Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16834 articles
Browse latest View live

ஸ்டெல்லா புரூஸ் -கடிதங்கள்

$
0
0

12745645_10205719191963341_4592405552325662165_n

ஸ்டெல்லா புரூஸின் அப்பா

ஸ்டெல்லா புரூஸ் -கடிதங்கள்

 

ஜெ
ஸ்டெல்லா ப்ரூஸ் குறித்த கட்டுரை அருமையாகயிருந்தது. குறை கண்டுபிடிப்பதற்காக சுட்டிக் காட்டவில்லை. ஜெயமோகன் குறிப்பிடுவதை ஆணித்தரமாக நம்பும் பல வாசகர்களில் நானும் ஒருவன். எனவே எனக்குத் தெரிந்த தகவலை தெரிவிக்கவே எழுதுகிறேன்.

 

 

சுஜாதா ஸ்டெல்லா ப்ரூஸின் ‘அது நிலாக் காலம்’ பாதிப்பில்தான் ‘பிரிவோம் சந்திப்போம்’ எழுதினார் என்ற தகவல் பிழையானது. ‘பிரிவோம் சந்திப்போம்’ ஆனந்த விகடனில் வெளியான பிறகுதான் ‘அது ஒரு நிலாக் காலம்’ வெளியானது.

 

நன்றி

 

ரெங்கநாதன்

 

அன்புள்ள ரெங்கநாதன்,

 

ஆம், அந்த வரி குழப்பமாகவே அமைந்துள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் பின்னர் சுஜாதாவே ஸ்டெல்லாபுரூஸ் பாணியில் ஒருசில நாவல்களை எழுதினார். அது ஒரு நிலாக்காலம்போன்ற ஸ்டெல்லா புரூஸ் நாவல்களின் பாணியை சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம்போன்ற நாவல்களில் காணலாம். என்ற வரியில் அது ஒரு நிலாக்காலம் நாவலை ஒட்டி பிரிவோம் சந்திப்போம் நாவல் அமைந்துள்ளது என்னும் தொனி வருகிறது. நான் உத்தேசித்தது அந்நாவல்களில் பொதுவாக வெளிப்படும் ஸ்டெல்லா புரூஸின் பாணி சுஜாதாவில் வெளிப்பட்டது என்பதே. திருத்திக்கொள்கிறேன்

 

நன்றி

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

ஸ்டெல்லா புரூஸின் வாழ்க்கைபற்றிய கட்டுரைகளும் கடிதங்களும் கலங்கச்செய்தன. உண்மையில் ஒருவர் மறைந்தபின்னர் இப்படி நாம் கணக்கெடுக்கலாமே ஒழிய நம்மால் எதையாவது முன்னாடியே சொல்லிவிடமுடியுமா என்ன? ஒருவரின் ஆன்மிகமான பயணத்தையோ, அதில் அவர் செல்லவேண்டிய பாதையையோ வழிகாட்டிவிடமுடியுமா? ஆன்மிகமான பயணங்களை மேற்கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஏதேனும் சிறிய பிழைகளால் தோல்வியுறுவதைத்தானே காணமுடிகிறது? அதேபோல இலக்கியம் போன்றவற்றில் வெற்றியும் தோல்வியும் காலத்தின் கையில் அல்லவா உள்ளது?

 

ஆர் .ராஜாங்கம்

 

அன்புள்ள ராஜாங்கம்

 

உண்மை. ஆகவே எதையும் அறுதியிட்டு உரைப்பது அசட்டுத்தனம்தான். நம் வாழ்க்கையைப் பற்றியேகூட எதையும் சொல்லிவிடமுடியாதுதான். ஆனால் இரண்டு விஷயங்கள் மிகத்தெளிவானவை. ஒன்று வழிகாட்டியாக குரு ஒருவர் இல்லாத ஆன்மிகப்பயணம். இரண்டு, இலக்கியத்தின் ஆன்மிகத்திற்குப் பதிலாக பணம் புகழ் என சிலவற்றை வைப்பது

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெ

 

ஸ்டெல்லா புரூஸ் பற்றிய உங்கள் கட்டுரைகளும் குறிப்புகளும் ஆழமானவை. அவற்றை வாசித்துக்கொண்டிருக்கையில் ஒன்று தோன்றியது. ஸ்டெல்லா புரூஸின் இறப்பு துயரமானதுதான். ஆனால் அதைவைத்து அவருடைய வாழ்க்கை துயரமானது என்று சொல்லிவிடமுடியுமா? அவர் பிடிக்காத வேலையைச் செய்யவில்லை. பிடிக்காதவற்றில் ஈடுபடவில்லை. வாசித்தும் எழுதியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். வாழமுடியாதபோது இறந்தார். இதுதானே நல்ல வாழ்க்கை? எப்படியாவது இழுத்துப்பிடித்து நூறாண்டு வாழ்வதில் என்ன அர்த்தம்?

 

சரவணக்குமார்

 

அன்புள்ள சரவணக்குமார்

 

உண்மைதான். அவர் மகிழ்ச்சியாக இருந்தார் என்றே அழகியசிங்கரின் குறிப்புகள் காட்டுகின்றன.

 

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அஞ்சலி என்.ராமதுரை

$
0
0

ramaduraiPNG

அறிவியல் எழுத்தாளர் என்.ராமதுரை  காலமானார்

 

வணிக எழுத்துக்குரிய செயற்கையான விளையாட்டுத்தனமோ, இறங்கிவந்து சொல்லும் பாவனைகளோ இல்லாமல், நேரடியான மொழியில் அறிவியலை தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர் என்.ராமதுரை. அறிவியல் அதிலுள்ள கருத்துக்களின், பார்வையின் விந்தையாலேயே ஆர்வமூட்டும் வாசிப்பனுபவமாக ஆகமுடியும் என நிரூபித்தவர். தமிழில் அறிவியலை எழுதியவர்களில் அவருக்கே நான் முதலிடம் அளிப்பேன்.

 

ராமதுரை அவர்களுக்கு அஞ்சலி

ராமதுரையின் இணையப்பக்கம் அறிவியல்புரம்

என்.ராமதுரை

நகரும் கற்கள்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இருமதங்களின் பாதையில்

$
0
0

IMG_20180613_142458

 

சென்ற ஜூலை,ஆகஸ்ட்,செப்டெம்பரில் சைதன்யாவுக்கு எண்பதுநாட்கள் விடுமுறை. அதில் கம்போடியா பயணம் உட்பட மொத்தம் 11 பயணங்கள். கிளம்பும்போது ‘எங்கியுமே போகலை… வீட்டிலேயே இருந்தது மாதிரி இருக்கு’ என மனவெதும்பல். ஆகவே இம்முறை விடுமுறைக்கு அவள் வரும்போது ஒரு பயணம் திட்டமிட்டோம். கர்நாடகத்தின் தென்கனரா பகுதி. இருபது நாட்களுக்கு முன்புதான் நண்பர்களுடன் அதற்குமேல் வடகனரா பகுதிக்கு அருவிப்பயணம் சென்றிருந்தேன். கடந்த ஆண்டுகளில் எப்படியும் ஆண்டுக்கொருமுறையாவது கர்நாடகத்திற்குள் சென்றுகொண்டிருக்கிறேன்.

 

நானும் அருண்மொழியும் சைதன்யாவும் அக்டோபர் 13 மதியம் கிளம்பி ரயிலில் மங்களூர் சென்றோம். அங்கிருந்து தர்மஸ்தலா. நண்பர் காஞ்சி சிவா அங்கே நேத்ராவதி விடுதியில் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தார். மங்களூரிலிருந்து டாக்ஸியில் சென்றோம். இணையத்தில் டாக்ஸி முன்பதிவுசெய்ய முயன்றேன். 3200 ரூபாய். இணையதளம் அளிக்கும் தள்ளுபடி போக 2700 ரூபாய். அவர்கள் சொன்ன கிலோமீட்டர் கணக்கு கொஞ்சம் உதைத்தது. ஆகவே நேரில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ரயில்நிலையத்தில் சந்தித்த முதல் டாக்ஸிக்காரரிடம் கேட்டேன். 1600 ரூபாய் என்றார். மறுசொல் பேசாமல் ஏறிக்கொண்டோம்

 

மழைக்குள் பாகுபலி, தர்மஸ்தலா

மழைக்குள் பாகுபலி, தர்மஸ்தலா

தர்மஸ்தலாவுக்குள் நுழைகையில் மழை பெய்துகொண்டிருந்தது. கோயில் நகரம் நனைந்து ஊறிச் சொட்டிக்கொண்டிருக்க நேத்ராவதியில் ஓய்வெடுத்தோம். நாலரை மணிக்கு எழுந்து பார்த்தால் மழை நின்று பெய்துகொண்டிருந்தது. ஒரு ஆட்டோ பிடித்து கடைவீதிக்குச் சென்று மூன்று குடைகள் வாங்கிக்கொண்டோம். எனக்கு பிரியமான இடம் அங்கு பாகுபலி சிலை இருக்கும் ரத்தினகிரி என்னும் குன்று. நான் காசர்கோட்டில் பணியாற்றும்போது முதன்முதலாக அதை வந்து பார்த்தேன். அன்றுமுதல் இன்றுவரை எனக்கு மிக அணுக்கமானது அச்சிலை.1972 ல் அது நிறுவப்பட்டது. கர்நாடகத்தில் இருக்கும் ஐந்து பெரிய பாகுபலி சிலைகளில் இது நான்காவது. பிற அனைத்துமே தொன்மையானவை.

 

தர்மஸ்தலா ஒரு சமணத்தலம். ஆனால் அங்குள்ள மஞ்சுநாதர் ஆலயம் பின்னர் வந்தது. மஞ்சுநாதர் ஆலயத்தில் பூசகர்கள் மாத்வ குருமரபைச் சேர்ந்த பிராமணர்கள் – அவர்களின் வழிபாட்டுமுறை வைணவம். ஆலயம் சமணரான வீரேந்திர ஹெக்டே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சென்ற ஐநூறாண்டுகளுக்கும் மேலாக அவர்களே அந்த ஆலயத்திற்கும் அருகிலுள்ள சமண ஆலயங்களுக்கும் பட்டாதிகாரிகள். இங்குள்ள உணவுச்சாலையில் நாளொன்றுக்கு பத்தாயிரம்பேருக்கு அன்னதானம் செய்யப்படுகிறது. தர்மஸ்தலா என்ற பெயர் அவ்வாறு அமைந்தது.

je7

மூடுபித்ரே 

ரத்னகிரிக்குமேல் அனேகமாக எவருமே இருக்கவில்லை. பாகுபலி மழைத்திரைக்குள் ஓங்கி நின்றிருந்தார். குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. 39 அடி உயரமான ஒற்றைக்கல் சிலையை நோக்கியபடி நின்றோம். அந்த நனைந்த அந்தியில் முழுதறிந்து அமைந்த அறிவரின் பேருருவுடன் நின்றிருப்பது ஊழ்கநிலையாக தோன்றியது. மழை நின்றபின்னரும் முகிலால் மூடப்பட்டிருந்தது குன்று.

 

அங்கிருந்து திரும்பிவந்து மஞ்சுநாதரை வணங்கினோம். பெரிய கூட்டமில்லை. மழைபெய்துகொண்டே இருக்கும் ஊர் என்பதனால் நனையாமலேயே ஆலயத்தின் வரிசையில் நின்று அத்தனை தெய்வங்களையும் வணங்கி வெளிவர முடிந்தது. தர்மஸ்தலாவின் ஆலயம் கேரளபாணியில் அமைந்தது. சிறிய மர ஆலயம், அதைச்சூழ்ந்து உருவாக்கப்பட்ட கட்டிடங்களால் விரிந்து அகன்றிருக்கிறது. நவராத்திரி என்பதனால் கலைநிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன. ஒரு பெண் கதாகாலட்சேபம் செய்துகொண்டிருந்தாள். கன்னடம்தான், ஆனால் சிசுபால வதம் என தெரிந்தது.

20181015_104558

மூடுபித்ரே 

மறுநாள் காலை மழைபெய்துகொண்டிருந்தது. நாலரை மணிக்கே எழுந்து குளித்துவிட்டு நானும் சைதன்யாவும் சந்திரநாத பஸதியை பார்க்கச் சென்றோம் [வசதிதான். வசிப்பிடம் என சம்ஸ்கிருதப்பொருள். பிராகிருதத்தில் பஸதி. பஸ்தி என்றும் சொல்வார்கள்] அது தொன்மையான சமண ஆலயம். முன்பு ஓடுவேயப்பட்டிருந்தது. இப்போது கான்கிரீட்டில், அதே பாணியில், விரிவாக்கி கட்டியிருக்கிறார்கள். நாங்கள் சென்றபோது ஆலயம் திறக்கப்படவில்லை. எவருமே இல்லை. சுற்றிவந்து வழிபட்டுவிட்டு அதற்கும் பின்பக்கம் நீண்டுசென்ற கிராமச்சாலையில் மழையில் நான்கு கிலோமீட்டர் நடந்தோம்

je7

அப்பகுதியே பழைய கட்டிடங்களால் ஆனது. வீரேந்திர ஹெக்டே குடும்பத்தின் தொன்மையான இல்லம் அங்கேதான். அவர்கள் பயன்படுத்திய பயிற்சிவிமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கிராமச்சாலையில் அவ்வப்போது சிலர் நடமாடினர். முற்றிலும் ஒழிந்து கிடந்தது நிலம். மழையின் ஓசை பசுமைவெளிக்குமேல் நிறைந்து நின்றிருந்தது. மேற்குமலைத்தொடர் பகுதிகளில் இருக்கும் அடர்பசுமையின் அலைகளை இந்தியாவில் வேறெங்கும் பார்க்கமுடியாது. அது ஒரு உயிர்த்திமிறல், ஒரு பெருங்களியாட்டு.

 

டாக்ஸி சொல்லி வைத்திருந்தேன். கேரளத்தை பூர்விகமாகக் கொண்ட அப்துல்லா தர்மஸ்தலாவிலேயே வாழ்பவர். சமணத்தலங்கள் அவருக்கே தெரியும். எட்டரை மணிக்கு வேணூர் சென்றோம். அங்கே ஒரு சிறு சமணக்கோயிலில் பூசகர் இருந்தார். பார்ஸ்வநாதருக்குரியது இவ்வாலயம். கருவறைக்குள் சுடரொளியில் சிறிய திருமேனி நின்றிருந்தது. இளமழை பெய்துகொண்டிருந்தது. காற்றுவெளியே சற்று நீலநிறம் கொண்டிருந்தது. நீர்ப்பரப்புகள் மெய்ப்புகொண்டு சிலிர்த்தன. இலைப்பரப்புகள் ஒளிந்து அசைந்தன. கூரைவிளிம்புகளில் ஒளி சொட்டியது.

 

மர்க்கட முஷ்டி என்னும் சமணக் கருத்துரு. நாகத்தைப் பற்றிய பாம்பு அதை விடத்தெரியாமல் முகத்தை மட்டும் திருப்பிக்கொள்கிறது. பாவத்தைக் குறிக்கும் உருவகம் இது.

மர்க்கட முஷ்டி என்னும் சமணக் கருத்துரு. நாகத்தைப் பற்றிய பாம்பு அதை விடத்தெரியாமல் முகத்தை மட்டும் திருப்பிக்கொள்கிறது. பாவத்தைக் குறிக்கும் உருவகம் இது.

கர்நாடகத்திலோ கேரளத்திலோ சிற்றூர்களுக்குச் செல்லும்போது நம் எண்ணத்தை வந்து அறையும் ஒன்றுண்டு. அவ்வூர்களின் ஆழ்ந்த அமைதி. ஆந்திரத்திலோ தமிழகத்திலோ அந்த அமைதியை எங்கும் நாம் உணரமுடியாது. ஒருமுறை புலரியில் புதுக்கோட்டை விஜயாலய சோளீச்வரம் சென்றிருந்தோம்.ஊர்களிலிருந்து மிகத்தொலைவில் தனித்திருப்பது அந்த இடம். ஆனால் நான்குபக்கமிருந்தும் ஒலிப்பெருக்கியில் பாடல்கள் வந்து அறைந்து முயங்கி அர்த்தமில்லாத ஒலிக்குப்பையாகி செவியை நிறைத்தன. வேணூரின் அமைதியில் நாம் பேசுவதும் தாழ்ந்த குரலாகிவிடுகிறது. சிந்தனையிலும் அமைதி உருவாகிறது. ஆனால் பொதுவாக தமிழ் இளைஞர்களை அத்தகைய அமைதி தொந்தரவு செய்வதைக் கவனித்திருக்கிறேன். கூச்சலிட்டு ஆர்ப்பரிப்பது அவர்களின் வழக்கம். நல்லவேளையாக நம்மூர் தமிழ்ராக்கர்ஸ் இன்னும் தென்கர்நாடகப் பகுதிகளுக்குச் செல்ல ஆரம்பிக்கவில்லை.

je6

வேணூர் 

 

வேணூரில் உள்ள பாகுபலி சிலை 38 அடி உயரமானது. அமரசிற்பி ஜகனாச்சாரி என்பவரால் உருவாக்கப்பட்டது. கர்நாடகத்தின் பேருருவ பாகுபலிகளில் சிரவணபெளகொளாவின் சிலையே பேரழகு கொண்டது. அது ஒரு சிறுவன். கள்ளமற்ற நோக்குடன் உலகு முன் திறந்து நின்றிருப்பவன். கர்க்களாவின் சிலை புன்னகைகொண்ட அழகிய வட்டமுகம். தர்மஸ்தலாவின் சிலை ஊழ்கநிலை. வேணூரின் சிலையில் ஒரு துயர் உண்டு. எப்படி அது அங்கே குடியேறியதென்று உணரமுடியவில்லை. வாயின் அமைப்பாலா, விழியாலா என்று தெரியவில்லை. ஆனால் ஆழ்ந்த துயர் ஒன்று உள்ளாழத்தில் நின்றிருக்கும் ஊழ்கம் அது

 

நாங்கள் சென்றபோது பாகுபலிக்கு பூசை நிகழ்ந்துகொண்டிருந்தது. கால்களை கழுவி அரிமலரிட்டு வணங்கினார் பூசகர். கர்நாடகத்தில் வேணூர் போன்று சமணர்கள் நிறைந்த ஊர்களில் சமணப்பூசகர்கள் வழிபாடுகளைச் செய்கிறார்கள். அவர்கள் இல்லாத ஊர்களில் மாத்வபிராமணர்களே சமணத் தீர்த்தங்காரர்களுக்கும் பூசைகளை சமணமுறைப்படிச் செய்கிறார்கள். சமணப்பூசனை என்பது இந்துப் பூசனையேதான். அன்னம் படைக்கப்படுவதில்லை, அரிசி மட்டும்தான் என்பதே வேறுபாடு.

je4

மூடுபிதிரே தெருவில் 

வேணூரிலிருந்து மூடுபித்ரி சென்றோம். மூடுபித்ரி சமணர்களின் தென்னகக் காசி என்பார்கள். நூற்றுக்கும்மேலான சமண ஆலயங்கள் உள்ளன. பெரியவை இரண்டு, குருபசதி, ஆயிரம்தூண் பசதி. பல கோயில்கள் வீடுகள் போன்ற அமைப்பு கொண்டவை. நாங்கள் சென்றபோது எந்த ஆலயத்திலும் எவருமில்லை. குருபஸதியில் அடுக்கடுக்காகச் சென்ற அறைவாயில்களுக்கு அப்பால் கருவறைக்குள் பொன்னிறத் திருவுருவாக பார்ஸ்வநாதர் நின்றிருக்கிறார். மூடுபிதிரியின் ஆலயங்களில் இதுவே தொன்மையானது. ஆனால் பின்னர் பலமுறை திருப்பிக் கட்டப்பட்டது. கேரள மரக்கட்டுமான ஆலயங்களின் பாணியில் அமைந்தது

20181015_114819

ஆயிரத்தூண் பசதி மூடுபித்ரெ 

ஆயிரம்தூண் பஸதி திருபுவன சூடாமணி என புகழ்பெற்றது. இந்தியாவின் மாபெரும் சமண ஆலயங்களில் ஒன்று. ஆலயத்தின் முதல்நிலை கற்களால் ஆனது, மேலே மரக்கட்டுமானம். கற்பலகைகளை ஓடு போல அடுக்கி உருவாக்கப்பட்டது இதன் கூரை. சந்திரநாதருக்குரிய ஆலயம் இது. ஹொய்ச்சாள பாணியில் அமைந்த வட்டக்கூரைகொண்ட பெரிய முகமண்டபம். சுற்றுமண்டபம் பருத்த கற்தூண்களால் ஆனது.

20181015_113423

ஆயிரந்தூன் பசதி 

மூடுபிதிரி முழுக்க இளமழை தொடர்ந்து வந்தது. அங்கிருந்து கார்க்களா சென்றபோது மழைவிட்டு சாரல்கலந்த குளிர்க்காற்று மட்டும் எஞ்சியது. கார்க்களாவின் பாகுபலிப் பெருஞ்சிலை 41 அடி உயரமானது. ஆண்மை நிறைந்த அழகுகொண்டது. மரத்தாலானதுபோல் தோன்றவைக்கும் கல்வரிகள் பரவிய உடல். தீர்த்தங்காரர்களின் சிலைகள் மானுடனின் உச்சநிலை என உருவகிக்கப்பட்டவை. பெருந்தோள்கள், தாள்தோய்தடக்கைகள், பழுதற்ற விரிநெஞ்சு, நீள்விழிகள், குமிழுதடுகள். நோக்க நோக்க மானுடத்தின் எழுந்தருளும் தெய்வம் என்றும் மானுடம் கொள்ளும் முழுமை என்றும் எண்ணச்செய்வன.

 

கார்க்களாவின் இன்னொரு குன்றில் உள்ளது சதுர்முக பஸதி. நான்கு திசைகளிலும் வாயில்கள் கொண்டது. நான்கு பக்கமும் நான்கு கருவறைகள் திறக்கின்றன. ஒவ்வொரு கருவறையிலும் கன்னங்கரிய திருவுடல்களுடன் நான்கு தீர்த்தங்காரர்கள் நின்றிருக்கிறார்கள். பெரும்பாலும் பக்தர்கள் வருவதில்லை. ஆகவே ஒரு வாயில் மட்டுமே திறந்திருக்கிறது.  அரையிருளில் இருளே குவிந்து ஒளிசூடியதுபோல் நின்றிருக்கும் படிவர்கள். ஆழ்ந்த அமைதியில் காற்றின் ஓசை.

20181017_095211

செயிண்ட் மேரீஸ் ஐலண்ட் 

மாலை மூன்றுமணிக்கு சிருங்கேரி சென்று சேர்ந்தோம். காஞ்சி சிவா அங்கும் தங்குமிடம் ஏற்பாடுசெய்திருந்தார். சிருங்கேரி மடத்துக்குச் சொந்தமான தங்கும்விடுதியில். ஓய்வெடுத்துவிட்டு நேர் எதிரிலிருந்த வளாகத்திற்குச் சென்றோம். 2014ல் கட்டப்பட்ட ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் துங்கா நதிக்கரையில் அமைந்த ஆலயத் தொகைக்குச் செல்லலாம். மையமாக உள்ள ஆலயங்கள் இரண்டு. சாரதாம்பா ஆலயம், வித்யாசங்கர ஆலயம். சூழ்ந்து பல சிறு கோயில்கள். முன்னர் துங்கபத்ரா கரையில் தர்மபுரி என்னும் ஊரில் இதேபோல ஆலயத்தொகை ஒன்றை பார்த்த நினைவு. அந்த ஆலயங்களும் கிருஷ்ணதேவராயர் கட்டியவை

 

சாரதாம்பா ஆலயம் மரத்தாலனதாக இருந்தது. ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அங்கே ஒரு தீவிபத்து ஏற்பட்டு அவ்வாலயம் அழிந்தது. அதன்பின் கல்லில் இன்றைய ஆலயம் கட்டப்பட்டது. சிலைகள் புதியவை என்றாலும் பழைய சிலைகளுக்குரிய நுணுக்கமான அழகுகொண்டவை. சிருங்கேரி சாரதாபீடத்தின் தெய்வம் இது.

 

20181015_095035

வேணூர் 

 

அருகில் உள்ள வித்யாசங்கர ஆலயமும் சிருங்கேரி மடத்திற்குரிய தெய்வமான வித்யாதேவிக்குரியதுதான். மையத்தெய்வம் சிவன். தென்னகத்தில் மிக அழகிய சிலைகள் கொண்ட ஆலயங்களில் ஒன்று இது. அடித்தளம் முதல் கோபுர உச்சிவரை அத்தனை கற்களும் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டவை. சுற்றுச்சுவரின் சிற்பங்களை நோக்கி முடிக்க சிலமணிநேரம் ஆகும். கர்நாடகச் சிற்பமரபுக்குரிய தனித்தன்மைகள் கொண்டவை பல சிலைகள்.

20181017_095523

செயிண்ட் மேரீஸ் ஐலண்ட் 

இங்கே விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணனுக்கும் பத்தாவது அவதாரமான புரவியூரும் கல்கிதேவனுக்கும் நடுவே அவதாரங்களில் ஒன்றாகத் தீர்த்தங்காரர் சிலையும் உள்ளது. ஏற்கனவே பெலவாடி வீரராகவப்பெருமாள் ஆலயத்தின் மையத்தெய்வத்தின் அருட்சுற்றுவட்டத்தில் பத்தாவது அவதாரமாக புத்தர் செதுக்கப்பட்டிருப்பதை பூசகர் சுட்டிக்காட்டியிருந்ததை நினைவுகூர்ந்தேன்.

 

சிருங்கேரி மடத்திற்கு தென்னகம் பெரிதும் கடன்பட்டிருக்கிறது. நான் ஏற்கனவே பலமுறை அதைச் சொல்லியிருக்கிறேன். மாலிக் காபூரின் படையெடுப்புப்புக்குப் பின் சீரழிந்துகிடந்த தென்னகத்தை அழிவிலிருந்து மீட்டெடுத்த விஜயநகர பேரரசு சிருங்கேரி மடத்தின் 12 ஆவது தலைவர். அவரால் ஊக்கப்படுத்தப்பட்டவர்கள் விஜயநகரத்தை உருவாக்கிய ஹரிஹரரும் புக்கரும். அவர்கள் தென்னகத்திலிருந்த உதிரி சுல்தானிய ஆட்சியாளர்களை வென்று மீண்டும் இந்துப்பேரரசு ஒன்றை உருவாக்கினர். தென்னகத்தில் நாம் இன்றுகாணும் ஆலயங்கள் அனைத்துமே இடிபாடுகளில் இருந்து நாயக்கர்களால் கட்டி எழுப்பப்பட்டவை, அல்லது மீட்டுருவாக்கம் செய்யப்பட்டவை. அவர்களால் புதுப்பிக்கப்படாத ஆலயங்களென ஏதுமில்லை.

20181015_123753

கார்க்களா

 

சிருங்கேரி மடமே ஸ்மார்த்த மரபு என்னும் ஆறுமதப்பூசகர்களின் குருமரபை உருவாக்கி தலைமைதாங்கி நிலைநிறுத்தியது. ஒருகட்டத்தில் இந்துமதத்தின் வழிபாட்டுமரபும் ஞானமரபும் முற்றழிந்துபோகாமல் காத்தது இந்த பூசக மரபினரே. இன்றும் சிருங்கேரி மடமே தென்னகத்திலுள்ள பல்லாயிரம் ஆலயங்களின் பெரும்புரவலராகத் திகழ்கிறது.

 

நவராத்ரி பூசைகள் தொடங்கிவிட்டிருந்தமையால் சிருங்கேரி கலகலப்பாக இருந்தது. துங்கா நதியோரம் ரங்கராட்டினங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், கடைகள் என பெரிய மக்கள்திரள். வளாகத்திற்குள் இசைநிகழ்ச்சிகள்,பஜனைகள். இரவு பத்துமணிவரை அங்கேயே சுற்றிவந்துகொண்டிருந்தோம். துங்காவின் மறுபக்கம் வேதபாடசாலைகளும் அவர்களுக்கான தங்குமிடங்களும் இருக்கின்றன

20181015_182743

சிருங்கேரியில் நானும் சைதன்யாவும் காலையில் ஒரு நீண்ட நடை சென்றோம். துங்கைக்கு மறுபக்கம் அடர்காடு, காபித்தோட்டங்கள், மிளகுத்தோட்டங்கள். ஆளொழிந்த பசுமை வெளி. மிளகின் பச்சை காய் ஒன்றை சைதன்யாவுக்கு சாப்பிடக்கொடுத்தேன். மிளகை அந்த வடிவில் பார்த்ததே இல்லை. நன்றாக மென்று அரைத்துவிட்டு மூக்குசிவக்க கண்ணீர்விட்டாள்.

 

காலை பத்துமணிக்கு உடுப்பிக்கு டாக்ஸியில் கிளம்பினோம். சிருங்கேரியைச் சூழ்ந்திருக்கும் பகுதி பெரும்பகுதி காடுதான். அங்கிருந்து அருகில்தான் தென்னாட்டின் சிரபுஞ்சி என்று சொல்லப்படும் ஆகும்பே வனம். பசுமைக்காடுகள் வழியாகச் சுற்றிச்செல்லும் பாதை தக்காணப் பீடபூமியின் விளிம்பில் மலையிறங்கி கீழே விரிந்துகிடந்த கடலோரக் கர்நாடகத்தை அடைந்தது

20181016_092501

உடுப்பியில் ஒரு விடுதியில் தங்கினோம். சென்று சேர்ந்தபோதே இருட்டிக்கொண்டிருந்தது. பெரிய கண்ணாடிப்பரப்பு சன்னலாக அமைந்திருந்தது. கடலில் இருந்து முகில்திரள் பெருகி அணுகுவதை அங்கிருந்து பார்க்கமுடிந்தது. கூரிய மின்னல்களால் முகிலிருள் கிழிபட்டது. இடியோசை கண்ணாடியை அதிரச்செய்து மழைத்துளிகள் நடுங்கி வழியவைத்தது. பின்னர் பெருமழை. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம்

 

மழை ஓய்ந்தபோது என்ன செய்வதென்று தெரியவில்லை. கடற்கரைக்குச் செல்வதாகத் திட்டம். அதை ஒத்திவைத்து உடுப்பி கிருஷ்ணன் கோயிலுக்கு சென்றோம். உடுப்பி கிருஷ்ண மடம் பிற்காலவேதாந்தங்களில் ஒன்றாகிய துவைத மரபை உருவாக்கிய மத்வாச்சாரியாரால் நிறுவப்பட்டது. அங்கே நிறுவப்பட்டிருக்கும் கிருஷ்ணன் சிலை மத்வர் தன் தனிப்பட்ட வழிபாட்டுக்காக வைத்திருந்தது என்றும், அவர் அதை ஒரு கோபிசந்தனக் குடுவைக்குள் கண்டெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. மிகச்சிறிய விக்ரகம். அது அமைந்துள்ள கருவறையை வெளியே இருந்தே பார்க்க ஒரு சாளரம் உள்ளது. உள்ளே சென்று வணங்க நீண்ட சுற்றுப்பாதைகள் வழியாகச் செல்லவேண்டும்.

IMG_20180615_112909

கேரளபாணியில் மரத்தாலான ஆலயம். அந்த ஆலயமே இன்னொரு பெரிய மரக்கட்டிடத்திற்குள் உள்ளது. தொன்மையான தூண்களும் உத்தரங்களும் கொண்டது. உடுப்பியின் கிருஷ்ணமடம் அமைந்துள்ள பகுதியில் நான்குபக்கங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வண்டிகள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. நடந்தே சுற்றிவருபவர்கள் அரியதோர் காலப்பயண அனுபவத்தை அடையமுடியும். இந்தச் சுற்றுப்பாதையில் மத்வ மரபின் எட்டு மடங்களின் மாளிகைகள் உள்ளன. அஷ்டமடங்கள் என இவற்றைச் சொல்வதுண்டு. தொன்மையான கட்டிடங்கள் அவை.

 

நின்றுவிட்டிருந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கியது. பின்னர் தூறலாகியது. மடத்தின் குளத்தில் தூய நீர் இருண்டு நலுங்குவதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். மடமே ஒரு கொண்டாட்டநிலையில் இருந்தது. ஒருபக்கம் பஜனை. ஒரு பெண் அற்புதமாக பரதநாட்டியம் ஆடினாள். அனைத்துப்பாடல்களும் கிருஷ்ண லீலை. ஓரிடத்தில் கிளாரினெட் வாசிக்கும் குழு ஒன்று. பல இடங்களில் சிறிய நூல்பாராயணக் குழுக்கள் அமர்ந்திருந்தன

 

உண்மையில் அந்தப்பொழுதில் மடமும் ஆலயமும் அப்படி இருக்குமென நினைக்கவில்லை. ஆகவே அந்தியில் என்ன செய்யலாமென திட்டமிட்டபோது பேசாமல் ஒரு சினிமாவுக்குச் செல்லலாம் என எண்ணி இருக்கைப்பதிவு செய்திருந்தோம். ஆகவே கிளம்பி மணிப்பாலில் ஐநாக்ஸில் ஒரு படம் பார்க்கச் சென்றோம். வெனம் என்னும் படம். பார்த்துமுடித்தபோது எனக்குள் ஒரு பாரசைட் புகுந்துகொண்டதைப் போல உணர்ந்தேன்.

je2

செயிண்ட் மேரீஸ் ஐலண்ட்

 

திரும்பி வர ஆட்டோவுக்காகக் காத்துநின்றபோது பதற்றம் ஏற்பட்டது. ஆயுதபூஜை என்பதனால் ஆட்டோக்கள் குறைவு. மழைக்காலம் என்பதனால் மேலும் குறைவு. கூப்பிட்ட எவருமே உடுப்பி வரை வரமாட்டேன் என்றார்கள். அப்போது ஒருவர் “நீங்கள் எழுத்தாளர் ஜெயமோகன் தானே? நம்பவே முடியவில்லை. இங்கே எப்படி?” என்றார். விவேக் என்றுபெயர். ஓசூர்க்காரர். மணிப்பால் பல்கலையில் இமானுவேல் கான்ட் குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்கிறார். அவரிடம் நிதானமாகப் பேச பொழுதில்லை. மழைநேரம், ஆட்டோ கிடைக்காத பதற்றம். அவரே ஆட்டோ பிடித்து அனுப்பிவைத்தார்.

 

மறுநாள் காலை மால்பே கடற்கரைக்குச் சென்றோம். கடற்கரையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் செயிண்ட் மேரீஸ் ஐலன்ட் என்னும் சிறிய தீவு உள்ளது. அதற்கு படகில் செல்வது அங்கே முக்கியமான வேடிக்கை. அலைகள்மேல் படகில் செல்வது எனக்குப் பிடிக்கும். ஆனால் அருண்மொழியும் சைதன்யாவும் இருந்தமையால் பெரும்பதற்றம். ஒருகணம் கூட நிம்மதியாக இருக்கவில்லை. நகத்தைக் கடித்து துப்பி ரத்தமே வந்துவிட்டது

je1

செயிண்ட் மேரீஸ் ஐலண்ட் 

செயிண்ட் மேரீஸ் ஐலண்டில் வாஸ்கோ ட காமா வந்து இறங்கியதாகவும், அதன்பின்னரே கோழிக்கோடு சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் ஆதாரமேதுமில்லை. மேலும் இப்பகுதியில் கப்பல்கள் அணுகமுடியாது. கடல்முழுக்க செங்குத்தான பாறைகள் எழுந்து நிற்கின்றன. இது எரிமலைக்குழம்பால் உருவான தீவு. தென்னைமரங்கள் உள்ளன. ஓணான்களும் அரணைகளும் எப்படி வந்தன என்று தெரியவில்லை.

 

விந்தையான வடிவங்களில் நின்றிருக்கும் பலவண்ணப் பாறைகளும் தூய்மையான கடற்கரையும் தெளிநீரும்தான் இங்குள்ள கவற்சி. இளநீர் கிடைக்கும் ஒரு கடை உண்டு. மற்றபடி அங்கே இரவு தங்க முடியாது. மிகத்தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது. அந்த நிலத்தின் தூய்மையே ஒரு மனமலர்ச்சியை உருவாக்கக்கூடியது

 

உடுப்பியிலிருந்து கிளம்பி மங்களூர் வந்தோம். மாலை நான்கரை மணிக்கு டிக்கெட் என்பது நினைவு. ஆனால் அது காலை நான்கரை. மாலை என்றால் பதினாறரையாக குறிப்பிடப்பட்டிருக்கும் என்பது நினைவில் தோன்றவேயில்லை. அருண்மொழிதான் டிக்கெட் போட்டிருந்தாள், நல்லவேளை. நான் போட்டிருந்தால் அதற்கு பதில்சொல்வதற்கு வெண்முரசுக்கு இணையான சொற்கள் தேவைப்பட்டிருக்கும்.

20181015_183311

சிருங்கேரி 

என்ன செய்வதென்று அறியாமல் அரைமணிநேரம் குழம்பியபின் பேருந்தோ ரயிலோ கிடைக்குமா என்று பார்த்தோம். திருவனந்தபுரத்துக்கு எந்த பயணவழியும் இல்லை. ரயில், பேருந்து, விமானம் எதுவும்.எர்ணாகுளத்துக்கு ஆறுமணிக்குக் கிளம்பும் பேருந்து கிடைத்தது. எர்ணாகுளத்திலிருந்து நாகர்கோயிலுக்கு ரயில் பதிவுசெய்யமுடிந்தது. பேருந்து காலை 6 மணிக்கு எர்ணாகுளம் செல்லும். ஏழேமுக்காலுக்கு ரயில் எர்ணாகுளம் வரும்.  ஏறிவிடலாம் என திட்டம்

 

ஆனால் பேருந்து கிளம்பிச்செல்ல எட்டு மணி ஆகிவிட்டது. மங்களூரில் பயணிகளைச் சேகரித்து அவர்களைக்கொண்டுசென்று கேரள எல்லைக்குள் நின்றிருக்கும் ஆம்னிபஸ்ஸில் ஏற்றிவிட்டார்கள். வழியில் கடுமையான சாலைநெருக்கடி. காலை எட்டுமணிக்குத்தான் சென்றுசேரும் என்றார்கள். அடுத்த ரயிலை நான் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் தூங்கிவிழித்தால் முற்காலை ஐந்துமணிக்கு திரிச்சூர் வந்துவிட்டிருந்தனர். ஏழுமணிக்கு எர்ணாகுளம். ஏழரைக்கே ரயில்நிலையம் வந்துவிட்டோம்.

20181015_184016

சிருங்கேரி 

பகல்முழுக்க படுத்துக்கொண்டே நாகர்கோயிலுக்குப் பயணம் செய்தோம். மாலை நான்கு மணிக்கு நாகர்கோயில் ஐந்துமணிநேரம் பிந்திவிட்டோம். ஆனாலும் பரவாயில்லை, பிரச்சினைகள் இல்லாமல் வரமுடிந்தது. இணையம் உருவாக்கும் தொடர்புவசதியே கைகொடுத்தது. இல்லையேல் ஒவ்வொரு இடத்திலும் அலைக்கழிந்திருக்கவேண்டும்

 

வரும்போது ஓர் எண்ணம் எழுந்தது, இரண்டுவகை தொல்மதநிலையங்களை பார்த்துவந்திருக்கிறோம். இரண்டுமே எனக்கு உளப்பூர்வமாக அணுக்கமானவை. இந்துமத நிலையங்கள் அனைத்துமே மக்கள்பெருக்குடன், கலைகளும் வழிபாடுகளுமாக  உயிர்த்துடிப்புடன் இருந்தன. சமணநிலைகள் அனைத்துமே நல்ல நிலையில் இருந்தாலும் மக்கள்வருகை இல்லாமல் வெறும் இடங்களாக, சென்றகாலத்தின் தடையங்கள் மட்டுமாக நின்றிருந்தன. கர்க்களாவின் சதுர்முக பசதியின் உள்ளே கண்ட இருள் மிகவும் தொந்தரவு செய்தது அப்போது.

20181015_103313

குருபசதி மூடுபதிரே

 

ஒரு மதம் கைவிடப்படுகையில் ஒரு நீண்ட வரலாறு, மாபெரும் பண்பாட்டுப்பரப்பு, விரிந்த சிந்தனைத்தொகை, மகத்தான கலைவெளி வெறும் காலச்சுமையாக மாறிவிடுகிறது. ஜப்பானிலும் கொரியாவிலும் ஏற்கனவே பௌத்தம் அப்படி மாறிக்கொண்டிருக்கிறது. இந்துமதம் இந்தோனேசியாவிலும் கம்போடியாவிலும் அப்படித்தான் உள்ளது. இந்தியாவில் அனைத்துத் தரப்புகளிலிருந்தும் இந்துமதம் மீது நிகழும் பண்பாட்டுத் தாக்குதல்களுக்குப்பிறகும் அது வாழ்கிறது. அதை வாழவைப்பது அதிலுள்ள கொண்டாட்டத் தன்மை, கலைகளையும் இலக்கியங்களையும் ஒருங்கிணைத்துச்செல்லும் தன்மை, அனைத்து வழிபாட்டுமுறைகளையும் இணைத்துக்கொண்டு முன்செல்லும் நெகிழ்வு, புத்தருக்கும் தீர்த்தங்காரருக்கும் இடமளிக்கும் தத்துவ விரிவு. அது என்றுமிருக்கவேண்டும்.

 

இரண்டு அழிவுசக்திகளின் நடுவே அகப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்து மதம். வெவ்வேறு அயல்மத உதவிகளுடன் அதை அழிக்கத்துடிக்கும் ஒரு தரப்பு. அதை ஓர் வெறிகொண்ட அரசியல்தரப்பாக்கி, அதைக் கருவியாக்கி அதிகாரத்தை அடைந்து, அப்பட்டமான ஊழலாட்சியை நிகழ்த்தும் ஒரு தரப்பு.  முதல்தரப்பு பொய்யானதோர் முற்போக்கு முகம் கொண்டது. மெய்யியலோ தத்துவமோ வரலாறோ எதுவாயினும் அதை விருப்பப்படி திரிக்கும் அறிவாற்றல் கொண்டது, நேர்மையற்றது, இன்னொரு தரப்பு மூர்க்கமான பழமைவாதமன்றி ஏதும் அறியாதது. இருவரும் மறுதரப்பினரால் ஊட்டி வளர்க்கப்படுகின்றனர். ஒருவரின் நேர்மையின்மையும் மூர்க்கமும் அறியாமையும் இன்னொருவருக்கு உணவாகின்றன. நடுவே மூவாயிரமாண்டுக்கால மெய்மரபு திகைத்து நின்றிருக்கிறது இன்று. இந்துமெய்மரபு மானுடத்தின் பெருஞ்செல்வம் என நான் நினைக்கிறேன். மானுடம் அதைப் பேணிக்கொள்ளும் என்றே நம்புகிறேன்.

 

 

அருகர்களின் பாதை 3 – மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா

 

குளிர்ப் பொழிவுகள் -1

 

குளிர்ப்பொழிவுகள் – 2

 

குளிர்ப்பொழிவுகள் – 3

 

குளிர்ப்பொழிவுகள்- 4

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-42

$
0
0

bowதுரியோதனன் துச்சாதனனும் துச்சலனும் துர்மதனும் துச்சகனும் சூழ கவச உடையுடன் குருக்ஷேத்ரத்தின் முகப்புக்கு வந்தபோது படைப்பிரிவின் முகப்பில் நின்றிருந்த தேருக்கு அடியில் சிறு மரப்பீடத்தில் அமர்ந்திருந்த சகுனி தன் புண்பட்ட காலை மெல்ல தூக்கி வைத்து தேர்விளிம்பைப் பற்றியபடி எழுந்து நின்றார். துரியோதனன் அவரை அணுகி தலைவணங்கினான். சகுனி “இன்று நாம் வகுத்துள்ள படைசூழ்கை உறுதியாக வென்று மீளும். நமது படைவீரர்கள் வெற்றி கொள்ள இயலுமென்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்” என்றார். “ஆம்” என்று துரியோதனன் சொன்னான். அவன் துயிலின்மையின் வெளிறலுடன் கண்களுக்குக் கீழே கருவளையங்களுடன் முற்றிலும் தளர்ந்தவன் போலிருந்தான்.

“நமது படைசூழ்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் மேம்பட்டபடி வருகின்றன. பிதாமகர் பீஷ்மரின் அம்புகளால் எதிரிப்படையின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. பின்னணியில் நிறுத்திய ஏவலர்களையும்கூட படைக்கலம் எடுக்கச்செய்து படைப்பிரிவுகளுக்குள் பொருத்துகிறார்கள். பயிலாதோரைக் கொண்டு முன்நிறுத்தி முகம் பெருக்க எண்ணுகிறார்கள். இன்றைய போர் பிதாமகருக்கு மேலும் எளிதென்றிருக்கும். அனலில் பூச்சிகள்போல பாண்டவப் படை பொசுங்கிக் குவியப்போகிறது” என்றார் சகுனி. தாடியை நீவியபடி புன்னகைத்து “தேர்ச்சகடத்தில் அடிபட்ட நாகம் சீறித் தலைதூக்கி மண்ணை அறைவதுபோல இன்று சற்று விசைகூட்டிக் காட்டுவார்கள் என நினைக்கிறேன்” என்றார்.

துரியோதனன் “உண்மைதான் மாதுலரே, நேற்று பிதாமகர் பீஷ்மர் பேரழிவை உருவாக்கியிருக்கிறார்” என்றான். சகுனி துரியோதனனின் விழிகளை பார்க்கவில்லை. துரியோதனனும் அவர் விழிகளை ஏறெடுக்கவில்லை. இருவருக்கும் உவப்பில்லாத ஏதோ முறைமைச் சொற்களை பேசிக்கொள்வது போலிருந்தது அவர்களின் முகம். சகுனி “போர் இன்றோ நாளையோ முடியவேண்டும். மழை அணுகிக்கொண்டிருக்கிறது” என்றார். துரியோதனன் “ஆம், இப்பருவத்தில் இங்கு மழை இல்லை. இத்தருணத்தில் ஏன் என புரியவில்லை” என்றான். சகுனி “மழை மண்ணும் விண்ணும் விழைவதற்கேற்ப பெய்கிறது. மானுடருக்கு அதில் சொல் உண்டா?” என்றார். “மெய்” என்றான் துரியோதனன்.

சகுனி அந்த உணர்வற்ற வெற்றுச்சொற்களால் உளம் சீண்டப்பட்டார். அதை வெல்லவேண்டும் என எண்ணி தன் முகத்தை இயல்பாக்கும்பொருட்டு தாடியை நீவியபடி “அனைத்தும் நல்வாய்ப்பென்றே அமைந்துள்ளது” என்றதுமே அவர் சொல் தன்னியல்பாக எல்லைமீறி வெளிப்பட்டது. “நமது இளையோர் இறந்ததும் ஒருவகையில் நன்று. அவர்களின் இறப்பு நமது படைவீரர்களுக்கு வீறு கூட்டியிருக்கிறது” என்றார் சகுனி. தன்னை அறியாமலேயே துச்சாதனன் ஓரடி முன்னால் எடுத்து வைத்தான். சகுனி அறியாமல் ஓர் அடி பின்சென்று பின்னர் நிமிர்ந்து அவனை பார்த்தார். வெண்கற்கள் என ஒளிமங்கிய அவ்விழிகள் துச்சாதனனை நடுங்கச் செய்தன. அவன் எடுத்த சொல்லை தன்னுள் நிறுத்தி தலையசைத்தான்.

ஆனால் அதற்குள் பின்னிருந்து துர்மதன் முன்னால் வந்து “இதை எவரிடம் சொல்கிறீர்கள், மாதுலரே? இதுவரை நிகழ்ந்த போரில் எவர் வென்றுகொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல தெய்வத்தாலும் இயலுமா?” என்றான். “ஆம், பிதாமகர் பீஷ்மர் பாண்டவப் படைகளை அழித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் மறுபுறம் அர்ஜுனனும் பீமனும் நமது படைகளை வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். இங்கு நிகழ்ந்துகொண்டிருப்பது வெறும் இறப்பு. வெற்றியோ தோல்வியோ அல்ல” என்றான். அவர்களின் சலிப்பை கலைத்துவிட்டதை உணர்ந்து சகுனி இதழ் வளைய புன்னகைத்து “போரெனில் வேறு என்னவென்று நினைத்தாய்? இது என்ன கதை விளையாடும் களிநிலமா? இறப்பால்தான் வெற்றிகள் ஈட்டப்படுகின்றன. விலையால்தான் கொள்பொருள் மதிப்பிடப்படுகிறது” என்றார்.

“ஆனால் எங்கள் குருதியினர் களம்படுகிறார்கள்” என்றான் துச்சலன். “குருதிக்குமேல்தான் பேரரசுகள் எழுகின்றன” என்றார் சகுனி. “மாதுலரே, குருதியின் பொருள் மாறுபடுவதென்பதை நேற்றிரவு அறிந்தேன். எங்கோ எவரோ இறப்பதல்ல, என் தோள் தழுவி ஆடிய உடன்பிறந்தார் இறப்பது. நாங்கள் இன்னுமிருக்கிறோம் திரளென. நன்று, நாங்கள் அனைவரும் இறந்து மூத்தவர் அரியணை அமர்வாரென்றால்…” என்று துச்சகன் சொல்ல துரியோதனன் “போதும்” என்றான். சகுனி சீற்றத்துடன் “உங்களுக்கு மாற்று இருக்குமெனில் சொல்க, போரை நிறுத்திவிடுவோம்! இப்போர் எனக்காக அல்ல” என்றார். “உங்களுக்காகவும்தான், மாதுலரே” என்றான் துச்சலன்.

சகுனி தன் உணர்வணைந்த நிலையைக் கடந்து சீற்றம்கொண்டார். “ஆம், நான் கொண்ட வஞ்சினத்திலிருந்து தொடங்கியது இது. ஆனால் வளர்ந்ததும் நிலைகொள்வதும் உங்கள் குடியின் பூசலால். உங்கள் மூத்தவன் கொண்ட மண்விழைவால். அவன் அவ்விழைவை துறக்கட்டும், குடிப்பூசல் பேசி முடிக்கப்படட்டும். ஒன்று சொல்கிறேன், எக்கணமும் போரை நிறுத்திக்கொள்ளும் உரிமை உங்களுக்கு உள்ளது” என்றார். “அமைதிப்பேச்சு குறித்து அவ்வப்போது எவரேனும் சொல்கிறார்கள். செல்க, விழைந்தால் அவர்களுடன் பேசும்பொருட்டு அமர்க! உங்கள் பிதாமகர்கள் முன்னிலையில் சொல்லமைவு கொள்க!”

துரியோதனன் “அந்தப் பேச்சே வேண்டியதில்லை. இனி எந்நிலையிலும் இந்தப் போர் அடங்காது, மாதுலரே” என்றான். சகுனி துச்சாதனனை நோக்கி புன்னகைத்து “நீங்கள் பேசிக்கொள்ள வேண்டியது உங்கள் மூத்தவனிடம், என்னிடம் அல்ல” என்றார். துரியோதனன் “பேசிக்கொள்வதற்கு இனி ஒன்றுமில்லை. நான் இன்று வாழும் தம்பியருடன் இருப்பதைவிட இறந்த தம்பியருடன் மிகைப்பொழுது இருக்கிறேன்” என்றான். கைவீசி “அனைவருடைய ஊழும் முன்னரே எழுதப்பட்டுவிட்டன. அதை மாற்றி எழுதும் தகுதியோ உரிமையோ நம் எவருக்குமில்லை” என்றபின் முன்னால் நடந்தான்.

துச்சாதனன் தன் இடையில் கைவைத்து சகுனியை நோக்கியபடி நின்றான். துரியோதனன் தன் குரல் கேளா தொலைவுக்கு சென்றுவிட்டதை திரும்பி நோக்கி உணர்ந்தபின் குரல் தாழ்த்தி “மாதுலரே, நீங்கள் யார்? மெய்யாகவே நீங்கள் மானுடர்தானா என்று ஐயுறுகிறேன்” என்றான். சகுனி மங்கிய புன்னகையுடன் அவனை நோக்கினார். “பாலை நிலத்திலிருந்து எழுந்த கொடுந்தெய்வமா நீங்கள்? எத்தனை தெளிவாக இப்போது கண்முன் தெரிகிறது! இவை அனைத்தும் உங்கள் ஆடல். உங்கள் சிற்றறையிலிருந்து களம்பரப்பி, பகடையை உருட்டி, இரவு பகலென நீங்கள் ஆடியதுதான் பிறிதொரு வழியில் இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சொல்க, ஏன் எங்களுடன் விளையாடுகிறீர்கள்? இம்முற்றழிவினால் நீங்கள் ஈட்டுவதென்ன?” என்றான்.

சகுனி அவன் விழிகளை சில கணங்கள் உற்று நோக்கியபின் “அஸ்தினபுரியின் தெருமுனைகளில் இப்போதும் சூதர்கள் பாடுகிறார்கள் நான் துவாபரன் என்று. இந்த யுகத்தை முற்றழித்து, எச்சமிலாது ஒழித்து, இனிவரும் யுகத்திற்கு வழி தெளிக்க வந்தவன் என்று” என்றார். அவர் புன்னகை பெரிதாகியது. “வரவிருக்கும் கலியுகத்தின் மைந்தன் என்று உன் மூத்தானை சொல்கிறார்கள். எனில் நான் யார்? அவனுக்கு வரவறிவிப்பு உரைப்பவன் மட்டுமே. நான் ஆற்றியதனைத்தும் அவன் பொருட்டே. சென்று அவனிடம் கேள்” என்றார்.

“கேட்கத்தான் போகிறேன். இதுவரை ஒரு சொல்லும் மாற்றுரைத்தவனல்ல. ஒவ்வொரு எண்ணமும் அவருக்கு எதிரொலி என மட்டுமே என்னுள் எழுந்துள்ளன. ஆனால் சொல்லியாக வேண்டும். இப்பாதை பேரழிவுக்குரியது. மாதுலரே, நேற்று நம் இளமைந்தர் நாற்பதுபேர் களம்பட்டனர். இளையவர்கள் கவசீயும் நாகதத்தனும் உக்ரசாயியும் அனாதிருஷ்யனும் குண்டபேதியும் விராவீயும் பீமனால் கொல்லப்பட்டார்கள். இப்போர் இப்படியே சென்றால் இங்கு ஒருவரும் எஞ்சப்போவதில்லை. மைந்தர் ஆயிரவரும் களம்படுவார்கள், உடன்பிறந்தார் நூற்றுவரும் அழிவார்கள். ஒருவேளை நீங்கள் எஞ்சுவீர்கள்” என்றான்.

“இல்லை, நானும் எஞ்சமாட்டேன்” என்றார் சகுனி. உடல் நடுங்க நின்றபின் துச்சாதனன் “அதை அறிந்துளீரா?” என்றான். “இக்களத்தில் கால்வைத்ததுமே அறிந்தேன்” என்றார். துச்சாதனன் “ஆம், இங்கே வந்ததுமே நான் மெய்ப்புகொண்டேன். நான் அறிந்தேன், இதுவே என் இடம் என” என்றான். சகுனி புன்னகைத்து “அது நன்று, நாம் எஞ்சுவதைப்பற்றிய விழைவுகொண்டு எங்கும் பின்னடையவேண்டியதில்லை” என்றார். “நீங்கள் அஞ்சவில்லையா?” என்றான் துச்சாதனன். “இல்லை, என் கடன் முடிகிறது என்றே உணர்கிறேன்” என்றார் சகுனி. துச்சாதனன் “மாதுலரே, நீங்கள் மெய்யாகவே குருதிகோரி வந்த கொடுந்தெய்வம்தானா?” என்றான்.

சகுனியின் நோக்கு மாறுபட்டது. “அவ்வப்போது நானும் உணர்வதுண்டு என் உடலில் ஏறி பாலையிலிருந்து ஒரு தெய்வம் இந்நிலத்திற்கு வந்துள்ளது என்று” என்றார். அவனை நிமிர்ந்து நோக்கி “பாலையை பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார். மேலும் குரலெழ “பாலையின் பசித்த ஓநாயை பார்த்திருக்கிறாயா? அதன் விழியில் எழும் அனல் ஒருகணம் உன் நோக்கில் பட்டதென்றால் நான் யார் என்று உனக்கு புரியும்” என்றார். பின்னர் உதடுகள் கோணலாகி இழுபட மென்மையாக நகைத்து “செல்க, உன் எளிய உள்ளம் இதை புரிந்துகொள்ள இயலாது! எந்தப் பேருள்ளமும் இங்கே பேதலித்து செயலழிந்து அமையும்” என்றார்.

“இங்குள்ள ஒவ்வொருவரும் இன்று இவ்வினாவை எதிர்கொள்கிறார்கள். இவையனைத்தும் ஏன்? இங்கு நிகழும் ஒவ்வொருவரும் அவ்வினா அறுபட்டு துடிக்கத்தான் உயிர்விடுகிறார்கள். இறந்தவர்கள் ஒருவரும் இந்நிலத்திலிருந்து அகலவில்லை. மாதுலரே, இரவில் எழுந்து நீங்கள் இருளை நோக்குக! பல்லாயிரம் கோடி மீன்கள் நிறைந்த இருண்ட நீர்போல் இருள் கொந்தளித்து சுழிப்பதை காண்பீர்கள். இருளில் நிறைந்திருக்கின்றன இறந்தவர்களின் இருப்புகள். அவர்கள் இங்கே எழுந்த வினாக்கள் விடைகளாக மாறாமல் அகலவியலாது” என்றான் துச்சாதனன்.

தடுமாறும் குரலில் அவன் தொடர்ந்தான். “என்னால் ஒருகணமும் துயிலமுடியவில்லை. இன்று காலை எழுந்து கதாயுதத்தை எடுத்தபோது நான் எண்ணியது ஒன்றுதான். தெய்வங்களே, மூதாதையரே, இந்தக் களத்தில் இருந்து இன்றேனும் என்னை விண்ணுக்கு எடுங்கள். நெஞ்சுபிளந்து இம்மண்ணில் படுத்திருக்கையில் மட்டுமே நான் அறியக்கூடும் அந்நிறைவை எனக்கு பரிசெனக் கொடுங்கள். மாதுலரே, வெல்வதற்காக அல்ல, ஒவ்வொரு நாளும் தோற்பதற்காகவே களம் நிற்கிறேன்.” சகுனி “அதை அன்றே பகடைக்களத்திலேயே முடிவுசெய்திருப்பாய்” என்றார். துச்சாதனன் “ஆம்” என்றான்.

பின்னர் “இவையனைத்துக்கும் பொருளறிந்த இன்னொருவரும் இருக்கக்கூடும் என நான் எண்ணினேன்” என்றான். சகுனி தாடியை நீவியபடி நோக்கினார். “நான் கணிகரை சென்று கண்டேன், இங்கு வருவதற்கு கிளம்பும்நாளில்” என்றான் துச்சாதனன். சகுனி தலையசைத்தார். “அவர் நோயுற்றிருந்தார். அவ்வறைக்குள் நுழைகையில் அவர் இறந்துவிட்டாரோ என்ற எண்ணம் ஏற்பட்டது. உடல் நடுங்கிக்கொண்டிருப்பதைக் கொண்டே அவர் இருக்கிறார் என உணர்ந்தேன். அருகே சென்று நோக்கினேன். குழிக்குள் இருக்கும் தவளையின் விழிகள்போல சொல்லில்லாத வெறிப்பை கண்டேன். நான் அவரிடம் ஒன்றும் பேசவில்லை.”

சகுனி தலையசைத்தார். துச்சாதனன் மேலும் ஏதோ சொல்ல முயன்று, சொல்லவிந்து திரும்பி நடந்தான். சகுனி அவனை நோக்கியபடி தாடியை நீவிக்கொண்டு நின்றார். பின்னர் “மருகனே” என அழைத்தார். அவன் நின்றான். “நீங்கள் என் பகடைக்காய்கள். நான் அவருடைய பகடையின் காய். அதை இக்களத்திற்கு வந்த அன்றே உணர்ந்தேன்” என்றார். துச்சாதனன் முகம் தசை தளர்ந்து எளிதாகியது. “ஆனால் இப்போது தோன்றுகிறது அவரும் எளிய பகடைக்காய் மட்டுமே என்று.” துச்சாதனன் அவரையே நோக்கிக்கொண்டு நின்றான். பின்னர் திரும்பி நடந்தான்.

bowகாம்போஜ நாட்டு அரசன் சுதக்ஷிணன் தன் தேரில் வருவது தெரிந்தது. தேர் விரைவழிய அதிலிருந்து அவன் இறங்கி சகுனியை நோக்கி வந்து “படைசூழ்கை முழுமையடைந்துவிட்டது, காந்தாரரே. ஒவ்வொன்றும் முற்றாக அமைந்துள்ளன. இம்முறை நமது சூழ்கை வெல்லும்” என்றான். “ஆம்” என்றார் சகுனி. “இம்முறை நாம் அமைத்துள்ளது கிரௌஞ்சவியூகம். இது ஒன்றுள் ஒன்று சுழலும் சகடங்களைப் போன்றது. நாரையின் எந்தச் சகடவளைவுக்குள் அவர்கள் சிக்கிக்கொண்டாலும் அழிவுதான்…” என்றான். சகுனி “அது நிகழும்” என்றார். “இன்றே பீமசேனரை நாம் அழித்தாகவேண்டும். காம்போஜத்து படைத்தலைவர்களில் பன்னிருவர் நேற்றுமட்டும் அவரால் கொல்லப்பட்டுள்ளனர்” என்றான் சுதக்ஷிணன். சகுனி அவன் தோளை தொட்டுவிட்டு தன் தேர்நோக்கி சென்றார்.

தேரில் அவர் ஏற ஏவலன் உதவினான். தேர்த்தட்டில் நின்றபடியே உடல் எடையை அமைத்து அரையமர்வு கொள்வதன்பொருட்டு அமைக்கப்பட்டிருந்த இடையளவு உயரமான தூண்பீடத்தில் தன் உடல் எடையை சாய்த்துக்கொண்டார். வில்லை எடுத்து நிறுத்தி நாணேற்றிய பின் அருகிருந்த தேரில் நின்றிருந்த சுதக்ஷிணனிடம் “செல்வோம்” என்றார். தேர்கள் கிளம்பிச்செல்ல சுதக்ஷிணன் போர்ச்சூழ்கையை விளக்கிக்கொண்டே வந்தான். “முன் நிரையில் பீஷ்ம பிதாமகர் நின்றிருக்க இன்று பூரிசிரவஸும் ஜயத்ரதனும் அவருக்கு இருபுறமும் துணை செய்கிறார்கள். பாண்டவப் படையை பிதாமகர் இரண்டாக உடைத்ததுமே ஜயத்ரதருடன் நாம் இணைந்துகொள்கிறோம்.”

“இன்று அர்ஜுனரைச் சூழ்ந்து செயலிழக்கச்செய்வோம். நம் படைகளுக்கு அர்ஜுனர் அளித்த இழப்பும் மிகப் பெரிது. இன்று அது நிகழலாகாது. இன்று நாம் அவரை கொல்ல முடிந்தால் நன்று. புண்படுத்தவேனும் செய்தால் நமது வெற்றியை உறுதி செய்கிறோம். மறுபக்கம் பூரிசிரவஸும் பால்ஹிகப் பிதாமகரும் பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தரும் பீமசேனரை சூழ்ந்து அப்பால் கொண்டு செல்வார்கள். அவர்கள் அவரை இன்று அழிப்பார்கள். கௌரவ உடன்பிறந்தார் கடோத்கஜனை எதிர்கொள்வார்கள். ஒவ்வொன்றும் முற்றிலும் வகுக்கப்பட்டுவிட்டது” என்றான் சுதக்ஷிணன்.

“ஆம்” என்றார் சகுனி. சுதக்ஷிணன் நகைத்து “எனக்கொன்று தோன்றுகிறது, ஒவ்வொரு முறை நாம் படைசூழ்கையை அமைக்கையிலும் இவ்வாடற்களத்தில் கண்ணுக்குத் தெரியாமல் நமக்கு மறுபக்கம் இருக்கும் ஒருவர் அப்படைசூழ்கையை கலைக்கும் நுண்சூழ்கை ஒன்றை அமைக்கிறார் என. இரு படைசூழ்கைகளும் போர்க்களத்தில் எங்ஙனம் கலைகின்றன என்பது விந்தையானது. ஒவ்வொரு படைவீரன் உள்ளத்திலும் படைசூழ்கையின் வடிவம் எவ்வண்ணமோ நிலைகொள்கிறது. கலைந்து மீண்டும் உருக்கொண்டு மீண்டும் கலைந்து களத்தில் போரிடுகிறோம்” என்றான். கைகளைத் தூக்கி “மந்தைவிலங்குகளில் மந்தையின் வடிவம் நுண்ணுருவில் வாழ்கிறதென்பார்கள்” என்றான்.

சகுனி ஒன்றும் சொல்லாமல் படைகளை கூர்ந்து நோக்கியபடி சென்றார். “இங்கு ஒரு படைசூழ்கையில் சிறுதுளியென இருக்கும் வீரன் இறந்துபோகும்போதுதான் அச்சூழ்கையிலிருந்து முற்றிலும் விடுபடுகிறான் என தோன்றுகிறது. அல்லது அவனுடன் அச்சூழ்கையின் ஒரு துளியும் செல்கிறதா?” என்றான் சுதக்ஷிணன். சகுனி புன்னகைத்து “நல்ல எண்ணம்! இத்தகைய எண்ணங்கள் போர்க்களத்தில் நம்மை மகிழ்வுடன் வைத்திருக்கும்!” என்றார். சுதக்ஷிணன் நகைத்து “முதல் நாள் போரில் மெய்யாகவே உளம் அதிர்ந்துவிட்டேன். முதல் நாள் இரவு மூன்று அகிபீனா உருண்டைகளை உண்டும் ஒருகணமும் நான் துயிலவில்லை. ஆனால் இரண்டாம்நாள் படைசூழ்கை உடைந்து சிதறும் காட்சியை தேரில் நின்று ஓரவிழியால் பார்த்தபோது ஒருகணம் என்னிலொரு சிரிப்பு எழுந்தது. அதன் பின் அனைத்தும் எளிதாயிற்று” என்றான்.

“காந்தாரரே, இது ஒரு கேலிக்கூத்தன்றி வேறொன்றுமில்லை. இன்று நான் உங்களை முதலில் பார்த்தபோது வெல்வோம் என்று சொன்னேன். அங்கு தொடங்குகிறது இந்த இளிவரல். இப்படைசூழ்கையில் ஒவ்வொருவரும் இன்னொருவரை நோக்கி இன்று நாம் வெல்வோம் என்கிறார்கள். ஒரு சொல்லை முற்றிலும் பொருளில்லாது பயன்படுத்தினால் அது பிற சொற்கள் அனைத்திற்கும் நஞ்சூட்டி சொல்வன அனைத்தையும் பொருளிலாதாக்குகிறது. பொருளில்லாச் சொல்லை சொல்வதென்பது பெரும் பொறுப்பு. எடைபோல அது நம் முதுகில் அமர்ந்திருக்கிறது” என்றான்.

பின்னர் மீண்டும் நகைத்து “ஆனால் பொருளிலாச் சொல்போல் விடுதலை பிறிதொன்றில்லை. பித்தர்களும் கவிஞர்களும் அவ்விடுதலையில் திளைப்பார்கள். அரசர்களோ ஆயிரம் கடிவாளமிட்ட சொற்களை ஆள்பவர்கள். நான் பேசக்கற்றுக்கொண்ட பின்னர் இப்போதுதான் பொருளின்மையின் பித்துவெளியில் திளைக்கிறேன்” என்றான். அவன் பேச விழைவது தெரிந்தது. “ஒருவேளை இப்போர்க்களத்திலன்றி பிறிதெப்போதும் நான் இத்தனை மகிழ்வுடன் இல்லாமலிருந்திருக்கலாம். இங்கு நான் எதையும் செய்யலாம். இக்கவசங்களையும் வில்லையும் உதறிவிட்டு ஆடைகளை கிழித்தெறிந்து வெற்றுடலுடன் களத்திலிறங்கி நான் நடனமிட்டால் எவரும் அதிர்ச்சி கொள்ளப்போவதில்லை. அதுவும் சூதர் பாடல்களின் கருக்கள் என்றாகும்” என்றான்.

சகுனி “உங்கள் நிமித்திகர் உங்களுக்கு எப்போது நாள் குறித்திருக்கிறார்கள்?” என்றார். அவன் திகைத்து பின்பு “இக்களத்தில். உறுதியாக அது இக்களத்தில் நிகழும். இதோ போர்முரசு கொட்டிய மறுகணம். அல்லது இப்போரின் இறுதிநாளில். ஆனால் இக்களத்தில், ஐயமேயில்லை. அதை நிமித்திகன் உரைத்தபோது நான் என் கையிலிருந்த கணையாழியை எடுத்து அவனுக்களித்தேன். அமைச்சர்களும் பிறரும் திகைத்தனர். அப்போது ஏன் அதை செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை. இக்களம் புகுந்த பின்னர் தெரிகிறது. என்னிடமுள்ள இந்த உளவிடுதலைக்கு அடிப்படையாக இருப்பது அதுவே. நான் திரும்பப் போவதில்லை. திரும்ப வேண்டியிராத பயணங்களைப்போல் இனிது வேறேது? நாம் என்ன செய்தாலும் அந்த இலக்கையே சென்றடைவோம் என்பதைப்போல் விடுதலையின் கொண்டாட்டம் பிறிதில்லை” என்றான்.

சகுனி “காம்போஜரே, இந்தப் பெருங்களத்தில் என்னவென்று தெரியாமல் ஆடும் பகடைக்காய் நீர் என தோன்றியிருக்கிறதா?” என்றார். சுதக்ஷிணன் “ஆம், அதில் எனக்கு ஐயமே இல்லை” என்றான். “இக்களத்தில் உமது இறப்பு எதன்பொருட்டு?” என்றார் சகுனி. “என் முதுதாதை அசுரகுடியிலிருந்து உருவானவர். எங்கள் தோற்றுவாய் வடக்கே சோனகப் பாலைநிலத்தில். அங்கிருந்து நாங்கள் காம்போஜநிலத்துக்கு வந்தபோது அங்கே தூய வெண்ணிறமான புரவிகள் மேய்ந்துகொண்டிருப்பதை பார்த்தோம். விரைந்தோடுகையில் வாலும் செவிகளும் அசைவிலாது நிற்கும் அத்தகைய புரவிகள் எங்கும் மிக அரிதானவை. உறையிலிருந்து உருவிய வாள் என கூரிய மெல்லுடல் கொண்டவை.”

அவற்றை என் மூதாதையான உக்ரபாகு கண்ணிவீசி பிடிக்கச் சென்றபோது அங்கிருந்த முதுமுனிவரான காமிகர் அவரை தடுத்தார். “யவனனே, இவை வேதவேள்விகளுக்குரிய தூய புரவிகள். இவற்றை மானுடர் பிடிக்கலாகாது” என்று சொன்னார். “வேள்விக்கு புரவி தேவைப்படும்போது அங்கு வந்து வேதமோதியபடி காத்திருப்பார்கள் அந்தணர். அவற்றிலொன்று தானாகவே வந்து அவர்கள் முன் நிற்கும் அதை மட்டும் பிடித்துச்செல்வது அந்தணர் வழக்கம்” என்றார்.

எந்தை அவரிடம் பணிந்து “நாங்கள் உணவும் நீருமின்றி வந்துள்ளோம். இங்கே எங்களுக்கு செல்வமென அமைவது இந்தப் புரவி ஒன்றே. இதை நாங்கள் எப்படி தவிர்ப்பது?” என்று கேட்டார். “இவற்றை ஒளியின் வடிவெனக் கொள்க! இல்லத்துச் சுடரென ஓம்புக! ஒருபோதும் இவற்றின் உரிமையாளர்கள் என எண்ணற்க! இவற்றின் ஏவலர் என்றே உங்களை கொள்க! இவை உங்களுக்கு செல்வமென்றாகும்” என்று காமிகர் சொன்னார். அவ்வண்ணம் அங்கே அப்புரவிகளைப் பேணி வாழ்ந்தனர் என் முன்னோர். புரவியே எங்கள் செல்வம். பாலைவன வைரங்கள் என அவற்றை சொன்னார்கள் அயலார். எங்கள் நாடு செழித்தது. குலம் பெருகியது.

ஒருமுறை எங்கள் அரண்மனைக்கு வந்த வைதிகர் ஒருவருக்கு கொடையளிக்கையில் மேலாடை சரிய என் மூதாதையான உக்ரசிம்மர் வசைச்சொல் ஒன்றை உதிர்த்து ஏவலனை கடிந்துகொண்டார். அவர் நீட்டிய கொடையை மறுத்த அந்தணர் “உன்னிடம் அசுரக்குருதி ஒரு துளி எஞ்சியிருக்கிறது. உன் உள்ளத்தின் கடிவாளத்தை ஒருபோதும் கைவிடாதே. உன் மைந்தர் ஒவ்வொருவரும் தங்கள்மேல் தாங்கள் ஆட்சிசெய்தாகவேண்டும். ஓர் அடிபிழைத்தால் நீங்கள் அழிந்துவிடவேண்டியிருக்கும்” என்றார். உக்ரசிம்மர் அஞ்சிவிட்டார். அதன்பின் இரு நோன்புகளை அவர் தன் குடியினர் கடைபிடிக்கும்படி வகுத்தார். ஒருநாளில் நூறு சொற்களுக்குமேல் உரைப்பதில்லை. ஒருநாளில் நூறுபேருக்குமேல் சந்திப்பதில்லை.

அதை எட்டு தலைமுறைக்காலம் என் குடியினர் கடைப்பிடித்தனர். எட்டாம் தலைமுறை அரசரான மகாபாகு ஒருமுறை நகருலாச் செல்லும்போது கண்ணுக்குப்பட்ட ஒரு திருடனை துரத்திச்செல்கையில் புரவி அசைவிழந்து நின்றுவிட்டது. அவர் அதை சவுக்கால் அறைந்தார். புரவி அசையவில்லை. திருடன் தப்பிவிட்டான். மகாபாகு சீற்றத்துடன் இறங்கி வாளால் அதன் கழுத்தை வெட்டி வீசிவிட்டு நோக்கியபோது புரவியின் முன்னால் புதருக்குள் சிறுகுழியில் மூன்று கண்திறக்காத நாய்க்குட்டிகள் முட்டிமோதிக்கொண்டு கிடப்பதை கண்டார்.

அந்தப் பழியைத் தீர்க்க மகாபாகு ஆலயங்களுக்குச் சென்று நோன்புகள் நோற்றார். கொடைகள் நிகழ்த்தினார். புரவிக்கு நிகராக தன் மைந்தனை அளித்தால் பழிநிகர் ஆகும் என்றும் இல்லாவிட்டால் எங்கள் குடிச்செல்வமான புரவிகள் முற்றழியும் என்றும் நிமித்திகர் உரைத்தனர். அவ்வண்ணம் மைந்தனை அளிப்பதாக அவர் நீர்தொட்டு ஆணையுரைத்தார். அதனூடாக தன் குடியை அழிவிலிருந்து காத்தார். அப்போது அவருக்கு திருமணமாகியிருக்கவில்லை. அவர் ஏழு அரசியரை மணந்தார். எழுவரில் ஒருவரே மைந்தனை ஈன்றார். அம்மைந்தன் நான்.

“என்னை எந்தை நான் பிறப்பதற்கு முன்பே தெய்வங்களுக்கு பலியாக அளித்துவிட்டிருந்தார். அந்த பலிநிறைவேற்றம் இக்களத்தில் நிகழும் என்றார் நிமித்திகர்” என்று சுதக்ஷிணன் சொன்னான். சகுனி புன்னகைத்து “நன்று, ஆடல் நெடுங்காலம் முன்னரே தொடங்கிவிட்டது” என்றார். அவன் வாய்விட்டுச் சிரித்தபடி தன் வில்லை நாணேற்றி “இக்களத்தில் என்னால் கொல்லப்படுபவர்களும் அவர்களுக்குரிய ஊழ்கொண்டவர்கள். என்னை கொல்லும் அம்புடன் எழுபவனுக்கும் தனக்குரிய கதை ஒன்றிருக்கும்” என்றான்.

போர்முரசு முழங்கத்தொடங்கியது. “இந்நாளில் மண்சரியும் அனைத்து வீரர்களுக்கும் வணக்கம். நீங்கள் செய்வதற்கு மிக ஏற்ற ஒன்றை செய்கிறீர்கள்” என்ற சுதக்ஷிணன் கைதூக்கி “வெற்றிவேல்! வீரவேல்!” என்று கூவினான். சகுனியும் கைதூக்கி “வெற்றி! வெற்றி!” என்றார். போர் முரசுடன் இணைந்ததுபோல் எழுந்த படையின் பேரோசை அலையென பெருகிச்சென்று எதிர் அலையென வந்த பாண்டவப் படைகளில் மோதி கலந்து கொந்தளிப்போசையாக மாறியது. அம்புகள் எழுந்து காற்றை நிறைத்தன. அலறல்களும் விலங்குகளின் ஓசைகளும் சகடஒலிகளும் இணைந்த பெருமுழக்கம் சூழ்ந்தது.

தொடர்புடைய பதிவுகள்

கட்டண உரை -கடிதங்கள்

$
0
0

jeya

 

கட்டண உரை –ஓர் எண்ணம்

 

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு

 

 

‘கட்டண உரை – ஓர் எண்ணம்’   வாசித்தேன்.  பெரும்பாலும் இன்று வணிக ரீதியாக புகழ்பெற்ற பேச்சாளர்களின் நிகழ்வே அதிகம்.  இத்தகைய பேச்சுக்கூட்டங்களில், நான் பார்த்த வரை, பேச்சாளருக்கும் கேட்பவருக்கும் எந்நேரமும் அறுந்து விடக்கூடிய ஒரு  மெல்லிய இழைதான் இருக்கிறது.  அதை சிலந்திவலையாக்கி கேட்போரை சிக்கவைப்பது பேச்சாளரின் திறமை.  சிக்காதவர் கடலையைக் கொறித்துக்கொண்டு எப்போதும் வெளிநடப்பு செய்யலாம்.  இரு தரப்பிலும் மேலதிகமான கட்டமைப்பு ஏதுமில்லை.

 

 

என்னைப் பொறுத்தவரை, அறிவியக்கம் சார்ந்த பேச்சுகளைத் தொடர ஆழ்ந்த , கவனம் சிதறாத அவதானிப்பு தேவை. பேச்சு முடிந்தபின்னர், எண்ணத்தில் மீட்டெடுத்து தொகுத்துக்கொள்ளும் விழைவும் அதைச் சார்ந்த சிந்தனைகளுமே வளமான செறிந்த பேச்சின் விளைவாக இருக்கவேண்டும்.  அதை வழங்கும் பேச்சாளருக்கும்   அதன் தரம் சார்ந்த மேலதிகமான பொறுப்புடைமை இருக்கிறது.  பேச்சாளனின் உழைப்பும் அது சென்றடையும் இடமும் முழுமையடையும்போதுதான்  அந்த நிகழ்வு பூர்த்தியாகிறது.

 

 

உண்மையில் ஒரு ஒரு மணிநேர அறிவார்ந்த பேச்சை தொடர்ந்தபடியே உள்ளுக்குள்  தொகுத்துக்கொண்டு, ஆனால் அந்த நேரத்தில் சிந்தனையைச் செயல்படுத்தாமல், மனதிலேயே குறித்துக்கொண்டு, பேச்சாளனைத் தொடர்ந்து அவதானித்து, பின்னர் மீள்நிகழ்வு செய்து மேற்செல்வதென்பது “நல்லா பேசினாரில்ல?” எனும் சாமானியர்களுக்கு உரியதன்று.  ஆகவே, தீவிர நோக்குடன் பங்கேற்க விழைவோரல்லாது, மற்றையோர் கிட்டத்தட்ட தடுக்கப்படவே வேண்டும்.  அதை மனதளவில்கட்டணம் செய்யுமென்றே நினைக்கிறேன். இல்லையேல் ஒவ்வாமை காரணமாக கடலை கொறித்து வெளிநடப்பு செய்து அந்நிகழ்வில் கவனச்சிதறலை உருவாக்கும் மனிதர்களைத் தவிர்க்க இயலாதுபோகும்.

 

 

அதே நேரம் ,’இலவசம்’  உள்ளில் இழையோடும் ஒரு  பெரும்பான்மைக் கூட்டத்தினரிடையே இது ஒரு புதிய பரீட்சார்த்தமான முயற்சிதான்.    அதில் நீங்கள் முதல் பேச்சாளராக அமைந்தது மிகப்பொருத்தமேயென்று எண்ணுகிறேன்.  கட்டணத்தின் விளைவைப் பற்றி இப்போது ஏதும் சொல்ல இயலாதென்றாலும் மிக சுவாரஸ்யமான ஒரு தலைப்பில் பேசவிருக்கிறீர்கள் என்ற எதிர்பார்ப்பு என்னுள் அமைந்துவிட்டது.

 

 

நிகழ்ச்சி சிறக்க இறை அருளட்டும்!

 

அன்புடன்

நா. சந்திரசேகரன்

சென்னை

 

 

அன்புள்ள ஜெயமோகன்

 

கட்டண உரை குறித்த அறிவிப்பையும் கடிதங்களையும் வாசித்தேன். ஒரு புதிய முயற்சி. இதில் வெற்றிதோல்வி என ஏதுமில்லை என நினைக்கிறேன். வாசகர்களின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக நிகழ்த்தவேண்டும்

 

இதன் அர்த்தம் என்னளவில் ஒன்றே ஒன்றுதான். மேடைப்பேச்சு என்பதன் மதிப்பை மீட்டு எடுப்பது. ஏனென்றால் இன்றைக்கு மேடைப்பேச்சு என்பது இரண்டே வகைதான். பெருந்திரளான மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வேடிக்கைப்பேச்சு ஒருபக்கம். எந்த பொறுப்புமில்லாத வெட்டி அரட்டை இன்னொரு பக்கம். பேசுபவர் கேட்பவர் இரு சாராருக்குமே மேடைப்பேச்சுமேல் ஆர்வம் கிடையாது. மதிப்பு கிடையாது

 

அந்த மதிப்பை உருவாக்குவதற்கான முயற்சியாகவே நான் கட்டண உரையை பார்க்கிறேன். தமிழகமெங்கும் ஓரிரு கட்டணக்கூட்டங்கள் நடந்தால்கூட மனநிலை மாறிவிடும். கட்டணம் கட்டி கேட்கிறாங்க என்பதே மேடைப்பேச்சின் மதிப்பைக் கூட்டிவிடும் என நினைக்கிறேன்

 

 

ஆர்.எஸ்.சந்தானம்

கட்டண உரை- கடிதங்கள்

கட்டணக் கேட்டல் நன்று !

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கன்யாகுமரியும் காடும்

$
0
0

kadu2

காடு நாவல் ஜெயமோகன்  கிளாசிக் வகை புதினங்களில் ஒன்று. கொஞ்சம் அதிக பக்கங்கள் கொண்டது. எனக்கு முடிக்க பத்து நாட்கள் ஆனது. நான் அதன் விமர்சனங்களை படித்த பின் படித்ததால் மிக பெரும் எதிர்பார்ப்புடன் படித்தேன். நிச்சயம் கதையோடு முழுமையாக ஒன்றிப் போனேன். காட்டில் இருப்பதாய் உணர்வு இருந்தது என்னமோ உண்மை.

கன்னியாகுமரி காடு புதினங்கள்- ஒரு மதிப்புரை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வாழும்சொல்

$
0
0

 a

ஏடுதொடங்கல்

பினராயி விஜயனின் எழுத்தறிவித்தல்

எழுத்தறிவிக்கும் சடங்கு – எம்.ரிஷான் ஷெரீப்

கிறித்தவ விஜயதசமி

 

நேற்று [19-10-2018] முழுக்க ஒரே பரபரப்பு. விடியலிலேயே எழுந்து வெண்முரசு எழுதிவிட்டேன். உடனே குளியல். ஏழரை மணிக்குள் அருண்மொழி பூசைக்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டாள். வெண்முரசு நூல்களை வைத்து சரஸ்வதி படமும் தாராதேவி சிலையும் நிறுவி பழம் பொரி மலர் கனிகள் படைத்து ஊதுவத்தி ஏற்றி விளக்கு பொருத்தி.

 

நான் நீராடிவிட்டு வந்தபோது அஜிதனும் சைதன்யாவும் திருதிருவென முழித்துக்கொண்டிருந்தார்கள். “நல்ல நாளில் காலை நீராடுவது ஒரு மரபு” என்று ஒரு தயக்கத்துடன் சொல்லிவைத்தேன். ஆனால் இதெல்லாம் மரபுகள் உடைபடும் காலம். பெண்டிர் மரபை மீறுவது நவீன மோஸ்தர். பல்லே தேய்க்கமாட்டேன் என்று சைதன்யா சொல்லிவிட்டால் மேலும் சிக்கல். அதுகூட பரவாயில்லை, அஜிதன் மேலைத்தத்துவம் சார்ந்து ஏதேனும் விளக்கம் அளிக்க ஆரம்பித்தால் காலை கந்தலாக ஆகிவிடும்.

 

நண்பர் மெலட்டூர் ராகவ் நாலைந்து சட்டைகள் வாங்கித்தந்திருந்தார். காலர் இல்லாதவை. அவற்றில் சந்தனநிறச் சட்டையை அணிந்து சரிகை வேட்டி கட்டி ஒருங்கி நின்றேன். அருண்மொழி எனக்கு சந்தனப்பொட்டு போட்டுவிட்டபோது முழுமையான தோற்ற ஒருமை அமைந்தது. இந்தமாதிரி தோற்றங்களுக்கு வழுக்கை நன்று.

 

காலையில் செல்வேந்திரன் தன் இளையமகள் இளவெயினிக்கு எழுத்தறிவிப்பதற்காக கோவையிலிருந்து வருவதாகச் சொல்லியிருந்தார். உடன் நரேனும். தீவிர திராவிடர்கழகத்தினரின் மகள் அருண்மொழி மரபுக்குள் உக்கிரமாகப் புகுந்தது அப்படித்தான். மொத்தமாக ஒரு மங்கலமான குழப்பம். அருண்மொழி பரவசமாக இருந்தாள். ஒவ்வொன்றுக்கும் ஆணையிட்டு அதை நாம் செய்வதற்குள் கூச்சலிட்டு தடுத்து அவளே செய்தாள்.

b

செல்வாவும் நரேனும் திருக்குறளரசியும் இளவெயினியும் இளம்பிறையும் வந்து சேர்ந்தனர். காலை எழுந்ததன் புத்துணர்ச்சியுடன் இளவெயினி, காலை எழுந்ததன் சோர்வுடன் இளம்பிறை. செல்வேந்திரன் அசைவத்தை நிறுத்திவிட்ட தெளிவுடன் இருந்தார். திருக்குறளரசி மெலிந்துவிட்டார் என சொல்லி அவரை மகிழ்விக்க எனக்கு ஆசைதான்.காலையிலேயே எதற்கு பொய் சொல்லவேண்டும் என எண்ணி கைவிட்டேன்.

 

இளமையில் எங்களூரில் அம்மன்கோயிலில் எழுத்தறிவிப்பு நடக்கும். கல்விமானாகிய என் பெரியப்பா பல குழந்தைகளுக்கு எழுத்தறிவிப்பார். அன்றெல்லாம் பள்ளிக்கூடம் போவதற்கு முந்தைய விஜயதசமிநாளில்தான் எழுத்தறிவிப்பு. ஆகவே பிள்ளைகள் நன்றாக வளர்ந்து ஐயமும் குழப்பமுமாக வாழைப்பழக்கையுடன் நின்றிருக்கும். எழுத்தறிவிப்புக்குப் பின் அரிசிப்பாயாசம் வழங்கப்படும் என்பது ஆர்வமூட்டும் அம்சம்.

 

பெரியப்பா ஒரு மரப்பெட்டியில் தங்க கைப்பிடி கொண்ட எழுத்தாணி வைத்திருப்பார். அது மங்கலச்சடங்குகளுக்கு மட்டும். எழுத்தறிவித்தல், திருமணக்குறி எழுதுதல் போல. எனக்கு அவர் எழுத்தறிவிக்க அந்தப்பெட்டியைத் திறந்து அதை வெளியே எடுத்த நினைவு உள்ளது. நான் மயிர்க்கூச்செறிந்து அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதை எப்படி ‘அடித்துமாற்றுவது’ என்பதைப்பற்றிய திட்டங்கள். பனை ஓலையில் எழுத்தாணி ஓடும் மென்மையான கிருகிரு ஓசை எனக்கு எப்போதுமே உச்சகட்டக் கிளர்ச்சியை உருவாக்குவதாக இருந்தது.

 

இளம்பிறைக்கு எழுத்தறிவித்தேன். செல்லக்கொட்டாவியுடன்  ’சமர்த்தாக’ இருந்தது. எதிரில் சுவாமிக்கு ஏகப்பட்ட தின்பண்டங்கள் படைக்கப்பட்டிருந்தது காரணமாக இருக்கலாம். நான் பொதுவாக தீங்கற்றவன் என அவர்கள் வீட்டுக்குச் செல்வதிலிருந்து புரிந்துகொள்ளலாம். அதைவிட அவள் கருவிலிருந்தபோதுதான் திருக்குளறரசி வெண்முரசு முழுமையாக வாசித்தார். ஆகவே  ‘எதுக்கு வம்பு?” என நினைத்திருக்கலாம்

 

அக்காலத்தில் இம்மாதிரிச் சடங்குகளில் ஏழெட்டு பெரிசுகள் கூடிச்சூழ்ந்து நின்று ‘ஆ, அப்டித்தான்’ ‘கைய எடுங்க’ ‘வாழைப்பழம் எங்கே?’ ‘தேன் தேன் கொண்டா” என்று கூச்சலிட குழந்தைகள் மிரண்டு ‘அம்மாகிட்ட போறேன்’ என ஆரம்பிக்கும். ‘கைய வச்சுட்டு சும்மா இருக்கணும். வாய மூடிட்டிருக்கலேன்னா நச்சுப்புடுவேன் நச்சு” என்று அதட்டி அழைத்துவரப்படும் பிள்ளைகள் கடைசிநிமிடத்தில் தங்கள் எதிர்ப்பை காட்டி ‘எனக்கு வேணாம்… எனக்கு வேணாம்’ என கதறி சரஸ்வதியை புன்னகைக்கச் செய்யும்.

c

அரிசியில் தமிழ் அ சம்ஸ்கிருத ஸ்ரீ எழுதி நாவில் தேன் தொட்டு வைத்து காதில் அ சொல்லி எழுத்தறிவிப்பு நடத்தவேண்டும். செய்து முடித்து எழுந்தால் ஒரு மாதிரி சங்கடமாக இருந்தது. இதற்கெல்லாம் இன்னும் கொஞ்சம் தகுதி வேண்டுமோ? அஜியும் சைதன்யாவும் என் புதியவேடத்தை வேடிக்கை பார்ப்பதுதான் காரணமோ?

 

உடனே அவர்கள் கிளம்பினர். நானும் அருண்மொழியும் அப்படியே காரில் கிளம்பி தெங்கம்புதூர் சென்றோம். நண்பர் லக்ஷ்மி மணிவண்ணன் ஒரு புதிய கடை திறக்கிறார். நீர்த்தூய்மை செய்யும் இயந்திரங்கள், மின்விசிகள் போன்ற வீட்டு உபயோகப்பொருட்கள் விற்கும் கடை. ‘வெயிலாள்’என கடையின் பெயர். நானும் அருண்மொழியும் வரவேண்டும் என அழைத்திருந்தார்

 

அய்யர் முறைப்படி வேதம் முதல் வள்ளலாரின் அருட்பா வரையிலான மந்திரங்களைச் சொல்லி பூசையை நிகழ்த்திவைத்தார். எந்தெந்த தெய்வங்களை நினைக்கவேண்டும் என்று அவர் மணிவண்ணனிடம் சொன்ன வரிசையை கவனித்தேன். முதலில் பெற்றோர், அடுத்து மறைந்துபோன மூதாதையர், அதன்பின் குடும்பதெய்வம், அதன்பின் குலதெய்வம், அதன்பின் கிராமதெய்வம், அதன்பின் காவல்தெய்வங்கள், அதன்பின் சிவன் விஷ்ணு போன்ற பெருந்தெய்வங்கள். குலதெய்வம் என்ன என்று அய்யர் அதட்ட மணிவண்ணன்  ‘பொன்னாரமடை இசக்கி’ என முணுமுணுத்தார். அய்யர் ‘முத்தாலம்மன் மாயாண்டிச்சாமி, பூதத்தான் என சாமிகளை வணங்கிக்கிடுங்க” என்றார்.

 

இந்த வரிசை நானறிந்து எப்போதுமே பூசைகளில் கைக்கொள்ளப்படுகிறது. காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி ஓர் உரையில் குடும்பதெய்வமும் கிராமதெய்வமும் வணங்கப்படாமல் பூசைகள் எதையும் தொடங்கலாகாது என்கிறார். திடிரென்று ஒருசிலர் ஒருசில நிதியுதவிகளுடன் கிராமதேவதைகள் இந்து தெய்வங்கள் அல்ல, அவை இந்துக்களால் ஒடுக்கப்படும் தெய்வங்கள் என்று இந்துக்களிடமே சொல்ல ஆரம்பித்த வேடிக்கையை நினைத்தபோது இந்துமதம்போல இத்தனை சூழ்ச்சித்திறனுடன் தாக்கப்படும் வேறேதும் மதம் உலகில் உண்டா என்ற ஐயத்தை அடைந்தேன்.

 

நான் நாடா வெட்டி கடையைத் திறந்துவைத்தேன். நித்யாவை நினைத்துக்கொண்டு இச்செயல்களைச் செய்வது என் வழக்கம். இதற்கான தகுதிகள் எனக்கில்லை என்றாலும் நான் அவரை நினைத்துக்கொண்டால் அக்குறைபாட்டைக் கடக்கலாம். லக்ஷ்மி மணிவண்ணன் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கம். அது சிறப்புறவேண்டும் என வாழ்த்தினேன்.விழா இனிதாக முடிந்தது. கடை புதிய இடம். பொருட்களும் புதியவை. மொத்தமாக ஒரு அழகு இருந்தது அங்கே

d

செல்வா,திரு 

வீட்டுக்கு வந்தால் இன்னொரு குடும்பம் எழுத்தறிவிக்க வந்திருந்தது. என் வாசகரான ராஜீவ், தக்கலை அருகே கேரளபுரத்தைச் சேர்ந்தவர். நான்குநாட்களுக்கு முன் அவருடைய இரண்டாவது குழந்தைக்கு எழுத்தறிவிக்க முடியுமா என நான் வங்கிக்குப் போய்விட்டு வெயிலில் நடந்து வரும்போது ஓடிவந்து வழிமறித்து கேட்டார். வரச்சொன்னேன். இவர்களுக்கும் இரண்டுமே பெண்குழந்தைகள். ஹர்ஷிதா த்ரேயா மூத்தவள். எழுத்து கொள்ளவந்தவள் இளையவளாகிய  லக்ஷ்மிதா த்ரேயா . ராஜீவ் கூடங்குளத்தில் பணியாற்றுகிறார். அங்கிருந்து வந்திருந்தார். மீண்டுமொரு எழுத்தறிவிப்புச் சடங்கு.

 

கண்ணைச்சுழற்றிக்கொண்டு தூக்கம் வந்தது. மேலே செல்லப்போனபோது சைதன்யா கேட்டாள், ‘அப்பா, இந்தச் சடங்கு தேவைன்னு நினைக்கிறியா?’ நான் சடங்குகளைப் பற்றிய நித்யாவின் கருத்தைச் சொன்னேன். நாராயணகுருகுலம் ஓர் தூய அத்வைத குருகுலம். அங்கே அன்றாடச் சடங்குகள் என ஏதுமில்லை. வகுப்புகள் மட்டும்தான். ஆனால் அத்வைதமரபு சடங்குகளுக்கு எதிரானது அல்ல. அனுஷ்டானங்களின் உளவியல், கருத்தியல் பங்களிப்பை அது ஏற்கிறது.

 

எந்த ஒரு கருத்தையும், உளநிலையையும் ஒரு குறியீடாகவும், குறியீட்டுச்செயல்பாடாகவும் ஆக்கிக்கொண்டுதான் அன்றாடப்படுத்த முடியும். ஆகவே நாம் ஏற்கனவே இருக்கும் சடங்குகளுடன் புதிய சடங்குகளைக் கண்டுபிடிக்கிறோம். மாலையிட்டுவணங்குதல், பொன்னாடை போர்த்துதல், நூல்வெளியிடுதல், நாடா வெட்டுதல், கேக் வெட்டுதல் போல சென்ற ஐம்பதாண்டுகளில் உருவாகி வந்த புதிய சடங்குகளே ஏராளமாக உள்ளன. குறியீட்டுச் செயல்பாடுகள் சமூகப்பழக்கமாக ஆகும்போது அவை சடங்குகளாகின்றன

 

வாழ்க்கையின் சில தருணங்களைச் சடங்காக ஆக்கித்தான் நம்மால் நிகழ்த்தமுடியும். திருமணம் ஓர் உதாரணம். அதைப்போன்ற ஒன்றுதான் எழுத்தறிவித்தல். குழந்தைக்கு சொல்லரசியின் முதல் அறிமுகம். அது சொல்லில் ஈடுபடும் ஒருவரிடமிருந்து அமையவேண்டும் என்பது ஒரு தொல்வழக்கம். தமிழகத்தில் சொல்லறிவித்தல், ஏடுதொடங்கல் என்ற பேரில் கொண்டாடப்பட்டது. பொற்கொல்லர்கள் போன்றவர்கள் தங்களுக்குரிய வகையில் அதைக் கொண்டாடினர். இன்று அது அனைவருக்கும் பொதுவான சடங்காக ஆகிவிட்டது

 

நவீன எழுத்தாளர்கள் குழந்தைக்குச் சொல்லறிவித்தல் கேரளத்தில் துஞ்சன்பறம்பில் தொடங்கியது. கேரள முதற்கவிஞர் துஞ்சத்து எழுத்தச்சனின் நினைவிடம் அது. ஓ.என்.வி குறுப்பு, எம்.டி.வாசுதேவன் நாயர் போன்றவர்களிடம் ஆயிரம் குழந்தைகளுக்குமேல் அன்று .  ஏடுதொடங்குவது வழக்கம். அவர்கள் இடதுசாரி எழுத்தாளர்களும் கூட. அது அங்கே ஒரு மதவிழாவாக அல்ல, பண்பாட்டுவிழாவாகவே கருதப்படுகிறது. முதல்வர் பிணரயி விஜயனே எழுத்தறிவிக்கிறார்

lak

லக்ஷ்மி மணிவண்ணனின் கடை,தெங்கம்புதூர் 

சென்ற 2012ல் திருப்பூரில் அறம் அறக்கட்டளை நடத்திய ஏடுதொடங்கல் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். ஆயிரம்பேருக்குமேல் திரண்டு வந்திருந்தனர். தொடர்ந்து ஆண்டுதோறும் அங்கே எழுத்தாளர்கள்  குழந்தைகளுக்குச் சொல்லறிவிக்கிறார்கள். நாஞ்சில்நாடன், ஜோ டி குரூஸ், மா வெங்கடேசன், கவிஞர் இசை என பலர் அதைசெய்திருகிறார்கள். உண்மையில் ஒரு எளிய சடங்கு இது. ஆனால் குழந்தைகளை மடியிலமர்த்துவதும் சொல்லளிப்பதும் எங்கோ ஒரு புள்ளியில் எழுத்தாளனை நெகிழவைத்துவிடும். தன் உலகியல் தோற்றத்துக்கு அப்பால் தான் சொல்லுக்குரியவன் என்னும் தன்னுணர்வை அவன் அடையும் தருணம் அது.

 

இத்தகைய சடங்குகளில் உள்ள காலத் தொடர்ச்சியே அவற்றை ஆழமானவையாக ஆக்குகிறது.  வேள்வி என்பது அனலுக்கு அவியூட்டும் ஒரு சடங்குதான். உலகியலில் ஊறிய ஒருவன் தீயில் நெய் ஊற்றினால் அது சாமிக்குச் செல்லுமா என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு தன்னை ஒரு சிந்தனையாளனாக எண்ணிக்கொள்வான். ஆனால் கொஞ்சம் சிந்திப்பவன், கொஞ்சம் வரலாறு அறிந்தவன், குறியீடுகளின் பரிணாமத்தையும் உளவியலையும் அறிந்தவன் அச்சடங்கின் தொன்மையால் ஆட்கொள்ளப்படுவான். ஏறத்தாழ நான்காயிரமாண்டுகளாக பெரிய மாற்றமில்லாமல் நடந்துவரும் ஒருசெயல். ஏறத்தாழ அதே சொற்கள். அந்த அறுபடாத தன்மை எத்தனை பெரிய செல்வம் என வியப்பான்.

 

அவை எந்த ஆதிக்கத்தாலும் அளிக்கப்படும் ஆணைகள் அல்ல. கவிஞனின் சொற்கள். நாம் சொல்லின் வழியாக மட்டுமே அறியும் கவிமூதாதையின் உணர்வுகள். அந்தக்கவிதையிலிருந்து இன்றைய கவிதை பெரிய மாற்றமேதையும் அடைந்திருக்கவில்லை என்பது நம்மை திகைக்கச் செய்யும். இயற்கைப்பேருருவின் முன், பெருவெளியின்முன், காலத்தின் முன் மானுடனின் எளிமையை அவை அறிவிக்கின்றன. அம்மாபெரும் இருப்புகளின் துளியென உணரும் பெருமிதத்தையும் வெளிப்படுத்துகின்றன. அனலுடன், காற்றுடன், வெயிலுடன், இடிமின்னலுடன், முகில்களுடன், மண்ணின் ஊற்றுகளுடன் தானும் அவற்றிலொன்றென நின்று உரையாடும் மானுடத்தை நாம் அவற்றில் காண்கிறோம்.

e

நரேனும் 

இன்றைய நவீன மனிதன் இந்தத் தொன்மையை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. அவன் ஒவ்வொருநாளுமென இழந்துகொண்டிருக்கும் காலத்தொடர்ச்சியை, பண்பாட்டு நீட்சியை, இயற்கையுடனான உறவை அவை நிலைநிறுத்துகின்றன என அவன் அறிவான். அவை குறியீட்டுரீதியாக மிக முக்கியமானவை, பேணப்படவேண்டியவை என உணர்ந்திருப்பான். சென்றகால மனிதன் அவற்றை நேரடிப்பொருளில் எடுத்துக்கொண்டிருப்பான். இன்றைய நவீன மனிதன் அவற்றை குறியீட்டுப்பொருளில் எடுத்துக்கொள்வான். சென்றகால மானுடன் சென்றடைந்த அதே உச்சநிலையை தானும் சென்றடைவான்.

 

மரபிலிருந்து தன்னை பிரித்துக்கொண்டு தன்னை ‘நவீன’மானவனாக எண்ணிக்கொள்வது பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டின் உளநிலை. இயற்கையை பயன்படுபொருளாகப் பார்ப்பது, மானுடனை இயற்கையின் நாயகனாக எண்ணிக்கொள்வது, அறிவால் முற்றிலுமாகவே ஓர் உலகைப் படைத்துவிட முடியுமென நம்புவது போன்ற கருத்துக்களும் உணர்வுகளும் அதனுடன் இணைந்தவை.  மிகவிரைவிலேயே அந்த கருத்துநிலைகள் காலத்தில் பின்னகர்ந்து பொருந்தாமை கொண்டன.

 

ஆனால் அந்நூற்றாண்டில் உருவான அரசியல்கொள்கைகளும் அரசியலமைப்புக்களும் அவற்றையே மாற்றமின்றிச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. எளிய இளைஞர்கள் அவற்றையே இளமையில் அறிகிறார்கள். அத்துடன் அவர்களின் தேடல்நின்றுவிடுவதனால் மேற்கொண்டு அறிவதுமில்லை. அது ஒரு நவீனச்சிந்தனைநிலைபாடு என கற்பனைசெய்துகொள்கிறார்கள். அவர்கள் அப்படியே காலத்தால் பழைமைகொண்டு துருப்பிடித்து நின்றிருப்பார்கள், அவ்வளவுதான்.

3

இன்றைய மனிதன் சடங்குகளை ‘நம்புவதில்லை’. அவற்றை ‘புரிந்துகொள்கிறான்’. நித்யா குருகுலத்தில் முறைப்படி வேதம்கற்று, துல்லியமான உச்சரிப்புடன் அனைத்துவகையான முறைமைகளுடன் வேள்விகளைச் செய்யும் வைதிகர்கள் இருந்தனர். அவர்களில் அந்தணரும் உண்டு அடித்தளச் சாதியினரும் உண்டு. மிகவிரிவான வேள்விகள் அங்கே நிகழ்ந்ததை நான் பார்த்திருக்கிறேன். இன்றும் நிகழ்வதுண்டு. அவற்றில் ஈடுபடாதவர்களும் அங்கே உண்டு.

 

சென்றகாலத்தின் அத்தனை தொடர்ச்சிகளையும் பேணிக்கொண்டுதான் நாம் இனிமேல் முன்னகர முடியும். இல்லையேல் வெறும் நுகர்வுப்பிண்டமாகவும் உழைக்கும் இயந்திரமாகவும் மட்டுமே வாழ்வோம். கேளிக்கை என புலனின்பங்களில் உழன்று, அவை இறுதியாக அளிக்கும் ஏமாற்றத்திலும் சோர்விலும் அமைவோம்.

 

ஆனால் சென்றகாலத்தின் அனைத்தையும் அப்படியே பேணமுடியுமா, தேவையா? இல்லை, அவற்றின் குறியீட்டுநிலையே முக்கியமானது. என்னைப்போன்ற போர்ச்சாதியினரின் குடித்தெய்வங்கள் கொடூரமான சடங்குகள் கொண்டவை. அன்றைய போர்ச்சமூகத்தில் உருவானவை, அன்று தேவையானவையாக இருந்தவை. இன்று அவை தேவையில்லை. அவ்வுணர்ச்சிகளுக்கே இன்று இடமில்லை. அவை நூறாண்டுகளுக்குமுன்னரே நாராயணகுருவின் காலகட்டத்தில் உருமாற்றம் செய்யப்பட்டுவிட்டன. இன்று உயிர்ப்பலியோ சாதியச்சடங்குகளோ இல்லை. அவை குறியீட்டுவடிவை எடுத்துக்கொண்டுள்ளன. ஊன்பலிக்கு மாறாக குங்குமம் நிறைக்கப்பட்ட கும்பளங்காய் வெட்டப்படுகிறது.

2

வேதவேள்விகளிலும் ஏராளமானவை காலப்போக்கில் தவிர்க்கப்பட்டுள்ளன. மனிதனைப் பலிகொடுக்கும் புருஷமேதம் போன்றவை ஆயிரமாண்டுகளில் ஒருமுறைகூட நிகழ்த்தப்படவில்லை. சென்ற ஐநூறாண்டுகளாக வேள்விகளில் உயிர்ப்பலி இல்லை.சடங்குகள் நவீன வாழ்க்கையுன் இணைந்து மாறவும் வேண்டும். விழுமியங்கள் சார்ந்த மாற்றம். அவற்றின் குறியீட்டுச்சாரம் நீடிக்கவும் வேண்டும்.

“சரி, அப்படியென்றால் எனக்கு ஏன் எழுத்தறிவிக்கவில்லை?” என்று சைதன்யா கேட்டாள். “நான்தான் உனக்கு நீ பிறந்தநாள் முதல் எழுத்தறிவித்துக்கொண்டே இருக்கிறேனே” என்றேன். “சீரியசாகவே கேட்கிறேன், ஏன்?” என்றாள் சைதன்யா. “எனக்கு அச்சடங்குகள் தேவை எனத் தோன்றவில்லை. அவை அன்றாடத்துக்கு அப்பாலிருக்கும் சில பேருணர்வுகளை அன்றாடவாழ்க்கைக்குள் கொண்டுவருவதற்குரிய அருந்தருணங்கள். நான் பெரும்பாலும் அன்றாடத்திற்கு அப்பாலுள்ள அருந்தருணங்களிலேயே வாழ்பவன். தனியாக அதைச் செய்யவேண்டியதில்லை என்று எண்ணுகிறேன்” என்றேன்

 

இரண்டுவயதுச் சைதன்யாவை அழைத்துக்கொண்டு நடக்கச் சென்றபோது காற்றில் உதிர்ந்து கிடந்த ஒரு இறகை எடுத்து இறகு எப்படி எழுதுகோலாகியது என அவளுக்கு விளக்கியதை நினைவுகூர்கிறேன். அவள் கைபற்றி மணலில் எழுதிக் காட்டினேன். ஒருபக்கம் மென்தூவலும் மறுபக்கம் கூரும் கொண்ட இறகைப்போல் எழுத்துக்கருவிக்கு சிறந்த வடிவம் வேறில்லை என அன்று எழுதிவைத்தேன். அவ்வாறு இயல்பாகவே அவளுக்கு எழுத்தறிவித்தல் நடந்தது என்று எண்ணிக்கொள்கிறேன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-43

$
0
0

bowதன்னைச் சூழ்ந்து விழிதொடும் தொலைவுவரை நிகழ்ந்துகொண்டிருந்த போரை நோக்கியபடி சகுனி அசைவிழந்து தேர்த்தட்டில் நின்றார். நாரை மெல்ல சிறகுவிரித்து அலகுநீட்டி முன்னால் சென்றது. மீன் அதை எதிர்கொண்டது. எப்பொழுதுமே படைகள் எழுந்து போர் நிகழத்தொடங்கி அரைநாழிகைக்குப் பின்னரே அவர் தேரை கிளப்புவது வழக்கம். முதல்நாள் போருக்கு முன்பு இரவில் படைசூழ்கை வகுக்கும் சொல்லாடல்கள் முடித்து தன் பாடிவீட்டுக்கு திரும்பும்போது அவர் மிகவும் களைத்திருந்தார். உள்ளம் வெறும் சொற்களால் நிரம்பி கொந்தளித்துக்கொண்டிருந்தது. அதன் எடையை தாளமுடியாததுபோல் இடையும் கால்களும் வலித்தன. புண்பட்ட கால் பெருகி பலமடங்கு பருத்து எடைகொண்டுவிட்டதுபோல் இருந்தது. நீர் நிறைந்த தோல்பையை இழுத்துச்செல்வதுபோல் காலை உந்தி வைத்து அவர் தேரிலேறிக்கொண்டார்.

பீடத்தில் அமர்ந்ததுமே கண்களை மூடி தலைதாழ்த்திக்கொண்டார். ஆழத்தில் விழுவதுபோல் இருந்தது. நெடுந்தொலைவுக்கு கேட்டுக்கொண்டிருந்த படைகளின் முழக்கம் ஒரு ரீங்காரமாக மாறி அவரைச் சுற்றி பறக்க அதன் சுழி நடுவில் அவர் விசைகொண்டு சுழன்று அமிழ்ந்துகொண்டிருந்தார். தேர் எங்கோ முட்டிக்கொண்டதுபோல் தோன்ற விழித்தெழுந்து “என்ன?” என்றார். “தங்கள் பாடிவீடு, அரசே” என்றான் பாகன். “ஆம்” என்றபடி அவர் பீடத்திலிருந்து இருமுறை எழமுயன்றார். உடல் உந்தி மேலெழவில்லை. அவர் “உம்” என்று ஒலியெழுப்ப பாகன் புரிந்துகொண்டு இறங்கி படிகளினூடாக ஏறி வந்து அவர் கையைப்பற்றி தூக்கினான்.

தேர்த்தூணைப் பற்றியபடி நின்று உடல் நிலையழிவை சமன் செய்தபடி மூச்சிரைத்தார். கண்களை மூடியபோது நிலம் சரிந்திருப்பதாகவும் தேர் கவிழப்போவதாகவும் தோன்றியது. மீண்டும் கண்விழித்து சூழ்ந்திருந்த நிலத்தை பார்த்தபோது அலையடிக்கும் நீர்ப்பரப்பொன்றின்மேல் அப்படை அமைந்திருப்பதுபோல் காட்சிகள் நெளிந்தன. அவர் நிலை மீள்வதற்காக பாகன் காத்திருந்தான். மீண்டும் விழி திறந்தபோது காட்சிகள் நிலைகொண்டிருந்தாலும் உடல் முழுக்க அனலென விடாய் நிறைந்திருந்தது. மெதுவாக புண்பட்ட காலை எடுத்துவைத்து இறங்கினார். பாகனின் தோளிலிருந்து கையை எடுத்ததும் அவன் தன் கையை விலக்கிக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் பிடித்துக்கொள்ளும் வகையில் மிக அருகே ஓசையிலாது நிழலென நடந்துவந்தான்.

தன் பாடிவீடு வரை செல்வதற்குள் அவர் மிகவும் களைத்திருந்தார். நெடுந்தொலைவென தோன்றியது. ஒவ்வொரு காலடிக்கும் உடலும் உள்ளமும் வலியால் துடித்தன. அவ்விரவுக்காகவே அத்தனை காலம் காத்திருந்தேன் என்று எண்ணிக்கொண்டார். நாளுமென சொல்சொல்லெனத் திரட்டி களஞ்சியம் என்றாக்கி சூழ வைத்திருந்தார். அத்தனை சொற்கள், விளக்கங்கள், சூழ்ச்சிகள், உரைகள், சூளுரைகள், உளநெகிழ்வுப் பேச்சுகள்… எத்தனை படைசூழ்கைச் செய்திகள், எவ்வளவு நூல்சுட்டுகள், என்னென்ன நெறிகள்! மூதாதையரின் சொற்கள் கடல்மீன்களென சூழ நிறைந்திருந்தன. நான்கு பகடைகளை மீண்டும் மீண்டும் உருட்டி முடிவிலி வரை ஆடுவதற்கு நிகர்.

அவருடைய பாடிவீடு உயரமற்றதாக இருந்தது. உள்ளே அவருக்கு மஞ்சம் விரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தச் சிறிய குடிலின் உட்பகுதியை பார்த்தபோது அச்சம் எழுந்தது. உள்ளே சென்றால் உடல் வீங்கி அங்கே செறிந்து சிக்கிவிடக்கூடும் என்று ஒரு எண்ணம் உருவாகியது. காட்டில் ஒருமுறை சாரைப்பாம்பை விழுங்கிய அரசநாகம் கல்லிடுக்கொன்றில் சிக்கி உயிர் துறந்து மட்கி எலும்புக்கூடென அமைந்திருப்பதை அவர் கண்டிருந்தார். பாம்பிற்குள் பிறிதொரு பாம்பு. அரசநாகத்தின் விலா எலும்புகள் ஒவ்வொன்றும் உள்ளிருந்த நாகத்தை ஆரத் தழுவியிருந்தன. உடன் வந்த துரியோதனனிடம் “இதில் எது எதை கொன்றது?” என்றார். துரியோதனன் கேட்டது புரியாமல் “அரசநாகம் விழுங்கியிருக்கிறது” என்றான். சகுனி வாய்விட்டு நகைத்து “கவ்வியபின் விடமுடியாத தீயூழ் கொண்டது அரசநாகம்” என்றார்.

திரும்பி தன் ஏவலனிடம் “என் மஞ்சம் வெளியில் அமையட்டும்” என்றார். அவன் தலைதாழ்த்தி உள்ளே சென்று மரவுரி மஞ்சத்தை எடுத்து வெட்டவெளியில் பரப்பினான். முருக்க மரத்தில் செதுக்கப்பட்ட தலையணைகளை வைத்தான். அவர் அவன் தோளைப்பற்றியபடி மெல்ல காலை நீட்டி மஞ்சத்தில் அமர்ந்தார். முழு உடலும் மண்ணில் அமர விழைந்தது. அன்றுபோல் பிறிதெப்போதும் படுக்கையை அவர் விரும்பியதில்லை. வானில் விண்மீன்கள் நிறைந்திருந்தன. கிழக்கு திசையில் ஒளிவிரிசல்கள்போல் சிறுமின்னல்களும் பெருங்களிற்றின் உறுமல்போல் தொலைஇடியோசையும் எழுந்தன. மழை பெய்யக்கூடும் என்று அவர் தனக்குத்தானே சொன்னார். அது தன்னிடமல்ல என்று உணர்ந்த ஏவலன் மெதுவாக தலைவணங்கினான்.

சகுனி தலையணையை சீரமைத்தபின் உடலை சரிக்கப்போக ஏவலன் “தங்களுக்கு மது…” என்றான். “கொடு” என்பதுபோல் கைதூக்கிய மறுகணமே வேண்டாம் என்று கையசைத்தார். “அகிபீனா?” என்று அவன் மீண்டும் கேட்டான். “வேண்டியதில்லை, நீ செல்க!” என்று அவர் கைகாட்டிவிட்டு உடல் சரித்து தலைவைத்து படுத்தார். இன்றிரவு துயில இயலாது. மதுவோ அகிபீனாவோ கொண்டு என் சித்தத்தை துயிலவைத்தால் இவ்விரவை இழந்தவனாவேன். அறுபது ஆண்டுகள் காத்திருந்த இரவு இது. நாளை தொடங்கவிருக்கிறது பெரும்போர். ஒவ்வொன்றும் முற்றிலும் கூடிவந்துள்ளது.

வெற்றி கண்முன் கைநீட்டி தொடும் தொலைவில் நின்றிருக்கிறது. இதற்கு அப்பால் ஒரு அரசக்கூட்டு, இதைவிடச் சிறந்ததோர் படையணி, இன்னும் உகந்த போர்நிலை பாரதவர்ஷத்தில் எவராலும் உருவாக்கப்படவில்லை. அன்று அவையில் நிகழந்த சொல்லாடலில் ஒவ்வொருவரும் உளவிசையின் உச்சத்திலிருந்தனர். வெற்றி எனும் சொல் அனைவர் நாவிலும் இருந்தது. பேசிப் பேசி பெருக அனைத்து சொற்களுமே வெற்றி என்ற உட்பொருளை கொண்டவையாயின. அவர்கள் உளம் எழுந்து கொந்தளிக்கும்தோறும் ஊசியால் தொட்டுவைத்த குருதித்துளிபோல் அவருள் ஐயம் எழுந்தது. அது மாபெரும் வெற்றி என்பதனால், மிக நெடுங்காலம் தவமிருந்து அணுகியதென்பதனால், அது அத்தனை எளிதாக இருக்கப் போவதில்லை என்று அகம் கூறியது.

எளிதாக இருந்தால் ஏமாற்றமடைவேனா? எளிதாக இருக்கலாகாதென்று என்னுள் அமைந்த ஆணவம் ஒன்று ஏங்குகிறதா? படுக்கையில் மெல்ல உடலை நெளித்தபடி சகுனி விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தார். தேவர்களின் ஒரு கணம் இங்கு ஓர் யுகம். அந்த விண்மீனின் ஒரு இமைப்புக்குள் இங்கு கோடி கோடி மாந்தர் பிறந்திறந்து மறைகிறார்கள். பேரரசுகள் உருவாகி அழிகின்றன. குமிழிகள்போல் நகரங்கள் தோன்றி மறைகின்றன. எனில் அங்கிருந்து அதை பார்த்துக்கொண்டிருப்பது யார்? அவர்கள் பார்ப்பதுதான் என்ன?

ஒற்றை விண்மீனை விழியூன்றி நோக்கியபடி படுத்திருந்தார். அது ஆபன் என்னும் வசு. விண்ணிலுள்ள தூய நீரை கறந்து புவியிலுள்ள நீர்வெளிகளை நிறைத்து வற்றாது பேணும் தெய்வம். நோக்கும்போது மெல்ல அலையடிக்கும் மீன் அது. அலைவே நீர். நிலைகொள்ளாமையின் வடிவே நீர். மானுட உடல் நீரால் ஆனது. உடலுக்குள் நீர் அலைகொண்டபடியே உள்ளது. உடலின் ஒவ்வொரு பகுதியும் வலியும் உளைச்சலும் கொண்டது. எப்படி உடலை திருப்பினாலும் ஒருகணம் இதமாகவும் மறுகணம் வலியாகவும் உடலை உணர முடிந்தது.

நாண் அவிழ்த்து ஆயுதசாலையில் வைக்கப்பட்டிருக்கும் வில்லென இவ்வுடலை எங்கேனும் தளர்த்தி வைத்தால் மட்டுமே இளைப்பாற இயலும். அந்நாண் கட்டப்பட்டிருப்பது உள்ளத்திற்குள். அறுபதாண்டுகாலம் இறுகி நின்ற நாண். சகுனி தன் காலில் வலியை உணரத் தொடங்கினார். அகிபீனா இன்றி அறுபதாண்டுகளில் ஒருநாள்கூட முழுதறிந்து துயின்றதில்லை. அகிபீனாவின் மயக்கமே உடலோய்வு. உள்ளம் அமைந்ததே இல்லை. இன்று என் உடலை நேருக்கு நேர் சந்திக்கிறேன். இறுதியாக அது என்னிடம் சொல்லப்போவதென்ன என்று கேட்கிறேன். அது சொல்வது ஒற்றைச்சொல்லையே. வலி வலி வலி வலி.

அந்த ஒற்றைச்சொல் முடிவிலாது செல்லும் கணங்களின் பெருக்கு. என் கால் நரம்புகள் இழுத்துக்கட்டிய ஒரு யாழ். ஒவ்வொரு நரம்பையும் சுண்டி விளையாடும் அறியா விரலொன்று. வலி! வலி ஓர் இசை! துள்ளும், துடிக்கும், தெறித்து கூசி, பின் நெகிழ்ந்து அமைந்து, மீண்டும் வெடித்தெழும் இரக்கமற்ற இசை! என்னால் இயலாது. இனி இயலாது என்னால். இதோ அகிபீனா கொண்டுவர ஆணையிடப்போகிறேன். இதோ எக்கணமும் எழுவேன். எழுந்து சற்று கைவீசினால் போதும், என் ஆணைக்காக காவலன் நின்றிருப்பான். அகிபீனா கொண்டு வருக! ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து. என் உடல் நிறையும் நச்சு. இக்காலில் பெருகியுள்ள நஞ்சை ஒவ்வொரு நாளும் உண்ணும் நஞ்சால் ஈடு செய்கிறேன்.

இல்லை, இவ்வொரு நாள் இந்த வலியை என்னால் எதிர்கொள்ள முடியாதென்றால் இதன் முன் தோற்றவனாவேன். இத்தனை நாள் ஒத்திப்போட்டதனைத்தும் இந்த ஒருநாளுக்காக. இதை எதிர்கொள்ளும் பொருட்டே என்னை தீட்டிக்கொண்டேன். கண்களை மூடிக்கொண்டபோது மிக அருகே அவர் காந்தாரப் பாலைஓநாயின் முகத்தை பார்த்தார். எரியும் விழிகள். திறந்த வாய்க்குள் உலர்ந்த நாக்கு செத்துக்கொண்டிருக்கும் நாகமென அசைந்தது. அது நெடுங்காலம் முன்னரே இறந்துவிட்டிருந்தது. தான் இறந்துவிட்டதை அது அறிந்தும் இருந்தது. அத்துயரம் அதன் முகத்தில் இருந்தது. அது இருக்கும் அவ்வுலகிலிருந்து ஒரு சொல்லையேனும் இங்கு அளிக்க இயலாததன் தவிப்பு தெரிந்தது.

அவர் அதை நோக்கிக்கொண்டிருந்தார். கனவுகளில் பல நூறுமுறை அது எழுந்து கொண்டதுண்டு. ஒவ்வொரு தருணத்திலும் திடுக்கிட்டு உடலதிர விழித்துக்கொண்டு மஞ்சத்தை கைகளால் அறைந்து ஏவலனை கைகளால் அழைத்து நீரும் அகிபீனாவும் எடுத்துவர ஆணையிடுவார். இம்முறை நான் உன்னை தவிர்க்கப்போவதில்லை. நீ உரைக்க விரும்புவதை எனக்கு சொல்லலாம். அதன் விழி கனிவதை காண முடிந்தது. எக்கணமும் ஊளையிட்டு அது அழுமென்று தோன்றியது.

விழித்துக்கொண்டபோது தன் கால் மேல் சம்மட்டியால் அறைவதுபோல் வலியை உணர்ந்தார். ஒருகணம்கூட துயின்றிருக்கவில்லை. கண்களை மூடி பற்களைக் கடித்து இரு கைகளையும் முட்டிச் சுருட்டி அவ்வலியை கணுக்கணுவென உணர்ந்தார். நெருப்பு சுட்டெடுப்பதுபோல். பாறாங்கற்களால் நசுக்கி அரைப்பதுபோல். தசைகளில் இத்தனை வலி எங்கிருந்து வந்தது? வெளியிலிருந்து அது வந்தணைய இயலாது. அது ஒவ்வொரு அணுவிலும் முன்னரே உள்ளது. வலியுடன்தான் அது கருக்கொண்டது. வலி என்பது அதற்கு ஒத்திவைக்கப்பட்ட அறிதல்.

வலிபோல் உடலை உணர்வதற்கு பிறிதொரு வழியில்லை. வலிபோல் விளக்கங்கள் அற்ற, மாற்றுகள் இல்லாத, ஒரு சொல்லும் சென்றமராத தூய நிகழ்வொன்றில்லை. வலி தெய்வங்களுக்குரியது. வலியினூடாக மேலும் தெய்வங்களை அணுகுகிறோம். என்னை சூழ்க! என் தெய்வங்கள் என்னை எடுத்துக்கொள்க! காற்றுகளின் அன்னையர் எழுக! ஓநாய் முகம் கொண்ட, எரியும் விழி கொண்ட, பசி வறண்ட நாக்கு கொண்ட தெய்வங்கள்! மரு, இருணை, ஃபூர்ணி, காமலை, கிலை, ஆரண்யை என்னும் அறுவர். “அன்னையரே எங்கிருக்கிறேன்? என்னை பலிகொள்க! என் அவிகொள்க!”

தன்னைச் சூழ்ந்து அவர் மெல்லிய காலடியோசைகளை கேட்டார். ஒளிரும் கண்கள் அணுகி வந்தன. வறண்ட கரிய மூக்குகள் நீண்டன. மூச்சொலி. அதில் வெந்த ஊனின் கெடுமணம். அவர் அக்கண்களை நோக்கியபடி காத்திருந்தார். உறுமலோசையுடன் ஆறன்னையரும் அவர்மேல் பாய்ந்தனர். அவர் உடலை கவ்வி கிழித்துண்ணத் தொடங்கினர். உறுமி, உதறி, இழுத்து, கவ்வி குருதி சுவைத்தனர். செவிகோட்டி சிற்றுயிர்களைத் துரத்தி நா சுழற்றி சுவை சுவை என வால் குழைய, உடல் நெளிந்தமைந்து கொப்பளிக்க அவரை உண்டனர்.

இரவெங்கும் குருதி மணம் நிறைய விழி விரித்து விண்மீன்களை நோக்கியபடி அவர் படுத்திருந்தார். புலரி முரசொலி எழுந்தபோது பெருமூச்சுடன் கையூன்றி எழுந்தமர்ந்தார். ஏவலன் அருகணைந்து “புலரி, காந்தாரரே!” என்றான். “ஆம்” என்றார். “படைசூழ்கைச் சொல்லாடலுக்கு முதற்புலரியில் செல்லவேண்டியுள்ளது.” தலையசைத்து அவர் கைநீட்ட பற்றித் தூக்கி அவரை எழுப்பினான். கால் வீங்கிப்பருத்ததுபோல் இருந்தது. வலியில் சொற்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்ள உள்ளம் அசைவிழந்திருந்தது.

அன்று அவையில் ஒவ்வொரு சொல்லையும் வலியின் ஆழத்திலிருந்து நரம்புகள் அறுந்து துடிக்க பிழுதெடுத்து முன்வைக்க வேண்டியிருந்தது. பற்களைக் கடித்து உடலை இறுக்கி அவ்வலியை உணர்ந்தார். அவை முடிந்து எழுந்ததும் துரியோதனன் அணுகி “இன்றே போர் முடிந்துவிடும் என்கிறார்கள், மாதுலரே. ஒருநாள் போருக்கே பாண்டவர்கள் தாளமாட்டார்கள் என்றுதான் நானும் எண்ணுகிறேன். பிதாமகர் பீஷ்மருக்கு நிகர்நின்றிருக்கும் ஆற்றல் புவியில் எவருக்குமில்லை” என்றான். அவர் ஒளியிலா புன்னகையுடன் “ஆம்” என்றார். “நான் கவசங்கள் அணியவேண்டும்… இளையோர் அனைவரையும் சந்திக்கவேண்டும்” என்று துரியோதனன் விடைகொண்டான்.

கவசங்கள் அணிந்து தேரை அணுகியபோது உடல் எடை முழுக்க காலில் அழுந்தியது. தேரில் நிலையமர்ந்து போரிடுவதற்கு உயரமான பீடம் அமைக்கப்பட்டிருந்தது. தேர் அருகே நின்றிருந்த துச்சலன் அவரிடம் “தாங்கள் போர்முனைக்கு வரவேண்டியதில்லை, மாதுலரே. பின்னணியில் நின்று ஆணைகளை மட்டும் அனுப்பினால் போதும்” என்றான். சகுனி இகழ்ச்சியுடன் உதடுகள் வளைய “நான் போரிடும்பொருட்டே காந்தாரத்திலிருந்து வந்தேன்” என்றார். அவர் சொன்னதன் விரிவு புரிய துச்சலன் தலைவணங்கினான்.

போர்முனையில் நின்றிருக்கையில் வலி ஒன்றே உண்மையென்றும் பிற அனைத்தும் உளமயக்கே என்றும் தோன்றியது. தேர் சற்று அசைந்தபோதுகூட சவுக்குகள் அறைவதுபோல உடலெங்கும் வலி கொப்பளித்தது. புரவியின் ஒவ்வொரு உடலசைவையும் வலியால் பன்மடங்காகப் பெருக்கி உணரமுடிந்தது. காற்று வந்து தொட்டபோதுகூட வலியெழ முடியும் என்பதை அன்று அறிந்தார். கண்களைச் சுருக்கி மூச்சை இழுத்து மெல்ல விட்டபடி வலியை உணர்ந்துகொண்டிருந்தார்.

போர்முரசுகள் ஒலித்து படை எழுந்து அலையெனப் பெருகிச்சென்று பாண்டவப் படையை சந்தித்தது. அதை வெறித்த விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தபோது அவர் ஒன்றை உணர்ந்தார், வலி முழுமையாக அகன்றுவிட்டிருந்தது.

bowவழக்கம்போல் ஒரு கணத்தில் சகுனியின் அனைத்துப் புலன்களும் விழித்துக்கொண்டன. உடல் உச்சகட்டத் துடிப்பில் இழுத்து முறுக்கிய யாழ்நரம்பென அதிர்ந்தது. பல்லாயிரம் விழிகளால் அவர் வானிலிருந்து களத்தை நோக்கிக்கொண்டிருந்தார். பல்லாயிரம் செவிகளால் ஒவ்வொரு ஒலியையும் பிரித்துக் கேட்டுக்கொண்டிருந்தார். பாண்டவப் படைமீது உலர்ந்த மணலில் நீர் பரவுவதுபோல கௌரவப் படை உட்புகுந்துகொண்டிருந்தது. பீஷ்மர் நாரையின் அலகு என தொடக்கவிசையிலேயே நெடுந்தொலைவு ஊடுருவிச் சென்றுவிட்டிருந்தார். முதல் ஐந்துநாள் போருக்குப் பின்னர் அவரை எவருமே எதிர்க்கத் துணியவில்லை. அவர்முன் ஊழ்முன் என பணிந்து தலைகொடுத்தார்கள்.

சகுனி ஆணைகளை இட்டுக்கொண்டே இருந்தார். “துரியோதனருக்கு துணைசெல்க! அவர் பீமசேனர் முன் தனித்து நின்றிருக்கிறார். கௌரவர்கள் மூத்தவரை சூழ்ந்துகொள்க!” அர்ஜுனனை அஸ்வத்தாமனும் ஜயத்ரதனும் சேர்ந்து எதிர்த்தார்கள். சகுனி படைமுகப்பை நோக்கிக்கொண்டு நின்றார். நகுலனும் சகதேவனும் ஓருடலின் இரண்டு கைகள் போரிடுவதைப்போல களத்தில் திகழ்ந்தனர். அவர்கள் இணைந்திருக்கையில் பெருவல்லமை பெறுவதை அவர் கண்டார். ஆகவே பிரிந்தால் முற்றாக ஆற்றலிழப்பார்கள் என புரிந்துகொண்டு “பூரிசிரவஸ் செவிகொள்க! சகதேவனையும் நகுலனையும் பிரியுங்கள். இருவர் நடுவே மாறா வேலி அமைக! அவர்கள் பார்த்துக்கொள்ளலாகாது. அவர்களின் சொற்கள் அரிதாகவே சென்றடையவேண்டும்” என ஆணையிட்டார்.

பால்ஹிகப் படைகள் கூர்கொண்டு எழுந்து சென்றன. பருந்தின் சிறகுகள் என நின்றிருந்த நகுலனுக்கும் சகதேவனுக்கும் நடுவே அவை தாக்கின. பூரிசிரவஸ் அப்பகுதியை அம்புகளால் தாக்க அவனைச் சூழ்ந்துகொள்ளும் வாய்ப்பென எண்ணி நகுலனும் சகதேவனும் அவன் மேலும் உள்ளே செல்லும்படிவிட்டனர். அவன் ஊடுருவி அவர்களை கடந்துசென்றதும் சகுனி “பால்ஹிகப் படைகளின் பின்பக்கத்தை சலன் காத்துகொள்க… அவர்கள் இணையலாகாது” என்று ஆணையிட்ட பின் தன் தேரைச் செலுத்தி படைமுகப்புக்குச் சென்று நகுலனை எதிர்கொண்டார்.

அவருடைய அம்புகள் நகுலனின் தேரை தாக்க அவன் திரும்பிப்பார்த்து அவரை கண்டுகொண்டான். சீற்றத்துடன் நகைத்தபடி “வருக மாதுலரே, நீங்கள் குருதியால் ஈடுகட்டவேண்டிய பழிகள் பல உள்ளன!” என்று கூவினான். அவன் உதடுகளிலிருந்து சொல்கொண்ட சகுனி “இப்போரே என் பழிகொள்ளல்தான், மருகனே” என்றபடி அம்புகளை தொடுத்தார். அவர்களின் அம்புகள் விண்ணில் உரசிச் சிதறின. இரு தேர்களும் அம்புகளின் விசையால் அதிர்ந்தன. இருவரும் ஒருவரை ஒருவர் விழிநட்டு நோக்கி மெல்ல அனைத்திலிருந்தும் விடுபட்டு எழுந்து அவ்வெளியில் நின்று போரிட்டனர்.

நகுலனின் அம்புவளையத்தைக் கடந்து கவசங்களைக் கடந்து தன் முதல் அம்பு சென்று தைத்ததை சகுனி முதலில் உடலால் உணர்ந்தார். ஒரு மாத்திரைப்பொழுது கழித்தே உள்ளம் அதை உணர்ந்து ஆம் என்றது. அதன் பின் உணர்ந்தார், அந்த அம்பை எடுக்கையிலேயே எவ்வகையிலோ அது எங்கு சென்று கொள்ளும் என்று தெரிந்திருந்தது. அந்த கணநேரத் தத்தளிப்பிலிருந்து நகுலன் மீள்வதற்குள் மேலும் மேலுமென அம்புகளால் அவர் அவனை அடித்தார். அவனுடைய பாகன் தேரை பின்னுக்கிழுக்கத் தொடங்கும்போது அப்பால் சகதேவனின் முழவொலி எழுந்தது. மறுபக்கமிருந்து சகதேவன் தன் படையுடன் ஊடே நின்ற பால்ஹிகப் படையை உடைத்து வந்தான்.

அவன் அம்புகள் பக்கவாட்டில் வந்து தன் தேரை தாக்க சகுனி தயங்கினார். நகுலன் புது விசைகொண்டு முன்னால் வர அவர்களிருவரும் மீண்டும் இணைந்துகொண்டார்கள். பின்பக்கம் பூரிசிரவஸ் திருஷ்டத்யும்னனால் எதிர்கொள்ளப்பட்டு பாஞ்சாலப் படைகளால் முற்றாக சூழப்பட்டிருந்தான். சகுனியின் பாகன் தேரை மெல்ல மெல்ல பின்னகர்த்தி கொண்டுசென்றான். நகுலனின் அழைப்பில்லாமலேயே அவன் பின்னடைவது எப்படி சகதேவனுக்கு தெரிந்தது என சகுனி வியந்தார். இருபுறத்திலிருந்தும் சலனும் சோமதத்தரும் வந்து நகுலனையும் சகதேவனையும் எதிர்கொண்டார்கள்.

சகுனியைச் சூழ்ந்து ஏழு கழையர் மேலேறி இறங்கி கையசைவுகளால் செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தனர். ஒரே தருணத்தில் அவற்றை விழிகொண்டு சொல்லாக்கி ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தார். துரியோதனனுக்கும் பீமனுக்கும் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. அஸ்வத்தாமனை கடோத்கஜன் எதிர்கொள்ள சாத்யகியால் ஜயத்ரதன் எதிர்க்கப்பட்டான். பீஷ்ம பிதாமகரை அர்ஜுனன் எதிர்கொள்ள அவனுக்கு உதவியாக அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் இருபுறமும் துணைத்தனர். துரோணருக்கும் சுதசோமனுக்கும் போர் நிகழ்ந்தது. “துணைகொள்க, பீஷ்மருக்குப் பின்னால் படைகள் இல்லை…” என சகுனி ஆணையிட்டார்.

ஒருகணத்தில் கூரிய சோர்வொன்று எழ அவர் முற்றாகவே அகம் செயலிழந்தார். அங்கே நிகழ்வதை தொடர்பற்ற எதுவோ என நோக்கிக்கொண்டிருந்தார். முன்பு பாலையில் கண்ட ஓநாயை நினைவுகூர்ந்தார். அது பசித்து இறந்துகொண்டிருந்தது. உலர்ந்த நா வெளியே தொங்கியது. கண்கள் பழுத்திருந்தன. மூச்சு மிக மெல்ல ஓடியது. அவர் புரவியிலிருந்து இறங்கி அருகே சென்றார். புரவியின் விலாவில் வேட்டைப்பொருளான முயல் தொங்கியது. அதிலொன்றை எடுத்து கழுத்தை வெட்டி குருதியை அதன் நாவருகே கிடந்த கரியிலையில் சொட்டினார். அதன் விழிகள் உயிர்கொண்டன. நாக்கு சிதைந்த புழு என நீண்டு வந்தது. குருதியை தொட வந்தது. ஆனால் அதனுள் இருந்த தெய்வம் பிறிதொன்று எண்ணியது. நாக்கை உள்ளிழுத்துக்கொண்டு அது விழிமூடியது. அதன் உடலுக்குள் அந்த தெய்வத்தின் மெல்லிய உறுமலோசை கேட்டது. அது மெல்ல மெல்ல கனல் அணைந்து கரியாவதுபோல் உயிர்துறப்பதை அவர் நோக்கி நின்றிருந்தார்.

சகுனி முழவோசை கேட்டு விழித்துக்கொண்டார். அந்த உளத்தழைவிலும் அவர் ஆணைகளை விடுத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார். “சூழ்க! கடோத்கஜனை சூழ்ந்துகொள்க!” என ஆணையிட்டபடி கைகளை வீசினார்.

தொடர்புடைய பதிவுகள்


ஒரு காஷ்மீர் முற்போக்கு #metoo

$
0
0

4

 

அன்புள்ள ஜெ

 

இந்தக்கட்டுரையை இன்று வாசித்தேன் . உங்கள் கவனத்துக்காக. பெண்கள் மீதான வன்முறைக்கு முற்போக்கும் பிற்போக்கும் ஒரே நிலையில்தான் உள்ளன. பிற்போக்குக்கு மூடுதிரைகள் ஏதுமில்லை. முற்போக்கினர் கொள்கை, போராட்டம், விடுதலை, சமத்துவம், இறுதி இலக்கு என எதையாவது சொல்லிக்கொள்வார்கள்

 

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இது. முற்போக்கை நாம் நம்புவோம். ஆகவே அவர்கள் இன்னும் அபாயமானவர்கள். தமிழ்நாட்டிலும் தங்கள் சாதி, தங்கள் கட்சி என்பதனாலேயே எத்தனை ஆதரவுக்குரல்கள், எத்தனை வெறுப்பும் காழ்ப்புமாக பாதிக்கப்பட்டவர்களை இழிவுசெய்கிறார்கள்

 

எஸ்

 

 #MeToo in India: I was raped by the man leading protests against the Kathua sexual assault

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

என்.ராமதுரை -கடிதங்கள்

$
0
0

NR-profile

 

அஞ்சலி என்.ராமதுரை

அன்புள்ள ஜெ

 

என் ராமதுரை பற்றிய உங்கள் அஞ்சலிக்குறிப்பை வாசித்தேன். விரிவாகவே நீங்கள் எழுதியிருக்கலாம். நான் ஓர் ஆசிரியன். என் மாணவர்களுக்கு அவருடைய கட்டுரைகளை நகல் எடுத்து வாசிக்கக் கொடுப்பேன். அறிவியலை விந்தை குறையாமல் எளிமையாக அறிமுகம் செய்தவர். அறிவியலுணர்வை ஊட்டுவதற்கு தொடர்ச்சியாக முயற்சி செய்துகொண்டே இருந்தவர். அவருடைய மறைவுக்கு அஞ்சலி

 

எஸ்.தங்கராஜ்

 

அன்புள்ள ஜெ

 

என்.ராமதுரை அவர்களின் அறிவியல்கட்டுரைகளின் வாசகன் நான். அவர் தன் வாழ்க்கை முழுக்கவே இங்குள்ள அறிவியலுக்கு எதிரான மனநிலைகளுடன் போராடிய ஓர் போராளி. அவருடைய கட்டுரைகளைப் பாருங்கள். தமிழர்களுக்கு ‘அற்புதங்கள்’ மீது நம்பிக்கை மிகுதி. பெருமுடா முக்கோணம் பிரமிடுகள் என எவ்வளவோ மூடநம்பிக்கைகள். இங்கே மாற்று மருத்துவம் சித்தமருத்துவம் எல்லாமே மூடநம்பிக்கைகளாகவே உள்ளன. அவர் இந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர். ஒவ்வொன்றிலும் உள்ள அறிவியல் உண்மையைச் சொல்லி இவர்கள் கொண்டிருந்த அற்புதபரவசாங்களை இல்லாமலாக்கியவர்.

 

யோசித்துப்பார்த்தால் ஆச்சரியம். அறிவியலை மதிக்காமல் வாய்க்கு வந்தபடிப் பேசும் பாரிசாலன், ஹீலர் பாஸ்கர் போன்றவர்களுக்கு இங்கே கோடிக்கணக்கில் ரசிகர்கள். அறிவியலை அற்புதமாக, எளிமையாகச் சொன்ன ராமதுரையை சில ஆயிரம்பேர்கூட வாசிக்கவில்லை. அவர் இந்த அற்புதங்களைப்பற்றிய புல்லரிப்புகளை இல்லாமலாக்கி அறிவியல்மனநிலையை உருவாக்கியவர் என்பதுதான் காரணம்.

 

ஆர்.நாராயணன்

 

 

இனிய ஜெயம்

 

ஹைட்ரஜன் அணு மிக மிக எடை குறைந்தது ஆகவே மிக மிக ”உணர்ச்சி ”கரமானது . ஆகவேதான் எளிதில் அது தீப் பிடிக்கிறது .ஆக்சிஜன் அணு எது ஒன்று எரிந்தாலும் அதற்க்கான கிரியா ஊக்கி .ஆக்சிஜனின் இறுதி துளி தீரும் போதே எரியும் பொருள் அடங்கும் .

 

இந்த ஹைட்ரஜன் அணு இரண்டு ,இந்த ஆக்சிஜன் அணு ஒன்று , இரண்டும் இணைந்தால் கிடைப்பது தண்ணீர் . நெருப்புக்கு நேரெதிரான வஸ்து . [ஆமாம் இதை எங்கே படித்தேன் ???]  அறிவியலின் எந்த ஒரு அலகிலும்,அதன் இயல்பிலேயே இந்த வசீகர மர்மமும் இணைந்தே செயல்படுகிறது . இந்தப் புள்ளியியை மையம் கொண்டு இயங்குவது என் ராமதுரை அவர்களின் அறிவியல் எழுத்துக்கள் . நான் அவ்வப்போது சென்று வாசிக்கும் தளம் .

 

//வணிக எழுத்துக்குரிய செயற்கையான விளையாட்டுத்தனமோ, இறங்கிவந்து சொல்லும் பாவனைகளோ இல்லாமல், நேரடியான மொழியில் அறிவியலை தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர் என்.ராமதுரை. அறிவியல் அதிலுள்ள கருத்துக்களின், பார்வையின் விந்தையாலேயே ஆர்வமூட்டும் வாசிப்பனுபவமாக ஆகமுடியும் என நிரூபித்தவர். தமிழில் அறிவியலை எழுதியவர்களில் அவருக்கே நான் முதலிடம் அளிப்பேன்.//

 

மிக சரியாக அவரது பங்களிப்பை வகுத்து வைத்த வரிகள் இவை. அதற்கு உதாரணம் என  கீழ்க்கண்ட அவரது கடலுக்கு அடியில்  கொட்டிக் கிடக்கும் உலோக உருண்டைகள்  எனும் கட்டுரையை சொல்லலாம் .

 

http://www.ariviyal.in/2011/11/

 

கிட்ட தட்ட இவர் போலவே ,அறிவியல் எழுத்தை இப்போது கையாளும் மற்றவர் ஹாலாஸ்யன் . கடல் விரிவின் சில பகுதிகள் வழியே , ஒளிச்சேர்க்கை நிகழ்த்தி ,வளி மண்டலத்தில் மிகுந்து நிற்கும் கரியமில அணுக்களை குறைக்கும் முயற்சியை ,ஆராய்ச்சி வழியே இந்தியா உட்பட சில நாடுகள் பரிசோதித்து பார்த்திருக்கிறது .அது குறித்த ஹாலாஸ்யன் அவர்களின்  கட்டுரை இது

 

கடலிற்கான உரம், இரும்பு

 

என் ராமதுரை அவர்களின் வழியிலான அறிவியல் எழுத்து முறை தொடரும் என்ற நம்பிக்கையை ஹாலாஸ்யன் அளிக்கிறார் .

 

ஐயையோ அப்போ சுஜாதா  என்றொரு கோஷ்டி கிளம்பி வரக்கூடும் . காலையிலேயே நண்பர் ஒருவர் தொலைபேசி விட்டார் . சுஜாதா வெறியர் .கணிப் பொறியில் அதன் அனைத்து கூறுகளையும் கட்டுடைத்து குடல் ஆபரேஷன் செய்வதில் ஜில்லா கத்திரி . ஆம் அதிலேயே அவர் ஒரு கல்லூரியில் வாத்தியாராக இருக்கிறார் . அவ்வப்போது தொலைபேசுவார்  இந்த வருட தீபாவளிக்கு உலகின் செயற்கை அறிவு உதித்துவிடும் என்பார் .  இந்த வருட தீபாவளி நெருங்கி விட்டது .

 

புற உலகில் மனநோய் ,மனச்சிக்கல் என்ற ஒன்றே இனி இல்லை .அக உலகில் கணிப்பொறிகள் கனவு காணும் .இந்த இரண்டு நிலைகளும் ஒருமித்து சாத்தியம் ஆகும் போதே செயற்கை அறிவு என்ற ஒன்று சாத்தியம் என்ற எளிய உண்மையை இவருக்கு சொல்லிப் புரிய வைத்து விட முடியாது .காரணம் சுஜாதா இவர்களை ”வளர்த்த ”விதம் அப்படி .

 

அதிலிருந்து விலகி நிற்கும் என் .ராமதுரை போன்றோர் பணி மிக மிக முக்கியமானது . அவரது தளம் தமிழின் சொத்துகளில் ஒன்று .அதை பாதுகாக்கும் விஷயங்கள் எந்த அளவு நடைமுறையில் இருக்கிறது என தெரியவில்லை .அவருக்கு அவரது வாசகர்கள் சார்பாக அஞ்சலிகள் .

 

கடலூர் சீனு

 

ராமதுரையின் இணையப்பக்கம் அறிவியல்புரம்

என்.ராமதுரை

நகரும் கற்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘நானும்’ இயக்கம், எல்லைகள்

$
0
0

Me-too-696x319

#me too-இயக்கம்

தருண் தேஜ்பால்களும் பெண்களும்

’நானும்’ இயக்கம்-கடிதங்கள்

‘நானும்’ இயக்கம் -கடிதங்கள்

 

ஜெ,

 

மீடூ இயக்கம் துவங்கியது எங்கு ?

 

தன் அதிகாரத்தை ,வயதை,பெண்களின் இயலாமையை உபயொக்கித்து பாலியல் மீறல்களில் ஈடுபடுபடும் ஆண்களைப் பற்றி தைரியமாக வெளியே பேச சமூகம் தரும் தைரியம்தானே மிடூ ? பெண் அத்துமீறல்களை வெளியே சொல்லுவதை சமூகம் கேவலமாக பார்ப்பதை தவிர்த்து தைரியம் தரும் இயக்கம்தானே இது ?

 

மிக அவசியமான இயக்கம் ,பெண்கள் வேலைக்காக வெளியே வரும் இத்தலைமுறையில் அவசியத்தேவை .

 

ஆனால் இந்தியாவில் ஒரு ஆண் பெண்ணிடம் எனக்கு உன்னை உடலாக பிடித்திருக்கிறது என்று சொன்னாலே அதை மிடூவாக்கி விடுகிறார்கள் , ஒரு இந்திய ஆண் பெண்ணிடம் உடல்ரீதியான மீறலில் ஈடுபடாமல் ‘எனக்கு தேவை’ என சொன்னாலே அது பாலியல் மீறல் ஆகிவிடுமா ?

 

ஆண் பெண்ணிடம் உணர்த்தித்தானே ஆகவேண்டும் ? அது அடிப்படை இச்சை அல்லவா ?

 

அதை அப்பெண் வெளியாக்குவாள் என்றால் அதை ஒத்துக்கொள்ளும் மனநிலையும் இருக்குமாயின் ஒரு ஆண் கேட்பதில் என்ன பிழை ? பெண் முதலடி எடுத்துவைக்காத சமூகத்தில் ஆண் எப்படித்துவங்குவது ?

 

இதுவும் சமூகம் முன்னேறிப்போவதன் அடையாளம்தான் என எண்ணுகிறேன் .

 

இப்படிக்கு

 

[நானில்லை …]

 

அன்புள்ள அ,

 

1984ல் நாங்கள் காசர்கோட்டில் தொழிற்சங்கப் பணி நிமித்தமாக ஒரு மிகமுதிய தொலைபேசி ஊழியையைச் சந்திக்கச் சென்றோம். அவருக்கு 80 வயது. அவர் தொலைபேசி ஊழியையாகப் பணியாற்றிய காலகட்டத்தைப் பற்றிச் சொல்லும்போது எந்த உணர்ச்சியுமில்லாமல் சொன்னார், அன்று உயரதிகாரிகளின் பாலியல் அடிமையாக இருந்தால் மட்டுமே அவ்வேலையைச் செய்யமுடியும் என்று. அவர் ஆங்கில இந்தியப்பெண். அவர்கள் மட்டுமே அன்று அவ்வேலைக்கு வந்தனர், அவர்களின் குடும்ப அமைப்பால் அவர்களுக்கு வேறுவழியிருக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு குடும்பத்தொழில் இல்லை, குடும்பப் பாதுகாப்பும் இல்லை

 

அப்போதுதான் தோழர் சொன்னார், இந்தியத் தொழிற்சங்கத்தின் முக்கியமான சாதனை வேலைசெய்யும் பெண்கள் மீதான பாலியல் ஆதிக்கத்தை அழித்தது என. ஏ.கே.கோபாலனின் தன்வரலாற்றில் [கொடுங்காற்றின்றே மாற்றொலி] அவர் நடத்திய போராட்டங்களில் பெரும்பாலானவை ‘கர்ப்பசத்யாக்கிரங்கள்’ என்பதைக் காணலாம். இடதுசாரிகளின் முதன்மையான போராட்ட வழிமுறை அது. தொழில்முதலாளிகளாலும் நிலவுடைமையாளர்களாலும் கருவுற்ற பெண்களுக்காக அவர்களைப் பயன்படுத்திக்கொண்டவர்களின் வீட்டு முற்றத்தில் அமர்ந்து செய்யும் சத்யாக்கிரகம் அது. அவர்களை அம்பலப்படுத்தி, நாணச்செய்வது. கிட்டத்தட்ட இன்றைய மீடூவேதான்

 

அதிகாரம் இருக்குமிடத்தில் எல்லாம் பாலியல்சுரண்டல் இருக்கும். இன்றுகூட பொதுவெளிக்கு வந்துவிட்ட ஒரு பெண் மாட்டேன் என்று சொல்லவே முடியாத ஆளுமைகள் சிலர் உள்ளனர். அதிகாரம் என்பது மறைமுகமாக இதையும் உள்ளடக்கியதுதான். அரசர்களின் காலகட்டத்தில் இது இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஜனநாயகத்தில் கொஞ்சம் மறைமுகமானதாக மாறியது. தனிமனித உரிமை மேலும் மேலும் பேசப்படும் இன்றைய சூழலில் அது பெண்களிடமிருந்து எதிர்ப்பைச் சந்திக்கிறது. அதை நாம் மூடிமறைக்கக்வே விரும்புகிறோம். இன்றும் பழைய மனநிலையில் வாழ்பவர்களுக்கு அது அதிர்ச்சியாக உள்ளது, தங்கள் இயல்பான உரிமை பறிக்கப்படுபவர்கள் போல் உணர்கிறார்கள்.

 

இன்றைய சூழலில் அதிகாரத்தை பாலியல் ஆதிக்கத்துக்காகப் பயன்படுத்தும்போது அதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள். உலகமெங்கும் பெரும்பாலும் எல்லா துறைகளிலும் அதிகாரம் முழுக்க ஆண்களிடம்தான் உள்ளது. அதேசமயம் பெண்கள் ஏதேனும் ஓர் ஆணை அண்டி இல்லங்களுக்குள் வாழ்வதற்குப் பதிலாக பொதுவெளிக்கு வந்து தங்கள் இடத்துக்காகப் போரிடும் நிலை உலகமெங்கும் உருவாகிவிட்டிருக்கிறது. ஆகவே இன்று இது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

 

நேற்று தொழிற்சங்கம் என்ன செய்ததோ அதையே இன்று இவ்வியக்கமும் செய்கிறது. வலுவான தொழிற்சங்கம் இல்லாத பல துறைகளில் இன்று பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. அவர்களுக்காக உருவாகி வந்த ஓர் இயக்கம் இது. விக்கிப்பீடியாவில் மிக விரிவாக இதைப்பற்றிப் பேசப்பட்டுள்ளது. இங்கே இதைப்பற்றி ஏதோ புத்தம்புதிதாகக் கேள்விப்படுவதுபோல் எழுப்பப்படும் எல்லா வினாக்களும் விரிவாக அதிலேயே விவாதிக்கப்பட்டுள்ளன. உண்மையில் இங்கே பேசுபவர்கள் விக்கியைக்கூட சரியாகப் படிப்பதில்லையோ என்ற ஐயத்தால் அதிலுள்ளவற்றையே சுட்டிக்காட்டுகிறேன் Me Too movement – Wikipedia

அலிஷா

அலிஷா

 

 

2017ல் அமெரிக்க திரைத்தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் [Harvey Weinstein] என்பவருக்கு எதிராக அவரால் பாதிக்கப்பட்ட எண்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் குற்றம்சாட்டினர். கற்பழிப்பு, மிரட்டல், துரத்துதல் என பல குற்றங்கள் இவர்மேல் சுமத்தப்பட்டன.ஹார்வி வெய்ன்ஸ்டீன் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குள்ளான வெய்ன்ஸ்டீன் மீது வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து அமெரிக்க நடிகையான அலிஸா மிலானோ [Alyssa Milano] என்பவர்  #metoo என்னும் இணைப்புச் சொல்லுடன் அனைத்துப்பெண்களும் தங்கள் அனுபவங்களைப் பொதுவெளியில் முன்வைக்கவேண்டும் என்று கோரி ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார். மிக விரைவிலேயே அது உலகமெங்கும் பரவி ஓர் அலையென ஆகியது. இதற்குமுன்னர் 2006ல் இச்சொல்லாட்சியை பெண்கள் ஒருங்கிணைவதற்கான குறிச்சொல்லாக டரானா பர்க் [Tarana Burke] என்னும் சமூகப்பணியாளர் பயன்படுத்தியிருந்தார்

 

#metoo இயக்கம் பெண்களுக்கு எதிரான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான செயல்திட்டம் கொண்டது அல்ல. பெண்களை உணர்ச்சிகரமாக பாதிக்கும் அனைத்து விஷயங்களையும் பேசும்பொருட்டு உருவானதும் அல்ல. கல்வி மற்றும் தொழில் அமைப்புகளில் ஈடுபடும் பெண்களின் மீதான பாலியல் சார்ந்த ஆதிக்கம், சுரண்டல், சீண்டல் ஆகியவற்றுக்கு எதிராக உலகளாவ ஓரு விழிப்புணர்ச்சியை உருவாக்கும் பொருட்டு உருவான இயக்கம் இது.  இதன் நோக்கம் சட்டபூர்வமான நடவடிக்கை அல்ல. அது இயலாததாக உள்ள சூழல்களை கவனப்படுத்துவதே இதன் நோக்கம். இது இப்பிரச்சினை நமது சமூக மனசாட்சி நம்பிக்கொண்டிருப்பதைப்போல அத்தனை எளியது அல்ல,மிகப்பிரம்மாண்டமானது என்று காட்டுவதையே இலக்காகக் கொண்டுள்ளது. இது ஒரு கவன ஈர்ப்பு மட்டுமே.

 

ஆகவே இவ்வியக்கம் பெண்கள் வீட்டிலோ, உறவுகளிலோ அடையும் துன்பங்களை கருத்தில்கொள்ளவில்லை என பொருளில்லை. இது பல்வேறு வகைகளில் ஒடுக்கப்படும் பெண்களின் பிரச்சினைகளை பேசவில்லை என்று பொருளில்லை. இது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரும்பொருட்டு, குறிப்பிட்ட இலக்குடன், ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். இதன் செயற்களம் கல்வி –தொழில் தளங்களிலுள்ள பாலியலாதிக்கத்தை சுட்டுவது மட்டுமே. ஆகவே இவ்வியக்கம் உருவானதுமே இவர்கள் ஏன் அதைப்பேசவில்லை, ஏன் இதைப்பேசவில்லை என்றெல்லாம் கேட்பதைப்போன்ற அபத்தம் வேறில்லை. இப்பிரச்சினையுடன் சர்வதேச அரசியல், சமூகக்கட்டமைப்பு, அறுதிப்புரட்சி போன்றவற்றை இணைத்துப்பேச ஆரம்பிப்பதெல்லாம் இதை மழுங்கடிக்கச்செய்யப்படும் மோசடிகள் மட்டுமே. இது உயர்குடிகளின் பேச்சு என்பது அறிவின்மை, எல்லா எதிர்ப்பும் எதிர்க்கும் ஆற்றல்கொண்ட தரப்பினரிடமிருந்தே உருவாகி வரும்.

 

ரயா சர்க்கார்

ரயா சர்க்கார்

இந்தியாவில் இவ்வியக்கம் ரயா சர்க்கார் என்னும் முன்னாள் இந்திய மாணவியால் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியக் கல்விநிலையங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல்சுரண்டல்வாதிகளாக அறியப்பட்டவர்களின் பெயர்களைச் சுட்டியது அது. எம்.எஸ்.எஸ் பாண்டியன் போன்றவர்களின் பெயர்கள் அதிலிருந்தன. அந்த அலையே இன்று ஊடகங்களை நோக்கி வந்துள்ளது.  நாம் கண்டும் காணாமலும் கடந்துசெல்லும் ஒரு சமூகநிகழ்வைச் சுட்டிக்காட்டுவதே இதன் நோக்கம். அதில் பெருவெற்றியை இது அடைந்துள்ளது. அப்பிரச்சினையை நாடே பேசவைக்கிறது. எம்.ஜே.அக்பரின் ராஜினாமா அவ்வகையில் ஒரு பெரிய தொடக்கம்.

 

இவ்வியக்கம் இப்போது ஏன் ஆரம்பித்தது, இத்தனைநாள் இவர்கள் ஏன் பேசாமலிருந்தார்கள், இப்போது மட்டும் ஏன் பேசுகிறார்கள் போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் பலமுறை பதில்கள் சொல்லப்பட்டு இணையத்தில் இறைந்து கிடக்கின்றன. ஆனாலும் இதை மீண்டும் மீண்டும் இங்கே பேசிக்கொண்டிருக்கிறார்கள். பெய்ஜிங்கில் 1995ல் நடந்த நான்காவது உலகப்பெண்கள் மாநாட்டுக்குப் பின்னர்தான் மெல்ல மெல்ல பெண்களுக்கான பொதுவெளி உரிமைகளை, பணியிடப் பாதுகாப்பை அரசுகள் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணமே உருவாகிறது. அதற்கான போராட்டங்கள் நடந்து இருபதாண்டுகளுக்குப்பின்னரே பெண்களுக்கான தனிச்சட்டங்களும் , கண்காணிப்பு அமைப்புகளும் உருவாகி வந்தன. இன்றுதான் இவற்றைப் பேசி நீதிகேட்க ஓர் அமைப்பு பெண்களுக்கு உள்ளது.

 

இந்தியாவைப் பொறுத்தவரை டெல்லி நிர்பயா பாலியல்வன்கொடுமை வழக்குக்குப் பின்னரே சட்டங்கள் வலுவாக உருவாயின. பெண்கள் நீதியை எதிர்பார்க்கமுடியும் என்ற நிலை உருவானது. அனைத்துக்கும் மேலாக இணையம் மூலம் உலகம் முழுக்க உள்ள பெண்கள் ஒற்றைக் கோரிக்கையுடன் ஒருங்கிணைய முடிகிறது. அவர்கள் தங்களை முகமறியாமல் வெளிப்படுத்தவும் வாய்ப்புள்ளது. சட்டமும் ஊடகமும் அளிக்கும் இவ்வாய்ப்புகள் வழியாகவே இவ்வியக்கம் உருவாகிறது, நேற்று இவ்வாய்ப்புகள் ஏதும் இல்லை

 

*

 

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இன்னமும் பாலியல்சார்ந்த பலவகையான பண்பாட்டுச்சிக்கல்கள் உள்ளன. இங்கே இந்த இயக்கம் அதன் ஆரம்பநிலை கவன ஈர்ப்புக்குப்பின் சரியாக வழிகாட்டாவிட்டால் பிழையாகப் போக வாய்ப்புகள் மிகுதி. அதைத்தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்

 

ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு முன் ஜெயகாந்தன் ஒரு கதையில் எழுதினார். ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் நான் உன்னை விரும்புகிறேன் என்று சொல்வதோ, அதைத்தெரிவித்து ஒரு கடிதம் அளிப்பதோ அவனுடைய உரிமை. அதை அந்தப்பெண் ஏற்கலாம், மறுக்கலாம். மறுத்தால் அவன் அதை மேலும் வற்புறுத்தினாலோ துன்புறுத்தினாலோதான் அது குற்றம். ஒருவன் தன் விருப்பத்தைத் தெரிவிப்பதனாலேயே அவனை குற்றம்சாட்டி, அக்கடிதத்தை தன் குடும்பத்தினரிடமோ அலுவலக மேலாளரிடமோ காட்டி அவனை அவமதிக்கும் பெண் நாகரீகமற்றவள். நாகரீகம் என்பது இன்னொருவரின் இயல்பான உணர்வுகளைப் புரிந்துகொள்வது. அந்த புரிதலும் நிமிர்வும் பெண்களுக்குத் தேவை.

 

ஜெயகாந்தன் எழுதி அரைநூற்றாண்டுக்குப்பின்னரும் இன்றுகூட காதல்கடிதத்துடன்  கதறியழுதபடி புகார்செய்ய ஓடுபவர்களே நம்மில் பெரும்பாலான பெண்கள். ஒருவன் காதலைத் தெரிவித்தான் என்றாலே அவனை ஒழுக்கமற்றவன் என எண்ணி தண்டிக்கப்பாய்பவர்கள் நம் மூத்த தலைமுறையினர். நிலைமை பெரும்பாலும் மாறவில்லை.

 

இந்நிலையில் ஒருவன் தன்னிடம் விருப்பத்தைத் தெரிவித்தாலே அவனை காமாந்தகன் என எண்ணி metoo வில் சேர்த்து அவமானப்படுத்த நம்மூர் பாதிவெந்த பெண்டிர் முயல்வார்கள் என்றால் என்ன நடக்குமென்றே தெரியவில்லை. ஒருவன் ஒருத்தியிடம் தன் விழைவைத் தெரிவிப்பது என்பது மிக இயல்பான ஒரு செயல். பெண்கள் பெரும்பாலும் தங்கள் விழைவைத் தெரிவிப்பதில்லை. அதை தங்களைப்புரிந்துகொண்டு ஆண்களே தெரிவிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் பிழையாகப் புரிந்துகொள்வதும் அடிக்கடி நிகழ்வதுதான்.

 

நாகரீகமான பெண் அப்படி ஒரு ஆண் பிழையாகப்புரிந்துகொண்டு தன் விருப்பை தெரிவித்தான் என்றால் அதை வைத்துக்கொண்டு ‘சீன்’ போடமாட்டாள். தன்னுடைய முக்கியத்துவத்தை, தன்  ‘தூய்மையை’ ‘அணுகமுடியாத தன்மையை’ வெளிப்படுத்தும் வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டாள். உண்மையாகவே பிடிக்கவில்லை என்றால் கறாராக, தெளிவாக அதைத் தெரிவித்துவிட்டு சிறிதுகாலத்துக்கு முழுமையான விலக்கத்தை கடைப்பிடிப்பாள்.

 

ஆனால் நான் என் அலுவலக வாழ்க்கையில் கண்ட அளவில் பெரும்பாலான பெண்களுக்கு அந்த முதிர்ச்சி இல்லை. அந்த விருப்பத்தில் அவர்களுக்கும் உடன்பாடு என்றால் வெளியே தெரியாது. இல்லை என்றால் அதை அவர்கள்  கொண்டாடித்தீர்த்துவிடுவார்கள். வீட்டுக்குச்சென்று சொல்லி தந்தையையுன் உடன்பிறந்தாரையும் கூட்டிவருவார்கள். மேலதிகாரியிடம் முறையிடுவார்கள். அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள். நானே சிலரை அதட்டி துரத்திவிட்டிருக்கிறேன்.

 

ஒருவன் ஒரு பெண்மேல் விழைவை வெளிப்படுத்துவது சீண்டலோ அத்துமீறலோ அல்ல. எளிய மானுடச்செயல்பாடு. அதை இயல்பாக எதிர்கொள்ள அந்தப்பெண்ணுக்குத் தெரியவேண்டும். அவன் அவளை தொடர்ந்து தொந்தரவுசெய்தால், அவள் உளநிலையை சீண்டினால் அது கண்டிக்கவேண்டிய பிழை. அதிகாரத்தையோ செல்வத்தையோ காட்டி மிரட்டினால் அது குற்றம். அது தண்டிக்கப்படவேண்டும். இந்த வேறுபாட்டை நம் பெண்களுக்கு விவரமான பெண்கள் சொல்லிக்கொடுக்கவேண்டும்.

 

ஜெ

 

தருண் தேஜ்பால்களும் பெண்களும்

லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டு

’நானும்’ இயக்கம்-கடிதங்கள்

‘நானும்’ இயக்கம் -கடிதங்கள்

‘நானும்’ இயக்கம்- கடிதங்கள்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசு புதுவை கூடுகை – 20 ( அக்டோபர் 2018)

$
0
0

unnamed

அன்புள்ள நண்பர்களே ,

 

வணக்கம் ,  நிகழ்காவியமான  “வெண்முரசின்   மாதாந்திர  கலந்துரையாடலின்  தொடர்ச்சி  20 வது   கூடுகையாக  “அக்டோபர்  மாதம் ”  25 -10-2018  வியாழக்கிழமை அன்று  மாலை  6:00 மணி  முதல்  8:30 மணி  வரை  நடைபெற இருக்கிறது  அதில்  பங்கு  கொள்ள  வெண்முரசு  வாசகர்களையும்  , ஆர்வமுள்ளவர்களையும் அன்புடன்  அழைக்கிறோம் .

 

கூடுகையின்  பேசு பகுதி  வெண்முரசு  நூல் வரிசை 2

 

(மழைப்பாடல்) பகுதி 17 புதிய காடு ,

82 முதல் 88 வரையிலான   பதிவுகள்   குறித்து  நண்பர்  மயிலாடுதுறைபிரபு  அவர்கள்  உரையாற்றுவார்

இடம்:

 

கிருபாநிதி  அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்”  முதல்  மாடி,

# 27, வெள்ளாழர்  வீதி ,  புதுவை -605 001

தொடர்பிற்கு :

 

9943951908 ; 9843010306

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-44

$
0
0

bowபோர்க்களத்தில் தன் கையசைவுகள், உதடசைவுகள் வழியாக இடைவிடாது ஆணைகளைப் பிறப்பித்து சூழ்ந்திருந்த படைகளை முற்றாகவே ஆட்டுவித்துக்கொண்டு தேரில் நின்றிருக்கையில் சகுனி முதல்முறையாக நாற்களப் பகடைகளைத் தொட்டு எடுத்த நாளை எண்ணிக்கொண்டார். குழந்தையாக இருந்தபோது நிகழ்ந்தவற்றில் ஓர் அணுவிடைகூட ஒளி குன்றாது நின்றிருக்கும் நினைவு அதுதான். அவருக்கு இரண்டு அகவை. தந்தையின் மடியில் அமர்ந்திருந்தார். தந்தையின் முன் நாற்களப் பலகை விரிந்திருந்தது. எதிரே அவருடைய இளையவராகிய மகாபலர் அமர்ந்திருந்தார். அவர் தலையில் கைவைத்து கருக்களை நோக்கியபடி அமர்ந்திருக்க அவரை புன்னகையுடன் கூர்ந்து நோக்கியபடி சுபலர் பகடைகளை கையிலெடுத்தார்.

அவர்களின் முகங்களிலிருந்த உணர்ச்சிகளை சகுனி மாறிமாறி பார்த்தார். அந்த ஒருமையும் கொந்தளிப்பும் பதற்றமும் எக்களிப்பும் அவரை ஆட்கொண்டன. சுபலர் பகடைகளை உருட்டியதும் மகாபலர் தலையில் ஓங்கி அறைந்தபடி “தெய்வங்களே!” என்றார். சுபலர் “மீண்டும் என் கணக்கு” என்றார். “என்ன, தந்தையே?” என்றார் சகுனி. “ஒன்றுமில்லை, பேசாமலிரு” என்றார் சுபலர். “தந்தையே” என்று சகுனி அவர் கையை பிடிக்க அவர் மைந்தனை இறக்கி அப்பால் நிறுத்தி பகடையை உருட்டினார். மகாபலர் குனிந்து நோக்கிவிட்டு வெறிக்கூச்சலிட்டு கைகளைத் தட்டியபடி எழுந்தார். உரக்க நகைத்தபடி நடனமிட்டார். சுபலர் தலையில் கைவைத்துக்கொண்டு குனிந்தார்.

அதற்கு முன்னரும் அந்த ஆட்டத்தை சகுனி பார்த்திருந்தார். ஆனால் ஒரே கணத்தில் துயரை பெருங்களிப்பாக, பெருங்களிப்பை இருண்ட வீழ்ச்சியாக மாற்றும் ஒன்று அப்பகடைகளில் இருப்பது அப்போதுதான் அவர் நெஞ்சில் பதிந்தது. அவர் அந்தப் பகடைகளையே நோக்கிக்கொண்டிருந்தார். அவை எலும்புகளால் ஆனவை. காந்தாரத்தின் பகடைகளில் எல்லாம் ஒருபுறம் காந்தாரத்தின் ஈச்சஇலை பொறிக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் ஆறன்னையரைக் குறிக்கும் ஆறு என்னும் எழுத்து. பகடைகள் புரண்டு விரிந்து மீண்டும் சேர்ந்து சிதறிப்பரவுவதை அவர் நோக்கிக்கொண்டிருந்தார். அவை சுபலரையும் மகாபலரையும் அறியாமல் தங்களுக்குள் தாங்களே விளையாடிக்கொண்டிருந்தன. புறாக்கள்போல எழுந்து சிறகடித்து மீண்டும் அமர்ந்து. அவற்றுக்கு அப்பால் சுபலரும் மகாபலரும் கொந்தளித்தனர், கூச்சலிட்டனர், கண்ணீர்விட்டனர், மகிழ்ச்சிகொண்டாடினர்.

உச்சிப்பொழுதில் உணவுண்பதற்காக அவர்கள் எழுவதுவரை ஆட்டம் நீடித்தது. ஏவலன் வந்து அறிவித்ததும் எழுந்துகொண்ட மகாபலர் “நான் வென்ற நிலங்களை தனியாக குறித்துள்ளேன், மூத்தவரே. அவை முறைப்படி நீரூற்றி எனக்கு அளிக்கப்படவேண்டும்” என்றார். சுபலர் “ஆம், அவை உனக்குரியவை. ஆனால் இன்னும் ஆட்டம் முடியவில்லை. இறுதியில் எவர் ஈட்டுகிறார்கள் என்று பார்ப்போம்” என்றார். மகாபலர் “நான் ஆடவில்லை என்றால்?” என்றார். “ஆட்டத்தை நிறுத்திவிட்டுச் செல்ல எவருக்கும் உரிமையில்லை” என்றார் சுபலர். “எங்கேனும் நிறுத்தியாகவேண்டுமே?” என்றார் மகாபலர். “ஆம், ஆனால் என் நிலத்தை நீ கொண்டுசெல்லும் இடத்தில் அல்ல” என்றார் சுபலர்.

இருவரும் நின்று நோக்கோடு நோக்கு பொருந்தினர். இரு முகங்களிலும் இருந்த வெறுப்பையும் சினத்தையும் சகுனி நோக்கிக்கொண்டிருந்தார். சுபலர் திரும்பிச்செல்ல மகாபலர் மெல்ல துப்பியபடி திரும்பி இன்னொரு பக்கமாக சென்றார். அவர்கள் இருவரும் ஒருபோதும் பேசிக்கொள்வதில்லை என்பதை சகுனி உணர்ந்தார். இணைந்து நிற்பதுகூட அரிது. ஆனால் அமர்ந்து ஆடமுடிகிறது. அங்கே நகைப்பும் கூச்சலும் எழுகிறது. பகைக்கும் நட்புக்கும் அப்பால் நிகழும் ஓர் ஆடல் அது என்று அவர் உணர்ந்த தருணம்.

அத்தருணத்தை அவர் எண்ணி எண்ணி வளர்த்துக்கொண்டார். மானுடர் பேசிக்கொள்ளும் அனைத்துமே வெறும் முறைமைச்சொற்கள். அவையில், அறையில், தனிமையில், எங்கும். மானுடர் ஒருவரோடொருவர் உண்மையாக பேசிக்கொள்ளவே இயலாது என்ற நிலையில் எழுந்த மாற்று உரையாடலே நாற்களம். அங்கே உரையாடல்களம் வகுக்கப்பட்டுள்ளது. நான்கு களங்கள், நான்கு பகடைகள், பன்னிரு எண்கள், எழுபத்திரண்டு கருக்கள். வெளியே விரிந்துள்ள பொருட்களின், உட்பொருட்களின், பொருள்மயக்கங்களின், உள்முயக்கங்களின் வெளி அனைத்துப் பேச்சுகளையும் முடிவிலிவரை கொண்டுசென்று பொருளற்றதாக்கிவிடுகிறது. பகடை திட்டவட்டமானது, மயக்கங்களற்றது. பின்பு அவர் அறிந்தார், ஒவ்வொரு உரையாடலும் பகடையாட்டமே என. பகடையாட்டம் சாரம் மட்டுமேயான ஓர் உரையாடல் என.

அன்று அவர்கள் சென்றபின் ஏவலன் தந்தப் பேழைக்குள் எடுத்து வைத்த பகடைகளை தன்னிடம் தரும்படி கேட்டார். “இளவரசே” என தயங்கிய பின் முதிய ஏவலன் “ஒருமுறை மட்டும் தொட்டுக்கொள்க!” என்றான். அவர் அந்தப் பகடைகளில் ஒன்றை எடுத்து கையில் உருட்டினார். “இது எதனாலானது?” என்றார். “இது புரவியின் எலும்பாலானது. எல்லா போட்டிவிரைவுகளிலும் வென்று உங்கள் தந்தையை மகிழவைத்த சுபார்ஸ்வம் என்னும் புரவி அது.” அவர் அதை கையிலிருந்து உருட்டினார். “இது என்ன? இது என்ன?” என்று அவன் கையைப் பிடித்து உலுக்கினார். “இளவரசே, இது பன்னிரண்டு. நீங்கள் வென்றீர்கள்” என அவன் அதை எடுத்து பேழைக்குள் வைத்தான்.

“நான் வென்றேன்! பன்னிரண்டு! பன்னிரண்டு! நான் வென்றேன்!” என்று சகுனி சொல்லிக்கொண்டார். துள்ளியபடி ஓடிச்சென்று தன் மூத்தவரான அசலரிடம் சொன்னார். “மூத்தவரே, நான் வென்றேன்! பன்னிரண்டு! வென்றேன்!” அன்றுமுதல் அந்த எண் அவரை ஆட்டிப்படைக்கலாயிற்று. பன்னிரண்டு. துயிலிலும் விழிப்பிலும் ஆட்கொண்டிருந்த எண். ஓர் எண் நாவிலெழுமென்றால் இயல்பாகவே அது பன்னிரண்டுதான். வெற்றி இத்தனை எளிதானது. இத்தனை கூரியது. கையருகே நின்றிருப்பது. கொலைவாளின் கூர்போல் மற்றொரு பொருள் அற்றது.

ஆனால் பகடையாடத் தொடங்கியபோது வெற்றிகள் கைகூடவில்லை. பெரும்பாலானவர்கள் அவரை எளிதில் வென்றனர். பன்னிரண்டு ஒரு கனவாக, பின் ஏக்கமாக, பின் எரிச்சலாக ஆகியது. ஆட அமர்கையிலேயே சினமெழுந்தது. பகடையை கையிலெடுக்கும்போதே நெஞ்சு இறுகி முகம் கூர்கொள்ள பற்களைக் கடித்தபடி உருட்டினார். பகடை அவரை ஒவ்வொரு முறையும் வென்றது. கால்கீழிலிட்டு மிதித்தபடி குளம்படிகள் ஒலிக்க கடந்துசென்றது. அவருக்கு பகடை கற்பித்த ஆசிரியர்கள் “பகடையை இறுகப்பற்றுகிறீர்கள், இளவரசே. அதை வாளென பற்றுக! அழுந்தப்பற்றியவர்களும் நழுவவிட்டவர்களும் வெல்வதில்லை” என்றனர்.

“வென்றாலும் தோற்றாலும் நிகரே என உளம் நிலைத்தோரே பகடையில் இறுதிவெற்றியை அடையமுடியும்” என்றார் ஆசிரியரான சுஸ்ரவஸ். “ஆனால் அத்தகையோர் பகடையே ஆடுவதில்லை. ஆடுவோரில் வெல்வோர் விழைவை பிறிதிலாது சூடியவர்கள். அதில் அசைவிலாது நின்றவர்கள். கையின் ஐயத்தையும் அச்சத்தையும் பகடை அறியும். பகடை என்பது களத்தில் உருளும் உங்கள் உள்ளம் என்றுணர்க!” பகடைமேல் கொண்ட விழைவே பகடையை அவரிடமிருந்து அயல்படுத்தியது. மெல்ல மெல்ல பகடையை அஞ்சலானார். பகடை கையில் வந்ததுமே மெய் நடுங்கத்தொடங்கியது.

ஆனால் பகடையை ஒழியவும் இயலவில்லை. ஒவ்வொருநாளுமென பகடையாடி இழந்துகொண்டே இருந்தார். ஒருமுறை தன் உடன்பிறந்தானாகிய விருஷகனுடன் ஆடி இளவரசுப் பட்டத்தையும் இழந்து கணையாழியை கழற்றிக்கொடுத்துவிட்டு புரவியில் ஏறி காந்தார நகரியிலிருந்து கிளம்பிச்சென்றார். மீள முடியாத திசை என மேற்கு சொல்லப்பட்டிருந்தது. செல்லச்செல்ல மண் வெளுத்துக்கொண்டே இருக்கும். தூய வெண்ணிற மண் அலைகளென அமைந்த பாலையில் உயிர்த்துளியே இருக்காது. விடாய்மிக்க எழுபத்திரண்டு காற்றுகள் உலவும் வெளி. அவை அங்கு செல்லும் உயிர்களின் குருதியை உறிஞ்சி உண்பவை. எஞ்சாது தோற்றவர்களும் ஏதுமிலாது வென்றவர்களும் சென்றடைந்து நிறைவுகொள்ளவேண்டிய நிலம் அது.

மேற்கே சென்றுகொண்டே இருக்கையில் ஒரு நாள் அந்தியில் தொலைவில் ஒற்றைப்பறவை ஒன்று வானில் சுழல்வதை கண்டார். அத்திசை நோக்கி செல்ல மிகச் சிறிய ஸாமிமரச் சோலை ஒன்று கண்ணுக்குப்பட்டது. அங்கே முன்னரே ஓர் ஒட்டகம் நின்றிருந்தது. அதை அணுகியபோது சோலைக்குள் ஒருவரை காணமுடிந்தது. பாலைவணிகரெனத் தெரிந்தது. மணற்தரையில் தோல்விரித்து அமர்ந்து பகடையாடிக்கொண்டிருந்தார். அவர் அருகே செல்வதுவரை வணிகர் அவரை நிமிர்ந்து நோக்கவில்லை. அணுகியதும் சகுனி வணங்கி தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

சோனகரான அவர் பெயர் சுவாமர் என்று தெரிந்தது. “இந்தச் சுனை மிக மெல்லவே ஊறுகிறது. இதை அகழ்ந்து அதன்மேல் துணியை விரித்துவிட்டு நீர் ஊறுவதற்காக காத்திருக்கிறேன்” என்றார் சுவாமர். சகுனி அவர் அருகே அமர்ந்தார். “தனிமையில் பகடையாடலாமா?” என்றார். “நம்முடன் நாம் ஆடலாம். இவ்வாறு நம் நிழல் நமக்கு முன்னால் விழுந்திருக்கவேண்டும்” என்றார் சுவாமர். “நம்மை நாமே வெல்வது எளிது” என்றார் சகுனி. “அல்ல. அதுவே கடினம்” என்று சுவாமர் சொன்னார். “என்னுடன் ஆடுகிறீர்களா?” என்றார். “என்னிடம் பணயம் என ஏதுமில்லை. அனைத்தையும் இழந்த பின்னர் வந்துள்ளேன்” என்றார் சகுனி. “எஞ்சியிருப்பது உங்கள் உடல். அதை பணயமாக்கலாமே” என்றார் சுவாமர். “எனக்கு அடிமையாக இருப்பதாக சொல்க…”

நீர் அருந்தியபின் அவர்கள் ஆடத் தொடங்கினர். ஏழு சுற்று ஆட்டத்திற்குப் பின் சகுனி அவர் அடிமையாக ஆனார். “நீர் சிறுவன். என்னுடன் வருக! தொலைவிலுள்ள சோனகநிலங்களை காட்டுகிறேன்” என அவர் அழைத்துச்சென்றார். அவருடைய சுமைதூக்கியாகவும் ஏவல்சிறுவனாகவும் நான்காண்டுகாலம் அவருடன் இருந்தார். “என்றேனும் என்னை நாற்களத்தில் வென்று உமது விடுதலையை நீர் ஈட்டிக்கொள்ளலாம்” என்றார் சுவாமர். ஒவ்வொரு நாளும் அவர்கள் பகடையாடினர். மீளமீள அவர் தோற்றுக்கொண்டே இருந்தார். தன் பங்கு நீரை, உணவை பணயம் வைத்தார்.

அவர்கள் பயணம் செய்துகொண்டே இருந்தனர். சுவாமர் பாலையின் அரிய கற்களை பெற்றுக்கொண்டு பொன்னை அளிப்பவர். பாலைவெளியில் நீரிலாது வாடி உடல்வற்றி கண்கள் பழுத்து இறப்பை பலமுறை அருகில் கண்டார். வழிதவறி உயிர்பதைத்து வான்நோக்கி திகைத்து அலைந்து கண்டடையப்பட்டார். சுவாமர் அவரிடம் எந்த இரக்கத்தையும் காட்டவில்லை. “ஒரு குவளை நீர் மட்டுமே எஞ்சுகிறதென்றால் அதை பகிர்ந்துண்ணலாகாது. இருவரும் இறப்பதற்கே அது வழிகோலும். எனக்கே என எண்ணுபவனே இந்நிலத்தில் உயிர்விஞ்ச இயலும். அறிக, பாலை ஓநாய் தனித்தது! முழுத் தனிமையை அது தனக்கான காப்பாக கொண்டுள்ளது” என்றார் சுவாமர்.

நான்காண்டுகளுக்குப் பின்னர் ஒருநாள் பாலைவெளியில் தவறி நீரிலாது உடல் வற்றிக்கொண்டிருக்க பாறைநிழலில் படுத்திருக்கையில் சுவாமர் சொன்னார் “நான் இறக்கவிருக்கிறேன். உம்மை அடிமையாகக் கொண்டு நான் இறந்தால் நீரும் என்னுடன் இறக்கவேண்டும் என்பதே நெறி. நான் அளித்து நீர் பெற்றுக்கொண்டால் நீர் ஷத்ரியர் அல்ல. என்னை கொன்று விடுதலைகொள்ள நீர் இப்போது ஷத்ரியர் அல்ல. என்னை வென்றுமட்டுமே நீர் விடுதலையை அடையமுடியும்.” சகுனி திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தார். “உமக்கு ஓர் அறிவுரையை சொல்கிறேன். நீர் நாற்களத்தை நாற்களமென்றே பார்க்கிறீர். நாற்களம் என்பது போர். இங்குள்ள அரசனும் அரசியும் புரவியும் யானையும் மெய். களம் என்பது நாடே. பகடைக்களத்தில் போரை நிகழ்த்துக!”

அன்று அவர் சுவாமரை வென்றார். இறந்த உடலின் மணம் நாடி வந்த ஓநாய்க்கு அதை விட்டுக்கொடுத்துவிட்டு காந்தார நகரிக்கு திரும்பினார். பிறகு அவர் எந்த நாற்களத்திலும் தோற்கவில்லை. பாலையில் குருதிதேடி அலைந்து பசியால் இறந்த ஓநாய் ஒன்றின் தொடையெலும்பிலிருந்து தன் பகடைகளை உருவாக்கிக் கொண்டார். அறிந்தவை அனைத்தையும் நாற்களத்தின் ஆட்டத்திலிருந்தே கொண்டார். அனைத்தையும் அக்களத்திலேயே நிகழ்த்தினார். விரிந்த வானை துளியெனச் சுருட்டி தன்னுள்கொண்ட ஆடிக்குமிழி என ஊழை உள்கொண்டது நாற்களம் என அவர் கண்டடைந்தார்.

ஆனால் குருக்ஷேத்ரத்திற்குள் படைகள் வந்தமைந்த முதல்நாள் அந்தப் பெருவிரிவை கண்களால் அறிந்தபோது அவருடைய அகம் திகைத்து செயலிழந்தது. விழித்த வெறும்கண்களுடன் அவர் அந்த செம்மண்நிலத்தை நோக்கி நின்றார். இதுவல்ல இதுவல்ல என அகம் அரற்றிக்கொண்டே இருந்தது. குருதிப்பெருக்கு. வெள்ளெலும்புகள் புதைந்த மண் செவ்வுதடுகளில் பற்கள் தெரிய புன்னகைப்பதுபோலிருந்தது. தேர்த்தட்டில் வியர்வை வழிய நெஞ்சுத்துடிப்பை நோக்கியபடி நின்றிருந்தார். திரும்பிவிடலாம் என்று தோன்றியது. வாளை எடுத்து நெஞ்சில் பாய்ச்சி அக்களத்திலேயே உயிர்விடலாமென எண்ணம் ஓங்கியது. கையிலிருந்த கடிவாளம் நடுங்கிக்கொண்டிருந்தது.

தொலைவில் ஓநாய் ஒன்று ஊளையிட்டது. அக்கணத்தில் உள்ளே ஒரு திரை நலுங்குவதுபோல் ஓர் எண்ணம் எழுந்தது. அதை சொற்களென பின்னர்தான் மாற்றிக்கொண்டார். அப்பெரும் போர்க்களத்தை அவர் ஒரு சிறுநாற்களமென்று தன்னுள் ஆக்கிக்கொண்டார். அதில் தான் நன்கறிந்த பகடையை உருட்டி ஆடலானார்.

bowபீஷ்மர் நேர்அம்பென பாண்டவப் படைகளைக் கிழித்து உட்செல்ல அவரை சுருதகீர்த்தியும் அபிமன்யூவும் இருபுறமும் துணைக்க அர்ஜுனன் எதிர்த்தான். பிதாமகரின் அம்புகளுக்கு முன் அவர்களால் நிலைகொள்ள இயலவில்லை. பிதாமகர் ஒவ்வொரு அம்புக்கும் ஓர் அணுவென அவர்களை பின்னடக்கிச் சென்றார். பாண்டவப் படைகளுக்குள் அவர் நெடுந்தொலைவு சென்றுவிட்ட பின்னர் “அர்ஜுனன் பின்னடைகிறான்…” என்று முரசு சொன்னது. “ஊசியை நூல் என படைகள் தொடர்க! மீனுக்குள் தூண்டில் நுழையட்டும்” என சகுனி ஆணையிட்டார். பூரிசிரவஸ் திருஷ்டத்யும்னனிடமிருந்து பின்வாங்கிக்கொண்டிருந்தான். “ஜயத்ரதர் பூரிசிரவஸை துணைக்கச் செல்க!” என்றார் சகுனி.

துரோணர் நகுலனையும் சகதேவனையும் எதிர்கொண்டார். கிருபருடன் யுதிஷ்டிரரும் அவர் மைந்தர்களும் போரிட்டனர். போரில் விரிந்த வெளி வெறும் ஓசையென சகுனியின் காதுக்கு வந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முழவுக்கும் வேறுபட்ட ஒலிகள் எழுந்தன. தோல்களின் அடர்த்தியும் வட்டத்தின் அகலமும் கோல்களின் தடிமனும் ஒலிகளை அமைத்தன. கன்றுத்தோல்கள், உடும்புத்தோல்கள், எருமைத்தோல்கள், முதலைத்தோல்கள் என ஒவ்வொன்றும் தனிக்குரல் கொண்டிருந்தன. நாய்குரைப்பதுபோல் துள்ளித் துள்ளி ஓசையிட்டுச் செல்லும் உடும்புத்தோல் முழவின் குரல் பீஷ்மரை அறிவித்துக்கொண்டிருந்தது. எருமைத்தோல் முழவு சினைப்பொலி எழுப்பி அஸ்வத்தாமனை. கன்றுத்தோலின் அமறலோசை துரியோதனனை.

முதல்நாள் முதல்நாழிகை அனைத்து ஒலிகளும் ஒன்று திரண்டு ஒற்றை முழக்கமென செவியை வந்தறைய தன் தேர்த்தட்டில் நின்று குழம்பி திகைத்து கண்களை மூடிக்கொண்டார் சகுனி. முன்பு ஒவ்வொரு ஒலியையும் ஆயிரம் முறை கேட்டு செவிக்கு பழக்கி வைத்திருந்த அனைத்தும் உள்ளத்திலிருந்து அழிந்து சென்றன. அப்பயனின்மை ஒருகணம் அச்சுறுத்தியது. வேறுவழியில்லை, இப்போர் அதன் போக்கில் தான் நிகழ ஒப்புக்கொடுப்பதைதான் செய்யக்கூடும். பீஷ்மரின் செய்தியை மட்டும் நோக்குவோம். பிற அனைத்தையும் பின்னர் கேட்டறியலாம். ஆம் ஒன்றில் நிலைகொள்க! ஒன்றில்…

பீஷ்மரின் செய்தியை கூறிக்கொண்டிருந்த தொழும்பனின் முழவொலியை செவி கூர்ந்தபோது மிக அண்மையிலென ஒலித்தது. அதன் ஒவ்வொரு தாளக்கட்டையும் ஒரு சொல்லென மாற்றியபோது தன் காதுக்கெனவே காற்றில் வந்ததுபோல் இருந்தது. “முன்னகர்கிறார் பிதாமகர்!” “எதிரில் பாண்டவ இளையோர் வந்து சூழ்ந்திருக்கிறார்கள்!” “பிதாமகர் தயங்கவில்லை!” “பிதாமகர் கொன்று முன்செல்கிறார்!” “குருதிப்பலி நிகழ்ந்துகொண்டிருக்கிறது!” உள்ளம் விசை கொண்டு முன்னெழ ஒவ்வொரு சொல்லையும் கண்முன் காட்சியென்று மாற்றி அதில் நின்று பரவி துடித்தபோது ஒரு கணத்தில் உணர்ந்தார், அனைத்து ஓசைகளையும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என.

அவை சொல்லென்றாகி நேரடியாகவே காட்சியென்றாகி குருக்ஷேத்ரப் பெருங்களத்தை வானிலிருந்து குனிந்து நோக்கும் தேவன்போல் ஒவ்வொரு தருணத்தையும் இடத்தையும் நோக்கியபடி அவர் தன் தேரில் நின்றிருந்தார். தன் கைகளால், வாயால் ஆணைகளை பிறப்பித்தார். பத்து விரல்களிலும் பட்டுச்சரடுகள் கட்டி பாவைகளை ஆட்டுவிக்கும் கூத்தன் என கௌரவப் படையின் பின்புறத்தில் நின்று அப்படையை அவர் நிகழ்த்தினார். எவர் சூழப்படவேண்டும், எவர் பிரிக்கப்படவேண்டும், எவருக்கு துணை வேண்டும், எவர் பின்னடைய வேண்டும் என.

வெற்றி அனைத்தும் அவருடையதாயிற்று. தோல்விகள் அனைத்தையும் அவரே சூடினார். முதல் நாள் பேரழிவை பாண்டவருக்கு நிகழ்த்தி அந்தியில் படை முடிவை அறிவித்தபோது மெல்ல உடல் தளர்ந்து அமர்ந்தார். ஓடிவந்து அவரது தேரில் ஏறிய துர்மதன் “வெற்றி, மாதுலரே! இன்று வெற்றி! பாண்டவப் படையின் பெரும்பகுதியை அழித்துவிட்டார் பிதாமகர். நாளைக்கு அவர்கள் படைக்கு எழுவார்களா என்பதே ஐயம்தான்!” என்றான். சுபாகு தேரில் பாய்ந்தேறி “வெற்றி! வெற்றி!” என்றான். சகுனி தளர்ந்த குரலில் “அப்படை இந்திரமாயக்காரனின் கையிலிருக்கும் பாவைகள் போன்றது. ஒரு பாவையை ஆயிரமெனக் காட்டவும் ஆயிரத்தை ஒன்றென்றாக்கவும் அவனால் இயலும்” என்றார்.

அவர் சொன்னதை புரிந்துகொள்ளாத துர்மதன் “வெற்றி! வெற்றிமுரசுகள் முழங்குகின்றன!” என்றான். சுபாகு “என்ன சொல்கிறீர்கள், மாதுலரே?” என்றான். “இப்போரை களத்தில் நிற்பவர்களில் நான் ஒருவனே முழுமையாக நோக்கிக்கொண்டிருக்கிறேன்” என்றார் சகுனி. சுபாகு “தாங்கள் சோர்ந்துள்ளீர்கள்” என்றபடி தேரிலிருந்து பாய்ந்து இறங்கிச் சென்றான். “திரும்புக!” என்று ஆணையிட்டபடி தேரில் அமர்ந்தபோது தன் காலில் முற்றிலும் வலி இல்லாதிருப்பதை அவர் பார்த்தார். அதை அசைக்க முயன்றபோது எடை மிக்க இரும்புக்கவசம் இருப்பதைப்போல் தோன்றியது. வலி எழவில்லை.

தேர் பலகைப் பரப்பினூடாக சென்றது. அனைத்துப் பாதைகளினூடாகவும் புண்பட்டோரை கொண்டுசெல்லும் வண்டிகள் களம் நோக்கி சென்றன. மெல்ல முதல் சொல் என வலி எழுந்தது. “ஆம், நீ எழுவாயென்று தெரியும்” என்று அவர் புன்னகையுடன் சொன்னார். “நீ அங்கிருக்கிறாய். நீ உடனிருப்பாய். நானின்றி நீ எங்கிருக்க இயலும்? என் அணுக்கனல்லவா? என்னை ஆட்கொண்ட தெய்வம் அல்லவா? என் பாதை நீ கொண்டுசெல்லும் திசையே அல்லவா?” வலி அவரிடம் “நீ!” என்றது. பித்தன்போல “நீ!” என்றார் அவர். அவர் அதை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். தயங்கி விசை அழிந்து ஆனால் எடைமிகுந்து “நான்!” என்றது. “நான்! நான்! நான்!” என்று எடை மிகுந்து துள்ளி செல்லத்தொடங்கியது.

செய்திகளாக வந்து சூழ்ந்து பின்னிப்பின்னி வலையென்றாகி விரிந்துகொண்டிருந்தது குருக்ஷேத்ரப் போர். அவர் ஆணைகளை இட்டுக்கொண்டே பின்னணியில் நிகராக தேரில் ஓடிக்கொண்டிருந்தார். இரு பேருருக்கள் முட்டிக்கொண்டு சீறிப்போரிட்டன. அவை ஒருங்கிணைந்த வஞ்சங்கள் ஓருருவென எழுந்த சீற்றங்கள். வீழ்ந்த படைகளின் இடைவெளிகளில் பின்னணி வீரர்கள் இயல்பாகவே வந்து நிறைந்தனர். வீழ்ந்தவர்களை கொக்கிகளால் இழுத்துக்கொண்டு சென்று அப்பாலிட்ட பின் மேலும் மேலும் என கொடிகளால் ஆணையிட்டனர் படைத்தலைவர்கள்.

“என்ன நிகழ்கிறது, மாதுலரே?” என்றான் துரியோதனன். “நாம் முன்னகர்ந்து கொண்டிருக்கிறோம்… இன்று மாலைக்குள் அவர்களின் படைசூழ்கையை எட்டு துண்டுகளாக சிதைப்போம்” என்றார் சகுனி. அந்தப் படை ஒரு மாபெரும் உள்ளம் என இயங்கிக்கொண்டிருந்தது. ஓயாத சொல்லொழுக்கு. ஒருபாதி பொய்யும் மறுபாதி கனவும். அவை சென்று சென்று அறைந்தும் கரைக்கமுடியாத பெரும்பாறையென மெய்யும். பித்தெடுத்த உள்ளம் இது. ஆனால் அத்தனை உள்ளங்களும் பித்தெடுத்தவையே. தெளிவென்பது உள்ளம் வெளிக்காட்டும் ஒரு நடிப்பன்றி வேறில்லை.

பித்துவெளி. அதன் ஒவ்வொரு உள்ளமும் பித்துப்பேழை. ஒவ்வொரு சொல்லும் பித்துத் துளி. பித்தை ஆட்டுவிக்கிறேன். பித்தின்மேல் அமர்ந்து நாற்களமாடிக் கொண்டிருக்கிறேன். ஆடல்கள் என்பவை வரையறுக்கப்பட்ட களங்களிலிருந்து மெல்ல மெல்ல பித்துநோக்கி செல்பவை. பித்து நின்றாடும் அரங்குகள். பகடைகளில் குடிகொள்பவை பித்தின் பெருந்தெய்வங்கள்.

அவர் பாலையில் ஓர் ஓநாயைக் கண்டதை நினைவுகூர்ந்தார். அது குருதிச்சுவை கண்டு உண்டு நிறைந்துவிட்டிருந்தது. மணல்மேல் சுழல்காற்றில் சருகு என தன்னைத்தான் சுழற்றிக்கொண்டு துள்ளியது. அவ்விசையில் தூக்கி வீசப்பட்டு எழுந்து தலைதூக்கி ஊளையிட்டது. வெறிகொண்டு மண்ணை கால்களால் அள்ளி அள்ளி வீசியது. பின்னர் மெல்ல அமைந்து வான்நோக்கி கூர்மூக்கைத் தூக்கி ஊளையிடத் தொடங்கியது.

அதனருகே விரிந்திருந்த அந்த மணலோவியத்தை அவர் திகைப்புடன் நோக்கினார். அறியாத் தெய்வமொன்று எழுந்தாடிச்சென்ற களமெழுத்து ஓவியம். அதன் வடிவம் எந்த ஒருமைக்குள்ளும் அமையவில்லை. ஆனால் ஒருமையற்ற வெற்றுவடிவென்றும் தோன்றவில்லை. பின்னர் ஒரு கணத்தில் உடல் மெய்ப்புகொள்ள அவர் கண்டுகொண்டார், அது அந்த ஓநாய் அப்போது எழுப்பிக்கொண்டிருந்த ஊளையின் காட்சிவடிவம் என.

தொடர்புடைய பதிவுகள்

’நானும்’ இயக்கம் கடிதங்கள்

$
0
0

4

 

‘நானும்’ இயக்கம், எல்லைகள்

தருண் தேஜ்பால்களும் பெண்களும்

அன்பின் ஜெ.

 

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் பெயரைக் கண்டேன். கஷ்மீர் கதுவா வில் ஒரு முற்போக்கு ஆசாமி பற்றியும் படித்தேன்.

 

என்னிடம், சின்மயியை, “அய்யங்கார் தேவிடியா” எனப் போற்றும் ஒரு ஜாதி சங்கத் தலைவரின் ஆடியோ தகவலும் வந்தது.

 

இது ஜாதி, மத, கொள்கைகளைத் தாண்டிய குற்றம்.வழிதலும், வழிதல் நிமித்தமும் ஆண்களின் வழி. இதில் பேதங்கள் இல்லை.மாறுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

நன்றி

பாலா

 

 

அன்புள்ள ஜெ,

 

வணக்கம். லீனா மணிமேகலை அவர்களுக்கு ஆதரவாக வெளிப்படையாக கருத்து தெரிவித்த குறைந்த எண்ணிக்கை இலக்கியவாதிகளில் ஒருவர் நீங்கள் என்று அறிந்ததில் மகிழ்ச்சி.

 

ஆனால் லீனா ஏன் இந்த நிகழ்வை இவ்வளவு நாள் சுமந்துகொண்டிருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுகிறீர்கள். பலருக்கு இந்த விஷயம் புரியவில்லை என்பது உண்மையிலேயே வியப்பாக உள்ளது.

 

பொது இடங்களில் நடக்கும் அத்துமீறல்களைவிட வேலையிடத்தில் தெரிந்தவர்கள்  ஏற்படுத்தும் உளைச்சல் தான் எங்களை அதிகம் கலங்க வைக்கிறது.

 

கதைகளில் ஒரு கதாபாத்திரத்தை பாதி பந்தியில் எழுப்பிவிடும் காட்சி அடிக்கடி வரும். நாஞ்சில் நாடன் கதைகளில்…அந்த சம்பவம் அந்த எழுத்தாளருக்கு எப்போதோ ஒரு முறை நிகழ்ந்திருக்கலாம். ஆனால் அது அவர் ஆழ்மனதில் அவ்வளவு தூரம் இறங்கியிருக்கிறது. ஏன்? கடந்து சென்றிருக்கலாமே?

 

ஏனென்றால் அது எதிர்பாராத நேரத்தில் நடக்கும் பெரிய அவமானம். நாங்களும் படித்து பயிற்சி முடித்து நம்பிக்கையோடு தான் வேலைக்கு வருகிறோம். வேலையிடத்தில் இப்படி நடப்பது பாதி பந்தியில் எழுப்பிவிடப்படுவது போன்ற அவமானம் தான்.

 

அன்புடன்,

நித்யா

 

 

அன்புள்ள ஜெ

 

மிடூ விஷயத்தில் இன்றைக்குக் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் பதில்களை நீங்கள் தருண் தேஜ்பால் கட்டுரையில் எழுதியிருந்ததை வாசித்து ஆச்சரியப்பட்டேன். அன்றைக்கே ஏன் சொல்லவில்லை, ஏன் நீதிமன்றம் செல்லவில்லை போன்ற எல்லா கேள்விகளும் அதில் பதில் சொல்லப்பட்டுள்ளன. அப்படிச் சொன்ன ஒரு பெண் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார் என்பது இன்றைக்கு இப்படிக்கேட்கும் மோரோன்கள் அன்றைக்கும் அதையே கேட்டனர் என்பதும் அக்கட்டுரையில் உள்ளது

 

செல்வி ராஜேந்திரன்

 

அன்புள்ள ஜெ

 

மிடூ இயக்கம் எப்படியெல்லாம் தோல்வியடையும் என்பதற்கான எல்லா தடையங்களும் நம்மூர் பெண்ணியப்புயல்கள் எழுத ஆரம்பித்ததுமே தெரிந்துவிட்டது. தலித்தியத் தீவிரப்புயல்களும் இதையே செய்தார்கள். தங்களை ஒர் அதிதீவிரத் தரப்பாக இவர்கள் காட்டிக்கொள்வார்கள்.தங்கள் சொந்த எதிரிகளையும், தங்கள் குரலை அப்படியே ஏற்றுக்கொள்ளாதவர்களையும் பெண்ணுக்கே எதிரிகள் என்று முத்திரை குத்துவார்கள். ஆதரித்துப்பேசினால் அதில் உள்நோக்கம் கண்டுபிடிப்பார்கள். மௌனமாக இருந்தால் கள்ளமௌனம் என்பார்கள். மொத்தத்தில் இவர்களின் மனநோய்க்கு உண்மையிலேயே உருவாகிவந்துள்ள ஒரு தவிர்க்கமுடியாத இயக்கத்தைப் பலிகொடுத்துவிடுவார்கள்

 

ஆர்.ராஜசேகர்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

சமீபத்தில் முகநூலில் ஒரு எழுத்தாளர் மீது மிடூ குற்றச்சாட்டு, ஒருவர் முகநூலில் உள்பெட்டிக்குச் சென்றபோது செக்ஸுக்கு அழைத்துவிட்டார் என்று சில பெண்கள் சொல்ல உங்கள் வாசகி வெண்பா கீதாயன் அதை வெளிப்படுத்தியிருந்தார். குற்றம்சாட்டப்பட்டவருடைய முகநூல்பக்கம் சென்று பார்த்தேன். சீரான இடைவெளியில் பாலியல்விஷயங்கள். பெரும்பாலும் பெண்களுக்கானவை. பெண்களை தூண்டில்போடுவதற்காக மட்டுமே நடத்தப்படும் முகநூல்பக்கம் அது. உண்மையில் முகநூல் என்பதே மார்க்கால் அதன்பொருட்டு உருவாக்கப்பட்டது. அதைத்தான் அந்தப்பக்கத்தை எழுதுபவர் செய்கிறார்.

 

முகநூலிலும் இணையத்திலும் அறிவார்ந்த விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. எழுத்தாளர்கள், கவிஞர்கள் எவ்வளவோபேர் இருக்கிறார்கள். அரசியல்பேசுபவர்கள் இருக்கிறார்கள். வெறும் எண்டெர்டெய்ன்மெண்ட் என்று சொல்லப்போனாலும்கூட சினிமா பற்றியெல்லாம் சுவாரசியமாக எழுதுபவர்கள் பலர் உள்ளனர். அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த இணையதளத்திற்கு  இந்தப்பெண்கள் ஏன் கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள்?  இது மட்டும் அவர்களிடம் சரியாக ஏன் சென்றுசேர்கிறது? இந்தப்பெண்களிடம் தமிழில் எழுதும் ஒரு நான்கு எழுத்தாளர் பெயர்களைக் கேட்டுப்பாருங்கள், தெரியாது. இதுமட்டும் எப்படி நேராக அங்கே கொண்டுசென்றுவிடுகிறது?

 

அந்த முகநூல்பக்கத்தில் நாலைந்து மொக்கை ஸ்டெட்டஸ். அதன்பிறகு உடனே செமிபோர்ன். போர்ன் சைட்டுகள் பற்றிய செய்திகள். பெண்களை ஆதரித்து அவர்களின் துயரம் கண்டு உருகுவதுபோல ஒரு போஸ்ட். உடனே மீண்டும் போர்னோகிராஃபி. வீட்டிலேயே பெண்கள் எப்படி மாஸ்டர்பேட் செய்துகொள்ளலாம் என்று எங்கோ வாசித்ததை எடுத்துப்போட்டு குறிப்பு எழுதுபவனை எழுத்தாளன் என்று நம்பி எழுத்துவல்லமையால் ஈர்க்கப்பட்டு அறிவார்ந்த உரையாடலுக்குப் போனார்களாம். உரையாடினார்களாம். உடனே அவன் கூப்பிட்டுவிட்டானாம். அதெப்படி கூப்பிடப்போச்சு என்று ஒரே லபோதிபோ. மிடூ இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவது இத்தகைய பெண்கள்தான்.

 

நடுவயதான ஒரு பெண் அத்தனை அப்பாவியாகவா இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்? அவன் கூப்பிடவேண்டும் என்றுதானே அங்கே செல்கிறார்கள். அதன்பின்னர் அவனுடைய ஏதோ இயல்பு பிடிக்கவில்லை. உடனே மிடூவா? இந்தப்பெண்களை மிடூ இயக்கத்தில் சேர்ப்பது வழியாக உண்மையாகவே உழைக்கப்போன இடத்தில் ஆண்தொல்லைகளை அனுபவிக்கும் பெண்களையும் அவமதிக்கிறார்கள். இதை உங்களுக்கு எழுதுவதே வெண்பா கீதாயனின் பக்கத்தில் உங்கள் படம் இருந்ததனால்தான். உடனே என்னை ஆணாதிக்கம் என்று சொல்வார்கள். நான் பெண்தான். என் ஐடியை பார்க்கவும்.

 

கே

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நம்முள் இறப்பவை : நிகோலாய் கோகலின் இறந்த ஆன்மாக்கள்

$
0
0

Nikolai-Gogol

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ‘UGLY’ என்றொரு படம். மக்கள் நிறைந்த பொதுவிடத்தில் கடத்தப்பட்டிருக்கும் ஒரு குழந்தையை தேடும் பயணமாக விரியும் அப்படம், அதன் விசாரணையில் எதிர்வரும் கதாப்பாதிரங்களின் சுயனலன்களையும் குரூரங்களையும் சொல்லுவதாக அதன் கதையோட்டம் நகரும். ஒருவர் மிச்சமிலாமல் அனைவரும் அதனூடாக தங்களது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வார்கள். படத்தின் இறுதியில் ஒரு காட்சி வரும் ஒரு பெட்டியை திறக்க உள்ளே அ ழுகிய நிலையில் அக்குழந்தை இறந்து கிடக்கும். அதன் வழியாக நம்மிடம் ஒரு கேள்வி மறைமுகமாக எழுப்பப்படும். நம்முள்ளிருக்கும் குழந்தை எந்த அளவு அழுக வைத்திருக்கிறோம் என. படத்தில் வரும் அனைவரின் உள்ளிருக்கும் அழுகிய தன்மையைத் தான் அதுவரை கண்டிருக்கிறோம் என உணரும்போது எழும் துணுக்குறலும் அதன் வெளிச்சத்தில் தலைப்பு கொள்ளும் அழுத்தமும் அப்படத்தை எனக்கு முக்கியமானதாக ஆகியது.

நிகோலாய் கோகலின்(Nikolai Gogol) இறந்த ஆன்மாக்கள் என்கிற இந்த தலைப்பும் அதனூடாக பொருள்படும் கதாப்பாத்திரங்களின் குணாதிசயங்களும் அதே உணர்வைத் தந்தது. ருஷ்யாவின் நவீன இலக்கிய வரலாற்றின் முதல் முக்கிய நாவல் இது. ஹரால்ட் புளூம்‍‍‍மின் ‘மேற்குலத்தின் மூலநூல்கள்’ (Western Cannons) பட்டியலில் ருஷ்யாவின் முதல் நாவலாக இது இடம்பெற்றுள்ளது. கோகல் இதை மூன்று பாகங்களாக எழுதத் திட்டமிட்டார். முதல் பாகம் முழுமையாக கிடைக்கிறது. நினைத்த வகையில் இரண்டாம் பாகம் வராததால் அதன் பெரும்பகுதியை அவர் எரித்துவிட எஞ்சியவை தொகுத்து இரண்டாம் பாகமாக வந்துள்ளது. நாவலை நிறைவு செய்யாமலே இறந்துவிட்டார்.

ஆரம்பித்த போது ருஷ்யா முழுவதையும் நாவலில் காட்டிவிடும் பெருங்கனவுடன் தொடங்கியிருக்கிறார். அதன் கட்டுமானத்தை ஒடிசி பயணம் வகையில் அமைத்து அதன்மூலம் மொத்த ருஷ்யாவையும் உள்ளடக்கும் வகையாக திட்டமிட்டார். நாவல் அதன் முதன்மை பாத்திரம் செசிக்கோவ் ஒரு புனைவு நகரில் நுழைவதில் தொடங்குகிறது. ஒரு கணவானின் தோரணையுடன் இருப்பதில் பெரும் சிரத்தை எடுத்துக் கொள்ளும் அவன் மிக விரைவில் தனக்கான நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்கிறான்.

அவ்வூரின் அனைத்து அதிகார வர்க்கத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அவ‌ர்கள் நடத்தும் கூடுகைகளிலும் கேளிக்கைகளிலுமாக பொழுதுகளை கழிக்கிறான். அப்படியான ஒருவரின் அழைப்பின் பேரில் அவரின் இல்ல விருந்துக்குச் செல்கிறான். அங்கு நிகழும் அச‌ட்டு கனவான்தன்மை நிறைந்த செயல்கள் மிகுந்த பகடியுடன் விவரிக்கப்பட்டிருக்கும். அமர்வது முதல் நடப்பது வரை, கைகுலுக்குவது முதல் ஒரு சம்பாஷனை துவங்குவது வரை விடுக்கப்படும் பீடிகைகள் ஒரு அபத்த நாடகத்தின் மென்கேலித் தொனியுடன் காட்டப்படும். முதல் பாகத்தின் மொத்த சம்பவங்களின் மையமென்பது இந்த பகடித்தன்மைதான். இதில் வரும் அத்தனை சந்திப்புகளும் வாசகனுக்கு இதே உணர்வு நிலையில் தான் சொல்லப்படும். பாத்திரங்கள் எந்த உணர்வில் இருப்பினும் கதைசொல்லியின் தொனி இந்த பகடித்தன்மைதான்.

1379c1c3a14f63edc7bcb385fad057fe

கதைசொல்லி யார் என நாவலில் வருவதில்லை. ஆனால் இத்தகைய படைப்பில் கதைசொல்லியை ஒருவிதமாக உருவகித்துக் கொள்ளுதல் நாவலை மேலும் அழ்ந்து புரிந்துகொள்ள செய்யும். நான் இதன் கதைசொல்லியை முழுப்போதையில் தெருவில் அலையும் ஒரு வயதான பித்தனாக கற்பிதம் செய்து கொண்டேன். செழிப்பின் உச்சியிலிருந்து சரிந்தவனாகவும் அச்சரிவை தன் அறிவும், கல்வியும் தடுக்கவியலா அவலத்தை கண்டவனாகவும் நினைத்துக் கொண்டேன். அதன் மூலம் அவன் வந்து சேர்ந்த இடம் இந்த பகடி. வாழ்வின் அனைத்து நிகழ்விலும் அதை மட்டும் பிரித்து எடுக்கும் கண்கொண்டவன் வழியாக காட்டப்படும் படைப்பு எனக் கொண்டால் இதில் வரும் ஒவ்வொரு சம்பவத்திற்கு பின்னாலுள்ள அழுத்தத்தை புரிந்து கொள்ள முடியும். மானுடத்தின் சரிவையும் கீழ்மையையும் மட்டுமே இப்பகுதி காட்டுகிறது. ஒரு நிகழ்வில் கூட ‘நல்ல’ பண்புகள் கொண்டவர்கள் இல்லை. ஆனால் ஒரு நல்ல வாசகன் இதிலிருக்கும் ஒரேவிதமான மனிதவுண‌ர்வுகளின் சலிப்பைக் கடந்து மனிதமனம் கொள்ளும் நுட்பமான தேர்வுகளை காண முடியும்.

இதை அபாரமாக உரையாடல்களின் வழி காட்டப்படுகிறது. ஒருவரை வென்று மற்றவர் எழும் நுட்பமான விளையாட்டு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. உதாராணமாக ஒரு அழைப்பின் பேரில் நாயகன் செல்லும் முதல் விருந்தினர் வீட்டில் அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து தன் நோக்கத்தை மெல்ல வெளியே எடுக்கிறான். அது ருஷ்யாவில் அடிமைமுறை இருந்த காலகட்டம். அவரிடம் இருக்கும் இறந்த மனிதர்களை (இதை இறந்த ஆன்மாக்கள் என்கின்றனர்) தன் பேருக்கும் மாற்றித் தரும்படியும் அதன் மூலம் அவர்கள் கட்டும் வரியின் சுமையினை தான் குறைப்பதாகவும் கூறுகிறான். மேலும் ஒவ்வொரு நபர் கணக்குக்கும் ஒரு குறைந்தபட்ச விலை தருவதாகவும் சொல்கிறான். இந்த இடத்தில் அவர்கள் கொள்ளும் வார்த்தை விளையாட்டுக்களை ஒரு நமுட்டுச் சிரிப்பில்லாமல் படிக்க முடியாது. நாயகனிடம் அவர் நேரடியாக அவனுடைய நோக்கத்தை கேட்க முடியாது. அது கனவான்கள் பண்பு கிடையாது. சுற்றி சுற்றி தன் குழப்பங்களை கூறுகிறார். இரண்டு எளிய நேரடி கூற்றுகள் . ”உங்களுக்கு ஏன் அவர்கள் தேவை?”  ”இறந்த ஆன்மாக்களை விற்பது சரியல்ல.” முதலாவதை கேட்க அவரது ‘நாகரிகம்’ இடம்கொடுக்காது. இரண்டாவது அவர‌து நினைப்புக்கே வரவில்லை. இவர் மட்டுமல்ல. மொத்த நாவலிலும் பல்வேறு நபர்களை சந்தித்து இறந்த அடிமைகளை தனக்கு மாற்றிக்கொள்கிறான். ஆனால் ஒருவர் கூட அது சரியல்ல எனக் கூறுவதில்லை.

சிலர் அதிலுள்ள் சட்ட சிக்கலை சொல்கின்றனர். சிலர் அதன் மூலம் தனக்கு கிடைக்குக் கூடிய‌ லாபங்களை அதிகமாக்க முயல்கின்றனர். ஒருவன் மட்டும் மிகத் தனித்துவமானவன். அவனுக்கு அதிலுள்ள விளையாட்டு மிகப் பிடித்துள்ளது. அவனொரு சூதாடி. வாழ்க்கையை சூதிலுள்ள புதிர்த்தன்மைகாகவே தன்னை முழுதும் கொடுத்தவன். தன்னுடைய பெரும் சொத்துக்களை அதில் இழந்து கடன் நெருக்கடியிலிருப்பவன். இருப்பினும் இறந்த ஆன்மாக்களை கேட்டு வரும் நாயகனை சீண்டுகிறான்.அவர்களின் மதிப்பை பெருமளவு பெருக்கி சொல்கிறான். அவர்களின் செயல்திறன் பல்லாயிரம் ரூபிள்கள் மதிப்புகொண்டவை எனக்கூறவே எரிச்சலடைந்த நாயகன் தனக்கு விருப்பமில்லையென மறுக்கிறான். உடனே அவன் தன் அனைத்து அடிமைகளையும் வைத்து விளையாட விருப்பம் தெரிவிக்க பதிலுக்கு செசிகோவ் அவன் கூறிய பணத்தை மட்டும் வைத்து விளையாடினால் போதும் என்கிறான். ஒருகட்டத்தில் சபலம் தட்டி அவன் சம்மதிக்க அவர்கள் சதுரங்கம் விளையாடுகிறார்கள். அவனுக்கு தெரியும் செசிகோவ் அதில் தேர்ச்சி பெற்றவனென. ஆனால் ஆரம்பத்திலிருந்தே  அவன் ஆட்டத்தை தவறாக ஆட கோபத்தில் செசிகோவ் காய்களை கலைத்து தனக்கு தொடர விருப்பமில்லையென தெரிவிக்கிறான். அதற்காக்வே காத்திருந்த சூதாடி தன் அடிமைகளை அழைத்து அவனை தாக்க சொல்கிறான். என்ன செய்வதென்ற்றியாமல் பயத்தில் செசிகோவ் உறைய கடைசி கணத்தில் ஏதேச்சையாக போலீஸ் அதிகாரிகள் வர அங்கிருந்து வெளியேறுகிறான்.

Marc-Chagall-Chichikov-and-Sobakevich

உண்மையில் அந்த சூதாடிக்கு பணத்திலோ அவனிடம் சூதாடுவதிலோ கூட விருப்பமில்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம் ஒரு உச்ச நிலை. மானுடன் உடைந்து பதறும் தருணத்திற்கான நிலை அல்லது உள்ளிருக்கும் மிருகம் மேலெழும் கணம். ஒன்று அது தனக்கோ அல்லது எதிராளிக்கோ அது நிகழவேண்டும். அதற்காகவே அதை செய்கிறான். பிற அனைத்தும் அவனுக்கு இரண்டாம் பட்சமே. நான் நினைத்துக் கொண்டேன் கதைசொல்லியும் கிட்டத்தட்ட அதே உணர்வுநிலை கொண்டவன் தானென.

ஆண்கள் இப்படியென்றால் பெண்கள் கொள்ளும் பாவனைகளோ வேறொரு வகை. விருந்துகளில் அவர்கள் கொள்ளும் நாசூக்குத்தன்மை, தங்களை ஈர்ப்பு மிக்கவர்களாக அவர்கள் காட்டிக் கொள்ளும் பிரயத்தனம், சக பெண்களிடம் கொள்ளும் பொறாமை என ஆண்களின் உள்ளீடற்ற உலகிற்கு நேரெதிரான இன்னொரு உலகம் பெண்களின் மூலம் காட்டப்ப்படுகிறது.

அதேசமயம் இவையனைத்தும் வெறும் கசப்பாக இல்லாமல் கலைத்தன்மை கொள்வது இரண்டு காரணங்களால். ஒன்று முன்பே கூறியதுபோல பகடி. அது அத்தனை விமர்சனத்தின் கணத்தையும் எடுத்துக்கொண்டு அங்கு ஒருவித இலகுத்தன்மையை நிரப்புவது மேலும் அதற்காக கைக்கொள்ளும் படைப்பூக்கம் நிறைந்த மொழி அதன் கசப்புணர்வை கலையாக்குகிறது. இரண்டாவது இத்தனை அலட்சிய நடைக்கும் மத்தியில் புறச்சூழலை விவரிக்கையில் அது கொள்ளும் தீவிரத்தன்மை. நாவலின் நாயகன் ஒரு இடத்திலிருந்து இன்னொன்றுக்கு செல்கையில் ருஷ்ய புறச்சூழல் சித்தரிக்கப்படுகிறது. மிகுந்த தீவிரத்துடனும் விவரிக்கப்படும் இந்த மொழிநடை இயற்கையின் அற்புதத்தையும் அதன் கருணையையும் உணர்வெழுச்சியுடன் கூறுகிறது. அதன் மூலம் முந்தைய எள்ளல் தொனியை இந்த தீவிர புறச்சித்தரிப்பு மூலம் சமன் செய்கிறது. இல்லையெனில் இதை வெறுமொரு விமர்சனப் படைப்பாக மட்டுமே எஞ்சியிருக்கக்கூடும். இந்த புறச்சூழல் சித்தரிப்பு மூலம் ஒரு மனிப்பதிவை கோகல் உருவாக்குகிறார். இந்த அற்புத வெளியில் வாழ வாய்ப்பு கிடைத்திருக்கும் இவ்வாழ்க்கையை நாம் உண்மையில் எப்படி வாழ்கிறோம் என்ற கேள்வி இதன் மூலம் எழுப்பப்படுகிறது.

செசிகோவ் தொடர்ந்து பல்வேறு முதலாளிகளிடமிருந்து அடிமைகளை வாங்குவதை அறிந்தவுடன் அந்த நகரின் மேல்தட்டு மக்களிடம் அவன் மதிப்பு உயர்கிறது. நடுவயதை நெருங்கிக்கொண்டிருப்பதாலும் தடிமனான உடல்கொண்டிருப்பதாலும் அவனிடம் ஒவ்வாமைகொண்டிருந்த இளம் பெண்களெல்லாம் விருந்துகளில் அவனை கவரயத்தனிக்கும் இடம் மிகுந்த ஹாஸ்யத்துடன் விவரிக்கப்பட்டிரும். அவன் நிற்கும் கதவருகே போடப்பட்டிருக்கும் நாற்காலியிலமர மனதளவில் முட்டிமோதி அதேசமயம் வெளித்தெரியாமல் இயல்பாக அமர்வது போன்ற தோற்றத்தையும் கொள்ள அவர்கள் படும்பாடு ஒரு உதாரணம்.

download

ஒரு கட்டத்தில் அவன் வாங்கிய அடிமைகள் அனைவரும் இறந்த ஆன்மாக்கள் என்கிற செய்தி சூதாடி மூலம் வெளிவர அது நகர்முழுக்க அனைத்து இடங்களிலும் பேசப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இரு திருமணமான தோழிகளுக்கிடையே ஒரு உரையாடல் நிகழ்கிறது. ஒரு அபத்த நாடகத்தின் உச்சகட்டத்தை வாசிக்கும் உணர்வளிக்கும் இடமது. அந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் புனைப்பெயர் அளிக்கப்பட்டிருக்கும். ஒருவரின் பெயர் ‘எளிய இனிமையான பெண்’ இன்னொருவர் ‘அனைத்து வகையிலும் இனிமையான பெண்’.

இன்னொரு பக்கம் இதே விசயத்தை ஆண்கள் தங்களின் ”அபார” அறிவால் அனைத்து வகையிலும் அலசி ஆராய்வர். அதிலும் ஒருவர் செசிகோவ் அனைவராலும் இறந்துபோனவன் எனக்கருதப்பட்ட ‘கேப்டன் கொபேகின்’ தான் என தன் ஆய்வுமுடிவை தெரிவித்து அவரது கதையை விவரிப்பார். அந்த கதையிலேயே அவருக்கு  ஒரு கை கால் இல்லையென்று கூறியதை ஒருவன் ஞாபகப்படுத்த அதை கவனிக்க மறந்ததையெண்ணி தலையிலடித்துக் கொள்வார். (இது சற்று அதீதமென நமக்கு தோன்றலாம். ஆனால் இதை விட அசட்டுத்தனங்கள் (வேதங்களில் ஒன்று தன் பைபிள், கிருஷ்ணனும் இயேசுவும் ஒருவரே, இன்ன பிற…) இன்றும் நம் மத்தியில் உதிர்க்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன.) இந்த களேபரங்கள் எதுவுமறியாமல் அடுத்த நகருக்கு மேலும் அடிமைகளை வாங்க செசிக்கோவ் சென்றுகொண்டிருப்பான்.

இன்று நின்று பார்க்கையில் இப்படைப்பின் குறையாகத் தோன்றுவது இதன் அடர்த்தியற்ற மொழி. ஒரு நிகழ்வோ சந்தர்பமோ சித்தரிக்கப்படுகையில் காற்றடைத்த பல வெற்று வரிகள் ஊடே வருகின்றன. இவ்வகை வரிகள் எந்த மேலதிக வண்ணத்தையோ நுட்பத்தையோ கோணத்தையோ அளிப்பதில்லை. (இன்றும் இது போன்ற பல வரிகள் மொழியோட்டத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. வாசகனை நிலைப்படுத்தவும் ஆசிரியரின் கனவுக்குள் கொண்டுவரவும் அவை பயன்படுகின்றன.) ஒரு முன்னோடிப் படைப்பென்பதால் இந்த குறைக் கண்டுகொள்ளாமல் இந்த நாவல் தருபவற்றை மட்டுமே கணக்கில் கொண்டு படிக்க வேண்டியுள்ளது.

முதல் பகுதியின் இறுதியில் நாவலில் கூறுதொனியில் மாற்றம் நிகழ்கிறது. அதுவரை இருந்த எள்ளல் தன்மை விலகி இங்கிருந்து இறுதி வரை ஒரு தீவிரத்தன்மையை எடுத்துக்கொள்கிறது. (இதுவரை கதைசொல்லி வந்த அந்த கிழட்டுப் பித்தன் தன் லட்சியவாத இளமைக்குத் திரும்பி கதை சொல்ல ஆரம்பிக்கிறான் என எண்ணிக்கொண்டேன்.) நாயகனின் இளமைப் பருவமும் அவனது இந்த பயணத்திற்கான காரணமும் சொல்லப்படுகிறது.

சிறுவயதில் அறிவில் நாட்டம் கொண்டிருந்த செசிகோவ் தன் ஆதர்ச ஆசிரியரின் கீழ் கற்க வேண்டி மனம் முழுக்க கற்பனை நிரம்ப ஒவ்வொரு வகுப்பாக தேறிவருகிறான். அவர் கற்றலின், அறிவின் இன்பத்தை அதன் மேன்மையை மாணவருக்கு கடத்துபவர். அந்த ஆசிரியரின் வகுப்புக்கு அவன் தேறி வருகையில் எதிர்பாராமல் அவர் இறந்து விடவே அவ்விடத்தை வேறொரு ஆசிரியர் நிறப்புகிறார். புதியவரோ ஒழுக்கம் மட்டுமே உயரும் வழி என சொல்லிக் கொடுக்கிறார். கீழ்படிதலும், நெறிப்படி நடப்பதுமே முக்கியமென்றும் அதன்படியே தான் மதிப்பெண் வழங்கப்போவதுமாக கூறுகிறார். அவரின் கீழ் செசிகோவின் ஆளுமை மெல்ல திரிபடைகிறது. செசிகோவ் மெல்லஅவரின் விருப்பப்படி நடந்து கொள்கிறான். அவ‌ருடைய குறிப்பறிந்து அவர் சொல்வதற்கு முந்தையைய கணமே அதை செய்பவனாக இருக்கிறான். அதன்மூலம் தன்னை முதல் மாணவனாக நிறுவிக்கொள்கிறான். போததாத பட்சத்தில் சக மாணவர்களை கோள்சொல்லியும் தன்னை உயர்த்திக்கொள்கிறான்.

image_l

இப்பகுதியை கோகல் அன்றைய ருஷ்யமதிப்பீடுகளின் வீழ்ச்சிக்கு உருவகமாக்கி கட்டுகிறார். கீழ்படிதலின் கூழைக்கும்பிடு போடுதலின் காலகட்டமாக, தன் மேல்மட்டத்தினரின் தட்டிக்கொடுத்தலையே தன் உயர்வெனக் கருதும் காலகட்டமாக ருஷ்யாவின் நிலை வீழ்கிறது. இதேசித்திரம் மேலும் நீட்சிபெற்று நாயகன் பணிக்கு சேரும் இடத்திலும்  காட்டப்படுகிறது. அச்சூழலுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட அவன் ஒவ்வொருவரையாக‌ வீழ்த்தி அதிகாரப்படியில் ஏறுகிறான்.ஒரு கட்டத்தில் சுங்கத் துறையில் உயரதிகாரியாக பெரும் பணம் ஈட்டுகிறான். எப்போதவது அபூர்வமாக ஏற்படும் தலைமை மாற்றத்தின் விளைவாக ஒரு நேர்மையான அதிகாரி பொறுப்புக்கு வர அதில் இவன் தலை மாட்டி அவன் பணி பிடுங்கப்பட்டு தன் ஆரம்ப நிலைக்கு திரும்புகிறான். இதிலிருந்து வெளிவர எத்தனிக்கும்போது எழும் யோசனையாக இந்த இறந்த ஆன்மாக்களை வாங்குவது என முடிவெடுக்கிறான். அந்த காலத்தின் அடிமைகள் அனைவரும் உடைமைகளின் பட்டியலில் தான் வருவார்கள். வீடு, நிலம் போல. பண்ணை முதலாளிகளிடம் நய‌ந்து பேசி குறைந்தபட்ச விலைக்கு இ‍றந்தவர்களை வாங்கி அதை அடகு வைத்து ஒரு தொகையை கடனாக வாங்கி தனது வாழ்கையை மேலெடுக்க நினைத்து தன் பயணத்தை துவக்குகிறான்.

நாவலின் இரண்டாம் பகுதி முதல் பகுதியிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. முதன்மையாக அதன் கூறுமுறை முற்றிலும் செறிவு கொண்டதாகியுள்ளது. எந்த‌ வரியும் முக்கியமானவற்றை நுட்பத்தை தொடாமல் செல்வதில்லை. இரண்டாவது முற்கூறியதுபோல அதன் தொனி தன் எள்ளல் தன்மையை முழுதும் இழந்து தீவிரம் அடைந்துள்ளது. மேலும் இப்பகுதியின் பேசுபொருள்  மிக முதிர்ச்சியடைந்த ஒன்றாக மாறிவிடுகிறது. காரணம் கதைபோக்கிலேயே தெளிவாக தெரிகிறது. இதில் ஆசிரியரின் கவனம் மேலான வாழ்வு நோக்கிய தேடல் மேல் விழுகிறது. ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் உள்ளும் சென்று அதன் போதாமையை அதன் சறுக்கலைக் கண்டு மேலும் மேலும் முன்னகர்கிறது. அது சந்திக்கும் பிரச்சனைகள் எல்லாம் மிக அடிப்படையானவை.

முதல் பகுதியைப் போல இதிலும் பல்வேறு கதாப்பாத்திரங்களை இணைக்கும் பொதுச் சரடாக செசிகோவின் பயணம் உள்ளது. ஆனால் பல பக்கங்கள் அழிந்துவிட்டதால் கதையின் தொடர்ச்சியை அறிய முடியவில்லை. இந்தப் பகுதியில் குறிப்பிடத்தகுந்தவை இதில் இடம்பெறும் மூன்று பாத்திரங்கள்.

இப்பகுதியில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் முந்தைய பகுதியின் நபர்களை விட முதிர்ச்சியானவர்கள். பெரும்பாலானவர்கள் தங்களுக்கென தேடல் கொண்டவர்கள். இப்பகுதியில் வரும் முதல் நபர் உயர்ந்த கல்வி கொண்டவன். தன் அறிவை பற்றிய பிரஞ்ஞை உள்ள ஒரு 33 வயது இளைஞன். புறச்சூழலால் வேறு வழியின்றி தனக்குப் பிடிக்காத சராசரி வேலையை செய்கிறான்.

ஒரு கட்டத்தில் அதை உதறி தன் சொந்த மண்ணுக்கு திரும்புகிறான். அவன் கற்ற க‌ல்வி அவனை ஒரு மேலான வாழ்க்கை வாழச் சொல்கிறது. தன் பண்ணையில் வேலை செய்யும் தன் ஊழியர்களின் வாழ்வை உயர்த்த நினைக்கிறான். அவர்களுடன் இணைந்து வேலை செய்கிறான். அவர்களுக்கான அத்தனை வசதிகளையும் செய்து தருகிறான். அனைவரும் இணைந்து மேலேற வேண்டுமென்பதே அவனது எண்ணமாக இருக்கிறது. ஆனால் எதுவும் அவன் னினைப்பது போல் நடப்பதில்லை. தன் ஊழியர்களுக்கு உட்பட்ட சொந்த நிலம் மட்டும் செழித்தோங்க அவன் நிலம் மட்டும் அதே மக்கள் வேலை செய்தும் வறண்டு போவதை எண்ணி குழம்புகிறான். அங்கு ஆழமாக‌ ஒரு விஷயம் அவனைத் தாக்குகிறது. அவன் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் அவர்களின் மனம் அடிப்படை இச்சைகளால் தான் ஆட்படுகிறது. ஒரு தொலைவைத் தாண்டி பார்க்கும் கண் அவர்களுக்கு வாய்க்கவில்லை. அத்தனை நாள் அவர்கள் இருந்த அந்த வறுமை பீடித்த அடிமைச் சூழல் அவர்கள் உயிர்பிழைக்கும் உணர்வை மட்டுமே அவர்களில் தக்கவைத்துள்ளது. மொத்த பிரஞ்ஞையும் உள்னோக்கி திரும்பிய அவல நிலையில் வாழ்கின்றனர்.

088f1a93d225270c357bfd21a75ea22d

தன்னை தூக்கிவிட்ட கையின் கதக‌தப்பைக் கூட அறியாத தடித்த தோல் கொண்டவர்களாக இதுவரை வாழ்ந்த சூழல் அவர்களை மாற்றி வைத்துள்ளது. தன் நிலம் மட்டும் வறண்டு கிடக்கும் நிலைகுறித்து கேட்கையில் அவர்கள் உதடு பிதுக்கி தெரியாது என்கின்றனர். தங்கள் வேலையை ஒழுங்காக செய்ததாகவும் பயிர் செழிக்காத்திற்கு எண்ணற்ற காரணங்கள் பின்னிருக்கலாமென அவர்கள் கூறும் சமாளிப்புகளைக்கேட்டு ஒரு கட்டத்தில் வெறுப்படைகிறான். அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு தன் கவனத்தை மீண்டும் தன் கல்வி மீது திருப்புகிறான். ருஷ்யாவின் முழு சரித்திரத்தை எழுதும் முயற்சியில் இறங்குகிறான்.

இந்த அத்தியாயத்தில் மிகவும் ஆச்சரியப்படுத்தியத் தருணமென்பது இது இரு தரப்பிலிருக்கும் குறையையும் சொல்கிறது. அடிமைகளின் சுயநலத்தை சொல்லும் அதே வேளையில் ‍‍‍‍அந்த முதலாளியின் சுயமைய பார்வையையும் சுட்டத் தவறவில்லை. அவன் தன் பண்ணைக்கு மீண்டு வரும் பகுதி விளக்கப்படுகையில், அதுவரை அவன் கற்ற கல்வி அவனை ஒரு ‘பயனுள்ள’ வாழ்வை ஒரு சேவை வாழ்வைப் பற்றிய ஒரு கற்பனைக்கு அவனைத் தள்ளுகிறது. அந்த மக்களின் நன்மைக்காக அல்ல அவனுடைய அகங்கார உந்துதலாலேயே அப்படி ஒரு முடிவை எடுக்கிறான். ஆகவேதான் ஒரு சறுக்கலிலேயே அதன் மீதான பிடிப்பை விடுகிறான். உண்மையில் தான் நம்பியதுபோல சூழ இருக்கும் ஊழியர்களின் நன்மைக்காகவென்றால் மேலும் அதில் மூர்க்கமாக உட்சென்றிருப்பான்.

அவன் தவற விட்ட இடத்தை அடுத்து வரும் நடுவயது கதாப்பாத்திரம் மூலம் காட்டப்படுகிறது. அவனும் தன் ஊழியர்கள் மீதான முன்னேற்றத்தில் ஈடுபாடு உள்ளவர். அதேசமயம் அதைப் பற்றிய பெரிய ஒளிவட்டம் அற்றவர். அதனாலேயே அவரால் ஒரு சிறந்த பண்ணை முதலாளியாக இருக்க முடிகிறது. அதை ஒரு சேவையாக செய்யவில்லை. அது அவர் இயல்பிலேயே கலந்து இருக்கிறது. அன்றாட அடிப்படை தேவை போலவெ அதையும் அவர் செய்கிறார். அந்த இளைஞன் தோல்வியடைவதற்கான காரணம் இதுவாக சுட்டப்படுகிறது.

மூன்றாவதாக வரும் பாத்திரம் இந்த இரண்டு எல்லைகளுக்கும் வெளியிலிருப்பவர். உண்பதும் உறங்குவதுமாக எந்த இலக்கின் சுமையுமில்லாமல் காற்றடிக்கும் திசை நோக்கி செல்லும் இறகாக தன் வாழ்வை வாழ்பவர்.பெரிய விருப்பத்தன்மையுடன் இப்பாத்திரம் சித்தரிக்கப்படுகிறது. எதிர்படும் அனைவரையும் வாஞ்சையுடன் வரவேற்கிறார். கையிலிருப்பது கரைவது குறித்த எந்த பிரஞ்கையுமற்றவராக இருக்கிறார். அந்தந்த கணத்தை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர்.

நாவலின் இறுதியாக ‘முடிவு அத்தியாயம்’ ஒன்றில் மிஞ்சியவை அனைத்தையும் தொகுத்து அதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு கோர்வையில்லாமல் கதை தத்தளித்து நகர்கிறது. பத்திர மோசடி குற்றத்திற்காக செசிகோவ் கைது செய்யப்படுகிறான். ஒரு பாதிரியாரின் குணநலன்களுடன் வரும் முரசோவ் என்ற அரசு வக்கீலிடம் தன்னை விடுவிக்க மன்றாடுகிறான். அவரது வற்புறுத்தலின் பேரில் கவர்னர் ஜெனரல் அவனை விடுவிக்க அவன் அங்கிருந்து வேறு ஊருக்கு செல்கிறான். அவனுடைய இயல்பு மாறியிருக்கிறதா என சரியாக விவரிக்கப்படவில்லை. கவர்னர் தன் அரசூழியர்கள் அனைவரையும் அழைத்து நாட்டின் அவல நிலை குறித்தும் அவர்கள் தங்கள் நல்வழி திரும்ப வேண்டிய அவசியம் குறித்தும் இதை தவறவிட்டால் அவர்களுக்கும் ருஷ்யாவிற்கும் மீட்பில்லை எனவும் ஒரு பெரிய உபதேச உரை வழங்குவதுடன் நாவல் நிறைவுபெறுகிறது.

வடிவ ரீதியாகவும் தரிசன ரீதியாகவும் முற்றுப்பெறாத ஆக்கம் தான். ஆனால் இன்றைய வாசகன் இதை பொருட்படுத்தி வாசிக்கவேண்டியதன் காரணங்களாக நான் கருதுபவை இதன் கூரிய அங்கதத்திற்காகவும், புறச்சூழலை விவரிக்கும் போது இது கொள்ளும் கவித்துவ மொழிநடைக்காகவும், இரண்டாம் பகுதியில் வரும் கதாப்பாத்திரங்களை வடிவமைத்த நுட்பத்திற்காகவும் தான்.

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பேயை அஞ்சுவது ஏன்?

$
0
0

ghost-story

 

பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் [நிழல்வெளிக்கதைகள்] வாங்க

 

அச்சம் என்பது….

கார்மில்லா -கடிதங்கள்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் தங்களின் காடு நாவல் திரைப்படமாக்கப்படும் முயரச்சியில் இருப்பதாக படித்தேன்.இதுவரை ரப்பர், அறம், யானைடாக்டர், நூறுநாற்காலிகள், பனிமனிதன், இந்துஞான மரபில் ஆறுதரிசனகள், ஏழாம் உலகம், முடித்திருந்தாலும் ,” காடு ” புகவில்லை. படித்துவிடவேண்டுமென முடிவெடுத்தபோது லெண்டிங் லைப்ரரியில்”வெளிய போயிருக்கு இன்னும் வரலை…” என்றார்கள், ” வரவும் சொல்லுங்கள்..” சொல்லிவிட்டு அங்கிருந்த தொகுப்பில்  நீண்ட நாட்களாக படிக்க நினைத்திருந்த “நிழல்வெளிக்கதைகள்” எடுத்து வந்து ஒரே அமர்வில் முடித்தேன், மிகவும் பிடித்திருந்தது.

 

 

காரணம் சமீபத்தில் அழுத்தமான  Mystery Flavour வகை கதைகளை படிக்க கிடைக்கவில்லை , சிறுவயதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்ட பேய்க்கதைகள் கூட இன்று யாரும் பேசுவதில்லை. சிறுவயதிலிருந்து கடவுள் நம்பிக்கை இழக்கத்துவங்கும்போதே ஆவி/பேய்/அமானுஷ்ய நபிக்கைகளையும் அதே விகிதத்தில் இழந்தேன். ஆனால் இவ்வகைகதைகளை கேட்பதிலோ படிப்பதிலோ எனக்கு துளியும் ஆர்வம் குறையாது (தற்போது அவ்விடத்தை நிரப்புவன special effect சினிமாக்கள் மட்டுமே).

 

சிறுவயதில் தலையில்லா முண்டம் இரவில் ஊருக்குள் நடமாடுதென்று வேப்பிலை காப்பை வீட்டு வீட்டிற்கு வாசலில் கட்டிவைப்பதை மிரட்சியோடு பார்த்திருக்கிறேன். பேய் கதை அல்லது அது பற்றிய  உரையாடல்களில்  உண்டாகும் பயம் அலாதியானது .ஒரு பயத்திற்கு ஆட்படப் போகிறோம் என்ற உணர்வே போதையானது .அதில் ஆட்பட்டு பயபீதியில் சிக்குவதற்கும், பின் மீண்டெழுவதற்கும் நம் மனமே பொறுப்பு.

 

தாத்தா பாட்டிகளின் “ஒரு ஊர்ல ஒரு ராஜா….”வோடு சில பேய்கதைகளும் ஒட்டிக்கொள்ளும், இன்றெல்லாம் யாரும் பேய்க்கதை சொல்வதுமில்லை கேட்பதுமில்லை, இன்றய நகரமயமாதலில் ஊருக்கு வெளியே பாழடைந்த பங்களா என்று ஒன்றுமில்லை, அனைத்தும் சிப்காட் தொழில் நகராகிவிட்டது, கதைகளில் நுழைய வழியில்லாதவாறு ஆவிகள் அவற்றின்  மறைவிடங்களிலிருந்து துரத்தப்பட்டுவிட்டன.பேய்களின் பிறப்பிடமான சுடுகாடுகள், இன்று  24/7 மின்-தகன நிலையமாய்  ஒரு சிறு தொழிற்கூடமென  மாறி, ஆவிகளை கருப்புகையாக கூண்டின் வழி வெளித்தள்ளுகிறது.

 

இந்த நிழல்வெளிக்கதைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், “தம்பி” முழுவதும் பிரிவாளுமை பற்றிய உளவியல் மருத்துவம் பேசிவிட்டு இறுதிவரியில் கதையின் பரிணாமம் அப்படியே மாறிவிடுகிறது. அதேபோல் “யட்சி” , “பாதைகள்”  “அறைகள்” என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித உளவியல்-மர்மக்கதைகள். .இன்னும் இதுபோல படைப்புகள் தமிழின் தேர்ந்த கதைசொல்லிகளால் உருவாக்கப்படவேண்டும், ஒருவேளை இன்னும் சில தலைமுறைக்கு பின் பேய்/ஆவிகளையும் எழுதின்வழிதான் யாரும் அறிந்து பயங்கொள்ளமுடியுமோ என்னவோ?

 

“நிழல்வெளிக்கதைகள்” சொன்னதற்கு மிகுந்த நன்றிகள்

 

அன்புடன்,

யா. பிலால் ராஜா

ghost

அன்புள்ள பிலால் ராஜா

 

ஏன் பயப்படுகிறோம், ஏன் அப்படிப் பயப்படுவது பிடித்திருக்கிறது என யோசித்துப்பார்த்திருக்கிறீர்களா? அப்படிப் பார்த்தால் ஒன்று தெரியும், திகில்கதைகளின் இடம் இலக்கியத்தில் ஒருபோதும் மறையாது.

 

நான் ஒரு பேய்க்கதையைப் படித்துக்கொண்டிருக்கையில் இரண்டு உளநிலைகள் பின்னிப்பிணைந்து செல்கின்றன. ஒன்று தருக்கம் சார்ட்ந்ஹ புழங்கும் உள்ளம். இன்னொன்று ஆழுள்ளம். நாம் கற்றவை, எண்ணுபவை, நம் அன்றாட வாழ்க்கைசார்ந்த புரிதல்கள் அனைத்தையும் கொண்டு அக்கதையை விளக்கிக்கொள்ள முயல்கிறோம். அந்த விளக்கத்துக்கு இணையாகவே நம் ஆழுள்ளம் வந்துகொண்டிருக்கிறது, ஓர் அடியொழுக்காக. நம் தர்க்கத்தின் விரிசல்களை உடைத்துக்கொண்டு ஒரு புள்ளியில் ஆழுளம் வெளிப்பட்டுவிடுகிறது. அதுதான் நம் அச்சம்

 

புதுமைப்பித்தன் இதை வேடிக்கையாக ‘பேய்களில் நம்பிக்கை இல்லை, ஆனால் பயமாக இருக்கிறது’ என்று சொன்னார். நம்பிக்கை வேறு பயம் வேறு. இவ்வாறு நம் ஆழுளம் வெளிப்படுவது நம்மை நாமே பார்த்துக்கொள்வது. இலக்கியம் என்பது ஆழுளம் நோக்கிய ஓர் ஊடுருவல். பேய்க்கதைகள் அதை வெற்றிகரமாகவே செய்கின்றன. இக்காரணத்தாலேயே அவை இலக்கிய மதிப்பு கொள்கின்றன

 

பேய்க்கதைகளின் இயங்குதளமும் நாம் நினைப்பதைவிட ஆழமானது. அவை தூய கவிதையைப்போல படிமங்கள் வழியாகவே தங்கள் ஊடுருவலை நிகழ்த்துகின்றன. ஏனென்றால் படிமங்களாலானது ஆழுளம்.பேய்க்கதைகளின் கனவியல்பு அப்படி உருவாவதுதான். பேய்க்கதைகள் அந்தப் படிமங்கள் ரகசியமாக தங்கள் ஊடுருவலை நிகழ்த்த விட்டு மேல்மனதை தங்கள் கட்டமைப்பாலும், புறச்சூழல் விவரிப்பாலும், கதைமாந்தரின் செயல்களாலும் மயக்கி நிறுத்திவிடுகின்றன. கதையை நம் தர்க்கம் வாசித்துக்கொண்டிருக்கையில் படிமங்களுடன் ஆழம் உரையாடிக்கொண்டிருக்கிறது

 

நாம் ஏன் அஞ்சுகிறோம்? நம் ஆழுளம் சிக்கிக் கிடக்கும் பல முடிச்சுகளை பேய்க்கதைகள் சென்று தொடுகின்றன. வரலாற்றின் முடிவிலாத, பொருளிலாத ஆழம். வன்முறைவிழைவு ,பாலுணர்ச்சியின் கட்டுக்கடங்காத தன்மை அவற்றின் விளைவான குற்றவுணர்ச்சி என மானுடனை ஆட்டுவிக்கும் அடிப்படை உணர்ச்சிகளாலானவை பேய்க்கதைகள். ஆகவே அவை கால இடப்பெறுமானம் அற்றவை. சென்றகாலகட்டத்தின் சமூகக்கதைகள்,தத்துவக்கதைகள் எல்லாம் இன்று அர்த்தமிழந்துவிட்டன. சென்றகால பேய்க்கதைகள் இன்றும் அப்படியே காலமில்லாது நின்றிருக்கின்றன.

 

பேய்க்கதைகள் இருவகை. ஆசிரியன் வாசகனிடம் கதைவிளையாட்டு ஆடும்கதைகள் ஒருவகை. உதாரணம் சுஜாதாவின் கொலையுதிர்காலம் போன்றவை. அவற்றுக்கு இலக்கியமதிப்பு இல்லை. வாசகனின் ஆழுளத்தில் உறங்கும் அடிப்படை உணர்ச்சிகளைத் தொட்டு அவனை அச்சம்கொள்ளச்செய்யும் கதைகள், அவன் தன் ஆழத்தை தானே காணும் அனுபவத்தை அளிக்கும் கதைகள் இரண்டாம்வகை, உதாரணம் புதுமைப்பித்தனின் செவ்வாய்தோஷம்.

 

இரண்டாம் வகைக் கதைகள் என்றுமிருக்கும். நேற்று தங்கள் கதைக்கட்டுமானத்தை அவை மதத்தில் இருந்தும், நாட்டார்மரபில் இருந்தும் எடுத்துக்கொண்டன. இன்று அவை அறிவியலில் இருந்து எடுத்துக்கொள்கின்றன. ஆனால் படிமங்களின் இயல்புகளும் அவை உருவாக்கும் அடிப்படையான உணர்ச்சிகளும் ஒன்றே

 

ஜெ

 

பேய்களின் உலகம்

பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் மதிப்புரை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-45

$
0
0

bowஒவ்வொரு திசையிலிருந்தும் போர்ச்செய்திகள் வந்துகொண்டிருந்தன. கடோத்கஜன் பிரக்ஜ்யோதிஷத்தின் படைகளை மத்தென கலக்கிக்கொண்டிருந்தான். முன்னூறு பேர் கொல்லப்பட்டுவிட்டனர். பகதத்தனுக்கும் கடோத்கஜனுக்கும் நேர்ப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பகதத்தன் மூன்று முறை எறிகதை வீச்சுக்கு ஆளானார். கவசங்கள் உடைந்து பின்னடி வைத்து செல்கிறார். அவருக்குத் துணையாக துச்சாதனனும் துரியோதனனும் செல்கிறார்கள். துரியோதனனின் கதைக்குமுன் நிற்கவியலாமல் கடோத்கஜன் பின்னடைகிறான்.

போரின் விசை கூடக்கூட கடோத்கஜனின் பின்னிலிருந்து திருஷ்டத்யும்னனின் ஆணை அழைத்து காத்தது. அர்ஜுனனை ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் சேர்ந்து எதிர்கொள்கிறார்கள். அம்புக்கு அம்பென நிகழ்கிறது போர். சர்வதனை இளைய கௌரவர் எழுவர் சூழ்ந்துள்ளனர். சுதசோமனை கௌரவர் பன்னிருவர் சூழ்ந்துள்ளனர். எஞ்சியவர் பீமனைச் சூழ்ந்து போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். போர் ஒவ்வொரு கணமும் நிகர்நிலையில் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் தடையற்றவராக பீஷ்மர் முன்சென்றுகொண்டிருக்கிறார். அவரிடமிருந்து அபிமன்யூவைக் காத்து கொண்டுசெல்கின்றனர். அதோ வெறிகொண்ட அபிமன்யூ கௌரவப் படையின் தேர் அணியொன்றை பிளந்துகொண்டு முன்னெழுகிறான். அவன் முன் அம்புபட்டு அலறியபடி கௌரவ மைந்தர்கள் தேரிலிருந்து உதிர்கிறார்கள்.

சுவாங்கனும் உத்வேகனும் ஊர்ஜிதனும் விழுந்தார்கள். கனகனும் சுப்ரதீகனும் சுப்ரபனும் தீர்க்கதேஜஸும் தீர்க்கரோமனும் காதரனும் வீழ்ந்தனர். அபிமன்யூ இளைய கௌரவ மைந்தர்களை கொன்று குவித்துக்கொண்டிருந்தான். வாசவனும் வக்ரனும் ருத்ரடனும் ருத்ரனும் ருத்ரநேத்ரனும் கொல்லப்பட்டார்கள். மதுபர்க்கனும் வல்லபனும் சாமனும் சார்த்தூலனும் வத்கலனும் சாலியும் வர்தனனும் சால்மலியும் வர்ச்சஸும் சமியும் வீரபாகுவும் விஜயபாகுவும் சமடனும் வீரகனும் லோகிதனும் சதபாகுவும் லோலனும் மூலகனும் லோபனும் மூஷிகனும் ரைவனும் கொல்லப்பட்டார்கள்.

சகுனி “மைந்தரை காத்துக்கொள்க… அனைத்து கௌரவர்களும் மைந்தரை சூழ்ந்துகொள்க!” என்று ஆணையிட்டார். கௌரவர்கள் இருபுறத்திலிருந்தும் திரண்டு மைந்தரின் உதவிக்காக செல்ல கடோத்கஜன் எழுந்து அவர்களைத் தடுத்து அறைந்து பின்னடையச் செய்தான். மறுபுறம் சர்வதன் அவர்களை தடுத்தான். துணையின்றி கௌரவ மைந்தர்கள் அபிமன்யூவின் முன் விடப்பட்டனர். திடஹஸ்தன், பாசன், பாமகன், சாந்தன், சுபத்ரன், சுதார்யன் என பெயர்கள் வந்தபடியே இருந்தன. சகுனி “முன்செல்க! முன்செல்க! மைந்தரை காத்துகொள்க!” என்று தன் தேர்ப்படைவீரர்களுக்கு ஆணையிட்டார். அவருடைய தேரைச் சூழ்ந்து காந்தாரப் படையும் சுபலரும் மகாபலரும் அம்புகளைத் தொடுத்தபடி வந்தனர்.

“விரைக! விரைக!” என சகுனி தேரை ஊக்கினார். தேர் படைகளைப் பிளந்தபடி அபிமன்யூவை நோக்கி சென்றது. ஆனால் பாண்டவப் படைகளுக்கு பின்னாலிருந்து வந்த தொலையம்புகளால் காந்தாரப் படை நிறுத்தப்பட்டது. கழுகிறகுகள் பொருத்தப்பட்ட அம்புகள் ஒளிரும் அலகுகளுடன் முழங்கியபடி இறங்கி தேர்களின் புரவிகள்மேல் குத்தி இறங்கி அமைந்தன. தேர்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்குழம்பின. “முன்செல்க! முன்செல்க!” என்று சகுனி கூவினார். அபிமன்யூவை துணைத்த பின்படையினரால் காந்தாரப் படையின் முன்னணிப் பரிவீரர்கள் விழுந்தனர். மூன்றுபுறமும் துணைப்படை தடுத்து நிறுத்தப்பட்டது. கழையன் மேலேறி நோக்கி செய்தியறிவிக்க சகுனி தன் வில்லால் தேரை ஓங்கி அறைந்து கூச்சலிட்டார்.

வலைக்குள் சிக்கிய மீன்களென கௌரவ மைந்தர்கள் சுற்றி வந்தனர். அஞ்சி கூச்சலிட்டு விற்களையும் ஆயுதங்களையும் கீழே விட்டு கைதூக்கினர். பலர் தலையைப் பொத்தியபடி உடல் வளைத்து தேர்த்தட்டில் அமர்ந்து நடுங்கினர். அபிமன்யூ ஒற்றைநாணில் கொத்துக்கொத்தென அம்புகளை எடுத்து எடுத்து அவர்களை கொன்று அழித்தான். சரணன், மானசன், வேகன், தந்தகன், பிச்சலன், விபங்கன், காலவேகன், கண்டகன், விரோகணன், பிரபாவேனன், ஹனு, அகோராத்ரன், அகோவீரன், சம்பு, விக்ரன், விமலன், ஏரகன், குண்டனன், வேணிதரன், வேணுஹஸ்தன், சார்ங்கன், கதாவேகன், மகாகாலன், சேசகன், பூர்ணாங்கன், சுதிரத்மன், ரிஷபன், சங்கு, கர்ணகன், குடாரன், குடமுகன், சுஹாசன், சுசரிதன், விரோசனன் என முழவுகள் வீழ்ந்த கௌரவ மைந்தரின் பெயர்களை அறிவித்துக்கொண்டே இருந்தன.

கைதளர்ந்து சகுனி வெறித்து நோக்கிக்கொண்டு நின்றார். நூற்றெண்பது கௌரவ மைந்தர் கொல்லபட்டுவிட்டனர். கணமொருவர் என கொல்லப்படுகிறார்கள். “பிதாமகர் பீஷ்மர் எழுக! கௌரவ மைந்தர்களை காத்துக் கொள்க!” என்று அவருடைய ஆணை முரசுகளாக வானில் முழங்கிக்கொண்டிருந்தது. விண்ணிலிருந்து எழும் மூதாதையரின் பதைபதைப்பு என. ஒலியிலிருந்து ஒலி தொடுக்க மிகத் தொலைவில் பீஷ்மர் அதை கேட்பதை அவரால் காண முடிந்தது. திரும்பி தேரைச் செலுத்தி பீஷ்மர் அபிமன்யூவை நோக்கி வந்தார். சுருதகீர்த்தி அவரை தடுக்க அவனை அம்புகளால் செறுத்து பின்னடையச் செய்து அவன் இடையில் அம்புபாய்ச்சி தேர்த்தட்டில் விழச்செய்தார். அபிமன்யூவின் பின்னணிப்படையினரின் சூழ்கையை உடைத்து உட்புகுந்து அதே விசையில் நான்கு அம்புகளால் அவன் தேர்ப்பாகனை கொன்றார். சீற்றத்துடன் திரும்பி தன் கால்களாலேயே கடிவாளத்தைப் பற்றி தேரைத் திருப்பி அபிமன்யூ பீஷ்மரை நோக்கி சென்றான். “மைந்தரை மீட்டெடுங்கள்! மைந்தரை சூழ்ந்துகொள்க!” என்று காந்தாரப் படையினருக்கு சகுனி ஆணையிட்டார்.

சுபலரும் காந்தார இளவரசர்களும் எதிரம்புகளைச் செறுத்து கடந்துசென்று எஞ்சிய கௌரவ மைந்தர்களை சூழ்ந்துகொண்டனர். அவர்கள் அனைவருமே தேர்த்தட்டுகள் மேல் உடல்குறுக்கி அமர்ந்து குளிர்கண்டவர்கள்போல் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். துர்த்தாரகன் உரத்த குரலில் “இது போரல்ல… படைக்கலம்விட்டு அமர்ந்துவிட்டவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது நெறியே அல்ல…” என்று கூவினான். சகுனியின் தேர் அருகே வந்த பரிவீரன் ஒருவன் “இருநூற்றியேழு இளவரசர்கள் கொல்லப்பட்டனர்… புண்பட்டு எஞ்சியோர் எவருமில்லை” என்றான். அருகே நின்றிருந்த தேர்வீரன் “இன்று மிகுந்த பேரழிவு, காந்தாரரே” என்றான்.

அதற்குள் முழவு இருநூற்றுப் பதினேழு கௌரவ இளவரசர்கள் கொல்லப்பட்டிருப்பதை தெரிவித்தது. “பிணங்களை கண்டெடுக்கிறார்கள்!” என்றான் பராந்தகன். கொக்கிச்சரடுகளை வீசி களத்திலிருந்து கௌரவ மைந்தரை இழுத்து எடுத்துக்கொண்டே இருந்தனர். இருநூற்றி முப்பத்தேழுபேர் என்றது முழவு. தேர்த்தட்டில் ஒருவர் மீது ஒருவரென அடுக்கப்பட்ட கௌரவர்களின் உடல்களை சகுனி ஒருமுறை மட்டும் நோக்கினார். கைகள் விரிந்து விரல்கள் அகன்று களைத்துத் துயில்பவர்கள் போலிருந்தனர். வாழ்ந்திருந்தபோது அவர்கள் அனைவர் முகங்களிலும் ஒற்றை உணர்ச்சியே திகழ்ந்தது. இறந்தபோதும் அவ்வாறே ஒற்றை உணர்ச்சிதான் நிலைகொண்டிருந்தது. வியந்து, திகைத்து, செயலிழந்தவர்கள்போல.

முதல்முறையாக அவர்களை கான்வேட்டைக்கு கொண்டுசென்றதை அவர் நினைவுகூர்ந்தார். காட்டின் ஆழத்துள் நுழைந்ததும் அவர்கள் ஓசையடங்க விழிகள் வெறித்து வாய் திறந்து புரவிகளில் அமைந்திருந்தனர். அதே நோக்கு. கதைபயிலக் கூட்டிவருகையில் மீளமீளச் சொன்னாலும் மிக எளிய பாடங்கள்கூட அவர்களுக்கு புரிவதில்லை. பலமுறை சொன்னபின் சினம்கொண்டு ஆசிரியர் அவர்களை அடிக்க தன் கதையை ஓங்கும்போதும் அதே திகைப்பையே அவர்களின் முகங்களில் காண்பார். எரிபுகுவதற்கென்றே சிறகுகொள்ளும் விட்டில்கள். சகுனி நாவில் கசப்பென ஊறிய எச்சிலை திரும்பி துப்பிக்கொண்டார். துப்புந்தோறும் கசப்பு ஏறி ஏறி வந்தது.

பீஷ்மர் அபிமன்யூவை தடுத்து மேலும் மேலும் பின்னடையச் செய்தார். “இளையோன் உயிர்கொடுக்கத் துணிந்தவனாக களம் நின்றிருக்கிறான்” என்றான் ஒரு பரிவீரன். “அவன் உயிரால் ஈடுகட்டுவோம் இன்றைய இழப்பை!” என அருகே பிறிதொருவன் கூவினான். பீஷ்மரை சூழ்ந்துகொண்ட பாஞ்சாலப் படைவீரர்கள் அலறி விழ அபிமன்யூவை காக்கும்பொருட்டு வில்லவர்கள் அரைவட்டமென பின்வளையம் அமைத்தனர். தடைகளை உடைத்தபடி கௌரவர்கள் இருபுறத்திலிருந்தும் இளைய கௌரவர் களம்பட்ட இடத்தை நோக்கி வந்தனர்.

“சூழ்ந்துகொள்க! அபிமன்யூவை சூழ்ந்துகொள்க! மைந்தரை காக்க வருக!” என்ற அவருடைய ஆணை முழங்கிக்கொண்டிருந்தது. அதை அவரே கேட்டபோது ஒருகணம் திகைத்தார். அது ஒரு சூழ்ச்சி. தூண்டிலில் மீன்களையே மீன்களுக்கு வைத்திருக்கிறார்கள். “முன்செலல் ஒழிக! கௌரவர் பின்னடைக!” என்று ஆணையிட்டார். ஆனால் அவ்வாணை ஒலிக்கையிலேயே காந்தாரப் பரிவீரன் அவர் முன் பாய்ந்து வந்து “பீமசேனரை ஏற்கெனவே நம்மவர் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்… கௌரவர் நாற்பதின்மர் அவரை ஒருங்கிணைந்து எதிர்க்கிறார்கள்” என்றான். மைந்தர் இறந்த செய்தி கௌரவர்களை வெறிகொள்ளச் செய்யும். இறந்த மைந்தரின் தந்தையர் இறப்புக்கு நெஞ்சுகாட்டி முன்சென்று களம் நிற்பார்கள். தாங்களும் வீழ்வதே அவர்களுக்கு நிறைவளிக்கும்.

“கௌரவர்களை காக்கவேண்டும்! கௌரவர் பின்னடைக!” என அவருடைய ஆணை முழங்கியது. சோமதத்தர் அவர் அருகே தேரில் வந்து “நமது படைகள் முழுமையாகவே இளைய பாண்டவனை சூழ்ந்துகொண்டுள்ளன. இதுவே நற்தருணம்” என்றார். “அவன் மைந்தன் உடனெழுவான். கௌரவர்களை உடைப்பான். கௌரவர்கள் கொல்லப்படுவார்கள்… இன்று கௌரவர்களும் கொல்லப்பட்டால் நமது படை உளம் தோற்றுவிட்டதாக பொருள்” என்று சகுனி கூறினார். நாற்புறத்திலிருந்தும் கௌரவப் படையினர் திரண்டு பீமனை நோக்கி சென்று கதைகளும் விற்களுமாக பொருதுவதை சகுனி கண்டார். “விலகுக… விலகுக!” என்று கூவியபடி அம்புகளை எய்து படைகளை விலக்கியபடி பீமனை நோக்கி சென்றார்.

அவர் எண்ணியதுபோலவே வெறிகூச்சலிட்டபடி தேர்த்தட்டில் நின்று நெஞ்சில் அறைந்து கதறி அழுதபடி கௌரவர்கள் பீமனை சூழ்ந்துகொண்டனர். செல்லும் வழியெங்கும் அவர்கள் தங்கள் மைந்தர்களின் உடல்களை கண்டிருந்தனர். “கௌரவர்கள் விலகட்டும்! போரை திரிகர்த்தர்களும் உசிநாரர்களும் முன்னெடுக்கட்டும்! கௌரவர்கள் விலகுக!” என்று சகுனி ஆணையிட்டார். அவருடைய தேர் ஊடே புகுந்த பாண்டவக் குறும்படையொன்றால் தடுக்கப்பட அவர்களை அம்புகளால் அறைந்து வீழ்த்தி விலக்கி அவர் திரும்பி நோக்கியபோது கௌரவர்களின் வளையத்தை ஒருபுறம் சுதசோமனும் மறுபுறம் சர்வதனும் உடைத்துவிட்டதை கண்டார்.

கௌரவர்கள் மேலும் பீமனை சூழ்ந்துகொண்டார்கள். அம்புகளைப் பெய்தபடி அவர் செல்லும்போதே “பிதாமகர் பால்ஹிகர் வருக! கௌரவர்களை காக்க வருக!” என ஆணையிட்டார். திருதசந்தனும் ஜராசந்தனும் பீமனின் அம்புகளால் அறையுண்டு வீழ்ந்தனர். துராதாரனும் விசாலாக்‌ஷனும் பீமனின் கொக்கிக் கயிற்றில் சிக்கி தேரிலிருந்து நிலத்தில் உருண்டனர். அவர்கள் எழுவதற்குள் பீமனின் கதை வந்து அவர்களின் தலைகளை உடைத்தெறிந்தது. அக்கணம் பாண்டவப் படையின் பின்னிரையிலிருந்து கழைமேல் எழுந்து பறந்து களம்நடுவே வந்திறங்கிய கடோத்கஜன் சுஹஸ்தனையும் வாதவேகனையும் பீமவிக்ரமனையும் அறைந்து தேரிலிருந்து சிதறடித்தான். அவர்கள் தேர்கள் தேடி ஓட பீமனின் சங்கிலியில் துள்ளிய கதை சுழன்று அவர்களை அறைந்து மண்ணில் குருதிச்சிதைவுகளாக பரப்பியது.

பீமன் தன் தேரிலிருந்து கழையூன்றி தாவி மகாபாகுவின் தேரிலேறி அக்கணமே அவனை அறைந்து கொன்றான். அருகிலிருந்த தேரிலிருந்து சித்ராங்கன் கூச்சலிட அவனை இழுத்துத் தூக்கி தன் முழங்கால்மேல் அறைந்து முதுகெலும்பை முறித்து அப்பால் வீச அவன் புழுதியில் புழுவென துடித்தான். சித்ரகுண்டலன் தேரிலிருந்து பாய்ந்திறங்க பீமனின் கொழுக்கயிற்றின் கூர்தூண்டில் அவன் கழுத்தைக் கவ்வி கவசத்துடன் கிழித்து பறந்தது. குருதிபெருகும் கழுத்தைப் பற்றியபடி அவன் மண்ணில் விழுந்தான். கௌரவர்கள் அந்தக் கொலைகளால் தளர்ந்து பின்னடையத் தொடங்க அவன் தேரிலிருந்து தேருக்கு பாய்ந்து பிரமதனையும் அப்ரமாதியையும் தீர்க்கரோமனையும் கொன்றான்.

தீர்க்கபாகு தேரிலிருந்து பாய்ந்திறங்கியபோது தேர்முகடிலிருந்து கீழே பாய்ந்த பீமனைக் கண்டு “மூத்தவரே!” என அலறினான். எட்டி அவன் நெஞ்சை மிதித்து தேர்ச்சகடத்தின் அச்சுக்கோலுடன் அறைந்தான் பீமன். கழுவில் கோத்தவன்போல் அவன் நின்று உதறிக்கொள்ள அஞ்சி தேரிலிருந்து பாய்ந்த சுவீரியவானை பின்னிருந்து கதையால் தலையிலறைந்து கொன்றான். சகுனி அம்புகளுடன் கௌரவச் சூழ்கையைக் கடந்து பீமனை அடைந்தபோது பீமன் உடலெங்கும் குருதியுடன் ஓங்கி நிலத்தை உதைத்து வெறிக்கூச்சலிட்டான். சகுனியின் இரு பேரம்புகள் பீமனின் கவசங்களை உடைக்க அவன் பாய்ந்து தன் தேரிலேறிக்கொண்டான்.

“கௌரவர் பின்னடைக… கௌரவர் பின்னடைக!” என்று சகுனி ஆணையிட்டார். அவருடைய ஆணை வீணொலியென காற்றில் நின்று அதிர கௌரவர்கள் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மேலும் மேலும் திரண்டு பீமனை நோக்கி சென்றனர். அவ்வாறு பெருந்திரளென சூழ்வதுபோல் பிழையான போர்முறை பிறிதொன்றில்லை என்று அவர் அறிந்திருந்தார். உணர்வுக் கொந்தளிப்பால் அவர்களுக்குள் எந்த ஒத்திசைவும் இருக்கவில்லை. பலர் கதறி அழுதுகொண்டிருந்தனர். நெஞ்சிலறைந்து வஞ்சினம் கூவினர். வெறிகொண்டு தலையை தூணில் முட்டிக்கொண்டனர். ஒவ்வொருவரும் தங்கள் கைகளால் பீமனை கொல்ல விழைந்தனர். எனவே நீர்ப்பரப்பிலிருந்து மீன்கள் துள்ளி எழுவதுபோல் பீமன் முன்சென்று விழுந்தனர். சுவர்ச்சஸும் ஆதித்யகேதுவும் பீமனின் அம்புகளால் கொல்லப்பட்டு தேரிலிருந்து விழுந்தனர்.

சகுனி பீமனை அம்புகளால் அறைந்து நிறுத்தியபடி துச்சாதனனும் துரியோதனனும் வந்து பீமனை எதிர்கொள்ளும்படி ஆணையிட்டார். “துரியோதனர் எழுக! துச்சாதனர் எழுக!” என அவருடைய ஆணை காற்றில் அதிர்ந்தது. ஆனால் அப்பால் வந்த துரியோதனனின் தேரை கடோத்கஜன் தடுத்து நிறுத்தினான். துச்சாதனன் துரியோதனனை விட்டுவர இயலாது தவித்தான். “ஜயத்ரதரும் அஸ்வத்தாமரும் வருக! கௌரவர்களை காத்து நிற்க வருக!” என்று சகுனி ஆணையிட்டார். அவர்கள் அர்ஜுனனால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். திருஷ்டத்யும்னன் பூரிசிரவஸை எதிர்த்து நிற்க சாத்யகி வந்து இணைந்துகொண்டான். சாத்யகி பித்தன்போல் வெறிகொண்டு தாக்க பூரிசிரவஸ் கை ஓய்ந்து அடிக்கு அடி வைத்து பின்னகர்ந்துகொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் தங்களுக்குள் மட்டுமே என போர்புரிந்துகொண்டிருக்க ஜயத்ரதன் திருஷ்டத்யும்னனை அம்புகளால் அறைந்து பின்கொண்டு சென்றான். பீமனுக்குத் துணையாக சர்வதனும் சுதசோமனும் வில்லுடன் எழ சகுனி கை ஓய்ந்து பின்னகர்ந்தார். பீமன் அந்த இடைவெளியில் பாய்ந்து மீண்டும் கழையிலெழுந்து தாவி வந்து துஷ்பராஜயனையும் அபராஜிதனையும் கொன்றான். “இளவரசர்கள் களம்பட்டதை முரசுகள் அறிவிக்க வேண்டியதில்லை” என்று சகுனி ஆணையிட்டார். அவரது ஆணை ஒலித்துக்கொண்டிருக்கையிலேயே அவர்கள் களம்பட்ட செய்தியை அறிவித்து முழவுகள் முழங்கின.

சகுனி சீற்றத்துடன் “பிதாமகர் பால்ஹிகர் எங்கே? பிதாமகர் களமெழட்டும்! பால்ஹிகர் களம் எழுக!” என்று கூவினார். ஆனால் பால்ஹிகர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. வெவ்வேறு இடங்களில் தொழும்பர்கள் மேலெழுந்து பால்ஹிகரை தேடி மிகத் தொலைவில் அவர் நிஷாதர்கள் நடுவே பாண்டவப் படைக்கு உள்ளே இருப்பதை கண்டுகொண்டனர். “பிதாமகர் துணை வருக! பிதாமகரை அழைத்து பீமனுக்கு பின்னால் கொண்டு வருக!” என்று சகுனி ஆணையிட்டார். உசிநாரர்களும் காம்போஜர்களும் இணைந்த படை கிராதர்களையும் நிஷாதர்களையும் தாக்கி வழி உருவாக்கி பால்ஹிகரை நோக்கி சென்றது. அதற்குள் சாருசித்ரனும் சராசனனும் பீமனால் கொல்லப்பட்டார்கள்.

கௌரவப் படை நொறுங்கி ஒன்றிணைவதுபோல் தோன்றியது. “துரோணரை துணை கொள்க! பால்ஹிகரை துரோணர் அழைத்து வருக!” என்று சகுனி கூவினார். துரோணர் தன்னை எதிர்த்து நின்றிருந்த பாஞ்சாலப் படைகளை விலக்கி இடைவிடாத அம்புகளால் கிராதர்களை வீழ்த்தி உருவாக்கிய பாதையினூடாக கவசமணிந்த யானைமேல் பால்ஹிகர் திரும்ப வந்தார். அவர் மையப்படையில் இணைந்துகொண்டதும் அங்கே முரசொலிகள் எழுந்தன. “பால்ஹிகரை பீமனிடம் அழைத்துச் செல்க!” என்று சகுனி ஆணையிட்டார். பீமன் தேரிலிருந்து கழையூன்றி எழுந்து பறந்து யானையொன்றின்மேல் சென்றமர்ந்து கதையால் கௌரவர்களாகிய சத்யசந்தனையும் சதாசுவாக்கையும் தலையறைந்து கொன்றான். குருதி வழிய அவன் நிமிர்ந்தபோது நேர் எதிரில் பால்ஹிகரை கண்டான். பாய்ந்தெழுந்து கதையை வீசி அவரை எதிர்கொண்டான்.

பால்ஹிகரின் பெருங்கதை காற்றில் சுழன்றெழுந்து வந்து அவன் அமர்ந்த யானையின் மத்தகத்தை அறைந்தது. அலறியபடி யானை பின்னடைந்து வலம் சரிவதற்குள் அதன் மேலிருந்து தாவி பீமன் இன்னொரு யானைமேல் ஏறிக்கொண்டான். அந்த யானையையும் அவர் அறைந்து வீழ்த்தினார். பீமன் வீழ்ந்த யானைக்கு அடியில் சிக்கிக்கொண்டான். பால்ஹிகரின் பெரிய கதை பறக்கும் மலை என அவனை நோக்கி வர மண்ணில் படுத்து அதை ஒழிந்து காலை உருவிக்கொண்டு அது மீண்டு வந்தறைவதற்குள் ஓடிச்சென்று தன் தேரில் ஏறிக்கொண்டான். அந்தத் தேரை பிதாமகரின் கதை அறைந்து சிம்புகளாக தெறிக்க வைத்தது.

மீண்டும் அவர் பீமனை தாக்குவதற்குள் அவரை கடோத்கஜன் தன் கதையால் தாக்கினான். ஆனால் பெரிய கதையின் அறைபட்டு அவன் கதை உடைந்து தெறித்தது. அவர் அறைந்தபோது கடோத்கஜனின் அணுக்கப்படையினரான இரு இடும்பர்கள் உடல்சிதைந்து துண்டுகளாக தெறித்தனர். கடோத்கஜன் தன் கொக்கிக்கயிற்றில் தொற்றிப் பறந்து அப்பால் விலகினான். சர்வதனும் சுதசோமனும் பாய்ந்து பின்னடைய திருஷ்டத்யும்னனின் ஆணையின்படி நீண்ட நிலைக்கேடயங்களை ஏந்திய யானைகள் வந்து அவனை மறைத்தன. பாஞ்சாலப் படை பீமனைத் தூக்கி அப்பால் எடுத்துச்சென்றது.

நான்கு விரல்கடை பருமனுள்ள இரும்புத் தகடாலான ஆறு ஆள் உயரமுள்ள அந்த இரும்புக்கேடயங்கள் ஒவ்வொன்றும் மூன்று யானையின் எடைகொண்டவை. முகப்பில் எதிரடியை தாங்குவதற்குரிய முழைவளைவுகள் கொண்டவை. யானைமருப்புகளை எதிர்க்கும்பொருட்டு அவற்றில் கூரிய வேல்முனைகள் பொருத்தப்பட்டிருந்தன. பின்னால் யானைகள் துதிக்கையால் பற்றும்பொருட்டு வளையங்கள் கொண்டவை. கீழே இரண்டு சிறு இரும்புச்சகடங்களில் அவற்றை உருட்டிச் செல்லமுடியும். அவற்றை மத்தகத்தால் ஏந்தி துதிக்கையால் பற்றிக்கொண்டுவந்த யானைகள் ஒன்றுடன் ஒன்று இணைத்து உருவாக்கிய இரும்புக்கோட்டைக்கு அப்பால் பாண்டவப் படை பின்வாங்கிக்கொண்டிருந்தது. அங்கே கௌரவர் கொல்லப்பட்டதை அறிவித்து வெற்றிமுரசுகள் முழங்கின. பாண்டவ வீரர்கள் “வெற்றிவேல்! வீரவேல்! வெற்றி! வெற்றி!” என்று கூச்சலிட்டனர். வேல்களும் கைவாள்களும் காற்றிலெழுந்து சருகலையென தெரிந்தன.

பால்ஹிகர் கதையை வீசி யானைகள் ஏந்திவந்த கேடயங்களை அறைந்து உடைத்தார். அவருடைய கதையின் மோதலில் இரும்புடன் இரும்பு பட்டு பொறியெழுந்தது. அறைபட்ட யானை பின்னடைய அங்கே ஈரப் பரப்பிலென குழியமைந்தது. ஆனால் பின்னிருந்து இன்னொரு யானையால் உந்தப்பட்டு கேடயம் முன்னால் வந்தது. கேடயம் உடைந்து சரிய அந்த இடைவெளியை பக்கவாட்டு யானைகள் இணைந்து உடனே மூடின. பால்ஹிகர் மீண்டும் மீண்டுமென கேடயங்களை அறைந்து உடைத்துக்கொண்டே இருந்தார். கேடயச்சுவர் நீர்விளிம்பென அலைகொள்வதை சகுனி கண்டார்.

“கௌரவ இளையோரை நோக்குக! எவரேனும் உயிர் பிழைக்கக்கூடுமா?” என்று சகுனி கேட்டார். கௌரவர்களை இழுத்து பின்னாலெடுத்துக்கொண்டிருந்தார்கள். “இருபத்திரண்டுபேர்” என்று காவலன் கூவினான். “இதோ இன்னுமொருவர்” என்றான் இன்னொருவன். “நோக்குக!” என்று ஆணையிட்டபடி சகுனி பின்னால் சென்றார். சங்கொலியுடன் துரியோதனனின் தேர் முன்னால் வர உடன் துச்சாதனனும் வந்தான். சகுனி துரியோதனனின் முகத்தை கூர்ந்து சிலகணங்கள் நோக்கிவிட்டு எதிர்த்திசையில் தேரை திருப்பிச்செல்ல ஆணையிட்டார்.

ஒருகணம் உடலில் இருந்து ஆற்றல் முற்றாக விலக மாபெரும் ஓவியத் திரைச்சீலை காற்றிலாடுவதுபோல் குருக்ஷேத்ரக் களம் அலைபாய்ந்தது. அவர் தேர்த்தூணை பற்றிக்கொண்டு மெல்ல இருக்கையில் அமர்ந்தார். கண்களை மூடிக்கொண்டு மிக அருகே என தன் மேல் பதிந்திருக்கும் ஒரு நோக்கை உணர்ந்தார். பின்னர் விழிதிறந்து திரும்பி தேரிலிருந்த ஆவக்காவலனிடம் “நீர்!” என்று கைநீட்டினார்.

தொடர்புடைய பதிவுகள்

ஏழாம் உலகம்- கடிதம்

$
0
0

ezham-ulagam

 

ஏழாம் உலகம் மின்னூல் வாங்க

ஏழாம் உலகம் வாங்க

 

அன்புள்ள ஆசானுக்கு ,

 

நலம் தானே ? ஏழாம் உலகம்  நாவல் வாங்கி 6 மாதத்திற்கு மேல் ஆகியும் படிக்காமல்  ஒத்திப் போட்டுக்கொண்டு வந்தேன்   இன்று தான்  படித்து  முடித்தேன். படித்து முடித்தவுடன் மனதில் சொற்களால் சொல்ல முடியாத ஒரு வெறுமை .

 

எல்லா  பாத்திரங்களும் நாவலை ஒரு ஒரு திசை நோக்கி  விரித்தபடியே உள்ளன. ஏழாம் உலகில் வாழும்  இம்மனிதர்கள் , பல வேலைகளில்  நாம் பார்த்தும் பார்க்காமல் சென்ற  நபர்கள். அந்த மனிதர்களின் வாழ்க்கையை  முகத்தில்  உமிழ்ந்து இங்கே பார் இப்படி ஒரு வாழ்வும் இங்கு  இருக்கிறது என்று  காட்டியது நாவல் .

 

நாவலில் வரும் எல்லாரும் அந்த உருபடிகளை மனிதர்களாக நடத்துபவர்களாக இல்லை , எல்லாரும் அவர்களை சுரண்டி  பிழைப்பவர்களாக இருக்கின்றனர்  பண்டாரம் , காவல்துறை , மருத்துவமணை , எங்கும் அவர்களை ஒரு ஆன்மாவகா  மதிப்பதே இல்லை .

 

இதில்  மனிதர்களின்  கீழ்மைகள் அனைத்தும் காட்டப்பட்டு விட்டன,

ஆனால் இதில்  அந்த கீழ்மையை வெளிப்படுத்துபவர்களுக்கு  அவர்கள் செய்வது தவறு என்று தெரிவதே இல்லை . பண்டாரமும் அவர் மனைவியும் ஒரு இடத்தில் சொல்லும் போது ” நான் யாருக்கென்ன பாவம் செய்தேன் ” என்று கூறும் போது அது உள்ளத்தில் இருந்து தான் சொல்லப்படுகிறது. தன் மகள் தன்னை விட்டு வேறு ஒரு ஆணுடன் ஓடியதை தாங்கிக்கொள்ள  முடியாத  பண்டாரம் தான் முத்தம்மை இடம் இருந்து ரஜினிகாந்தை பிரித்து விற்கும்போது எந்த ஒரு குற்ற உணர்வும் அற்றவராக  இருக்கிறார். அவரின் பார்வையில் அவர்  செரியாகவே நடந்து கொள்கிறார். அதே பண்டாரம் குழந்தைகளை கடத்தி உருப்புகளை சேதம் பண்ணும் கும்பல் குழந்தைகளை காட்டும் போதும் அவர் மனம்  அதை ஏற்றுக்கொள்ள முடியாமல்   மறுக்கவும் செய்கிறது  பதறிப்போகிறார்.அந்த  ஏழாம் உலக மனிதர்களுக்கும்  ஆன்மா இருப்பதை அவர் அறிந்து கொண்டவராக  தெரியவில்லை.

 

இங்கு  போத்தியின் உள் ஆழம் வெளிப்படும் இடம் வருகிறது , முத்தம்மையை நிர்வாணமாக பார்க்க நினைக்கிறார் ஆனால்

பின் அதை அவரே வேண்டாம் என்று மறுக்கிறார்.  அதை செய்ததுக்கு மேல் இனி அவள் முன் சென்று நிர்க்க முடியாது என்று சொல்கிறார்.

 

பின் அந்த ஏழாம் உலக மனிதர்களின் வாழ்க்கை பார்வை அவர்கள் தங்கள் அளவில் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். முத்தம்மை குழந்தையை வளர்க்கும் பகுதி , தொரப்பு  தன் குழந்தையை தொட்டு பார்க்க என்னி என்னி கை நீட்டும் தருணம் தந்தைமையின் ஒரு பகுதி. பின்  எருக்கு ,  மருத்துவமணையில் இருந்து அவளை கூட்டி வர பெருமாள் தனக்கு  மஞ்சள் கயிற்றை கட்டியதால் அவனை தன் கணவனாக ஏற்றுக்கொண்டது. குய்யனின் நகைச்சுவைகள் . குய்யன் தன் முதலாலி தனக்கு கல்யாண சோறு  போடவில்லை என்று அறிந்து அவன் அடையும் மனவருத்தம் பின் அவர்கள் எல்லாம் சேர்ந்து அவனுக்கு  சாப்பாடு வாங்கி தருவது   பல இடங்கள் எங்கோ மனதை தொட்டு தொட்டு செல்கிறது.

 

இறுதியில் முத்தம்மை ” ஒத்தவிரலு ” என்று அழும் இடம் முதலில் படித்த போது புரியவில்லை பின்பு தான் புரிந்தது. இதை விட ஒருத்தி மேல்   கீழ்மையை புகட்ட முடியாது. நாவல் அவர்களின்  அந்த வாழ்விலும் அவர்கள் தங்களை இன்பமாக அமைத்துக் கொண்டதை உணர்த்துகிறது.

 

 

நன்றி ,

 

சுகதேவ்

 

மேட்டூர்.

ஏழாம் உலகம் -கடிதம்

ஏழாம் உலகம்- கடிதங்கள்

ஏழாம் உலகம் -கடிதங்கள்

ஏழாம் உலகம் பற்றி

ஏழாம் உலகம் கடிதங்கள்

ஏழாம் உலகம் – கடிதம்

ஏழாம் உலகம் -கடிதம்

ஏழாம் உலகம்- கடிதங்கள்

ஏழாம் உலகம்- கடிதங்கள்

 

ஏழாம் உலகம்- கடிதம்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’நானும்’ இயக்கம், அழைத்தலே சீண்டலா?

$
0
0

4

 

‘நானும்’ இயக்கம், எல்லைகள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

 

 

நேற்றைய  கடித-பதிலில் ஆண் பெண்ணிடம் விழைவை வெளிப்படுத்துவது சீண்டலோ அத்துமீறலோ அல்ல என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் குறிப்பிடுகின்ற விழைவு காதல் விருப்பம் குறித்தென நான் பொருள்கொண்டு வாசித்தேன். அப்படித்தான் பொருள்கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். எவ்வாறு காதல் விழைவிற்கும் பாலியல் அத்துமீறலுக்கும் பெண்களுக்கு வேறுபாடு தெரியாத நிலை உள்ளதோ அதேபோல ஆண்களுக்கு காதல் விழைவிற்கும் பாலியல் விழைவில் படுக்கைக்கு அழைப்பதற்கும் வேறுபாடு தெரியவில்லை. “பாருங்கள், ஆசானே சொல்லிவிட்டார்” என்று ஒரு தீவிர ‘நானும்’ எதிர்ப்பாளர் உங்களது நேற்றைய பதிலைச் சுட்டியிருந்தார்.

 

 

 

காதல் விருப்பத்தை ஒரு ஆடவன் தெரிவிப்பது இயல்பான ஒன்று. அவன் மீதும் அவ்வாறான எண்ணமிருந்தால் ஏற்றுக்கொள்வேன், இல்லையெனில் மறுப்பேன். ஆனால் என்னை வெறும் பாலியல் பொருளாகக் கருதிப் படுக்கைக்கு அழைக்கும் பட்சத்தில் அதைக் காதல் விழைவு போலச் சாதாரணமாகக் கருதிப் புறந்தள்ள இயலாது. கண்டிப்பாக இச்சூழலை எதிர்கொள்கிற எல்லாப் பெண்களுக்கும் ஒரு சீற்றத்தைத் தரும். திருமணமாகாத பெண்களுக்கே இது ஓர் உளஅழுத்தம் தரக்கூடிய கேள்வியெனில் திருமணமான பெண்கள் இதை எவ்வாறு எதிர்கொள்வார்கள்? இன்று முகநூல் உட்பட இன்ன பிற தனிச்செய்திகளில் மிக எளிதாக ஒரு ஆண் எத்தகைய காரணங்களோ நோக்கங்களோ இன்றி ஒரு பெண்ணிடம் பாலியல்ரீதியிலான அழைப்பு விடுக்கமுடியும். அப்படியான ஆண்களை ப்ளாக் செய்துவிடுங்கள் என்கிற அறிவுரையைக் கூறிக் கடக்கலாம். ஆனால் இத்தகைய தனிச்செய்தியை அப்பெண்ணின் வீட்டில் உள்ளவர்கள் பார்க்க நேர்ந்தால் பெருஞ்சிக்கல் ஏற்படும்.  எனவே முற்போக்கு ஆண்கள் பாலியல் விழைவையும் காதல் விழைவையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதை நீங்கள் கொஞ்சம் விளக்க வேண்டும்.

 

 

வெண்பா.

 

 

அன்புள்ள வெண்பா

 

ஆண் பெண் உறவு விஷயங்களில் கறாரான நெறிகளை எழுத்தாளர்கள் சொல்லமாட்டார்கள். அது ஒழுக்கவியலாளர்களின் பணி. எழுத்தாளர்களுக்கு ஆண்பெண் உறவு  எத்தனை சிக்கலானது என்று தெரியும். ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே ‘தூயகாதல் ‘திருமணம் செய்துகொள்வதற்கான விழைவு’ தவிர வேறு பாலியல் ஊடாட்டமே  இருக்கக்கூடாது என்று எந்த எழுத்தாளனாவது சொல்லமுடியுமா என்ன?

 

ஒரு பெண் ஆண்கள் சூழ்ந்த நவீன உலகில் முற்றிலும் உடலாக பார்க்கவே படாமல் வாழமுடியுமா? அப்படி ஒரு வாழ்க்கை உருவானால் அது இயல்பாக இருக்குமா?  பெண் உடலும்கூடத்தானே?  பெண் உடல் மீதான ஆணின் கவற்சி என்பது ஓர் உயிர்ச்சக்தி அல்லவா? அப்படி அல்ல என்று அறுபதை நெருங்கும் நான், முற்றிலும் வேறொரு வாழ்க்கைச்சூழலில் உள்ளவன், இன்றைய நவீன வாழ்க்கையிலுள்ள சின்னப்பையன்களுக்கான ஒழுக்கநெறியாகச் சொல்வேன் என்றால் அது பொருந்துவதா?

 

எனக்கு இதெல்லாமே குழப்பமாகவே இருக்கிறது. ஒரு பெண் பாலியல்சார்ந்து ‘மாட்டேன்’ என்று சொல்லும் உரிமையை அறுதியாக தக்க வைத்துக்கொள்ளவேண்டும், ஒரு சொல்லுக்கு அப்பால் எவ்வகையிலும் ஆண் கடக்கலாகாது என்று மட்டுமே இன்றைய சூழலில் சொல்லமுடியும்.

 

உடலாக மட்டும் ஒருவன் தன்னை அணுகினால் அவனை அப்பெண் அருவருக்க, ஒதுக்க எல்லா நியாயமும் உள்ளது. தன்னை அவன் அவமதித்தான் என எண்ணக்கூட உரிமை உள்ளது. தன்னை ஆளுமை என ஏற்பவர்களிடம் மட்டுமே அனைத்து தொடர்பாடல்களையும் அவள் வைத்துக்கொள்வதே நல்லது ஆனால் ஒருவன் அப்படி அணுகினாலே அது தன் மீதான பாலியல் சீண்டலாகக் கொள்ளமுடியுமா என்ன?

 

நம் சூழலில் இன்று பின்தொடர்தல், வற்புறுத்துதல், மிரட்டல், விலக மறுத்தல், பணிச்சூழலில் தொல்லைகொடுத்தல் என பாலியல்சீண்டல்களை தெளிவாக வரையறை செய்யவேண்டும். பேசினான், என்னை இப்படி நினைத்தான், இப்படி என்னை மதிப்பிட்டான் என்பதெல்லாம் பாலியல்தொல்லை என்றால் அது மிகப்பெரிய சிக்கல்களைத்தான் உருவாக்கும். ஏனென்றால் அது மிகமிக தனிநபர் சார்ந்த ஒன்று.

 

புகழ்பெற்ற தருண் தேஜ்பால் வழக்கில் தருண் தேஜ்பால் நீதிமன்றத்தில் தன் தரப்பாகச் சொன்னது இது– தான் பெண்களுடன் தொடர்புகள் கொண்டவன், பெண்களைல் பாலுறவுக்காக அணுகுபவன் என்பது அந்தப்பெண் உட்பட அனைவருக்கும் தெரியும்.  அச்சூழலில் அது பரவலாக ஏற்கப்பட்டதும்கூட. அந்தப் பெண்ணையும் அவ்வாறே அணுகினேன். அவள் ‘நோ’ சொன்னாள். ஆனால் அந்தப்பெண் சொன்ன நோ திட்டவட்டமானதாக இல்லை. பெண்கள் ‘நோ’வையே  ‘எஸ்’ என்னும் பொருளில் சொல்வார்கள். அதை கறாராகவும் திட்டவட்டமாகவும் சொல்லாமல் ஒரு கொஞ்சலாகவே சொன்னாள். ஆகவே அதை ஒப்புதல் என எடுத்துக்கொண்டேன்.

 

நீதிமன்றம் இதில் ஒருபகுதியை ஏற்றுக்கொண்டது. அந்தப்பெண்ணை அவர் அணுகியது பிழை அல்ல. அவள்  நோ சொன்னதை தனக்கேற்ப விளக்கிக் கொண்டதும், உடல்ரீதியாக அவளிடம் சுதந்திரம் எடுத்துக்கொண்டதும்தான் பிழை என்றது. அதனடிப்படையிலேயே ஜாமீன் மறுக்கப்பட்டது. இப்போது வழக்கு நடந்துகொண்டிருக்கிறது

 

நாம் அமெரிக்க ஐரோப்பிய வாழ்க்கைமுறை நோக்கிச் செல்கிறோம். ஆகவே அங்குள்ள விழுமியங்களையும் ஏற்றுக்கொள்கிறோம். ஒருத்தியை ஒருவன் டேட்டிங் -குக்கு அழைப்பது அங்கே பிழை அல்ல. அவள் மறுத்தபின் வற்புறுத்தினால்தான் அது பாலியல் தொல்லை. இன்றைக்கு இந்திய உளவியலுக்கு இது ஏற்கத்தக்கதாக இல்லை. இங்குள்ள பெண்கள் உளக்கொதிப்படைகிறார்கள்.  இன்று இந்திய வாழ்க்கையிலுள்ள பல்வேறு தளங்களில் இது ஒவ்வாததும்கூட. ஆனால் பல  தொழில்துறைகளில் முழுமையாகவே ஐரோப்பிய வாழ்க்கைமுறை நிலவுகிறது. பார்ட்டிகள், பயணங்கள், மதுக்கூடுகைகள் என அனைத்தும் உள்ளன. அங்கெல்லாம் ஐரோப்பிய அமெரிக்க வாழ்க்கையை வைத்துக்கொண்டு ஒழுக்கவியலில் மட்டும் அதை புறக்கணித்து மரபான மனநிலையை விதியாக ஆக்க முடியுமா என்ன?

 

பணிச்சூழல்களை தனிப்பட்ட உறவுகளுக்கு முற்றிலும் அப்பாலானதாக வைத்துக்கொள்ளுதல், மனிதர்களை மதிப்ப்பிட்டு அதற்கேற்ப உறவுகளை அமைத்துக்கொள்ளுதல், தன் செயல்கள் மற்றும் சொற்கள் வழியாக தான் எண்ணாத குறிப்புகள் வெளிப்படாமல் காத்துக்கொள்ளுதல், திட்டவட்டமான மறுப்புகளைத் தெரிவிக்கப் பழகுதல், அதன்பின்னர் தொல்லைகள் தொடர்ந்தால் கறாரான நடவடிக்கைகள் எடுத்தல் ஆகியவையே இன்றைய பெண்களுக்குத் தேவை என நான் நினைக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால் சினிமா, விளம்பரத்துறை போன்ற தளங்களில் இன்று ஆண்களுக்கும் இந்த எச்சரிக்கைகள் தேவை.

 

இந்த மிடூ எல்லாம் கூடிப்போனால் ஆறுமாதமே. இது ஒரு சின்ன விழிப்புணர்வை மட்டுமே உருவாக்கும். இப்போதே இது ஏதேனும் அமைப்பாக திரண்டு உருவாகாவிட்டால் இதனால் எந்தப் பயனும் இல்லாமல் போகும். அரசியல் கலக்காமல், இந்த ஒரு நோக்கத்திற்காக மட்டுமே செயல்படும் ஒரு கண்காணிப்பு அமைப்பு உருவாகியாகவேண்டும். ஓருசிலரேனும் அதற்கு முழுநேர உழைப்பைச் சிலகாலம் அளிக்கவேண்டும்

 

ஜெ

 

 

 

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

தங்களது தளத்தில் என்னைப் பற்றிய கடிதம் கண்டேன்.’நானும்’ இயக்கம் கடிதங்கள் பொதுவாக நடுத்தர வயதுப்பெண்கள் தங்களது இல்லப்பொறுப்புகளை முடித்துவிட்டு சீரியல் பார்ப்பதற்கு மாற்றாக முகநூலுக்கு வருகின்றனர். அவர்களுக்கு குறைந்தபட்ச வாசிப்பனுபவம் கிடையாது. முகநூல் பக்கங்களில் வருகிற தகவல்களைப் பகிர்கின்றனர். பெரிதாகத் தற்படங்கள் கூடப் பதிவிடுவதில்லை. ஆனால்  முகநூல் உளவியல் எழுத்தாளர்கள் அனைவரும் அவர்களது நட்புப்பட்டியலில் இருக்கின்றனர். உண்மையில் இப்பெண்மணிகளுக்குப் பாலியல் தேவை இருந்தால் திண்டுக்கல், மதுரை, திருச்சி என எங்கெங்கோ இருந்துகொண்டு சென்னையில் இருக்கிற ஒருவருக்குத் தினமும் தனிச்செய்தி அனுப்பித் தூண்டிலிட வேண்டிய அவசியமில்லை. தத்தமது நகரங்களில் பார்த்துக்கொள்ளலாம். இங்கே விஷயம் அதுவன்று. எவ்வாறு அதிகாரத்தைக் கொண்டு பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் நடக்கிறதோ அதேபோல எழுத்தைக்கொண்டும் ஓர் அத்துமீறல் நிகழ்கிறது.

 

 

சமூகவலைதளங்களில் பாலியல் அணுகுமுறைகளிலும் அத்துமீறல்களிலும் ஈடுபடுபவர்கள் உளவியல் எழுத்தாளர்கள் என்கிற பட்டத்தைத் தாங்கி நிற்கின்றனர். தினமும் தங்களது மனவக்கிரங்களையும் பாலியல் கனவுகளையும் உளவியல் எழுத்துகளாக வடிக்கின்றனர். அல்லது என் தோழி ஒருத்தி என்கிற மாதிரியான உளவியல் அனுபவங்களை எழுதுகின்றனர். இதுவரை எதுவுமே வாசித்திராத பெண்மணிகளுக்கு இந்தப் போலியான எழுத்துநடை ஒரு பிரமிப்பை உருவாக்குகின்றது. எனவே அவ்வவ்வபோது அந்த எழுத்தாளரைப்(?!) பாராட்டத்துவங்குகின்றனர். பிறகு எழுத்தாளர் ஒரு கட்டுரை எழுத வேண்டியுள்ளது கொஞ்சம் அனுபவம் பகிரலாமே என்று வீட்டு விஷயங்களை வாங்கிக்கொள்கின்றனர். அடுத்து குழந்தைகள் நலன் மற்றும் கணவரது நலன் முதலியவற்றிற்கும் குறிப்புகள் தருகின்றனர். இதுவரை ஆண் நட்புகள் இல்லாத பெண்மணிகள் இவரை தம்மீது அக்கறை உள்ளவராகக் கருதி வீட்டில் நிகழும் பிரச்சனைகள், குறைகள் போன்றவற்றை உளற ஆரம்பிக்கின்றனர். உடனே அந்த உளவியல் ஆன்மாக்கள் இரட்டை அர்த்தப் பேச்சுகள், டேட்டிங், பாலியல் சுதந்திரம் போன்ற உரையாடல்களில் ஈடுபட்டு இறுதியாக பாலியல் அழைப்பை விடுக்கின்றன. இது ஒரு தொடர் நிகழ்வாக இருக்கின்றது. #Metoo ட்ரெண்ட் ஆவதற்கு முன்னும் முகநூலில் பொதுச்சூழல் குறித்து அறியாத நடுத்தரவயதுப் பெண்களுக்கு இத்தகைய தடுமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நான் #metooவில் குறிப்பிட்ட பெண்கள் சுதாரித்து வெளியே வந்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் இருக்கின்ற கொந்தளிப்பு எழுத்தாளர் இப்படிச் செய்யலாமா என்பதுதான்.

 

 

வெறும் பெர்வெர்ஷன்களை எழுதித் தன்னை எழுத்தாளராகச் சொல்லிக்கொண்டு இதுபோல பெண்களிடம் அத்துமீற முயற்சித்த சம்பவங்கள் என்னை எரிச்சலடையச் செய்தன. நம்முடைய பெண்கள் உளச்சோர்வெனில் உளவியல் மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை பெறுவதற்குத் தயங்குகின்றனர். ஆனால் முகநூலில் இத்தகைய போலிக்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். நல்ல வாசிப்பறிமுகம் தேவையெனில் நூலகங்களை நோக்கிச் செல்வதில்லை. முகநூலுக்கு வந்து உளவியல் களவியல் போன்ற ஏதேதோ இயல்களிலும் இஸங்களிலும் மாட்டிக்கொள்கின்றனர். இன்று வாசிப்பதற்கு நூலகம் வரை கூட செல்லவேண்டியதில்லை; Scribd மற்றும் kindleஇல் எவ்வளவோ புத்தகங்கள் வாசிக்கலாம். இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பினை இந்த #metoo சமாச்சாரம் அளித்திருப்பதாகக் கருதுகின்றேன்.

 

 

#metoo வெறும் பணியிட பாலியல் பேரங்களையும் சுரண்டல்களையும் மட்டுமே சொல்கிற ஓர் தளமாக நான் பார்க்கவில்லை. பொதுவெளிகளிலும் சமூகவலைதளங்களிலும் நிகழ்கின்ற பாலியல் சுரண்டல்களும் இதன்மூலம் வெளிப்படுத்தப்படவேண்டும். ஏனெனில் பாலியல் வசைகள் மற்றும் sexual manipulations அதிகம் நிகழ்கிற இடம் சமூகவலைதளங்களாகும். பெண்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தும்போது பாலியல் விழிப்புணர்வும் அவசியம். #metoo சர்ச்சைகளுக்குப்பின் இப்போது பெண்மணிகள் தனிச்செய்திகளில் கேட்டு சிறுகதைகள் வாசிக்கப் பழகுகின்றனர். இலக்கிய எழுத்தாளர்கள் குறித்துத் தெரிந்து கொள்கின்றனர். இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்து குறித்த புரிதல் அவர்களுக்கு வரும். எனவே அத்தகைய பெண்மணிகள் ஆண்கள் கூப்பிட வேண்டுமென்றோ பாலியல் நோக்கங்களுக்காகவோ தனிச்செய்திகளுக்குச் செல்லவில்லை. இதுவரை காணாத விஷயங்களைக் கண்டுகொண்ட மிகைஆர்வத்தில் உள்ளே செல்ல அந்த ஆர்வத்தை ஆண்கள் பயன்படுத்திக்கொள்ள முயன்றதும் தப்பித்து விலகியவர்கள். மற்றொரு விஷயம், வெறும் வீட்டுச்சூழலுக்குள் வாழ்கிற இந்திய நடுத்தர வயதுப்பெண்மணிகளுக்குக் கணவனைத் தவிர வேறு ஆண்களிடம் தோழமைரீதியாகப் பேசிப் பழகவோ நட்பு பாராட்டவோ வாய்ப்பு கிடையாது. அந்த இடைவெளியைத்தான் சமூகவலைதள ஆசாமிகள் பயன்படுத்திக்கொள்ள முயல்கின்றனர்.

 

 

 

வெண்பா.

 

அன்புள்ள வெண்பா

 

இது எப்போதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் பிழைகளுக்கு அறியாமையை காரணமாகச் சொல்லமுடியாது, அறியாமையே ஒரு பிழைதான் என ஒரு தொல்கூற்று உண்டு

 

ஜெ

 

 

நான்கு நாட்கள் முன்பு உளவியல் எழுத்தாளர்களுக்காகவே நான் முகநூலில் எழுதியது

 

உளவியல் எழுத்தாளர்கள்- #MeToo

 

முன்பு சினிமாவில் இருப்பவர்களிடம் “சினிமானா அப்பிடி இப்பிடியாமே” என்று கண்ணடித்துக் கேட்கும் கும்பல் இலக்கியத்தின் பக்கம் தற்போது கொட்டகை போட்டுள்ளது. தமிழ்ச்சமூகத்தில் மூன்று வகையான எழுத்துகள் வாசிக்கப்படுகின்றன. ஒன்று இலக்கியச் சார்பானது, இரண்டு முற்போக்கு மற்றும் புரட்சிச் சார்புடையது மற்றும் மூன்றாவது கேளிக்கைவகை.

 

இவற்றையும் கடந்து இந்த facebook, உளவியல் எழுத்து என்கிற ஓர் புதுமையான எழுதுமுறையை அளித்திருக்கின்றது. அவற்றை வாசித்த உளவியல் மருத்துவர்கள் சிலர் மயங்கிவிழுந்த கதைகளையும் கேட்டிருக்கின்றேன். இந்த முதல் மூன்று வகைகளைவிட நான்காவது வகைக்குதான் வாசகர்கள் ஜாஸ்தியாக இருக்கின்றனர். ஏனெனில் உளவியல் என்கிற தலைப்பின் கீழ் எவ்வளவு மோசமான perversionஐயும் நியாயப்படுத்திக் கொள்ள முடியும். அனைத்து சல்லித்தனங்களையும் தரிசனங்களாகவும் பரிசோதனை முறைகளாகவும் மாற்றிக்கொள்ள இயலும்.உதாரணமாக நண்பனின் காதலியை கரெக்ட் செய்து அந்தக் காதலில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு பெண்ணென்பவள் பொருளில்லை அவளுக்கும் உணர்வுகள் இருக்கின்றன என்கிற தரிசனமுடிவை அனுபவ ரீதியாக எழுதிப்போட்டுவிட்டால் நல்லதொரு உளவியல் எழுத்து தயார். இதேபோல ஒவ்வொரு விஷயங்களையும் உளவியல் ரீதியாக அணுகி அதற்கொரு தீர்க்கமான முடிவையும் தந்துவிடுகின்றனர். இதுவரை எதையுமே வாசிக்காதவர்களுக்கு மெய்யாகவே இத்தகைய எழுத்துவகை ஓர் எழுச்சியையும் பிரமிப்பையும் தரும். அவர்கள் எழுத்து என்பது இதுதான் என அறுதியிட்டு எழுத்தாளர் என்று கொண்டாடத்துவங்கிவிடுகின்றனர்.

 

இத்தகைய எழுத்தினால் வருகிற பயன் யாதெனில் பெண் சமூகம் இவர்களை ஓர் உளவியலாளராகக் கருதி தம்முடைய அந்தரங்கங்களைப் பகிர ஆரம்பிக்கிறது. குறிப்பாகப் பெண்கள் “உங்க போஸ்ட் படிச்சுதாங்க ஹேப்பியா ஃபீல் பண்றேன், எனர்ஜி தருது” என்று சிலாகித்து வருகின்றனர். இவர்களுக்குப் பாலியல் தேவை இருக்காது, அத்துடன் அதைப் பற்றியும் யோசித்திருக்கமாட்டார்கள். பாலியல் தேவையிருந்தால் fbவரை ஏன் வர வேண்டும்? தன்னுடைய ஏரியாவிலேயே எளிதாக பிறகாதல் பழக்கவழக்கங்களை வைத்துக்கொள்ளலாம். அதனால் இங்கே வருபவளுக்குத் தேவை இருப்பது போன்ற பாவனையை உருவாக்க வேண்டும். எனவே கொஞ்சம் கொஞ்சமாக அவள் வீட்டு விஷயங்கள் மற்றும் கணவன் குறித்து அடிக்கடி விசாரித்து விசாரித்து விரிசல்களைத் தேடுகின்றனர். “பாவம்ங்க நீங்க, ஒத்த ஆளா கணவர், பிள்ளைகள்,குடும்பத்தை எப்படி சமாளிக்கிறீங்க?” என்று லாஜிக்கில்லாத பிட்டெல்லாம் போட வேண்டும். எல்லார் வீட்டிலும் ஒரு மனைவிதானே கணவனையும் வீட்டையும் சமாளிக்கிறார் என்கிற அறிவு இந்த உளவியல் எழுத்தாளர்களிடம் பேசும்போது தோன்றாது. இதேதொனியைத்தான் manipulation என்கிறேன். மெதுமெதுவாக நம்மை brainwash பண்ண இன்னுமிரண்டு மூன்று முற்போக்கான சம்பவங்களைத் தெரிந்த பெண்களைக் குறிப்பிட்டுச் சொல்லி அப்படியே தேற்றி correct செய்து விடுவது. இது பெண்களை வீழ்த்தும் எளிய வழி, ஆனால் இதற்கு நிறைய உழைப்பைப் போட வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் #metooக்களாக மாறிவிடும். இங்கு மாட்டியவர்கள் அவ்வாறு பிசகித் தோற்றவர்கள். அதற்காக சிக்காத இந்த உளவியல் எழுத்தாளர்கள் யாரும் நல்லவர்களில்லை. சிக்கிய பெயர்களை விடவும் சல்லிகள் என்பதால் யாரும் சொல்வதற்கு முன்வரவில்லை.

 

இங்கு பிரச்சனை யாதெனில் இந்த நால்வகையினரையும் பிரித்துப் பார்க்க அறிவில்லாமல் மொத்தமாக இலக்கியவாதிகள் என்கிறோம். எனவே எழுத்தாளர் என்கிற labelஐ ஒட்டிக்கொண்டு எதையாவது கிறுக்கிக்கொண்டு யாரையாவது come to my home என்று கையைப்பிடித்து இழுத்தால் “இலக்கியவாதிகளே இப்படித்தான்” என்கிற பேச்சுக்கு ஆளாக வேண்டியுள்ளது. அடுத்து மற்றொரு சாரார் இருக்கின்றனர். இவர்கள் எழுத்தாளர் என்றாலே எந்நேரமும் மதுவில் மிதந்துகொண்டு மங்கைமீது சாய்ந்துகொண்டு எழுத வேண்டும் என்கிற நியதியைக் கடைபிடிப்பவர்கள். கடைசியாக மதுவருந்தி மங்கைமீது சாய்ந்து என்ன படைத்தீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தால் “மங்கைமேல சரிஞ்சப்புறம் என்னத்த படைக்குறது, அதான் எப்படி சரிஞ்சேன்னு குறிப்பா எழுதிட்டேன்” என்றபடி கழன்றுகொள்வார்கள். எழுத்தைக் கொண்டு பெண் வேட்டையாடுவது எளிதான செயல். ஆனால் எழுத்துக்கு அப்பால் உங்களது நிலையென்ன என்பதுதான் பெண்களைச் சேர்வதற்கான வழி. அத்தகைய நேரடித்தன்மை இங்கிருக்கும் பலருக்கும் வராது. எழுதவேண்டுமென்றால் எழுத மட்டுமே செய்யுங்கள்; அதிகாரத்தைக் கொண்டு பெண்ணை அனுசரிக்க வைப்பது எப்படித் தவறோ அதேபோல எழுத்தைக் கொண்டு பெண்ணை மடக்குவதும் தவறுதான். உங்கள் சுயமெனும் மிருகம் எழுத்தைப் போர்த்திக்கொண்டு மறைந்துள்ளது.

 

பெண்களுக்கு, உயிரோடிருப்பவர்களும் fbயில் எழுதுபவர்களும் மட்டுமே எழுத்தாளர்கள் கிடையாது. இவர்களுக்கு முந்தைய சூழலில் நவீன தமிழ் இலக்கியத்தில் பிரம்மாண்டங்களையும் புனைவுகளையும் படைத்தவர்கள் ஏராளம் உண்டு. அவர்களை வாசிக்கப் பழகினாலே இங்கு கோலம் போடுகின்ற போலிக்களைப் புறந்தள்ளலாம்.

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்

$
0
0

saravanan

 

‘மெய்யறிதல் என்பது ஒரு திரிபுநிலை’ என்ற சொல்லை எப்போதோ என் குறிப்பேடு ஒன்றில் எழுதிவைத்திருந்தேன். பழையகால தியானக்குறிப்புகளை எடுத்துப்பார்த்தபோது அந்தவரி கண்ணில் அறைந்தது. அதை ஏன் எழுதினேன், எங்கிருந்து பெற்றேன் என நினைவிருக்கவில்லை. ஆனால் சிலநாட்கள் அந்த வரி உடனிருந்து உழற்றிக்கொண்டே இருந்தது.

 

பின்னர் அவ்வரியை என் அனுபவங்களினூடாக ஆராயத்தொடங்கினேன். நான் துறவுக்குநிகராக அலைந்த நாட்களில் பார்த்தவர்கள் ஒருபக்கம் அனைத்தையும் விட்டு வந்தவர்கள், எவ்வகையிலோ மெய்மையை தொட்டவர்கள். அன்றேல் அதைநோக்கி எழுந்தவர்கள். மறுபக்கம் திரிபடைந்தவர்களும்கூட. துறவியையும் குற்றவாளியையும் உளநோயாளியையும் பிரித்தறிதல் மிகக்கடினம். மெய்த்தேடல் அவர்களை திரிபடையச்செய்தது என்றும், இவ்வுலகிலிருந்து அவர்களை விலக்கியது என்றும் அன்று எண்ணிக்கொண்டிருந்தேன். திரிபுகளால் இவ்வுலகிலிருந்து அகன்றதே அவர்களை அங்கே கொண்டுசென்றது என்று பின்னர் எண்ணிக்கொண்டேன். இரண்டுமே சரிதான்.

 

அன்றாடத்தின் அடுக்குத்தொடரான இவ்வாழ்வில் அதை அறிவது என்பதற்கே இடமில்லை. அறிவதற்குரிய விலக்கத்தை வாழ்க்கை அளிப்பதில்லை. விலக்கம் வந்தபின்னர் இயல்பாக வாழ்வது அமைவதுமில்லை. அவ்விலக்கம் சிலருக்கு அவர்களின் பிறப்பியல்பாலேயே அமைகிறது. பேரழகர்கள் விலகித்திரிபடைவதுண்டு. பெருங்குரூபிகளும் அவ்வாறு ஆவதுண்டு. எதிர்பாராத பெரிய அடிகள், உலுக்கும் தற்செயல்கள், உண்டுசெரிக்கவே முடியாத ஒவ்வாமைகள், துரத்தும் குற்றவுணர்வுகள் வழியாக திரிபடைந்தவர்கள் உண்டு. அவர்கள் முலைசுவைக்கச் செல்கையில் அன்னையால் உதைத்துவிரட்டப்பட்ட குழந்தைகள். அவர்களிலிருந்துதான் கடுங்கசப்பான அச்செடி முளைக்கிறது. மலரழகும் கனிச்சுவையும் கொண்டு அது முழுமைபெற மீண்டும் ஒரு நீண்ட பயணம் தேவையாகிறது.

 

திரிபிலிருந்து எழும் தேடலின் கதை சரவணன் சந்திரனின் சுபிட்சமுருகன். இருவகையில் இக்கதை இதுவரை அவர் எழுதிய படைப்புகள் அனைத்திலும் இருந்து வேறுபட்டு மேலெழுந்திருக்கிறது. அவருடைய ஐந்துமுதலைகளின் கதை, ரோலக்ஸ் வாட்ச், அஜ்வா போன்ற நாவல்கள் நேரடியான கதைசொல்லல், விவரணைகள் இல்லாத மொழிநடை, அன்றாடத்தின் வியப்புகளையும் புதிர்களையும் மட்டுமே நாடிச்செல்லும் தன்மை ஆகியவற்றாலானவை. அவ்வகையில் வாசிப்பார்வத்தை ஊட்டுபவை. கேளிக்கை எழுத்தின் அனைத்து இயல்புகளுடன் இலக்கியத்தின் எல்லையைக் கடந்து வந்தவை.

 

மாறாக சுபிட்ச முருகன் ஆழ்ந்த கொந்தளிப்பும் கண்டடைதலின் பரவசமும் கொண்ட ஆக்கம். ஐயமே இன்றி அவருடைய சிறந்த படைப்பு, தமிழின் முக்கியமான இலக்கியவெற்றிகளில் ஒன்று. அமைப்பு உள்ளடக்கம் என பலவகையிலும் அசோகமித்திரனின் மானசரோவர் என்னும் நாவலுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கது இது

.

சுபிட்சமுருகனில் சரவணன் சந்திரன் நாவலுக்கு இன்றியமையாத படிமங்களினூடாகச் செல்கிறார். செயற்கையாக உருவாக்கப்படாது இயல்பாகவே படிப்படியாக விரியும் மையப்படிமம். நாவல் தொடங்குவதே மஞ்சள்மின்ன எழுந்து நின்றிருக்கும் ராஜநாகத்தில். மஞ்சள்மேல் பித்துகொண்டவளின் முகம். மஞ்சள்முகம். சொல்பொறுக்காது பொசுங்கியவள். முகம் மட்டும் கருகவில்லை. கரிய எரிந்த தேக்குக் கட்டையொன்றின் உச்சியில் மரப்பாச்சியின் மஞ்சள் பூத்த முகத்தைச் செதுக்கியிருந்த மாதிரிக் கிடந்தது உடல்” என ஒற்றைவரியில் கடந்துசெல்லும் குரூரமான ஒரு தருணம்.

 

பாம்புகளையே உணவாகக்கொண்டு வாழும் ராஜநாகம் எப்போதும் அவனுக்குப்பின்னால் உள்ளது. இறுதியில் விரியன்களை விழுங்கிப் பலிகொண்டு அடங்குகிறது. இந்நாவல் இதன் சுருக்கமானச் சித்தரிப்பால் சொல்லாமல் விட்ட அனைத்தையும் வாசகன் முழுமைசெய்துகொள்வது இப்படிமத்தின் நுண்மையான பரிணாமத்தால்தான். இந்நாவல் சரவணன் சந்திரனின் பிறநாவல்கள் எதிலுமில்லாத அளவுக்கு உளக்கொந்தளிப்புகளை கனவென்றும் நினைவோட்டமென்றும் சொல்லிச்செல்கிறது. அவையனைத்தும் இந்த மையப்படிமத்தை மேலும் மேலும் பெருக்குகின்றன. தன்னைத் தான் ஊதிப்பெருக்கி எழுந்து நின்றிருக்கிறது ராஜநாகம்

 

பிறிதொன்று, இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச்சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின்மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது. அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குவதே புனைவின் கலை. இது வாழ்க்கையின் முடிச்சுகளைப் பேசும் படைப்பு மட்டுமல்ல, அப்பால் சென்று ஒட்டுமொத்த வினாவில் தலையை ஓங்கி அறைந்துகொள்வதும்கூட. எப்போதும் நான் புனைவில் எதிர்பார்க்கும் கூறு இது.

 

கதிரென விளைவது மண்ணில் உப்பென இருக்கிறது என்பார்கள். ஒரு தனிமனிதனில் அவன் ஊழ் என்று குவிவது தலைமுறை தலைமுறையாக உறுத்து வந்து சேர்கிறது. குலமூதாதையரில் ஒருவரில் தோன்றிய கூடாக்காமம் அவரில் வஞ்சமாக எழுந்தது. கசப்புகளாக, ஐயங்களாக, வன்மங்களாக உருமாறியது. இறப்புகளும் இழப்புகளுமாக தன்னைப் பெருக்கிக்கொண்டது. அக்குடியைச் சூறையாடி அவனில் இனி என்ன என்று வந்து நின்றிருக்கிறது. அவனை மோதிச் சிதறடித்து பிறிதொருவனாக ஆக்குகிறது.

 

குற்றவுணர்வின் உச்சம். அது தனியொருவனின் குற்றவுணர்ச்சி அல்ல, ஒரு குலத்தின், தலைமுறை அடுக்குகளின் குற்றவுணர்ச்சி. அவனில் அது உடற்செயலின்மையாக வெளிப்படுகிறது. நேரடியாகப் பார்த்தால் குற்றவுணர்ச்சியால் உடல்தளர்வது என விளக்கலாம்தான். ஆனால் அது குறியீடென மேலும் பொருள்பெறுகிறது. மிக நுண்மையான ஒன்றின் அழிவு. உடலை உள்ளம் கைவிடுவது அது. உடல் வெறும் உடல்மட்டுமேயாகி நின்று திகைக்கிறது. வெறும் உடலென்கையில் எத்தனை அபத்தமான ஒரு பிண்டம் தான் என அறிந்து பதைபதைக்கிறது

 

அதைவிட காமம் என்பது மிகமிக ஆழமாக பிறிதொருவருடன் உறவு கொள்ளும் ஆற்றல் அல்லவா? அதை இழந்தவன் அடையும் தனிமையைப்போல் பிறிதொன்று உண்டா? அனைத்துவாயில்களும் சுவரென்று ஆகி மூடிக்கொள்ள உள்ளே சிக்கிக் கொண்டவன் அல்லவா அவன்? நினைவுகளை மீட்டி அவன் தன் உடலை வெளியே இருந்து திறந்துகொள்ள முயல்கிறான். கனவுகளைக்கொண்டு உள்ளே இருந்து உடைத்தெழ முயல்கிறான். தொடர்புறுவதற்கு அவன் கொள்ளும் அத்தவிப்பினால்தானே பெண்ணின் தொடுகைக்கு, கூந்தல் மணத்துக்கு அவன் அலைவது. உடல்திறந்து வெளியேற உயிரும் உடலும் கொள்ளும் தத்தளிப்பு அது. அனைத்துச் சுவர்களையும் உள்ளிருந்து முட்டிமுட்டி தலையால் அறைந்து ஓசையின்றி கூச்சலிடுகிறது.

 

அந்தத் திரிபின் உக்கிரமான சித்திரத்தை விரைவான சொற்களில், சுருக்கமான விவரணைகளினூடாகச் சொல்லிவிட்டதென்பதனால்தான் சுபிட்சமுருகன் ஓர் இலக்கியப்படைப்பாக மாறுகிறது. அந்தப் பெருந்துன்பம் வழியாகக் கடந்துசென்று கனிகிறது இப்பயணம். கனியாகும் மலர் ஒருபகுதியை அழுகி உதிர்த்துவிடுகிறது. எத்தனை இடங்களில் அடிபட்டு சிதைந்துச் சிதைந்து எஞ்சுகிறது அவன் அகம் என்று பார்க்கையில் அவன் வாங்கும் அந்த அடிகளனைத்தும் ஒரு தியானத்தின் படிநிலைகளோ என எண்ணத் தோன்றுகிறது. சிலர் உள்ளே அவ்வடிகளை வாங்கக்கூடும். அவன் தசைகளிலும் எலும்புகளிலும் பெற்றுக்கொள்கிறான்

supi

விரிவாக எழுந்துவரக்கூடும் காட்சிகளையும் ஒற்றைவரியாகச் சொல்லிச் செல்வது சரவணன் சந்திரனின் புனைவெழுத்தின் வழியாக உள்ளது. .பாடையில் தூக்கிக் கொண்டு போன போது தலையைக் குலுக்கி ஆட்டினாள் அத்தை. “காடு சேர மாட்டேங்குறா” என தலையைக் கயிற்றை வைத்துக் கட்டினார்கள் – என நினைவிலிருந்து எழும் ஒரு காட்சிக்கீற்று. உடையப்பன் ஓங்கிக் குரலெடுத்து குத்த வைத்து அழுதான். “எல்லா பயகல்கிட்டயும் அடிவாங்குற இந்தப் பொழப்பு எனக்கு பிடிக்கலையே. ஆஞ்சநேயா என்னைத் தொரத்தி விட்டுருப்பா. நான் என்ன விரும்பியா செய்றேன்” என அகம் வெளிப்படும் ஒரு தருணம். இவற்றினூடாக எளிதாக ஒழுகிச்சென்று நாம் சேரும் ஓரிடமே இக்கதையின் ஆழம்.

 

அரிதாகவேனும் அபத்தமும் அங்கதமும் வெளிப்படும் தருணங்களும் இந்நூலில் உண்டு. இயலாதுபோன துயரின் உச்சிநின்று தொலைக்காட்சிச் செய்திவாசிப்பாளரான தன் இணையிடம் “இடுப்பில் புண்ணோடு வந்து படுத்துக் கொண்டு தத்துவம் பேசுகிறார். உடன் இருப்பவர்களையும் பயத்தில் ஆழ்த்துகிறார். நாளை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன” என்று செய்திவாசிக்கச் சொல்பவன் தன்னைத்தானே நோக்கி எள்ளிச்சிரிக்கும் தருணம் ஓர் உதாரணம்

 

எப்பிடிப் பொத்தி வச்சாலும் அவ வந்து கொத்திருவா” என்றவரியிலிருந்து இந்நாவலை நான் மறுதொகுப்பு செய்யத் தொடங்கினேன். ஒரு தொடுகை. கருவிலிருக்கும் குழந்தையை வந்து தொடும் புறவுலகு போல. அது ஓர் அழைப்பு. ஏவாளை லூசிஃபர் என. தாந்தேயை ஃபியாட்ரிஸ் என. இருண்டபாதைகளினூடாக அழைத்துச் செல்கிறது. விழுந்து எழுந்து புண்பட்டு சீழ்கொண்டு கண்ணீரும் கதறலுமாக ஒரு நீண்ட பயணம்.  ’வட்டத்தின் ஓரமாகத் தவழ்வதைத் தவிர வேறு எதுவும் அப்போது எனக்கு விதிக்கப்படவில்லை” என்னும் பெருந்தவிப்பு.

 

மறுபிறப்பு என்பது மீண்டும் ஒரு கருப்புகுதலுக்குப் பின்னர், மீண்டுமொரு பேற்றுநோவுக்குப்பின்னரே இயல்வது. ’வானில் சூல் கொண்டிருந்த கரும் பானை வெடித்துச் சிதறியது. மின்னல் வெட்டிய வானம் வெள்ளை வேட்டி போல ஒளிப் பிரவாகமானது. ஒளியே மூலம். தனிப் பெரும் கருணை. எதுவாக? மழையாக இருந்தேன் அப்போது’ என நிறைவடைகையில் வட்டச்சுழல்பாதை மையத்தை அடைந்துவிட்டிருக்கிறது. அதன் விசை என்பது மையத்தை அடைவதற்கானதுதான்

 

ஜெயமோகன்

 

 சரவணன் சந்திரனின் சுபிட்சமுருகன் நாவலுக்கு எழுதிய முன்னுரை

 

சுபிட்ச முருகன் வாங்க

 

https://www.commonfolks.in/books/d/subitcha-murugan

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16834 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>