Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16732 articles
Browse latest View live

சுகிசிவமும் சுப்ரமணியனும்

$
0
0

 

அன்புள்ள ஜெ,

 

இணையத்தில் இப்போது திரு சுகி சிவம் அவர்களின் வேத,தமிழ் கடவுள் என்பதின் விளக்கங்கள் சர்ச்சை ஆகி வருகின்றது. நீங்கள் கவனித்திருக்கக்கூடும்? பெரும்பாலும் இவ்வித இனைய வம்புகள்/கூச்சல்களை நான் பொருட்படுத்துவதில்லை. மேலும் இந்து மதம் பற்றி “இந்திய ஞான மரபின் ஆறு தரிசங்கள்” படித்தபின், எனக்கு எவ்வித குழப்பமும் இல்லை.

 

மதம் என்பது குறிப்பாக இந்து மதம், தத்துவம், மற்றும் குறியீடுகள்தான் அதன் மைய்யமாக இருக்கும். வழிபாடுகள் அதன் சடங்குகள் சமுதாயத்தின் அமைப்பை சரி செய்து கொள்வதற்க்காக செய்யப்பட்ட ஏற்பாடே, எனினும் சடங்குகளின் வழியாக அதன் மைய தத்துதத்தை சாமானியனும் சென்றடைய முடியும்.இந்து மதம் மிகப்பெரிய உரையாடல்களை நடத்தி தத்துவ-வழிபாட்டு முறையை அமைத்திருக்கிறது.

 

இந்த முழு காணொளியில், போகிற போக்கில், “வடக்கில் இருந்து வந்த வழிபாட்டு முறைகளில் சில சிறப்புக்கள் இருக்கிறது, தெற்கில் இருந்த வந்த வழிபட்டு முறையில் சில நேர்மை இருக்கிறது”. இந்த கூற்றை எவ்வாறு புரிந்து கொள்வது?

 

இது தூய்மை வாதத்தின் நெடி அல்லவா ? சுகி சிவம் தூய்மை வாதம் பேசுகிறாரா ?

 

நிச்சயம் வம்புக்காக கேட்கவில்லை, ஒரே ஒருமுறை இதற்கு விளக்கமான பதிவு தருவீர்களா?

ராம் பாலாஜி

இந்துமத விவாதங்கள்

அன்புள்ள ராம்,

 

நான் நேற்று எழுதிய ஒரு குறிப்பின் சுட்டி உள்ளது. அதை முன்னுரையாக வாசித்துக்கொள்ளவும் – இந்துமத விவாதங்கள்

 

திரு சுகி சிவம் சொன்னதை ஒரு கருத்தாக அல்ல, பல கருத்துக்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் அதற்கு வரும் எதிர்ப்புக்கள் பல கோணங்களிலானவை.

 

மரபான சைவ –முருக வழிபாட்டாளர்கள் முருகனை தொன்மமாக, பரிணாமம் அடைந்து வந்த ஒரு வடிவமாக, பல்வேறு வடிவங்களின் கலவையாக காண்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு அது பரம்பொருளின் வடிவம். மானுடர் தோன்றும்முன்னரே அவ்வண்ணம் தோன்றியது. ஞானிகளால் அவ்வண்ணமே கண்டடையப்பட்டது. அது எப்படி உருவானது என ஆராய்வதே பிழையானது. அவ்ர்களுக்கு மதத்தைப்பற்றிய வரலாற்றுபூர்வமான எந்த ஆராய்ச்சியும் மீறலே

 

உண்மையில் மதநம்பிக்கைதான் உங்கள் வழி என்றால், பக்தியை கடைக்கொள்பவர் என்றால் ஆராய்ச்சிநோக்கு மிகமிக எதிரானது. ஆராய்ச்சிநோக்கு சற்று தோன்றினால்கூட ஐயம் எழும். பக்தி அகன்றுவிடும். அத்தகையோர் இத்தகைய ஆராய்ச்சிகளைச் செவிகொள்ளவே கூடாது. இவர்களிடம் விவாதிக்கவும் கூடாது. பக்தியும் ஆராய்ச்சியும் முற்றிலும் வேறுவேறு வழிகள் கொண்டவை. சுகி.சிவம் வரலாற்றுநோக்குக்கு இடமில்லாத, பக்திக்கு மட்டுமே இடமுள்ள, மேடையில் அதைச் சொன்னதே எதிர்ப்புக்குள்ளாகிறது.

 

சுகி.சிவம் முருகனும் சுப்ரமணியனும் வேறுவேறு என்கிறார். இந்தப் பார்வை தொன்மங்களின் அடிப்படையிலும், வரலாற்றுத்தரவுகளின் அடிப்படையிலும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் பண்பாட்டு ஆய்வின் ஒருபகுதி. அந்த ஆய்வு மிகவிரிவானது. பல்வேறு உள்விவாதங்கள் கொண்டது. அதை எளிமையாக்கி ஒரு மதச்சொற்பொழிவு மேடையில் ஒரு கருத்தாக முன்வைக்க முடியாது.

 

ஏனென்றால் மதத்தொன்மங்கள் சார்ந்த இந்த ஆய்வுகள் எவையுமே ‘நிரூபிக்கப்பட்ட’ உண்மைகள் அல்ல. அவற்றை புறவயமாக நிரூபிக்கவும் முடியாது. இவை ஊகங்கள் மட்டுமே. இந்த ஊகங்கள் எவையும் பரவலாக ஏற்கப்பட்டவையும் அல்ல. ஆகவே ஓர் ஆய்வாக இவற்றை முன்வைக்கையில்கூட இவற்றுக்கான எதிர்தரப்பையும் சேர்த்தே சொல்லவேண்டும். சுகி.சிவம் ஒரு வரலாற்று உண்மை போலச் சொல்கிறார். அது ஏற்கத்தக்க அணுகுமுறை அல்ல.

 

முருகனும் சுப்ரமணியனும் வேறுவேறா? இந்த வரியே பிழையானது. இந்து தெய்வங்கள் என நாம் இன்று வணங்கும் எல்லா தெய்வங்களும் வரலாற்றினூடாகப் பரிணாமம் அடைந்து இவ்வடிவில் வந்தமைந்தவைதான். அவை அனைத்திலுமே வெவ்வேறு தெய்வ உருவங்கள் வந்து இணைந்துள்ளன. ஆனால் இந்து தெய்வங்கள் மட்டும்தானா? இல்லை, புத்தர், ஜினர், ஏசு ,மாதா என இன்று வணங்கப்படும் எல்லா தெய்வங்களும் இவ்வாறுதான் உருவாகியிருக்கின்றன. நாட்டார்தெய்வங்களே கூட இவ்வாறுதான் திரண்டு வந்துள்ளன. இவ்வாறுதான் தெய்வங்கள் உருவாக முடியும்

 

இன்று வணங்கப்படும் ஒரு தெய்வஉருவகம் வெவ்வேறு தெய்வஉருவகங்கள் காலப்போக்கில் இணைந்து ஒன்றாகி எப்படி உருவானது என்று பார்ப்பதற்கும் இன்றிருக்கும் உருவத்தை பலபகுதிகளாகப்பிளந்து அவை வேறு வேறு என வாதிடுவதற்கும் பெரிய வேறுபாடுள்ளது. இணைவின் இயல்பை ஆராய்வது வேறு, பிளந்து நோக்குவது வேறு. அது வரலாற்றை ரத்துசெய்வது. பலசமயம் வரலாற்றை பிழையாக விளக்குவது. அதைத்தான் சுகி சிவம் செய்கிறார்

 

நான் தெய்வ உருவங்களின் பரிணாமத்தை எப்படிப் பார்க்கிறேன்? என் நோக்கு அத்வைதம் சார்ந்தது. நாராயணகுருவின் நித்யாவின் வழிவந்தது. இத்தெய்வ உருவங்கள் மானுட உருவகங்களே. ஆனால் இப்படி உருவகிக்கப்படும் ஒன்று, ஒரு அறிபடுபொருள், அப்பால் உள்ளது. ஒரு பேசுபொருள் அதற்கான சொல்லைக் கண்டடைவதுபோல அது தன் உருவத்தை அடைகிறது. அன்பு என நாம் உணரும் ஒன்று உள்ளது. அன்பு என்னும் சொல் நாம் இடுவது மட்டுமே. நம் அறிதல் மாறுபடுந்தோறும் அச்சொல்லை நாம் சற்றே மாற்றிக்கொண்டே இருக்கிறோம். நம் பண்பாடு மாறும்போது, நம் சமூகச்சூழல் மாறும்போது அச்சொல் உருமாறிக்கொண்டே வருகிறது. தெய்வ உருவங்கள் அவ்வாறுதான் மாறுபடுகின்றன.

 

முருகன் என வழிபடப்படும் தெய்வம் குறித்து இரண்டுவகையான உருவகங்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. சில சங்கப்பாடல்களில் முருகு எனக் குறிப்பிடப்படும் தெய்வம் தமிழகத்து நாட்டார்-சிறுதெய்வமாக உள்ளது. தலைவி காதல்நோய் கொள்ளும்போது அவள்மேல் அணங்கு கூடியிருப்பதாக வீட்டார் எண்ணுகிறார்கள். வேலன் வந்து வெறியாட்டு ஆடி, ஊன்சோற்றை எண்புறமும் வீசி அணங்கை அகற்றுகிறான். சில பாடல்களில் அவள்மேல் ஆவேசித்திருப்பதே முருகுதான் என்றும் கொள்ளமுடிகிறது. முருகு தலைவிமேல்,  பூசகன் மேல் சன்னதமாக வந்து கூடுகிறது. அது முருகு அயர்தல் எனப்படுகிறது. சங்க இலக்கியம் காட்டும் முருகனின் பூசனைமுறைகளும் நாட்டார்- பழங்குடித்தன்மை கொண்டவை.

 

வேறுசில சங்கப்பாடல்களில் சேயோன் மலையுடைத் தெய்வமாக, செவ்வேளாக, பெருந்தெய்வத்தின் சாயலுடன் இருக்கிறான். இரண்டும் வேறுவேறு தெய்வங்களா, ஒரேதெய்வம் காலத்தில் அடைந்த மாற்றமா என்பதை அறிஞர்கள் இன்னும் விவாதிக்கிறார்கள். இந்தத் தெய்வங்களில் சேயோனுடன் அவுணரைக் கொன்றது உட்பட புராணச்செய்திகளை இணைந்துள்ளன. சங்கம் மருவிய காலத்திலேயே சேயோன் கார்த்திகேயனாகவும் சுப்ரமணியனாகவும் ஆகிவிட்டான். முருகனை மையத்தெய்வமாகக் கொண்ட கௌமாரம் இங்கே வந்து வளர்கிறது. அங்கிருந்து தொடங்கி வடமொழி ஸ்காந்தத்தின் தமிழ்வடிவமான கந்தபுராணம் உருவாவது வரை முருகவழிபாட்டின் தொடர்ச்சியாக ஒரு வளர்ச்சிச் சித்திரம் இங்குள்ளது.

 

அது சுகி சிவம் சொல்வதுபோல எளிமையான வழிபாட்டுமாற்றம் அல்ல. வெவ்வேறு தெய்வங்கள் இணைந்து பெருந்தெய்வம் உருவாகும் ஒரு பெரிய பண்பாட்டுமாற்றம் அது. அதில் மெய்யியல், தத்துவம்,  தொன்மவியல், குறியீட்டியல் என பல நுண்ணிய அக இயக்கங்கள் உள்ளன. உலகம் முழுக்க எல்லா பெருமதங்களும் இவ்வாறுதான் உருவாகியிருக்கின்றன.தனியொருவரால் உருவாக்கப்பட்ட தீர்க்கதரிசன மதங்களே கூட இப்படித்தான் காலப்போக்கில் பேருருவம் கொள்கின்றன. பெருமதங்கள், பெருந்தெய்வங்கள் உருவாக வேறுவழியே வரலாற்றில் கிடையாது.

 

சரி, அங்கிருந்து வந்தது ‘வடவரின்’ அல்லது ‘ஆரியரின்’ சுப்ரஹ்மணியனா? இல்லை. அதுவும்கூட இந்தியப்பெருநிலத்தில் இருந்த பல்வேறு தெய்வஉருவங்களும் வழிபாட்டுமுறைகளும் இணைந்து உருவான ஒன்றுதான். அதில் வடநிலத்திலிருந்த பழங்குடி – நாட்டார் தெய்வங்களின் கூறுகள் உண்டு.அதை சுப்ரமணியன் என வைதிகமரபு கொண்டது. தேவசேனாபதி என்னும் உருவகம் சுப்ரமணியன் என்னும் உருவகத்துக்கு சற்றே மாறானது. தேவசேனாபதியான முருகன் அன்னைதெய்வங்களை வழிநடத்திப் போருக்குச் செல்வதன் சித்திரத்தை நாம் காண்கிறோம். அதற்கு நாட்டார் மூலம் இருக்கலாம் இந்த இணைவு மகாபாரதக் காலகட்டத்திலேயே நிகழ்ந்துவிட்டது.

 

வேதகாலம் முதல் இந்தியாவில் ஒரே தெய்வங்கள் ஒரேவகையாக வழிபடப்பட்டதில்லை என்பது தொடக்கநிலைப் பாடம். வேதங்கள் தொல்காலத்தையவை. அவற்றிலிருந்த சிலதெய்வங்கள் பின்னர் வளர்ந்தன. பல பின்னர் முக்கியத்துவமிழந்தன. சூரியனும் இந்திரனும் வேதங்களின் தெய்வங்கள். அவர்கள் பின்னர் முழுமுதல்தெய்வங்களாக ஆனார்கள். சௌரம் ஐந்திரம் என்னும் மதங்களின் தலைமை தெய்வங்களானார்கள். கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்குள் இந்திரவழிபாடு மெல்ல மறைந்தது. கிபி பதினொன்றாம் நூற்றாண்டுவரை நீடித்த சூரியவழிபாடு சைவ வைணவ மதங்களில் இணைந்தது. சிவனும் விஷ்ணுவும் தனிப்பெருந்தெய்வமாக ஆனார்கள். கிருஷ்ணனும் ராமனும் பெருந்தெய்வங்களாக எழுந்தனர்.

 

இதை ‘அவன் கொண்டுவந்தான், இவன் ஏத்துக்கிட்டான்’ என்பதுபோல பேசுவது மிகமிகக் குழப்பமான, அரைகுறையான புரிதல்களையே உருவாக்கும். முருகு ஒரு சிறுதெய்வமாக இருந்த சங்ககாலத்தின் தொடக்கத்திலேயே இங்கே இந்திரன் பெருந்தெய்வமாக இருந்தான். பூம்புகாரில் நிகழ்ந்த பெருவிழா இந்திரனுக்குத்தான். இந்திரன் மறைய அதேகாலகட்டத்தில் முருகன் பெருந்தெய்வமானான். இந்த மாற்றங்கள் எளிமையான சமூகவியல் – அரசியல் வாய்ப்பாடுகளின்படி விளக்கப்படக்கூடியவை அல்ல. ஆய்வாளர்களே கூட இன்னமும் தெளிவுறாத விவாதப்பொருட்கள் இவை.

 

பொதுவாக ஒரு தெய்வம் பெருந்தெய்வமாக எழுவதன் சித்திரத்தை இப்படிச் சொல்லலாம்.

 

அ. அத்தெய்வம் ஞானியரின் உள்ளுணர்வால் மீண்டும் கண்டடையப்படுகிறது.அவர்களின் மரபால் விரிவாக்கப்படுகிறது. அறிஞர்களால் தத்துவக்கோணத்தில் விளக்கப்படுகிறது. இதுவே முதன்மையான செயல்பாடு.

 

ஆ. அந்த தெய்வ உருவகம் பரவத்தொடங்கும்போது வெவ்வேறு குடிகள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். அவ்வாறு ஏற்றுக்கொண்ட குடிகளின் தெய்வங்கள் இந்த மையத்தெய்வத்துடன் இணைகின்றன. அக்குடிகளின் வழிபாட்டுமுறைகள் அந்த மையத்தெய்வத்திற்கும் உரியதாகின்றன

 

இ. மையத்தெய்வம் இவ்வாறு பல தெய்வக்கூறுகளின் தொகையாக உருவாகி வரும்போது கூடவே துணைத்தெய்வங்களும், பிற குறியீடுகளும் இணைந்துகொள்கின்றன.

 

இ. அந்த இணைப்பை நிறுவும்பொருட்டு புராணங்கள் உருவாகின்றன.ஆசாரங்கள் ஆகமங்கள் வழியாக வரையறை செய்யப்படுகின்றன

 

இந்து தெய்வங்களின் உருவாக்கத்தை வரலாற்றுரீதியாக, மார்க்சிய நோக்கில், ஆராயும் டி.டி.கோசாம்பி போன்றவர்களின் அணுகுமுறையும் இதுவே. அதுவன்றி ஒருவரின் தெய்வத்தை இன்னொருவர் மேல் சுமத்தும் மோசடி அல்ல இது. இந்த பரிணாமத்தை புத்தமதத்திலும் காணலாம். புத்தர் திபெத்திலும் சீனாவிலும் ஜப்பானிலும் சென்றடைந்தபோது அங்குள்ள தெய்வங்களின் இயல்புகளும் அடையாளங்களும் அவருடன் இணைந்தன. அவர் உருமாற்றம் அடைந்தார். ஜப்பானிய ஷிண்டோ மதத்தை பௌத்தத்தில் இருந்தோ புத்தரை ஷிண்டோ தெய்வங்களில் இருந்தோ இன்று முற்றாகப் பிரித்துவிடமுடியாது.

 

இந்துதெய்வங்களான சிவன், விஷ்ணு, முருகன் போன்ற அனைத்துமே சங்ககாலத்தின் இறுதியில், சங்கம் மருவிய காலத்தில் ஏறத்தாழ இன்றிருக்கும் இதேவடிவில், இதே தொன்மங்களுடன் உருவாகிவிட்டிருந்தன. கோட்டங்கள் எனப்படும் ஆலயங்கள் அவற்றுக்கிருந்தன எனபதை சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம். கோட்டம் என்றால் பலதெய்வங்கள் அமைந்த ஆலய வளாகம். செவ்வேளுக்கும் மணிவண்ணனுக்கும் கோட்டங்கள் அமைந்துள்ளன என்றால் அவை பெருந்தெய்வங்களாக, துணைத்தெய்வங்களுடன் கோயில்கொண்டிருந்தன என்றே பொருள்.

 

சங்கம் மருவிய காலகட்டம் என நாம் சொல்லும் கிபி இரண்டாம்நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டுவரையிலான காலம் இவ்வகையில் முக்கியமானது. சிவன், விஷ்ணு, துர்க்கை என நாம் வழிபடும் எல்லா தெய்வங்களும் ஏறத்தாழ இதேகாலகட்டத்தில்தான் இன்றுள்ள வடிவத்தை அடைகின்றன. பல்வேறு தெய்வஉருவங்கள் கலந்து இது நிகழ்கிறது. கிபி நான்காம்நூற்றாண்டில் குப்தர் காலத்தில்தான் இந்து தெய்வ உருவங்கள் திட்டவட்டமான வடிவை அடைந்தன என்று ஆய்வாளர் சொல்வதுண்டு.

 

ஆனால் இன்றும்கூட தெய்வ உருவங்கள் இடத்திற்கு இடம் மாறுபடுவதையும் சிற்பங்களைப் பார்ப்பவர்கள் உணரமுடியும். நீங்கள் தமிழகம் விட்டு நூறு கிலோமீட்டர் சென்று கர்நாடகத்திற்குள் நுழைந்து பேலூர் சிற்பங்களைப்பார்த்தாலே தெய்வ உருவகங்களில் உள்ள மாற்றத்தைக் கண்கூடாக காணலாம்.சிற்பங்களில் இருக்கும் உருவங்களுக்கும் ஓவிய உருவங்களுக்கும் கூட மாறுபாடு உள்ளது. இன்று நாம் எண்ணும் தெய்வ உருவங்கள் ராஜாரவிவர்மாவுக்குப் பின் காலண்டர் அச்சுமுறை உருவானதன் விளைவாக உருவானவை. அவற்றுக்கும் சிற்பங்களிலுள்ள உருவங்களுக்கும் ஒற்றுமை மிகக்குறைவு. மனித ‘மாடல்களை’ வைத்து வரையப்பட்டவை அவை. வெவ்வேறு பாடல்களில் இருந்தும் நாடகவடிவங்களில் இருந்தும் அவ்வடிவுக்கான சான்றுகள் கொள்ளப்பட்டன.

 

இந்துதெய்வ உருவங்களின் இந்தப் பரிணாமம் என்பது இந்தியசமூகம் உருவாகி வந்த பரிணாமத்தின் விளைவாக,அதற்கு இணையாக உருவாகி வந்தது. இந்தியமெய்யியல் திரண்டு வந்ததன் விளைவாக, அதன் அடையாளமாக உருவாகி வந்தது. இந்தியச் சமூகப்பரிணாமத்தை இவ்வடிவங்களின் பரிணாமத்தைக்கொண்டு புரிந்துகொள்ள முயலலாம். இந்தியச் சமூகப்பரிணாமத்தைக்கொண்டு இந்த வடிவங்களின் பரிணாமத்தைப் புரிந்துகொள்ள முயலலாம். இந்திய மெய்யியலை பருவடிவமாக ஆராய இதைப் பயன்படுத்தலாம்.

 

ஆனால் இங்கே நிகழ்வதென்ன என்றால் இந்த பரிணாமம் ஒரு எளிய சதிவேலையாக குறுக்கப்படுவதுதான். வெறும் ஆதிக்கஅரசியலின் ஒரு விளைவாக இதை எளிமையாக்கிவிடுவதுதான் . இது இங்கே சென்ற சில ஆண்டுகளாக நடைபெறுகிறது. மொழித்தூய்மைவாதம், இனவாதம், சாதியவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் மொத்த வரலாற்றுச் சக்கரத்தையே நேர் எதிர்த்திசையில் சுழற்ற முயல்கிறார்கள் சிலர். நம் வீட்டுக் கடிகாரத்தின் முள்ளை நாம் நேர் எதிராக பிடித்துச் சுற்றிக்கொண்டிருந்தால் தாத்தா காலத்திற்குச் சென்றுவிடலாம் என்பதுபோல ஒரு நம்பிக்கைதான் இது.

 

இது இங்கே உருவாகிவரும் ஓர் அரசியல்தரப்பு மட்டுமே. எவ்வகையிலும் மதம், ஆன்மிகம் சார்ந்தது அல்ல. இவர்கள் இந்தியவியலாளர்களும் மார்க்சிய ஆய்வாளர்களும் இந்தத் தெய்வ உருவங்கள் அடைந்த பரிணாமம் குறித்து செய்திருக்கும் விரிவான ஆய்வுகளை எளிமைப்படுத்துகிறார்கள்.. அதிலிருந்து மேலோட்டமான சில கருத்துக்களை எடுத்துக்கொண்டு தமிழரின் தெய்வம், கலப்பற்ற தெய்வம், வந்தேறித்தெய்வம் என்றெல்லாம் பேசத்தொடங்குகிறார்கள். அவற்றுக்கான ஆய்வுமுறைமைகள் அரைகுறையானவை. இந்துமதக்கொள்கைகளுக்குள் அவற்றுக்கு இடமில்லை. இந்தியவியல் ஆய்வுமுறைமைகளின்படியும் அவை அரைகுறையானவை.

 

ஏற்கனவே சைவத்தில் இப்போக்கு மிகுந்துள்ளது. சைவத்திலிருந்து ஒரு தமிழ்சைவத்தை பிரித்து எடுக்கும் முயற்சி நிகழ்கிறது. சிவனிலிருந்து தமிழ்சிவனை பிரித்துக்கொள்ள முயல்கிறார்கள். முருகனிலிருந்து தமிழ்முருகனை எடுக்க முயல்கிறார்கள். அதற்கு இரண்டாயிரமாண்டு வரலாற்றைத் திருப்பிச் சுழற்ற வேண்டும். ஒட்டுமொத்த மரபையே நிராகரிக்கவேண்டும். அது இயல்வதா என்பது வேறு கேள்வி. இயல்வதென்றால் நாம் இழப்பதென்ன என்பது அதைவிடப்பெரிய கேள்வி. சங்ககாலத்திலிருந்து பாரதிவரைக்குமான ஒரு மாபெரும் பாரம்பரியத்தை, அதன் அறிவுச்செல்வத்தை, கலைக்கருவூலத்தை ஒட்டுமொத்தமாக தூக்கிவீசிவிடவேண்டுமா? தமிழ் சமூகத்தை நோக்கி எளிய அரசியலின்பொருட்டு அவ்வாறு அதன் பண்பாட்டின் ஆயிரத்தைநூறு ஆண்டுகளைத் தூக்கிவீசிவிடஅறைகூவும் ஒருவர் மெய்யாகவே தமிழ்ப்பண்பாட்டை அறிந்தவரா? அதை வாழவைக்கவா அவர் முயல்கிறார்? .

 

சுகி.சிவம் செய்யும் பிழை என்னவென்றால் அந்த அரசியல்தரப்புகளுக்கேற்ப தன் கருத்துக்களை உருமாற்றிக்கொண்டதுதான். சென்ற ஐந்தாண்டுகளில் தமிழ் மதச்சூழலில் நிகழ்ந்துவரும் மாற்றத்தை அவர் பிரதிபலிக்கிறார். அவர் ஒரு மதச்சொற்பொழிவாளர் என்னும் வகையில், அறிஞர் என்னும் நிலையில் வழிகாட்டியாகத் திகழவேண்டுமே ஒழிய அரங்கில் எழும் உணர்ச்சிகளை தான் அடைந்துவிடக்கூடாது. அவருடைய சொற்களில் வெளிப்பட்டது அரங்கினரில் ஒரு பகுதியை நிறைவுசெய்யும் எளிய உத்தி மட்டுமே.

 

ஆனால் ஒன்றைச் சொல்லவேண்டும். சைவத்திற்கும் இந்துமதத்தின் பிற பிரிவுகளுக்கும் இடையேயான முரண்பாடும் சைவத்தின் தனித்தன்மையும் நிலைகொள்வதே உகந்தது. சைவமேகூட தமிழகத்தில் பல தனித்தன்மைகளைக் கொண்டிருக்கிறது. சைவம் சார்ந்த பல தமிழ்த்தொன்மங்கள் வேறெங்கும் இல்லாதவை. ஆகவே இங்கே சைவம் தமிழ்ச்சைவமாக நீடிக்க முயல்வதிலும் பிழையேதுமில்லை. அது இந்துத்துவ அரசியலுக்கு உடன்பாடற்றதாக இருக்கலாம். அவர்கள் தரப்படுத்தும் இந்துமதத்திற்குள் அமையாமல் நிற்கலாம். சுகி.சிவம் போன்றவர்கள் அதற்காக பேசுவது முற்றிலும் ஏற்புடையதே.

 

அது ஒருவகை அடிப்படைவாத நோக்குதான். ஆனால் அனைத்தையும் வேதங்களில் கொண்டுசென்று கட்டும் அடிப்படைவாதத்திற்கு எதிரான தூய்மைவாதம் அது. தமிழ்ப்பண்பாட்டில் என்றும் அந்த எதிர்ப்பு இருந்துவந்துள்ளது. அது தமிழ்ப்பண்பாட்டின் தனித்தன்மையிலிருந்து எழும் குரல். அக்குரலாக ஒலிக்கும் அறிஞர்கள் பலர் இங்கே இருந்தனர். அ.ச.ஞானசம்பந்தன் முதல். அவர்களின் குரலாக சுகி.சிவம் தொடர்வது ஏற்புடையதே.

 

ஆனால் அது ஒட்டுமொத்தப் புரிதலின் விளைவாகவே அமையவேண்டும். இந்துதெய்வங்கள், சைவ தெய்வங்கள் பரிணாமம் அடைந்து வந்த பாதையை ஒரு மெய்ஞானப்பரிணாமமாகவே மதம்சார்ந்த பார்வையால் வகுக்கமுடியும். அரசியல்சதியாக, ஆதிக்க உத்தியாக அதைப் பார்க்கையில் அது மதத்தை மறுக்கும் பார்வையாக ஆகிவிடுகிறது. அந்தத் தெளிவு அனைவருக்கும் தேவை.

 

மதத்தில் மாறுதல்கள் நிகழலாமா?இரண்டு அடிப்படையில் நிகழலாம. ஒன்று மெய்யறிவர் தங்கள் மெய்மையறிதலின் அடிப்படையில் உருவாக்கும் மாற்றங்கள். இரு உதாரணங்கள். திருவிதாங்கூர் [குமரிமாவட்ட] ஆலயங்கள் பலவற்றின் பூசனைநெறிகள் போன்றவற்றை வில்வமங்கலத்து சுவாமியார் என்னும் ஆசிரியர் மாற்றியமைத்ததாக வரலாறு சொல்கிறது. இந்த மையமரபிலிருந்து விலகி ஐயா வைகுண்டர் அவர்கள் அவருக்கென ஒரு வழிபாட்டுமுறையை உருவாக்கினார். இருவழிகளுமே எப்போதும் உள்ளவைதான்.

 

இரண்டாவதாக மாறிவரும் அறங்களுக்கேற்ப மாற்றங்கள் நிகழ்வதைச் சொல்லலாம். எந்த மதமும் அது வடிவம்கொண்ட காலகட்டத்தின் அறத்தையே வெளிப்படுத்தும். அது என்றென்றும் மாறாதது என மரபுவாதிகள் நம்ப விழைந்தாலும் அது காலம் மாறுகையில் மாறியே ஆகவேண்டும், மாறிக்கொண்டே இருக்கிறது என்பதே உண்மை. அனைவருக்கும் ஆலயம்புகும் உரிமை முதல் அனைவரும் அர்ச்சகராகும் உரிமை வரை இவ்வகைப்பட்டவை.

 

இவற்றுக்கு அப்பால் அரசியல்நோக்குகளால் மதக்கொள்கைகள் மறுவிளக்கம் அளிக்கப்படும் என்றால், மாறுதல்கள் நிகழுமென்றால் மதம் காலப்போக்கில் அழியும். மதத்தின் முக்கியமான சிறப்பியல்பே அது நம்மால் எண்ணிச்சென்றடையாத தொல்காலத்துடன் நம்மைப் பிணைக்கிறது என்பதுதான். சமகால அரசியலுக்கேற அதை மாற்றப்புகுந்தால் எஞ்சுவது இன்னொருவகை அரசியலாகவே இருக்கும். இது எல்லா தரப்பினரும் எண்ணவேண்டிய ஒன்று.

 

சுகி.சிவம் கூறியதை எதிர்ப்பவர்களில் இந்துத்துவர்கள் அவர்களின் ஒற்றை இந்துமத உருவகத்தை இவர் பிளவுபடுத்துகிறார் என்பதனால் சினமுறுகிறார்கள். அவர்கள் வழிபாடுகளின் தனித்தன்மையைப்பற்றிப் பேசுபவர்களைக்கூட அவ்வண்ணமே அணுகுகிறார்கள் என்பதைக் காணலாம். அவர்களின் மொழியை எண்ணி வருந்துவதில் பொருளில்லை. அது வெறுப்பரசியலின் மொழி. வேறெதையும் அது அறியாது. தன் தரப்பை தன் குரலில் சொல்லாத அனைவருமே அதற்கு எதிரிகளே. எதிரிகளை எந்த எல்லைக்கும் சென்று வசைபாடுவதே அதன் வழி. அதற்கு அறிவடிப்படை என ஏதும் இல்லை.

 

தனிப்பட்ட முறையில் சுகி.சிவம் அவர்களின் உரைகள் இன்று இன்றியமையாத ஒரு மரபின் நீட்சியை நிலைநிறுத்துவன என்று நினைக்கிறேன். அவரைப்போன்ற ஒருவரின் சொற்களில் மாற்று அல்லது மறுப்பு இருக்குமென்றால்கூட அதற்கான மதிப்புடன் மட்டுமே சொல்லப்படவேண்டும் எனக் கருதுகிறேன். நமது மத அறிஞர்களை நாமே மதிப்பதையே முதலில் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

 

நான் சுகி.சிவம் அவர்களின் தரப்புடன் முரண்படுவது வேறு அடிப்படைகளில்.

 

அ.. அவர் நின்றுபேசுவது பக்தியின் அடித்தளம்மீது. அதற்கு ஆய்வுநோக்கு எதிரானது. அவர் தூய அத்வைதி என்றால் மட்டுமே மதத்தின் தளத்திற்குள் அதைச் செய்யமுடியும். அல்லது இந்தியவியலளராக வெளியேவந்து செய்யலாம். பக்தியுடன் ஆய்வை குழப்பிக்கொள்ளககூடாது.

 

ஆ. அவர் இந்து தெய்வங்கள் உருவாகி வந்த பரிணாமத்தை எளிமைப்படுத்தி ஒருவகை சதியாக காட்டிவிடுகிறார். அந்தப் பரிணாமம் ய்யறிஞரும் படிவரும் அடைந்த உள்ளுணர்வினூடாக, உரையாடல்களினூடாகத் திரண்டுவந்தது. அது வரலாற்றின் கனி. அதை திரும்பக்கொண்டு செல்ல முடியாது. அவ்வாறு செய்யமுயல்வது எளிய அதிகார அரசியல் சார்ந்தது.

 

இ. மதச்சொற்பொழிவு என்பது மதத்தின் தத்துவங்களையும் ஆசாரங்களையும் புரிந்துகொள்ள வழிகாட்டுவது. அதில் அரசியல்கலக்கும்போது வம்புபேசுவதாக ஆகிவிடும். அவ்வுரையின் நோக்கமே இல்லாமலாகிவிடும். சுகி.சிவம் தன் சைவம் –தமிழ் சார்ந்த நோக்கில் மதத்தைப்பற்றிப் பேசலாம். ஆனால் அது எங்கே அரசியலாகிறது என அறிந்திருக்கவேண்டும். இவ்வுரையில் மட்டுமல்ல இப்போது பல உரைகளிலும் அவர் அவ்வெல்லையை மீறுகிறார். அதற்கான ஆதரவு இங்கே இருக்கிறது என்பதே காரணம். அவர் அந்த ஆதரவின்பின் செல்பவராக இருக்கலாகாது.

 

ஜெ

 

சங்க இலக்கியங்களில் முருகன் பழங்குடி இன வெறியாட்டு வழிபாடு- எம். சண்முகம் பிள்ளை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

காஷ்மீரின் குளிர்

$
0
0

https://www.youtube.com/watch?v=nspiSdUFoNg

 

அறுபது எழுபதுகளின் இந்தி சினிமாக்களில், வண்ணம் வந்து, ஈஸ்ட்மென் படச்சுருள் அறிமுகமாகி, நவீன ஒளிப்பதிவுக்கலை பரவலாகத் தொடங்கியபின் காஷ்மீர் பேரழகுடன் வெளிப்பட்டிருக்கிறது. காஷ்மீர் ஒரு பொதுக்கனவாக வெகுஜன மோகமாகவே அன்று இருந்திருக்கவேண்டும். டெல்லியில் இருந்து மிக அணுக்கமான இடங்களாக ஸ்ரீநகரும் குலுமணாலியும் இன்று தோன்றுகின்றன. எழுபதுகளில் அது ஒரு வாழ்நாள்கனவாக இருந்திருக்கும். திரும்பத்திரும்ப பார்த்திருக்கிறார்கள்

அழகான ஒளிப்பதிவில் டால் ஏரியும் ,குல்மொஹர்கள்பூத்த பூங்காக்களும் பனிமலைகளும் விழிகளை நிறைக்கின்றன. இந்த காஷ்மீரை ஒருவேளை இன்று நாம் காணவே முடியாது என்று படுகிறது,

மகேந்திர கபூரின் இனிய குரல். ரஃபியைப்போலவே பாடலுக்குள் உண்மையான உணர்ச்சிகளைச் செலுத்த முடிந்த கலைஞர். இப்பாடல்களை இன்றும் பார்க்கமுடிவதற்கு இன்னொரு காரணம் அன்றைய பரவலான வழக்கம்போல இல்லாமல் இந்தி நடிகர்கள் குறைவாக நடித்திருக்கிறார்கள். நடனங்கள் ஆடியோ, ‘ஸ்டைல்’ காட்டியோ துன்புறுத்தவில்லை.

பாடல் மகேந்திர கபூர்

இசை ஓ.பி.நய்யார்

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஊட்டி கடிதங்கள்

$
0
0

ஊட்டி, அபி, இளவெயில், குளிர்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

’ஊட்டி குளிர் அபி’ வாசித்தேன். பொள்ளாச்சியிலும் நீங்கள் சொல்லியிருந்த அதே சீதோஷ்ணம், குளிரும் சாரல் மழையும் பச்சை பிடித்திருக்கும் சுற்றுப்புறங்களும் இளவெயிலுமாக இருக்கிறது. அதனாலோ என்னவோ வழக்கமான, ”அடடா ஊட்டிக்கு நானும் போயிருந்திருக்கலாம்” என்னும் ஏக்கம் வராமல் நானும் அங்கே வந்திருந்தது போலவே இருந்தது

ஊட்டி எனக்கு மிகப்பழகிய ஒரு இடம். கோத்தகிரி வனக்கல்லூரியில் 3 வருடங்கள் ஆய்வு மாணவியாக இருந்திருக்கிறேன். எனினும் குருநித்யா ஆசிரமம் எனக்கு காட்டிய ஊட்டி முற்றிலும் வேறு. அத்தனை பேர் கூட்டமாக காவிய முகாமில் இருந்தபோதும் தனிமையை அந்த இடத்தில் உணர முடிந்தது. உயரமான இடங்களில் எனக்கு அப்படித்தோன்றும்.

முதன்முதலில் அங்கு வந்திருந்து, அமர்வின் பொருட்டு அந்த அரங்கில் நுழைந்ததும் நாற்காலியில் அமர்ந்திருந்த நித்யாவின் உருவச்சிலை ஏற்படுத்திய திடுக்கிடல், அதன்பின்னர் எத்தனை முறை அந்த அரங்கில் நுழைந்தாலும் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. அவரும் நம்முடன் அமர்வை கவனிக்கிறார் என்று நினைத்துக்கொள்ளுவேன்

அந்த அமைதியும் குளிரும் பச்சை வாசனையும் இப்போதென என என்னால் நினைவில் மீட்டெடுக்க முடியும்

முதல் முறை வந்தபோது நடுக்கும் குளிரில் கலவையான காய்களை பெரிது பெரிதாக வெட்டிபோட்ட குழம்புடன் முகத்தில் ஆவியடிக்கும் சூட்டில் இரவுணவு சாப்பிட்டது நினைவில் வந்தது நீங்கள் எழுதியதை வாசிக்கையில்

இறுதியாக நீங்களும் சீனுவும் கூட புறப்பட்டு வந்த பின்னரும் அபியின் கவிதைகள் அங்கேயேதானிருந்திருக்கும்.

//இங்கே படரும் இருளைச் சிறுது சுண்டினால் கூட

என் மலை எனக்கு பதில் சைகை தரும்//

//என்னைச் சுற்றி நிரம்பும்காட்டுக்களிப்பு//

//பொழுதின் நினைவும் நினைவின் பொழுதும்

இடைச்சுவர் தகர்ந்து ஒன்றினுள் ஒன்றாகி ஊர்கின்றன

ஊர் தன் மிகச்சிறிய புள்ளியில்//

இப்படி நீருக்குள் கூழாங்கற்கள் உருளும் தாளலயத்தைசொல்லும் அபியின் கவிதைகள் யாருமற்ற தனிமையில் அங்கிருப்பதுதான் பொருத்தமும் கூட

கடந்த ஊட்டி முகாமிற்கு வராமல் போனது பெரும் இழப்பு எனக்கு மே மாதம் மலைச்சரிவெங்கும் பூத்திருக்கும் அடர் ஊதா ஜகரண்டாக்களை பார்க்கத்தவறி விட்டிருந்தேன். திடீரென்று வந்திருக்கும் Trigeminal neuralgia என்னும் நரம்பு தொடர்பான கோளாறினால் இனி மலைப்பிரதேசங்களுக்கு நான் செல்வது சாத்தியமில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இப்படி என் வாழ்வில் எடுக்கபட்ட, ஒராயிரம் முன்முடிவுகள் தகர்ந்திருக்கின்றன , எனவே அடுத்த காவிய முகாமுக்கு குருநித்யாஆசிரமத்திற்கு வரும் நாளுக்காக காத்திருக்கிறேன்

அன்புடன்

லோகமாதேவி

***

அன்புள்ள ஜெ

ஊட்டியில் இளவெயிலில் நீங்கள் நடத்திய சிறிய சந்திப்பு பற்றி வாசித்தேன். என் வாழ்க்கைமுழுக்க நான் ஆசைப்படுவது அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு. பல சந்திப்புகளை உங்கள் தளத்திலே பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தவகையான சிறிய சந்திப்புகளின் அழகே வேறுதான். ஊட்டியின் பசுமை, குளிர், வெயில், நித்ய சைதன்ய யதியின் அருகாமை எல்லாமே கனவு போல உள்ளது. ஒருவேளை இதெல்லாம் எனக்கெல்லாம் சாத்தியமே ஆகாது. ஆனால் கனவுகாணலாமே

எஸ்

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மொழி,எழுத்து,மதம்- அ.பாண்டியன்

$
0
0

ஜாவி-காட்- வனப்பெழுத்தும் வாய்ச்சண்டையும்

மும்மொழி கற்றல்

வணக்கம் ஜெயமோகன் அவர்களே,

உங்கள் மும்ழொழி கல்வி பற்றிய கட்டுரையை வாசித்தேன். அதில் நீங்கள் கூறிய இரு கருத்துகளை தொட்டு சில விடையங்களை அனுபவப்பூர்வமாக பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். காரணம் மும்மொழி கல்வி பற்றியும் எழுத்துரு மாற்றம் பற்றியும் மலேசியர்களின் அனுபவம் இந்தியர்களை விட கூடுதலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

கடந்த அறுபது ஆண்டுகளாக இங்கு ஒரு மொழியா, இரு மொழியா அல்லது மும்மொழியா என்கிற வினாவுக்கு தக்க பதில் இல்லாத ஊசலாட்டத்தோடுதான் கல்வித்துறை இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு மொழியின் வரிவடிவ சிக்கலும் இங்கு அண்மையில்தான் பெரும் அரசியல் போராட்டமாக மாறியிருக்கிறது.

மலேசியாவின் தேசிய மொழி மலாய் மொழி என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். இரண்டாம் மொழியாக ஆங்கிலம் உள்ளது. ஆயினும் சிறுபான்மை மக்களான சீனர்களும் தமிழர்களும் இங்கு தங்கள் தாய்மொழிகளை அரசாங்க அனுமதியுடன் பள்ளிகளில் பயில்கின்றனர். தொடக்க நிலை தமிழ்ப்பள்ளிகளும் சீனப்பள்ளிகளும் இங்கு இன்றுவரை முழு அரச உதவி பள்ளிகளாகவும் பகுதி உதவி பள்ளிகளாகவும் இயங்குகின்றன. தமிழ்ப்பள்ளிகள் ஆரம்பப் பள்ளி அளவில் மட்டும் உண்டு. ஆனால் பல்கலைக்கழகம் வரை தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்க தடை இல்லை.

60-ஆம் ஆண்டுகளில் மலாய் தேசிய மொழியாக நிலை உயர்த்தப்பட்ட பின்னர், இந்நாட்டில் வேறு எந்த மொழியும் தேவை இல்லை என்கிற தீவிர முடிவோடுதான் மலாய் தேசியவாதிகள் இருந்தார்கள். ஆனால் உலக நிலைமையும் உள்நாட்டு நிலையும் அதற்கு ஏற்றதாக அமையவில்லை. ஆகவே ஆங்கிலம் தவிர்கவியலா இடத்தைப் பிடித்துக் கொண்டது.

அடுத்து சீன, தமிழ் மொழி கல்வி தாய்மொழிக் கல்வி உரிமை என்ற அடிப்படையில் சில பல போராட்டங்களின் வழியாக இங்கு நிலையான இடம் பிடித்தன. ஆனால் அவை கட்டாயம் இல்லை என்பதால் மக்களின் விருப்ப தேர்வாக உள்ளன. ஆகவே தாய்மொழி கல்வியில் பற்று உள்ளவர்கள் மூன்று மொழிளை மூன்று வெவ்வேறு எழுத்துருக்களில் பயில்கின்றனர்.

தாய்மொழி கல்வியை துறந்தவர்கள் மலாய்ப் பள்ளிகளில் இரண்டு மொழிகளை ஒரே எழுத்துருவில் (மலாய், ஆங்கிலம்) பயில்கின்றனர்.

ஆகவே மொழி எண்ணிக்கையை ஒரு அளவுகோலாக வைத்துப் பார்த்தால் மலாய்ப்பள்ளி மாணவர்கள் சுமை குறைந்த நிலையில் கல்வி கற்க்கும் வாய்ப்பைப் பெருகின்றனர். சீனப்பள்ளி அல்லது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கூடுதலாக தங்கள் தாய்மொழியைக் கற்கின்றனர். ஒப்பீட்டளவில் இது மாணவர்களுக்கு சுமை என்ற முடிவுக்கு நாம் வரலாம் . ஆனால், இங்கு நடப்பது சற்று மாற்றமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

அரசாங்கம் தேசிய மொழி கொள்கையை தீவிரமாக கடைபிடித்து வருகிறது. ஆங்கிலம் உலக மொழியாக அத்தியாவசிய தேவையாகிவிட்டது. ஆகவே இந்த இரண்டு மொழிகளோடு மலேசியர்கள் நிறைவாக வாழ முடிகின்றதா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாக அமைகின்றது.  காரணம், மலேசியர்களில் பலர் மூன்றாவதாக ஒரு மொழியை தங்கள் சுய தேவையை முன்வைத்து கற்றுக் கொள்வதில் முனைப்பு காட்டுகின்றனர். மிக முக்கியமாக எல்லா இனத்தவர்களும் சீன மொழி பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர்.  தமிழை கைவிட்டாலும் சீனம் பயில விரும்பும் தமிழர்கள் அதிகம் உள்ளனர். அதைவிட வியப்பு மலாய்காரர்களும் சீன பள்ளியைத் தேர்வு செய்வதாகும். அவர்களாகவே மூன்று மொழிச் சுமையை சுமக்க முன்வருகிறார்கள். எதிர்கால வேலை வாய்ப்பு, குறிப்பாக தனியார் நிறுவனங்களில் மலாய், ஆங்கில மொழிகளை விட சீன மொழிக்கே அதிக முக்கியத்துவம் உள்ளது என்றே மக்கள் நம்புகின்றனர். இதன் அடிப்படையிலேயே சீன மொழி அரசாங்கம் வகுத்த எல்லா கொள்கைகளையும் சட்டங்களையும் இலகுவாக கடந்து அவசியமான மொழியாக மலேசியர்களால் தேர்வுசெய்யப்படுகின்றது. தமிழ் மொழிக்கு இங்கு பெரிய பொருளாதார பலம் இல்லை. ஆயினும் மொழி உணர்வின் அடிப்படையில் தமிழ்ப்பள்ளிகள் இங்கு தொடர்ந்து இயங்குகின்றன. தமிழ்ப்பள்ளியை விட்டுக் கொடுப்பது இனத்தின் எல்லா உரிமைகளையும் இந்நாட்டில் விட்டுக் கொடுப்ந்தற்கு ஈடானதாகவே மொழி உணர்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆகவே, அரசு வகுத்த கோட்பாடுகளையும், கல்விச்சூழலில் நிகழும் சிக்கல்களையும், பொருட்படுத்தாமல், எதிர்காலம் பற்றிய சிந்தனைதான் இங்கு மூன்று மொழிகள் கற்க மக்களை ஊக்குவிக்கின்றது.

அடுத்து, ஒரே எழுத்துருவில் வெவ்வேறு மொழிகளை எழுதுவதால் விளைந்த மிகப்பெரிய சிக்கலை மலேசியர்கள் இபோதுதான் எதிர்நோக்கியுள்ளனர். அது இதுவரை யாரும் எதிர்பாராதது. அதுபற்றி சுருக்கமாக சொல்லிவிடுகிறேன் (விரிவாக வாசிக்க http://vallinam.com.my/version2/?p=6327)

மலாய் மொழி தனக்கென நிரந்தர எழுத்துரு கொண்ட மொழியன்று. அது, சமஸ்கிருதம், தமிழ் போன்ற இந்திய மொழிகளை உள்வாங்கிக் கொண்ட பிராந்திய மொழி. தென்கிழக்காசியாவை இந்து-பெளத்த அரசுகள் ஆண்ட போது, பல்லவ எழுத்துருக்களும் தேவ நாகிரி போன்ற எழுத்துவடிவங்களும் பண்டைய மலாய் மொழியை எழுத பயன்பட்டுள்ளன. ஶ்ரீவிஜய பேரரசு வீழ்ந்த பிறகு, 11ஆம் நூற்றாண்டு முதல், மலாய் தீவுக் கூட்டங்களில் இஸ்லாம் மதம் பரவியது. இஸ்லாமிய அரசுகள் உருவாகின. மலாய் மொழியில் அரபு சொற்கள் அதிகம் புழங்கத்தொடங்கின. ஆகவே மலாய் மொழியை இஸ்லாமிய பண்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு அது முன்னர் பயன்படுத்திய எழுத்து வடிவங்களுக்கு மாற்றாக புதிய எழுத்து உருவாக்கப்பட்டுள்ளது. அது அரபு மொழி எழுத்துக்ளை மூலமாக கொண்டு தயாரிக்கப்பட்ட எழுத்தாகும். அதையே ஜாவி எழுத்து என்கின்றனர். ஜாவி எழுத்து அதன் எழுத்து வடிவிலும் இலக்கண விதிகளிலும் பெரும் மாற்றங்களைக் கண்டுவந்துள்ளது. கடந்த 700 ஆண்டுகளாக மலாய் மொழி ஜாவி எழுத்துகளில் எழுதப்பட்டு வந்தது.

ஆயினும் ஐரோப்பியர்கள் தென்கிழக்கு நாடுகளுக்கு வரத்துவங்கியதும் அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப மலாய் மொழியை லத்தின் லிபியில் (ஆங்கில எழுத்துகள்) எழுதியுள்ளனர். பின்னர் ஆங்கிலேயர் வருகையின் பின்னர் மலாய் மொழியை ஜாவி எழுத்தில் எழுதுவது மெல்ல குறைந்து ஆங்கில எழுத்தில் (ரூமி அல்லது ரோமனைஸ் என்று குறிப்பிடப்படுவது) எழுதுவது அதிகரித்துள்ளது. மலாய் மொழி அறிஞர்கள் ரூமி எழுத்துக்கூட்டலில் மலாய் மொழியை எழுதும் இலக்கணங்களை சிறப்பாக அமைத்துக் கொடுத்தனர்.

தமிழகத்தில் ஈ.வெ.ரா தமிழை ஆங்கில எழுத்தில் எழுதும் ஆலோசனையைச் சொன்ன அதே காலகட்டத்தில் மலேசியாவில் சில முன்னோடி தேசியவாதிகள் அதே ஆலோசனையை மலாய் மொழிக்கு வழங்கியுள்ளது வியப்பு. ஒரே வேறுபாடு தமிழ் அந்த ஆலோசனையை ஏற்கவில்லை. ஆனால் மலாய் மொழி ஏற்றுக் கொண்டது. அன்றிருந்த முற்போக்கு மலாய் எழுத்தாளர் இயக்கம் தீவிரமாக முயன்று அரசை ஏற்க வைத்துள்ளது.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், ஒரு இனத்தின் மொழியாக இருந்த மலாய் மொழி நாட்டின் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. அதோடு அது கட்டாய மொழியாகவும் சட்டம் இயற்றப்பட்டது. ஆகவே இந்நாட்டில் குடியிருந்த எல்லா இன மக்களும் மலாய் மொழியைப் பயில ஜாவி எழுத்து தடையாக இருக்கும் என்று உணர்ந்த அரசு ரூமி எழுத்தையே மலாய் மொழியின் நிரத்தர எழுத்தாக்கியது. ஆயினும் மரபை விட்டு முற்றாக நீங்காமல் ஜாவியை தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது. ஆகவே பொதுவெளியில் மலாய்மொழி ரூமியில் மட்டுமே எழுதப்படும் மொழியானது. ஜாவி எழுத்து இஸ்லாமிய பள்ளிகளில் மட்டுமே பயிலும் ஒரு எழுத்தாகிவிட்டது. இஸ்லாம் பாடத்தின் போதுதான் ஜாவி எழுத்து பயிற்றுவிக்கப்படுகின்றது.

நவீன மலேசியாவில் மலேசியர்கள் மலாய் எழுத்தை ரோமனைஸ் எழுத்தில் மட்டுமே எழுதி பழகிவிட்டனர். குறிப்பாக மலாய்காரர் அல்லாதவர்கள் ஜாவியோடு எந்த தொடர்பும் அற்றவர்கள். அவர்களுக்கு ஜாவி எழுத்து என்பது அரபு மொழியோடு தொடர்புடையதாகவும் ஆகவே இஸ்லாம் மதத்துக்கு மட்டுமே உரிய ஒன்று என்ற புரிதலே எஞ்சி நிற்கின்றது. இதற்கு அரசும் கல்விச்சூழலும்தான் காரணம்

இச்சூழலில்தான், அரசு திடீர் என்று மலாய் மொழியின் பாரம்பரிய மரபை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியாக பள்ளிகளில் மீண்டும் ஜாவி எழுத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது இஸ்லாம் அல்லாதோரிடையே மிகப்பெரிய அதிருப்தியையும் போராட்டங்களையும் வெடிக்கச்செய்துள்ளது. மலாய் மொழியில் மீண்டும் ஜாவி எழுத்தை அறிமுகப்படுத்துவது இஸ்லாமியமயமாக்களின் ஒரு திட்டம் என்பதே பரவலாக எழும் குற்றச்சாட்டு.

மலாய்காரர்கள் ஜாவி எழுத்தை தங்கள் மொழியின் பாரம்பரிய  அடையாளம் என்று விளக்கி சொன்னாலும் மலாய்காரர் அல்லாத சிறுபான்மையினர் அதை ஏற்பதாக இல்லை. மலாய் மொழிக்கும் ஜாவி எழுத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கும் நிலையில்தான் அவர்கள் உள்ளனர். அரசின் இந்த மாற்றங்களை மிகுந்த சந்தேகத்துடந்தான் நோக்குகின்றனர். பெரும் விவாதங்களும் போராட்டங்களும் தொடர்கின்றன.  அறுபது ஆண்டுகளில் மலாய் மொழி இழந்த ஜாவி எழுத்தை இன்று அதுவே விரும்பினாலும் மீட்கமுடியாத நிலை உருவாகி இருப்பதை கவனிக்கவேண்டியுள்ளது.

அ.பாண்டியன்

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஆழமில்லாத நீர்

$
0
0

 

இரவெல்லாம் மழை முழங்கிக்கொண்டிருந்தது. காலையில் துளிச்சாரலும் காற்றும் சூழ்ந்திருக்க  நடக்கச் சென்றேன். இன்று இந்த மண்ணில் படும் முதல் மானுடக்காலடி என்னுடையது. எனக்குமுன் ஒரு நாய் சென்றிருக்கிறது. சில பறவைகள். அனேகமாகக் கொக்குகள். செம்மண்ணில் மழை கூழாங்கற்களை சற்று மேலே தூக்கிப் பரப்பியிருக்கிறது. முன்பு பல ஆயிரமாண்டுகள் தொடர்ந்து பெய்த ஆதிமழையால் இவ்வண்ணம் எழுப்பப்பட்ட கற்களே அதோ அந்த மலைமேல் உச்சிப்பாறைகள் என அமைந்திருக்கின்றன. அந்த மழையில் உருவான ஓடைகளே பள்ளத்தாக்குகள்.

ஒவ்வொன்றும் கழுவப்பட்டு குளிர்ந்த ஒளிகொண்டிருந்தன. இலைப்பரப்புகள் குழந்தைகளின் கன்னங்கள் போலிருந்தன. உயிர்ப்பரப்புகளில் இருக்கும் இந்த மெருகை பளிங்கில்கூட காணமுடியாது. வெறுமே நோக்கிக்கொண்டு செல்கையில் ஏன் அடிக்கடிப் பெருமூச்சுவிடுகிறேன் என்று தெரியவில்லை. நான் துயரமாக இருக்கிறேனா? மகிழ்ச்சி என நான் நினைவுகூரும் தருணங்கள் எல்லாமே கொப்பளிப்பானவை, நிலையழிந்தவை. ஆழ்ந்த நிகர்நிலையின் அமைதிகூடிய இத்தருணங்களில் நான் மெய்யாகவே மகிழ்ச்சியாக இல்லையா?

இனிய இசை துயருடையது என்று ஒருவரி. பாரதி எழுதியது. இனிய காட்சிகள் துயருடையவை. இனிய தருணங்களே சற்று துயர்கலந்தவைதான். அது நாம் உணரும் நம் எளிமை அளிக்கும் துயர். நமது அகத்தனிமையின் துயர். அது துயரென்பதே ஒரு பாவனைதான். அது ஒரு மெல்லிய நலுங்கல். நீர்த்துளி இலைநுனிகளில் ஒளிகொண்டு நடுங்குவதுபோல. 

எங்கும் நீர் நிறைந்திருந்தது. வயல்களில்கூட நீர்தான். இப்போது நாற்றுகள் வேர்பரப்பி கரும்பசுமைகொள்ளும் காலம். ஜூனின் திருவாதிரை ஞாற்றுவேலையில் நடப்பட்டவை. அழாமல் பள்ளிக்கூடம் செல்ல தொடங்கிவிட்ட குழந்தைகளைப்போல. சில பள்ளமான வயல்களில் நாற்றுக்களின் மேல்நுனிகள் மட்டும் தெரிந்தன. ஓய்வாக சில கொக்குகள் நீள்கால்களை தூக்கி வைத்து நடந்துகொண்டிருந்தன. நீரில் தென்னைமரத்தின் பாவைகள் நெளிந்தாடின. விதவிதமாக சுருட்டி நெளித்து நீட்டப்படும் பட்டுத்துணி போல ஓடைநீர் சென்றுகொண்டிருந்தது. கற்களில் கண்ணாடிவளைவென தாவியது. சிறிய இடைவெளியில் சுருண்டு முறுகி அப்பால் சென்று அகன்றது.

நீரின் நிறத்தை எழுதுவது எழுத்தாளர்களுக்கு எப்போதுமே அறைகூவலானது. நேர்க்காட்சி அனுபவங்கள் குறைவான, கற்பனையற்ற எழுத்தாளர்கள் நீலநீர் ஓடிக்கொண்டிருந்தது என்று சொல்லி கடந்துசெல்வார்கள். நீரின் நிறம் நீலமா? சிலசமயம் நீலம், அவ்வளவுதான். அதுவும் வான்நீலம் அல்ல. அதை நீர்நீலம் என்பதே சரியானது.சிலசமயம் தைலநீலம். சிலசமயம் கருங்கல் உடைசலின் நீலம்.சிலசமயம் பூவரசுத்தளிரின் மெல்லிய பசுமைநீலம். 

ஆழ்ந்த நீலநிறத்தில் நீரை நான் கண்டது அமெரிக்காவின் கிரேட்டர் ஏரியிலும் லடாக்கின் போங்கோங் ஏரியிலும்தான்.இரண்டுமே அதிதூய நீர்ப்பரப்புகள். நீராழங்கள் என்று சொல்லவேண்டும்.அவற்றின் நீலம் தூய்மையிலிருந்து வந்தது. கிரேட்டர் ஏரியினுள் மண்படாது விண்ணிலிருந்து பொழிந்த பனியுருகிய நீர் மட்டுமே உள்ளது. அரைகிலோமீட்டர் ஆழம் கொண்டது. போங்கோங் ஏரியும் பனியுருகி சேர்வது. முந்நூறு மீட்டர் வரை ஆழம்கொண்டது. அந்த ஆழத்தின் நிறம் நீலம்.

இங்கே ஓடும் நீர் சேறுகலந்தது. கால்வாயில் ஓடிக்கொண்டிருப்பதும் மழைநீர்தான். சற்றே தெளிந்தால் மீண்டும் கலங்குவது. சிற்றோடைகளில் ஓடிக்கொண்டிருக்கும் நீரின் நிறம் அதில் கலந்துள்ள உப்புகளால் அமைகிறதா? ஒருவகை எண்ணைப்பச்சை. சூழ்ந்திருக்கும் பசுமையால் அவ்வண்ணமா?

நீரில் காற்றின் மெல்லிய அலைகள். அலையடிக்கும் வானத்தை இவ்வாறு குனிந்துதான் பார்க்கவேண்டும். காற்றில் பசுவின் மயிர்ப்பரவல் இப்படி சிலுசிலுப்பதைக் கண்டிருக்கிறேன். மழைவழிந்தோடிய புல்பரப்பில் நீர்த்தடங்கள். அன்னைப்பசு நக்கிய கன்றின் உடலில் படிந்த மயிர்வடிவங்கள் போல. நீரோடைகளின் விளிம்பில் புல் நீண்டு கரையென்று ஆகிவிட்டிருக்கிறது. பச்சைவயல்களின் கரையென நீரே அமைந்திருக்கிறது.

நீர்நாடாக்களால் வயல்வெளி வரிந்து கட்டப்பட்டிருக்கிறது. நீர் வயல்களை பிரித்து துண்டுகளாக ஆக்குகிறது. நீர் எனும்போதே நம்முள் இருக்கும் ஓர் உணர்வு என்ன ஆழம் என உசாவுகிறது. ஆழமான நீர் அளிக்கும் அச்சமே அதை அழகாகவும் காட்டுகிறது. ஆழமற்ற நீர் காலை தொட்டு முகர்ந்து குழையும் நாய்க்குட்டிபோல. பல சமயம் நாம் அதை உணர்வதே இல்லை

ஆனால் ஆழமில்லாத நீரிலெழும் குழைவும் துள்ளலும் நோக்க நோக்க இனிதாகின்றவை. ஆழமில்லாத நீர் அசைவாலேயே நீரென்றாவது. அசைவழிந்தால் அது மறைந்துவிடுகிறது. ஒரு மெல்லிய ஒளிப்பூச்சாக அல்லது வானொளியாக உருக்கொண்டுவிடுகிறது. ஆழமில்லாத நீர்மேல் மெல்லிய பாசிப்படர்வுகள். புல்நிரைகள். அதிலும் சிறகுவீசி நீந்திக்கொண்டிருக்கின்றன சில பூச்சிகள். நீர்ச்சாடிப் பூச்சிக்கு ஆழம் என்பதென்ன என்றே தெரியாது. எல்லா நீரும் அதற்கு ஒளிரும் மெல்லிய அலைப்பரப்பு மட்டும்தான்.

ஆழமற்ற நீருக்கு நீலநிறமே இல்லை. அது செல்லுமிடத்தின் வண்ணங்களை பெற்றுக்கொள்கிறது. அல்லது வண்ணமில்லாமல் ஒழுகிக்கொண்டிருக்கிறது. அங்கே மையப்பெருக்காக பேச்சிப்பாறைக் கால்வாய். இவை சிறு குருதிக்குழாய்கள் போல இந்நிலத்தை மூடியிருக்கின்றன. நீர் சென்றுகொண்டே இருக்கிறது. வழிந்து சுழித்து ஒசிந்து. என்னைச்சுற்றி நீர் எல்லாத்திசைகளிலும் ஓடிக்கொண்டிருக்க வெறுமே நின்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆழமான நீர் அளிக்கும் ஊழ்கநிலையை ஆழமற்ற நீர் அளிப்பதில்லை. ஆழம் நம்மை விலக்குகிறது. ஆழமற்ற நீர் அதனுடன் விளையாட அழைக்கிறது

ஒருநாள் காலையில் நீரை பார்த்துவிட்டு இல்லம் மீண்டால் உள்ளம் பிறிதொன்றாக ஆகிவிட்டிருக்கிறது. இளமைமுதலே என் வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. நீரால் சூழப்பட்டது திருவரம்பு. அருகே ஆறு, சூழ்ந்து ஓடை. நீரின் ஓசை எந்நேரமும். வயல்பார்க்கச் செல்வது என்பது எங்களூரின் அன்றாடவேலை. “பிள்ளை எங்க? வெள்ளம் பாக்கவா?” என்பது வழக்கமான குசலம். வயல்களில் நீர் பார்ப்பதென்பது எங்களூரில் நீர் இருக்கிறதா என்று பார்ப்பது அல்ல. நீரில்லாத நிலை இல்லை. இருக்கும் நீரை வடியச்செய்வது. நீரில் மூழ்காமல் நெல்லைக் காப்பாற்றுவது.

நாள்தோறும் நீர்பார்த்து வாழ்ந்தார் அப்பா. நான் விவசாயம் செய்யவில்லை. விவசாயியின் பதற்றங்கள் எனக்கு இல்லை. விவசாயியின் கண்களையும் இழந்துவிட்டேன். ஆனாலும் நாள்தோறும் நீர் பார்க்கிறேன். மீனவர்கள் கடல்பார்க்காமல் வாழ முடியாது என்பார்கள். என் அப்பாவின் பள்ளித்தோழரான மீனவர் காலையில் வந்து பகலெல்லாம் அப்பாவுடன் கொண்டாடிவிட்டு நள்ளிரவில் திரும்பிச் செல்வார். ”காலை எந்திரிச்சதும் தண்ணிய பாக்கல்லேண்ணா செரிவராது கேட்டியளா?”. அப்பா “ஏன் இங்க தண்ணி இல்லியா?” என்றார். அவர் “இதெல்லாம் குஞ்சுல்லா? அங்க இருக்கு தாய்க்கோளி” என்றார்

நான் மூன்றாண்டுகள் கடலோரத்தில் வாழ்ந்திருக்கிறேன். காசர்கோட்டில் இரவில் நெடுநேரம் கடற்கரையில் தனிமையாக அமர்திருப்பேன். அன்னைப்பறவை என்னை எப்போதும் ஆறுதல்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்தச் சிறுகுஞ்சுகளின் மென்சிறகுகள் போல விளையாட வந்ததே இல்லை.

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

எழுத்தாளனின் சாட்சி

$
0
0

சாட்சிமொழி வாங்க

இன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் ஓராண்டு காலமாக உங்கள் வாசகன். முதலில் அண்ணா ஹஸாரே பற்றி நீங்கள் எழுதிய புத்தகத்தை வாசித்தேன். பின்பு ரப்பர், இன்றைய காந்தி, உரையாடும் காந்தி ஆகிய புத்தகங்களையும் படித்தேன். ஒரு ஆண்டாக உங்கள் இணையதளத்தை தினமும் வாசித்து வருகிறேன்.

சாட்சி மொழி புத்தகத்தை ஒரு மாதமாக படித்து வருகிறேன். 300 பக்கங்கள் தான், இருந்தும் ஒரு மாதம் ஆனது. கட்டுரைகள் அனைத்தும் வெவ்வேறு அரசியல் சார்ந்த குறிப்புகள் கொண்டது, தொடர்ச்சியாக படித்து முடிக்க முடியவில்லை. வழக்கமான பாணியில் இப்புத்தகம் இல்லை.

ஜெயமோகன் அவரது அரசியல் பார்வையை முன்வைக்கிறார். இடதுசாரியா, வலதுசாரியா, குழப்பவாதியா என்று பல கேள்விகள். ஜெ அவரை ஒரு சாமானிய தரப்பாகவே நிறுத்தி கொள்கிறார். ஆனால் அதை வரலாற்று ரீதியாக அணுகி, ஒரு பெரும் சித்திரத்தை நம்மிடம் கொடுத்து, நம்மை சிந்திக்க வைக்க வேண்டும் என்று முயல்கிறார். அதில் அனேக இடங்களில் வெற்றி காண்கிறார். இதை முன்முடிவுகள் இன்றி ஒரு வாசகன் அணுகுவான் என்றால், பல புதிய பரிமாணங்களை அறியக் கூடும். சாமானிய அரசியல் என்பது காந்தியின் அரசியல், அது தான் எனது அரசியலும் என்கிறார் ஜெயமோகன். திராவிட இயக்கத்தை நிராகரிக்கிறார். மேடை, நாடகம், சினிமா இயக்கம் தான் திராவிட இயக்கம், அறிவுக்கு அடிப்படையான எழுத்தை அது என்றுமே பேணவில்லை. பரப்பிய இயக்கம் (populist), அதன் வெளிப்பாடாக பாமர தனமான நோக்கத்திலே அனைத்தையும் அணுகும். மக்களை கேளிக்கை நோக்கியே செலுத்துகிறது. இவை அனைத்தும் முக்கியமான காரணங்களாக தெளிவு படுத்தி திராவிட இயக்கத்தை முழுமையாக நிராகரிக்கிறார்.

சுனாமி பேரழிவு, மலேசிய வன்முறை, கேரள வன்முறை, நீர் பங்கீடு என பதிவுகள் இருக்கிறது. அதில் எனக்கு சுனாமி மற்றும் மலேசிய கட்டுரைகள் மிக முக்கியமானவை என்று பட்டது. அரசு சுனாமி போன்ற இயற்கை பேரழிவை கையாள முடியாமல் இருந்த நிலையில், சமய பண்பாட்டு மற்றும் தனியார் குழுக்கள் இத்தருணத்தில் ஆற்றிய பணியை ஜெ பதிவிட்ட இடம் ஆச்சரியமும் நெகிழ்ச்சியும் அடைய செய்கிறது. மக்கள் பட்ட அவதி பதற வைக்கக்கூடிய ஒன்று. அத்தனை ஆயிரம் உயிர்கள் மாண்டும், பாதிக்கப்பட்ட மக்கள் சில தினங்களில் மீன் பிடிக்க சென்றதை அறியும்போது, மானுடம் அவ்வளவு எளிதாக வீழ்த்த கூடிய ஓன்ற அல்ல என்று தோன்றுகிறது. இதில் மத அரசியல், கமிஸன் வாங்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், கலகம் மூட்டும் எதிர் கட்சிகள் அனைவரையும் வெறுக்க செய்கிறது. ஜெ நேரடி அனுபவம் பெற்றதால், நமக்கும் அந்த உணர்வு வந்து விடுகிறது. நான் சுனாமி வந்த போது நான்காம் வகுப்பு படித்து வந்தேன், ஒன்றும் அறியாத பருவம். இந்த பதிவு முக்கியமான தகவல்களோடு பேரனுபவத்திற்கானது.

மலேசிய வன்முறை பற்றி படிக்கும் போது கபாலி படம் தான் உடனே நினைவுக்கு வந்தது. இந்திய வம்சாவளி மலேசியர்கள் மீது 2001 மார்ச் மாதம் நடந்த வன்முறை பற்றி தான் இக்கட்டுரை. இனவாத வன்முறை, இதற்கு குழு மனப்பான்மை முக்கியமான காரணம். இப்படி ஒரு வன்முறை நடந்தது என்பதே நான் இக்கட்டுரை மூலம் தான் அறிந்து கொண்டேன்.

சோதிபிரகாசம் எழுதிய ‘வாழ்க்கையின் கேள்விகள்’ என்ற நூலுக்கு முன்னுரை ஜெ எழுதி இருக்கிறார். இதில் மார்க்சியம் பற்றி விரிவாக விவாதிக்க பட்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மார்க்சியம் அடைந்த நடைமுறை தோல்விகளை சுற்றி காட்டி அதை நிராகரிக்கிறார் ஜெ. இலக்கியம், மதம், கடவுள் நம்பிக்கை, பொருளாதாரம், நுகர்வு கலாச்சாரம் பற்றியும் இதில் உள்ளது. இதை புரிந்து கொள்ள நான் சிரமப்பட்டேன்.

சாட்சி மொழி பற்றி இது முழுமையான ஒன்றாக இருக்காது. என் புரிதல், நான் முக்கியமாக கருதியவை மட்டுமே. நம் புரிதல், அறிதலுக்கு அப்பால் பல தரப்புகளும், நிகழ்வுகளும் உள்ளது என்பதை எனக்கு இப்புத்தகம் திரும்பவும் நினைவூட்டிய ஒன்று. மேலும் வாசிக்க வேண்டும், மேலும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் நிறைவு செய்தேன்.

-அன்புடன் சபரிநாத்,

சோளிங்கர்.

***

அன்புள்ள சபரிநாத்

எனக்கு அரசியல் கருத்துக்களைப் பொறுத்தவரை ஒரு புரிதல் உண்டு. தெளிவான அறுதியான அரசியல்நிலைபாடு எழுத்தாளனுக்கு உகந்தது அல்ல. அது அவனுடைய பார்வையை முன்கூட்டியே வகுத்துவிடும். அதன்பின் அவனுக்கு எதுவுமே கிடைக்காது. அவனுடைய அறவுணர்வு, சூழ்நோக்கு ஆகிய இரண்டையும் அளவுகோலாகக் கொண்டு இயல்பாக உசாவியபடியும் வெளிப்படுத்தியபடியும் செல்லவேண்டும் என்று நினைக்கிறேன். ‘எழுத்தாளனின் அரசியல்’ என நான் சொல்வது இதையே

இது இரண்டு முகம் கொண்டிருக்கும். சாமானியனின் குரலாக அவன் குரல் ஒலிக்கும். சூழலில் பொதுவாக என்ன எண்ணப்படுகிறதோ அதை காட்டும். கூடவே அவனுடைய நுண்ணுணர்வால் கண்டடையப்பட்ட சில அவதானிப்புகள், சில உருவகங்கள் அதில் இருக்கும். சிலசமயம் தவறாகலாம், சிலசமயம் எவருமே சொல்லாததாக ஆகலாம். ஆனால் அவனுடைய பங்களிப்பு அதுவே, ‘சரியானதை’ மட்டுமே சொல்லவேண்டும் என நினைக்கும் எழுத்தாளன் தான் உணர்ந்ததைச் சொல்லமுடியாதவனாக ஆவான்.

ஏறத்தாழ ஆற்றூர் ரவிவர்மா ஒரு குறிப்பில் கூறியிருப்பதன் இன்னொரு வடிவம் இக்கருத்து. சாட்சிமொழி உட்பட என் நூல்களில் காண்பது இதுவே. ஏதேனும் அரசியல் நிலைபாடு வழியாக அதை மதிப்பிடுபவர்கள் அதை வசைபாடவே முயல்வார்கள். பொதுப்பார்வையில் தென்படாத சிலவற்றை அதில் கண்டடைபவனே இலக்கியவாசகன், இவை அவனுக்காக எழுதப்படுகின்ரன.

ஜெ

***

அரசியலாதல்

அழியாத சாட்சி

இன்றைய அரசியல்

அரசியல்சரிநிலைகள்

எனது அரசியல்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பின் தொடரும் நிழலின் குரல் –கடிதம்

$
0
0

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க

அன்புள்ள ஜெ

 

தங்களின் ஆக சிறந்த படைப்புகளில் ஒன்றான பின் தொடரும் நிழலின் குரல் நாவலை சில நிமிடம் முன் தான் முழுவதுமாக படித்து முடித்தேன்.       நாவலை பல்வேறு தடைகள்,இடைஞ்சல்கள், நேரமின்மை,சோம்பேறிதனம் என கடந்து முடிக்க கிட்டதட்ட தோராயமாக இரண்டரை மாதங்கள் எடுத்து கொண்டேன்.

 

இந்த புத்தகம் தற்சமயம் பதிப்பில் இல்லை என்றே நினைக்கிறேன்.ஆகையால் தெரிந்த அண்ணனிடம் மன்றாடி பெற்ற பழைய பதிப்பை இரவலாய் பெற்று படிக்க தொடங்கினேன்.முதல் நாள் ஆர்வத்தில் நூறு பக்கங்களை கடந்து படித்தேன்.அதன் பின்னர் சுத்தமாக வேகம் இன்றி போனது.அதன் பின் வேலை தேடி அலைந்து படித்து முடித்திருந்த படிப்புக்கு சம்மந்தம் இல்லா வேலைக்கு சேர அது ஒரு பக்கம் ஒரு நாளில் பத்து முதல் பன்னிரண்டு மணிநேரத்தை பிடிக்க தினமும் முக்கால் மணிநேரம் அரை மணிநேரம் என படித்து முடித்து இருக்கிறேன்.

 

இது போன்ற ஓன்றை தங்களால் மட்டுமே எழுத மற்றும் தொகுக்க முடியும்.கதை போன்று தொடங்கி கடிதம் ,மொழிபெயர்ப்பு சிறுகதை,நாடகம் என ஒரு உண்மை சம்பவத்தை தங்கள் சந்தித்த நிகழ்வுகள் என நாவல் பல்வேறு தளங்களை தொட்டு செல்கிறது. இதில் நீங்கள் எதை கூறாமல் விட்டிர்கள் முழு உலக தத்துவகங்களையும் சித்தாத்தகளையும் கூறி பெரும் உலகை மட்டும் அல்ல அதற்கு அப்பாற்பட்ட ஒன்றையும் இப்படைப்பில் தங்கள் நிகழ்த்தி காட்டி விட்டிர்கள் என நான் நினைக்கிறேன்.

 

எல்லா சித்தாந்தங்களும் ஓட்டை படகு தான் அவற்றில் பயணிப்பது தவிர வேறு வழியில்லை இல்லாவிடில் வாழ்க்கை எனும் பெரும் சூழலில் சிக்கி கரையேற முடியாத என சில வரிகள் வரும் அதை எல்லாம் எப்படி பாரட்டி சொல்வது. வேற லெவல் இப்படி கூறினால் தான் ஒரு திருப்தி வருகிறது.

 

கடைசி நாடகத்திற்கு ஒருவாறு ஒரு விளக்கம் தரப்பட்டிருந்தது.அதை படித்தே குழம்பி போனேன்.அது ஒரு பைத்தியகார ஹாஸ்பிட்டல் இதில் உள்ள பைத்தியங்கள் ஒரு நாடக போடுகிறது அந்த நாடகத்தில் ஒரு பைத்தியகார ஆஸ்பத்திரி என நீண்டு அதில் பல கதாபாத்திரங்கள் வந்து வேறு ஒரு தளமான மனபிறழ்வில் இருந்து திரும்பும் ஒன்றை நிகத்தியுள்ளீர்கள்.நாடகத்தில் பல இடஙகளில் சிரிப்பு என்னை மீறியும் வந்தது. புகாரின்,டிராஸ்கி என அறியாத பல முக்கியமான நபர்களை அறிந்தேன். தியாகம் எனும் ஒன்றில் தான் நம் வாழ்க்கை உருண்டோகிறது என்பதை நாவலில் கண்ட தரிசனமாக நான் எண்ணுகிறேன்.

 

 

இப்படிக்கு

 

மணி

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்

பெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து

பின் தொடரும் நிழலின் குரல்- கடிதம்

பின் தொடரும் நிழலின் அறம்

மகத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்

பின் தொடரும் நிழலின் குரல் – அறம்

பின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்

பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்

காடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்க

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்

ஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குர

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)

$
0
0

 

அன்று நான் எனது தந்தையின் குடிசையைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனாக இருந்தேன். அப்போது எனக்கு எத்தனை வயது இருந்திருக்கும்? என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. மிகக் குறைந்த வயது. ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்திருக்கக்கூடும். எனது தாய், தந்தையோடு பட்டறையில் இருந்தாள். சுத்தியலால் அடிக்கும் ஓசையும், விதவிதமானவற்றை வாங்க வருபவர்களது குரல்களும் எப்போதுமே ஒலித்துக்கொண்டிருக்கும் பழகியவர்களது குரல்களும் இப்பொழுதும் என் காதுகளில் ஒலிக்கின்றன.

 

ரிஷான் ஷெரீஃப் மொழியாக்கம் செய்த கதை. வல்லினம் இதழில்.

கரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஏன் பொதுப்பிரச்சினைகளைப் பேசுவதில்லை?

$
0
0

 

அன்புள்ள ஜெயமோகன,

நான் உங்கள் வாசகன். நீங்கள் எழுதும் கட்டுரைகளில் உள்ள சமநிலையான சிந்தனைகளை விரும்பி வாசிக்கக்கூடியவன். நான் எழுதும் முதல் கடிதம் இது.

நெடுநாட்களாக என் மனதில் உள்ள கேள்வி இது. இதை நான் உங்கள் இணையதளத்தில் தேடினேன். நீங்கள் சொன்ன பதிலைப் பார்த்தேன். அதாவது நீங்கள் ஏன் முக்கியமான சமூகப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்வதில்லை? கருத்துச்சொல்ல ஆரம்பித்தால் தொடர்ந்து அதையே விவாதிக்க வேண்டியிருக்கும் என்று சொல்கிறீர்கள். எழுத்தாளனின் வேலை அது இல்லை என்கிறீர்கள். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமூகப்பிரச்சினைகளில் எழுத்தாளர்கள் உணர்ச்சிகரமாக எதிர்வினை ஆற்றத்தானே வேண்டும்? அது அவர்களின் கடமை இல்லையா?

உதாரணமாக இப்போது சென்னையிலே வங்கியில் கொள்ளையடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு இளைஞர்களை சுட்டுக்கொன்றுள்ளது. இந்த அநீதிக்கு எதிராக எழுத்தாளர்கள் குரல் கொடுக்க வேண்டாமா?

ஜெய்சன் சாமுவேல்

அன்புள்ள ஜெய்சன்,

நான் பொதுவாக சமூகப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்வதில்லை. நம்முடைய சமூகம் இன்று பல்வேறு அதிகார சக்திகள் தொடர்ந்து முரண்பட்டு மோதிக்கொண்டே இருக்கும் ஒரு அரசியல்வெளி. பிரம்மாண்டமான உள்விரிவுள்ள ஒரு ஜனநாயகம் நம்முடையது. ஆகவே எப்போதும் இங்கே கொந்தளிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. ஊடகப்பெருக்கம் உள்ள தேசமாகையால் ஒரு இடத்தின் பிரச்சினை தேசம் முழுக்க சென்று சேர்கிறது. பலநூறு தரப்புகள், பல்லாயிரம் கருத்துக்கள் வருகின்றன. பிரச்சினை இல்லாமல் ஒருவாரம்கூடக் கடந்துசெல்வதில்லை.

எழுத்தாளன் இப்பிரச்சினைகள் அனைத்துக்கும் எதிர்வினை ஆற்றி, அதைத்தொடர்ந்து வரும் விவாதங்களிலும் பங்கு கொண்டான் என்றால் அவனுடைய அகச்சக்தி முழுக்க அதற்கே செலவழியும். அவனால் எந்தப் புனைவையும் எழுத முடியாது. ஆகவேதான் சமூகப்பிரச்சினைகளுக்கு எதிர்வினை ஆற்றுவதில்லை என்பதை நான் கொள்கையாகக் கொண்டிருக்கிறேன். குறைந்தபட்சம் அவை சூடாக நிகழும்போதாவது முற்றாக அமைதி காக்கிறேன்.

உலகமெங்கும் பெரும்பாலும் எல்லா முக்கியமான எழுத்தாளர்களும் இந்த நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்கலாம். அவர்களுடைய சொந்த ஆன்மீக,அரசியல்,சமூகவியல் தேடல் ஒன்று இருக்கும். அதனுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு மட்டுமே அவர்கள் எதிர்வினை ஆற்றுகிறார்கள். ஏனென்றால் அது அவர்கள் செய்துவரும் கருத்துச்செயல்பாட்டின் ஒரு பகுதியாக உள்ளது.

அல்லது, பிற எல்லாத் தரப்பும் மௌனம் காக்கும்போது இலக்கியவாதியின் குரல் எழுகிறது. அவன் பேசியே ஆகவேண்டிய இடம் அது. அப்படிப் பேசி அதற்காகக் களப்பலியான எழுத்தாளர்கள் உலகமெங்கும் உண்டு. அதற்காக இலக்கியத்தையே இழந்தவர்களும் உண்டு. இலக்கியம் மேலான விழுமியங்களுக்காக நிலைகொள்வது. அவ்விழுமியங்களுக்காக இலக்கியத்தை இழப்பதும் முறையானதே.

நேர்மாறாக, தொடர்ந்து எல்லா சமூகப் பிரச்சினைகளுக்கும் எதிர்வினையாற்றும் எழுத்தாளர்கள் உண்டு. அவர்கள் எழுத்தாளர்கள் என்பதை விடக் களப்பணியாளர்கள், அரசியலாளர்கள் என்ற அடையாளத்தை மேலதிகமாகச் சுமப்பவர்கள். அவர்கள் விதிவிலக்குகள். அவர்களின் புனைகதை ஆற்றலை அந்த அடையாளங்கள் பெரிதும் நசுக்கி அழித்திருப்பதையும் நீங்கள் காணலாம்.

நம் சமூகத்தின் பொதுவான மனப்போக்கு என்னவென்றால், அவர்கள் இலக்கியவாதி எழுதுவதை வாசிக்கமாட்டார்கள் என்பதே. அவன் தன் சிந்தனையின் கற்பனையின் நுண்ணிய பகுதிகளை வெளிப்படுத்தியிருக்கும் புனைவுகளை அவர்கள் பொருட்படுத்தி விவாதிக்க மறுப்பார்கள். ஆனால் ஏற்கனவே தாங்கள் செய்து கொண்டிருக்கும் விவாதங்களில் தங்களைப்போல அவனும் வந்து கலந்துகொண்டு தங்களைப்போல ஒரு நிலைப்பாட்டை அவனும் எடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ‘அதாவது நீ எழுத்தாளனாக இருக்காதே, எங்களைப்போல நீயும் பேசு’ என்று சொல்கிறார்கள். நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தின் சுருக்கமான பொருளும் அதுவே.

எழுத்தாளன் அரசியலாளனோ செயல்பாட்டாளனோ அல்ல. அவனுடைய நுண்ணுணர்வும் சரி, அவன் செயல்படும் தளமும் சரி முற்றிலும் வேறானவை. இன்னும் நுட்பமானவை, சிக்கலானவை. அந்தத் தகுதியால்தான் அவன் எழுத்தாளனாக ஆகிறான். அந்தத் தனித்தன்மையுடன் அவன் ஓர் அரசியலாளன் போல, செயல்பாட்டாளன் போல, சேவையாளன் போலச் செயல்பட முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

சரி, நீங்கள் சொன்ன விஷயத்தையே பேசுவோம். சென்னை துப்பாக்கிச்சூடு பற்றி மனித உரிமைப்போராளிகள் மற்றும் இதழாளர்கள் பேசுவதை நான் அவசியமான ஒன்றாக நினைக்கிறேன். நம் சமூகத்தில் அரசதிகாரம் எல்லைமீறிச்செல்லாமல் காக்கும் அணைகள் அவை. மக்களின் கூட்டான தார்மீகமே சமூகத்தின் தண்டிக்கும் சக்தியாக இருக்கவேண்டுமென்பதைத் தொடர்ச்சியாக நிறுவிக்கொண்டிருக்கும் செயல்பாடு அது. ஆக்கபூர்வமான சமூகத்தில் இன்று மனித உரிமை, சூழியல் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை ஆகிய மூன்றுக்காகவும் எப்போதும் ஒருங்கிணைந்த குரல் எழுந்துகொண்டிருந்தாகவேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். அதற்காகப் போராடும் ஒவ்வொருவரையும் நான் மதிப்புடன் வணங்குவேன்.

ஆனால் இவர்களில் ஒருவனாக என்னுடைய குரலை இணைக்கமுடியாது. ஏனென்றால் நான் இவர்களில் ஒருவனல்ல. நான் எழுத்தாளன். மேலே குறிப்பிட்ட செயல்பாட்டாளர்களுக்கு ஒற்றை நோக்கு உள்ளது. அதை ஒட்டிய செயல்திட்டம் உள்ளது. அச்செயல்திட்டத்தை ஒட்டி மட்டுமே அவர்கள் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள். எழுத்தாளன் அப்படி ஒற்றை நோக்குடன் செயல்பட்டால் அவன் எழுதுவது இலக்கியமாக இருக்காது. தட்டையான பிரச்சாரமாகவே இருக்கும்.

உலகமெங்கும் இலக்கியமென எது எண்ணப்படுகிறதோ அது இப்படிப்பட்ட ஒற்றைநோக்குடைய எழுத்து அல்ல. இலக்கியத்தின் இலக்கு என்பதே சொல்லப்படாதவற்றைச் சொல்வது. பார்க்கப்படாத கோணத்தில் பார்ப்பது. ஆகவே எப்போதும் அது பொதுப்பார்வையைத் தவிர்த்து முரண்பாடுகளையும், விசித்திரங்களையும், விபரீதங்களையும் முன்னிறுத்துகிறது.

இலக்கியமென்பது பிறவழிகளில் சொல்லப்படாதவற்றைச் சொல்வதற்கான ஒரு வழி. உண்மை என்பது அப்பட்டமாக மேலே மிதந்து கிடக்காது என்றும், அது முரண்பாடுகள் நடுவே சமரசப்புள்ளியாகத்தான் இருக்கும் என்றும் அது நினைக்கிறது. எல்லாவற்றையும் அறிந்து, தொகுத்து, அனைத்துக்கும் பொதுவாக உள்ள உண்மையையும் யதார்த்ததையும் சொல்லத்தான் அது முயலும். அப்படிச் சொன்ன படைப்புகளுக்கு மட்டுமே இலக்கிய மதிப்பு உண்டு.

அப்படி இல்லாத ஆக்கங்கள் செயல்பாட்டாளர்களுக்கு உதவும். அவர்கள் அதைக் கொண்டு செல்வார்கள். ஆனால் ஒருபோதும் இலக்கிய வாசகனை அவை நிறைவடையச்செய்யாது. அவனுக்கு உள்ளூரத் தெரியும் அந்த ஆக்கம் சொல்வது இலக்கியம் மட்டுமே சொல்லக்கூடிய சமநிலை கொண்ட உண்மை அல்ல என்று. அப்படைப்பு இலக்கியமாக நிற்கவும் செய்யாது.

நான் தொழிற்சங்க அரசியலில் செயல்பட்டவன். அங்கே நான் செய்தவை அனைத்தும் தொழிலாளர்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டவை. பேசியவை எல்லாமே அந்த நோக்கத்தால் ஆனவை. இலக்கியவாதியாக அவற்றை அப்படியே நான் பேசமுடியாது. இலக்கியவாதியாக நான் அவற்றின் மறுபக்கத்தையும் பார்க்கவேண்டும். தொழிலாளர்களின் மறுபக்கத்தை கவனிக்கவேண்டும். முதலாளிகளின், அரசாங்கத்தின் தரப்பையும் கவனிக்கவேண்டும். அப்போதுதான் அது இலக்கியவாதியின் குரலாக ஆகும்.

சுருக்கமாகச் சொன்னால், ஒரு பழைய பழமொழியையே சொல்லவேண்டும். நல்ல இலக்கியம் எலியின் உயிர்வதையை மட்டும் சொல்வது அல்ல. பூனையின் பசியையும் கணக்கில் கொண்டு பேசுவது. இலக்கியம் ‘other side of the other side of the other side’ ஐப் பேசமுயலும் என்ற ஒரு கூற்று உண்டு. சமரசமற்ற கறாரான உண்மையை நோக்கியே அது செல்லவேண்டும். அது எத்தனை கசப்பானதாக இருந்தாலும் அதைச் சொல்லவேண்டும். சொல்பவனை எந்த அளவுக்கு அன்னியப்படுத்தினாலும் அதை அவன் சொல்லியாகவேண்டும்.

அதன் விளைவு ஒருவேளை சமூகத்திற்குத் தீங்கானதாக ஆனாலும்கூட உண்மையைச் சொல்வதே இலக்கியமாக இருக்கும். அதுவே இலக்கியவாதியின் கடமையும்கூட. அக்காரணத்தால்தான் உலகின் பெரும்படைப்பாளிகள் சமகாலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். அவமதிக்கவும் தண்டிக்கவும் பட்டிருக்கிறார்கள். அரசாலும் மதத்தாலும் சமூகத்தாலும் மட்டும் அல்ல, சமூக சீர்திருத்தவாதிகளாலும் முற்போக்காளர்களாலும்கூட அவர்கள் சிறுமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் துப்பாக்கிச்சூடு விஷயத்தில் ஒரு சாதாரணக் குடிமகனாகவும், எழுத்தாளனாகவும் நான் உண்மையை அறிந்துகொள்ள முயன்றேன். நானறிந்தது இது. வங்கிக்கொள்ளை நிகழ்ந்ததும் காவல்துறை அனைத்து வங்கிகளிலும் உள்ள ரகசியக் காமிரா பதிவுகளை ஆராய்ந்தது. ஏனென்றால் கொள்ளையர் பல வங்கிகளை நோட்டமிட்டிருக்க வாய்ப்பிருந்தது. காவல்துறைக்கு அக்கொள்ளையைச் செய்தவர்கள் எவரென பெரும்பாலும் ஊகம் இருந்தது. அந்த முகங்களுக்காகத் தேடியபோது ஒரு முகம் சிக்கியது. அது காவல்துறையின் ரகசியப் பதிவுகளில் உள்ள முகம்.

அந்த முகத்தை வெளியிட்ட காவல்துறை உடனே ஒரு ரகசியத்தகவலாளியிடமிருந்து அந்நபரைப்பற்றிய தகவலைத் தெரிந்துகொண்டது. அந்தத் தகவலாளி பெரும்பாலும் ஒரு பாலியல்தொழிலாளர். அவர் யாரெனக் காவல்துறை ஒருபோதும் வெளிப்படுத்தாது. நேராகக் கொள்ளையர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்ற காவல்துறை அவர்களை அமைதியான முறையில் கைதுசெய்து கொண்டு சென்றது. செல்லும் வழியில் மேலிட உத்தரவு வந்தது. திருப்பிக் கொண்டுவந்து அறைக்குள் குப்புற வீழ்த்தி சுட்டுத்தள்ளியது. இந்தச் சித்திரம் உண்மையாக இருக்கலாமென நான் நினைக்கிறேன்.

நெடுங்காலம் நீடிக்கும் இரு அமைப்புகள் நடுவே கண்டிப்பாக ஒரு நடைமுறைச் சமரசம் இருக்கும். சமீபத்தில் இந்திய அரசின் உயரதிகாரியாக இருந்த பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய கலங்கியநதி நாவலில் அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான போரும் கொலைகளும் நடந்துகொண்டிருக்கும்போதே அப்படி ஒரு நடைமுறைச் சமரசம் இருக்கும் சித்திரம் அபாரமாகப் பதிவாகியிருப்பதை வாசித்தேன். அக்கட்டுரையில் இவ்வரியைச் சொல்லியிருந்தேன்.

அத்தகைய சமரசம் காவல்துறைக்கும் குற்றவாளிகளுக்கும் நடுவிலும் உண்டு. காவல்துறைக்கு நிறைய எல்லைகள் உள்ளன. அதன் திறமைக்குறைவு, வசதியின்மை, ஊழல், அரசியல் கட்டாயம், இந்திய சட்டத்துறையின் சிக்கல்கள் என பல காரணங்கள். ஆகவே நடைமுறையில் காவல்துறை ஓர் எல்லைவரை குற்றங்களை அனுமதிக்கின்றது.

திருட்டு வழக்குகளைக் காவல்துறை கையாளும் விதத்தைப்பற்றி வழக்கறிஞர்களான நண்பர்கள் அளிக்கும் சித்திரம் வேடிக்கையானது. இங்கே உண்மையில் திருட்டை ஒழிக்கக் காவல்துறை முயல்வதில்லை, அது காவல்துறையின் எல்லைக்கு மீறிய விஷயம். திருட்டுவழக்குகளை ஒரு குறிப்பிட்ட அளவுக்குத் தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வது மட்டுமே அது செய்யும் பணி. பெரும்பாலான வழக்குகள் திருடர்களே ஐந்துக்கு ஒன்று என்பது போலத் தங்களை ஒப்புக்கொடுப்பவை. திருட்டு இந்த அளவு வரை நிகழலாமென திருடர்களுக்கும் காவலர்களுக்கும் ஒரு பரஸ்பரப் புரிதல் உள்ளது.

இங்கே பெரும்பாலான திருட்டுகள் பதிவாவதே கிடையாது. திருட்டுக்கொடுத்தவர் மிகவும் அழுத்தம் கொடுத்தால் திருட்டுப்பொருளையே திருடனிடமிருந்து பேசி வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். அதற்குள்ளேயே பல கணக்குகள். திருட்டைக் காவலர் பெரிதாக நினைப்பதில்லை, ஆனால் வழிப்பறி தங்கள் அதிகாரம் மீதான நேரடிச் சவால் என எண்ணுவார்கள். திருட்டுடன் கொலை என்றால் அதன் கணக்கு வேறு. தொடர்திருட்டு என்றால் அது மேலிடத்தொல்லையை உருவாக்கும்.

இந்த பிகார் திருடர்கள் விஷயம் இதேபோலக் காவல்துறைக்கு மிகவும் தெரிந்த, வேறுவழியில்லாமல் அது விட்டுவைக்கிற ஒரு இந்தியப்பிரச்சினை. பிகாரில் உள்ள பல கிராமங்களே ஒட்டுமொத்தமாக திருடர்கிராமங்கள். ஒருங்கிணைந்த பெரிய கொள்ளை அமைப்புகள் அங்கே உள்ளன. அங்குள்ள காவல்துறையும் நீதித்துறையும் அதற்கு உடந்தையாக உள்ளன. அந்தத் திருடர்களில் பெரும்பாலானவர்கள் பெரும் பணக்காரர்கள்.

அவர்கள் பிற இந்திய மாநிலங்களில் சென்று திருடிவிட்டு பிகாருக்குள் சென்றுவிட்டால் அவர்களைப் பிடிக்கவே முடியாது. சட்டப்படி பிகாரின் காவல்துறைக்குத் தகவல்தெரிவித்து அங்கே சென்று அவர்களைப் பிடிக்கவேண்டும். அந்தத் தகவல் உடனே அவர்களுக்குக் காவலர்களாலேயே சொல்லப்பட்டுவிடும். அங்கே அவர்களுக்கு எல்லாவகையான அடியாள் பாதுகாப்பும் நீதித்துறைப் பாதுகாப்பும் உண்டு. பிகார் போலீஸுக்குத் தெரியாமல் பிகாரித் திருடர்களைப் பிடிக்கப்போய் தமிழக போலீஸின் உயரதிகாரிகள் உட்படப் பலர் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களை இங்கேயே பிடித்தால்கூட நீதிமன்றத்தில் ஆஜராக்கியதுமே ஜாமீன் கிடைத்துவிடும். உடனே கிளம்பிச்சென்றுவிடுவார்கள். திரும்பப் பிடிக்க முடியாது. முதலில் அப்படி ஒரு மனிதனை அல்லது விலாசத்தையே தேடிப்பிடிக்கமுடியாது. இது ஒரு பிகாரிய பிரச்சினை மட்டும் அல்ல. இப்படிப்பட்ட குழுக்கள் தமிழகத்திலேயே உண்டு. திருச்சி ராம்ஜிநகரில் அப்படி ஒரு திருட்டு உலகம் இருந்தது என்றார் நண்பர். அவர்கள் வடமாநிலங்களில் திருடிவிட்டு இங்கே வருவார்கள். அவர்களை நம்மூர் போலீஸ் பாதுகாக்கும்.

ஆகவே தமிழகப் போலீஸும் கேரளப்போலீஸும் பிகாரி திருடர்களைப் பிடிப்பதே இல்லை. ஏனென்றால் ஜாமீனில் சென்றவர்களைத் திரும்பப் பிடிக்கமுடியாவிட்டால் அது பெரிய சிக்கல். ஆகவே அவர்களைப் பிடிக்கவேண்டுமென்றால் அந்தத் திருடர்களே ஒப்புக்கொண்டு சின்ன வழக்குகளில் வந்து பிடிகொடுக்கவேண்டும். இவ்வாறாக நம் காவலர் திருடர் எனத் தெரிந்தும் நிறையப் பேரை நடமாட விட்டிருக்கிறார்கள். அதாவது பிகாரி கொள்ளையர்களை தண்டிக்கவேண்டுமென்றால் சுட்டுக்கொலைசெய்யவேண்டும், வேறு எதுவுமே நடைமுறையில் சாத்தியமல்ல. இதுவே யதார்த்தம்

இந்த விதிமுறை மீறப்படுவது சில அபூர்வ வழக்குகளில். என்னிடம் பேசிய ஒரு நண்பர் சிலவருடங்களுக்கு முன்னால் ஓர் அரசியல்வாதி திருடர்களால் கொல்லப்பட்டபோது மட்டும் தமிழகக் காவல்துறை உயரதிகாரி துணிந்து பிகார் காவல்துறைக்குச் சொல்லாமல் பிகார் சென்று திருடர்கள் சிலரைப் பிடித்துக்கொண்டு வந்ததாகச் சொன்னார்.

இந்த ஆட்டம் நேற்றும் நடந்தது, இன்னும் நடக்கும். நடுவே இப்படி ஒரு நிகழ்ச்சி ஏன்? தொடர் திருட்டுகளால் மாநிலத்தில் அச்ச உணர்ச்சி மேலோங்குகிறது என்றும் சட்ட ஒழுங்கை சரியாக வைத்திருப்பவர் என்ற முதல்வரின் பிம்பத்திற்குக் குறைவு ஏற்படுகிறது என்றும் தெரிந்ததும்தான் இதற்குக் காரணம். இதனூடாகத் திருடர்களுக்குக் காவல்துறை ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறது – ‘இதற்கு மேல் ஆட்டம் வேண்டாம். இதுதான் எல்லை’ என. ஆகவே இந்தக் கொலை.

இதை பிகாரிகள் எதிர்பார்க்க மாட்டார்கள். அதிகபட்சம் சிலநாள் ரிமாண்டும் ஜாமீனும்தான் அவர்கள் எதிர்பார்க்கக்கூடியது. அவர்களின் அமைப்பில் கொஞ்சநாள் அச்சம் நிலவும். அதுவே காவல்துறையின் நோக்கம்.

இதுதான் நானறிந்தது. உண்மை இதற்கு நெருக்கமாக எங்கோ உள்ளது. உலகம் முழுக்க ஆயுதமேந்திய அமைப்புசார் வன்முறையானது அரசுகளால் ஆயுதம் மூலமே எதிர்கொள்ளப்பட்டு வருகிறது என்பது ஓரு யதார்த்தம். அதை சட்டநடவடிக்கைகள் மூலம் ஒன்றும் செய்ய முடியாது. அதிலும் மாநிலங்கள் தனி நாடுகளாகவே செயல்படும் இந்தியாவில் வேறு ஒன்றுமே சாத்தியமில்லை என்பது காவலர் தரப்பு.

மனித உரிமையாளர்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம் நியாயமானவை. இப்படி எவரை வேண்டுமானாலும் போலீஸ் சுட்டுக்கொல்லலாமே. நாளை நம்முடைய குழந்தைகளை பிகாரி போலீஸ் இப்படி விசாரணை இல்லாமல் சுட்டுக்கொன்றால் நாம் விடுவோமா? இப்படி காவலர்களே கொல்லலாம் என்றால் எதற்கு சட்டம், நீதிமன்றம் எல்லாம்? அவர்களின் எதிர்ப்பும் போலீஸின் பொய்களை அவர்கள் அம்பலப்படுத்துவதும் முக்கியமான சமூக எதிர்வினையே. அது போலீஸின் எல்லையை நிர்ணயிக்கும் சமூக விசை.

அதேசமயம் திருடர்களின் சட்ட உரிமை, சட்டபூர்வ நடவடிக்கை பற்றி அவர்கள் பேசுவதெல்லாம் இந்திய யதார்த்தத்தில் கேலிக்குரியவை. அந்த வேகத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களை நிரபராதிகள் என்றும் போலீஸைக் குற்றவாளிகள் என்றும் காட்ட அவர்கள் முயலும்போது இன்னும் அபத்தமாக ஆகிறது அது.

ஓர் எழுத்தாளனாக நான் என்ன செய்யவேண்டும்? எது சரி எது தவறு என சொல்வதற்கு முன்னால் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அல்லவா புரிந்துகொள்ளவேண்டும்? மனித உரிமைக்காகத் திருட்டை அனுமதிக்க முடியுமா? இல்லை, நடைமுறைத் தேவைக்காக சட்டத்தை ரத்துசெய்யமுடியுமா? நான் இந்த தர்மசங்கடப்புள்ளியை முதலில் முன்வைக்கவேண்டும். அதில் இருந்து மேலே செல்லமுடிந்தால் செல்லவேண்டும்.

மாறாக, இந்த மனித உரிமையாளர்களின் மேலோட்டமான வாதங்களை ஏற்று நானும் கோஷமிட்டால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆனால் அதற்கு எழுத்தாளனாகிய நான் எதற்கு? அதைத்தான் அவர்களே செய்கிறார்களே?

உண்மை முக்கியம் என நினைத்து நான் இதில் உள்ள உண்மையைப் பேசப்போனால் அது மனித உரிமையாளர்களால் விரும்பப்படாது. நான் ’பிற்போக்கானவன்’, ‘சமூக அமைப்பின் குரலாகப் பேசுபவன்’, ‘மனிதாபிமானமில்லாதவன்’ என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள். அவர்களுக்கெல்லாம் விளக்கம் அளித்தே நான் ஓய வேண்டியிருக்கும்.

இந்தக் கட்டுரையில் நான் ஒற்றைப்படை நிலைப்பாடு எடுக்காத காரணத்துக்காகவே என்னென்ன வசைகள் வருகின்றன என்று கவனியுங்கள். இங்கே எழுத்தாளனை அவனுடைய படைப்புகளை வாசிக்காத ஒரு பெரும் கும்பல் எப்போதும் வசைபாடிக்கொண்டே இருக்கிறது.

இந்த விஷயத்தில் மட்டும் அல்ல, சமூகத்தில் பரபரப்பாகப் பேசப்படும் எல்லா விஷயத்துக்கும் இப்படி மறுபக்கமும், மறுபக்கத்தின் மறுபக்கமும் உண்டு. அவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு பார்த்தால் மட்டுமே இலக்கியவாதியாக நான் பேசமுடியும். எழுத்தாளன் அவற்றை அப்படி எல்லாத் தருணத்திலும் பேசிக்கொண்டிருக்கமுடியாது.

ஆக மௌனமாக இருப்பதே வழி. அதற்கும் மேல் இந்தப் பிரச்சினை என்னுடைய மனசாட்சியைத் தாக்குமென்றால் இதை என் புனைவுலகுக்குக் கொண்டுசெல்லவேண்டும். புனைவுலகில் நான் இதை எல்லாத் தரப்புகளையும் பேசச்செய்து ஒரு சமநிலைநோக்கைப் பார்த்து இதைக் கொண்டுசெல்லமுடியும்.நானறியும் உண்மையை இன்னும் கூர்மையாகவும், இன்னும் முழுமையாகவும் சொல்லமுடியும். அதுதான் என் ஊடகம்.

அப்படி இலக்கியத்தில் முழுமையான தர்க்கங்களுடன், உணர்ச்சிக் கூர்மையுடன் சொல்லப்பட்ட விஷயங்களையேகூட நம்முடைய பொத்தாம்பொது வாசகர்கள் அவர்கள் ஏற்கனவே பேசிக்கொண்டிருக்கும் ஒற்றைப்படை அரசியலை நோக்கி இழுத்துச்சென்று மடத்தனமாக விவாதிப்பதே இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நம்முடைய இலக்கிய விவாதங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே இது தெரியும். இந்நிலையில் இலக்கியவாதி இலக்கியம் எழுதாமல் இவர்களின் டீக்கடைப்பெஞ்சு விவாதங்களில் சென்று அமர்ந்தால் வேறு வேலையே வேண்டியதில்லை.

ஆகவேதான் நான் பேசாமலிருக்கிறேன்.

ஜெ

 

மறுபிரசுரம் – முதற்பிரசுரம் Mar 12, 2012

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று –நீர்ச்சுடர்-1

$
0
0

தோற்றுவாய்

மலைசரிந்து இறங்கி, மண் செழிக்க ஒழுக, அழிமுகத்தில் கடலைச் சேர்ந்து விரிநீர் என்றானது கங்கை. அலையலையெனப் பெருகி தன்னைத் தானே நிறைத்துக்கொண்டது. காற்றும் ஒளியும் கொண்டு வெளியாகியது. நீலவானாகியது. தன்னில் தான் செறிந்து எட்டுத் திசைகளையும் நிறைத்து அமைந்தது.

கேள் அரசே, இது முன்னர் நிகழ்ந்த கதை. முன்னர் நிகழ்ந்தவை கோடி கோடி. அவற்றில் கண்ணீரும் கனவும் சென்று தொட்டவை மட்டுமே ஒளிகொள்கின்றன. ஒளிகொள்வனவற்றை மட்டுமே எடுத்துச்சேர்க்கின்றனர். மானுடரின் விழிநீர் தன் ஒழுக்கில் உருட்டி எடுத்த சொற்களே, கூழாங்கற்கள் கங்கையால் சாளக்கிராமங்களாவதுபோல் மெய்மை என்றாகின்றன. மலைதழுவியிறங்கும் ஏழு குளிர்ந்த கைகளை விரித்து கற்களை சாளக்கிராமமாக்கும் கங்கைப்பெருக்கை வணங்குக! கங்கையால் தூய்மை அடைந்தவை அழிவதில்லை என்று உணர்க!

செறிந்து ஒளிகொண்ட சொல் ஒன்று கங்கையினூடாக ஒழுகியது. செல்லச்செல்ல ஒரு மீன்விழி என்றாகி நீர் இறுகி கரும்பாறையென்றாகிய ஆழத்தை சென்றடைந்தது. அங்கே விழியோ செவியோ மூக்கோ கைகால்களோ இல்லாமல் சுவையறியும் நீர்வடிவான வாய் மட்டுமே கொண்ட உயிர்கள் அடிநிலமெனச் செறிந்திருந்தன. அவற்றின்மேல் ஒரு நீர்க்குமிழி என அது பறந்து சென்றமைந்தது. நெளிந்து கொப்பளித்துக்கொண்டிருத அவற்றிடம் கேட்டது “சொல்க, நீங்களெல்லாம் யார்? இங்கே நீங்கள் அமைந்திருப்பது ஏன்?”

அவற்றில் ஒன்று தன் உடலதிர்வால் சொன்னது “நாங்கள் கங்கைப்பெருக்கில் ஒவ்வொரு நாளும் திரண்டு வந்து இங்கே அடையும் பெரும்பிழைகளை, நீங்காப்பழிகளை, துயர்களை கணமொழியாது நக்கி உண்டு அழிக்கும் ஆழத்து தெய்வங்கள். எங்களால் தூய்மை செய்யப்படுகிறது கடல். எங்களிலிருந்து மீண்டும் எழுகின்றன நதிகள்.” அவற்றின் கரிய முடிவிலாப் பரப்பை நோக்கி உளம் மலைத்த மீன்விழி சொன்னது “அன்னையின் ஆழத்தில் நீங்கள் கனிந்திருக்கிறீர்கள். உங்களை வணங்குகிறேன். சொல்க, நீங்கள் எழுவது எங்கிருந்து?”

“நாங்கள் எதை உண்கிறோமோ அவற்றிலிருந்தே எழுகிறோம்” என்று அது சொன்னது “ஒவ்வொரு பிழையும் ஒவ்வொரு பழியும் ஒவ்வொரு துயரும் தன்னை திரட்டிக்கொள்ளவே தவித்துக்கொண்டிருக்கிறது என்று அறிக! தன் வடிவின்மையே அதை ஓயாது துடிக்கச் செய்கிறது. அத்துடிப்பே உயிர்களால் வலியென உணரப்படுகிறது. வடிவை அடைந்ததும் அது அமைதிகொள்கிறது. எல்லா வடிவங்களும் இறுக முயல்கின்றன. கூர் கொள்ள முயல்கின்றன. அறிக, அங்குள அனைத்தும் கூர்கொண்டபடியே இருக்கின்றன! கூர் என்பது ஒளி. உடல்களின் கூர் விழி எனப்படுகிறது. தாவரங்களின் கூரே தளிரும் மலரும். அகவடிவான அனைத்திலும் கூர் என எழுகிறது மெய்மை.”

“மெய்மை திரண்டு உடல்கொண்டவர்கள் நாங்கள்” என அது சொன்னது. “எங்கள் நோக்கமே எங்களை முழுமை செய்வதே. நாங்கள் தோன்றிய அழுக்கை உண்கிறோம். பின்னர் வளைந்து எங்களை நாங்களே விழுங்கி உண்டு மறைகிறோம்.” விழித்துளி அவற்றை வணங்கியபின் கோரியது “கங்கைப்பெருக்கினூடாக வருகையில் நான் ஒற்றை வினாவையே அறுதியாக ஏந்தியிருந்தேன். அவ்வினா எஞ்சியமையால்தான் நான் முழுமைகொள்ளவில்லை. அதை நீங்கள் உரைத்து என்னை விடுவித்தாகவேண்டும்.”

“கூறுக!” என்றது கடலுயிர். “பேரன்னை கங்கை கரைதோறும் காண்பது மானுடர் துயரை மட்டுமே. கொள்வது மண்ணின் அழுக்கை. அவள் ஆறுதல் அளிக்கிறாள். அனைத்தையும் தூய்மை செய்கிறாள். எனினும் அந்தத் தீயூழ் ஏன் அவளுக்கு ஏற்பட்டது? ஆக்கி அமுதளிக்கும் அன்னையருக்கு உயிர்கள் ஏன் துயரை மட்டுமே திருப்பியளிக்கின்றன?”

“ஏனென்றால் அன்னை கங்கை ஐந்து தீச்சொற்களை பெற்றவள்” என்றது கடலுயிர். “முன்பு குறியோனாக உருக்கொண்டு விண்வடிவன் மண்ணிலெழுந்தபோது அவனுக்குமேல் விரிந்த நீர்வெளியாக அவள் வானிலிருந்தாள். கீழிருக்கும் பெருமானுக்கு குடைபிடித்து அவனை நான் காப்பேன் என்று எண்ணினாள். அந்த ஆணவத்தால் மறுகணமே அவள் தண்டிக்கப்பட்டாள். மூவடியால் புடவியை அளந்த மாலோன் தூக்கிய காலின் நகக்கணுவால் வானில் கீறல் விழுந்தது. அவள் பொழிந்து மண்ணிலிறங்கி மலைகளை மூடி பெருகி கடலை அடைந்தாள்.”

பிறகொரு யுகத்தில் சகரன் என்னும் அசுரகுடி மன்னன் தன் ஆசுரவேள்வியை நிறைவுசெய்யும் பொருட்டு இந்திரனின் புரவியை நாடினான். இந்திரன் அஞ்சி தன் புரவியை கபில மாமுனிவரின் வேள்விச்சாலைக்குள் கொண்டுசென்று கட்டினான். அரசன் தன் படையினருடன் கபிலரின் வேள்விச்சாலைக்குள் புகுந்து அப்புரவியை கவர்ந்துசெல்ல முயன்றான். கபிலர் அவனையும் அவன் குடியினரையும் தீச்சொல்லால் சுட்டெரித்து சாம்பலாக்கினார். சாம்பலில் எஞ்சிய ஒரு துளி முனிவரிடம் சொல்மீட்பு கோரியது. இச்சாம்பலனைத்தையும் தான் பெற்று உங்கள் ஆத்மாக்களை தூய்மை செய்யும் நீர்ப்பெருக்கு ஒன்றால் மீட்புகொள்க என அவர் சொல்லளித்தார்.

சகரனின் குலத்தில் எழுந்த பகீரதன் தன் குடிக்கு மீட்பளிப்பது விண்கங்கை ஒன்றே என்று உணர்ந்தான். அவன் கடுந்தவம் செய்து பிரம்மனை தன் முன் தோன்றச்செய்தான். பிரம்மனிடம் கங்கை மண்ணிறங்கவேண்டும் என சொல் கேட்டான். “அவள் உளம்கனிந்தால் அவ்வாறே ஆகுக!” என அவர் கூறினார். “அவள் உளம்கனிவது எப்போது?” என்று பகீரதன் கேட்டான். “அன்னைப்பசுவின் மடியை முட்டுகிறது கன்று… எந்த முட்டில் எப்போது அன்னை பால்கனியும் என அது அறியாது. ஆயினும் அது முட்டிக்கொண்டே இருக்கிறது” என்றார் பிரம்மன்.

பல்லாயிரமாண்டுகள் தவம் செய்த பகீரதன் கங்கையை அழைத்துக்கொண்டே இருந்தான். ஒரு கணத்தில் அவன் அழைப்பால் தன் முலைகளில் அமுது ஊற அன்னை கீழே நோக்கினாள். விண்முனிவர் அவளிடம் சொன்னார்கள் “அவன் எளிய மானுடன், அசுரகுடியினன். அவனுக்காக கனியலாகாது உன் முலை. அவை விண்ணவருக்கு அழிவின்மையை அளிக்கும் அமுது ஊறும் சுனைகள் என்று உணர்க!” அன்னை நோக்கை திருப்பிக்கொண்டாலும் உள்ளம் திரும்பவில்லை. மீண்டும் மீண்டும் மானுடமைந்தனின் அழைப்பு அவள் மடியை முட்டியது. அவளை மீறி அவள் முலைகள் சுரந்து மண்மேல் பெருகிவழிந்தன. “நீ மண்ணிலிறங்கி மானுடருக்குரியவள் ஆகுக!” என முனிவர் அவள் மேல் தீச்சொல்லிட்டனர்.

மண்ணிறங்கிய அன்னை சிறுமியாக இருந்தாள். அவளுடன் ஏழு தங்கைகள் பிறந்தனர். அவர்களுடன் சிரித்து நகையாடி மலையிறங்கி வந்தாள். வழியில் நீராடும்பொருட்டு இறங்கிய துர்வாச முனிவரின் ஆடையை கோமதி இடித்து இழுத்துச்சென்றாள். வெற்றுடலை மறைக்கும்பொருட்டு திணறிய முனிவரைக் கண்டு மந்தாகினி நகைத்தாள். அளகநந்தையும் நாராயணியும் மகாகாளியும் உடன்சேர்ந்துகொண்டார்கள். கங்கை சிரிப்பை அடக்கிக்கொண்டாள். சினம்கொண்ட முனிவர் கங்கையை நோக்கி “அழகி எனும் நிமிர்வும் இளமை என்னும் விசையும் கன்னியரை ஆணவம் கொள்ளச் செய்கின்றன. அவர்கள் அன்னையராகி அடங்குவதே நெறி. நீ பல்லாயிரம்கோடி மானுடருக்கு அன்னையென ஆவாய். அவர்களின் பிழைகளை பொறுப்பாய். பழிகளை சுமப்பாய். துயர்களை கரைப்பாய்” என்று தீச்சொல்லிட்டார்.

துயருற்ற அன்னை செல்லும்தோறும் சீற்றம்கொண்டாள். அமாவசு கொடிவழியின் அரசமுனிவரான ஜஹ்னு தன் வேள்விநிலத்தில் தவம்செய்துகொண்டிருக்கையில் அந்நிலத்தை அள்ளிச்சுருட்டி கொண்டுசென்றாள். அவளை தன் கையசைவால் நிறுத்திய ஜஹ்னு “சொல், நீ யார்? தவச்சாலையை கலைக்கும் ஆற்றலை எங்கிருந்து பெற்றாய்?” என்றார். “நான் விண்கங்கை. விண்ணிலுறையும் தூய வேதச்சொல் போன்றவள். என்னை மண்ணிலுள்ளோர் பிழைகளையும் பழிகளையும் துயர்களையும் கொள்ளும்படி ஆணையிட்டார் முனிவர்… நான் அதை பொறுத்துக்கொள்ள மாட்டேன்” என்று அன்னை சொன்னாள்.

“விண்ணுறையும் வேதச்சொல் மண்ணில் நால்வேதங்களாகியது முனிவர் சொல்லினூடாக என்று உணர்க!” என்றார் ஜஹ்னு. “உன்னை என் நாவால் உண்டு செவியால் புறந்தருகிறேன். நீ மண்ணவருக்கு உரியவள் ஆவாய்.” அவர் அவளை அள்ளி உண்டு தன் செவியினூடாக வெளியேவிட்டார் “இனி நீ என் மகளென்றாகி ஜானவி என அழைக்கப்படுவாய்.வேதம்போல் பல்லாயிரம் நாப்படினும், பலகோடி பிழைபடினும் தூய்மை இழக்காதவளாவாய்” என்று வாழ்த்தினார்.

மண்ணவர்க்குரிய அன்னையென அவள் அவ்வண்ணம் மாறினாள். வேதமெய்மையே நீர் வடிவு கொண்டதுபோல் மண்ணில் ஒழுகிச்சென்றாள். மானுடர் அளித்த அன்னத்தை பெற்றுக்கொண்டு அவர்களின் மூதாதையரை விண்புகச் செய்தாள். உளம் கனிந்து உளம் நிறைந்து மண்ணில் தன்னை முழுதமைத்துக்கொண்டாள்.

பின்னர் ஒருநாள் மாமுனிவர் நாரதர் அன்னையின் நீரில் மூழ்கி எழுந்தபோது அன்னை தன்னை அடையாளம் காணவில்லை என்று கண்டார். திகைப்புடன் “கங்கையே, விண்ணில் என் தோழி நீ. எங்ஙனம் என்னை மறந்தாய்?” என்றார். அன்னை “நான் விண்ணை நினைவுறவில்லை… மண்ணிலேயே நிறைவுற்றிருக்கிறேன்” என்றாள். அவள் இருந்த நிறையன்னை நிலையை உணர்ந்த நாரதர் சொன்னார் “ஆம், நீ கனிந்த அன்னை. ஆனால் பேரன்னையரே விண்புக முடியும். தன் குழவியரின் குருதிச்சுவை அறியாதவள் விண்புகும் பேரன்னை ஆவதில்லை. அவ்வாறே ஆகுக!”

அத்தீச்சொல்லால் அன்னை கங்கை அஸ்தினபுரியின் குருகுலத்தில் பிறந்த சந்தனு என்னும் மன்னனுக்கு துணைவியாக வந்தாள். எட்டு வசுக்களை மைந்தராக ஈன்றாள். எழுவரைக் கொன்று குருதிச்சுவை அறிந்தாள். பேரன்னையாக மாறி விண்ணிலும் ஒழுகலானாள். மண்ணில் அவளுடைய நிழலே நீர்வடிவாக பெருகி வழிந்தது.

தன் மைந்தரைக் கொன்று கடக்காத அன்னை முழுமைகொள்வதில்லை. அரசே, அறிக! பேரன்னையர் தன் மைந்தரை படிகளாக்கி ஏறி விண்புகுபவர்கள்.

தொடர்புடைய பதிவுகள்

நீரும் நெறியும் கடிதங்கள்

$
0
0

நீரும் நெறியும்

 

அன்புள்ள ஜெ

 

நீரும் நெறியும் பழைய கட்டுரை. ஆனால் மீண்டும் மீண்டும் புதிதாக வாசிக்கவைக்கிறது. ஏனென்றால் இன்றைக்கும் இருக்கும் பிரச்சினை. நாம் காவேரிநீரை நமக்குத்தரவில்லை என்பதை மட்டும் உணர்ச்சிப்பிரச்சினையாக ஆக்கிக்கொள்கிறோம். நமது நீராதாரங்கள் அழிவதைப்பற்றி கவலைப்படுவதில்லை.நம்முடைய நீரை நம் சகோதரர்களுடன் பகிர்ந்துகொள்வதுமில்லை.

 

நாம் இந்த மனநிலையை எவரேனும் சுட்டிக்காட்டினால் அவர்மேல் கோபம் கொள்கிறோம். கொந்தளிக்கிறோம். உண்மையில் நம்முடைய பிரச்சினைதான் என்ன என்பதே சிக்கலான கேள்விதான். நம்முடைய பலவீனங்களையும் சில்லறைத்தனங்களையும் மறைக்கவே இந்த நாடகங்களை ஆடிக்கொண்டிருக்கிறோமா?

 

ஆர்.சத்யமூர்த்தி

 

அன்புள்ள ஜெ

நீரும் நெறியும் கட்டுரையில் ஒரு விஷயம் என்னை மிகவும் கவர்ந்தது. அதாவது குமரிமாவட்டத்திற்கே உயிர்கொடுத்த பேச்சிப்பாறை அணையைக்கட்டிய மகாராஜாவையும் அதன் பொறியியலாளரையும் எவருமே நினைவுகூரவில்லை, அரசியல்வாதிகளைப்பற்றியே பேசினார்கள் என்பது

 

இதுதான் நம் மனச்சிக்கல். நாம் நமக்கு என்னதான் நன்மை செய்திருந்தாலும் நம் சாதி. நம் மதம் சார்ந்தவர்களைத்தான் மதிக்கிறோம். மற்றவர்களை மறந்துவிடுகிறோம். அல்லது அவமதிக்கிறோம். உதாரணமாக கொங்குமண்ணின் வளர்ச்சிக்கு காமராஜர் ஆட்சிக்காலமே முதன்மையான காரணம். ஆனால் கோவைப்பகுதியில் காமராஜரை நினைவுகூர எவருமே இல்லை. அங்கே அவருக்கு ஒரு நல்ல சிலைகூட இல்லை

 

அதேபோல தமிழகத்திற்குப் பெரும்பங்காற்றிய பல தெலுங்கர்கள் உண்டு. அவர்கள் எல்லாருமே தமிழ்ப்பற்று காரணமாக மறக்கப்பட்டுவிட்டார்கள். இந்த மனநிலையிலிருந்துதான் நாம் எந்த நன்மையும் செய்யாமல் சும்மாவே சாதி மத இன மொழி சண்டைகளை தூண்டிவிடும் தலைவர்களை பெறுகிறோம்

 

டி,.எம்.கணேஷ்குமார்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்?

$
0
0

 

கவிதை என்பது ஒரு சமூகத்தின் கூட்டுநனவிலியில் உள்ள படிமங்கள் மொழிக்குறிகள் மூலம் இணைக்கப்பட்டு புதிய படிமங்கள் உருவாக்கப்படும் ஒரு வெளிப்பாட்டு முறை – ஜெயமோகன்

 

 

கவிதை மட்டுமல்ல, கவிதை பற்றி எழுதியது கூட புரியாத ஒரு ஆரம்ப நிலை வாசகன், தமிழின் முதன்மை கவிஞர்களில் ஒருவரான தேவதேவனை சந்தித்தால்?

 

ஊட்டி குரு நித்யா காவிய முகாமிலிருந்து கோவை ரயில் நிலையம் வரை கவிஞர் தேவதேவன் அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு அமைந்தது. அவருடன் விவாதிக்கவோ, தேர்ந்த கேள்விகளை முன்வைகவோ தேவையான வாசிப்பு பின்புலம் எனக்கில்லை. அதே நேரம், அவருடன் செலவிட கிடைத்த நேரத்தை வீணடிக்கவும் மனமில்லை. மிகுந்த தயக்கத்துடன், நவின கவிதைகள் குறித்த சில அடிப்படைக் கேள்விகளை அவரிடம் முன் வைத்தேன்.

 

கவிதையின் அரிச்சுவடி பாடம் கூட தெரியாதவனின் கேள்விகள் என புறம் தள்ளாமல், அவர் கூறிய பதிகள் கீழே!

 

கே: கவிதை எழுதுவது குறித்து…

 

ஏன் கவிதை எழுத வேண்டும் என எண்ணுகிறீர்கள்? எந்த கவிதையை வாசித்து, எதை வியந்து கவிஞன் ஆக வேண்டும் என எண்ணினீர்கள்? அங்கிருந்து தொடங்குங்கள். அந்த கவிதையில் எது உங்களை கவர்ந்தது? என கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.

 

கவிதை எழுத தொடங்கும் பொழுது, உங்கள் எண்ணங்களை எழுதிப் பாருங்கள்.

 

நல்ல கவிதையில் அந்த எண்ணங்கள் ‘உசத்தியாக’ இருக்கும். கவிதை எழுதுவது என்பது திரும்ப திரும்ப அந்த ‘உசத்திக்கு’ போவது, அங்கு வாழ்வது. அது போன்ற ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

 

எனது 25ம் வயதில், (கனவு/மீட்சி) இதழுக்கு தந்த நீண்ட பேட்டியிலும் இதையே குறிப்பிடிருந்தேன். கவிதை எழுதுவதற்கு முதல் படி, கவிஞனாகவே வாழ்வது.

 

உங்களுக்கு சொல்ல ஒரு விஷயம் இருந்தால், அது தானாக வழி காட்டும். வழி தெரியும்.

 

கே: கவிதையில் சொல்ல வருவதை நேரடியாக சொல்லக்கூடாதா? எழுதும்பொழுது கவிஞன் எத்தனிப்பது நேரடி பொருளையா, அதில் மறைந்துள்ள பொருளையா?

 

நேரடியாக கூறுவது, மறைமுகமாக கூறுவது என எதுவும் இல்லை. நீங்கள் கூற வருவது ஒரு அனுபவம். வாசகனுக்கு அது அனுபவமானால் போதும்.

 

கே: கவிதையின் வார்த்தைகள் தரும் நேரடி பொருளை புரிந்துக்கொண்டால் போதாதா?

 

நாம் ஒரு சாக்லேட் சாப்பிடுகிறோம். ஒரு தின்பண்டம் சாப்பிட்டோம். மிகவும் ருசியாக இருந்தது. இது, ஒரு நேரடி அனுபவம். நேரடியான பொருளுக்கான நிறைவு கிடைக்கிறது.

 

அதற்கு மேல் உங்கள் தேவை என்ன?ஒரு சாக்லேட்டுக்கும் கவிதைக்கும் என்ன வேறுபாடு?

 

கவிதையின் நேரடி பொருளை புரிந்து ரசிப்பது இவ்வளவு தான். சாக்லேட்டின் சுவை.

 

ஆனால் கவிதை அதற்கு மேல் எதோ ஒன்றை தொட்டு, உங்கள் சிந்தனை மையத்தை தொட்டு, பெரிய அனுபவத்தை கொடுக்கிறது. ஒரு அருமையான அனுபவம் என உணர்கிறீர்கள்.

 

ஊட்டிக்கு ஒரு பயணம் வருகிறீர்கள். அது என்ன வகை அனுபவம்? இதை பார்த்தேன், அதை பார்த்தேன் என்பது புலன் அனுபவம். சாக்லேட் லெவல். ஆனால், அந்த காட்சி அனுபவத்தை தாண்டி ஒரு அனுபவம் உள்ளது. செரிபரலாக இல்லாத ஒரு அனுபவம்.

 

புலன் அனுபவமாக பார்ப்பவர்கள், அனைத்து இடங்களையும் பார்க்க வேண்டும் என ஓடிக்கொண்டிருக்கிறர்கள். அல்லது, விடுதிகளில் மது அருந்துகிறார்கள். ஆனால், இதை ஒரு ஆத்மார்த்தமான அனுபவமாக கருதுபவர்கள் அடையும் உணர்வு வேறு. புலன்களுக்கு வெளிய இல்லாமல், உங்களுக்குள் நீங்கள் அடையும் அனுபவம். நேரடி பொருளை கடந்து, கவிதையை அனுகுவது இதற்கு இணையானது.

 

கே: ஆனால், உங்கள் அனுபவத்தை நேரடியாக எழுதாமல் மாற்றி எழுதுகிறிர்கள். அதன் மூலம் உங்கள் அனுபவத்தை வாசகன் சொன்றடைய வேண்டுமா?

 

உங்கள் நண்பருடன் உரையாடிக்கொண்டிருக்கிறீர்கள். அவர் தனது பிரச்சனைகளை பகிர்ந்துவிட்டு “ஒரே இருட்டா இருக்குபா!”என கூறுகிறார். இதில் நீங்கள் நேரடி அர்த்தத்தை பார்ப்பதில்லை. அவர் என்ன கூறவருகிறார் என புரிந்துக் கொண்கிறீர்கள். இது புரியும் பொழுது கவிதை ஏன் புரிவதில்லை?

 

ஒருவர் ‘விடியுமா?’ என ஒரு நாவல் எழுதுகிறார். உலகம் அழிய போகிறது, நாளை காலை விடியுமா என கேட்டா எழுதுகிறார்? அவர் கூற வரும் பல விஷயங்களை நாம் அந்த வார்த்தை மூலமே சென்று அடைகிறோம்.

 

நீண்ட நாள் நண்பருடன் சாலையில் செல்லும் பொழுது ஒரு காட்சியை காண்கிறீர்கள்.

 

“பார்த்தியா?”

“ம்ம்! ஆமால!”

 

ஒரு காட்சியை இருவர் பார்க்கும் பொழுதும் எண்ணுவது ஒன்றாக உள்ளது.

 

சில சமயங்களில் வார்த்தைகள் கூட தேவையில்லை. நீங்கள் விழிகளால் சுட்டுகிறீர்கள். நண்பர் ஆமோதிக்கிறார். இங்கு, ஒரு சமிஞை கவிதை ஆகிறது.

 

கவிதை என்பது ஒரு காட்சி.

 

பல விஷயங்களை ஒரு காட்சி மூலம் சொல்லிச்செல்வது.

 

அதை புரிந்துக்கொள்ள ஒருவர் பயின்று வர வேண்டும். நீங்கள் கவிதை வாசிக்க விரும்புகிறீர்கள். இது தான் கவிதை. இப்படி இல்லை என்றால் அது கவிதை இல்லை.

 

புரிந்தவற்றில் இருந்து புரியாதது நோக்கி செல்ல வேண்டும். கவிதையில் புரிந்த பகுதிகள் ஏன் புரிந்தது என யோசியுங்கள். அது ஒரு அறிவியல்

 

கவிஞனை வாசித்து பழக்கம் இருந்தால் அவனது மொழி புரியும். கவிதை என்பது கவிஞனின் ஆளுமையின் வெளிப்பாடு. கவிஞன் தான் அடைந்த உண்மையை அசை போட்டுக்கொண்டே இருப்பான். கூறியவற்றையே மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருப்பான். வாழ்க்கை முழுவதும் அவன் கூறுவது திரண்டு வரும். அவனுக்கென ஒரு அந்தரங்க பாஷை இருக்கும். அதை அறிவதன் மூலம், அவனது கவிதையை புரிந்துக்கொள்ள முடியும்.

 

ஒருவேளை, உங்களுக்கு கவிஞரின் மனநிலை தெரியாது வெறும் கவிதை மட்டும் உங்கள் முன் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். கூற வந்ததை புரிந்துக்கொள்ள அது போதும் என்ற நம்பிக்கையில் தான் அந்த வரி எழுதப்பட்டுள்ளது.

 

‘மார்கழி மாதம்,
வேறு என்ன வேண்டும்?’

 

என்று ஒரு கவிதை எழுதுகிறேன்.

 

இதை வாசிக்கும் பொழுது, உங்களுக்குள் ஒரு மார்கழி மாதத்தை அனுபவிப்பீர்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சி தரும்.

 

ஒருவேளை, மார்கழி மாதம் உங்களுக்கு எந்த உணர்வையும் தரவில்லை என்றால்?

 

கவிஞன் ஒரு விஷயம் முக்கியம் என எண்ணுகிறான். அதை குறித்து கவிதை எழுதுகிறான். ஆனால், அது உங்களுக்கு எந்த உணர்வையும் தரவில்லை. இப்போது என்ன செய்வது?

 

ஒருவன் பேசுவது உங்களுக்கு புரியவில்லை என்றால், அவன் ‘psycho’வாக இருக்கக்கூடும்.அவனை குணமடைய செய்ய வேண்டிய பொறுப்பு சமூகத்திடம் உள்ளது. அதற்கு அவனை புரிந்துக்கொள்ள முயல வேண்டும்.

 

இப்படி ஒரு கவிதை எழுதுகிறான் என்றால், அவன் எப்படிப்பட்ட மனிதனாக இருப்பான்?

 

– இயற்கையை நேசிகக்கூடியவன்
– வெப்பமண்டல பகுதியை சார்ந்தவனாக இருப்பான்
– குளிரை விரும்புபவன் போன்றவை.

 

இப்படி அந்த கவிதையின் மூலம் நீங்கள் கண்டடைந்த மனநிலை உள்ள ஒருவன் அந்த கவிதையை எழுதியுள்ளான். அது முக்கியம் என்கிறான். அவனது மனநிலையின் மூலம் கவிதையை புரிந்துக்கொள்ள முயலுங்கள்.

 

கே: பொரும்பாலும் இணையத்தில், சராசரி கவிதைகளை வாசித்து தொடங்கும் வாசகனுக்கு படிமம் போன்றவற்றை புரிந்துக்கொள்வது, தீவிர கவிதைகளை வாசிப்பது போன்றவை கடினமாக இருக்கிறது.

 

கவிதை என எழுதப்பட்ட வரியின் மூலம், கவிஞன் கூற வருவது அதன் மேலதிக அனுபவத்தை தான். அது புரிந்தால் நல்லது. புரியவில்லை என்றாலும் தாழ்வில்லை. ஏற்கனவே புரிந்ததன் மூலம் முயற்சி செய்யுங்கள். எற்கனவே கிடைத்த ஒரு திறப்பிலிருந்து அறிவுபுர்வமாக முன்னகர்ந்து அடுத்த திறப்பை அனுக முயற்சி செய்யலாம். டியுப் லைட்டாக இருப்பதில் தவறில்லை. எந்த மனநிலை முந்தைய திறப்பை தந்ததோ அதை தக்கவைத்க்கொள்ளுங்கள். அதிலிருந்து மேலெழ முயற்சி செய்யுங்கள்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தினமணியும் நானும்

$
0
0

எங்கள் வீட்டில் அன்றெல்லாம் நாளிதழ்கள் வாங்குவதில்லை. வீட்டில் நாளிதழ்வாங்குவதென்பது அன்றெல்லாம் கிராமங்களில் எண்ணிப்பார்க்கமுடியாத ஒன்று. டீக்கடைகளில் தினத்தந்தி வாங்கப்படும். ஊரேகூடி வாசிப்பார்கள். நான் நாளிதழ்களை நாடகத்தனமாக வாசிப்பதில் திறன்கொண்டவன்.  “பேச்சிப்பாறை நீர்மட்டம்!” என அறிவித்து ஆழ்ந்த இடைவெளிக்குப்பின்  “இருபது அடி!” என்பேன். பெருமூச்சுகள் ஒலிக்கும். 

 

நான் அறிந்த நாளிதழ்களின் எச்சாயலும் இல்லாத நாளிதழாக இருந்தது தினமணி. அவ்வப்போது அதைப்பார்த்திருந்தாலும் வாசிக்கத் தோன்றியதில்லை. அதன் மொழிநடையும் செய்திகளின் அமைப்பும் சிறுவர்களுக்கு உரியதாக இருக்கவில்லை. பின்னர் தினமணியை தொடர்ந்து வாசித்திருக்கிறேன். நெருக்கடிநிலைக்காலகட்டத்தில் ஒவ்வொருநாளும் அது வருமா வராதா எனபதே பேசப்படும் செய்தியாக இருந்தது

  

 

தினமணி என்றால் எனக்கு அடிப்படையில் மூன்று மனிதர்கள்தான். ஏ.என்.சிவராமனின் கட்டுரைகளை நான் வாசிக்கவேண்டும் என என் வரலாற்று ஆசிரியர் முத்தையா நாடார் என்னிடம் சொன்னபோது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலேயே தினமணி வரும். அதன் கட்டுரைகளை பெரும்பாலும் புரியாமல் படித்தேன். அவை புரியத் தொடங்கியபோது சிந்திக்கக் கற்றுக்கொண்டுவிட்டிருந்தேன்.

 

வளரும் வயதில் இவ்வுலகம் என்பது கண்ணால்காணும் காட்சிகளால் மட்டும் ஆனது அல்ல, அதைக்கடந்து செயல்படும் சிந்தனைகளாலும் ஆனது என அறிவதென்பது மிகப்பெரிய கண்திறப்பு. கருத்துக்களால் ஆன நிகருலகு ஒன்றுக்குள் நுழைகிறோம். திகைப்பும் பரவசமும் கொந்தளிப்புமாக கண்டுகொண்டபடியே இருக்கிறோம். நான் மதுலிமாயி, பிலுமோடி,மது தந்தவதே என அன்றைய ஜனநாயகத்தின் முகங்களை தினமணி வழியாகவே அடையாளம் கண்டுகொண்டேன். ஜெயப்பிரகாஷ் நாராயணனையும் கிருபளானியையும் வழிபடலானேன்.

மீண்டும் ஒரு திறப்பென தினமணி இன்னொரு ஆளுமை வழியாக நிகழ்ந்தது. ஐராவதம் மகாதேவனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த தினமணி நவீனத் தமிழ்ச் சிந்தனைமரபிலேயே ஒரு திருப்பத்தை உருவாக்கியது. அவர் காலத்தில் வெளிவந்த தமிழ்மணி இணைப்புதான் நவீன இலக்கியத்தை பரவலாக வாசகர்களிடம் கொண்டுசென்றது. சிற்றிதழ்களுக்குள் புதைந்திருந்த தமிழின் படைப்பாளிகள் பொதுமுகம் கொண்டனர்.

 

உண்மையில் அன்று நவீன இலக்கியத்தை ஆழ்ந்து வாசித்துக்கொண்டிருந்த எனக்கே பல எழுத்தாளர்கள் தினமணி வழியாகவே அறிமுகமானார்கள். அந்த அலையே பின்னர் இந்தியாடுடே, சுபமங்களா போன்றவை நவீன இலக்கியத்தைப் பரவலாகக்கொண்டுசெல்ல வழிவகுத்தது.அனைத்துக்கும் மேலாக அருண்மொழி நவீன இலக்கியத்தையும் என்னையும் தமிழ்மணி வழியாகவே அறிமுகம்செய்துகொண்டாள். தமிழ்மணியை தொகுத்து தைத்து வைத்திருந்தாள், நான் முதன்முதலாகப் பார்க்கச்சென்றபோது காட்டினாள்.

மூன்றாவது முகம் என தினமணியின் ஆசிரியர் ராம.சம்பந்தம் அவர்களைச் சொல்வேன். அவருடன் எனக்கு நேரடி அறிமுகம் உருவாகியது. எழுதத்தொடங்கியிருந்த எனக்கு அது பெரிய வாய்ப்பு. தினமணியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினேன். அதனூடாக என் கருத்துக்களை நானே தீட்டிக்கொண்டேன். என் கருத்துக்கள் எதிர்ப்பலைகளை உருவாக்கியபோது அவற்றை எதிர்கொள்வது எப்படி என்றும் கற்றுக்கொண்டேன். ஆசிரியராக சம்பந்தம் அவர்கள் எந்தவகையிலும் என் கருத்துக்களில் தலையிடவில்லை

 

சம்பந்தம் அவர்களின் காலகட்டத்தில்தான் அரசியல்செய்திகளுக்கு இணையான இடம் பண்பாட்டுச்செய்திகளுக்கும் தினமணியில் வழங்கப்பட்டது. ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்படுவது ஓர் அரசியல்வாதியின் உரையைவிட முக்கியமானது என்னும் உணர்வு உருவானது. நூல்வெளியீட்டுச்செய்திகளைகூட பெரிய அளவில் நாளிதழ்களில் காணமுடிந்தது. அது தமிழ்வாசகர்களுக்கே திகைப்பை அளித்திருக்கும்

 

இன்றும் தினமணி தமிழ் அறிவியக்கத்தின் முதன்மைத் தளமாக நீடிக்கிறது. இன்னும் நெடுங்காலம் நீடிக்கட்டும்

 

[தினமணி மலருக்காக எழுதப்பட்ட வாழ்த்துக்குறிப்பு]

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பொன்னீலன் 80- விழா

$
0
0
வணக்கம்
நான் ராம் தங்கம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது, பொன்னீலன் அண்ணாச்சிக்கு இந்த ஆண்டு 80 ஆவது பிறந்தநாள். அவர் எழுத வந்து 55 ஆண்டுகள் ஆகிறது என்கிற தகவலை அவரிடம் சொன்னேன். உடனே நாஞ்சில்நாடன் இதனை ஒரு பெரிய விழாவாக ஒரு நாள் நிகழ்வாக எடுக்க வேண்டும். நாகர்கோவிலில் தான் எடுக்க வேண்டும். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து முக்கியமான ஆளுமைகளை அழைத்து இந்த விழாவை எடுக்கவேண்டும். இப்போது ஜெயமோகன் வெளிநாட்டில் இருக்கிறார்,நானும் இரண்டு மாதங்கள் பயணத்தில் தான் இருக்கிறேன். அதனால் வருகிற நவம்பரில் வைத்துவிடலாம் என்று சொன்னார்கள்.
அவருடைய ஆலோசனையின்படி அதற்கான ஏற்பாடுகளை நான்தான் செய்து வருகிறேன். இதை எந்த அமைப்பு சார்ந்தும் செய்யவில்லை. நவம்பரில் 16-ம்  தேதி சனிக்கிழமை  முழுநாள் நிகழ்வை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்.நவம்பர் மாதம் நீங்கள் இந்தியா வந்து விடுவீர்கள் என்று நாஞ்சில்நாடன் சார் சொன்னார்கள். நீங்கள் கட்டாயம் விழாவில் இருந்து நடத்திக் கொடுத்து சிறப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். விழாவின்போது பொன்னீலன் அண்ணாச்சி குறித்து ஒரு புத்தகம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம்
ராம் தங்கம்
நாகர்கோவில்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று –நீர்ச்சுடர்-2

$
0
0

பகுதி ஒன்று – இருள்நகர்-1

அரசியே, கேள். முதற்பொருளாகிய விஷ்ணுவிலிருந்து படைப்பிறையாகிய பிரம்மனும் பிரம்மனிலிருந்து பிறவித் தொடராக முதற்றாதையர் மரீசியும், கஸ்யபனும், விவஸ்வானும், வைவஸ்வதமனுவும் பிறந்தனர். புவிமன்னர் குலத்தை உருவாக்கிய பிரஜாபதியாகிய வைவஸ்வதமனுவின் மைந்தர் இக்ஷுவாகு. வைவஸ்வதமனு தன் மெய்யறிவையே சிரத்தா என்னும் பெண்ணென எழச் செய்து அவளுடன் இணைந்து இக்ஷுவாகு, நிருகன், சர்யாதி, திஷ்டன், திருஷ்டன், கரூஷன், நரிஷ்யந்தன், நாபாகன், பிருத்ரன், கவி என்னும் பத்து மைந்தர்களை பெற்றார். மெய்மையின் நிழலான ஐயத்தை சாயை என்னும் பெண்ணாக்கி அவளைப் புணர்ந்து மனு, யமன், யமி, ரேவந்தன், சத்யும்னன், அஸ்வினிகுமாரர்கள் என்னும் மைந்தர்களுக்குத் தந்தையானார். இக்ஷுவாகுவிலிருந்து பிறந்தது இக்ஷுவாகு குலம் என்று அறிக! அவர்கள் சூரியகுலத்தவர் என்று அறியப்படுகிறார்கள். அவர்களின் புகழ் அழிவிலாதெழுக!

இக்ஷுவாகுவிலிருந்து தண்டன், விகுக்ஷி, நிமி என்னும் மூன்று அரசர்கள் பிறந்தனர். அவர்களில் விகுக்ஷியிலிருந்து சசாதனும் அவன் மைந்தனாக புரஞ்சயனும் பிறந்தனர். ககுல்ஸ்தன், அனேனஸ், பிருதூலாஸ்வன், பிரசேனஜித், யுவனாஸ்வன் என்னும் கொடிவழியில் மாமன்னன் மாந்தாதா பிறந்தார். அவருடைய மைந்தர்களே அம்பரீஷன், முசுகுந்தன், புருகத்ஸன் என்னும் அரசர்கள். புருகத்ஸனின் மைந்தன் திரிசதஸ்யு. அவனிலிருந்து அனரண்யன், அர்யஸ்வன், வசுமனஸ், சுதன்வா, த்ரைர்யாருணன் ஆகியோர் பிறந்தனர். அவன் மைந்தன் திரிசங்கு தனக்கென்று உலகைப் படைத்தவன். அவன் மைந்தனே மெய்யே வாழ்வென்று நிலைகொண்ட ஹரிச்சந்திரன். அவன் புகழ் வாழ்க!

ஹரிச்சந்திரனின் மைந்தன் லோகிதாஸ்வனிலிருந்து ஹரிதன், சுஞ்சு, சுதேவன், ஃபருகன், சகரன் என்னும் கொடிவழி நீட்சி உருவாகியது. அசமஞ்சஸின் மைந்தன் அம்சுமான். அவன் மைந்தனே கங்கையை மண்ணுக்குக் கொண்டுவந்தவனாகிய பகீரதன். அவன் புகழ் என்றும் நிலைகொள்க! வாழ்வோருக்கு அன்னமும் நீத்தோருக்கு நீரும் தெய்வங்களுக்கு ஊர்தியும் ஆகிய கங்கையை வணங்குக! மீன்குலங்களால் விழிகள் கொண்டவள். மூவிழியனின் சடையில் அமர்ந்தவள். குளிர்ந்த கைகளால் கற்களை சாளக்கிராமம் ஆக்குபவள். கனிந்தவள். கைபெருகி பாரதப்பெருநிலத்தை அணைப்பவள். அவளில் கரைக நம் கனவுகள்! நம் துயர்களும் ஏமாற்றங்களும் பழிகளும் அவளிலேயே அமைக! நம் உவகைகளும் களியாட்டுகளும் அவள் மடியிலேயே நிகழ்க! அவள் வாழ்க!

பகீரதனின் குருதியிலிருந்து சுருதநாபன், சிந்துத்வீபன், ஆயுதாயுஸ், ரிதுபர்ணன், சர்வகாமன், சுதாசன், மித்ரசகன், கன்மாஷபாதன் என குலச்சரடு நீண்டது. அஸ்மகன், மூலகன், கட்கவாங்கன், தீர்க்கபாகு என வளர்ந்தது. திலீபன் என அழைக்கப்பட்ட தீர்க்கபாகுவின் மைந்தனே ரகு. அவன் குருதியினரே ரகுகுலத்தோர். ரகுவின் மைந்தன் அஜன். அவன் மைந்தன் பத்து தேர்களில் தனித்தூரும் அரசனாகிய தசரதன். தசரதனின் மைந்தனாக எழுந்தவன் ராமன். ராகவராமன் திரேதாயுகத்தின் தலைவன். அவன் ஆண்டமையால் இந்த மண் அரசநெறி என்றால் என்னவென்று அறிந்தது. அது மானுடநெறியிலிருந்து எவ்வண்ணம் முரண்பட்டு உருக்கொண்டு எழும் என்பதைக் கண்டது. அரசநிலையே தவமென்றாகும் என்று கற்றது. வானுறையும் தெய்வங்களும் மண்ணில் வாழ வரலாகும் என அவன் பிறவி நிறுவியது. அவன் வாழ்க!

அரசியே, இக்ஷுவாகுவின் மூன்றாவது மைந்தன் நிமி. நிமியின் மைந்தனே மிதி. கௌதம முனிவரின் மாணவனாகிய நிமி வேதவேள்விகளில் ஈடுபட்டு தன் நாட்டையும் தன் மூதாதையர் வாழும் விண்ணுலகையும் செழிக்கச் செய்தான். அவருக்காக ஜயந்தபுரம் என்னும் வேள்விச்சிற்றூரை உருவாக்கி அளித்தான். வேள்வியால் தன் அகத்தைச் செழிப்புறச் செய்தான். அரசக்கொண்டாட்டங்களால் தன் உடலை நிறைவுறச் செய்தான். ஒன்று பிறிதொன்றை வளர்த்தது. ஒன்று பிறிதொன்றுக்குப் பொருள் அளித்தது. நல்லரசன் தந்தையெனக் கனிகிறான். தந்தையெனக் கனிபவன் நல்லரசன் என்றாகிறான்.

அந்நாளில் ஒருமுறை நிமி தன் அவைக்கு வந்த கௌதம முனிவரிடம் “ஆசிரியரே, ஓர் அரசன் இயற்றும் வேள்விகளில் முதன்மையானது எது?” என வினவினான். கௌதமர் “அரசே, தன் படைகள் வெல்லவேண்டும் என அரசன் இயற்றும் வேள்வி உயர்ந்தது” என்றார். அதைவிட உயர்ந்தது என்ன என்று நிமி கேட்டான். “தன் நாட்டில் வேதம் பொலியவேண்டி கருவூலம் முற்றொழிய அந்தணர்க்கு ஈந்து அரசன் ஆற்றும் வேள்வி” என்றார் கௌதமர். அதையும் கடந்தது என்ன என்றான் நிமி. “தன் குடிகள் செழிக்கவேண்டும் என்று அரசன் தன்னையே ஈந்து இயற்றும் வேள்வியே மேலும் சிறந்தது” என்றார் கௌதமர். அதைவிடவும் சிறந்த வேள்வி என்ன என்று நிமி கேட்டான். “தன் நிலத்தில் மழை ஒழியலாகாது என்று அரசன் தன் வேள்விநலன்களையும் அளித்து இயற்றும் வேள்வி” என்றார் கௌதமர். அதைவிடவும் மேலானது என்ன என்று நிமி கேட்டான். “தன் மூதாதையர் நிறைவடையவேண்டும் என அரசன் தன் மைந்தரையும் அளித்து ஆற்றும் வேள்வியே அதனினும் மேலானது” என்றார் கௌதமர்.

நிறைவுறாதவனாக “முனிவரே, அதைக்காட்டிலும் மேலான வேள்வி எது?” என்றான் நிமி. “தன் கொடிவழியினர் அழிவின்மை கொள்ளவேண்டும் என அரசன் இயற்றும் வேள்வியே அனைத்தைவிடவும் மேலானது. அதற்கப்பால் ஒரு வேள்வி இல்லை. வெற்றி, வேதச்சிறப்பு, குடிப்பெருக்கம், மழைநிறைவு, மூதாதையர் மகிழ்வு என்னும் ஐந்து நலன்களையும் இவ்வேள்வியே அளித்துவிடும்” என்றார் கௌதமர். “ஐந்து வேள்விகளை நான் சொன்னபோதும் உன்னுள் இருந்து நிறைவுறாது பொங்கியது தந்தையென்னும் பெருநிலை. பெருந்தந்தை என்றாகுக! பேரரசன் என உன்னை அமைப்பது தெய்வங்களின் கடன்” என்று கௌதமர் சொன்னார்.

அவ்வண்ணம் ஒரு வேள்வியை நிகழ்த்த நிமி முடிவுசெய்தான். வேள்விக்குரிய பொருட்கள் அனைத்தும் வரவழைக்கப்பட்டன. அவை பாரதவர்ஷத்தின் எட்டு திசைகளில் இருந்தும் கொண்டுவரப்பட்டன. கௌதமர், பிருகு, அங்கிரஸ், வாமதேவர், புலகர், புலஸ்த்யர், ருசீகர் என்னும் ஏழு மாமுனிவர்களும் வேள்வியில் அமர ஒப்புக்கொண்டனர். வேள்வித்தலைமைகொள்ள முதல் வைதிகரும் தன் குலகுருவுமான வசிட்டரை சென்று பணிந்து அழைத்தான் நிமி. ஆனால் அப்போது வசிட்டர் இந்திரன் ஒருங்கமைத்துக்கொண்டிருந்த மாபெரும் வேள்வி ஒன்றை நிகழ்த்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார். தன்னால் நிமியின் வேள்விக்கு வர முடியாது என அறிவித்தார். பலமுறை பணிந்து கோரியும் வசிட்டர் சொல்மீற முடியாதென்று உரைத்தார்.

குறித்த நாளில் வேள்வி தொடங்கவில்லை என்றால் தீங்கு விளையக்கூடும் என்று நிமித்திகர் கூறியமையால் கௌதமர் தலைமையில் முனிவர் அறுவரைக் கொண்டே நிமி வேள்வியை முடித்தான். மைந்தர் பெருகவும், கொடிவழிகள் சிறப்புறவும் தேவர்கள் வந்து சொல்லளித்தனர். வேள்விநலன் பெற்று நாடு செழிக்க உளம் நிறைந்து நிமி அமர்ந்திருந்த நாட்களில் விண்ணிலிருந்து வசிட்டர் மீண்டுவந்தார். அரண்மனைக்கு வந்த அவர் அரசன் நிமியை சந்திக்க விழைந்தார். ஆனால் வேள்விநிறைவில் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த அரசன் அப்போது பகல்பொழுதில் துயில் கொண்டிருந்தான். அவனை எழுப்பத் தயங்கிய காவலர் வசிட்டரின் வரவை அறிவிக்கவில்லை. சினம்கொண்ட வசிட்டர் நிமியை நோக்கி தீச்சொல் ஏவினார். “கோலேந்தி அவையமர வேண்டிய பொழுதில் துயிலும் நீ உன்னால் பேணிப் பெருகவைக்கப்பட்ட அவ்வுடலை உதறுக! இப்போதே நீ உடலிலி ஆகுக!” என்றார்.

அவருடைய சொல் நிகழ்ந்ததுமே நிமியின் உடலில் இருந்து ஆத்மா கற்பூரத்தில் இருந்து நறுமணம் என பிரிந்து எழுந்தது. அவன் உடல் அங்கேயே கிடந்தது. வாழ்க்கை முடிவடையாமல் உடல்நீத்த அவன் ஆத்மா கடுவெளியில் நின்று தவித்தது. உடலிழந்ததுமே அது மூச்சுலகை அடைந்தது. அங்கே மூதாதையரின் தெய்வநிலையை அடைந்தது. “உயிர்பறிக்கும் உரிமை யமனுக்கு உரியது. ஏனென்றால் வாழ்க்கையின் பொருள் அறிந்தவன் அவன் மட்டுமே. மாமுனிவராக இருந்தாலும் நீங்கள் இவ்வண்ணம் உயிரகற்றியது உங்களுக்கு வாழ்வென்றால் என்னவென்று தெரிந்திருக்கவில்லை என்பதன் சான்று. நெடுநாட்கள் பயின்ற நோன்பாலும் ஊழ்கத்தாலும் நீங்கள் வாழ்க்கையை மறந்துவிட்டீர்கள். நோன்பும் ஊழ்கமும் வாழ்க்கையை அறிந்து கடத்தலின்பொருட்டே. மெய்மையும் வீடுபேறும் வாழ்க்கையை பொருள்கொள்ளச் செய்வன மட்டுமே. பெண்ணென்றும் ஆணென்றும் மைந்தன் என்றும் மகளிரென்றும் நின்று வாழ்க்கையை உணரும் ஓர் எளிய மானுடன் ஒவ்வொரு தவமுனிவனுக்குள்ளும் குடிகொண்டாகவேண்டும். இல்லையேல் அவன் பிறரை உணராதவனாவான். பிறர்மேல் அளியற்றவனாவான்” என்றான் நிமி.

“ஆசிரியரே, உங்களுக்கும் மூதாதையென நின்று இதை சொல்கிறேன். நீங்கள் இழந்ததை அடைந்து எழுக! எளியோனாக பிறந்து எய்தி மீள்க… இதுவே என் தீச்சொல்” என்று நிமி சொன்னான். வசிட்டர் அக்கணமே உடல்நீத்து மறுபிறப்பு கொண்டார். ஆதித்யர்களாகிய மித்ரனுக்கும் வருணனுக்கும் மைந்தனாக ஒரு குடத்திலிருந்து எழுந்தார். கமண்டலத்தில் பிறந்த அகத்தியரின் இளையோன் என அவர் அறியப்பட்டார். அங்கே அவர் அருந்ததியை மணந்து தவம்செய்து மெய்மையை மீண்டும் வந்தடைந்தார். கடலில் இருந்து கிளம்பி மலைமேல் பொழிந்து ஊறி நதியென ஒழுகி மீண்டும் கடலை அடைந்து நீர் என்று ஆனார்.

அரசன் மறைய நாடு மைந்தரில்லாமல் ஆகியதை அறிந்த அந்தணர்கள் முனிவர்களிடம் சென்று செய்வதென்ன என்று வினவினர். கௌதமர் “நீடுவாழும் கொடிவழியை அரசனுக்கு அளித்துள்ளனர் தேவர்கள். அச்சொல் அழியாது. அவர்களே அதற்குப் பொறுப்பு. அவர் உடலை வேள்விச்சாலைக்கு கொண்டுசெல்க! அவ்வுடலில் இருந்து மைந்தன் எழுந்தாகவேண்டும்” என்றார். அந்தணர் நிமியின் உடலை வேள்விச்சாலைக்கு கொண்டுசென்றனர். வேள்வியில் அமர்ந்த முனிவராகிய பிருகு “பால் கடையப்பட்டு வெண்ணை எழுகிறது. கடல் கடையப்பட்டு அமுதும் நஞ்சும் பிறந்தன. வான் கடையப்பட்டு எழுந்தவை சூரியனும் சந்திரனும் விண்மீன்களும் என்கின்றன நூல்கள். புடவியும் காலமும் மெய்யுணர்வால் கடையப்பட்டதன் விளைவாகத் திரண்டதே பிரம்மம் என்னும் அறிதல். அறிக, மைந்தர் பெற்றோரின் உடலில் எழும் அமுது! இவ்வுடலை நாம் கடைவோம். இவனிலிருந்து எழுக இவன் குடித்தொடர்!” என்றார்.

அவர்கள் அவ்வுடலை அனலுக்கு அளித்தனர்.  ஆடையென்பது அரையுடல். அணியென்பது அவ்வுடலின் ஒளி. உடல் உண்ட அன்னம் என்பதே அவ்வுடலின் முதல்வடிவம். ஆகவே அரசன் விரும்பி உண்ட உணவால் அவன் வடிவை அமைத்தனர். அதை அவன் அணிந்திருந்த ஆடைகளாலும் அணிகளாலும் அழகுசெய்தபோது அவன் அங்கே கிடப்பதாகவே உணர்ந்தனர். அவனைச் சூழ்ந்தமர்ந்திருந்த சூதர் அவனுடைய வெற்றியையும் கொடையையும் அளியையும் அன்பையும் அழகையும் புகழ்ந்து பாடப்பாட அவன் முகம் மலர்ந்தது. விழிகளில் உயிர் சுடர்ந்தது.

அந்தணர் வேதம் முழக்கியபடி அந்த உடலை மென்மையாகக் கடைந்தனர். அவ்வுடலில் இடத்தொடை அதிர்ந்தது. அதை பிளந்துகொண்டு ஒரு மைந்தன் எழுந்தான். மதனத்தால் ஜனித்த அவனை மிதி ஜனகன் என அவர்கள் அழைத்தனர். உடலிலியின் மைந்தன் என்பதனால் விதேகன் என்றனர். விதேகன் ஆட்சிசெய்த நிலம் விதேகம் என்றும், மிதி அமைத்த அதன் தலைநகர் மிதிலை என்றும் பெயர்கொண்டது. ஜனகர்களின் நிரையில் அரசமுனிவர் தோன்றினர். அருகமர்ந்து சொல்தேர்ந்து மெய்மை உரைத்தனர். அவர்களின் குருதியில் புவிமகள் என சீதை பிறந்து ராகவராமனை மணந்தாள். தன் தூய கால்களால் பாரதவர்ஷத்தை நடந்தே பொலிவுறச் செய்தாள். பேரன்னையை வணங்குவோம். அவள் புகழ் கணம்தோறும் பெருகி எழுக!

 

“கோசலனாகிய பிருஹத்பலனை வாழ்த்துக! இக்ஷுவாகு குடியில் பிரசேனஜித்தின் மைந்தனாகப் பிறந்து குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் நின்றுபொருதி மாண்ட நிமியின் குருதியினனை வாழ்த்துக! விண்ணில் அவன் நிறைவுறுக! மண்ணில் அவன் புகழ் செறிவுறுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று பாணன் பாடினான். அவன் முன் காந்தாரியும் பிற அரசியரும் பானுமதியும் அமர்ந்திருந்தனர். தென்னகத்துச் சூதன் கருகிய சுள்ளிபோல் மெலிந்த சிற்றுடல் கொண்டிருந்தான். அவனுடன் அவன் நிழலென்றே தோன்றிய விறலி வெண்சிப்பிகள் என அகன்ற விழிகள் கொண்டிருந்தாள். அன்று காலை அவன் அரண்மனை முற்றத்தில் வந்து நின்று “புகழ்பாடி பரிசில் பெறவந்த பாணன் நான்… வாயில்கள் எனக்காகத் திறக்கட்டும்!” என்றான்.

அரண்மனையே அக்குரல் கேட்டு திகைத்தது. நெடுங்காலமாக அங்கே பாணரும் புலவரும் அணுகவில்லை என்பதைப்போல் அவர்கள் உணர்ந்தனர். அவனை என்ன செய்வது என்று தெரியாமல் காவல்பெண்டிர் தயங்கினர். முதிய செவிலி “இங்கே எவரும் பாடலுக்கு செவியளிக்கும் நிலையில் இல்லை… அவனை எளிய பரிசில் அளித்து அனுப்பிவையுங்கள்” என்றாள். இளைய அந்தணராகிய சிற்றமைச்சர் ஸ்ரீமுகன் பொன்நாணயத்துடன் சென்று பாணனை வணங்கி “கொள்க, பாணரே. இவ்வரண்மனை இறப்பின் துயரால் இருள்மூடியுள்ளது என அறிந்திருப்பீர்கள். இங்கே சொல்கொள்ளும் உள்ளங்கள் இன்றில்லை… இதை பெறுக! ஊட்டுபுரையில் உண்டு தங்கி மீள்க! என்றேனும் இங்கு மங்கலம் திகழ்கையில் வருக!” என்றார்.

தன் கையை பின்னிழுத்துக்கொண்டு பாணன் சொன்னான் “நான் இரவலன் அல்ல, பாணன். இங்கு வரும்வழியெங்கும் எனக்கு உணவிட இல்லறத்தோர் இருந்தனர். என் சொல்கொள்ள எவருமில்லை. சொல்லுக்கு பொருள்கொள்வேனே ஒழிய எவருடைய அளியையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நானும் என் விறலியும் உணவுண்டு பன்னிரு நாட்களாகின்றன. இங்கு பசித்து மடிவதற்கும் எங்களுக்குத் தயக்கமில்லை.” ஸ்ரீமுகன் என்ன செய்வதென்று அறியாமல் முதிய செவிலியை நோக்க மேலே உப்பரிகையில் வந்து நின்ற ஏவற்பெண்டு “முழவொலி கேட்டு பேரரசி உசாவினார்கள். பரிசில்கொள்ள வந்த பாணனா என்று அறியவந்தேன்” என்றாள். “ஆம், சொல்லுக்கு ஈடாக மட்டுமே பொருள்கொள்ளும் தென்னிலத்துப் பாணன் என்று கூறுக!” என்றான் பாணன்.

சென்று திரும்பிவந்த ஏவற்பெண்டு “அரசி அவரை அகத்தளத்திற்கு அழைத்துச்செல்லும்படி ஆணையிட்டார்கள்” என்றாள். பாணன் தலைவணங்கி தன் யாழுடனும் முழவுடனும் உள்ளே வந்து படிகளில் ஏறினான். முதிய செவிலி “இவர் போர்ப்பரணிகள் பாடப்போகிறார். அதுவன்றி இவர்களிடம் பாடுபொருள் வேறில்லை” என்றாள். ஸ்ரீமுகன் “போரைப்பற்றியா?” என்றார். “ஆம், ஆனால் போர் என்னும் சொல்லைக் கேட்டாலே இந்த அரண்மனை சருகுக்குவை என சரிந்துவிடும் போலுள்ளது” என்றாள் செவிலி. “நாம் என்ன செய்ய இயலும்? அவர்கள் காற்றுபோல. நம்மை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. நமக்கு புழுங்குவதும் நடுங்குவதும் காற்றுக்குத் தெரிவதேயில்லை” என்றார்.

அகத்தளத்தில் காந்தாரிமுன் அமர்ந்த பாணன் அவள் கோராமலேயே பாடத்தொடங்கினான். “சூரியகுலத்தின் பெருமையை பாடித் திரியும் பாணன் நான். எழுகதிர் பெருமையை, வீழ்கதிர் சிறப்பை, அழியாக்கதிர் ஒளியை பாடுபவன்” என்றான். காந்தாரி மறுமொழி சொல்லவில்லை. அவள் சொல்லெடுத்தே நெடுநாட்களாகிவிட்டிருந்ததுபோல் தோன்றியது. பளிங்காலான சிலை என அவள் பீடத்தில் அமர்ந்திருந்தாள். சிறிய வெண்ணிற விரல்கள் கோத்து மடியில் வைக்கப்பட்டிருந்தன. உதடுகள் இறுகி ஒட்டி செந்நிறப் புண் என தெரிந்தன.

“குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் கோசலனாகிய பிருஹத்பலன் மலர்ச்சூழ்கைக்குள் நின்று பாண்டவ மைந்தனாகிய அபிமன்யுவுடன் பொருதினான். இரு மாவீரர்களும் அணுவிடை குறையாத ஆற்றலுடன் ஒருவரை ஒருவர் தாக்கி போரிட்டனர். விலகியும் அணுகியும் நிகழ்ந்தது அப்போர்” என்று பாணன் பாடினான். “ஆயிரத்தெட்டு இதழ்களுடன் விரிந்த பெருந்தாமரையின் இதழ்கள் ஒன்றன்மீது ஒன்றென மெல்ல படிந்து ஒற்றை வளையமென்றாகி குவிந்து மொட்டாகி இறுகி செண்டாகி மணியாகி மூடிக்கொண்டன. உறுதியான ஓர் எண்ணம் மலரை உலோகமென்றாக்கும் என்று அறிக! மலர்ச்சூழ்கைக்குள் பாண்டவ இளையோனாகிய அபிமன்யு முழுமையாகவே சிக்கிக்கொண்டான். அவனைச் சூழ்ந்து கௌரவர்களின் பெருவீரர்கள் அனைவரும் குலைத்த வில்லுடன் நிறைந்த ஆவநாழியுடன் வந்து வளையமென்றானார்கள்.”

கை பெருகி சித்தம் ஒன்றென்றாகி நின்று போரிட்ட அபிமன்யுவைச் சூழ்ந்திருந்த கௌரவ வீரர்கள் ஒவ்வொருவரும் காற்றெரியில் சுழன்று பதறிப் பறக்கும் பறவைகள்போல் அலைமோதினார்கள். உடன்வந்த பாஞ்சால வீரர்கள் அனைவரும் கொன்றொழிக்கப்பட அபிமன்யு தன்னந்தனியனாக நின்று போரிட்டான். அவன் அம்புகள் பட்டு சுபலரின் ஏழு படைத்தலைவர்கள் தேர்த்தட்டுகளில் விழுந்தனர். துரியோதனன் தன்னெதிரே தழலென ஆடி நின்றிருந்த அர்ஜுனனை பார்த்தான். என் மைந்தன் என் மைந்தன் என எழுந்து கொந்தளித்த நெஞ்சை உணர்ந்தான். நடுங்கும் கைகளுடன் தேரில் அமர்ந்திருந்தான். அவனுக்கு இருபுறமும் துச்சகனும் துச்சாதனனும் வில் சோர தேரில் பின்னடைந்துகொண்டிருந்தனர்.

அக்கணம் கோசலனாகிய பிருஹத்பலன் தன் தேரிலிருந்து வில்லுடன் பாய்ந்திறங்கி நெஞ்சில் அறைந்து வஞ்சினம் கூவினான். “இந்தக் கணத்திற்கென்றே வாழ்ந்தேன், பாண்டவனே” என்று குரலெழுப்பியபடி நாணொலித்துக்கொண்டு அபிமன்யுவை நோக்கி சென்றான். உடைந்த அம்புகளில் சிலவற்றை பொறுக்கியபடி எழுந்த அபிமன்யு நாண் தளர்ந்த வில்லுடன் அவனை எதிர்த்தான். அபிமன்யுவில் எழுந்த ஊழின் ஆற்றலை உணர்ந்த துரியோதனன் “செல்க, கோசலனை காத்துநில்லுங்கள்!” என்று கூவினான். ஆனால் ஊழ் வகுத்ததை மானுடர் திருத்த இயலாதென்று அவனும் அறிந்திருந்தான். “அழியாக் கொடிவழிக்காக நிமி தெய்வங்களிடம் சொல் பெற்றுள்ளான். பிருஹத்பலனோ மைந்தன் இல்லாதவன், இளையோன். எனவே இக்களத்தில் அவன் வீழப் போவதில்லை” என்று அப்பாலிருந்து கிருபர் கூவினார்.

மறுகணமோ முற்கணமோ அற்றவன்போல் பிருஹத்பலன் போரிட்டான். ஏழு அம்புகளால் அவன் அபிமன்யுவின் வில்லை உடைத்தான். எஞ்சிய ஒற்றை அம்புடன் அவன் தேர்ச்சகடம் ஒன்றுக்கு அடியில் பதுங்கினான். கர்ணன் நாண்குலைத்தபடி தேரில் அபிமன்யுவை நோக்கி வருவதற்குள் அருகில் உடைந்து கிடந்த தேர் ஒன்றின் மேல் பாய்ந்தேறிய அபிமன்யு அந்த ஒற்றை அம்பை வீசினான். காற்றின் திரைகளை ஒவ்வொன்றாக கிழித்துக்கொண்டு அந்த அம்பு எழுந்தது. ஒருகணமே நூறு அணுக்கணங்களாக மாறியது. ஒவ்வொரு அணுக்கணமும் நூறு தன்மாத்திரைகளாக ஆயின. ஒவ்வொன்றிலும் ஒரு முகம் என இக்ஷுவாகு குடியின் மூதாதையர் தோன்றினர். திகைப்பும் துயரும் சீற்றமும் அமைதியும் என முகங்கள் தெரிந்தன.

அவற்றில் ஒன்றில் மாமன்னன் நிமி தோன்றினான். “தெய்வங்களே, கூறுக! நான் உங்கள் அருட்சொல் கொண்டிருக்கிறேன். இக்ஷுவாகுவின் கொடிவழி அழியாது பெருகும் என்று வேள்வித்தீயில் வந்து சொன்னவர்கள் நீங்கள். உங்கள் சொல்வந்து தடுக்கட்டும் இந்த கொலையம்பை…” என்று கூவினான். அவன் முன் பிரம்மன் தோன்றினார். “மைந்தா, உன் குடியே உன் உயிரில் இருந்து எழவில்லை என்று அறிவாய்” என்றார். “உன் வேள்விப்பயனே மைந்தன் எனத் திரண்டது. அதுவே இக்ஷுவாகு குலமாக நீண்டது. ஐயமிருப்பின் உன் தந்தை இக்ஷுவாகு இதோ உள்ளான். அவன் உடலை முகர்ந்து நோக்குக! உன் மைந்தனையும் முகர்ந்து ஒப்பிடுக!” என்றார்.

தன் முன் திரையிலெழுந்த இக்ஷுவாகுவை நிமி முகர்ந்தான். “இவரிலெழுவது என் குருதியின் மணம்” என்றான். பின்னர் அப்பால் எழுந்த அலையில் தோன்றிய மிதிஜனகனை முகர்ந்து “இது என் குருதியின் மணம் அல்ல. வேள்விநெய்யின் மணம் இது” என்றான். “அறிக, உன் வேள்விப்பயன் மைந்தன் என்று ஆகுமென்றால் உன் குடியின் புகழ் திரண்டு ஒரு மைந்தன் என்று ஆகி தொடரலாகாதா?” என்றார் படைப்பிறைவன். நிமி “ஆம்” என்று சொல்லி பெருமூச்சுடன் தலையசைத்தான். “அவர்களில் எழுவது புதுப் பனையோலையின் மணம் என்று அறிக! சொற்களில் அழியாமல் திகழும் உன் குலமென்று தெளிக!” என்றார் பிரம்மன். நிமி சொல்லின்றி பிரம்மனை வணங்கிவிட்டு தன்னைக் கடந்துசெல்லும் அம்பை வெறுமனே நோக்கி நின்றான். நீந்தும் நாகம் என கடந்து சென்றது அந்த அம்பு.

அதன் கூர்முனை பிருஹத்பலனின் கழுத்துநரம்பை வெட்டியது. திடுக்கிட்டு அள்ளிப் பொத்திய விரல்களின் நடுவே குருதி கொப்பளித்து எழ, வாய் கோணலாகி, கால்கள் குழைய பிருஹத்பலன் களத்தில் விழுந்தான். அவன் குருதி பெருகி மண்ணில் விழுந்தது. இரு கைகளாலும் காற்றை அளைந்தபடி உடல் புளைந்தது. விழிகளில் வெறுமை அசைவிலாதமைந்தபோது அவன் உடலை அவன் வேறெங்கிருந்தோ திகைத்து நோக்கிக்கொண்டிருந்தான். அவ்வுடல் சிதையேற்றப்படுவது வரை காற்றில் இருந்தான். எரியணைந்து வெள்ளெலும்பானபோது இறுதியாக நோக்கிவிட்டு விண்ணிலேறி காத்திருந்தான்.

கோசலத்தின் தலைநகர் குசாவதியைச் சூழ்ந்து ஓடும் சிற்றாறான ஹிரண்யவதியின் நீரில் கோசலத்து அந்தணரும் அமைச்சரும் குடித்தலைவர்களும் படைமுதல்வர்களும் கூடி பிருஹத்பலனுக்கு நீர்க்கடன் செய்தனர். குருக்ஷேத்ரத்திலிருந்து சிறு மண்கலத்தில் கொண்டுவரப்பட்ட எலும்புகளை ஹிரண்யவதிக் கரையில் மணல்கூட்டி செம்பட்டு விரித்து அமைக்கப்பட்ட பீடத்தில் வைத்து மலர்மாலை சூட்டி வழிபட்டனர். அவன் புகழை சூதர்கள் கலமுழவும் யாழும் மீட்டிப் பாடினர். அங்கே சமைக்கப்பட்ட எள்ளரிசி அன்னமும் காய்களும் கனிகளும் அவனுக்கு படைக்கப்பட்டன.

ஹிரண்யவதி குளிர்ந்து கிடந்தது. அங்கே காற்றலைகளில் பிருஹத்பலன் இருப்பதாக அனைவரும் உணர்ந்து மெய்ப்பு கொண்டனர். அங்கேயே குடித்தலைவர்கள் கூடி அமர்ந்து முன்னரே முடிவெடுக்கப்பட்டபடி கோசலத்துத் தொல்குடியாகிய குசர்களில் இருந்து ஏழு அகவை நிறைந்த இளமைந்தன் ஒருவனை தெரிவுசெய்து பிருஹத்பலனின் புகழ்மைந்தனாக அனலைச் சான்றாக்கி தெரிவுசெய்தனர். அவன் தன் கையை அறுத்து ஏழு துளிக் குருதியை மண்ணில் சொட்டி தன் குருதித்தந்தையையும் குடியையும் உதறினான். நீருள் மும்முறை மூழ்கி எழுந்து மறுபிறப்புகொண்டு மேலே வந்தான். அந்தணர் அவனை வாழ்த்தி அவனுக்கு பிருஹத்ஷத்ரன் என்று பெயர் சூட்டினர். அமைச்சர்கள் அவனை வணங்கி சொல்கொண்டனர். படைத்தலைவர்கள் அவன்முன் வாள் தாழ்த்தினர்.

பிருஹத்ஷத்ரன் தன் தந்தை பிருஹத்பலனுக்கு ஹிரண்யவதியின் தூய பெருக்கில் நீர்க்கடன் செய்தான். கைநூறு கைகள் விரித்து கங்கை பலிநீர் கொள்கிறது. பெருநீர் வடிவென்றாகி கடலை அடைகிறது. பிருஹத்ஷத்ரன் கரையை அடைந்தபோது விண்ணிலிருந்து தழைந்திறங்கிய செம்பருந்து ஒன்று அவன் தலைக்குமேல் மும்முறை வட்டமிட்டு பொன்னொளியில் கணம்சுடர்ந்து மேலேறி காற்றில் மிதந்து வானில் மறைந்தது. அந்தணர் வேதம் ஓத, கோசலத்தினர் மறைந்த மாமன்னரை வாழ்த்திக் கூவினர். “இக்ஷுவாகு குலம் பெருகுக! பிருஹத்பலன் புகழ் நிலைகொள்க! பிருஹத்ஷத்ரன் கோல் சிறப்புறுக!” என்று ஆர்ப்பரித்தனர்.

“அரசியே அறிக, செல்வம் அழியும். குருதி அறுபடும். குடிகளும் நகர்களும் மண்ணிலிருந்து மறையும். அறம்நின்று புகழ்பெற்ற குலம் என்றும் அழிவதில்லை. ஆம், அவ்வாறே ஆகுக!” என்று பாடியபின் பாணன் யாழை தாழ்த்தினான். கூடத்தில் அமைதி நிறைந்திருந்தது. தன் மடியில் கைகளைக் கோத்து இறுக்கியபடி காந்தாரி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவளைச் சூழ்ந்தவர்களாக நின்றிருந்த ஒன்பது அரசியரில் எவரிடமிருந்தோ மெல்லிய விசும்பலோசை மட்டும் எழுந்தது.

வெண்முரசு விவாதங்கள்

தொடர்புடைய பதிவுகள்


குமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்

$
0
0

 

பாலா- வைகுண்டம் -பொருளியல்- விவாதம்

அன்பின் ஜெ..

 

வைகுண்டம் மற்றும் திருவாசகம் அவர்களின் கடிதம் கண்டேன்.

 

இருவருமே, ‘மனச் சாய்வு, மேட்டிமை வாதம்’, ஆகியவற்றால் புண்பட்டிருக்கிறார்கள் எனப் புரிகிறது. அவை வசைகள் அல்ல. அவர்கள் பேசும் வாதத்தை, நான் முறைப்படுத்தினேன்.  They are certainly biased and elitist arguments.

 

2013 ஆம் ஆண்டு, ஜக்தீஷ் பக்வதி/ அர்விந்த் பனகாரியா என்னும் பொருளியல் பேராசிரியர்கள், ‘why growth matters ’ என்னும் பொருளியல் புத்தகத்தை வெளியிட்டார், அதுதான் 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில், குஜராத் மாதிரி என முன்வைக்கப்பட்டது. அது, குஜராத்தில் நிகழ்ந்த பொருளியல் வளர்ச்சியே, அதன் சமூக வளர்ச்சிக்கு வித்திட்டது என்பதுதான் அதன் அடிப்படை. வைகுண்டம் முன்வைக்கும் ஒரு பார்வையின் அடிப்படை.

 

அதே ஆண்டு, “An uncertain Glory” என்னும் புத்தகத்தை, அமர்த்தியா சென்னும், ஜான் ட்ரெஸ்ஸூம் வெளியிட்டார்கள். தொழிற்வளர்ச்சிக்கு முன்பே, அரசுகள் சமூக முன்னேற்றக் கட்டமைப்பில் முதலீடு செய்வதே மேம்பட்ட சமூக வளர்ச்சியைத் தரும் என்னும் வாத்த்தை முன்வைத்தார்கள். அதற்கான முன்மாதிரியாக, கேரள மாநிலத்தை முன்வைத்தார்கள்.

 

அதை எதிர்த்த ஜக்திஷ் பகவதி, கேரளம் பல காலம் முன்பாகவே சமூக முன்னேற்றக் கட்டமைப்புகளில் முதலீடு செய்து விட்டது. எனவே, அதையும் குஜராத்தையும் ஒப்பிடக் கூடாது என்றார். ஆனால், நவீனத் தொழில்துறை, அதிலிருந்து வரும் வரிவருமானம் எனப் பொருளாதாரம் மாறும் முன்பே, கேரள அரசும், சமூகமும், சமூக முன்னேற்றக் கட்டுமானங்களான கல்வியிலும், சுகாதாரத்திலும் பெரும் முதலீட்டைச் செய்தார்கள் என்பதுதான் நான் முன்வைக்கும் புள்ளி.

 

இதனூடக, பேராசிரியர் கலையரசன், தமிழகத்தையும், குஜராத்தையும் ஒப்பீடு செய்து ஒரு ஆய்வை முன்வைத்தார். 1990களில், தமிழகமும், குஜராத்தும் கிட்டத்தட்ட ஒரு அளவு சமூக முன்னேற்றம் கொண்டிருந்தன. இரண்டுமே தாராள மயப் பொருளியல்கள் கொள்கைகளை முன்னெடுத்தன.

 

பத்தாண்டுகளுக்குப் பின்னர், குஜராத், தமிழகத்தை விட வேகமான பொருளியல் வளர்ச்சி வேகத்தைக் கண்டிருந்தது. ஆனால், சமூக முன்னேற்றக் குறியீடுகளில், தமிழகத்தை விடப் பின் தங்கியிருந்தது என்னும் வாதத்தை, தரவுகளுடன் முன்வைத்தார். அதற்கான காரணங்களாக, தமிழகம் சமூக முன்னேற்றத்திட்டங்களான இலவ்ச அரிசி, சுகாதாரக் கட்டுமானம்,நூறுநாள் வேலை போன்றவற்றில் ஒப்பீட்டளவில் மேம்பட்டவகையில் கவனம் செலுத்தியது என்பதே அவர் வாதம்.

 

உலகில், வறுமை பற்றிய பொருளியல் கோட்பாடுகளை உருவாக்கிய அமர்த்தியா சென், சீனம் கல்வியிலும், மருத்துவத்திலும் செய்த முதலீடுகளை உலகளாவிய அளவில் கவனப்படுத்தியவர். உலகின் மிக ஏழ்மையான நாடாக இருந்த போதேசீனம் அடிப்படைக் கல்வியிலும்சுகாதாரத்திலும் (வெறும் பாத மருத்துவர்கள் https://asiasociety.org/amartya-sen-what-china-could-teach-india-then-and-now , https://en.wikipedia.org/wiki/Barefoot_doctorசெய்த முதலீடுகள்சீனத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் வந்த போதுஅதன் பொருளாதாரம் பன்மடங்கு வளர உந்துசக்தியாக இருந்தது என்பது அமர்த்தியா சென்னின் ஆராய்ச்சி முடிவுகள்.

 

 

ஒரு முதலாளி, தன் தொழிலில் வரும் உபரியில், ஒரு சிறு பகுதியை தொழிலாளருக்கு ஊதியமாக வழங்க வேண்டும் என்னும் மனநிலை கொண்டவராக இருப்பார். அது அவரளவில் சரி.

 

ஆனால், அரசு என்பது அப்படி லாப நட்டம் பார்க்க வேண்டிய ஒரு நிறுவனம் அல்ல. அது அனைத்து மக்களையும் சமமாகப் பாவித்து, அவர்களின் சமத்துவமான (equitable) முன்னேற்றத்தை நோக்கி உழைக்க வேண்டிய ஒன்று.

 

மக்கள் முன்னேற்றத்தை முதன்மையாகப் பார்த்த அனைத்துத் தலைவர்களும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதை தங்கள் கடமையாகப் பார்த்தார்கள். பொருளாதாரம் வளர்ந்து, அரசு ஊழியர்கள் ஊதியம், இதர செலவுகள் எல்லாம் கழிந்து, உபரி இருந்தால் மக்களை முன்னேற்றலாம் எனக் காத்திருக்கவில்லை. வைகுண்டமும், திருவாசகமும் சொல்வது போல், இன்றைய அதீத நுகர்வுப் பொருளாதாரம் உருவாகி, அதில் அதிக வரி வசூல் செய்து, அதன் பின் சமூக முன்னேற்றக்கட்டுமானத்தை உருவாக்கலாம் என அவர்கள் காத்திருந்தால், 90 களுக்குப் பிறகே, தமிழகத்தில் இலவசக் கல்வியையும், சுகாதாரத்தையும் வழங்கியிருக்க முடியும். ஆனால், தமிழகம், சமூக முன்னேற்றக் கொள்கைகளை கொணர்வதில் ஒரு முன்னோடி மாநிலமாக சுதந்திரம் பெறும் முன்னரே விளங்கியது.

 

1920 களில்பள்ளிகளில் மாணவர்கள் படிக்க வருவதை ஊக்குவிக்கசென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இலவச உணவு வழங்கப்பட்டதுஇதனால் அதிக மாணவர்கள் படிக்க வந்தார்கள்அப்போதுநாம் இன்று காணும் திருப்பூர்களும்ஒரகடங்களும் இல்லை. அதன் மூலம் வரும் விற்பனை வரி, கலால் வரி, வருமான வரி என்பதெல்லாம் இருக்கவே இல்லை.

 

1950 களில் காமராசர் இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்த போதுதொழிற்பேட்டைகள் துவங்கியிருந்தாலும்தமிழகம் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய மாநிலமாகவே இருந்ததுநிதியாதாரங்கள் இல்லை எனப் புலம்பிய அரசு அதிகாரிகளிடம், (இதைத்தான் மனச்சாய்வு எனக் குறிப்பிடுகிறேன்), பிச்சையெடுத்தேனும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவேன் என அவர் சொன்னதாகக் கதைகள் உண்டு.  மூடப்பட்ட பள்ளிகளைத் திறந்ததோடல்லாமல், புதிதாக 12000 பள்ளிகளைத் திறந்தார். காமராசருக்கும் அவருக்கு முந்தய ஆட்சியாளருக்கும் இருந்த வித்தியாசம் அதுதான்நிதி அல்ல பிரச்சினைஇருக்கும் நிதியை எவ்வாறுஎதற்காகச் செலவிட வேண்டும் என்னும் மனச்சாய்வுதான் பிரச்சினை.

 

 

1982 ஆம் ஆண்டுஎம்,ஜி,ஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்திற்கான நிதித் தேவை 120 கோடி.  அன்று தமிழகத்தின் வருமானம் 900 கோடிவருடாந்திர மாநிலத் திட்ட சீராய்வுக்காகதில்லி சென்றுஅன்றைய திட்டக் கமிஷனின் துணைத்தலைவரானடாக்டர் மன்மோகன் சிங்கைச் சந்திக்கிறார். 900 கோடி வருமானத்தில், 120 கோடியை யாராவது இலவசத்திட்டத்திற்குச் செலவிடுவார்களா எனக் கேட்கிறார் மன்மோகன் சிங். ’எம்.ஜி.ஆர்கோப்பைத் தூக்கியெறிந்து விட்டுகோபத்துடன் வெளியேறினார்’, எனச் சொல்கிறார்அன்று அவருடன் சென்றிருந்த அரசு அதிகாரி எஸ்.நாராயண்இதுதான் நான் குறிப்பிட்ட மனச்சாய்வு. . (1993 ஆம் ஆண்டுமத்திய நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங்மதிய உணவுத்திட்டத்தை நாடெங்கும் அமுல்படுத்தியது அந்தத் திட்டத்தின் உண்மையான வெற்றி)

 

கடைக்கோடி மனிதனுக்கு நல்ல கல்வியும்சுகாதாரமும்உணவும் கிடைக்கும் வகையில் சமூகமும் பொருளாதாரமும் மாறும் போதுஅந்த அடிப்படை அலகின் செயல் திறனும் பயன் திறனும் அதிகரிக்கிறதுஅந்தக் கண்ணி வலுவாகும் போது நாடும்பொருளாதாரமும் வலுவடைகின்றன.

மன்மோகன் சிங் உள்ளிட்ட பல நவீனப் பொருளியல் அறிஞர்கள் தவறவிட்ட முக்கியமான புள்ளி இது. (எம்.ஜி.ஆருக்குப் பொருளாதாரத் தேற்றங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லைஅவரிடம் மனிதாபிமானம் இருந்தது).

 

இதைத்தான் நான் மேட்டிமை வாதம்மனச்சாய்வு எனக் குறிப்பிட்டிருந்தேன்.  (வைகுண்டம்குழந்தைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்தல் போல என்றொரு பதத்தை உபயோகித்திருந்தார்நூறு நாற்காலிகள் மற்றும் வணங்கான் நாயகர்களைகல்வி எப்படி உயர்த்தியது என்பதை அறிவோம்).

 

 

காந்தியப் பொருளியல் முதலாளித்துவத்தை ’வழக்கமான பொருளில்’ எதிர்க்கவில்லைஅது லாப நோக்கைநுகர்வு வெறியை முன்னெடுத்துவளங்களை நீடித்து நிற்கும் வகையில்லாமல்சுரண்டுகிறது என்னும் விமர்சனத்தை முன்வைக்கிறதுஅதற்கு மாற்றாக நீடித்து நிற்கும்மக்கள் அனைவரையும் அர்த்த்தோடு இணைக்கும்அனைவருக்கும் பயன் தரும் வகையிலான  தொழில்முறைகளை முன்வைக்கிறதுராஜேந்திர சிங் ஆர்வரி நதியை மீட்டது போல.

 

குமரப்பாவின் கூற்றானட்ராக்டர் சாணி போடாது என்பதுஒரு காலத்திற்கான தீர்வாக அவர் முன்வைத்த பதில்ட்ராக்டர் வந்ததுகாளை மாடுகளின் தேவை குறைந்ததுஆனால்சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்ததை விடஇன்று கால்நடைகளின் எண்ணிக்கை 50% அதிகம்ஏன் என யோசித்தால்மாறுதல் புரியும்இன்றைய சூழலுக்குகுமரப்பாவின் கொள்கைகள் எவ்வாறு பொருந்தும் என யோசிக்க வேண்டும் என்பதே வேண்டுகோள்.

 

வைகுண்டம் அவர்களுக்குப் புத்தகங்களைப் பரிந்துரைக்க விரும்பவில்லைமதுரையில் வசிக்கும் அவர்அங்கே இருக்கும் அர்விந்த் கண் மருத்துவமனையினர்அடுத்த முறை எங்கே இலவசக் கண்ணொளி முகாம் நடத்துகிறார்கள் என அறிந்துமுடிந்தால் அங்கே ஒரு நாள் நேரத்தைச் செலவு செய்யுங்கள் எனப் பரிந்துரைக்கிறேன்.

அன்புடன்

 

பாலா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கல்வி- கடிதங்கள்

$
0
0

’மொக்கை’ – செல்வேந்திரன்

 

மும்மொழி கற்றல்

ஆசிரியருக்கு,

 

நமது கல்வித் தரம் எவ்வாறு உள்ளது என்பதை அல்ல தரக்கேடு எந்த அளவில் உள்ளது என்பதை தான் இனி கணக்கிடவேண்டும். செல்வேந்திரனின் உரை மிக கூர்மையானது சமரசமற்றது. அதற்காக அவருக்கு  எனது மனமுவந்த பாராட்டுக்கள். இப்படி ஒரு சிந்தனை இருக்கிறது என்பது கூட கல்வி வட்டாரம் அறியாது.  அவர் சரியாகவே கல்லூரிகளுக்கு வரும் பேச்சாளர்களையும்  அவர்கள் உதிர்க்கும் புகழ்மொழிகளையும் விமர்சித்துள்ளார்.

 

கடந்த 20 ஆண்டுகளாக  மாணவர்களுக்கு டண்  கணக்கில் தன்னம்பிக்கை அளித்தல், அவர்கள் செய்யும் அனைத்து அற்ப செயல்களையும் சாதனைகளாக ஊக்குவித்தல் என்கிற மனோ வியாதி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் கடுமையாக பரவியுள்ளது.  நாளாவட்டத்தில் அவர்கள் இதை  தனக்குத்தானே நம்பவும் துவங்கி விட்டனர்,  மாணவர்கள் அறிவு துளைக்கா பசுங்குடியில் உள்ளனர்.  விமர்சனம் என்பது கல்வித்துறை இதுவரை சந்தித்திராத ஒன்று. இவ்வாறு வெளியில் இருந்து தான் அவர்களுக்கு அது வரவேண்டும். எனக்கொரு கருத்துண்டு, இத்தனை ஆண்டுகள்  கல்விக்கு செலவிட்டு 24 வயதில் வெளியே வருகிற ஒருவனுக்கும்  கல்விச்சாலைக்கே செல்லாத ஒருவனுக்கும் எந்த வேறுபாடும் காணக்கிடைப்பதில்லை, ஆகவே அனைத்து கல்வி நிலையங்களையும் ஒரு 5 ஆண்டுகளுக்கு மூடினால்  கூட இந்த தேசத்திற்கு  எவ்வித இழப்பும் இல்லை. மீள் பரிசீலனை செய்து விட்டு மீண்டும் நாம் கல்விக்கூடங்களை திறக்கலாம்.

 

எத்தகைய கற்சுவரின் முன்பும் பாடம் ஒப்பிக்கும் பயிற்சியை ஆசிரியர்களும், எத்தகைய  கண்கவர் அறிவுச்செல்வத்திற்கும் செவி மடுக்காத பயிற்சியை  மாணவர்களும் பயின்று தேர்ந்துள்ளனர். ஆகவே 2000 பேர் அமர்ந்த அரங்கில் செல்வேந்திரன் பேசியது ஒரு நூறு இருநூறு பேர்களது  செவிகளை தான்  அது லேசாக  சென்று தடவியிருக்கும்.  மாணவர்களின் மறதித்திறன் வியக்கத் தக்க அளவில் உள்ளது, அவர்கள் கடந்த ஆண்டு எவற்றை அறிந்து வைத்திருந்தார்கள்  என்பதை இந்த ஆண்டு அறிவதில்லை.

 

அதுபோக நமது ஆங்கில கல்வி முழுத்தோல்வியை அடைந்துள்ளது எனக்கூறலாம். மணிக்கணக்கில் பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள்  கற்பித்து கற்று, லட்சக்கணக்கில் செலவிட்டு  நாம் அடைவது ஒரு managable english. சுயமாக ஒரு விஷயத்தை ஆங்கிலத்தில் பேசவோ எழுதவோ  நமது மாணவர்களுக்கு தெரியாது.  இவர்களின் தற்கொலை கடிதங்களை படித்து பார்த்தல் அவர்கள் சாவதே மேல் எனக்கூறுவோம், முதலில் மொழியை கொன்றுவிட்டு தான் அவர்கள் தற்கொலை செய்கிறார்கள் . என்னசெய்வது ஒரு மாணவன் சுயமாக எழுதுவது இது மட்டும் தான்  பொதுப்பார்வைக்கு வருகிறது. தேசிய ஊடகங்களில் நல்ல ஆங்கிலத்தில் பேச நமக்கு எந்த கட்சியின் தரப்பிலும் ஆள் இல்லை, ஆகவே குஷ்பூ போன்றோரிடம் தான்  நாம் சொல்லவேண்டியிருக்கிறது.  ஆக கடந்த 20 ஆண்டுகளாக பலவருடங்களாக சேர்ந்த மனித மணிநேரங்களையும், கோடிக்கணக்கில் ரூபாய்களையும்  ஆங்கிலக்கல்வி  என்கிற பெயரில் ஆற்றில் விட்டுவிட்டோம்.

 

ஒரு பத்தாண்டுகளுக்கு  கிராமப்புற  மாணவர்கள்  பாதிக்கப்பட்டாலும்  பரவாயில்லை என ஒரு மேம்பட்ட கல்வித்திட்டத்தை  ஒரு சமரசமற்ற  நிபுணர் குழு மூலமாக  அமைத்து,  கிட்டத்தட்ட 80 % ஆசிரியர்களை  பணிநீக்கம் செய்து விட்டு, புதிதாக துவங்க வேண்டியது தான். கல்விச்சாலைகளில்  Motivational speakers ஸை  உடனடியாக சட்டரீதியாக  தடைசெய்யவேண்டும், (இதுவரை அவர்கள் ஆற்றிய பணிக்கே  உகந்த சிறைத்தண்டனை  வழங்க வேண்டும்).

 

கிருஷ்ணன்.

அன்புள்ள ஜெயமோகன்!

 

செல்வேந்திரனின் “மொக்கை”என்ற தலைப்பிலான உரையும், “மும்மொழி கற்றல்” பற்றிய கடிதத்துக்கான தங்களின் பதிலும் தமிழகக் கல்வி நிலை தொடர்பான விமர்சனங்களே.இரண்டும் மனதில் ஆழ்ந்த வேதனையையே உருவாக்கின.இரண்டும் யாரும் சொல்லாத,சொல்ல விரும்பாத பிரச்னைகளின் புதிய கோணங்களைத்  தொட்டன.  பிரச்னைகளை நிர்வாணமாக பார்த்து உண்மைநிலையை உணர்ந்து கொண்டால் மட்டுமே அவற்றின் சரியான தீர்வுகளை நோக்கி செல்ல முடியும்.இந்தி வேண்டாம் என்பதற்கான அரசியலற்ற காரணத்தை மாணவர்களின் கோணத்திலிருந்து சிந்திப்பது புதிதாகஇருந்தது.

 

 

மாணவர்களின் உண்மையான அறிவு நிலை எந்த அளவுக்குமோசமாக உள்ளது என்பதை தயவு தாட்சண்யமின்றி பச்சையாக செல்வேந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.இது ஓரிரு நாட்களில் சரி செய்யக் கூடிய இழப்பல்ல.இன்றிலிருந்து தொடங்கினால்தான் அடுத்த தலைமுறையையாவது காப்பாற்ற முடியும்.இளைஞர்களை உண்மையில் நேசிக்கும் எவரும் இப்படித்தான்நொந்து போக முடியும்.செல்வேந்திரனின் மனிதாபிமானமும்துணிவும் வணங்கத் தக்கவை பாராட்டுக்கள்,செல்வேந்திரன்!

 

சாந்தமூர்த்தி,

மன்னார்குடி.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

எழுத்தாளனின் மதிப்பு

$
0
0

 

அன்புள்ள ஜெ..

 

ஹலோ எஃப் எம்’மில் உங்கள் பேட்டி வித்தியாசமான கேட்பனுபவம் தந்தது..பொதுவான நேயர்களும் கேட்கக்கூடும் என்பதை மனதில் வைத்து பேசினீர்கள்.

 

எழுத்தாளர்க்கு போதிய மரியாதை என்று நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் அதற்கு காரணம் நம் மக்கள் அல்லர்..  நம் சராசரி மக்கள் என்றுமே படிப்பு என்பதை மதிக்கக்கூடியவர்கள்..

 

நான் ஒருமுறை சென்னையிலிருந்து பெங்களூரு பயணித்தேன்..  சரியான கூட்டம். நண்பனுக்கு வாங்கிச் சென்ற வண்ணக்கடல் ( வெண்முரசு) நூலை சும்மா புரட்டிக் கொண்டிருந்தேன்..

அதைப்பார்த்த நடத்துனர் என்னிடம்  , ” சார்.. என் சீட்ல உட்காரந்து வசதியா படிங்க ” என நடத்துனருக்கான தனி இருக்கையை தந்தார்.  உண்மையில் நான் ஏற்கனவே படித்த நூல் என்பதால் சும்மாதான் இலக்கின்றி புரட்டினேன். ஆயினும் அவருக்கு மதிப்பளிக்கும் விதமாக உண்மையிலேயே படிக்கலானேன்

 

மக்களுக்கு படிப்பின்மீது மரியாதை இருந்தாலும் எழுத்தாளனுக்கு பெரிய அளவில் மதிப்பில்லை என்ற நிலைக்கு காரணம் வெகு ஜன இதழ்களும் சினிமாவும்தான். இலக்கியவாதி என்பவன் புரியாமல் எழுதுபவன் , கிறுக்கன் என்ற பிம்பத்தையே அவை உருவாக்கின..   வெகு ஜன இதழ்களில் எழுதிய சுஜாதா ஒரு திரைநட்சத்திரத்துக்குரிய புகழில் திளைத்தபோது சிற்றிதழ் எழுத்தாளர்கள் அடையாளமின்றி இருந்தனர்

 

ஆனால் இன்று நிலை வேறு..  வெகு ஜன இதழ்கள் இன்றும்கூட இலக்கியவாதிகளை கேலி செய்தாலும் அந்த காலம் மாதிரி அவர்களால் யாரையும் உருவாக்கவோ அழிக்கவோ முடிவதில்லை..

 

வெகுஜன இதழ்களில் எழுதி பிரபலமாகி கட்சி ஆரம்பிக்கும்வரை சென்ற எம் எஸ் உதயமூர்த்தியை இன்று யாருக்கும் தெரியவில்லை..

மாறாக இலக்கியவாதிகள் பரவலாக அறியப்படுகின்றனர்..

 

மக்கள் எப்போதுமே எழுத்துக்கு மரியாதை கொடுத்தாலும் அவர்கள் முன் யார் எழுத்தாளர்கள் என அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் என்பதுதான் பிரச்சனை.

 

பொய்தெய்வங்களை முன்வைக்கும் பரப்பியல் ஊடகங்கள்தான் எழுத்தாளனை நம் சமூகம் மதிப்பதில்லை என்ற நிலைக்கு காரணம் என நினைக்கிறேன்

 

ஜனரஞ்சக ஊடகங்கள் செல்வாக்கை இழந்துவரும் இன்றைய சூழலில் நிலை மாறக்கூடும்

 

அன்புடன்

பிச்சைக்காரன்

 

 

அன்புள்ள பிச்சைக்காரன்,

 

ஹல்லோ எஃபெம் என்னிடம் கேட்ட கேள்வி, எழுத்தாளர்களைக் கொண்டாடவேண்டும் என்று சொல்கிறார்களே, அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். எழுத்தாளர்களுக்கு இங்கே உரிய மரியாதை இருப்பதாக நினைக்கிறீர்களா?

 

நான் அதற்குச் சொன்ன மறுமொழி, எழுத்தாளர்களை கொண்டாடவேண்டியதில்லை. ஆனால் அவர்கள் எழுத்தாளர்களாக மதிக்கப்படவேண்டும். எழுத்து என்பது என்ன, அதன் பின்னணியிலுள்ள உளக்கொந்தளிப்புக்கள் என்ன என்பவை புரிந்துகொள்ளப்படவேண்டும். எழுத்தாளர் எழுத்தாளர் என்பதற்காக மதிக்கப்படவேண்டும், அவர் எழுத்துக்கள் மீதான வாசிப்பு அம்மதிப்பின் விளைவு

 

தமிழகத்தில் இலக்கியம் மீதான மதிப்பு இருக்கிறதா என்றால் இல்லை. சற்றும் இல்லை. இங்கே அறிவியக்கம் மீதான மதிப்பே இல்லை என்பதே உண்மை. நான் எப்போதும் சொல்லிவருவதுதான். அறிவியலாளர் எவருக்கேனும் இங்கே மதிப்பு உள்ளதா? நோபல்பரிசு பெற்ற இரு தமிழர்கள் உள்ளனர். சர் சி.வி.ராமன், வெங்கட்ராமன் இருவரையும் கௌரவிக்கும் முகமாக ஏதேனும் சாலையோ நினைவுச்சின்னமோ சென்னையில் உண்டா? கணிதமேதை ராமானுஜனுக்கு?

 

இலக்கியமுன்னோடி புதுமைப்பித்தனுக்கு ஒரு நினைவுச்சின்னம் சென்னையில் உண்டா? ஞானபீடப்பரிசு பெற்ற அகிலனுக்கோ ஜெயகாந்தனுக்கோ ஓர் நினைவகம் இங்கே உண்டா?  அதனுடன் கேரளத்தையும் கர்நாடகத்தையும் ஒப்பிட்டுக்காட்டினேன். அங்கே ஒவ்வொரு ஊரும் அங்கே பிறந்த எழுத்தாளர்களால் அடையாளம் பெறுவதை, கல்லூரிகளில் பள்ளிகளில் அவ்வெழுத்தாளர்களின் படங்கள் இடம்பெற்றிருப்பதை. நான் சொன்னவை எப்போதுமே சொல்லிவருவனதான்.

.

 

நான் பேசிக்கொண்டிருப்பது ஒரு வெளிப்படையான விஷயம். ஆனால் என்ன சிக்கல் என்றால் உண்மையில் இதைப்பற்றி தெரியாத ஒருவரிடம் இதைச் சொல்லவே முடியாது என்பதுதான். எந்தக்காரணத்தால் இவர்கள் இலக்கியத்தை, அறிவியக்கத்தை மதிப்பதில்லையோ அதே காரணமே எதிரே வந்து நின்று தடுக்கும். அதே மொண்ணைத்தனமே இதற்கு எதிர்வினையாக எழும். எத்தனை காலமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன் இதை. என் வருந்தலைமுறைகளும் இந்த மொண்ணைத்தனத்தின் மீதேயே முட்டிக்கொள்வார்கள்.

 

எதிர்வினைகளிலுள்ள முக்கியமான கருத்துக்கள் இவையே.

 

அ. எழுத்தாளன் சமூகசேவை செய்யவேண்டும். சமூகத்திற்குப் பயனுள்ளவனாக இருக்கவேண்டும். மக்களுடன் இணைந்து போராடவேண்டும். இல்லாவிட்டால் மதிக்கமுடியாது. [அப்படிப்பட்ட எழுத்தாளனை அடிப்பது அவசியம் என்றும் சில கருத்துக்கள்]

 

ஆ.  எழுத்தாளன் கண்டபடி எழுதக்கூடாது. மக்களுக்குப் புரியும்படி மக்கள் வாசித்து மகிழ்வதற்காக எழுதவேண்டும். இல்லாவிட்டால் மரியாதை கிடையாது

 

இ. எழுத்தாளன் நல்லவனாக இருக்கவேண்டும். ஒழுக்கமானவனாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் மதிப்பை எதிர்பார்க்கக்கூடாது

 

ஈ.  எழுத்தாளன் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய, மக்களுக்கு நல்லது அளிக்கக்கூடிய கருத்துக்களைச் சொல்லவேண்டும்.

 

மொண்ணைக்கருத்துக்கள் என்பவை இவை. இந்த மொண்ணைக்கருத்துக்கள் முக்கியமானவர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் எழுவதில்லை என்பதனால்தான் கேரளத்திலும் கர்நாடகத்திலும் எழுத்தாளர்கள் மதிக்கப்படுகிறார்கள் என்கிறேன்.

 

அ. எழுத்தாளன் சமூகசேவகன் அல்ல. அவனுடைய வேலை எழுத்து. அவன் எதற்காக எழுதுகிறான் என்பது அவனுக்கே பலசமயம் தெரியாது. அவன் ஓர் அடிப்படை உந்துதலால் எழுதுகிறான். அது சிலசமயம் உடனடிப் பலன் அளிக்கும். சிலசமயம் உடனடியாக பலனேதும் அளிக்காது. அதன் முக்கியத்துவம் பல ஆண்டுகளுக்குப்பின் கண்டடையப்படலாம். அவன் செத்தபின் கண்டடையப்படலாம். ஆகவே உடனடியாக சமூகப்பயன்பாடு என்பதைக்கொண்டு எவரும் இலக்கியத்தை அளக்கமுடியாது. மக்களின் பொதுவான இயக்கங்களில் சேர்ந்து செயல்படுபவர்களாக பொதுவாக எழுத்தாளர்கள் இருப்பதில்லை. அவர்களின் வழி தனித்தது. பலசமயம் காலத்தில் மிக முன்னால் செல்வது. மக்கள் அங்கே வந்துசேர மிகவும் பிந்தவும்கூடும். மக்களில் ஒருவனாக மக்களின் பொதுக்கருத்துக்களுடன் முற்றாக இணைந்து செயல்படும் எழுத்தாளன் ஏற்கனவே மக்களுக்குத்தெரிந்தவற்றையே சொல்பவன். விலகி தனிப்பாதை காண்பவனே எப்போதும் முக்கியமான எழுத்தாளன். அவனுடைய எழுத்தை அப்போது பொருள்கொள்ள முடியாவிட்டாலும், அவை உடனடி பயனளிக்காவிட்டாலும் அவை எவ்வகையிலோ ஒரு சமூகத்தின் அறிவார்ந்த செயல்பாட்டுக்கு முக்கியமானவை என உணர்ந்து அவனை மதிப்பதே உயர்பண்பாட்டின்  மனநிலை.

 

ஆ. எழுத்தாளன் எழுதுவது சிலசமயம் மக்களுக்கு உகந்ததாக புரிவதாக இருக்கும். சிலசமயம் மக்களின் பொதுரசனையையும் அறிவுத்தளத்தையும் கடந்ததாக இருக்கும். பொதுவாக புதியன சொல்லும் எழுத்தாளன் பொது ரசனை, பொது அறிவுத்தளத்தைக் கடந்தவனாகவே இருப்பான்.

 

இ. எழுத்தாளனின் உள்ளம் உள்ளுணர்வுகளையும் உணர்ச்சிகளையும் நம்பிச் செயல்படுவது. ஆகவே அது பாய்ந்து முன்செல்லும் இயல்பு கொண்டது. சமூகம் சராசரிகளுக்காக வகுத்து வைத்திருக்கும் ஒழுக்க அளவுகோல்கள் அதற்கு உகந்தவையாக இருப்பதில்லை. எழுத்தாளனின் அந்த மீறலை அங்கீகரிக்கும் பண்பாடே அறிவார்ந்த பண்பாடு. ஏனென்றால் அந்த மீறல்வழியாகவே அவன் சராசரிகளிடமிருந்து முன்னால் செல்கிறான்

 

ஈ. மக்கள் என இவர்கள் சொல்வது தங்களைத்தான். பொதுவாக அரசியல்சார்பானவர்களே இலக்கியவாதிகளை வெறுக்கிறார்கள். அவர்களுக்கு தாங்கள் நம்புவதே உண்மை. அதை ஏற்று தங்கள்பின்னால் மந்தையாகக் கொடிபிடிப்பவர்களே தேவை. மற்ற அனைவருமே எதிரிகள். ஆகவே மாற்றுக்கருத்துள்ள எழுத்தாளர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள், வெறுப்புக்குரியவர்கள். எந்தத்தரப்பையும் சேராத எழுத்தாளன் பொது எதிரி.

 

நம் சூழலில் எழுத்தாளன் மீதான உச்சகட்ட வெறுப்பு எவரிடமிருந்து வெளிவருகிறது என்று பாருங்கள். பெரும்பாலும் முதிராஅரசியலாளர்களிடமிருந்துதான். அவர்களுக்கு தங்கள் காழ்ப்புகளை கொட்ட, தங்களை நீதிமான்களாகவும் போராளிகளாகவும் காட்டிக்கொள்ள, அதற்கு அடியில் தங்கள் அன்றாட அற்பத்தனங்களை மறைத்துக்கொள்ள ஒர் அரசியல்நிலைபாடு தேவை. அந்நிலைபாட்டை எடுத்ததுமே அதன் வெளிப்பாடாக எழுத்தாளர்களை வசைபாடத் தொடங்குகிறார்கள்

 

எழுத்தாளனை வெறுப்பவர்கள் எவர்? ஐரோப்பியப் பண்பாட்டில் இயல்பாகவே அறிவுவழிபாடு உண்டு. அந்த மதிப்பீடுகளை ஏற்றுக்கொண்டவர்கள் எழுத்துமேல் மதிப்பு கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கே இந்தியாவில் கிறித்தவர்கள் அறிவொளிக்காலத்திற்கு முந்தைய கிறித்தவ உள்ளம் கொண்டவர்கள். உச்சகட்ட அறிவெதிர்ப்புதான் அவர்களின் இயல்புநிலை. விதிவிலக்குகள் தமிழக அளவில் ஒரு பத்திருபதுபேர் இருந்தாலே அதிகம். மிச்ச அத்தனைபேருமே மோகன் சி லாரசரசின் உளநிலைகொண்டவர்கள்.

 

இந்துமரபு என்றுமே கல்வியை, ஞானத்தை வழிபடுவதற்கு வழிகாட்டுவது. ஒர் எளிய இந்து எந்தக் கல்விமானையும் மதிப்பவன். ஆனால் இங்கே இன்று இந்துமதம் சார்ந்த விழுமியங்களில் நம்பிக்கைகொண்ட இந்துக்கள் மிகமிகக் குறைவு. உலகியல்வெறியே ஆள்கிறது. மதவழிபாடே கூட உலகியல்பேரம்தான். உலகியலுக்கு உதவாத அறிவின்மேல் இங்கே மதிப்பு இல்லை.

 

இங்கே உள்ள இந்துத்துவர்கள் போல இந்துக்களின் அடிப்படை மதிப்பீடுகளுக்கு எதிரானவர்கள் இல்லை. தங்கள் தரப்பில் நின்று கொடியேந்தாத அனைவரையும் அவர்கள் பேசும் மொழியை கவனியுங்கள். ஓர் இந்து, அவனுக்கு அடிப்படை இந்துமெய்யியலின் மெல்லிய மதிப்பேனும் இருந்திருந்தால், ஒருபோதும் அச்சொற்களில் அவ்வுணர்வுகளில் ஓர் அறிஞனை, எழுத்தாளனைப் பற்றிப் பேசமாட்டான். அவன் தனக்கு முற்றிலும் எதிரானவன் என்றால்கூட. நான் சொல்லும் சொற்களை நான் சொல்வதைப்போலவே சொல்லாத எவனும் இழிந்தவனே என்னும் நிலைபாடு கொண்டவர்கள் இவர்கள்.

 

இடதுசாரிகளும் திராவிட இயக்கச்சார்பானவர்களும் இதே உளநிலைகொண்டவர்கள் – ஆனால் இப்போது பார்க்கையில் ஒப்புநோக்க மேலும் சற்று அறிவார்ந்தசெயல்பாடுகள்மேல் மதிப்பு கொண்டவர்கள் என படுகிறது. இதுதான் நம் சூழல்

 

இன்னின்ன வகையில் இருந்தால் எழுத்தாளனை மதிப்போம் என்பது மதிப்பல்ல. நிபந்தனைகளே இல்லாமல், அவன் எழுத்தாளன் என்பதனால், எழுத்தினூடாக தன்னை முன்வைப்பவன் என்பதனால், அளிக்கப்படும் மதிப்பே உண்மையானது. அப்படி மதிக்கப்படும் சூழலிலேயே எல்லாவகையான வெளிப்பாடுகளும் நிகழும். அதுவே ஓர் அறிவார்ந்த சூழலை உருவாக்கும். அதுவே புதியன நிகழச்செய்யும். அறிவார்ந்த வளர்ச்சியை இயல்வதாக்கும். அதையே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்

 

ஜெ

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று –நீர்ச்சுடர்-3

$
0
0

அஸ்தினபுரியின் அரண்மனை எரிபுகுந்து எழுந்ததுபோல் கருகி இருந்தது. அதன் தூண்கள் அனைத்தும் தொட்டால் கையில் கரி படியுமோ என நின்றிருந்தன. சுவர்கள் இருள்திரையென்று தொங்கின. நடக்கும் பாதையில் மரப்பலகையின் தேய்தடம்மேல் படிந்திருந்த சாளரத்து மெல்லொளியும் கூட இருளே நீர்மை கொண்டதென்று தோன்றியது. அரண்மனையின் இடைநாழிகளுக்குள் நடக்கையில் அதுவரை அறிந்திராத இடத்திற்கு வரும் பதற்றத்தை கனகர் உணர்ந்தார். மறுகணம் ஏதோ கொடிது நிகழவிருப்பதைப்போல. எவரோ ஓசையின்றி பின்தொடர்வதுபோல. இருளுக்குள் எவரோ பதுங்கியிருக்கிறார்கள். அல்லது இருளே பதுங்கிக் காத்திருக்கிறது.

அந்தத் தொன்மையான அரண்மனையின் பல பகுதிகள் புழக்கத்திலிருந்து விலகிவிட்டவை. அங்கே உள்ளறைகளுக்குள் இருள் நிறைந்திருப்பதை அவர் கண்டதுண்டு. அந்த அரண்மனைக்கு அடியில் ஹஸ்தி கட்டிய பழைய அரண்மனையின் பகுதிகள் உண்டு. அவற்றை தொல்கருவூலங்களாக பயன்படுத்தினர். குறுகிய மரப்படிகளினூடாக கீழிறங்கி இருண்ட ஆழத்திற்குள் மூழ்கி அங்கே சென்றுசேரவேண்டும். அங்கே அவர் அரிதாகவே சென்றிருக்கிறார். பெரும்பாலும் ஏதேனும் அரிய பூசைச்சடங்குக்காக அதற்குரிய பண்டைய அரும்பொருட்களை எடுக்கும் பொருட்டு அங்கே செல்லவேண்டியிருக்கும். அரிதாக ஏதேனும் ஆவணங்கள் தேவைப்படும்.

அந்தச் சிற்றறைகளுக்குள் வழிந்தோடி உறைந்து மையென்றாகியதுபோல் இருள் செறிந்திருப்பதை அவர் கண்டிருக்கிறார். முதல்முறையாக அத்தகைய சிற்றறை ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த ஏதோ தீய காற்றால் கையிலிருந்த அகல்விளக்கின் நெய்ச்சுடர் அணைக்கப்பட சற்று பொழுது விழியில்லாது ஆகிவிட்டதைப்போல் உணர்ந்து பதைத்து அங்குமிங்கும் கைதவித்து சுவர்களிலும் பொருட்களிலும் முட்டிக்கொண்டார். உடன் வந்த துணைஅமைச்சர் சவிதர் “அசையாமல் அங்கு நில்லுங்கள், அமைச்சரே. நான் விளக்கு கொண்டுவரச் சொல்கிறேன்” என்று சொன்னார்.

அசையாமல் நின்றபோது இருள் எல்லாப் பக்கங்களிலுமிருந்து வந்து கவ்விப் பற்றிக்கொண்டதைப்போல தோன்றியது. இருளை கையால் தொட முடியுமென்றும் வழித்து எடுத்துவிட முடியுமென்றும் உளமயக்கு எழுந்தது. நெடும்பொழுதுக்குப் பின் தொலைவிலிருந்து அகல்மணிச் சுடரொன்று அணுகி வந்தது. அதற்குப் பின்னால் பேயுருக்கொண்டு காவலன் ஒருவன் அசைந்துகொண்டிருந்தான். அவன் அருகில் வந்த பிறகும் அச்சுடர் அங்கு நின்றுகொண்டிருப்பதுபோல் தோன்றியது. அவன் அருகணைந்து சுடரை அங்கிருந்த இன்னொரு விளக்கில் கொளுத்தினான். அது தயங்கி மெல்ல நெளிந்து எழுந்து நீண்ட போது அறை மீண்டும் பொருள் கொண்டது.

அங்கிருந்த ஒவ்வொரு பொருட்களையாக அவர் மாறி மாறி பார்த்தார். அவ்வனைத்தும் வேறாக உருமாறிவிட்டிருந்தனவா? இருளுக்குள் அவை பேருருவம் கொண்டெழுந்து, பின்னர் ஒளி வந்ததும் பழகிய பொய்வடிவம் சூடி அங்கு அமர்ந்திருக்கின்றவா? அங்கு பிடரியை சிலிர்ப்படையச் செய்யும் நோக்குணர்வு இருந்துகொண்டே இருந்தது. அவர் அமைச்சரிடம் “விளக்கை எவரோ அருகே வந்து ஊதியணைத்ததுபோல் தோன்றியது. இங்கு காற்றே இல்லை. எவ்வாறு விளக்கு அணைந்தது?” என்றார். சவிதர் “இந்த அறைகளுக்குள் நிலைக்காற்று உள்ளது என்கிறார்கள். உலவும் காற்று தெய்வங்களுக்குரியது. தேங்கிய காற்று கீழுலக இருப்புகளுக்கு ஊர்தி” என்றார்.

“இங்கே சில அறைகளில் நச்சுநீரென அது தேங்கியிருக்கும் என்கிறார்கள். முன்பு ஹஸ்தாஹாரம் என்னும் மேலும் ஆழத்து அறைக்குள் ஓர் ஏவலனை அனுப்பினேன். மாமன்னர் ஹஸ்தி அமைத்த நிலவறை அது. இருண்ட கிணறு போன்றது. ஆழத்தில் இருள் அலைகொண்டு மின்னுவது. பட்டுச்சரடாலான ஏணியினூடாக இறங்கிச்சென்ற அவன் எந்த ஒசையுமின்றி அந்த விழிதொடா நீரில் மூழ்கி மறைந்தான். அவன் கையில் கொண்டு சென்ற விளக்கு அணைந்தது. அவனைத் தூக்கும் பொருட்டு மேலும் நால்வர் இறங்கிச்சென்றனர். அவர்களும் இறந்த பின்னர் மேலும் நின்றவர்கள் அஞ்சி அகன்றுவிட்டனர். கொக்கிகளை வீசி எறிந்து அந்த உடல்களை மேலே எடுத்தோம். நீரில் மூழ்கி இறந்தவர்களின் வெறிப்பு கொண்டிருந்த முகங்கள்… அவற்றிலிருந்தே அவர்கள் கண்ட தெய்வங்களின் கொடிய உருவை அறிய முடிந்தது.”

அதற்குப் பின் அங்கே நின்றிருக்க இயலவில்லை. “ஆவணங்களை கொண்டுவருக!” என்று சொல்லிவிட்டு அவர் வெளியே சென்றார். நெடும்பொழுது உள்ளம் படபடத்துக்கொண்டிருந்தது. அங்கிருந்து மேலே வந்தபின் அந்த இடத்தை முற்றாகவே நினைவிலிருந்து அழித்துக்கொண்டார். அவ்வப்போது கனவில் மட்டும் அந்த இடத்தை கண்டுகொண்டிருந்தார். ஒவ்வொருமுறை கனவிலும் அவர் அங்கே நாகங்களையும் கண்டார். விழி மின்ன இருளுக்குள் அவை சுருண்டு அமர்ந்திருந்தன. இருளென்றே செதில்கள் அசைந்தன. ஆனால் அங்கே அவர் நாகங்களை கண்டதில்லை. இருளில் நாகங்கள் இருந்தே ஆகவேண்டும். அவற்றின் கண்களில் மட்டுமே அங்கு ஒளி இருக்கமுடியும்.

கனகர் படியிறங்கிச் சென்றபோது அங்கே கல்லால் ஆன இருண்ட சிற்றறையில் மேலே எங்கோ திறந்த சிறுசாளரம் வழியாக ஆடிகளில் பட்டுத்திரும்பி வந்த மங்கலான ஒளி ஓர் கிழிந்த ஆடைபோல் விழுந்துகிடந்த இடத்தில் சவிதர் அதே விழிகளுடன் அமர்ந்திருந்தார். அவர் தன்னை அறிவித்ததும் அவரிடம் சற்று முன்னர்தான் பேசி நிறுத்தியதுபோல சொல்லொழுக்கை தொடர்ந்தார். அவர் தன்னை அடையாளம் கண்டுகொண்டார் என்று கனகர் எண்ணினார். பின்னர் உணர்ந்தார், அவருக்கு எவரும் ஆள் அல்ல என்று. முகங்கள் ட பொருட்டல்ல. கண்களை அவர் பார்ப்பதே இல்லை. அவர் பிறரை தன் ஆடிப்பாவை அசைவெனவே பார்த்தார். நெடுநாள் புழுதிப்படலம் கலைந்து மீண்டும் அமைவது போன்றதே அவருடைய பேச்சு.

“செப்பு ஆவணங்கள் அறுபத்தெட்டு அறைகளிலாக உள்ளன. அறுநூற்றெண்பது பேழைகள். நீங்கள் கோருவது எந்த அரசரின் காலத்தைச் சேர்ந்தது என்று கூறுக! அரசச்செயல் சார்ந்த ஆவணங்கள் கருடமுத்திரை கொண்டவை. தெய்வச்சடங்குகள் என்றால் சந்திரசூரியர். குடிகள் குறித்த பதிவுகள் என்றால் அமுதகலம். அதற்குள் ஒவ்வொரு உள்ளடக்கத்திற்கும் தனியடையாளங்கள் உண்டு. அடையாளங்களை வெவ்வேறு வகையில் இணைத்து ஒற்றை அடையாளமாக ஆக்கியிருப்பார்கள். எவை என்று உரையுங்கள்…” என்றார். கனகர் அடையாளங்களை கூறியபோது சிற்றகலில் நெய்ச்சுடரை ஏற்றிக்கொண்டு அவர் கிளம்பினார். கனகர் உடனெழுந்தார். “நீங்கள் வரவேண்டும் என்பதில்லை” என்றார் சவிதர். ஆனால் கனகர் உடன்செல்ல விழைந்தார். அந்தப் பொழுதின் சோர்வை அச்செயல் கலைக்கும் என்பதுபோல. அத்தருணத்தில் எவரேனும் தன்னை இழிசொல் உரைத்தால், அறைந்தால்கூட மகிழ்ச்சியே உருவாகும் எனத் தோன்றியது. எதையேனும் வீசியெறிந்து இந்த அகந்திகழ் அசைவின்மையை கலைத்தேயாகவேண்டும்.

சவிதருடன் அவர் இருளிலிருந்து மேலும் இருளுக்கு என சென்றுகொண்டிருந்தார். தலைக்குமேல் காலம் ஒழுகிச்செல்வதை உணர முடிந்தது. அறைக்கதவுகள் இரும்புக்குமிழி வைத்த தடித்த மரத்தாலானவை. அவை மூடி இறுகி சுவர்களே என்றாகி நின்றிருந்தன. சவிதர் நோக்கி நோக்கி அடையாளங்களைத் தேர்ந்து ஒரு வாயில் முன் நின்று “இதுதான்” என்றார். இடையிலிருந்து தாழ்க்கோலை எடுத்து அறைக்கதவை திறந்தார். முனகலோசையுடன் வாயெனத் திறந்து இருளில் இறங்கிச்சென்ற சிறிய சுரங்கப்பாதை தெரிந்தது. இருளில் குத்தி நிறுத்தியதுபோல வெண்கலத்தாலான ஏணி ஆழ்ந்து சென்றது. அவர் தயங்க சவிதர் “வருக!” என உள்ளே இறங்கிச்சென்றார். அவர் தொடர்ந்தபோது குளிர்ந்த கற்சுவர்கள் மேலேறிச் சென்றன.

“இங்கிருந்த பெரும்பாறை ஒன்றின்மேல்தான் ஹஸ்தி தன் அரண்மனையை கட்டினார். பின்னர் சிற்பிகள் அந்தப் பாறையை குடைந்து குடைந்து கீழிறங்கிச்சென்று இந்த அறைகளை உருவாக்கினர். இவை முன்னர் அரசகுடியினர் இடர்ப்பொழுதுகளில் வந்து மறைந்துகொள்ளும் இடங்களாகவும் கருவூலங்களாகவும் வடிவமைக்கப்பட்டன. பின்னர் கருவூலங்கள் பெருக அறைகள் ஒன்றிலிருந்து ஒன்றெனத் தொடர்ந்து ஆழ்ந்திறங்கிச் சென்றன. இங்கே நாங்கள் அறிந்தவரை நூற்றெட்டு அறைகள் உள்ளன. பல அறைகள் ஒழிந்துகிடக்கின்றன. அறியாத மேலும் அறைகள் இருக்கவும் கூடும். கீழிருக்கும் அறைகளில் நீர் நிறைந்துள்ளது. எவ்வண்ணமோ ஊறிய நீர். ஏதோ யுகத்தின் நீர்.”

“இருளே குளிர்ந்து எடைகொண்டு நீரென்றாயிற்று என்கிறார்கள். இருக்கலாம். ஆனால் நச்சுநீர் அது. அதில் ஒரு துளி நம் உடலில் பட்டாலும் எரியும். நம் உடல் உருகத்தொடங்கும்… இருள் செறியுந்தோறும் இருளுலக தெய்வங்கள் இங்கே குடியேறலாயின. ஏனென்றால் அவை ஒளியை அஞ்சுபவை. ஒளியில் திகழும் காலத்தை வெறுப்பவை. இங்கே அவை இன்மைக்கு நிகரான இருப்பு கொண்டு உறங்குகின்றன. ஒவ்வொரு சிறுஒளியும் இங்கு அசைவுகளாகவே பெருகுகின்றது. அவை தெய்வங்களை எழுப்புகின்றன. எழுந்த தெய்வங்கள் உரிய பலி கொள்ளாமல் மீண்டும் அமைவதில்லை. ஆகவே கூடுமானவரை இந்த அறைகளை திறப்பதில்லை. ஒருமுறை ஓர் அறையை திறந்தால்கூட குருதிகொடுத்தே மீண்டும் மூடுவோம். அக்குருதியால் அத்தெய்வம் நிறைவுறாவிட்டால் மேலெழுந்து சென்று அரண்மனையில் பலிகொள்ளும். அவ்வப்போது அதுவும் நிகழ்வதுண்டு.”

சவிதர் விளக்கொளியால் கொண்டுசெல்பவர்போலச் சென்று அறைகளை திறந்தார். பேழைகளுக்கு நடுவே நிழலெனச் சென்றார். கனகர் கால் ஓய்ந்து அங்கிருந்த பெட்டிகளில் ஒன்றில் அமர முயன்றபோது “வேண்டாம், அமைச்சரே. இப்பெட்டிகள் அனைத்திலும் புழுதி படிந்துள்ளது” என்று சவிதர் சொன்னார். அப்புழுதியை விழிகளால் நோக்க இயலவில்லை. அவர் அறிந்த புழுதி மெல்லிய அலைகளாக படிந்திருப்பது. அது இருப்பது அறியாமல் சீரான வண்ணப் பூச்சாக மாறியிருந்தது. அவர் அந்தப் பெட்டிகளை கூர்ந்து நோக்கினார். அவை மரத்தாலும் இரும்பாலுமான பேழைகள். அனைத்தும் மண்ணாலானவை போலிருந்தன.

அவர் எண்ணத்தை அறிந்த அமைச்சர் “நீங்கள் கண்டது அலைவுறும் காற்றின் புழுதி, இது நிலைக்காற்று” என்றார். அவர் அப்போதுதான் சவிதரை கூர்ந்து நோக்கினார். அவர் பதறும் விழிகளும், சற்றே கூன் விழுந்த முதுகும், கன்னம் ஒட்டியமையால் எழுந்தமைந்த பற்களும் கொண்டிருந்தார். கனகரை விடவும் மூத்தவர். ஆனால் நெடுங்காலமாக கருவூலத்தின் சிற்றறைகளிலேயே பணிபுரிந்தார். எந்த அரசவிழவுகளிலும் அவரை நோக்கியதில்லை. சிற்றமைச்சர் அவைகளிலேயே பார்த்ததுபோல் நினைவிலெழவில்லை. ஒருவேளை அவர் இந்த ஆழத்திலேயே வாழ்கிறார் போலும். வெளிவராமலேயே இங்கே இருக்கமுடியுமா? முடியும், வெளியுலகை அறியாமலேயே இருக்கவேண்டும். இவர் உண்மையில் இருப்பவரா, அன்றி பேய்த்தோற்றமா? முன்பு கண்ட அவர்தானா இவர்? இவர்கள் அனைவருமே ஒற்றைமுகம் கொண்டுவிடுகிறார்களா என்ன?

கனகர் விரைந்து ஆவணங்களை எடுத்து அளிக்கும்படி அவரிடம் கையசைவால் சொன்னார். அவர் கனகர் கூறிய ஆவணத்தின் நிரைக்குறி எண்ணை உள்ளத்தில் மீண்டும் குறித்துக்கொண்டு ஒவ்வொரு பெட்டியாக விரல் சுட்டி எண்ணியபடி அகன்றார். தலையை ஆட்டியபடி “இங்குள்ள பெட்டிகள் அனைத்தின் மீதும் புழுதி படிந்துள்ளது. அவற்றை நான் தொடுவதில்லை. சில பெட்டிகளின் மீது கை புதையும் அளவுக்கு புழுதி உள்ளது. அப்புழுதி ஒரு காப்பு. அது திரையிட்டு இங்கிருக்கும் பொருட்களை மறைத்துள்ளது. அப்பொருட்களுடன் இணைந்துள்ள தெய்வங்களையும் அதுவே கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. இங்குள்ளவை அனைத்தும் புதையல்கள். பூதங்களும் தெய்வங்களும் காவல் காக்காத புதையல்கள் இல்லை என்று அறிந்திருப்பீர்கள்” என்றார்.

அவர் நகைத்தபோது முற்றிலும் அது மானுட ஒலிபோல் தோன்றவில்லை. கன்னங்கள்  குழிந்து உள்ளே போயிருக்க பிதுங்கிய சிறிய விழிகள் அலைமோதின. அவருடைய கையிலிருந்த விளக்கிலிருந்து முகம் மட்டும் இருளிலிருந்து எழுந்து தெரிந்தது. “இத்தகைய அறைகளுக்குள் இருக்கும் இருள் வேறு வகையானது. வானம் இருக்குமிடத்தில் உள்ள இருள் வேறு. அது ஒருவகை ஒளியேதான். ஏனென்றால் எந்நிலையிலும் அங்கே விழிகள் முற்றிலும் இல்லாமல் ஆவதில்லை. ஒவ்வொரு பொருளும் தன்னை தான் கண்டடையும் அளவுக்கு அங்கு வெளிச்சம் இருக்கும். இத்தகைய இருள் மண்ணுக்கு அடியிலுள்ள குகைகளிலும், அனைத்து வழிகளும் முற்றாக மூடப்பட்ட இதுபோன்ற நிலவறைகளிலும் மட்டுமே இயல்வது” என்றார் சவிதர்.

“இது இருளல்ல. இதற்கு வேறு சொல் உள்ளது” என்று அவர் தொடர்ந்தார். “மயர்வு, மயல், மருள்… சரியான சொல் செம்மொழியில் உள்ளது. அவர்கள் இதை தமஸ் என்கிறார்கள். தமஸ் என்றால் இருள் மட்டுமல்ல, செயலின்மையும்கூட. நிலைத்ததன்மையும் ஆகும். இருளென்பது மாறாமை. நிலைத்தன்மை. இன்மை. ஒன்றுபிறிதொன்றாகும் மயக்கவெளி” அவர் எவருடன் பேசுகிறார் எனத் தெரியவில்லை. இருளுக்குள் இருந்து என குரல் ஒலித்துக்கொண்டிருந்தது.

“நான் இங்கு பணிக்கு வந்தபோது எனக்கு பதினாறு அகவை. இந்த அறைகளில் பணிபுரிய அந்தணர்கள் விரும்புவதில்லை. இங்கு சில நாட்கள் பணிபுரிந்தால் அதன் பின் வேள்விக்கூடத்திற்குள் நுழைய இயலாதென்றும் அனலெழும் எரிகுளத்திற்கருகே அமரமுடியாதென்றும் சொல்வார்கள். ஆகவே இங்கு மிகக் குறைவாகவே அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வழிவழியாக வருபவர்கள். இதன் காவலர்கள் கூட ஒருசில குடிகளில் இருந்தே மீண்டும் வருகிறார்கள். அவர்கள் இங்குள்ள தெய்வங்களால் ஆட்கொள்ளப்பட்டவர்கள். தெய்வங்களிடமிருந்து மானுடருக்கு மீட்பில்லை.”

“எந்தை இங்கு பணிபுரிந்தார். அவர் விழிகளில் இருள் நிறைந்திருக்க மறைந்தார். அவரை நான் நன்கு நினைவுறுகிறேன். முதுகு வளைந்த, தோல் வெளிறிய, பற்கள் உந்திய சிறிய மனிதர். ஆம், என்னைப் போலவே.” அவர் அனல் பற்றிக்கொள்ளும் மூச்சொலி எழுப்பி சிரித்தார். “அவர் இங்கே ஒரு காவலறைக்குள் இறந்து அமர்ந்திருந்தார். கையில் விளக்குடன் உள்ளே நுழைந்தவர் அந்த விளக்கு அணைந்து போனதும் அங்கேயே உயிரிழந்து மூலையொன்றில் அமர்ந்திருந்தார். இறந்து உலர்ந்து ஒட்டியிருக்கும் பல்லிபோல.” அவர் மீண்டும் நகைத்தார்.

“எப்போதும் அப்படித்தான் இருப்பார். இங்கே பெரிய அறைகூவலே காலம்தான். அது ஒழுகிக்கொண்டிருப்பது. அதை உணரும் உள்ளம் இங்கே அமைந்திருக்க முடியாது. காலத்தை உணர்பவன் இங்கே இருந்தால் பித்தனாவான். காலம் கரிய யானைபோல் துதிக்கையால் கால்களை சுழற்றிப்பிடித்து இழுக்கும் என்பார்கள். ஆகவே இங்கே அனைவருமே அகிபீனா உண்பார்கள். எங்களுக்கு தடையில்லாமல் அதை அளிக்கவேண்டும் என்பது நெறி. அது காலத்தை அழித்துவிடும். உள்ளத்தின் மேல் ஒரு கரிய பாறையைத் தூக்கி வைத்துவிடும். அவ்வப்போது அதன் விளிம்புகள் அலைகொள்ளுமே ஒழிய அசைவு நிகழாது. வைத்த இடத்தில் அவ்வண்ணமே அமைந்திருக்கும். இந்த எடைமிக்க பேழைகள் என நாமும் அமர்ந்திருக்கலாகும்.”

“மெல்ல மெல்ல புழுதி படியத் தொடங்கும். எண்ணங்கள் மேல் உணர்வுகள் மேல் நினைவுகள் மேல். மெய்யாகவே உடல் புழுதி வடிவமாக ஆகும். அதன்பின் இடர் இல்லை. இங்கே இருப்பது எளிது. இருப்பதும் இல்லாமலிருப்பதும் வேறுபாடில்லாமலாகும்போது இருப்பதைப்போல் எளிது பிறிதில்லை.” அவர் மீண்டும் சிரித்தார். அது சிரிப்பல்ல, வெறும் ஓசை என்று தோன்றியது. தேனீக்கூட்டில் கல்பட்டதுபோல் அந்தப் பேச்சு ஒரு கலைவு. அவர் விரைவிலேயே அடங்கி சொல்லின்மைக்குள் சென்றுவிடுவார். இச்சொற்கள் அனைத்தும் மீண்டும் சென்றமையும்பொருட்டே சுழன்று சுழன்று பறக்கின்றன.

“எந்தையை நான்கு நாட்கள் தேடினர். இங்கே உடல்கள் மட்கிய கெடுமணம் எழுவதில்லை. எழக்கூடும், இங்குள்ள பொதுமணத்தில் அதை தனித்தறிய இயலாது. இங்கே அனைத்துமே மட்கிக்கொண்டிருப்பவை” என்றார் சவிதர். “தற்செயலாக ஒரு அறை திறந்திருப்பதைக் கண்டு ஏவலர்கள் உள்ளே வந்து அவரை மீட்டனர். அப்போது அவர் உடல் வற்றிவிட்டிருந்தது. முகத்தில் விந்தையானதொரு இளிப்பும் கண்களில் ஒளியின்மையும் நிகழ்ந்திருந்தது. அந்தணராயினும் எங்களை எரிப்பதில்லை, அவரை புதைத்தனர். அந்த இளிப்பு அப்படியே மண்ணுள் மறைந்தது.”

“என் அன்னை அரண்மனைப்பணி தவிர வேறு எந்தப் பணிக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று சொன்னார். எனக்குக் கீழே ஏழு மைந்தர்கள். தந்தை கொண்டுவரும் ஊதியமன்றி வேறு வாழ்க்கைக்கு அடிப்படை ஏதுமில்லை. எந்தையும் என்னை அரண்மனைக்கு கொண்டுசெல்ல விரும்பவில்லை. என்னை அவர் வேதம் படிக்க அனுப்பினார். என் நினைவில் வேதம் எழவில்லை. எரிகுளத்தை நோக்கி அமர்ந்திருக்கையில் மேலிருந்து பொழிந்து அனலை கவ்விக் கவ்வி உண்ணும் இருளை மட்டுமே நான் பார்த்திருந்தேன். பதினாறாண்டு அகவையில் ஒரு சொல்கூட வேதம் சித்தத்தில் நிற்கவில்லை.”

“ஆகவே வேறு வழியில்லாமல் நான் இங்கு பணிக்கு வந்தேன். இங்கிருந்த மூத்த அமைச்சர் பிரகதர் என்னை அருகணைத்து தன் கையை என் தோளில் வைத்து சொன்னார். உன் தந்தையை எனக்குத் தெரியும். நீ இங்கு பணிக்கு வரமாட்டாய் என்று சொன்னார்கள். நான் அதை நம்பவில்லை. எவ்வண்ணமாயினும் நீ இங்கு வந்துவிடுவாய் என்றே எனக்கு உறுதியிருந்தது. மைந்தா, ஒளியின் ஊழியர்கள் போலவே இருளுக்கும் ஊழியர்கள் உண்டு. அவர்களைவிட நாம் மேலும் வல்லமை கொண்டவர்கள். ஏனெனில் நம்மை ஆள்வது பலமடங்கு ஆற்றல் கொண்டது. இங்கே இப்புள்ளியில் இருந்து கடுவெளியின் முடிவிலி வரை புடவியை நிறைத்திருப்பது இருளே. அந்தப் பெருவெளியில் உள்ள இருளையே இங்குள்ள அறைகள் தேக்கி வைத்திருக்கின்றன என்றார்.”

“இருள் ஒன்றே அது சென்று தொடும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு தெய்வமாக தான் வெளிப்படுவது. ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொரு வளைச்சுழிப்புக்கும் உரிய தெய்வத்தை அது தன்னிலிருந்து பிறப்பித்துக்கொள்கிறது. இங்கிருக்கும் தெய்வங்கள் முடிவற்றவை. நோக்க நோக்க பெருகுபவை. எண்ணங்கள் தொடும்தோறும் பேருருக் கொள்பவை. இருளை வணங்குபவன் அழிவிலாததும் எங்குமிருப்பதும் அனைத்திற்கும் அன்னையானதுமான ஒன்றை வணங்குகிறான். வெளியே அதை பராசக்தி என்கிறார்க்ள். மூன்று தெய்வங்களை ஈன்றவள் அவள். கைகளை விரித்து பெரும் உளஎழுச்சியுடன் அவர் கூவினார் சர்வ கல்விதமாமேகம் நான்யாஸ்தி சனாதனம்! அன்னை சொன்ன சொல்! சர்வ கல்விதமாமேகம் நான்யாஸ்தி சனாதனம்!”

“அவர் முகத்திலிருந்த களிப்பு பித்தர்களுக்கும் யோகியருக்கும் உரியது. கன்னங்கரியவள், இருளே உருவானவள், இன்மையை இருப்பெனக் கொண்டவள் என்று அவர் கூவினார். நான் அவரை நோக்கிக்கொண்டிருந்தேன். அக்கணம் முடிவுசெய்தேன், என் இடம் இது. இங்கன்றி வேறெங்கும் எனக்கு விடுதலை இல்லை.” அவர் குனிந்து அவர் விழிகளை பார்த்தார். “விடுதலை என்றால் என்ன? கட்டுப்படுத்துவனவற்றை கடந்து எய்தவேண்டியவற்றைச் சென்றடைவது அல்லவா? சிறையை ஒருவன் தன் அறுதிப் பரிசென அடைந்தால் அதுவே அவனுக்கு விடுதலை என்றாகும் அல்லவா?”

சவிதர் “என்னிடம் அவர் சொன்ன அந்தச் சொற்களை ஒவ்வொரு நாளும் தொட்டுத் துலக்கி வந்திருக்கிறேன். அந்த முதல் நுண்சொல்லை என்னுள் உரைக்காத நாழிகையே இல்லை” என்றார். கைகளை விரித்து “சர்வ கல்விதமாமேகம் நான்யாஸ்தி சனாதனம்! சர்வ கல்விதமாமேகம் நான்யாஸ்தி சனாதனம்!” என்று கூவினார். கனகர் அவரை விந்தையுணர்வுடன் நோக்க “அஞ்சவேண்டாம். நான் சித்தம் புரண்டவன் அல்ல. அகிபீனா என் சித்தத்தை நிலைநிறுத்துவதன்றி கலைப்பது அல்ல” என்றார்.

கனகர் எரிச்சலுடன் “பேச்சைக் குறைத்து அதை தேடித் தருக!” என்றார். “ஆம், தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் பேசுவது மிக அரிது. நீங்கள் அறியமாட்டீர்கள், பத்தாண்டுகளில் இங்கே ஆவணம் கோரி வந்த ஏழாவது மானுடர் நீங்கள். இங்கு சில பணியாளர்களும் அமைச்சர்களும் இருப்பதை அப்போது மட்டும்தான் மேலிருக்கும் ஊழியர்களும் அமைச்சர்களும் உணர்கிறார்கள். எங்களைப் பார்த்து அவர்கள் திகைக்கிறார்கள். மண்ணில் விழுந்து மறந்துவிட்ட பொருளை எடுத்து நோக்குகையில் அடியில் புழுக்கள் நெளிந்து கொண்டிருப்பதை பார்ப்பதுபோல. அல்லது மண்ணுக்குள்ளிருந்து வேர்கள் வந்து அதை கவ்வியிருப்பதைக் கண்டு திகைப்பதுபோல. நான் எண்ணுவதுண்டு புழுக்கள் வேறு வகையான வேர்கள் என. வேர்கள் ஒருவகை புழுக்கள். நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்?”

கனகர் அவரை பார்த்துக்கொண்டிருந்தார். “ஆம், இருள். இதை தமஸ் என்கிறார்கள். அச்சொல்லை எனக்கு பிரகதர் சொன்னதை நினைவுகூர்கிறேன். தமஸ் என்றால் தேக்கமும் கூடத்தான். தேங்கியிருப்பது இருள். எழுவது ஒளி. விசைகொள்வது, விரைவது, எரிவது, அணைவது, மீண்டும் எழுவது, நெளிவது, துவள்வது, புகைவது, வெடிப்பது, சுழல்வது, அலைகொள்வது, தாவிப்பற்றி ஏறுவது, தொற்றிக்கொள்வது, மின்னுவது, துடிப்பது, பரவுவது, குவிவது. ஒளி அனைத்தையும் நிகழ்த்துகிறது. இருள் எதையும் செய்வதில்லை. அது தேங்கி நின்றுகொண்டிருக்கிறது.”

ஏற்ற இறக்கமில்லாமல் ஏதோ தொன்மையான வழிபாட்டுச்சொல்லொழுக்கு என அவர் பேசிக்கொண்டே சென்றார். “இப்புடவி ஒரு மாபெரும் கலம். அதில் இருளை நிரப்பி வைத்திருக்கிறாள் பேராற்றல்வடிவினள். இல்லை, இருள் அதுவே ஒரு கலமாக தன்னைத்தானே தாங்கி புடவியென்று நின்றிருக்கிறது. அது நம்மிடம் கூறுகிறது சர்வ கல்விதமாமேகம் நான்யாஸ்தி சனாதனம்…” கனகர் மூச்சுத்திணறுவதுபோல் உணர்ந்தார். சொற்கள் மூச்சுத்திணறச் செய்யும் என அறிந்தார். “நன்று, நீங்கள் கோரியது இந்தப் பெட்டியில் உள்ளது” என்றார் சவிதர். “விரைவாக எடுங்கள். இங்கு நான் மிகைப்பொழுது நின்றிருக்க இயலாது” என்றார் கனகர்.

“ஆம்” என்றபின் அவர் அப்பெட்டியை கூர்ந்து நோக்கி கண்களை மூடி உதடுகளை அசைத்துக்கொண்டிருந்தார். பின்னர் பெருமூச்சுடன் கண் திறந்து கை தொழுது அந்தப் பெட்டியின் பூட்டுக்குள் தாழை நுழைத்து வெவ்வேறு வகையில் சுழற்றினார். “இதற்குரிய தாழ்க்கோலை கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்று கனகர் கேட்டார். “இங்குள்ள அனைத்துப் பெட்டிகளுக்கும் தாழ்க்கோல் ஒன்றே. இவற்றை ஆளும் தெய்வத்திற்குரிய நுண்சொல் உண்டு. ஒவ்வொரு பெட்டிக்கும் அது நுட்பமாக உருமாறுகிறது. அப்பெட்டியின் அளவிலிருந்தும் வடிவத்திலிருந்தும் அது வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்தும் அக்கணக்கை நம் உள்ளத்திலிருந்து கறந்து எடுப்பதுபோல் திரட்டிக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப இத்தாழ்க்கோலைச் சுழற்றி பெட்டிகளை திறப்போம்” என்றார் சவிதர்.

பெட்டியை அவர் திறந்தபோது பிறிதொரு கெடுமணம் எழுந்தது. காட்டுப்பன்றி வாய்திறந்ததுபோல் வெம்மைகொண்ட ஆவியின் மணம். அதுவரை இருந்த கெடுமணமே இருளின் மணம் என்று எண்ணியிருந்தார். அது ஒரு மட்கிய உடல்களின், நெடுநாள் பழகிய புழுதியின், காறல் என மாறிய எண்ணெய்ப் பிசுக்கின், மயிர் எரிவதன் மணங்கள் கலந்தது. எண்ணும்தோறும் உருமாறிக்கொண்டிருப்பது என்றும் என்றுமென அங்கு நின்றிருப்பது என்றும் தோன்றுவது. அக்கெடுமணத்திற்குள் நீருக்குள் நீர் ஊறுவதுபோல அந்தப் புதிய கெடுமணம் கரந்து எழுந்து வந்தது.

“என்ன கெடுமணம் அது?” என்றார் கனகர். “இந்தப் பெட்டிக்குள் இருக்கும் மணம். இவ்வறைக்குள் இருக்கும் மணத்தைவிட மேலும் செறிவானது இது” என்றபின் உள்ளே குனிந்து செப்பேடுகளை தொட்டுத் தொட்டு நோக்கி மாந்தளிர்ச்சுருள்கள்போன்ற மெல்லிய செப்பேடுகளால் ஆன எடைமிக்க நூல் ஒன்றை எடுத்து விளக்கருகே கொண்டுவந்து அதன் முகப்பை கூர்ந்து நோக்கி “தாங்கள் கோரியது” என்றார் சவிதர். “மிகத் தொன்மையானது என எண்ணுகிறேன்… அக்காலத்து எழுத்துக்கள்…” கனகர் “அவற்றை படித்தறிவோர் உண்டு” என்றார். சவிதர் “ஆம், அறிவேன். இங்கே எங்களில் எவராலும் இங்குள்ள எவற்றையும் படிக்கமுடியாது. ஒரு சொல்கூட” என்றபின் நகைத்து “அறிந்துகொள்ள முடியாதவற்றையே முறையாக காவல் காக்க முடியும்” என்றார்.

கனகர் அருகே சென்று அதை பெற்றுக்கொண்டார். கூர்ந்து அதன் அடையாளங்களை மட்டும் நோக்கி “ஆம், இதுதான்” என்றார். சவிதர் “இது பலநூறாண்டுகள் தொன்மையானது என்று தோன்றுகிறது” என்றார். “ஆம், மாமன்னர் ஹஸ்தியின் மைந்தரான அஜமீடரின் மைந்தர் ருக்‌ஷரின் காலத்தையது. ஏற்கெனவே அவர் மைந்தர் சம்வரணரின் காலம் வரையிலான ஆவணங்களை நோக்கிவிட்டேன்” என்றார். “சென்ற நாலைந்து நாட்களாகவே ஆவணங்களைத்தான் துழாவிக்கொண்டிருக்கிறேன்.”

“இதை இங்கிருந்து எடுத்துச் செல்கையில் ஓர் முற்றமைதியை குலைக்கிறீர்கள் என்று எண்ணுக! இந்த இருளில் அனைத்தும் விதைவடிவில் கருநிலையில் உறைகின்றன. இங்கிருந்து துயில் கலைந்து அசைவுகொள்பவை மேலெழுந்து அங்கே நீங்கள் காணும் நகரும் வாழ்வும் மொழியும் எண்ணங்களும் ஆகின்றன. அசைவிழக்கையில் மீண்டும் எடைகொண்டு ஆழ்ந்து இங்கே வந்து படிகின்றன. அவ்வண்ணம் வந்தமைந்த ஒன்று இது…” கனகர் “ஆம்” என்றார்.

தொடர்புடைய பதிவுகள்

பகடியும் தமிழிலக்கியமும்- கடிதம்

$
0
0

 

தீவிரச் சிறுகதைகளும் பகடிச் சிறுகதைகளும் -சாம்ராஜ்

அன்புள்ள ஜெ

 

சாம்ராஜ் அவர்கள் தமிழில் பகடி எழுத்து பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். அவருடைய முதல்வரிகளிலேயே தமிழிலக்கியத்தைப்பற்றிய ஒரு பிழையான மதிப்பீடு இருப்பதுபோல எனக்குப்பட்டது. தமிழில் முழுக்கமுழுக்க பகடி எழுதிய, வேறொன்றையும் எழுதாத இலக்கியப்படைப்பாளிகள் இல்லை. ஆனால் தமிழில் எழுதிய எல்லா முக்கியமான படைப்பாளிகளும் ஆழமான பகடிக்கதைகளை எழுதியிருக்கிறார்கள். தமிழிலக்கியத்தின் வலிமையான ஒரு பகுதியாகவே பகடி எழுத்து இருந்துகொண்டிருக்கிறது

 

சாம்ராஜின் பிரச்சினை என்னவென்றால் அவர் அரசியல்பகடியை மட்டுமே பகடி என நினைக்கிறார். அரசியல்பகடி உண்மையில் கொஞ்சம் மேலோட்டமானது. அதற்குள் அரசியல்நிலைபாடு, அதுசார்ந்த பார்வைதான் உள்ளது. அதற்கேற்ப கூட்டி உருவாக்கப்பட்டதாகவே அந்தப்பகடி இருக்கும். அரசியல்பகடியே கூட பகடி இலக்கியமாக ஆகவேண்டுமென்றால் அதில் மனித இயல்புகள் பகடி செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆகவே நல்ல பகடி என்பது எப்போதுமே மனிதர்களின் அடிப்படைகளை நோக்கிச் சிரிப்பதுதான்

 

அப்படிப்பட்ட பகடியை எழுதாத தமிழிலக்கியவாதிகள் மிகக்குறைவே. அந்தப்பகடிக்கதைகள் எல்லாமே தமிழில் கொண்டாடப்பட்டுள்ளனவே ஒழிய அவற்றை எவரும் இலக்கியமல்ல என்று சொன்னதில்லை.பகடி எழுதாத சிலர் உண்டு. உதாரணமாக மௌனி,. லா.ச.ராமாமிருதம், ஜெயகாந்தன், வண்ணதாசன் போன்றவர்கள். அவர்கள் பெரும்பாலும் ரொமாண்டிஸிஸத்தை எழுதியவர்கள். மற்ற அனைவருமே பகடி எழுதியிருக்கிறார்கள். உண்மையில் தமிழ் பகடிஎழுத்தின் உச்சம் அவர்கள்தான்

தமிழில் பகடிஎழுத்தின் சாதனைகள் புதுமைப்பித்தனிலேயே காணக்கிடைக்கின்றன. அரசியல்பகடியும் குணச்சித்திரப்பகடியும் கலந்து அமைந்தவை. கட்டிலைவிட்டிறங்காக்கதை, எல்லாம் முடிவிலே இன்பம் போன்றவை அரசியல்பகடிகள். பால்வண்ணம்பிள்ளை, பூசணிக்காய் அம்பி போன்றவை குணச்சித்திரப்பகடிகள். அவருடைய எழுத்தில் நேர்பாதி பகடி எழுத்துக்கள்தான்.

 

அடுத்த தலைமுறையில் தி.ஜானகிராமன் அற்புதமான பகடிக்கதைகளை எழுதியிருக்கிறார். தஞ்சைமராட்டியர் பற்றிய அவருடைய கதைகளை கிளாஸிக் என்றே சொல்லவேண்டும். மூன்றுகிழவர்கள் பென்ஷன் வாங்கப்போகும் கதைதான் அதில் உச்சம் என்று சொல்லவேண்டும். தேவர்குதிரை, கோதாவரிக்குண்டு என பலகதைகளை அற்புதமான குணச்சித்திரப்பகடிகள் எனலாம்.

 

கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் கதைகளிலிருந்து நுட்பமான பகடிக்கதைகளை தனியாகவே சேர்த்து எடுக்கலாம்.கி.ராவின் நாற்காலி அழகான பகடிக்கதை. சுந்தர ராமசாமியின் பகடிக்கதைகள் தொடக்கம் முதலே புகழ்பெற்றவை. பிரசாதம் அதிகார அமைப்பைக் கேலிசெய்யும் கதை. லவ்வு முதலிய பலகதைகளைச் சுட்டிக்காட்டலாம். தவிர்க்கவே கூடாத பெயர் கிருஷ்ணன்நம்பி. தமிழின் அரசியல்பகடிகளில் ‘தங்க ஒரு’ ஒரு உச்சகட்டப்படைப்பு.

 

அசோகமித்திரன் சொல்லவே வேண்டாம். எத்தனை கதைகள். ரிக்ஷா என்ற சிறிய கதை உடனடியாக நினைவுக்கு வருகிறது. சமகால அரசியலை நையாண்டிச்செய்யும் கதைகள், மனிதர்களின் நுட்பமான பாவனைகளை பகடிசெய்யும் கதைகள் என ஒரு இருபதுமுப்பது சிறந்த கதைகளை அசோகமித்திரனில் தெரிவுசெய்யமுடியும். பகடிக்காகவே ப.சிங்காரம் போற்றப்பட்டார். புயலிலே ஒரு தோணியில் மலாக்காத்திருவள்ளுவரும் பிறரும் சேர்ந்து மதுக்கடைகளில் வெளிப்படுத்தும் நையாண்டி தமிழ்மரபின்மேலெயே முன்வைக்கப்பட்ட உச்சகட்ட பகடி. ‘தன்னிடம் மும்மடங்கு படை இருந்தும் சற்றும் தயங்காமல் ரோமல் மேல் படையெடுத்த மான்ட்கோமரீ!” அந்த மதுரைச்சித்தரிப்பில் உள்ள நையாண்டிகளை எப்படி மறக்கமுடியும்?

 

தமிழில் அரசியல்பகடிகள் எழுதியவர்களில் இந்திரா பார்த்தசாரதியையும் ஆதவனையும் எப்படி விட்டுவிடமுடியும்? இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி சுதந்திரபூமி ஆகிய தொடக்கநாவல்கள் முதல் வேதபுரத்துவியாபாரிகள் வரை அனைத்துமே பகடி இலக்கியங்கள் அல்லவா?

இந்திரா பார்த்தசாரதி

அடுத்த தலைமுறை எழுத்தாளர்களில் திலீப்குமார் தமிழில் அழகிய பகடிக்கதைகளை எழுதியவர். அவர் எழுதிய ‘தீர்வு’ ‘கடிதம்’ போன்ற கதைகள் சிறந்த உதாரணங்கள். நாஞ்சில்நாடனைப் பற்றி சாம்ராஜே சொல்லிவிட்டார். அதற்கு அடுத்த தலைமுறையில் நீங்கள் பல பகடிக்கதைகளை எழுதியிருக்கிறீர்கள். மாடன்மோட்சம் ஒரு கிளாசிக் உதாரணம்.எஸ்.ராமகிருஷ்ணன் நல்ல பகடிக்கதைகளை எழுதியிருக்கிறார். உதாரணமாக  ‘ராமசாமிகளின் மறைக்கப்பட்ட வரலாறு’ போன்றகதைகளைச் சொல்லலாம். யுவன் சந்திரசேகர், இரா.முருகன் படைப்புகளிலும் பகடிக்கதைகள் உண்டு. அரசூர் வம்சம் முழுக்கமுழுக்க பகடி.

 

நான் நினைவிலிருந்தே இதை எழுதுகிறேன். ஒரு வாரம் நேரம் எடுத்துக்கொண்டால் உலக இலக்கியத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த பகடி எழுத்தின் தரத்தைச்சேர்ந்த நூறு பகடிக்கதைகளை தமிழிலகியத்திலிருந்து என்னால் எடுத்து அளிக்கமுடியும். தமிழ்நவீன இலக்கியத்தின் அடிப்படைகளில் ஒன்று நுட்பமான பகடிதான். ஆனால் பிரபல ஊடகங்களில் வரும் பகடி போல அது வெளிப்படையானதாக இருக்காது. உதாரணமாக திலீப்குமாரின் கடிதம். அதில் குஜராத்திகள் கிண்டல்செய்யப்பட்டிருப்பதை சாமானியவாசகன் இருமுறைவாசித்தால்தான் கண்டுகொள்ளமுடியும்

 

உண்மையில் மேலே சொன்ன பகடிக்கதைகளின் வரிசையில் வைக்கத்தக்க சில கதைகளைத்தான் ஷோபாசக்தி எழுதியிருக்கிறார். முந்தையதலைமுறையின் பகடிக்கதைகளுடன் ஒப்பிடும்போது ஷோபாவின் கதைகள் நுட்பங்கள் அற்று வெளிப்படையாக இருக்கின்ரன இன்று அந்தப்பகடிக்கதைகளின் நுட்பம் இல்லாமல் உரக்கக்கூவும் பகடியாகவே தெரிகின்றன. அவற்றை அரசியல்கேலி என்றுதான் சொல்லவேண்டும். பகடி என்பது வாசகனால் கண்டுபிடிக்கப்படுவது. ஆசிரியரே சொல்வது அல்ல

 

ஆகவே சாம்ராஜ் தமிழ் நவீன இலக்கியத்தில் பகடி இல்லை, அவை அங்கீகரிக்கப்படவில்லை என்பது வாசிப்பின் பின்புலத்திலிருந்து வந்த வரியாகத்தெரியவில்லை

 

ஆர்.ஸ்ரீனிவாசன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16732 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>