Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16880 articles
Browse latest View live

இசை- கடிதம்

$
0
0
அன்பின் ஜெயமோகன்
உங்களது அமேரிக்க சிறு – வரவு நல்ல முறையில் அமைந்தது கண்டு மகிழ்ச்சி. அமேரிக்க இசை பற்றிய உங்கள் பதிவு நன்று. இன்னொரு தடவை வந்து போங்கள். நியு ஓர்லியன்ஸ், மெம்பிஸ் என அமேரிக்க இசையை கொஞ்சம் நேரடியாக நுகர்ந்து பின் செல்லலாம். நானும் இதை சாக்காக வைத்து கொஞ்சம் நாள் கான்கிரிட், கலவை என பார்க்காமலிருக்கலாம்.
ப்ளூஸ் கேட்டு, கேட்டு நம் மனதில் பதிந்துவிட்டால் வேறு இசை வகைகளை கேட்க இயலுவதில்லை. இது போலவே Classic Jazz & Rock,  Blue Grass & Classic Country. 37 வருட அமேரிக்க வாழ்க்கையில் பெற்ற பெரும் பேறுகளில் ஒன்றாக கருதுவது அமேரிக்க இசை வகைகளைக் கேட்கும் ஆர்வம் வந்து அதில் மூழ்கி போனதுதான்.
அடிக்கடி https://www.siriusxm.com/bluesville ல் கேட்கும் சில இசை ஜாம்பவான்களின் பாடல்கள். பெரிய சாகரத்திலிருந்து வெகு சிறு துளிகள்.
Blues, Classic Rock
  1. Muddy Waters –  https://www.youtube.com/watch?v=e_l6A7krjrQ&list=PLgDXL3BjY36_RkahYLPvh0Jz81Q-qHd5q
  2. Etta James – https://www.youtube.com/watch?v=zbPgnRny0_0
  3. Howlin’ Wolf – https://www.youtube.com/watch?v=6Vr-DR5HdKw
  4. John Lee Hooker – https://www.youtube.com/watch?v=X70VMrH3yBg
  5. Stevie Ray Vaughan – https://www.youtube.com/watch?v=0vo23H9J8o8
  6. Allman Brothers – https://www.youtube.com/watch?v=XPg1gULbZCs
  7. Bonnie Raitt  – https://www.youtube.com/watch?v=f56_Eg4i89c
Blue Grass – Man of Constant Sorrow –  https://www.youtube.com/watch?v=YBVnKYOvWcs  தெற்கு இந்தியா நாட்டாரிசை போலவே பின் பாடகர்கள் ஒத்து ஊதுவது ஆச்சரியமல்ல.
Classic Country
                           https://www.youtube.com/watch?v=KbeQa2hmznk
Current – Active Greats!

Tab Benoit – நானும், மகனும் சேர்ந்து பார்த்து 4 வது இசை நிகழ்ச்சி. டேப் பெனுவா பெரிய பெயர் பெறவில்லை. ஏன் என தெரியவில்லை.

நிற்க.
[ஹிப்  ஹோப் என்பது நரக  வேதனை. முக்கியமாக பாடல்வரிகள்] அமேரிக்க தமிழ் பையன் ஒருவர் பாடிய பாடலொன்று…https://www.youtube.com/watch?v=wh_Ssx3ttkg
அன்புடன்,
வாசன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

காடு இரு கடிதங்கள்

$
0
0

 

 

காடு அமேசானில் வாங்க

காடு வாங்க

,அன்புள்ள ஜெ

 

வணக்கம். நான் மாதவி,

 

வயது 25. சில மாதங்களாக தங்கள் இலக்கியங்களை வாசித்து வருகிறேன். சமீபத்தில் தங்கள் காடு நாவலை முழுவதுமாக படித்தேன். பல நாட்களாக அதிலிருந்து மீள முடியவில்லை. கிரிதரன் போல நானும் முதலில் காடு கண்டு பயந்தேன். பின்பு காடு எனக்குள் மெல்ல விரிவடைய ஆரம்பித்தது.காடு என்பது குறுகிய எல்லைகளுக்குள் அடைக்க முடியாது,நம் மனமும் அப்படியே.

 

பருவ நிலைகளுக்கு ஏற்ப காடு எவ்வாறு மாறுகிறதோ, அதேபோல் தான் கிரியின் மனமும். குட்டப்பன் என்ற மனிதனிடம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உரிய எளிய தீர்வு இருந்தது. அவரது சமையல் மிகவும் பிடித்துப் போனது.

 

நடுவே தாங்கள்  குறிப்பிட்ட வன நீலி கதை படித்து இரவில் காய்ச்சல் ஏற்பட்டது. வனநீலிக்கு நான் என் மனதில் ஒரு கொடூர பிம்பம் கொடுத்துவிட்டதால் என்னவோ, நீலியை பற்றி படிக்கும்போதும் அதே பிம்பம் தோன்றியது.

 

ஆனால், கிரிதரன் காட்டிற்கு அம்மாவுடன் இடம்பெயர்ந்து வந்து வருவதாக கூறும்போது வேண்டாம் என பதறும் போது  நீலி ஒரு தேவதையாகவே எனக்கு தோன்றுகிறாள்.

 

அதிகம் பேசிக் கொள்ளாவிட்டாலும் கிரியின் மீது அளவுகடந்த அன்பும் புரிதலும் நீலீக்குள் இருக்கிறது. எவ்வாறு அப்புரிதல் ஏற்பட்டது? என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது.

 

நீலி ஏன் இறந்து போய்விட்டாள் என்ற ஆதங்கமும், கிரியும் அவளும் திருமணம் செய்து கொண்டால் எவ்வாறு இருக்கும் என்ற கற்பனையும் எனக்குள் எழுந்தது. இந்த கற்பனை சரியா தவறா என்று தெரியவில்லை.

 

கிரியை தவிர வேறு உலகமே தெரியாத வேணி,தேவாங்கை மகள் போல பாவிக்கும் ரெசாலம், அப்பாவை குறை கூறாமல் வீட்டு பொறுப்பை ஏற்க நினைக்கும் கிரியின் மகன்,தன் மகனை ஒரு நல்ல இடத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் கிரியின் அம்மா அனைவருமே எதார்த்தத்தின் உச்சகட்டம்.

 

கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட இப்படி ஒரு படைப்பை முழுவதுமாக படித்ததில் மகிழ்ச்சி.இப்படி ஒரு அனுபவத்தை எனக்கு அளித்த தங்களுக்கு நன்றி.

 

காடு என்னை பொருத்தவரை ஒரு சிறந்த வாழ்நாள் அனுபவம். நான் தற்போது இன்றைய காந்தி வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

 

நன்றி,

மாதவி சிவதாணு.

 

 

அன்புள்ள மாதவி

 

காடு முதலில் ஒரு நேரடியான காதல்கதையாகத் தோன்றும். அதில் நீலி உட்பட அனைத்துமே வெவ்வேறு குறிப்புப்பொருட்கள் கொண்டவர்கள். அதனுடன் வாழ்க்கையை இணைத்துக்கொள்ளும்தோறும் அது தெளிவுறும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்

 

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

காடு நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். என்னால் என் உணர்வுகளை எழுதமுடியுமென தோன்றவில்லை. ஏன் எனக்குக் காடு இவ்வளவு முக்கியமாக இருந்தது என்று மட்டும் எண்ணிப்பார்க்கிறேன். நாம் வாழும் உலகம் கட்டுப்பாடுகள் கொண்டது. ஆனால் காடு கட்டுப்பாடுகள் இல்லாதது. அது ஒரு கொண்டாட்டம். காட்டுக்குள் சதுரம் நீள்சதுரம் முக்கோணம் போன்ற வடிவங்கள் இல்லை என காடு நாவலில் ஓர் இடத்தில் வருகிறது. என்னைப்போன்ற ஒரு பெண் காட்டுக்குள் செல்லவே முடியாது. தனியாகச் செல்வது கனவிலும்கூட கிடையாது. ஆகவே காடு எனக்கு ஒரு ரகசியக்கொண்டாட்டமாக இருக்கிறது என நினைக்கிறேன்

 

உஷா விஜயகுமார்

 

அன்புள்ள உஷா

 

காடுபிடித்தல், காடுகேறுதல் என்று பல சொல்லாட்சிகள் மலையாளத்தில் உண்டு. கட்டுமீறிப்போதல், வடிவமழிந்துவிடுதல் என்னும் பொருள்கொண்டவை அவை

 

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

குருதி [சிறுகதை]

$
0
0

சேத்துக்காட்டார் என்று சொன்னபோது ஊரில் எவருக்கும் யாரென்றே தெரியவில்லை. ‘சேக்கூரானா? மாடு தரகு பாப்பாரே?’ என்று கலப்பையும் கையுமாகச் சென்றவர் கேட்டார்

சுடலை ‘இல்லீங்க..இவரு கொஞ்சம் வயசானவரு….’ என்றார்

‘வயசுண்ணா?’

‘ஒரு எம்பது எம்பத்தஞ்சு இருக்கும்’

‘இந்தூரா?’

‘ஆமாங்க..’

‘அப்டி யாரு நம்மூரிலே?’ மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘நமக்கு அவரு என்னவேணும்?’ என்றார்

சுடலை அரைக்கணம் தயங்கிவிட்டு ‘நான் அவருகூட செயிலிலே இருந்தேன்’ என்றார்

கலப்பைக்காரர் முகம் மாறியது. ‘நமக்கென்னாங்க தெரியும்…நானே குத்தகைக்கு எடுத்து ஓட்டிட்டிருக்கேன்…வரட்டுங்களா?’ என்றார். சுடலை மேலே பேசுவதற்கு முன் அவர் சென்றுவிட்டார்

சுடலைக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி அந்த மண்ணில் அத்தனை வருடம் வாழ்ந்த ஒருவரை ஊரே மறந்திருக்க முடியும்? வேற்றூர்க்காரர் ஒன்றும் இல்லை. அதே ஊரில் பிறந்து வளர்ந்து விவசாயம் பார்த்துப் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய சம்சாரி. ஒருவேளை செத்துப்போய்விட்டாரோ. செத்தாலும் எப்படி தடமில்லாமல் ஆக முடியும்?

சேத்துக்காட்டார் என்றால் ஜெயிலில் எல்லாருக்கும் ஒருபயம்தான். இரட்டைக்கொலை. இரண்டுதலைகளையும் இரு கைகளிலாக எடுத்துக்கொண்டு எட்டு மைல் நடந்துசென்று போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தார். தூக்கு கிடைத்தது. பிறகு விதவிதமான மறுபரிசீலனைகள் கருணைமனுக்கள். குற்றம் நடக்கும்போது சேத்துக்காட்டாருக்கு வயது அறுபத்திரண்டு. அதுதான் அவருக்குக் கைகொடுத்தது. இரட்டை ஆயுள்தண்டனையாக முடிந்தது.

சுடலை கைதாகி உள்ளே போனபோது சேத்துக்காட்டார் ஏற்கனவே பதிமூன்று ஆண்டுகளை சிறையில் கழித்துவிட்டார். நரைத்த தலைமுடி. புருவம்கூட நரைத்திருந்தது. ஓங்குதாங்கான உருவம். மண்ணில் வேரோடிய கருவேலமரம் மாதிரி உடம்பு. அதிகம் பேசமாட்டார்.

ஜெயிலில் மரியாதையே ஒருவர் செய்த குற்றத்தை வைத்துதான். ஆனால் அதற்கும் மேலாகவே சேத்துக்காட்டாருக்கு ஒரு இடம் இருந்தது. அது ஏன் என்பது அவர் ஜெயிலுக்குச் சென்ற எட்டாம்நாள் தெரிந்தது. சில்லறைத்திருட்டும் அடிதடியுமாக ஜெயிலுக்கு வந்த சங்கரப்பாண்டியை பார்த்தாலே பெரிய கரைச்சல்காரன் என்று தெரிந்தது. சுடலை சாப்பாட்டை வாங்கிக்கொண்டு சென்று அமர்ந்ததும் அவன் அருகே வந்தான். ’மாமா, தட்ட இந்தப்பக்கமா நீட்டுறது…. மருமான் பசியால துடிக்கிறேன்ல?’ என்றான்

‘இம்புட்டுதானேய்யா இருக்கு?’ என்றார் சுடலை. முதல்நாள் தட்டில் களியாக வேகவைத்து உருட்டிய சோற்றை அவர்கள் போட்டபோது உண்மையிலேயே அவருக்குத் துணுக்கென்றது. இவ்வளவு சோற்றையும் தின்று எப்படி வாழ்வது? ஊரில் அவர் படிப்படியாக சோறு போட்டுக்கொள்ளமாட்டார், கூம்பாரமாக சோற்றைக் குவித்து நுனியில் குழி எடுத்து அதில் குழம்பை ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால்தான் நிறைவாக இருக்கும்.

‘குடுங்க மாமா..பெரியபேச்சு பேசறீங்க’ என்று சங்கரப்பாண்டி தட்டைப் பிடிக்க சுடலை சற்று கோபமாக ‘விடுடா டேய்’ என்றார்.

‘என்ன மரியாத கொறையுது?’ என்று முறைத்தவன் எதிர்பாராத கணத்தில் தரையிலிருந்து மண்ணை அள்ளி சோற்றிலே போட்டுவிட்டான். சுடலை கொதித்து எழப்போய் மறுகணமே அடக்கிக் கொண்டார். இவன் சிறைப்பறவை. நான் ஒரு எதிர்பாராத பிரச்சினையால் இங்கே வந்தவன். எனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனக்கு நிலமிருக்கிறது. ஆனால் கைகால்கள் நடுங்கின

‘டேய் என்னடா மொறைக்கிறே?’ என்றான் சங்கரப்பாண்டி

சுடலை பார்வையைத் திருப்பிக்கொண்டார். கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

அப்போது சேத்துக்காட்டார் எழுந்து வந்தார். ‘டேய் உன் சோத்த அவனுக்குக் குடுத்திட்டு அந்த சோத்த நீ எடுத்துக்க’ என்றார். நிதானமான கனத்த குரல்

சங்கரப்பாண்டி ” என்ன பெரிசு…கொரலு ஓங்குது? போ போ …போய் அந்தால ஒதுங்கு’ என்றான்

சேத்துக்காட்டார் மேலும் நிதானமான குரலில் ‘குடுத்தா நீ நாளைக்கும் உசிரோட இருப்பே….எனக்கு ரெட்டக்கொலைக்கு ரெட்ட ஆயுள்… இன்னொரு கொலையச் செஞ்சாக்க எனக்கு புதிசா தண்டன இல்ல பாத்துக்க’ என்றார்.

அவர் கண்களைப்பார்த்த சங்கரப்பாண்டி திகைத்துவிட்டான். கை இயல்பாக நீண்டு அவன் தட்டை சுடலையை நோக்கி நீட்டியது.

அதன்பின் பெரியவருக்கு சுடலைதான் மிக நெருக்கமானவராக இருந்தார். ஜெயிலில் இருந்த இரண்டுவருடமும் அனேகமாக தினமும் கூடவே இருந்தார். பெரியவர் பொதுவாகப் பேசுவதேயில்லை. பகல் முழுக்க மூர்க்கமாக மண்ணில் வேலைசெய்வார். ஜெயிலுக்குள் ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடந்தது, அதில் பாதி மரங்கள் பெரியவர் நட்டு வளர்த்தவை என்றார்கள். இரவில் கம்பிக்கு அருகில் வெளிச்சமுள்ள இடத்தில் இருந்துகொண்டு கொண்டு வந்திருந்த மரக்கட்டைகளைச் செதுக்கிக் கொண்டிருப்பார். செதுக்கி பாலீஷ் போட்டு முடிக்கையில் யானைத்தலையோ கழுகுமுகமோ கொண்ட கைத்தடிகளாக அவை உருவாகிவரும். பெரும்பாலும் வார்டர்களுக்கே கொடுத்துவிடுவார். செதுக்கும்போது மொத்த முகமும் கூர்ந்து கவனமாக இருக்கும். வாயை மட்டும் மெல்வதுபோல அசைப்பார்

ஒன்றரை வருடம் கழித்துதான் அவர் ஏன் ஜெயிலுக்கு வந்தார் என்பது சுடலைக்குத் தெரிந்தது. இரண்டு வருடங்களில் ஒரேஒருமுறைதான் அவரது வீட்டார் அவரை மனுபோட்டு பார்க்க வந்திருந்தார்கள். அவரது பேத்தி வயதுக்கு வந்திருந்தாள். பட்டுப்பாவாடை கட்டி நகைபோட்ட கரிய குண்டுச்சிறுமியுடன் அவள் அப்பா ஜெயிலுக்கு வந்திருந்தான். பார்க்க சேத்துக்காட்டார் மாதிரியேதான் இருந்தான். ஆனால் அந்த உறுதியும் உள்ளிறுக்கமும் இல்லாத சாதாரண மனிதனாகவும் தெரிந்தான்.

சேத்துக்காட்டார் தயக்கமாகத்தான் போனார். கம்பிக்கு அப்பால் நின்ற சிறுமியைக் கண்டதும் நடை தளர்ந்தது. மெதுவாக அருகில் சென்று நின்று அவள் தலையில் கைவைத்து வருடினார்.பின்னர் மெல்லியகுரலில் ‘எதுக்கு இங்கல்லாம் கூட்டிட்டுவாறே? சொல்லியிருக்கேன்ல?’ என்றார்

‘இவதான் கேட்டா….பின்ன, என்னதான் இருந்தாலும் உங்க ஆசீர்வார்தமில்லாம…’

‘அது இருக்கே…எங்க இருந்தாலும் இருக்கே..’

‘இருந்தாலும்…’

‘டேய் நான் செத்தாச்சுன்னு நினைச்சுக்கடா…போடா…’ அவரது உரத்த குரல் கேட்டு எல்லாரும் பேச்சை நிறுத்திவிட்டுத் திரும்பினார்கள். சேத்துக்காட்டார் சட்டென்று பேத்தி தலயில் மீண்டும் கைவைத்து ‘நல்லா இரும்மா…மவராசியா பெத்து நெறைஞ்சு இரும்மா’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டார்

அன்றிரவு அவர் குச்சி செதுக்கவில்லை. சுவரையே பார்த்துக்கொண்டு பேசாமலிருந்தார். பின்னர் ‘டேய் உனக்கு எவ்வளவு நெலமிருக்கு?’ என்றார்

‘அதுகெடக்கு நாலஞ்சு ஏக்கர். வெறும் முள்ளு…ஆடுகடிக்க பச்சை இல்லை’ என்றார் சுடலை

‘பொட்டக்காடா இருந்தாலும் அதுதாண்டா உனக்கு அடையாளம். நீ செத்தா விளப்போற எடம்டா அது. நாளைக்கு உம்பிள்ளையும் அங்கதான் அடங்குவான்…டேய் மண்ணில்லாதவன் மனுசனில்ல. மிருகம்…தெரிஞ்சுக்க’

பிறகு அவரே அவரது கதையைச் சொன்னார். அவருக்கு எட்டேக்கர் நிலமிருந்தது. பொட்டல்தான். ஆனால் இருபதுவருடம் இரவுபகலாக அதில் கல்லும் சரளும் பொறுக்கிப் போட்டு வயலாக்கினார். கிணறு வெட்டினார். மிளகாயும் சோளமும் தக்காளியும் போட்டார். நிலத்தில் பசுமை விரிந்தபோது ஊர்ப்பெரியமனிதர்களுக்கு எரிந்தது. ‘லே என்னலே சேத்துக்காட்டான்…சமுசாரி ஆயிட்டே போல… ‘ என்பார்கள். ‘ஏதோ இருக்கேன் ஐயா’ என்பார் பணிவாக. ’அப்டியே வெள்ளைய சுத்திக்கிட்டு வண்டிகட்டிக்கிட்டு வந்து பஞ்சாயத்திலே ஒக்காரவேண்டியதுதானேடா?’ ‘என்னய்யா நீங்க? …நான் ஏதோ கைப்பிடி மண்ணக் கிண்டிக்கிட்டிருக்கேன்…’

கொஞ்சம் கொஞ்சமாகப் பிரச்சினைகள் ஆரம்பித்தன. நிலத்தை விலைக்குக் கேட்டார்கள். விலையைக் கூட்டிப்பார்த்தார்கள். நான்குசாதிசனத்தை வைத்துப் பேசிப்பார்த்தார்கள். ‘இந்தாபாரு சேத்துக்காட்டான், நமக்கு இதெல்லாம் ஆகாது. சமுசாரித்தனம் செய்றவன் அதைச்செய்யணும். அப்பதான் அதுக்கு அழகு….ஏக்கருக்கு எட்டாயிரம் சொல்றாரு நாயக்கரு…இண்ணைக்கு இந்தூர்ல ஆயிரத்துக்கு மேலே போற நெலம் எங்க இருக்கு சொல்லு… பேசாம வாங்கிட்டு போ…’

‘இல்லீங்கய்யா… இது நான் ரத்தம் சிந்தி செதுக்கி எடுத்த மண்ணு…இந்த மண்ணுதானுங்களே நமக்கு ஒரு ஆதாரம்…இத விட்டுப்போட்டுட்டு எப்டிங்கய்யா?’ ஆனால் வற்புறுத்தல்கள் ஏறிக்கொண்டே போயின. ‘அவங்கள எதுத்து நீ இந்த நெலத்த வச்சுகிட முடியும்னு நினைக்கிறியா? விட்டிருவானுங்களா? இப்ப வித்தா பணமாச்சும் மிஞ்சும். சண்டையபோட்டுப் பறிச்சுக்கிட்டானுங்கன்னா அதுவுமில்ல பாத்துக்க’

அதன்பின் கேடிகள் வந்து மிரட்டினார்கள். ஒரே ராத்திரியில் ஒட்டுமொத்த சோளத்தையும் பறித்துக்கொண்டு சென்றார்கள். மிளகாய்ப் பாத்திகளில் மாடுகளை விட்டு அழித்தார்கள். இரவும்பகலும் தோட்டத்திலேயே கிடந்தார். இடுப்பில் அரிவாளுடன்தான் தூங்கினார். தங்கத்தைப் பொத்திப்பாதுகாப்பதுபோலப் பயிரைப்பாதுகாத்தார்.

ஒருநாள் ராத்திரி மூத்தவனைத் தக்காளித்தோட்டத்தில் காவலுக்கு உடகாரச்செய்துவிட்டு வீட்டுக்குப்போனார். திரும்பிவந்தபோது காவல்மாடத்தில் கழுத்துவெட்டுப்பட்டுக் கிடந்தான். அரையடி தள்ளிக்கிடந்தது தலை. தலையில் கையை வைத்துக்கொண்டு அங்கேயே அமர்ந்துகொண்டார். நாலைந்துநாளுக்கு பேச்சே நின்றுவிட்டது.

வழக்கம்போல போலீஸ் வந்து மகசர் எழுதினார்கள். அவர்தான் குற்றவாளி என்பதுபோல அங்குமிங்கும் நடத்தினார்கள். ஒருமாசத்தில் கேஸ் ஓய்ந்துவிட்டது. குற்றவாளிகள் யாரென்று தெரியவில்லை என்றார்கள்.

அவருக்குத்தெரிந்திருந்தது. ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஒன்றும் செய்யவுமில்லை. சிதைந்து அழிந்த தக்காளிச்செடிகளை ஒவ்வொன்றாக எழுப்பி நிறுத்திக் குச்சி வைத்துக் கட்டித் தண்ணீர் ஊற்றி மீண்டும் உயிர்ப்பித்தார். அந்த வருடம் அவருக்குத்தான் தக்காளியில் அதிக மகசூல். அவருக்குத்தெரியும் என அவர்களுக்கும் தெரியும். அவர்கள் எச்சரிக்கையாக இருந்தார்கள். கவனித்துக்கொண்டே இருந்தார்கள். அவர் விவசாயத்தில் மட்டும் மூழ்கி இருந்தார். சிரிப்பு மறைந்துவிட்டது. பேச்சு முழுக்க உள்ளுக்குள் புகுந்துவிட்டது.

அதன் பின் அவர்கள் வம்புக்கு வரவில்லை. எட்டு வருடம் அவர் எதையுமே வெளியே காட்டிக்கொள்ளவில்லை. எஞ்சிய இருபையன்களும் வளர்ந்து பெரியாளானார்கள். மூத்தவனுக்கு உள்ளூர் சொசைட்டியில் வேலை கிடைத்தது. இளையவளுக்குத் திருமணம் செய்து வைத்தார். சின்னவன் போலீசில் சேர்ந்தான். அவனுக்கு வேலைகிடைத்த மறுநாள் அவர் நாலடி நீளமான அரிவாளுடன் மேலகரம் நாயக்கர் வீட்டுக்குச் சென்றார்.

காலைநேரம் .வீட்டுமுன்னால் நாயக்கர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அருகே பெரிய கோளாம்பி. வெற்றிலைத்தட்டம் ஸ்டூல்மேல் இருந்தது. பக்கத்தில் அவரது தம்பி சிக்கையா நின்றிருந்தான். பருத்திவாங்கவந்தவர்கள், சாணிஎருவை அள்ளி மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தவர்கள் என பத்துப்பதினைந்துபேர் இருந்தார்கள். ’என்னடா சேத்துக்காட்டான்? என்ன விசயம்?’ என்றார் நாயக்கர்

‘எட்டுவருசமா என் பிள்ளைய மேல வரட்டும்னு காத்திருந்தேன்’ என்றார் சேத்துக்காட்டார். நாயக்கர் புரிந்துகொள்வதற்கு முன் சட்டென்று படியேறி அவரை ஒரே வெட்டில் வெட்டி வீழ்த்தினார். சிக்கையா முற்றத்தில் பாய்ந்து ஓடினான். அவனை இரண்டே எட்டில் பிடித்தார்

‘கொல்லாதே…கொல்லாதே’ என்று சிக்கையா கதறினான்.

’பெத்தவனுக்க அக்கினியிலே இது’ என்றபடி ஒரே வெட்டில் அவனைத் துண்டித்தார். இரு தலைகளுடன் , அக்குளில் அரிவாளுடன் பொதுச்சாலை வழியாக நடந்து சென்றார்.

‘ஒரு பிடி மண்ண வச்சுக்கிட எனக்கு உரிமை உண்டான்னு நாடு அறியட்டும்லே’ என்றார் சேத்துக்காட்டார். சுடலை அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

’இப்ப வருத்தப்படுறிகளா?’ என்றார் சுடலை ஒருமுறை

‘எதுக்கு?’

‘இனி வெளிக்காத்து கிட்டாதுல்ல?’

‘வேண்டாம்ல…ஆனால் இனி ஒரு ஏழையோட நெலத்தைத் தொடுறப்ப யோசிப்பானுகள்ல? நம்மாளுக நாலுபேரு துணிஞ்சு வெட்டாம இதுக்கு ஒரு தீர்ப்பு கெடையாதுலே மக்கா’

மேலும் ஒன்பது வருடம் கழித்து சேத்துக்காட்டானுக்கு மன்னிப்பு கிடைத்தது. சிறையில் இருந்து அவர் வெளியேவந்தபோது சுடலை பார்க்கப்போயிருந்தார். அவரது மகன் சொசைட்டியில் ஆபீசராக இருந்தார். பேத்திக்குத் திருமணமாகிப் பிள்ளையும் ஆகிவிட்டிருந்தது. ‘எல்லாம் மாறிப்போச்சுலே சுடலே…ஒத்த ஒரு தெரிஞ்ச ஆளு இல்ல பாத்துக்க…வேற ராச்சியம்போல இருக்கு’ என்றார் சேத்துக்காட்டார்.

டீக்கடையிலும் பஞ்சாயத்துபோர்டு ஆபீசிலும் சேத்துக்காட்டாரை எவருக்கும் தெரியவில்லை. சொசைட்டிக்காரரை சொல்லிக் கேட்டுப்பார்த்தார். அவரையும் தெரியவில்லை. அவர் சாத்தூர் பக்கம் வேலைசெய்வதாகச் சொன்னார் ஒருவர். அவருக்கே பெரிய பிள்ளைகள் இருக்கும்போல.

பஸ்ஸுக்காகக் காத்துநிற்கையில்தான் அதுவரை உள்ளூரக் கொந்தளித்துக்கொண்டிருந்ததைத் தொண்டையில் ஒரு பதற்றமாக கைவிரல்களின் நடுக்கமாக கால்களில் ஒரு பலமிழப்பாக உணர்ந்தார். ஊரில் பஸ் ஏறும்போது ராமரின் கடைக்குப்பின்புறம் சென்று குடித்ததுதான். ராமர் தின்பதற்கு ஏதும் வைத்திருப்பதில்லை. குடித்துவிட்டு அப்படியே திரும்பிவிடவேண்டியதுதான்.

ஒருரூபாய்க்கு ஊறுகாயாவது வாங்கலாமென நினைத்துக்கொண்டே ரோட்டுக்கு வரவும் பஸ் வந்தது. ஏறிக்கொண்டபின்புதான் போதை மேலேற ஆரம்பித்தது. ஆனால் நாக்கு தடித்து எச்சில் ஊறிக்கொண்டே இருந்தது. சன்னல் வழியாகத் துப்பிக்கொண்டே இருந்தார். பின்னிருக்கை ஆசாமி ஒருவன் ‘டேய் அறிவுகெட்ட கூமுட்ட…ஓடுற பஸ்ஸில துப்புறியே அறிவில்ல?’ என்றான். மெல்ல நடுங்கும் தலையுடன் அவனைத் திரும்பிப்பார்த்தார். வாயில் எச்சில்தான் கொழகொழவென்று வந்தபடியே இருந்தது. வெறித்துப்பார்த்தபடி சில கணங்கள் சென்றன. ஏதோ பேச நினைத்தார். ஒரு வார்த்தைகூடத் திரண்டுவரவில்லை. திரும்பிக்கொண்டார். தலை கனத்து துவண்டது.

எட்டுமாதம் முன்னால் இவன் என்னை இப்படிச் சொல்லியிருப்பானா? எட்டுமாதம் முன்னாலிருந்த சுடலை ஆளே வேறு. கையும்காலும் பனந்தடிபோல இருக்கும். குரல் உடுக்குபோல ஒலிக்கும். வேட்டியை இறுக்கிக் கட்டியிருக்கும் பச்சை பெல்ட்டில் எப்போதும் கட்டாரி வைத்திருப்பார். வெள்ளைத்துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு மீசையை நீவியபடி பஞ்சாயத்தில் அமர்ந்தாரென்றால் எதிர்ப்பேச்சு பேச ஆளிருக்காது

இன்று அவரைப்பார்க்க எப்படி இருக்க்கும்? வெயிலில் காய்ந்த வாழைத்தண்டு போல உடம்பு. இடுப்பளவு ஓடைத்தண்ணீரில் நடப்பது போல நடை. எல்லாவற்றையும் விட மரியாதை போயிற்று. கண்டவனிடமெல்லாம் கடன் வாங்கிக் குடித்தாயிற்று. குடிமகன் ராமுகூட ‘வே சும்மா போவும்வே அனத்தாம…அவனவன் சாவுறான்…குடிக்கதுக்கு சில்லறைக்கு வந்திருக்கீரு….போவும்வே போயி இடுப்பு துண்ட எடுத்து ரோட்டில விரிச்சிட்டு இரும். சாயங்காலம் அஞ்சோபத்தோ தேறும்’ என்று முகம்பார்த்து சொன்னபோது டீக்கடையில் இருந்த அத்தனை பேரும் சும்மா பார்த்துக்கொண்டிருந்தார்கள். எல்லாக் கண்களிலும் ராமு கண்களிலிருந்த அதே பாவனைதான். புழுவை, மலத்தைப் பார்க்கும் அருவருப்பு. எட்டுமாசம்…எல்லாமே இடிந்துவிழுந்த எட்டுமாசம்.

கம்பியில் தலையை சாய்த்துக்கொண்டபோது சட்டென்று கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. மார்பில் சொட்டும் நீர்த்துளிகளைத் தன் கண்ணீர் என்று உணர்ந்து துடைத்தார். ஆனாலும் கொட்டிக்கொண்டே இருந்தது. சட்டென்று வேறு எங்கிருந்தோ கேட்பதுபோல தன் கேவல் ஒலியைக் கேட்டார். பஸ்ஸே திரும்பிப்பார்த்தது. அவர் கண்ணீருடன் அவர்களை ஏறிட்டுப்பார்த்தார். ‘என்னய்யா?’ என்றார் கண்டக்டர். இருவர் சிரித்தனர். அவர் அண்ணாந்து நோக்கி விசும்பிக்கொண்டே இருந்தார். வந்திறங்குவது வரை மனசு உருகி கண்ணீராக சொட்டிக்கொண்டிருந்தது.

எங்கே சரக்கு கிடைக்கும் என உணர்வது கண்ணோ காதோ அல்ல. அது ஓர் உள்ளுணர்வு. அது இந்த எட்டுமாதங்களில் மிகவும் பெருகிவிட்டிருந்தது. சொல்லப்போனால் பிற எல்லா உணர்வுகளும் மழுங்கி அதுமட்டும் வளர்ந்திருந்தது. பஸ்ஸ்டாப்புக்கு அருகிலேயே விறகுக் கடையில் விற்றுக்கொண்டிருந்தான். பிளாஸ்டிக் டம்ளரில் அந்தக் கலங்கலான திரவத்தைக் கண்டதும் உடம்பு உலுக்கிக்கொண்டது. ஆனால் வாய் நிறைய எச்சில் நிறைந்தது. ஒரே மடக்கில் குடித்ததும் இன்னொரு உலுக்கல். உடம்புக்குள் அது எரிந்து இறங்குவதை உணந்தபடி சில கணங்கள் நின்றார்.

வேட்டியைத் தூக்கி அண்டர்வேரில் இருந்து பணம் எடுத்துக்கொடுத்தபோது உள்ளே குந்தி அமர்ந்திருந்த மொட்டைத்தலை ஆசாமி ‘அண்ணாச்சிக்கு எந்தூரு?’ என்று சினேகமாகக் கேட்டார்.

‘வடக்க’ என்றார் சுருக்கமாக

‘இங்கிண யாரப்பாக்க வந்திக?’

சொல்லலாமா என்று சிந்தித்துவிட்டு சொன்னார் ‘சேத்துக்காட்டாருண்ணுட்டு பெரியவரு ஒருத்தரு…செயிலிலே எல்லாம் இருந்திருக்காரு’

அவன் பெயர் மாரிமுத்து ‘தனலட்சுமி டீச்சரோட தாத்தன் ஒருத்தன் கெடக்காரு.அவரு செயிலுக்குப் போனவரு. போஸ்டுமேன் அவரு லெட்டர எங்கிட்ட குடுத்தான். நான் கொண்டுபோயிக் குடுத்திருக்கேன். செண்டிரல் ஜெயிலு லெட்டர்’ என்றான்.

’ஆளைக்காட்டுலே‘ என்றார் சுடலை.

‘நமக்கு சோலி கெடக்குல்ல? அண்ணாச்சி, இந்தா இப்டியே நேரா மேகாட்டுப் பனம்பொட்டலுக்குப் போங்க…செவலமேட்டில ஒரு சின்னக் குடிச தெரியும்….பெரியவரு அங்கதான் கெடப்பாரு… ’

‘செரிலே’ என்று சுடலை கிளம்பினார்

‘அண்ணாச்சி துப்புக் கூலி குடுக்கல்ல’ என்றான் அவன் சோழிப்பற்களைக் காட்டி

அவனுக்கு ஒரு இரண்டு ரூபாயைக் கொடுத்தபின் வேட்டியைத் தூக்கிக் கட்டியபடி நடந்தார். ஊருக்குள் இருந்து காலனிக்குள் செல்லும் பாதை. பாதையும் ஊரிலிருந்து வெளியேறும் சாக்கடையும் ஒன்றுதான் . நாலைந்து பன்றிகள் முட்டிக்கொண்டு உறுமின. பிளாஸ்டிக்தாள்களும் மட்கிய துணிகளுமாகக் குப்பை குவிந்துகிடந்தது. காலனியில் இருபது வீடுகள். இருபதும் குட்டிச்சுவர்களுக்குமேல் புல்வேய்ந்த கூரை கொண்டவை. எதற்குமே கதவுகள் இல்லை.சாணி மெழுகிய வாசலை வளைவாகக் குழைத்திருந்தார்கள். குகைவாசல் போல. சாக்குப் படுதாக்கள்தான் கதவு. குடிசைகளில் எவரும் இல்லை. இரண்டு சின்னப்பிள்ளைகள் துணியில்லாமல் மண்ணில் விளையாடிக்கொண்டிருந்தன. ஒரு கிழம் திண்ணையில் சுருண்டு கிடந்தது. அருகே கிடந்த நாய் எழுந்து ஆர்வமில்லாமல் மூக்கை நீட்டிப்பார்த்தது

காலனிக்கு அப்பால் பொட்டல் ஆரம்பித்தது . முழுக்க உடைமுட்கள். அவற்றில் காற்று கொண்டு வந்து மாட்டிவிட்ட பழைய துணிகளும் மழைக்காகிதங்களும் பல வண்ணங்களில் படபடத்தன. ஒற்றையடிப்பாதை நீண்டு சென்றது.

மேகாடு எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. மேடு என்று சொன்னான். ஆனால் அது ஊருக்கு மிக வெளியே இருந்தது. அதுவரை நடக்கவேண்டுமா என்று தயக்கமாக இருந்தது. தள்ளாட்டம் ஆரம்பமாகிவிட்டது. சமமில்லாத தலைச்சுமை ஒருபக்கமாக இழுப்பது போல உடம்பு அல்லாடியது. அதுவரை வெயிலில் நடந்தால் கீழே விழுந்தாலும் விழவேண்டியிருக்கும். அதன்பிறகு எழ முடியாது.ஆனால் வெறுவழியில்லை. வந்தாயிற்று.

செம்மண் மேடு. தூரத்தில் தெரிந்ததுபோல செங்குத்தான மேடு இல்லை. பனைவிடலிகள் செறிந்த சரிவுதான். நாலைந்து பனைகளைப் பிடித்துக்கொண்டு ஏறமுடிந்தது. மேலே ஒரு சாளை தெரிந்தது. பனையோலைகளைக்கொண்டு கூரை போடப்பட்டிருந்தது. காவல்மாடம் அளவுக்கே இருந்தது. காவல்மாடமாகக் கட்டப்பட்டதற்குக் கொஞ்சம் மண்சுவர் சேர்த்துக்கொண்டு குடிசையாக ஆக்கியிருக்கிறார்கள்.

குடிசை வாசலில் சென்று நின்றார். குடிசைக்குள் மனிதர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அப்பகுதியிலேயே மனிதநடமாட்டம் இல்லை என்று தோன்றியது. குடிசைமுற்றத்திலேயே முள்மண்டிக்கிடந்தது. திண்ணை இடிந்து மண்ணாகக்கிடக்க காற்றில் வந்த சருகுகள் சுவரில் மோதிக் குவிந்திருந்தன. ’அய்யா’ என்றார் சுடலை. அவரது குரல் அன்னியமாக அவருக்கே கேட்டது.

இரண்டாம் முறை கூப்பிட்டபோது உள்ளிருந்து ஒரு முனகல் ஒலித்தது. ‘அய்யா இருக்கீங்களா?’ என்றார் சுடலை

‘ஆரு?’ அது சேத்துக்காட்டாரின் குரல்தான்

‘நாந்தான் ,சுடலே’

‘உள்ள வா…’

மெல்ல திண்ணையில் ஏறினார். வெயிலில் வந்ததனால் கண்கள் இருட்டாக இருந்தன. உள்ளே தரையில் விரிக்கப்பட்ட பாயில் இரு கால்கள்தான் தெரிந்தன. செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே போனார்

‘வாலே’

சுடலை மெல்ல அமர்ந்தார். கண்கள் பழகியபோது கீழே கிடந்தவரை நன்றாகப் பார்க்க முடிந்தது. படபடப்பாக வந்தது.

‘என்னல பாக்கிறே? மனுசன் இப்டி காஞ்சபீயா கெடக்கானேன்னு நெனைக்கிறியா? எல்லாம் மக்கி மண்ணா போற ஒடம்புதானே போவட்டும்’ தொண்டையில் குரல்வளை ஏறி இறங்கிய போது சாரைச்செதில் படர்ந்த கரியசருமம் அசைந்தது.

சுடலை அவரது கைகளைத் தொட்டார். குளுகுளுவென அழுகிய மீன்போல நெளிந்தது சதை. சில்லென்றிருந்தது.

‘தனியா கெடக்கீங்க?’

‘எப்பவும் தனிமதானே? இங்க வசதியா காத்தோட்டமா இருக்கு…’

‘பேத்தி கூட இருக்கதா சொன்னாக’

‘அவதான் பாத்துக்கிடுதா….அவ ஊருக்குள்ள இருக்கா. சோறு குடுத்தனுப்புவா…வேற என்ன வேணும்?’

‘இருந்தாலும்…’

‘லே இது நான் பாத்துப்பாதுகாத்த நெலம் பாத்துக்க….கமல வச்சு தண்ணி எறச்சு நான் வெள்ளாம பண்ணின மண்ணு. இப்ப யாருக்கும் வெள்ளாமைக்கு நேரமும் இல்ல மனசும் இல்ல. இருந்தாலும் இது நம்ம மண்ணுல்ல? என் சடலம் இங்கதானே விளணும்?’

‘அங்க வீட்டிலே இருந்திருக்கலாமே வயசான காலத்திலே’

‘அவுகள்லாம் இப்ப பெரியாளாயாச்சுலே…செயிலுக்குப்போன கொள்ளுத்தாத்தாவப்பாத்தா பிள்ளையளுக்கு பயமா இருக்குண்ணு சொல்லுறா. மூத்தகுட்டிக்குத் தரம்பாக்கிறாக. பேச்சுவாறப்ப இவன் யாரு என்னன்னு கேள்வி வரத்தானே செய்யும்? இப்ப அவுக இருக்கிற இருப்புக்கு ரெட்டைக்கொலை செஞ்சு செயிலுக்குப்போன கதையச் சொல்ல முடியுமா? சரிதான்னு நானே இந்தப்பக்கமா நவுந்துட்டேன்…நீ ஒண்ணும் கவலப்படாதே…எனக்கு ஒரு கொறையுமில்ல…’

‘உடம்பு எப்டி இருக்கு?’

‘நடுவு தளந்துபோச்சு. எந்திரிக்கமுடியாது….சரி இனிமே என்ன? மிஞ்சிப்போனா இந்தக் கார்த்திகை. அதான் என் கணக்கு பாத்துக்க….எல்லாம் பாத்தாச்சுலே . இருந்து இருந்து சலிச்சுப்போச்சு. போனாப்போரும்னு ஆயாச்சு. எளவு, உத்தரவும் வரமாட்டேங்குது….சரி, நாம நினைச்சா வருமா? அவன் நினைக்கணும்….’

சுடலை பேசாமல் பார்த்துக்கொண்டே இருந்தார்

‘என்ன பாக்கே?’

‘மூத்தவன் வாறதுண்டா?’

‘ரெண்டுபேரும் வருவானுக…ஆனா அவனுகளுக்கும் வயசாச்சு. ஆயிரம் நோயிங்க அவனுகளுக்கும் இருக்கு….நாம இப்டி இளுத்துகிட்டு கிடந்தா அவனுக என்ன செய்வானுக?…செரி அது போவட்டு…நீ எப்டி இருக்கே? சரியா கண்ணு தெரியல்ல பாத்துக்க….’

அவர் சுடலையின் கையைப் பிடித்து உருட்டிப்பார்த்தார். ‘என்னல கையெல்லாம் ஒழவுகம்பு கணக்கா இருக்கு?’’ மூச்சு இழுத்து ‘சாராயம் மணக்குது….அப்ப அதுதான் என்னல?’

‘வாறப்ப கொஞ்சம் குடிச்சேன்’

‘கொஞ்சமில்ல…உனக்க கை நடுங்குது…நனைஞ்ச துண்ட முறுக்கினமாதிரி இருக்கு கை…லே நீ இப்ப இத்துப்போன குடிகாரன்…இல்லேண்ணு சொல்லு’

சுடலை உதடுகளை இறுகக் கடித்தார். நெஞ்சுக்குள் அழுத்தம் ஏறி ஏறி வந்தது.

‘வேண்டாம்லே…நீ பிள்ள குட்டிக்காரன்…ரெண்டு பயக இருக்கானுக ராமலட்சுமணன் மாதிரி..’

சட்டென்று அலறியபடி கிழவர் காலில் விழுந்துவிட்டார் சுடலை. மெலிந்த கால்களை இறுகப்பிடித்து மண்டையை அதில் மோதி மோதிக் கதறி அழுதார். அந்தக்கணமே செத்துவிடவேண்டும் என நினைப்பவரைப்போல. பெரியவரின் கை அவர் தலைமேல் படிந்து முடியைப் பற்றிக்கொண்டு நடுங்கிக்கொண்டிருந்தது

மெல்ல ஓய்ந்து தேம்பிக்கொண்டிருந்தபோது கிழவர் ‘போனது யாரு?’ என்றார்

‘மூத்தவன்யா….கருமுத்துஅய்யனாரு மாதிரி கண்ணு நெறைஞ்சு நின்னானே …என் செல்லம் என் ராசா…என் எஜமானே, நான் என்ன செய்வேன்? இனி என்னத்துக்கு நான் உசிரோட இருக்கணும்? நான் இனி என்ன மசுத்துக்கு மனுஷன்னு நடமாடணும்?’ மீண்டும் தலையிலறைந்துகொண்டு அழ ஆரம்பித்தார்

‘என்ன நடந்தது?’

‘அப்பவும் இப்பவும் ஒரே கததான் அய்யா… ஈனச்சாதி நெலம்வச்சிருந்தா விடமாட்டானுங்க…’

கிழவர் ‘முருகா…’ என்றார்

‘நெலத்தக் கேட்டானுக. குடுக்க மாட்டேன்னு சொன்னேன். சீண்டிட்டே இருந்தானுக. பய கொஞ்சம் சூடுள்ளவன். துணிஞ்சு நின்னான்….கைய வச்சிட்டானுக…அய்யா என் சக்கரவர்த்திய பழங்கந்தல மாதிரி அடிச்சு சுருட்டி முள்ளுக்காட்டில செருகி வச்சிருந்தானுகளே…அதக் கண்ணால பாத்துட்டு நானும் சோறு திண்ணுட்டு வாழுறேனே….அந்தக் கண்ண நோண்டி எறியாம இருக்கேனே’

‘ஆளத்தெரியுமாலே?’

‘தெரியும்….’

கிழவர் ‘ம்ம்?’ என்றார். அந்தப் பழைய சேத்துக்காட்டார் குரல் அது. குகைப்புலியின் ஒலி போல. சுடலைக்குப் புல்லரித்தது.

‘ம்ம்?’ என்றார் கிழவர் மீண்டும்

‘என் கையிலே அருவா நிக்கமாட்டேங்குது சாமி…நூறுவாட்டி ஆயிரம் வாட்டி மனசுக்குள்ள அவன வெட்டி சாய்ச்சாச்சு…முடியல்ல. சாராயத்த ஊத்தி தீய அணைச்சுகிட்டு படுக்கத்தான்யா முடியுது….என்னால முடியல்ல…என் காலு மண்ணில தரிக்கல….நான் அப்பவே செத்தாச்சு…இந்தச்சடலத்த வச்சுகிட்டு நான் அவன் முன்னால போயி நிக்கமுடியாது….என்னால முடியல்ல…என்னால முடியல்லய்யா’

கிழவர் பேசாமல் கண்கள் மின்ன படுத்துக்கிடந்தார்.

‘உங்களப்பாத்தா ஒரு தைரியம் வருமான்னு பாக்கவந்தேன்யா….வீட்டுப்பாத்திரத்த எடுத்து வித்து அந்தப்பணத்திலே வெசாரிச்சு வந்தேன்…ஆனா நீங்க இந்தக் கெடை கெடக்கிறீக….என்னத்துக்கு இதெல்லாம்னு தோணுது. எதுக்கு வெட்டும் குத்தும்? அந்தப் பாழாப்போன நெலத்துக்கா? அந்தப் பொட்டக்காட்டுக்கா நான் என் செல்லத்த பலிகுடுத்தேன்? வேண்டாம்….அந்த மண்ணு நாசமா–’

பளாரென்று கன்னத்தில் அறை விழுந்தது. காதுஅடைக்க விழுந்த அறையில் சுடலை பொறி கலங்கி சரிந்து பொத்திப்பிடித்துக்கொண்டார். ஊன்றிய கை ஆடியது. அவர் நிமிர்வதற்குள் கிழவர் தன் ஒரு கையை ஊன்றிக் கடைசி உந்தலில் எழுந்து பாதி அமர்ந்துவிட்டார். வற்றிச்சுருங்கிய முகம் உணர்ச்சிமிகுதியால் கோணலாகியது. தாடை ஆட கழுத்துச்சதைகள் நெளிந்து நெளிந்து இழுபட்டன.

‘ச்சீ…பிச்சக்காரப்பயலே….நெலத்தையா பழிக்குறே? லே நெலம் உனக்கும் எனக்கும் தாயாக்கும்லே…நீயும் உன் சந்ததிகளும் இந்த மண்ணில மனுஷனா வாழணுமானா கையிலே நெலமிருக்கணும்…நீ ஆம்புளையானா போயி அவன வெட்டுல.. வெட்டிட்டு நீயும் சாவுலே… உன்னால முடியல்லேண்ணா உனக்க மகன அனுப்பு…நீயும் உன் வம்சமும் வெட்டிச் செத்தாலும் சரி, ஒரு துண்டு நெலத்த விடாதீங்க ….நம்ம சந்ததிகளுக்கு நாம செய்ற கடமைலே…’

ஊன்றிய கை வெடவெடவென ஆட கிழவர் அப்படியே மல்லாந்து விழுந்தார். மறுகையால் தரையைப் படார் படார் என ஓங்கி அறைந்தார். ‘மனுசனா வாழணும்ல…நாயா பண்ணியா வாழாதே. மனுஷனா வாழு…மனுஷனா வாழுலே…லே மனுஷனா வாழுலே’

இருமல்களும் மூச்சுத்திணறல்களுமாக தன் முன் கிடந்து நெளியும் அந்த வற்றிய உடலை சுடலை விழித்துப்பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

Mar 1, 2013 முதற்பிரசுரம்

 

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-27

$
0
0

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 8

குழல்கற்றைகள் ஈரமாக இருந்தமையால் தலைப்பாகை அணிய முடியவில்லை. தலைதுவட்டிக்கொண்டிருந்தபோது நகுலன் உள்ளத்தால் யுதிஷ்டிரனின் அவைக்கு சென்றுவிட்டிருந்தான். அங்கே என்ன சொல்லவேண்டும் என்று சொல்லை எடுத்து கோக்கத் தொடங்கியபோதுதான் தன் உள்ளம் திருதராஷ்டிரரின் குடிலில் நிகழ்ந்த அனைத்திலிருந்தும் மிக விலகி, எண்ணி எடுக்கத்தக்க சில சொற்களாக அனைத்தையும் மாற்றிவிட்டிருப்பதை உணர்ந்தான். அதன்பொருட்டே வேறெங்கோ சென்றது அகம். எதைஎதையோ கோத்தது. எவற்றையெல்லாமோ எடுத்து போர்த்திக்கொண்டது.

திருதராஷ்டிரரின் குடிலில் நிகழ்ந்தது வாழ்நாள் இறுதிவரை நீடிக்கும் ஒரு நினைவு. அல்லது நாளையே அதை உள்ளம் கழித்துவிடவும்கூடும். அத்தருணத்தின் அறியமுடியாமையும் உணர்வுச்சுழல்களும் அடியிலியைச் சென்றடைந்து மீண்ட அவ்வெறுமைப்பெருவெளியும் இத்தனை எளிதாக சொல்லாக மாறுமென்பதை எண்ணும்போது அவனுக்கு விந்தையானதோர் நிறைவும் பின்னர் புன்னகையும் தோன்றியது. சொல்லைப்போல் முடிவுற்றுவிட்ட பிறிதொன்றில்லை. மீண்டும் நேரடி நிகழ்வினூடாக, கற்பனையினூடாக அதைத் திறந்து விரித்தாலொழிய அது ஒன்றையே சுட்டி நின்றிருக்கும்.

அவன் யுதிஷ்டிரனின் அவைக்களம் நோக்கி செல்கையில் அச்சொற்களை மீண்டும் ஒருமுறை முறையாக கோத்து அடுக்கி உருவமைத்துக்கொண்டான். ஆகவே அவன் நடை சீரான காலடிகளாக அமைந்தது. யுதிஷ்டிரன் தன் குடிலுக்கு வெளியே சாலமரத்தடியில் போடப்பட்டிருந்த தாழ்வான மூங்கில் பீடத்தில் அமர்ந்திருக்க சகதேவன் அவர் அருகே பின்னால் அமர்ந்திருந்தான். சற்று அப்பால் மரங்களில் சாய்ந்தபடி பீமனும் அர்ஜுனனும் நின்றனர். ஏவலர்கள் மேலும் விலகி நிற்க தௌம்யர் யுதிஷ்டிரனுக்கு நேர் முன்னால் உயரமான மரப்பீடத்தில் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் அவருடைய மாணவர்கள் நின்றனர். யுதிஷ்டிரனுக்கு வலப்பக்கம் அமைச்சர்கள் நின்றிருந்தனர்.

அவர்கள் மெல்லிய குரலில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அப்பேச்சு அத்தனை செறிவானதல்ல என்பது அவர்களின் விழிகள் அலைந்ததில் இருந்து தெரிந்தது. யுதிஷ்டிரன் முதலிலேயே நகுலனை பார்த்துவிட்டார். அவருடைய சொல் தயங்கியதும் தௌம்யரும் பிறரும் திரும்பி நோக்கினர். நகுலன் அருகணைந்து சொல்லின்றி தலைவணங்கி நின்றான். யுதிஷ்டிரன் அவனை நிமிர்ந்து பார்த்து சற்றே எரிச்சலுடன் “நெடும்பொழுதாக உனக்காக காத்திருக்கிறோம்” என்றார். “நான் அங்கிருந்து வந்து ஒற்றர்களை சந்தித்து சில ஆணைகள் விடுக்க வேண்டியிருந்தது” என்றான் நகுலன். என்ன என்பதுபோல் யுதிஷ்டிரன் ஏறிட்டுப் பார்த்தார்.

“பிற அரசியரும் திருதராஷ்டிரருடன் தங்க விரும்பினார்கள். அதனால் என்ன நிகழும் என்பதை எண்ணவேண்டியிருந்தது. ஆனால் அது முறையானது என்பதனால் அவர்களை அங்கு அனுப்ப ஆணையிட்டேன்” என்றான். யுதிஷ்டிரன் “அவர்கள் அங்கு தங்க இடமிருக்கிறதா?” என்றார். “இப்போது அவர்கள் பேரரசருடன் இருக்கிறார்கள். இன்று மாலைக்குள் அவர்களுக்கான குடில்களை அங்கு போட்டுவிடமுடியும். அனைத்துக்கும் ஆணையிட்டிருக்கிறேன்” என்று நகுலன் கூறினான்.

அப்பேச்சினூடாக அவர்களின் எண்ணங்களை அவன் திருதராஷ்டிரரின் மேல் திருப்பிவிட்டான். தௌம்யர் “அவர்கள் அவருடன் இருப்பது நன்று” என்றார். ஆனால் கூடவே மெல்லிய குரலில் “அவர்கள் பதின்மர்” என்றார். அவர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டதுபோல் அச்சொல் ஒலித்தாலும் அனைவரும் திரும்பி கூர்ந்து நோக்கினர். அவரே அச்சொற்களை உணர்ந்து “பத்து முகங்களைப்போல. உள்ளத்தின் பத்து வடிவங்கள்” என்றார். “ராவணப்பிரபுவைப்பற்றி அவ்வண்ணம் சொல்வதுண்டு. அவருடைய பத்து ஆணவநிலைகள் அவை என. இவை அறத்துணையின் பத்து வடிவங்களாக இருக்கக் கூடும்.” அப்போதும் அவர் சொல்ல வருவதென்ன என்று நகுலனுக்கு புரியவில்லை. யுதிஷ்டிரன் தவிர பிறர் அதை உளம்கூர்ந்து எண்ணவுமில்லை.

தௌம்யர் நகுலனை நோக்கிவிட்டு “அவர்கள் அறத்துணை என்பதன் எடுத்துக்காட்டுக்கள் என்பதை மறுக்கவேண்டியதில்லை. ஆனால் பத்து நிலைகள். பத்து எனில் கொழுநருக்காக கண்களை கட்டிக்கொண்ட காந்தாரி ஓர் எல்லை. மறு எல்லையில் உளம் உடைந்து சாளரத்தில் அமர்ந்தவள்… விழியின்மை. பற்று என்பது ஒரு விழியின்மை. கற்பு என்பதும் இன்னொரு விழியின்மையே” என்றார். புன்னகைத்து “நான் சொல்லவருவதை சொல்லிவிட்டேனா என்று தெரியவில்லை. இதெல்லாம் சற்றே வழிவிட்டுச் செல்லும் எண்ணங்கள். என் குருமரபுக்கு மட்டுமே உரியவை. பிறர் இவற்றை உளக்கோணல் என்றே எண்ணக்கூடும்” என்றார்.

“சொல்க!” என்றார் யுதிஷ்டிரன் தணிந்த குரலில். “இப்படி சொல்கிறேன். உலகளந்தானுக்கு மஞ்சமும் குடையும் ஆகி நின்றிருக்கும் முதல்நாகம் ஆயிரம் தலைகொண்டது. ஈராயிரம் நா கொண்டது. வாழ்த்தும் பணிவும் என அதன் நா ஓயாது ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் ஆயிரத்தின் மடங்குகளில் என பெருகிச் செல்லும் அச்சொற்களில் பலகோடியில் ஒன்று அவர்மேல் நஞ்சு கக்கும் என்று தப்தகீதிகை சொல்கிறது.” நகுலன் அவர் சொல்லவருவதை புரிந்துகொண்டு “ஆம், அதற்கும் வாய்ப்புள்ளது” என்றான். யுதிஷ்டிரன் “என்ன வாய்ப்பு?” என்றார். தௌம்யரை நோக்கி “என்ன நிகழும்?” என்றார். நகுலன் “நமக்கு வேறு வழியில்லை, அமைச்சரே” என்றான். “ஆம், அவருக்கும் வேறுவழியில்லை” என்றார் தௌம்யர்.

மீண்டும் ஒரு சொல்லின்மை உருவாகியது. காடு ஓலமிட்டுக்கொண்டிருந்தது. நகுலன் தௌம்யரை பார்த்துக்கொண்டிருந்தான். வேதம் பெருங்கனவென எழுந்து ஆட்டிவைக்கும் காடுகளை அவன் கண்டு மீண்டிருந்தான். இங்கே அது அன்றாட உலகியல் மெய்மையாக, அவற்றை நிகழ்த்தும் சடங்குகளாக மாறி அமைந்திருக்கிறது. வேதமுடிபினர் அளவைநோக்கை வெறுப்பதை அவன் கண்டிருந்தான். ஆனால் அப்போது அதுதான் பயனுள்ளதா என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒவ்வொன்றையும் இயற்கை ஒளியில் அவற்றுக்கான மெய்யான அளவில் நிறுத்துகிறது. தெய்வங்களையும் அளந்தே வைத்திருக்கிறது அளவைநோக்கு. வேதமுதன்மைநோக்கு என்கிறார்கள் அவர்கள். வேதம் அவர்களின் அளவுகோல். அதை மாற்றிக்கொள்ள அவர்களால் இயலாது.

யுதிஷ்டிரன் பொருளற்ற எண்ணங்களில் உழல்வதை அவருடைய விழிகளின் மங்கல் காட்டியது. சற்று நேரம் கழித்து உளம் மீண்டு அசைந்தமர்ந்து “நாம் பேரரசரைக் கண்டு வணங்கி சொல் பெற்ற பின்னரே நீர்க்கடன் தொடங்கவேண்டுமென்று தௌம்யர் ஆணையிடுகிறார், இளையோனே” என்றார். நகுலன் “ஆம், அது முறையே” என்றான். யுதிஷ்டிரன் மேலும் ஒவ்வாமையை உடலில் காட்டி “ஆனால் நாம் சென்று வணங்கி சொல் பெறும் நிலையில் அவர் உள்ளாரா? இப்போது இந்த அவை அறிய வேண்டியது அதுவே” என்றார்.

நகுலன் “எந்நிலையிலாயினும் அவர் நம் தந்தை” என்றான். யுதிஷ்டிரன் பெருகும் எரிச்சலுடன் உரக்க “நான் உன்னிடமிருந்து நெறியுரைகளை எதிர்பார்க்கவில்லை. இன்று நிகழ்ந்ததை வைத்து உன் கணிப்பென்ன என்று அறியத்தான் உன்னை அழைத்தேன்” என்றார். அவர் எரிச்சல்கொண்டது நகுலனுக்கு உவப்பாக இருந்தது. அவன் தன் நிலையழிவை கடந்து நின்று சொல்லெடுக்க வாய்ப்பாக அமைந்தது அது. “இன்றைய நிகழ்வுகளை வைத்து நாம் எதையும் முடிவெடுக்க முடியாது” என்றான். “ஆம், ஆனால் நிகழ்ந்தவையே அடையாளம்… சொல்” என்றார் யுதிஷ்டிரன்.

தௌம்யர் “இன்று பேரரசி அரசரைச் சென்று சந்தித்தபோது என்ன நிகழ்ந்தது? அதை முதலில் சொல்க!” என்றார். நகுலன் “அவர்கள் இன்று மைந்தரை இழந்த தந்தையும் தாயும் மட்டுமே. அறுதியில் அவர்களிடம் எஞ்சியது அந்நிலை மட்டும்தான். அதுவே நிகழ்ந்தது. தழுவிக்கொண்டு விழிநீர் உகுத்தனர்…” என்றான். யுதிஷ்டிரன் கை நீட்டி அவனைத் தடுத்து “அவ்வாறே நிகழும் என்று நானும் எண்ணினேன். அத்துயர் உச்சியில் அவர்கள் வெஞ்சினம் கொண்டார்களா? நம்மைக் குறித்த பழிச்சொற்கள் அவர்கள் நாவில் எழுந்தனவா? பேரரசியோ அரசரோ நம்மை தீச்சொல்லிட வாய்ப்புண்டா? நாம் சென்று அவர்களைப் பார்ப்பது நலம் பயக்குமா? நான் அறிய விரும்புவது அதை மட்டும்தான்” என்றார்.

நகுலன் கசப்புடன் “இத்தருணத்தில் மானுடரைப் பற்றி என்ன சொல்ல இயலும்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையிலிருக்கிறார்கள். முந்தைய கணம் அடுத்த கணத்தை உருவாக்காமல் ஆகிவிட்டிருக்கிறது இங்கே. மூத்தவரே, இன்று எவரைப் பற்றியும் எக்கணிப்பையும் சொல்லும் நிலையில் நானில்லை” என்றான். பீமன் உடலை அசைத்து எழுந்தபோது கைகள் மார்பிலிருந்து தழைந்தன. “இப்பேச்சுக்கு பொருளே இல்லை. நாம் சென்று அவரைப் பார்த்து வணங்கி சொல் பெறவேண்டுமென்பது முறையெனில் அதை செய்வோம். அதன் பொருட்டு தீச்சொல்லோ பழிச்சொல்லோ வருமெனில் அது நமக்குரியது என்றே கொள்வோம். எண்ணிச் சூழ்ந்து இங்கு அமர்ந்திருப்பதுபோல் வீண்செயல் பிறிதில்லை” என்றான்.

யுதிஷ்டிரன் “வாயை மூடு… நீ அவர் முன் சென்று நின்றிருக்கப்போகிறாயா? கீழ்மகனே, நீ அவருக்குச் செய்தது என்ன என்பதை உணர்ந்திருக்கிறாயா? ஒரு தந்தையின் நூறு மைந்தரையும் ஆயிரம் பெயர்மைந்தரையும் கொன்றுவிட்டு அவரை எதிர்கொள்ளப்போகிறாய்” என்றார். “நான் அவர்களை போரில் வென்றேன். படைக்கலம் எடுத்து களம்வரும் ஒருவன் முடிந்தால் என்னை கொல் என்னும் அறைகூவலையே விடுக்கிறான். வென்றால் கொல்லும் ஒப்புதலை வழங்குகிறான்… நான் போர்வென்றவன். என் வெற்றியை தெய்வங்களுக்கு அளித்துவிட்டவன். எதைப்பற்றியும் வருந்தவேண்டியதில்லை நான்” என்றான் பீமன்.

யுதிஷ்டிரன் சினத்துடன் உரக்க “நீ நெறி பேசுகிறாயா? என்னிடம் அறம் பேச வந்தாயா?” என்றார். “ஆம், என் அறம் பற்றி எனக்கு எந்த ஐயமும் இல்லை. எதைப்பற்றியும் குற்றவுணர்ச்சியும் இல்லை” என்று பீமன் சொன்னான். “செய்தவற்றின்பொருட்டு குற்றவுணர்ச்சி கொள்வதே நரகம் என்பது… நான் அதில் இல்லை.” யுதிஷ்டிரன் “அது மானுட இயல்பு. குற்றவுணர்ச்சி அற்றவை விலங்குகள்” என்றார். “மூத்தவரே, இக்குற்றவுணர்ச்சி ஒரு நடிப்பு. இச்செயலைக் கடந்துசென்று வெற்றியின் கனிகளை உண்ண நாமனைவரும் அதை பயன்படுத்திக்கொள்கிறோம். நான் எதையும் நாடவில்லை. ஆகவே எனக்கு எந்த நடிப்பும் தேவையில்லை” என்றான் பீமன்.

“சீ, கீழ்மகனே! என்ன சொன்னாய்?” என்றபடி யுதிஷ்டிரன் எழுந்துவிட்டார். “என்னடா சொன்னாய்? என் முகத்தை நோக்கி நீ என்னடா சொன்னாய்?” பீமன் உறைந்த முகத்துடன் அமைதியாக நிற்க தௌம்யர் “அரசே, அமர்க!” என்றார். யுதிஷ்டிரன் பதறும் உடலுடன் அமர்ந்துகொண்டார். “இவன் சொல்வதென்ன? இவனுடைய சொற்களில் என்றுமிருந்தது இந்த நஞ்சு. இன்று அது நொதித்து கூர்கொண்டுவிட்டிருக்கிறது. அறிவிலி… காட்டாளன். அமைச்சரே, இவன் வடிவில் காட்டின் இருள் எழுந்து வந்து பாண்டுவின் குடியை பழிப்பு காட்டுகிறது. பாண்டுவால் கொல்லப்பட்ட அந்த விலங்கின் வஞ்சம் போலும் இது.” அவர் தன் தலையில் அறைந்து கொண்டார். “ஊழ், ஊழன்றி வேறில்லை…”

தௌம்யர் “நாம் இப்போது பேசவேண்டியவை இவை அல்ல. ஒருவரை ஒருவர் குத்திக் கிழித்துக்கொள்வதில் பொருளில்லை” என்றார். “ஏன் இதை செய்கிறோம்? அமைச்சரே, இங்கே நிகழ்வது இதுவே. நாங்கள் ஐவரும் சந்தித்துக்கொள்ளவே இயல்வதில்லை. ஒருவரை நோக்கி ஒருவர் நஞ்சு கக்காமல் எங்களால் மீள இயல்வதில்லை” என்றார். “ஏனென்றால் நீங்கள் ஐவரும் ஓருடலின் ஐந்து முகங்கள்” என்றார் தௌம்யர். “நீங்கள் உங்களிடமே சொல்லிக்கொள்வனதான் சொல்லாகவும் எழுகின்றன.” யுதிஷ்டிரன் குரல் தளர்ந்து “ஏன் இந்த பெருந்துன்பம்? ஏன் துயரை வளர்த்து அதில் இப்படி திளைக்கிறோம்? ஏன் ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொள்கிறோம்?” என்றார்.

சகதேவன் “நஞ்சில் புழுத்த புழுக்கள்போல் துயருக்கே பழகி அதில் வாழத் தொடங்கிவிட்டிருக்கிறோம். ஆகவே அது நமக்கு போதாமலாகிவிட்டிருக்கிறது” என்றான். அவன் குரலில் இருந்த ஏளனம் யுதிஷ்டிரனின் உள்ளத்தை அடங்கச்செய்தது. “ஆம், உண்மை. நம்மைப்போல் ஏளனத்துக்குரிய சிற்றுள்ளங்கள் இங்கு வேறில்லை…” என்றார். நகுலன் தன்னுள்ளே புன்னகைத்துக்கொண்டான். துயரைக் கொட்டி அதை வெறுப்பினூடாக வளர்த்து உச்சத்தை அடைந்து ஓர் ஏளனம் வழியாக கீழிறங்கி வருவதே ஒவ்வொருநாளும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தௌம்யர் “நாம் பேசவேண்டியதை பேசுவோம்” என்றார்.

நகுலன் “ஆம், அதையே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்றான். “அமைச்சரே, பேரரசர் நம்மை நோக்கி என்ன சொல்லக் கூடுமென்பதை இத்தருணத்தில் அவரே அறியார். இவ்வனைத்தையும் நிகழ்த்தும் தெய்வங்கள்கூட அவற்றை சொல்ல முடியாது. ஒவ்வொருமுறையும் நம் கணிப்புகள் அனைத்தையும் கடந்து ஏதோ ஒன்றுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்னும்போது இங்கு அமர்ந்து ஒவ்வொன்றையும் எண்ணி எண்ணி கணிப்பதில் உள்ள பொருளின்மையை நாம் உணர்வதில்லை” என்றான். யுதிஷ்டிரன் “நம் செயல்களை பொருளற்றுப் போகச்செய்வது தெய்வங்களின் ஆணை. ஆனால் நாம் ஆற்றும் செயலுக்கான பொருள் ஒன்று நம்மிடம் இருக்கவேண்டும். இல்லையேல் அச்செயலை நம்மால் நம்பி ஆற்றமுடியாது” என்றபின் சகதேவனிடம் “நீ என்ன எண்ணுகிறாய், இளையோனே?” என்றார்.

சகதேவன் “அவர்கள் விழிநீர் உகுத்திருக்கிறார்கள், அது ஒன்றே இப்போது போதுமானது” என்றான். “ஏன்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “மூத்தவரே, விழிநீர் அனைத்தையும் கழுவுவது. முதன்மையாக வஞ்சத்தை. பேரரசியின் அணைப்பில் சிறுமைந்தராக மாறிய பேரரசர்தான் அங்கிருப்பார். ஒருவேளை அவர் அகம் மீண்டும் நஞ்சு கொள்ளக்கூடும். ஆனால் இப்போது இக்காலையிலேயே நாம் அவரை சந்திக்கச் சென்றால் அங்கிருப்பவர் சற்றுமுன் உளம் கனிந்தவர். மைந்தர்போல் உளத்தூய்மை கொண்டவராக அவர் இருக்க வாய்ப்பு. ஆகவே அஞ்சவேண்டியதில்லை” என்றான்.

யுதிஷ்டிரன் திரும்பி நகுலனிடம் “நான் என்பொருட்டு அஞ்சவில்லை. அங்கிருப்பவர் நூறு மைந்தரையும் ஆயிரம் பெயர் மைந்தரையும் இழந்தவர். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி என மும்முடிசூடி அமரத்தக்க மைந்தனை இழந்தவர். அறியாது ஒரு அவச்சொல் அவர் நாவில் எழுமெனில் அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் அதன் நஞ்சையே சென்றடையும். எரிமழையென அவர் சினம் நம் குடிமேல் விழும். அதை தவிர்ப்பது அரசன் என என் கடமை” என்றார். நகுலன் ஓர் உளத்துடிப்பை உணர்ந்தான்.

சகதேவன் “அவ்வண்ணம் ஒன்று எழுமென்றால் அதை எவ்வகையிலும் நாம் கடக்க இயலாது. தந்தையென ஒரு சொல்லேனும் அவர் நம்மை பழித்துச் சொல்லாமலிருந்தால் அதுவே குறை” என்றான். “என்ன சொல்கிறாய், இளையோனே?” என்றார் யுதிஷ்டிரன். “நமக்குரிய பழி என ஒன்று உண்டு எனில் அதை நாம் பெறுவோம். அனைத்து தீச்சொல்லுக்கும் தகுதியானவர்கள் நாம் என்பதை நாமே அறிவோம். தந்தையிடமிருந்து தண்டம் பெறாமல் நாம் நம்மை பொறுத்துக்கொள்ள மாட்டோம். மூத்தவரே, இளஅகவையில் ஒரு பிழை செய்தால் அன்னையிடமிருந்து அதற்குரிய தண்டனையைப் பெற்றால்மட்டுமே நம் அகம் நிறைவுறுகிறது” என்றான்.

“இன்று அதை நமக்களிக்க அவரன்றி வேறெவரும் இல்லை” என்று அவன் தொடர்ந்தான். “சென்று அவர் முன் நிற்போம். அவர் நம்மை அழிப்பதென்றால் நிகழட்டும். நம் குடியையே பொசுக்குவார் என்றால் அதுவும் முறையே.” பீமன் “நான் எப்பிழையும் இயற்றவில்லை. எவர் அளிக்கும் தீச்சொல்லும் என்னை வந்தடையாது. தேவை என்றால் நானே முன்னால் செல்கிறேன். நான் மட்டுமே சென்று அவருடைய பழிச்சொல்லை பெற்றுக்கொள்கிறேன்” என்றான். யுதிஷ்டிரன் அவருடைய எல்லா பொறுமையையும் இழந்தார். “நீ உளம்தொட்டுச் சொல். இப்போதேனும் நீ உன் மைந்தரைக் கொன்றவர்களும் போரில்தான் கொன்றார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறாயா? சொல்” என்றார்.

அச்சொல் எவ்வண்ணம் சென்று அறையும் என யுதிஷ்டிரன் நன்கறிந்திருந்தார். கைகள் தளர விழிகள் சுருங்க முகத்தசைகள் இழுபட்டு அதிர பீமன் அவரை வெறித்துப் பார்த்தான். இரு கைகளையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து உரசியபடி மரம் பிளக்கும் ஒலியில் உறுமினான். தௌம்யர் அவர்களின் நடுவே புகுந்து “இங்கு நின்று இதைப்பற்றி வெறுமனே சொல்லாடிக்கொண்டிருப்பதில் எப்பொருளும் இல்லை. அவர் எந்நிலையில் இருந்தாலும் சரி, எது நிகழக்கூடுமென்றாலும் சரி, அங்கே சென்று அவர் கால் பணிந்து சொல் பெற்று இந்நீர்க்கடன் சடங்கை நிகழ்த்துவதே நம்முன் உள்ள ஒரே தெரிவு. மாற்றுவழி ஒன்றில்லை” என்றார்.

நகுலன் “ஆம், நான் கூறவருவதும் அது மட்டும்தான்” என்றான். யுதிஷ்டிரன் பெருமூச்சுடன் “அதை நானும் அறிவேன். இருப்பினும் ஏதேனும் ஒரு வழி தோன்றுமோ என்று எண்ணினேன்” என்றபின் “இளைய யாதவன் எங்கே?” என்றார். “காலையிலிருந்து அவர் தன் குடிலில்தான் இருக்கிறார்” என்றான் சகதேவன். “அவனை உடனழைத்துச் செல்வோம்” என்று யுதிஷ்டிரன் கூறினார். சகதேவன் “மூத்தவரே, இது நமக்கும் நம் தந்தையருக்குமான தருணம். இதில் அவர் எதற்கு?” என்றான். யுதிஷ்டிரன் “ஏனெனில் இப்போரை நிகழ்த்தியவன் அவன். இவையனைத்துக்கும் பொறுப்பேற்க வேண்டியவனும் அவனே. முதலில் அவன் நின்றிருப்பதே முறை” என்றார்.

“போரை அவர் நிகழ்த்தியிருக்கலாம். நம் தந்தைக்கு எதிராக அனைத்தையும் செய்தவர்கள் நாமே. மானுட குலத்திற்கும் பாரதவர்ஷத்து அரசர்களுக்கும் அவர் தம் பெண்டிருக்கும் மறுமொழி சொல்லவேண்டிய இடத்தில் இளைய யாதவர் இருக்கலாம், நம் தந்தையருக்கு சொல்லளிக்க வேண்டியவர் அவர் அல்ல” என்று சகதேவன் சொன்னான். “ஆம்” என்றபின் யுதிஷ்டிரன் தத்தளிப்புடன் “ஆனால் அவன் வந்து முன்னால் நின்றால் அனைத்தும் எளிதாகலாம். பேரரசி இளைய யாதவன் மேல் பெரும்பற்று கொண்டவர். இன்று காலை வந்திறங்கியபோது இளைய யாதவனை வாழ்த்தினார். அவனுடன் இருக்கையில் தந்தையும் அவ்வாறு எண்ணக்கூடும். அனைத்தையும் எளிதாக்கும் ஒன்று அவனிடம் உள்ளது. இத்தருணத்தையும் அவன் எளிதாக்கி அளிக்கக்கூடும்” என்றார்.

நகுலன் “ஒருவேளை மூத்த தந்தை முனிந்தெழுந்தால்கூட அந்நஞ்சனைத்தையும் அவரே தாங்கிக்கொள்ளவும் கூடும் அல்லவா?” என்றான். அச்சீண்டலால் சீற்றமடைந்த யுதிஷ்டிரன் “ஆம், அவ்வாறே. அந்நஞ்சையும் அவனே தாங்கட்டும். அதுவே முறை. அவன் பொருட்டு நாம் படைகளையும் மைந்தரையும் அளித்தோம். நம் பொருட்டு அவன் அத்தீச்சொல்லை பெறட்டும். அதில் என்ன பிழை?” என்றார். “நன்று. தீச்சொல் அவருக்கு, மண்ணும் முடியும் நமக்கு” என்று பீமன் பல்லைக் கடித்தபடி சொன்னான். யுதிஷ்டிரன் “மண்ணும் முடியும் எனக்கு வேண்டியதில்லை. நீயே வைத்துக்கொள். அரசனையும் இளையோரையும் கொன்றவன் நீ அல்லவா? காட்டரசு நெறிப்படி நீயே முடிசூடும் தகுதி கொண்டவன். நீ முடி கொள்க! நான் அஸ்தினபுரிக்கோ இந்திரப்பிரஸ்தத்துக்கோ வரவில்லை. இக்காட்டிலேயே இருந்துகொள்கிறேன். இங்கு தவம் செய்கிறேன். என் இறுதியை நான் கண்டடைகிறேன். ஆம், நீ செல், நீயே நிலம்கொள்க!” என்றார்.

“மெய்யாகவே காட்டில் இருக்க விரும்புபவன் நான் என்பதையும் நீங்கள் அறிவீர்கள், மூத்தவரே” என்று சொன்னபின் பீமன் நகுலனிடம் “நாம் கிளம்புவோம். அனைத்து ஒருக்கங்களையும் செய்” என்றான். “நீ சொன்னதற்கு என்ன பொருள்? நீ சொன்னதற்கு என்ன பொருள்? அதை முதலில் சொல்!” என்று யுதிஷ்டிரன் கூவினார். தௌம்யர் “வீண்சொல் வேண்டாம். இளைய யாதவர் உடன் வரட்டும். உரிய சொற்களை எடுப்பதற்கான ஆற்றல் அவருக்குண்டு. மெய்யாகவே இத்தருணத்தை அவர் எளிதாக்கக்கூடும்… கிளம்புக!” என்றபின் “நீங்கள் ஐவரும் இணைந்தே செல்லுங்கள். பேரரசியும் பேரரசரும் உளம் ஓய்ந்து அமர்ந்திருக்கும் தருணமே அதற்குரியது. இன்னமும் பொழுதை வீணடிக்க வேண்டியதில்லை. இளைய யாதவர் நேராகவே அங்கு வரட்டும். அவரை அழைத்துவர நான் என் மாணவர்களை அனுப்புகிறேன்” என்றார்.

“இவன் சொல்லும் இச்சொற்கள்… இவன்!” என்று பீமனை நோக்கி கைநீட்டி பேசத்தொடங்கிய யுதிஷ்டிரனை நோக்கி சினத்துடன் கை நீட்டித் தடுத்து “போதும். இனி இங்கு சொல் வேண்டியதில்லை” என்றார் தௌம்யர். தன்னை அடக்கி தணிந்து யுதிஷ்டிரன் “அவ்வாறே” என்று தலைவணங்கினார். பீமன் பொருட்டின்மை தெரிய உடலை திருப்பிக்கொண்டான்.

தொடர்புடைய பதிவுகள்

எவ்வாறோ அவ்வாறே!

$
0
0

டோரிஸ் டே

Dear Mr.Jeyamohan
I was delighted to read your piece about Que Sera Sera song on your Blog
By a happy coincidence I had written an article in English about the song and its history in the “Daily Financial Times”published n Colombo. Later it was posted on my Blog also
Incidently P. Bhanumathy sang verses from this for the Telugu remake of Tamil “Katpaham” film also
I  attach appropriate links of my article
Thank You
With Best Regards
Jeyaraj(DBS)
Singer – Actress Doris Day’s Evergreen Signature Song “Que Sera Sera” (Whatever Will Be, Will Be)

Singer – Actress Doris Day’s Evergreen Signature Song “Que Sera Sera” (W…

By D.B.S.Jeyaraj When I was just a little kid enrolled at the Santa Maria Montessori school in Wattala, a song w…

Singer-Actress Doris Day’s evergreen signature song ‘Que Sera Sera’ | Daily FT

Singer-Actress Doris Day’s evergreen signature song ‘Que Sera Sera’ | Da…

When I was just a little kid enrolled at the Santa Maria Montessori school in Wattala, a song we sang without kn…

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சென்னையில் வாழ்தல் –கடிதம்

$
0
0

சென்னையில் வாழ்தல்

சென்னையில் வாழ்தல்- கடிதம்

அன்புள்ள ஜெ

சென்னையில் வாழ்தல் பற்றிய பதிவுகளை வாசித்தேன் .

சென்னையில் தற்போது வாழ்ந்தாலும் பள்ளிப்பருவத்தில் தமிழகத்தின் பிற சிற்றூர்களில் (தந்தைக்கு மாற்றல் உள்ள வேலை) நிசசயம் மனதிற்கு இனியதுதான். ஆனால் எல்லோருக்கும் எப்போதும் இது சாத்தியம் கிடையாது என்பதுதான் உண்மை.  ஒருவருக்கான தொழில் அவர் சொந்த ஊரிலேயே அமைந்ததென்றால் அவர்கள் அதை தாராளமாக அனுபவித்துக்கொள்ளலாம் . மற்றவர்களுக்கு (குறிப்பாக அடுத்த தலைமுறையினருக்கு சென்னையில் வசிக்க வேண்டியதற்கு தொழில், பிற தேடல்கள் , திருமணமாகிப் புகுந்த இடம் , சென்னை மீது ஆர்வம் எனப்  பல காரணிகள் உண்டு.வறண்ட மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு சென்னை பசுமையாகத்தெரியலாம்.

சென்னை வெறுப்பாளர்களிடம் பேசிப்பார்த்தால் சில விஷயங்கள் வெளி வரும்

 

“நம்மூர்ல நமக்கு எம்புட்டு மரியாதை ”  என்பது போன்ற ராஜாங்க ஈர்ப்புகள்.

 

“நம்ம ஊர் டாக்டர் பாத்தாதான் நமக்கு சரிப்பட்டு வரும்”, “நம்ம செங்கழனி அம்மன தெனமும் பார்த்து கும்பிட்டாதான் மனசுக்கு நிம்மதி”, போன்ற நம்பிக்கைகள்.

சில பேர் பெற்ற பிள்ளைகளை விடவும் சொந்த ஊர் நட்புகள் மற்றும் கட்டிய வீட்டின் மேல் அதீத பாசம் வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன்.
மும்பையின் நெரிசல்  மிகுந்த வாழ்க்கை  முறையைப் பார்க்க நேரிடும் சென்னைவாசிக்கு ஒப்பீட்டளவில் சென்னை சொர்க்கமாய்த் தெரியும்.
யாருக்கெல்லாம்  எல்லா விஷயங்களிலும் மனதிற்குப் பிடித்த வாழும் சூழல் எப்போதும் கிடைக்குமென்றால் அவர்கள்  ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் . அது இல்லாதவர்களுக்கு இருப்பதில் இருந்து மனதிற்கு இனியத்தைக் கண்டடையும் தேடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு சில நாட்கள் இருந்து விட்டு ஓட்டம் பிடிப்பது உதவாது. மாற்றங்களுக்கும், விட்டுக்கொடுத்தல்களுக்கும்  மனதை தயார் படுத்திக்கொள்வது ஒன்றே வழி.
அன்புடன்
ரமேஷ் கிருஷ்ணன்
அன்புள்ள ஜெ
நான் சென்னையை விரும்புபவர்களில் ஒருவன்
சென்னையில்தான் நான் இரண்டு விஷயங்களில் இருந்து விடுபட்டேன். என்னை எவரும் இருபத்துநான்கு மணிநேரமும் வேவு பார்க்கவில்லை.  போட்டுக்கொடுக்கவில்லை. நான் என்னுடைய சொந்த வாழ்க்கையை இஷ்டப்படி வாழமுடிந்தது. இங்கே இருக்கும் இந்த சுதந்திரம் தமிழகத்தில் வேறு எங்கேயும் இல்லை. பெண்கள் சென்னையை விரும்புவது இதனால்தான்
இன்னொன்றூ இங்கேதான் சாதி நேரடியாக வந்து மூஞ்சியில் அறைவதில்லை. பார்த்த பத்தாம்நிமிடமே தம்பி என்ன ஆளுங்க என்று எவரும் கேட்பதில்லை
சென்னைதான் ஒரு நவீன  மனுஷனுக்கு வாழ்வதற்கு மிகமிக வசதியான ஊர்
செல்வா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிலைகளை நிறுவுதல்

$
0
0

கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?

 

அன்புள்ள ஜெ

கிருஷ்ணன் என்னும் காமுகனை வழிபடலாமா, கீதையை எப்படி வாசிப்பது என்னும் இரண்டு கட்டுரைகளுமே எனக்கிருந்த பலவகையான ஐயங்களையும் குழப்பங்களையும் தீர்த்துவைப்பவையாக இருந்தன. பல புதிய தொடக்கங்களையும் உருவாக்கி அளித்தன. நான் இந்த ஐயங்களுடன் பல ஆண்டுகளாக இருந்து வருகிறேன். பலருடைய உரைகளைக் கேட்டிருக்கிறேன். நூல்களை வாசித்திருக்கிறேன். அவர்கள் சொல்லாத எதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்று எண்ணிப்பார்த்தேன். நவீனமொழியும் நவீனச் சிந்தனைகளின் தர்க்கங்களைப் பயன்படுத்திச் சொல்லும் முறையும்தான் உங்கள் சிறப்பு என்று தோன்றியது.

என்னைப்போன்ற ஒருவனுக்கு சம்பிரதாயமான பக்திச்சொற்பொழிவின் செயற்கையான நெகிழ்ச்சி கொண்ட நடை ஒவ்வாமையையே உருவாக்குகிறது. அதேபோல நவீனச் சிந்தனைகளுடன் தொடர்பே இல்லாமல் பழைமையான நம்பிக்கைகாளாகவே எல்லாவற்றையும் சொல்வதும் ஏற்றுக்கொள்ளமுடிவதாக இல்லை. அத்துடன் அவர்களில் பலர் நவீனச் சிந்தனைகள் என்னும்போது நிரூபணவாத அறிவியலைத்தான் குறிப்பிடுகிறார்கள். சயன்ஸ் என்ன சொல்லுது என்று ஆரம்பிக்கும்போதே திருமண் இட்டுக்கொண்டால் ஜலதோஷம் வராது என்றுதான் சொல்லப்போகிறார்கள் என்று தெரிகிறது.

இன்றைய சூழலில் சிந்திக்கும் ஒருவனுக்கு மரபின்மேல் பெரிய பக்தி இருக்கமுடியாது பொதுவாக பக்தியே அவ்வளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்காது. ஆகவே அவனுக்கு மூளைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் தேவைப்படுகிறது. கீதையை எந்தவகையிலும் நான் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதில்லை, அதை நியாயப்படுத்தியே ஆகவேண்டும் என்னும் பொறுப்பு எனக்கில்லை என்பதை நீங்கள் சொன்னபோதுதான் உண்மையில் கீதை எனக்கு நெருக்கமானதாக ஆகிறது.

நான் கேட்கவிரும்பும் ஒரு கேள்வி இதுதான். கிருஷ்ணன் என்னும் தெய்வத்தை வழிபடும் ஒருவர் கிருஷ்ணனைப்பற்றிய இந்த நவீனப்புரிதலைக் கொண்டிருக்கவேண்டுமா? அவரை வரலாற்றிலும் தொன்மவியலிலும் வைத்துப் பார்க்கவேண்டுமா? அப்படிப் பார்த்தால்தான் அவரால் கிருஷ்ணனை எதிர்க்கும் ஒருவருக்கு அழுத்தமான பதிலைச் சொல்லமுடியும். அப்படிச் சொல்ல இன்றைய கிருஷ்ணபக்தர்கள் பெரும்பாலானவர்களால் முடிவதில்லை இல்லையா? அப்படியென்றால் கிருஷ்ணனைப்பற்றிய வரலாற்றுபூர்வமான புதிய அறிதல் இந்துமதத்திற்கு இன்றைக்கு தேவைதானே? கிருஷ்ணனைப்போலவே சிவன் முருகன் எல்லாத் தெய்வங்களையும் அப்படி அறிந்துகொள்ளவேண்டும் அல்லவா?

எஸ். கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,

முதலில் உங்கள் கேள்வியின் இறுதிவரியிலிருந்து ஆரம்பிக்கிறேன். ஏன் ஒரு பக்தன் பிறருக்கு கிருஷ்ணன் பற்றி விளக்கவேண்டும்? ஏன் பிறருடைய அவநம்பிக்கையை அவன் களையவேண்டும்? அவனுக்கு அந்தக் கடமையை பக்திவழிபாட்டுமுறை அளிக்கிறதா என்ன?

முன்பொருமுறை கிருஷ்ணபக்தர் என தன்னை அறிவித்துக்கொண்டவரான மலையாளக் கவிஞர் யூசுஃப் அலி கேச்சேரி இடமறுகு என்னும் நாத்திகர் எழுதிய ‘கிறிஸ்துவும் கிருஷ்ணனும் உண்மையில் வாழ்ந்தவர்கள் அல்ல’ என்ற நூலைப்பற்றி கேட்கப்பட்டபோது சொன்னார். ‘உண்மைதான், இடமறுகின் கிருஷ்ணன் இப்போதும் வாழவில்லை’

பக்தரின் வழி அதுதான். அவருக்கு அவருடைய பக்தி, அவருடைய நம்பிக்கைதான் முக்கியம். பிறரை பக்தி நோக்கி இழுப்பதும், பிறருடைய ஐயங்களை போக்கி தன் விருப்பதெய்வத்தை அவர்முன் நிறுவுவதும் அவருடைய வேலையே அல்ல.

இந்தக்குழப்பம் எங்கிருந்து வருகிறது? கிறித்தவ மதத்தின் விசுவாசத்துடன் இந்துமதத்தின் பக்தியை நாம் ஒப்பிட்டுக்கொள்வதனால். அவர்கள் பயன்படுத்தும் சொல் விசுவாசம். அதற்கு ஏற்பு, கட்டுப்படுதல், ஏற்றுச்சொல்லுதல் என்னும் பொருட்கள் உண்டு. விசுவாசி அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்கின்றது அந்த மதம்.

விசுவாசம் என்பது நம்பிக்கையில் இருந்து தொடங்குவது. அதன் தளம் மேல்மனம், பிரக்ஞைநிலைதான். மானுட நம்பிக்கை என்பது எந்நிலையிலும் முழுமையானது அல்ல. எப்போதுமே ஒரு துளி ஐயம், ஒரு துளி விலகல் இருந்துகொண்டே இருக்கும். அதனுடன் ஓயாது போராடிக்கொண்டேதான் இருக்கவேண்டும். அந்த ஒருதுளியைத்தான் அவர்கள் சாத்தான் என்கிறார்கள். அவர்களின் விசுவாசம் என்பது சாத்தானுடனான ஓயாத சமர்தான். உன் விசுவாசத்தைக் காத்துக்கொள் என்கிறது கிறித்தவம்.

அந்தச் சமரில் அவர்கள் தங்கள் நம்பிக்கையைப் பேணிக்கொள்ள மிகச்சிறந்த வழியாகக் காண்பது அதை பிறரிடம் பரப்புவது. மதமாற்ற முயற்சி என்பது கிறித்தவத்தை தழுவிய ஒருவர் மேலதிகமாகச் செய்வது அல்ல. அந்த நம்பிக்கையின் ஒரு பகுதி அது. தொடர்ந்து ‘நான் கிறிஸ்துவை நம்புகிறென்’ என பிறரிடம் சொல்பவர் தனக்குத்தானே அதைச் சொல்லிக்கொள்கிறார்

அந்த இயல்பு சைவ,வைணவ,சாக்த மதங்களின் பக்திக்கு இல்லை. பக்தியை நாம் நம்பிக்கை, விசுவாசம் என்னும் இரு சொற்களாலும் சுட்டமுடியாது. உங்களுக்கு கிருஷ்ணன்மேல் நம்பிக்கை உண்டா, கிருஷ்ணனுக்கு விசுவாசமாக இருக்கிறீர்களா என்று வைணவம் கேட்பதில்லை. பக்தி என்பது பெரும்பாலும் ஆழுள்ளம்சார்ந்தது. பெரும்பாலும் தன்னிச்சையானது. அது ஒர் இயல்பான ஏற்புநிலை. அதற்கான உள்ளம் கொண்டவர்களுக்குரியது அது.

அந்நிலையில் கிருஷ்ணன்மேல் பக்தரின் ஆழுள்ளம் படிகிறது. அந்த பக்தரின் விழிப்பு உள்ளம், பிரக்ஞைநிலை அதை எதிர்க்கவும்கூடும். அதை தர்க்கபூர்வமாக நிறைவுசெய்துகொள்ள அவர் முயலவேண்டியதில்லை. சொல்லப்போனால் அதற்கு அவர் எதையுமே செய்யக்கூடாது. விழிப்புள்ளத்தை அவர் அப்படியே விட்டுவிடவேண்டும்.

ஆகவேதான்’நீ என்ன கல்லா?’ என்று நம் பக்திப்பாடல்களிலேயே வருகிறது. ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேனே’ என்று வருகிறது எந்த கிறித்தவப்பாடலிலாவது இப்படி ஒரு வரி வரமுடியுமா? விழிப்புள்ளத்திற்கு நீ கல்லாகக்கூட இருக்கலாம், என் ஆழுள்ளத்திற்கு நீ வேறு என்பதே இவ்வரியின் பொருள்

ஆகவே இங்கே பக்தி என்பது தெரிந்துகொண்டு, புரிந்துகொண்டு, வகுத்துக்கொண்டு ஏற்றுக்கொள்வது அல்ல. கிருஷ்ணனை வழிபடும் பக்தர் எதையுமே தெரிந்துகொள்ளவேண்டியதில்லை. கிருஷ்ணனின் சிலை மட்டுமே போதும். அதைக்கொண்டே அவர் அனைத்தையும் சென்றடைய முடியும்

சிலை [விக்ரகம்] என்பது இரண்டு தளம்கொண்டது. கண்ணால் காணும் பொருள் ஒன்று. அகம் அறியும் குறியீடு இன்னொன்று. ஒன்றின்மேல் ஒன்று படிந்துள்ளது. கண்ணால் காணும் பொருளை வழிபடுபவரிடம் அகம் அறியும் குறியீடு பெருகத் தொடங்குகிறது. அவருடைய கனவை, ஆழுள்ளத்தைச் சென்றடைகிறது.அங்கே மேலும் மேலும் பேருருவம் கொள்கிறது

ஆகவேதான் அந்த விழிமுன் காணும் தெய்வஉருவம் இன்னின்ன முறைப்படி அமையவேண்டும் என்றும், வெறும் அழகியல்நோக்கிலோ, நடைமுறை வசதி கருதியோ அது மாற்றப்படக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது. அதில் மாற்றம் நிகழவேண்டும் என்றால் அந்த ஆழுள்ளத்திலிருந்தே வரவேண்டும். அது ஒரு ஞானியிடமிருந்தேஎ வரமுடியும்.

அந்த அறிதல் தர்க்கபூர்வமானது அல்ல. மொழிவடிவானதும் அல்ல. வரலாற்றுநோக்குடனும் குறியீட்டியல்சார்ந்தும் கிருஷ்ணனை அறியும் ஒரு பேரறிஞர் அறிவதைவிட மிகமிக ஆழ்ந்த மிகமிக விரிந்த கிருஷணவடிவை எளிமையான பக்தர் அடையக்கூடும். அந்த வடிவம் அவருடைய ஆழுள்ளத்திற்குள் எங்ஙனம் செல்கிறது என்பதே முக்கியமானது.

பக்தர் ஒருபோதும் தன் விழிப்புள்ளத்தைப் பொருட்படுத்தக்கூடாது. அதைக்கொண்டுசென்று ஆழுள்ளத்திற்கு எதிர்நிலையில் நிறுத்தக்கூடாது. விழிப்புள்ளத்திற்கு பயிற்சி அளிக்க அளிக்க அவர் ஆழுள்ளத்திற்கான எதிர்ப்பையே பெருக்கிக்கொள்கிறார். ஊழ்கமுறையை அறிந்தவர்களுக்கு தெரியும் ஆழ்ந்துசெல்லும்போது ஊடே புகும் விழிப்புநிலையுடன் போரிடக்கூடாது, அதை விலக்க முயலக்கூடாது. அதை அப்படியே விட்டுவிடவேண்டும். நாம் பேசிக்கொண்டிருக்கையில் ஊடே புகும் குழந்தையை கவனித்தால் அது அடம்பிடிக்க தொடங்கும். அப்படியே விட்டுவிட்டால் அது தன் விளையாட்டுலகுக்குச் சென்றுவிடும்.

ஆகவே இந்துமதத்தின் பக்தருக்கு தன் தெய்வத்தை வரலாற்றுநோக்கில் குறியீட்டு நோக்கில் அறியும் பொறுப்பு இல்லை. அதை அவர் வலியுறுத்தி நிறுவ வேண்டியதில்லை. எவருக்கும் விளக்கவும் வேண்டியதில்லை. எந்த எதிர்ப்பையும் அவர் சந்தித்து வெல்லவேண்டியதுமில்லை. அவருடைய வழிகள் உணர்வுரீதியாக அத்தெய்வத்தில் ஈடுபடுதல், அவ்வுணர்வுகளை நிலையான புறச்செயல்பாடுகளாக ஆக்கிக்கொள்ளும் சடங்குகளைச் செய்தல் மட்டுமே

அப்படியென்றால் ஏன் வரலாற்று விளக்கம் அல்லது குறியீட்டு விரிவாக்கம்? இது பக்தர்களுக்குரியது அல்ல. உங்களையும் என்னையும்போல பக்தியில் சென்றமையாத அறிவார்ந்த உள்ளம் கொண்டவர்களுக்குரியது. இதுவும் இந்துமதங்கள் முன்வைக்கும் வழிமுறைதான். மேலே நான் பக்தியைப்பற்றிச் சொல்லியிருப்பதுகூட பக்தியைப்பற்றிய அறிவார்ந்த விளக்கம் மட்டுமே

அதாவது இந்து மதத்தின் இரு வழிகளைச் சேர்ந்தவர்களுக்கும் எந்தச்சிலைகளையும் நிறுவும் பொறுப்பு இல்லை. ஞானவழியைச் சேர்ந்தவருக்கு அச்சிலைகளை அறிதல்தான் அவருக்குரிய முறை. பக்தியை வழியாகக் கொண்டவருக்கு அச்சிலையினூடாக ஆழ்ந்து செல்லுதல் அவருக்குரிய முறை. ஒருவரின் தன்னியல்புக்கு ஏற்ப ஞானமோ பக்தியோ தெரிவுசெய்யப்படுகிறது.

 

ஜெ

 

கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?- எதிர்வினை

பக்தி ஒரு கடிதம்

பாகவதமும் பக்தியும்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-28

$
0
0

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 9

யுதிஷ்டிரனின் குடிலுக்கு வெளியே நகுலன் காத்து நின்றிருந்தான். அவனருகே சகதேவன் நின்றிருக்க சற்று அப்பால் வேறு திசை நோக்கியபடி பீமன் மார்பில் கைகளைக் கட்டியபடி நின்றிருந்தான். மேலும் அப்பால் சிறிய முள்மரம் ஒன்றுக்கு அடியில் இருந்த உருளைக்கல் மீது அர்ஜுனன் அமர்ந்து முழங்காலில் கைமுட்டுகளை மடித்தூன்றி தலைகுனிந்து நிலத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் குழல்கற்றைகள் சரிந்து முகம் மீது தொங்கிக்கிடந்தன. அவன் குரலைக்கேட்டே எவ்வளவு நாள் ஆகிறது என நகுலன் எண்ணிக்கொண்டான்.

காலை வெயில் எழுந்து முற்றத்தில் கண்கூசும்படி பரவி இருந்தது. ஈரமண்ணிலிருந்து எழுந்துகொண்டிருந்த வெக்கை மூச்சு திணற வைத்தது. மரங்கள் அனைத்திலிருந்தும் நீராவி எழுவதுபோல் தோன்றியது. காற்றில் பரவியிருந்த ஆவியே வியர்வையாக உடலில் வழிகிறதா? எங்காவது அமரவேண்டும் எனத் தோன்றியது. ஆனால் அங்கே எங்கும் அமர்வதற்கான இடம் இருக்கவில்லை. முக்தவனத்தில் பெரும்பாலானவர்கள் மண்ணிலேயே அமர்ந்தார்கள். நகுலன் குடில்நிரைகளை நிமிர்ந்து நோக்கினான். வெயிலுக்கு அப்பால் அவை மெல்ல அலைகொள்வதுபோலத் தோன்றியது. கண்களை ஒளி கூசச்செய்து விழிநீரை வரவழைத்தது.

குடிலுக்கு வலப்பக்கம் காட்டின் ஓரமாக ஒற்றைப்புரவித்தேர் நின்றிருந்தது. சேணம்பூட்டி நுகத்தில் கட்டப்பட்ட புரவி தரையிலிருந்து சருகு ஒன்றை எடுத்து வெறுமனே மென்றுகொண்டிருந்தது. அதன் கழுத்துமணிகள் ஒலித்தன. பீமனின் புரவி எடைமிக்கது. அது ஒற்றைக்காலைத் தூக்கி தலைதாழ்த்தாமல் துயின்றுகொண்டிருந்தது. அப்பால் முள்மரத்தின் கிளையில் கட்டப்பட்டிருந்த அர்ஜுனனின் புரவி துயிலவில்லை. ஆனால் எப்போதுமே அது துயில்கொள்வதுபோன்ற அமைதியுடன இருப்பதைத்தான் நகுலன் கண்டிருக்கிறான்.

நகுலனின் புரவி குடிலுக்கு அப்பால் மரத்தடியில் தலை தாழ்த்தி நின்றது. தலை தாழ்த்துகையில் அது கழுதை போல் மாறுவதை நகுலன் எப்போதுமே உணர்வதுண்டு. அனைத்துப் புரவிகளுக்குள்ளும் ஒரு கழுதை உறைகிறதென்று அவனுக்கு புரவித்தொழில் கற்றுக் கொடுத்த சூதரான ஜீமுதர் கூறுவதுண்டு. கழுதையிலிருந்து புரவி எழுந்தது என்பது அவருடைய குலக்கதைகளில் ஒன்று. அவருடைய எல்லா கதைகளுமே வேடிக்கையானவை. அவை குழந்தைகளுக்குரியவை, அவர்கள் குழந்தைப்பருவத்திற்குமேல் கதைகளை நாடுவதில்லை. “கழுதையின் தவமே புரவியாயிற்று. ஒவ்வொரு கழுதையும் தன்னுள் ஒரு புரவியை மீட்டிக்கொண்டிருக்கிறது. நீரில் தன்னை புரவியென அது பார்த்துக்கொள்கிறது. கனவுகளில் புரவியென விரைகிறது. பல்லாயிரம் கழுதைகளில் ஒன்று தன் உடலின் எல்லைக்ளைக் கடந்து உயிரின் விசையைப் பெருக்கி புரவியென ஆயிற்று” என்று அவர் சொன்னார்.

“புரவிகுலம் கழுதைகளைக் கடந்து நெடுந்தொலைவு சென்றது. தொலைவுகளை ஆண்டது. நிலம்வெல்லும் படைக்கலமாயிற்று. அரசப்புரவியென அணிகொண்டது. இந்திரனும் கதிரவனும் அதை தங்கள் ஊர்தி எனக்கொண்டனர். பின்னர் ஒருமுறை புரவி உணர்ந்தது, தன்னுள் கழுதை உறைவதை. அதை அஞ்சியது, அருவருத்தது. கழுதையல்ல தான் என்று ஒவ்வொரு கணமும் எண்ணத்தலைப்பட்டது. கழுதை இயல்புகள் அனைத்தையும் மறக்கவும் மறைத்துக்கொள்ளவும் முயன்றது. அதன் பொருட்டே புரவிகள் அத்தனை தன்னுணர்வு கொண்டதாயின. நோக்குக, புரவி துயில்வதே இல்லை! அரை உணர்வு நிலையிலேயே எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. சற்று துயின்றால், சற்று தசைகளை தளரவிட்டால், சற்று தலை தாழ்த்தினால் கழுதையாகிவிடுவோம் என்னும் அச்சம் புரவியை எப்போதும் துரத்திக்கொண்டிருக்கிறது.”

உரக்க நகைத்து ஜீமுதர் சொன்னார் “அவ்வகையில் கழுதை நல்லூழ் கொண்டது. அது தன்னை மறந்து வாயூறி வழிய தலை சரிந்து முகவாய் நிலம் தொட துயில முடியும். நான்கு கால்களையும் பரப்பி வைத்து மண்ணோடு மண்ணாக படுத்துக்கொள்ள முடியும். தன் கழுதையை மீண்டும் சென்றடையும் புரவியின் விடுதலை அரியது. புரவி அரிதாகும்தோறும், அழகுகொள்ளும்தோறும் கழுதையிலிருந்து விலகிச்செல்கிறது. புரவி இலக்கணத்தின் பிழைகளே கழுதை. புரவி தவறவிட்ட அனைத்தும் கழுதையாகி நின்றுவிடுகிறது. ஆனால் கழுதை புரவியை மிக அணுக்கமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. நுண்வடிவில் புரவியில் ஏறிப்பாய்ந்துகொண்டிருக்கிறது.”

இதை ஏன் எண்ணுகிறோம் என்று எண்ணியபடி நகுலன் மீண்டும் தன் புரவியை பார்த்தான். அழகில்லாத அன்னையொருத்தி. எவ்வகையிலும் அழகைப்பற்றி தான் கவலை கொள்ள வேண்டியதில்லை என்று எப்போதோ உணர்ந்து தன் உடலை முற்றாக மறக்கத் தலைப்பட்டவள். அத்தகைய பெண்டிரை அவன் பலமுறை பார்த்திருந்தான். அவர்களிடம்தான் இயல்பாக தாய்மை உணர்வு வெளிப்படுகிறது. தன் அழகைப்பற்றி ஒரு துளி எண்ணம் அகத்தே எஞ்சுபவள்கூட முற்றிலும் அன்னையாவதில்லை. அப்புரவியின் அருகே சென்று நிற்கவேண்டும் என்று நகுலன் நினைத்தான். அங்கேதான் தன்னால் இயல்பாக நின்றிருக்க முடியும். இங்கே உடல் பதைப்பு கொள்கிறது.

இளமையில் மிடுக்கும் திமிரும் கொண்ட பெரும்புரவிகள் மேல் அவனுக்கு பித்திருந்தது. இழுத்து நீட்டப்பட்டது போல தோன்றும் சோனகப்புரவிகள். கொக்குக் கழுத்தும் நாரைக்கால்களும் கொண்டவை. நாணமும் அச்சமும் கொண்டவை. நீர்ப்பரப்பு போல் நொடிக்கச் சிலுப்பும் தோற்பரப்பு கொண்டவை. புதுப்பாளைபோன்ற ஒளி கொண்டவை. சிம்மம் புரவியானது போன்றவை யவனப்புரவிகள். களிறோ என ஐயுறும் முதுகு கொண்டவை. உறைகீறி எடுத்த விதை என மெருகு கொண்டவை. புரவிக்கு தன் அழகு தெரியும். அதன் நிற்பில் கால் எடுப்பில் தலை எழும் செருக்கில் வெளிப்படுவது அந்த தன்னுணர்வே. அதன் விழிகளில் இருப்பது மேடையேறிவிட்ட நடனமங்கையின் மிதப்பு.

அவன் தன் விழிகளினூடாக கடந்து சென்ற புரவிகளை எண்ணிக்கொண்டான். பிறந்து குழவியென வந்து தன் கைகளினூடாக வளர்ந்து உடல்வடிவை அவனிடம் பதித்துவிட்டுச் சென்றவை. அவன் அறிய மீள மீள பிறந்தெழுந்தவை. அவற்றை பெரும் உவகையுடன் அவன் நோக்கி அமர்ந்திருந்ததுண்டு. ஏடுகளைக் கொண்டுவைத்து அவற்றின் ஒவ்வொரு இயல்பையும் குறித்து வைத்ததுண்டு. ஓவியர்களைக் கொண்டு அவற்றை பட்டுத் திரைச்சீலையில் வரைந்து சேர்த்ததுண்டு. சூதரைக்கொண்டு அவற்றின் புகழ் பாடி பதியவைத்ததும் உண்டு. அறுதியாக வந்து சேர்ந்த இப்புரவி எக்கணமும் மேலும் ஒரு அடி பின் வைத்து கழுதை என்றே ஆகிவிடக்கூடியது.

கதவு திறந்து ஏவலன் வெளிவந்து “அரசர்!” என்று வரவறிவிப்பு செய்தான். சகதேவன் நிமிர்ந்து நின்று தன் மேலாடையை இழுத்துவிட்டுக்கொண்டான். யுதிஷ்டிரன் குடிலிலிருந்து வெளிவந்து தன் தலையிலிருந்த பட்டுத்தலைப்பாகையை இன்னொரு முறை பிடித்து நேராக்கி வைத்தார். “செம்பருந்தின் இறகு சற்றே சரிந்துள்ளதா?” என்றார். “இல்லை” என்று சகதேவன் சொன்னான். “நிழலில் நோக்குகையில் சரிந்து தெரிகிறது” என்று அவர் மீண்டும் தலைப்பாகையை சீராக்கி வைத்தார். வெண்ணிற மேலாடையை இழுத்து சுற்றிக்கொண்டு “செல்வோம்” என்றார். சகதேவனும் நகுலனும் அவருக்குப் பின்னால் நடக்க அப்பால் நின்றிருந்த அர்ஜுனன் எழுந்தான்.

பீமன் அவர் அணுகியபின்னரே நோக்கு கலைந்தான். யுதிஷ்டிரன் பீமனிடம் “மீண்டும் அதே தோலாடையை அணிந்திருக்கிறாய். அரசகுடியினருக்குரிய பட்டாடையை அணிந்தால் என்ன?” என்றார். பீமன் அவரை திரும்பிப்பார்க்கவில்லை. தலைகுனிந்து நின்றிருந்தான். யுதிஷ்டிரன் திரும்பிப் பார்த்தபோது அர்ஜுனனும் பழைய இளநீல ஆடையை அணிந்திருப்பதை கண்டார். “பார்த்தா, நாம் நம் குடிமூத்த தந்தையை பார்க்கச் செல்கிறோம். நமக்குரிய ஆடைகளை நாம் அணிந்திருக்க வேண்டும்” என்றார் அர்ஜுனன் “மீண்டும் குடிலுக்குச் செல்ல பொழுதில்லை” என்றான். “ஏன், சகதேவன் சென்று வந்திருக்கிறானே?” என்றார் யுதிஷ்டிரன். அர்ஜுனன் மறுமொழி சொல்லவில்லை.

“என்ன ஆயிற்று உங்களுக்கு? நம் உளநிலை என்னவாக இருப்பினும் நாம் இப்போது செல்லவிருப்பது அரசப் பணிக்காக. மைந்தரென்றும் அரசனென்றும் நாம் அவரை சந்திக்கச் செல்கிறோம். தோற்றமே அரசகுடியினரை உருவாக்குகிறது. பழக்கமே அவர்களை நிலைநிறுத்துகிறது. எத்தோற்றத்திலும் செல்லலாம் என்னும் நிலையில் அரசகுடியினர் எப்போதும் இருப்பதில்லை” என்றார் யுதிஷ்டிரன். சகதேவன் “இது துயரத்துக்குரிய மாதம். இங்கு நெறிகள் அத்தனை குறிப்பாக பேணப்படுவதில்லை” என்றான். ‘இப்போதுதான் நாம் நெறிகளை பேணியாக வேண்டும். விழவுப்பொழுதுகளில் பேணப்படுவது நெறியல்ல, அது வெறும் நடிப்பு. இப்போது நமது அனைத்து எல்லைகளும் சிதறிப் பறந்துகொண்டிருக்கையில்தான் நாம் நம்மை மீள மீள வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது” என்றபின் மீண்டும் அர்ஜுனனைப் பார்த்து “வெண்ணிற மேலாடையாவது நீ அணிந்துகொள்ளலாம்” என்றார்.

நகுலன் “மூத்தவரே, நமக்கு பொழுதில்லை. இங்கிருந்து நாம் பேரரசரின் குடில் நோக்கி செல்வதற்கு அரைநாழிகைப் பொழுதாவது ஆகும்” என்றான். “இளைய யாதவன் எங்கிருக்கிறான்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அவர் அங்கு வந்துவிடுவதாக சொன்னார்” என்று நகுலன் சொன்னான். “என்ன செய்கிறான்?” என்று மீண்டும் யுதிஷ்டிரன் கேட்டார். நகுலன் “அவர் இன்று காலை முதல் அந்த இரும்புப்பாவையுடன் அமர்ந்திருக்கிறார்” என்றான். “எந்தப் பாவை?” என்றபடி யுதிஷ்டிரன் திரும்ப பீமனும் திரும்பிப் பார்த்தான். “மூத்தவரின் வடிவில் அஸ்தினபுரியின் அரசர் உருவாக்கிய இரும்புப்பாவை. குருக்ஷேத்ரத்திலிருந்து இரு வீரர்களால் அது எடுத்து வரப்பட்டது. மூன்று பகுதிகளாக பிரிந்து கிடந்தது. அதை மீண்டும் பொருத்தி முடுக்கிக்கொண்டிருக்கிறார்” என்றான் நகுலன்.

“இப்பொழுது அதை எதற்கு செய்கிறான்?” என்ற யுதிஷ்டிரன் “சில பொழுதுகளில் அவனை முதிரா உளம் கொண்ட சிறுவன் என்றே எண்ணத்தோன்றுகிறது” என்றார். “நமக்குப் பொழுதில்லை” என்று நகுலன் மீண்டும் சொன்னான். “அவன் அங்கு வந்துவிடுவான் என்றாய். அவன் வருவதற்குள் நாம் சென்றுவிட்டால் என்ன செய்வது?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அவருக்குத் தெரியும். அதற்கு மேல் நாம் அவரை கையாள முடியாது” என்று நகுலன் சொன்னான். “நாம் எவ்வண்ணம் செல்கிறோம்? புரவியில் வேண்டாம். நான் பிற விழிகளுக்கு நடுவே செல்ல விரும்பவில்லை. அங்கு செல்வதற்குள் என் உளம் முற்றிலும் சிதைந்துவிடும்” என்றார் யுதிஷ்டிரன். “ஆம், அறிவேன். தாங்கள் செல்வதற்கு கூண்டுத்தேர் வந்துள்ளது” என்று சொன்ன நகுலன் கை காட்டினான்.

குறுங்காட்டின் ஓரமாக நின்றிருந்த மூடுதிரையிட்ட தேர் வந்து முற்றத்தின் விளிம்பில் நின்றது. ஒற்றைப்புரவி கட்டப்பட்ட, சிறிய சகடங்கள் கொண்ட தேர். யுதிஷ்டிரன் “அங்கு வரை செல்வதற்கு தேர்ப்பாதை உள்ளதா?” என்றார். ‘சேற்றுப்பாதைதான். ஆனால் எடையற்ற தேர் சிக்கலின்றி செல்லும்” என்று நகுலன் சொன்னான். யுதிஷ்டிரர் தேரை அணுகி ஏறுவதற்குமுன் “நீங்கள் இருவரும் என்னுடன் ஏறிக்கொள்ளுங்கள்” என்றார். “நான் புரவியில் உடன் வருகிறேன்” என்றான் நகுலன். “நான் தனிமையாக உணர்வேன், இளையோனே” என்றார் யுதிஷ்டிரன். சகதேவன் “நான் ஏறிக்கொள்கிறேன்” என்றான்.

யுதிஷ்டிரன் ஏறி தேரில் அமர்ந்ததும் சகதேவன் தொடர்ந்து ஏறி அமர்ந்து திரையை கீழிறக்கினான். தேர் முன்னால் சென்றது. அர்ஜுனன் அருகே நின்ற புரவி மேல் ஏறிக்கொண்டான். பீமனை நோக்கி அவனுடைய ஏவலன் புரவியை கொண்டுவந்தான். பீமன் அதில் ஏறிக்கொண்டதும் நகுலன் தன் புரவியை அணுகி அதை தொட்டான். அது தலை தூக்கி அக்கணமே மீண்டும் புரவியென்றாகியது. இதை புரவியென ஆக்குவது என் விழைவு. எவ்வகையிலோ இதை இதன் ஆழ்ந்த இயல்பிலிருந்து மேலெடுக்கிறது அது. புரவி கழுதையிலிருந்து தன் பயணத்தின் பொருட்டு மானுடரால் இழுத்து வெளியே எடுக்கப்பட்ட பிறிதொன்று போலும்.

அவனுள் அவ்வெண்ணம் அவனுடைய கட்டுப்பாடில்லாமலேயே ஓடலாயிற்று. அதை அவன் கேட்டிருந்தான். ஒவ்வொரு கனியும் காட்டிலுள்ள சிறந்த கனியின் விதைகளில் இருந்து தெரிவுசெய்து எடுக்கப்பட்டது. மேலும் மேலுமென நற்கனி தேர்வுசெய்யப்பட்டு இனிதாக்கப்படுகிறது. தேர்வுசெய்யும் கைகளால் மீள மீள கண்டடையப்பட்டு புரவி உருவாக்கப்பட்டது. கழுதையிலிருந்து புரவியாகியது. இனி புரவியிலிருந்து எழுவது பிறிதொன்று. அவன் புரவியின் கால் வளையத்தில் தன் இடக்காலை ஊன்றி வலக்காலைச் சுழற்றி அமர்ந்த கணம் குருக்ஷேத்ரத்தில் குருதி உண்டு வெறித்த விழிகளுடன் சிம்மக்குரலில் கனைத்துப் பாய்ந்த புரவிகளின் முகங்களை ஒருகணத்தில் கண்டான். நடுக்கு கொண்டு புரவிமேலேயே அமர்ந்திருந்தான்.

யுதிஷ்டிரனின் தேர் அப்பால் முன்னால் சென்றது. அவருக்குப் பின்னால் பீமனும் அர்ஜுனனும் சென்றனர். அவன் தொடைகள் நடுங்க புரவிமேலேயே அமர்ந்திருந்தான். பின்னர் புரவியின் கழுத்தைத் தட்டி அதை முன்னால் செலுத்தினான். அது தலையை அசைத்தபடி ஊனமுற்ற முதற்காலை மெல்ல எடுத்து வைத்து நடக்கத் தொடங்கியது. சிம்மங்கள் எழும். பறக்கும் புரவிகள் எழும். பறக்கும் சிம்மப்புரவிகள் எழும். எழவிருப்பவை எவை? குருதியுண்ணும் புரவிகளா? குருதி உண்டபின் அவை நாகங்கள் என்றாகி மண் பிளந்து உள்ளே சென்று உறையுமா? இருள் வடிவாக எழுந்து வருபவை. நீருள் அலைவடிவெனச் சுருண்டிருப்பவை.

மண்மீது பரவி தொலைவுகளை ஆளும் கொடிய ஊன் விலங்கொன்று இங்கிருந்து எழவிருக்கிறது. நகுலன் உடல் குளிர்ந்து நடுங்க கடிவாளத்தை இறுகப் பற்றியபடி பற்களை சேர்த்துக் கடித்து விழிநீர் வார மீள மீள மெய்ப்பு கொண்டபடி குதிரை மீது அமர்ந்திருந்தான்.

 

தேர் குடில் நிரைகளைக் கடந்துசெல்ல வாயில்களில் நின்றிருந்த ஏவலர்களுள் பெண்டிரும் அந்தண இளைஞர்களும் வெறித்த விழிகளுடன் அதை பார்த்தனர். அவர்கள் யுதிஷ்டிரனை பார்க்க இயலவில்லை எனினும் அவரை உள்ளத்தால் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் அவர்களை பார்க்கவில்லை. எனினும் அந்த நோக்குகளை உணர்ந்துகொண்டிருந்தார். தன் குடிலுக்குள் தனித்திருக்கையில்கூட அவர் அந்நோக்குகளிலிருந்து தப்ப இயலாது.

ஒற்றைப் புரவி சிறுமணியோசையுடன் சேற்றில் குளம்புகள் விழும் துடிப்பொலியுடன் தேரை இழுத்துச் சென்றது. அது அலைகளில் ஏறி ஆடும் படகு போலிருந்தது. அந்த அசைவு நன்று. உள்ளிருக்கும் அசைவை அது மட்டுப்படுத்துகிறது. அலைகொள்ளும் உள்ளத்துடன் அசையாமல் அமர்ந்திருப்பதே கடினம். திருதராஷ்டிரரின் குடிலை தொலைவில் பார்த்தபோது நகுலன் அது ஓர் உலைக்கலம் எனும் எண்ணத்தை மீண்டும் அடைந்தான். அதன் மீது அகிபீனாவின் புகைப்படலம் அப்போதும் நின்றிருந்தது.

காற்று ஒழுகிக்கொண்டிருந்த ஆடிமாதம். எங்கோ அணையிட்டுத் தடுத்தது போல் அனைத்து ஒழுக்குகளும் நின்று, இலையசைவுகூட இல்லாமல், வரையப்பட்ட ஓவியம்போல் எழுந்து நின்றிருந்தது காடு. புகையைக் கலைக்கும் காற்று கூடவா இல்லை? ஒரு பறவை பறந்தால்கூட கலைந்துவிடுமளவுக்கு மெல்லிய நீலப்புகை. அப்புகையை முகர்ந்து காடு பித்துகொள்ளக்கூடும். அத்தனை பறவைகளும் பித்துகொள்ளகூடும். துயிலிலிருந்து பிறிதொரு காடு எழும். கனவிலெழும் பிறிதொரு காடு. பிறிதொரு விலங்குத்தொகை. பிறிதொரு சிற்றுயிர்த்திரள். பிறிதொரு வெளி.

அவன் இளைய யாதவரின் தேர் எங்கேனும் நிற்கிறதா என்று பார்த்தான். அவர் வந்திருக்கவில்லை என்பது தெரிந்தது. தவிர்த்துவிட்டாரா என்ற எண்ணம் வந்தது. அதற்கான வாய்ப்பில்லையென்று தோன்றியது. அவரில்லாது பேரரசரை சென்று பார்ப்பது எவ்வகையிலும் இயலாது. பேரரசரைப் பார்க்க அவர்கள் கிளம்பி வந்துகொண்டிருக்கும் செய்தியை அவன் முன்னரே ஏவலன் வழியாக அறிவித்துவிட்டிருந்தான். சங்குலனும் சஞ்சயனும் உடனிருப்பார்கள் என்றும் அவர்கள் வந்து பார்க்கலாம் என்றும் ஒற்றன் வந்து திரும்பி செய்தி சொன்னான். “திருதராஷ்டிரர் எவ்வண்ணம் இருக்கிறார்?” என்று அவனிடம் கேட்டான். “அழுகை ஓய்ந்து மீண்டு அரசியருடன் சேர்ந்து அமர்ந்திருக்கிறார்” என்று ஒற்றன் சொன்னான்.

“அவர்கள் உரையாடிக்கொள்கிறார்களா?” என்று நகுலன் மீண்டும் கேட்டான். “இல்லை அரசே, அவர்கள் ஒருவரை ஒருவர் உணர்ந்தபடி ஒரு சொல்லும் உரைக்காமல் அமர்ந்திருக்கிறார்கள்” என்றான் ஒற்றன். “அவர் ஏதேனும் உணவருந்தினாரா?” என்று நகுலன் கேட்டான். “ஆம் ஊனுணவு அருந்தினார்” என்றான். அது நகுலனுக்கு ஆறுதலளித்தது. “பேரரசி?” என்று மீண்டும் கேட்டான். ”அரசருக்கு உணவூட்டியதே அரசிதான். அதன் பின்னர் தானும் உண்டார்” என்றான். அதன் பின்னரே அவன் திருதராஷ்டிரரிடம் சென்று அவரைச் சென்று பார்ப்பதற்கு உகந்த பொழுதென்று அறிவித்தான்.

குடிலின் முற்றத்தை அடைந்தபோது இளைய யாதவர் இல்லாமல்தான் திருதராஷ்டிரரை சந்திக்கப்போகிறோம் என்ற எண்ணத்தை அளித்தது சூழல். அது அவனுக்கு பதற்றத்தை உருவாக்கியது. புரவி நின்று தேர் குலுங்கியது. அவன் தன் புரவியைத் தட்டி அருகணைந்தான். பீமனும் அர்ஜுனனும் சற்று முன்னால் சென்று நின்றனர். குடில் முகப்பிலிருந்து ஏவலர்கள் முன் வந்து அவர்களிடமிருந்து கடிவாளங்களை பற்றிக்கொள்ள பீமன் இறங்கி சற்று அப்பால் சென்று கைகளை கட்டிக்கொண்டு நின்றான். அர்ஜுனன் இறங்கிச் சென்று பீமன் அருகே நிற்க இரு புரவிகளையும் ஏவலர் அழைத்துக்கொண்டு விலகிச்சென்றனர்.

இரு ஏவலர்கள் தேரின் புரவியை பற்றிக்கொள்ள அது முன்பின் உலைந்து நின்றது. சகடக்கொண்டியை ஒருவன் போட்டான். தேரின் பின்பக்கத் திரையை விலக்கி சகதேவன் வெளியே தலைநீட்டி நகுலனிடம் “இளைய யாதவர் வரவில்லையா?” என்றான். “வருவார்” என்று நகுலன் சொன்னான். “ஏவலர் எவரையாவது அனுப்பி அவரை வரச்சொல்லலாம்” என்று சகதேவன் சொன்னான். “அவர் வராமல் இருக்கப்போவதில்லை” என்று நகுலன் மீண்டும் சொன்னான். “அவர் வந்த பின்னர் மூத்தவர் தேரிலிருந்து இறங்குவதே உகந்தது. இப்போது இறங்கினால் வேறு வழியில்லை. நாம் சேர்ந்து சென்று தந்தையை சந்திக்கவேண்டியிருக்கும். முற்றத்திலேயே நெடும்பொழுது நிற்கவியலாது” என்றான் சகதேவன்.

நகுலன் உள்ளுணர்வின் தொடுகையால் திரும்பிப்பார்த்தான். மிகத்தொலைவில் இளைய யாதவரின் கொடியுடன் ஒற்றைப்புரவித் தேர் வருவது தெரிந்தது. “தேரில் வருகிறார்” என்றான். “தேரிலா?” என்று சகதேவன் கேட்டான். பின்னர் கொடியைப்பார்த்து “ஆம் அவருடையதுதான். தேரில் ஏன் வரவேண்டும்?” என்றான். நகுலன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. தேர் தெளிந்து பெருகி அருகணைந்தது. அதன் புரவிக்கால்கள் சீரான அறைதல்களாக தரையை முட்டிக்கொண்டிருக்க சகடம் உருண்டு ஒழுகி வருவதை இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். தேர் வந்து முற்றத்தை அடைந்து சற்றே வளைந்து நிற்க ஏவலர்கள் வந்து அதன் கடிவாளத்தை பற்றிக்கொண்டனர். தேர்ப்பாகன் அமரத்தில் நிமிர்ந்து அமர்ந்திருந்தான்.

தேரின் பின்புறத் திரையை விலக்கியபடி இளைய யாதவர் கீழே குதித்தார். தன் மேலாடையை சீரமைத்தபடி நகுலனைப் பார்த்து புன்னகைத்தார். நகுலன் தலைவணங்கி “தங்களைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம், யாதவரே” என்றான். “ஆம், பொழுதாகிவிட்டதென்று தெரிந்தது. ஆகவேதான் விரைந்து வந்தேன். செல்வோம்” என்றார். யுதிஷ்டிரன் தேரிலிருந்து இறங்கி தன் மேலாடையை சீரமைத்தபடி இளைய யாதவரை வணங்கினார். மீண்டும் தலைப்பாகையை சீரமைத்தார். இளைய யாதவர் அப்பால் நின்ற அர்ஜுனனை நோக்கி செல்லலாம் என கையசைத்தார்.

அவர்கள் செல்வதற்கு ஒருங்கியபோது இளைய யாதவர் “சொல்வதற்கென சொற்களெதையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதில்லை” என்றார். யுதிஷ்டிரன் அவர் சொல்வதென்ன என்பதை புரிந்துகொள்ளாமல் திகைப்புடன் பார்த்தார். “முறைமைச் சொற்கள் என எதையும் சொல்லவேண்டியதில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். “இது ஒரு முறைமைச் சடங்கு. அதன் பொருட்டே வந்திருக்கிறோம். குறித்த சொற்களால் மட்டுமே இத்தருணத்தை கடந்து செல்லமுடியும்” என்றார் யுதிஷ்டிரன். “சிலதருணங்களில் முறைமைச்சொற்கள் இரக்கமற்றவையாக தோன்றக்கூடும்” என்றார் இளைய யாதவர். “அவர் முன் சென்று நில்லுங்கள். தன்னியல்பாக உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை சொல்லுங்கள்.”

“அவ்வண்ணமல்ல அது நிகழ்வது” என்றார் யுதிஷ்டிரன் “தன்னியல்பான சொற்கள் என்று எதுவும் எனக்கு தோன்றவில்லை. அவ்வண்ணம் தோன்றுமெனில் அது உகந்தவையாக இல்லாமலும் இருக்கக்கூடும். நான் முறைமைச் சொற்களை மட்டுமே கூறவிருக்கிறேன். அவ்வாறு மட்டுமே என்னால் வெளிப்பட முடியும்” என்றார் யுதிஷ்டிரன். புன்னகைத்தபடி “எனில் அதுவே ஆகுக!” என்றார் இளைய யாதவர். தன் பாகனை நோக்கி தேரை திருதராஷ்டிரரின் குடிலருகே சென்று நிறுத்தும்படி ஆணையிட்டார். தேர் அவர்களைக்கடந்து முன்னால் சென்று திருதராஷ்டிரரின் குடிலுக்கு இணையாக இருந்த சஞ்சயனின் குடிலை நோக்கி சென்றது.

“செல்வோம்” என்றபடி இளைய யாதவர் நடக்க அப்பாலிருந்து பீமனும் அர்ஜுனனும் வந்து அவர்களுடன் இணைந்துகொண்டனர். யுதிஷ்டிரன் “நாம் இத்தருணத்தில் உரிய சொற்களை சொன்னால் நம் மீது பழியில்லாமல் இதைக் கடந்து மீளமுடியும். எண்ணாது சொல்லும் எச்சொல்லும் அவர்மேல் அம்பென அனலென பாயக்கூடும்” என்றார். எவரும் மறுமொழி சொல்லவில்லை. “நாம் எண்ணிச் சொல்வது இயலாது. முறைமைச்சொற்கள் என்பவை நம் முன்னோர் எண்ணி எண்ணி வகுத்தவை. எத்தனையோ தருணங்களை கடந்துவந்தவை” என்று மீண்டும் யுதிஷ்டிரன் சொன்னார். “நீங்களே அவற்றை சொல்லுங்கள், மூத்தவரே” என்றான் நகுலன். யுதிஷ்டிரன் வெறுமனே திரும்பி நோக்கினார். அவருடைய கைவிரல்கள் நெளிந்துகொண்டே இருப்பதை நகுலன் பார்த்தான்.

தொடர்புடைய பதிவுகள்


பூமணி- மண்ணும் மனிதர்களும்

$
0
0

 

பூமணிக்கு விருது அளிப்பதாக முடிவுசெய்தபின்னர் அச்செய்தியை அவரிடம் நேரில் சொல்வதற்காகக் கோயில்பட்டி சென்றிருந்தேன். அதற்கு முன்னர் அவரை நான் ஒருமுறைதான் நேரில் பாத்திருக்கிறேன், ஏறத்தாழ ஏழு வருடங்களுக்கு முன்னர் வண்ணதாசனின் மகள் திருமணத்தில். ஒரு எளிமையான கைகுலுக்கல். அப்போது பூமணி ஓர் எழுத்தாளர் போலிருக்கவில்லை, நானறிந்த பல நூறு அரசு அதிகாரிகளில் ஒருவரைப்போலிருந்தார். நேர்த்தியான ஆடைகள். படியவாரிய தலைமயிர். கண்ணாடிக்குள் அளவெடுக்கும் கண்கள். மெல்லிய குரலில் பேச்சு. நிதானமான பாவனைகள். ஒரு சில சொற்கள் பேசிக்கொண்டோம்.

 

நான் பூமணியிடம் அன்று அவரது ’பிறகு’,’வெக்கை’ ஆகிய இருநாவல்களைப் பற்றி சில சொற்கள் சொன்னேன். சிரித்துக்கொண்டே ‘அதெல்லாம் எழுதி ரொம்ப நாளாச்சு’ என்றார். அப்போது அவர் ’கருவேலம்பூக்கள்’ படம் எடுத்து முடித்திருந்தார். படம் எப்படி வந்திருக்கிறது என்று கேட்டேன். நன்றாக வந்திருப்பதாக எல்லாரும் சொல்கிறார்கள் என்றார். மீண்டும் இலக்கியத்துக்கு எப்போது வருகிறீர்கள் என்றேன். சிரித்துக்கொண்டு எப்போதுமே இலக்கியத்தில்தான் இருப்பதாகவும் ஒரு பெரிய நாவலை எழுதிக்கொண்டிருப்பதகாவும் சொன்னார். மேடையின் மெல்லிசை முழக்கத்தில் பாதிகேட்டுப் பாதி உதட்டசைவால் ஒரு சிறிய உரையாடல்.

கோயில்பட்டிக்கு வருகிறேன் என்றதும் பூமணி வரவேற்றார். ஆனால் அவரது வீட்டுக் கட்டுமான வேலை நடந்துகொண்டிருப்பதனால் வெளியே சந்திக்கலாம் என்றார். நான் அவரை நான் தங்கியிருந்த விடுதிக்கு வரமுடியுமா என்றேன். மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார். அவர் இல்லம் தேடிச்சென்று சந்திக்கவேண்டுமென்ற ஆசை நிறைவேறாமல் போனதில் கொஞ்சம் வருத்தம்தான். விடுதியறையில் காத்திருந்தேன். கதவு தட்டப்பட்டது. நான் ‘யார்?’ என்றேன். ’நான்தான் பூமணி’ என்றார். சற்று அதிர்ச்சியாக இருந்தது. பூமணி முற்றிலும் இன்னொருவராக இருந்தார். அக்கறையே இல்லாத ஆடைகள். நன்றாக நரைத்த தலை. நரைத்த மீசை. சட்டென்று வயோதிகம் வந்து கூடியது போல.. பூமணியின் கைகால்கள் மெல்ல நடுங்கின. நரம்புத்தளர்ச்சி நோயால் அவதிப்படுவதாகச் சொன்னார். அது அவரது நடை பாவனை எல்லாவற்றையும் மாற்றி அவரை இன்னொருவராக ஆக்கிவிட்டிருந்தது. சென்னையை நிரந்தரமாகத் துறந்து கோயில்பட்டிக்கே வந்துவிட்டதாகச் சொன்னார். ஏனென்று கேட்டேன். ‘எப்பவுமே சென்னையிலே இருக்கிற ஐடியா இருந்ததில்லை. சரி, கடமைகள் முடிஞ்சது வந்திட்டேன்’ என்றார்

அன்று மாலை வரை பூமணியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரது இளமைக்காலம், இலக்கிய வாசிப்பு, அரசுத்துறை ஊழியம், எல்லாவற்றைப்பற்றியும். ஒரு பதிவுக்கருவி கொண்டுசென்றிருந்தேன். அதுவேலைசெய்யவில்லை. ஆகவே அவர் பேசுவதை முழுக்கக் கையாலேயே குறிப்பெடுத்தேன். வழக்கமாகக் கரிசல் நிலத்தில் வெயில் எரிந்துகொண்டிருக்கும். ஆனால் அன்று இதமான சாரல்மழை இருந்தது. மாலையில் தேவதச்சனின் சேது ஜுவல்லரிஸ் என்ற நகைக்கடையைத் தேடிசென்றேன். அதைக்கண்டுபிடிப்பது அப்படி சிரமமாக இல்லை, ஆனால் நானறிந்த கோயில்பட்டி நிறைய மாறியிருந்தது. புதிய பெரிய கட்டிடங்கள். பரபரப்பான சாலை. தேவதச்சனின் கடையே மாறியிருந்தது, ஏதோ நகையைப் பரிசீலித்துக்கொண்டிருந்தவர் என்னை ஏறிட்டுப்பார்த்தார். கண்ணாடிக்குள் தெறித்த கண்களில் சட்டென்று வியப்பு.

‘’பூமணி சொன்னார், வருவீங்கன்னு சொன்னார். உக்காருங்க’ என்றார் தேவதச்சன். நான் அவர் முன்னால் அமர்ந்துகோண்டேன். ’நகைவியாபாரமெல்லாம் எப்படிப் போகுது’ என்றேன். ‘போய்ட்டிருக்கு’ என்றார் தேவதச்சன்.’இப்ப பெரிய பெரிய கார்ப்பரேட் கடைகள் வந்தாச்சு. ஜனங்களுக்கு அவங்க விளம்பரம் மேலே மயக்கம். விலையிலயும் கொஞ்சம் குறைச்சுக்க முடியும்…முன்னெல்லாம் பொற்கொல்லர்னா ஒரு குடும்ப உறவு இருக்கும். கல்யாணம் நிச்சயிச்சா உடனே செய்றது ஆசாரிய வந்து பாக்கிறதுதான். பெரும்பாலான சமயங்களிலே பொண்ணையும் கூட்டிட்டு வருவாங்க. பொண்ணோட அம்மாவுக்குப் போட்ட நகைகளைக் கொண்டு வருவாங்க. உருக்கிப் புதுசா செய்றதுக்காக…அந்த நகையும் இதே கடையிலேதான் செஞ்சிருப்போம்…இங்கதான் செஞ்சதுன்னு சொல்லிக் குடுப்பாங்க…அந்த உறவு இப்ப இல்லை. நேத்து ஒருத்தர் வந்தார். ரெண்டுதலைமுறையா எங்க கஸ்டமர். எவ்வளவோ வேலைசெஞ்சு குடுத்திருக்கோம். கொஞ்சம் விலை வித்தியாசம், சட்டுன்னு அங்க போறம்னு கெளம்பிட்டார். பல தலைமுறைப் பழக்கம் , அதுக்கு ஒரு பிரயோசனமும் இல்லைன்னு ஆயிட்டுது’ என்றார்

கடையில் இருந்து கிளம்பித் தேவதச்சனுடன் நடந்துசென்றேன். இருபதாண்டுகளுக்கு முன்னால் அவரிடம் அப்படிக் கவிதையின் படிமங்களையும் உருவகங்களையும் பற்றிப் பேசிக்கொண்டே சென்ற நாட்கள் நினைவுக்கு வந்தன. செண்பகவல்லி அம்மன் கோயிலுக்குப் பின்னாலுள்ள மைதானத்துக்குச் செல்லும் படிகளில் ஏறிச்சென்றோம். பழமையான வீடுகள் இன்னும் மிச்சமிருந்தன. சில வக்கீல்கள் அங்கே குடியிருப்பதாகச் சொன்னார். ஒரு வீட்டில் வ.உ.சி கொஞ்சகாலம் குடியிருந்தாராம். வீடு பழைமைகொண்டு மூடிப் போடப்பட்டிருந்தது. அதன் படிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். செண்பகவல்லி அம்மன் எப்படி கோயில்பட்டி என்ற சிற்றூரின் குடிதெய்வமாக உருவாகி வந்தாள் என்று தேவதச்சன் சொன்னார். இரவு நெடுநேரம் வரை கோயில்பட்டியின் வளர்ச்சியைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். ஒரு சிறிய சாலையோரத்து கிராமமாக இருந்தது, ஒரு தொழில்நகரமாக வளர்ந்த கதையைச் சொன்னார்.

மறுநாள் தேவதச்சன் அதிகாலையில் விடுதிக்கு வந்தார். கதிரேசன்கோயில் மலைக்கு ஒரு ஆட்டோவில் சென்றோம். கரடு என்றுதான் சொல்லவேண்டும். மலைக்குமேல் உள்ள முருகன் கோயில் வெறும் ஒரு வேலாக இருந்த காலம் எல்லாம் தேவதச்சனுக்குத் தெரியும். அன்றெல்லாம் பிள்ளைகளுடன் அவர் அங்கே வந்து விளையாடியதுண்டு. நெடுங்காலம் குடிகாரர்களின் மையமாக இருந்த இடம். கீழே சின்னக் குற்றவாளிகளும் உதிரித்தொழிலாளர்களும் வாழும் தெருக்கள். இன்று எல்லாமே மாறிவிட்டன. அப்பகுதி எங்கும் புதிதாக ‘நகர்’கள் முளைத்துப் பரவிக்கொண்டிருந்தன.அந்தக் கோயிலை எடுத்துக்கட்டுவது அப்பகுதிக்கு ஓர் அடையாளத்தைக்கொடுத்து அங்கே நிலத்தின் மதிப்பை ஏற்றும் என நினைத்த நில வியாபாரிகளால் கோயில் பெரிதாகக் கட்டப்பட்டு சிமிண்ட் படிகளும் அமைக்கப்பட்டது. அதற்குப்பலனும் இருந்தது, கதிரேசன்கோயில் நகர் இன்று மிகவும் மதிக்கப்படும் பகுதி. அருகேதான் இன்னும் அந்தக் குடிசைப்பகுதி இருக்கிறதென்றாலும்.

ஆனால் அது இன்று குடிசைப்பகுதியல்ல என்று தோன்றியது. சில ஓட்டு வீடுகள் இருந்தன. மிச்சமெல்லாம் புதியதாகக் கட்டப்பட்ட சிமிண்ட் வீடுகள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை கிடந்த கோயில்பட்டியை இந்திய அளவுகோலின்படி செல்வச் செழிப்பான நகரமென்றே சொல்லவேண்டும். ஏராளமான புதிய வீடுகள் டிஸ்டெம்பர் அடித்த சுவர்களுடன் இளமழைக்குப்பின் முளைத்த பசுமையுடன் நின்றன. சுற்றி விரிந்திருந்த கரிசல் நிலம் தொடுவானில் சற்றே உயர்ந்திருந்த மண்மேட்டை அடைந்து வானுக்கேறியது. கோயில்பட்டி கண்ணெதிரே வளர்ந்துகோண்டிருப்பதுபோல எனக்கு பிரமை ஏற்பட்டது. பெயர் சுட்டுவதுபோலக் கோயில்பட்டி ஒரு கூடுமிடமாகவே இருந்திருக்கிறது. மங்கம்மாள்சாலையில் வணிகர்கள் இளைப்பாறும் ஒரு சின்ன மையம். கேப்பைக்களியும் பதநீரும் விற்கும் வியாபாரிகள் அங்கே மரத்தடிநிழலில் அமர்ந்திருந்திருக்கலாம்.

1689 முதல் 1704 வரை மதுரையை ஆண்ட ராணிமங்கம்மாளால் உருவாக்கப்பட்டது தென்னகத்துக்கான நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை 47. இன்றும்கூட இப்பகுதிகளில் இதை மங்கம்மாசாலை என்றுதான் சொல்கிறார்கள். மங்கம்மாள் இந்தியாவை ஆண்ட அபூர்வமான பேரரசிகளில் ஒருவர். அவருடன் ஒப்பிடுவதற்கு இன்னொரு அரசிதான், காகதீயப்பேரரசி ராணி ருத்ராம்பாள். மங்கம்மாளின் காலகட்டத்தில் திருச்சிமுதல் குமரிவரை அவளுடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது, அனேகமாகத் தமிழகத்தின் முக்காற்பங்கு. வரிவசூல் அமைப்புகள் முழுமை பெற்றிருந்தன. பெரிய படையெடுப்புகள் ஏதும் நிகழவில்லை, படைகொண்டுவந்த ஔரங்கசீபின் தளபதியைக் கப்பம் கொடுத்துத் திருப்பியனுப்பினாள் மங்கம்மாள். பிற மன்னர்களைப்போல மங்கம்மாள் கோயில்களைக் கட்டவில்லை. சாலைகள், சந்தைகள், ஏரிகள் ஆகியவற்றிலேயே அவர் கவனம் செலுத்தினார். தென்னாட்டில் உள்ள பல ஊர்கள் அவரால் உருவாக்கப்பட்டவையே.

ஏசுசபைக் குறிப்புகளை வைத்துப்பார்த்தால் மங்கம்மாளுக்கு முன்னர் மதுரையில் இருந்து குமரிக்கு வரும் பாதையானது கிழக்குமலைத்தொடர்களை ஒட்டி அமைந்திருந்தது. முக்கியமான காரணம் இப்பகுதி நிலம் வளமானது என்பதும் ஆகவே இங்கே சிற்றரசுகள் உருவாகியிருந்தன என்பதும்தான். மக்கள் வாழும் நிலம் வழியாகவே சாலைகள் அமையமுடியும். வண்டிகளுக்கு நீரும் உணவும் தேவைப்பட்டது. இன்றைய சாலை இருக்குமிடம் வெறும் பொட்டல். இன்று கரிசல் என்று சொல்லப்படும் நிலம் நீரற்றபாலையாக, கைவிடப்பட்ட தரிசாகக் கிடந்திருக்கும். அங்கே இருந்தவர்கள் பெரும்பாலும் பாலையை நம்பி வாழும் மக்கள். அவர்களுக்குத் திருட்டு குற்றமல்ல.

அத்துடன் மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றிக்கொண்டபோது தோற்கடிக்கப்பட்ட பாண்டியவம்சம் தென்னாட்டில் கயத்தாறிலும் தென்காசியிலும்தான் குடியேறியது. நெடுங்காலம் கயத்தாறு அவர்களின் மையமாக இருந்தது. விஸ்வநாதநாயக்கனின் பேரமைச்சர் அரியநாதமுதலியார் கயத்தாறைச் சுற்றி ஆண்டிருந்த பஞ்சவழுதிகள் என்ற சிற்றரசர்களைத் தோற்கடித்தார் என்று சொல்லப்படுகிறது. இவர்களெல்லாருமே தங்களைப் பாண்டிய வம்சத்தவர் என சொல்லிக்கொண்டவர்கள். பாண்டியர்களின் மறவப்படையின் பெரும்பகுதி இங்கே சிதறி வாழ்ந்தனர். நிலத்தின் வளமின்மை அவர்களைக் கொள்ளையர்களாக ஆக்கியிருந்தது. எப்போதாவது குமரிக்குப் பெரும்படையுடன் வரும்போதுமட்டுமே இந்த விரிந்த பொட்டல்நிலம் பாதையாகப் பயன்படுத்தப்பட்டது.

மங்கம்மாள் இங்கே ஒருசாலையை அமைக்க முடிவெடுத்தபோது கடுமையான எதிர்ப்ப்பு வந்ததாகச் சொல்லப்படுகிறது. வாய்மொழிக்கதைகளின்படி மங்கம்மாள் பெண்களுக்கே உரிய மதிநுட்பத்துடன் முடிவெடுத்தார். இப்பகுதியில் ஆங்காங்கே ஆதிக்கம் செலுத்திய கள்வர் குலங்களையே தேர்ந்தெடுத்துக் குலப்பட்டமும் அடையாளமும் கொடுத்து அப்பகுதிகளின் காவலர்களாக நியமித்தார். அவர்கள் அங்கே பயணிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டும், அவர்கள் சிறு சுங்கம் வசூலித்துக்கொள்ளலாம். மங்கம்மாள் கட்டிய நூற்றுக்கணக்கான கல்மண்டபங்கள் சமீபத்தில் நாற்கரச்சாலை வரும்வரைக்கும்கூட இச்சாலையின் இருமருங்கும் இருந்தன.

மங்கம்மாள் சாலை மிகவிரைவிலேயே முக்கியமான வணிகப்பாதையாக ஆகியது. அதனூடாக வந்த வண்டிகள் தங்குமிடங்கள் ஊர்களாக ஆயின. தெற்கே உவரி புன்னைக்காயல் பகுதிகளில் இருந்து வந்த நாடார் வணிகர்கள் குடியேறிய சாத்தூர் சிவகாசி விருதுபட்டி போன்ற ஊர்கள் வளர்ந்து பேரூர்களாக நகரங்களாக மாறின. அவ்வாறுதான் கோயில்பட்டியும் உருவெடுத்தது. ஒப்புநோக்கக் கோயில்பட்டிக்கு அருகே உள்ள கழுகுமலை, கயத்தாறு , கங்கைகொண்டான் போன்ற ஊர்களே முக்கியமானவை. அங்கேதான் கோயில்கள் இருந்தன. ஆனால் கோயில்பட்டி சட்டென்று வளர ஆரம்பித்து அவ்வூர்களைத் தாண்டிச் சென்றது.

திருநெல்வேலி கண்ட்ரி மேனுவல் எழுதிய எச்.ஆர்.பேட் கோயில்பட்டியின் வளர்ச்சியை முன்னரே ஊகித்தவர்களில் ஒருவர். கோயில்பட்டியைச் சுற்றியிருக்கும் கரிசல்நிலம் பருத்தி விவசாயத்துக்கு மிகமிக ஏற்றது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த நிலப்பகுதியில் உள்ள வறண்ட காலநிலையும் இதமான மழையும் கூடப் பருத்திக்கு ஏற்றதுதான். பருத்தி விவசாயம் அப்போதே கோயில்பட்டி சுற்றுவட்டாரக் கிராமங்களின் முக்கியமான தொழிலாக ஆகிவிட்டிருந்தது. பருத்தியை வாங்கி விற்கும் வணிகமையமாகக் கோயில்பட்டி உருவம் கொள்ள ஆரம்பித்தது. பருத்தியை நூலாக்கும் மில்கள் கோயில்பட்டியில் உருவானபோது அது தொழில்நகரமாகவும் ஆகியது. 1891 இல் வந்த லாயல் மில்லும் 1926 இல் வந்த லட்சுமி மில்லும் இன்றும் கோயில்பட்டியின் அடையாளங்கள்.

மெல்லமெல்ல மில் தொழில் வலுவிழந்தபோதுதான் கோயில்பட்டியில் தீப்பெட்டித்தொழில் ஆரம்பித்து வேகம் கொண்டது. கோயில்பட்டியின் வறண்ட காலநிலை தீப்பெட்டித்தொழிலுக்கு மிகமிக உகந்தது. ஏராளமான மலிவான உழைப்பு கிடைத்தது இன்னொருகாரணம்,. இன்றைய கோயில்பட்டியின் செழிப்பு தீப்பெட்டித்தொழிலினால்தான் என்பதை மறுக்கமுடியாது. கோயில்பட்டியின் விவசாயம் சமூகக் கட்டமைப்பு எல்லாவற்றையுமே தீப்பெட்டித்தொழில் முற்றாக மாற்றியமைத்துவிட்டது. கோயில்பட்டி குறைந்தகாலத்துக்குத் தரமான பேனா நிப்புகள் செய்யக்கூடிய இடமாகவும் அறியப்பட்டது. அதிகமும் கையாலேயே செய்யவேண்டிய இவ்வேலையை இங்கே கிடைக்கும் மலிவான குழந்தைத்தொழிலாளர்களின் உழைப்புக்காகவே கொண்டுவந்தார்கள். இத்தொழில் இன்று நசிந்துவிட்டது.

கோயில்பட்டியைச்சுற்றிய நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குக் கோயில்பட்டிதான் மையம். சுற்றியுள்ள கிராமங்களில் இடைசெவல் இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கேதான் தமிழின் இரு முக்கியமான பெரும்படைப்பாளிகள் உருவானார்கள். கு.அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனும். கி.ராஜநாராயணன் வழியாக இந்த நிலம் இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றது. கரிசல் இலக்கியம் என்ற சொல்லாட்சி உருவானது. கரிசல் இலக்கியத்திற்கு இன்று ஒரு நீண்ட படைப்பாளி வரிசையே உள்ளது. கோயில்பட்டியை ஒட்டிய ஆண்டிபட்டி என்ற கிராமம்தான் பூமணிக்கும். அந்தக் கரிசல் மண்ணயே அவரும் எழுதினார். அவ்வகையில் அவரும் கரிசல் எழுத்தாளர் என்று சொல்லலாம்.

பூமணி தேவேந்திரகுல வேளாளர் என்று சொல்லப்படும் பள்ளர் [அல்லது மள்ளர்] சமூகத்தைச் சேர்ந்தவர். தேவேந்திரகுலத்தவர் அட்டவணைச்சாதிகளில் சேர்ந்தவர் என்பதனால் பூமணியை தலித் எழுத்தாளர் என்பது வழக்கம். ஆனால் இவ்வகை அடையாளங்களை முழுக்க நிராகரிக்கக்கூடியவராகவே எப்போதும் பூமணி இருந்திருக்கிறார். ”தலித் என்ற வார்த்தை எனக்கு அன்னியமானது. அந்த வார்த்தைக்கு ஒடுக்கப்பட்டவன் என்ற அர்த்தம் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எந்தச்சாதியில்தான் ஒடுக்கப்பட்டவன் இல்லை? எல்லாச்சாதியிலும் ஒடுக்குகிறவனும் ஒடுக்கப்பட்டவனும் உண்டு. ஆனால் அந்த வார்த்தை குறிப்பிட்ட சில சாதிகளை ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவதற்காக முன்வைக்கப்படுகிறது. இதில் ஓர் அசிங்கமான உள்நோக்கம் உண்டு

அன்றைக்கு சூத்திரனுக்குக் கீழே வைக்கப்பட்டிருந்தவன் பின்னர் ஒரு புண்ணியவானின் கருணையால் அரிசனன் ஆனான்,அப்புறம் பட்டியல்சாதிக்காரன், தாழ்த்தப்பட்டவன், ஆதி திராவிடன் என்று மாறினான். இன்று தலித் கூட்டில் அடைத்திருக்கிறார்கள், ஆக தூரத்தில் நின்று சுட்டிக்காட்டுவதற்கு ஒரு நிரந்தர அடையாளம் வேண்டியிருக்கிறது. இந்த லட்சணத்தில் சமபந்தி போஜனம் சமத்துவபுரம் எல்லா இழவும் உண்டு

சௌக்கியமா என்று வழக்கமாகக் குசலம் விசாரிப்பதுபோல தலித் இலக்கியம் பற்றி எல்லாரும் விசாரிக்கிறார்கள். முற்பட்ட பிற்பட்ட அட்டவணைச்சாதி என்று இலக்கியத்தைத் தரம்பிரிக்கமுடியாது. அனுபவங்களும் உணர்வுகளும் எந்த சாதிக்காரர்களால் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன என்பதைவிட அவை என்ன என்பதுதான் முக்கியம். என்னைப்பொறுத்தவரை அழகிரிப்பகடை,சங்கரய்யர் இருவருடைய உணர்வுகளுக்கும் சாதியில்லை.

கிடையாடுகளைத் துண்டந்துண்டமாகப் பிரித்து வேலிகளுக்குள் அடைத்துவைப்பதுபோல இலக்கியத்தை சாதிவேலிகளுக்குள் அடைத்து அதன் நோக்கங்களைக் குறுக்கிவிடக்கூடாது. எழுத்தாளனின் விரல்களுக்கு விலங்கிடமுடியாது,சாதி அடையாளத்துடன் இனம் காட்டப்படும் தலித் இலக்கியத்தில் எனக்கு உடன்பாடில்லை. அந்த வார்த்த்தையின் உண்மையான அர்த்தத்தில் இலக்கியம் இருந்தால் அது வரவேற்கப்படவேண்டியதே.

என்னை தலித் என்று கூறிக்கொள்ள விரும்பவில்லை. அந்தக் கடன்வாங்கிய பட்டம் எனக்குத் தேவையுமில்லை. எழுத்தாளனை இப்படி சிறுகூண்டுகளுக்குள் அடைத்து நிறுத்திவைப்பது இலக்கியத்துக்குச் செய்யும் பெரிய துரோகமாகும். இதுதான் தொடர்ந்து நடக்கிறது

தலித் என்ற வார்த்தை இறக்குமதிசெய்யப்படுவதற்கு முன்பே நான் சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைப்பற்றி எழுதியவன். என்னை இச்சாதிக்காரன் என்று சொல்லிக்கொள்வதில் கூச்சமோ தயக்கமோ கிடையாது,. அதற்காக நான் வேறு எந்த இனத்தினரைப்பற்றியும் எழுதக்கூடாது என்று தடைவிதிப்பதற்கு எந்தக் கொம்பனுக்கும் உரிமை இல்லை. ஏனென்றால் அடிப்படையால் நான் ஒரு மனுசன்’ என்று பூமணி தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

பூமணி சொல்வதை அவரது வாசகன் முழுமையாக ஏற்றுக்கொள்வான். அவரை தலித் எழுத்தாளர் என்று சொல்லமுடியுமா என்றால் அவர் அவர்களைப்பற்றி மட்டும் எழுதியவரல்ல. கரிசல் எழுத்தாளார் என்று சொல்லமுடியுமா என்றால் அவரது எழுத்தின் எல்லை அதுவும் அல்ல. அவரை ஒடுக்கப்பட்ட மக்களின் கதைசொல்லி என்று சொல்லக்கூட முடியாது, அவர் எல்லா மக்களையும் கதைமாந்தர்களாக ஆக்கி எழுதியிருக்கிறார். சரி, முற்போக்கு எழுத்து என அவரது எழுத்ததைச் சொல்லிவிடமுடியுமா என்றால் அவர் எங்கும் அரசியலை அடையாளப்படுத்தியவரல்ல. ஆகவே அவரை இலக்கியவாதி என்று மட்டுமே அடையாளப்படுத்தமுடியும்

ஆனால் பூமணி எழுதும் வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொள்ள அப்பகுதியின் சாதி சமூக அமைப்பின் ஒரு சித்திரம் நமக்குத் தேவையாக உள்ளது. இது தமிழ்நாட்டின் பிறபகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு உருவாகும் பலவகையான புரிதல்பிழைகளைத் தவிர்க்கும். இந்தவாழ்க்கைச்சித்திரத்தின் நுட்பமான பல உள்ளோட்டங்களை அடையாளம் காணவும் செய்யும். அந்தத் தேவைக்காக, அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு பூமணியின் சமூகப்பின்னணியை நாம் ஆராயலாம். தமிழில் சமூக யதார்த்ததை எழுதிய எந்தக் கலைஞனையும் இந்த விரிவான பின்னணியில் வைத்து ஆராய்வது அவசியம்.

சங்க காலத்தில் மள்ளர்கள் என்று அழைக்கப்பட்டவர்களே இன்று பள்ளர்கள் என்றும் காலாடி,குடும்பர்,மூப்பர்,பண்ணாடி என்ற பிற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களைத் தேவேந்திர குலத்தவர் என்ற பொருளில் தேவேந்திரகுல வேளாளர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்ப்பக்கம் உள்ள கல்வெட்டு

விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . . ”
—- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் 2, எண் 863ஃ பக்கம் 803

கூறும் ஆதாரத்தின் அடிப்படையில் இவர்களை தேவேந்திர குலத்தவர் என்று சொல்வது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மள்ளர்களின் பூர்வீகநிலம் இப்பகுதியல்ல என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் அவர்கள் நெல்விவசாயிகள் என்றே சொல்லப்பட்டுள்ளது. ஆகவே மருதநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருக்கக்கூடும். அவர்களின் வரலாற்றில் இரு பெரும் சரிவுக்காலங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. ஒன்று, ஏழு எட்டாம் நூற்றாண்டு முதல் பிற்காலச் சோழர்- பாண்டியர் ஆட்சியில் நிகழ்ந்தது. இந்தக்காலகட்டத்தைத் தமிழகத்தில் பெரிய ஆலயங்களை மையமாக்கிப் பொருளியலமைப்புகள் உருவான காலகட்டம் என்று சொல்லமுடியும். அன்றைய நில உரிமை முறைப்படி வேளாண் நிலங்கள் கிராமங்களுக்குரியவையாக, கூட்டு உரிமை கொண்டவையாக இருந்தன. தனிநபர் உரிமை இல்லை. வேளாண்மைக்குத் தேவையான நிலம் அந்தந்தப் பருவத்தின் தேவைக்கு ஏற்ப அளந்து பயன்படுத்தப்பட்டது. வேளாண்மை செய்யப்படாத நிலங்கள் ஏராளமாகக் கிடந்தன.

அன்று பெரும்பாலான வேளாண்நிலங்கள் மள்ளர் கிராமங்களுக்குரியவையாக இருந்திருக்கலாம். சோழ-பாண்டிய ஆட்சிக்காலத்தில் ஆலயங்கள் நில உடைமை மையங்களாக ஆனபோது கிராமநிலங்கள் முழுக்கக் கோயில்சொத்துக்களாக ஆயின. அவற்றின் நிர்வாக உரிமை சைவ-வைணவ மடங்களுக்கும், அம்மடங்களிடமிருந்து வேளாளர்களுக்கும் சென்று சேர்ந்தது. இந்தக் காலகட்டம் வேளாளர்களின் பொற்காலம். ஏராளமான வேளாளகுலங்கள் உருவாகி வந்த காலகட்டம் இது. மள்ளர்கள் நிலங்களை இழந்து குத்தகைக்காரர்களாக, நிலங்களில் வேலைசெய்பவர்களாக ஆக நேர்ந்தது.

இரண்டாவது சரிவுக்காலகட்டம் என்பது பதினைந்தாம் நூற்றாண்டு முதல் நாயக்கர்களின் குடியேற்றத்தை ஒட்டி நிகழ்ந்தது. இருநூறாண்டுகளுக்கும் மேலாக நாயக்கர்கள் ஆந்திரநிலப்பகுதியில் இருந்து வந்து தென்னகத்தில் குடியேறியபடியே இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பெரும்பாலும் மள்ளர்களின் நிலங்களே அளிக்கப்பட்டன. மள்ளர்கள் மேலும் மேலும் பண்படாத தரிசுகளை நோக்கித் தள்ளப்பட்டார்கள். நாயக்கர்களின் பிந்தைய தலைமுறைகள் தரிசுகளைப் பயிர்செய்யவேண்டிய கட்டாயத்துக்காளானார்கள். நாயக்கமன்னர்கள் இவர்களுக்காகவே ஏரிகளையும் குளங்களையும் தொடர்ந்து உருவாக்கினார்கள்.

இவ்விரு சரிவுக்காலகட்டங்களைத் தாண்டி மள்ளர்கள் நவீனகாலகட்டத்துக்குள் நுழையும்போது அவர்களின் சமூக நிலை குழம்பியதாகவே இருந்தது.1770 லும் 1874 லும் ஏற்பட்ட இரு பெரும் பஞ்சங்களால் ஏராளமான மக்கள் பஞ்சப்பராரிகளாக ஆகி விவசாயக்கூலிகளாகவும் நில அடிமைகளாகவும் ஆகிவிட்டிருந்தனர். அந்த அவலநிலையில் இருந்தமையால்தான் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகக் கணிக்கப்பட்டார்கள். அந்தச் சலுகை அவர்களுக்குத் தேவையாகவும் இருந்தது.சுதந்திரத்துக்குப்பின் அவர்களின் பொருளியல் மேம்பாடு அடைந்தமைக்கு அந்த அடையாளமும் அது அளித்த முன்னுரிமைகளும் பெரும் உதவி புரிந்தன.

ஆனால் எங்கெல்லாம் தேவேந்திரர் மட்டும் வாழ்ந்த கிராமங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் அவர்கள் நில உரிமையாளர்களாகவும் நீடித்தனர். பருத்தி போன்ற பணப்பயிர்கள் வந்தபோது அல்லது நவீன பாசனவசதிகள் வந்தபோது வசதியான நிலக்கிழார்களாகவும் இருந்தார்கள். இந்த முரண்பாடு பூமணியின் படைப்புலகிலேயே காணக்கிடைக்கிறது. அவர் தலித் வாழ்க்கையை எழுதுகிறார் என்ற எண்ணத்தில் வாசிப்பவர்கள், குறிப்பாக வடதமிழகத்து வாசகர்கள், பூமணி ஒருபக்கம் அம்மக்களின் கடுமையான வறுமையை எழுதும்போதே மறுபக்கம் அவர்கள் நிலம் வைத்து விவசாயம் செய்வதையும் எழுதுவதைக் கண்டு குழப்பம் கொள்கிறார்கள். இந்த சாதிப்பின்புலத்தைப் புரிந்துகொள்வது பூமணியின் கதைகள் காட்டும் உலகை நுணுக்கமாக அறிய உதவிகரமானது. அதாவது பூமணி நில அடிமைகளின் கதையை எழுதவில்லை. சிறு நில உடைமையாளர்களை, வறட்சியால் அல்லது வேறு காரணங்களால் கூலிவிவசாயத்துக்குச் செல்லும் மக்களையே காட்டுகிறார்.

பூமணி எழுதும் சமூகப்புலத்தில் வேளாளர்கள் அனேகமாகக் கண்ணுக்குப்படவில்லை. அவர்கள் பெரும்பாலும் கோயில் இருக்கும் ஊர்களிலேயே இருந்தார்கள் என்று தோன்றுகிறது. பிராமணர்களின் ஊர் இன்று பூமணியின் புனைவுப்பரப்புக்குள் வருகிறது. குத்தகைக்காரர்களால் கைவிடப்பட்டு மெல்லமெல்ல அழிகிறது அந்த அக்ரஹாரம். அதன் கதையை ’நைவேத்யம்’ என்ற நாவலில் அவர் எழுதியிருக்கிறார். ஊரில் மறவர்களின் இடமும் குறைவே. கரிசலில் மறவர்கள் முக்கியமான சாதி என்றே திருநெல்வேலி கெஜட்டீர் கூறுகிறது. என்றாலும் பூமணி எழுதும் நிலப்பகுதியில் அவர்கள் அதிகமில்லை.

பூமணியின் சமூகசித்திரத்தில் முக்கியமான சாதிகளாக இருப்பவர்கள் மூவரே. பெரும்பாலும் நிலக்கிழார்களாக இருப்பவர்கள் நாயக்கர்கள்.நாயக்கர்களுக்கிடையே உள்ள சாதி வேறுபாடுகளைப் பூமணி காட்டுவதில்லை. அவரது புனைவுலகில் நாயக்கர்கள் சிக்கனத்தில் பிடிவாதமும் உழைப்பில் தீவிரமும்கொண்ட நில உடைமையாளர்களாகவே வருகிறார்கள். நாயக்கர்களின் வயல்களில் வேலைசெய்யக்கூடியவர்களாகவே தேவேந்திரர் அதிகமும் காட்டப்படுகிறார்கள். ஆனால் அவர்களிலும் நில உரிமையாளர்கள் உண்டு. தேவேந்திரர்களுக்கு நிகரான பொருளியல் தகுதியுடன் ஆனால் மேலான சமூகநிலையுடன் கோனார்கள். அவர்கள் வேளாண்மைச்சமூகத்துடன் இணக்கமாக ஆனால் அதற்கு வெளியே இருக்கிறார்கள்.

தேவேந்திரர்களுக்குக் கீழே இருப்பவர்கள் பகடைகள் அல்லது அருந்ததியர். அவர்கள் இப்பகுதியின் வேளாண்மைக்கு இன்றியமையாதவர்களாக இருக்கிறார்கள். குமரிமாவட்டத்தில் ஆற்றுப்பாசனப்பகுதியைச் சேர்ந்த எனக்கு இந்த நுட்பம் பிடிபடக் கொஞ்சம் பிந்தியது. தோல் தொழிலாளர்களான அருந்ததியர் குமரிமாவட்டத்தில் மிகமிகக் குறைவு. ஏனென்றால் அன்றெல்லாம் செருப்பு என்பது இங்கே சிலரால் மட்டுமே போடப்படுவதாக இருந்தது. ஆனால் கரிசலில் செருப்பு ஆடுமேய்ப்பவர்களுக்கு இன்றியமையாத ஒன்று. அத்துடன் இப்பகுதியில் விவசாயம் என்பது கிணற்றில் இருந்து கமலைமூலம் நீர் இறைத்துச் செய்யப்படுவதாகவே இருந்தது. அதற்குத் தோல்தொழிலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இவர்களைத்தவிர இந்த வேளாண்சமூகத்தை நம்பி வாழும் ஆசாரிகள் போன்றவர்கள். ’பிறகு’ நாவலில் சுப்பையனாசாரி ஊருக்குள் ஒரு கொல்லர் வந்துவிட்டால் பிழைப்பைப் பங்கிட்டுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அவரே கொல்லர் வேலையையும் செய்துகொடுக்கிறார்.

இந்த சமூகப்புலத்தில்தான் பூமணியின் கதைகள் நிகழ்கின்றன. கதைமாந்தர்களைப் பெரும்பாலும் சாதி அடையாளத்துடன்தான் பூமணி சொல்கிறார். கந்தையா நாயக்கர், அழகிரிப்பகடை, சுப்பையனாசாரி என. அவர்களுக்கிடையே உள்ள உறவுமுறைகளை அவர் விளக்குவதில்லை. அவை பெரும்பாலும் நுட்பமான உரையாடல் வழியாகக் காட்டப்படுகின்றன. ‘ஏலே சக்கிலியத்தாயளி’ என்று ஒரு நாயக்கர் அழைக்கமுடிகிறது ‘சாமியவுக’ என்று பகடை அவர் முன்னால் கைகட்டி நிற்கிறார். ஆனால் பகடைக்கும் மள்ளருக்கும் இடையே நட்பான சூழல் நிலவுகிறது. கோனார்களுக்கும் ஆசாரிகளுக்கும் இடையே சமத்துவம் திகழ்கிறது. பூமணியின் புனைவுலகு முழுக்க உரையாடல்களில் வாசகன் கொள்ளவேண்டிய கவனமே சாதிப்படிநிலைகளில் எவர் எங்கே இருக்கிறார் என்பதை உரையாடல்கள் காட்டிச்செல்கின்றன என்பதைத்தான்.

’தமிழ்நாட்டில் வர்க்கம் என்ற துல்லியமான பிரிவு உள்ளதா என்ன? சாதியும் சாதிப்போராட்டமும்தான் இன்று தலைவிரித்தாடுகின்றன’ என்று பூமணி ஒரு பேட்டியில் சொல்கிறார். ஆனால் பூமணியின் கதைகளில், குறிப்பாக மிகவிரிவான ஒரு சமூக சித்திரத்தை அளிக்கும் ’பிறகு’ போன்ற நாவல்களில் சாதிமுரண்பாடுகள் பெரிதாக சித்தரிக்கப்படவில்லை. பூமணி காட்டும் உலகில் சாதியின் ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் உள்ளது. அதைமீறி மானுட உறவுகளும் உள்ளன. ’பிறகு’ நாவலில் ஒருவகையான காவியத்தன்மையுடன் கந்தையா நாயக்கருக்கும் அழகிரிப்பகடைக்குமான உறவு சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பூமணி சமூக மோதல்களைக்கூட மனித வாழ்க்கைக்குள் கொண்டுவந்து உறவுகளின் சிக்கலாக மட்டுமே காட்டுகிறார். அவரது கலையின் சிறப்பம்சமே இதுதான் எனலாம்.

ஆனால் ஒரு கூர்ந்த வாசகன், பூமணியின் கதைகளுக்குள் நாயக்கர்களுக்கும் தேவேந்திரர் போன்ற அடுத்தகட்ட சாதியினருக்குமான நுட்பமான மோதல் மௌனமாக அனலடித்துக்கொண்டே இருப்பதைக் காணலாம். அதை நில உடைமையாளாருக்கும் உழைப்பாளர்களுக்குமான மோதலாகவும் கொள்ளலாம். ஆனால் பூமணியின் புனைவுலகில் அவர் எந்தத் தரப்பின் குரலாகவும் ஒலிப்பதில்லை. உள்ளது உள்ளபடி என்ற அவரது அழகியல்நோக்கு அதற்கு அனுமதிப்பதில்லை. ஒரு பற்றற்ற சாட்சி போல அவரது கண் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறது, நூற்றுக்கிழவன் போன்ற லௌகீக விவேகம் எல்லாவற்றையும் ஆழ்ந்த சமநிலையுடன் பதிவுசெய்கிறது.

 

 

மறுபிரசுரம் /முதற்பிரசுரம்  Dec 23, 2011

 

பூமணியின் வழியில்

பூமணி- சொல்லின் தனிமை

பூமணி-கடிதங்கள்

பூமணி- எழுத்தறிதல்

பூமணி- உறவுகள்

பூமணி- மண்ணும் மனிதர்களும்

விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை

பூக்கும் கருவேலம் – பூமணியின் படைப்புலகம்

தொடர்புடைய பதிவுகள்

ரே –கடிதம்

$
0
0

இசை- கடிதம்

‘வீட்டவிட்டு போடா!’

மதிப்புக்குரிய ஆசிரியருக்கு,

வணக்கம்.

ரே சார்லஸ் அவர்களின் “I got a woman”, நீங்கள் கேட்டிருப்பீர்கள் என்று என்னுகிறேன்.

 https://youtu.be/LcvtUypT5xA

பாட்டில் , காதலியிடம், நான் உனது அன்பான ‘சிறு நாய்’ என்று கூறி, நாய் போலவே குறைத்து காட்டுவார்.

நீங்கள் கூறும் ‘தாளம்’ எப்போதுமும் ரே-விடம், உன்டு என்று நினைக்கிறன்.

கையிரண்டும் பியானோவில் வாசிக்க , இரண்டு கால்களும் தரையை மாற்றுமொரு பியானோவாக உருவகம் செய்து வாசிப்பதை காணலாம் .

-ஓம் பிராகாஷ்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

யக்ஷி உறையும் இடம்

$
0
0

 

கேரளா தொடர் கொலைகள்: மேலும் பலரைக் கொல்ல திட்டமிட்டிருந்த ஜோலி.. அதுவும்?

6 கொலை செய்தும் அடங்காத ஜோலி.. மேலும் 2 பெண் பிஞ்சுகளை கொல்லவும் சதி!

கேரளா தொடர் கொலை வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள ஜோலி உள்பட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

 

நாலைந்து நாட்களாகவே தொடர்ச்சியாக நான் கவனித்துவரும் செய்தி கேரளத்தில் ஜோலியம்மா ஜோசஃப் என்னும் ஜோலி  தாமஸ் செய்த தொடர்கொலைகள். சும்மாவே கேரளத்தில் செய்திப்பஞ்சம். இப்படி ஒரு செய்தி கிடைத்தால் ஊடகம் கொண்டாடிவிடும். நாளொன்றுக்கு ஏழெட்டு திருப்பங்கள். அதிரடி கருத்துக்கள். உளவியல் சமூகவியல் ஆய்வுகள். விவாதங்கள். இன்னும் ஓராண்டுக்குள் இந்தக்கதை சினிமாவாகிவிடும்

ஜோலி [தமிழில் நாம் ஜாலி என்று எதைச் சொல்கிறோமோ அதேதான். மலையாள உச்சரிப்பு] ஒரு அசாதாரண நிகழ்வுதான். அடிக்கடி இவ்வண்ணம் நிகழ்வதில்லை. ஒரு பெண் தன் குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேரை நஞ்சிட்டுக் கொன்றிருக்கிறாள். நான்குபேருக்கு சயனைட். இருவருக்கு பூச்சிமருந்து. கொல்வதற்கு முன்பு சிறுதுளிகளாக நஞ்சு கொடுத்திருக்கிறாள். அவர்கள் வாந்தியும் மயக்கமும் வந்து சிகிழ்ச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். உடல்நலிந்து நோயுற்றிருக்கிறார்கள். அதன்பின் நஞ்சு அளிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்

கொலைசெய்தபின் ஜோலி இறந்தவர்களுக்காக கதறிஅழுதிருக்கிறார். துயரம் கொண்டு பலநாள் இருந்திருக்கிறார். இறந்தவர்களின் உடல்மேல் ஜோலி விழுந்து கதறும் படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்பின் மிகமிக இயல்பாக வாழ்ந்திருக்கிறார். மேலும் கொலைகள் செய்ய திட்டமிட்டிருக்கிறார். இறந்தவர்களின் சொத்துக்களைக் கைப்பற்றியிருக்கிறார். தன் கணவனைக் கொன்றபின் கணவனின் தம்பியின் மனைவியையும் அவள் குழந்தையையும் கொன்றுவிட்டு அவனை மணந்துகொண்டிருக்கிறாள். முதல்கணவனில் ஜோலிக்கு இரண்டு குழந்தைகள். அவர்களுக்கு நல்ல அன்னையாக இருந்திருக்கிறார். நட்பு சுற்றம் அனைவருக்கும் இனியவராக, நம்பகமானவராக வாழ்ந்திருக்கிறார். ஆகவே கடைசிவரை அவர்கள் அவளை சந்தேகப்படவில்லை.

உறவினர்களில் ஒருவர் சந்தேகப்படுகிறார். அண்டைவீட்டுக்காரரும் சந்தேகப்படுகிறார். அதுவும் மிகமிகத் தற்செயலாக. ஜோலி செய்த சிறு பிழை ஒரு சொத்தை போலி ஆவணம் வழியாக கவர எண்ணியது . அதிலிருந்து தொடங்கி கொலைகளை நோக்கிச் சென்றது உறவினரின் ஐயம். ஆனால் அவர்கள் இருவரும் குடும்பத்தின்மேல் பழிசுமத்துவதாகவே மற்ற உறவினர்கள் நினைக்கிறார்கள். கடைசியில் போலீஸ் வந்து ஒரு பிணத்தை அகழ்ந்து எடுத்து சோதனை செய்து சயனைடை கண்டுபிடித்தபோதுதான் அனைத்தும் வெளியாகியது. கேரளமே அதிர்ந்தது. முதற்கட்ட விசாரணையின்போது ஜோலி எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. மிகமிக ஒருங்கிணைவுள்ள பதில்களைச் சொன்னார். போலீஸே அவர் பேசியதை நம்பி குழம்பியது. அனால் அதன் பின் நிபுணர்கள் வந்து மொத்தம் 36 மணிநேரம் கேள்விகள் கேட்டனர். அதன்பின்னரே ஜோலி முன்பின்னாக பதில் சொல்லத் தொடங்கினார்.சிக்கிக்கொண்டார்.

இப்போது அனைத்தையுமே ஒப்புக்கொள்கிறார். அதற்குக் காரணம் வழக்கறிஞர்களின் ஆலோசனை. ஏனென்றால் ஜோலியின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் சான்றாகக் கருதப்படாது. எத்தனை விரைவில் வழக்கு பதியப்படுகிறதோ அத்தனை விரைவில் அவர் பிணையில் வெளியே வரமுடியும். அதன்பின் வழக்கு பல ஆண்டுகள் நடக்கும். அனேகமாக இருபது ஆண்டுகள். அதுவரை ஜோலி மகிழ்ச்சியாக வெளியே இருக்கமுடியும். இன்றைய நிலையில் நீதிமன்றம் அவரை தண்டிக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் எந்தக்கொலைக்குமே நேரடிச் சாட்சிகள் இல்லை. சந்தர்ப்பசாட்சியங்களைக் கொண்டு தண்டிக்க முடியாது. இறந்தவர்களின் உடல்களில் இருந்து சயனைடால் இறந்தார் என்பதற்கான சான்றுகளை எடுப்பதும் கடினம்.

ஜோலிக்காக ஆஜராகவிருப்பவர் புகழ்பெற்ற குற்றவழக்கறிஞரான பி.ஏ.ஆளூர் [பிஜு ஆண்டனி ஆளூர்] பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்தவர். ஒரு பேட்டியில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது என்று அவர் சொல்கிறார். ஏனென்றால் இறந்தவர்களின் இறப்புக்கான காரணம், நேரம் எதையுமே இனி அறிவியல்முறைப்படி ஐயமில்லாமல் நிரூபிக்கமுடியாது. குடும்பத்திற்கு வெளியே சாட்சிகள் எவருமில்லை. பெரும்பாலும் போதியசாட்சிகள் இல்லை என போலீஸே நீதிமன்றத்திற்கு அறிவிக்கவே வாய்ப்பு. அல்லது மக்களை திருப்திப்படுத்த வழக்கை நடத்தி கீழ் நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித்தரும். உயர்நீதிமன்றத்தில் ஜோலி விடுதலை ஆவார். இந்த அளவுக்கு அவள் மாட்டிக்கொண்டதே கூட அவள் கிறித்தவர் என்பதனால்தான்.இந்து என்றால் சடலத்தை எரித்திருப்பார்கள். எந்தச் சான்றும் இருந்திருக்காது.

ஜோலி எடுத்துக்கொண்டது பெரிய சொத்துக்கள் ஏதுமில்லை. ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டால் ஐந்துகோடி வரலாம். அவர் பிறப்பால் ஏழை அல்ல. வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். இறந்தவர்களிடம் அவர் எந்த மனவருத்ததிலும் கோபத்திலும் இருக்கவில்லை. அவர்கள் அவளை மோசமாக நடத்தவுமில்லை. அவளை நம்பினர். அவள் அளித்த உணவை உண்டனர். மனைவி இறந்தபின்னரும்கூட ஜோலியின் மாமனார் அவளை நம்பி அவள் அளித்த உணவை உண்டார். நஞ்சு ஊட்டப்பட்டு இறந்தார். அதன்பின்னரும் குடும்பத்தில் அனைவரும் அவளை நம்பினர்.

அவளுக்கு இக்கொலைகளால் கிடைத்தது என்ன? பெரிதாக ஒன்றுமே இல்லை. அவள் இளமைப்பருவத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தனவா? அவளுடைய வளர்ப்புக்காலத்தில் சிடுக்குகள் உண்டா? எதுவுமே இல்லை. மிகமிக சராசரியான குடும்பம். மிகமிக இயல்பான இளமைப்பருவம். படிப்பு அதன்பின் திருமணம். பெரிய ஆசைகளை உருவாக்கும் நகரச்சூழல் இல்லை. சிறிய ஊரில்தான் வாழ்க்கை. அப்படியென்றால் என்னதான் காரணம் இத்தனை கொலைகளுக்கு? இத்தனை கொலைகளுக்குப் பின்னரும் எப்படி அவள் இயல்பாக மகிழ்ச்சியாக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாள்?

மேலும் ஆச்சரியம் அவளுடைய வேலை. அவளை கல்லூரி பேராசிரியை என்றே அவளுடைய குடும்பத்தினர், மகன்கள் எல்லாரும் நம்பியிருந்தனர். அடையாள அட்டையை வெளிப்படையாக வீட்டில் தொங்கவிடுவது அவள் வழக்கம். ஆனால் அவள் படித்தது வெறும் பிகாம் மட்டுமே. பிறந்தவீட்டில் இருந்தபோது எம்.ஏ படித்திருக்கலாம் என புகுந்தவீட்டில் நம்பினர். புகுந்தவீட்டில் படித்திருக்கலாம் என பிறந்தவீட்டில் நம்பினர்.ஒவ்வொரு நாளும் கல்லூரிக்குச் சென்று காண்டீனில் அமர்ந்துவிட்டு வந்தாள். காண்டீனில் இருந்தவர்கள் அவள் அருகிலிருந்த பியூட்டிபார்லரின் உரிமையாளர் என நம்பினர். பியூட்டிபார்லர் உரிமையாளர்கள் அவள் கல்லூரி ஊழியை என நினைத்தனர். பதினான்கு ஆண்டுக்காலம் அவ்வாறு எண்ணிக்கொண்டனர் ஒவ்வொரு நாளும் காரில் அவள் கல்லூரிக்குச் சென்றுவந்தாள்.

ஜோலி உள்ளூர் தாசில்தார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவள்.அவளை மிகமிக இனிமையானவளாக அவர்கள் நினைத்தார்கள். அவள் இரண்டாம் திருமணம் செய்துகொண்டபோது திருச்சபை அவளை விலக்கியது. அவளை திரும்பச்சேர்த்துக்கொள்ளும்படி பிஷப் கடிதம் எழுதினார். அந்தக்கடிதம் பொய்யானது. ஆனால் எவருக்கும் சந்தேகம் வரவில்லை.

உளவியல்நிபுணர் சொல்கிறார், அவள் ஒரு கடுமையான உளநோயாளி என. ஒருவர் பொய்சொன்னால் நாம் அணுக்கமாக கண்களைப் பார்த்தால் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால் அவர் உளச்சிக்கலால் அதை உண்மையாக நம்பிச் சொன்னால் நாமும் நம்பிவிடுவோம். ஜோலி வெவ்வேறு யதார்த்தங்களில் முழுமையாகவே மெய்யாக வாழ்ந்தாள். ஆகவே அவளுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. எல்லாமே உண்மைதான். ஜோலி வீட்டில் இருந்துகொண்டு தன் கல்லூரிக்கு செல்பேசியில் வேலைசார்ந்து நிறையவே பேசுவதுண்டு என்கிறார் கணவர். பணம் முதலீடு உட்பட பல விஷயங்களை ஜோலி பேசினார். எல்லாமே பொய். பொய்யே மெய். ஒன்றுக்கு இன்னொன்றுடன் தொடர்பில்லை. நல்ல அன்னையாக வாழும்போதே கொலைசெய்ய தயக்கமில்லை. கொலைசெய்தபின் குற்றவுணர்ச்சியும் இல்லை. குழந்தையைக் கொன்றபின்னரும்கூட

ஜோலி இக்கொலைகளை வெறும் மகிழ்ச்சிக்காகவே செய்திருக்கவேண்டும் என்பது ஒரு நிபுணர்கணிப்பு. வெறும் லாபத்திற்காகச் செய்திருந்தால் குழப்பம் இருக்கும், குற்றவுணர்ச்சியும் தொடரும். முதற்கொலையைச் செய்ததுமே அதன் கிளர்ச்சியை அறிந்திருப்பாள். அதன்பின் கொலை அவள் வாழ்க்கையை உத்வேகம் கொண்டதாக ஆக்கியது. அவளுக்கு சவால்களை முன்வைத்தது. தர்க்கபுத்தியை கற்பனையை தூண்டியது. வெற்றிக்குப்பின் சாதனை உணர்வை அளித்தது. சிலநாட்களிலேயே மீண்டும் கொலைசெய்ய தூண்டுதலை கொடுத்தது. ஜோலி மேலும் மூவரைக் கொல்ல திட்டமிட்டிருந்தாள். அதற்குள் மாட்டிக்கொண்டாள். கொலைசெய்த அனைவரின் அருகிலும் அமர்ந்து அவர்கள் சிறுகச்சிறுகச் சாவதை ரசித்திருக்கிறாள்.

இதெல்லாம் ஜோலியின் பக்கமிருந்து பார்க்கையில்.மறுபக்கம் இன்னும் விந்தை. அவளை எப்படி அத்தனைபேர் முழுமையாக நம்பினர்? அவளுடைய இயல்பான புன்னகை, இனியபேச்சு எல்லாமே காரணம்தான். முதன்மைக்காரணம் அழகு. கேரளபாணியில் அவள் ஒரு முதன்மை அழகி. நடுவயதிலும்கூட அழகியாகவே இருந்தாள். அழகுநிலையத்திற்கு வாரந்தோறும் சென்று அழகியாக நீடித்தாள். அழகிய முகம்போல மிகப்பெரிய திரை வேறில்லை. எங்குமே செல்லுபடியாகும் நாணயம் வேறில்லை. அழகை நாம் கள்ளமின்மை என, நன்மை என, இனிமை என, தூய்மை என , அன்பு என, பண்பு என , பெருந்தன்மை என, குடிப்பிறப்பு என பலவகையாக கற்பனைசெய்துகொள்கிறோம்

 

 

ஆனால் ஜோலி கைதுசெய்யப்பட்ட பின் இரண்டே நாளில் அந்தமுகம் அப்படியே கொடூரமானதாக மாறிவிட்டது. உள்ளிருந்து அத்தனை அழகின்மைகளும் வெளியே வந்து  முகமாக மாறிவிட்டன. பேரழகியாகிய யக்ஷி கோரைப்பல்லும் எரியும்கண்களும் புதர்போல முடியுமாக கொடூரத்தோற்றம் கொள்வதைப்பற்றி கேரளத்தின் தொன்மங்களில் எப்படியெல்லாம் வாசித்திருக்கிறோம்!

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

திண்டுக்கல்லில் நூல் வெளியீட்டு விழா

$
0
0

“கீழ்வெண்மணியில், அந்த இரவு நில உரிமையாளர்கள் 200பேர் கையில் அருவாள், துப்பாக்கி, தீப்பந்தம் சகிதம் திமுதிமுவென புறப்பட்டு வந்தார்கள். கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் வெட்டிச் சாய்த்து குடிசைகளையெல்லாம் தீவைத்துக் கொளுத்தினார்கள். சேரியில் இருப்பவர்கள் எல்லோரும் உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்தார்கள். அப்பொழுது, வயதானவர்களும் பெண்களும் சிறுவர்களும் ஒரு குடிசைக்குள் ஒளிந்துகொண்டிருந்தனர். தீ வைத்தபடியே வந்த கும்பல் அந்தக் குடிசைக்கதவைப் பூட்டிவிட்டு, பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். உள்ளே இருந்த 44 பேரும் உயிரோடு வெந்து சாம்பலானார்கள்.

 

அடுத்தநாள் நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்தோம். கருகிய உடல்களைப் பார்த்ததும் கிருஷ்ணம்மாள் கதறி அழ ஆரம்பித்துவிட்டார். என்னாலும் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. நானும் அழுதேன். கிருஷ்ணம்மாள் மட்டும் கீழ்வெண்மணியில் தங்குவது என முடிவு செய்தோம்.  ஒருவருட காலத்திற்கு காந்திய போதனைகள், வினோபாவின் போதனைகளை பாதயாத்திரை மூலமாக அந்தக் கிராமம் முழுவதும் கொண்டுசென்றோம்.

 

கீழ்வெண்மணி கிராமத்தில் அப்போது மொத்தம் 75 ஹரிஜனக் குடும்பங்கள் இருந்தன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ஏக்கர் நிலம் பெற்றுதர வேண்டும் எனத் தீர்மானித்திருந்தோம். 1968ல் அந்தக் கொடூரம் நடந்தது. 1971ல் அந்த 74 குடும்பங்களுக்கும் சேர்த்து 74 ஏக்கர் நிலத்தை அகிம்சை முறையில் வாங்கிக் கொடுத்துவிட்டிருந்தோம். அரைப்படி நெல் கூடுதலாகக் கேட்டவர்களுக்கு, இப்பொழுது நிலமே சொந்தமாகக் கிடைத்தது.”

 

–       சுதந்திரத்தின் நிறம் புத்தகத்தில் கிருஷ்ணம்மாள், ஜெகந்நாதன்…

 

ஜெகந்நாதன், கிருஷ்ணம்மாளின் வாழ்வுவரலாறு பற்றித் உங்களுடைய கட்டுரையின் ஒற்றைவரி  விருப்பவார்த்தையிலிருந்து புறப்பட்டெழுந்த எங்களுடைய எண்ணத்தின் செயலாக்கமே ‘சுதந்திரத்தின் நிறம்’ புத்தகமாக இன்று மலர்ந்திருக்கிறது. தோற்கடிப்பை மையப்படுத்திய வெற்றுவிவாதங்களாக இல்லாமல், நவீன காலத்தின் பெருவெளிக்குள் எங்கெல்லாம் காந்தியம் திறக்கும் சாத்தியமுள்ளது என்பதை நிறைய தருணங்களில் உங்கள் எழுத்துக்கள் எங்களுக்கு வெளிச்சமிட்டன. இப்படியான சாத்தியங்கள் வாய்ப்பதற்கான துணைக்கருவியாக தன்னறம் நூல்வெளி அமைவதில் வார்த்தைகளற்ற உளமகிழ்வு கொள்கிறோம்.

 

அதேபோல்… காந்தியத்தால் தாக்கம்பெற்று தங்கள் துறைகளில் இயங்கும் பல சாட்சிமனிதர்களின் வாழ்க்கைவரலாற்றுத் தொகுப்பாக ‘இன்றைய காந்திகள்’ புத்தகம் உருவாகியுள்ளது. உணர்வெழுச்சியை அகம்விதைக்கும் எழுத்துநடையில் நண்பர் திரு.பாலசுப்ரமணியம் முத்துசாமி அவர்களால் எழுதப்பட்ட இப்புத்தகம், இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டின் வாழ்விலும் காந்தியம் எப்படி உருமாறிப் பயணிக்கிறது என்பதனை பதினோரு வரலாற்று மனிதர்களின் வழியாக நமக்கு அறியப்படுத்துகிறது.

 

இன்னமும் மீட்சிக்கான வழி மீதமிருக்கிறது என்பதை சாட்சியங்களே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. தோழமை பாலா எழுதிய இக்கட்டுரைகள், காந்தியவழியில் பயணப்பட்டு, தங்கள் செயலிலக்கு தாண்டியும் நம்பிக்கையோடு நகர்கிற சாட்சிமனிதர்களின் தொகுப்பாக நிறைந்துள்ளது. அத்தனைபேரும் இரத்தமும் சதையுமாக இம்மண்ணில் நம்மோடு உலவியவர்கள். பலர் இன்றும் உலவுபவர்கள். வெவ்வேறு செயல்தளத்தில் அகிம்சைக் கோட்பாடுகளின் வழியாக நடைமுறைவாழ்வியலை மேன்மையுறச் செய்து, மக்களுக்கான மனிதர்களாக அவர்கள் தங்களை வாழ்வுபடுத்திக் கொண்டுள்ளனர்.

 

‘சுதந்திரத்தின் நிறம்’ புத்தகம் கடந்தகால வரலாறுகளின் சாட்சித்தொகுப்பாகவும், ‘இன்றைய காந்திகள்’ புத்தகம் நிகழ்காலத்தில் மேலோங்கும் சாட்சியங்களின் விவரிப்பாகவும் அமைந்திருப்பது நிஜத்தில் வியப்பளிக்கிறது. அந்தந்த காலகட்டங்களில் தகுந்த சாத்தியங்களை முன்னெடுத்து, தேவைப்படும் இடங்களில் காந்தியக் கருத்தை ஏற்றும், நடைமுறையை மீறும் இடங்களில் காந்தியக் கருத்தை மாற்றியும் லட்சியங்களை அடைவதை இவ்விரு வரலாற்றுப்பதிவும் எழுத்தின்வழி எடுத்துரைக்கின்றன.

 

எனவே, தன்னறம் நூல்வெளியின் வெளியீடுகளான ‘சுதந்திரத்தின் நிறம்’ மற்றும் ‘இன்றைய காந்திகள்’ புத்தகங்களின் வெளியீடாகவும், நமக்குள் நிகழப்போகும் ஒரு நற்சந்திப்பை ‘செயல்வழி ஞானம்’ என்ற பெயரில் ஒருங்கிணைக்கிறோம். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தூய இருப்பில் மலரப்போகும் இந்நிகழ்வில், உங்களுடைய இருப்பானது, ஒருவித அகத்திறத்தலை  அனைவருக்குள்ளும் உருவாக்கும் என நெஞ்சார நம்புகிறோம். கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் கரங்களால் கட்டிடமெழுப்பிய காந்திகிராம் ஊழியரகத்தில் வைத்து இக்கூடுகை நிகழவிருக்கிறது. கீழ்வெண்மணியில் நிலங்களைப் பெற்ற மக்களின் பிரதிநிதியாக, அம்மண்ணிலிருந்து இருமனிதர்கள் இந்நிகழ்விற்கு வருகைதர இருக்கிறார்கள். புத்தகத்தின் முதல் பிரதியை அவர்களிடம் ஒப்படைத்து, இவ்வரலாற்று நூலுக்கு நேர்மை செய்வது நமது கடமையாகிறது.

 

ஒரு ஐ.ஐ.டி பட்டதாரியாக இருந்தும்கூட, புறம்சார்ந்த தனது கவனங்களை விட்டெறிந்து, குப்பையிலிருந்து பொம்மைகளை கைப்பட உருவாக்கும் பயிற்சியைக் குழந்தைகளுக்கு அளிப்பதை தன் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டு, பெரியதொரு சமூகமாற்றத்தை சத்தமின்றி விதைத்துப் பயணிக்கிற திரு.சுபீத் (அர்விந்த் குப்தாவின் சீடர்) அவர்கள் ‘இன்றைய காந்தி’நூலை வெளியிட, கிராம உள்ளாட்சி சார்ந்து முழுமூச்சாக இயங்கிவரும் தோழமை நந்தகுமாரும், கழிவுமேலான்மை சார்ந்தும், நீரில்லாக் கழிப்பறைகள் சார்ந்தும் இயங்குகிற தோழி விஷ்ணுப்ரியாவும் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளவிருக்கிறார்கள்.

 

குக்கூ ‘முகம் விருது’ இம்முறை பொன்னுத்தாய் அம்மா காந்திஜி பள்ளிக்கூடத்துக்கு வழங்கப்படவிருக்கிறது. 1950களிலேயே தனது குடும்ப வீட்டை இடித்து, ஒரு சிறுபள்ளிக்கூடத்தை துவக்கியவர் பொன்னுத்தாய் அம்மாள். வீதிவீதியாக அலைந்து, ஒடுக்கப்பட்ட சேரி மக்களிடமும், காடுமேடுகளில் ஆடுமாடுகள் மேய்ப்பவர்களிடம் பேசிப் புரியவைத்து அவர்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வைத்தவர். காந்தியின் அரிஜனசேவா சங்கத்தோடும், அம்பேத்கரிய மக்கள் இயக்கத்தோடும் இணைந்து பொன்னுத்தாய் அம்மாள் பள்ளிக்கூடம் பொட்டுலுப்பட்டி கிராமத்திலும் அதைச்சுற்றிய பகுதிகளிலும் கல்விப்புரட்சிகளை நிகழ்த்தியுள்ளது. தியாகி கக்கனால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிமுடிக்கப்பட்ட பள்ளி இது.

 

கட்டணத்தொகை ஏதும் பெறாத முற்றிலும் இலவசமான இப்பள்ளியை மிகுந்த நெருக்கடியில் நடத்தியவர் பொன்னுத்தாய் அம்மாள். தன் வாழ்க்கையின் இறுதிக்கட்டங்களில், சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு வீடுவீடாகச் சென்று ‘படிக்க வாங்க கண்ணுகளா!” என்று பின்தங்கிய குழந்தைகளின் மனதில் கல்வியை விதைத்த முதலாளுமை. இறுதிமூச்சுவரை பள்ளியைப் புதுப்பிக்கப் போராடி  2002ல் பொன்னுத்தாய் அம்மா இயற்கையோடு கலந்தார். பொன்னுத்தாய் என்னும் தனிமனுஷி தனது கிராமத்தில், சமூகத்தில், கல்விப்புலத்தில் நிகழ்த்திக்காட்டிய தியாகத்துக்காகவும் அர்ப்பணிப்புக்காகவும், இந்த கெளரவிப்பு அவர்களுக்கு நிகழ்கிறது.

 

நாடகக்கலைஞர் ராம்ராஜ் குழுவினரின் நிகழ்த்துநாடகமும், புகைப்பட அருங்காட்சியகத் துவக்கமும் இந்நிகழ்வினை இன்னும் சாரப்படுத்தி நிலையுயர்த்த உள்ளது. நண்பர்கள் மற்றும் தோழமையுறவுகள் அனைவரையும் இந்நல்நிகழ்வுக்கு கரம்கூப்பி அழைக்கிறோம். செயல்வழி ஞானத்தை அடைந்த முன்மனிதர்களின் வார்த்தையிலிருந்து நீண்டு பரவுக, அதைப் பின்தொடர்கிற மனங்களுக்கான இலட்சியவெளி. வெறுப்பின் வேர்களிலிருந்து நழுவி, நமக்கான சுதந்திர வெளியை அடையும் ஒரு தார்மீக தாகத்தை இந்நிகழ்வு நிச்சயம் தரும். அருள்நிறை தருணங்கள் நமக்கினி நிகழும்!

 

இப்படிக்கு

தன்னறம் நூல்வெளி

குக்கூ காட்டுப்பள்ளி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29

$
0
0

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 10

திருதராஷ்டிரரின் குடில் நோக்கி நடக்கையில் சற்று தயங்கி காலெடுத்து வைத்த நகுலன் சகதேவனின் தோளுடன் தன் தோளால் உரசிக்கொண்டான். அக்கணநேரத் தொடுகை அவனுள் இருந்த அழுத்தம் அனைத்தையும் இல்லாமல் ஆக்கி, எடையில்லாமல் உணரச்செய்தது. அவ்விடுதலை அளித்த இனிமையில் அவன் நின்றுவிட்டான். சகதேவன் திரும்பிப் பார்த்தான். நகுலன் இரண்டு அடி எடுத்து வைத்து மீண்டும் சகதேவனுடன் இணையாக நடக்கையில் இயல்பாக என கையை நீட்டி தன் இடக்கை விரல்களால் சகதேவனின் கைகளைப் பற்றி விரல் கோத்துக்கொண்டான். சகதேவன் விரல்கள் அவன் விரல்களை பற்றின.

இளஅகவையில் பெரும்பாலான தருணங்களில் அவர்கள் விரல்கோத்துக்கொண்டுதான் எங்கும் செல்வது வழக்கம். விளையாடும்போதுகூட விரல்களை சேர்த்திருப்பார்கள். கங்கையில் நீந்தும்போதும் ஒருவரை ஒருவர் கைகளை பற்றிக்கொண்டு நீந்தும் முறையை அவர்களே உருவாக்கிக்கொண்டார்கள். அமர்ந்திருக்கையில் பெரும்பாலும் நகுலனின் பீடத்தின் விளிம்பில் தொற்றிக்கொள்வது சகதேவனின் வழக்கம். புரவிகளில் செல்லும்போதுகூட இணையாக அவ்வப்போது இரு முழங்கால்களும் ஒட்டி தொட்டு உரசி மீளும்படியாகவே அமைவார்கள். ஒவ்வொரு பேச்சுக்குப் பின்னரும் ஒருவரை ஒருவர் விழிதொட்டுக்கொள்வதுண்டு.

அதைக் குறித்த புரிதலும், கூடவே மெல்லிய ஏளனமும் அரண்மனைச் சூழலில் இருந்தது. அவர்கள் உடல்கள் ஒன்றையொன்று ஒட்டியே கருவறைக்குள் இருந்து வெளிவந்தன, இரு தொப்புள் கொடிகள் ஒன்றையொன்று பின்னி முயங்கும் நாகங்கள் போலிருந்தன என்று செவிலியர் கூறுவர். கருவறைக்குள்ளேயே அவர்கள் ஒருவரையொருவர் கைகோத்திருந்தனர். இளமையில் ஒற்றைச் சொற்றொடரை சில சொற்களை ஒருவர் சொல்ல எஞ்சியதை பிறிதொருவர் சொல்லி முடிக்கும் வழக்கம் அவர்களுக்கு இருந்தது. ஒருவரோடொருவர் பேசிக்கொள்கையில் இருவரும் இணைந்து ஒன்றையே சொல்லும் விந்தையை பிறர் பேச்சை நிறுத்தி வியப்புடன் பார்ப்பார்கள்.

அவர்கள் ஆடிப்பாவைகள். எப்போதேனும் ஆடியில் தன்னை நோக்கிக்கொண்டால் நகுலன் விரல் நீட்டி ஆடிப்பாவையின் விரலை தொடுவான். விழிகளுக்குள் நோக்கி புன்னகைப்பான். இளமையில் ஒருமுறை சகதேவன் உடல்நலமின்றி ஆதுரசாலைக்குச் சென்றபோது விடாது அழுதுகொண்டிருந்த நகுலன் அருகே பெரிய ஆடி ஒன்றை வைத்து அவ்வழுகையை நிறுத்தி உணவூட்டி தூங்க வைத்ததை செவிலி சொல்வதுண்டு. அவன் வளர்ந்த பின்னர் ஆடி நோக்குவதில்லை. அது ஒரு துணுக்குறலை அளித்தது. ஆடியில் தோற்றம் பெருகும் உணர்வாலேயே அதை மானுடர் விழைகிறார்கள். அவன் தான் மட்டும் ஆடியில் நோக்கினால் இருப்புக் குறைவை உணர்ந்தான். இருவராக ஆடி நோக்கினால் ஆடியில் ஒருவரை இன்னொருவர் நோக்குவர். ஒருவர் விழிகளை இன்னொருவர் நோக்கி புன்னகைப்பர்.

பின்னர் அவர்கள் மெல்ல பிரியலாயினர். நகுலன் புரவிநூலையும் கொட்டில்களையும் சூதர்களையும் நோக்கி செல்ல சகதேவன் சுவடிகளில் பதிந்த ஊழின் ஆடல் நோக்கி தன் சித்தத்தை திருப்பினான். அதில் இருந்த விந்தையை ஒருமுறை இயல்பாகப் பேசும்போது யுதிஷ்டிரன் சொன்னார் “ஒருவன் புறவுலகு நோக்கி சென்றிருக்கிறான். புரவிக்கலை அகமற்றது. இதோ இங்கே இக்கணம் என கண்முன் நிகழ்வது. புரவி ஐம்புலனுக்கும் முன் நின்றுள்ளது. இன்னொருவன் அகக்கலையை நாடுகிறான். நிமித்தநூலென்பது புறத்தை முற்றே விலக்கி அகத்திலிருந்து மெய் காண்பது. நிமித்திகன் புறத்தை உணர்ந்தான் எனில் நிகழ்காலத்தில் சிக்கிக்கொள்வான். நேற்றையும் நாளையையும் அறிவதற்குத் தடையாக இங்கு திகழும் மாயை என்பது நிகழ்காலமே. நிமித்தநூலென்பது நிகழ்காலத்திற்கெதிரான முடிவிலா போரென்றனர் மூதாதையர்.”

“ஆம், அவர்கள் ஒருவரை ஒருவர் நிரப்பிக்கொள்கிறார்கள்” என்று அன்று அவையிலிருந்த விதுரர் சொன்னார். “எதிரெதிர் திசையில் சென்றும் அவர்கள் தங்களை நிறைத்துக்கொள்ளலாம்” என்றார் பீஷ்மர். எப்போதேனும் சகதேவனின் நிமித்தக்களங்களில் புரவிகள் தோன்றியுள்ளனவா என்று நகுலன் எண்ணிக்கொண்டான். அவன் புரவிக்கால்களால் கடக்கப்படும் பன்னிரு களத்தை தன் கனவுகளில் உணர்வதுண்டு. புரவிகள் எப்போதுமே தொடுவான் எல்லை நோக்கி செல்கின்றன. ஓடும் புரவிகளில் ஒன்று, பல்லாயிரத்தில் ஒருமுறை, அத்தொடுவானில் ஏறிக்கொள்ளக்கூடும். அக்கணமே அது உருவழிந்து அனலுடல் கொண்டு மறையும்…

குடில் வாயிலை அடைந்து யுதிஷ்டிரன் தயங்கி நின்றார். அருகணைந்த இளைய யாதவர் அவரிடம் முன்னால் செல்லும்படி கைகாட்ட முணுமுணுக்கும் குரலில் “நீ முதலில் நுழைவதே முறையாக இருக்கும், இளைய யாதவனே” என்றார் யுதிஷ்டிரன். அவருக்குப் பின்னால் நகுலனும் சகதேவனும் நிற்க அவர்களுடன் உடல் முட்ட இளஞ்சிறுவன் என தடுமாறினார். பீமனும் அர்ஜுனனும் தொடர்ந்து வந்தனர். உள்ளிருந்து சஞ்சயன் வெளிவந்து சொல்லின்றி தலைவணங்கினான். யுதிஷ்டிரன் “இருக்கிறாரா?” என்றார். “ஆம், அரசே. இருவரும் தங்களுக்காக காத்திருக்கிறார்கள்” என்று சஞ்சயன் சொன்னான். “நாங்கள் ஐவரும் வருவதை அவர் அறிவாரா?” என்று யுதிஷ்டிரன் மீண்டும் கேட்டார். “முன்னரே கூறிவிட்டேன்” என்று சஞ்சயன் சொன்னான்.

மேலும் தயங்கி தலையிலிருந்த இறகை சீர்படுத்தியபின் “எதன் பொருட்டென்று கூறினீர்களா?” என்று யுதிஷ்டிரன் மீண்டும் கேட்டார். “ஆம், அவர்கள் அறிவார்கள்” என்றான் சஞ்சயன். இளைய யாதவர் “பிறகென்ன? நீங்கள் ஐவரும் முதலில் செல்லலாம். அதுவே முறையாகும்” என்றார். பீமன் பெருமூச்சுவிட்ட ஒலி உரக்கக் கேட்க நால்வரும் திரும்பி நோக்கினர். அவன் மார்பில் கட்டியிருந்த கைகளை தாழ்த்திக்கொண்டான். அவன் கண்களுக்குக் கீழே சுருக்கங்கள் அடர்ந்து கருகியிருந்தது. வாயை இறுக மூடியிருந்தமை சுருக்கிப்பிடித்த கைமுட்டி என உதடுகளை தோன்றச்செய்தது.

யுதிஷ்டிரன் தன் உடலை இறுக்கி மீண்டும் தளர்த்தி “நான் என்னவென்று உரைப்பது?” என்றார். “சற்று முன் முறைமைச்சொற்களே உங்களுக்கு இயல்பானது என்றீர்கள்” என்றார் இளைய யாதவர். “ஆம், ஆனால் அனைத்துச் சொற்களையும் இப்போது மறந்தவன் போலிருக்கிறேன்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “தெய்வங்களுக்கு முன் நாம் முறைமைச்சொற்களைக் கூறி வேண்டிக்கொள்வதில்லை” என்றபின் “உங்கள் உள்ளம் நிகழ்க! செல்க!” என்றார் இளைய யாதவர். பெருமூச்சுவிட்டு தன் தலையிலணிந்த தலைப்பாகையை மீண்டும் சீரமைத்து மேலாடையை இழுத்துவிட்டு திரும்பி சகதேவனையும் நகுலனையும் பார்த்துவிட்டு யுதிஷ்டிரன் குடிலுக்குள் நுழைந்தார்.

நகுலனும் சகதேவனும் சிறிய இடைவெளி விட்டு அவர்களை தொடர்ந்தனர். பீமன் குடிலின் வாயிலிலேயே நின்றுவிட இளைய யாதவரின் அருகே சென்று அர்ஜுனன் நின்றான். அறைக்குள் சுவர் ஓரமாக சங்குலன் நின்றிருந்தான். அவன் ஒரு அடிமரத்தடியை தூணாக நிறுத்தியதுபோல் தோன்றினான். அவனுடைய பருத்த தோள்களும் விரிந்த நெஞ்சும் மேலும் பெருகிவிட்டிருந்தன. போருக்குப் பின்னர் அனைவருமே உடல்கரைந்துகொண்டிருக்கையில் அவன் மட்டும் பொலிவுகொண்டு வளர்ந்திருந்தான். நகுலன் அவனுடைய நரம்புகளின் புடைப்பையும் முடிச்சுகளையும் நோக்கிக்கொண்டிருந்தான். அரசரில் மறைந்துவிட்டவை அவனில் சென்று சேர்கின்றனவா?

அவர்களுக்குப் பின்னால் வந்த சஞ்சயன் உள்ளே நுழைந்து குடிலுக்குள் மூங்கில் பீடத்தில் அமர்ந்திருந்த திருதராஷ்டிரரை அணுகி “தங்கள் மைந்தர்கள் பார்க்கும்பொருட்டு வந்திருக்கிறார்கள், பேரரசே” என்று அறிமுகம் செய்தான். திருதராஷ்டிரர் நெடுநாட்களுக்குப் பின்னர் அன்று புத்தாடை அணிந்திருந்தார். வெண்ணிற மென்பட்டாடை அவர் இடையில் சுற்றி, புகையென மேலெழுந்து, வலத்தோளை வளைத்து முதுகிலிறங்கி சுழன்று வந்து மடியில் விழுந்திருந்தது. கரிய தசைகள் புடைத்து இறுகியிருந்த பெருந்தோள்கள் அந்த ஆடையில் இருபுறத்திலும் விரிந்து கிளையெழுந்த வேங்கை அடித்தடியென தோன்றின. ஆனால் அவர் நன்கு மெலிருந்திருப்பது வயிற்றுத்தசைகளில் பரவியிருந்த நரம்புகளாலும் விலா எலும்புகளின் புடைப்புநிரையாலும் தெரிந்தது.

திருதராஷ்டிரர் தலையை சற்றே திருப்பி செவிகளால் அவர்களை பார்ப்பதுபோல் அமர்ந்திருந்தார். பற்களை இறுகக் கடித்து வாயை மூடியிருந்தமையால் உதடுகள் குவிந்திருந்தன. இரு விழிகளும் ஊற்றெழும் கொப்புளங்கள்போல அசைந்தன. நரையோடிய குழல்கற்றைகள் தோளில் விழுந்து கிடந்தன. பீடத்திலிருந்து விழுந்து மடிந்த கால்கள் குடிலின் தரையில் ஆழப்பதிந்து தொல்மரத்து வேர்கள்போல் தோன்றின. அவன் அக்கால்களை சில கணங்கள் நோக்கினான். அல்லது அது ஒரு கணம் மட்டும்தானா? பெரிய பாதங்களில் புடைத்த நரம்புகள். மின்னும் விழிகொண்ட நகங்கள். கணுக்கால் முழை இரும்பாலானதுபோல. அவர் பேரெடைகளைத் தூக்கி தன் கால்மேல் வைத்து மறுகாலில் நின்று அதை தலைவரை தூக்குபவர்.

அவர் அருகே காந்தாரி நீலத் துணியால் கண்களை மூடி இரு கைகளையும் கோத்து மடியில் வைத்து அமர்ந்திருந்தாள். மெல்லிய பொற்பின்னலால் அணிகள் செய்த பட்டாடையை அணிந்து அதன் முகப்பை எடுத்து தலையில் சுழற்றி அணிந்திருந்தாள். அவள் வெண்ணிறக் கன்னங்களில் நீல நரம்புகளின் பரவலை நகுலன் கண்டான். கழுத்து நரம்பு புடைத்து முடிச்சுகளுடன் தெரிந்தது. பசுநீலக் கொடியொன்று படர்ந்தேறியதுபோல். இளம்பாளையில் வரிகள் என கன்னங்களிலும் தோளிலும் குருதிக்கொடிகள். இரு கைகளும் வெண்தந்தங்கள்போல் உருண்டு திகைப்பூட்டும் அளவுக்கு பெரிதாக தெரிந்தன. அக்கைகளில் அளவுக்குப் பொருந்தாத சிறிய உள்ளங்கை. செந்நிறமான சிறு விரல்கள். அவை ஒன்றோடொன்று கோத்திருந்தன. அவற்றில் எந்த அசைவும் இல்லை என்பதை நகுலன் கண்டான்.

சஞ்சயனின் சொற்களை திருதராஷ்டிரர் கேட்டதுபோல் தெரியவில்லை. அவன் மீண்டும் அருகே சென்று “பேரரசே, தங்கள் மைந்தர்கள் யுதிஷ்டிரனும் இளையோரும் வாழ்த்துச்சொல் பெறும்பொருட்டு வந்திருக்கிறார்கள். தங்கள் முன் நின்றிருக்கிறார்கள்” என்றான். நீர்ப்பரப்பில் சருகு விழுந்ததுபோல் ஓர் அசைவு திருதராஷ்டிரரில் தோன்றியது. உறுமலோசையுடன் “ஆம்” என்றார். யுதிஷ்டிரன் தோள்கள் நடுங்க கூப்பிய கைகள் அருவிவிழும் இலைகள்போல் துள்ளிக்கொண்டிருக்க தலைகுனிந்து நின்றார். தன் மூச்சு அவர் மேல் பட்டால்கூட அவர் நிலையழிந்து விழுந்துவிடக்கூடும் என்று நகுலன் எண்ணினான்.

யுதிஷ்டிரனை மெல்ல தொட்டு சகதேவன் “வணங்குக, மூத்தவரே!” என்றான். யுதிஷ்டிரன் “ஆம்” என்றார். ஆனால் நடுங்கும் உடலுடன் அசையாமல் நின்றார். மீண்டும் அவரைத் தொட்டு “செல்க!” என்று சகதேவன் சொன்னான். யுதிஷ்டிரன் திரும்பி இளைய யாதவர் எங்கே என்று பார்த்தார். சகதேவனுக்கும் நகுலனுக்கும் பின்னால் பீமனும் அர்ஜுனனும் வந்து நிற்பதை பார்த்தபின் திகைப்புடன் உதடுகளை மட்டும் அசைத்து “அவன் எங்கே?” என்றார். சகதேவன் திரும்பிப்பார்த்து “அவர் வெளியே நின்றிருக்கிறார்” என்று ஓசையிலாது சொன்னான். “அவன் எங்கே?” என்று மீண்டும் யுதிஷ்டிரன் கேட்டார். “தேவையெனில் வருவார்” என்று சற்று ஓசையெழ சொன்ன சகதேவன் “செல்க!” என்று சொன்னான்.

அச்சொல்லின் கூர்மையால் யுதிஷ்டிரன் சற்றே உடல் விதிர்த்து அடியெடுத்து வைத்தார். பின்னர் அங்கேயே கால் மடித்து நிலத்தில் அமர்ந்தார். கைகளைக் கூப்பி அதன் மேல் தன் நெற்றியை அமைத்து “வணங்குகிறேன், தந்தையே. தங்கள் அருட்சொல் கொள்ள வந்தேன்” என்றார். “ஆம்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். அவருடைய வலது கை எழுந்து காற்றில் துழாவியது. “எங்கிருக்கிறாய், மைந்தா… அருகில் வா” என்றார். யுதிஷ்டிரன் தன்னை அறியாது சற்றே பின்னடைந்து “தந்தையே, நான் தங்கள் மைந்தன்… தங்கள் அடிபணியும் இழிந்தோன்” என்றார். “என் உடன்பிறந்தாருடன் தங்களை நாடி வந்திருக்கிறேன். தந்தை பாண்டுவும் நுண்வடிவில் எங்களுடன் இங்கு வந்திருக்கிறார் என்பதை உணர்கிறோம்.”

திருதராஷ்டிரர் நடுங்கத் தொடங்கினார். சகதேவன் முன்னால் ஓர் அடி வைத்து “வணங்குகிறோம், தந்தையே. மூத்தவர் இன்னும் சில நாட்களில் அஸ்தினபுரியின் முடிசூடவிருக்கிறார். அதற்குமுன் இங்கு நீத்தார் அனைவருக்கும் நீர்க்கடன் செய்யவேண்டி உள்ளது. அனைத்துச் சடங்குகளுக்கும் குலமூத்தார் என்றும் பேரரசர் என்றும் தங்கள் வாழ்த்து தேவைப்படுகிறது. அதன்பொருட்டே இங்கு வந்தோம்” என்றான். இரு கைகளையும் நீட்டி காற்றைத் துழாவியபடி “எங்கிருக்கிறீர்கள்? அருகே வருக!” என்று திருதராஷ்டிரர் சொன்னார். அவருடைய முகம் அழுகையில் நெளிந்தது. “அருகணைக, மைந்தர்களே!” என்று அவர் அழைத்தார்.

சகதேவன் அவரை கூர்ந்து நோக்கியபடி “நாங்கள் அஞ்சுகிறோம், தந்தையே… நாங்கள் கொண்டது உங்கள் மைந்தரின் நிலம். மூத்தவர் சூடப்போவது உங்கள் மணிமுடி” என்றான். திருதராஷ்டிரர் “எவ்வாறெனினும் அஸ்தினபுரிக்கு உகந்த அரசன் அமைந்தது நன்று. என் இளையோன் விண்ணிலிருந்து மகிழ்வான். அவன் நிறைவுறுக! என் மைந்தர் சிறப்புறுக! வாழ்க நம் குலம்! குடியும் நகரும் நலம் பெறுக!” என்றார். அவருடைய கைகள் அலைபாய்ந்தன. விழிகளிலிருந்து நீர் வழிந்தது. “இனியேனும் அனைத்தும் சீர்ப்படவேண்டும். நம் குடி மகிழ்வுகொள்ள வேண்டும்.”

யுதிஷ்டிரன் எழுந்து பிடித்துத் தள்ளப்பட்டவர்போல் முன்சரிந்து திருதராஷ்டிரரின் கால்களின் கீழ் விழுந்து தன் தலையை அவர் பாதங்களில் வைத்துக்கொண்டார். “எந்தையே, பெரும்பழி செய்தவன் நான். தாங்கள் இடும் அனைத்து தீச்சொற்களுக்கும் தகுதியானவன். உங்கள் சொல்லால் சுட்டெரிக்கப்படுவேன் எனினும் அது முறையே என்று எண்ணுவேன். கீழ்மகன், உள்ளிருந்து ஆட்டி வைக்கும் எளிய விழைவுகளால் இயக்கப்படும் சிறியவன். தங்கள்முன் அதற்கப்பால் ஒன்றும் நான் சொல்வதற்கில்லை” என்றார்.

திருதராஷ்டிரர் குனிந்து அவர் இரு தோள்களையும் பற்றி, சிறுகுழவியெனத் தூக்கி, தன் மடியில் அமர்த்தி, இரு கைகளால் அவரை வளைத்து அணைத்து தன் நெஞ்சோடு இறுக்கிக்கொண்டார். “தந்தையே! தந்தையே!” என்று கூறியபடி தன் முகத்தை அவர் மார்பின்மீது அமிழ்த்தி நடுங்கியபடி யுதிஷ்டிரன் அழுதார். அவர் சூடிய தலைப்பாகை செம்பருந்தின் இறகுடன் திருதராஷ்டிரரின் காலடியில் கிடந்தது. திருதராஷ்டிரர் சிறுகுழவியை என யுதிஷ்டிரனின் இரு கன்னங்களிலும் முத்தமிட்டு அவர் தோளையும் முதுகையும் தன் அகன்ற கைகளால் வருடினார். “துயருறாதே… நீ அறத்தோன். அறத்தின்பொருட்டே நீ விழிநீர்விடுகிறாய். அது நம் குடிக்கு நன்றே என்று அமையும்” என்றார்.

நடுங்கும் முதிய குரலில் “இவையனைத்தும் நம் கைகளில் இல்லை. நாம் இயற்றக்கூடுவது இனி நல்லாட்சி ஒன்றே. அஸ்தினபுரிக் குடிகள் துயருற்றுவிட்டார்கள். இனி அவர்களுக்கு உனது கோலே காப்பு” என்றார். அவர் விழிகளிலிருந்து நீர் வழிந்து யுதிஷ்டிரனின் தலையிலும் தோளிலும் சொட்டியது. யுதிஷ்டிரன் “இளமைந்தன் என்று தங்கள் மடியில் அமர்ந்ததைப்போல் இப்பிறப்பில் பிறிதொரு பேறு எனக்கு அமைந்ததில்லை. இது போதும், தந்தையே” என்று சொன்னபோது குரல் உடைந்து தேம்பி அழுது தளர்ந்து நினைவழிந்ததுபோல் அவர் தோள்களில் தலை தொய்ந்தார்.

சகதேவன் முன்னால் சென்று குனிந்து திருதராஷ்டிரரின் கால்களைத் தொட்டு வணங்கி “வாழ்த்துக, தந்தையே!” என்றான். நகுலனும் இயல்பாக உடன் சென்று வணங்கி “தங்கள் நற்சொல் பெற விழைந்தோம், தந்தையே” என்றான். யுதிஷ்டிரனை இடக்கைக்கு மாற்றி வலக்கை நீட்டி அவர்கள் இருவரையும் பற்றி இழுத்து தன் வலத்தொடை மேல் அமரச்செய்து உடலுடன் சேர்த்து இறுக்கி அவர்கள் தலைகளையும் முகத்தையும் வருடினார் திருதராஷ்டிரர். “மைந்தர் இல்லையென்று ஒருகணம் எண்ணுவேன். மறுகணம் உங்கள் நினைவு வராமல் இருந்ததில்லை. இதோ இந்தக் குழல்மணத்தை எத்தனை காலமாக அறிந்திருக்கிறேன். என் இளையோன் மைந்தர் நீங்கள். என் மைந்தரைவிட நான் தலைக்கொள்த்ள தக்கவர். சிறப்புறுக! குடி அழியாது பெருகுக! வெற்றியும் புகழும் அமைக! பிறவி நிறைவடைக!” என்றார்.

நகுலன் உடல் தளர்ந்து சரிந்து அவர் தொடையிலிருந்து இறங்கி நிலத்தில் அமர்ந்து அவர் முழங்கால் முட்டில் தலைவைத்து நெஞ்சு பிளக்கும் ஒலியுடன் அழுதான். சகதேவன் கண்ணீர் விட்டபடி அவரது வலத்தோளில் தலை சாய்த்தான். யுதிஷ்டிரன் அவருடைய இடத் தொடையிலிருந்து மெல்ல எழுந்து நின்று கண்களைத் துடைத்தபின் திரும்பி அர்ஜுனனை நோக்கி “வருக!” என்றார். அர்ஜுனன் தழல் எனத் தவித்த அசைவுடன் நின்றிருந்தான். ஒருகணம் தயங்கி பின்னால் வளைந்து மறுகணம் ஓரடி எடுத்து வைத்து தயங்கி பின்னர் ஓடிவந்து அவர் காலடியில் விழுந்து ஓலம் என ஒலித்த குரலில் “தந்தையே, நான் பார்த்தன். தங்கள் பெயர்மைந்தரைக் கொன்றவன். பிதாமகர்களையும் ஆசிரியர்களையும் களத்தில் வீழ்த்திய பழிகொண்டவன். தாங்கள் அளிக்கும் எச்சொல்லுக்கும் தகுதியானவன்” என்றான்.

திருதராஷ்டிரர் தன் கைகளை அவன் தலைமேல் வைத்து குழல்கற்றையைப் பற்றி மெல்ல தூக்கி “இனி இத்தகைய சொற்களால் என்ன பயன்? இவற்றைக் கடந்து செல்க! கொலை போர்க்களத்தில் நின்றிருக்கும் ஷத்ரியனுக்குரிய அறமே. களம் நிகழ்பெருக்குகளின் வெளி என்பதால் அங்கு மீறலும் இயல்பானது. அதற்கு மாற்றுகளும் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. ஷத்ரியனென போருக்கெழுந்தவன் எந்நிலையிலும் ஷத்ரியன் என்றே நின்றிருக்கவேண்டும். ஆற்றியவற்றின்பொருட்டு குற்றஉணர்வு கொள்ளலும் வென்றபின் சோர்வும் தோல்வியில் பணிவும் அவனுக்குரியவை அல்ல. கடந்து செல்க! உன் விண்வாழும் தந்தையின் அருள் உனக்குண்டு. அஸ்தினபுரிக்குக் காவலென உன் காண்டீபம் அமையட்டும்” என்றார்.

அர்ஜுனன் விம்மி அழத்தொடங்க அவர் அவன் காதைப் பிடித்து உலுக்கினார். “மைந்தா, விளையாட்டுக் குழந்தையென்றே உன்னை அறிந்திருக்கிறேன். இப்போதும் என் உள்ளத்தில் உனது இளம் புன்னகையே நிறைந்திருக்கிறது. அதுவன்றி பிறிதொன்றை அறியவும் நான் விழையவில்லை” என்றார் திருதராஷ்டிரர். திருதராஷ்டிரரின் அருகிலிருந்து காந்தாரியின் பக்கமாகச் சென்று குனிந்து அவள் கால்களைத் தொட்டு வணங்கி “வாழ்த்துக, அன்னையே!” என்று யுதிஷ்டிரன் சொன்னார். அவள் தன் இரு கைகளையும் அவர் தலையில் வைத்து “பாரதவர்ஷத்தை முற்றாள்க! உன் குலம் பெருகுக! உன் கோலால் குடி செழிக்கட்டும். நலம் பெறுக! நிறைவுறுக!” என்று வாழ்த்தினாள்.

அர்ஜுனன் எழுந்து சொல்லின்றி காந்தாரியின் தாள் தொட்டு வணங்க “மேலும் மேலும் வெற்றி அமைக! வெற்றியில் உளம் திளைக்கும் இளமையும் உடன் அமைக! துயரனைத்தும் விலகி அகம் தெளிக!” என்று காந்தாரி சொன்னாள். நகுலன் நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தபோது அதிலிருந்த மலர்ந்த புன்னகை அவன் அகத்தை படபடக்க வைத்தது. அமர்ந்தபடியே கைகளை நீட்டி அவள் கால்களைத் தொட்டு “வாழ்த்துக, அன்னையே!” என்றான். தன் கைகளால் அவன் தலையைத் தொட்டு குழல்பற்றி மெல்ல உலுக்கி “நலமும் நிறைவும் பெறுக!” என்றாள். பின்னர் அவளை வணங்கிய சகதேவனின் தலையைத் தொட்டு “உங்கள் அன்னை துயருற்றிருக்கிறாள். நீங்கள் சிறப்பும் உவகையும் பெறுவதைக் கண்டு அவள் மீளக்கூடும். அன்னையின் பொருட்டும் நீங்கள் சிறப்புற வேண்டும்” என்றாள் காந்தாரி.

சகதேவன் பெருமூச்சுவிட்டு கண்களை மூடி திருதராஷ்டிரரின் தொடைமீது தன் தலையை வைத்துக்கொண்டான். அதன் பின்னரே யுதிஷ்டிரன் பீமனை உணர்ந்தார். நிமிர்ந்து அவனைப் பார்த்து “அருகே வருக!” என்று கைகாட்டினார். பீமன் அவர்களை மாறி மாறி பார்த்தபடி குடில் வாயிலில் நின்றான். அவன் முகத்திலிருந்த ஐயமும் பதற்றமும் நகுலனுக்கு எரிச்சலை உருவாக்கியது. அவன் முகத்தை திருப்பிக்கொண்டான். பீமனுக்குப் பின்னால் இளைய யாதவர் வந்து நின்றார். அவருக்குப் பின்னால் கவச உடை அணிந்த ஏவலன் ஒருவன் வந்தான். யுதிஷ்டிரன் பற்களைக் கடித்து சினத்துடன் “அருகே வருக!” என்று விழிகளால் பீமனுக்கு ஆணையிட்டார்.

பீமன் மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து திருதராஷ்டிரரை நோக்கி வந்தான். நகுலனும் சகதேவனும் திருதராஷ்டிரரின் அருகிலிருந்து எழுந்தனர். நகுலன் திருதராஷ்டிரருக்குப் பின்னால் சென்று நின்றான். சகதேவன் காந்தாரியின் அருகே நின்றான். யுதிஷ்டிரன் “வணங்குக!” என்று பீமனை நோக்கி கைகாட்டினார். பீமன் திருதராஷ்டிரருக்கு சற்று அருகே வந்து நின்றபோது அவன் உடலிலிருந்து வெம்மை எழுவதுபோல் தோன்றியது. அவன் உடலெங்கும் தசைகள் நெளிந்தன. அவனுக்குப் பின்னால் இளைய யாதவர் வந்து நின்றார். யுதிஷ்டிரன் “தந்தையே, தங்கள் அன்புக்குரிய மைந்தன் விருகோதரன் வந்திருக்கிறான்” என்றார்.

இரு கைகளையும் விரித்து புன்னகையுடன் “வருக, மைந்தா!” என்று திருதராஷ்டிரர் அழைத்தார். பீமன் விம்மியபடி கால்மடித்து முழந்தாளிட்ட கணத்தில் இளைய யாதவர் தனக்குப் பின்னால் வந்த ஏவலனின் தோளைப்பற்றிச் சுழற்றி முன்னால் நிறுத்தினார். அப்போதுதான் அது துரியோதனன் சமைத்த இரும்புப் பாவை என்பது நகுலனுக்குத் தெரிந்தது. முன்னால் வந்து சரிந்து திருதராஷ்டிரரின் கைகளுக்கு நடுவே அது விழுந்தது. “மைந்தா! துரியோதனா!” என்று வீறிட்டபடி திருதராஷ்டிரர் அந்த இரும்புப் பாவையை இரு கைகளாலும் பற்றிச் சுழற்றி நெஞ்சோடணைத்து இறுக்கினார். அதன் இரும்புத்தகடுகள் நொறுங்கின. உள்ளமைந்த விற்சுருள்கள் உடையும் ஓசை கேட்டது. இடுப்பும் இரு தோள்களும் உடைந்து நெளிந்துருமாற பாவை அவர் கைகளில் வளைந்து மடியில் விழுந்தது.

தொடர்புடைய பதிவுகள்

வருவது வரட்டும்!- கடிதம்

$
0
0

“வருவது வரட்டும்!”

எவ்வாறோ அவ்வாறே!

அன்புள்ள ஜெ,

 

எனக்குத் தாலாட்டாகப் பாடப்பட்ட மெட்டு இந்த “சின்னப் பெண்ணான போதிலே” பாடல், ஆனால் வரிகள் என் அம்மாவுடையது. என் தம்பி பிறந்த பின் அதே பாடல் ஒரு சில மாறுதல்களுடன்  அவனுடைய தாலாட்டு ஆகியது.
இதன் ஆங்கில வடிவத்தை உங்கள் கட்டுரை வழி தான் அறிந்தேன்.  தொடர்ந்து இணையத்தில் தேடியதில் பானுமதி அம்மா அவர்கள் பாடிய “Que sera sera” கிட்டியது.  கற்பகம் திரைப்படம்  தெலுங்கில் 1965 இல் “தொடு நீடா” என்ற பெயரில் வெளிவந்தது. அதில் இதே பாடலை சில வரி மாற்றங்களுடன் பாடியிருப்பார். இந்திய உச்சரிப்புடன் அவர் பாடிய இப்பாடல் என் தாயின் தாலாட்டு போலவே உற்சாகத்தையளிக்கிறது.
அன்புடன்
ஸ்வேதா,

பெங்களூர்

அன்புள்ள ஸ்வேதா
ஆச்சரியம்தான். அந்த அசல் பாடலின் இந்திய மறு வடிவங்கள் அனைத்திலும் ஒன்று கவனமாக தவிர்க்கப்படுகிறது. அதில் மொத்தவாழ்க்கையையும் சொல்லி எது எப்படியோ அப்படி என்னும் ஊழ்வாதம் சொல்லப்படுகிறது. ‘நீர்வழிப்படும் புணைபோல ஆருயில் முறைவழிப்படும்’ என்பதே அதிலுள்ளது. அதைத்தான் அஞ்சுகிறார்கள். ‘நல்லதே நடக்கும்’ என்று சொல்ல ஆசைப்படுகிறார்கள். நம் கலாச்சாரத்திலேயே இந்த வேறுபாடு உள்ளதா என்ன? அப்படியென்றால் கணியன் பூங்குன்றன் நம் குரல் இல்லையா? அது நாம் மெல்ல மெல்ல அகற்றிவிட்ட இன்னொரு மெய்யியலா? சமணம் இங்கே நிலைக்காமல் போனதற்குக் காரணமே அந்த ஊழ்வாதத்தில் உள்ள உளவிலக்கமா? நமக்குத் தேவையாக இருப்பது இனிய உலகியல்வாதம்தானா?
ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நேரு –ஒரு கடிதம்

$
0
0

 

அன்புள்ள ஜெ,

 

காந்தி, சுதந்திரம், நேரு, காலனியாக்கம் என்பது போன்ற விஷயங்களில் எனது எண்ணங்களை இரண்டாக தொகுத்துக்கொள்ளமுடியும்; உங்களது கட்டுரைகளை, உரைகளை, நூல்களை வாசித்து, கேட்டு அறிவதற்கு முன் எனக்கு இருந்த புரிதல்கள் எல்லாம் தேனீர் கடைகளின் உரையாடல்கள் வழியாக வந்த ஒரு அறிதல் (அதை அறிதல் என்று கூட சொல்லமுடியாத ஒரு விதமான தவறான புரிதல்கள்). பதின்ம வயதில் வரலாறு மற்றும் குடியியல் பாடங்களில் காந்தி, நேரு, போஸ் பற்றி படிக்க நேரும்பொழுது, அந்த வயதிற்கே உரிய மனநிலையால் என்னை கவர்ந்த நபர் போஸ். அவருடைய வீரமும்,ஆயுதம் இந்திய போராட்டமும் மிகவும் கவர்ந்தது. காந்தி மற்றும் அவரது அஹிம்சை போராட்டங்களும் பிடிபடவேயில்லை.

 

இந்த தவறான புரிதலை திருத்திக்கொள்ள எனக்கு 27 வருடங்கள் ஆனது – ஒரு ஜெயமோகன், ராமச்சந்திர குஹா மற்றும் அரவிந்தன் கண்ணையன் நூல்கள் மற்றும் கட்டுரைகள் வழியாகவே அதை அடைய முடிந்தது. உங்களது இணையம் இல்லையென்றால் இன்னும் அறியாமையின் இருட்டு சிறையிலே களித்திருக்க வேண்டியிருக்கும். அதற்கு நன்றிகள் பல.

 

அவ்வப்பொழுது பழைய புத்தகக்கடைகளில் உலாத்துவது எனது பொழுதுபோக்குகளில் ஒன்று. சில நாட்களுக்கு முன்பு, ஜூடித் பிரவுன் அவர்கள் எழுதிய – நேரு அவர்களுது வாழ்கை வரலாறு புத்தகம் கிட்டியது. அருமையான வாசிப்பனுபவம், இந்த நூலை வாசித்தபொழுது நிறைய இடங்களில் உங்களது எழுதும், கருதும் ஊடுபவையாக வந்தவண்ணம் இருந்தது.

 

இன்று இந்தியா ஒரு பெரும் பொருளாதாரம், நாளை ஒரு பெரும் வல்லரசு ஆவதற்கான அனைத்து இங்க்ரெடிஎன்ட்ஸ் இருக்கும் ஒரு நாடு. இதே இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு இருந்த நிலை முற்றிலும் வேறு – மத கலவரங்கள், படிப்பறிவு,பொருளாதார சமத்துவமின்மை, வறுமை, வேலையின்மை என்பது போன்ற கொடுமையான நோய்களால் பீடிக்கப்பட்டிருந்த நாடு. இத்தனை இக்கட்டுகளிலும், இருந்து நம்மை மீட்ட பெரும்பங்கு இருவரை சாரும் – நேரு, வல்லபாய் படேல்.

 

நேரு போன்ற ஒரு மனிதர் நமக்கு தலைவனாக அமைந்தது நாம் செய்த நல்லூழ். இப்பொழுது ஒரு நல்ல ஜனநாயகம் என்பதின் அடையாளங்கள் – நீதித்துறை, அரசியல் சாசனம்,பாராளுமன்றம், தேர்தல் – எல்லா மக்களும் பங்கேற்கும், பத்திரிகை, அட்மினிஸ்ட்ரக்டிவ் மெச்சினேரி – சட்டங்களை நடைமுறைப்படுத்த. நாம் சுதந்திரம் பெற்றபொழுது இவையெதுவுமே வலிமையாக இல்லை (இல்லவே இல்லை) . இந்த infrastructure கட்டமைத்து நமது நிகழ்கால பொருளாதார சாதனைகளுக்கு அஸ்திவாரம் இட்ட அரசு நேரு, அம்பேத்கர், படேல் போன்ற தலைவர்களை. நான் இந்த நூலை வாசிப்பதை பார்த்து ஒரு அலுவலக நண்பர்  (“edwina பத்தி எதுவும் போட்டுருக்கா?”) என்ற நக்கலான கேள்வி கண்ணீர் ததும்புமளவு எரிச்சலூட்டியது ! இது பெரும்பாலும் நமது கல்விமுறையின் தோல்வியே என்பது தெளிவு. நாம் கடந்து வந்த தூரம், நமது ஜனநாயகத்தின் வரலாறு குறித்து ஒரு படங்களும் நான் கற்றதில்லை, வந்த ஆசிரியர்கள் அவர்களுக்கும் இந்த விஷயங்களில் ஆர்வம் இல்லையென்றே  தோன்றுகிறது. இந்த புத்தகம் எங்கும் பெரும் ஆச்சர்யங்கள், படித்து முடித்த பிறகு இந்த நபரின் மீது இன்னும் பெரும்காதலை வந்திருக்கிறது (நேரு, காந்தி இருவருக்கும் இது பொருந்தும்).

 

காந்தி கனவுகண்ட இந்தியா முற்றிலும் வேறு – அவரது ஆஃப்ரொஞ்ச் grassroots ஜனநாயகம் என்று கொள்ளலாம். நேருவின் இந்தியா முற்றிலும் வேறு – இந்த விஷயங்களில் அவரிடமே முரண்படவும் செய்திருக்கிறார் மிகவும் கடினமாகவும் கூட. சில இடங்களில் நேரு காந்தியே தந்தை வடிவமாக காண்கிறார் உதாரணம்: காந்தி அவர்களது அஹிம்சை போராட்டத்தை (non-cooperation) திரும்பபெரும்பொழுது நேரு அவரிடம் வாதிடுகிறார் ஒரு இடத்தில் காந்தி – எனக்கும், உனக்கும் இந்த விஷயத்தில் உடன்பாடு அமைவதற்கான வாய்ப்பு இல்லை, நீ உன்னுடைய கருத்தை வலிமையாக, வெளிப்படையாக முன்வைக்கவேண்டும் என்று சொல்லும்பொழுது அவரது பதில் கடிதத்தில், “On wider sphere, am I not your child in politics perhaps a truant one” என்று சொன்னஇடத்தில் இந்த இருபெரும் மனிதருள் இருந்த அன்பு பணிக்கச்செய்தது.

 

இவ்வளவு சட்டங்கள் இயற்றியும் அவரால் மக்களது மனநிலையை, சுயநலத்தை, மாற்றவே முடியவில்லை. எந்த ஜனநாயக முறை ஒன்று அவர் உருவாக்கினாரோ, அதை ஜனநாயகம் அவரது புரட்சிகரமான செயல்களுக்கும் முட்டுக்கட்டை இட்டது. இன்றளவும் – தீண்டாமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவறு என்றாலும் நடந்துகொண்டே இருப்பதற்கான காரணம் இந்த சமூக மனநிலையே. நேரு அவரது கடைசிகாலங்களில் காந்தி கண்ட கனவின் மூலமே சமூகத்தீர்வு சாத்தியமாகும் என்ற ஒரு புரிதலுக்கு வந்துருகிறார்.

 

இப்பேற்பட்ட மனிதனுக்கு குறைகளை இல்லையா ? இருக்கிறது. என்னளவில் அவரது தவறு ( on hindsight ). 1. நேரு என்ற ஒரு தலைவருக்கு காந்தி என்ற ஒரு ஆசான் அமைந்தார், ஆனால் நேரு தனக்கு பிறகு வரும் தலைமுறை ஆட்சியாளரை கண்டெடுத்து பட்டை தீட்ட வில்லை, அவர் தனது கனவை, நாட்டை யாரேனும் துஷ்ப்ரயோகம் செய்துவிடுவார்களோ என்ற பயமே காரணம் என்று தோன்றுகிறது  2.  அவர் சீராக delegate செய்யவில்லை, அவரது முழு ஆற்றலும் அரசாங்க நிர்வாகத்தின் பெரும்பகுதி அழித்து அவரது creativity மட்டுப்படுத்தியது. படேல் போன்ற ஒரு ராஜதந்திரி அவரது தலைமையை அதன் விழைவை  இன்னும் amplify செய்திருக்கமுடியும் 3. நேரு ஒரு பெரும் ஆளுமை அவரை சுற்றி இருந்த கூட்டம் அவர்கேட்க விரும்பாத ஒன்றை கூறவேயில்லை, மேனன், விஜயலக்ஷ்மி போன்ற சிலநபர்களின் ஆலோசனை மட்டுமே கேட்டு முடிவுகள் எடுத்தார்.

 

மனிதர் எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார், அவரது கனவு, ஒய்வு என்பது அறியாத உழைப்பும் – மானிடரின் மீது பெரும்காதல் கொண்ட ஒருவனால் மட்டுமே கொடுக்கமுடியும். என்றைக்குமே என் நாட்டின் தலைவனாய் இவர் இருந்தார் என்பது நான் பெருமைப்படுவேன். இப்பேற்பட்ட லட்சியவாதியை நமக்கு கொடுத்த இறைவன் நிகழ்கால ஊழல் மலிந்த அரிசியல்வாதியை நமக்கு அளித்திருப்பது நாம் இவருக்கும், காந்திக்கும் இழைத்த வரலாற்று பிழையே, ஊழ்வினையாய் நேர்ந்திருக்கிறது.

 

 

பேரன்புடன்

கோபி

நேரு

நேரு x பட்டேல் விவாதம்

கிசுகிசு,நேரு,அரவிந்தன் கண்ணையன்

பி.ஏ.கிருஷ்ணன்,நேரு – கோபி செல்வநாதன்

நேருவின் பொருளியல்கொள்கை பற்றி…

பௌத்தம்,நேரு -கடிதங்கள்

நேருவும் பட்டேலும் மதச்சார்பின்மையும்

காந்தி நேரு-கடிதங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நிலம் [புதிய சிறுகதை]

$
0
0

 

இருபத்திரண்டு வருடங்களுக்குப்பின் ராமலட்சுமிக்கு பொத்தைமுடி ஏறிப்போய் வெட்டுவேல் அய்யனாரைச் சேவிக்கவேண்டுமென்று ஆசை வந்தது. எப்போது அவளுக்குள் அந்த எண்ணம் வந்தது என்று அவளுக்குத்தெரியவில்லை. உறைகுத்தின தோசைமாவு மறுநாள் காலை மூடியைத் தள்ளிவிட்டுப் பூத்துமலர்ந்திருப்பதுபோல காலையில் அவள் அது தன்னிடமிருப்பதை உணர்ந்தாள்.

அவள் முகம் பூரித்திருப்பதைக்கண்டு அன்னமயில் ‘ஏனம்மிணி, மொகத்திலே எளவெயிலுல்ல அடிக்குது?’ என்று கேட்டாள். ராமலட்சுமி புன்னகைத்துக்கொண்டாள்.

அடுத்தக்கணமே மனம் கூம்பியது. முகத்தை சுவரை நோக்கித் திருப்பிக்கொண்டாள். நாலைந்துவருடம் முன்புகூட காலையில் அப்படி அகம்பூரித்திருந்தால் நாலைந்துநாள் தள்ளிப்போயிருக்கிறது என்று அர்த்தம். அதன்பின் வேண்டுதல்கள், காணிக்கைமுடிதல்கள். உள்ளூர ஒவ்வொரு சொல்லும் மன்றாடலாக இருக்கும். காலடி எடுத்துவைக்கும்போதெல்லாம் வயிறு வயிறு என்று மனசு பதறும். நாட்கள் தாண்டத்தாண்ட நம்பிக்கை சோளக்கதிர் கனப்பதுபோல வளரும். பின்பு ஒருநாள் வாடிய செம்பருத்தி முற்றமெல்லாம் உதிர்ந்துகிடக்கும்.

அந்த நம்பிக்கையின் அலைக்கழிப்பு முழுமையாக அடங்கிப்போனதுகூட நல்லதுதான் என்று ராமலட்சுமி நினைத்துக்கொண்டாள். இனிமேல் அவள் கொல்லைப்பக்கச் சுவரில் நாட்களைக் கரியால் புள்ளிவைக்கவேண்டியதில்லை. வண்ணாத்தி சின்னு வரும்போதெல்லாம் கூசி அரங்குஅறைக்குள் ஒடுங்கிக்கொள்ளவேண்டியதில்லை.

கொல்லையில் தொழுவத்துப் புல்கூரைமேல் கருக்கிருட்டு வடிந்துகொண்டிருந்தது. கறுத்தானும் மாடசாமியும் பசுக்களை ஒவ்வொன்றாக அவிழ்த்துக் கொண்டுவந்து முளைத்தறிகளில் கட்டிக்கொண்டிருந்தார்கள். தொழுவத்தின் குண்டுபல்புகளைச்சுற்றிப் பூச்சிகள் புகைச்சுருள்போல பறந்துகொண்டிருந்தன. செவலை நன்றாகத் திரும்பி நின்று முளையில் சுற்றிய கன்றைப்பார்த்து அம்பே என்றபின் வாலைத்தூக்கி சடசடவென சிறுநீர் கழித்தது.

அன்னமயில் கூடைநிறைய எள்ளுப்புண்ணாக்கு அள்ளி இடுப்பில் வைத்து கொண்டுசென்று முந்தையநாளே தொட்டிகளில் கலக்கி வைத்திருந்த புளித்தகாடியில் கொட்டிக் கலக்கினாள். புண்ணாக்குவாசனைக்குப் பசுக்கள் கயிற்றை இழுத்து கனத்த நாக்கை நீட்டின.மூக்குக்கயிறு இழுக்க தலை தாழ்த்திச் சுற்றிவந்தன. மாடசாமி தொழுவத்தில் பெரியகருப்பியின் அருகே கன்றை அவிழ்த்துவிட்டான். செவலைக்கன்று. முதுகில் வெள்ளைக் கைக்குட்டையைப் போட்டதுபோல ஒரு தடம். மெழுகுமூக்கை நீட்டி நீட்டித் தாயின் அகிடைப் பிடிக்க முனைந்துகொண்டிருந்தது. கயிறு தளர்ந்ததும் குட்டிவாலை தூக்கியபடி  சென்று கனத்து நரம்புபுடைத்துத் தொங்கிய அகிடில் முட்டி இருமுறை ஏந்தியபின் வேகமாகச் சப்ப ஆரம்பித்தது. ராமலட்சுமிக்குப் புல்லரித்தது. கதவருகே சற்றே மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். படபடப்பில் அவளுக்குக் கால் பதறியது. ஒவ்வொருநாளும் அவள் பார்க்கும் காட்சிதான். ஒவ்வொருநாளும் அதை அவள் ஒளிந்துநின்றுதான் பார்ப்பாள். அன்னமயில் அடுத்தமுறை புண்ணாக்கு எடுக்க உள்ளே வரும் சத்தம் கேட்டதும் அவள் உள்ளே சென்றாள்

கொல்லைக்குச்சென்று மரச்சம்புடத்தில் தொங்கிய உமிக்கரியைக் கொஞ்சம் அள்ளிப் பூவரசம் இலையில் மடித்துக் கொண்டு வடலிப்பனையில் இருந்து ஓரு ஓலையைக் கீறிக்கொண்டாள். கொல்லைப்பக்கம் நின்ற வேப்பமரத்தில் காகங்கள் எழுந்து எழுந்து பறந்து பூசலிட்டுக்கொண்டிருந்தன. பனையோலை மறைப்பு போடப்பட்ட குளியலறைக்குள் பெரிய சிமிண்ட் தொட்டியில் அன்னமயில் தண்ணீர் நிறைத்து வைத்திருந்தாள். முந்தைய நாளே நிறைத்து இரவின் குளிரை வாங்கிவைத்திருக்கும் தண்ணீர். ராமலட்சுமி க்கு அதில் குளிக்க மிகவும் பிடிக்கும். அந்தத் தண்ணீருக்குக் கொஞ்சம் கனம் அதிகம் என்று தோன்றும். இந்த கரிசல்காட்டின் வெக்கைக்குத் தண்ணீர் சாதாரணமாக உடம்பில் விழுந்ததுமே உலர்ந்துவிடும். ராத்திரித்தண்ணீர் இன்னும் கொஞ்சநேரம் உடம்பில் நீடிக்கும் என்று அவளுக்கு ஒரு நினைப்பு.

குளித்து முடித்துவந்ததும் அவள் அரங்கு அறைக்குச் சென்று தேக்குப் பெட்டியைத் திறந்தாள். மரிக்கொழுந்து செண்ட் போட்டு வைத்த புடவைகள் அடுக்கப்பட்டிருந்தன. பெட்டியின் மூடியின் உட்பக்கம் அவளும் சேவுகப்பெருமாளும் திருமணம்செய்துகொண்டபோது எடுக்கப்பட்ட படம். அவள் கையில் ஒரு செண்டு இருந்தது. இங்கெல்லாம் அது வழக்கமே இல்லை. அன்று யாரோ திருநெல்வேலியில் இருந்து கொண்டுவந்து கையில் கொடுத்துவிட்டார்கள். அதை என்ன செய்வதென்றே தெரியாமல் கையில் வைத்திருந்தாள். மெத்தென்று குளுமையாக இருந்தது. கைக்குழந்தைபோல.

அவளுக்குப் புல்லரித்தது. ஆம், அதை மடியில் வைத்திருந்தபோது அதைத்தான் அவள் நினைத்தாள். பூச்செண்டு வாடாமலிருக்கத் தெளித்திருந்த பன்னீர் ஊறி அவள் சின்னாளப்பட்டுப் புடவையில் சொட்டித் தொடை ஈரமானபோது அவளுக்கு புல்லரித்துக் கண்ணீரே வந்துவிட்டது. உதட்டை இறுக்கியபடி தலையைக் குனிந்து கொண்டாள். சேவுகப்பெருமாளுக்கு அப்போதே ஊரெல்லாம் தோழர்கள். எல்லாருமே பெரியமனிதர்கள். மோட்டாரைப்போட்டுக்கொண்டு வந்தபடியே இருந்தார்கள். என்னென்னவோ பரிசுப்பொருட்கள். கடிகாரம் மட்டும் இருபத்தைந்துக்குமேல் வந்தது. ஒவ்வொருவரைப்பார்த்தும் அவள் புன்னகைக்கவேண்டியிருந்தது. புன்னகைசெய்தே முகம் வலிக்க ஆரம்பித்தது

ராமலட்சுமி அரக்குச்சிவப்புப் பட்டுப்புடவையை எடுத்தாள். அதை மெதுவாகத் தடவிப்பார்த்தாள். மதுரையில் அழகர்விழா பார்க்கப்போனபோது எடுத்தது. கல்யாணமாகி நான்கு வருடம் கழித்து. சேவுகப்பெருமாள் அதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தான். வெளியே கூட்டிச்சென்றால் கண்டிப்பாகப் புடவை உண்டு. ‘அய்யே இப்ப என்னத்துக்கு இது? நான் இதையெல்லாம் கட்டிக்கிட்டு எங்க போறேன்?’ என்று அவள் சொன்னாலும் அவன் கேட்கமாட்டான். ‘என்ன இப்ப? பொட்டியில வச்சுக்க…இல்லாட்டி வீட்டுக்குக் கட்டிக்க’ என்பான். ‘இதையா…நல்லாருக்கு பட்டுகட்டிகிட்டு காட்டுவேலைக்குப்போறேனக்கும்’ என்பாள் அவள். ‘காட்டுவேலை ஏன் செய்றே? நீ மகாராணியாக்கும்…நாக்காலியிலே அட்டணக்கால் போட்டுட்டு ஒக்காரு…’ அவள் சிரித்து ‘ஆமா… அட்டணக்கால் போடுறாங்க… மானம்பாத்த பூமியிலே அது ஒண்ணுதான் கொற’ ஏன் போட்டா என்ன? நீ யாரு? நீ வடக்கூரான் பெஞ்சாதி…கோயில்பட்டி சங்‌ஷனிலே போயி பேரச்சொல்லிப்பாரு. தெருவே எந்திரிச்சு நிக்கலேண்ண என்னாண்ணு கேளு…’

பட்டுப்புடவைக்குள் இருந்த பாச்சாஉருண்டைகள் எல்லாம் ஆவியாகிப் புடவையிலேயே கலந்துவிட்டிருந்தன. அதை எடுத்து முகர்ந்து பார்த்தபோது அவளுக்கு எங்கோ போய்விட்டதுபோலிருந்தது. மதுரை சாலைகளில் வண்டிப்புகையை சுவாசிப்பதுபோல இருந்தது. புதிய மோட்டார்காரில் ஏறியதுபோல இருந்தது. இளவாழையிலை போலிருந்த புடவையை மெதுவாகப் பிரித்து உதறிவிரித்தாள். மூன்றுமுழம் அகலத்துக்கு மயில் சரிகைபோட்ட முந்தானை. உள்ளுக்குள் செவ்வந்திப்பூ புட்டா. அந்தக்காலத்தில் அதைப்பார்ப்பதற்காகவே பெண்கள் பக்கத்து ஊரில் இருந்தெல்லாம் தேடிவருவார்கள்.

அவள் பீரோக் கண்ணாடியில் தன்னைப்பார்த்தாள். காதோரம் படர்ந்த நரையில் முகத்தின் மஞ்சள் கலந்து ஏதோ குருவியின் இறகுபோலிருந்தது. நெற்றியில் குங்குமம் வைத்த இடம் வட்டமாகக் கருகி அய்யனார் கோயில் கல்படியில் சூடவிளக்கு ஏற்றிய தடம்போலிருந்தது. கன்னம் கனத்து, கழுத்து குறுகி, உடம்பு உருண்டு அந்தத் தோற்றம். அது அவள்தான் என்று அவள் மனம் முழுக்க நம்பியதேயில்லை. திரும்பத்திரும்ப கண்ணாடிபார்த்த காலகட்டத்தில் மனதில்பதிந்த ஒரு சித்திரம் உண்டு. அவளுக்கு கே.ஆர்.விஜயாவின் சாயல் என்பாள் மேலகரம் அத்தை. ’அந்த விசயாக்கூட ஒன்னைமாதிரி கறுப்புதாண்டீ…லைட்டடிச்சு செவப்பாக் காட்டுறாங்க’ என்பாள். சேவுகப்பெருமாளிடமும் அதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். ‘உன்னைப்பாத்தா கே.ஆர்.விஜயாமாதிரின்னு சொன்னாங்க… அவ என்ன உன்னைய மாதிரி உளுந்து நெறத்திலயா இருக்கா?’ என்று அவன் முதலிரவில் கேட்டான் ‘ஆ, அவள பெயிண்ட் அடிக்கிறதுக்கு முன்னாடி பாத்துட்டு வந்து கேளுங்க’ என்றாள் அவள்.

அவள் புடவை கட்டி வெளியே வந்தபோது அன்னமயில் பெரிய செம்பில் விளிம்பு வழிய நுரைத்த புதுப்பாலுடன் உள்ளே வந்தாள். கண்கள் விரிய பார்த்து ‘ஏனம்மிணி….இண்ணைக்கு எங்கியாம் போறிகளா?’ என்றாள். ‘ஏன் போனாத்தானா? சும்மா கட்டிக்கப்பிடாதா?’ என்றாள் ராமலட்சுமி . ‘கட்டிக்கிடுறது…உங்களுக்கு என்ன மகராசி’ என்றபின் அவள் சமையல்கட்டுக்குள் சென்றாள்.

‘அன்னம், பாலைக்காய்ச்சி டீ போடுடீ…மதியம் குழம்பும் சோறும் சமைச்சிரு…நான் சும்மா பொத்தைமுடி வரைக்கும் போய்ட்டு வாறேன்’ என்றாள். ‘பொத்தைமுடிக்கா? இப்ப அங்க யாரு இருப்பா? வெசாகத்துக்கு சனம் ஈ மாதிரி அம்மும். அப்றம் மாடுமேய்க்கிற பயலுக கூட எட்டிப்பாக்க மாட்டாங்களே’ என்றாள் அன்னமயில்

‘அய்யனாரு இருப்பாருல்ல?’

‘அவருக்கென்ன? பசியா தாகமா வெயிலா மழையா?…நயினாரு கூட வாறாரா’

‘கேட்டுப்பாக்கிறேன்..’

ராமலட்சுமி முன்னறைக்குப்போய் வாசல்வழியாக எட்டிப்பார்த்தாள். சேவுகப்பெருமாள் பெரியகட்டில்நிறைத்துப் படுத்துக்கிடந்தான். சீரங்கம் பெரியபெருமாள் போல கன்னங்கரிய உடம்பு. ’வடக்கூரானா அவன் மதயானையாச்சே’ என்பார்கள் அக்காலத்திலேயே. பெண்பார்க்க வந்தபோதுதான் அவனை அவள் முதன்முதலாகப் பார்த்தாள். வெள்ளை வேட்டியை ஏற்றிக்கட்டி வெள்ளைச்சட்டைக்கையை நன்றாகச் சுருட்டி விட்டு கழுத்துக்குப்பின் கைக்குட்டை செருகி தோல்செருப்பு ரீக் ரீக் என்று ஒலிக்க நடந்து வந்தான். பெரிய மீசை. கம்பிச்சுருள்கள் போலத் லைமயிர் நெற்றியில் புரண்டது. திண்ணையில் அமர்ந்ததும் ‘டீ சாப்புடறீயளா?’ என்றார் அப்பா. ‘கொண்டாங்க’ என்று சொல்லி விட்டு ‘டம்ளரிலே வேணாம்…சொம்புல கொண்டாங்க’ என்றான். அப்பாவுக்குப் புரியவில்லை. கூடவந்த கழுகுமலை மாமா ‘அவ்வோ வீட்டிலே அதான் வழக்கம்…எல்லாம் கொஞ்சம் கூடுதலா இருக்கும்’ என்று சிரித்தார். பெரிய ஓட்டுச்செம்பு நிறைய கொதிக்கும் டீ வந்தது. அதை அப்படியே தூக்கி களக் களக் என ஒரே மூச்சில் குடித்தான். வாயிலிருந்து உலைவாய் போல ஆவி எழுந்தது.

அப்பாவுக்குத் தயக்கம்தான். ’ஏனம்மிணி, பையன் ஒருமாதிரி இருக்கானே…கையும்காலும் அய்யனாரு மாதிரி இருக்கு…’ அவளுக்கு ஒன்றும் சொல்லத்தெரியவில்லை. ஆனால் அம்மாச்சி உடனே சொல்லிவிட்டாள் ‘ஏளா என்ன சொல்லுதே? நரம்பனுக தான் பொட்டைக்குட்டிகள மதிக்க மாட்டானுக…இவன் அய்யனாரு அம்சம்…நம்ம குட்டிய ராணிமாதிரி வச்சுக்கிடுவான்…காலில விளுந்து கெடப்பான்…. ’ அதற்குமேல் எவருக்கும் கருத்து இருக்கவில்லை.

கல்யாணமெல்லாம் கனவுபோலதான் இருந்தது. என்ன நடக்கிறது என்றே தெரியாத துண்டுநிகழ்ச்சிகளின் ஓட்டம். கல்யாணமாகி நாலாம்நாள் மலையேறி வெட்டுவேல் அய்யனாரைப் பார்த்தபோதுதான் அவளுக்குள் ஏதோ நிகழ்ந்தது.விழித்த கண்களுடன் நின்ற அய்யனாரின் ஆளுயரக் கருங்கற்சிலை.வெட்டுப் பற்களில் ஒரு சிரிப்பு இருப்பதுபோலத் தெரிந்தது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. ‘ஏன்ளா? என்னாச்சு? என்ன?’ என்று அவன் கேட்டுக்கொண்டே இருந்தான். அவள் உதட்டை அழுத்திக் கண்ணீரைத் துடைத்தாள். திரும்பிப் படியிறங்கும்போது நாலாம்படியில் நின்றுவிட்டாள். ‘என்ன? என்னளா?’ என்றான் அவன் .சட்டென்று விசும்பிவிட்டாள். ‘எஞ்சாமி…தெய்வமா வச்சு கும்பிடுதேன்…எஞ்சாமி’ என்று சொற்கள் கசங்கின. அவன் அவள் தோளைப்பிடித்துத் தன்னுடன் சேர்த்துக்கொண்டான். அவள் உடல் நடுங்கியது. ஒரு நிமிடத்தில் ’அய்யோ’ என்று விலகிவிட்டாள். நல்லவேளையாக மலையில் வேறு யாருமே இல்லை. அவன் சட்டையில் கொஞ்சம் குங்குமம் ஒட்டியிருந்தது. அதை அவள் சுண்டிவிட்டாள். அவன் விலகிக்கொண்டு சிரித்தான்.

அவள் பார்வையை உணர்ந்ததுபோல அவன் இமைகள் அசைந்தன. சட்டென்று கண்களை விழித்து அவளைப் பார்த்தான். எழுந்து அமர்ந்து ’என்னளா?’ என்றபடி மீசையை நீவினான்.

அவள் ‘இல்லை’ என்று தலையை அசைத்தாள்

‘என்ன?’ என்று பல்லைக்கடித்துக்கொண்டு உரக்கக் கேட்டான்.

‘ஒண்ணில்ல…சும்மா அப்டியே பொத்தமுடிவரை போலாமாண்ணு’

‘அங்க இண்ணைக்கு என்ன? நாளைக்குப்போலாம்’ என்று எழுந்து லுங்கியைக் கட்டிக்கொண்டான். அருகே மேஜைமேல் இருந்த சந்தனப்பெட்டியில் இருந்து புலிநகம் போட்ட சங்கிலியை எடுத்து முடிநிறைந்த மார்பில் போட்டுக்கொண்டான். திரும்பி மீண்டும் ‘என்ன?’ என்றான்

‘ஒண்ணில்ல’

‘ஏளா, எனக்கு இண்ணைக்கு தலைக்குமேலே வேல கெடக்கு… வக்கீலுபிள்ளைய வரச்சொல்லியிருக்கேன்…’

அவள் தலையைக் குனிந்து கொண்டாள். ஆனால் அப்படியே நின்றாள்

‘வெந்நி எடுத்து வை’

‘ம்’

‘என்ன?’

‘ஒண்ணில்ல’

அவன் கைகளில் போட்டிருந்த மோதிரங்களைத் திருகினான். பின் குரலை மாற்றி சுவரைப்பார்த்தபடி ‘நாராயணன் வரட்டும்…சொல்லிட்டுப் போலாம்’ என்றான்

அவள் ‘ம்’ என்றாள்

‘பிடிச்சா பிடிச்ச பிடி….விட்டே குடுக்காத…அவனவன் ஆயிரம் சோலியிலே சாவுறான்…செரி போ…’

அவள் மெல்லப் பின்வாங்கி அவன் முன்னாலிருந்து விலகியதும் சிரித்துக்கொண்டு சமையலறைக்கு ஓடினாள்.

அன்னமயில் ‘என்ன சிரிப்பு?’ என்றாள்

‘வாறாரு’

‘அது என்ன புதிய விஷயமா? எப்ப தாலிய கட்டினாரோ அப்ப நயினாரு அடங்கியாச்சுல்லா? மீசையும் அருவாளுமெல்லாம் வீட்டுக்கு வெளியதானே?’

‘போடி’

சேவுகப்பெருமாள் குளித்துத் தலை துவட்டுவதில்லை. கையாலேயே இருமுறை பின்பக்கமாக நீவி விட்டுக்கொள்வான். உடம்பைத் துவட்டுவதுமில்லை. ஈரத்துடன் சட்டை போட்டுக்கொண்டால் உடம்பெல்லாம் அது ஒட்டி சொட்டுநீலம் பூசியது நீலத்தடங்களாகத் தெரியும். பௌடர் எல்லாம் போடுவதில்லை. ஒரு சின்ன சம்புடத்தில் புனுகும்மெழுகும் கலந்து வைத்திருப்பான். அதைப் பல்தேய்க்கும் பிரஷ்ஷால் எடுத்து மீசையில் போட்டு அதாலேயே நன்றாக நீவி விட்டுக்கொள்வான். அதன்பின் கன்னத்தில் முறுக்கி நிறுத்தித் திரும்பித்திரும்பிப்பார்ப்பான்

‘போரும் வடக்கூரான் சண்டியரே…மீசை நல்லா வெட்டரிவா கணக்காத்தான் இருக்கு’

‘போடி…அடிச்சுப் பல்லப்பேத்திருவேன்’

‘நாராயணன் வந்திருக்கான்…’

சேவுகப்பெருமாள் வாசலுக்கு வந்தான். கூடவே அவளும் பட்டுப்புடவையுடன் வந்ததும் நாராயணன் புரிந்துகொண்டான்

‘எங்க அண்ணி? கோயிலுக்கா?’

‘அய்யனார பாக்கணும்கிறா…’

‘வெயிலு வந்திருமே’

‘சுருக்குன்னு போய்ட்டு வந்திருதோம்…. வக்கீலுபிள்ள எப்ப வாறாரு?’

‘பத்துமணின்னு சொன்னாரு’

‘…முடிஞ்சிருமா?’

‘பிடிபிடின்னு நிக்கானுக….அவனுகள்ட்ட சும்மா பேசினா படியாது. அருவா பேசணும்’

’ம்’ என்று மீசையைக் கோதினான். அப்போது அவன் கண்கள் கீழே தழைவது அவளுக்குப் பிடிப்பதில்லை. அவன் வேறு எவரோ ஆகும் தருணம் அது.

‘பாத்துக்கிடுவோம்’ என்றபின் அவளிடம் ‘வாடி’ என்றான்.

பைக்கை அவன் எடுக்கையில் நாராயணன் தயங்கி ‘அண்ணா’ என்றான்

‘ஏண்டா?’

‘இல்ல…தனியாப்போறிக…’

அவன் புன்னகை செய்து முன்கூரையில் இருந்து தோல் உறையிட்ட அரிவாளை எடுத்து வண்டியில் நெடுக்குவாட்டாக வைத்தான். அதை வண்டியுடன் பொருத்த இரண்டு கிளிப்புகளைச் செய்திருந்தான். ‘அய்யனாருக்கு ஆயுதம்தான்ல தொணை…நீ போய்ப் பிள்ளைவாளப் பாரு…’

‘பொத்தைமுடிப்பக்கம் இந்நேரம் யாருமிருக்க மாட்டாங்க’

‘அய்யனாரு இருக்காருல்ல?’ அவன் பைக்கில் ஏறிக்கொண்டான். அவன் எடையில் பைக் அமிழ்ந்தது. ‘ஏறுட்டீ’

அவள் ஏறிக்கொண்டாள். ஒரே உதையில் அவன் வண்டியை இயக்கினான். வண்டி தடதடவென்று ஒலித்து செம்மண்சாலையில் ஏறியது. சரளைக்கல் உருண்டுகிடந்த எட்டடிச்சாலை வழியாக சென்றது. சாலையின் குழிகளை ஒதுக்கி வளைத்து வளைத்து ஓட்டினான். அவள் கூந்தலை இழுத்து முன்னால் விட்டுக்கொண்டாள். புடவைத்தலைப்பை இடுக்கிக் கொண்டாள்.

சித்திரை மாதம். ஆனாலும் காலையில் குளிர் இருந்தது. காலனி தாண்டியதும் இருபக்கமும் விரிந்த பொட்டல். சோளக்கொல்லைகள் குச்சி எச்சங்களுடன் காய்ந்து புழுதி பரவிக் கிடந்தன. காலைவெயிலில் பொட்டலில் கிடந்த கண்ணாடிக்காகிதங்கள் ஏனத்தில் தண்ணீர் பிடித்து வைத்ததுபோல ஒளிவிட்டன. உடைமுட் புதர்களுக்குள் அடைக்கலாங்குருவிகள் எழுந்து எழுந்து அமர்ந்து இரைதேடின.

கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு தன் எடையெல்லாம் கரைந்து விட்டதுபோலத் தோன்றியது. குருவி போல அவள் பொட்டல்மேல் பறந்துகொண்டிருந்தாள். எழுந்து அமர்ந்து சுழன்று சென்றுகொண்டே இருந்தாள்.

உச்சியில் தூக்கி வைத்ததுபோன்ற பாறையுடன் பொத்தைமுடி நெருங்கி வந்தது. அதில் ஒற்றைக்கண்போலத் தெரியும் அம்மணாண்டிக்குகை தெளிந்து தெளிந்து வந்தது. மலையுச்சியில் நிற்கும் ஒற்றைக்கருவேலத்தின் இலைகளைப் பார்க்கமுடியும்போலிருந்தது.

சேவுகப்பெருமாள் பைக்கை நிறுத்திப் பூட்டினான். அதிலிருந்து அரிவாளை எடுத்துக் கழுத்துவழியாக முதுகுப்பக்கம் சட்டைக்குள் போட்டுக்கொண்டான். வேட்டியை நன்றாகக் கட்டிக்கொண்டு ‘வா’ என்றான்.

கீழிருந்து பார்க்கையில் அவ்வளவு உயரத்தையும் ஏறமுடியுமா என்ற பிரமிப்பு எப்போதுமே ஏற்படும். ஆனால் எப்போதுமே அவள் இயல்பாக ஏறிவிடுவாள். சேவுகப்பெருமாள்தான் கொஞ்சம் மூச்சிரைப்பான்.

‘என்ன?’ என்றான் சேவுகப்பெருமாள் . அவள் முகத்தை எப்போதும் அவன் பார்த்துக்கொண்டிருப்பான். அவள் என்ன நினைக்கிறாள் என்று அவனுக்குப்புரியும்

‘ஒண்ணில்ல’

‘சொல்லுட்டி’

’இப்ப எதுக்கு இந்த அருவா?’

‘ஒரு சின்ன பிரச்சின போய்ட்டிருக்கு…அதான்’

‘என்ன பிரச்சின?’

‘உனக்கென்ன அதுக்கு? சொன்னா புரிஞ்சுகிடவா போற?’

‘ஆமா புரியறதுக்கு என்ன இருக்கு…எவனோ போக்கத்தவன் நெலத்த வளைக்கிறது. அருவாளக்காட்டி மெரட்டுறது. கேஸப்போட்டு வாட்டுறது….அடிச்சுத் தொரத்திட்டு அத சேத்துக்கறது…இதுதானே நடக்குது இருவத்தஞ்சு வருசமா’

‘இதான் நடந்திட்டிருக்கு ஆயிரம் வருசமா …லெச்சம் வருசமா. மண்ண மனுசன் விட்டிருவானா? மண்ணு வச்சிருக்கவன்தான் மனுசன்…’

‘பொண்ணாசையால ராவணன் கெட்டான் மண்ணாசையால துரியோதனன் கெட்டான்னு சொலவடை’

‘மண்ணுக்காக சாவுறதில ஒரு கெம்பீரம் இருக்குட்டீ’

‘என்ன சொன்னாலும் ஏறப்போறதில்லை…’. அடுத்த சொல் அவள் வாயில் எழுந்து உதடுகளில் கடிபட்டு நின்றது. பிள்ளையில்லாமல் எதற்கு இத்தனை நிலம். சொல்லாத சொல் உள்ளுக்குள் வீங்கியது. நெஞ்சுக்கூட்டை இறுக்கியது.

சேவுகப்பெருமாள் படிகளில் நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். கண்ணெட்டும் தூரம் வரை நிலம் விரிந்து கிடந்தது. தொடுவானில் ஒளிதேங்கிக்கிடந்து கண்கூசியது.

‘எவ்ளவு நெலம்…எவனெவனோ வச்சிருக்கான்….’ என்று அவன் சொன்னான் ‘நம்ம கிட்ட இருக்கிற இம்புட்டு நெலத்துக்காக இந்தப்பேச்சு பேசுற’

‘நூறு ஏக்கர்னா இம்புட்டு நெலமா?’

’கழுகுமலையிலே சிக்கைய நாயக்கர் எழுநூறு ஏக்கர் வச்சிருக்காரு’

‘அந்தப்பக்கம் அவருக்க தாத்தன் ஆயிரம் ஏக்கர் வச்சிருப்பான்… நாம எவ்வளவு நெலத்த வளைச்சுப்பிடிச்சாலும் ஒலகத்திலே அவ்ளவு நெலமும் மிச்சமாத்தான் கெடக்கும்…’

‘நீ சும்மா வாடி…பொட்டக்கழுத …ஒனக்கென்ன தெரியும்?’

‘ஆமா. எது சொன்னாலும் இப்டி ஒரு வார்த்தை சொன்னாப்போச்சு…’

மூச்சிரைக்க மூச்சிரைக்க நடந்தபின் அவன் பாதையோரப் பாறை ஒன்றில் அமர்ந்துகொண்டான். ‘தண்ணிப்பாட்டில் கொண்டாந்திருக்கணும்…’ என்றான்

‘இந்த பொத்தை ஏறி எறங்கறதுக்கு என்ன தண்ணி?’

‘தவிக்குதுல்ல….சூட்டிகையான பொட்டப்புத்தின்னா ஒரு பாட்டில் தண்ணி கையோட எடுத்து வச்சிருக்கணும்’

‘மலைமேலே ஊத்துத்தண்ணி இருக்கு…குடிச்சுக்கலாம்’

அவளும் அருகே அமர்ந்தாள். கையில் இருந்த பிளாஸ்டிக் பையில் தேங்காய் பூ பழம் கற்பூரம் எல்லாம் வைத்திருந்தாள். அதை அருகே வைத்தாள். ஒரு குரங்கு அருகே வந்தது. பெரிய தாய்க்குரங்கு. அடிவயிற்றில் குட்டி ஒட்டியிருந்தது. பெரிய கண்களைச் சிமிட்டிச்சிமிட்டி விழித்தது. அன்னையின் கன்னம் சிவப்பாக இருந்தது

‘இது கன்னம் எதுக்கு செவப்பா இருக்கு?’ என்றாள்.

’குட்டி போட்டிருக்குல்ல?’

‘தேங்காய குடுக்கட்டா?’

‘அய்யனாருக்கு உடைக்கவேண்டாமா? அப்றமா குடுப்பம்’

‘அய்யனாருக்கு பூ போரும்’ அவள் தேங்காயைத் தரையில் அறைந்து உடைத்து இரு மூடிகளையும் வீசினாள். குரங்கு பாய்ந்து ஒன்றை எடுத்துக்கொள்ள இன்னும் இரு குரங்குகள் பாறையில் இருந்து தாவி வந்தன. ஒன்று மூடியுடன் ஓட இன்னொன்று பின்னால் சென்றது.

‘போலாமா? வெயிலாயிரும் அப்புறம்’

மேலும் நடந்தபோது அவள் பலமுறை சொற்களை மேலெடுத்துத் திரும்ப உள்ளே போட்டபின் மெல்ல கேட்டாள். ‘’ஏங்க, சத்திரப்பட்டி சின்னத்தை கடைசியா என்னண்ணு கேக்கச்சொன்னாங்க’

‘என்னது?’ என்றான். அவனுக்கு உண்மையிலேயே நினைவில்லை என்று கண்கள் சொல்லின

‘மீனாச்சி விசயம்’

‘த…எவ்ளவு வாட்டி சொல்றது…சும்மா கெட…’

‘ஆமா…சும்மா கெடக்கேன். கடலு மாதிரி நெலமிருக்கு…கட்டியாள ஒரு வாரிசில்ல…பாழ்மரம் மாதிரி நிக்கிறேன்…பட்டுவிளுந்தா தூக்கிப்போட்டுத் தீய வைக்க ஒரு ஆளில்ல’

அவன் கோபத்துடன் நின்று அவள் கண்களைப்பார்த்தான். ‘முட்டாச்சிறுக்கி அப்டியே ஒரு அப்பு அப்பினா பல்லு உதுந்திரும்….நிப்பாட்டு ஏய் நிப்பாட்டுரீ…நிப்பாட்டச் சொல்றேன்’

அவளை மீறிக் கண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது. புடவை முந்தானையால் துடைக்கத்துடைக்கப் பெருகியது. பின் மூக்கைப் பிழிந்துகொண்டாள்

‘காலங்காத்தால இதுக்கா கூட்டிட்டு வந்தே? நான் போறேன்’ அவன் படியிறங்கினான்

‘இல்ல ராசாவே…இல்ல…சொன்னா கேளுங்க…ஏதோ பொட்டப்புத்தி…வாங்க’

அவன் நின்றான். முகம் மாறியது. ‘த…இந்த படியில வச்சுத்தாண்டி என்னையச் சொன்னே, அய்யனாருண்ணுட்டு…. அய்யனாரு சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவராக்கும்…’

அவள் தலைகுனிந்து நின்றாள்

‘இந்தாபாரு…இந்த சென்மத்திலே இன்னொரு பொண்ணு இல்ல…அது அன்னைக்கு இந்தப் படியில வச்சு முடிவுசெஞ்சது….இனி அந்தப்பேச்ச எடுக்காதே….’

‘ம்’

‘நமக்கு என்னட்டி கொற? சிங்கம்மாதிரி ரெண்டு தம்பிக இருக்கானுக…அவனுகளுக்க பிள்ளைய உன் இடுப்ப விட்டு எறங்கின நேரமில்ல…பின்ன என்ன?’

‘சரிதான்’

’வா’ என்று அவன் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு ஏறினான்

அவள் மெல்ல ‘பிறவென்னத்துக்கு இந்த நெலமெல்லாம்?’

‘அந்தப் பேச்ச விடு’

‘எப்டி விடுறது? எவ்வளவு ரத்தம்…எவ்ளவு சாபம்… எல்லாம் நம்ம தலையிலதானே விழுது…’

‘ரத்தம் இல்லாம நெலம் இல்ல… மகாபாரதமே அதுக்காகத்தானே’

‘அநியாயமா ஏழைங்க நெலத்த புடுங்கிட்டு புள்ளகுட்டிகளோட அடிச்சுத் தொரத்துறதுக்கு மகாபாரதமா தொண?’

‘நியாயம் அநியாயம்லாம் இங்க என்ன? நெலத்த வச்சிருக்க திராணியிருக்கிறவனுக்கு அது சொந்தம்….ரெத்தத்தக் கண்டா தொடைநடுங்கிற சனத்துக்குக் கூலிவேலதான் விதி’

‘இந்தப்பொட்டக்காட்டு நெலத்துக்கு இந்தப்போரு’

‘பொட்டக்காடா இருந்தாலும் இது நெலம்…பொட்டக்காடுன்னு சொன்னியே…இவனுக வச்சிருக்கிற கோமணம் மாதிரி நெலத்துக்கு என்ன மதிப்பு? நாலாடு நின்னு கடிக்க அதில எலையில்ல…ஆனா அதுக்காக சாவுறான்’

‘நீங்களும்தான் சாவுறீய’

‘அதான்…நெலமுண்ணா அதான்…கொல்லணும்,சாவத்துணியனும்…அதுக்குத்தான் நெலமே…’

‘நமக்கென்னத்துக்கு–’

’இப்ப சும்மா வாறியா இல்லியா?’

அப்படி அவன் கத்துவான் என்று அவள் நினைக்கவில்லை. அவனுக்குள் இருந்து அவள் அஞ்சும் அந்த துரியோதனன் வெளிவரும் தருணம். அவன் கண்கள் இடுங்கிவிடும். உடம்பே இரும்பாலானதுபோல ஆகிவிடும். அப்போது கைநடுங்காமல் அரிவாளைத்தூக்கி மரக்கிளையை வெட்டுவதுபோல ஒருவனின் கையை வெட்டித் தூக்கி அப்பால் போட அவனால் முடியும்.

மலைமேல் செல்லச்செல்ல அவன் மெல்ல இறுக்கமிழந்தான். ’அப்ப சொன்னியே ஆயிரம் ஏக்கர் வச்சிருக்கிறவருண்ணு…. ஒட்டப்பிடாரம் கிட்ணப்பநாயக்கர்னு கேள்விப்பட்டிருக்கியா?’

‘இல்ல’

‘ஆயிரம் ஏக்கர் வச்சிருந்தார்னு சொல்லுவாங்க…பதினெட்டு ஊர்லயா நெலமிருந்துச்சு… சொந்தமா ஒரு கம்மாயே வச்சு வெள்ளாம செஞ்சிருக்காரு… அவரோட அப்பன் குடுத்தது எண்பது ஏக்கருதான். மிச்சமெல்லாம் இவரே சம்பாரிச்சது…ஆயிரம் ஒழவுமாடு வச்சிருந்திருக்காரு…மாட்டைக்கவனிக்க ஒரு கிராமமே இருந்திருக்கு….’

’அவ்ளத்தையும் அள்ளிட்டுப் போனாராக்கும்?’

அவன் பதில் சொல்லவில்லை. மேலே அய்யனார் கோயில் உச்சி தெரிந்தது. ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் அங்கே அய்யனார் சிலை மட்டும்தான் இருந்தது. ஜின்னிங் ஃபேக்டரி வைத்திருந்த தாத்தையநாயக்கர்தான் காரைச்சுவரும் ஓட்டுக்கூரையும் போட்டு ஒற்றை அறைக் கட்டிடம் கட்டியது. கோயில் முன் ஓடுபோட்ட கூரையுடன் ஒரு சிறிய மண்டபம். பக்கவாட்டில் சிமிண்ட் மேடையில் விதவிதமான வேல்களும் சூலங்களும் நாட்டப்பட்டிருந்தன. எல்லாமே துருப்பிடித்துக் காய்ந்த மலர்மாலைசுற்றி நின்றன.வலதுபக்கம் கருவேல மரம் வேர்கள் பரப்பி நின்றிருந்தது. பிரம்மாண்டமானதோர் கழுகின் ஒற்றைக்கால் போலத் தெரிந்தது அடிமரம்

சட்டென்று அவள் திடுக்கிட்டாள். மண்டபத்தில் கிடந்த பண்டாரத்தை அடையாளம் கண்டுகொண்டாலும் படபடப்பு ஓய சில நிமிடங்களாயின.

‘என்ன?’ என்று கேட்டபின் அவனும் பார்த்தான். ’ஓ…பண்டாரம்…’ என்றான்

பண்டாரம் சடைமுடி மண்டிய தலையும் சடைகள் கலந்த தாடியுமாக அப்படியே கிடந்தார். அவர்கள் வருவதை அவர் முன்னரே கவனித்திருக்கவேண்டும். பொருட்படுத்தவில்லை. தூங்குகிறார் என்று தோன்றவில்லை. வெகுநேரமாகப் படுத்திருப்பார் போல. உடலில் சருகுகள் கிடந்தன

கோயிலுக்குக் கதவில்லை. சேவுகப்பெருமாள் ‘சட்டுபுட்டுனு பூசைய முடி… வெயிலேறினா இறங்கிக்கிட மாட்டே’ என்றான்.

அவள் பூசைப்பொருட்களைக் கோயில் முன்வைத்தாள். ‘பாத்துக்கிடுங்க…கொரங்கு வந்திரப்போவுது’ என்றபின் ஊற்றுக்குச் சென்றாள். மேலேறிச்சென்ற கரும்பாறையின் காலடியில் இருக்கும்ஒரு பெரிய ஏனம் அளவுள்ள பாறைக்குழிஅது. பாறையின் இரண்டு இடுக்குகளில் இருந்து நீர் ஊறி அதில் தேங்கிக்கொண்டே இருக்கும். மிஞ்சி வழிந்த நீர் வலதுபக்கமாக நீண்ட கரியபட்டைக்கறையாகக் கீழிறங்கி அங்கே நின்றிருந்த இலஞ்சி மரத்தடியில் மண்ணில் மறைந்தது. எருமைமாட்டின் கண்ணீர்த்தடம் போல.

கயிற்றில் கட்டப்பட்ட தகர டப்பா இருந்தது. அதில் நீரை அள்ளிக் குடித்தபின் கைகால் முகம் கழுவிக்கொண்டாள். இன்னொரு தகரப்போணியில் நீரை அள்ளிவிட்டு நிரப்பி அதைக் கையில் எடுத்தபின் கோயில் முகப்புக்கு வந்தாள்.

‘தண்ணிவேணுமானா போயி குடிக்கிறது’

சேவுகப்பெருமாள் ஊற்றுக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றான். ராமலட்சுமி கோயில் முன்னாலிருந்த பலிபீடத்தை நீர்விட்டுக் கழுவினாள். கொண்டுவந்த பிளாஸ்டிக் பையைப்பிரித்து அதிலிருந்து பழச்சீப்பு, பொரி ,வெல்லம் எல்லாவற்றையும் எடுத்து அந்த பலிபீடத்தில் படைத்தாள். ஊதுவத்தி கொளுத்தி வாழைப்பழத்தில் குத்தி வைத்தாள். புகைச்சுருள் காற்றில் சுழன்று பறந்து மறைந்தது.

இரு கூரையோடுகளால் பொத்திவைக்கப்பட்டிருந்த கல்விளக்கில் கொண்டுவந்திருந்த கடலை எண்ணையை ஊற்றித் திரிபோட்டுப் பற்றவைத்தாள். செவ்வந்திமாலையை அய்யனாரின் தோளில் தொங்கவிட்டாள். சேவுகப்பெருமாள் முகமும் சட்டையுமெல்லாம் நனைந்திருக்க வந்து அருகே நின்றான்.

ராமலட்சுமி மிகமெல்ல ’சாமியக் கூப்பிடலாமா?’ என்றாள்

‘அவரு சாமிகும்பிடறதில்ல’ என்றான் சேவுகப்பெருமாள்

‘பின்ன எதுக்கு இங்க இருக்கார்?’

‘ரெண்டுநாளைக்கு ஒருக்க இங்க எவனாவது திங்கிறதுக்குக் கொண்டாந்து குடுத்திடறான். ஊத்துத்தண்ணி இருக்கு. ஒதுங்க எடமிருக்கு…போரும்ல?”

அவள் திரும்பிப் பண்டாரத்தைப்பார்த்தாள். தூங்குகிறாரா? அவர்கள் பேசுவது கேட்கிறதா?

அவள் மேலும் மெதுவாக ‘இப்டி எதுக்கு இருக்கணும்?’ என்றாள்

‘நெலமில்லேன்னா இப்டி இருக்கலாம்…என்ன சரியா, இருந்திருவோமா?’

‘சும்மா இருங்க’ என்று அவள் அவனை மெல்லத் தட்டினாள். கற்பூரத்தை ஏற்றினாள். தீ அந்தரத்தில் எழுந்து பறந்தது. ‘கும்பிட்டுக்குங்க’ என்றாள். அவன் கைகூப்பினான்

பின்பக்கம் பண்டாரம் மெல்லிய குரலில் ‘’ஏலே, நீயும் அய்யனாரா? அரிவாளோட நிக்கே?’ என்றார்

சேவுகப்பெருமாள் திரும்பிப்பார்த்தான்

பண்டாரம் ‘அத வச்சுக்கிட்டுக் கும்பிடுலே…’

சேவுகப்பெருமாள் பேசாமல் கூர்ந்து பார்த்தான்

‘அந்த நம்பிக்க இல்லேன்னா எதுக்கு அய்யனாரக் கும்பிடுதே? அந்த அரிவாள நாட்டிக் கும்பிடுறதுதானே?’

சேவுகப்பெருமாள் ‘அய்யனாரு மேல நம்பிக்கை இருக்கு….’

‘என் மேலே இல்ல…’ பண்டாரம் சிரித்தார். அவரது பற்கள் அவ்வளவு வெண்மையாக இருந்ததை ராமலட்சுமி ஆச்சரியத்துடன் கவனித்தாள். ‘இல்ல என் மேலே பயமா?’

‘பயமா?’ என்றான் சேவுகப்பெருமாள் சிரித்தபடி

‘பயப்படாதே…எனக்கு மண்ணு இல்ல. மண்ணாசையும் இப்ப இல்ல’

சேவுகப்பெருமாள் அரிவாளை உறையுடன் எடுத்து மண்டபத்தில் வைத்துவிட்டு வந்து அவளருகே நின்று கும்பிட்டான். ராமலட்சுமி தீபத்தை தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டாள். அவனும் கண்ணில் ஒற்றிக்கொண்டான்.

‘பரவாயில்ல….திரும்பியே பாக்கலை….’ பண்டாரம் சிரித்தார் ‘ஏட்டி, அந்தப் பழத்திலே ரெண்டு எடுத்து இந்தப்பக்கமா போடு’

சேவுகப்பெருமாள் அரிவாளை எடுத்துக்கொண்டு ‘மண்ணாசை முன்னாடி இருந்திருக்கு….இல்ல?’ என்றான்

‘இருந்தது….உன்னைவிட பத்துமடங்கு மண்ணு. பத்துமடங்கு மண்ணாசை. அதனால பத்துமடங்கு பயம்.பத்துமடங்கு ஆயுதம்….’ பண்டாரம் சிரித்தார்

சேவுகப்பெருமாள் அவரையே கூர்ந்து நோக்கி நின்றான்

‘சரி போ…எங்கிட்ட பேசினா நீயும் வந்து அந்தத் திண்ணையிலே படுத்திரப்போறே’

சேவுகப்பெருமாள் ஏதோ சொல்ல வந்தபின் திரும்பி ராமலட்சுமி யிடம் ‘சீக்கிரம் வாடி’ என்றபின் படிகளில் இறங்கினான்.

‘சாமி அவல்பொரியும் வெல்லமும் சாப்பிடறீங்களா?’

‘போடம்மா அன்னலச்சுமி…கை நெறையப் போடு….உன் கையாலே பண்டாரம் ரெண்டுநாள் பசிய ஆத்திக்கட்டும்’

அவள் வாழையிலையில் பொரியும் அவலும் வெல்லமும் வாழைப்பழமும் கலந்து பண்டாரத்துக்கு எடுத்து வைத்தாள். அவர் எழுந்தமர்ந்து பழத்தையும் வெல்லத்தையும் அவலுடன் குழைத்தார். ராமலட்சுமி ஊற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து அவரருகே வைத்தாள்

பண்டாரம் முதல் உருண்டையை அருகே வந்த பெரிய ஆண்குரங்குக்குக் கொடுத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தார். ராமலட்சுமி கைகூப்பியபடி நின்றிருந்தாள். பண்டாரம் நிமிர்ந்து பார்த்து ‘ஒண்ணு சொல்றேன் கேக்குறியா?’ என்றார்

‘சொல்லுங்க சாமி’

‘பெத்தவளுக்கு ஒண்ணுரெண்டுபிள்ளை. பெறாதவளுக்கு ஊரெல்லாம் பிள்ளை’

அவளுக்கு குபுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது. ‘அதில்ல சாமி….இப்டி நெலம்நெலம்னு அலையுதாங்களே’

’எல்லா செடியும் மரமும் நெலத்தைத்தானே புடிச்சிட்டிருக்கு…விட்டா காத்து அடிச்சுட்டுப் போய்டும்ல?’

‘பிள்ளையில்லாம எதுக்கு சாமி இந்த மண்ணாச?’

‘பிள்ளை இல்லாததனாலதான்…’ பண்டாரம் சிரித்தார்.

ராமலட்சுமி அடிபட்டவள் போல எழுந்து விட்டாள். அவள் கால்கள் நடுங்கின. நிற்க முடியாமல் பின் வாங்கித் தூணைப் பிடித்துக்கொண்டாள்.

‘என்ன? என்றார் பண்டாரம் சிரித்துக்கொண்டு.

‘இல்ல சாமி’ என்று ராமலட்சுமி கைகூப்பினாள்

‘போ…காத்து நிக்கான் பாரு…’

தளர்ந்தநடையுடன் ராமலட்சுமி படிகளில் இறங்கினாள். வீடுவரை அவளால் ஒரு சொல்கூட பேசமுடியவில்லை.

 

[மறுபிரசுரம். முதற்பிரசுரம். Feb 20, 2013]

தொடர்புடைய பதிவுகள்

பக்தியும் அறிவும்

$
0
0

சிலைகளை நிறுவுதல்

அன்புள்ள ஜெ,

நலமா?

தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் கடிதங்களும் விவாதங்களும் புதியவகையில் எண்ணச் செய்கின்றன. முன்பெல்லாம் இந்த விஷயங்களைப்பற்றிய கேள்விகள் உள்ளத்தில் இருந்தாலும் அவற்றை இத்தனை தெளிவாகக் கேட்டுக்கொண்டதில்லை. அவற்றுக்கு இப்படியெல்லாம் பதில் யோசித்ததும் இல்லை. என்ன காரணம் என்றால் இவற்றையெல்லாம் ஒரு அன்றாடப்பார்வையிலேயே பார்த்துவந்தோம். இவற்றின் வரலாறு, குறியீடு எதையுமே யோசித்ததில்லை. ‘அறிவில்லா முட்டாளுங்க பசுவோட குண்டியக் கும்பிடுறாங்க’ என்ற அளவில்தான் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பார்த்தோம். இன்றைக்கு யோசிக்கையில் செடி முளைவிடும் வயலை கும்பிடலாம் என்றால் பசுவின் பின்பக்கத்தைத்தானே வழிபடவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

இந்த வகையான எண்ணத்தை உருவாக்கியதற்கு உங்களுக்கு நன்றி. எத்தனையோ கேலிகள் கிண்டல்கள் அரை அறிவாளிகளின் அசட்டு நையாண்டிகள் எல்லாவற்றையும் மீறி இந்த அறிவார்ந்த ஒரு தளத்தைல் தமிழில் நிறுவிவிட்டீர்கள். இது ஒரு சாதனை. இதற்காக உங்களுக்கு நன்றி சொல்லவேண்டியிருக்கிறது. தமிழ்போன்ற ஒரு அறிவார்த்தமே இல்லாமலிருக்கும் சூழலில், வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பும் நையாண்டியுமே விவாதமாக நடந்துகொண்டிருக்கும் போது இதை சாதிப்பதற்கு தன்மீதான நம்பிக்கையும் பொறுமையும் தேவை. நீங்கள் வாஷிங்டனில் பேசியதைக்கேட்டேன். உங்களுடைய அபாரமான பொறுமையைத்தான் வணங்கினேன்.

இனி என் கேள்விகள். நான் அறிவார்த்த வழி அல்லது ஞானமார்க்கமே உயர்ந்தது, நுட்பமானது என்று நம்பியிருந்தேன். பக்தி அறிவுநுட்பமில்லாத அன்றாடவாழ்க்கையினருக்கு உரியது என நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் கட்டுரைகளின் வழியாக பக்தியின் வழி நுட்பமான ஆழ்மனம் கொண்டவர்களுக்கு உரியது என்று சொல்கிறீர்கள். சடங்குகளை அறிந்துகொள்ளவேண்டாம், அவற்றை ஆழ்ந்து செய்தாலே போதும் என்று சொல்கிறீர்கள். இது எனக்கு இன்னமும்கூட முழுக்கவும் ஏற்பு இல்லாததாகவே உள்ளது. பக்தியில் அறிவார்த்தத்துக்கு இடமே இல்லையா? ஞானமார்க்கத்தை முன்வைத்த ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் எல்லாம்கூட பக்திக்கு தேவையான நுண்ணுணர்வு குறைவானவர்களா?

என்.ராமகிருஷ்ணன்

அன்புள்ள ராமகிருஷ்ணன்

நான் சொல்லிச்சொல்லி எனக்கே தெளிவுபடுத்திக்கொள்கிறேன், எனக்குச் சொல்லப்பட்டவற்றை நினைவுபடுத்திக்கொள்கிறேன், அவ்வளவுதான்.

நான் பக்தியை எப்படிப் பார்க்கிறேன்? அதற்குத்தேவையானது முதலில் ஒரு கள்ளமின்மை, எளிமை. இன்னொன்று அறிவார்ந்த தளத்திற்கு பதிலாக உணர்வுநிலைகளையும் உள்ளுணர்வையும் முன்வைக்கும் ஆளுமை இயல்பு. சிலருக்கு அந்தத் தன்மைகள் இயல்பாகவே அமைந்துள்ளன. பக்தி அவர்களுக்குரியது.

சிலர் அவ்வாறல்ல. அவர்களுக்கு முதலில் முந்துவது அறிவார்ந்த தன்மை, அதன் விளைவான தன்முனைப்பு அல்லது ஆணவம். உணர்வெழுச்சியும் நுண்ணுணர்வும் அதைத்தொடர்ந்து, அதன் வழியாக மட்டுமே அமைகின்றன. அவர்களுக்குரியது ஞானமார்க்கம்.

முந்தையது நம்பி ஏற்று ஒழுகி அமைவதன் வழி. பிந்தையது அறிந்து ஆராய்ந்து தெளிந்து உள்வாங்கி அமைவதன் வழி. இரண்டிலுமே இறுதியிலிருப்பது அமைவதுதான். வெறுமே நம்புவதும் அல்ல அறிந்துகொள்வதும் அல்ல.

அறிவார்ந்த தளம் கொண்டவர்களிடம் இருக்கும் ஆணவமே அவர்களின் பெரிய தடை. பெரும்பாலானவர்களால் அதைக் கடக்கவே முடியாது. அவர்கள்தான் ஓயாத பூசலில் இருந்துகொண்டிருப்பவர்கள். தான் அறிந்ததை நிறுவ முயல்வார்கள். அறியாததை எதிர்த்துக்கொண்டே இருப்பார்கள். அந்தியில் மரத்தில் அமர்வதற்கு முன்னர்தான் பறவைகள் நிறைய கூச்சலிடும் என நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னார்.

பக்தியில் செல்பவர்களுக்கான தடைகள் இரண்டு. ஒன்று தொடர்ச்சியாக எழும் அறிவார்ந்த ஐயங்கள். இரண்டு உலகியல்தன்மை. ஐயங்களுக்கு அறிவார்ந்த பதில்களை அவர்கள் நாடி, அதன்பொருட்டு கற்கத்தொடங்குவார்கள் என்றால் காலப்போக்கில் மேலுள்ளம் வலுவாகும். அது ஆழுள்ளத்தை எதிர்த்து மறைத்துவிடும். அதை தன்போக்கில் விட்டுவிடவேண்டும் என்பதே கூறப்படுகிறது.

பக்தியை உலகியல் நன்மைகளுக்கான பேரமாக, அச்சங்களுக்குரிய காப்பாக மட்டுமே கையாளத் தொடங்கிவிடுகையில் அது ஆழுள்ளத்திலிருந்து விலகி மேலுள்ளத்தைச் சார்ந்த ஒரு நடவடிக்கையாகிவிடுகிறது. பக்தன் இவை இரண்டிலும் இருந்து வெல்பவன்.

இயல்பான கள்ளமின்மை கொண்டவர்கள் பக்தியில் அமைகிறார்கள். அறிவார்ந்த தேடல்கொண்டவர்கள் சிலர் சில வாழ்க்கைத் தருணங்களால் உடைந்து ஆணவம் அழிந்து பக்தர்கள் ஆவதுண்டு. சில மேலான ஆளுமைகளால் ஆணவம் உடைக்கப்பட்டு அவ்வாறு ஆவதும் உண்டு

பக்தர்களுக்குரிய அறிவுத்தளம் என்பது தர்க்கபூர்வமானது அல்ல. பக்தியை வளர்க்கக்கூடியது அது. அதன் வழி கற்பனைகள், உருவகங்கள் ஆகியவற்றை அறிவதும் அவற்றில் உணர்வுபூர்வமாக ஈடுபடுவதும்தான். அதுவும் ஞானமே. ஆனால் பக்திஞானம்

உதாரணமாக, அறிவுத்தளத்தேடல் கொண்ட ஒருவர் உபநிடதங்களைக் கற்றுத்தெளிவார். அதன்பின் ஆப்தவாக்கியம் ஒன்றை சென்றடைந்து அதை உள்ளுணர்வுக்குச் செலுத்திக்கொள்வார். பக்தர் ஒருவர் உபநிடதங்களை முழுமுதல்சொல் என நம்பி ஏற்று உள்ளுணர்வை நோக்கி கொண்டுசெல்வார். இரண்டும் இறுதியில் ஒன்றே

இரு உதாரணங்கள். விஷ்ணுபுரத்தில் சிரவணமகாப்பிரபு தன் மாணவனாகிய பிங்கலனிடம் சொல்கிறார். “நீ ஐயம்கொண்டுவிட்டாய், ஐயம் வந்தபின் அறிவே உன் பாதை. நீ எண்ணினாலும் இனி பக்திக்கு மீளமுடியாது”

ஞானவழியிலும் கற்பனை, உணர்வுநிலை,நுண்ணுணர்வு சார்ந்த அறிதல் உண்டு. வேறுவகையானது. ஜே.கிருஷ்ணமூர்த்தி ஓர் உரைக்காக வந்து அமர்கிறார். ஒரு சிறு பறவை அறைக்குவெளியே சன்னலில் அமர்ந்து கூவியது. ‘இன்றைய பாடம் முடிந்துவிட்டது. இதுவே அது’ என எழுந்துகொண்டார்

அந்தப்பறவைப்பாடலை பக்தர் உணரமுடியாது. அதை உணர அறிதலின் வழியாக ஒரு நுட்பமான பயணம் தேவை

ஜெ

 

கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30

$
0
0

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 11

இரும்புப் பாவை மடங்கி தன் மடியில் விழுந்ததும் திருதராஷ்டிரர் தோள் தளர்ந்தார். இரு கைகளும் உயிரிழந்தவை என பக்கவாட்டில் சரிய, பாவை அவர் மடியிலிருந்து நழுவி தரையில் கால் மடிந்து சரிந்து ஓசையுடன் விழுந்தது. என்ன நிகழ்ந்தது என்று அறியாமல் அனைவரும் விழி திறந்து நோக்கி நிற்க திருதராஷ்டிரர் இரு கைகளையும் தலைக்கு மேல் விரித்து விரல்களை அகற்றி விரித்து காற்றைப் பற்ற முனைவபர்போல அசைத்தார். குளிர்கண்டவர்போல உடல் நடுங்கினார். சில கணங்களுக்குப்பின் விந்தையானதோர் சீறல் ஒலி அவரிடமிருந்து எழுந்தது. பீடம் ஓசையிட உடலை உந்தி எழுந்து தலையை இருபுறமும் உருட்டி “என்ன? என்ன?” என்றார்.

பின்பு ஒரு மின் என அனைத்தும் தெளிய தன் நெஞ்சில் வெடிப்போசையுடன் இரு கைகளாலும் மாறிமாறி அறைந்தபடி கதறி அழுதுகொண்டு கால் மடிந்து மீண்டும் பீடத்திலேயே விழுந்தார். அவரது பேரெடை தாளாமல் பீடம் முறிய பின்பக்கம் மல்லாந்து விழுந்தார். அவரை தூக்கும்பொருட்டு அறியாது பீமனும் அர்ஜுனனும் முன்னகர அதுவரை அங்கிலாதிருந்தவன் போலிருந்த சங்குலன் கைநீட்டி ஓசையிலாது அவர்களைத் தடுத்து, அருகே வந்து, இரு கைகளாலும் அவரது தோள்களைப்பற்றி சிறுகுழந்தையை என தரையிலிருந்து தூக்கி நிறுத்தினான். அவர் அவன் கையில் துணிப்பாவை என தொய்ந்து கிடந்தார்.

சங்குலன் முறிந்த பீடத்தை காலால் உதைத்து அப்பால் தள்ளினான். திருதராஷ்டிரர் வீறிட்டலறியபடியே இருந்தார். அவர் உடல் நடுங்க, கைகள் பதைத்தன. அவரை தன் ஒரு தோளில் சாய்த்த பின் சங்குலன் பீமனை நோக்கி அவ்வறைக்குள் அப்பால் கிடந்த பிறிதொரு பீடத்தை எடுக்கும்படி விரல் சுட்டினான். பீமன் பாய்ந்து சென்று அதை தூக்கி வந்து அருகே இட அதை காலால் இழுத்து அருகிட்டு திருதராஷ்டிரரை அதில் அமர்த்தினான். அவர் கால் மடித்து அதில் அமர்ந்து முழங்கால்கள் மேல் தலை வைத்து தன் தலையை கைகளால் பற்றிக்கொண்டு அழுதார்.

அங்கு நிகழ்வதென்ன என்று அறியாதவள்போல உறைந்த முகத்துடன் காந்தாரி அமர்ந்திருந்தாள். திருதராஷ்டிரர் “மந்தா! மந்தா! என் மைந்தா! மந்தா! உன்னை கொன்றுவிட்டேன்! என் கைகளால் உன்னை கொன்றுவிட்டேன்! மகற்கொலை புரிந்த கீழ்மகனானேன்! கெடுநரகுக்குச் செல்லும் பழி கொண்டேன்! என் மைந்தா! என் மைந்தா!” என்று கதறினார். திரும்பி இரு கைகளையும் விரித்து இளைய யாதவரின் திசை நோக்கி “யாதவனே, என்ன நிகழ்கிறது இங்கு? என் மைந்தன்! என் இனிய மைந்தன்! என் மைந்தனை என் கைகளால் கொன்றுவிட்டேன்” என்றார்.

இளைய யாதவர் அருகணைந்து பீமனின் தோளைப்பற்றி “வணங்குக!” என்றார். பீமன் திகைத்து சிறுகுழந்தைபோல் மாறி மாறி பார்க்க “வணங்குக அவரை!” என்றார். பீமன் முன்னகர்ந்து முழந்தாளிட்டு அவரருகே சென்று “தந்தையே, நான் பீமன். உயிருடனிருக்கிறேன்” என்றான். “மைந்தா!” என்று கூவியபடி எழுந்து அவர் அவனை அள்ளி மார்போடணைத்து இறுக்கிக்கொண்டார். அவன் இரு கன்னங்களிலும் தோள்களிலும் வெறிகொண்டவர்போல் முத்தமிட்டார். அவன் முகத்தைப் பற்றி தன் மார்போடணைத்து அவன் குழல் மேல் முகத்தை வைத்து உரசினார். மானுடரிலிருந்து உள்ளுறை விலங்கு எழும் தருணங்களே உச்ச கணங்கள் என்று நகுலன் எண்ணிக்கொண்டான்.

திருதராஷ்டிரர் திரும்பி கைகளை விரித்து “இளைய யாதவனே, என்ன நிகழ்ந்தது? என்ன நிகழ்ந்தது? என் மைந்தன்! இதோ என் மைந்தன்! ஆ! என் மைந்தனை நான் கொல்லவில்லை. மூதாதையரே! தெய்வங்களே! என் மைந்தன் இதோ இருக்கிறான். என் குடித்தெய்வங்கள் என்னுடன் இருந்தன. என் நற்பொழுது நிலைத்தது! என் மைந்தனை நான் கொல்லவில்லை!” என்று கூவினார். பற்கள் கரிய முகத்தில் ஒளியுடன் தெரிய “என் மைந்தன் இருக்கிறான்! என் மைந்தன் இருக்கிறான்!” என்றார்.

இளைய யாதவர் மேலும் அருகணைந்து “மைந்தனைக் கொன்றதும் உண்மையே” என்றார். அவர் சொல்வது புரியாமல் கை அந்தரத்தில் நிற்க திருதராஷ்டிரர் “என்ன சொல்கிறாய்?” என்றார். “அது துரியோதனன் சமைத்த இரும்புப் பாவை” என்றார். “நன்று! நன்று செய்தாய்! என்னுள்ளிருந்து இவ்வண்ணமொரு கொடுந்தெய்வம் எழும் என்று நான் எண்ணியதே இல்லை. இத்தனை இருள் இருந்திருக்கிறது என்னுள். எத்தனை கெடுமதியாளனாக நான் இருந்திருக்கிறேன்! நன்று! தெய்வங்களே, என்னை காத்தீர்கள்! மூதாதையரே, எனக்கு நல்லூழ் அளித்தீர்கள்!” என்றார் திருதராஷ்டிரர்.

பின்னர் மீண்டும் பீமனைத் தழுவி அவனை முத்தமிட்டு “எத்தனை இனியவன்! இவன் என் கையில் வளர்ந்த மகவு… தழுவுந்தோறும் தெவிட்டாத உடல் கொண்டவன். இவனை இளமையில் எத்தனை ஆயிரம் முறை தோள் தழுவியிருப்பேன்! என் தோள்களிலிருந்து இவனை இறக்கிவிட்டதே இல்லை” என்றார். தலையைச் சுழற்றியபடி “இனியவன்! இப்புவியில் எதைவிடவும் எனக்கு இவன் இனியவன். இப்புவியில் இனி நான் இவனுருவில் வாழ்வேன். என் மைந்தன் இவன்! எஞ்சியிருக்கும் என் மைந்தன் இவன் மட்டுமே!” என்றார்.

பீமன் அவர் மார்பில் முகம் சேர்த்து “ஆம் தந்தையே, தங்கள் மைந்தன். அப்பாவையென இப்போது என்னை இறுக்கிக் கொல்வீர்கள் எனில் அதுவே என் நல்லூழ் என்று எண்ணுவேன்” என்றான். அவனை ஓசையெழ அறைந்து “பேசாதே! இவ்வண்ணம் எதையும் என்னிடம் பேசாதே!” என்று சொல்லி திருதராஷ்டிரர் மீண்டும் பீமனை இறுகத் தழுவிக்கொண்டார். “நான் அறிகிறேன், உன் உள்ளம் எங்கெல்லாம் செல்கிறது என்று நன்கறிகிறேன். உன் மைந்தர்களின் இறப்பு உன்னை கொல்கிறது” என்றார்.

“ஆம், தந்தையே. என் மைந்தர்களின் சாவில் இருந்து என்னால் வெளிவரவே இயலவில்லை” என்றான் பீமன். திருதராஷ்டிரர் “ஆம் மைந்தா, அது கடினமானதுதான். தந்தைக்கு மைந்தர் இழப்பு தன் இறப்புக்கு நிகர். ஆனால் நீ வெளிவந்தாகவேண்டும். அஸ்தினபுரியின் பொருட்டு, உன் தமையன் பொருட்டு, உன் குடி இங்கு வாழவேண்டும். அனைத்தையும் கடந்து செல்க! நிகழ்ந்ததனைத்தும் கனவென்று கொள்க! இல்லையென்று எண்ணினால் இல்லாமல் ஆகுமளவுக்கு கனிவு கொண்டதே இங்குள்ள அனைத்தும். மைந்தரை மறந்துவிடு. பெருகும் கங்கைப்புனலில் அவர்களுக்கு கடன் கழித்த மறுகணமே அவர்களை கடந்து சென்றுவிடு” என்றார்.

பீமன் அவர் தோளில் தலை சாய்த்து ஓசையிலாது அழுதான். அவர் அவன் தலையை வருடினார். மீண்டும் மீண்டும் அவன் குழலில் முத்தமிட்டார். அவர்கள் இருவரும் பிற எவரும் அங்கிலாததுபோல் ஒரு தனிமையை சென்றடைந்தனர். ஒருவரை ஒருவர் தழுவி, தொடுகையாலேயே ஒருவரை ஒருவர் அறிந்து, அங்கிருந்தனர். இரு பெருநாகங்கள் ஒன்றையொன்று தழுவி நெகிழ்ந்து இறுகி மீண்டும் நெகிழ்ந்து இறுகிக்கொண்டிருப்பதுபோல். சுனையொன்றின் சுழிப்புபோல. பிறர் அவர்களை வெறுமனே நோக்கி நின்றிருந்தனர்.

யுதிஷ்டிரன் கைகூப்பி விழிநீர் வடித்துக்கொண்டிருந்தார். அர்ஜுனன் தளர்ந்து இளைய யாதவருக்குப் பின்னால் சென்று நின்று பின்னர் மீண்டும் தளர்ந்து சுவரோரமாக சாய்ந்து நின்றான். சகதேவன் காந்தாரியின் அருகிருக்க அவள் தன் கைகளால் அவன் தலையை வருடிக்கொண்டிருந்தாள். அவன் விழி மூடி அவள் தொடையில் நெற்றியை வைத்து ஊழ்கத்திலென அமைந்திருந்தான்.

நீண்ட மூச்சுடன் இருவரும் பிரிந்தனர். திருதராஷ்டிரர் “செல்க! உன் அன்னையிடம் வாழ்த்துச்சொல் பெறு!. உளம் நிறைந்து அவள் உனக்களிக்கும் சொல்லால் நீ துயர் அற்று மீள்வாய்” என்றார். “ஆம்” என்றபடி பீமன் எழுந்து சென்று காந்தாரியின் கால்களைத் தொட்டு வணங்கினான். அவள் தன் இரு கைகளையும் அவன் தலையில் வைத்து “சிறப்புறுக! எஞ்சும் வாழ்வு இனிதாகுக! மீட்பு கொள்க!” என்றாள். அவன் அவள் காலில் தன் தலையை வைத்தான். காந்தாரி மேலும் குனிந்து அவன் செவிகளைப் பற்றி தலையைத் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டாள்.

அவன் நிலத்தில் அமர்ந்து அவள் மடியில் முகம் புதைத்து கை தளர்ந்து அமர்ந்திருக்க அவன் குழல்கற்றைகளை கைகளால் வருடியபடி “துயருறாதே, மைந்தா. துயர் மானுட உயிருக்கு இயல்பான ஒன்று அல்ல. உவகையே உயிரின் நிறைநிலை. துயர் நிலைகுலைவு. நிலைகுலைந்தவற்றை சீரமைக்க ஐந்து பூதங்களும் ஓயாது முயல்கின்றன என்பார்கள். வானென அமைந்த தேவர்கள் அதன் பொருட்டே மண்ணுக்கு இறங்குகிறார்கள் என்பார்கள். எண்ணுக, இத்துயர் கடந்து போகும்! அறிக, அனைத்துத் துயர்களும் கடந்துபோகும்! நீ இவை அனைத்திலிருந்தும் எழுவாய். அனைத்தும் ஒருநாள் நினைவென்று ஆகும். நிகழ்ந்தவை நிகழ்ந்தாக வேண்டியவை என்றாகும்” என்றாள்.

பீமன் அவள் மடியில் விழி மூடி கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தான். யுதிஷ்டிரன் “நிறைவுற்றோம், தந்தையே. இந்த ஒரு நாளால் அனைத்திலிருந்தும் விடுபட்டோம். இனி துயரில்லை, இனி எதையும் அஞ்சுவதில்லை. இனி எந்த தெய்வங்களிடமும் கேட்க ஒன்றுமில்லை எங்களுக்கு” என்றார். திருதராஷ்டிரர் கைநீட்டி “யாதவனே, ஏன் இவ்வண்ணம் எல்லாம் நிகழ்ந்ததென்று நான் கேட்கப்போவதில்லை. நீ அறியாத ஏதுமில்லை என்று, என்று நீ அஸ்தினபுரிக்கு வந்தாயோ அன்றே அறிவேன். மெய்யுரைக்க வேண்டுமெனில் இவ்வண்ணமெல்லாம் நிகழும் என்று முன்னரே அறிந்திருந்தேன். இதுவரை நான் ஆற்றிய அனைத்தும் அவ்வண்ணம் நிகழ்தலாகாது என்பதற்காகவே” என்றார்.

பின் மெல்ல கசப்புடன் நகைத்து “உண்மையில் நான் இதுகாறும் செய்தவை எல்லாம் உனக்கெதிரான போர் மட்டுமே. அதில் நான் தோற்றுவிட்டேன். அவ்வாறன்றி வேறு வழியில்லை” என்றார். முகம் உள்ளெழுச்சியில் நெளிய கைகளைத் தூக்கி உரத்த குரலில் “இதோ என் மைந்தரை தோள் தழுவுகையில் மீண்டும் பெருந்தந்தையென்று உணர்கிறேன். இத்தருணத்தில் இவ்வாறு எழ முடிந்ததை எண்ணி ஆம் ஆம் என்று தெய்வங்களிடம் சொல்கிறேன். அவர்கள் என்னை வெல்ல இயலாது. நான் எளிய மானுடன் அல்ல, குலம் சமைக்கும் பிரஜாபதி. பிரஜாபதிகளை காலமும் தெய்வமும் வெல்ல இயலாது. பெருகுவதொன்றே அவர்களின் ஊழ். நான் பெருகி இப்பாரதவர்ஷம் முழுக்க நிறைவேன்” என்றார்.

“ஆம் அரசே, இங்கிருந்து பெருகி எழுபவர் நீங்கள் மட்டுமே. குருகுலம் ஒருபோதும் அழியாது” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆம்! ஆம்! ஆம்!” என்று திருதராஷ்டிரர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். பின்னர் நீண்ட பெருமூச்சுடன் உளம் நகர்ந்து “அந்தச் சிலை! அதை தழுவுகையில் நான் எதை எண்ணினேன்? அந்தத் தோள்கள் எனக்கு நன்கு பழக்கமானவை. ஒருகணம் இவன் என்றும் மறுகணம் அவன் என்றும் தோன்றும் உடல் அது” என்றார். “அதை நாம் மீண்டும் எண்ணவேண்டியதில்லை. எண்ணி எண்ணிச் செல்லும் தொலைவுகள் வாழ்வுக்குரியவை அல்ல. வாழ்வை துறப்பவை அவை” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்று திருதராஷ்டிரர் கூறினார். “நலம் பெறுக! அனைத்தும் நன்றென்றே அமைக!” என்றார்.

யுதிஷ்டிரன் “தந்தையே, இத்தருணத்தில் நீத்தார்கடனுக்காக தாங்கள் எங்களுக்கு நற்சொல் அளிக்க வேண்டும்” என்றார். “நிகழ்க! காற்றுவெளியை நிறைத்திருக்கும் அனைவரும் அன்னமும் நீரும் விழிநீரும் பெற்று விண்புகுக! அவர்கள் இங்கு ஆற்றியவை அனைத்தும் நிறைவுற்றதென்று அவர்கள் அறியட்டும். மானுடரின் விழைவுகளால் எழுவதல்ல அந்நிறைவு, ஊழ் வகுத்த வட்டத்தை இருமுனை இணைத்து முடிப்பதனால் எழும் நிறைவு அது. அதை விண்ணிலிருந்து மட்டுமே மானுடர் அறியமுடியும். அவர்கள் அங்கு அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

யுதிஷ்டிரன் வணங்கி “எனில் நாங்கள் சொல் கொள்கிறோம், தந்தையே!” என்றார். “அவ்வாறே” என்றார் திருதராஷ்டிரர். யுதிஷ்டிரன் பீமனின் தோளைத் தொட்டு “எழுக, மந்தா! தந்தை ஓய்வெடுக்கட்டும்” என்றார். “ஆம், நான் ஓய்வெடுக்க வேண்டியிருக்கிறது. நெடுந்தொலைவு ஓடியவன் போலிருக்கிறேன். இப்பெருங்களைப்பை இதற்கு முன் எப்போதும் உணர்ந்ததில்லை” என்றார் திருதராஷ்டிரர். பீமனின் தோளைத் தொட்டு இளைய யாதவர் “எழுக, பீமசேனரே! நலமே நிறைந்தது. இது தெய்வங்கள் எழுந்த பொழுது” என்றார்.

பீமன் கண்களைத் துடைத்தபடி எழுந்து “வருகிறேன், அன்னையே” என்றான். காந்தாரி அவன் கன்னத்தை மெல்ல தட்டினாள். சகதேவனும் “வாழ்த்துக, அன்னையே!” என்றான். அவள் அவன் கைகளைப் பற்றி தன் உதடுகளில் வைத்து முத்தமிட்டாள். யுதிஷ்டிரனும் அர்ஜுனனும் அருகணைந்து “விடைகொள்கிறோம், தந்தையே” என்றனர். அவர்கள் ஒவ்வொருவராக வெளியே செல்ல இளைய யாதவர் மட்டும் குடிலுக்குள் நின்றார். நகுலன் திரும்பிப் பார்க்க “செல்க!” என்றார்.

அவன் வெளியே சென்றதும் யுதிஷ்டிரன் திரும்பிப்பார்த்து “அவன் வரவில்லையா?” என்றார். “அவர்களுடன் தனிமையிலிருக்கிறார்” என்றான். “இனியென்ன அவன் சொல்லவேண்டியிருக்கிறது அவர்களிடம்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “ஒருவேளை இனிமேல்தான் அவர் உண்மையிலேயே கூற வேண்டியதை கூறுவார் போலும்” என்று சகதேவன் சொன்னான். புரியாமல் புருவம் சுளிக்க அவனைப் பார்த்தபின் யுதிஷ்டிரன் “நெஞ்சிலிருந்து பேரெடை ஒன்று அகன்றது. இத்தருணத்தை எண்ணி எண்ணியே துயிலழிந்திருந்தேன். ஒரு கணத்தில் அனைத்திலிருந்தும் விடுபட்டவன் போலிருக்கிறேன்” என்றார்.

பெருமூச்சுகள் வழியாக அவர் முகம் மலர்ந்தபடியே வந்தார். “இப்போர் நிகழவேயில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. அனைத்துக்கும் முன்னால் சென்று அஸ்தினபுரியில் உடன்குருதியினருடன் விளையாடி மகிழ்ந்திருந்த நாட்களுக்கே சென்றுவிடலாம்போல் தோன்றுகிறது” என்றார். பீமன் பெருமூச்சுடன் “விண்ணுலகொன்று உண்டு, அங்கு அவர்களுடன் தோள்தழுவி விளையாடுவோம்” என்றான். யுதிஷ்டிரன் “அதன் ஒரு கீற்றை இன்று அறிந்தோம், இளையோனே” என்றார்.

 

திரும்பிச் செல்கையில் தேரிலேயே யுதிஷ்டிரன் துயில்கொள்ளத் தொடங்கியிருந்தார். தேரை நோக்கி செல்கையிலேயே அவர் நடை தளர்ந்து சகதேவனை பற்றிக்கொண்டுதான் நடந்தார். தேர் மிக மெல்ல ஒழுகிச்செல்வதுபோல் ஓடியது. குடிலை அடைந்து திரைவிலக்கி இறங்கிய சகதேவனும்கூட துயிலிலிருந்து விழித்தவன் போலிருந்தான். “மூத்தவரே! மூத்தவரே!” என இருமுறை அழைத்த பின்னரே யுதிஷ்டிரன் விழித்துக்கொண்டு தேரிலிருந்து தொய்ந்த நடையுடன் இறங்கினார்.

பீமன் புரவியில் வந்து இறங்கி “நானும் துயில்கொள்ளவே விரும்புகிறேன், இளையோனே” என்றான். சகதேவன் யுதிஷ்டிரனை மெல்லத் தாங்கி குடிலுக்குள் கொண்டுசெல்வதை நகுலன் பார்த்தான். சற்று நேரத்தில் அவன் வெளிவந்து “அவர் விழித்துக்கொள்ளவே இல்லை” என்றான். அர்ஜுனன் புரவியை நிறுத்தி குடிலை சிறிது நேரம் பார்த்துவிட்டு திரும்பி குறுங்காட்டுக்குள் புகுந்து மறைந்தான். பீமன் “எனக்கும் காடுதான் துயிலுக்குரிய இடம்” என்றபின் புன்னகைத்து நகுலனை தோளில் தட்டிவிட்டு காட்டுக்குள் புகுந்து கிளையொன்றை பற்றித் தாவி மரத்தின் மீதேறி இலைகளுக்குள் மறைந்தான்.

சகதேவன் புன்னகைத்து “நீயும் துயில்கொள்ள விரும்பக்கூடும்” என்றான். “ஆம், விந்தையானதோர் வெறுமை. அனைத்துமே முடிவுக்கு வந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. உண்மையில் இது இனிதாகக்கூட இல்லை. இனி ஒரு கணம்கூட இல்லை, இனி எதிர்காலமென்பதே இல்லை என்று தோன்றுகிறது. இத்தருணத்தில் இறப்பொன்றே இயல்பானதென்றுபடுகிறது” என்றான். சகதேவன் புன்னகைத்தபின் நடக்க நகுலன் உடன் நடந்தான். “நாம் துயரை ஏன் விழைகிறோம்? நம் அன்றாடத்தின் சலிப்பையும் வெறுமையையும் துயர்போல நிறைப்பது பிறிதொன்றில்லை என்பதனாலா?”

அவர்கள் தங்கள் குடிலுக்குள் சென்று அமர்ந்தனர். சகதேவன் தன் மேலாடையைத் தூக்கி அப்பால் வீசிவிட்டு மஞ்சத்தில் படுத்து “தெய்வங்களே!” என்று முனகினான். பின்னர் விழிகளை மூடியபடி “மானுடர் எத்தனை உயர்ந்த நிலைக்கு செல்ல இயல்கிறது! எத்தனை படிகளை மானுடருக்கு தெய்வங்கள் திறந்து வைத்திருக்கின்றன! தெய்வங்களின் அருகே சென்று அமரும் வரை விண் விரிந்திருக்கிறது!” என்றான்.

நகுலன் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் மிக அழகாக மாறிவிட்டதுபோல் தோன்றியது. முகத்தில் இருந்த அப்புன்னகையை அவன் பார்த்து நெடுநாட்களாகியிருந்தது. சகதேவன் “வேறெந்த நிலையிலும் மனிதன் முழுமை கொள்வதில்லை. தந்தையும் அன்னையும் என்னும் நிலையில் மட்டுமே முழுநிலை கூடுகிறது. பிற அனைத்தும் பொய், மிகை கற்பனைகளை அள்ளிச் சூடிக்கொள்ளும் உருவங்கள். அன்னையும் தந்தையும் என்று ஆவதொன்றே கருவிலேயே மனிதருக்கு அளிக்கப்படும் ஆணை” என்றான்.

பின்னர் எண்ணி மேலும் தொடர்ந்தான் “முனிவர்கள் இப்புவியையே அன்னையும் தந்தையும் என்று நின்று அறிபவர்களாக இருக்கலாம். அளிப்பதற்கு மட்டுமே உளம் கொள்பவர்கள். அன்பன்றி பிறிது எதையும் கொள்ளாதவர்கள்.” அவன் குரல் தாழ்ந்து தாழ்ந்து சென்றது. அவன் சொல்லும் சொற்கள் பொருளழிந்தன. “அன்னையும் தந்தையும்” என்ற சொற்கள் மட்டும் கேட்டன. நாக்குழறி வெற்றொலியாகியது. சற்று நேரத்தில் குறட்டையொலி கேட்கத் தொடங்கியது.

நகுலன் அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். தன் தலை மடியில் வைத்திருந்த கையில் மோதுவதை உணர்ந்து விழித்தெழுந்தான். அமர்ந்தபடியே துயின்றுவிட்டிருப்பதை உணர்ந்து எழுந்து நின்றான். கைகளை நீட்டி சோம்பல் முறித்துவிட்டு மேலாடையைச் சீரமைத்து வெளியே வந்தான். காற்று சீராக வீசிக்கொண்டிருந்தது. பின்காலைக்குரிய உருகி வழிந்த வெயில். பசுந்தழை வெயில்பட்டு வேகும் மென்மணம். மரக்கிளைகளுக்கு அப்பால் கங்கை பளபளத்துக்கொண்டிருந்தது. பறவைக்குரல்கள் அடங்கத் தொடங்கிவிட்டிருந்தன.

குடில்நிரைகளில் ஏவலரும் பெண்களும் அந்தணரும் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். பேச்சுக்குரல்கள், தறிகள் மீது முழைக்கழிகள் அறையும் ஓசை. புரவிகளின் மெல்லிய கனைப்பொலி. ஒவ்வொன்றும் இனிதாகிவிட்டிருப்பதை அவன் உணர்ந்தான். மரங்கள், குடில்கள், ஒளி அனைத்தும் கேளா இசையால் ஒன்றோடொன்று இணைந்து ஒற்றைப்படலமென்று ஆகிவிட்டிருந்தன.

அவன் மெல்ல நடந்து தன் புரவி நோக்கி சென்றான். அது நன்றாக தலைதாழ்த்தி துயின்று கொண்டிருந்தது. அருகணைந்து அவன் அதன் தோளில் தொடும்வரை விழிப்பு கொள்ளவில்லை. அதன் பின்னரும் மெல்லவே கண்விழித்து அவனைப் பார்த்து மூக்கை விரித்து சற்றே சீறியது. அவன் அதன் மேல் ஏறி அமர்ந்த பின்னரும் துயிலிலிருந்து முழுதும் விழிக்காமலேயே நடைகொள்ளத் தொடங்கியது. அவன் அதை கழுத்தைத் தட்டி செலுத்தினான். குடில்களையும் மரங்களையும் நன்றாக உலர்ந்து செந்நிறச் சுடர் கொண்டிருந்த நிலத்தையும் விடாய்கொண்ட விழிகளால் தவிக்கத் தவிக்க தொட்டுத் தொட்டு நோக்கியபடி சென்றான்.

அனைத்திலும் அழகென்று நிறைந்திருந்தது பிறிதொன்று. உளமகிழ்வை அளிப்பவை எல்லாம் அழகானவை. உளமகிழ்வோ உள்ளிருந்து எழுகிறது. வெளியே இருக்கும் அனைத்தையும் தொட்டுத் தழுவி அறிகிறது. இந்த மூங்கில் கழைகள் ஏன் தித்திக்கின்றன? அந்த மரங்களின் இலையசைவில் ஏன் அத்தனை குழைவு? அடுமனைப்புகை தன் மெல்லிய கலைவில் உள்ளத்தைத் தொட்டு வருடிச்செல்லும் மென்மையை எங்ஙனம் அடைகிறது?

ஒரு நாரை சிறகசைத்து மிதந்து வந்து குடிலுக்குப் பின் அமைந்த அசைவில் மெய்ப்பு கொண்டு நடுங்கி அவன் புரவிமேல் அமர்ந்தான். பற்கள் உரசிக்கொண்டு காதுக்குள் விந்தையானதோர் உராய்வோசையை எழுப்பின. பின்னர் மீண்டு மீண்டும் புரவியைத் தட்டி செலுத்தினான். “தெய்வங்களே! தெய்வங்களே!” என்று அவன் உள்ளம் அரற்றிக்கொண்டிருந்தது. காட்டின் அத்தனை இலைகளும் நாநுனிகளாகி தவித்துத் தவித்து துழாவி உண்ணும் ஓர் இனிப்பு எங்கும் நிறைந்திருந்தது.

ஒரு சொல். பொருள் அல்ல, வெறும் சொல். களிப்பென்றும், உவகையென்றும், இனிமையென்றும் அதை மாற்றிக்கொள்ளலாம். பித்தென்றும், கனவென்றும், ஊழ்கமென்றும் அதை ஆக்கலாம். ஒன்றுதல் என்றும், இன்மையென்றும் அதை சொல்லலாம். இது ஒரு துளி. கடலையே உணர்ந்தவர்கள் இருக்கலாம். இத்துளியே எனக்குக் கடல். கடலை உணர்ந்தோர் தேவர். அதை சுவைத்தபின் அவர்கள் சொல்லும் அனைத்தும் வேதம்.

அவன் மீண்டும் திருதராஷ்டிரரின் குடிலுக்கே வந்தான். நான்கு ஏவலர் அங்கிருந்து வந்து தலைவணங்கினர். “இளைய யாதவர் எங்கே? அங்கே இருக்கிறாரா?” என்று அவன் கேட்டான். “இல்லையே. அவர்தான் எங்களை அனுப்பினார். அந்த இரும்புப் பாவையை சீரமைத்துக் கொடுக்கும்படி சொன்னார்” என்றான் ஒருவன். “சீரமைத்துவிட்டீர்களா?” என்று நகுலன் கேட்டான். “ஆம், அது மிக எளிதில் சீரமைத்துக்கொள்ளும்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது. அது போருக்கானது அல்லவா?” என்றான் அவன்.

நகுலன் அவர்களைக் கடந்து சென்று திருதராஷ்டிரரின் குடில் முன் புரவியை நிறுத்திவிட்டு இறங்கி நின்றான். மிக மெல்ல நடந்தபோது குடிலுக்கு வெளியே நின்றிருந்த சஞ்சயனை கண்டான். சஞ்சயன் அவனைக் கண்டு புன்னகைத்தான். “என்ன செய்கிறார்கள்?” என்று நகுலன் தாழ்ந்த குரலில் கேட்டான். “மைந்தனுடன் இருக்கிறார்கள்” என்று அவன் சொன்னான். நகுலனின் நெஞ்சு படபடத்தது. மிக மெல்ல காலடி எடுத்துவைத்து அவன் குடில் வாயிலை அடைந்து உள்ளே பார்த்தான்.

திருதராஷ்டிரரும் காந்தாரியும் மஞ்சத்தில் அமர்ந்திருந்தனர். மஞ்சத்தில் அந்த இரும்புப் பாவை படுத்திருந்தது. திருதராஷ்டிரர் அதன் தோள்களை தன் கைகளால் வருடிக்கொண்டிருந்தார். காந்தாரி அதன் தலையை தடவினாள். இருவரும் முகம் மலர்ந்து சொல்லின்மையில் மூழ்கி அமர்ந்திருந்தனர்.

தொடர்புடைய பதிவுகள்

ஆகுலோ ஆகுனை…

$
0
0

 

முகில்செய்தி

முகில்செய்தி- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

 

நலம் தானே. மேகசந்தேசம் பதிவு எனக்குள் எத்தனையோ நினைவுகளை கிளர்த்தியது.

 

முக்கியமாக… ‘ஆகுலோ ஆகுணை’ பாடலில்  வரும் இந்த இரு வரிகள்.

 

“ஆகலா தாகமா சிந்தலா வந்தலா,

ஈ கரணி வெர்ரினை ஏகதம திருகாட”

(பசியா தாகமா கவலையா கலக்கமா…

இப்படி ஒரு பித்த்தியாய்  தனிமையில்

திரிகையில் …)

 

இந்த வரிகளை முதலில் ஒரு தெலுங்கு கதை தொகுப்பின் முதல் பக்கத்தில் பார்த்தேன்.

 

இயக்குனர் வம்சியின் கதைகள் அவை. இந்த வரிகளில் உள்ள ஏதோ ஒன்று என்னை மீண்டும் மீண்டும் அசை போட வைத்தது. வாழ்க்கையில் ஏதோ ஒன்றுக்காக இப்படி பித்து பிடித்து அலையும் காலம் பற்றி இப்பொழுது நினைத்தால் ஏக்கம் தான் தோன்றுகிறது. அது இனிமேல் முடியுமா என்ற அவநம்பிக்கை தான் வருகிறது. முதல் தடவை இதை அசைபோட்டு கிறங்கி போகும் போது காதலில் இருந்தேன். அந்த ஒருதலை காதலுக்கு என்னை ஒரு பெருந் காதலனாக பாவிக்க இந்த வரிகள் உதவின. ஆனால், போக போக பெரும் கலைகளின் மீது, உன்னதங்கள் மீது(ஏன் ஜெயமோகனின் எழுத்துக்களின் மீதும் தான்!) எனக்குள் இருக்கும் ஒரு பெருங்காதலுக்கு இந்த பித்து நிலையை ஊகித்து கொள்வேன்.

 

இப்பொழுதும் அதே போதையை இவை அளிக்கின்றன. என்னை நான் திடீர் என்று ஒரு பித்தனாக பொய் தோற்றத்திற்கு மாற்றிக்கொள்ள, மிகையுணர்ச்சி கொள்ள உதவுகின்றன.

 

இந்த பாடல் சினிமாவுக்காக எழுதினதல்ல. அறுபதுகளில் கிருஷ்ண சாஸ்திரி எழுதிய ‘கிருஷ்ண பக்ஷம்’(தேய் பிறை) என்ற நூலில் இருந்து எடுத்து மெட்டு அமைக்க பட்டது.

 

தெலுங்கு நவீன இலக்கியத்தில் கிருஷ்ண சாஸ்திரி ‘பாவ கவி‘ என்று அழைக்க படுவார். இது ‘ப்பாவம்அல்ல பாவம்.  தான், தன் தனிமை, தன் அளவிலா காதல், வானளாவிய ஏக்கம், அது தரும் துன்பங்கள்இயற்க்கை அழகுகள் மீது மோகம் என்பவை இந்த பாவ கவிதைகளின் பேசு பொருள். அதில் இவர் முன்னோடி.

தெலுங்கு புது கவிதையின் முன்னோடிகளில் ஒருவர்.

தமிழின் பாரதிதாசனுடன் ஒப்பிடத்தக்க,  தெலுங்கு இனத்தின் தற்பெருமையை கட்டமைக்க கவிதைகள் எழுதிய ராயப்ரோலு

சுப்பாராவ்மார்க்சிய தாக்கத்துடன் தெலுங்கு சொல்லிசையின் உச்சம் என எண்ணத்தக்க கவிதைகளை தந்த “மகா கவி“ ஸ்ரீஸ்ரீ போன்றவர்களை ‘ அப்யு தய‘(முற்போக்கு என்று மொழிபெயர்க்கலாம்!) கவி என்கின்றோம். அந்த போக்கிற்கு முற்றிலும் மாறாக ‘தான்’ என்கிற ஒரு பாவனையை உருவாக்கி அதில் ஒரு மானுட காதல் ஏக்கத்தை உருவாக்கியவர் கிருஷ்ணா சாஸ்திரி. நிச்சயமாக ஆங்கில ஷெல்லி, கீட்ஸின் பாதிப்பு இருண்டாலும்… நம் மண்ணின், மொழியின், கலாச்சார உச்சங்களை கவிதையில் கொண்டு வந்தார் இவர். இவரின் ஊர்வசி கவிதை… ஒரு க்ளாஸிக்.

அது மட்டுமல்ல, தன் கவிதைகள் மட்டும் அல்லாது, தெலுங்கின் புது கவிதைகள் எழுதும் அனைவரையும் பாமரர்களுக்கு அறிமுகம் செய்யும் பெரும் பணியை மேற்கொண்டவர். எல்லா கிராமங்களுக்கும் சென்று தான் பொருட்டென கருதும் கவிஞர்கலின் கவிதைகளை பாடியவர். இதை  ஒரு வேள்வியாகவே கருதியவர்.

ஸ்ரீ ஸ்ரீ போல் இவரும் சினிமாவுக்கு பாடல்கள் எழுதினர். க்ராமங்களுக்கெல்லாம் சென்று கவிதைகளை பாடிய இவரின் குரல் முதுமையில் ஊமையாயிற்று.

அவருக்கு அஞ்சலியாகத் தான் இந்த பாடலை தாசரி நாராயண ராவ் தன் படத்தில் பதிவு செயதார் என்று நினைக்கிறேன்.

 

இந்த பாடலுக்கு சம்பந்த பட்டு எனக்கு இரண்டு மனக்குறைகள் உண்டு. ஒன்று, நுட்பமான  இயற்க்கை வர்ணனைகளை சற்றே மிகையான கவிதை மொழியில் சொல்லும் இப்பாடலை… ஒரு கிராமிய பெண் பாடுவதாக அமைத்தது. இன்னொன்று… ஒரு கிராமீய பெண் பாடுவதாக அமைந்ததாலேயே இதில் உள்ள அந்த தேவையற்ற, துடுக்கான தாளம்.

 

இதை இன்னும் கொஞ்சம் மென்மையாக அமைத்திருக்கலாம் இந்த மனுஷன் என்று தான் ரமேஷ் நாயுடு பற்றி எண்ணிக்கொள்கிறேன்.

 

மிக்க அன்புடன்,

ராஜு.

அன்புள்ள ராஜு

 

அருமையான பாடல். அந்த வரிகளின் சொற்பொருளை அளிக்கமுடியுமா?

 

ஜெ

 

ஜெ,

 

‘இலையில் இலையாக பூவில் பூவாக கிளையில் கிளையாக நுன்னிளம் கொடியாக
இந்த  காட்டில் மறைந்திடமாட்டேனோ
எப்படியேனும் இங்கேயே இருந்திட மாட்டேனோ…,

ஆகுலோ = இலையில்
பூவுலோ = பூவினில்
கொம்ம = கிளை
நுனு லேத்த  = சிறு சிறு இளம் என்று அர்த்தம்.
ரெம்ம = கிளையில் இருந்து பிரிந்து வரும் சிறு கிளை. இலையின் காம்புக்கும் கிளைக்கும் நடுவில் இருப்பது. ஆங்கிலத்தில் தேடினால் twig or branchlet என்று வருகிறது. தமிழில் சிறு கிளை அல்லது கொடி என்று இணையத்தில் பார்த்தேன். கொடி என்பது சரியான அர்த்தம் இல்லை என்றாலும்… சிறு கிளை-யை விட இதே பொருத்தமாக பட்டது.

அடவி = காடு
தாகி = ஒழிந்துக்கொள்ளுதல் அல்லது மறைந்துபோதல்
எட்டு லைனா = எப்படியேனும்
இ சடனே = இங்கேயே
ஆகி = நின்றுவிடுதல்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சண்டேஸ்வரர் கலைக்களஞ்சியம்- கடிதம்

$
0
0

இனிய ஜெயம்

 

கொஞ்சநாள் தமிழ் எண்ம நூலகம் பராமரிப்புப் பணிகள் காரணமாக,ஓய்ந்து நின்றிருந்தது.தற்போது செயல்படத் துவங்கிய நிலையில், நான் முன்பு வாசித்த நூலின் சுட்டியை உயிர்ப்பிக்க முடிந்தது.

 

திருவாவடுதுறை ஆதீனம் வெளியீடான சண்டேசுவரர் கலைக்களஞ்சியம். சண்டேஸ்வரர் எனும் தனித்த வழிபாட்டு மரபின் புராணம் வரலாறு சிற்ப வழிபாட்டுமுறை   போன்ற  அனைத்து அலகுகளும்  குறித்த விவரங்கள் பல்வேறு படங்களுடன் அடங்கிய முழுமையான நூல்.

 

https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZteluU2&tag=%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D#book1/

 

இந்த நூலின் அட்டைப்படமே சண்டேஸ்வர அனுக்ரக மூர்த்திதான். சண்டேச நாயனார் என அறியப்பெற்ற விசார சருமனை எவ்வாறு ‘சண்டேச’ எனும் விகுதிகள் சைவம்  கொண்டுவந்தது எனும் ‘விவரணை’ இந்த நூலில் இல்லை. ஆனால் சண்டேச நாயனார் வழிபாடு எங்கெல்லாம் திகழ்ந்தது, தமிழ் நிலமெங்கும் கிடைக்கும் சண்டேச அனுக்ரக மூர்த்தி படிமங்கள் குறித்த விவரங்களும் விளக்கங்களும் இதில் உள்ளன.

 

ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கத்திருந்து சண்டேஸ்வரர் சிற்பங்கள் கிடைப்பதாக குறிக்கும் இந்த நூல் அந்த சிற்பங்கள் என குறிப்பது லகுலீசர்படிமத்தை. எமசண்டீசர் வடிவத்துடன் இணையாக இருப்பது என்பதால் லகுலீசர் சிற்பம் அப்படி இனம் காணப்படுவது இயல்பே.

 

இந்த நூலுக்குப் பிறகான கால் நூற்றாண்டில் பல கல்வெட்டுக்கள் படிக்கப்பெற்று, ஆய்வுகளைத் தொடர்ந்து இவர் சண்டேஸ்வரர் வடிவான எமசண்டீசர் அல்ல லகுலீசர் என அறியப் பெற்றது.  அந்த ஆய்வுக்கான தொடர் புலங்களை மையம் கொண்டதே மங்கை ராகவன் குழுவினரின் தமிழகத்தில் லகுலீசபாசுபதம் நூல்.

 

http://kongukalvettuaayvu.blogspot.com/2018/05/24-12-2017.html

 

மேற்கண்ட சுட்டி வழியே இந்த ஆய்வுகள் தொடர்ந்து முன்னகர்வதை காணSet featured imageலாம். பொதுவாக ஆச்சாரம், பக்தி, ஆய்வுகள் மூன்றும் நேரெதிரான திசைகளில் பயணிப்பவை. ஆச்சாரமான வழியில் பயின்று வந்த மனம், சண்டேஸ்வரர் என வழிபடபட்டவர் லகுலீசர் என்பதை ஒப்பாது. பக்தியும் அவ்வாறே வியாழன் தோறும் இவர்கள் வணங்கும் ‘குரு பகவான்’ அதே கோவிலில் வேறு இடத்தில் இருக்கிறார். அப்படி நம்பி இவர்கள் வணங்குவது தட்சிணாமூர்த்தி என இவர்கள் அறிவதில்லை.அவர்களுக்கு அது ஒரு பொருட்டும் அல்ல. ஆகவே பக்தியில் லகுலீசர், சண்டேச நாயனராகவோ சண்டேஸ்வரர் என்றவதும் இயல்பே. ஆய்வுகள் இந்த இரண்டு நிலைகளுக்கும் வெளியில் நிற்பவை.

 

சமீபத்தில் தமிழகத்தில் ஒரு கோவிலில், தனது தேவியை இடது மடியில் ஏந்தி அமர்ந்திருக்கும் விநாயகர் புடைப்பு சிற்பம் இன்று கண்டேன். தேவியின் தலை மட்டுமே தெரிந்தது. சிற்பம் இடுப்புக்குக் கீழே பல்லிளிக்கும் வண்ணத் துணியால் [அது புடைப்புச் சிற்பம் என்பதால்] பொதியப்பட்டிருந்தது. இப்படி பல கோவில்களில் அழகிய சிற்பங்கள் பக்தாள் மனம் ஆபாசப்பட்டு விடக்கூடாது என்று கருதி பழைய துணியால் பொதியப்பட்டு நிற்பது வாடிக்கை. சோழக் கோவில் ஒன்றில் சிவன் பார்வதி சரச சிற்பம் ஒன்று [சிவன் பார்வதியின் இட முலையை,தனது இடக்கரத்தால் பற்றி நிற்பது ஆபாசம் அன்றோ] இப்படி பொதிக்குள் நின்றிருந்தது.

 

அந்த ஆபாசத்தை விட நான் செய்வது எந்த ஆபாசமும் இல்லை. சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, விநாயகர் மீதான கந்தலை விலக்கிப்பார்த்தேன். வினாயகரின் ஊர்த்துவ லிங்கத்தை தேவி பற்றி இருக்கிறாள். தேவியின் இடைக்கரவை தனது துதிக்கை கொண்டு தொட்டிருக்கிறார். விஷயம் அறிந்த நண்பரை தொடர்பு கொண்டேன். உச்சிஷ்ட கணபதி. தாந்த்ரீக மரபின் ஒரு பகுதி. நெடிய வழிபாட்டு, உபாசனை மரபு கொண்ட மூர்த்தி.  சுற்றிலும் ஏதேனும் ஆச்சாரவாதியோ பக்தரோ இருந்தால் மனம் துணுக்குற்று இருப்பார். என்ன செய்ய ஆய்வு மனம் இந்த ஆவரணா வை விலக்குவதைத்தான் முதல் பணியாகக் கொண்டிருக்கிறது. :)

சண்டிகேஸ்வரர்

 

கடலூர் சீனு

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16880 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>