Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16742 articles
Browse latest View live

தீவிர சிறுகதைகளும் பகடி சிறுகதைகளும் -சாம்ராஜ்

$
0
0

தமிழ் இலக்கியத்தில் தீவிர சிறுகதைகள் எழுதபட்ட அளவுக்கு பகடி சிறுகதைகள் எழுதப்படவில்லை பொதுவாக தமிழர்களுக்கு தீவிரத்தில் இருக்கும் மோகம் இலக்கியத்திலும் பிரதிபலிக்கும். TMT முறுக்கு கம்பிகளை போல இலக்கியத்திலும் உணர்ச்சிகள் முறுக்கி கொண்டிருக்க வேண்டும் என கருதுவோர் உண்டு. இந்த தீவிர உணர்ச்சிகளிலும் பாவனைகள் நிறைய உண்டு. பாலியல் தொழிலாளி- விடுதியில் அவளை சந்திப்பது போன்ற வகையிலான கதைகள் நிறைய எழுதப்படுவதுண்டு. இவற்றில் பெரும்பாலும் பாவனையான மிகையான கதைகளே. “இல்லாத காட்டில் இல்லாத புலியை தேடும்” கதைகள். வண்ணதாசனின் மிச்சம் கதையில் ஒரு அசலான பாலியல் தொழிலாளியின் சித்திரமுண்டு.

நான் தீவிர கதையின் தரப்பிற்காக ஷோபா சக்தியின் பாரபாஸ்சையும் மறுபக்கத்தில் பகடி கதைகளின் தரப்பாக கீ.ரா.வின் “ நாற்காலியையும்” நாஞ்சில் நாடனின் ”வாக்குப்பொறுக்கிகள்”களையும் கூடுதலாக ஷோபா சக்தியின் கண்டிவீரனையும் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

பொதுவாக ஏன் தமிழில் பகடி கதைகள் எழுதப்படுவதில்லை எனில் பகடிக்கு அடிப்படை சுய எள்ளல். சுய எள்ளல் தமிழ் சமூகத்தில் மிக குறைவே.

நகைச்சுவை கதைகள் வேறு, பகடி கதைகள் வேறு. நகைச்சுவை கதைகளுக்கு உள்ளடுக்குகள் கிடையாது. ஆனால் பகடி கதைகளுக்கு பல உள்ளடுக்குகள் உண்டு. ஒரு நல்ல எழுத்தாளன் வெறும் நகைச்சுவை கதைகளை ஒருபோதும் எழுதுவதில்லை. பகடி என்பது நாம் சிரித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு கசப்பையோ, ஒரு துக்கத்தையோ, வாழ்வு சார்ந்த எள்ளல்களையோ நம்மிடம் கடத்துபவை. நகைச்சுவை கதைகள் தொட்டில் செடி ஆழம் ஒன்றும் கிடையாது.

ஷோபாவின் பாரபாஸ் சந்தியாபுலத்தீவின் இன்றைய நசிந்த நிலையையும், முன்பு அங்கு நடந்த திருட்டுக்கள் பற்றியும், அதற்காக தண்டிக்கப்பட்டவர்களை பற்றியும், இறுதியாக தண்டிக்கப்பட்ட வில்லியம் குடும்பத்தின் தற்கொலையும், கால் தடத்தை பரிசோதித்து திருடன் யாரென சொல்லும் எப்பாஸ் தம்பி இம்முறை திருடனின் தடம் குதிரையின் குளம்படிகளாக இருப்பதாக கண்டறிகிறான். அந்த குதிரை சந்தியோகுமையோரின் குதிரை. இந்த கதை எதார்த்த தளத்திலிருந்து புறப்பட்டு ஒரு மாயத்தன்மையில் முடிகிறது. இந்த மாயத்தன்மை நமக்குள் கிளர்த்தும் கேள்விகள் பல. யார் குற்றவாளி?, தண்டிக்கப்பட்டவர்களெல்லாம் குற்றவாளிகளா? இன்று அந்த தீவு நசிந்து போய் கிடப்பதற்கு இதுதான் காரணமா? கதையின் தலைப்பு நமக்கு சூசகமாய் பலவற்றை சொல்கிறது. இந்த கதை முழுக்க துயரத்தின் நெடி உண்டு. கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான லிஜோ ஜோஸ் பெல்லிசெரியின் இ.மா.யூ படத்தை பார்த்த பொழுது பாரபாஸ் ஞாபகம் விடாது வந்தது. இரண்டும் ஒரே போல் நிலப்பரப்பு, கிறிஸ்த்துவ மீனவர்களின் கடற்புறம். எப்பொழுது எடுத்து வாசித்தாலும் வலியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது பாரபாஸ்.

கீ.ரா.வின் நாற்காலி ஒரு ஊரிலேயே நாற்காலி இல்லாத காலத்தில் நாற்காலி செய்ய முயன்ற வீட்டைப் பற்றியும் அவர்கள் அதனால் எதிர்கொண்ட சிக்கல்கள் பற்றியும் பேசுகிறது. தொடக்கம் முதலே அற்பமானவர் என்று கதைச் சொல்லியால் வர்ணிக்கப்படும் சம்மந்தி, நாற்காலி செய்வது தொடர்பாக வீட்டில் நடக்கும் உரையாடல், முக்காலியிலிருந்து கீழே விழுந்த சப்கோர்ட் ஜட்ஜ், செத்த பிணங்கள் உட்காரும் நாற்காலியாய் மாறிப்போன நாற்காலி. ஒரு மெல்லிய புன்னகையாலேயே கதையை எழுதிக் கொண்டு போகிறார் கீ.ரா. கதவு எழுதிய கீ.ரா தான் நாற்காலியும் எழுதுகிறார். கீ.ரா.விடம் எப்பொழுதும் ஒரு அனுபவத்தின் சிரிப்பு உண்டு. அது இக்கதையிலும் உண்டு.

நாஞ்சில் நாடனின் வாக்கு பொறுக்கிகள் 1980 வாக்கில் எழுதப்பட்டவை. நாடன் துயரமான கதைகள் நிறைய எழுதியவர். உப்பு, கால் நடைகள் கனக தண்டிகள், விலாங்கு, ஊதுபத்தி, வைக்கோல்  நிறைய சொல்லலாம். தமிழில் அசலான பகடி கதைகள் எழுதுபவராய் நாஞ்சிலை நான் எப்போதும் உணர்வேன். டிங் டாங் சிறுகதை ஒரு சிறந்த உதாரணம்.

தேர்தல் சமயங்களில் நண்பர்கள் அழைத்து தேர்தலை அம்பலப்படுத்தும் விதமாக ஏதேனும் கதைகளோ, கவிதைகளோ உண்டா? என்று கேட்பார்கள். நான் எப்பொழுதும் அவர்களுக்கு சொல்லும் பதில் வாக்கு பொறுக்கிகள். நாஞ்சில் நாட்டில் நடக்கும் தேர்தலில் மூன்று வேட்பாளர்களை துல்லியமாக வர்ணிக்கிறது இச்சிறுகதை. துல்லியமென்றால் அத்தனை துல்லியம். ”என்னதான் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்று ஐந்தாம் வகுப்பு பாடமெடுத்தாலும் இந்த தொகுதியில் மருமக்கள் வழி வேளாளர் அன்றி மகாத்மாவே வந்து நின்றாலும் ஜெயிக்க முடியாது.”

”பரமேஸ்வர பிள்ளைக்கு தெளிவாக தெரியும் இந்த தேர்தலில் தோற்றால் மறுபடியும் அந்த நைல் நதியின் தீரத்திற்கு போக வேண்டியது வரும் என”

மூன்று வேட்பாளர்களின் “ஆகிருதியை” சித்திரமாய் சொல்லும் கதையின் இறுதி வரி ”தேர்தல் முடிந்து விட்டது வாக்கு எண்ணிக்கை நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த மூவரில் ஒருவர் ஜெயிக்கத்தான் போகிறார்”. இன்றைய ஜனநாயகத்தை இதை விட காத்திரமாய் பகடி செய்ய முடியாது.

ஷோபாவின் கண்டிவீரன் வண்ணதாசனின் சிறுகதை ஒன்று இப்படி தொடங்கும் “எந்த மரத்தை வெட்டப் போகிறோமோ அந்த மரத்தின் நிழலில்தான் அதை வெட்டுவதற்கான தாம்பு கயிறும், அரமும் வைக்கப்படுகிறது. ” கண்டிவீரனுக்கான பொழிப்புரை இதுவே.

ஒரு சிறிய இயக்கம் தனது செல்வாக்கை நிலைநாட்ட ஒருவனுக்கு கொலை தண்டனை அறிவித்து, அவனை கொல்வதற்கு அவனை கொண்டே ஒரு வங்கி கொள்ளை நடத்தி, தோற்று, அங்கே கிடைத்த பழைய துப்பாக்கியைக் கொண்டு அவனை கொல்லலாம் என்று கருதுகையில் பெரிய இயக்கத்தால் சுற்றி வளைக்கப்பட்டு, கைதியால் அவனை சுட வைத்திருக்கும் துப்பாக்கியால் பெரிய இயக்கக் காரர்கள் சுடப்பட்டு, கைதியான கண்டிவீரன் தலைமையில் சிறிய இயக்கத்துக் காரர்கள் தமிழ்நாட்டுக்கு தப்பிப் போகிறார்கள்.

இந்த கதை பல்வேறு திறப்புகளை கொண்டது. கண்டிவீரன் எனப்படும் காந்திராஜன் மலையகத்தைச் சேர்ந்தவன். அவன் மூதாதையர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள். மலையகத்தை சேர்ந்த ஒரு தமிழன் சிறிய இயக்கத்துக்காரர்களை காப்பாற்றிக் கொண்டு போகிறான். சார்லி சாப்ளினீன் Gold Rush திரைப்படத்தில் துப்பாக்கியால் சுட ஒருவனை விரட்ட இருவரும் ஓடி ஓடி சுடுபவனின் முதுகுக்கு பின்னால் வந்து கொண்டிருப்பான் சுடப்பட வேண்டியவன். அப்படி மொழியில் நிகழும் ஒரு அங்கத விளையாட்டு இச்சிறுகதை.

பகடி சிறுகதைகளுக்கும், வட்டார மொழிக்கும் பந்தம் இருப்பதாக தோன்றுகிறது. கீ.ரா-வும், நாஞ்சிலும் வட்டார வழக்கின் பிரதிநிதிகள். ஷோபாவும் லேசாக அதனோடு தோய்வதுண்டு. மாடர்ன் மோட்சத்தை ஒரு பொதுவான தமிழில் எழுதியிருந்தால் என்னவாகியிருக்கும்?.

தீவிர கதைகள் எவ்வளவு நமக்கு தேவைப்படுகின்றனவோ அதற்கு நிகராக பகடி கதைகளும் தேவைப்படுகின்றன என நம்புபவன் நான். பகடியின் வழியே தான் இந்த உலகம் தான் வாழ்வதற்கான ஆற்றலை பெற்றுக் கொள்கிறது என தோன்றுகிறது. பகடி இல்லையெனில் முதலாளிகளிடத்திலும், உயரதிகாரிகளிடத்திலும், பிரபலங்களிடத்திலும் ஒருவனோ ஒருத்தியோ எப்படி தொடர்ந்து பணிபுரிய முடியும். பகடி ஆசுவாசத்தை தருகிறது. வீழ்த்த முடியாதவர்களை வீழ்த்திய உணர்வுகளை தருகிறது. பகடியின் வழி ”மரியாதைக்குரியவர்கள்” தலைகீழாக நடக்க வைக்கப்படுகிறார்கள். அவர்களின் கீரிடங்கள் எட்டி உதைக்கப்படுகின்றன. மூச்சுமுட்ட வைக்கப்படும் ஒழுக்க விதிகள் தூசி படிந்த கார்பட்டை போல தெருவில் தூக்கி வீசப்படுகிறது. ஓபேரா அரங்கத்தில் விசும்பலுக்கும், விசிலுக்கும் இடம் தரப்படுகிறது.

முகுந்த நாகராஜின் கவிதை ஒன்று உண்டு.

”தோசை தெய்வம்

அதை பழிக்காதே”

நான் பகடியை தெய்வம் என்பேன். எங்கள் ஊர் பக்கம் முப்பது நாற்பது வருடம் வாடகைக்கு இருப்பவர் அந்த கடையை வேறொருவருக்கு மாற்றி தரும் பொழுது கடைக்கான அட்வான்சை உரிமையாளர் வாங்கிக் கொள்வார். முப்பது நாற்பது வருடம் இந்த கடையை வைத்திருந்து கொடுப்பதற்கான தொகையை வரும் புதிய நபரிடம் பழையவர் வாங்கிக் கொள்வார். அந்த தொகைக்கு பெயர் பகடி. தமிழ் இலக்கியமும் அப்படி பெருந்தொகை கொடுத்து பகடியை பெற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.

 [ஆகஸ்டு 10, 11,2019  அன்று ஈரோடு சிறுகதை உரையாடல் அரங்கில் பேசியதன் எழுத்து வடிவம்]

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சை.பீர்முகம்மதுவுக்கு வல்லினம் விருது

$
0
0

வல்லினம் விருது 2014இல் தொடங்கப்பட்டது. மலேசிய படைப்புலகில் தீவிரமாகப் பங்களித்த ஒருவரை தேர்ந்தெடுத்து ஐயாயிரம் ரிங்கிட் விருது தொகையாக வழங்கப்படுகிறது. அவ்வகையில் ஐந்து ஆண்டுகள் கழித்து இம்முறை சை.பீர்முகம்மது அவர்களுக்கு 2019க்கான வல்லினம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தன் வாழ்நாள் முழுவதும் மலேசிய இலக்கியத்திற்கு உழைத்த ஒருவரை கவனப்படுத்தும் விருதாகவே வல்லினம் இலக்கியக் குழு இவ்விருதை வடிவமைத்துள்ளது. இவ்விருதை ஒட்டி சை.பீர்முகம்மது அவர்களின் ‘அக்கினி வளையங்கள்’ நாவலும் பதிப்பிக்கப்படுகிறது.

சை.பீர்முகம்மதுவுக்கு வல்லினம் விருது

வல்லினம் மாத இதழ்

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பசுஞ்சுடர்வு

$
0
0

“ஏன் நீங்கள் சென்னையில் குடியேறக்கூடாது?” சினிமாக்காரர்களில் இருந்து வாசகர்கள் வரை அடிக்கடிக் கேட்கும் கேள்வி. கோவையில் குடியேறச்சொல்லி அன்புக்கட்டளைகள் பல. ஏன் என்று நானே கேட்டுக்கொள்கிறேன். கோவை எனக்கு பிடித்த ஊர். சென்னையில் அறைகளுக்குள் இருக்கப்பிடிக்கும் – நட்சத்திரவிடுதி என்றால். ஆனாலும் நாகர்கோயிலையே விரும்புகிறேன். பல காரணங்கள். என் நினைவுகள் படிந்த நிலம். என் மூதாதையரின் மண்.

ஆனால் சமீபத்தில் ஊட்டி சென்றபோது ஒன்று தெரிந்தது. ஊட்டியும் எனக்குப்பிடித்திருக்கிறது. அங்கும் நான் கொண்டாட்டமாகவே இருக்கிறேன். அங்கே செல்ல ஆரம்பித்து இந்த முப்பதாண்டுகளில் கொண்டாட்ட மனநிலை இல்லாமல் ஊட்டியில் இருந்ததே இல்லை. அப்போதுதான் ஊட்டிக்கும் நாகர்கோயிலுக்கும் பொதுவாகச் சில இருந்தாகவேண்டும் என்று தோன்றியது.

நேற்று காலை ஒரு மெல்நடை சென்றேன். ஒளிரும் இனிய மழை. குடை எடுத்துக்கொள்ளவில்லை. காற்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது. முகில்கள் இளவெயிலில் மின்னிக்கொண்டிருந்தன. இலைகளிலெல்லாம் ஈரம் பளபளத்தது. புல்மலர்க்குலைகளில் நீர்மணிகள் விதைகளுடன் கலந்து தாங்களும் ஒளிர்ந்தன. கணியாகுளம் சாலையில் சென்றபோது ஒரு காட்சியைக் கண்டு நின்றுவிட்டேன். பசுமையின் ஒளி. ஆம், இதுதான் என்னை இங்கே வைத்திருக்கிறது. இதுதான் நகரங்களைவிட்டு அகற்றுகிறது.

பசுமை அளிக்கும் உணர்வுகள் பல. எல்லா வண்ணங்களும் அழகே. எனினும் பசுமையே உயிரின் வண்ணம். தளிர் ஒருவண்ணம். அதில் ஒளி ஊடுருவுகிறது. ஆழ்பசுமை கொண்ட முற்றல் இலைகளில் ஈரம் ஒளியென வழிந்து சொட்டிவிடுகிறது. பசுமைக்குமேல் பசுமை விந்தையான விளைவை உருவாக்குகிறது. ஒற்றை வண்ணத்தாலான ஓவியம். பசுமைபோல ஒளியைக் கொண்டாடும் வண்ணம் வேறில்லை. ஒளிக்காகவே உருவாக்கப்பட்ட வண்ணம் அது. ஒளியை உணவாக்குவது.

ஒளி அருவமானது. விண்ணிலிருந்து பொழிவது. கடுவெளியின் புன்னகை. அதை பருவடிவ அன்னமாக ஆக்குக்கின்றன இந்த இலைகள். கைவிரித்து அள்ளி அள்ளிச் சேர்க்கின்றன. காய்களும் கனிகளும் கிழங்குகளும் ஆக்குகின்றன. புல்லை உண்ணும் எருமையின் மெல்லிய மூச்சொலியை, அதன் உடலெங்கும் ததும்பும் சுவையை, வாலில் சுழலும் பரவசத்தைப் பார்க்கையில் நேரடியாகவே பசுமையை மேயும் உவகையை மானுடர் இழந்துவிட்டார்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது

இது ஆவணி. பொன்னோணம் எழும் மாதம். இந்த மாதத்திற்கென்றே ஒரு பசுமைவண்ணம் இங்கே உண்டு. தளிரிடுந்ந தாருண்யமே பொன்னோணம். பழைய சினிமாப்பாட்டு. ஆடியின் சாரலும் மழையும் சற்றே ஓய தளிர்கள் அனலென பற்றிக்கொண்டு பெருகிச்சூழல் அவற்றின்மேல் வெயில் பொழிந்து தேங்கியிருக்கும் வண்ணம். ஓணத்திற்கு மலர்க்களம் அமைப்பார்கள். எங்களூரில் ஒருமுறை என் அக்காக்கள் தளிரிலைகளால் ஒரு பசுங்களம் அமைத்ததை நினைவுகூர்கிறேன்.

பாதைகளின் இருபுறங்களிலுமிருந்து புல் பெருகி எல்லைகவிந்து தடமழிக்க முனைகிறது. குப்பைகளுக்குமேல் பசும்புல்லின் தளிர்ப்போர்வை. வேலிகள் பசுமைகொண்டிருக்கின்றன. பாறைகள்மேல் பசும்பாசி படிந்திருக்கிறது. அன்றெல்லாம் எங்கள் ஊரின் ஓட்டுக்கூரைகளிலும் ஓலைக்கூரைகளிலும்கூட பசுமைதான் நிறைந்திருக்கும். நீர்க்காய்கறிகள் செழிக்கும் பருவம். பீர்க்கு, பூசணி, சுரை. அவை மலர்விடும். நான் பசுமைக்குள் பிறந்து வளர்ந்தவன்

பசுமைக்குமேல் அன்றி வேறெங்கு விழும் கதிரொளியும் வீண் என்று படுகிறது. அமுது ஒழுகி வற்றி மறைகிறது. இலைகளில் ஊரும் புழுக்கள் பச்சைநிறம் கொண்டிருக்கின்றன. அவையும் பச்சையம் கொண்டிருக்கின்றனவா என்ன? ஆனால் பச்சைநிற வண்ணத்துப்பூச்சிகள் இல்லை. பசுமஞ்சள் நிறச் சிறகுகொண்டவை உண்டு. அவை பச்சைத்தளிர்களில் அமர்கையில் தளிரென்றே மயங்கவைக்கின்றன

கொஞ்சம்கூட கற்பனாவாதம் இல்லாத நவீனத்துவ எழுத்தாளர்களை நான் எப்போதும் ஒருபடி கீழாகவே வைத்திருக்கிறேன். கற்பனாவாதம் இல்லாதவர்கள் தான் என்னும் மையத்தைக் கடந்து இப்புவிப்பேருருவைக் காணவே முடியாது. இருப்பென்பதைக் கடந்து வெளியென்பதை உணர இயலாது. அவர்களுக்கு திளைத்தல் இல்லை, பறத்தல் இல்லை, இன்மையென்றாதல் இல்லை. பெருநிலைகள் ஏதுமில்லை. பெருநிலைகள் கற்பனை அல்ல. ஆனால் கற்பனை இன்றி அங்கே செல்ல இயலாது.

தமிழில் கற்பனாவாதம் என காணக்கிடைப்பவைகூட பெரும்பாலும் காமம்சார்ந்தவை. காமம்சார்ந்த கற்பனாவாதம் மிக எளியது. அது தன்னில் தொடங்கி தன் இன்னொரு வடிவில் முடிவது. கற்பனாவாதக் காதலின் காதலி என்பவள் அவனுடைய ஆடிப்பாவை அன்றி வேறு எவர்? இயற்கைநோக்கி விரியும் கற்பனாவாதம் பேருருக்கொண்டது. வானை உணர்கையில் அது முடிவிலி. காமம் இயற்கையின் கொச்சையான வடிவம். இயற்கையில் காமம் இயல்பான ஒரு துளி

இப்போது படிக்கையில் பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிதைகளே உச்சமெனத் தோன்றுகிறது. அவ்வப்போது தோன்றி அடுத்த தலைமுறைக்குப் பொருளிழக்கும் அன்றாடச்சிக்கல்களும் இருப்பின் தவிப்புகளும் கவிதையால் தொடப்பட்டு ஒளிர்ந்து கவிதை கடந்துசென்றதும் இருளில் மூழ்கி பின்னகர்ந்து விடுகின்றன. உலகக்கவிதையின் மகத்தான வரிகளில் மிகப்பெரும்பாலானவை இயற்கையைப்பற்றியவையே.

வெறும் இயற்கைவர்ணனையே பெருங்கவிதையாகக்கூடும். ஏனென்றால் இயற்கையை பொருள்கொள்ளச் செய்வது மொழி. மொழியை இயற்கை பொருள்கொள்ளச் செய்கிறது. மாறி மாறி நோக்கிக்கொண்டு ஒன்றையொன்று வளர்த்தபடி மாளாத்தவத்தில் அமைந்திருக்கின்றன இருபேரிருப்புக்களும். இயற்கைமுன் திகைத்து தன் எல்லையை உணர்கையில் மொழி கவிதையாகிவிடுகிறது. ஆகவேதான் நான் தேவதேவனிடம் மீண்டும் மீண்டும் சென்றுகொண்டிருக்கிறேன்


பச்சைக்குடில் என மூடிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்து இலைத்திரைக்கு அப்பாலிருக்கும் பசிய வயல்வெளியில் நின்றிருக்கும் பசுஞ்சுடர்வெயிலை நோக்கிக்கொண்டிருக்கிறேன். இங்கே பசுமை அன்றி வேறேதுமில்லை. மானுடர்கூட. என் இல்லத்திலிருந்து ஐந்துநிமிட நடை. ஊட்டி அன்றி வேறெங்கேனும் இது அமையக்கூடுமென தோன்றவில்லை. இங்கே அமர்ந்து வெறும் விழிகளாக என்னை ஆக்கிக்கொண்டிருக்கிறேன்.ஓவியனாக இருந்திருந்தால் பச்சை வண்ணத்தை அன்றி  எதையும் தூரிகையால் தொட்டிருக்கமாட்டேன்.

பசுமை என்னும் சொல் பொருளிழக்கிறது. ஆனால் இங்கிருந்து கிளம்பியபின் அச்சொல்லில் இவையனைத்தும் வந்து அமர்ந்திருக்கும். சொல்துறத்தலும் சொல்சூடிக்கொள்ளுதலும் இலக்கியவாதியின் ஊசலின் இரு எல்லைகள். மறுபிறப்பெனில் இங்கே பச்சைநிறப்புழுவென உடலே ஒளி கொண்டு இலைமேல் ஒட்டி உடலால் வெயிலை அருந்தி காலமில்லாது அமர்ந்திருக்கவேண்டும் என்று கற்பனைசெய்துகொண்டேன். இந்த மறுபிறப்பு என்பதுதான் எத்தனை முடிவற்ற வாய்ப்புகளை அளிக்கிறது நமக்கு.

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மீள்கை

$
0
0

 

ஒரு சிறு நினைவுடன் தொடர்புள்ள பாடல் இது. தேவ் ஆனந்தின் ‘கைடு’ படம் 1965ல் வெளிவந்தது நான் சின்னக்குழந்தை அப்போது. அன்று இது மிகப்புகழ்பெற்ற படம். ஆனால் தமிழகத்தில் சென்னைக்கு வெளியே எவரும் பார்த்திருக்கமாட்டார்கள். ஆர்.கே.நாராயணனின் நாவலின் திரைவடிவம். இதன் ஹாலிவுட் வடிவத்திற்கு நோபல் பரிசு பெற்ற பேர்ல் எஸ் பெர்க் திரைக்கதை எழுதியதாகச் சொல்வார்கள்.

அன்றெல்லாம் பீகாரிகள் குடும்பமாக வந்து எங்களூரில் பிச்சை எடுப்பார்கள். அங்கே வெள்ளம் என்றும் பஞ்சம் என்றும் சொல்வார்கள். உண்மையிலேயே அங்கே பஞ்சம் இருந்தது. பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இரவலர் வாழ்க்கைக்குப் பழகி அதிலேயே நீடித்தார்கள்

நாங்கள் அப்போது கன்யாகுமரி அருகே கொட்டாரம் என்னும் ஊரில் ’கோட்டி’ பூமேடைக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்தோம். எனக்கு ஐந்து வயது. அது காந்திய யுகத்தின் நீட்சி இருந்த காலம். என் அம்மா சர்க்காவில் நூல் நூற்பார்கள். அதை ‘நூலாப்பீஸ்’ என்னும் இடத்திற்கு கொண்டுசென்று கொடுத்தால் பணம் கிடைக்கும். அது பெண்களுக்குரிய பணம். ஆண்களுக்குச் சம்பந்தமில்லாதது. அலங்காரப் பொருட்களுக்காகப் பெரும்பாலும் செலவிடப்படும்.

ஆண்கள் வீட்டைவிட்டுச் சென்றுவிட்டபின் பெண்கள் கூடி அமர்ந்து சர்க்காவில் நூல் நூற்பதென்பது ஒரு இனிய கொண்டாட்டமாக இருந்தது. பாட்டுகள் பாடப்படும். கதைகள் சொல்லப்படும். அம்மா தொடர்கதைகளை விரிவாக, நாடகத்தனமாகச் சொல்வாள். சிரிப்பும் கொண்டாட்டமுமாக இருக்கும். எங்கள் வீட்டின் முகப்பு பெரியது. பத்துப் பதினைந்துபேர் அமரலாம். அப்பா இல்லாதபோது அது பெண்களின் கேளிக்கைமண்டபம்.

ஒருநாள் ஒரு ஜோடி கையில் சிறுகுழந்தையுடன் வந்தது. ஆணின் கையில் ஆர்மோனியம். அவர்கள் பிகாரி பஞ்சத்திலிருந்து வந்ததாகச் சொன்னார்கள். பாடகர்கள். அம்மா எந்தப் பாடகரையும் பாடாமல் திருப்பி அனுப்புவதில்லை. அவர்கள் இந்தப் பாடலை பாடினார்கள். அம்மாவால் தாங்கவே முடியவில்லை. திரும்பத்திரும்ப பாடவைத்தாள். பத்து தடவைக்குமேலாக. அதன்பின் அதை எழுதிவாங்கிக்கொண்டு அவ்வப்போது பாடிக்கொள்வாள்.

நெடுங்காலம் கழித்து ரேடியோவில் இப்பாடலைக் கேட்டபோது நான் அம்மாவிடம் இந்நினைவுகளைச் சொன்னேன். அம்மா முகம் மலர்ந்து ஓரிரு வரிகளை முனகிக்கொண்டாள். முகம் மேலும் மேலும் கனவில் கனிந்து இளம்பெண்ணாக ஆனாள்.

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தடம் -கடிதங்கள்

$
0
0

தடம் இதழ்

ஜெமோ,

உங்கள் படைப்புகளான  விஷ்ணுபுரம்  மற்றும் பின்தொடரும்  நிழலின் குரல் வழியாக உங்களை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான் தடம் இதழை விகடன் ஆரம்பித்திருந்தது. அதிலிருந்த உங்களுடைய மிக விரிவான நேர்காணலும்  அதைத் தொடர்ந்து வந்த ‘நத்தையின்  பாதை’ தொடரும் உங்களை நெருங்கி அறிய உதவின. ஒவ்வொரு மாதமும் அக்கட்டுரைகளைப்  படித்துவிட்டு உங்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.

அதில் வந்த மற்றவர்களின் கட்டுரைகள், விரிவானவை  மட்டுமல்ல. முக்கியமானவை என்றும் நம்புகிறேன். குறிப்பாக, சமீபத்தில் வெளிவந்த  ராஜேந்திர சோழனின் நேர்காணல். அவர் விஷ்ணுபுரம்  விருதுக்கு தேர்வானவர்  என்பதை அறிந்ததும், அவருடைய படைப்புகளை தேட ஆரம்பித்தேன்.

நிறைய வாசகர்களுக்கு, விகடனின்  வணிக வாசிப்பிலிருந்து  சற்றாவது  விடுபட்டு இலக்கிய வாசிப்பிற்குள் நுழைவதற்கு தடம் வழிகாட்டியது  உண்மை.

அன்புடன்

முத்து

***

வணக்கம் ஜெ

காட்சியூடகம் மற்றும் வாசிப்பு பற்றி ஏற்கெனவே இத்தளத்தில் விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. இன்று ஒரு சிற்றிதழ் நிறுத்தப்படுவதென்பது வாசிப்பு குறைந்து வருவதைத்தான் காட்டுகிறது. காட்சியூடகம் அந்த இடத்தை அபகரித்துக்கொண்டு வருகிறது. வாசிப்பு என்பதெல்லாம் பழசு, வீடியோக்கள் என்பதுதான் இப்போ டிரெண்ட் என்பதுதான் பலரது வாதம். வாசிக்கும் அதே அனுபவத்தை வீடியோக்கள் கொடுத்தால் பரவாயில்லை. ஆனால் அப்படியில்லையே ! வாசிப்பில் உள்ள பொறுமையும், கற்பனையும் காட்சியூடகத்தில் வருவதில்லை. அது அப்போதைய பரபரப்பு மட்டுமே. காட்சியூடகம் நம்மைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு அடுத்தடுத்த காட்சிகளுக்குள் தூக்கி வீசுகிறது. அங்கு பெரிதாக கவனிக்கவோ, கற்பனைசெய்யவோ வழியில்லை. இன்று ‘பொறுமை’, ‘நுட்பம்’, ‘ஆழம்’, ‘முழுமை’ போன்ற சொற்களெல்லாம் பொருளிழந்து கொண்டிருக்கிறது. நூடுல்ஸ் போன்று எல்லாம் உடனடியாக வேண்டும். அடுத்து…அடுத்து… என்று தாவிக்கொண்டு செல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு எழுத்தாளர், ‘Web Series’ பார்க்கவில்லையென்றல் நீங்களெல்லாம் வேஸ்ட் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் வாசிக்கும் மக்களும், அச்சிடப்பட்ட நூல்களும் தொடர்ந்து இருக்கும் என்றே நம்புகிறேன். அதற்கென்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. கைபேசி வழியாக இணையதள கட்டுரைகள் வாசிப்பது ஒரு வசதிதான். ஆனால் பல பக்கங்கள் கொண்ட நூல்களை கைபேசியிலோ, கணினித்திரையிலோ Scroll செய்து வாசிப்பது அவ்வளவு வசதியாக இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு அச்சிடப்பட்ட புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு சாவகாசமாக படிப்பதுதான் வசதியாக இருக்கிறது. இன்று  மின் நூல்கள் (e books) அச்சு நூல்களுக்கு சரியான மாற்றாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா ? எதிர்காலத்தில் அச்சுநூல்களுக்கான தேவை மேலும் குறைந்து இல்லாமல்போகும் சூழல் வருமா ?

(எப்படியும் என் காலத்தில் அது நடக்கப்போவதில்லை. எனவே எனக்கு பிரச்சனையில்லை)

விவேக்.

***

அன்புள்ள ஜெ

சென்ற ஆண்டு தடம் இதழ் தொடங்கப்பட்டபோது நீங்கள் எழுதிய ஒரு குறிப்பு உங்கள் இணையதளத்தில் உள்ளது. தடம் என்ன செய்யக்கூடாது என்று சொன்னீர்களோ அதையெல்லாமே அவர்கள் செய்தார்கள். ஆகவேதான் தடம் நின்றது. மேலே ஒன்றுமே சொல்வதற்கில்லை

ஆர்.ராமகிருஷ்ணன்

***

அச்சிதழ்கள், தடம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நீதிமன்றம், நெறிகள் –கடிதம்

$
0
0

நீதிமன்றத்தில் அனுமன்!

அன்புள்ள ஜெ,

நீதிமன்றத்தில் அனுமன் கட்டுரையை வாசித்தேன் .இது தொடர்பாக வேறொரு பார்வையை முன்வைக்க முயல்கிறேன் .

அ) பாரதத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகவே ஸ்ம்ருதிகள் எழுதி தொகுக்கப்பட்ட சட்டங்களாக இருந்து வந்தன .ஆனால் இந்தியா முழுவதற்கும் ஒரே ஸ்ம்ருதியாக இருந்தது இல்லை .ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வித ஸ்ம்ருதி .இவை சில அடிப்படை விஷயங்களில் ஒன்றாகவும் ஏனையவற்றில் வித விதமாக வினோத விஷயமாகவும் இருந்து வந்தன . விலக்கப்பட்ட திருமண உறவுகள் தொடங்கி வாரிசு உரிமை தத்து எடுக்கும் உரிமை வரை பல விஷயங்களிலும் வேறு பாடுகள் இருந்தன

உதாரணத்திற்கு பழைய உணவை அந்தணர் உண்ணக் கூடாது என்று கூறும் ஒரு ஸ்ம்ருதி உரை ஆனால் அத்தகைய பழக்கம் சாதாரணமாக தமிழக அந்தணர்களிடம் இருந்தது என்ற விளக்கத்தையும் தருகிறது பாரதத்தின் மற்ற பகுதியில் இருந்த ஸ்ம்ருதிகளுக்கும் கேரளத்தில் புழக்கத்தில் இருந்த சங்கர ஸ்ம்ருதிக்கும் இருந்த வேறுபாடுகளை குறித்து பக்கம் பக்கமாக எழுதலாம் . பால்ய விவாகம் இல்லை என்பதில் தொடங்கி மருமக்கள் வழி சொத்துரிமை வரை பல விஷயங்கள் அதன் அடிப்படையில் இருந்ததே . சிக்கலான வழக்குகள் ஸ்ம்ருதிகளின் அடிப்படையில் தர்க்கம் நியாயம் மீமாம்சிக சூத்திரம் போன்றவற்றில் சிறப்பு பயிற்சி பெற்ற பண்டிதர்களைக் கொண்டு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு சொல்லப்பட்டன .சில நேரங்களில் மடங்களின் கருத்தும் கேற்கப்பட்டது .நம்பூதிரிகள் நடத்திய ஸ்மார்த்த விசாரணை இப்படிப்பட்ட ஒன்று தான் .அங்கு உள்ள ஸ்மார்த்த என்பது ஸ்ம்ருதி என்பதை வேர்ச்சொல்லாகக் கொண்டது . விசாரணையை நடத்தும் ஸ்மார்த்தன் என்னும் நம்பூதிரி ஸ்ம்ருதிகளை நன்றாக தெரிந்தவனாக இருக்க வேண்டியது அவசியம் .பாரதம் முழுக்க வித விதமான வடிவில் சில நேரங்களில் ஜாதி பஞ்சாயத்தாகக் கூட இத்தகைய நீதி விசாரணை முறை இருந்தது .

ஆ) ஆங்கிலேயர்கள் நாட்டை முழுமையாக கைப்பற்றுவதின் ஒரு பகுதியாக நீதித்துறையையும் கைவசப்படுத்தினார்கள் .ஆனால் அவர்களும் அனைவருக்கும் சம நீதி என்பது (குறைந்தது உரிமையியல் வழக்குகளில் ) குறித்து எல்லாம் எண்ணவில்லை .இன்றளவும் சட்டக் கல்லூரியில் இந்து குடும்ப சட்டம் , கிறிஸ்த்தவ குடும்ப சட்டம் , இஸ்லாமிய குடும்ப சட்டம் என்று தான் கற்பிக்கப்படுகிறது . ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவர்களை மட்டுமே தங்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வர முயன்றார்கள் .அதிலும் சீர் திருத்த கிறிஸ்த்தவர்களை மட்டும் .இந்து சட்டம் , ஷரியத் ஆகியவற்றில் கை வைக்கவில்லை . ஆரம்ப கால நீதிமன்றங்களில் ஸ்ம்ருதி பூர்வ மீமாம்ச நியாயம் போன்றவற்றில் வல்லுனரான பண்டிதர்கள் ஆங்கில நீதிபதிகளுக்கு வழிகாட்டிகளாக செயல்பட்டு வந்தனர் .Native pundits என்ற ஒரு பதவி இருந்தது .இவர்கள் தான் நீதி நூல்கள் அடிப்படையில் நிர்ணயம் செய்வார்கள் .பிறகு codified law புழக்கத்தில் வந்த போது இந்த பதவி மறைந்தது .ஆனால் இவர்களும் இவர்களது வாரிசுகளும் மிகச் சிறந்த வக்கீல்களாக மாறினார்கள் .Transferable skills என்பதற்கு நல்ல உதாரணம் இது . ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டைய கட்ஜு மீமாம்சிக அடிப்படையில் சட்டங்களை புரிந்து கொள்ள முயல்வது குறித்த கட்டுரைகளை எழுதியுள்ளார் .மேற்கத்திய நிர்ணய முறைகளை விட இவை சிறந்தவை என்பது அவரது வாதம் .சில உதாரண வழக்குகளையும் முன்வைத்துள்ளார் .இன்றளவும் பாகப்பிரிவினை என்றால் மித்ராக்ஷ பள்ளி என்ன சொல்கிறது தயாபாக பள்ளி என்ன சொல்கிறது என்றே சிவில் சட்டங்கள் விளக்குகின்றன .

இ) எனில் ஆங்கில அரசின் சட்ட முறை வந்த பிறகு குற்ற வழக்குகள் அவற்றிற்கான தண்டனைகள் போன்றவை தரப்படுத்தப்பட்டதா என்றால் பெரிய அளவில் இல்லை என்றே தோன்றுகிறது .முன்னர் தங்கள் செல்வாக்கை மட்டும் முன் நிறுத்தியவர்கள் இப்போது தங்கள் செல்வத்தையும் முன் நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று எண்ணுகிறேன் .

ஈ) இந்த விவாதங்களின் வரலாற்றின் தொடர்ச்சியாக தான் இன்று முன் வைக்கப்படும் பொது சிவில் சட்டத்தை குறித்தும் பார்க்கிறேன் . முகநூலில் அறிமுகமான ஸ்ரீராம்தாஸ் மகாலிங்கம் என்னும் நண்பர் ஹிந்து மத கொள்கைகளின் அடிப்படையில் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார் . அவர் சொல்வதில் நியாயம் இருப்பதாகத் தான் தோன்றுகிறது .தங்கள் வயதோ தங்கள் மனைவி வயதோ என்னவென்று தெரியாத ஆனால் இருபாலரும் விரும்பி மணம் முடித்து மகிழ்ச்சியாக வாழும் நேரத்தில் அப்பாவி கேரள ஆதிவாசி இளைஞர்கள் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள் .ஹிமாச்சல் பிரதேச பழங்குடி ஒன்றில் பல புருஷ மணம் இன்றும் உள்ளது .தாய் மாமனை திருமணம் செய்வது வடக்கில் ,கேரளத்தில் விலக்கப்பட்ட விஷயம் .ஆனால் தமிழகத்தில் தொன்று தொட்டு இருக்கிறது . மரண படுக்கையில் வாய் வார்தையாகவே தனது சொத்தை ஒரு இஸ்லாமியர் தானம் செய்யலாம் என்பதும் அதற்கு சட்ட அங்கீகாரம் உண்டு என்பதும் அவர்கள் நம்பிக்கை .இதை எல்லாம் பொது சிவில் சட்டம் எப்படி சமன் செய்யப்போகிறது? எப்படி செய்ய முடியும் ? தெரியவில்லை.

பி.கு: வழக்கு விசாரணை பாணி நூல்கள் என்பது 19 ஆம் நூற்றாண்டின் இறுதி , 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் மிகப் பிரபலமாக இருந்தது போலும் .மாத்வ சித்தாந்தத்தை வெகு ஜனங்கள் இடையே கொண்டு செல்ல பல மொழிகளில் வெளியிடப்பட்ட ஒரு பிரபல நூலின் பெயர் “சிவில் சூட் ” . வெவ்வேறு தத்துவ பள்ளிகளை சார்ந்தவர்கள் மேல் உலகில் நடத்தும் சிவில் வழக்கில் த்வைத தரப்பு வாதம் எப்படி வெல்கிறது என்ற பாணியில் இருக்கும் .

அனீஸ்கிருஷ்ணன் நாயர்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஃபாசிஸத்தின் காலம்

$
0
0

எம்.எஃப் ஹூசேன் இந்து தாலிபானியம்

பஷீரும் ராமாயணமும்

இரு எல்லைகள்

அன்புள்ள ஜெ

போரும் அமைதியும்  குறித்து நீதிமன்றம் சொன்ன கருத்துக்களைப்பற்றிய உங்கள் கருத்துக்களைச் சொல்லியிருந்தீர்கள். ராஜராஜசோழன் பற்றி ரஞ்சித் ஒரு கருத்துச் சொன்னார். அதன்பொருட்டு அவர் நீதிமன்றத்தில் கண்டிக்கப்பட்டார். காவல்நிலையத்தில்  கையெழுத்திடவேண்டும் என்னும் நிபந்தனையின்படி பிணை பெற்றார். ஒரு கருத்து சொன்னதற்கே அவரை குற்றவாளியாக காணும் நீதிமன்றத்தின் செயல்பாட்டை எப்படி காண்கிறீர்கள்?

சந்திரசேகர்

***

அன்புள்ள சந்திரசேகர்

இதைப்பற்றி கொஞ்சம் தாமதமாக பேசலாம் என ஒத்தி வைத்திருந்தேன். முன்பு எழுதிய கட்டுரையை இப்போது பதிலாக மாற்றுகிறேன்

மலையாள மனோரமாவின் இலக்கிய இதழான பாஷாபோஷிணியில் நான் ஆண்டுதோறும் ஒரு நீள்கதையை எழுதுவது வழக்கம். நூறுநாற்காலிகள், யானை டாக்டர், ஊமைச்செந்நாய் ஆகியவை அதில் வெளிவந்து புகழ்பெற்றவை. இவ்வாண்டு மாடன் மோட்சம் கதையை அனுப்பியிருந்தேன். ஆசிரியர்குழுவுக்கு கதை மிகப்பிடித்திருந்தது. கூப்பிட்டுக் கொண்டாடினார்கள். ஆனால் பிரசுரிக்க மறுத்துவிட்டார்கள். பலவகையான மன்னிப்புகோரல்களுடன் திரும்பத் தந்தார்கள்.

காரணம் கேரளப் பண்பாட்டுச்சூழல் முழுக்கமுழுக்க கருத்துரிமைக்கு எதிரானதாக ஆகிவிட்டிருக்கிறது. மாடன்மோட்சம் இந்துத்துவ அரசியலைக் சற்றே கேலிசெய்கிறது. அது இன்றையசூழலில் மலையாள மனோரமாவுக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும். ஏனென்றல் அது கிறித்தவ ஊடகம் என தொடர்ச்சியாக முத்திரைகுத்தப்பட்டுவரும் சூழல் நிலவுகிறது. ஆகவே அவர்கள் அதை விரும்பவில்லை. கேரளம் முழுக்க இந்தக் கெடுபிடி இன்று உச்சம் அடைந்துள்ளன. இதழ் தாக்கப்படும். தேவையில்லாத சட்டநடவடிக்கைகளுக்குள் இழுக்கப்படும்.

மலையாளத்தின் அத்தனை இதழ்களும் இந்தக் கசப்புமருந்தைக் குடித்தவையே. பொதுவாக இந்து ஆதரவு இதழான மாத்ருபூமியேகூட இதழ் ’மீச’ என்னும் நாவலை வெளியிட்டமைக்காகவும் அதற்குமுன் பேரா.எம்.எம்.பஷீரின் ராமாயண உரையை வெளியிட்டமைக்காகவும் கடுமையாகத் தாக்கப்பட்டது.  மலையாள மனோரமாவுக்கு இடதுசாரி ஆதரவும் கிடையாது. அது வலதுசாரி முதலாளித்துவ சாயல்கொண்ட இதழ். இடதுசாரிகளுக்கு எதிரானது.

எண்பதுகள் வரை கேரளத்தில் திரைப்படங்களிலேயே எல்லாவகையான விமர்சனங்களுக்கும் இடமிருந்தது. கேலி கிண்டல் சாதாரணம். அறிவியக்கம் மிகக்கறாராகவே செயல்பட்டது. எல்லா கருத்துக்களும் மறுத்தும் பேசப்பட்டன. தொண்ணூறுகளில் உருவான வஹாபிய இயக்கமே கருத்துக்களை மதவெறியுடன் அணுகுவதை, கும்பல்களாகச் சென்று எதிர்ப்பு தெரிவிப்பதை தொடங்கிவைத்தது. மிகக்குறிப்பாக அப்துல்நாசர் மதனி கேரளத்தில் அதை ஒர் இயக்கமாக தொடங்கிவைத்தவர்.

பாடத்திட்டத்திலுள்ள ஒரு பாடத்திலிருந்து கேள்வியை கேட்டமைக்காக பேராசிரியரின் கையை வெட்டி வீசினார்கள். அதை சில முற்போக்கினர் சிறுபான்மையினர் உரிமை என நியாயப்படுத்தவும் செய்தனர். அதன்பின் கிறித்தவர்கள் கிளம்பினர். இறுதியாக இன்று இந்து அமைப்புக்கள். ‘இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் விமர்சிப்பாயா? இந்துக்கள் என்றால் மட்டும் இளிச்சவாய்களா?” என்பதே இன்றுள்ள இந்துத்துவ அமைப்புகளின் கேள்வி. அதாவது நாங்களும் அந்த எல்லைவரைச் செல்வோம், அவர்களாக ஆவோம் என்னும் அறைகூவல்.

ஆக எவரும் எவரைப்பற்றியும் எந்த விமர்சனமும் சொல்லமுடியாத நிலை. எந்த ஆய்வையும் எவரும் எதிர்ப்பு தெரிவிக்காதபடி எழுதவேண்டிய கட்டாயம். விளைவாக அறிவியக்கமே உறைந்து நின்றிருக்கிறது. மிகமிகக் கவனமாகவே இதழ்கள் கருத்துக்களை வெளியிடுகின்றன. இருந்தும் நாள்தோறும் பூசல்கள். இப்போது கற்பழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பிஷப் பிராங்கோவுக்கு கேரளப் போலீஸ் அடிமையாக இருக்கிறது என குற்றம்சாட்டிய ஒரு கார்ட்டூனுக்கு எதிராக கிறித்தவ அமைப்புக்கள் தலைமைதாங்கிய உச்சகட்ட போராட்டம், தாக்குதல் நடந்து முடிந்தது. கார்ட்டூன் திரும்பப்பெறப்பட்டது..

இரண்டு ஆண்டுகளுக்கு முன் மலையாள மனோரமாவின் இலக்கிய இதழான பாஷாபோஷினி ஒர் ஓவியத்தை வெளியிட்டது. கிறிஸ்துவின் இறுதி உணவு ஓவியத்தை தழுவி ஓவியர் பாஸ்கரன் வரைந்த ஓவியம் அது. ஒரு கதைக்கான காட்சிச் சித்தரிப்பு. அதில் கிறிஸ்துவின் இடத்தில் மக்தலனா மரியம் இருக்கிறார்.அது ஏசுவை இழிவு செய்கிறது என எதிர்ப்பு கிளம்ப பாஷாபோஷிணியின் இதழ்கள் எரிக்கப்பட்டன. நாளிதழின் ஆசிரியர்குழு மன்னிப்பு கோரியது. அதன்பின் மனோரமா மிகமிகக் கவனமாக ஆகிவிட்டது.

இந்தியா எங்கும் இச்சூழல் பெருகிவருகிறது. இதில் என்ன வேடிக்கை என்றால் தங்களைப் பற்றிய ஒரு விமர்சனத்திற்கு எதிராக தெருமுனைப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், கருத்து தெரிவித்தவர்களை மிரட்டுபவர்கள், வன்முறைத் தாக்குதல் தொடுப்பவர்கள், சட்டநடவடிக்கை எடுப்பவர்கள் இன்னொருவர் அதைச்செய்யும்போது கருத்துச்சுதந்திரம் பாதிக்கப்படுகிறது, ஃபாஸிசம் எழுகிறது என கூச்சலிடுவதுதான். இங்கே இன்று எந்த சாதியையும் நாம் விமர்சிக்க முடியாது. எந்த மதத்தையும் எதுவும் சொல்லமுடியாது. எஞ்சியிருப்பவர் காந்தி மட்டும்தான். நாம் ஆடும் கிரிக்கெட்டின் ஸ்டம்ப் அவர்தான்.

கருத்து, அது எத்தகையதாயினும், கருத்துத் தளத்திலேயே எதிர்கொள்ளப்படவேண்டும். அதற்கு எதிராக கும்பல்கூச்சலிடுவதும், சட்டநடவடிக்கைக்குச் செல்வதும் உண்மையில் கருத்துச்செயல்பாட்டையே இல்லாமலாக்கிவிடும். கருத்துரிமை அழிக்கப்பட்டால் இலக்கியச் செயல்பாடுகள் அழியும். கலைகள் அழியும். காலப்போக்கில் பண்பாட்டு நடவடிக்கைகளே அழிந்து நுகர்வியம் மட்டுமே எஞ்சியிருக்கும். கருத்துரிமை கட்டுப்படுத்தப்படும் நாடுகளை சாதாரணமாக நோக்கினாலே இதை உணராலாம்.

ஒரு கருத்தை எதிர்க்கலாம். அதன் நோக்கங்களை தோலுரிக்கலாம். அதன் உள்ளடுக்குகளைச் சுட்டிக்காட்டலாம். ஏன், வசைபாடுவதுகூட ஒருவகையில் சகித்துக்கொள்ளத்தக்கதே. வசை எந்த எல்லைக்குச் சென்றாலும் அதை தவிர்த்துச் செல்ல முடியும் நம்மால். ஏனென்றால் கீழ்த்தரமாக வசைபாடுபவர் தன் தரப்பை தானே தோற்கடித்துக்கொள்கிறார். ஒன்றை நெஞ்சைத் தொட்டுச் சொல்லிக்கொள்வேன். என் முப்பதாண்டுக்கால அறிவுச்செயல்பாட்டில் என்னை வசைபாடிய எவரையுமே திருப்பி வசைபாடியதில்லை. ஒருவரிடம்கூட தனிப்பட்ட நட்பை முறித்துக்கொண்டதில்லை. ஒருவரைக்கூட நேரில் பார்க்கையில் முகம் மலர்ந்து எதிர்கொள்ளாமல் இருந்ததும் இல்லை.

அவ்வகையில் மு.கருணாநிதி வரை நமக்கு மகத்தான முன்னுதாரணங்கள் உள்ளன. நான் மு.கருணாநிதி அவர்களை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். அவர் அதைவிடக் கடுமையாக என்னை விமர்சனம் செய்து எழுதினார். ஆனால் என்மேல் மதிப்புள்ளவராகவே இருந்திருக்கிறார். என் நூல்களை கேட்டு வாங்கியிருக்கிறார். அவருக்கும் எனக்கும் பொதுவானவர்கள் அவர் என்னை சந்திக்க விழைவதாகவும் சொல்லி அழைத்திருக்கிறார்கள். ராஜராஜ சோழன் குறித்த ஒரு படத்திற்கு அவர் எழுதும் வசனத்திற்கு திரைக்கதை உதவிசெய்யமுடியுமா என ஒரு தயாரிப்பாளர் அவரிடம் கலந்தாலோசித்தபின் கேட்டிருக்கிறார். நான்தான் தவிர்த்துவிட்டேன், காரணம் அவருடைய அதிகார இடத்தைக்  கண்டு உருவான மிரட்சிதான்.தவிர்த்திருக்கலாகாது என இப்போது தோன்றுகிறது. இன்று அந்தக்காலம் சரசரவென மறைந்துகொண்டிருக்கிறது.

கருத்துரிமையை ஒடுக்குவதனூடாகவே ஃபாஸிசம் செயல்படுகிறது. இன்று ஃபாஸிசத்தை வாழ வைப்பவர்கள் தங்கள் அரசியல் எதிரிகளை எல்லாம் பாஸிஸ்ட் என வசைபாடும் அரைவேக்காடு காழ்ப்புக்கும்பல்தான். நூறு ரூபாய் கடன்கேட்டு கொடுக்கவில்லை என்றால்கூட அவனை ஃபாஸிஸ்டு என்று திட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். மெய்யான ஃபாஸிச நடவடிக்கைகளை அது தங்கள் அரசியலுக்கு உகந்தது எனில் அப்பட்டமாக ஆதரிக்கவும் செய்வார்கள் இவர்கள்

இன்று பா.ரஞ்சித் அவர்கள் நீதிமன்றத்திற்கு இழுத்தடிக்கப்பட்டிருக்கிறார். நமக்குத்தெரியும் இங்கே நீதிமன்ற நடவடிக்கை என்பதே தன்னளவில் ஒரு தண்டனை. வேலைகளை விட்டுவிட்டு நீதிமன்றத்துக்கு அலையவேண்டும். பணம் செலவிட்டு வாதிடவேண்டும். நீதிபதி ரஞ்சித்துக்கு அறிவுரை சொல்கிறார். ராஜராஜனை விமர்சிக்கக்கூடாது என்கிறார்.

ரஞ்சித் சொன்ன கருத்து பொதுவாக எனக்கு ஏற்புடையது அல்ல. அதை விரிவாக எழுதியிருக்கிறேன். ஆனால் அக்கருத்தைச் சொன்னது எப்படி குற்றமாகும்? அதைச் சொன்னதற்காக அவரைக் கைதுசெய்யவேண்டும் என்ற ஃபாசிசக் கூச்சலை எப்படி நியாயப்படுத்த முடியும்? அது ஒரு தரப்பு. ராஜராஜசோழன் தமிழ் அடையாளம்தான். ஆனால் தமிழ் அடையாளங்களை எவருமே மறுக்கக்கூடாதா என்ன? வேறு அடையாளங்களை முன்வைக்கக்கூடாதா என்ன?  நிலைநிறுத்தப்பட்ட கருத்துக்களை மறுத்துப்பேசக்கூடாது என்றால் அதன்பின் என்ன கருத்துச்செயல்பாடு எஞ்சியிருக்கிறது?

ரஞ்சித் சொன்ன கருத்துத் தரப்பு இங்கே நெடுங்காலமாக உள்ள ஒன்று. அயோத்திதாசர் அதை வேறுவகையில் சொல்லியிருக்கிறார். பறையர்கள் இங்கே உயர்நிலையில் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருபகுதியினரான வள்ளுவர்கள் இங்கே பூசகர்சாதியாகத் திகழ்ந்திருக்கிறார்கள். பல்லவர்களின் பூசகர்கள் வள்ளுவர்களே.  பல்லவர்காலத்தின் இறுதியில்தான் பறையர்கள் நிலமிழந்து அடித்தளமக்களாக ஆனார்கள், சோழர் காலத்தில் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் ஆனார்கள்.

பறையர்கள் உயர்நிலையில் பூசகர்களாக இருந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள், சடங்குச்சான்றுகள் பல உள்ளன. இந்த அரசியல்விவாதங்கள் உருவாவதற்கு முன்னரே எழுதப்பட்ட . அபிதானசிந்தாமணியிலேயே  விரிவான செய்திகள் காணப்படுகின்றன. அப்படியென்றால் பல்லவர் காலத்தின் இறுதியில் அவர்கள் வீழ்ச்சியடைந்து சோழர்காலத்தில் அடித்தள மக்களாக ஆனமைக்கு  அரசியல் காரணம் என்ன என்பது ஒரு வரலாற்றுக்கேள்வி. [இதே கேள்வி பாணர்கள் குறித்தும் உள்ளது] இந்த கேள்விக்கு வெவ்வேறுவகையில் வரலாற்றாசிரியர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். அயோத்திதாசர் முதல் ரஞ்சித் வரை அளிக்கும் விளக்கம் அவர்களில் ஒன்று

பறையர்களின் வீழ்ச்சிக்கு சோழர்கள் அளித்த பிராமண ஆதரவுதான் காரணம் என்பது ஒரு ஊகத்தரப்பு. அயோத்திதாசர் பறையர்களை வீழ்த்தியவர்கள் ‘வேஷப்பிராமணர்’ என்கிறார். அவர்களைச் சோழர்கள் ஆதரித்தனர். ஆகவே பறையர்களின் நில உரிமை முதலியவை சோழர்களின் ஆட்சிக்காலத்தில் பறிக்கப்பட்டன என்கிறார். ஆனால் அது ஒருபக்க ஊகம் மட்டுமே. வரலாற்றில் ஊகம் வேறு வரலாற்று உண்மை வேறு. பல கொள்கைகளை நிரூபிக்கவே முடியாது

பறையர்களின் நில உரிமை பறிபோனது வேறொரு வகையில் .பறையர்களுக்கு ஊருக்குப்பொதுவான நிலத்தில் இருந்த கூட்டுரிமை பிரிட்டிஷார் கொண்டுவந்த ரயத்துவாரி முறையால்தான் முற்றாக அழிந்தது. பறையர்கள் உட்பட அனைத்துச் சாதியினருக்கும் கிராமநிலத்தில் அவர்களுக்குரிய மரபுரிமைகள் இருந்தன. ரயத்துவாரி முறை அறிமுகம் செய்யப்பட்டபோது கிராமக்கணக்குப்பிள்ளைகள், உயர்வகுப்பினர் நிலங்களை தங்களுக்கே தனியுரிமையாகப் பட்டாபோட்டுக்கொண்டார்கள். பறையர்கள் உட்பட அடித்தள மக்கள் தங்கள் உரிமை பறிபோவதை அறியாமலேயே நிலமிலாக்கூலிகளாக மாறினார்கள். இதை ஆய்வாளர்கள் விரிவாக எழுதியிருக்கிறார்கள்.

இவ்வாறு பல ஊகத்தரப்புகள் வரலாற்றாய்வில், பண்பாட்டாய்வில், சமூகவியல் ஆய்வில் உண்டு. அவைதான் மெல்லமெல்ல ஆதாரங்களைச் சேர்த்துக்கொண்டு வரலாற்று உண்மைகளாக உருக்கொள்கின்றன. ஓர் ஊகத்தரப்பை முன்வைக்கவும் வாதாடவும் எவருக்கும் உரிமை உண்டு. அந்த வாய்ப்பு இருக்கும்வரைத்தான் இங்கே ஆய்வுகளும் விவாதங்களும் நிகழும். போதிய ஆதாரம் இல்லாத நிலையில் அது ஊகத்தரப்பாகவே நிலைகொள்ளும். அது ஒன்றும் பிழையோ  திரிபோ சதியோ அல்ல.அது ஒரு பார்வை, ஒரு கருத்து, அவ்வளவுதான். அதை கருத்தால்தான் எதிர்கொள்ளவேண்டும்.

ஒருசாரார் ஒரு கருத்தை உண்மை என நம்புகிறார்கள், உணர்ச்சிகரமாக ஈடுபடுகிறார்கள் என்பதனால் பிறர் அதை மறுக்கக்கூடாது என்பதுபோல அபத்தம் வேறில்லை. அவர்கள் உளம்புண்படுகிறார்கள் என்றால் அவர்களுக்கு நவீன ஜனநாயகமும் கருத்துச்செயல்பாடும் புரியவில்லை என்றேபொருள். அதை அவர்களுக்குக் கற்பிப்பதே செய்யவேண்டியது. மாறாக புண்படுத்தக்கூடாது என கருத்துச்செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதை நம் நீதிமன்றங்களே செய்ய தொடங்கிவிட்டிருக்கின்றன. பாஸிஸச் செயல்பாடுகளின் கருவிகளாக நீதிமன்றங்கள் தங்களை அறியாமல் மாறிக்கொண்டிருக்கின்றன.

இந்தியா போன்ற ஒரு நாட்டில் சமூக – மதமோதல்கள் எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கும் சூழலில் சட்டம் – ஒழுங்கு அமைப்புகளின் மிதமிஞ்சிய பதற்றம் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே. இங்கே கருத்துச்சுதந்திரம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லமுடியாது. ஆனால் சமூக ஒற்றுமைகுலையும் என்ற அடிப்படையில் நீதிமன்றம் செல்லமுடியும். உண்மையில் இக்காரணத்தைச் சொல்லி ஒருவர் எந்தக்கருத்துக்கு எதிராகவும் நீதிமன்றம் செல்லமுடியும். அந்த வழக்கு நீதிமன்றத்தில் அறுதியாகத் தள்ளுபடியே செய்யப்படும். நீதிபதிகளால் கடுமையாக வழக்குதொடுத்தவர் கண்டிக்கவும் படுவார். ஆனால் வழக்கை எதிர்கொள்வதே கருத்துச்சொல்பவருக்கு பெரிய தண்டனை என்பதே இந்தியச்சூழல். பலமாதங்கள், ஆண்டுகள் அவர் அதற்காகச் செலவிடவேண்டியிருக்கும். பணம் செலவிடவேண்டியிருக்கும். வழக்கு தொடுப்பதன் வழியாகவே இங்கே கருத்துக்களை ஒடுக்கிவிடமுடியும்.

சென்ற சில ஆண்டுகளாக மதம்,சாதி , மொழி உட்பட எதைப்பற்றி எதைச் சொன்னாலும் அதைச்சார்ந்த அடிப்படைவாதிகள் மனம்புண்படுவதும் நீதிமன்றம் செல்வதும் ஆர்ப்பாட்டம் செய்வதும் வழக்கமாக ஆகிவிட்டிருக்கிறது. நிலநாட்களுக்கு முன் காந்தி –கோட்சே பற்றி கருத்துரைத்தமைக்காக கமல்ஹாசன் நீதிமன்றம் ஏற்றப்பட்டதும் இவ்வாறே. மிகவிரைவாக கருத்துச்செயல்பாடே நிகழமுடியாத சூழல் அமைந்து வருகிறது. நீண்டகால அளவில் நம் சமூகம் அடிப்படைவாதிகளின் இறுகிய பிடிக்குள் சென்று அமைந்துவிடும். எல்லாவகையான அடிப்படைவாதங்களும் ஆபத்தானவையே. நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை சட்ட ஒழுங்குப்பிரச்சினையாகக் கருதவேண்டிய காலம் முடிந்துவிட்டது. இவை கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல்கள் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது.

இவ்வகையான வழக்குகளுடன் நீதிமன்றம் வருபவர்களை, அரசியல்சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கும் ஜனநாயக அடிப்படைகளுக்கும் அறிவுச்செயல்பாட்டுக்கும் எதிரானவர்களாகக் கண்டு தண்டனையும் அபராதமும் விதிக்கும் தெளிவு நம் நீதிபதிகளுக்கு வரும்போதுதான் இங்கே ஃபாஸிசம் மீது முதல் கட்டுப்பாடு உருவாகும்.

நம் தரப்பைச் சொல்லும் உரிமைக்காக மட்டும் அல்ல நாம் எதிர்க்கும் கருத்துக்கள் எழுவதற்கான உரிமைக்காகவும் குரல்கொடுக்கையிலேயே நாம் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கிறோம். அதன் வழியாகவே நாம் நம் கருத்துச் சுதந்திரத்தையும் பேணிக்கொள்கிறோம். ரஞ்சித் மீதான நீதிமன்றத் தாக்குதல் கருத்துரிமைக்கு எதிரான அடிதான். கருத்துக்கள் கருத்துக்களத்திலேயே விவாதிக்கப்படவேண்டும், நீதிமன்றங்களில் அல்ல.

ஜெ

தோப்பில் முகமது மீரான், கருத்துச்சுதந்திரம்

கருத்துச் சுதந்திரம்-மனுஷ்யபுத்திரன்

கருத்துச்சுதந்திரம்- சட்டங்கள்

கருத்துச்சுதந்திரம் எவருக்கு?

 

 

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அழிசி விமர்சனக்கட்டுரைப் போட்டி

$
0
0

அன்பின் ஜெ,

வணக்கம். நலம்தானே? சென்ற ஆண்டு நடத்திய விமர்சனப் போட்டி இவ்வாண்டும் தொடர்கிறது. 2000-ஆம் ஆண்டுக்குப் பின் அறிமுகமான எழுத்தாளர்களின் படைப்பை முன்வைத்து கட்டுரையைக் கோருகிறோம். இம்முறை மூன்று பரிசுகள். எழுத்தாளர்கள் பாவண்ணன், எம்.கோபாலகிருஷ்ணன் மற்றும் க.மோகனரங்கன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட இசைந்துள்ளனர். இரண்டாயிரத்துக்குப் பின் எழுதவந்தவர்களின் முழுப் படைப்புகளைப் பற்றிய விமர்சனமாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். சென்ற முறை, 24 கட்டுரைகளே வந்தன என்பதை நினைத்துப்பார்த்து, முழுப் படைப்புகளுக்குப் பதிலாக ஏதேனும் ஒரு படைப்பு என்று மாற்ற வேண்டியிருந்தது. தங்கள் தளத்தில் இப்போட்டியை அறிமுகம் செய்து வாசக நண்பர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

போட்டி அறிவிப்பு இங்கே,

விமர்சனக் கட்டுரைப் போட்டி 2019

https://azhisi.blogspot.com/2019/09/2019.html

நன்றியுடன்,

வே. ஸ்ரீநிவாச கோபாலன்.

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இலக்கியம்- இரு கடிதங்கள்

$
0
0

அன்புள்ள ஜெ,

சாதரண வாசிப்பிலிருந்து சற்று தீவிர இலக்கிய வாசிப்புக்கு வந்து இருக்கிறேன் என நம்ப ஆரம்பித்த நாட்களிலிருந்து எழுத வேண்டுமெனும் வீபரித ஆசை உண்டாயிற்று.அதன் விளைவாய் ஒரு சிறுகதையும் ஒரு ஒரு அரைகுறை கதை ஒன்றையும் கைபட எழுதி அது பிடிக்காமல் கிழித்து எறிந்தேன்.

எழுதுவதில் எனக்கான சிக்கல் என நான் நினைப்பது ஒரு நிகழ்வை விவரித்து செல்லாத கற்பனை பஞ்சமும் சொற் பஞ்சமும் என எண்ணுகிறேன்.இவற்றை களைய தங்களது ஆலோசனைகளை பெற விரும்புகிறேன்.

இப்படிக்கு

மணிபாபு

***

அன்புள்ள மணிபாபு

எழுதுவதிலுள்ள எல்லா சிக்கல்களுக்கும் இரண்டே வழிதான். வாசிப்பு, எழுத்து.

உங்கள் சிக்கல்களை எதிர்கொண்டு வென்ற மற்ற எழுத்தாளர்களின் படைப்புக்களை வாசியுங்கள். சொற்பஞ்சம் என ஒன்று இல்லை. எழுதுவதற்கு இருந்தால் சொற்களை தேடி மனம் தவிக்கும். கண்டடைவீர்கள்.

ஒரு நிகழ்வை விரித்துரைக்கும்போது அது கொஞ்சம்கூட தெரியாத ஒருவரிடம் சொல்கிறீர்கள் என்று நினைத்துக்கொண்டால்போதும் என்று சுஜாதா ஒருமுறை எழுதியிருக்கிறார்.

எழுதிக்கொண்டே இருங்கள்

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன்,

தங்கள் கடிதம் கிடைத்தது. நலமுடன் இருக்கிறேன். தாங்கள் அடையாளம் கண்டுகொண்டு நலம் விசாரித்தது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நன்றி.

தாங்கள் கூறியபடி ஒரு படைப்பு தரும் அனுபவத்தை விரிவாக எழுத முயற்சி செய்கிறேன்.

நான் திருச்சியில் வசிப்பவன். இங்கு இலக்கிய, வாசிப்பு குழுக்கள் ஏதேனும் உள்ளதா? இருந்தால் தெரிவிக்கவும். ஏனென்றால் இலக்கியம் சார்ந்து உரையாட எனக்கு யாரும் இல்லை. கடிதம் மூலம் தங்களுக்கு எழுதுவதோடு சரி.

நன்றி.

தங்கள்,

கிஷோர் குமார்

***

அன்புள்ள கிஷோர்குமார்

திருச்சியில் வாசகசாலை போன்ற அமைப்புக்கள் கூட்டங்கள் நடத்துகின்றன என நினைக்கிறேன். திருச்சியில் நடக்கும் கூட்டங்களை சில அரைவேக்காட்டு ஆசாமிகள் நடக்கவிடாமல் பேசிக்குலைக்கும் செய்திகள்தான் வருகின்றனவே ஒழிய அங்கே உருப்படியாக ஒரு கூட்டம் நடந்ததாக நான் சென்ற பல ஆண்டுகளில் கேள்விப்பட்டதில்லை. ஒருவேளை அதனாலேயே பலரும் சோர்ந்து ஒதுங்கிக்கொண்டிருக்கலாம்

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

போலிக்குரல்- சேதன் சஷிதல்

$
0
0

 

அன்பின் ஜெ..

இந்தியில் மிகச் சிறந்த போலிக்குரல்களில் ஒன்று சேதன் சஷிதல்.

இவர் ஒரு டப்பிங் கலைஞர் என்பதால், குரல்களினூடே வாழ்ந்து வருபவர். பல குரல்களையும் தனக்கே உரிய நுட்பத்தோடு விளக்குகிறார். அம்ரீஷ் பூரியின் குரலிலிருந்து, அனுபம் கேர் குரலுக்கும், சச்சின் டெண்டுல்கர் குரலுக்கும், அமிதாப் பச்சனின் குரலுக்கும் அலட்டிக் கொள்ளாமல் மாறும் திறன் பெரும் கலைஞர்களுக்கே உரியது.

அன்புடன்

பாலா

***

இருபத்தொரு குரல்கள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கருத்துச்சுதந்திரம் காப்போம் !!!

$
0
0

வணக்கம் நேயர்களே, கருத்துச்சுதந்திரம் எப்பவும் இல்லாதபடி இன்னிக்கு கடுமையான அடக்குமுறைக்கு ஆளாயிட்டிருக்கிற காலகட்டம். கருத்துச்சுதந்திரத்தைப் பாதுகாக்கற பொறுப்பு கருத்துக்களை சொல்லிட்டிருக்கிற நமக்கெல்லாம் இருக்கிறதனால இப்ப இந்த நிகழ்ச்சியிலே தமிழிலே இருக்கிற முக்கியமான சிந்தனையாளர்களை எல்லாம் கூட்டிவந்து வச்சு ஒரு விவாதத்தை ஆரம்பிச்சிருக்கோம். முதல்ல சிற்றிதழ் எழுத்தாளரும் கவிஞருமான சோதியப்பா அவர்கள். வணக்கம் சோதியப்பா அவர்களே, இப்ப கருத்துச்சுதந்திரம்னா என்ன?

கருத்துச்சுதந்திரம்னாக்க அது இப்ப வந்து நாம சொல்லக்கூடிய கருத்துக்கள் எந்தவகையான பிரக்ஞை மனநிலையிலே இருந்து வருதுன்னு நாம பாக்கிற அதே நேரத்திலே அதோட பின்புலமா இன்றைக்குச் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய எந்தவகையான அழகியல்கூறுகள் கருத்து மட்டுமல்லாம அறவியல் தேற்றங்களும் அதோட சமன்பாடுகளும் உண்டு பண்ணக்கூடிய நிலைபேறு என்ன அதெல்லாம் அதோட உட்கருத்துக்கு எந்தவகையிலே பின்புலமா இருக்குங்கிறத ஆராய்ச்சி பண்ணி பாக்கிறபோதுதான்…

அருமையாகக் சொன்னீர்கள் சோதியப்பா அவர்களே, வணக்கம் அன்புச்செல்வம் அவர்களே, நீங்க முற்போக்கு முகாமைச்சேர்ந்தவர். நீங்க என்ன நினைக்கிறீங்க?

இனிய நண்பர் சோதியப்பா அவர்கள் இங்க எடுத்துச் சொன்னது ஒரு பிற்போக்கு, வகுப்புவாத, சாதிவெறி,இனவெறி, தரகுமுதலாளித்துவப் பித்தலாட்டம்ங்கிறத மட்டும் ஆணித்தரமா சொல்ல கடமைப்பட்டிருக்கேன். ஒரு பரம அயோக்கியன், சுயநலவெறியன், கபடவேடதாரி மட்டுமே இதைச் சொல்லமுடியும்கிறது என்னோட தாழ்மையான கருத்து.

அதில்ல, இப்ப கருத்துச் சுதந்திரம்னா..

அதேதான் நான் சொல்லவர்ரது. கருத்துக்களை உண்டு பண்ற சுதந்திரம் கட்சி மேலிடத்துக்கும் அதை வெளிப்படுத்துற சுதந்திரம் கட்சி ஊழியர்களுக்கும் முழுமையா குடுக்கப்பட்டிருக்கிற ஒரு அமைப்பைச் சேர்ந்தவன்ங்கிற முறையிலே…

இல்ல கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுறதில்லையா? அதப்பத்தி என்ன சொல்றீங்க?

எல்லாவிதமான ஒடுக்குமுறைக்கும் எதிரா கடுமையாப் போராடுவோம். கருத்துச்சொல்றது தனிமனித உரிமை. அதை ஆதரிச்சு ஒவ்வொரு தனிமனிதனுக்காகவும் அதேநேரத்திலே…

எல்லா தனிமனிதனுக்கும் இந்த உரிமை இருக்கா?

என்ன அப்டி கேட்டுட்டீங்க? இருக்கு

சோவியத் ருஷ்யாவிலே கருத்துச் சுதந்திரம் இருந்திச்சா? இப்ப சீனாவிலே கூட —

நல்லா கேட்டுக்கணும். தனிமனிதனுக்கு கருத்துச் சுதந்திரம் வேணும். ஆனா ஒருநாட்டிலே புரட்சி வந்து அங்க கம்யூனிசம் அமலாயிடுச்சுன்னா தனிமனிதனே இல்லியே? இருக்கிறது மக்கள் மட்டும்தானே? மக்களுக்கு எல்லா உரிமையும் வந்தாச்சே?

அப்ப மக்கள்–

இருங்க, சொல்லிட்டிருக்கோம்ல? அந்த மக்கள் அவங்களே பேசமுடியாதுல்ல? அதுக்குத்தான் கட்சி அதுக்குண்டான ஆட்களை நியமிக்குது. அவங்க மக்கள் கருத்தைச் சொலுவாங்க. அவங்க தப்பா சொன்னா கட்சி அவங்கள கொலை பண்ணிட்டு வேற ஆட்களை வச்சு மக்கள் கருத்தை சொல்ல வைக்கும். அது மக்கள் கருத்து இல்லேன்னு சில புல்லுருவி ஐந்தாம்படையினர் சொல்றப்ப அவர்களை கட்சி களையெடுக்கும். அது புரட்சிகர ஜனநாயகம். அதெல்லாம் இங்க வரணும்…அதான் எங்க கொள்கை

அப்ப கருத்துச் சுதந்திரம்…

அந்தக்கருத்துக்கள நாங்க மக்கள் மத்தியிலே சொல்லணும்ல? நாங்க சொல்றதுக்கு எல்லாரும் சப்போர்ட் பண்ணணும்ல? அதுக்குத்தான் கருத்துச் சுதந்திரம்…

அருமையாச்சொன்னீங்க தோழர். வணக்கம் , ஸ்ரீமான் சுப்ரமணியம் அவர்களே இப்ப நீங்க கருத்துச் சுதந்திரத்த ஒடுக்கிறீங்கன்னு குற்றச்சாட்டு இருக்கு

சத்தியமா இல்லீங்க. நான் என்னத்தைங்க கண்டனுங்க? நான் ஏதோ நான் உண்டு நம்ம பொளைப்பு உண்டுன்னு இருக்கிற ஆளுங்க.

அதில்லீங்க. நீங்கன்னா நீங்க இல்ல, நீங்க சேர்ந்திருக்கிற கட்சி அதாவது உங்களோட இந்துத்துவ தரப்பு

அதில பாத்தீங்கன்னா, கருத்துச் சுதந்திரத்த முதன்முதலா முன்வைச்சதே இந்துக்கள்தான். ஆபஸ்த்பம்ப சூத்திரத்திலே என்ன சொல்லியிருக்குன்னா–

என்னங்க சொல்லியிருக்கு?

எளுதி கொண்டாந்தனுங்க.கார்ல மறந்து வச்சிட்டேன். அதை விடுங்க. இப்ப மகாபாரதத்திலே கிருஷ்ணன் எவ்ளவு பெரிய தெய்வம்? அவரோட முகத்தப்பாத்து சிசுபாலன் என்ன சொல்றான்? நீ ஒரு சத்ரியனே இல்லே, வெளியே போடான்னு சொல்றானா இல்லியா? அந்தக் கருத்துச் சுதந்திரம் அனுமதிக்கப்பட்டிருக்கா இல்லியா?

அதை கிருஷ்ணன் அனுமதிச்சாருங்களா?

இல்ல, சக்கரத்த எடுத்து தலைய வெட்டினார். அது அவரோட கருத்துச் சுதந்திரம். நாங்க ரெண்டு பக்க கருத்துச் சுதந்திரத்தையும் ஆதரிக்கிறோமுங்க. அதை புரிஞ்சுகிட மாட்டேங்கிறாங்க. சனநாயகம்னு ஒன்னு இருக்கு இல்லீங்களா? ஏனுங்க?

அப்ப ஜனநாயக கருத்து சுதந்திரம் வேணும்னு சொல்றீங்க

ஆமாங்க, கருத்துச் சுதந்திரம் வேணும். ஏன்னா அது இந்துமதத்தோட ஆதாரம். உலகுக்கே கருத்துச் சுதந்திரத்த கத்துக்குடுத்தவங்க இந்துக்கள்தான். அது கல்வெட்டுகளிலே இருக்கு. அன்னியச் சதியாலே அதில இப்ப ஒரு கல்வெட்டுகூட இல்ல. எதுக்குச் சொல்றேன்னா, இது கருத்துச் சுதந்திரத்தோட புனிதபூமி. நாமார்க்கும் குடியல்லோம்னு சொன்னானே…

கருத்துச் சுதந்திரம் இங்க இருந்ததுன்னு சொல்ல வரீங்க?

ஏகப்பட்டது இருந்தது. இப்ப சிலர் அதெல்லாம் பொய்னு சொல்லவாராங்க. அவங்கள்லாம் இந்த நாட்டுக்கு எதிரிங்க. கூசாம பொய் சொல்ற அவங்க நாக்க வெட்டுவோம். பொய்ய எழுதுற கைய ஒடைப்போம். கருத்துச் சுதந்திரம் மடித்தொட்டிலான இந்த பாரதப் பொன்னாட்டை அவமதிக்கிற எவனையும் சும்மா விடமாட்டோம்…

அருமையாச் சொன்னீங்க. வணக்கம் பேராசிரியர் கலீமுல்லா அவர்களே கருத்துச் சுதந்திரம் பற்றி உங்க தரப்பு என்ன?

அளவிடமுடியாத கருணை கொண்டவனும் அருளாளனுமாகிய…

சார் இது இருபது நிமிச செய்தி. இந்த ரெகுலர் மந்திரத்தயெல்லாம் நீங்களே முன்னாடியே சொல்லிட்டு வெயிட் பண்ணியிருக்கலாம்ல?

சரிங்க… அதாவது கருத்துச் சுதந்திரம் அவசியம். அதுக்காக நாங்க உசிரக் குடுப்போம்.

எல்லாக்கருத்துக்குமா?

கருத்தில என்ன அப்டி வேறுபாடு? எல்லா கருத்துக்கும்தான் சுதந்திரம் வேணும். கருத்துச் சுதந்திரத்தை அடக்குறது காட்டுமிராண்டித்தனம். அதுக்கு எதிரா போராடுற அத்தனை முற்போக்கு சக்திகளையும் நாங்க ஆதரிக்கிறோம்…

அப்ப உங்க மதத்த விமர்சனம் பண்ணினா?

தம்பி, ஏன் இப்டி புரிஞ்சுகிடாம பேசுறீங்க? கருத்துக்குத்தான் சுதந்திரம். அதுக்காக அளவிடமுடியாத கருணைகொண்ட அருளாளனை விமர்சிக்கிற அத்துமீறலை எப்டீங்க ஏத்துக்கிட முடியும்? அது மதநிந்தனை. அதைக் கருத்துன்னு சொல்லிர முடியுமா? அதுவேற இது வேற… கருத்துக்கு சுதந்திரம் வேணும். மதநிந்தனைக்கு கடுமையான தண்டனை வேணும். இதில என்ன குழப்பம் உங்களுக்கு?

இல்ல, அப்ப நீங்க மத்த மதங்களை விமர்சிக்கிறது–

அது கருத்து தம்பி. கருத்துக்குச் சுதந்திரம் வேணும்ல?

அற்புதமான கருத்துக்கள்… வணக்கம் அறிவுடைநம்பி அவர்களே. உங்க கருத்து என்ன?

வணேக்கம். இன்றைத் தீனம் சில அன்னிய பார்ப்பன மதவாத பண்டாரப்பரதேசி கும்பல் பெரியார் பிறந்த மண்ணிலே கருத்துச் சுதந்திரத்தை பறிக்க களமிறங்கியிருக்கும் வேளையிலே கருத்துச் சுதந்திரத்துக்காக கருத்துறுதியோடு களமிறங்கியிருக்கும் கழகமானது…

சரிங்க… ஒரு சின்ன கேள்வி, கருத்துன்னா என்னங்க?

தலைமைக் கழக அறிக்கையும் பேட்டியும்தானே?

அதுக்கு முழுச் சுதந்திரம் வேணும்கிறீங்க

ஆமாங்க

இல்லீங்க, உங்க தலைவர பழக்கருப்புனு ஒருத்தர் விமர்சனம் பண்ணினப்ப வீடு பூந்து அடிச்சீங்கள்ல?

அதத்தானுங்க சொல்லிட்டிருக்கேன். கருத்துங்கிறது தலைமைக்கழகம் எங்களைக் கூப்பிட்டுச் சொல்றது. அந்தக்கருத்த நடைமுறைப்படுத்துற சுதந்திரம் எங்களுக்கு வேணும் இல்லீங்களா? நடைமுறைப்படுத்தினத குத்தம்னு சொல்றீங்க. அனியாயம்ங்க

வணக்கம் கவிஞர் மானுடயுத்தன் அவர்களே, உங்க கருத்து

கருத்துச் சுதந்திரம் இந்த கொடூரமான காலத்திலே கடுமையான வாதைக்கு உட்பட்டிருக்கிற நேரத்திலே யாருடைய கையிலே நாமள்லாம் கருவிகளா இருந்திட்டிருக்கிறோம்கிறத நாம் பாக்கிறப்ப நமக்கு கிடைக்கிற சித்திரம் என்னன்னா வரலாற்றிலே வதையுண்டவர்களின் வாக்குகள் இந்த கொடுங்கனவுகள் நிறைஞ்சு வழிஞ்சிட்டிருக்கிறபோது —

சரியா புரியலிங்க

அறிவுடைநம்பி சொல்றதத்தான் நானும் சொல்றேன். அவரு லோக்கலு. அதையே நான் எலக்கியமா சொல்லுவேன்.

கருத்துச் சுதந்திரத்துக்கான இருமுனைப் போராட்டத்திலே இருக்கிற உங்களுக்கு வாழ்த்துக்கள். அய்யா, தமிழேந்தி அவர்களே உங்க கருத்து என்ன?

தமிழனுக்கு கருத்துரிமை தேவை. அதுக்காக எந்த விலையும் குடுப்போம்

அப்ப குஷ்பு–

அந்தம்மா தமிழா? தமிழ்க்கருத்துரிமைய ஏன் வடஇந்தியக் கருத்துரிமை, மார்வாடிக் கருத்துரிமை, பனியாக் கருத்துரிமை, பார்ப்பனக் கருத்துரிமையோட குழப்பிக்கிறீங்க? நீங்க என்ன ஆளு?

திரு சோதியப்பா என்னவோ சொல்ல வ்ரார்…சொல்லுஙக

அதைத்தான் நான் சொல்றேன். எழுத்தாளனுக்கு எழுதுற உரிமை இருக்கிற அதேநேரத்திலே வாசிக்கும் உரிமையை தக்கவைத்துக் கொள்ளும் தரப்பிலிருந்து எழுந்து வரக்கூடிய எதிர்மறைப்பான்மைகளின் தரவுகளும் உபதரவுகளும் அளிக்கக்கூடிய முழுமையான தரப்பு என்னன்னு பாக்கவேண்டியிருக்கிது என்பதை நாம் இங்கே கருத்துச் சொல்லவேண்டியிருக்கிறதனால

அய்யா, ரொம்ப நவீன இலக்கியமா இருக்கு. ஒண்ணுமே புரியலை

அதாங்க,எழுத்தாளன் அவனுக்கே புரியாம எதையாவது எழுதி வைக்கிறான். அதை வாசகன் அவன் இஷ்டத்துக்குப் புரிஞ்சுகிடறான். இப்ப பிரச்சினை என்னான்னா எழுத்தாளன் எழுதினதுக்காக அவனை அடிக்கிறது நியாயமா, இல்ல வாசகன் புரிஞ்சுகிடுறதுக்க்காக அவனை அடிக்கிறது நியாயமா?

வாசகன் புரிஞ்சுகிடறதை வச்சுத்தானே அடிக்கமுடியும்?

அப்ப நான் என்னங்க பண்றது? என்னோட எழுத்து பல அர்த்ததளங்கள் கொண்டது. மல்டிப்பிளிசிட்டி ஆஃப் ரீடிங்னு வெள்ளைக்காரன் சொல்றான். ஒரு கதைய எழுதிட்டு நான் எத்தனை வாட்டீங்க அடிவாங்குறது? சொல்லுங்க…படிச்சவங்க….ஒரு நியாயத்த சொல்லி முடிங்க

வருத்தப்படாதீங்க, பேசீருவோம். கருத்துரிமைக்காக வேறுபாடுகளை மறந்து களமிறங்கியிருக்கும் அனைவரையும் கருத்துரிமைக்களம் நிகழ்ச்சி வரவேற்கிறது… இப்ப நிகழ்ச்சிக்குள்ள போலாங்களா?

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 6, 2015

***

தொடர்புடைய பதிவுகள்

இமைக்கணத்தில் நிகழ்ந்தது

$
0
0

 

ஒரு பேருரையில் நித்ய சைதன்ய யதி சொன்ன ஒற்றைவரியிலிருந்து தொடங்குகிறது இமைக்கணம். பகவத்கீதையை கிருஷ்ணன் நாமறிந்த ஆளுமைகளுக்குச் சொல்லியிருந்தால் நேருவுக்கு சாங்கிய யோகத்தைச் சொல்லியிருப்பார்.காந்திக்குக் கர்மயோகத்தையும் விவேகானந்தருக்கு ஞானயோகத்தையும் சொல்லியிருப்பார். மோக்ஷசன்யாச யோகம் ரமணருக்குச் சொல்லப்பட்டிருக்கும்’ நித்யாவின் வழி எப்போதுமே சற்றே வேடிக்கை கலந்து நம் கற்பனையையும் அறிதல்முறையையும் சீண்டுவது. அந்த வரி என்னை நெடுங்காலம் தொடர்ந்து வந்தது. இமைக்கணத்தின் கரு அதுவே

வெண்முரசு வாசிப்பவர்கள் இதற்குள் அறிந்த ஒன்று கீதையைப்பற்றிய வெண்முரசின் அணுகுமுறை. மகாபாரதப்போரில் கீதை உரைக்கப்படவில்லை, கீதைக்காகவே மகாபாரதப்போர் நிகழ்ந்தது என்பதே அதன் தரிசனம். அனைத்து மக்களுக்கும் தங்களுக்கான வேதங்கள் உள்ளன. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது நால்வேதம். நால்வேதத்தின் தொடர்ச்சியும் எதிர்நிலையுமே நாராயணவேதம். அதாவது கீதை. கீதையின் பீடமே மகாபாரதம். அதன் முன்னோடிநூல்கள் உபநிடதங்களும் கீதையிலேயே குறிப்பிடப்படும் பிரம்மசூத்திரமும். வேதங்களுக்கும் வேதாந்தத்திற்குமான முரண்பாடு, அல்லது முரணியக்கம் கீதையிலேயே சொல்லப்பட்ட ஒன்று. அதையே வெண்முரசு மொத்த மகாபாரதமாக விரித்துக்கொள்கிறது.

ஆகவே வெண்முரசில் கீதை களத்தில் நிகழவில்லை. அது கிருஷ்ணனால் அர்ஜுனனுக்கு உரைக்கப்படுகிறது— பிறிதொரு மெய்வெளியில். அதேசமயம் அது அனைத்து மகாபாரதக் கதைமாந்தர்களுக்கும் அவரவருக்கு உகந்த வடிவில் உரைக்கப்படுகிறது. இமைக்கணக் காடு என இங்கே சொல்லப்பட்டிருக்கும் நைமிஷாரண்யத்தில்தான் பின்னர் மகாபாரதக் கதை முழுதுறக் கூறப்பட்டது. ஆகவே அதுவே கீதைக்குரிய காடு. இந்நூல் வெண்முரசு வெவ்வேறு நூல்களினூகாகச் சொன்ன வேதாந்தக் கருத்துக்களை புனைவுவடிவில் அளிக்கும் ஒரு தனிநூல்.

வெண்முரசில் இதன் பின்னரே போர் தொடங்குகிறது. இதில் பேசப்பட்டவை மீண்டும் அறநிலமான குருநிலையில் கண்டடையப்படுகின்றன.

நாராயணகுருகுலத்தின் சுவாமி வியாசப்பிரசாத் அவர்களுக்கு இந்நூல் காணிக்கை

ஜெ

கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் வெண்முரசுஇமைக்கணம் நாவலுக்கு எழுதிய முன்னுரை

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்

$
0
0

அன்புள்ள ஜெ,

நலமா? பாசிஸம் பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்தேன். பா.ரஞ்சித் ராஜராஜன் பற்றி பேசியதற்கு எழுந்த எதிர்ப்பை குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த எதிர்ப்பு ஒரு பல்முனை தாக்குதல். சமீப காலமாக ராஜராஜனை சாதிய ரீதியாக கொண்டாட ஆரம்பித்தவர்களுக்கு ரஞ்சித்தின் ஜாதி அவரை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம். ராஜராஜனையும் தமிழ் பேரரசுகளையும் ஒரு பண்பாட்டு அடையாளமாக முன்னிறுத்திய திராவிட இயக்கத்தினர் பலருக்கு ரஞ்சித் என்றால் ஏற்கனவே எட்டிக்காய். அப்புறம் இருக்கவே இருக்கிறார்கள் இந்துத்துவர்கள். அந்த சர்ச்சையை ஒட்டி நான் எழுதிய கட்டுரையின் சுட்டி இது.

ராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்

நிச்சயமாக அதில் உங்களுக்கு ஏற்பில்லாத பகுதிகள் உண்டு. முடிந்த வரை ஆதாரங்களைத் தேடித் தேடித் தான் எழுதியிருக்கிறேன். சோழர்கள் எப்படி சைவத்தை சாம்ராஜ்ய ஒருங்கிணைப்புக்கு பயன்படுத்தினார்கள், ஏன் கோயில் கட்டுமானம் முக்கியமானது, கல்வியின் நிலை, நில உடைமை என்று பல புள்ளிகளைக் கட்டுரை தொட்டுச் செல்லும்.

நன்றி

அரவிந்தன்

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

திருச்சி இலக்கியம்- கடிதம்

$
0
0

இலக்கியம்- இரு கடிதங்கள்

வணக்கம் சார்

நலமா..? தங்களின் தளத்தில் வெளியான கிஷோர்குமார் என்பவரின் கடிதத்தையும் அது குறித்து தங்களின் பதிலையும் படித்தேன்.

திருச்சியை பொறுத்தவரை, நீங்கள் கூறிய பதில் மிக சரியானது. வாசகர்சாலைக்கான கூட்டத்தை திருச்சி மையநூலகத்தில் சுஜாதா சுந்தர் என்பவர் மாதந்தோறும் ஒரு சனிக்கிழமையன்று கூட்டுகிறார். அக்கூட்டம்(?) கூட்டுவதற்கு அவர் படும்பாடுகளை நான் அறிவேன். கூட்ட அரங்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசகர்களை பரவலாக அமர செய்திருப்பதே அவரின் இமாலய முயற்சிதான். தீவிர இலக்கியமெல்லாம் அங்கு விவாதிக்கப்படுவதில்லை. ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் கூட்டம், நுாலகம் பூட்டும் நேரத்தை கணக்கிற்கொண்டு ஏழு மணி அல்லது அதற்கும் கொஞ்சம் கூடுதலுக்குள் நிறைவு பெற்று விடும். எனது மாயநதி தொகுப்பு கூட அங்கு விவாதிக்கப்பட்டது. ஒரு ஆர்ஜே பெண் அதை எடுத்துக் கொண்டு விவாதித்தார். இப்படியெல்லாம் கூட கதைகளை குறித்து எண்ணம் தோன்றுமா…? அதை பேசதான் முடியுமா என்ற ஆச்சர்யத்திலிருந்து இன்னும் நான் விடுபடவில்லை.

மற்றபடி, இலக்கியம் வளர்க்கும்(?) இரு பெருமன்றங்களை சேர்ந்த நந்தலாலா என்பவரை போன்ற நிர்வாகிகள் சுய விளம்பரக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கும் இலக்கியத்துக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என்பது தெள்ளத்தெளிவு.

கடந்த 2017 டிசம்பர் மாத கணையாழி இதழுக்காக திருச்சியை சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளை பெற்று தருமாறும், திருச்சியை சேர்ந்த படைப்பாளிகள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதி தருமாறும் திரு.ம.இராசேந்திரன் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு கேட்டார்கள். பெருமன்றங்கள் சார்ந்த நிர்வாகிகள் சிலரை தொடர்புக் கொண்டு கேட்டபோது, தருகிறேன் என்று கூறிய பெரும்பாலானாவர்கள், பிறகு என் அலைபேசி அழைப்பை தொடாமலேயே நிராகரித்து விட்டனர். இதை அக்கட்டுரையில் கூட பதிந்திருக்கிறேன். (சிலர் கதைகளையும் கவிதைகளையும் அளித்து உதவினர் என்பது வேறு விஷயம்)

கடந்த மாதம் ஒன்றில் அகரமுதல்வன், தனது “உலகின் மிக நீண்ட கழிவறை“ என்ற சிறுகதைத்தொகுப்பு குறித்து பேசுமாறு கேட்டுக்கொண்டார். இரண்டே நாட்கள் இடைவெளி என்பதால் மறுத்து, தயங்கி, பிறகு பேசினேன். அது புலியூர்முருகேசன் என்பவரின் தலைமையில் மிகப்பெரிய சர்ச்சையாக வடிவெடுத்தது. இங்கு இலக்கியம் என்பது குழு அரசியல்தான். அதை தவிர்த்து வேறில்லை. புத்தகக்கண்காட்சிகள் கூட திருச்சி கண்டால் தெறித்துத்தான் ஓடுகின்றன. ஒரே ஆறுதல், என்னை போன்ற மனநிலையோடு கிஷோர்குமார் என்ற ஒருவர் இங்கிருக்கிறார் என்பதுதான்.

அன்புடன்

கலைச்செல்வி.

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சாதியென வகுத்தல்

$
0
0

 

அன்புள்ள ஜெமோ,

இது தனிப்பட்ட முறையிலான ஒரு கடிதம். பெயர் இல்லாமல் வெளியிட்டாலும் பிரச்சினை இல்லை. உங்களை பார்ப்பன அடிவருடி என்று பலர் சொல்வதைக் கவனித்திருக்கிறேன். நான் உங்களை தொடர்ந்து வாசித்து வருபவன். எனக்கு முதலில் அவ்வெண்ணம் இருந்தது. இப்போது அப்படி ஒரு சார்புநிலை எடுப்பவர் நீங்கள் என்று தோன்றவில்லை. ஆனால் பிராமணர்களைப் பற்றிய உங்கள் மதிப்பும் அதை நீங்கள் சொல்லிக்கொண்டே இருப்பதும் உண்மையாகவே எனக்கு ஆச்சரியம் அளிப்பவை.

நான் பிராமணர்கள் பலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தவன். எந்த முன்முடிவுகளும் இல்லாமல்தான் அவர்களை அணுகினேன். ஆனால் அவர்களிடம் இருக்கும் தாங்கள் பிறப்பாலேயே மேம்பட்டவர்கள் என்ற எண்ணமும் எந்த திறமையும் இல்லாமலிருந்தால்கூட அறிவில் மேம்பட்டவர்கள் என்ற நினைப்பும் மதஆன்மீக விஷயங்களில் இயல்பாகவே ஞானத்துடன் பிறரை அங்கீகரிக்கவேண்டிய இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வும் கசப்பை உருவாக்குபவை. பிறருடைய அறிவுத்திறத்தையும் ஆன்மிகத்தையும் அவர்களைப்போல எவருமே மட்டம் தட்டுவதில்லை. பிற அனைவருமே அறிவிலிகள் நாகரீகமற்றவர்கள் என்றுதான் அவர்களுக்கு குடும்பத்திலேயே கற்றுத்தரப்படுகிறது.

ஒரு பிராமணரல்லாதவர் பிராமணர்களுடன் நட்புடன் இருக்கவே முடியாது என்றுதான் என் அனுபவம் சொல்கிறது. மேலோட்டமான நட்பு இருக்கலாம். ஆனால் கொஞ்சம் உள்ளே சென்றால் நாம் புண்படுவது உறுதி. இணையத்திலேயேகூட வெட்கமே இல்லாமல் தங்கள் மேட்டிமைத்தனத்தைஎந்த அடிப்படை அறிவும் இல்லாமலேயேகூடவெளிப்படுத்தும் பிராமணர்களையே நாம் காண்கிறோம். இதைப்பற்றிய உங்கள் பதில் என்ன என்று அறிய விரும்புகிறேன்

எஸ்.

***

அன்புள்ள எஸ்,

இத்தகைய கருத்துக்கள் பொதுவாக சொந்த அனுபவங்களை பொதுமைப்படுத்தி அடையப்படுபவை. அப்படி பொதுமைப்படுத்தக் கூடாது என்று நான் சொல்லமாட்டேன். சொந்தவாழ்க்கையில் எவரும் புள்ளிவிவரங்களைக்கொண்டு புறவயமாக முடிவெடுப்பதில்லை. அனுபவம் சார்ந்தே முடிவெடுப்பார்கள். அவ்வண்ணம் முடிவெடுக்கையில் நமது முன்முடிவுகள், நமது பலவீனங்கள் அதில் எந்த பங்களிப்பை ஆற்றுகின்றன என்று நாம் பார்த்தாகவேண்டும். நம் பார்வைக்கோணம் என்ன என்பதை நாமே புறவயமாக வகுத்துக்கொள்ளவேண்டும்.

சாதிகள் எவையாயினும் இரண்டு முகங்கள் அவற்றுக்கு உண்டு. சாதிசார்ந்த தன்னிலை, சாதிசார்ந்த பெருமிதம். இரண்டுமே இளமைப்பருவதிலேயே வருபவை, குடும்பத்தால் அளிக்கப்படுபவை. சாதிசார்ந்த தன்னிலை ஒருவகையான பண்பாட்டு உருவகம் எனலாம். குடித்தெய்வங்கள், குடும்ப ஆசாரங்கள், பல்வேறு பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் ஆனது. அவற்றை கைவிடுவது எளிதல்ல. கைவிட்டால் பலசமயம் பாரம்பரியமே இல்லாமலாகிவிடவும்கூடும். கைவிடுபவரின் தெரிவு அது. அதை எவரும் கட்டாயப்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன்

சாதிசார்ந்த பெருமிதமே மேட்டிமை உணர்வாக வெளிப்படுகிறது. பிறரை மட்டம்தட்டுவதாக ஆகிறது. ஆனால் அவ்வியல்பு இல்லாத சாதியினர் எவரேனும் இந்தியாவில் உண்டா என்ன? ஒவ்வொரு சாதியைப்பற்றியும் அதற்குக்கீழே இருக்கும் சாதியினரிடம் கேட்டால் ஒன்றையேதான் சொல்வார்கள்மேட்டிமைத்தனம், அதன் விளைவான ஏளனம்.தமிழகத்தில் எந்தச்சாதியைப் பற்றியும் அதற்குக்கீழே இருக்கும் சாதி பாராட்டுதலாக ஏதேனும் சொல்லி இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.

தங்கள் சொந்த கல்வியறிவாலும், பண்பாட்டாலும் தங்களை மேம்படுத்திக் கொண்டவர்கள் அந்த வெற்றுப்பெருமிதங்களைக் கடந்திருப்பார்கள். ஆனால் எந்தச்சாதியிலும் அவர்கள் மிகமிகச் சிறிய எண்ணிக்கையில்தான் இருப்பார்கள். அவர்களிடம் அந்த வழக்கமான தோரணைகள் வெளிப்படாது. அந்த தோரணைகளை வெளிப்படுத்துபவர்கள் எந்தச்சாதியினரானாலும் வெற்றுவேட்டுக்கள். புறக்கணிப்புக்குரியவர்கள்.

நான் என் வரையில் சிறந்தவர்களைக் கொண்டே பொதுமைப்படுத்தும் முடிவுகளை எடுக்கவேண்டும் என நினைக்கிறேன். எனக்கும் பல கசப்பான அனுபவங்கள் உண்டு, அவற்றைக் கடந்துசென்றுவிடுவேன். நான் பெயர் சொல்லவிரும்பாத ஒருவர். அவர்மேல் பெருமதிப்பு கொண்டிருந்தேன். அதை பலமுறை எழுதியிருக்கிறேன். இத்தளத்திலேயேகூட. ஆனால் நான் சென்ற ஜூன் மாதம் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவர் அதை மகிழ்ந்து கொண்டாடி ஆனந்தப்பட்டார். நான் கேஸை பலப்படுத்தும்பொருட்டு வேண்டுமென்றே பொய்யாக மருத்துவமனையில் இருப்பதாக அந்த இரவிலேயே டிவீட் போட்டார்.நையாண்டி செய்தார்.

அந்த டிவீட் இணையத்தில் பெருவாரியாகப் பரப்பப் பட்டது. நான் காவல் உயரதிகாரியைச் சந்திக்க சென்றபோது அவரே கூடஉங்களுக்கு மெய்யாகவே அடிபட்டதா?” என்று கேட்டார். அந்த டிவீட்டை அவரும் பார்த்திருந்தார். நான் அடிபட்ட தடங்களைஅவை மிக வலுவாகவே பதிந்து தெளிவாகத் தெரியும்படி இருந்தனகாட்டியபோது அதிர்ச்சி அடைந்தார். அந்த டிவீட் போட்டவர் பெரிய நிறுவனங்களில் மக்கள்தொடர்புப் பணியில் இருந்தவர். பலநூறுமுறை காவல்நிலையங்களுக்குச் சென்றவர். அந்த டிவீட்டின் பொருளும் விளைவும் அவருக்கு நன்கு தெரியும்

என் நண்பர்கள் அந்த டிவீட்டை அவர் தெரியாமல் போட்டிருக்கக் கூடும் என அழைத்தபோது அவர் செல்பேசியை எடுக்கவே இல்லை. அவருடைய நண்பர் ஒருவர் வழியாக இறுதியாக அவரிடம் மெய்யாகவே நான் மருத்துவமனையில் இருப்பதைச் சொன்னபின்னர் தனக்கு ஒன்றுமே தெரியாது, கேள்விப்பட்டதை இணையத்தில் போட்டேன் என்று கூறி அதை நீக்கினார். ஆனால் என் நண்பர் ஒருவர் அவருக்கு “You nailed him’ என ஒரு குறுஞ்செய்தி அனுப்பியபோது அதற்கு haha என மறுமொழி அளித்தார்.

பின்னர்தான் தெரிந்தது, அவர் சில ஆண்டுகளாகவே என்மேல் வஞ்சத்துடன் இருந்திருக்கிறார். சில சாதியக் குழுக்களில் என்னை கிண்டலும் கேலியும் செய்து எழுதியிருக்கிறார். அவருடைய நுட்பமான சாதிய எதிர்வினை அது. ஆனால் மிகமிக திறமையாக ஒரு இனிய நட்பார்ந்த முகத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் எனக்குக் காட்டியிருக்கிறார். தருணத்திற்காகக் காத்திருந்திருக்கிறார். மனிதர்களின் கீழ்மைக்கு அளவே இல்லை

மிக எளிதாக இதை பிராமணச் சாதியின் குணம் என பொதுமைப்படுத்திக்கொள்ள முடியும். பலர் அப்படித்தான் செய்வார்கள். ஆனால் நான் அச்சாதியின் முகமாக நினைப்பவர்கள் சுந்தர ராமசாமியும் வெங்கட் சாமிநாதனும்தான், இவர் அல்ல. சுந்தர ராமசாமி பிராமணத் தன்னிலையையும் கடந்தவர். அவருடைய பண்பாட்டுச்சூழல் பிராமணியம் சார்ந்தது, அவ்வளவுதான். வெங்கட் சாமிநாதன் பிராமணராக தன்னை உணர்பவர். ஆனால் மேட்டிமைத்தனம் கொண்டவர் அல்ல. அவர்களுடனான என் அனுபவங்கள் முற்றிலும் வேறானவை.எழுத்தாளர்களுக்காக நான் திரட்டிய எல்லா நிதியிலும் இயல்பிலேயே கஞ்சரான சுந்தர ராமசாமியின் பங்களிப்பே முதன்மையானதாக இருந்திருக்கிறது. உதவிபெற்றவர்களில் அவருடைய முதன்மை எதிரிகளும் உண்டு

சமீபத்தில் நண்பர்களுடன் வெங்கட் சாமிநாதனைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நான் ஏழுமுறை வெவ்வேறு நண்பர்களுக்காக அவரிடம் உதவிகோரியிருக்கிறேன். ஒருமுறை ஒரு நண்பர் வேலையில்லாமல் கடும் வறுமையில் இருந்தபோது பெ.சு.மணி அவர்களின் மகள் திருமணவிழாவிற்கு வந்திருந்த வெங்கட் சாமிநாதனிடம் அவரை அறிமுகம் செய்துவைத்தேன். பெ.சு.மணி அந்த திருமணத்திற்கு என்னை அழைக்கவில்லை. சாமிநாதனை  ‘தற்செயலாகச்’ சந்திக்கும்பொருட்டே அங்கே சென்றோம். சாமிநாதன் முழுமூச்சாக இறங்கி அவருக்கு வேலைவாங்கி அளித்தார். அவர் வாழ்க்கையே மாறியது

சாமிநாதன் எந்த தோரணையும் இல்லாமல் சிபாரிசுகளுக்குச் செல்வார். முக்கியமானவர்களிடம் மன்றாடுவார், நச்சரிப்பார். “ஒருத்தன் நல்லா இருப்பான்னா இருக்கட்டுமே….பாப்பான் யாசகம் பண்ணலாம்னு இருக்கு” என்பார். நான் சொல்லி அவர் வேலை வாங்கித்தந்தவர்களில் எவருமே பிராமணர் அல்ல. அவர்களில் நால்வர் கடுமையான ‘பார்ப்பன எதிர்ப்பாளர்கள்’. அதுவும் அவருக்குத் தெரியும். அவர்கள் எவரும் இன்றுவரை ஒரு வார்த்தைகூட அவரைப்பற்றி நன்றியாகவோ பாராட்டாகவோ சொன்னதில்லை. அவருடைய உதவிகளால் மேலே வந்தவர்கள் மேலும் பலர்நான் அறிந்து இலக்கியச் சூழலில் உண்டு. அவர்களிலும் எவரும் பிராமணர்கள் அல்ல. அவர்கள் அவர் இறந்தபோது ஒரு அஞ்சலிக்குறிப்பு கூட எழுதவில்லை. .மேலே எங்கோ இருந்து சாமிநாதன் “சரிவிடு, இவனுங்க சொல்லித்தானா?” என்று சொல்லி சிரிப்பதாக எண்ணிக்கொள்வேன்.

எவரை நான் பொதுமைப்படுத்துவது? சாமிநாதனைக்கொண்டா, அவரிடம் உதவிபெற்றுக்கொண்டு அவரை இழிவுசெய்பவர்களைக்கொண்டா? நான் சாமிநாதனையே அந்தணரியல்பு கொண்டவர் என்று எடுத்துக்கொள்வேன். நீங்களல்ல எவர் என்னை பிராமண அடிவருடி என்றாலும் ”ஆமாடா போடா’ என்றுதான் மரியாதையாக பதில் சொல்வேன்.

முப்பதாண்டுக்காலமாக பிரமிள் சுந்தர ராமசாமியையும், சாமிநாதனையும் எழுத்தில் அவதூறுசெய்தார். பல அவதூறுகள் அனைத்து எல்லைகளையும் மீறியவை. குடும்பத்தையும் இழிவுசெய்பவை. பிரமிள் மகத்தான கவிஞர் என்று சொல்லும் ஒவ்வொரு முறையும் இயல்பிலேயே அற்பர் , உளச்சிக்கல்களால் இயக்கப்பட்டவர் என்பதையும் நான் சொல்லத்தவறியதில்லை- அவர் இருந்தபோதேகூட.. அவர் சகபடைப்பாளிகளைப் பற்றி எழுதியதில் அனேகமாக அத்தனை வரியும் பொய்யானது என நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அதையும் எழுதியிருக்கிறேன். நேரில் சொல்லியுமிருக்கிறேன். என் முன் நேரில் சொல்லமுயன்றபோது கடுமையாக எச்சரித்துமிருக்கிறேன்.

பிரமிள் இலங்கைக்குடிமகன். சட்டவிரோதமாக இங்கே வாழ்ந்தவர். எந்த ஆவணமும் கையில் இல்லாதவர். வெங்கட் சாமிந்தான் இந்திய அரசின் பாதுகாப்புத்துறையில் முக்கியமான பதவி ஒன்றை வகித்தவர். ஒரு சொல்லில் பிரமிளை அவர் சிறைக்கு அனுப்பியிருக்கக்கூடும். அதை அவர் செய்யவில்லை. தன்னை தானே கடக்கமுடிபவரின் இயல்பு அது. அதைக்கொண்டே நான் அவரை மதிப்பிடுவேன்

பிரமிள் தன்னை பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையாளர் என்று சொல்லிக்கொண்டார். ஆனால் ஒருபோதும் சாதிய எதிர்ப்பாளர் அல்ல. மிகத்தெளிவான வேளாளச் சாதிவெறி கொண்டவர். இதை நான் தனிப்பட்ட முறையில் நன்கறிவேன். இது அவர் வாழ்ந்தபோதே அது விரிவாக அவருடைய அணுக்க மாணவர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளது [அவருடைய மாணவர் ஒருவரின் குமுறலாக எழுதப்பட்ட விமர்சிக்கப்படாத கடவுள் என்னும் நீண்ட கட்டுரை நினைவுக்கு வருகிறது] பிரமிளைக்கொண்டு வேளாளர்களை மதிப்பிடுவேனா? மாட்டேன். உலகக்குடிமகனாகிய, மரபும் நவீனத்துவமும் பிசிறின்றி கலந்தவராகிய, பேரறிவும் பெருந்தன்மையும் கொண்ட மாமனிதராகிய ஜெயகாந்தனைக்கொண்டே மதிப்பிடுவேன்

உங்கள் பார்வை உங்கள் தெரிவு

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கடலூர் சீனுவின் கடிதங்கள்…

$
0
0

கடலூர் சீனு

 

உங்கள் இணையத்தில் திரு கடலூர் சீனு அவர்களின் கடிதம், கட்டுரைக்கென விசிறி வட்டம் உருவாகியிருக்கும் என நினைக்கிறேன். சில வேளைகளில் மிகக் கட்சித்தனமான வாக்கியங்களால் ஒரே பத்தியில் பல விஷயங்களை தாண்டி விடுகிறார். உங்கள் குழுமத்தின் அறிவு செயல்பாட்டையும், கூர்மையையும் தமிழ் இலக்கிய வட்டம் நன்கு அறியும். ஆனால் அதில் பங்கு கொள்ளாத இயலாத என்னை போன்றோருக்கு திரு சீனு அவர்களின் கடித பங்களிப்பு அங்கு நடக்கும் விவாதங்களை “ஒட்டு கேட்ட” மன திருப்தியை அளிக்கிறது.

நன்றி.

ரமேஷ்.

***

அன்புள்ள ஜெ

கடலூர் சீனு நூல்களைப்பற்றி எழுதும் குறிப்புக்களை விரும்பி வாசிப்பவன் நான். அவர் அறிமுகம் செய்யும் நூல்கள் வெவ்வேறு தளங்களைச் சார்ந்தவை. வரலாறு, சமூகவியல், இலக்கியம். ஆனால் அவர் தொடர்ச்சியும் ஒழுங்கும் உள்ள கட்டுரைகளாக ஒருசிலவற்றையே எழுதியிருக்கிறார். பெரும்பாலும் குறிப்புகளாகவே அவை நின்றுவிடுகின்றன. அவர் கட்டுரைகளை எழுதத் தொடங்குவது நல்லது என நினைக்கிறேன். அவைதான் அவர் நினைப்பது என்ன, அவருடைய கோணம் என்ன என்பதை எல்லாம் தெளிவாக விளக்கக்கூடியவை

சாந்தகுமார்

***

லகுலீச பாசுபதம் – கடலூர் சீனு உரை

நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்- கடலூர் சீனு

பேய்களும் பாரதியும் – கடலூர் சீனு

ஆடல்வல்லான் -கடலூர் சீனு

இன்றைய பண்பாட்டு விவாதங்களில்… கடலூர் சீனு

சமண வழி – கடலூர் சீனு

செழியனின் டு லெட் – கடலூர் சீனு

டு லெட்டும் விமர்சகர்களும் – கடலூர் சீனு

வாழ்நீர் – கடலூர் சீனு

இருளுக்குள் பாயும் தவளை. சா. துரை கவிதைகள் – கடலூர் சீனு

ராஜ் கௌதமன் – பாட்டும் ,தொகையும் ,தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்-கடலூர் சீனு

ராஜ் கௌதமன் ‘கண்மூடிவழக்கம் எலாம் மண்மூடிப்போக’- கடலூர் சீனு

பழைய யானைக்கடை -கடலூர் சீனு

நெல்லையில் ஒருநாள்- கடலூர் சீனு

யுவன் சந்திரசேகரின் ஊர்சுற்றி – கடலூர் சீனு

பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு

கல்மேல் நடந்த காலம் -கடலூர் சீனு

கிளம்புதலும் திரும்புதலும் -கடலூர் சீனு

முழுதுறக்காணுதல் – கடலூர் சீனு

முழுதுறக்காணுதல் 2 – கடலூர் சீனு

சபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு

அந்திமம் -கடலூர் சீனு

உலகமனிதன் -கடலூர் சீனு

என்றென்றும் யானைகள்- கடலூர் சீனு

பகுத்தறிவும் டாக்கின்ஸும் – கடலூர் சீனு

தாந்த்ரீக பௌத்தம் – கடலூர் சீனு

சுடர்தனை ஏற்றுக.. -கடலூர் சீனு

சிவசக்தி நடனம் – கடலூர் சீனு

மகாக்ரோத ரூபாய…. – கடலூர் சீனு

வசுதைவ குடும்பகம்- கடலூர் சீனு

நிலம் பூத்து மலர்ந்த நாள் – கடலூர் சீனு

மழை,மனிதர்கள்- கடலூர் சீனு

குகை ஓவியங்கள் -கடலூர் சீனு

அழியா ஓவியங்கள் -கடலூர் சீனு

ஜிப்மர்தினங்கள் -கடலூர் சீனு

பரிந்து இட்டோர் – கடலூர் சீனு

கஸாக்- கடலூர் சீனு

கடவுள் தொடங்கிய இடம் — கடலூர் சீனு

ஜெகே ‘ கடலூர் சீனு

ஓருலகம்- கடலூர் சீனு

ஆழி- கடலூர் சீனு

நீலம் -கடலூர் சீனு

தமிழ் இலக்கியக் காலகட்டங்கள்- கடலூர் சீனு

கிராவும் காந்தியும் – கடலூர் சீனு

நுகர்வெனும் பெரும்பசி-கடலூர் சீனு

சுமித்ரா- கடலூர் சீனு

கடல் சங்கு – கடலூர் சீனு

காலத்துயர் – கடலூர் சீனு

ஊட்டியிலிருந்து கொண்டுவந்தவை – கடலூர் சீனு

பாண்டிச்சேரியில் – கடலூர் சீனு கடிதம்

தெருவெங்கும் தெய்வங்கள்- கடலூர் சீனு

அன்பை வாங்கிக்கொள்ளுதல்…[கடலூர் சீனு]

கவிதை மொழியாக்கம் -சீனு

சீனு – ஒரு குறிப்பு

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அகதி வாழ்வு

$
0
0

 

அன்பு ஜெயமோகன்,

சமீபமாய் ஈழத்துக்குத் திரும்பி இருக்கும் எழுத்தாளர் தொ.பத்திநாதன் அவர்களின் நேர்காணல் இம்மாதக் காலச்சுவடில்(செப்டம்பர் 2019) வெளியாகி இருக்கிறது. மிகச்சுருக்கமான அதே நேரம் நேர்த்தியான உரையாடலாக அந்நேர்காணல் அமைந்திருந்தது.

அவரின் இரு கட்டுரைகளுக்கான இணைப்பை இங்கு தருகிறேன்

நட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்?

தமிழகத்தின் ஈழஅகதிகள்

 

நேர்காணலைத் தொடர்ந்து, இலங்கைக்குச் சென்றிருக்கும் அவரை ஆதவன் தொலைக்காட்சி பேட்டி கண்டிருந்தது. அக்காணொலியும் சிறப்பான ஒன்று. அதன் சுட்டியை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

 

 

உயிர்நலத்தை விரும்பும்,

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்,

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தூக்குமேடைக் குறிப்புகள்

$
0
0

தூக்குமேடைக்குறிப்புகள் வாங்க

ஆசிரியருக்கு,

கடந்த இரு மாதங்களாக நாங்கள்  இணை  வாசிப்பு ஒரு அமைப்பை துவங்கி உள்ளோம். ஒரே சமயத்தில் ஒரே புத்தகத்தை வாசித்து அது குறித்து தொடர்ச்சியாக விவாதிப்பது என்பது இதன் செயல்பாடு. இதன்மூலமாக அந்த புத்தகத்தை அழுத்தமாக மனதில் பதிய வைத்துக் கொள்வது  இதன் என்பது நோக்கம். இப்போதைக்கு சுமார் 20 பேர் உள்ளோம் படித்தபின் அனைவரும் அதை பற்றி ஒரு குறைந்தபட்ச குறிப்பு எழுத வேண்டும் அதை அனைவரும் கூட்டாக வாசிக்க வேண்டும் என்பது இதன் முக்கிய விதி.

இணை வாசிப்பை மின்னஞ்சல்கள் மூலமாகவே நடத்துகிறோம். முதலாவதாக  நாஞ்சலின் மாமிச படைப்பை வாசித்தோம். இரண்டாவதாக ஜூலிஸ்  பூசிக்கின்  தூக்குமேடை குறிப்புகளை வாசித்தோம்.

 

தூக்கு மேடை குறிப்புகள் முக்கிய ஆக்கமாக இருந்தபோதிலும் இடதுசாரி  சிந்தனை வட்டத்தை சாராத ஒருவர் அரிதாகவே வாசித்திருக்கிறார் என்பதை சமீபத்தில் அறிந்தேன்.

அரசியல் குறித்தெல்லாம்  வாசகிகளோ அல்லது பெண் எழுத்தாளர்களோ காத்திரமாக அறிந்து கொள்வதோ அல்லது பேசுவதோ குறைவு. இச்சூழலில் ஸ்வேதா இந்த புத்தகத்தை வாசித்துவிட்டு அதன் வரலாற்றுப் பின்னணி, வெளியான சூழல், பின்னர் இதன் மீது ஏற்பட்ட விமர்சனங்கள் என ஒரு விரிந்த   வாசிக்கத்தக்க கட்டுரையை எழுதியுள்ளார் பார்வைக்கு வைக்கிறேன். நமது வாசகர்கள் இந்த புத்தகத்தின் மீது கவனம் செலுத்துதல் தேவையான ஒன்று.

கிருஷ்ணன்.

***

சிவப்பு கனவுகள் கண்டவன் – ஜூலியஸ் பூசிக் – ஸ்வேதா

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

முகில்வண்ணம்

$
0
0

 

‘நூறுமலையாளம் உண்டெங்கிலெந்தெடி பெண்ணே?

காறுமலையாளம் அல்லேடி மலையாளம் கண்ணே!’

 

ஒரு பழைய நடவுபாட்டு. நூறுமலையாள மண் இருந்தாலுமென்ன கார் மலையாளம் அல்லவா மலையாள மண்? அழகான பாடல். அக்காலங்களில் நாற்றுநடவு செய்பவர்கள் அடிக்கடிப் பாடிக்கேட்டிருக்கிறேன். ஆறுமலையாளிக்கு நூறு மலையாளம் [ஆறு மலையாளிகள் சேர்ந்தால் நூறு மலையாள உச்சரிப்பு] என்ற பழமொழியுடன் இதையும் சேர்த்துப் புன்னகைத்துக்கொள்வதுண்டு.

 

இரவும்பகலும் மழைபெய்துகொண்டிருக்கும் குமரிமாவட்டத்தில், சேறுகலங்கிய வயலில் முட்டளவு இறங்கிநின்று நாளுக்கு பத்துமணிநேரம் வேலைபார்ப்பவர்கள், திரும்பிச்செல்லும் வீடும் சற்றே ஒழுக, ஈரவிறகை ஊதி ஊதிப் புகையெழப் பற்றவைத்து சமைத்து உண்டு, தரையில் மண்ணீரம் ஊறிக்குளிர பனம்பாயில் துயிலவேண்டியவர்கள் அதைப்பாடியிருக்கிறார்கள் என்பது வியப்புக்குரியதுதான்.

மனிதர்களின் அடிப்படையான ரசனை வசதிகள் சார்ந்தது அல்ல. பழக்கம் சார்ந்தது. உள்ளுணர்வாக படிவதும் பழக்கமே. கீழைத்தஞ்சாவூர்க்காரரான என் மாமனார் குமரிமாவட்டம் வந்தாலே “என்ன ஊரு இது, எப்ப பாத்தாலும் மழை, சளியும் காய்ச்சலுமா ஒருநாள் நிம்மதியா தூங்கமுடியுதா?” என அங்கலாய்ப்பார். இந்த ஊரில் எருமையாக வாழ்வதைப்போல் இனிது பிறிதில்லை என்பது என் எண்ணம்

 

விடிகாலையில் சாரல்மழையில் நனைந்தபடி நடைசெல்கிறேன். ஊதல்காற்றுவேறு. தலைமயிர் குறைவு என்பதனால் பெரிதாகத் துவட்டிக் காயவைக்கவேண்டியதில்லை. ஒரு நீவு நீவிவிட்டால்போதும். எங்களூரில் பெரும்பாலானவர்களுக்கு வழுக்கை இருப்பது ஏதேனும் பரிணாமவிதியோ என்னவோ.

இந்த மழை தொடங்கும் காலகட்டத்தை திருவாதிரை ஞாற்றுவேல என்று மலையாளநூல்கள் வரையறுக்கின்றன. ஞாறு என்றால் நாற்று. வேலை என்னும் சொல்லுக்கு திருவிழா, கொண்டாட்டம் என்று பொருல். நான் இப்படித்தான் நெடுங்காலம் புரிந்துகொண்டிருந்தேன். ஏனென்றால் எங்களூரில் உண்மையிலேயே அது பெரிய கொண்டாட்டம். எருமைகள் போல மானுடரும் ஆகும் காலம். ஆனால் அது மிகத்தொன்மையான வானியல்கணக்கு என சோதிட ஆய்வாளரான நண்பர்  ஒருமுறை சொன்னார். ஞாயிற்று [ஞாயிறு] என்னும் சொல்லின் திரிபுதான் இங்கே ஞாற்று எனப்படுகிறது.

 

ராசிசக்கரத்தில் ஒரு மீன் கட்டத்தை சூரியன் கடந்துசெல்லும் காலகட்டத்தை ஞாற்றுவேலை என்கிறார்கள். ஞாயிற்றுநிலை என்றே பழைய நூல்கள் சொல்கின்றன. மொத்தம் 27 ஞாற்றுவேலைகள். 27 மீன்களின் பெயர்கள் அவற்றுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மீனிலிருந்து இன்னொன்றுக்கு சூரியன் செல்வது ஞாற்றுவேலைப் பகர்ச்சை எனப்படுகிறது. [பகிர்தல்] ஒரு ஞாற்றுவேலை பொதுவாக பதிமூன்றரை நாட்கள் நீளும். அதில் தொடக்கம் உச்சம் சரிவு என மூன்றுநிலைகள் உண்டு. ஒரு ஞாற்றுவேலை உச்சம் மூன்றுநாட்கள்

பழங்கால கேரள வேளாண்மை ஞாற்றுவேலைக் கணக்குகளின் அடிப்படையில் அமைந்திருந்தது, இன்றைக்கும் பழையதலைகள் அப்படித்தான் கணக்கிட்டுக்கொண்டிருக்கின்றன. எந்தெந்த ஞாற்றுவேலைகளில் மழை எவ்வண்ணம் பொழியும் என்பதற்கு கணக்குகள் உண்டு .ஏப்ரல் பாதியில் கோடையின் வெம்மைக்குள் முதல் ஞாற்றுவேலையான அஸ்வதி தொடங்குகிறது. அதில் கோடைமழை பெய்தாகவேண்டும். அடுத்த ஞாற்றுவேலை கார்த்திகை. அதில் மழை இருக்காது.

 

ஜூன் தொடக்கத்தில் திருவாதிரை ஞாற்றுவேலை தொடங்குகிறது. மழை மயிற்பீலி வீசுவதுபோல சுவர்களில் அறைந்தபடி சாய்வாகப் பெய்யவேண்டும். திருவாதிரைக்கு தெளிந்தமழை, புணர்தத்தில் புகைந்த மழை, ஆயில்யம் அடைச்சுமழை, அத்தம் மழை சக்தம் என தொடர்ந்து மழைவந்தாகவேண்டும் என வற்புறுத்தும் பழமொழிகள். அதாவது திருவாதிரை முதல் மழைதான்.மற்ற ஞாற்றுவேலைகளைப் பற்றி கவலைப்படாதவர்கள், தெரிந்திராதவர்கள்கூட திருவாதிரை ஞாற்றுவேலை பற்றி தெரிந்திருக்கிறார்கள். திருவாதிரை ஞாற்றுவேலை தொடங்கியது என நாளிதழ்கள் செய்தி போடுகின்றன.

திருவாதிரை ஞாற்றுவேலையில் விரல் வெட்டி நட்டால் மனிதனும் முளைத்தெழுவான் என்றும் கல் விதைத்தால் மலைமுளைக்கும் என்றும் பாட்டாக்கள் சொல்வதுண்டு. அதாவது ஜூனில் விதைத்தால் செப்டெம்பர் பாதிவரை திரும்பியே பார்க்கவேண்டாம். அக்டோபரில் சோம்பல்முறித்து திரும்பிப் பார்க்கையில் நட்டவிதை எழுந்து இலைவிரித்து தண்டு பருத்து நின்று  “என்ன வேய்?’ என்று கேட்கும். பின்னர் அடுத்த மழைக்காலம் ஒன்றரை மாத இடைவெளிக்குப்பின் மகர ஞாற்றுவேலையில் தொடங்குகிறது.

 

இந்தமழைக்காலம் கேரளத்திற்கு கொஞ்சம் கொடுமையானது. உண்மையில் மழையளவு கூடவில்லை. ஆனால் மலைகளை எல்லாம் வெட்டி சாலைகளும் தோட்டங்களும் மாபெரும் கட்டிடங்களுமாக ஆக்கிவைத்திருக்கிறார்கள். மலை அப்படியே விண்டு வீழ்கிறது. வெள்ளம் செல்லும் பாதைகளில் எல்லாம் அடைப்புக்கள். நீர் ஊருக்குள் புகுகிறது. சென்ற இரண்டு ஆண்டுகள் கேரளத்திற்கு பெரிய பாடங்களைக் கற்பித்திருக்கின்றன. ஆனால் கற்பார்களா, கற்றாலும் நடைமுறைக்கு வருமா எனத் தெரியவில்லை.

குமரிமாவட்டத்திற்கு இவ்வாண்டு நல்ல மழை, ஆனால் மிகைமழை இல்லை. இப்போது ஒவ்வொருநாளுமென பெய்துகொண்டிருக்கிறது. ஓணம்வரை பெய்யும் என்பது பழைய கணக்கு. நாளும் காலையில் சென்று முகில்மண்டிய வானை நோக்கி நின்றிருக்கிறேன். நான் செல்லும் பகுதிகள் ஒரு மனிதத்தலைகூட தென்படுவதில்லை. சிறகுவிரித்தாடும் தென்னைகள். முகில்சூடிக் கருமைகொண்ட மலைகள். பசுமையின் அலைகளாக ஓடும் காற்று

 

மலைகள் கருமைகொள்வது அவை மெல்லமெல்ல கடுவெளி நோக்கிப் பின்வாங்குவதுபோலத் தோன்றும். அவற்றின் முப்புடைவுகள் தெளிவுகொள்கின்றன. பின்னர் மங்கலடைகின்றன. அவை மென்மையான புகைக்குவைகள் என மாறுகின்றன. பசுமை கருமையோ என எண்ணச் செய்கிறது. அவற்றின் மேல்முனைகள் கரைந்து வானில் மறைகின்றன. திரையிறங்கி அவற்றை முழுமையாக மூடிவிடுகிறது. அப்போது மின்னல்கள் வெட்டுமென்றால் மலைமுகட்டுப்பாறைகள் கங்குகள் போல் ஒளிர்ந்தணைவதைக் காணலாம்

முகில்கள் மெல்லிய காக்கைச்சிறகுகள் போலத் தோன்றுகின்றன. அல்லது கருங்குருவிச்சிறகுகள். காக்கைச்சிறகுகள் சற்றே கடினமானவை. கருமையிலிருந்து ஒளிரும் வெண்மைநோக்கிச் செல்லும் பல்லாயிரம் அழுத்தவேறுபாடுகளாலான வெளி. நோக்கும் கணத்தில் அவ்வுருவங்கள் தெரிகின்றன. மறுகணம் வேறொன்றாகின்றன. ஒரு கணத்தை ஒரு வெளியென காணவேண்டுமென்றால் முகில்களையே பார்க்கவேண்டும்.

 

நித்ய சைதன்ய யதி ஊட்டியில் பெரும்பாலான நாட்களில் தன் ஓவியநிலையுடன் ஏதேனும் மலைவிளிம்பில் சென்று அமர்வார். வெண்ணிறத்தாளில் கிராஃபைட் [பென்சில்முனைத்] தூளை எண்ணையில் குழைத்து சுட்டுவிரல்தொட்டு கருமுகில்குவைகளை வரைவார். அலையலையாக, குவைகளாக, சுருள்களாக. முதலில் எண்ணைக்கறை போலத் தோன்றும். முகில்களாக உருக்கொள்கையில் பின்னாலிருக்கும் வெண்ணிறக் காகிதம் கண்கூசும் வானொளியாக முகில்களை ஊடுருவி பீரிடும்

 

வரைந்ததுமே அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுவார். பலசமயம் அவரைக் காணவருபவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அவற்றை அவர் சேர்த்து வைப்பதில்லை. வரைவது முகில்களைக் கூர்ந்து பார்க்கும்பொருட்டு மட்டுமே. ஓவியம் வரையத்தெரியாவிட்டாலும் வரையலாம் என்று நித்யா சொல்வார். ஒருமாதிரி பார்க்கும்படியான நிலக்காட்சியை வரைய ஒருமாதகாலப் பயிற்சி போதும். சட்டகத்தின் ஜியோமிதியையும் வண்ணக்கலவையையும் பயின்றால்போதும். வரைந்தபின் கிழித்து வீசிவிட்டால் பிரச்சினை இல்லையே.

 

ஏனென்றால் நம்மால் வெறுமே நிலக்காட்சியை பார்க்க முடிவதில்லை. எண்ணங்கள் ஊடறுக்கின்றன. நினைவுகள், ஒப்பீடுகள். அவற்றை அவ்வப்போது சொல்லாக ஆக்கிக்கொள்வோம். வரைவது அந்நிலக்காட்சியை கூர்ந்து மிகக்கூர்ந்து பலமணிநேரம் பார்க்கச் செய்கிறது. அது ஓர் ஊழ்கம்.

நான் வானின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லைவரை நாற்பது நிமிடம் அணுவணுவாக கூர்ந்து நோக்குவதை என் ஊழ்கமுறையாகக் கொண்டிருக்கிறேன். அக்காட்சியுடன் வந்தமையும் எண்ணங்களை தவிர்த்துவிடவேண்டும். உதறக்கூடாது, மேலே படியும் மெல்லிய ஆடையை என நழுவவிடவேண்டும். நோக்குதலன்றி உளச்செயலேதும் நிகழக்கூடாது. நாற்பது நிமிடங்களில் ஐந்து நிமிடம் அவ்வாறு அமையுமென்றாலும்கூட ஊழ்கம் நிறைவடைந்தது என்றே பொருள்.

 

இன்றுகாலை முகில்கள். ஓருபுள்ளியில் இருந்து அதேபுள்ளிவரை. பின்னர் அதை புகைப்படங்களாக எடுத்துக்கொண்டேன். நித்யா வரைவதுபோல வரைய எனக்குப் பயிற்சி இல்லை என்பதனால். அவ்வண்ணங்களை எப்படிச் சொல்லாக்குவதென்று வரும் வழியில் எண்ணிக்கொண்டேன். சாம்பல்நீலம், வெண்கருமை என கலவைகளாகவே தோன்றிக்கொண்டிருந்தது. சொற்களை வண்ணம்போல கலந்துகொண்டே இருக்கவேண்டும். ஓர் எல்லையில் அந்த வண்ணம் சொல்லாகிவிடும். உடனே அப்படியே தூக்கி வீசிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடவேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பனிமலையில்

$
0
0

தும் அகர் சாத் தேனே கா

[நீ என்னுடனிருப்பது வரைக்கும் அழகிய பாடல்களை பாடிக்கொண்டிருப்பேன்]

மகேந்தர் கபூர்

http://meaninngtranslation.blogspot.com/2015/12/tum-agar-saath-dene-ka-lyrics.html

 

திருவனந்தபுரத்தில் அன்றெல்லாம் இந்திப்படங்கள் கொஞ்சம் பழசாகி மீண்டும் வரும். ஸ்ரீகுமார்-ஸ்ரீவிசாக் இரு அரங்குகளில் ஒன்றில். கல்லூரி முதலாண்டில் திருவனந்தபுரம் சென்றபோது சும்மா ஒன்றுமேதெரியாமல் ஏறி அமர்ந்து பார்த்தபடம் ஹம்ராஸ். யார் நடித்தது,என்ன கதை, என்ன பின்னணி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் விந்தையான ஓர் அனுபவம். அந்தப்படம் வெறும் காட்சியனுபவமாகவே என்னுள் பதிந்துவிட்டது. அதை முழுக்கமுழுக்க கண்களாலேயே அறிந்தேன்

 

அந்தப்படத்தில்தான் ஒரு பாடலில் இமையமலையின் பனிமுகடுகளின் அழகைக் கண்டேன். தமிழ்ப் படங்களில் கண்டிருக்கிறேன். புகைப்படங்களிலும். ஆனால் விரிந்த திரையில், குளிரூட்டப்பட்ட அரங்கில் அதைக் கண்டது ஒரு பெரிய அனுபவமாக அமைந்தது. அன்றெல்லாம் இந்திப்படங்களில் முக்கியமான பாடல்களை மட்டும்  இடைவேளைக்குப்பின் மீண்டும் ஓடவிடும் வழக்கமிருந்தது..அரங்கிலிருந்த பெரும்பாலானவர்களுக்கு அப்பாடல் ஏற்கனவே நன்றாகத் தெரிந்திருந்தது என்பது அவர்கள் கூடவே பாடியதிலிருந்து தெரிந்தது.

 

நீண்ட இடைவேளைக்குப்பின் தற்செயலாகக் கண்டெடுத்து அதை மீண்டும் பார்க்கையில் அப்பாடலின் அமைப்பே அழகாக இருக்கிறது. ரயில்நிலையத்தில் இறங்குவதிலிருந்து அந்தியில் தோட்டத்தொழிலாளர்கள் செல்வது வரை ஒருநாள். அன்றைய தமிழ்ப்படங்களின் வண்ணப்பீரிடலுடன் ஒப்பிடுகையில் அழகான ஒளிப்பதிவு

 

ஏ நீல ககன் கி தலே [தர்திரி கா பியார் ஃபலே

[[நீலவானத்தின் கீழே மண்ணில் காதல் விரிகிறது]

மகேந்திர கபூர் 

ஹம்ராஸ் படத்தின் ஏ நீல் ககன் என்ற பாடல் அன்றே கேரளத்தில் மிகமிகப்பிரபலம். இன்றுகூட அதேயளவு புகழுடன் இருக்கிறது என்பதை சமீபத்தைய தொலைகாட்சி நிகழ்ச்சிகளினூடாக அறிந்தேன்.இசையமைப்பாளர் ரவி பின்னாளில் ரவி பாம்பே என்றபேரில் மலையாளத்தில் பெரும்புகழுடனிருந்தார். மகேந்திர கபூரின் குரலுக்கு கேரளத்தில் அன்றுமின்றும் பித்தர்கள் மிகுதி.

 

என்னால் இப்போதும் அந்த முகங்களைக் கடந்து பின்னணியின் பனிமலைகளைத்தான் பார்க்க முடிகிறது. பனிமலைகளின் பாடலாகவே ஒலிக்கிறது

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16742 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>