Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16732 articles
Browse latest View live

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–64

$
0
0

பகுதி ஆறு : படைப்புல் – 8

பிரஃபாச க்ஷேத்ரத்திற்கான பயணம் முதலில் கட்டற்ற ஒற்றைப்பெருக்காக இருந்தது. எவரும் எவரையும் வழி நடத்தவில்லை. எவரும் தலைமை அளிக்கவும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளிருந்து எழுந்த ஆணையொன்றுக்கு அடிபணிந்தவர்கள்போல சென்றனர். திரள் நீரென்று ஆவதை முன்பும் பலமுறை பார்த்திருந்தவன் நான் என்றாலும் அப்போதும் திரளுயிர் என்ற ஒன்று உருவாகிவிட்டதுபோல் தோன்றியது. அந்தப் பெருக்கு ஒரு பாம்புபோல் ஒற்றை உடலாக மாறியது. சரிவுகளில் நெளிந்திறங்கியது. மேடுகளில் சுழன்று ஏறியது. தேங்கி இரண்டாகவோ மூன்றாகவோ ஒழுகி வழி கண்டடைந்து நின்று ஒருங்கிணைந்துகொண்டது.

பிரஃபாச க்ஷேத்ரத்துக்கான செல்வழி எவர் உள்ளத்தில் இருக்கிறது என்பதை உணர முடியவில்லை. செல்லும் வழி சரிதானா என்ற ஐயமும் இருந்தது. மூத்தவரான சுருதன் எங்கள் குழு மூத்த காவலர்தலைவனை அழைத்து “இங்கு நிலப்பகுதியை நன்கு அறிந்த ஒற்றர் சிலர் என் அறிதலில் உள்ளனர்… பெயர்களை தருகிறேன். உடனே அவர்களை அழைத்து வருக!” என்று ஆணையிட்டார். ஒற்றர்கள் பலர் அந்நிலத்தில் பரவியிருந்தார்கள் என்றாலும் அவர்களிடையே ஒருங்கிணைப்பு முற்றாக இல்லாமலாகிவிட்டிருந்தது. கிருஷ்ணைக்கு மட்டுமே முறையான தனிப்பட்ட ஒற்றர் அமைப்பு இருந்தது. அதில் பலரை சுருதனுக்கு தெரியும். அவர்களை கொண்டுவந்து ஃபானுவிடம் சேர்த்து ஓர் அமைப்பை உருவாக்க அவர் முயன்றார்.

அவர் அந்தப் பொழுதில் மெல்லமெல்ல தன் கையில் ஆட்சியை எடுத்துக்கொள்ள முயல்வதை நான் கண்டேன். சாம்பன் ஆட்சிசெய்தபோது அவர் சாம்பனின் ஆதரவாளராக, பின் இரண்டாமிடத்தவராக ஆகி ஒரு கட்டத்தில் ஆணைகளை பிறப்பிப்பவராக மாறினார். கிருஷ்ணையால் வெளியே நிறுத்தப்பட்டார். இப்போது கிருஷ்ணையை வெல்ல ஃபானுவை சார்ந்திருக்கிறார். ஃபானுவிடம் உரிய கருத்துக்களை அழுத்தமாகச் சொன்னார். அப்போது ஃபானுவால் வசைபாடப்பட்டார். ஆனால் பின்னர் ஃபானு அங்கே வந்து சேர்ந்தபோது அவருடைய உள்ளத்தில் சுருதன் ஆற்றல்கொண்டவர் என்னும் எண்ணம் ஏற்பட்டது. சுஃபானு அவையில் இருந்து விலகி இரு உடன்பிறந்தாருடன் தனியாகவே வந்தார். அந்த இடத்தை கைப்பற்ற சுருதன் முயன்றார்.

காவலர்தலைவன் இரண்டு ஒற்றர்களை அழைத்துவந்தான். முதிய ஒற்றரான முத்ரன் சுருதனை வணங்கினார். “முத்ரரே, இன்று துவாரகையின் அரசராக விளங்கும் ஃபானுவின் பொருட்டு என் ஆணை இது. இந்தப் பாதையைப் பற்றி உமக்குத் தெரிந்ததை சொல்க!” என்றார் சுருதன். “ஆம், நான் இப்பகுதியில் நெடுங்காலம் பணியாற்றியிருக்கிறேன். இந்நிலத்தை நன்றாகவே எனக்குத் தெரியும்” என்றார் சுருதன். “எனில் கூறுக, இப்போது நாம் செல்லும் வழி சரிதானா? இவர்கள் தங்களை எப்படி வழிநடத்திக்கொள்கிறார்கள்? உளம்போன போக்கில் கால்களை செலுத்துகிறார்களா?” என்றார். “இல்லை இளவரசே, அதைத்தான் நான் விந்தையுடன் நினைத்துக்கொள்கிறேன். வழியை நன்கு தேர்ந்து அறிந்திருக்கும் நான் எப்படி தெரிவு செய்வேனோ அதே போன்று திசையும் நிலமும் தெரிவு செய்து அவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றார் முத்ரன்.

“எனில் இவர்களை நன்கு அறிந்த எவரோ வழி காட்டுகிறார்களா? ஆணைகளை எவரேனும் பிறப்பிக்கிறார்களா?” என்று சுருதன் கேட்டார். ”இல்லை. இத்திரளின் முகப்புக்குச் சென்று அதை நான் கவனித்தேன். எவரும் வழிகாட்டவில்லை. ஆணைகள் எதுவும் எழவும் இல்லை. ஆனால் வழி அறிந்த சிலர் தன்னியல்பாகவே முன் நிரையை அடைகிறார்கள். அவர்கள் உடல்மொழியிலும் அசைவுகளிலும் இருக்கும் உறுதி பிறர் அவரை தொடர வைக்கிறது. அவர்கள் இந்த நீளுயிரியின் உணர்கொம்புகளாக தங்களை மாற்றிக்கொண்டுவிட்டிருக்கிறார்கள்” என்றார் முத்ரன். “எனில் ஒன்றும் செய்வதற்கில்லை. அத்திசையை தொடர்ந்து செல்வது மட்டும்தான் வழி” என்றார் சுருதன்.

ஆனால் ஃபானுவிடம் அதையே மாற்றிச் சொன்னார். “நாம் சென்றுகொண்டிருக்கும் வழியை நான் கண்காணித்துக்கொண்டிருக்கிறேன், அரசே. உரிய ஆணைகளை திரள்முகப்புக்கு அனுப்பிக்கொண்டும் இருக்கிறேன். இதுவரை சரியான திசையிலேயே சென்றுகொண்டிருக்கிறோம்…” ஃபானு “எவரேனும் மாற்றுச் சொல் உரைத்தார்களா?” என்றார். “இல்லை, அனைவரும் திரளிலேயே மிதப்பவர்களாக வந்துகொண்டிருக்கிறார்கள். கிருஷ்ணைக்கு தெரிந்திருக்கும், பிரஃபாச க்ஷேத்ரம் செல்லும் வழிதான் இது என்று.” ஃபானு “எனில் நன்று… நமக்காக ஊழ் தெரிவுசெய்த இடம்போலும் இது” என்றார். பின்னர் “இனி எவரும் நான் பிழையாக அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட முடியாதல்லவா? இது மக்களின் தெரிவு” என்றார்.

“இல்லை, அவ்வாறல்ல” என்று சுருதன் சொன்னார். “இது மக்களின் தெரிவு என்பது நமக்கே தெரியும். மக்கள் இது உங்கள் தெரிவென்று நினைக்கிறார்கள். நாம் ஆணையிட்டோம் என பிற மைந்தர் எண்ணுகிறார்கள். அவ்வண்ணமே நீடிக்கட்டும். இந்தப் பெருந்திரள் மேல் முழுமையான கட்டுப்பாடு உங்களுக்கே என்றிருக்கட்டும். அது நமக்கு பலவகையிலும் நன்று… நம்மை பிறர் அஞ்சுவார்கள். நாம் இவர்களை நடத்திக்கொண்டுசெல்கிறோம் என்பது இதற்குள் மற்ற அரசர்களிடம் சென்று சேரும். அவர்கள் நம்மை அரசன் என மதிப்பார்கள்…” ஃபானு “ஆம், அதுவும் உண்மை” என்றார். “ஆகவே முகப்பில் நம் ஆணைமுரசுகள் ஒலிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். நம் ஆணைமுரசுகளால் அவர்கள் செலுத்தப்படுவதாக தோன்றும்… அது செல்லும் வழியையே முரசுகள் சொல்கின்றன என்று எவருக்கும் தெரியப்போவதில்லை” என்றார் சுருதன்.

பாலைநிலத்தினூடாக ஏழு நாட்கள் சென்றோம். பகலில் வெயில் ஏறுகையில் ஆங்காங்கே தங்கி, துணியாலும் மூங்கில் தட்டிகளாலும் கூரைசாய்வுகள் அமைத்துக்கொண்டு அவற்றுக்குள் புகுந்து துயின்றோம். கிளம்பிய ஒரு நாளிலேயே அந்நிலத்தில் செல்வதற்கான வழிமுறைகளை ஒவ்வொருவரும் கற்றுக்கொண்டார்கள். மணலை ஆழமாகத் தோண்டி ஓரிருவர் புகுந்து கொள்ளும் அளவுக்கு துளைபோன்ற பள்ளங்களை உருவாக்கினர். அப்பள்ளங்களுக்கு மேல் தட்டிகளாலோ துணியாலோ கூரையிட்டனர். உள்ளே இறங்கி படுத்துக் கொண்டால் பாலையில் எரியும் கொடுவெயிலை தவிர்க்க முடிந்தது. நெஞ்சளவு ஆழத்து மண்ணை தோண்டிவிட்டால் அடியிலிருக்கும் மண் தண்மை கொண்டது என்பதை அறிந்தனர். மென்மையான மணலை எங்கே கண்டடைவது என்று உணர்ந்தனர்.

பின்னர் ஒரு நாழிகைக்குள் மொத்தத் திரளும் மண்ணுக்குள் புகுந்துவிடும் அளவுக்கு இரண்டு ஆள் ஆழமான குழிகளை அமைத்தனர். அதற்குள் மூச்சுக்காற்று உள்ளே வரும்படி வாசல்களை அமைக்க பழகினர். கூரையாக இட்ட தட்டியின்மீது தடிமனாக மணலை அள்ளிப்போட்டுக்கொண்டால் உள்ளிருப்பவர் இன்னும் குறைவாகவே வெப்பத்தை உணரமுடியும். சிலர் மூங்கில்தட்டியை வளைத்து குழலென அமைத்து அதை பாலைமணல் சரிவில் பதித்து உள்ளிருக்கும் மணலை எடுத்து எடுத்து அதை உள்ளே செலுத்தி பொந்து ஒன்றை உருவாக்கி அதற்குள் இறங்கி உள்ளே படுத்துக்கொண்டனர். மணலுக்கு அடியில் பல்லாயிரம் பேர் படுத்து துயில வெளியே அனலென எரியும் வெயிலும் சுட்டுப்பழுத்த மணல் அலைகளும் பரவியிருந்ததை ஒருநாள் பார்த்தேன். வியப்புடன் அது பாலைவன எலிகளின் வழிமுறை என்று புரிந்துகொண்டேன்.

பாலைவனச்சோலைகள் அரசருக்கும் அரசனின் விலங்குகளுக்கும் மட்டும் உரியதாக இருந்தன. சோலையை ஒட்டிய இடங்களில் மணல் ஆழம் நீரின் தண்மை கொண்டிருந்தது. சோலைக்குள்ளேயே அரசருக்கான குடில்களை மண்ணை அகழ்ந்து ஆழத்திலேயே அமைத்தனர். ஒருநாள் காலையில் அனைவரும் மண்ணுக்குள் அடங்கிய பின்னர் ஓசையின்மையை உணர்ந்து எழுந்து சோலையிலிருந்து வெளிவந்து சுற்றும் நோக்கிய ஃபானு திகைத்து “என்ன நிகழ்கிறது? எங்கு சென்றுவிட்டார்கள் அனைவரும்?” என்றார். விழிதொடும் தொலைவு வரை ஒவ்வொருவரும் கொண்டு வந்த பொருட்கள் மட்டும் சிதறிக்கிடந்தன. விலங்குகள்கூட மண்ணுக்குள் சென்றுவிட்டிருந்தன. “விட்டுச்சென்றுவிட்டார்களா? எப்படி? எங்கே?” என்று ஃபானு பதறிப்போய் கேட்டார். அவருள் என்றுமிருக்கும் அச்சம் அது என்று தெரிந்தது.

“அனைவரும் மணலுக்குள் புகுந்துவிட்டார்கள்” என்று பிரஃபானு சொன்னார். “மணலுக்குள்ளா? எவ்வாறு?” என்று வியப்புடன் ஃபானு கேட்டார். “அது பாலையில் வாழும் எலிகளின் நெறி. இங்குள்ள அனைவருமே அதைத்தான் செய்கின்றனர். மானுடருக்கு எப்போதுமே சிற்றுயிர்கள்தான் வழிகாட்டி” என்று ஃபானுமான் சொன்னான். “துவாரகையில் இவர்கள் பறவைகளாக வாழ்ந்தனர், இப்போது எலிகளாக்கிவிட்டோம்” என்றார் ஃபானு. ஃபானுமான் “அவர்கள் சிறகு கொள்ளும் காலம் வரும், மூத்தவரே” என்றான். சுருதன் “ஒவ்வொன்றிலும் அதற்கான மகிழ்ச்சி உள்ளது” என்றார். “வானில்லாத வாழ்க்கை!” என்று ஃபானு சொன்னார். “நாம் கதிரவனையே பார்க்காதவர்களாக ஆகிவிட்டோம்!”

தொடங்கிய மறுநாளே பயணப்பொழுது இயல்பாக வகுக்கப்பட்டது. பயணம் முழுக்கமுழுக்க இரவில்தான். பகலில் முழுமையான ஓய்வு. அந்த ஒழுங்கை உடலும் ஓரிரு நாட்களில் கற்றுக்கொண்டது. இரவில் பாலைநிலம் குளிர்ந்திருந்தது. குளிர்காற்று வீசியது. விண்ணில் விண்மீன்களின் ஒளிப்படலம். கண் அந்த வானொளிக்கு பழகியபோது கூழாங்கற்கள் கூட தெளிவாகத் தெரிந்தன. விடாய் மிகவில்லை. மூன்று இடங்களில் அமர்ந்து உணவு உண்டு புலரிவரை சென்றோம். அந்தத் தொலைவை பகலில் கடக்கவே முடியாது.

புலரிக்கு முன்னரே பகலணையும் இடத்தை கண்டுகொண்டோம். இரவெல்லாம் இருளை நோக்கி நடந்துவிட்டு வந்தால் புலரிவெளிச்சம் கண்களை கூசவைத்து பணியாற்ற முடியாமல் ஆக்குகிறது என்று அறிந்தோம். ஆகவே விடிவெள்ளி தோன்றியதுமே பயணத்தை நிறுத்திவிட்டு ஒரு சாரார் குழிகளை தோண்டத் தொடங்கினோம். ஒரு சாரார் அடுமனை கூட்டினர். இருள் விலகிக்கொண்டிருக்கையிலேயே உணவுண்டு துயில்கொண்டோம். ஒளியில் விழித்துக்கொண்டால் இரவின் இருளுக்கு விழி பழக பொழுதாகியது. ஆகவே கதிர் நன்கணைந்த பின்னரே விழித்தெழுந்தோம். உணவு உண்டபின் நடை தொடங்கினோம். இருளிலேயே இருந்த விழிகள் கூர்கொண்டபடியே வந்தன. நாங்கள் இருளுக்குள் வாழும் உயிர்களென மாறிக்கொண்டிருந்தோம்.

ஸாமி மரத்தின் இலைகளை வெட்டி சருகுகளையும் கலந்து சற்றே உப்புநீர் கலந்து ஊறவைத்து அளித்தால் சுமைவிலங்குகள் அவற்றை உண்பதை கண்டுகொண்டோம். சற்றே மாவும் சேர்த்து அவற்றுக்கு அளித்தால் அது போதுமான உணவு. அதன்பின் புல்லுக்கோ பிறவற்றுக்கோ தேடல் இருக்கவில்லை. வெயிலை முழுமையாகவே தவிர்த்துவிட்டமையால் நீரின் தேவை மிகமிகக் குறைந்தது. வியர்வை இல்லாமலாகியபோது உணவில் உப்பை குறைத்து நீர் அருந்துவதையும் குறைக்க முடிந்தது. மெல்ல இரவின் உலகை அறியலானோம். விண்மீன்களால், திசைமாறும் காற்றுகளால், சிற்றுயிர்களால் ஆன முற்றிலும் புதிய ஓர் உலகம். “கந்தர்வர்களே, தேவர்களே, உடனிருங்கள். உங்கள் உலகில் வாழ்கிறோம் நாங்கள்!” என்ற பாணனின் பாடல் மக்களிடையே அன்றாடமென ஒலித்தது.

 

நாளடைவில் அப்பயணம் பின்னர் புதிய கண்டடைவுகள் இல்லாமல், புதிய துயரங்கள் இல்லாமல், ஓர் அன்றாடமென நிகழத்தொடங்கியது. அப்போது பூசல்கள் நிகழத்தொடங்கின. சாம்பன் எங்கள் அணிநிரைக்கு மிகப் பிந்தி தனியாக வந்துகொண்டிருந்தார். பிரத்யும்னனின் படைகளே முகப்பில் சென்றன. நடுவில் ஃபானுவின் படைகள் சென்றன. பின்னர் ஃபானு முந்த பிரத்யும்னன் இரண்டாவதாக வந்தார். மூன்று படைகளும் ஒற்றை உடலெனச் செல்லும் அந்தப் பெருக்கின் உள்ளே மூன்று பகுதிகளாகவே நீண்டன. “எறும்புபோல. மூன்று தனி உடல்கள் வேறு வழியின்றி ஒன்றையொன்று கவ்விக்கொண்டது போன்றது எறும்பின் உருவம்” என்று மூத்தவர் சுருதன் கூறினார்.

பின்னர் ஃபானுவின் படைகளுக்கு இடையே பூசல்கள் தொடங்கின. அந்தகர்களும் விருஷ்ணிகளும் போஜர்களும் ஹேகயர்களும் ஒருவரை ஒருவர் கசந்தும் இளிவரல் செய்தும் விலக்கியும் பேசத்தொடங்கினர். ஏன் அந்த உணர்வுகள் ஏற்பட்டன என்பதை நான் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். முதலில் தோன்றியது, தங்கள் இடர்களுக்கான பொறுப்பை இன்னொருவர் மேல் சுமத்துவதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆர்வத்தாலேயே என்று. விருஷ்ணிகள் செய்த பழியால் யாதவர்கள் அனைவரும் உயிர்கொடுக்க வேண்டிவந்தது என்று ஹேகய குடிதலைவர் ஒருவர் சொன்னார். அச்சொல் அவரிடமிருந்து நோய் என அனைவருக்கும் பரவியது. விருஷ்ணிகள் செய்த பிழையல்ல அது, ஷத்ரியக் குருதியினராலேயே அது நிகழ்ந்தது. விதர்ப்பர்களின் பழி அது என்று விருஷ்ணிகள் கூறினார்கள். ஷத்ரியர்களே அனைத்துப் போர்முனைகளிலும் முன்னின்றவர்கள் ஆகவே அவர்களே கொல்லவும் கொல்லப்படவும் தகுதியானவர்கள் என்று விருஷ்ணிகள் மறுமொழி கூறினார்கள்.

அந்தகர்கள் விருஷ்ணிகளுக்கு மேலாக துவாரகையின் அரசப்பொறுப்புக்கு எப்படி வந்தனர் என்று விருஷ்ணி குலத்தலைவர்கள் அலர் தூற்றினர். “மகளிர் வழி முடிகொள்பவனைப் போல் இழிந்தவன் எவன்?” விருஷ்ணிகளின் தலைவன் அமைத்த மாநகரை அந்தகர்கள் அழித்துவிட்டனர் என்று வசைபாடினர். அந்தகக் குடியின் மைந்தராகிய ஃபானு அரசருக்குரிய நிமிர்வு இல்லாமல் முடிவெடுப்பதற்கு பிந்தியமையாலேயே துவாரகையின் குடிகளில் பெரும்பகுதி உயிரிழக்க நேரிட்டது. அவர்களின் களஞ்சியங்களையும் கருவூலச் செல்வங்களையும் கடல் கொண்டுசென்றது. இன்று இறந்துகிடக்கும் எங்கள் மைந்தர்களை அள்ளி நெஞ்சோடு அணைக்கும் தீயூழ் எங்களுக்கு அமைந்ததற்கு வழி வகுத்தவர் அவர். அச்சொல்லுடன் ஹேகயர்களும் போஜர்களும் இணைந்துகொண்டது அந்தகர்களை கொந்தளிக்கச் செய்தது.

“அந்தகர்கள் ஒருபோதும் அரசாளக் கூடாது என்பது எங்கள் குடிக்கூற்று” என்றனர் விருஷ்ணிகள். “இந்நகரை நிறுவியவரின் முதல் மைந்தர் அவர்” என்றார்கள் அந்தகர்கள். “ஆம், ஆனால் தன் அழகாலும் ஆணவத்தாலும் அவர் மேல் செல்வாக்கு கொண்ட அந்தகக் குலத்து பெண்ணின் வழியாக அவர் குருதிமுதன்மை பெற்றார்” என்றனர் விருஷ்ணிகள். “சத்யபாமையை அரசி அல்ல என்கிறீர்களா?” என்றனர் அந்தகர். “அவரை அரசியென குடியவைக்கு வெளியே இளைய யாதவர் காட்டியதே இல்லை. அரசியென அமைந்தவர் ருக்மிணி” என்றனர் ஷத்ரியர். “ஆகவே ருக்மிக்கு முடியை அளித்துவிடுவோமா?” என்று அந்தகர் ஏளனம் செய்தனர்.

அப்பூசல்களுக்குப் பின்னால் இருப்பது வெறும் சலிப்புதானோ என்று நான் ஐயுற்றேன். அந்தப் பயணத்தில் முதலில் வெற்றுடலாக தங்களை ஆக்கிகொண்டு, ஒருவரை ஒருவர் இணைத்துக்கொண்டு, ஒற்றைப் பேருரு என ஆகி ஒழுகிச் செல்வதே ஒவ்வொருவரும் சந்தித்த அறைகூவலாக இருந்தது. அவ்வாறு அவர்கள் இயல்பாக மாறினார்கள். எறும்புகள் உடலால் பாலம் கட்டி நீர்ப்பெருக்கை கடப்பதுபோல, உடலை ஏணியாக்கி படிகளாகி ஏறிச்செல்வதுபோல், உடலையே அரண்மனையும் கோட்டையுமாக ஆக்கிக்கொள்வதுபோல் பாலையில் திகழ்ந்தனர். ஆனால் உடல் முற்றாகப் பழகி தன்னியல்பாக அனைத்தையும் செய்யத் தொடங்கியதுமே உள்ளம் பிரிந்து தனக்கான இடத்தை தனி வழியை நாடியது. அது வெறுப்பினூடாகவே தன் இருப்பை அடையாளம் காட்டியது.

பிறரை வெறுக்கையிலேயே ஒருவர் தனக்கென ஒரு தனியிருப்பு உண்டென்பதை உணர்கிறார். தன்னை திரளென்று உணர்ந்தவர் பின்னர் யாதவர் என்று உணர்கிறார், பின்னர் அந்தகர் என்றோ போஜர் என்றோ உணர்கிறார். அவ்வாறு தன்னை குறுக்கிக்கொண்டு வந்து தன்னிடம் முடிகிறார். தன் குடித்திறனை, மூதாதையர் வரிசையை சொல்லிக்கொண்டிருக்கிறார். விடியலில் பாலையில் அமர்ந்து வளைகள் தோண்டிக்கொண்டிருக்கும் மக்களினூடாக கடந்து செல்கையில் ஒவ்வொருவரும் தங்கள் குலப்பெருமையை, குடித்தொன்மையை, மூதாதையர் மரபையே வெவ்வேறு சொற்களில் கூறிக்கொண்டிருப்பதை பார்த்தேன். சிலர் உரக்க கூவினர். சிலர் பூசலிட்டனர். சிலர் பாடினர். ஒவ்வொருவரும் வெவ்வேறு சொற்களில் அதையே கூறிக்கொண்டிருந்தனர்.

ஒருவர் மரபை பிறிதொருவர் சிறுமை செய்தார். அதற்கு மறுமொழியாக தங்கள் மரபை கூவிச்சொன்னார். அவ்வாறு கூவிச்சொல்லும் பொருட்டு பிறர் தங்களை சிறுமை செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தனர். நட்புடன் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருந்தவர்கள்கூட தங்கள் பெருமையையே கூறிக்கொண்டிருந்தனர். பூசல்கள் பெருகிக்கொண்டே இருந்தன. நான் சுருதனிடம் “இங்கு ஒவ்வொருவரும் தங்கள் குடிப்பெருமையையே சொல்லி பூசலிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றேன். “அது நிகழட்டும். அதுவே அவர்களை மானுடராக்குகிறது. இல்லையேல் வெறும் எறும்புத்திரளென அவர்கள் ஆகிவிடுவார்கள்” என்று சுருதன் கூறினார். ”இந்தப் பூசல்களெல்லாம் வெறும் நாப்பயிற்சியாகவே இருக்கின்றன. எவரும் எவரையும் தாக்கிக்கொள்ளாதவரை இதனால் இடரொன்றுமில்லை.”

“அல்ல, இவர்கள் சொல்லிச் சொல்லி பகைமையை பெருக்குகிறார்கள். அப்பகைமையையே மேலும் எண்ணி எண்ணி பெருக்கிக்கொள்கிறார்கள். இந்த வெறுமையில் அவர்களுக்கு ஆற்றுவதற்கு தொழிலேதும் இல்லை, ஆக்குவதற்கும் ஏதுமில்லை. எனவே இங்கு எதிர்மறை எண்ணங்களே பெருகுகின்றன. ஒருபோதும் நாம் இதை ஒப்ப இயலாது. இவ்வாறு பெருகும் வெறுப்பு உறுதியாக போராக வெடிக்கும், ஐயம் தேவையில்லை” என்று நான் சொன்னேன். “ஐயம் வேண்டாம், இவர்கள் சொல்லிச் சொல்லி உமிழ்ந்துகொண்டிருக்கிறார்கள். செல்லும் நிலத்தில் இந்த அடையாளங்கள் எவருக்கும் எஞ்சாது. அங்கே இவர்கள் வெறும் கையும்காலும்தான். நாடோடிகளுக்கு ஏது குலம்?” என்றார் சுருதன். “மாறாக பெருக்கில் இறங்கும்போது தெப்பத்தை தழுவிக்கொள்வதுபோல இவர்கள் குலங்களை பற்றிக்கொள்வார்கள். பூசலிடுவார்கள்” என்றேன்.

“என்ன செய்யலாம் அதற்கு?” என்று சுருதன் கேட்டார். “அவர்களை தனித்தனியாக பிரிக்க வேண்டும். அந்தகர்களுக்கும் விருஷ்ணிகளுக்கும் முதன்மையான போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. ஹேகயர்களுக்கும் போஜர்களுக்கும் தொன்மையான பகையொன்று இருக்கிறது. விருஷ்ணிகள் பிற அனைவருடனும் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். விருஷ்ணிகளாகவும் போஜர்களாகவும் அந்தகர்களாகவும் இவர்கள் ஒருங்கு திரள்வதை தடுக்கவேண்டும். இவர்களைக் கலந்து ஒவ்வொருவரும் தனித்தனி யாதவர்களாக உணர்வதற்கு வழி அமைக்கவேண்டும்” என்றேன். “அது இயல்வதென்று எண்ணுகிறாயா?” என்றார் சுருதன். “குலமில்லையேல் இவர்கள் சிதறிவிடுவார்கள். உளமிழந்து பித்தர்களாக மாறிவிடுவார்கள்.”

“இவர்கள் ஒற்றை விசையெனத் திரண்டு பணியாற்றுவதற்கு, ஒருவரோடொருவர் ஊக்கி நம்பிக்கை கொண்டு இந்நெடுவழிப் பயணத்தை மேற்கொள்வதற்கு வழி அமைப்பது அவர்களின் குலம்தான். அவர்களை தனித்தனியாக பிரித்தால் ஒவ்வொருவரும் உடல் சோர்ந்துவிடுவார்கள். அவர்களால் இப்பணியை செய்ய இயலாது. நாம் தங்க முடிவெடுத்த ஒரு நாழிகைக்குள்ளேயே ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிக்குழுக்களாக பிரிந்துவிடுகிறார்கள். சிலர் மணலை அள்ளுகிறார்கள், சிலர் கூடாரங்களை கட்டுகிறார்கள். சிலர் உணவு சமைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஓரிரு நாழிகைக்குள்ளேயே உணவுண்டு மகளிருடனும் குழந்தைகளுடனும் பொந்துகளுக்குள் புகுந்து துயிலத்தொடங்கிவிடுகிறார்கள், இதை கலைத்து மீண்டும் ஒரு அமைப்பை இப்போது உருவாக்க இயலாது” என்றார்.

நான் அதை உண்மையென்று உணர்ந்தேன். ஆனால் வேறு வழியில்லை என்று சொன்னேன். “வேறு வழியில்லை என்று நானும் சொல்லவருகிறேன். அவர்களை கலைத்தால் இப்பணி நிகழாது என்பது இருக்கட்டும். கலைப்பதை அவர்கள் எதிர்த்தால் என்ன செய்வது? அவர்களை எவரைக்கொண்டு கலைப்பது? அவர்களைக் கொண்டே அவர்களை அடக்க முடியுமா என்ன? இந்தப் பெருந்திரளில் இன்று ஏவலரும் காவலரும் குடிகளும் கலந்து ஒன்றாக இருக்கிறார்கள். இங்கு அரசப்படை ஒன்று இல்லை என்பதை மறக்கவேண்டியதில்லை” என்றார் சுருதன். நான் ஒன்றும் சொல்லாமல் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் நெடுமூச்சுடன் “உண்மை” என்றேன்.

தீயவை நிகழுமென்ற அச்சம் என்னை ஆட்டிப்படைத்துக்கொண்டே இருந்தது. எக்கணமும் யாதவர்களுக்குள்ளே ஒரு பூசல் வெடிக்கக்கூடும். ஒவ்வொருமுறை பேச்சுகள் உச்சத்தை அடையும்போதும் இதோ படைக்கலங்களுடன் எழுந்து தாக்கப்போகிறார்கள் என்று எண்ணி நான் நடுங்கினேன். ஆனால் பொங்கி எழுந்து ஓர் உச்சத்தை அடைந்து ஏதோ இறையாணைக்கு கட்டுப்பட்டவர்கள்போல் ஒவ்வொருவரும் அடங்கி பின்னகர்வதை கண்டேன்.

பின்னர் நான் அதை புரிந்துகொண்டேன். ஒவ்வொரு தரப்பினரிடமும் பூசலை எழுப்புவதற்கான சிலர் இருந்தனர். எந்நேரமும் கொதிநிலையில் இருப்பவர்கள், ஒரு சிறு பூசலையே கடுமையான சொற்களால் உடல் கொந்தளிக்கும்படி மாற்றுபவர்கள், ஒவ்வொரு சொல்லுக்கும் இழிபொருள் கண்டடைபவர்கள். எப்போதும் பூசலை அவர்கள் முன்னெடுத்தனர். அதற்கென்றே அவர்கள் துணிந்து நின்றனர். அந்தத் திரளின் ஒருவகையான உணர்கொம்புகளும் நச்சுக்கொடுக்குகளுமாக அவர்கள் இருந்தனர். பூசல்களை அவர்களே தொடங்கினர், வளர்த்தனர். பிறகு ஒவ்வொருவராக அதில் ஈடுபட அது நுரைத்து மேலெழுந்தபோது அதுவரை அப்பூசல்களுக்கு அப்பால் இருந்த சிலர் எழுந்து வந்து பூசல்களை தணித்தனர்.

எப்போதும் அவர்களால்தான் பூசல் தீர்த்து வைக்கப்பட்டது. அவர்கள் பெரும்பாலும் முதியோர்கள். அனைத்திலும் ஆர்வமிழந்து தங்களுக்குள் சொற்களோடு தனித்திருப்பவர்கள். அவ்விலக்கத்தாலேயே அத்திரள் மேல் ஆணை கொண்டவர்களாக ஆனவர்கள். ஓங்கிய குரலில் “நிறுத்துங்கள்! என்ன இது? அறிவிலிகளே, போரிட்டு சாகவா போகிறீர்கள்? உங்கள் மைந்தர்களையும் பெண்டிரையும் இந்தப் பாலையில் சாகவிடப்போகிறீர்களா என்ன?” என்று அவர்கள் கூறியதுமே ஒவ்வொருவரும் தங்கள் நிலை உணர்ந்து மீண்டனர். முணுமுணுப்புகளுடன், கசப்புச் சொற்களுடன், காறித் துப்பியபடியும் முகங்களை இளித்து ஒருவருக்கொருவர் பழிப்புக் காட்டியபடியும் விலகிச்சென்றனர்.

அப்பூசல் ஓர் எல்லை கடந்த பிறகே அதை அணைப்பவர் எழுந்தனர். அந்த எல்லையை அது கடந்த பின்னர்தான் அது அணைக்கப்பட இயலும். பூசலில் ஒவ்வொருவரும் தங்கள் உள ஆற்றலை வீணடித்த பின்னர் மேலும் எழ முடியாது திகைத்து நிற்கும்போதுதான் அதை நிறுத்துபவர்களின் சொல் ஏற்கப்பட்டது. அதை அத்தீயை அணைக்கும் அம்முதியவர்களும் அறிந்திருந்தனர். எண்ணி அறிந்திருக்கவில்லை, இயல்பாகவே அப்போதுதான் அவர்கள் உள்ளம் அங்கே சென்றது. இந்த அமைப்பு இப்படித்தான் செயல்படும் என்ற உணர்வை நான் அடைந்தேன். இந்தக் காடு தன்னைத்தானே பற்றவைத்துக்கொள்ளவும் அணைத்துக்கொள்ளவும் பயின்றிருக்கிறது. அது என்னை சற்று ஆறுதல்படுத்தியது.

தொடர்புடைய பதிவுகள்


மூன்று டைனோசர்கள்-கடிதங்கள்

$
0
0

மூன்று டைனோசர்கள்

அன்புள்ள ஜெ.

 

இந்த அனுபவம் எனக்கும் உண்டு. பறவைகள் வீடுகளுக்குள் கூடு கட்டியது போல எங்கள் வீட்டின் பின் வாசற் கரையில் பட்ட கமுக மரம் ஒன்று இருந்தது.  அதன் நடுப்பக்க பொந்தினுள் ஒரு பெரிய வகைக் கரிக்குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது. தாய்க்குருவி உணவூட்டுவது அவ்வளவு பிரமிப்பாக இருக்கும். அதைப் பார்த்துவிட்டே குளிக்கப்போவேன். கீழேயுள்ள புகைப்படத்தைக் குஞ்சு வளர்ந்த நாட்களில் எடுத்திருந்தேன்.

 

எனக்குப் பயம் என்னவென்றால் இரண்டு பூனைகள் கீழே சுற்றிக்கொண்டு திரிந்தன. ஏதேனும் நடந்துவிடும் என்று. பூனைகளை இரவில் தூரத் துரத்திவிட்டு தூங்கச்செல்வேன். துரதிஷ்டவசமாக நேற்று விடியற்காலை எழுந்து பார்த்தேன் மூன்று குஞ்சுகளும் பொந்தில் இல்லை. கீழே தலைகள் மட்டும் கிடந்தன. வேதனையாக இருந்தது, தாய்க்குருவியின் கதறல்.

 

சமயத்தில் பூனைகள் ஆபத்தானவையாக மாறக்கூடும். முன்னெச்சரிக்கையாக குறிப்பிடுகிறேன்.

 

சுயாந்தன்.

 

அன்புள்ள சுயாந்தன்

முன்பு என் அப்பா இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று சங்கிலிகளை இணைத்து அதில் நாயை கட்டி அந்த மரத்திலேயே இரவில் கட்டிவைத்தார். ஒருவாரம்தான், குஞ்சுகள் பறவைகளாகி பறந்துவிட்டன

ஜெ

என் அன்பு ஜெ,

 

நான் காத்துக் கொண்டிருந்த மூன்று வருகைகள். மகிழ்ந்தேன். பார்ப்பதற்கு நீங்கள் சொன்னது போலவே டைனோசர் குட்டிகள் தான். டைனோசர்கள் “ஜுராசிக்” என்ற புவியியல் கால அளவுகோலில்  மறைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அதில் பறந்து தப்பிப் பிழைத்த ‘பறக்கும் டைனோசர்’ போலான இந்தக் குஞ்சுகள். எப்படிப் பிழைத்ததென ஆச்சரியப்படுத்தும் பல்லி வகையறாக்களும், முதலைகளும். எப்படியோ அவர்களின் முதாதையர் டைனோசர் என்பது உறுதி. (நீங்கள் விஷ்ணுபுரத்தில் மணிமுடியில்:பாம்புகள் தங்களை முடித்துக்கொள்ள அதன் மூதாதையரான மீன்கள் இனத்தத்தைத் தேடி நீருக்குள் புகுந்தது ஞாபகம் வந்தது.)

 

“பிரபஞ்ச பசி” என்ற வார்த்தை ஓர் அகண்ட வார்த்தை ஜெ. அது அந்த வார்த்தையாலேயே என்னை உள்ளிழுத்துக் கொண்டது. அன்னையும், தந்தையும் தீர்க்க இயலா பிரபஞ்சப் பாசிகள் அவை. அவை தந்துவிட்ட உணவுகளைத் தவிறவும் மிச்சமிருக்கும் பசியால் மேல் நோக்கி எழுந்து வளரத் துவங்குமோ?!

 

“வளர்க!” எத்துனை அற்புதமான ஆசிர்வாதம். அவைகள் உங்கள் மொழியைப் புரிந்து கொள்ளாவிடினும், நீங்கள் அனுப்பும் அந்த அற்புதமான அலைவரிசையில் அவை சிறப்பாக வாழும். குடும்ப சகிதம் (உங்கள் வாசகர்களையும் சேர்த்து) அவர்களை வரவேற்றிருக்கிறோம்.

 

மன்னருக்கு இந்த விசயம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அவரும் வாழ்த்தியிருக்கக்கூடும். என்னுடைய வாழ்த்துக்களும் சொல்லிவிடுங்கள்.

 

ஒரு வாரமாக நான் வைத்திருந்த குருவிக் கின்னங்கள் இன்று அடையாளம் கண்டறியப்பட்டு புசிக்கப்பட்டது. அடைக்கலாங் குருவி ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஓர் மண்சட்டி உலை மூடியில் அவள் குடிக்க சற்று நீரும் வைத்திருக்கிறேன். அவை மகிழ்வாக இருக்கும் என்றெண்ணுகிறேன். அவளை படம் பிடிக்க வாய்ப்பு கிடைக்கையில் அனுப்புகிறேன் ஜெ.

 

அடுத்தகட்டமாக அடைக்கலாங்குஞ்சுகள் பறப்பதற்கான வாழ்க்கைப் பாடத்தை தாயும், தந்தையும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும். பின் அடைக்கலாங்குருவி சமூகமே வந்து பறப்பதற்கு சொல்லிக் கொடுக்கும். ஓர் அனுமானந்தான். எங்கள் வீட்டின் முன்னுள்ள வேப்பமரத்தில் குஞ்சு பொறித்த தேன்சிட்டு அப்படித்தான் செய்தது. ஒருவேளை அடைக்கலாம் குருவிகளும் அதையே செய்யலாம். பார்த்தீர்களானால் பகிருங்கள் ஜெ.

 

வளர்க!

மன்னரின் இராச்சியத்தில் மூன்று வருகைகள். வளரட்டும் வளமாக!

 

அன்புடன்

இரம்யா.

 

இனிய ஜெயம்

 

மூன்று டைனோசர்கள் வாசித்தேன். முதலில் என்னை துணுக்குறச் செய்தது அந்தக் குட்டி ஜீவன்களின் பசி. பசி கூட அல்ல பசித்தீ. முதல் உயிர் தோன்றிய தருணம் தொட்டு இன்று உயிர்த்தொகுதி என்று பெருகி நின்று, புழு முதல் திமிங்கலம் வரை வெவ்வேறு வயிருகள் கொண்டு பசி என எழுந்தாடுவது என்ன? அது வடவைத் தீயேதானா?

 

இரண்டாவதாக என்னை சிந்தனைக்குள் தள்ளியது இதற்குள் செயல்படும் பரிணாமவியல் நோக்கு. கொஞ்ச நாளாக இயற்பியல் மூளைநரம்பியல் வரலாறு உயிரியல் இவற்றில் எல்லாம் பரிணாமவியல் கோட்பாடு நிகழ்த்திய தாக்கம் குறித்து சொற்ப ஆங்கில அறிவைக் கொண்டு வாசித்து வருகிறேன்.

 

முதற்கண் இந்த பரிணாமவியல் கோட்பாடு என்பது ‘நிரூபண’ சாட்சியம் கொண்ட உண்மை அல்ல. அனைத்தையும் இனைக்கக் கூடிய தர்க்கபூர்வமான ஒரு ஊகம் மட்டுமே. ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு போல. மயக்கம் எங்கே உருவாகிறது என்றால் அந்த ஒன்றே முற்ற முழுதான விடை என ‘நம்ப’ த் தலைப்படும் போதே. ஆகவேதான் குவாண்டம் இயலின் முதல் இயல்பு வெளியே தெரிந்த போது  ஐன்ஸ்டின் கடவுள் சூதாடி அல்ல என்று சொல்லி பொருமினார்.

 

பரிணாமவியல் கோட்பாடும் முற்ற முழுதான ஒன்றல்ல என்பது (சார்ப்பியலுக்கு குவாண்டம் ஒன்று எதிராக கிளம்பி வந்தது போல) அதற்க்கு மாறான மற்றொரு உண்மை வலிமையாக எழுந்து வரும் போதே நிகழும். இவை போக பரிணாமவியல் எல்லா இயலையும் போல அடிப்படை கேள்விகளை ‘விளக்க’ வகையற்றதாகவே இருக்கிறது.

 

மொழி எப்படி தோன்றியது?

மூளையில் ஒரு சடுதி மாற்றம்.

 

பிரபஞ்சம் எப்படி தோன்றியது?

மூலக் கருவில் ஒரு சடுதி மாற்றம்.

 

முதல் உயிர் எப்படித்தோன்றியது?

ரசாயனக் குழம்பில் ஒரு சடுதி மாற்றம்.

 

இந்த மூன்றிலும் இந்தக் கரு, மொழிக்கான மூளைஅமைப்பு, உயிர் துளிர்க்கும் ரசாயன குழம்பு இந்த அடிப்படை கலவையே மிக மிக சிக்கல் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.  எத்தனை நிகழ்தகவுதான் இங்கே திரும்ப திரும்ப நிகழ முடியும்?  ஒரு அடிப்படை செல் என்பதே தன்னளவில் மிக சிக்கல் வாய்ந்த வடிவத்தை கொண்டிருக்கிறது. அது பரிணாம வளர்ச்சி அடைந்தே அந்த வடிவம் கொண்டது எனில், இந்த பூமியில் இவை ஒவ்வொன்றும் வடிவம் கொள்ள சூழல் தகாவுடன் இணைந்த ஒரு டைம் ஸ்பான் இருக்கும் இல்லையா. அதன் அளவீடுதான் என்ன? மொத்தத்தில் எல்லா துவக்கத்துக்கும் பரிணாமம் தற்காலிகமாக சொல்லும் பதில் சடுதி மாற்றம். இந்த விடை எப்படிப் பட்டது என்றால், அங்கே காகிதங்கள் இருந்தது, அச்சுக் கூடம் இருந்தது, எழுத்துருக்கள் இருந்தது, மை இருந்தது, நிலநடுக்கம் போல ஒரு சடுதி மாற்றம். முன்பிருந்த எல்லாமே மறைந்து போய் அங்கே விஷ்ணுபுரம் நாவல் இருந்தது. இப்படிப் பட்ட விடையைத்தான் வித விதமான கணக்குகள் ஈவுகள் வழியே அறிவியல் தந்து கொண்டு இருக்கிறது .

 

அடிப்படை கேள்வியை விட்டால் அடுத்த வரிசையியலும்  பரிணாமவியல் பதிலளிக்க இயலா கேளிவிகளின் தொடர் நீள்கிறது. கேம்ப்ரியன் காலத்தில் சடுதி மாற்றம் வழியே நண்டு போன்ற உடலிகளின் பெருக்கம் நிகழ்கிறது. இந்த உடலிகள் எதற்கும் மூதாதை வரிசை இல்லை. குறிப்பாக ட்ரைலோபைட்டா எனும் உயிர் அப்போது உள்ள எந்த உயிரைக் காட்டிலும் மிக மிக சிக்கல் வாய்ந்த விழி அமைப்பைக் கொண்டிருக்கிறது. அந்தவிழி அமைப்புக்கு முன்னாடியே இல்லை.

 

அதே போல மீன் அதிலிருந்து நீர் நில பிராணி எனக் கொண்டால் பரிணாமவியல் கோட்பாடு இதை இணைக்க திணறுகிறது. முதுகு எலும்பும் இடுப்பு எலும்பும் இணைந்த உடலே நிலநீர் உயிர்களின் அடிப்படை. இந்த இணைப்பு பரிணமித்து வந்த எந்த தடயமும் இல்லை. இப்படி சுவாசப் பைகள் விழிகள், அதை விட குறிப்பாக நாக்கு. இப்படி நிலநீர் உயிரின் தனித்துவம் எதற்கும் மீன்களில் பரிணாம மூதாதை சுவடு இல்லை.

 

நிலநீர் உயிரில் இருந்து ஊர்வன வந்தது எனக் கொண்டால் இரண்டும் ஈனும் முட்டைகள் அதன் அமைப்பு சிக்கல் அது பொரிக்கும் முறை இவை பரிணாமத்தால் பதில் சொல்ல இயலா சிக்கல் கொண்டதாக இருக்கிறது. அங்கிருந்து பறவை என்றால் நிலைமை இன்னும் சிக்கல் கொள்கிறது. எல்லா ஊர்வனவும் குளிர் குருதி கொண்டவை. பறவை இதற்க்கு நேர் எதிர். மீனின் சுவாச உறுப்புக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத சுவாச உறுப்பை எவ்வாறு ஊர்வன கொண்டிருக்கிறதோ, அதே போல ஊர்வனவற்றுக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத சுவாச அமைப்பை பறவைகள் கொண்டிருக்கிறது. ஊர்வன பறப்பன இரண்டின் விழித் திறன்களும் முற்றிலும் வேறு வேறான இவற்றுக்கு எங்கும் பரிணாம மூலமே இல்லை.

 

டேவிட் அட்டன்பாரோ ஆவணங்கள், டாக்கின்ஸ் நூல்கள் போல பெரும்பான்மை மக்களை நிறைக்கும் பரிணாமவியல் ஆதரவு தரவுகள் எதுவும், பரிணாமவியல் உண்மையில் எங்கெங்கு பதில் சொல்ல இயலா கேள்விகளை சந்திக்கிறது என்பதை பேசுவதே இல்லை. அந்த இடைவெளிகளில்தான் இருக்கிறது பிரம்மத்தின் மற்றொரு முகம். ஒரே ஒரு மூலம் மட்டுமே அதன் கைவசம் வைத்திருக்கும் அளவு பிரம்மம் அவ்வளவு கஞ்சனாக இருக்க வாய்ப்பில்லை என்றே நானும் நம்புகிறேன். உரையாடல்களை சொற்ப ஆங்கில அறிவு கொண்டு புரிந்து கொண்ட வகையில், ஊட்டி நித்யாகுருகுலம் சுவாமி வியாச பிரசாத் பரிணாமக் கோட்பாட்டை ஏற்பவர் அல்ல என்றே அறிகிறேன். குரு நித்யாவும் இதை போதாமை கொண்ட கோட்பாடு என்றே சொல்லுவார் என நினைக்கிரென். தன்னை நம்ப வைத்து அதன் வழியே தனது முட்களை உதிர்க்க வைத்து, முட்கள் இல்லாத கள்ளிச் செடியை பிறப்பிக்க வைத்த ஆய்வு குறித்து நித்யா குருகுலத்தில் பேசி இருக்கிறோம். இந்த பரஸ்பர நம்பிக்கை அன்பு இதை பறிமாவியல் கோட்பாடு கொன்டு விளக்கிவிட முடியுமா என்ன?  பிறகு என் பரிணாமவியல் இருக்கிறது? உங்கள் கதையில் வருவதே பதில். மனிதன் நம்புகிறான். ஆகவே பிரம்மம் அவ்வாறு நடிக்கிறது. :)

கடலூர் சீனு

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கதைகள்- கடிதங்கள்

$
0
0

அன்புள்ள ஜெ..

நிகர்நிலை அனுபவம் அளிக்கவல்ல எழுத்தின் உச்சகட்ட சாத்தியங்களை கதைகளில் பார்ப்பது பிரமிப்பாக இருக்கிறது சிவம் கதையில் , சிதையில் வேகும் பிணமாக என்னையே எண்ணற்றமுறை உணர்ந்து விட்டேன் இந்த கதைகளுக்கு வரும் கடிதங்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிக்கின்றன. இதுபோன்ற எண்ணிக்கையிலான பிரமாண்ட , காத்திரமான,கூட்டு வாசிப்பு தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவே முதல்முறை என எண்ணுகிறேன்

இதற்கு வரும் வாசகர் கடிதங்களைப் படிப்பதே ஒரு பெரிய பணியாக இருக்கும் என நினைக்கிறேன் முகநூலில் சில இலக்கியவாதிகள் ( ஓய்வு)  முன்வைக்கும் அசட்டுத்தனமான புரிதல்களைவிட, , ஒரு மருத்துவ நிபுணர் , ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவன மேலாளர் , ஒரு தீவிர வாசகர் எழுதி , உங்கள் தளத்தில் வெளியாகும் கடிதங்கள் உண்மைத்தன்மையுடன் , வித்தியாசமான புரிதல்களுடன் இருக்கின்றன

ஆனாலும்கூட , வடிகட்டப்பட்ட கடிதங்களும் கணிசமாக இருக்கும்தான் ஒட்டுமொத்தமாக பார்த்தால் , நீங்கள் சிற்றிதழ் சூழலில் இருந்து வந்தவர் என்ற முறையில் , வாசகர்களின் எதிர்வினை நம்பிக்கை அளிக்கும்வண்ணம் இருக்கிறதா? என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

 

அன்புள்ள பிச்சைக்காரன்

ஐம்பதில் ஒரு கடிதமே பிரசுரமாகிறது- அக்கடிதத்தில் ஏதாவது ஒரு வாசிப்புக்கோணம் இருக்கவேண்டும். சற்றேனும் வாசகனுக்கு உதவவேண்டும். வாசகர் கடிதங்களில் பல ஆசிரியனுக்கு தன் மனதை தெரிவிக்கும் பொருட்டு மட்டும் எழுதப்படுபவை. ஆகவே உதிரிச் சொற்றொடர்கள் மட்டுமே கொண்டவை. அவற்றை வெளியிடுவதில்லை.

தமிழில் வாசிப்பவர்களிலேயே மிகப்பெரும்பாலானவர்களுக்கு தமிழில் தட்டச்சிடத் தெரியாது. ஆங்கில உதிரிச்சொல் கடிதங்களே எண்ணிக்கையில் மிகுதி. இந்தியாவில் மொத்த தொழில் -வணிக -தனிவாழ்வு தொடர்புமுறைகளும் உடைந்த ஆங்கில ஒற்றைச்சொற்களால் ஆனவையாக மாறிவிட்டிருக்கின்றன. ஆங்கிலம் அறியாதவர்கள் தங்கிலீஷ்.

பல கடிதங்களில் கதைபற்றிய புரிதல் நுட்பமானதாக இருக்கும், தட்டச்சிடும் பழக்கம் இல்லாததனால் உதிரியான சில சொற்களே கடிதத்தில் இருக்கும்.

தட்டச்சு அல்ல, தொட்டச்சு. என் வாசகர் கடிதங்களில் கணிப்பொறியில் தட்டச்சிடப்படுபவை மிகமிகக் குறைவு. பெரும்பாலானவை செல்பேசியில் எழுதப்படுபவை. தமிழக அளவில் கணிப்பொறியின் இடத்தை செல்பேசியே எடுத்துக்கொண்டுவிட்டிருக்கிறது. விமானநிலையங்களில் நான் மடிக்கணினியுடன் இருப்பேன். மிகப்பழைய ஒரு விசித்திரமான பொருளை கையில் வைத்திருப்பதுபோல அன்னியமாக இருப்பேன்.

இக்கடிதங்களில் பல சொற்களை தானியங்கி தொழில்நுட்பம் மாற்றியமைத்திருக்கும். ஆகவே ஆங்காங்கு புரியாமல் பொருத்தமற்று இருக்கும்.

கடிதங்களின் மொழியை முன்பெல்லாம் மாற்றியமைத்துக்கொண்டிருந்தேன்.  ஓரிருமுறை அவ்வாறு மாற்றியமைத்ததுமே கற்றுக்கொண்டு நன்றாக எழுதத் தொடங்கிய பலர் உண்டு – சிலர் கதைகள்கூட இன்று எழுதுகிறார்கள். இப்போது அதைச் செய்ய பொறுமையில்லை.

பெரிய பிரச்சினை ஃபார்மேட்தான். சில கடிதங்கள் வேர்ட்பிரஸ் பக்கத்தில் நில்லாமல் நீண்டு அகன்றுவிடும். சில கடிதங்களில் சொற்கள் நடுவே இடைவெளியே இல்லாமல் ஒற்றை கோடாக இருக்கும். அவற்றை வெட்டி பலவகையிலும் சீர் செய்து வெளியிடவேண்டும்.

சீர்செய்வதற்கு நான் செய்யும் ஒருவழி உண்டு .இணையதளத்தின் அட்ரஸ் பக்கத்தில் வெட்டி ஒட்டி திரும்ப வெட்டி ஒட்டுவேன். ஃபார்மாட் ஆகியிருக்கும். சொந்தமான கண்டுபிடிப்பு.

தனிப்பட்ட செய்திகள் கொண்ட கடிதங்கள் பல உண்டு, குறிப்பாக பலிக்கல் கதைக்கு வந்த கடிதங்களில் பல நெஞ்சைக் கலக்குபவை. மொத்த தமிழகத்திலும் இந்த அளவுக்கு பிராமணர்களுக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளது, அது சார்ந்து இத்தனை குற்றவுணர்வு ரகசியமாக உள்ளது என்பது ஆச்சரியம் அளிப்பது. 

கொரோனா காலம் என்பதனால் உள்ள வேறுபாடு என்பது வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் வாசகர்கள் நிறைய எழுதுகிறார்கள் என்பது. இரவு கதை பிரசுரமாகி காலையில் கண்விழித்தால் கடிதங்களைப் பார்ப்பது உற்சாகமானது. கொரோனோ இல்லாவிட்டால் இவர்கள் எழுதியிருக்க மாட்டார்கள். இவர்களில் பலர் முறையாக இலக்கியம் பயின்று ஆய்வுப்பணி செய்பவர்கள் என்பதனால் அவர்களின் பார்வை புதிதாக இருக்கிறது

கடிதங்கள் நிறைய வருகின்றன. ஆனால் மொத்தமாகவே ஏறத்தாழ முந்நூறுபேர்தான் எழுதுபவர்கள். இந்த தளத்தின் வாசகர்களில் இருநூறில் ஒருவர் என்ற விகிதம். மிகமிகக்குறைவு என்றே சொல்லவேண்டும்.

இதன் வாசகர்களின் எண்ணிக்கையும் பரப்பும் நீங்கள் எண்ணுவதை விட பலமடங்கு அதிகம். பொதுவாக இலக்கியச்சூழல், சமூகவலைத்தளச் சூழலுக்கு வெளியே இருக்கும் வாசகர்கள் முக்கால்பங்குக்கும் மேல்.

அதற்கு காரணம் சினிமா என்பது என் ஊகம். 2.0 போன்ற ஒரு படம் வந்தால் சிலலட்சம் வாசகர்கள் உள்ளே வருகிறார்கள். ஆயிரம்பேர் அதிகரிக்க எஞ்சியோர் விலகிவிடுவார்கள். இதன் வழியாகவே நவீன இலக்கிய அறிமுகம் அடைந்து வாசிப்பவர்களும் பலர் உண்டு

பத்தாண்டுகளில் மிகமிக நிறைவான ஓர் அறிவுச்சூழல் இதைச்சூழ்ந்து உருவாகியிருக்கிறது – எந்த ஊடக ஆதரவும் இல்லாமல். இன்று தமிழகத்தில் நவீன இலக்கியம் -தீவிர அறிவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஊடகம் இந்த தளம்தான்.

ஆகவே வெறுப்பாளர்கள் எப்போதுமே குமுறிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போதுகூட வாசகர்கடிதம் எழுதும் ஒருவரை இன்ஸ்டகிராமில் அல்லது லிங்கடினில் அடையாளம் கண்டுகொண்டால் வசைகள் அனுப்பும் வழக்கம் தமிழ்ச்சூழலில் நீடிக்கிறது. சமீபத்தில் ஒருவருக்கு ‘பார்ப்பன சங்கி நாயே’ என்று  தொடர்ந்து வசை. அவர் அழாக்குறையாக மின்னஞ்சல் போட்டார் – ‘சார் நான் ஒரிஜினல் துளுவ வெள்ளாளன் சார்!”

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

வணக்கம்

தங்கள் சிறுகதைகள் அனைத்தும் தங்கள் ஒட்டு  மொத்த செயல்பாட்டின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளன. அனைத்து கதைகளையும் வாசித்தேன்  ஒரு வாசகன் அக்கதைகளை வெவ்வேறு சிறு தொகுதிகளாக வரிசைப்படுத்த முடியும் .ஒரு ஆரம் போல , விளக்கின் வரிசை போல.

ஆண் பெண் உறவின் அடிப்படையில் , தங்களை முதன் முதலில் அணுகி வரும் வாசகனுக்கான வரிசையாக முதல் ஆறு , ஆழி  , பொலிவதும் கலைவதும் , சீட்டு , கோட்டை , பெயர் நூறான் , பாப்பாவின் யானை, நஞ்சு , வேட்டு  மற்றும் லீலை ,  இவ்வாறு வரிசைப்படுத்துவதன் மூலம் இளமை முதல் நடு வயது வரையிலான காலகட்டத்தை உங்கள் கதைகள் தொட்டு செல்கின்றன.

அடுத்த வரிசை உங்கள் பால்யம் முதல் இளமை வரை நீங்கள் கண்ட ஒரு கிராம வாழ்வின் அழகிய பிரதி – ஆனையில்லா, வருக்கை, மதுரம், பூனை, துளி,இடம் , மொழி , தங்கத்தின் மணம், சூழ்திரு – அனைத்து கதைகளிலும் கேலியும் நகைச்சுவையும் நன்கு கூடி வந்திருக்கின்றன, பழைய பெருமை குறித்த ஒரு சரடு , இறைவனை மதத்தை துணைக்கு அழைத்தபடியே இருக்கும் மக்களின் மாண்பு, திடீர் கூக்குரல் , மட்டற்ற மகிழ்ச்சி , ஒரு பார்வையில் வெள்ளந்தி மாற்றி நோக்குகையில் விவரம் ,விலங்குகளூடான ஒரு ஒத்திசைவு , குழந்தைகள் பெரியவர் ஆகுதல் , பெரியவர் குழந்தைகள் ஆகுதல் – இத்தொகுப்பை அப்படியே மால்குடி டேஸ் போன்ற ஒரு தொகுப்பாக கோட்டு சித்திரங்களுடன் காண்பதற்கு அருமையாக இருக்கும் .

அடுத்த வரிசை தங்கள் பணியிடம் தொடர்பானது –  வான் நெசவு , வான் கீழ் , உலகெலாம் , சுற்றுக்கள் , வானில் அலைகின்றன நட்சத்திரங்கள் , மலைகளின் உரையாடல், குருவி , நகைமுகன்  மற்றும் லூப் , எனக்கு மிகவும் பிடித்த கதைகளாக லூப் மற்றும் நகைமுகன் இரண்டையும் சொல்வேன் – லூப் ஒரு சில வரிகளிலேயே சூழியல் சார்ந்த கதையாக , மாற்றம் குறித்த ஒரு சிந்தனையை அடிக்கோடிடுகிறது , வளர்ச்சி என்னும் பெயரில் வளங்கள் சூறையாடப்படுகையில் இயற்கையின் லூப்பை உணர்தல் அவசியமாகிறது – நகைமுகன் – சிரித்து சிரித்து கண்களில் கண்ணீர்,

அடுத்த வரிசை மிகவும் பிடித்தமான துப்பறியும் தொடர் – வெறும் மூணு சீட்டு விளையாட்டு போல் இல்லாது கதையின் நிலபரப்பும் கதை மாந்தர் தம் தொழிலும், இடம் பெறும் கதைகள் – பத்து லட்சம் காலடிகள், கைமுக்கு, ஓநாயின் மூக்கு மற்றும் வேரிலே திகழ்வது – என்னை மிகவும் கவர்ந்தது பத்து லட்சம் காலடிகள், மற்றும் கைமுக்கு கதையும் – ஒரு தந்தை மகனை மீறிய அறத்தை நிலை நாட்டுகிறார், இன்னொரு தந்தை அறம் தவிர்த்து மகனை காப்பாற்றுகிறார் – ஏனோ லோகிதாஸ் நினைவுக்கு வருகிறார் , கூடவே கிரீடமும் செங்கோலும், ஒன்றில் அறம் எது என்ற தெளிவு இருக்கிறது இன்னொன்றில் அவ்வறத்தின் பால் நிற்க இயலாதவர்கள் கூறும் காரணங்கள் இருக்கின்றன – ராமாயணமும் மகாபாரதமும் போல , தியரியும் நடைமுறையும் போல , தங்களின் இரு வான் நோக்கிய சாளரங்கள் நினைவுக்கு வந்தது.

புதிய நிலப்பரப்புகள் குறித்த சித்திரமாக அமைந்த வரிசை அடுத்தது – தவளையும் இளவரசனும் , ஐந்து நெருப்பு , ஏதேன் மற்றும் அனலுக்கு மேல் – ஐந்து நெருப்பு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது , ஒரு நிலப்பரப்பின் கடுமையை , இவ்வளவு நெருக்கமாக உணர்கையில் பதை பதைப்பாக இருந்தது , அறியாத நிலப்பரப்பின் கடுமையை தங்கள் வரிகளில் உணர்ந்தேன் , முத்துவின் புறப்பாடு ஒரு தொடர்ச்சி , இந்நிலத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும் கடைகோடி  மக்களின் சங்கல்பங்கள்.

கரவு மற்றும் முத்தங்கள் வரிசையில் ஒரு நாட்டார் தன்மையும் தொன்மங்களின் சாயலும் இருந்தன – இரண்டு கதையும் யூகிக்க முடியாத படி பயணித்து பூடகமாகவே முடிந்தன.

வரலாற்று ஆளுமைகள், தருணங்கள் குறித்த வரிசையாக ” எண்ண எண்ண குறைவது, போழ்வு, வனவாசம், நற்றுணை , பிடி , ஏகம் ,ஆயிரம் ஊற்றுகள் மற்றும் ஆட்டக்கதை – என்னை மிகவும் கவர்ந்தது , பிடியும் ஆட்டக்கதையும் , குறிப்பாக ஆட்டக்கதையில் லட்சுமி சரஸ்வதி குறித்தான கதையாடல் புதிய திறப்பை அளித்தன

தங்கள் ஆளுமையின் ஒரு பகுதியாக நீங்கள் வலியுறுத்தி கொண்டே இருக்கும் ஆன்மீக சாரம் கொண்ட கதைகளாக ஒரு வரிசை அமைந்துள்ளது – அதில் ஒரு சரடாக மாயப்பொன் . இறைவன் , பலிக்கல் , அங்கி , விலங்கு, எழுகதிர் மற்றும் ஆடகம் , – இவை செயல்  தளத்தில் உள்ள ஆன்மீக சரடு ,  குறிப்பாக ஆடகம் ஆன்மீக தேடலில் இருக்கும் ஒருவனது செயலின்மை குறித்ததாகவும் எவ்வாறு அதிலிருந்து வெளி வருகிறான் என்பது போல அமைந்துள்ளது – எழுகதிர் ஒரு ஆன்மீக மதத்தின் பயணம் போல இருந்தது – கையில் கிடைத்தற்கரிய செல்வம் இருந்தும் கிழக்கு நோக்கி சென்று கொண்டே இருக்கும் ஒரு ஆன்மாவின் தேடல் போலவும் அமைந்திருந்தது – இன்னொரு சரடு ஆன்மீக விஷயங்களின் ஆதார விஷயங்கள் போல அமைந்தவை – கூடு, காக்கை பொன் மற்றும் சிவம் – மூன்று கதைகளும் கேள்வியில் தொடங்கி பதில் எதிர்பாராத பயணங்களை துவக்கி வைக்கின்றன.

தங்கள் படைப்பூக்கத்திற்கும் எழுத்தாளுமைக்கும் எனது வணக்கங்கள்

அன்புடன்
மணிகண்டன்

 

அன்புள்ள மணிகண்டன்

கதைகளை நூலாக்கும்போது இந்த வகைப்பாடு சார்ந்தே செய்யவேண்டும் என நினைக்கிறேன். பலநூல்களாகவே செய்யமுடியும்.

ஒருகதை எழுதும்போது அந்த தீவிரநிலைதான் இன்னொரு கதைக்கான தூண்டுதலை அளிக்கிறது. இன்னொரு கதையை கொண்டுவந்து அளிக்கிறது. உலக இலக்கியத்தின் பிதாமகர்கள் இதைப்பற்றி நிறைய எழுதிவிட்டார்கள்

ஆச்சரியமான சில உண்டு. என் கதைகள் பெரும்பாலும் குமரிநிலம்விட்டு விலகாதவை. இப்போதுதான் அவை விரிந்து வேறுநிலங்களுக்குச் செல்கின்றன. என் தொழில்களமான செய்திதொடர்புத்துறை பற்றி நான் எழுதியதே இல்லை. என் மனதைக் கவர்ந்த காசர்கோடு பற்றி ஒருவரி கதைகூட எழுதியதில்லை. அவையெல்லாமே இப்போதுதான் எழுத்தில் வருகின்றன

இப்போதுகூட என்னை உலுக்கிய பல தனிநிகழ்வுகள் பற்றி ஏதும் எழுதவில்லை. என் நண்பன்,அப்பா, அம்மாவின் தற்கொலை, என் அலைச்சல் நாட்கள் கொந்தளிப்பானவை. நான் சுனாமியில் கண்ட வாழ்வனுபவங்கள் உக்கிரமானவை. அவற்றை எழுதவில்லை. அவற்றிலிருந்து கதை வரவில்லை, அவ்வளவுதான்

என் குடும்பம் பற்றிக்கூட பெரிதாக எழுதியதில்லை. ஆனால் இத்தனை எழுதிய பின்னரும் அம்மா பற்றி ஒரு கதை வரவில்லை. ஏன் என்றே தெரியவில்லை

ஜெ

61நிழல்காகம்[சிறுகதை]

60 லாசர் [சிறுகதை ]

59 தேவி [சிறுகதை]

58 சிவம் [சிறுகதை]

57 முத்தங்கள் [சிறுகதை]

56 கூடு [சிறுகதை]

55 சீட்டு [சிறுகதை]

54 போழ்வு [சிறுகதை]

53 நஞ்சு [சிறுகதை]

52 பலிக்கல்[சிறுகதை]

51 காக்காய்ப்பொன் [சிறுகதை]

50 லீலை [சிறுகதை]

49 கரவு [சிறுகதை]

48.ஐந்து நெருப்பு[ சிறுகதை]

47.நற்றுணை [சிறுகதை]

46.இறைவன் [சிறுகதை]

45.மலைகளின் உரையாடல் [சிறுகதை]

44.முதல் ஆறு [சிறுகதை]

43.பிடி [சிறுகதை]

42.கைமுக்கு [சிறுகதை]

41.உலகெலாம் [சிறுகதை]

40.மாயப்பொன் [சிறுகதை]

39.ஆழி [சிறுகதை]

38.வனவாசம் [சிறுகதை]

37மதுரம் [சிறுகதை]

36ஓநாயின் மூக்கு [சிறுகதை]

35 வான்நெசவு [சிறுகதை]

34 பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

33பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

32 வான்கீழ் [சிறுகதை]

31 எழுகதிர் [சிறுகதை]

30 நகைமுகன் [சிறுகதை]

29 ஆட்டக்கதை [சிறுகதை]

28 குருவி [சிறுகதை]

27 சூழ்திரு [சிறுகதை]

26 லூப் [சிறுகதை]

25 அனலுக்குமேல் [சிறுகதை]

24 பெயர்நூறான் [சிறுகதை]

23 இடம் [சிறுகதை]

22.சுற்றுகள் [சிறுகதை]

21.பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20வேரில் திகழ்வது [சிறுகதை]

19.ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18.தங்கத்தின் மணம் [சிறுகதை]

17.வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16.ஏதேன் [சிறுகதை]

15.மொழி [சிறுகதை]

14.ஆடகம் [சிறுகதை]

13.கோட்டை [சிறுகதை]

12.துளி [சிறுகதை]

11.விலங்கு [சிறுகதை]

10.வேட்டு [சிறுகதை]

9.அங்கி [சிறுகதை]

8.தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7.பூனை [சிறுகதை]

6.வருக்கை [சிறுகதை]

5.“ஆனையில்லா!” [சிறுகதை]

4.யா தேவி! [சிறுகதை]

3.சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2.சக்தி ரூபேண! [சிறுகதை]

1 எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கரு,நிழல்காகம்- கடிதங்கள்

$
0
0

ஷம்பாலா -நிகோலஸ் ரோரிச்

கரு [குறுநாவல்]- பகுதி 1

கரு [குறுநாவல்]- பகுதி 2

 

அன்புள்ள ஜெயமோகன்,

கரு மீண்டும் ஒரு அற்புதமான தாவல். எனக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வம் கொண்ட ஓர் உலகம் என்பதனால் ஒரே மூச்சில் வாசித்துமுடித்தேன். இன்னொரு முறை வாசித்தபிறகுதான் முழுமையாகச் சொல்லமுடியும் என நினைக்கிறேன்.

முதலில் ஒரு குறிப்பிட்ட அறிவுலகை அறிமுகம் செய்கிறீர்கள். அதிலுள்ள மயக்கங்கள், குழப்பங்கள், கற்பனைகள் ஆகியவற்றுடன்.லாப்சங் ராம்பா போன்ற பாப்புலர் எழுத்தாளரை உருவாக்கியது அந்த கனவுலகம்தான்.அந்த கனவுலகுக்கும் இன்றைய திபெத்துக்குமான உறவையும் தொடர்பையும் சொல்லிவிட்டு மேலே செல்கிறீர்கள். இந்தக்கதை எந்த அஸ்திவாரம் மீது அமைந்துள்ளது என்று காட்டும் ஒரு பகுதி அது

ஷம்பாலா -நிகோலஸ் ரோரிச்

இந்தக்கதை நான்கு கதைசொல்லிகளாலானது. முக்தா ப்ரைமரி கதைசொல்லி. அதன்பின் ஆடம் கதை சொல்கிறான். அன்னா அவரே வந்து கதை சொல்கிறார். பிரிகேடியர்ஜெனரல் டக்ளஸ் வைட்பரோஸ் கதை சொல்கிறார்.முக்தாவும் ஆடம் சொல்லும் கதைக்குள் இரண்டு பேரின் கதைகள் வருகின்றன. ஆன்னியின் கதை, சூசன்னாவின் கதை. முக்தா அந்த இருகதைகளிலும் தன்னுடைய விவரிப்பை சேர்த்துக்கொள்கிறார். முக்தா ஹெலெனா ரோரிச்சின் கதையைச் சொல்லி முடிக்கிறார்.

இத்தனை கதைப்பின்னலும் முரண்பாடுகள் இல்லாமல் ஒரே ஃப்ளோவாக கதையோட்டத்துடன் வந்துகொண்டிருக்கின்றன. ஒருகதையில் விடுபட்டதை இன்னொரு கதையில் நிறைத்துக்கொண்டு கதை முன்னால் செல்கிறது.வாசகன் எந்தக்கதை எவரால் சொல்லப்படுவது என்று தெரிந்துகொண்டு அவனே இக்கதைகளை இணைத்துக்கொண்டு ஒரு பெரிய சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும்

இந்தக்கதைகளின் மையமாக இருப்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறார் முக்தா. இன்றைய திபெத் என்னும் நிலத்தில் மைக்ரோ- அப்ஸ்ட்ராக்ட் வடிவில் எஞ்சியிருக்கும் ஒரு கனவு. உண்மையில் இருக்கிறதா என்றால் அது என் நம்பிக்கை என்று அவரே சொல்லிவிடுகிறார். ஆன்னி அங்கே செல்லும்போது ஒரு மிஸ்டிக் அனுபவத்தை அடைகிறார். சூசன்னா அதே அனுபவத்தின் தொடர்ச்சியை அடைகிறார். ஹெலெனா ரோரிச்சும் அடைகிறார். மூன்று அன்னைகள். அவர்கள் அடையும் மிஸ்டிக் அனுபவத்தின் மூலமாக இருக்கிறது ஷம்பாலா என்ற நிலம்.

ஷம்பாலா -நிகோலஸ் ரோரிச்

அது ஒரு கூட்டுக்கனவு. சென்றநூற்றாண்டின் மிகப்பெரிய கனவு அது. அந்த Night walkers and mystery mongers வாழ்ந்த ஒரு வாழ்க்கையில் இருந்து அது உருவாகி வந்தது. அந்த ஷம்பாலா என்ற கனவை தொட்டு நின்று அப்படி சென்றகாலத்தில் இருந்து ஒரு கனவின் மிச்சம் இங்கே வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. சென்ற யுகத்தின் மிச்சம்தான் ஷம்பாலா. அப்படியென்றால் இந்த Night walkers and mystery mongers வாழ்ந்த காலகட்டத்தின் மிச்சம் இன்றைக்கும் இருக்கவேண்டும் அல்லவா?

சென்றகாலகட்டத்தின் துளி நம்மிடம் காத்திருக்காமல் நாம் எப்படி வாழமுடியும்? மீட்பும் நோயும் உடலிலேயே மைக்ரோகுரோஸம் ஆக இருக்கமுடியுமா? அதுபோல வரலாற்றிலும் இருக்குமா? இப்படி ஒன்றன்மீது ஒன்றாக கேள்விகளை எழுப்பிச்செல்கிறது கதை. ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு கேள்விகளுடன் செல்கிறது. வாசகர்கள் எங்கே எதற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் என்பது அவர்களின் தேடலைப் பொறுத்தது.

கடைசியாக ஒன்று, இந்தக்கதையிலேயே இதெல்லாமே ஒருவகையான Fantasy என்னும் எண்ணம் உங்களுக்கு இருப்பதைக் காண்கிறேன். நீங்கள் சொல்லாவிட்டாலும். அப்படி இல்லை. ஷம்பாலா திபெத் பௌத்தம் பற்றி நான் சொல்லவரவில்லை. ஆனால் வேறு பலவிஷயங்கள் உள்ளன. எனக்கு தனிப்பட்ட அனுபவம் உண்டு.தனியாக எழுதியிருக்கிறேன்

சுவாமி

http://www.roerich.org/roerich-writings-shambhala.php

Nicholas Roerich and the Search for Shambhala

 

 

 

அன்புள்ள ஜெ

நலம்தானே?

ஷம்பாலா என்ற மையம்தான் கதை. அதிலிருக்கும் கனவு, எதிர்பார்ப்பு அதுதான் கதையை நிகழ்த்துகிறது. அங்கிருந்து மீட்புவரும் என்ற நம்பிக்கை. அல்லது மனிதனால் அங்கே செல்லமுடியும் என்ற நம்பிக்கை. அது ஒரு மாபெரும் collective fiction.

ஆனால் எனக்கு அந்தக்கதைக்குள் இருக்கும் மனிதகதைகள் முக்கியமானவையாக பட்டன. சூசன்னாவுக்கும் பெட்ரூஸுக்குமான காதல். அதிலுள்ள ஆட்கொள்ளல். கூடவே கசப்பு பகைமை. பெட்ரூஸ் காணாமலாகும் அன்று அவருக்கும் சூசன்னாவுக்குமான உரையாடல் மிகமுக்கியமானது. ஏசுவுக்காக அர்ப்பணித்துக்கொண்டவர் சாத்தானிடம் காதல்கொள்வதன் கதைதானே அது? விசித்திரமான ஒரு காதல்கதை.

ஆனால் ஆன்னி அப்படி இல்லை. குற்றவுணர்ச்சியால் அவதிப்படுகிறார். அவருக்கு ஷம்பாலாவில் இருந்து உதவிகிடைக்கிறது. ஆனால் திபெத் மீதான படையெடுப்பை அவர் ஆதரித்து உதவியும் செய்கிறார் இன்னொரு கதை சார்ல்ஸுடையது. தாயன்பை அறியாத குழந்தைக்கு ஷம்பாலாவிலேயே கூட அமைதி இல்லை. அவன் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறான்

எஸ். முரளி

 

நிழல்காகம்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

அசிதர் சொல்லும் காகத்தின் கதை வேடிக்கையும் விளையாட்டுமாக ஒரு அடிப்படையான கேள்வியை முன்வைக்கிறது.  மனிதவாழ்க்கை என்பது ஒரு பெரிய வேடிக்கை ஆட்டம்தானா? எனக்கு அதில் முக்கியமானதாக தோன்றியது இரண்டு வரிகள். துறவு என்பது வாழ்க்கையை நடிப்பது என்ற வரி. துறவி கொஞ்சம் விலகிநின்று வேடிக்கைபார்த்து சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார். அதுவரை துரத்தி கொத்திய லௌகீகம் என்னும் காக்கா கொஞ்ச ஆரம்பித்துவிடுகிறது

இன்னொருவரி நித்யா சொல்வது காக்கா மனிதனுக்கு பித்ருவாக நடிக்கிறது. ஏனென்றால் மனிதர்கள் அதை அப்படி நினைத்துவிட்டார்கள். வேடிக்கையும் நையாண்டியுமாகச் சொல்லப்பட்டாலும் இந்தக்கதையின் பல வரிகள் சீண்டிக்கொண்டே இருந்தன

ஆர்.ராஜசேகர்

என் அன்பு ஜெ,

 

அசிதர் சொன்ன அந்த வித்தியாசமான கதையால் பல்லுணர்வுகளுக்கு ஆட்பட்ட பிற துறவிகளைப் போலவே நானும் ஆட்பட்டேன்.

கலை என்பது நடிப்பு. சரி. நிழல்நாய் கடிப்பதில்லை. ஆமாம் தான். ஆனால் நான் அதிர்ந்தது இந்த வார்த்தைகளால் தான். “துறவு என்பதும் வாழ்கையில் வேறு ஒரு வகையில் நடிப்பது தான்”. இங்கு தான் கேள்விகள் பெருகியது என்னுள். அப்படியானால் இல்லறம் என்பதும் நடிப்புதானே!. மனைவி என்பதும், காதலி என்பதும், நல்ல மாணவி என்பதும், இன்னும் பிறவும், யாவும் நம்பப்படும் வரை நடிக்கப்படும் ஓர் விளையாட்டல்லவா. நம்புவது நின்று போகையில் அது சார்ந்தோருக்கு அர்த்தமற்றதாகி விடுகிறது. அதை நம்பவைக்கவே நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

குலக்கடமையாக, பிரபஞ்ச விதியாக, ஆணையாக நமக்கு அளிக்கப்படும் தண்டனைகள் இருக்கத்தான் செய்கின்றன. காகம் கொத்துவதைத் தாண்டிய, கண்களால் அறிய இயலா பிரபஞ்சக் குட்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனவே. துன்பங்களாக வந்து நம்மை ஆட்டுவிக்கின்றனவே. அவற்றை கடப்பது எங்ஙனம் என்று நீங்கள் சொல்லித் தந்தாற்போலிருந்தது. வா! வந்து என்னைக் குட்டு என்ற ஓர் சரணாகதி. வலிப்பது போல் நடிப்பதன் மூலமே அதன் செயல் முழுமை பெறுகிறதென்றால், துன்பம் வந்தால் துக்கமடைந்து அழுது இறைவனிடம் சரணாகதி அடைந்து விடுவதே துன்பத்தை முடித்து வைப்பதற்கான வழியாகக் கண்டுகொண்டேன். என்ன செய்ய.? துன்பம் தவிர்க்க முடியாதது ஆயிற்றே. அதை ஏற்றுக் கொள்வதன் மூலமே கடந்துவிடலாம் என்று எடுத்துக் கொண்டேன் ஜெ.

இறுதி வரிகள் ஒரு சிரிப்போடு, சிந்தனையையும் உதறிவிட்டுச் சென்றது. பெரும்பாலன விசயங்கள் நாம் நம்புவாதாலேயே நடிக்கப் படுகின்றன. என் சிற்றப்பா சிகிரெட் பிடிப்பார், மது அருந்துவார். ஆனால் அது எனக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வார். ஏனெனில் சிறு வயதில் அவர் என் ஹீரோ. அப்படி நான் எல்லோரிடமும் தம்பட்டம் அடித்ததாலேயே அவர் என் முன்பு எதுவும் செய்ததில்லை. பின்னர்தான் தெரிந்துகொண்டேன். அதன்பின் அவர் நடிப்பதில்லை. அது போலவே எனக்கு பிடித்தமான நண்பர் ஒருவர் அதிகம் கெட்ட வார்த்தைகள் பேசுவார். குழுவாக நாங்கள் படிக்க உட்காரும்போது பலரும் சொல்வார்கள் ‘அவனைப் பற்றி உனக்குத் தெரியாது; இருப்பதிலேயே மோசம் அவன்’ என்று. ஆனால் அவன் என்னிடம்/என் முன்பு அப்படியில்லை. காரணம் நான் நம்புவதாலேயே நடித்திருக்கிறான். இன்னும் அனைத்து உறவுகளும், நபர்களுக்குத் தக்கவாரு இருப்பதாக உணர்கிறேன். நாம் நம்புவதால் அப்படி இருக்கிறார்கள். சில சமயம் நம்மை சிலர் நம்புவதால் நாம் அப்படி இருக்கிறோம்.

அய்யோ நான் இதையெல்லாம் யாரிடம் போய் சொல்வேன். உங்களைத் தவிர கேட்க அளில்லை அதனால் உங்களுக்கே எழுதுகிறேன். நீங்கள் கேட்கிறீர்கள் என்றே நம்புகிறேன்.

 

அன்புடன்

இரம்யா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘பிறசண்டு’ [சிறுகதை]

$
0
0

நன்றி K. P. Krishnakumar

 

“அப்பன் பாத்து வரணும்… வளி கொஞ்சம் எறக்கமாக்கும்”என்றான் ரத்தினம். அவர் கையைப்பிடித்து “பதுக்கே, காலை எடுத்து வைங்க” என்று காரிலிருந்து இறக்கினான்

“பாத்துக்கிடுதேம்ல, நீ கையை விடு…”

“விளுந்திருவீக”

“நான் உன்னைய பிடிச்சுகிடுதேன்… ”

அவர் அவன் தோளை பிடித்துக்கொண்டார். வெயில் ஏறியிருந்தது. கண்கள் கூசின. “லே அந்த கிளாஸை எடுலே”

“இருங்க”என்றான். டிரைவரிடம் “முருகேசன் அண்ணா, அந்த டாஷ்போர்டிலே ஒரு கூலர் கெடக்கு எடுங்க” என்றான்

முருகேசன் அதை எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தார். அதை கண்ணாடிக்குமேலே மாட்டிக்கொண்டார். அதுவரை வெண்ணிறமான இருளாகவே தெரிந்தது. கண்களுக்குள் சிவப்பு மஞ்சள் நீலம் என குமிழிகள் அலைந்தன. பிறகு பாதை தெளிந்தது. கூழாங்கற்கள் பரவிய மண்ணாலான பரப்பு. மேலிருந்து மழைநீர் ஓடி உருவான நீளமான தடங்கள்.

“பள்ளம் இருக்கு பாத்து”.

“இதாலே போலீஸ் ஸ்டேசன்?”

“இன்ஸ்பெக்டருக்க ஆப்பீஸ் இங்கயாக்கும்… ஸ்டேஷன் இல்ல” என்று ரத்தினம் சொன்னான் “வாங்க”

சிரோமணி “யம்மா, மண்டைக்காட்டம்மா” என்று மெல்ல நடந்தார். கால்கள் முதலில் தடுமாறினாலும் வழியை உணரத்தொடங்கியதும் உடலுக்கும் தரைக்கும் ஓர் இணக்கம் வந்தது

அவர் கையை எடுத்ததும் “பிடிச்சுகிடுங்க”என்றான்

“இல்ல, வேண்டாம்… ஒண்ணுமில்ல, நடக்கேன்”

அவர் நடந்தபோது இலையான் பூச்சி போல ஆங்காங்கே நின்று நடுநடுங்கினார். கால்களை தூக்கி தூக்கி வைத்து மேலே சென்றார்

அவர்கள் மெதுவாக நடந்து அந்த ஓட்டுக் கட்டிடம் நோக்கிச் சென்றார்கள். அது கார் நிற்கும் முற்றத்தில் இருந்து சற்று பள்ளத்தில் இருந்தது. சரிவான பாதையில் இறங்க இறங்க பெரிதாகி தலைக்குமேல் சென்றது.

பழைய திருவிதாங்கூர் காலகட்டத்து கட்டிடம். ஓடுகளை மட்டும் சமீபமாக மாற்றியிருந்தார்கள். பெரிய சுதைத்தூண்கள் கொண்ட வராந்தாவால் சூழப்பட்ட அறைகள் கொண்டது. சுவர்கள் கல்லடுக்கி கட்டப்பட்டவை.

அருகே சென்றபோதுதான் வராந்தாவில் ஏற எட்டு படிகள் இருப்பதை சிரோமணி கண்டார். ஆனால் நல்ல வசதியான நீளமான படிகள். கருங்கல்லை செதுக்கி உருவாக்கப்பட்டவை

நடுக்கம் ஓயும்வரை நின்றபின் முழங்காலில் கையை ஊன்றியபடி அவர் மேலேறினார். வராந்தாவை அடைந்தபோது வியர்த்திருந்தது. வராந்தா அரையிருளில் இருக்க உள்ளே அறைகள் முழுமையாக இருளில் இருந்தன. மின்விசிறிகள் கறகற என சுழலும் ஓசை.

சிரோமணி கறுப்புக் கண்ணாடியை கழற்றி சட்டைப்பைக்குள் வைத்தார். மற்ற கண்ணாடியையும் கழற்றி கண்களை அழுத்தி துடைத்துக்கொண்டார். மீண்டும் கண்ணாடியை போட்டு சற்றுநேரம் தரையை பார்த்துக்கொண்டிருந்தார்

தரையில் மண்ணாலான தரையோடு. அது மிகவும் தேய்ந்து சொரசொரப்பான பள்ளங்களாக இருந்தது. கருங்கல் சுவரை ஒட்டி நீண்ட பெஞ்சு போடப்பட்டிருந்தது. அதுவும் கனமான பழைய பெஞ்சு. சுவரில் அறிவிப்பு பலகைமேல் ஒட்டப்பட்ட காகிதங்கள் காற்றில் சிறகடித்தன.

“அப்பா இருங்க…இன்ஸ்பெக்டர் வந்தாச்சான்னு பாத்துட்டு வந்திருதேன்”என்றான் ரத்தினம்

“குடிக்க வெள்ளம் தந்திட்டுப் போலே”

ரத்தினம் தண்ணீர் குப்பியை அவர் அருகே வைத்தான். அவர் வீட்டில் சூடுசெய்த நீரைத்தான் குடிப்பது. அதை பெரிய கண்ணாடிக்குப்பியில் கொண்டுபோவார்

அவர் அமர்ந்துகொண்டார். அங்கே ஏற்கனவே ஒரு கிழவியும் அவளுடன் வந்த ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். அப்பால் தரையில் இரண்டு கிராமவாசிகள் குந்தி அமர்ந்திருந்தனர். ஒருவர் கையை கும்பிடுவதுபோல கோத்து நெற்றியில் சாய்த்து வைத்திருந்தார். மற்றவர் தடித்த கண்ணாடியால் காகிதக்கட்டு ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தார்.

கீழே வேப்பமர நிழலில் நிறையபேர் நின்றிருந்தனர். எல்லாருமே மிகமிக மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர். காகங்கள் வேப்பமரம் முழுக்க அமர்ந்து கூவிக்கொண்டிருந்தன. தரை முழுக்க வேப்பஞ் சருகுகள்.

வராந்தா முனையில் ஒருவர் தரையில் நின்று வராந்தாவையே மேஜையாக்கி மனு எழுதிக்கொண்டிருந்தார். கூட நாலைந்துபேர். இரண்டு பேர் பெண்கள்.

ரத்தினம் வந்து “இன்ஸ்பெக்டர் வர கொஞ்சம் நேரமாவும்னு சொல்லுதாக… பெஞ்சிலே உக்காருங்க. டீ வேணுமா?”என்றான்

“வேண்டாம்” என்றார் சிரோமணி

“ஆரு ரெத்தினராஜ்லா, இங்க என்ன?” என்று ஒருவர் ரத்தினத்தின் தோளைத்தட்டினார்.

நெற்றியில் சந்தனப்பொட்டு போட்டிருந்தார். பெரிய மீசை டை போடப்பட்டு முறுக்கிவிடப்பட்டிருந்தது. வெற்றிலைவாய். தொங்கிய கன்னங்கள். பெரிய பானைவயிற்றுக்குமேல் கருப்பு பாண்டை போட்டு பெல்ட் போட்டிருந்தார். வெள்ளைச் சட்டையில் கணுக்கை பித்தான்கள் போடப்பட்டிருந்தன. வக்கீலாக இருக்கலாம்

“வேலு சாரா? எப்டி இருக்கீக? நமக்கு இங்க ஒரு சின்ன வேலை. ஒரு விசாரணைக்கு வரச்சொன்னாங்க…இங்க என்ன?” என்றான் ரத்தினம்

“இங்கதானே நம்ம தொளிலு? ஒரு பார்ட்டியை என்குயரிக்கு வரச்சொன்னாங்க… உங்களுக்கு என்ன கேஸு?” என்றார் வேலு

“நம்ம வீட்டிலே ஒரு தெஃப்டு”

“தெஃப்டா?”

“ஆமா, திருடன் நுழைஞ்சிட்டான்…”

“பூட்டிட்டு வெளியூர் போனியளோ?”

“இல்ல, அதைச் சொன்னா வெக்கக்கேடு. வீட்டிலே மாடியிலே நானும் என் வீட்டுக்காரியும் மகளும் உறங்கீட்டிருந்தோம். கீளே  இவரு ஒரு ரூமிலே. இவரை பாத்துக்கிடுத வேலைக்கார அம்மா பக்கத்திலேயே பாய போட்டு படுத்திருக்கா..”

“ஆருக்கும் தெரியல்லியா? ஜெகஜ்ஜால கில்லாடி திருடன்னு நினைக்கேன்” என்றார் வேலு

“என்னச் சொல்ல?” என்று ரத்தினம் குரலை தாழ்த்தினான். “உள்ளதைச் சொன்னா உள்ள மானமும் போயிரும்… அப்பா ஆளைப் பாத்திருக்காரு”

“உள்ளதா?” என்றார் வேலு “சத்தம் போட்டாரோ?”

“இல்ல, அதில்லா சொல்லுதேன்” என்று ரத்தினம் சொன்னான். “இவருக்கு சுகர் உண்டு. நெர்வ் சிஸ்டமும் பிரச்சினையாக்கும். ஆனா பாத்ரூம் உள்ள ரூமிலே இருக்க மாட்டாரு. மனசுக்கு பிடிக்கல்லேன்னு சொல்லுவாரு. அதனாலே சைடு ரூமிலே இவருக்கு கட்டில். அங்கேருந்து மெயின்ஹாலுக்கு வந்து பின்னாடி திரும்பி பாத்ரூம் போகணும். ராத்திரியிலே நாலுதடவையாவது போயிருவார்… வெளக்கை போட்டுட்டு சுவரைப் பிடிச்சுட்டு மெதுவா நடந்துபோய்ட்டு அப்டியே வந்திருவாரு. அண்ணைக்கு போறப்ப திருடனை பாத்திருக்காரு”

“எங்க?”

“இவரு மெயின்ஹாலுக்கு வந்திருக்காரு. அப்ப மாடிப்படியிலே ஒருத்தன் உக்காந்திட்டிருக்கான். இவரு அவனை பாத்து  ‘ஏம்லே இங்க உக்காந்திட்டிருக்கே?’ன்னு கேட்டிருக்காரு. அவன் சாதாரணமா ‘சும்மா இப்டியே காத்தாட ஒக்காந்திட்டிருக்கேன் மாமா’ன்னு சொல்லியிருக்கான்.  ‘போயி படுலே, மணி பன்னிரண்டு ஆச்சுல்லா’ன்னு சொல்லிட்டு இவரு ஒண்ணுக்கு போயிட்டு வந்து படுத்திட்டாரு”

“அய்யோ, அவன் ஆளு உங்கள மாதிரி இருப்பானோ?”

“சின்னப்பய சார்… இருவது வயசு இருக்கும்னு சொல்லுதாரு… நமக்கு அம்பதாகுது”

“அப்ப?”

“நல்லா கேட்டுட்டேன். ‘நீங்க அவனை கண்டு என்னன்னு நினைச்சீங்க அப்பா?’ன்னு கேட்டா ‘ஆரோ நம்ம பயன்னு நினைச்சிட்டேன்பா’ ன்னு சொல்லுதாரு. ஆருன்னு நினைச்சாருன்னு ஞாபகம் இல்லை. ஆரோ சின்னப் பய உக்காந்திருக்கான், அம்பிடுதான் மனசிலே ஏறியிருக்கு”

“என்னவே இது, அக்குறும்பா இருக்கு!”

“என்னத்தைச் சொல்ல?காலம்பற பாத்தா கொல்லப்பக்கம் திறந்து கிடக்கு. பீரோ திறந்திருக்கு. வார்ட்ரோப் துணியெல்லாம் செதறி கெடக்கு. இவ சமையலறையிலே பருப்புடப்பாவுக்குள்ள அஞ்சுபவுன் செயின் வச்சிருக்கா.. அதையும் விடல்ல”

“எம்பிடு போயிருக்கும்?”

“மொத்தம் நாப்பது பவுன்… அறுபதினாயிரம் ரூபா. வெள்ளிப்பாத்திரம் கொஞ்சம்… பதினாறு பட்டுசாரி”

“நல்ல அறுவடைய பண்ணிட்டானே… ஆளு அவன் கில்லாடியாக்கும்… ” என்றார் வேலு உற்சாகமாக  “வே, அவனை பிடிச்சா சொல்லும்வே, அந்த திருமுகத்தை நான் பாக்கணும்”

“எனக்கு எரியுது, உமக்கு சிரிப்பு என்ன? ” என்றான் ரத்தினம் “சிரிப்பா சிரிச்சாச்சு… இவரு பாத்ததை அப்டியே மறந்திருந்தா கூட இந்தக் கேவலம் இல்ல. காலம்பற போலீஸு வந்து நிக்குது. இவரு எஸ்.ஐ கிட்ட போயி எல்லாத்தையும் சொல்லிட்டார். நான் மேலே கான்ஸ்டபிளுக்கு பீரோவ காட்டிட்டு இருந்தேன். இல்லேன்னா நிப்பாட்டியிருப்பேன்”

“வம்பாச்சே?”

“பின்ன? எஸ்.ஐ பிடிச்சுகிட்டாரு. ஆரோ உங்களுக்கு தெரிஞ்சவன்தான் வந்திருக்கான்னு சொல்லிட்டாரு. குடைஞ்சு குடைஞ்சு கேக்காரு.  ‘அதெப்டிவே வீட்டுக்குள்ள ஒருத்தன் வந்து உக்காந்திருக்கான், நீரு எப்டி அப்டியே விட்டுட்டு போனீரு?’ன்னு கேக்காரு. ‘இல்ல, காத்தாட உக்காந்திருக்கேன்னு சொன்னானே’ன்னு இவரு சொல்லுதாரு. எஸ்.ஐ அப்டியே தீப்பிடிச்சு எரிஞ்சிட்டாரு. ‘வே, வீட்டுக்குள்ள பூட்டை உடைச்சு வந்து உக்காந்தா காத்தாடுவான் ஒருத்தன்? அறிவிருக்கா வே’ன்னு கத்திட்டாரு… நான் வந்து சமாதானம் செய்தேன். அவருக்கு ஆறவே இல்ல. சொல்லிச்சொல்லி மனுசன் நொந்திட்டாரு…”

அவர்கள் இருவரும் சிரோமணியைப் பார்த்தனர். அவர் அவர்களை நிமிர்ந்து பார்த்தார். அவருடைய விழிகள் நரைத்திருந்தன. புருவமும் நரைத்திருந்தது. முகம் ஒருபக்கம் இழுபட்டமையால் வலக்கண் தழைந்து ,வாய் வலதுபக்கம் கோணலாகி ,அவர் முகம் ஒரு நிரந்தரமான பாவனையை காட்டியது. அவர் எதையோ மறந்துபோய் நினைவுகூர முயல்வதுபோல. தலைவேறு ஆடிக்கொண்டிருந்தது

வக்கீல் வேலு சட்டென்று சிரிப்பை அடக்கி பக்கவாட்டில் திரும்பிக்கொண்டார்

“என்னவே?”என்றான் ரத்தினம்

“இல்ல, பாத்தா சிரிப்பை அடக்க முடியல்ல. ஒருத்தன் வீட்டுக்குள்ள வந்திருக்கான்… ”

“செரி விடும்” என்றபோது ரத்தினத்துக்கே சற்று சிரிப்பு வந்தது

“இவருக்கு என்ன பிரச்சினை?” என்று வக்கீல் கேட்டது சிரோமணிக்கு கேட்டது. அவர் நிமிர்ந்து பார்த்துவிட்டு வேப்பமரம் பக்கமாக திரும்பிக்கொண்டார்.

“பல பிரச்சினை. பிரசர் சுகர் உண்டு.. நியூரோ பிராப்ளம் உண்டு. அதிலேதான் தொடக்கம்”

“டிரீட்மெண்டு எடுக்கல்லியோ?”

“எல்லாம் எடுத்தாச்சு. தொடங்கி முப்பது வருசமாச்சு…கூடிட்டே போவுது. செரி இனி என்னன்னு விட்டச்சு”

“ஓ, சின்ன வயசிலே வந்தாச்சா?”

“சிவில் எஞ்சீனியராட்டு இருந்தாரு, தெரியுமில்ல?”

“அப்டியா?”என்று வக்கீல் திரும்பிப்பார்த்தார்

“நாப்பத்திரண்டு வயசிலே வேலையிலே இருந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க… நாலு வருசம் ஜெயிலிலயும் இருந்தாரு”

“ஏன்?”

“சோலையாறு டேம் இவருக்க பொறுப்பாக்கும்.சிவில் எஞ்சீனியரிங்கிலே இருந்த இன்ட்ரெஸ்ட் அக்கவுண்டிங்கிலயும் ஆஃபீஸ் மேனேஜ்மெண்டிலேயும் கிடையாது.ராத்திரி பகலா கன்ஸ்டிரக்‌ஷன் சைட்டிலேயே இருப்பார். மத்த வேலையை எல்லாம் இவரோட சீனியரே கிளார்க்கை வச்சு பாத்துக்கிட்டார். இவரு சிக்னேச்சர் மட்டும் போட்டுட்டு இருந்தார். அவன் அந்தக்கால கணக்கிலே முப்பத்தஞ்சு லட்சம் வரை ஆட்டைய போட்டுட்டான். கூட நாலஞ்சு கிளார்க்குகளும் அக்கவுண்ட் ஆஃபீசருங்களும் உண்டு. இவரை மாட்டிவிட்டுட்டாங்க.. எல்லாமே பக்கா டாக்குமெண்டு… எல்லாருமே சாட்சி, என்ன செய்ய?”

“அப்டியா?” என்று வக்கீல் திரும்பி சிரோமணியைப் பார்த்தார்.

“அவன் மதுரைக்காரன். அப்பாசாமின்னு பேரு. கொஞ்சம் அரசியல் பேக்ரவுண்டு உண்டு. இவருக்கு ஒண்ணும் கெடையாது. அப்புராணி. எங்க தாத்தா கொத்துவேலை பாத்தவரு. இவரு நல்லா படிச்சதனாலே தோட்டத்தை வித்து படிக்க வச்சாரு… இவரு பதினொண்ணாம் கிளாஸிலே ஸ்டேட் லெவல் எட்டாம் ரேங்கு. அந்தக்காலத்து ஆர்.இ.சியிலே நாலாம் ரேங்கு… நேரா பி.டபிள்யூ.டியிலே இஞ்சீனியர்… ஆனா உலகம் தெரியாது.ஒருத்தர்கிட்டயும் ஒரு தொடர்பும் இல்ல. எந்த சப்போர்ட்டும் கெடையாது. என்ன செய்ய? வச்சு மாட்டிவிட்டானுக…நேரா ஜெயிலு…அப்ப இப்டி ஆனதாக்கும்”

வக்கீல் சிரோமணியை மீண்டும் திரும்பிப்பார்த்தார்

“அம்மைக்க அண்ணன் என்னை படிக்க வச்சதினாலே மனுசனா நிமுந்தேன்…அவருக்க மகளை கெட்டி அவருக்க பிஸினஸை பாத்ததனாலே இப்டி இருக்கேன்”

அவர்கள் இருவரும் மீண்டும் சிரோமணியை திரும்பி பார்த்தார்கள்.

வேலு மீண்டும் சிரிப்பை அடக்கி “உள்ளதைச் சொன்னா பாவமாட்டு இருக்கு வே. ஆனாலும் சிரிப்பு வருது” என்றார்

“சிரிப்பேரு…” என்றபோது ரத்தினமும் சிரித்தான்.

ஜீப் வந்து நின்றது.நாலைந்து கான்ஸ்டபிள்கள் அதை நோக்கி ஓடினார்கள். பலர் எழுந்து நின்றார்க்ள்

“இன்ஸ்பெக்டர் வந்திட்டாருன்னு நினைக்குதேன்” என்று வக்கீல் சொன்னார்.

அவர்கள் முன்னால் சென்று படிகளில் நின்றனர்.சிரோமணி எழப்போனார். ரத்தினம் அவர் எழவேண்டியதில்லை என்று கைகாட்டினான்

இன்ஸ்பெக்டர் வேகமாக வந்து படிகளில் ஏறி திரும்பி “ஏய், யார்ப்பா அது. மனுவெல்லாம் இங்க வச்சு எழுதக்கூடாது. அந்தால போ” என்றபின் உள்ளே சென்றார்.ரத்தினமும் வக்கீலும் வணங்கியதை வெறுமே பார்த்து தலையசைத்தார். போலீஸ்காரர்கள் உள்ளே போக ஒரு போலீஸ்காரர் “தள்ளுங்க.. கூட்டம்போடக்கூடாது”என்றார்.

வக்கீல் உள்ளே செல்ல, ரத்தினம் வந்து “அப்பா நான் பாத்துட்டு வந்திருதேன்… இங்க இருங்க” என்று சொல்லி உள்ளே சென்றான்

சிரோமணி மீண்டும் கொஞ்சம் தண்ணீர் குடித்தார். அப்போது அப்பால் தூணின் மறைவிலிருந்து ஒல்லியான உடலுடன் ஒருவன் வந்து அவர் அருகே தரையில் குந்தி அமர்ந்தான். “சார்!” என்றான்

“ஆரு?”என்றார் சிரோமணி. அவர் அவனை சிறுவன் என்று முதலில் நினைத்தார். ஆனால் மீசை இருந்தது.

“சாருக்கு ஆளைத் தெரியல்லியா? நானாக்கும்… வீட்டுக்கு வந்தேன்லா?”

“டிவி ரிப்பேரு பாக்க வந்தியோ?”

“இல்ல சார். நானாக்கும் திருட வந்தது”

அவருக்கு நினைவு வந்தது. அவர் உடல் நடுங்கி துள்ளி துள்ளி போட்டது. கைகள் பதறி அங்குமிங்கும் ஆடின

அவன் அவர் கைகளைப் பிடித்து சேர்த்து அழுத்திக்கொண்டான். “சார் பயப்படாதீக… நான் சும்மா பேசத்தான் வந்தேன்… அண்ணைக்கு வீட்டிலேயும் நான் ஒண்ணும் செய்யல்லேல்லா?”

“ஆமா”என்றார் சிரோமணி. கையை துழாவ அவன் புரிந்துகொண்டு தண்ணீர் புட்டியை நீட்டினான். அவர் அதை வாங்கி கொஞ்சம் குடித்தார். ஆறுதலாக உணர்ந்தார்

“சார் இப்ப திருடனை அடையாளம் காட்டுகதுக்காக்கும் உங்களை விளிச்சிருக்காங்க.சார் என்னையை அடையாளம் காட்டப்பிடாது”

“ஏம்லே?”

அவன் சிரித்து “வேண்டாம், என்னத்துக்கு? நீரு நம்ம பாட்டா மாதிரி இருக்கேரு” என்றான்

“ஆனா நீ திருடினேல்ல?சரோஜாவுக்க நகைய கொண்டுட்டு போனேல்ல?”

“ஆமா, அது செலவுக்கு பைசா இல்லாம செஞ்சதுல்லா”

“அதெப்ப்டிலே நான் சொல்லாம இருக்க முடியும்?”

“சொல்லாம இருங்க… கண்ணு தெரியல்லன்னு சொல்லுங்க. நான் கையிலே பிளாஸ்டிக் கவரு போட்டிருந்தேன். அதனாலே கைரேகை இருக்காது. நீங்க சொல்லேல்லன்னா என்னைய பிடிக்க முடியாது”

“நான் சொன்னா நீ இல்லேன்னு சொல்லுவேல்ல?”

“விடமாட்டாக, அடிச்சு பிரிச்சுப் போடுவாக. தொண்டிமுதலும் ரூபாயும் கிட்டாதவரை அடிச்சுகிட்டே இருப்பாக. நான் செத்திருவேன்”

“நீ திருடினேல்ல?”

“பின்ன செலவுக்கு என்ன பண்ண?”

“என்ன செலவு?”

“பைக்கு இருக்கு…அதுக்கு எண்ணை ஊத்தணும்லா?”

“ஆமா”என்றார் சிரோமணி

“எண்ணைவெலைய காலம்பற காலம்பற கண்டமானிக்கு ஏத்துதானுக…என்ன செய்ய? தெரியாதுன்னு சொல்லி போடுங்க” என்று சொல்லி திரும்பி அப்பால் நின்ற ஒரு பெண்ணிடம் “ஏட்டி சொல்லுடி”என்றான்

அவர் திரும்பிப் பார்த்தார். மிக அழகான பெண். பதினெட்டு வயது இருக்கும். மெலிந்தவள். சீரான பல்வரிசையும் பெரிய கண்களும் கொண்டவள்

“இவ ஆருலே?”

“நான் கெட்டப்போற குட்டியாக்கும்… நல்ல குட்டி. தையலு படிக்குதா… ஏய் சார கும்பிடு”

அவள் வந்து அவர் காலை தொட்டு கும்பிட்டாள்

“நல்லா இரு”என்று சிரோமணி சொன்னார் “நீ எதுக்குடி கள்ளனை கெட்டுதே?”

அவள் புன்னகைத்தாள்.

“நல்ல குட்டி”என்று அவன் சொன்னான். “நல்லா அளகாட்டு படமா தைப்பா”

“நீ மரியாதைக்கு ஜீவிக்கப்பிடாதாலே?”

“இனிமே மரியாதைக்கு சீவிக்குதேன்… பாட்டா, இந்த தடவை சொல்லீருங்க… ஒண்ணுமே தெரியல்லன்னு சொல்லீருங்க”

“லே, நீ எதுக்கு அண்ணைக்கு ராத்திரி படியிலே இருந்தே?”

“யோசிக்கணும்லா? ஒரு எடத்திலே அமைதியா இருந்து யோசிச்சுப் பாத்தேன்”

“என்னன்னு?”

“பைசாவும் நகையும் எங்கே இருக்குன்னு…”

“அப்ப நான் உன்னை பாத்தேன்..” என்றார் சிரோமணி “நீ எப்டிலே அப்டி தைரியமா இருந்தே?”

“பின்ன? எந்திரிச்சு ஓடியிருந்தா நீங்க கூவி  சத்தம் போட்டிருப்பீகள்லா?”

“ஆமா”என்று சிரோமணி சொன்னார். “ஆனாலும் உனக்க பிரெசென்ஸ் ஆஃப் மைண்டு அபாரமாக்கும்”

அவன் பிரெசென்ஸ் என்று மெல்ல சொல்லிக்கொண்டான். திரும்பி அந்தப்பெண்ணை பார்த்துச் சிரித்தான். பிறகு அவர் கைகளைப் பிடித்து அழுத்தி “தெரியாதுன்னு சொல்லீருங்க பாட்டா… இப்ப என்ன?”என்றான்

“லே, உனக்க சாமர்த்தியம் எனக்கு இருந்திருந்தா நான் அந்த அப்பாசாமிப் பயலையும் கேஸிலே இளுத்து விட்டிருப்பேன். கேஸை அவனே பாத்திருப்பான்… நான் மரியாதையா வேலைபாத்து ரிட்டயர் ஆகியிருப்பேன்” என்றார் சிரோமணி “தோணல்ல,தோணியிருந்தாலும் தைரியம் இருந்திருக்காது”

“அதுக்கு பிறசண்டு வேணும்லா?”என்று அவன் சொன்னான்

“ஆமா வேணும்…நாக்கிலயும் மனசிலயும்… லே மக்கா நாம ஆளு ஈஸியா இருந்தா அது வந்திரும். நான் முறுக்கிப்பிடிச்ச மாதிரி இருந்தேன். உடைஞ்சுபோயிட்டேன்”

“பிறசண்டு நல்லதாக்கும்” என்று அவன் சொன்னான். “பாட்டா நீரு நல்லவராக்கும். நீரு சொல்ல மாட்டேரு… இன்ஸ்பெக்டர் நாலஞ்சு பேரை வரச்சொல்லியிருக்காரு… எட்டுபேரு உண்டுண்ணு நினைக்கேன். எட்டுபேரையும் மாறிமாறி பாத்துட்டு தெளிவா தெரியல்லைன்னு சொல்லீரும், கேட்டியளா?”

“ஆனா நீ எப்டிலே அப்டி இருந்துபோட்டே… என்னா ஒரு சிரிப்பு…நினைச்சே பாக்க முடியல்ல”

“பாட்டா, இவ நல்ல பிறசண்டு உள்ள குட்டியாக்கும்… நீங்க ஆசீர்வாதம் செய்தாச்சு… இவளுக்காக நீங்க சொல்லணும்… ஒண்ணுமே தெரியல்லண்ணு”

“செரிடே”

“அப்பம் செரி…நான் மாறி நிக்கேன்… உங்க மகன் இப்ப வந்திருவான்”

“செரிடே, உனக்க பேரு என்ன சொன்னே?”

“சொல்லேல்ல…”என்றான் “ஏ.இன்னாசி முத்து,வயசு இருபத்திமூணு”

“உனக்கு அப்பனம்மை உண்டா?”

“அம்மை இருக்கா. அப்பன் விட்டுட்டு போயிட்டாரு. அம்மை ஒரு மாதிரி பிறசண்டு இல்லாத்த கிளவியாக்கும்”

“இவ பேரு?”

“எஸ்தர்… ஏட்டி கும்பிடுடீ”

அவள் மீண்டும் கும்பிட்டாள்.

“நல்ல பேரு…நல்ல குட்டி” என்றார் சிரோமணி

“வாறாரு’என்று எஸ்தர் சொன்னாள். அப்பால் ரத்தினம் கையிலிருந்த தாளை வாசித்தபடி வந்து கொண்டிருந்தான்.

“நான் மாறி நிக்குதேன்”என்று இன்னாசி எழுந்தான்

“அடிக்கடி வீட்டுக்கு வாடே” என்றார் சிரோமணி

=======

தொடர்புடைய பதிவுகள்

பொன்னீலன்

$
0
0

 

பொன்னீலன் இதயத்தில் ஒரு தாக்குதல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். அவர் மகளும் மனைவியும் உடனுள்ளனர். சிலநாட்களில் ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யப்படும். பெரிய சிக்கல் ஏதுமில்லை.

சென்றசில நாட்களில் அவர் ஒருசிலரால் கடுமையாக வசைபாடப்பட்டு துன்புற்றார் என்று கேள்விப்பட்டேன். அவருடைய இயல்புக்கு அந்த வசைபாடல்களை அவர் கொஞ்சம் உணர்ச்சிகரமாகவே எடுத்துக்கொள்வார். அவருடைய கட்சிiநண்பர்கள், முகநூல் மார்க்ஸியர் பலரே அவரை அத்துமீறி தாக்கினார்கள் என்றும் அதில் ஒருசாராரிடம் மதவெறியே மிகுந்திருந்தது என்றும் கேள்விப்பட்டேன்

அதற்குக் காரணமாக அமைந்தது கல்கியில் பொன்னீலன் என்னைப்பற்றி எழுதிய சிறு குறிப்பு. என் எழுத்தைப் பாராட்டி அவர் எழுதியிருந்தார். அதை இன்றைய முகநூல்மார்க்சியர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவர்கள் மார்க்ஸியம் என்றால் நாவார வசைபாடுவது எறு புரிந்துகொண்டவர்கள்.

அடிப்படையில் இதிலுள்ளது தலைமுறை இடைவெளி. பொன்னீலனுடைய தலைமுறை தூயமார்க்ஸியத்தில் நம்பிக்கை கொண்டது, அதற்காக வாழ்க்கையை அளித்தது. கூடவே தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையான ‘சான்றோர் மரபைச்’ சேர்ந்தவர் அவர். அவருடை மார்க்ஸியம் அவ்விரு பண்பாட்டுக்கூறுகளின் கலவை

ஆகவேதான் அவரால் திருமூலரையோ வள்ளலாரையோ ஐயா வைகுண்டரையோ மார்க்ஸியத்துடன் இயல்பாக இணைத்துக் கொள்ளமுடிகிறது. அவருக்கு எதிர்மறைக்கூறுகள் இல்லை. எவருடனும் காழ்ப்புகளும் தனிப்பட்ட விலக்கங்களும் கிடையாது. மேலும் அவருடைய தலைமுறையில் மார்க்சியம் மெய்யாகவே ஒரு புதிய உலகை உருவாக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அது ஒரு மக்களியக்கமாகவும் திகழ்ந்தது.

அவருடைய அடுத்த தலைமுறைக்கு மார்க்ஸியத்தின் புத்துலகக் கனவுகள் உண்மையில் கிடையாது. அதெல்லாம் வெறும்பேச்சு என அவர்களுக்கு ஆழத்தில் நன்றாகவே தெரியும். சாதி,மத நிலைபாடுகளுக்கும் தனிப்பட்ட காழ்ப்புகளுக்கும் மார்க்ஸியம் ஒரு திரை மட்டும்தான் அவர்களுக்கு. அவர்களால் காழ்ப்பின்றி செயல்பட முடியாது.அக்காழ்ப்பின் நஞ்சை அவர்கள் தங்கள் மூத்தவர்களுக்கும் அளிப்பார்கள். அவர்கள் எத்தகைய பெரியவர்கள், தியாகிகளாக இருந்தாலும்.

இது உண்மையில் குறுங்குழுக்களின் பண்பாடு. மார்க்ஸியக் குறுங்குழுக்களிலேயே இப்படி மாறிமாறி கடித்துக் குதறி ரத்தம் உறிஞ்சும் மனநிலைதான் நிலவும். அவர்களின் தலைவர்களும் மூத்தவர்களும் ஒரு கட்டத்தில் அடுத்த தலைமுறையினரால் துரோகிகளாக முத்திரைகுத்தப்படுவார்கள்

கம்யூனிஸ்டுகள் இன்று அகன்றுவிரிந்த கட்சி என்பதிலிருந்து குறுங்குழுவாக தங்களை மாற்றிக்கொண்டே செல்கிறார்கள்போல தோன்றுகிறது. கட்சிக்கு வெளியே இன்று இடதுசாரிகளாக அறியப்படுபவர்கள் பலர் பல்வேறு உளச்சிக்கல்களை மார்க்ஸியத்தின் பெயரால் முகநூலில் கொட்டிக்கொண்டிருக்கும் சிறியமனிதர்கள்.

பொன்னீலனுடன் எனக்குள்ள உறவு முப்பதாண்டுக்கால நீட்சி கொண்டது. அவரை சுந்தர ராமசாமியின் நண்பர் என்றுதான் எனக்கு தெரியும். 1988 ல் சுந்தர ராமசாமியின் வீட்டில் அவரைச் சந்தித்தேன். அன்று அந்த ‘சபையில்’ அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களில் பொன்னீலன் மட்டும்தான் மார்க்ஸியர்

சுந்தர ராமசாமி,எம்.எஸ். போன்றவர்களுடன் பொன்னீலனுக்கு இருந்த உறவு என்பது கட்சி, அரசியல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது. அரசியல்ரீதியாக கடுமையான முரண்பாடுகளுடன் வாழ்நாள் முழுக்க நீடித்த உறவு அது

1992l பொன்னீலனின்  ‘புதியதரிசனங்கள்’ நாவல் வெளிவந்தபோது நடந்த விமர்சனக்கூட்டத்தில் அவருடைய அழைப்பின்பேரில் தர்மபுரியில் இருந்து வந்து பேசியிருக்கிறேன்.நான் நாகர்கோயிலில் எடுத்த எல்லா விழாக்களிலும் அவர்தான் தலைமை. எம்.எஸ், நாஞ்சில்நாடன், வேதசகாயகுமார், அ.கா.பெருமாள் என அனைவருடைய பாராட்டுவிழாக்களையும் அண்ணாச்சியின் தலைமையில்தான் நடத்தியிருக்கிறேன்.

அது ஒரு மங்கலம் என்பதே என் எண்ணம். பொன்னீலன் வந்து மனம்விட்டு பாராட்டிப் பேசுவார். சற்று கூடுதலாகவே பாராட்டுவார், நம் தகுதிக்கு மீறிய பாராட்டு என நமக்கே தெரியும்தான், அது அவருடைய தலைமுறையின் வழக்கம். அதை ஒரு பெரியமனிதரின் வாழ்த்தாக எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்

அவர் வந்து வாழ்த்தி பாராட்டிச் சென்றவர்கள் எல்லாம் மார்க்ஸியர்கள் அல்ல, சொல்லப்போனால் வேதசகாயகுமார் போன்றவர்கள் கடுமையான மார்க்ஸிய எதிர்ப்பாளர்கள். மட்டுமல்ல, அவர்கள் பொன்னீலனையே கடுமையாக எதிர்த்தவர்கள். அந்தப்பாராட்டுக்கு பிறகும் எதிர்ப்பவர்கள். அது அவருக்கு எப்போதுமே ஒரு பிரச்சினை அல்ல.

அதைத்தான் நான் தமிழின் சான்றோர்மரபு என்கிறேன். அது கருத்தியல்செயல்பாடுகளுக்கு அப்பால் மனித உறவை நிறுத்துவது. அத்தனைக்கும் அப்பால் மனிதனோடு மனிதன் பேச இடமளிப்பது. ஒருபோதும் பண்பின் எல்லை தாண்டி எதையும் சொல்லாதது. எந்நிலையிலும் அன்பின், அரவணைப்பின் மொழியில் பேசுவது.

அந்த சான்றோர் மரபு ஜீவாவிடம் இருந்தது. ஜெயகாந்தனிடம் இருந்தது.  ஞானியிடம் இருந்தது.கந்தர்வனிடம் இருந்தது. பவா செல்லத்துரையில் நீடிக்கிறது.அது இங்கே ஒரு பெரிய பண்பாட்டு உரையாடலை உருவாக்க தொடர்ச்சியாக முயன்றது. ஒருங்கிணைப்பதன் வழியாக ஒரு அறிவுச்செயல்பாட்டை உருவாக்க முயன்றது. பொன்னீலன் அதன் ஒரு முகம்.

நான் மார்க்ஸியக் கட்சிகளின் நேரடி ஆதரவாளன் அல்ல.மார்க்ஸியத்தின் வரலாற்று ஆய்வுநோக்கை ஏற்றுக்கொண்டவன். அதன் அடிப்படை அறவியலை ஏற்றுக்கொண்டவன். அதன் இந்திய அரசியல்ச் செயல்பாட்டை விமர்சனத்துடன் அணுகுபவன். அதில் ஏதும் ரகசியம் இல்லை. மிகமிக விரிவாக எழுதியிருக்கிறேன்

பொன்னீலன் உறுதியான கட்சி ஆதரவாளர். அவர் என் கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர் அல்ல. அதை மேடைகளிலேயே சொல்லிவிட்டே மேலே பேசுவார். அது எவ்வகையிலும் நான் அவர்மேல் கொண்டுள்ள பணிவுகலந்த மதிப்பையோ அவர் என்மேல் கொண்டிருக்கும் அன்பையோ மாற்றப்போவதில்லை

எழுத்தாளன் விமர்சிக்கும் தகுதி கொண்டவன். மெய்யான மார்க்சிஸ்டுகளுக்கு அந்த புரிதல் இருப்பதனால்தான் கேரளத்தின் முதன்மையான மார்க்ஸிய அரங்குகளுக்கு நான் அழைக்கப்படுகிறேன். கேரளத்தின் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிகாரபூர்வ இதழான தேசாபிமானியின் எழுபத்தைந்தாவது ஆண்டு கருத்தரங்கையே நான்தான் தொடங்கிவைத்து உரையாற்றினேன்

இந்த வசைகளை நான் எதிர்பார்த்தேன். பொன்னீலன் அந்தப் பாராட்டை எழுதியிருக்கக் கூடாது என்றே நினைக்கிறேன். சென்ற சிலநாட்களாகவே தனிமையால் சோர்ந்த நிலையில்தான் இருந்தார். எப்போதும் நண்பர்களுடன், இளவல்களுடன் இருந்த பெருவாழ்வு அவருடையது. அச்சோர்வுடன் இந்த தாக்குதல்களும் சோர்வை உருவாக்கியிருக்குமோ என்று ஐயம் எழுந்து என்னை வருத்தம் அடையச் செய்கிறது.

பொன்னீலன் நலம்பெறவேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–65

$
0
0

பகுதி ஆறு : படைப்புல் – 9

பதினாறாவது நாள் பாலையின் மறு எல்லையை நெருங்கிக்கொண்டிருந்தோம். விடிவெள்ளி எழத்தொடங்கியிருந்தது. தங்குவதற்கான மென்மணல்குவைகள் கொண்ட இடம் ஒன்றை கண்டடைந்து, அங்கே அமைவதற்கான ஆணையை கொம்பொலிகளினூடாக அளித்து, ஒவ்வொருவரும் மணலில் நுரை ஊறிப் படிவதுபோல் மெல்லிய ஓசையுடன் அடங்கத் தொடங்கியிருந்தனர். வளை தோண்டுபவர்கள் அதற்கான தொழிற்கலன்களுடன் கூட்டமாகச் சென்றனர். பெண்கள் அடுமனைப் பணிக்கு இறங்கினர். குழந்தைகளை உலருணவும் நீரும் அளித்து துயில வைத்தனர்.

இரவில் ஓசையில்லாமல்தான் நடந்துகொண்டிருப்போம். இருட்டுக்குள் ஒரு கரிய நதி ஒழுகிச் செல்வதுபோல என்று தோன்றும். அல்லது மரக்கிளைகளில் காற்று செல்வதுபோல. காலையில் அமையப்போகும் இடம் கண்டடையப்பட்டதுமே ஓசை எழும். முதலில் அது கலைவோசையாக, பின்னர் பேச்சொலிகள் கலந்த முழக்கமாக, பின்னர் ஓங்கி ஓங்கி பெருகும் ஓசையலைகளாக எழும். பின்னர் மெல்ல அடங்கத் தொடங்கும். ஒவ்வொருவரும் உண்டு உறக்கம் நோக்கி செல்வார்கள். விரைவிலேயே அங்கே ஒரு பெருந்திரள் இருப்பதற்கான சான்றே இல்லாமல் அனைவரும் மறைந்துவிட்டிருப்பார்கள்.

அன்று அந்தக் கலைவோசை அடங்கிக்கொண்டே செல்கையில் முகப்பு முனையில் உரத்த குரலில் பூசலிடும் ஓசை எழுந்தது. சிலர் ஓடினார்கள். சிலர் கூச்சலிட்டார்கள். பெண்களும் குழந்தைகளும் அழுதனர். நான் எழுந்து என்னருகே நின்ற காவலனிடம் “என்ன? என்ன?” என்றேன். அவன் “நோக்கிவருகிறேன், இளவரசே” என்று முன்னால் ஓடினான். இன்னொருவன் என்னை நோக்கி வந்து “முகப்பில் தென்மேற்கு முனையில் அந்தகர்களுக்கும் ஹேகயர்களுக்குமிடையே பூசல் எழுந்துள்ளது…” என்றான். “எதன் பொருட்டு?” என்றேன். “அறியேன். பூசல்கள்…” என்று அவன் சொன்னான்.

நான் என் புரவியை ஆற்றுப்படுத்தி அதற்கு ஸாமி மரஇலைகளை உப்பு கலந்த மாவுடன் உணவாக வைத்துக்கொண்டிருந்தேன். பூசல் அதுவாகவே அமைந்துவிடும் என்று எண்ணினேன். அந்த நீண்ட பாலைநிலப் பயணத்தில் துவாரகையில் இருந்த பூசல்களும் கசப்புகளும் பொருளற்றதாக பின்னகர்ந்துவிட்டிருந்தன என்று எனக்கு தோன்றியது. துவாரகையே ஏதோ பழைய நினைவெனத் தோன்றியது. ஆனால் அங்கு பூசல் ஓங்கிக்கொண்டே இருப்பதை உணர்ந்தேன். அதன் பின் அதை தணிக்கும் குரல்கள் எழுந்திருக்கலாம். ஓசைகள் நின்றன. செவிகளாலேயே அவர்கள் ஒவ்வொருவரும் பிரிந்து விலகி அகல்வதை அறிந்து கொண்டிருந்தேன்.

எண்ணியிராக் கணத்தில் அலறலோசை கேட்டு திரும்பிப்பார்த்தேன். எவரோ எவரையோ கடுமையாகத் தாக்கிவிட்டார்கள் என்று தெரிந்தது. “அந்தகர்கள் கொன்றுவிட்டார்கள்! போஜர்களை அந்தகர்கள் கொன்றுவிட்டார்கள்!” ஒரு மின்னல் திரள் மேலே பாய்ந்ததுபோல மொத்த யாதவக் குடியும் ஒரு திடுக்கிடலை அடைந்தது. பின்னர் என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை. ஒவ்வொருவரும் வெறிகொண்டு ஒவ்வொருவரையும் தாக்கிக்கொள்ளத் தொடங்கினார்கள். படைக்கலங்களாலும் தொழிற்கலன்களாலும் போரிட்டனர். அருகிலிருந்த அனைத்துப் பொருட்களையும் எடுத்து வீசினர். ஒருவர் மேல் ஒருவர் பாய்ந்து பற்களாலும் நகங்களாலும் கடித்தனர்.

முதலில் தங்கள் எதிரிகளை அவர்கள் தாக்கிக்கொண்டார்கள். அவ்வாறு தாக்குவதை பலமுறை அவர்கள் உள்ளத்தில் நிகழ்த்திக்கொண்டிருந்ததனால், கனவுகளில் அது பலமுறை நிகழ்ந்துவிட்டிருந்ததனால், வெறிகொண்டபோது அது கணந்தோறும் மிகுந்து எழ அதை இயல்பாக செய்தார்கள். பாய்ந்து குரல்வளைகளைக் கடித்து குருதியுடன் நரம்புகளை பிய்த்தெடுத்தார்கள். அறைந்து செவிகளையும் மூக்கையும் கடித்து துப்பினார்கள். கைகளை முறுக்கி ஒடித்தனர். உயிர்க்குலைகளை கவ்வி கசக்கினர். பெரும்பாலானவர்களிடம் கொல்லும் படைக்கலம் எதுவும் இல்லை. துவாரகையில் இருந்து கிளம்பும்போது மிகக் குறைவாகவே எங்களிடம் படைக்கலங்கள் இருந்தன. எளிய யாதவரும் வேளாண்குடியினரும் படைக்கலம் பயின்றவர்கள் அல்ல என்பதனால் அவர்களுக்கு அவை அளிக்கப்படவில்லை.

உண்மையில் படைக்கலங்களை வைத்திருந்தவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு இருந்தது. வெறி கொண்டு தாக்கியவர்க்ள் எந்த படைக்கலமும் இல்லாதவர்கள். அவர்கள் அதை தங்கள் வெறியால் ஈடுகட்டினர். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொல்ல உள்ளமே போதுமானது என்று அப்போது கண்டேன். ஒரு கணத்தில் என்னைச் சூழ்ந்து வெறிகொண்ட முகங்களும், பித்தெடுத்த கண்களும், வலிப்பெழுந்த உடல்களுமாக நான் அன்றுவரை கண்டுவந்த மக்களே பாதாள உலகங்களிலிருந்து எழுந்து வந்த பேயுருவங்களாக மாறுவதை கண்டேன். குருதி மணம் எழுந்தது. அது ஆணையிடும், கவரும், பித்தெடுக்க வைக்கும் மணம். தெய்வங்களுக்கு திமிரேற்றுவது, மானுடரை பற்றி எரியவைப்பது. குருதி மணம் ஒவ்வொருவரையும் விலங்குகளாக்கியது. பலிகொள்ளும் தெய்வங்களாக்கியது.

ஃபானு தன் குடிலிலிருந்து வெளிவந்து “என்ன நடக்கிறது? பூசலா? உடனடியாக அமையச் சொல்லுங்கள். இங்கு பூசலுக்கு ஒப்புதல் இல்லை. பூசல்களில் ஈடுபடுவோர் கடுமையாக ஒடுக்கப்படுவார்கள். இது எனது ஆணை” என்றார். பிரஃபானு சலிப்புடன் “எவரிடம் ஆணையிடுவது?” என்றார். “நமது படையினரை அவர்களை அடக்கச் சொல்லுங்கள்” என்றார் ஃபானு. “அரசே, இப்போது படையென இருப்பது கருவூலத்தைக் காத்துவரும் இந்த ஆயிரம் பேர்தான். இவர்களை இங்கிருந்து அனுப்பினால் நாம் பாதுகாப்பற்றவர்கள் ஆகிவிடுவோம்” என்றார் பிரஃபானு.

“என்ன செய்வது? பிறகென்ன செய்வது இப்போது?” என்று ஃபானு பதறினார். “அவர்களே அடித்துக் கொன்று விலகட்டும். இத்திரளில் எத்தனை பேர் செத்துவிழுகிறார்களோ அத்தனை நன்மையென்று கொள்வோம். நம்மிடம் இருக்கும் உணவு போதாமலாகுமோ என்ற ஐயம் நமக்கு இருந்தது. அவர்கள் அவ்விடருக்கு தாங்களே விடை காண்கிறார்கள். இதில் உயிரிழப்பவர்கள் நமக்கு உணவை மிச்சம் ஆக்குகிறார்கள் என்று கொள்வோம்” என்றார். “அரசனென இதை பார்த்து நிற்பது பதற வைக்கிறது” என்றார் ஃபானு. “அரசர்களை இது பதற வைக்காது. குடித்தலைவர்களையே இது பதற வைக்கும்” என்று பிரஃபானு சொன்னார்.

கூச்சலிட்டும் கொன்றும் அலறியும் செத்தும் கொப்பளித்துக்கொண்டிருந்த கும்பல் மிக விரைவிலேயே உணர்ச்சிகளை இழந்தது. உடலாற்றல் கூடவே சரிந்தது. போர்வீரர்கள் என்பவர்கள் சினமின்றி போராடக் கற்றவர்கள். ஆகவே அவர்களால் நெடுநேரம் போரிட முடியும். தங்களை ஒற்றைத்திரள் என்று ஆக்கிக்கொண்டவர்கள், ஆகவே ஒருவர் களைப்புற இன்னொருவர் மேலெழ விசை குறையாது அவர்களால் நெடுந்தொலைவு செல்லவும் முடியும். பெருந்திரள் மிக விரைவிலேயே உடலாற்றலையும் உணர்வாற்றலையும் இழந்தது. பெருந்திரளால் மிகக் குறைவான பொழுதே அழிவை உருவாக்க முடியும் என்பதை அப்போது கண்டேன்.

ஒரு நாழிகைக்குள் ஒவ்வொருவரும் விலகி அங்கங்கே படிந்தனர். புண்பட்டவர்களும் இறந்தவர்களும் பிரித்தறிய முடியாதபடி கிடந்தனர். கொன்றவர்களும் கொல்லப்பட்டவர்களும் ஒன்றேபோல மணலில் வெற்றுடல்களாக விழுந்து கிடந்தனர். விழிதொடும் எல்லைவரை நெளிந்துகொண்டிருந்த புழுக்கூட்டங்களைப்போல் அத்திரளை பார்த்தேன். விருகன் புரவியில் வந்து பாய்ந்திறங்கி “என்ன நிகழ்கிறது அங்கே? எதிரிகளா?” என்றார். “ஒன்றுமில்லை, நெடும்பொழுதாக அவர்கள் வெறும் உடல்களாக வந்துகொண்டிருந்தார்கள். இப்போது உள்ளங்களாக வெளிப்பட்டுவிட்டார்கள். மீண்டும் உடல்களாக மாறுவார்கள்” என்று பிரஃபானு சொன்னார்.

மெல்ல அவர்கள் அடங்கினர். ஒவ்வொருவரும் நிலைமீண்டனர். பெருமூச்சுடன் தனிமையுடன். என்ன நிகழ்ந்தது என்றே தெரியாத திகைப்புடன். பெண்கள் மட்டும் கதறிக்கொண்டிருக்க ஆண்கள் மணலில் விண்ணையோ மண்ணையோ வெறித்து நோக்கி அமர்ந்திருந்தனர். அன்று அத்திரளில் ஐந்தில் ஒருவர் கொல்லப்பட்டனர். அவ்வுடல்களுடன் அங்கே தங்கமுடியாதென்பதனால் உடனடியாகக் கிளம்பி அடுத்த சோலைக்கு செல்ல ஃபானு ஆணையிட்டார். அவ்வெண்ணத்தை அவருக்கு சொன்னவர் பிரஃபானு. “இங்கிருந்து நாம் விலகிச்செல்ல வேண்டும். ஒன்று, இவ்வுடல்களைவிட்டுச் செல்வதற்காக. இன்னொன்று, இங்கிருந்து நம்முடன் எழுந்து வருபவர்கள் மட்டும் வந்தால் போதும் என்பதற்காக” என்றார்.

ஃபானு “புண்பட்டவர்கள்…” என்று சொல்லத் தொடங்க பிரஃபானு “புண்பட்டவர்கள், நடக்க முடியாதவர்கள் இங்கேயே கைவிடப்படவேண்டும். அவர்கள் இங்கேயே இறந்துபோவது நமக்கு நல்லது. நம்மால் நோயாளிகளை சுமந்துகொண்டு பயணம் செய்ய இயலாது. அவர்கள் அங்கே வந்து நமக்கு சுமையாக ஆகக்கூடும்” என்றார். நான் “ஆனால் அவர்கள் நம்மவர்” என்றேன். “அங்கே துவாரகையில் பேரலையில் பல்லாயிரம் பேர் இறந்தனர். அந்த உடல்களை அப்படியே மணலில் புதையவிட்டுவிட்டு நாம் கிளம்பினோம். அவர்களில் மேலும் சிலர் இறந்தால், கைவிடப்பட்டால் என்ன குறைகிறது?” என்று பிரஃபானு கேட்டார்.

உடனே கிளம்பும்படி ஃபானுவின் ஆணை வந்தது. அது முரசொலியாக எழுந்ததும் அனைவரும் திடுக்கிட்டனர். ஆணைதானா என்று குழம்பினர். உறுதியாக முரசுகள் ஆணையிட்டுக்கொண்டே இருந்தன. அவர்கள் எழுந்து நிரைகொண்டனர். பொருட்களையும் குழந்தைகளையும் எடுத்துக்கொண்டனர். புண்பட்டவர்களும் நோயுற்றவர்களும் கூடவே எழுந்து நின்று கூச்சலிட்டனர். அவர்களின் உற்றார்கள் அவர்களை அழைத்து வருவதற்கு முயன்றனர். ஆனால் அரசப்படையும் உடல்நலம் கொண்டவர்களும் விரைந்து விலகிச்செல்ல ஆணை எழுந்தது. அவர்கள் விரைந்து செல்ல செல்ல மற்றவர்கள் கூச்சலிட்டனர்.

வேறுவழி இருக்கவில்லை. மிக விரைவில் கதிர் மேலெழுந்து வெப்பம்கொள்ளத் தொடங்கிவிடும். அதன்பின் நடக்க முடியாது. உடனே அடுத்த சோலைக்கு சென்றாக வேண்டும் என்பதனால் ஒவ்வொருவரும் முடிந்த விரைவில் சென்றனர். அவர்களின் விசையைக் கண்ட பின்னர் மற்றவர்கள் தங்கள் உற்றவர்களை ஆங்காங்கே அப்படியே விட்டுவிட்டு ஓடிவந்தனர். காலொடிந்தவர்கள் தசைகிழிந்தவர்கள் தங்களை விட்டுவிட்டு செல்ல வேண்டாம் என்று கைநீட்டி கூச்சலிட்டு அழுதனர். “அழைத்துச் செல்லுங்கள், தந்தையே!” என்று மைந்தர்கள் அலறினர். “மைந்தா, நான் உடன் வருகிறேன்!” என்று தந்தையர் கூவினர்.

சற்று நேரத்தில் தொலைவில் இருந்து பார்த்தபோது அங்கு உடல்கள் சிதறிக் கிடந்தன. அவ்வுடல்களிலிருந்து தவழ்ந்தும் உந்தியும் தங்களை முன்னெழுப்பிக்கொண்ட உடல்கள் நெடுந்தொலைவு வரை வழிந்து வந்திருந்தனர். தளர்ந்து நடந்து வந்தவர்களின் நிரை எங்களுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்தது. நடைதளராதவர்கள் முன்னால் நடந்து சென்றனர். திரும்பிப் பார்த்த ஃபானு “குறைந்துகொண்டே வருகிறோம்” என்றார். பிரஃபானு “ஆம், ஆனால் வருபவர்கள் அனைவரும் உடலூக்கம் கொண்டவர்கள்” என்றார்.

பிரஃபாச க்ஷேத்ரம் மேலும் இரண்டு நாள் நடையில் வந்து சேர்ந்துவிடும் என்று சுருதன் கூறினார். அங்கு சென்று சேரும்போது கிளம்பியவரில் மூன்றில் ஒரு பங்கினரே இருப்பர். “பசியில், நோயில், பூசலில் இரு பங்கினரை இழந்திருக்கிறோம். ஒருவகையில் நன்று. எத்தனை குறைவானவர்கள் செல்கிறோமோ அத்தனை நிறைவானவர்கள் நாம். நமது செல்வம் அங்கு மேலும் பல ஆண்டுகள் வாழ்வதற்குப் போதுமானது. அங்கு உணவில்லையென்றாலும் கூட பதினைந்து நாட்களுக்கு மேல் நம் உணவைக்கொண்டு அங்கு வாழமுடியும்” என்றார் பிரஃபானு.

 

இரவெல்லாம் நடப்பதும் பகலெல்லாம் ஓய்வெடுப்பதுமாக எங்கள் பயணம் நீடித்தது. நிலக்காட்சி மாறத்தொடங்கியது. அது எங்களுக்கு தெளிவுறத் தெரியவில்லை. ஏனென்றால் மிகமிக மெல்ல அது மாறிக்கொண்டிருந்தது. வானில் பறவைகளின் எண்ணிக்கை மிகுந்தது. பறவைகள் எங்கள் அருகே வந்து இறங்கி எழலாயின. பின்னர் நீராவி கொண்ட காற்று பச்சிலை மணத்துடன் வந்தது. நிலத்தில் மெல்லிய தீற்றல்போல ஆங்காங்கே புற்கள். புல்லை கொறிக்கும் சிற்றுயிர்கள். ஒவ்வொன்றாக நாங்கள் புல்வெளியை நெருங்குவதை காட்டின. ஆனால் அந்த அறிதல் சிலருக்கே இருந்தது.

குறும்புதர்களும் தழைந்த மரங்களும் கொண்ட புல்நிலம் வரத்தொடங்கியபோதும் கூட எங்கள் ஒழுங்கு பெரிதாக மாறவில்லை. இரவில் விழித்திருக்கவும் ஊக்கம் கொண்டு நடக்கவும் மானுடரும் விலங்குகளும் பயின்றுவிட்டிருந்தனர். இரவில் அனைவருக்குமே நன்றாக விழிகள் தெரியத்தொடங்கின. இரவு பயணத்தின் விசையும் தொடர்ச்சியும் பகலில் அமைவதுமில்லை. ஆகவே இரவிலேயே தொடர்ந்து செல்லலாம் என்று படைத்தலைவர்கள் முடிவெடுத்தனர்.

பாலைநிலங்களைக் கடந்ததும் புல்வெளிகளில் வண்டிகளின் சகடங்கள் அவ்வப்போது சேற்றில் பதிந்தன. ஏழெட்டு முறை சகடங்கள் மண்ணில் தாழ்ந்து வண்டிகளைத் தூக்கி கொண்டு செல்லவேண்டும் என்ற நிலை வந்தபோது ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டது. மரப்பலகைகளையும் தடிகளையும் விரைந்து அடுக்கி ஒரு நீண்ட சாலை போடப்பட்டது. அச்சாலையினூடாக வண்டிகள் முன்னால் சென்றன. பின்னர் அச்சாலைகளை பெயர்த்து எடுத்து முன்னால் கொண்டு சென்றனர். அது வண்டிகள் எங்கும் புதையாமல் இயல்பாக உருண்டு செல்ல வழி வகுத்தது. விலங்குகள் களைப்படையாமல் இருக்கவும் உதவியது. பின்னர் அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தனர். பகலில் பாதை அமைப்பவர்கள் முன்னரே சென்று நெடுந்தொலைவு வரைக்கும் மரப்பாதைகளை அமைத்தனர். அதை தொடர்ந்து இரவில் நாங்கள் கிளம்பிச்சென்றோம்.

முதல் சிலநாள் பயணத்திற்குப் பின்னர் அப்பயணத்தை ஒவ்வொருவரும் மகிழத் தொடங்கியிருந்தனர். அதிலிருந்த அச்சமும் தயக்கமும் ஐயங்களும் அகன்றன. ஒவ்வொருவருக்கும் அதில் செய்வதற்கு ஏதோ இருந்தது. அந்தியில் ஒரு இடத்தில் படுத்ததுமே இரு பக்கங்களிலாக பிரிந்து சென்று பறவைகளை பிடிப்பதற்கு, வலைவிரிப்பதற்கு திறன்கொண்டவர்கள் உருவானார்கள். பாலைவனப் பறவைகள் கூட்டம் கூட்டமாக தங்குமிடங்களை அவற்றின் எச்சங்களைக் கொண்டே கண்டுபிடிக்கத் தொடங்கினார்கள். உணவில் பெரும்பகுதி பாலைவனப் பறவைகளாலானதாக ஆகியது.

பிரஃபாச க்ஷேத்ரத்திற்கு சென்றபின்னும் பல மாதங்களுக்கு எங்களிடம் உணவு எஞ்சியிருக்கிறது என்ற செய்தி ஒவ்வொருவரையும் மகிழ வைத்தது. பிரஃபாச க்ஷேத்ரத்திலும் வேட்டை விலங்குகள் உண்டு, அருகே சிந்து ஓடுவதனால் மீன் பிடிக்கமுடியும். கடலில் இருந்தும் மீன் பிடிக்க முடியும் என்ற செய்தி ஒவ்வொருவருக்கும் நிறைவளித்தது.

மரப்பலகைகளை அடுக்கி இரவு தங்குவதற்கான பாடி வீடுகளை அமைப்பதும், குடில்களை தட்டிகளாக தனித்தனியாக செய்துகொண்டு சிறிய மூங்கில் உருளைகளால் சகடங்கள் அமைத்து அவற்றை அதன்மேல் ஏற்றி தள்ளிக்கொண்டு செல்வதும், தேவையான இடங்களில் நிறுத்தி நான்கு பக்கமும் இழுத்து விரிய வைத்து விரைவில் குடிலாக்கிக்கொள்வதும் பயிலப்பட்டது.

பிரஃபாச க்ஷேத்ரத்தை நெருங்கியபோது முடிவிலாது அவ்வண்ணமே சென்றுகொண்டிருக்கும் ஒரு பெருந்திரளாக நாங்கள் மாறிவிட்டிருந்தோம். முதல் புலரியில் பிரஃபாச க்ஷேத்ரத்திற்கு ஒரு நாழிகைத் தொலைவில் வந்தபோது கடற்பறவைகளின் தொடர்குரலைக் கேட்டோம். முதலில் என்ன என்று ஏன் என்று தெரியாமல் துவாரகை நினைவில் வந்து அறைந்தது. துவாரகையின் காட்சிகள் கனவுகள்போல் ஓடத்தொடங்கின. பின்னர்தான் அந்நினைவையும் கனவையும் எழுப்புவது அந்த ஓசை என்று தெரிந்தது. அதன் பின்னரே அது கடற்காகங்களின் பெருங்குரலென்று தெளிந்தது.

அப்போது நான் மூத்தவர் ஃபானுவின் அருகில் இருந்தேன். “கடற்காகங்களா?” என்று அவர் மலர்ந்த முகத்தோடு என்னை நோக்கி சொன்னார். “அருகிலிருக்கிறது கடல் எனில் நாம் பிரஃபாச க்ஷேத்ரம் வந்துவிட்டோம் என்றுதான் பொருள்.” நான் “இங்கிருந்து இன்னும் ஒரு நாழிகைத் தொலைவிலேயே பிரஃபாச க்ஷேத்ரம் உள்ளது. பிரஃபாச க்ஷேத்ரத்திலிருந்து சிந்துவின் புறநீர் தேக்கத்தின் வழியாகவே நாம் கடலுக்குள் செல்ல முடியும்” என்று சொன்னேன். “சிந்து கடலுக்கு நிகரானது. கடலின் ஒரு கை அது” என்று ஃபானு சொன்னார்.

பிரஃபாச க்ஷேத்ரத்தை அடைந்துவிட்டோம் என்ற செய்தி அனைவரையும் சென்று அடைந்தபோது ஒவ்வொருவரும் மேலும் ஊக்கம் கொண்டனர். முதற்புலரியில் பெரும்பாலானவர்கள் நடைதளர்ந்து மெல்ல மெல்ல ஊர்ந்துகொண்டிருப்பார்கள். எவரும் அறிவிக்காமலேயே அச்செய்தி ஒவ்வொருவரையும் சென்று தொட எங்களைச் சூழ்ந்து இருளின் அலைகளென வந்துகொண்டிருந்த பெருந்திரளில் ஊக்கம் எழுவதை நான் அசைவெனக் கண்டேன். மெல்ல அந்த ஓசை பெருகி அலையலையென எழுந்து சூழ்ந்துகொண்டது.

மலைவெள்ளம் செல்வதுபோல வழி நிறைத்து முன்னால் சென்றது மக்கள் திரள். எவராலும் வழிநடத்தப்படாததால் ஆணைகள் அனைத்தையும் கடந்து தன்னைத்தானே ஒழுங்கமைத்துக்கொண்டதாக அது மாறிவிட்டிருந்தது. நெடுங்காலத்திற்கு முன்பெனத் தோன்றிய ஒரு காலத்தில் துவாரகையிலிருந்து கிளம்பும்போது அனைத்து ஆணைகளையும் கடந்து மக்கள் தாங்களே பெருகி எழுந்ததுபோல அப்போதும் நிகழ்ந்தது.

விண்ணில் மீன்கள் நிறைந்திருந்தன. தொலைவில் விடிவெள்ளி தனித்து மின்னிக்கொண்டிருந்தது. கடலிலிருந்து வந்த காற்றில் நீர்வெம்மையை உணர்ந்தோம். சிலர் அழுதனர். சிலர் வான்நோக்கி கைவிரித்தனர். ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டார்கள். இன்னமும் எவரும் அந்நிலத்தை பார்க்கவில்லை. ஆனால் அங்கே உள்ளம் சென்றுவிட்டிருந்தது. தந்தையே, அங்கே ஒருவரேனும் அத்தருணத்தில் துவாரகையை நினைவுற்றார்களா என்று நான் எண்ணினேன். துவாரகை என்ற சொல்லை ஒருவர் சொன்னாலும் உளம் மலர்ந்திருப்பேன். ஆனால் ஒருவரும் கூறவில்லை.

நெஞ்சில் அறைந்துகொண்டு “துவாரகை துவாரகை!” என்று கூவவேண்டும் என்று நினைத்தேன். என் நரம்புகள் உடைந்துவிடுமளவுக்கு உள்ளம் இறுகி இறுகிச் சென்றது. அதன் உச்சியில் மெல்ல தளர்ந்தேன். பின்னர் புன்னகைத்தேன். இந்தப் பெருக்கு ஒரு கலத்தில் இருந்து இன்னொரு கலத்திற்கு எண்ணை விழுதுபோல ஒழுகிச் சென்றுகொண்டிருக்கிறது. என்றும் அது அவ்வாறுதான் இருந்துள்ளது. நேற்றைக் களைந்து நாளை நோக்கி சென்றுகொண்டே இருக்கிறது. காலத்தில் நகர்கையில் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இடத்தில் அந்நகர்வு நிகழ்கையில் நமக்குத் தெரிகிறது.

அல்லது ஒரு சிறு பஞ்சுவிதை. காற்றில் பறந்து அலைக்கழிந்து சுழன்று சென்று தனக்கான மண்ணில் படியவிருக்கிறது. அந்த மண்ணில் அதற்கான உணவும் நீரும் இருக்கவேண்டும். அனைத்து அலைக்கழிப்புகளும் விலக நான் விழிநீர் கோத்து மெய்ப்பு கொண்டேன். “தெய்வங்களே, மூதாதையரே! காத்தருள்க!” என்று என்னுள் கூவினேன்.

தொடர்புடைய பதிவுகள்

சீட்டு,நஞ்சு- சிறுகதை

$
0
0

சீட்டு [சிறுகதை]

அன்பின் ஜெ

சீட்டு கதையை வாசித்தேன். கீழ்நடுத்தரவர்க்கத்திடம் எப்போதுமே ஒரு ஆழமான மெட்டீரியலிஸ்டிக் தன்மை இருக்கும். அவர்களுடைய ஆன்மிகம் கூட மெட்டீரியலிஸ்டிக் ஆனதாகவே இருக்கும். அன்பு காதல் திருமணம் பாசம் எல்லாமே அப்படித்தான். அது வாழ்க்கையின் கஷ்டத்தில் இருந்து வந்த ஒரு இயல்பு. அப்படித்தான் அவர்கள் இருக்கமுடியும். பைசா பைசாவாக சேமிப்பது. இன்னொருத்தரை பிய்த்துப்பிடுங்குவது. எப்போதுமே பைசாக் கணக்கு பார்ப்பது. அவர்களுடைய உலகம் அப்படிப்பட்டது. அந்த உலகத்தின் மிக அழகான சித்திரமாக இருந்தது. யதார்த்தமே மீறப்படவில்லை. மிகமிக இயல்பான யதார்த்தமான சூழல்.

அவர்களின் இயல்பை அற்பத்தனம் என்று சொல்லலாம். ஆனால் குருவி கூடுகட்டுவதுபோலத்தான் அவர்கள் குடும்பத்தை அமைத்துக்கொள்வது. ரேஷனில் சர்க்கரை போடுவதையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கவேண்டிய வாழ்க்கை அப்படித்தான் இருக்கும். அந்தச் சூழலில் ‘நைசா கேட்டுப்பாரு’ என்று அழகப்பன் சொல்வதில் நமக்கு தப்பாக தோன்றலாம். அவனுக்கும் கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கும். ஆனால் வேறுவழியில்லை. அவனும் அவளும் அப்படித்தான் குடும்பத்தை அமைக்கப்போகிறார்கள். நல்ல தம்பதிகலாக குருவிக்கூடு ஒன்றை கட்டி இதேபோன்ற குருவிக்குஞ்சுகளை உருவாக்குவார்கள். அந்த அம்மா அப்படித்தான் அழகப்பனை உருவாக்கியிருக்கிறார்.

இது நியாயதர்மங்களின் கதை அல்ல, அவர்களின் வாழ்க்கையில் உள்ள குறுகலின் கதை

 

மகேஷ்

 

வணக்கம் ஜெ

சீட்டு சிறுகதை வாசித்தேன். மனித மனத்தில் தோன்றும் ஒவ்வொரு எண்ணத்துக்கும் உணர்வுக்கும் பிறிதொன்று ஈடாக முன்வைக்கப்படுகிறது. நைசாக கேட்டுப்பாரு எனும் சொல் மெல்ல ஒயா முடிவிலாச் சுழலில் பெண்களைத் தள்ளும் வார்த்தைகளின் தொடக்கம். இந்தச் சுழல் எப்பொழுதும் பெண்களைக் கொண்டே எழுப்பப்படுகிறது.

 

அரவின் குமார்

நஞ்சு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

நஞ்சு கதையை வாசிக்கையில் எனக்கு பட்டது இது அந்தப்பெண் செய்த சிறிய துரோகம், அந்த இளைஞன் அதற்கு பதிலடி செய்தது என்று சுருக்கமாகவே வாசிப்பார்க்ள். ஆனால் இது மூன்று கட்டம் கொண்டது. துரோகம் பதிலடி இரண்டுக்கும் நடுவே அவன் படும் அவஸ்தையும் அவனுடைய உருமாற்றமும் உள்ளது. மூன்று கட்டமாக கதையை வாசித்தால்தான் இந்தக்கதையை புரிந்துகொள்ளமுடியும்

 

பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் எனக்கு இதே அனுபவம். அவள்தான் முன்னால்வந்து என்னுடன் நெருக்கமாக இருந்தாள். காதல் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் மாட்டிக்கொண்டோம். எனக்கு வேலை இல்லை. அவள் குடும்பத்தில் அப்படி ஒரு ரியாக்சன் வரும் என அவள் நினைக்கவில்லை. சட்டென்று நான் அவளை ‘தொந்தரவு’ செய்வதாக மாட்டிவிட்டுவிட்டாள். அடி உதை பிரச்சினைகள். போலீஸில் போய் எழுதிக்கொடுத்தேன். ஊரைவிட்டே வந்துவிட்டேன்

 

பத்து வருஷங்களுக்கு பிறகு அவளை பிள்ளைக்குட்டிகளோடு பார்த்தேன். என்ன சொல்ல? இதேபோல ஃபிளர்ட்டிங் பண்ண முயன்றாள். ஏனென்றால் அது அவள் சமாதானப்படுத்தும் முயற்சி. ஆனால் எனக்கு அய்யே என்று ஆகிவிட்டது. ஆனால் அதுவரை இருந்த ஒரு ஆற்றாமை இல்லாமலாகிவிட்டது. அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன்

 

இன்றைக்கு பல காதல் விவகாரங்களில் சட்டென்று பெண் மனசு மாறி குடும்பத்துடன் திரும்பிச் சென்றுவிடுகிறாள். உலகம் ‘பாவம் அந்த பொண்ணு’ என்றுதான் பேசும். ஆனால் அந்த ஆணின் மனசிலே ஒரு நஞ்சை விட்டுவிட்டுச் செல்கிறாள் என்பதை உணர்வதில்லை

 

ரகு

 

அன்புள்ள ஜெ,

 

தன்னிச்சையான செயல்கள் என்று ஒன்று உண்டா அல்லது அது ஆழ்மனதின் வெளிப்பாடா? தர்க்க ரீதியாக பார்த்தால் நம் செயல்களுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அனைத்து செயல்களிலும் தர்க்கம் இருப்பதாக தெரியவில்லை. காலத்தின் ஒரு புள்ளியில் ஒரு தன்னிச்சையான செயலில் எப்படி வாழ்க்கை முழுவதும் மாறி விடும் என்பதற்கு லீலாவும், ‘நஞ்சு’வும் ஓர் உதாரணம் என்றே தோன்றுகிறது.

 

உலகில் அனைவரும் எப்போதுமே ஒரு விடுதலைக்காக காத்திருக்கிறார்கள். அந்த காத்திருப்பும் எதிர்பார்ப்பும் இல்லை என்றால் மனிதனுக்கு செய்வதற்கு ஒன்றுமே இல்லை. அது சின்ன எதிர்பார்ப்பிலிருந்து மிகப்பெரிய இலட்சியங்கள் வரை பொருந்தும். லீலாவிற்கு வறுமையினிடமிருந்து, ‘நஞ்சு’விற்கு பிடிக்காத கணவனிடமிருந்து.

 

அதே சமயம் உலகில் அனைவரும் எப்போதும் ஒரு பொருளை அடைய செயல்படுகிறார்கள். விடுதலை வேட்கை தூண்டியதால் பொருள் மீது நாட்டமா  அல்லது பொருள் மீது கொண்ட பற்றால் விடுதலை மீது வேட்கையா. இந்த இரண்டும் ஒன்று தானா இல்லை வெவ்வேறா? லீலாவின் பொருள் பற்றும் ‘நஞ்சு’வின் காதல்/காம பற்றும் அவ்வாறே என்னால் காண முடிகிறது.

 

லீலாவின் சோகத்தைக் கேட்டு உரப்பன் வருந்தியது அவளின் உண்மையான கஷ்டங்களை எண்ணி என்பதைவிட , அவன் அவள் துன்பத்துக்கு தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற தன்னிரக்கத்தாலே அதிகம் வருந்தினான். அதனாலே அவள் நாடகம் தெரிய ஆரம்பித்தபின் அவன் தன் இயலாமையிடம் விடுதலை அடைந்து, உதட்டில் ஒரு பும்முறுவல் பூத்தான்.  இது ஒரு ஆழ்மன நாடகம் என்றே எனக்குப்படுகிறது. இரு மனங்கள் தாங்கள் பேசி உறவாட சில செயல்களை அது நம்மேல் தன்னிச்சையாக செய்ய வைக்கிறதோ.

 

‘நஞ்சு’ காரில் விசும்பியதை ஒரு நாடகம் என்றும் அதற்குள் தான் ஒரு கதாபாத்திரம் என்றும் உணர்ந்த அவன், அவள் மேல் தீராக்  கோபம் கொண்டதும், அவளின் நினைவு அடிக்கடி வந்து சென்றதும், அவளை மறுபடியும் எதேச்சயாக  பார்க்க நேர்ந்து, அவளை துரத்தி அவன் தன் சந்தேகத்தை கேட்டு தெரிந்து முடித்து, அவளை தொட்டதும் அவள் தன் மார்மீது விழுந்ததும் ஒரு தற்செயலா. இல்லை ஆழ் மனக்கனவா.  அந்த கனவு நடந்ததனால் தன் எண்ணத்தை அவன் உணர்ந்து திரும்பி சென்றானா. இதில் யார் நஞ்சு?

 

மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடாக தினம் வரும் ஒவ்வொரு சிறுகதையும் ஒரு கலை பொக்கிஷமாகவே நான் உணர்கிறேன்.

 

அன்புடன்,

பிரவின்

தொடர்புடைய பதிவுகள்


தேவி,லாசர்- கடிதங்கள்

$
0
0

தேவி [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

தேவி மிக உற்சாகமாக வாசித்த கதை. எல்லாருக்குமே ஒரு நாடக அனுபவம் இருக்கும். குறைந்தபட்சம் பள்ளிகளிலாவது நாடகத்தில் நடித்திருப்பார்கள். அது ஒரு கோலாகலமான அனுபவம். அந்த நினைவை அந்தக்கதை மீட்டியது. ஆனால் அதை விட முக்கியமானது இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்து குழந்தைகள் வெளியே வருகிறார்க்ள். ஒவ்வொருவரும் வெவ்வேறுவகையிலே வெளிப்படுகிறார்கள்

தேவி கதையில் மூன்று கதை இருக்கிறது. ஒருகதை அனந்தன் நாடகம்போட படும் அவஸ்தை. இன்னொரு அவன் நாடகத்திற்குள் இருக்கும் நக்ஸலைட்டின்கதை. மூன்று ஸ்ரீதேவி என்ற சரஸ்வதியின் துயரக்கதை. வறுமையில் இருந்து அவள் கலைவழியாக மீண்டு எழுந்து வருகிறாள். ஆயிரம் முகங்களால் நடித்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். அனந்தன் நாடகத்தை நடிக்கவைப்பது ஒரு வேடிக்கை அல்ல. அந்த காலகட்டத்தின் உண்மையான துக்கமே அந்த நாடகத்திலே இருக்கிறது.வேலையில்லா திண்டாட்டம், குடும்பம் என்ற சுமை எல்லாமே. ஆகவேதான் லாரன்ஸ் அதை அப்படி உணர்ச்சிபூர்வமாக நடிக்கிறான்

அந்த மூன்று கதைகளும் ஒரு கதைக்குள் ஒன்றுக்குமேல் ஒன்றாக அமைந்திருக்கின்றன.  ஆகவேதான் கதையின் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பல அடுக்குகள் வந்துவிடுகின்றன

ராஜ்

 

வணக்கம் ஜெ

தேவி சிறுகதையை வாசித்தேன். ஒன்றிலிருந்து முடிவில்லா முகங்கள் எழுந்து வருவதைப் போன்றுதான் சரஸ்வதியிலிருந்து மூன்று பேர் எழுந்து வருகின்றனர். அப்படி எழுந்து வரும் ஆயிரம் பல்லாயிரம் முகங்களுக்கு இடையில் சரஸ்வதி யாரென்று பார்த்தால், குடும்பத்தைப் பாலிக்கும் பெண்ணாக இருக்கிறாள். அந்தப் பெண்மையும் தாய்மையும் அளிக்கும் விசையே ஆயிரம் பல்லாயிரம் முகங்களை அவளால் பூணச் செய்கிறது. அந்தப் பல முகங்களில் ஒன்றாகத் தெய்வங்கள் கூட இருக்கலாம். மன்றாடலுடன் இறைஞ்சினால் நினைத்தத் தோற்றத்தில் எழுந்தருளவும் கூடும் தேவி.

அரவின் குமார்

 

லாசர் [சிறுகதை ]

அன்புள்ள ஜெ

லாசர் கதை இந்த வரிசைக் கதைகளில் வேறுமாதிரியக அமைந்திருக்கிறது. சரித்திரபுருஷரான ராபர்ட் கால்டுவெல்லின் வாழ்க்கையில் ஒருநாள். அவருடைய வாட்ச் தொலைந்துபோய்விடுகிறது. பையன்கள் அதை வண்டு என்று நினைத்து புதைத்துவைக்கிறார்கள். அது இறந்துவிடுகிறது. அழுதபடி அதைக்கொண்டுசென்று அவரிடம் அளிக்கிறார்கள். அது அவர் கைபட்டு உயிர்த்தெழுகிறது

அந்தப்பையனின் தங்கை செத்துவிடுகிறாள். அவன் அடையும் பதற்றம் துக்கம் எல்லாம் கதையில் மனதை உலுக்கும்படி வெளிப்பட்டிருக்கிறது. அவன் அழும்போது உண்மையாகவே மனம் நெகிழ்ந்துவிட்டது. அந்த கடிகாரம் உயிர்த்தெழுந்துவிட்டது, அந்த குழந்தையும் உயிர்த்தெழும். அது இங்கே உயிர்த்தெழாது, கிறிஸ்துவின் சபையில் உயிர்த்தெழும். கடிகாரத்தை உயிர்த்தெழவைத்ததுபோல அந்த குழந்தையையும் உயிர்த்தெழவைக்க கால்டுவெல் ஜெபம் செய்கிறார்

இந்தக்கதையின் மையமே லாசர் என்ற பெயர்தான். ஏசுவால் உயிர்த்தெழச்செய்யப்பட்டவன் லாஸர். அவன் செத்துவிட்டிருந்தான். ஏசுவால் அவன் உயிருடன் வந்தான். அப்படிப்பார்த்தால் கால்டுவெல் உயிர்த்தெழவைப்பது அந்தச் சிறுவனைத்தான். தங்கையின் சாவு அவனுடைய சாவுதான். அந்த ஆன்மிக சாவில் இருந்து அவன் மீண்டு எழுகிறான். அவர் அந்த வாட்சை மீட்பதுபோல அவனை மீட்டு எடுக்கிறார்

ஜான் சுந்தர்ராஜ்

 

என் அன்பு ஜெ,

கதை என் பள்ளி காலத்திற்கு அழைத்துச் சென்றது. ஊட்டியும், அதன் விடுதி வாழ்கையின் தனிமையும் ஐந்து வருடங்களாக ஏதோ ஒன்றை பற்றிக் கொள்ள வைத்திருந்தது. கடவுள் மேலான தீவிர நம்பிக்கை கொண்டு என் அன்னையாக, தந்தையாக, தோழனாக கற்பனை செய்து கொண்டதுண்டு. இந்துவான என்னை கிறுத்துவாளாக மாற்றிக் கொண்டேனா? என்றால் இல்லை. கடவுளை நம்ப ஆரம்பித்தேன். அவர்க்கு உருவம் கொடுத்தேன். அவர் போதிப்பதை என் வாழ்வில் நான் கடைபிடிக்கும் நெறியாக மாற்றிக் கொண்டேன். என்னைப் பகிர பெரும்பாலும் நான் அவரையே தேடியிருக்கிறேன். என் ஆசைகள், கனவுகள் யாவையும் அவர் செவி மட்டும் இரகசியமாக அறிவதுண்டு. பெரும்பாலும் தனிமை தான் என் மருந்து. என் முதல் கூட்டை அங்கு உருவாக்கிக் கொண்டேன் எனலாம் (கூடு சிறுகதையில் நீங்கள் சொல்வது போல). ஞானத்தை, இந்த வாழ்வு எனும் காலப் பயணத்தை எதிர் கொள்வதற்கான அனைத்து ஆற்றலையும் தந்தது அந்த ஐந்து வருடங்கள் தாம்.

பைபிளில் வரும் லாசர் கதையை நன்றாகத் தெரியும் எனக்கு. அது நிச்சயமாக நடந்ததா என்று யாராவது இப்போது என்னிடம் கேட்டால், பதிலில்லை. ஆனால் அதிலிந்து நான் கற்றுக் கொண்டது இது தான், “நாம் கைக் கொள்ள வேண்டும் என்று நிர்ணயித்த இலக்கை/ வேண்டுமென்று நினைக்கும் ஒன்றின்மேல் பற்றுருதியாய் இருப்பின் அது கைகூடும். நிச்சயமாகக் கைகூடும். அந்த அதீத நம்பிக்கை வழி என் வாழ்வில் விடாமுயற்சியைக் கற்றுக் கொண்டேன் எனலாம். பைபிளை அந்த ஐந்து வருடத்தில் மூன்று முறையாவது வாசித்திருந்தேன். அதற்கும் மேல் எனலாம். அதை பாதரிமாரிடம், சகோதரிகளிடம் தருக்கப்படுத்தியதுண்டு. முடிந்தவரை அவர்கள் பதில் சொல்வதுண்டு. சொல்ல முடியாத கேள்விக்கு பாதர் சிரிப்பதுண்டு. ஒரு முறை அவ்வாறு பாதரிடம் பைபிளைக் கொண்டுபோய் “பாதர், பாதர், இந்த இடத்தில் சாத்தான் கடினமாக விரதமிருக்கும் இயேசுவை மலை உச்சிக்கு இட்டுச் சென்று, உலக அரசுகளைக் காட்டி, இயேசு தன்னை விழுந்து வணங்கினால் அவற்றை அவருக்குக் கொடுப்பதாகக் கூறி சோதிக்கிறது. அப்படியானால் உலக அரசுகள் சாத்தானுடையதா என்று கேட்டேன்???” அதற்கு அவர் என் தலையை தடவிட்டு, சிறு புன்முறுவலுடன் சென்றுவிட்டார்.

முதிர்ச்சியடந்தபின் மனிதன் அறத்தோடு வாழ்வதற்கான கதைகளாக; உவமைகளாக அவற்றை எடுத்துக் கொண்டபின் அவ்வாராய்ச்சியை விட்டு விட்டேன். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் பைபிள் கதைகள் பற்றியும், அதில் கடத்தப்படும் நீதி போதனைகள் பற்றி Youtue -ல் எடுத்தியம்பியிருந்தார். பைபிள் கதைகள் காலத்திற்கேற்றார்போல், படிக்கும் வாசகர் சார்ந்து மீட்டுருவாக்கம் செய்வது குறித்தும் பேசியிருந்தார். அதுவும் நினைவிற்கு வந்தது ஜெ.

“இறப்பு என்பது ஒரு குளியல். இறப்பு என்பது ஒரு வாசல். இறப்பினூடாகவே நாம் மெய்யான தேவனை அடைகிறோம். அவருடைய ஆணையாலே நாம் உயிர்த்தெழுவோம்; எசிலி கிழவி  சொன்ன “படுத்தா எந்திரிக்கோம். செத்தா உயிர்த்தெழுதோம்… நினைச்சு நினைச்சு அளுதா ஆச்சா? என்ற வரிகள் எனக்கு,

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

இந்தத் திருக்குறளை நினைவு படுத்தியது.

லாசரின் தங்கை பாப்பா உயிர்த்தெழுந்தாளா? என்றால், நிச்சயமாகத் தெரியாதெனக்கு. இந்த லாசரைப் பொறுத்தவரை பாப்பா உயிர்த்தெழுந்திருப்பாள். இறைவனிடம் சேர்ந்திருப்பாள் அல்லது வண்டாக பாப்பா மாறிவிட்டிருந்தாள். வண்டுதான் பாப்பா. அவன் அமைதியடையட்டும். ஆமாம்டா லாசர்!!! அந்த வண்டுதான் பாப்பா என்று சொல்லி அவனைக் கட்டியணைக்க வேண்டும் போலிருந்தது. அருமை ஜெ.

கதையயும் தாண்டி அது என் சிந்தையை, நினைவடுக்கை தட்டிவிட்ட யாவையும் எழுதிவிட்டேன்.

என்றும் அன்புடன்

இரம்யா.

தொடர்புடைய பதிவுகள்

கரு,கூடு- கடிதங்கள்

$
0
0

ஷம்பாலா – நிகோலஸ் ரொரிச்

 

அன்புள்ள ஜெ

கரு ஒரு மனம்பேதலிக்கச் செய்யும் கதை. அந்தக்கதையின் உத்தி என்ன என்பதை அதை வாசித்து முடித்து யோசித்துப் பார்க்கையில் மிகமிகத் தெளிவாகவே உணரமுடிகிறது. மிக எர்த்லியாக ஆரம்பிக்கிறது கதை. இது கதையே அல்ல, கட்டுரை என்று பாவனை காட்டுகிறது. செய்திச்சுருக்கம் போல, கலைக்களஞ்சியப் பதிவுபோல நடிக்கிறது. அரசியலில் நிலைகொள்கிறது.

அப்படியே விரிந்து சட்டென்று நிலக்காட்சிகளை விரிவாக சொல்லி அதற்குள் இழுக்கிறது. தனிப்பட்ட உணர்ச்சிகளை உறவுச்சிக்கல்களை சொல்லி உள்ளே வாழச்செய்கிறது. அதன்பிறகு ஷம்பாலா என்ற மாயக்கற்பனை எழுந்து வந்து நிலைகொள்கிறது. அதற்குள் நாம் அதை நம்பிவிடுகிறோம். நம்முடைய டிபென்ஸ் மெக்கானிசம் இல்லாமலாகிவிடுகிறது.அதன் பிறகு ஒருவகையான பதற்றத்துடனேயே வாசித்தேன்.

g

Annie Royle Taylor

பெட்ரூஸ்

ஒன்று இன்னொன்றின்மேல் படிகிறது. எதிர்பாராத திருப்பம் அல்ல. கொஞ்சம் எதிர்பார்த்த கொஞ்சம் எதிர்பார்க்காத திருப்பங்கள். ஒரு கதை அங்கே வந்து அமையும்போது அதுதான் அங்கே இருக்கமுடியும் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. கடைசியில் ஒரு முழுமை. இந்த ஒவ்வொரு மழைத்துளிக்கும் இலக்கு இருக்கும் என்றால் என் தர்க்கபுத்திக்கு என்னதான் அர்த்தம் என்ற அந்தகடைசிவரியின் பதற்றம்தான் எஞ்சியது.

இங்கே நாம் வாழும் வாழ்க்கையிலிருந்து என்றேனும் ஒரு திரும்பிச்செல்லுதல் சாத்தியமா? கொஞ்சம் மிச்சம் இருக்குமா? ஆனால் இதெல்லாம் நேரில் இருக்கவேண்டியதில்லை ஜெ. இலக்கியத்தில் இருக்கும். இலக்கியம் என்பதே ஒரு நூற்றாண்டின் கனவை இன்னொரு நூற்றாண்டுக்கு கடத்துவதுதான். ஷம்பாலா ஆயிரம் நூற்றாண்டின் கனவு

ஜெயராமன்

 

ஜெ…

 

நான் உங்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதுபவனல்ல.

ஆனால் இந்த “கரு” கதையா,அனுபவ பதிவா,ஆன்மீக தேடலின் மறைமொழியா,ஒரு ஞானகுருவின் பிரகடனமா என முடிவெடுக்கவே குழம்பக்கூடிய நிலையில்,படித்தவுடன் உள்ள அகக்கொதிப்பில் இதை எழுதுகிறேன்.

ஆன்மீகத்தில் சிலவற்றை பற்றி நீங்கள் எழுதவே போவதில்லை,ஏனென்றால் குரு நித்யா, குரு வினய சைதன்யா போன்றவர்கள் அந்த பகுதி தேடல் உள்ளவர்களுக்கு மட்டும்,அது அனைத்து பொது வாசகர்களுக்குமானது இல்லை என்று சொன்னதாக பல முறை கூறியுள்ளீர்கள். அப்போதெல்லாம் ஆன்மீகத்தின் வசீகரமான அந்த மர்மத்தின் மீது ஒரு ஈர்ப்பும் நீங்கள் எழுதவே மாட்டீர்களே என்ற ஏக்கமும் சூழ்வதுண்டு.

இந்த கொரோனா காலம் எதோ ஒரு வகையில் உங்களது,   இந்த மனத்தடையை நீக்கியுள்ளது இறையருளே எனக்கொள்கிறேன்.

இக்கதைக்கான பின்புலமாக பரந்துபட்ட உழைப்பு ஆராய்ச்சி செய்துள்ளது வெளிப்படை. ஆனால் இந்த பின்புல ஆய்வு ஆழ்ந்த நம்பகத்தன்மையை உருவாக்க செய்ய ஏதுவாகிறது.அதைவிட இதை ஒளி கொள்ள வைப்பது இதனுள் உறையும் ஆன்மீக மர்மம்.

இந்த ஆக்கத்தில் வைரத்தின் பட்டகங்கள் திருப்பும்தோறும் ஜொலிப்பதுபோல, ஆண்பெண் உறவில் ஆல்ஃபா ஆணின் ஆகர்ஷிப்பில் பெண் எப்படி விட்டில்பூச்சி போல ஈர்க்கப்படுகிறாள் என்பதுவும்,

பிரபஞ்சத்தில் எப்படி கருந்துளை வாசல்கள் இருக்கின்றனவோ அதுபோல பரிசுத்த ஆத்மாக்களின் பல்பரிமாண வாழ்விட வாசல்களை அதன் நேர்மறை அதிர்வுகளால் அறிந்து கொள்ள முடியும் என்பதையும்( இந்த விவரிப்பை குறை பட்ட மனித தர்க்க அறிவு நிரம்பியவர்களால் விவாதிக்கவும் ஏற்காததுவும் ஆகும்)

ஒரு கட்டத்தில் ஆன்மீக தேடல், மனம் நிறைந்த எந்த தேடலும் அற்ற பூரண ஸ்திதையை அடையும் என்பதையும்,அகதேடலில் மேலை மனமும் கீழை மனமும் கொள்ளும் மேம்போக்கான வித்யாசத்திற்கு அடியில் மனிதம் எனும் ஒற்றை இருப்பு எய்தும் பூரணத்துவம் திசையற்று இருக்கும் நிலையையும் சொல்கிறது.

ஷாம்பாலா திபேத்தின் பனிச்சிகரங்களில் இருக்கிறதோ இல்லையோ,அது காசியில், காஞ்சியில், திருவண்ணாமலையில், காளஹஸ்தியில், ரிஷிகேசத்தில்,கேதாரத்தில், மெக்காவில், பெத்லேகேமில், மனித மனத்தில் எல்லாம் உறைகிறது எனவே கதை படித்தபின் தோன்றுகிறது.

 

நன்றி ஜெ…

 

விஜயராகவன்.

அன்புள்ள ஜெ

லடாக்- திபெத் உலகின் கனவையும் மாயத்தையும் கலந்து சொல்லப்பட்ட கூடு கதை ஒரு கொந்தளிப்பை உருவாக்கியது. இன்றைக்கு என் வயதில் நான் நினைத்தால்கூட அங்கெல்லாம் செல்ல முடியாது.

இன்று நான் யோசிக்கிறேன். நானும் ஒரு கூடுதான் கட்டினேன். Pluming என்றுதான் அதைச் சொல்லவேண்டும். பிறகு என் சைசுக்கு சுருங்கினேன் cut down to size. கூடு வாசிக்கும்போது அது இதேபோல உலகவாழ்க்கை சார்ந்தது அல்ல என்று தெரிகிறது. ஒருவர் உலகவாழ்க்கையில் தெரிகிறார். ஆனால் அவருடைய அகத்தில் இந்த உலகம் எவ்வளவு பெரிதாகி பிறகு சிறிதாகிறது என்பதை காட்டுகிறது

பல ஞானிகள் ஏன் பெரிய அமைப்புக்களை உருவாக்குகிறார்கள் என்பதற்கான பதில்

 

எம்.சந்தானம்

 

அன்புள்ள ஜெ,

 

கூடு கதையை வாசித்தேன், ஒன்றுமில்லாததிலிருந்து பிரம்மாண்டமாக உருவெடுத்து பின் ஒன்றுமில்லாத இடத்தை நோக்கி செல்வதை போல நோர்பு திரபா தெரிந்தார்,  அந்தரங்கமா எனக்கு பணம், தொழில் இவற்றில் பெரிய ஆர்வமெல்லாம் இல்லை,  ஆனால் விலக மனம் இல்லை ஏனெனில் தோல்வியுற்று திரும்புவதை போன்றதாக தோன்றும்,  ஒன்று வேண்டாம் என்பது அது நம்மால் செய்ய முடியாமல் விடுவதாக இருக்க கூடாது என்று நினைப்பேன்,  செய்து பின் அதை விடுவது வேறு,  நோர்பு திரபா இவ்வகையில் வருபவர்

இந்த கதையிலேயே ஒரு வரி உண்டு,’ இவர்கள் போன்றவர்களுக்கு தேவைப்படுமெனில் சுரங்கம் கிடைத்துவிடும் ‘ என்பது இவர் போன்றவர்க்கு எதையும் உருவாக்கி கொள்ளும் திறன் உண்டு என்பதுதான்,  அப்படியானால் வலு உள்ளவர் விடுவதுதான் துறவு என்று நினைக்கிறேன்,  மற்றபடி இயலாதவர்கள் விடும் துறவை துறவு என்று நினைக்க வில்லை.

மலையில் இருந்த குழியில் சிறுவயதில் அவர் இருந்து பெற்று கொண்ட ஞானம் எது என்று யோசிக்கிறேன், பிறகான அலைதல்கள்,  பிரமாண்ட உருவாக்கங்கள் எல்லாம் முடிந்த பின் மீண்டும் அங்கேயே வந்து சேர்கிறார்,  மனதினுள் என்ன தேடியிருப்பார், எதை கண்டடைந்திருப்பார் என்று யோசிக்கவே ஆர்வமாக இருக்கிறது,  உங்களது இப்படியான கதைகள் என்பது விதைகள் போல,  என்றாவது உருண்டு அடிபட்ட பிறகு புரியும், முளைக்கும் :)

கூடு என்பது மனம்தான்,  என் நண்பர் ஒருவரிடம் சமீபத்தில் நம் வீடு உள் கட்டமைப்பு எப்படி இருக்குமோ அதுதான் நம் மனதிலும்  எதிரொலிக்கும் என்று சொன்னேன்,  இந்த மடாலயத்தை பிட்சுவின் கூடு என்று சொன்னது ஆச்சரியயமா இருந்தது. ஏனெனில் இங்கு கோவில்கள் என்பது பக்தர்களுக்காகத்தான்.  இதில் துறவிகளுக்காக என்று வருகிறது.  அதுவும் இந்த மடாலயம் பிரமாண்டத்தின், மனவிளைவின் உச்சம்,  12*10 அடி கட்டில் என கட்டில் அளவு என்று படித்த போது உருண்டு விளையாடுவாரா என்று யோசித்தேன் ! இருக்கையின் அளவு 6*5 அடி என்று பார்த்த போது எப்படி சாய முடியும் என்று யோசித்தேன், வேண்டுமானால் உள்ளே தள்ளி கால் மடக்கி சாய்ந்து உட்காரலாம் :),

இப்போது எனது பயண கனவுகளில் பவுத்த மடாலயங்களும் சேர்ந்து விட்டன :) சார் இந்த கதை பற்றி நிறைய எழுதிட்டு போகலாம்,  அவ்வளவு விஷயங்கள் உள்ள இருக்கு,  ஒரு சிறுகதையில் இந்த அளவு உலகை கொண்டுவந்து அதில் தத்துவ விசாரணைகளையும் உள்ளடக்கி தருவதெல்ல்லாம் பெரிய சாதனை,  கூடவே சின்ன சின்ன எவ்வளவு நுண்தகவல்கள், உதாரணமாக அந்த பொதிகழுதையின் திறன்,  அந்த ஊர் மக்களின் மனம்.

ஸ்பிடி சமவெளி, மடாலயம் வார்த்தைகளை பார்த்த போது முன்பு நீங்கள் எழுதிய  இமைய பயண கட்டுரைகள் ஞாபகம் வந்தது, முக்கியமாக நீங்கள் அங்கு ஒரு மடாலயத்தில், அல்லது அதை பார்த்தபடி இருந்த சமயத்தில் கிடைத்த தியான அனுபவம் பற்றி எழுதிய பகுதி

 

ராதாகிருஷ்ணன்

தொடர்புடைய பதிவுகள்

இணைவு [சிறுகதை]

$
0
0

போழ்வு [சிறுகதை]     முன்தொடர்ச்சி

[1 ]

கொல்லம் படகுத்துறையில் இறங்கி நேராக என் சாரட் நோக்கி ஓடினேன். ஸ்காட் மிஷனில் இருந்து எனக்காக அனுப்பப் பட்டிருந்த வண்டி.என்னுடன் என் பெட்டியை தூக்கியபடி மாத்தன் ஓடிவந்தான். நான் மூச்சிரைக்க ஏறி அமர்ந்ததும் அவன் பெட்டியை என் அருகே வைத்தான். வண்டிக்காரன் மாத்தனிடம் “எங்கே?” என்றான்.

நான் உரக்க “பன்னிரண்டாம் ரெஜிமெண்ட்… பன்னிரண்டாம் ரெஜிமெண்டின் தலைமை அலுவலகம்” என்றேன்.

அவன் திரும்பி “பொதுவான வண்டிகளை உள்ளே விடமாட்டார்கள்” என்றான்.

“என்னிடம் கர்னல் மன்றோவின் ஆணை இருக்கிறது… போ” என்று நான் சொன்னேன்.

மாத்தன் “டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்று முறைப்படி அழைத்தான்.“நான் இப்போது என்ன செய்யவேண்டும்?”

“நீ மெதுவாக அங்கே வா. என் பெயரைச் சொல்.”

“என்னிடம் ஸ்காட்டிஷ் மிஷனில் இருந்து இதைப்போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று சொன்னார்கள்.”

“மிஸ்டர் மாத்தன் செறியான்” என்று நான் அழைத்தேன் “உங்களுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை. நான் எதையுமே தவறாக நினைக்கப் போவதில்லை. நீங்கள் இப்போதே விலகிச்செல்லலாம். இதில் தலையிடவே வேண்டியதில்லை.”

“ஆம்” என்று அவன் சொன்னான். “ஆனால்…” பின்னர் “நல்லது, நான் வருகிறேன்” என்றான்.

“இல்லை, எனக்கு வெள்ளையன் என்ற பாதுகாப்பு இருக்கிறது. உள்ளூர்க்காரனாகிய உனக்கு அது இல்லை. நீ விலகிக்கொள்ளலாம் மாத்தன்.”

“இல்லை, நான் வருகிறேன்.”

அவனை ஒருகணம் பார்த்துவிட்டு “போகலாம்” என்று சொன்னேன்.

வண்டி செல்லும்போது சற்றே உடலை நீட்டி இளைப்பாறினேன். கொல்லம் நகர் வழக்கமான பரபரப்புடன் இருந்தது. தலைச்சுமையாக பொருட்களை படகுத்துறைக்குக் கொண்டுசென்றுகொண்டிருந்தனர். பெரும்பாலும் வாழைக்குலைகள், கொப்பரைக்கூடைகள். பெண்கள் இப்பகுதியில் மார்புகளை மறைப்பதில்லை. உயர்குடிப் பெண்களும்கூட. ஆனால் அவர்கள் வெளியே வருவதில்லை. அரசகுடியினர் அல்லாத ஆண்களும்கூட இடைக்குமேல் ஏதும் அணியக்கூடாது.

கொல்லம் அதைச் சூழ்ந்திருந்த காயல்களாலேயே ஒரு நகரமாக ஆகியிருந்தது. படகுகளால் அது பிற ஊர்களுடன் இணைக்கப்பட்டது. துறைமுகம் அதை உலகுடன் இணைத்தது. ஊரெங்கும் படகுகளின் உடைசல்களை துடுப்புகளை பார்க்கமுடிந்தது. மக்களிலேயே பெரும்பாலும் அனைவரும் படகோட்டிகளின் நடை கொண்டிருந்தார்கள். ஐரோப்பாவில் குதிரை போல இங்கே படகு. குதிரையில் அமர்ந்து அமர்ந்து தோளில் ஒரு நிமிர்வும் முகவாய் எடுப்பும் வந்துவிடும். படகை நெடுநாட்கள் ஓட்டினால் பின்பக்கம் வளைந்து நடை மாறிவிடும்.

வண்டிக்காரன் திரும்பி “பீரங்கி மைதானத்திற்குத்தானே?” என்று கேட்டான்.

“ஆமாம்” என்றேன்.

“போருக்குப்பின்னால் அங்கே எந்த வண்டிகளும் செல்ல அனுமதிப்பதில்லை”.

“நான் சொல்லிக்கொள்கிறேன்.”

கொல்லம் நகரின் கிழக்காக அமைந்திருந்தது கொல்லம் கண்டோன்மெண்ட். நகரிலிருந்தும் படகுத்துறையில் இருந்தும் அங்கே செல்வதற்கு கல்பதிக்கப்பட்ட சாலை அமைந்திருந்தது. உள்ளூரில் நிறைய உறுதியான செம்பாறையை மண்ணிலிருந்தே வெட்டி எடுக்கிறார்கள். அவற்றையே கோட்டைகட்டவும் தரையில் பரப்பவும் வீடுகட்டவும் பயன்படுத்துகிறார்கள். வண்டியின் சக்கரம் கற்கள்மேல் ஏறிச்சென்றபோது என் உடல் அதிர்ந்துகொண்டிந்தது.

கொல்லம் கோட்டை அமைந்து நூறாண்டுகள் கடந்துவிட்டிருந்தன நான் அதற்குமுன் ஒருமுறை அங்கே சென்றிருக்கிறேன். உயரமில்லாத கோட்டை. செம்பாறைகளால் கட்டப்பட்டப்பட்டது. இருமுனைகளிலும் மரத்தாலான காவல் மேடை நீண்ட மஸ்கட்டுகளுடன் காவலர்கள் நின்றிருந்தனர்.

கோட்டையின் நுழைவாயிலின் இருபுறமும் பீரங்கிமேடைகள். அவற்றில் சிறியவகை பீரங்கிகள் கரிய உருளைபோல தெரிந்த வாய்த்துளைகளுடன் சற்று அண்ணாந்து நின்றிருந்தன. கோட்டைக்குள் உயரமாக எழுப்பப்பட்ட பெரிய பீரங்கிமேடைகள் எட்டு இருந்தன. அவற்றின்மேல் பெரிய வகை பீரங்கிகளின் இரும்பு உடலை காணமுடிந்தது. அங்கே கருஞ்சிவப்பு பிரிட்டிஷ் சீருடை அணிந்த வீரர்கள் தென்பட்டனர்.

மைதானம் மிக விரிந்தது. அதில் ஒரு முழு ரெஜிமெண்டே அணிவகுப்பு மரியாதையை நிகழ்த்தமுடியும். ஆனால் அதில் ஐந்தடி இடைவெளியில் நூற்றுக்கணக்கான கமுகுத்தடிகள் நடப்பட்டிருந்தன. அவற்றை ஒன்றுடன் ஒன்று மூங்கிலால் சேர்த்துக் கட்டியிருந்தனர். பின்காலை வெயிலில் அவற்றின் நிழல் பெரிய வலைபோல மண்ணில் விழுந்து பரவியிருந்தது.

எங்கள் வண்டி பீரங்கி மைதானத்தை நெருங்கும்போதே அங்கிருந்து நான்கு குதிரை வீரர்கள் வந்தனர். பின்னால் வந்த ஒருவன் வெயிiலில் மின்னிய நீண்ட பயனெட்டுடன் கூடிய மஸ்கட் வைத்திருந்தான். முன்னால் வந்தவன் வெள்ளைக்காரன், அல்லது ஆங்கில இந்தியன். கரிய தலைமயிர், கருப்புக் கன்கள், வெண்சிவப்பு நிறம், ஒடுங்கிய முகமும் கூர்மூக்கும் வெள்ளையர்களுக்குரியவை.

“வணக்கம், நான் சார்ஜெண்ட் ஜான் பெர்ஜர். நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ளலாமா?”

“நான் டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்றேன். “நான் அரசு விவகாரமாக உடனே கர்னல் சேமர்ஸை பார்க்கவேண்டும்” காகிதப்பையை எடுத்து கர்னல் மன்றோவின் கடிதத்தை உள்ளிருந்து எடுத்து அவனிடம் காட்டினேன். “என்னிடம் கர்னல் மன்றோ அளித்த கடிதம் இருக்கிறது.”

“நான் கர்னல் சேமர்ஸின் அனுமதி இல்லாமல் உள்ளே அனுப்பமுடியாது டாக்டர்.”

“நீங்கள் இந்த கடிதத்தையே அவரிடம் காட்டலாம்.”

“நல்லது” அவன் அதை வாங்கிக்கொண்டான். “அதுவரை இவர்களின் காவலில் நீங்கள் இங்கே நின்றிருக்கவேண்டியிருக்கும்.”

“பரவாயில்லை.”

அவன் குதிரையில் திரும்பிச் சென்றான். அவன் குதிரையின் வால் சுழல்வதை நான் பார்த்துக்கொண்டு நின்றேன். வெயில் ஏறி ஏறி வந்தது. வெட்டுக்கல் பரவிய பெரிய மைதானம் வெப்பத்தை உமிழத்தொடங்கியது. மேலே தெரிந்த பீரங்கிகளின் திமிங்கல உடல்கள் ஒருவகையான அமைதியின்மையை உருவாக்கின.

உள்ளே ஒரு முழு பட்டாலியனும் இருக்கிறது என்று தோன்றியது. காலையிலேயே அவர்கள் பணிகளை தொடங்கிவிட்டிருந்தார்கள். கோட்டையும் உள்ளிருக்கும் கட்டிடங்களும் பழுதுபார்க்கப்பட்டுக் கொண்டிருந்தன. பிரிட்டிஷ் காரிசனாக இருந்தாலும் பெரும்பாலான படைவீரர்கள் இந்தியர்கள், குறிப்பாக மெட்ராஸ் ரெஜிமெண்டில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள். அவர்களின் கன்னங்கரிய நிறமும் பெரிய வெண்ணிற கண்களும் இந்த மண்ணுக்குரியவை அல்ல.

சார்ஜெண்ட் ஜான் பெர்ஜர் திரும்பி வந்தான். “உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது” என்றான் “ஆனால் உங்கள் வண்டிக்கு அனுமதி இல்லை. நீங்கள் இறங்கி உங்கள் பெட்டியுடன் உள்ளே செல்லலாம்.”

“நன்றி, ஜான் என்னுடைய உதவியாளர் இங்கே வருவார். அவர் இங்கே என் வண்டியில் எனக்காகக் காத்திருக்க அனுமதிக்கவேண்டும்.”

ஜான் “சரி” என்றான். “இவன் சார்ஜெண்ட் தோமா. உங்களை உள்ளே அழைத்துச் செல்வான்.”

நான் கோட்டைக்குள் நுழைந்தேன். உள்ளே பிரிட்டிஷ் பாணியின் சுட்டசெங்கற்களால் தரை போடப்பட்டிருந்தது. சிவப்பு ஓடு வேய்ந்த தாழ்வான கூரைகொண்ட பெரிய கட்டிடங்கள் செம்மண்குன்றுகள் போல நீளமாக சென்றன. அவற்றை ஒட்டி செங்கல்பாதைகள். நடுவே பூச்செடிகள் வைக்கப்பட்டிருந்தன. குரோட்டன்ஸ் செடிகள், கப்பலில் கொண்டுவரப்பட்டவை.

தோமா என்னை ஓர் உயரமான ஓட்டுக்கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றான். பிரிட்டிஷ் பாணியிலான உருளையான சுதைத்தூண்கள் கொண்ட நீண்ட வராண்டாவால் சூழப்பட்ட இரண்டு அடுக்கு மாளிகை. மாடியிலும் சுற்றிலும் வராண்டா. வராண்டாக்களின் விளிம்பில் மரத்தாலான கைப்பிடிச்சுவர். சன்னல்கள் மிகப்பெரியவை. அனைத்திலும் வெட்டிவேர் தட்டிகள் தொங்கின. அதைச்சூழ்ந்து பூச்செடிகளால் ஆன தோட்டம் இருந்தது.

அந்த மாளிகையின் முகப்பு சற்று வேறுபட்டதாக இருந்தது. இரட்டைச் சுதைத்தூண்களால் அரைவட்டவடிவமாக மையக் கட்டிடத்தில் இருந்து முகம்போல எழுந்து நின்றது. டாஃல்பினின் மூக்குபோல. மேலேயும் அதே வளைவு.

என்னை அவன் உள்ளே அழைத்துச் சென்றான். அங்கே மிக உயரமான கூரை கொண்ட அகலமான கூடத்தில் தேக்குமரத்தாலான நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஐரோப்பியருக்கு வசதியான உயரமான நாற்காலிகள். என்னை அமரும்படிச் சொன்னான்.

சீருடை அணிந்த பிரிட்டிஷ்காரர் வந்து பட்டுக் கையுறை அணிந்த கைகளை நீட்டி “நான் காப்டன் கோர்டான். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்றார்.

“மகிழ்ச்சி காப்டன் கோர்டான். நான் உடனே கர்னல் சேமர்ஸை சந்திக்கவேண்டும்.”

“கர்னல் மன்றோவின் கடிதத்தை பார்த்தேன். அதை கர்னலுக்கு அனுப்பியிருக்கிறேன். அவர் ஓர் ஆலோசனையில் இருக்கிறார்…” என்று கோர்டான் சொன்னார். “நீங்கள் சற்றே காத்திருக்கவேண்டும்.”

“நன்றி” என்றபின் அமர்ந்து என் கோட்டை தளர்த்திக்கொண்டேன்.

கோர்டான் “உங்களுக்கு ஐஸ்போட்ட பானங்களை நான் தரமுடியும். இங்கே கொச்சியிலிருந்து ஐஸ் வருகிறது.”

“நன்றி” என்றேன்.

கோர்டான் கைகாட்ட பட்லர் தாலத்தில் வைக்கப்பட்ட கண்ணாடிக் கோப்பையில் நிறைந்த விஸ்கியுடன் வந்தார். கூடவே ஒரு வெண்ணிறத் துவாலை.

நான் துவாலையை எடுத்து முகம் துடைத்து மடியில் போட்டபின் ஐஸ்போட்ட விஸ்கியை கையில் எடுத்தேன். அதை ஒருமுறை முகர்ந்து சிலகணங்கள் கழித்து ஒரு சொட்டை நுனிநாக்கில் நனைத்தபின் “கோர்டான், வெளியே அத்தனை மூங்கில் கழிகள் எதற்காக? ஏதாவது பந்தல் போடப்போகிறீர்களா?” என்றேன்.

“அவை தூக்குமரங்கள்” என்று கோர்டான் சொன்னார்.

என்னால் சற்றுநேரம் ஒன்றும் சொல்லமுடியவில்லை. கோர்டான் கண்சிமிட்டி தலைவணங்கி உள்ளே சென்றார்.

[ 2  ]

திருவிதாங்கூரில் அப்போதுதான் ஒரு பெரிய கலவரம் நடந்து ஓய்ந்திருந்தது. சில ஆயிரம் உயிர்கள் அகன்றுவிட்டிருந்தன. பிரிடிட்ஷ் ஆட்சியில் இந்திய நிலம் முழுக்க கலவரங்கள் நடந்துகொண்டே இருந்த காலம், ஆகையால் பொதுவாக ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கலவரச் செய்திகளையே பேசிக்கொண்டார்கள். ராணுவ அதிகாரிகளுக்கு அவை அவர்களின் திறமையை நிரூபித்து மேலே செல்வதற்கான வாய்ப்பு. வணிகர்களுக்கு அவை வணிகத்தின் நல்வாய்ப்பு அல்லது இழப்பு.

கலவரம் நடந்தபோது நான் மெட்ராஸில் இருந்தேன். கல்கத்தாவுக்குச் செல்வதற்கான கப்பலுக்காக காத்து ஓரியண்டல் ஹோம் என்ற விடுதியில் தங்கியிருக்கும் போதுதான் திருவிதாங்கூரில் இருந்து அங்கே வந்திருந்த தோந்நியில் இட்டூப்பு என்ற சிரியன் கிறிஸ்தவரைச் சந்தித்தேன். அவரும் கல்கத்தா செல்வதற்காக கப்பலுக்காக காத்திருந்தார். திருவிதாங்கூரில் வேலுத்தம்பி தளவாய் தொடங்கிய கலவரத்தைப் பற்றி அவரிடமிருந்தே விரிவாக தெரிந்துகொண்டேன்.

இட்டூப் கொச்சியில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் பங்குதாரர். அவருக்கு கொச்சியில் இருந்த கர்னல் மன்றோவின் அலுவலகத்துடனும் கொச்சி அரசர் ராமவர்மாவுடனும் திருவனந்தபுரத்தில் மகாராஜாவுடனும் நெருக்கமான நேரடித் தொடர்பு இருந்தது. அனைத்தையும் நடைமுறைப்பார்வையுடன் உள்ளே நுழைந்து பார்ப்பவராக இருந்தார்.

“பிரச்சினை ஒருவர் குடுமியை இன்னொருவர் பிடித்துக் கொண்டிருப்பதுதான்” என்றார் தோந்நியில் இட்டூப்பு. கர்னல் மன்றோ ஒன்றுமே செய்யமுடியாது. திருவிதாங்கூரில் இருந்து அவர் எவ்வளவு ரூபாய் கப்பமும் கட்டணமும் வசூலித்துக் கொடுக்கவேண்டும் என்பதை மெட்ராஸிலும் கல்கத்தாவிலும் இருப்பவர்கள் முடிவுசெய்கிறார்கள். ‘எஸ் சர்’ என்பதற்கு அப்பால் அவரால் எதுவும் சொல்லமுடியாது.

உண்மையில் அந்த கவர்னர்களும் ஒன்றும் செய்யமுடியாது, அவர்கள் எகிப்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் செல்லும் பிரிட்டிஷ் துருப்புக்களுக்கான நிதியை திரட்டி அளித்தாகவேண்டும். அவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் மேலும் தேவைப்படும். அவர்களும் ஒன்றும் செய்யமுடியாது, பிரிட்டன் உலகை வெல்ல அந்தப் போர்கள் தேவைப்பட்டன

பிரிட்டிஷ் பேரரசு நினைத்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. உலகை அவர்கள் வெல்லாவிட்டல் உலகம் அவர்களை அழிக்கும். சுறாமீன் நீந்தாவிட்டால் மூழ்கிவிடும், பிரிட்டிஷ் பேரரசு போரில் ஈடுபடாவிட்டால் அழிந்துவிடும். ஆகவே ஒன்றுமே செய்யமுடியாது. இது ஒரு பெரும்நெருப்பு. சிக்கியதை எல்லாம் எரித்து உண்டு இது வளர்ந்தபடியே இருக்கும்.

கர்னல் மன்றோ என்ன செய்வார், ஆணையிடப்படுவதை திரட்டி அளிக்கவேண்டும். அதேசமயம் அவர் திருவிதாங்கூர் அரசரிடமும் திவானிடமும் கெஞ்ச முடியாது, ஆணையிடத்தான் வேண்டும். ஆணையை அவர்கள் கடைப்பிடித்தாகவேண்டும். அவர்கள் தங்களுக்கு கீழே இருப்பவர்களிடம் வசூலிக்கவேண்டும். அவர்கள் அதற்குக் கீழே இருப்பவர்களிடம். கடைசியில் நிலத்தில் உழலும் மக்கள் கொடுக்கவேண்டும். அவர்கள் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

முடிவில்லாமல் வரி வசூலிக்கமுடியுமா என்ன? திருவிதாங்கூரின் பெரும்பகுதி நிலம் காடும் மலையும். காட்டிலிருந்து எந்த ஊர்களுக்கும் சாலைகள் இல்லை. காட்டையும் ஊர்களையும் இணைக்கும் அகன்ற பெரிய ஆறுகளும் இல்லை. ஆகவே காட்டுக்கும் ஊருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. காட்டுக்குள் ஊர்க்காரர்கள் செல்லமுடியாது. அங்கே வாழும் மலைமக்கள் இங்கே வருவதுமில்லை. காட்டிலிருந்து அரசுக்கு ஒரு பைசா வருமானம் இல்லை.

திருவிதாங்கூரில் வரி வருமானம் வருவது கடலோர ஊர்களில் இருந்து மட்டும்தான். ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு. திருவிதாங்கூரின் எந்த கடல்துறைமுகத்திற்கும் பொருளை விளைவித்து கொண்டுவந்து சேர்ப்பதற்கு பின்புலத்தில் பெரிய நிலம் இல்லை. விவசாயநிலம் பின்புலமாக இருந்தால்தான் துறைமுகம் வளரும். இங்கே விளைநிலமே குறைவு. தேங்காய் இருப்பதனால்தான் கொஞ்சமேனும் துறைமுகங்கள் சமாளிக்கின்றன.

ஆனால் இது எதுவும் மெட்ராஸ் கவர்னரின் ஆலோசகர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் நிலவரைபடத்தை வைத்துக்கொண்டு பரப்பளவை கணக்கிட்டு வரியை முடிவுசெய்கிறார்கள். கர்னல் மன்றோ மேலும் மேலும் திருவிதாங்கூர் அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அரசர் பாலராம வர்மாவுக்கு நாட்டில் என்ன நடக்கிறதென்றே தெரியாது. திவான் வேலுத்தம்பி தளவாய்தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு. அவர்தான் கர்னல் மன்றோவுக்கு பதில் சொல்லவேண்டும்.

கர்னல் மன்றோவுக்கும் வேலுத்தம்பிக்கும் ஓராண்டுக்காலம் நெருக்கம் நிலவியது. வேலுத்தம்பி தளவாயின் எதிரிகளை அழித்தவர் கர்னல் மன்றோ. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கிடையே உரசல் தொடங்கியது. கப்பம் கட்ட முடியாமல் செலவைக் குறைக்கும் பொருட்டு கர்னல் மன்றோ பேச்சைக் கேட்டு திருவிதாங்கூரின் ராணுவத்தைக்கூட கலைத்தார் வேலுத்தம்பி. அது ஒரு கலவரமாக வெடித்தது. கர்னல் மன்றோ உதவியுடன் அதை அடக்கினார்.

“தெரியும்” என்று நான் சொன்னேன்.

“அதற்குப்பிறகுதான் உண்மையான சிக்கல் தொடங்கியது” என்று தோந்நியில் இட்டூப்பு சொன்னார். “திருவிதாங்கூர் கர்னல் மன்றோவின் முழுக்கட்டுப்பாட்டில் வந்தது. அவர் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது என்று மெட்ராஸ் கவர்னருக்கு தெரிந்தும் விட்டது. அவர்கள் பணம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். கர்னல் மன்றோ கொடுத்துக்கொண்டே இருந்தார்.”

சந்தைகளின் தீர்வை இரண்டு ஆண்டில் எட்டுமுறை கூட்டப்பட்டது. அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் அளிக்க முடியாத நிலை. வேலுத்தம்பி பலமுறை கர்னல் மன்றோவை கண்டு முறையிட்டாலும் அவர் அதைச்செவி கொள்ளவில்லை. வணிகர்கள் திருவிதாங்கூர் நாட்டைவிட்டே ஓட ஆரம்பித்தனர். வேலுத்தம்பிக்கு வேறுவழியில்லை. அவர் எதிர்க்க ஆரம்பித்தார்.

தோந்நியில் இட்டூப்பு என்னிடம் “நான் எல்லா செய்திகளையும் சீராக தொகுத்து ஒரு ஜர்னல் ஆக எழுதியிருக்கிறேன். கல்கத்தாவில் என் பங்குதாரர்கள் கேட்பார்கள்” என்றார்.

“அதை எனக்கு வாசிக்க கொடுங்கள்… முடிந்தால் ஒரு நகல் எடுத்துக்கொள்கிறேன்” என்று நான் சொன்னேன்.

“அதிலென்ன, தாராளமாக” என்றார் தோந்நியில் இட்டூப்பு.

அவர் அளித்த ஜேர்னல் நீளமான நாட்குறிப்பு. அதை நான் சுருக்கி என் டைரியில் எழுதிக்கொண்டேன். எனக்கே நிகழ்வுகளைச் சரியாகப் புரிந்துகொள்ள அது உதவியது.

1807 முதல் வேலுத்தம்பிக்கு கர்னல் மன்றோவுக்கும் நடுவே பூசல்கள் வெளிப்படையாக தெரிய தொடங்கின. வேலுத்தம்பியை சீண்டி பதவியில் இருந்து அவரே விலகும்படிச் செய்யவேண்டும் என்று கர்னல் மன்றோ நினைத்தார். வேலுத்தம்பி எவருக்காவது தண்டனை விதித்தால் அவருக்கு பதவி உயர்வு கொடுத்தார். எவருக்காவது பாராட்டும் பதவியும் அளிக்கப்பட்டால் அவரை தண்டித்தார். வேலுத்தம்பியின் தனிப்பட்ட காவலர்களை குறைத்தார். எஞ்சியவர்களுக்கு ஊதியம் கிடைக்காமல் செய்தார்.

1807 மே மாதம் 12 ஆம் தேதி மகாராஜாவுக்கு கர்னல் மன்றோ எழுதிய கடிதத்தில் வேலுத்தம்பி திவான் பதவியில் இருந்து இறங்கி வடக்கு மலபாரில் கண்ணூர் அருகே சிறைக்கல் என்ற ஊருக்குச் சென்று அரசப்பணிகள் எதிலும் ஈடுபடாமல் வாழவேண்டும் என்றும், பதிலுக்கு அவருக்கு ஆண்டுதோறும் ஐநூறு ரூபாய் பென்ஷன் அளிக்கப்படும் என்றும் அதை மலபார் கலெக்டர் பேபரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் கர்னல் மன்றோ சொன்னார். அதை வேலுத்தம்பி அவமதிப்பாகவே எடுத்துக்கொண்டார்.

அரண்மனையின் மொத்த நகைகளையும் விற்று அந்தப்பணத்தை நேரடியாகவே மெட்ராஸ் கவர்னருக்கு கப்பமாக அனுப்பினார் வேலுத்தம்பி. கூடவே மகாராஜா கைச்சாத்திட்ட ஓலையும் சென்றது. உடனே கர்னல் மன்றோவை திருப்பி அழைத்துக் கொள்ளவேண்டும், அவர் திருவிதாங்கூரின் அரசியலில் தலையிடுவது அரச உறவுகளுக்கு ஊறுவிளைவிப்பது என்றும்  கோரப்பட்டிருந்தது.

ஆனால் மெட்ராஸ் கவர்னர் அலுவலக சீர்குலைந்து கிடந்தது. வில்லியம் காவட்ண்டிஷ் பெண்டிங்க் பிரபு கவர்னர் பதவியில் இருந்து விலகி இங்கிலாந்து சென்றார். வில்லியம் பீட்ரீ தற்காலிக கவர்னராக இருந்தார். அவருக்கு இந்த பூசல்களில் தலையிட நேரமிருக்கவில்லை. அதைவிட தலைபோகும் பிரச்சினைகள் இருந்தன.எல்லா பிரச்சினைகளையும் அடுத்த கவர்னருக்காக ஒத்திவைப்பதில் அவர் மும்முரமாக இருந்தார்.

திருவிதாங்கூர் பிரிட்டிஷாருக்கான கப்பத்தின் அடுத்த தவணையை கட்ட தாமதமாகியது. கர்னல் மன்றோ மிகக்கடுமையான மொழியில் மகாராஜாவுக்கு கடிதம் எழுதினார். உடனே கப்பம் வராவிட்டால் திருவிதாங்கூர் அரசை கைப்பற்றி மகாராஜாவை சிறையிடநேரும் என்று எச்சரித்தார்.

கர்னல் மன்றோவின் தூதராக ஸ்தானபதி சுப்பையன் செயல்பட்டார். சுப்பையன் மகாராஜாவிடம் வேலுத்தம்பியை நீக்கி கர்னல் மன்றோவிடம் இணக்கமாக இருக்கும்படி எச்சரித்தார். ஒருநாள் சுப்பையன் இரவு அரசரிடமும் திவானிடமும் பேச்சுவார்த்தை முடிந்து அரண்மனையில் இருந்து தன் மாளிகைக்குச் செல்ல கிளம்பினார். சென்று சேரவில்லை. அவருடைய உடல் அருகிலிருந்த தென்னந்தோப்பில் கிடந்தது, பாம்பு அவரை கொத்தியிருந்தது.

சுப்பையனின் கொலை கர்னல் மன்றோவுக்குச் சில செய்திகளைச் சொன்னது. வேலுத்தம்பி மன்றோவை எதிரியாக நினைக்கிறார். கொல்லவும் கூடும். அவர் தன் தலைமையகத்தை கொச்சி கண்டோன்மெண்டுக்கு மாற்றிக்கொண்டார்.

அப்போது கொச்சியை ஆட்சி செய்தவர் பத்தாம் ராமவர்மா. அவருக்கு இலக்கியத்தில் மட்டுமே ஆர்வம். சுந்தரகாண்ட புராணம் என்ற காவியத்தை எழுதிக்கொண்டிருந்தார். கொச்சி அரசர்களின் அமைச்சர் பதவியும் பாரம்பரியமானது. அது பாலியம் குடும்பத்திற்குரியது. அதன் மூத்தவர் பாலியத்து அச்சன் என்று அழைக்கப்படுவார்.

அப்போது பாலியத்து அச்சனாக இருந்தவர் பாலியத்து கோவிந்தன் மேனோன். அவர் அரசர் ராமவர்மாவை ஆலுவாவுக்கு வடக்கே இருந்த வெள்ளாரம்பள்ளி என்ற சிற்றூரில் ஓர் அரண்மனை கட்டி அங்கே கொண்டு சென்று தங்கவைத்துவிட்டு முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுத்துக்கொண்டார். தன்னை எதிர்த்த கொச்சி நாயர் தலைவர்களை எல்லாம் சிறைப்பிடித்து கூட்டம் கூட்டமாக கைகால்களைக் கட்டி கொச்சி காயலில் மூழ்கடித்துக் கொன்று கிட்டத்தட்ட அரசனாகவே ஆனார்.

அவருக்கும் தொடக்கத்தில் கர்னல் மன்றோவின் ஆதரவு இருந்தது. ஆனால் கப்பம் கேட்டு நெருக்கடி கொடுத்த கர்னல் மன்றோவுக்கும் பாலியத்து அச்சனுக்கும் பூசல் உருவாகியது. கப்பம் கொடுக்காவிட்டால் இன்னொருவரை திவானாக ஆக்குவேன் என்று கர்னல் மன்றோ பாலியத்து அச்சனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ராமவர்மா மகாராஜா பாலியத்து அச்சனை பதவிநீக்கம் செய்யவும் குஞ்ஞிகிருஷ்ணன் மேனன் என்ற இளைஞனை அமைச்சராக்கவும் திட்டமிட்டார். அந்தச் செய்தியை அறிந்த பாலியத்து அச்சன் குஞ்ஞிகிருஷ்ணன் மேனனை கொல்ல நாடெங்கும் கொலைகாரர்களை அனுப்பித் தேடினார்.

அவர்கள் ஊரெல்லாம் தேட ஓராண்டுக்காலம் வெள்ளாரம்பள்ளியில் தன் அரண்மனைக்குள்ளேயே குஞ்ஞிகிருஷ்ணன் மேனனை அரசர் ராமவர்மா மறைத்து வைத்திருந்தார். பின்னர் அவனை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் கர்னல் மன்றோவிடம் அனுப்பினார். குஞ்ஞிகிருஷ்ணன் மேனன் கொச்சி பிரிட்டிஷ் காரிசனில் கர்னல் மன்றோவின் அவையில் அடைக்கலம் தேடினான்.

இதை அறிந்த பாலியத்து அச்சன் வேலுத்தம்பியின் ஆதரவை தேடினார். ஒருவரோடொருவர் எந்த நெருக்கமும் இல்லாதவர்களாக இருந்த பாலியத்து அச்சனும் வேலுத்தம்பியும் கைகோர்த்துக்கொண்டனர். ஒரே சமயம் கொல்லம், கொச்சி, பரவூர் மூன்று இடங்களிலும் வெள்ளையரை தாக்கி கொல்வது என்று இருவரும் சேர்ந்து முடிவெடுத்தனர்.

வேலுத்தம்பி பிரிட்டிஷ் கவர்னர் சர் ஜார்ஜ் பர்லோ முதலாம் பாரோனெட்டுக்கு ஓரு கடிதம் அனுப்பினார். அவர் திவான் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் ,கோழிக்கோட்டில் ஓய்வுபெற்று வாழ விரும்புவதாகவும்,முன்பு சொன்னபடி பென்ஷனும் பாதுகாப்புப் படையும் அளிக்கவேண்டும் என்றும் கேட்டார். அந்தக் கடிதம் மெட்ரஸ் கவர்னர் அலுவலகத்தில் பரிசீலனையில் இருந்தது.

அதேசமயம் பிரெஞ்சுக் காரர்களிடம் பிரிட்டிஷாரிடம் போரிட  தனக்கு உதவவேண்டும் என்று கோரி ஒரு செய்தியை அனுப்பினார் வேலுத்தம்பி. கோழிக்கோடு சாமூதிரி மன்னருக்கும் உதவிகேட்டு செய்தி அனுப்பினார். இருவருமே எதிர்வினை அளிக்கவில்லை.

வேலுத்தம்பி தன் படைவீரர்களை வைக்கம் பத்மநாபபிள்ளை என்ற படைத்தலைவனின் தலைமையில் கொச்சிக்கு அனுப்பினார். பாலியத்து அச்சன் 1808 டிசம்பர் 28 ஆம்தேதி அறுநூறு நாயர்படைவீரர்களுடன் கொச்சி பிரிட்டிஷ் காரிசனை தாக்கினார். கோட்டையை உடைத்து உள்ளே புகுந்தார்.

கர்னல் மன்றோ பின் பக்கச் சுரங்கம் வழியாக தப்பி ஆற்றுக்குள் சென்று ஒரு சிறுபடகில் குப்புறப் படுத்து தப்பினார்.காயல் வழியாகவே கடலுக்குள் சென்று துறைமுகத்தில் நின்றிருந்த பியட்மோன் என்னும் பிரிட்டிஷ் கப்பலில் தஞ்சம்புகுந்தார்.

கோட்டைக்குள் இருந்த பிரிட்டிஷார் கொல்லப்பட்டனர். கஜானா கொள்ளையடிக்கப்பட்டது. சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். குஞ்ஞிகிருஷ்ணன் மேனன் அங்கே இல்லை, அவன் முந்தைய நாளே அங்கிருந்து சென்றுவிட்டிருந்தான்.

திருவிதாங்கூர் படையும் கொச்சியின் படையும் இணைந்து கொச்சி கண்டோன்மெண்ட் பகுதியை சூறையாடினர். சூழ்ந்திருந்த வியாபாரிகளின் இல்லங்களைக் கொள்ளையிட்டனர். யார் கர்னல் மன்றோவின் ஆதரவாளர் யார் பாலியத்து அச்சனின் ஆதரவாளர் என்ற வேறுபாடெல்லாம் நாயர்படையினருக்கு தெரியவில்லை. பலர் கொள்ளைச் செல்வத்துடன் அப்படியே மலபாருக்கு தப்பியோடினர். போருக்குச் சென்றபடையில் பாதியே திரும்பி வந்தது.

வேலுத்தம்பி கொல்லத்திற்குச் சென்று கடலோரக் கோட்டைக்குள் முகாமிட்டார். அதுதான் ஏறத்தாழ எழுபதுநாட்கள் நீடித்த கலவரத்தின் தொடக்கம்.

கர்னல் மன்றோ அனுப்பிய செய்திகளின் அடிப்படையில் திருவிதாங்கூரின் பிரிட்டிஷ் ரெசிடென்ட் ஆக இருந்த கர்னல் பெல்லாட் மெட்ராஸ் கவர்னருக்கு விண்ணப்பம் விடுத்தார். கவர்னர் ஜார்ஜ் பர்லோவின் ஆணைப்படி மலபாரில் இருந்து கர்னல் குப்பேஜும் பாளையங்கோட்டையில் இருந்து கர்னல் லோகரும் படைகளுடன் திருவிதாங்கூருக்குள் நுழைந்தனர்.

வேலுத்தம்பி கொல்லத்தை அடுத்த குண்டறை என்னும் இடத்தில் 1809 ஜனவரி 15ஆம் தேதி ஊர்த்தலைவர்களை கூட்டி ஓர் அறிவிப்பை விடுத்தார். அதை குண்டறை விளம்பரம் என்று பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆவணங்கள் குறிப்பிட்டன.

எழுந்து வரவிருக்கும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை முதல்முதலாகச் சுட்டிக்காட்டிய அறிக்கை அது. பிரிட்டிஷார் இந்தியாவை விழுங்கிவிடுவார்கள் என்றும், அதை தடுக்கும் ஆற்றல் பிரிந்து போரிட்டுக்கொண்டும், சுயநலத்தையே கருதிக்கொண்டும் வாழும் அரசர்களுக்கு இல்லை என்றும், படைத்தலைவர்களும் வீரர்களும் தங்கள் மண்ணைக் காக்க படையென திரண்டு எழவேண்டும் என்றும் அது அறைகூவியது. பிரிட்டிஷார் காவல்கூலி என்றும் கப்பம் என்றும் திருவிதாங்கூரில் மறைமுகமாகக் கொள்ளையடித்துச் சென்ற மாபெரும் செல்வத்தை அது கணக்கிட்டு கூறியது.

அறம் வாழ, இந்தியாவின் தொல்மரபுகள் பேணப்பட, நாட்டின் தன்மானம் நிலைகொள்ள அணிதிரள்க என்று அறைகூவிய அந்த அறிவிப்பு ஒரு சிறு எழுச்சியை உருவாக்கியது. வேலுத்தம்பிக்குப் பின்னால் நாயர்படை ஒன்று திரண்டது. அன்றே அவர்கள் கொல்லம் கண்டோன்மெண்டை தாக்கினர்.

அவர்களை ஒரு ராணுவம் என்று சொல்வதே ஒரு வேடிக்கை என்று பிறகு மேஜர் ஹாமில்டன் அளித்த அறிக்கை குறிப்பிட்டது.  ஒரு பெரும் மக்கள் திரள். அதில் கிட்டத்தட்ட இருபதாயிரம்பேர் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ராணுவப் பயிற்சி என்பதே இல்லை. பெரும்பாலானவர்கள் அடிமுறைப் பயிற்சியும் கொஞ்சம் உள்ளூர் ஆயுதப்பயிற்சியும் பெற்றவர்கள். அவர்களுக்கு அணிவகுக்க தெரியவில்லை. ஒருவரோடொருவர் முட்டிமோதி கூச்சலிட்டு ரகளைசெய்து கற்களை வீசி கட்டிடங்களை உடைத்துக்கொண்டு அவர்கள் மலைவெள்ளம்போல ஒழுகிச் சென்றார்கள்.

பெரும்பாலானவர்கள் வெறும் கால்களுடன் நடந்தனர். இடையில் சுற்றிக்கட்டிய அரைவேட்டியும் தலையில் துணித்தலைப்பாகையும் மட்டும்தான் ஆடைகள். எந்தவகையான கவசங்களும் கிடையாது. பொதுவான செய்தித் தொடர்பு முறையோ வரையறுக்கப்பட்ட தலைமையோ இல்லை. சிறுசிறு குழுக்களின் பெருந்தொகை. ஆனால் எந்த குழுவுக்கும் தனியான தலைமை என்பது இல்லை.

அவர்கள் ஒரே அலையாக வந்து தாக்கவில்லை, சூழ்ந்துகொள்ளவுமில்லை. வரும்வழியிலேயே பெரும்பாலானவ்ர்கள் பிரிந்துவிலகி வழியில் கொள்ளையிடத் தொடங்கினார்கள். சில இடங்களில் அவர்களுக்குள் பூசல்களும் அடிதடிகளும் நடைபெற்றன. முன்னணிப்படை கோட்டையை தாக்கிய பிறகும்கூட பின்னால் வந்தவர்களுக்கு தாக்குதவதற்கான செய்தி சென்று சேரவில்லை. முன்பக்கம் நாயர்கள் கூட்டம்கூட்டமாக செத்துவிழுகையில் பின்பக்கம் ஈட்டிகளை தரையில் தட்டியபடி வட்டம் வட்டமாக நடனமிட்டு பாடிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் முறையான ஆயுதங்கள் இல்லை. ஏராளமானவர்கள் கமுகுமரத்தை கீறி முனைகூராக்கி செய்யப்பட்ட வாரிக்குந்தம் என்னும் உள்ளூர் ஈட்டிகளையே ஆயுதங்களாக வைத்திருந்தனர். அவர்களில் நூற்றுக்கும் குறைவானவர்களே மஸ்கட்டுகள் வைத்திருந்தனர். பதினெட்டு சிறியவகை பீரங்கிகளை மாட்டுவண்டிகளில் வைத்து இழுத்துவந்தனர். அவற்றில் ஆறுபீரங்கிகள் மட்டுமே கண்டோன்மெண்ட் வரை வந்தன. நான்கு மட்டுமே வெடித்தன. மொத்தமே பதினாறு குண்டுகள் மட்டுமே சுடப்பட்டன.இரண்டு மட்டுமே பிரிட்டிஷ் கோட்டையைச் சென்றடைந்தன.

அவர்கள் எவருக்கும் பீரங்கிகளை இயக்கத் தெரிந்திருக்கவில்லை. திருவிதாங்கூர் எப்போதுமே பீரங்கிகளை இயக்க ஐரோப்பியரையே நம்பியிருந்தது. பீரங்கிகளின் எடையைப் பற்றி நாயர் படையினருக்கு எந்த புரிதலும் இருக்கவில்லை. அவற்றை ஏற்றிய மாட்டுவண்டிகள் சாலைப் பள்ளங்களில் சக்கரம் இறங்கியதும் அச்சு முறிந்தன. அவற்றை ஆங்காங்கே கைவிட்டுவிட்டு சென்றனர்.

பீரங்கிகளை வலுவான மேடையில் நிலைநிறுத்தவேண்டும் என்று அறியாமல் அவர்கள் வண்டிகளிலேயே அவற்றை வைத்து வெடிமருந்து திணித்து குண்டுபோட்டனர். பீரங்கிக்குழாய்களின் பின் அடியால் அவை இருந்த வண்டிகள் நொறுங்கி பீரங்கிகள் தரையில் விழுந்து மண்ணோடு அழுந்தின. அவற்றின் உடல் சுட்டுப்பழுத்திருக்கும் என்று தெரியாமல் அவர்கள் அவற்றை தூக்க முயன்றனர். கைகள் வெந்து கதறி விலகினர். மேலும் முட்டாள்தனமாக அவற்றைக் குளிர்விக்கும்பொருட்டு நீரை மேலே ஊற்றினர். உள்ளே கொதிக்க மேலே குளிர்ந்தபோது பீரங்கிக்குழாய்கள் விரிசலிட்டன. விரிசலிட்ட பீரங்கிகளில் மருந்திட்டு வெடிக்க செய்தபோது அவை சிதறின.

வெறும் ஆறுமணிநேரமே அந்தப்போர் நடைபெற்றது. கோட்டை கர்னல் சேமர்ஸின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர் மேஜர் ஹாமில்டரின் தலைமையில் ஐரோப்பியப் படைகளை ஒரு பிரிவாக ஆக்கி அவர்களிடம் பீரங்கிகளின் பொறுப்பை ஒப்படைத்தார். மறவர் படையையும் உள்ளூர் படையையும் இரண்டு பிரிவுகளாக்கி அவர்களை முன்னால் நிறுத்தினார்.

முதல் ஒருமணி நேரத்திலேயே எழுநூறு நாயர்கள் கொல்லப்பட்டார்கள். அனைவரும் சிதறி ஓடினர். அவர்களை நகர் முழுக்கத் தேடித்தேடி பிடித்தனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது குற்றம் என்று அறிவிக்கப்பட்டமையால் நகரமே மூடிவிட்டது. நாயர்படைகள் கொல்லத்தில் பரிதவித்து அங்குமிங்கும் ஓடினர். அச்சத்தில் அவர்கள் உதிரிகளின் கும்பல்களாக மாறினர்.

அவர்கள் படகுவழியாகவே எங்கும் செல்லமுடியும். படகுத்துறைகளைச் சூழ்ந்துகொண்டு பிரிட்டிஷ் படை அவர்களைச் சிறைப்பிடித்தது. மறுநாள் அவர்களைச் சிறைபிடித்து அளிப்பவர்களுக்கு பத்துசக்கரம் பரிசு என அறிவித்தபோது ஊர்க்காரர்களும் படகுக்காரர்களும் வேட்டைக்கு இறங்கினர்.

ஊர்க்காவலர்களால் ஆங்காங்கே அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டனர். நகர்முழுக்க சடலங்கள் பரவிக்கிடந்தன. மூவாயிரம்பேருக்கு மேல் நகரில் கொல்லப்பட்டனர். நாலாயிரம் பேர் கைதுசெய்து இழுத்துவரப்பட்டு கோர்ட்மார்ஷியல் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். ஒருநாளுக்கு ஐநூறுபேர் வீதம் பன்னிருநாட்கள் தொடர்ந்து தூக்கு நடைபெற்றது. எஞ்சியவர்களில் நாலாயிரம் பேர் உடனே கப்பலில் ஏற்றப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.

பாலக்காடு வழியாக கர்னல் பிக்டன் தலைமையில் வந்த இரண்டாவது படை எஞ்சியவர்களை வேட்டையாடியது. மலபாரிலிருந்து கர்னல் குப்பேஜ் தலைமையில் வந்த படை கொச்சியை கைப்பற்றி கொல்லம் நோக்கி வந்தது. லெஃப்டினண்ட் கர்னல் மக்லியோட் தலைமையில் ஆலப்புழை கடலோரமும் காயலோரமும் முழுமையாகவே சூழப்பட்டன.

வேலுத்தம்பி தெற்கே தப்பியோடினார். அவருடைய தாய்நிலமான தெற்கு திருவிதாங்கூரில் முன்பு காப்டன் பெனெடிக்ட் டி லென்னாய் கட்டிய வலுவான கோட்டைகள் இருந்தன. ஆரல்வாய்மொழிக் கோட்டை, வட்டக்கோட்டை, உதயகிரிக்கோட்டை, பதம்நாபபுரம் கோட்டை, மருந்துக்கோட்டை போன்றவற்றை தளமாக ஆக்கிக்கொண்டால்  நிலைகொள்ள முடியும் என்று நம்பினார்.

அதோடு தன்னுடைய உறவினர்களான நாயர் குடும்பத்தவர் உதவி செய்வார்கள் என்று எதிர்பார்த்தார். ஆளூர், புளியறை, கேரளபுரம், திருவிதாங்கோடு, மங்கலம், பாறசாலை, நெய்யாற்றின்கரை போன்ற ஊர்களிலிருந்த நாயர் மாடம்பிகளுக்கெல்லாம் ஓலையுடன் அவருடைய தூதர்கள் சென்றார்கள்.

ஆனால் அவர்கள் அனைவருமே வேலுத்தம்பியால் பாதிக்கப்பட்டவர்கள். 1804-ல் நடந்த நாயர் கலவரத்தின்போது கர்னல் மக்காலேயின் துணையுடன் வேலுத்தம்பியால் கொடூரமாக ஒடுக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் வேலுத்தம்பி நடந்தவற்றை மறந்துவிடும்படியும் நாட்டுக்காக தன்னுடன் நிலைகொள்ளும்படியும் மன்றாடினார்.

ஆனால் அவர்கள் அவர் மேல் மேலும் வஞ்சம் கொண்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும்  வேலுத்தம்பியால் யானைகளை கொண்டு இரண்டாகப் பிளக்கப்பட்ட மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை எழுந்து வந்தார். கேரளபுரம் வலிய சாஸ்தா நாயர் வேலுத்தம்பிக்கு ஓர் ஓலையை அனுப்பினார் “மாவிங்கல் கிருஷ்ணபிள்ளைக்கு உன் நெஞ்சிலிருந்து எடுத்த ரத்தத்தை கலந்த பச்சரிசிச்சோறை உருட்டி வைத்து பலிகொடுக்கவேண்டும் வேலாயுதா. அதற்காகத்தான் நான் காத்திருக்கிறேன்.”

அவர்கள் அனைவரும் வேலுத்தம்பியை கைவிட்டனர். பாளையங்கோட்டையில் இருந்து மெட்ராஸ் ரெஜிமெண்டை சேர்ந்த பிரிட்டிஷ் ராணுவம் கர்னல் லேகரின் தலைமையில் கிளம்பி ஆரல்வாய்மொழியை அணுகியபோது எந்த எதிர்ப்பும் இல்லாமல் திருவிதாங்கூரின் கோட்டைகளை அவர்களுக்காக திறந்திட்டனர்.

கர்னல் லோகர் நாகர்கோயில் வந்து ஆளூர் வழியாக பத்மநாபபுரத்தை அடைந்தார். அரண்மனையில் இருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு திருவனந்தபுரத்தை நோக்கிச் சென்றார். ஆரல்வாய்மொழி வீழ்ந்ததுமே புலியூர்க்குறிச்சியில் உதயகிரிக் கோட்டையில் தங்கியிருந்த வேலுத்தம்பி தன் படைவீரர்களுடன் திருவனந்தபுரம் நோக்கிச் சென்றார்.

திருவனந்தபுரத்தில் மகாராஜாவை சென்று சந்தித்து விடைபெற்றார் வேலுத்தம்பி. இருகைகளையும் தலைக்குமேல் கூப்பி, “நான் எல்லாவற்றையும் திருவிதாங்கூரின் நலனுக்காகவே செய்தேன். ஏதாவது பிழை நடந்திருந்தால் நானே பொறுப்பு. ஆங்கிலேயர் வந்து விசாரித்தால் என்னை பொறுப்பாக்கி விடுங்கள். எனக்கு தண்டனை அறிவியுங்கள். உங்கள் மாண்புக்கு பங்கம் வரவேண்டாம்” என்று அரசரிடம் சொன்னார். அரசரின் முன் வாள்தாழ்த்தி வணங்கி விடைபெற்றார்.

அவர் சென்ற மறுநாள் கர்னல் லேகரின் படை திருவனந்தபுரத்தை வந்தடைந்தது. வழியில் எந்த எதிர்ப்பையும் அவர்கள் சந்திக்கவில்லை. “நனைந்த மணல்மேடுகள் போலிருந்தன கோட்டைகள். கன்னம் சிவந்த மணப்பெண் போல வரவேற்றனர் நாயர் படைத்தலைவர்கள்” என்று லேகர் தன் அறிக்கையில் எழுதினார்.

பாலராம வர்மா மகாராஜா சரண் அடைந்தார். வேலுத்தம்பி தளவாய் பதவிநீக்கம் செய்யப்பட்டார். உம்மிணித்தம்பி என்று அழைக்கப்பட்ட மார்த்தாண்டன் இரவி புதிய திவானாக பொறுப்பேற்றார். அவர் வேலுத்தம்பி தளவாய் உரியமுறையில் தண்டிக்கப்படுவார் என்று கர்னல் லோகருக்கு வாக்குறுதி அளித்தார்.

வேலுத்தம்பி தளவாய் திருவனந்தபுரத்தில் இருந்து தப்பி கொல்லம் செல்லும் வழியில் பிரிட்டிஷ் படைகள் இருப்பதைக் கண்டு வழி திரும்பினார். குன்னத்தூர் பகுதியில் வள்ளிக்கோடு என்னும் இடத்திற்கு அருகே இருந்த காட்டுக்குள் சென்று ஒளிந்துகொண்டார். பிரிட்டிஷ் படை அங்கும் வருவதைக் கண்டு அங்கிருந்து மண்ணடி என்னும் ஊருக்குச் சென்றார். அங்குதான் அவருடைய இறுதி நிகழ்ந்தது.பாலியத்து அச்சன் சிறைப்பிடிக்கப்பட்டு மெட்ராஸுக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

நான் தோந்நியில் இட்டூப்பிடம் கேட்டேன். “இந்தக் கலவரத்தை தடுத்திருக்க முடியுமா? வேலுத்தம்பி தளவாய் சொல்வதில் நியாயம் உண்டு அல்லவா?”

”எனக்கு எந்த நியாயமும் தெரியாது. நான் எளிமையான வியாபாரி. எனக்கு அரசியல் எதற்கு?” என்று  தோந்நியில் இட்டூப்புசொன்னார்“

நான் பின்னர் அவரிடம் ஏதும் பேசவில்லை. அவரும் நானும்தான் எச்.எம்.எஸ்.ப்ளூலோட்டஸ் என்ற கப்பலில் கல்கத்தா சென்றோம். கல்கத்தா சென்றபின் விடைபெறும்போது அவர் என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டேன். அவர் பீரங்கி, துப்பாக்கி ஆகியவற்றுக்கான வெடிமருந்துகளை கல்கத்தாவிலிருந்து வாங்கி கொண்டுசென்று திருவிதாங்கூரிலும் கொச்சியிலும் கொல்லத்திலும் கோழிக்கோட்டிலும் விற்பனைசெய்துவந்தார்.

[ 3 ]

கர்னல் சேமர்ஸ் நான் நினைத்ததுபோல உயரமாக பருமனாக இருக்கவில்லை. மெலிந்த நீண்ட உடல்கொண்ட மனிதர். பச்சைக்கண்கள், சிவப்பான குட்டைத்தலைமயிர். சிறிய உதடுகளுக்குச் சுற்றிலும் சுருக்கங்கள். சந்தேகமும் விலக்கமும் கொண்ட பார்வை.

நான் கைநீட்டி “நான் டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்றேன்.

“உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று அவர் சொன்னார், மகிழ்ச்சியே அற்ற குரலில். மெலிந்த விரல்களைக் கோத்து முகவாயின்கீழ் வைத்தபடி “கர்னல் மன்றோ உங்களை எதன்பொருட்டு அனுப்பினார் என்று தெரிந்துகொள்ளலாமா?” என்றார்.

“நான் தலைக்குளத்து பத்மநாபன் தம்பியைச் சந்திக்கவேண்டும்” என்றேன்.

அவர் முகம் மாறியது. “உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.”

“ஆமாம் தெரியும்” என்றேன். “நான் நேற்று காலைதான் கொச்சிக்கு வந்தேன். செய்தி கேட்டதுமே படகில் ஏறிவிட்டேன்.”

“அதை எவரும் மாற்றமுடியாது… அது டிரிப்யூனலின் தீர்ப்பு”

“கர்னல் சேமர்ஸ், நான் கவர்னரிடம் பேசமுடியும். லார்ட் ஜார்ஜ் பர்லோ எனக்குத் தெரிந்தவர்தான். அவர் பெங்காலில் பணியாற்றியபோது அவர் மனைவி லேடி எலிசபெத் பர்ட்டன் ஸ்மித் அவர்களுக்கு சிகிச்சை அளித்திருக்கிறேன்.”

கர்னல் சேமர்ஸ் சலிப்புற்றவர் போல தோன்றினார். “டாக்டர் பெயின்ஸ், இதை நீங்கள் ஏன் செய்யவேண்டும்?”

“நான் இதேபோன்ற ஒன்றை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செய்ய முயன்றேன்… மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை என்பவருக்காக. அன்று அது கைகூடவில்லை. எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை, அவரை எனக்கு தெரியும். இன்றும் அதேதான், பத்மநாபன் தம்பியை எனக்குத் தெரியும்”

“எந்த அளவுக்கு தெரியும்?” என்று கர்னல் சேமர்ஸ் கேட்டார். “அவர் பிரிட்டிஷாருக்கு எதிராக கலகம் செய்த வேலுத்தம்பி தளவாயின் தம்பி… பலநூறு பிரிட்டிஷார் சாவுக்கு காரணமாக அமைந்தவர்.”

“ஆமாம், அதுபோர். அவர் கொலை கொள்ளை எதிலும் நேரடியாக ஈடுபடவில்லை. அவருடைய தமையனுக்குக் கட்டுப்பட்டவர். அவர் கொலைகாரர் அல்ல, கலகக்காரரும் அல்ல.”

“அவர்மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன என்று தெரியுமா?”

“கலகம் செய்தார்கள் என்று தெரியும்.”

“அது போர்க்குற்றம். அதற்கு அப்பால் ஒரு தனிப்பட்ட குற்றச்சாட்டு உண்டு. சென்ற 1808 டிசம்பர் 20 ஆம் தேதி கொச்சிக்கு சர்ஜன் ஹ்யூம் என்னும் ராணுவ மருத்துவரும் அவர் மனைவியும் வந்து சேர்ந்தனர். கொச்சியிலிருந்து கொல்லத்திற்கு வந்துகொண்டிருந்த பன்னிரண்டாம் ரெஜிமெண்டின் காப்டன் ஜோ மக்கின்ஸியும், சார்ஜண்ட் ஜான் வார்னரும் 12 பிரிட்டிஷ் படையினரும் 34 பிரிட்டிஷ் இந்தியப் படைவீரர்களும் அப்போது கொல்லத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். சர்ஜன் ஹ்யூமும் மனைவியும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் படகுகளில் கொல்லம் நோக்கி வந்தனர்”

“ஆலப்புழை அருகே புறக்காட்டு கடற்கரையை அவர்கள் அடைந்தபோது படகுத்துறையிலேயே வேலுத்தம்பியின் படை அவர்களை வளைத்துக் கொண்டது. அவர்களை இழுத்துச் சென்று சிறைவைத்தனர். அவர்களை என்ன செய்வது என்று வேலுத்தம்பியிடம் கேட்டனர். அவர் அவர்களை கொன்று விடும்படி ஆணையிட்டார்.அதற்கு ஆதாரம் இருக்கிறது”

“புறக்காட்டு கடற்கரையிலேயே சர்ஜன் ஹ்யூமும், ஜோ மக்கின்ஸியும் ,வார்னரும் கொல்லப்பட்டார்கள். மற்ற அனைவரையும் இழுத்துச் சென்று ஆலப்புழையின் அருகே பள்ளாத்துருத்தி ஆற்றில் கைகால்களை கட்டி நீரில் முக்கி கொலைசெய்தனர்” என்று சேமர்ஸ் சொன்னார். “அது போர் என்றால்கூட அவர்கள் போர்க்கைதிகள்”

இடைமறித்து “கர்னல், ஆனால் அவர்கள் திருமதி ஹ்யூமை விடுவித்தனர், திருமதி ஹ்யூமை நான் சந்தித்தேன்… நான் இங்கே வருவதற்கே அவர்தான் காரணம்” என்றேன்.

“ஆமாம், அவர்கள் திருமதி ஹ்யூமை விடுவித்தனர்… ஏனென்றால் இங்கே பெண்களைக் கொல்வது பாவம் என்று கருதப்படுகிறது… மற்ற அனைவரையும் கொல்ல ஆணையிட்டவர் பத்மநாபன் தம்பி” என்றார் கர்னல் சேமர்ஸ்.

“இல்லை, திருமதி ஹ்யூம் என்னிடம் சொன்னார். அவர்களின் படகு கைப்பற்றப்பட்டதுமே அத்தனை பேரையும் கொல்லவேண்டும் என்று நாயர்படை துடித்தது. அவர்கள் பெண்களைக் கொல்ல தயங்குபவர் அல்ல. வேலுத்தம்பி தளவாய் களக்காட்டில் நடத்திய பெண்கொலை அனைவருக்கும் தெரியும். அவர்களை தடுத்தவர் பத்மநாபன் தம்பி. வேலுத்தம்பிக்கு நெருக்கமானவரான வைக்கம் பத்மநாப பிள்ளைதான் கொலை செய்யவேண்டும் என்று துடித்தவர். அந்த செயலை தாமதப்படுத்தவேண்டும் என்றுதான் பத்மநாபன் தம்பி தன் அண்ணனிடம் கேட்டுச் செய்யலாம் என்று சொன்னார். அப்படித்தான் வேலுத்தம்பிக்கு செய்தி சென்றது. அவர் கொல்லலாம் என்று ஆணையிட்டார்”

“அந்தக் குழுவின் தலைவர் பத்மநாபன் தம்பி” என்றார் கர்னல் சேமர்ஸ்.

“ஆமாம், ஆனால் அவர் பொறுப்பல்ல. அவர் மீண்டும் தாமதிக்க முயன்றார். ஒருகட்டத்தில் அவர்களை தப்புவிக்கக்கூட முயன்றார். வைக்கம் பத்மநாபபிள்ளை திருமதி ஹ்யூமையும் கொல்லத்தான் நினைத்தார். அவர் உயிரை மன்றாடி மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தவர் பத்மநாபன் தம்பி. அவர் வாயாலேயே சாட்சி சொல்ல வைக்கமுடியும்”

“ஆனால் இப்போது நேரமில்லை… இன்னும் சற்றுநேரத்தில் தூக்கு நிறைவேறிவிடும்.”

“நான் அவரை பார்க்கவேண்டும்…நான் அவரிடம் பேசவேண்டும்.”

“அதனால் பயனில்லை.”

“நான் பேசவேண்டும்… என்னிடம் கர்னல் மெக்காலேயின் ஆணை இருக்கிறது.”

“ஏற்பாடு செய்கிறேன்” அவர் மணியை அடித்தார். சார்ஜன்ட் கோர்டான் வந்து நின்றான். “சார்ஜண்ட் இவரை பத்மநாபன் தம்பியை பார்க்க அழைத்துச்செல்…”

சார்ஜெண்ட் தன்னை அறிமுகம் செய்துகொள்ளாமல் செல்வோம் என்று தலையசைத்தான்.நான் எழப்போனேன்

கர்னல் சேமர்ஸ் சட்டென்று கசப்புடன் மெல்லிய ஒலியில் சிரித்தார் “டாக்டர் பெயின்ஸ், இந்த மொத்த நிகழ்ச்சியும் அர்த்தமே இல்லாத அபத்தம். அவர்கள் விட்டில்கள் போல செத்தார்கள், சாகிறார்கள். எந்த அர்த்தமும் இல்லை. வெறும் கேலிக்கூத்து. இந்த அபத்தத்தில் நீங்களும் ஏன் திளைக்கவேண்டும்?” என்றார்.

நான் திகைப்புடன் பார்த்தேன்.

“இங்கே நடந்தது போரே அல்ல…. ஆறுமணிநேரம் போர் நடந்தது என்று பதிவுசெய்திருக்கிறோம். அது எங்கள் போர்ச்செலவுக்காக நாங்கள் காட்டும் கணக்கு. போர் நடந்தது வெறும் நாற்பது நிமிடங்கள். பீரங்கிகள் முழங்கியதுமே கூட்டம் கூட்டமாகச் செத்து உதிர்ந்தார்கள். பீரங்கிக் குண்டுகளை தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் கிடைமட்டமாகச் சுட்டோம். ஒவ்வொரு குண்டும் நூறுபேரை நசுக்கிக்கொண்டு சென்றது. அவர்கள் மண்ணில் படுத்திருந்தால் தப்பியிருக்கலாம். ஆனால் யார் சொல்வது? ஆணையிடவே எவருமில்லை.”

“நம் தரப்பில் காயம்பட்டவர்கள் பதினேழுபேர். உயிரிழப்பு நான்கு பேர் மட்டும்…  நிதியுதவிக்காக எங்கள் தரப்புச் சாவுகளை கொஞ்சம் கூட்டி கணக்கு காட்டியிருக்கிறோம். அவர்களின் சாவு என்பது தோராயமான கணக்குதான், எழுநூறு. எவர் அடக்கம்செய்ய குழி தோண்டுவது? ஆயிரம்பேரையாவது இழுத்துச்சென்று காயலில் வீசியிருப்போம்….”என்றார் கர்னல் சேமர்ஸ் “என்ன இது என்று சலித்துவிட்டேன். போர் ஆறு மணிநேரம் ஏன் நடந்தது தெரியுமா? பின்னால் வந்தவர்களுக்கு முன்னால் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் வந்துகொண்டே இருந்தார்கள். வந்து செத்துக்குவிந்தார்கள், அவர்களுக்கே தெரியாத ஏதோ மர்மமான சக்தியால் ஆட்டுவிக்கப்பட்டவர்கள்போல…”

“ஓ” என்றேன். எனக்கு படபடப்பாக இருந்தது.

“வெறும் படுகொலை… எறும்புகள்மேல் வெந்நீர் விடுவதுபோல” என்றார் கர்னல் சேமர்ஸ். “நினைத்தால் குமட்டல் வருகிறது. ஆனாலும் செய்து கொண்டிருக்கிறேன்… ஏனென்றால் இன்னொரு கலகத்தை நாம் விரும்பவில்லை. இவர்களின் தலைமுறைநினைவுகளில் இதன் விளைவு ஆழமாக பதியவேண்டும்.”

“நல்லது” என்றேன் பெருமூச்சுடன் “நான் வருகிறேன்.”

ஆனால் கர்னல் சேமர்ஸ் நிலைகுலைந்த நிலையில் இருந்தார். உரக்க “டாக்டர் பெயின்ஸ், நீங்கள் வாசிப்பவர் என நினைக்கிறேன். இதெல்லாம் என்ன? ஏன் இதைச் செய்கிறார்கள்?”

“யார்?”

“இந்த வேலுத்தம்பி தளவாய்… இவரைப் போன்றவர்கள்.”

“அவர்களுக்கான நியாயங்கள் இருக்கின்றன” என்றேன்.

“ஆமாம், நான் குண்டறை விளம்பரத்தை வாசித்தேன். கண்டிப்பாக அவர்களுக்கான நியாயங்கள் உள்ளன. அவர்கள் போராடுவது இயல்பானது, அதுதான் தேசபக்தி, அதுவே ஆண்மை. ஆனால் ஏன் இப்படி எந்தத் தயாரிப்பும் இல்லாமல் மக்களை பலிகொடுக்கிறார்கள்? அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு வெறிகொள்ளச் செய்து சாவுக்களத்திற்கு அனுப்புகிறார்கள்? இவர்களுக்கு இந்த மக்களைப்பற்றி கவலையே இல்லையா”

“அந்த மக்களுக்காகத்தான் அவர்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள்.”

“அப்படியென்றால் ஏன் இதைச் செய்கிறார்கள்? உண்மையில் இந்த மக்களை அவர்கள் தங்களைச் சுற்றி கேடயமாக வைத்துக் கொள்கிறார்கள். அவர்களை வைத்து பகடையாடுகிறார்கள். மக்களை இவர்கள் பணயக்கைதிகளாக வைத்துக்கொள்கிறார்கள்… ” கர்னல் சேமர்ஸ் சொன்னார்.

“அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொண்டவர்கள் அம்மக்கள். அவர்களின் ஆணையை ஏற்றுக்கொள்கிறார்கள்” என்றேன்.

“ஆம், ஏன்? அறிவில்லாத கும்பல் அறிவில்லாதவர்களையே தலைவர்களாக ஏற்கிறதா? உணர்ச்சிவெறி கொண்ட கூட்டம் உணர்ச்சியை தூண்டுபவனைத்தான் தலைவன் என்று ஏற்குமா? இவர்களின் மனதிலுள்ள வன்முறைதான் ஒரு வன்முறையாளனை வீரவழிபாடு செய்ய தூண்டுகிறதா?”

“கர்னல், நாம் இவர்கள்மேல் தீர்ப்பு சொல்லக்கூடாது”என்றேன்.

“ஆமாம், அவர்களுக்கான நியாயங்கள் இருக்கலாம். நாம் அன்னியர்கள்” என்றார் கர்னல் சேமர்ஸ் “குண்டறை விளம்பரத்தில் சொல்லப்பட்ட எல்லாமே உண்மை. அதன்பொருட்டு போராடியே ஆகவேண்டும். போராடாவிட்டால் அது கோழைத்தனம், சுயநலம். ஆனால்…” அவர் தலையை குலுக்கி “ஆனால் இது பைத்தியக்காரத்தனம். விட்டில்கள் போல…” என்றார்.

“அவர்களின் தலைவர்களுக்கு அரசியல் சூழ்நிலை தெரியவில்லை… அவர்கள் நவீன உலகை புரிந்து கொள்ளவில்லை” என்றேன்.

“ஆம், அது ஓரளவு உண்மை. வேலுத்தம்பியை போன்றவர்கள் மிகச்சிறிய உலகில் வாழ்கிறார்கள். உலக அரசியல் அவர்களுக்கு தெரியாது. அவர்கள் எறும்புகளைப் போல, எறும்பளவுக்கே இருப்பவையே அவர்களின் கண்ணுக்குப் படுகின்றன. உலக அரசியல் சற்றேனும் தெரிந்திருந்தால் உருவாகிவரும் பிரிட்டிஷ்ப்பேரரசுக்கு எதிராக இந்தச் சிறிய நிலத்தில் இந்தச் சிறிய படையுடன் ஆயுதங்கள் இல்லாமல், பயிற்சி இல்லாமல் போராடமுடியாது என்று அறிந்திருப்பார்கள்” என்று கர்னல் சேமர்ஸ் சொன்னார்.

“சற்றேனும் வரலாற்றுப் புரிதல் இருந்தால் எங்கள் எதிரிகளுடன் சேர்ந்துகொண்டிருப்பார்கள். அதைவிட தங்கள் நட்புசக்திகளை பகைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். முடிந்தவரை ஒருங்கு திரண்டிருப்பார்கள்… இப்படி தனிக்குழுவாக, தனிநபர் வீரத்தை நம்பி செயல்பட்டிருக்க மாட்டார்கள். இது கூட்டுத்தற்கொலை அன்றி வேறல்ல.அதை வீரம் என்று நினைத்துக்கொள்கிறார்கள்”

“ஆமாம்” என்றேன். நான் அங்கிருந்து செல்லவிரும்பினேன். என் தலையில் நரம்புகள் வலியுடன் துடித்தன.

“இதில் தாளவே முடியாத ஓர் அபத்தம் உள்ளது. இது ஏன் தாளமுடியாதது என்றால் உலகமெங்கும் இதுதான் நடைபெறுகிறது. உலகமெங்கும்… ஆப்ரிக்காவில் அரேபியாவில் ஆஸ்திரேலியாவில் கிழக்காசியாவில் எங்கும்… இதேபோல கண்மூடித்தனமான கூட்டம். இதேபோல தன்முனைப்பு கொண்ட, உலக அறிவில்லாத தலைமை. வீரவழிபாடு, கூட்டுத்தற்கொலை… இதேதான்… நூற்றுக்கணக்கான முறை…” என்றார் கர்னல் சேமர்ஸ்.

நான் அந்தப்பேச்சையே விரும்பவில்லை. எனக்கு மூச்சுத்திணறியது.

கர்னல் சேமர்ஸ் கையைவீசி தலையை அசைத்தார் “நான் ஜெனரல் ராபர்ட் கன்னிங்ஹாமிடம் இதைப்பற்றி ஒருமுறை கேட்டேன். நதிகளில் நீர் பெருகும்போது கனமான கலங்கல்நீர் கீழே செல்கிறது. அதைப்போலத்தான் இது என்றார். நாம் புதியகாலகட்டத்தவர்கள், அவர்கள் பழைய காலகட்டத்தவர்கள். அவர்கள் ஓர் அலையாக வந்து நம்மிடம் தோற்று கீழே சென்றே ஆகவேண்டும், அது இயற்கையின் விதி என்றார்.”

“அப்படியென்றால் தலைவர்களை ஏன் குறைசொல்லவேண்டும்?” என்றேன்.

“உண்மை… ஆனால் இவர்கள் தலைவர்கள். இத்தனை ஆயிரம் பேரின் உயிருக்கு பொறுப்பேற்றுக் கொண்டவர்கள்… இவர்கள் இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். இன்னும் கொஞ்சம் பார்வையை விரித்துக் கொள்ளலாம்” என்றார் கர்னல் சேமர்ஸ் “மிகச்சிறிய மனிதர்களாக இருக்கிறார்கள். மிகமிகச்சிறிய உள்ளம். எறும்புகள்போல என்றேனே. இன்னொரு எறும்பு மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது. இந்த ஒவ்வொரு உள்ளூர் தலைவனுக்கும் அவனுக்கு சமானமான சிலரே எதிரிகள். அவர்களிடம் போரிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்… “

“இந்த வேலுத்தம்பியையே எடுத்துக்கொள். இவர்மட்டும் இவருடைய நண்பர் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை கொல்லாமல் இருந்திருந்தால் இவரை தெற்குத் திருவிதாங்கூரில் எளிதில் வென்றிருக்கமுடியாது. மாவிங்கல் கிருஷ்ணபிள்ளைக்கு வேளிமலை உள்ளங்கை போல. அவருடன் இவரும் சேர்ந்து மலைமேல் ஏறி அப்பால் காட்டுக்குள் சென்றிருந்தால் ஐம்பதாண்டுகள் போரிட்டிருக்கலாம்….”

நான் பெருமூச்சுவிட்டேன்.

“நீங்கள் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை அறிந்தவர் அல்லவா?”

“ஆமாம்” என்றேன்.

“பாவம்… கொடூரமாக கொல்லப்பட்டார்” என்றார் கர்னல் சேமர்ஸ் “இதோ வேலுத்தம்பியை வென்று அவருடைய வம்சத்தையே முற்றாக அழிக்க வெறிகொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பவர் இப்போதைய திவான் உம்மிணித் தம்பி. இவர்கள் அனைவருமே ஒரே வார்ப்புதான். இவர்கள் சந்தேகப்படுவதும் அஞ்சுவதும் சகோதரர்களைத்தான். இவர்கள் அனைவர் கையிலும் சகோதரக்கொலையின் பாவரத்தம்.”

“உடனிருந்த தோழர்களைக் கொன்று கொன்று காலப்போக்கில் மனப்பிறழ்வு கொண்டவர்களாக ஆகிவிடுகிறார்கள். எவர்வேண்டுமென்றாலும் தன்னை கொல்லக்கூடும் என்று சந்தேகப்படுகிறார்கள். ஆகவே கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் கொல்கிறார்கள். மேலும் மேலும் கொலை” என்றார் கர்னல் சேமர்ஸ் “ஆகவே அவர்களைச் சுற்றி திறமையான எவருமே இல்லாத நிலை உருவாகிறது. வெறும் துதிபாடிகளும் சேவகர்களும் நிறைகிறார்கள். ஒருதலைவனின் அறிவு என்பது கூட்டான அறிவாகவே இருக்கமுடியும். அதை இழப்பவன் எத்தனை மாமனிதன் என்றாலும் போதுமான அறிவுடையவன் அல்ல”.

“மிகச்சிறியவர்கள்… ஆம், தனிப்பட்ட பண்புகளில் அவர்கள் நம்மைவிட மேலானவர்கள். நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் தாங்களே வெட்டிக்கொண்ட குழிகளுக்குள் நிற்கிறார்கள். நாம் குன்றின்மேல் நிற்கிறோம். நம்முடைய கல்வியால், பிரிட்டிஷ் அரசு நமக்கு அளிக்கும் உலகப்பார்வையால். நாம் இவர்களை எறும்புகளைப் பார்ப்பதுபோல குனிந்து பார்க்கிறோம். சிலசமயம் பரிதாபப்படுகிறோம். நம் காலைக் கடிக்கும்போதும் பூட்ஸால் ஒரே நசுக்காக நசுக்கிவிடுகிறோம்.”

அத்தனை சொற்களின் எடையை என்னால் தாளமுடியவில்லை. என் தலை ஈயக்குண்டுபோல ஆகிவிட்டது. “நான் போகலாமா?” என்றேன்.

“போகலாம்….” என்றார் கர்னல் சேமர்ஸ் அவர் தளர்ந்து இயல்பு நிலையை அடைந்து மீண்டும் தன் மேஜைக்குப் பின்னால் சென்று அமர்ந்தார். ஒரு தந்தப்பெட்டியில் இருந்து சுருட்டை எடுத்து நடுங்கும் கைகளால் பற்றவைத்துக்கொண்டார்.

“அத்தனைக்கும் அப்பால் ஒன்று இருக்கிறது டாக்டர் பெயின்ஸ்” என்றார் கர்னல் சேமர்ஸ் “இவர்களின் தன்முனைப்பு. தாங்கள் சரித்திர புருஷர்கள் என்னும் மிதப்பு. அப்படி நினைக்க ஆரம்பிக்கும் எவரும் அதன்பின் மனிதர்களாக இருப்பதில்லை. தெய்வங்களாக தங்களை நினைக்கிறார்கள். மனிதர்கள் கூட்டத்தோடு அழிக்க தெய்வங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை”

நான் “ஆமாம்” என்றேன்.

“அவ்வாறு சரித்திர புருஷர்களாக அவர்களை உணரச்செய்வது அந்தச் சமூகத்தில் இருக்கும் வீரவழிபாடு. வீரவழிபாடு சென்ற யுகத்திற்குரியது. பழங்குடிகளின் மனநிலை அது. பிரிட்டிஷாருக்கு விஸ்கௌண்ட் நெல்சனுக்கு பின் எவர் மீதும் வீரவழிபாடு இல்லை. நம்மில் வீரம் உண்டு, வீரர்கள் உண்டு, ஆனால் நமக்கு இன்று வீரம் என்பது கடமைதான். நம் வீரர்கள் எல்லாருமே கடமைவீரர்கள்தான். தெய்வங்கள் அல்ல. எந்த வீரரும் பிரிட்டிஷ் சட்டத்துக்கும் நெறிக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல”

அவர் என்னை நோக்கி புன்னகைத்தார் “ஆம், ஆகவே நாம் வெல்கிறோம். ஆகவே இவர்களை கூண்டோடு அழிக்க உரிமை கொண்டிருக்கிறோம். சரிதானே?”

அதிலிருந்த தற்கசப்பு எனக்கு புதிதல்ல, பெரும்பாலான பிரிட்டிஷ் படைத்தலைவர்களின் இயல்பு அது. படித்தவர்கள் படைத்தலைவர்களாக ஆகும்போது ஏற்படும் விளைவு. அவர்கள் மிகச்சிறந்த வியூக வகுப்பாளர்கள், மிகமிகச் சிறந்த பேச்சுவார்த்தை நிபுணர்கள். ஆனால் மூர்க்கமில்லாத படைவீரன் கசந்துவிடுகிறான். சேமர்ஸ் ஆக்ஸ்ஃபோர்ட் மாணவர்.

நான் என் கோட்டை இழுத்து சீரமைத்து பெருமூச்சு விட்டேன். “கர்னல்” என்றேன் “ஆனால் அத்தனைக்குப்பிறகும் மக்கள் கொண்டாடும் சரித்திர புருஷர்கள் அவர்கள்தான்” என்றேன்.

சேமர்ஸ் உணர்ச்சியற்ற நீலக்கண்களால் என்னை பார்த்தார்.

“நாம் மீண்டும் பார்ப்போம்” என்றேன்.

சேமர்ஸ் ஒன்றும் சொல்லாமல் தலையை குனிந்தபடி சுருட்டுப்புகையை ஊதி விட்டுக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

நான் தலைவணங்கி வெளியேறினேன்.

[ 4 ]

நான் விரிந்த கூடம் ஒன்றில் அமரச்செய்யப்பட்டிருந்தேன். உயரமான நாற்காலி கால்களுக்கு வசதியாக இருந்தது. என் முன் ஒரு குறுகிய மேஜை, தொப்பி உடைவாள் ஆகியவற்றை வைப்பதற்குரியது. அதில் என் மருத்துவப்பெட்டியை வைத்திருந்தேன்

கதவு திறந்து பத்மநாபன் தம்பி உள்ளே வந்தார். அவருடன் வந்த சார்ஜெண்ட் அங்கே நின்றுவிட்டான். அவர் வணங்கியபடி புன்னகையுடன் அருகே வந்தார். நான் எழுந்து நின்று வணங்கினேன்.

அவர் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு “எதிர்பார்க்கவே இல்லை” என்றார்.

“நான் நேற்றுத்தான் செய்தியை கேள்விப்பட்டேன்…உடனே கிளம்பிவிட்டேன்” என்றேன்.

“இதேபோலத்தான் முன்பும் வந்தீர்கள்.”

நான் அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை. “நான் வந்தது ஒரு செய்தியுடன்” என்றேன். “நான் கொச்சியில் திருமதி ஹ்யூமைப் பார்த்தேன். அவர் உங்கள் மீதான நன்மதிப்பையும் வணக்கத்தையும் சொல்லும்படிச் சொன்னார்.”

“அவர்களுக்கு எல்லா நலன்களும் அமையட்டும்.”

“நான் அவர்களை அழைத்துக் கொண்டு கர்னல் மன்றோவை பார்க்கச் சென்றேன். அவரிடமிருந்து ஒரு கடிதம் பெற்றேன். அந்தக் கடிதத்துடன் இங்கே வந்திருக்கிறேன்” பெட்டியில் இருந்து அந்தக் கடிதத்தை வெளியே எடுத்தேன். “இது கர்னல் மன்றோ அளித்த கடிதம், மெட்ராஸ் கவர்னர் ஜார்ஜ் பர்லோவுக்கு. இன்னொரு கடிதம் கர்னல் மன்றோவே சொல்லி நான் எழுதியது. உங்களுக்காக”

அதை மேஜைமேல் வைத்தேன். “இதில் உங்கள் கைச்சாத்து வேண்டும்…”

“எதற்காக?”என்றார் பத்மநாபன் தம்பி.

“நீங்கள் மெட்ராஸ் கவர்னர் ஜார்ஜ் பர்லோவுக்கு எழுதும் விண்ணப்பக் கடிதம் இது. முன்பு மெட்ராஸ் கவர்னர் உங்களுக்கு வாக்களித்த பென்ஷனை பெற்றுக்கொண்டு கண்ணூர் அருகே சென்று தங்கியிருப்பீர்கள், மேற்கொண்டு திருவிதாங்கூர் அரசியலில் தலையிட மாட்டீர்கள் என்று…”

“டாக்டர் இன்றைய நாள் என்ன என்று தெரியுமா?”

“தெரியும்… நீங்கள் இந்த மனுவில் கையெழுத்திட்டுவிட்டால் மெட்ராஸ் கவர்னர் இதன்மேல் முடிவெடுப்பதுவரை உங்களை தூக்கில்போட முடியாது. இந்த கடிதத்தை கவர்னருக்கு வழிமொழிந்து முன்தேதியிட்டு கர்னல் மன்றோ கைச்சாத்திட்டிருக்கிறார். இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது”

பத்மநாபன் தம்பி புன்னகைத்தார்.

“உங்கள் மூத்தவரே முடிவெடுத்துவிட்ட விஷயம்தான் இது… நீங்கள் தயங்க வேண்டியதில்லை” என்றேன் “திருவிதாங்கூருக்குள் நுழைவதில்லை என்பதெல்லாம்கூட ஒரு தற்காலிக ஒப்பந்தம்தான்… நாளையே நிலைமை மாறலாம்.”

பத்மநாபன் தம்பி அந்த காகிதத்தையே சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு தலைதூக்கி என்னைப்பார்த்தார்.

“டாக்டர், அண்ணனின் கடைசிநாளில் நடந்தது என்ன என்று தெரியுமா?”

“அவர் கொல்லப்பட்டார்…அவர் உடலை—”

“நான் முழுமையாகச் சொல்கிறேன்” என்று பத்மநாபன் தம்பி சொன்னார். “திருவனந்தபுரத்தில் இருந்து நாங்கள் குன்னத்தூர் சென்றோம். அங்கே பள்ளிக்கோட்டுக்கு அருகே ஒரு சிறுகாட்டுக்குள் தங்கியிருந்தோம். சமையல்புகையை எவரோ பார்த்து உளவு சொல்லிவிட்டனர். பிரிட்டிஷ் படை வருவதை எங்கள் உளவாளி கொச்சுநீலன் ஓசையெழுப்பி அறிவித்தான். நாங்கள் அங்கிருந்து புதர்கள் வழியாகவே தப்பி ஓடினோம்.”

நாங்கள் இரவுமுழுக்க புதர்கள் வழியாக ஓடி மண்ணடியைச் சென்றடைந்தோம். அங்கே மேலுக்கல் கேசவன் போற்றி என்பவருடைய பழைய வீடு ஒன்று இடிந்து முள்செடிகள் மூடி கிடந்தது. நானும் மாடன் பிள்ளை என்னும் வீரனும் அண்ணனும் மட்டும்தான். அந்த வீட்டைச்சுற்றி தோட்டம் காடாக மண்டியிருந்தது. மாடன்பிள்ளைக்கு தெரிந்தவர் கேசவன் போற்றி. நாங்கள் அந்த இடிந்த வீட்டில் குடியேறியது போற்றிக்கு தெரியாது.

எங்களுக்கு அங்கே சாப்பிட ஒன்றுமில்லை. தோட்டத்தில் நின்ற தேங்காய்களை பறித்து தின்றோம். அண்ணனின் உடலில் நகைகள் இருந்தன. அவற்றை மாடன் பிள்ளையிடம் கொடுத்து கொண்டுசென்று விற்று தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டுவரும்படி சொல்லி அனுப்பினோம்.

எப்படியாவது மாஹிக்குள் நுழைந்தால் பிரெஞ்சுக்காரர்களிடம் சென்று சேர்ந்துவிடலாம் என்று அண்ணன் நினைத்தார். பிரெஞ்சுக்காரர்களின் உதவியுடன் மீண்டும் திருவிதாங்கூரை கைப்பற்றி ஆங்கிலேயரை துரத்தலாம் என்று கனவுகண்டார். நகையை விற்ற பணம் வந்தால் படகுவழியாக மாஹிக்கு கிளம்பமுடியும் என்று நாங்கள் திட்டமிட்டோம்.

மாடன் பிள்ளை அந்த நகைகளை மண்ணடியில் இருந்த பாறமேல் நாராயணக் குறுப்பு. என்பவரிடம் விற்பதற்காகக் கொண்டு சென்றான். அவர் அவனை அங்கேயே பிடித்துவைத்துக்கொண்டு பிரிட்டிஷ் படைக்கு சொல்லியனுப்பினார். அவருக்கு அண்ணன்மேல் கடுமையான கோபம் இருந்தது. ஏனென்றால் அவர் மாவுங்கல் கிருஷ்ணபிள்ளையின் தோழரான பாறமேல் கிருஷ்ணக்குறுப்பின் தம்பி.

பிரிட்டிஷ் படை நெருங்குவதை நான் கண்டுபிடித்தேன். அவர்கள் ஓசையில்லாமல் வந்தார்கள். ஆனால் பறவைகள் ஓசையிட்டு காட்டிக்கொடுத்தன. “அண்ணா, பிரிட்டிஷார்” என்று நான் சொன்னேன். நாங்கள் அங்கிருந்து ஓடினோம். புதர்கள் வழியாக நரிகளைப்போல ஓடிக்கொண்டே இருந்தோம்.

மரங்களில் ஏறிப்பார்த்தால் நாற்புறமும் பிரிட்டிஷ் படை சூழ்ந்துவிட்டது தெரிந்தது. பாறைமேல் நாராயணக்குறுப்பும் தன் படைகளுடன் வந்திருந்தார். நாங்கள் ஓடிப்போய் மண்ணடி பகவதிகோயில் வளைப்புக்குள் புகுந்தோம். அது மிகச்சிறிய கோயில். அதைச்சூழ்ந்து மண்ணாலான உயரமான மதில் இருந்தது. ஆனால் அங்கே ஒளிந்துகொள்ளமுடியாது. பாறைமேல் நாராயணக்குறுப்பு வேட்டைநாய்களுடன் வந்தார்.

தப்பமுடியாது என்று தெரிந்தது. நான் மனமுடைந்துவிட்டேன். அண்ணா என்னிடம் “பப்பு, என்னை அவர்கள் உயிருடன் பிடிக்கக்கூடாது. என்னை அவமானப்படுத்துவார்கள். அது இந்த நாட்டை அவமானப்படுத்துவதுபோல. நான் கௌரவமாகச் சாகவிரும்புகிறேன்… என்னைக் கொல்” என்று சொன்னார்.

என் நெஞ்சு நடுங்கிவிட்டது “அண்ணா” என்று அலறினேன்.

“வேறுவழியில்லை… இதுதான் முடிவு…”

“அண்ணா நான் எப்படி அதைச் செய்வேன்!”என்று கதறினேன்.

“இது என் ஆணை” என்று அண்ணா சொன்னார்.

நான் வாளை உருவினேன் என்னால் முடியவில்லை. “இல்லை அண்ணா… என்னால் முடியாது அண்ணா” என்று அழுதேன்.

“என்னை வெட்டு… இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடுவார்கள்… நான் அந்த வெள்ளைநாய்கள் முன் அவமானப்படக்கூடாது… என் கழுத்தை வெட்டு பப்பு”என்று அண்ணா கூச்சலிட்டார்.

அண்ணன் எனக்கு அப்பா. அவர் தோளில் இருந்து வளர்ந்தவன். அவர் கையால் சோறு அள்ளி ஊட்டிய நினைவு எனக்கு இருக்கிறது. என்னால் முடியவில்லை. நான் தலையில் அறைந்துகொண்டு அழுதேன்.

நாய்களின் குரைப்போசை கேட்டது. அவர்கள் அணுகிவந்துகொண்டிருந்தனர்.

அண்ணா தன் இடையில் இருந்து கட்டாரியை உருவி தன் நெஞ்சிலேயே ஓங்கி குத்தினார். கட்டாரி அவர் உடலில் இறங்கியது. அவர் மல்லாந்து விழுந்தார். காயத்தை பொத்திய கைவிரல்களில் ரத்தம் ஊறி வழிந்தது.

ஆனால் அதனால் அவர் சாகமாட்டார் என்று தெரிந்தது. வெட்டுவாய் வழியாக அவருடைய மூச்சு குருதியுடன் குமிழிகளாக வெடித்தது

அண்ணா “பப்பூ, இந்தக் காயத்தால் நான் சாகமாட்டேன்…. அவர்கள் என்னை இந்த காயத்துடன் கட்டி இழுத்துச் செல்வார்கள்… நான் இழிவடைந்து சாகவிடாதே… வெட்டு என்னை. என் தலையை வெட்டு” என்றார்.

நான் வாளை உருவி அண்ணனின் தலையை வெட்டினேன். மீண்டும் வாளை தூக்குவதற்குள் பாறைமேல் நாராயணக்குறுப்பின் வீரன் ஒருவன் ஒரு கல்லை எடுத்து எறிந்து என்னை வீழ்த்தினான். என்னை பிடித்துக் கொண்டார்கள். என்னை குப்புறத்தள்ளி கைகால்களை கட்டினார்கள். இழுத்துச்சென்று பாறைமேல் வீட்டு முற்றத்தில் பகல் முழுக்க போட்டிருந்தனர். பின்னர் கட்டிய கையை அவிழ்க்காமலேயே மாட்டுவண்டியில் கொல்லத்திற்கு கொண்டுவந்தனர்.

“சொல்லுங்கள் டாக்டர், அண்ணனை கொன்ற கையுடன் நான் இனி வாழலாமா?” என்றார் பத்மநாபன் தம்பி.

நான் என்னை தொகுத்துக் கொண்டேன். “உங்கள் உணர்வு புரிகிறது”என்றேன். “ஆனால் நீங்கள் உங்கள் அண்ணனின் கனவை முன்னெடுக்கலாமே… உங்கள் அண்ணனும் அதைத்தான் விரும்புவார்.”

பத்மநாபன் தம்பி புன்னகைத்து “இல்லை, நான் உயிர்வாழ விரும்பவில்லை” என்றார்.

“உங்கள் அண்ணன் செய்து முடிக்காத விஷயங்களைச் செய்யலாம்…” என்றேன். “அவர் நீங்கள் இப்படி உயிர்விடுவதை விரும்ப மாட்டார்….”

“இல்லை டாக்டர் விட்டுவிடுங்கள். எனக்கு ஓர் உதவி மட்டும் செய்யுங்கள். என்னை தூக்கிலிடும்போது நீங்களும் உடனிருங்கள். இல்லாவிட்டால் என்னை சார்ஜெண்டுகள் அவமானப்படுத்துவார்கள். மேலக்காட்டு நீலகண்டபிள்ளையை தூக்கிலிடுவதற்கு முன் அவர் வாய் நிறைய மண்ணை அள்ளி ஊட்டினார்கள்.”

“சேச்சே!” என்றேன் “பிரிட்டிஷாரா அதைச் செய்தார்கள்?”

“படைவீரர்கள் எங்கும் ஒரே மனிதர்கள்தான்” என்றார் பத்மநாபன் தம்பி “அண்ணனின் தலைவெட்டுபட்ட உடலை திருவனந்தபுரத்திற்குக் கொண்டுசென்று அங்கே கண்ணும்மூலை என்ற இடத்தில் ஒரு தூக்குமரத்தில் கட்டி தொங்கவிட்டனர். தலைவேறு உடல்வேறாக”

“உண்மையாகவா?”

“ஆமாம்” என்று பத்மநாபன் தம்பி சொன்னார். “அதில் ஆச்சரியமே இல்லை. ஒரு மாவீரன் கொல்லப்படுவது என்பது ஒரு பதக்கம் போல. அதை உலகுக்குக் காட்டவேண்டும் அல்லவா? அவர்கள் அதை கொண்டாடினார்கள்..”

நான் என் உணர்வுகளைக் கடந்து “பத்மநாபன் தம்பி, இது என் கடைசி கோரிக்கை. எனக்காக நீங்கள் இதைச் செய்யவேண்டும். உங்கள் அண்ணன் இதையே விரும்புவார், சந்தேகமே வேண்டாம்…. கைச்சாத்திடுங்கள். இதை நான் உங்களுக்காகச் செய்தேன் என்று இருக்கட்டும். எனக்காகவும்கூட…”

சிலகணங்கள் பத்மநாபன் தம்பி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் கைச்சாத்திடுவார் என்று தோன்றியது. ஆனால் அவர் நிமிர்ந்து “டாக்டர் நான் முழுமையாகச் சொல்லவில்லை… அண்ணன் கடைசியாக என்ன சொல்லி கூவினார் தெரியுமா?”

நான் வெறுமே பார்த்தேன்.

“மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை நினைத்து வெட்டுடா என் தலையை என்று”

நான் நடுங்கிவிட்டேன்.

பத்மநாபன் தம்பி எழுந்துகொண்டபோது கண்கள் நீரால் பளபளத்தன. ஆனால் அவர் புன்னகை செய்தார்.

“நான் வெட்டினேன்…” என்று கிசுகிசுக்கும் குரலில் சொன்னார் “டாக்டர் என் கைக்கு அந்த வேகம் வந்தது நானும் மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை நினைத்துக்கொண்டதனால்தான்.”

நான் வெறுமே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

“நன்றி டாக்டர், நீங்கள் செய்த முயற்சிக்கு நான் அடுத்த பிறவியில் ஈடு செய்கிறேன். நான் வாழக்கூடாது. அது தர்மம் அல்ல.”

கைகூப்பிவிட்டு பத்மநாபன் தம்பி நடந்து சென்று மறைந்தார். சார்ஜன்ட் வந்து வணங்கும் வரை நான் அங்கேயே அமர்ந்திருந்தேன்.

***

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–66

$
0
0

பகுதி ஆறு : படைப்புல் – 10

பிரஃபாச க்ஷேத்ரத்தின் தென்கிழக்கு எல்லையென அமைந்த மண்மேட்டை அடைந்து மேலேறத் தொடங்கியதும் அனைவரும் தயங்கினர். அதுவரை உள்ளம் எழுந்து எழுந்து முன்செலுத்திக்கொண்டிருந்தது. மேடேறுவதன் சுமையால் மூச்சு இறுகி உடல் களைத்தபோது உள்ளமும் தளர்ந்தது. முன்னால் சென்றவர்கள் தயங்க பின்னால் சென்றவர்கள் வந்துகொண்டிருக்க அந்தத் திரள் தன்னைத்தானே முட்டிச் சுழித்து பக்கவாட்டில் விரித்துக்கொண்டது.

இருளுக்குள் நீர் வந்து நிறைவதுபோல அம்மேட்டை கீழிருந்து நிரப்பி முடி வரை சென்றோம். அதன் மேற்குச்சரிவு முழுக்க மக்கள் இடைவெளியில்லாமல் நிறைந்திருந்தனர். அதன் உச்சியில் நின்றிருந்த உருளைப்பாறை ஒன்றின்மேல் கால் மடித்தமர்ந்து ஃபானு மேற்கே தெரிந்த இருண்ட வெளியை பார்த்துக்கொண்டிருந்தார். அது அப்போது மென்மையான நீராவியாக, பசுந்தழை வாசனையாக மட்டுமே தெரிந்துகொண்டிருந்தது. வானின் ஒளியில் ஆங்காங்கே இருந்த நீர்ப்படலங்கள் மின்னின.

இளையோர் ஃபானுவைச் சூழ்ந்து நின்றிருந்தார்கள். எவரும் எதுவும் பேசவில்லை. விழிகளால் அங்கே தங்களை நிரப்பிக்கொள்ள முயன்றவர்கள் போலிருந்தனர். ஃபானு பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தார். அவர் உள்ளம் எங்கிருக்கிறது என்று எனக்கு புரிந்தது. பிரஃபானு ஃபானுவிடம் “இங்கே நாம் நிலைகொண்டது நன்று, மூத்தவரே. இது நாம் வளரவிருக்கும் நிலம். ஆனால் இங்கு இப்போது நமக்கு என்ன காத்திருக்கிறதென்பதை அறியோம். விடிந்தபின் நன்கு நோக்கி உள்ளே நுழைவதே உகந்தது” என்றார்.

அந்தச் சொற்களால் ஃபானு கலைந்து திரும்பிப் பார்த்தார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை என்று தோன்றியது. ஃபானுமான் பிரஃபானு சொன்னதை மீண்டும் சொன்னான். ஃபானு “ஆம், அது நன்று. அவ்வாறே செய்வோம்” என்றார். அப்போதும் அவருக்கு ஒன்றும் புரிந்திருக்கவில்லை. பிரஃபானு “நிமித்திகர்கள் பொழுது கணித்து சொல்லட்டும். முதல் நற்காலை நூல்முறைப்படி வைத்து நாம் உள்ளே நுழைவோம். நாம் அரசர் என்று இந்நிலத்திற்குள் நுழையவேண்டும். இதற்குரிய தெய்வங்கள் நம்மை அவ்வண்ணமே அறியவேண்டும்” என்றார்.

“ஆம், தெய்வங்கள் அறியவேண்டும்” என்றார் ஃபானு. “எனில் நிமித்திகர்களை அழைத்து வரச்சொல்கிறேன்” என்றார் பிரஃபானு. “ஆம், அழைத்து வாருங்கள்” என்று ஃபானு சொன்னார். ஏவலர்கள் அவ்வாணையை ஏற்று தலைவணங்கினர். நான் “இத்திரளில் ஒவ்வொருவரும் அடையாளம் அழிந்து கலந்துவிட்டிருக்கின்றனர். நிமித்திகர்களை எப்படி தேடுவது?” என்றேன். “அனைவரும் சொல்லிழந்து அமைதியாக நின்றிருக்கிறார்கள். கூவி அழைத்தால் நிமித்திகர்கள் மறுமொழி சொல்வார்கள்” என்றார் பிரஃபானு. ஏவலர் தலைவணங்கி அப்பால் சென்றனர்.

பொழுது மெல்ல விடிந்து வந்தது. வானில் முகில்கள் தெளியத் தொடங்கின. கீழ்ச்சரிவில் சிவப்பு திரண்டது. கடலோரங்களில் மட்டுமே தெரியும் ஆழ்சிவப்பு அது. சில மலர்களில் மட்டுமே அவ்வண்ணம் தெரியும். கண்கள் துலங்கி வந்தன. காட்சி தெளிந்தபோது எங்களைச் சுற்றி மானுடத்தலைகளாலான ஏழு குன்றுகள் இருப்பதை நாங்கள் கண்டோம். மரங்களோ புல்லோ பாறைகளோ தெரியாத மானுட அலைகள். ஓசையற்று செறிந்து எழுந்து வான்கீழ் நின்றிருந்தன.

ஃபானு திரும்பிப்பார்த்து “நமது குடி! நம் மக்கள்!” என்றார். அவர் முகம் மலர்ந்திருந்தது. கைகளை விரித்து “வெல்லும் குடி! அழியாக் குடி!” என்று சொன்னபோது அவர் நெஞ்சு விம்முவதை என்னால் உணரமுடிந்தது. ஏனோ அந்த உணர்வை அப்போது என்னால் பகிர்ந்துகொள்ள இயலவில்லை. அவர்கள் ஒற்றை உடல் என ஒருவருக்கொருவர் அழுத்திக்கொண்டு அங்கு செறிந்திருந்தார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் முந்தவும் வெல்லவுமே உள்ளங்கள் முயன்றுகொண்டிருந்தன. உடல்கள் பருப்பொருளால் ஆனவை என்பதனால்தான் அவர்கள் அங்கு தேங்கியிருந்தார்கள். அவர்களுக்குள் இருக்கும் உணர்வு அவர்களை ஒன்றாக்கவில்லை. ஒவ்வொருவரையும் தனித்தனியாக பிரிக்கிறதென்றே எனக்கு தோன்றிக் கொண்டிருந்தது.

எங்களுக்கு முன்னால் எழுந்த நிலத்தின் மீது காலை வெண்முகில் பரவியிருந்தது. நிலத்தில் இருக்கும் முகில்களுக்கே உரிய பாற்படலம் போன்ற வெண்மை. புல்வெளியிலிருந்து பகல் முழுக்க எழுந்த நீராவி குளிர்ந்து நீராக மாறி அதன் மேலேயே படிந்து உருவான முகில் அது. அப்பாலிருந்து கடலும் அங்கே நீராவியை பொழியக்கூடும். பிரஃபாச க்ஷேத்ரம் முன்னிரவுகளில் மூச்சுத்திணற வைக்கும் அளவுக்கு நீராவிப் புழுக்கம் கொண்டிருக்கும் என்றும் பின்மாலையிலேயே உடலில் வியர்வை ஊறி எரிச்சல் எழும் என்றும் சிற்றுண்ணிகள் கடிக்கத் தொடங்கும் என்றும் ஒவ்வொரு நாளும் மழைக் கருக்கல்போல வானம் ஒரு பாவனை காட்டி, சிறுதுளிச் சாரலை காட்டி மீண்டும் வெளிக்கும் என்றும் நான் எண்ணிக்கொண்டேன். அது யமுனைக்கரை புல்வெளிகளின் இயல்பு.

அப்பால் இருக்கும் கடலிலிருந்து நீராவி எழுந்து வானில் பறந்துகொண்டே இருக்கும். ஆனால் மழையாகாமல் கீழிருந்து காற்று அதை தள்ளி அகற்றும். முதல் மழைக்காலத்தில் பெருங்காற்று கடலில் இருந்து நிலத்தின்மேல் பரவும். அலைஓசை காதில் விழும். கோடையிடியும் மின்னலும் வானை நிறைக்கும். அங்கே மழை வஞ்சம் கொண்டதுபோல் மண்ணை அறையும். புதர்கள் குமுறிக்கொந்தளிக்கும். புல்லை நிறைத்து நீர் பெருகி ஒழுகும். நீர் வடியும்போது கோதப்பட்ட புற்களின் மேல் சருகுகள் படிந்திருக்கும். அங்கே விசிறிகள் இன்றி வாழமுடியாது. சிற்றுயிர்கள் பெருகி வாழும். ஆகவே தூபப் புகை சூழாமல் இருக்கமுடியாது.

நுரையென புல் பெருகுவதால் ஆநிரைகள் செழிக்கும். ஆனால் மானுடர் வெவ்வேறு தோல்நோய்களால் துன்புறுவார்கள். சற்றே எச்சரிக்கையுடன் இல்லையென்றால் மூச்சு நோயும் குடல் நோயும் பெருகும். கொசுக்களும் ஈக்களும் வண்டுகளும் என சிற்றுயிர்களால் எப்போதும் சூழப்பட்டிருப்பார்கள். உணவுப்பொருட்களை எப்போதும் மூடியே வைக்கவேண்டும். ஆறிப்போனவற்றை உண்ணக்கூடாது. நான் புன்னகைத்தேன். அங்கே நான் முழு வாழ்க்கையையும் முடித்துவிட்டிருந்தேன். தனியாக, எனக்குள். திரும்பி சூழ்ந்திருந்த திரளைப் பார்த்தபோது ஒரு நாணத்தை அடைந்து விழி திருப்பிக்கொண்டேன்.

வெயில் வெம்மைகொண்டபோது வெண்முகில் திரை நிலத்தில் இருந்து மேலெழுந்தது. கடற்காற்றால் மெல்ல மெல்ல அகற்றப்பட்டது. வெயில் எழுந்து நிலம் சூடாகும் தோறும் மேலே தூக்கப்பட்டது. அந்தப் பெருவிரிவில் திரைவிலகி ஒழுகிச் சுருண்டு அகல நிலம் தெளியத் தொடங்கிய காட்சி உளம்விரியச் செய்வதாக இருந்தது. செழித்து நீலமோ என இலைப்பசுமை கொண்ட புல் நிறைந்த வெளி சிற்றலைகளாக விழி தொடும் எல்லை வரை நிறைந்திருந்தது. அதற்கப்பால் பச்சை வரம்பென மிகப் பெரிய கோட்டை ஒன்று இருந்தது.

“அது என்ன?” என்று ஃபானு என்னிடம் கேட்டார். “தென்னையா? ஈச்சையா?” நான் கூர்ந்து பார்த்தபோது அது உயரமற்ற குறுங்காட்டுச் செறிவென்றே தோன்றியது. “மூங்கில்களா?” என்றார் ஃபானு. என்னால் சொல்லக்கூடவில்லை. “ஒற்றர்களை வரச்சொல்” என்றார் ஃபானு. சற்று நேரத்தில் வந்து தலைவணங்கிய முதிய ஒற்றனிடம் “அது என்ன, அங்கே மறு எல்லையில் வேலியிட்டிருப்பது?” என்றார். அவன் “அரசே, அது ஒருவகை நாணல். நம் கைகளின் கட்டைவிரலைவிட தடிமனான உறுதியான தண்டுகள் கொண்ட நாணல்கள் அவை. அக்கரையில் அவைதான் இடைவெளியில்லாமல் செறிந்திருக்கின்றன” என்றான்.

“நாணலா?” என்று ஃபானு கேட்டார். “ஆம், அது சற்றே உப்பு கலந்த சதுப்பில் மட்டுமே வளர்கிறது. இந்தப் புல்வெளிச் சதுப்பிற்கு அப்பால் கடல்நீர் வந்து கலக்கும் உப்புச் சதுப்பு உள்ளது. அதற்கு அப்பால் மணலும் அதற்கப்பால் கடல் விளிம்பும் உள்ளன. அந்த உப்புச் சதுப்பு மிக ஆழமானது. அதில் இறங்கினால் மனிதர்கள் முற்றாகவே புதைந்துவிடக்கூடும். நெடுந்தொலைவிற்கு கடலையும் இப்புல்வெளியையும் பிரிப்பது அது. கடலிலிருந்து வரும் உப்புநீர்த் துளிகளை அச்சதுப்பும் நாணலும் தடுத்து விடுவதனால்தான் இப்புல்வெளி இத்தனை பசுமைகொண்டு செழித்திருக்கிறது. வேறெங்கும் கடலோரமாக இத்தனை பெரிய புல்வெளியை நாம் பார்க்க முடியாது” என்றான்.

“ஆம், இந்த நாணல்களைப்பற்றி எவரோ எப்போதோ சொன்னார்கள்” என்றார் ஃபானு. “அங்கே மணலில் ஆமைகள் வந்து முட்டையிடுகின்றன. பாறைகளில் சிப்பிகள் செறிந்துள்ளன. ஆழமற்ற புற நீரில் மீன்கள் நிறைந்துள்ளன” என்று ஒற்றன் சொன்னான். “சதுப்பில் செல்லும் திறன் கொண்ட பன்றிகள் சில சென்று அந்த நாணலின் இனிய தண்டுகளை உண்பதுண்டு. யானைகளும் அரிதாக அத்தனை தொலைவு சென்றுவிடுகின்றன.”

நான் அக்கணம் என் தலைக்குள் ஒரு குளிர்ந்த ஊசி நுழைவதுபோல் உணர்ந்தேன். அந்த நாணல்களைப் பற்றித்தான் சூதர்கள் பாடினார்கள், விஸ்வாமித்ரரின் தீச்சொல்லால் பிறந்த இரும்புத் தடியின் துகள்கள் அலைகளில் மிதந்துசென்று படிந்து முளைத்தவை அந்நாணல்கள். கூரிய படைக்கலங்களாகி யாதவக் குடியை அழிக்கவிருப்பவை. நான் எண்ணிக்கொண்டிருக்கையிலேயே ஒற்றன் சொன்னான் “அந்நாணல்கள் மிகமிக உறுதியானவை. ஆனால் எடையற்றவை. கூர்முனையாக செதுக்கினால் ஆற்றல்மிக்க அம்புகளாக ஆக்கலாம். இவ்விடத்தை நாங்கள் முதலில் பார்க்கவந்தபோதே அதை செய்து பார்த்தோம். மிகமிகச் சிறப்பானவை.”

ஆனால் ஃபானு அவ்வுணர்வுகளை அறியவில்லை. “நிமித்திகர்கள் வரட்டும். இந்நிலத்திற்குள் நாம் எழுவதற்கான பொழுதென்ன என்று பார்க்கவேண்டும்” என்றார். பிரஃபானு “நிமித்திகர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள், மூத்தவரே” என்றார். நிமித்திகர்கள் ஏவலரால் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அங்கேயே புற்பரப்பை ஒதுக்கி அமர்ந்து தோலாடையை விரித்து அதன்மேல் கோடு கிழித்து களம் வரைந்து கூழாங்கற்களை பரப்பி குறிநோக்கத் தொடங்கினார்கள். இடையில் கை வைத்தபடி அவர்கள் கணிப்பதை ஃபானு நோக்கி நின்றார். பிற இளையோர் அவரைச் சூழ்ந்து நின்றனர்.

வெயில் ஏறிக்கொண்டே வந்தது. வெண்முகில்திரை மேலெழ மேலெழ அந்நிலம் மேலும் தெளிவாகத் தெரிந்தது. ஒவ்வொரு புல்லிதழும் தனித்தனியாகத் தெரியும்படி அது அருகே எழுந்து திரையெனத் தொங்கியது. நிலத்திற்குள் நுழையும் தவிப்புடன் அரசரின் ஆணைக்காக காத்து நின்றிருந்த யாதவப் பெருந்திரள் எழுப்பிய ஓசை வலுத்தபடியே வந்தது. அத்திரளே காற்றில் அலைவுறுவதுபோல் அந்த ஓசை எழுந்தமைந்தது.

“இந்த நிலம் மெய்யாகவே உகந்ததுதானா?” என்று சுருதன் கேட்டார். எரிச்சலுடன் திரும்பி “இல்லையென்றால் என்ன செய்யப்போகிறீர்கள்? திரும்பிச்செல்லலாமா?” என்று ஃபானு கேட்டார். “அல்ல, இது புதையும் சதுப்பென்று தோன்றுகிறது. இதில் இப்போது நாம் சிறிய குடில்களை அமைக்க முடியும். ஆநிரைகள் இதில் பெருகவும் கூடும். ஆனால் ஒரு பெருநகரை இதில் அமைக்க முடியாது” என்றார் சுருதன்.

“எனில் அது மிதக்கும் பெருநகராக அமையட்டும். கல்லால் அமைக்கவேண்டியதில்லை, மரத்தால் அமைப்போம். அங்கே மரத்தெப்பங்களை அடுக்கி அவற்றின்மேல் ஒரு நகரத்தை அமைப்போம். இது நம் நிலம். இங்கு எதைக்கொண்டு நகரமைப்பது என்பதை பின்னர் முடிவு செய்வோம்” என்றார் ஃபானு. பிரஃபானு “மூத்தவரே, இது உகந்தது அல்ல என்றால் பிறிதொரு இடத்தை தெரிவுசெய்யும் வரை, ஆநிரைகள் பெருகி வலுவான யாதவக் குடிகளாக நாம் ஆகும் வரை, இங்கிருப்போம். பின்னர் இங்கிருந்து அகன்று சென்று பிறிதொரு நகரத்தை வென்றெடுப்போம்” என்றார்.

நிமித்திகர் எழுந்து “அரசே, நற்பொழுது இன்னும் ஒரு நாழிகை கழிந்து எழுகிறது. அப்போது கதிர் சற்று மேலெழுந்திருக்கும். இப்புல்வெளியில் ஈரம் உலர்ந்திருக்கும். இதில் பாம்புகள் இருந்திருந்தால் அவை தங்கள் வளைகளுக்குள் நுழைந்திருக்கும். நாம் புல்வெளிக்குள் நுழையும் தருணம் அதுவே” என்றார். ஃபானு “அதற்கு முன் நமது வண்டிகள் இந்நிலத்திற்குள் நுழைவதற்கு பாதை அமைக்கப்படவேண்டும்” என்றார்.

பிரஃபானு “ஆம், ஆனால் அதற்கு முன் நற்பொழுதில் முறையாக ஐம்மங்கலங்களுடன் தாங்கள் இந்நிலத்தில் காலடி வைத்து முன் நுழையுங்கள். மங்கலச்சேடியரும் இசைச்சூதரும் எழுக! அனைவருக்கும் முன்னால் வேதம் ஓதி அந்தணர் செல்க! கங்கை நீர் முதலில் அதன்மேல் விழவேண்டும். நாம் இதனுள் நுழைகையில் வேதச்சொல்லே முதற்சொல்லென எழவேண்டும். அதுவே நம் குடிக்கு உகந்த வழக்கம், நாம் செழிக்கும் வழி” என்றார்.

“ஆணை, அந்தணரும் சேடியரும் இசைச்சூதரும் ஒருங்கட்டும்” என்றார் ஃபானு. “அரசே, தங்கள் மணிமுடியும் செங்கோலும் இங்கே கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் அணிந்துகொள்ளலாம்” என்றார் பிரஃபானு. ஃபானு “இப்பொழுதில் அரச உடை என்பது…” என்று தயங்கினர். “அரசருக்குரிய அணிப்பொன் மேலாடை ஒன்றையேனும் அணிந்துகொள்ளுங்கள். மணிமுடியை சூடி செங்கோலை கையிலேந்திக் கொள்ளுங்கள். தங்களை பல்லாயிரம் விழிகள் பார்க்கின்றன என்பதை மறக்க வேண்டியதில்லை. அவர்கள் தங்கள் நிலமென்றும், இதை தாங்கள் ஆளவேண்டும் என்றும் எண்ணவேண்டும். அவர்களில் நம் தெய்வங்கள் எழ வேண்டும்” என்றார் பிரஃபானு.

மூத்தவர் ஃபானு அங்கே ஒரு பாறையில் அமர்ந்தார். இரு ஏவலர் வந்து அவருக்கு பொன்னூல் பட்டாடைகளை அணிவித்தனர். மூங்கில் பெட்டிகளிலிருந்து அரச அணிக்கோலத்திற்கான நகைகளை அவருக்கு சூட்டினர். மணிமுடியும் துவாரகை செங்கோலும் வந்து அருகே பிறிதொரு பாறையில் காத்திருந்தன. முதலில் சற்று தயங்கினாலும் அணிகொள்கையில் மூத்தவர் ஃபானு மகிழ்வதை பார்க்க முடிந்தது. அவர் முகம் மலர்ந்தபடியே வந்தது. தோள்கள் எழுந்தன. ஒவ்வொரு அணியாகச் சுட்டி அதை அணிவிக்கும்படி ஆணையிட்டார். அவர்கள் தவறவிட்டார்கள் எனில் அதை சற்று சுட்டிக்காட்டினார். ஒவ்வொன்றையும் அணிந்து அணிசெய்த ஏவலன் காட்டிய ஆடியில் தன்னை பார்த்துக்கொண்டார்.

மணிமுடிக்கு காவலாக நானும் சுருதனும் நின்றிருந்தோம். அந்தணர்கள் கங்கை நீர் நிறைத்த சிறு குடங்களுடன் முன்னால் அணிவகுத்தனர். அணிச்சேடியர் மங்கலத்தாலங்களை ஏந்தி நின்றனர். இசைச்சூதர்கள் தங்கள் இசைக்கலன்களை இறுக்கி சுதி சேர்த்துக்கொண்டனர். ஒவ்வொன்றும் ஒருங்கிக்கொண்டிருந்தது. மெல்ல மெல்ல எனக்கும் ஒரு நிறைவு எழுந்தது. முறையாக ஒரு புது நிலத்திற்குள் செல்லவிருக்கிறோம். ஐயங்களும் தயக்கங்களும் விலகவேண்டும். தெய்வங்கள் உடன் நிற்கவேண்டும். இங்கு யாதவ அரசு எழவிருக்கிறது.

நான் வேண்டிக்கொண்டேன். மீண்டும் மீண்டும் அறிந்த தெய்வங்களையெல்லாம் அகத்தால் தொழுதேன். மூதாதையரை வழுத்தினேன். தந்தையே, அப்போது ஒருமுறைகூட தங்களை நினைத்துக்கொள்ளவில்லை. மறந்தும் எவர் நாவிலும் தங்கள் பெயர் எழவில்லை. தங்களை எண்ணிக்கொள்வதாக ஃபானு கூறவில்லை. நிமித்திகரோ அந்தணரோ அமைச்சரோ கூட உங்களைப் பற்றி சொல்லவில்லை. எவரும் உண்மையிலேயே நினைவுகூரவில்லை.

முதிய அந்தணர் இருவர் வந்து செங்கோலையும் மணிமுடியையும் எடுத்து ஃபானுவுக்கு அணிவித்தனர். மணிமுடி சூட்டப்பட்டபோது ஃபானு மூதாதையர் பெயர்களை சொல்லும் நீண்ட பாடல் ஒன்றை சொன்னார். அதில் உங்கள் பெயர் வருகிறது. ஆனால் ஃபானு ஒரு சொல்லென அதை கடந்து சென்றார். செங்கோல் அவருக்கு அளிக்கப்பட்டபோது “மூதாதையரே! தெய்வங்களே! காத்தருள்க தேவர்களே!” என்றார். அப்போதும் தங்கள் பெயர் வரவில்லை.

இப்போது இங்கே நின்று எவ்வளவு இயல்பாக உள்ளம் உங்கள் பெயரை வெளியே தள்ளிவிட்டது என்று எண்ணி எண்ணி வியக்கிறேன். வேண்டும் என்றே அல்ல. நாவில் எழவில்லை. தேவையில்லை என்று ஆனதனால் அவ்வண்ணம் சுருங்கி உதிர்ந்துவிட்டிருந்தது.

ஃபானு மணிமுடி சூடி அந்தப் பாறைமேல் அமர்ந்தார். செங்கோலை தோளில் வைத்துக்கொண்டார். ஓர் அந்தணர் “ஒரு கன்றும் பசுவும் பின்தொடரட்டும்” என்றார். “கன்றும் பசுவும்!” என்று குரல்கள் எழுந்தன. ஒருவர் அப்பால் சென்று “ஒரு கன்றும் பசுவும் வரட்டும். வெண் பசு, கரிய மூக்கும் கரிய காம்புகளும் கொண்டது” என்றார். பசுவுக்காக பல குரல்கள் சென்றன. பசுக்களை குன்றுக்குக் கீழே நிரைவகுத்து நிறுத்தியிருந்தோம். அங்கிருந்து பசுக்களை மேலே கொண்டு வர வழியெங்கும் செறிந்து இருந்த மக்களைப் பிளந்து வழியமைக்க வேண்டியிருந்தது.

அப்போது அந்த ஓசையை கேட்டேன். முதலில் அது என்ன என்று எனக்கு தெரியவில்லை. நான் சூழப் பார்த்தபின் அதை அறியமுடியாமல் அருகிலிருந்த சிறுபாறைமேல் ஏறிப் பார்த்தேன். தேங்கி நின்றிருந்த துவாரகையின் குடிகளில் ஒரு பகுதி முன்விளிம்பு உடைந்து ஒரு கையென நீண்டு பிரஃபாச க்ஷேத்ரத்தின் புல்வெளிக்குள் ஊடுருவிச் சென்றுகொண்டிருப்பதை பார்த்தேன். அதன் முகப்பில் சாம்பனும் அவர் இளையோரும் குவிந்த அம்புபோல சென்றுகொண்டிருந்த்னர்.

“என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று?” என்று நான் கூவினேன். ஃபானு “என்ன அது ஓசை?” என்று கூவினார். ஓடிவந்த சிற்றமைச்சர் “அரசே, அந்தப் புல்வெளியில் யானை ஒன்றை சாம்பன் பார்த்தார். அது சேற்றில் இடைவரை புதைந்து வெளியே வராமல் தவிக்கிறது. தன்னை மறந்து அதை வேட்டையாடிக் கொல்லும்பொருட்டு அவர் வேலுடன் பாய்ந்துவிட்டார். அவர் உடன்பிறந்தாரும் குடிகளும் தொடர்ந்து சென்றார்கள்” என்றார். ஃபானு “அறிவிலி!” என்று கூவியபடி எழுந்தார். பிரஃபானு “மூத்தவரே, அமர்க! நாம் இப்போது ஒன்றும் செய்யமுடியாது” என்றார்.

நான் நோக்கிக்கொண்டிருந்தபோதே அந்த உடைவினூடாக அதுவரை தேங்கித் ததும்பி நின்றிருந்த துவாரகையின் குடிகள் அனைவரும் பெருகி பிரஃபாச க்ஷேத்ரத்தின் விரிந்த புல்வெளிக்குள் நுழைந்தனர். மொத்தத் திரளும் நீண்டு நீண்டு பெருக்கென ஆகிச் சரிந்து ஒழுகி புல்வெளியில் இறங்கி சிதறிப் பரவி நிறைந்துகொண்டிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

நிழல்காகம்,தேவி- கடிதங்கள்

$
0
0

தேவி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

தேவி ஒரு கொண்டாட்டமான கதை. சரளமான நகைச்சுவையுடன் ஆரம்பித்து முதிர்ந்தபடியே சென்று ஒர் உணர்ச்சிநிலையில் முடிகிறது. மொத்த நாடகத்தையுமே ஸ்ரீதேவி மாற்றியமைக்கிறார். அவரே அதை நடித்து வெற்றிகரமாக ஆக்குகிறார். ஆனால் புகழ் முழுக்க அனந்தனுக்கு. அவனை பாராட்டித்தள்ளுகிறார்கள். அவனுக்கே அது அவனுடைய வெற்றி அல்ல என்று தெரியவில்லை. ஸ்ரீதேவி மூன்றுவேடங்களில் நடித்ததனால் அவருடைய உண்மையான திறமையைக்கூட ஊர்க்காரர்கள் உணரவில்லை. சொல்லப்போனால் அனந்தன், லாரன்ஸ் தவிர எவருக்குமே அது ஸ்ரீதேவியின் வெற்றி என்று தெரியவில்லை. அவர் அதை நடித்ததுமே அதிலிருந்து விலகிவிட்டார். அவர் நடிப்பது ஒரு லீலையாகத்தானே ஒழிய வெற்றிதோல்விக்காகவோ பாராட்டுக்காகவோ அல்ல. அவர் அந்த தேவி பகவதிதான். தன் மகிழ்ச்சிக்காகவே ஆடுகிறார். அவருடைய ஆட்டத்துக்கான புகழும் பெருமையும் மற்றவர்களுக்கு

எம்.ராஜேந்திரன்

***

அன்புள்ள ஜெ,

தேவி கதை சிரித்து சிரித்து வயிறு புண் ஆகி விட்டது. ஸ்ரீதேவி, ஆனந்தன்,பெட்டி காதர், லாரன்ஸ்,பெருவட்டர் என்று மறக்க முடியாத பாத்திரங்கள். அதிலும் பெட்டி காதர்பாடும் “அல்லாவை நான் தொழுதால்” வெடித்து சிரித்து விட்டேன். அதிலும் ஏழே முக்கால் கட்டை ஆர்மோனியம் அபாரம்.

நீங்கள் ஏற்கனவே பதிவிட்டது போல, வெளியில் ஒரு ஒழுங்கின்மை தெரிந்தாலும் ஆழத்தில் ஒரு ஒழுங்கு கூடி விடுகிறது. கதையின் கடைசியில் “பெண்ணின் பெருந்தகை யாவுள” என்ற வரியே நினைவிற்கு வந்தது.

அன்புடன்

ஸ்ரீதரன்

பெங்களூர்

***

நிழல்காகம்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

நிழல்காகம் விசித்திரமான கதை. காகத்தின் பகை பற்றி நிறைய கதைகள் எழுதப்பட்டுள்ளன. காரணம் அது நம்மால் புரிந்துகொள்ளமுடியாத ஒரு ஃபினாமினன். இயற்கை நம் மீது பகைமை கொள்வதுதான் அது. அது நம்மை துணுக்குறச் செய்கிறது. அது கடவுள் நம் மீது கோபம் கொள்வதுபோல

ஆனால் இந்தக்கதை அடுத்தடுத்த கேள்விகளுடன் மேலே செல்கிறது. கதையிலேயே தலைமை பிட்சு சொல்வதுபோல அந்த அறப்பிரச்சினை இந்தக்கதையில் தத்துவப்பிரச்சினையாக ஆக்கப்பட்டுள்ளது. இந்த வாழ்க்கையின் மெய்யான பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறோம். எப்படி கடந்துசெல்கிறோம். அதுதான் இந்தக்கதையின் மையம்

உண்மையில் எனக்குப் பட்டது நாம் வாழ்க்கையை மீம் செய்கிறோம். நம் தெய்வங்கள் நம் வாழ்க்கையை மீம் செய்கின்றன என்று

சாந்தகுமார்

***

அன்பு மிக்க நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம், நலம்தானே?

நிழல்காகம் படித்தேன். இப்பொழுது எழுதி வரும் கதைகளிருந்து முற்றிலும் வேறுபட்டத் தளத்தில் இயங்கும் கதை. பெரும்பாலும் ஓரிரண்டு கதைகளைத் தவிர மற்றவை எல்லாமே வெவ்வேறு மையங்களைக் கொண்டு இருப்பதால்தான் வாசிக்க ஆர்வம் ஏற்படுகிறது. சலிப்பில்லாமல் இருக்கிறது.

யானைகளைத்தான் நினைவாற்றல் உள்ள மிருகம் என்று கூறுவார்கள் யானை டாக்டர் கதையில் தனக்குச் சிகிச்சை அளித்தவரிடம் பல மைல்கள் கடந்து தேடி வரும் யானையைப் படித்திருக்கிறோம்

வளவனூரில் இதுபோல ஒருவரைக் காகங்கள் இறுதிவரை துரத்திக்கொண்டே இருந்தன. அவர் அவற்றின் கூடுகளைக் கலைத்துக் குஞ்சுகளை அழித்ததே காரணம்.பின்பு கிருஷ்ணாபுரம் வந்தபோது அந்த ஊரில் ஓர் எருமை ஒன்று குறிப்பிட்ட ஒருவர் வந்தால் மட்டும் கட்டுத்தறியிலிருந்து அறுத்துக் கொண்டு போகத் திமிறும். பின்பு விசாரித்ததில் அவர் தன் இருசக்கர வாகனத்தை அதன் மீதுமோதிவிட்டார் எனத் தெரிந்தது.

இதுபோலக் காக்கை கொத்தும் கதைகள் முன்பு படித்துள்ளேன். ஆனால் அவை முடியும்போது மாந்திரீகம் செய்தோ அல்லதுசனி பகவானுக்குப் பரிகாரம் செய்தோதான் நிவாரணம் தேடுவதாக முடியும்.

ஆனால் ஓர் உயிரினத்துடன் அன்பு பாராட்டித் தான் வேறன்று,அது வேறன்று என்பதை அதற்கு உணர்த்தி விட்டால் அதுவும் பழைய தலைமுறைப் பகையை மறக்கும் என்பதைக் கதை உணர்த்துகிறது.

எந்த ஊருக்குப் போனாலும் முதலில் காக்கைகள் கொத்துவது போலவே பின்னால் அவர் ஒரு காகத்துடன் உறவு பாராட்டுவதையும் எல்லா ஊர்க்காக்கைகளும் உணர்ந்து கொள்வது உயிரினங்களிடையே உள்ள ஒத்துணர்வை வெளிப்படுத்துகிறது.

நாம் இன்னும் எளிமையாக நினைத்திருக்கும் பல உயிரினங்களிடமிருந்து கற்கவேண்டியவை நிறைய இருக்கின்றன என்பதைக் கதை வழி அறிய முடிகிறது. ஆனாலும் இன்னும் மனிதர்கள் துரோகம், வெறி. பகைமை.முதலியவற்றால் பீடிக்கப்பட்டு வாழ்கிறார்களே

வளவ. துரையன்

***

தொடர்புடைய பதிவுகள்

நற்றுணை ,கூடு- கடிதங்கள்

$
0
0

கூடு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கூடு கதை வாழ்க்கையின் ஒரு வடிவம். அதை நான் ஆன்மிகமான விஷயமாக மட்டும் எடுத்துக்கொள்ளவில்லை. பல வாழ்க்கைகளே அப்படித்தான். என் தாத்தா தஞ்சையில் கட்டிய வீட்டை இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடித்தார்கள். மொத்தம் இருபத்திரண்டு அறைகள். கல்யாணமண்டபமாக இருபது ஆண்டுகள் இருந்தது. பாழடைந்து பத்தாண்டுகள் கிடந்தது. அவர் வக்கீலாக இருந்தார். அன்றைக்கு அத்தனை அறைகளிலும் ஆளிருந்தார்கள். எதிர்த்த வீட்டை வாங்கி கெஸ்ட் ஹவுஸ் மாதிரி வைத்திருந்தார். அவருடைய சைஸ் அந்த வீடு. அவர் வயதாகி அப்பாவுடன் டெல்லியில் ஒரு அப்பார்ட்மெண்ட் அறையில் இருபதாண்டுகள் வாழ்ந்து மறைந்தார் அப்படியே கூடு கதைதான்.

ஸ்.ஆர்.ஸ்ரீனிவாஸன்

***

அன்புநிறை ஜெ,

தன்னிடம் விட்டு அகல்தலும் மீள வந்து அமைதலுக்குமான இடைவெளியில் கூடு இருக்கிறது. முக்தானந்தரின், இந்நாடெங்கும் அலைந்து அமையும் துறவிகளின், நோர்பு திரக்பாவின், ராப்டனின் பயணங்கள்.

ஓரிடத்தின் இயற்கையாக விளையும் காய்கறிகளை உட்கொள்வது குறித்தும், அது வெட்டப்படும் முறை, சமைக்கப் பயன்படும் கலம் என அனைத்தின் மீதான கவனத்தோடு உணவு தயாரித்தல் என்று மாக்ரோபயாடிக்ஸ் குறித்து ஊட்டி குருகுலத்தில் ஒரு உரையாடலின் போது குறிப்பிட்டிருந்தீர்கள். தான் சென்று படிய வேண்டிய நிலத்தைத் தேரும் விதையின் பயணம் முதலாகவே மாக்ரோபயாடிக்ஸ் தொடங்குகிறது போலும்.

பயணத்தின் கடுமையை ஒரு சுயசரிதையில் வேண்டுமென்றால் மேலும் கடுமையாக்கிக் கொள்ளலாம் என்ற வரி எழுதும் போது விவரிப்பின் விசையில் நாம் கொள்ளும் ஆணவத்தின் ஒரு சிறு அடிக்கோடு, பயணங்களை அதன் இடர்களை உருவைவிடப் பெரிதாக ஊதிப் பெருக்கி விடும் செயல்பாடு குறித்து கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

இதை சிறுகதையாக எழுத எப்படித் தோன்றியது. இந்தக் கதைக்கருக்களும் விதைகளென பறந்தலைகிறதா? படியும் தருணத்தைப் பொறுத்து சிறுகதை என்றோ, நாவல் என்றோ கட்டுரை என்றோ முளைக்கிறதா? இமயத்தைப் பற்றி எத்தனையோ விரிவான பயணக் கட்டுரைகள், பனி மனிதன் போன்ற கதைகள் மூலம் எழுதிய காட்சிப்புலங்கள் மீண்டும் ஒரு சிறுகதையில் அதற்கே உரிய உள்ளொளியோடு வருகின்றன.

இமயம் என்னும் கவர்ந்திழுக்கும் பெரும் காந்தத்தின் அதிர்வு கதையின் பெரும் பகுதியில் வருகிறது. சேற்று வண்ணம் மட்டுமேயான மலை வெளிகள், குளிர்காலத்தின் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் கிராமங்கள், அலையெழுந்தது போன்ற வெண்பனிமலைகள், மீண்டும் மீண்டும் என் அகக்கனவுகளில் அலைந்து திரியும் பெருவெளி. என்று மீண்டும் அந்நிலக்களுக்கு செல்ல முடியும் என்ற ஏக்கத்துக்கு பதிலளிப்பது போல ஒவ்வொரு குளிர்காலத்திற்கு பிறகும் பாதை புதிதாக உருவாக்கப்படும் என்ற வரி நம்பிக்கை தருகிறது. இந்த உறை காலமும் கடந்து பாதைகள் உருவாகும்.

இக்கதையில் வரும் பயணங்கள் இன்றைய பயணக் குழுக்கள் வழியாக செல்வது போல எளிதாக சென்றடைந்துவிடக் கூடியவை அல்ல. ஓங்கிய இமயமும் அமைதியான மடாலயங்களில் சுடரென நின்றிருக்கும் புத்தரும் அன்று போல இன்றும் நிற்பதனாலேயே எளிதாக நம் அகம் இன்றைய சுற்றுலாவின் கரங்கள் சென்று தொட்டுவிட்ட மடாலயத்துக்கான பயணங்களை நினைவுறுத்தும். காலத்தில் பின் சென்று அந்த நாளின் பயணத்தை அதன் இடர்களை கற்பனை செய்து பார்க்க வேண்டிய ஒன்று.

ஆலமரங்கள் தங்களைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு இறகுப்பிசிர்கள் என அலைகின்றன என்பது ஒரு சிலிர்ப்பான படிமம். விதை முளை விட்டு கிளைத்து ஆலமரமாக பரந்து மீண்டும் தன்னிலெழும் பல விதைகளின் மூலம் விதைநிலைக்குத் திரும்புவது ஒரு பயணம். விதை மரமாகி மீண்டும் விதையாக தன்னை சுருக்கிக் கொள்வது என்பது கருவிலிருந்து எழுந்து காலூன்றி நடந்துவிட்டு மீண்டும் கருநிலைக்குத் திரும்புவதன் பயணம்.

“இந்த நிலைபெற்று நிறைந்துவிட்ட வாழ்க்கைக்குள் இருந்து வெளியே செல்லவேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவாகிறது? இங்கே இல்லாத எதை அவர்கள் உணர்கிறார்கள்? அப்படி ஒன்று உண்டு என்று அவர்களுக்கு மட்டும் எப்படி தெரிகிறது? ” என்ற கேள்விகளின் விடையை கருவிலிருந்து தன் காலமறிந்து வெளிவரும் கருவே அறிந்திருக்கிறது.  ஆழத்திலிருந்து வரும் அழைப்பை பெரும்பாலும் புற இரைச்சல்களில் மறந்து விடுகிறது மானுடம்.

கதை முழுவதும் பல படிமங்கள், விதையிலிருந்து விரிந்தெழும் வீரியத்தோடு ஆனால் விதை வடிவில் நிறைந்திருக்கின்றன.

அந்த புழுதியாலான பாதையில் கழுதை மீதமர்ந்து செல்லும் பயணத்தின் வர்ணனை சிலிர்ப்பாக இருந்தது. அந்த சிறிய எலும்புகளால் ஆன மூட்டுகள் மலைமேல் கொண்டு செல்கின்றன என்ற உணர்வு இந்த சிறிய மானுட உடல் சுமந்து திரியும் மகத்தான தேடலின் விசையை குறித்த பிரமிப்பு போன்றது.

தனக்கென நாவில்லாத மணி, தன் ஓசையின்மைக்கே திரும்பி விட்டிருந்தது என்ற வரியிலிருந்து இந்த மொத்தக் கதையையும் விரித்துக் கொள்ளலாம். அது உலோகத்திலிருந்து திரண்டு மணியென உருவாகி வந்த நாட்களும், அந்த மலைசூழ்ந்த மடாலயத்துக்கு வந்தடைந்த மாபெரும் பயணமும், ஓங்காரம் எழுப்பி மலைச்சிகரங்களோடு உரையாடிய நாட்களும் கடந்து ஓசையடங்கி அமைந்து பாறையென மாறிவிட்ட பயணம்.

ஒரு சிறிய குகையில் தன்னைச் சுருக்கியமர்ந்து, பின்னர் கிளம்பிச் சென்று பெரும் பயணங்கள் செய்து, பாதகங்கள் அரிதாக சென்று தொடும் மலைச்சரிவில் அவ்வளவு பெரிய உம்லா மடாலயத்தை நிர்ணயித்து அதன் உயிர் விசையாகத் திகழ்ந்து மீண்டும் அந்த மலைச்சரிவின் குகைத்துளைக்குள் வந்தடங்கும் நோர்பு திரக்பாவின் பயணம். உம்லா மடாலயம் இன்றிருக்கிறதா?

ஒளிவிடும் வைரம் என்ற பெயரும் அதேபோல ஒரு விதை. தேவையானபோது அவர்கள் அனைவருமே தங்களுக்குரிய வைரச்சுரங்கங்களைக் கண்டடைகிறார்கள் என்பதும் இக்கதைதான். மலைச்சுரங்கத்திலிருந்து கிளம்பி பல பட்டைகள் தீட்டி ஒளி வீசிச் சுடர்ந்து மண்ணுக்கே திரும்பிய பயணம்.

வீடுகளில் குளவி கூடு கட்டுவது போல எனக்கென ஒரு அறையை அமைத்துக் கொண்டேன் என்ற ராப்டனின் பதிலும் விரிந்து விரிந்து நிறைகிறது. ககன வெளியில் மானுடத்தின் சிறுகூடென உலகம். பரந்த உலகின் மகத்தான இயற்கைக்கு முன் தாங்கள் அடைந்து வாழ சிறு வீடு. மாபெரும் அரண்மனைகளை விட செல்வம் நிறைந்த மடாலயம், அதில் தனக்கென கூடு போல ஒரு அறை அமைத்து அதிலிருந்தும் விடுபட்டு கூடுடைத்து அறைகளின் அளவு சிறுத்துக் கொண்டே வந்து சிறு கூடை அளவுக்குள் தன்னைக் குறுக்கிக் கொள்ளும் திரக்பா. மூன்றுமுறை உங்கள் உடலை திறந்து வெளியேறுங்கள் என்ற தனது பாடத்தை வாழ்ந்து காட்டுகிறார். சில பதங்கங்கள் தங்கள் உடலேயே கூடாக ஆக்கி பிரிந்து உள்ளே வளர்கின்றன என்பதும் பதங்கமாதலை (sublimination) சொல்லச் சிறந்த வழி.

காற்றால் சுழற்றப்படும் அறச்சக்கரங்கள் என்ற படிமமும் அறம் மனிதர்களால் கைவிடப்பட்டாலும் நிகழும் என்ற வார்த்தைகளும் அந்த கைவிடப்பட்ட மடாலயங்களில் இமயத்தின் மடியில் இருந்து கேட்கும் அசரீரி போல் ஒலிக்கிறது.

ஓர் இடத்தை நாம் கண்ணால் பார்த்தபிறகு அங்கே சென்றடைய பலமணிநேரம் ஆகும் என்ற இமயப் பாதை குறித்த வர்ணணையே இறுதியாக ராப்டனிடம் முக்தானந்தர் கேட்டதற்கான விடையாகவும் கொள்ளலாம்.

பறந்தெழும் வல்லமை கொண்ட ஒன்று சிறுகதை என்ற வடிவில் தன்னை ஒடுக்கிக் கொண்டிருக்கும் கூடு இக்கதை.

வணக்கங்களுடன்,
சுபா

***

நற்றுணை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கூடு கதையை வாசிக்கையில் நான் ஆஷாபூர்ணாதேவி எழுதிய நாவலைப் பற்றி நினைத்துக்கொண்டேன். முதல்எதிர்க்குரல் என்றபேரில் வெளியான நாவல் அது. ஒரு பெண் பழமையான ஒரு சூழலில் இருந்து எதிர்த்து வெளிவருவதைப்பற்றிய வங்காள நாவல். பெண்ணில் எழும் அந்த யட்சியை அழகாகச் சித்தரித்துக்காட்டிய நாவல்.

சி.சுசிலா

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். தனிமையின் புனைவுக் களியாட்டுக் கதைகள் ஒவ்வொன்றும், ஏதாவது ஒரு வகையில் கட்டிப்போட்டு விடுகின்றன. மகிழ்வாக, குதூகலமாக, சோகமாக, சிந்திக்க வைப்பவையாக, வாழ்வின் அனுபவமாக கட்டிப்போடுகின்றன, புரட்டிப்போடுகின்றன.

நற்றுணை என்னை மிகவும் ஆட்டிப்படைக்கும் கேள்வியான, பெண்களின் போராட்டம். அவள் ஒவ்வொன்றுக்கும் அதிகப் படிகள் ஏறவேண்டிய நிலைமை. அவளை எப்பொழுதும் ஒரு பண்டமாக பார்க்கும் உலகம். அதை மீறி அவள் . இந்த உலகில் ஒரு சாதரண மனுஷியாக அவளுக்கு பிடித்தமாதிரியாக வாழ்வதில் எப்பொழுதும் இருக்கும் சவால்.   நற்றுணை என் நினைவில் எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும் அந்தத் தணலை நெய் ஊற்றி சுடரை வானளவு வளர வைத்துவிட்டது.

இன்றும் அம்மிணி தங்கச்சிகள் கஷ்டப்படத்தானே செய்கிறார்கள். ஒரு நற்றுணை வேண்டியதாகத்தானே இருக்கிறது. நற்றுணை, என்ன ஒரு விதமான தலைப்பு. கொற்றவை போல், நான் அடிக்கடி வாய்விட்டுச் சொல்லிப் பார்க்க இன்னொரு தலைப்பு.

அது நான் முதல் முதலாக மேனேஜர் ஆன வருடம். நான் லீடாக இருந்து மேனஜராக பதிவு உயர்வு பெற்றதால்,  நான் இருந்த லீட் பதவி காலியாக,  அதற்கு ஆளைத் தேர்வு செய்யவேண்டிய கட்டாயம்.  ஒரு மாதம் ஆகியும் நான் நினைத்த மாதிரி ஆள் கிடைக்கவில்லை. மாதங்கள் தள்ளிப்போனால், ஒரு ஆள் குறைவாக என்னால் வேலைகளை முடித்து தர முடிகிறது என்று அந்த காலியிடத்தை பட்ஜெட் என்ற பெயரில் மூடிவிடுவார்கள். எங்களது இந்திய நிறுவனத்தில் வேலை பார்த்த பெண் , அமெரிக்க மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்து வேலையை விட்டு சென்றது நினைவு வந்தது., linkedin- சென்று, அந்த பெண் இப்பொழுது அமெரிக்காவில் எங்கு இருக்கிறாள், என்ன வேலை பார்க்கிறார் என்று பார்த்தேன். அவரை அழைத்து, அந்த வேலைக்கு விண்ணப்பிக்க சொன்னேன்.

நான்தான் மேனேஜர் ஆயிற்றே, என் முடிவாகத்தான் இருக்கும் என்பது கார்பரேட் உலக வாழ்க்கையல்ல.  அவரை   நேர்முகம் செய்த எனது குழுவினர் அவரை லீடாக எல்லாம் எடுக்க முடியாது, வேண்டுமானால், சீனியர் இஞ்சினியராக எடுக்கலாம் என்று சொல்லிவிட்டனர்.  ஒரு வேளை, அவர் ஆணாக இருந்திருந்தால் அப்படி சொல்லியிருக்கமாட்டார்களோ என்று என்னுள் ஒரு கேள்வி இருந்தது. அப்பொழுது ,நான் அனுபவம் இல்லாத வாதம் செய்து வெல்லத் தெரியாத ஒரு மேலாளர். அவருக்கு வேலை கொடுத்தால் போதும் என்று எடுத்துக்கொண்டேன்.

இரண்டாவது நிகழ்வு. என்னுடன் நடந்த முதல்  நேர்முகத்திலேயே, புரிந்துகொண்டேன், அவர் தன் வேலையை கடமை உணர்ந்து செய்வார் என்று. அவரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கலாம் என்று என் மனம் உறுதியாக சொன்னது. ஆனால், அடுத்த துறையின் மேலாளரும், அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். அவர் , எப்படியோ இந்த பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் என்றும், அவர்கள் ஆரம்ப பள்ளிக்குச் செல்பவர்கள் என்றும் அறிந்துகொண்டார். என்னிடம் அவரது திறமையை எள்ளளுவும்  நினைத்து பார்க்காமல், ஒரு அம்மாவாக அவர் வேலையை சரியாகச் செய்ய மாட்டார் என்றும் அவரை வேலைக்கு எடுக்க கூடாது என்றும் ஒற்றைக் காலில் நின்றார்.

எங்கள் இருவருக்கும் மேல் உள்ள மேலாளரிடம் சென்று, அவருக்குத் திறமையில்லை என்று சொல்லி வைத்தார். இந்தமுறை, நான் பேசத்தெரிந்த புள்ளி விபரங்களை கோர்த்து வாதத்தில் வெல்லத் தெரிந்த மேலாளராக மாறியிருந்தேன். அவரை தேர்வு செய்வதில் வெற்றி பெற்றேன். அவர் அதற்கு அப்புறம் சிறப்பாக பணி செய்தற்காக அலுவலக கூட்டங்களில் அழைக்கப்பட்டு பரிசுகள் பல கொடுக்கப்பட்டு சிறப்பிக்க பட்டார்.

நான்  நற்றுணையில் வரும் யட்சியை, ஒரு படிமமாக பார்க்கிறேன். பெண் முன்னேற அவளை அறிந்த ஒரு துணை – தந்தை, சகோதரன், தோழன், தோழி தேவையாக இருக்கிறது. யட்சியின் துணையில்லாமல், அவள் அவளாக முன்னேறும் காலம் எப்பொழுது வரும் ? நற்றுணை போன்ற கதைகள், காலம் காலம் காலமாக சொல்லப்பட்டு, பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு எறும்பு ஊறக் கல்லும் தேயும் என நம்புகிறேன்.

அன்புடன்,

வ. சௌந்தரராஜன்

***

தொடர்புடைய பதிவுகள்

கரு- கடிதங்கள்

$
0
0

ஷம்பாலா- நிகோலஸ் ரொரிச்

கரு [குறுநாவல்]- பகுதி 1

கரு [குறுநாவல்]- பகுதி 2

ஜெ,

எளிதில் வாசித்துவிடக்கூடிய ஒரு கதை அல்ல கரு. அது அடிப்படையில் மெட்டஃபிசிக்கலான ஒரு படைப்பு. ஒரு தனிப்பட்ட ஆன்மிகக் கனவை வெளியே ஏதேனும் வழியில் சொல்லிவிடமுடியுமா என்ற முயற்சி. அதற்கு நீங்கள் இவ்வளவு அப்ஜெக்டிவான செய்திகளை ஏன் அளிக்கிறீர்கள் என்று யோசித்துப் பார்த்தேன். ஒரே காரணம்தான் தட்டுப்பட்டது. இது சப்ஜெக்டிவானது. மிகமிக அந்தரங்கமானது. இதை நீங்கள் வெளியே சொன்னால் ஒரு அசட்டுக்கனவாகவோ வேடிக்கையாகவோ ஆகிவிடும். ஆகவே இதை முடிந்தவரை சரித்திரத்தில், உண்மையான டேட்டாக்களோடு நிறுத்த முயல்கிறீர்கள். இதெல்லாம் உண்மை, இதெல்லாம் அப்ஜெக்டீவானது என்று நீங்களே சொல்லிக்கொள்கிறீர்கள்

ஆனால் அதுதான் இந்தக்கதையை நம்மிடமும் கொண்டுவந்து சேர்க்கிறது. ஒரு தத்துவ விவாதம், நிறைய சரித்திர பின்னணி, நுணுக்கமான பாதைவிவரிப்பு ஆகியவற்றை கொண்டு அந்த அப்ஸ்டிராக்டான தரிசனத்தை நாமும் சென்றடைய வைக்கிறீர்கள். டைம்லெஸ்னெஸ் என்று சொல்லலாம். ஆனால் அதை உணரவைக்க கலையால்தான் முடியும். இதில் அந்தப் பையன் பிறப்பதற்கு முன் தோன்றுகிறான் என்பது  mind-bogglingஆன விஷயம். அந்த இடம் தான் மொத்தமாக தர்க்கம் கடந்த தரிசனம் வெளிப்படும் இடம். அந்த நான்சென்ஸ் லெவல் வரை கொண்டுசென்று சேர்க்கத்தான் அத்தனை தர்க்கம், அத்தனை நுட்பமான விவரிப்பு, அவ்வளவு கதைக்குள்கதை என்ற அமைப்பு.

அந்த தரிசனம் ஏற்கனவே உள்ளது அல்ல. நான் இந்த ஷம்பாலா பற்றி நிறைய படித்திருக்கிறேன். என்னுடைய பத்தாண்டுக்கால வாசிப்பு இது. நானும் லாப்சங் ராம்பாவிலிருந்துதான் தொடங்கினேன். ஆனால் திபெத்தியன் புக் அஃப் டெட் வரை ஏராளமாக வாசித்திருக்கிறேன். நீங்கள் அந்த ஐடியாவை உங்களுக்குரிய மெட்டஃபர் ஆக மாற்றிக்கொள்கிறீர்கள். ஷம்பாலாவுக்கு நீங்கள் கொடுக்கும் விவரிப்பு எவரும் கொடுத்தது இல்லை. இதுதான் உங்கள் பெர்சனல் விஷன் என்று நினைக்கிறேன்.

அந்த விஷன் ஒரு காலமில்லாத நிலையில் இந்தக்கதையில் வெளிப்படுகிறது. எனக்கு இப்படி தோன்றியது. கல் மண் எல்லாவற்றையும் எடுத்து அடுக்கி ஒரு பானைமாதிரி செய்தால் உள்ளே வெற்றிடம் அல்லது வானம் அடைபட்டிருக்கும். அதேபோல சரித்திரத்தைக்கொண்டு சரித்திரத்தைக் கடந்த ஒரு அப்ஸ்ட்ராக்டான விஷயத்தை அல்லது ஒரு பைத்தியத்தரிசனத்தை முன்வைக்கிறது கரு என்ற இந்நாவல்.

ஏற்கனவே விஷ்ணுபுரம் போன்ற நாவல்களில் இதைச் சொல்லியிருக்கிறீர்கள். விஷ்ணு ஒரு கருக்குழந்தைபோல ஒரு நாற்றமடிக்கும் குளத்தின் இருட்டுக்குள் சுருண்டு கிடப்பதை காசியபன் பார்க்கும் இடம் ஞாபகம் வருகிறது. ஒரு பெரிய சிலிர்ப்பை அளித்த இடம் அது. அங்கிருந்தே வந்துகொண்டிருக்கும் ஒரு பெர்சனல் ஸ்பிரிச்சுவல் விஷன் இது. அதை இங்கே ஒரு மெட்டஃபர் ஆக்கி முன்வைக்கிறீர்கள் என நினைக்கிறேன்

இந்தக்கதைகள் வழியாக எழுதி எழுதி வந்தடைந்த இடம் இது என்று கொள்ளலாமா?

ஜெயராமன்

***

ஷம்பாலா- நிகோலஸ் ரொரிச்

நம் பகுத்தறிவிற்கு அப்பால் உள்ளதை அறியும் விழைவு கூட பகுத்தறிவிற்கு உட்பட்டு புரிந்து கொள்ளக் கூடியதல்ல. தனிமையும் வெறுமையும் குற்றவுணர்வும் பாதுகாப்பற்ற நிலையில் உருவெளித் தோற்றங்களை காண்கின்றன. இது உண்மை இது வெறும் தோற்ற மயக்கம் தான் என்று அறுதியிட்டு கூற அங்கே யாரும் இல்லை. தியான அனுபவங்களாகக் கூறப்படுபவை எல்லாம் பெரும்பாலும் இவ்வாறானது தான்.

ஆனால் இதை புறத்தே நிகழ்த்த முடியுமா புறவயமாக ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்றால் அதற்கு பகுத்தறிவு சார்ந்த நிரூபணம் தேவை. சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் உங்களுக்கும் எனக்கும் நம் அனைவருக்கும் பொதுவானவை தான். பிரத்யட்சமான அவற்றுக்கு நிரூபணம் தேவையில்லை. ஆனால் பல ஆயிரமாண்டுகளாக இதே போன்ற ஒரு உலகம் அகவயமாகவும் இருக்கிறது என்று கூறி வந்திருக்கிறார்கள்.

மிகச் சிறிய எண்ணிக்கையில் இருந்த இவர்கள் ஒரு பெரும் இயக்கமாக அல்லது பல்வேறு உதிரி அமைப்புக்களாக உருவெடுத்தது பிரம்ம ஞான சபையும் அதைத் தொடர்ந்து உருவான human potential movement ஏற்பட்ட காலகட்டங்களில் தான்.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னான தலைமுறை மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இதில் பெருமளவு ஆர்வம் கொண்டது. மனித குல வரலாற்றில் அந்தப் போர் ஏற்படுத்திய காயங்கள் மிக உக்கிரமானவை. ஹிப்பிக்கள் இதில் பெரிய அளவில் ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். ஷம்பாலா குறித்த கதைகளும் தொன்மங்களும் இதற்கு பெரிய அளவில் தீனி போடுவதாக இருந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை இன்றைக்கும் பரமஹம்ச யோகானந்தர் தனது நூலின் வழியாக ஏற்படுத்திக் கொடுத்தப் பாதை அதே மர்மங்களுடன் பின்பற்றப் படுகின்றன. அவரது சுயசரிதை நூலை படித்த போது அந்த சமயத்தில் ஒரு தரமான விட்டலாசார்யா படத்தை பார்த்தது போலவே உணர்ந்தேன்.

இவ்வாறு பெரிய அலையாக எழுந்த இந்த ஆன்மிக கதைகள் தகவல்கள் எண்பதுகளின் இறுதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போன காரணம் என்ன? தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு மிகப்பெரிய பாய்ச்சல் பல மர்மங்களை நம்மிடம் இருந்து விலக்கிச் சென்று விட்டது தான் காரணம். அச்சு தொழில்நுட்பத்தைக் கொண்டு அமானுடங்கள் குறித்து மனித மனத்தில் ஏற்படுத்த முடிந்த  தாக்கம் அவற்றின் உண்மைத் தன்மை குறித்த ஆவலை ஏற்படுத்தியது. அதைப்பற்றி பேசியும் விரித்தும் சிந்தித்தும் மனிதன் அதை ஆயிரம் பல்லாயிரமாகப் பெருக்கிக் கொண்டான். டிஜிட்டல்-காட்சி தொழில்நுட்பம் மிக நேரடியானது. மேற்குறிப்பிட்ட எதுவும் சாத்தியப்படவில்லை. இன்றைக்கு போல் மனிதன் அம்மணமாக உணர்ந்த பிரிதொரு காலம் இருந்திருக்காது :)

இந்த பின்னணியில் ஷம்பாலா குறித்து பேசப்பட்டவையும் எழுதப்பட்டவையும் தனி மனித அனுபவங்களுமாக திரண்டு வந்திருப்பது தான் ஜெயமோகனின் குறுநாவல் கரு. கதை நடக்கக்கூடிய காலகட்டம் மிக முக்கியமானது. திபெத்தின் அதன் பழமையின் ஆன்மிகத்தின் அரசியலின் ஒரு சந்திப்பு காலம் அது. சந்தேகமேயில்லாமல் இன்று அது தன் ஆன்மாவை இழந்து விட்ட வெறும் கூடாகவே இருக்கிறது.

ஷம்பாலா- நிகோலஸ் ரொரிச்

இங்குள்ள எதுவும் நிரந்தரமாக அழிவதில்லை மாறுதல் அடைந்தவாறே இருக்கிறது. காலமும் வெளியும் நம் புரிதலுக்கும் அப்பாலும் கூட ஆழமான ஒரு பொருளை உடையது. புறவயமாக அதன் பொருளை விளக்க முற்படும் தோறும் அது எப்போதும் திருப்தி அளிக்காததாக குறையுடையதாகவே இருக்கிறது. முக்தானந்தாவிற்கு அது ஷம்பாலா கதை என்று தெரியும் ஆயிரம் பல்லாயிரம் வகைகளில் ஆடம் விளக்க முற்படுவதை எல்லாம் தர்க்க அறிவுடன் ஒப்பிட்டே புரிந்து கொள்ள முயல்கிறார். ஆனால் ஆடம் விடைபெற்று தனக்கான அழைப்பு வந்து விட்டது எனக் கூறி புறப்படும் போது அவனுடைய மெய்யான தீவிரம் பெரும் திகைப்பை ஏற்படுத்துகிறது.

ஆன்மிக வெளிப்பாடு மெய்யை கற்பனையுடன் கலக்க விடுவது. தூய மெய்மை என்று புறவயமாக ஒன்று இருக்க முடியாது என்று ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறுவார். பிரம்ம ஞான சபையின் மாணவர். பிறகு முற்றாக அதை உதறியவர். புரிதலின் வழி மட்டுமே போதுமானவறாக அமைந்து விட்டவர். ஆனால் முற்றறிதலை வேண்டுவோருக்கு அது மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. திட்டவட்டமான ஒரு அனுபவத்தை வேண்டுகிறது மனம். ஆனால் தர்க்க அறிவிற்கு புறம்பான சம்பவங்கள் நடைபெறும் போது குழப்பமும் அதற்கான விளக்கமும் தேடி அலைகிறோம்.

முக்தா தன் கதையின் வழியாக ஒரு மாபெரும் ஓவியத்தை காட்டுகிறார். அதில் ஆன்னியும் சூசன்னாவும் பெட்ரூஸூம் இடமும் தர்கத்திற்கு புறம்பான வேறொரு இருப்பில் வாழ்கிறார்கள். கற்பனைக் கொண்டு இட்டு நிரப்பிய தன் கதைக்குள் நுழைகிறான் ஆடம் ஆனால் மேலதிகமாக அதை ஆய்வுக்குட்படுத்தாமல் அப்படியே விட்டு விடுகிறார் முக்தா. பின்னாளில் ஹெலனை சந்திக்கும் போது கதையாக அறிந்ததின் உண்மைக்கூறு திரண்டு வருவதை காண்கிறார்.

தர்க்கம் பகுத்தறிவு தோற்கும் இடமது. ஷம்பாலா மரணத்தின் குறியீடு தான். மரணத்தின் உள்ளே தான் இன்னொரு வாழ்வுக்கான கருமுட்டைகள் விதைகள் உறங்குகின்றன. கனியும் போது பேருரு கொள்கின்றன. இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கைக்கான திறப்பு அது. மிச்சம் மீதியற்று மறைபவர்களுக்கு ஷம்பாலா வீடுபேறு.

கூடு சிவம் காக்கை பொன் கரு அனைத்துமே தரிசனக் கதைகள். Darshan stories. தமிழில் முதல் முயற்சி (நானறிந்தவரை) இந்த கோவிட் காலத்தை அர்த்தமுடையதாக்கியதற்கு நன்றிகள் ஜெ.

சிவக்குமார் ஹரி

சென்னை

***

ஷம்பாலா- நிகோலஸ் ரொரிச்

என் அன்பு ஜெ

கரு ஈர்க்கும் தன்மையது. உயிருக்கான வித்து உறைந்திருக்கும் இடம். அனைத்தின் மூலம். ஆற்றல்கள் அனைத்தின் மூலம். ”யோகிகளும், முனிகளும், ஞானிகளும் சக்தி இயந்திரங்களை, ஆற்றல் மூலங்களைத் தேடி எப்போதும் அலைந்து கொண்டிருப்பதாகவும், சில வற்றை கண்டுபிடித்திருப்பதாகவும் விஷ்ணுபுரத்தில் சொல்லியிருப்பீர்கள். நான் ஷம்பாலாவையும் அப்படிப்பட்ட ஓர் ஆற்றலின் மையக் கருவாக பார்க்கிறேன்.

இது பெளத்ததில்/ வஜ்ராயன/ தாந்த்ரீக பெளத்ததில் கரு எனக் கொண்டேன்.  கிட்டத்தட்ட நான்கு அடுக்கான ஓர் கதை சொல்லல். ஒவ்வோர் படியாக ஷம்பாலா வின் இருப்பின் ஆர்வம் குடியேரத் தொடங்கியது என்னுள். ஆடமிற்கு எப்படி சூசன்னா, ஆனியின் மூலமாக தூண்டுதல் ஏற்பட்டதோ, முக்தா ஆடமின் மூலம் அந்த ஷம்பாலாவின் மீதான ஈர்ப்பை தூண்டிவிட்டது போல இருந்தது.  எதை நம்பிப் போக, யார் உதவுவார்கள் என்றால் நம் உள்ளுணர்வு/ மூதாதையர் உருவில் (சூசன்னாவுக்கு சார்லஸ் போலவோ/ ஆடமிற்கு அவன் தந்தை போலவோ) ஏதேனும் ஒன்று. வழியில் சந்திக்க வேண்டிய துன்பங்கள் தெரிகிறது. ஆனால் அதைதாண்டிய அந்த சத்ய யுகமாயிருக்கும் இலக்கு ஈர்க்கிறது.

முக்தா தெளிவாக இருந்தது போல ஆடமின் பேச்சுக்களில் நான் இல்லை. நான் மயங்கியிருந்தேன். அவன் தருக்கங்களுக்கு அவனே ஓர் தத்துவத்தை உதிர்க்கும் போது ஆ! என்று வாயைப் பிளந்திருந்தேன். “நதி ஒரே திசைக்கே செல்கிறது. அதிலிருக்கும் மீன்கள் நான்கு திசைக்கும் செல்வன. மீன்களை பிடிக்கும் பறவைகள் ஐந்தாவது திசையையும் அறிந்தவை. அருகே மரத்தடியில் அமர்ந்து தவம் செய்யும் யோகியின் உள்ளம் ஆறாவது திசையையும் அறிந்தது”  என்ற வரிகளில் நான் நாரையை எண்ணிப் பார்த்தேன். அது ஐம்பரிமாணங்களைத் தெரிந்து அந்த மீனுக்காக காத்துக் கொண்டிருக்கிறதா? ஒற்றைக் காலில். அந்த தவக் கோலத்தில் வரப்போகும் காலவெளியில் அந்த ஒரு மீனுக்காக! ஆமாமல்லவா! ஓர் சரியான உத்தேசம் அனுமானம் செய்யும் யாவும் ஐம்பரிமாணம் அறிந்தவையா? வள்ளுவரும் அறிவுடையார் ஆவதறிவார் என்கிறாரே! ஆறாம் பரிமாணமா?? அது என்ன? நமக்கும் அப்பாற்பட்டதா? தவம் செய்யும் முனிவர்க்கு வாய்க்கும் அந்த பரிமாணம் எத்தகையது? என்றெல்லாம் கேள்விகள் என்னுள் எழுந்தன்

ஷம்பாலா- நிகோலஸ் ரொரிச்

இவ்வுலகியலில் நமக்கு அப்பாற்பட்டது என்ற ஒன்று இருக்கிறது என்றே நம்புகிறேன் ஜெ. இந்த கணிதத்தில் “Assumptions” என்ற ஒன்று இருக்கிறது. இயற்பியலிலும், வேதியலிலும், புவியியலிலும் இது இருக்கிறது. அதைத் தகர்த்தால் யாவும் அர்த்தமற்றவையாகிவிடும். இது தவிரவும் புவியியலில் Arm chair theory என்ற ஒன்று இருக்கிறது. உட்கார்ந்து கொண்டே இது இப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்வது. அதன் பின் அதற்கான ஆதாரங்களைத் திரட்டுவது. ஒரு வகையில் பெருவெடிப்புக் கொள்கை என்பதும், கண்ட நகர்வுக் கொள்கை என்பதும், புவியியல் கால அளவுகள் என்பதும், பரிணாமக் கொள்கை என்பதும், ஐன்ஸ்டீனின் கருந்துகள், அண்டவெளி புழுத்துளைக்(Wormhole) கோட்பாடு யாவுமே அப்படிப்பட்ட Arm chair theory தான். ஐன்ஸ்டீன் வரும் வரை இப்பிரபஞ்சம் நியூட்டனின் விதிகளை நடித்துக் கொண்டிருந்தது. ஹப்புல் சொல்லும் வரை ஐன்ஸ்டீன் சொன்னதை நடித்திருந்தது. இன்று அனைவரும் பிரபஞ்சம் நகரும் தன்மையது என்றே நினைக்கிறோம். அதுவும் நகர்கிறது. பிரபஞ்ச பெருவெடிப்புக் கொள்கை மீது நம்பிக்கை வைத்து அதற்கான ஆதாரங்களில் மூழ்குகிறோம். இன்னும் பல மில்லியன் வருடங்களுக்குப் பின் இருக்கும் மக்கள் இப்பிரபஞ்சத்தை எப்படிச் சொல்கிறார்களோ அப்படி அதுவும் இருக்கும். இந்த எண்ணங்கள் யாவும் நிழல்காகம், கரு என்ற கதைகளின் வழி நான் அறிந்ததை, அறியாத ஒன்றோடு கோர்த்துக் கொண்டது( நீங்கள் சொல்வது போல). நான் பள்ளியில் பயிலும் போது புளூட்டோவையும் சேர்த்து 9 கோள்கள் இருக்கின்றன என்றார்கள். இன்று 8 கோள் தான் என்கிறார்கள். நான் என் வாழ் நாளின் சில காலம் 9 கோல் இருந்தன என்று நம்பி இருந்தேனே. நான் மட்டுமா. ஒட்டுமொத்த உலகமும். அப்படியானால் நாளை என்னவெல்லாம் ஆகும்? என்ற கேள்வி இருந்திருக்கிறது என்னுள். இன்று புரிகிறது. எக்காலத்திலும் பிரபஞ்சம் அப்படியே இருந்திருக்கிறது. மனிதர்கள் அவர்களுக்கு தெரிந்த இந்த எளிய அறிவினால் அதை கணிதத்திலும், புவியியலிலும், இயற்பியலிலும், வேதியலிலும் வகுத்துக் கொள்கின்றனர். வகுத்துக் கொள்வதால் பிரபஞ்சம் நடிக்கிறது.

இந்த ஓர் நிலையாமையினால் நான் ஆட்பட்டிருக்கிறேன். அதனால் என்னை மீறிய ஓர் ஆற்றலை புறவயமாக தேடமுற்படுகிறேன். அறிவியல் காரணம் கட்டப்படாத ஒன்றை மனம் நாடுகிறது. இதனால் தான் நான் இல்லாமை, இரண்டின்மை மீது ஓர் ஆர்வத்தைக் கொண்டேன். “ஒரு போதும் சென்றடையவில்லை என்ற நிறைவின்மையை அடைக” என்று நீங்கள் இந்த மனுடத்தை நோக்கி விசும் போதும் இருகப் பற்றிக் கொண்டது அதனால் தான்..

பனிக் கட்டிகள் நிறைந்த அந்த திபெத். குறிப்பாக அந்த லாசா என் கனவுப் பிரதேசங்களில் ஒன்று. ஆனால் நீங்கள் சொன்னது போலவெ இன்று சுற்றுலாத்தளமாக உருவாகி விட்ட பின்னர் காண்பதற்கான ஓர் உந்துவிசை குறைந்து விட்டது. அதனை வருடந்தோரும் நடக்கும் ஊட்டி பூக்கள் ஷோ போல, குன்னூர் பழ ஷோ போல செயற்கை தன்மை நிறந்த சுற்றுலா போல ஆகிவிட்டது. அங்கு மக்கள் என்ன விசயங்களை இரசிக்கிறார்கள் என்பதே வியப்பாக இருப்பதுண்டு. இன்று என் கனவு இடங்களாக, ஓர் விருப்பத்தைத் தூண்டக்கூடிய இடங்களாக ஷம்பாலா, நாக்சு நகர், தேனீர்ச்சாலை, போ-சு என்னும் ஆறு, கெய்கு [Gyegu], காங்டிங் நகர் ஆகியவை அமைந்துவிட்டன. ஆனால் லாசாவும் செல்ல வேண்டும் அதன் மிச்சமிருக்கும் இயற்கையைக் காண வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் ஜெ.

சில மாதங்களுக்கு முன் பனி மனிதன்/ yeti யின் கால் தடத்தை பார்த்ததாக ஓர் இராணுவ வீரர் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்தது ஓர் பெட்டிச் செய்தியாக தின நாளிதல் ஒன்றில் படித்தது நினைவிற்கு வந்தது. அதை நான் எளிதாக அன்று  கடந்து விடவில்லை. நீண்ட நேரமாக அந்த மாயாவத நம்பிக்கையைப் பற்றி தேடிக் கொண்டிருந்தேன். அது சார்ந்த கதைகள் இன்னும் அங்கு சொல்லப்பட்டு வருவதாகப் பார்த்தேன். இங்கு நாம் நம்பும் அய்யனார், பைரவர், மாரியம்மாள், குல தெய்வங்கள், எல்லைச் சாமி போல என்று நினைத்திருந்தேன். பனிமனிதன் அங்குள்ள கொள்ளை கூட்டத்திற்கு எத்துனை தெவையென்பதை உணர்ந்தேன். நாம் இன்று வகுத்துள்ள அறிவியல்/ அது சார்ந்த புரிதல்கள் இல்லாத கால கட்டத்தில் வாழ்ந்த மூதாதையர்கள் கண்டிப்பாக “உள்ளுணர்வுகளால்” தான் வழி நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொன்றையும் கடத்த அவர்கள் பல கதைகளை உருவாக்கியிருக்க வேண்டும்.

யுக முடிவுகளைப் பற்றி எந்த மதமும் பேசாமல் இல்லை எனலாம் ஜெ. எனக்கு விஷ்ணுபுரம் மணிமுடி படிக்கையில், பைபிலில் திருவெளிப்பாடு என்ற அதிகாரம் நினைவுக்கு வந்ததது. அது போலவே இன்றும் இதில் பெளத்தத்தின் யுக முடிவு பற்றியும், ஷம்பாலா என்ற கற்பனை நகரத்தின் எழுச்சி, முடிவில் மைத்ரேயா என்ற வருங்கால புத்தரின் தோற்றம் ஆகியவற்றை ஆடம் வாயிலாக நீங்கள் சொல்லும் போதும் நினைவிற்கு வந்தது அந்த திருவெளிப்பாடு அதிகாரம் தான். ஏதோ ஒரு வகையில் எல்லா மதங்களும் உலகின் முடிவைப் பற்றிய நம்பிக்கைகளைக் கொண்டுள்ளன. உலகின் முடிவில் பரம பிதா/ அல்லாஹ்/ விஷ்ணு/ மைத்ரேயா தோன்றுவதாகச் சொல்கிறார்கள். ஏதோ ஓர் வகையில் அமானுஷ்யமான/ ஆர்வத்தைத் தூண்டக் கூடிய ஓர் முடிவை நோக்கி மானுடத்தை செலுத்திவிட்டிருக்கிறார்கள்.

ஷம்பாலா- நிகோலஸ் ரொரிச்

கலியுகம், சத்திய யுகம் என்ற பல வகை யுக வகைபாடுகளையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்று நீங்கள் ஒவ்வோர் இடத்திற்கும் அதே காலவெளியில் ஒவ்வோர் வகையான யுகத்தை சொன்னது என்னை திகைப்பிற்குள்ளாக்கியது. அப்படியானால் எவ்வளவு சீக்கிரமாக வளர்கிறோமோ அவ்வளவு சீக்கிரமான அழிவு தானோ என்று நினைத்துக் கொண்டேன். தீண்டப்படாத புத்தம் புதிய இடங்களின் அழிவு நம்மைவிடப் பிந்தியிருக்கும் எனப்பட்டது. சட்டென்று 2004 சுனாமியின் போது அந்தமானில் வாழும் பழங்குடியின மக்கள் (செண்டினலீஸ்) முன்னமே வரப்போவதை அறிந்து மலைப் பகுதிகளுக்குச் சென்று தப்பித்துவிட்டார்கள் என்ற செய்தி நினைவுக்கு வந்தது. அப்படியானால் அவர்களை வழி நடத்திஅய்து எது? உள்ளுணார்வா? அல்லது அங்கே அவர்களுக்கு வழிகாட்ட பனிப்பிரதேசத்திலுள்ள யதி போன்ற ஆன்மா உள்ளதா? உள்ளுணர்வின் சங்கேதத்தை விட்டு எத்துனை தொலைவு நாம் சென்று விட்டோம் என்ற கவலை எழுகிறது என்னுள். அறிவியல்/ பகுத்தறிவு/ ஏற்கனவே அறியப்பட்ட அறிவை மட்டுமே வைத்ததான புரிதல்கள் என்று நமக்கே உரித்தான உள்ளுணர்வினின்று வெளியேறிவிட்டோமே என்ற கவலை எழுகிறது. அதற்காக மூட நம்பிக்கைகளை/ முட்டாள்தனங்களை கேள்வி கேட்கக் கூடாது என்றில்லை. அது செய்ய வேண்டும். ஆனால்… மரபின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ள முயல வேண்டும் எனப்பட்டது ஜெ.

எல்லா மதங்களிலும் ஏதோ ஓர் வகையில் தாந்த்ரீகம் குடி கொண்டிருக்கிறது. பெளத்தத்திலும் அது சாதாரண மனிதர்களிடமிருந்து வெகு தொலைவிலுள்ளது. சாதாரண வாழ்வைத் தாண்டிய ஒன்றை மானுடன் தேடுகையில் கண்டடையும் ஒன்றாக அது தெரிகிறது எனக்கு. அதை அடையும் இலட்சியம் எனக்கில்லை எனினும், அதைப் பற்றி நீங்கள் எழுதுகையில் மிகப் பிரம்மாண்டமான கற்பனைக் கோட்டைகளை கட்ட முடிகிறது என்னுள். போக முடியாத ஓர் கற்பனை/உண்மை நகரத்தை கட்டமைப்பது என்பதே வாசிப்பில் ஒரு சுகம் தான்.

நேற்று இரவின் விளிம்பில் இந்தக் குறு நாவலை முடித்து அதை பற்றியே சிந்தித்துக் கொண்டே கண் அயர்ந்து விட்டேன். கனவில் நீங்கள் முக்தாவைப் போலேயே ஆனால் சுற்றிலும் வெண்மையான மலை இருக்கும் பகுதியில், ஓர் உச்சியில் அமர்ந்து, போர்வையைப் போர்த்திக் கொண்டு, எங்களுக்கு ஷம்பாலாவைப் பற்றி சொல்லிக் கொண்டிருப்பதாக இருந்தது.  மிகப் பெரிய வெண்மையான ஒளி உங்களுக்கு கீழே,  அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் எங்களைச் சுற்றியும் நிறைத்திருந்தது.  திடீரென மூச்சுவிட முடியாமல் எழுந்து விட்டேன். பார்த்தால் மணி நான்கு சொச்சம். உடல் முழுவதும் வியர்த்து நனைந்திருந்தது. பிறகு தான் தெரிந்தது மின் துண்டிப்பினால் அறையின் குளிர் கன்றி, வெப்ப மிகுதியால் வியர்த்து உடல் நனைந்திருந்ததென்று. அதன் பின் தூங்க முடியவில்லை. மாடிக்குச் சென்று கதிரவன் எழும் வரை குருவிகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். காலை மீண்டும் மறுவாசிப்பு செய்தேன். இந்த நாள் முழுதும் இதன் சிந்தனை என்னில் ஆட்கொண்டிருந்தது. மாலையில் மீண்டும் வாசித்துவிட்டு, உங்களுக்கு பதில் கடிதம் எழுதியபின் மனம் அமைதியடைகிறது.

அற்புதமான இந்த அனுபவத்தை அளித்ததற்காய் நன்றி ஜெ

என்றும் அன்புடன்

இரம்யா.

***

கரு,கூடு- கடிதங்கள்

கரு,நிழல்காகம்- கடிதங்கள்

தொடர்புடைய பதிவுகள்


முதுநாவல்[சிறுகதை]

$
0
0

இது 1814 ல் திருவிதாங்கூர் திவான் தேவன் பத்மநாப மேனோன் சின்னம்மை நோயால் இறந்தார் என்ற செய்தி வந்து பெரும்பாலான ஊர்களில் இருண்ட மழைமூட்டம்போல துயரம் நிறைந்திருந்த ஒரு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாறசாலை ஊரின் அந்திச்சந்தையின் தெற்கு வாசலில் உச்சிகடந்த பொழுதில் ஓர் ஒற்றை மாட்டுவண்டி வந்து நின்றது. அதிலிருந்து இடும்பன் நாராயணன் என்ற பெயர்கொண்ட ஏட்டு இறங்கி நின்று உரத்த குரலில் “எங்கேடா அந்த தலைக்கெட்டு காதர்? அவன் தன் அம்மையிடம் குடித்தது பால் என்றால் என் எதிரே நிற்கச்சொல்… மூத்திரம் என்றால் இந்நேரம் அது அவன் உடலில் இருந்து தானாகவே வெளியேறத் தொடங்கியிருக்கும்” என்றான்.

அந்த அறைகூவல் தலைக்கெட்டு காதர் தவிர்க்கவே முடியாத பொறி. அதுவரை எந்த ஒரு நாயர்போலீஸும் அப்படி நேருக்குநேர் வந்து அறைகூவியதில்லை. அதை தலைக்கெட்டு காதர் எதிர்கொண்டே ஆகவேண்டும். அதை தவிர்த்துவிட்டுச் சென்றால் அதன்பின் சந்தையில் உயிர் வாழவே முடியாது. உண்மையில் தலைக்கெட்டு காதரை பிடிப்பதற்கு ஒரே வழி அதுதான், அதைச் செய்ய ஆளில்லாமல்தான் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு தோல்விகண்டன.

செய்தி காதருக்கு அதற்குள் சென்று சேர்ந்துவிட்டிருந்தது. அதைவிட விரைவாக சந்தையில் கூடியிருந்த அத்தனை பேருக்கும் சென்றது. சரசரவென்று கடைகள் ஏறக்கட்டப்பட்டன. சட்டிகள் பானைகள் மரச்சமான்கள் போன்ற உடையும் பொருட்கள் தூக்கி அகற்றப்பட்டன. பெண்களும் குழந்தைகளும் ஓடி ஆங்காங்கே ஒடுங்கிக் கொண்டார்கள். அத்தனைபேரின் உடலும் விரைப்பேற கண்கள் பிதுங்க முகம் வலிப்பு கொண்டது. அர்த்தமில்லாமல் கூச்சலிட்டுக் கொண்டும் கைகால்கள் உதற அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் இருந்தனர்.

பாம்பு நுழைந்த மரத்தில் பறவைகள் போல ஓலமிட்ட சந்தை பின்னர் அடங்கியது. அங்கே ஒருவர்கூட இல்லை என்று தோன்றும். இடும்பன் நாராயணன் கனமான தோல்பூட்சுகளை போட்டுக் கொண்டு சந்தைவழியாக நடந்தபோது அந்த ஓசை அனைவருக்கும் கேட்டு பற்களை கிட்டிக்க வைத்தது. பலர் அப்போதே ஓசையில்லாமல் அழத்தொடங்கிவிட்டிருந்தனர்.

தலைக்கெட்டு காதர் பாறசாலை வட்டாரத்தில் எத்தனை புகழ் பெற்றிருந்தானோ அப்படியே இடும்பன் நாராயணனும் திருவனந்தபுரம் ஆரியசாலை வட்டாரத்தில் புகழ் பெற்றிருந்தான். ஒருவர் போலீஸ் ஒருவர் ரவுடி என்பதற்கு அப்பால் அவர்களிடையே வேறுபாடு ஏதுமில்லை. இருவரையும் மக்கள் வெறுத்தனர். இருவரின் எவர் செத்தாலும் அது அசுரவதம் என்று கொண்டாட தயராக இருந்தனர்.

பார்க்கவும் அப்படித்தான். தலைக்கெட்டு காதர் ஏழரை அடி உயரமானவன். அவனை நேரில் பார்ப்பவர்கள் எவரும் அவன் ஒரு பூதமா என்ற திகைப்பை அடைவார்கள். அத்தனை உயரமான மனித உடல் சாத்தியம் என்பதையே அவர்கள் அதற்குமுன் அறிந்திருக்க மாட்டார்கள்.

காதரின் கைகள் மிகநீளமானவை, அவை அவன் முழங்கால் மூட்டை தொட்டு தொங்கிக்கொண்டிருக்கும். விரல்கள் ஒவ்வொன்றும் மூங்கில்கள் போல. அடர்த்தியான நீளமான தாடி, அடர்த்தியான புருவங்கள், புடைத்த பெரிய மூக்கு. தலையில் எப்போதும் இடதுகாதைச் சுற்றி பெரிய தலைப்பாகை இருக்கும். அதை அப்பகுதியில் எவருமே செய்யாதபடி முன்பக்கம் குச்சம் விட்டு பின்பக்கம் வால்நீட்டி கட்டியிருப்பான். அவன் முகத்திற்குமேல் ஒரு பெரிய துணிப்பறவை அமர்ந்திருப்பதுபோல தோன்றும். தலைப்பாகை இல்லாத காதரை எவரும் பார்த்ததில்லை.

முழங்கால்வரை நீண்டு கிடக்கும் மிகநீளமான அங்கிபோன்ற சட்டை. அதன் இருபக்கங்களிலும் பெரிய பைகள். கீழே கணுக்கால் தெரியுமளவுக்கு சராய். அவன் கனமான தோல்செருப்பை அணிவான். அதன் அடியில் இரும்பு லாடங்கள் பொருத்தப்பட்டிருக்கும். அவன் நடக்கும்போது எழும் ஓசை எந்த மனிதர் நடக்கும்போதும் எழுவதில்லை.

காதர் மிகக்குறைவாகவே பேசினான். அவனுக்கு மலையாளமோ தமிழோ சரியாக தெரியவில்லை. அவன் குரல் உறுமியை மீட்டியதுபோல ஆழமான கார்வை கொண்டிருந்தது. பெரும்பாலும் சிறிய மேடைகளிலோ திண்ணைகளிலோ ஒருகாலை மடித்துவைத்து தலையை ஓணான்போல சற்றே நீட்டி தாழ்த்திவைத்து கண்களைச் சுருக்கி மண்ணை பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவனுடைய காதுகள்தான் அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருக்கும்.

அவன் கையில் எப்போதுமே சுருட்டு இருக்கும். அதை ஊரில் உலக்கைச் சுருட்டு என்றார்கள். ஒரு குழந்தையின் கையளவுக்கு தடிமனான அந்தச் சுருட்டை அவனேதான் சுருட்டுவான். புகையிலையை பலகையில் வைத்து கையால் அறைந்து கசக்கி பதமாக்கி இறுக்கமாகச் சுருட்டி நூலால் கட்டுவான். பற்ற வைக்கும்முன் அதைக் கைகளுக்குள் வைத்து உருட்டி உருட்டி நெகிழ்வாக்குவான். எப்போதும் பளிச்சிடும் மஞ்சள்நூலால்தான் அதைச் சுற்றிக்கட்டியிருப்பான். ஆகவே அது பித்தளைப் பூண்போட்ட இரும்புலக்கை போலத் தெரியும். அதிலிருந்து புகை சன்னமாகத்தான் எழும். அவன் புகையை ஆழமாக இழுத்து மூக்குவழியாக கீழ்நோக்கி ஊதிவிட்டுக் கொண்டிருப்பான்.

பாறசாலைச் சந்தையில் காதர் சுருட்டைப்பிடித்தபடி நடந்தால் ஒவ்வொரு வியாபாரியும் அரையணாவோ ஒரணாவோ எடுத்துவைத்தாகவேண்டும். விற்பனையாகவில்லை, பணம் வந்துசேரவில்லை என்ற எந்த பேச்சுக்கும் ஒரே பதில்தான். திரும்பி செவி அடக்கி ஓர் அறை. அந்த அடிக்குப்பின் எவருக்கும் செவி கேட்பதில்லை. பெரும்பாலானவர்களுக்கு கீழ்த்தாடை விலகி பிறகு ஒருபோதும் பேச்சும் எழுவதில்லை.

காதர் அவ்வப்போது காணாமலாகி பீமாப்பள்ளிப்பகுதியின் பெண்களிடம் அத்தனை பணத்தையும் இழந்து திரும்பி வருவான். அதைவிட வெறிகொண்டதுபோல சூதாடுவான். சூதாடுவதற்கென்றே தெற்கே நெய்யாற்றங்கரை முதல் வடக்கே பாலராமபுரம் வரை அவன் செல்வதுண்டு. உணவும் தூக்கமும் இல்லாமல் சூதாடுவான். கையிலிருக்கும் கடைசி பணம்வரை போனபிறகே எழுவான்.

காதர் சூதில் ஒருமுறைகூட வென்றதில்லை என்பார்கள். வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையையும் இழந்ததில்லை. தோற்கத்தோற்க வெறி ஏறி மீண்டும் ஆடினான். ஆகவே அவனுக்கு எத்தனை கிடைத்தாலும் பணம் போதவில்லை. அவன் சூதாடும்போது வன்முறையில் ஈடுபடுவதில்லை. தன் தோல்வியை முழுமையாக ஏற்றுக்கொண்டு பந்தயம் கட்டிய பணத்தை அளித்துவிட்டு தலைகுனிந்து நடந்து சென்றான்.ஆகவே காதர் அப்பகுதியில் அத்தனை சூதாடிகளுக்கும் கறவைப்பசுவாக இருந்தான்

நாளடைவில் சூதாடிகள் பாறசாலைக்கே தேடிவரத்தொடங்கினர். கூட்டம்கூட்டமாக வந்து காதர் சொன்ன இடத்தில் சொன்ன தொகையை பந்தயம் வைத்து ஆடினர். முதலில் காதரை வெல்ல அனுமதித்தனர். அவனை வெறிகொள்ளச் செய்து கையிலிருந்த கடைசிப்பணத்தையும் வென்று கொண்டாடியபடி திரும்பிச் சென்றனர்.ஒரு குழு ஆடிக்கொண்டிருக்க இன்னொரு குழு அடுத்த ஆட்டத்திற்காக காத்திருந்தது

பாறசாலை சந்தையிலேயே காதருக்கு வசூலும் இருந்தமையால் பணம் தீரத்தீர சந்தைக்குள் சென்று பிடுங்கி வந்தான்.அவனை எண்ணி எண்ணி வியாபாரிகள் எரிந்தனர். எளியமக்கள் கண்ணீர் வடித்தனர். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. போலீஸால் அவனை பிடிக்க முடியவில்லை. ஊரில் அவனை எதிர்க்க எவருமில்லை.

வியாபாரிகள் சேர்ந்து பணம்போட்டு பெரிய கேடிகளை பணம் கொடுத்துக் கூட்டிவந்தனர். பாறசாலை சந்தையில் வைத்து அடித்து நொறுக்கி குப்பை போல தூக்கிப்போட்டான். கண்ணுமாமூடு அனந்தன் நாடார் அடிமுறைக் களரிக்கு ஆசான். அவரால் அவனை அறைய முடியவில்லை. அவன் நாபியில் எட்டி உதைக்க சுருண்டு விழுந்து வலிப்பெடுத்து அங்கேயே இறந்தார். பள்ளியாடி முகமது அலி மாமிச மலை. அவனை தூக்கி தரையில் அறைந்து மூக்கிலும் வாயிலும் ரத்தம் பீரிட உடல் வெடித்து சாகச்செய்தான். அதன்பின் அவனுடன் சண்டையிட எவருமே வராமலானார்கள்.

அவனை நஞ்சூட்டி கொல்லமுயன்றனர். அவர்களை காதரே கண்டுபிடித்து வீட்டோடு சேர்த்து அடித்து நொறுக்கினான். மந்திரவாதம் எதுவும் அவனிடம் பலிக்கவில்லை. அவனை எவராலும் கொல்லமுடியாது என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அவன் மனிதன் அல்ல மனிதவடிவம் கொண்ட ஜின் என்ற நம்பிக்கை உருவாகியது. அவனை வெறுத்தனர். கண்ணீருடன் சபித்தனர். அவனை நேரில் கண்டால் கைகூப்பி தலைகுனிந்து நடுங்கி நின்றனர்.

இடும்பன் நாராயணனும் ஏழடிக்குமேல் உயரம் கொண்ட பூத வடிவம்தான். அவன் அப்பாவுக்கு பூதன் பிள்ளை என்றுதான் பெயர். கைகால்கள், மூக்கு, வாய், குரல் எல்லாமே பெரிது அவனுக்கு. தலையில் மயிர் கிடையாது. ஆனால் உடலெங்கும் மயிர்.

விடியற்காலையில் சவரம் செய்துகொண்டு, கரமனை ஆற்றில் குளித்து, காந்தளூர் மகாதேவர் கோயிலில் கும்பிட்டு சந்தனக்குறி அணிந்ததுமே இடும்பன் நாராயணன் போலீஸுக்கான உடைகளை அணிந்துவிடுவான். பகலும் இரவும் முழுக்க அவன் போலீஸ் உடையிலேயே இருப்பான். தூங்கும்போது மட்டுமே அவற்றை கழற்றினான். ஆனால் அவன் எங்கே தூங்குகிறான் என்பதை எவருமே கண்டதில்லை.

அன்றெல்லாம் திருவிதாங்கூர் போலீஸின் ஆடை என்பது கீழே சுற்றிமுறுக்கி அணிந்த ஆழ்ந்த கருஞ்சிவப்புநிறமான வேட்டி. அதை முறுக்கிக்குத்து என்பார்கள். அதற்குமேல் குப்பாயம் என்னும் கையில்லாத சட்டை. அதற்குமே இருதோள்களிலுமாக கட்டப்பட்டு மார்பின்மேல் பெருக்கல்போல அமைந்திருக்கும் மஞ்சள்நிறமான பட்டைத்துணி. தலையில் வெண்ணிறத் துணியால் இறுக்கிச் சுற்றப்பட்ட உயரமில்லாத தலைப்பாகை, அதில் திருவிதாங்கூரின் பித்தளை இலச்சினை. கால்களில் மாட்டுத்தோலை மடித்து கயிறுகட்டி இறுக்கும் பழையவகை செருப்பு. காலுக்கும் தோலுக்கும் நடுவே மரக்கட்டையாலான மிதியடி வைக்கப்பட்டிருக்கும்.

கர்னல் மன்றோ திருவிதாங்கூர் திவானாக நேரடிப் பொறுப்பேற்றபின், 1812-ல் திருவிதாங்கூர் ராணுவத்தை நவீனப்படுத்தி உள்ளூர்க் காவலுக்கு தனியாக போலீஸ் துறையை உருவாக்கியபோது கீழே முறுக்கிக் குத்துக்கு பதிலாக மெட்ராஸ் ரெஜிமெண்டின் காக்கி கால்சட்டையை கொண்டுவந்தார். கையில்லாத சட்டைக்கு பதிலாக முழுக்கை சட்டையும் முழங்கையில் பட்டையும். சப்பையான தலைப்பாகைக்கு பதிலாக தலைப்பாகையின் வடிவிலேயே அமைந்த , முகப்பு உயர்ந்து நிற்கும், உயரமான சிவப்புக் கம்பிளித் தொப்பி.

காலில் இரும்பு ஆணிகள் வைத்த உயரமான பூட்ஸுகளும் முழங்கால் மூட்டு மறைய கம்பிளிப் பட்டைச்சுற்றும் கட்டாயமாக்கப்பட்டது. அது பிரிட்டிஷ் சோல்ஜர்களின் சீருடை, ஆகவே நாயர் படைவீரர்களால் பெரிய கௌரவமாக அது கருதப்பட்டது. நீண்ட கம்பிளிப் பட்டையை இழுத்து பலமுறை சுற்றி மூட்டு மடிப்புக்கு மேல் கொண்டுவந்து அங்கே இரும்பாலான ‘சிரட்டைக்கிண்ணம்’ வைத்து மேலும் இறுகச்சுற்றி முடிச்சிடவேண்டும். முழங்காலில் ஈட்டியால் அறைந்தாலும் முழங்கால் அடிபட குப்புற விழுந்தாலும் காயம் படாது. அதை கட்டி பூட்ஸ் அணிந்ததுமே நாயர்வீரர்கள் தங்களை பூதங்கள் போல உணர்ந்தனர்.

மற்ற மாறுதல்களை ஏற்றுக்கொண்ட இடும்பன் நாராயணன் கால்சட்டை போட மறுத்துவிட்டான். அணிவகுப்பின்போது காவல்துறைத் தலைவர் காப்டன் ஜான் மார்ட்டின் பேட்ஸ் வந்தால் மட்டும் கால்சட்டை அணிந்து உடனே கழற்றிவிடுவார். அப்போது மட்டும் நெற்றியில் சந்தனக்குறி இருக்காது. வாயில் வெற்றிலையும் இருக்காது. ஆனால் காப்டன் மார்ட்டினின் அணிவகுப்பு மாதம் ஒருமுறைதான். மற்றபடி வாரம் ஒருமுறை சென்று ஹூஸூர் கச்சேரியில் கைநாட்டு போட்டு சங்குமுத்திரை வரைந்து இருப்பை அறிவித்தால்போதும்.

படைவீரர்கள் நெற்றியில் மதக்குறிகளை அணிவது வெற்றிலை போட்டு குதப்பிக் கொண்டிருப்பது ஆகியவற்றைக் கண்டால் காப்டன் மார்ட்டின் அவர்களை கைகளை தூக்கிக்கொண்டு முழங்காலால் ‘கவாத்து’ முற்றத்தை பத்துமுறை சுற்றி வரச்சொல்வார். பூட்ஸுகளையும் முழங்காப் பட்டைகளையும் கழற்றிவிட்டு தவழ்ந்து ஓடவேண்டும். முழங்காலில் தோல் மீண்டும் வர மூன்றுமாதமாகும்.

இடும்பன் நாராயணன் எப்போதும் கையில் பித்தளைப் பூணிட்ட உலக்கை போன்ற பிரம்பை வைத்திருப்பான். நின்றால் அவனுடைய காதுவரை உயரமான கழி அது. அதைக்கொண்டு அவர் எவரை அடித்தாலும் அக்கணமே உடலைக்குறுக்கி “எஜமானே, மாப்பு எஜமானே” என்று சொல்ல வேண்டும். ஓடினால் துரத்திப் பிடித்து எலும்புகள் உடைய தோலும் சதையும் கிழிந்து பறக்க அடித்து துவைப்பான். சற்றேனும் எதிர்ப்பு உடலில் எழுந்துவிட்டால் அவனை உயிருடன் விடுவதில்லை.

பூட்ஸ்கால்கள் ஒலிக்க இடும்பன் ஆரியசாலைக்குள் நுழையும்போதே அனைவரும் எழுந்து நின்றுவிடுவார்கள். அவனுக்கு ‘குட்டிச்சட்டம்பி’ ஆக ஒருவன். குட்டையான உடலும் உறுதியான தோள்களும் பெரிய உதடுகளிலிருந்து எழுந்த மாட்டுப்பற்களும் கொண்ட அவன் பெயர் என்னவென்று எவருக்கும் தெரியாது. அவனை இருமாலி என்று அழைத்தனர். இருமாலி ஒவ்வொரு கடையாகச் சென்று காசு வசூல் செய்து வருவான். காசு கேட்பதில்லை, சென்றதுமே எழுந்து நின்று கொடுத்துவிடவேண்டும்.

இருமாலி இரவும்பகலும் இடும்பனுடனேயே இருந்தான். பழக்கப்படுத்தப்பட்ட விலங்குபோல அவனுக்குப் பணிவிடைகள் செய்தான். இடும்பன் அவனை கெட்டவார்த்தையால் திட்டுவான்.அவ்வப்போது ஓங்கி அறைவான். உதைப்பான். எதற்கும் இருமாலி எதிர்வினை ஆற்றுவதில்லை.அவன் மேலேயே இடும்பன் காறி துப்புவான். அந்த எச்சிலை துடைப்பதுகூட இல்லை.

காலைவசூல் என்பது ஒரு ரோந்து செல்லலும்கூட. அப்போதுதான் ஆரியசாலையின் பிரஜைகள் இடும்பனிடம் மனக்குறைகளைச் சொல்வதும் வேண்டுகோள்களை முன்வைப்பதும் நடக்கும். இடும்பனுக்கு என்று ஒரு நீதி இருந்தது, அதை புரிந்துகொண்டால் அவனை நன்றாகவே பயன்படுத்த முடியும் என்று ஆரியசாலைவாசிகளுக்கு தெரியும்.

பொதுவாக கூலிகொடுக்காமல் இருப்பது, கூலிக்காரர்களை முதலாளிகளோ அவர்களின் வேலைக்காரர்களோ அடிப்பது இடும்பனுக்கு பிடிக்காது. தெருவில் வாழும் பிச்சைக்காரர்கள் பொறுக்கிக் குழந்தைகள் ஆகியோரை அதட்டலாம், ஆனால் காயம் ஏற்படும்படி அடிக்கக்கூடாது. இடும்பன் அவனைக் கண்டால் புழுவாகப் பணிந்துவிடும் அடித்தளத்து மக்களிடம் கருணையுடன் இருந்தான். அவர்கள் பட்டினியும் பாடும் சொன்னால் ஏதாவது கொடுத்து உதவுவதும் வழக்கம்.

உலாவுக்குப்பின் நேராக சென்று ஒரு கடையில் ஏறி அமர்ந்து சாப்பிடத் தொடங்குவான். அவன் சாப்பிடும் விதத்தை கணித்து கூடவே பரிமாறிக்கொண்டிருக்கவேண்டும். மனதுக்குப் பிடித்த உணவுப்பொருள் கைநீட்டிய இடத்தில் ஏற்கனவே இல்லை என்றால் எழுந்து பரிமாறுபவனுக்கு செவிளில் ஓர் அறை விடுவான். அடிபட்டவன் இன்னொரு அடிவாங்க நின்ற வரலாறே கிடையாது. அப்படியே சுருண்டு விழுந்துவிடுவான். அவனிடம் அடிவாங்கி செவிப்பறை கிழிந்தவர்கள் நூறுபேருக்கும் மேல் என்பார்கள்.

ஆனாலும் ஆரியசாலைப் பகுதி மக்கள் இடும்பனை ஏற்றுக்கொண்டார்கள். அங்கே இன்னொரு ரவுடியோ திருடனோ தலையெடுக்க அவன் விடவில்லை. அவனுக்கு தேவையானது பெரிய தொகையும் அல்ல, ஒரு கடைக்குக் காலணாதான். பெண்களிடம் வம்பு வைத்துக் கொள்வதில்லை, தொடர்பு முழுக்க சந்தையில் தொழில்செய்யும் பெண்களிடம்தான். அதிலும் காக்கை நாராயணி ஒரு இடும்பி. அருகருகே நின்றால் இருவரும் சம உயரம் இருக்கும்.

காக்கை நாராயணி இடும்பனைவிட எடை கூடுதல். ஒரேகையால் மாட்டுவண்டியின் நுகத்தை தூக்கி மாடுகளை இன்னொரு கையால் கட்டு அவிழ்க்கும் ஆற்றல்கொண்டவள்.அவர்களுக்குள் இருந்த உறவு மிக ஆழமானது. இடும்பன் யாரிடமாவது பல்தெரிய சிரித்துப் பேசுவதென்றால் காக்கை நாராயணியிடம்தான். இரவுகளில் இருவரும் நாட்டுச்சாராயம் குடித்துவிட்டு தெருக்களில் அமர்ந்து விடியவிடிய பாடுவதும் உண்டு.

இடும்பனைப் பற்றிய கதைகள் வடக்கே சிறையின்கீழ் முதல் தெற்கே கோட்டாறுவரை பரவியிருந்தன. திருவனந்தபுரத்திற்கு வெளியே நெய்யாற்றின்கரை, நெடுமங்காடு, ஆரியநாடு, காட்டாக்கடை சந்தைகளில் அவன் நிகழ்த்திய சண்டைகளை தெருப்பாடகர்கள் கொட்டாங்கச்சியில் தாளமிட்டு எல்லாச் சந்தைகளிலும் பாடினார்கள்.

ஆரியநாடு ‘மொஞ்சு’ மஸ்தானை ஒரே அடியில் இடும்பன் வீழ்த்திய கதை, நெய்யாற்றின்கரை எருமை ஆபிரகாமை எட்டி இடுப்பின்கீழ் உதைத்து அங்கேயே கொன்ற கதையையும் மக்கள் மயிர்க்கூச்செறிந்து கேட்டார்கள். காட்டாக்கடை ‘உறை’ கருணாகரன் நாயரை இடும்பன் அடித்து இழுத்து மாட்டுவண்டிச் சக்கரடத்தில் நெடுக்காகக் கட்டி திருவனந்தபுரம் வரை ஓட்டிச்சென்றான். சக்கரத்தில் சுழன்று சுழன்று திருவனந்தபுரம் சென்ற உறை அங்கே கட்டு அவிழ்த்தபோது ரத்தவாந்தி எடுத்து மயக்கம் போட்டிருந்தான். பின்னர் மூளை குழம்பி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் வட்டத்தில் பைத்தியமாக அலைந்து கொண்டிருந்தான்.

பாறசாலையின் மக்கள் இடும்பனைப் பற்றிய எல்லா கதைகளையும் அறிந்திருந்தாலும் பார்த்ததில்லை. அவன் தலைக்கட்டு காதரைப் பற்றி அறிந்திருப்பான் என்றும், எப்போது வேண்டுமென்றாலும் அவன் தலைக்கட்டுக் காதரை பிடிக்க வரக்கூடும் என்றும் எதிர்பார்த்தார்கள். அவ்வப்போது இடும்பன் கிளம்பிவிட்டான் என்றும் வந்துகொண்டிருக்கிறான் என்றும் சந்தையில் வதந்தி கிளம்பும். உயரமான எவராவது சந்தைக்குள் நுழைந்தால் “அய்யோ இடும்பன் வந்தாச்சே!” என்று எவரோ அலற சந்தையே அடங்கி அமைந்துவிடும்.

தலைக்கெட்டு காதரை பிடிக்க திருவிதாங்கூர் போலீஸ் பலவகையான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம் அது. அவனைப் பிடிப்பதற்காக ஏழுமுறை திருவிதாங்கூர் போலீஸ்படை வந்து சந்தையையைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. ஒருமுறை திருவிதாங்கூர் நாயர்பிரிகேட் மொத்தமாகவே வந்து சந்தையைச் சுற்றிய தெருக்களை வளைத்துக்கொண்டு ஒவ்வொரு முகமாக, ஒவ்வொரு சந்துபொந்தாக சோதனையிட்டு வலையை சுருக்கிக்கொண்டே வந்திருக்கிறது. காதர் தப்பிவிட்டான்.

சந்தைவட்டாரம் காதர் எப்போதுமிருக்கும் இடம். அவன் தங்குவதற்கு அங்கே நூறுக்குமேல் இடங்கள் இருந்தன. ஒருமுறை தங்குமிடத்தில் மறுநாள் தங்குவதில்லை. எங்கு தங்குவான் என்பதை தங்குவதற்கு ஐந்து நிமிடம் முன்புதான் முடிவுசெய்வான். அவன் எங்கே தங்கியிருக்கிறான் என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது.

அவனுடன் ‘பல்லி’ ரஹ்மான் , ‘கூதற’ மம்மூஞ்ஞி என்கிற முகமது குஞ்ஞி ஆகிய இருவர் மட்டுமே இருப்பார்கள். ஒரு கண் இல்லாத குள்ளமான கூதற மம்மூஞ்ஞி காதருக்குரிய எல்லா பணிவிடைகளையும் செல்வான்.செருப்பு போட்டுவிடுவது அவிழ்ப்பது வரை அவன்தான். உணவை மம்மூஞ்ஞி தானே உண்டு சற்றுநேரம் கழித்தே காதருக்கு வழங்குவான். மம்மூஞ்ஞி கொடுக்காத எதையும் காதர் உண்பதில்லை.

பல்லி மிகமெல்லிய வெளிறிய மனிதன். பின்னாலிருந்து பார்த்தால் பன்னிரண்டு வயது பையன் என்றே தோன்றும். எந்த ஒட்டிலும் பொருத்திலும் ஊர்ந்து ஏறிச்செல்ல முடியும். வீட்டுக்குள் படுத்திருப்பவர்கள் அறியாமல் ஓட்டுக்கூரைமேல் மெல்ல தவழ்ந்து செல்வான். தேவை என்றால் ஒரு கூரையிலிருந்து இன்னொரு கூரைக்கு காற்றில் தாவிச்செல்வான்.

காதர் ஓர் இடத்தில் இருந்தால் அதைச்சுற்றி ஏதோ உயரமான இடத்தில் பல்லி இருப்பான். அவன் எதையாவது பார்த்தால் நாக்கைச் சுழற்றி கூரிய, மெல்லிய ஒலியை எழுப்புவான். அது காதருக்குக் கேட்கும். அதிலேயே அவன் நிறையச் செய்திகளைச் சொல்லிவிடுவான். எந்த தூக்கத்திலும் பல்லியின் ஓசையை காதர் கேட்டுவிடுவான்.

காதருக்கு சந்தைவட்டத்திலிருந்து வெளியேறும் வழிகளும் நூற்றுக்குமேல் தெரியும். சந்தையில் தோன்றியவன் அப்படியே மறைந்து அப்பால் மாலிக் தினார் பள்ளிக்கு முன்னால் தோன்றுவான். குளக்கரையிலோ கிருஷ்ணசாமி கோயில் முகப்பிலோ தெரிவான். பலர் அவனுக்கு அந்தர்த்தானவித்தை தெரியும் என்று நம்பினர்.

தலைக்கெட்டு காதர் உண்மையில் பாறசாலைக்காரன் அல்ல. அவன் அனைவரும் நினைவில் வைத்திருக்கும் அதே உருவத்தில் முப்பதாண்டுகளுக்கு முன்பு சந்தையில் தோன்றினான். ஒருநாள் காலையில் இடிச்சக்கை சரசம்மாவின் கடைக்கு முன் அவன் வந்து நின்றான். அவனை கண்டதுமே உள்ளே தரையில் அமர்ந்து கஞ்சி குடித்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் திகைத்து எழுந்து விட்டார்கள்.

காதர் கைவிரலை நொடித்து தனக்கு கஞ்சி கொண்டுவரும்படி ஆணையிட்டான். ஒரு சிறு தயக்கம் எழுகிறதோ என்ற சந்தேகம் வந்ததும் வெறுங்கையால் அருகே இருந்த பெஞ்சை அறைந்து சிம்புகளாக உடைத்து போட்டான். அங்கிருந்த பலர் சிறுநீர் கசிந்துவிட்டனர். சரசம்மா பெரிய கிண்ணம் நிறைய கஞ்சி கொண்டுவந்து வைத்தாள். ஒரே மூச்சில் அதை அவன் குடித்து இன்னும் என்று கைகாட்டினான். பதினேழு கிண்ணம் கஞ்சியையும் மயக்கிய பலாக்காய் அவியலையையும் சாப்பிட்டுவிட்டு எழுந்தான்

அதன்பின் அவன் அங்கேயே தங்கிவிட்டான். அன்றெல்லாம் பாறசாலைச் சந்தைவட்டாரத்தில் நாலைந்து கஞ்சிக்கடைகள் மட்டும்தான். காலை முதல் மாலைவரை சம்பா அரிசி கஞ்சியும் தேங்காய் துவையலும் மாங்காய் ஊறுகாயும் காலணாவுக்கு கிடைக்கும். மற்றபடி கடை என்ற ஏற்பாடெல்லாம் இல்லை. சந்தை மாலையில்கூடி இருட்டியதும் முடிந்துவிடும்.

சந்தை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருந்தது. பாலராமபுரம் துணிகள் விற்கும் வாணியர்கள், திருவனந்தபுரம் ஆரியசாலைக் கடைகளில் இருந்து புகையிலை கொண்டுவந்து விற்பவர்கள், இரும்புச் சாமான்கள் விற்கும் கொல்லர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் சந்தைக்கு வந்து மூங்கில் நட்டு அதில் மூங்கில்தட்டி கட்டி கடைபோடுவார்கள். சுற்றுவட்டத்தில் இருபது கிராமங்களில் இருந்து மக்கள் தலைப்பெட்டிகளுடன் சந்தைக்கு வந்து கூடுவார்கள். விற்றுவாங்கிச் செல்வது அன்றாடவாழ்க்கையின் ஒரு பகுதி.

முக்காலி கட்டி தராசு தொங்கவிட்டு கருங்கல் எடைக்கற்களுடன் கருப்பட்டி வாங்கும் வியாபாரிகளும் கருப்பட்டி விற்கவரும் பனையேறிகளும்தான் சந்தையில் பெரும்பகுதி. தன்னியல்பாக உருவான அது முன்பு கருப்பட்டிச் சந்தை என்றே அழைக்கப்பட்டது. பிறகு பனையேறிகளுக்கு தேவையான ஓலைப்பெட்டிகளையும் கூடைகளையும் குலுக்கைகளையும் செய்துவிற்கும் குறவர்கள் வந்து கடைபோட்டனர். கருப்பட்டி விற்றவர்களின் கையிலிருக்கும் பணத்தை இலக்காக்கி மற்ற வியாபாரிகள் வரத்தொடங்கியது பிறகுதான்.

அது மகாதேவர் கோயிலுக்குச் சொந்தமான உத்சவப்புரை மைதானமாக இருந்தது. அங்கே கருப்பட்டிவியாபாரிகள் அமரத்தொடங்கியபோது திவான் கிருஷ்ணன் தம்பியின் காலகட்டத்தில் பேஷ்கார் குஞ்ஞுகிருஷ்ணன் பிள்ளை வந்து நேரில் பார்வையிட்டு தீர்வை கணக்கு வகுத்தார். தீர்வையை வசூல் செய்து அளிக்கவேண்டிய செறிய காரியக்கார் பதவிக்கு உள்ளூரிலேயே உண்ணி செம்பகத்துப்பிள்ளையை நியமித்தார். சந்தை மேலும் வளர்ந்தபோது திவான் ராஜா கேசவதாஸின் ஆட்சிக்காலத்தில் அவரே நேரில் வந்து பார்த்து சந்தைக்கு மேலும் இடத்தை அளித்து விரிவுபடுத்தினா. தீர்வையும் கூட்டப்பட்டது.

திவான் வேலுத்தம்பி தளவாயின் காலகட்டத்தில் பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ற நாயர்படை அங்கே தங்கியது. அவர்கள் பாறசாலை பத்மநாபன் தம்பியின் தலைமையில் தான் அரசரை சந்திக்க திருவனந்தபுரம் சென்றனர். ஆனால் பாறசாலை பத்மநாபன் தம்பி பின்னர் திவான் வேலுத்தம்பி தளவாய்க்கு எதிராக கலகம் செய்து அவரால் கொல்லப்பட்டார்.

மேலும் சில ஆண்டுகள் கழித்து திவான் வேலுத்தம்பிக்கு கர்னல் மன்றோவுக்கும் பூசல் வந்தபோது பாண்டிநாட்டிலிருந்து கர்னல் லெகர் தலைமையில் வந்த கம்பெனிப்படை வேலுத்தம்பியை ஆதரித்த நாயர்படையை அந்தச் சந்தையில் சுற்றிவளைத்து ஒருவர் மிஞ்சாமல் வெட்டிக்கொன்றனர். சந்தை மூன்றுமாதம் கூடவில்லை.

கர்னல் மன்றோ அவரே திவான் பதவியை ஏற்றுக்கொண்டு திருவிதாங்கூர் முழுக்க பயணம் செய்தார். எல்லா சந்தை மையங்களுக்கும் குதிரைப்படையுடன் கஸ்பா அலுவலகத்தை அமைத்து கொள்ளையர்களையும் அத்துமீறும் உதிரிப் படைநாயர்களையும் அடக்கினார்.பாறசாலைச் சந்தை நாளுக்கு நாள் வளர்ந்தது. தீர்வை வசூலிக்கும் பொறுப்பு மீண்டும் உண்ணி செம்பகத்துப்பிள்ளையின் காரக்கோணத்து வீட்டுக்கே அளிக்கப்பட்டது.

ராஜாகேசவதாசன் காலம் முதலே சந்தைக்கும் தனியாக காவல் இருந்தது. உண்ணி செம்பகத்துப்பிள்ளையின் காவலர்களும் சந்தை வளாகத்தில் ஈட்டியுடன் நின்றிருந்தனர். ஆனாலும் சந்தையில் எப்போதும் அடிதடியும் தலைவெட்டும் நடந்துகொண்டேதான் இருந்தது. சந்தையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு போக்கிரி தலையெடுத்து வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலித்து வாழ்வான். அதற்குச் ‘சந்தை விளைச்சல்’ என்று உள்ளூரில் பெயர். சில்லறைகளும் சந்தைவிளைச்சலுக்கு முயல்வதும் அடிவாங்குவதும் உண்டு.

சந்தையில் விளைபவனுக்கு கடுவன் என்றும் பெயர் உண்டு. ஆண்பூனை மென்மையான குரல் முற்றி அடிக்குரலில் உறுமத்தொடங்குகிறது. அதன் மீசைமுடி கம்பியாக நீண்டுவிடும். அதன்பின் அந்த மீசைமுடியில் படும் எவரும் அதன் எதிரிகள். ஒரு வட்டாரத்தை அது தன் ஆளுகைக்குள் கொண்டுவருகிறது.

ஆனால் கடுவன்களை அவ்வப்போது போலீஸ் பொறிவைத்துப் பிடிக்கும். பெரும்பாலான நேரங்களில் சந்தையிலேயே போட்டு அடித்து அடித்துக் கொன்று அங்கேயே கம்பத்தில் தொங்கவிடுவார்கள். கால்களையோ கைகளையோ வெட்டி பிச்சையெடுக்க விடுவதும் உண்டு. கர்னல் மன்றோ வந்தபின் எவரானாலும் பிடித்து இழுத்து கொண்டுசென்று நீதிமன்றத்தில் நிறுத்தி முறையாக விசாரித்து சிறையில் அடைக்கவேண்டும், கொலைகாரன் என்றால் தூக்கிலிடவேண்டும் என்று சட்டம் வகுக்கப்பட்டது.

உத்திரட்டாதி திருநாள் கௌரி லக்ஷ்மி பாய் தம்புராட்டியின் ஆட்சிக்காலத்தில் ,கர்னல் மன்றோவே திவானாக இருந்த குறுகிய பொழுதில், போலீஸ் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. நீதிமன்ற நெறிகள் வகுக்கப்பட்டன. போலீஸ்துறை நவீனப்படுத்தப்பட்டு சட்டதிட்டங்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டன. அவற்றை மீறும் போலீஸ்காரர்களுக்கும் தண்டனை வரும் என்ற நிலை உருவானது. ஆனால் இடும்பன் போன்ற போலீஸ்காரர்களை அதெல்லாம் கட்டுப்படுத்துவதில்லை. அன்று நாடெங்கும் முளைத்துக்கொண்டே இருந்த ரவுடிகளையும் போக்கிரிகளையும் களைய அவர்கள் தேவைப்பட்டார்கள்.

இடும்பன் பாறசாலைக்குக் செல்வதை ஆரியசாலையில் அறிவித்துவிட்டே கிளம்பினான். ஆரியசாலைச் சந்தையில் தன் கையிலிருந்த கழியை சுழற்றியபடி “டேய், யாரடா அவன் தலைக்கெட்டு காதர்? தலைக்கெட்டுகாதரை ஜெயிக்க இடும்பனால் முடியாது என்று சொன்னவன் யார்? எங்கே இருந்தாலும் வாடா!” என்று கூவினான். “அவன் தலைக்கெட்டை தலையோடு எடுத்துக்கொண்டு வருகிறேன்! பாருங்களடா நாய்களே!” என்று சபதம் போட்டான்

அங்கிருந்து ஒற்றைக்காளை வண்டியில் இடும்பன் கிளம்பியபோது சற்றே தொலைவுவிட்டு எட்டுபத்து வண்டிகளில் ஆரியசாலையின் அடிதடி ரசிகர்கள் வந்தனர். வரும்வழியிலேயே “வாருங்கள்… பாலிசுக்ரீவ யுத்தம் பார்க்கப்போகிறோம்” என்று சொல்லி மேலும் ஆளை திரட்டிக்கொண்டார்கள்.

இடும்பன் பாறசாலைக்கு காலையிலேயே வந்துவிட்டான். அங்கே ஒரு கஞ்சிக்கடைக்குள் சென்று சுட்டகோழியிறைச்சியுடன் கஞ்சிகுடித்துவிட்டு படுத்து தூங்கினான். அவனுடன் வண்டிக்கு அருகிலேயே நடந்து வந்த இருமாலி தலைமாட்டில் குந்தி அமர்ந்து காவல் காத்தான் .

உச்சிப்பொழுது கடந்ததும் இடும்பன் எழுந்து கைவிரித்து சோம்பல் முறித்தான். ஒரு முழுக்கருப்பட்டியை உடைத்து தூளாக்கி அதை மென்று தின்றான்.கூடவே பெரிய நூறுமுட்டன் மரவள்ளிக்கிழங்குகள் பத்து. பின்னர் ஏப்பம் விட்டபடி எழுந்து ஒற்றைமாட்டு வண்டியில் ஏறி சந்தைக்குச் சென்றான். இருமாலி கூடவே நடந்தான்

சந்தையைச் சூழ்ந்து உரிய இடங்களில் போர்க்கலை ரசிகர்கள் நிலைகொண்டிருந்தனர். இடும்பன் வருவதை கண்டதும் அவர்கள் “வாறான்!” என்று குரல்கொடுத்தனர்.

இடும்பன் சந்தைக்குள் பூட்சுகள் ஒலிக்க நடந்து வெற்றிலைக்கடை வரிசையை அடைந்தபோது தலைக்கெட்டு காதர் எதிரே வந்தான். இருமாலி பின்னடைந்து ஒரு சந்தில் நின்றான். பல்லியும் கூதறையும் காதரை தொடர்ந்து வந்தனர். அவர்களும் பின்னால் தனி இடங்களில் ஒதுங்கி நின்றனர்

இடும்பனும் காதரும் ஒருவரை ஒருவர் நேருக்குநேர் விழிக்கு விழி சந்தித்த கணத்தை சூழ்ந்திருந்தவர்கள் உணர்ந்து மெய்சிலிர்த்தார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அசைவில்லாமல் நின்றார்கள். இருவரில் எவர் முதலில் அசைவார்கள் என்று ஒவ்வொருவரும் துடித்து இறுகி வெடிக்கும்நிலையில் காத்திருந்தனர்

பின்னர் அது நிகழ்ந்தது. பல்வேறு சந்தைப்பாட்டுக்களில் அது வெவ்வேறுவகையாக பாடப்பட்டுள்ளது. ஓர் அறைவோசையைத்தான் அனைவரும் கேட்டார்கள். உடல் அதிர்ந்து பற்கள் கிட்டித்துக் கொண்டார்கள். நாலைந்துபேர் விழுந்து வலிப்பு கொண்டு துடித்தனர்.

வஞ்சினம் இல்லை. மிரட்டலோ மிஞ்சலோ இல்லை. ஒரு சொல் இல்லை. இரு ராட்சத உருவங்களும் முட்டி அறைந்து விலகி அறைந்து மீண்டும் விலகின. பாய்ந்து மீண்டும் முழுவிசையில் அறைந்துகொண்டன. கைகால்கள் பின்னி இறுக புழுதியில் கால்கள் மிதிபட்டு மிதிபட்டு சுழல தசைகள் இழுபட்டு அதிர அசைவிழந்தன. ஒன்றை ஒன்று தூக்கி அறைந்தன. தெறித்து விலகின.கையூன்றி ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன. மீண்டும் எழுந்து அறைந்தன.

கருங்கரடி பிடியல்லோ கடுவா அடியல்லோ

காட்டானை முட்டல்லோ! காட்டுபோத்தின் வெறியல்லோ!

ஒந்நாமடி ரண்டாமடி மூநாமடி நாலாமடி

நிந்நாலடி நெடும்பாலடி நீட்டிச் சாடியடி சவிட்டியடி!

செந்நாயடி சீறிச்சாடியடி சேந்நாலடி சூடோடடி!

கொந்நால் தீரா அடி கொலையடி கோளடி கொண்டோனடி!

அடியடியடியடியடியொ! அய்யோ! அடியடியடியடியடியொ!

தேற்றைப்பந்நி சீற்றமல்லோ ஈற்றைப்புலி நில்பல்லோ !

ஆற்றுப்பெரு வெள்ளமல்லோ! ஆளிக் கத்தும் தீயல்லோ!

அடியடியடியடியடியொ! அய்யோ! அடியடியடியடியடியொ!

நூறாண்டுகளுக்கு பிறகு இப்போதும்   ‘தேற்றக்கடுவாயும் ஈற்றப்புலியும்’ என்ற அந்த சந்தைப்பாடல் அச்சிட்டு விற்கப்படுகிறது. பதினெட்டு பக்கமுள்ள நாட்டுப்பாடல். அந்தக் கவிஞன் தன் சிரட்டைத் தாளத்துடன் அங்கே நின்று அந்த சண்டையைப் பார்த்திருக்கலாம். அவன் பட்டினியால் மெலிந்த கரிய உருவம்கொண்டவன். பெரிய மின்னும் கண்களும் கார்வைகொண்ட குரலும் தாளம் தவறாத கைகளும் கொண்டவன். அவன் உடல் அங்கே நின்று அதிர்ந்திருக்கும். கண்ணால் கண்டதைவிட பலமடங்கு உக்கிரமான ஒரு சண்டையை அவன் தன் கற்பனையால் கண்டிருப்பான்.

அன்று கொண்டாடப்பட்ட எத்தனையோ நூல்கள் இன்று கிடைப்பதில்லை. ‘தேற்றக்கடுவாயும் ஈற்றப்புலியும்’  இன்றும் வாழும் படைப்பாக இருப்பதற்குக் காரணம் அதன் மொழிவளமோ கற்பனைவளமோ தத்துவமோ ஒன்றும் அல்ல, அதை எழுதியவன் அதைப் பார்த்தபோது நடுங்கி சிறுநீர் கழித்தான் என்பதுதான்.

என் அப்பா சித்தமருத்துவரான சில்லுவிளை நாகமாணிக்கம் நாடார்  ‘தேற்றக்கடுவாயும் ஈற்றப்புலியும்’ ஒரு பிரதி வைத்திருந்தார். அதை அவரே ஓரளவு பாடுவார். நான் இளமையிலேயே அப்பாவின் குரலில் அந்த சண்டைக்காட்சியை காதால் கேட்டு கனவுபோல கண்டிருக்கிறேன். அப்பா அந்தச் சணடையின் கதையை கிழவர்களிடமிருந்து விரிவாக நேரில் கேட்டிருந்தார். அவர் இளமையிலேயே கேட்டகதை. ஆகவே அவர் மனதில் அது வளர்ந்து வளர்ந்து அவரே நேரில் கண்டதைப்போல மாறிவிட்டிருந்தது.

அந்தச் சண்டை முழுப்பகலும் நீடித்தது. இருவரும் மணலளவுக்கு மயிரிழையளவுக்குக் கூட ஒருவருக்கொருவர் தாழவில்லை. இருவரின் ஆடைகளும் கிழிந்து தொங்கின. பின்னர் இருவரும் இறுக்கிக் கட்டிய கோவணம் மட்டுமே உடுத்தவர்களானார்கள்.மண்ணில் புரண்டு எழுந்து மண்ணால் ஆன உருவம்போலவே மாறினார்கள். ஒரு கட்டத்தில் இருவரையும் பிரித்தறியவே முடியவில்லை. எவர் எவரை அடிக்கிறார் என்றே தெரியவில்லை. எவர் விழுந்தார் என்று புரியவில்லை. எவருக்காக மகிழ்வது என்று அறியமுடியாமல் திகைத்து பார்த்து நின்றனர் மக்கள்.

பத்து முறைக்குமேல் இருவரும் விலகி அமர்ந்து மூச்சுவாங்கி ஓய்வெடுத்தனர். மீண்டும் எழுந்து சண்டையிட்டனர். அத்தனை வெறிகொண்ட போரிலும் இருவருமே அருகிலிருந்த கழிகளையோ கற்களையோ கையில் எடுக்கவில்லை. ஒருமுறை அவர்கள் சண்டையிட்டுச் சென்றவழியில் ஒரு கொடுவாள் கிடந்தது. அதை ஒருவர் எடுக்கக்கூடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அதன்மேலேயே உருண்டு சென்றபோதும்கூட அவர்கள் அதை கையால் தொடவில்லை. இருவர் உடலில் இருந்தும் ஒரு சொட்டு ரத்தம்கூட விழவில்லை.

சாடி வலிஞ்சொடிச்சு சவிட்டி எழிச்செடுத்து

கூடி அமர்ந்தெழிச்சு குத்தி சுழந்நெழிச்சு

அடியடியோ! அடியடியோ! அய்யோ!

அடியடியோ! அடியடியோ!

வாரிச்சவிட்டி வலிஞ்சுகெட்டி வட்டமிட்டு வீசியடிச்சு

கோரியிட்டு குத்திமலத்தி கொடுங்குழியில் கூட்டிச்ச்சுருட்டி

அடியடியோ! அடியடியோ! அய்யோ!

அடியடியோ! அடியடியோ!

அடித்து அடித்து அவர்கள் சந்தையை விட்டு வெளியே சென்றார்கள். மாலிக்தீனார் பள்ளியின் தெருவுனூடக அடித்துச் சென்றார்கள். மக்களும் அவர்களைச் சூழ்ந்து ஒரு பெரிய வளையமாக முன்னால் சென்றார்கள். இடும்பன் காதரை தூக்கி மண்ணில் அறைந்து எழுவதற்குள் காதர் இடும்பனை தூக்கி மண்ணில் அறைந்தான்.

இருட்டிக்கொண்டே வந்தது. இரவிலும் அடிதொடருமா என்று சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டது. அவர்கள் நன்றாகவே களைத்திருந்தனர். கைகால்களை தூக்க இருவராலும் முடியவில்லை. பலமுறை இருவரும் எழுந்தபின்னரும் களைத்து மீண்டும் அமர்ந்தனர். இறுதி விசையையும் செலுத்தி எழுந்து மீண்டும் அடித்தனர்.

இருவரும் இருபுறமாக தள்ளாடி விழுந்தனர். கையூன்றி எழுந்த இடும்பன் அங்கே ஒரு  முதுநாவல் மரத்தடியில் ஒரு பொந்தில் ஆந்தை போல பதுங்கி அமர்ந்திருந்த கிழட்டுப் பரதேசியைப் பார்த்து தண்ணீருக்காகக் கைநீட்டினான்.

அவர் அங்கே அன்றுகாலைதான் வந்து தங்கியிருந்தார்.மிகப்பெரிய பச்சை தலைப்பாகை அணிந்திருந்தார். நரைத்த தாடி இரண்டு புரிகளாக மார்பு வரை தொங்கியது. அந்த தலையை தாங்கமுடியுமா என்று சந்தேகம் வருமளவுக்கு மிகமெலிந்த உடல் வற்றி நெற்றாக ஆகி கூன்விழுந்து ஒடுங்கியிருந்தது. கைகள் கரிய சுள்ளிகள் போல மிகச்சிறிதாக இருந்தன.

அவரிடம் ஒரு துணிமூட்டையும் கழியும் இருந்தது. அதுவும் பச்சைநிறம்தான். ஒரு சுரைக்குடுவையில் தண்ணீர் வைத்திருந்தார்.பல்லே இல்லாத கரிய வாயை திறந்து, கண்கள் இடுங்க சிரித்தபோது குழந்தையைப் போலிருந்தார். உற்சாகத்துடன் அதை எடுத்து இடும்பனுக்கு நீட்டினார். அவன் அதை வாங்கி அண்ணாந்து பாதி குடித்து விட்டு மூச்சுவாங்கினான்.

கீழே கையூன்றி எழுந்து அமர்ந்த தலைக்கெட்டு காதர் அவனை பார்த்துக் கொண்டிருந்தான். இடும்பன் மிஞ்சிய நீரை காதருக்கு நீட்டினான். காதர் எழுந்து வந்து அதை வாங்கி குடித்துவிட்டு குடுவையை பரதேசியிடம் திரும்பக் கொடுத்தான்

மீண்டும் சற்று மூச்சுவாங்கியபின் கைகளை மண்ணில் தேய்த்துக்கொண்டு  மீண்டும் ஒருவரை ஒருவர் அறைந்து கொண்டனர். அறைந்து வீழ்த்தியும் தூக்கி அடித்தும் கோயில்முகப்பு வரை வந்தனர். அப்போது அந்தியாகிவிட்டிருந்தது. தலைக்கெட்டு காதரை அள்ளிப்பிடித்த இடும்பன் அப்படியே மல்லாந்துவிழ இருவரும் உருண்டு உருண்டு புழுதியில் நெளிந்து அசைவற்றனர்.

இரண்டுபேருமே செத்துவிட்டார்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டது. சுற்றி நின்ற வட்டம் அணுகியது. சிலர் மெல்ல பேசவும் தொடங்கினர். அந்த ’கைகால்தலையுடல்’ தொகுதி அப்படியே ஒரு பிண்டமாக கிடந்தது. அவர்கள் மேலும் அணுகியபோது அது மெல்ல அதிர்ந்தது. அக்கூட்டம் அலறி பின்னடைந்தது.

மீண்டும் நெடுநேரம் அசைவின்மை. அவர்கள் அணுகிவந்தனர். அந்த பிண்டத்தில் தசைகள் இறுகி நெளிந்துகொண்டிருப்பதை கண்டனர். “உயிர் இருக்கு” என்று எவரோ சொன்னார்கள். நெடுநேரம் அவர்கள் ஏதேனும் நிகழும் என எதிர்பார்த்து அப்படியே நின்றார்கள்

பின்னர் அதில் ஒரு துடிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து ஒரு கால் தனியாக பிரிந்து அசைந்தது. கை தனியாக விலகி மண்ணில் ஊன்றியது. அது தன்னைத்தானே இருமுறை உருட்டிக்கொண்டது. அதிலிருந்து புழுதிவடிவாக ஒருவன் மேலே எழுந்தான். இன்னொருவனை மண்ணுடன் அழுத்திப் பிடித்துக்கொண்டு மேலேறி அமர்ந்தான்

அது இடும்பன். அவன் கீழே கிடந்த காதரின் இரு கைகளையும் பிடித்து பின்னால் சேர்த்துப் பிடித்துக் கொண்டான்.  “டேய்!” என்று கூவினான்.

இருமாலி கூட்டத்திலிருந்து ஓடிச்சென்று அவனருகே நின்றான்.

“இவனுக்க உருமாலை எடுத்தாடா!”

இருமாலி ஓடிச்சென்று அவர்கள் போரிடத் தொடங்கிய இடத்தில் மண்ணில் மிதிபட்டு சேறுபோலக் கிடந்த காதரின் முண்டாசுத் துணியை எடுத்து வந்தான். அதைக்கொண்டு காதரின் இருகைகளையும் நன்றாகச் சேர்த்து சுருக்கிட்டு கட்டியபின் பிடித்து தூக்கி நிறுத்தினான் இடும்பன்.

காதரின் தலையை அன்றுதான் அனைவரும் பார்த்தனர். அவன் இஸ்லாமிய முறைப்படி மொட்டை அடித்து தாடி வைத்திருந்தான். அவனுடைய தாடிமயிர் புழுதிபடிந்து தேங்காய்நார் போலிருந்தது. வாய்திறந்து மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான். பெரிய இமைகள் சரிந்து கண்கள் மூடியிருந்தன.

“ஏலே கோளி மாதிரி வாயப்பொளக்கான்லே!”

அந்தக் குரல் எழுந்ததும் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். கூச்சல்களும் கெட்டவார்த்தைகளும் ஒலிக்கத் தொடங்கின.

“விளுந்தாம்லே துலுக்கன்!”

“என்னா நிப்பு…”

“அவனுக்க உருமாலுகெட்ட பாக்கணுமே!”

“தாயளி அவனை அடியுங்கலே! அவனுக்க முகத்திலே காறித்துப்புங்கலே!”

கெட்டவார்த்தைகளால் வசைபாடியபடி அந்தக்கூட்டம் அணுகியபோது இடும்பன் தன் காலை ஓங்கி தரையில் அறைந்தான். அலறியபடி அனைவரும் சிதறி ஓடினர். இடும்பன் கெட்டவார்த்தை சொன்ன ஒருவனை கைசுட்டி உறுமியான். இருமாலி தவளைபோல மண்ணிலிருந்து காற்றில் எழுந்து பறந்து அவனை அணுகி அவன் செவிட்டில் ஓர் அறைவிட்டான்.

அடிபட்டவன் ஓசையே இல்லாமல் அப்படியே புழுதியில் விழுந்து முகம்பதித்து கிடந்தான். அவன் இடதுகால் மட்டும் இழுத்துத் துடித்துக்கொண்டிருந்தது

பல்லியும் கூதறையும் கதறி அழுதபடி பின்னால் வந்தனர். இடும்பன் காதரை இழுத்துக்கொண்டு சென்று தன் ஒற்றை மாட்டுவண்டியில் தள்ளி தூக்கி ஏற்றினான். திரும்பி பல்லியிடமும் கூதறயிடமும் பின்னால் வரும்படி கைகாட்டிவிட்டு தானும் வண்டியில் ஏறிக்கொண்டான்.

இருமாலி பல்லியையும் கூதறையையும் ஒரு துணியால் கைகளைச் சேர்த்துக் கட்டி தன் கையில் பிடித்துக்கொண்டு வண்டிக்குப் பின்னால் சென்றான்.

வண்டிக்குப்பின்னால் பாறசாலை மக்கள் ஊர் எல்லை வரை வந்தனர். வண்டி கண்ணிலிருந்து மறைந்ததும் பலர் ஏதோ ஒருவகை மனச்சோர்வுக்கு ஆளாகி அழுதனர். தலையில் கைவைத்தபடி ஆங்காங்கே அமர்ந்து கண்ணீர்விட்டனர். அந்த மனச்சோர்வு படர்ந்து பரவ சந்தை வளாகமே அமர்ந்து விம்மியழத் தொடங்கியது

அந்த அழுகை ஏன் என்று எவருக்குமே தெரியவில்லை. அவர்கள் ஒன்றுமே பேசிக்கொள்ளவுமில்லை. அன்றிரவு பாறசாலை ஊரே தூங்கவில்லை. ஆனால் விளக்கேற்றவுமில்லை. கிராமங்களில் இருந்து வந்தவர்கள் சந்தையின் வெவ்வேறு இடங்களில் அப்படியே அமர்ந்துவிட்டிருந்தனர். சிலர் சுருண்டு படுத்தனர். எவரும் எதுவும் சாப்பிடவில்லை. எந்த ஓசையுமில்லாமல் இருட்டிம் விழித்திருந்தது ஊர்.

மறுநாள் விடிந்தபோது ஊர்முழுக்க மக்கள் நிறைந்திருந்த போதும் ஒரு சத்தமில்லை. பிணங்கள் போல எழுந்து ஓடையில் நீர் அள்ளி முகம்கழுவி தங்கள் பெட்டிகளும் கடவங்களுமாக ஊருக்குச் சென்றனர். வியாபாரிகள் பொருட்களுடன் அங்கேயே அமர்ந்துவிட்டனர். அன்றும் ஊரே சோர்ந்து வெளிறியிருந்தது

சந்தை அதற்கு அடுத்தநாள்தான் கூடியது. அப்போது மீண்டும் ஊர்களிலிருந்து வந்தவர்கள் சோர்ந்தவர்களாக எதையுமே பேசாதவர்களாகத்தான் இருந்தனர். ஓரிரு சொற்களில் உரையாடிக்கொண்டனர். ஆனால் ஒரு வார்த்தைகூட அந்த சண்டைபற்றிப் பேசிக்கொள்ளவில்லை.

அவர்கள் அனைவரும் உணர்ந்திருந்த, அனைவரும் மனதுக்குள் கேட்டுக்கொண்டிருந்த ஒன்றை கருப்பட்டி வியாபாரியான காபிரியேல் நாடார் மெல்லிய முனகலாக எழுப்பினார். “அவனுக ஒரு வார்த்தைகூட பேசிக்கிடல்லியே”

அவர்கள் அதைக்கேட்டு திடுக்கிட்டனர்.

காபிரியேல் நாடார் “அவனுக போறவளியிலயாவது என்னமாம் பேசுவானுகளா?”என்று மேலும் கேட்டார்

நெடுநேரம் கழித்து இபுராகீம் மரைக்காயர் சொன்னார் “இல்ல, பேசிக்கிடுகதுக்கு என்ன இருக்கு… யா ரஹ்மான்!”

அங்கிருந்து சென்ற இடும்பன் நாராயணன் அதற்குப்பின் பேசவே இல்லை. அந்த வண்டியில் ஒரு சொல்லும் எழவில்லை. தலைக்கெட்டு காதரை ஹூஸூர் கச்சேரியில் ஒப்படைத்தபோதும் பேசவில்லை. அனைத்தையும் இருமாலிதான் விளக்கிச் சொன்னான்.

இடும்பன் அங்கிருந்து தன் அச்சியான கவங்கில் மாதவி வீட்டுக்குச் சென்று அமர்ந்திருந்தான்.இரவெல்லாம் ஒரு வார்த்தை பேசவில்லை. அவள் பலவாறாகக் கேட்டும் வாய் திறக்கவில்லை. அவள் அளித்த கஞ்சியையும் குடிக்கவில்லை. மறுநாள் காலை அவன் காணாமலாகியிருந்தான்

பல ஆண்டுகளுக்குப்பின் அகஸ்தியர் கூடம் செல்லும் வழியில் வில்லுச்சாரி என்னும் இடத்தில் காட்டுக்குள் குடில்கட்டி வாழ்ந்த மௌனச்சாமியாராக இடும்பனை மக்கள் கண்டுகொண்டனர். இடும்பன் நாராயணன் என்றபெயர் வழக்கொழிந்து மௌனச்சாமி என்றே அவர் அறியப்பட்டார். அவரைச் சூழ்ந்து ஒரு ஆசிரமம் உருவாகியது. சீடர்கள் வந்தனர். திருவிதாங்கூர் மகாராஜா சுவாதித்திருநாளே அவரை மாதந்தோறும் வந்து வணங்கிச் சென்றார்.

இடும்பன் நாராயணனின் குட்டிச்சட்டம்பியான இருமாலி மாடசாமிப்பிள்ளை பின்னர் கடைவைத்து வியாபாரியாக ஆனார். அவர்தான் கோட்டைப்புறம் மாரியம்மன் கோயிலை சொந்தச் செலவில் கட்டியவர். பெரிய தர்மிஷ்டராக அறியப்பட்டார். சாவது வரை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சாயங்காலம் மட்டும் அவர் மௌனச்சாமி மடத்தில்தான் இருப்பார். மௌனச்சாமியை நெடுங்கிடையாக விழுந்து வணங்கிவிட்டு அவர் முன்னால் சற்று இடப்பக்கமாக விலகி  ஒரு மூலையில் கண்மூடி அமர்ந்திருப்பார். மறுநாள் காலை கிளம்பிச்செல்வார். வந்தது முதல் திரும்புவது வரை ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை.

மௌனச்சாமி ஒரு வார்த்தைகூட பேசியதில்லை. என் அப்பா மௌனசாமி மடத்துடன் நெருக்கமாக தொடர்பில் இருந்தார். மௌனசாமியின் வரலாற்றையும் அவரிடமிருந்து பெற்ற ஞானத்தையும் பற்றி பல நூல்களை அவருடைய சீடர்களும் இல்லற மாணவர்களும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவரிடமிருந்து புன்னகை மட்டுமே வெளிப்பட்டது என்று அப்பா சொன்னார்

தலைக்கெட்டு காதரும் அந்த நாளுக்குப்பின் பேசவில்லை.ஹூஸூர் கச்சேரியில் கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் அவன் பதில் சொல்லவில்லை. அவர்களே கேஸ் எழுதினர். விசாரித்து சிறையிலிட்டனர். சிறையிலும் அவன் பேசவில்லை. அவனை அடிக்கவோ மிரட்டவோ எவரும் துணியவில்லை

பதினேழு ஆண்டுகள் காதர் சிறையிலிருந்தான். அவனை எதற்காக தண்டித்தார்கள் என்பதையே எல்லாரும் மறந்துவிட்டிருந்தனர். அவனுடைய பெயரே கூட சிறைப்பதிவுகளில்தான் இருந்தது. மகாராஜா உத்தரம் திருநாள் ராமராஜா பதவிக்கு வந்ததை ஒட்டி அவனை விடுதலை செய்தனர்

மீண்டும் பாறசாலை சந்தைக்கு வந்த தலைக்கெட்டு காதர் அதேபோல தலையில் உருமால் கட்டியிருந்தார். ஆனால் பச்சைநிறம் அதற்கு. பச்சைநிறமான நீண்ட அங்கி. தாடி நரைத்து இருபிரிவாக மார்பில் விழுந்திருந்தது.அந்த முதுநாவல் மரத்தடியில் அவர் வந்து அமர்ந்தபோது அவர் எவரென்றே எவருக்கும் தெரியவில்லை. ஏதோ அயலூர் சூஃபி என்றே எண்ணினர்

மேலும் முப்பத்தாறு ஆண்டுகள் அந்த முதுநாவல் மரத்தடியில் காதர் தங்கியிருந்தார். காலைக்கடன்களுக்கு கருக்கிருட்டில் ஆற்றுக்குச் செல்வதை தவிர அங்கிருந்து அகலவே இல்லை. எவரிடமும் எதுவும் பேசவில்லை. எவர் முகத்தையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை. எவரிடமும் எதுவும் கேட்கவில்லை. அருகிலிருந்த கடைக்காரர்கள் உணவும் நீரும் அளித்தனர்.

அவர் தன் விரல்களால் எண்ணியபடி உதடுகளால் ஓசையில்லாமல் “பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்” என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதை மட்டும். விழித்திருக்கும் நேரமெல்லாம். இரவில் மிகக்குறைவாகவே அவர் தூங்கினார். பெரும்பாலும் அமர்ந்தபடியே. ஆகவே அவர் இரவும் பகலும் அதைச் சொல்லிக்கொண்டிருந்தார் என்று நம்பினார்கள்

நாளடைவில் பக்தர்கள் தேடி வரத்தொடங்கினர். அவரை வணங்கியவர்களையும் அவர் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவர்களே அவருக்கு முன்னால் பச்சை சால்வைகளை படைத்து அவருடைய ஆசி என்று திரும்ப எடுத்துக்கொண்டனர்.அவர் முன் சுருட்டுக்களை படைத்தார்கள். அவை அதற்கென்றே தயாரிக்கப்படும் சுருட்டுக்கள், சாதாரண சுருட்டுக்களைவிட இருமடங்கு பெரியவை. அவற்றை படைத்தபின் எடுத்துச் சென்று பிரித்து சாதாரண சுருட்டுக்களாக ஆக்கி விற்றார்கள்.

அங்கே வந்து வழிபட்டால் நோய்கள் தீர்ந்தன, கடன்கள் அழிந்தன, கவலைகள் மறைந்தன. வருபவர்கள் பெருகிப்பெருகி அந்த இடமே ஒரு பெரிய மையமாக ஆகியது. அதன் அருகே இருந்த பள்ளிவாசல் மைதானத்தில் எப்போதும் வண்டிகள் நிறைந்திருந்தன

நூற்றியிருபது வயதுல் காதர்மறைந்தபோது அந்த நாவல்மரத்தின் அடியிலேயே அவரை நல்லடக்கம் செய்தனர். பச்சைச் சால்வை போர்த்தப்பட்ட அவருடைய சமாதியை உள்ளே வைத்து ஒரு தர்கா அமைக்கப்பட்டது. அங்கே தூபமிட்டு ஓதுவதற்கும் சால்வைபோர்த்தி கொடுப்பதற்கும் முசலியார்கள் அமைந்தனர். அவர்கள் இரண்டு குடும்பங்கள். இருவருமே அவருடைய அணுக்கர்களாக இருந்த பல்லேலி அப்துல் ரஹ்மான், மேட்டில் முகமது குஞ்ஞி ஆகியோரின் வாரிசுகள்.

ஹஸ்ரத் அப்துல் காதர் சாகிப் வலியுல்லா தர்கா பாறசாலையின் சந்தைக்கும் மசூதிக்கும் நடுவே உள்ள சாலைவளைவில் அமைந்திருக்கிறது. அங்கே அந்த மூத்த நாவல்மரம் இன்றும் தடித்த கிளைபரப்பி நிழல்விரித்திருக்கிறது. காய்க்கும் பருவத்தில் அந்த மரமே பறவைகளால் நிறைந்திருக்கும்.செவிமூடும் பறவைக்கூச்சல்களுக்கு நடுவேதான் தர்காவிலிருந்து பிஸ்மில்லாஹ் ஓசை கேட்கும். மழைபோல கொட்டி தரைஎங்கும் நிறைந்து கிடக்கும் நாவல்பழங்கள் வண்டிச்சக்கரங்களால் அரைக்கப்பட்டு சிவந்து கூழாகிப் பரவியிருக்கும். நாவலடி தம்புரான் என்று இஸ்லாமியர் அல்லாதவர்களாலும் ஔலியா வணங்கப்படுகிறார்

என் அப்பாவிடமிருந்து நான் கேட்டறிந்த இந்தக்கதைகளில் எஞ்சிய ஒரே கண்ணி அந்த நாவல்மரத்தடியில் அமர்ந்திருந்தவர் யார் என்பது. அவர் அளித்த அந்த குடுவையிலிருந்த நீர் எது?

நான் பதினெட்டு ஆண்டுகள் வெவ்வேறு தரப்பினரிடம் அவரைப்பற்றி கேட்டேன். மௌனசாமியின் வழிவந்தவர்களிடம், தர்காவை நடத்துபவர்களிடம். அவர்களுக்குச் சொல்ல நூற்றுக்கணக்கான செய்திகள் இருந்தன. அங்கே வந்து வழிபட்டுச் சென்றவர்களின் பட்டியல், அற்புதங்களின் கதைகள். ஆனால் எவரிடமும் ஒரு சொல்கூட அந்த முதிய பரதேசியைப் பற்றி இல்லை.அவருடைய தோற்றத்திலுள்ள எந்த சூஃபியும் அப்பகுதியில் எங்கும் வந்ததாகச் செய்தி இல்லை. பேசப்பட்ட அனைவருமே அரச ஆகிருதி கொண்டவர்கள்.

தேற்றக்கடுவாயும் ஈற்றப்புலியும்’  என்ற அந்த சிறிய நூலை மட்டும்தான் சான்றாகக் கொள்ளவேண்டும். உண்மையில் என் ஆய்வை தொடங்கியதே அந்த நூலில் இருந்துதான். அதில்தான் அந்த அடிதடி நிகழ்ச்சியின் விரிவான சித்திரம் அளிக்கப்பட்டிருந்தது. ஏழு வரிகளில் அந்த முதியவர் பற்றிய விவரிப்பு அதில் இருந்தது. அவருடைய தோற்றத்தில் இருந்து அவர் ஒரு சூஃபி என்று தெரிந்தது, அவ்வளவுதான் அவரைப்பற்றிய விளக்கம்.

பின்னர் அறிந்துகொண்டேன் அவரை தொடரவோ அறியவோ முடியாது என்று. சில பறவைகள் அப்படித்தான்

***

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–67

$
0
0

பகுதி ஆறு : படைப்புல் – 11

பிரஃபாச க்ஷேத்ரத்தில் மிக விரைவாக குடில்கள் அமைந்தன. அத்தகைய ஒரு நிலத்தில் யாதவர்கள் எவரும் அதற்கு முன் குடியேறியதில்லை. பெரும்பாலும் அவர்கள் அனைவருமே துவாரகையில் பிறந்து வளர்ந்தவர்கள். முதியவர்களோ வடக்கே செழித்த புல்வெளிகளிலும், மதுவனம், மதுராபுரி போன்ற அரசு நிலைத்த நகர்களிலும் பிறந்தவர்கள். ஒரு கடலோரச் சதுப்பு நிலத்தில் குடில் கட்டி நகர் அமைக்கும் பயிற்சியை அவர்கள் எங்கிருந்தும் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆணையிடாமலேயே ஒவ்வொருவருக்கும் அனைத்தும் தெரிந்திருந்தது. நூற்றுக்கணக்கான குலக்கதை அடுக்குகளினூடாக அவர்கள் வெவ்வேறு நிலங்களில் யாதவர்கள் எவ்வண்ணம் குடியேறினார்கள் என்பதை அறிந்திருந்தார்கள். தேவையில்லை என்பதனால் மறந்திருந்தார்கள். தேவையென்பதனால் தெய்வம் எழுந்ததுபோல் அந்த அறிதல் எழுந்தது.

சதுப்பு நிலத்தில் இறங்கியதுமே அங்கே பெரும்பாலான இடங்களில் இடையளவு சேறு புதைந்து உடல் உள்ளே செல்லும் என்பதை அறிந்துகொண்டார்கள். ஆகவே எடைமிக்க பொருட்களை அங்கே இறக்கலாகாது என்று சொல்வழியாகவே ஆணைகள் பரவிச்சென்றன. காளைகளையும் பசுக்களையும் அச்சதுப்பில் இறக்குவதென்பது இடர் அளிப்பது என்று உணர்ந்து முதியவர்கள் “பசுக்களையும் காளைகளையும் பின்னுக்கு கொண்டு செல்லுங்கள். புரவிகளும் அத்திரிகளும்கூட பின்னால் இருக்கட்டும். நம்மிடம் இருக்கும் எருமைகள் மட்டும் முன்னால் வரட்டும்” என்றனர்.

அவர்களிடம் எருமைகள் மிகக் குறைவாகவே இருந்தன. அவை பாலையின் அந்த வறுபரப்பில் நீரிலாது வாழக்கூடியவை அல்ல. எனினும் வரும்பெருக்கில் முற்றிலும் எருமை இல்லாமல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே எருமைகளை கொண்டுவந்திருந்தனர். வியத்தகு முறையில் அவை பாலைநிலத்தின் வெம்மையை ஏற்றுக்கொண்டன. குறைவான நீரில் உயிர்வாழ்ந்தன. திரளின் உணர்வுகளை புரிந்துகொண்டு ஒத்துழைத்தன. இயல்பாக அந்த நெடுந்தொலைவை கடந்து வந்தன.

நாற்பது எருமைகள் முன்னால் அழைத்துவரப்பட்டன. அவை புல் செறிந்த சேற்று நிலத்தைக் கண்டதுமே மகிழ்ந்து முக்காரையிட்டுக்கொண்டு செவி குவித்து முன்னால் செல்ல விரும்பின. குட்டிகளிடம் நிறைய புல், நிறைய நீர் என அறிவித்தன. ஆணையிடப்பட்டதும் சதுப்பில் இறங்கி வயிற்றை உப்பி தெப்பங்கள்போல மாறி உழன்றும் மிதந்தும் சென்றன.

அவற்றின் உடலில் கட்டப்பட்டிருந்த கயிறுகளைக் கொண்டு பலகைகளை இழுத்து சேற்றுப் பரப்பின்மீது நீண்ட பாதை ஒன்றை அமைத்தனர். பலகைகள் ஒன்றுடன் ஒன்று சேர்த்து கட்டப்பட்டன. அவை எடையால் சேற்றில் மூழ்காமல் இருக்க அவற்றுக்கு அடியில் பெரிய மூங்கில்கள் குறுக்காக அமைக்கப்பட்டன. அம்மூங்கில்களுடன் மேலும் மரச்சிம்புகள் இணைக்கப்பட்டன. மேலிருந்து பார்த்தபோது ஒரு பெரிய முதுகெலும்பு அச்சேற்று நிலத்தில் பதிந்ததுபோல் தோன்றியது.

“நிலம் முதுகெலும்பு கொண்டுவிட்டது. இனி இது எழுந்து நின்றிருக்கும். பேருருக்கொண்டு போர்புரியும். நிலம் வெல்லும். புகழ்கூடும்!” என்று ஒரு சூதன் சொன்னான். யாதவர்கள் அனைவரும் மகிழ்ந்து கூச்சலெழுப்பி நகைத்தனர். கால்கள் விரிந்த அந்தப் பாதையை பூரான் என்று அழைத்தனர். அதில் ஏறியபோது படகில் செல்லும் உணர்வு ஏற்பட்டது. ஆனால் எளிதில் அதற்கு அவர்கள் உடல்பழகினர். மானுடரும் விலங்குகளும்.

வண்டிகளும் பசுக்களும் காளைகளும் சுமை விலங்குகளும் பெருந்திரளான மக்களும் அதன்மேல் ஏறிய போதும்கூட அது சேற்றிலேயே மிதந்து சற்றே அசைவு அளித்தாலும் கவிழாமல் நின்றது. அதனூடாக மக்கள் சென்று பரவினர். குடில்கள் அமைக்கும் பணியை உடனே தொடங்கினர். ”சேற்றில் மூங்கில்களை ஓங்கிக் குத்தி அடிநிலம் எங்குள்ளது என்று பாருங்கள். எங்கு அவை உறுதியாக நிலைகொள்கின்றனவோ அங்கு நாட்டுங்கள். அவற்றை வேர் என்றாக்கி குடில் அமைக்கலாம்” என்றார் முதியவர்.

அதுவரை நான் நான்கு மூங்கில்கள் குத்த இடம் இருந்தால் மட்டுமே ஒரு இல்லத்தை அமைக்கமுடியும் என்று எண்ணியிருந்தேன். அப்போதுதான் ஒற்றைப் பெருமூங்கிலை அழுத்தமாக நட்டு அதை மேலிருந்து மரத்தடிகளால் அறைந்து அறைந்து உள்ளே செலுத்தி நாட்டிய பின் அதிலிருந்து நாற்புறமும் இணைப்பு கொடுத்து சதுப்புக் குடில்களை கட்ட முடியும் என்று கண்டேன்.

பெரும்பாலான குடில்கள் ஆணிவேர் மட்டுமே கொண்டவை. அவற்றின் எடை சதுப்பில் பரவும் பொருட்டு ஒவ்வொன்றுக்கு அடியிலும் பெரிய கிடைமூங்கில்கள் அமைக்கப்பட்டன. குடில்கள் கட்டப்பட்டு அவை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டன. அவை வலைபோலப் பரவியபோது சேறு அவற்றை தாங்கிக்கொண்டது. அந்தக் குடில்பரப்பே ஒரு மாபெரும் பாசிப்படர்வு என்று தோன்றியது.

முதல் நாளிலேயே அங்கு கரையோரம் பெருகி நின்றிருந்த உயரமான நாணல்புதர்கள் பயன்படக்கூடியவை என்று ஆயர்கள் கண்டனர். அந்த நாணல் மூங்கில் போலவே உள்ளே துளைகொண்டது. மிகமிக உறுதியானது. சிறிய மூங்கிலென பயன்படக்கூடியதென்பதை யாதவர்கள் கண்டுகொண்டதும் மட்கிய மரத்தடிகளை தெப்பங்களாக்கி உள்ளே சென்று அந்த நாணல்களை வெட்டிக் குவித்து கயிற்றால் இழுத்துக் கொண்டுவந்து முடைந்து தட்டிகளும் பாய்களும் ஆக்கினர். அவற்றைக் கொண்டே இல்லங்களுக்கு சுவர் அமைக்கலாம் என்றும் கூரை அமைத்து அதன்மேல் மூங்கில் தாள்களையே பரப்பி நீரொழுகாது ஆக்கலாம் என்றும் கண்டுகொண்டார்கள்.

பின்னர் அந்தப் புல் தண்டுகளை அடுக்கடுக்காக சேர்த்துக் கட்டி ஒன்றுடன் ஒன்று இணைத்து பெரிய பரப்பென்றாக்கி சதுப்பின்மேல் போட்டால் அது மிதந்து கிடக்கும் நிலப்பரப்பென ஆவதை கண்டுபிடித்தனர். மூங்கில்வேர்கள் இல்லாமலேயே அந்த மிதக்கும் நிலத்தின்மேல் இல்லங்களை அமைக்க முடியும். அந்த நாணல் சதுப்பின் ஈரத்தில் மட்குவதில்லை. அழுந்தும்போது சதுப்பிலிருந்து நீரை மேலே ஊறிஎழச் செய்வதுமில்லை.

ஒவ்வொருநாளும் புதியன கண்டறியப்பட்டன. புதியவை உருவாகி வந்தன. ஐந்து நாட்களுக்குள் பிரஃபாச க்ஷேத்ரம் முழுக்க பரவி எழுந்த ஒரு நகரத்தை கண்டேன். நாணற் கூரைகளும் நாணல் சுவர்களும் கொண்டது. சீரான தெருக்களுக்கு இருபுறமும் மூங்கில்கால்களின் மேல் எழுந்து நின்ற இரண்டு அடுக்கு மாளிகைகளின் நிரை. அங்காடி ஒன்று. அதனருகே கேளிக்கை களம். குடிமூத்தோருக்கும் குலதெய்வங்களுக்குமான ஆலயங்கள். அனைத்துமே நாணல்களால் ஆனவை.

பன்னிரண்டு மூங்கில்களை நாட்டும் இடமிருந்த ஒரு இடத்தில் மூன்றடுக்கு மாளிகை எழுந்தது. சாம்பனுக்கும் பிரத்யும்னனுக்கும் அநிருத்தனுக்கும் தனித்தனி மாளிகைகள் கட்டப்பட்டன. அவை தனி மையங்களாக மாறின. அவற்றைச் சுற்றி அவர்களின் ஆதரவாளர்களின் குடில்கள் அமைய அவை நகரத்திற்குள் தனிநகரங்களாக மாறின.

நகரத்தைச் சுற்றி இருபது காவல்மாடங்கள் அமைந்தன. அவற்றில் இரவுபகலாக வில்லேந்திய காவலர்கள் அமர்ந்திருந்தனர். பிரஃபாச க்ஷேத்ரத்தில் பெருகிக்கிடந்த லோகநாசிகை என்னும் அந்தப் புல் அம்புக்கு மிக உகந்தது என்று கண்டடையப்பட்டது. அதைக் கொண்டு நெடுந்தொலைவுக்கு அம்பு செலுத்த முடிந்தது. சிறகு கொண்ட பறவைபோல அவை எழுந்து விண்ணில் நீந்திச்சென்று இலக்கை அடைந்தன.

அந்த அம்புகள் யாதவர்களை நம்பிக்கையும் மிதப்பும் கொண்டவர்கள் ஆக்கின. எவரும் பிரஃபாச க்ஷேத்ரத்தை அணுகிவிட முடியாது என்ற நம்பிக்கை எழுந்தது. அந்நகருக்கு ஒரு கோட்டைகூட தேவையில்லை என்றார் பிரத்யும்னன். ”இந்த அம்புகளைக் கடந்து கொசுக்களும் ஈக்களும்கூட இங்கே வந்துசேர முடியாது” என்றார்.

தெப்பங்கள்போல் மிதந்து கிடந்த பாதைகளினூடாக புரவிகள் நனைந்த முரசுத்தோலில் கோல் ஒலிப்பதுபோல் குளம்புகள் முழங்க விரைந்தோடின. அங்கே விலங்குகளுக்கான புல்லுக்கு குறைவே இல்லை. ஆகவே பசுக்களும் எருமைகளும் தின்றுகொண்டே இருந்தன. ஓரிரு நாட்களிலேயே அவை வாட்டம் அகன்று மின்னும் விழிகள் கொண்டவையாக ஆயின. பசுக்களும் எருமைகளும் குடமென அகிடு கனத்தன. கலங்கள் நிறைந்து நுரைக்க பால் அளித்தன.

புல்வெளியில் விலங்குகளை வேட்டையாடி கொண்டுவருவது எளிதாக இருந்தது. அங்கே விலங்குகள் பெருகிக்கிடந்தன. அவை மானுடர் வேட்டையாடுவதை அறிந்திருக்கவில்லை என்பதனால் மிகச் சிறிய பொறிகளிலேயே சதுப்பில் மேயும் மறிமான்களும் முயல்களும் சிக்கிக்கொண்டன. பன்றிகள் இரவில் படையென கிளம்பி வந்தன. ஓரிரு நாட்களுக்குள்ளேயே மூன்று வேளையும் பன்றி இறைச்சியை உண்ணலாயினர். பாலையில் நடந்த மெலிவும் கருகலும் உடல்களிலிருந்து மறைந்தன. முகங்களில் மகிழ்ச்சியும் கண்களில் ஒளியும் ஏற்பட்டது.

யாதவர்கள் புல்வெளிகளில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று அப்போது கண்டேன். புது நிலம் ஒன்றை வென்று கையகப்படுத்துவதே அவர்கள் அடையும் முதன்மை மகிழ்ச்சி என்பதையும் அப்போது உணர்ந்தேன். கலைகள், கேளிக்கைகள், வெற்றிகள், புகழ் எதுவுமே அவர்களுக்கு மெய்யாகவே பொருட்டு அல்ல.

ஒவ்வொரு நாளும் புதிய முறைகள் உருவாகி வந்தன. எருமைகளைக் கொண்டு பிற எருமைகளை வெல்லும் உத்தி ஒன்றை முதியவரான சக்ரர் வகுத்தார். புணர்வுக்கு மணம் எழுப்பிய இளம் எருமை ஒன்றின் பின்பக்கத்திலிருந்து எடுத்த மதநீரை நீரில் கரைத்து அனைத்து எருமைகள் மேலும் தெளித்து அவற்றை பிரஃபாச க்ஷேத்ரத்தின் எல்லைகளில் கட்டி வைத்தார்கள். ஒவ்வொரு எருமையைச் சுற்றியும் புலரியில் பல ஆண் எருமைகள் நிற்பதைக் கண்டனர். அவற்றை கயிறு எறிந்து கொம்புகளில் சுருக்கிட்டு துள்ள வைத்து கால்களில் சுருக்கிட்டு வீழ்த்தி பிடித்துவந்தனர்.

பின்னர் அவற்றை கட்டி வைத்து பட்டினி இட்டு, நீரும் உணவும் இட்டு, உணவுடன் ஆணைகளை இணைத்து சில நாட்களிலேயே பழக்கினர். அந்த மதம் எழுந்த ஆண் எருமைகளை கொண்டுசென்று சதுப்பில் எடை இழுக்கவும் உழவும் பழக்கினர். அவற்றின் விந்து நீரை வெளியே எடுத்து நீரில் கலக்கி பிற எருமைகளின் உடலில் தெளித்து காட்டில் இரவில் கட்டிவைத்து மறுநாள் அழைத்து வந்தபோது கன்னி எருமைகள் பெருந்திரளாக பிரஃபாச க்ஷேத்ரத்திற்கு வந்தன.

ஒரு மாதத்திற்குள் பிரஃபாச க்ஷேத்ரம் எருமைகளின் முக்காரைகளால் நிறைந்தது. எங்கும் எருமைகளின் செவியாட்டல், வால் சுழற்றல். அவை அச்சேற்றில் திளைத்தன. உண்டு கழித்து அந்த நிலத்தை வளம் கொண்டதாக்கின. சேற்றில் செழித்து விளையும் செடிகளை கண்டடைந்தனர். சேம்பு முதலிய பல்வேறு கிழங்குகள் சேற்றில் மிகச் சிறப்பாக விளையுமென்பதை கண்டனர்.

பின்னர் சேற்றுநிலத்தை விளைநிலமாக்கத் தொடங்கினர். சேற்றுக்குள் காற்று நுழையாததனாலேயே அங்கு செடிகள் வளர்வதில்லை. நாணல் குழாய்த் துண்டுகளை நறுக்கி அச்சேற்றில் விட்டு அவை புதைந்தபோது உள்ளே காற்று புகுந்து நுரைக்குமிழிகள் எழுந்தன. உள்ளிருந்து அழுகலை உண்ணும் சிறு வெண்புழுக்கள் பெருகி வந்தன. பின்னர் கிழங்குகளை நட்டால் அவை பெருகும் என்று தெரிந்தது.

சேற்றுக்கு நடுவே இடையளவு ஆழத்தில் நீண்ட ஓடைகளை வெட்டி ஆங்காங்கே வெட்டப்பட்ட பெரிய குளத்தில் சேர்த்தனர். நீர் வடிந்ததும் சேற்றுப்பரப்பு வறண்டு வெடித்தது. அதன் பின்பு அங்கு நடப்பட்ட வாழைகள் தளிரெழுப்பி, குளிர்ந்த உடல் எழுப்பி தலைக்குமேல் வளர்ந்தன. எருமைகளின் சாணி அவற்றுக்கு சிறந்த வளமென ஆயிற்று. பிரஃபாச க்ஷேத்ரம் எட்டு மாதங்களுக்குள் மாபெரும் வாழைத்தோட்டமென மாறியது.

சதுப்பு நிலம் வேளாண்மைக்கு உரியதல்ல என்று நான் அறிந்திருந்தேன். அதை வேளாண்மை நிலமாக ஆக்குவது எப்படி என்பது யாதவ முதியவர் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தது என்பதை வியப்புடன் உணர்ந்தேன். முதியவராகிய சம்பூதர் பல தலைமுறைகளுக்கு முன்பு யாதவர்களுக்கு நிலம் தேடிச்சென்று யமுனை நதிக்கரையிலிருந்த சதுப்பு ஒன்றை அடைந்து அதைத் திருத்தி நிலமென்று ஆக்கியதைப்பற்றி சொன்னார். அது பின்னர் மதுராபுரி என்று ஆகி கோல் கொண்டு முடிசிறந்தது.

அந்நிலத்தில் இருந்து அவர்கள் உயிரை மீட்டெடுத்ததைப் பற்றி கூறும் யமுனாவிலாசம் எனும் காவியம் நீண்ட மேய்ச்சல் பாடலாகவே அவர் நினைவில் இருந்தது. அதிலிருந்த ஒவ்வொன்றையாக பிரஃபாச க்ஷேத்ரத்தில் செய்தனர். மண்ணில் சுண்ணமும் சாம்பலும் சேர்த்தனர். மணலையும் கூழாங்கற்களையும் கொண்டுவந்து கலந்தனர். மூங்கிலை ஆழமாகப் பதித்து எடுத்து கூரிய சிறு குழிகளை உருவாக்கினர்.

சதுப்பு நிலத்துக்குள் நூறு தெய்வங்கள் ஆவி வடிவில் குடிகொள்கின்றன. அவை மழை பெய்து நீர் பெருகும்போது குமிழிகளாக வெளிக்கிளம்புகின்றன. வெயில் மூத்து நிலம் வெடிக்கும்போது அனலாக எழுந்து பற்றிக்கொள்வதும் உண்டு. அந்த தெய்வங்களை அந்நிலத்திலிருந்து உரிய முறையில் வெளியேற்றுவதே மானுடன் அங்கே செய்யவேண்டியது.

பிரஃபாச க்ஷேத்ரத்தில் எங்கெல்லாம் மாடுகள் மேயாமல் ஒழிகின்றனவோ அங்கே அடியில் தீய தெய்வங்கள் வாழ்கின்றன என்று பொருள். அங்கே மூங்கில்களை அறைந்து ஆழ்ந்த துளைகள் இடப்பட்டன. பக்கவாட்டில் பலநூறு துளைகள் கொண்ட சல்லடைமூங்கில்கள் அவை. அந்த மூங்கில்களுக்குள் வந்த ஆவி மேலெழுந்து தலைக்கு மேல் சென்று மறைந்தது. எப்போதாவது அதில் அனல்துளி பட்டால் நீலநிறமாக பற்றிக்கொண்டு சிறிய ஒற்றைக்குமிழி என கொப்பளித்து வானில் எழுந்தது.

அதன் பிறகு வழிபடும் தெய்வங்களை மண்ணுக்குள் அனுப்பினார்கள். துளையிடப்பட்ட பலநூறு மூங்கில்கள் மண்ணில் அழுத்தப்பட்டன. நெற்றுகளும் ஓடுகளும் அம்மண்ணுக்குள் புதைக்கப்பட்டன. அவை போதாமலானபோது நெற்றுகள்போல் குழாய்கள்போல் மண்ணில் செய்து உலர வைத்து சுட்டு அம்மண்ணில் புதைத்தனர்.

“நூற்றெட்டு மாருத மைந்தர்கள் மண்ணுக்குள் குடியேற வேண்டும். அவர்கள் உள்ளே வாழும் புழுக்களை, வேர்களை புரக்கவேண்டும். அதன் பின்னரே இங்கே உயிர்க்குலம் எழும்” என்றார் சக்ரர். மாருதர்கள் மண்ணுக்குள் வாழத் தொடங்கினர். அவர்கள் அங்கே உயிர் பெருக்கினர். மண்ணின் மணம் மாறத்தொடங்கியது. அதில் எப்போதுமிருந்த புளித்த வாடை அகன்றது. எரியும் சாம்பல்சுவை தோன்றியது. மண்ணின் நிறம் ஆழ்ந்த நீலச் சாம்பல் நிறத்தில் இருந்து வெளிறி சிவப்பு கொண்டது.

அங்கு வந்தபோது அச்சதுப்பு நிலமெங்கும் ஒற்றைப் புல்லே நிரம்பியிருந்தது. கூரிய அரம் கொண்ட குறுவாட்கள் போன்ற இலைகளும் நீர்நிறைந்த தண்டும் கொண்டது. பிறிதொரு நிலையுயிர் அங்கே எழமுடியாமல் இருந்தது. அந்தப் புல் தன் வேர்களை வளர்த்து மேலே கொண்டுவந்து செந்நிறமான புழுக்கூட்டங்களைப்போல மிதக்கவிட்டு வெளிக்காற்றில் மூச்சுவிட்டது. வேர் அழுந்தும் செடிகள் அங்கே எழமுடியவில்லை. அவற்றின் விதைகள் சேற்றுள் வாழ்ந்த நீலநிற அனலால் எரித்து அழிக்கப்பட்டன.

மண்ணுக்குள் மாருதர்கள் சென்றதும் மண்புழுக்கள் எழுந்தன. உள்ளிருந்து மண்ணை கொண்டுவந்து மேலே குவித்தன. ஒவ்வொரு நாளும் பிரஃபாச க்ஷேத்ரத்தில் காலை எழுந்து மண்ணை நோக்கினால் பல்லாயிரம் மண்குவைகளை காணமுடிந்தது. உள்ளே மண்புழுக்கள் வேர்கள் என நெளிந்து இறங்கின. அவை மாருதர்களின் மைந்தர்கள். மாருதர்கள் நிலத்திற்குள் செல்வதற்கான வழி அமைப்பவை என்றார்கள் மூத்தவர்கள்.

உள்ளே சென்ற மாருதர்கள் அங்குள்ள அனைத்து உயிர்களையும் தொட்டெழுப்பினார்கள். ஒவ்வொருநாளும் புதிய செடிகள் மேலெந்து வந்தன. அங்கே கோடை காலம் வந்தபோது முதல் முறையாக மிதக்கும் நகரம் முழுக்க பலவண்ண மலர்கள் மலர்ந்தன. ”முதல் முறையாக இம்மண்ணில் இளவேனில் எழுந்திருக்கிறது” என்று மூத்தவர் ஃபானு கூறினார். “இத்தனை வண்ண மலர்கள் இங்கு மலரக்கூடுமென எவரும் எண்ணியிருக்கமாட்டார்கள்.”

சூதர் ஒருவர் “மலர்கள் கந்தர்வர்களையும் தேவர்களையும் அழைப்பவை. வண்டுகளாகவும் தேனீக்களாகவும் வண்ணத்துப்பூச்சிகளாகவும் அவர்கள் இங்கு வருவர்கள். தேவர்கள் குடிகொள்ளும் நிலம் மானுடர் வாழ்வை பெருக்குவது” என்றார். “தேவர் வருக! மூத்தார் வருக! இந்நிலத்தில் எங்கள் குலம் எழுக!” என்றார் ஃபானு.

எங்கிருந்தென்று தெரியாமல் வண்ணத்துப்பூச்சிகள் வந்து பிரஃபாச க்ஷேத்ரத்தை நிரப்பின. மலர்களும் வண்ணத்துப்பூச்சிகளும் நிறைந்து அந்நிலம் முதல் முறையாக வண்ணம் பொலிந்தது. அதன் நடுவே சிறுவர்கள் ஓடி விளையாடினார்கள். வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றிய தொன்மையான யாதவப் பாடல்கள் அனைத்தும் நினைவிலிருந்து மீண்டு வந்தன. யாதவர் வண்ணத்துபூச்சிகளை அந்த அளவுக்கு கொண்டாடியிருக்கிறார்கள் என்று அப்போது அறிந்தேன்.

அங்கே வந்த சில நாட்களிலேயே ஒவ்வொருவரும் சதுப்புக்குள் வாழும் கலையை கற்றுக்கொண்டிருந்தார்கள். வாழைத்தண்டுகளை இணைத்து பாதையாக்கி சதுப்புகளுக்குள் செல்லவும் மிதக்கும் மரங்களை படகுகளாக்கி கழிகளை ஊன்றி உளைச்சதுப்புக்கு மேலே நீந்தவும் அவர்கள் பழகியிருந்தார்கள். “முதன்முறையாக இந்நிலம் புன்னகைக்கிறது. வருக என்கிறது. இங்கு வாழ்வு செழிக்கும்” என்றார் ஃபானு.

“எங்கும் மனித வாழ்வு செழிக்க முடியும். பாலை நிலத்தில் துவாரகை எழமுடியும் எனில் இந்நிலத்தில் மும்மடங்கு செழிப்பும் செல்வமும் கொண்ட பெருநகரொன்று எழமுடியும்” என்றார் பிரஃபானு. தன் மாளிகையின் மூங்கில் முகப்பில் நின்றபடி சுற்றிலும் நிகழ்ந்துகொண்டிருந்த இளவேனிற்கால பணிகளை பார்த்துக்கொண்டிருந்தார். பணிகளையே விளையாட்டென, களியாட்டென மாற்றிக்கொண்டிருந்தனர். கைகொட்டி பாடியபடி, நடனமிட்டபடி வேலை செய்தனர்.

இளவேனிற்காலத்தில்தான் யாதவர்கள் தேன் எடுக்கும் கலையை கற்றனர். பலநூறு தேன் கூடுகள் அங்கே அமைக்கப்பட்டன. தேன்கூடுகளிலிருந்து தேன் எடுப்பதற்கான வழிமுறைகள் அனைத்தையுமே அவர்கள் தங்கள் தொன்மையான குலப்பாடல்களில் இருந்தே கற்றுக்கொண்டனர். தேன் கலந்த மதுவை தயாரிப்பதும் அங்கு அறிந்ததுதான். “தொன்மையான நூல்கள் விதைத்தொகுதிகள். நம் முன்னோர் வாழ்ந்த முழு வாழ்வையும் அவற்றிலிருந்து நாம் மீட்டுக்கொள்ள முடியும் போலும்” என்றார் சுருதன்.

மூத்தவர் ஃபானுவும் உடன்பிறந்தவர்களும் அவருடைய மூங்கில் மாளிகையின் உப்பரிகையில் நின்றிருந்தோம். அங்கே வந்தபின் துவாரகையில் இருந்த பூசல்களும் காழ்ப்புகளும் மறைந்துவிட்டிருந்தன. நான்கு மையங்களாகவே அங்கும் இருந்தனர் என்றாலும் பகைமை இல்லாமலாகிவிட்டிருந்தது. பகைமைகொள்ள எவருக்கும் பொழுது இருக்கவில்லை. கண்டடைதலின், வென்றுசெல்லலின் கொண்டாட்டம் வாழ்கையை நிறைத்திருந்தது.

யாதவ மைந்தர் மூவர் கொல்லப்பட்டிருப்பதையே கூட அனைவரும் மறந்துவிட்டனர். அங்கு வருவதற்கு முன்புவரை இருந்த வாழ்க்கையை பாம்பு சட்டையை உரிப்பதுபோல கழற்றி அப்பால் விட்டுவிட்டிருந்தனர். அதுவும் நன்றே என்று தோன்றியது.

அங்கு வந்தபின் அனைவருமே உடல்நிலை மேம்பட்டிருந்தனர். அங்கிருந்த வெம்மைமிக்க காற்றும் அந்திச்சாரலும் முதல் சில நாட்களுக்குப் பின் பழகிவிட்டிருந்தன. கணிகர் ஒருவருக்கு மட்டுமே உடல்நிலை சீர்கெட்டிருக்கிறது என்றார்கள். அவருக்கு மூச்சிளைப்பும் வெப்பும் இருந்தது. ஆனால் அதை எவரும் பொருட்டெனக் கருதவில்லை. அவர் தேவையற்றவராக ஆகிவிட்டிருந்தார். அவர் இறந்தாலும் நன்றே என்று பொதுவாக அனைவரும் எண்ணினர்.

அங்கே அரசு உருவாகவில்லை. மூத்தவர் ஃபானு முடிசூட்டிக்கொள்ளவில்லை. அரசவை கூடவோ அமைச்சரும் படைத்தலைவரும் வகுக்கப்படவோ இல்லை. சுருதன் வந்த நாள் முதல் அதை சொல்லிக்கொண்டிருந்தார். “அரசு என ஒன்று உருவாகவேண்டும். அதன் பின்னரே நாம் இங்கே வேரூன்றிவிட்டோம் என்று பொருள். முடிகொண்ட அரசனின் ஆணைகளின்படி இங்கே ஒவ்வொன்றும் நிகழவேண்டும்…”

“இன்று என்ன குறைகிறது?” என்று நான் கேட்டேன். “ஒவ்வொருவரும் நலமாகத்தானே இருக்கிறார்கள்?” சுருதன் “ஆம், ஆனால் எக்கணமும் பூசல் தொடங்கும். குற்றங்கள் நிகழும். இங்கே இன்னமும் நிலம் பகுக்கப்படவில்லை. அனைவருக்கும் உரியதாகவே நிலம் உள்ளது. மக்கள் பெருகும்போது நிலம் பெருகுவதில்லை. அதை இன்றே பகுத்தாகவேண்டும்… பூசலுக்குப் பின் பகுக்க இயலாது” என்றார்.

“அத்துடன் இங்கே இன்னும் குலம் பகுக்கப்படவில்லை. அனைவரும் ஆ புரக்கின்றனர். அனைவரும் மண் உழுகின்றனர். அனைவரும் வேட்டையாடவும் மீன்கொள்ளவும் செல்கிறார்கள். இவ்வண்ணம் அது நீடிக்க முடியாது. அதை வகுக்க முனையும்போது ஏற்றதாழ்வு உருவாகும். அங்கும் பூசல்கள் எழும்.”

“இதையெல்லாம் ஏன் செய்யவேண்டும்?” என்று நான் கேட்டேன். “இன்னும் நாம் மக்களிடமிருந்து வரிகொள்ளத் தொடங்கவில்லை. நம் கருவூலத்தையே செலவிட்டு வருகிறோம். இங்கே இப்போதே வணிகம் தொடங்கிவிட்டது. அதற்கு நாம் காப்பு அளிக்கவேண்டும். அதற்கு நமக்கு படை வேண்டும். படைபுரக்க செல்வம் வேண்டும். செல்வத்தின்பொருட்டு நாம் குடிகளைப் பகுத்து நிலத்தை பங்கிட்டாகவேண்டும்.”

“அவ்வண்ணமென்றால் பூசல்களை போக்குவதல்ல அரசின் பணி, உருவாக்குவதுதான் என்கிறீர்கள்” என்றேன். “ஒருவகையில் அது மெய். அரசு தன் குடிகளை ஆளவேண்டும் என்றால் பிரித்தாக வேண்டும். அரசு என்பது களிற்றின் கொம்புபோல” என்றார் சுருதன்.

மூத்தவர் ஃபானு மகிழ்ந்ந்திருந்தார். உரக்க நகைத்தார். எண்ணியிராக் கணத்தில் கையைத் தூக்கி “இளவேனிற்காலக் கொண்டாட்டம் ஒன்று இங்கு நிகழட்டும். நாம் இங்கு நிலைகொண்டுவிட்டோம் என்று தெய்வங்கள் உணரட்டும். தெய்வங்களுக்கான கொடையும் பலியும் களியாட்டும் எழுக!” என்று ஆணையிட்டார்.

தொடர்புடைய பதிவுகள்

கரு, இணைவு- கடிதங்கள்

$
0
0

ஷம்பாலா -ரோரிச்

கரு [குறுநாவல்]- பகுதி 2

கரு [குறுநாவல்]- பகுதி 1

அன்புள்ள ஜெ

கரு நாவல் இன்று மறைந்துபோய்விட்ட ஒரு உலகத்தை அறிமுகம் செய்கிறது. எண்பதுகளில் நான் மதுரை தியோசஃபிக்கல் நூலகத்தில் நிறைய வாசிப்பேன். நான் அப்போது பார்த்த பலநூறு புத்தகங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. அந்தப்புத்தகங்கள் இன்றைக்கு அழிந்திருக்கலாம். அவையெல்லாமே தாந்திரீகம், யோகம், மறைச்சடங்குகள் ஆகியவற்றைச் சார்ந்தவை. அவை இன்றைக்கு பொருத்தமில்லாதவையாகக் கூட இருக்கின்றன. ஆனால் மர்மங்களையும் மறைக்கப்பட்ட ஞானத்தையும் தேடி அலைந்த மனிதர்களால் ஆன ஒரு பெரிய காலகட்டம் இங்கே இருந்திருக்கிறது

John Woodroffe

Sarat Chandra Das

Agehananda Bharati

 

பௌத்த மறைஞானம், இந்திய தாந்த்ரீக ஞானம் ஆகியவற்றில் அனைவருக்குமே ஆர்வம் இருந்திருக்கிறது. காந்திக்கு ஆர்வம் இருந்தது. அம்பேத்கரின் பௌத்தமும் அவருடைய தம்மமும் நூலை வாசிக்கையில் அவருக்கு வஜ்ராயனம் மீது ஆர்வம் இருந்தது தெரிகிறது. அயோத்திதாசர் மறைமுகச் சடங்குகள் பலவற்றைச் செய்திருக்கிறார்.

அந்தக் காலகட்டமே கதையில் முக்தானந்தர் சொல்வதுபோல வசீகரமான மர்மங்களால் ஆனது. வாழ்க்கைமுழுக்க அதை தேடி அலைய முடியும். இந்த யுகம் அந்த மர்மங்களை கடந்துவிட்டது. இது கூகிள் யுகம். அந்த காலகட்டத்தினர் நேர்வாழ்க்கைக்குச் சமானமாகவே கனவிலும் வாழ்ந்தவர்கள்

கரு அதன் மெய்ஞானம் அது சார்ந்த உருவகம் ஆகியவற்றை கடந்து இந்த ஒரு கடந்தகாலத்தின் முழுசான சித்திரத்தையும் அளிக்கிறது. ஆகவேதான் அந்த யுகத்தைச் சேர்ந்த எல்லா பெயரும் எப்படியோ உள்ளே வந்துவிடவேண்டும் என்று கதையில் முயன்றிருக்கிறீர்கள். ஆர்தர் ஆவலோன், சரத்சந்திர தாஸ், அகேகானந்த பாரதி எல்லாருமே அப்படித்தான் உள்ளே வந்திருக்கிறார்கள்

சத்யமூர்த்தி

***

நிக்கோலஸ் ரோரிச்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின் கரு நாவலை இரண்டு மூன்று முறை படித்த பிறகுதான் அதன் வடிவமே ஒரு மாதிரி புரிந்தது. கதையில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு மாதிரியான கரு மனதில் முளைக்கிறது. அது எப்படி அவர்களை திபெத்தை நோக்கி பயணிக்க வைக்கிறது என்பதே முதல் அடுக்கு.

ஆன்னி கிறிஸ்துவுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். திபெத்தில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக அவர் தேவைப்படுவோர் என்று ஆணித்தரமாக நம்புகிறார். அதற்காக உயிரை பணயம் வைத்து மலையில் ஏற சித்தமாக இருக்கிறார். அவருக்குள் கருக் கொண்டிருப்பது முழு அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத நம்பிக்கை.

சூசன்னா தம்பதியினர் மிஷனரிகளில் இருந்தாலும, அவள் பயணிப்பது ஒரு சாகசத்துக்கே. கைக்குழந்தையுடன் மலைப்பயணம் என்பது இந்த நாட்களிலேயே நினைத்துப் பார்க்க இயலாதது. நூறு வருடங்களுக்கு முன்பு ஆபத்தான மலைகளில் குதிரையில் பயணிப்பது என்பது மிகச் சூரத் தனமானது. அவரின் கரு தன்னுடைய எல்லைகளை தானே முன்சென்று கடப்பது. அவரின் கணவர் அதற்கு தூண்டுதலாக இருக்கிறார்.

அடுத்து வருவது ஆடம் மின் ஷம்பாலா நோக்கிய பயணம். அதற்குக் கருவாக இருப்பது அவன் அப்பா டோனாவூர் இல் இருந்து காணாமல் சென்றது. அதிலிருந்து அலைக்கழிப்பு களுடன் உள்ளான். அவனின் பயணம் ஆரம்பிக்கும் பொழுது காலம் என்னும் நதி புரண்டு ஓடி உள்ளது. முன்னோர்களின் உரைகளும்/குறிப்புகளும் ஓரளவுக்கு தான் அவனுக்கு உதவுகின்றன.

ஹெலனா ரோரிச் ஷம்பாலா செல்ல முயன்றது , அறிவதற்காக. தியாசபிகல் சொசைட்டி க்கு உரித்தான ஒரு அறிவுபூர்வமான தன்மை. கலைகளையும் அறிவியலையும் இணைக்கும் பார்வை.

நாவலின் அடுத்த அடுக்கு இவர்கள் எல்லோரையும் இணைக்கும்  புள்ளி. தெரியாதவை களெல்லாம் கொக்கி களாக மாறி மற்றொன்றுடன் கோர்ப்பது என்று ஆடம் சொல்கி றான். இதில் ஆடம் தவிர மற்ற மூவரும் வரலாற்று ஆளுமைகள். அவர்களின் பெயர்கள் காலம் என்னும் நதியில் அடித்துச் செல்லாமல் நிலையாக நிற்க பேறு பெற்றவர்கள்.

நற்றுணை கதையில் அம்மணி தங்கச்சிக்கு துணையாக வந்த யக்ஷி போல், இந்நாவலில் சார்லஸ் என்கின்ற பிரம்மபுத்திரன்  இப் பெண்மணிகள் கிராஸ் ரோட்டில் நிற்கும்பொழுது இவர்களுக்கு வழிகாட்டுகிறான். நால்வரையும் நாலு யுகத்தின் பிரதிநிதிகள் என்றும் எடுத்துக் கொள்ளலாம். அவனைப் பற்றி இன்னும் யோசிப்பது என்பது, சாவித் துவாரத்தின் வழியாக உலகைப் பார்த்து துவாரத்தின் அளவை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிகொண்டே போவதற்கு சமானம். மேஜர் டக்லஸ் வில்லியம் போல, வெறும் பகுத்தறிவு கண்களால் பார்த்தல் ஸ்டரியோஸ்காபிக் விஷன் கிடைக்காதது போல.

நாவலின் அடுத்த தளம் தொடுவது ஷம்பாலா என்றால் என்ன? எப்படி அதை அடைவது. ஒரு சிலருக்கு அது முந்தைய யுகத்தின் எச்சம். சிலருக்கு வினை/மனம் இன்மையின் எச்சம்

ஒவ்வொருவரின் அகப்பயணம் எவ்வாறு முடிவடைகிறது?  முக்தா மற்றும் ஆடம்இன் பேச்சுகளில் ஆடமே வேதாந்தச் சொற்களை உரைக்கிறான். முக்தா கிட்டத்தட்ட திபெத்திய புத்தபிக்கு மாதிரி உள்ளார்.

“நதி ஒரே திசைக்கே செல்கிறது. அதிலிருக்கும் மீன்கள் நான்கு திசைக்கும் செல்வன. மீன்களை பிடிக்கும் பறவைகள் ஐந்தாவது திசையையும் அறிந்தவை. அருகே மரத்தடியில் அமர்ந்து தவம் செய்யும் யோகியின் உள்ளம் ஆறாவது திசையையும் அறிந்தது

இந்த நாவலில் வரக்கூடிய சாத்தியமுள்ள மற்றொரு வரலாற்று பெண்மணி  அலெக்ஸாண்ட்ரா  டேவிட் நீல் என்ற பிரெஞ்சுப் பெண்மணி. அவரும் தியாசபிகல் சொசைட்டி சேர்ந்தவர்தான்.நான் சிக்கிமில் லா சென் சென்றிருந்தபோது இவரைப் பற்றி கேள்விப்பட்டேன். இதுநாள்வரை இவர்தான் திபெத்திற்கு முதலில் சென்ற வெள்ளைக்கார பெண்மணி என்று நினைத்திருந்தேன்

சில திபெத்திய வரலாற்று நிகழ்ச்சிகளையும் + ஆளுமைகளையும், புனைவுகளும் கலந்து spiritual பயணமாக முன்வைக்கும் நாவல். திரும்பத் திரும்பப் படித்து விரித்துக் கொண்டே போக வேண்டியதுதான். முதலில் படிக்கும் பொழுது  நாவலின் முடிவு எவ்வாறாக இருக்கும் என்று யோசித்தேன். உங்களின் நாவல்கள் கண்டிப்பாக விடைகளுடன் முடியாது என்று தெரியும் ஆனால் முத்தா வின் முடிவு மிக அழகான கவித்துவமானது

இந்நாவலில் வரும் சில அறிவுபூர்வமான குறிப்புகள் சுவாரசியமானவை. சுற்றிலும் முற்றாகப் பனி சூழ்ந்திருக்கும் பொழுது ஏற்படும் hallucinations. கண்களில் இருந்து மூளைக்கு செல்லும் போது காட்சி மாற்றும எதுவும் இல்லாததால்

மூளை அதுவாகவே ஏதோ ஒரு ரீல் சுற்ற ஆரம்பிக்கிறது.ஒருமுறை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபொழுது பனிச்சறுக்கு விளையாட்டில் ஏன் வெள்ளையர் அல்லாதவர்களால் விளையாட முடிவதில்லை என்று விவாதித்துக் கொண்டிருந்தோம். பனிச்சறுக்கு gene மற்றவர்களிடம் இல்லை என்று முடித்தோம்.

நீங்கள் இப்பொழுது எழுதும் ஒவ்வொரு கதையிலும் ஒன்று மற்றொன்றை தொட்டுத்தொட்டு தொடங்கி வருகிறது. இந்நாவலின் கரு எங்கிருந்து தொடங்கியிருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன். கூடு(திபெத்திய புத்த மதம்) /நற்றுணை (சாதனை படைக்கும் முதல் பெண்மணிகள்)?

நாவலுக்கு மிக்க நன்றி.

அன்புடன்,

மீனாட்சி

***

இணைவு [சிறுகதை]

போழ்வு [சிறுகதை]     

அன்புள்ள ஜெ

போழ்வு இணைவு ஆகிய இரு கதைகளையும் இருமுறைக்குமேல் வாசித்தேன். அதிலுள்ள சமகால குறிப்புகளை எல்லாம் கணக்கில்கொண்டு வாசித்தேன். அந்தக்காலகட்டம் பற்றிய வரலாற்று நாவல்களோ கதைகளோ தமிழில் மிககுறைவு. அந்தக்காலகட்டம்- பிரிட்டிஷார் இந்தியாவில் காலூன்றிய காலகட்டம்—தான் நம் வரலாற்றில் மிக முக்கியமானது. நம்முடைய இன்றைய சமூக அமைப்பு அரசியல் அமைப்பு ஆகியவை உருவாகி வந்த காலம் அது.

ஆனால் அதுபற்றிய ஒரு வரலாற்று பிரக்ஞையுடன் நுண்ணுணர்வுடன் எழுத இங்கே எவருமில்லை. ஒரு பெரிய வரலாற்று ஆராய்ச்சிப்பார்வை அதற்குத்தேவை வேறு எவர் ஏழுதமுடியும் என்று யோசித்தால் ஒன்றுமே தோன்றவில்லை

இந்த இரு கதைகளிலும் உள்ள இரண்டு விஷயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவை டிஸ்டன்ஸிங் என்ற வழியை கையாள்கின்றன எங்கோ கேரளத்தில் என்றோ நடந்த கதை என்ற அளவில் வரலாற்றை தூரப்படுத்தி அதன்பின் மிக அருகே உள்ள வரலாற்றை குறிப்புணர்த்திப் பேசுகின்றன

இன்னொன்று இந்தக்கதைகளுக்குள் வரலாற்றின் போக்கு பற்றிய மிகவிரிவான அறிவார்ந்த விவாதம் உள்ளது. சேமர்ஸ் பேசுவதும் சரி முந்தைய கதையில் டாக்டர் பெயின்ஸ் பேசுவதும் சரி அப்படித்தான். ஆனால் அது கதை சொல்லவருவது அல்ல. அப்படி சிலர் மேலோட்டமாக வாசிக்கக் கூடும். அது கதையின் ஒரு சரடுதான். இன்னொரு சரடு சொல்லப்படாமல் வருகிறது. சொல்லப்படுவது நவீனப்பார்வை. சொல்லப்படாதது மரபான பார்வை. அவை இரண்டும் இணைந்து ஒரு முரண்பட்டு கடைசியில் முடிவில் ஒரு குறிப்பு அளிக்கப்படுகிறது. அதுதான் உண்மையில் கதையின் மையம்

ஸ்ரீனிவாசன்

***

அன்பு ஜெயமோகன் ,

நலம் என நம்புகிறேன் . தளத்தில் சமீபத்தில் தாங்கள் எழுதி வெளியாகும் பெரும்பாலான கதைகள் மிக்கவாறும் வரலாறு, மரபு வழிச்செய்திகள், மற்றும் நான் ஏற்கெனவே கேரள செய்தித்தாள்கள் வழி வாசித்த  (*ஓநாயின் மூக்கு) உண்மையான தகவல்களை அடிப்படையாய் கொண்டு  மிகச்சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது . தென் திருவிதாகூரில் பிறந்து வாழ்ந்தவன் என்பதாலும், அதன் சமூக வரலாற்று பின்னணியை பெரும்பாலும் அறிந்தவன் என்ற முறையிலும் உணர்ச்சிபூர்வமாகவே மிக நெருக்கமாக உணர்கிறேன்.

‘போழ்வு’ மற்றும்  ‘இணைவு ‘ இரண்டையுமே இலங்கையில்  ஈழப்பின்னணியின் நினைவின்றி வாசிக்க முடியவில்லை. குறிப்பாய் கொல்லம் போர், தொடர்ந்து தளவாய் வேலுத்தம்பியின் முடிவு, அதற்கான காரணங்கள்  மற்றும்  இக்கதை தங்கள் தளத்தில் வெளியான இந்நாள் எல்லாமாய் சேர்ந்து மனதை அமைதியிழக்க வைத்துவிட்டது . டாக்டர் அலெக் பெய்ன்ஸ் மற்றும் கர்னல் சேமர்ஸ் இருவருக்குமான உரையாடல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டது . வரலாற்றிலிருந்து நாம் எதையும் கற்றுக்கொண்டதாகவும் தெரியவில்லை. நன்றி .

மாதவன் பிள்ளை ,

குவைத்.

***

தொடர்புடைய பதிவுகள்

நிழல்காகம், ஓநாயின் மூக்கு- கடிதங்கள்

$
0
0

நிழல்காகம்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

நிழல்காகம் ஒரு ஆன்மிகமான கதையை அறிவார்ந்த விவாதம் வழியாக நவீனக்கதையுலகுடன் இணைக்கும் உங்கள் உத்தியை கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் எழுப்பப்படும் அடிப்படையான கேள்விகள்தான் அந்தக்கதையின் பலமே. கலை என்பது என்ன? அது வாழ்க்கையை நடிக்கிறது. நிழல்நாய் கடிக்காது, ஆனால் அதனுடன் விளையாடலாம். கலையில் உள்ள காமம் பகை எதையும் அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. அது ஒருவகை நடிப்புதான். ஆனால் பொய் அல்ல. அன்பால் நீதியால் அப்படி மாற்றி நடிக்கப்படுகிறது அது. அதைத்தான் கதை சொல்கிறது.

தத்துவ மாணவர்கள் இனிப்பு சாப்பிடலாமா? சாப்பிடலாம், இந்த பூமி முழுக்க நிறைந்திருக்கும் வாழ்க்கையில் இருந்து திரண்ட இனிப்பு அது. அந்த வாழ்க்கையை அவர்கள் பிரம்மத்தின் லீலையாக பார்க்கிறார்கள் என்றால் அந்த இனிப்பு பிரம்மத்தின் இனிப்புதானே? அந்த இனிப்பைத்தான் அசித சாமி அடைகிறார். அவர் முதலில் தன் பாரமரியத்தில் இருந்து கிடைத்த குரோதத்தையே நேருக்குநேர் சந்திக்கிறார் .அதை மீம் செய்து இனிப்பாக ஆக்கிக்கொள்கிறார். விளையாட்டாக ஆக்கிக்கொள்கிறார்

விளையாட்டைப் பற்றிச் சொல்வார்கள், அது போர், வியாபாரம் ஆகியவற்றை விளையாட்டாக ஆக்கிக்கொண்டது என்று சொல்லப்படுவதுண்டு.நார்மன் வின்செண்ட் பீல் அவர்களின் ஒரு விளக்கம் உண்டு. வாழ்க்கையை விளையட்டாக உணருங்கள். ஹென்றிஃபோர்டும்  ஐன்ஸ்டீனும் ஒருநாள் கூட வேலை செய்ததில்லை. அவர்கள் விளையாடினார்கள். பீத்தோவனும் நெப்போலியனும் விளையாடினார்கள். விளையாட்டில்தான் சலிப்பே இல்லை. களைப்பே இல்லை. விளையாட்டாக வாழ்க்கையை ஆக்கிக்கொள்பவர்களே கடந்துசெல்கிறார்கள். அதைத்தான் இந்தக்கதையை பார்த்ததும் நினைத்துக்கொண்டேன்

சாரங்கன்

வணக்கம் ஜெ

 

நிழல்காகம் சிறுகதையை வாசித்தேன். கோவில்களில் இருக்கும் சடங்குகள் முதலாக மனித உணர்வுகள் வரை அனைத்துமே பாவனைகள் என்ற எண்ணம் தோன்றச் செய்யும் கதை. நன்கு பயின்று வெளிப்படுத்தப்படும் கதை உச்சம் தொடுகிறது. மனித உணர்ச்சிகளில் குற்றவுணர்வினைப் போல. அந்தக் குற்றவுணர்வினை நீங்கி காகத்துடனான சிநேக பாவத்தைக் கைகொள்கிறபோது இனிய ஆடலாக ஆகிறது.

 

அரவின் குமார்

பலிக்கல்[சிறுகதை]

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

பலிக்கல், ஓநாயின் மூக்கு போன்ற கதைகளில் பாவபுண்ணியம் பற்றிய ஒரு தேடல் உள்ளது. அடிப்படையான ஒரு கேள்வி அது. உண்மையிலேயே பாவமும் புண்ணியமும் இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கின்றனவா? இல்லை அது வெறும் கற்பனைதானா? கற்பனை என்று சிலசமயம் தோன்றுகிறது. அப்படி அல்ல, அது ஓர் உண்மை என்று வேறுசிலசமயம் தோன்றுகிறது. இந்தக்கதைகளிலும் அந்த மாயம் உள்ளது

ஓநாயின் மூக்கு கதையில் அது வரலாறு மனித மனங்கள் வழியாக கடந்துவந்துகொண்டே இருப்பதுதான் பழிபாவம் என்று சொல்லப்படுகிறது. பலிக்கல் குற்றவுணர்ச்சியை சொல்கிறது. தப்போ சரியோ, இருக்கோ இல்லையோ, நம் வாழ்க்கையை ஆட்டிப்படைக்கும் ஒன்றும் இந்த பாவபுண்ணியமும் குற்றவுணர்ச்சியும்.

யோசித்துப்பார்த்தால் உலகிலுள்ள மிகப்பெரிய இலக்கியப்படைப்புக்களில் பெரும்பகுதி குற்றவுணர்ச்சி பற்றியே எழுதப்பட்டிருக்கின்றன என்று தெரிகிறது. பலிக்கல் அந்த வகையில் ஒரு கதை

 

செல்வக்குமார்

 

ஜெ

 

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை” என்ற குறளை நெடுநாட்களாக உங்கள் மூலம் பின்தொடர்ந்து வருகிறேன். பின் தொடரும் நிழலின் குறல் நாவலே இக்குறளில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அதன்பின் பல்வேறு கட்டுரைகள், சிறுகதைகளில் அந்த குறளின் பல்வேறு பரிணாமங்கள் உங்கள் எழுத்துக்களில் வந்தபடியே இருக்கின்றன. அக்குறளின் சாரத்தை பல்வேறு தளத்தில் விரித்து கொண்டே செல்கிறீர்கள்.அதன் மேல் உங்களுக்கு உள்ள தீர மோகத்தையும் காட்டுகிறது.

இந்த புனைவு களியாட்டு சிறுகதைகளிலும் அதன் தாக்கம் உள்ளது. ஓநாயின் மூக்கு முதல் பலிக்கல் வரை. ஔசேப்பச்சனின் கூறுமுறையும், கதையின் பல்வேறு அடுக்குகள் கலந்த வடிவ ஒருங்கும் , ஒநாயின் மூக்கு கதையை ஒரு உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. “இங்குள்ள நாம் அறியக்கூடிய விதிகளால் ஆட்டுவிக்கப்படுவது அல்ல என்றால் நாம் எப்படி வாழமுடியும்? எதை நம்பி முடிவுகள் எடுக்கமுடியும்? சரித்திரம் பிரம்மாண்டமானது. எண்ணி எண்ணி தொடமுடியாதது. அதிலிருந்து பேய்களும் சாபஙகளும் எழுந்துவந்து என்னை கவ்வும் என்றால் எனக்கு என்னதான் பாதுகாப்பு? ” , இந்த கேள்வியில் இருந்து இன்னும் விடுபட முடியவில்லை. அல்லற்பட்டு ஆற்றா கண்ணீர் காலவெளி கடந்து சுழற்றி தாக்கும்போது, யாரால் தாங்கமுடியும்.

அதன் மறுபகுதியான, இந்திய பெருநிலத்தின் மைய அற விழுமியமாக , ‘தர்மமே வெல்லும்’ என்ற சொற்கள் அர்த்தமற்ற ஒலியாகவே என்னனுள் பலகாலம் இருந்துவந்துள்ளது.  ஆனால் , அவ்விழுமியம் எப்படி இந்திய நிலங்களின் அனைத்து பகுதிகளிலும் பல்லாண்டாக வேரூன்றி வந்துள்ளது என்பதை உங்கள் எழுத்தின் வழி உணர்ந்து வருகிறேன்.  கதைகளை இப்படியெல்லாம் சுருக்க கூடாது என்றாலும், புறத்தில் சுறுக்குவதெல்லாம் அகத்தில் விரிப்பதற்கே. குருவிடமிருந்து வரும் ஆப்த வாக்கியமாக , இப்பொழுது அச்சொல்லை அசைபோடுகிறேன்.

 

கார்த்திக் குமார்

 

தொடர்புடைய பதிவுகள்

கூடு, தேவி- கடிதங்கள்

$
0
0

கூடு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

கூடு கதையின் மிக அழகான பகுதியே லடாக்கின் நிலப்பரப்பை, அங்கே பயணம் செய்வதை விவரித்திருந்த முறைதான். ஒரு பயணக்குறிப்புக்கும் அதற்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. பயணக்குறிப்புகளில் ஒரு வகையான objectiveness உள்ளது. அது வேறு ஒரு அனுபவம். இதிலுள்ளது subjectiveness இது அந்தக்கதைக்குள் ஒரு கதாபாத்திரம் செய்யும் பயணம். ஆகவே அவருடைய மனநிலைக்கு ஏற்ப ஒருவகையான குறியீட்டு அர்த்தமும் உணர்ச்சிகளும் வந்துவிடுகிறது

 

கதையில் அந்தக்கதாபாத்திரம் ஆன்மீகமாக பயனம் செய்கிறது. ஆகவே அந்தத் தேடலின் அர்த்தம் பயணம் சம்பந்தமான குறிப்புகளில் ஊடுருவியிருக்கிறது. பாதையில் சாவுக்கான பொறிகள் இருக்கின்றன. மேலிருந்து விழும் பாறைகள். அருவியாக கொட்டும் கல். ஒவ்வொரு முறையும் புதிதாக உருவாக்கப்படும் பாதை. மாறிக்கொண்டே இருக்கும் பாதை. அது ஆன்மீகமான அர்த்தம் அடைந்துவிடுகிறது.  spiritual journeyயை குறிப்பாலுணர்த்துவதாக அது ஆகிவிடுகிறது.

 

அந்த பயணத்தின் ஒரு பகுதியகா அவர் சென்றடைவதே மடாலயங்கள். அவையும் அத spiritual journeyயின் நடுவே வந்து கடந்து செல்லும்spiritual positions ஆக உள்ளன. ஒவ்வொரு மடாலயமும் ஒவ்வொரு வகை. சின்ன மடாலயத்திற்குள் அமர்ந்திருக்கும் பொன்வடிவ புத்தர் ஒரு கனவுபோல தெரிகிறார்.

 

கூடு கதையே மூன்று அடுக்குகளால் ஆனது. ஒரு பகுதி அந்த லாமாவின் தேடல் மற்றும் மரணத்தின் கதை. இன்னொரு பகுதி அதை தேடிச்ச்சென்று கண்டடைபவர் சொல்லும் அவருடைய தேடலின் கதை, அவருடைய பயணங்களின் கதை. மூன்றாம்பகுதி அவர் அதன்மேல் சொல்லும் கருத்துக்கள். மூன்று பகுதிகளையும் ஒன்றுக்குமேல் ஒன்றாக பொருத்தினால்தான் நாம் இந்தக்கதையை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியும்

 

எஸ்.மகாதேவன்

 

 

வணக்கம் ஜெ

 

கூடு சிறுகதையை வாசித்தேன். இயற்கையுடனான திமிறல் தான் நில்லாத அலைபாய்தலும் நிலையில்லாமையும். ஆனால், உள்ளொடுங்கி கருக்குழவியாகும் தருணம் அந்த மாபெரும் இயற்கையில் நம் மெய்யான இடம் துலங்கி வரும் இடம். கூடு உறைதல், கூடு நீங்குதல், கூட்டில் உள்ளொடுங்குதலான புத்தப்பிட்சுக்களின் வாழ்வு பிரமிக்க வைக்கிறது. நாம் சுழற்றாமலே அறச்சக்கரங்கள் சுழலும், ஒத்திசைவும் நெறியும் தன்னிடத்தே கொண்டது எனும் போது ஏற்படுகிற வெறுமைதான் உள்ளொடுங்கும் நிலை. அந்த முற்றொடுங்குதல்தான் ஏதேனும் வகையில் அவர்ககை இவ்வுலகில் பேருரு கொள்ளச் செய்கிறது.

 

அரவின் குமார்

தேவி [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

தேவி ஒரு பெரிய கொண்டாட்டமான கதை. காதர்பாய் இந்து கோயில் விழாவின் தொடக்கத்திலேயே அல்லாவை நாம் தொழுதால் என்று ஆரம்பிக்கிறார். திருவிழா ஜெமினிகணேசனின் காதல்பாட்டுடன் ஆரம்பமாகிறது. நாடகத்தின் உள்ளடக்கம் நக்சலைட் ஆதரவு. திருவிழா என்பதைவிட அது ஒரு கொண்டாட்டம். ஊரே சேர்ந்து கொண்டாடுகிறது

அந்த நாடகத்தின் எல்லா நகைச்சுவைகளையும் சிரித்து சிரித்து ரசித்தேன். பல்லாலேயே டார்ச் அடிக்கும் உள்ளூர் ரசிகர், அவருக்கும் லாரன்ஸுக்குமான மென்மையான பனிப்போர், அரைக்கட்டை குறைவதனால் அலைக்கழியும் பாய், குன்னக்குடியில் காருக்குறிச்சியை கேட்கும் தாத்தா, மீசை இல்லாவிட்டால் நாடகமே வேண்டாம் என்று குமுறும் போஸ்ட்மேன், ஃபைட்டுக்கு ரெடியாக இருக்கும் ஃபாதர் வேஷம், லாரன்ஸ்க்கு வயிற்றிலிருந்து போகும் கேஸ். அந்த கொண்ட்டாட்டத்தை இயல்பாக சொல்லிச் செல்வதனால்தான் இது மாஸ்டர்பீஸ் கதை

ஜெயக்குமார்

என் அன்பு ஜெ,

 

“தேவி” படித்து முடித்ததும் எனக்குத் தெரிந்த உங்களின் அனைத்து பெண் கதாப்பாத்திரங்களையும் நினைத்துக் கொண்டேன். நீலிமா, நீலி, லலிதாங்கி, எல்லா, கமலம் இப்படி… அதில் இந்த ஸ்ரீதேவியும் இப்பொழுது. பெண்களை நீங்கள் சக்தியின் உச்சமாகக் காண்கிறீர்கள் என்றே தோன்றும் எனக்கு. அவர்களுக்கு ஆண்கள் எவ்வளவு துச்சமானவர்கள் என்பதை ஆழமாக விளக்கியிருப்பீர்கள். சக்தியின் ரூபமாக, யட்சியாக, உடலாலும், உள்ளத்தாலும், திறமையாலும் உச்சத்தில் நீங்கள் தூக்கி நிறுத்துவதில் பெருமை எனக்கு.

அதற்காக அப்படி மட்டும் தான் எழுதுகிறீர்கள் என்றில்லை. பெண்ணின் மனத்தை இத்துனை ஆழமாக தோண்டிப்பார்க்க முடியுமா என பல இடங்களில் வியந்திருக்கிறேன். எப்படி உங்களுக்கு சாத்தியம் என்றெல்லாம் கூட நினைத்தடுண்டு. அத்துனை உணர்வு பூர்வமாக, சமமாக, சில சமயம் ஒரு படி மேலே போய் அவர்களைக் காணிக்கிறீர்கள். அது தவிரவும் அவர்கள் ஆண் சமூகத்தால் படும் அவஸ்தையையும், அவர்களைப் புரிந்து கொள்ளாதது பற்றியும், அவர்கள் நிச வாழ்வில் பெண்களைப் பற்றிய கேவலமான மதிப்பீடு பற்றியும், இன்ன பிற வக்கிற எண்ணங்களையும் எழுதாமல் இருந்ததில்லை. அப்டியான தருணங்களை யாவும் கோர்த்துக் கொண்டே வருகிறேன் ஜெ. அவற்றையெல்லாம் தொகுத்து “ஜெயமோகனின் எழுத்துகளில் பெண்” என்று எழுதுமளவுக்கு கொட்டிவைத்திருக்கிறீர்கள்.

ஏனோ பெண் என்பதால் நானே மிகைப்படுத்திக் கொள்கிறேனா? தெரியவில்லை ஜெ. ஆனால் பெண் பற்றிய சித்தரிப்புகள், பெண்னின் மனதில் ஆண், ஆணின் மனதில் பெண், சமூகத்தில் பெண் இவையாவும் எழுத்துக்களில் இன்றியமையாதது. உங்கள் எழுத்துக்களில் அவற்றை மிகவும் நேசிக்கிறேன். என்னை நானே சில சமயம் கொற்றவையாக, யஷியாக, சக்தியாக உணர்ந்து கொண்டதுண்டு. எழுத எழுத பெண் என்ற ஒற்றை வரிக்குள் தொலைந்துவிட்டாற் போலுணர்வு. இருந்தும், நாடகக் கலையில் நடிப்பின் உச்சமென சொல்லவரும் ஓர் கதையில் பெண் கதாப்பாத்திரத்த அளித்திருப்பது திருப்தியளிக்கிறது.

வில்லிக்கு பெண் சரிவரது என்றெண்ணி அங்கே ஆணை நடிக்க வைப்பார்களோ என்று பயந்த மாத்திரத்தில் ஸ்ரீதெவியே அது நடித்தது எனக்கு ஆறுதல் தந்தது. நீங்கள் சொன்ன சில காட்சிகளிலேயே எனக்கு ஆனந்தக் கண்ணீர் பொங்கியது. ஆனந்தன் செயித்துவிட்டான் என்று அவன் அப்பா நம்பியதாக சொன்னபோது எனக்கு ஸ்ரீதேவியின் நினைப்பு வந்து மேலும் கண்ணீர் கொட்டிவிட்டது. கதையின் உச்சமாக லாரன்ஸ் காலில் விழுகையில் ஓர் ஏக்கப் பெருமூச்சோடு இன்னும் இரண்டு துளிக் கண்ணீர் நிறைவாக வந்து மடிக் கணிணியில் கொட்டியது. அவளை காமக் கண்ணோடு பெரும்பாலான ஆண்கள் நோக்கும் கண்ணோட்டத்தில் கண்ட லாரன்ஸே கண்ணீர் சொரிந்து காலில் விழவைத்தது அவளின் கலை.

இது நாள் வரை கலையின் உச்சத்தை தொட்டவர்கள்(நடிகர்களாக) நாம் சொல்வது சிவாஜி, கமல், எம்.ஆர். இராதா போன்றோரைத் தான். அரிதாக நடிகைகள் (சாவித்ரி). இன்னும் நடிகர்களையே புகழ்ந்து கொண்டிருக்கும் நாடகக் கலையில் ஓர் பெண்ணை நடு நாயகமாக்கி நடிப்பின் உச்சத்தை அவளிடம் காணித்தமைக்கு நன்றி. அன்னையாக, காதலியாக, வில்லியாக ஒரு பெண்ணுக்குள் அத்தனையும் புதைந்து தான் கிடக்கிறது. ஒரு பெண் தன்னை பிறர் என்னவாக பார்க்க வேண்டுமென நினைப்பதை அவளே அரங்கேற்ற முடியும். பேச்சளவில், உடலளவில். லாரன்ஸ் நடிக்கும் முன் தயங்கியதற்கான காரணம் புரிந்தது. ஆனால் கதாப்பாத்திரமாகவே மாறிவிட்ட ஓர் கலை தெய்வத்தின் முன் வேறெதுவுமின்றி அந்த கதாப்பாத்திரத்தை மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது என்பதே ஸ்ரீதேவியின் நடிப்பின் உச்சத்தை புலப்படுத்தியது.

இன்னும் நிறைய சொல்ல இருந்தாலும் ”தேவி” கதை அது மட்டுமல்ல. அந்த மகா நடிகையின் நடிப்பைத் தாண்டி, நாடகக் கலை பற்றியது. நாடகம் யாருக்காக போடுகிறோம் அது சார்ந்த மக்களின் மனங்களுக்கேற்றாற்போல அனந்தன் பெரியவர் சொல் கேட்டு மாற்றிக் கொண்டது என்னவோ போலிருந்தாலும், அது தான் நிதர்சணமான உண்மை. எதற்காக நாடகம் போடுகிறோம்? யாருக்காக? என்ற கேள்விகளைக் கேட்டாலே மாற்றத்திற்கு தயாராவோம். எந்தத் துறையிலும் புதுமையைத் தாண்டி பழமையின் ஆணிவேரையும் மறக்கக்கூடாது என்று காணித்திருந்தது அருமை. அது எனக்கு ஒரு பாடமாக அமைந்தது.

பள்ளியில் பல நாடகங்கள் நடித்திருக்கிறேன். கல்லூரியில் நானே பல விழிப்புணர்வு நாடகமும் போட்டிருக்கிறேன். கைத்தட்டலகளில் மெய்மறந்து அலைந்திருக்கிறேன். நானென்ற அகங்காரமிருந்தது என்னுள். இன்று அந்தக் காலவெளியைத் தவிர, அது சார்ந்த மக்களைத் தவிற எங்கும் அந்த சுவடுகள் இல்லை. நினைவுகளைத் தவிர வேறெங்கும் அதன் சுவடுகள் இல்லை. அனைத்தும் மறைந்துவிட்டார் போல ஓர் உணர்வு. அந்த நினைவடுக்கினின்று மீண்டும் அதைத் தட்டியெழுப்பியது இந்தக் கதை. நாடகம் நடக்குமா என்பது போன்ற கிளைமாக்ஸ் காட்சி போல் வந்து சிறப்பாக முடிந்து சுபம் போட்டு திருப்தியாய் வீட்டுக்குச் செல்ல அனுமதிப்பதான கதை. பாகங்களாக வகுத்து (உங்கள் நாவல் பாணியைப் போல) ஒன்றுக்கும் இன்னொன்றுக்குமான இடைவெளிகளை இட்டு நிறப்ப வாசகர்களுக்கு வாய்ப்பளித்தமைக்கும் நன்றி. அருமை ஜெ. என்றும்

அன்புடன் இரம்யா.

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16732 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>