண்கள் துணைநிற்கும் திருமுற்றம். உள்ளே சமதளத்தில் நுழைந்ததும் இரு நிரைகளாய் காலத்தின் கருமை பூசி ஆங்காங்கே வெளிரித் தெரியும் தூண்கள் வழியாக சுற்றி வரும் பாதை. கிழக்கு நோக்கும் உயர்ந்த முகப்பில் இரண்டாம் அடுக்கின் சாளரங்கள் அதன் அகன்ற விழிகளால் நம்மை நோக்குகின்றன.

முதல் தளத்தில் இருபுறத்திலும் முகமண்டபங்கள் இருந்ததன் தடம், வேலைப்பாடமைந்த மேடைகளாய் எஞ்சி நிற்கின்றன. ஏகாந்தம் மட்டுமே தரும் விடுதலையோடு அப்சரஸ் தூண்களில் மேற்கூரையின்றி நிற்கிறாள். அவளது கை ஏந்திய மலர்கள் வாடுவதில்லை. சுற்றுப் பிரகாரத்திற்கும் கோவிலுக்கும் இடையேயான சமதளத்தில் வெட்டுண்ட தென்னை மரத்தின் அடிமரப்பாகம் போல நூற்றுக்கணக்கான கற்கள் வரிசையாக நிற்கின்றன.

Baphuon 7

கெமெர் ஆலயங்களில், மேரு ஆலயம் (அல்லது மலை ஆலயம்) மற்றும் பரந்த ஆலயம் என இருவகையான ஆலயங்களில் இது முதல் வகைமையைச் சேர்ந்தது. சட்டம் சட்டமாக பல சதுரங்களை ஒன்றன் மேல் ஒன்றென அடுக்கியது போன்ற தோற்றம். அதோடு இழைந்த செங்குத்தான படிகள். பழைய படிகள் தொற்றி ஏறும் வண்ணம் செங்குத்தானவை. இப்போது ஏறுவதற்கு இரும்புக் கம்பிகளால் தாங்கப்படும் மரப்படிகள் போடப்பட்டிருக்கின்றன. கருமையான மணற்பாறை சுவர்களில் பசுமை தளிர்விட்டு பல இடங்களில் செடிகள் முளைத்திருக்கின்றன. வலிமை என்பது உயிர் விசையே என அறிந்திருக்கக்கூடும் பாறையில் வேர் செலுத்தி  காற்றில் அசையும் அத்தளிர்கள் .

 

Baphuon 6

இரண்டாம் அடுக்கில் சுற்றி வரும் பாதையில் வெளிப்புறத்துக்குத் திறந்திருக்கும் சதுரவடிவிலான சாளரங்கள், சுற்றிலும் சின்னஞ்சிறு செதுக்கு வேலைகள் நிறைந்தவை. இந்தக் கோவிலின் சிற்பங்களும் ஒன்றன் மீது ஒன்றென அடுக்கப்பட்ட செவ்வகக் கற்களில் வடிக்கப்பட்டவையே. எனவே நிற்கும் அப்சரசின் இடைவரை ஒரு கல்லும், கழுத்து வரை ஒரு கல்லும், தலை வேறொரு கல்லுமாக இருக்கிறது. சுற்றி வரும் நீளரங்குகள் சில இடங்களில் கூரையை இழந்து அரைத்தூண்களாக. வேலைப்பாடுகளற்ற செவ்வகத் தூண்கள் என எஞ்சி நிற்பவை. கூரை இருக்குமிடங்களில் வளைந்து மேலேறும் தூண்கள் சந்திக்கும் முகடுகளின் கீழ் செல்லும் போது குடைந்தெடுத்த குகைவழி செல்லும் உணர்வேற்படுகிறது. ஒன்றுள் ஒன்றென அடுக்கப்பட்ட வாயில்களின் நிலைகள், வரைபடத்தின் சட்டமென உருமாறி உள்ளே தெரியும் பாதையை சித்திரமாக்குகின்றன. பக்கவாட்டில் திறந்த சாளரங்கள் வழியே சூழ்ந்திருக்கும் கானகம் உற்று நோக்குகிறது ;சிள்ளென்ற மொழியில் இடையறாது பேசுகிறது.

Baphuon 3

நான்கு திசைகளிலும் சுற்றுப் பிரகாரத்தின் மத்தியில் சிற்பங்களை அணியென உடுத்திய கமலமுடி கோபுரத்தோடு கூடிய நுழைவு வாயில்கள். அதன் வழியே மேலேறுகிறது செங்குத்தான மிக உயரமான படிகள். படிகளை ஒட்டிய பெருஞ்சுவர்களில் எளிதில் கவனமின்றித் தவறவிட்டுவிடக்கூடிய சில சிறிய போர்க்காட்சிகள், கணையாழியை சீதையிடம் காட்டும் அனுமன், மாரீசனைக் கொல்லும் ராமன், இரு காட்டுப் பன்றிகள் பொருதும் காட்சி, பாசுபதம் தேடிச் சென்ற அர்ஜுனனுக்கும் சிவனுக்கும் பன்றி வேட்டையின் பொருட்டான போர் என்று பல புராண சித்திரங்கள் சிறு சிறு செதுக்குகளாக இருக்கின்றன.

Elephant Terrace

Elephant Terrace

மூன்றாம் அடுக்கு மேலேறியதும் கூரைகளை இழந்த சுற்றுப்பாதைகள், நடுவே இருக்கும் தாழ்வான மையப்பகுதியை வலம் வருகிறது. அந்த இடம் கோவில் தெப்பத்தை சுற்றிவரும் மண்டபம்போலிருக்கிறது. கடுந்தரையில் சிறுதளிரை வேர்பிடித்து எழ வைக்கும் கதிரவன், நின்றிருக்கும் இருபுறத்து தூண்களையும் சரித்து நிழற்தூண்களென ஆக்குகிறான். நிழலில் உருவாகி நாளெலாம் நகரும் நிகர் கோபுரங்கள் உச்சி வெயிலில் குறுகி ஒடுங்குகின்றன .

Kanaiyaazhi

Kanaiyaazhi

மேல்தளத்தின் நான்கு திசைகளிலும் பிரகாரத்தின் மையத்தில் சிறு கோபுரங்களுடன் வாயில்கள் இருந்திருக்கின்றன. ஹொய்சாலக் கோவில்களில் காணப்படுவது போல வரிவரியாக அடுக்கப்பட்ட சிலம்பெனத் தெரியும் தூண்கள். மேலே செறிவான செதுக்குகள். ஐராவதத்தில் அமர்ந்த இந்திரன் இங்கு மிக அதிகம் காணப்படும் சிற்பம். செவ்வகத் தூண்களின் அடிப்பகுதியிலும் மேற்புறத்திலும் நுண் செதுக்குகள்.  சற்றே அகலமான மேடையிலிருந்து நான்கு படிகள் இறங்கி குளம் போலத் தாழ்வாகப் பரந்து கிடக்கும் மையப் பகுதியின் நடுவில் மற்றொரு நாற்கோன பீடம் எழுகிறது. மேலே வீற்றிருக்கிறது திசைகளுக்கு வாசல் அமைத்து விண்ணோக்கி திறந்த திரு ஒழிந்த கருவறை. சுழன்று வரும் காற்று வெறுமை கருக்கொண்ட கருவறையில்  கோவில் கொள்கிறது. சூழ்ந்திருக்கும் வெளியும் கீழிருந்து நோக்க திருவென உள்ளே உள்ளே நிற்கிறது.   இன்மையிலிருந்து கிளைத்தெழும்  பல நூறு தெய்வங்கள்.

Leper King Terrace Wall 1

Leper King Terrace Wall 1

மறுபுறம் கீழிறங்கி சுற்றி வரும் போது ஆலயத்தின் பின்புறம் வடிவமிழந்து கற்களால் அடுக்கியெழுப்பப்பட்ட கோட்டை மதிற்சுவர் எனத் தெரிகிறது. ஓரிடம் உள்ளிருந்து வெளித்தள்ளியது போல் புடைத்து வளைந்து நிற்கிறது. சரிந்து விழுந்து சீரமைக்கப்பட்ட பகுதி அது. தகவற்பலகையை வாசித்த பின்னரே மீண்டும் அப்பகுதியை உற்றுநோக்க சயனித்த புத்தபெருமானின் முகம் தெரிகிறது. புடைத்தெழுந்த பகுதி புத்தரின் முகம்.

பாபுவனைச் சுற்றி வரும் பச்சை படர்ந்த கற்பாதை வழியாக நடந்து இடதுபுறம் சற்றே தொலைவிலிருந்து, பத்து படிகள் ஏறும் உயரமான மையப்பாதையைக் காணும் போது யாராலோ சுமந்து செல்லபடும் நீளமான ஏணி போல, அல்லது பாபுவன் எனும் தேரைக் கட்டியிழுக்கும் வடம் போலக் காட்சியளிக்கிறது தூண்களின் வரிசை. அங்கிருந்து இடதுபுறமாக வெளியேறி காடு வழி புகும் பாதை அரச வளாகமாக இருந்த பகுதியை சென்றடைகிறது. மதிற்சுவரால் சூழப்பட்ட இப்பகுதிக்குள் இருந்த மரக்கட்டங்களை காலமும் மிச்சமிருந்ததை வனமும் உண்டுவிட்டது.

 

Leper King Terrace Wall 4

Leper King Terrace Wall 4

பிம்மேனகாஸ் 

கற்சிதைவுகளுக்குள் நெளிந்து புகுந்து கொண்ட அரவொன்றைக் கண்டபடி ‘பிம்மேனகாஸ்’ (Phimeanakas) சென்றடைந்தோம்.

ராஜேந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்டது. பிறகு இரண்டாம் சூர்யவர்மனால் மீண்டும் புனரமைக்கப்பட்டிருக்கிறது.பத்தாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட இது அன்றைய அரசக் கோவிலாக இருந்திருக்கிறது. பதின்மூன்றாம் நூற்றாட்டின் ஜோ டாக்வன்(Zhou Dahuan) என்ற சீன யாத்ரீகரின் குறிப்புகளில் – மன்னன் இவ்வாலயத்தில் ஒவ்வொரு மாலையும் பெண்ணுருக்கொண்ட ஒரு நாகத்துடன் கூடியிருந்து அரசுக்கு அழியா வளத்தை வரமாகப் பெற்றான் என்ற சுவாரசியமான குறிப்பு இருக்கிறது. அப்போது இக்குறிப்பை வாசிக்கததால் இது குறித்து சற்று முன்னர் கண்ட நாகத்திடம் கேட்டறிய முடியவில்லை.

Phimeanakas 1

Phimeanakas 1

அதிகம் ஆளரவமில்லாத அக்கோவிலை சூழ்ந்திருக்கும் மரங்கள் அக்கோவிலின் தனிமையை நிழலால் காக்கின்றன. இப்போது அதில் மேலேற அனுமதியில்லை. பிம்மேனகாஸ் சிறியளவிலான பாபுவன் போல இருக்கிறது. மூன்றடுக்கு பிரமிடு, நாற்திசையிலும் படிகள். மூன்றாம் அடுக்கின் சாளரங்கள், வரிசையாக ஒன்றன் மேல் ஒன்றென பட்டை பட்டையாக அடுக்கப்பட்டது போன்ற கட்டுமானம். பாபுவன் கோவிலுக்கு வடக்கே அரச வளாகமாக இருந்த அரணுக்குள் அமைந்திருக்கிறது இந்த பிம்மேனகாஸ்(விம்மேனகாஸ் என்றும் சொல்கிறார்கள்)

Prea Rup

Prea Rup

யானைகள் உப்பரிகை

இக்கோவிலிலிருந்து வெளிவந்து இடப்புறம் வடக்கில் யானைகளின் மேற்தளம் என்றழைக்கப்படும் மிகப்பெரிய மேடை போன்ற அமைப்பு இருக்கிறது. ஏழாம் ஜெயவர்மனால் பன்னிரண்டாம் நூற்றாணடின் இறுதியில் கட்டப்பட்டிருக்கிறது. முன்னால் முகம் நீட்டிக் கொண்டிருக்கும் மேடையில், பல இடங்களில் யானைகள் துதி நிலம் தொட அணிவகுக்கின்றன. துதிக்கரமும் பல கற்களால் அடுக்கப்பட்டிருக்கிறது, எனில் யானையின் உடற்பரப்பு மிக நெருக்கமான கோடுகளால் ஆன தோற்பரப்பு போல கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. இயந்திரங்களில் மட்டுமே சாத்தியமென நினைக்கக்கூடிய சீரிய இடைவெளியும், கூர்மையும் கொண்ட கோடுகள்.

Prea Rup2

Prea Rup2

இம்மேடையின் மதிலெங்கும் அடுக்கப்பட்ட கற்களில் உருவெளிக் கோடுகளெனப் புடைப்பு சித்திரங்களாக இதன் பெயர்க்காரணமான யானைகள் அணிவகுக்கின்றன. இதன் எதிரே பெரிய திறந்தவெளியாக இருக்க அதன் மறு கரையென ஒரே சீராக மரங்களூடே சிறு ஆலயங்கள் நிற்கின்றன. இம்மேடையிலிருந்யு அரசன் அப்பெருவெளியில் நடைபெற்ற அணி ஊர்வலங்களையும், திருவிழாக்களையும் கண்டதாக சீன யாத்ரீகரின் நூற் குறிப்பிருக்கிறது.

Prea Rup3

தொழுநோய் மன்னன் உப்பரிகை 

ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்ட சிற்ப மேடை இப்பெயர் பெற்றது வருத்தம்தான். இதன் மேலே இந்தப் பெயரை வழங்கிய ஒரு சிலை – யமனுடைய சிற்பம் என்றும் தொழுநோய் கண்ட மன்னனின் சிற்பம் என்றும் இரண்டு விதமாக அறியப்படும் சிலை இருந்திருக்கிறது. இது அரச குடியின் இறுதிச் சடங்குகளுக்கான இடமாக இருந்திருக்கலாம் என அறியப்படுகிறது. இது பாதாளத்திலிருந்து உயிர் கொண்டெழுந்து  நிற்கும் ஏழுலகங்களின் அடுக்கு. பல மடிப்புகளாக மடிந்து செல்லும் இதன் கீழ்ப்புறத்தில் ஒவ்வொரு முனையிலும் பல தலை நாகங்கள் உடலைப் புவியடியில் மறைத்து, படம் மட்டும் தூக்கி சீறி எழ, நூற்றுக்கணக்கான உருவங்கள் இடைவெளியின்றி செதுக்கப்பட்ட இருபத்தைந்து மீட்டர் நீள சிற்ப மதில். கீழ் அடுக்கில்  நாகங்களும், கடற் கன்னிகளும், முதலை முதலான நீர்வாழ் உயிரிகள் மற்றும் ஊர்வனவும், அடுத்த வரிசையில் வெறித்த விழியுடன் அரக்கர்களும், மேலே கருடனும் ஏனைய தேவதைகளும், இன்னும் உச்சியில் அப்சரஸ்களும், கின்னரர்களும், என திகைக்க வைக்கும் சிலைகளின்திரள்.

Ta Phrom 3

தா ப்ரோம்

 
அடுத்ததாக மதிய உணவுக்குப் பிறகு சென்றது ஏழாம் ஜெயவர்மன் (1125 – 1215) காலத்தில் கட்டப்பட்ட ‘ராஜவிஹாரம்’ என்று பெயர்கொண்ட தா ஃப்ரோம் ஆலயம். இங்கிருந்து சிறிது தொலைவில் இருக்கும் ப்ரே கான் ஆலயம் ஏழாம் ஜெயவர்மனின் தந்தைக்காகவும் இது அவரது தாய்க்காகவும் கட்டப்பட்டதென சில குறிப்புகள் இருக்கின்றன. இது கட்டப்பட்ட காலத்தில் ஒரு கோவிலோடு கூடிய மடாலயமாகவும் சமயக் கல்வி நிலையமாகவும் இருந்திருக்கிறது. இதன் முதன்மை தெய்வமாகிய ப்ரக்ஞானபரமிதாவின் (ஞானத்தின் தேவி) பிரதிஷ்டை அரசனின் தாயை உருவகப்படுத்தி செய்ததாக சொல்லப்படுகிறது.
இங்கு கிடைத்த கல்வெட்டு ஆதாரங்களின் படி பன்னிராடயிம் பேருக்கு மேல் இவ்வளாகத்துள் வாழ்ந்ததாகவும் சுற்றுப்புற கிராமங்களின் வாழ்வதாரமாகவும் பண்பாட்டு மையமாகவும் இக்கோவில் இருந்திருக்கிறது. பதினைந்தாம் நூற்றாண்டின் ஸ்ரீந்திரவர்மன் வரை இக்கோவில் விரிவாக்கம் நடைபெற்றிருக்கிறது.

Ta Phrom 4

பதினைந்தாம் நூற்றாண்டில் க்மெர் அரசகுல வீழ்ச்சிக்குப் பிறகு வந்த நூற்றாண்டுகள் தா ப்ரோம் முற்றிலும் மனிதனால் கைவிடப்பட்டு வனங்களால் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கோபுரத்தின் மீதும் வளைந்து சுருட்டிக் கவ்வும் மலைநாகமென வேர்கள்.
இலவம் மற்றும் அத்தி வகையைச் சேர்ந்த மரங்கள் நிறைந்த காடு. கல்லில் உறைந்திருக்கும் மாபெரும் கனவுகளை உறிஞ்சியதாலோ என்னவோ அனைத்து மரங்களும் பேருருக் கொண்டிருந்தன.  பெருமரங்கள் வளர்ந்து கோவிலை இறுகக் கவ்வியிருக்கும் அழகு அதிகம் கலையாது இதை சீரமைத்திருக்கிறார்கள். இவ்வாலய சீரமைப்புப்பணி இந்தியத் தொல்லியல் துறையின் உதவியோடு நடைபெற்றிருக்கிறது.

Ta Phrom Tree 1

இன்னும் சிலகாலம் கண்டடையப் படாதிருந்தால் இப்பெரு விருட்சங்கள் தனது வேர்களெனும் உகிர்களால் கவ்வி இக்கலைப் படைப்புகளோடு விண்ணோக்கி ஏகியிருக்கக் கூடும் என்று தோன்றியது. இத்தகைய மாபெரும் கலைப் படைப்புகள் எதற்காக யாரை நோக்கி எழுப்பப்படுகின்றன! காலத்தோடு இடையறாது கலைஞன் எதற்காகப் போரிடுகிறான்? தான் வாழும் காலத்தில் சமூகத்தால் புறக்கணிக்கப்படினும், கைவிடப்படினும் எதற்காக இம்மரங்களைப் போலப் பறந்தெழ முயற்சிக்கிறான்!!

கணம்தோறும் சொட்டிக் கொண்டிருக்கும் காலத்தின் ஸ்தூல வடிவைக் காண்பது போலிருந்தது இன்றைய தா ஃப்ரோம் ஆலய வளாகம். ஒரு குருவியின் பிழையில் கிளைத்தெழுந்த ஆக்கிரமிப்பு என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டீர்கள். ஆலயத்தைச் சுற்றி நடந்தபோது, குருவிக் குலமே செய்த சதியென்று பட்டது. அல்லது அவ்வனத்தின் கைவிடப்பட்ட தேவதைகளின் வஞ்சம் எனத் தோன்றியது , ஒவ்வொரு மரமும் அக்கோவில்களின் மீது படர்ந்தொழுகியிருக்கும் விதம், என்ன ஒரு விசைகொண்ட பிடி!! தன்னுடையதாயிருந்து இழந்து போனதை மீட்டுக் கொள்வதற்கான ஒரு விசை. வானிலிருந்து உருகிச் சொட்டிய உயிர்த்துளிகள் போல அக்கோபுரங்கள் மேல் நின்ற மரங்களை, ஒவ்வொருவரும், படர்ந்து கவ்வும் நாகம் போல, சுருட்டி விழுங்கும் யானை போல என அக்காட்சியை சொல்லுக்குள் கவ்வ முயற்சித்துக் கொண்டிருந்தோம்.

Ta Phrom Tree 2
இன்று தா ஃப்ரோமில் மரஉகிர் பற்றிய கோபுரத்து மறு வாயிலை சிலந்திவலை பற்றியிருந்தது, அது இன்னொரு முயற்சி!! நாம் இரும்புச் சட்டங்கள் கொடுத்து தூக்கி நிறுத்துகிறோம். மனித யத்தனங்களை விழுங்க காலமும் ஞாலமும் காத்துக் கொண்டிருக்கின்றன.

சுண்ட வரும் சிறுவிரல் முன் நின்று எதிர்நோக்கும் ஒற்றை எறும்பென மானுடம் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கிறது. எங்கிருந்தோ பெருமலைகளை உடைத்து நதியிலும் மண்ணிலும் புரட்டி இப்பெருவடிவு சமைக்கிறது. கைவிடப்பட்டவற்றை காலம் பசுந்தழைக்குள் புதைத்து வைக்கிறது, மானுடம் மீண்டும் கண்டெடுக்கிறது. இதுவும் மனிதனும் இயற்கையும் இருபுறம் கடைந்திழுக்கும் பாற்கடல்தானோ, காலம் உமிழ்ந்த ஆலகாலம். நாம் இரண்டு நாட்களாகக் கண்டு வரும் இப்பெரும்பரப்பு மானுடத்தின் விழைவையும், கனவையும், அதன் உச்ச சாத்தியங்களும் மண்மூடக் கூடிய அபத்தத்தையும் ஒருங்கே முன்வைக்கிறது. மானுடம் மட்டுமல்ல, மண்ணின் பெரு விசையை மீறி எழுந்து நிற்கும் சிறு புல்லிலிருந்து விண்தொட நேரெழும் பெருவிருட்சம் வரை விழைவின் துளிகள்தானே.

 

Leper King Terrace Wall 5
ப்ரே ரூப்

க்மெர் மன்னன் ராஜேந்திரவர்மனால் 953-961 களில் கட்டப்பட்ட ‘கோவில் மலை’ வகைமையைச் சேர்ந்தது ப்ரே ரூப். இதுவும் அரச குலத்தின் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற இடம் என்று கருதப்படுகிறது.

ஓங்கி நிற்கும் மேடையின் மீது நான்கு முனைகளில் துணை கோபுரங்களும் மத்தியில் சற்றே உயரமான மேடையில் மைய கோபுரமுமாக நிற்கிறது ப்ரே ரூப். மாலை ஒளியில் இக்கோவிலைப் பார்ப்பதற்காக கதிர் மேல்வானிலிருந்து இறங்கும் வேளையில் சென்றிருந்தோம். அதுவரை பார்த்திருந்த கோவில்களில் இருந்து இது வேறுபட்டிருந்தது. சிறு செங்கற்கள் மற்றும் மணற்பாறையால் ஆன கட்டுமானம். எப்போதோ இருந்து சுண்ணப் பூச்சு சிறு திட்டுகளாக மங்கிய செந்நிற வண்ணங்களாக எஞ்சியிருந்தன. மாலைச் செவ்வொளியில் கோவில் மேலும் அரக்கேறுகிறது.
Pasupatham
பசுங்காடுக்கு நடுவே ஒரு சதுரவடிவ அரணுக்கு உள்ளே நிற்கிறது ப்ரே ரூப். இருபுறமும் நதிக்கரை போல நிற்கும் மேடைகளுக்கு நடுவில் உயர்ந்தோங்கும் படிகளின் மேலே இருபுறமும் அமர்ந்த நிலையில் சிம்மங்கள் காவலிருக்கின்றன. நான்முனை துணைக் கருவறைகளும் சிலபடிகள் மேலேறியிருக்க இருபுறம் சிம்மங்களால் காக்கப்பட்டு நிற்கின்றன. மைய விமானத்தின் முன் நந்தி அமர்ந்த இடம் வெறும் பீடமாக எஞ்சியிருக்கிறது. விடையேறிய பரமனும் எங்கோ சென்றுவிட உருவிலி அமர்ந்த கருவறை.

comp
அனுதினம் மறையும் கதிரை அவ்விடத்தில் காண்பதற்கென பெருந்திரள் கூடியிருந்தது. உலகத்தின் பல கோடிகளில் இருந்து வந்தவர்கள் அந்த க்மெர் ஆலயத்தின் செவ்வொளி கூடும் எழில் தருணத்தைப் பார்க்கக் காத்திருக்க, மூடுதிரைக்குப் பின் சூரியன் பாராமுகமாயிருந்தான். மதியம் பெய்த சிறுமழை ஆங்காங்கே வானத்தைத் தரை இறக்கியிருந்தது. தெளிவான நீரில் சிதிலமாகவும், காற்று வருடிய சிற்றலையில் அழகான கோவிலின் சாத்தியமாகவும் மாயம் நிகழ்த்திக் கொண்டிருந்தது பிம்பங்கள் தேங்கிய நீர் சதுரங்கள். அந்திம வெளி என்பதாலோ அந்தி ஒளியினாலோ மனதுள்ளும் வார்த்தைகளில்லாத மௌனம் கவிந்திருந்தது.வேறெங்கோ உயரத்திலிருந்து அங்கு கூடியிருப்பவர் அனைவரையும் ஒரு பறவைப் பார்வை பார்க்க முடிவதாய் ஒரு உணர்வு.

com

அங்கிருந்து மண்மறைந்த அனைவரும் விண்ணேயிருப்பார்கள் என்ற நம்பிக்கையை அங்கு மண் மறைந்து விண்ணெழும் கதிரோன் தினமும் சொல்வதாகப் பட்டது. மாலை வானம் பெரியதொரு முகில் திரையென விரிந்திருந்தது. முட்களில்லாத கடிகாரம் ஒன்றைப் பார்ப்பது போல வானம் பொழுது சாய்வதை காட்டாது ஒளி அவிந்து கொண்டிருந்தது. காத்திருப்பதில் இயற்கையோடு போட்டியே இருக்க முடியாது, இருள் கூர் கொள்ளும் முன் படியிறங்கத் தொடங்கினோம்.

 

மிக்க அன்புடன்,

சுபா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நடையின் எளிமை

$
0
0

sujatha

அன்புள்ள ஜெ..

சிறுகதை எழுதுவது குறித்து அவ்வப்போது சுஜாதா டிப்ஸ் கொடுப்பார்… எளிமையாக எழுதுங்கள் என்பது அவரது முக்கியமான அறிவுரை… -எண்ணியவண்ணமே நடந்தது.. நல்கினான்… என்றெல்லாம் எழுதாமல் நினைத்தபடி நடந்தது கொடுத்தான் என எழுதுஙகள் என்பார்…

மிகப்பெரிய ஒரு ரகசியத்தை தெரிந்து கொண்டது போல இருந்தது.. எளிய எழுத்து என்பது எங்களுக்கெல்லாம் தாரக மந்திரம் ஆயிற்று… கடினமான மொழியில் எழுதும் இலக்கியவாதிகளின் எழுத்து கேலிக்குரியதாக தோன்றியது…

ஆனால் போக போக புதிய சொற்களின் தேவை புரிந்தது.. அருந்து பருகு மண்டு மாந்து என்ற அனைத்து சொற்களுமே குடிப்பது என்பதை சுட்டினாலும் நுட்பமான வேறுபாடுகள் உண்டு.. ஆனால் நாம் பயன்படுத்துவது குடிப்பது என்ற சொல்லை மட்டுமே.. காரணம் மற்ற சொற்கள் புரியாது…

ஆனால் ஆங்கிலத்தில் அப்படி இல்லை.. புரிகிறது புரியவில்லை என்பதைப் பற்றி கவலைப்படாமல் துல்லியமாக மட்டுமே எழுதுகிறார்கள்.. புரியவில்லை என்றால் நாம்தான் அகராதியை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்…

ஆனால் அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக எளிய ஆங்கில வடிவில் சில சொற்களை மட்டுமே பயன்படுத்தி சில நாவல்களை மறு ஆக்கம் செய்கிறார்கள்.. பள்ளிமாணவர்களுக்கு இது பயன்படும்

அப்படி பார்த்தால் வெகு ஜன தமிழ் எழுத்து என்பது பள்ளி மாணவர்களுக்கான தமிழ் என்ற அளவில்தான் செயல்படுகிறது… சில நூறு வார்த்தைகளுக்குள்தான் நம் தகவல் தொடர்பு நடக்கிறது.. பத்தாண்டுகளுக்கு முன் இருந்த வார்த்தைகள் இன்று இருப்பதில்லை

தமிழ் உயிர்ப்புடன் இருப்பது இலககியத்தில் மட்டும்தான்.. தமிழை காப்பாற்ற வேண்டும் என்பது இலக்கியவாதிகளின் இலக்காக இல்லாமல் இருக்கலாம்… ஆனால் அவர்களது வாசிப்பு ஒரு விஷயத்தை சரியாக சொல்ல வேண்டிய அக்கறை ஆகியவற்றால் பல்வேறு தமிழ் சொற்களை ( வெகு ஜன பயன்பாட்டில இல்லாதவற்றை ) பயன்படுத்துகிறார்கள்.. தமிழ் சொல் வளத்தை அதிகரிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு உங்கள எழுத்துகளை படிப்பவர்களை அறிவேன்

ஆனால் வெகுஜன எழுத்தில் தமிழ் சில நூறுசொற்களுக்குள் சுருஙகி இருக்கிறது…தெரிந்தோ தெரியாமலோ இதற்கு சுஜாதாதான் காரணமோ என்று தோன்றுகிறது

அன்புடன்
பிச்சைக்காரன்

 

pupi

 

அன்புள்ள பிச்சைக்காரன்,

சிற்றிதழ்சார்ந்த இலக்கியச் சூழலில் மிகவிரிவாக முன்னரே பேசப்பட்டுவிட்ட விஷயம்தான் இது. இதை அடுத்தடுத்த தலைமுறையினருக்காக மீண்டும் மீண்டும் பேசவேண்டியிருக்கிறது என நினைக்கிறேன்.

இலக்கியத்தின் விரிவையும் அதன் சாத்தியங்களையும் அறியாத புதியவாசகன் இயல்பாக நான்கு முன்முடிவுகளைக் கொண்டு உள்ளே நுழைகிறான். வெளியே உள்ள இலக்கியமல்லாத வாசிப்புகளில் இருந்து அவன் அடைபவை அவை. அவற்றை எளிமை, நேரடித்தன்மை, உலகியல்தன்மை, பரபரப்பு என்னும் இயல்புகளாக வரையறைசெய்துகொள்ளலாம். இலக்கியம் இந்நான்குக்கும் அப்பாற்பட்டது

இலக்கியம் வாசிக்கப்புகும் ஆரம்ப வாசகன் செய்திகள், வணிக இலக்கியம், சினிமா ஆகியவற்றினூடாகவே அங்கே வந்துசேர்கிறான். செய்திகள் எப்போதுமே எளிமையான நேரடி மொழியில் அமைந்தவை. அங்கே பொருள்மயக்கங்களுக்கு இடமில்லை. தெளிவாக அமையும்தோறும் செய்திமொழி சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஆகவே குறைந்த அளவுக்குச் சொற்களில் நேரடியான சிறிய சொற்றொடர்களை அமைப்பதே அங்கே தேவையானது. அவ்வாறான ஒரு பொதுநடை ஒரு சூழலில் உருவாக்கப்பட்டு புழக்கத்தில் இருக்கும்

இலக்கியம் என்பது செய்திகளால் உருவாக்கப்படும் அந்தப் பொதுநடைக்கு எதிரான ஒன்றாகவே இருக்கமுடியும். ஏனென்றால் அந்தப் பொதுநடையால் சொல்லப்படமுடியாதவற்றைச் சொல்வதே இலக்கியத்தின் முதன்மை நோக்கம். பொதுப்பார்வையால் மறைக்கப்படுவனவற்றை நோக்கியே எப்போதும் இலக்கியம் செல்கிறது. ஆகவே எந்த அளவுக்குச் செய்திநடையில் இருந்து விலகுகிறதோ அந்த அளவுக்கு இலக்கியநடை அழகும் செறிவும் கொள்கிறது. இலக்கியவாதியை அளக்கும் அளவுகோலே அவன் நடை பொதுநடையிலிருந்து எந்த அளவுக்கு வேறுபடுகிறது என்பதுதான்

பொருள்மயக்கம் என்பது இலக்கியத்தின் வழிமுறைகளில் முதன்மையானது. ஒன்றைச் சொல்லி இன்னொன்றை வாசகன் ஊகிக்க விடுவதே அதன் வழிமுறை. எந்த அளவுக்கு பொருள்மயக்கம் கொள்கிறதோ அந்த அளவுக்கு இலக்கியநடை ஆழமானதாக ஆகிறது. நவீன இலக்கிய விமர்சனம் இதை பன்முகப்பொருள்கொள்ளும்தன்மை என வரையறை செய்யும். அவ்வகையிலும் அது செய்திநடைக்கு நேர் எதிரானதாகவே இருக்கமுடியும்

சுருக்கம் என்பது செய்திக்குரிய அடிப்படை இயல்பு. அக்காரணத்தாலேயே அது இலக்கியத்திற்கு எதிரானது. இலக்கியத்தின் அடிப்படை நோக்கமே . விரித்துரைப்பதுதான். சொல்லப்படாதனவற்றை, உணரப்படவேண்டியவற்றை நோக்கிச் செல்வதே இலக்கியம். விரித்து விரித்து உரைத்து அதற்கும் அப்பால் சிலவற்றை குறிப்புணர்த்தி அமைவதே அதன் வழி. உலக இலக்கியத்தின் பெரும்படைப்புகளை வாசித்தவர்கள் விரிவு என்பது ஓர் அடிப்படை இலக்கியக்குணம் என உணரமுடியும். ஆகவே செய்தியின் சுருக்கத்தை இலக்கியத்தில் எதிர்பார்ப்பதென்பது இலக்கியத்தை நிராகரிப்பதேயாகும்

செய்தி அவசர வாசிப்புக்குரியது. ஏற்கனவே அறிந்தவற்றுக்கு நீட்சியாகவே செய்திவாசகன் புதியசெய்தியை வாசிக்கிறான். அடிப்படையான தகவல்கள் தவிர எதுவும் அவன் கவனத்தில் நிலைப்பதில்லை. ஆகவே செய்திகளை தேய்வழக்குகளுடன் அமைப்பார்கள். தெரிந்த செய்திகளை கோடிகாட்டி புதியவற்றைச் சொல்வார்கள். நேர்மாறாக இலக்கியம் என்பது அதற்கென உள்ளத்தையும் பொழுதையும் அளிக்கும் வாசகனுக்குரியது. ஒன்றுக்குமேற்பட்ட வாசிப்புகளை அளிக்கும் எண்ணம் கொண்டவனுக்காக எழுதப்படுவது. அதன் எல்லா வரிகளும் முக்கியமானவை.

செய்திவாசகனே நேரடியாக வணிக எழுத்துக்குச் செல்கிறான். ஆகவே வணிக எழுத்தின் நடை பெரும்பாலும் செய்திநடையிலிருந்து உருவானதாகவே இருக்கும். எளிமை,நேரடித்தன்மை, சுருக்கம் ஆகியவை அதன் இயல்பாக இருக்கும். அதில் பழகிய வாசகன் இலக்கியப்படைப்புகளிலும் அதை எதிர்பார்ப்பான். அது இலக்கியத்திலிருந்தே அவனை விலக்கிவைக்கும் ஒரு பெரிய தடையாக ஆகிவிடும்

ஏராளமான சொற்கள் ஏன் இலக்கியத்திற்குத் தேவையாகின்றன? அது சொல்லவும் உணர்த்தவும் முயல்பவை முடிவிலாதவை என்பதனால்.ஒரு சூழலுக்கூரிய சொல் இன்னொரு சூழலுக்குப் பொருந்தாது என்பதனால். ஒர் ஒலியமைவு கொண்ட சொல்லை அதற்குரிய தருணத்தில் மட்டுமே கையாளமுடியும் என்பதனால். சொல்லிலேயே காட்சியும், ஓசையும் உள்ளது. குடித்தான் என்பது அருந்தினான் என்பதும் ஒன்றல்ல. குடிப்பதில் உள்ள வல்லின ஓசை அதை விரைவான செயலாக ஆக்குகிறது. அருந்தினான் என்னும்போதே மெல்லமெல்ல குடிக்கும் காட்சி கண்ணெதிரே எழுகிறது. இலக்கியத்திற்கு மொழியிலுள்ள மொத்தச் சொற்களும் போதாது.

அந்த தடையை உருவாக்குபவை சுஜாதா போன்றவர்களால் உருவாக்கப்பட்டு சுற்றிவரும் ஒற்றைவரிகள். ’நல்ல இலக்கியம் சுருக்கமானது’ ‘ஒருபக்கத்தில் சொல்லமுடியாததை நூறுபக்கத்திலே சொல்லமுடியாது’ ’நல்ல நடை எளிமையானதாக இருக்கும்’ என்பதுபோன்ற வரிகள் இலக்கியமென்றால் என்ன என்று அறியாதவர்களால் மட்டுமே சொல்லப்படுவன. இவ்வரிகளை ஏற்றால் உலக இலக்கியத்தின் மாபெரும்படைப்புகள் பெரும்பாலானவற்றை நாம் துறக்கவேண்டியிருக்கும் என வாசிப்பவர்கள் அறிவார்கள்.

நேரடித்தன்மை இலக்கியத்தின் இயல்பே அல்ல. நேரடியாகச் சொல்லிவிடமுடியாதனவற்றைச் சொல்லும்பொருட்டே இலக்கியம் எழுதப்படுகிறது. அதன் உத்திகள், நுட்பங்கள், அழகியல் அனைத்துமே அதன்பொருட்டு உருவாகி வந்தவைதான். ‘சொல்லவந்ததை சொல்லிவிடுவதே இலக்கியம்’ என இங்கே அவ்வப்போது அரைவேக்காட்டுக் குரல்கள் எழுவதுண்டு. இலக்கியம் சொல்லவருவதில்லை, உணர்த்தவருகிறது என்பதே அதற்கான மறுமொழி.

இதேபோன்ற இன்னொரு முன்முடிவு அன்றாட வாழ்க்கை சார்ந்ததும், நாம் அனைவரும் அறிந்ததுமான யதார்த்தத்தை இலக்கியத்தில் தேடுவது. செய்திகளில் இருந்து உருவாகி வணிக இலக்கியம் வழியாக இலக்கிய வாசிப்பில் புகும் பிழைமனநிலை இது. இலக்கியம் பேசுவது வாழ்க்கையை மட்டும் அல்ல. கனவுகளையும் இலட்சியங்களையும்கூடத்தான். மானுட மனத்தின் அச்சங்கள், ஐயங்கள், குழப்பங்கள் ஆகியவற்றையும்தான். உளத்திரிபுநிலைகள், ஆழ்ந்த சிடுக்குகள் ஆகியவையும் அதன் பேசுபொருட்களே. தத்துவம், வரலாறு, அறிவியல்,மெய்யியல் என அதன் தேடல்கள் விரிவானவை.

அன்றாட, புறவயமான , உலகியல் வாழ்க்கை என்பது இலக்கியத்தின் பேசுபொருளில் மிகச்சிறிய ஒரு பகுதி மட்டும்தான். அதை மட்டுமே நாம் அறிவோம் என்பதனால் அதை மட்டுமே வாசிக்க விரும்புவதைப்போல இலக்கியத்தை சிறுமைசெய்வது வேறில்லை. இலக்கியத்திற்கு அன்றாட யதார்த்தம் ஒரு தேவையே அல்ல.

சொல்லப்போனால் வரலாறு முழுக்க இலக்கியம் அன்றாட யதார்த்தத்துக்கு எதிராகவே செயல்பட்டுள்ளது. அன்றாட யதார்த்தத்தால் தொடமுடியாத இலட்சியங்களை, கனவுகளை, தரிசனங்களை முன்வைக்கவே அது முயன்றுள்ளது. என்றும் அதன் இலக்கு அதுதான். நவீன இலக்கியம் உருவானபோதுதான் அன்றாடவாழ்க்கையையும் இலக்கியத்திற்குள் சொல்லலாம் என்னும் எண்ணம் ஏற்பட்டது. அவ்வாறு சொன்ன இலக்கியவாதிகள் சிலர் உருவாகி வந்தனர். அதன் எல்லைகள் இன்று இலக்கியத்தால் உணரவும் படுகின்றன. அன்றாட வாழ்க்கை மட்டுமேயாக நின்றிருக்கும் நல்ல இலக்கியம் ஒன்று இருக்கவும் முடியாது. அதன் ஒருமுனை அதை மீறிச்சென்றாலொழிய அதற்கு இலக்கியமதிப்பு இல்லை

வணிக எழுத்தில் பழகிய உள்ளங்கள் இலக்கியத்தில் பரபரப்பை, அடுத்தது என்ன எனும் வாசிப்பு விசையை எதிர்பார்க்கும். இலக்கியத்தில் அது இன்றியமையாதது அல்ல. ஏனென்றால் ஒற்றைக் கதையோட்டத்தையும் , எளிமையான கதைமாந்தரையும், நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியையும் உருவாக்கினால் மட்டுமே வாசிப்புவிசை இயல்வதாகும். ஒவ்வொன்றையும் விரிவாக்கிக் கொண்டு செல்லும் இலக்கியத்தின் போக்குக்கு எதிரானது அது. வணிக சினிமா, வணிக புனைவு ஆகியவற்றிலிருந்து பெற்ற அம்முன்முடிவை துறக்காமல் இலக்கியவாசிப்புக்குள் நுழைய முடியாது

இலக்கியம் வாசிப்புவிசை கொண்டிருக்கக் கூடாதென்றில்லை. பல படைப்புகள் அவ்விசை அமைந்தவையே. அதுவும் அவை கொள்ளும் புனைவு உத்தியே. இன்னொன்றை நாம் கவனிக்கலாம். ஓர் இலக்கியப் புனைவுடன் வாசகனாக நாம் உரையாட ஆரம்பித்துவிட்டால் அது நம்மை இழுத்துச்செல்கிறது. எந்தப் பரபரப்பு புனைவை விடவும் அது வாசிப்புவிசை கொண்டதாக உள்ளது

அவ்வப்போது இலக்கிய மதிப்புரைகளில் வரும் வரிகள் நம்மை திசைதிருப்புபவை. ‘ஆற்றொழுக்கான நடை’ ‘ சொல்லவந்ததை சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்’ ’பாமரருக்கும் புரியும்படி எழுதியிருக்கிறார்’ ’நேரடியாகச் சொல்லப்பட்டுள்ளது இந்தப்படைப்பு’. இவை இலக்கியப்படைப்பின் இயல்புகளே அல்ல

அதேபோல இங்கே சிறந்த நடை என பாராட்டப்படுபவை பெரும்பாலும் செய்திநடையில் இருந்து உருவான எளிய அன்றாடமொழியால் ஆனவையே. எளிதாக வாசிக்க வைப்பவை என்பதனாலேயே நல்ல நடை என அவை கொண்டாடப்படுகின்றன. நல்ல நடை என்பது எந்த கருத்தையும் கூர்மையாகச் சொல்வதும், எந்த உளநிலையையும் எழுதிக்காட்டிவிடக்கூடியதும், எந்த காட்சியையும் கண்முன் விரித்துவிடும் தகைமை கொண்டதும், எந்தச் சிடுக்கான தருணத்தையும் சந்திக்கும் தன்மைகொண்டதும், எல்லா தருணங்களுக்கும் ஏற்ப தன்னை உருமாற்றிக்கொள்ளக்கூடியதும் ஆகும். தர்க்கம் நடையின் ஓர் அம்சம் மட்டுமே. தர்க்கத்தை திகைக்க வைப்பதும்,அர்த்தமின்மை வரைச் செல்லும் சொற்சிடுக்கும் இலக்கியநடையின் இயல்புகளே.

சிறந்த உதாரணம் புதுமைப்பித்தன். மகாமசானம் கதையின் எள்ளல் கொண்ட நடைக்கும் கபாடபுரத்தின் கனவுநடைக்கும் அன்றிரவின் செவ்வியல்நடைக்கும் அவருடைய தமிழ் வளைகிறது. அவரே நம் முன்னுதாரணம்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கூப்பிடுதூரத்து தெய்வங்கள் -கடிதங்கள்

$
0
0

yakshi

தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் அமேசானில் வாங்க

கூப்பிடுதூரத்துத் தெய்வங்கள்.

அன்புள்ள ஜெ

யட்சி பற்றி படிக்கும்போதெல்லாம் ஒரு சிலிர்ப்பு வராமல் இல்லை.

பாலகுமாரன் ஒருமுறை மயிலாப்பூர் முண்டககண்ணி அம்மன் வரலாற்றை மிகுந்த வர்ண்ணனையோடு எழுதியிருந்தார். அவள் ஊரின் காவல் தெய்வம் நாம் அனைவரும் மயிலாப்பூரில் முதலில் வணங்கவேண்டியது அவளைத்தான் என்று குறிப்பிட்டிருந்தார்.

அன்று இரவு கனவு வந்தது, அம்மன் சன்னல் வழியாக என் அறைக்குள் நுழைந்தது போல். மறுநாள் காய்ச்சல் வேறு. அடுத்த சனிக்கிழமையே மயிலாப்பூர் ஓடினேன், முண்டாக்கண்ணியை தரிசித்துவிட்டுத்தான் திரும்பினேன். மனதில் அவ்வளவு நிம்மதி.

திருமணம் ஆனதும் மனைவியிடமும் இதை சொல்லி அவளையும் அழைத்துச்சென்றேன்.

எங்கெங்கு காணினும் சக்தியே..

பதிவுக்கு நன்றி
அன்புடன்
பகவதி

 

 

அன்புள்ள ஜெ

கூப்பிடுதூரத்து தெய்வங்கள் வாசித்தேன். ஏற்கனவே இக்கதைகளை ஜன்னல் இதழில் வாசித்திருந்தேன். மீண்டும் நூலை அமேசானில் தரவிறக்கியும் வாசித்தேன். என்னைப்பொறுத்தவரை இந்த புத்தகம் நானே என்னை மறுகண்டுபிடிப்பு செய்த நூல். எனக்கு சின்ன வயதுமுதலே நாட்டுப்புறத்தெய்வங்கள் குலதெய்வங்களைப்பற்றி இகழ்ச்சியான அபிப்பிராயம்தான். அவையெல்லாம் மூடநம்பிக்கைகள் என்று ஒற்றைவரியில் எனக்குக் கற்பிக்கப்பட்டது. அப்படிக் கற்பித்தவர்கள் வெளிநாட்டு மதநம்பிக்கைகளை அதைவிட மூர்க்கமாக நம்பியவர்கள். இன்னும் சொல்லப்போனால் மாடனையும் முத்தாலம்மனையும் விரட்டிவிட்டால்தான் சிலுவையை கையில் தரமுடியும் என்று நினைத்தவர்கள். அவர்களின் கையாட்களாகச் செயல்பட்டவர்கள் பகுத்தறிவாளர்கள். அவர்கள் நினைத்தது 90 சதவீதம் நடந்தது. என் குடும்பத்தில் பாதிக்கும் மேலானவர்கள் இன்றைக்கு கிறித்தவர்கள். பலர் பெந்தேகொஸ்தே கிறிஸ்தவர்கள். எங்கே பார்த்தாலும் பிசாசு சாத்தான் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் மாடசாமியும் முத்தாலம்மனும் மூடநம்பிக்கைகள் என்பார்கள்.

நான் என்னுடைய குலதெய்வ வழிபாட்டையும் என் முப்பாட்டன் தெய்வங்களையும் இன்றைய நவீன பார்வையில் புரிந்துகொள்வதற்கு உதவியது இந்த ஒரு புத்தகம்தான். எனக்கு உங்கள்மேல் நிறைய கருத்துவேறுபாடுண்டு. நான் பிறப்பால் திமுக காரன். இன்றைக்கு நான் தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கை கொண்டவன் ஆனாலும் இந்த நூலுக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கைக்கொண்டவர்கள், இந்த மண் மேல் பெருமிதம் கொண்டவர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம் இது

எஸ்.ராஜேந்திரன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தமிழும் ராஜ் கௌதமனும்

$
0
0

raa

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

 

ஜெமோ,

ஐரோப்பிய கோடை தரிசனம் பெரும் புத்துணர்ச்சியை வளங்கியிருக்குப்பதை “மெதுவாகத்தான் இம்மண்ணில் இனி கால் பதிக்கவேண்டும்…” என்ற ஒற்றை வரியில் உணர்த்தியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.
ராஜ்கௌதமன் அவர்களின் ‘எண்பதுகளில் தமிழ் கலாச்சாரம்’  என்ற கட்டுரை தொகுப்பிலுள்ள ‘சுத்த தமிழ் நேயம்’. என்ற கட்டுரையைப் பற்றிய என்னுடைய அவதானிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
பிராமண சமூகங்களின் மேட்டிமைவாத போக்கிற்கும் ஆதிக்கத்திற்கும் எதிராக, பிராமணரல்லாத உயர்ஜாதியினர் கையிலெடுத்ததும் தமிழைத்தான். இவர்கள் தங்கள் மரபுகளை மீட்டெடுப்பதை விட அதன் பழம்பெருமைகளில் தஞ்சம் புகுவதையே நாடியிருக்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை பழங்கால தமிழ் சமூகத்திலேயே அனைத்து சாதனைகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டது என நிறை கொண்டு இறந்தொழிந்த காலங்களில் மட்டுமே வாழ்பவர்களாக இருந்தார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்

$
0
0

manush

மனுஷ்யபுத்திரனின் தேவி கவிதை குறித்து உருவான விவாதத்தில் என் தரப்பைக் கோரி பல கடிதங்கள். அனைத்திலும் இருந்த எல்லா கேள்விகளுக்குமாக ஒட்டுமொத்தமாக இந்த விளக்கம்.

 

கேரள வெள்ளம் குறித்து குருமூர்த்தி எழுதிய கருத்து பொதுவெளி வெளிப்பாடு என்னும் முறையில் அசட்டுத்தனமானது. ஆனால் மரபான பக்தர்கள் அதைத்தான் சொல்லமுடியும். ஏனென்றால் பக்தியின் அடிப்படையே இயற்கைவிசைகளில் இருந்தும், எதிர்காலத்தின் நிலையின்மையில் இருந்தும், இறப்பிலிருந்தும் உருவாகும் அச்சத்தில் உள்ளது. பக்தி பின்னர் தத்துவத்தையும் மெய்த்தரிசனங்களையும் இணைத்துக்கொண்டு எத்தனை விரிவடைந்தாலும் அந்த ஆதார மனநிலை மாறுவதில்லை. இயற்கைவிசைகளிலிருந்து தன்னை காக்கவேண்டும் என்று கோரும் அதே உள்ளம்தான் இயற்கையின் விசையை இறைவனின் தண்டனை என்றும் எண்ணுகிறது. ஏறத்தாழ இதேபோலவே மோகன் சி லாசரஸ் கேரள வெள்ளம் குறித்து சொல்லியிருக்கிறார். முன்பு உத்தரகண்ட் வெள்ளத்தைப்பற்றி கிறித்தவபோதகரும் அரசதிகாரியுமான  உமாஷங்கரின் கருத்தும் ஏறத்தாழ இத்தகையதே. பகுத்தறிவாளர் என்ன சொன்னாலும் பக்தர்கள் இதைச் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.

 

அதைத் தொடர்ந்து பகுத்தறிவாளர்கள் கேட்கும் வினா அய்யப்பனை இத்தனை அழிவைச் செய்பவனாகச் சொல்வது எவ்வளவு கொடுமையான கருத்து, குருமூர்த்தியைக் கண்டிக்கவேண்டாமா என்று. தாங்கள் முழுமூச்சாக எதிர்க்கும் ஒன்றைப்பற்றி எத்தனை முழுமையான அறியாமையுடன் இவர்கள் இருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. இதேபோன்ற ஒரு விவாதத்திலேனும் கொஞ்சமாவது வரலாற்றுணர்வை, கொஞ்சமாவது தர்க்கபுத்தியை இவர்கள் வெளிப்படுத்தியிருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்! இங்கே பகுத்தறிவென்பது அறிவிலாத குதர்க்கம் மட்டுமே என்பதற்கான சான்று இப்பேச்சுக்கள். மார்க்ஸிய நோக்கில் சிந்திப்பவர்கள் என இங்கே எவருமில்லை என்பதற்கும் இதுவே சான்று.

 

உண்மையில் உலகிலுள்ள அத்தனை மதங்களிலும் இறைவன் தண்டிக்கும் சினம் கொண்டவனாகவும் அளவற்ற அருள்கொண்டவனாகவுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறான். விதிவிலக்கு தத்துவ மதங்களான பௌத்தமும் ஜைனமும். அவற்றிலுள்ள இறையுருவகம் ஒரு தத்துவக்கருதுகோள் மட்டுமே. அத்வைதத்தைப் பொறுத்தவரை அழிவு ஆக்கம் என இருமை கடந்த ஒன்றாகவே முடிவிலாத இறை இருக்கவியலும். அருள் -துயர் என உணர்வது மானுடனின் வாழ்க்கையின் சூழலும் அவன் உள்ளத்தின் அளவுக்குட்பட்ட தன்மையும் அளிக்கும் தோற்றங்களே. ஆனால் எங்கும் கருணை மட்டுமே கொண்ட தெய்வ உருவகம் கிடையாது. கிறிஸ்தவம், இஸ்லாம், ஜரதுஷ்டிர மதம் என அனைத்துமே தண்டிக்கும் இறைவனையே முன்வைப்பவை.

 

மதங்களின் இந்த இருபாற்பட்ட தன்மை பற்றி ஆய்வாளர்கள் பல ஆயிரம் பக்கங்கள் எழுதியிருக்கிறார்கள்- குறிப்பாக மார்க்ஸிய அறிஞர்கள். இதை ஒருவகை பிளவாளுமை என்றுகூட வகுத்த ஆய்வாளர்கள் உண்டு. எதையேனும் இங்கு எவரேனும் அறிந்திருக்கிறார்களா? தங்களுக்கு பலி அளிக்கப்படவில்லை, தங்கள் ஆணைகள் மீறப்படுகின்றன என்பதனால் சினம்கொண்டு நகரங்களை முற்றாக அழிக்கும் தெய்வங்களைப்பற்றிய கதைகள் எல்லா தொல்மதங்களிலும் உள்ளன.ஏனென்றால் இந்த அம்சம் பழங்குடி வழிபாடுகளிலிருந்து தொடங்குவது. பழங்குடித் தெய்வங்கள் அனைத்துமே பலிகொள்பவையும் அருள்பவையும்தான்.

 

முதல்நோக்கில் அது மானுடனின் அச்சத்தின் வெளிப்பாடாகத் தோன்றும். ஆனால் அது ஒரு பெரிய தரிசனமும்கூடத்தான். இயற்கையின் அளவிலா ஆற்றலே உணவாகவும் மருந்தாகவும் அழிவாகவும் நோயாகவும் வருகிறது, அவை ஓர் உச்சநிலையில் ஒன்றே என்பது ஒரு தொல்தரிசனம். ஒரு சிறுசுனையின் பேரழகை இயற்கை என ரசிக்கையில் பெருவெள்ளத்தையும் அவ்வாறே எண்ணிக்கடக்க முடியவேண்டும். உண்மையில் இதை சற்றேனும் உள்வாங்கிக்கொள்ளாத ஒருவர் தன் சொந்தவாழ்க்கையின் இழப்புகளைக் கூட கடந்துசெல்லமுடியாது.

 

ஆனால்.இந்தப் பேரழிவின் தருணத்தில் குருமூர்த்தி அதைச் சொன்னது பக்தனின் இயல்பான வெளிப்பாடல்ல. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன் சொந்த அரசியலை மட்டுமே காணும் சிறுமை. அதை வன்மையாகக் கண்டிப்பது இன்றைய சூழலின் தேவை.

 

*

 

அந்த அரசியல்கூற்றுக்கும், அடிப்படையான சிறுமைக்கும் எதிரான  கண்டனத்தை மனுஷ்யபுத்திரன் முன்வைத்தது இயல்பானதே- இரண்டு வகையில். பகுத்தறிவுத்தரப்பு குருமூர்த்தி போன்றவர்களின் பக்திநோக்கை கண்டிப்பது அவர்களின் தத்துவார்த்தமான எதிர்ப்பை காட்டுகிறது. இரண்டாவதாக, பேரழிவையும் தன் அரசியலுக்கு கருவியாக்கும் குருமூர்த்தியின் கீழ்மையை அரசியல்நோக்கிலும் கண்டிக்கவேண்டியிருக்கிறது. குறிப்பாக இவர்கள் இன்று அதிகாரத்தில் இருக்கிறார்கள் எனும்போது அந்தக் கண்டனம் மேலும் ஆற்றலுடன் எழவேண்டியிருக்கிறது

 

 

மனுஷ்யபுத்திரனின் அந்தக் கவிதை இந்து மதத்தை இழிவுசெய்கிறதா? அதை எழுத அவருக்கு உரிமை இல்லையா? அதைப்பற்றி எச்.ராஜா உருவாக்கிய வசைபாடலின் இடம் என்ன?

 

 

முதல் கேள்வியே இந்துமதத்திற்குப் பொறுப்பேற்க இவர்கள் யார் என்றுதான். இவர்களின் சாதியமேட்டிமைத்தன்மையால், அதை பொதுவெளியில் உளறும் பொறுப்பின்மையால்தான் இந்துமதம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இன்றைய நவீனச் சிந்தனைகளை எதிர்கொள்ளும் ஆற்றல்கொண்ட ஒரு மெய்யியல்தரப்பாக இந்துமதம் ஆவதை தடுத்து அதை வெறும் நம்பிக்கைவெறியாக, அரசியல்கூப்பாடாக, முச்சந்தி வன்முறையாக ஆக்கும் இவர்களைப்போல இந்துமதத்திற்கு அழிவைக் கொண்டுவருபவர்கள் எவருமில்லை.இந்துமதத்தைக் காப்பாற்றவேண்டியது இவர்களிடமிருந்துதான்.

 

 

இந்துமதம் எவருக்கும் சொந்தமான நிறுவனம் அல்ல. இறுகிப்போன நம்பிக்கைகளின் தொகுப்பும் அல்ல. அது மூவாயிரமாண்டுகளாக இந்த மண்ணில் உருவான ஒரு மாபெரும் மெய்த்தேடல். படிமப்பெருவெளி. அதன்மேல் மானுடகுலம் அனைத்துக்கும் உரிமை உண்டு. அந்த மெய்யியலை தன் தேடலுக்கு வழிகாட்டியாகக் கொள்ள, அப்படிமங்களை தனக்கான அழகியல் கருவியாகக்கொள்ள, பூமியில் வாழும் எவருக்கும் உரிமை உண்டு. அதன்மேல் தங்களுக்கு ஏதோ அதிகாரம் உண்டு என்று நினைக்கும் இந்த கூட்டத்திடம் அவ்வதிகாரத்தைக் கொடுப்பதைப்போல தற்கொலைத்தனம் வேறில்லை. ஆகவே அவர்களின் எதிர்ப்பையே முதலில் கண்டிக்கவேண்டியிருக்கிறது.

 

 

இதையே கிறிஸ்தவ மதம்சார்ந்தும் சொல்வேன். நான் கிறிஸ்தவன் அல்ல. ஆனால் கிறிஸ்துவை கதைநாயகனாக்கி பல கதைகளை எழுதியிருக்கிறேன். இன்னமும் கூட எழுதுவேன். ஏதேனும் கிறிஸ்தவர் அதன்பொருட்டு என் மேல் கண்டனம் தெரிவித்தால் அதற்கு நான் எவ்வகையிலும் ஆட்பட முடியாது என்பதே என் பதிலாக இருக்கும். நாம் இன்று காணும் கிறிஸ்தவ ஆன்மிகம் மத அமைப்புக்களால் உருவாக்கப்பட்டது அல்ல, தல்ஸ்தோய் முதலான பேரிலக்கிவாதிகளால் எழுதி உருவாக்கப்பட்டது. அந்த உரிமையை எனக்கு மறுத்து வெறிகொண்ட குறுங்குழுவாக கிறிஸ்தவம் மாறுமென்றால் அதனுடன் எனக்குப் பேச ஏதுமில்லை. இஸ்லாம் இன்று அப்படிப்பட்ட ஒரு மூடுண்ட குறுங்குழு. அவ்வாறு ஒரு குறுங்குழுவாக இந்துமதத்தை மாற்ற முடியாது என்பதே ஓர் இந்துவாக என் நிலைபாடு.

 

 

மனுஷயபுத்திரன் இந்து மெய்யியல் மரபிலுள்ள தேவி என்னும் படிமத்தை எடுத்துக்கொண்டு கவிதையை எழுதியிருக்கிறார். எவ்வகையிலும் இந்து மெய்யியலைச் சிறுமைசெய்வதாக அது இல்லை. அத்தகைய நூற்றுக்கணக்கான கவிதைகள் பக்திமரபுக்குள்ளேயே எழுதப்பட்டுவிட்டன. இங்கே எதிர்ப்பவர்களின் பிரச்சினை அதை எழுதியவர் மனுஷ்யபுத்திரன் என்பது மட்டுமே. அவருடைய இஸ்லாமியப்பெயரைத் திரும்பத்திரும்பச் சொல்வதனூடாக அவர்கள் அதையே வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த அதிகாரத்தை நாம் இக்கும்பலுக்கு அளிப்போம் என்றால் நாளை இதை இவர்கள் அனைவருக்கும் நிபந்தனையாக்குவார்கள். இந்துமெய்யியலின் வலம் இடம் தெரியாத இக்கும்பலிடம் நாம் அனைவரும் சென்று அனுமதிகோரி நிற்கவேண்டியிருக்கும். அதுவே இந்துமதத்தின் அழிவாக இருக்கும்.

 

 

முன்பு எம்.எஃப்.ஹூசேன், எம்.எம்.பஷீர் ஆகியோர் இதேபோல இந்து குறியீடுகளைப் பயன்படுத்தியபோது வந்த எதிர்ப்பைப்பற்றி நான் என்ன சொன்னேனோ அதையே இங்கும் சொல்கிறேன். கலைஞனின் வெளிப்பாட்டுரிமை என்பது இந்தநாட்டின் நீண்ட மரபிலிருந்து உருவானது. இந்த தேசத்தை உருவாக்கிய முன்னோடிகளால் அளிக்கப்பட்டது. அதை எந்த கும்பலும் மிரட்டல்மூலம் தடுப்பதை ஏற்கவியலாது.இந்து மதத்தின் கருத்துக்களையும் படிமங்களையும் இலக்கியத்தின் கருப்பொருளாக்குவதற்கோ விவாதிப்பதற்கோ மறுப்பதற்கோ அனைவருக்கும் உரிமை உண்டு. நான் இந்துமதத்தை நம்புகிறேன், ஆகவே நான் பார்க்கும் கோணத்திலேயே அனைவரும் இந்துமதத்தை அணுகவேண்டும், இல்லையேல் மனம் புண்படுவேன் என்று ஒருவர் சொல்வாரென்றால் அவர் வாழ்வது இந்நூற்றாண்டில் அல்ல.

 

மனுஷ்யபுத்திரன் கவிதைமேல் ஒருவருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாகாதா? கண்டிப்பாக இருக்கலாம். அதை கடுமையாக மறுத்து, நார்நாராகக் கிழித்து எழுதிக்குவிக்கலாம். ஆனால் இங்கே செய்யப்படுவது எழுத்தாளனின் படைப்பை படிப்புவாசனை இல்லாத கும்பல்முன் எடுத்துப்போடுவது. அவன் மேல் தனிப்பட்ட வன்மத்தைக் கக்குவது. அவனுடைய எண்ணை கொடுத்து அதில் அழைத்து வசைபாடுங்கள் என அறைகூவுவது என்பதெல்லாம் இழிவின் உச்சம். நான் நம்பும் இந்துப்பண்பாட்டில் இத்தகைய கீழ்மைகளுக்கு இடமில்லை.

 

*

 

ஆனால் மனுஷ்யபுத்திரன் விஷயத்தில் மட்டும் இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. ஒன்று, மனுஷ்யபுத்திரன் வெறும் கவிஞர் அல்ல. ஓர் அரசியல்கட்சியின் பேச்சாளர். அவர் முன்வைக்கும் விமர்சனங்கள் அக்கட்சியின் அரசியல் சார்ந்தவை. அவற்றை முன்வைக்கும் அவருடைய சுதந்திரத்தை அக்கட்சிதான் காக்கவேண்டுமே ஒழிய எழுத்தாளர்கள் அல்ல. அவர் தி.மு.க மேடையில் சொல்லும் ஒவ்வொரு கருத்தையும் தமிழ் இலக்கியவாதிகள் பின்னின்று காக்கவேண்டும் என்றால் அது இயல்வதல்ல. சென்றகாலத்திலும் வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் போன்றவர்கள் அவர்கள் சொன்ன கருத்துக்காக தாக்கப்பட்டிருக்கிறார்கள். அது வெறும் தெருமுனை அரசியல். அதில் இலக்கியவாதி செய்வதற்கேதுமில்லை. தி.மு.கவுக்காக கருத்தைச் சொல்லிவிட்டு இலக்கியவாதிகளிடம் மனுஷ்யபுத்திரன் ஆதரவு கோருவது எவ்வகையிலும் முறையல்ல. அதையும் ஓர் அரசியல்நடவடிக்கையாக மட்டுமே பார்க்கமுடியும். அதில் இலக்கியவாதிகள் பங்கெடுக்கவியலாது.

 

 

இரண்டாவதாக, எம்..எஃப்.ஹூசேய்ன் போலவோ எம்.எம்.பஷீர் போலவோ இந்து மெய்யியல் மீதோ, இந்து மரபு மீதோ மதிப்புகொண்டவர் என மனுஷ்யபுத்திரன் தன்னைச் சொல்லிக்கொள்ளமுடியுமா? இந்துமதத்தை அழிப்பதே முதல்நோக்கம் என்று முழங்கும் திராவிடர் கழக மேடைகளில் பேசுபவர் அவர். இந்துமதம் உலகின் மிகமோசமான ஒரு கொள்கை, கொடியநஞ்சு என நினைக்கும் தரப்பைச் சேர்ந்தவர் என தன்னை முன்வைப்பவர் அவர்.

 

 

அத்துடன் இந்துமத வழிபாடுகள் அனைத்தும் ஷிர்க் என்னும் இறைவனுக்கு இணைவைக்கும் பெரும்பாவம் என்று நம்பும் இஸ்லாமிய மத அடிப்படைவாதியான ஜவஹருல்லா போன்றவர்களை தன் மேடைகளில் ஏற்றி தன் தரப்பினராக வெளிப்படையாக முன்வைத்தவர் அவர். அவரை இஸ்லாமிய அடையாளத்துடன் அவருடைய எதிர்த்தரப்பினர் பார்ப்பதற்கு வழியமைத்தவர் அவரே அல்லவா?

 

 

மனுஷ்யபுத்திரனுக்கு வரும் கீழ்த்தரமான வசைகளை புரிந்துகொள்ளமுடிகிறது, நான் மு.கருணாநிதி அவர்கள் நல்ல படைப்பாளி அல்ல என்ற கருத்தைச் சொன்னமைக்காக இதைப்போலவே கீழ்மையான சொற்களால் மாதக்கணக்கில் வசைபாடப்பட்டேன். மு.க அவர்களாலேயே மிரட்டல் கவிதை எழுதி எச்சரிக்கவும் பட்டேன். இது இங்கே வளர்க்கப்பட்டுள்ள சூழல். எவரும் விதிவிலக்கல்ல இதற்கு. தனிமனிதர்களாக, அமைப்புசாராமல் நின்றிருக்கும் எழுத்தாளர்கள் முற்றிலும் பாதுகாப்பற்றவர்கள். இந்த விஷயத்தில் அமைதிகாப்பதே சாதாரண எழுத்தாளர் இங்கே செய்யவேண்டியது. இங்குள்ள கும்பல்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் திராணி எந்த எழுத்தாளனுக்கு உண்டு? இந்த விவாதத்தால் மனுஷ்யபுத்திரனுக்கு அரசியல் லாபம் கிடைக்கலாம், அவருக்காக பேசும் எழுத்தாளன் அடைவது என்ன?

 

 

தொடர்ச்சியாக இந்துமதம் சார்ந்த வழிபாட்டுமுறைகள், இந்து அடையாளங்கள் மட்டும் குறிவைத்து சிறுமைப்படுத்தப்படும் சூழலில் இருந்து எழும் எதிர்வினை இது என மனுஷ்யபுத்திரன் புரிந்துகொள்ள மாட்டார் என்றாலும் அவருக்காகப் பேசுபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எத்தனை காலமாக இந்துமதம்மீதும், இந்து மெய்யியல்மீதும்  கீழ்த்தர வசைபாடல் இங்கே நிகழ்கிறது. அதைச்செய்பவர்கள் மாற்றுமதங்களின் வெறியர்களுடன் கைகோப்பதற்குத் தயங்குவதுமில்லை. மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாக எழும் குரல்களிலேயே இந்துமதம் மேல் எத்தனை வசைகள், எத்தனை சிறுமைப்படுத்தல்கள். எத்தனை சாதியக்காழ்ப்பு. இதேபோல இவர்கள் பேசும் தரப்பை, இவர்களின் தலைமையை இழிவுசெய்து வசைபாடினால் இவர்கள் அதை ஒரு கருத்துத்தரப்பு என்று ஏற்பார்களா? ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கம் திரட்டி எடுத்த இந்த மூர்க்கம்தான் மறுபக்கம் எதிர்மூர்க்கமாக இன்று திரண்டுள்ளது. அது எவராலும் இன்று தவிர்க்கப்படக்கூடியது அல்ல, அதற்கு ஒரு மக்கள்பின்புலம் இன்று உருவாகியுள்ளது. ஆகவேதான் அதை திரும்பத்திரும்பச் செய்கிறார்கள். இவ்விஷயத்தில் திமுகவின் அதிகாரபூர்வ மௌனம் காட்டுவதும் அதைத்தான்.

 

 

மரபின் மூடநம்பிக்கைகளை, அதன் பழமைவாதத்தை, ஏன் மரபையே எதிர்க்கும் உரிமை எவருக்கும் உண்டு. முழுமையாக நிராகரிப்பதுகூட ஜனநாயகபூர்வமானதுதான். இந்துமதத்திற்குள்ளேயே கூட எல்லாவகையான எதிர்ப்புகளுக்கும் இடம் உண்டு. உண்மையில் ஒரு நவீன சமூகத்தில் மரபுக்கு எதிரான எதிர்ப்பு எப்போதும் நிகழ்ந்தபடியே இருக்கவேண்டும். பகுத்தறிவுசார்ந்த விமர்சனம் எப்போதும் மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் எதிர்நிலையாக நின்றிருக்கவேண்டும். இல்லையேல் மதம் அமைப்பாகவும் ஆன்மிகம் வெற்றுநம்பிக்கையாகவும் சீரழியும். ஆனால் அவை தர்க்கபூர்வமாக, நல்ல நோக்கத்துடன் முன்வைக்கப்படவேண்டும் வசைபாடுதலுக்கும் சிறுமைப்படுத்தல்களும் நேர் எதிர்விளைவுகளை மட்டுமே உருவாக்கும்.

 

 

கடைசியாக மனுஷ்யபுத்திரனின் அந்தக் கவிதை. கவிதை என்பது கொஞ்சம் நுட்பமான விஷயங்களுக்குரியது. அன்றாட அரசியலின் செயற்கையான உணர்ச்சிகளுக்காக படிமங்களையும் சொற்களையும் பயன்படுத்துவது கவிதையைக் கொல்வதுதான்.  இத்தகைய சூழலில் அக்கவிதையின் இலக்கியத்தன்மை பற்றி பேசலாமா என்று கேட்கலாம். கண்டிப்பாகப் பேசவேண்டும். இத்தகைய மலினமான விவாதங்கள் வழியாக அந்த நாலாந்தர ஜோடனைக் கவிதை ஓர் இலக்கிய அடையாளமாக ஆகிவிடக்கூடும். அதை அடையாளம் காட்டுவது இலக்கியவிமர்சகனின் கடமை.

 

 

மனுஷ்யபுத்திரன் தன்  இயல்பான அகவெளிப்பாட்டுக்கு இந்துமதக் குறியீடுகளைப் பயன்படுத்தியமையால் இந்த எதிர்ப்பு வரவில்லை என்பதை நினைவுகொள்ளவேண்டும். அவர் அதை ஓரு முச்சந்தி அரசியலின் பகுதியாகவே கையாள்கிறார். அதற்குத்தான் முச்சந்தி எதிர்ப்பு உருவாகிறது. சமீபத்தைய அரசியல்கவிதைகளினூடாக அவர் தன்னுள் இருக்கும் எஞ்சிய கவித்துவத்தை கூறுபோட்டு விற்பதுபோலத் தோன்றுகிறது. உச்சகட்டமாக இதற்கு விலையாக அவர் எதிர்பார்ப்பது என்ன? ஒரு பதவியா?

 

 

உண்மையில் இன்றுபோல சிக்கலான ஒரு நிலை முன்பெப்போதும் வந்தததில்லை . ஒருபக்கம் இங்கே பகுத்தறிவுவாதிகள் மாற்றுமதவெறியர்களுடன் கைகோத்தபடி இந்துமதம் அழியவேண்டுமென கூக்குரலிடுகிறார்கள்.  மறுபக்கம் மதக்காவலர்களாக அரசியல்வாதிகள் வந்து நின்று கீழ்த்தரக் காழ்ப்பைக் கொட்டுகிறார்கள். . மதத்தை அரசியல்தரப்பாக அன்றி மெய்தேடலின் பாதையாக, பண்பாட்டு வெளியாகக் காண்பவர்கள் இவ்விரு சாராரின்  நடுவே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். குரலெழுப்பினால் இருசாராராலும் வசைபாடப்படுவதே அவர்களுக்கு மிஞ்சும். ஆனாலும் அவர்களின் குரலும் எழுந்தாகவேண்டும். ஏனென்றால் இத்தகைய இறுக்கம் அறுதியாக  கருத்தியல்செயல்பாடுகளுக்கும் ஆன்மிகமானத் தேடலுக்கும்தான் ஊறுவிளைவிக்கும்.

 

இரு எல்லைகள்

பஷீரும் ராமாயணமும்

எம்.எஃப் ஹூசேன் இந்து தாலிபானியம்

இந்துத்துவம் காந்தி

எம் எஃப் ஹூசேய்ன்

ஹூசேய்ன் கடிதங்கள்

காதலர் தினமும் தாலிபானியமும்

தேவியர் உடல்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கும்பமுனி யார்?

$
0
0

kumpamuni2

 

அன்புள்ள  ஜெ,

 

https://nanjilnadan.com/2018/08/20/பைரவதரிசனம்/

நாஞ்சில்நாடனின் இந்தக்கதை பிரமாதம்…கும்பமுனி தொடரில் இப்படி ஒரு வரி தோன்றவைப்பது தான் நாஞ்சிலின் முத்திரை..!

“மூத்த பின்நவீனத்துவத் தமிழ் எழுத்தாளனின் பழுதுபட்ட கிழட்டு இருதயம் படபடவெனத் துடித்து, சற்று நேரம் நின்று, பின்பு சீராக அடிக்கத் துவங்கியது.”

சரி- நாஞ்சில் தான் கும்பமுனி என்று படித்தாயிற்று. ஆச்சி தான் கண்ணுப்பிள்ளை என்ற வாசிப்புக்கு இடமுள்ளதா?

மதுசூதனன் சம்பத்

 

 

கவிமணி

கவிமணி

அன்புள்ள மது

 

சென்னை வந்துவிட்டீர்கள் என கேள்விப்பட்டேன்

 

பொதுவாக புனைகதைகளின் கதாபாத்திரங்களை இன்னார் என அடையாளப்படுத்துவது கடினம். அந்த ஆசிரியரே கூடச் சொல்லமுடியாது. வாசகர்கள் கொஞ்சம் ஊகிக்கலாம்

 

கும்பமுனி மூன்று மனிதர்களின் கலவை என இப்போது தோன்றுகிறது. நகுலன் முதன்மையாக. கொஞ்சம் கவிமணி தேசிகவினாயகம்பிள்ளை.நாஞ்சில் எழுத எழுத கும்பமுனி கவிமணியை நோக்கி நகர்கிறார். கும்பமுனியின் வீடும் சூழலும் கவிமணிக்குரியவை. கவிமணியின் நக்கலும் இடக்கும் ஊரறிந்தவை. கும்பமுனி ஒரு காவியம் எழுதியிருந்தால் ‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ போலவே இருந்திருக்கும். கவிமணியின் பல சொல்லாட்சிகளை கும்பமுனிக்கு அளித்திருக்கிறார் நாஞ்சில். அதோடு அவர்களிருவரையும் தானாக சமைத்துக்கொண்டு உள்ளே வாழும் நாஞ்சில்நாடன்

 

கும்பமுனியின் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை ஒரு தனிக் கதாபாத்திரம். நகுலனுக்கு அப்படி யாருமில்லை – எனக்கு யாருமில்லை, நானேகூட என வாழ்ந்தவர். நாஞ்சிலுக்கு உலகெலாம் உண்டு, தனிமை இல்லை. ஆச்சிக்கு இலக்கியமெல்லாம் கிடையாது என்பது மேலதிக சௌகரியம்

 

நகுலன்

நகுலன்

கண்ணுபிள்ளைக்கு முன்னுதாரணமாக அமைந்தவர் கவிமணியின் தவசிப்பிள்ளை. பிள்ளைகள் இல்லாதிருந்த கவிமணி தவசிப்பிள்ளையுடன்தான் தங்கியிருந்தார். உடம்பெங்கும் சொறியால் அவதிப்பட்டார். அவருடைய தவசிப்பிள்ளையும் செய்யுள் எழுதுவார், அவர் ஓர் அரை கவிமணி. கடைசிக்காலத்தில் கவிமணி எழுதிய ‘எந்நாள் காண்பேன் இனி?” வகை இரங்கல் வெண்பாக்கள், திருமண வாழ்த்துக்கள் போன்றவை தவசிப்பிள்ளையின் கைவண்ணம் [காணிக்கை உண்டு] என்று சொல்லப்படுவதுண்டு

 

கவிமணி பற்றி அ.கா.பெருமாள் பேச்சில் உருவாக்கிய மிகச்சுவாரசியமான சித்திரங்களிலிருந்து நாஞ்சில் இந்தக் கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கலாம்

 

ஜெ

 

நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’

மீண்டும் கும்பமுனி

நாஞ்சில் நாடனின் கும்பமுனி

கும்பமுனியின் காதல்

 கும்பமுனி ஓர் அறிமுகம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள் -கடிதங்கள்

$
0
0

manush

மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்

 

அன்புள்ள ஜெ

 

இவ்விஷயத்தில் என் மனதில் ஓடிய அனைத்து எண்ணங்களையும் அப்படியே வார்த்தையாக்கி இருக்கிறீர்கள்.. “மகாபாரதம் எழுதினால் பாஜக ஆதரவு பெருகும்” என்று எழுதிய போதே அவர் இலக்கியவாதி என்ற நிலையில் இருந்து முழுமையான அரசியல்வாதியாக தன்னை முன்வைத்து விடடார்.. குருமூர்த்தியிடமும், ராஜாவிடமும் வெளிப்படும் அதே மூர்க்கம் தான் இவரிடமும் வெளிப்படுகிறது..

 

நீங்கள் சொன்னது  போல எல்லாமே அரசியல் மதக் கண்ணாடி வழியாகவே பார்க்கப்படுகிறது.. ஒவ்வொரு வாட்சப் குழுவிலும் அரசியல் பேச வேண்டாம் என்று கதற வேண்டி இருக்கிறது..

 

இறுதியாக ஒரு தகவல் .. இங்கே அமெரிக்காவிலும் அப்படித்தான் நடக்கிறது (conservatives vs liberal).. முட்டாள் தனமும் மூர்க்கத் தனமும் நமக்கு மட்டும் உரியதல்ல என்பதே இப்போதைக்கு ஆறுதல் ..

 

நன்றி

ரத்தன்

அன்புள்ள ரத்தன்

 

ஜெர்மனி சென்றிருந்தபோது அங்கிருக்கும் அரசியல்சூழல் பற்றி பேச்சுவந்தது. அங்கும் இதுதான் பிரச்சினை. நீ எந்தப்பக்கம் என்ற கேள்விதான் எங்கும். இல்லை எனக்கு சில கேள்விகள் உள்ளன என்றாலே நீ எதிரி என்பதுதான் பதில்

 

ஜெ

 

ஜெ

 

நினைத்ததைப்போலவே உங்கள் மீதான வசைகள் இருபக்கமிருந்தும் வந்துகொண்டிருக்கின்றன. ஒருபக்கம் உங்கள் கட்டுரை நுட்பமான ஃபாசிசம் என திமுக ஆதரவாளர்கள் [இந்த ஆதரவாளர்களிடமிருந்து தப்பினால்தான் திமுகவுக்கு எதிர்காலம்] இன்னொரு பக்கம் கழுதைகள் நடக்கும் போது எல்லா பக்கமும் எத்திகொண்டே நடப்பதுபோல உங்கள் கட்டுரை என்று இந்துத்துவ வசை. இரண்டுபேருக்குமே பார்வை ஒன்றுதான். அவர்கள் சொல்லிக்கொண்டிருப்பதை கூடச்சேர்ந்து அதே குரலில் கோஷமிடாத அத்தனைபேருமே எதிரிகள், பாவிகள், ஃபாஸிஸ்டுகள். நாம் எந்தவகையான துருவப்படுத்தலின் நடுவே சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டும் சூழல் இது

 

 

சத்யா

 

அன்புள்ள சத்யா

 

எதிர்பார்த்ததுதான் இது, இவர்களுக்கு வேறுவழியில்லை. அவர்களின் தரப்பை அப்படி மட்டுமே காத்துக்கொள்ளமுடியும். ஒரு தரப்பை தன்னலத்துக்காகவோ மூர்க்கமான சாதிய, இன, நம்பிக்கைக்காகவோ சார்ந்திருப்பவர்கள் வேறொன்றும் செய்யமுடியாது. அவர்கள் எந்த கருத்தாலும் பாதிக்கப்படுவதில்லை. இக்கட்டுரை என்னைப்போலவே சிந்திக்கும் சிலருக்காக, அவர்கள் எண்ணிக்கொண்டிருப்பதன் சொல்வடிவமாக மட்டுமே எழுதப்பட்டது

 

ஜெ

 

 

திரு ஜெ,

 

உங்கள் கட்டுரையின் சாரம் ஒன்றே. அதாவது குருமூர்த்தி சொன்னது  மென்மையான அசட்டுத்தனம். ஆனால் மனுஷ்யபுத்திரன் சொன்னது மன்னிக்கமுடியாத பாவம் இல்லையா? நல்ல சமநிலை. மனுஷ்யபுத்திரன் திமுக காரர். ஆகவே அவருக்கு ஏதாவது எதிர்ப்புவந்தால் திமுக காரர்கள்தான் காக்கவேண்டும். அதாவது நீங்கள் குமுதத்தில் எழுதினால் குமுதம்தான் உங்களுக்காகப் போராடவேண்டும், இல்லையா?

 

சிவக்குமார்

 

அன்புள்ள சிவக்குமார்

 

அருமையான புரிதல். நீங்கள் வேலூரில் இதற்காக ஒரு தனிப்பயிற்சி நிலையம்கூட நடத்தலாம்

 

ஜெ

 

திரு ஜெ

 

நீங்கள் பெருமாள் முருகன் விஷயத்தில் அளித்த நிபந்தனையில்லாத ஆதரவு ஏன் மனுஷ்யபுத்திரனுக்கு இல்லாமல்போயிற்று? அவருக்கு மட்டும் அஞ்சுபக்கம் நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவித்திருப்பது ஏன்? அவர் இஸ்லாமியர் என்பதனால்தானே?

 

எம்

 

அன்புள்ள எம்

 

பெயர் தேவையில்லை என்ற உங்கள் அச்சத்தைப்பற்றி யோசியுங்கள். எம்.எஃப்.ஹூசேய்னும், எம்.எம்.பஷீரும் இஸ்லாமியர்களே. ஆனால் அரசியல்வாதிகளல்ல, வெறும் இலக்கியவாதிகள்

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெ

 

அருமையான கட்டுரை. இத்தகைய கட்டுரைகள் வரும்போது வழக்கமாக நீங்கள் அந்தர் பல்டி அடித்துவிட்டீர்கள் என்று சொல்லத்தான் சம்பந்தப்பட்டவர்கள் ஆசைப்படுவார்கள்.  அதற்காக நுணுகி வாசிப்பார்கள். நீங்கள் 2009ல் எழுதிய இந்து தாலிபானியம் உட்பட அத்தனை கட்டுரைகளையும் பின்னிணைப்பாக அளித்து உங்கள் பார்வை தொடர்ச்சியாக சீராக எப்படி இருந்துகொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறீர்கள். ஆகவே கட்டுரையை வாசிக்காமலேயே மட்டையடி அடிக்கிறார்கள். நீங்கள் ஃபாஸிஸ்ட் என சிலர் எழுதியதை வாசித்தேன். சென்ற ஐம்பதாண்டுகளாக அப்பட்டமான நாஸித்தனமான வெறுப்பரசியலை செய்துவரும் ஃபாஸிஸ்டுகள் மற்றவர்களை அப்படிச் சொல்வது ஆச்சரியமில்லை. இவர்களை ஃபாஸிஸ்டுகள் என்று சொன்னவர்கள் இந்தியாவின் முன்னோடி கம்யூனிஸ்ட் தலைவர்கள்தான். அந்த வார்த்தையை என்ன ஏது என்று தெரியாமல் வசையாக பிடித்துக்கொண்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்

 

அருண்குமார்

 

அன்புள்ள அருண்குமார்,

 

இத்தகைய கருத்துக்கள் வரும்போது கட்சி சார்பானவர்களின் பதற்றம் ஏற்கனவே தங்களைச் சுற்றியிருக்கும் கூட்டத்துக்கு ஒரு விளக்கத்தை அளிப்பது மட்டுமே. அவர்கள் அதைச்செய்யட்டும். என் கட்டுரையிலேயே எல்லாம் தெளிவாக உள்ளது

 

ஜெ

 

ஜெயமோகன் அவர்களுக்கு

 

உங்கள் கட்டுரை இரண்டுபக்கமும் சாத்த முயல்கிறது. அதில் எச்.ராஜா, குருமூர்த்தி போன்றவர்களைச் சொல்ல கீழ்மை அறிவின்மை உட்பட எல்லா சொற்களையும் பயன்படுத்தும் நீங்கள் மனுஷ்யபுத்திரனை மட்டும் எத்தனை மென்மையான சொற்களால் சொல்கிறீர்கள். அது பயத்தால் வாய்குளறுவதனால்தானே? இஸ்லாமியர் என்றதுமே வரும் அந்தப் பயம்தான் இங்கே செல்லுபடியாகிறது. ஆகவேதான் ராஜா போன்றவர்கள் தேவைப்படுகிறார்கள்.

 

மகேந்திரன்

 

அன்புள்ள மகேந்திரன்

 

நான் சொல்வது அக்குரல் இந்துமதம் என நான் நம்பும் மெய்தேடும் பாதையின் அடையாளம் அல்ல என்று மட்டுமே.

 

அக்கட்டுரை தெளிவாகவே சொல்வது இதைத்தான், நான் மனுஷ்யபுத்திரனின் கருத்துரிமையையே ஆதரிக்கிறேன், சில நிபந்தனைகள் மற்றும் ஐயங்களுடன். அந்நிபந்தனைகள் எழுத்தாளனின் பொறுப்பு மற்றும் அடையாளம் சார்ந்தவை. அவருடைய அக்கவிதையில் ஓர் இந்துவின் நோக்கில் பிழையாக ஏதுமில்லை. அதற்கு எதிரான வன்முறையை கண்டிக்கிறேன்.

 

ஜெ

 

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

 

வணக்கம்.
வழக்கம் போல் ஒரு பிரச்சனையின் எல்லா கோணங்களையும் சரிவர ஆராய்ந்து காய்தல் உவத்தலின்றி எழுதியிருக்கிறீர்கள்.ஆனால் என்ன செய்ய உங்களை போன்ற மிகச் சிலரே (ஏன் எனக்குத்தெரிந்து நீங்கள் ஒருவரேயென்றும் கூட கூறலாம் )பாகுபாடின்றி உண்மையை உரக்கச் சொல்லுகிறீர்கள்.இது எத்தனை பேரிடம் சென்றடையுமோ தெரியவில்லை.இந்த மனுஷ்யபுத்திரன் போன்றவர்களின் கயமைத்தனம்தான் என்னைப்போன்ற சாமானிய நடுத்தர இந்துக்களையும் சில சமயங்களில் எரிச்சலுற செய்கிறது மேலும் எதிர் பக்கம் ஈர்க்கிறது.இவர் ஒரு காலத்தில் இலக்கியவாதியாக இருந்திருக்கலாம் இப்போது அத்தகுதியை முற்றிலும் இழந்து ஒரு கட்சியின் அடியாளாகத்தான் என் கண்ணுக்குத்  தெரிகிறார்.எனவே அறம் பேணும் எந்த இலக்கியவாதியும் நீங்கள் கூறியபடி இந்த நிகழ்வில் இவர்  பின்னே நிற்கத் தேவையில்லை.மேலும் இவரை போன்றவர்களின் ஒரு பக்கம் சார்ந்து நிற்கும் தன்மையினால் இவர்களின் நம்பகத்தன்மை எங்கள் மத்தியில் என்றுமே சந்தேகத்துக்குரியதுதான்.
அன்புள்ள,
அ .சேஷகிரி.
*

 

ஜெ,

 

உங்கள் கட்டுரையில் ஒரே விஷயம்தான் நான் கேட்க விரும்புவது. கருத்துச் சுதந்திரத்தின் எல்லை என்ன? எதுவரை எழுத்தாளன் செல்லலாம்?

 

ரவி

 

அன்புள்ள ரவி,

 

எழுத்தாளனின் கருத்துச் சுதந்திரத்துக்கு எல்லையே இல்லை. எல்லை வகுக்கப்படுமென்றால் அதனுடன் போராடி எந்தத் துன்பத்தையும் ஏற்கவும் மடியவும்கூட அவன் சித்தமாகவேண்டும். ஆனால் அது எழுத்தாளனாக நின்று, அவ்வகையில் தன் ஆளுமையை வரையறைசெய்துகொண்டு பேசும்போது மட்டுமே. அரசியல்வாதிகளின் கருத்துச் சுதந்திரம் அரசியலுக்கு உட்பட்டது

 

ஜெ

கருத்துரிமையும் கேரளமும்

இரு எல்லைகள்

பஷீரும் ராமாயணமும்

எம்.எஃப் ஹூசேன் இந்து தாலிபானியம்

இந்துத்துவம் காந்தி

எம் எஃப் ஹூசேய்ன்

ஹூசேய்ன் கடிதங்கள்

காதலர் தினமும் தாலிபானியமும்

தேவியர் உடல்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16891 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>