Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16901 articles
Browse latest View live

ஐரோப்பா-1, அழியா ஊற்று

$
0
0

europ1

 

2016 வரை நான் சென்ற நாடுகள் அனைத்துமே ‘புதிய’ உலகங்கள். இன்றைய நாகரீகம் உருவாகத் தொடங்கிய பின்னர் மனிதர்கள் குடியேறி சமைத்துக்கொண்டவை. நான் இந்திய எல்லையைக் கடந்து சென்ற முதல் அயல்நாடு கனடா. 2001 செப்டெம்பரில் அ.முத்துலிங்கம் அவர்களின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்குச் சென்றேன். முதல்வெளிநாடு என்பது எவருக்கும் எண்ண எண்ணக் கிளர்ச்சியூட்டும் நினைவு. இன்றும் நயாகராவும், மேப்பிள்காடும், டிம் ஹார்ட்டன் டீக்கடையில் அமர்ந்து பேசிய இலக்கியமும் நினைவில் இனிக்கின்றன.

 

 

அதன்பின்னர் 2006 ல் சித்ரா ரமேஷ் முயற்சியால் சிங்கப்பூருக்கும் அங்கிருந்து மலேசியாவுக்கும் சென்றேன். 2009 ஏப்ரலில் ஆஸ்திரேலியாவுக்கு நோயல் நடேசன் அவர்களின் அழைப்பால் சென்றேன். அங்கிருந்து வந்ததுமே 2009 ஜூலையில் அமெரிக்கா சென்றேன். நண்பர் திருமலைராஜனும், சிறில் அலெக்ஸும் ஏற்பாடுசெய்திருந்த வாசகர் சந்திப்புகள்.

eu2

 

சுந்தர ராமசாமி ஒர் அவதானிப்பை முன்வைப்பதுண்டு. நேராகச் செல்லும் சாலை வளைந்து வளைந்து செல்லத் தொடங்கினால், அகன்ற சாலை இடுங்கத் தொடங்கினால், ஆறு வரப்போகிறது என்று பொருள். ஆறு இருக்குமிடத்தில் முன்னரே மக்கள் செறிவாகக் குடியேறி ஊர்களை அமைத்திருப்பார்கள். அங்கே வழிகள் வளைந்தாகவேண்டும். இடுங்கியாகவேண்டும். கனடாவிலும் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் கண்ட மாபெரும் சாலைகள் அந்த நிலம் புதியது என்பதற்கான சான்றுகள் என நினைத்துக்கொண்டேன்

 

 

கனடா கிட்டத்தட்ட வெற்றிடமாக கிடந்த நிலப்பரப்பு. அங்கே சென்றமைந்த ஐரோப்பியக் குடியேறிகள் உருவாக்கியது அந்நாடு. கனடாவின் நீட்சியாகவே நான அமெரிக்காவைக் கண்டேன். பலவகையான நிலங்களுடன் விரிந்துபரந்துகிடந்த அந்த மாபெரும் நாடு இன்னமும்கூட முழுமையாகக் கண்டடையப்படாதது என்று தோன்றியது. சிங்கப்பூரும் புதியநிலம்தான்.ஒரு பழைய செம்படவச் சிற்றூர் லீ க்வான் யூ என்னும் தலைவரின் ஒருங்கிணைப்பால், மேற்குநாடுகளின் ஆதரவால் பெருநகரென்றும் நாடென்றும் ஆனது அது.

 

eu3

மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் பழங்குடி நிலங்கள். அங்கு இன்றுகாணும் அனைத்தும் சென்ற சில நூற்றாண்டுகளாக உருவானவை. ஆஸ்திரேலியாவிலும் மலேசியாவிலும் பயணம் செய்யும்போது இந்தியவிழிகளுக்கு அந்நிலம் ஆளில்லாமல் ஒழிந்து கிடப்பதாகவே உளமயக்கு ஏற்படும்

 

 

இந்தப் புதுநிலங்களுக்கு உரிய முதல் பொதுத்தன்மை இவை ‘வரலாறற்றவை’ என்பதே. சில நூறாண்டுகளின் குடியேற்ற – ஆதிக்க வரலாறே இவற்றில் உள்ளது. அதை ‘இளம் வரலாறு’ என்று சொல்வேன். அது சுண்ணக்கல் போன்றது. காலத்தால் இறுகி இறுகித்தான் அது பளிங்கு ஆக முடியும். வரலாற்றின் நிகழ்வுகள் காலத்தின் அழுத்தத்தால், மொழி அதன்மேல் ஓயாது அலையடித்துக்கொண்டிருப்பதனால் மெல்ல மெல்ல தொன்மங்கள் ஆகின்றன. வரலாற்றுச் சின்னங்கள் படிமங்களாகின்றன. இளம் வரலாறு நமக்கு செய்திகளின் தொகையாகவே வந்து சேர்கிறது. முதிர்ந்த வரலாறு உணர்வுகளாக, கனவுகளாக வந்து சேர்கிறது. செய்தித்தாளுக்கும் இலக்கியப்படைப்புக்குமான வேறுபாடு போன்றது இது.

eu4

பேரிலக்கியப் படைப்பு போல தொடத்தொடத் திறக்கும் ஆழம் கொண்டதாக, நமக்கே உரிய உட்பொருட்களை அளித்துக்கொண்டே இருப்பதாக வரலாறும் மாறக்கூடும். அதற்கு அவ்வரலாறு பற்பல அடுக்குகள் கொண்டதாக ஆகவேண்டும். அதன் ஒவ்வொரு புள்ளியும் பலமுனைகளில் திறக்கப்படவேண்டும். அதை வரலாற்றாசிரியர்கள் ஓர் அளவுக்குமேல் செய்யமுடியாது. அதைச் செய்பவை இலக்கியங்கள். பேரிலக்கியங்களில் வரலாறும் தத்துவமும் சமூகவியலும் அன்றாடவாழ்க்கையும் ஒன்றாகக் கூடிக்கலக்கின்றன. அந்த ஒட்டுமொத்தமே வரலாற்றை பெருகச் செய்கிறது. காடாகி நிற்பது மண்ணின் சுவையே. இலக்கியங்களாக ஆகும்போதே மண் பொருள் பெறுகிறது

 

 

வரலாற்றை சந்திக்கும்போது நாம் அடையும் விம்மிதம், உளவிரிவு, எண்ணப்பெருக்கு ஆகியவை வரலாறு அவ்வாறு தொன்மமும் படிமமும் ஆக மாறி ஆழம் கொள்ளும்போது உருவாகின்றவைதான். நான் கண்ட புதிய உலகங்களின் வரலாறு வியப்பூட்டியது, சித்திரங்களாக மாறி நினைவில் நிறைந்தது. ஆனால் இந்தியாவில் பயணம் செய்யும்போது உருவாகும் உணர்வுக்கொந்தளிப்புகளும் கனவும் அப்பயணங்களில் பெரும்பாலும் உருவாகவேயில்லை. அது இந்தியா என் நாடு என்பதனாலா என நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். புதிய உலகங்களில் உள்ள நவீனத்தன்மையாலா என்று எண்ணியிருக்கிறேன்.

eu5
2012 செப்டெம்பரில் நமீபியா சென்றபோது அவ்வெண்ணம் மாறியது. ஆப்ரிக்கா ஒரு தொல்நிலம். நமீபியாவின் மணல்பரப்பும் கலஹாரியும் காலமே அற்ற பாலை வெளி. அங்கும் நான் ஒருவகை புத்தெழுச்சியைத்தான் உணர்ந்தேன். இயற்கையில் ஒரு விலங்கென நின்றிருப்பதன் விரிவை. ஆனால் இமையத்தில், கங்கைக்கரையில் நான் அறிந்த அந்தக் கனவை அடையவில்லை. அப்போது தோன்றியது அக்கனவை உருவாக்குவது நிலம் அல்ல என. நிலத்தை படிமங்களாக ஆக்கும் வரலாறுதான் அந்நிலங்களில் விடுபடுகிறது

 

 

சென்ற 2016 ல் நான் முதல்முறையாக ஐரோப்பாவை கண்டேன்.  ஜூன் 10 ஆம் தேதி சென்னையிலிருந்து அருண்மொழியுடன் கிளம்பி அபுதாபி வழியாக லண்டனைச் சென்றடைந்தேன். நண்பர்கள் முத்துக்கிருஷ்ணன், சிவா கிருஷ்ணமூர்த்தி, சதீஷ், பிரபு, சிறில் அலெக்ஸ், கிரிதரன் ராஜகோபாலன் ஆகியோர் வரவேற்றனர். நண்பர்களின் இல்லங்களில் தங்கியபடி லண்டனையும் சூழ்ந்திருந்த இங்கிலாந்தின் சிற்றூர்களையும் பார்த்தேன். அங்கிருந்து காரில் கிளம்பி பிரான்ஸ் வழியாக இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா, பெல்ஜியம் வந்து மீண்டும் லண்டன் திரும்பி ஊருக்கு மீண்டேன். முதல்கணம் முதல் ஐரோப்பா எனக்கு முற்றிலும் ஆழ்ந்த அனுபவமாக, வரலாற்றுத்தரிசனமாக இருந்தது. அன்று தொடங்கி இன்றுவரை மீளமுடியாமல் ஆழ்த்திவைக்கும் கனவு. நாற்பதாண்டுகளாக என்னை சுழற்றியடிக்கும் இந்தியா என்னும் கனவுக்குச் சற்றும் குறைவில்லாதது

 

 

விக்டர் ஹ்யூகோ

விக்டர் ஹ்யூகோ

 

லண்டனின் தொன்மையான தெருக்களில் நண்பர்களுடன் நடந்தேன். சில கணங்களிலேயே ஆழ்ந்த கனவுநிலையை அடைந்தேன். கனவுகள் அனைத்துக்கும் ஒரு பொதுக்கூறு உண்டு, அவை நம்மை கிளர்ச்சியும் அச்சமும் கொள்ளச் செய்யும்போதே நாம் முன்னர் அறிந்தவையாகவும் இருக்கும். லண்டன் நான் நன்கறிந்த்தாகத் தோன்றியது. அதன் கல்வேய்ந்த இடுங்கிய தெருக்கள், நான்கடுக்கு மாளிகைகளின் சாம்பல்நிறச் சுவர்கள், கண்ணாடிச்சாளரங்களில் தெரிந்த வானொளி. புனைகதைகள் வழியாக பலநூறு முறை நான் உலவிய நகர். அங்கிருந்த ஒவ்வொன்றும் வரலாற்றின் ஆழம் கொண்டிருந்தன. புனைவிலக்கியத்தால் கனவூட்டப்பட்டிருந்தன.

 

 

லண்டனின் ஓசைகளை இப்போதும்கூட நினைவுறுகிறேன். பெரும்பாலான கட்டிடங்களின் வெளிப்பக்கம் மிகப்பழையது. சுண்ணக்கல்லாலோ மணல்கல்லாலோ ஆன சுவர்கள். அரிதாக ஆழ்சிவப்புச் செங்கற்கள். பல கட்டிடங்களில் செங்கற்களில் ஒரு சில உதிர்ந்துபோன இடைவெளிகள். கல்லால் ஆன அடித்தளங்களில் சிலசமயம் திறக்கும் சிறு சாளரங்கள். சில இடங்களில் சாலைப்பரப்புக்கு அடியிலேயே இறங்கிச்செல்லும் படிகள் சென்றடையும் அறைகளை காணமுடிந்தது. அவ்வப்போது பெய்து சுவடறியாமல் மறையும் மழை. இந்தியத்தோலுக்கு எப்போதும் இருக்கும் குளிர். பெரும்பாலானவர்கள் தோள்களைக் குறுக்கியபடி வேகமாக நடந்தனர். பெரும்பாலானவர்கள் குடை வைத்திருந்தார்கள். நீளமான மழைமேலாடைகள் மங்கலான மழையொளியில் நெளிந்தசைய அவர்கள் மிகப்பெரிய மீன்கள் போல எனக்குத் தோன்றினார்கள்.

 

டிக்கன்ஸ்

டிக்கன்ஸ்

 

 

ஐரோப்பா என்னும் ‘கருத்து’ என்னுள் குடியேறி நெடுங்காலமாகிறது. சொல்லப்போனால் இந்தியா என்னும் கருத்துடன் இணைந்தே அதுவும் வந்தது. இந்தியாவை ஐரோப்பாவின் கண்கள் வழியாகப் பார்ப்பதும், இந்தியாவையும் ஐரோப்பாவையும் எதிரெதிரென வைப்பதும் பின்னர் சிந்தனையில் அறிமுகமாயின.ஆனால் நானறிந்த ஐரோப்பா நான் சொற்கள் வழியாக உருவாக்கிக்கொண்ட உருவகம்தான். நேரடியாக அந்த மண்ணில் கால்வைக்கையில் அந்த பிம்பங்கள் உடைந்து சிதறியிருக்கவேண்டும். அதையே நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவை மேலும் மேலும் கூர்மையும் தெளிவுமே கொண்டன.

 

 

ஐரோப்பாவின் அத்தனை இடங்களிலும் நான் முன்னரே வாழ்ந்திருந்தேன். நாஸ்தர்தாம் பேராலயத்தில் நான் நாஸ்தர்தாமின் கூனனைச் சந்தித்து உடனுறைந்தது என் பதிமூன்றாவது வயதில். பாரீஸ் நகரின் மக்கள் கொந்தளிப்பு வழியாக அச்சமும் பதற்றமுமாக நான் அலைந்தது பதினைந்தாவது வயதில் டிக்கன்ஸின் இருநகரங்களின் கதையை வாசித்தபோது. லூவர் கலைக்காட்சியகமும், வத்திகான் மாளிகையும், கொலோன் பேராலயமும் நான் ஆழ்ந்து அறிந்தவையாக இருந்தன.

 

 

தாமஸ் மன்

தாமஸ் மன்

அப்போது ஒரு புனைகதை வழியாகவே நான் ஐரோப்பாவைப்பற்றிச் சொல்ல முடியும் என்று தோன்றியது. அத்துடன் நான் எழுதிக்கொண்டிருந்த வெண்முரசின் கனவுக்குள் வலுவாக ஊடுருவி அதை கலைத்தன ஐரோப்பா அளித்த உளச்சித்திரங்கள். மூர்க்கமாக அவற்றை அள்ளி ஒதுக்கி அப்பால் வைத்துவிட்டே என்னால் வெண்முரசில் இறங்க முடிந்தது.  இப்போது என் எண்ணங்களை தொகுத்துச் சொல்லிக்கொள்ளலாம் என தோன்றுகிறது. இப்போது இவ்வாறு தொகுக்காவிட்டால் இவை நினைவில் சிதறிப்போய்விடலாம்.

 

 

இவை வெளியே இருந்து வந்து நோக்கிச் செல்பவனின் பார்வைகள். அங்கே சென்று வாழ்பவர் அடையும் புரிதல்கள் வேறாக இருக்கலாம். ஆனால் அயலவன் அடையும் பலவற்றை அங்கிருப்போர் அடைவதில்லை. விலக்கமும் தெளிவை அளிக்கக்கூடும். மேலும் ஐரோப்பாவைப் புரிந்துகொள்வது நான் என்னைப்புரிந்துகொள்வதும்கூட

 

eu0

 

சென்ற 2000த்தில் மலையாள மனோரமா நாளிதழ் லண்டன் டைம்ஸ் இதழில் வெளிவந்த ஒரு பட்டியலை அதன் இரண்டாயிரமாண்டு சிறப்பு மலரில் வெளியிட்டிருந்தது. அதை நான் மொழியாக்கம் செய்தேன். 2000 ஆண்டு உலகவரலாற்றின் முக்கியமான நிகழ்ச்சிகள் இரண்டாயிரத்தை அது பட்டியலிட்டிருந்தது. சீனாவில் ஒரு அரசவம்சம் முடிவுக்கு வருவது, தென்கிழக்காசியாவில் ஒரு பேரரசு அழிவது ஒரு நிகழ்வு. காண்டர்பரி ஆர்ச்பிஷப் பதவி ஏற்பது ஒரு நிகழ்வு. அந்த அசட்டுத்தனத்துக்கு எதிராக அப்போது ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.அப்போது வந்த ஒரு கேலிச்சித்திரம் கூட நினைவுள்ளது. உலகம் என்னும் தர்ப்பூசனியில் ஐரோப்பா என்னும் கீற்று தராசின் ஒரு தட்டில். மறுதட்டில் எஞ்சிய உலகு. ஐரோப்பாதான் கீழே இருக்கிறது
உண்மையிலேயே ஐரோப்பியர் பெரும்பாலானவர்கள் ஐரோப்பாவே உலகமென நம்புபவர்கள். சிந்தனையாளர்கள்கூட. உலகையே ஐரோப்பிய விழிகளால் கண்டு இறுதியாக மதிப்பிடவும் அவர்களுக்குத் தயக்கமில்லை. சென்ற ஐம்பதாண்டுக்கால கீழைநாட்டு ,ஆப்ரிக்க வரலாற்றெழுத்து என்பது ஐரோப்பா உருவாக்கிய வரலாற்றுக்கு எதிரான , அவர்களால் விடப்பட்டுவிட்ட வரலாற்றை எழுதும் முயற்சி என்பதைக் காணலாம். ஆனால் மறுபக்கம் உலகவரலாற்றை புறவயமாக எழுதும் முயற்சியே ஐரோப்பாவால் முன்னெடுக்கப்பட்டது என்பதும் உண்மை.

2016-06-18 21.17.15

 

ஐரோப்பா சென்ற இரண்டாயிரத்தைநூறாண்டுகளாக மானுட நாகரீகத்தின் மிக முக்கியமான ஊற்றுநிலமாக இருந்திருக்கிறது. உலகசிந்தனைகள், கலைகள் அனைத்தையும் முன்னெடுக்கும் முதன்மைவிசை அது. ஐரோப்பாவின் தாக்கம் இல்லாத பண்பாடு என இன்று உலகில் எதுவுமே இல்லை. அப்பண்பாடுகளின் மலர்ச்சிக்கும், பிறபண்பாடுகளுடனான உறவாடலுக்கும் ஐரோப்பிய ஊடாட்டம் களம் அமைத்துள்ளது. இன்றுநாம் காணும் உலகப்பண்பாடு என்பது ஐரோப்பியப் பண்பாட்டுக்கூறுகளால் முடைந்து ஒன்றிணைக்கப்பட்டதுதான். இன்றைய உலகின் நவீன ஜனநாயகவிழுமியங்கள், அரசியல்முறைமைகள் ஐரோப்பாவில் விளைந்தவை.

 

மறுபக்கம் சென்ற முந்நூறாண்டுகளில் ஐரோப்பாவின் காலனியாதிக்கம் உலகநாகரீகங்களைச் சூறையாடியிருக்கிறது. பெரும் பஞ்சங்களுக்குக் காரணமாகியிருக்கிறது. உலகப்போர்களினூடாக பேரழிவுகளை உருவாக்கியிருக்கிறது. ஐரோப்பாவில் உருவான நுகர்வுப் பண்பாடும், முதலீட்டியமும் உலகை அடக்கி ஆள்கின்றன. இன்றும் உலகின்மேல் ஐரோப்பாவின் மறைமுகப் பொருளியல் ஆதிக்கம் உள்ளது

 

ஐரோப்பாவை இவ்விரு முனைகளில் நின்றுதான் புரிந்துகொள்ளமுடியும். இரண்டும் இரண்டு உண்மைகள். ஒன்றை ஒன்று மறுப்பவை அல்ல, ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்பவை. வற்றாத பேராற்றல் ஒன்றின் ஊற்று அது என்றே நான் புரிந்துகொள்கிறேன். அது நித்ய சைதன்ய யதியின் கூற்று. ஆற்றல் ஒன்றே, வெளிப்பாட்டுமுறையே அழிவோ ஆக்கமோ ஆக அதை மாற்றுகிறது

k

 

மீண்டும் வருவேன் என அப்போதே தெரிந்திருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இப்போது 2018 ல் மீண்டும் ஐரோப்பா கிளம்பும்போது வாசித்து நிறுத்திவிட்டிருந்த ஒரு பெருநூலை விட்ட இடத்தில் இருந்து தொடங்குவதுபோலத்தான் தோன்றியது. 2015 நவம்பரில் இந்தோனேசியாவிற்குச் சென்று பரம்பனான் பேராலயத்தையும், போராப்புதூர் தூபியையும் பார்த்தேன். 2018 ஜூலையில் கம்போடியா சென்று ஆங்கோர்வாட் ஆலயத் தொகையைப் பார்த்தேன். வழக்கம்போல இந்திய விரிநிலத்தில் பயணம் செய்தேன். தொல்லுலகினூடாகச் சென்று கொண்டிருந்த என் உள்ளம் இன்னும் ஆழமாக ஐரோப்பாவை சென்று தொட்டு மீண்டுகொண்டிருந்தது.

 

 

2018 ஆகஸ்ட் 4 அன்று சென்னையிலிருந்து கிளம்பி ஃப்ராங்க்பர்ட் சென்றிறங்கினேன். விமானம் தரையிறங்குவதுவரை தூங்கிக்கொண்டிருந்தேன். தட் என அந்தப் பேருடல்பறவை நிலம்தொட்டபோது ‘புடன்ஃபுரூக்ஸில் இறங்கிவிட்டேன்’ என்று அரைத்துயிலில் எண்ணம் வந்தது. ‘புடன்புரூக்ஸிலிருந்து அடுத்து எங்கே செல்கிறோம்?” என்று நினைத்துக்கொண்டேன். அதன்பின்னர்தான் அது தாமஸ் மன்னின் நாவல் என நினைவுக்கு வந்தது. ஃப்ராங்க்பர்ட் என நினைவைத் திருத்திக்கொண்டேன். பெட்டிகளை எடுத்துக்கொண்டிருந்தபோது மீண்டும் அந்த ஊரின் பெயர் புடன்புரூக்ஸ் என்றே ஞாபகம் வந்தது. அதை தவிர்க்கமுயன்றபின் ஏன் தவிர்க்கவேண்டும், இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். எனக்கு ஜெர்மனி என்றால் தாமஸ் மன்தான்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கேரளக் கருத்துரிமை -கடிதங்கள்

$
0
0

meesha

கருத்துரிமையும் கேரளமும்

மலையாள மொழியில் எழுத்தாளர் எஸ்.ஹரிஸ் மாத்ருபூமி இதழில் தொடராக எழுதிவந்த நாவலை இந்து அமைப்புகள் அவரது குடும்பத்தை மிரட்டல் விடுத்து நிறுத்தி இருக்கிறது. இது காலச் சுவடு தலையங்கத்தில் வந்திருக்கிறது. இதைப்பற்றி நீங்கள் எதுவுமே சொல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. அல்லது வேண்டுமென்றே தவிர்த்தீர்களானால் ஏன் என தெரிந்துக்கொள்ள விழைகிறேன்.

அன்புடன்
தினேஷ் ராஜேஷ்வரி.

அன்புள்ள தினேஷ்

கருத்துரிமையும் கேரளமும் என்ற கட்டுரையில் விரிவாகவே பேசியிருக்கிறேன்

ஜெ

ஜெ

ஹரீஷ் அந்நாவலை எந்த சமரசமும் இல்லாமல் எழுதி நூலாக, சொந்தச்செலவிலாவது வெளியிடவேண்டும் என்று எண்ணுகிறேன் 

அந்நூல் ஏற்கனவே டிசி புத்தக வெளியீடாக வந்துள்ளது
அன்புடன்
பாலா திரிச்சூர்
அன்புள்ள பாலா
நன்றி நான் அத்தகவலை அறிந்திருக்கவில்லை
ஜெ
220px-Mannam_Statue,_Vaikom_cropped
அன்புள்ள ஜெ
மீச நாவலைப் பற்றி நாயர் சர்வீஸ் சொசைட்டியின் எதிர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்? கேரள எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் நாயர்கள். கேரளத்தில் மிக அதிகமாக எழுதப்பட்ட பின்புலமும் நாயர்களுடையது. மிக அதிகமான விமர்சனமும் நாயர்கள்மேல்தான் வந்துள்ளது. இப்போது இந்த எதிர்ப்பு எழுவதன் பின்னணி என்ன?
ஆர். ராமச்சந்திரன்
அன்புள்ள ராமச்சந்திரன்
கேரள நாயர் சொசைட்டி காந்தியவாதியான மன்னத்து பத்மநாபன் அவர்களால் உருவாக்கப்பட்டது. நாராயணகுருவைச் சென்று சந்தித்து கால்தொட்டு வணங்கி வைக்கம் ஆலயநுழைவுப்போராட்டத்தில் கலந்துகொண்டவர் அவர். ஒருகாலத்தில் அது நாயர் சாதியை கல்விநோக்கிக் கொண்டுவருவதற்காகவும் நிலவுடைமை காலகட்டத்து மூர்க்கங்களில் இருந்து விடுவிப்பதற்காகவும் மட்டும் செயல்பட்டது, வெற்றியும் பெற்றது
அதன் வீழ்ச்சி தொடங்கியது 1956ல் சட்டபூர்வமாகத் தெரிவுசெய்யப்பட்ட கம்யூனிஸ்டு அரசுக்கு எதிரான ‘விமோசன சமரத்தில்’ கிறித்தவத் திருச்சபைகளுடனும் ஸுன்னி இஸ்லாமிய அமைப்புகளுடனும் அது கைகோத்துக்கொண்டபோது. அப்போதே அது முற்போக்கு எண்ணமுள்ளவர்களால் கைவிடப்பட்டு ஒரு குறுங்குழுவாக ஆகிவிட்டது.
1986ல் தகழி சிவசங்கரப்பிள்ளையின் கயறு நாவல் தேசிய அளவில் தொலைத்தொடராக வெளிவந்தபோது [இயக்கம் எம்.எஸ்.சத்யூ] அதில் நாயர்களின் மருமக்கள் வழி சொத்துரிமைமுறை காட்டப்பட்டது தங்களை இழிவுபடுத்துகிறது என போராடி அதை நிறுத்தினர் நாயர்கள். அன்றுமுதல் இந்த உளநிலை பெருகித்தான் வருகிறது.
வைக்கம் முகமது பஷீரின் பாத்துமாவின் ஆடு நாவலில் ஒரு நிகழ்ச்சி. தன் குடும்பத்தின் மொத்தக் குழந்தைகளையும் திரட்டிக்கொண்டு மையச்சாலை வழியாக ஆற்றுக்குக் குளிக்கச்செல்கிறார் பஷீர். அத்தனைபேரும் நிர்வாணமாக இருக்கிறார்கள். குளித்துமுடித்ததும் இளையவனாகிய அப்து “த்தாத்தா எனக்கு வேட்டி வேணும்” என்கிறான். ஏனென்றால் அவன் வகுப்பில் படிக்கும் ஒரு பையன் அப்பால் வேட்டி கட்டி நின்றிருக்கிறான். இவனுக்கு வெட்கம் வந்துவிட்டது. அப்துவுக்கு தன் துண்டை பஷீர் அளிக்கிறார். அவன் வேட்டி கட்டியதும் மற்ற அத்தனைபேரும் மர்மஸ்தானங்களை பொத்திக்கொள்கிறார்கள். வெட்கம்! அத்தனைபேருக்கும் ஆடை கொடுத்தால் பஷீர் நிர்வாணமாகச் செல்லவேண்டியிருக்கும்
இன்று மனம் புண்படுவது ஒரு மோஸ்தர்., ஒரு நாலாந்தர அரசியல் உத்தி. எப்போதும் அதற்கு எளிய இரை இலக்கியவாதிதான்
ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மனுஷ்யபுத்திரன் ,இலக்கியம் அரசியல்

$
0
0

manush

மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்

 

அன்புள்ள ஜெ

 

மனுஷ்யபுத்திரன் விவாதத்தில் நீங்கள் எழுதிய கட்டுரையை வாசித்தேன். தொடர்ச்சியாக நீங்கள் சொல்லிவரும் கருத்துதான். இந்துமரபு என்பது ஒரு இறுகிப்போன அமைப்பாக ஆகக்கூடாது, விவாதவெளியாக இருக்கவேண்டும். அதை அரசியல் தரப்பாக மாற்றிவிடக்கூடாது. தெருச்சண்டியர்களின் கைகளில் மத அதிகாரம் போகக்கூடாது. இந்துமதம் என்பது மெய்மைக்கான தேடல், அதை இழிவுபடுத்தும் முயற்சிகளையும் அழிக்கமுயலும் முயற்சிகளையும் எதிர்க்கவேண்டும். அதை இந்தக்கட்டுரையிலும் திரும்பச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் பொதுப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்லமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே இப்படி நீண்ட கருத்துக்களைச் சொல்வதுதான் உறுத்துகிறது

 

எஸ்.சரவணன்

 

அன்புள்ள சரவணன்,

 

நான் கருத்துச் சொல்லும் பிரச்சினைகளைக் கவனியுங்கள், அவை எனக்குச் சொல்வதற்கு ஏதேனும் இருக்கும் இடங்களே. இலக்கியம், மதம், ஆன்மிகம் சார்ந்த தளங்களில் மட்டுமே கருத்து சொல்கிறேன். மற்ற இடங்களில் நமக்கு என்ன தெரியும்? நாளிதழ்கள், அரசியல்வாதிகள் உருவாக்கும் செய்திகளை ஒட்டி கருத்துச்சொல்லிக் களமாடுவது எழுத்தாளனின் பணி அல்ல. நான் முன்னர் எழுத்தாளன் என்னும் என் எல்லைக்கு அப்பால் சென்று சொன்ன சில கருத்துக்களைக்கூட இப்போது மறுபரிசீலனை செய்துகொண்டிருக்கிறேன். இனி அப்பிழைகளைச் செய்யப்போவதில்லை.

 

 

எழுத்தாளன் கருத்து சொல்லவேண்டும் என வாதிடுபவர்கள் சொல்வதை கவனியுங்கள். எவராவது எழுத்தாளன் சொல்வதென்ன என்று செவிகொடுக்கிறார்களா? அதற்கேற்ப தங்கள் தரப்பை மாற்றிக்கொள்கிறார்களா?  முன்னரே கருத்துசொன்ன எழுத்தாளர்களை இவர்கள் எப்படி எதிகொண்டிருக்கிறார்கள்? தாங்கள் ஏற்கனவே சொல்லிக்கொண்டிருக்கும் உறுதியான தரப்பை ஏற்று எழுத்தாளன் தன் பின்னால் வந்து நின்று கொடிபிடித்து கோஷமிடவேண்டும் என்று மட்டுமே நினைக்கிறார்கள். கொஞ்சமேனும் மாற்று கருத்தை எழுத்தாளன் சொல்லிவிட்டால் கண்மூடித்தனமாக வசைபாடுகிறார்கள். எழுத்தாளன் தன் ‘பிரியாணிக்கும்பலில்’ ஒருவனாக ஆகவேண்டும் என்பதைத்தான் இவர்கள் எழுத்தாளன் கருத்து சொல்லவேண்டும் என்ற சொற்களால் உத்தேசிக்கிறார்கள்.

 

 

அப்படி ஏதேனும் ஒரு தரப்புடன் சென்று நின்று கோஷமிடுபவன் எழுத்தாளனே அல்ல. அவன் கோஷமிடும் தொண்டன். அவன் எதையும் எழுதிவிடமுடியாது. எழுத்து தான் தனியன், தன் குரல் தனித்தொலிப்பது என ஒருவன் நம்பத் தொடங்கும்போதே எழுகிறது. பல்லாயிரம் கருத்துக்கள் உலவும் உலகப்பெரும்பரப்பில் தன் குரலுக்கும் ஓர் இடமுண்டு என அவன் எண்ணும் தன்னம்பிக்கையே எழுத்தின் ஊற்று. ஆகவே உலகமெங்கும் என்றும் எழுத்தாளன் தனிப்பாதை கொண்டவனே. எழுத்தாளனை நோக்கி மத அமைப்புகளும் அரசியல் இயக்கங்களும் எங்கள் வில்லையை மாட்டிக்கொள் என்று சொல்லி அழைப்பதும் , மறுத்தால் அவனை வசைபாடுவதும் , முடிந்தால் தண்டிப்பதும் வரலாறெங்கும் நிகழ்ந்தபடியேதான் உள்ளன. அவர்களை மீறி, அவர்களுக்கு எதிராகவே இன்றுவரை உலக இலக்கியப்படைப்புக்கள் அனைத்தும் எழுதப்பட்டுள்ளன

 

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெ

 

கலைஞர் இறப்புக்கு அஞ்சலி செலுத்தாத நீங்கள் மனுஷ்யபுத்திரன் கவிதை விஷயத்திற்கு மட்டும் நீண்ட எதிர்வினை ஆற்றியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. உங்க்ள் செலெக்டிவ் ஆன கோபம் என்ன அடிப்படையிலானது?

 

ஆர். முருகேஷ்

 

 

அன்புள்ள முருகேஷ்

 

நான் இன்றுவரை சினிமா, அரசியல் பிரபலங்களின் இறப்பை ஒட்டி தமிழகத்தில் உருவாகும் எந்த sycophancy யிலும் கலந்துகொண்டதில்லை. அவர்களில் பலருடன் எனக்கு நேரடியான அணுக்கம் இருந்தும் கூட. எழுத்தாளன் அதற்குக் கூசவேண்டும் என்பதே என் எண்ணம். அந்த ஆள்கூட்ட உணர்ச்சிவெறிகளில் கலந்துகொண்டு நெகிழும், கூச்சலிடும் எழுத்தாளர்கள்மேல் எனக்கு எந்த மதிப்பும் இல்லை.

 

தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் அனேகமாக எவருமே அஞ்சலிக் கட்டுரை, நெகிழ்ச்சிக்குறிப்பு எதையும் எழுதவில்லை என்பதைக் கவனியுங்கள்.  இது நெடுங்காலமாகவே சிற்றிதழ் சார்ந்த இலக்கிய மரபிலிருக்கும் மனநிலை. ஆள்கூட்டத்திடம், மையப்பெரும்போக்குடன் முரண்படுவதே எழுத்தாளனாவதன் முதல்படி. நீங்களும் கும்பலில் ஒருவர் என்றால் கோஷமிடச்செல்லுங்கள், முகநூலில் புழுக்கையிடுங்கள். இலக்கியத்திற்குள் வந்து தொந்தரவுசெய்யாதீர்கள்.

 

நான் அஞ்சலிக்கட்டுரைகள் எழுதுவது

 

 

அ. எனக்கு நேரடியாக அணுக்கமான நண்பர்களுக்கு.

ஆ.இலக்கியத்தில் பங்களிப்பாற்றி அறியப்படாது மறைபவர்களுக்கு.

இ.இலக்கிய ஆளுமைகளுக்கு.

 

அந்த அஞ்சலிக்குறிப்புகளில்கூட அவர்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பை மிகையின்றிச் சரியாகச் சொல்லவே முயன்றிருப்பேன்.பெரும்பாலும் என் மதிப்பீட்டை ஒட்டியே மேற்கொண்டு அவர்கலின்மீதான விவாதம் நிகழ்வதையும் கண்டிருக்கிறேன்.

 

கூட்டுமனநோய் போல வெளிப்படும் பிரபலங்களுக்கான இரங்கலில் சிறுவிமர்சனத்துக்கோ மதிப்பீட்டுக்கோ இடமில்லை. ஜெயலலிதா கருணாநிதி அல்லது வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தவில்லை என எழுத்தாளனை வசைபாடுபவர்கள் அவ்வெழுத்தாளன் தன் தரப்பாக ஒரு சிறுவிமர்சனத்தையோ மதிப்பீட்டையோ சேர்த்துக்கொண்டால் எப்படி எகிறிக்குதித்து வசைபாடுவார்கள் என எண்ணிப்பாருங்கள். அவர்கள் எதிர்பார்ப்பதென்ன என்று புரியும்.

 

 

ஜெ

 

 

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

மனுஷ்யபுத்திரன் பற்றிய கட்டுரையில் பேச விட்டுப்போன விசயம் ஈழத்திற்கு திமுக செய்த துரோகமும் அதற்கு இவரைப்போன்றவர்கள் செய்த சப்பைக்கட்டும். இவர்களின் ஆத்மா செத்துவிட்டது. இந்த இனத் துரோகிகள் கவிதை எழுதி என்ன முற்போக்கு எண்ணத்தை விதைக்கப்போகிறார்கள்?

செல்வ. சிவக்குமார்

 

அன்புள்ள சிவக்குமார்

 

உங்கள் புரஃபைல் நீங்கள் இளையவர் என்பதை காட்டுகிறது. ஈழ விஷயங்களை நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே பார்த்துவருகிறேன்.

 

ஈழ மக்கள் விஷயத்தில் ஆழமான நல்லெண்ணமும், தொடர்ந்த முயற்சியும் கொண்டிருந்தவர்கள் இருவர், எம்.ஜி.ஆர் அடுத்து முக. முக மற்றும் கனிமொழி கடைசி வரை முயன்றதை, அவர்கள் எடுத்த முயற்சிகள்  தோற்கடிக்கப்பட்டதை அறிவேன். ஆனால் அதில் சம்பந்தப்பட்டவர்கள்தான் எழுதவேண்டும். அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

 

ஈழ விஷயத்தில் துரோகிப்பட்டம் பெறாத தமிழர்கள் எவருமே இல்லை. நேற்றுதான் இந்தக் கட்டுரையை வாசித்தேன். வேடிக்கையாக இருந்தது

 

http://umarchennai.blogspot.com/2015/08/why-i-am-not-a-may17-member.html?m=0

 

ஜெ

 

 

கருத்துரிமையும் கேரளமும்

இரு எல்லைகள்

பஷீரும் ராமாயணமும்

எம்.எஃப் ஹூசேன் இந்து தாலிபானியம்

இந்துத்துவம் காந்தி

எம் எஃப் ஹூசேய்ன்

ஹூசேய்ன் கடிதங்கள்

காதலர் தினமும் தாலிபானியமும்

தேவியர் உடல்கள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஐரோப்பா-2, சொல்லில் எஞ்சுவது

$
0
0
london1

எழுத்தாளர் இடங்களுக்கு அழைத்துச்செல்லும் இளம் எழுத்தாளர்

 

 

2016 ஜூன் மாதம் எங்கள் லண்டன் பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு லண்டனில் வசித்த இலக்கியவாதிகளின் இல்லங்கள் மற்றும் அவர்கள் வழக்கமாக வரும் மாலைவிடுதிகள் வழியாக ஒரு சுற்றுலா. வழக்கத்துக்கு மாறாக ராய் மாக்ஸம் அதில் வந்துகலந்துகொண்டு சுற்றுலா முழுக்க நடந்து வந்தார். “புதிய பப் எதையாவது காட்டுவார்கள் என்று நினைக்கிறேன்” என்று கண்ணடித்தபடிச் சொன்னார். எங்கள் வழிகாட்டி ஒர் ஆய்வுமாணவர், எழுத்தாளராக முயல்பவர். ராய் மாக்ஸமை அறிமுகம் செய்தபோது அவருக்குத் தெரிந்திருந்தது. அவருடைய தேநீர் குறித்த நூலை வாசித்திருந்தார்

லண்டனில் வாழ்ந்த எழுத்தாளர்கள் என் நினைவில் எழுந்தபடியே இருந்தார்கள். வழிகாட்டியின் பேச்சிலும் தாக்கரே, டபிள்யூ டபிள்யூ ஜேகப்ஸ், எமிலி பிராண்டே, டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டின் என பெயர்கள் வந்துகொண்டே இருந்தன. என்ன சிக்கலென்றால் இவர்களை கேள்விப்பட்ட நாளிலிருந்து லண்டன் என்னும் நகரம் என் மனதில் விரிந்துபரந்த வெளியாக மாறிக்கொண்டே இருந்தது. நடக்கவைத்தே அழைத்துச்சென்ற வழிகாட்டி அந்நகரை மிகச்சிறிதாக ஆக்கிவிட்டிருந்தார். திடீரென லண்டன் நாகர்கோயில் அளவுக்கே ஆகிவிட்டதுபோல ஒரு மனப்பிரமை.

lon3

லண்டன் நகர் மையத்தில் 77, பரோ ஹை தெருவில் [Borough High Street] இருக்கும் ஜார்ஜ் இன் என்னும் உணவு விடுதியின் முன்னாலிருந்து பயணம் ஆரம்பித்தது. இந்த விடுதி முந்நூறாண்டு பழைமையானது என்றார். பதினாறாம் நூற்றாண்டு முதல் அந்த விடுதி செயல்படுகிறது. ஷேக்ஸ்பியரே அங்கே வந்து உண்டு குடித்திருக்கிறார். டிக்கன்ஸின் நாவலொன்றில் அவ்விடுதி பற்றியக் குறிப்புகள் உள்ளன . இவை அங்கே எழுதி வைக்கப்பட்டிருந்தன. உண்மையா இல்லையா என நம்மால் சோதித்தறியமுடியாது. அந்த கோணத்தில் பழைமையான அவ்விடுதியைப் பார்ப்பது உள எழுச்சியை அளிப்பதாக இருந்தது

முதல்முறையாக லண்டனின் அக்காலத்தைய கணப்புகளைப் பார்த்தது அங்கேதான். மின்கணப்புகளின் காலகட்டத்தில் அவை அர்த்தமற்ற நினைவுச்சின்னங்கள். அக்கணப்புகள் எரிந்த நாட்களில்தான் லண்டன் உலகத்தின் நவீன சிந்தனையின் மையமாக இருந்தது. ஷேக்ஸ்பியர் முதல் ஜேம்ஸ் ஜாய்ஸ் வரை, ஜே.எஸ்.மில் முதல் டி.எஸ். எலியட் வரை, ஜான் ஹோப்ஸில் இருந்து ஏ.என்.வைட்ஹெட் வரை, ஃப்ரான்ஸிஸ் பேக்கன் முதல் சார்ல்ஸ் டார்வின் வரை முந்நூறாண்டுகள் அறிவின் அலைக்கொந்தளிப்பு நிகழ்ந்தது. இன்றும் அறிவியலிலும் தத்துவத்திலும் பிரிட்டிஷ் அறிவியக்கம் தொடர்கிறது என்றாலும் இலக்கியத்தில் அது எரிந்தெழுந்த காலங்கள் வரலாறாக மாறிவிட்டிருக்கின்றன. ஒருகாலத்தில் லண்டன் தீவிபத்துக்களுக்குப் புகழ்பெற்றது. கணப்புகள் எல்லைமீறுவதன் விளைவு. ஜார்ஜ் இன்னில் பல கணப்புகளில் செயற்கையாக எரியா விறகுகளை வைத்திருந்தனர்.

lon4

லண்டனின் தெருக்களில் செங்கற்களையும் கருங்கற்களையும் பாவியிருந்தனர். சற்று அப்பாலிருந்து நோக்க அவ்வெளி மிகப்பெரிய முதலைதோற்பரப்பு போலத் தோன்றியது. இடுங்கலான தெருக்கள் அதே தொன்மையுடன் பேணப்படுகின்றன. இருபுறமும் சென்றநூற்றாண்டுகளைச் சேர்ந்த கட்டிடங்கள். பெரும்பாலானவை இரண்டாம் உலகப்போரின் ஜெர்மானியக் குண்டுவீச்சுகளால் அழிக்கப்பட்டவை. மீண்டும் அதே வடிவில் கட்டப்பட்டிருக்கின்றன. நூறாண்டுகளுக்கு முன்பிருந்த பாசிப்பரவலையும் நீர்க்கருமையையும்கூட அப்படியே திரும்பக்கொண்டு வந்துவிட்டார்கள் போலும் என நினைத்துக்கொண்டேன்.

வழிகாட்டி சொன்னதற்கும் மேலாக நானே கற்பனை செய்துகொண்டேன். ஜேன் ஆஸ்டின் இந்த தெருக்களில் சாரட் வண்டியில் சென்றிருப்பார். மேரி கெரெல்லி இந்தத் தெருக்களில் நடந்திருக்கக் கூடும் .அப்போதே தண்டவாளங்களில் குதிரைகள் இழுத்துச்செல்லும் வண்டிகள் வந்துவிட்டிருந்தன. அவை ஓசையின்றி செல்லும் என்பதனால் வண்டிகளின் வலப்பக்கம் மிகப்பெரிய வெண்கல மணியைக் கட்டி அடித்தபடியே செல்வார்கள்.நகரமே அந்த மணியோசையால் நிறைந்திருக்கும். அவற்றுக்குமேல் தேவாலய மணியோசைகள்.  லண்டன் உட்பட ஐரோப்பிய நகர்கள் அனைத்திலுமே நகர்மையத்திலேயே வைக்கோல்சந்தை என்னும் பெயர்கொண்ட ஓர் இடம் உள்ளது. லண்டனின் ஹேமார்க்கெட் வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் உள்ளது. அக்காலத்தில் நகரம் குதிரைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. இன்று டீசல்,பெட்ரோல் போல அன்று வைக்கோல் நகரை இயக்கும் ஆற்றலாக இருந்திருக்கிறது.இன்று வண்டிப்புகை போல அன்று குதிரைச்சாணி

lon5

 

லண்டனை நேரில் பார்ப்பதுவரை ஆங்கில இலக்கியங்களில் வரும் ‘செய்தியோட்டச் சிறுவன்’ [Erraand boy] என்ற விஷயம் எனக்குப் பிடிகிடைக்கவேயில்லை. ஒருவருக்கொருவர் செய்திகளைச் சிறிய காகிதச்சுருளில் எழுதி சிறுவனிடம் கொடுத்தனுப்புகிறார்கள். இதற்கென்றே சிறுவர்கள் இருந்திருக்கிறார்கள். லண்டனைப் பார்த்தபின் புரிந்தது, பெரும்பாலான பிரபுக்களின் வீடுகள் சிறுவர்கள் ஓடிச்சென்று குறிப்பைக் கொடுத்துவிட்டு திரும்ப ஓடிவரும் அளவுக்கு அருகருகேதான் இருந்திருக்கின்றன. தாக்கரே அந்தப்பக்கம் ஓரு மதுக்கடையில் இருக்க கூப்பிடு தூரத்தில் டிக்கன்ஸ் இந்தப்பக்கம் இருந்திருக்க வாய்ப்புண்டு. அவர்கள் சின்னச் சந்தில் தோளோடு தோள் முட்டி ‘மன்னிக்கவும்’ என தொப்பியை எடுத்து தாழ்த்தி வணங்கிவிட்டுச் சென்றிருக்கவும்கூடும்.

 

சார்ல்ஸ் டிக்கன்ஸ் வந்தமர்ந்து எழுதியதாகச் சொல்லப்படும் The Grapes என்னும் மதுவிடுதி Narrow Street,ல் உள்ளது. 1583ல் கட்டப்பட்ட இவ்விடுதியை சார்ல்ஸ் டிக்கன்ஸ் அவருடைய நூலில் குறிப்பிட்டிருக்கிறார் அங்கே ஷேக்ஸ்பியர்கூட வந்து தங்கியிருந்தார் என்று சொல்லி அருகிலிருந்த ஒரு தங்கும் விடுதியின் சாளரத்தை வழிகாட்டி வெளியே நின்று சுட்டிக்காட்டினார்.

old-curiosity-shop-resized

 

சாத்தானின் மதுவிடுதி என அழைக்கப்பட்ட Prospect of Whitby அருகிலுள்ளது.எழுத்தாளர்கள் சந்திக்க உகந்த இடம்தான். ஜெருசலேம் விடுதி The Jerusalem Tavern இன்னொரு இடம். இது பதினாலாம் நூற்றாண்டு முதல் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவை அனைத்துமே இன்று பழுதுபார்க்கப்பட்டு நல்லநிலையில் உள்ளன. பழமையின் தடையங்களை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, அவற்றை புதியனவாக்கி புழக்கத்திற்குக் கொண்டுவருவது ஐரோப்பாவின் இயல்புகளில் ஒன்று. பழைமையை தோன்றச்செய்யும்படி புதிதாகக் கட்டுவதுமுண்டு. இது வரலாற்றுடன் ஆழ்ந்த தொடர்பை உருவாக்குகிறது, சமகாலத்தை சென்றகாலத்துடன் இணைக்கிறது. கட்டிடங்கள் போல காலத்துடன் இணைந்தவை வேறில்லை. அந்த விடுதிகளில் ஒவ்வொரு பொருளும் குறியீடுகளும் அடையாளங்களுமாக ஆகிவிட்டிருந்தன. அங்கே அமர்ந்திருக்கையில் சென்ற காலம் ஆழ்மனத்தில் ஓடிக்கொண்டேதான் இருக்கும். அருகே அந்த இலக்கியமேதைகள் இருப்பதுபோன்ற பிரமை இருந்துகொண்டிருக்கும்

 

லண்டனில் சென்றகால எழுத்தாளர்கள் வாழ்ந்த மையங்கள் அவர்களுடைய டைரிக்குறிப்புகள், வாழ்க்கை வரலாறுகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. Fitzroy Tavern அவற்றிலொன்று. அக்காலத்து உயர்தர மதுவிடுதி. டைலன் தாமஸ், ஜார்ஜ் ஆர்வல் போன்றவர்கள் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடம். முதல்,. இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் இலக்கியவாதிகள், கலைஞர்கள் சந்திக்கும் முக்கியமான மையம் ..ஃபிட்ஸ்ராய் காபிநிலையமாக 1883ல் டபிள்யூ. எம் ப்ரட்டன் என்பவரால் கட்டப்பட்டது. பல கைகள் மாறி இன்று ஒரு மதுநிறுவனத்திற்கு உரிமையானதாக உள்ளது.இன்று வெவ்வேறு இலக்கிய ஆர்வலர் அங்கு வந்துகொண்டிருந்த தங்கள் எழுத்தாளர்களுக்காக அங்கே நினைவுக்கூட்டங்கள் நடத்துகிறார்கள்

 

 

The Grapes [76 Narrow Street, E14]

The Grapes [76 Narrow Street, E14]

 

ப்ளூம்ஸ்பரி விடுதி, ஃபிரெஞ்ச் ஹவுஸ் விடுதி ஆகியவையும் இலக்கியமுக்கியத்துவம் உடையவை என்றார். புளூம்ஸ்பரி விடுதி விர்ஜீனியா வுல்ஃபுடன் தொடர்புள்ளது. டீன் தெருவிலுள்ள பிரெஞ்சு ஹவுஸ் விடுதியில்தான் சார்ல்ஸ் டிகால் பிரெஞ்சு மக்களுக்கு அவர் விடுத்த புகழ்மிக்க அறைகூவலை எழுதினாராம். சொல்லப்போனால் அங்குள்ள எல்லா மதுவிடுதிகளுமே இலக்கிய முக்கியத்துவம் கொண்டவையாகத்தான் இருந்திருக்கும். எழுத்தாளனுக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன? இதெல்லாம் ஒருவகையான சுற்றுலாக் கவற்சிகள். இன்று உருவாக்கப்படும் நவீனத் தொன்மங்கள்

 

ஒருகட்டத்தில் அவர் சொன்னவற்றை பின் தொடரமுடியாமலாயிற்று. பெரும்பாலும் அக்காலத்தைய சில்லறைப் பூசல்கள். வம்புவழக்குகள். ராய் மிக ஆர்வமாகக் கேட்டுத்தெரிந்துகொண்டார். அங்கே நான் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் ஒருவரோடொருவர் பேசியபடிச் செல்வதை என்னுள் பார்த்துக்கொண்டிருந்தேன். டிக்கன்ஸின் கற்பனாவாதத்தைப் பற்றி ஜான்சன் என்ன சொல்லக்கூடும்? ஆனால் வால்டர் ஸ்காட்டுக்கும் ஷேக்ஸ்பியருக்கும் அவரைப் பிடித்திருக்கும்…திடீரென்று தோன்றியது, எங்களுடனேயே ஓர் ஆங்கில எழுத்தாளர் இருக்கிறார். ராய் மாக்சம் அந்த கதைகளைக் கேட்டு என்னை நோக்கி கண் சிமிட்டிப் புன்னகைசெய்தார்.

 

.

 

The_Jubilee_Hospital,_Neyoor_(p.322,_1891)_-_Copy

The_Jubilee_Hospital,_Neyoor_(p.322,_1891)_-_Copy

 

குமரிமாவட்டத்திற்கு லண்டன் மிக நன்கு தெரிந்த ஊர். குமரிமாவட்டத்தில் கடலோரங்களில் போர்ச்சுக்கீசியர்களால் 1730 வாக்கில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் கொண்டுவரப்பட்டது. [அதற்கு முன் கிபி ஏழாம் நூற்றாண்டிலேயே சிரியன் மிஷனைச் சேர்ந்த தாமஸ் கானாயியால் திருவிதாங்கோட்டில் அரைப்பள்ளி என்னும் தொன்மையான தேவாலயம் வந்துவிட்டது. அது அனேகமாக இந்தியாவின் முதல் கிறித்தவ தேவாலயமாக இருக்கலாம்] மிகவிரைவிலேயே 1809ல் களில் லண்டன் மிஷன் குமரிமாவட்டத்தின் உட்பகுதிகளில் பணியாற்றத் தொடங்கியது.நாகர்கோயில் அருகே உள்ள மயிலாடியில் வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே லண்டன் மிஷனரி சொசைட்டியின் சார்பில் உருவாக்கிய முதல் தேவாலயமே இங்கே சீர்திருத்தக் கிறித்தவத்தின் வருகையை உருவாக்கியது.

 

இன்று குமரிமாவட்டத்தில் உள்ள இரு பெரிய அமைப்புகள் லண்டன் மிஷன் இயக்கத்தால் உருவாக்கப்பட்டவை. தமிழகத்தின் மிகப்பழைய கல்லூரி என அறியப்படும் நாகர்கோயில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி 1818ல் சார்ல்ஸ் மீட் அவர்களால் நாகர்கோயிலில் ஆரம்பிக்கப்பட்டது. 1891ல் ஆரம்பிக்கப்பட்டநெய்யூர் ஜூபிலீ ஆஸ்பிட்டல் இன்று சி.எஸ்.ஐ ஆஸ்பத்திரியாக தொடர்கிறது. குமரிமாவட்டத்தில் லண்டன் மிஷன் அமைப்பைச் சேர்ந்த ஏராளமான தேவாலயங்களும் கல்விநிலைகளும் உள்ளன. இன்று அவை சி.எஸ்.ஐ அமைப்பின் பகுதிகளாக உள்ளன

 

 

 

the-george-inn

the-george-inn

 

இளமையில் லண்டனில் இருந்து வரும் துரைகளை நிறையவே பார்த்திருக்கிறேன். பெரும்பாலானவர்கள் மதப்பிரச்சாரத்துக்காக வரும் பாதிரியார்கள். லண்டனின் குளிராடையிலேயே மேடையில் தோன்றுவார்கள். அதே ஆடை அணிந்த ஒருவர் அவர்களின் பேச்சை மொழியாக்கம் செய்வார். தேனீ வளர்ப்பு உட்பட பல்வேறு கைத்தொழில்களை உள்ளூரில் பரப்புவதற்காக வந்தவர்கள் இன்னொரு வகை. வேட்டிகட்டி மெல்லிய துணியில் சட்டை அணிந்து புண் போன்ற உதடுகளும் நரைத்த கண்களும் சிவப்பு தலைமயிரும் கொண்ட அவர்கள் எங்களுக்கு தீராத வேடிக்கைப்பொருட்கள். அக்காலத்தில் அமர்ந்துகழிக்கும் கழிப்பறை[ கம்மோடு] எங்களூரில் லண்டன் எனப்பட்டது. யாராவது லண்டன் என்றாலே வாய் பொத்திச் சிரிப்போம்.

 

நான் இளமையில் வாழ்ந்த முழுக்கோடு சிற்றூரின் மையமே அங்கிருந்த ஒய்.எம்.சி.ஏ தான். நூறாண்டு பழைமை கொண்ட அமைப்புஅது. அங்கே இருந்த லண்டன் மிஷன் பாதிரியார்கள் பேணிய தொன்மையான நூலகம் இளமையில் எனக்கு பெரிய புதையலாகவே தென்பட்டது. நான் எழுத்துக்கூட்டி மூச்சுப்பிடித்து படித்து முடித்த முதல் ஆங்கில நூல் ஐவன்ஹோ. வால்டர் ஸ்காட் என்றபெயரை பெருமிதத்துடன் சொல்லி அலைந்தது இன்றும் நினைவிலிருக்கிறது. பள்ளியில் அந்நூலின் கதையை சொல்லிச்சொல்லி பலமடங்கு பெரிதாக்கிக் கொண்டேன்.

.

shake

Shakespeare’s Globe

 

ஒய்.எம்.சி.ஏ நூலகத்தில் இருந்த 19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் வழியாகவே நான் இலக்கியத்தைப் பொறுமையாக வாசிக்கக் கற்றுக்கொண்டேன். பெரியபெரிய சொற்றொடர்கள். நீண்ட உரையாடல்கள். அதைவிட நீண்ட கடிதங்கள். பல பக்கங்களுக்கு நீளும் விவரணைகள். டெஸ் ஆஃப் ஊபர்வில்ஸில் டெஸ் தன் ஊரைவிட்டுக் கிளம்பிச்செல்லவே பல பக்கங்கள் ஆனதை மெய்மறந்து வாசித்து அவள் போய் சேர்ந்ததும் நானே நீண்ட நடை ஒன்றை முடித்ததுபோல் உணர்ந்ததை நினைவுறுகிறேன்

 

நீளமான சித்தரிப்புகளுக்கு இருக்கும் ஆற்றலை நெடுங்காலம் கழித்தே நம்மால் உணரமுடியும். அவை மெதுவாகச் செல்வதனாலேயே அவற்றில் நாம் நெடுநேரம் வாழ்கிறோம். நுட்பமாக நினைவில் நிறுத்திக்கொள்கிறோம். ஹெமிங்வே பாணி நவீனத்துவநாவல்களின் நிலமும் வாழ்க்கையும் வெறும் செய்தியாகவே நினைவில் எஞ்சுகின்றன. பழைய பிரிட்டிஷ் , ருஷ்ய நாவல்களிலோ நாம் வாழ்ந்து மீண்டிருப்பதாகவே உணர்கிறோம். அவ்வப்போது வண்டிகளில் ஏறியும் நடந்தும் அந்தப்பயணத்தை செய்துகொண்டிருந்தபோது பிரிட்டிஷ் நாவல் ஒன்றினூடாகச் செல்வதாகவே தோன்றியது. சலிப்பு என்பது நம் மூலை ஓய்ந்துவிடும் நிலை அல்ல. நம் மூளையின் வழக்கமான பாதைகள் ஓய்ந்து ஆழம் மட்டும் இயங்கிக்கொண்டிருக்கும் நிலை. நினைவுகூருங்கள், சலிப்பூட்டும் நாவல்களே நீண்டகாலம் நினைவில் நிற்கின்றன. சலிப்பூட்டாத பேரிலக்கியமென ஏதுமில்லை.

 

 

Fitzroy_Tavern_-_Fitzrovia_-_W1

Fitzroy Tavern

லண்டனில் பெரும்பாலான புத்தகப்பிரியர்கள் செல்லும் செயரிங் கிராஸ் சாலை. ஒருகாலகட்டத்தில் பழைய புத்தகங்களின் சொற்கம். இப்போது குறைவாகவே அங்கே புத்தகங்கள் விற்கப்படுகின்றன. பொதுவாக புத்தகக் கடைகளே சோர்ந்துதான் காணப்படுகின்றன. நிறைய ஊர்ப்பெயர்களை ஊட்டியில் வெள்ளைக்காரர்கள் வைத்திருக்கிறார்கள். செயரிங் கிராஸ் முன்பு பிரம்மராஜன் இருந்த இடம். The Pillars of Hercules  என்ற மதுவிடுதி 1910ல் கட்டப்பட்டது. 1733 முதல் அங்கே செயல்படுகிறது. டிக்கன்ஸின்  இருநகரங்களின் கதையில்  அது குறிப்பிடப்பட்டுள்ளது- எனக்கு ஞாபகமில்லை. சொல்லப்போனால் அவர் சொன்ன எதுவுமே எனக்கு தெரிந்திருக்கவில்லை. பின்னர் விக்கிப்பீடியாவிலிருந்தே பல செய்திகளை தெரிந்துகொண்டேன். அந்தச் சாலை டிக்கன்ஸின் கதாபாத்திரமான Dr Manette, நினைவாக மேனெட் சாலை என அழைக்கப்படுகிறது

 

உண்மையில் பப்கள் எனக்கு ஆர்வமளிக்காத இடங்கள். இலக்கிய மதுக்கடை என்ற கருதுகோளே அன்னியமானது. ஆனால் இந்தவகையான மதுக்கடைகள் வழியாகவே லண்டனில் இலக்கியம் வளர்ந்திருக்கிறது. நாஞ்சில்நாடன் வந்திருந்தால் ஒரு முழுநாளும் எல்லா மதுக்கடையிலும் அமர்ந்து ஒரு குவளைவீதம் அருந்தி சென்றுமறைந்த பேரிலக்கியவாதிகளின் ஆத்மாக்களுக்கு அணுக்கமானவராக ஆகியிருப்பார்.எந்த மதுக்கடைக்கும் உள்ளே நுழையாமல் வெளியே நின்று பார்த்துச்செல்வதென்பது ஒரு பிழைதான்.

holms

திருவனந்தபுரத்தில் கேரளா காஃபி ஹவுஸ் ஒரு காலத்தில் அப்படி இலக்கியவாதிகள் சந்திக்கும் இடமாக இருந்திருக்கிறது. நான் இரண்டுமுறை சென்றிருக்கிறேன். பி.கே.பாலகிருஷ்ணன்,  மலையாற்றூர் ராமகிருஷ்ணன், எஸ்.வி.வேனுகோபன்நாயர் போன்ற எழுத்தாளர்களையும் இயக்குநர்  ஜி,அரவிந்தனையும் அங்கே சந்தித்தேன். இன்று திருவனந்தபுரம் மஸ்கட் ஓட்டலில் எழுத்தாளர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள்.  அதற்கு முன் ஐம்பதுகளில் இன்றைய ஸ்ரீகுமார் திரையரங்கின் முன்புறம் அப்படி ஒரு மையமாக இருந்திருக்கிறது என சுந்தர ராமசாமியின் நினைவுகள். நாகர்கோயிலில் இருந்த போத்தி ஓட்டல் கவிமணி, கே.என்.சிவராஜபிள்ளை, வையாபுரிப்பிள்ளை, கே.கே..பிள்ளை போன்றவர்கள் வந்தமரும் மையமாக இருந்திருக்கிறது. சென்னையில்டிரைவ் இன்  உட்லண்ட்ஸ் ஓட்டல் சமீபகாலம் வரை எழுத்தாளர்கள், கலைஞர்களின் பொதுவான சந்திப்புப் புள்ளி. ஒருகாலத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியே அங்கேதான் நடக்கும்.

 

ஆனால் இவை எதற்கும் இங்கே எந்தவகையான முக்கியத்துவமும் இன்றில்லை. எழுத்தாளர்களின் கடந்தகால ஏக்கங்களில் மட்டும் வாழ்பவை. இடங்களில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம்தான். ஆனால் ஒருகாலகட்டத்தின் சிந்தனைகள்  மேல் நமக்கு ஈடுபாடு இருக்கும்பட்சத்தில் அவை உருவான இடங்களும் முக்கியமாக ஆகிவிடுகின்றன. அவை அச்சிந்தனையின் படிமங்களாக மாறுகின்றன. .

 

ஷேக்ஸ்பியரின் குளோப் அரங்குடன் சுற்று முடிந்ததும் ராய் வழிகாட்டியின் முதுகைத்தட்டி வாழ்த்து தெரிவித்தார். நண்பர்கள் அளித்த மேலதிக பரிசை வழிகாட்டி நன்றியுடன் தலைவணங்கி பெற்றுக்கொண்டார். நான் லண்டனை முழுமையாகப் பார்த்துவிட்டதுபோன்ற திகைப்பை அடைந்தேன். டி.எஸ்.எலியட் ஒரு கட்டுரையில் சொல்கிறார். ஒரு புதியநூல் அதற்குமுன் நாம் வாசித்த அத்தனை நூல்களையும் முழுமையாக மாற்றியமைத்துவிடுகிறது என்று. லண்டன் தெருக்களில் நடந்த அந்த ஒருநாள் நான் வாசித்த அத்தனை பிரிட்டிஷ் நாவல்களையும் மாற்றியமைத்துவிட்டது என உணர்ந்தேன்.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

திருட்டுத்தரவிறக்கம்

$
0
0

illehi

 

அன்பாசிரியருக்கு வணக்கம்,

 

அச்சிலிருந்து கணினி, கைபேசி, கிண்டில் வரை இன்று புத்தக வாசிப்பு அதன் உச்சத்தை அடைந்திருக்கிறது. ஏராளமான இலவச புத்தகங்கள் இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றன என்றாலும் விலைகொடுத்து வாங்கவேண்டிய புத்தகங்கள் pdf  வடிவில் முறையான அனுமதி இல்லாமல் இணையத்தில் கிடைக்கின்றது. இது ஒரு ஆரோக்கியமான சூழல் இல்லையே, இதை தடுக்க ஏதும் வழி உள்ளதா ?

 

நன்றி.

 

அன்புடன்,

வை. தாமோதரன்,

பஹ்ரைன்

அன்புள்ள தாமோதரன்

 

எந்த வழியிலேனும் படித்த்தால் சரி என்ற எண்ணமே எனக்கு இவ்விஷயத்தில் உள்ளது. ஏனென்றால் ஒருநூலை படித்து சுவை அறிந்தவர் மேலும் படிப்பார், நூல்களை வாங்குவார். பிடிஎஃப் வடிவில் எவராலும் நீண்டநேரம் படிக்கமுடியாது. பெரும்பாலான பிடிஎஃப் நூல்கள் தரவிறக்கம் செய்யப்பட்டு கணிப்பொறிகளில் உறங்கும் என்பதே நடைமுறை.

 

ஆனால் இந்த இலவசத் தரவிறக்கத்தில் தமிழ்மக்களின் மனநிலை ஆச்சரியப்படத்தக்கது. ரூ 1000 கொடுத்து ஒரு சினிமாவுக்கு டிக்கெட் வாங்குபவர்கள் நூறுநூபாய் ஒரு நூலுக்கு அதிகவிலை என நினைக்கிறார்கள். எங்கள் பகுதியில் ஒருவர் வீடுவீடாக வந்து குப்பைகளை எடுத்துச்செல்வார். மாதம் ஐம்பது ரூபாய். மாதம் இரண்டுலட்சம் ரூபாய் வருமானமுள்ளவர் அந்த ஐம்பது ரூபாய் எதற்கு கொடுக்கவேண்டும், குப்பையை பக்கத்து பிளாட்டில் போடலாமே என என்னிடம் பேசியிருக்கிறார். நூல்கள் என்றல்ல உயர்வான எதையும் உண்மையாக மதிக்காத மனநிலையையே இதில் காண்கிறேன்

 

மின்னூல்களை இலவசத் தரவிறக்கம் செய்வதென்பது ஒரு கொள்ளை. திரைப்படங்களை திருட்டுத் தரவிறக்கம் செய்பவர்கள் ‘நடிகன்லாம் கோடிகோடியா சம்பாரிக்கிறான் சார்’ என்றெல்லாம் சில நியாயங்களைச் சொல்வதுண்டு. ஆனால் நூலாசிரியர்கள் சில ஆயிரங்கள்கூட பதிப்புரிமைத்தொகை பெறுவதில்லை. மின்னூல்கள் எந்த தடையுமில்லாமல் ஆசிரியனுக்கு பதிப்புரிமை கிடைக்கச் செய்பவை. அவற்றில் கைவைப்பது கிட்டத்தட்ட பிச்சைக்காரனின் திருவோட்டிலிருந்து எடுத்துக்கொள்வது

 

இங்கே எழுத்தாளன் பிச்சைக்காரன் மட்டுமல்ல, துறவியும்கூட. ஆகவேதான் புன்னகையுடன் உங்களை வாழ்த்துகிறான்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மனுஷ்யபுத்திரன் கவிதைகள் –ஒரு கேள்வி

$
0
0

manushyaputhiran_5

மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்

மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள் -கடிதங்கள்

 

அன்புள்ள ஜெ

 

இந்த விவாதத்திற்காகக் கேட்கவில்லை, என் உண்மையான ஐயம் இது. மனுஷ்யபுத்திரன் ஏன் அரசியல் கவிதைகள் எழுதக்கூடாது? அவர் என்ன எழுதவேண்டும் என்றுசொல்ல வாசகனாக உங்களுக்கு உரிமை உண்டா? அப்படிப்பட்ட கட்டாயங்களுக்கு அவர் ஆளாகவேண்டுமா?

 

ரவி இளங்கோ

 

 

அன்புள்ள ரவி

 

மனுஷ்யபுத்திரன் அன்றுமின்றும் எனக்குப்பிரியமான கவிஞர். எனக்கு உகந்த கவிஞர்களின் கவிதை மட்டுமல்ல அவர்களின் தோற்றமும் குரலும்கூட எனக்கு முக்கியமானவை. தேவதேவன், விக்ரமாதித்யன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன் போன்றவர்களின் புகைப்படங்களே எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பவை. எங்கு நோக்கினாலும் சிலகணங்கள் நோக்காது கடந்துசெல்வதில்லை. கவிஞனுக்கும் வாசகனுக்குமான உறவென்பது எளிமையானஒன்றல்ல, வாசகன் கவிஞனுடன் தானும் வாழ்கிறான். ‘பிடித்தால்படி பிடிக்காட்டி போ’ என்பது போன்ற மனநிலைகளுக்கு அதில் இடமில்லை

 

மனுஷ்யபுத்திரன் எதையும் எழுதலாம், அது ஆத்மார்த்தமாக இருக்கும் என்றால். தன் கவிஞனின் ஒரு சொல்லில் பொய்மை குடியேறுமென்றால் அதை அறிபவனே வாசகன். மனுஷ்யபுத்திரன் அரசியலை எழுதலாம், எந்த அரசியல்வேண்டுமென்றாலும். ஆனால் அது அவருடைய குருதியும் கண்ணீருமாக இருக்கவேண்டும். இன்றைய அதிகார அரசியலில், கும்பல்பண்பாட்டில் அத்தகைய அரசியலுக்கு இடமில்லை என அறியாத அப்பாவிகள் இருப்பார்கள் என நான் நம்பவில்லை. அரசியல் ஆதரவாளர்களின் கைத்தட்டலுக்காக, முச்சந்தி அரசியலின் ஆவேசங்களை ஒட்டி அவர் எழுதும்போது தன் சிறந்த கவிதைகளின் மொழிநடையை, படிமங்களை அதற்கு அளிக்கிறார். அவருடைய கவிதையின் வாசகர்களுக்கு அது மிகமிகச் சங்கடமூட்டும் விஷயம்

 

என் விமர்சனங்கள் மனுஷ்யபுத்திரனுக்கு ஆத்திரமூட்டும்  என்று அறிவேன், அதன்பொருட்டு வருந்தவும் செய்கிறேன். இன்று அவருடன் முகநூலில் கும்மியடிக்கும் கும்பலுக்கும் கவிதைக்கும் சம்பந்தமில்லை என்று அவரே உள்ளூர அறிவார்.  இந்த அரசியல், இப்போது அவர் தேடிச்செல்லும் இலக்குகள் எல்லாம் மிகச் சாதாரணமானவை என அவர் அறியும் காலம் பல ஆண்டுகளுக்குப்பின் வரும். அன்று  அவர் எழுதத் தொடங்கிய காலம் முதல் அவர் கவிதைகளுடன் வந்துகொண்டிருக்கும் வாசகனின் கருத்தின் மதிப்பை உணரக்கூடும்

 

ஜெ

 

பிகு

 

இந்த  விவாதத்தை இங்கே முடித்துக்கொள்ளலாமென நினைக்கிறேன்

 

கருத்துரிமையும் கேரளமும்

இரு எல்லைகள்

பஷீரும் ராமாயணமும்

எம்.எஃப் ஹூசேன் இந்து தாலிபானியம்

இந்துத்துவம் காந்தி

எம் எஃப் ஹூசேய்ன்

ஹூசேய்ன் கடிதங்கள்

காதலர் தினமும் தாலிபானியமும்

தேவியர் உடல்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஐரோப்பா-3, புறத்தோர்

$
0
0

Jeyamohan UK visit 248-COLLAGE

 

என் ஆரம்பகால வாசிப்புகளில் அதிகமும் பிரிட்டிஷ் நாவல்கள். என் அம்மாவுக்கு அவை பிரியமானவை. மேலும் குமரிமாவட்டத்தில் அவை எளிதாகக் கிடைக்கும். எங்கள் ஆசிரியர்களும் அவற்றைத்தான் பெரிதாகச் சொல்வார்கள். கல்லூரியில் எனக்கு ஆங்கிலம் கற்பித்தவர்கள் அமெரிக்காவில் இலக்கியம் முளைக்க வாய்ப்பே இல்லை என உறுதியாக நம்பியவர்கள். ஏனென்றால் அவர்கள் ஸ்காட்டிஷ் பாதிரியார்களிடம் படித்தவர்கள்.

 

 

ருஷ்யப்பெருநாவல்களில் பின்னர் நான் கண்டுணர்ந்த ஆன்மிகச் சிக்கல்கள், அடிப்படைக் கேள்விகள் எதையும் பிரித்தானிய நாவல்களில் கண்டடைந்ததில்லை. ஆகவே டிக்கன்ஸ் உட்பட எவருமே என்னை நெடுங்காலம் பாதிக்கவில்லை. சொல்லப்போனால் அவற்றின் புறவர்ணனைகளை மட்டுமே இப்போது நினைவுறுகிறேன். இரு விதிவிலக்குகள் மேரி கெரெல்லியும், ஜார்ஜ் எலியட்டும். இருவருமே பெண் எழுத்தாளர்கள்.

மேரி கொரெல்லி

மேரி கொரெல்லி

மேரி கொரெல்லி [Marie Corelli ]யின் இயற்பெயர் மேரி மாக்கே. 1855ல் லண்டனில் ஸ்காட்லாந்து கவிஞரான டாக்டர் சார்லஸ் மாக்கேக்கு அவருடைய வேலைக்காரியான எலிசபெத் மில்ஸிடம் அங்கீகரிக்கப்படாத மகளாகப்பிறந்தார். இசைக்கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். அதில் வெற்றிபெறாமல் எழுத ஆரம்பித்தார். மேரி கொரெல்லி என பெயர் சூட்டிக்கொண்டார். 1886ல் தன் முதல் நாவலை வெளியிட்டார். மேரி கொரெல்லி தன் புனைவுகளால் பெரும்புகழ்பெற்றார். ஆனால் அக்கால விமர்சகர்களால் ‘மிகையுணர்ச்சி நிறைந்த போலி எழுத்து’ என அவை நிராகரிக்கப்பட்டன. “எட்கார் ஆலன்போவின் கற்பனையும் குய்தாவின் நடையழகும் கொண்டவர், ஆனால் மனநிலை ஒரு தாதியுடையது” என அக்கால விமர்சகர் ஒருவர் எழுதினார்

அந்த வெறுப்புக்கு முக்கியமான காரணம் மேரி கொரெல்லியின் வாழ்க்கை. அவர் மணம் புரிந்துகொள்ளவில்லை. தன் தந்தையின் இல்லப்பணிப்பெண்ணாக இருந்த பெர்த்தா வ்யெர் [Bertha Vyver] ருடன் சேர்ந்து வாழ்ந்தார். அவர்களுடையது ஒருபாலுறவாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் மேரிக்கு ஓவியரான ஜோசஃப் செவெர்னுடன் ஆழ்ந்த உறவு இருந்திருக்கிறது. பதினொரு ஆண்டுகள் அவருக்கு தொடர்ச்சியாகக் கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஆனால் மணமானவரான செவெர்ன் அந்த உறவை பெரிதாகக் கருதவில்லை.

lon7

மேரியின் ஆர்வங்கள் குழப்பமானவை. பதினேழாம் நூற்றாண்டு கட்டிடங்களை மீட்டமைப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். அக்காலத்தில் பிரபலமாக இருந்த Fraternitas Rosae Crucis போன்ற கிறித்தவ குறுங்குழுக்களில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.பழங்கால ஞானவாத கிறித்தவ மரபின் நீட்சியான தன்வதைக்குழுக்கள் இவை. இன்று பிரபலமாக உள்ள பெந்தேகொஸ்தே சபைகளைப்போல. அதேசமயம் மாற்றுச்சிந்தனையாளரான ஜான் ரஸ்கின் போன்றவர்களுடனும் நெருக்கமாக இருந்துள்ளார். 1924ல் மறைந்தார். மேரி கொரெல்லி இறந்த பின் பெர்த்தா மேரியைப்பற்றி ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

மேரி கொரெல்லி ஒதுங்கிப்போகும் இயல்பு கொண்டிருந்தார். மார்க் ட்வைன் உட்பட அன்றைய பல எழுத்தாளர்கள் மேரியைப்பற்றிய எதிர்மறையான எண்ணங்களைப் பதிவுசெய்திருக்கிறார்கள். முதல் உலகப்போரில் உணவைப் பதுக்கிவைத்தார் என்னும் குற்றச்சாட்டு அவர் மேல் எழுந்தமையால் பெரும்பான்மையானவர்களால் வெறுக்கப்பட்டார். இறப்புக்கு பின்னர் அவர் அனேகமாக நினைவுகூரப்படவே இல்லை.

george

ஜார்ஜ் எலியட்

 

ஜார்ஜ் எலியட் என்ற ஆண் பெயரில் எழுதிய மேரி ஆன் ஈவன்ஸ் வார்விக்‌ஷயரில் ராபர்ட் ஈவன்ஸுக்கும் கிறிஸ்டினா ஈவன்ஸுக்கும் மகளாக பிறந்தார். செல்வச்செழிப்புள்ள குடியில் பிறந்து உயர்கல்வியை அடைந்தாவர் ஜார்ஜ் எலியட். மேரி ஈவன்ஸ் மிக அழகற்ற தோற்றம் கொண்டிருந்தார் என்றும், ஆகவே அவருக்கு மணம் நிகழ வாய்ப்பில்லை என கருதிய தந்தை அவருக்கு அன்றைய சூழலில் பெண்களுக்கு அரிதானதும் செலவேறியதுமான கல்வியை அளித்தார் என்றும் சொல்லப்படுகிறது.

இளமையிலேயே ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர், லுட்விக் ஃபாயர்பாக் ஆகியோருடன் பழகி உரையாடும் வாய்ப்பு அமைந்தது. ஆகவே அவருடைய மரபான கிறித்தவ நம்பிக்கை உடைந்தது.டேவிட் ஸ்டிராஸின் The Life of Jesus ஐ அவர் மொழியாக்கம் செய்தார். அதுதான் அவருடைய முதல் இலக்கிய முயற்சி. அதன்பின் ஃபாயர்பாகின் The Essence of Christianity யை மொழியாக்கம் செய்தார். அவருடைய மதமறுப்பு தந்தையை சினம் கொள்ளச்செய்தது. தந்தையின் இறப்புக்குப்பின் அவர் சுவிட்சர்லாந்துக்குச் சென்று அங்கே தங்கினார். 1850ல் லண்டன் திரும்பிய மேரி அன்றைய இடதுசாரி இதழான Westminster Review வின் இணையாசிரியராகப் பணியாற்றினார்.

மேரி இலக்கியப்படைப்பாளியாகவும் அரசியல் விமர்சகராகவும் தொடர்ச்சியாகச் செயலாற்றியவர். அவருடைய முதல்நாவல் Adam Bede 1859 ல் வெளிவந்தது. அவருடைய Middlemarch முதன்மையான ஆக்கம் எனப்படுகிறது. பரவலாக படிக்கப்படுவது Silas Marner. நான் சிலாஸ் மார்னர் நாவலை கல்லூரி முதலாண்டு படிக்கையில் வாசித்தேன். பிரிட்டிஷ் எழுத்தாளர்களில் அவரே முதன்மையானவர் என்னும் எண்ணம் உருவாகியது, அது இன்றுவரை மாறவில்லை.

lon8
மேரி சுதந்திரமான பல பாலுறவுகள் கொண்டிருந்தார். வெஸ்ட்மினிஸ்டர் ரெவ்யூவின் ஆசிரியர் ஜான் சாப்மான், தத்துவ ஆசிரியரான ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் ஆகியோருடனான உறவும் அவற்றில் அடங்கும். பின்னர் தத்துவவாதியான ஜார்ஜ் ஹென்றி லூயிஸுடன் [George Henry Lewes] அவருக்கு உறவு ஏற்பட்டது. ஜார்ஜ் லூயிஸ் ஏற்கனவே மணமானவர், ஆகவே அவ்வுறவு சட்டவிரோத உறவாகவே நீடித்தது. 1880ல் மேரி தன்னைவிட இருபது வயது குறைவானவரான ஜான் கிராஸை மணந்தார். அவருடன் வெனிஸ் சென்றபோது ஜான் கிராஸ் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் பிழைத்துக்கொண்டார். அவ்வாண்டே தொண்டைத் தொற்றுநோயால் மேரி இறந்தார்.

மேரி வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் புதைக்கப்படவில்லை. அவர் கிறித்தவ நம்பிக்கைகளை மறுத்தமையாலும் முறைகேடான பாலுறவுகள் கொண்டிருந்தமையாலும் அனுமதி மறுக்கப்பட்டது. அவருடைய உடல் ஹைகேட் சிமித்தேரிக்குக் கொண்டுசென்று அடக்கம் செய்யப்பட்டது. அக்காலத்தில் பொதுவாக மதமறுப்பாளர்கள் அங்கே அடக்கம் செய்யப்பட்டார்கள். கார்ல் மார்க்ஸின் கல்லறையும் அங்குதான் உள்ளது.

சிலாஸ் மார்னர் சித்தரிப்பு

சிலாஸ் மார்னர் சித்தரிப்பு

இருபெண்கள். இருவருமே வாழ்ந்தகாலத்தில் வெறுக்கப்பட்டார்கள். ஒருவகையான திமிருடன் எதிர்த்து நின்றனர். எழுத்தை தங்கள் ஆயுதமாகக் கொண்டனர். இருவருக்குமே மதம் முக்கியமான ஆய்வுப்பொருள். இருவருமே மதத்தை கவித்துவமாகவும் தர்க்கபூர்வமாகவும் நுணுகி நோக்க முயன்றனர். மேரி கொரெல்லி அரசியலற்றவர். ஜார்ஜ் எலியட் அரசியல் நிறைந்தவர். மேரி கொரெல்லி மறக்கப்பட்டார். ஜார்ஜ் எலியட் பிரிட்டிஷ் இலக்கியத்தின் வெற்றிகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறார்

ஹைகேட் சிமித்தேரிக்கு லண்டன் நண்பர்களுடன் சென்றபோது இந்த இரு எழுத்தாளர்களைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். நான் பிரிட்டிஷ் எழுத்தாளர்களுள் முதன்மையானவர்களாகக் கருதும் இருவருமே பெண்கள் என்பது ஆச்சரியப்படச் செய்தது. அவர்கள் இருவருக்குமே மதம்சார்ந்த, ஆன்மிகம் சார்ந்த தேடல் இருந்தது என்பது அவர்களை எனக்கு அணுக்கமாக ஆக்கியிருக்கலாம். ஆனால் அதற்கும் மேல் ஏதோ ஒப்புமை இருக்கவேண்டும் அந்தக்கோணத்தில் யோசித்ததே இல்லை. “ஏன் பெண்கள்?” என்று நானே கேட்டுக்கொண்டேன். எனக்குப்பிடித்த இன்னொரு பிரிட்டிஷ் எழுத்தாளரான ஸகி[ Saki]யை நினைவுகூர்ந்தேன்.

 

Hector Hugh Munro என்ற இயற்பெயர் கொண்ட ஸகி இவ்விரு எழுத்தாளர்களுக்கும் சமகாலத்தவர். [1870 -1916] ஸகி அங்கத எழுத்தாளர். பிரிட்டிஷ் பர்மாவில் பிறந்தவர். கல்கத்தா அன்றைய பிரிட்டிஷ் பர்மாவின் தலைநகர். ஸகி பிரிட்டிஷ் இந்தியாவின் காவல்துறை அதிகாரியாக இருந்த சார்லஸ் அகஸ்டஸ் மன்றோவுக்கு மைந்தனாகப்பிறந்தார். 1896ல் லண்டன் திரும்பிய ஹெச்.ஹெச்.மன்றோ ஸகி என்ற பேரில் எழுதலானார்

saki

ஸகி

 

ஸகி என்ற பெயரில் பெரும்பாலும் அறியப்படாதவராக ஒளிந்துகொண்டு அவர் எழுதியமைக்கு ஒரு காரணம் இருந்தது, அவர் ஒருபாலுறவுப் பழக்கம் கொண்டவர். அன்றைய பிரிட்டிஷ் ‘கனவானுக்கு’ அது மிக வெறுக்கத்தக்கப் பழக்கம். மன்றோ முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் ராணுவத்துக்காகப் போரிட்டு பிரான்சில் உயிர்துறந்தார். அவருடைய இறப்புக்குப்பின் அவருடைய சகோதரி ஈதெல் அவர் எழுதி வைத்திருந்த சுயசரிதைக் குறிப்புகளை முழுமையாக அழித்து தங்கள் இளமைப்பருவத்தைப் பற்றிய நினைவுகளை நூலாக எழுதினார். பின்னாளில் ஆய்வாளர்கள் அது பெரும்பாலும் கற்பனை என நிராகரித்தார்கள்.

அன்றைய பிரிட்டிஷ் கனவான் என்னும் தோற்றமே எழுத்தாளர்களுக்கு இரும்புச்சட்டையாக ஆகிவிட்டதா? அவர்கள் உணர்வுரீதியாக அத்துமீறவும் ஆன்மிகமாக பித்துகொள்ளவும் அது தடையாக ஆனதா? கனவான் அல்லாமல் இருந்தமையால் ஸக்கி மேலெழுந்தாரா? பெண்கள் என்பதனால், சீமாட்டிகளாக இல்லாமலிருந்தமையால் மேரிகள் தங்களுக்கு அப்பால் செல்ல முடிந்ததா? அவர்கள் ஒடுக்கப்பட்டமையே பெருவழிகளிலிருந்து அவர்களை விலக்கியது. வெறுக்கப்பட்டமையே அழியாதவற்றை நோக்கி அவர்களைச் செலுத்தியது.

lon2

ஹைகேட் சிமித்தேரி லண்டனுக்கு வடக்கே உள்ளது. 1839ல் இன்றைய வடிவில் அமைக்கப்பட்டது. அன்று லண்டனின் இறப்பு மிகுந்தபடியே வந்தமையால் ஏழு பெரிய செமித்தேரிகள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று இது. Magnificent Seven என இவை அழைக்கப்படுகின்றன. புனித ஜேம்ஸுக்குரியது இது.பதினைந்து ஏக்கர் பரப்பு கொண்டது. அடர்ந்த புதர்களும் நிழல்மரங்களும் கொண்ட காடு இது. நாங்கள் சென்றிருந்தபோது எவருமே இல்லை. இறந்தோரின் நினைவிடங்களின் நடுவே எவரென்று அறியாமல் வெற்று எழுத்துக்களென பெயர் தாங்கி நின்றிருந்த நடுகற்களின் நடுவே நடந்தோம்.

எப்போதும் சிமித்தேரிகள் எழுப்பும் விந்தையானதோர் உணர்வை அவ்விடம் அளித்தது. வாழ்க்கை அங்கே இல்லை, ஆனால் ஒருவர் அங்கே நுழைகையில் நினைவுகளினூடாக ஒரு வாழ்க்கை உருகாகி அலைகொள்ளத் தொடங்குகிறது. நடுகற்கள். நீருக்குள் உடல் மறைத்து நுனிவாலை மட்டும் வெளியே காட்டிக்கொண்டிருக்கும் ராட்சத விலங்குபோல இறந்தவர்கள் இறப்புலகில் வாழ்ந்தபடி தங்கள் ஒரு சிறுபகுதியை மட்டும் இவ்வுலகுக்குக் காட்டிக்கொண்டிருந்தார்கள். நினைவுப்பலகைகளில் சீமாட்டிகள், வீரர்கள், எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள். கணிசமானவை பிரிட்டிஷ் பெயர்கள் அல்ல என்னும் எண்ணம் எழுந்தது.நிறைய ருஷ்ய, ஜெர்மானியப்பெயர்கள் கண்ணில்பட்டன.

marx

ஹைகேட் சிமித்தேரியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் முதன்மையான ஆளுமையாக அறியப்பட்டிருப்பவர் கார்ல் மார்க்ஸ். இருபதாம்நூற்றாண்டின் மிகப்பெரிய மதத்தின் நிறுவனர் என்பதனால் ஒவ்வொருநாளும் இங்கே மார்க்ஸியர்கள் வந்து மலர்வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். மற்றவர்கள் அவர்களின் நினைவுநாளில் மட்டுமே எண்ணப்படுகிறார்கள். மைக்கேல் ஃபாரடேயின் கல்லறை இங்குதான் உள்ளது. புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளரான டக்ளஸ் ஆடம்ஸ் [சுஜாதாவின் கணிசமான கதைகளின் மூல ஊற்று] இங்குதான் மண்ணிலிருக்கிறார்.

இங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ள முக்கியமானவர்களின் பட்டியலை பார்த்தபோது எங்கும் ஜார்ஜ் எலியட்டின் பெயரைக் காணமுடியவில்லை. ஆனால் அங்கே சென்றபோது பெரிதாகத் தேடாமலேயே அதைக் கண்டடையமுடிந்தது. கார்ல் மார்க்ஸ் சமாதிக்குச் சென்றபின் திரும்பிக்கொண்டிருந்தபோது அவர் பெயரைக் கண்டேன். மலர்வைக்கும் எண்ணம் ஏதும் இருக்கவில்லை என்பதனால் கையில் ஏதுமில்லை. அங்கேயே ஒரு காட்டு மலரைப் பறித்து அவர் கல்லறைமேல் வைத்து வணங்கிவிட்டு வந்தேன்.

geo

 

திரும்பும்போது மீண்டும் ஓர் எண்ணம் எழுந்தது. மலையாளத்தில் தெம்மாடிக்குழி என ஒரு சொல் உண்டு. கத்தோலிக்க தேவாலயத்தால் முறையான நல்லடக்கம் மறுக்கப்படுபவர்களுக்குரியது இது. தேவாலய வளாகத்திலோ அல்லது குடும்பத்தவரின் நிலத்திலோ எந்த சடங்குகளும் இல்லாமல் அடக்கம் செய்யப்படுபவர்களின் கல்லறை. ஹைகேட் சிமித்தேரி லண்டனின் தெம்மாடிக்குழிகளின் இடம். ஐரோப்பாவின் தெம்மாடிக்குழிகளில் இருந்துதான் புதிய யுகம் பிறந்து வந்தது என்று தோன்றியது,

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மாத்ருபூமியில் ஓர் உரையாடல்

$
0
0

மாத்ருபூமி தொலைக்காட்சியில் என் எழுத்தின் பின்புலமாக அமைந்த நிலம் பற்றியும் கடந்தகாலம் பற்றியும் ஓணம் பற்றியும் நடந்த உரையாடல்

 

ஜயமோகனம் – நாஞ்சில்நாடு

 

https://youtu.be/REcMD4iangY

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கடிதங்கள்

$
0
0

pra

இனிய ஜெயம்

 

 

நேற்று புதுவை சென்றிருந்தேன் .மருத்துவமனை வாயில் வரை சென்று விட்டேன் . ஏதோ உத்வேகம் மீண்டும் அவரை எங்கேனும் மேடைல் அவர் தோன்றும்போது பார்த்துக் கொள்வோம் என எனக்கு நானே சொல்லிக்கொண்டு திரும்பி விட்டேன் .  பிரபஞ்சன் இம்முறை நீண்ட நாள் மருத்தமனை வாசத்தில் இருக்கிறார் .மிகுந்த பலவீனம் அடைந்திருக்கிறார் .  பாஸ்கர் என்ற காவல்துறை அதிகாரி பிரபஞ்சனின் நண்பர் .எனக்கும் . அவ்வப்போது அவர் சென்று பார்த்து நிலவரங்கள் சொல்கிறார் . பெரும்பாலான கவிதாயினிக்கள் பவா செல்ல துரை எல்லாம் வந்து போனதாக சொன்னார் . நலம் பெறட்டும் .

 

 

புதுவையில் முதன் முறையாக பேராசிரியர் வகிதையா கான்ஸ்டன்டைன் அவர்களை சந்தித்தேன் . வலிய சென்று வாசகராக அறிமுகம் செய்து கொண்டேன் . பெருங்கடல் வேட்டத்து ஆவணப்படம் திரை இட்டு கலந்துரையாடல் செய்ய வந்திருந்தார் .அவர் உட்பட நண்பர்கள் பலருக்கு  அண்ணன் சிறில் அலெக்ஸ் வழியாகவும்  நற்றிணை வழியாகவும் என்னை தெரிந்திரின்தது   மாலதி மைத்ரி ஒய் நீதானா அது சிறில் சொல்லிருக்கார் என முதல் சந்திப்பிலேயே உற்சாகம் அடைந்தார் .

 

 

அருள் எழிலன் இயக்கிய மிக முக்கியமான ஓங்கி புயல் மரணங்கள் குறித்த  ஆவணப் படம் .இன்று அந்த ஆவணம் பேசும் அரசியல் இடர்கள் எல்லாம் தற்ச்சமயம் அந்த ஆவணப் படத்துக்கு மிகுந்த கவனத்தை பெற்று தரும் .கொஞ்ச நாளில் எல்லாம் அடங்கிய பின் ,அந்த ஆவணம் அதற்குள் இயங்கும் கலைஞனின் அகத்தின் உண்மை ,கலை நேர்த்தி இவற்றுக்காக காலம் கடந்து வாழும் .

 

 

குறிப்பாக ஒரு காட்சி  சர்ச்சை நம்பி வாழும் மக்களுக்கு சர்ச் அவர்களை ஜனநாயக அரசியலில் இருந்து தனிப்படுத்தும் நிலையை பேசுகிறது . ஆவணத்தின் துவக்கத்தில் குமரி கடல் கிராமம் ஒன்றில் ஏதோ கிறிஸ்துவ திருவிழா ,இரவு .ஊர் முழுக்க வண்ண விளக்குகள் ,ஊரின் மையத்தில் சர்ச் மட்டும் முற்றிருளில் மூழ்கி கிடக்கிறது .

 

 

இப்படி பல காட்சிகள் எங்கேனும் என்றேனும் இந்த ஆவணம் குறித்து எழுத வேண்டும் .

 

கடலூர் சீனு

 

 

அன்பின்  ஜெ

 

 

ஜெயமோகன் அவர்களுக்கு,

 

 

நீங்கள் சொன்னது கொஞ்சம் வருத்தத்தை வருவிக்கிறது. நான் உங்கள் போல் சரளமாக தமிழ் பேச தெரியாதவன். ஆனால் உணர்வு இருக்கிறது. பிரெஞ்சு பெண்ணிய புரட்சி பற்றி நீங்கள் விமர்சிக்க கூட தகுதி இல்லாதது போல் பேசியுளீர்கள். பிரிட்டிஷ் பெண்ணியத்தை புகழ்ந்து பேசியது உங்கள் விக்டோரியன் மனப்பான்மையை(Victorian Mindset) தான் காண்பிக்கிறது.

 

பிரிட்டிஷ்காரர்கள் தான் ஒரு காலத்தில் நம் நாட்டில் இயற்கையாய் இருந்த பல குழுக்களாக இருந்த மக்களை பிரித்து பண்பாடை அழித்து, பெண் அடிமைத்தனத்தை வளர்த்து இன்னும் அதில் இருந்து விடுபடாமல் நம் மக்களையும் அதே விக்டோரியா மனப்பான்மைக்கு ஆளாக்கிவிட்டனர்.  ‘இரண்டாம் பால்’ சிமோன் தீ பூவா வின் நூலை வாங்கி படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவர் என்னமோ Reactionary போன்று நீங்கள் பார்ப்பது கொஞ்சம் வேதனையளிக்கிறது.

 

பிம்பத்தை உடைக்கலாம் நீங்கள், அது தவறல்ல. ஆனால் மறந்து நீங்கள் சில சமயத்தில் உண்மையையும் சேர்த்து உடைத்துவிடுகிறீர்கள் என்ற பயம் கண்டிப்பாக இருக்கிறது.

 

பிரெஞ்சு பெண்கள் மற்றும் ஆண்களால் அவர் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை என்று தான் நினைக்கிறன்.

 

இப்படிக்கு

இராம்ஜி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஈரோடு வெண்முரசு சந்திப்பு

$
0
0

 

l

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்

 

வெண்முரசின் சிறப்புக்கூடுகையில் கலந்துகொண்ட பின்னர் இப்போதுதான் ஊர் திரும்பினேன். இதற்கு முன்னர் விஷ்ணுபுரம் விழாக்களிலும், ஊட்டி காவியமுகாம்களிலும் கலந்துகொண்டிருக்கிறேன் எனினும் இந்தக்கூடுகை மிகச்சிறப்பானதொன்றாக இருந்தது. உங்களின் எழுத்துக்களில் அனைத்தையுமே நான் வாசிப்பவள் அதுவும் மீள் மீள வாசிப்பவள் எனினும் ’வெண்முரசு’ என்னும் மாபெரும் படைப்பினைக்குறித்த பிரமிப்பே எனக்குள் முழுமையாக நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் மீள் வாசிப்பில் எனக்கு பல புதிய விஷயங்கள்  தெரிய வந்துகொண்டே இருக்கின்றது.. எனவே இந்த வெண்முரசுக்கான சிறப்புக்கூடுகையில் நான மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டேன்.

 

முதல் நாள் நீங்கள் இல்லாவிடினும் வழக்கம் போலவே சரியான நேரத்தில் ஏற்கனவே கலந்துகொள்பவர்களுக்கு தெரிவித்திருந்தபடி முதல் அமர்வு துவங்கியது. திரு. மது ,வெண்முரசின் தரிசனங்களும் படிமங்களும் குறித்துப்பேசினார்.  ’’தண்நிலவும் கங்கையும், வழுக்கும் குளிர் நாகங்களும் சந்தனக்காப்புமாய் குளிர்ந்திருக்கும் சிவனை அனலோன் என்கிறோம்’’ என்னும் அவர் தமிழாக்கம்செய்த அந்த அழகிய சமஸ்கிருதப்பாடலுடன் துவங்கினா.ர் குந்தி பீஷ்மர் சந்திப்பு சுப்ரியையின் எஞ்சும் நஞ்சு, முதற்கனலில் விதைத்தவை இன்று முளைத்து கிளைபரப்பி வளர்ந்திருப்பது என்று அழகாகப் போனது அவர் உரை..  குறிப்பாக சுழற்சி தரிசனம் குறித்து வெகு அருமையாக சொன்னார்.

 

 

திருமூலநாதன்

திருமூலநாதன்

அனைத்து அமர்வுகளிலுமே திரு கிருஷ்ணன்  வலுவான ஆதாரபூர்வமான தகவல்கள் நிறைய  அளித்தார். அவரை இதற்கு முன்னரே பல ஆண்டுகளாக, நிகழ்வுகளை கச்சிதமாக ஒருங்கிணைப்பவராக, மட்டுறுத்துனராக, உரைகளில் ஆழ்ந்து மட்டுறுத்துவதையே மறந்தவராக, உங்களின் மிக நெருங்கிய அன்பு நண்பராக அறிந்திருக்கிறேன். ஆனால் இந்தக்கூடுகையில் அவரின்  legal expertise என்னவென்பதை உணர முடிந்தது.

 

Biological  தந்தை யாரென்பதற்கான  DNA   சோதனைகளுக்கான சட்டம், பிறழ் உறவில் பெண்னை குற்றவாளியாக இணைக்ககூடாது எனும் சட்டம், கர்ணனை least crime committed  என்று சொல்லலாம் இப்படி ஒவ்வொருஅமர்விலும் வெண் முரசு தொடர்பான பல சட்ட நுணுக்கங்களை விளக்கமாக கூறினார்

 

அடுத்த அமர்வில் பாரி, வெண்முரசின்  உச்சதருணங்கள் குறித்துப்பேசினார். அரிஷ்டனேமி இளையயாதவர் குசேலர்,புஷ்கரன் என்று மிக முக்கிய கதாபாத்திரங்களின் உச்ச தருணங்களை விளக்கினார். பல வருடங்கள் ஊழ்கத்திலிருந்த இளைய யாதவரின் பீலிவிழி  அவருக்குப்பதிலாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்ததை,  இளைய யாதவருக்கும் குசேலருகும் இருந்த உறவை,. புஷ்கரன்  என்னும் ஆளூமையைக்குறித்தெல்லாம் பேசினார்.

 

அந்த அமர்விலும் நிறைய கலந்துரையாடினோம். கர்ணனுக்கும் சுப்ரியைக்குமான கசப்பு அவள் சேடி இறந்தபோது அவளின் வஞ்சமும் இறந்துவிடுவது இப்படி கலந்துரையாடலிலும் அதிகம் புதிய கோணங்களும் புதுப்புது அர்த்தங்களும் கிடைத்தன பலரிடமிருந்து

c

அடுத்ததாக ராகவ் சொற்களின் எண்ணிக்கை குறித்து மிக விரிவான ஒரு ஆய்வு செய்திருந்தார். அது மலைப்பாக இருந்தது மொத்த வார்த்தைகள் இதுவரை வெண் முரசிலெத்தனை, , குறிப்பிட்ட சில வார்த்தைகள் எத்தனை முறை உபயோகத்திலிருக்கிறது, எப்படி ஒரு குறிப்பிட்ட வார்த்தையை சுலபமாக தேடி எடுக்கலாம் என்று விளக்கினார்.

 

பின்னர் ராஜமாணிக்கம் அவரகளின் ‘  வெண்முரசில் தந்தைமை’’ அமர்வு துவங்கியது. அது தீப்பிடித்தது போல பலராலும் பலவிதங்களில்  அனல் பறக்க விவாதிக்கபப்ட்டு கூட்டுஉரையாக இருந்தது. குறிப்பாக பாரி, ’திருதிரஷ்டிரர் பெரும் தந்தையா அல்லது வெறும் தந்தையா’ என்று எடுத்துக்கொடுத்தது  வெகு ஆர்வமாக மிகஆவேசமாகக்கூட விவாதிக்கப்பட்டதுதிருதிராஷ்டிரர், தீர்கதமஸ், துரோணர்,ஜாததேவன் சாத்யகி விதுரர் யயாதி என்று பட்டியலும் விவாதமும் மிக சுவாரஸ்யமாக நீண்டுகொண்டே போனது.

 

பிறகு இன்றைய அமர்வு , நீங்களும் இருந்தீர்கள். அந்தியூர் மணி அவர்களின் ‘’ பிற இலக்கியஙகளிலிருந்து வெண்முரசில் எடுத்தாளப்பட்டவை’’ என்னும் உரையும், பாண்டிச்சேரி தாமரைக்கண்ணனின்  மாமழை குறித்த அருமையான் உரையும், வேணுவின்  ‘’ நீலம் மலர்ந்த நாட்களும்,  மதிய உணவிற்குபின்னர் உங்களின் உரையுமாய் இன்றைக்கும் மிக அருமையான ஒரு நாளாகவே இருந்தது.

e

இந்த இரண்டு நாட்களுக்குப்பின்னர் இப்போது நினைக்கிறென் நான் வெண்முரசை மிக நேரடியாக் வாசித்திருக்கிறேன் என்று. வெண்முரசென்னும் ஒரு மாபெரும் அரண்மனையின் கதவுகளைத்திற5ந்து நேராக உள்ளே சென்று கொண்டிருந்திருக்கிறென் அந்த மகத்தான படைப்பின் பலதளங்களையும் அடுக்கைகளையும் மறை பொருட்களையும் நான் அறிந்திருக்கவே இல்லை

 

வெண்முரசு வாசிப்பில் இத்தனை இத்தனை சாத்தியங்கள் இருக்கின்றது, இத்தனைஇத்தனை  கோணங்களில் வாசிக்க முடியுமென்பதைத் தெரிந்துகொண்டேன்  ஒவ்வொரு கூடுகையிலும் புதியவர்கள் இளைஞர்கள்,   மற்றும் பெண்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.. அதுவும் மகிழ்ச்சியாக இருந்தது.

 

விஷ்ணுபுரம் விழா எப்படி வருடந்தோறும் நடைபெறுகின்றதோ, அப்படி வெண்முரசுக்கும்  அவசியம் நடத்தினால் இன்னும்  பல வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை ஒரு வேண்டுகோளாகக் கேட்டுகொள்கிறேன்.

 

என்னைபொருத்தவரை மிக plain ஆக இருந்த  வெண்முரசு வாசிப்பு இன்று மிகப்பெரிய சித்திரமாகிவிட்டிருக்கிறது.

 

 

உறிஞ்சுதாளில் சொட்டிய மைத்துளி  ஊறி, விரிந்து பரவிச்செல்வதுபோல பல கோணங்களிலும் வாசிப்பின் சாத்தியங்கள் விரிந்து வருவதை பலரும் ஆச்சரயத்துடன் இந்த இரண்டு நாட்களும் உணர்ந்தோம்.   வழக்கம் போல சரியான நேரத்திற்கு உணவும் தேனீரும்  வழங்கப்பட்டது, வாழையும் கரும்பும் சேனையும் மஞ்சளுமாக அருமையான சூழலில் இருக்கும் பண்ணை வீட்டில் இக்கூடுகை நடந்தது இன்னும் சிறப்பாக இருந்தது

 

 

இவற்றை எற்பாடு செய்தவர்களுக்கும் பலவேலைகளை விருப்பத்துடன் செய்தவர்களுக்கும் அமர்வுகளில் உரையாற்றியவர்களுக்கும், உங்களுக்கும் நன்றி

 

 

அன்புடன்

லோகமாதேவி

வெண்முரசு விவாதங்கள் தளம்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஐரோப்பா-4, நுண்ணோக்கிகள்

$
0
0
sher

ஷெர்லக் ஹோம்ஸின் இல்லம். சிறில் அலெக்ஸ் -ஹோம்ஸ்

 

மலையாள நகைச்சுவைப் படம் ஒன்றில் கதாநாயகனுக்கு ‘சி.ஐ.டி’ வேலை கிடைக்கிறது, தனியார் நிறுவனத்தில். உடனே அவன் சென்று நீளமான மழைச்சட்டை, உயரமான தொப்பி, தோல் கையுறைகள், முழங்கால்வரை வரும் சேற்றுச்சப்பாத்துக்களை வாங்கிக்கொண்டு  அணிந்துகொள்கிறான். திருவனந்தபுரம் தம்பானூர் வழியாக மேமாத வெயிலில்அதைப்போட்டபடி சிந்தனையில் ஆழ்ந்து நடக்கிறான். நான் லண்டனின் தெருக்களில் நடந்தபோது எனக்கு சுற்றும் நடப்பவர்கள் பெரும்பாலானவர்கள் ரகசிய உளவாளிகள் என்னும் மனப்பிராந்திக்கு ஆளானேன். லண்டனே துப்பறிவாளர்களின் நகரம் என்று தோன்றியது.பெரும்பாலானவர்கள் நானறிந்த துப்பறிவாளர்களின் உடைகளை அணிந்திருந்தனர். எஞ்சியவர்கள் குற்றவாளிகளின் உடையை. அத்துடன் அந்த பழைமையான வீடுகள், கல்வேய்ந்த தெருக்கள், மெல்லிய மழையீரம் எல்லாம் மர்மங்களை ஒளித்துவைத்துக்கொண்டிருப்பவை.

 

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஆங்கில வாசிப்பே துப்பறியும் கதைகள், சாகசக்கதைகள் வழியாகத்தான் தொடங்கியிருக்கும். அதுவே எளிய வழி. மொழி நம்மைப் படுத்தியெடுத்தாலும் என்ன நிகழ்கிறது என்று அறிவதற்கான ஆவல் வாசிக்கச்செய்திருக்கும். லண்டனில் இருந்து பிரிக்கமுடியாதவர்கள் ஷெர்லக் ஹோம்சும், ஜேம்ஸ் பாண்டும். இளமையில் எனக்கு ஒய்.எம்.சி.ஏ நூலகத்தின் பழையதாள் குவியலில் ஏதோ வெள்ளையர் வாசித்து தூக்கிப்போட்ட எர்ல் டெர் பிக்கர்ஸ் [Earl Derr Biggers] எழுதிய சார்லி சான் துப்பறியும் நாவல்களின் பெருந்தொகை ஒன்று கிடைத்தது. அடுத்த இருபதாண்டுகளில் எங்கள் நூலகமே அழிந்துவிட்டிருந்தாலும் அது மட்டும் என் கையில் எஞ்சியிருந்தது. சார்லி சான் என் இளமையில் நாயகன். அவரைவிட அவர் செயல்பட்ட ஹோனலூலு போன்ற நான் முற்றிலும் கற்பனையில் உருவாக்கிக் கொள்ளவேண்டிய நிலங்கள் பெரிதும் கவர்ந்தன.

sher

ஹோம்ஸ் படிப்பறை

 

உலகமொழிகளின் இலக்கியத்தைக் கூர்ந்து பார்த்தால் பிரிட்டிஷ் இலக்கியத்திற்கு மட்டும் ஒரு சிறப்பு உண்டு என்பதைக் காணலாம் – வெறும் பொழுதுபோக்குக்கான எழுத்து என்ற தனி வகைமை அங்கே மிகுதி. சொல்லப்போனால் இன்று உலகை ஆளும் வணிக எழுத்தின் எல்லா வகைமாதிரிகளும் பிரிட்டிஷ் இலக்கியச்சூழலில்தான் தொடங்கின. பேய்க்கதைகள், துப்பறியும் கதைகள், உளவாளிக் கதைகள், குற்றப்பரபரப்புக் கதைகள், அறிவியல் புனைகதைகள் ஆகிய அனைத்துக்கும் மிகத் தொடக்ககால மாதிரிகள் பிரிட்டிஷ் இலக்கியத்தில் உள்ளன.. இவை ஒவ்வொன்றிலும் ஓரிரு பெரும்படைப்பாளிகளை நாம் பிரிட்டிஷ் இலக்கியத்தில் குறிப்பிட முடியும். சரித்திரக்கதைகளுக்கு வால்டர் ஸ்காட், சாகசக்கதைகளுக்கு டானியல் டீஃபோ, துப்பறியும் கதைகளுக்கு சர் ஆர்தர் கானன் டாயில், [ஷெர்லக் ஹோம்ஸ்]  உளவாளிக்கதைகளுக்கு இயான் ஃப்ளமிங் [ஜேம்ஸ்பாண்ட்] பேய்க்கதைகளுக்கு பிராம் ஸ்டாக்கர் [டிராக்குலா] அறிவியல் குற்றக்கதைகளுக்கு மேரி ஷெல்லி [பிராங்கன்ஸ்டைன்]

 

 

பிரிட்டிஷ் இலக்கியத்தில் இவை உருவாகக் காரணங்கள் பல. முதன்மையாக, ஆங்கிலம் பதினெட்டாம்நூற்றாண்டிலேயே உலகமொழி ஆகத் தொடங்கியது. அதற்கு உலகமெங்கும் வாசகர்கள் உருவானார்கள். ஆகவே பத்தொன்பதாம்நூற்றாண்டில் நூல்வெளியீடு பிரிட்டனின் மிகப்பெரிய தொழிலாக ஆகியது. அது பரவலாக வாசிக்கப்படும் எழுத்துக்கான தேவையை உருவாக்கியது. அதன் எல்லா வகைமாதிரிகளும் சோதனைசெய்து பார்க்கப்பட்டன. அவை பின்னர் அமெரிக்காவில் பேருருக் கொண்டன. பிரிட்டன் மீது ஒரு  மாபெரும் பூதக்கண்ணாடியை வைத்துப்பார்ப்பதே பலசமயம் அமெரிக்காவாகத் தெரிகிறது. பிரிட்டனில் முளைப்பவை அமெரிக்காவில் பல்கிப்பெருகி பெருந்தொழிலாக ஆகிவிடுகின்றன

she

ஷெர்லக் ஹோம்ஸ் இல்லம்

 

அதைவிட முக்கியமான காரணங்கள் இவ்வகை கேளிக்கை எழுத்து உருவானமைக்குப் பின்னணியில் இருக்கவேண்டும். வரலாற்றையும், சமூகவியலையும் இலக்கியத்தையும் ஒருங்கிணைத்துப்பார்க்கும் ஆய்வாளர்கள்தான் அதைப்பற்றி உசாவ வேண்டும். பொதுப்பார்வையில் இரு சமூகவியல் காரணங்களைச் சொல்லலாம். அக்கால பிரிட்டனின் மாபெரும் விருந்தறைப் பேச்சுக்கள் இவ்வகை எழுத்துக்கான தேவையை உருவாக்கியிருக்கின்றன. நெடுநேரம் நீளும் விருந்துகளில் கதைகளையும், கவிதைகளையும் வாசிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அத்தகைய கூட்டுவாசிப்பில்  நுண்ணிய அவதானிப்புகளுக்கு தேவையில்லாமலேயே சட்டென்று உச்ச உணர்ச்சிகளை உருவாக்கும் கதைகள் விரும்பப் பட்டிருக்கின்றன. இன்னொன்று, பிரிட்டிஷ் பேரரசின் ஊழியர்களாக உலகமெங்கும் சென்ற ஆங்கிலேயருக்கு அந்நூல்கள் பிரிட்டனின் நினைவை மீட்டுவனவாக இருந்தன, அவர்களில் பெரும்பாலானவர்கள் முதல்தலைமுறையில் கல்வியறிவு பெற்றவர்கள். ஆகவே மொழிநுண்ணுணர்வோ இலக்கியப் பயிற்சியோ அற்றவர்கள். அவர்களுக்கான எழுத்து தேவைப்பட்டிருக்கலாம்

 

 

மேலும் ஆழ்ந்த  ஒரு பண்பாட்டுக் காரணம் இருக்குமென நான் எண்ணுகிறேன். பிரிட்டன் சீர்திருத்தக் கிறித்தவத்தின் நிலம். நவீன ஜனநாயகக் கருத்துக்களும், மதச்சீர்திருத்தக் கருத்துக்களும், பகுத்தறிவுவாதமும் அங்கே இருநூறாண்டுக்காலம் பேசப்பட்டிருக்கின்றன. அந்தத் தளத்தில் நின்றபடி சென்ற மதஆதிக்கத்தின் இருண்டகாலத்தை பார்க்கையில் உருவாகும் அச்சமும் ஒவ்வாமையும் அவர்களின் உளஇயல்புகளில் உறைந்துள்ளன. அந்த அச்சத்தையும் ஒவ்வாமையையும் பிரிட்டிஷ் பேய்க்கதைகள் பயன்படுத்திக்கொள்கின்றன என்று தோன்றுகிறது. பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலாவே அதற்கு மிகச்சிறந்த உதாரணம். மத்தியகால ஐரோப்பா அவர்களின் கெட்டகனவுகள் பரவிய நிலம்.

lead_large

ஹோம்ஸ் ஒரு பழைய சித்திரம்

 

 

இன்னொரு கோணத்தில் பார்த்தால், நவீன அறிவியலை புனைவுகள் சந்திப்பதன் விளைவாகவே துப்பறியும் கதைகளும் குற்றக்கதைகளும் உளவாளிக் கதைகளும் உருவாகின்றன என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆர்தர் கானன் டாயில் துப்பாக்கிகளைப்பற்றியும் அகதா கிறிஸ்டி நஞ்சைப்பற்றியும் எழுதுவதை வாசிக்கையில் உருவாகும் எண்ணம் இது. குற்றம், துப்பறிதல் இரண்டிலுமே அறிவியல்செய்திகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட படைப்புகளே பெரும்புகழ்பெறுகின்றன. ஆனால் செய்திகளை விட முக்கியமானது சிறிய தகவல்களினூடாக துப்பறிந்து உண்மையைச் சென்றடையும் அந்தப் பயணம். அது அறிவியலில் இருந்தும் தத்துவத்தில் இருந்தும் இலக்கியத்திற்கு வந்தது

 

 

பேராசிரியர் ஜேசுதாசன் பிரிட்டிஷ் இலக்கிய விமர்சகரான ஐ.ஏ.ரிச்சர்ட்ஸின் மேல் பெரும் ஈடுபாடு கொண்டவர். Ivor Armstrong Richards (1893 1979) நவீன இலக்கியவிமர்சனத்தின் பிதாமகர்களில் ஒருவர். இலக்கியப்படைப்பை நுணுகி ஆராய்ந்து அதில் ஆசிரியரின் நோக்கத்தை, அவருடைய உத்திகளை, அவர் தன்னைக் கடந்துசெல்லும் தருணங்களைக் கண்டடைவது அவருடைய விமர்சன முறை. படைப்பில் ஒளிந்திருக்கும் சிறுசிறு தகவல்களைக்கூட கருத்தில்கொண்டு, படைபாளி நுட்பமாக ஒளித்துவைத்தவற்றை கண்டுபிடித்து விரித்துக்கொண்டு வாசிக்கும் இந்த முறையே பின்னாளில் அமெரிக்காவில்  ‘புதுத்திறனாய்வு’முறையாக உருவாகியது. இது பிரதிஆய்வு விமர்சனமுறை எனப்படுகிறது. ரிச்சர்ட்ஸின் நூல் ஒன்றின் தலைப்பே அவருடைய வழிமுறையை தெளிவாகக் காட்டுவது –The meaning of meaning

 

 

I.A. Richards

I.A. Richards

 

ஐ. ஏ. ரிச்சர்ட்ஸ் பற்றிப் பேசுகையில் ஜேசுதாசன் சிரித்தபடிச் சொன்னார் “அவரு ஷெர்லக் ஹோம்ஸுல்லா?” கிண்டலாக அல்லாமல் நேரடியாகவே அவ்வாறு விளக்கினார். பதினெட்டாம்நூற்றாண்டு பிரிட்டிஷ் சிந்தனையை ஆட்கொண்டிருந்த மைய எண்ணம் என்பது புறவயத்தன்மைதான். எதையும் தர்க்கபூர்வமாக அணுகுவது, புறவயமான ஆதாரங்களை நுட்பமாக சேகரித்து அவற்றைத் தொகுத்து ஒரு விரிவான சித்திரத்தை உருவாக்கி அதன் சாரமாக ஓர் உண்மையை உருவாக்குவது. இரண்டு மூலங்களில் இருந்து தொடங்கியது இந்த ஆய்வுமுறை. ஒன்று, இறையியல்.இன்னொன்று அறிவியல்

 

 

அன்றைய சீர்திருத்தவாத கிறித்தவம் விவிலியம் முதலான மதமூலங்களை நுட்பமாக ஆராய்ந்து தரவுகளின் அடிப்படையில் கத்தோலிக்கர்களுடன் விவாதித்தது. மூன்றுநூற்றாண்டுக்காலம் நீடித்த அந்தப் பெருவிவாதம் இறையியலில் ஆக்ஸ்போர்ட் இயக்கம் போன்ற ஏராளமான தரப்புக்களை உருவாக்கியது. பிரதிஆய்வு விமர்சனம் என்னும் பார்வையின் ஆரம்பமே அதுதான். அந்த விமர்சனமுறை பின்னர் தத்துவத்திலும் இலக்கியத்திலும் வேரூன்றியது. பிரிட்டிஷ் அறிவியலாளரான ஃப்ரான்ஸிஸ் பேக்கன் நவீன அறிவியல் முறைமைகளின் தொடக்கப்புள்ளி என்பார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் நிரூபணவாத அறிவியல் கிடைக்கும் தரவுகளைத் தொகுப்பதிலும் அவற்றைக்கொண்டு ஊகங்களை நிரூபிப்பதிலும், அவற்றின் எதிர்த்தரப்புகளுடன் விவாதிப்பதிலும் தெளிவான முறைமைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது.

 

 

இவ்விரு  முன்னோடி மனநிலைகளின் இலக்கிய வெளிப்பாடுதான் பிரிட்டிஷ் குற்றப்பரபரப்பு எழுத்துக்களிலும் துப்பறியும் எழுத்துக்களிலும் எழுந்தது. அதன் மிகச்சிறந்த முன்னோடி ஷெர்லக் ஹோம்ஸ்தான். இன்று துப்பறிவாளருக்குரிய ஒரு தொல்படிமமாகவே அவருடைய பெயரும் தோற்றமும் மாறிவிட்டிருக்கிறது. ஷெர்லக் ஹோம்ஸ் வெறும் துப்பறிவாளர் அல்ல. அவர் மிகமிக பிரிட்டிஷ்தனமான ஒரு நிகழ்வு. பத்தொன்பதாம்நூற்றானின் பிரிட்டிஷ்தன்மையின் ஓர் அடையாளம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொல்லியலாளர்கள், வரலாற்றாய்வாளர்கள், ஆட்சியாளர்கள், சட்ட நிபுணர்கள் அனைவரிடமும் நாம் கொஞ்சமேனும் ஹோம்ஸைப் பார்க்கமுடியும். யோசித்துப்பாருங்கள் கால்டுவெல், [திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்] ஜே.எச்.நெல்சன் [மதுரா கண்ட்ரி மேனுவல்] மார்ட்டிமர் வீலர் அனைவருமே ஒருவகையான ஷெர்லக் ஹோம்ஸ்கள்தானே?

 

 

ஐரோப்பாவின் இந்த நுண்ணோக்கி விழிகள்தான் நமக்கு ஒரு புறவய வரலாற்றை உருவாக்கி அளித்துள்ளன. நம் தொன்மையை நவீன முறைமைகளைக் கொண்டு தொகுத்து நமக்கு அளித்துள்ளன. நாம் நம்மைப்பார்க்கும் பார்வையையே அவைதான் ஒருவகையில் வரையறைசெய்துள்ளன. ஐரோப்பாவின் உணர்ச்சிகளற்ற புறவயப்பார்வையின் அடையாளம் ஹோம்ஸ்

 

 

Arthur_Conany_Doyle_by_Walter_Benington,_1914

 

மருத்துவரான சர் ஆர்தர் கானன்டாயில் [859- 1930] எழுதிய துப்பறியும் கதைநாயகன் ஷெர்லக் ஹோம்ஸ். கானன் டாயில் ஏராளமாக எழுதியிருந்தாலும் ஷெர்லக் ஹோம்ஸ் வழியாகவே வரலாற்றில் இடம்பெற்றார். கானன்டாயிலின் A Study in Scarlet என்ற கதையில் 1881ல் முதல்முறையாகத் தோன்றினார்., ஹோம்ஸின் இயல்புகளை மிகத்துல்லியமாக ஆசிரியர் வரையறை செய்தமையால்தான் அவர் அத்தனை புகழ்பெற்றார் எனத் தோன்றுகிறது. ஹோம்ஸ் ஒரு பொஹீமியன் வாழ்க்கைப்போக்கு கொண்டவர் என்று வாட்ஸன் ஓரிடத்தில் சொல்கிறார். வெளியே நோக்கிய உள்ளம் கொண்டவர், ஆனால் தனித்தவர். நெருக்கமானவர்களுடன் மட்டும் இருக்க விரும்புபவர். மிகமிகத் தூய்மையான பழக்கவழக்கங்கள் கொண்டவர். பிரிட்டிஷ் கனவானுக்குரிய மென்மையான குரலும், மரபான பேச்சுமொழியும் கொண்டவர். கிண்டலாக மாறாத உள்ளடங்கிய நகைச்சுவை கொண்டவர். தத்துவம், மதம் ஆகியவற்றில் அறிவார்ந்த ஈடுபாடு கொண்டவர். ஆயுதங்களில் ஈடுபாடுகொண்டவர், ஆனால் வன்முறை மனநிலை அற்றவர். பெண்களிடம் மரியாதையாகப் பழகுபவர், ஆனால் அவர்களிடம் பெரிய ஈடுபாடில்லாதவர். அவர்களை இரண்டாந்தரமான அறிவுள்ள்ளவர்களாக எண்ணுபவர். மொத்தத்தில் ஒரு இலட்சிய பிரிட்டிஷ் கனவான்.

 

The_Adventure_of_the_Veiled_Lodger_02

The Adventure of the Veiled Lodger

 

 

2000 த்தில் நான் ஹோம்ஸ் துப்பறியும் ஒரு கதையை எம்.எஸைக்கொண்டு. மொழியாக்கம் செய்து சொல்புதிது சிற்றிதழில் வெளியிட்டேன். தொடர்ச்சியாக நான் தெரிவுசெய்த உலகச்சிறுகதைகளை எம்.எஸ். மொழியாக்கம் செய்து சொல் புதிது வெளியிட்டுவந்த காலம் அது. அவ்வரிசையில் இக்கதை வந்தது இலக்கிய வாசகர்களை அதிர்ச்சியுறச் செய்தது. பின்னர் எம்.எஸ் மொழியாக்கம் செய்த கதைகளின் தொகுதி வெளிவந்தபோதும் அக்கதை சேர்க்கப்படவில்லை. துப்பறியும் கதை எப்படி இலக்கியமாகும் என அன்று பலர் கேட்டார்கள். ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் சில உயர்தர இலக்கியமே என நான் பதில் சொன்னேன். அந்த விவாதம் எழவேண்டும் என்றுதான் அக்கதை மொழியாக்கம் செய்யப்பட்டது. ஹோம்ஸ் பலசமயம் குற்றத்தை மட்டும் துப்பறிந்து விளக்குவதில்லை, அதற்குப்பின்னாலிருக்கும் உளநிலையை நோக்கிச் செல்கிறார். எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதைவிட எதைக் கண்டுபிடிக்கிறார் என்பது முக்கியமாக ஆகும் கதைகள் அவை. The Adventure of the Veiled Lodger என்ற அக்கதையில் குருதிமணம் பெறும் சிம்மம் ஆழமான ஒரு படிமம் என்பது என் எண்ணம். இந்த அம்சத்தால் கானன்டாயில் வெறும் துப்பறியும்கதையாசிரியர் அல்ல, படைப்பாளி என நான் நினைக்கிறேன்.

 

 

லண்டனில் ஹோம்ஸுக்கு ஓர் நினைவுமாளிகை உள்ளது. லண்டனில் 221 பேக்கர் தெருவில் ஹோம்ஸ் வாழ்ந்ததாக கானன் டாயில் தன் நாவல்களில் குறிப்பிடுகிறார். கானன் டாயில் குறிப்பிட்ட அந்த வீடு இருந்ததா என்பதே ஐயத்திற்குரியது. அந்த எண்கொண்ட வீடு வெவ்வேறு கைகளுக்குச் சென்றுவிட்டது. இப்போது ஹோம்ஸ் வாழ்ந்த காலகட்டத்தை ஏறத்தாழ அதேபோன்ற ஒரு கட்டிடத்தில் அப்படியே உருவாக்கி அதை ஒரு சுற்றுலாமையமாக ஆக்கியிருக்கிறார்கள். ஷெர்லக் ஹோம்ஸ் சொசைட்டியால் அது இப்போது நிர்வகிக்கப் படுகிறது. கானன் டாயிலின் கதைகளின்படி ஹோம்ஸும் அவர் நண்பர் வாட்ஸனும் இங்குதான் தங்கியிருந்தார்கள்.

 

 

இன்று  உலகமெங்குமிருந்து பலநூறு ஹோம்ஸ் ஆர்வலர் அங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். கீழ்த்தளம் கட்டணச்சீட்டு கொடுப்பதற்குரிய இடமாகவும் நினைவுப்பொருட்கள் விற்கும் இடமாகவும் உள்ளது. சிறிய இடுங்கலான படிகளின் வழியாக மேலேறிச் சென்றால் முதல்தளம் ஹோம்ஸ் காலகட்டத்தின் அனைத்துப் பொருட்களுடனும் அவ்வண்ணமே பாதுகாக்கப்படுகிறது. எக்கணமும் வீட்டு உரிமையாளரும் காப்பாளருமான திருமதி ஹட்ஸன் வந்து “மன்னிக்கவேண்டும், உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டுவிடக்கூடும் எனத் தோன்றும்

 

je

 

முதல்மாடியில் ஹோம்ஸ் அமர்ந்து பைப் பிடித்தபடி பேக்கர் தெருவை நோக்கிக்கொண்டிருக்கும் வழக்கமான தொடக்கக் காட்சி நிகழும் முகப்பறை. பழைமையான கணப்பு. தட்டச்சுப்பொறி. ஹோம்ஸின் ஆய்வகம், அங்கே அவருடைய துப்பறியும் கருவிகள். அவருடைய நீண்ட மழைமேல்சட்டை, deerstalker தொப்பி. ஒவ்வொன்றும் இந்த ஒன்றரை நூற்றாண்டுக்குள் தொன்மத் தகுதியை அடைந்துவிட்டிருக்கின்றன. அந்த சிறிய இல்லத்தில் ஹோம்ஸ் கதைகளின் சில கதைமாந்தர்களின் மெழுகுச்சிலைகள் உள்ளன. ஹோம்சின் ஆடைகளை அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர் பயணிகள்

 

 

எனக்கு அந்த வீடுதான் மேலும் ஆர்வமூட்டியது. அங்கே வாழ்ந்த மனிதர் எப்படி அக்காலகட்டத்தின் அடையாளமோ அதைப்போல. ஒவ்வொன்றும் முந்தைய காலகட்டத்தில் உறைந்துபோயிருந்தன.  சென்ற காலம் போல அச்சமூட்டுவது வேறில்லை. அதை நாம் அருகே காணமுடியும், உள்ளே நுழைய முடியாது. குழந்தைத்தனமான எண்ணமாக இளவயதில் உருவாகும் அந்த அச்சம் வயதாகும்தோறும் கூடிக்கூடி வருகிறது. அங்குள்ள பொருட்களை நோக்கிக்கொண்டே சென்றுகொண்டிருந்தேன். இன்றைய லண்டனுக்கு மேல் காற்றென வீசி மறைந்த ஒரு காலகட்டத்தை மீண்டும் உருவாக்கிக் கொள்ளமுயன்றேன். பெரிய தோலுறைபோட்ட நூல்களை பூதக்கண்ணாடி கொண்டு நோக்கி ஆராயும் ஆய்வாளர்கள், விருந்துமேஜையில் அமர்ந்து மெல்லியகுரலில் விவாதிப்பவர்கள், உலகமெங்குமிருந்து வரும் செய்திகளை வானொலியில் கேட்டுக்கொண்டிருப்பவர்கள். அறிவியலாளர்கள், தத்துவவாதிகள், துப்பறிவாளர்கள்… இன்றைய லண்டனுடன் நமக்கு பெரிய உறவேதுமில்லை. நமக்கு வந்துசேர்ந்து, இன்றைக்கும் நம்மிடம் எஞ்சியிருப்பது அந்த பத்தொன்பதாம்நூற்றண்டு லண்டன்தான்

 

.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஈரோட்டில் இருந்து…

$
0
0

d

 

வெண்முரசின் அடுத்த நாவலுக்கான உளநிலையில் இருக்கிறேன். இதை ஒரு திகைப்பு என்று சொல்லலாம். எப்போதுமே தொடங்குவது வரை அடுத்து என்ன எழுதப்போகிறேன் என்ற பதற்றம்தான் இருக்கும். நாவலின் வடிவம் குறித்த எந்தத் திட்டமும் இருக்காது. முதல் அத்தியாயம்தான் மொத்த நாவலின் வடிவையும் முடிவுசெய்கிறது. அந்த முதல் அத்தியாயத்தை முதல் வரி, முதல் பத்தி முடிவுசெய்கிறது. முதல் அத்தியாயத்தை மையமாகக்கொண்டு தேடிக்கண்டடைந்துகொண்டே செல்வது என் பணி

 

இத்தகைய சூழலில் எப்போதும் ஐயங்கள் அலைக்கழிக்கின்றன. எழுதியவை சென்றடைகின்றனவா என்ற ஐயம் படுத்தி எடுக்காத எழுத்தாளன் இல்லை. அதிலும் இத்தகைய பெரிய ஆக்கம், ஒன்றுக்குமேற்பட்ட தளங்களைத் தொட்டுச்செல்லும் படைப்பு, ஓரளவேனும் வாசிக்கப்படுவதற்கு ஆழ்ந்த கவனம் தேவை. நுட்பமானவற்றை தொட்டுணரும் தன்மையும் ,உணர்வுரீதியாக அணுகும் கூர்மையும், முன்முடிவுகளையும் முந்தைய வாசிப்புப்பழக்கங்களையும் கடந்துசெல்லும் சுதந்திரமும் தேவை. அத்துடன் தொடர்ச்சியாக வாசித்தவற்றைத் தொகுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. அத்தகையோர் நம் சூழலில் பெரும்பாலும் வெளிக்குத்தெரிவதில்லை

 

வெண்முரசு எழுதத் தொடங்கும்போது நான் எதிர்பார்த்தது நூறு வாசகர்களை. அவர்கள் இறுதிவரை வாசிக்கவேண்டும் என்று விரும்பினேன். இன்று உருவாகியிருக்கும் மாபெரும் வாசகப்பரப்பு மிக வியப்புக்குரியது. இத்தனை ஆயிரம்பேர் இத்தனை ஆயிரம் பக்கங்களை வாசிப்பது தமிழில் இதற்கு முன் நடந்திருக்காது. அத்துடன் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும் நுண்வாசிப்புகள் இதை ஊக்கம் குன்றாமல் எழுதிச்செல்ல உதவுகின்றன. பிற எவரையும் விட அவ்வாசகர்களுக்கு நான் கடன்பட்டவன்

வேணுவெட்ராயன்

வேணுவெட்ராயன்

 

தாமரைக்கண்ணன் பாண்டிச்சேரி

தாமரைக்கண்ணன் பாண்டிச்சேரி

மணிபாரதி,அந்தியூர் மணி

மணிபாரதி,அந்தியூர் மணி

இத்தகைய நூல்களை கூட்டுவாசிப்பினூடாகவே அறியமுடியும். ஒருவர் விட்ட தளத்தை இன்னொருவர் நிரப்புவதனூடாக நிகழும் வாசிப்பு ஒன்றாகத் திரள்கையில் ஒரு பேருள்ளத்தின் அறிதலாக மாறிவிடுகிறது. கடிதங்கள், குழுமங்கள் வழியாகவும் பாண்டிச்சேரி, சென்னை போன்ற ஊர்களில் நிகழும் விவாத அரங்குகள் வழியாகவும் அந்த கூட்டுவாசிப்பு நிகழ்கிறது. ஆனால் எதிலும் நான் கலந்துகொள்வதில்லை. ஏனென்றால், வாசிப்புக்கு ஏற்ப புனைவு மாற்றம்கொள்ளக் கூடாது. எழுதும்போது அங்கே வாசகனே இல்லை. அது ஆசிரியனுக்கு மட்டுமே உரிய கனவுலகு. மேலும் இன்றுள்ள வாசகனுக்காக புனைவுகள் எழுதப்படுவதில்லை. வழிவழியாக வந்துகொண்டிருக்கும் வாசகனையே புனைவுகள் எதிர்கொள்கின்றன. இன்றைய சுவை, இன்றைய கருத்துநிலை ஆகியவை இலக்கியத்துக்கு ஒரு பொருட்டே அல்ல. நிகழ்கால மதிப்பீடுகளால் அல்ல, காலமிலா ஆழத்திலுள்ள ஆசிரியனின் கனவில், இலட்சியத்தில் இருந்தே படைப்புக்கள் உருவாகவேண்டும்.

 

இதுவரை சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் நிகழ்ந்த இரு வாசகர்கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவை இரண்டுமே மிக உளநிறைவளிப்பவையாக இருந்தன. அவை தொடங்கி சிலகாலம் ஆகிவிட்டிருந்தமையால் கூட்டுவாசிப்பு ஒவ்வொருவரையும் நுண்ணிய வாசகராக ஆக்கிவிட்டிருந்ததை உணரமுடிந்தது. அந்த நம்பிக்கையே ஈரோட்டில் நிகழ்ந்த வெண்முரசு கூட்டத்திற்குச் செல்ல ஊக்குவித்தது. ஆயினும் விவாதங்கள் நிகழும் முதல்நாள் செல்ல நான் விரும்பவில்லை. இரண்டாம்நாள் மதியம் நண்பர்களையும் வாசகர்களையும் சந்திக்கத்தான் முதன்மையாகச் சென்றேன்.

IMG_2138

ஐரோப்பா பயணத்தினூடாக முந்தைய நாவலில் இருந்து பெருமளவுக்கு விலகி வந்துவிட்டேன். ஈரோட்டுக்குச் சென்று அடுத்த நாவலுக்கான தூண்டுதலைப் பெறவேண்டுமென்று தோன்றியது. ஈரோட்டுக்கு 25 ஆம் தேதி இரவு ரயிலில் சென்று அதிகாலையில் இறங்கினேன். கிருஷ்ணன், அந்தியூர் மணி, சந்திரசேகர் ஆகியோர் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார்கள். டீ குடித்துவிட்டு பேருந்தில் வந்திறங்கிய பாலசுந்தரையும் உடன் அழைத்துக்கொண்டு கிளம்பினோம். நண்பர் செந்தில்குமார் வீட்டில் குளித்துவிட்டு காஞ்சிகோயிலில் அமைந்த பண்ணைவீட்டுக்குச் சென்றேன்

 

முந்தையநாள் நிகழ்ந்த சந்திப்புக்கு வந்த நண்பர்கள் காலைநடை சென்றிருந்தார்கள். பேசிக்கொண்டிருக்கையிலேயே ஒவ்வொருவராக வந்தார்கள். மறுநாள் நிகழ்ச்சிக்கு மேலும் நண்பர்கள் வந்தனர். காலைச்சிற்றுண்டிக்குப்பின் அமர்வுகள் தொடங்கின. அந்தியூர் மணி [மணிபாரதி] வெண்முரசில் உள்ள வேறு இலக்கியங்களின் எடுத்தாள்கை பற்றி பேசினார். பாண்டிச்சேரி கமலக்கண்ணன் மழைப்பாடலின் குறியீடுகள், உணர்ச்சித்தருணங்கள் பற்றிப் பேசினார். திருமூலநாதன் மழைப்பாடலில் தமிழ்ச்செவ்விலக்கியங்களின் வரிகள் எவ்வகையில் ஆளப்பட்டுள்ளன என்று பேசினார். வேணு வெட்ராயன் நீலம் நாவலின் புனைவாக்கத்தை உளவியல் கோணத்தில் ஆராய்ந்து பேசினார்.அக்கட்டுரைகளைப்பற்றி விவாதங்கள் நிகழ்ந்தன.

20180826_084543

முந்தையநாள் நிகழ்வுகளைப்பற்றி கிருஷ்ணன் சொன்னார். மதுசூதனன் சம்பத் முதல் அரங்கைச் சிறப்பான ஓர் உரையுடன் தொடங்கிவைத்தார் என்றும் ஜெயகாந்த் ராஜு, ராகவ், ரகு, பாரி ஆகியோரின் கட்டுரைகளும் பங்களிப்பும் மிகச்சிறப்பாக இருந்தது என்றும் சொன்னார். நான் பத்துநிமிடம் வெண்முரசு குறித்து உரையாடி அதன்பின் கேள்விகளுக்கு மறுமொழி சொன்னேன். பின்னர் வழக்கம்போல அரட்டை. மதியத்துடன் நிகழ்ச்சி முடிந்தது. நண்பர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றார்கள். மாலையில் கிளம்பி ஈரோடு வந்தேன். இரவு ஒன்பது மணிக்கு எனக்கு நாகர்கோயிலுக்குப் பேருந்து.

 

ஒரு படைப்பை எழுதும் எழுத்தாளனுக்கு எழுதும்போதும்சரி, பின்னரும் சரி திறனாய்வுகளால் எப்பயனும் இல்லை. சொல்லப்போனால் எதிர்விளைவே உருவாகும். திறனாய்வுகள் அவற்றின் உச்சநிலையில்கூட சமகாலம் சார்ந்தவை. நிகழ்காலம் நோக்கி எழுதும் கட்டாயத்தை ஆசிரியனுக்கு அளிப்பவை. நிகழ்கால அறிவுத்தளம் படைப்புக்கு மிகப்பின்னால் எங்கோதான் நின்றிருக்கும்.  திறனாய்வின் நோக்கம் ஒன்றே, மேலும் கூர்ந்த வாசிப்பை, கூட்டுவாசிப்பை உருவாக்குவது. அவ்வாசிப்பினூடாகத்தான் படைப்பை நோக்கி வாசகன் வந்தடைகிறான்.

 

ஆனால் படைப்பு பரவலாகப் படிக்கப்படுகிறது, நுட்பமாக பின்தொடரப்படுகிறது என்பதைப்போல ஆசிரியனுக்கு ஊக்கமூட்டுவதும் வேறில்லை. அவன் எதிர்வினைகளைக் கவனிப்பது அதற்காக மட்டுமே. இவ்விரட்டைநிலை ஒருவகையான அலைபாய்தல்தான். ஈரோடு சந்திப்பு மீண்டும் என் வாசகர்களைப் பற்றிய நம்பிக்கையை உறுதிசெய்தது.

IMG_2142

செல்லும்போது ரயிலில் அருணாச்சலம் மகாராஜன் எழுதிய கிராதம் குறித்த கட்டுரையை வாசித்தேன். மிக விரிவாக, நாவலின் பல்வேறுகூறுகளைக் கருத்தில்கொண்டு எழுதப்பட்ட நுட்பமான கட்டுரை அது. கிராதம் இப்போது நான் கடந்துவந்துவிட்ட நாவல்.அக்கட்டுரையினூடாக முற்றிலும் புதியதாக அந்நாவலை நான் சென்று உணர்ந்தேன். அது ஓர் ஊக்கத்தை அளித்தது. மிக அருகே அருணாச்சலம் மகாராஜனை உணர்ந்தேன்.[கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்]

 

திரும்பி வரும்போது தோன்றியது ஒருவேளை நாளையே திசைதேர்வெள்ளம் நாவலைத் தொடங்கிவிடுவேன் என்று. இன்று தொடங்கிவிட்டேன்.

 

கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

காந்தி சில நினைவுகள் – ஹரிஹர சர்மா

$
0
0

photo_133

 

காந்திஜியுடன் தொண்டு செய்யத் தொடங்குமுன் நானும் இந்தியாவிலேயே நடந்த முதல் அரசியல் புரட்சிக்குழுவில் சேர்ந்திருந்தது பலருக்குத் தெரியாது. நீல கண்டப் பிரம்மச்சாரி (தற்காலம் ஸ்ரீ ஓம்கார்ஸ்வாமி), வாஞ்சி, சங்கரகிருஷ்ணன் முதலியோரோடு குழுவில் முக்கிய பங்கு கொண்டிருந்தேன். காந்திஜியையும் அவரது தென்னாப்ரிக்கா சத்தியாகிரகப் பணியையும் அறிந்ததும் புரட்சிக் குழுவிலிருந்து விலகி காந்திஜியைச் சந்தித்து அவருடனே பணியாற்ற வேண்டுமென்று உறுதிக் கொண்டேன்

 

காந்தி சில நினைவுகள் – ஹரிஹர சர்மா

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஐரோப்பா-5, அடித்தளத்தின் குருதி

$
0
0

 

lona

 

என் அம்மாவின் மலையாள நூல் சேகரிப்பில் இரு விந்தையான நூல்கள் இருந்தன. இரண்டுமே மொழியாக்கநூல்கள். ஒன்று கோட்டயத்த்தில் வாழ்ந்த ரிச்சர்ட் காலின்ஸ் என்னும் பாதிரியாரின் மனைவியான ஃப்ரான்ஸிஸ் வைட் காலின்ஸ் [Mrs Frances Wright Collins] 19 ஆம் நூற்றாண்டில் எழுதிய The Slayer Slain என்னும் ஆங்கில நாவலின் மலையாள மொழியாக்கமான காதக வதம். கோட்டயத்திலிருந்து அந்நாளில் வெளிவந்துகொண்டிருந்த கிறித்தவ இறையியல் இதழான வித்யா சம்கிரஹ் அதை வெளியிட்டது. வைட் அந்நாவலை முழுமையாக்கவில்லை.அதை அவர் கணவர் எழுதி முழுமையாக்கினார். இன்னொன்று லண்டன் கொட்டாரத்திலே ரஹஸ்யங்கள். George W. M. Reynolds என்னும் பிரிட்டிஷ் எழுத்தாளர் எழுதிய  The Mysteries of the Court of London என்னும் நாவலின் தொன்மையான மொழியாக்கம்.

 

 

இரு நூல்களுமே பைபிளை செய்யுளில் எழுதியதுபோன்ற நடை கொண்டவை. நான் அவற்றை பலமுறை வாசிக்கமுயன்று தோற்றேன். முதல்நாவல் 1872 லும் இரண்டாவது நாவல் 1910 லும் வெளிவந்திருந்தன. அவற்றை அம்மா எங்கோ கைவிடப்பட்ட நூலகமொன்றிலிருந்து வாங்கியிருந்தாள்.  காதக வதத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது, அது ஒரு நல்லுபதேசக் கதை. பின்னாளைய மலையாள நாவல் இலக்கியத்திற்கு அது தொடக்கமாக அமைந்தது. மேலும் பல ஆண்டுகள் கடந்தே 1889ல் முதல் மலையாள நாவலாகக் கருதப்படும் இந்துலேகா [ஒ.சந்துமேனன்] வெளிவந்தது. நடுவே இந்த லண்டன் அரண்மனை ரகசியங்கள் ஏன் சம்பந்தமே இல்லாமல் வெளிவந்தது என எண்ணி வியந்திருக்கிறேன்

reyno

 

George William MacArthur Reynolds  [1814 – 1879] பிரிட்டிஷ் எழுத்தாளர், இதழியலாளர். ராணுவ அதிகாரியின் மகனாகப்பிறந்தார். ராணுவப்பயிற்சி பெற்றபின் எழுத்தை வாழ்க்கையாகத் தேர்வுசெய்தார்.வாழ்நாளின் பெரும்பகுதியை பிரான்ஸில் கழித்தவர். மதுவிலக்குக் கொள்கைகொண்டவர், அதற்காக ஒரு இதழையும் நடத்தியிருக்கிறார். [The Teetotaler ].தாக்கரே, டிக்கன்ஸ் ஆகியோரின் காலகட்டத்தில் அவர்களைவிடவும் பிரபலமாக இருந்திருக்கிறார். பெரும்பாலும் வணிகக்கேளிக்கை எழுத்துக்களை எழுதினார்.மிக விரைவிலேயே மறக்கப்பட்ட ரெய்னால்ட்ஸின் நாவல்கள் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் விரும்பப்பட்டவை. இந்தியாவில் பெரும்பாலான பழைய நூலகங்களில் அவை இருக்கும்.

 

 

இந்திய மொழிகள் பலவற்றில் ரெய்னால்ட்ஸின் நாவல்கள் ஆரம்பகாலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவற்றைத் தழுவி எழுதப்பட்ட மர்மக் கதைகள் வழியாகவே இந்தியாவில் ஆரம்பகால வணிகக் கேளிக்கை எழுத்துக்கள் தோன்றின. மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் ‘பிரதாப முதலியார் சரித்திரத்தில்’ [1884] ரெய்னால்ட்ஸின் பாதிப்பு நிறைய உண்டு. மறைமலை அடிகளின் கோகிலாம்பாள் கடிதங்கள் [1931] போன்ற அக்கால நாவல்களில் ரெய்னால்ட்ஸின் நேரடி செல்வாக்கைக் காணலாம். நம்பமுடியாத இடத்தில் நிலவறை ஒன்று திறந்தால், சாக்சத் திருப்பங்கள் மூலம் கதாபாத்திரங்கள் வெளிப்பட்டால் அங்கே ரெயினால்ட்ஸ் நின்றிருக்கிறார்.

lonb

 

ரெய்னால்ட்ஸின் The Mysteries of London என்னும் நாவலின் தொடர்ச்சிதான்  The Mysteries of the Court of London . இவை  ’நகர்மர்ம’ வகை கதைகள். [City mystery]. ஒரு நகரத்தின் மர்மங்களை கற்பனையாகச் சொல்லிச்செல்லும் படைப்புக்கள் இவை. பெரும்பாலும் தொன்மையான நகரங்களே கதைக்களமாக இருக்கும். கண்ணுக்குத் தெரியும் நகரத்தின் அடியில் மேலும் பல அறியா நகர அடுக்குகள் இருப்பதாகவும் அங்கே செல்லும் சுரங்கவழிகள் உண்டு என்றும் இவை புனைந்துகொள்ளும். ரெய்னால்ட்ஸின் நாவலில் சுரங்கங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் லண்டனே மாபெரும் எலிவளைகளின் தொகுப்புதான் என்னும் எண்ணத்தை அடைந்தேன்.

 

லண்டன் நண்பர்கள் மாறி மாறி என்னை சுற்றிக்காட்டும் பொறுப்பை எடுத்துக்கொண்டார்கள். பெரும்பாலும் சிறில் அலெக்ஸ். அவ்வப்போது சிவா கிருஷ்ணமூர்த்தி. சிவா கிருஷ்ணமூர்த்தி ஈரோட்டுக்காரர். லண்டனைப் பின்னணியாகக் கொண்ட சிறுகதைகளை இணைய இதழ்களில் எழுதி வருபவர். சமீபத்தில் குறிப்பிடத்தக்க பல கதைகளை எழுதியிருக்கிறார்

சிவா கிருஷ்ணமூர்த்தி

சிவா கிருஷ்ணமூர்த்தி

 

லண்டனில் நண்பர்களுடன் நடந்துகொண்டிருந்தபோது ரெய்னால்ட்ஸ் நினைவுக்கு வந்தபடியே இருந்தார். நான் நடந்துகொண்டிருந்த நிலத்துக்கு அடியில் இன்னொரு லண்டன் இருக்கிறது. அதற்கும் அடியில் இன்னொன்று. தொன்மையான நகரங்களுக்கு அப்படி பல அடுக்குகள் உண்டு. வரணாசியில் பெரிய வணிகமையங்களும் ஆடம்பரத் திரையரங்குகளும் கொண்ட பகுதியில் இருந்து கங்கைக்கரை வரைச் சென்றால் எளிதாக நாநூறாண்டுகளை கடந்து காலத்தில் பின்னால் சென்றுவிடலாம். அவ்வாறு ஆழம் மிக்க நகரங்களைப் பற்றித்தான் அத்தகைய  நகர்மர்ம நாவல்களை எழுதமுடியும்.

 

லண்டன் மாநகருக்கு இரண்டாயிரமாண்டுக் கால எழுதப்பட்ட வரலாறுண்டு.  அவ்வகையில் உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்று அது. 1136 ல் ஜியோஃப்ரீ மோன்மோத்  [Geoffrey of Monmout ] என்ற பாதிரியாரால் பிரிட்டனின் ஆட்சியாளர்களின் வரலாற்றைச் சொல்லும்பொருட்டு எழுதப்பட்ட தொன்மத் தொகுதியான Historia regum Britanniae லண்டன் நகரம் ப்ருட்டஸ் ஆஃப் டிராய் என்பவரால் நிறுவப்பட்டது என்கிறது,. அவர் டிராய் நகரை மீட்கும் போருக்குச் சென்று மீண்டவரான ஏனியாஸ் [Aeneas] என்னும் தொன்மக் கதாநாயகனின் வம்சத்தில் வந்தவர். Historia Britonum என்னும் ஒன்பதாம் நூற்றாண்டு தொன்மத் தொகைநூலில் இவருடைய கதைவருகிறது. புருட்டஸ் பிரிட்டிஷ் நிலத்துக்கு வரும்போது அங்கே அரக்கர்கள் வாழ்ந்துவந்தார்கள். கடைசி அரக்கனாகிய கோக்மகோக் Gogmagog புரூட்டஸால் கொல்லப்பட்டான். புரூட்டஸ் அங்கே ஓர் ஊரை உருவாக்கினார். அதுவே லண்டன். இது கிமு ஆயிரத்தில் நிகழ்ந்தது என்கிறது ஹிஸ்டோரியா ரீகம் பிரிட்டன். அதை ஒரு தொன்மமாக மட்டுமே ஆய்வாளர் நோக்குகிறார்கள். ஆனால்  கிரேக்கக் குடியிருப்பாளர்கள் தொல்குடியினரை வென்று அந்நிலத்தைக் கைப்பற்றியமைக்குச் சான்று அது.

 

Brutus of Troy

Brutus of Troy

 

இங்கே வாழ்ந்த தொல்கால மக்களைப் பற்றிய செய்திகள் அரிதாகவே கிடைக்கின்றன. ஜியோஃப்ரி கிறிஸ்துவுக்கு முன்பு அப்பகுதியை ஆண்ட தொன்மையான அரசர்களின் [கற்பனைப்] பட்டியலை அளிக்கிறார். அவர்களில் லுட் [Lud] என்பவர் Caer Ludein என அந்நகரத்துக்குப் பெயரிட்டார். அது மருவி லண்டன் என்று ஆனது என்று ஜியோஃப்ரியின் நூல் குறிப்பிடுகிறது. லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் வெண்கலக் காலகட்டத்து தொல்லியல் தடையங்கள் கிடைத்துள்ளன. தேம்ஸுக்கு குறுக்காகக் கட்டப்பட்டிருந்த மரப்பாலம் ஒன்றின் அடித்தண்டுகள் 1993ல் ஓர் ஆய்வில் கண்டெடுக்கப்பட்டன

 

 

கிபி 43ல் இங்கிலாந்து மண்ணின்மேல் ரோமாபுரி படையெடுத்துவந்து நிரந்தரக் குடியிருப்பை அமைத்தது. அப்போதுதான் வரலாற்றுநோக்கில் லண்டன் [ Londinium]  உருவானது. தேம்ஸின் பாலம் அமைப்பதற்குரிய வகையில் மிகக்குறுகிய பகுதியில் நகரம் உருவானது. அது அக்காலத்தைய வழக்கப்படி ஆற்றங்கரையில் அமைந்த துறைமுகம். கலங்கள் தேம்ஸ் வழியாக உள்ளே வந்தன. கிபி ஆறாம் நூற்றாண்டில் ஜெர்மானிய பழங்குடிகளான ஆங்கிலோ சாக்சன்கள் பிரிட்டன் மேல் படைகொண்டுவந்து லண்டனைக் கைப்பற்றிக் குடியேறினர். பதினொன்றாம் நூற்றாண்டில் பிரெஞ்சு நிலப்பகுதியாகிய நார்மண்டியைச் சேர்ந்த நார்மன்கள் ஆங்கிலோ சாக்ஸன்களை வென்று லண்டனைக் கைப்பற்றினர்.  பதினைந்தாம் நூற்றாண்டில் அயர்லாந்தின் பிரபுவான ஹென்றி டியூடர் [Henry Tudor] ஏழாம் ஹென்றி என்றபேரில் லண்டனைக் கைப்பற்றினார். ஒருங்கிணைந்த பிரிட்டனின் சிற்பி என அவர் கருதப்படுகிறார். அதுவரை ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் ஒன்றுடன் ஒன்றுபோரிடும் இனக்குழுக்களின் தொகுப்பாக இருந்த பிரிட்டன் அதன் பின்னர் உலகப்பேரரசாக எழுந்தது.  ரத்தினச் சுருக்கமாக இதுவே லண்டனின் வரலாறு

 

lond

ரெய்னால்ட்ஸின் நாவலை இன்று நினைவுகூர்ந்தால் அது மூழ்கிச்செல்லும் காலகட்டம் லண்டனின் புகழ்பெற்ற மதப்பூசல்களின் யுகம் எனத் தெரிகிறது. மதப்பூசலின் அடியில் இனவேறுபாட்டின் காழ்ப்புகள் இருந்தன. அவை அதிகாரப்போர்களாக ஆகி அரண்மனைச் சதிகளாக வெளிப்பட்டன. லண்டன் என்பது ஸ்காட்லாந்தும் அயர்லாந்தும்  இங்கிலாந்தும் முட்டிக்கொள்ள்ளும் உயர்விசைப்புள்ளி அல்லவா? ரெய்னால்ட்ஸ் வெறும் கொலைகள், அவற்றை கண்டடைதல் என்றே கதை சொல்லிச் செல்கிறார். ஆனால் அக்கதைகள் நின்றிருக்கும் களம் அங்கே இருந்தது

 

 

இந்தியாவில் அப்படி சிலநகரங்களை வைத்து எழுதமுடியும். தமிழகத்தில் மதுரையும் காஞ்சியும். ஆனால் எழுதப்பட்டதில்லை. டெல்லி பற்றி நிறையவே எழுதலாம், ஆனால் குறைவாகவே எழுதப்பட்டுள்ளது. வரணாசியின் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ள சிவ்பிரசாத் சிங்கின் நீலநிலா, உஜ்ஜயினியின் பின்னணியில் எழுதப்பட்டுள்ள அமர் மித்ராவின் துருவன் மகன் போன்றவை வரலாற்றுநாவல்களே ஒழிய நகர்மர்மக் கதைகள் அல்ல. நகர்மர்மக் கதைகளுக்கு ஒரு கட்டமைப்பு உள்ளது. அவை நிலைகொள்ளும் அதிகார அமைப்புக்கு அடியிலுள்ள புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகளைச் சுட்டிக்காட்டும் தன்மை கொண்டவை

lonc

மாபெரும் சகடம், உடன் நண்பர் சதீஷ்

 

 

லண்டனின் புகழ்பெற்ற நிலஅடையாளங்களை நின்று நோக்கியபடி நானும் அருண்மொழியும் நண்பர்களுடன் நடந்தோம். சிறில் அலெக்ஸ் வீட்டில்தான் தங்கியிருந்தோம். அவர் நகருக்கு சற்று வெளியே இருந்தார். அங்கிருந்து நிலத்தடி ரயிலில் லண்டன் நகருக்குள் புகுந்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு ரயில்களில் ஏறி நகர்ச்சாலைகளில் வெளிப்பட்டோம். தலைக்குமேல் நகரம் கொந்தளித்துக்கொண்டிருக்க உள்ளே நகரின் குடல்களினூடாக ரெயினால்ட்ஸின் சுரங்கப்பாதைகளில்  செல்வதுபோலப் பயணம் செய்தோம்.பெருச்சாளிகள் வளைகளிலிருந்து வெளிவருவதுபோல. அல்லது விட்டில்கள் பெருகிஎழுவதுபோல. எங்களைக் காத்து நின்றிருந்த நண்பர்களுடன் பேசியபடி நகரை பெரும்பாலும் நடந்தே உணர்ந்தோம்.

 

 

நியூயார்க்கின் டைம் ஸ்குயரில் நிற்கையில் எனக்குப் பட்டது, அது மிக அதிகமாகப் பார்க்கப்பட்ட ஓர் இடம் என்று. லண்டனைப்பற்றியும் அதுவே தோன்றியது. எங்குநோக்கினாலும் சுற்றுலாப்பயணிகள். புகைப்படங்கள் எடுப்பவர்கள், சாப்பிடுபவர்கள், வேடிக்கை பார்த்து பேசிச்சிரிப்பவர்கள். புகழ்பெற்ற லண்டன் பாலம். தேம்ஸ் நீலக்கலங்கலாக ஓடியது. அதில் படகுகள் வெண்பாய் விரித்து பறப்பவைபோலச் சென்றன. பாலத்தில் நின்றபடி தேம்ஸின் நீர்ப்பரப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். நீர் கண்ணெதிரிலேயே குறைய தரைவிளிம்பு தெரியலாயிற்று. நகர்நடுவே ஓடும் நதிகளுக்குரிய துயரம். நகரின் கழிவுகளைச் சுமந்தாகவேண்டும். எத்தனை தூய்மைப்படுத்தினாலும், என்னென்ன சட்டங்கள் இருந்தாலும் அது மாசுபடுவதை தடுக்கவியலாது. அந்த நீரிலும் மென்படகுகளில் இளைஞர்கள் விளையாட்டுத்துழாவலில் ஈடுபட்டிருந்தார்கள்.

 

thames

இத்தகைய பயணங்களில் நாம் பழகிய தடங்களினூடாக அடித்துச் செல்லப்படுகிறோம். நாம் என்ன பார்க்கவேண்டும் என்பதை லண்டனின் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் சென்றுதேய்ந்த தடத்தினூடாக முடிவுசெய்து வைத்திருக்கிறார்கள். வேறு வழியாக நாம் செல்லவே முடியாது. சுற்றுலா மையங்கள் அறுதியாக வரையறைசெய்யப்பட்ட அர்த்தம் கொண்டவை. நாம் சென்றுநோக்கும் ஒரு வரலாற்றுத்தலம் நம்மால் அர்த்தப்படுத்தப்படுகிறது, நம்முள் விரிவடைகிறது. சுற்றுலாமையங்களில் விடுபடுவது அதுதான்

 

 

தேம்ஸின் கரையோரமாக வேடிக்கை பார்த்தோம். தெருப்பாடகர்கள், இசைக்கலைஞர்கள், நினைவுப்பொருட்கள் விற்பவர்கள், ஓவியர்கள்… வெவ்வேறுவகையான முகங்கள். நம்பமுடியாதபடி மாறுபட்ட தலைமயிர் அலங்காரங்கள். மானுட முகம் என ஒன்று உண்டா என்றே ஐயம் எழும். மஞ்சளினத்தின் முகமும் கறுப்பினத்தின் முகமும் உறுப்புகளின் அமைப்பால் மட்டுமே ஒன்று என்று தோன்றும். ஆனால் புன்னகையில் ஒளிரும் அன்பு, சிரிப்பு, தன்னுள் ஆழ்ந்திருக்கும் அழுத்தம் என முகங்களின் உணர்வுகள் மானுடம் முழுக்க ஒன்றே

lons

 

நான்கு நாட்கள் லண்டனில் கண்ட வெவ்வேறு இடங்களைப்பற்றி விரிவாகவே எழுதலாம், ஆனால் இன்றைய இணைய உலகில் செய்திகள் மிக எளிதாக எங்கும் கிடைக்கின்றன. நான் எழுத எண்ணுவது என் உள்ளம் எவற்றையெல்லாம் அவற்றுடன் இணைத்துக்கொண்டது என்பதைப்பற்றி மட்டுமே. அதன் தர்க்கமென்ன என்பதிலுள்ளது இந்நிலத்தை இன்று நான் எப்படி உள்வாங்கிக்கொள்கிறேன் என்பது, இந்நிலம் என் பின்புலத்திற்கு என்னவாகப் பொருள்கொண்டது என்பது

 

 

லண்டனின் கண் எனப்படும் மாபெரும் சக்கரராட்டினம் லண்டனின் அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதன்மேலேறி லண்டனை பார்ப்பதென்பது ஓரு சுற்றுலாச் சடங்கு. ஏற்கனவே அமெரிக்காவில் டிஸ்னிலேண்டிலும் யூனிவர்சல் ஸ்டுடியோவிலும் மாபெரும் ரங்கராட்டினங்களில் ஏறியிருக்கிறேன். என்ன வேடிக்கை என்றால் அப்போதும் சிறில் அலெக்ஸ்தான் உடனிருந்தார். ஆனால் சுற்றுலாக்களின் மகிழ்ச்சிகளில் ஒன்று எல்லா தன்னிலைகளையும் கழற்றிவிட்டு நாமும் சுற்றுலாப்பயணியாக அவ்வப்போது ஆவது. ஆகவே நானும் அருண்மொழியும் அதில் ஏறிக்கொண்டு வானுக்கும் மண்ணுக்கும் சுற்றிவந்தோம். அதன் மேலே சென்றால் லண்டனைப் பார்க்கலாம் என்றார்கள். நான் பார்த்தது தலைசுற்றச்செய்யும் ஒளிப்பிழம்புகளின் சுழியை மட்டுமே

 

buckingham-palace

394 அடி விட்டம் கொண்ட பெரும் சக்கரம் இது. மெர்லின் எண்டர்டெயினர்ஸ் அமைப்புக்குச் சொந்தமானது. ஜூலியா ஃபார்பீல்ட் மற்றும் டேவிட் மார்க்ஸ் என்னும் நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டது. மில்லினியம் நிறைவை ஒட்டி 2000 ஜனவரி ஒன்றாம்தேதி பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டது. இத்தகைய சக்கரங்களிலுள்ள இன்பம் என்பது ‘பத்திரமான அபாயம்’தான். நம் தர்க்கமனம் அபாயமில்லை என்று சொல்கிறது. உடலும் உள்ளமும் அதை உணராது பதறுகின்றன. இறங்கியதும் உடலையும் உள்ளத்தையும் ஏமாற்றிவிட்டதான ஓர் அசட்டுப்பெருமிதம். அந்தச் சிரிப்பை அத்தனை முகங்களிலும் காணமுடிந்தது.

 

 

லண்டனுக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் மூன்று அரண்மனைகளைத் தவறவிடுவதில்லை.  அவற்றில் பக்கிங்ஹாம் அரண்மனை முதன்மையானது. பிரிட்டனின் அரசியின் உறைவிடம், பிரிட்டிஷ் அரசின் அதிகாரத்தின் குறியீட்டு மையம் இந்த மாபெரும் அரண்மனை. 1703ல் பக்கிங்ஹாம் பிரபுவால் கட்டப்பட்டது. 1761ல் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் இதை தன் அரசி சார்லட்டுக்கான மாளிகையாக கொண்டார்.19 ஆம் நூற்றாண்டில் சிற்பிகளான ஜான் நாஷ், எட்வர்ட் ப்ளோர் ஆகியோர் அதை விரிவாக்கி கட்டினர். 1837ல் விக்டோரிய அரசி அதை தன் மாளிகையாகக் கொண்டார்

 

and

Andrea Palladio

 

பக்கிங்ஹாம் அரண்மனைக்கு முன் அனுமதிபெற்ற சுற்றுலாப்பயணிகள் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுகிறார்கள். நாங்கள் அந்த மாபெரும் கம்பிவாயிலுக்கு வெளியே நின்று அக்கட்டிடத்தை நோக்கினோம். இந்தியாவை நூறாண்டுகள் ஆண்ட மையம் அது என்ற எண்ணமே என்னுள் இருந்தது. மாளிகைகளுக்கு சில பாவனைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமையமாக உருவாகிவிடும் மாளிகைகள் தோரணையும் அலட்சியமும் வெளிப்படும் நிமிர்வு கொண்டிருக்கும். முகவாயை தூக்கிய உயரமான பிரிட்டிஷ் அரசகுடியினரை காணும் உணர்வை அடைந்தேன்

 

 

பக்கிங்ஹாம் அரண்மனை புதுச்செவ்வியல் வடிவிலமைந்தது.[ Neoclassical] பிரிட்டனிலும் ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் பெரும்பாலான அரசுக் கட்டிடங்கள் அந்தப்பாணியில் அமைந்தவையே. இவ்வரசுகளின் அதிகாரக்கொள்கை, அவர்கள் கோரும் பண்பாட்டுத் தொடர்ச்சி ஆகியவற்றை குறியீட்டளவில் மிகச்சிறப்பாக உணர்த்தும் பாணி இது.  இத்தாலியச் சிற்பி அண்டிரியா பல்லாடியோ [Andrea Palladio] இந்தப்பாணியின் முன்னோடி. பண்டைய கிரேக்க, ரோமானியக் கட்டிடக்கலையை ஒட்டி நவீனகாலகட்டத்தின் தேவைகளுக்கேற்ப உருவாக்கப்பட்டது இந்த வடிவம். காட்சியில் தொன்மையான பெருமாளிகைகளின் மாண்பு தெரியும். ரோமானியபாணியின் உயர்ந்த பெருந்தூண்கள் இதன் முகப்படையாளம். நமது பாராளுமன்றமும் இந்த அமைப்பு கொண்டதே. பக்கிங்ஹாம் அரண்மனை ஒரே சமயம் மாளிகை போலவும் பெரிய அணைக்கட்டு போலவும் எனக்கு பிரமை எழுப்பிக்கொண்டிருந்தது

 

famine

சென்னை பஞ்சம் -மெட்ராஸ் மெயில்

 

பக்கிங்ஹாம் என்னும் சொல் சென்னை கவர்னராக இருந்த பக்கிங்ஹாம் அவர்களை நினைவிலெழுப்புகிறது.  அவர் வெட்டியதுதான் விழுப்புரத்திலிருந்து சென்னைவழியாக காக்கிநாடா வரைச் செல்லும் 796 கிலோமீட்டர் தொலைவுள்ள பக்கிங்ஹாம் கால்வாய். டியூக் ஆஃப் பக்கிங்ஹாம் [1823 – 1889] பல்வேறு அரசியல்சூதாடங்களால் சொத்துக்களை இழந்து கடனாளியாகிய நிலையில் ஓர் ஆறுதல்பரிசாக சென்னை கவர்னர் பதவி அவருக்கு 1877ல் வழங்கப்பட்டது. சென்னை மாகாணம் உச்சபட்ச பஞ்சத்தைச் சந்தித்த காலகட்டம் அது. அது ஒரு செயற்கைப் பஞ்சம். இந்தியாவின் கிழக்குப்பகுதி பஞ்சத்தால் அழிந்தபோது மேற்குபகுதியிலிருந்து பெருமளவுக்கு உணவு வெளியே கொண்டுசெல்லப்பட்டது. சென்னையின் பிரிட்டிஷ் நாளிதழான மெட்ராஸ் மெயில் உட்பட இதழாளர்களும், பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்ணீருடன் மன்றாடியும்கூட விசாகபட்டினத்திலிருந்து உணவுத்தானியம் ஏற்றுமதியாவது நிறுத்தப்படவில்லை. அரசு கணக்குகளின்படியே கூட கிட்டத்தட்ட ஒருகோடிபேர் பலியானார்கள். மும்மடங்கினர் அயல்நாடுகளுக்கு அடிமைப்பணிக்காகச் சென்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அன்னியச்சூழலில் அழிந்தனர்.

 

 

அந்தப் பேரழிவுக்கு பக்கிங்ஹாம் ஒருவகையில் பொறுப்பேற்கவேண்டும். அவருடைய ஆட்சி என்பது கட்டுமானத்தொழிலில் இருந்த இந்தியர்கள், ஏற்றுமதியாளர்கள், தோட்டத்தொழில் உரிமையாளர்கள் ஆகியோர் சேர்ந்து செய்த மாபெரும் கூட்டு ஊழலாக மட்டுமே இருந்தது. ஆனால் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களாலும் அவர்களின் அடிபணிந்து வரலாறெழுதியவர்களாலும் அவ்வரலாறு பெரும்பாலும் மறைக்கப்பட்டது, பூசிமெழுகப்பட்டது. முதன்மைக்காரணம், பஞ்சத்தில் பலியானவர்கள் பெரும்பாலும் அடித்தள மக்கள். இன்று மலைமலையாகத் தகவல்களை பிரிட்டிஷ் ஆய்வாளர்களே எடுத்து வைத்தபின்னரும்கூட பிரிட்டிஷ்தாசர்களாகிய இந்தியர்கள் ஒருசாரார் பிரிட்டிஷார் மேல் பிழையில்லை, அவர்கள் சிறந்த நிர்வாகிகள் என பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

 

1024px-GrainFamineMadras

பஞ்சத்தின்போது சென்னையிலிருந்து ஏற்றுமதியான உணவுத்தானியம் – மெட்ராஸ் மெயில்

 

அவர்கள் சொல்வது பிரிட்டிஷார் உருவாக்கிய நிவாரண முகாம்களைப்பற்றி. பிரிட்டிஷார் செய்திருக்கவேண்டியது முதலில் உணவு ஏற்றுமதியை நிறுத்துவது. அது இறுதிவரை செய்யப்படவில்லை. மாறாக நிவாரணநிதி ஒதுக்கப்பட்டு அதில் கட்டுமானங்கள் செய்யப்பட்டன. கட்டுமானம் என்றால் இந்தியாவில் ஊழல் என்றே பொருள். கிட்டத்தட்ட உலகம் முழுக்க அப்படித்தான். அதிலும் பிரிட்டிஷ் இந்தியாவின் அரசுநிர்வாகம் ஊழல் வழியாகவே உருவாகி நிலை நின்ற ஒன்று.

 

 

அந்த ஊழல்மைய நிவாரணப் பணிகளின் உச்சம் பக்கிங்ஹாம் கால்வாய். அருகே கடல் இருக்க உள்நாட்டு படகுப்போக்குவரத்துக்கு அத்தனை பெரிய கால்வாய் என்பதே ஒரு வேடிக்கை. அந்த மாபெரும் அமைப்பு வெறும் ஐம்பதாண்டுகள் கூட பயன்பாட்டில் இருக்கவில்லை. சொல்லப்போனால் எப்போதுமே முழுமையாக பயன்பாட்டில் இருக்கவில்லை. அதனுடன் இணைக்கப்பட்டிருந்த இயற்கையான உள்கடல்கள் மட்டுமே சிறிதுகாலம் பயன்பாட்டிலிருந்தன. தொடர்ந்து மணல்மூடிக்கொண்டிருக்கும் இடத்தில் அமைந்த அக்கால்வாயை பராமரிப்பது இயல்வதல்ல என்பதனால் அது கைவிடப்பட்டது. இன்று கிட்டத்தட்ட மறைந்தேவிட்டது. பிரிட்டிஷாரின் நிர்வாகத்திறன், பொறியியல் திறன் ஆகியவற்றை விதந்தோதுபவர்கள் அந்த மாபெரும் தோல்வியை, ஊதாரித்தனத்தை , ஊழலை கருத்தில்கொள்வதேயில்லை.

buk

பக்கிங்ஹாம் பிரபு

 

பக்கிங்ஹாம் என்ற சொல்லை கால்வாயுடன் , பஞ்சத்துடன் இணைக்காமலிருக்க என்னால் இயலவில்லை. ரெயினால்ட்ஸின் கதைநாயகனாக அந்த அரண்மனையின் ஆழ்ந்த சுரங்கங்கள் வழியாகச் சென்றால் அடுக்கடுக்காக செல்லும் அதன் அடித்தள வரலாற்றில் எங்கே சென்று சேர்வேன்? கோடிக்கணக்கான எலும்புகளும் மண்டையோடுகளும் குவிந்துகிடக்கும் ஒரு வெளிக்கா என்ன?

 

 

பக்கிங்ஹாம் கால்வாயுடன் இணைந்து நினைவுக்கு வந்தவர் காந்தி. 1930 ல் வட்டமேஜை மாநாட்டுக்காக லண்டன் வந்த காந்தி பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆறாம் ஜார்ஜ் மன்னரை  சந்திக்கச்சென்றபோது சம்பிரதாயங்களையும் மீறி எளிய அரையாடை அணிந்திருந்தார்.  அவ்வெண்ணம் வந்தபோது மீண்டும் பக்கிங்ஹாம் மாளிகையை நிமிர்ந்து பார்த்தேன்.  அந்த மாளிகையே மன்னரைப்போலத் தோன்றியது. சரோஜினி நாயுடுவுடன் காந்தி கைத்தடி ஊன்றி நடந்துவரும் காட்சி என் உள்ளத்தில் எழுந்தது.

 

gandhi-handshake-with-king-george

காந்தி 1921 செப்டெம்பரில் மதுரைக்கு வந்து இங்கிருந்த பஞ்சத்தில் நலிந்த விவசாயிகளின் கந்தலணிந்த மெலிந்த உடல்களைக் கண்டபின்னரே அந்த ஆடைக்கு மாறினார். மாபெரும் பஞ்சத்தின் பலியாடுகளில் ஒருவராக அவரும் ஆனார். அவர்களின் பிரதிநிதியாகச் சென்று பக்கிங்ஹாம் அரண்மனையில்  ‘தேவைக்குமேல்’ ஆடையும் அணிகளும் அணிந்திருந்த அரசர் முன் நின்றார். ஒருங்கிணைந்த இந்தியாவின் ஆற்றலின் அடையாளமாக ஆனார். அது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் ஒட்டுமொத்தச் சுரண்டலுக்கும் எதிராக இந்தியாவின் பதில்.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஹோம்ஸ்- கடிதங்கள்

$
0
0

lead_large

ஐரோப்பா-4, நுண்ணோக்கிகள்

 

வணக்கம் திரு ஜெயமோகன்

 

 

 

ஷெர்லாக் ஹோம்ஸ் இன்றும்  இந்தியாவில் பள்ளிகளில் ஆங்கில பாடபகுதியாக உள்ளது, வுட்ஹவுஸும் அதுபோலதான். இங்கிலாந்திலேயே இவற்றை இன்று படிப்பவர்கள் குறைவு என்றபோதும் இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

 

 

 

நாம் ஆங்கிலேயர்களின் கீழிருந்த காலத்தில் நாமும் பிரிட்டிஷ் கனவான்கள போல் ஆக வேண்டும் என கருதி ஷெர்லாக் ஹோம்சும் வுட்ஹவுஸ் நூல்களும் படித்தோம் என எண்ணி கொள்ளலாம். அதை இன்றும் படிப்பவர் கடந்த காலத்தை மீள செய்ய அவற்றை வாசிக்கிறார் என்றும் கொள்ளலாம். ஆனால் அதை மீறியும் ஒரு ஈர்ப்பு அவற்றின் மேல் தொடர்ந்து இந்தியர்களுக்கு இருந்தே வந்துள்ளது. அதேநேரத்தில் கோனன் டாய்லே தான் எழுதிய சிறந்த நூல்கள் என கூறியவை இங்கு அவ்வளவாக படிக்கப்படுவதில்லை.

 

 

 

இன்றும் வாசிப்பு பழக்கம் சிறிதளவே உள்ளவரின் புத்தக அலமாரியில் ஒரு ஷெர்லாக் ஹோல்ம்ஸ் நூலையும் வுட்ஹவுஸ் நூலையும் காணலாம். நான் சிறு வயதில் நூலகங்களில் அதிகம் கண்டது இந்நூல்கள் தான். நான் படித்த முதல் முழு ஆங்கில நாவல் தி ஹவுண்ட் ஆப் பாஸ்கெர்வில். அந்நாட்களில் நான் எப்பொழுதும் கையில்ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகத்துடன் தான் இருப்பேன். வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் அல்லாமல் அறிவு சார்ந்த logical reasoningகும் வழிகாட்டியாக ஹோம்ஸ் என் நாயகனாக திகழ்ந்தார்.

 

 

 

வுட்ஹவுஸ் கோனன் டோய்ல் இருவரும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியவர்கள். அவர்கள் நூல்களிலும் அதை பற்றி எழுதியவர்கள். இந்தியா இன்று கிரிக்கெட் ஆடும், பார்க்கும் நாடுகளில் முதன்மையானது.கிரிக்கெட், ஹோம்ஸ், வாட்ஸன், பெர்டி வூஸ்டர், ஜுவ்ஸ் என பல எச்சங்களை பிரிட்டிஷ் ராஜ் நம்மிடம் விட்டு சென்றிருக்கிறது.

 

 

கோனன் டோய்ல், பெர்னார்ட் ஷாஹ், ஆஸ்கார் வைல்டு போன்ற ஆளுமைகளை பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில நூல்கள் நமக்கு தருகின்றன(ஆனால் மூவரும் ஐரிஷ் பின்புலம்கொண்டவர்கள் என பின்புதான் தெரிந்தது)

 

 

 

Malcolm Muggeridge கடைசியான உண்மை ஆங்கிலேயன் இந்தியன் ஆக தான் இருப்பான் என கூறினார்(the last true Englishman would be an Indian). “நமக்கு வந்துசேர்ந்து, இன்றைக்கும் நம்மிடம் எஞ்சியிருப்பது அந்த பத்தொன்பதாம்நூற்றண்டு லண்டன்தான்.” கச்சிதம்!

 

 

ஸ்ரீராம்

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

ஷெர்லக் ஹோம்ஸ் என்ற வடிவத்தைக்கொண்டு பிரிட்டனை மதிப்பிடமுயன்றவிதம் சிறப்பாக இருந்தது. ஹோம்ஸ் இல்லத்துக்குச் சென்றது மட்டும்தான் நினைவு. ஆனால் அதை தொடர்ச்சியாக பல்வேறு சின்னச்சின்ன விஷயங்களுடன் இணைத்திருப்பது அழகாக உள்ளது.

 

 

உண்மையில் நீங்கள் சொல்லும்போதுதான் தோன்றியது, மெய்யாகவே அந்தக்கால பிரிட்டிஷ் குணாதிசயத்துக்குச் சரியான உதாரணம் ஷெர்லாக் ஹோம்ஸ்தான். உதாரணமாக ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம். அவர் இங்கிருக்கும்போது பறவையியலில் முன்னோடியாகச் செயல்பட்டார். இன்னொருவர் சர் ஜான் வுட்ரோஃப். அவர் தாந்திரிகத்தை ஆராய்ந்தார். அக்கால பிரிட்டிஷ்காரர்களுக்கு நுண்ணோக்கி வைத்து இந்த உலகை ஆராய்ச்சி பண்ணுவதுதான் பொழுதுபோக்கு. அறிவியலிலும் இலக்கியத்திலும் மிகப்பெரிய அலையை அது உருவாக்கியது. ஹோம்ஸை ஐ.ஏ.ரிச்சர்ட்ஸுடன் ஒப்பிட்டதெல்லாம் நன்றாக இருந்தது. டெக்ஸ்சுவல் கிரிட்டிசிசம் என்றாலே ஒரு துப்பறியும் வேலைதான்

 

 

ஆர்.சந்தானம்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வாசகர்களுடன் உரையாடல் -கடிதங்கள்

$
0
0

reader

வாசகர்களின் உரையாடல்

ஜெ அவர்களுக்கு

 

வணக்கம்..  நலமா.

 

வாசகர்களுடன் உரையாடல் பற்றிய பதிவைப் படித்தேன்.

 

உங்களுடைய சிந்தனை என் போன்றவர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. வீட்டின் மூலையில், தனிமையில் இணையத்தின் வழி மட்டுமே இலக்கிய உலகை, அறிவுசார் தேடலை அனுபவிக்கையில், நான் நேசிக்கும் பெரிதும் போற்றும் படைப்பாளிகளுடன் உரையாடுதல் என்பது பெருங்கனவே.

 

உங்களுக்கு என் முதல்  மின்னஞ்சலை அனுப்பிய தருணம் இன்றும் நினைவிருக்கிறது. அதை அனுப்புவதற்கு முன் எத்தனையோ தடவை தட்டச்சு செய்து அழித்தேன். ஒரு வழியாக அனுப்பிவிட்டேன்.. ஆனாலும், உங்கள் தளத்தில் அது வெளியான போது ஏற்பட்ட படபடப்பு மிகவும் புதியது.. அழகானது..

 

நீங்கள் சொன்ன

 

“நான் தமிழகமெங்கும் பரவி வாழ்வதற்குச் சமம் அது.” வரி சத்தியமானது..

 

ஆனால், உங்களிடம் ஒரு தயக்கம் விலகி, அஞ்சல் செய்யத் துவங்கியதைப் போல், வேறெவரும் இத்தனை அணுக்கமானவராக பொதுவெளியில் தன்னை முன்னிறுத்துவதில்லை என்பதே உண்மை..

 

தொடருங்கள் உரையாடலை… அதன் வழியே நானும் சிறிது கற்றுக் கொள்கிறேன்..

 

பவித்ரா..

 

 

அன்புள்ள ஜெ,

 

வாசகர்களுடன் உரையாடுதல் கட்டுரையை வாசித்தபோது ஓர் எண்ணம் ஏற்பட்டது. நான் உங்களுக்குக் கடிதங்கள் எழுதியதில்லை. இந்தக்கடிதத்தையே ரொம்பவும் தயங்கித்தான் எழுதுகிறேன். என் சூழலில் கடிதமெல்லாம் எழுதுவது கஷ்டம். ஆனால் எல்லா கடிதங்களையும் நானே எழுதியதுமாதிரி, எல்லா பதிலும் எனக்காகவே சொல்லிக்கொள்வது மாதிரி நினைத்துக்கொள்வேன்

 

 

ஆகவே எத்தனை நீளமான பதிலாக இருந்தாலும் என்னால் வாசிக்கமுடிகிறது. அதைவிட நீளம் குறைவான ஒரு கட்டுரையை நிறுத்தி நிறுத்தி பலதடவை வாசித்துத்தான் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. கேள்விபதில் பாணியில் உங்களுடன் ஒரு நெருக்கம் தோன்றுகிறது. நம் மனசில் தோன்றும் சந்தேகங்கள் அடுத்த சிலநாட்களில் வேறு எவரவாது கேட்டிருப்பார்கள். இந்த உரையாடலுக்கு கடந்தகாலத்திலே வசதி இல்லை. சுந்தர ராமசாமி போன்றவர்களுடன் நிகழ்ந்த உரையாடல்களைச் சொல்கிறீர்கள். அந்த வாய்ப்பு சிலருக்கே கிடைத்தது. இன்றைக்கு இணையம் அந்த வாய்ப்பை அனைவருக்கும் வழங்கியிருக்கிறது

 

 

எம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஐரோப்பா-6,மேற்குமலைமுடி

$
0
0

shak

திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஒருகாலகட்டத்தில் பள்ளிக்கல்வியின் தவிர்க்கமுடியாத பகுதியாக இருந்தது. அவர்கள் வெளியிட்ட நூல்கள் பெரும்பாலான பள்ளிநூலங்களில் இருக்கும். முதன்மையாக, பழந்தமிழ் இலக்கியங்களின் முறையாக பிழைநோக்கப்பட்ட எளிய பதிப்புகள். புலியூர் கேசிகன் உரையுடன் சங்கப்பாடல்களை நான் எட்டாம் வகுப்பு படித்த காலத்தில் வாசித்தது ஒரு மாபெரும் திறப்பு. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட வெளிநாட்டு இலக்கிய அறிமுக நூல்கள் ஒரு புத்துலகைத் திறந்துவைத்தவை. வால்டர் ஸ்காட்டின் ஐவன்ஹோ, லிட்டன்பிரபுவின் பாம்பியின் கடைசிநாட்கள்  முதலிய செவ்வியலக்கியப் படைப்புகளை எளிய நடையில் சுருக்கி கோட்டோவியங்களுடன் நல்ல காகிதத்தில் கெட்டி அட்டையில் வெளியிட்டார்கள். என் நடுநிலைப்பள்ளி நாட்களில் ஒரே வீச்சில் உலக இலக்கியச்சூழலை அறிந்துகொள்ள வழியமைத்தவை அந்நூல்கள்.

 

நான் ஷேக்ஸ்பியரின் படைப்புக்களை வாசிப்பது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக வந்த கா.அப்பாத்துரையின் ‘ஷேக்ஸ்பியர் கதைக்கொத்து’ என்னும் நூலில்தான். ஐந்தாம் வகுப்பை முழுக்கோடு பள்ளியில் முடித்து ஆறாம் வகுப்பை அருமனை உயர்நிலைப் பள்ளியில் படிப்பதற்காக வந்திருந்தேன். முத்தையா என்னும் ஆசிரியர்தான் நூலகத்துக்குப் பொறுப்பு. என் வாசிப்பார்வத்தைக் கண்டு அவர் அந்நூலை எனக்கு அளித்து “இதப்படிலே.இவனுக்குமேலே கதைசொல்றவன் கெடையாது” என்றார்.  மாக்பெத்தும், லியர் மன்னனும், ஹாம்லெட்டும் என்னை ஆட்கொண்டார்கள்.

 

கா அப்பாத்துரை

கா அப்பாத்துரை

பன்மொழிப்புலவர் என அழைக்கப்பட்ட கா.அப்பாத்துரை குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆரல்வாய்மொழியில் 1907ல் பிறந்தார். இயற்பெயர் நல்லசிவம். திருவனந்தபுரம் பல்கலை மாணவர். தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் முதுகலைப் பட்டம்பெற்றவர். இந்தி, சம்ஸ்கிருதம் ஆகியமொழிகளிலும் பட்டம்பெற்றிருக்கிறார். நெல்லையிலும் மதுரையிலும் காரைக்குடியிலும் இந்தி ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். அக்காலத்தைய தமிழியக்கச் செயல்பாடுகளில் முதன்மைக்குரல்களில் ஒன்றான கா.அப்பாத்துரை மொழியாக்கம், வரலாற்றாய்வு, தமிழாய்வு என எழுதிக்குவித்தவர். இவருடைய மொழியாக்கத்தில் மலையாள முதல்நாவல்களான இந்துலேகா , மார்த்தாண்டவர்மா போன்றவை தமிழில் வெளிவந்துள்ளன. பதினொன்றாம்நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானிய ஆசிரியரான  முரசாகி ஷிகுபு எழுதிய The Tale of Genji  இவருடைய மொழியாக்கத்தில் செஞ்சி கதை என்றபேரில் வெளிவந்துள்ளது. குமரிக்கண்டம் பற்றி நிறைய எழுதியவர் என்றாலும் இவருடைய வரலாற்றாய்வுநூல்களில் தென்னாட்டுப் போர்க்களங்கள் தான் முக்கியமான படைப்பு.

 

கா.அப்பாத்துரைக்கு முன்னோடியாக அமைந்தது பிரிட்டிஷ் கட்டுரையாளரும் தொல்பொருள் சேகரிப்பாளருமான சார்லஸ் லாம்ப் [Charles Lamb  1775 – 1834] எழுதிய Tales From Shakespeare. என்னும் கதைநூல் 1807 ல் வெளிவந்த இந்த குறுங்கதைத் தொகுதி ஷேக்ஸ்பியரை உலகமெங்கும் கொண்டுசென்றது. அப்போது பிரிட்டிஷ் பேரரசு உலகின் பெரும்பகுதியை ஆண்டது. அங்கெல்லாம் ஆங்கிலக் கல்வியை அவர்கள் கொண்டுசென்றார்கள். பிரிட்டிஷார் வகுத்த ஆங்கிலக் கல்வியின் முதன்மை ஆசிரியராக ஷேக்ஸ்பியர் இருந்தார். அவரை ஒரு பிரிட்டிஷ்பெருமிதமாகவே அவர்கள் கருதினர். ஷேக்ஸ்பியரை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் முதல்நூலாக சார்லஸ் லாம்பின் கதைத் தொகுதி புகழ்பெற்றது. பெரும்பாலான உயர்நிலைப்பள்ளிகளில் பாடமாக இருந்தது. பல்லாயிரக்கணக்காக அது அச்சிடப்பட்டு விற்கப்பட்டது. இன்றும்கூட அது பல கல்விநிலையங்களில் பாடமாக உள்ளது.

lamb

சார்ல்ஸ் லாம்ப்

 

உலகமெங்கும் முந்நூறாண்டுக்காலம் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மதநூல்களைப்போலப் பயிலப்பட்டன. ஆங்கில நடையைக் கற்றுக்கொள்வதற்கு ஷேக்ஸ்பியர் கவிதைகளில் பயிற்சி இருந்தாகவேண்டும் என்று சொல்லப்பட்டது. பேச்சில் ஷேக்ஸ்பியர் வரிகளை மேற்கோளாக்குவது அன்றைய படித்த நாகரீக மனிதர்களின் இயல்பாகக் கருதப்பட்டது. பேராசிரியர்கள் ஷேக்ஸ்பியர் வரிகளை வேடிக்கையாகவும் கவித்துவமாகவும் கையாள்வதும் அதை மாணவர்கள் புரிந்துகொண்டு சிரிப்பதும் அன்று சாதாரணம். சென்றகால அரசு அதிகாரிகளின் கோப்புக் குறிப்புகளில் ஷேக்ஸ்பியர் வரிகள் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

 

சில நினைவுகள். இந்திரா பார்த்தசாரதியின் நாவலொன்றில் ஒரு சிறு கிராமத்தில் விருந்தினராக வீட்டுக்கு வரும் நாடோடிக்கிழவர் பேச்சின் நடுவே  the rest is silence என்ற ஷேக்ஸ்பியர் வரியை சொல்வதைக் கண்டு கதைசொல்லி வியப்பதை எழுதியிருப்பார். நான் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் இளங்கலை பயின்றபோது Adwanced English கற்பித்த ஆசிரியர் ஆர்தர் டேவிஸ் எரிச்சலுடன் Listen to many, speak to a few ,do nothing  என்று சொன்னது ஷேக்ஸ்பியரின் வரியின் மீதான அவருடைய பகடி என  மாணவர்கள் அறிந்திருந்தார்கள் என்பது பலர் சிரித்ததிலிருந்து தெரிந்தது. நான் பணியாற்றிய நிறுவனத்தின் அறுபதுகளைச் சேர்ந்த கோப்பு ஒன்றை ஒரு வழக்குக்காக பார்த்தபோது அக்கால அதிகாரி ஒருவர் Nothing can come of nothing. என்ற ஷேக்ஸ்பியர் வரியை குறிப்பிட்டிருப்பதைக் கண்டேன்.

 

[மொத்த ஷேக்ஸ்பியரே இவர்களிடம் மேற்கோளாக மாறிவிட்டார் என்பார்கள். ஷேக்ஸ்பியர் நூல் ஒன்றை நூலகத்தில் எடுத்து வாசித்த பெண்மணி ஏகப்பட்ட மேற்கோள்கள், ஆகவே நடை நன்றாக இல்லை என்று திருப்பிக்கொடுத்துவிட்டார் என்று  ஒரு நகைச்சுவை உண்டு].

 

ஸ்டிராட்போர்ட் அரங்கு கனடா

ஸ்டிராட்போர்ட் அரங்கு கனடா

 

இவர்கள் பெரும்பாலும் அக்கால ஆங்கிலேய ஆசிரியர்களிடம் படித்தவர்கள். அவர்கள் ஷேக்ஸ்பியர் வெறியர்கள். அவர்களிடமிருந்து அந்நோய் தொற்றிக்கொண்டது. அக்காலக் கல்லூரிகளில் ஒரு ஷேக்ஸ்பியர் நிபுணர் இருப்பார். ஷேக்ஸ்பியர் என்றே அடைமொழி இருக்கும். மார்த்தாண்டம் கிறித்தவக்கல்லூரியில் லைசாண்டர் என்ற ஆசிரியருக்கு அப்படி ஓர் அடைமொழி உண்டு. வசையாக கொஞ்சம் மாற்றியும் சொல்வோம்.

 

ஆச்சரியமான ஒன்றுண்டு, இந்தியர்களின் உள்ளத்தில் ஷேக்ஸ்பியரின் செல்வாக்கு மிகமிகக் குறைவு. இந்திய இலக்கியச் சிற்பிகள் எவருமே தங்களைக் கவர்ந்த முன்னோடிப்படைப்பாளியாக அவரைச் சொன்னதில்லை. கற்பனாவாதக் கவிஞர்களில் பைரன்,ஷெல்லி, கீட்ஸ், வெர்ட்ஸ்வெர்த் ஆகியோரும் பிற்காலக் கவிஞர்களில் டி.எஸ்.எலியட்டும் இந்தியமொழிகளில் தீவிரமாக செல்வாக்கு செலுத்தியவர்கள். இந்திய மொழிகள் அனைத்திலுமே ஒரு ஷெல்லியும் எலியட்டும் இருப்பார்கள் என்று சுந்தர ராமசாமி சொன்னதுண்டு. தமிழில் ஷெல்லிக்கு பாரதி எலியட்டுக்கு சி.மணி. மலையாளத்தில் ஷெல்லிக்கு சங்கம்புழா எலியட்டுக்கு என்.என்.கக்காடு. ஆனால் ஷேக்ஸ்பியர்கள் இல்லை

 

 

இந்திய கட்டிடக்கலை குறித்தும் இலக்கியம் குறித்தும் முக்கியமான நூல்களை எழுதியிருக்கும் கே.ஆர்.அய்யங்கார் இந்திய மொழிகளில் ஷேக்ஸ்பியர் எப்போது மொழியாக்கம் செய்யப்பட்டார் என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார்.  Shakespeare in India  என்னும் தலைப்பில்.. இந்தியாவின் எல்லா மொழிகளிலுமே ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு ஒன்றுக்குமேற்பட்ட மொழியாக்கங்கள் உள்ளன. இந்திய மொழிகளில்  அச்சில்வெளிவந்த மிக ஆரம்பகால படைப்புகள், ஷேக்ஸ்பியர் மொழியாக்கங்கள்தான்.

 

மலையாளத்தில் ஷேக்ஸ்பியரின் The Comedy of Errors நாடகத்தை கல்லூர் உம்மன் பிலிப்போஸ் உரைநடையில் 1866ல் ஆள்மாறாட்டம் என்றபேரில் மொழியாக்கம் செய்தார். அது உரைநடையிலக்கியத்தின் தொடக்ககால நூல்களில் ஒன்று. தமிழில் விஸ்வநாத பிள்ளை 1870ல்  The Merchant of Venice  ஐ மொழியாக்கம் செய்தார். பம்மல் சம்பந்த முதலியார் ஷேக்ஸ்பியரின் நான்கு நாடகங்களை தமிழாக்கம் செய்துமேடையேற்றினார். இலக்கிய நோக்கில் அரு.சோமசுந்தரம், கள்ளபிரான் பிள்ளை, சி.நமச்சிவாயம் போன்றவர்கள் குறிப்பிடத்தக்க ஷேக்ஸ்பியர் மொழிபெயர்ப்பாளர்கள். இந்த மொழியாக்கங்கள் எவையுமே கவித்துவமானவை அல்ல.  தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள், இலக்கியத்தகுதி கொண்ட மொழிபெயர்ப்பாளர்கள் ஷேக்ஸ்பியரை மொழியாக்கம் செய்ததில்லை. ஆகவே தமிழிலும் மலையாளத்திலும் ஷேக்ஸ்பியரின்  கருத்தியலோ அழகியலோ எந்த இடத்தையும் பெறவில்லை. ஏன் என்பது ஆய்வாளர்களுக்குரிய தேடல்.

 

பம்மல் சம்பந்த முதலியார்

பம்மல் சம்பந்த முதலியார்

என்னுடைய உளப்பதிவு இது. ஒன்று, ஷேக்ஸ்பியர் எலிசபெத் –விக்டோரிய யுகத்தின் அடையாளமாகவே இங்கே முன்வைக்கப்பட்டார். ஆகவே அவர் கல்வித்துறையிலேயே திகழ்ந்தார். இந்திய இலக்கியம் என்பது ஆங்கில ஆதிக்கத்திற்கும் அதன் விழுமியங்கள் நிறைந்திருந்த கல்விநிலையங்களுக்கும் எதிராக எழுந்த ஒன்று. ஆகவே ஷேக்ஸ்பியரை இந்திய இலக்கிய முன்னோடிகள் பொருட்படுத்தாமலிருந்திருக்கலாம். ஷேக்ஸ்பியரின் உலகப்பார்வை அங்கதம் நிறைந்த கசப்பு கொண்டது. அது இலட்சியவாதம் பெருகி எழுந்த பத்தொன்பதாம்நூற்றாண்டு இந்திய உள்ளத்துக்கு உவப்பாக இல்லாமலிருந்திருக்கலாம். அதோடு ஷேக்ஸ்பியர் பேசிய ஐரோப்பிய வரலாற்றுச்சூழலுடன் ஒன்றமுடியாததும் காரணமாக இருந்திருக்கலாம்

 

சென்ற இருபத்தைந்தாண்டுகளாகத்தான் ஷேக்ஸ்பியர் பள்ளிப்பாடங்களில் இருந்து வெளியேறி வருகிறார். உலக அளவிலேயே இந்த மாற்றம் நிகழ்கிறது. அமெரிக்காவில் தொடங்கி உலகம் முழுக்கச் சென்ற Plain Language Movement அதற்கு முக்கியமான காரணம். அவ்வியக்கத்தின் வேர்கள் நவீனத்துவ அழகியலில் உள்ளன. நவீனத்துவ எழுத்தாளர்கள் மொழியை ஒலியழகுடனும்  சொல்லணிகளுடனும் எழுதுவதை எதிர்த்தார்கள். சிக்கலான மொழி நடைமுறையில் பயனற்றது என்று வாதிட்டனர். மக்கள் பேசும் மொழிக்கு அணுக்கமாக இருப்பதே நல்ல நடை என்ற கருத்து நவீனத்துவத்தின் ஆசிரியர்களால் சொல்லிச்சொல்லி நிறுவப்பட்டது.  காம்யூ, காஃப்கா, ஹெமிங்வே ஜார்ஜ் ஆர்வல் போன்றவர்கள்   மிக எளிய நேரடி நடையில் எழுதியவர்கள். அந்த அலை உலகம் முழுக்கச் சென்றது. தமிழில் ஜி.நாகராஜன், அசோகமித்திரன், சுஜாதா போன்றவர்கள் அந்நடைக்காக வாதிட்டிருப்பதைக் காணலாம்

 

ஷேக்ஸ்பியர் இல்லம் இங்கிலாந்து

ஷேக்ஸ்பியர் இல்லம் இங்கிலாந்து

நேரடியான எளிய நடையை முன்வைத்தவர்களுக்கு இதழியலுடன் உள்ள தொடர்பு குறிப்பிடத்தக்கது. ஜார்ஜ் ஆர்வெல், ஹெமிங்வே போன்றவர்கள் இதழியலாளர்கள் மட்டுமல்ல, போர்ச்செய்தியாளர்களும் கூட.ஆகவே நேரடித்தன்மை, சுருக்கம் ஆகிய இரண்டும் அவர்களுக்கு முதன்மையாகப் பட்டன. இரண்டாம் உலகப்போருக்குப்பின் நவீனத்துவம் ஓர் இலக்கிய அலையாக உலகமெங்கும் பரவியது. அதன் விளைவாக அதுவரை உலகமெங்கும் ஆங்கிலக்கல்வியின் ஒருபகுதியாக இருந்த பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிஞர்களின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.

 

1970 களில் அமெரிக்காவில் அது ஒரு கொள்கையாகப் பரவலாயிற்று. செய்தி,வணிகம், அரசுநிர்வாகம் ஆகிய தளங்களில் மிக எளிமையான நேரடியான ஆங்கிலமே பயன்படுத்தப்படவேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. 1976ல் ஜிம்மி கார்ட்டரின் அரசு எளிய ஆங்கிலத்தையே அரசில் பயன்படுத்தவேண்டும் என ஆணை பிறப்பித்தது. எளிய ஆங்கிலம் பல்லினக்குடியேற்றம் கொண்ட அமெரிக்காவுக்கு தவிர்க்கமுடியாததாக இருந்தது. அத்துடன் பெருவளர்ச்சி அடையத் தொடங்கிய அறிவியல்- தொழில்நுட்பத்துறை  எளிய ஆங்கிலத்தையே நாடியது

 

விளைவாக இந்தியாவிலும் கல்வித்துறை மாற்றங்கள் உருவாயின. கல்லூரிகளில் கற்பிக்கப்பட்ட ஆங்கிலத்தை ‘நடைமுறை’ ஆங்கிலமாக மாற்றவேண்டும் என்று கொள்கை வகுக்கப்பட்டது. விளைவாக கவிதை மிகவும் குறைக்கப்பட்டது. குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் கவிதை. பெரும்பாலான பாடங்களில் அமெரிக்க எழுத்து அதிக இடம்பெற்றது. அந்த அலையில் ஷேக்ஸ்பியர் காணாமலானார். நான் என் கல்லூரி புகுமுக வகுப்பில் இரண்டு ஷேக்ஸ்பியர் நாடகங்களை படித்திருக்கிறேன். A Midsummer Night’s Dream, As You Like It. என் மனைவி என்னைவிட எட்டாண்டுகள் இளைவள். அவள் ஷேக்ஸ்பியரின் மிகச்சிறிய மனப்பாடச்செய்யுள் ஒன்றை மட்டுமே படித்திருக்கிறாள். மற்றபடி ஷேக்ஸ்பியரை கல்விக்கூடம் வழியாக அறியவே இல்லை.

shak6

ஷேக்ஸ்பியர் இல்லம் ஸ்ட்ராஃபோர்டு, ,பழையபடம்

 

இதில் ஒரு வேடிக்கை, அக்காலத் தமிழ்ப் பாடத்திட்டமும் ஆங்கிலப்பாடத்திட்டத்தை ஒட்டி அமைக்கப்பட்டது என்பதே. ஆகவே ’நாடகச்செய்யுள்’ ஒரு பாடம். அதற்கு தமிழில் செய்யுள் நாடகங்கள் இல்லை. ஆகவே ஆசிரியர்கள் அதன்பொருட்டு நாடகங்கள் எழுதினர். சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியம் அவ்வாறு எழுதப்பட்டதே. புலவர் ஆ.பழநியின் அனிச்ச அடி போன்ற பல நாடகங்கள் பின்னாளில் எழுதப்பட்டன. எச்சுவையும்  இல்லாத இந்த சக்கைகளை ஷேக்ஸ்பியரை நினைத்துக்கொண்டு மாணவர்கள் மென்று விழுங்கவேண்டியிருந்தது.

 

ஷேக்ஸ்பியர் நாடகங்களை வாசிக்க மிகச்சிறந்த வழியாக நான் கண்டுகொண்டது ஆங்கிலப் பட்டப்படிப்பு முதுகலைப் படிப்புகளுக்குப் பாடமாக பரிந்துரைசெய்யப்பட்ட நாடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள உரையுடன் கூடிய நூல்கள். சாணித்தாளில் வெளியிடப்பட்டவை. பழையபுத்தகக் கடைகளில் ஓரிரு ரூபாய் விலையில் கிடைக்கும். ஒருபக்கம் மூலம், நேர் எதிர்பக்கம் சொற்பொருள், பொழிப்புரை. என்னிடம் ஏறத்தாழ எல்லா ஷேக்ஸ்பியர் நாடகங்களும் இருந்தன. இணையம் இல்லாத அந்தக்காலத்தில் மிக எளிதாக பொருளறிந்து வாசிப்பதற்கு உதவியானவை அவை.

 

ஷேக்ஸ்பியர் நாடகங்களின் சிறப்புகள் குறித்து பலவாறாக எழுதப்பட்டுள்ளது. நான் முக்கியமாக நினைப்பது அவற்றின் ‘நாடகத்தன்மை’தான். நாடகாந்தம் கவித்துவம் என்னும் சம்ஸ்கிருதச் சொல்லாட்சிக்குச் சிறந்த உதாரணங்கள் அவை. நாடகம் என்பது மிகச்சிறிய ஓர் கால இட எல்லைக்குள் வைத்து வாழ்க்கையைச் சொல்லியாகவேண்டிய கட்டாயம் கொண்டது.எந்தக் கலைக்கும் அதன் எல்லையே சாத்தியமும் ஆகிறது. நாடகம் அந்த எல்லை காரணமாகவே வாழ்க்கையின் உச்சத்தருணங்கள் வழியாகச் செல்லவேண்டியிருக்கிறது. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அத்தகையவை. ஓதெல்லோ தொடங்குமிடம் ஓர் உதாரணம். டெஸ்டெமோனாவைத் தேடி வாளுடன் அரங்கில் பாய்ந்து நுழையும் வீரர்கள், அங்கே வந்து அவர்களிடம் உங்கள் வாள்களை உறையிலிடுங்கள், நிலவொளியில் துருப்பிடிக்கப்போகின்றன என  ‘பஞ்ச் டயலாக்’ பேசும் ஓதெல்லோ என அது பரபரப்பாகவே ஆரம்பித்து அப்பரபரப்பு குறையாமல் மேலே செல்கிறது.

sham4

ஷேக்ஸ்பியர் இல்லம் ஸ்ட்ராஃபோர்டு,

 

அந்த உச்சப்படுத்தல் கொஞ்சம் செயற்கையானதே, ஆனால் கலை  என்பதே அடிப்படையில் செயற்கையானதுதான். இயற்கையானதாகத் தெரிவதுகூட செயற்கையான செதுக்கல்தான். இயற்கையான வெளிப்பாட்டின்மேல் நம்பிக்கை கொண்டிருந்த தல்ஸ்தோய் ஷேக்ஸ்பியரை நிராகரித்தது புரிந்துகொள்ளக்கூடியதே, ஆனால் அவருடைய  The Power of Darkness கூட ஷேக்ஸ்பியர் பாணி செயற்கை உச்சங்கள் கொண்டதே. ஷேக்ஸ்பியரின் கலை அந்த உச்சங்களினூடாக அது சென்றடையும் வாழ்க்கைத்தரிசனங்களில் உள்ளது. அது மானுடனின் அனைத்து இருள்களையும் கருத்தில்கொண்டு ஒட்டுமொத்த வாழ்க்கைநோக்கிய ஒரு பார்வையைச் சென்றடைவது. பலசமயம் எதிர்மறைத்தன்மை கொண்டதாயினும் பகடியும் கவித்துவமும் கலந்தது

 

ஆனால் இன்று ஷேக்ஸ்பியர் நாடகங்களை மேடையில் நடிக்கமுடியுமா என்னும் ஐயம் எனக்கிருந்தது.2001ல் கனடாவுக்குச் சென்றபோது அ.முத்துலிங்கம் அவர்களின் உதவியால் Stratford Shakespeare Festival லுக்குச் சென்றேன். கனடாவின் ஒண்டோரியோ மாநிலத்தில் உள்ள ஸ்டிராட்போர்ட் என்னும் ஊரில் நிகழும் ஷேக்ஸ்பியர் நாடகவிழா நாடகத் தயாரிப்பாளரான டாம் பீட்டர்ஸன் Tom Patterson அவர்களால் தொடங்கப்பட்டது. பீட்டர்ஸன் கனடாவின் ஸ்ட்ராஃபோர்டு ஊரைச் சேர்ந்தவர்.இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியர் பிறந்த ஊரின் பெயர் அது. அவர் அங்கே 1953 ல் மேயர் டேவிட் சிம்ப்ஸனின் உதவியுடன் அந்த நாடகவிழாவை ஒருங்கிணைத்தார்.அக்கால நட்சத்திரமான அலெக் கின்னஸ் அதை தொடங்கிவைத்தார். மிகச்சிறிய புறநகரான ஸ்டிராஃபோர்ட் மெல்ல புகழ்பெறலாயிற்று. இன்று திறந்தவெளி அரங்குகள், மரபான அரங்குகள் என பற்பல நிரந்தர நாடக அரங்குகளுடன் முக்கியமான கலைமையமாக ஆகியிருக்கிறது இவ்வூர்

 

shamr

ஷேக்ஸ்பியர் இல்லம் ஸ்ட்ராஃபோர்டு, ,பழையபடம்

 

ஷேக்ஸ்பியர் நாடகவிழாவாக இருந்தாலும் அனைத்து நாடகங்களும் அங்கே அரங்கேறும். நான்  வில்லியம் ரோஸ் எழுதிய Guess Who’s Coming to Dinner போன்ற நவீனயுக நாடகங்களை அங்கே பார்த்தேன் இவையெல்லாம் பேசிக்கொண்டே இருக்கும் நாடகங்கள், வசனமழை என்றுதான் வாசிக்கையில் நினைத்திருந்தேன். ஆனால் மேடையில் பார்க்கையில் , நாடக அரங்கை நிறைக்கும் உடலசைவுகள், நேரக்கணக்கு தவறாத சொல்பரிமாற்றம், இயற்கையான நடிப்புடன் அபாரமான அனுபவமாக இருந்தன. இங்குதான் முதல்முறையாக ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றை மேடையில் பார்த்தேன். Twelfth Night. மிகத்தேர்ந்த அரங்கப்பயிற்சியால் கண்களை விலக்கமுடியவில்லை, கீழே விழுந்த ஒரு கைக்குட்டையைக்கூட இடைவேளையிலேயே எடுக்கமுடிந்தது. பயின்ற குரல்களால் பேசப்பட்ட ஒரு வசனம்கூட புரியாமலில்லை – எனக்கு ஆங்கில உச்சரிப்பு எப்போதுமே புரிந்துகொள்ளக் கடினமானது. அரங்க அனுபவம் என்றால் என்ன என்று அறிந்துகொண்ட நாட்கள் – நான் தமிழில் இன்றுவரை ஒரு மேடைநாடகத்தைக்கூட ரசித்ததில்லை.

 

அசல் ஸ்டிராட்போர்டுக்குச் செல்வோம் என அப்போது எண்ணியிருக்கவில்லை. Stratford-upon-Avon என அழைக்கப்படும் சிற்றூர் பிரிட்டனில் வார்விக்‌ஷயரில் அவோன் ஆற்றங்கரையில் உள்ளது. ஷேக்ஸ்பியர் பிறந்த ஊர் அது. இங்குள்ள ஹென்லி தெருவில் உள்ள பழைமையான மாளிகையில்தான் ஷேக்ஸ்பியர் பிறந்தார் என்கிறார்கள். வரலாறு என்பதைவிட பெரும்பாலும் இது ஒருவகை நவீனத் தொன்மம்தான். அந்த வீடு 16 ஆம் நூற்றாண்டுமுதல் அங்கிருந்தாலும் மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது. செங்கல்லாலும் மரத்தாலும் ஆனது. இன்று அது ஷேக்ஸ்பியர் அருங்காட்சியகமாக உள்ளது. பதினாறாம்நூற்றாண்டின் தன்மையை வைத்து நோக்கினால் இது ஒரு பெரிய மாளிகைதான். இந்திய விழிகளுக்கு அந்த மாளிகைக்கும் ஸ்ட்ரார்போர்டில் உள்ள பிற வீடுகளுக்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை. அதை பழைமையான வீடு என வெளியே இருந்து நோக்கினால் சொல்லமுடியாது

shak

 

ஆனால் உள்ளே சென்றால் பழைமை தெரியும். பல அறைகள் குறுகலானவை. உணவுமேஜை, நாற்காலிகள் எல்லாமே எளிமையான அமைப்பு கொண்டவை.  1564 ல் அங்கே ஷேக்ஸ்பியர் ஜான் ஷேக்ஸ்பியர் என்னும் கம்பிளி வணிகரின் மகனாகப்பிறந்தார். ஜான் ஷேக்ஸ்பியர் தோலால் கையுறைகள் செய்யும்தொழிலையும் செய்துவந்தார். அந்த இல்லத்தின் கீழ்ப்பக்கம் அவருடைய பணிச்சாலையும் கடையும் இருந்தன. அங்கே இப்போது பாதிசெய்யப்பட்ட கையுறைகளுடன் அவருடைய பணிக்கருவிகள் உள்ளன. ஜான் ஷேக்ஸ்பியரிடமிருந்து இந்த இல்லம் ஷேக்ஸ்பியருக்கு வந்தது. அவருக்கு வேறுவீடு இருந்தமையால் அவர் இதை பெரும்பாலும் பயன்படுத்தவில்லை. லூயிஸ் ஹிக்காக்ஸ் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்ட இந்த கட்டிடம் ஒரு விடுதியாக இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியருக்குப்பின் அவர் மகள் சூசன்னாவுக்கு உரிமையான இவ்வில்லம் அக்குடும்பம் மறைந்தபின் மறக்கப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் தாமஸ் கார்லைல், சார்ல்ஸ் டிக்கன்ஸ் போன்ற பலர் இங்கே வந்து சுவர்களில் கையெழுத்திட்டிருக்கின்றனர்

 

1846ல் ல் அமெரிக்க வணிகரான பி.டிபார்னம் [ P. T. Barnum]  என்பவர் இந்த மாளிகையை விலைக்கு வாங்கி செங்கல்செங்கல்லாகப் பெயர்த்து அமெரிக்கா கொண்டுசென்று நிறுவ திட்டமிட்டார். அச்செய்தி பிரிட்டனின் தேசிய உணர்வை எழச்செய்யவே  பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஒரு தனிச்சட்டம் நிறைவேற்றப்பட்டு ஷேக்ஸ்பியர் பிறந்த ஊர் கமிட்டி அமைக்கப்பட்டது. டிக்கன்ஸ் போன்றவர்களின் உதவியுடன் 3000 பவுண்டுக்கு அந்த இடம் வாங்கப்பட்டு ஷேக்ஸ்பியர் நினைவில்லமாக ஆக்கப்பட்டது.  இன்றிருக்கும் கட்டிடம் அக்கமிட்டியால் விரிவாக்கி கட்டப்பட்டது

shakk

 

ஸ்டிரார்போர்ட் குளிராக இருந்தது. அந்த கட்டிடத்தின் உள்ளே செல்கையில் வரலாற்றுநிலைகளில் உருவாகும் காலப்பயணம் சாத்தியமானது. குறுகலான அறைக்குள் மூச்சுக்காற்றின் நீராவி நிறைந்திருந்தது. கற்பனையோ உண்மையோ அங்கே ஷேக்ஸ்பியர் வாழ்ந்தார் என்ற எண்ணத்துடன் அவ்வறைகளுக்குள் நடப்பதும், ஷேக்ஸ்பியர் படைப்புகளின் முதல் அச்சுப்பதிப்பு உட்பட அரிய நூல்சேகரிப்புகளை நோக்குவதும் கனவிலாழ்த்துவதாக இருந்தது.மெல்லியகுரலில் உரையாடல்கள்.வெளியே நிறைந்திருந்த ஆழ்ந்த அமைதி.

 

ஷேக்ஸ்பியரின் நாடகங்களிலிருந்து வெவ்வேறு கதைமாந்தர்களை நினைத்துக்கொண்டேன். எனக்கு எப்போதும் நெருக்கமானவனான மாக்பெத். ‘என் வாளே என்னை எங்கே அழைத்துச்செல்கிறாய்?’. காலத்தின் பெருக்கில் கற்பனைக்கதாபாத்திரங்கள் மேலும் மேலும் உண்மையானவர்களாக ஆகிறார்கள். உண்மையான மானுடர் கற்பனைக்கதாபாத்திரங்களாக ஆகிவிடுகிறார்கள். ஷேக்ஸ்பியரைவிட அவருடைய கதைமாந்தர் வரலாற்றில் மேலும் தெளிவுடன் தெரிகிறார்கள்.

 

வெளிவந்தபோது தோட்டம் இளமழையில் நனைந்திருந்தது. அங்கே லண்டன் வாழ் வங்கத்தவர் கொடையாக அளித்த தாகூரின் கற்சிலை. அருகில் ஒரு பெஞ்சில் அமர்ந்தேன். கா.அப்பாத்துரை முதல் எழுந்த ஒரு நீண்ட நினைவுச்சரடை உள்ளோ ஜெபமாலை போல மணிமணியாகத் தொட்டு உருட்டமுடிந்தது.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

காடு- கடிதங்கள்

$
0
0

kaadu

 

காடு அமேசானில் வாங்க

காடு வாங்க

 

 

மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

 

சென்ற மாதம் காடு நாவல் வாசித்து முடித்தேன். சுமார் ஒரு வாரம் இதைப்பற்றி யாரிடமும் பேச பிடிக்கவில்லை. இந்த கடிதத்தை இப்போது ஏன் எழுதுகிறேன் என்றும் தெரியவில்லை. இதை நீங்கள் வாசிப்பீர்களா என்றும் உறுதி இல்லை. ஆனாலும் எழுதுகிறேன்.

 

 

பொதுவாக, என்னை பாதித்த விஷயங்களை என் மனைவியோடு உடனுக்குடன் பகிர்வதுண்டு. ஆனால் இந்த நாவல் எனக்கு தந்த அனுபவங்கள் மிகவும் அந்தரங்கமானவை. எனக்கே எழுதப்பட்டது போன்று ஒரு உணர்வு. அதை அந்தரங்கமாக அனுபவிப்பதே நல்லது என்று பட்டது.

 

 

தொடக்கத்தில் உங்கள் நடை கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் அது என் முன் விரித்த உலகம் என்னை மேலும் தொடரச் செய்தது.

 

 

வாசிக்கும்போது காடு எனக்கு இதுவரை காட்டி வந்த பிம்பங்களே கண் முன்னே வந்தது. சிறு வயதில் ஊருக்கு அடுத்து உள்ள சிறு காடுகளில் காரணமில்லாமல் சுற்றி அலைந்த நாட்கள் உண்டு. எங்கும் நிறைந்த பச்சையும், ஈரமும் கலந்த சூழலில் நாள் முழுக்க இருந்ததுண்டு. அந்த உணர்வே படிக்கும் போதும். தொண்டையில் ஒரு வித குளிர்ந்த ஈரம். p

 

 

காட்டில் நான் சுற்றும் போது எளிதில் தளர்வும் தனிமையும் அடைவேன். அதனாலோ என்னவோ நாவல் முழுவதும் ஒரு ஆற்றாமையும் சோர்வும் என்னைத் தொற்றிக்கொண்டது. அல்லது ஒரு வேளை கிரியின் மன உளைச்சலும் தத்தளிப்பும் என்னையும் பாதித்தது போலும்.

 

 

நீங்கள் காட்டை நீலியின் (மலையத்திப் பெண்) குறியீடாக காட்டினீர்கள் என்றே எண்ணிக் கொண்டேன் (பிழையானால் மன்னிக்க). அதிர்ந்தேன். நான் காதலித்த பெண்ணை அவ்வாறே கண்டேன். அவள் அருகே இல்லாத போது எனக்கு அவள் சார்ந்த இடமெல்லாம் பொருளெல்லாம் அவளாகவே பட்டது. அவள் எனக்காக உண்டு பண்ணிய உலகமாகவே மாறியது. அந்த இடங்களெல்லாம் எனக்கு தந்த ஏக்கங்கள் அளவிட முடியாதது. ஒரு வித மனப்பிறழ்வு நிலைக்கு ஒப்பானது அது.

 

 

ஒரே ஒரு கேள்வி. உங்களுக்கு இந்த அனுபவங்கள் எப்படி வந்தன? நீங்கள் கிரி/என்னைப் போல காதலித்திருக்கிறீர்களா?

 

 

நான் சிரத்தை எடுத்துக்கொண்டு வாசித்த முதல் இலக்கியம் இதுவே. எழுத்தினால் ஒருவனை இவ்வளவு வீரியமாக தாக்க முடியும் என்று நினைத்ததில்லை. இனி வாசிப்பை விடேன்.

 

 

அனுபவத்திற்கு நன்றி, ஐயா.

 

 

அன்புள்ள,

கௌரி சங்கர்.

திருவனந்தபுரம்

 

 

அன்புள்ள ஜெ

 

காடு நாவலை ஒரு நண்பனிடமிருந்து வாங்கி இப்போதுதான் வாசித்து முடித்தேன். எமர்சனின் இயற்கை என்ற கட்டுரையை நீங்கள் மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள். அதில்  “இயற்கையானது சோகக் காட்சிக்கும் நகைச்சுவைக் காட்சிக்கும் மிகச் சரியாகப் பொருந்தும் ஒரு நாடகப் பின்புலம். நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது காற்று மகத்தான நன்மையின் அரவணைப்பாக உள்ளது.”  என்ற வரி வரும். அதை இந்நாவலை வாசிக்கையில் பலமுறை நினைத்துக்கொண்டேன் எமர்சன் சொல்வதுபோல  “காட்டில் மனிதர்கள் பாம்புச் சட்டையுரிப்பது போலத் தங்கள் வயதைக் களைந்துவிடுகிறார்கள். குழந்தைகளாக ஆகிவிடுகிறார்கள். காட்டுக்குள் அழியாத இளமை குடிகொள்கிறது. இந்தக் கடவுளின் தோட்டங்களுக்குள், அன்பும் புனிதமும் நிரம்பிய இப்பிரதேசங்களுக்குள் நிரந்தரமானதொரு திருவிழா கொலு வீற்றிருக்கிறது. அங்கு செல்லும் விருந்தினன் ஆயிரம் வருடங்களானாலும் அலுப்பென்பதை அறிவதில்லை” என்றுதான் காடு நாவலைப் பற்றியும் சொல்வேன்

 

ஆனந்த் சந்திரகுமார்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தாமஸ் மன்னின் புடன்புரூக்ஸ்

$
0
0
தாமஸ் மன்

தாமஸ் மன்

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

கடந்த 2, 3 மாதங்களாக ஒரு பெரும் வாசிப்பு சுழலுக்குள் சிக்கி திளைத்துக் கொண்டிருக்கிறேன். எதேச்சையாக கால்பங்கு கரமசோவ் சகோதரர்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்து தொடரமுடியாமல் அதிலிருந்து விலகி கான்ஸ்டன்ஸ் கார்னெட் (Constance Garnett) ஆங்கிலமொழிபெயர்ப்புக்கு வந்து அது என்னை ஒரே வீச்சில் இழுத்துக்கொள்ள அதுகொடுத்த தெம்பில் அடுத்து அடுத்து உலக பேரிலக்கியங்களை ஆங்கிலத்தில் வாசித்து வருகிறேன்.

 

கரமசோவ் சகோதரர்களுக்கு அடுத்து நான் படித்த புத்தகம் தாமஸ் மண்ணின் “புடன் புரூக்ஸ்“.

இரண்டு காரணங்கள், ஒன்று பணி நிமித்தமாக கடந்த ஒன்னறைஆண்டுகளாக ஜெர்மனியில் இருப்பதால் அது இப்புத்தகத்தை படிக்க ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. இப்புத்தகம் இந்நாட்டை எனக்கு மேலும் அணுக்கமாகலாம் என்ற எண்ணம். இன்னொன்று ருஷ்ய பேரிலக்கியவாதிகளுக்கு நிகராக நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் பெயர் தாமஸ் மண். இவர் படைப்பைப் பற்றி அதிகம் நமது வாசகர்கள்நடுவே விவாதிக்கப்படாததாலும் இப்புத்தகத்தை எடுத்தேன்.

 

ஜெர்மனியின் வடக்குப் பகுதியின் ல்யூபெக் நகரில் வசித்து வரும் புடன்புரூக்ஸ் வம்சத்தினரின் வீழ்ச்சியை சித்தரிக்கும் பெரும் நாவல் இது. நான்கு தலைமுறைவழியாக சென்று ஒரு குடும்பம் வீழும் சித்திரம் இது. 1835ல் இருந்து அடுத்த 40 வருடங்கள் நடக்கும் நிகழ்வுகளாக நாவல் விரிகிறது. தாமஸ் மண் இதை தன் முதல்நாவலாக தன் 26வது வயதிலேயே இதை எழுதிவிட்டார். பல வருடங்க்களுக்கு பிறகு நோபல் பரிசு கிடைக்கும் போதும் இதைக் குறிப்பிட்டே மண்ணுக்கு பரிசுவழங்கப்பட்ட்டது. வில்லியம் ஃபாக்னர் உலகின் தலைசிறந்த நாவலென இதை கூறுகிறார்.

 

நாவலின் கட்டமைப்பில் மிகவும் வியப்பழால்த்தியது இதன் வடிவமும் கூறுமுறையும் தான். அத்தனை இளம் வயத்தில் மண்ணுக்கு தெரிந்திருக்கிறது எது காலம் கடந்துநிற்குமென. நாங்கு தலைமுறை வாழ்வை சொல்லும் இந்நாவலில் உணர்ச்சிக் கொந்தளிப்பான பல தருணங்களை ஓரிரு வரிகளில் சொல்லிச் செல்கிறார். பல அன்றாடசிறு விஷயங்களை விரிவாக விளக்குகிறார். ஒவ்வொரு நிகழ்வும் 40 வருட வாழ்வில் அதன் பெறுமதியைப் பொறுத்தே அழுத்தம் பெறுகிறது.

budden

நாவலின் ஆரம்பத்தில் யோஹான் (Johann) சீனியர் தான் வாங்கிய புது இல்லத்திற்காக‌ ஒரு விருந்து கொடுக்கிறார். பல பக்கங்களுக்கு நீண்டு செல்லும் இவ்விருந்தில்அக்குடும்பத்திற்கு நெருக்கமான அதன் சூழலை வடிவமைக்கும் பல்வேறு மனிதர்கள் அறிமுகமாகிறார்கள். ஒவ்வொருவரின் முக அமைப்பும் அவர்களின் தனித்தன்மையும்நுட்பமாக‌ சித்தரிக்கப்படுகிறது. யோஹானின் ஒரே மகனான ஜானின்(Jean) மூத்தமகளான டோனியின் (Tony) சற்றே முன்னெழும்பிய மேலுதடும், உறவினரின் மகளானகுளோதில்டேவின் (clothilde) பெரும்பசியும், எந்த வியாதிக்கும் பிரென்சு ரொட்டியும், புறாக் கறியும் மட்டுமே மருந்தாகச் சொல்லும் குடும்ப மருத்துவரென விதவிதமானமுகங்களின் நிறை வந்துகொண்டே இருக்கிறது. இப்படைப்பில் வரும் அத்தனை கதாப்பத்திரங்களும் தனக்கேயான‌ தனித்துவமான குணாதிசயங்களுடன் கண்முன் எழுந்துவருகிறது.

 

இப்படைப்பை நுண்தகவல்களின் பெருநிறை என சொல்லலாம். மனிதர்களின் சித்தரிப்புகள் ஒருபுறமென்றால், புறசித்தரிப்புகள் மற்றொரு புறம். புடன்புரூக்ஸ் வீட்டின்விரிவான விவரிப்பில் தொடங்கி ஒவ்வொரு பருவ நிலை மாற்றங்களின் வெவ்வேறு வண்ணங்களும் நாவல் முழுக்க விரவுக் கிடக்கிறது.

 

 

 

இந்நாவலை செவ்வியல் படைப்பாக்கும் முதன்மையான அம்சம் இதன் வடிவமும் கூறுமுறையும் தான். இம்ப்பிரனிசம் ஓவியத்தில் ஒளியும் இருளும் முயங்கிஉருவாக்கும் ஒவியமுறைக்கு இணையானது இதன் கூறுமுறை. எங்கு ஒளி விழ வேண்டும் எங்கு இருள் படரவேண்டும் என்பதில் உள்ள தேர்வு முறைதான் இதை ஒருஅசாதாரணமான படைப்பாக மாற்றுகிறது.

 

 

இதே அழகியலை வைத்து ஒவ்வொரு அத்தியாயத்தையும் வெவ்வேறு வகையாக‌ தீட்டி எடுக்கும் விதம் ஒரு பேரிலக்கியவாதியின் ஆற்றலையும் அவன்பெருந்தோற்றத்தையும் முழுமையாக உணரமுடிகிறது.

 

 

உதாரணத்திற்கு மூன்றாம் பாகத்தில் ஒரு அத்தியாயம் வருகிறது. ஞாயிறு பின் மதியவேளையில் ஒரு நடை செல்ல முதிய‌ ஜான்னுக்காக அவரது மனைவி, மூத்தமகன் டாம், மகள் டோனி காத்திருக்கிறார்கள். நேரம் செல்ல செல்ல பொறுமை இழந்து டோனி தன் அம்மாவிடம் அப்பாவைப் பற்றி குறை கூறி அலுத்து கொள்கிறாள். ‘வயது ஆக ஆக அப்பா அனைத்தையும் மிக மெதுவாக செய்கிறார். அனைத்துக்கும் மிக தாமதமாகவே வருகிறார். எப்போதும் தன் மேசையிலேயே அமர்ந்து நிறுவனவேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு15 நிமிடம் முன்னால் தன் பேனாவை நிறுத்தினால் நாம் என்ன திவால் ஆகிவிடப் போகிறோமா?’

 

 

செப்டம்பர் மாதம் பாதி முடிந்தும் இன்னும் உஷ்ணம் குறையவில்லை. இன்னும் ஒரு க்ஷணம் கூட‌ தாங்க முடியாது என்னும் நிலை வரும்போது மேற்குலிருந்து குளிர்காற்று வீசுகிறது. மெல்ல அறையின் வண்ணம் மாறி அதுவரையிலிருந்த பளீர் வெளிச்சம் மங்க வரவேற்பரையின் பொருட்கள் அனைதிலும் செவ்வொளி பட்டு கூர்கொள்கிறது. மாடியிலிருந்து பணிப்பெண் முகம் வெளிறி ஓடி வந்து Mr.Kounsel என்கிறாள். சட்டென நிலைமையைப் புரிந்து கொண்ட‌ டாம் விரைந்து மாடிக்கு ஓடியபடியேதன் தங்கையிடம் மருத்துவரை அழைக்க சொல்கிறான். ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் ஜான் ஏற்கனவே இறந்து போயிருக்கிறார்.

 

 

இந்த அத்தியாயத்தை வடிவமைத்திருக்கும் விதம் இந்த நாவலின் அழகியலையும் ஆசிரியரின் கவனம் விழும் இடங்கலையும் நமக்கு உணர்த்துகிற‌து.

budden

ஒரு சராசரி வாசக‌ன் ஜான் இறக்கும் அந்த சம்பவத்தை மட்டும் அந்த அத்தியாயத்திலிந்து எடுத்துக் கொண்டு அடுத்து சென்றுவிடும் அபாயம் உள்ளது. ஆனால் பத்துபக்கம் நீளும் இவ்வத்தியாத்தில் அந்த இடம் வெரும் 5 வரிகளே வருகிறது. அப்படியென்றால் ஆசிரியர் கோருவது இந்த 5 வரிகளின் வெளிச்சத்தில் அந்தஅத்தியாயத்தின் மற்ற‌ வரிகள் என்ன பொருள் அளிக்கின்றன என்பதுதான். அப்படி வாசிக்கும் போது ஜானின் நடவடிக்கையும் அந்த கால மாற்றமும் மேலதிகமான குறியீட்டுப் பொருள் தருகிறது.

 

இதன் மிக நிதானமான நடையாலேயே சிறு சிறு நிகழ்வுகளின் சித்திரங்களின் கவித்துவத்தையும் குறியீட்டுத் தன்மையையும் மேலதிக கவனம் கொண்டு வாசிக்கவேண்டியுள்ளது.

 

நாவலின் முதல் முடிச்சு அலது சிக்கல் டோனி மூலம் நிகழ்கிறது. புடன்புரூக்ஸ் நிருவனத்திடம் வர்த்தகம் செய்ய வரும் க்ரூன்லிக்(Grünlich) எனும் தொழிலதிபர்டோனியை மணந்து கொள்ள குடும்பத்திடம் சம்மதம் கேட்கிறார். ஆனால் டோனிக்கு க்ரூன்லிக்கின் செயற்க்கையான அதிகப்படியான பவ்யமான நடத்தை ஒவ்வாமையைஉருவாக்குகிறது. ஆனால் மற்றவர்களுக்கு அவனுடைய நாசூக்கான அடக்கமான தன்மை விரும்பப்படுகிறது. ஜான் தன்னுடைய தொழில் இணைப்புகள் மூலம் அவனுடைய குடும்பப் பிண்ணனியையும் தொழில் நிலவரத்தையும் விசாரித்துவிட்டு டோனியின் சம்மதத்திற்காக மட்டும் காத்திருக்கிறார். டோனியால் முழுமையாகமறுத்தாலும் முதன்முறையாக அத்தனை பேர் மத்தியிலும் தன்னைப் பற்றிய முக்கியத்துவமும் பேச்சும் நிகழ்வது கண்டு தன் உள்ளம் கொள்ளும் கிளுகிளுப்பை மிகவும்விரும்புகிறாள்.

 

 

ஒரு மாறுதலுக்காக டோனியை அருகிலிருக்கும் கடற்கரை நகரில் தன்னுடைய நண்பருடைய வீட்டில் தங்க ஜான் ஏற்பாடு செய்கிறார். அங்கு சில நாட்களில் நண்பனின்மகனும் தன் மகளும் காதலிப்பதை அறிந்து தன் மகன் டாம் மூலமாக வீட்டிற்கு கூட்டிவரச் செய்து டோனிக்கு மீண்டும் க்ரூன்லிக்கை மணக்குமாறு அறிவுறுத்துகிறார்.

 

இங்கு நெருக்கடியில் மனித மனத்தின் ஆழம் போடும் வேடங்கள் தாமஸ் மண்ணின் விவரிப்புகளில் அபாரமாக வெளிப்படும். இவ்வளவு கறாரான நெருக்கடிகளுக்குமத்தியிலும் மொத்த குடும்பத்தினரின் எண்ணமும் தன் திருமணத்தை சுற்றியே மையம் கொண்டிருப்பதனால் உருவாகும் உவகையால் மட்டும் அவள் அந்ததிருமணத்திற்கு சம்மதிக்க முடிவெடுக்கிறாள். ஆனால் அவள் உள்ளம் அதை தன் குடும்பப் பெயருக்காக அதை எடுப்பதாக நுட்பமாக மாற்றிக்கொள்கிறது. அப்போதுஅருகே மேசையிலிருக்கும் தன் வம்சாவள்யின் அட்டவனையில் தன் பெயருக்கு அருகில் க்ரூண்லிக் பெயரை எழுதுவதன் மூலமாக இது காட்டப்படும்.

 

இப்படி எண்ணற்ற தருணங்கள் மூலம் கோர்க்கப்பட்டு இப்பெரும் படைப்பு நகர்ந்து செல்கிறது. எந்த ஒரு செவ்வியல் படைப்பைப் போல இதுவும் ஒருபக்கம் விலாவரியான புறச்சித்திரங்களை அளித்துக் கொண்டே மற்றொருபக்கம் மனித மனத்தின் மெல்லிய நுட்பமான ஆழங்களையும் தொட்டுச் செல்கிறது. இரண்டையும் தனக்கேயுரிய உணர்ச்சி கலவாத இயல்புவாத நடையில் சொல்லிச் செல்கிறது.

 

இந்நாவலில் மற்றுமொரு முக்கிய பாத்திரம் டாம். சிறு வயதிலிருந்தே மிகவும் புத்திசாலியான தன் வம்சாவளியின் பெயரையும் நிறுவனத்தையும் அடுத்த கட்டதிற்குஎடுத்து செல்வான் என எண்ணும் அனைவரின் எதிர்பார்ப்புக்களையும் சுமக்கும் டாம். அதேபோல் தன் தந்தை இறந்த பின்பு தன்னுடைய அபார தைரியத்தாலும் புதியசவால்களை சந்திக்கும் மனோ திடத்தாலும் மேலும் மேலும் வளர்ந்து ஒரு கட்டத்தில் செனட்டராகிறான். ஆனால் அதுவே அவன் சரிவிற்கும் முதலெழுத்தாகஅமைந்துவிடுகிறது. எந்த இயல்பு தன்னை அங்கு தன்னை அழைத்து வந்ததோ அதுவே அங்கிருந்து கீழே உருட்டியும் விடுகிறது. ஒளி தன் காலடியில் உருவாக்கும் இருள்போல. தன் நிறுவனத்தின் அனத்து அலகுகலும் தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தனாலேயே உயர்ந்து வந்த டாம் அதே இயல்பால் செனட்டரான பின்பும் தன் புதியபொறுப்பில் அதை செய்ய‌முயன்று தோற்கிறான். ஒரு கட்டத்தில் அனைத்து சிறு தவ‌றுகளையும் தான் ஒருவனே திருத்த முயன்று சக அதிகாரிகளிடம் கோமாளிஆகிறான்.

 

 

அதே சமயம் தன் சகோதரன் கிறிஸ்டியான் (Christian) மூலம் வரும் குடும்பப் பிரச்சனையும் இதனுடன் இணைந்துகொள்கிறது. கிறிஸ்டியான் டாமிற்கு நேர் எதிர்.ஆரம்பத்திலிருந்தே எதையும் அலட்சியத்துடனும் அனைத்தையும் ஒரு கோணல் புத்தியுடன் அணுகுபவன். தன் குடும்பச் சூழலில் அனைவரிடமும் அவமானத்தையும்இகழ்ச்சியை மட்டுமே பெற்று வாழ்பவன். அந்த கொடூர பற்சக்கரங்களுக்கு நடுவில் சிக்கி முழுக்க சிதையாமல் இருக்க உதவுவது அவனுடய கலையார்வம் மட்டுமே.அனைவரையும் கூர்மையாக நோக்கி அப்படியே தன் உடல்மொழியில் வெளிப்படுத்தும் கலை அறிந்தவன். குறைந்த காலம் தானிருந்த நாடக வாழ்க்கையின் அனுபவநிழலில் மீதி வாழ்க்கையை கழிப்பவன்.

 

 

குடும்ப உறவுகளின் அவமதிப்புக்கு மேலதிகமாக நரம்பு நோயாலும் அவதியுறுகிறான். விருப்பமில்லாமல் செய்யும் தொழிலால் நஷ்டம் ஏற்பட்டு டாமின் தயவைஎதிர்பார்த்து மேலும் அவமானப்படுகிறான். இந்நாவலைப் பற்றி தாமஸ் மண் குறிப்பிடும் போது இதை தொழில் புரிபவ‌னின் மனநிலைக்கும் ஒரு கலை மனதுக்கும்இடையான மோதலாக தான் உருவாக்க நினைத்ததாக குறிப்பிடுகிறார்.

 

 

நாவலின் மைய்யக் கேள்வியாக நிற்பது இக்குடும்பம் வீழக் காரணம் என்ன? எந்தவொரு சிறந்த படைப்பைப் போல இதுவும் பல காரணங்களால் இந்த வீழ்ச்சிநிகழ்கிறது. சமூக அரசியல் மாற்றங்கள், நோய்கள் என. முதன்மையாக இது குடும்ப நாவல் என்பதால் வெளியே நடக்கும் சமூக மாற்றங்கள் சில குறிப்புகளால்ஆங்காங்கே சுட்டப்படுகிறது. உதாரணத்திற்கு வீட்டிற்கு வந்து முகச்சவரம் செய்து விட்டு போவருடன் நிகழும் சம்பாஷனை வழியாக இது காட்டப்படுகிறது. பிரஷ்ஷிய,ஆஸ்த்திரிய அரசுகளிடையே இருக்கும் பிணக்குகளாலும், ஒருங்கிணைந்த வியாபார சங்கம் உருவாவதன் மூலமாகவும் இம்மாற்றம் நிகழ்கிறது. அதேபோல நோய்கள்.கிறிஸ்டியானுக்கு நரம்புச் சிக்கல் இருப்பதைப்போல் ஜானின் மகன் ஹானோ (Hanno) சிறுவயதிலிருந்தே சவலையாக இருக்கிறான். எழுந்து நடக்க ஆரம்பிக்க பிந்துவதுமுதல் சரியாக பற்கள் வளராமல் சிரமப்படுவது, வயிற்றுப் பிரச்சனைகள் எனப் பல.

 

 

கிறிஸ்டியானுக்கும், ஹானோவிற்கும் பல இனைக்கோடுகள் வரையலாம். இருவருமே உடல் பலவீனமானவர்கள். இருவருக்கும் கலை ஆர்வம் கொண்டவர்கள்.ஹானோவிற்கு பியனோ வாசிப்பதில் மிகுந்த ஆர்வம். தன் தம்பி என்பதால் அவரது பார்வையிலிருந்து ஒதுக்கிய ஜானிற்கு இப்போது தன் மகனை ஒதுக்க முடியாததால்அவனை துன்புறுத்துகிறார், திட்டுகிறார். ஆண் மாதிரி இரு, இந்த மாதிரி பியானோ ஆர்வமெல்லாம் வீண் வேலை என்கிறார். கிறிஸ்துமஸ் தினத்தன்று ஹானோஅவருக்காக‌பாடும் பாடல் நினைவு வராததனால் மூர்க்கமாகிறார். இயல்பிலேயே கோழையான ஹானோ மேலும் உள்ளொடுங்கி போகிறான். நாவலின் இறுதியில்காய்ச்சல் வந்து இறந்து போகிறான்.

 

 

கிட்டத்தட்ட கிறிஸ்டியானின் விரக்தி ஒரு சாபம் போல ஜானை சூழ்கிறது அவனது வம்சத்தையே முற்றாக அழிக்கிறது. அதே போலத் தான் டோனியின் சரிவும்.க்ரூன்லிக்குடன் வாழ்ந்த சில வருடங்களிலேயே தெரிந்து விடுகிறது. அவன் ஒரு தோற்றுப் போன வியாபாரி என. தனக்கு வரும் வரதட்சனைப் பணம் மூலம்பெருங்கடனை அடைத்துவிடவே டோனியின் கரம் பிடித்திருக்கிறான். திருமணத்திற்குப் பிறகு மீண்டும் கடனில் மூழ்க தந்து மாமனார் ஜானின் உதவியை நாடுகிறான்.அவர் வந்து கடனளித்தவரிடம் உரையாட அனைத்தும் வெளிச்சமாகின்றன. இது அனைவரும் சேர்ந்து நடத்திய சூழ்ச்சி என. திருமணத்திற்கு முன்பு ஜான் க்ரூன்லிக்கைப்பற்றி விசாரிக்கையில், பணம் குடுத்த அனைவரும் சேர்ந்து அவரை இதற்குள் இழுத்திருக்கிறார்கள். சம்பாஷனையின் முடிவில் ஜான் உடைந்து போகிறார். தன் மகளிடம்அனைத்தும் கூறி டோனியையும் அவளது சிறு பெண் குழந்தையையும் அழைத்து சென்று விடுகிறார். அந்த விரக்தியில் சில வருடங்களில் இறந்து போய் விடுகிறார்.

 

 

டோனி சில வருடங்கள் கழித்து இன்னொரு திருமணம் செய்து கொள்கிறாள். இவ்வுறவும் நெடுநாள் நீடிக்கவில்லை. தன் கணவன் பெர்மானெடெர் (Permaneder) வீட்டுபணிப்பெண்ணுடன் கொஞ்சிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அன்றிரவே கிளம்பி வந்து விடுகிறாள். டாம் பலவகையில் சமாதானம் செய்து பார்க்கிறான். அவன்குடித்திருந்ததால் தவறி நடந்து கொண்டிருப்பானென்றும் அவனுக்கு உண்மையிலேயே அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதை தன் வீட்டிலேயே செய்திருக்கமாட்டானென்றும் சொல்கிறான். ஆனால் டோனி மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்கிறாள். தன்னைப் பார்த்து அந்த வார்த்தையை கூறிவிட்டானென்றும் அதன் பிறகுஅவனுடன் ஒரு கணமும் வாழ முடியாதென்றும் கூறுகிறாள். எவ்வளவு வற்புறுத்தி கேட்ட போதும் அது என்னவென கூற மருத்துவிடுகிறாள்.

 

வக்கீல் மூலம் விவாகரத்து கடிதம் அனுப்பும் போது பெர்மானெடெர் எந்தவித மறுப்புமின்றி ஒப்புக்கொள்வதுடன், முழு வரதட்சனைப் பணத்தையும் திருப்பி அனுப்பிவிடுகிறான். அனைத்தும் முடிந்த சில நாட்களில் எப்படியோ பெர்மானெடெர் கூறியது குடும்பத்தினற்கு தெரிகிறது. அவன் கூறியது Go to devil, you filthy sprat-eating slut!

budden

இவ்வளவுக்கப்புறம் கடைசியாக தெரியும் போது வாசகனுக்கு ஏற்படும் அதிர்ச்சி மிகப்பெரியது. அது குடிகாரனின் நிலை மீறிய வார்த்தை இல்லையென்றும், அதுடோனியின் கடந்தகால மணஉறவையும் அவளின் அந்தரங்க உணர்ச்சியை சிறுமை செய்யும் கீழ்த்தரமான வசை என்றும் வாசகன் உணர்ந்து கொள்கிறான்.பெர்மானெடெர் கொள்ளும் மவனமும் அதை உணர்ந்ததால் தானோ?

 

இவ்வளவு கசப்பான உறவுகளுக்கு அப்புறம் டோனியின் வாழ்க்கை என்னவாக முன்னகரும்? அனைத்திலும் வெற்றியடையும் தன் சகோதரன் மீது அவளும் அறியாஆழம் கசப்பு கொண்டிருக்குமோ? ஹானோ சவலைத் தனத்தை உள்ளூர மழிந்திருக்குமோ? அந்த கோணத்தில் வாசிப்பதற்கான அத்தனை சாத்தியத்தையும் இப்படைப்புதிறந்தே வைத்திருக்கிறது.

 

அனைத்தையும் தாண்டி இன்னொரு கோணத்தை தருவதால் தான் இது ஒரு பெரும்படைப்பாகிறது. கிட்டத்தட்ட நாவலின் பாதியில் அது வருகிறது. ஜான் தன் தொழிலில்உச்சகட்ட வெற்றி அடைந்திருக்கிறான். அப்போது தான் செனட்டர் ஆகி தனக்கென ஒரு பிரம்மாண்டமான வீட்டையும் வாங்கியிருக்கிறான். அதன் தோட்டத்தில் அமர்ந்துடோனியிடம் கூறுகிறான். “எதோவொன்று என்னை தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது டோனி. இதுவரை வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொண்ட எனக்குஇப்போது சஞ்சலங்கள் வருகின்றன. வெற்றியென்றால் என்ன? ஒவ்வொரு காரியம் செய்யும் போது தான் நிறைவானவனென்றும் அடுத்த நொடி என்ன நிகழுமெனமுந்தைய கணம் தெரிந்தவனாகவும் தன்னை உணர்வதுதானே? அது இப்போது இல்லை. என் வாழ்வின் பிடி என்னிடமிருந்து வழுக்கி செல்வதாகவே உணர்கிறேன்.”டோனி உடனே கூறுகிறாள் “ஏன் அப்படி நினைக்கிறாய். உன் தொழில் சிறப்பாக நிகழ்கிறது. புதிதாக வீடு வாங்கியிருக்கிறாய்.” அதற்கு ஜான் “இந்த வெற்றியும் வீடும்மேலோட்டமானது. வாழ்க்கையிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் எப்போது இந்த வெளியுலக சொத்துக்கள் மகிழ்வு தரஆரம்பிக்கிறதோ, அப்போது உள்ளிருக்கும் ஒன்று வீழ ஆரம்பிக்கிறதென. உள்ளிருக்கும் வீழ்ச்சி வெளியே தெரிய கொஞ்சகாலமாகும் அவ்வளவுதான். சிலசமயம் நம்கண்ணுக்கு பிரகாசமாக தெரியும் நட்சத்திரம் உண்மையில் அங்கு அணைந்து இருண்டிருக்கும்.”

 

நாவல் காட்டும் தரிசனமென்பது ஒவ்வொரு உயர்வும் தன்னகத்தே வீழ்ச்சியையும் உள்கரந்து வைத்திருக்கும் என்பதுதான். ஓங்கி உயர்ந்திருக்கும் கோபுரத்தின் ஒவ்வொருகல்லும் தன்னுள் சிதறிப் பரவும் விளைவை வைத்திருக்கும். சரிவுக்குத் தேவை ஒரு சிறு தருணம் மட்டும் தான். அது வெளிப்புற காரணமாய் இருக்கலாம். அரசியல் சமூக மாற்றம்போல. அல்லது நோய்களாக இருக்கலாம். ஹானோவுக்கு வருவதை போல. அல்லது விதியின் சாபமாக இருக்கலாம் கிறிஸ்டியான், டோனி வாழ்க்கையை போல. அல்லதுதன் உளவிளைவாக இருக்கலாம். டாம் கூறுவதைப் போல. எழுச்சியை வெற்றியை கண்டு குதூகலிக்கும் அதே மனம் தான் தோல்வியை சரிவை வேண்டி ஏங்குகிறது!

b

அன்புடன்,

பாலாஜி பிருத்விராஜ்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அலெக்ஸ்- நினைவுப்பிரார்த்தனை

$
0
0

IMG_2288

அஞ்சலி வே.அலெக்ஸ்

 

நண்பர் அலெக்ஸ் மறைந்து ஓராண்டு ஆகிறது. வரும் செப் 3 அன்று பசுமலை சி.எஸ்.ஐ சர்ச் கம்யூனிட்டி ஹால் [Pasumali CSI Church Community Hall] லில் அவருக்கான சிறப்பு நினைவுகூரல் பிரார்த்தனை நிகழவிருக்கிறது. நான் கலந்துகொள்கிறேன். விருப்பமிருக்கும் நண்பர்கள் உடன் வரலாம்

 

ஜெ

 

 

அலெக்ஸ் நினைவுகளும் பசுமைக்காடுகளும்

அலெக்ஸ் நினைவுகள் குறிப்புகள்

அலெக்ஸ் கடிதம் 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16901 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>