Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16754 articles
Browse latest View live

வேண்டுதல் நிறைவு

$
0
0

ஒரு வேண்டுதல்

உயிராபத்து நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி முருகசாமி அய்யா, தனது உடல்நலத்தில் தேறுதலடைந்து உள்நோயாளிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். மருத்துவமனை வாசலில் கண்ணீர்காயாத விழிகளோடு துக்கம்சுமந்து நின்ற அந்த காதுகேளாத, வாய்பேசாத பிள்ளைகளின் வேண்டுதலும் தவிப்பும் தான் இந்த நிம்மதிப்பெருமூச்சை நமக்களித்துள்ளது.

அய்யாவின் குணமடைதலைக் கேள்விப்பட்டு, அழைத்துக்கேட்கும் அத்தனை இருதயங்களையும், துவக்கநாள் தொட்டுப் பிரார்த்தனைகளால் இறைதொழுத நம்பிக்கை மனங்களையும் கைகூப்பி பாதம் தொழுகிறோம். அனைத்துவகையிலும் உடன்நின்ற நண்பர்களை நெஞ்சணைத்துக் கொள்கிறோம்.

முழுமையான நலம்பெற தொடர்ந்த சிகிச்சை அவசியமாகிறது

 

சிவராஜ்

குக்கூ காட்டுப்பள்ளி

 

திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி- அடுத்த சூழ்ச்சி

திருப்பூர் குற்றச்சாட்டு -நம் அறமும் குடும்பமும்

ஒரு குற்றச்சாட்டு

திருப்பூர், கொற்றவை- கடிதம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

யுவன் சந்திரசேகரின் ‘கானல்நதி’- கலைச்செல்வி

$
0
0

கானல்நதி வாங்க

 

வணக்கம் சார்

 

நலமா? யுவன் அவர்களின் கானல்நதி நாவலை படித்து முடித்தேன்.முடித்தவுடன் எழுந்த உணர்ச்சிக் கொந்தளிப்போடு இதை எழுதுகிறேன்.

 

எந்த முன்முடிவுமின்றி ஒரு நாவலை அணுகுவதே ஒரு சுவாரஸ்யம்தான். கானல்நதியை அப்படிதான் அணுகினேன்.. தபலா மேதை குருச்சரண்தாஸ் தனது நண்பனான இந்துஸ்தானி இசை பாடகன் தனஞ்செய்முகர்ஜியின் வாழ்க்கையை நாவலாக எழுதும்படி கேசவசிங்சோலங்கியிடம் கேட்டுக் கொள்கிறார் என்ற கேசவ்சிங்சோலங்கியின் முன் அறிமுகத்தோடு நாவல் தொடங்குகிறது. ஆனால் அது நாவலின் தொடக்கம் என்பதை அறியமுடியாமல், முன் அறிமுகத்தில் இருந்தபடி சாரங்கன் என்பவரால் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட நாவல் என்று எண்ணிக் கொண்டேன். பிறகு எங்கிருந்து யுவன்…? நாவலின் களம் வங்காள கிராமத்திலிருந்து துவங்குவது வேறு என் குழப்பத்தை கூடுதலாக்கியது.

 

தனஞ்செய்முகர்ஜியின் பால்யம் கீழ்நடுத்தரவர்க்கத்தின் பால்யம் போலதான். ஆனால் எங்கோவிருக்கும் வங்காள கிராமம் அது. தனஞ்செயலுக்கு ஒரு அண்ணனும் தங்கையும் உண்டு. ரகசியமாக காதலையும் காமத்தையும் பரிமாறிக் கொள்ளும் கிராமப்புற வாஞ்சையுடன் கூடிய பெற்றோர். தனஞ்செய்யின் சிறுவயதிலேயே அவனின் சங்கீதமேதமை தந்தைக்கு புரிந்து விடுகிறது. மகனை ஸாஸ்த்திரியிடம் சங்கீதப்பயிற்சிக்கு சேர்க்கிறார். குரு சீடன் உறவு தந்தை மகன் உறவாக மாறுவது, அண்ணன் சுப்ரதோ பலகாரக்கடைக்கு வேலைக்கு செல்வது, இவனது சம்பாத்தியம் குடும்பத்துக்கு அவசியம் என்றாலும் மகனின் ஞானத்திற்கு முன்னுரிமை அளிக்கும் குடும்பம், கடைக்குட்டியாக தங்கை அபர்ணா இவர்களோடு மனதிற்கு பிடித்தமான இந்துஸ்தானி இசை பாடகனாக உருவாகி வரும் இளம்பருவத்தில் அவனுக்கு ஸரயு அறிமுகமாகிறாள். காமஉணர்வு அவனுள் புகுந்துக் கொள்கிறது. ஏற்கனவே தாயுடனான தந்தையின் நெருக்கத்தை சிறுவனாக, தாய் மட்டுமே உலகமாக, தாயின்றி இருப்பதை கற்பனை செய்யும்போதே வியர்ப்பவனாக இருக்கும் பாலப்பருவத்தில் பார்த்திருக்கிறான். அவர்களின் கூடல், தாயை அவனிடமிருந்து அந்நியப்படுத்துகிறது. மித்தேலி அத்தையின் நெருக்கம் எழுப்பும் உணர்வை காமத்தின் சிறு பிசிறலாக உணர்கிறான். ஸரயுதான் காமத்தின் முழுபிம்பமாக காதல் என்ற அழகியலோடு அவனுக்குள் உறைந்துப்போகிறாள்.

 

கதைக்களம் அந்நியமண்ணிற்குள் நிகழ்வது சுகமாகவே இருக்கிறது. சாஸ்திரிய சங்கீதத்தை அனுபவித்து ரசிக்கும் மனோபாவம் எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. திரையிசைப்பாடல்கள் அதனுள்ளிருந்துதான் எழுவது என்ற சேதியெல்லாம் செய்திகள்தான். அதை உடலின் சகலபாகங்களும் கரைந்துருகும் (உண்மையான) பாவனைகளோடு அமர்ந்திருப்பவர்களை காணும்போது அதில் ஏதோ ஒன்றிருப்பதை உணர முடிகிறது. ராகங்களாக வகைப்பிரித்து, அதை ஆலாபிக்கும்போதே கண்டுணர்ந்து சிலிர்க்கும் கண்களில் நீரைக் கொட்டி அவ்விசையை உயிரின் நாதமாக்கி கொள்பவர்களால், அவ்விசைக்காக உயிரையும் விட முடிவது சாத்தியமே. தனஞ்செய்க்கு வாய்த்த குரு அப்படியானவர். இசையை பிரஸ்தாபிப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. தனஞ்செய்முகர்ஜிக்கு ஏற்கனவே காட்டிய தடத்தின் வழியே இசையால் பயணிப்பதை விட, புதிதுபுதிதாக இசைநுணுக்கங்களை உருவாக்குவதும் கிறங்குவதும் பிடித்தமாக இருக்கிறது. அவனுடைய வாழ்வில் ஒரேயொரு மேடையேறும் வாய்ப்பு ஏற்படுகிறது. முன்னிறுக்கும் அத்தனையும் மறந்து அல்லது இசைக்குள் அனைத்தையும் அடக்கும் அவனுக்கு வாய்த்த தோழன் குருச்சரண்தாஸ். அவன் மூலமாகதான் சென்னையில் மேடையேறும் வாய்ப்பை கிடைக்கப் பெறுகிறான்.

 

குருச்சரண் பணவசதி நிறைந்த தபேலா கலைஞன். அவர்களுக்கிடையேயான நட்பும் அது விரிந்து செல்லும் போக்கும் இசையாலேயே நிரப்பப்படுகிறது. அங்கு ஸரயும் வருகிறாள். காஞ்சனாதேவியும் வருகிறார். லட்சணங்கள் பொருந்திய வழவழப்பான மேனியையுடைய ஸரயுவின் மீதான காமமும் காதலும், குருச்சரணால் அறிமுகப்படுத்தப்படும் காஞ்சனாதேவியுடன் ஏற்படும் காமத்தொடர்பால் எட்ட முடியவில்லை. ஸரயுவின் வாழ்வு நிம்மதியற்று போனதாக தெரியவரும்போது குருச்சரண் “இது உண்மையில் உனக்கு சந்தோஷம்தரும் விஷயம்தானே…“ என்கிறான். ஆனால் உண்மையில் தனஞ்செய்க்கு அது மகிழ்வை தரவில்லை. பிறகு “ஆள் பிடிக்கும் வாழ்வாக“ அவள் வாழ்வு மாறிப்போனதிலோ, அவள் தனக்கென ஓரிடத்தை சேமித்து வைப்பதையும் பெரிய அதிர்வுகளோ விமர்சனங்களோ இல்லை. அதீத உணர்ச்சியின் கொந்தளிப்புக் கூட ஸரயுவை இழுத்துக் கொண்டோடும் மனநிலையையோ, அவள் கணவனை கொன்று பழித்தீர்த்துக் கொள்ளும் எண்ணத்தையோ அவனுக்கு ஏற்படுத்துவதில்லை. அதாவது உயிரிலிருந்து எழும் நாதமாகவே சங்கீதத்தையும் ஸரயுவையும் அவன் கருதுகிறான். இது இரண்டுமே அவன் திடமாக எண்ணியிருந்தால் சாத்தியப்பட்டிருக்கும் என்பதையும் அவன் உணர்கிறான். ஸரயுவின் நினைவுகளிலிருந்து மீளவும் முடியவில்லை. மீண்டுவிடும் எண்ணமும் அவனுக்கில்லை. சங்கீதமும் அப்படியே.

 

தனக்கு நெருக்கமான ஒவ்வொரு உயிரையும் வேறொரு மிருகத்தின் சாந்நித்தியம் என்கிறான் தனஞ்செயன். அம்மா தானியமணிகள் பொறுக்கித் திரியும் பெட்டைக்கோழி, அப்பா தனக்கென்று உயரம் எதையும் எட்டமுடியாத இரட்டைவால்குருவி. சுப்ரதோ, குள்ளநரி. அபர்ணா, தரையில் உட்கார்ந்து கழுத்தை இடவலமாக திருப்பி கோணல்பார்வையுடன் இரைதேடும் காகம், காஞ்சனாதேவி வேறொரு மிருகம் கொன்றுதின்று மிச்சம் வைத்த இரையை கிழித்து உண்ணும் கழுதைப்புலி, குருச்சரண்தாஸ் தந்திரமான ஓட்டம் ஓடம் கீரிப்பிள்ளை, மித்தாலி அத்தை, நெருப்பில் தலைகீழாக பாய்ந்து உயிரை விட்ட மணிப்புறா, மைனாவதிபாட்டி ஜடாயுக்கிழவி என்கிறான். தன்னை ஒலியையும் தனிமையையும் தின்று வாழும் புராணிகமிருகம் என்கிறான். ஸரயு எதுவுமில்லாதவள், அவனை பொறுத்தவரை. அவள்மீது காமம் இருக்கிறது, காதல் இருக்கிறது. ஆனால் அதை அப்படியே கையகப்படுத்திக் கொள்ளும் தீவிரம் இருப்பதில்லை. வழுவழுப்பான அவளுடல் கணவனுக்குள் அகப்படுவதை எண்ணிப்பார்ப்பவனுக்கு, அதை குறித்து சொந்தம்கொண்டாடல் உணர்வு எழுவதில்லை. பிறகு, நினைத்தால் ஸரயுவின் உடல் கிடைத்து விடும் என்ற தருணத்திலும் அதன் மீது தீவிரத்தன்மை ஏற்படுவதில்லை.

 

ஆனால் அத்தீவிரம் அவனே உணராமல் வெவ்வேறு வழிகளில் வெளிப்பட தொடங்குகிறது. தன்னை அரவணைத்துக் கொள்ளும் குருச்சரணின் நட்பை மூர்க்கமாக விலக்குகிறான். கிறித்துவ கன்னியாஸ்திரியாக தன் தங்கையை பார்க்கும்போது ஏற்படும் சிறிதான குற்றவுணர்வு அவனை பெற்றோரிடம் சேர்க்கிறது. அங்கு இறக்கும்தருவாயிலிருக்கும் தந்தை, சூன்யம் பிடித்த வீடு, வயதான தாய் என்ற சூழல்களிலிருந்தும் தன்னிச்சையாக விடுபட்டுக் கொள்கிறான். பால்யத்தில், அவன் பார்க்க நேர்ந்த நிர்வாண உடல், சுப்ரதோவின் மனைவியாக இருக்கலாம் என்று கருதுகிறான். அவ்வுடலில் ஸரயு அவ்வளவாக பொருந்தவில்லை. காஞ்சனாதேவியை தேடி வருகிறான். அவ்விடம் மூடப்படுகிறது. குருச்சரண்தாஸ், நண்பனை விலக்கி விடுகிறான். இறுதியாக அறிமுகமாகும் அஸ்லாம்கான் என்பவனின் ஜென் மனோபாவம், தனஞ்செயனை, அப்படியாக வாழாமல் போனேமே என்று ஏங்க வைக்கிறது. ஏனெனில், அதுதான் அவனின் இயல்பு. அதை கலங்கலாக உணருகிறான்.

ரயில்நிலையத்தில் பிச்சையெடுக்கும் மூளைவளர்ச்சிக்குறைந்த பெண்ணின் வாளிப்பான உடல் கையாளப்பட்டு அநாதரவாக கிடக்கும்போது, அவளை அள்ளியெடுத்து தன் புஜங்களில் படுக்க வைத்துக் கொள்கிறான். சொல்லப்போனால், இரவு முழுவதும்  பெண்ணுடன் கழித்த ஒரே இரவு அதுவாகதானிருக்கும். ஆனால், ஒரு பெண்ணின் அருகாமைக்குள் இருந்ததற்கான எந்த உணர்வுமின்றி மறுநாள் விழிக்கிறான்.

 

தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட ஏதோவொன்றை இருமியும் செருமியும் வெளியே கொண்டு வரும் உடலின் அனிச்சை செயலைபோல, மனதில் சிக்கிக் கொண்ட மையத்தின் சுழற்சியை தன்னிலை மறக்கவைக்கும் மதுவின் போதையால் இதுநாள் வரை கடந்தவனுக்கு, அன்று, அஸ்லாம்கானுடன் நேரத்தை கழிப்பது அதை விட போதையாக இருக்கிறது. ஏனெனில், அதுதான் அவன்.

 

தனஞ்செயனின் குருவான விஷ்ணுகாந்த் சாஸ்திரி, அவனை நான் அனுப்பியிருக்க கூடாது. இங்கிருந்து கிளம்ப சொன்ன என் பேச்சை அவன் மீறியிருக்க வேண்டும் என்கிறார். மீண்டும் கூறுகிறார்… ராட்சஷத்தை அடைத்து வைக்க முடியாதுதானே..? ஆம்.. அடைத்து வைக்க இயலாமல் அல்லாடும் அவனிடமிருந்து உயிர் வரை அத்தனையும் தொலைந்து போகிறது.

 

யுவனின் எழுத்துநடையும், இசையின் நுட்பம் குறித்த விவரிப்பும், தனஞ்செய்முகர்ஜி என்ற முழுக்கலைஞன் அவ்விசையை எப்படியாக உட்கொண்டான் என்பது குறித்த களமுமாக நாவல் தொடங்கி, நகர்ந்து, முடிந்த பிறகும்  அந்நினைவு தவிர வேறேதும் நினைக்கத் தோன்றவில்லை எனக்கு. இது நல்லதொரு நாவலுக்கே சாத்தியம்.

 

அன்புடன்

 

கலைச்செல்வி.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அறம் -கடிதம்

$
0
0

அறம் ஜெய்யமோகன்

அறம் வாங்க

 

வணக்கம் ஜெ ,

 

அறம் தொகுப்பை தற்போதுதான் வாசித்தேன். ஒவ்வொன்றும் ஒருவித அனுபவம். ஒருவாரகாலம் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தேன். ஒவ்வொரு மனிதர்களுடைய அகக்கொந்தளிப்புகளையும், பரவசத்தையும் வார்த்தைகளால் சொல்லியிருக்கும் விதம் அருமை. நான் இக்கதைகளை படித்தது இப்போதுதான். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்த எதிர்மறை விமர்சனத்தை சாரு நிவேதிதாவிடமிருந்து கேட்க நேர்ந்தது. ‘நூறு நாற்காலிகள்’ கதையை அவர் ஓர் அதீதப் புனைவு, உண்மைக்கு மாறானது என்று விமர்சித்திருந்தார். இந்தக் கதை ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா என்று யாரோ கூறியதாகவும் சொன்னார்.

 

ஆனால் இப்போது படித்துப் பார்த்தல் பெரும் வியப்பே ஏற்படுகிறது. அந்தக்கதை காட்டும் சித்திரம் மிக முக்கியமானது. அந்தக் கலெக்டரின் அம்மா பெரும் புதிராகவே எனக்குத் தெரிந்தாள். பொதுவாக கீழ் நிலையில் இருப்பவர்கள் பொருளாதாரத்தில், வசதி வாய்ப்புகளில் மேலே வரவேண்டும் என்பது ஒரு பொதுவான வேட்கை. இங்கு அப்படியே தலைகீழ். உடை உடுத்தாதே, நாற்காலியில் அமராதே என்று ஒவ்வொருமுறையும்  அவள் கதறும்போது எதோ என்னைத் துளைத்தது போல இருந்தது. இது எம்மாதிரியான உளநிலை ? பெரும் அச்சம், வெறுப்பு, ஒவ்வாமை என்று என்னவோபோல் அவள் காட்சியளித்தாள். அப்படி வாழ்ந்தால்  தம்றான்மார் கொன்றுவிடுவார்கள் என்கிற அச்சம் எத்தனை நூற்றாண்டு அச்சம் ? தலைமுறை தலைமுறையாய் அந்த அச்சம் ஊறி ஊறி மனம்முழுக்க வேர்விட்டுப் பரவி இறுகிக்கிடக்கிறது. ஒரே தலைமுறையில் நிலை மாறுவதை அவளால் கற்பனைகூட செய்யமுடியவில்லை.

 

//அவ உனக்க ரெத்தத்த உறிஞ்சி குடிக்கா பாத்துக்கோ…// என்று மகனை அச்சத்துடன் எச்சரிப்பதும், அவர் தனிமையில் , //எஜமான்களின் நாற்காலியில் அமர்ந்திருக்கிறேனா? அதற்காக என்னை கொன்றுகொண்டிருக்கிறார்களா? இவள் என் குருதியை உறிஞ்சிக்கொண்டிருக்கிறாளா? என்னுடைய மாயைகளுக்கு வெளியே நின்று, மனவசியங்களுக்கு அகப்படாத மிருகம்போல, அம்மா உண்மையை உணர்கிறாளா ? //… என்று எண்ணிக்கொண்டிருக்கும் வரிகள் கதையில் ஹைகிளாஸ்.
பொதுவாக நான் நரிக்குறவ மக்களைப் பற்றி செவிவழி கேள்விப்பட்ட ஒன்று, அவர்கள் பிறரைப்போல ஆக விரும்பமாட்டார்கள். அவர்கள் உலகம் வேறு. அதில்தான் வாழவிரும்புவார்கள்.

ஓலைச்சிலுவை-  சாமர்வெல்லின் தியாக, சேவை மனப்பான்மை பற்றி பேசுகிறது. இருப்பினும் மதமாற்றம் என்ற ஒன்றைப்பற்றி குறிப்பிடுவதற்கு எனக்கு சிறு தயக்கம் இருந்தது. காரணம் மதமாற்றம் பற்றி பேசினாலே இந்துத்துவ முத்திரை விழுந்து விடுகிறது. மிஷனரிகளின் சேவை போற்றத்தக்கதே.  பசிக்கு உணவு கொடுப்பது, நோய்க்கு மருந்து, ஆறுதல், கல்வி போன்றவைகளில் அவர்களின் சேவை மிகப்பெரியது. ஆனால் இவை எல்லாவற்றையும் மதமாற்றம் செய்யாமல் அவர்களால் செய்ய முடியாதா ? ஒருவேளை அதுதான் அவர்களுக்கு ஆத்மார்த்த உந்துசக்தியாக இருக்கிறதா ?

 

//ஆமலே, சோறுக்காகத்தான். கர்த்தர் எனக்கு சோறும் கறியும்தான்லே. அதை எங்க போயிச் சொல்லவும் எனக்கு வெக்கம் இல்ல//  இவ்வரியைப் படிக்கும்போது ஒருகணம் மதங்கள், தத்துவங்கள் தோற்பதை உணர்ந்தேன். மிக எளிய உண்மை. ஒரு ஆங்கிலப்படத்தில் வாடிகன் நகர காவல் அதிகாரி ஒருவர், ”என்னோட வாடிகன் நோயாளிகளுக்கும், சாகப்போறவங்களுக்கும் ஆறுதல் கொடுக்கும், என்னோட வாடிகன் பசியோட வர்றவுங்களுக்கு உணவு கொடுக்கும்” என்று பேசுவார்.

ஒருவகையில் யோசித்தால் இன்று கிறிஸ்தவம் உலகம் முழுக்கப் பரவியதற்கு இந்த எளிமைத்தனம் ஒரு முக்கியமான காரணமாகத் தெரிகிறது. பெரிய சித்தாந்தமெல்லாம் தேவையில்லை. ஒரு சராசரி மனிதனுக்கு வயிற்றுக்கு உணவும், மனதுக்கு ஆறுதலும் கிடைத்துவிட்டால் அதைவிட அவனுக்கு என்ன வேண்டும் ? அதையே அவன் கொண்டாடுவான்.

கதையின் இறுதியில் குழந்தையைப் பறிகொடுத்துக் கதறும் தாயிடம் சாமெர்வெல் குருவாயூரப்பனின் படத்தைக் கொடுத்து ”இனி இதாக்கும் உன் குழந்தை…’’ என்ற வரிகளை படிக்கும்போது ஒரு சிறு கற்பனை. இது அவரை சிறுமை செய்வதுபோல இருந்தாலும் ஒருகணம் வந்து சென்றது.  குருவாயூரப்பனின் படத்திற்கு பதில் தன்னிடமிருந்து ஒரு இயேசுவின் படத்தை எடுத்து அதை அவளிடம் கொடுத்து ”இனி இதுதான் உன் குழந்தை…” என்று சொல்லியிருந்தால்… அவர் அப்படிச் செய்யவில்லையே !

மயில்கழுத்து- முற்றிலும் மாறுபட்ட வாசிப்பனுபவம். அழகில் ஊறி ஊறி கரைந்துபோகும் ராமனின் அகஉணர்ச்சிகளை வார்த்தைகளால் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. கடைசி நான்கு பக்கங்களை மீண்டு மீண்டும் வாசிக்கவேண்டுமென்று தோன்றுகிறது.

//…வாங்கடீ ஒலகத்திலே உள்ள அத்தன பேரும் வாங்கடீ. உங்க வெளையாட்டயும் வெஷத்தையும் முழுக்க எம்மேலே கொட்டுங்கடீன்னு எந்திரிச்சு நின்னு கத்தணும்போல இருக்கு. என்னை குளுந்து போக விடாதீங்க. என்னை பற்றி எரிய விடுங்க …// ….. ஐயோ, என்ன மனுஷன்டா இவன் ! !  பெண் ஆணை ஈர்க்கவும், அச்சுறுத்தவும் செய்கிறாள். ஆணால் பெண்ணை வெல்ல முடியவில்லை. அதனால்தானோ அவளைக் கட்டுப்படுத்தி அடக்கி வைக்க நினைக்கிறான் ?

கோட்டி- ராமையா போன்றோரை இச்சமூகம் கோமாளிகளாகத்தான் ஆக்கும். இந்தக் கோமாளியாக்குதல் இன்னும் அதிகரித்துக்கொண்டுதான் செல்கிறது. சமூகத்தால் முற்றாக நிராகரிக்கப்பட்டு, தூற்றப்பட்டு வாழ்ந்த ஒரு மனிதனைப்பற்றி படிக்கும் போது, இடையிடையே அவருடைய நகைச்சுவை சேட்டைகளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. கடைசியில், முறையான மருத்துவம் கிடைக்காமல் நோயுற்று, ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது இறந்தார் என்று படிக்கும் போது என்னவோபோல இருந்தது.

நன்றி,

விவேக்ராஜ்.

அறம் -ராம்குமார்

அறம் -கடிதங்கள்

அறம் – உணர்வுகள்

அறம் – வாசிப்பின் படிகளில்…

அறம் -கடிதங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நீரும் நெறியும்

$
0
0

பேச்சிப்பாறை கால்வாய்,பார்வதிபுரம்

 

பேச்சிப்பாறை அணையில் இருந்து சானல்களுக்குத் தண்ணீர் விட்டு பத்துநாள் தாண்டிவிட்ட பிறகும் பார்வதிபுரத்துக்கு நீர் வரவில்லை. நடக்கச் சென்றபோது கணபதியா பிள்ளை கலுங்கில் அமர்ந்திருந்தார். ”ஞாற்றடி பெருக்கியாச்சா?”என்றேன்.”வெள்ளம் வரல்லேல்லா?”என்றார். ”விடல்லியோ?” ”விட்டு பத்துநாளாச்சு…வந்துசேரணுமே” எனக்கு புரியவில்லை. நீர் எங்கே போகிறது?

கணபதியாபிள்ளை சொன்னார். பேச்சிப்பாறை நீரின் அரசியலை. 1906 ல் அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜா மூலம்திருநாள் அவர்களால் கட்டப்பட்டது அந்த அணை. குமரிமாவட்டத்தின் வளத்தைப் பெருக்கியதில் அந்த அணைக்குள்ள பங்கு சாதாரணமல்ல. உண்மையில் இன்று மாபெரும் வயல்வெளிகளாக உள்ள பகுதிகள் எல்லாம் அந்த அணைவந்தபின் நீர் பெற்ற தரிசு நிலங்கள்தான். மொழி அரசியல் காரணமாக இன்றைய குமரிமாவட்ட நாடார்களில் இளைய தலைமுறை மன்னரை வெறுக்கிறார்கள். சாதி அரசியலும் மதஅரசியலும் உருவாக்கிய குறுகிய, இருண்ட ஒரு வரலாற்றுணர்வே இங்கே உள்ளது.

ஆனால் குமரிமாவட்ட நாடார்களிடம் இன்றுள்ள செழிப்பான தென்னந்தோப்புகள் எல்லாமே பேச்சிப்பாறை அணைநீர் மூலம் உருவானவையே. அவ்வணையே இங்குள்ள நாடார் எழுச்சியில் பெரும்பங்குவகித்தது என்றால் அது மிகையல்ல. சமீபத்தில் பேச்சிப்பாறை அணையின் நூறாண்டு நிறைவுவிழா [இரண்டுவருடம் பிந்தி ]கொண்டாடபப்ட்டது. மொத்தப் பேச்சாளர்களும் இப்போதைய ஆட்சியாளர்களைப் பற்றி மட்டுமே பேசினர், ஒருவர் கூட மூலம்திருநாளைப் பற்றியோ அவரது கனவை நனவாக்கிய எஞ்சினியர் மிஞ்சின் பற்றியோ ஒரு சொல்லும் சொல்லவில்லை என்று நாளிதழ்களில் செய்திவந்தது.

வரலாறு எப்போதுமே அபப்டித்தானே? பண்டைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இன்றைய குமரிமாவட்டத்தின் வளத்துக்கு மூலகாரணமானவர் இருவர். மதுரை ஆட்சியாளர்களிடமிருந்து குமரி நிலபப்குதிகளை மீட்டு 1731 முதல்  இருபதண்டுக்காலம் ஆட்சி செலுத்திய  மார்த்தாண்டவர்மா மகாராஜா. அவரது படைத்தலைவரான காப்டன் பெனடிக்ட் டி லென்னாய் என்ற டச்சுக்காரர். டி லென்னாயின் சமாதி தக்கலை அருகே உதயகிரிக் கோட்டையில் பாழடைந்து கிடக்கிறது. நான் அறிந்து திருவனந்தபுரம் அரச குலம் அல்லாமல் எவருமே அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியதில்லை.

மார்த்தாண்டவர்மா

பேச்சிப்பாறையையைப் பற்றி கணபதியா பிள்ளை ஒன்று சொன்னார். அணையை கட்டும் முடிவை எடுத்தவர் மூலம்திருநாள் மகாராஜா. ஆனால் போதிய நிதி இல்லை. ஆகவே குளங்கள் வயல்களாக விற்கப்பட்டு நிதி திரட்டப்பட்டது. ஆனால் அது ஒரு கண்துடைப்பு. இன்று பத்மநாபசாமி ஆலயத்தில் இருக்கும் அரண்மனையின் ரகசிய கருவூலத்தில் இருந்தே நிதி வந்தது. அதை வெள்ளையன் அறிந்துகொண்டால் பிடுங்கிவிடுவான் என்பதனால் இந்த நாடகம் நடத்தப்பட்டது. அன்றைய பெரும்பஞ்ச காலகட்டத்தில் திருவிதாங்கூரில் மட்டும் மூன்றுவேளை அனைவருக்கும் கஞ்சி ஊற்றப்பட்டது. கஞ்சித்தொட்டிக்கான செலவும் இப்படி மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டதாக நாடகம் போடப்பட்டது

அணை கட்டப்பட்டதும் ஆயக்கட்டு பகுதிகள் முழுமையாக சர்வே செய்யப்பட்டன. சானலின் ஒரு மடை வழியாக பயன்பெறும் வயல்கள் ஒரு அலகாக வகுக்கப்பட்டன. அவர்கள் இணைந்து நீரை பங்கிட்டுக் கொள்ள ஒரு உழவர் குழுவை அமைக்க வேண்டும். கிடைக்கும் நீரை அவர்கள் சீராக பங்கிடவேண்டும். அவர்களுக்கு தேவையான நீர் கணக்கிடப்பட்டு அது கிடைக்கும்வரை மட்டுமே மடை திறக்கப்படும். அதை அதிகாரிகள் கறாராகவே கண்காணிப்பார்கள். நீரை அவர்கள் குளங்களில் சேமித்துக் கொண்டு சீராக செலவிடுவார்கள்.

சுதந்திரத்துக்குப் பின்னர் மெல்ல மெல்ல நீர்ப்பங்கீட்டு அமைப்புகள் சீரழிந்து கடந்த நற்பது வருடங்களாக எந்தவிதமான கட்டுபாடும் இல்லை. பெரும்பாலான இடங்களில் மக்கள் அவர்களே மடைகளை திறந்து விட்டுக் கொள்கிறார்கள். இன்று வேளாண்மைப் பகுதி பத்துமடங்காக ஏறியிருக்கிறது. ஆனால் நீர் அரிதிலும் அரிதாக உள்ளது.  பல ஊர்களில் கால்வாய் நீரை மடை திருப்பி தோப்புகளையும் ரப்பர் எஸ்டேட்டுகளையும் சதுப்பாகும் வரை நனைக்கிறார்கள். நாட்கணக்கில் விட்டுவிடுகிறார்கள். பல இடங்களில் நீர் நிறைந்து காடுகளையெலலம் நனைத்து ஓடைகள் வழி ஆற்றுக்கு போய் வீணாகிறது.

”அவனுகளுக்கு நெறைஞ்ச பெறவுதான் பய்ய வெள்ளம் இங்க வந்து சேரும்…அதாக்கும் காரியம்”என்றார் பிள்ளைவாள்.”எஸ்டேட்டுக்காரனுகளை தட்டிக் §க்கக எங்கிளுக்கு சங்குறப்பு இல்லல்லா? அவனுக பைசா உள்ளவனுக…”

அப்படி கால்வாயில் வந்த நீரை தேக்கிவைப்பது இன்னும் கஷ்டம். பெரும்பாலான ஏரிகள் தூர்க்கப்பட்டுவிட்டன. கணியாகுளம் மைய ஏரியே உதாரணம். அதன் நான்குபக்கமும் பங்களா வீடுகள் வந்து விட்டன. நீரை நிரப்பி விட்டு விவசாயி வீட்டுக்குச் சென்றால் நள்ளிரவிலேயே ஆள்வைத்து மதகை திறந்துவிட்டுவிடுவார்கள். அல்லது தோண்டி விடுவார்கள். ஐந்துவருடத்தில் ஒருமுறைகூடபேரியில் நீர் நிற்க அவர்கள் விட்டதில்லை. சுங்கான்கடையில் உள்ள மாபெரும் குதிரைபாஞ்சான்குளம் நிறைந்தால் ஐந்தே நாளில் காலியாகி மணல் ஓடிக்கிடக்கும். கணியாகுளத்தின் நான்கு ஏரிகளுமே கரைகளில்லாத வெற்றுச் சதுப்புகள்.

”என்னசெய்ய? ஆரிட்டண்ணு சண்டைக்குப் போறது? சாவுகது வரை நாம செய்வோம். பின்ன கெடந்து முள்ளு முளைக்கட்டு”என்றார் பிள்ளை. ”செரி அப்பம் கடமடைக்கு எப்பம் வெள்ளம் போறது?”என்றேன்.

”கடமடைக்கு வெள்ளம் போகணுமானா அவனுக நாலுநாள் பஸ்ஸை மறிக்கணும்…”என்றார் கணபதியாபிள்ளை. ”கலெக்டர் வந்து பேசி எடுத்து கொஞ்சம் தண்ணி விட்டுகுடுப்பாக….தலையெளுத்து கடப்பொறம் ஆளுகளுக்குத்தான். அவனுகளுக்கு இந்த வெள்ளம் எங்க போயி எண்ணைக்கு அவனுக குடிக்கது?”

மூலம்திருநாள் ராமவர்மா

”இதையா குடிக்காங்க?” என்றேன்.. பார்வதிபுரம் தாண்டினால் நகரில் உள்ள முக்கிய கழிவுநீர் ஓடைகள் எல்லாமே இதில்தான் கலக்கின்றன. அரசாங்கமே பெரிய சிமிட்டி ஓடையாக கட்டி கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. ”பின்ன? வேற தண்ணி வேணும்லா? குளோரினை அடிச்சு குடுப்பானுக…அப்டிபார்த்தா பழையாத்திலதானே நாகருகோயிலுக்க சாக்கடையும் க்ககூஸ¤ம் முழுக்க கலக்குது..அதைத்தானே கன்யாகுமரி முதல் உள்ள எல்லா கடப்பொறம் ஆளுகளும் குடிக்கானுக?”

நாகர்கோயிலில் எந்த ஆஸ்பத்திரியிலும் நேர் பாதிப்பேர் கடற்கரை பரதவர்களாகத்தான் இருப்பார்கள். வருடம் தோறும் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் மாதங்களில் கடற்கரைகளில் ஒரு வயிற்றுப்போக்கு அலையுண்டு. பலர் சாவார்கள். ”பீச்சுனாமி”என்று அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். நாகரீகத்தின் சாக்கடை குடிக்கவைக்கப்பட்ட மனிதர்கள்.

”இது இங்க மட்டும் உள்ள காரியமில்ல..தமிழ்நாடு முழுக்க இந்த கதைதாலா…தண்ணி இல்ல. உள்ளவன் இல்லாதவனுக்கு விடமாட்டான். விட்டாலும்  அவனுக்க பீயக் கலக்கித்தான் குடுப்பான்…என்ன செய்யியது?” என்றார் கணபதியா பிள்ளை.

நீர் பங்கீடு

 

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Jun 21, 2008 

 

தொடர்புடைய பதிவுகள்

குமரிநிலம் -கடிதங்கள்

$
0
0

இருபது நிமிட நிலம்

 

அன்புள்ள ஜெ,

 

நலம்தானே?

 

நீண்ட இடைவேளைக்குப்பின் எழுதுகிறேன். ஆனால் தளத்தை தொடர்ந்து வாசித்துக்கொண்டேதான் இருக்கிறேன். நீங்கள் எழுதிய இருபதுநிமிடநிலம் என்னும் கட்டுரை எழுதத்தூண்டியது. அழகான கட்டுரை. கவித்துவம் மிக இயல்பாக வந்து அமைந்தது. ஒரு நல்ல நாவலின் தொடக்கம் போல ஒரு பகுதி. குமரிமாவட்டத்துக்கு மாதம் ஒருமுறை வந்துகொண்டிருந்தவன்நான். ஆகவே இந்த நிலப்பகுதியின் அழகு எனக்கு நல்ல அறிமுகம். அதிலும் அந்த ரயிலை ஒட்டி வரும் இருபதுநிமிடங்கள் உண்மையிலேயே ஒரு டேவிட் லீன் சினிமாக்காட்சிபோல பிரம்மாண்டமான காட்சியாகவே இருக்கும்.

 

நிறைய இடைவெளிக்குப்பின் அந்த நிலத்தைக் கற்பனையில் ஓட்டிக்கொண்டேன். பரவசமாக உணர்ந்தேன். இவ்வளவு ‘வளர்ச்சி’க்குப்பின்னாடியும் கன்யாகுமரிமாவட்டத்தில் இவ்வளவுக்காவது இயற்கை மிஞ்சியிருப்பதே பெரிய விஷயம். இன்னும் ஒரு பத்தாண்டில் இந்த கட்டுரையையும் படங்களையும் வந்து பார்த்து எப்படியெல்லாம் அந்த நிலம் இருந்தது என நினைத்துப் பெருமூச்சுவிடுவோம் என நினைக்கிறேன் நன்றி

 

சரவணக்குமார்.ஜி

 

அன்புள்ள ஜெ

 

நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நான் 1999 வாக்கில் மனோன்மணியத்திலே படிக்கும்போது நாகர்கோயிலில் இருந்து அனேகமாக தினமும் நெல்லைக்குப் போய்வந்துகொண்டிருந்தேன். ஆனால் ஒருநாள்கூட இந்த இயற்கைக்காட்சிகளை நின்று ரசித்ததில்லை. அவ்வப்போது கண்ணுக்குப் பட்டிருக்கிறது. இன்றைக்கு வெளிநாட்டிலிருந்துகொண்டு யோசிக்கும்போது இதையெல்லாம் பார்த்திருக்கிறேன் என்ற ஞாபகம் மட்டும்தான் நிற்கிறது.

 

நீங்கள் எழுதிய குறிப்பை பார்க்கும்போது மனசில் ஒரு பெரிய சோர்வும் தனிமையும் ஏக்கமும் வந்தது. ஆனால் இப்போதுகூட நான் தினமும் அந்த வழியே போனால் பார்ப்பேனா என்று சந்தேகம்தான். நீங்கள் அந்த வழியே மாதம் மூன்றுமுறைச்சென்றுவருகிறீர்கள். ஒவ்வொருநாளும் பார்க்கிறீர்கள். இதுதான் எழுத்தாளனுக்கும் மற்றவர்களுக்கும் நடுவே உள்ள வேறுபாடு என நினைக்கிறேன். எழுத்தாளன் அன்றாட வாழ்க்கையால் தன் பார்வையை மறைத்துக்கொள்ளாமல் இருக்கிறான். ஆகவேதான் அவனை கொஞ்சம் லூஸு என்கிறார்கள் என நினைக்கிறேன். அவன் ஒவ்வொரு நாளையும் புதிசாக பார்க்கிறான். ஒவ்வொன்றையும் புதிசாகப் பார்க்க முடிகிறது.

 

 

நான் இனி அந்நிலத்தைப்பார்க்க நாலைந்து ஆண்டுகள் ஆகும். அதுவரை இந்தப்படங்களைப் பார்த்துக்கொள்கிறேன்

 

கே.மாதவன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

போரும் அமைதியும் –ஒரு செய்தி, செய்தித்திரிபு

$
0
0

 

ஜெ,

 

வெர்னான் கோன்ஸ்லாவிஸ் [Vernon Gonsalves] ஒரு முன்னாள் பேராசிரியர், சமூக போராளி, எழுத்தாளர். முன்பும் சில முறை கைதாகி விடுதலையாகியுள்ளார்.

 

இம்முறை, பீமா கோரேகாவ் [Bhima-Koregaon] வன்முறையில் இவருக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகத்தின் பெயரில் பூனே போலிஸ் ஆகஸ்ட் 2018ல் அவரை கைது செய்தது. ஒரு வருடமாக, சாட்சயங்கள் எதுவும் காட்டப்படவில்லை (அரசு தரபில் சாட்சி தாக்கல் செய்யவில்லை?).

 

இந்நிலையில், அவரது ஜாமின் வழக்கை இன்று விசாரித்த மும்பை உயர்நிதிமன்ற நீதிபதி, உன்னிடம் போரும் அமைதியும் புத்தகம் உள்ளது. வேறு ஒரு நாட்டில் நடைப்பெற்ற போர் பற்றிய புத்தகத்தை நீ ஏன் வைத்துள்ளாய். அதற்கு தகுந்த விளக்கம் தர வேண்டும் என கூறியுள்ளார்.

//
“The title of the CD ‘Rajya Daman Virodhi’ itself suggests it has something against the State while War and Peace is about a war in another country. Why were you (Gonsalves) having these books and CDs at home? You will have to explain this to the court,” said a single-judge bench of Justice Sarang Kotwal.

//

She said a search conducted at Gonsalves’ house had yielded “incriminating evidence” in the form of “books and CDs with objectionable titles including the books and CDs mentioned above”.

Agreeing with defence that mere possession of such material does not make anyone a terrorist, Justice Kotwal, however, said Gonsalves will have to explain why he kept such material at his home.

https://www.huffingtonpost.in/entry/war-and-peace-bombay-hc-question-activist-vernon-gonsalves-bhima-koregaon_in_5d66787ce4b022fbceb4069c?utm_hp_ref=in-news

 

உங்களிடம் போரும் அமைதியும் 2 அல்லது 3 பிரதி உள்ளது என எண்ணுகிறேன். நீங்கள் ஏன் அதை வீட்டில் வைத்துள்ளீர்கள்?

 

ரியாஸ்

 

அன்புள்ள ரியாஸ்,

 

இந்தச் செய்தியை வாசித்த மறுகணமே நான் எண்ணியது இது மிகப்பிழையாக அறிக்கையிடப்பட்ட செய்தி, நீதிமன்றம் இப்படிச் சொல்லியிருக்காது என்பதே. வேறு எதைச் சொன்னாலும் நம் உயர்நீதிமன்றத்த்தில் உள்ள அளவுக்கு அறிவுத்தகுதி ஊடகங்களில் கண்டிப்பாக இல்லை. எனக்கே பல ஆங்கிலச் செய்தியாளர்களைத் தெரியும். ஓர் இலக்கிய அரங்கின் உரையில் பிரேம்சந்த் என்று சொல்லப்பட்டதும் ‘அந்த எழுத்தாளர் இங்கே வந்திருக்கிறாரா?” என்று அருகிருந்த கேட்ட மூத்த டெல்லிச் செய்தியாளரின் முகம் நினைவுக்கு வருகிறது.

 

ஆகவே ஒருநாள் பொறுத்து இச்செய்தியை உறுதிசெய்துகொள்ளலாம் என நினைத்தேன். அதற்குள் உயர்நீதிமன்ற நீதிபதியை அவன் இவன் என்றெல்லாம் வசைபாடி எழுதித்தள்ளிவிட்டனர். தாங்கள் ஏதோ அறிவொடு பிறந்த ஞானிகள் என.  மிகப்பெரும்பாலானவர்கள் போரும் அமைதியும் என்ற பெயரையே அந்தச்செய்தியால்தான் அறிந்திருப்பார்கள். அதை அறிக்கையிட்ட செய்தியாளர் போரும் அமைதியும் என கூகிளில் தேடி டால்ஸ்டாய் என்பவரை கண்டடைந்திருப்பார். எவ்வளவு வசைகள். எவ்வளவு நையாண்டிகள், எக்காளங்கள். இந்தக்கும்பல்கள் தங்களை என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? இவர்கள் எவராலும் கவனிக்கப்படவில்லை என்பதனாலேயே இந்த வீராவேசம். இத்தனை அறிவுக்கொந்தளிப்பு. பரிதாபம், வேறென்னச் சொல்ல?

 

உண்மைச்செய்தி இது. நீங்களே வாசிக்கலாம்.

 

Bombay HC did not raise questions on Leo Tolstoy’s War and Peace but one by Biswajit Roy

 

நீதிமன்றம் குறிப்பிட்ட நூல் டால்ஸ்டாயின் போரும் அமைதியும் அல்ல. பிஸ்வஜித் ராய் எழுதிய   War and Peace in Junglemahal: People, State and Maoists  என்றநூல். அது மாவோயிஸ்டுகளில் பிரச்சார நூல் என்பது குற்றம்சாட்டுவோர் [அரசு] தரப்பு வாதம்.. அது குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டில் கிடைத்தது. அதை ஒரு சாட்சியாக போலீஸ் தரப்பில் முன்வைக்கும்போது அதை ஏன் வீட்டில் வைத்திருந்தீர்கள் என அதிகாரபூர்வமாக கேட்டு பதிவுசெய்வது நீதிமன்றத்தின் கடமை. சர்வ சாதாரணமான ஒரு சட்டச்சடங்கு. அவ்வளவுதான்..அதுதான் நிகழ்ந்தது. செய்தியாளர் அரைகுறையாகக் குறித்துக்கொள்ள செய்தி ஆசிரியர்கள் அதை அபத்தமாக எழுத இணைய ஊடகக்காரர்கள் மேலும் அபத்தமாக அதை நாடெங்கும் பரப்பிவிட்டனர்

 

இது தமிழ் இணைய ஊடகச் செய்தி.

 

டால்ஸ்டாய் புத்தகத்தை ஏன் வீட்டில் வைத்திருந்தீர்கள்?- திகைக்க வைத்த நீதிபதி. 

 

இந்த ஊடகத்திற்கு அனேகமாகச் செய்தியாளர்களே இருக்கமாட்டார்கள். இணையத்தில் கிடைக்கும் எதுவும் பதினைந்து நிமிடங்களில் இவர்களுக்குச் செய்தியாகிவிடும்.  ஆராய்வதற்கும் செய்திக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கும் ஆசிரியர் என்றும் எவரும் இருக்கமாட்டார்கள். இந்தப்பிழையான செய்திக்காக நாம் எவரிடமும் குறை சொல்லமுடியாது. இன்று இவையே நாம் ஊடகம் என நினைக்கிறோம். நாம் இதை வாசித்துக்கொண்டிருக்கையிலேயே நூறு ஆயிரம் பல்லாயிரமாக பெருகிவிட்டிருக்கும். இந்நேரம் பல்லாயிரம் வாட்ஸ்டப் செய்திகள் நாடெங்கும் பறந்துகொண்டிருக்கும்

 

இப்போது ஆதாரபூர்வமான தெளிவான மறுப்பு வந்துவிட்டது. நீதிமன்றம் உண்மையில் அதிர்ச்சி அடைந்துவிட்டது. ஆனால் நாடெங்கும் பரவிய இச்செய்தியை எவர் இனி மறுப்பார்கள்? இதை பரப்பியவர்கள் அப்படியே விட்டுவிட்டு அடுத்தச் செய்திக்குச் சென்றுவிடுவார்கள். இவர்களே இசெய்தியை திரித்தவர்கள் ஆகவே தங்கள் பிழையை தாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இந்த நேரடி உண்மையை மீண்டும் திரிப்பார்கள். ‘பலப்பல’ கோணங்களில் பேசுவார்கள். சொற்களைப்பெருக்கி குவித்து கடந்துசெல்வார்கள். இந்த அபத்ததை எவரேனும் சுட்டிக்காட்டினால் அவரை தாக்கி அவதூறு செய்து வசைபாடுவார்கள்.இதைப்போல ஒரு பத்துப்பதினைந்து செய்திகளைக் கொண்டுவந்து காட்டி இதைப்பற்றி நீ ஏன் பேசவில்லை, ஏன் களமிறங்கவில்லை என்று மடக்க முயல்வார்கள்.இதுதான் இங்குள்ள வழக்கம்.

 

உங்களை எனக்குத்தெரியும். உண்மையாகவே வாசிப்பவர். இச்செய்தி வந்ததுமே எப்படி நம்பினீர்கள்? நானும் நம்பும் மனநிலையில்தான் கொஞ்சநாள் முன்புவரை இருந்தேன். அவநம்பிக்கை உருவாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. சமீபத்தில் நானே இந்த குப்பைப்புயல் நடுவே இரண்டுநாட்கள் நின்றிருக்க நேர்ந்தது. ஒன்றுமே செய்ய முடியாது. அவதூறு, திரிபு, நையாண்டி, தாக்குதல். மீம்ஸ்கள், கருத்துக்கள் மறுகருத்துக்கள், நுண்விசாரணைகள், உள்தகவல்கள்…. நான் உண்மையிலேயே இது என்ன என்று திகைத்து அமர்ந்துவிட்டேன்.

 

இந்த அரைவேக்காட்டு இணைய ஊடகங்கள், அவர்களை நம்பி கொந்தளிக்கும் ஒரு சமூகவலைத்தளக்கும்பல் நம்மைச்சூழ்ந்து நாம் எதையுமே அறியவும் சிந்திக்கவும் முடியாதவர்க்ளாக ஆக்கிவிட்டிருக்கிறது. என் விஷயத்தில். இவர்களே விசாரணையை முடித்து இவர்களே தீர்ப்பையும் எழுதிவிட்டனர். என் நண்பர் சொன்னார். ஒரு வழக்குக்கு நாநூறு நீதிபதிகள் நாநூறு தீர்ப்பை எழுதிய அற்புதக்காட்சி என்று..என்ன ஒரு நன்மை என்றால் மூன்றாம்நாள் நாம் இருப்பதே இவர்களுக்கு மறந்துவிடும். அடுத்த இரை வந்து சேர்ந்துவிடும்.

 

இதை நாம் ஏன் நம்புகிறோம்? ஏன் என்றால் நாம் நம்ப விரும்புகிறோம். ஏன் நம்ப விரும்புகிறோம் என்றால் அந்த மனநிலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறோம். எப்படி அங்கே வந்தோம் என்றால் இதே ஊடகங்களால்தான். தொடர்ச்சியாக இவை உருவாக்கும் மாயச்சூழலுக்குள் வாழ்கிறோம்.

 

இது பின்நவீனத்துவக் காலம். ஒவ்வொரு செய்தியையும் நாம் இருமுறை ஆராயவேண்டியிருக்கிறது. செய்தி அல்ல செய்திக்குப் பின்னாலுள்ள நோக்கமே முக்கியம் என உணர்ந்தாகவேண்டியிருக்கிறது. ஆனால் பின்நவீனத்துவம் பேசுபவர்கள்தான் இப்படி ஒரு செய்தி வந்ததுமே அதன்மேல் பாய்ந்து விழுந்து எடுத்து தலையில் வைத்துக்கொள்கிறார்கள்.

 

வெர்னான் கோன்ஸ்லாவிஸ் குற்றமற்றவரா, அவரை நீதிமன்றம் சரிவர விசாரிக்கிறதா என்பதெல்லாம் வேறு விஷயம். அதைப்பற்றிய பேச்சே அல்ல இது. ஏன் சொல்கிறேன் என்றால் இந்த அறிவின்மையைப் பரப்பியவர்கள் உடனடியாக பேச்சை அப்படி திருப்பிவிடுவார்கள். ஒரு நீதிமன்றம் ஏன் இப்படி இழிவுசெய்யப்படுகிறது? இதற்குப்பின்னாலிருக்கும் நோக்கம் என்ன? நீதிமன்றம் இனிமேல் இந்த மாபெரும் அறிவிலிப்பெருக்கை கருத்தில்கொண்டுதான் பேசவேண்டுமா என்ன?

 

 

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தடம் இதழ்

$
0
0

 

விகடன் தடம் இதழ் நிறுத்தப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். தமிழுக்கு முக்கியமான இதழாக இருந்தது என்பதே என் உளப்பதிவு. எந்த ஒரு சிற்றிதழும் அதற்கான ஒரு சிறிய சாய்வுடனேயே இருக்கும். விகடன் பேரிதழ் கூட அந்தச் சாய்வுகொண்டதுதான். தடமும் அச்சாய்வு கொண்டிருந்தது. பொதுவாக தமிழ் அறிவுலகில் உள்ள இடதுசாரி,தமிழ்த்தேசிய, திராவிட அரசியல் சாய்வு என அதை வகுத்திருந்தேன். ஆனால் தமிழிலக்கியத்தின் எல்லா குரல்களும் அதில் ஒலிக்க இடமளித்தது. தமிழில் இதுவரை வெளிவந்த இதழ்களிலேயே பார்வைக்கு அழகானது தடம்தான். பக்கவடிவமைப்பில் அது ஒர் உச்சம்.

நான் தொடர்ச்சியாக வாசித்த ஒரே இதழ். பெரும்பாலும் இதழ்களில் எழுதியுமிருக்கிறேன். நான் தடம் இதழில் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை என நினைக்கிறேன். அவற்றைக் கேட்டு வாங்கிய கவிஞர் வெயில் அவர்களுக்கு நன்றி

இவ்வாறு பெரிய திட்டங்களுடன் தொடங்கப்படும் முயற்சிகள் நலிந்து நின்றுவிடுவது எப்போதுமே நிகழ்கிறது. நான் தொடர்புகொண்ட முயற்சியாகிய சுந்தர ராமசாமியின் ‘காலச்சுவடு’ நிறுத்தப்பட்டபோது அடைந்த உளச்சோர்வை நினைவுகூர்கிறேன். அதன்பின் என் ஊடகமாக அமைந்த சுபமங்களா நின்றது. இம்முயற்சிகளுக்கு முன்பு இடைநிலை இதழ்களாக இனி [எஸ்விராஜதுரை], புதுயுகம் பிறக்கிறது [வசந்தகுமார்] என பல முயற்சிகள் நின்றன. பல சிற்றிதழ்கள் நின்றன. நான் நடத்திய சொல்புதிதும் அவற்றில் ஒரு முயற்சி. ஒவ்வொரு முயற்சியின் தோல்வியும் மேலும் புதிய முயற்சிகள் தொடங்குவதை பலவகையில் தள்ளிப்போடுகிறது.

ஒவ்வொரு தோல்வியும் காட்டுவது திரும்பத்திரும்ப தமிழ்ச்சூழலின் அக்கறையின்மையைத்தான். அரசியலையும் சினிமாவையும் மாய்ந்து மாய்ந்து விவாதிப்பார்கள். கலை, கலாச்சாரம் என பொங்குவார்கள். தமிழின் தொன்மை என தோள்தட்டுவார்கள். ஆனால் தமிழின்பொருட்டு நிகழும் எந்த முயற்சிக்கும் எந்த உதவியும் செய்யமாட்டார்கள். தடம் இதழைப் பார்த்ததுமே ‘ஐம்பதுரூபாய் அதிகம் சார், கட்டுப்படியாகலை’ என்று சொன்ன பலரை கண்டிருக்கிறேன். மாதம் லட்சம் ரூபாய் ஊதியம் ஈட்டுபவர்கள் அவர்கள். ஒரு நல்ல காப்பியின் விலை. ஒரு முறை ஆட்டோவில் ஏறி இறங்குவதன் குறைந்தபட்ச கட்டணம். ஆனால் நம்மவர் உள்ளத்தில் கலை இலக்கியத்திற்கான விலை அதைவிடக்குறைவு தடம் போன்ற இதழை நம் கல்விநிலையங்களில் நூலகங்களில் வாங்கியிருந்தாலே பத்தாயிரம் பிரதிகள் விற்றிருக்கும்.

தடம் இதழ் நின்றதற்கான முதன்மைக்காரணம், அச்சில் படிப்பவர்கள் குறைவு என்பது. கடைகளில் கண்ணில்பட்டால்தான் வாங்கினார்கள். தேடிச்சென்று வாங்குவதில்லை. அப்படிச் சிலர் இடைநிலை இதழ்களை வாங்கிய காலம் ஒன்று இருந்தது, அது இன்றில்லை. இன்றைய வாசிப்பு செல்பேசித்திரையில் நிகழ்கிறது. என் கட்டுரைகளேகூட தடம் இதழில் வெளிவந்தபின் என் தளத்தில்  மீண்டும் வெளிவரும்போதுதான் எதிர்வினைகள் மிகுதியாக வருவது வழக்கம். இது ஒரு காலமாற்றத்தின் சித்திரம். உலகப்புகழ்பெற்ற இடைநிலை இதழ்களும், சிற்றிதழ்களும்கூட நின்றுகொண்டிருக்கின்றன.

ஆனால் விகடனின் அமைப்புவல்லமை அதை ஒரு சிறிய இதழாக நீட்டித்திருக்க முடியும். அது ஏன் நின்றது? ஏனென்று சமூகஊடகங்களைப் பார்த்தால் தெரியும். தடம் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அதில் வெளிவந்த ஏதேனும் ஒரு செய்தியாவது, ஒரு கருத்தாவது, ஒரு படைப்பாவது குறைந்த அளவிலேனும் சமூக ஊடகங்களில் ‘டிரெண்ட்’ ஆகியிருக்கிறதா? சாதாரணமாகவேனும் விவாதிக்கப்பட்டிருக்கிறதா? தேடிப்பாருங்கள் , திகைப்பாக இருக்கும். விதிவிலக்கு நான் என் பேட்டியில் ஈழத்தில் இன அழித்தொழிப்பு நிகழ்கிறதா என்பதற்கு அளித்த பதில் சார்ந்து எழுந்த விவாதம்.. ஏனென்றால் அது என்னை வசைபாட ஒரு வாய்ப்பு. ஆனால் ஈழப்போர் பற்றி விதந்தும் நெகிழ்ந்தும் பேசப்பட்ட பலப்பல பக்கங்கள் தடம் இதழில் வெளிவந்துள்ளன. இந்த வசைபாடிகள் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்களோ அவற்றைச் சொன்ன பல கட்டுரைகள் வந்துள்ளன. அவற்றைப்பற்றி எவராவது விவாதித்திருக்கிறார்களா? பிறருக்கு அடையாளம் காட்டினார்களா?

இங்கே பேசப்பட்டவை அனைத்துமே அரசியல்காழ்ப்புநிலைகள், சினிமா ஆகியவற்றைப் பற்றி செயற்கையாக உருவாக்கப்பட்ட ‘டிரெண்ட்டிங்’ விஷயங்கள் மட்டுமே. நாலைந்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு பொதுவான பேசுபொருள் எங்கிருந்து எனத் தெரியாமல் கிளம்பி வரும்.  அத்தனைபேரும் அதையே பேசிப்பேசி சலித்து அப்படியே அடுத்ததற்குச் செல்வார்கள். தங்கள் தனிரசனையை, தங்கள் தனித்த பார்வையை, தங்கள் தேடல்களை எத்தனைபேர் முன்வைத்திருக்கிறார்கள்? முன்வைத்தவர்களுக்கு எத்தனை பேர் வாசகர்களாக வந்தனர்? இந்த செயற்கை ‘டிரெண்டிங்’ தான் இங்கே சீரிய ஊடகங்களை அழிக்கிறது. முன்பு மாலைமுரசுச்செய்தியாக அமைந்தவை இன்று மையச்செய்தியாக ஆகின்றன. அவற்றுக்கு அப்பாலுள்ள கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த எதுவும் கவனிக்கப்படுவதில்லை.

தடம் போன்ற இதழ்களின் பங்களிப்பு என்ன? இன்று நாடே ஓரிரு விஷயங்களைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கிறது. பேசவைக்கப்படுகிறது, அதற்கான கொள்கைகள் வியூகங்கள் நடைமுறைகள் அனைத்தையும் அருகிருந்து பார்த்திருக்கிறேன். அந்த பொதுப்போக்குக்கு அப்பால் உள்ள இலக்கியம், அரசியல்கோட்பாடு, பண்பாட்டுச் சிக்கல்களைப் பேசவே தடம் போன்ற இதழ்கள் முயல்கின்றன. ஆகவேதான் அவை மாற்று ஊடகங்கள் எனப்படுகின்றன.

இங்கூள்ள பொதுரசனை அங்கும் வெளியே உள்ள அரட்டையையே எதிர்பார்க்கும்.. அந்த அலைக்கு எதிராக நிலைகொள்ளவேண்டும். அதற்குத்தேவை அவ்வாறு பொதுப்போக்குகளுக்கு அப்பால் நின்றிருக்கும் தனித்தன்மை கொண்ட வாசகர்கள்  அத்தகைய ஒரு வாசகர்வட்டம் இங்கே உள்ளதா? உள்ளது என்பதுதான் என் வலைத்தளம் வழியாக நான் கண்டடைந்தது. இந்தத்தளம் இத்தனை வாசகர்களுடன் இத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என நான் எண்ணியதே இல்லை. ஆனால் அந்த வாசகர்களால் ஏன் தடம் பேணப்படவில்லை? அதற்குக்காரணம் தடம் இதழின் உள்ளடக்கம்  என்றோ அதன் கொள்கை  என்றோ எவரும் சொல்லமுடியாது.எல்லா கொள்கைகளுக்கும் இங்கே இடமுண்டு. இன்று தமிழில் எழுதும் ஏறத்தாழ அனைவருமே அதில் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள்.

மிக எளிமையான காரணம்தான், தடம் இதழை அதை வாசித்தவர்கள் பணம்கொடுத்து வாங்கவில்லை. அதற்குக் காரணம் அறிவு, இலக்கியம், கலை என்னும்போது மட்டும் நமக்குள் வரும் கைச்சிக்கனம். அந்த இதழ் வெளிவந்து ஒரு அறிவுத்தரப்பாக, வெளியீட்டுத்தளமாக நிலைகொள்வது எல்லாருக்கும் நல்லது என நாம் உணரவில்லை. அதை நிலைநிறுத்த பிரக்ஞைபூர்வமாக ஏதும் செய்யவில்லை. நம் கலாச்சார அமைப்புக்கள் அதை ஆதரிக்கவில்லை.நம் உரையாடல்களில் அதை நாம் பேசவில்லை.

ஐம்பது ரூபாய் கொடுத்து பத்தாயிரம்பேர் வாங்கியிருந்தால் தடம் தொடர்ந்து நடந்திருக்கும். அது தொடராது என்றே நானும் எண்ணியிருந்தேன். அதை நடத்துவதற்குக் குறைந்தது இரண்டு ஊழியர்களாவது தேவை. அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் அளவுக்கேனும் அது பொருளீட்டவேண்டும். இங்கே எந்த ஒழுங்குமில்லாமல் வசதிப்பட்ட கால இடைவெளிகளுடன் சிற்றிதழ்கள் நடக்கின்றன. பல இதழ்கள் வந்து நின்றாலும் ஏதோ ஒன்று கண்ணுக்குப்படுகிறது. ஜெயமோகன்.இன் என்னும் இந்த இணையதளம் தடம் இதழைவிட அளவில் ஏழெட்டு மடங்கு பெரியது. ஆனால் சிற்றிதழ்கள் பெரும்பாலும் தனிநபர்களின் இலவச உழைப்பைச் சார்ந்து இயங்குபவை. நிதியிழப்பு கொண்டவை. என் தளமும் அவ்வாறே.

இந்தத்தளம் நண்பர்களின் நன்கொடையாலும் இலவச உழைப்பாலும் நடைபெறுகிறது. இன்று வருகையாளர் அதிகம் என்பதனால் இதை நடத்துவதற்கான செலவும் அதிகம். அதை நண்பர்கள் அளிக்கிறார்கள். அவ்வப்போது சிறு கட்டணம் அல்லது நன்கொடை வைப்போம் என எவரேனும் சொல்வார்கள். அழகிய அச்சில், வண்ணப்பக்கங்களுடன், கையில் எடுத்து பார்க்கத்தக்கதாக, பலர் படிக்கத்தக்கதாக, மேஜையில் போடத்தக்கதாக தடம் போன்ற ஓர் இதழ் வரும்போது மாதம் ஐம்பதுரூபாய்க்கு யோசிக்கும் தமிழர்கள் இணையதளத்திற்கா பணம்கட்டுவார்கள் என்று நான் கேட்டதுண்டு. மெனக்கெட்டு அதை பிடிஎஃப் எடுத்து உலவவிட்டு பணம்கட்டாதீர், வாங்காதீர் என பிரச்சாரம் செய்வார்கள். தங்களால் முடிந்த சேவை

தடம் நின்றுவிட்டது மீண்டும் நம்மையே நமக்கு காட்டுகிறது. அரைநூற்றாண்டாக ஒவ்வொரு சீரிய கலையிலக்கிய முயற்சி தோற்கடிக்கப்படுகையிலும் எழும் அதே பெருமூச்சுதான் எஞ்சுகிறது

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

செய்தித் திரிபு –கடிதங்கள்

$
0
0

War and Peace in Junglemahal People, State and Maoists

போரும் அமைதியும் – ஒரு செய்தி, செய்தித்திரிபு

அன்புள்ள ஜெ,

செய்தி பற்றி கேட்டிருந்தீர்கள். டால்ஸ்டாய் பற்றி எதுவுமே தெரியாமல் ஒரு உயர்நீதிநீதிபதி நீதிமன்றத்தில் கேட்டார் என்பது உண்மையா என்று கேட்டிருந்தீர்கள். அதன்பின் நாம் பேசினோம். நான் சொல்வதை எழுதி அளிக்கும்படிச் சொன்னீர்கள். எழுதுவதற்குள் முழுச்செய்தியும் வந்துவிட்டது. இருந்தாலும் நான் சில அடிப்படைகளைச் சொல்ல விரும்புகிறேன்

உண்மையில் அது டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நூலாகவே இருந்தாலும்கூட நீதிமன்றத்தில் அப்படி நிகழ வாய்ப்பு உண்டு. பிராஸிக்யூஷன் தரப்பு அந்நூலை ஓர் ஆதாரமாக நீதிமன்றத்தில் முன்வைக்கும் என்றால் அதை சிரித்து புறம்தள்ளும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை. அதைப்பற்றி நன்றாகவே தெரிந்திருந்தாலும்கூட. வன்முறைநோக்கத்துடன் குற்றம்சாட்டப்பட்டவர் அதை வீட்டில் வைத்திருக்கிறார் என்று பிராஸிக்யூஷன் சொல்லும் என்றால் அதைப் பதிவுசெய்தபின் ‘நீங்கள் இதை ஏன் வீட்டில் வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டு அக்யூஸ்ட் சொல்லும் பதிலையும் பதிவுசெய்தே ஆகவேண்டும். அந்த நூலை எப்படி பிராஸிக்யூஷன் ஒரு குற்றத்தைத் தூண்டும் நூல் என நிரூபிக்கப்போகிறது என்பது நீதிபதிக்கு தெரியாது அல்லவா? அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கொடுக்கவேண்டும். அந்நூலை வாசித்து அதன்பின் உண்மையில் அது அப்படி அல்ல என்று நிராகரிக்கலாம். தீர்ப்பில் அதை கடுமையாக கண்டிக்கலாம். அது மட்டுமே அவருடைய உரிமை.

உங்கள் வீட்டில் இருந்து விஷ்ணுபுரம் நாவலை எடுத்து அது மதவெறியைத் தூண்டும் நூல் என்று பிராஸிக்யூஷன் நீதிமன்றத்தில் சொல்லலாம். நீதிபதி ‘அதைப்பற்றி உங்கள் தரப்பு என்ன?’ என்று கேட்டே ஆகவேண்டும். ரேசர் பிளேடு வைத்திருந்தார், கொடூரமான கொலை ஆயுதம் அது என்று பிராஸிக்யூஷன் சொல்லுமானால்கூட நீதிபதி அக்யூஸ்ட்டிடம் ‘ஏன் இதை வைத்திருந்தீர்கள்? கொலைசெய்யும் நோக்கம் இருந்ததா?’ என்று கேட்டே ஆகவேண்டும். சென்றகாலங்களில் பல நூல்களை இப்படி நீதிமன்றங்களில் சாட்சியமாகச் சேர்த்திருக்கிறார்கள். மதநூல்கள், அரசியல்நூல்கள், இலக்கியநூல்கள்.

ஏன் இது தேவையாகிறது? நீங்கள் குறிப்பிட்ட War and Peace in Junglemahal: People, State and Maoists என்னும் நூல் அச்சிடப்பட்டு சட்டபூர்வமாக வெளியிடப்பட்ட ஒன்று. ஆகவே அதை வைத்திருப்பது குற்றம் அல்ல என்று போலீஸுக்கு தெரியாதா என்ன? அவர்கள் என்ன வெண்ணைகளா? இல்லை. சட்டப்படி ஒரு குற்றத்தை நிரூபித்தால்மட்டும் போதாது. குற்றம் செய்யும் நோக்கமும் நிரூபிக்கப்படவேண்டும். நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் குற்றப்பத்திரிக்கைகளில் குற்றத்தின் நோக்கமே முக்கியமாகச் சொல்லப்பட்டிருக்கும். ’கொல்லும்நோக்கத்துடன் தாக்கி கொலைசெய்தார்’ என்றுதான் அதில் இருக்கும். ஏனென்றால் செயலை குற்றமாக ஆக்குவது நோக்கம்தான்.

ஆகவே குற்றம்சாட்டப்பட்டவரின் நோக்கம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவேண்டும். அதற்கு அவருடைய அடிப்படையான மனநிலையை அங்கே நிறுவ வேண்டும். அதற்குத்தான் இப்படி நூல்களை நீதிமன்றத்திற்குக் கொண்டுவருகிறார்கள். நாளை நீங்கள் ஒரு மதக்கலவரத்தில் கைதுசெய்யப்பட்டால் விஷ்ணுபுரம் ஒரு சாட்சியம்தான். நீங்கள் இந்துமனநிலை கொண்டவர் என்பதற்கு அதுதான் ஆதாரம். இல்லை என நிரூபிக்கவேண்டியது உங்கள் பொறுப்பு.

ஆனால் இந்திய நீதிமன்றங்களில் குறிப்பிட்ட கோணத்தில் சிந்தனைசெய்தார், குறிப்பிட்ட நூலை வாசித்தார் என்பதெல்லாம் குற்றமாக மட்டும் அல்ல குற்றத்திற்கான மனநிலையை உருவாக்கும் சாட்சியமாகக்கூட ஏற்கப்பட்டதில்லை. அரசு தடைசெய்த நூல்களை வாசித்ததைக்கூட நீதிமன்றங்கள் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை. இந்திய நீதிமன்றங்கள் அளவுக்கு வாசிப்பை, சிந்தனையை சாதகமாக காணும் நீதிமன்றங்களே உலகில் கிடையாது என நான் உறுதியாகவே சொல்லமுடியும். பெரும்பாலும் ஒரு புத்தகத்தை சாட்சியமாக்கினால் சம்பந்தப்பட்டவர் வன்முறைஅற்றவர் என்ற முடிவுக்கே நீதிமன்றம் செல்லும். ஆனால் போலீஸுக்கும் வேறுவழி இல்லை

நீங்கள் சொன்னதுபோல எதையுமே தெரிந்துகொள்ளாமல் எழுதும் செய்தி ஊடகங்களும் எதை வாசித்தாலும் தங்கள் அரசியலுக்கேற்ப அதை வளைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யும் சமூகஊடக மக்களும் சேர்ந்து நம்மை முழுமையான அறியாமைக்குள் கொண்டுசென்றுவிட்டார்கள்

எம்.மகாதேவன்

 

அன்புள்ள மகாதேவன் அவர்களுக்கு,

 

நன்றி. எனக்கே இந்த விந்தையான அனுபவம் இருந்தது. ஒருவழக்கில், அத்தனை ஆவணங்களும் தாக்கல்செய்யப்பட்டு விசாரணை தொடங்கியபோது என்னிடம் நீதிபதி கேட்டார். உங்கள் பெயர் என்ன? நான் சொன்னேன். அவர் தாளில் சரிபார்த்துக்கொண்டிருந்தார். தொழில்?. சினிமாக்கதை எழுதுவது. அப்பா பெயர்? பிறந்த தேதி? சரிபார்த்தபின் சரி செல்லலாம் என்றார். இதை அவர்தான் சரிபார்க்கவேண்டுமா என்று வழக்கறிஞரிடம் கேட்டேன். அவரேதான் சரிபார்க்கவேண்டும். நீங்கள் நேரில் வந்து அவரிடம்  முகம்பார்த்து நீங்கள்தான் நீங்கள் என்று சொல்லியாகவேண்டும் என்றார்..  நீதிமன்றத்திற்கு நரேந்திர மோடி சென்றால்கூட நீங்கள்தான் நரேந்திரமோடியா, என்ன தொழில் செய்கிறீர்கள் என்று கேட்பார்கள். அதுதான் சட்டம்.

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெ..

தடம் இதழ் நின்றதன் வருத்தத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்..  உங்கள் வருத்தம் புரிகிறது..  ஆனால் ஒரு கடைக்கோடி வாசகனிடம் எந்த பாதிப்பையும் இது ஏற்படுத்தவில்லை..  உயிரெழுத்து நிற்கவிருக்கிறது என அறிந்தபோது பதறியவர்கள் உண்டு , சில இதழ்களின் நிறுத்தல் செய்தியை படித்துவிட்டு அவர்களை தொடர்பு கொண்டு நாங்கள் முடிந்த அளவு உதவுகிறோம்” . நிறுத்தாதீர்கள் என இறைஞ்சியவர்கள் உண்டு.. அந்த இதழ்களெல்லாம் வாசகனுடன் நேரடியாக உறவில் இருந்தவை..  தடம் இதழ் எத்தனை புது வாசகனை புது எழுத்தாளனை தமிழுக்கு கொணர்ந்தது..  எத்தனை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தியது என்பவையெல்லாம் கேள்விக்குரியன…  சிறிய அளவில் நடத்துபவர்கள்கூட இவற்றை செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்..  தடம் நினைத்திருந்தால் உங்களைப் போன்றோர் செய்தவற்றை விட பெரிய அளவில் செய்திருக்கலாம். ஆனால் அவர்களிடம் அந்த எண்ணமே இல்லை..  ஏற்கனவே உருவாகியிருந்த ஓர் அமைப்பை பயன்படுத்திக் கொண்டார்களே தவிர புதிதாக எதையும் கொண்டு வந்து சேர்க்கவில்லை..   ஞாநி நடத்த முயன்ற கசடதபற இதழ் போதிய ஆதரவின்றி முடங்கியதன் வருத்தமும் குற்றவுணர்வும் இன்றும் நீடிக்கிறது..  ஞாநி , சுரா , சுதீர் செந்தில் போன்றோருக்கு ஒரு விஷன் இருந்தது..  ஆகவே அவர்கள் முயற்சிகளின் தோல்வி வருத்தமளித்தது.. பழைய கணையாழி , காலச்சுவடு , சொல்புதிது , முன்றில் இதழ்கள் தேடிப்பிடித்து படிக்கப்படுவது போல தடம் தேடப்படுமா என்பது ஐயமே…

போரும் அமைதியும் குறித்து நீதிமன்றம் ஏதோ சொல்லி விட்டது என வாட்சப்பில் பார்த்துவிட்டு டால்ஸ்டாயை நக்சலைட் என நீதி மன்றம் சொல்கிறது , கிறிஸ்தவர் என்பதால் அவர் மீது கோபம் என கவிதை எழுதுகிறார் ஒரு  இலக்கியவாதி.. கவிதை அருமை தோழர் என பலர் அதை ஷேர் செய்கிறார்கள்.. நீதிமன்றம் கேட்பது வேறொரு நூல் குறித்து என்ற அடிப்படை விபரம்கூட தெரியாமல் சமூக சீர்திருத்த கவிதைகள் எழுதும் இவர்கள் இன்றைய இளைய தலைமுறைக்கு எவ்விதத்திலும் பயன்பட மாட்டார்கள்.. இவர்கள்தான் தமிழ் இலக்கியத்தின் பிரதிநிதிகள் என்று ஒப்புக்கொண்டால் தமிழ் வாசிப்பு அழிவதை யாரும் தடுக்க முடியாது

காசை நினைத்து நூல்கள் வாங்க தயங்குகிறார்கள் என்பதெல்லாம் கிடையாது.. உங்கள் வெண்முரசு நூலை அது பதிவேற்றப்பட்ட சில நொடிகளில் படித்துவிடும் பலர் அதன் அச்சு வடிவத்தையும் வாங்குகிறார்கள்.. சிற்றிதழ்கள் பரவலாக கடைகளில் கிடைக்காது என்றாலும் தேடிப்பிடித்து வாங்குபவர்கள் ஏராளம்.

நீங்கள் குறை சொல்ல வேண்டியது வாசகர்களை அல்ல… வாட்சப் மெசேஜ்களுக்கு எதிர்வினை ஆற்றுபவர்களையும் அல்ல. ஆனால் இலக்கியவாதிகள் என்ற முகமூடியில் செயல்படும் வாட்சப் மொண்ணைகளையே நீங்கள் கண்டிக்க வேண்டும்

அன்புடன்;
பிச்சைக்காரன்

 

 

அன்புள்ள பிச்சைக்காரன்,

பலசமயம் இது எனக்கும் நடந்திருக்கிறது. நாம் இருக்கும் மனநிலையைப் பொறுத்தது. சட்டென்று ஒரு செய்தி நம்மை கொந்தளிக்கச் செய்துவிடுகிறது. எனக்கே சமீபத்தில் இந்த இதழ்கள் செய்தி வெளியிடுவது, உண்மையறியும் குழுக்கள் உண்மையை அறிவது என்பதெல்லாம் மிகப்பெரிய மோசடி என்ற நேரடி அனுபவம் அமைந்ததனால்தான் சுதாரித்தேன். இல்லாவிட்டால் அறச்சீற்றம் வந்துவிடும். ஏனென்றால் இலக்கியவாதிக்குச் செய்தி என்பது ஒரு குறியீடு, அடையாளம் மட்டும்தானே? அதன் மெய்யான பொருள் அவனுக்கு முக்கியமல்ல, அவன் அதற்கு அளிக்கும் பொருளே முக்கியமானது.

 

ஜெ.

அன்புள்ள ஜெ

போரும் அமைதியும் பூசல் சட்டென்று முடிந்துவிட்டது. ஒரு பதினைந்துநாள் போயிருந்தால் நூறுபேராவது அந்நூலை வாங்கியிருப்பார்கள். போட்டோ எடுத்து முகநூலில் போட்டுவிட்டு புரட்சியாளர் ஆகியிருப்பார்கள். இரண்டுபேர் புரட்டிப்படித்திருக்கும் வாய்ப்புகூட இருந்தது. பாவம் டால்ஸ்டாய்

ஜெயராமன்

 

அன்புள்ள ஜெயராமன்

 

எப்படியோ கிழவர் பேசப்படுகிறார். அதுவரை நல்லது.

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

’மொக்கை’ –செல்வேந்திரன்

$
0
0

 

அரங்கில் குழுமியிருக்கும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.

மொக்கை எனும் தூய தமிழ்ச்சொல்லுக்கு கூர்மையற்ற எனும் பொருளைக் காட்டுகிறது தமிழகராதி. மொக்கு அல்லது மொன்னை எனும் சொல்லிலிருந்து மொக்கை எனும் தமிழ்ச் சொல் உருவாகியிருக்கலாம். வடிவேலு மொக்கச்சாமியாக அரிதாரம் ஏற்றதன் வழியாக இந்தச் சொல் தமிழர்களால் மீள்கண்டுபிடிப்பு செய்யப்பட்டிருக்கும் என்று யூகிக்கிறேன்.

மொக்கை ஃபிகர், மொக்கை படம், மொக்கை ஜோக், மொக்கை சாப்பாடு என்று கல்லூரி மாணவர்கள் அன்றாடம் பலதடவை இந்தச் சொல்லை உபயோகிக்கிறார்கள். அவர்களின் உலகில் வாத்யார் மொக்கை, வகுப்புகள் மொக்கை, நூலகம் மொக்கை, புத்தகங்கள் மொக்கை, பேச்சாளன் மொக்கை, அரசியல் மொக்கை. காணும் யாவையும் மொக்கையென விளிக்கும் உங்களின் கூர்மைதான் என்ன என்பதை அறியும் பொருட்டே இந்த அரங்கில் பல வினாக்களை எழுப்பினேன்.

திராவிடம், இட ஒதுக்கீடு, ஹைட்ரோ கார்பன், கீழடி, போக்ஸோ, ஆர்ட்டிக்கிள் 370, தேசிய கல்விக்கொள்கை, ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், நீர் மேலாண்மை, ஆவாஸ் போஜனா, ஸ்மார்ட் சிட்டி திட்டம், பொருளாதார நெருக்கடி என இந்த அரங்கில் கேட்கப்பட்ட எந்த ஒரு கேள்விக்கும் உங்களிடம் பதிலில்லை. தவறாக சொல்லும் பதிலைக் கூட கொண்டு கூட்டி ஒரு கோர்வையாக சொல்லத் தெரியவில்லை. தமிழ்சினிமாவைப் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் மாய்ந்து பாய்ந்து பதில் சொல்கிறீர்கள். ஆனால், உங்கள் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய எந்தவொரு சமகாலவிஷயத்திலும் உங்களுக்குப் பிடிமானம் ஏதுமில்லை.

ஐநூறு ரூபாய்க்கு வரைவோலை எடுத்து வா என வங்கிக்கு அனுப்பி வைத்தால், இங்குள்ள பலர் திரும்ப வராமலேயே போய்விட வாய்ப்புள்ளது. ஐந்து செல்லான்களை எழுதி கிழிக்காமல் நம்மால் பஸ் பாஸ் எடுக்க முடியவில்லை. ஆதார் அட்டையில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் திருத்த வழியுண்டா என பூங்கா ஜோசியனிடம் விசாரிக்கிறோம். எங்கும் எதிலும் திகைப்பும் தெளிவின்மையும்.

உங்களுடைய சிகையலங்காரம் டிரெண்டியாக இருக்கிறது. உடைகள் டிரெண்டியாக இருக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள், ஈருளிகள் டிரெண்டியாக இருக்கின்றன. ஆனால், அறிவு விஷயத்தில் நீங்கள் டிரெண்டியாக இல்லை. AI, IoT, Block Chain, Big Data, Disruptive Management, Bit Coin, Augmented Reality and Virtual Reality என அன்றாடம் மாறிவரும் எந்தத்துறைசார்ந்த தொழில்நுட்ப மாற்றங்களைப் பற்றியும் உங்களுக்குப் பேச ஒருவரி கைவசம் இல்லை. படுமொக்கை, மொக்கை, சுமார், சூப்பர் என நான்கு தரப்பிரிவுகளாக உங்களைப் பிரித்தால் படுமொக்கை எனும் பிரிவின் கீழ்தான் வருவீர்களென நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

ஏன் வாசிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு என்னுடைய நேரடி பதில் கூமுட்டையாக இல்லாமல் இருப்பதற்கு. ஒரு மொக்கைப் பீஸாகவே வாழ்ந்து முடிந்து போகாமல் இருப்பதற்கு. ‘ஒரு எழவும் தெரியாது… வந்துட்டான்யா முடியை சிலுப்பிக்கிட்டு…’ என அவமானப்பட்டு கூசி நிற்காமல் இருப்பதற்கு. கலை சுரணை, பண்பாட்டுச் சுரணை, அரசியல் சுரணை, சூழியல் சுரணை என எதுவுமே இல்லாமல் வெறும் வாட்ஸாப் பைத்தியங்களாக உலவாமால் இருப்பதற்கு, ஆயுளையே அவிர்பாகமாக கேட்கும் கார்ப்பரேட் நெருக்கடிகளுக்குள் எவனோ ஒருவன் சிபாரிசில் உள்நுழைந்து எங்கள் தாலியறுக்காமல் இருப்பதற்கு.

நண்பர்களே, தமிழ் மேடைகளில் தவறாமல் நிகழும் கீழ்மைகளுள் ஒன்று பேச்சாளர்கள் பார்வையாளர்களை, பேச வந்த ஊரை, கல்லூரியை வானளாவ புகழ்வது. அமர்ந்திருப்போர் விழிகளில் ஒளிர்விடும் பாரதம் தெரிவதாக அளந்து விடுவது. அற்ப கைதட்டுதலுக்காக அல்லது அடுத்தமுறை கூப்பிட வேண்டுமென்பதற்காக மிகையான புகழ்மொழிகளை முன்வைப்பது. இவ்வகை தொழில்முறை பேச்சாளர்கள் பணத்தையும் பெற்றுக்கொண்டு அறத்தையும் மீறுகிறார்கள். உங்கள் ஆன்மாவை நோக்கி எவ்வித தயக்கமும் இன்றி நான் கேட்கும் தர்மசங்கடம் மூட்டும் வினாக்களால் நீங்கள் சீண்டப்பட்டால் நான் மகிழ்வேன். அரங்கை விட்டு வெளியேறும்போது தாக்கப்பட்டால் புளகாங்கிதம் அடைவேன்.

வாசிக்கும் இளைஞன் வழிகாட்டும் தலைவன் என்பேன் நான். நீங்கள் இண்டலெக்சுவலி ஃபிட்டாக இருந்தால் வகுப்பிலும் வீட்டிலும் நாட்டிலும் மதிப்பிற்குரிய நபராவீர்கள். ஒரு சமகாலப்பிரச்சனையைப் பற்றி உங்களது கருத்துகளை சொல்லுங்கள் என வகுப்பில் ஆசிரியர் உங்களைப் பேச பணித்தால் அது எவ்வளவு பெரிய கவுரவம்? முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் உங்கள் தந்தை உங்களைக் கலந்தாலோசித்தால் எவ்வளவு பெரிய ஆனந்தம்? உங்கள் நண்பர்கள் வட்டத்திலேயே விஷய ஞானமுள்ளவர் என அறியப்பட்டால் எவ்வளவு பெரிய மரியாதை? உங்கள் அண்ணன் தங்கைக்கு மச்சானுக்கு முறைப்பையனுக்கு வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவெடுக்க சிந்தனைத் தெளிவுடன் வழிகாட்ட முடியும் என்பது எவ்வளவு பெரிய முக்கியத்துவம்? கையில் புத்தகத்தையோ நாளிதழையோ வைத்திருக்கும் ஒருவனை காவல்துறை ‘யோவ்..’ என விளிப்பதில்லை. வாசிக்கும் பழக்கம் உள்ளவன் எந்த சபையிலும் தன் தலையை தொங்கவிட்டு அமர்ந்திருக்க வேண்டியதில்லை. இரண்டாயிரம் பேர் கூடியுள்ள சபைமுன் நின்று ‘கூமுட்டைகளே’ என்று நான் உங்களைக் கூவி அழைக்கும் அதிகாரத்தையும் துணிச்சலையும் எனக்கு எது தந்திருக்கிறது என்று நீங்கள் யோசித்துப்பாருங்கள்.

ஒத்துக்கொள்கிறேன். உங்கள் கையில் வைத்திருக்கும் டிவைஸ் அளவிற்கு நாளிதழ்கள் சுவாரஸ்யமானவை அல்ல. உங்கள் டைம்லைனின் வண்ணமிகு இனிய ஆச்சரியங்கள், உடனுக்குடன் வந்து குவியும் உங்கள் அபிமானஸ்தர்களின் வாழ்க்கைத் தருணங்கள், வேடிக்கை மீம்ஸ்கள், ஆச்சர்யமூட்டும் வீடியோக்கள், சிரிப்பாணி மூட்டும் டிக்டாக்குகள் இவை எதற்கும் முன் நாளிதழ்கள் போட்டியிட்டு குதுகலப்படுத்த முடியவே முடியாது. தொழில்நுட்பத்தின் பகாசுர கரங்கள் உலகின் உச்ச இன்பங்களை உங்கள் கண் முன்னே கொட்டி ஆட்டுதி அமுதே என கொஞ்சுகிறது. தொழில்நுட்பத்துடன் போட்டியிட்டு வெல்லும் ஆற்றல் இந்த உலகில் எதற்கும் இல்லை. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் தவிர்த்து வாசிப்புக்குத் திரும்புங்கள் என்று கூச்சலிடுவது அர்த்தமற்றது. டைம்லைன் மூளைக்கு ஏற்றும் டோபோமைனுக்கு அடிமையாகதவர் என்று எவரும் இன்று புவியில் இருக்க முடியாது. ஆனால், நான் உங்களிடம் சொல்லிக்கொள்ள விழைவது ஒன்றேதான் ‘உப்புமா, கிச்சடியை விட நிச்சயம் பீட்ஸா சுவையானதுதான். ஆனால் மூன்று வேளையும் பீட்ஸாவை மட்டுமே உண்டால் சீக்கிரத்தில் செத்துப் போய்விடுவோம். யங்கிஸ்தான் செல்லங்களாக நீங்கள் இருபத்துநாலு மணிநேரமும் இன்ஸ்டாவில் திளைப்பதும் ஜாயிண்ட் அடித்துவிட்டு சத்தமில்லாமல் இளித்துக்கொண்டிருப்பதும் ஒன்றேதான். வழி வேறாயினும் விளைவுகள் ஒன்றேதான். அச்சமூட்டுகிற வகையில் அறியாமை இருளுக்குள் இருப்பதற்குப் பதிலாக நாளொன்றுக்கு இருபது நிமிடங்கள் நாளிதழ்களை வாசிக்கலாம்.

இன்னும் தங்கள் ஆன்மாவை விற்றுவிடாத தரமான நாளிதழ்கள் என்ன செய்கின்றன? அவை நிர்வாக அமைப்புகளை, அதிகாரமையங்களை, நிறுவனங்களை, தொழிற்சாலைகளை, வங்கிகளை, கல்விக்கூடங்களை, ஆன்மிக அமைப்புகளை, சி.ஈ.ஓக்களை, சி.ஓ.ஓக்களை, இயற்கை வளங்களை இன்னும் ஏராளமானவற்றை கண்ணுக்குத் தெரியாத கண்களாக கண்காணிக்கிறது. அதன் வழியாக மக்களைப் பாதுகாக்கிறது. வெளியே தெரிந்தால் பத்திரிகைகள் குடைந்தெடுத்து விடுவார்கள். அவமானம், மானம் போய்விடும், தண்டனை பெறுவோம் என்கிற அச்ச உணர்வு இன்றும் எஞ்சியிருக்கிறது. என்ன நடந்தது? என்ன நடக்கிறது? யார் முடிவெடுக்கிறார்கள்? யார் பலனடைகிறார்கள் என்பதை மக்களுக்குச் சொல்கிறது. எச்சரிக்கிறது. ஜனநாயகம், நீதி, பொது ஒழுங்கு, நிர்வாகம் போன்றவற்றை மட்டுறுத்தும் விசைகளுள் ஒன்றாக இருக்கிறது.

லட்சோப லட்சம் மாணவர்கள் பத்திரிகைகளைப் புறக்கணிப்பதன் வழியாக ஒருவகையில் ஜனநாயகத்தின் குரல்வளையை மிதிக்கிறார்கள் என்பேன். தன்னைச் சுற்றி நிகழும் எந்தவொன்றைப் பற்றியும் ஒரு எழவும் தெரியாத கூமுட்டைகளாக இந்தச் சமூகத்தை மேலும் பாதுகாப்பற்ற வாழ லாயக்கற்ற ஒன்றாக மாற்றுகிறார்கள். தன்னுடைய உரிமைகளை, தனக்கான சலுகைகளை, வாய்ப்புகளைப் பற்றிய அறிவில்லாதவர்களாகவும், தன் மீது நிகழும் சுரண்டலைப் பற்றிய தெளிவில்லாதவர்களுமாக இருக்கிறார்கள். தன்னை ஒரு ஆளுமையாக முன் வைக்காமல் ஆயிரக்கணக்கான ஆடுகளடங்கிய மந்தையில் நாயின் ஊளைக்கும் நரியின் ஊளைக்கும் வித்தியாசம் தெரியாமல் அஞ்சி நடுங்குபவர்களாக உள்ளனர்.

உலகிலேயே மிக அதிகம் வாசிக்கும் பழக்கம் உள்ள நாடு இந்தியா. சராசரி இந்தியர்கள் ஒரு வாரத்திற்கு பத்து மணி, 42 நிமிடங்கள் வாசிக்கிறார்கள். எந்த வளர்ந்த நாடும் இந்தப் பட்டியலில் நம்மை மிஞ்சி இல்லை என்பது பெருமிதம்தான். ஆனால், பள்ளி மாணவர்கள் பாடப்புத்தகங்கள் தாண்டி எதையேனும் வாசிக்கிறார்களா என நிகழ்த்திய ஆய்வில் வெறும் 30% மாணவர்கள்தான் என்று தெரியவந்தது. கல்லூரி அளவில் என்று சோதித்துப்பார்த்தால் 1% கூட இல்லை. இரண்டாயிரம் பேர் அமர்ந்திருக்கும் அரங்கில் கடந்த ஆறு மாதத்தில் ஏதேனும் ஒரு நூலைப்படித்தவர்கள் என இரண்டே பேர்கள்தான். ஹாரிபாட்டர். ஜேகே ரெளலிங்கின் புகழ் ஓங்குவதாகுக.

சுகாதாரத்துறை அமைச்சர் அரசுத்திட்டங்களைப் பற்றி கேள்வி கேட்டால் பிரின்ஸிபால் முதல் செவிலியர் மாணவிகள் வரை ஒருவருக்கும் ஒன்றாகிலும் தெரியவில்லை. நட்சத்திர ஹோட்டலில் வேலை வாங்கித்தருகிறேன் என இணையத்தில் பொய் சொல்பவனிடம் ஆறுநூறு பெண்கள் நிர்வாண வீடியோக்களை அனுப்பி வைக்கிறார்கள். ஓங்கிய வாளுடன் ஓடும் பேருந்தில் தீப்பொறி பறக்க விட்டு காவல்நிலையத்தில் வழுக்கி விழுகிறார்கள். ஓரொரு இந்தியனும் பூஜிக்கவேண்டிய பாபாசாகேப் அம்பேத்கரின் சிலையை நடுசாலையில் காலால் நசுக்கி உடைக்கிறார்கள். தஞ்சாவூர் அரண்மனை ஓவியங்களில் சிந்துஜா சீக்கிரம் வா என கிறுக்கி வைக்கிறார்கள். லட்சம் ஆண்டுகள் பழமை கொண்ட பிம்பேத்கா குகை ஓவியங்களை பைக் சாவியால் கீறிப்பார்க்கிறார்கள். ஆளரவமற்ற சமணப்பள்ளிகளில் சபையில் பேச முடியாதவற்றை செய்கிறார்கள். மலைமுகடுகளில் ஏறி நின்று மனம் பொங்க சூரியோதயம் பார்க்கும் ஆன்மிக தருணத்தில் கூச்சலிடுகிறார்கள். அருவிக்கரைகளை பீர் பாட்டில்களால் அலங்கரிக்கிறார்கள். எங்கெங்கு காணினும் சூரைமொக்கை இளைஞர் குழாம். ஓங்கரிக்க வைக்கும் ஈனத்தனங்கள்.

கொஞ்சமேனும் வாசிக்கிற வழக்கமுள்ள ஒரெயொருவன் இந்த அவையில் இருந்தால் கூட எழுந்து நின்று என்னோடு சமர் செய்வான். அடுத்த முறையேனும் அப்படி ஒருவனை சந்திக்க விழைகிறேன். நன்றி வணக்கம்.

 

நெல்லை நினைவலைகள் -செல்வேந்திரன்

குமரகுருபரன் அஞ்சலி – செல்வேந்திரன்

விஷ்ணுபுரம் விருது 2013 – செல்வேந்திரன் பதிவு

யானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மும்மொழி கற்றல்

$
0
0

 

அன்புள்ள ஜெ

 

மும்மொழிக்கல்வி பற்றிய உங்கள் கருத்து என்ன? இந்தி கற்பிப்பதை இன்றியமையாத தேவை என நீங்கள் எண்ணுகிறீர்களா? இன்றைக்கு நிகழும் விவாதங்களில் எவரும் மாணவர்களைப் பற்றி, கல்வித்தரம் பற்றி கவலைப்படுவதே இல்லை. அவரவர் அரசியல்நிலைபாட்டைச்சார்ந்து மோதிக்கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவர் அஜெண்டாவுடன் இருக்கிறார்கள். ஒரு விவாதக்குழுமத்தில்கூட நடுநிலையான பார்வை, கல்விசார்ந்த பார்வை என்பதே இல்லை. எதிர்காலம் பற்றிய பார்வை இல்லை. எல்லாருமே கல்வியாளர்களைப்போல பேசுகிறார்கள்

 

ஒரு மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்து தற்கொலைசெய்துகொண்டார். உண்மையில் அந்த மாணவியின் முகம் இரண்டுநாட்கள் தூக்கமிழக்கச் செய்தது. எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அந்த மாணவியின் வாழ்க்கையுடன் விளையாடியவர்கள் யார்? ஒரு கல்விமுறையை கட்டவிழ்த்துவிட்டு சீரழித்துவிட்டு திடீரென ஒரு தகுதித்தேர்வைக் கொண்டுவருவது என்பது பெரிய வன்முறை. அந்தத் தகுதியை அவர்களுக்கு அளிக்கும் வாய்ப்புள்ள கல்வி வழங்கப்பட்ட பின்னரே அந்தத் தகுதித்தேர்வு அளிக்கப்படவேண்டும். அந்த மாணவி எழுதிய தற்கொலைக் குறிப்பு அதிர்ச்சி அளித்தது. அது நாலாம்கிளாஸ் குழந்தை எழுதுவதுபோல தப்பும்தவறுமாக இருந்தது. அந்தத் தரத்தில்தான் கல்வி அளிக்கப்படுகிறது. ஆனால் தகுதித்தேர்வு வேறு தரத்தில். அந்த மாணவி தனக்கு தமிழே தெரியவில்லை என்றுகூட தெரியாத அளவுக்கு கல்விமுறை இருக்கிறது.

 

தேர்வில் உயர்மதிப்பெண் பெற்ற பெண்ணின் தமிழ்க்கல்வித் தரம் இப்படி இருக்க கூடவே இந்தியையும் அறிமுகம் செய்வதைப்போல கொடுமை வேறு ஒன்றுமில்லை என நினைக்கிறேன். இதைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன?

 

எஸ்.தர்மராஜன்

 

அன்புள்ள தர்மராஜன்,

 

நீங்கள் சொல்வதுபோல இது அரசியல்தரப்புகளின் விவாதமாக ஆகிவிட்டிருக்கிறது. இதில் எல்லாருமே கல்வியாளர்களாகக் கருத்து சொல்கிறார்கள். ஆகவே முடிந்தவரை சூடு அடங்கியபின் எழுத்தாளனாக என் கருத்தைச் சொல்கிறேன்.

 

இப்போது கருத்து சொல்பவர்கள் பெரும்பாலும் இதை இன்றைய அரசியல் சூழலில் நின்றோ இன்றைய பண்பாட்டுவிவாதச் சூழலில் நின்றோதான் பேசுகிறார்கள். இக்கொள்கைகளை வகுப்பவர்கள்கூட ஐம்பதாண்டுகளுக்கு முன் பள்ளிக்கல்வி பெற்ற பண்பாட்டு – கல்வித்துறைச் செயல்பாட்டாளர்கள். இவர்கள் பண்பாட்டு ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்றெல்லாம்தான் யோசிக்கிறார்கள். uண்மையில் இதை நடைமுறை சார்ந்து, நம் பள்ளிக்குழந்தைகளின் கோணத்தில் யோசிக்கவேண்டும்.

 

இதைப்பற்றிப் பேசும் எவருக்காவது இங்கே கல்வியின் உண்மையான நிலை என்னவாக இருக்கிறது என்று தெரியுமா? போலியான புள்ளிவிவரங்களை கொண்டு அறைகளில் அமர்ந்து முடிவுகளை எடுக்கிறார்கள் – எல்லாவற்றிலும் அப்படித்தான். தமிழ்நாட்டின் கல்விச்சூழல் உண்மையில் நாளுக்குநாள் அழிந்துகொண்டிருக்கிறது. உடனே பிகாருடன் ஒப்பிட்டு தமிழகம் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என பேச ஆரம்பிக்கிறார்கள். ஓரிருமுறையேனும் பள்ளிகளுக்கோ கல்விநிலையங்களுக்கோ சென்றிருப்பவர்கள் நான் சொல்வதைப் புரிந்துகொள்வார்கள்

 

நம் கல்வித்துறை இரு பெரும்பிரிவுகளால் ஆனது. அரசுக்கல்வி, தனியார்க் கல்வி. அரசுக்கல்வித்துறையில் முப்பதாண்டுகளுக்குமுன்பே பணிநியமனம் முழுக்கமுழுக்க லஞ்சம்கொடுத்தால்தான் நிகழும் என்றாகியது. இன்று அது உச்சகட்டத்தில் உள்ளது. விளைவாக ஆசிரியராகக்கூடிய தகுதியும் மெய்யான ஆர்வமும் கொண்டவர்கள் ஆசிரியர்களாக ஆவது மிகமிககுறைந்தது. அது நன்றாகப் படித்தவர்கள் விரும்பும் தொழில் அல்ல இன்று. குறைந்த கல்வித்திறனும் பணமும் கொண்டவர்கள் ‘வாங்கி’ அமரும் ஒரு பணி.

 

அதன் விளைவுகளை அரசுசார் கல்விநிலையங்கள், அரசு உதவிபெறும் கல்விநிலையங்கள் அனைத்திலும் இன்று காணலாம். கல்லூரி ஆசிரியர் பணிக்கு கிட்டத்தட்ட 75 லட்சம் லஞ்சம் கொடுக்கப்படவேண்டும். அதன்பின் அந்த ஆசிரியரிடம் வேலைபார்க்கும்படி எவர் சொல்லமுடியும்? பெரும்பாலான அரசுநிறுவனங்களில் கல்வி என்பதே ஒருவகை ஒப்பேற்றல் மட்டும்தான். விதிவிலக்கான ஆசிரியர்கள் சிலரே.

 

இன்னொருபக்கம் தனியார்க் கல்வி. அங்கே ஆசிரியர்களுக்குச் சம்பளம் மிகமிகக் குறைவு. தனியார்க் கல்விநிலையம் ஒன்றில் முதுகலைப் பட்டம்பெற்று ஆசிரியராகப் பணியாற்றுபவர் பெறும் சராசரி ஊதியம் அரசுக்கல்விநிலையத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பெறும் சம்பளத்தில் நான்கில் ஒன்று மட்டுமே. தமிழகத்தில் ஒரு கூலித்தொழிலாளி பெறும் சராசரி ஊதியத்தில் பாதி மட்டுமே. நம்பவேமுடியாத ஊதியத்தில் பணியாற்றுபவர்களைக் கண்டிருக்கிறேன் – ஒரு பொறியியல் கல்லூரி ஆசிரியர் அவர் மாதம் நாலாயிரம் ரூபாய் வாங்குவதாகச் சொன்னார். அவர்கள் வெறும் அடிமை உழைப்பாளிகள்.

 

இவ்விரு வகையிலும் கல்வி கைவிடப்பட்டிருக்கிறது. முதல்வகைக் கல்வியில் மாணவர்களுக்கு எதுவும் சொல்லித்தரப்படுவதில்லை.இரண்டாம் வகை கல்வியில் மாணவர்கள் மூர்க்கமாக தேர்வுக்குரிய  பயிற்சி மட்டுமே அளிக்கப்படுகிறார்கள். இரண்டு இடங்களிலும் கல்வி என்பது இல்லை.

 

கல்லூரிகளுக்குச் சென்றால் நெஞ்சு பதைபதைக்கிறது. மாணவர்களுக்கு எதிலும் அடிப்படை அறிதலே கிடையாது. கவனிக்கும் பயிற்சியும் இல்லை. வெறும் முகங்களை நோக்கிப் பேசவேண்டியிருக்கிறது. உளம் கசந்து கல்விநிலையங்களுக்கு இனி செல்வதில்லை என முடிவெடுப்பேன். அப்படி முழுக்க தொடர்பு இல்லாமல் ஆகக்கூடாது என மீண்டும் செல்ல ஆரம்பிப்பேன். இந்த ஊசலாட்டத்திலேயே இருக்கிறேன்.

 

உங்கள் வினாவுக்கு வருகிறேன். இன்றைய கல்வித்தேவை தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது. கல்வி மேலும் மேலும் விரிவானதாக, ஆழமானதாக, சவால்மிக்கதாக ஆகிறது. அது உலகநாகரீக வளர்ச்சியுடன் தொடர்புடையது. அறிவியல்கல்வி இன்னும் இன்னும் சவால்மிக்கதாகவே ஆகும். வேறுவழியே இல்லை.

 

நாம் இங்கே சரியான அறிவியல்கல்வியை அளிப்பதே இல்லை. நம் மாணவர்கள் அறிவியல்கருதுகோள்களை புரிந்துகொள்வதில்லை. அறிவியல்ரீதியான சிந்தனைக்குப் பழகுவதில்லை. அறிவியலை மனப்பாடம் செய்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மிகமிக அடிப்படையான அறிவியல் கொள்கைகள் கூட நம் மாணவர்களுக்கு, உயர்கல்வி மாணவர்களுக்குக்கூட புரிந்திருப்பதில்லை. அவற்றை அறிந்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.

 

இதற்கான காரணம் கல்வித்திட்டச் சுமைதான்.இங்கே இப்போது இருமொழிக் கல்வி உள்ளது. இதுவே நடைமுறையில் பெருஞ்சுமையாக உள்ளது என்றே நான் பத்தாண்டுகளாக எழுதி வருகிறேன். ஆங்கிலத்தை இனி எவரும் தவிர்க்க முடியாது. அது உலகமொழி, தொழில்நுட்பத்தின் மொழி. நாம் பெறும் வேலைவாய்ப்புகளில் 99 சதவீதமும் நாம் ஆங்கிலம் அறிந்தவர்கள் என்பதனால் அமைவதே. நம் தொழில்கள் அனைத்திலும் ஆங்கிலக் கல்வி இன்றியமையாதது. ஆங்கிலம் கற்றோர் கற்காதோர் என நாடே இரண்டாகப்பிரிவுண்டிருக்கிறது. ஆங்கிலம் கற்றவர்களுக்குரியது இன்றைய அனைத்து உலகியல்வெற்றிகளும்.

 

இன்று தங்கள் மொழிகளிலேயே உயர்கல்வியும் தொழில்நுட்பக் கல்வியும் வழங்கிவந்த ஐரோப்பிய நாடுகளும் சீனாவும் ஜப்பானும் எல்லாம்கூட ஆங்கிலம் நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கின்றன. ஆகவே தாய்மொழியில் உயர்கல்வி என்பதெல்லாம் இனி மிகமிக அபத்தமான பேச்சுக்கள். இனி அது நடக்கவே நடக்காது. ஆங்கிலமே அறிவியல்கல்வியின் மொழி.

 

ஆனால் தாய்மொழிக்கல்வியை நாம் தவிர்க்கமுடியாது. ஆகவே வேறுவழியின்றி இருமொழிக்கல்வி இங்கே உள்ளது. இது எந்த லட்சணத்தில் உள்ளது என அறியவேண்டும் என்றால் சில பள்ளிகளுக்குச் சென்றுபாருங்கள்: அரசுப்பள்ளி, தனியார்ப்பள்ளி இரண்டுக்கும். தமிழ்க்கல்வி மிகமிகப் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிலேயே பெரும்பிழையில்லாமல் ஒரு பத்தி எழுதுபவர்கள், சொந்தமாக ஒரு கருத்தை எழுதத் தெரிந்தவர்கள் மிகமிகக்குறைவு. ஆயிரம் பல்லாயிரத்தில் ஒருவர். பிறர் தட்டுத்தடுமாறி படிப்பார்கள். மனப்பாடம் செய்து ஓரளவு எழுதுவார்கள்.

 

இங்கே மிகப்பெரும்பாலான மாணவர்கள் தமிழில் எதையும் வாசிப்பதில்லை. நாளிதழ்களைக்கூட. ஒரு கல்லூரியில் என்னுடன் வந்த குமுதம் நிருபர் சிந்துகுமார் ‘இங்கே குமுதம் வாசகர் எவர்?” என்றார். எவருமே இல்லை. ’குமுதத்தை ஒருமுறையேனும் பார்த்தவர் எவர்?” என்றார் ஒரு பெண் ஒருமுறை பார்த்திருந்தாள். ”ஏதேனும் வார இதழை வாசிப்பவர் யார்?” என்றார். எவருமில்லை. ”தமிழ்நாளிதழ்களை தொடர்ச்சியாக வாசிப்பவர் எவர்?” என்றார். எவருமில்லை. இன்று இளையதலைமுறையிடம் தமிழ்க்கல்வி பெரும்பாலும் இல்லை. இதுவே உண்மை நிலை. தமிழில் சரளமாக வாசிப்பவர்க்ள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே.

 

ஏன்? இதுதான் காரணம். இங்கே தனியார்ப்பள்ளிகளில் பயிற்றுமொழி ஆங்கிலம். தமிழ் இரண்டாம்பாடம். தமிழில் வெற்றிபெற்றால் மட்டும் போதும். ஒரு வாரத்தில் நான்கு அல்லது மூன்று மணிநேரம் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது. அதுவும் விடைகளை மனப்பாடம் செய்து எழுதுவதற்கு மட்டும். தமிழ்ப்பயிற்சி முற்றாகவே இல்லை. மாணவர்களுக்கு தமிழ் பெரிய தொல்லை என்றே தோன்றுகிறது. அரசுப்பள்ளிகளில் முறையான பயிற்சி அளிக்கப்படுவது அரிது. ஆகவே தமிழகத்தில் தமிழ் ஓரளவுமட்டுமே தெரிந்த ஒரு தலைமுறையே உருவாகிவிட்டது. இன்னமும்கூட தமிழ் தமிழ் என கூச்சலிடுபவர்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை.

 

நான் இதை தொடர்ச்சியாக அவதானித்துக் கொண்டிருக்கிறேன். நம் மாணவர்களால் தமிழில் நூல்கள் எதையும் வாசிப்பதில்லை. ஏனென்றால் தமிழை அவர்களால் முக்கிமுக்கித்தான் வாசிக்கமுடியும். அவர்களின் மொழித்தரத்துக்குரிய நூல்கள் அறிவுத்தரத்தை வைத்துப்பார்த்தால் மிகமிக கீழே இருக்கின்றன. அதாவது பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஐந்தாம் வகுப்புத்தர நூலையே வாசிக்க முடியும். ’முட்டாள் மட்டி மடையன்’ கதைகள் என்பதுபோல. ஆனால் அவன் இன்ஸெப்ஷன் படம் பார்க்கக்கூடியவனாக இருப்பான். ஆகவே அவனுக்கு அது ஆர்வமூட்டுவதில்லை. ஹாரிபாட்டர் அவனுக்கு எளிதாக இருக்கிறது.

 

இதை எண்ணியே நான் ’பனிமனிதன்’, ’வெள்ளிநிலம்’ போன்ற நூல்களை எழுதினேன். அவை குழந்தைநாவல்களுக்குரிய எளிமையான மொழி கொண்டவை. ஆனால் பரிணாமஅறிவியல், மதங்களின் இயங்கியல் போன்ற சிக்கலான, தீவிரமான விஷயங்களைப் பேசுபவை. இங்கே குழந்ந்தை எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் சிக்கலான தமிழில் ’அம்முவும் அம்பதுபைசாவும்’ போன்ற எளிமையான நீதிக்கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் அந்நூல்களை அருவருக்கின்றன. நான் எழுதியது ஒரு முன்னுதாரணமாக. இன்றுதேவை வரலாறு அறிவியல் என ஆய்வுசெய்து எழுதப்படும் நூல்கள் – ஆனால் ஐந்தாம்வகுப்புக்குரிய மொழிநடை கொண்டவை. அவற்றையே நம் பத்தாம் வகுப்பு மாணவன் வாசிப்பான். நான் ஒரு முன்னுதாரணமே எழுதிக்காட்டினேன். சரியான குழந்தை எழுத்தாளர்கள் இன்னும்கூட சிறப்பாக எழுதமுடியும்

 

ஆனால்  பல நண்பர்களின் ஆங்கிலம் வழிக்கல்விகொண்ட குழந்தைகள் பனிமனிதனையும் வெள்ளிநிலத்தையும் வாசிக்கும்படி தந்தையிடம் சொல்லி கேட்கவே விரும்புகின்றன. ஏனென்றால் அவற்றின் அறிவுத்தரம் அந்நூல்களை எளிதில் தொடுகிறது. ஐந்தாம்வகுப்புத்தமிழே கூட முக்கிமுக்கி வாசிக்கக்கூடியதாக உள்ளது. தமிழ் கேட்டால் நன்கு தெரியும். தமிழின் எழுத்துரு கண்ணுக்கும் உள்ளத்திற்கும் பழகாமல் அயலானதாக உள்ளது.

 

மொழிக்கல்வி இன்றைய நவீன உலகில் ஒரு முக்கியமான அறிவுத்தகுதி அல்ல. பலமொழிகள் அறிந்திருப்பதனால் பெரிய நன்மை ஏதும் இல்லை. ஒருவேளை இன்னும் பத்தாண்டுகளில் மொழிகளுக்கிடையேயான தானியங்கி மொழியாக்கம் முழுமையை அடைந்துவிடக்கூடும்..நான் இப்போதே சாதாரணமாக பிரெஞ்சு, ஸ்பானிஷ் இணையதளங்களை வாசிக்கிறேன். கன்னட  வங்க இணையதளங்களைக்கூட வாசிக்கிறேன். இச்சூழலில் மொழிக்கல்விக்கு மூளையுழைப்பின் பெரும்பகுதியைச் செலவிடுவது மாபெரும் வீணடிப்பு

 

அத்துடன் இன்று அறிவியலுக்குள்ளேயே பல மொழிகளை நாம் கற்றேயாகவேண்டியிருக்கிறது. யோசித்துப்பாருங்கள், அல்ஜிப்ரா ஒரு தனிமொழி. வேதியியல்குறியீடுகள் ஒரு தனிமொழி. அப்படி மொழிக்குள் பலமொழிகளை நாம் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆகவே மேலதிகமாக ‘பண்பாட்டு ஒருமைப்பாட்டுக்காக’ மொழி கற்பது போல அபத்தம் வேறில்லை. அது ஒட்டுமொத்தமாகவே இந்தியாவை அறிவார்ந்த பின்னடைவுக்கே கொண்டுசெல்லும். உலகப்போட்டியில் நாம் தோற்போம்

 

இப்போதே நாம் பிள்ளைகள்மேல் மிகுசுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறோம். இளவயதில் இரண்டு எழுத்துருக்களை [லிபிகளை] படிக்கவும் எழுதவும் கற்பது மிகப்பெரிய சுமை. இளமையில் நாம் மொழியை எளிதாகக் கற்கிறோம். ஆனால் லிபி கற்பது மிகப்பெரிய உழைப்பு. யோசித்துப்பாருங்கள். நாம் கையில் எழுதுகோலை எடுப்பது முதல்வகுப்பில் [இப்போதெல்லாம் இரண்டுவயதில்] ஓரளவு சரளமாக நாம் எழுத ஆரம்பிப்பது பத்தாம் வகுப்பில். பத்துப்பதினைந்தாண்டுக்கால கடும் உழைப்பு. ஒவ்வொரு நாளும் ஐந்தாறு மணிநேரம் பயின்றுதான் கைக்கு எழுத்துக்கள் பழகவேண்டியிருக்கிறது. மூளை எழுத்துருக்களை சரளமாக மொழியாக ஆக்கமுடிகிறது. மானுடம் அளிக்கும் மிகப்பெரிய அறிவுழைப்பு எழுதப்பழகுவதும் எழுத்துருவை மொழியாகப் பழகுவதும்தான்.

 

இரண்டுமொழியோ மூன்றுமொழியோ கடும் உழைப்பால் கற்கமுடியும்தான். ஆனால் இயல்பாகவே மூளை அவற்றில் ஒன்றைத்தான் தனக்குரியதாகத் தெரிவுசெய்யும். அதில்தான் திறன் வெளிப்படும். நான் கற்றகாலத்தில் எங்கள் மூளை தமிழைத் தெரிவுசெய்தது. 15 ஆண்டுக்காலம் ஆங்கிலம் கற்றபின்னரும் ஆங்கிலம் கைக்கும் மூளைக்கும் அயலானதாகவே இருந்தது. இன்றைய மாணவனுக்கு ஆங்கிலம் முதன்மையாக உள்ளது. தமிழ் அயலானதாக உள்ளது.

 

தமிழ் ஆங்கிலம் இரண்டுக்கும் எழுத்துவடிவங்கள் முழுக்கமுழுக்க வேறானவை. அதாவது அவற்றின் வளைவுத்தன்மைகள், கோட்டுவடிவங்கள் முற்றாக வேறுபட்டவை. அவற்றை மூளை எதிர்கொள்கையில் திகைக்கிறது. ஒருவன் இணையான கோட்டுவடிவம்கொண்ட தமிழ் எழுத்துருவையும் மலையாள எழுத்துருவையும் கற்பதுபோல அல்ல அது. முற்றிலும் வேறான கோட்டுவடிவம் ஒன்றை எதிர்கொள்வதை மூளை எத்தனை எதிர்ப்புடன் சந்திக்கிறது என்பதை பற்றி ஏராளமான ஆய்வுகள் இன்று வந்துள்ளன

 

எழுதுவது என்பது விரல்களை ஒரு ஆக்ரோபேட்டிக்ஸுக்குப் பழக்குவது என்று பூஃக்கோ சொல்கிறார். இரண்டு லிபிகளை எழுதுவது என்பது இரண்டுவகை ஆக்ரோபாட்டிக்ஸ்கலைகளை ஒரே சமயம் பழகுவது. அதுவே நம் மூளையைச் சோர்வடையச் செய்து இந்நூற்றாண்டுக்குரிய மெய்யான கல்வியை அடையமுடியாமல் ஆக்கிவிடுகிறது என்பதே என் தரப்பு. இதில் மூன்றாவது ஆக்ரோபாட்டிக்ஸை புகுத்த நினைக்கிறார்கள்.

 

இந்தியோ வேறுமொழியோ தேவை என்றால் கற்றுக்கொள்ள இன்று எளிய வழிகள் உள்ளன. தேவையான அளவு மட்டுமே கற்றுக்கொள்ளவும் வழிகள் உள்ளன. ஜப்பான் சென்று மிகச்சிக்கலான ஜப்பானியமொழியைக் கற்ற நண்பர்கள் பலரை சமீபத்தில் சந்தித்தேன். கற்காமல் மொழியாக்கம் செய்யவும் வாய்ப்புகள் மிகுதியாகி வருகின்றன. இன்று அறிவியலை, பண்பாட்டைக் கற்றுக்கொள்ளவேண்டிய அரியபருவத்தை மொழிகளையும் எழுத்துருக்களையும் கற்று பயில செலவழிப்பது ஓர் அறிவுத்தற்கொலை.

 

இன்னொன்று உண்டு. மொழிகற்கும் திறன் அனைவருக்கும் ஒன்று அல்ல. காட்சிநுண்ணுணர்வு, கணித நுண்ணுணர்வு போல மொழிநுண்ணுணர்வும் ஒரு மூளைத்தனித்தன்மை. சிலரால் மொழிகளை எளிதில் கற்கமுடியும். காட்சி  நுண்ணுணர்வுள்ளவர்கள் மொழிகளைக் கற்பது மிக அரிது. என்னால் மொழிகளை கற்கமுடியும். மூன்றுமொழிகளில் நாளும் புழங்குகிறேன். ஆனால் என்னால் கணிதத்துக்குள் நுழையவே முடியாது. மூன்றுமொழிகளை கற்பித்து அதனடிப்படையில் மாணவர்களை தெரிவுசெய்வது என்பது மாபெரும் வன்முறை.

 

இந்தியை திணிக்க நினைப்பது வட இந்திய அறிஞர்களின் உளக்கோளாறு. அரசியல்வாதிகளின் ஆதிக்க எண்ணம். 1994 ல் நான் சாகித்ய அக்காதமியின் ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். நான் ஒரு கட்டுரைமேல் கருத்துரை ஆற்றவேண்டும். அக்கட்டுரை இந்தியில் இருந்தது. அதன் மொழியாக்கம் அளிக்கப்படவுமில்லை. என்னை கருத்துரை ஆற்ற அழைத்தனர். நான் மிகக்கடுமையாக எதிர்வினை ஆற்றினேன். ‘இந்தி கற்றால்தான் இந்தியன் எனில் நான் இந்தியன் அல்ல என்றே சொல்வேன்’ என்றேன்.அதைப்பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன்.. நானும் மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடும் இணைந்து சாகித்ய அக்காதமிக்கு ஒரு கண்டனக் கடிதமும் அனுப்பினோம். இன்றும் என் எண்ணம் அதுவே

 

ஆனால் இத்தரப்பை எதிர்ப்பவர்களும் எந்த அறிவியல்நோக்கும் கொண்டவர்கள் அல்ல. வெறும் அரசியல்வாதிகள். சில மாதங்களுக்கு முன் தமிழின் ஒரு பதிப்பாளர் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார். சில ஆண்டுகளுக்கு முன் நான் தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதலாமே என தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதிய கட்டுரையை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கோரினார். எதற்கு என்று கேட்டேன். மொரிஷியஸ்,தென்னாப்ரிக்கா முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழில் வாசிப்பதற்காக அவர் ஆங்கில எழுத்துக்களில் தமிழ்நூல்களை வெளியிடுகிறாராம். அதன் முன்னுரையாகப் பயன்படுத்திக்கொள்ள அக்கட்டுரையை கோரியிருந்தார். ஏனென்றால் அவர்கள் தமிழில் வாசிப்பதென்றால் அது ஒன்றே வழி. ஆனால் அதை சொல்லவும் அச்சம். ஏனென்றால் இங்குள்ள கலாச்சாரக் காவலர்கள் கிளம்பிவிடுவார்கள், தமிழை அழிக்கிறாய் என்று.

 

அக்கட்டுரை வெளிவந்தபோது எழுந்த எதிர்ப்புகளை நினைவுகூர்கிறேன். அந்த யோசனை ஈவேரா அவர்களால் முன்வைக்கப்பட்டது என்பதுகூட அவர்களை சிந்திக்கவைக்கவில்லை. தமிழ்நாட்டு தமிழ்க்கல்வியில் இருக்கும் அச்சமூட்டும் தேக்கநிலையைக் கண்டு நான் எண்ணியது அது. இன்றும் என் எண்ணம் அது மட்டுமே ஒரே வழி என்பதே.  அன்றிருந்த அச்சம் பலமடங்காகப் பெருகிக்கொண்டே இருக்கிறது. இனி தமிழ்மாணவர்கள் ஆங்கிலத்தையே கற்பார்கள். ஆங்கில எழுத்துவடிவமே எழுதும்பயிற்சிகொண்டதாக அவர்களுக்குள் இருக்கும். தமிழ் எழுத்து வடிவம் ஒர் உபரி அறிதலாக, முக்கிமுக்கி வாசிக்ககூடியதாகவே எஞ்சும். ஆகவே இங்குள்ள இலக்கியங்கள் எவையும் இனிமேல் மெல்லமெல்ல வாசிக்கப்படாமல் ஆகும். குறளும் கம்பராமாயணமும் மட்டுமல்ல சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும்கூடத்தான். நாங்கள் தொல்லடையாளங்களாக மாறி மறக்கப்படலாம்.

 

இரண்டு எழுத்து வடிவங்களைப் பயில்தல் என்னும் சுமையை எதிர்காலத்தின் அறிவுச்சூழல் ஏற்றுக்கொள்ளாது. ஆங்கிலம் போல உலகப்பொதுவான எழுத்துரு ஏற்கப்படலாம். அல்லது எல்லா எழுத்துருக்களிலும் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளும் வசதி வரலாம். ஆனால் இன்றிருக்கும் சூழல் இப்படியே தொடர்ந்தால் தமிழ் ஒரு வகை பேச்சுமொழியாக மட்டுமே எஞ்சும்

 

ஆகவே நான் மும்மொழியை ஏற்கவில்லை. ஒற்றை எழுத்துருக்களுக்குமேல் கற்கலாகாது என்று நினைக்கிறேன்.  அந்த உழைப்பு நவீன அறிவுத்துறைகள் அறிவியல் ஆகியவற்றை கற்கச் செலவிடப்படவேண்டும்

 

பிகு. இங்கே விவாதங்கள் நிகழும் அழகுக்கு சிறந்த உதாரணம். நான் அக்கட்டுரையை எழுதியபோது பலரும் கேட்ட ;அறிவார்ந்த; கேள்வி, ”அப்படியானா விஷ்ணுபுரத்தை தங்கிலீஷ்லே அச்சிடவேண்டியதுதானே, ஏன் தமிழில் அச்சடிக்கிறே?” பலருக்கும் மாய்ந்து மாய்ந்து பதில் சொன்னேன். “இன்றைக்கு தமிழை ஆங்கிலத்தில் எழுதலாம், எல்லாரும் வாசிப்பார்கள் என்று சொல்லவில்லை. ஆங்கில லிபியில் எழுதுவதை படிப்படியாக கல்விவழியாக கொண்டுவரலாம் என்றுதான் சொல்கிறேன்.  அப்படி ஒரு கல்வியும் வாசிப்பும் வந்தால் அதன்பின் விஷ்ணுபுரத்தை அதில் அச்சிடலாம்” ஆனால் என்னால் அவர்களிடம் சொல்லிப் புரியவைக்கவே முடியவில்லை.

 

இரண்டுநாட்களுக்கு முன் வாசிக்கும்பழக்கம் கொண்ட இளம்நண்பர் அதே கேள்வியை கேட்டார். திகைப்பாக இருந்தது. நாம் சிந்தனைப் பயிற்சியை அடையவே இன்னும் எவ்வளவு தொலைவு செல்லவேண்டியிருக்கிறது. பண்பாட்டு விஷயங்களை மிகையுணர்ச்சியுடன் அரசியல்காழ்ப்புகளுடன் அணுகுகிறோம். பண்பாடே அழிந்தாலும் கண்டுகொள்வதுமில்லை.

 

இதனால் உடனே ஏதேனும் நடக்குமா, எதிர்ப்பவர்களின் மிகையுணர்ச்சிகளை நோக்கிப் பேசமுடியுமா, ஒருவரையேனும் புரியவைக்க முடியுமா என்று என்னிடம் கேட்டீர்கள் என்றால் வாய்ப்பில்லை என்பதே என் மறுமொழி..ஆனால் இதைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டுமென்றும் படுகிறது.

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இமைக்கணம் செம்பதிப்பு

$
0
0

 

வெண்முரசு நூல்வரிசையின் பதினேழாவது நூலான இமைக்கணம் செம்பதிப்பாக வரவிருக்கிறது. நான் இதை திருத்தியமைக்க பொழுது எடுத்துக்கொண்டமையால் இத்தனை காலம் பிந்தியது. முன்பதிவுசெய்துகொள்ளும்படி நண்பர்களையும் வாசகர்களையும் கோருகிறேன்

 

ஜெ

இமைக்கணம் செம்பதிப்பு முன்பதிவு – கிழக்கு

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

முகில்செய்தி- கடிதங்கள்

$
0
0

 

முகில்செய்தி

அன்புள்ள ஜெ

மேகசந்தேசம் பாடல்களைக் கேட்டேன். என் பழைய நினைவுகளைக் கிளர்ந்தெழச்செய்தது அது. அந்தப்படம் நான் ஹைதராபாதிலிருந்த போது வெளிவந்தது. பெரிய ஹிட். பாடல்கள் இரண்டு ஆண்டுகள் மக்களை பித்துப்பிடிக்க வைத்திருந்தன. அதில் ஒவ்வொருபாட்டும் ஒவ்வொரு வகை. அஷ்டபதிப் பாட்டு இரண்டு. கர்நாடக சங்கீதப்பாட்டு இரண்டு. எனக்குப் பிடித்த பாடல் நவரச சும மாலிகா. நான் நான்கு வருடங்கள் அதைத்தான் ரிங்டோனாகவே வைத்திருந்தேன். நீங்கள் கொடுத்திருந்த இணைப்பிலேயே முண்டு தெலிசேனா பிரபு என்னும் அற்புதமான பாடல் இல்லை

ராஜ்குமார்

 

அன்புள்ள ஜெ

 

மேக்சந்தேசம் படம் நான் 1990ல் பார்த்தது. அப்போது ஓர் ஆச்சரியமான விஷயம் தெரியவந்தது. அந்தப்படத்தின் அதே கதைதான் எம்.டி.எழுதி ஐ.வி.சசி இயக்கி 1994ல் வெளிவந்த அக்ஷரங்ஙள் என்னும் படம். ஆனால் அக்ஷரங்ஙள் ஏறத்தாழ எம்.டியின் சுயசரிதை. அவருடைய வாசகியை அவர் முதல் திருமணம் செய்துகொண்டார். அவர் பெயர் பிரமீளா.ஒரு பெண்குழந்தை. அவர்களுக்கிடையே பிரிவு. அவர் ஒரு நடனமங்கையை மணம்புரிந்துகொண்டார். கலாமண்டலம் சரஸ்வதி . அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை. அதேதான் அந்தப்படம். அதில் ஒரு பாடல் கறுத்த தோணிக்காரா. அற்புதமான பாடல் அது. ஆனால் நன்றாகப் படமாக்கப்பட்டிருக்காது

 

விஷயத்துக்கு வருகிறேன். மேகசந்தேசமும் உண்மையான ஒரு கவிஞனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டது. அவனுடைய வாழ்க்கையும் அதேபோலத்தான் அமைந்திருந்தது. அதாவது இரு படங்களுக்கும் ஆதாரமாக அமைந்த வாழ்க்கையில்தான் ஒற்றுமை.

 

சுரேஷ்குமார்

அக்ஷரங்ஙள்

 

கறுத்த தோணிக்காரா கடத்து தோணிக்காரா

மானமிருண்டு மனசிருண்டு மறுகரை ஆரு கண்டு?

 

விடர்ந்ந பூவிது கொழியும் மும்பே

தினாந்தம் அணையும் மும்பே

இனியொரு ஈரடி கூடி

பாடான் கொதிப்பு ஹ்ருதய தலங்கள்

 

இதாணு இதாணு என் யாத்ரா கானம்

இதினு இனி இல்ல ஒரு அவசானம்

விராம திலகம் சார்த்தருது ஆரும்

வரும் ஈ வழி ஞான் எந்நும்

 

[கரிய தோணிக்காரனே கொண்டுசெல்லும் தோணிக்காரனே

வானம் இருண்டுவிட்டது மனம் இருண்டுவிட்டது

மறுகரை யார் கண்டது?

மலர்ந்த பூ இது உதிர்வதற்கு முன்

நாள்முடிவு வந்து சேர்வதற்கு முன்

மேலும் ஒரு இரண்டடிப்பாடலை

பாட விரும்புகின்றன இதயத்தின் இதழ்கள்

 

இதுதான் இதுதான் என் விடைபெறும் பாடல்

இதற்கு இல்லை ஒரு முடிவு

முடிவு சொல்லி எவரும் பொட்டு இட்டுவிடவேண்டாம்

நான் இவ்வழியே மீண்டும் வருவேன்]

 

.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஏழு நதிகளின் நாடு

$
0
0

இனிய ஜெயம்

முக்கால் நூற்றாண்டைத் தொடப்போகும் சுதந்திர இந்தியாவின் விடுதலைத் திருநாளை, அன்றைய இரவை விழித்திருந்து விடுதலை  நாளின் நினைவுகளை மீட்டும் வண்ணம் எதையேனும் வாசிப்பது  என முடிவு செய்திருந்தேன். குகாவின் இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு நூலை எடுக்கப் போனேன்,வரிசையில் வரிசை தப்பி நின்றிருந்த  செல்வேந்திரன் பரிசளித்திருந்த நான் வாசித்திராத  நூல் ஒன்று என்னைத் தூக்கு என்னைத்  தூக்கு என்று துள்ள, எடுத்தேன்.

சந்தியா பதிப்பகம் வெளியிட்ட, சிவ முருகேசன் மொழிபெயர்த்த [இடரற்ற வாசிப்பை நல்கும் தெள்ளிய மொழிபெயர்ப்பு ]

https://en.wikipedia.org/wiki/Sanjeev_Sanyal

சஞ்சீவ் சன்யால் எழுதிய ஏழு நதிகளின்  நாடு  நூல்.

என்னுடைய பாணியில் அப்படியே புத்தகத்தை நடுவில் திறந்து,கண்டிருக்கும் பக்கத்தில் இருந்து வாசிக்கத் துவங்கினேன். பிரித்தானியர்  திபெத்தை  குறிப்பாக லாசா நகரை எவ்வாறு ‘கண்டுபிடித்தார்கள்’ எனும் கதையில் திறந்தது நூல். லாங்டன் துவங்கி எவரெஸ்ட் நிறைவு செய்த இந்திய வரைபடத்தின் உருவாக்கப் பணி,துவங்கப்பட்டது 1800 கும் முன்பாக, ரென்னர் என்பவரால். வங்கத்தின் வினோத நிலப்பரப்பை, புலிகளுடன் போராடி, [நூல் நெடுக வரும் இந்தியப் புலிகள் சிங்கங்களின் கதை தனி] ஒவ்வொரு இடமாக அளந்து அவர்தான் பெங்கால் அட்லஸ் எனும், ஈஸ்ட் இந்தியா கம்பனி செல்வாக்கு செலுத்தும் நிலத்தின்  முதல் வரைபடத்தை உருவாக்குகிறார்.

அதன் பின்னர் அறுபது ஆண்டுகள்,கம்பனி ராஜ்ஜியம் கொஞ்சம் கொஞ்சமாக விரிய விரிய, கூடவே நிலமும் அளக்கப்பட்டு,எவரெஸ்ட் சிகரம் வரையிலான முதல் இந்திய வரைபடம் 1862 இல் முழுமை பெறுகிறது. வெளியே தேசங்களின் நாடு பிடிக்கும் ஓட்டம் உச்ச கதியில். இயல்பாக தான் விரியப் போகும் அடுத்த எல்லையாக   பிரிட்டன் திபெத்தை ‘குறி’ வைக்கிறது.  ஆனால் திபெத்தை எப்படி அணுகுவது. இமய வெளியில் அது எங்கே .அமைந்திருக்கிறது. என்பதை எப்படி அறிவது? 1865 துவங்கி இரண்டு வருடம் ஒரு புனிதப் பயணி போர்வையில், நாங்கிங் என்பவர் பிரிட்டன் உளவாளியாக அங்கே அமைகிறார். யாத்ரீகர் குழு ஒன்றுடன் இணைந்து, நேபாளத்தை கடந்து  திபெத் நிலத்தில் நுழைந்து, லாசாவில் பல சிரமங்களை கடந்து தங்குகிறார் நாங்கிங். அன்றைய தலாய் லாமாவை ஒரு பயணி வேடத்தில் சந்திக்கிறார். அங்குள்ள உள்ளூர் வணிகர்களுக்கு கணக்கு எழுதும் வேலையில் அமர்ந்து,தனியே தங்கிக் கொள்ள ஒரு விடுதியும் தேர்வு செய்து கொள்கிறார். கையில் சீதோஷ்ணம் அறிய ஒரு உஷ்ண மானி, நிலம் அறிய ஒரு பாகை மானி, ஒரு திசை மானி.இவற்றை ரகசியமாக வைத்து பராமரிக்கிறார்.

அவர் கையில் வைத்திருக்கும் ஜப மாலையின் நூறு மணிகளை,குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு மணி என தவற விட்டு, குறிப்பிட்ட தொலைவில் இருந்து லாசாவின் தூரம் என்ன என்று கணிக்கிறார். இரவுகளில் பதுங்கி பதுங்கி கூரைகளில் அமர்ந்து, நட்சத்திர வரிசை, தீர்க்க ரேகை வரிசை, சூழலின் உஷ்ணக் கணக்கு இவற்றை அடிப்படையாகக் கொண்டு, கடல்மட்டத்தில் இருந்து லாசா என்ன உயரத்தில் அமைந்திருக்கிறது என கணிக்கிறார். [பின்னர் இவை வரைபட வரைவுக்குள் வந்த போது, நாங்கிங் கணிப்புகள் உயரத்திலும் தூரத்திலும் சில அடிகள் மட்டுமே வித்தியாசம் கொண்டிருந்தது]. ரகசிய குறிப்புகளுடன் கிளம்புகிறார். சம காலத்தில் அவர் கண் முன்னால் சீன உளவாளிகள் சிக்கி தலை இழந்துகொண்டிருக்கும் சூழல். யாத்ரீகர் குழு ஒன்றுடன், சாங்க்போ நதிக்கரை ஓரமாகவே 800 கிலோமீட்டர் வரை நடந்து, பின்தங்கி,நழுவி, மானசரோவர் வழியாக இந்தியா வந்து சேர்ந்து,குறிப்புகளை ஒப்படைத்து, இரண்டு வருட சாகச வாழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்கிறார் நான்கிங்.

அடுத்த ஆவல் துவங்குகிறது, சாங்க்போ நதிதான் இங்கே வந்து கடலில் கலக்கும் பிரம்மபுத்ராவா? எப்படி அறிவது? அடுத்த உளவாளி சிக்கிமை சேர்ந்த கின்தப் திபெத்துக்கு செல்கிறார். அவருக்கு அங்கே நிலவரம் சாதகமாக இல்லை. அடிமையாக சிக்கிக் கொள்கிறார். சில வருட அடிமை வேலை. கோவில் ஒன்றில் தஞ்சம் புகுந்து புத்த பிக்குவாக சில காலம் அந்தக் கோவிலில் தங்குகிறார். அவ்வப்போது ரகசிய வேலை செய்து, குறிப்பிட்ட அளவில் 500 மரக்கட்டைகளை வெட்டி ஓரிடத்தில் பதுக்குகிறார். குறிப்பிட்ட நபர் வழியாக இந்திய அதிகார மையத்துக்கு தான் சிக்கி இருக்கும் நிலையையும், செய்யப் போகும் பணியையும் செய்தியாக அனுப்புகிறார்.

குறிப்பிட்ட நாளில் நாளொன்றுக்கு ஐம்பது கட்டைகள் என பத்து நாளில் ஐநூறு கட்டைகளை, சாங்க்போவின் வெள்ளத்தில் ஒழுகிச் செல்ல விடுகிறார் கின். இது பாரத எல்லைக்குள் வந்து சேர்ந்தால் அப்படி கொண்டு வந்து சேர்க்கும் பிரம்மபுத்ராதான் இந்த சான்க்போ. வேலையை முடித்து தப்பி இந்தியா வருகிறார். இவர் தொலைந்து போனார் எனும் நிலை இங்கே.அவர் அனுப்பிய செய்தி இந்தியா வந்து சேரவில்லை. அவர் செய்த வேலையை இங்கே நின்று ஒருவருமே கவனிக்கவில்லை. எந்தப் பயனையும் விளைவிக்காத சாகச வாழ்வை நிறைவு செய்த கின், [சான்க்போ தான் பிரம்மபுத்ரா என வரைபடம் வந்த பின்னர் அறியப்படுகிறது] எந்த அங்கீகாரமும் அற்று ஒரு தையல்காரராக தனது இறுதி வாழ்நாளை டார்ஜிலிங்கில் கழித்து மறைந்தார்.

தான் நிற்கும் நிலம் முதல், தான் பரவப்போகும் நிலம் வரை, புவியல் அறிவு நோக்கி, போர்சுகல், டச்சு, சீன, பிரித்தானிய தேசங்கள் அந்த அறிவுக்காக தவித்த வரலாறின் பின்புலத்தில் வைத்து அதன் ஒரு பகுதியாக இந்திய வரைபடம் உருவான விதத்தை சொல்கிறது. நூலின் இந்தியாவின் வரைபடத்தை தயாரித்தல் எனும் அத்யாயம். அன்று பொக்கிஷங்களில் தலையாய பொக்கிஷமாக இருந்திருக்கிறது நில வரைபடங்களும், கடல் வழித் தடங்களும் கொண்ட வரைபடங்களும். 1600 களில் இந்தியாவுக்கு வந்த வணிகக்குழு, மொகலாய மன்னருக்கு பரிசாக அளித்த ஐரோப்பிய நிலம் ஒன்றின் அரிய வரைபடம் அவரால் புரட்டிக் கூட பார்க்கபடாமல், கருவூலத்தில் கூட சேர்க்கப்படாமல் திருப்பி அளிக்கப்படுகிறது. அன்றைய இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் உலகப் பிரக்ஞயின் எல்லை இது.

நிலத்தை அறியாததன் பொருட்டு அலக்சாண்டர் கொடுத்த விலை, நிலத்தை அறியாததன் பொருட்டு சிவாஜி வசம் சிக்கி சீரழிந்த ஔரங்கசீப் படை, நாடு பிடிக்கும் போட்டியில் இந்த உயிர் விலையை கொடுக்காமலிருக்கும் பொருட்டு பிரித்தானிய அரசாங்கம் பட்ட பிரயத்தனங்களை விவரிக்கும் அத்யாயம். எட்டு அத்யாயங்கள் கொண்ட ஏழு நதிகளின் நாடு நூல் வழியே, உலகின் மிக இளைய மலைத்தொடரான இமயமலை உருவான கண்டத் தட்டு நகர்வுகளின் காலம் துவங்கி, உலகின் மிக மிகப் பழைய மலைத்தொடர்களின் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் மெல்ல மெல்ல கரைந்தழியும் இன்றைய காலம் வரை, பாரத நிலத்தின் சமூக, அரசியல், கலாச்சார, பண்பாட்டை உருவாக்கிய நில அமைப்பின் வரலாறையும், அந்த நில அமைப்பை சிந்து சரஸ்வதி காலம் முதல் சுதந்திர இந்தியாவின் காலம் வரை பாதித்த இந்த பண்பாட்டுப் போக்கை, பரஸ்பரம் ஒன்றை ஒன்று பாதித்து நிகழ்ந்தவற்றின் வளர்ச்சிப் போக்கை, எதிர்மறை நிலைகளை ஒரு விரிந்த பகைப்புலத்தில் வைத்துப் புரிந்து கொள்ள முயலுகிறார் நூலாசிரியர் சஞ்சீவ் சன்யால்.

கண்டத்தட்டுகளின் நகர்வு வழியே உருவான புராதன இந்தியாவில், குஜாராத் அருகே நிகழ்ந்த டினோசர்களின் ஜுராசிக் காலம், அதற்கும் முன்பான பூச்சிகளின் காலம் இவைகளின் விளக்கத்தில் துவங்குகிறது நூல். ஐம்பது வகைமைக்கு மேலே வரும் எழுநூறு பூச்சி இனங்களின் தொல்படிமங்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் கணிசமானவைக்கு பூர்வீகம் பாரதம் கிடையாது. கண்டங்கள் தாண்டி இருக்கின்றன இவர்களின் மூதாதையர் வரிசை. டினோசர்களின் மூதாதை வரிசையும் அவ்வாறே. கண்ட நகர்வுகளின் யுகம்,பனி யுகம், டோபோ எரிமலை வெடித்த யுகம், பின் அடுத்த கண்ட நகர்வுகள் யுகம் பின் அடுத்த பனி யுகம் இவற்றின் வழியே உருவான இந்திய நிலப்பரப்பின் மனிதர்களுக்கு முன்பான உயிர்கள், இத்தகு வரலாறு காரணமாகவே எங்கோ தாய் நிலத்தைக் கொண்ட இங்கே கலவைக் கலாச்சாரம் கொண்ட சமூக வாழ்க்கைக்குள்தான் படிமங்களாகக் கிடைகின்றன.

பின்பு பிம்பெத்கா வெளியை உருவாக்கிய மானுட சமுதாயம் துவங்கி, சிந்து பண்பாட்டுக்கு முன்பான இந்தியர் வரை, ஆதிக்குடியின் மூலத்தை மரபியல் தரவுகள் வழியே ஆராய்கிறார் சன்யால். ஆரிய படையெடுப்பு, மொழிக்குடும்பம், இனக்கோட்பாடு, குண அடிப்படை கொண்ட வர்ணம், சாதி, இவை எதற்கும் அறிவியல் துணை இல்லை என்பதை அண்மைய ஆய்வுகள் வரை துணைக் கொண்டு படிப் படியாக விளக்கி, மரபணு ஓடை வழியே, இந்த நிலத்துக்கானதூயஆதிக்குடி, இந்த குறிப்பிட்ட காலத்தில் இந்த நிலத்தில் வந்தேறிய குடி என ஏதுமில்லை, இங்கே மனிதர்கள் இருந்தார்கள்,இங்கே பண்பாடு துவங்கியது என்ற வகையில்தான் வேதப்பண்பாடும் சிந்து சரஸ்வதி நாகரீகமும் துவங்கியது என்கிறது நூல்.

சிந்து சரஸ்வதி நாகரீகம் எவ்வாறு முளைத்து, வணிகத்தொடர்புகள் வழியே செழித்து, சரஸ்வதியின் மறைவால் கைவிடப்பட்டு, நகர்ந்து கங்கைக் கரையில் வந்தணைந்தது எனும் சித்திரத்தை அளிக்கும் நூல், சிந்து கலாச்சாரத்துக்கு குதிரை தெரியாது, ஆரிய படையெடுப்பால் அழிந்தது போன்ற நிலைபெற்றுவிட்ட கருதுகோள்களை மைகேல் டானினோ ஆய்வுகள் குறிப்பிட்டு மறுத்துரைக்கிறது நூல். பாரத நிலத்தின் முதல் நகரமயமாக்கலை அது நிகழ்ந்த முறைமையை, அந்த நகரங்களை செழிக்க வைத்த வெளிநாட்டு வணிகம் உள்ளிட்ட கூறுகள் வழியே விளக்கும் சன்யால், டோலவீரா போன்ற நகரங்கள், எவ்வாறு அந்த வணிக உற்பத்திக்கான ஆட்களை தேசமெங்குமிருந்து கவர்ந்திழுத்து புறச் சேரிகளை உருவாக்கியது, அவற்றையும் உள்ளிழுத்து எவ்வாறு வளர்ந்தது, அங்கே பயன்படுத்திய மாட்டு வண்டியும் அது சார்ந்த உழைப்பும் இன்றும் இந்திய நிலத்தில் தொடரும் சித்திரம் என பல பல சித்திரங்களை சுவையாக முன்வைக்கிறார் சன்யால்.

அடுத்த இதிகாச காலத்தில், நிலம் மாறுகையில் எத்தனை வகையாக இவ்விரு இதிகாசங்கள் பரவினாலும், இவ்விரு இதிகாசங்களிலும் காட்டும் இந்திய நிலம் சார்ந்த தகவல்கள் துல்லியமாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் சன்யால். முதலில் வரும் ராமாயணம் வடக்கு தெற்காக இலங்கை வரை விரிய, அடுத்து வரும் மகாபாரதம் கிழக்கு மேற்காக விரியும் சித்திரத்தை குறிப்பிடுகிறார். அங்கிருந்து சாலை வழி,நதி வழி வணிகப் பாதைகள் தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்த தேசங்கள் [மகதம் போல] மகாபாரத காலத்துக்குப் பின்பு உயர்ந்து வந்து இரண்டாம் நகரமயமாக்கலின் துவக்கத்தை நிகழ்த்துவதை சுட்டுகிறார். அடுத்து அவர் முன்வைக்கும் அவதானம்தான் கிளாசிக். புத்தர் தனது முதல் உபதேசத்தை நிகழ்த்தும் சாரநாத் நகரம் வளர்ந்த விதம் குறித்து விவரிக்கிறார். அன்றைய நாளில் ராமாயணமும் மகாபாரதமும் கண்டது போன்ற வணிக வழித்தடத்தில், மொத்த இந்தியாவுக்கும் முக்கியமான நகரமாக, சிலுவைக் குறியின் மையம் போல, இந்தியாவின் குறுக்கும் நெடுக்கும் இணைத்த வணிகப் பாதையின் மையத்தில் நிற்கிறது புத்தர் உபதேசம் நிகழ்த்திய சாரநாத். இன்றும் இந்தியாவை குறுக்கும் நெடுக்கும் இணைக்கும் என் எச் இரண்டு மற்றும் ஏழு இந்த இரண்டு நாற்கரச் சாலைகளின் சந்திப்பு புள்ளி, சாரநாத்துக்கு மிக அருகில்தான் செல்கிறது என்கிறார் சன்யால்.

பின்பு, மௌரியர்களும், குப்தர்களும் உருவாக்கிய கடல் வணிகம், அதன் வழியே செழித்த நகரங்கள் குறித்து தமிழின் சிலப்பதிகாரம் வரை இணைத்து விவரிக்கிறது நூல். நூலாசிரியர் கணக்கின்படி கிபி இரண்டில் உலக வணிகப் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் இருந்து சென்றிருக்கிறது, உலக வணிக பரிவர்த்தனை தங்கத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் இருந்திருக்கிறது. மௌரியர் காலத்தில் இங்கே வந்த மெகஸ்தனிஸ் துவங்கி, ஆங்கிலேயர் காலம் வரை இங்கே வந்த பயணிகளின் [மிகை தவிர்த்த] குறிப்புகள் வழியே பல தரவுகளை முன்வைக்கிறார் சன்யால்.

இணையாகவே பல நுண்ணிய குறிப்புகளும் நூல் நெடுக தொடருகிறது. உதாரணமாக தாமிரலிப்தி சிலிக்கா எரி இவற்றில் செழித்த கயிறு வணிகம், அவை வெளிநாட்டு வர்த்தகத்தில் முக்கிய சரக்காக அமைந்த விதம், போலவே, ஓடிசாவில் குறிப்பிட்ட வகையில், ஆணிகள் அறையாமல், கயிறுகள் கொண்டு தைத்து [பாறையில் முட்ட நேர்ந்தால் மொத்தமாக உடையாமல் இருக்க ஒரு டெக்னிக்] கப்பல் கட்டும் விதம் குறித்து நூல் சொல்கிறது. இப்படி ஒவ்வொரு நகரமாய சூழலிலும் செழித்த தனித்துவமான தொழில்நுட்பங்கள் பலவற்றை சுவாரஸ்யமாக சொல்லிச் செல்கிறது நூல்.

பக்தியார் கில்ஜி படையெடுப்பில் நாளந்தா வீழ, அதே சூழலில் அயல் நிலத்தில் முதல் பல்கலைக் கழகம் துவங்கப்படுகிறது. அறிவின் அச்சு எதிர்திசைக்கு நகர்கிறது. தொடர் படையெடுப்பால் வட தேசங்கள் கலகலக்கும் சூழலில், இங்கே சோழ தேசத்தில் அடுத்த நகர்மயமாதல் நடந்து கொண்டிருக்கிறது. பாபர் துவங்கி டில்லி எனும் நகரம் எத்தனை முறை, எத்தனை வடிவங்களும் விரிவாக்கமும் கொள்கிறது எனும் சித்திரம் வியப்பூட்டும் ஒன்று.

ஆங்கிலேயர் காலத்தில் கல்கத்தா மும்பை போன்ற நகரங்கள் வளர்ந்த சூழலை சொல்லியபடி செல்லும் நூல், இந்தியப் பிரிவினையின் போது நகர்மயச் சூழல் என்னென்ன பாதிப்பை அடைந்தது [டில்லி முழுக்க அகதிகளால் நிரம்பி வழிகிறது] இன்றைய இந்தியாவின் அரசியல் வரைபடத்தை அடைய, சுதந்திரத்துக்குப் பிறகும் கால் நூற்றாண்டு இந்தியா போராடிய விதத்தைத் தொடர்ந்து, இன்று டில்லிக்குப் புறநகராக வளர்ந்துகொண்டிருக்கும் குருகான் நகரின் சித்திரத்தில் வந்து நிறைகிறது நூல்.

மெல்ல விவசாயம் கைவிடப்படுகிறது. நிலங்கள் சொத்துக்கள் அதன் சட்டங்கள் மீதான சிக்கல் தலைமுறை விவசாயம் என்பது இல்லாமல் போகிறது. நிலம் விற்ற காசு கையில். நகரத்துக்கு உழைக்கும் வர்க்கங்களுக்கு நகரத்துக்குள் இடம் இல்லை. இங்கே இந்த புறநகரில் வயல் விற்ற காசில், உரிய அனுமதிகள் தேவை இல்லை எனும் வசதியில், அந்த வர்கத்துக்காக புற சேரிகள் உருவாகின்றன. இப்போது அந்த விவசாயிகள் இங்கே முதலாளி. பின்பு அரசியல். வணிக வளாகங்கள் வருகை. பள்ளியின் வருகை. இங்கே தங்கிய உழைக்கும் வர்கத்தின் அடுத்த தலைமுறை பள்ளிகளை நோக்கி ஆங்கில அறிவு நோக்கி நகர, புறநகர் நகரத்துடன் இனைய, குருகான் ஆறு கிலோமீட்டர் எனும் சாலைக்கல் இப்போது நகரின் மையத்தில். ஒரு நகரம் எவ்வாறு இன்று வளர்கிறது என்பதன் வெவேறு இழைகளில் ஒரே ஒரு இழையை சுட்டி நிறைகிறது நூல். உபரியாக அந்த நகரின் வளர்ச்சிக்காக ஆரவல்லி மலைத்தொடரின் நீட்சி கொஞ்சம் கொஞ்சமாக அழிவதை சொல்கிறது நூல்.

சிந்து நாகரீகம் துவங்கி இந்த நிலச் சூழல்,அது உருவாக்கிய பண்பாடு, அந்தப் பண்பாட்டால் மாற்றி அமைக்கப்படும் நிலத்தின் சூழல் எனும் இந்த இழையின் ஓட்டத்தில் பல்வேறு பண்பாட்டு அசைவுகளை தொடுத்துச் செல்கிறது நூல். உதாரணமாக புலம்பெயர்ந்தது குஜராத்தில் அடைக்கலம் கண்ட பார்சிக்கள் பல வணிகங்கள் வழியே முக்கியமான வணிக சக்தியாக உயர்ந்து ,ஒரு சூழலில் மும்பை நகரம் எனும் மையத்துக்கே அஸ்திவாரமாக அமையும் சித்திரம். ஆங்கிலோ இந்தியர் கலாச்சாரம் உருவாகி, ரயில் பாதைகளை மையம் கொண்டு அவை அமைந்து, ஆஸ்திரேலியா கனடா நிலத்துக்கு சென்று கரைந்து மறையும் சித்திரம். இந்தியாவை தாய் நிலமாக கொண்ட [மரபணு ரீதியாகவும்] ஜிப்சிக்கள் நாடோடிகளாக மாறி உலகம் சுற்றியது, லண்டனில் எழுபத்தி ஒன்றில் அவர்களுக்கு என ஒரு மாநாடு நடந்தது, நாடற்ற அவர்களுக்கு அங்கே அவர்கள் தங்களுக்கு என ஒரு கொடி உருவாக்கிக் கொண்டது, அந்தக் கொடியின் மையத்தில் அசோக சக்கரம் அமைந்தது போன்ற சித்திரங்கள்.

நூலில் எனக்கு பிடித்த மையங்கள் பல. குறிப்பாக இந்த நூல் உருவாக்கிக்காட்டும், இங்கே இயங்கிக் கொண்டிருந்த வேறு விதமான வரலாற்று பிரக்ஞை குறித்த புள்ளி. சரஸ்வதி அந்தர்வாகினியாக ஓடும் அலகாபாத்தில்தான் [காந்தி அஸ்தி கரைத்த பிரயாகை] இந்தியாவை கம்பனி வசமிருந்தது பிரிடன் எடுத்துக் கொண்ட பிறகான, பிரிடன் மகாராணியின் முதல் அறிக்கை வாசிக்கப்பட்டு,அதன் நினைவாக அங்கே ஒரு தூண் நடப்படுகிறது. அங்கே ஏற்கனவே அசோகரின் செய்தி தூண் உண்டு, அதன் அருகே குப்தரின் தூண், இப்படி ஜகாங்கீர் வரை ஒரு வரலாற்று செய்தி வரிசை அங்கே உண்டு.

கேரள மாப்ளா முஸ்லிம் குறித்த சித்திரம் அடுத்தது. நபிகள் காலத்திலேயே இங்கே கேரளத்தில் மசூதி உருவாகி தனித்தன்மை கொண்ட கலாச்சாரம் உருவாகி, இன்று அரபு தேசம் சென்று அந்தக் கலாச்சாரக் கண்ணிகள் இன்றும் கேரளத்தின் பொருளாதார மையத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவதை காட்டும் குறிப்புகள்.

வாசிக்க வாசிக்க எத்தனை வினோத திருகு கண்ணிகள் வழியாக உருவாகி வந்திருக்கிறது நமது கலாச்சாரம் எனும் வியப்பு கூடிக்கொண்டே போகிறது. ஏழாம் நூற்றாண்டில் இராக் நாட்டில் கர்பலா எனும் இடத்தில் நடக்கும் சண்டையில், ஹுசைன் எனும் மன்னருக்காக இங்கிருக்கும் பஞ்சாபை சேர்ந்த மொஹியல் பிராமணர்கள் களமிறங்குகிறார்கள். அவனுக்காக உயிர் துறக்கிறார்கள். இந்த ஹுசைனி பிராமணர்கள் ஒவ்வொரு ஆண்டும் மொகரம் பொழுதில் ஷியா பிரிவினர் உடன் இணைந்து துக்கம் அனுஷ்டிக்கிறார்கள். இது நூல் தரும் இது போன்ற பல்வேறு குறிப்புகளில் ஒன்று.

பாவண்ணன்

அதே போல பதிமூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவுக்கு அகதிகளாக வருகிறார்கள் பர்மா சீன எல்லையில் வாழும் தாய் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இந்துவாக மாறி அசாமில் ஒரு அரசாட்சியை உருவாக்கும் நிலைக்கு உயர்கிறார்கள்.அஹோம்களின் அரசு என்று பெயர் பெற்ற அந்த அரசு,1671 இல் மொகலாயர்களுடன் உச்சக்கட்ட போரில் இறங்குகிறது.  பெஷ்வாக்களுக்கோ சிவாஜிக்கோ கூட சாத்தியப்படாத முழு வெற்றியை அஹோம்கள் அடைகிறார்கள். பிரம்மபுத்ரா நதிக்குள் வைத்து மொத்த மொகலாயப் படையையும் சின்னாபின்னம் செய்து மூழ்கடிக்கிரார்கள்.

எழுத எழுத இந்த நூலின் மொத்த விஷயங்களையும் எழுதிவிட வேண்டும் எனும் உத்வேகம் பொங்குகிறது. சிந்திக்க பல வாசல்களை திறந்து வைக்கும் நூல். உதாரணமாக இந்த ஹுசைனி பிராமணர்களை அடிப்படையாகக் கொண்டு சிவாஜியின் பக்கத்தை நோக்கினால் சிவாஜி படையில் முதன்மை கப்பல் படை தளபதி பெயர் தௌலத் கான். குதிரைப் படை தளபதி பெயர் இப்ராகிம் கான். அவரது படையில் நான்கில் ஒருவர் முஸ்லிம்.  வங்காள வணிகர்களின் பொருளுதவி கொண்டே, கிளைவ் பிளாசி போரில் நவாபை வெல்கிறான் என்கிறது இந்த  நூலின் குறிப்பு. வரலாற்றை திரும்பிப் பார்த்தால் சிவாஜியை அவ்ரங்கசீப் சார்பாக எதிர்த்தவர் ஜெய் சிங்.

இந்த நூலின் ஒவ்வொரு குறிப்பும் சிந்தனையின் வெவ்வேறு பாதைகளை திறப்பன. உதாரணமாக வீரத்துக்குப் புகழ்பெற்ற, சத்ரிய ராஜ்புத் இன் ஒரு பகுதி இன்று சிறுபான்மை அந்தஸ்து கேட்டு போராடிக் கொண்டிருக்கிறது என்கிறது இந்த நூலின் குறிப்பு. அப்படியே இதை ராமகிருஷ்ண மடத்துக்கும் போட்டுப் பார்க்கலாம் ஒரு காலத்தில் இந்திய மறுமலர்ச்சியின் தூண்களில் ஒன்றாக இருந்த மிஷன், இன்று அவர்களும் சிறுபான்மை அந்தஸ்து கேட்டு வழக்காடிக் கொண்டிருக்கிறார்கள்.  இப்படி பலவற்றை இந்த நூல் சார்ந்து சொல்லிக்கொண்டே போகலாம்.  இங்கே நிறுத்திக் கொள்கிறேன். என்னை விட விரிவாக நூலின் உள்ளடக்கத்தை பாவண்ணன் முன்வைத்திருக்கிறார் .சுட்டி கீழே.

சுதந்திர தினம் எனக்கு இனிதே புலர்ந்தது. உங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

கடலூர் சீனு

***

புதிய வெளிச்சம் – ஏழு நதிகளின் நாடு

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று-நீர்ச்சுடர்

$
0
0

 

வெண்முரசு நாவல்தொடரின் இருபத்துமூன்றாவது நாவல் நீர்ச்சுடர். போர்முடிந்து நீர்க்கடன்கள் இயற்றப்படுவதும் யுதிஷ்டிரனின் மணிமுடிகொள்ளலும் இந்நாவலின் கதைக்களம். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டாக மகாபாரதப்போரே நிகழ்ந்துகொண்டிருந்தது. அக்காலங்களில் பலவகையான அலைக்கழிப்புக்கள், கொந்தளிப்புகள். இனி அவற்றிலிருந்து மெல்ல விடுபடுவேன் என நினைக்கிறேன்

நீர்ச்சுடரை செப்டெம்பர் 15 அன்று தொடங்கலாமென நினைக்கிறேன். அப்போது அமெரிக்காவிலிருப்பேன்.

ஜெ

 

வெண்முரசு விவாதங்கள் 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நீதிமன்றத்தில் அனுமன்!

$
0
0

 

எட்டு கிரிமினல் கேஸ் வாங்க

செய்குதுதம்பி பாவலர்

நாஞ்சில்நாடன் முன்னுரை

 

இந்தியாவுக்கு பிரிட்டிஷார் அறிமுகம்செய்த விந்தைகள் பல உண்டு. ரயில்,பேருந்து முதல் தபாலட்டை வரை. அவற்றில் மிகமிக விந்தையாக நம்மவர்களுக்கு அன்று தோன்றியது நீதிமன்றம்தான். இரண்டு காரணங்கள், ஒன்று பொதுவாகவே இங்கே புரணி பேசுவதும் மாறிமாறி வாதம் செய்துகொள்வதும் மிகுதி.இங்கே அத்தனை திண்ணைகளும், ஆலமரத்தடிகளும் அதற்கான களங்கள். அவை இடைவிடாது வழக்குகள் நிகழும் நீதிமன்றங்கள். அதற்கப்பால் இங்கே நீதிவழங்கும் பஞ்சாயத்துக்கள் இருந்தன. சாதித்தலைவர்களின் பஞ்சாயத்து அமர்வுகள், ஊர்த்தலைவர் பஞ்சாயத்துக்கள், சிற்றரசர் பஞ்சாயத்துக்கள். வாய்ச்சண்டைக்கே பஞ்சாயத்து என்று சொல்லும் மரபு. வம்புவழக்குக்கே பஞ்சாயத்து என்பார்கள்.

 

அந்தப் பஞ்சாயத்தை முறையாக வகுத்து, நெறிகள் அமைத்து, அதற்கான ஊழியர்களுடனும் நீதிபதிகளுடனும் வெள்ளையன் அமைத்திருக்கிறான் என்றால் நம்மவர் எண்ணி எண்ணி இறும்பூது எய்தியிருப்பார்கள்.அங்கே சென்றும் பேசலாம், அதைப்பற்றி திண்ணையிலும் பேசலாம். 1861ல் இந்திய உயர்நீதிமன்றச் சட்டத்தின் [The Indian High Courts Act of 1861]  அடிப்படையில் வெள்ளையர் கல்கத்தாவிலும் மும்பையிலும் சென்னையிலும் உயர்நீதிமன்றங்களை அமைத்ததுமே இந்தியாவின் சமூகச்சூழல் எப்போதைக்குமான மாற்றத்தை அடைந்துவிட்டது. மக்களுக்கு தங்களைப் பற்றிய பார்வை, சமூகத்தைப்பற்றிய பார்வை, அதிகாரம் பற்றிய பார்வை மாறிவிட்டது.

 

மலையாள எழுத்தாளர் ஆனந்த் இந்திய நீதிமுறையின் பரிணாமம் பற்றி எழுதிய நூலில் பிரிட்டிஷ் இந்தியப் பகுதிக்கு மன்னர்கள் ஆண்ட பகுதியிலிருந்து பலகோடிப்பேர் சென்று குடியேறினர் என்றும், இன்றும் அவையே மக்கள்தொகை செறிந்த பகுதிகள் என்றும், அதற்குக் காரணம் அவர்களின் நீதியமைப்புதான் என்றும் சொல்கிறார். மக்கள் சோறு தேடி அல்ல நீதி தேடி இடம்பெயர்ந்தார்கள். வெள்ளையன் ஆட்சிக்காலத்தில் சென்று நீதிகேட்க ஓர் இடமிருக்கிறது, அந்த நீதியை கருணையாக அல்லாமல் உரிமையாகக் கோரமுடியும் என்னும் நிலை ஒரு பெரிய வாக்குறுதி

 

வெள்ளையரின் நீதிமன்றங்களின் முக்கியமான சிறப்பியல்புகள் இரண்டு. ஒன்று எழுதித் தொகுக்கப்பட்ட பொதுச்சட்டங்களும் அவற்றுக்கான வரையறைசெய்யப்பட்ட பொதுநடைமுறைகளும். இரண்டு, அவை அனைத்து மானுடருக்கும் நிகரான நீதியை வாக்குறுதி அளித்தன.

 

அன்றுவரையிலான இந்தியாவில் அவ்விரு முறைகளும் இல்லை- ஐரோப்பாவிலேயே நூறாண்டுகளுக்கு முன்னர்தான் அவை உருவாகி வந்தன. நமக்கு தர்மசாஸ்திரங்கள் இருந்தன. அவை சட்டநூல்கள் அல்ல, நெறிநூல்கள். மன்னராட்சியில் மன்னர் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர் அல்ல, சட்டத்தை உருவாக்குபவர்கூட அல்ல, அவரேதான் சட்டம். அவரை ஆசாடங்களும் நம்பிக்கைகளும் கட்டுப்படுத்தலாம், அவ்வளவுதான். ஆனால் பெரும்பாலான மன்னர்கள் இயல்பாகவே அவற்றைக் கடந்துசென்றார்கள் என்பதையும் நாம் காண்கிறோம்.

 

நமக்கு எல்லா காலத்திலுமே சாதிக்கேற்ப நீதி என்பதே நெறியாக இருந்துள்ளது. ஒரு நவீனச் சமூகத்தில் அது அறமில்லாதது என்று தோன்றலாம். ஆனால் அன்றைய சமூகமே சாதியாக வகுக்கப்பட்டு சாதிகளாகவே செயல்பட்டது என்னும்போது அதுவே இயல்பானது. அன்றைய சமூகத்தை அது உறுதியான மேல்-கீழ் என்னும் அடுக்கதிகாரக் கட்டமைப்புக்குள் நிலைநிறுத்தியது.  அனைவருக்கும் நீதி என்னும் கருதுகோளே மானுடம் வரலாற்றில் கடைசியாக வந்தடைந்த ஒன்று. அது ஐரோப்பிய மறுமலர்ச்சி உலகுக்கு அளித்த கொடை

 

ஆகவே பிரிட்டிஷாரின் நீதிமுறை இந்தியர்களுக்கு மிகப்பெரிய வரமாக இருந்துள்ளது. பிரிட்டிஷார் மேல் சாதாரணமான இந்தியர்கள் கொண்ட நம்பிக்கை இருநூறாண்டுகள் நீடித்தமைக்குக் காரணம் அவர்களின் நீதியமைப்புதான். இந்தியாவின் விடுதலைப்போரை முன்னெடுத்த தலைவர்கள்கூட பிரிட்டிஷ்நீதிமேல் தங்கள் நம்பிக்கையை வலியுறுத்துபவர்களாகவே இருந்தனர். காந்தி உட்பட

 

ஆனால், இங்கே பிரிட்டிஷ்பாணி நீதிமுறை வந்துசேர்ந்ததுமே அது சீரழியத் தொடங்கியது. இந்திய மன்னர்களின் அரசவைகளில் இருந்த எல்லா வகையான துதிபாடல் முறைகளும், லஞ்சமும், ஓரம்சார்ந்த பார்வையும் உள்ளே வந்தன. பொய்சாட்சி சொல்லுதல், பொய்சான்றுகள் உருவாக்குதல் ஆகியவை உச்சத்தை அடைந்தன. தமிழில் எழுதப்பட்ட முதல்நாவல்களிலேயே நீதிமன்றமுறையின் ஊழல் பேசுபொருளாகியிருக்கிறது. குறிப்பாக பத்மாவதி சரித்திரம் [அ.மாதவையா] மிகவெளிப்படையாகவே நீதிமன்ற ஊழல்களைப் பற்றிப் பேசுகிறது. கொலைக்கேஸில் விடுதலைபெற ஐந்தாயிரம் ரூபாய் நீதிபதிக்கு அளிக்கவேண்டியிருந்தது என்று மாதவையா சொல்கிறார்.

 

பத்மாவதி சரித்திரத்தில் வரும் சீதாபதி அய்யர் என்பவர் போலி ஆவணங்களை உருவாக்குவதில் நிபுணர். ஏனென்றால் அன்று இந்தியச் சமூகத்தில் ஆவணங்கள் மிகக்குறைவு. அவையும் பெரும்பாலும் நீட்டோலை ஆவணங்கள். அவற்றை நேரடி ஆவணங்களாகக் கொள்ளமுடியாது, அவ்வாறு விளக்கிக்கொள்ளமுடியும் அவ்வளவுதான். ஆவணங்களைப் பற்றிய புரிதல் மக்களிடையே இல்லை. ஆகவே ஆவணங்களைப்பற்றி அறிந்தவர்கள் பொய்யான ஆவணங்களை உருவாக்கி உடைமைகளைப்பிடுங்குவது ஒரு தொழில்போலவே நிகழ்ந்திருக்கிறது

அத்துடன் அந்தக்காலகட்டம்தான் இந்தியாவின் நிலம் முறையாக அளந்து அடையாளப்படுத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட காலம். ஆகவே நிலவுரிமை சார்ந்த வழக்குகள் குவிந்தன. அதையொட்டிய அடிதடிகளும் நீதிமன்றத்தைச் சென்றடைந்தன. அடிதடி கொலை முதலியவை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் வரையறைசெய்யப்பட்ட குற்றங்களாகப் பார்க்கப்பட்டன. அதை அறியாமல் அவற்றில் ஈடுபட்டு சிறைசென்றனர் [உதாரணமாக சொந்த மகனையும் மருமகனையும் கடுமையாகத் தாக்கிவிட்டு சிறைசெல்வது நெல்லைப் பகுதியில் மிகுதி. சொந்த மகனைக்கூட  அடிக்கக்கூடாதா என்று கடைசிவரை புலம்பிக்கொண்டும் இருப்பார்கள்]

 

ஆகவே அன்று நீதிமன்றம் அன்றாடவாழ்க்கையில் ஒரு பகுதி என கலந்திருந்தது. நீதிமன்ற நடவடிக்கைகளில் அனைவருக்குமே பேரார்வம் இருந்தது. சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூட நீதிமன்றச் சொற்கள் கையாளப்பட்டன. நீதிமன்றம் சார்ந்த பழமொழிகள் உருவாயின. நீதிமன்றம் போலவே கிராமப் பஞ்சாயத்துக்கள் உருமாறத் தொடங்கின

 

அந்தச்சூழலைப் புரிந்துகொண்டால் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் எழுதிய எல்லாருக்கும் பார்க்கத்தகுந்த எட்டு கிரிமினல் கேஸ் என்னும் நூலை ஆர்வமாக வாசிக்கமுடியும். சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர்அவர்கள் நாகர்கோயில் இடலாக்குடி பகுதியைச் சேர்ந்தவர். ஷேக் என்னும் சொல்லின் தமிழ் வடிவம் செய்கு. பக்கீர் மீரான் சாகிபுவுக்கும் அமீனாவுக்கும் மகனாக 1874ல் பிறந்தார். திருவிதாங்கூர் அரசுப்பள்ளிகளில் மலையாளம், பழந்தமிழ் பயின்றார். ஆங்கிலத்தின் தன்முயற்சியால் பயிற்சிபெற்றார். சம்ஸ்கிருதமும் அரபியும் கற்றிருந்தார். அவருடைய தமிழாசிரியர் கோட்டாறு பட்டாரியார் வீதியில் வாழ்ந்த சங்கரநாராயண அண்ணாவி என்பவர்.

 

சென்னை சென்று தக்கலை பீர்முகம்மது அப்பா அவர்களின் ஞானப்புகழ்ச்சியையும் உமறுப்புலவரின் சீறாப்புராணத்தை பிழைநோக்கிப் பதிப்பித்தார். கம்பராமாயணம் சீறாப்புராணம் முதலிய செவ்விலக்கிய நூல்களிலும் இலக்கணங்களிலும் விற்பன்னர். அவற்றைக்கொண்டே சதாவதானம் என்னும் கவனகக்கலையை நிகழ்த்துபவர். சிறந்த சொற்பொழிவாளர். காந்திய இயக்கத்தில் தீவிர ஈடுபாடுகொண்டிருந்தார். 1950ல் மறைந்தார். கோட்டாறு இடலாக்குடியில் அவருடைய நினைவுமண்டபம் அமைந்துள்ளது

 

எட்டுகிரிமினல் கேஸ் என்ற இந்நூல் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட நூல்களில் ஒன்று. இது எட்டு நீதிமன்றவழக்குகளைப் பற்றியது. ஆனால் மெய்யான வழக்குகள் அல்ல. புராண, இதிகாச நிகழ்ச்சிகளை நீதிமன்ற வழக்குகளாக புனைந்திருக்கிறா. அரிச்சந்திரன் வழக்கு, சூர்ப்பனனை மூக்கறுத்த வழக்கு, வாலியை ராமன் கொன்றது பற்றிய வழக்கு, இலங்கையை அனுமன் எரித்தது பற்றிய வழக்கு, ரம்பையை பலவந்தம் செய்த வழக்கு, கோபிகைகளின் ஆடைகளை கண்ணன் கவர்ந்தது பற்றிய வழக்கு, துரோபதை [திரௌபதி] ஆடையை துச்சாதனன் களைந்தது பற்றிய வழக்கு, கீசகன் பாஞ்சாலியை கற்பழிக்க முயன்ற வழக்கு ஆகியவை.  இவற்றில் இலங்கை எரித்த வழக்கில் மேல்முறையீடு [அப்பீல்] நிகழ்ந்திருக்கிறது. திரௌபதி அவைச்சிறுமை செய்யப்பட்ட வழக்கில் மறுவிசாரணை நிகழ்ந்திருக்கிறது

 

எல்லா வழக்குகளும் நீதிமன்ற ஆவணமொழியில் அசல் ஆவணங்களைப்போலவே அமைந்திருக்கின்றன அரிச்சந்திரன் வழக்கில் வாதி அரிச்சந்திரன், சுக்கிரன், காசிராஜன் ஆகியோர். பிரதிவாதிகள் விஸ்வாமித்திரன், சுக்கிரன், காசிராஜன். வாதிபக்கமும் பிரதிவாதிபக்கமும் சாட்சிகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றனர். வாதியின் வக்கீல் எம்.சத்யவாகீசுவரையன். பிரதிவாதி மக்கீல் மிஸ்ற்றர் மௌற்கல்லியன் [வெள்ளைக்காரர்!] மூன்றாம் பிரதிவாதி வக்கீல் கே.விஸ்வநாதையன்.

 

வியாச்சியம் இப்படி ஆரம்பமாகிறது ‘1 ஆம் பிரதிவாதி மனப்பூர்ணமாய் என்னை வேதனைப்படுத்தவேண்டுமெனவும் எனது சத்தியத்திற்கு விரோதஞ்செய்யவேண்டுமென்றவும் இன்னும் பலவிதமான கெட்ட எண்ணத்தோடும் தாம் கேட்ட திரவியத்தை கொடுக்கிறேனென்ற வாக்குத்தத்தை வஞ்சகமாக் முன்னரே என்னிடத்தில் வாங்கிக்கொண்டு…..” இப்படி முடிகிறது “இது சிக்ஷாநியமம் 415, 416, 304, 302, 552, 333 ஆகிய இவ்வகுப்புகளின்படி தண்டிக்கத்தக்க குற்றமானதினாற் பிரதிவாதிகளையும் சாக்ஷிகளையும் வரவழைத்துக்கேட்டு தீர்மானப்படுத்தி நியாயஞ்செலுத்தவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்”

அன்றைய நீதிமன்ற மொழி இது. குற்றம் நிகழ்ந்தால் மட்டும்போதாது, அந்தக்குற்றம் செய்யவேண்டுமென்ற நோக்கமும் செய்தவருக்கு இருக்கவேண்டும் என்பதனால்தான் மனப்பூர்ணமாய் என்னை வேதனைப்படுத்தவேண்டும் என்றும் பலவிதமான கெட்ட எண்ணத்துடனும் நடந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. ஆச்சரியம் என்னவென்றால் இன்றைக்கும் போலீஸி ‘மகசர்’ எழுதுவது இந்த மொழியில்தான்.

வழக்கு விசாரணை இப்படி நிகழ்கிறது. பிரதிவாதியாக கூண்டில் நிற்பவர் அனுமன்.

வாதியை தெரியுமா

தெரியும்

நீ வாதியினது இராச்சியமான இலங்காபுரிக்கு எப்போதாவது போனதுண்டா?

உண்டு

அப்படிப்போவதற்கு காரணம் யாது?

எனது இரட்சகரான ராமபிராது மனைவியாகிய சீதையம்மாளை இந்த வாதி திருடிக்கொண்டுபோய் தனது நாடாகிய இலங்காபுரியினர்து ராஜதானியில் வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதையறிந்து வரும்படி பிரானவர்கள் என்னை அனுப்பினார்கள். அக்கட்டளைப்படி அங்கு போனேன்.

நீங்கள் கேள்விப்பட்டபடி அந்த அம்மாள் அங்கே இருந்தார்களா?

இருந்தார்கள்

அப்பால் நீர் செய்தது யாது?

இப்படி விசாரணை நீள்கிறது. எல்லா வழக்குகளிலும் நீதிபதி விரிவாக தீர்ப்பு வழங்குகிறார். கீசகன் பாஞ்சாலியைக் கற்பழிக்க முயன்ற வழக்கின் தீர்ப்பு இப்படி முடிகிறது.

தீர்மானம்

முற்கூறிய காரணங்களினால் இந்தியன் பினல்கோர்டு 375 511 ஆகிய இவ்வகுப்புகளின்படியுள்ள குற்றங்களைப் பிரதிவாதி செய்திருப்பதாகத் தெரிகின்றது. ஆதலால் அக்குற்றங்களைப் பிரதிவாதியின்மீது ஸ்தாபகப்படுத்தி அதற்காக வாதியினது நாயகனாகிய வீமன் பிரதிவாதியாகிய கீசகனைப்பிடித்து அவனது மார்பைப்பிளந்து அவனைக்கொல்லும்படி தீர்மானித்திருக்கின்றேன்

தேவலோகம் டிஸ்திரிக்கட்டு மாஜிஸ்திரேட்டு

தேவேந்திரையன்

[கையெழுத்து]

 

இந்நூல் 1907ல் வெளியானது. கோல்டன் அச்சு இயந்திரசாலை டி.கோபால்நாயக்கர். இட்டா பார்த்தசாரதி நாயிடு அவர்களின் நிதியுதவி நூலுக்கு இருந்திருக்கிறது.நோட்டு, ஆர்டர், ஜட்ஜிமெண்டு,வக்கீல் கிறாஸு போன்ற ஆங்கிலச்சொற்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை அக்கால வாசகர்களுக்கு பெரிய கிளர்ச்சியை உண்டுபண்ணியிருக்கும் என நினைக்கிறேன். என் அப்பா லட்டுலட்டாக வாசித்து மகிழ்ச்சி அடைந்திருப்பார்.

 

இந்நூல் ஏன் வெளியானது என்பது ஆர்வமூட்டக்கூடியது. பாவலர் உசாவும் இவ்வழக்குகள் புராணப்பிரசங்க மேடைகளில் புகழ்பெற்றவை. இவை சில அடிப்படையான அறச்சிக்கல்களை எழுப்புபவை. மரபான அற,ஒழுக்க,நீதிப் பிரச்சினைகளை பிரிட்டிஷ் நீதிமுறைக்குள் வைத்து ஆராயமுயல்பவை இந்த வழக்குகள். அன்று உண்மையிலேயே நம் சமூகத்தின் மிகப்பெரிய சிந்தனைப்பொருளாக இது இருந்திருக்கிறது. நாம் வழிவழியாக சரிதவறுகளை வகுத்து வைத்திருக்கிறோம். அவை திடீரென்று பிரிட்டிஷாரின் நீதிமன்றத்தால் நிறுவப்படவேண்டியவை ஆகிவிட்டன. அச்சூழலில் நம்முடைய மொத்த அறவியலையும் ஒழுக்கவியலையும் புதிய சட்டமுறையை வைத்து ஆராய்ந்தாக வேண்டியிருக்கிறது

 

இன்றும்கூட இப்பிரச்சினை உள்ளது. இன்றும்கூட நாம் விவாதங்களில்  ‘சூர்ப்பனகையை மூக்கறுத்த ராமன் இன்றிருந்தால் ஈவ்டீசிங் வழக்கில் உள்ளே போயிருபபார்’ என்று பேசுகிறோம். “சொந்தப்பெண்டாட்டியை நாலு அடிபோட கணவனுக்கு உரிமை இல்லையா?” என சட்டத்தைமரபான பார்வையைக்கொண்டு அறைகூவல் விடுக்கிறோம். நூறாண்டுகளுக்கு முன் மூவாயிரம் ஆண்டுக்கால மரபை நவீன பிரிட்டிஷ் சட்டமாக ஆக்கிக்கொள்ள போராடிக்கொண்டிருந்திருப்பார்கள். அச்சூழலில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது

 

ஆகவே அன்று இந்நூல் மிக விரும்பி வாசிக்கப்பட்டிருக்கும். உண்மையில் இது ஒரு நீதிமன்ற நிகழ்வுபோல மேடைகளிலும், உள்ளரங்குகளிலும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதன்பின்னர்தான் நூல் வடிவில் எழுதியிருக்கிறார். இன்றும்கூட வழக்காடுமன்றம் என்னும் வடிவில் இந்த விவாதக்கலைநிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது

 

இன்று வெறுமே இலக்கிய ஆராய்ச்சிக்காக மட்டுமல்ல, அன்றைய சிந்தனைமுறை எப்படி இருந்தது என்பதை அறியவும் என்னென்ன மாற்றங்கள் அதில் நிகழ்ந்தன என உணரவும் உதவும் நூல் இது. ஒரு மரபான சமூகம் தன் நம்பிக்கைகளை புதிய அறவியலுக்குள் கொண்டுவந்து பொருத்திக்கொள்வதற்காகச்  செய்துகொண்டிருந்த முயற்சியை இதில் காணலாம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இருபத்தொரு குரல்கள்

$
0
0

 

 

கேரளத்தின் தேசியகலை என்பது இப்போது பலகுரல், போலிக்கரல்கலை தான். இங்கே தமிழகத்தில் பலகுரல் என்றாலே புகழ்பெற்ற வசனங்களைச் சொல்வதுதான். நமக்கு அந்த வசனம் தெரியும் என்பதனால்தான் அது அப்படி கேட்கிறது. இவர் வெவ்வேறுகுரல்களில் பாடுவது ஆச்சரியமானதுதான்.  பெரும்பாலான மலையாளக்குரல்கள் அச்சாக அப்படியே வந்திருக்கின்றன.  [ஆனால் பெண்குரல்கள் ஒப்பி வரவில்லை’]

 

உண்மையில் இந்த போலிக்குரல் என்னும் இயல்பு மல்லுக்களின் அன்றாடப்பேச்சிலேயே வரத்தொடங்கிவிட்டது

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பகடி -போகன்- நேர்காணல்.

$
0
0

 

டான் குவிக்சாட் போன்ற புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளை அங்குதான் படித்தேன். ஏனோ சமையல்கலைப் புத்தகங்கள் மீது ஒரு ஈடுபாடு இருந்தது. அறுபது வகையான வங்காளச் சமையல் என்ற புத்தகத்தை ஏன் அவ்வளவு ஆர்வத்துடன் படித்தேன் என்று இப்போது விளங்கவில்லை.அந்த புத்தகத்தை சில பழைய அணில் மாமா புத்தகங்களை நூலகரிடம் லஞ்சம் கொடுத்து விலைக்கு
வாங்கவும் முயற்சி செய்தென். கடமை தவறாத அவர் மறுத்துவிடடார்.பெரியாரின் புத்தகங்களை நான் படிக்க ஆரம்பித்த பிறகுதான் அவர் சற்று பதற்றமடைந்தார்.

 

”பகடியை நிறுத்து என்கிறவர்கள் அடிப்படையில் ஒருவனை எழுதுவதை நிறுத்து என்கிறார்கள்.” -போகன் சங்கர்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சித்தார்த்தனும் தம்மமும்-சிவக்குமார் ஹரி

$
0
0

 

தம்மம் தந்தவன் நாவலை வாங்க

 

புத்தர் என்பது ஒரு நிலை. அது ஒருவருடைய பெயரல்ல கெளதம புத்தராக அறியப்படும் சாக்கிய முனி புத்தருக்கு முன் ஏராளமான புத்தர்கள் இருந்திருக்கிறார்கள். அவருக்குப் பின்னும் ஏராளமானோர். அவரது சமகாலத்திலும் மகாவீரர் உட்பட தேடுவதும் அலைதலும் கொண்டு கண்டடைந்தோர் பலர். அவர்களில் ஒருவனாக வருபவன் தான் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தன். சித்தார்த்தன் ஒரு அந்தணச் சிறுவன். அந்தணர்களுக்குரிய அனைத்து கல்வியையும் தன் தந்தையிடம் இருந்து முழுமையாக கற்றுத் தெளிகிறான். அனைத்து அனுஷ்டானங்களையும் குறைவின்றி கடைபிடிக்கிறான் என்றாலும் அவனுக்குள் ஒரு நிறைவின்மை சதா இருந்துக் கொண்டே இருக்கிறது. மிகக் குறிப்பாக எதற்காகவென இன்னமும் துலக்கம் பெறாத தெளிவற்ற இன்மை அது. அவனே தன் சொந்த தகுதியில் ஆசிரியராகி பிற மாணாக்கர்களை பயிற்றுவிக்க முடியும் அதுவே அவர் தந்தையின் விருப்பமும் கூட. ஆனால் சமணர் குழாம் ஒன்றை சித்தார்த்தன் பார்க்கும் போது அவனுக்கான முதல் அழைப்பாக உட்குரலை கேட்கிறான். ஆனால் தந்தையிடம் தன் விருப்பத்தை தெரிவிக்கும் போது அதை கடுமையாக மறுக்கிறார். தன் நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருக்கும் சித்தார்த்தனின் உறுதி இறுதியில் தந்தையை அசைக்கிறது. தன் நிழல் போல் இருக்கும் நண்பன் கோவிந்தனுடன் புறப்படுகிறான் சித்தார்த்தன்.

விடுதலைக்கான அடிப்படையான வழிகள் இரண்டு. ஒன்று அன்பின் வழி மற்றொன்று சுதந்திரத்தின் வழி. அன்பின் வழியை தேர்பவர்கள் சுதந்திரத்தில் முழுமை கொள்கிறார்கள். சுதந்திரத்தின் வழி தேர்பவர்களின் முழுமை அன்பிலேயே இருக்கிறது. இன்னொரு வகையில் இது இல்லறம் தேர்பவர்களுக்கும்(அன்பின் வழி) துறவறம் தேர்பவர்களுக்குமானது.(சுதந்திரத்தின் வழி). இது ஒன்றையொன்று முழுமை செய்கிறது. விலாஸ் சாரங்கின் கெளதம சித்தார்த்தன் முதலில் இல்லறம் தேர்கிறான். அவன் சத்ரிய குலத்தை அரச குடும்பத்தைச் சேர்ந்தவன். காமத்தின் ஆசையின் சுவையை அறிந்தவன். பிம்பாவை கைபிடிக்கும் போது அவளிடம் ஒருவித விலக்கத்துடனே நடந்து கொள்கிறான். ஒரு குழந்தையின் பிறப்போடு விடைபெறுவான் என்ற உண்மை பிம்பாவை சுடுகிறது. அதன் காரணமாகவே பல வருடங்கள் தள்ளிப் போடப்பட்டு இறுதியாக பிம்பா ஒரு குழந்தையைப் பெறும் போது சித்தார்த்தன் எந்தவித சலனமுமின்றி பிரிந்து போகிறான். ஹெஸ்ஸேயின் சித்தார்த்தன் முதிரா இளைஞன். யசோதரையை பிரிபவன் பழுத்த கனி. உள்ளத்தாலும் உடலாலும் முதிர்ந்த இளைஞன். ஹெஸ்ஸே சித்தார்த்தனுடைய அறிவு ஏட்டுச் சுரைக்காய் கௌதம சித்தாரத்தனுடையது அனுபவ அறிவு. இருவருடைய வெளியேற்றத்தின் பின்புலம் இது.

சமணருடன் சேரும் சித்தார்த்தன் கடுமையான நோன்புகளை நோற்கிறான். உடலை வருத்தி பல நாட்கள் பட்டினி கிடந்து உடலை கடக்க விழைகிறான். இதனால் பல நன்மைகளை அடைந்தாலும் அவன் இறுதியில் துவக்கப் புள்ளிக்கே வந்து சேருகிறான். தியானம் என்பது சில மணிநேரம் சுய உணர்வற்று போவது தானே மது அருந்துபவனும் சில மணிநேரம் தன்னை மறக்கத் தானே அதனை செய்கிறான். என் சாதனைகளிலும் நான் தற்காலிக ஓய்வைத்தான் அடைகிறேன் கோவிந்தா. இதுவும் கடந்து செல்ல வேண்டியதுதான் என்று தன் நண்பனிடம் கூறுபவன் தான் கற்ற சித்து வேலைகளை பயன்படுத்தியே சமணரிடம் இருந்து விடை பெறுகிறான். புத்தரின் புகழ் அதற்குள் மிக வேகமாக பரவியிருந்தது. நண்பன் கோவிந்தனுடன் புத்த சங்கத்தை அடைகிறான் சித்தார்த்தன். கோவிந்தன் புத்தரால் ஈர்க்கப்பட்டு அதுவே தன் அறுதியான இடம் தான் இருக்கப் போகும் இடம் என முடிவு செய்கிறான். சித்தார்த்தனோ புத்தரை கண்டு உரையாடிய பின்பும் சமாதானமடையாமல் தன் போக்கில் போகிறான்.

சித்தார்த்தன் புத்தர் சந்திப்பு- கதையின் முக்கியமான பகுதிகள் இரண்டு இது முதலாவது. புத்தரிடம் சித்தார்த்தன் வேறுபடும் இடம். காரணகாரியங்களுடன் கடவுளை பற்றி நிற்காத ஒரு போதனையை தாங்கள் கூறுவது நிகழ்வுகளின் தொடர்ச்சி அது சார்ந்த ஒருமை போன்றவை கேட்பவரை சீண்டி அதனை ஏற்கச் செய்யும் அல்லது முரண்பட செய்யும் ஆனால் இந்த ஆனால் மிக முக்கியமானது. உலகினின்று மேலேறுதல்- உலகை மறுத்தல் என்பது அதில் ஊடும் பாவுமாக தொக்கி நிற்கிறது. சித்தார்த்தன் இதை ஒரு பிழையாகவே காண்கிறான். அவன் புத்தரை மறுத்து வெளியேறும் இடம் இது. புத்தரும் இவ்வாறு பலரை மறுத்தும் ஏற்றும் வெளியேறியவர் தான். தன் தேடுதலின் காலத்தில் வாழ்க்கையின் முதலும் முடிவுமான பிரச்சினை துன்பம் மட்டும் தான் என்று உறுதியாக இருந்தார் புத்தர். அவருக்கு எதை வெல்ல வேண்டும் என்பது குறித்து ஒரு வகை தெளிவு இருந்தது. ஆகவே அவரது அலைதல் தெளிவற்றது என்று கூற முடியாது. பல வகையான பயிற்சிகளையும் கடுந்தவங்களையும் மேற்கொள்கிறார் புத்தர். ஆனால் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தனிடம் துன்ப விடுதலை என்பது மட்டுமே குறிக்கோள் அல்ல. இந்த கனி முதிர்வதற்கு நாளாகும் என்பதை புரிந்து வாழ்த்தி அனுப்புகிறார் புத்தர்.

ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தன் தற்காலத்தைச் சார்ந்தவன் தான். முழுமையான ஒரு தனிமனிதவாதி. உறவோடும் ஞானத்தோடும் வாழ விழைபவன். அவனுக்கு துன்ப விடுதலை முதன்மையானது அல்ல அது ஒரு பொருட்டாகவே கூட இருப்பதில்லை. அவன் அடிப்படையான கேள்வி புத்தராக ஏன் ஸோர்பாவை மறுக்க வேண்டும் என்பது தான். மிக திட்டவட்டமான நெறிமுறைகளை தரும் சங்கங்கள் அவனுக்கு உவப்பாக இருக்கவில்லை. வழியில் காணும் புத்தரை இந்த அடிப்படையிலேயே மறுத்துச் செல்கிறான்.

விலாஸ் சாரங்கின் கெளதம சித்தார்த்தனுக்கு உலகியல் நோக்கங்கள் எதுவும் கிடையாது. உண்மையில் தன் மனைவி பிம்பாவைக் கூட ஒரு வகையில் தயார் படுத்துகிறான் தான் விட்டுச் செல்லும் நாளில் ஏமாற்றமும் வேதனையும் அடையாமல் இருக்க. ஹெஸ்ஸேயின் சித்தார்த்தனோ தன் முடிவில் உறுதியாக தன் தந்தையை ஏற்கச் செய்கிறான். உலகியல் சார்ந்த விருப்பங்கள் உள்ளுக்குள் அடங்கியிருக்கிறது. கமலாவை சந்திக்கும் போது அது வெளிப்படுகிறது. உண்மையில் கமலாவே அவனுக்கு முதல் குருவாக அமைகிறாள். அவள் ஒரு தாசி அவள் வேண்டுவதை வேண்டுவது போல் சித்தார்த்தன் இருப்பதை கோருகிறாள். அப்போது மட்டுமே தன்னை அடைய அவன் தகுதியானவன். அவளுக்காக ஒரு வேலையில் சேர்கிறான். பொருள் ஈட்டுகிறான். ஒரு குழந்தையையும் பெறுகிறான். சம்சார கடலில் மூழ்குபவன் மீண்டும் தோணிக்காரனை அடையும் போது தான் இழந்தவைகளை புரிந்து கொள்கிறான். ஆற்றுடன் பேசுகிறான் அதனுடன் சிரிக்கிறான் ஆற்றுடனேயே இசைந்து வாழ்கிறான். வாசுதேவனே தன் இரண்டாவது குரு என கூறும் போது அவன் அதை மறுத்து ஆறு தான் நம் குரு என்கிறான்.

கெளதம புத்தரின் மகன் தீக்கை பெறுவதும் அவரது சங்கத்தில் சேர்வதும் மிக இயல்பாக நடக்கிறது. அவன் தந்தையான புத்தரை பணிகிறான்.. அவனுக்கு கலைகளில் ஆர்வம் இருந்தாலும் முற்றான துறவை தந்தையின் நோக்கத்திற்கு மாறாக எதுவும் செய்யவில்லை. ஆனால் சித்தார்த்தனின் மகன் அவன் மேல் கடும் வெறுப்பு கொள்கிறான். அவன் நேசிக்கப்பட்டாலும் அதுவே அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. சித்தார்த்தனின் இனிமையும் நேசமுமே ஒரு நுண்ணிய தளையாக உணர்கிறான். அவன் போக்கில் விட்டு விடுவதே சிறந்தது என்கிறான் வாசுதேவன். மகன் பிரியும் போது சித்தார்த்தன் தன் தந்தையை பிரிந்து வந்த ஒரு வட்டம் முழுமையடைகிறது. வாசுதேவனுடனும் ஆற்றுடனும் அவன் முழுமையடைகிறான். ஒவ்வொரு உண்மையிலும் அதன் எதிர்மறையான தும் அதே அளவு உண்மை என்கிறான் சித்தார்த்தன் தன் நண்பன் கோவிந்தனிடம். அவன் அறிந்ததும் தெரிந்ததுமான திரண்ட கருத்து இது. கனி இப்போது முதிர்ந்து விட்டது. Samsara is nirvana என்ற பிற்கால முழக்கங்களின்
முதல் குரல் ஹெஸ்ஸே. இருமைகளை கடந்த ஒரு சிந்தனையின் முழுமையை சித்தார்த்தன்-கோவிந்தன் உரையாடலில் இறுதியாக வழங்குகிறார் ஆசிரியர். இவர் பெயர் இல்லை என்றால் நிச்சயம் இதை இந்தியர் எழுதியிருப்பதாகவே கருதுவோம். விலாஸ் சாரங்கின் பெயர் இல்லாவிட்டால் தம்மம் தந்தவன் முற்றிலும் மேற்கை சேர்ந்த ஒருவர் எழுதியதாகவே கருதலாம்.

தம்மம் தந்தவன் நூலில் புத்தரின் போதனைகள் இல்லை ஆனால் ஒரு குறுக்கு வெட்டு தோற்றத்தில் அவரது வாழ்க்கையை அறியலாம். அவரது போதனைகளை அறிய இந்தப் பிண்ணனி மிக அவசியமானது. ஹெஸ்ஸே சித்தார்த்தாவின் கடைசிப் பகுதி சித்தார்த்தன் கோவிந்தனிடம் கூறுவதாக வருவது சென்ற நூற்றாண்டில் திரண்டு வந்த தனிமனித வாதத்தில் இருந்து கிளைத்து வந்த மகத்தான மானுட தரிசனம். பகவத்கீதையில் கிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனத்திற்கு நிகரான ஒரு அனுபவத்தை அடைகிறான் கோவிந்தன்.

ஆனாலும் அதன் முதல் விதை ஊன்றப்படுவது புத்தரிலிருந்து தான். அந்த மகத்தான சுதந்திரத்தின் ஊற்று அவரின் கடைசி வரிகள்.

“நீங்கள் எண்ணி அசை போட நான் என் சிந்தனைகளை உங்களுக்கு அளித்துவிட்டேன். இனி உங்களுக்கானதொரு சிறந்த பாதையை நான் முன்மொழிந்த கேள்விகள் மூலமும் இலக்குகள் மூலமும் நீங்களே சுதந்திரமாகப் படைத்துக் கொள்ளுங்கள். உங்களின் விமோசனத்திற்காக விடாமுயற்சியுடன் பாடுபடுங்கள். நான் விடைபெற்றுச் செல்கிறேன். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.”

மேலை பெளத்த நோக்கு இருவகையானது. மரபார்ந்த தேரவாதம் அவர்களுக்கு ஆர்வமூட்டுவதல்ல மாறாக மாத்யமிக மற்றும் ஸென் பெளத்தமே அவர்களுக்கு அணுக்கமாக உணர்கிறார்கள். பெளத்தத்தை மதமாக அல்லாமல் தத்துவமாகவே அணுகுகிறார்கள். அதற்கான அடிப்படைகள் திபெத்திய பெளத்தத்திலும் ஸென்னிலும் மேலதிகமாக இருக்கின்றன. தாங்கள் பிறந்த மதத்தின் மீது ஒவ்வாமை கொண்ட அதன் போதாமைகளை உணர்ந்த ஒரு தலைமுறையே 1960களிலும் 70களிலும் பெளத்தம் உள்ளிட்ட கீழைத்தேய தத்துவங்களிடம் திரும்பியது. அது தனிமனித வாதத்துடன் சேர்த்து பெளத்த சிந்தனையை புதிய முறையில் விளக்க முற்பட்டது. ஹெஸ்ஸேயின் நூல் அந்த வகையில் முதன்மையானது. குருட்ஜியெஃப் (gurdjieff)போன்றோர் பல வஜ்ராயன புத்த முறைகளை தங்கள் தியானங்களில் பயன்படுத்தினர். அந்த வகையில் applied Buddhism என்பதின் முன்னோடி அவர்.

“In properly organized groups no faith is required; what is required is simply a little trust and even that only for a little while, for the sooner a man begins to verify all he hears the better it is for him… Accept nothing you cannot verify for yourself.”

–G.I. Gurdjieff

 

முற்றிலும் விசுவாசிக்க அழைப்பு விடுத்து மீட்சி அதன் வழியாகவே சாத்தியம் என்று கூறும் நிறுவன அமைப்புகளில் இருந்து எதிர்திசையில் செல்லுவது இது. ஆன்மிக ஆய்வுக்கான ஒரு வாசல் பெளத்தத்தில் புத்தரின் போதனைகளில் திறந்தே இருக்கிறது. பகுத்தறிவிற்கு(rational thinking) உட்பட்ட ஆனால் அதனைக் கடந்த ஒரு மார்க்கமாகவே மேலை நோக்கில் பெளத்தம் பார்க்கப்படுகிறது.

கிழக்கில் சங்கரர் முதல் ஓஷோ வரை பெளத்தத்துடன் உடன்பட்டும் மறுத்தும் வரும் ஒரு நீண்ட மரபு நம்மிடம் இருக்கிறது. அத்வைத வேதாந்தம் அதில் முக்கியமான ஒரு மாற்றுத் தரப்பு. இன்றளவும் ஏற்றும் மறுத்தும் உரையாடலில் இருக்கும் தரப்புகள் இவை. மேலை கோணத்தின் அடிப்படையில் பெளத்தத்தை அணுகிய இந்தியர்கள் புத்தரை கடவுளாகவோ கடவுளின் அவதாரமாகவோ காணாமல் ஞானகுரு என்னும் அடிப்படையிலும் பேரறிஞர் என்னும் அடிப்படையிலுமே பார்த்தார்கள். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்ற தத்துவ அறிஞர்கள் எந்த வயதிலும் ஒருவன் துறவியாகலாம் என்பது போன்ற பெளத்தத்தின் போதாமைகளை இந்து மத அடிப்படைகளை கொண்டு (இல்லறத்திற்கு பின் துறவறம்) சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். பெளத்தத்தின் மறுபிறவி கொள்கை எப்போதும் அறிஞர்களுக்கு காரண அறிவுக்கு உட்படாததாக சங்கடத்தை ஏற்படுத்தக் கூடியது. Brian weissன் many masters many lives இதனை கடந்து நோக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கானது.

விலாஸ் சாரங்கின் தம்மம் தந்தவன் நடையில் பல இடங்களில் ஒரு எள்ளல் போக்கு உள்ளது. உதாரணமாக சமகாலத்தவர்களான மகாவீரர் மற்றும் புத்தர் சந்திக்காததின் காரணத்தை ஒரு எள்ளலுடன் கடந்து செல்கிறார். தற்கால பெண்ணிய நோக்குடன் பெளத்த பெண்ணிய நோக்கை ஒப்பிடுகிறார். இது பெளத்தத்தை பொறுத்தவரை மட்டுமல்ல எல்லா மதங்களை பொறுத்தவரையிலுமே கூட தவறானது. இத்தகைய பெண்ணிய நோக்கு நமக்கு நவீன காலகட்டத்தில் தான் வந்து சேர்கிறது. ஆகவே அனைத்தையும் அதன் போதாமைகளுடன் ஏற்பதே சிறந்தது.

சாரங்கின் தம்மம் புத்தரின் சோதனைகளுக்கான அடிப்படைகளை தரக்கூடியது. ஹெர்மன் ஹெஸ்ஸே சித்தார்த்தனின் பயணம் வழியாக ஒரு மகத்தான தரிசனத்தை தருகிறார். ஒரு சிறிய சாளரத்திற்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களைக் காண்பதைப் போன்றது.
 

சிவக்குமார் ஹரி

தம்மம் தோன்றிய வழி…

தம்மமும் தமிழும்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விரல்

$
0
0

இல்லாத மணிமுடி

 

விரல் என அசோகமித்திரன் ஒரு கதை எழுதியிருப்பார். ஜி.நாகராஜனைப் பற்றிய கதை என்பது பொதுவான நம்பிக்கை. எழுத்தாளனும் குடிகாரனுமாகிய நண்பன் விரலை கதவிடுக்கில் விட்டு நசுக்கிக்கொள்ல கதைசொல்லியான எழுத்தாளன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வான். “என் விரல்! என் விரல்!” என்று அந்த குடிகார எழுத்தாளன் போதையில் புலம்புவான். “இனிமேல் என்னால் எழுதவே முடியாது… இனிமேல் எழுதவே முடியாது” என்பான். அழைத்துச்செல்பவன் கசப்புடன் “எழுதித்தான் என்ன ஆகப்போகிறது?” என்பான்

 

அந்தக்கதையை நினைத்துக்கொள்ள ஒரு தருணம். சென்ற ஜூனில் நிகழ்ந்த அடிநிகழ்ச்சியில் இடதுகை விரலில் அடிபட்டது. அதைப்பற்றி ஒரு குறிப்பும் எழுதியிருந்தேன். தாளமுடியாத வலி ஏதும் இருக்கவில்லை. அசைத்தால் மட்டும்தான் வலி. ஆனால் அந்த விரல் அடிக்கடி அசைக்கப்படுவது அல்ல. வீக்கம் இருந்தது. அது தானாகச் சரியாகப்போய்விடும் என நினைத்தேன். தாடையைப்பற்றித்தான் கவலை இருந்தது. ஆகவே எந்த சிகிழ்ச்சையும் செய்யவில்லை.

 

ஆனால் விரல் அப்படியே தான் இருந்தது. வீக்கம் கொஞ்சம் குறைந்தது, மீண்டும் கூடியது. ரயிலில் மேல்படுக்கையை கையால் பற்றி ஏறினால் மீண்டும் வீக்கம். இருநாளில் சற்றே குறையும். நண்பர் ஷாகுல் ஹமீதுதான் அதன் வீக்கம் குறையாமலிருப்பது பற்றி சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தார். ஆனால் எனக்கு ஒரு டாக்டரிடம் செல்வதுபோல சலிப்பூட்டும் விஷயம் ஒன்றில்லை. எவராவது கட்டாயப்படுத்தாமல் எந்த நோய்க்கும் நான் மருத்துவம் பார்த்துக்கொண்டதில்லை

 

ஷாகுல் அவரே ஆயுர்வேத எண்ணைகள் கொண்டுவந்து பூசிவிட்டார். அவர் ஒரு ஹீலர். அவருடைய பாரம்பரியத்திலேயே அந்த கூறு உண்டு. அதை நம்பிக்கை சார்ந்தது என்று சொல்லலாம். ஆனால் உண்மையிலேயே அது பயனளிப்பது. என் முதுகுவலி அவரால்தான் இல்லாமலாயிற்று. ஆனால் இந்த விரலை மருத்துவரிடம் காட்டியே ஆகவேண்டும் என்று ஷாகுல் சொல்லிவிட்டார். மூன்றுமாதங்கள் கடந்தும் வலியும் வீக்கமும் இருப்பது நல்லது அல்ல என்றார்.

 

ஆகவே நேற்று கோட்டாறிலுள்ள மாஞ்சாங்குடியிருப்பு வைத்தியரிடம் சென்று காட்டினோம். ஷாகுலின் பைக்கில் அவரே அழைத்துச்சென்றார். அது வர்ம- ஆயுர்வேத மருத்துவமனை. இப்பகுதியில் புகழ்பெற்ற ஒன்று.  மருத்துவர் விரலைப்பிடித்து அழுத்தினார். நல்ல வலி இருந்தது. எக்ஸ்ரே எடுக்கச் சொன்னார். எக்ஸ்ரேயில் விரல்மூட்டு இறுகி சற்றே புடைத்திருந்தது. எலும்பில் அடிபட்டு அப்படியே ஒன்றுசேர்ந்துவிட்டிருக்கிறது. விரல் சற்று மேலெழுந்து வளைந்தது போலிருக்க அதுவே காரணம். சிலநாட்கள் மருந்துபோட்டால் சரியாகிவிடும் என்றார் மருத்துவர்

 

வீட்டுக்கு வந்தேன். மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. ‘அன்புள்ள ஜெமோ புளிச்சமாவில் இடியாப்பம் சுடமுடியுமா? சமையல்குறிப்பு அனுப்பமுடியுமா?” இப்படி நாளுக்கு நாலைந்து மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருந்தன. இப்போது கொஞ்சம் குறைந்துவிட்டாலும் அவ்வப்போது வருகின்றன. நேற்று ஒன்று “அன்புள்ள ஜெமோ, தாடையைச் செப்பனிடுவதற்கு சிறந்த வழி இன்னொரு புளிச்சமாவு என்று நண்பன் சொல்கிறான். உங்கள் கருத்து என்ன?” இவற்றை எழுதி அனுப்புபவர்கள் இதை கேலி என எண்ணுகிறார்கள். இதைப்பார்த்ததும் நான் புண்பட்டு சுருண்டுவிடுவேன் அல்லது சீற்றம்கொண்டு கொதிப்பேன் என்று கற்பனை செய்துகொள்வார்கள் போல. நண்பர்களிடம் “அவனுக்கு ஒரு இமெயில் பண்ணியிருக்கேன் மாப்ள….இந்நேரம் செத்திருப்பான்” என்று சொல்லும் அந்த முகத்தை நினைவில் கொண்டுவருகையில் புன்னகைதான் வருகிறது.

 

உண்மையில் ஏதேனும் ஓர் எழுத்தாளரை ஓரிரு பக்கங்களேனும் வாசித்தவர்கள் இதை எழுதுவதில்லை. இவர்கள் பெயர் மட்டுமே தெரிந்துவைத்திருப்பவர்கள். இந்த கடிதங்களைக் கண்டு எழுத்தாளன் சோர்வோ சீற்றமோ அடைவான் என்று அதனால்தான் எண்ணுகிறார்கள். எந்த எழுத்தாளனும் இக்கடிதங்களை மெனெக்கெட்டு எழுதுபவர்களின் உளநிலையை ஊகித்து புரிந்துகொள்ள முடியுமா என்றுதான் பார்ப்பான். இவர்கள் யார், இவர்களின் பொதுவான பண்பாட்டுநிலை என்ன? மிகப்பெரும்பாலும் மதக்காழ்ப்பையே காண்கிறேன். ஒவ்வொருநாளும் வசைகளைப் பெறுபவன் என்பதனால் எனக்கு முதல் வரியிலேயே புரிந்துவிடும். அழித்துவிடுவேன். சிலசமயம் ஏதாவது குறும்புகள் செய்வேன். சிலசமயம் பரிதாபமாக இருக்கும்.

 

முன்பு விரல் பற்றி எழுதியபோது இரண்டுவாரத்தில் சரியாகிவிடும் என்றும் அதுவரை வெறுப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் மேலும் ஒருமாதமாவது மகிழ்ச்சி அடையலாம். முக்கியமாக அவர்களுக்காகவே இதை எழுதுகிறேன் .அவர்களுக்கு என்ன இலக்கியமா கலையா, இப்படி ஏதாவது மகிழ்ச்சி வந்தால்தானே? ஏதோ ஒருவகையில் அவர்களும் நமக்கு வேண்டியவர்கள் அல்லவா?

 

ஆகவே விரல்குறித்த மின்னஞ்சல்களை எதிர்பார்க்கிறேன்.

 

மாயாவிலாசம்!

தாடை!

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஒருபோதும் விடைபெறாதே!

$
0
0

1976ல் நான் பள்ளியில் படிக்கும்போது வெளிவந்த படம் சல்தே சல்தே. இந்தப்பாடல் அன்றைக்கு இளைஞர்கள் நடுவே பெரும் செல்வாக்கு செலுத்தியது. அதற்குக் காரணம் அதன் கடைசி வரிகளை விசில் அடிக்க முடியும் என்பது என இன்றைக்கு நினைக்கிறேன். அன்றெல்லாம் இந்திப்பாடல்கள் தமிழகத்தில் மிகப்பிரபலம். இந்தப்பாடலை விசில் அடிக்க நான் பலமாதங்கள் முயன்று வீணாய்ப்போயிருக்கிறேன்.

இன்று பார்க்கும்போது முதல் ஆச்சரியம் இவ்வளவு தெளிவான அச்சு கிடைப்பது. இந்திப் படங்கள் பெருநிறுவனங்களால் எடுக்கப்பட்டவை. ஆகவே நல்ல அச்சு உள்ளது. ஆனால் தமிழ்ப்படங்களும் மலையாளப்படங்களும் பெரும்பாலும் சிறிய தயாரிப்பாளர்களால் எடுக்கப்பட்டு வெற்றி அல்லது தோல்விக்குப்பின் கைவிடப்பட்டவை. பெரும்பாலான படங்கள் அழிந்துவிட்டன. சில எஞ்சுகின்றன. அவையும் மிகமோசமான காட்சித்தரம் கொண்டவை. நாடாப்பதிவிலிருந்து டிஜிட்டலுக்கு கொண்டுவரப்பட்டவை.

கபி அல்வித நா கெஹனா – ஒருபோதும் விடைபெற்றுக்கொள்ளாதே – அன்று ஒரு முக்கியமான பல்லவி. கிஷோர்குமாரின் குரல். சிமி கர்வாலை எப்படி தென்தமிழ்நாட்டில் காதலித்தார்கள் என்றெல்லாம் முனைவர்ப்பட்ட ஆய்வுகளால்தான் சொல்லமுடியும்

சினிமாtதான் எவ்வளவு அற்புதமாகக் காலத்தை பின்னோக்கிச் சுழற்றுகிறது!

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16754 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>