வெண்முரசு நூல்களுக்கு கிண்டில் சிறப்புச் சலுகை விலையை அறிவித்திருக்கிறது. [பார்க்க அமேசான் பக்கம்] ஆர்வமுள்ள நண்பர்கள் வாங்கலாம்
ஜெ
வெண்முரசு நூல்களுக்கு கிண்டில் சிறப்புச் சலுகை விலையை அறிவித்திருக்கிறது. [பார்க்க அமேசான் பக்கம்] ஆர்வமுள்ள நண்பர்கள் வாங்கலாம்
ஜெ
தமிழ்நாடகத்துறையிலும் நாட்டாரியலிலும் அழுத்தமான பங்களிப்பை அளித்தவரும் சிறுகதையாசிரியருமான ந.முத்துசாமி இன்று காலமானார். நீர்மை என்னும் அவருடைய சிறுகதைத் தொகுதி முக்கியமானது. நீர்மை, செம்பொனார்கோயில் போவது எப்படி போன்ற கதைகள் தமிழின் சிறந்த கதைகளின் பட்டியலில் வருபவை
ந.முத்துசாமிக்கு அஞ்சலி
பாண்டவப் படையின் நடுவே பாஞ்சால அக்ஷௌகிணியின் ஏழாவது புரவிப்படையின் பரிவீரனாகிய பீலன் அனிலையெனும் பெரும்புரவியின் மீது அமர்ந்திருந்தான். வலக்கையில் நீண்ட குத்துவேலை தண்டை நிலத்தூன்றிப் பற்றி இடக்கையால் கடிவாளத்தை தளர்வாகப் பிடித்து சேணத்தில் கால்களை நுழைத்து உடல் நிமிர்த்தி நீள்நோக்கு செலுத்தி அசையாச் சிலையென காத்திருந்தான். அவனுக்கு முன்னால் நான்கு அடுக்குகளுக்கு அப்பால் படைகளின் பொருதுமுகத்தில் இரு எடைமிக்க இரும்புத்தகடுகள் உரசிக்கொள்வதுபோல பேரோசையும் அனல்பொறிகளென அம்புகளும் எழுந்துகொண்டிருந்தன.
ஆடியை நோக்கும் ஆடியிலென இருபுறமும் புரவிகளின் நேர்நிரை விழி தொடும் எல்லை வரை அகன்று சென்றது. அவன் அந்த எல்லையின்மையை உளம்தவிர்த்து தன் படைப்பிரிவை மட்டும் எண்ணத்தில் நிறுத்தினான். கங்கைக்கரையில் நீண்ட கொடிக்கயிற்றில் புலத்தியர் உலரவிட்ட ஆடைகள்போல அவை உள்ளதாக எண்ணிக்கொண்டான். புரவிகளின் வால்கள் சுழன்றுகொண்டே இருந்தன. அவை உடல் எடைமாற்றியும் பொறுமையிழந்தும் அசைந்தன. அவற்றின் கவசங்களும் மணிகளும் உரசும் ஒலிகளுடன் படைக்கல ஒலிகளும் இணைந்து சாலையில் வண்டிகள் பெருகிச்செல்லும் ஓசை என கேட்டுக்கொண்டிருந்தன.
அப்புரவிகள் அனைத்திலும் அனிலையே உயரமானது. எடையும் விசையும் கொண்டது. ஆகவே தேர்ந்த பரிவீரனாகிய பீலனுக்கு அது அளிக்கப்பட்டது. அவன் அதைப்பற்றி பெருமிதம் கொண்டிருந்தான். எப்போதும் முதல்நிரையில் தானும் புரவியும் நிறுத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அவனுடைய படைப்பிரிவு சீராக அணிவகுத்துச் செல்கையில் நோக்கும் படைத்தலைவர்களின் விழிகள் அனிலையைக் கண்டு விரிவதை அவன் ஒருபோதும் தவறவிடுவதில்லை. அப்போது அவன் உடல் மேலும் நிமிரும். அவர்களில் பலர் பின்னர் கொட்டிலுக்கு வந்து அனிலையை பார்த்துச் சென்றதுண்டு. துருபதரே இருமுறை கொட்டிலுக்கு வந்து அதை தொட்டு வருடிவிட்டுச் சென்றார்.
பாஞ்சாலப் படை உபப்பிலாவ்யத்திற்கு வந்த பின்னர் நகுலன் மாதமிருமுறையேனும் அனிலையை நோக்க வருவான். முதல்நாள் நகுலன் அணுகியதுமே நெடுநாட்களாக அறிந்த ஒருவனை நோக்கி உளம்பாய்வதுபோல் அனிலை நிலையழிந்து கட்டுக்கயிற்றை இழுத்து உடல்திருப்பி மெய்விதிர்த்து கனைப்போசை எழுப்பியது. அவன் வந்து அதன் பிடரியில் கைவைத்ததும் திரும்பி தன் பெருந்தலையை அவன் தோள்மேல் வைத்து அழுத்தி அவன் மணம் முகர்ந்து மூச்செறிந்தது. ஒவ்வொரு முறையும் அவன் வருவதற்கு முன்னதாகவே, அன்று காலையிலேயே அது அவனுக்காக உளமொருங்கி நிலையழிந்து குளம்புமாற்றி மிதித்தும் தலைதாழ்த்தி மூச்சுசீறியும் பிடரிகுலைத்தும் காத்திருக்கும். நகுலன் வரும் நாள் அதற்குத் தெரியும் என பீலன் எண்ணிக்கொண்டதுண்டு. ஆனால் நகுலன் சீரான நாளிடையில் வருவதில்லை என்பதை பின்னர் நோக்கியபோது புரவி எப்படி அதை அறிகிறது என அவன் வியப்புறுவான்.
அவன் தந்தை அவனிடம் “புரவி அறிவனவற்றை மானுடர் அறியவியலாது. விலங்குகள் கொள்ளும் அறிவை மானுடரால் விளக்கவே இயலாது. அவை பேரன்பால் மெய்யுணர்கின்றன” என்றார். அனிலையை அவன் தொலைவிலிருந்து நோக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு முறையும் அந்தத் திகைப்பை அடைவான். அதற்குள் வாழ்வது எது? வலியும் நோயும் பசியும் இறப்பும் அதற்குமுண்டு. ஆனால் துயரில்லை, கவலையுமில்லை. மானுடரை விட தெய்வங்களுக்கு உகந்த ஊர்தியாக அது இருப்பது அதனால்தான் போலும். மானுடரில் நோக்கிலேயே அடிமையும் மிடிமையும் கொண்ட புல்லர்களை அவன் கண்டதுண்டு. புரவிகளில் நோயுற்றும் உணவின்றியும் நொய்ந்தவற்றையே கண்டிருக்கிறான். நிமிர்விலாத புரவியென ஏதுமில்லை. கால்மடித்து ஒருக்களித்துப் படுத்து தலைநிமிர்ந்து இளவெயில் காய்ந்து விழிமூடி அசைபோட்டுக்கொண்டிருக்கும் புரவியின் அழகு அவனை விழிநீர் கசிய வைப்பதுண்டு. பேரரசர்கள் அரியணையில் அமர்கையில் மட்டுமே எழும் நிமிர்வு அது.
புரவிச்சாலையில் பிறந்து வளர்ந்தவன் அவன். அவன் தந்தை சுபாங்கர் தேர்ந்த பரிமருத்துவர். அவர்களின் குலமே பரிமருத்துவத்தில் ஈடுபட்டு தலைமுறைகளாக அவ்வறிதலைத் திரட்டி கையளித்து சேர்த்தது. அவர்கள் உத்கலத்திலிருந்து பாஞ்சாலத்திற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள். முன்பு சோனக நாட்டிலிருந்து புரவிகள் உத்கலத்தின் துறைமுகங்களில் வந்திறங்குகையில் அவற்றை வாங்கி நெடுந்தொலைவிற்கு கொண்டு சென்று பிறநாடுகளில் விற்கும் தொழிலை செய்துவந்ததனர் பலர். அவன் குலம் சோனக மருத்துவர்களிலிருந்து அவர்கள் பரிமருத்துவத்தை கற்றுக்கொண்டது. வணிகர்கள் ஊர்திரும்பிவிட்ட கார்காலத்தில் மருத்துவர்களுக்கான தேவை மிகுந்திருந்தது.
நான்கு கால்கள் கொண்டவை எனினும் யானையும் பசுவும் எருமையும் அத்திரியும் கழுதையும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. அவை அனைத்திலிருந்தும் வேறுபட்டது புரவி. பிற விலங்குகளின் தசைகள் முரசில் இழுத்துக் கட்டப்பட்ட தோல் போன்றவை. புரவியின் தசை வில்லில் முறுகி நின்றிருக்கும் நாண். பிற விலங்குகளை நிற்கவைத்தோ அமரவைத்தோ படுக்கவைத்தோ மருத்துவம் பார்க்கலாம். புரவி நின்றிருக்கையிலும் விரைந்தோடிக்கொண்டிருப்பதென்றே அதன் உடல் அமைந்திருக்கும். விரைந்து புண் ஆறும். ஆறாப் புண் உயிர்குடித்துச் செல்லும். புண்பட்ட, நோயுற்ற புரவி அதுவே தான் உயிர்வாழவேண்டுமென்று எண்ணவேண்டும். அப்புண்ணை குளிர்விக்க வேண்டுமென்று அதனுள் வாழும் தெய்வங்கள் கருதவேண்டும்.
புரவி மானுடரைப்போலவே எண்ணங்களாலானது. ஐயமும் தயக்கமும் ஆறாச் சினமும் கொண்டது. ஆனால் வஞ்சமற்றது, ஆகவே துயரற்றது. மறதி இல்லாதது, ஆகவே கடந்தகாலமற்றது. “புரவி பேணுபவன் ஒவ்வொரு கணமும் உணரவேண்டியது ஒன்றுண்டு, தன்னைவிட உடலால் உள்ளத்தால் உள்வாழ்வதனால் பலமடங்கு மேம்பட்ட ஒன்றுடன் அவன் உரையாடிக்கொண்டிருக்கிறான். மண்ணில் பெருகி நிறைந்துள்ள உயிர்க்குலங்கள் பிரம்மத்தின் வடிவங்கள். எண்ணிலாக் குணங்கள் நிறைந்த பிரம்மத்தின் ஒவ்வொரு இயல்பும் ஓர் உயிர். மானுடன் பிரம்மத்தின் விழைவின் ஊன்வடிவு. புரவி அதன் விசையின் உயிர் கொண்ட உடல். புரவி வடிவிலேயே காற்று புவியில் தன்னை உடலென நிகழ்த்திப்பார்க்கிறது. எண்மூன்று மாருதர்களும் புரவியுடலில் குடிகொண்டுள்ளனர் என்றறிக!” என்றார் தந்தை.
புரவி மருத்துவன் காற்றுக்கு மருந்திடுபவன். புரவி விலங்குகளில் இளந்தளிர். மலர்களில் அது வைரம். புரவி மீதுள்ள பற்று அவன் குடியினரை பிற அனைத்திலிருந்தும் விலக்கியது. பித்துகொண்டவர்களாக அவர்கள் புரவியைப்பற்றி மட்டுமே பேசினர். புரவிகளுடன் வாழ்ந்தனர். புரவிகளை கனவு கண்டனர். அவர்களின் தெய்வங்களும் புரவி வடிவிலேயே அமைந்திருந்தன. இருபத்துநான்கு புரவி வடிவ மாருதர்களுக்கு மேல் அமைந்த ஹயக்ரீவன் அவர்களின் ஆலயங்களில் அமர்ந்து அருள்புரிந்தான். அவர்களின் குடியில் புரவிகளின் பெயரே மைந்தருக்கும் இடப்பட்டது. மண்மறைந்த புரவிகள் மைந்தராகவும் புரவிக்குருளைகளாகவும் அவர்களிடையே மீண்டும் திகழ்ந்தன.
ஆறு தலைமுறைக்கு முன் அவருடைய மூதாதை ஒருவர் புண்பட்ட புரவியின் ஊன் திறந்த வாயை தைத்துக்கொண்டிருந்தார். புண்ணை தைப்பதற்கு முன் அப்புரவியிடம் அதை அறிவித்து ஒப்புதல் பெற்றாகவேண்டும். ஏழு முறை புண்ணைத் தொட்டு ஊசியையும் நூலையும் அதன் முன் காட்டி அதன் விழியசைவை கண்டபின்னரே முதல் கண்ணியை குத்திச் செலுத்தி எடுத்து முடிச்சிடவேண்டும். அன்று அந்த மூதாதை களைத்திருந்தார். பொழுது தொடங்கியது முதல் அவர் மருந்திட்டு தைக்கும் நூறாவது புண் அது. அப்பால் கலிங்கத்திற்கும் உத்கலத்திற்கும் நடுவே அம்பொழியா பெரும்போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. புரவிகள் புண்பட்டு வந்துகொண்டே இருந்தன.
தன் உதவியாளனிடம் சினத்துடன் ஏதோ கூறிய பின் அருகிருந்த கந்தகம் கரைத்த நீருக்குள்ளிருந்து நூல் கோத்த ஊசியை எடுத்து புரவியின் முன் தோளிலிருந்த ஊன்வாயை இடக்கைவிரலால் சேர்த்துப் பற்றி வலக்கை விரல்களால் ஊசியைக் குத்தி தூக்கினார். சினந்து திரும்பிய புரவி அவர் தோள் தசையைக் கடித்துத் தூக்கி அப்பாலிட்டது. பின்னர் எழுந்து விரைந்தோடி அப்பால் சென்று நின்று நடுங்கியது. மூதாதையின் உதவியாளர்கள் சென்று அவரைத் தூக்கி எடுத்தனர். புரவியின் கடிபட்டு தசைகிழிந்து குருதி கொட்டிக்கொண்டிருந்தது. படிக்காரம் கரைத்த நீரால் அதை மும்முறை கழுவி, கந்தகப் பிசினால் நீவி மெழுகுத் துணியால் கட்டிட்டு அவரை மெல்ல பற்றி இல்லத்திற்கு கொண்டு சென்றனர்.
அப்புரவி தனக்குரிய மரத்தை கண்டடைந்து அதில் உடல் சாய்த்து நின்று முன்வலக்கால் தூக்கி விழிமூடி தலை தாழ்த்தியது. அதன் தசைகள் ஒவ்வொன்றாக நாண்தளர்ந்தன. மூன்று பகல் அவ்வாறே அது நின்றிருந்தது. புண்ணிலிருந்து குருதி ஒழுகி மறைய, உடல் நடுங்கி சோர்ந்து, பெருந்தலை எடைமிகுந்து மண்தாழ்ந்து, நீரிலாதுலர்ந்த கருமூக்கு மண்ணில் ஊன்ற, செவிகள் மடிந்து முன் தொங்க, நீர்வடிந்து காய்ந்த விழிகள் அசைவிழந்து வெறிக்க, முன்கால் மடித்து மண்ணில் அமைந்து பக்கவாட்டில் சரிந்து விழுந்து, தோல்பை என வயிறு எழுந்தமைய, புழுதிபறக்க மூச்சிரைத்து, மெல்ல அடங்கி கமுகுப்பூக்குலை வாலைச் சுழற்றி ஓய்ந்தது.
அம்மூன்று நாட்களும் தன் இல்லத்தில் கடும்காய்ச்சலில் உடல்சிவந்து, நினைவழிந்து, நாவில் பொருளிலாச் சொற்கள் எழ, அவ்வப்போது வலிப்பில் கைகால் இழுத்துக்கொள்ள, இறப்பு நோக்கி சென்றுகொண்டிருந்தார் மூதாதை. புரவி இறந்த மூன்றாவது நாழிகையில் அவரும் உயிர்துறந்தார். அப்புரவியுடன் சேர்த்து அவரையும் மண்ணில் புதைத்தனர். நாற்பத்தியோராவது நாள் நிமித்திகன் கல்பரப்பி கோள்நோக்கி கணித்து அவர் செய்த பிழையென்னவென்று உணர்த்தினான். அவர் குடியை குலம் விலக்கி வைத்தது. மூன்றாண்டுகள் பிறிதொரு நிலத்திற்குச் சென்று அங்கே பரிபேணி பிழைநிகர் செய்து மீளவேண்டுமென்று ஆணையிட்டது.
இறந்த மூதாதையின் மைந்தர் கபிலர் தன் மூன்று மனையாட்டிகளுடனும் பன்னிரு மைந்தருடனும் உத்கலத்திலிருந்து கிளம்பி பாஞ்சாலத்திற்கு வந்தார். அன்று பாஞ்சாலம் பயிலா பழங்குடிகள் ஒருவரோடொருவர் பூசலிட்டுப் பரவிய மலை நிலமாக இருந்தது. ஆண்டுக்கு இருமுறை ஏழுமடங்கு பெருகும் ஐந்து நதிகளின் சதுப்பில் அவர்கள் கோதுமையும் கரும்பும் பயிரிட்டனர். நதிகளினூடாக வந்துசேரும் பொருட்களை மலை மடம்புகளுக்குள் அமைந்த சந்தைகளுக்கு கொண்டுசெல்லும்பொருட்டு அத்திரிகளை பேணினார்கள். சுழிப் பிழையாலும், காலொருமை இன்மையாலும் போருக்கும் பயணத்திற்கும் ஒவ்வாதவை என தவிர்க்கப்பட்ட புரவிகளை வணிகர்கள் படகுகளில் ஏற்றிக்கொண்டு வந்து பாஞ்சாலப் பழங்குடிகளுக்கு விற்றனர். அவை பிறிதொரு வகை அத்திரிகள் என்றே அக்குடிகள் எண்ணின. அத்திரிகளை நிலமும் நீரும் காற்றும் ஒளியுமே பேணின.
அங்கு வந்து சேர்ந்த கபிலர் இருபுறமும் சுமைதூக்கியபடி மலைவிளிம்புகளினூடாக கொடிபோல் சுற்றிப்படர்ந்திருந்த சிறுபாதைகளில் சென்றுகொண்டிருந்த புரவிகளை கண்டார். அவற்றில் பல புரவிகள் நோயுற்றிருந்தன. முறையாக பேணப்படாமையால் உடற்குறைகள் பெருக வலிகொண்டு துயருற்றிருந்தன. அவற்றை பேணுவதெப்படி என்று அவர் அம்மக்களுக்கு கற்பித்தார். “புரவி வானுக்குரியது. வேள்விக் களத்திலெழும் அனலுக்கு நிகரானது புரவியின் உடல். அதை அவியிட்டு, நுண்சொல் உரைத்து வளர்க்கவேண்டும். மண்ணுக்கு கைப்பிடி விதையை அளியுங்கள், களஞ்சியம் நிறைய அன்னத்தை அது அளிக்கும். அனலுக்கு அவியளியுங்கள், மண் குளிர்ந்து பெருகும் மழையை அது அளிக்கும். புரவிக்கு உங்கள் அன்பை அளியுங்கள், திசைகளைச் சுருட்டி உங்கள் காலடிகளில் வைக்கும். எதிரிகளுக்கு முன் உங்கள் காவல்தெய்வமென எழுந்து நின்றிருக்கும். புரவியை அறிந்தவர்கள் மண்ணில் எங்கும் தோற்பதில்லை” என்று அவர் கூறினார்.
புரவி பாஞ்சாலத்தில் பெருகலாயிற்று. ஏழு தலைமுறைகள் கடந்தபோது பாஞ்சாலம் ஆற்றல்மிக்க ஐந்து குடிகளின் நிலமாக மாறியது. சூழ்ந்திருந்த நாடுகள் அனைத்தும் அவர்களை அஞ்சின. நகரங்களும் கோட்டைகளும் சாலைகளும் சந்தைகளும் என அந்நாடு செழித்தது. அதன் நடுவே காம்பில்யம் அருமணி ஆரத்தில் வைரமென பொலிந்தது. அதன்பின் அவர்கள் அங்கிருந்து திரும்பிச்செல்லவில்லை. பாஞ்சால அரசர்களால் பேணப்பட்டு அவர்களின் குலம் பெருகியது. நூற்றெட்டு குடிகளாகி நாடெங்கும் பரவியது. கபிலகுலத்தவர் ஒருவரேனும் ஒரு நகரியில் இருந்தாகவேண்டும் என முறையிருந்தது.
அவன் தந்தையின் தந்தை ஊர்வரர் பாஞ்சாலத்தின் தென்னிலத்தில் புண்யகுண்டம் என்னும் ஊரில் குடியேறி அங்கே நிலைகொண்டார். அவன் தன் தந்தைக்கு எட்டாவது மைந்தன். அவனுக்கு இளமையிலேயே போரில்தான் ஆர்வமிருந்தது. மருத்துவ நூல்கள் உளம்புகவில்லை. புரவித் தொழிலுடன் போர்க்கலையும் பயின்றபின் அவன் வாழ்வு தேடி காம்பில்யத்திற்கு சென்றான். அங்கே அரிய புரவிகள் கொண்ட பெரும்படை ஒன்றிருப்பதை அவன் அறிந்திருந்தான். அவன் அரண்மனையை அடைந்து அரசவைக்குச் சென்று பணிகோரினான். அவனைக் கண்ட முதல்நாளே திருஷ்டத்யும்னன் “பெரும்புரவி ஒன்று கொட்டிலில் உள்ளது. தனக்கான வழிகள் கொண்டது. அதை அடக்கி ஆளும்பொருட்டு ஒரு பரிவலரை தேடிக்கொண்டிருந்தோம். நீர் அமைந்தீர்” என்றான்.
அவனுடைய ஆணையைப் பெற்று பீலன் கொட்டிலுக்குச் சென்றான். கொட்டில் காவலனாகிய பப்ரு அவனிடம் “நீரா? இளையோனாக இருக்கிறீர். அனிலை சற்று கட்டற்றது” என்றார். அவன் “நான் உத்கலத்தின் கபிலகுலத்தவன்” என்றான். பப்ரு ஒருகணம் வெறித்து நோக்கியபின் “வருக, கபிலரே” என எழுந்தார். அவனுடைய மணத்தை அறிந்ததும் அனிலை மூச்சுசீறி பெரிய குளம்புகளை கொட்டிலின் கற்தரையில் முட்டியது. அவன் அதை அணுகி சற்று அப்பால் நின்று தன் உள்ளத்தால் அதனுடன் உரையாடலானான். “என் அன்னையே, நான் எளியவன். உன்னை பேணும்பொருட்டு வந்துள்ள அடியவன். உன் காலடிகளில் என் வாழ்க்கையை நிறைவுசெய்ய விழைபவன். எனக்கு அருள்க! என்னை உன்னருகே அணுகவிடுக!”
மீண்டும் மீண்டும் உதடுகள் மெல்ல அசைய அதை சொன்னபடி அருகே சென்று அதன் கழுத்தில் தொட்டான். தொடப்போன இடம் முன்னரே விதிர்த்தது. அனிலை திரும்பி அவன் தலைக்குமேல் தன் தலையை தூக்க அதன் எச்சில் வழிந்து அவன் மேல் விழுந்தது. அவன் முகம் மலர்ந்து அண்ணாந்து நோக்கி “அன்னையே, வணங்குகிறேன்” என்றான். பப்ருவிடம் “அன்னை என்னை ஏற்றுக்கொண்டுவிட்டாள்” என்றான்.
அனிலை நான்கு அகவை வரை குழவி என்றும் கன்னி என்றும் கொட்டிலில் நின்றாள். இனிய விளையாட்டுத் தோழியாகவும் விரைவுக்கு மேல் விரைவெடுக்கும் விசைகொண்டவளாகவும் பரிவலர் அவளை எண்ணியிருந்தனர். கருவுறுவதற்காக அவளை பொலிக்குதிரைகளை நோக்கி கொண்டுசெல்லத் தொடங்கியபோதுதான் அவள் இயல்பு மாறத்தொடங்கியது. முதல் முறையாக அவளை பொலிநிலைக்கு கொண்டுசென்ற ஏவலர் அதன் வாயிலிலேயே முன்காலை அழுந்த ஊன்றி, மூக்குத்துளைகள் விரிய, விழிகளை உருட்டி நின்றுவிட்டதை கண்டனர். அவள் உடல் முழுக்க தோல் சிலிர்த்துக்கொண்டிருந்தது.
அவர்கள் மெல்ல கழுத்திலும் விலாவிலும் தட்டி “செல்க! செல்க! என் அரசியல்லவா? என் இனிய மகளல்லவா?” என்று நற்சொல் உரைத்தனர். துருத்தியென மூச்சுசீறி அனிலை மீண்டும் பின் அடி எடுத்து வைத்தாள். “செல்க!” என்று கடிவாளம் பற்றி இழுத்தார் பரிவலரான ருத்ரர். தலையால் ஓங்கி அறைந்து அவரைத் தூக்கி அப்பால் வீசி அவர் உதவியாளரை விலாவால் தட்டித் தள்ளிவிட்டு நான்கு குளம்புகளும் நிலத்தில் அறைந்து ஒலி எழுப்ப விரைந்தோடி மூடியிருந்த கொட்டில் வேலியை தாவிக்கடந்து வந்து தன் நிலையை அடைந்து உள்ளே சென்று நின்றிருந்தாள்.
அவர்கள் இருவரும் மூச்சிரைக்க ஓடி வந்தபோது கொட்டில் நிலையில் அவள் காய்ச்சல் கண்டதுபோல் நடுங்கிக்கொண்டிருப்பதை பார்த்தனர். ருத்ரர் அருகே வந்தபோது மூச்சு சீற விழிகளை உருட்டி அவள் திரும்பிப்பார்த்தாள். ருத்ரர் அதிலிருந்த குறிப்பை உணர்ந்து நின்றுவிட்டார். அவர் உதவியாளரையும் தன்னை அணுக அவள் விடவில்லை. கொட்டிலில் இருந்த வேறு இரு உதவியாளர்கள் வந்து அவள் கடிவாளத்தை பற்றிக் கட்டினார்கள். அன்று முழுக்க உணவருந்தாமல் தலை தாழ்த்தி உடல் நடுங்கி அதிர்ந்து மூச்சு சீற அவள் நின்றிருந்தாள்.
மறுநாள் புலரியில் அவள் கடிவாளத்தை அவிழ்த்து வெளியே கொண்டுவந்தபோது முன்னால் கொண்டுவைத்த மென்தவிடும் மாவும் கலந்த நீரை அவள் அருந்தவில்லை. “நோயுற்றிருக்கிறாள். உள்நோயின்றி புரவிகள் உணவு மறுப்பதில்லை” என்றார் கொட்டில் மருத்துவர் சுதலர். அவள் உடலை அவர் எங்கு தொட்டபோதும் அங்கே தோல் விதிர்த்தது. கடிவாளத்தை பற்றித் தாழ்த்தி அவள் வாயின் மணத்தை முகர்ந்து “குடலில் புண் நிறைந்திருப்பதுபோல் மணம் எழுகிறது” என்றார். “ஒரே நாளில் புண் எவ்வாறு எழும்?” என்றார் ருத்ரர். “உளம் கொதித்திருக்கிறாள். என்ன நிகழ்ந்தது?” என்று சுதலர் கேட்டார். அவர்கள் அதை சொன்னபோது “விந்தை! இப்பருவத்தில் புரவிகள் பொலிநிலையின் குருதிமணத்தை அறிந்ததுமே உவகைகொண்டு கனைப்பதையே கண்டுள்ளேன். அவற்றை நாம் உள்ளே கொண்டுசெல்லத் தேவையில்லை. நம்மை அவை இழுத்துச்செல்லும்” என்றார் சுதலர்.
அவளைச் சூழ நோக்கி “நடுக்கம் உள்ளது. அஞ்சியிருக்கிறாள். அஞ்சும்படி எதுவோ நிகழ்ந்துள்ளது” என்றார் சுதலர். ருத்ரர் “என்ன செய்வது? எப்படியும் கருவுற்றாகவேண்டுமே?” என்றார். “பார்ப்போம். இப்போது இவள் உணவுண்ண வேண்டும். இன்னும் ஒருநாள் உணவொழிந்தால் இவள் குடலும் இரைப்பையும் புண்ணாகிவிடும். அப்புண்ணை ஆற்றிய பிறகே உணவு அளிக்க இயலும்” என்றார் சுதலர். “மூங்கில்குழாய் வைத்து உணவை உள்செலுத்தலாமே?” என்றார் ருத்ரர். “தன்னினைவின்றி படுத்திருந்தால் அவ்வாறு செய்யலாம். முழு ஆற்றலுடன் நின்றிருக்கும் புரவிக்கு குழாய் வழியாக உணவுநீரூட்ட இயலாது. ஆனால் ஒன்று தோன்றுகிறது…” என்று சொன்ன மருத்துவர் கொட்டிலில் துள்ளிக்கொண்டிருந்த இரு குதிரை மகவுகளை கயிறு கட்டி இழுத்துகொண்டு வரச்சொன்னார்.
சிறு புரவியான பசலன் ஆர்வத்துடன் அருகே வந்து அனிலையின் கால்களில் தன் முதுகையும் விலாவையும் உரசி அப்பால் சென்றான். அவன் தோழனான ஹரிதன் மேலும் அருகணைந்து அவள் கால்களுக்கிடையில் புகுந்து சிறிய மடியை தன் முகத்தால் முட்டி காம்புகளில் வாய்வைத்தான். கால்களை உதறியபடி பின்னகர்ந்த அனிலை குனிந்து ஹரிதனின் வாலையும் முதுகையும் நக்கத் தொடங்கினாள். “நன்று! நாக்கு அசைந்துவிட்டது. நீரை கொண்டுவையுங்கள்” என்றார் மருத்துவர். மீண்டும் நீரை அருகில் கொண்டுவைத்தபோது அனிலை குனிந்து விழிவரை முகம் முக்கி நீர் அருந்தினாள். நீர் உள்ளே செல்லும் ஒலியை கேட்ட மருத்துவர் “அணைக! உள்ளெழுந்த அனல் முற்றணைக!” என்றார். முகவாய் முள்மயிர்களில் நீர்த்துளிகள் நின்றிருக்க தலைதூக்கி நீள்மூச்செறிந்தாள் அனிலை. தலையை உலுக்கி காதுகளை அடித்துக்கொண்டு மீண்டும் ஹரிதனை நக்கினாள்.
இரு நாட்களுக்குள் முற்றிலும் சீரடைந்து உணவுண்ணத் தொடங்கினாள். அடுத்த கருநிலவு நாளில் மீண்டும் அவளை பொலிநிலைக்கு கூட்டிச்சென்றனர். இம்முறை கொட்டிலிலிருந்து பொலிநிலைக்குச் செல்லும் சிறு பாதையின் திருப்பத்திலேயே அனிலை காலூன்றி நின்றுவிட்டாள். பின்னர் திரும்பி கொட்டில் நோக்கி நடந்தாள். அவளை பற்றிக்கொண்டிருந்த பரிநிலைக்காவலன் கடிவாளத்தைப்பற்றி இழுக்க அவனை கடிவாளத்துடன் மேலே தூக்கி சற்றே சுழற்றி அப்பாலிட்டுவிட்டு கொட்டிலுக்குள் புகுந்துவிட்டாள்.
மீண்டும் மூன்று முறை முயன்ற பின் “இவள் காமஒறுப்பு கொண்டவள் போலும். யாரறிவார், முற்பிறவியில் அருந்தவம் எதுவோ ஆற்றி அது நிறைவடையாது உயிர் துறந்திருக்கக்கூடும்” என்றார் மருத்துவர் சுதலர். அடுத்த கருநிலவு நாளில் உசிநாரத்திலிருந்து வந்திருந்த மருத்துவரான ஜம்பர் “இதை நான் பார்த்துக்கொள்கிறேன். பலமுறை செய்து வென்ற சூழ்ச்சி ஒன்றுள்ளது. அங்கிருப்பவை நூற்றுக்கு மேற்பட்ட பொலிக்குதிரைகள். அவற்றின் விந்து கலந்த மணமும் அவையெழுப்பிய விழைவொலிகளின் தொகையும் அவளை அச்சுறுத்துகின்றன. சில புரவிகள் அவ்வாறு அஞ்சுவதுண்டு. பொலிநிலைக்கு அவளை கொண்டுசெல்ல வேண்டியதில்லை. காட்டுக்குள் பொலிக்குரிய நிலை ஒன்றை அமையுங்கள்” என்றார்.
புரவிநிலைக்கு அப்பால் காட்டுக்குள் பொலிநிலை ஒன்று அமைக்கப்பட்டது. முப்புறமும் எடைமிக்க தடிகளும் மூங்கிலும் வைத்து கட்டப்பட்ட சிறிய அறையில் அனிலையை கொண்டுசென்று கட்டினர். அவள் முன்கால்களுக்குப் பின்னும் கழுத்துக்குப் பின்னாலும் மூங்கில் வைத்து இறுக்கி அசையாது நிறுத்தினர். திரும்பவோ உடலை அசைக்கவோ அவளுக்கு இடமிருக்கவில்லை. இரு பின்னங்கால்களும் மூங்கில் தூணுடன் சேர்த்து கட்டப்பட்டன. என்ன நிகழ்கிறது என்று அறியாமல் முதலில் கட்டப்படுவதற்கு இடங்கொடுத்த அனிலை பின்னர் பதற்றமடைந்தாள். பெரிய குளம்புகளால் தரையை அறைந்தபடி நிலைகுலைந்து துள்ளத்தொடங்கினாள்.
பொலிநிலையிலிருந்து குருதிவிசை நிறைந்த பொலிக்குதிரையாகிய பாவகன் அழைத்து வரப்பட்டான். அனிலையின் பின்புறத்திலிருந்து கோழையை எடுத்து மரவுரி ஒன்றில் நனைத்து பாவகனின் முகத்தருகே தொங்கவிட்டனர். மணம்கொண்டு காமம் எழுந்து உறுமி விழியுருட்டி முன்கால்களால் மண்பறித்து பாவகன் வெறிகொண்டான். அவன் ஆணுறுப்பு இரும்புலக்கையென வெளிவந்தது. அனிலையைவிட இருபிடி உயரமும் கால்பங்கு எடையும் கொண்டிருந்தான். அவனை இழுத்து வந்து அனிலையின் அருகே நிறுத்தியதும் உறுமி உடல் மெய்ப்பு கொண்டு தலைகுலுக்கியபடி அணுகினான்.
தலையைத் தாழ்த்தி விழிகளை உருட்டி அசைவிலாது நின்றாள் அனிலை. மருத்துவர் ஜம்பர் பழுப்புக் கூழாங்கல்போல பற்களைக் காட்டி “நோக்குக! உலகின் இன்சுவைகளில் முதன்மையானது காமம். தெய்வங்களுக்கு உகந்தது. அதன் முதல் கனி சற்று துவர்க்கும். பின்னர் ஒவ்வொரு கனிக்கும் இனிப்பு மிகுந்து செல்லும்” என்றபின் மேலும் நகைத்து “தோலும் கொட்டையும் இனிக்கும் ஒரு பருவமும் வந்துசேரும்” என்றார். பாவகன் அருகே சென்று உரக்க கனைத்தபடி முன்கால்களைத் தூக்கி அனிலையின் பின்தொடை மேல் வைத்து உடலை நெருக்க அனிலை பெருங்குரலில் கனைத்து தன் கழுத்தால் முன்னாலிருந்த மூங்கிலை ஓங்கி அறைந்து உடைத்தாள். மூங்கில் நெரிபடும் ஒலியுடன் திரும்பி இரு கால்களையும் காற்றில் தூக்கி ஓங்கி உதைக்க பாவகன் அறைபட்டு வலியுடன் ஓசையிட்டபடி இருமுறை தள்ளாடி பக்கவாட்டில் விழுந்தான்.
அனிலை மேலும் முன்னகர்ந்து அதே விசையில் உடலை பின்னெடுத்து முழு ஆற்றலாலும் இரு மூங்கில்களை உடைத்தபடி அறையிலிருந்து வெளி வந்தாள். தரையில் விழுந்துகிடந்த பாவகன் முன் கால்களை ஊன்றி எழ முயல ஓங்கி அவனை முட்டி அப்பாலிட்டாள். அடிவயிறு தெரிய, நான்கு கால்களும் காற்றில் உதைத்துக்கொள்ள, மல்லாந்து விழுந்த பாவகனின் மேல் தலையால் முட்டி அவன் கழுத்தைக் கடித்து தூக்கிச் சுழற்றி அப்பாலிட்டாள். பாவகனின் பெருநாளம் உடைந்து கழுத்திலிருந்து கொழுங்குருதி பீறிட்டு அனிலையின் முகத்திலும் கழுத்திலும் வழிந்தது. குழைந்து வாழைத்தண்டுக் குவியலென நிலத்தில் கிடந்த பாவகனை மீண்டும் கடித்துத் தூக்கி இருமுறை உதறினாள் அனிலை.
“இது புரவியல்ல! இது வேங்கை! புரவி இவ்வாறு செய்வதில்லை! புரவியின் இயல்பே இது அல்ல!” என்று கூவியபடி மருத்துவர் ஜம்பர் விரைந்து ஓடி அருகே நின்ற சால மரமொன்றின் கிளைகளைப்பற்றி மேலேறி உச்சிக்கிளையில் இறுகப்பிடித்தபடி அமர்ந்து நடுங்கினார். பிற ஏவலர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். முகமயிர் முட்களிலும் பிடரியிலும் குருதி செம்மணிகள்போல உருண்டு ஓடையென்றாகி வழிய, திமிர்த்த தசைகள் இறுகி நெளிந்தசைய, மெல்ல நடந்து மீண்டும் கொட்டிலுக்கு வந்த அனிலை உறுமி பரிகாவலரை அழைத்தாள். அவர்கள் எவரும் வந்து வாயில் திறக்கத் துணியவில்லை. வாயிலை தலையால் அறைந்துடைத்து உள்ளே நுழைந்தாள். மீண்டும் தன் கொட்டிலை அணுகி அங்கே நின்றுகொண்டாள்.
அனிலையின் பிறவிநூலை கணிக்க பீலனிடம் கோரினர். அவன் அவளின் ஐந்து நற்சுழிகளையும் நாநிறத்தையும் குளம்புகளின் அமைப்பையும் விழிமணிகளின் ஒளியையும் கணித்து “இவள் காமத்தை தொடப்போவதில்லை. புரவிகளில் தெய்வக்கூறுகள் மூன்று உண்டு. திருமகளின் கூறு மட்டுமே கொண்டவள் ஐம்மங்கலங்கள் நிறைந்தவள். தெய்வங்கள் ஊர்வதற்கு உரியவள். திருமகளும் கலைமகளும் கூடிய புரவி முனிவர்களுக்குரியது. திருமகளும் கொற்றவையும் கூடிய புரவி அரசர்களுக்குரியது. திருமகள் கூறோ கலைமகளின் கூறோ சற்றுமின்றி முற்றிலும் கொற்றவையின் கூறு மட்டுமே கொண்ட புரவி பல்லாயிரத்தில் ஒன்று. அவளை எவரும் ஆள இயலாது. அவள் மேல் ஊர்வதும் எளிதல்ல” என்றான்.
“ஆனால் அன்னை பெருங்கனிவு நிறைந்தவள். தன் மகவையென தன்னை ஊர்பவனை கொண்டு செல்பவள். அவன் தேவியை அடியவனென அவளை வழிபடவேண்டும். அவள் காலடியில் அமர்ந்து பணிவிடை செய்யவேண்டும். போர்முனைகளில் களிறுகளும் அவளைக் கண்டு அஞ்சுவதை காண்பீர்கள். இவளுக்கு அனிலை என்று பெயர் சூட்டியவர் நாளும் கோளும் நன்கறிந்த நிமித்திகர். அவர் வாழ்க!” என்றான் பீலன்.
அன்புள்ள ஜெ
வரவிருக்கும் மூன்று படங்களில் நீங்கள் உங்கள் அரசியலைப் பேசியிருப்பதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டிருந்தது. அல்லது அவ்வாறு உங்கள் வாசகர்கள் கருதுவதாக. நீங்கள் உங்கள் அரசியலை அவற்றில் எழுதியிருக்கிறீர்களா என்ன?
சந்திரகுமா
அன்புள்ள சந்திரகுமார்
தமிழ்மக்கள் அதிகமாகக் கவனிப்பது சினிமாவை. ஆகவே சினிமா சம்பந்தமான ஏதேனும் செய்தியை போட்டுக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயம் இதழ்களுக்கு உள்ளது. அதேசமயம் சினிமா குறித்து அதிக செய்திகள் இன்று இல்லை. சொல்லப்போனால் சினிமா பற்றிய ரகசியம் இன்று கறாராகப் பாதுகாக்கப்படுகிறது. ஆகவே அவர்கள் என்னதான் எழுதுவார்கள்? பெரும்பாலும் மேஜையிலிருந்துகொண்டு எதையேனும் எழுதுவதுதான். சாதாரணச் செய்திகளை ஒருவகை வம்புகள் போல ஆக்குவது, முடிச்சுகள் போடுவது என அவர்களுக்கு பல உத்திகள்.அது அவர்களின் தொழில்.
நான் பலமுறை சொல்லியிருப்பதுபோல, சினிமா என் தொழில். தொழில்மட்டுமே. இங்கே எழுத்தாளன் எழுத்தாளனாக வாழமுடியாது. வேறெந்த தொழிலைவிடவும் எனக்கு நேரத்தை, பயணங்களுக்கான பணத்தை அளிப்பது சினிமா என்பதனால்தான் எனக்கு அதில் ஈடுபாடு. சினிமாவில் என் பங்களிப்பு என்பது கதைக்கட்டுமானத்தை உருவாக்க இயக்குநருக்கு உதவுதல், வசனம், அவ்வளவுதான். அதை இயக்குநர் கோரியதற்கு ஏற்பவே எழுதுகிறேன். இயக்குநர்கள் உகந்ததை படத்தில் சேர்க்கிறார்கள். என் தனிப்பட்ட கருத்துக்களென அவற்றில் ஏதுமிருப்பதில்லை. ஒட்டுமொத்தமாக படத்தின்மேல் எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை
இயக்குநர்தான் படத்தின் ‘ஆசிரியர்’. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலையமைப்பு, இசையமைப்பு, ஒப்பனை என பிற அனைத்துமே இயக்குநருக்குச் செய்யப்படும் உதவிகள், சேவைகள் மட்டுமே. இயக்குநர் தன் தேவைக்கும் ரசனைக்கும் ஏற்க அவற்றைப் பயன்படுத்திக்கொள்கிறார். படத்தின்மேல் கட்டுப்பாடுள்ள ஒரே ஒருவர் இயக்குநர்தான். ஆகவே தங்கள் பங்களிப்பு சார்ந்து எவரும் தனிச்சாதனையை சினிமாவில் கோரமுடியாது. படம் வெற்றிபெற்றால் அந்த வெற்றியில் பங்கெடுத்து மகிழ்ச்சி அடையலாம். அதற்கும் அடிப்படை ஏதுமில்லை. வெற்றி என்பது முழுக்க முழுக்க முழுக்க இயக்குநருக்குரியது மட்டுமே. பெரிய நடிகர்களுக்காக கதை செய்யும்போது அவருடைய ஆளுமை, அவர் திரையில் தோன்றும்விதம் ஆகியவை கருத்தில்கொள்ளப்படும்.
இவற்றில் சர்க்கார் மட்டுமே அரசியல்படம். மற்ற இரண்டும் அரசியல்படங்கள் அல்ல, கேளிக்கைப்படங்கள்தான். அவற்றின் இயக்குநர்கள் தெளிவான சினிமாப்பார்வையும், வெற்றிகளின் தடமும் கொண்டவர்கள். அந்த சினிமாக்களை அவர்களே தீர்மானிக்கிறார்கள். ஆகவேதான் இத்தனை ஆண்டுகளாகக் களத்தில் நிற்கிறார்கள். அவர்களின் வெற்றிகள் அவர்களின் தனித்திறன் சார்ந்தவை மட்டுமே. அது நுட்பமாக வெகுஜன ரசனையை கணித்து வைத்திருப்பது, நினைத்ததை திரையில் கொண்டுவர உழைப்பது என்னும் இரண்டு இயல்புகள் சார்ந்தது.
இக்காரணத்தால்தான் நான் சினிமாக்களை என் படைப்புகள் அல்லது நான் பங்களித்தவை என்றுகூடச் சொல்லிக்கொள்வதில்லை. இந்த தளத்தில் நான் எழுதும் சினிமாக்களைப்பற்றி ஏதும் வெளிவந்ததில்லை.
என் வாசகர்களும் முதிர்ச்சியானவர்கள், அவர்களுக்கும் இது தெரியும். பத்திரிகைகளின் சினிமாத் துணுக்குகளுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமிருப்பதில்லை
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
ஆம். நீங்கள் சொல்வது போல இன்றுள்ள சூழலில் பெண் பாலியல் ரீதியாக ‘மாட்டேன்’ என்று சொல்லும் உரிமையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல உடல்கவர்ச்சியின்றி ஆண்-பெண் உறவுகள் இருக்க முடியாது. நாம் ஐரோப்பிய வாழ்க்கைமுறையை நோக்கி நகர்ந்தாலும் ஒரு அமெரிக்கனைப் போலவோ ஐரோப்பியனைப் போலவோ டேட்டிங்கிற்கு இந்திய ஆண் அழைப்பதில்லை. மேலும் டேட்டிங் என்பது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒருவித வசீகரச் செயல்பாடு. ஆண் தனக்குப் பிடித்த பெண்ணை வசீகரித்துத் தன்னை அவளுக்குப் பிடித்தவனாக ஆக்கும் முயற்சி. அதில் வெற்றி பெற்றால் அவ்வுறவு தொடரும். அவள் பெரிதாக விருப்பம் கொள்ளவில்லையெனில் அந்தச் சந்திப்புடன் முடிந்துவிடும். அத்தகைய வழக்கம் இங்கே முற்றிலும் பிறழ்ந்து வெறும் பாலியல் உறவு சார்ந்த செயல்பாடென மாறிவிட்டது. ஆனால் இங்கே திருமணமானவளோ ஆகாதவளோ அதுபற்றிய கவலைகள் ஏதுமின்றித் தன்னை முற்போக்கானவனாகவும் சுதந்திரமானவனாகவும் பெண்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்பவனாகவும் காட்டிக்கொண்டு பாலியல் அழைப்பு விடுக்கின்றனர். அது கண்டிப்பாக டேட்டிங்கில் வராது.
இதே கருத்தியலைப் பெண்ணியவாதிகள் வேறுவிதமாக பாலியல் சுதந்திரமென முன்வைத்தனர். ஆண்கள் வெறும் பாலியல் தேவைக்கு மட்டுமானவர்கள், இந்தக்காலத்தில் அதற்கும் கருவிகள் வந்துவிட்டன என்பது மாதிரியான பெண்ணியக் கருத்துகள் பேசப்பட்டபோது ஆண்களுக்கு இவ்வகையான கொந்தளிப்பு உருவானது. ஏனெனில் ஆணோ- பெண்ணோ வெறும் உடல் இச்சைக்காக பயன்படுவதை இருபாலருமே விரும்புவதில்லை. நான் பெண்கள் பேசும் பாலியல் சுதந்திரத்தையும் ஒரு சிறுபிள்ளைத்தனமான கூற்றெனக் கருதுகின்றேன். அதாவது வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்ணுக்குப் பாலியல் உச்சங்கள் மட்டுமே லட்சியமாக இருப்பது என்பது வேடிக்கையான ஒன்று. அவளுக்குப் பிறவேலைகளோ பணிகளோ இருக்காதா? அறிவுத்தளத்தில் அவளுக்கான இடம் என்ன? மனிதர்களைப் பொறுத்தவரை வாழ்நாளில் காதலும் காமமும் ஒரு பகுதி மட்டுமே. அதை மட்டுமே வைத்துக்கொண்டு வாழ்க்கையைச் செலுத்த இயலாது. வெறும் பாலியல் உச்சங்களுக்காக மட்டும் புரட்சி செய்வதென்பது பாலின பலவீனமென நினைக்கின்றேன்.
இன்று இந்த #metoo விமர்சனங்களுக்குள்ளாவதற்கும் பெண்கள் சொல்கிற பாலியல் அத்துமீறல் அனுபவங்களை ஆண்கள் எள்ளல் செய்வதற்கும் முக்கிய காரணம் பெண்ணியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் வெறும் பாலியல் சுதந்திரம், கலவி உச்சம் போன்ற தேவையற்ற கருத்தியல்களை மட்டும் பெண்ணிய பாடத்திட்டமாக வரைந்துகொண்டு பேசியதாகும். பாலியல் சுதந்திரமும் ஐரோப்பிய மனநிலையிலிருந்து இருந்து இங்கே கடத்திவரப்பட்டதுதான். இவற்றையெல்லாம் பார்க்கும்போது நாம் மாற்றுக் கலாச்சாரப் பழக்கவழக்கங்களை தவறாகப் பயன்படுத்துகின்றோம் அல்லது நம்முடைய இந்திய மனநிலைக்கு அவற்றைச் சரியாக நடைமுறைப்படுத்தத் தெரியவில்லை என்று கருதுகின்றேன்.
இந்தியச் சூழலில் இருக்கின்ற பெண்ணியவாதிகள் இனிமேலாவது பாலியல் சுரண்டல்கள் குறித்து ஓர் தெளிவான வரையறை ஒன்றினை உருவாக்கி #metooவின் பக்கம் நிற்கவேண்டும். இல்லையேல் பாலியல் அத்துமீறல் செயல்பாடுகள் பாலியல் சுதந்திரம் மாதிரியான அரைகுறை கருத்தியல்களால் பூசிமெழுகப்படும். ஆண்கள் தம்மைக் காத்துக்கொள்ள “நீங்களே இதைத்தானே பேசினீர்கள், இன்றென்ன பத்தினித்தனம்” போன்ற கேள்விகளை வீசக்கூடும். இப்போதே அப்படியான விமர்சனங்கள்தான் #metoo குறித்து எழுகின்றன. எனவே இங்கே முதலில் பாலியல் விழிப்புணர்வு அத்தியாவசியமானது.
வெண்பா
அன்புள்ள வெண்பா,
இங்கே பேசப்படும் ‘முகநூல்’ பெண்ணியம் மீது எனக்கு எந்த மதிப்பும் இல்லை. அது முகநூலில் உள்ள வேறு கருத்துநிலைபாடுகளைப்போல வெறுமே ஒரு போலி அடையாளத்துக்காக உருவாக்கப்படும் கூச்சல். இந்த கூச்சல்களை ஊடகங்கள் கவனிப்பதுதான் தமிழகத்தின் மிகப்பெரிய சாபம். தமிழ்ப் பெண்ணெழுத்தாளர்கள், பெண்கவிஞர்கள் வெறுமே ‘ஆக்டிவிஸ்ட்’ என்று முகநூல் புஃபைலில் போட்டுக்கொள்பவர்கள். அது அவர்களுக்கு தமிழகத்துக்கு வெளியே ஓர் அடையாளத்தை அளிக்கிறது. அவர்களுக்கும் பெண்ணியம் என்பது பாலியலை எழுதுவது மட்டுமே.திராவிடப்பெண்ணியம் என்பது வெறும் பம்மாத்து. அந்தக்கட்சிகளே அடிப்படையில் ஆணாதிக்கத்தன்மை கொண்டவை.
உண்மையான பெண்ணியம் இங்குள்ள இடதுசாரிக் கட்சிகளின் பெண்களமைப்புகளால் முன்வைக்கப்படுவது மட்டுமே. இன்று தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், பிரச்சினைக்குள்ளானவர்கள் நம்பிக்கையுடன் சென்று நிற்கத்தக்க ஒரே இடம் அவர்கள்தான். தமிழகத்தில் பெண்கள் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கு முன்னின்றவர்களும் அவர்களே. அது அவர்களின் தொழிற்சங்கப்பின்னணியிலிருந்து வந்த தெளிவும் பயிற்சியும் மூலம் உருவாவது. ஊடகங்கள் அவர்களையே பெண்ணியர்களாக முன்னிறுத்தவேண்டும்
ஜெ
அன்புள்ள ஜெ
மிடூ விஷயம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். என் கேள்வி. இது நம் பண்பாட்டையே கொச்சைப்படுத்துவதாக மாறிவிடவில்லையா? இங்கே எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க இதைமட்டுமே ஊடகங்கள் பேசிக்கொண்டிருப்பது ஏன்?
ராமச்சந்திரன்
அன்புள்ள ராம்
பொதுவாக எந்தச் சமூகமும் தன்னை பெரிதும் பிழையற்றதாகவே எண்ணிக்கொள்ள விரும்பும். அதாவது அதன் நெறிகள் சரியானவை, பிரச்சினை தனிமனிதர்களிடம்தான் என நம்பும். ஏனென்றால் அந்த நெறிகளை நம்பியே அவர்கள் வாழ்கிறார்கள். ஆகவே அதன் ஆதாரமான உளவியலமைப்பிலேயே ஒரு பிரச்சினை உள்ளது என சுட்டிக்காட்டுவது மிகக் கடினமானது. அதற்கு மிகப்பெரிய சமூக இயக்கம், கருத்தியல் பிரச்சாரம் தேவை. அதைத்தான் ‘நானும்’ இயக்கம் உருவாக்குகிறது.
இத்தனை பெரிதாக, இத்தனை ஆவேசமாக, இத்தனை முழுமையாக இது நிகழாவிட்டால் நம் சமூகத்தை இது சென்றடையாது. ஆகவே இன்று ஊடகங்களில் இதற்குக் கிடைத்திருக்கும் கவனம் ஒரு நல்ல விஷயம் என்றே நினைக்கிறேன். இதைப்பற்றி ஒட்டுமொத்தச் சமூகமும் கவனிப்பதற்கு இது ஒன்றே வழி. இத்தகைய ஒரு பெரிய நோய் நம் சமூகத்தின் உள்ளுறுப்புகளில் சீழ்கட்டியிருக்கிறது என்பதை இப்படித்தான் காட்டமுடியும். ஒரு சாதாரண சினிமாவின் விளம்பரத்துக்கே இரண்டுவாரக்காலம் இதைவிட உச்சகட்ட ஊடக ஆக்ரமிப்பு தேவையாகிறது என்பதை கவனிக்கலாம். இன்றைய சூழலில் எந்த ஒரு ஊடக அலையும் சிலநாட்களுக்கே. அதன்பின் கவனம் திரும்பிவிடும். அதற்குள் முடிந்தவரை ஊடுருவல் நிகழ்ந்தாகவேண்டும்
இப்படி ஓர் ஊடகக் கவனம் உருவாகும்போது ஒரு சாரார் ‘அப்படியென்றால் அதை ஏன் கவனிக்கவில்லை?’ என்று பலவற்றைச் சுட்டிக்காட்டுவார்கள். அது இந்த இயக்கம் மீதான அசௌகரியத்தை வேறுவழிகளில் வெளிப்படுத்திக்கொள்வதுதான், இன்றைய சூழலில் எவரும் நானும் இயக்கத்துக்கு எதிரான நிலைபாடு எடுக்கமுடியாது. ஒரு முற்போக்கான விஷயத்தை எதிர்ப்பதற்கு மிகத் தந்திரமான வழி மேலும் முற்போக்கான ஒரு நிலைபாடு எடுத்து அதை வசைபாடுவதுதான். நிலைபாடுதானே, காசா பணமா? கேட்பதற்குச் சரிதானே என்றும் தோன்றும். அதற்குப்பின்னால் இருப்பது சில்லறை ஆணாதிக்கநோக்கு, சாதிய நோக்கு, கட்சிசார்பு போன்றவையாகவே இருக்கும்.
இத்தகைய விஷயங்களுக்கு மெய்யாகவே எதிர்ப்பு வரும். குழப்பங்கள் உருவாகும். எந்தப் புதிய கருத்தியல்தாக்குதலும் விவாதத்தையே உருவாக்கும். விவாதத்தில் பதற்றப்படுபவர்கள் மாற்றத்தை எதிர்ப்பவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் குரல்களே ஓங்கி ஒலிக்கும். ஆனால் விவாதிக்கப்படுகிறது என்பதே மாற்றம் உருவாகத் தொடங்கிவிட்டது என்பதற்கான சான்றுதான். அவ்வகையில் நானும் இயக்கம் அதன் அடிப்படை வெற்றியை அடைந்துவிட்டது. அதன் முகப்பில் நிற்கும் பெண்கள் அனைவருக்கும் ரயா சர்க்கார் முதல் சின்மயி வரை முழுமையான ஆதரவை அளிப்பதே நம் கடமை
ஜெ
அன்புள்ள அரங்கநாதன்
இந்த இயக்கத்தைக் கூர்ந்து நோக்கும்போது தெரிவன சில சங்கடமூட்டுபவை.
அ. குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு கட்சியை, சாதியைச் சார்ந்தவர் என்றால் அதைச்சார்ந்தவர்கள் அவரை ஆதரிக்கிறார்கள், அல்லது அமைதி காக்கிறார்கள். எந்த முற்போக்கு பேசினாலும் அந்த எல்லையை கடக்க நம்மவர்களால் முடியவில்லை
ஆ. இதழாளர்களில் பெண்கள் மட்டுமே பெண்களை ஆதரிக்கிறார்கள். ஆண் இதழாளர்கள் பெரும்பாலும் ஆண்களாக மட்டுமே தங்களை முன்வைக்கிறார்கள். ஒப்புநோக்க ஆங்கில ஊடகங்களில் பெண் இதழாளர்கள் மிகுதி என்பதனால் அவர்கள் மட்டுமே பெண்களின் தரப்பை எழுதினார்கள்
இ. குற்றம் சாட்டுபவர் பெண் என்றால் பொதுவாக அவர்களின் நடத்தை இழிவுசெய்யப்படுகிறது. பிராமணப்பெண் என்றால் கூடுதலாகச் சாதியும். வேறெந்த பெண்ணின் சாதியும் பேசப்படுவதில்லை.
ஜெ
அன்பிற்குரிய ஜெயமோகன் சர்,
வணக்கம். நான் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவன். கேரளா மாநிலம் கோழிக்கோடு தான் என் சொந்த ஊர். தாயார் கண்ணூர் மாவட்டம் பரசினிக்கடவை சேர்ந்தவர். தந்தையின் வேலை நிமித்தமாக ஈரோட்டில் வளர்ந்ததால் சொந்த ஊரும் அங்கே என் வீட்டை சுற்றி உள்ள உறவின பிராமணர்களுமாயும் எனக்கு பரிச்சயம் குறைவு. அதனாலேயே வலதுவாத சிந்தனையோடு அங்குள்ள என் உறவினர்களுக்கும் என் தந்தைக்கும் இருக்கும் உடன்பாடு எனக்கு இல்லை. என் தாய் கம்யூனிசம் பேசுவார். அதுவும் காரணமாக இருக்கலாம்.
நான் வளர்ந்த சூழலில் பெரியாரை வாசிக்க நேர்ந்தது என்னை சில சமயம் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இட ஒதுக்கீட்டை என் தந்தை எதிர்த்து வந்தபோது அவருடன் கடுமையாக வாதிட்டிருக்கிறேன். அண்மையில் சபரிமலையில் பெண்கள் நுழைவதை என் தந்தை ஏற்று கொள்ளாததும் அது போன்ற ஒரு வாதத்திற்கு வழி செய்தது. அந்த வாதம் எப்பொழுத்தும்போல இட ஒதுக்கீட்டில் சென்று நின்றது. ஆனால் இம்முறை அவர் ஏன் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார் என்று எனக்கு புரிய வந்தது :
அப்பா, அவரின் சிறுவயதிலேயே(11) தந்தையை இழந்து விட்டார். தாயும் 3 சகோதரிகளும் முழு பட்டினி. உண்ண அரிசி இருக்காது. இரவில் யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டு தென்னை நாளிகேரத்தின் தோலை உரித்து சின்ன கயிறு போன்று ஏதோ செய்து கொண்டு கொடுத்தால் இரண்டு பைசா கிடைக்குமாம். அந்த காசிற்கு டீத்தூள் வாங்கி இனிப்பின்றி அனைவரும் அருந்துவார்கள். அதுவே அவர்களுக்கு அன்றைய நேர உணவு. எங்கிருந்தேனும் கஞ்சி சோறு கிடைத்தால் அக்காக்கள் நீரை குடித்து இவருக்கு அரிசியை வைப்பார்கள். படிக்க வைக்க ஆளில்லை. 10ம் வகுப்புக்கு மேல் கோவில்களில் வேலைக்கு நின்று பட்டினியை போக்கி கொண்டனர். அன்று அவருடன் படித்த ஒருவர் எல்லா சலுகைகளும் பெற்று உணவும் தேவைக்கு செல்வமுமாய் இருந்தது இவர் மனதில் ஆழமாய் பதிந்தது. சிறுவயதில் கயிறு பிரித்து கொடுத்து காசு வாங்கிய இடமும் கீழ்ப்படிநிலைச் ஜாதி என்பது குறிப்பிட தக்கது. இதெல்லாம் அவருக்கு இட ஒதுக்கீட்டின் மேல் ஒரு ஏற்பின்மை வர காரணமாக இருக்க கூடும் என்று எண்ணுகிறேன்.
ஆனால் என் கேள்வி, இது போன்ற நலிந்த ஒரு சாரார் எல்லா சமூகத்திலும் இருக்க கூடும். இத்தகைய ஒரு சமூக சூழலில் இட ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கம் என்ன? இது போன்ற ஜாதியால் மட்டும் உயர்ந்து, அதுவே சாபமாகி போன சாரார் பற்றிய பதிவு/புனைவு ஏதேனும் தமிழ்/மலையாள இலக்கியத்தில் உண்டா?
இது போன்றவர்களின் மனநிலையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பி.கு : என் அரசியல் வல/இடது பேதமில்லாது போனதும் என் குடும்ப சூழலுக்கும் சமூகத்தில் என் ஜாதியினரை பொத்தாம் பொதுவாக எதிர்கொள்ளும் முறைக்கும் இடையில் உள்ள முரண் காரணமே.
நன்றி.
ஸ்ரீநிதி.பி
அன்புள்ள ஸ்ரீநிதி,
உங்கள் கடிதத்தைப்போன்று பல கடிதங்களுக்கு நான் விரிவான பதில்களை அளித்திருக்கிறேன். இருந்தும் மீண்டும் எழுதவேண்டியிருக்கிறது.
உங்கள் தந்தை தன் சொந்த அனுபவத்தைக்கொண்டு ஓர் அதீதநிலைபாட்டுக்கு உணர்ச்சிகரமாகச் சென்றடைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதுவே சாதாரண மக்களின் இயல்பு. ஆனால் சிந்திப்பவர்கள் பிறர்மேல்கொள்ளும் பரிவினூடாகவே உலகை, வாழ்க்கையைப் புரிந்துகொள்லவேண்டும். இலக்கியம் அதற்காகவே.
உங்கள் தந்தையின் இளமைக்காலம் என்றால் ஐம்பது அறுபதுகளாக இருக்கும். அது இந்தியாவில் அனைத்துச் சாதியினரிடமும் மிகமிகக் கடுமையான வறுமை இருந்த காலகட்டம். உலகப்போருக்குப்பின் உலகப்பொருளியல் வீழ்ச்சி அடைந்தது. பலவகையான கைத்தொழில்கள் நவீனமயத்தால் இல்லாமலாயின. கிராமியப்பொருளியல் அமைப்பு சிதறுண்டது. ஆகவே வறுமை பரவியது. பிகாரில் அதற்கு இருபதாண்டுகளுக்கு முன்புவரை பல்லாயிரக்கணக்கானவர்கள் பட்டினியில் இறந்தனர். சுதந்திர இந்தியாவில் கஞ்சித்தொட்டிகள் திறந்தும், கடுமையான ரேஷன் முறைகள் வழியாகவும் பட்டினிச்சாவு தவிர்க்கப்பட்டது. ஆனால் எங்கும் பட்டினி ஓங்கியிருந்தது
என் இளமையிலேயே கடுமையான வறுமையைக் கண்டிருக்கிறேன். நாட்கணக்கில் காட்டுக்கிழங்குகளையும் வாழைத்தண்டையும் முருங்கைக்கீரையையும் உண்பார்கள். பலாக்காய், பலாக்கொட்டை முதன்மை உணவாகவே இருக்கும். மாங்கொட்டையை நாட்கணக்கில் நீரில் ஊறப்போட்டு துவர்ப்பை அகற்றி களிகிண்டி சாப்பிடுவார்கள்.
நான் நிலவுடைமைச் சாதியைச் சேர்ந்தவன். கேரளத்தின் ஆதிக்கசாதி. ஆனால் நாயர்களிலேயே மிகக்கடுமையான பட்டினியில் உழன்ற பல குடும்பங்களை நான் அறிவேன். அவர்களில் பலர் என் நண்பர்கள். நாட்கணக்கில் உணவில்லாமலிருக்கும் குழந்தைகளைக் கண்டிருக்கிறேன். இரவில் காட்டுக்குள் புகுந்து காட்டுபூசணிகளை திருடிவந்து வேகவைத்துச் சாப்பிடுபவர்களை கண்டிருக்கிறேன். ஆனால் ஊரில் கெத்தையும் விட்டுவிடமாட்டார்கள். அச்சுழலில் உங்கள் தந்தை கடும் வறுமையில் இருந்தது ஒன்றும் வியப்புக்குரியது அல்ல.
எளிமையான கேள்விகள் சிலவற்றை எழுப்பிக்கொள்ளுங்கள். உங்கள் சாதியில் பட்டினிகிடந்தவர்கள் எத்தனை சதவீதம்? அவர்களுக்கு உதவுவதற்கான அமைப்புகள் இருந்தனவா? எவ்வகையிலேனும் அதிலிருந்து வெளியேறும் வழிகள் திறந்திருந்தனவா?
அப்போது உங்களுக்கு கிடைக்கும் பதில் இதுவே. அந்தணர்களிலோ என் சாதியினரிலோ பட்டினி கிடந்தவர்களின் விகிதம் மிகக்குறைவு. பலவகையான சமூகப்பாதுகாப்பு அமைப்புகள் பல இருந்தன. ஆலயங்கள், சாதியமைப்புகள், பலவகையான அரசு அமைப்புகள். அந்தக் கொடிய வறுமையிலிருந்து வெளியேற கல்வியை துணைகொள்ள வாய்ப்பிருந்தது. உணவகங்கள் வைக்கவோ, உணவகங்களில் வேலைபார்க்கவோ சமூக ஒப்புதல் இருந்தது
இந்நிலையுடன் அன்றிருந்த தலித்துக்கள், அவர்களுக்கு இணையான சாதியினரை ஒப்பிட்டுப்பாருங்கள். அவர்களில் அனேகமாக அனைவருமே பட்டினியில் இருந்தனர். அவர்களுக்கு உதவ எந்தச் சமூக அமைப்பும் இல்லை. குமரிமாவட்டத்தில் கிறித்தவத் திருச்சபைகள் மட்டுமே உதவின. அவர்கள் வேறு தொழில்கள் செய்ய அனுமதி இருக்கவில்லை. பொது இடங்களில் நடமாடவோ கல்விகற்கவோ வாய்ப்பே இல்லை.
அவர்களும் நீங்களும் இருந்த நிலைமையின் வேறுபாடு இது. இதுவே அவர்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் எத்தனை இன்றியமையாதவை என்பதைக் காட்டும். அது ஒரு சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு. அரசின் கடமை. அனைத்துக்கும் அப்பால் ஒன்றுண்டு, அம்மக்களை ஒடுக்கி மானுடவிலங்குகளாக ஆக்கியதில் அவர்களுக்குமேலே இருந்து அவர்களைச் சுரண்டிய எல்லா சாதிக்கும் பொறுப்பு உண்டு. சாதி மேலே செல்லச்செல்ல அப்பொறுப்பு மேலும் கூடும். அதற்கு பிழைமாற்று செய்தாகவேண்டும். அதுவே அறம்.
அக்கால அந்தணர்களின் வாழ்க்கைக்கதைகளை வாசிக்கையில் அவர்களில் பலர் கடுமையான வறுமையில் உழன்றதை காணமுடிகிறது. ஆனால் அவர்களுக்கு பலவகையான சமூக உதவிகள் அன்று கிடைத்தன. சமூக அமைப்புகளும் செல்வந்தரும் பொதுவாகவே ஏழைமாணவர்களின் கல்விக்கு உதவியிருக்கிறார்கள். உங்கள் தந்தை நினைத்திருந்தால் கண்டிப்பாக படிப்புக்கு உதவிதேடி படித்து முன்னேறியிருக்கலாம். ஈரோட்டிலேயே கடும் வறுமையில் ஊர்ச்சோறு என நாளுக்கு ஒரு வீட்டில் சாப்பிட்டு படித்து பெரிய நிலைக்குச் சென்ற எத்தனைபேர் உள்ளனர் என்று ஆராய்ந்து பாருங்கள்.
உங்கள் தந்தையைப்போல சமையற்வேலைக்குச் சென்ற பல்லாயிரம்பேர் இங்கே உண்டு. அவர்களில் தேர்ந்த சமையற்காரர்களாக ஆனவர்கள், உணவகம் நடத்தி செல்வந்தர்களானவர்கள் பலநூறுபேர். அவர்களைப்போல் உங்கள் தந்தை ஏன் ஆகவில்லை? அப்படியென்றால் அவருடைய தோல்விக்கு அவருடைய தகுதியின்மையும் காரணம் அல்லவா?
ஏறத்தாழ உங்கள் தந்தையின் அதேகாலகட்டத்தைச் சேர்ந்தவர் தேனி சீருடையான். அவருடைய சுயசரிதை ‘நிறங்களின் உலகம்’ஐ வாசியுங்கள். அந்த உச்சகட்ட வறுமை, விழிபறிபோதல், அனைத்திலிருந்தும் மீண்டு அவர் பழக்கடைவைத்தல், எழுத்தாளராக எழுந்து வருதல் ஆகியவற்றை வாசியுங்கள்.[அகமறியும் ஒளி]
வறுமைகொடிதுதான். ஆனால் தன் தோல்விக்கு அது மட்டுமே காரணம் என்றும், அதற்குச் சமூகம் பொறுப்பேற்கவேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருப்பது ஓர் உளச்சிக்கலே ஒழிய வாழ்க்கைநோக்கு அல்ல.
இட ஒதுக்கீடு என்பது வறுமைவாய்ப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சலுகை அல்ல. அதற்கு வேறுவகை உதவித்தொகைகள் பல உண்டு. உங்கள் தந்தை தன் வறுமையை உணர்ந்து தீவிரமாகப் படித்திருந்தால் அவரால் அந்தச் சலுகைகளை பெற்று மேலெழுந்திருக்கமுடியும். பேராசிரியர் ஜேசுதாசன் முழுக்கமுழுக்க தன் படிப்புக்காக அரசு அளித்த உதவித்தொகையால் படித்தவர். இட ஒதுக்கீடு என்பது சமூக அமைப்பால் ஒடுக்கப்பட்டு, படிக்கவும் மேலெழவும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு உரிய சலுகை. அவ்வாய்ப்பு தலித்துக்களுக்கு மறுக்கப்பட்டது. பிராமணர்களுக்கு மறுக்கப்படவில்லை.
இட ஒதுக்கீடு எவருக்கு அளிக்கப்படுகிறது? தங்கள் வாழ்க்கைச்சூழலால், தங்கள் குடும்பப்பின்னணியால் கல்விக்குரிய உளநிலையே அமையாதவர்கள் கல்விக்கு உகந்த வாழ்க்கைச் சூழலும் குடும்பச்சூழலும் அமைந்தவர்களுடன் போட்டியிட்டால் அவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காது என்ற நடைமுறை யதார்த்தத்தில் இருந்தே இட ஒதுக்கீடு உருவானது. அவ்வாய்ப்பினூடாகவே அவர்கள் மேலெழவும் முடிந்தது.
இடஒதுக்கீடு என்பது இன்று ஒருபக்கம் அபத்தமாக ஆகிவிட்டது என்பது என் எண்ணம். தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படவேண்டும் என நினைக்கிறேன். ஆனால் அனைத்துவகைகளிலும் முன்னேறிவிட்ட பிற்பட்ட, மிகவும்பிற்பட்ட சாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றி தங்களுக்கு இட ஒதுக்கீடுகள் அளித்துக்கொள்வது இடஒதுக்கீடு பற்றிய காந்தி, அம்பேத்கரின் எண்ணங்களையே தலைகீழாக்குவது. குறைந்தது இட ஒதுக்கீட்டில் பொருளியல் உச்சவரம்பாவது உருவாக்காவிட்டால் அது இன்னொருவகை சுரண்டலாகவே திகழும்
இவ்விஷயங்களை மிகக்குறுகலாக, எனக்கு என் மக்களுக்கு என்று பார்த்து முடிவெடுப்பதே சாதாரணமாக நிகழ்வது. ஆனால் இலக்கியவாசகன் அறவுணர்வால் மட்டுமே தன் சமூகப்புரிதல்களை அடையவேண்டும்.
பிராமணர்களின் துயரை எவரேனும் எழுதியிருக்கிறார்களா என்று கேட்டீர்கள் அல்லவா? கலைஞனுக்குரிய அறவுணர்வுடன் மானுடம்மீதான பரிவுடன் பூமணி எழுதியிருக்கிறார். நைவேத்யம் என்னும் அவருடையந் நாவலை வாசியுங்கள். தமிழின் தலித் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளி என்று கருதப்படுபவர் அவர்
ஜெ
கோவையிலிருந்து யுகமாயினி என்னும் சிற்றிதழை நடத்திய சித்தன் [சித்தன் பிரசாத்] அவர்கள் காலமானார் என்னும் செய்தி அறிந்தேன். இடதுசாரிப் பார்வை கொண்டவர். கோவை ஞானி அவர்களுக்கு அணுக்கமானவர். எஸ்.பொன்னுத்துரை அவர்களுக்கும் அணுக்கமானவராக இருந்தார்.
இடதுசாரி நோக்குகளுடன் எழுதவரும் இளைஞர்களுக்கான களமாக யுகமாயினி இருந்தது. தன் கருத்துக்களுக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டச் சிற்றிதழாளர் சித்தன். ஒருசில முறை நேரில் சந்தித்து முகமன் உரைத்திருக்கிறேன். சிற்றிதழாளர் என்பதற்கு அப்பால் அவருக்கும் எனக்கும் பொதுவாக ஏதுமில்லை. ஆயினும் அந்த தீவிரம் என்றும் வணக்கத்திற்குரியது
சித்தன் அவர்களுக்கு அஞ்சலி.
சேலம் தமிழ்ச்சங்கத்தில் வரும் 28-10-2018 [ஞாயிற்றுக்கிழமை] தமிழிலக்கியத்தின் ஊடும்பாவும்’ என்றதலைப்பில் பேசுகிறேன். ஒன்றுடனொன்று முரண்பட்டு அவ்விசையில் தமிழிலக்கியத்தை நெய்திருக்கும் இரண்டு அடிப்படைக்கூறுகளைப்பற்றிய உரை.
இடம் சேலம் தமிழ்ச்சங்கம்
நாள் 28-10-2018
பொழுது மாலை 6 மணி
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் வருக!
பீலன் அனிலை தலைதாழ்த்தி செருக்கடிப்பதை கேட்டான். அது போருக்கு கிளம்பவிருக்கிறது என்பதை உணர்ந்ததும் திகைப்புடன் இருபுறமும் பார்த்தான். புரவிகள் அனைத்தும் செவிகோட்டி ஒலிக்காக கூர்ந்து நின்றிருந்தன. அனிலை முன்வலக்காலால் மண்ணை கிண்டியது. மீண்டும் செருக்கடித்து உடல் சிலிர்த்தது. “கிளம்புக! கிளம்புக! கிளம்புக!” என்று முழவின் ஒலி எழுந்தது. நூற்றுக்கணக்கான கடிவாளங்கள் இழுக்கப்பட புரவிகள் கனைத்தபடி, தலைசிலுப்பி, குளம்புகள் நிலத்தில் அறைந்து முழக்கமிட இடிந்து சரியும் கோட்டைபோல் படைமுகப்பு நோக்கி சென்றன.
அனிலையின் மீது அமர்ந்து வேலை சற்றே சாய்த்து பற்றியபடி தலைதாழ்த்தி முழு விரைவில் சென்றபோது பீலன் அவ்வியப்பிலேயே இருந்தான். முழவோசை எழுவதற்கு முன்னரே அனிலை அதை எவ்வாறு உணர்ந்தது? அவ்வாறு அது கணிக்கமுடியா நுண்மையொன்றால் உணர்ந்துகொண்டிருப்பவற்றை பலமுறை அவன் வியப்புடன் அறிந்திருக்கிறான். அதன் பக்கத்து கொட்டிலில் நின்றுகொண்டிருந்த புரவியான சுதீபன் காட்டில் அரவு தீண்டி உயிர்துறந்தபோது இரண்டு நாட்கள் முன்னரே அனிலை அமைதியிழந்திருந்ததை, மீண்டும் மீண்டும் சுதீபனை நோக்கி தலைநீட்டி முகத்தால் அதன் முகத்தை வருடிக்கொண்டிருந்ததை அவன் நினைவுகூர்ந்தான். முதியவராகிய கொட்டில் காவலர் காளிகர் நெஞ்சடைத்து இறப்பதற்கு முந்தைய நாள் இரவு அனிலை அவரை நோக்கி மீள மீள குரல் கொடுத்தது. நிகழ்வனவும் நிகழ்ந்தனவும் வருவனவும் ஒரு சரடின் மூன்று முடிச்சுகள்போல. சரடின் மேல் ஊர்ந்து செல்லும் எறும்புக்கு ஒன்று பிறிதொன்றுடன் தொடர்புடையதல்ல. முழுச் சரடையும் நோக்குபவருக்கு அது ஒன்றே என்று அவன் தந்தை ஒருமுறை சொன்னார்.
புரவிப்படை அவர்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த தேர்ப்படையை அணுகி தேர்கள் ஒன்றுக்குமுன் ஒன்றென அமைந்து வழிவிட்டு உருவாக்கிய நூறு பாதைகளினூடாக பீறிட்டு மறுபுறம் சென்றன. அங்கு கௌரவப் படை தேர்கள் உடைந்து, புரவிகள் தாக்கப்பட்டு நிலைகுலைந்திருந்தது. நீண்ட வேல்களால் எதிர்வந்த புரவிகளையும் தேர்வலர் வில்லவர்களையும் குத்திப் புரட்டி சரித்தபடி முன்சென்றனர் புரவிப்படையினர். பீலன் தன் நீண்ட குத்து வேலால் தேரில் நின்று வில்குலைத்த ஒருவனின் கவசத்தின் மேல் ஓங்கி குத்தினான். அவன் தோள்விசையும் தோள்வலியும் புரவிகளின் எழுவிசையும் இணைந்த அறைதலில் இரும்புக்கவசம் உடைந்தது. வேல் அவன் நெஞ்சுக்குள் புதைந்தது. புரவியை முன் செலுத்தி வேலை உருவி எடுத்து தலைக்குமேல் சுழற்றி மீண்டும் எடுத்து அதற்கு அப்பால் புரவிமேலிருந்து அம்புதொடுத்த ஒருவனின் கழுத்தை நோக்கி இறக்கினான். புரவிப்படை அணி கலைந்து குழம்பியிருந்த கௌரவப் படைக்குள் முழுமையாக ஊடுருவியது.
போரின் உச்சம். இறப்பு ஐம்புலன்களும் அறியும் பருவடிவப் பேரிருப்பென அருகே நின்றிருக்கும் தருணம். ஒவ்வொரு முறை நிகழ்கையிலும் அது விந்தையானதோர் உச்சத்தை அளிப்பதை பீலன் அறிந்திருந்தான். ஒருநாள் போர் முடியும்போது “இன்னொருநாள், மேலும் ஒரு நாள்” என உள்ளம் துள்ளும் உவகை படைப்பிரிவுகளுக்குச் சென்று அமைந்து, உடலில் பாய்ந்த அம்புகளை அகற்றி, புண்களுக்கு எரியும் மருந்திட்டு, ஊனுணவு உண்டு, அகிபீனா மாந்தி, படுப்பதற்காக சரியும்போது முற்றிலும் அணைந்துவிட்டிருக்கும். விண்ணிலிருந்த மீன்களை நோக்கியபடி எழுந்து ஓடவேண்டும் என்ற எண்ணமே எழும்.
அங்கிருந்து கிளம்பிவிடுவதைப்பற்றிய வெவ்வேறு உளநிகழ்வுகள் வழியாக தன்னிலை மயங்கும். ஆனால் புலரியிலெழுந்ததும் முதல் எண்ணம் அன்று போருக்குச் செல்லவிருப்பதாகவே இருக்கும். ஒவ்வொரு கணமென போரை எதிர்நோக்கி படைக்கலங்களைத் தீட்டி, கவசங்களை பழுதுநோக்கி, புரவியை அணிசீரமைத்து ஒருக்கி கடத்துவான். அனைத்தும் அந்த ஒரு தருணத்தின் எழுச்சிக்காகவே. அன்றாட வாழ்க்கையின் முடிவிலாத நிலையொழுக்கில் அத்தகைய தெய்வகணங்களுக்கு இடமில்லை.
முந்தைய ஆறு நாட்களும் அனிலை உச்சகட்ட விசையுடன் போரிட்டது. களத்தை நோக்கி நடக்கையில் மெல்ல உடல்சிலிர்த்து எடைமிக்க குளம்புகளை நீட்டி வைத்து தலையசைய பிடரி நலுங்க அது நடக்கையில் முற்றமைதி கொண்டிருக்கும். நாணேற்றப்பட்ட வில்லின் அமைதியுடன் அது காத்து நின்றிருக்கும். ஆணை கிடைத்ததும் களத்திலெழுந்து பாய்ந்து செல்லும். எங்கே எவரை எப்படி தாக்கவேண்டுமென்று அதுவே முடிவெடுத்தது. அது காற்றில் தாவிஎழுந்து திரும்பும் கணத்தில் வேல்பாய்ச்ச பீலன் அறிந்திருந்தான். அது திரும்பும் அக்கணத்தைப்போல அதற்கு உகந்த பிறிதில்லை என்றும் பட்டறிவு கொண்டிருந்தான்.
அனிலை களத்திலெழுந்ததும் பிற புரவிகள் அஞ்சின. தேர்நுகத்திலேயே அவை நிலைகுலைந்து ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு அமறின. யானைகளும் தயங்கி பின்னடைந்தன. அவன் வீசிய வேலின் எடையும் விசையும் அக்களத்தில் வேறெவற்றுக்கும் இருக்கவில்லை. அந்த வேலை அவனால் தனியாக ஒற்றைக்கையால் தூக்க முடியாது. அதன் தண்டு நான்கு ஆள் நீளமான தோதகத்தில் மரக்கடைவு. அதன் முனை இரண்டு கைவிரல்களாலும் சுற்றிப்பிடிக்கத்தக்க அளவுக்குப் பெரியது. அதன் கூருக்கு இருபுறமும் கொக்கிகளும் உண்டு. “இது வேலல்ல, சிறு கதை” என்று அவன் அணுக்கர் சொல்வதுண்டு.
அனிலை முன்கால் தூக்கித் தாவி எழுகையில் அவன் வேலை பின்னிழுத்து அதன் முன்விசையாலேயே அதற்கு ஆயம் கூட்டுவான். அது பாய்கையில் வேலைச் சுழற்றி புரவியின் விசையுடன் தன் வேலின் விசையையும் சேர்த்துக்கொண்டு நீட்டி வீசுவான். அவனுடைய வேல் அனைத்துக் கவசங்களையும் பிளந்தது. யானை மருப்புகளிலேயே தைத்திறங்கியது. புரவியின் விசையில் பாய்ந்து சென்று தன் கையில் கட்டப்பட்டிருந்த சங்கிலியை இழுத்து பாய்ந்த வேலை பிடுங்கிச் சுழற்றி மீண்டும் ஆயம் கூட்டி எறிந்தான்.
முதல் நாள் முதல் போர்த்தருணத்திலேயே அவனுக்கும் அனிலைக்குமான ஒத்திசைவு கூடிவிட்டது. அவர்கள் உளம் ஒன்றாக உடல் அதனுடன் இணைய போரிட்டனர். கொல்லுந்தோறும் களிவெறி ஏறிவந்தது. அக்களிப்பை அனிலையும் அடைவதை அவன் கண்டான். களிறுகளும் புரவிகளும் களத்தில் வெறியும் களிப்பும் கொள்ளும் என அவன் கற்றிருந்தான். களத்தில் அதை அறிகையில் அவன் முற்றிலும் அறியாத பிறிதொரு விலங்கின்மேல் அமர்ந்திருப்பது போலிருந்தது.
போர்க்களத்தில் என்ன நிகழ்கிறதென்பதை அவனைப்போன்ற வீரர்கள் அறிவதற்கு வழியே இருக்கவில்லை. முன்னேறுக, வலந்திரும்புக, இடம்திரும்புக, பின்னடைக, விரைவுகொள்க என்னும் ஐந்து ஆணைகளால் அவர்கள் இயக்கப்பட்டார்கள். பீலன் தன்னருகே நின்றிருந்தவர்களையே அறிந்திருக்கவில்லை. முதல் நாள் அவனுக்கு இருபுறமும் நின்றிருந்தவர்களை போர் முடிந்ததும் தேடினான். உடலெங்கும் குருதி சொட்ட அனிலை செருக்கடித்துக்கொண்டு நின்றது. நெஞ்சில் அம்பு தைத்திருக்க, இரு கைகளையும் விரித்து மல்லாந்து கிடந்த ஒரு முகத்தை அவன் நோக்கினான். அவனுக்கு இடப்பக்கம் நின்றவன்! நோக்கை விலக்கிக்கொண்டு திரும்பிச்சென்றான். அதன்பின் எவர் முகத்தையும் நினைவில் நிறுத்திக்கொள்ளவில்லை.
அப்பால் களத்திலெழுந்த ஓசைகளைக் கேட்டு பீலன் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து அனிலையை நிறுத்தினான். அவன் உள்ளம் அறிந்ததுபோல் அது மூச்சு சீறி செருக்கடித்தபடி முன்னங்கால் தூக்கி நின்றது. அதன் உடலின் மென்மையான மயிர்ப்பரப்பில் குருதித்துளிகள் சிறுகனிகள்போல தொங்கிக்கிடந்தன. புதுக் குருதி தடம் உருவாக்கி இறங்க அது சிலிர்த்துக்கொண்டது. வாளொலிகளின் விசையை கேட்டபடி அவன் மேலும் அணுகியபோது சூழ்ந்திருந்த வீரர்கள் ஆமைகளைப்போல குனிந்து கேடயத்தை முதுகிலாக்கி வந்து சரியும் அம்புகளை தவிர்த்தபடி அங்கே கிருதவர்மனுக்கும் பீமனுக்கும் நிகழும் போரை நோக்குவதை கண்டான்.
அப்போரில் எவர் வெல்வார் என முன்னரே அனைவருக்கும் தெரிந்திருந்தது. கிருதவர்மன் பாண்டவப் படையால் சூழப்பட்டிருந்தான். போரின் விசையில் அவனுடைய தேர் அணியிலிருந்து பிரிந்து முன்னெழ அதை பாண்டவர்களின் படையினர் பின்தொடர்பை துண்டித்து உள்ளே கொண்டுவந்துவிட்டிருந்தனர். அவன் மீண்டும் தன் மையப்படையுடன் சேரும்பொருட்டு விசைகொண்டு போரிட்டுக்கொண்டிருந்தபோது கதையைச் சுழற்றியபடி உறுமலோசையுடன் பீமன் அவனை எதிர்கொண்டான். சில கணங்களிலேயே அவர்கள் கதைகளால் தாக்கிக்கொண்டார்கள்.
பீமனின் அறைகளை தாவியும் துள்ளியும் பின்னால் சென்றும் உடல்வளைந்து ஒழிந்தும் கிருதவர்மன் எதிர்கொண்டான். ஒருமுறைகூட அவன் கதையின் அடியை தன் கதைமேல் வாங்கிக்கொள்ளவில்லை. பீமனின் கதை விசையுடன் சுழன்றுவரும் ஓசையை, மெல்லிய காற்றசைவைக்கூட உணரமுடியுமென்று தோன்றியது. பீமனை சினம்கொள்ளச் செய்து நிலையழிய வைத்து தாக்குவது கிருதவர்மனின் நோக்கம் என்று தெரிந்தது. பீமன் சினம்கொள்வதை முகம் காட்டியது. மிகச் சிறுபொழுதுக்குள் கிருதவர்மனை கொன்றுமீளவேண்டும் என அவன் எண்ணியிருக்கலாம். அப்பால் பாண்டவப் படையின் மீது கௌரவர்களின் படை தன் முழுவிசையாலும் தாக்குதல் தொடுத்தது.
அவர்களின் அறைகளுக்கேற்ப பாண்டவப் படை உலைந்தும் அதிர்ந்தும் பின்வளைந்து மீண்டும் போர்விளியுடன் முன்னால் சென்று உறுதிகொண்டு ஒருங்கிணைந்தது. அங்கே துரியோதனனும் துச்சாதனனும் துர்மதனும் துச்சகனும் இருப்பதை கொடிகளிலிருந்து உணரமுடிந்தது. அவர்களை எதிர்த்து நின்றிருந்த பாண்டவர்களின் கேடயமேந்திய யானைநிரை அதிர்ந்துகொண்டே இருந்தது. “தண்டுகள்! தண்டுகள் வந்துகொண்டிருக்கின்றன!” என்று படைக்காவலன் கூவினான். “இன்னும் பெரும்பொழுதில்லை… இதோ வளையம் உடைந்துவிடும்!” என இன்னொருவன் கூவினான். இருவரிலும் அது இருவகை விளைவுகளை உருவாக்கியது. பீமன் மேலும் பதற்றம்கொள்ள கிருதவர்மன் நம்பிக்கைகொண்டு புன்னகைத்தான்.
பீமன் பாய்ந்து கிருதவர்மனின் தலைமேல் ஓங்கி அறைய அவன் அதை முற்றொழிந்து இடக்கை ஊன்றி நிலத்திலிருந்து துள்ளி எழுந்து கதையை வீசி பீமனின் விலாவை ஓங்கி அறைந்தான். பீமனின் கவசம் உடைந்து தெறிக்க அவன் பின்னால் சரிந்து நிலையழிந்த கணத்தில் கிருதவர்மன் பாய்ந்தோடி இரு தேர்களின் முகடுகளின் மேலேறி அப்பால் தாவி தன் படையுடன் இணைந்துகொண்டான். சீற்றத்துடன் தன் கதையை நிலத்தில் ஓங்கி அறைந்து கூச்சலிட்ட பீமன் “கேடயப்படை திறக்கட்டும்…” என்று ஆணையிட்டான். அவன் சொல்லாலோ மறுபக்க அறைவிசையாலோ கேடயமேந்திய யானைகளில் ஒன்று விலக அவ்விடைவெளியில் மறுபக்கமிருந்து தண்டு பாய்ந்து வந்தது. பீமன் அதன் மேல் பாய்ந்தேறி அப்பால் சென்றான்.
அந்தத் தண்டுடன் மேலுமிரு தண்டுகள் இணைந்துகொள்ள யானைகளின் சுவர் விலகியது. பாண்டவப்படை போர்க்கூச்சலுடன் பீமனை துணைக்கப் பாய்ந்தது. பீலன் தன் வேலைவீசி முதல்தண்டை ஏந்திவந்துகொண்டிருந்த யானையின் மத்தகத்தின் சென்னிக்குழியில் அறைந்து உள்ளே முனையிறக்கினான். சங்கிலியை இழுத்து வேலை பிடுங்கியபோது வெண்கூழுடன் குருதி வழிந்து அதன் துதிக்கவசத்தில் ஊறியது. பிளிறியபடி தண்டை விட்டுவிட்டு யானை வலப்பக்கமாக சரிய தண்டின் முனை நிலத்தில் ஊன்றி நிலைகொண்டது.
பின்னணியானையால் தண்டை தனியாக பிடிக்கமுடியவில்லை. அதன் துதிக்கை தண்டில் சிக்கிக்கொள்ள அனிலை பாய்ந்து தண்டைக் கடந்து அப்பால் சென்றது. அக்கணத்தில் பீலன் தன் வேலால் அந்த யானையின் மத்தகத்தை அறைந்தான். அவன் வேல் பெரிய மண்டையோட்டில் முட்டித் தெறித்தது. யானை நிலைதடுமாறி பிளிறலோசை எழுப்ப அவன் அதன் கழுத்தில் வேலை இறக்கிச் சுழற்றி அதன் மூச்சுக்குழாய்களை தொடுத்து இழுத்து நீட்டியபடி அப்பால் பாய்ந்து வேலைச்சுழற்றி விடுவித்துக்கொண்டு மறுபுறம் துரியோதனனும் பீமனும் கதை முட்டிக்கொள்வதை பார்த்தான்.
பீமன் சீற்றம் கொண்டிருந்தான். மாறாக துரியோதனன் ஆழ்ந்த துயரும் அதன் விளைவான அமைதியும் கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் மோதத் தொடங்கியபோது துச்சாதனனும் துர்மதனும் துச்சகனும் அவர்களை சூழ்ந்துகொண்டு பின்காப்பளித்தனர். வேலை ஊன்றி நின்று பீலன் அவர்களின் போரை கண்டான். பீமன் கொக்கரித்தபடி, ஆர்ப்பரித்தபடி துரியோதனனை அறைந்தான். துரியோதனன் அந்த அடிகளை தன் கதையால் இயல்பாக வாங்கி அவ்விசையை திசைமாற்றி ஒழுக்கி தன் கதையைச் சுழற்றி அவனை அறைந்தான். துரியோதனன் மேல் விழும்போது அந்த அறைகள் மென்மையான பஞ்சுப்பொதிகளால் நிகழும் போரெனத் தோன்றிய விந்தையை பீலன் உணர்ந்தான்.
மேலும் மேலும் வெறிகொண்டு கூச்சலிட்டு தேர்விளிம்புகளிலும் புரவிப்பிடரிகளிலும் மிதித்துத் தாவி காற்றிலெழுந்தும், கைவிடு வீச்செனச் சுழற்றியும் பீமன் துரியோதனனை தாக்கினான். கண்கூடாகவே துரியோதனன் ஆற்றல்கொள்வதை உணர முடிந்தது. துரியோதனன் பாறை போலவும் பீமன் அதில் அலைத்தொழுகும் நீர்போலவும் தோன்றினர். என்ன நிகழ்ந்ததென்று அறியாக் கணத்தில் பீமன் துரியோதனனின் அறைபட்டு பின்னால் சென்று விழுந்தான். அவன் நெஞ்சக்கவசம் அருகே விழுந்தது. அவன் இருமியபடி புரள துரியோதனனின் அடுத்த அறை அவன் அருகே மண்ணில் பதிந்தது.
ஆனால் மேலும் உருளவியலாமல் கவிழ்ந்த தேர்த்தண்டு ஒன்றில் பீமன் முட்டிக்கொண்டான். துரியோதனனிடமிருந்து வஞ்சினமோ சினமறைதலோ எழக்கூடுமென பீலன் எண்ணினான். ஆனால் அவன் கதையைச் சுழற்றி தலைக்குமேல் தூக்கியகணம் அனிலை கனைத்தபடி பாய்ந்து சென்று துரியோதனனை முட்டித் தூக்கி அப்பால் வீசியது. அவன் புரண்டு எழுந்து கதையை எடுக்க காற்றில் பாய்ந்தெழுந்து அவன் நெஞ்சை தன் தலையால் அறைந்தது. அவன் தெறித்துவிழுந்து கதையைத் தூக்கியபடி எழ பீலன் தன் வேலால் அவன் நெஞ்சில் குத்தி கவசத்தை உடைத்தான்.
கூச்சலிட்டபடி கௌரவர் பீலனை சூழ்ந்துகொண்டார்கள். அம்புகள் நான்கு பக்கமிருந்தும் அவன்மேல் பொழிய ஐந்து கதைகள் அவனுக்குச் சுற்றும் சுழன்றன. அவன் தன் வேலை நிலத்திலூன்றி அதிலேறி காற்றிலெழுந்து அப்பால் சென்று விழுந்தான். அனிலை துச்சலனை முட்டித் தூக்கி அப்பால் எறிந்தது. கதையுடன் வந்த கௌரவ மைந்தன் சாம்யனை கழுத்துநாளத்தைக் கடித்து தூக்கி உதறி கீழே போட்டது. குருதித்துளிகள் சிதறும் மூச்சுடன் அவர்களை நோக்கி திரும்பி நின்றது. “அனிலை, போதும்… வந்துவிடு… வா!” என பீலன் கூவினான். “வந்துவிடு… வா… வந்துவிடு” என்று நெஞ்சிலறைந்து கூச்சலிட்டான். துரியோதனனின் அறைபட்டு அது விழுந்து இறக்கப்போகிறது என எண்ணினான்.
ஆனால் கௌரவர்கள் அதன் வெறிகண்டு அஞ்சி பின்னடைந்தனர். அக்கணம் இருபக்கமிருந்தும் கேடயமேந்திய யானைகள் வந்து அனிலையை அவர்களிடமிருந்து பிரித்தன. தலைதாழ்த்தி பிடரி சிலிர்க்க நின்ற அனிலை திரும்பி பீலனை பார்த்தது. தன்னை அது அடையாளம் காணாததுபோல் தோன்ற அவன் தயங்கி நின்றான். மெல்ல அருகணைந்து அவன் அதன் கடிவாளத்தை பற்றினான். அது பெருமூச்சுவிட்டது. “அன்னையே!” என்றான் பீலன். அதன் விழிகள் மாறுபட்டன. “அன்னையே, என் தெய்வமே!” என்று அவன் மீண்டும் அழைத்தான். மெல்ல அதன் விலாமேல் கையை வைத்தான். அது மெல்ல உடல்சிலிர்த்தபடி தலைதாழ்த்தியது.
பீமன் எழுந்து நின்று அவனிடம் “அது பாஞ்சாலப் படைப்பிரிவை சேர்ந்ததா?” என்றான். “ஆம், அரசே. அவள் பெயர் அனிலை. ஆணறியா கன்னி. கொற்றவையின் முழுதியல்புகள் அமைந்தவள். வெல்லமுடியாத விசைகொண்டவள்” என்று அவன் சொன்னான். பீமன் தன்னைப் பாராட்டி ஏதேனும் சொல்வான் என அவன் எதிர்பார்த்தான். ஆனால் பீமன் சிவந்த விழிகளும் விம்மும் நெஞ்சும் கொண்டிருந்தான். அவன் விழிநோக்கி சொல்லெடுக்கத் தயங்கினான். திரும்பிச்சென்றபோது அவன் காலடிகள் நிலைகொள்ளவில்லை என்பதை அவன் கண்டான்.
அவனருகே நின்றிருந்த காவலர்தலைவன் “உன் படைப்பிரிவு எது?” என்றான். அவன் சொல்வதற்குள் “ஓடு… இனி இளைய பாண்டவர் கண்முன் நிற்காதே. நீ இனி உயிருடன் திரும்பவியலாது” என்றான். “ஏன்?” என்றான் பீலன். “ஏனென்றால் நீ வெறும் வீரன்… செல்க!” என்றான் காவலர்தலைவன். பீலன் புரவிமேல் ஏறிக்கொண்டபோது படையணியைக் கிழித்து அருகணைந்த அவனுடைய காவலர்தலைவன் “படைமுகப்புக்குச் செல்க! அங்கே பீஷ்மருக்கு எதிர்நிற்க புரவிவேலவர் தேவை” என்றான். ஒருகணத்திற்குப் பின் புரிந்துகொண்டு பீலன் புன்னகைத்தான்.
படைமுகப்பில் பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் கடும்போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. பீஷ்மரிடமிருந்து பின்னடைந்து அர்ஜுனன் விலக அவரை பாஞ்சாலப் படைகள் வந்து சூழ்ந்துகொண்டன. தொலைவில் கௌரவர்களுடன் கடோத்கஜன் போரிட்டுக்கொண்டிருந்தான். அபிமன்யூ ஜயத்ரதனுடன் போரிட சுருதகீர்த்தியுடன் பூரிசிரவஸ் வில்கோத்திருந்தான். பீலன் ஒரே கணத்தில் அந்தப் போர் மீதான அனைத்து ஆர்வத்தையும் இழந்தான். அவன் உளச்சோர்வை புரவியும் அடைந்தது. கால்களை நீட்டி வைத்து அது மெல்ல நடந்தது. அவன் கவசங்கள்மேல் உலோகக் கலத்தில் மழைத்துளிகள் என அம்புகள் வந்து விழுந்துகொண்டே இருந்தன.
பீஷ்மரின் அம்புகளால் பாண்டவர்களின் தேர்ப்படை சிதறுண்டுகொண்டிருப்பதை அவன் கண்டான். மிகப் பழகிய ஏதோ சடங்கிலென வீரர்கள் தேரில் வில்குலைத்து அவர் முன் சென்று அம்பேற்று ஓசையின்றி துடித்து விழுந்துகொண்டிருந்தார்கள். நாணொலியுடன் அவரை துருபதரும் சத்யஜித்தும் எதிர்கொள்ள பாஞ்சால இளவரசர்களான பிரியதர்சனும் உத்தமௌஜனும் பாஞ்சாலப் படையுடன் துணைவந்தனர். கிராதர்களின் விற்படையை நடத்திய சுமித்ரனும் பாஞ்சால்யனும் வந்துசேர்ந்துகொண்டார்கள். சத்ருஞ்ஜயனும் சுரதனும் தங்கள் படையுடன் வந்து இணைந்துகொள்ள பீஷ்மர் அவர்களை எதிர்த்தார்.
பீஷ்மர் பின்னடையத் தொடங்குவதை பீலன் கண்டான். அவரால் அவர்களின் ஒருங்கிணைந்த எதிர்ப்பை நேர்கொண்டு நிற்க இயலவில்லை. அவர்கள் அனைவரும் நோக்குக்கு ஒன்றுபோலிருந்தனர். உடன்பிறந்தார் இணையும்போது பிழையின்றி ஒன்றாக முடிகிறது. ஒற்றைப் பேருருக்கொண்டு எழ இயல்கிறது. மேலும் மேலும் கொம்போசைகள் எழுந்தன. அனுபநாட்டு மூதரசர் விருத்தஷர்மரும் அவர் மைந்தர் வசுதனனும் இளையோன் நீலனும் வந்து சூழ்ந்தனர். தொடர்ந்து மேற்கு நிஷாதஅரசின் ஹிரண்யநாபனையும் அவன் இளையோன் ஹிரண்யபாகுவையும் மைய நிஷாதநிலத்து அரசர் மணிமானையும் அவர் மைந்தர் மணிகர்ணனையும் கீழ்நிஷாதநிலத்து அரசர் தண்டதரனையும் அவர் மைந்தர் சார்ங்கதரனையும் பீலன் கண்டான்.
அவர்கள் அந்தத் தருணத்தை முன்னரே வகுத்திருக்கவில்லை. ஆகவே அது இயல்பாக உருவானபோது வெறிகொண்டார்கள். ஒருவரை ஒருவர் நோக்கி கூச்சலிட்டும் நாணொலி எழுப்பியும் பீஷ்மரை சூழ்ந்துகொண்டனர். அவர்களின் கொம்போசைகள் ஓநாய்க்கூட்டத்தின் அழைப்பொலிபோல் ஒலிக்க மேலும் மேலும் என அரசர்கள் வந்து பீஷ்மரை சூழ்ந்தனர். உத்தரமல்லநாட்டு தீர்க்கபிரக்யரின் மைந்தர் தீர்க்கதந்தரும் வந்து சேர்ந்துகொண்டார். அரக்கர் குலத்தலைவர்கள் வக்ரசீர்ஷரும் காகரும் வந்தனர். அம்புகளை எதிர்கொள்ளவியலாமல் பீஷ்மர் மேலும் பின்னடைந்தார். அவர்களுக்கு அப்பின்னடைதல் மேலும் விசைகூட்டியது. பீஷ்மரின் கவசங்கள் உடைந்தன. அவருடைய வில் உடைய இருமுறை அவர் வில்மாற்றிக்கொண்டார்.
பீஷ்மருக்குப் பின்னாலிருந்து சங்கொலியுடன் துரோணர் தோன்றினார். நீண்ட வில் தலைக்குமேல் எழுந்து நிற்க, வலக்கை சுழன்று அம்புகளை எடுக்க, நாண் துடிக்க அம்புகள் எழுந்து பறக்க, தேரில் அணுகிவந்த துரோணரைக் கண்டதும் பீஷ்மரை எதிர்த்தவர்கள் திகைத்தனர். ஒருகணம் காற்று நின்றுவிட பறந்துகொண்டிருந்த துணித்திரை அமைவதுபோல அவர்களின் ஊக்கம் அணைவதை பீலன் கண்டான். துரோணரின் பிறையம்பு சென்று தைத்து பாஞ்சால இளவரசன் பிரியதர்சன் தலையறுந்து தேர்த்தட்டில் விழுந்தான். துருபதர் அலறியபடி வில்லை நழுவவிட்டார். பாஞ்சாலர்கள் அனைவருமே திகைப்படைந்தனர். அடுத்த கணமே பாஞ்சால இளவரசன் உத்தமௌஜனும் நெஞ்சில் துரோணரின் அம்பு ஏற்று விழுந்தான்.
துருபதர் வெறியுடன் அலறியபடி துரோணரை எதிர்த்தார். சத்யஜித்தும் சுமித்ரனும் பாஞ்சால்யனும் சத்ருஞ்ஜயனும் சுரதனும் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். பீஷ்மர் பிறரை எதிர்த்து அம்புகளால் அறைந்தபடி முன்னெழுந்தார். உத்தரமல்லநாட்டு தீர்க்கபிரக்யரின் மைந்தன் தீர்க்கதந்தன் அலறியபடி பீஷ்மரை நோக்கி வர அவ்விசையிலேயே அவன் தலை அறுந்து பின்னால் சென்றது. அரக்கர் குலத்தலைவர்கள் வக்ரசீர்ஷரும் காகரும் பீஷ்மரின் அம்புகளால் வீழ்ந்தனர். அனுபநாட்டு மூதரசர் விருத்தஷர்மரும் அவர் மைந்தர் வசுதனனும் இளையோன் நீலனும் சங்கோசையுடன் பீஷ்மரை எதிர்கொள்ள மேற்கு நிஷாதஅரசின் ஹிரண்யநாபனும் அவன் இளையோன் ஹிரண்யபாகுவும் அஞ்சி தேரில் பின்னடைந்தனர்.
ஆனால் அம்புகளால் தன்னை எதிரிட்டவர்களை தடுத்தபடியே பீஷ்மர் திரும்பி அவர்களையும் தாக்கினார். விரிசிறை அம்புகள் காற்றிலெழுந்து மிதப்பவைபோல ஒழுகி அறுபட்டவை என இறங்கின. ஹிரண்யநாபன் அம்புபட்டு தேரிலிருந்து விழுந்தான். தன் தேரிலிருந்து பாய்ந்து அப்பால் நின்ற புரவியில் ஏறிக்கொண்ட ஹிரண்யபாகுவும் கழுத்தில் அம்பு தைத்து பக்கவாட்டில் விழுந்தான். நிஷாதநிலத்து அரசர் மணிமானையும் அவர் மைந்தர் மணிகர்ணனையும் பீஷ்மர் கொன்றார். கீழ்நிஷாதநிலத்து அரசர் தண்டதரனையும் அவர் மைந்தர் சார்ங்கதரனையும் மறுகணமே வீழ்த்தினார்.
எஞ்சியவர்கள் மேலும் அழுந்தி செறிந்து வளைந்து பின்னடைய பீஷ்மரைச் சூழ்ந்து வெற்றிடம் உருவானது. அதில் தனித்துவிடப்பட்டவர்களாக அனுபநாட்டு மூதரசர் விருத்தஷர்மரும் அவர் மைந்தர் வசுதனனும் இளையோன் நீலனும் திகைத்தனர். நீலன் அம்புபட்டு விழ வசுதனன் தன் தேரை பின்னடையச் செய்யும்படி பாகனிடம் ஆணையிட்டான். பாகன் தேரை பின்னெடுப்பதற்குள் அவன் தலை அறுபட்டு தொங்கியது. வசுதனன் பாய்ந்து தரையிலிறங்கி பின்நிரை நோக்கி ஓடுவதற்குள் அவன் கழுத்தில் நீளம்பு குத்தி நின்றது. தன் வில்லை தேர்த்தட்டில் வைத்து கைகளைத் தூக்கிய விருத்தஷர்மரை பீஷ்மரின் அம்பு அறைந்து தெறிக்கச் செய்தது.
தன் விழிகளில் ஒன்றால் நிகழ்வதை நோக்குகையிலும் மறுவிழியால் களம்பார்த்து பீலன் போரிட்டுக்கொண்டிருந்தான். அனிலை தன் இலக்குகளை அதுவே தெரிவுசெய்து பாய்ந்து சென்று தாக்கித்திரும்பி சுழன்றெழுந்தது. சுமித்ரன் துரோணரின் அம்பை நெஞ்சிலேற்று வீழ்ந்தான். “மூத்தவரே, திரும்புக… போதும்!” என சத்யஜித் கூவ துருபதர் தன் மைந்தரிடம் திரும்பும்படி ஆணையிட்டார். துரோணர் அதை உணர்ந்து முழுவிசையுடன் முன்னெழுந்து சென்று சத்ருஞ்ஜயனைத் தாக்கி வீழ்த்தினார். சுரதனும் பாஞ்சால்யனும் தேர்களை பின்னடையச் செய்தனர். தேர்கள் ஒன்றை ஒன்று முட்டி அசைவிழக்க சுரதன் துரோணரின் அம்பை ஏற்று தேரிலிருந்து ஒருக்களித்து கீழே விழுந்தான்.
பின்னணியில் முரசுகள் முழங்கிக்கொண்டே இருந்தன. அவை துணைகோரும் அழைப்புகள் என பீலன் உணர்ந்தான். பாஞ்சாலப் படைகளுக்குள்ளிருந்து திருஷ்டத்யும்னன் நாணொலி எழுப்பியபடி களத்திற்கு வந்து துரோணரை எதிர்கொண்டான். திருஷ்டத்யும்னனின் அம்பு துரோணரின் தோளை தைத்தது. அவர் அதை பொருட்படுத்தாமல் பாஞ்சால்யனையும் வீழ்த்திவிட்டு அவனை எதிர்த்தார். துருபதர் கதறியழுதபடி தேர்த்தட்டில் அமர்ந்தார். திருஷ்டத்யும்னன் வெறிக்கூச்சலிட்டபடி துரோணரை எதிர்த்து அம்புகளால் அறைந்து அறைந்து பின்னால் கொண்டுசென்றான். அவர்களிருவரும் கௌரவப் படைவிரிவுக்குள் மூழ்கி அப்பால் சென்றனர்.
சாத்யகியும் அபிமன்யூவும் இருபுறங்களிலுமிருந்து எழுந்துவந்து பீஷ்மரை எதிர்த்தனர். பீலன் அனிலையை முன்னெழச்செய்து பீஷ்மருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த வில்லவர்களை எதிர்த்தான். அனிலை பாய்ந்தெழுந்து முன்செல்ல அவனுடைய வேல் தேரில் நின்றவர்களை அறைந்து வீசியது. மிக அண்மையில் சென்றுவிட்டிருந்தமையால் அவர்களின் அம்புகள் எழுந்து அனிலையையும் பீலனையும் தாக்க முடியவில்லை. உடல்முழுக்க குருதியுடன் களத்தில் நின்ற அனிலை அவர்களனைவரையும் அச்சுறுத்தியது. ஒருவன் “நோக்குக! அது குருதி குடிக்கிறது! குருதியை நக்கிக்குடிக்கிறது!” என்று கூவினான். சூழ்ந்திருந்தவர்கள் அஞ்சி கூச்சலிட்டனர். “பேய் வடிவு! குருதியுண்ணும் கானகப்பேய் இது!” என்று ஒருவன் அலறினான்.
அனிலை பசுங்குருதியை விரும்பி குடிப்பதை பீலன் களம் வந்த முதல்நாளே கண்டிருந்தான். போர் முடிந்தபின் அந்தியில் அதை கொண்டுசெல்கையில் தலைதிருப்பி தன் உடலின் குருதியை அது நக்கியதை கண்டான். பின்னர் போரிலும் அது வீழ்ந்தவர்களை கழுத்தில் கடித்து குருதியை உறிஞ்சுவதை உணர்ந்தான். களத்தில் புரவிகள் நான்கு நாழிகைப்பொழுதுக்குமேல் போரிடுவதில்லை. அவற்றை பின்னடையச் செய்து வெல்லமும் மாவும் கரைத்த நீர் அளித்த பின்னரே மீண்டும் களத்திற்கு கொண்டுவருவார்கள். அனிலை பசியும் விடாயுமில்லாமல் பகல் முழுக்க போர்க்களத்தில் நின்றிருப்பது குருதியையே உணவென அருந்துவதனால்தான்.
நேர் எதிரில் காம்போஜ மன்னன் சுதக்ஷிணனை பீலன் கண்டான். அவனுடைய படைவீரர்கள் அனிலையை சுட்டிக்காட்டி அவனிடம் கூவ அவன் வில்லைத் தாழ்த்தி அதை நோக்கினான். பின்னர் நாணொலி எழுப்பியபடி அனிலையை நோக்கி வந்தான். எதிரே நின்ற இரு புரவிவீரர்களை வீழ்த்தியபடி அனிலை அவனை நோக்கி சென்றது. சுதக்ஷிணனின் அம்புகள் அதன் கவசங்களின் மேல் பட்டுத் தெறித்தன. அம்புகள் எழுகையிலேயே திசைகணித்து ஒழியவும் கவசப்பரப்பைக் காட்டி தடுக்கவும் அனிலை அறிந்திருந்தது. சுதக்ஷிணனின் அம்பு தோளில் அறைய பீலன் புரவியிலிருந்து கீழே விழுந்தான்.
ஆனால் குன்றாவிசையுடன் உறுமியபடி மேலெழுந்த அனிலை பாய்ந்து சுதக்ஷிணனின் தேரின் புரவிகளின்மீது கால்வைத்தேறி தேர்த்தட்டில் நின்றிருந்த அவனை முட்டி அப்பாலிட்டது. அவன் எழுவதற்குள் எடைமிக்க குளம்புகளுடன் அவன் மேல் பாய்ந்தது. அவன் புரண்டு எழுந்து தன் வேலை எடுப்பதற்குள் பீலன் தன் நீள்வேலால் அவன் நெஞ்சில் அறைந்தான். சுதக்ஷிணன் நிலைதடுமாறி சரிய அவன் தலைக்கவசம் விழுந்தது. கனைத்தபடி அனிலை அவன் கழுத்தைக் கவ்வி தூக்கிச் சுழற்றி உதறி அப்பாலிட்டது. முகத்தில் வழிந்த குருதியை நக்கியபடி அது திரும்ப எதிரே பீஷ்மரின் தேர் வந்தது. அனிலை உறுமலோசை எழுப்பியபடி பிடரி உலைத்து தலைதூக்கி பீஷ்மரை நோக்கி திமிர்த்த அசைவுகளுடன் சென்றது. பீஷ்மர் அதை வெறித்த கண்களுடன் நோக்கினார். அவர் கையிலிருந்த வில் தழைந்தது.
அவருடன் போரிட்டுக்கொண்டிருந்த அபிமன்யூ “வில்லெடுங்கள், பிதாமகரே… இன்றே முடித்துவிடுவோம் இவ்வாட்டத்தை!” என்று கூவியபடி அவரை தாக்கினான். பீஷ்மர் மெல்லிய குரலில் ஆணையிட அவருடைய தேர்ப்பாகன் தேரை கௌரவப் படைகளுக்குள் கொண்டுசென்றான்.
ஜெ
உங்கள் முந்தைய கடிதப்பதிலில் இப்படி குறிப்பிட்டிருந்தீர்கள்
அ. குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு கட்சியை, சாதியைச் சார்ந்தவர் என்றால் அதைச்சார்ந்தவர்கள் அவரை ஆதரிக்கிறார்கள், அல்லது அமைதி காக்கிறார்கள். எந்த முற்போக்கு பேசினாலும் அந்த எல்லையை கடக்க நம்மவர்களால் முடியவில்லை
இந்தச்செய்தியை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்
ஸ்ரீனிவாசன்
அன்புள்ள ஸ்ரீனிவாசன்,
ஆம், நல்ல முடிவு. தாங்களும் ஒரு விசாரணை நடத்தி முடிவெடுப்பதே அக்காதமிக்கு நல்லது. தங்கள் சாதி, மத எல்லைகளைக் கடந்து இப்படி ஒரு முடிவெடுக்க அவர்களுக்குத் தோன்றியது பாராட்டத்தக்கது
ஜெ
இயற்கையின் மீதான ஆர்வம், இந்திராகாந்தியின் இளமைப்பருவத்திலேயே துவங்குகிறது. அடிப்படைப் பாடங்கள் தந்தை நேரு தன் மகள் இந்திரா ப்ரியதர்ஷினிக்கு எழுதும் கடிதங்களில் இருந்து துவங்குகின்றன. 1930 ஆம் ஆண்டு, மௌரிஸ் என்பவர் எழுதிய “தேனியின் வாழ்க்கை வரலாறு” புத்தகத்தைப் பரிசாக அனுப்புகிறார். இது போலப் பல புத்தகங்களை அவர் மகளுக்காக அனுப்பிக் கொண்டேயிருக்கிறார். கமலா நேருவின் தம்பியும், இந்திராவின் தாய்மாமனுமான கைலாஸ் நாத் கௌல், ஒரு உயிரியல் ஆய்வாளர்..(இவர் பின்னர் இங்கிலாந்தில் அரச தாவரவியல் பூங்காவில் பயிற்சி பெற்று, கான்பூர் வேளாண் பல்கலையின் துணை வேந்தரானார்) அவருக்குப் பாம்புகள் மீது பெரும் ஆர்வம்.. பாட்டி வீட்டில் எந்தப் பெட்டியைத் திறந்தாலும் பாம்பு இருக்கும் என எழுதியிருக்கிறார் இந்திரா.. இதனால், அவருக்கு பாம்பு மற்றும் பல விலங்குகள் மீது ஆர்வம் ஏற்பட்டது.
அன்புள்ள ஜெ
இன்று அதிகாலையில் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை செல்லவேண்டியிருந்தது. வழியனுப்பல் என்பது வாடசப் காலத்திலும் சோகமானதே….
அதிகாலைப்பொழுது எப்போதும் காலியான மின்சார ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்புகள் அமையும் நேரம். வழியில் ஒரு போஸ்டரில் இருந்த பிசிறில்லா பாண்டியனே என்ற வரி கண்ணில் பட்டது. சங்க இலக்கியத்தில் வரும் பொற்கை பாண்டியன் போல ஒரு காரணக்கதை கண்டிப்பாக இருக்கக்கூடும் என்று தோன்றியதால் திரும்பி வருகையில் கவனமாக அவ்விடத்தை நோக்கினேன். முழு போஸ்டரையும் படித்தபின் அது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தலைவர் ஜான் பாண்டியன் அவர்களின் மனைவி பிரிஸில்லா பாண்டியன் என்று புரிந்தது..
“வேதசகாயகுமார் தேவசகாயகுமாராக மாற்றப்படாவிட்டால் வேறசகாயகுமாராக எழுத்து வேறாக அச்சாகியிருக்கும்.” என்ற அச்சுப்பிழை கட்டுரை வரிகள் ( https://www.jeyamohan.in/925#.W8qb1crhU0O) ஞாபகம் வந்து மீண்டும் அந்தக்கட்டுரையை படித்து [அச்சுப்பிழை] ஒரு லாஃப்டர் தெரபியுடன் பொழுது புலர்ந்தது.
நன்றி
அன்புடன்
R.காளிப்ரஸாத்
அன்புள்ள ஜெ
நகைச்சுவைக் கட்டுரைகளில் வைணவம் ஓர் அறிமுகம் கட்டுரையில் ஒரு இடம்.
“பரமாத்மாவிலிலுருந்து பசுவிலிருந்து பால் வர்ரது மாதிரி பிரபஞ்சம் வந்துண்டிருக்கு. ஐந்து முலைக்காம்புகளும் பஞ்சேந்த்ரியங்கள். பாலை கறந்துக்கறது நம்மளோட மாயைன்னு சொன்னேன். வாயை மூடின்னுட்டான்”
”சிலபேர் அதைக்கடைஞ்சு வெண்ணையே எடுக்கறா”என்றான் நாணா. அது அத்தனை ஆழமாக தோன்றியதால் அதை அவன்தான் சொன்னானா என்ற ஐயம் அறிஞர்களுக்கு ஏற்பட்டு அவனை முற்றாக தவிர்த்துவிட்டார்கள்”
வாசிக்கும்போது வெடித்துச் சிரித்தேன். பின்னர் இன்று ஞாபகம் வந்த்து. ஆபீஸ் மீட்டிங்கில் ஒரு புகழ்பெற்ற அசடு ஒரு கருத்தைச் சொன்னது. வாய்க்குவந்தபடி அது சொன்னாலும் அப்போதைக்கு பயங்கர ஆழமான கருத்தாகத் தோன்றியது. அரைநிமிடம் மௌனமாக இருந்துவிட்டு அப்படியே கடந்துசென்றுவிட்டோம். இந்த வரியை இன்றைக்கு நினைத்துச் சிரித்தேன்
ராம்
கவிதையில் தற்குறிப்பேற்ற அணிக்கு எத்தனை ஆண்டுக்கால தொன்மை இருக்கும்? பெரும்பாலும் கவிதையளவுக்கே. உலகிலேயே புதுமையே அடையாததும் எப்போதும் புதுமையாகத் தோன்றுவதும் கவிதைதான் போலும்.இன்றும் கவிஞர்கள் தற்குறிப்பேற்ற அணிகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இன்றும் உள்ளம் ஒருகணம் மலர்ந்து ஒளிகொள்கிறது
கலாப்ரியாவின் இரு கவிதைகளை வாசித்தேன்.
[ 1 ]
பொடீத் தூற்றல் தூறுகிறது
கோலம் கூட அழியலை
அம்புட்டு மழைதான் பெஞ்சுது
என்று சொல்லுவது மாதிரி
இரண்டு வண்ணத்துப் பூச்சிகள்
குலவிக் கொண்டே பறக்கின்றன
நனைதல் மறந்து
மாற்றிச் சொல் என்பது மாதிரி
[ 2 ]
அந்தத் தண்டவாளத்தில் கொஞ்ச நேரம்
இந்தத் தண்டவாளத்தில்
கொஞ்ச நேரம்
அமர்ந்தமர்ந்து சமாதானப்படுத்துகிறது
ரயில் கடந்து போன தண்டவாளங்களை
ஒரு சிட்டுக் குருவி
தற்குறிப்பேற்றம் ஏன் அந்தப் பரவசத்தை அளிக்கிறது? பொருளின்மையின் மகாமௌனத்தில் உறைந்திருக்கும் இப்பொருள்வயப் பிரபஞ்சத்தை பொருள்கொள்ளச் செய்கிறது என்பதனாலா? அது குழந்தை தன் கைப்பொம்மையிடம் பேசுவதுபோல் அல்லவா? அப்பேச்சும் மறுபேச்சும் குழந்தையே உருவாக்கிக்கொள்வனதானே?
கவிதை மிகமிக கள்ளமற்றதாக நின்றிருப்பது தற்குறிப்பேற்ற அணியின்போதுதான். குழந்தையாகக் கவிஞன் ஆகும் தருணம். தமிழ்க்கவிதை மரபு மகத்தான தற்குறிப்பேற்றங்களால் ஆனது. சங்கப்பாடலின் அழகியலே உண்மையில் அதுதான்
கலாப்ரியாவில் எப்போதுமுள்ள சங்கத்தொடர்ச்சியை நான் முன்னரும் விரிவாகவே எழுதியிருக்கிறேன். அவை பெரும்பாலும் கண்களால் கண்டடையப்பட்ட கவிதைத் தருணங்களால் ஆனவை
பகுதி ஏழு : காற்றன்
தெற்கெல்லையின் பன்னிரண்டாவது காவலரணின் காவலர்தலைவனாகிய சந்திரநாதன் அவனே தன்னை காணும்பொருட்டு வந்தது துர்மதனுக்கு வியப்பை அளித்தது. தெற்கு விளிம்பில் அமைந்த தன் பாடிவீட்டில் அவன் அன்றைய போரின் அறிக்கையை கேட்டுக்கொண்டிருந்தான். அவன் உடலின் புண்களுக்கு மருந்திட்டு வேது அளித்துக்கொண்டிருந்தனர் மருத்துவர். சிறு அம்புகளை அவர்கள் பிடுங்கும்போது அவன் முனகினான். அறைக்குள் கந்தகநீரின் எரிமணம் நிறைந்திருந்தது. சூழ்ந்து நின்றிருந்த படைத்தலைவர்கள் தங்கள் படைகளின் அழிவை அறிவித்துக்கொண்டிருந்தனர்.
ஒவ்வொருவரும் தங்கள் படைகளின் அழிவையும் எச்சத்தையும் அறிவித்தனர். எட்டு காலாட்படையினருக்கு ஒரு வில்லவர் என களம்பட்டிருப்பதை அவன் பார்த்தான். விழிகளை சுருக்கியபடி “காலாட்படையினரின் இறப்பின் மடங்கு பெரிதாக உள்ளதே?” என்றான். “எப்போதுமே அவ்வாறுதான். நான்கு மடங்கு என்பது கணக்கு. இப்போது சற்று மிகுதி” என்று படைத்தலைவனாகிய துர்வீரியன் சொன்னான். துர்மதன் “எட்டு மடங்கு எனில் அதை நாம் புறக்கணிக்க முடியாது” என்றான். “அது உளச்சோர்வை உருவாக்கும். காலாட்படையினர் மிக எளிதில் அஞ்சி பின்னகரக்கூடும்.”
பிறிதொரு படைத்தலைவனாகிய உஜ்வலன் “அரசே, வில்லவர்கள் படைத்தொழில் பயின்றவர்கள். விரைந்துசெல்லும் தேரில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களிடையே இடைவெளி இருப்பதனால் அகலவும் இயலும். எனவே அவர்கள் களத்தில் அம்புகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும். காலாட்படையினர் குறைந்த பயிற்சி பெற்றவர்கள். மேலும் அவர்கள் ஒருவரோடொருவர் நெருங்கி களம் செல்கிறார்கள். எழுந்து பொழியும் அம்பு மழையிலேயே அவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்துவிடுவதுண்டு” என்றான்.
துர்மதன் “அவர்கள் கவசங்கள் அணிந்துகொள்கிறார்களே?” என்றான். “ஆம், பெரும்பாலும் அவை எருமைத்தோல் கவசங்கள். அரிதாகவே இரும்பு. அம்புகளிலிருந்து அவை ஓரளவே காக்கும்” என்றான் துர்வீரியன். துர்மதன் “இதற்கு ஏதேனும் செய்தாகவேண்டும். மூத்தவரிடம் பேசுகிறேன். காலாட்படையினர் மேலும் சற்று இடைவெளி விட்டு அகன்று வரலாம். அவர்களுக்கு சிறந்த கவசங்கள் அளிக்கப்படலாம்” என்றான். துர்வீரியன் “போர் தொடங்கி இது ஏழாவது நாள். இனிமேல் கவசங்களுக்கோ புதிய படைக்கலங்களுக்கோ நாம் ஒருங்கு செய்ய இயலாது” என்றான்.
அப்போதுதான் ஏவலன் வந்து தெற்கெல்லைக் காவலரணின் தலைவன் சந்திரநாதன் வந்திருப்பதாக சொன்னான். துர்மதன் “தெற்கெல்லைக் காவலனிடமிருந்து தூதா?” என்றான். “தூதல்ல அரசே, அவரே வந்திருக்கிறார்” என்றான் ஏவலன். “அவனேவா? காவலரணை விட்டுவிட்டா?” என்றபடி எழுந்த துர்மதன் படைத்தலைவரிடம் கையசைத்துவிட்டு அவனே வெளியே வந்தான். தெற்கெல்லைக் காவலன் அருகே வந்து வணங்கி “அரசரைப் பார்த்து செய்தி ஒன்றை அளிக்கவேண்டும். அதன் பொருட்டே வந்தேன். இங்கு தாங்களிருப்பதை அறிந்தேன்” என்றான். “சொல்க!” என்றான் துர்மதன்.
“அரசே, விதர்ப்ப நாட்டு அரசர் ருக்மி தன் படைகளுடன் கிளம்பி வந்திருக்கிறார். நம்முடன் சேரவிழைகிறார். அரசரிடம் அளிக்கும்பொருட்டு என்னிடம் ஓர் ஓலை அளித்திருக்கிறார்” என்றான் சந்திரநாதன். முதலில் துர்மதனுக்கு அவன் சொல்வதென்ன என்று புரியவில்லை. “யார்?” என்று மீண்டும் கேட்டான். குழம்பி “அவரா? ஆனால் விதர்ப்ப நாட்டு அரசர் பீஷ்மகர் அல்லவா?” என்றான். காவலன் “அறியேன். ஆனால் விதர்ப்ப நாட்டு அரசருக்குரிய முத்திரை ஓலையுடன் வந்திருக்கிறார்” என்றான். துர்மதன் ஒருகணம் தயங்கி “அவர் எங்கிருக்கிறார்?” என்றான். “தெற்கெல்லை காவல்மாடத்திலேயே காத்திருக்கிறார்” என்றான். “அவரது படைகள்?” என்றான் துர்மதன். “அவை மூன்று நாழிகைத் தொலைவுக்கு அப்பால் காத்திருக்கின்றன” என்றான் சந்திரநாதன்.
துர்மதன் பொறு என்று கைகாட்டி தன் பாடிவீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த படைத்தலைவரிடம் “படைத்தலைவர்கள் மூவர் தெற்கெல்லைக்கு செல்க! அங்கு விதர்ப்ப நாட்டு படை மூன்று நாழிகை அப்பால் நின்றுள்ளது. அது தான் நின்றிருக்கும் இடத்திலிருந்து ஓர் அடிகூட முன்னகரக்கூடாது. நமது தொலைவில்லவர்கள் காவல் மாடங்களிலும் அரண்களிலும் காத்து நிற்கட்டும். வில் அணியும் விரைவுப்புரவி அணியும் ஒருங்கி நிற்கவேண்டும்” என்று ஆணையிட்டான். அவர்கள் தலைவணங்கினர். அவர்கள் குழப்பமடைந்திருப்பது தெரிந்தது.
துர்மதன் வெளியே வந்து “அவரை அழைத்து வா!” என்றான். “அரசரை பார்த்துவிட்டு…” என்று சந்திரநாதன் தயங்க “வேண்டியதில்லை. அவரே அரசரிடம் பேசட்டும். இன்னும் சற்று நேரத்தில் படைசூழ் அமர்வு நிகழவிருக்கிறது. அரசர் அரியணையில் அமர்ந்து அவை கேட்பார். அதில் விதர்ப்பரே தன்னுடைய சொற்களை உரைக்கட்டும்” என்றான். காவலன் தலைவணங்கி கிளம்ப “பொறு” என்று துர்மதன் மீண்டும் சொன்னான். “அவரை நானே வந்து அழைத்து வருவதுதான் முறை. அவர் அரசர்” என்றான். சந்திரநாதன் “ஆம்” என்றான்.
துர்மதன் சென்று தன் புரவியிலேறிக்கொண்டான். சந்திரநாதனை தன்னை தொடரச் சொல்லிவிட்டு படைகள் நடுவே அமைந்த பலகைகள் விரவிய விரைவுப்பாதையில் புரவிக்குளம்படி தாளம் எழுப்ப விரைந்து சென்றான். செல்லும் வழியெல்லாம் அவன் உள்ளம் குழம்பிக்கொண்டிருந்தது. திரும்பிச்சென்று துச்சகனை அழைத்து வந்தாலென்ன என்று எண்ணினான். ருக்மியுடன் அணுக்கமான கௌரவன் அவன்தான். ருக்மியை இறுதியாக எப்போது பார்த்தோம் என எண்ணிப்பார்த்தான். உள ஓவியம் திரளவில்லை.
தெற்கெல்லையை அவர்கள் அடைந்தபோது புரவிகள் வியர்த்து மூச்சிறைத்துக்கொண்டிருந்தன. துர்மதன் இறங்கி தொடர்ந்து வந்த காவலனிடம் “அவர் எங்கிருக்கிறார்?” என்றான். திரும்பிவிடலாமா என்னும் எண்ணம் அப்போதும் ஏற்பட்டது. “காவலரணின் கீழ் அறையில்” என்றான் சந்திரநாதன். “நன்று” என்றபின் துர்மதன் தன் ஆடைகளை சீர்படுத்தியபடி சென்று காவலரணின் வாயிற்காவலனை அணுகி கைகளாலேயே அவனை விலகிப்போகும்படி காட்டிவிட்டு சிற்றறைக்குள் நுழைந்தான்.
அவைகளில் பார்த்திருந்தாலும்கூட அங்கே அமந்திருந்த முனிவர்தான் ருக்மி என்று புரிந்துகொள்ள சற்று பிந்தியது. நெஞ்சுக்குக் கீழ் தழைந்த செந்தழல் தாடியும், தோள்களில் இறங்கி இடைவரைக்கும் சென்ற சடைவிழுதுகளும், மெலிந்து ஒட்டிய முகமும், சினந்தவைபோல் கூர்கொண்டிருந்த விழிகளும், சற்றே கூன் விழுந்த நெடிய உடலும் கொண்ட அவரை ஒரு நாட்டின் அரசர் என்று எண்ணி கொண்டுசென்று பொருத்துவது இயலாததாக இருந்தது. துர்மதன் நெஞ்சில் கைகுவித்து வணங்கி “விதர்ப்பத்தின் அரசரை வணங்குகிறேன். நான் அஸ்தினபுரியின் பேரரசர் துரியோதனருக்கு இளையோனாகிய துர்மதன். அஸ்தினபுரியின் படை எல்லைக்குள் தாங்கள் வந்தது எங்கள் பேறு” என்றான்.
ருக்மி மறுமுகமன் எதுவும் உரைக்காமல் “நான் உமது மூத்தவரை பார்க்க விழைகிறேன், அதன் பொருட்டே வந்தேன்” என்றான். “இன்னும் இரு நாழிகையில் அவரது பாடிவீட்டிலேயே படைசூழ்கை அமர்வு நிகழும். அவர் அமர்ந்து சொல் கேட்பார். தாங்கள் அங்கு வந்து அவையிலேயே அவரிடம் பேசலாம்” என்றான் துர்மதன். ருக்மி ஒருகணம் எண்ணியபின் “அவையிலென்றால்…” என முனகி “அதுவும் நன்று” என்றான். “தங்கள் படைப்பிரிவுகள் இப்போதிருக்கும் இடத்திலேயே இருப்பது நன்று. மூத்தவரின் ஆணை வரை” என்றான் துர்மதன். “ஆம், அவை அங்கிருக்கும். நான் என் படைகளுடன் கௌரவதரப்பில் நின்று போரிட வந்துள்ளேன்” என்றான் ருக்மி.
துர்மதன் “ஆனால் தங்கள் தந்தை பாண்டவர்களை ஆதரிக்கிறார். தங்கள் உடன்பிறந்தாரான ருக்மரதரும் ருக்மகேதுவும் ருக்மபாகுவும் ருக்மநேத்ரரும் மறுதரப்பில் இருக்கிறார்கள்” என்றான். “ஆம், அவர்கள் என்னுடன் இல்லை. நான் எனக்குரிய நிலத்தை பகுத்துக்கொண்டு நெடுநாட்களாகின்றன. குண்டினபுரிக்குள் நான் நுழைவதில்லை. போஜகடகத்தை தலைநகராகக்கொண்டு ஆள்கிறேன்” என்ற ருக்மி “கிளம்புவோம்” என்று எழுந்தான்.
துர்மதன் தெளிவுற நினைவுகூரமுடியாமல் தலையை விரல்களால் தட்டி “முதலில் தங்கள் தந்தை பீஷ்மகரும் தாங்களும் இங்கே எங்களுடன் சேர்வதாகத்தானே சொன்னார்கள்?” என்றான். “ஆம், ஆனால் அவருடனிருக்கும் குலத்தலைவர்கள் பன்னிருவரும் ஒரே குரலில் பாண்டவர்களிடம் சென்று சேரவேண்டும் என்றே சொன்னார்கள். தந்தைக்கு வேறுவழியில்லை” என்றான் ருக்மி. “ஆனால் அவருடைய சொல் என்னை கட்டுப்படுத்தாது. என் படைகள் வேறு.” உள்ளம் நிலையழிந்திருந்தமையால் அவன் செயற்கையான உரத்த குரலில் பேசினான்.
துர்மதன் ருக்மியின் பதற்றத்தை விந்தையாக நோக்கியபடி “வேறு எங்கிருந்து படைதிரட்டினீர்கள்?” என்றான். ருக்மி “என் எல்லைக்கு அப்பாலிருந்தும் படைதிரட்டினேன். ஆகவேதான் இத்தனை பிந்தினேன்… குலத்தலைவர்களில் மூவர் என்னுடன் இருக்கிறார்கள்” என்றான். ஏவலன் அருகே வந்து தலைவணங்க துர்மதன் திரும்பி ருக்மியிடம் “தங்களுக்கான தேர்…” என்றான். “தாழ்வில்லை. புரவியில் செல்வதே விரைவு” என்றான் ருக்மி. “நெடுந்தொலைவு. அங்கு சென்றபின் தாங்கள் களைத்து அவையில் அமரமுடியாமலாகலாம்” என்றான் துர்மதன். “நான் களைப்படைவதில்லை” என்று ருக்மி சொன்னான்.
ருக்மி விட்டிலொன்று தாவுவதுபோல புரவியிலேறிக்கொண்டான். புரவியில் உடன் செல்கையில் துர்மதனுக்கு அவனுக்கு கதை பயிற்றுவிக்கையில் துரோணர் சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன. “உள்ளத்தின் விசையை உடல் தவறவிட்டு நின்றுவிடுகையிலேயே தசைகள் கொழுப்பேறி பருக்கின்றன. நதி விரைவழிந்து தேங்குவதுபோல. உள்ளத்தின் விசையை உடலும் அடைகையில் உடல் இருப்பதையே உள்ளம் உணராது. வாளில் பிடியே எடை மிக்கதாக இருக்கவேண்டும், உடல் உள்ளத்தை ஏந்தியிருக்கும் பீடம்.” அவன் ஓரக்கண்ணால் திரும்பி ருக்மியை பார்த்தபடி புரவியில் சென்றான்.
அவர்கள் துரியோதனனின் பாடி வீடு அமைந்த அரசவட்டத்தை அடைந்தபோது இரவு செறிந்து படைகள் முற்றமைந்துவிட்டிருந்தன. அதற்கேற்ப கலைந்து முழங்கிக்கொண்டிருந்த ஓசை சீரடைந்து மெல்லிய உள் முழக்கமென கார்வைகொண்டிருந்தது. துச்சலன் அரசவட்டத்தின் முதன்மைக்காவலரணில் இருந்தான். துர்மதன் இறங்கிச்சென்று அவனிடம் ருக்மி வந்திருப்பதை சொன்னதும் அவன் வெளியே வந்து வணங்கி முகமனுரைத்தான்.
“அவை முன்னரே கூடிவிட்டது, விதர்ப்பரே. படைசூழ்கையை பேசிக்கொண்டிருக்கிறார்கள். தாங்கள் உள்நுழைவதற்கான தருணம் எதுவென நான் சென்று கேட்டு சொல்கிறேன். அதுவரை இக்காவலரணில் தாங்கள் இளைப்பாறலாம்” என்று துச்சலன் சொன்னான். ருக்மி கைவீசி “அமரவேண்டுமென்பதில்லை” என்று காவலரணின் முதல் தூணில் சாய்ந்து நெஞ்சில் கைகளைக் கட்டியபடி தொலைவில் காடு பற்றியதுபோல் தெரிந்த படைகளை நோக்கியபடி நின்றான்.
துர்மதன் அருகே நின்று அவன் முகத்தை நோக்கினான். மானுட முகங்களில் உணர்வுகளும் எண்ணங்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதை அவன் கண்டிருந்தான். ஒற்றை உணர்வில் மாறாது நிலைத்த முகத்தை அப்போதுதான் பார்க்கிறான் என்று எண்ணிக்கொண்டான். என்ன உணர்வு அது? வஞ்சம்! போர்க்களத்தில் தன் மைந்தரை இழந்து சீற்றத்துடன் வில்லேந்தி வந்த சாத்யகியின் முகமா அது? அந்த உச்சகணம் அப்படியே சிலைத்ததுபோல. இவருள் இப்போது வஞ்சம் கொந்தளித்துக்கொண்டிருக்கிறதா என்ன? எவர் மீதான வஞ்சம்?
ஒருமுறை அவன் உள்ளம் நடுங்கியது. ஒருவேளை அது மூத்தவர் மீதுள்ள வஞ்சமாக இருக்கலாம். அவைக்குள் நுழைகையில் இவருடைய படைக்கலங்கள் அனைத்தையும் அகற்றிவிடவேண்டும். என் வாளுடன் இவருக்கு மிக அருகில் நின்றிருக்கவேண்டும். மூத்தவரை நோக்கி இவர் ஓர் அடி எடுத்து வைத்தால் இந்நெஞ்சைத் துளைத்து இவரை வீழ்த்திவிடவேண்டும் என்று துர்மதன் எண்ணிக்கொண்டான். அவ்வெண்ணம் அவனை இயல்படையச் செய்ய உடலை எளிதாக்கி மூச்செறிந்தான்.
மேலும் சற்று நேரம் அவனை கூர்ந்து நோக்கியபோது அவ்வஞ்சம் அப்போது எழும் உணர்வல்ல என்றே தோன்றியது. ருக்மி தன் உதடுகளால் மெல்ல ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். சுட்டு விரலை காற்றில் சுழித்தான். உடலை நிலையழியச் செய்து மெல்ல அசைந்தான். அவ்வப்போது திரும்பி துரியோதனனின் பாடிவீடு இருக்கும் திசையை பார்த்தான். அவனுக்குள் எண்ணங்கள் மாறிக்கொண்டிருப்பதை அவ்வசைவுகள் காட்டின. அவன் நிலைகொள்ளாமலிருந்தான். ஆனால் முகத்தின் ஆழுணர்ச்சி அவ்வண்ணமே இருந்தது.
நெடுங்காலமாக மாறாது கொண்டிருக்கும் உணர்ச்சி முகமாக மாறிவிடும் என்று அவன் பயின்றிருந்தான். பீஷ்மரின் முகத்தில் உறுதியையும் விதுரரின் முகத்தில் கவலையையும் கர்ணனின் முகத்தில் அகன்று நிற்கும் தன்மையையும் அவன் கண்டது உண்டு. ஆனால் அவை ஓடைக்கு அடியில் பாறை என ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருக்கும் அன்றாட உணர்ச்சிகளுக்கு அடியில் நிலைகொண்டவை. இந்த முகத்தில் இந்த ஓர் உணர்வன்றி பிறிதேதும் இல்லை. தெய்வச்சிலைகளுக்குரிய மாறாமை. “மாறாமை என்பது தெய்வங்களின் இயல்பு. மானுடர் மாறுபவர் என்பதனால்தான் மாறாதவர்கள் தெய்வங்களாகிறார்கள். மாறா மானுடரும் தெய்வங்களே” கிருபரின் சொற்கள்.
இப்போது இவையெல்லாம் ஏன் எனக்கு நினைவுக்கு வருகின்றன என்று துர்மதன் வியந்தான். ருக்மியின் முகத்தை பார்ப்பது அவன் பதற்றத்தை பெருக்கிக்கொண்டிருந்தது. துச்சலன் அங்கிருந்து வருவதை கண்டான். ருக்மி திரும்பிப்பார்த்து தன் மேலாடையை இழுத்து சீரமைத்தான். அக்கணத்தில் சிறு அதிர்வென துர்மதன் ஓர் எண்ணத்தை அடைந்தான். இதே போன்று மாறா உணர்வில் நிலைத்த பிறிதொரு முகம் அவனுக்கு தெரிந்திருந்தது. எவர் முகம் அது? நன்கறிந்த முகம்! மாறாமையை தன் இயல்பெனக்கொண்ட தெய்வ முகம்! எவர் முகம் அது என அவன் உள்ளம் நெளிந்து துழாவித் தவித்தது.
துச்சலன் அருகே வந்து தலைவணங்கி “தாங்கள் அவை புகலாம், விதர்ப்பரே” என்றான். ருக்மி தலையசைத்து முன்னால் செல்ல துச்சலன் பின்தொடர்ந்து செல்லும்படி துர்மதனிடம் கைகாட்டினான். துர்மதன் தலைவணங்கி ருக்மியை பின்தொடர்ந்து நடந்தான். ருக்மி பாடிவீட்டின் வாயிலை அடைந்ததும் அங்கு நின்ற காவலன் தலைவணங்கி உள்ளே சென்று அவன் வரவை அறிவித்து வெளியே வந்தான். ருக்மியின் முகத்தை அப்போது நோக்கியபோது அது வஞ்சமல்ல என துர்மதன் எண்ணினான். அது பிறிதொன்று, அவன் அறியாதது.
ருக்மி உள்ளே நுழைந்தபோது வாள் தொடும் தொலைவில் துர்மதனும் சென்றான். உள்ளே சென்ற ருக்மி அவையை ஒருமுறை விழியோட்டி நோக்கிவிட்டு துரியோதனனை தலைவணங்கினான். முகமனெதுவும் உரைக்காமல் “நான் கௌரவப் படைப்பிரிவுகளுடன் சேர்ந்து போரிடும் பொருட்டு வந்துள்ளேன், தார்த்தராஷ்டிரரே” என்றான். ஒருகணத்திற்குப் பின் துரியோதனன் விழிசுருங்க “போர் தொடங்கி ஆறு நாட்கள் முடிந்துவிட்டன” என்றான். “ஆம், நான் அறிவேன். என் படைப்பிரிவுகளை திரட்டுவதற்கு பொழுதாகியது” என்றான். “ஏன்?” என்று துரியோதனன் கேட்டான்.
“தாங்கள் அறிவீர்கள் என் தந்தைக்கும் எனக்குமான பூசலை. நான் போஜகடகத்தில் தனி நாடமைத்து தனிக்கொடியும் தலைநகரும் கொண்டு ஆள்வதே அவருக்கு எதிராகத்தான். இளைய யாதவன் என்னை சிறுமை செய்து என் தங்கையுடன் சென்று முப்பத்தாறாண்டுகள் கடந்துள்ளன. அன்று முதல் இன்று வரை ஷத்ரிய அவைகளில் அமரமுடியாதவனாகிவிட்டேன். அக்கீழ்மகனின் நெஞ்சைப் பிளந்து குருதிகொள்வேன் என்று வஞ்சினம் உரைத்தேன். அச்சொற்களை அணையா விளக்கென நெஞ்சில் ஏந்தி இதுகாறும் வாழ்ந்துளேன். தந்தையும் அன்று என் உணர்வுகளை புரிந்துகொண்டார். ஆனால் அவர் யாதவனுடன் போரிட விதர்ப்பத்தால் முடியாது என்னும் எண்ணம் கொண்டிருந்தார்.”
“அரசே, மீளமீள அரச அவைகளில் யாதவனுக்கு பெண்ணளித்தவர் என்று என் தந்தை சிறுமை செய்யப்பட்டார். ஆயினும் காலம் எளிதில் அனைத்தையும் மறக்க வைக்கிறது. இன்று அவர் அவர்களை ஆதரிக்கிறார். தன் மைந்தர்கள் நால்வரை அவர் பாண்டவர்களுக்கு ஆதரவாக படைகளுடன் அனுப்பியிருக்கிறார். நான் மறக்கவில்லை. மறப்பது எனக்கு எளிதும் அல்ல. என் வஞ்சம் நூறுமடங்கு நஞ்சும் கூரும் கொண்டுள்ளது. இளைய யாதவனை களத்தில் வென்று பழிகொள்ளவே இங்கு வந்தேன்” என்றான் ருக்மி.
“அவ்வஞ்சத்தை மறக்க முயன்றுளீரா?” என்று துரியோதனன் கேட்டான். “இல்லை” என்றான் ருக்மி. “என் முழு உயிர்விசையாலும் நெய்யூற்றி வஞ்சத்தை வளர்க்கவே முயன்றேன்.” துரியோதனன் “அது தங்கள் தோற்றத்தைப் பார்த்தால் தெரிகிறது. விதர்ப்பரே, இன்று இந்த அரியணையில் அமர்ந்து இவ்வுலகுக்கு நான் சொல்வதற்கு ஒரு சொல்லே உள்ளது, வஞ்சத்தால் எப்பயனும் இல்லை. எவ்வஞ்சமும் அது கொண்டவரைத்தான் முதலில் அழிக்கும். அது அனலின் இயல்பு. விரும்பி தன்னை ஏற்றுக்கொண்டவரை உண்டு நின்றெரித்து எச்சமிலாதாக்கி விண்மீள்வது அது” என்றான்.
ருக்மி அதை எதிர்பாராததனால் சொல் தளர்ந்து அவையை ஒருமுறை நோக்கிவிட்டு “என்னால் இளைய யாதவனை எதிர்க்க முடியும். ஏழு நாழிகைப்பொழுது தனியொருவனாக வில்விஜயனை தடுத்து நிறுத்த முடியும். அரிய அம்புக்கலைகளை கற்றிருக்கிறேன். நான் உங்கள் படைகளில் இணைவது உங்கள் வெற்றியை உறுதி செய்யும்” என்றான். “உங்களுடன் வந்துள்ள படைகள் எந்த உள நிலையில் இருக்கின்றன என்பது இப்போது நீங்கள் சொன்னதிலிருந்தே புரிகிறது. நீங்கள் உடன்பிறந்தாருக்கு எதிராக படை கொண்டெழுவதை அவர்கள் விரும்பவில்லை” என்றான் துரியோதனன்.
“அவர்களை விழைவும் அச்சமும் காட்டி திரட்டி அழைத்து வந்திருக்கிறீர். வஞ்சினம் உரைத்து வெறி கொண்டெழுந்த படைகளே இங்கு உளம் சோர்ந்து சிதைந்துள்ளன. உங்கள் விழைவும் அச்சமும் எத்தனை பொழுதுக்கு களம் நிற்கும்?” என்றான் துரியோதனன். எழாக் குரலில் ஆற்றல் வெளிப்பட “படைவல்லமையும் தோள் வல்லமையும் அல்ல ஊழ் வல்லமையாலேயே போர்கள் வெல்லப்படுகின்றன என்று உணர்ந்து இங்கு அமர்ந்திருக்கிறேன். நீங்கள் இந்த அவையில் அமர்வதற்கு எனது ஒப்புதல் இல்லை. திரும்பிச்செல்க!” என்றான்.
“நான்… ” என்று ருக்மி சொல்லெடுக்க “திரும்பிச்செல்க!” என்று துரியோதனன் உரக்க சொன்னான். “திரும்பிச்செல்லப் போவதில்லை. போருக்கென கிளம்பி வந்துவிட்டேன். போரில் ஈடுபட்டே திரும்புவேன்” என்றான் ருக்மி. “உங்கள் படை வல்லமை எனக்கு தேவையில்லை. உங்கள் போர்த்துணையையும் நான் விரும்பவில்லை” என்றான் துரியோதனன். “ஏன்?” என்று ருக்மி உரக்க கேட்டான். “நீங்கள் உங்கள் உடன்பிறந்தாருடன் போர்புரிய வேண்டியிருக்கும். விதர்ப்பர்கள் ஒருவரோடொருவர் கொன்று குவிக்க வேண்டியிருக்கும்” என்று துரியோதனன் சொன்னான்.
ருக்மி ஏளனத்தால் வளைந்த இதழ்களுடன் “அதைத்தானே இங்கே நீங்கள் இன்று செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்றான். “ஆம், ஆகவேதான் அதன் பொருளின்மையை இவ்வுலகுக்குச் சொல்லும் தகுதியுடையவன் ஆகிறேன். இனி என் ஒப்புதலுடன் ஒருபோதும் குலம் குலத்தோடும் குருதி குருதியோடும் போரிடமாட்டார்கள்” என்று துரியோதனன் சொன்னான். ருக்மி “என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிடில் அதை அவைச்சிறுமை என்றே கொள்வேன். ஏனெனில் நான் இங்கு வருவதை முரசறிவித்து குடியினருக்கும் நாட்டினருக்கும் சொல்லிவிட்டே கிளம்பினேன்” என்றான்.
அவன் குரல் தழைந்தது. “அரசே, இளைய யாதவர் மேல் நான் கொண்ட வஞ்சம் உலகறிந்தது. இத்தருணத்திற்காகவே இத்தனை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளுமெனக் காத்திருந்தேன். ஒவ்வொரு படைசூழ்கையாக பயின்றேன். நீங்கள் என்னை திருப்பி அனுப்புவது என் இலக்குகளை முற்றழிப்பது. என் வாழ்வையே பொருளற்றதாக்குவது. அளிகூருங்கள், இதை நான் ஒரு அருட்கொடையெனக் கோருகிறேன். நான் உங்கள் படைகளுடன் நிற்கவேண்டும். அந்த யாதவ இழிமகனை எதிர்கொள்ள வேண்டும். அவனை நான் கொல்ல வேண்டும். அன்றி அவன் கையால் நான் மடியவேண்டும். அதுவே என் குடிகளுக்கு முன் வீரனென்றும் ஆண்மகனென்றும் எழுந்து நிற்கும் தருணம்.”
துரியோதனன் “உம்மை என்னுடன் ஏற்றுக்கொள்ளாததற்கான அடிப்படையே இப்போது நீங்கள் சொன்னதுதான். இளைய யாதவருக்கு எதிரான வஞ்சத்துடன் எழுந்திருக்கிறீர்கள். இம்மண்ணில் எவரேனும் அவருக்கெதிரான வஞ்சத்தை நிறைவேற்ற இயலுமா என்ன? நீர் மலையில் தலைமுட்டி அழிகிறீர். அதற்கு களமொருக்குவதல்ல என் பணி” என்றான். ருக்மி சீற்றத்துடன் “நீங்களும் இங்கு யாதவருக்கு எதிராகவே போர்புரிகிறீர்கள். உங்களை அவர் முற்றழிப்பார். அது பசி கொண்ட பாம்பு, தீண்டி குறிவைக்கும், விடாது தொடர்ந்துவரும்” என்றான் ருக்மி.
துரியோதனன் புன்னகையுடன் “அறிந்துளீர்! நன்று! நானும் அதை அறிந்துளேன். எழுந்தபின் அமைவது என் இயல்பல்ல என்பதனால் இது என் வழி. உமக்குரியதல்ல அது” என்றான். ருக்மி எண்ணியிராக் கணத்தில் குரல் உடைந்து தளர உடல் வளைத்து “நான் என்ன செய்யவேண்டும்? இன்று நான் இயற்றக்கூடுவதென்ன? அதை சொல்க!” என்றான். “சென்று அவர் அடிபணிக! வஞ்சம் கொண்டேனும் இத்தனை நாள் அவரை நாளும் எண்ணியிருக்கிறீர். அதனாலேயே அவர் அருளைப்பெறும் தகுதி கொண்டிருக்கிறீர். அவருக்கு ஊர்தியாகுக! அவர் கையில் படைக்கலமாகுக! அவரால் முழுமை கொள்வீர்” என்று துரியோதனன் சொன்னான்.
ருக்மி “இதை நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. நான் அங்கு சென்று அடிபணிவதென்பது என் வாழ்க்கையின் ஒவ்வொரு எண்ணத்தையும் நானே மறுப்பதுபோல” என்றான். துரியோதனன் “வந்த பாதையை ஒவ்வொரு அணுவும் என முற்றிலும் மறுத்து திரும்பிச்செல்லாமல் எவரும் மெய்மையை அடைவதில்லை, விதர்ப்பரே” என்றான். “இத்தகைய சொற்களை நான் வெறுக்கிறேன். இவை மானுடரை சிறுமை செய்கின்றன. புழுதியின் பொடியாக மாற்றுகின்றன” என்றான் ருக்மி. “சிறுமையின் எல்லை வரை செல்லாமல் எவரும் முழுமையை உணர்வதில்லை. இந்தக் களம் ஒவ்வொருவரும் தங்கள் சிறுமையை உணர்வதற்கு உகந்தது” என்று துரியோதனன் சொன்னான்.
“நேற்று இரவு களம்பட்ட என் உடன்பிறந்தாரின் கவசங்களையும் கங்கணங்களையும் என்னைச்சுற்றி பரப்பி வைத்து ஒவ்வொன்றையும் எடுத்து நெஞ்சிலும் தலையிலும் சூடி விழிநீர்விட்டு கலுழ்ந்தேன். அப்போது அறிந்தேன் புழுதிப்பொடி மட்டுமே நான் என. அதற்கப்பால் எதுவுமே இல்லை. அத்தகைய பெரும் இழப்புகளுக்கு ஆளாகாமல் அதை நீரும் உணரமுடியுமெனில் நல்லூழ் கொண்டவர் நீங்கள்” என்றான் துரியோதனன். புன்னகையுடன் மீசையை நீவியபடி “இவ்வுலகில் ஒவ்வொருவரிடமும் கைபற்றி கண்ணீர்விட்டு தோள் அணைத்து நான் சொல்லவிருப்பது இது ஒன்றே. புழுதிப்பொடியென்று உணர்க! அறிதல் அனைவருக்கும் இயல்வது, உணர்தல் தெய்வங்களால் அளிக்கப்படுவது. அறிந்ததை தவம்செய்து உணர்க! இல்லையேல் தெய்வங்கள் அதை குருதி சிந்தி உணரச்செய்யும்” என்றான்.
பதற்றத்துடன் கைகள் அலைபாய அவையை சூழநோக்கியபின் “இறுதியாக என்ன சொல்கிறீர்கள்?” என்று ருக்மி உரத்த குரலில் கேட்டான். “இந்த அவையில் எவ்வகையிலும் நீங்கள் அமர இயலாது. கௌரவப் படைகளில் விதர்ப்பத்திற்கு இடமில்லை. இளைய யாதவர் மேல் வஞ்சமழியமாட்டீர் என்றால், போர் புரியத்தான் போகிறீர் எனில், அது உங்கள் ஊழ். அதன் பொருட்டு எங்கள் மேல் ஏறி நீர் நின்றிருக்க இயலாது. செல்க!” என்றான் துரியோதனன். சீற்றத்துடன் உடல் தத்தளிக்க “இது அவைச்சிறுமை! விதர்ப்பம் தூசியென தட்டி விலக்கப்படுகிறது. பெரும்புகழ் கொண்ட நாடு என்னுடையது. பாரதத்தின் பெருவீரர்களிலொருவனாக அறியப்பட்டவன் நான். எனது படையுதவி உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று கருதினீர்கள் என்று உங்களைச் சூழ்ந்திருக்கும் ஷத்ரியர்கள் எண்ணுவார்கள் என்றால் ஆயிரம் ஆண்டுகாலம் இந்தச் சிறுமை எங்கள் மேல் தங்கும். சூதர் சொல்லில் இது பெருகும். எங்கள் கொடிவழிகள் இதை நாணும்” என்றான்.
“இவையனைத்தும் வெறும் உளமயக்குகளே. காலத்தின் பொருட்டும், குடியின் பொருட்டும், சொல்லின் பொருட்டும் ஒருவன் வாழ்வானெனில் அவன் இருளையே சென்றடைவான். உள்ளிருக்கும் ஒளியின் பொருட்டு வாழ்க! இவை அவ்வொளியை மறைக்கும் புகை. செல்க!” என்றான் துரியோதனன். மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்து பின் சீற்றத்துடன் தன் சடைப்புரிகளை அள்ளி பின்னால் வீசி ருக்மி திரும்பிச்சென்றான். துர்மதன் அவனை தொடர்ந்து செல்லப்போக துரியோதனன் “இளையோனே, தெற்கு படைப்பிரிவின் கணக்குகளை சொல்” என்றான். துர்மதன் தலைவணங்கினான்.
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
குடும்பத்திலிருந்து விடுமுறை படித்து ஒருவாரத்துக்கு மேலாகியும் குடும்பப்பணிகளின் சுமையால் இன்றுதான் உங்களுக்கு அதுகுறித்து எழுத முடிந்தது.
நீங்கள் இந்தப்பதிவை எழுதியது , என்னைபோல வீட்டிலும் வெளியிலும் வேலைசெய்யும் அனைத்துப்பெண்களின் சார்பாகவும் என்று எடுத்துக்கொண்டு மகிழ்ந்தேன்.
அருண்மொழி அவர்களுக்கு ’என்னமாம் செய்’ என்று நீங்கள் சொன்னது போல பேரன்புடன் சொல்பவர்கள் அத்தனை அதிகமில்லை. கடிந்துகொண்டும் சலித்துக்கொண்டும் (இப்படியான முகாம்களோ பயிற்சிகளோ அளிக்கும் பொருளாதாரப்பயன்களின் பொருட்டு) அரைமனதுடன் அனுமதி அளிப்பவர்களே அதிகம். இப்பதிவு குறித்த எதிர்வினைகளிலிருந்தே பெரும்பாலான பெண்களுக்கு தளையாகவே குடும்பம் என்னும் அமைப்பு இருப்பதை அறிந்துகொள்ளலாம்,
அப்படி அனுமதி வாங்கி ஒரு வாரத்திற்கு சமையலுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு , அக்கம்பக்கம் தேவைப்பட்டால் உதவும்படி இறைஞ்சிக்,கேட்டுக்கொண்டு அம்மாவையோ அக்காவையோ சகாயத்துக்கும் ஏற்பாடு செய்துவிட்டும் மிகுந்த குற்ற உணர்வுடனேதான் வெளியே போவோம்.
உண்மையில் படித்தவர்கள் என்று சொல்லப்படும் நபர்கள் இருக்கும் குடும்பத்தில் தான் இத்தகையவை நடக்கின்றது என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.
இப்படியான பயிற்சிமுகாம்களுக்கு போகவும் வாய்ப்பில்லாத பெண்கள்தான் மேல்மருவத்துருக்கு மாலைபோட்டுக்கொண்டும், வாழும் கலைப்பயிற்சிக்கும்,ஆடிவெள்ளிக்கும் பிரதோஷவழிபாட்டிற்கும் என எப்படியாவது வெளியேறி , கழுத்தை அழுத்திக்கொண்டிருக்கும் கைகளை முற்றிலும் அகற்ற முடியாவிட்டாலும் கொஞ்சமாக நெகிழ்த்தி, தற்காலிகமாகவாவது மூச்சு விட்டுக்கொள்கிறார்கள்.
16/17 வருடத்திற்கு முன்னர் எனக்குத்திருமணமான புதிதில் வாழும் கலைப்பயிற்சியில் கலந்துகொண்டேன். உடன் கோவைக்கல்லூரியில் என் பேராசிரியராக இருந்த , கஞ்சிபோட்ட புடவையும் அதைவிட விரைப்பான உடல்மொழியுமாக கண்டிப்புக்கு பேர்போன என் பேராசிரியையும் கலந்துகொண்டிருந்தார். பயிற்சியின் ஒரு அங்கமாக பஞ்சாபி பாங்ரா நடனம் அனைவரும் ஆடவேண்டியிருந்தது. அப்போது எனக்கு பெண்கள் மட்டும் இருந்த அறையில்தான் என்றாலும் கூச்சம் காரணமாக நடனமாட தயக்கமிருந்தது ஆனால் அந்தப்பேராசிரியை ’குத்தி’ ஆடிக்கொண்டிருந்தார். அப்படி நடனமாடியது அங்கு பலருக்கு பெரும் விடுதலையாக இருந்ததை கவனித்தேன். இன்று ஒருவேளை 18 வருட மணவாழ்விற்கு பிறகு மறுபடியும் அப்படியான ஒரு சூழல் வந்தால் நான் ’’இறங்கிக்குத்தி’’ என்று சொல்வார்களே அப்படி ஆடுவேனாயிருக்கும்.
யுகம் யுகமாக செய்துகொண்டிருப்பதைப்போன்ற அலுப்பூட்டும் ஒன்றே போலான வேலைகளிலிருந்து எங்களுக்கு அவ்வப்போதாவது விடுப்பு எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.என்னைப்போல அக்கம்பக்கம் சில நிமிஷங்கள் அரட்டை அடிக்கக்கூட நேரமில்லாதவர்களுக்கு இன்னும் அதிகமாக ஒரு விடுதலை தற்காலிகமாகவாவது தேவை இருக்கிறது.
பலர் நினைபப்துபோல வேலைசெய்யும் பெண்களுக்கு பணியிடத்தில் மூச்சுவிட்டுக்கொள்ளலாம் என்பதெல்லாம் மாயை. உண்மையில் அங்கும் நாங்கள் குடும்பத்தை கட்டி சுமந்துகொண்டுதான் செல்கிறோம். ஊறவைத்துவிட்டு வந்த, மாலை போய் அரைக்கவேண்டிய உளுந்தும் அரிசியும் மனதில் ஒருபக்கம் ஓடிக்கொண்டே இருக்கும் போய்செய்யவேண்டிய வேலைகளை, விடுமுறையில் வீட்டில் தனித்து இருக்கும் குழந்தைகளை, கவனிக்க வேண்டிய குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் உடல்நிலையை இப்படி ஏராளம் மனதில் எப்போதும் நிமிண்டிக்கொண்டே இருக்கும்.
கல்லூரியில் வகுப்பில்லாத நேரங்களில் பெண்கள் எல்லாரும்குடும்பத்தை அலைபேசி வழியே நிர்வாகம் செய்துகொண்டுதானிருப்போம்
உண்மையில் இந்த அலைபேசி மன அழுத்தத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. நான் அமைதிப்பள்ளத்தாக்கிற்கு ஒரு பயிற்சியின் பொருட்டு சென்றிருந்த போது அங்கு அலைபேசி அனுமதிக்கப்படவில்லை. பால்பேதமின்றி மற்ற பங்கேற்பாளர்களுடன் இயல்பாக கலந்துரையாடியதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டதுமாய் அது வேறுஒரு உலகம். அட்டை கடித்து குருதி கொட்டியதும் கூட அத்தனை மகிழ்வளிக்கும் ஒன்றாக இருந்தது உள்ளே நடக்கத்துவங்கி கொஞ்சநேரத்திலேயே மகன்களை மற்ற குடும்ப விஷயங்களை எல்லாம் சுத்தமாக மறந்துவிட்டேனென்பதை அன்று இரவு உறங்கச்செல்லும்போதுதான் மிகுந்த குற்றஉணர்வுடன் நினைத்துக்கொண்டேன்
பணியிடங்களுக்கும் குழந்தைகளை நாங்களேதான் அழைத்துச்செல்கிறோம் எனக்குதெரிந்து எந்த அப்பாக்களும் குழந்தைகளை பணியிடங்களுக்கு பள்ளி விடுமுறையின் போது கூட்டிசென்றதே இல்லை
என் இரு மகன்களையும் பல பள்ளி விடுமுறைநாட்களில் கல்லூரிக்கு அழைத்துச்சென்று நூலகத்திலும் கேண்டீனிலும் வைத்து சமாளித்திருக்கிறேன்
சமீபத்தில் என் இளைய மகன் புனேவில் national defence academy க்கு சென்றிருந்தபோது எடுத்த புகைப்ப்டங்களை காண்பித்துக்கொண்டிருந்தான். அங்கு சீருடையில் மற்றவர்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த ஒரு பெண் உயர் அதிகாரி அப்போது காலாண்டுத்தேர்வுவிடுமுறையென்பதால் அவரின் மகனையும் காலடியில் உட்கார வைத்துக்கொண்டிருந்ததை அவன் புகைப்படம் எடுத்திருந்தான்
எந்தப் பணியிலிருந்தாலும் நாங்கள் எபொதும் குடும்பத்துடனே சேர்த்து தைக்கப்ட்டிருக்கிறோம்
இப்படியான தற்காலிகப்புறப்பாடுகளும் விடுமுறைகளும் புத்துணர்வை மட்டுமல்ல பலருக்கு தொடர்ந்து உயிர்வாழ போதுமான சக்தியையும், இழந்துகொண்டேயிருக்கும் வாழ்வின் மீதான் பிடிப்பையும் கூட கொடுக்கின்றது. மனதிலிருக்கும் பலதையும் சொல்லி மனதை கனமின்றி செய்ய உதவிய இந்தபதிவிற்கு நன்றிகளுடன்
லோகமாதேவி
அன்புள்ள லோகமாதேவி
நான் பணியாற்றும் காலத்தில் அஜி,சைதன்யாவின் பள்ளி மிக அருகில். நான்தான் அழைத்துச்செல்வேன். அவர்களுக்கு மூன்றுமணிக்கே பள்ளி முடிந்துவிடும். எனக்கு ஐந்தரைக்கு. எஞ்சிய நேரம் சைதன்யா என் மேஜைக்கு அடியில் வீடுகட்டி குடும்பம் நடத்தி வாழ்ந்து கொண்டிருப்பாள். என் அறைக்குள் வந்து “மத்த ஃபைல் வந்தாச்சா?” என்று கேட்ட என் மேலதிகாரி காதர் சாரை “சத்தம் போடாதே தாத்தா, கொழந்த தூங்குதுல்ல?” என அதட்டினாள். அவர் பவ்யமாக “ஸாரி” என்றபின் மெல்ல என்னிடம் “அந்த ஃபைல் வந்தாச்சா?” என்றார்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் இருநாள் பெருவிழாவாக நடத்தி வருகிறீர்கள். வெளியூர்களில் இருந்து வந்து கோவையில் தங்கி நிகழ்ச்சியில் ஆர்வத்தோடும் அறிவு வேட்கையோடும் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 200 பேரைத் தாண்டுகிறது. ஆண்டுக்கு ஆண்டு அந்த எண்ணிக்கை கூடி வருவதும் நன்மாறுதலே. எல்லாருக்கும் விருந்துணவு, தங்குமிடங்கள் ஆகியவற்றைச் சிறப்பான முறையில் செய்து வருகிறீர்கள். ஆனால் அதற்காக யாரிடத்திலிருந்தும் சிறுதொகையைக்கூடப் பெறுவதில்லை. செலவுகள் கூடுவதால் தற்போது பணம்படைத்தவர்களிடமிருந்து மட்டும் நன்கொடை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். ஆனால் நிகழ்வில் கலந்துகொள்ள எந்தச் செலவையும் பங்கேற்பாளரிடம் திணிப்பதில்லை. நவீன இலக்கியம் பரவ வேண்டும் என்றும் மூத்த மற்றும் இளைய படைப்பாளிகள் சிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் பிறமொழிப் படைப்பாளிகளின் உறவுப்பாலம் வலுப்பட வேண்டும் என்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் செவ்விய முறையில் செயல்பட்டு வருகிறது. வேறு எந்த எழுத்தாளரும் இதுபோன்று அமைப்பை நிறுவி இலக்கியம் செழிக்க முயலவில்லை.
இந்நிலையில் இலக்கிய உரை கேட்கக் கட்டணம் விதிக்கும் எண்ணத்துக்கு வந்துள்ளீர்கள்.
தமிழகத்தில் இலக்கிய அமைப்புகள் நடத்துபவர்கள் ஆர்வத்தின் காரணமாகச் சொந்தப் பணத்தைச் செலவழிக்கிறார்கள். ஆனாலும் போதுமான கூட்டம் வராததால் சலிப்படைகிறார்கள். தொடர்ந்து செலவு செய்து இழப்படைவதால் நிகழ்ச்சி நடத்துவதையே நிறுத்தி விடுகிறார்கள்.
அதே நேரத்தில் தமிழகத்தில் இலக்கியவாதிகளாக… தமிழறிஞர்களாக வலம்வரும் பலரும் உரையாற்றப் பல்லாயிரக் கணக்கில் ஊதியம் கேட்கிறார்கள். இந்தத் தொகையை ஊரில் உள்ள பணவேந்தர்களிடம் நன்கொடையாகப் பெற்றுச் சில அமைப்புகள் வழங்குகின்றன.
சில தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக எனஉரைத்து, புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர்களின் குழுவை வரவழைத்து, நிகழ்வை நடத்திப் பணவேட்டையாடுபவர்கள் உண்டு. இவர்கள் இலக்கியத்தையோ அறிவையோ வளர்ப்பவர்கள் இல்லை.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, தி.மு.க. சார்பில் கட்டணம் செலுத்தி உரைகேட்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. க. சுப்பு, துரைமுருகன், ரகுமான்கான் ஆகியோர் உரையாற்றினர். .
ஒரு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநில மாநாடுகள் நடத்தப்பட்டன. அந்த மாநாடுகள் இருநாட்கள் நடக்கும். அதற்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மாநாட்டு நிறைவின் போது நுழைவுக்கட்டணத்தின் மூலம் வசூலான தொகை விவரத்தை அறிவிப்பார்கள். பின்னர் காலப் போக்கில் இரண்டாம் நாளன்று இறுதியில் கலைஞர் பேசுகிற போது மட்டும் நுழைவுவாயிலை அனைவருக்கும் இலவசமாகத் திறந்துவிடுவார்கள். அந்த நேரத்தில்தான் மாநாட்டுப் பந்தலில் அதிகக் கூட்டம் அலைமோதும்.
தெருக்களில் திடல்களில் நடக்கும் அரசியல் கூட்டங்களுக்கு என் சிறுவயதில் சென்றிருக்கிறேன். சிறப்புப் பேச்சாளர் பேசுவதற்கு முன் ஓர் அறிவிப்பை வெளியிடுவார்கள். “நம் கழகத் தோழர்கள் பாண்டியன், பெருமாள், தங்கராசு ஆகியோர் துண்டேந்தி வருகிறார்கள். தங்களால் இயன்ற பொருளுதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்பார்கள். அந்தத் தோழர்கள் துண்டை முழங்கைகளில் விரித்தபடி கூட்டத்தில் நுழைந்து வருவார்கள். காசோ ரூபாயோ போடுவார்கள். அந்தத் தொகையும் அதே கூட்டத்தின் நன்றியுரையின் போது அறிவிக்கப்படும். இந்தத் தொகை எல்லாம் கூட்டச் செலவைச் சரிகட்டுவதற்காகத்தான்.
தற்காலத்தில் அரசியல் கூட்டம் நடத்துபவர்கள் பெருந்தொழிலதிபர்களிடம் நிதிபெற்றுவிடுகிறார்கள். அரசியல்வாதிகளே கோடீஸ்வரர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே கூட்டத்தில் பணம் வசூலிப்பதில்லை. ஆனாலும் அரசியல் உரைகேட்க மக்கள் வருவதில்லை. மாறாக கூட்டத்துக்கு ஆள்சேர்க்கச் செலவழிக்கிறார்கள். ஆள்ஒருவருக்கு ஐநூறு ரூபாயும் மதுப்புட்டியும் தருகிறார்கள். கூலி வாங்கிக் கொண்டாடுவதற்காகவே அத்தகைய அரசியல் கூட்டத்துக்கு ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் வருகிறார்கள்.
எழுத்தாளர் வளவ. துரையன் அவர்கள் கடலூரில் இலக்கியச் சோலை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதுவரை 180 நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தி இருக்கிறார். அந்தக் கூட்டத்துக்கு இருபதுபேர் வருவார்கள். நிகழ்ச்சியின் ஊடே வருகையாளர் கையொப்பப் பதிவேட்டைச் சுற்றுக்கு விடுவார். அதில் முதல் கையொப்பம் இடுபவர், இருபது ரூபாய் அல்லது ஐம்பது ரூபாய் நன்கொடை எழுதித் அந்தத் தொகையை அந்தப் பதிவேட்டில் வைத்துவிடுவார். அதன்பின் கையெழுத்து இடுவோர் ஒவ்வொருவரும் பத்து ரூபாய்க்குக் குறையாமல் மொய் வைக்க வேண்டிய வழக்கம் உருவானது. அவர் யாரையும் நிதியளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. எனினும் பலர் பார்க்கும் அந்தப் பதிவேட்டில் நிதி வழங்காவிட்டால் மதிப்புக்குறைவாகிவிடுமோ என்று எண்ணினார்கள். அது குறித்து இலக்கிய அன்பர்கள் குறைகூறினர். கூட்ட வருகையும் குறைந்து போனது. தற்போது வருகையாளரிடமிருந்து அவர் நிதி பெறுவதி்ல்லை.
அதேபோல் கவிஞர் கனிமொழி.ஜி மற்றும் கவிஞர் யாழி அவர்கள் இணைந்து ஆம்பல் இலக்கியக் கூடல் அமைப்பை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் பல்லாயிரம் ரூபாய் செலவழித்துக் குளிர்கூடத்தில் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். வெளியூர் பேச்சாளர்கள், எழுத்தாளர்களுக்கு தங்குவதற்கு குளிர்அறைகள் ஏற்பாடுகள் உண்டு. நிகழ்ச்சி நிறைவின்போது அனைவருக்கும் “என்றும் நாவிலும் நினைவிலும் நிற்கும்” அசைவ உணவு பரிமாறுகிறார்கள். ஆனாலும் ஆறுதல்தரும் அளவுக்குக் கூடக் கூட்டம் வருவதில்லை.
ஒவ்வோர் நகரத்திலும் ஏராளமான தமிழாசிரியர்கள், தமிழ்ப்பேராசிரியர்கள், உள்ளனர். எவ்வளவுதான் சிறப்பான நிகழ்ச்சி என்றாலும் அவர்களில் ஓரிருவரைத் தவிர யாரும் அத்தகைய தமிழ்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. தமிழ்அமைப்புகளும் குழுக்கண்ணோட்டத்துடன் ஆங்காங்கே செயல்படுகின்றன. ஒவ்வோர் ஊரிலும் இலக்கிய ஆர்வலர்கள் எனக் கொஞ்சம்பேர்தான் உள்ளனர். அவர்களுக்குள்ளும் பல குழுக்கள். ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அடுத்தவோர் அமைப்பினர் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சிக்குச் செல்வதில்லை. கூட்டத்துக்குப் பத்துப்பேராவது சேரட்டும் என எதிர்பார்த்துக் குறித்த நேரத்தைத் தாண்டியும் நிகழ்ச்சியைத் தொடங்காமல் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அரங்கமும் காத்தாடிக்கொண்டிருக்கிறது.
தற்காலத்தில் கூட்டச் செலவு கூடிவிட்டது. ஒரு பேச்சாளர் தன்பேச்சின் முன்தயாரிப்புப் பணிக்காகப் பலநாட்கள் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கு மதிப்பூதியம் அளிப்பது சமூகத்தின் கடமை. எழுத்தாளர்களின் எழுத்தோவியங்களுக்குச் சன்மானம் கிடைப்பதில்லை. எழுத்தாளர்களின் உரையைக் கட்டணம் செலுத்திக் கேட்க இந்தச் சமூகம் தயாரா என்று தெரியவில்லை. எழுத்தாளர்கள் பலகாலம் ஆராய்ச்சி செய்து உருவாக்கிய அறிவார்ந்த புத்தகங்களை வெளியிடப் பதிப்பகங்களுக்குப் பணம்தர வேண்டியதாகிறது. தாங்கள் அறம் சிறுகதையில் சொன்னதுபோல் ராயல்டி என்பது கெட்ட வார்த்தை ஆகிவிட்டது.
கோமாளிச் சேட்டைகள் நிறைந்த நிகழ்ச்சிக்கு வேண்டுமானால் கட்டணம் கொடுத்து உரைகேட்க வரலாம். அதற்கும்கூட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எல்ஐசி முகவர்கள் போல வீட்டுப்படியேறியும் அலுவலகப் படியேறியும் புன்னகையை முகத்தில் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டும் பதமாகப் பேசியும் நுழைவுச் சீட்டை விற்க வேண்டும்.
புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் காந்தி பற்றிய தங்கள் உரையையும் கடந்த மேமாதம் புதுச்சேரி கம்பன் கழகத்தில் தாங்கள் ஆற்றிய உரையையும் நேரில் கேட்டு நான் வியந்திருக்கிறேன். பொற்காசுகள் கொடுத்துக் கேட்க வேண்டிய உரைதான் உங்களுடையது. எனினும் கரும்பு தின்னவும் கூலி கேட்கும் உலகில் நாம் வாழுகிறோம் என நினைக்கிறேன்.
ஜெயமோகன் அவர்கள் இலக்கிய அளவில் அறிமுகமானதைவிட, சினிமா மூலம்தான் அதிகம் அறிமுகம் ஆகியிருக்கிறார் என்பதில் உண்மையுண்டு. ஜெயமோகனுக்காகக் கொஞ்சம் கூட்டம் வரலாம். அதற்காக எல்லாப் பேச்சாளர்களுக்கும் கட்டணம் தந்து உரைகேட்கும் கூட்டம் வந்துவிடாது. இங்குத் தலைப்புக்கோ கருத்துக்கோ முதன்மை தராத நிலைதான் உள்ளது. இன்றைய போக்கில் தத்துவத்துக்கு ஆதரவில்லை. தலைவருக்குத்தான் ஆதரவும் ஆரவாரமும்.
கட்டண உரை என்பதை நான் ஆதரிக்கிறேன். ஆர்வமுள்ள அறிவார்ந்த இலக்கிய அன்பர்கள் சிலர் வேலை இல்லாமல் வறியவர்களாக இருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு வர அவர்களுக்கு ஆர்வம் இருக்கும். அவர்கள் ரூபாய் 150 செலவழிப்பார்களா? அந்தத் தொகை இருந்தால் அவர்கள் கூட்டத்துக்கு வருவார்களா? அல்லது மதுக்கூடத்துக்குச் செல்வார்களா?
தங்களின் கட்டண உரை முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகிறேன்.
அங்கே சர்க்கஸ் நடைபெறுகிறது. கவுண்டர்கள் முன் யாரும் நிற்கவில்லை.
-கோ. மன்றவாணன்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஒரு கேள்வி, நானும் என் 2 நண்பர்களும் நேற்று த்ரிசூர் வடக்குநாதன் ஆலயம் சென்றோம். ஆலயம் வாசலில் ஹிந்து அல்லாதவற்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்னும் அறிவிப்பு பலகையை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் தமிழகத்தின் சிலபல கோவில்களுக்கு சென்றவன், எங்கும் இந்த தடை கண்டதில்லை. சட்டை அணிய கூடாது போன்ற சில விதிமுறைகள் இருக்கும், அதை கடைபிடித்தே செல்வது வழக்கம். பெரிய கோவில்கள் தரும் அமைதி எனக்கு மிகவும் உவப்பானவை. கோவில் வாசல் வரை சென்று திரும்பி வந்தோம். நண்பர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள், நான் நாத்திகன்(தி.க விதண்டாவாதிகளில் நான் ஒருவன் அல்ல). எனக்கு இப்படி ஒரு அனுபவம் முதல் முறை. பெரும் மன உளைச்சலை அளித்தது. மேலும் மனக்குழப்பம் என்னை ஆட்கொனுள்ளது. ஹிந்து மதம் குறித்து நீங்கள் எழுதியுள்ள பல கட்டுரைகளை படித்துள்ளேன். அதனாலேயே இந்த தடை பெரும் அதிர்ச்சி. அதனால் இந்த தடைக்கு உள்ள காரணம் அறியவே(கோவில் செல்ல உளமார விருப்பத்துடன்) இந்த கடிதம் எழுதுகிறேன்.
வடக்குநாதன் ஆலயம் செல்வதற்கு முன் த்ரிசூரின் மிக பெரிய கிறிஸ்தவ ஆலயம்(புத்தன் பள்ளி) சென்றோம், அங்கு எந்த தடையும் இல்லை. மிக அமைதியான ஆலயம். சென்று சற்று நேரம் அமர்ந்து வந்தேன்.
கேள்வி : இந்த தடைக்கான காரணம் ? நான் அங்கு செல்லலாமா ?
இப்படிக்கு,
அருள், கருங்கல்.
அன்புள்ள அருள்
இதைப்பற்றி நான் முன்னரே எழுதிய கட்டுரையின் சுட்டி இது
ஜெ
https://ritabanerjisblog.wordpress.com/2018/02/22/on-gandhis-sexual-abuse-of-girls-in-his-ashram
இந்த பதிவை படித்தவுடன் மனம் நொந்து போனேன்.இது உணமெய்யா இல்லை பொய்யா.உங்கள் கருத்து என்ன.
நன்றி.
வீரா விக்ரம்
அன்புள்ள விக்ரம்
முன்னரே நான் இதைப்பற்றி எழுதியவற்றின் சுட்டிகள் இவை
ஜெ
””இரண்டு அழிவுசக்திகளின் நடுவே அகப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்து மதம். வெவ்வேறு அயல்மத உதவிகளுடன் அதை அழிக்கத்துடிக்கும் ஒரு தரப்பு. அதை ஓர் வெறிகொண்ட அரசியல்தரப்பாக்கி, அதைக் கருவியாக்கி அதிகாரத்தை அடைந்து, அப்பட்டமான ஊழலாட்சியை நிகழ்த்தும் ஒரு தரப்பு”” என குறிப்பிட்டு இருக்கிறீர்கள்
இன்னொரு தரப்பு ஒன்று உண்டு என நினைக்கிறேன்… அப்பாவித்தனம் அல்லது அறியாமை தரப்பு ஒன்று உண்டு..
முதல் இரண்டு தரப்புகளுடன் நீங்கள் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.. ஆனால் மூன்றாவது தரப்புடன் உங்களைப் போன்றவர்கள் உரையாட வேண்டிய தேவை இருக்கிறது
உதாரணமாக , செப்பியன்ஸ் – மனித இனத்தின் சுருக்கமான வரலாறு என்ற புத்தகம்.. எழுதியவர் யுவல் நோவா ஹராரி..
எந்த உள் நோக்கமோ பிரச்சார விழைவோ முன் முடிவுகளோ இன்றி ஆராய்ச்சி நோக்கில் எழுதி இருக்கிறார்
அதில் ஒரு பகுதியில் இந்தியாவைப் பற்றியும் சாதிகள் குறித்தும் குறிப்ப்பிடுகிறார்.. ஆரியர் படையெடுப்பு மூலம் அவர்களால் சாதிகள் உருவாக்கப்பட்டதாக அவர் நினைக்கிறார்… அவர் எப்படி எந்த முடிவுக்கு வந்தார் என அவரே குறிப்பிட்டுள்ளார்.. இந்தியா குறித்து ஆய்வுகள் செய்த மேலை நாட்டினர் புத்தகங்களையே அவர் ஆதாரமாக கொள்கிறார்.. அவர்கள் எப்படி இந்த முடிவுக்கு வந்தார்கள் என்று கேட்டால் இது போன்ற சார்பு நிலை “ ஆராய்ச்சிகளை “ ஆதாரமாக காட்டுவார்கள்.
ஆரிய படையெடுப்பு போன்றவை குறித்து நாளை நூல் எழுதும் ஒருவர் , ஹாராரி நூலை ஆதாரமாக காட்டுவார்
உண்மையில் ஹராரி இந்திய தத்துவங்கள் மீதும் தியான முறைகள் மீதும் ஆர்வம் கொண்டவர்… ஆக அவருக்கு உள் நோக்கம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை… ஆனால் ஆரிய ஊடுறுவல் என்பதும் சாதிகள் உருவாக்கத்தில் ஆரியர்கள் பங்களிப்பு என்பதும் சர்ச்சைக்குரிய ஒரு கருதுகோளே தவிர நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல என்பது அவரை எட்டவில்லை.. மாற்றுக்கருத்துகள் அவருக்கு தெரியவில்லை
ஆயிரம் பூக்கள் மலரட்டும்… எல்லா கருத்துகளும் முட்டி மோதட்டும் என்பது இல்லாமல் ஒரு சார்பான கருத்துகளே வெளி நாடுகளை
அடைவது ஆபத்தான நிலை என கருதுகிறேன்
உதாரணமாக ஜெயலலிதா ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம் என்பதை அமைச்சர் ஒருவர் பேசியதை ஆதாரமாக காட்டுவதும் அவரிடம் ஆதாரம் கேட்டால் , ஜெயா டிவியை ஆதாரமாக காட்டுவதும் எப்படி கேலிக்கூத்தாக இருக்கும் அது போன்ற சூழல்தான் , இந்தியாவை பொருத்தவரையிலான கருத்தாக்கங்களில் உள்ளது
அன்புடன்
பிச்சைக்காரன்
அன்புள்ள பிச்சைக்காரன்,
இன்று இந்தியாவின் மெய்யான அறிவுத்தரப்பு சோர்ந்து, எவராலும் கவனிக்கப்படாமல், எந்த அரங்கிலும் குரலெழுப்ப இயலாமல் உள்ளது என்பதே உண்மை.இந்தியாவில் இன்றுள்ளவை இரு அரசியல்தரப்புக்கள்.மெய்யான அறிவுத்தரப்பு இன்று தோற்கடிக்கப்பட்டு, குரலற்று ஒடுங்கியிருக்கிறது.
ஒன்று இங்கே முற்போக்கு என்றும் தாராளவாதம் என்றும் முகமூடி சூடிக்கொண்டு வந்து அனைத்து அரங்குகளையும் நிறைத்திருக்கும் இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்புக் கருத்துநிலைகள். இவற்றுக்கு மிகப்பெரிய அளவில் நிதியாதரவு உள்ளது. கல்விநிலையங்கள் இவர்களின் பிடியில் உள்ளன. ஆய்வு அமைப்புகள் இவர்களால் ஆளப்படுகின்றன. உலகமெங்குமுள்ள கல்வியமைப்புகள், ஊடகங்களுடன் தொடர்புள்ளவர்கள் இவர்களே. இந்தியமரபை, இந்தியாவின் மக்களை சிறுமைப்படுத்தி எழுதப்படும் எதற்கும் இவர்களால் சர்வதேசிய அளவில் முக்கியத்துவத்தைப் பெற்றுத்தர முடியும். ஆகவே அவ்வகை எழுத்துக்களும் சினிமாக்களும் பெருகுகின்றன. அவை மரபு எதிர்ப்பு என்றும் கலகம் என்றும் புரட்சி என்றும் முன்வைக்கப்படுகின்றன.
இந்த கலக,புரட்சி,மரபு எதிர்ப்பாளர்கள் எவரும் உலகைச்சூறையாடும் மேலைநாட்டுப் பொருளியல் ஆதிக்கம் பற்றிப் பேசமாட்டார்கள். அந்தப்பொருளியல் ஆதிக்கங்களால் மேலைநாட்டுக் கல்வித்துறையும் ஊடகங்களும் முழுமையாகவே கட்டுப்படுத்தப்படுவதை இல்லையென்றே சாதிப்பார்கள். மதமாற்ற சக்திகளுடன் கைகோத்துக்கொள்வதற்கு, அவர்களின் சதித்திட்டங்களுக்கு அடியாட்களாக நின்றிருப்பதற்கு இவர்களுக்கு நாணமில்லை.
இரண்டாவது தரப்பு, இவர்களின் திரிபுகள் மற்றும் கசப்புகளை தங்களுக்குரிய உரமாகக்கொண்டு வளரும் அடிப்படைவாத, பழைமைவாதக்குரல். இது இன்னொரு அரசியல் விசை. அதையே நான் சுட்டியிருக்கிறேன். மேலைநாட்டு அறிவுஜீவிகள் இந்திய அடிப்படைவாதிகளைச் சுட்டிக்காட்டி அதைக்கொண்டு இங்குள்ள நேர்மையற்ற இந்திய, இந்து எதிர்ப்புசக்திகளை முற்போக்கு, ஜனநாயக சக்திகளாகக் கட்டமைக்கிறார்கள்.
இந்தியாவின் உண்மையான மெய்யியலை, பண்பாட்டை முன்வைக்கும் குரல்கள் பல உள்ளன, அவற்றுக்கு இவ்விரு தரப்புகளுமே எதிரானவை. இவர்களின் அரசியலுக்கு அவை உதவாது. இதுவே இன்றைய நிலைமை. இச்சூழலில் இந்தியக் கல்வித்துறை ஆய்வுகள், அவற்றைச் சார்ந்து உருவாக்கப்படும் மேலைநாட்டுக் கல்வித்துறை ஆய்வுகளைக்கொண்டே இந்தியாவைப் புரிந்துகொள்கிறார்கள் மேலைநாட்டு ஆய்வாளர்கள். சென்றகாலங்களில் இவ்வாறு மேலைநாட்டுக் கல்வியாளர்களின் நூல்களில் இந்தியா குறித்து சொல்லப்பட்டிருக்கும் பிழைகள், திரிபுகள், உள்நோக்கம்கொண்ட இருட்டடிப்புகளை சுட்டிவந்திருக்கிறேன்.
அனேகமாக இந்தியப் பண்பாட்டின் எந்த ஒரு விஷயம் குறித்தும் அமெரிக்க, ஐரோப்பிய ஆய்வை வாசித்தால் அதிலுள்ள அறியாமையும், திரிபும் ,பொய்யுமே வந்து அறைகின்றன. எனக்கு நன்றாகத்தெரிந்த தளங்களில் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இந்தப் பிழையான ஆய்வுகளுக்கு கல்வித்துறைசார்ந்த முறைமை கடைப்பிடிக்கப்பட்டிருக்கும். ஆகவே பலநூறு அடிக்குறிப்புகள், நூல்சுட்டுகள் இருக்கும். அவை பெருமைமிக்க கல்வியமைப்புகளால் புகழ்மிக்க அறிஞர்களால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். ஆகவே அவற்றின் நம்பகத்தன்மையை எளிமையாக எவரும் ஏற்றுக்கொள்வார்கள்.
இது சென்ற நூறாண்டுகளாக மெல்லமெல்ல உருவாக்கப்பட்டு பூதாகரமாக எழுந்து நின்றிருக்கும் ஒரு அறிவாதிக்கம். ஆப்ரிக்க, சீன வரலாறும் பண்பாடும் இவ்வாறு திரிக்கப்பட்டுத்தான் நமக்குக் கிடைக்கின்றன. இன்று சீனா அதிலிருந்து வெளியேற நிகரான அறிவியக்கம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான ஆற்றல் இந்தியாவின் அறிவியக்கத்திற்கு இல்லை. அறிவியக்கம் நடைமுறை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக, நிலையான கருத்துவளர்ச்சி கொண்டதாக இருக்கவேண்டும். அதற்கு அரசுநிறுவனங்கள், கல்விநிறுவனங்களின் உதவி தேவை. அதற்கான வாய்ப்பே இந்தியாவில் இன்றில்லை. என்றாவது உருவாகலாம். அன்று அந்த இந்திய அறிவியக்கம் மெல்லமெல்ல வளர்ந்து அதன்மேல் ஏற்றப்பட்டுள்ள திரிபுகளையும் பொய்களையும் கடந்துசெல்லலாம்.
இவாலின் இந்தக் கருத்தை மிகமேலோட்டமாக இந்தியப் பண்பாட்டாய்வாளர்களின் எழுத்துக்களை வாசித்தாலே மறுத்துவிடலாம். ஏன், இந்தியவரலாற்றை மார்க்சிய அடிப்படையில் ஆய்வுசெய்த கோஸாம்பி போன்றவர்களே ஆணித்தரமாக மறுத்துவிட்ட விஷயம் இது. இந்தியாவின் பழங்குடிவாழ்க்கையிலிருந்து உருவானது சாதி என்றும், அது பேரரசுகள் உருவாகும்தோறும் அடுக்கதிகாரமாக ஆக்கப்பட்டு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டது என்றும்தான் கோஸாம்பியே சொல்கிறார்.
இவால் இந்தக்கருத்தை இந்தியவரலாற்றை சுருக்கமாக எழுதித் தொகுத்திருக்கும் அமெரிக்க நூல்களிலிருந்து பெற்றுக்கொண்டிருக்கலாம். அவர்கள் எதை வேண்டுமென்றாலும் திரிப்பார்கள், அதற்கு விரிவான கல்வித்துறை முறைமைகளை மட்டும் கடைப்பிடிப்பார்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் ஏசுவின் மாணவர் தாமஸ் இந்தியாவின் தென்கடற்கரைக்கு வந்தார் என்ற அப்பட்டமான பொய்யை மெல்லமெல்ல கல்வித்துறை ஆய்வுகளுக்குள் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இத்தகைய நூறு திரிபுகளை நான் சுட்டிக்காட்ட முடியும்.
ஒருமுறை ஒரு அமெரிக்கப்பேராசிரியருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர்முன் ஒரு ஆய்வுநூல் இருந்தது. பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வுநிறுவன உதவியுடன் செய்யப்பட்டது. நூலைத் திறக்காமலேயே நான் சொன்னேன், இது திரிபுகள் நிறைந்த நூல் என. அவர் சீண்டப்பட்டார். நான் அதில் ஏதேனும் ஒரு பக்கத்தை பிரியுங்கள், அங்கே அப்பட்டமான ஒரு திரிபை நான் சுட்டிக்காட்டமுடியும் என்றேன். அவர் பிரித்த பக்கத்தில் ஒருவரி ‘பிராமணர்களுக்குக் குலதெய்வம் கிடையாது, குலதெய்வம் பிற சாதியினருக்கு உரியது’ . அது அப்பட்டமான பிழை என அவருக்கே தெரியும். சோர்வாக நூலை மூடிவைத்துவிட்டார். தமிழகத்தில் அல்ல இந்தியா முழுக்கவே பிராமணர்களுக்கு குலதெய்வங்களும், குடும்பதெய்வங்களும் உண்டு. பலசமயம் பிராமணர்களுக்கும் பிறருக்கும் ஒரே குலதெய்வங்கள் இருப்பதுமுண்டு.
சமீபத்தில் ஒரு நூலை மேலோட்டமாகப் புரட்டினேன்.அதில் ஒரு வரி ‘பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு கோத்திரங்கள் கிடையாது’. என்ன சொல்ல?. சரி, இந்நூல்களை நாம் மறுக்க முடியுமா? மறுப்பதென்றால் நாம் எழுதும் நூலை இந்தியாவின் புகழ்மிக்க கல்விநிலையங்களின் உதவியுடன் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைகள் வெளியிடவேண்டும். அதற்கு வாய்ப்பே இல்லை. அவர்களுக்குச் சாதகமான கருத்துக்களையே வெளியிடுவார்கள். இந்தியாவின் குரல் அவர்களைச் சென்று சேரவே வழியில்லை, ஏற்கனவே காதுகளை மூடி வைத்திருக்கிறார்கள். நான் சொன்ன மறுப்புகள் எங்கும் ஒலிக்காது. ஆனால் அந்நூல்கள் அமெரிக்க,ஐரோப்பிய நூலகங்களில் இருக்கும். மேற்கோள் காட்டப்படும்.
இந்த பல்கலை ஆய்வுகள் முறைமைகளை கடைப்பிடிப்பவை, கல்வித்துறை மொழியில் பேசுபவை, ஆகவே பாமரர்களுக்கு அவை உண்மை எனத் தோன்றும்.அவை முறைமைகளை, கல்விச்சார்பை பாவனை செய்வதனாலேயே மேலும் கீழ்மைநிறைந்த அரசியல் ஆயுதங்கள். இவை அங்கே இருந்து மீண்டும் இங்கே வருகின்றன. இங்குள்ள அறிவுச்சூழலில் மேற்கோள்களும் ஆதாரங்களும் ஆகின்றன. குறைந்தது அதற்கு எதிராகவாவது ஒரு தற்காப்பை நாம் மேற்கொள்ளலாம்.
ஜெ
தெற்கு எல்லைக்காவலரணில் நின்றிருந்த புரவிவீரர்களில் இருவர் படைத்தலைவர்களுக்கான கொடியுடன் இருப்பதை தொலைவிலேயே யுயுத்ஸு பார்த்தான். ஐயத்துடன் தன்னைச் சூழ்ந்து வந்துகொண்டிருந்த படைத்தலைவர்களிடம் விரைவு கூட்டும்படி கைகாட்டிவிட்டு பாய்ந்து அதை நோக்கி சென்றான். படைத்தலைவர்கள் எல்லைக்காவல் அரணுக்கு வருவது அரிது. அரசரோ நிகரானவரோ வந்திருக்கவேண்டும். அன்றி ஏதேனும் ஒவ்வாப் பெருநிகழ்வு அமைந்திருக்கவேண்டும்.
ஒவ்வொரு நாளும் போர் முடிந்ததும் படையிலிருந்து கிளம்பி அருகிலிருக்கும் சிற்றூரான மிருண்மயத்திற்குச் சென்று அங்கு காவலர்மாளிகையில் தங்கியிருந்த திரௌபதிக்கும் குந்திக்கும் போர்நிகழ்வை சுருக்கி சொல்லி அவர்களின் வினாக்களுக்கு விளக்கமளித்து மீளும் பொறுப்பு அவனுக்கு அளிக்கப்பட்டிருந்தது. அப்போரின் துயர்மிகுந்த நிகழ்வாக அவன் உணர்ந்தது அதைத்தான். மாளிகையின் முகப்பிலேயே அவனை எதிர்கொண்டு உள்ளே அழைத்துச்செல்ல திரௌபதியின் சேடி நின்றிருப்பாள். அவளுக்கு சற்று அப்பால் தொடர்பற்று தனியாக நிற்பதுபோல் குந்தியின் சேடி நின்றிருப்பது தெரியும். அவர்கள் அவனிடம் ஒருசொல்லும் உரைப்பதில்லை. தலைவணங்கி உள்ளே அழைத்துச் செல்வர். சொற்களை உள்ளத்தில் அடுக்கியபடி அவன் உடன்செல்வான்.
காவலர்தலைவனின் சிறிய இல்லத்தில் மரத்தாலான கூடத்தில் இரு பீடங்களில் குந்தியும் திரௌபதியும் அமர்ந்திருப்பார்கள். முதல் நாளிலிருந்தே அவர்கள் செய்தி கேட்பதற்காக முழு அரசஉடையுடன்தான் வந்து அமர்ந்திருந்தனர். அவர்களுக்குப் பின்னால் வாய்மணம் பரப்பிய தாலம் ஏந்திய சேடியர் நின்றனர். அறைக்குள் நுழைவாயிலை காத்தபடி இரு ஆணிலிகள் நின்றனர். யுயுத்ஸுவுக்கு பீடம் அளிக்கப்படுகையிலும் வாய்மணமும் இன்னீரும் அளிக்கப்படுகையிலும் அவர்கள் ஒரு சொல்லும் உரைப்பதில்லை. சேடியரும் ஆணிலிகளும் அகன்றதும் குந்தி சொல்க என கையசைத்து ஆணையிடுவாள். அவன் அவர்களின் விழிகளை நோக்காமல் நோக்கு சரித்து நிலத்தையோ அப்பால் அசையும் திரைச்சீலைகளையோ பார்த்தபடி நிகழ்வுகளை சொல்வான்.
யுயுத்ஸு முதல்நாள் அவ்வமர்வில் அவர்கள் அணிந்திருந்த அரசஉடையைக் கண்டதுமே அங்கு நடந்துகொள்ள வேண்டிய முறையை உய்த்துணர்ந்துகொண்டான். ஆகவே முறைப்படி குந்திக்கும் பின்னர் திரௌபதிக்கும் அவைமுறைமைச் சொற்களை உரைத்து தலைவணங்கி அமர்ந்தான். போர்நிகழ்வுகளை எந்த நாடகமும் இன்றி வெறுமனே செய்திகளாக எளிய சொற்களில் அவர்களிடம் சொன்னான். வெற்றியும் தோல்வியும் படைநகர்வும் சூழ்கையும் ஒரே அளவு சொற்களில் அமையவேண்டுமென்பதை உளம் கொண்டான். குரலில் உணர்வோ ஏற்ற இறக்கமோ இல்லாது பார்த்துக்கொண்டான். அவர்கள் தங்கள் முகங்களில் எந்த உணர்வும் அசைவுமின்றி நிலைத்த விழிகளுடன் கேட்டிருந்தனர்.
கொலைகள், குருதிப்பெருக்குகள் வழியாக அவனது சொற்கள் சென்று நின்றதும் மறுசொல் உரைக்காமல் கையசைத்து செல்க என்று காட்டி குந்தி எழுந்தாள். அருகே நின்றிருந்த சேடி அவள் வெண்பட்டு ஆடையின் மடிப்புகளை சீர்படுத்த கைகூப்பி அவையை என அக்கூடத்தை வணங்கி வலம் திரும்பி வெளியேறினாள். அவள் வெளியேறிய பின்னர் திரௌபதியும் எழுந்து சேடியர் ஆடை சீரமைக்க இடைகொடுத்து பின் அவை வணங்கி அத்திசையிலேயே தானும் சென்று அகன்றாள். அதன் பின் யுயுத்ஸு எழுந்து இரு பீடங்களுக்கும் தலைவணங்கி இடந்திரும்பி கூடத்திலிருந்து வெளியே வந்தான்.
ஒவ்வொரு முறை அந்த அவையிலிருந்து வெளியே வரும்போதும் பெரும் விடுதலை ஒன்றை உணர்ந்தவன்போல் அவன் நீள்மூச்செறிவான். ஒவ்வொரு முறையும் சொல்லத்தொடங்குகையில் “இன்றைய போர் நமக்கு வெற்றிமுகம் அளிப்பதாக முடிந்தது. இன்று நம் படைத்தலைவர்கள் வகுத்த சூழ்கை அதன் இலக்கை அடைந்தது. களத்தில் நம் அரசர்களும் வீரர்களும் தங்கள் குல மாண்புக்குரிய வீரத்தை வெளிப்படுத்தினர். விண்ணவரும் தெய்வங்களும் குனிந்து நோக்கி வாழ்த்தும் செயல்கள் அவை” என்று சொல்கையில் அச்சொற்களின் பொருளில்லாமை அவனை பின்னிருந்து எவரோ வேல்முனையால் தொடுவதுபோல் உறுத்தியது.
ஆனால் முதல்நாள் அப்பொருளிலாச் சொற்றொடர்கள் தொடங்கியபோது அந்த அயன்மையே அவனை இயல்பாக பேசவைத்தது. எஞ்சிய பேச்சின் ஒழுங்கையும் வடிவையும் அதுவே முடிவு செய்தது. எவ்வகையிலும் சொல்பவருக்கோ கேட்பவருக்கோ தொடர்பற்றது என்றும் எப்போதுமே சொல்லப்பட்டு வருவது என்றும் எவராலும் மாற்றிவிட முடியாத தொல்கதை என்றும் அந்நிகழ்வை அது எண்ணிக்கொள்ள வைத்தது. அவ்விலக்கத்தால் அவனால் கூரிய சொற்களை தயக்கமில்லாது சொல்லமுடிந்தது.
ஆனால் தொடர்ந்த நாட்களில் அவ்வாறு சொல்வது அவனை நெருடத்தொடங்கியது. முதலில் உள்ளே எழும் சிறு அசைவின்மை ஒன்றால் பின்னர் சொல்லிக்கொண்டிருக்கும் சொற்களின் அனைத்து ஒழுங்குகளையும் குலைக்கும்படி உள்ளிருந்து எழும் இன்னொரு குரலாக அந்த உறுத்தல் உருமாறியது. ஒவ்வொரு சொல்லையும் அதன் கவ்வுதல்களிலிருந்து பிடுங்கி உள்ளிருந்து எடுக்க வேண்டிய நிலை வந்தது. பின்னர் அவ்வுளப் போராட்டத்தின் வெம்மையால் உடல் மெல்ல நடுங்க குரல் தழுதழுக்க அவன் போர்நிகழ்வுகளை சொல்லலானான். சொல்லி முடித்ததும் தொடுத்த அம்புகளென அந்நிகழ்வுகளனைத்தும் அவனிடமிருந்து செல்ல நாண் தளர்ந்ததுபோல் அவன் உள்ளம் நிலை மீண்டது. எழுந்து வெளிவருகையில் உள்ளிருந்து அக்கதையை எதிர்கொண்ட எதிர்க்குரலே அவன் அகமென இருந்தது.
ஒவ்வொருநாளும் மிருண்மயத்தின் முற்றத்தில் வந்து இருண்ட வானை அண்ணாந்து பார்த்து விண்மீன்களை நோக்கியபடி இடையில் கைவைத்து அவன் நின்றான். வேறு எவரிடமோ தன்னுள் எஞ்சும் கதையை சொல்ல விழைபவனாக. அன்று விண்மீன்கள் தெரியாமல் முகில் மறைத்திருந்தது. இருளுக்குள் மின்னல்கள் கிழிபட்டு துடித்துக்கொண்டிருந்தன. முரசொலிகள்போல தென்மேற்குச்சரிவில் இடியோசை மெல்ல ஒலித்து எதிரொலிகளென நீண்டு தேய்ந்து மறைந்தது.
புரவியிலேறிக்கொண்டு ‘செல்வோம்’ என்று சொல்லிக் கிளம்பியபோது யுயுத்ஸு எப்போதும்போலவே அன்றும் நாளை இங்கு நான் வரப்போவதில்லை, இப்பணியை அன்றி வேறு எந்தப் பணியையும் இங்கு நான் இயற்ற இயலும், இதையே நான் ஆற்றவேண்டுமெனில் களம் சென்று நெஞ்சு கொடுத்து குருதியுடன் வீழ்வதன்றி எனக்கு வேறு வழியில்லை என்று யுதிஷ்டிரரிடம் சொல்லவேண்டுமென்று எண்ணிக்கொண்டான். புரவி மையச்சாலைக்கு வந்து மிகத் தொலைவில் வானில் செவ்வொளிக் கசிவென எழுந்திருந்த பாண்டவப் படையை நோக்கி செல்லத்தொடங்கியபோது ஒருபோதும் தான் அதை சொல்லப்போவதில்லை என்று உணர்ந்து நீள்மூச்செறிந்தான்.
காவலரணை நெருங்கியதும் யுயுத்ஸு புரவியிலிருந்து இறங்கினான். அங்கு நின்றிருந்த வீரன் அவனை நோக்கி தலைவணங்கி அருகணைந்தான். “காவலர்தலைவர்கள் இங்கு என்ன செய்கிறார்கள்?” என்று யுயுத்ஸு கேட்டான். அதற்குள் காவலரணுக்குள் இருந்து வெளிவந்த படைத்தலைவன் அவனை நோக்கி தலைவணங்கி “இளவரசே, விதர்ப்ப நாட்டு அரசர் ருக்மி வந்துள்ளார். இளைய பாண்டவர் அர்ஜுனரை பார்க்க வேண்டுமென்று விழைகிறார்” என்றான். யுயுத்ஸு நிகழ்ந்த அனைத்தையும் ஒருகணத்தில் புரிந்துகொண்டு “எங்கிருக்கிறார்?” என்றான். “அவருக்கு என்ன முறைமை செய்யவேண்டுமென்று எங்களுக்கு தெரியவில்லை. அரசர்கள் இவ்வாறு நேரடியாக தனித்து வரும் வழக்கமில்லை” என்றான் படைத்தலைவன்.
“தனித்தா வந்திருக்கிறார்?” என்றான் யுயுத்ஸு. படைத்தலைவன் “தன்னந்தனியாக வந்திருக்கிறார். படைக்கலங்கள் எதுவும் இல்லை. அரசர் என்பதற்கான கணையாழி மட்டுமே உள்ளது. அவர் அருகணைந்து ஒளிக்குள் நுழைந்தபோது யாரோ முனிவர் என்று காவலர்தலைவர் எண்ணினார். அவர் இவரெனத் தெரிந்ததும் முழவொலி எழுந்தது. நாங்கள் இங்கு வந்தோம். முடிவெடுப்பதற்குள் தாங்கள் வந்துவிட்டீர்கள்” என்றான். “அரசர்கள் முன்னரே அறிவிப்பின்றி படைக்குள் நுழையலாகாது. படை என்பது ஒரு நகரம். நகர்நுழைவுக்கான எல்லா முறைமைகளையும் அவர்கள் பேணியாகவேண்டும்” என்றான் காவலர்தலைவன்.
யுயுத்ஸு காவலரணுக்குள் நுழைந்தபோது சிறுபீடத்தில் கால்மேல் கால் போட்டு கைகளை மார்பில் கட்டியபடி சாய்ந்தமர்ந்திருந்த ருக்மியை கண்டான். அருகே சென்று தலைவணங்கி “நான் தார்த்தராஷ்டிரனான யுயுத்ஸு. பாண்டவப் படைகளின் சொல்லாயும் பொறுப்பிலிருக்கிறேன். தங்கள் பணிக்கென தலைகொண்டவன்” என்றான். ருக்மி வலக்கையால் அவனை வாழ்த்தி “இங்கு வந்ததை நான் அறியவில்லை” என்றான். யுயுத்ஸு “போர் தொடங்குவதற்கு முன்னரே வந்துவிட்டேன்” என்றான். ருக்மி “நான் முதலில் அங்குதான் சென்றேன். அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கிருந்து திரும்பி என் நாட்டிற்கு செல்லவேண்டும் என்றே கிளம்பினேன். எனது படைத்தலைவர்கள் அதை விரும்பவில்லை. கௌரவர்களால் திருப்பியனுப்பப்பட்டால் நாம் படைக்கூட்டுக்கு தகுதியானவர்கள் அல்ல என்பதையே வரலாற்றில் நிலைநிறுத்துகிறோம் என்று என் முதன்மை படைத்தலைவன் சக்ரரதன் சொன்னான்” என்றான்.
யுயுத்ஸு அவன் அப்படி நேரடியாக பேசத்தொடங்கியதை எண்ணி வியப்புகொண்டான். ஆனால் அவனறிந்த ருக்மி எப்போதுமே முறைமைகளறியாத நேர்ப்பேச்சு கொண்டவன். “நான் தூதுச்செய்தியுடன் வந்துள்ளேன்… நானே தூதனானேன். ஏனென்றால் இச்செய்தியை என்னால்தான் சொல்லமுடியும்…” என்றான். யுயுத்ஸு மெல்ல இடைமறித்து “நான் தங்களை அழைத்துச்செல்கிறேன்…” என்றான். ஆனால் ருக்மி பேசவிழைந்தான் என தெரிந்தது. அவன் மிகக் குறைவாகவே பேசுபவன். அது சொல்லடங்கியதால் அல்ல, சொல் திரளாமையால். அத்தகையோர் பேசத்தொடங்கினால் அதிலேறி ஒழுகிச்செல்வார்கள்.
ருக்மி “என் படைத்தலைவர்கள் சொல்வது உண்மை என தோன்றியது. துரியோதனரால் திருப்பி அனுப்பப்பட்டேன் என்ற செய்தியே என் குடிக்கு நஞ்சுபோன்றது. சூதர்கள் எங்களை கோழைகள் என்றும் பயிலாதோர் என்றும் நம்பத்தகாதோர் என்றும் சொல்லிச் சொல்லி நிறுத்திவிடுவார்கள்” என்றான். யுயுத்ஸு “எதன் பொருட்டு அவர்கள் உங்களை திருப்பி அனுப்பினார்கள் என்பதை சொல்லில் நிலைநிறுத்தலாமே?” என்றான். “ஆம், ஆனால் அது சூதர் பாடலில் நிலைகொள்ளாது. ஏனெனில் சூதர்கள் சொல்லிச் சொல்லி தார்த்தராஷ்டிரராகிய துரியோதனருக்கு ஓர் இயல்பை அளித்துள்ளார்கள். அதை அவர்கள் எப்போதும் மாற்றப்போவதில்லை. சூதர்பாடல்கள் ஊற்றிலிருந்து கிளம்பிய நதி போன்றவை. அவை மீண்டும் ஊற்றுக்கு ஒருபோதும் செல்வதில்லை என்பார்கள்” என்றான் ருக்மி.
“தன் இயல்புக்கு மாறான ஒன்றை அவர் கூறினார் போலும்!” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆம், நான் என் குலத்தாருடன் போரிடவேண்டாம் என்றார். எந்நிலையிலும் உடன்பிறந்தார் ஒருவரோடொருவர் போரிட்டு குருதி சிந்தலாகாது என்றார்” என்றான் ருக்மி. “மண்ணுக்காகவும் புகழுக்காகவும் நிகழ்த்தப்படும் அனைத்துப் போர்களும் பொருளற்றவையே என்றும் சொன்னார்.” யுயுத்ஸு “இந்தப் போரிலிருந்து நிறையவே கற்றுக்கொண்டிருக்கிறார்!” என்றான். ருக்மியின் உதடுகள் இகழ்ச்சியுடன் வளைந்தன. “அங்கிருப்பவர் யுதிஷ்டிரரா என்ற ஐயத்தை நான் அடைந்தேன். போர் தொடங்கியபின் துரியோதனர் யுதிஷ்டிரர் ஆகிவிட்டார் என்றால் இங்கு யுதிஷ்டிரர் துரியோதனராக இருப்பாரோ என்று எண்ணிக்கொண்டேன்” என்றான். யுயுத்ஸு “அவர்கள் இருவரும் ஒருவரே” என்றான்.
ருக்மி அதை புரிந்துகொள்ளாமல் கூர்ந்து நோக்க “விதர்ப்பரே, உங்களிடம் பேசியவையும் என் மூத்தாரின் இயல்புக்குரிய சொற்களே. அவரை இருபுறமும் இருவகையான தெய்வங்கள் நின்றாள்கின்றன. நீங்கள் சென்ற தருணம் நன்று இயற்றும் தெய்வங்களுக்குரியது” என்றான். ருக்மி “ஆம், அவர் நன்னிலையில் இல்லை என்பதை நானும் உணர்ந்தேன். ஆனால் என் படைகள் அவரால் திருப்பி அனுப்பப்பட்டன என்பதை எங்கும் என்னால் விளக்க இயலாது. நான் இயற்றவேண்டியதென்ன என்று படைத்தலைவர்களிடம் கேட்டேன். பாண்டவப் படைகளுடன் வந்து சேர்வதொன்றுதான் செய்வதற்குள்ளது என்றார்கள்” என்றான்.
யுயுத்ஸு புன்னகைத்து “உங்கள் வஞ்சினம் என்ன ஆவது?” என்றான். ருக்மி “ஆம், அது பொருளற்றுப் போகிறது. அதை என்ன செய்வதென்று தெரியாமல் வைத்திருக்கிறேன். என்னால் அசைக்க முடியாத மாபெரும் படைக்கலம் ஒன்று என் இல்லத்தில் கிடப்பது போலிருக்கிறது” என்றான். “மெய்யாகவே எனக்கு எதுவும் தெரியவில்லை” என ருக்மி எழுந்தான். மேலாடையை எடுத்து அணிந்தபடி பதற்றத்தால் சற்று நடுங்கிய குரலில் “நான் இளைய பாண்டவர் அர்ஜுனரை பார்க்கவேண்டும், அவரிடம் பேசவேண்டும்” என்றான். அவனுடைய தாடி செந்நிறமாக தழல்போல் அசைந்தது. அவர்களின் குடிக்கே ஹிரண்யரோமர்கள் என்று பெயர் என யுயுத்ஸு நினைத்துக்கொண்டான்.
“உன்னை கண்டால் யுதிஷ்டிரரைப்போல் தோன்றுகிறது. நீ எனக்கு உரிய வழிகாட்டமுடியும்” என்று ருக்மி சொன்னான். “நான் உடனே இளைய பாண்டவரை காணவேண்டும்…” யுயுத்ஸு “நீங்கள் பேச வேண்டியது மூத்தவர் யுதிஷ்டிரரிடமல்லவா?” என்றான். “அல்ல. அதற்கு முன் இளைய யாதவரிடம். அதற்கு முன்பு இளைய பாண்டவரிடம்” என்றான் ருக்மி. “இளைய பாண்டவரிடம் எனக்கு எஞ்சும் சொல் உள்ளது. முன்பு நான் துருமன் என்னும் கிம்புருடநாட்டு ஆசிரியரிடம் வில்பயின்றேன். அவர் எனக்கு அளித்த விஜயம் என்னும் வில்லுடன் நான் அஸ்தினபுரிக்குச் சென்று இளைய பாண்டவர் அர்ஜுனரை நிகர்ப்போருக்கு அழைத்தேன். அன்று இதே குருக்ஷேத்ரத்தில் நிகழ்ந்த போரில் நாங்கள் இருவரும் ஒருநாள் முழுக்க இணைநின்று போரிட்டோம். என் வீரத்தில் மகிழ்ந்த இளைய பாண்டவர் தேவையேற்படுகையில் நான் அவரை சென்று காணவேண்டும் என்றும் அவருடைய வில் எனக்கு உதவும் என்றும் சொல்லளித்தார்.”
யுயுத்ஸுவின் தோளில் கைவைத்து “இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளவேண்டிய தருணம் இது” என்று ருக்மி சொன்னான். “தாங்கள் நாடும் உதவி எது?” என்றான் யுயுத்ஸு. ருக்மி தத்தளிப்புடன் தலையை அசைத்து நீள் தாடியை கையால் பற்றி உருவி பின்னர் “என் படைகள் இங்கு சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். ஒருநாளேனும் இங்கு கௌரவரை எதிர்த்து நாங்கள் போரிடவேண்டும்” என்றான். “தங்கள் உடன்பிறந்தோர் முன்னரே இங்குதான் இருக்கிறார்கள்” என்றான் யுயுத்ஸு. “ஆம், அவர்கள் என்னை இரு கை விரித்து ஏற்றுக்கொள்வார்கள். இதுகாறும் நான் இழைத்த அனைத்துப் பிழைகளையும் அவர்கள் எப்போதோ பொறுத்திருப்பார்கள். இத்தருணத்திற்காக காத்திருப்பார்கள் என்றே நான் எண்ணுகின்றேன். அந்தத் தோளிணைவு யுதிஷ்டிரர் அவையில் நிகழ்வதென்றால் நன்று. ஆனால் அதற்கு முன்…”
சொல்லின்மையால் தத்தளித்த ருக்மி கைகளை காற்றில் அசைத்து “அதற்கு முன் எனக்கொரு சொல் தேவை. நான் அதைத்தான் இளைய பாண்டவரிடம் எதிர்பார்க்கிறேன்” என்றான். “என்ன சொல்?” என்று யுயுத்ஸு கேட்டான். “நான் இளைய யாதவர் மேல் கொண்டுள்ள வஞ்சம். நான் இதுகாறும் வாழ்ந்தது அதன்பொருட்டே. அதை நான் கைவிடவேண்டுமென்றால்… எங்கும் இளிவரல் எழாது நான் அதை கடந்துசெல்லவேண்டுமென்றால்…” என ருக்மி தடுமாறினான். “அது இளைய யாதவரால் மட்டுமே இயலும். அவர் உளம்கொள்ளவேண்டும். அதற்கு அவரிடம் இளைய பாண்டவர் சொல்லவேண்டும்.”
யுயுத்ஸு தன்னுள் எழுந்த வெறுப்பை முகத்தில் காட்டாமல் மறைத்தபடி “அவர் ஆற்றவெண்டியதென்ன?” என்றான். “வெறுமனே என்னிடம் ஒரு அடியறைவு சொல்லுதல். வெறும் சொல்தான். தன் பிழையை பொறுக்கவேண்டுமென்று ஒரு கோரிக்கை. பொறுத்தேன் என்ற ஒரு சொல்லால் அத்தருணத்தை நானும் கடந்து செல்வேன். இதுவரை அள்ளிக்கொண்டுவந்த அனைத்தையும் அங்கு உதறிவிட விரும்புகிறேன்” என்றான் ருக்மி. தலையை அசைத்து “ஆம், அதற்கு பொருளேதுமில்லை. அது வெறும் நடிப்பு. ஆனால் அத்தகைய ஒரு நாடகத்தருணம் இல்லையென்றால் இந்த நீண்ட தவத்தை என்னால் முடித்துக்கொள்ள இயலாது. என் வாழ்வே பொருளற்றதாகிவிடும்” என்றான்.
யுயுத்ஸு “விதர்ப்பரே, இக்களத்தில் இங்குள்ள அனைவருடைய வாழ்வும் பொருளற்றதாகவே உள்ளது” என்றான். யுயுத்ஸுவின் சொல்லை ருக்மியால் புரிந்துகொள்ள இயலவில்லை. “நான் கூறவருவதை இளைய பாண்டவரால் புரிந்துகொள்ள முடியும். இது அரசுசூழ்பவரின் உணர்வல்ல. வஞ்சத்தாலும் சினத்தாலும் விழைவாலும் ஆட்டுவிக்கப்படும் ஷத்ரியர்களின் தடுமாற்றம். கூற்றைவிட அவர்கள் அஞ்சுவது சூதர் சொல்லைத்தான். ஆகவேதான் அவரை பார்க்கவேண்டுமென்று கேட்டேன்” என்றான். “தங்களை அவரிடம் கூட்டிச்செல்வது என் பணி” என்று யுயுத்ஸு சொன்னான்.
அர்ஜுனனின் படைபிரிவை நோக்கி கிளம்புவதற்குள்ளாகவே அருகிலிருந்த காவல்நிலையிலிருந்து அர்ஜுனனுக்கு ஒரு புறாச்செய்தியை அனுப்ப யுயுத்ஸு ஒருங்கு செய்தான். அதில் சுருக்கமாக ருக்மியின் வருகையின் நோக்கத்தை தெரிவித்திருந்தான். அவன் செய்தியை அனுப்பிவிட்டு வந்து புரவியிலேறிக் கொண்டபோது “முழுச் செய்தியையும் நீ அனுப்பியிருக்க வேண்டியதில்லை” என்றான் ருக்மி. யுயுத்ஸு “செய்தியை அனுப்பாமல் தங்களை நான் அழைத்துச்செல்ல இயலாது. எதன் பொருட்டு தாங்கள் அவரை பார்க்கவேண்டுமென்பதை அவர் அறிந்த பிறகே முடிவெடுப்பார். ஏனெனில் இப்போர் தொடங்கியபின் படைசூழ்கைக்கான அவையில் அவர் அமர்வதில்லை. போர் குறித்த எந்தச் சொல்லாடல்களுக்கும் வந்ததில்லை. போரும் அந்திப்பொழுதின் விற்பயிற்சியும் அவ்வப்போது இளைய யாதவரை சந்தித்து ஓரிரு சொற்கள் உரையாடுவதுமன்றி இங்குள்ள எவருடனும் அவருக்கு எத்தொடர்பும் இல்லை. காட்டில் யோகிகள் வாழ்வதுபோல் இங்கு வாழ்கிறார், காட்டுடன் எத்தொடர்புமின்றி” என்றான்.
ருக்மி “அவர் அவ்வாறுதான் இருக்க இயலும்” என்றான். அவர்களின் புரவி தாளமிட்டு மரப்பாதையில் விரைந்தது. புண்பட்டோரும் மாய்ந்தோரும் அகற்றப்பட்டு களம் ஒழிந்துவிட்டிருந்ததனால் குருக்ஷேத்ரத்தில் ஓசைகள் முற்றாக அடங்கிவிட்டிருந்தன. படைப்பிரிவுகளில் இரவு விளக்குகளன்றி பிற பந்தங்கள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன. விண்மீன் பரவிய வானத்தின் அமைதி தெரிந்தது. மிகத் தொலைவில் படைக்குப் பின்புறம் மருத்துவநிலையிலும் அதற்கும் அப்பால் உலைக்கூடங்களிலும் மட்டுமே வெளிச்சம் இருந்தது. குளிர்ந்த காற்று கந்தக மணத்துடன் வீசியது. சுழன்றுவந்தபோது அடுமனை மணம் அதிலிருந்தது.
ருக்மி கை சுட்டி “காட்டுக்குள் அது என்ன ஒளி?” என்றான். “சிதைகள்!” என்று சுருக்கமாக யுயுத்ஸு சொன்னான். ருக்மி ஒன்றும் சொல்லாமல் இடக்கையால் தாடியை நீவியபடி சிதைச் செம்மையை விழிநிலைத்து நோக்கிக்கொண்டு புரவியில் அமர்ந்திருந்தான். அவன் என்ன எண்ணுகிறான் என்று யுயுத்ஸுவுக்கு புரியவில்லை. அவர் ஏதும் எண்ணுவதே இல்லையோ என்ற எண்ணம் ஏற்பட்டது. என்றேனும் தன்னைக்கடந்து ஒரு சொல் எண்ணியிருப்பாரா இவர்? தங்கள் புகழுக்கும் செல்வத்திற்குமென களம் காண்கிறார்கள். பல்லாயிரம் உயிர்களை வைத்து விளையாடுகிறார்கள்.
அர்ஜுனன் பதினெட்டாவது படைப்பிரிவில் இருப்பதாக புறா செய்தி கொண்டுவந்தது. பதினெட்டாவது படைப்பிரிவை நோக்கி சென்று முதல் காவலரணில் தன் புரவியை நிறுத்தி இறங்கிய யுயுத்ஸு தன் வருகையை அறிவித்தான். அங்கு காவலுக்கு நின்றிருந்த காவலன் “தங்களுக்காக காத்திருக்கிறார்கள்” என்றான். “யார்?” என்று யுயுத்ஸு கேட்டான். “இளைய யாதவரும் இங்கு வந்திருக்கிறார். தங்களுக்காக காத்திருக்கிறார்” என்றான் காவலன். யுயுத்ஸு அதை எப்படி எதிர்பார்க்காமல் இருந்தேன் என்று எண்ணிக்கொண்டான். காவலன் அவர்களின் வரவை அறிவிக்கும்பொருட்டு சென்றான்.
அவனுடன் நடந்து வந்த ருக்மி காவலர்தலைவன் குறிமொழியில் சொன்னதை புரிந்துகொள்ளவில்லை. “நான் இளைய பாண்டவரிடம் சொல்வதற்கொன்றே உள்ளது. என் நோக்கை அவர் இளைய யாதவரிடம் சொல்ல வேண்டும். இன்று தெளிவாக உணர்கிறேன் எனது வஞ்சத்தின் ஊற்றுமுகம் என்ன என்பதை. அது வீரனென்றும் அரசனென்றும் நான் கொண்ட ஆணவம். ஷத்ரியன் என்று அவைகளில் தருக்கி நிற்க விழைந்தேன். யாதவன் என் தங்கையை மணம்கொண்டு சென்றான். அதை தடுக்கச் சென்ற என் தாடியை மழித்து சிறுமை செய்தான். செல்லுமிடமெங்கும் சூதர் சொல்லில் அச்சிறுமை வாழ்வதை கண்டேன். அதைக் கடந்து சூதர்சொல்லில் பெருமை நிலைநாட்டி மண்நீங்கிச் செல்ல வேண்டுமென்பதற்கப்பால் நான் எதைப்பற்றியும் எண்ணவில்லை.”
“அதன் பொருட்டே இதுநாள் வரைக்கும் வாழ்ந்தேன். அவ்வஞ்சத்தை ஒவ்வொரு நாளும் நிகழ்வுகள் பெருக்கின. வெவ்வேறு அவைகளில் நானும் எந்தையும் கொண்ட சிறுமைகள். என் உடன்பிறந்தானுக்கு நிகரான சிசுபாலனை தலைவெட்டிச் சரித்து அவர் கொன்ற முறை…” என்றான் ருக்மி. யுயுத்ஸு “அவரும் இத்தகைய ஆணவத்தால் ஆட்டுவிக்கப்பட்டவரே” என்றான். “ஆம், ஆணவமே ஷத்ரியர்களை ஆக்குகிறது. ஆணவமில்லாத ஷத்ரியன் வேலேந்தி படைப்பெருக்கில் ஒரு துளியென நின்று பொருதி இறக்கும் ஊழ் கொண்டவன்” என்றான் ருக்மி. யுயுத்ஸு ஏதோ சொல்ல வந்து அச்சொல்லை தவிர்த்தான்.
“அதைவிட ஜராசந்தரின் இறப்பு!” என்றான் ருக்மி. “உடல்கிழித்து வீசப்பட்டார்! என்னளவில் அவை எளிய போர்விளைவுகள் அல்ல. அவர்கள் ஒவ்வொருவராகவும் நின்று நான் நடித்திருக்கிறேன். ஆகவே அவர்கள் ஒவ்வொருவருடனும் இறந்தேன். ஒவ்வொரு இறப்புக்குப் பின்னும் ஏழு மடங்கு வஞ்சத்துடன் எழுந்தேன். ஆனால் இதுவரை எனக்கிருந்த இழிவைவிட நூறு மடங்கு இழிவை கௌரவர்களால் போர்முனையிலிருந்து விலக்கப்பட்டமை எனக்கு அளிக்குமெனும்போது அனைத்தும் குழம்பி சரிந்து கிடக்கின்றன கண்முன்.” ருக்மி “அங்கே இளைய பாண்டவர் தனித்திருக்கிறாரா? எங்களுடன் எவரும் இருப்பதை நான் விரும்பவில்லை” என்றான். யுயுத்ஸு அதற்கு மறுமொழி உரைக்கவில்லை.
“எனக்கு ஒரு தெளிவு வேண்டும்… அதை இளைய பாண்டவர் அளிக்கமுடியும்” என்று ருக்மி சொன்னான். “நான் பாண்டவப் படைகளில் சேர்வதற்கான அழைப்பை இளைய யாதவரே எனக்கு அளிக்க வேண்டும். அவர் எனக்கிழைத்த பிழைக்கு ஒரு சொல்லளித்து என்னை அழைத்தார் என்றும் என்னால் இடர்ச்சூழலை கடந்துசெல்ல இயலும்.” யுயுத்ஸு “அதை அவரே எத்தடையுமின்றி இயற்றுவார். சூதர்சொல்லில் வாழும் பொருட்டு அவர் எதையும் இங்கு செய்யவில்லை” என்றான். “விதர்ப்பரே, ஷத்ரியர்கள் இருவகை. சூதர்களுக்கு பின் செல்பவர், சூதர்களால் தொடரப்படுபவர்.”
ருக்மி அவன் சொற்களை புரிந்துகொள்ளவில்லை. கைவீசி “வீண்சொற்களில் எனக்கு ஆர்வமில்லை” என்றான். “ஆனால் நீங்கள் சொல்வதை இளைய பாண்டவர் ஏற்றுக்கொள்வார் என்று எனக்கு தோன்றவில்லை. உங்களை அவர் ஏற்றுக்கொண்டாரெனில் அது அவருக்கே இழிவு. நான்குநாள் போரில் கௌரவருடன் எதிர்நிற்க இயலாமையால் உங்களை படைத்துணைக்கு அழைத்தார் எனும் பொருள் வரும். அவருடைய வில்வல்லமைக்கும் தோள்திறனுக்கும் அது இழுக்கு” என்றான் யுயுத்ஸு. “இளைய பாண்டவர் பீமன் இங்கிருந்தால் சினந்து இழிசொல்லுரைத்து உங்களை திரும்பிச்செல்ல ஆணையிடுவார்.”
ருக்மியின் கண்கள் இடுங்கின. “ஆம்” என்றான். “அதை என் படைத்தலைவர்கள் கூறினார்கள். ஆகவேதான் பீமனை அவையில் சந்திப்பதற்கு முன்னரே அச்சொல்லை அர்ஜுனனிடமிருந்து பெற்றுவிடவேண்டுமென்று எண்ணினேன்” என்றான். “அதை நீங்கள் இளைய யாதவரிடமிருந்தே பெறலாமே?” என்றான் யுயுத்ஸு. “அவர்முன் சென்று நின்றால் அக்கணமே இயல்பாக என் ஆணவம் வடிந்து தோள்கள் குறுகிவிடக்கூடும். என்னையறியாமலே நான் பணிந்துவிடக்கூடும்” என்றான் ருக்மி.
யுயுத்ஸு திரும்பிப்பார்த்தான். முதன்முறையாக அவனிடம் வியப்புணர்ச்சி எழுந்தது. ருக்மி “பகைமையுடன் என்றாலும் இத்தனை ஆண்டுகள் ஒவ்வொரு கணமும் என இளைய யாதவரை எண்ணியிருந்தவன் நான் என்று தார்த்தராஷ்டிரர் சொன்னார். அது மெய். இப்புவியில் அவர் மணந்த மங்கையரைவிட அவரை எண்ணிக்கொண்டிருந்தவர்கள் சிசுபாலனும் நானுமே. கொன்று அவரை விண்புகச் செய்தார். வென்று என்னை அவர் விண்புகச் செய்யக்கூடும். அத்தருணத்தை நான் அறிவேன். ஆம், ஐயமே இல்லை. அவரை எதிர்கொண்டு அருகில் கண்டால் சென்று கால் பணிந்து வணங்குவதன்றி வேறு எதையும் என்னால் செய்ய இயலாது. அதற்கு முன்னரே அவரிடமிருந்து ஒரு சொல்லில் ஓர் அழைப்பு எனக்கு இளைய பாண்டவரினூடாக கிடைக்குமெனில் என் குலத்தார் முன் நிமிர்ந்து நின்று சொல்ல ஏதுவாகும். அது ஒன்றையே இத்தருணத்தில் எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான்.
“இப்போர் சென்றுகொண்டிருக்கும் திசையை நானறிவேன். ஒவ்வொரு நாளும் பேரழிவின் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. நானும் என் படையும் இப்போரில் அழிவோம் என்பது ஒரு வாய்ப்பே. அதற்கு நான் தயங்கவில்லை. இவை இயல்பாக உரிய முறையில் முடியவேண்டும் என்பதற்கு அப்பால் நான் எண்ணுவது பிறிதில்லை” என்றான் ருக்மி. யுயுத்ஸு “ஒவ்வொன்றும் உரிய முறையில் முடிவதற்கான வழி ஒன்றே. அவை நிகழ்வொழுக்கில் சென்று தங்கள் முடிவை தாங்களே அடைவதற்கு விடுதல். அன்றாட வாழ்க்கையில் அனைத்தையும் பற்றிக்கொள்வதே வாழ்திறன். பிறிதோர் எல்லையில் அனைத்துப் பிடிகளையும் விட்டுவிடுவதே உலகியல் முதிர்வு” என்றான்.
ருக்மி “ஆம். உன் பேச்சும் யுதிஷ்டிரரைப் போலவே” என்றான். அவர்கள் குடிலை அணுகுவதற்குள் கதவு திறந்து உள்ளிருந்து இரு கைகளையும் விரித்தபடி வெளியே வந்த இளைய யாதவர் “விதர்ப்பரே, தாங்கள் வருகிறீர்கள் என்ற செய்தி கேட்டு வந்தேன். முன்பு போரில் உங்களுக்கு பெரும்பிழையொன்றை இழைத்துளேன். அதன் பொருட்டு என்னையும் என் குடியையும் தாங்கள் பொறுத்தருளவேண்டும். தங்கள் வில்லும் தோளும் எங்கள் படைகளுக்கு துணையென அமைய வேண்டும். பெருங்குடி ஷத்ரியர்கள் பிற குலத்தோரின் பிழை பொறுத்தலினூடாகவே மாண்பு கொள்கிறார்கள்” என்றபடி வந்து ருக்மியின் கால்களை தொடுவதற்காக குனிந்தார்.
உடல் நடுநடுங்க ருக்மி இரண்டடி பின்வைத்து யுயுத்ஸுவை பற்றிக்கொண்டான். அவன் பிடித்துக்கொண்ட யுயுத்ஸுவின் கையும் நடுங்கியது. கால்தளர்ந்து நிலத்தில் அமர்ந்த ருக்மி தன் முன் நிலத்தை தொட்டு தலை தாழ்த்தி “எந்தையே! என்னிறையே! இவ்வாடலில் நான் எங்கு அமைய வேண்டுமோ அதை இயற்றுக!” என்றான். இளைய யாதவர் அவன் இரு தோள்களையும் பற்றித் தூக்கி தன் நெஞ்சோடணைத்துக்கொண்டு “நன்று திகழ்க! புகழ் பெருகுக!” என்றார்.
சினிமாக்களைப்பற்றி இந்த தளத்தில் எழுதக்கூடாது என்பதே என் எண்ணம். ஆனாலும் இது ஒரு சுவாரசியமான வாழ்க்கைநிகழ்வு, கதைக்களம் என்பதனால் இது
சர்க்கார் படம் நான் பணியாற்றியது. பணியாற்றியது என்றால் சென்ற இருபதாண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம்தான். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக சென்னையில் தங்கி காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது. எந்தக்காட்சியும் எவரேனும் ஒருவருக்குப் பிடிக்காது. பிடித்திருந்தால் விஜயின் இயல்புக்குச் சரிவருமா என்ற சந்தேகம். உடனே ”இது முன்னாடியே வந்திருச்சோ?” என்ற அடுத்த சந்தேகம். உடனே “ரொம்ப புதிசா இருக்கோ? புரியலைன்னுருவாங்க”என்ற மேலும் பெரிய சந்தேகம். ஒரு நான்கு வெண்முரசு அளவுக்கு கதை விவாதிக்கப்பட்டிருக்கும். எங்கோ ஓரிடத்தில் இதிலுள்ள வேடிக்கையை நான் ரசிப்பதனால்தான் ஈடுபடவே முடிந்தது.
வணிகசினிமா என சாதாரணமாகச் சொல்கிறோம். அது லட்சக்கணக்கானவர்களின் ரசனைக்கும் நமக்கும் நடுவே ஒரு சமரசப்புள்ளியைக் கண்டடைவதுதான். அவர்களுக்குப் பிடித்ததைக் கொடுக்கவேண்டும். அவர்கள் எதிர்பார்ப்பதைக் கொடுக்கவேண்டும். ஆகவே எதுவும் பெரிதாகப் புதுமைசெய்ய முடியாது. ஆனால் கண்டிப்பாக கொஞ்சம் புதிதாகவும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் ’அதேகதைதாண்டா மாப்ள’ என்று கடந்துசென்றுவிடுவார்கள். சினிமாக்களில் வரக்கூடியதாக இருக்கவேண்டும் ஆனால் முன்னர் அதேபோல வந்திருக்கவும்கூடாது. முழுக்கமுழுக்க ஒரு கதைத்தொழில்நுட்பம் அது. இந்த கம்பிமேல் நடையால்தான் இந்த அவஸ்தை
தொடங்கும்போது வெறும் ஒரு மெல்லிய ஒற்றைவரிதான் கையிருப்பு. ’சிவாஜிகணேசன் ஓட்டையே கள்ள ஓட்டு போட்டுட்டாங்கசார். அதான் நம்ம கதை!” .உண்மை என்னவென்றால் விவாதம் ஆரம்பித்த நான்காம் நாள் வரைக்கும்கூட இந்த ஒரே வரிதான் கதை. ‘ஹீரொ வோட்ட கள்ளவோட்டா போட்டுடறாங்க சார்… அப்றம்? டேய் டீ சொல்ரா”. இது நகருமா ஊருக்கே போய்விடுவோமா என்ற நிலையில்தான் அடுத்த களநகர்வு ‘சார் நம்ம ஹீரோ ஒரு கார்ப்பரேட் சிஇஓ” .உடனே அது விஜய்க்கு சரியாகுமா என்ற விவாதம். அதன்பிறகுதான் படத்தின் முதல்காட்சியே. ‘புடிச்சிட்டோம் சார்… இப்டியே மொள்ளமா போயிடலாம்… டேய் டீ சொல்ரா!”
அந்த ஒருவரி கதை படம் ஆரம்பித்த நான்காம்நிமிடத்தில் வந்துவிடுகிறது. டிரெயிலரிலேயே வந்தும்விட்டது. எஞ்சியதெல்லாம் ‘சரி, இப்டீன்னா நம்மாள் என்னபண்ணுவார்?” என்று கோத்துக்கோத்து முடையப்பட்டது. ஒவ்வொரு காட்சிக்கும் பலவடிவங்கள் யோசிக்கப்பட்டன. முருகதாஸே ஒன்றைச் சொல்லி எல்லாரும் ஆகா என்று சொல்லி மறுநாள் அவரே வந்து சரியாவராது என்று நிராகரிப்பார். ஒரு விஷயம் ‘ஒக்காரலை’ என்றால் மீண்டும் ஆரம்பத்திலிருந்தே. ‘சார் நம்ம ஹீரோ ஓட்ட கள்ளவோட்டா போட்டிருரானுக…அப்றம்…?” மொத்தத் திரைக்கதையின் நான்கு வெவ்வேறுவடிவங்கள் இப்போதும் என் கைவசம் உள்ளன. சொல்லப்போனால் இன்னும் ஒரு சினிமாவை வசதியாக கைவசம் உள்ள காட்சிகளில் இருந்து எடுக்கலாம்.
அப்படியிருந்தும் இந்த விவாதம் ஏன்? சமகாலத்திலிருந்து செய்திகள், அரசியல்நிகழ்வுகள் வழியாக கருக்களை எடுப்பது முதல்காரணம். நமக்கு சமகாலநிகழ்வுகளே கைப்பிடி அளவுக்குத்தான். தமிழ்சினிமாவின் கதாநாயகன், கதாநாயகி, வில்லன்கள், சமூகப்பிரச்சினை, அடிதடித்தீர்வு என்ற ‘டெம்ப்ளேட்’ பெரும்பாலும் மாறாதது என்பது இரண்டாவது காரணம். அந்தச்சின்ன கருவை இந்த சட்டகத்துக்குள் சரியாக அடக்குவதுதான் இங்கே கதை என்பது.
மற்றபடி இதில் ஆயிரம் வணிகநோக்கங்கள்,பேரங்கள். இந்த கதைத்திருட்டு போன்ற செய்திகளை நாம் நம்ப விரும்புகிறோம், ஏனென்றால் இந்தச் செய்திகளிலேயே ஒரு வணிகசினிமா டெம்ப்ளேட் உள்ளது. ஏழைX பணக்காரன், எளியவன்X வென்றவன் என்ற முடிச்சு. ’அடாடா ஏழை அசிஸ்டெண்ட் டைரக்டரோட கதைய சுட்டுட்டாண்டா” .நாம் எங்கே அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதும் எழுதப்பட்டுள்ளது அதில். உண்மையில் இந்த ஒருவரியையே விஜயை வைத்து படமாக ஆக்கலாம். அதே டெம்ப்ளேட்டில்.
என்றாவது இந்த வேடிக்கையைப்பற்றி ஒரு நல்ல நாவலை எழுதிவிடுவேன் என நினைக்கிறேன்.