Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16724 articles
Browse latest View live

அரசன்,சிட்டுக்குருவி- கடிதங்கள்

$
0
0

பித்திசைவு

மூன்று வருகைகள்.

செங்கோலின் கீழ்

என் அன்பு ஜெ,

காலையில் செய்தித்தாளை புரட்டிவிட்ட பின் ஓர் இனம் புரியாத எதிர்மறை சிந்தனைகள் வந்தது…. இதனை விரட்ட ஜெ வின் தளத்திற்கு சென்று வருவோம் என்று தான் திறந்தேன். “செங்கோலின் கீழ்” என்ற தலைப்பு… சரி எதுவானாலும் பரவாயில்ல, மனுசன் எத எழுதுனாலும் நல்லாத்தானே எழுதுவார் என்றே ஆரம்பித்தேன். படித்து முடிக்கையில் வெடித்து சிரித்துவிட்டேன். என் வீட்டிலிருப்பவர்கள், ஏன்டீ அப்படியொரு சிரிப்பு, லூசா என்றார்கள். நான் நினைத்துக் கொண்டேன், சிரித்த என்னையே இப்படிச் சொல்றாங்களே, அந்த பல்லியப்பத்தி எழுதின ஜெவ என்ன சொல்லுவாங்களோனு நினைச்சேன். மேலும் சிரிப்பு வந்தது. ஒன்னுமில்லிடீ ராதா(என் அம்மா) ஜெயமோகன் தளம் என்றவுடன் அவள் புரிந்து கொண்டாள். இவள் சில நேரம் அழறா, சில நேரம் அந்த சுவத்த பாத்துட்டே உக்காந்திருக்கா (கேட்டா சிந்திக்கிறேன்றா), சில நேரம் சிரிக்கா. எப்ப கேட்டாலும் ஜெமோ தளம்னு தான் பதில் வருதுன்னு அலுத்துக் கொண்டாள். நான் புன்முறுவலுடன் பல்லி பற்றிய எண்ணங்களில் மூழ்க ஆரம்பித்தேன் ஆசானே.

அந்தப் பல்லி… என் சென்னை அறையில் இது போன்ற பல்லியை இரண்டரை வருடம் எதிர்கொண்டதுண்டு. பலமுறை விரட்டியிருக்கிறேன். அது ஒரு இன்ச் கூட நகர்ந்த பாடில்லை. இதில் பயமுறுத்தல்கள் வேறு செய்யும்… சரி வேறு வழியில்லை என்று என்னை பழக்கப்படுத்திக் கொண்டேன்… சமையலறையில் நுழையும் முன் ஓர் சத்தம் கொடுப்பேன். வேண்டுமென்றே பாத்திரத்தை வைத்து சத்தமெழுப்பிய பின்னரே எனக்கான சமையலைத் தொடங்குவேன். அதுவும்கூட தன்னை பழக்கப்படுத்திக் கொண்டது. சென்னை அறை தூங்குவதற்கு மட்டுமே பெரும்பாலாக பயன்படுத்தக்கூடியது பலருக்கும். மற்ற சமயங்களில் ஓட்டங்கள் தான். குளிக்கும்முன், சமைக்கும் முன் என் இருத்தலை உணர்த்தினாலொளிய அது எனக்குத் தனிமையைத் தந்ததில்லை. எரிச்சல் படுவேன், பின்பு அதனுடன் பேசுவது, புலம்புவது என்று என் பிரபஞ்சத்தில் சேர்த்துக் கொண்டேன். “என்” என்ற சிந்தனையை நீங்கள் கட்டுடைத்துவிட்டீர்கள். உங்கள் எழுத்தின் மூலம் தான் உணர்ந்தேன் இரண்டரை வருடமாக போனப்போதுன்னு அந்த பல்லிதான் என்னை தங்க அனுமதிச்சிருக்கு தன்னோட இராச்சியத்துலன்னு. எனக்கு செங்கோல் படிச்சு முடிக்கும் போது யுரேகா! மொமண்ட் மாதிரி இருந்தது. வீட்டில் யாரிடமாவது சொல்லலாம்னா என்ன பைத்தியம்பானுங்க. ஏற்கனவே அப்படிதான் சொல்றாங்க அது வேற.

ஆனா ஜெ, தனிமை என்பது இவ்வுலகில் உடலளவில் சாத்தியமில்லையோ என்ற எண்ணம் எழுகிறது என்னுள். சென்னை சென்று 10 வருடங்கள் ஆகியிருந்தது. அதில் தனியறையில் இருந்தது 5 வருடங்கள். தனியறை என்று இனி எவரிடமும் கூறிவிட முடியாது. அங்கு எறும்பு, கரப்பான்பூச்சி, பல்லி, பெயர்தெரியாத பல பூச்சிகளுடன் நானும் இருந்தேன் என்று சொல்லலாம். “தனிமை” என்ற நிலை உடல்சார்ந்து மாயைதான். தன்னைத் தவிர பிற உயிர்களை பொருட்டாக கருதாதவன் கூறுவது. எங்கும் பிற உயிர்களின் இருத்தலை மதிப்பதென்பது உயரிய ஆன்மாவின் குணம். அதைத்தான் உங்களின் இந்த செங்கோலின்கீழ் உணர்த்தியது.

என்றாவது அந்தப் பல்லியின் இராச்சியத்திற்கு வந்தால், அதன் செங்கோலின் கீழ் சதா தட்டி எழுதிக் கொண்டும், சிந்தித்துக் கொண்டும், வாழ்வை முழுமையாக வாழ்ந்து கொண்டுமிருக்கும் ஜெமோவைக் காண வேண்டும். மன்னர் வாழ்க!

அன்புடன்

இரம்யா.

***

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்கள் மூன்று வருகைகள் கட்டுரை படித்ததும் Bob Marley ன் Three little birds என்ற பாடல் நினைவுக்கு வந்தது.ஊரே கரோனா களேபரத்தில் இருக்கும்போது Bob Marley போல நீங்களும் Dont worry be happy ஆக இருக்கிறீர்கள்.கூடிய சீக்கரம் உங்கள் அறையிலும் sweet songs கேட்க வாழ்த்துக்கள்.

வணக்கத்துடன்

ஆனந்த் சுந்தரம்

***

 

Don’t worry about a thing
‘Cause every little thing gonna be alright
Singing’ don’t worry about a thing
‘Cause every little thing gonna be alright

Rise up this mornin’
Smiled with the risin’ sun
Three little birds
Pitch by my doorstep
Singin’ sweet songs
Of melodies pure and true
Saying’, (this is my message to you)

Singing’ don’t worry ’bout a thing
‘Cause every little thing gonna be alright
Singing’ don’t worry (don’t worry) ’bout a thing
‘Cause every little thing gonna be alright

Rise up this mornin’
Smiled with the risin’ sun
Three little birds
Pitch by my doorstep
Singin’ sweet songs
Of melodies pure and true
Sayin’, this is my message to you

சின்னஞ்சிறு வெளி

நாளிரவு

பொற்கொன்றை!

இன்றைய மலர்

வான் அலை

நாற்புறமும் திறத்தல்

வீடுறைவு

தனிமைநாட்கள், தன்னெறிகள்.

கொரோனோவும் இலக்கியமும்

தனிமையின் புனைவுக் களியாட்டு

தொடர்புடைய பதிவுகள்


போழ்வு, சீட்டு- கடிதங்கள்

$
0
0

போழ்வு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

போழ்வு சிறுகதையை ஒரு குறுநாவலாகவே வாசிக்கவேண்டும். அது ஓர் உச்சத்தில் மையம் கொள்கிறது. அது வேலுத்தம்பியின் ஆளுமைப்பிளவு. ஆனால் கதையில் உள்ள சரடுகள் பல. அவர் ராஜா கேசவதாஸின் ஆளுமையில் மயங்கியவர், அவரைப்போலவே ஆக விரும்புபவர். ஆனால் அவர் அவரை தாண்டிச்செல்கிறார். ராஜா கேசவதாஸை கொல்வதுதான் அவர் மருமகனைக் கொல்வது

திருவிதாங்கூர் சுரண்டப்படுவதற்கு எதிராக கிளர்ந்து எழுந்தவர். அவரே திருவிதாங்கூரைச் சுரண்ட ஆரம்பிக்கிறார். மெக்காலேயை பயன்படுத்த நினைத்தவர் மெக்காலேயால் பயன்படுத்தப்படுகிறார். அது இன்னொரு சரடு. அவருடைய உருவாக்கம் முதல் அந்த பிளவுக்கணம் வரையிலான வரலாற்றின் நுட்பங்கள் கதையில் வந்துகொண்டே இருக்கின்றன. இன்றைய பார்வையை கொண்டுவர ஐரோப்பிய கண்களை கொண்டுவந்திருக்கிறீர்கள்

ராஜசேகர்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

போழ்வு கதை ஒரு மாபெரும் வீரனின் வாழ்க்கை சரித்திரத்தை அருகே பார்த்த திருப்தியை அளித்தது.  அரசருக்குரிய உடை அவருக்கு கடைசிவரை பொருந்தவில்லை.  இரு முஸ்லீம் தையல் கலைஞர்களும் அதில் ஏதோ ஒரு குறை இருப்பதாய் மனதிற்குள் உணர்கிறார்கள்.  மாபெரும் வீரர்கள், அப்படி வீரர்கள் ஆனதில் இருந்தே பயந்துகொண்டு தான் இருப்பார்கள் போல. யானைகள் உடலை கிழிக்கும் போது தளவாய் நடுங்கி கொண்டு இருக்கிறார்.

கேரளாவில் தமிழகத்தை ஒப்பு நோக்கும் போது தலைவர்களுக்கான சிலைகள் மிக குறைவு.  வேலுத்தம்பி தளவாயின் கம்பீரமான சிலை திருவனந்தபுரத்தில் தலைமை செயலகத்திற்கு எதிரில் உள்ளது (அந்த இடத்திற்கு பெயரே “STATUE தான்).  தங்களுடைய எல்லா கதைகளுமே கடைசியில் மனித அறத்தையே போதிக்கின்றன.

மிகுந்த வணக்கத்துடன்

பா. சரவணகுமார்
நாகர்கோயில்

***

சீட்டு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

பொதுவாக மனதின் விடுதலையை நோக்கியே சென்றுகொண்டிருந்த கதைகள் இப்போது மறுபக்கத்தையும் பார்க்க ஆரம்பித்திருக்கின்றன. போழ்வு, நஞ்சு போன்றவை அப்படிப்பட்ட கதைகள். சீட்டு அதில் இன்னொரு உச்சம். அற்பத்தனத்தை காட்டும் கதை.

சீட்டு என்ற தலைப்பு இன்னொரு அர்த்தத்தை அளிக்கிறது. ஆளுக்கொரு சீட்டை இறக்குகிறார்கள். ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். இதில் ஆண்குறிதான் அழகப்பனின் சீட்டு. அவன் அதை வைத்துத்தான் அவளை தனக்கு அடிமையாக ஆக்குகிறான். காதலிக்கும்போது அவள் இன்னொருவனிடம் கொஞ்சுவதைக் கண்டு பதற்றம். ஆனால் உறவுக்குப்பின் அவள் மனைவி. இனி அவளைச் சுரண்டலாம். அவர்கள் இரண்டுபேரும் சேர்ந்து பிறரை சுரண்டலாம்

அந்த அம்மா இன்னொரு சீட்டை இறக்கிக்கொண்டே இருக்கிறாள். வீட்டுக்கு வந்து மகனைப் பார்த்ததுமே என்ன நடந்திருக்கிறது என்று அவளுக்கு தெரிவது ஒரு நுட்பமான இடம்

எம்.ராஜேந்திரன்

***

அன்புள்ள ஜெ,

சீட்டு, பெண்-ஆண் உறவுகளின் சமரசங்களை உள்ளடக்கிய கதை. மனிதனுக்கு உணவும், உறக்கமும் நன்றாக கிடைத்த பின் அவன்/அவள் ஏங்குவது இந்த உறவுக்காகத்தான். இச்சிறுகதை  இரு அம்சங்களை மேலே தொட்டு அதன் ஊடே ஒரு பெரிய கலந்துரையாடலை தன்னுள் நிகழ்த்த இட்டுச் செல்கிறது.

உமையாளுக்கும் அழகப்பனுக்கும் இருக்கும் நெருக்கம் பற்றி அலுவலகத்தில் அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் அதை தாங்களே பேசிக்கொள்ளவில்லை என்றாலும், அவர்களுக்கும் அது மனதிலே இருந்தது. கிட்டத்தட்ட இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவது நிச்சயம். இந்த மாத சீட்டுப் பணத்தை உமையாள் எடுக்க வேண்டும் என்று நினைத்தாள். அழகப்பனோ நாராயணன் அதை எடுக்க போவதாக சொன்னான். ஒருவேளை சீட்டு ஏலத்தில், அவர் ரொம்ப கீழே இறங்கி கேட்டால் உமையாளுக்கு நஷ்டம்.

அழகப்பன் தன்னுடைய உயரதிகாரியை சந்தித்துவிட்டு வரும் வழியில் உமையாளும், நாராயணனும் சிறிது பேசிக் கொண்டு இருப்பதைப்  பார்த்து ஒரு விதமான மனச்சோர்வும், ஒவ்வாமையும் அடைகிறான். அது அவனை அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு உலுக்கு உலுக்கியது. அவன் மனம் அந்த காட்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை. உமையாள் அவனைத்தேடி அவன் வீட்டு வந்ததும், அவளுடன் அவன் உடல் ரீதியாக மிகவும் நெருக்கம் அடைந்த பின்னரே அவனால் சற்று நிம்மதி அடைய முடிந்தது.

சீட்டு பணம் தன் அண்ணண் மனைவியின் அப்பாவின் மருத்துவ செலவிற்கு தேவைப்பட்டதால் தான் இந்த மாதமே எடுக்க நினைத்தாள். ஆனால் அவள் அம்மா, தன மருமகளின் சகோதரர்கள் தான்  அவர்கள் அப்பாவுக்கு செலவு செய்ய வேண்டும், நாம் எதற்கு செல்வு செய்யணும் என்று சொன்னனதால், அந்த சீட்டு பணத்தை ராமச்சந்திரன் எடுப்பதாக முடிவாகியது.  அழகப்பனின் குடும்பத்திற்கு வேண்டியப்பட்டவர் ஒருவருக்கு  அவசரமாக பணம் தேவைபட்டதால் அவனின் அம்மா அதை உமையாளிடம் கேட்கச் சொல்லி அவனிடம் சொன்னாள். அவன் அதை உமையாளிடம் கேட்கும் போது, அவள் ராமச்சந்திரனிடம் சொல்லி விட்டதாக சொன்னதரற்கு, அவன் அவளை அவனிடம் ‘நைசாக’ பேசி சீட்டை தனக்கு விட்டுத்தரும்படி சொல்லச் சொன்னான்.

இங்கே இரு நுட்பமான ஆழமான மனித உறவுகளின் சமரசங்களை காண முடிகிறது. அவள் இன்னொருவரிடம் குழைந்து பேசுவதனால் மிகவும் ஒவ்வாமை கொண்ட அவன், இறுதியில் அவனே அவளிடம் அதை செய்யச் சொல்வதற்கான காரணத்தை ஆராய்ந்தால் மனித மனம் எல்லா  தருணங்களிலும் வெவ்வேறு வகையாக செயல்படுவதை காணலாம். அவன் முதலில் மனம் சோர்ந்தது, அவன் அவள் மேல் கொண்ட ஒரு வகை obsession என்றே எனக்கு தோன்றுகிறது. எங்கு அவள் தனக்கு கிடைக்காமலே போய் விடுவாளோ என்ற பயமும், தன்னால் அவளை கவரவே முடியாதோ என்ற அவநம்பிக்கையினாலே அவனால் நிம்மதி கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரும் உடலால் மிகவும் நெருங்கியபின் அவனுக்கு அது ஒரு மிக பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தது. அவன் அவளை அவன் ஆட்கொள்ளும் ஒரு பொருளாகவே அவனால் உணர முடிந்தது.

எல்லா உறவுகளுக்கும் ஒரு சாமரம் இங்கே தேவை படுகிறது. முக்கியமாக ஆண் – பெண் உறவிற்கு. அவள் தனக்கு வேண்டிய காரியத்தை நைசாக சாதித்து கொள்ள நினைப்பதில் எந்த ஒரு குற்றமும் இல்லை என அவளை நினைக்க வைத்தது ஒரு சமூகத்தின் செயலே. அது மட்டும் தான் வழி என்று அவள் நினைப்பதும் ஒரு சமூக அவலச் சித்திரமே. அந்த சமரசத்தோடே நாம் வாழ கற்றுக் கொண்டு விடுகிறோம். நாட்கள் செல்ல செல்ல அது ஒரு சமரசம் இல்லை, அது தான் வாழ்க்கை முறை என்றும் நமக்கு பழகி விடுகிறது.

தன் அப்பாவிற்கு மகன் தான் செலவு செய்யணும், மகள் வீட்டார் செலவு செய்ய கூடாது என்று சொல்லும் ஒரு அம்மா.  தன்  குடும்ப கஷடத்துக்காக மருமகளிடம் பணம் கேட்டு பாரு என்று இன்னொரு அம்மா. இவர்கள் இருவருக்கும் இடையில் தான் இந்த சமூகம் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதை வெறும் குடும்பச் சிக்கலாக இல்லாமல் ஒரு சமூக சிக்கலாகவே எனக்குப் படுகிறது.

சற்றே யோசித்தால், இந்தக் குடும்ப அமைப்பில் தான் நாம் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒரு வேலை இந்த அமைப்பு தான் மனிதன் தானே அமைத்துக் கொண்ட ஒரு உச்ச நிலையான அமைப்பு. இதில் பல்வேறு சிக்கல்கள், இன்னல்கள் இருந்தாலும்  இந்த குடும்ப சமரசத்தில் தான் மனிதன் ஒரு வகையாக நிம்மதியாக வாழ முடிகிறதோ!

அன்புடன்,

பிரவின்

***

தொடர்புடைய பதிவுகள்

நற்றுணை, கூடு- கடிதங்கள்

$
0
0

நற்றுணை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நற்றுணை கதையைப் பற்றி பேசும்போது எனக்கு நினைவுக்கு வந்தது நீங்களே எழுதிய ஒரு கட்டுரை. அதை தேடிக்கண்டடைய முடியவில்லை. அது மணிமேகலை காவியத்தைப் பற்றியது. அதில் மணிமேகலை ஒரு தாசி என்பதனால் உதயகுமாரன் என்பவன் அவளை தூக்கி வரச்சொல்கிறான். அவனே தேடி வருகிறான். அவள் ஒரு பளிங்கு அறைக்குள் செறு ஒளிந்துகொள்கிறாள். அவளை தேடிவரும் உதயகுமாரன் அவளை கண்டுபிடிக்கமுடியாமல் செல்கிறான்

அவள் வெளிவந்து தன் தோழியிடம் அழுகிறாள். நான் இத்தனை தவம் செய்தும்கூட என்னை ஒரு தாசி என்று எண்ணி தூக்கிச்செல்ல வந்துவிட்டானே என்கிறாள். உடனே அங்கே மணிமேகலா என்ற தெய்வம் தோன்றுகிறது அந்தத் தெய்வம் மணிமேகலையை தூக்கி மணிமேகலந்தீவுக்கு கொண்டுசெல்கிறது. அங்கிருந்து அவள் அமுதசுரபியுடன் திரும்பி ஊருக்கு வருகிறாள். ஊருக்கெல்லாம் உணவு போடுகிறாள்

அந்த மணிமேகலா தெய்வம் எங்கிருந்து வந்தது? அது அவள் மனசுக்குள் இருந்தே வந்தது. அது அவளுக்கு ஆற்றலை அளிக்கிறது. அவளை வெற்றிகொள்ள வைக்கிறது. மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு காட்சியளித்த அதே விஷயத்தையே நற்றுணை கதையிலும் எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இந்த தரிசனம் நம் மரபிலே இருந்துகொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது

ஆர். குமார் முருகேசன்

***

அன்புள்ள ஜெயமோகன்,

முதற்கண் நன்றிகலந்த வணக்கங்கள். இதுதான் எனது முதல் கடிதம்.தங்களின் கதைகளை தொடர்ச்சியாக இல்லாவிடினும் ,இயலும்போதெல்லாம் வாசித்து வருபவள் நான். தங்களின் நற்றுணை வசித்து பிரமித்து போனேன்.

ஆம் எனக்கும் இஷ்டதேவதைகள் மீது நம்பிக்கை உண்டு. அயல்நாட்டில் வசித்தபோதிலும் எனது குலதெய்வமான பெண் தெய்வத்தை வணங்குபவள் .அவள்தான் அம்மிணி தங்கச்சிக்கு கேசினி நற்றுணையாக அமைந்தது போல எல்லாவற்றிலும் எனக்கும் துணையாக இருந்து காக்கிறாள், வெற்றி பெற வைக்கிறாள்  என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. நான் வெளி காட்டிக்கொள்வதில்லை.அந்த பெண்தெய்வத்தை எங்கள் வீட்டிற்குள் இருப்பது போலவே நான் உணர்ந்த சமயங்களும் உண்டுஎல்லா காலங்களில் மனசுக்குள்  தோழி போல் அவளோடு பேசிக்கொள்வேன்.

நற்றுணை படித்ததும் எனக்கு மனதுக்கு அணுக்கமான ஒருவராய் அம்மணி தங்கச்சியையும் கேசினியையும் உணர்ந்தேன்.அதனாலே இந்த கடிதம் எழுத விழைந்தேன்.வரலாற்று செய்திகளோடு இறை நம்பிக்கையால் கல்வியை கற்று புது வழியை பெண் தலைமுறைக்கே உருவாக்கிய அம்மிணி தங்கச்சிகள் இன்றைய தலைமுறை பெண்களால் கட்டாயம் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள்.நன்றி அய்யா

இளவரசி இளங்கோவன்

கனடா

***

கூடு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

கூடு கதை வழக்கம்போல meticulas details களுடன் எழுதப்பட்ட கதை. இந்த details எதற்காக என்றால் கதையின் மையமாக இருப்பது ஒரு spritual fanatacy என்பதனால்தான். இத்தனை யதார்த்தமான செய்திகள், நுட்பமான நில வர்ணனைகளுடன் கதையை படிக்கையில் அந்த யதார்த்ததுக்குள் செல்லமுடிகிறது. ஆனால் கதை இயல்பாக கற்பனைக்குள் செல்கிறது. அந்த கடைசி மொனாஸ்ட்ரி மட்டும் கற்பனை என்று உணரவே முடியவில்லை. அந்த அளவுக்கு நம்பகத்தன்மையை உருவாக்கிவிடுகிறது.

பௌத்தம் மீண்டகதை, அதன் பல்வேறு அடுக்குகள், திபெத் பௌத்தம் என்று சென்றுகொண்டே இருக்கும் கதை ஒரு அடிப்படையான தரிசனத்தை முன்வைக்கிறது. நாம் என்பது எவ்வளவு பெரியது.அந்த சின்ன குகையிலிருந்து கிளம்பி அந்த மாபெரும் மடாலயமே ஆகி அந்த மடாலயமும் போதாமல் எழுந்து பிறகு சுருங்கிச்சுருங்கி சிறிதாகி மீண்டும் அங்கேயே செல்லும் அந்த வாழ்க்கை ஒரு மகத்தான புராணம் போல இருக்கிறது

மூன்றுமுறை தன்னை திறந்து வெளிவராதவனுக்கு முக்தி இல்லை என்ற நோர்பு டிரக்பாவின் தரிசனத்தின் காட்சிவடிவம் அந்தக் கதை. அவருடைய பயணமும் இருவகை. எழுந்து பெருகுவது. சுருங்கி திரும்புவது. அதிலிருந்து மீண்டும் எழுந்து விஸ்வரூபம் எடுப்பது.

கூடு என்றால் தமிழில் உடல்தான். உடல் உயிரின் ஒரு உலகவடிவம் என்பார்கள். கூடவே கூடு என்பது உயிர் கூடியிருக்கும் இடம். உயிர் அடைபட்டிருக்கும் இடம். அந்த சின்னஞ்சிறு பையனில் எழுந்தது எவ்வளவு பெரிய ஆற்றல். அவனால் உலகையே வெல்லமுடியும். அவ்வளவுபெரிய ஆற்றலே அந்த மடாலயம். ஆனால் அதை அப்படியே உலகுக்கு விட்டுவிட்டு உடல் ஒடுங்கி மறைகிறது. உள்ளிருந்து ஆற்றல் மட்டும் விஸ்வரூபம் கொள்கிறது.

ஜெயக்குமார்

***

அன்புள்ள கதாசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று பிரம்ம முகூர்த்தத்தில்  “கூடு” கதையை படித்தேன். வாசிப்பு துவங்கும்போது ஊட்டி அருகில்  ஃபேண் ஹில் என நினைத்துக்கொண்டேன்.முக்தானந்தாவின்  28 ஆண்டுகால கதை சொல்லல் நீண்டு தனது அலைச்சல், தேடுதல் தொடர புத்த மத வரலாறே கண்முன்னால் விரிந்தது .

இந்திய பெருநில மண்ணில் கதைக்களம் பரந்து விரிந்து சிம்லா, லடாக்… அடடா… கதை தரும் அனுபூதி என்பது இந்த பதிவிலும் உணர்ந்தேன் .காரணம் உண்டு . இயக்க நடவடிக்கை தொடர்பாக  ஹரியானா சென்றபோது  சண்டிகரிலிருந்து கல்கா சென்று பேருந்தில் சிம்லா கண்டதும் யாக் மீது ஏறியதும் 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட இமய மலையொட்டிய எனது அனுபவத்தை உணர இக்கதை உதவியது. சிம்லாவில் இருந்து காணும் இமயமலை வெள்ளி பரப்பின் மின்னல் கண்களை அதிசயிக்க செய்கிறது.முக்தானந்தாவின்  வெளிப் பயணம் வாசகரின் அகப்பயணமே என அனுபவிக்க செய்கிறது .

என் சக தோழனின் மகன் ராணுவ வீரர் வேலை நிமித்தமாக   லடாக்கிலிருந்து கீழ் நில பரப்புக்கு புறப்பட்டு விட்ட செய்தி கிடைத்து பல நாட்களாகியும் தொடர்பற்ற நிலையில் கதையில் கூறும் மேலிருந்து பொழியும் கல்மழையும்  கற்களால் ஏற்படும் பேரருவியும் காரணமாக கீழே இறங்க முடியாமல் தவித்த தெல்லாம் பின்பு தான் அவர் சொல்லி தெரியும். உடன் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது பின்புதான் இவர்களுக்கும்  தெரிகிறது.

பெயர்கூட தெரியாத அந்த இமய மலை சரிவில் கூட்டம் இரு பிரிவாக மாறியது என ஒரு பிரிவு கருத பெரும் கற்களாலான பேரருவி தான் காரணம் .இதெல்லாம் தெரிவது பல நாட்களுக்குப் பிறகு . (சக தோழரின் கண்ணீர் கண்டபோது மனிதநேயமிக்க அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நாராயணகுரு தங்கிச் சென்ற குடும்பத்தைச் சேர்ந்தவரான டாக்டர் ஏ. சம்பத் அவர்களை அந்த ஆகஸ்ட் 15-ல் சந்தித்து முறையிட்டோம். உடனே டெல்லி சென்று அப்போதைய ராணுவ அமைச்சர் ஏகே ஆண்டனி அவர்களை சந்தித்து கூறியபின் நள்ளிரவு பத்திரிகையாளர்களை அமைச்சர் சந்தித்து தேடுதல் நடத்த ஆணையிட்டது வெளியுலகே தெரிந்தது.)

சில நாட்களுக்குப் பின்பு ராணுவ வீரர் தொலைபேசியில் அழைத்தார். நடந்த ஏதும் அவருக்கு தெரியாது. பனிப்பாறை இடிந்து கீழே இறங்கி வந்ததால் பலர் மாண்டு போனதெல்லாம் பின்னர் தெரிந்தனர். சில நாட்கள் உயிரைப் பாதுகாக்க வழியின்றி எந்த திசைக்கும் செல்லமுடியாது நின்றதை கூறினார். ராணுவ ஹெலிகாப்டர் அவர்களை சண்டிகருக்கு கொண்டு சேர்த்த போது உடன் வந்த பலர் இல்லை என்பது தெரிந்தது.  இமய பாதை எப்படியானது என்றும் இப்பகுதி கற்பனை அல்ல என்றும் உணர்த்திய கதையின் தருணமிது.

கதை நகர்வில் முக்தானந்தா,  டென்சின், ஊர்த்தலைவர் ,போடக், துறவி ரிங்டன்,நோர்பு திரக்பா எல்லாம் வந்து செல்பவர்கள் அல்ல .எப்போதும் நம்மோடு இருக்க போகிறவர்கள். இது தமிழின் வஜ்ர கதை மட்டுமல்ல இந்திய கதை என்றே கூறவேண்டும். எல்லா மொழிகளிலும் கொண்டு செல்ல வேண்டிய அருமையான கதை .ஏன் நாளை உலக மொழிகளில் கூட இக்கதை உலாவரும்…!

–பொன்மனை வல்சகுமார்

***

தொடர்புடைய பதிவுகள்

தேவி [சிறுகதை]

$
0
0

“ஒத்தை ஒரு பொம்புள கேரக்டரா? செரியாவாதே” என்றார் ‘பெட்டி’ காதர். “ஒருநாடகம்னா மினிமம் மூணு பொம்புளை கேரக்டர் வேணும். அதாக்கும் வளமொறை. சும்மா ஆளாளுக்கு தோணின மாதிரி நாடகம்போட்டா நாடகமாயிடுமா?”

“இல்ல நாடகம்தானே?” என்று அனந்தன் சொன்னான்.

“நாடகம்னா? வே, நாடகம்தானேன்னு அம்மைய மகன் பெண்டாள முடியுமா? இல்ல கேக்கேன்”

லாரன்ஸ் சூடாகிவிட்டான். “நாடகத்தைப் பத்திப் பேசும்வே. சும்மா வாயில வந்தத பேசப்பிடாது. பகவதி இருக்கப்பட்ட ஊராக்கும்”

‘பெட்டி’ காதர் சற்று தணிந்தார். “இஞ்சபாருங்க. நான் பதிமூணு வயசிலே நாடகத்திலே வந்தவனாக்கும். இப்பம் நாப்பது வருசமாட்டு இதிலே இருக்கேன். இந்த ஆர்மோனியத்துக்க கட்டைய பாத்தேளா, நம்ம வெரலு பட்டுப்பட்டு தேய்ஞ்சிருக்கு. ஒரிஜினல் பிரிட்டிஷ் ஐட்டம். பாருங்க ரோட்னி ரெய்னால்ட்ஸ் கம்பெனி. இத நான் வாசிக்கவேண்டாம். கைய வச்சாப்போரும். மனசிலே உள்ளது சங்கீதமாட்டு வரும். பட்டுநூலு மாதிரி சுத்தும். தேன் விளுது மாதிரி ஒளுகும். கேட்டுப்பாருங்க, சங்கீதம்னா சும்மா இல்லை”

அவர் லாரன்ஸின் தோளில் கைவைத்து நைச்சியமாக “மக்கா, நீ எனக்க மூத்த மகன் அல்லாப்பிச்சைக்க பிராயமாக்கும் கேட்டுக்க. நாடகத்தைப்பத்தி எனக்கு தெரியும். முன்னே போனவங்க சும்மா சொல்லி வைக்கல்ல. ஒரு ரூலுன்னா ரூலாக்கும். நாடகம்னா மூணு பொம்புளை வேணும்”

“அது ஏன்? அதாக்கும் நான் கேக்குதது” என்றான் அனந்தன்.

“அதாக்கும் இம்பிடுநேரம் சொன்னது, முன்னே போனவனுக சொல்லிவச்சதாக்கும்”.

அனந்தன் எரிச்சலுடன் “முன்னே போனவங்க சொல்லிவச்து போரும்னா பிறகு என்னத்துக்கு புதிசாட்டு எழுதணும்?” என்றான்.

“ஆ… அதாக்கும் நானும் சொல்லுகது. எதுக்கு எளுதணும்? நம்ம போதேஸ்வரனும் திருநயினார்க்குறிச்சி மாதவன்நாயரும் திக்குறிச்சி சுகுமாரன் நாயரும் எளுதாத நாடகமா? இனியிப்ப பச்சை மலயாளம் வேணுமானா சி.வி.ராமன்பிள்ளையும் கைனிக்கரை குமாரபிள்ளையும் எளுதின நாடகங்கள் அந்தால கிடக்கு. தமிளு வேணுமானா புலவர் லச்சுமணபிள்ளைக்க நாடகம் இருக்கு. சதாவதானி செய்குத்தம்பி பாவலர், கோட்டாறு காதர் மைதீன்ன்னு எம்புட்டு நாடகம் கெடக்கு. தாழைக்குடி அழகப்பா பிள்ளைக்க நாடகம்லாம் முத்துமுத்தாட்டு இருக்குமே!”

“அப்ப அதாக்கும் ஏற்பாடு? உமக்கு தெரிஞ்ச நாடகத்தைப் போடலாம்னு பாக்குதீரு. வே, இது நாங்க எளுதின நாடகம். இதை அரங்கேற்றுகதுக்குத்தான் நாங்க நாயா அலைஞ்சு பைசா பிரிச்சு ஸ்டேஜு போடுதோம்….”

“இல்ல, சங்கரதாஸு சாமி நாடகம்லாம்…”

“அப்ப அந்த சங்கரதாஸுகிட்ட பைசா வாங்கிட்டு வாரும்வே”

‘பெட்டி’ காதர் என்ன சொல்ல என்பதுபோல பெருமூச்சுவிட்டு தலையை அசைத்தார்.

பீடியை கடைசியாக உறிஞ்சி வீசிவிட்டு உள்ளே வந்த தபலா வாசிக்கும் ‘சட்டி’ செல்லப்பன் “என்னவாக்கும் சண்டை?” என்றார். “அவருக்க ஆர்மோனியத்திலே ரெண்டு கட்டையிலே சத்தம் வராது. அதனாலே ராகமெல்லாம் கொஞ்சம் சரிஞ்சு ரோடுவிட்டு ஓடை வளியாட்டுத்தான் ஓடும்… மக்காவுக்கு கெளம்பினா மதினாவுக்கு போயிருவாரு… ஆனா நம்ம நாடகத்துக்கு இது போரும்… இருபத்தஞ்சு ரூபாய்க்கு வேற ஆர்மோனியக்காரனை கிட்டாது” என்றார்.

காதர் “நல்லது சொன்னா காது கிட்டாது” என முணுமுணுத்தார்.

“நாடாரே, நீரு சொல்லும். நம்ம பட்ஜெட்டுக்கு மூணு நடிகையை எங்க போயி விளிக்க? அதனாலே ஒத்த ஒரு பொம்புளை இருக்குத மாதிரி நாடகம் எளுதினேன். கதையை சொன்னா சம்மதிக்க மாட்டேங்குதாரு”

“அடுப்புன்னா மூணு கல்லு வைக்கனும். ஒத்தக்கல்லு வச்சா பாத்திரம் நிக்காது” என்றார் ‘பெட்டி’ காதர்.

“நாங்க பேசிட்டிருக்குதது கதாபாத்திரத்தப் பத்தி, வெங்கலப் பாத்திரத்தைப் பத்தி இல்ல”.

காதர் “வே அனந்தன் நாயரே, இந்த பய பேசினான்னா நான் வீட்டுக்குப் போறேன் என்றார் “நீரு ஒரு நஜீபுள்ள நாடகப்புலவராக்கும். அதாக்கும் இம்பிடுநேரம் மரியாதையா பேசிட்டிருக்கேன்”.

அனந்தன் “லாரன்ஸ் நீ சும்மா இரு, நான் பேசுதேன்” என்றான்.

செல்லப்பன் “அவரு சொல்லுகதிலே காரியமுண்டு” என்றார். “அவருக்கு சொல்லத் தெரியல்ல. ஆனா ஒரு நாடகத்துக்கு மினிமம் மூணு பொம்புளை கேரக்டர் வேணும்”.

“முப்பெருந்தேவியர்னு சொல்லுதாகள்லா?” என்றார் ‘பெட்டி’ காதர்.

“லலிதா பத்மினி ராகினிதானே?” என்று லாரன்ஸ் கேட்டான்.

“இந்த ஹராம்பொறந்தான் இருந்தா நான் நாடகத்திலே இல்லை. நான் போறேன்”.

“போவும்வே அட்வான்ஸ் வாங்கின அஞ்சுரூவாயை வச்சுட்டு போவும்”.

அனந்தன் “டேய் நீ சும்மா இரு” என்று அதட்டி  “சொல்லுங்க நாடாரே” என்றான்.

“அதாவது நம்ம நாடகத்திலே பொம்புளைக் கதாபாத்திரத்துக்கு என்ன வயசு?” என்றார்

“மோகனான்னு பேரு. வயசு இருபது. ஹீரோயினாக்கும்… ஹீரோ ஆனந்துக்க காதலி… நாலு பாட்டு உண்டு”

“நாடகம் பாக்கவாற சின்னப்பொண்ணுக அவளை ரெசிப்பாளுக. ஆனா வாறதிலே முக்காலும் வயசுபோன பொம்புளைகளாக்கும். அவளுகளுக்கு இந்த சின்னக்குட்டி சொந்த மகளை மாதிரி. இவ என்ன சொன்னாலும் சம்மதிச்சு தரமாட்டாளுக. என்ன செய்தாலும் தப்புன்னு சொல்லுவாளுக.”

“ஓ!” என்றான் அனந்தன்.

“நாடகம்னா அப்டியாக்கும். அப்ப அந்த பிஞ்சுகிளவிகளுக்கு அவளுகளை மாதிரி ஒரு கதாபாத்திரம் வேணும்லா..”

“கிளவியா?”

“இல்லை. கிளவி இல்லை. எல்லா கிளவிகளும் தங்களைப்பத்தி நடுவயசாட்டுத்தான் நினைச்சுக்கிடுவாளுக. நட்டநடூ வயசிலே ஒரு கதாபாத்திரம் வேணும்…”

“ஆனா ஹீரோயின் இல்லாம…”

“ஹீரோயின் வேணும்… கூடுதலா இவளும் வேணும். அண்ணி இல்லேன்னா அம்மை..”

“ஓ” என்று அனந்தன் சொன்னான்.

லாரன்ஸ் “இவன் ஒரு அம்மை கேரக்டர் எளுதினான்.ஈஸ்வரி அம்மை…. ஈஸ்வரி… பிறவு பொம்புளை நடிகைக்கு எங்க போறதுன்னு அதை மாத்தி சித்தப்பாவாட்டு ஆக்கிப்போட்டான்” என்றான்

“அதை திரும்ப ஈஸ்வரியாட்டு ஆக்கிடுங்க” என்றார் செல்லப்பன். “ஆனா ரெண்டும் இருந்தாலும் பத்தாது. ஒரு சின்னக்குட்டி, ஒரு பொம்புளை ரெண்டும் இருக்கு, செரி.நாடகம் பாக்குத லேடீஸ் ரெண்டுலே ஒண்ணு மேலே ஒட்டிக்கிடுவாளுக. ஆனா அவளுக அம்பிடு பேருக்கும் எதிரியாட்டு ஒரு பொம்புளை இருப்பா. கெட்டவ. வில்லி. அப்டி ஒருத்தி இல்லேன்னா அவளுக இருந்து நாடகம் பாக்க மாட்டாளுக”.

“ஏன்?”

“மக்கா, எல்லாம் நம்ம பொம்புளைகள்லா?, அவளுகளுக்கு ஆம்புளையிலே வில்லனே கெடையாது. குடிகாரனையும் சோம்பேறியையும் எல்லாம் செரி கெடக்கான் நாயின்னு சகிச்சுட்டுப் போறவுகதானே?. நீங்க பாருங்க, புருவத்தை ஒட்டி பெரிய மீசைய வச்சு மரு வச்சு எப்டி வில்லனை காட்டினாலும் செரி, அவன் எம்பிடு எருமையா குரலுவிட்டு கனைச்சாலும் செரி, இந்த நாறச்செறுக்கிக வாயப்பொத்திச் சிரிச்சுகிட்டுதான் இருப்பாளுக… அதுவே பொம்புளை வில்லின்னா மண்ணை வாரி தூத்தி சாபம்போட்டு கண்ணீரு விடுவாளுக. பொம்புளைவில்லி வேணும்… இல்லேன்னா நாடகம் கொளுக்காது. அம்பிடுதான்”.

லாரன்ஸ் “ஏம்லே நம்ம வட்டி ராஜப்பாவை வில்லியா ஆக்கிட்டா என்ன?”

“ஆக்கிருங்க… வேறவளி இல்லை என்றார் செல்லப்பன் “வட்டி ராஜம்மை, அம்புடுதானே. எல்லாம் கணக்குதான்.”

அனந்தன் பெருமூச்சுவிட்டான்.

“அப்ப மூணு நடிகை வேணும்” என்றார் செல்லப்பன் “நாம வேணுமானா அதிலே ஒரு நடிகைக்கு ஆம்புளையை போட்டுக்கிடலாம். வில்லியா ஆம்புளை வந்தா நல்லாருக்கும்”.

“ஆம்புளையா?”

“பொம்புளைகளுக்கு பொம்புளை வில்லி வேணும். ஆனா அவ செரியான பொம்புளையா இருந்தா கொஞ்சம் கனிஞ்சும் போடுவாளுக. குரலும் நெளிவும் வந்திரும் இல்லியா?. என்ன இருந்தாலும் பொம்புளைல்லா? பொம்புளையே வில்லியா வந்தாலும்கூட அவ ஆம்புளைமாதிரித்தான் நடிக்கணும். அப்ப ஆம்புளயே பொம்புளை வில்லியா நடிச்சா எகிறீரும்”

“அதுக்கு நாங்க பொம்புளை வேசம்போடுத ஆம்புளைக்கு எங்க போக?” என்றான் அனந்தன்.

“நமக்கு தெரிஞ்ச ஒருத்தன் இருக்கான். குமரேசன்னு பேரு… நல்லா பஹபஹன்னு சிரிப்பான். பிஎஸ்வி குமரேசன்னு பேரு வச்சிருக்கான்.”

“பொம்புளை வந்து பிஎஸ்வி மாதிரி சிரிச்சா…”

“ரொம்ப நல்லா இருக்கும்… வில்லிதானே? முப்பது ரூபாயும் போக்குவரத்துச் செலவும் போரும், வருவான். நான் கேரண்டி”.

“செரி அப்ப ரெண்டு நடிகை…” என்றான் லாரன்ஸ் “என்ன செலவாகும்?”

“எப்டி போனாலும் ஒரு நாள் நடிப்புக்கு நூத்தம்பதுக்கு குறையமாட்டாளுக”

“அய்யோ முந்நூறா? நாடாரே, எங்க மொத்த கலெக்சனே இருநூத்தம்பதுதான்” என்று அனந்தன் அலறினான்.

“பேசிப்பாப்பம்… கொறைப்பாளுக”

“ரெண்டு வேணுமா?”

“இல்லேன்னா நாடகம் கொளுக்காது. பாதியிலே ஆடியன்ஸ் எந்திரிச்சு போக ஆரம்பிச்சா பிறவு அப்டியே எறங்கீரும்… இந்த நாடக ஆடியன்ஸ் வௌவாலுக் கூட்டம் மாதிரியாக்கும் ஒரு அஞ்சாளு எந்திரிச்சு அந்த சந்தடி வந்தா அம்புட்டுப்பேரும் எந்திரிச்சு சூத்தை தட்டிக்கிட்டு போயிடுவானுக”.

அனந்தன் மறுபடியும் பெருமூச்சுவிட்டான்.

“நான் ஒரு அம்பது ரூபாய்க்கு வளிபாக்குதேன்…. நாடாரே நீரு, நூறுண்ணு குறைச்சு குடுத்தா வச்சு சமாளிச்சுகிடலாம்”

“பாப்பம்”.

“ஒரு விசயம்” என்றார் ‘பெட்டி’ காதர் “இந்த ஈரோவுக்க பேரை மாத்தணும். ஆனந்த் செரியில்ல. குமரேசன்னு வைப்பம்”

“குமரேசனா நடிக்கதுக்காவே நான் எனக்க அம்மைக்க கம்மலை திருடி அடகுவச்சேன்? வெட்டி பொலிபோட்டிருவேன்” என்றான் லாரன்ஸ் “ஸ்டைலாட்டு பேரு இருந்தா நடிக்கேன்… இல்லேன்னா எனக்க பைசாவ திருப்பிக்குடுங்க”.

“இருலே…” என்றன் அனந்தன் “காதர் சாயவு, இது மாடேர்ன் நாடகமாக்கும். குமரேசன்லாம் பளைய பேரு”.

“செரி, ஆனா கதாநாயகி சாகப்போறப்ப நெஞ்சடைச்சு விளிக்குதா. ஆனந்த்த்த்த்னு விளிச்சா நாக்க கடிச்சுகிடுவாள்லா? செரி, வில்லன் எப்டி சத்தம்போடுவான்? ஆனந்த்த்த்த்த்னு சொன்னா வாலு கதவிலே மாட்டின பூனை மாதிரில்லாவே இருக்கும்? இஞ்ச பாருங்க, டேய் குமரேசாஆஆஆஆ!” ஆர்மோனியத்தின் அனைத்துக்கட்டைகளையும் அழுத்தி பின்னணி சேர்த்து “எப்டி இருக்கு பாருங்க”.

“செரி, அதாக்கும் காரியம்னா, ராஜான்னு வைப்போம். டேய் ராஜா!!!!!”

ஆனால் ‘பெட்டி’ காதர் ஆர்மோனியத்தை அழுத்தவில்லை. “அதுக்கு அவன் ராஜா இல்லேல்லா?” என்றார்.

லாரன்ஸ் “செரி அப்ப காஜான்னு வைப்பம்” என்றான்

“இந்த பர்க்கத்துகெட்ட பயகூட நான் நாடகம்போடமாட்டேன்… நான் போறேன். எனக்கு நாடகம் வேற ஆயிரம் கெடக்கு”.

“எடலாக்குடியிலே நீரு எம்ஜியாருல்லா?”

“டேய் சும்மா இருலே.. சொல்லுங்க சாயவே, ராஜான்னா… இப்ப உங்க ரெண்டாம் பையன் பேரு சுல்தான்னுதானே? அவனை பாத்தா ஆளு சுல்தான் மாதிரி இருக்கான், அந்தப்பேரு போட்டீக”.

“ஆமா” என்றார் காதர். மகிழ்ந்து சிரித்து “அவன் இப்ப மோட்டார் மெக்கானிக்குல்லா!” என்றார்.

“அதை மாதிரித்தான், ராஜா!”

காதர் ஆர்மோனியத்தின் மேல் கைவைத்து அரைக்கண் மூடி “ராஜா!”என்றார் மெல்ல அழுத்தினார். “ட்ட்ட்ட்ட்டேய் ர்ர்ர்ர்ர்ராஜாஆஆஆ!!!” ஆர்மோனியம் இரைச்சலிட்டது. “ஒருமாதிரி செரியா வருது!” என்றார்.

“அப்ப நாம கெளம்பி போயி நடிகைகளைப் பாப்பம்”.

“எப்ப?”என்றான் லாரன்ஸ்.

“இப்பமே போவம்… இது திருளா சீசன்லா!” என்றார் சட்டி செல்லப்பன். “நீங்க நேராட்டு அமரவிளை சங்சனுக்கு வந்திருங்க”.

“அமரவிளைக்கு எதுக்கு?”

“வே, ஈரோயின் வேணுமானா அங்கதான் போகணும். அமரவிளை, வட்டவிளை ,அந்தால நெய்யாற்றங்கரை ,பாறசாலை வரை”.

“ஏன்?”

“நமக்கு தமிளு பேசுத நடிகை வேணும். திர்ணவேலி குட்டிகளை கூட்டிட்டு வந்தா இங்க உள்ளவனுக உடங்காட்டுக் கருவாச்சின்னு சொல்லி துப்பீருவானுக, நல்ல மலையாளக் குட்டிக வேணும். ஆனா அவளுக தமிளு பேசிக்கிட மாட்டாளுக. தமிளு பேசுத மலையாளக் குட்டிக இந்த பார்டர் ஏரியாவிலேதான் உண்டு… நான் வளிகாட்டுதேன்…”

 

[2 ]

 

 

அனந்தன் களைத்திருந்தான். “ஒரு சாய குடிப்பம் நாடாரே” என்றான்.

செல்லப்பன் “சாயை நல்லதாக்கும்” என்றார்.

லாரன்ஸ் “பல சாயை குடிச்சாச்சு” என்றான். “போற போக்கைப் பாத்தா சாயைகுடி மட்டும்தான் நடக்கும்போல”.

அவர்கள் டீக்கடைக்குள் ஏறி பெஞ்சில் அமர்ந்தனர். செல்லப்பன் “வடையும் சாயையும் வரட்டு” என்று ஆணையிட்டார்.

“அவன் சொல்லுகது காரியமாக்கும். அமரவிளையிலே காலம்பற எறங்கி இந்நா இப்ப பதினெட்டு எடம் ஏறி எறங்கியாச்சு… செரியாவல்ல. இருநூறுக்கு குறைஞ்சு ஒருத்தியும் வரமாட்டா. நாநூறு ரூபாய் ஹீரோயினுக்கே செலவாயிரும். அதுக்குமேலே அவளுக வார பஸ் செலவு, கூடவாறவனுக்க செலவு, சாப்பாடு மத்தசெலவுகள். ஸ்டேஜுக்க செலவு தனியா கெடக்கு. சவுண்டு சிஸ்டம் லைட்டுக்க செலவு. உமக்கும் சாயவுக்கும் குடுக்கணும். மொத்தம் ஆயிரம் ரூபா இல்லாம நடக்காதுன்னு தோணுது…” என்றான் அனந்தன்.

“கையிலே இருக்கது நாநூற்றைம்பது ரூபாயாக்கும்” என்றான் லாரன்ஸ்.

“இந்த அமரவிளை நீலவேணிக்கு என்ன சீக்கு? நூத்தி இருபது ரூபா வரை பேசியாச்சு. எலி மூஞ்சியையும் வச்சுகிட்டு என்ன பேச்சு பேசுதா?” என்று அனந்தன் சொன்னான்.

லாரன்ஸ் “ஏலே நீதானே பூவங்காலை கோமதிக்கு நூத்தி அம்பது சொன்னே? அவள பாத்தேல்ல? எளவு,  நெஞ்சிலே ரெண்டு பக்கறை தூங்கி கிடக்கு. மூத்தமக வீட்டிலே பிள்ள பெற்று கிடக்கா. ஹீரோயின் மோகனாவா நடிக்கதுக்கு அவளை விளிச்சே நீ… அவ எரநூறுக்கு ஒத்தப்பைசா குறையாதுண்ணு சொல்லிப் போட்டா”.

“செரி விடு”.

“என்னத்த விட? சின்னப்பிள்ளைக நாடகமாக்கும். ஆடியன்ஸ் கூவி விளிச்சு கேலி செய்வானுக. சிலசமயம் கல்லும் மண்ணும் வந்துவிளும்… அதுக்கும் சேத்து பணம் கேக்குதேன்னு சொன்னா பாரு. நீ ஆம்பிளையானா அங்க நாக்க பிடுங்கி செத்திருக்கணும்”.

“இப்ப சாவுதேன்லே, போருமா?”என்றான் அனந்தன். அவனுக்கு தொண்டை அடைத்தது

செல்லப்பன் “எனக்கு ஒரு ஐடியா” என்றார்.

லாரன்ஸ் “சொல்லும்” என்றான்.

செல்லப்பன் “நாம நெய்யாற்றின்கரை ஸ்ரீதேவியை விளிச்சா என்ன?” என்றார்

அனந்தன் “அவ நூற்றைம்பதுக்கு வருவாளா?” என்றான். “அவ பெரிய ஸ்டார்னு சொன்னாங்க”

செல்லப்பன் “இருநூத்தைம்பதுக்கு ஒரு பைசா குறைக்க மாட்டா. ஆனா அவ வாறான்னு சொன்னா நாம கொஞ்சம் பைசா பிரிச்செடுக்கலாம். ஊரிலேயே ஒரு இருநூறு ரூபாய் கண்டிப்பா குடுப்பாங்க. அவ ஹீரோயின். ஒரு அம்பது ரூபாய்க்கு உள்ளூரிலே ஒருத்திய பிடிச்சு கிளவியா போட்டிரலாம். முந்நூறிலே சோலி முடியும்…” என்றார் “கிளவி சளிப்பாக்கினாலும் ஆளுக இவள பாத்து வாயைப்பெளந்து இருந்துகிடுவானுக”.

“நல்ல ஐடியாவாக்கும்” என்றன் லாரன்ஸ்.

“ஆனா…” என்று அனந்தன் தயங்கினான்

“ஆனா ஒண்ணும் ஆனா இல்லை. இப்ப போனா வேலை முடியும். நம்ம டேட்டு திருவிளா டேட்டாக்கும்… போயிட்டுதுன்னா பிறவு பேசி பிரயோசனமில்லை”. என்றார் செல்லப்பா.

லாரன்ஸ் “ஆமா, போய் பார்த்திருவோம்” என்றான்.

“லே, பைசா வேண்டாமாலே?” என்றான் அனந்தன்.

“பைசா வந்திரும்.. நான் செல்லன்பெருவட்டர் கிட்ட பேசுதேன். அவருக்கு முன் சீட்டிலே ஒரு நாக்காலி போட்டா அம்பது ரூபா குடுப்பாரு…”.

“இருநூத்தம்பதுண்ணா”

“லே, இவ எனக்க ஹீரோயினாக்கும்… நான் ஒரு அம்பது ரூவா தாறேன்”

“நீ எங்கலே போவே அம்பதுக்கு?”

“என்னமாம் செய்யுதேன்…”

“உனக்க அம்மை பெட்டியிலே கம்மலு இல்லேன்னு கண்டுபிடிக்குத அண்ணைக்கு உனக்கு பொலியாக்கும்”

“நான் அப்ப மாமன் வீட்டுக்கு போயிருவேன்லா?”

“உனக்க அப்பன் எங்க வீட்டுக்கு வருவாரு. என்னைய பொலிபோட”.

“செரி நீங்க பேசி முடியுங்க” என்றார் செல்லப்பன்.

“பேசுகதுக்கு ஒண்ணுமில்லை… போறோம். அட்வான்ஸு குடுக்கோம்”.என்றான் லாரன்ஸ்.

டீக்கு பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது செல்லப்பன் “குருதை வண்டியிலே போவம்” என்றார்.

“தூரமா?”

“இல்ல, இங்கதான். ஆனா நடந்துபோனா ஒரு இது இல்ல”.

“செரி போவம்” என்றான் லாரன்ஸ்.

“குதிரைவண்டிக்கு என்ன கேப்பான்?” என்றான் அனந்தன்.

“அஞ்சுரூபா கேப்பான்”.

“அஞ்சு ரூபாயா?”

“அஞ்சு ரூபா நான் குடுக்கேன். எனக்க ஹீரோயினுக்க முன்னாலே நான் நடந்துபோயி நிக்கமாட்டேன்” என்றான் லாரன்ஸ்.

“செரி , அப்ப அது உனக்க செலவு” என்றான் அனந்தன்.

குதிரைவண்டிக்காரன் “நாடகம் புக்கிங்கா சார்?”என்றான்.

“ஆமா”.

“நம்ம கிட்ட ஒரு நல்ல குட்டி உண்டு. நல்ல பதினெட்டு வயசு” என்றான் குதிரைவண்டிக்காரன் “நல்லா மததமன்னு கருப்பட்டி நிறத்திலே இருப்பா”.

“தமிளு தெரியுமா?”

“தமிளு…. பேசுவா” என்றான். “இந்த தமிளுண்ணா என்ன? மலையாளத்தை தொண்டையக் காறிப் காறி பேசினா அது தமிளு”.

“தமிளை மூக்கை அடைச்சுகிட்டு பேசினா மலையாளம்… போவும்வே”

ஸ்ரீதேவியின் வீட்டின் முன் குதிரைவண்டி நின்றது. “இதாக்கும் சரஸ்வதிக்க வீடு”.

“சரஸ்வதியா? ஆரு?”

“நாடக நடிகை?”

“நாங்க ஸ்ரீதேவின்னுல்லாவே சொன்னோம்?”

“ஆ, அது நாடகத்துக்கு. வீட்டிலே சரஸ்வதியாக்கும்… பைசா எடுங்க”.

லாரன்ஸ் வண்டிக்குள்ளேயே அமர்ந்திருந்தான். அனந்தன் இறங்கி சட்டையை இழுத்துவிட்டு தலையை நீவிக்கொண்டான்.

செல்லப்பன் “நம்ம பளைய தோஸ்தாக்கும்…” என்றபின் “சிறிதேவீ! சிறிதேவீ!” என்றார். செருப்பை கழற்றிவிட்டு உள்ளே சென்றார்.

அனந்தன் “எறங்குலே” என்றான்.

லாரன்ஸ் இறங்கி “ஏலே எங்கிட்ட பௌடர் இல்ல”

“அதுக்கென்ன?”

“எண்ண வளிஞ்சு கெடக்குலே… அய்யோ என்ன செய்யுகதுன்னே தெரியல்லியே”

“வீட்டு சுவரிலே புதிசாட்டு சுண்ணாம்பு அடிச்சிருக்கு பாரு… கையை நல்லா வச்சு தடவி முகத்திலே வச்சு தேச்சுக்க”

“லே, உள்ளதா சொல்லுதே?” என்றான் லாரன்ஸ் “நீ ஒருமாதிரி ஆளை ஊசியாக்கப்பிடாது”

“உள்ளதுலே…செய்யலாம்”.

அவன் சுவரில் கையை தேய்த்தான். வெள்ளையாக வந்தது. அதை முகத்தில் பூசிக்கொண்டான். “ஏலே எப்டிலே இருக்கு?”.

“நல்லா இருக்குலே”.

“உள்ளதா?”

“ஆமலே நல்லா இருக்கு. பௌடர்போட்ட மாதிரி இருக்கு”.

“அவகிட்ட நான் பீஏ படிச்சிருக்கேன்னு சொல்லுலே”. லாரன்ஸ் சொன்னான்.

“நீயா? நீ எட்டாம்கிளாஸுல்லா?”

“சொல்லுலே சொல்லுலே மக்கா”.

“செரி”.

உள்ளிருந்து ஸ்ரீதேவி ,செல்லப்பன் இருவரும் வந்தனர். ஸ்ரீதேவி சிரித்துக்கொண்டே “வாங்க… உள்ள வாங்க” என்றாள் “நான் ஸ்ரீதேவி… நாடார் சாரு நம்ம பளைய ஃப்ரண்டாக்கும்… உக்காருங்க” என்று ஒயர்கூடை நாற்காலியை காட்டினாள்.

“நான் …இவன்… நாங்க ரெண்டுபேரும்…”என்றான் அனந்தன்.

“நாடகம் எளுதுகது யாரு?”

“நான்… நாடகம்… எளுதி” என்று அனந்தன் சொன்னான். அவனுடைய இடதுகால் தன்னிச்சையாக துடித்துக்கொண்டிருந்தது. குரல் தழுதழுத்தது.

“நான் ஹீரோவாக்கும்” என்றான் லாரன்ஸ்.

“நல்லா தெரியுதே… ஹீரோவுக்கான பர்சனாலிட்டி” என்றாள். “படிச்சிட்டிருக்குதியளா?”

“இல்ல, நான் எட்டாம் கிளாஸ் பாஸ். ரப்பர் கடை வச்சிருக்கேன்”.

“இரியுங்க”.

அவர்கள் அமர்ந்துகொண்டார்கள். “சாயை எடுக்கட்டா?” என்றாள் ஸ்ரீதேவி.

“இப்பம்தான் குடிச்சோம்” என்றார் செல்லப்பன் “ஆனா உனக்கு வேணுமானா ஒரு சாயை எடு”.

“முத்தம்மா” என்றாள் ஸ்ரீதேவி.

உள்ளிருந்து ஒரு கிழவி வந்து எட்டிப்பார்த்தாள். “சாயை” என்றாள் ஸ்ரீதேவி.

கிழவி அவர்களை வெற்றுவிழிகளுடன் பார்த்துவிட்டு போனாள். ஸ்ரீதேவியும் உள்ளே போனாள்.

அனந்தனுக்கு ஏமாற்றமாக இருந்தது ஸ்ரீதேவிக்கு முப்பத்தைந்து வயதுக்குமேல் இருக்கும். முற்றல் முகம். சற்றுக் குள்ளம். கருப்பு நிறம். பல்லும் கொஞ்சம் நீளமானது. ஈறுகள் கருப்பாக இருந்தன. இவளா ஹீரோயின் மோகனா? அவனுக்கு அழுகை வந்து தொண்டை அடைத்தது.

லாரன்ஸ் “நான் வாய் தவறி படிப்பைச் சொல்லிட்டேம்லே” என்றான். அவன் குரல் தழுதழுத்தது.

“வயசு கூடுதலாக்கும்” என்றான் அனந்தன்.

“இவதான் எனக்கு ஹீரோயின்”.

“லே, மோகனான்னா …”

“இவதான் மோகனா… இவ போரும்”. என்றான் லாரன்ஸ்

“லே, சொல்லுறதை கேளு”.

அதற்குள் ஸ்ரீதேவி வந்து அமர்ந்தாள். “வீட்டிலே ஆருமில்லை. எனக்கு ரெண்டு பிள்ளைகளாக்கும். ரெண்டுபேரும் திருவனந்தபுரத்திலே படிக்கானுக…”.

பக்கத்து அறையில் இருமல் ஓசை “ஆருடீ அது? லச்சுமியே ஆருடி அது?”

“டிராமா புக் பண்ண வந்தவங்களாக்கும்… இந்நா வாறேன்” என்றாள் “எனக்க அப்பா. நெய்யாற்றின்கரை ஜயதேவன்னு சொன்னா ஃபேமஸ். நல்லா பாடுவார். இப்ப ஆறு வருஷமாட்டு படுக்கையிலேதான் எல்லாமே”.

“அதாரு லச்சுமி?” என்று அனந்தன் கேட்டான்.

“என் அக்கா… அவ இப்ப இல்ல. நாங்க மூணுபேரு. பார்வதி, லட்சுமி , சரஸ்வதி. மூணுபேரும் டான்ஸ் படிச்சோம். பாடுவோம். குறத்திடான்ஸெல்லாம் ஆடுவோம்… பார்வதி இப்ப திருவனந்தபுரத்திலே இருக்கா… அப்பாவுக்கு மூணுபேரும் எப்பவும் குழம்பிடும்” என்றாள் ஸ்ரீதேவி “என்ன டிராமா?”

“நான் எழுதின நாடகம்… ஆனா ஹீரோயின்—”

லாரன்ஸ் அவன் பேச்சுக்கு ஊடே புகுந்து “நல்ல நாடகம்… அதிலே மோகனான்னு ஹீரோயின்… நீங்கதான் வந்து நடிக்கணும்…நீங்க கண்டிப்பா வரணும்… மாட்டேன்னு சொல்லீரப்பிடாது” என்றான்.

“வாறதுக்கென்ன? நம்ம தொழிலாக்குமே” என்றாள் ஸ்ரீதேவி “எத்தனை நடிகைகங்க?”

“மூணு… ஒருத்தி வில்லி. அதை அங்க ஒருத்தரு நடிக்காரு… நீங்க ஹீரோயினா வந்தா இன்னொரு ஆளை தேடிப்பிடிப்போம்” என்று லாரன்ஸ் சொன்னான்.

அனந்தன் நடுவே பேசமுயன்றான் தொண்டை அடைத்திருந்தது. ஆனால் லாரன்ஸ் உற்சாகமாக பேச ஆரம்பித்தான். “இந்த கதையிலே ஹீரோயினுக்கு அப்டி ஒரு ரோல். சும்மா நடிச்சுகிட்டே இருக்கலாம். டான்ஸ் உண்டு பாட்டு உண்டு. ஜெர்க் சீன்ஸ் உண்டு”.

“அது என்னது?” என்று அவள் புருவம் சுளித்து கேட்டாள்.

அனந்தனிடம் “என்னலே அது?” என்றான் லாரன்ஸ்.

“டியர் ஜெர்க்கிங்… அளுகை சீன்ஸ்” என்றான் அனந்தன்.

“ஓ”என்றாள் “நீங்க என்ன படிக்குதீக?”

அனந்தன் “பிகாம்…”என்றான். குரல் வேறு எவருடையது போலவோ இருந்தது.

“இது பிள்ளைக சேர்ந்து போடுத நாடகம். பெரிய பணமொண்ணும் இல்லை… பாத்து எடுத்து செய்யணும்” என்றார் செல்லப்பன்.

“பணத்தைப்பத்தி பிரச்சினையே இல்லை. நீங்க வந்து நடிக்கணும், அவ்வளவுதான்” என்றான் லாரன்ஸ்.

“நம்ம ரேட்டு தெரியுமே” என்றாள் ஸ்ரீதேவி.

“முந்நூறு, சொல்லிட்டேன்” என்றார் செல்லப்பன் “பின்ன நம்ம பையனுங்களுக்காக அம்பது குறைச்சு…”

“மறுக்கப்பிடாது” என்று லாரன்ஸ் இரு கைகளையும் கூப்பியபடிச் சொன்னான்.

“செரி… ரொம்ப கேக்குதீக” என்றாள். “இன்னொரு நடிகை ஆராக்கும்?”

“அதுக்கு ஒரு ஆளை தேடணும்… உங்களுக்கு இம்பிடு குடுத்தா பிறகு மிச்ச பணம் இருக்காதுல்லா? அம்பதுரூபாய்க்கு வார உள்ளூர் நடிகைய தேடணும்…” என்றான் லாரன்ஸ்.

“அது சரிவருமா?” என்றாள் “அவ எல்லா டைலாக்கும் சொல்லுவாளா?”

“ஆமா அது பிரச்சினைதான்” என்று அனந்தன் சொன்னான். “நடிக்கத் தெரிஞ்சவங்க அம்பது ரூபாய்க்கு வரமாட்டாங்க”

“ஒண்ணு செய்ங்க… அந்த ரோலையும் நானே செய்யுதேன். மொத்தமா சேத்து முந்நூற்றி இருபத்தஞ்சு குடுத்திருங்க”

“அதெப்பிடி?” என்றான் அனந்தன்

“இன்னொரு நடிகை அம்பது ரூபாய்க்கு வந்தாக்கூட பஸ்சு செலவு, கூட வாரவனுக்கான செலவு, சாப்பாட்டுச் செலவு, மிச்ச செலவுன்னு உண்டுல்ல? எளுவத்தஞ்சு ஆயிரும்ல? நான் எப்டியும் வாறேன். அந்த ரோலையும் நடிச்சிருதேன்”.

“ஆனா…” என்றான் அனந்தன்.

“நல்ல நாடகக்காரரு நெனைச்சா செய்யலாம். ரெண்டு கேரக்டரும் சேந்தாப்போல ஸ்டேஜ்லே வராம சீன் எளுதணும். அப்டி வந்தாகணும்னா அந்த எடத்திலே ஒருத்தரை வீட்டுக்கு உள்ள நிக்கிறாப்ல வச்சுடணும்….அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை”

“ஆனால் சத்தம்? ரெண்டுபேரு…”

“ரெண்டுபேருதானே…” ஸ்ரீதேவி நடுவயது பெண்ணின் சத்தத்தில் “எடீ ஸ்ரீதேவி என்னடி செய்யுதே?” என்றாள். “இந்த சத்தம் போருமா, ஒரு அம்மை மாதிரி இருக்குல்ல?”.உடனே அவளே இளம்பெண் குரலில் “இங்கே படிச்சிட்டிருக்கேன்மா…” என்றாள்.இரண்டுமே அவள் குரல் அல்ல.

ஒரே வாயிலிருந்து இரண்டு குரலும் வந்தது என்பதை அனந்தனால் நம்பவே முடியவில்லை.

“போருமா?” என்றாள் ஸ்ரீதேவி.

“போரும் போரும்” என்றான் லாரன்ஸ்.

செல்லப்பன் “அப்ப முந்நூற்றி எழுவத்தஞ்சு… உறைப்பிச்சாச்சு” என்றார்.

“செரி… ” என்றான் லாரன்ஸ்.

“நாங்க… யோசிச்சு” என்று அனந்தன் தயங்கினான்.

அதற்குள் லாரன்ஸ் ஐந்துரூபாய் தாள்களாக ஐம்பது ரூபாய் எண்ணி எடுத்து எழுந்து நின்று நீட்டினான். “வாங்கி அனுக்ரகிக்கணும்”.

ஸ்ரீதேவி எழுந்து நின்று இரு கைகளையும் நீட்டி அதை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

லாரன்ஸ் தழுதழுத்த குரலில் “எனக்க முதல் ஹீரோயினாக்கும்” என்றான்.

ஸ்ரீதேவி புன்னகைத்து “நல்லா வருவீங்க” என்றாள்.

“அப்ப நாங்க எறங்குதோம்” என்று செல்லப்பன் சொன்னார். “டேட்டு குறிச்சுகிடுங்க…”

அவர்கள் வெளியே வந்ததும் அனந்தன் “ஏலே, அவ மூஞ்சி செரியில்லலே” என்றான்.

சட்டையை இழுத்து பின்னால் விட்டு ‘பூ!’ என்று ஊதி இளைப்பாறிய லாரன்ஸ் ”நல்லாத்தான் இருக்கு, ஏன் என்ன குறை அவளுக்கு?” என்றான்

“லே, அது மூஞ்சியாலே… முத்தலு… அரைக்கிளவிலே”.

“அவ போரும்”.

“ஏலே அவளாலே மோகனா? மோகனா காலேஜ் பொண்ணாக்கும்லே”.

“ஏன், இவளும் அப்டித்தான் இருக்கா”.

“இவ வேண்டாம்… நான் சம்மதிக்க மாட்டேன். போயி அட்வான்ஸை வாங்கிட்டு வாங்க”.

“இவதான்… இவ இருந்தா நாடகம் போட்டாப்போரும்”.

அனந்தன் அழுகைவர “லே, வேண்டாம்லே… மூஞ்சியாலே அது?” என்றான்.

“ஏன் உனக்க ஜெயபாரதிக்கு மட்டும் மூஞ்சி தங்கமோ?”

“ஜெயபாரதியச் சொல்லாதே…”

“அவ யாரு உனக்க மச்சினியா? போலே” என்றான் லாரன்ஸ் “அப்டித்தான் சொல்லுவேன்… ஜெயபாரதிக்க மூஞ்சிதான் பண்ணி மாதிரி இருக்கு”.

”டேய்” என்று அனந்தன் லாரன்ஸை அடிக்க பாய்ந்தான். செல்லப்பன் நடுவே புகுந்து இருவரையும் பிடித்து விலக்கினார்.

“லே, அடிச்சு பாருலே… ஆம்புளைன்னா அடிச்சுப்பாருலே”.

“நீ ஜெயபாரதியைப்பத்தி சொல்லிப்பாருலே”.

“லே மக்கா, ஜெயபாரதி இருக்கது மெட்ராஸிலே. நீங்க இங்க கிடந்து அடிச்சுகிட்டா ஆருக்கு லாபம்… சொன்னா கேளுங்க!”

“இவன் ஜெயபாரதியைச் சொல்லுதான்!”

“இங்கபாருங்க , ரெண்டாளுக்கும் வேண்டாம். அவன் ஜெயபாரதியைச் சொல்லமாட்டான். நீரு நெய்யாற்றின்கரை ஸ்ரீதேவியை சொல்லப்பிடாது”.

“செரி” என்றான் அனந்தன்.

“அப்ப வாங்க சமாதானமாட்டுப் போவோம். பிரச்சினை சால்வ் ஆச்சுல்லா?” என்றார் செல்லப்பன் “ஓரோ சாயைகள் குடிப்போம். இங்கிண நல்ல பழம்பொரிகள் உண்டு”

 

[ 3 ]

 

கோளாம்பி ரேடியோவில் சீர்காழி ‘வினாயகனே!’ என்று பாடத் தொடங்கியதுமே மக்கள் வர ஆரம்பித்துவிட்டனர். வயல்வரப்புகளின் வழியாக வந்து இடைவழியில் ஏறி கோயில் முற்றத்தை அடைந்தனர். கோயில் மலர்களாலும் குருத்தோலைகளாலும் சளைப்பனையோலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஸ்டேஜ் மொட்டையாகவே கிடந்தது. அனந்தன் பாய்ந்து ஸ்டேஜின் பின்பக்கம் சென்றான். சாய்த்துக் கட்டப்பட்டிருந்த மேக்கப் அறையில் ‘அணப்பன்’ ராஜமணி ஒரு இரும்பு நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

“மேக்கப்பு போடுத எல்லாருக்கும் ஸ்டூலு போடணும்… இங்க ஒரு நாலஞ்சு மேசையும் வேணும்” என்றான் அனந்தன்

“ஸ்டூலு எதுக்கு?”என்று ராஜாமணி கேட்டான். “சேரு இருக்குல்லா?”

“மேக்கப்பு போடுகதுக்கு ஸ்டூலு வேணும். கண்ணாடியும் மேக்கப்பு சாமான்களும் வைக்க மேசை வேணும்” என்றான் அனந்தன். “ஸ்டூலிலே இருந்தாத்தான் மேக்கப்புகாரங்க சுத்திச்சுத்தி வந்து மேக்கப்பு போடமுடியும்”

“ஸ்டூலுக்கு இப்ப எங்கபோக?”

“நம்ம பயக்கள விளிச்சுக்கிட்டு சுத்தி வீடுகளிலே கேட்டுப்பாருங்க… நான் நாடகத்துக்கு உண்டான வேலைகளை பாக்கணும்” என்று அனந்தன் வெளியே பாய்ந்தான்.

அனந்தனின் உடல் பரபரத்ததில் மனதில் சொற்கள் நிற்கவில்லை. அவன் என்ன செய்கிறான் என்றே தெரியாமல் அங்குமிங்கும் அலைமோதினான். சட்டென்று கால்கள் களைத்து அமர்ந்தான். உடனே உள்ளிருந்து ஸ்பிரிங் அவனை மேலே தூக்கியது.

அருணாச்சலம் அண்ணனின் வீடுநோக்கி ஓடினான். எதிரே லாரன்ஸ் வந்தான். “லே, வந்தாச்சு… வந்தாச்சு” என்றான்.

“ஆரு?”

“ஸ்ரீதேவி வந்தாச்சு”.

“எங்க?”

“வாற வளியிலயே நம்ம நேசப்பன் பெருவட்டரு மடக்கி அவருக்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாரு. அங்க அவரு சாயையும் பலகாரமும் ஏற்பாடாக்கியிருக்காரு. குடிச்சுட்டு வருவாங்க”.

“அப்ப நீயும் கூட போகவேண்டியதுதானே? ஏன் இங்க வந்து நொட்டுதே?”

“லே, எனக்கு வயத்த கலக்குதுலே”.

“போகவேண்டியதுதானே?”

“நாலஞ்சு மட்டம் போயாச்சு… போயி குத்தி இருந்தா ஒண்ணுமே வரல்ல”.

அனந்தன் “போலே நாயே, அதை எங்கிட்ட வந்து ஏன் சொல்லுதே?” என்று சொல்லிவிட்டு ஓடி முன்னால் சென்று எங்கே சென்றுகொண்டிருந்தோம் என்பது நினைவுக்கு வராமல் திகைத்து நின்றான்.

மாதேவன் பாட்டா அவனை கைகாட்டி அழைத்தார். அவன் அருகே சென்றதும் வெற்றிலையை துப்பிவிட்டு மிக மிக நிதானமாக, “லே, காருக்குறிச்சி நாதசரம் வேணும் கேட்டியா? தீவாரதனை நேரத்திலே அந்த பிளேட்ட போடணும். நீ சவுண்டுகாரன்கிட்ட சொல்லீரு” என்றார்.

“சொல்லுதேன்” என்றான். அவர் மேற்கொண்டு பேசுவதற்குள் கோயிலுக்குள் நுழைந்து அப்பால் வந்தான். கருவறைக்குள் கிருஷ்ணனுக்கு சந்தன முழுக்காப்பு சாத்தப்பட்டிருந்தது. கண்கள் மட்டும் கருமையாக தெரிந்தன. போற்றி உள்ளே ஏதோ செய்துகொண்டிருந்தார்.

முகமண்டபத்தில் புஷ்பாஞ்சலிக்கு தாமரை மலர்கள் குவிக்கப்பட்டிருந்தன. மடைப்பள்ளியில் சர்க்கரைப் பாயசத்தின் மணம் எழுந்தது. அச்சுதன் மாராரும் சந்திரன் மாராரும் தொப்பைகளுடனும் செண்டைகளுடனும் அமர்ந்திருந்தனர். மேளக்காரர் இருவர் அரைத்தூக்கத்தில் சுவரோடு சாய்ந்திருந்தனர்.

அவன் நினைத்துக்கொண்டு அருணாச்சலம் அண்ணனின் வீட்டுக்கு ஓடினான். அருணாச்சலம் அண்ணன் வைக்கோர் போர் அருகே நின்றிருந்தார். அவர் வைக்கோலை பிடுங்க எருமையும் கூடவே வைக்கோலை இழுத்து தின்றது.

“என்னலே?” என்றார் அருணாச்சலம் அண்ணன்

“நாடகத்துக்குண்டான பாத்திரம் பண்டம் எல்லாம் இங்க வடக்கே ரூமிலே வைச்சிருந்தேன். ஸ்டேஜுக்கு வேணும்ங்கிற நேரத்திலே கருணாகரனை அனுப்புதேன்… அவன் கிட்ட குடுத்தனுப்புங்க”

“எல்லாம் செரி, அதிலே ஒரு சாமான் குறைஞ்சா நீ பைசா தருவே”.

“செரிண்ணா”.

லாரன்ஸ் அவனை நோக்கி ஓடிவந்தான். “லே, சங்கதி சக்ஸஸ். படிப்புரை நாராயணன் தம்பி அம்பதுரூபா தந்தாச்சு… இனி ஒரு பிரச்சினையும் இல்லை… மிச்சம்கூட வரும்…”.

“அவரு என்ன சொன்னாரு?”

“நாளைக்கு அவருக்க வீட்டிலே ஸ்ரீதேவிக்கு ஒரு சாயை குடுப்பாரு”.

“சாயை குடிச்சே செத்திருவா போல இருக்கே”.

“இங்கபாரு நான் ஜெயபாரதியை பத்தி என்னமாம் சொன்னேனா? பின்ன எதுக்கு நீ ஸ்ரீதேவியப்பத்தி சொல்லுதே?” என்றான் லாரன்ஸ்

“ஜெயபாரதியாலே இங்க வந்து நாடகம் ஆடுதா?” அனந்தன் கேட்டான்.

“ஆமா பெரிய நாடகம்… லே எனக்கு இந்த நாடகம் அவ்ளவு பிடிக்கல்ல கேட்டியா? ஃபைட்டு வேணும்”.

”ஒரு பைட்டு இருக்குல்லா?”

“அது வெறும் பிடியில்லா? இன்னொரு நல்ல அடி வேணும் ஏந்திச் சவிட்டி அடிக்கணும்”

“நீ நடிக்குத லெச்சண மயிருக்கு ஊருகாரனுக தருவானுக அடி”.

’கொட்டோடி’ அப்பு தொலைவிலிருந்து சைக்கிளில் வந்து சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு ஓடிவந்து “லே அனந்தா சதிச்சுப்போட்டான்லே… தாயோளி கொட்டையை களவாண்டுட்டு போயிட்டான்லே” என்றான்.

“ஆரு?”

“சுவருமுட்டி குமரேசன்… லே, பிஎஸ்வி குமரேசன்… அவன் எஸ்கேப்பு”

“என்னலே சொல்லுதே? ரிகர்சலுக்கு வந்தானே? இருபது ரூவா பணமும் வாங்கிட்டுல்லா போனான்”.

“சிரட்டைமுலை வச்சுகெட்டு பொம்புளைவேசம் போட அவனால முடியாதாம். கடைக்காரன் உண்டை நாராயணன்கிட்ட சொல்லிட்டு நாகருகோயிலுக்கு போயிட்டான்” என்றான் கொட்டோடி அப்பு.

“எரப்பாளி நாயி. பின்ன எதுக்குலே பைசா வாங்கினான்?”

“அது செலவுக்கு வாங்கினது, பிறவு திருப்பி தந்திருவானாம்”.

அனந்தன் அப்படியே குத்துகல்லில் அமர்ந்துவிட்டான். கால்கள் நடுங்கின. வயிற்றில் தசைகள் இறுகியிருந்தன. சட்டென்று வியர்த்து தளர்ந்தான்.

“இப்ப என்னலே செய்ய?”

“அந்த ரோலை மறுக்கா ரவுடி ராஜப்பனா ஆக்கினா என்னலே?” என்றான் லாரன்ஸ்.

“ஆருலே நடிக்க? அது பெரிய கேரக்டர்லா?”

“என்ன செய்ய?”

அனந்தன் சட்டென்று உடைந்து “போயி சாவுதேன், எங்கிணயாம் போயி சாவுதேன்” என்று கூவி அழுதான்.

“லே, லே, நாலுபேரு பாக்குத எடம்லே” என்றான் லாரன்ஸ்.

“அதுக்கு நீ என்னத்துக்குலே அளுவுதே? இந்தமாதிரி ஒருத்தன் வரேல்ல, மிச்சபேரு நடிக்குதத பாருங்கன்னு சொல்லிட்டு நாடகத்தபோட்டா என்ன?” என்றான் கொட்டோடி அப்பு.

வலத்தோளில் ஆர்மோனியத்துடன், கணுக்காலுக்குமேல் வலச்சுற்று வேட்டியுடன், ‘பெட்டி’ காதர் ஒருக்களித்து நடந்து வந்தார். “ஏலே தம்பி ,நான் எத்தனை கட்டையிலே எடுக்கணும்?”

“கட்டை…” என்ற லாரன்ஸ் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.

“ஒத்தை கட்டைபோரும்” என்றான் கொட்டோடி.

“ஒத்தக்கட்டையா? என்ன சொல்லுதீக?”

“சாயிப்பே, நாங்க இங்க தீய தின்னுட்டு நிக்குதோம்…”.

“தீயா, எதுக்கு?”

“டீ கிட்டல்ல… போவும் வே” என்றான் லாரன்ஸ்.

“இந்த ஹராம்பொறப்பு கூடவே இருந்தா ஒரு மயிரும் நடக்காது” என்றார் ‘பெட்டி’ காதர்.

“நீரு போயி எல்லாம் செரியாக்கும்… நாங்க வாறோம்“ என்றான் அனந்தன்

“நான் ஒரு நல்ல சாயா குடிச்சுட்டு ரெடியா இருக்கேன்… நாடகம் ஒம்பது மணிக்குல்லா?“ என்றார் காதர்

அனந்தன் அவருக்கு இரண்டு ரூபாய் கொடுத்தான். அவர் வாங்கிக்கொண்டு நடந்து சென்றார்.

அந்தி மயங்கிக்கொண்டிருந்தது. கோயிலில் தீபாராதனை கும்பிடுவதற்கான கூட்டம் வந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் நடுவயதான பெண்கள்.

கைதமுக்கு நாராயணி அம்மச்சி “அனந்தா, டே, உனக்க நாடகம் எப்படே?” என்றாள்.

“ஒம்பது மணிக்கு” என்றான் அனந்தன்

“நான் வாறேன் என்னா?” என்றாள் அம்மச்சி “நீ நடிக்குதியாலே?”

“இல்ல”.

“உனக்க நாடகம்னு சொன்னாக?”

“நான் எளுதின நாடகமாக்கும்”

“அய்யே, நாடகத்தை நடிக்கமாட்டியா? எளுதியா காட்டுவே?”

“இல்ல அம்மச்சி, நடிக்குத நாடகம்தான்”.

“பின்ன எதுக்குடே எளுதுகே?”

“தெரியாம எளுதியாச்சு, இனிமே எளுத மாட்டேன்” என்று அனந்தன் கையெடுத்து கும்பிட்டான்.

அவள் “நல்லா எளுதினே போ… மரியாதைக்கு எளுதி பரிச்சை பாஸாகுடே” என்றாள். அவளுடன் சென்ற கிழவிகள் ஏதோ சொல்ல அனைவரும் சிரித்தனர்.

“ஒம்பது மணிக்கு நீ என்னலே நொட்டுவே?” என்றான் லாரன்ஸ்.

“எனக்கு ஒண்ணும் தெரியல்ல” என்றான் அனந்தன். ‘சாவுதேன், நான் சாவுதேன்”

மைக்செட் மோகனன் ஓடிவந்தான். “அண்ணா ,அங்க மாதேவன் பாட்டா காருக்குறிச்சி கேக்காரு.. நம்ம கிட்ட ஸ்டாக்கு இல்லை பாத்துக்க”.

“பின்ன என்னலே இருக்கு?” என்றான் லாரன்ஸ் “நாதசரம் ஏதாவது போடு. அவரு எங்க காருக்குறிச்சிய கண்டாரு?”.

“அண்ணா, நாதசரம் இல்லியே”.

“கோயிலுக்கு வந்தா நாதசரம் கொண்டுவரமாட்டியா?” என்றான் லாரன்ஸ்.

“அண்ணா எடுத்து வச்சேன்… சேக்கு சின்னமௌலானா சாயவு… அதை மறந்துட்டேன்”.

“என்னலே செய்ய?” என்றான் லாரன்ஸ் “நாம அண்டியை காணல்லன்னு நின்னா இவன் வந்து அடைப்ப காணல்லண்ணு சொல்லுதான்”.

அனந்தன் “உம்மகிட்ட குன்னக்குடி இருக்காவே?”

“இருக்கு… ஒரு சோலோ…”

“தவுலு வலையப்பட்டிதானே?”

“தவுலுன்னா டும்டும் கொட்டுதானே?”

“வெளங்கீரும்… போ, அதைப்போடு… பாட்டா கேட்டா அதாக்கும் காருக்குறிச்சீண்ணு சொல்லு… போ”.

தொலைவில் ஒரு வண்ணக்கூட்டம் வருவது தெரிந்தது. நடுவே ஒரு குடை.

“அதாருலே அந்திக்கு குடைபிடிக்கான்?”

அருகே வந்தபோது தெரிந்தது அது நேசப்பன் பெருவட்டர். அவர் ஸ்ரீதேவிக்கு குடையை பிடித்திருந்தார். தொலைவிலேயே அவருடைய பற்கள் ஒளியுடன் தெரிந்தன.

“எளவு, அந்த ஆளு பல்லாலே டார்ச் அடிக்கானே”.

சட்டி செல்லப்பன் ஸ்ரீதேவிக்குப் பின்னால் நடந்து வந்தார். அவருடைய தோளில் தொங்கிய துணிப்பையில் தபலாக்கள் இருந்தன.

அருகே வந்ததும் செல்லப்பன் முன்னால் வந்து “டீ குடிச்சாச்சு. அப்டியே ஒருக்கா டைலாக்க இருந்து வாசிச்சுட்டோம்னா நேரா ஸ்டேஜுலே ஏறிடலாம்”

“ரிகர்சல் வேண்டாமா?” என்றான் அனந்தன்.

“வாசிச்சாப்போரும்” என்றாள் ஸ்ரீதேவி

“போரும் போரும், வாசிச்சாப்போரும், வாசிச்சாப்போரும்” என்றார் நேசப்பன் பெருவட்டர்.

“என்ன வாசிக்க?”என்று லாரன்ஸ் அவரிடம் கேட்டான்.

அவர் திரும்பி அவனை முறைத்தார்.

”இங்க பின்னாடி எடமிருக்கு… கோயிலுக்க கெட்டிடமாக்கும்” என்று லாரன்ஸ் சொன்னான்.

“நம்ம வீட்டிலயே எடமிருக்கே… அங்கிண எல்லாத்தையும் வச்சிருக்கலாம்” என்றார் நேசப்பன் பெருவட்டர்

“அடுத்த வருசம் அங்க வச்சுகிடலாம்” என்றான் லாரன்ஸ். “அப்ப உம்ம கெட்டினவ பெத்திருவாள்லா?”

நேசப்பன் பெருவட்டர் அவனை முறைத்து பார்த்தார். ஒன்றும் பேசாமல் திரும்பிக்கொண்டார்.

கோயிலின் பின்னாலிருந்த தேவஸ்வம் கட்டிடத்தை அவர்கள் அடைந்தபோது குன்னக்குடி வயலினும் தவுலும் ஒலித்தது. கூடவே கோயிலின் மணியோசை. தீபாராதனை நடக்கிறது. ஸ்ரீதேவி செருப்பை கழற்றிவிட்டு நின்று கண்மூடி கைகூப்பி கும்பிட்டாள்.

நேசப்பன் பெருவட்டர் குடையை தாழ்த்தி தானும் கும்பிட்டர்.

தேவஸ்வம் கட்டிடத்தில் பில்கலெக்டர் மணி, பஞ்சாயத்து பியூன் கணேசன், ஞானப்பன், தேவசகாயம், வெற்றிலைக்கடை குமரேசன், பம்ப் குணமணி, ஈஸ்வரன் நாயர், சண்முகம், எண்ணைச்செட்டி முருகனடி, சுப்பையாச் செட்டியார் ஆகியோர் இருந்தனர். எல்லாரும் அவரவர் வசனத்தாள்களை கையில் வைத்திருந்தனர்.

ஸ்ரீதேவி செருப்பை கழற்றிவிட்டு உள்ளே சென்றாள். அனைவரும் அவளைக் கண்டு எழுந்து நின்றனர்.

நேசப்பன் பெருவட்டர் “சேச்சே என்ன எடம் இது… ஒரே தூசியாட்டுல்லா இருக்கு?” என்றார்.

“தூசி நாடகத்துக்கு நல்லதாக்கும்” என்றான் லாரன்ஸ் “அதனாலே நாங்க கொண்டுவந்து விரிச்சு போட்டிருக்கோம்”.

நேசப்பன் பெருவட்டர் மீண்டும் அவனை முறைத்துப் பார்த்தார். இருவரும் சீற்றத்துடன் பார்த்துக்கொண்டார்கள்.

“வசனம் ஒருக்கா பாப்பமா? நேரமில்லை… எட்டரைக்கெல்லாம் மேக்கப்பு போடணும்” என்றாள் ஸ்ரீதேவி

“அக்கா” என்று அனந்தன் உடைந்த குரலில் அழைத்தான். “நாடகத்த இண்ணைக்கு நடத்த முடியாது… அந்த பிஎஸ்வி குமரேசன் ஏமாத்திப்போட்டான். பைசாவோட ஓடிப்போயிட்டான்” என்றான்.

“அய்யோ”

“பெரிய ரோலாக்கும்… வேற ஆரும் அதை செய்யமுடியாது… ” அவன் அழுதுகொண்டே “நான் சாவுதேன்… சாவுதேன்” என்றான்.

“ஏ என்ன பேச்சு பேசுதே நீ? சாவுததா, இதுக்கா? அந்த நாடகப் பேப்பரை குடு” அவள் அதை வாங்கினாள். ஸ்டீல் நாற்காலியில் அமர்ந்தாள்.

அதை வேகமாக புரட்டிப் பார்த்தாள்.

“இந்த ரோலையும் நானே செய்யுதேன், அம்பிடுதானே?”

“அய்யோ… மூணுரோலா?”

“என்ன, மூணுபேரும் சேந்து ஸ்டேஜ்லே வரமுடியாது… அதுக்கு சீனிலே என்ன மாற்றம் செய்யுததுன்னு பாப்பம்… சின்னச்சின்ன மாற்றம் போரும்… பாதிய வசனத்தை வச்சு செரியாக்கிக்கிடலாம்”

“செரியாக்கிப் போடலாம், செரியாக்கிப் போடலாம்… பின்னே?” என்றார் நேசப்பன் பெருவட்டர்.

 “நீரு ஆசாரிச்சியை செரியாக்கினீருல்லா?”என்றான் லாரன்ஸ்

பெருவட்டர் அவனை முறைத்தார்

“அக்கா அது போருமா?” என்று அனந்தன் கண்ணீர் வழிந்த கன்னங்களுடன் கேட்டான்.

“டேய் நாடகம் எங்க நடக்குது? பாத்திட்டிருக்கிறவன் மனசிலே… நீ சும்மா நின்னு பயந்து அலறினா உனக்க முன்னாலே அவன் பேயைப் பாத்திருவான்… அவனை கற்பனைசெய்ய வச்சாப்போரும்… நான் பாத்துக்கிடுதேன்… நீ உக்காரு. என்ன செய்யணும்னு சொல்லுதேன்”.

அனந்தன் “செரியா வருமா அக்கா?” என்றான்.

“வரவளைச்சிடலாம்… மேக்கப்பு ஆளை வரச்சொல்லணும்… நான் ஒர் நிமிசத்திலே வேசம் மாத்திட்டு வாறமாதிரி வில்லி வேசத்தை போடணும்” என்றாள் ஸ்ரீதேவி “மேக்கப்பு ஆரு?”

“வடிவு ஏஜென்ஸீஸ்… செட்டு, மேக்கப்பு, லைட்டு எல்லாம் அவங்களாக்கும். அடங்கலாட்டு இருநூறுரூபா” என்றான் லாரன்ஸ் “நானாக்கும் பைசா குடுத்தேன்”

“அப்ப அச்சு அண்ணனாக்கும் மேக்கப்பு… கூட்டிட்டு வாருங்க”

“நான் விளிச்சுட்டு வாறேன்” என்று மணி வெளியே ஓடினான்.

ஆர்மோனியத்துடன்  ‘பெட்டி’ காதர் எட்டிப்பார்த்து “இப்பமே முடிவா சொல்லிப்போடுங்க, பிறவு பிரச்சினை ஆயிரப்பிடாது… எட்டு கட்டைன்னா, அதுக்கொரு லிமிட் உண்டும்” என்றார் ‘மேலே போறப்ப விரியாது பாத்துங்கிடுங்க”.

“முதல்ல உம்ம ஆர்மோனியத்திலே எல்லா கட்டையும் இருக்கான்னு பாரும்வே” என்றார் செல்லப்பன்.

“என்னையச் சொல்லு, எனக்க ஆர்மோனியத்தை சொன்னா…” என்று பெட்டி சாயபு கூவினார்  “இது என்ன சாதனம்னு தெரியுமா வே? ரோட்னி ரெய்னால்ட்ஸ்.. ஒரிஜீனல்!”

ஸ்ரீதேவி “ஆமா,பிரிட்டிஷ் ஆர்மோனியம்லா?”என்றாள். “பாய் அண்ணா, நல்லா இருக்கேளா?”

“தங்கச்சி… நீயா… எப்பம் வந்தே? நான் பாக்கல்ல..”.

“சாயை குடிச்சேளா?”

“ஆச்சு”.

“ஒரு பீடி பிடியுங்க… இப்ப வாறேன்” என்றாள் ஸ்ரீதேவி.

“எட்டிலே ஏறி மேலே போனா சட்ஜமம் சில சமயம் பிடி கிட்டாது தங்கச்சி, அதாக்கும் சொன்னேன்”.

“உள்ள சட்ஜமத்தை வச்சு அட்ஜஸ்ட் செய்வோம் அண்ணா… அண்ணனாலே முடியாததா” என்று ஸ்ரீதேவி சொன்னாள்.

“பின்ன? நான் பாத்துக்கிடுதேன். சட்ஜமம் நம்ம கையிலே உள்ள சாதனம்லா?” என்றார் காதர் “வே சட்டி, நம்ம ஆர்மோனியத்தைப் பத்தி தங்கச்சிகிட்ட கேட்டுப்பாரும்… பஞ்சமம் நின்னு பேசும்லா… வந்திருக்காரு…” என்றபின் அனந்தனிடம் “தம்பி நம்ம ஆர்மோனியத்துக்கு பெசல் மைக்கு வேணும். பஞ்சமம் பேசணும்னா மைக்கு வேணும்…”

“ஆமா, சொல்லியாச்சு”.என்றான் அனந்தன்

“செரி வாறேன்” என்று பெட்டி கிளம்பிச் சென்றார்.

“ஆராக்கும் இங்க பஞ்சம் பேசுதது?” என்றார் நேசப்பன் பெருவட்டர். எவரும் பதில் சொல்லவில்லை “என்னத்துக்கு பஞ்சம், நம்ம தோட்டம் இருக்குல்லா?” என்று அவர் சொன்னார்.

மேக்கப்காரர் அச்சுதன்நாயர் வந்து நின்றார். அவருடைய கன்னம் தோண்டி எடுத்ததுபோல குழிந்திருந்தது. கழுத்தில் குரல்வளை மிகப்பெரியது.

“சரஸதி… நல்லா இருக்கியா மோளே?”

“அண்ணா வாங்க… ஒரு சின்னகாரியம்… சொல்லியிருப்பாங்க. எனக்கு ஒரு செக்கண்டிலே வேசம் மாத்தணும்…”

“அதுக்கு வளியிருக்கு…” என்றார் அச்சுதன்நாயர் “வில்லிக்கு ஒரு பெரிய அங்கி மாதிரி ஒண்ணு இருக்கு. சவிட்டு நாடகத்திலே எஸ்தர் ராணி போடுத அங்கி…நல்ல செவப்பு. அதை தலை வளியா போட்டா முளு டிரெஸ் ஆயிடும். ஒரு செக்கண்டிலே போட்டிரலாம். தலையிலே உனக்க முடிக்குமேலே நரைச்ச முடிக்கும் சுருளுமுடிக்கும் ரெண்டு விக்க மாத்தி மாதி வைக்கலாம்… ஆளுமாறிரும்”

“அது போரும்… மிச்சத்தை நான் குரலிலே காட்டிருதேன்”

“ஒரு ரப்பர் மரு இருக்கு, வில்லிக்க கன்னத்திலே ஒட்டலாம்” என்றார் அச்சுதன்நாயர். “பின்ன ஒரு ஐடியா இருக்கு”

“சொல்லுங்கண்ணா”

“ஒரு கிளிப்பு இருக்கு… ஸ்டீல் கிளிப்பு. அதை வாய்க்குள்ள போட்டுகிட்டா உதடும் தாடையும் வேறமாதிரி ஆயிடும்…ஆளே மாறினமாதிரி தெரியும். ஒரு செக்கண்டிலே போட்டுக்கிடலாம்”

“செரி … போரும்… இதுக்குமேலே என்ன?” என்றாள் ஸ்ரீதேவி.

“நீ நடையையும் பார்வையையும் மாத்திருவேல்ல… உன்னை சாமி நினைச்சா துரத்திப் பிடிச்சிரமுடியுமா?” என்றார் அச்சுதன் நாயர்.

“வாறேன் அண்ணா, டைலாக்க படிச்சுட்டு வாறேன்” என்றாள் ஸ்ரீதேவி.

அச்சுதன் நாயர் போனதும் மணி “தொடங்கலாமா?” என்றான்.

அனந்தன் படபடப்பாக அமர்ந்திருந்தான். தன்னை மீறி சிறுநீர் வெளியேறிவிடுமோ என்றுமட்டும்தான் அவன் எண்ணம் இருந்தது

ஸ்ரீதேவி “படிச்சிட்டே போவம்… எங்கெங்கே மாத்தணும்னு சொல்லுதேனோ அங்கங்க மாத்தினா போரும்” என்றாள்

வசனங்களை மாறிமாறி படித்தனர். மூன்று கதாபாத்திரங்களின் வசனங்களையும் ஸ்ரீதேவியே தன் குரலில் வாசித்தாள். அவள் சில இடங்களில் மாற்றங்கள் சொன்னாள். அவன் அதை மாற்றிக்கொண்டான். மாற்றியபின் இன்னொரு தடவை படித்தார்கள்

ஆனாலும் எப்படி அது மேடையில் நிகழவிருக்கிறது என்று அனந்தனுக்குத் தெரியவில்லை. பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டு கதாபாத்திரங்கள் ஒரே சமயம் மேடையில் வந்தன. இரண்டு இடங்களில் மூன்று கதாபாத்திரங்களுமே மேடையில் வந்தன.

படித்து முடித்ததும் ஸ்ரீதேவி “நான் இன்னொரு தடவை படிச்சிருதேன்… நல்லா வந்திருக்கு… ஒண்ணும் பிரச்சினையில்லை” என்றாள்.

அனந்தன் “ஈஸ்வரா!” என்றான்.

லாரன்ஸ் “ஏசுவே!” என்றான்.

ராஜமணி வந்து “ஸ்டேஜுகாரனுக வந்தாச்சு… படுதா எறக்கியாச்சு” என்றான்.

“நான் வாறேன் அக்கா”.

“நீ போடே… எல்லாம் ஈஸ்வர அனுக்ரகத்தாலே நல்லா முடியும்” என்றாள் ஸ்ரீதேவி.

அனந்தன் எழுந்து மேடைக்குச் சென்றான். மாதேவன் பாட்டா வழியில் அவனிடம் “காருக்குறிச்சி திவ்யமா இருந்துதுடே… என்னமா வாசிக்கான்? என்னா சத்தம், பட்டுல்லா!” என்றார்.

அவன் புன்னகைத்தான்.

மாதேவன் பாட்டா “மறுபடி காலம்பற போடச்சொல்லுடே” என்றார்.

“சரி” என்று சொல்லிவிட்டு மேடைக்கு சென்றான். உடலெங்கும் இனிய களைப்பு இருந்தது. பதற்றம் விலகிவிட்டிருந்தது.

பள்ளிக்கூடத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட பெஞ்சுகளை சீராக அடுக்கிப்போட்டு சேர்த்து கட்டி அதன்மேல் சணல் சாக்குகளை விரித்து மேடை எழுப்பப் பட்டிருந்தது. மேலே எழுப்பப்பட்ட முன்பக்கம் திறந்த அரங்கில் நான்கு மூலைகளிலும் வலுவான மூங்கில்களை நட்டு ,மேலே பன்னிரு படி ஏணிகளை வைத்துச் சேர்த்து கட்டியிருந்தனர்.

செட் படுதாக்களை கயிற்றில் கட்டிக்கொண்டிருந்தார் ‘வடிவு ஏஜென்ஸீஸ்’ ஓனர் வடிவுடையான் செட்டியார். அவருடைய உதவியாளர்கள் சாஸ்தாவும் தாணப்பனும் மூங்கிலில் ஏறி இரு மூலைகளில் அமர்ந்திருந்தனர். கீழிருந்து வீசப்பட்ட கயிறுகளை பிடித்து மூங்கில் வழியாக போட்டு அப்பால் தொங்கவிட்டனர்.

வடிவுடையான் கைகாட்டிவிட்டு கீழிருந்து கயிறுகளை இழுத்தார். படுதாக்கள் சுருள் அவிழ்ந்து மேலேறின. ஒரே சமயம் மொத்த அரங்கும் மேலேறிவிட்டது. அனந்தனுக்கு புல்லரித்து கண்ணீர் மல்கியது.

வடிவுடையான் அந்தக் கயிறுகளை இழுத்துக் கட்டி இரண்டாம் முடிச்சைப் போட்டார். முகப்பின் மேல்சுருக்கு திரைச்சீலை கட்டப்பட்டது. அதன் சரடை சகடை வழியாக இழுத்து மறுபக்கம் கொண்டுவந்தனர். வடிவுடையான் அதை இருமுறை மேலும் கீழும் இழுத்து பார்த்தார். ஒவ்வொரு முறை திரை மேலெழுந்து கீழிறங்கியபோதும் அனந்தனுக்கு நெஞ்சு பதறியது.

அவன் மேக்கப் அறைக்குச் சென்றான். ராஜமணி எங்கிருந்தோ சாப்பிடுவதற்குரிய டெஸ்குகளைக் கொண்டுவந்து போட்டிருந்தான். அவற்றில் அச்சுதன் நாயர் மேக்கப் பொருட்களை எடுத்து பரப்பியிருந்தார். நிலைக்கண்ணாடி இரண்டுதான் இருந்தது.

“மேக்கப்பு போடுத பயக்களை எல்லாம் வரச்சொல்லுங்க” என்றார் அச்சுதன்நாயர்.

“நான் மேக்கப்பு போடுதேன்!” என்றான் ராஜாமணி

“உனக்கு போஸ்ட்மேன் வேசம்லா? அதுக்கு என்னத்துக்கு மேக்கப்பு?” என்றான் அனந்தன்

“எனக்கு மீசை வேணும்… இல்லேன்னா நான் இப்ப இந்த டெஸ்கையும் ஸ்டூலையும் எடுத்துக்கிட்டு போவேன்”

“மீசைய ஒட்டிவிடுங்க மாமா” என்றான் அனந்தன்.

அவன் வெளியே வந்தபோது லாரன்ஸ் ஓடிவந்தான். பதறிப்போனவனாக ‘லே அனந்தா!” என்றான்

“எங்கலே போனே?” என்றான் அனந்தன்.

“வயத்த கலக்கிப்போட்டுதுலே… ஆனா மூச்சுவிடுத மாதிரி சவுண்டாக்கும் வருது”.

“அது பெருமூச்சாக்கும்… நீ அடக்கின பெருமூச்சு அந்தாலே போவுது”.

“எனக்கு பயமாட்டு இருக்குலே…. நாடகமே மறந்துபோச்சு… மூணுரோலையும் அவளே செய்யுதா…”.

“அதுக்கு உனக்கு என்ன?”

“லே, நான் அவளை ஹீரோயினா நினைச்சுப்போட்டேன். இப்பம் அவளே வில்லி மாதிரி பேசுதா. அதுகூட போட்டுன்னு வைக்கலாம், அம்மை மாதிரியும் பேசுதாள்லே… எனக்கு ஒண்ணும் புரியல்ல” லாரன்ஸ் சொன்னான்.

“ஸ்டேஜிலே அவ குரலை மாத்திக்கிடுவா”.

“ஆளு அவதானே… அய்யோ நான் எங்கிணயாம் ஓடிருவேன்”.

“ஓடு… நீ எங்க போனாலும் நான் தேடிவந்து வெட்டுவேன்”.

மணி வந்து “அண்ணா மேக்கப்பா? எனக்கு மேக்கப்பு உண்டுல்லா?” என்றான்.

“ஆமலே… உண்டு…மேக்கப்புக்கு கெடந்து பறக்கானுக….போ போ, போயி மேக்கப்ப போடு”.என்றான் அனந்தன் ”நாடகம் பாக்க வாறவனுகளுக்கும் மேக்கப்பு உண்டுன்னா வந்து அம்மீருவானுக போல”

“ஸ்ரீதேவி என்ன செய்யுதா?” என்றான் லாரன்ஸ்.

“உறங்குதாக”.

“சாப்பிட்டாச்சா?”

“எல்லாரும் சாப்பிட்டாச்சு. அவங்க அப்டியே படுத்திட்டாங்க”.

லாரன்ஸ் ரகசியமாக “ஏன் உறங்குதா?” என்றான்.

அனந்தன் “ஜாமபூசைய முடிச்சு ஒம்பதுக்கு நடையடைப்பான். பத்துக்கு நாம ஆரம்பிப்போம். இன்னும் ஒருமணிக்கூர் இருக்குல்லா?” என்றான்.

சட்டென்று ஸ்டேஜில் “அல்லாவை நாம் தொழுதால்… சுகம் எல்லாமே ஓடி வரும்ம்ம்ம்ம்ம்ம்!!! அந்த வல்லோனை நினைத்திருந்தால்… நல்ல வாழ்க்கையும் தேடி வரும்ம்ம்ம்ம்ம்ம்!!!!” என்ற உச்சகட்டகுரல் வெடித்து எழுந்தது. சரிவிறங்கும் பஸ்ஸின் ஆரன் போல கூடவே ஆர்மோனியம் பீரிட்டது.

“என்னலே அது?” என்று திடுக்கிட்டவனாக மணி கேட்டான்

“பெட்டி சாயவு ஏளேமுக்கால் கட்டையிலே எடுத்து பாக்காரு” என்றான் லாரன்ஸ்.

“ஒரு கட்டையிலே உடைவு உண்டுண்ணு சொன்னது உண்மையாக்கும்” என்றான் மணி.

 

[ 4 ]

 

 

அனந்தன் மேக்கப் அறைக்குள் சென்றபோது இறுக்கமான சுடிதாரும் துப்பட்டாவும் அணிந்து பின்னல் இரட்டைப் போட்டு ஸ்ரீதேவி ஸ்டூலில் அமர்ந்திருந்தாள். அச்சுதன் நாயர் அவளுக்கு மேக்கப் போட்டுக்கொண்டிருந்தார்.

“அண்ணா எப்டி இருக்கு?” என்று ஒருவன் கேட்டான்.

அது மணி என்பது அதன்பிறகுதான் தெரிந்தது. “விக்கு வச்சிருக்கியா?” என்றான் அனந்தன்.

“பின்ன? நாம சோசியருல்லா?”

“ஆமாமா!” அனந்தனுக்கு நாடகமே மறந்துவிட்டது போல் இருந்தது.

கணேசன், ஞானப்பன், தேவசகாயம், குமரேசன், குணமணி, ஈஸ்வரன் நாயர், சண்முகம், முருகனடி, சுப்பையா எல்லாரும் மேக்கப் போட்டுக்கொண்டிருந்தனர். ஞானப்பன் மீசையை கோணலாக ஒட்டியிருந்தான். அதைச் சொல்லலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தபோது லாரன்ஸ் அவனை நோக்கி வந்தான்.

“லே, வா ஒரு விசயம்”.

“சொல்லு”.

“நான் இன்னொரு பைட்டு ஏற்பாடு ஆக்கியாச்சு”.

“ஆருகிட்ட?”

“ஞானப்பனும் நானும்”.

“டேய் ஞானப்பன் பாதிரியாராக்கும். அவரு எப்டி ஃபைட்டு?”

“எங்க ஃபாதர் பைட்டு போடுவாரு”.

“லே, வேண்டாம்லே”.

லாரன்ஸ் “நாங்க ரிகர்சல் பாத்தாச்சு” என்றான் லாரன்ஸ். ஸ்ரீதேவியை பார்த்து பரவசமாக “ஜெயபாரதி மாதிரி இருக்காள்ள்ல?”

“ஜெயபாரதியச் சொல்லாதே”.

“சும்மா சொன்னேம்ல”.

“நீ போயி ஸ்டேஜ்ல எல்லாம் இருக்கான்னு பாரு”.

அவன் சென்றதும் அனந்தன் ஞானப்பனை அணுகி “அண்ணா, உங்களுக்கு ஃபைட்டு உண்டுண்ணு லாரன்ஸ் சொன்னானா?” என்றான்.

“ஆமாம்லே”.

“அவன் ஃபைட்டுலே அண்ணனுக்க விக்கை பிடுங்கி எறிவானாம்… கூவுகதுக்கு பயக்களை ரெடியாக்கி வச்சிருக்கான்”.

“அய்யோ!” என்றார் ஞானப்பன் “ஏம்லே?”.

“அண்ணனுக்க ரோலு ஸ்டிராங்காக்கும். கைத்தட்டல் விளும்… அவனுக்கு எரியும்லா? அதாக்கும்”.

“ஓ, அதாக்குமா”.

“அண்ணன் ஆளு ஸ்டைலாக்கும்னு அவனுக்கு தெரியும்”.

“அவனுக்கு நான் வச்சிருக்கேன்”.என்றார் ஞானப்பன் “அயோக்கியப்பய…அபராதிப்பய”

“நாடகம் முடியட்டும்…நாளைக்கு பாப்பம்”.

“செரிடே….”.

நிம்மதியுடன் அனந்தன் ஸ்டேஜுக்கு போய் நாடகப்பிரதியை புரட்டிப் பார்த்தான்..

கோயிலில் செண்டை மேளம் கேட்டுக்கொண்டிருந்தது. கலாசம் கொட்டி அது ஓய்ந்தது. மணியோசை. தீபாராதனை.

அணைஞ்ச பெருமாளின் மகன் ஓடிவந்து “சினுமாப்பாட்டு போடலாமான்னு கேக்காரு” என்றான்.

“போடச்சொல்லு” என்றான் அனந்தன் “ஜெமினி பாட்டு போடு. முதல் பாட்டு எம்ஜியாரானாலும் சிவாஜியானாலும் இங்கிண அடி நடக்கும்”.

சற்றுநேரத்தில் “இயற்கை என்னும் இளையகன்னி!” ஆரம்பித்தது. அனந்தன் நாடகப் பேப்பர்களை புரட்டி பார்த்தான். சட்டென்று பீதியுடன் உணர்ந்தான், அவன் மூன்று மனிதர்களாகப் பார்த்துக் கொண்டிருந்த கதாபாத்திரங்களை நடிக்கப்போகிறவர் ஒருவர். அவனுக்கு குப்பென்று வியர்த்தது. எங்கிருக்கிறோம் என்றே கொஞ்சநேரம் தெரியவில்லை.

நாராயணன் போற்றி கையில் பிரசாதத்துடன் பின்பக்கம் வழியாக வந்தார். “நீ அங்க வருவேன்னு நினைச்சேன். செரி, இங்க பதறீட்டு நிக்கே போல. அதனால கொண்டு வந்தேன். தொட்டு நெத்தியிலே போட்டுக்க. எல்லாம் நல்லபடியா முடியும்”.

“திருமேனி, இங்க பெரிய பிரச்சினை…” என்றான் அனந்தன்

“பைசா இல்லியோ… அது நாம பாத்துக்கிடலாம்”

“அதில்லை, இண்ணைக்கு ஒராளாக்கும் மூணு ரோலும் செய்யுதது”.

“ஏண்டே?”

அனந்தன் சொன்னான். போற்றி வெற்றிலைக்கறை படிந்த வாய் காட்டிச் சிரித்து “செரிவிடு… பொம்புளைன்னா ஆரு? அவளுக ஆயிரம் வேசம் போடுவாளுக… அவளுகளுக்கு சொல்லிக் குடுக்கணுமா?” என்றார்.

“இல்லை… மூணு ரோலும்…” என்று அனந்தன் சொன்னான்

“டேய் பராசக்திக்கு இல்லாத்த முகமா? பிரம்மா, விஷ்ணு, சிவன் மூணும் அவளுக்க முகமாக்கும். மூணுதேவியும் அவளாக்கும். முப்பத்திமுக்கோடி தேவர்களும் கெந்தர்வனுங்களும் அவளுக்க முகங்களாக்கும்… சும்மா கெட”

அவர் சென்றபோது அவனுக்கு மேலும் பதற்றமாக இருந்தது. மேக்கப் முடிந்து அச்சுதன் நாயர் வந்தார். “பிள்ளை ஒரு ரெண்டுரூவா தரணும்”

“சம்பளம் அடங்கலுல்லா? நீங்க வடிவுடையான் செட்டியார்ட்ட வாங்கணும்”.

“ஆமா, அது வேற. இது சும்மா… ஒரு வாய் எரியுத வெள்ளம் குடிக்க… மேக்கப்பு போட்டிருக்குல்லா?”

அவன் இரண்டு ரூபாயை கொடுத்தான்.

“இனி நமக்கு வேலையில்ல… ஒரு வாய் குடிச்சா ஒரு எதம் கிட்டும்”

“ஸ்ரீதேவி என்ன செய்யுதா?”

“உறங்குதா… அது எப்பமும் அப்டியாக்கும்” அவர் குரல் தாழ்த்தி “ஒரு மடக்கு பிராந்தி அவளே கொண்டு வந்திருவா. தண்ணியச்சேத்து விளுங்கினா ஒரு சின்ன கறக்கம்”.

“அய்யோ”.

“டேய், அது மருந்தாக்கும்… கேரளத்திலே பல காவுகளிலே பகவதிக்கு பண்டு கள்ளு வைச்சு நைவேத்தியப் படையலு போடுகதுண்டு. இப்ப ரம்மும் பிராந்தியுமாக்கும் படையலு” என்றார் அச்சுதன் நாயர் “பிராந்தி ஹைகிளாஸாக்கும்… மணமாட்டு இருக்கும்”.

“மாமா செரியா வருமா? மூணுரோலு”

“ஏல, நாம குடிக்குததும் ஆற்றுத்தண்ணி. குளிக்குததும் குண்டி களுவுததும் அதுதான்… கங்கைக்கு கோடி முகம்… நீ தைரியமா இருலே”

அனந்தன் மீண்டும் நாடகத்தை வாசித்தான். மணி வந்து “டைம் ஆச்சு… அஞ்சுநிமிசம்!” என்றான்.

“தொடங்கிடலாமா?” என்று அனந்தன் திரையை விலக்கி வெளியே பார்த்தான். அவன் தலையை கண்டதும் வெளியே “லேய், கரடிக்குட்டி! குட்டிக்கரடி” என்று கூச்சல்கள் எழுந்தன.

“கூட்டம் வந்திருக்குலே” என்றான் அனந்தன்.

“நான் பெட்டி கிட்ட ஒரு பாட்ட பாடச்சொல்லுதேன்” என்றான் மணி. அவன் ஸ்டேஜின் வலப்பக்கம் அமர்ந்திருந்த பெட்டி சாயபுவிடம் சொல்லிவிட்டு வந்தான். அவரும் அவனுடன் எழுந்து வந்து “செய்குத்தம்பிப் பாவலர் பாட்டு ஒண்ண எடுப்பம்…. எட்டுகட்டைக்கு எடுப்பா இருக்கும்” என்றார்.

“செரி” என்றான் அனந்தன்.

பெட்டி காதர் சென்று அமர்ந்து மைக்கை தட்டினார். அதை மைக் செட் மோகனன் ஆன் செய்ததும் அது ரீரீரீ என ஓசையிட்டது. அவன் அதை சரிசெய்ததும் அமைதியாகியது. பெட்டி ஆர்மோனியத்தை ஒரே அழுத்தாக அழுத்தினார். செல்லப்பன் தபலாவை இரு கைகளும் வாசித்தார். அது துள்ளித்துள்ளிச் சென்றது.

“மைக்குச் சத்தம்போடுதே” என்றான் அனந்தன்

“அண்ணா அது அவருக்கா அறுமோணியம் சத்தம்… ரெண்டும் ஒண்ணுதான்” மணி சொன்னான்..

பெட்டி சாயவு அவரால் இயன்ற உச்சக்குரலில் “சிரமாறுடையான் செழுமா வடியைத் திரமா நினைவார் சிரமே பணிவார் பரமா தரவா பருகாருருகா, வரமா தவமே மலிவார் பொலிவார்” என்று பாடினார்.

“ஏலே, சாயவு அவருக்க சாமியவா பாடுதாரு?” என்றான் மணி.

“நம்ம சாமியத்தான்”.

“என்ன பாசையாக்கும்?” என்று மணி ரகசியமாக கேட்டான்.

“தமிளுதான்”.

சாயவு பாடினார். “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை அகற்றுவதும் ஆவிக்கருந்துணை யாயின்பம் பொருத்துவதும் கல்வியென்றே! ஆஆஆ!”.

அவர் பாடி முடித்ததும் செல்லப்பன் தன் தபலாவில் தனியாவர்த்தனம் எடுத்தார். அதிவிரைவான தாளம்.

“எருமைக்கூட்டம் அத்துக்கிட்டு ஓடுதமாதிரி இருக்குண்ணே” என்றான் மணி பரவசமாக.

ஓய்ந்தபோது ஆழ்ந்த அமைதி. “லே போலே, அனௌன்ஸ் சொல்லுலே” என்றான் லாரன்ஸ். அவன் விக் வைத்து சிவப்பு பௌடர் போட்டு புருவத்தில் மையெழுதி லிப்ஸ்டிக் பூசியிருந்தான். சிவப்பு சட்டையும் வெள்ளை பாண்டும் அணிந்திருந்தான்.

அனந்தன் முன்னால் சென்று மைக்கை தொட்டு தட்டினான். “மான மகாஜனங்களே!” என்றான்

திரைக்கு அப்பால் “டேய் கரடிக்குட்டி! டேய்!”என்று ஓசை எழுந்தது “கூ! கரடிக்குட்டீ! கூ!”

“மானமகாஜனங்களே, அனைவருக்கும் அன்புவணக்கம். திருவரம்பு அமுதம் கலைக்கூடம் வழங்கும் சங்கீத சமூகசீர்திருத்த நாடகம் ‘சிவந்த தீ!’ இதோ ஆரம்பிக்கப்போகிறது”.

வெளியே கூச்சல்கள். சாயபு ஆர்மோனியத்தில் ஓர் அழுத்து அழுத்தினார். அனந்தன் அந்த கூச்சலாலேயே ஊக்கம் பெற்றான். “நம் சமூகத்திலே புரையோடிப்போயிருக்கும் அநீதிகளைச் சுட்டிக்காட்டி திருத்தும் சமூகசீர்திருத்த நாடகம் இது. ஏழைகளுக்கு நீதி எங்கே? ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை எப்போது? அன்பும் அறமும் நிலவும் சமூகம் அமைவது எப்படி? விடைகாண கண்டுதெளிய பாருங்கள் சிவந்த தீ!”

சொய்ங் என்று தவலை கீழே விழுந்ததுபோல சல்லரிவட்டம் ஓசையிட்டது. அனந்தன் மேலும் ஊக்கமடைந்தான். “இந்த நாடகம் ஒரு போர்வாள்! இந்த நாடகம் உலுத்தர்களுக்கு ஓர் எச்சரிக்கை! நல்லோருக்கு ஓர் ஆறுதல்! உங்கள் ஆதரவை நாடும் திருவரம்பு அமுதம் கலைக்குழு!” மீண்டும் சொய்ங்! “சிவந்த தீ! சிவந்த தீ! சிவந்த தீ!” ஒரு சமையலறையே சரிந்து விழுவதுபோல பயங்கரமான பாத்திர ஓசை.

லாரன்ஸ் அவனிடம் கம்மிய குரலில் “பயமா இருக்குலே” என்றான்.

“முத சீன் உனக்காக்கும்… போபோ” என்றான் அனந்தன்.

லாரன்ஸ் தடுமாறி அரங்குக்குச் சென்றான். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து ஒரு செய்தித்தாளை பிரித்து வைத்துக்கொண்டான். அதை தலைகீழாக பிடித்திருந்தான்.

மணி “டேய், டேய், தலைகீளா பிடிச்சிருக்கே” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அனந்தன் விசில் ஊதினான். திரும்பி மணியிடம் எரிச்சலுடன் “என்னலே?” என்றான்.

“நூஸ்பேப்பரை தலைகீளா பிடிச்சிருக்கான்லே” என்றான் மணி

அனந்தன் தலையில் கைவைத்தான். அதற்குள் மறுபக்கமிருந்து இடுப்பில் நீர்குடத்துடன் ஸ்ரீதேவி வந்தாள்.

மைதானம் முழுக்க கிசுகிசுவென்று லாரன்ஸ் தலைகீழாக பேப்பர் படிப்பதைப் பற்றிய பேச்சு பரவி அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

“தலைகீள் பேப்பரு… கூ!”

ஸ்ரீதேவி குடத்தை வைத்துவிட்டு வந்து பேப்பரை பிடுங்கி நேராக அவன் கையில் வைத்தாள். “பேப்பரை தலைகீழா வச்சா படிப்பீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு?”

“நான்… ஒண்ணுமில்லை” என்று லாரன்ஸ் தடுமாறினான்.

“சரி, படிப்புக்கு வேலை கிடைக்கலை…அதுக்காக? விரக்தியிலே இப்டி உக்காந்திருந்தா ஆச்சா?”

“எவன் வேலை குடுக்கறான்” என்றான் லாரன்ஸ்.

“பேப்பரை தலைகீழா படிக்கிறது மாதிரி எல்லாத்துலயும் ஒரு தலைகீழான பார்வை உங்களுக்கு… ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு வேலை கிடைச்சுட்டுத்தானே இருக்கு?”

“நான் ஏன் தலைகீழா பேப்பர் படிச்சேன் தெரியுமா?”

“ஏன்?”

“உன்னை நினைச்சுட்டிருந்தேன்” என்று லாரன்ஸ் சொன்னான். “இந்த உலகமே தலைகீழா ஆயிடுச்சு!”

அனந்தன் திகைத்தான். லாரன்ஸ் மிக மிக இயல்பாக அதைச் சொன்னான். உண்மையான காதலுடன். கண்களிலும் முகத்திலும் நெகிழ்ந்த சிரிப்புடன்.

“அதுக்கு இப்டி தலைகீழா பிடிச்சு படிச்சாபோராது” என்றாள் ஸ்ரீதேவி.

“பின்ன?”

“ம்ம்? தலைகீழா நிக்கணும்”.

“வேணுமானா நிக்கிறேன்… உன் வீட்டுமுன்னாலே வந்து நிக்கவா?”

“வாங்க…எங்க அப்பாவே பிடிச்சு தலைகீழா கட்டி வைப்பார்”.

“ஒருநாள் வரத்தான் போறேன்”.

“வாங்க, ஆனா இப்படி இல்லை. ராஜகுமாரனாட்டு வரணும்”.

அவர்கள் ஒருவரை ஒருவர்  பார்த்துக்கொண்டு சிரித்துப் பேசினர். அவள் உடலசைவுகளில் காதல்கொண்ட இளம்பெண்ணின் துள்ளலும் நாணமும் தயக்கமும் வெளிவந்தன. அவனைச் சீண்டினாள். அவன் ஏதாவது பேசினாள் வாய்பொத்தி சிரித்தாள். அவன் அவள் கையை தொடவந்தபோது மிரண்டு விலகினாள். லாரன்ஸ் அவளுடன் இணைந்து அத்தருணத்தில் மெய்யாகவே காதல் கொண்டுவிட்டான் என்று தெரிந்தது.

அவள் குடத்து நீரை அள்ளி அவன்மேல் தெளித்துவிட்டு சென்றாள். அவன் சிரித்தபடி விலகினான். பின்னர் முகத்தில் பட்ட நீரை துடைத்தபடி அவள் போன வழியை பார்த்தான். அந்த நாளிதழை சுருட்டியபடி தனக்குத்தானே மகிழ்ந்துகொண்டு மேடையில் சுற்றிவந்தான்.

பெட்டி சாயபு செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் மெட்டை வாசித்தார்.

அனந்தன் கூட்டத்தை பார்த்தான். அனைவரும் நாடகத்திற்குள் சென்றுவிட்டிருந்தனர். நாடகம் தொடங்கிவிட்டிருந்தது. நிஜமாகவே. அவன் எழுதியதிலிருந்து சற்றே விலகி. ஆனால் அதுவே ஆக.

மறுபக்கமிருந்து ஸ்ரீதேவி ஒற்றை நரைமுடிச் சரடு கொண்ட முடியை கொண்டையாக கட்டி, வெள்ளைச் சேலை உடுத்து முதிய நடையில் வந்தாள். “டேய் உங்கிட்ட கடைக்கு போகச்சொன்னேன்ல? இங்க என்ன செய்றே?” என்றாள். முதிய குரல்.

“இங்க நான்…”

“பேப்பர் படிக்கிறேன்னு சொப்பனம் கண்டுட்டு இருந்தே… தெரியும்…” என்றாள்.

“தெரியும்ல? பின்ன என்ன?”

“டேய், அவ நமக்கு செரியாக மாட்டா. அவ யாரு, நாம யாரு? உன்னை உங்கப்பா எப்டி கஷ்டப்பட்டு படிக்க வைச்சார்… இப்ப அந்த மனுசன் இல்லை. உன்னை நம்பித்தான் குடும்பமே இருக்கு…” ஈஸ்வரியம்மா சொன்னாள்.

“அதுக்காக நான் சாக முடியாதுல்ல?”

“சாகச் சொல்லல, வாழச்சொல்லுறேன்… சும்மா சொப்பனம் கண்டுட்டு இருக்காம உருப்படியா ஏதாவது வேலையை தேடிட்டு மனுஷனா வாழச்சொல்றேன்”.

“நானும் அதைத்தான் சொல்றேன். நான் மனுஷனாத்தான் வாழ்வேன், மிருகமா வாழமாட்டேன். நாய்ப்பொழைப்பு ,சேத்துப்பண்ணிப் பொழைப்பு எனக்கு வேண்டாம்”.

அனந்தன் லாரன்ஸின் முகத்தை பார்த்து திகைத்தான். உண்மையான கோபம். உண்மையான உடல்நடுக்கம்.

“மனுசனுக்கு இருக்கிற முதல் சுதந்திரம் அவனுக்க வாழ்க்கையை அவனே முடிவெடுக்குறது. குடும்பம் கடமை, மண்ணு, மட்டை எல்லாத்தையும் அவன் தலையிலே கட்டி வைங்க… அவனை மண்ணோட மண்ணா மிதிச்சு தாழ்த்துங்க.. ஆயிரம் ஆண்டுகளா இங்க அதுதானே நடக்குது? எதிர்த்து கேக்காம இருக்கிறவன் யோக்கியன். அடிபணிஞ்சு நாயா வாலாட்டி வாழுறவன் நல்லவன்” என்றான் லாரன்ஸ்

‘நல்லவனா வாழுறவன்தான் வாழுறான்”என்றாள் ஈஸ்வரியம்மா

லாரன்ஸ் ஆவேசமாக கையை நீட்டி “நான் நல்லவன் இல்லை. நான் அயோக்கியன், நான் கிறுக்கன். ஆனா மனுஷன். ஆமா வெறும் மனுஷன் போருமா?”

“இப்ப எதுக்கு கத்துறே? அப்ப இந்த குடும்பத்துக்கு கடமைன்னு ஒண்ணு உனக்கு இல்லியா?”

“என்ன கடமை? அந்தா நீ வளக்குற எருமை நிக்குது. நீ தீனி போடுறே, அது பாலு குடுக்குது. நான் இன்னொரு எருமை. திங்கிறியே, ஏன் கறக்கலைன்னு கேக்குறே… கறக்குறேன், என் ரத்தத்தை கறந்து குடுக்கறேன். போருமா? போருமா உனக்கு”.

ஈஸ்வரியம்மா தணிந்து “இல்ல மக்கா, சொன்னதை கேளு. மனுஷங்க சுதந்திரமானவங்கதான். அது மனசுக்குள்ள உள்ள சுதந்திரம். ஆனா வெளியே நாம ஒண்ணோடொண்ணு சேந்துதான் வாழமுடியும். நான் உன் அம்மா. நீ படிக்கணும்னு கடைசி தங்கத்தையும் வித்தவ. உனக்காக ராத்திரி பகலா புல்லுபறிச்சு சாணிவழிச்சு வாழ்ந்தவ… எந்த அம்மாவாவது தன்னோட சுதந்திரம்னு நினைச்சு பெத்த பிள்ளைய பட்டினிபோடமுடியுமா? சொல்லு… அப்ப சுதந்திரம் எங்க இருக்கு?”

“எங்கயும் இல்ல… எந்த உயிருமே சுதந்திரமா இல்லை” என்று லாரன்ஸ் உடைந்த குரலில் சொன்னான்.

“கடமையைச் செஞ்சா உரிமை தானா வரும்… அதான் சுதந்திரம்”.

“இந்த பேச்செல்லாம் நான் நிறையவே கேட்டாச்சு” என்றான் லாரன்ஸ். “பகவத் கீதையை வச்சு அடிச்சே கொல்லுங்க”.

“ஒண்ணு நெனைச்சுக்கோ, அடிக்கடி காதிலே விழுறதுதான் எப்பவுமே உண்மை. அது அடிக்கடி காதிலே விழுறதினாலேயே அது நமக்கு சலிச்சிருக்கும். அதை நாம மறுக்க முடியாதுங்கிறதனாலேயே நமக்கு அதன்மேலே எரிச்சல் வரும். ஆனா அத்தனை பேருக்கும் தெரியறதுனாலேதானே அதை அடிக்கடி கேட்கிறோம்?. மலைமாதிரி அது கண்முன்னாடி நிக்குது, அதை நம்மால கண்ணமூடி மறைச்சிர முடியாது”

“நீ போ… உள்ள போ… எனக்கு உன் பிரசங்கத்தை கேக்க நேரமில்லை”

“கண்ணா, நான் சொல்றதை கேளு…நீ கனவு கண்டுட்டே இருக்கே. அது உன்னோட வயசு. நீ கூட்டுப்புழு மாதிரி. ஆனா உள்ளேயே எவ்ளவுநாள் இருப்பே? சிறகு முளைக்கவேண்டாமா? வெளியவந்து பறக்கவேண்டாமா?”

“கூட்டோட அப்டியே பிடிச்சு வெந்நியிலே போட்டு கொல்லுது இந்த சமூகம்.. எங்க ஆத்மாவை பட்டா நெய்து போட்டுக்கிடுறாங்க ஆண்டைங்க”

”நான் பேச வரலை… உன் மனசுக்கே தெரியும்” என்றாள் ஈஸ்வரியம்மா

“நான் போறேன்… இங்க உக்காந்து உன் பேச்சை கேக்க எனக்கு நேரமில்லை”.

“சரி சரி…. கோவிச்சுக்காதே… வா தோசை ஊத்தி தாறேன்”.

“தோசையும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்”.

“செரி, நீ இங்க இரு…. நானே கொண்டுவாறேன்”.

“வேண்டாம்னு சொன்னேன்ல?”

“செரி, நீ இங்க உக்காந்து அவளைச் சொப்பனம் கண்டுட்டே சாப்பிடு..” என்று ஈஸ்வரியம்மா சிரித்தபடியே சொன்னாள்.

“போ” என்றான் லாரன்ஸ், அவன் புன்னகைத்துவிட்டான்.

“என் தங்கக்கொடம் இல்ல… இங்க உக்காரு… அம்மா இந்தா வந்திருதேன்”.

அவள் உள்ளே சென்றாள். அப்போது மறுபக்கம் மோகனாவின் குரல் கேட்டது. “என்ன சொப்பனம் கண்டாச்சா?”

“போடி” என்றான் லாரன்ஸ்.

“என்ன சொப்பனம்?”

“ஒரு பேயை”.

மோகனா சிரித்தாள்.

“மோகினிப் பேயா?”

லாரன்ஸ் சிரித்தான். “ஆமா, ரத்தம் குடிக்குது”.

“ரத்தம் நல்ல தேனாட்டு இனிக்குது” என்று அவள் வாயை சப்புக்கொட்டும் ஒலி.

லாரன்ஸும் மோகனாவும் சிரித்தார்கள்.

உள்ளிருந்து தட்டில் தோசையுடன் ஸ்ரீதேவி வந்தாள். “ஆருடா அது?”

“அவதான்”

“அவ எதுக்கு இங்க வரா? தண்ணி எடுத்துட்டு போக வேற வழியா இல்ல?”

லாரன்ஸ் “அவ தெருவிலேதானே போறா?” என்றான்.

“ஊரெல்லாம் தெரு இருக்கே” என்றபின் ஸ்ரீதேவி உள்ளே சென்றாள்.

லாரன்ஸ் அமர்ந்து தோசையை சாப்பிட ஆரம்பித்தபோது வெளியே குரல் கேட்டது “யாரு வீட்டிலே?”

அது ‘வட்டி’ ராஜம்மையின் குரல் “வீட்டிலே ஆரு?”

லாரன்ஸ் “என்ன வேணும்?” என்றான்.

ஸ்ரீதேவி சிவப்பு அங்கி அணிந்து, சுருள்முடியும் மரு ஒட்டிய முகமும் கொண்டு, சற்றே விந்தியபடி நடந்துவந்தாள். வாய் இழுபட்டு ஒரு நிரந்தரமான இளிப்பு. “டேய் எங்கலே உங்க அம்மா?”

“உள்ள கைவேலையா இருக்காங்க”

“கைவேலையோ, கால்வேலையோ, வட்டி வரவேண்டிய நேரத்திலே வந்திடணும்… தெரியும்ல? இல்லேன்னா சிலசமயம் கையும் இருக்காது காலும் இருக்காது”

“வட்டிதானே? குடுத்திடறோம்”

“நான் என்ன அசலையா கேட்டேன்? அசலு வேரு மாதிரி… அதை எடுக்கமாட்டோம். வெட்ட வெட்ட முளைச்சிட்டே இருக்கும்…”

உள்ளே ஈஸ்வரியம்மா “யாருடா அது?” என்றாள்.

“நம்ம வட்டி ராஜம்மை… வந்து என்னான்னு கேளு” என்றான் லாரன்ஸ்.

“குளிச்சிட்டிருக்கேண்டா”.

வட்டி ராஜம்மை “அவங்க வரட்டும்… நான் உங்கிட்ட பேசுதேன்… எப்ப வேலைக்கு போவே? எப்ப பைசாவ திருப்பி தருவே?”என்றாள்.

“போறேன்”.

“என்னவேலை? நக்ஸலைட்டு வேலையா?”

“சில சமயம் அதுக்கும் போகவேண்டியிருக்கும்”.

“போ போ…. நீ கடைசியிலே அங்கதான் போவே” என்று வட்டி ராஜம்மை சிரித்தாள்.

“உங்க ஆட்டத்தை முடிக்க நக்சலைட்டுகளாலத்தான் முடியும்”.

வட்டி ராஜம்மா உரக்க சிரித்தாள். “தம்பி, நம்ம பேரு வட்டி ராஜம்மை. வட்டின்னா என்ன? பணத்துக்கு குடுக்கிற லாபம். எதுக்கு அதை குடுக்கிறே? சொல்லு. என் பணம் உங்கிட்ட இருந்தா நீ எனக்கு வட்டி குடுக்கிறே.சரி, ஏன் அதை என் பணம்னு சம்மதிக்கிறே? ஏன்னா சம்மதிக்கலைன்னா சர்க்கார் உன்னை திருடன்னு சொல்லி ஜெயிலிலே போடும். அப்ப இந்த வட்டிக்கு காவலன் யாரு? சர்க்காரு”.

“அந்த சர்க்காரை நாங்க மாத்திக்காட்டுறோம்”.

“அந்த சர்க்காரை யாரு பாதுகாக்கிறது? பட்டாளம். பட்டாளம் ஏன் சர்க்காரை பாதுகாக்குது? அதுக்கு சர்க்கார் மேலே நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கை எப்டி வருது? அது இந்த சமூகத்துக்கு இருக்கிற நம்பிக்கை. நூறுவருசமா ஆயிரம் வருசமா வழிவழியா வாற நம்பிக்கை அது”.

வட்டி ராஜம்மை அவன் தோளில் கைவைத்து “நீ சின்ன பையன்… உனக்கு தெரியாது. நான் இப்ப வட்டி ராஜம்மை. எங்க அப்பா சிண்டன் நாயர் பழைய திருவிதாங்கூரிலே வரிவசூல் பண்ணின அதிகாரி. அவங்க அப்பா படை நடத்தினவரு… அப்ப வாளிலே அதிகாரம். இப்ப பணத்திலே அதிகாரம்… எங்க அதிகாரத்தை உடைக்க உன்னோட நக்ஸலிசத்தாலே முடியாது”.

“அப்ப உன்னை ஜெயிக்கவே முடியாதுன்னு நினைக்கிறியா? நீ என்ன தெய்வமா?”

“ஆமா, தெய்வம்தான். ஒரு தெய்வத்தை ஜெயிக்க இன்னொரு தெய்வத்தாலேதான் முடியும்…” என்று வட்டி ராஜம்மா சொன்னாள் ”இந்த தெய்வத்துக்கு கோழி பலி குடுத்தா அந்த தெய்வத்துக்கு ஆடு வெட்டி பலி குடுக்கணும்… அஹ்ஹஹ்ஹஹா!” அவள் அவன் தோளை உலுக்கி “வரட்டா? வட்டிப்பணம் இண்ணைக்கு சாயங்காலத்தோட வந்து சேந்திருக்கணும்… இல்லேன்னா நடக்கிறதே வேற”என்றாள்.

அவள் திரும்பி “ஈஸ்வரியம்மா!” என்றாள்.

“இதோ வாறேன்”.

“வரவேண்டாம், நான் கெளம்பறேன்… வட்டியோட வந்து பாத்தா போரும்”.

அவள் செல்வதை லாரன்ஸ் சீற்றத்துடன் பார்த்து நின்றான். கோபத்துடன் செய்தித்தாளை கீழே வீசினான். மறுபக்கம் ஸ்ரீதேவி ஈஸ்வரியம்மாவாக வந்தாள். குளித்து துண்டை தலையில் கட்டியிருந்தாள்.

“அதாருடா அது, வட்டி ராஜம்மாவா?”

“இல்லை, இந்த நாட்டை ஆட்சி செய்ற தெய்வம்” என்று லாரன்ஸ் சொன்னான்.

“ஆமா. தெய்வம்தான்… எல்லா தெய்வத்துக்கும் படையல் போடவேண்டியிருக்கு”.

“நான் போடுறேன் படையலு… ரத்தப்படையல்”.

“டேய் என்னடா சொல்றே?

“அதான் சொல்லிட்டேன்ல?”

லாரன்ஸ் ஆவேசமாக வெளியே செல்ல திகைத்தவளாக ஈஸ்வரியம்மா பார்த்து நின்றாள்.

பெட்டி காதர் “வென்றிடுமோ வேரின்றி நின்றிடுமோ தர்மம்தான்! இப்புவியில் என்றுதான் காய்ந்திடுமோ ஏழைகளின் கண்ணீரே!ஆஆ!ஆஆ!” என்று தொடங்கினார். தபாலா ஓசை உடன் இணைந்துகொண்டது.

அனந்தன் விசிலை ஊதிவிட்டு கண்மூடி அமர்ந்தான். திரை சரிந்தது. வெளியே கைதட்டல்கள், விசிலோசைகள். அனந்தனின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது

 

[ 5 ]

 

அனந்தன் ஸ்டேஜின் கீழே நின்றான். அவனைச் சூழ்ந்து ஊரிலிருந்த முகங்கள் முட்டி மோதின.

ஆசாரி நாணுக்குட்டன் “மக்களே கொச்சு கரடி, நீ கலாகாரனாக்கும் கேட்டியா?” என்றார்.

செவத்தபெருமாள் “நான் அளுதுபோட்டேன்… பெத்த மகனை விட்டுட்டு அந்த பொம்புளை படுத பாடு…” என்றார்

“ஒரு வசனம் வருதுல்லா? நல்லதெல்லாம் சாமிக்கு படையலுன்னுட்டு… இப்ப நக்சலைட்டுன்னு சாவுத பயக்கள்லாம் ஆரு? நல்லா படிக்குத பயக்களாக்குமே” என்றார் குமார நாடார்.

கைதமுக்கு நாராயணி அம்மச்சி “அந்த சின்னக்குட்டியும் பயலுக்க அம்மையா வாறவளும் நல்லா நடிச்சாளுக… அருமையாட்டு இருந்தது. ஆனா அந்த அறுதலிமூதி வட்டி ராஜம்மை இருக்காளே, அவ வெளங்குவாளா? அவளை சுட்டெரிக்க சாமி இல்லியே…” என்றாள்.

‘குண்டணி’ காளிக்குட்டி பாட்டி “மக்களே, அடுத்த நாடகத்திலே இவளுக ரெண்டாளும் போரும் என்னா? அந்த மூதேவி வேண்டாம்… அவளும் அவளுக்க மூஞ்சிக்கட்டையும்” என்றாள்.

மாதேவன் பாட்டா “நல்லா இருந்துதுடே… மூணு பொண்ணாப் பொறந்தாள்களும் நல்லா நடிச்சாளுக”

“நம்ம லாரன்ஸு பய கலக்கி முத்தெடுத்துப்போட்டானே”.

“அவன் நல்ல நடிப்பான் பாத்துக்க”.

“நாடகம் உருக்கிப்போட்டுது”

“சின்னப் பயக்களுக்கு படிச்சு வேலையில்லேன்னா கஷ்டம்லா?”

“நக்சலைட்டுன்னு சொல்லுதான், அவனுக நியாயம் பேசுதவனுகளாக்குமே!”.

“நியாயம்பேசினா சர்க்காருக்கு பிடிக்காதுல்லா!”

ஒவ்வொருவரும் அவன் கையை பற்றி இழுத்தனர். தோளை பிடித்து உலுக்கினர். கன்னத்தை வழித்து நெட்டி முறித்தனர்.

“அந்த வட்டி ராஜம்மைய பாத்து ஒரு நாலு நாறவார்த்தை சொல்லணும்லே” என்றார் ஜோசப்பு “எளவு என்னா நெல நிக்கா!”

“இந்த மோகனாக்குட்டி இருந்ததனாலே நாடகம் வெளங்கிச்சு…”

“செரி செரி போங்க நாடகம் முடிஞ்சாச்சுல்லா?” என்றார் பாட்டா.

ஒவ்வொருவராக விலகிச் செல்ல மெதுவாக முற்றம் காலியாகியது. கடலைப் பொட்டலக் காகிதங்களும் இலைகளும் பரவிய கோயில்முற்றம் வெறுமைகொண்டு கிடந்தது. குழல்விளக்குகளின் வெளிச்சம் மெல்ல அதன்மேல் அதிர்ந்தது.

போற்றி வந்தார். “டேய் நல்லா நடிச்சாளுக மூணு பொம்புளைகளும். அப்டி ஒரு நடிப்பு…. நான் ஒருத்தியத்தான் பாத்தேன். மத்த ரெண்டாளும் எப்ப வந்தாக?”

“பிறவு” என்றான் அனந்தன்

“இந்தா கரி கொண்டுவந்திருக்கேன்… நெத்தியிலே போட்டுக்க… கண்ணுபடப்போவுது” என்றார் போற்றி “உனக்க அப்பன் வந்து நின்னு பாத்துட்டு போனான்”

“வந்தாரா?”

“வராம இருப்பனா? ஆனால் யாராவது பாத்தா மோசம்லா? அதான் தேவ்டியாகுடிக்கு போறமாதிரி துணிபோட்டு தலைய மூடிட்டு நின்னு பாத்தான். நான் சொன்னேன், பய ஜெயிச்சுப் போட்டானேன்னு. ஒண்ணும் சொல்லாம போனான். ஆனா முகம் மலந்துபோச்சு…”

அனந்தன் புன்னகைத்தான்.

“இனி ஒரு பத்துநாள் நாம இந்த நாடகத்தை புகழ்ந்து அவன்கிட்ட பேசணும்… அதைக் கேட்டாத்தான் அவன் மனசு ஆறும்… கிறுக்கனாக்கும்” என்றார் போற்றி “வரட்டா பனி விள தொடங்கியாச்சு”.

அவர் சென்றதை அனந்தன் வெறுமே பார்த்துக்கொண்டு நின்றான் “செட்டு அவுக்கலாம்லா?” என்றார் வடிவுடையான்.

“அவுக்கலாம்”.

அவரும் உதவியாளர்களும் கயிறுகள் அனைத்தையும் அவிழ்த்தனர். வடிவுடையான் “ஜெயமாருதீ” என்றார். அனைவரும் சேர்ந்து கயிறுகளை விட சட்டென்று மொத்த சீன் திரைகளும் சேர்ந்து சரிந்து மேடையில் துணிக்குவியலாக ஆயின

அனந்தன் தன்மேல் குளிர்ந்த ஏதோ வந்து அறைந்ததுபோல் உணர்ந்தான். கால்கள் நடுநடுங்கின. மேடை அப்படியே மறைந்துவிட்டது. அவன் பார்த்துக் கொண்டே நின்றான். பின் பெருமூச்சுவிட்டான்.

மிக விரைவாக வடிவுடையானும் உதவியாளர்களும் திரைச்சீலைகளை மடித்துச் சுருட்டிக் கொண்டிருந்தனர்.

தேவஸ்வம் கட்டிடத்திற்குச் செல்லும்போது அனந்தன் தன் களைப்பும் தளர்வும் மறைந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். கணம் கணமாக விடுபட்டபடியே வந்தான். அந்த நாடகத்தின் கரு எட்டு மாதங்களுக்கு முன் மனதில் தோன்றியது. ஈஸ்வர வாரியரின் மகன் ராஜன் கொல்லப்பட்ட செய்தியை வாசித்தபோது எழுந்த ஓர் அதிர்வு.

அது ஆழ்ந்த அமைதியன்மையாக நீடித்தது. வளர்ந்துகொண்டே இருந்தது. ராஜனாகவும் ஈஸ்வர வாரியராகவும் அவனே மாறினான். அவனே மாறிமாறி பேசிக்கொண்டான். முட்டி மோதிக்கொண்டான். பின்பு ஒரு கதையாக எழுதினான். அது செயற்கையாக இருந்தது. கிழித்து வீசிவிட்டு விம்மி அழுதான். தலையை அறைந்துகொண்டான். பித்துப்பிடித்து பதினைந்து நாள் அலைந்தான். பிறகு நாடகமாக எழுதினான்.

நாடகமாக அது மாறியதுமே அதை லாரன்ஸுக்குத்தான் வாசிக்கக் கொடுத்தான். அவன் அதை வாசித்துவிட்டு குமுறிக்குமுறி அழுதான். அதை நடிப்பதென்று முடிவெடுத்தனர். பணம் தேடினர். ஆள் தேடினர். பயிற்றுவித்தனர். பதற்றம், ஆற்றாமை, கொந்தளிப்பு. நாடகம் தொடங்கியதும் பரவசம். பின்னர் பாராட்டுக்களின் திளைப்பு. நான் நான் நான் என திமிர்த்து எழுந்த ஆணவம். ஒரு கணத்தில் அனைத்தும் விலக அறுந்து விழுந்து மண்ணில் நின்றான். அந்த நாடகம் எங்கோ என்றோ எவரோ நடித்ததாக ஆகிவிட்டிருந்தது.

தேவஸ்வம் கட்டிடத்தில் கொண்டாட்டம் தொடங்கியிருந்தது. ராஜமணி உள்ளூர் சாராயப்புட்டிகளை கொண்டுவந்து வைத்திருந்தான். பெரும்பாலானவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திளைத்தபடி தொட்டி மீன்கள் போல சுற்றிச்சுற்றி வந்தனர்.

’சட்டி’ செல்லப்பன் அவனை நோக்கி வந்து “மைனரே, நீ ஆர்ட்டிஸ்டாக்கும். நீ நம்ம கூட வா. நீ நாடகம் எளுது, நான் வாசிக்குதேன். தாயளி, இந்த ஊரிலே இனி ஒருத்தனும் நாடகம் போடப்பிடாது” என்றார்.

அனந்தன் புன்னகைத்தான்.

மணி “உன்னாணை அண்ணா, நான் உண்மையிலேயே மூணு நடிகை இருக்கான்னு நினைச்சுட்டேன்… அப்டியே நம்பிட்டேன்”

“அத்தனைபேரும் அப்டி நம்பிட்டானுக… அதாக்கும் நாடகம் சக்ஸஸ் ஆச்சு” என்றான் ராஜமணி.

“மக்கா ஒண்ணு சொல்லுதேன் கேளு. ஒரு நாடகம் தொடங்கின பத்துநிமிசத்திலே தெரிஞ்சிரும் , நாடகம் எடுக்குமா விளுமான்னு… நல்லா நாடகம் அப்டியே மேலே தூக்கும். முக்கியமா நடிக்குதவங்க கதைக்குள்ள போயி அந்த கதாபாத்திரமாட்டே ஆயிடுவாங்க. அவங்களுக்க உணர்ச்சிகளை பாத்து மத்தவனுகளும் உள்ள போயிடுவானுக. பின்ன அங்க நடக்குத நாடகம் நாம நடத்துகது இல்லை. அதுவே நடக்குததாக்கும்”

“இருந்தாலும் மூணுவேசத்தை ஒராளு போடுறதுண்ணா” என்றான் ஞானப்பன்.

“அது கலை… அதைப்பத்தி மனுசன் பேசிக்கிட முடியாது” என்றார் செல்லப்பன் “மக்களே அனந்தா, நீ ஆர்ட்டிஸ்டு. இந்தா அண்ணன் தாறேன், ஒரு ஏத்து ஏத்து. கலைமகளுக்கு பிடிச்சதாக்கும் வாற்றுசாராயம்”.

“இல்ல வேண்டாம்”.

“ஏன்?”

“அப்பா அடிப்பாரு”.

“தாயோளிய போவச்சொல்லு. டேய் இங்க பாரு, எப்ப பெத்த அப்பன் முகத்தை பாத்து கெட்டவார்த்தை சொல்லுதியோ அப்பதான் நீ முளுக்கலைஞன்”.

“வேண்டாம்ணா”.

“செரி, போ… எங்க போவே?”

மொத்த நடிகர்களுமே ஏற்கனவே போதையில் இருந்தனர். மூலையில் ஆர்மோனியத்தை தலைக்கு வைத்து பெட்டி காதர் படுத்திருந்தார்.

“வணக்கம் சாயவு, நம்ம லாரன்ஸை பாத்தியளா?”

“இல்ல, அந்தாலே குடிக்காரோ என்னமோ”

“அவன் குடிக்க மாட்டானே”.

“இது குடிக்க வச்சிரும். இதொரு போதையில்லா” என்றார் பெட்டி காதர். “நான் கண்ணைமூடிட்டு யா அல்லான்னு அப்டியே படுத்திருவேன்… நம்ம பாட்டு எப்டி? தூக்கிட்டோம்ல? எட்டுக்கட்டையிலே எடுக்கிறப்ப அப்டியே ஒரு விறையல் வரும் பாருங்க… எனக்கே சிலுத்துப்போச்சு”

“ரொம்ப நல்லா இருந்திச்சு சாய்வு… இப்ப வாறேன்”.

உள்ளறைக்கு வெளியே திண்ணையில் லாரன்ஸ் தனியாக அமர்ந்திருந்தான்.

“லே, இங்க என்ன செய்யுதே?”

“ஒண்ணுமில்ல”.

“என்னலே”.

“ஒண்ணுமில்லை” என்று அவன் எழுந்தான் “லே நான் நல்லா நடிச்சேனா?”

“நல்லாவா? நீ நடிக்கல்ல. ராஜாவா அங்க நின்னே… செத்துபோன ராஜனுக்க ஆத்மா அளுதிருக்கும்லே”.

“எப்டி நடிச்சேன்னே தெரியல்ல” என்று அவன் அனந்தனின் கையை பிடித்தான். “எனக்கு என்னமோ ஒரு மாதிரி ஆயிரிச்சு. இந்த அம்மா அப்டியே நம்மளைச் சுத்திகிட்டாங்கலே.. இந்தப்பக்கம் ஹீரோயின், அந்தப்பக்கம் அம்மா, அந்தப்பக்கம் வில்லி. எங்க நிக்காங்க எங்க வாறாங்கன்னு தெரியல்ல”

“ஆமா நான் உண்மையிலே மறந்துட்டேன்… மூணுபேருண்ணே நினைச்சேன். நாடகம் முடிஞ்சபிறவுதான் அய்யய்யோ ஒரு ஆளுல்லா மூணும்னு நினைச்சு அப்டியே வெறைச்சிட்டேன்” என்றான் அனந்தன்

“எனக்கு எப்டி இருந்திருக்கும் நினைச்சுப்பாரு. எல்லாம் ஒரு பெரிய சொப்பனம் மாதிரி ஆயிப்போட்டுது. காதலிக்குள்ள அம்மை இருக்கா. அம்மைக்குள்ள காதலி இருக்கா. வில்லியாவும் இருக்காங்க. எல்லாம் கலந்து….யம்மா. வெளியே வர முடியல்லடே”

“வெளிய வந்தாகணும்… நான் வெளியே வந்தாச்சு…” அனந்தனுக்கு ஓர் எண்ணம் வந்தது . “லே நீ வா சொல்லுதேன்”.

“எங்க?”

“ஸ்ரீதேவியை பாப்பம்”.

“இல்லலே, என்னாலே பாக்க முடியாது”

“பாப்பம்லே… அவங்கள மறுபடி ஸ்ரீதேவியா பாத்தா எல்லாம் செரியாயிடும்”.

“இல்லலே மக்கா”.

“வாலே”.

அவனை அனந்தன் கைபிடித்து இழுத்துச் சென்றான். தேவஸ்வம் கட்டிடம் ஒரு கூடமும் ஒரு சிறிய அறையும் கொண்டது. அந்தச் சிறிய அறையின் வாசல் பூட்டப்பட்டிருந்தது.

அனந்தன் அதை தட்டினான்.

“அக்கா, ஸ்ரீதேவி அக்கா!”

ஸ்ரீதேவி கதவைத் திறந்து “என்னடே? நான் தூங்கணும்ல?”

“இவன் கிட்ட பேசுங்க… இல்லேன்னா இவன் செத்திருவான்”.

“என்னலே மக்கா?” என்றார் ஸ்ரீதேவி.

சட்டென்று ஒரு விசும்பலோசையுடன் லாரன்ஸ் ஸ்ரீதேவியின் காலடியில் விழுந்தான்.

“அய்யய்ய என்ன இது!” என்று ஸ்ரீதேவி குனிந்து அவனை தூக்கி சேர்த்து அணைத்துக்கொண்டாள். அவன் தலையை வருடி “என்னடே மக்கா இது… வேண்டாம்.. கண்ணைத்தொடை” என்றாள்.

***

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–61

$
0
0

பகுதி ஆறு : படைப்புல் – 5

துவாரகையில் இருந்து கிளம்புவதற்கான ஆணையை விடுப்பதற்கு ஃபானு மேலும் ஒருநாள் எடுத்துக்கொண்டார். “நமது கருவூலங்களை கொண்டுசெல்ல உரிய வண்டிகள் தேவை” என்றார். “அவை முறையாக பாதுகாக்கப்படவேண்டும். அதற்கான படைசூழ்கை அமைக்கப்படவேண்டும். கருவூல வண்டிகளைச் சுற்றி நாம் இருக்கவேண்டும். எந்நிலையிலும் அவை நம்மிடமிருந்து விலகிச் சென்றுவிடக்கூடாது.”

பிரஃபானு அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். “இங்கே அரண்மனையிலேயே போதிய காவலர் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு நாம் காவற்படையை அமைத்துக்கொள்ள முடியும்” என்றார். “அவர்களில் வில்லவர் எத்தனை பேர்? வில்லவர்கள் வேண்டும். ஏனென்றால் நாம் செல்லவிருப்பது திறந்த பாலைநிலம்…” என்றார் ஃபானு. “வில்லவர் போதிய அளவுக்கு உள்ளனர். குதிரைகள் குறைவாக உள்ளன. ஆனால் நாம் செல்லும் வழியில் அவற்றை சேர்த்துக்கொள்ள முடியும்” என்று பிரஃபானு சொன்னார்.

“அனைத்தும் விரைந்து முடிக்கப்படவேண்டும். நமக்கு பொழுதில்லை” என்றார் ஃபானு. ஆணைகளை விடுத்துவிட்டோம் என்னும் நிறைவை அவர் அடைவதை பார்த்தேன். “நாம் எங்கு செல்கிறோம்?” என்று சந்திரஃபானு கேட்டார். “சிற்பிகள் சொல்வதை கேட்டாயல்லவா? எங்கே செல்கிறோம் என்பதை எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது அல்ல இது. உடனே கிளம்பியாகவேண்டும். இல்லையேல் துவாரகையின் கருவூலமே நீரில் மூழ்கிவிடும்.” அவைவிட்டு நீங்கும்போது சுருதன் “கருவூலத்தைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார். அதுதான் துவாரகை என்பதுபோல” என்றார். “அது உண்மைதானே? நம்மையும் அவரையும் வேறுபடுத்துவது கருவூலம் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதுதானே?” என்றார் வீரா.

பிரஃபானு உண்மையாகவே விசைகொண்டு செயல்பட்டார். அரண்மனையிலும் சூழ்ந்திருந்த காவல்கோட்டங்களிலும் இருந்து எல்லா படைவீரர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்களை எண்ணி வகுத்து புதிய காவல்படை ஒன்று உருவாக்கப்பட்டது. அனைவருக்கும் படைக்கலங்கள் வழங்கப்பட்டன. பதின்மருக்கு ஒருவரும் நூற்றுவருக்கு ஒருவரும் என தலைமை வகுக்கப்பட்டது. நாலாயிரவரும் நால்வரால் தலைமை கொள்ளப்பட்டனர். தலைமைப்பொறுப்பு படைத்தலைவன் நிகும்பனிடம் அளிக்கப்பட்டது. படை உருவாகி வந்ததுமே மீண்டும் துவாரகையில் ஓர் அரசு உருவாகி வந்தது என்னும் எண்ணம் அமைந்தது.

துவாரகையின் கருவூலங்கள் மைய அரண்மனைக்கு அடியில் பெரும்பாறையை வெட்டிக்குடைந்து உருவாக்கப்பட்ட கல்லால் ஆன நிலவறைகளில் இருந்தன. அவற்றை திறப்பதற்கான தாழ்க்கோல்கள் சாம்பனிடமும் பிரத்யும்னனிடமும் ஃபானுவிடமும் பிரித்து அளிக்கப்பட்டிருந்தன. மூவரும் இணையாமல் கருவூல அறையை திறக்கமுடியாது. ஃபானு “அவர்களை உடனே வரசொல்லுங்கள். அவர்களிடமிருக்கும் தாழ்க்கோல்கள் அளிக்கப்படவேண்டும், நமக்கு பொழுதில்லை” என்றார்.

ஆனால் கணிகர் “அரசே, அது இப்போது நிகழாது. அவர்கள் கருவூலத்தை உங்கள் கையில் ஒப்படைப்பார்கள் என நினைக்கிறீர்களா?” என்றார். ஃபானு சீற்றத்துடன் “வேறு என்ன செய்வார்கள்? போரிடுவார்களா? இந்த இடிந்த நகரில் கிடந்து போரிட்டு சாக முற்படுவார்களா?” என்றார். “ஆம், அதற்குத்தான் முற்படுவார்கள்” என்று கணிகர் சொன்னார். ஃபானு திகைத்துவிட்டார். “நாம் செய்வதற்கு ஒன்றே உள்ளது. மூத்தவர்களான சாத்யகியும் கிருதவர்மனும் சென்று அவர்கள் இருவரையும் கண்டு தாழ்க்கோல்களை பெற்றுவரட்டும். கருவூலத்தை அவர்களின் பொறுப்பில் விட்டுவிடுவோம்.”

ஃபானு “என்ன சொல்கிறீர்கள்? நான் அரசன். கருவூலத்தை எப்படி அவர்களின் பொறுப்பில் விடுவேன்?” என்றார். “அவர்கள்தான் உங்களை அரசராக்குபவர்கள். நீங்கள் நாளை முடிசூடி ஆளவேண்டும் என்றாலும் அவர்களின் வில்லின் துணை தேவை. கருவூலம் அவர்களின் பொறுப்பில் இருக்கட்டும். அதுவே நமக்கு நல்லது” என்று கணிகர் சொன்னார். “அவர்களிடம் கருவூலம் இருப்பது நம்மிடம் இருப்பதற்கு நிகர். அவர்கள் நம்மை ஆதரிப்பவர்கள். அவர்களிடம் இருக்கையில் கருவூலத்தை நாம் கைப்பற்றிக்கொண்டோம் என்னும் பதற்றம் அவர்களுக்கு வராமலும் இருக்கும்” என்றார் கணிகர்.

பிரஃபானு “ஆம், கணிகர் சொல்வது உண்மை” என்றார். ஃபானு “எனில் அவ்வாறே செய்யுங்கள். இளையோனே, நீயே அவர்களிடம் பேசு” என்றார். கணிகர் “அதற்கு முன் வேறொன்றை தெளிவுபடுத்தியாகவேண்டும். கருவூலத்தின்மேல் அவர்களுக்கு இருக்கும் உரிமை என்ன என்று” என்றார். “அவர்கள் அதை கிருதவர்மனிடமும் சாத்யகியிடமும் கேட்பார்கள் என்பதில் ஐயமில்லை.” ஃபானு “இதென்ன? குடிகள் அனைவருக்கும் உரியதா என்ன கருவூலம்? என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “இப்போது நாம் இப்படிப் பேசுவதில் பொருளில்லை. நாம் மிகச் சிறிய படையுடன் பாதுகாப்பில்லாமல் பாலையில் கருவூலத்துடன் செல்லவிருக்கிறோம். நமக்கு உடன்பிறந்தார் அனைவரின் உதவியும் தேவை” என்றார் கணிகர்.

“என்ன சொல்கிறீர்கள்?” என்று ஃபானு சலிப்புடன் கேட்டார். “அவர்கள் இருவருக்கும் கருவூலத்தில் இணையான உரிமை அளிக்கப்படும் என்று கிருதவர்மனும் சாத்யகியும் சொல்லளிக்கட்டும்” என்றார் கணிகர். “அதெப்படி? இணையுரிமையா?” என்று ஃபானு கூச்சலிட்டார். “அச்சொல் அவர்களால் அளிக்கப்படுகிறது, உங்களால் அல்ல. நாம் முதலில் உரிய இடத்திற்கு சென்றுசேர்வோம். அங்கே கருவூலத்தை பாதுகாப்போம். நமக்கான படையையும் நமக்குரிய நட்பு அரசுகளையும் உருவாக்கிக் கொள்வோம். அதுவரை கருவூலம் கிருதவர்மன் சாத்யகி இருவர் பொறுப்பிலும் இருக்கட்டும். அது மூன்று தரப்பினருக்கும் இணையான உரிமை கொண்டது என அவர்கள் நம்பட்டும்.”

“நாம் முற்றுரிமை அடைந்து முடிசூடியதும் என்ன செய்யவேண்டும் என அறிவிப்போம். அரசே, அப்போது சாத்யகியும் கிருதவர்மனும்கூட உங்கள் குடிகளே. குடிகளில் எவரும் அரசரின் பொருட்டு சொல்லளிக்கும் உரிமை கொண்டவர்கள் அல்ல” என்றார் கணிகர். ஃபானு பெருமூச்சுவிட்டார். “சூழ்ச்சியே அரசனின் முதன்மைப் படைக்கலம்” என்றார் கணிகர். “ஆம், அதை செய்வோம்” என்றார் ஃபானு. பிரஃபானு “அவ்வாறே நான் அவர்கள் இருவரிடமும் பேசுகிறேன்” என்றார்.

அப்போது ஶ்ரீஃபானு அவைக்குள் வந்து நின்றான். “சொல்க!” என்றார் ஃபானு. “மூத்தவரே, இந்நகரை இடித்து அழித்த பிரதிஃபானுவின் மைந்தரையும் துணைவியையும் என்ன செய்வது?” என்றான். “அவர்கள் நம்மிடமா இருக்கிறார்கள்?” என்று ஃபானு கேட்டார். “அவர்கள் அப்போதே பிடிபட்டுவிட்டனர். நகருக்குள் ஒரு மாளிகையில் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை நாம் கொண்டுசெல்லவிருக்கிறோமா?” ஃபானு “பிரதிபானு எங்குள்ளான்? மனைவியையும் மைந்தரையும் தேடி அவன் வரக்கூடுமா?” என்றார்.

கணிகர் “எதன்பொருட்டும் அவர் இந்நகருக்குள் இனி வரப்போவதில்லை” என்றார். பின்னர் உதடை கோணலாக்கிச் சிரித்து “வருவார் என்றால் படைவல்லமையுடன் வருவார்… அவருக்கு எங்கேனும் துணையரசர்கள் இருக்கக்கூடும். அவர்கள் படையொருக்கி நின்றிருக்கவும் வாய்ப்புண்டு” என்றார். ஃபானு “அவனா? அவன் அப்படி செய்வானா என்ன?” என்றார். “அரசே, பிறகெதற்கு அவர் நகரை இடிக்கவேண்டும்? இடிக்கப்பட்டு பாதுகாப்பில்லாமல் சிதைந்து கிடக்கும் நகரை தாக்கி வெல்வது அவர் எண்ணமாக இருக்கவே வாய்ப்பு. துணைக்கு படையுடன் மன்னர்கள் இல்லாமல் அவர் அதைச் செய்ய ஏன் துணியவேண்டும்?” ஃபானு “ஆம், அவனுக்கு அப்படி எண்ணமிருக்கலாம்” என்றார்.

“நகரின் கருவூலமே அவர் இலக்காக இருக்கும்” என்றார் கணிகர். ஃபானு உரக்க கைகளை அறைந்துகொண்டு “அறிவிலி… கீழ்மகன்” என்றார். சீற்றத்துடன் எழுந்து “இது என் ஆணை, அந்த இழிமகனின் மனைவியை எரித்தே கொல்லுங்கள். அவன் மைந்தரை முதுகுத்தோலை உரித்து கழுவிலேற்றுங்கள்…” என்றார். “மூத்தவரே…” என்று நான் கூவினேன். “வஞ்சகர்களுக்கு இது எச்சரிக்கை. என் குருதியினரே ஆயினும் என் இளையோரே ஆயினும் இதுவே என் நெறி… இது என் ஆணை!” என்றார் ஃபானு. நான் பெருமூச்சுடன் அதனை கடந்துசென்றேன்.

கருவூலங்களுக்கான தாழ்க்கோல்கள் வந்து சேர்ந்தன. அவற்றை ஏவலர் தலைச்சுமைகளாக எடுத்துச் சென்று அப்பால் மணல்மூடிக் கிடந்த வழியில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளில் ஏற்றினர். அவற்றை பாயும் தோலும் போட்டு மூடிக்கட்டினர். “கருவூலம் சென்று ஒருங்கிவிட்டதா?” என்று ஃபானு கேட்டுக்கொண்டே இருந்தார். “ஆம் அரசே, கருவூலத்தை முழுமையாகவே வண்டிகளில் ஏற்றிவிட்டோம்” என்று பிரஃபானு சொன்னார். “நம் படையினர் சூழவே செல்லட்டும்” என்று ஃபானு சொன்னார்.

அரண்மனையை விட்டு ஒவ்வொருவராக கிளம்பிச் சென்றோம். ஆனால் எவரும் பெரிய அளவில் உணர்வெழுச்சி கொள்வதாகத் தெரியவில்லை. தங்களுக்குரிய பொருட்களை எடுத்துக்கொள்ளவும் எதையும் விட்டுவிடாதிருக்கவும் மட்டுமே ஒவ்வொருவரும் முனைப்பு கொண்டனர். எதையாவது மறந்துவிட்டு ஓடிச்சென்று எடுத்துக்கொண்டனர். ஏவலர்களுக்கு ஆணைகளை பிறப்பித்தனர். அவர்கள் விட்டுவிட்டு வந்த பொருட்களுக்காக வசைபாடினர். கூச்சலும் சந்தடியுமாக அரண்மனைமுகப்பு கலைவு கொண்டிருந்தது.

எறும்புகள் மழைக்காலத்தில் துளைகளிலிருந்து வெளியேறுவது போலிருந்தது அக்காட்சி. ஒவ்வொருவரும் ஏதேனும் பொதியை வைத்திருந்தனர். வெறுங்கையுடன் ஒருவர்கூட வெளியே செல்லவில்லை. அரசர் ஃபானுகூட கையில் ஒரு பெரிய பொதியை வைத்திருந்தார். “அது துவாரகையின் மணிமுடி. அதை அவரே தன் கையில் வைத்திருக்கிறார்” என்று சுருதன் சொன்னார். “இந்தப் பையை வைத்துக்கொள். இதற்குள் இருப்பவை சில ஓலைகள். இவை துவாரகை வெவ்வேறு மன்னர்களுக்கு அளித்துள்ள கடனுக்கான சான்றோலைகள். நம்மால் இவற்றைக்கொண்டு பெரும்பொருள் ஈட்ட முடியும்.”

கையில் எதுவுமில்லாமல் அங்கிருந்து வெளியேறியவர் கணிகர் மட்டுமே. அவரை ஒரு தாலத்தில் வைத்து இரு வீரர்கள் கொண்டுசென்றனர். அவர் கைகளை விரித்து புன்னகையுடன் அமர்ந்திருந்தார். சூழ்ந்திருந்த அலைக்கழிதல்களை நோக்கி நோக்கி மகிழ்ந்தார். அரண்மனையின் முகப்பில் நெரிசல் ஏற்பட்டிருந்தது. அரசரே அந்த நெரிசலில் முட்டி ததும்பவேண்டியிருந்தது. அதுவரை அரண்மனையில் யாதவ மைந்தர் எவரும் கிளம்பாமல் ஒருவரோடொருவர் முட்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் கருவூலம் கிளம்பியதுமே அத்தனை பேருமே உடன்கிளம்ப முண்டியடித்தனர்.

ஃபானு வெளியே வந்தபோது அரண்மனை முகப்பில் பிரதிஃபானுவின் மைந்தர் கழுவிலேற்றப்பட்டிருப்பதை பார்த்தார். அதற்குள் ஃபானுமான் வந்து “மூத்தவரே, நம் அன்னையர் அனைவரும் உரிய இடங்களுக்குச் சென்று சேர்ந்துவிட்டார்கள்” என்றான். “நம் கருவூலம் எங்கே? கிளம்பிச்செல்கிறதா?” என்றார் ஃபானு. “ஆம், உடன் சாத்யகியும் கிருதவர்மனும் செல்கிறார்கள்” என்று ஃபானுமான் சொன்னான். “நாமும் உடன் செல்லவேண்டும். அவர்கள் அதைச் சூழ்ந்துகொள்ள இடமளிக்கலாகாது” என்றார் ஃபானு.

நீண்ட நிரையாக துவாரகையில் இருந்து கிளம்பியவர்கள் தோரணவாயிலைக் கடந்து பாலைவெளி நோக்கி சென்றனர். ஃபானு தோரணவாயிலைக் கண்டதும் “இதோ நின்றிருக்கிறதே, பெருவாயில் வீழ்ந்தது என்றார்கள்?” என்றார். “அரசே, அது இரண்டு குன்றுகளில் ஒன்றின்மேல் நின்றிருந்த கடல்நோக்கிய பெருவாயில். இது பாலைநோக்கிய தோரணவாயில்.” அவர் “ஆம், இரண்டு உண்டு அல்லவா?” என்றார். “மிகப் பெரியது” என்று விழிதூக்கினார். “ஆம், விண்ணவர் நகர்புகும் வாயில் என்பார்கள்” என்றார் கணிகர். ஃபானு “புகுந்தவர்கள் விண்ணவர்கள் அல்ல, பாதாள தேவர்கள்…”என்று சொல்லி சிரித்தார்.

அந்தச் சிரிப்பின் பொருளின்மையை உணர்ந்து சூழ்ந்திருந்தவர்கள் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் கணிகர் உரக்க நகைத்தார்.

 

பெரும்பாலையில் தோரணவாயிலுக்கு சற்று அப்பால் இருந்த முதல் சோலைக்குச் சுற்றும் துவாரகையினர் தங்கினர். மூங்கில் தட்டிகளாலும் தோலாலுமான கூடாரங்கள் அமைக்கப்பட்டன. நகரைவிட்டு வெளியே வந்ததும் ஃபானு பதற்றம் மிக்கவராக ஆனார். ஏதேதோ சொல்லி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். பின்னர் அதை அவரே உணர்ந்து இளிவரலாக ஏதேனும் சொன்னார். அது மிகமிக இழிந்ததாக, எரிச்சலூட்டுவதாக இருந்தது. அவரை சற்றும் தாங்கமுடியாதவராக அது ஆக்கியது. வாளை உருவி அவரை வெட்டி வீழ்த்திவிடவேண்டும் என எனக்கே உளம் பொங்கியது.

முதல்நாள் உச்சிப்பொழுதிலேயே பாலைநிலத்திற்குள் வந்துவிட்டோம். அது மழைக்காலம் அல்ல என்பதனால் கூரைகள் அமைக்கப்படவில்லை. பெரும்பாலானவர்கள் வெட்டவெளியிலேயே தங்கினார்கள். ஏற்கெனவே பாலைநிலம் முழுக்க பரவிக்கிடந்தவர்கள் அரசரும் பிறரும் அங்கே வந்துவிட்டதை அறிந்து திரும்பிவந்து சேர்ந்துகொண்டமையால் அந்திக்குள் அப்பகுதி மக்கள்திரளால் நிறைந்திருந்தது. மேலும் மேலும் வந்துகொண்டிருந்தனர். மூத்தவர் ஃபானு வெளியே வந்து அந்த மக்கள் பெருக்கை பார்த்தார். “நமது மக்கள்!” என்று பிரஃபானு சொன்னார். அவர் கைவிரித்தபோது அத்திரளில் இருந்து தேனீக்கூடு போன்ற பெருமுழக்கம் எழுந்தது. ஃபானு முகம் மலர்ந்து “என் குடி! என் அரசு!” என்றார். “அவர்களை கண்ணெதிரே பார்க்கிறேன்!”

துவாரகையின் களஞ்சியத்தில் இருந்து பல நாட்களுக்குப் போதுமான உணவுப்பொருட்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. அந்தியில் அடுமனைகள் அமைந்தன. உணவு சமைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. உணவு அங்கே அதுவரை இருந்த சோர்வையும் சலிப்பையும் இல்லாமலாக்கியது. அடுமனைப்புகை விழவுக்கொடி என வானிலேறியது. கூட்டத்தின் ஓசையையே அது மாற்றியது. உணவு உண்டபோது அது விழவுக்களியாட்டாக மாறியது. மக்கள் கூச்சலிட்டு நகைத்தனர். ஒருவரை ஒருவர் கூவி அழைத்தனர். ஆங்காங்கே பாடல்களும் எழுந்தன.

இரவு விண்மீன்கள் செறிந்த வான்கீழ் தங்கினோம். உணவு உண்டு ஓய்வுக்கு படுத்தபோது ஒவ்வொருவரும் இயல்படைந்தனர். பல நாட்கள் நீண்ட பதற்றத்திற்குப் பின் அந்தத் தளர்வே கொண்டாட்டமாக ஆகியது. எங்கிருந்தோ ஒரு பாடல் எழுந்தது. பின்னர் மெல்ல அந்தப் பெருந்திரளே இருளுக்குள் பாடிக்கொண்டிருந்தது. அவர்கள் நம்பிக்கை அடைந்தனர். நம்பிக்கையை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டனர். அன்றிரவு மக்கள் துயில நெடும்பொழுதாகியது. அந்த உள எழுச்சியை உடற்களைப்பு வென்றமையால்தான் அவர்களால் துயிலமுடிந்தது.

மறுநாள் எழுந்தபோது அந்த இடமே நன்கு பழகியதாக இருந்தது. நெடுநாட்கள் அங்கேயே இருப்பதைப்போல. துவாரகை மிகமிக அப்பால் மறைந்துவிட்டிருந்தது. உடைந்து சரிந்த துவாரகையை மக்கள் மறக்க விரும்பினர். பழைய துவாரகையை இனிய நினைவாக பேணிக்கொண்டனர். ஆகவே இருக்கும் இடத்தில் முற்றாக உளம் அமைந்தனர். காலையில் அங்கே ஒவ்வொருவரும் கொண்டிருந்த சுறுசுறுப்பை, அவர்களின் முகங்களில் இருந்த களிப்பை பார்த்தபோது வியப்பாக இருந்தது. சுருதன் என்னிடம் “மக்கள் குழந்தைகளைப்போல. எந்த மாற்றமும் அவர்களுக்கு உகந்ததே. ஆகவேதான் நல்ல ஆட்சியாளர்கள் மக்களுக்கு மாற்றங்களை அளித்துக்கொண்டே இருக்கிறார்கள்” என்றார்.

அங்கேயே தொடர்ந்து தங்கினோம். மேலே எங்கு செல்வது என்று முடிவெடுக்க முடியவில்லை. ஒவ்வொருநாளும் ஃபானு அவைகூடி மேலே செய்யவேண்டுவன குறித்து பேசினார். அப்பேச்சு நூறு முனைகளில் தொட்டு அறுந்து அமைய ஊணுக்கு எழுந்து செல்வார்கள். “எங்கேனும் சென்றாகவேண்டும்… இங்கே எத்தனை நாள் நீடிப்பது?” என்றுதான் பேச்சு தொடங்கும். “எங்கேனும் சென்றே ஆகவேண்டும்” என்று முடியும். “அவர் இங்கே அமைந்துவிட்டார். இந்த வாழ்வே நன்றாகத்தான் இருக்கிறது என்று எண்ணுகிறார் போலும்” என்றார் சுருதன்.

பதினைந்து நாட்களுக்குப் பின்னர் நாளும் பொழுதும் குறிக்கும்பொருட்டு மூத்தவர் ஃபானுவின் ஆணையின்படி நிமித்திகர் எழுவர் அழைத்து வரப்பட்டனர். உண்மையில் சிதைந்த துவாரகையிலிருந்து சிதறி வெளிப்போந்து அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்த குழுவிலிருந்து அவர்களை தேடிக் கண்டடைந்து அழைத்து வந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் நிமித்திகர் என்று அடையாளம் காட்டியமையால்தான் பிறரால் நிமித்திகர் என்று உணர முடிந்தது.

அவர்களைக் கண்டதுமே அவர்கள் எத்தகைய நிமித்திகர் என்பதை அறிந்தேன். கேட்பவருக்கு உகந்ததைக் கூறுவதே நிமித்திகத் தொழிலின் முதன்மை அறம் என்று நினைக்கும் எளியோர். ஆனால் அத்தகையோரே மக்களால் விரும்பப்படுகிறார்கள். தன் நூலில் ஆழ்ந்த நம்பிக்கையும் ஒழியாது அதில் உழன்றுகொண்டிருக்கும் உள்ளமும் கொண்டவனே நல்ல நிமித்திகன். மெல்ல மெல்ல அவன் புறத்தே இயங்கும் உலகின் நெறிகளை முற்றாக மறந்துவிடுகிறான். தன் நூலின் நெறிகளுடன் அதை ஒப்பிடுவதையும் விட்டுவிடுகிறான். வாழ்க்கை என்பது முற்றாகவே தன் நூல்களுக்குள் நிகழ்வது என்று நினைத்துக்கொள்கிறான். அந்நிலையிலேயே அவனால் உய்த்துணர்ந்தும் உசாவி உணர்ந்தும் சிலவற்றை சொல்ல முடிகிறது.

மெய்வாழ்வுடன் நூல் வாழ்வை இடையறாது ஒப்பிட்டுக்கொண்டிருக்கும் நிமித்திகன் ஐயம் கொண்டவனாகிறான். அவனால் எதையும் அறுதியாக கூற இயல்வதில்லை. அறுதியாக உணராதபோது அவன் ஆணித்தரமாக உரைக்க முற்படுகிறான். சொல் பெருக்குகிறான். தன்னை அறிந்தோனாகவும் கடந்தோனாகவும் காட்டிக்கொள்கிறான். ஓசையிடும் நிமித்திகன் உள்ளீடற்றவன். ஓசையடங்குதலே நிமித்திகத் தொழிலின் அடையாளம் என்பார்கள். வந்தவர்கள் வரும்போதே தங்களுக்குள் சொல்லாடிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பேச்சுக்கும் ஒரு சொல்லுக்கு நூறுசொல் எடுத்தனர். தந்தையே, பாரதவர்ஷத்தின் மாபெரும் குடியொன்றின் முதன்மை முடிவு அவ்வாறு அவர்களால் எடுக்கப்பட்டது.

அவர்களைக் கண்டதுமே அவர்களால் ஆகக்கூடியது ஒன்றுமில்லை என்று எனக்கு தோன்றியது. ஆனால் அத்தருணத்தில் நிமித்திகர் ஒருவர் வந்தாலொழிய எந்த முடிவையும் எடுக்க இயலாது. நிமித்திகர் கூறியதனால் மட்டும் எங்கும் எந்த முடிவும் எடுக்கப்படப் போவதில்லை, நிமித்திகரைக் கொண்டு எதையேனும் சொல்லவைத்து அவற்றில் ஒரு முடிவையே மூத்தவர் எடுக்கவிருக்கிறார். நிமித்திகர் இன்றி முடிவெடுக்க முடியாத நெடுங்கால வழக்கத்தின் விளைவு அது. நிமித்திகர் வந்துவிட்டதை அறிந்து யாதவ மைந்தர் அனைவரும் சூழக் கூடிநின்று நோக்கினோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்குகள் கொண்டிருந்தோம். ஆனால் அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும் என்பதில் அனைவரும் ஓரெண்ணத்துடன் இருந்தோம்.

மணலில் சூழ்ந்து நின்றிருந்த யாதவ மைந்தருக்கு நடுவே நிமித்திகர் அமர்ந்தனர். வெறும் மணலிலேயே சுட்டுவிரலால் களம் கிழித்தனர். சூழ்ந்திருந்த சிறு கற்களை சோழிகளென அமைத்தனர். அவற்றை நகர்த்தி கணக்கிட்டனர். பின்னர் அவர்களில் மூத்தவர் “இங்கிருந்து வடக்கு நோக்கி செல்வதே உகந்தது. வடக்கே பன்னிருநாள் நடையில் பிரபாச க்ஷேத்ரம் எனும் ஒரு இடம் இருக்கிறது. அங்கு சென்று நகர் அமைக்கலாம்” என்றார். மற்றவர்கள் “ஆம்” என்றனர். “அதுவே எங்கள் கணிப்புகளிலும் வெளிப்படுகிறது.”

“அது உகந்ததா?” என்று மூத்தவர் கேட்டார். “மிக உகந்தது. அங்கு பெரும்புல்வெளி ஒன்றிருக்கிறது. யாதவர்கள் புல்வெளிகளில் பெருக இயலும் என்பதை அறிந்திருப்பீர்கள். மிக அருகே கடலும் இருக்கிறது. நாம் கடலோரம் பிறந்து வளர்ந்தவர்கள். அங்கொரு சிறு படகுத்துறை அமையலாம். எதிர்காலத்தில் அது துறைமுகமாக வளரவும் கூடும். அங்கு பிறிதொரு துவாரகை எழும். அது தங்கள் புகழ் சொல்லும். நன்றே வளர்க!” என்றார் நிமித்திகர். மற்ற நிமித்திகர்களும் பிரபாச க்ஷேத்ரம் பற்றி சொல்ல தொடங்கினார்கள். அந்நிலத்தின் வளமும் அதன் இடப்பொருத்தமும் அதற்கும் யாதவர்களுக்கும் நடுவே இருக்கும் ஊழின் பொருத்தமும் அவர்களால் விளக்கப்பட்டன. யாதவ மைந்தர் விழிவிரித்து மறு சொல் இன்றி கேட்டு நின்றனர்.

“அவ்வாறே ஆகட்டும்! நாம் பிரபாச க்ஷேத்ரத்திற்கு கிளம்புவோம்!” என்று மூத்தவர் ஃபானு கூறினார். “பிரபாச க்ஷேத்ரத்தில் நமது குடி வேரூன்றட்டும். நம் கோல் அங்கே எழட்டும். நமது கொடிவழியினர் அங்கே செழிக்கட்டும். இது நம் எழுகை! வெல்க யாதவக்குடி! வெல்க யதுவின் குருதி! ஆம், அவ்வாறே ஆகுக!” கூடி நின்ற யாதவ மைந்தர் உரக்க குரலெழுப்பி வாழ்த்தினர். அவ்வாழ்த்தொலி அங்கிருந்து சூழ்ந்திருந்த துவாரகையினரிடம் பரவ மெல்லமெல்ல அந்தப் பெருந்திரள் பரப்பு அமைதி அடைந்தது.

அவரிடம் இருந்த அந்தத் தெளிவு எனக்கு பதற்றத்தை அளித்தது. அரசர் எவரும் அத்தனை உறுதியாக முடிவெடுத்துவிடக் கூடாது, அம்முடிவை அவ்வண்ணம் அப்போதே சொல்லிவிடவும் கூடாது. அமைச்சர்களிடமும் படைத்தலைவர்களிடமும் பிறிதொரு முறை உசாவவேண்டும். மாற்றுச் சொல் இருந்தால் தெரிந்துகொள்ளவேண்டும். அந்த இடத்தின் அனைத்துச் செய்திகளையும் அங்கு செல்வதற்கான வழிகளையும் ஆராய வேண்டும். ஆனால் மூத்தவர் அரசருக்குரிய தன்னொதுக்கம் உடையவரல்ல. அவர் எளிய யாதவர்களைப்போல உணர்ச்சிகளால் ஆளப்படுபவர். அந்த நேரத்து உளச்சோர்விலிருந்து அவர் அடைந்தது அந்த உளஎழுச்சி. மூடிய கதவை முட்டித்திறப்பது போன்றது அது. அத்தனை விசையுடன் மோதாவிட்டால் அந்த உளச்சோர்வை வெல்லமுடியாது.

நான் “மூத்தவரே!” என்றேன். “இனி ஒன்றும் எண்ணுவதற்கில்லை. இந்தப் பாலைவனத்தில் போதுமான அளவுக்கு தங்கிவிட்டோம். மேலும் மேலும் இங்கு நம்பிக்கை இழந்துகொண்டிருக்கிறோம். தனிமையை கொண்டிருக்கிறோம். இங்கிருந்து கிளம்புவதொன்றே நாம் செய்யவேண்டியது!” என்ற பின்னர் மூத்தவர் எழுந்து கைகூப்பினார். இளையோர் அளித்த பரிசுகளை எடுத்து நிமித்திகர்களுக்கு அளித்த பின்னர் கைகளைத் தட்டி “அனைவரும் கேளுங்கள், அனைவரும் கேளுங்கள்!” என்றார். நான் “மூத்தவரே!” என்று சொல்வதற்குள் “அரச அறிவிப்பு!” என்றார்.

கூடி நின்ற அனைத்து இளையோரும் குடிகளும் எழுந்து நின்று அவரை பார்த்தனர். “ஆம், பிறிதொரு துவாரகையை உருவாக்கவிருக்கிறோம்!” என்றார். சற்றுநேரம் எவரும் எதுவும் சொல்லவில்லை. வெற்றுவிழிகளுடன் வெறித்து நோக்கி அமர்ந்திருந்தார்கள். “நாம் துவாரகையிலிருந்து வெளியேறியது மேலும் சிறந்த நகரை உருவாக்குவதற்காக! உறுதியானதும் வெற்றிகொள்ளமுடியாததுமான பெருநகர் ஒன்றை நாம் உருவாக்குவோம்! இதோ அதன்பொருட்டு எழுகிறோம்” என்று மூத்தவர் ஃபானு கூறினார். ஃபானுமான் “வெல்க யாதவப் பெருங்குடி! வெல்க அரசர் ஃபானு!” என்று கூவினான். அப்போதும் எவரும் வாழ்த்தொலி எழுப்பவில்லை.

ஃபானுமானும் பிரஃபானுவும் பிறரை நோக்கி கைகாட்டிவிட்டு “வெல்க! வெல்க!” என்று கூச்சலிட்டனர். ஒருகணம் கழித்து அனைத்து மக்களும் உரக்க ஒலியெழுப்பி கூச்சலிட்டனர். “நாம் பிரபாச க்ஷேத்ரத்திற்கு செல்லவிருக்கிறோம். அந்த நிலத்தில் ஒரு நகரை உருவாக்குவோம். அருகே கடல் உள்ளது. அங்கொரு கடல் துறைமுகத்தை உருவாக்குவோம். நாம் செல்லுமிடம் துவாரகைபோல் வெறுநிலமல்ல. பாறை முகடுமல்ல. அது யாதவருக்கு உகந்த புல்வெளி. அங்கு கன்று பெருக்குவோம். செல்வம் செழித்ததும் நகர் முனைவோம். நம்மிடம் கருவூலம் உள்ளது. நாம் இன்னும் எதையும் இழந்துவிடவில்லை” என்றார் ஃபானு. “அஸ்தினபுரிக்கு நிகரான கருவூலத்துடன்தான் அங்கு செல்கிறோம். அங்கு சென்று ஒரு பெருநகரை எதிரிகளின் கண்முன் உருவாக்கி எழுப்புவோம். துவாரகை இங்கு சரிந்து அங்கு எழுந்தது என்றே பொருள்! கிளம்புக!” என்றார்.

தொடர்புடைய பதிவுகள்

பத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்

$
0
0

பலிக்கல்[சிறுகதை]

அன்புள்ள ஜெ,

பலிபீடம் நெஞ்சை கனக்கவைத்த கதை. மனித வரலாறு தோன்றிய நாள் முதல் மனிதன் கேட்டுக்கொள்ளும் கேள்வி- இங்கே நீதி என்று ஒன்று இருக்கிறதா என்றுதான். இல்லவே இல்லை என்றுதான் பாதிப்பெர் சொல்வார்கள். சரி, அப்படியென்றால் நீ எதை நம்பி வாழ்கிறாய், நீதி வேண்டும் என்று எவரிடமும் நீ கேட்டதே இல்லையா என்று கேட்டால் விழிப்பார்கள். எப்படியும் ஒருவாரத்திற்கு ஒருமுறையாவது நாம் நீதி வேண்டும் என்று கேட்கிறோம். இது நீதி இல்லை என்று குமுறுகிறோம். அதாவது இங்கே நீதி உள்ளது என்ற ஆழமான நம்பிக்கைதான் நம்மை வாழச்செய்கிறது

மனிதனின் மனதுக்குள் நீதியுணர்ச்சி வாழ்கிறது. இல்லாவிட்டால் இத்தகைய பெரிய ஒரு பண்பாடு இங்கே நீடிக்காது. இன்னும் நல்ல நீதிக்காக நாம் போராடலாம். ஆனால் நீதி இல்லாத ஒரு நாள்கூட இங்கே மனிதவாழ்க்கை நீடிக்கமுடியாது என்பதுதான் உண்மை. பலிக்கல் கதையில் கடைசியில் போற்றியின் வாயில் வந்து எல்லாரையும் மன்னிப்பது என்ன? குற்றம் செய்தவனையும் பாதிக்கப்பட்டவனையும் சரிதான் சின்னப்பிள்ளைகள் என்று சொல்வது என்ன? நீதியைப்பற்றியும் நீதியை மீற மனிதனை உந்தும் ஆசையைப்பற்றியும் அறிந்த ஒரு மூதாதைதான் இல்லையா?

சாரங்கன்

***

அன்புள்ள ஜெ.

மனித நாகரிகம் இன்றுள்ள வளர்ச்சியை நாகரிகத்தை அடைந்தற்கு ஒரு முக்கிய காரணம் சமூகம் என்றோரு கற்பிதத்தை உருவாக்கி அதற்காக உயிர் கொடுத்த தியாகிகளால்தான்.

நம்மை விட வலுவான யானையோ சிங்கமோ ,  மிருக கூட்டத்தின் வெற்றிக்காக என் தலையை கடவுளுக்கு காணிக்கையாக்குகிறேன் என சொல்லப்போவதில்லை. ஆனால் நவகண்டம் என்ற சுயபலி ஆயிரமாண்டுகளுக்கு முன்பே இங்கு இருந்திருக்கிறது. அந்த பலி பீடங்களில்தான் ஜனநாயக யுகம் அமைந்துள்ளது

இன்று மனித உரிமையை உண்மையாக பேணக்கூடிய ஐரோப்பிய நாடுகள் கூட்டம் கூட்டமாக அப்பாவி மக்களை கொன்று குவித்தவைதான்.  அந்த,மக்களின் பிணங்களின் மீதுதான் இன்றைய நாகரிக உலகம் அமைந்துள்ளது

உலகப்போரில் உயிரிழந்த வெள்ளையர்களின் , வதை முகாம்களில் உயிரிழந்த யூதரககளின் தியாகத்தால்தான் இன்று போர்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட உலகில் வாழ்கிறோம்இயற்கை கொடூரமான சற்றும் கருணையற்றவழிகளில்தான் தன் வழியை அமைக்கிறது.

வெண்முரசின் கிருஷ்ணன் தன் உறவினர்கள் என்றோ தன் புதல்வர்கள் என்றோ எந்த கருணையும் காட்டுவதில்லை

குடிகளின் கண்ணீர்தான் அரசனை அழிக்கும்படை என்பதை பின் தொடரும் நிழலின் குரலில் பார்க்கிறோம். இந்த செய்தியை நிலைநாட்ட ஏன் இத்தனை அப்பாவிகளை , அறிஞர்களை , தலைவர்கள் பலியானார்கள் என யாரிடம் போய் கேட்க முடியும்

பலிக்கல் கதையில் ஏன் செத்தோம் என தெரியாமலேயே சாகும் ஜார்ஜ் தாமஸ் மகன் ,  எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை என கதறும் முத்தாலத்து சங்கரன் போற்றி , அவரது மனைவி, அழகிய நம்பியா பிள்ளையின் குடும்பத்தில் பிறந்த வாரிசுகள் என யாரிடமுமே இயற்கை கருணையுடனோ நியாயத்துடனோ நடந்து கொள்ளவில்லை..அனைவருமே இயற்கையின் பலி கடாக்கள்தான்

இப்படி ஒரு பலி பீடம் ஏன் அமைக்கப்பட்டது என்பதை வானுக்கு அப்பால் இருந்து அனைத்தையும் நோக்கும் அவனே அறிவான் அல்லது அவனும் அறிய மாட்டான்.  அது வேறு விஷயம்

ஆனால் நம் கண் முன் தெரிவது ஒன்று உண்டுஎவ்வளவோ கண்ணீர் துளிகள் விழுந்தபின்னும் பூப்பூக்கும் பூமி போல , மூடியுள்ள அறையில் எப்படியோ சிறகடிக்கும் குருவி போல , நினைத்துப்பார்க்கவே முடியாத வேதனையின் உச்சத்தில் நின்றபடி  வெளிவரும் ” சரி விடு, இரண்டு பேரும் நமக்கு ஒண்ணுதான் ” என்று மீட்பு அளிப்பதும் கருணையற்ற இயற்கையின் இன்னொரு பக்கமாக அமைந்துள்ளது

அன்புடன்

பிச்சைக்காரன்

***

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே? இனிமேலும் தேவையில்லை என்ற அளவில் பத்துலக்ஷம் காலடிகள் பற்றிய கடிதங்கள் வந்துவிட்டன. இனி புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. அந்தக்கதையில் சாகிப் செய்தது சரியா என்றெல்லாம் சிலர் பேசியதை கண்டேன். அவர்கள் அந்தக் கதை அத்தனை கஷ்டப்பட்டு பெரிதாக உருவாக்கி கொண்டுவரும் அமைப்பைப் பற்றிய கவலையே இல்லாமல் அந்த சம்பவத்தைப் பற்றி பேசுகிறார்கள். அது சரியா இல்லையா, அதை செய்யலாமா கூடாதா என்று அந்தக்கதைக்குள் பேசமுடியாது. அந்த தப்பை அந்த அமைப்பு தாங்கிக்கொள்ளாது, ஒட்டுமொத்தமாக சரியும் என்பதுதான் அந்தக்கதை சொல்லும் பதில். அந்த மிகப்பெரிய அமைப்பை அப்படித்தான் நாம் புரிந்துகொள்ளமுடியும். எல்லா அமைப்புக்களும் அப்படித்தான். எல்லா பெரிய அமைப்புக்களும் வீழ்ச்சியை தொடங்குவது எங்கோ ஒரு சின்ன பிழை நடக்க ஆரம்பிக்கும்போதுதான். ஒன்றும் செய்ய முடியாது என்றும் தோன்றுகிறது

சிவக்குமார்.எம்

***

அன்புள்ள ஜெ,

என் அறையில் ஏதோ எடுக்கச்சென்றவன் சொடுக்கியது போல ’பத்துலட்சம் காலடிகள்’ கதையில்  மறுபடியும் முட்டிக்கொண்டேன். மீண்டும் கதையையும் கடிதங்களையும் நிதானமாக வாசித்தேன்.

சாகிப் செய்தது சரியா?

கதை நேரடியாகவே வினவுவது இதைத்தான். கதை முடிந்தவுடன் நாம் கேட்டுக்கொள்ளவேண்டியதும் இந்தக் கேள்விதான் என்று நினைக்கிறேன்.  கதையில் இரண்டு பதில்கள் உள்ளன. உண்மையில் அவை பதில்கள் அல்ல. கதைமாந்தர்களின் மறுமொழி. கதைசொல்லி சொல்வது ஒன்று. மற்றொன்று ஔசேப்பச்சனுடையது.

1) “என்ன சொல்ல? அவர்களின் மனநிலை எனக்குப் புரியவில்லை” என்றேன் “அவர்கள் வேறு ஒரு யுகத்தைச் சேர்ந்தவர்கள்.”

2) “நான் அதைப்பற்றி ஆயிரம் தடவையாவது நினைத்துப்பார்த்திருக்கிறேன்” என்றான் ஔசேப்பச்சன் “அப்போதெல்லாம் மாப்பிளாக் கலாசிகள் ரயில்வே வேகன்களை தூக்கிய காட்சிதான் நினைவுக்கு வரும். மூத்த உஸ்தாத் என்னிடம் சொன்னார், ஆயிரத்துக்கு ஆயிரம் கால்வைப்புகள், அவ்வளவுதான் என்று. ஆயிரம் பெருக்கல் ஆயிரம். பத்துலட்சம் காலடிகள். ஆனால் அதில் ஒன்று, ஒன்றே ஒன்று, தவறாகப் போய்விட்டால் அவ்வளவுதான். தவறு பெருகிப்பெருகி கப்பல் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும்.”

இந்த இரண்டு மறுமொழிகளும் ஒரு முக்கியமான கேள்வியையும் அதையொட்டி சிந்திப்பதற்கான வழியையும் சுட்டுகின்றன.

உண்மையில் ஹாஷிமின் கொலையை நியாயப்படுத்திவிடமுடியுமா?

ஔசேப்பச்சனின் மறுமொழியின் பின் உள்ள நியாயப்படுத்தலின் அடிப்படை என்ன? தர்க்க ரீதியான நியாப்படுத்துதல் இது.  இன்னும் விரிவாக நோக்கினால்  மெட்டீரியலிசத்தின் அடிப்படையில் அமைந்த தர்க்கம் இது.  அந்த தர்க்கம்தான் ஒரு clockwork போல செயல்படும் ஒரு பிரபஞ்சத்தை கற்பனை செய்யும். காரண காரிய உறவு என்றும் ஒரு செயலுக்கு பின் இன்னொரு செயல் அதன்பின் இன்னொரு செயல் என்றும் சென்றுக்கொண்டே இருக்கும். ஒரு சிறு தவறு பெருகிக்கொண்டே செல்லும் என்று சொல்வது இந்த விரிவான தர்க்கத்தின் ஒரு பகுதிதான். தர்க்கத்தில் இருந்து எழும் இந்த எதிகல் ஸ்டாண்ட் ஒரு கொலையை நியாயப்படுத்துவிடமுடியுமா?  இந்த தர்க்கத்தின் சரியான குறியீடுதான்  பத்தேமாரி. ஒரு கொலைக்கான நியாயப்படுத்தல் ஒரு பத்தேமாரியின் கணக்கில் இருந்து வரும் ஒன்றா? அப்படி நினைப்பதால்தான் அது

சிறு பிழை = மரணதண்டனை

என்ற சமன்பாட்டில் வந்து நிற்கிறது. சாகிபின் தீர்ப்பும் இதுதானே! இன்னும் கொஞ்சம் பின்னால் சென்றால் ஒரு சக்கரவர்த்தியின் நீதியும் இதுவாகத்தான் இருக்கும். சாகிப் என்ற ஷத்ரியன் சொல்வது ஒரு சக்கரவர்த்தியின் நீதியைத்தானே! யாரும் மீறமுடியாத நெறி அது. மீறினால் மரணம்தான் தண்டனை. ஏனெனில் சிறுதவறு  பெரிதாகி எல்லாம் அழிந்துவிடும்.  அவர் உள்ளூர விழைவது  என்ன? மரபின் தொடர்ச்சிதான் இல்லையா? மரபு அழியாமல் இம்மார்டலாக செல்ல சிறு பிழைபொறுக்கமுடியாத நெறிதான் சரியா?. Does the End justify the means?

பிழைபொறுக்கமுடியாத நெறி என்பது சென்ற காலத்து அரசனின் நெறி. அதை காப்பது வாள். மரணம்தான் ஒரே தண்டனை. ஒரு சிறு பிழையை அனுமதிக்காத நீதி இந்த நூற்றாண்டிற்கு உரியதாக இருக்க முடியாது.  ஒரு கொலையைச் செய்துவிட்டு அசராமல் அமர்ந்திருக்கும் ஒரு சக்கரவர்த்தியின் முன் ஒரு போலீஸ் அதிகாரி சென்று நிற்கும்போது ஒரு துணுக்குறல் ஏற்படுகிறது.  அவரை கைதி செய்து  கோர்ட்டுக்கு எல்லாம் இழுத்துச்செல்லமுடியாது  என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

சாகிபின் முன்னும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் ஆயிரவருட மரபின் முன்னும் கொலை, குற்றவுணர்ச்சி போன்ற அனைத்தும் பொருளிழந்து போய்விடுகிறது. அது 20ம் நூற்றாண்டின் நிகழ்வது ஒரு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. கதையும் அவரை மேலே மேலே கொண்டுச்செல்கிறது. வசீகர அழகு.  அபாரமான நகைச்சுவை உணர்வு. கலையை கொண்டாடுபவர். இயற்கை ரசிகர். மனிதர்களின் ஆழத்தை அறிந்தவர். இந்த நூற்றாண்டின் இம்பரசிவ்வான ஆளுமை அவர். ஆனால் நீதியுணர்வு என்று வரும்போது மட்டும் ஒரு கடந்த கால சிம்மாசனத்தில் சென்று அமர்ந்து கொள்கிறார்.

எனவே சாகிப் ஒரு வசீகர monarch க்கின் வார்ப்பாக இருக்கலாம்.  ஆனால் சென்ற யுகத்தின் எச்சம் அவர். ஹாஷிம் அரபிக்கடலுக்குள் சென்றுவிட்டான். ஒரு அரசனின் கிரீடத்தை நினைவுறுத்தும் துருக்கி தொப்பியும் கடலுக்கு அடியில் சென்றுவிட்டது. ஆயிரம் வருடமாக  இறுக்கமான ஒரு மரபு கடைசியில் முடிந்தவிட்டது என்பதைப் போல. இனி குருதிக்கறை படிந்த கொலைவாளுடன் உறுதியான நரம்புகளுடன் நிற்கும் சக்கரவர்த்தி பிம்பத்தையும் சந்தேகமில்லாமல் அரபிக்கடலில் தூக்கிவீசவேண்டியதுதான்.

இப்படி ஒரு வாசிப்புக்கோணம் இருக்கிறதா? அல்லது இது என் கோணல் வாசிப்பா? நீங்கள்தான் சொல்லவேண்டும்.

அன்புடன்,
ராஜா.

***

அன்புள்ள ராஜா

கதையில் சரிதவறுகளை ஆசிரியன் சொல்லக்கூடாது. அவனுக்கு முற்றிலும் அப்பாற்பட்டது அது

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

கூடு,சிவம்- கடிதங்கள்

$
0
0

சிவம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

சிவம் ஒரு தத்துவார்த்தமான விளையாட்டை ஆடுகிறது. அன்பே சிவம் என்ற வார்த்தையின்மேல் அத்வைதியின் பகடியுடன் ஆரம்பிக்கிறது. அன்பை தூக்கி எவர் மண்டையிலும் போடலாம். தலைமுறைதலைமுறையாக பூசை அபிசேகம் செய்யப்பட்டு மழமழவென்று ஆனது. தேவை என்றால் மனிதன் அதன்மேல் ஏறிநின்று வேறு தெய்வத்தை தொழவும் தயங்கமாட்டான்.

அந்த  ‘சிவம்’ பற்றிய கதை இது. ஜலசமாதி ஆகும் அந்த சாமியாரும் அன்பை கங்கையில் இருந்து எடுத்து வைத்து பூசை செய்பவர். சிவோகம், அன்பே நான் என்று சொல்பவர். எழுந்ததும் காலால் தட்டி அப்பால் வீசிவிட்டுச் செல்பவர். அன்பு என்பது உண்டா என்றால் உண்டு. ஆனால் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. அன்பை ஒரு நிபந்தனையாகக் கொண்டவர்கள் அல்ல

கதையின் ஒவ்வொரு நிகழ்வும் வெவ்வேறு இடங்களைத் தொட்டுத் தொட்டு மீட்டுகிறது.சுடலை, அதில் உணவைச் சுட்டுத்தின்பது, உருகிவழியும் காலில் இருந்து உதிரும் வெள்ளிநகை… ஆன்மிகமான மறைபொருள் நிறைந்த கதை

எம்.குமார் மூர்த்தி

***

அன்புநிறை ஜெ,

பாதைகள் எதுவானாலும் அது கங்கையை நோக்கியே. எனில் பித்தினால் பாய்பவரை மீட்டு வெளியேற்றுவதும் முழுமைக்கு மீள்பவரை அதில் கரைக்கவும் அறிந்த துறவியரின் அன்பு. காசியில் சென்று தனலில் எரியவோ புனலில் கரையவோ நீண்ட தவம் தேவைப்படுகிறது.  தானாகக் கழன்று விழும் வரை அணையாச் சிதையருகே காலபைரவன் காத்திருப்பான் ஒரு வெட்டியானின் அன்போடு.

என்றென்றும் மனதில் நிற்கப்போகும் ஒரு வரி – “நில்லாக்காலம் நிகழும் உடல்”

உடலுக்கும் மனதுக்குமான உறவைச் சொல்லும் ஒரு படிமம் – “ஒழுகும்படகில் எழுந்து எழுந்து அமரும் பறவை”

இக்கதையின் முகப்புப் படத்தை எவ்வண்ணம் தெரிவு செய்தீர்கள். இக்கதையை நினைத்ததும் அக்கொடியே மனதில் காட்சியாய் எழுகிறது. நெருப்பென, அதன் தழலென, நின்று திகழும் அகலெனமூன்று முறை இக்கதையில் அச்சித்திரம் வருகிறது.

காவிநிறம் புலரியில் தீயென்றே தெரியும்.

புலரிவெளிச்சத்தில் காவிக்கொடி தழலென்றே துலங்குவது.

காவிக்கொடி அகல்சுடர் என படகின் முனையில் படபடத்தது

மிக்க அன்புடன்,

சுபா

***

கூடு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கூடு ஒரு சவாலான கதை. அது திட்டவட்டமான தகவல்கள், அதைச்சார்ந்த தத்துவார்த்தமான ஆய்வுகள், ஊடே ஓடும் பகடிகள் வழியாகச் செல்கிறது. மூளையை ஒருவகையில் மந்திரித்து மலைக்கவைத்துவிடுகின்றன இந்த செய்திகள். அந்த நிலத்திலுள்ள வாழ்க்கை, அங்கே பயணம் செய்யும் விதம், அந்த நிலப்பகுதி, அந்த மடாலயங்கள் எல்லாமே நேரில் விரிகின்றன. அதன்பின் அப்படியே உருவகமாக கற்பனையாக மேலே செல்கிறது

இரண்டுவகையான ஃபேன்டஸி கதைகள் உள்ளன. முதலிலேயே இது ஃபேண்டஸி உருவகம் என்று சொல்லிவிட்டு பேசுபவை. மேஜிக்கல் ரியலிச கதைகள் அவ்வகைப்பட்டவை. இன்றைக்கு உலக இலக்கியத்தில் வெளிவரும் பலகதைகள்  ‘மிதமிஞ்சிய’ செய்திகளை அள்ளிஅள்ளி வைத்து வாசகனை மலைக்கச் செய்தபின் மேலே அவனை ஊடுருவுகின்றன. நாம் defencelessஆகிவிடுகிறோம். என்ன பிரச்சினை என்றால் அச்செய்திகளை எதிர்ப்புடன் பார்த்தாலும் defenceless ஆகிவிடுவோம். கதையின் மையம் நம்மை அறியாமல் ஊடுருவிவிடும்

மூன்றுமுறை உடல்திறந்து வெளியே வருவதன் தவம் பற்றிய கதை. ஜெ, நான் மீண்டும் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. தனிப்பட்ட முறையில் எழுதியிருக்கிறேன். 1999ல் நான்காண்டுகளில் நான் இறந்து கூட்டுப்புழுவாகி உடல்திறந்து வெளியே வந்தேன். மூன்றுமுறை உடல்திறப்பேனா என்று தெரியாது. ஆனால் ஒருமுறை வந்ததே மிகப்பெரிய ஒரு ஆன்மிக மறுபிறப்பு

எம்.

***

இனிய ஜெயம்,

கூடு வாசித்தேன். கதைக்கு வெளியே அது தொடர்பான வேறு சில எண்ணங்கள் எழுந்து வந்து அலைக்கழித்தது. உதாரணமாக காந்தி. என்னைத் துண்டாடுங்கள் இந்த தேசத்தை துண்டாடாதீர்கள் என்ற அவரது இறைஞ்சல்.  கூடு கதையின் குரு. அவரது அகமே அதன் ஆழமும் விரிவுமே அந்த மடம். போக புத்தர் துவங்கி அமிதாப புத்தர் தொடர்ந்து அங்கிருக்கும் ஒவ்வொரு ஓவியமும் பொருளும் பெரும்மணியும் எல்லாமும் அவரது அகத்தில் உறையும் வெவ்வேறு விஷயங்களே. விண்ணும் மண்ணும் இணைக்க வியனுரு கொண்டு எழும் அவரரது அகமே அந்த மொனாஸ்ட்ரி. அப்படித்தான் காந்திக்கு அவரது தேசமும்.  காந்தியின் தலை கொய்யப்பட்டது. பின்னர் சுடப்பட்டது துண்டாடப்பட்ட உடல் மட்டுமே.

ஒரு மொனாஸ்ட்ரி என்பது எந்த நிலையிலும் அதை உருவாக்கிய ஆத்மீக ஆளுமையின் அகத்துடன் இணைந்த ஒன்றே. அது வள்ளலார் சபையோ. அன்னையின் மந்திரோ. எதுவாகிலும். சென்ற வருடம் கோவில் பாதுகாப்புக்கு என்றும், நகரை அழகுபடுத்த என்றும் நீதிமன்ற உத்தரவின்படி பூரி ஜெகந்நாதர் கோவில் எல்லை சுவர் தொட்டு 75 மீட்டர் ரேடியஸ் சுற்றளவில் இருந்த அனைத்து கட்டிடங்களும் அகற்றப்பட்டன. இதில் ஆக்கிரமிப்பு அகற்றம் எனும் சீரிய பணிக்குள் சிக்கி சிதைந்த மடங்கள் பல. ஒவ்வொன்றும் நூற்றாண்டிகள் பழமை கொண்டது. பூரி கோவிலின் சடங்கு ஆசாரங்களுடன் பின்னிப் பிணைந்தது. நஷ்ட ஈட்டைக் கொண்டு இடம் பெயர்ந்து செல்ல அவைகள் எல்லாம் பாணி பூரி கடைகளா என்ன?  இக் கதை வாசித்த  பிறகு அங்கே சிதைந்த ரகுநந்தன் நூலகம் ஏமாற் மடம் எல்லாம் வேறு அர்த்தம் கொள்கிறது.

கடலூர் சீனு

***

தொடர்புடைய பதிவுகள்

ஐந்து நெருப்பு, நஞ்சு- கடிதங்கள்

$
0
0

ஐந்து நெருப்பு[ சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஐந்துநெருப்பு படித்தேன். எப்படி சிலர் கடுமையானவர்களாக ஆகிறார்கள், எது அங்கே செலுத்துகிறது என்பது எப்போதுமே ஒரு கேள்விதான். என் பணியில் நான் சிலசமயம் குற்றவாளிகளாகிய பெண்களிடம் பேசுவதுண்டு. அவர்கள் தாங்கள் வந்த வழியைச் சொல்வதில்லை. ஆனால் தீரவிசாரித்துப் பார்த்தால் மனம் கொந்தளிக்கவைக்கும் பலவிஷயங்கள் தெரியவரும். இந்தக் கதையில் வருவதுபோல மூன்றுபக்கம் நெருப்பு. ஆகவே முள்ளில் குதிக்கிறார்கள்

மிக மிக யதார்த்தமான கதை. ஆனால் கதை வாசித்து பலநாட்களுக்கு பிறகு முள்மேல் குதித்து உடம்பெல்லாம் முள்ளாகக் கிடக்கும் முத்துவின் காட்சி ஒரு படிமம் போல மனதில் நின்றுவிட்டது. நாம் இப்படி நெருப்புக்குப் பயந்து முள்ளில் குதிப்பவர்களைத்தான் அடிக்கடி கொடுங்குற்றவாளிகள் கொலைகாரர்களாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்

நான் குற்றவாளிகளைப் பார்த்தவரை இந்த ஐந்துநெருப்பு சூழல் அவர்களின் ஏழு எட்டு வயதுக்குள் வந்துவிடுகிறது. மேலும் இருபது ஆண்டுகள் கழித்துதான் அவர்களை நாம் பார்க்கிறோம். அப்போது அவர்கள் திரும்பமுடியாத இடம் வரை வந்திருப்பார்கள். ஆகவேதான் கிரிமினல் மனம்திரும்பமாட்டார்கள் என்று சொல்கிறோம்

மாரிச்செல்வம்

***

அன்பார்ந்த ஜெ. வணக்கம் நலம்தானே?

ஐந்து நெருப்பு படித்தேன். வாழ்வின் அவலத்தை உரக்கச்சொல்லும் உண்மைக்கதை. பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது முத்துவின் வாழ்வில் நடக்கிறது.

இங்கு வாழஇயலாச் சூழலும் ,முள்காட்டுக்காரனின் தொல்லையும் முத்துவைத் திடீர் முடிவெடுக்க வைக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் பணக்கட்டையும் துப்பாக்கியையும் அவன் எடுத்து வைப்பது.

வறுமை அவனை எப்படியாவது வாழவேண்டும் என்று போ போ என்று துரத்த பம்பாய் செல்ல எங்குமே வெளியில் அதிகமாக வராதவன்முடிவெடுக்கிறான்.

தற்கொலை செய்து கொண்டவரின் வாழ்வு, முத்துவின் அம்மாவின் பழைய கதை இனி நடக்க இருக்கும் முத்துவின் பம்பாய் வாழ்வு எல்லாமே ஒரு நாவல் எழுதும் காரணிகளாக இருக்கின்றன.

கதை படித்துவரும்போதே மனம்கனத்து விடுகிறது. அவ்வப்போது அதை மாற்றவே,”போன சென்மத்துல இவ கோளியாக்கும்” ” கறி வைக்க வச்ச கோளி” என்ற வரிகள் உதவுகின்றன.

அச்சூழலிலும் மாம்பழக்கலர் சுடிதார் என்னும் கோமதியின் வார்த்தைகள் அவளின் வெகுளியைக் காட்டுகின்றன.

எந்தச் சூழலிலும் வறுமைக்கோட்டிலிருப்போர் வாழ ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும் மற்றவரைப் பற்றிக் கவலையின்றித் தன் வாழ்வை நடத்திச் செல்வர் என்பதுதான் தூக்கில் தொங்கியவர் பற்றிக் கவலைப் படாமல் முத்து பம்பாய்ப் பயணத்திற்குத் திட்டமிடுவதைக் காட்டுகிறது.

கதையில் மிகை என்பதே இல்லை.அதுவே கதையின் மீது நம்பகத்தன்மையை அதிகப்படுத்துகிறது.

வளவ. துரையன்

***

நஞ்சு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நஞ்சு ஒரு கூர்மையான கதை. மனதின் நஞ்சு எப்படி வெளிப்படுகிறது என்பது. ஒரு உவமை சொல்லத் தோன்றுகிறது. என் சொந்த ஊர் கொடைக்கானல் பக்கம். அங்கே ஒரு பூமுள் உண்டு அது எதிராக கையை வைத்தால் உள்ளே போய்விடும். எடுக்கவே முடியாது. ஏனென்றால் அத்தனை சிறியது. ஆனால் செப்டிக் ஆகும். கட்டியாகி சீழாகி வெளியேவரும். அது உடைமுள்ளை விடகொடியது

இந்தக்கதையில் ஆண்நஞ்சும் பெண் நஞ்சும் வருகிறது. ஆண்நஞ்சு உடைமுள் மாதிரி. பெண் நஞ்சு என்பது பூமுள்மாதிரி, அந்த வேறுபாடு கதை முழுக்க தெளிவாகிக்கொண்டே வருகிறது

கே.பழனிராஜ்

***

வணக்கம் ஜெ

நஞ்சு சிறுகதையை வாசித்தேன். கண்டவுடன் அவளைக் கொல்லவேண்டும் என்ற வரியுடன் செல்கிறவன், அவளைப் பார்த்தவுடன் மனதை மாற்றிக் கொள்கிறான். நஞ்சின் முதற்துளி விழுங்கியப்பின் அதன் மீதான கசப்பு குறைந்துவிடும் தருணம். அவனும் அவளும்  பல்லாயிரம் முறை கற்பனை செய்து பார்த்திருந்த தருணம்.

அரவின் குமார்

மலேசியா

***

தொடர்புடைய பதிவுகள்


லாசர் [சிறுகதை ]

$
0
0

”என்னலே அது?” என்றபடி ஜான்சன் ஓடி அருகே வந்தான். லாசர் அதை உடனே மண்ணை அள்ளிப்போட்டு மூடிவிட்டான். “ஏலே என்னலே அது? ஏலே சொல்லுலே” என்றான் ஜான்சன்.லாஸர் அதை அவனிடமிருந்து எப்படி மறைப்பது என்று தெரியாமல் “ஒண்ணுமில்லே” என்றான். அவன் முகமும் உடலும் எல்லாவற்றையும் காட்டின. அவன் பதறிப்போயிருந்தான்.

“என்னவாக்கும்?” என்றபடி ஜான்சன் அருகே அமர்ந்தான். “பைசாவா? பைசாவாலே?” அவன் குரல் தழைந்தது. “பைசான்னா ஆருகிட்டையும் சொல்லாண்டாம். நாம ரெண்டுபேரும் எடுத்துக்கிடுவோம்… திருச்செந்தூருக்கு போவோம்…அங்க கடல் உண்டு கேட்டியா?”

லாஸர் மேலும் திகைப்புடன் பார்த்தான். திருச்செந்தூர் திருச்செந்தூர் என்று அவன் உள்ளே சொல் தத்தளித்தது. “இல்லேண்ணா தூத்துக்குடி… அங்க பெரிய கடல் உண்டு… அதுக்குமேலே கப்பல் உண்டுலே. பெரிய கப்பல்… இந்தா இந்த வீட்ட காட்டிலும் பெரிசாட்டிருக்கும். அதிலே ஏறினா பெனாங்கு கொளும்பு போவலாம் தெரியுமா?”

லாஸர் பெருமூச்சுவிட்டான். ஜான்சனுக்குத் தெரியாத செய்திகளே உலகில் இல்லை. அவன் அழத்தொடங்கினான். ஏன் அழுகிறான் என்றே அவனுக்குத்தெரியவில்லை. ஆனால் என்ன அழகான பெயர்கள். திருச்செந்தூர், தூத்துக்குடி. கடல் உள்ள ஊர்களே அழகான பெயர்கள் கொண்டவை. அவன் தலைகுனிந்து அமர்ந்து விம்மினான்.

“ஏலே, ஏம்பிலே? சொல்லு. என்னவாக்கும்?” லாஸர் ‘அது பைசா இல்லை” என்றான். ‘பின்ன?” என்றான் ஜான்சன். “அது வேற ஒண்ணு…” ஜான்சன் மண்ணைப்போட்டு அவன் மூடிய குழியை நோக்கியபின் “பவுனா?” என்றன். இல்லை என லாசர் தலையாட்டினான். “பின்ன என்னலே?”. என ஜான்சன் எரிச்சலடைந்தான்.

லாசர் அழுகையை நிறுத்தினான். ஆர்வமெழுந்தபோது மனதில் துயர் இல்லாமலாகியது. “அது ஒரு காரியமாக்கும்… இந்தா காட்டுதேன்” அவன் மிகமிக மெல்ல ஒரு இலையால் மணலை விலக்கினான். ஜான்சன் ஆவர்த்துடன் எட்டிப்பார்த்தான்.

உள்ளே இருந்த பொருள் வட்டமாக இருந்தது. அப்பச்சியின் சுண்ணாம்புச் செப்பு போல. அதற்கு நீளமான வால் இருந்தது. வாலைச் சுருட்டி அருகே வைத்திருந்தது. ஈரமண்ணில் நத்தை ஊர்ந்து உருவாகும் ஒளிக்கோடு போன்ற வால். “வாலிருக்கு” என்றான் ஜான்சன். “ஏலே அதுக்கு சீவனிருக்கு, பாரு” அது டிக்டிக்டிக்டிக் என ஓசையிட்டுக்கொண்டிருந்தது.

“ஆமெலே. சீவன் இருக்கு” லாசர் அதை தொடப்போனான். ‘தொடாதே” என்று ஜான்சன் சொன்னான். “அது விசவண்டாக்கும்… பாருலே அதுக்க கண்ணை…கொடுக்கு சுத்துது பாரு” அதற்கு புள்ளிப்புள்ளியாக கண்கள் இருந்தன. அவை இளநீல நிறத்தில் மின்னிக்கொண்டிருக்க கொடுக்கு ஓவ்வொரு கண்ணையாக தொட்டு தொட்டு துடித்து ஓடிக்கொண்டிருந்தது.

அவர்கள் இருவரும் அதை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தனர்.ஜான்சன் நீண்ட பெருமூச்சுவிட்டு ‘விச வண்டாக்கும்” என்றான். லாசரும் “விச வண்டாக்கும்” என்று சொல்லிக்கொண்டான். “என்னலே செய்யுதது?” என்று ஜான்சன் கேட்டான். “மண்ணைப்போட்டு மூடிப்போட்டுட்டு ஓடீருவோம்லே” என்றான் லாசர்.

“மண்ணுண்ணு மாதிரி பேசப்பிடாது. ஏலே, இது விச வண்டுண்ணா நம்ம தங்கச்சிக்குட்டிகளை கடிச்சுப்போடும்லா?” லாசர் “ஆமா” என்றான். அவன் தங்கை ஏசுவடியாள் மிகச்சிறியவள். நாய்க்குட்டிபோன்ற அசைவுகளுடன் தவழ்ந்து அலைபவள். பேச்சு இன்னும் வரவில்லை. எல்லாரையுமே ன்னா ன்னா என்று அழைக்கிறாள். பசித்தால் அப்படியே அமர்ந்து ன்ன்ன்னா என்று வீரிட்டு அலறத் தொடங்கிவிடுவாள்.

அவன் அவளை குட்டி என்றுதான் அழைப்பான். அவன் எங்கே சென்றாலும் அவளும் மூன்றுகாலில் கிளம்பிவிடுவாள். அவன் விலகி ஓடினால் கைநீட்டி “ன்னா ன்னா” என்று கதறுவாள். அவள் குரல் செவிகளை துளைப்பது. அதிலிருந்து தப்ப அவன் மேலும் விரைந்து ஓடவேண்டும்.

லாசர் பயத்துடன் “இத என்ன செய்யுதது?” என்றான். அதை அந்த வண்டு கேட்டுவிடக்கூடாது என்பதுபோல குரலைத் தாழ்த்தியிருந்தான். ஜான்சன் தலையைச் சரித்து யோசித்தான். அவனுக்குத்தெரியாதவை என ஏதுமில்லை. ஆனால் கொஞ்சம் யோசிக்கவேண்டும். “இது விசவண்டு இல்லேன்னு தோணுது” என்று அவன் சொன்னான். “ஏன்?” என்று லாசர் கேட்டான். “விச வண்டுன்னாக்க இப்பம் நம்மள கடிக்க வரும்லா?” என்றான் ஜான்சன். “ஆமா, கடிக்க வரும்லா?” என்றான்.

ஜான்சன் மேலும் யோசித்தபின் “விசமிருந்தா இப்டி பேசாம இருக்காது…” என்றான். மேலும் அதை கூர்ந்து நோக்கி “அளகாட்டு இருக்கு….” என்றான். “அளகாட்டு இருக்கு” என்று லாசர் சொன்னான். “இத நாம வளப்போம்லே” என்றான் ஜான்சன். “அய்யோ” என்றபடி லாசர் எழுந்துவிட்டான். “ஏலே, சிலசமயம் இது குட்டிபோட்டிரும் பாத்துக்க…குட்டிபோட்டா நமக்கு லாபம்தானே?”

லாசருக்கு என்ன லாபம் என்று புரியவில்லை. “லாபம்”என்று மட்டும் சொன்னான். ஜான்சன் “நாம இத விக்கலாம்” என்று சொன்னன். சொன்னதுமே அவனுக்கு உற்சாகம் மிகுந்தது. “அளகாட்டு இருக்குல்லா? நாம வித்தா பைசா குடுப்பானுக. பத்துபைசாக்கு ஒண்ணு…” லாசர் குழப்பமாக “பத்து பைசாவுக்கு ஒண்ணு” என்றான்.

“நெறைய குட்டிபோடும்…நாம தினம் ஒண்ணுண்ணு விக்கலாம்… டீக்கனாருக்க மவன் சிலுவைக்கு மட்டும் குடுக்கப்பிடாது” என்றான் ஜான்சன். லாசர் “பாவம்”என்றான். “அவன் கெட்டவன்லே…அவன் போட்டிருக்குத சட்டைய பாத்தியா? சில்காக்கும். கப்பல்துணி….அந்த கப்பல்துணியை போட்டிருக்கப்பாட்ட எல்லாரும் கெட்டவனுக” என்றான் ஜான்சன்.

லாசர் “ஆனா பெரிய சாமியாரு கப்பல்துணில்லா போட்டிருக்காரு?” என்றான். “ஆருலே இவன்? ஏலே அவரு சாமியாருல்லா? அவருக்க கண்ண பாத்தியா? கனகாம்பரம் மாதிரில்லா இருக்கு? சக்கரக்கெளங்கு மாதிரி இருக்குதாரு” லாசர் அவருடைய கண்களை நினைவுகூர்ந்தான். அவனுக்கு அவை வெண்ணிறக் கூழாங்கற்கள் போலிருப்பதாகத் தோன்றியது.

அவன் உடனே திரும்பி அந்த வண்டைப் பார்த்தான். “லேய், இந்த வண்டு சாமியாருக்க கண்ணுமாதிரியாக்கும்” என்றான். ஜான்சன் அந்த வண்டைப் பார்த்துவிட்டு ‘ஆமா, அவருக்க கண்ணுமாதிரியாக்கும்..” என்றான். சிலகணங்கள் பார்த்துவிட்டு “இத நாம அம்பது பைசாவுக்கு விக்கலாம்லே…குட்டி போட்டாக்கா நிறைய அம்பது பைசா கிட்டும்” என்றான். லாசர் “குட்டிபோடுமா?” என்றான். “பாப்பம், நீ அதை எடு” என்று ஜான்சன் சொன்னான்.

லாசர் பாய்ந்து பின்னகர்ந்து “நானா?” என்றான். ‘கம்பு வச்சு எடுலே…மோணையன் மாதிரி பயப்படுதான்” என்றான் ஜான்சன். லாசர் அருகே கிடந்த இரு குச்சிகளால் அந்த வண்டை மெல்ல தூக்கி எடுத்தான். அது டிக்டிக்டிக் என்றது. அதன் கொடுக்கு துடித்தது. கண்கள் உறுத்து பார்த்தன. வால் தொங்கி ஆடியது.

“வளைஞ்ச வாலாக்கும்”என்றான் ஜான்சன். “இதை என்னலே செய்யுதது?” என்றான் லாசர். “இருலே, நான் ஒரு சட்டி கொண்டாறேன். நீ அதில இத வச்சு உனக்க வீட்டுக்கு கொண்டுபோ…அங்க வச்சு நல்லா தீனிகுடு… இது வளந்து குட்டிபோடுதான்னு பாப்பம்” என்றான் ஜான்சன்.

”எனக்க வீட்டிலே அப்பன் அடிப்பாவ” என்று லாசர் சொன்னான். “நீ எதுக்கு அப்பனிட்ட சொல்லுதே? ஆருகிட்டையும் சொல்லாதே…சொன்னா அம்புடுதான்” என்றான் ஜான்சன். லாசர் “சொல்லமாட்டேன்” என்றான். பிறகு “ஏலே பயமாட்டு இருக்குலே…நீ உனக்க வீட்டிலே கொண்டுட்டுப்போயி வையி” என்றான்.

ஜான்சன் சீறிவிட்டான். “ஆருலே இவன்? ஏலே எனக்க வீட்டிலே எப்டி வைக்கமுடியும்? என்ன சொல்லுதே?”. லாசர் “ஆமா, வைக்க முடியாது” என்றான். ”எனக்க வீட்டுக்கு கொண்டுபோறதா? கிறுக்கு மாதிரில்லா பேசுதே” என்றான் ஜான்சன்

ஜான்சன் சென்று ஒரு சிறு உடைந்த கலத்தை எடுத்துவந்தான். அதற்குள் மணலை அள்ளிப்போட்டு உள்ளே அந்த வண்டை போட்டான். “மண்ணபோட்டு மூடப்பிடாது. சிலப்பம் அதுக்கு மூச்சுமுட்டும்…நல்ல பச்சை இலைய போடுவோம்” என்றான். அதன்மேல் இலையும் சருகும் போட்டு மூடினான்.

“ஏலே இது இலைய சாப்பிடுமா?” என்று லாசர் கேட்டான். ஜான்சன் சிந்தனையில் ஆழ்ந்தபின் “எறும்பையும் தின்னும்” என்றான். அருகிலிருந்த மாமரத்திலிருந்து இலையுடன் சிவப்பெறும்பு கூடு ஒன்றை எடுத்துவந்து கசக்கி உள்ளே போட்டான். “கொண்டு போயி உனக்க வீட்டுலே அக்கானிப்புரையிலே வையி… சத்தம் காட்டாம செய்யணும் கேட்டியா?”

லாசருக்கு நெஞ்சு படபடத்தது. அந்த கலத்தை கையில் எடுத்துக்கொண்டபோது உடல் தளர்ந்தது. “தைரியமாட்டு போலே…” என்றான் ஜான்சன். “நான் பிறவு வாறேன் என்ன?” லாசர் பீதியுடன் ‘ஏலே ஒண்ணும் செய்யாதுல்ல?” என்றான். “என்ன செய்யும்? ஆருல இவன்? அறிவில்லா மோணையனா இருக்கானே?” என்றான் ஜான்சன்.

லாசர் கலத்துடன் தயங்கித் தயங்கி தன் வீட்டுக்குச் சென்றான். அங்கே முற்றத்தில் அவனுடைய அப்பா நின்றிருந்தார். பக்கத்துவீட்டு அந்தோணிப் பாட்டாவும் எசிலிக்கிழவியும் அமர்ந்திருந்தார்கள். வீட்டுக்குள் அம்மாவின் அழுகை கேட்டது.

அவன் மெல்ல பனைவிடலிகளின் மறைவு வழியாகச் சென்று அக்கானிப்புரைக்குப் பின்பக்கம் பழைய அடுப்புக்குள் கலத்தை ஒளித்துவைத்தான். அதன்மேல் நாலைந்து பனையோலைகளை போட்டு மறைத்தான். கைகளை நன்றாக துடைத்துக்கொண்டு வீட்டை நோக்கிச் சென்றான்

அவனிடம் அக்கானி கொண்டுபோகச் சொல்லியிருந்தாள் அம்மா. அவன் விளையாடப் போய்விட்டான். அம்மா வெளியேவந்து பனைமட்டையால் அடிப்பாள் என நினைத்தான். ஆனால் உள்ளே ஏதேதோ ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன.

வைத்தியர் ஞானப்பிரகாசம் வெளியே வந்தார். உள்ளே அம்மா உரக்க அலறி அழுதாள். “நல்லதாக்கும் கடிச்சிருக்கு… நீலம் கேறிப்போச்சு” என்றார். அப்பா கைகளைக் கட்டி தலைகுனிந்து நின்றார். கிழவி அவனிடம் “எங்கலே போனே?” என்றாள். அவன் ஒன்றும் சொல்லாமல் ஒட்டுத்திண்ணையில் ஏறி சுவர் சாய்ந்து நின்றான்

உள்ளே இருந்து அம்மா வெறிகொண்டவள் போல ஓடிவந்து அதே விசையில் நெஞ்சறைய விழுந்து நிலத்தில் இரு கைகளாலும் ஓங்கி ஓங்கி அறைந்தபடி “எனக்க மோளே! எனக்க செல்லமே! எனக்க முத்தே!” என்று அலறி அழுதாள். அவளுக்கு பின்னால் வந்த பரிசுத்தம் மாமி “போச்சு” என்றாள்.

அப்பா சற்று நிலைதடுமாறினார். பாட்டா அவரை பிடித்துக்கொண்டார். அப்பா அப்படியே மண்ணில் கால்களை பரப்பி அமர்ந்துகொண்டார். கிழவி “ஏசுவுக்க சித்தம்… நாம என்ன செய்யுகது? குட்டி பாவக்கறையில்லாம பரலோகம் போறா” என்றாள்.

வீட்டுக்குள் இருந்து வந்த நேசம் அத்தை லாசரின் கையைப் பிடித்து கூட்டிச்சென்று அவள் மகள் மேரியக்காவிடம் கொடுத்து “கொண்டுட்டுப்போய் நம்ம வீட்டிலே வச்சுக்க குட்டி…வல்லதும் திங்கக்குடு”என்றாள்

செல்லும்போது லாசர் “குட்டிக்கு என்ன தீனம்?” என்றான். “ஒண்ணுமில்லை , பிறவு சொல்லுதேன்” என்றாள் மேரியக்கா. “குட்டி கர்த்தர்கிட்ட போச்சுதா?” என்று அவன் கேட்டான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “குட்டிய இனி பாக்கணுமானா நாமளும் கர்த்தர்கிட்ட போகணுமா?” என்று அவன் கேட்டான். “சும்மா இருலே” என்றாள் மேரியக்கா

மேரியக்கா அவனுக்கு சுட்ட பனம்பழமும் கருப்பட்டியும் தந்தாள். அவன் பனைநாரை சப்பியபடி அவர்கள் வீட்டு திண்ணையில் நின்றுகொண்டு தன் வீட்டில் ஊரிலுள்ளவர்கள் அனைவரும் கூடியிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தான். திருக்கோயிலில் இருந்து ஞானம் உபதேசியார் நீண்ட அங்கியுடன் வந்தார். அவருக்கு அமர்வதற்காக ஜார்ஜ் வாத்தியார் வீட்டிலிருந்து நாற்காலி கொண்டுவந்து போட்டார்கள்.

வீட்டுக்குள் இருந்து அழுகையோசை கேட்டுக்கொண்டே இருந்தது. அம்மாவின் அழுகை மட்டுமல்ல. நிறைய பெண்களின் அழுகை. “நான் வீட்டுக்குப் போறேன்” என்று லாசர் சொன்னான். அங்கே அத்தனை பரபரப்பாக இருக்கும்போது அப்படி விலகி நிற்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.

”சின்னப்பிள்ளைக அங்க போகப்பிடாது”என்றாள் மேரியக்கா. “ஏன்?” என்று அவன் கேட்டான். “கர்த்தருக்கு பிடிக்காது” என்றாள். “ஆமா, கர்த்தருக்குப் பிடிக்காது” என்று அவன் சொன்னான். கர்த்தருக்குப் பிடிக்காதவற்றை அவன் செய்வதில்லை.அவள் “கருப்பட்டி வேணுமா?” என்றாள்.

அவனுக்கு அப்படி நிறைய கருப்பட்டி கிடைப்பதில்லை. சாதாரண நாட்களில் மேரியக்கா கருப்பட்டி கேட்டாலே அடிக்க வருவாள். அவள் அப்போது அழகாக தெரிந்தாள். அவளுடைய பற்கள் வெண்மையானவை, ஈறுகள் செங்கல்நிறத்தில் இருந்தன. அவளுடைய கழுத்தும் தோளும் கருமையாக பளபளப்பாக இருந்தன.

“அக்கா நீ பளபளப்பா இருக்கே” என்று அவன் சொன்னான். அவள் புன்னகைத்தாள். அவள் கண்கள் எருமைகளின் கண்கள் போல விரிந்து நீர் மின்னின. அவளுடைய கூந்தல் நீளமாக பளபளப்பாக இருந்தது. அவன் அம்மாவின் கூந்தல் நார்போலிருக்கும். உச்சியில் சும்மாடு வைக்கும் இடம் முடியில்லாமல் காய்ந்த புல் போலிருக்கும்

அவன் மேரியக்கா கொடுத்த கருப்பட்டியுடன் வந்து மீண்டும் திண்ணையில் நின்றான். ஜான்சன் அவனை நோக்கி வந்தான். அவன் வந்த நடையிலேயே ரகசியம் இருந்தது. அவனிடம் சொல்ல தனக்கு மேலுமொரு செய்தி இருப்பது லாசருக்கு பரபரப்பை அளித்தது. “ஏலே எனக்க குட்டி செத்துப்போச்சு” என்றான்.

“ஆமா, பாம்பு கடிச்சுப்போட்டுன்னு அம்மா சொன்னாவ” என்றான் ஜான்சன். “நான்கூட நமக்க விச வண்டுதான் கடிச்சுப்போட்டோன்னு நினைச்சேன்” லாசர் . ‘நான் அதை கொண்ட்டுப்போயி வைக்குறப்பவே குட்டிய பாம்பு கடிச்சுப்போட்டுது” என்றான் லாசர். “நல்ல குட்டி. வளந்த பிறவு அவளை நான் கெட்டணும்னு நினைச்சேன்” என்று ஜான்சன் சொன்னான்.

லாசரின் கையிலிருந்த கருப்பட்டியை இயல்பாக வாங்கி தன் வாய்க்குள் போட்டுக்கொண்டு ஜான்சன் “நீ விச வண்டை பாத்தியா? அது இலை திங்குதா?” என்றான். “இல்லை, என்னைய இங்க கூட்டிட்டு வந்திட்டாவ” என்றான் லாசர். “ஆமா, சாவுஜெபத்தை பிள்ளைக கேக்கப்பிடாது“ என்று ஜான்சன் சொன்னான். “அடக்கம் சாயங்காலம் உண்டுண்ணாக்கும் சொன்னாவ”

லாசர் ரகசியமாக “அடக்கம்ணாக்க?”என்றான். “மண்ணிலே புதைச்சு வைக்கிறது” என்றான் ஜான்சன். அவனும் ரகசியமாகத்தான் சொன்னான். “குருசிக் கிளவிய புதைச்சது மாதிரியா?” என்றான் லாசர். “ஆமா” என்று ஜான்சன் சொன்னான்.”பெட்டியிலே வைச்சு புதைப்பாவ”

லாசர் சற்றுநேரம் யோசித்துவிட்டு “அப்டியாக்கும் கர்த்தர்கிட்ட போறது இல்லியா?” என்றான். “ஆமா” என்று ஜான்சன் சொன்னான். “கிளவி அங்க இப்பம் இருபபா.. இவள கண்டதும் வா பிள்ளேண்ணு விளிப்பா. கிளவி அருமையானவளாக்கும்”

லாசர் மேலும் குரல்தாழ்த்தி “இனி நான் குட்டிய பாக்கணுமானா கர்த்தர்கிட்ட போகணுமா?” என்றான். “நாம கொறே பிந்தி போவலாம்லே” என்றான் ஜான்சன். “நாம பள்ளிக்கொடத்திலே படிக்கணும்லா?”

லாசரின் வீட்டுக்கு சவப்பெட்டி சென்றது. மரியான் அண்ணா அதை தூக்கிச் சென்றார். சிறிய பெட்டி. குட்டி சிறிய உடல் கொண்டவள். அவளை அவன் தவளை என்றுதான் அழைப்பான். அவளுக்கு மேல்வாயில் ஒரே பல்தான். தவழ்ந்து தவழ்ந்து அவள் தொடைகளெல்லாம் கருமையாக இருக்கும். ”ன்னா ன்னா” என்று அவளே நெஞ்சில் எச்சில் ஒழுக சொல்லிக் கொண்டிருப்பாள். கழுத்தில் தொங்கிய சிலுவைக்கயிற்றை பிடித்து தூக்கி சிலுவையை வாயில் வைத்து கடிப்பாள். அவனைக் கண்டதும் கண்களில் சிர்ப்புடன் ’ன்னா ன்னா ன்னா” என்பாள்.

லாசருக்கு அழுகை வந்தது. “ஏம்லே?” என்று ஜான்சன் கேட்டான். “குட்டி நல்லவளாக்கும்லே… அருமையாட்டு என்னைய அண்ணாண்ணு விளிப்பா” அவன் தேம்பி அழத்தொடங்கினான். ஜான்சன் “அவளை ஜீவிக்கவைக்கணுமானா பெரியசாமியாரு நினைக்கணும்” என்றான்.

லாசர் நிமிர்ந்து பார்த்தான். ‘”ஏசு சாமி மூணாம்நாள் வந்தாருல்லா?” என்றான் ஜான்சன். லாசர் ‘குட்டீ எனக்க குட்டீ!” என்று கதறி அழத்தொடங்கினான். ஜான்சன் பயந்துவிட்டான். “ஏல ஏல” என அவனை உசுப்பினான். மேரியக்கா ஓடிவந்தாள்.

அவன் அப்படியே படுத்துவிட்டான். மேரியக்கா அவனருகே அமர்ந்திருந்தாள். அவன் கொஞ்சம் தூங்கியிருப்பான். அவனை யாரோ தூக்கிக் கொண்டுசென்றார்கள். “நில்லுலே….ஏலே நில்லுலே” அவன் நிற்கமுடியாமல் குழைந்தான். “மண்ணைப்போடு… மண்ணைப்போடு” குழிக்குள் ஒரு சிறிய பெட்டி. அவன் கையைக்கொண்டு எவரோ மண்ணை அள்ளிப்போட்டார்கள். அவன் விசும்பிக்கொண்டே இருந்தான்

அவனுக்கு அன்றே காய்ச்சல் கண்டது. அவன் பாயில் புரண்டபடி “குட்டி குட்டி” என்று புலம்பிக்கொண்டிருந்தான். “குட்டி வண்டாக்கும்… எனக்க குட்டி வண்டாக்கும்” என்றான். அவனுக்கு வாயில் கசப்பான மருந்தை ஊற்றி குடிக்க வைத்தார்கள். மேரியக்கா அவனை எழுப்பி அமரச்செய்து சூடான கஞ்சியை அவனுக்கு கொடுத்தாள். அவன் கண்ணீருடன் “குட்டி, எனக்க குட்டி… அவளுக்கு பல்லு இருக்கு” என்று சொன்னான்

திருக்கோயிலில் ஜெபம் நடந்தபோது மேரியக்கா அவனை துணியால் மூடி கூட்டிக்கொண்டு சென்றாள். அவனுக்கு காக்கிச் சட்டையும் காக்கி கால்சட்டையும் அவள்தான் அணிவித்தாள். “உனக்க குட்டிக்க ஜெபமாக்கும். ஒரு வார்த்தையானாலும் நீ கேக்கணும்லே” என்றாள்

அவனால் பெஞ்சில் அமர முடியவில்லை. அம்மாவை எசிலி கிழவியும் அத்தையும் இருபக்கமும் நின்று தூக்குவதுபோலகொண்டுவந்தார்கள். அம்மா முக்காட்டால் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அப்பா ஆண்கள் பகுதியில் இறுக்கமாக கைகளை நெஞ்சோடு கட்டியபடி அமர்ந்திருந்தார்

அவன் பெரிய சாமியாரின் ஜெபத்தைக் கேட்டுக்கொண்டிருந்தான். பெரிய சாமியார் லண்டனில் இருந்து வந்தவர். அவர் பஞ்சுபோல வெண்மையான தாடியும் முடியும் வைத்திருந்தார். பூனைக்கண்கள். அவர் மெட்ராசிலிருந்து நடந்தே இடையான்குடிக்கு வந்ததாக வேதக்கண் வாத்தியார் சொன்னார்.

“ஏலே நடந்துலே… அங்கேருந்து இங்க வரை நடந்து வந்திருக்காரு… எதுக்கு? ஏலே இந்த தேரிக்காட்டிலே இந்த இடையான்குடியிலே நம்மையெல்லாம் ரெட்சிக்கதுக்கு…. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்”

அவன் அவரை தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பான். அவர் கையில் நீண்ட பிரம்புடன் பூட்ஸ் அணிந்துகொண்டு நடை செல்வார். அப்போது எவரிடமும் பேசமாட்டார். இரவில் கையில் நீண்ட மூங்கிலும் மறுகையில் அரிக்கேன் விளக்குமாக இடையான்குடியைச் சுற்றிவருவார். “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா!” என்று கூவிக்கொண்டே செல்வார். “பீடைகளும் பேய்களும் ஓடிப்போகும்லா? அருளுள்ள மனுசனாக்குமே” என்று எசிலி கிழவி சொல்வாள்.

அவன் அவர் பெயரை பலமுறை சொல்லிப் பார்த்ததுண்டு. அவன் நாவில் அவர் பெயர் வருவதில்லை. சாமுவேல் மாதிரி. வறுவேல் மாதிரி ஒரு விசித்திரமான பெயர். ஆனால் ஜான்சன் தெளிவாகவே சொல்லிவிடுவான். ராபர்ட் கால்டுவெல். அவனால் சொல்லமுடியாத ஒன்றும் இல்லை. ஜான்சன் எல்லாவற்றையும் எப்படியோ அறிந்திருந்தான்.

பெரிய சாமியார் கைகாட்ட மரியான் எழுந்து பைபிளை வாசித்தார். அவன் குரல் உரக்க ஒலித்தது. திருக்கோயிலில் பைபிள் வாசிக்கும்போது அது அங்கிருக்கும் எவரிடமும் உரையாடுவதுபோல் இருப்பதில்லை. வேறெங்கோ இருக்கும் எவரோ ஒருவரிடம் தனியாகப் பேசுவதுபோல ஒலிக்கிறது.

மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்றாள். இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார்.

மார்த்தா அவரிடம் , “இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்” என்றார். இயேசு அவளிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றாள்.

அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார். இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், “லாசரே, வெளியே வா” என்று கூப்பிட்டார்.

இறந்தவனாகிய லாசர் உயிரோடு வெளியே வந்தான். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார்.

அவன் வாசித்து நிறுத்தியதும் பெரிய சாமியார் கைகூப்பி “பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே” என்றார். சபை ரீங்காரமிட்டது. “நம்புங்கள், இறந்து மீண்டும் உயிர்த்தெழாமல் எவரும் தேவனை அடைவதில்லை. இறப்பு என்பது ஒரு குளியல். இறப்பு என்பது ஒரு வாசல். இறப்பினூடாகவே நாம் மெய்யான தேவனை அடைகிறோம். அவருடைய ஆணையாலே நாம் உயிர்த்தெழுவோம்” என்றார்.

லாசருக்கு கடுமையாக குளிர்ந்தது. அவன் முனகியபடி எழமுயன்று சுருண்டு விழுந்தான். அவன் உடலில் இருந்து சூடாக சிறுநீர் சென்றுகொண்டிருந்ததை அவன் உணர்ந்தான். “குட்டி குட்டி” என்று அவன் கூவினான். “குட்டி இங்க நிக்கா… எனக்க குட்டி இங்க நிக்கா!” சபை கலைந்தபோது வேதம் வாத்தியார் “அமைதி அமைதி” என்றார். “ஏட்டி அந்தபிள்ளைய வெளியே கொண்டுபோ” என்று ஆணையிட்டார்.

மறுநாளே லாசர் குணமாகிவிட்டான். அவன் வாய் மட்டும் கசந்தது.கைகால்களில் கடுமையான ஓய்ச்சல் இருந்தது. அது இனிமையாகவும் தோன்றியது. கண்களை திறந்தபோது ஒளி கூசி கண்ணீர் வழிந்தது. அவன் சுருண்டு பாயில் படுத்துக்கொண்டான். காதில் தொலைவிலுள்ள ஓசைகள் கூட கேட்டுக்கொண்டிருந்தன

வீட்டில் சமையல்வேலை அனைத்தையும் எசிலிக்கிழவிதான் செய்தாள். அம்மா எதையுமே செய்யாமல் பின்திண்ணையிலேயே அமர்ந்திருந்தாள். அப்பா பனையேறப் போகவில்லை. பத்துநாள் அவர் பனையேற வேண்டியதில்லை என்றும். அவருடைய கூறு பனைகளை மற்றவர்கள் பங்கிட்டு ஏறிக்கொள்வது என்றும் முடிவுசெய்திருந்தார்கள்.

எசிலி கிழவி ஓயாமல் பேசிக்கொண்டிருந்தாள். “படுத்தா எந்திரிக்கோம். செத்தா உயிர்த்தெழுதோம்… நினைச்சு நினைச்சு அளுதா ஆச்சா? நான் சொல்லுத ஆரு கேக்கா? போடீ கிளவீங்குதாக” ஆனால் அவளுடைய குரல்தான் அந்த வீட்டை உயிருடன் வைத்திருந்தது.

லாசர் சிறுநீர் கழிக்க எழுந்தான். கால்கள் தடுமாறின. சுவரைப் பிடித்தபடி நடந்து வெளியே சென்றான். அவனை கண்டதும் விடலிப்பனைக்கு அப்பாலிருந்து ஜான்சன் சீழ்க்கை அடித்தான். அவன் திரும்பிப் பார்த்தான்.

அவனருகே வந்த ஜான்சன் “ஏல, அந்த வண்டு என்னாச்சுலே? குட்டி போட்டுதா? பாத்தியா?” என்றான். லாசர் அதை மறந்தே போயிருந்தான். “இல்லே, பாக்கல்லே” என்றான். “எங்க வச்சே?” என்றான் ஜான்சன். “அந்த வண்டு ஆருக்கதுன்னு நான் கண்டுபிடிச்சாச்சு. அது பெரிய சாமியாரு வளக்குத வண்டாக்கும்”

“அவரு வளக்குததா? ஆரு சொன்னா?” என்று லாசர் கேட்டான். “அவரு சட்டையிலே இருக்குத பையிலே வச்சிருக்கப்பட்ட வண்டாக்கும் இது. அடிக்கடி அருமையாட்டு எடுத்து பார்த்துக்கிடுவாரு. யோசேப்பு அண்ணன் சொன்னாரு” ஜான்சன் சொன்னான்

“நீ அவருகிட்ட சொன்னியா?” என்று லாசர் பீதியுடன் கேட்டான். ‘இல்லே…அவராக்கும் எனக்க கிட்ட கேட்டது. இந்தமாதிரி இருக்கும்லே, நீ கண்டியான்னு கேட்டாரு. அப்பமே நான் கண்டுபிடிச்சுப்போட்டேன்… அது காணாமப்போச்சுன்னு பெரியசாமியாரு தேடிட்டிருக்காரு. அண்ணனுக்க கிட்ட தேடிப்பாக்க சொல்லியிருக்காரு” என்றான் ஜான்சன்.

லாசர் “விலையுள்ள வண்டாக்கும்லே” என்றான். ஜான்சன் “ஆமா, லண்டன் வண்டுல்லா?” என்றான். ஜான்சன் “எங்கலே வச்சே?” என்றான். “திருப்பி குடுத்திருவோம்லே…அவரு ஏசு சாமிக்க சாமியாராக்கும்” என்றான் லாசர்

அவன் ஜான்சனை அக்கானிப்புரைக்கு பின்னால் கூட்டிச்சென்றான். பனையோலையை அகற்றி கலத்தை வெளியே எடுத்தான். குச்சியால் சருகுகளை விலக்கி பார்த்தான். வண்டு இருந்தது. இலைகள் வாடியிருந்தன

“ஏம்லே சத்தமே கேக்கல்ல?” என்றான் ஜான்சன் “ஆமா, சத்தமே கேக்கல்ல” என்று லாசர் சொன்னான். ஜான்சன் “செத்துப்போச்சுலே” என்றான் ஜான்சன். “செத்துப்போச்சா?” என்று லாசர் கேட்டான். “பாருலே, அதுக்க கொடுக்கு செத்திருக்கு” லாசர் கூர்ந்து பார்த்தான். மெய்யாகவே அது செத்துவிட்டிருந்தது. அவன் நெஞ்சு படபடத்தது.

ஜான்சன் சட்டியிலே எடுத்திருக்கப்பிடாதுலே” என்றான். “சட்டியிலே எடுத்தோம்ல, அதனாலேதான் செத்துப்போச்சு”.என்றான் லாசர். ஜான்சன் “நான் எடுக்கல்லே” என்று ஜான்சன் சொன்னான். லாசரை நோக்க்கி கைசுட்டி “’நீதான் எடுத்தே” என்றன். லாசர் ‘ஆமா, நாந்தான் எடுத்தேன்” என்றான். “

நான் வேண்டாம்னாக்கும் சொன்னேன்” என்றான் ஜான்சன். லாசர் “ஆமா” என்றான். பிறகு “என்னலே செய்ய?” என்றான். “கொண்டுபோயி யோசேப்பு அண்ணன் கிட்டக் குடுப்பம்” என்றான் ஜான்சன். ‘அவரு என்னைய அடிப்பாரு” என்று லாசர் சொன்னான். “ஆமா அடிப்பாரு. நீதானே எடுத்து வச்சே? உனக்க வீட்டிலேதானே இருந்தது? செத்துப்போச்சுல்லா?”

லாசர் அதை மீண்டும் பார்த்தான். அவனுக்கு இரக்கம்தான் வந்தது. நல்ல வண்டு. அதன் நீலக்கண்களில் ஒளி இருந்தது. “நாம இதை பெரியசாமியாரு கிட்ட குடுப்பம்… அவரு அடிக்க மாட்டாரு” என்றான் லாசர். “பெரியசாமியாருகிட்டயா? அய்யோ….நீ போ. நான் வரமாட்டேன்” என்றான் ஜான்சன்.

லாசர் “நான் போறேன்” என்றபடி கலத்துடன் நடந்தான். “அய்யோலே. அவரு அடிப்பாருலே… பிரம்பு வச்சிருக்காருலே” என்றான் ஜான்சன். “அடிச்சா சாவுதேன்… நான் எடுத்து வச்சுத்தானே வண்டு செத்துப்போச்சு?” என்றான் லாசர். “நீ போ…நான் வரமாட்டேன்” என்றான் ஜான்சன். “நான் போறேன்” என்று லாசர் சொன்னான். ‘நீ என் பேரச் சொன்னா நான் உன்னை கல்லால அடிப்பேன்” என்றான் ஜான்சன். “சொல்லமாட்டேன்” என்று லாசர் சொன்னான்

அவன் பெரியசாமியாரின் வீட்டை அடைந்தான். பெரியசாமியாரின் மனைவி வெளியே போர்வைகளை காயப்போட்டுக்கொண்டிருந்தாள். வேலைக்காரப்பெண் உதவி செய்தாள். அவளிடம் சென்று பெரிய சாமியாரைச் சந்திக்கவேண்டும் என்று கேட்கலாமா? வேண்டாம். நேராக அவரிடமே சென்றுவிடலாம்

அவன் வீட்டைச் சுற்றிக்கொண்டு சென்றான். அவர்களின் கூரைவீடுகளை விட பலமடங்கு உயரமான வீடு. பெரிய வெள்ளைச் சுவர்கள். அவர்களின் வீடும் திருக்கோயில் போலவே இருந்தது. அவன் பெரிய சாமியாரின் அறையை கண்டான். அவர் ஒரு மேஜைமுன் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.

அவன் வாசலில் மறைந்து நின்றான். அவர் இறகுப்பேனாவால் நத்தைவடிவப் புட்டிக்குள் இருந்து நீலநிற மையை தொட்டுத் தொட்டு எழுதினார். நீலநிற கட்டெறும்பு போன்ற எழுத்துக்கள். அந்த தாள் கமுகுப்பாளை போலிருந்தது. எழுதப்பட்ட தாளை அருகே ஒரு கொக்கியில் காயப்போட்டிருந்தார்

அவன் ;”சாமி” என்றான். அவர் அவனை திரும்பிப் பார்த்தார். பூனைக்கண்களுடன் அவருடைய பார்வை முறைப்பதுபோலிருந்தது. அவனுக்குச் சிறுநீர் வந்தது. அவன் தப்பி ஓடிவிட நினைத்து கட்டுப்படுத்திக்கொண்டான்

“சாமி உங்களுக்க வண்டு எனக்கு கிட்டிச்சு. அதை நான் இந்த சட்டியிலே வைச்சதினாலே செத்துப்போச்சு” என்று லாசர் சொன்னான். அவன் கண்களில் இருந்து நீர் வழிந்தது. “எனக்க குட்டி செத்தது மாதிரி செத்துப்போச்சு”

“இங்க வா” என்று அவர் அழைத்தார். அவன் அருகே சென்றதும் அவனை அருகே அழைத்து கைகளால் தோளை வளைத்தார். அவன் தலைமேல் கைவைத்து நன்மைஜெபம் செய்தார். அவன் அழுதபடி “செத்துப்போச்சு சாமி…நான் ஒண்ணுமே செய்யல்ல. செத்துப்போச்சு சாமி” என்றான்

அவர் பானைக்குள் இருந்து அந்த வண்டை வெளியே எடுத்தார். அவருடைய விரல்களுக்கு நடுவே அதன் வால் தொங்கியது. அவர் அதை குலுக்கிப் பார்த்தார். “நான் பானையிலே வச்சேன்…பானையிலே செத்துப்போச்சு சாமி” என்றான் லாசர்.

பழுப்புநிற பற்கள் தெரிய “எனக்க மக்கா, செத்ததெல்லாம் என் தேவன் கைபட்டால் எழும்பாதோ?” என்றார் பெரிய சாமியார். “பாரு… இதையும் தேவன் எழுப்புவார்”

அவர் அதை கையில் வைத்து விரல்களால் வருடினார். அவர் ஜெபம் சொல்கிறார் என லாசர் நினைத்தான். அவர் அதைக் கொண்டுசென்று மேஜைமேலிருந்த சிலுவைப்பாடுச் சிலையின் கீழே வைத்தார். மரத்தில் செதுக்கப்பட்ட சிலை. ஏசுவானவர் முள்முடிசூடி கைவிரித்து வானை நோக்கிக்கொண்டு தொங்கினார்.

லாசர் திரும்பி நோக்கியபோது வாசலில் ஜான்சன் நிற்பதைக் கண்டான். அவன் பாதியுடல் மறைந்து நின்றிருந்தான். பெரியசாமியார் திரும்பியபோது லாசர் கைகூப்பினான். அவர் அவனை நோக்கி புன்னகைத்து “பாரு, உயிர்த்தெழுதல் நடந்தாச்சு” என்றார்

லாசர் போவதற்குள் ஜான்சன் முன்னால் சென்று அந்த வண்டைப் பார்த்தான். அது மீண்டும் டிக்டிக்டிக்டிக் என ஓசையிட்டது. அதன் உணர்கொம்பு அசைந்துகொண்டிருந்தது

“சீவன் வந்தாச்சு” என்று ஜான்சன் சொன்னான். “நானாக்கும் இவன்கிட்ட சொன்னது, கொண்டுபோயி பெரிய சாமிகிட்ட குடுலே, அவரு சீவன் குடுப்பாருண்ணு” லாசர் “ஆமா, இவனாக்கும் சொன்னது” என்றான்

“ஜெபம் செய்வோம்” என்றார் பெரிய சாமியார். லாசர் மண்டியிட்டான். ஜான்சன் அவனருகே மண்டியிட்டு அமர்ந்துகொண்டு சுற்றும் பார்த்தான். லாசரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

பெரியசாமியாரும் மண்டியிட்டார். “பரமண்டலங்களை ஆளும் என் பிதாவே, அருமைக்குமாரனே, ஆவியானவரே, மானுடரின் பாடுகளை தேவனே நீர் அறிவீர். எல்லா கண்ணீருடனும் உன் கைகளும் உடனிருக்கிறதல்லவா என் ஆண்டவனே. எல்லா இல்லங்களிலும் உன் காவல் அமைகிறதல்லவா என் மீட்பனே எங்கள் ஆத்மாக்களை தொட்டு உயிர்த்தெழவைக்கும் தூயநீர் அல்லவா உன் சொல்!”

***

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–62

$
0
0

பகுதி ஆறு : படைப்புல் – 6

தந்தையே, ஃபானுவின் சொல் அனைவரையும் எழச் செய்தது. குடிகள் அனைவரும் அத்தனை பொழுதும் அத்தகைய ஒரு சொல்லுக்காகத்தான் காத்திருந்தனர். கண்ணீருடன் நெஞ்சில் அறைந்து அவர்கள் அழுதனர். எழுந்து நின்று கைவிரித்து கூச்சலிட்டனர். எண்ணி எண்ணி களிவெறிகொண்டு குதித்துச் சுழன்று ஆர்ப்பரித்தனர். கொண்டாட்டமும் களியாட்டமும் எங்கும் நிறைந்திருந்தது. அந்தப் பொழுதில் பிறிதொன்றையும் அங்கு சொல்ல இயலாதென்று உணர்ந்தேன்.

ஃபானு அந்தக் களியாட்டை தனக்கான ஏற்பாக எடுத்துக்கொண்டார். அதில் தானும் கலந்து கண்ணீர்விட்டு நடனமாடினார். அருகணைந்து அனைவரையும் தழுவிக்கொண்டார். இளையோரை முத்தமிட்டார். படைத்தலைவர்களை தோளைப் பிடித்து உலுக்கினார். நெடுநேரம் அந்தக் கொண்டாட்டம் நிகழ்ந்தது. பின்னர் ஃபானு “கிளம்புவோம். அதற்குரிய ஒருக்கங்கள் நடக்கட்டும். வண்டிகள் கட்டப்படட்டும். கூடாரங்கள் சுருட்டப்படட்டும்!” என்றார்.

படைத்தலைவர்கள் பிரிந்து சென்று ஆணைகளை பிறப்பிக்கத் தொடங்க அங்கிருந்த அலைக்கொந்தளிப்பு அடங்கி ஒவ்வொருவரும் அவரவர் பணிகளுக்கு சென்றார்கள். புரவிகளுக்கு சேணங்கள் பூட்டப்பட்டன. மூத்தவர் ஃபானு கவிழ்த்திட்ட மரக்கலம் ஒன்றில் அமர்ந்தார். அவர் அருகே வந்த சுருதன் “மூத்தவரே, தாங்கள் அதை அவ்வண்ணம் சொல்லியிருக்கக் கூடாது” என்றார். “ஏன்?” என்று ஃபானு கேட்டார். அந்தக் கணத்தின் மகிழ்ச்சியை அழிக்க வந்தவராகவே அவருக்கு சுருதன் தோன்றினார். “நம்மிடம் இத்தனை பெரிய கருவூலம் இருப்பதை இங்கு ஏன் சொல்லவேண்டும்?” என்றார் சுருதன்.

ஃபானு எரிச்சலுடன் “அதை எவரும் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாமே. இத்தனை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு செல்லப்படுவது கருவூலம் அன்றி வேறென்ன?” என்றார். சுருதன் “ஆனாலும் அக்கருவூலம் இருக்கிறதென்பதை சொல்லியிருக்கக்கூடாது. இங்கு எவருடைய ஒற்றர்கள் இருப்பார்கள் என்று நமக்கு தெரியாது. நம்மை எவரேனும் தாக்கினால் எப்படி நம்மால் கருவூலத்தை பாதுகாக்க முடியும்?” என்றார். ஃபானு “எவர்?” என்றார். “எவராயினும்… இக்கருவூலம் பேரரசு ஒன்றின் ஐம்பதாண்டுக்கால செல்வம். இதற்கிணையான ஒன்று பாரதவர்ஷத்தில் இல்லை” என்றார் சுருதன்.

ஃபானு திகைத்துவிட்டார். சுருதன் அதை பயன்படுத்திக்கொண்டு மேலே சென்றார். “நாம் பிரபாச க்ஷேத்ரத்திற்குச் சென்ற பிறகே கூட நம்மை எதிரிகள் தாக்க வாய்ப்பிருக்கிறது. அது கூர்ஜரத்துக்கு மிக அருகே இருக்கிறது” என்றார். ஃபானுமான் சினத்துடன் “கூர்ஜரம் நொறுங்கிக் கிடக்கிறது. நம்மைத் தாக்கும் அளவுக்கு அவர்களுக்கு ஆற்றல் இல்லை” என்றான். “சிந்து தாக்கலாம், சிந்துவை உறுதியான மன்னனொருவன் ஆளத்தொடங்கியிருக்கிறான்” என்றார் சுருதன். “நமக்கு அஸ்தினபுரியின் உதவி இருக்கிறது” என்றார் ஃபானு. “ஆம், ஆனால் அவர்கள் மிக மிகத் தொலைவில் இருக்கிறார்கள்” என்றார் சுருதன்.

ஃபானு அவ்வண்ணம் சுவற்றுடன் அழுத்தப்பட்டதனால் சீற்றம்கொண்டார். “அஞ்சி அஞ்சி வாழ்வதில் பொருளில்லை. நமது படைக்கலங்கள் இன்னும் தாழவில்லை. நம்மிடம் பெருவீரர் இருவர் உள்ளனர். சாத்யகியும் கிருதவர்மனும் நம்முடன் இருக்கிறார்கள் என்ற செய்திக்குப் பிறகு எவரும் நம்மை எதிர்க்கப் போவதில்லை” என்றார். சுருதன் மேலும் சொல்லத் தொடங்க “உனக்கு அச்சமிருந்தால் நீ வரவேண்டாம். இங்கே பாலையில் கிடப்பதைவிட செல்வது மேல்… என் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது” என்றார் ஃபானு. சுருதன் தலைவணங்கி “அவ்வாறே” என்றார்.

“மூத்தவரே, ஆணை என்ன? என்ன செய்வது?” என்று ஃபானுமான் கேட்டான். “கிளம்ப வேண்டியதுதான்” என்றார் ஃபானு. “விதர்ப்பத்தின் ருக்மி நம்முடன் வந்து சேர்ந்துகொள்வதாக செய்தி வந்திருக்கிறது” என்றான் ஃபானுமான். “அவரை கிளம்பி பிரபாச க்ஷேத்ரத்திற்கு வரச்சொல். நாம் அங்கு சென்றுகொண்டிருக்கிறோம். இங்கு இனி எவருக்குமாக நாம் காத்திருக்க வேண்டியதில்லை” என்றார் ஃபானு. “அவர் நமக்காக வந்து கொண்டிருந்தார். நகர் சரிந்த செய்தி அறிந்ததும் படைகளை நிறுத்திவிட்டு நம் தூதுக்காக காத்திருந்தார்” என்றார் பிரஃபானு.

நான் “மூத்தவரே” என்றேன். “கூறு” என்றார் ஃபானு. “இந்தப் பிரபாச க்ஷேத்ரம் என்ற சொல்லை எங்கோ கேள்விப்பட்டதுபோல இருக்கிறது” என்றேன். ஃபானு என் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் முகம் மலர்ந்து “அது புகழ்பெற்ற நிலமாக இருக்கலாம். நமது மூதாதையர் அங்கிருந்து வந்திருக்கலாம்” என்றார். “இல்லை மூத்தவரே, பிறிதொன்று” என்றேன். ”நீ புதிய ஐயங்கள் எதையும் எழுப்ப வேண்டியதில்லை. கிருதவர்மனிடமும் சாத்யகியிடமும் இங்கிருந்து நாம் கிளம்பும் செய்தியை சென்று சொல்” என்றார். தலைவணங்கி “ஆணை!” என்றேன்.

 

உளச்சோர்வுடன் நான் கிருதவர்மனை சந்திக்கச் சென்றேன். அவர்கள் இருவரும் துவாரகையிலிருந்து கருவூலம் ஏற்றிய வண்டிகளுடன் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் நடத்திவந்த காவலர்படை கருவூலத்தைச் சூழ்ந்திருக்க அவர்கள் தங்கள் தனிப்பட்ட காவலர்படையுடன் பெருந்திரளுக்கு சற்று அப்பால் தனியாக தங்கியிருந்தனர். அவர்கள் இருவருடைய விற்களையும் நம்பியே ஃபானு தன்னை ஒரு அரசரென்று எண்ணிக்கொள்கிறார் என்று அனைவரும் அறிந்திருந்தமையால் அவர்களை அரசருக்கு நிகராகவே அனைவரும் நினைத்தனர். ஆனால் அவர்கள் அரசுநடத்தலில் நேரடியாக தலையிடக்கூடாது என்று எண்ணினர்.

நான் சாத்யகியின் படைகளை அணுகியபோது அவருடைய முதற்காவலன் என்னை நோக்கி வந்து வணங்கினான். என்னிடம் என் அலுவல் ஏது என்று வினவினான். “நான் சிறிய தந்தை கிருதவர்மனையும் மூத்தவர் சாத்யகியையும் சந்திக்க வந்தேன். இது அரசாணை” என்றேன். “அவர்களிருவரும் இன்று காலைதான் பாலையில் வேட்டைக்கு சென்றார்கள்” என்றான். “வேட்டைக்கா? இப்பொழுதா?” என்றேன். “ஆம், தனிப் புரவிகளில் சென்றார்கள்” என்றான்.

பாலையில் சில நாட்களாக வேட்டை உணவைத்தான் உண்டு கொண்டிருந்தோம். வேட்டைக்கென வில்லவர்களை இரவுகளில் பாலையில் அனுப்பி முயல்களையும் பாலைவனப் புல்வெளியில் வளரும் சிறிய மறிமான்களையும் கொண்டுவந்தோம். பொதுமக்களுக்கு பாலை நிலக்கழுதைகளும் பறவைகளும் கூட உணவாயின. துவாரகையில் இருந்து காலொடிந்தும் உடல் புண்பட்டும் வெளியே வந்த புரவிகளை உண்ணலாம் என்று சாம்பனின் அணுக்கரான அசுரகுலத்தவர் சொன்னார்கள். ஆனால் அவ்வாறு குதிரையை உண்ட பின் நம்மிடம் இசைந்திருக்கும் குதிரைகளை ஆளமுடியாது, அவை முரண்கொள்ளும் என்றார் அமைச்சர் ஸ்ரீகரர்.

நான் அவர்களுக்காகக் காத்து அங்கேயே பாலையின் ஒரு சிறு மணல் மேட்டில் அமர்ந்திருந்தேன். அத்தனைக்கு அப்பாலும் அவர்கள் இருவரும் விளையாட விரும்புவதைப் பற்றி எண்ணிக்கொண்டேன். மேய்ச்சல் விலங்குகள் விரைவிலேயே விளையாடுவதை நிறுத்திக்கொள்கின்றன. வேட்டை விலங்குகள் எத்தனை வளர்ந்தாலும் விளையாடிக்கொண்டே இருக்கின்றன. போர்வீரர்கள் விளையாடாமல் இருக்க முடியாது. துரத்தாமல், வெல்லாமல் அமைய முடியாது.

தொலைவில் அவர்கள் இருவரும் வருவதை கண்டேன். ஒருவரோடொருவர் பேசிச் சிரித்துக்கொண்டு இணையாக இரு புரவிகளில் ஊர்ந்து வந்தனர். அவர்களுக்குப் பின்னால் செம்புழுதிப் படலம் சிறகென எழுந்திருந்தது. அவர்களின் புரவிகளுக்கு இருபுறமும் முயல்கள் சேர்த்து கட்டப்பட்டு தொங்கின. காற்றில் நீந்தி அருகணைந்து புரவியிலிருந்து இறங்கினர். நூறு முயல்களுக்கு மேல் அவர்களிடம் இருந்தன. அவர்களை அணுகிய ஏவலரிடம் அம்முயல்களை அளித்துவிட்டு என்னை பார்த்தனர்.

நான் தலைவணங்கி “நூறு முயல்களா? அத்தனை அம்புகளுடன் சென்றீர்களா?” என்றேன். “இங்கே நாணல்கள் மிகக் கூர்மையானவை” என்று கிருதவர்மன் சொன்னார். “சரியாக ஏவினால் முயலின் இதயத்தில் பாய்ந்துவிடுவன.” சாத்யகி “சொல்க!” என்றார். நான் “மூத்தவர் ஃபானு இங்கிருந்து கிளம்பிச் செல்வதற்கு முடிவெடுத்துவிட்டார். ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது” என்றேன்.

கிருதவர்மன் வியப்புடன் “ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டதா? எப்போது? எதையும் உசாவவில்லையே?” என்றார். சாத்யகி “எங்கே செல்வதற்கு?” என்றார். “நேற்று மாலை நான் அவனிடம் பேசினேனே” என்றார் கிருதவர்மன். “இம்முடிவு சற்றுமுன்னர் எடுக்கப்பட்டது” என்றேன்.

“என்ன நடந்தது?” என்று சாத்யகி கேட்டார். “அவர் சற்றுமுன் நிமித்திகரை அழைத்து எங்கு செல்லக்கூடும் என்று கேட்டார். அவர்கள் கூறியதும் அக்கணமே ஆணை பிறப்பித்துவிட்டார்” என்றேன். சாத்யகி “அறிவிலி!” என்றார். “அந்நிமித்திகரின் வடிவில் எவர் வேண்டுமானாலும் வந்து அந்த எண்ணத்தை சொல்லமுடியும். ஒவ்வொன்றுக்கும் குலமூத்தார், நிமித்திகர், படைத்தலைவர், அமைச்சர், குடித்தலைவர் என்ற ஐந்து தரப்பினரின் சொல் கேட்காமல் அரசன் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. ஐம்பேராயம் தலைக்கொள்ளலே அவன் கடன்” என்றார்.

கிருதவர்மன் “அவன் பல தருணங்களில் வெறும் உணர்ச்சிகளால் இயங்கும் யாதவர் போலவே இருக்கிறான்” என்றார். சாத்யகி “அவர் எப்போதும் அப்படித்தான்” என்றார். “எங்கு செல்கிறான்?” என்று கிருதவர்மன் கேட்டார். “பிரபாச க்ஷேத்ரம் என்னும் நிலம் இங்கிருந்து பதினைந்து நாள் நடைத்தொலைவில் உள்ளது என்றும், அது ஒரு புல்வெளி என்றும், கடலோரமாக அமைந்திருக்கிறதென்றும், அதுவே நல்லதென்றும் நிமித்திகர்கள் கூறினார்கள்” என்றேன். சில கணங்களுக்குப் பின் கிருதவர்மன் “எவ்வண்ணம் கூறினார்கள்?” என்றார். “இத்தனை தெளிவாக எந்த நிமித்திகரும் கூறுவதில்லை.”

“அவர்கள் தரையில் களம் வரைத்து கவடி நிரப்பி கணித்து கூறினார்கள்” என்றேன். “திசை மட்டும் சொன்னார்களா இடத்தையும் சேர்த்துச் சொன்னார்களா?” என்று கிருதவர்மன் கேட்டார். “திசை மட்டுமல்ல, இடத்தையும் செல்லும் தொலைவையும்கூடச் சொன்னார்கள். அந்நிலத்தின் நன்மைகளையும் விரித்துரைத்தனர்” என்றேன். “முதல் முறையிலேயே கூறிவிட்டனரா?” என்று கிருதவர்மன் மீண்டும் கேட்டார். ”ஆம்” என்றேன். “எனில் அதற்கு என்ன பொருள்?” என்றார். நான் என்ன சொல்வதென்றறியாமல் பேசாமல் நின்றேன். “சொல்க, என்ன பொருள்?” என்றார்.

நான் ”தெரியவில்லை, தந்தையே” என்றேன். “அறிவிலி, அவர்கள் முன்னரே அதை முடிவு செய்திருக்கிறார்கள். அந்த முடிவை எடுத்தபின் அதை நெடுநாட்களாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் இங்கு வந்து சொல்லியிருக்கிறார்கள். அங்கு வந்தபின் அவர்கள் எதையும் கணிக்கவில்லை” என்றார் கிருதவர்மன். எனக்கு உடனே அது உண்மை என்று தெரிந்தது. “ஆம், அவ்வாறுதான் இருக்கவேண்டும்” என்றேன். பின்னர் அச்சத்துடன் “அவர்கள் ஒற்றர்களா?” என்று கேட்டேன்.

“ஒற்றர்களாக இருக்க வாய்ப்பில்லை. ஒற்றர்கள் நிமித்திகர்களாக வருவதும் இல்லை. இவர்கள் எளிய தெருநிமித்திகர்கள். அரசருக்கு நூல் நவின்று சொல்லும் தகுதி உடையவர்கள் அல்ல. அவர்களை அழைத்து குறிகேட்டபோது உடனடியாக நெஞ்சிலிருப்பதை சொன்னார்கள். அவர்களின் அந்த எண்ணம் துவாரகையின் குடிகளுக்கு ஏற்கெனவே இருந்திருக்கவேண்டும். அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்திருக்கவேண்டும். அது உடனே இவர்களின் நெஞ்சில் எழ அவ்வண்ணமே சொல்லியிருக்கிறார்கள்.”

சாத்யகி “ஆம், இதை நான் முன்னரும் கேட்டிருக்கிறேன்” என்றார். “துவாரகையின் மக்களின் எதிர்வினை என்னவாக இருந்தது?” என்று கிருதவர்மன் கேட்டார். “மக்கள் கண்ணீருடன் எதிர்கொண்டார்கள், கொண்டாடினார்கள்” என்றேன். “எவருமே ஐயம் எழுப்பவில்லையா? அங்கே எப்படி செல்வதென்று கேட்கவில்லையா?” என்றார் கிருதவர்மன். “இல்லை” என்றேன். “அது எங்ஙனம்? எந்த ஒரு முடிவுக்கும் மக்களில் ஒரு சாரார் ஐயம் தெரிவிப்பார்கள். ஒரு சாரார் மறுப்பு தெரிவிப்பார்கள். பெரும்பான்மை உணர்வுகள் எழுந்த பிறகு மெல்ல மெல்லத்தான் ஒற்றை உணர்வு உருவாகும். பெரும்பான்மை நோக்கியே எஞ்சியவர்கள் வந்து சேர்வார்கள். இது விந்தையாக உள்ளதே.”

நானும் அதை அப்போதுதான் உணர்ந்தேன். “ஒரு முடிவு கூறப்பட்ட உடனே அத்தனை பேரும் சேர்ந்து அதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் என்ன பொருள்? அனைவரும் அந்த முடிவை நோக்கி முன்னரே வந்திருக்கிறார்கள். அதை அரசர் சொல்லவேண்டுமென்று எதிர்பார்த்திருந்திருக்கிறார்கள். அரசர் இப்போது மக்களுக்கு ஆணையிடவில்லை. மக்கள் அரசருக்கு ஆணையிட்டிருக்கிறார்கள்” என்றார் கிருதவர்மன். “ஆம்” என்று நான் சொன்னேன். “ஆக இனி ஒன்றும் சொல்வதற்கில்லை. முடிவு எடுக்கப்பட்டுவிட்டது” என்றார் சாத்யகி. “ஆம், முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அதன் விளைவுகளையாவது நாம் எண்ணவேண்டும்” என்று கிருதவர்மன் கூறினார்.

“அத்தனை பேர் உள்ளத்திலும் திரண்டெழுந்து அப்படி ஓர் எண்ணம் எப்படி வந்தது? இந்த இடத்தின் பெயர், இதன் வழி, இதன் சிறப்பு இவர்களிடம் எவ்வாறு விதைக்கப்பட்டது? இது எங்கிருந்து கிளம்பி வந்தது?” என்று கிருதவர்மன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். “ஏன் அங்கு செல்ல வேண்டுமென்ற முடிவை அவர்கள் எடுக்கிறார்கள்? எங்கோ ஆழத்தில் இது எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது.” சாத்யகி மெல்லிய குரலில் “ஆம், இருந்துகொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது” என்று சொன்னார். கிருதவர்மன் “என்ன?” என்று திரும்பி கேட்டார்.

“அந்தகரே, இந்தப் பிரபாச க்ஷேத்ரம் என்பது இங்கு சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த தீய நிகழ்வின் முதிர்வுப்புள்ளி” என்றார் சாத்யகி. “முன்பு விஸ்வாமித்ரர் இங்கு வந்தபோது அவருடைய தீச்சொல் இந்நகர் மேல் விழுந்தது நினைவிருக்கும்.” நான் “ஆம்” என்றேன். “அதைப்பற்றி நானும் அறிந்திருக்கிறேன்” என்று கிருதவர்மன் சொன்னார். “அதன்பின் சாம்பன் தொடர்ந்து கொடுங்கனவுகளை கண்டுகொண்டிருந்தார். ஊன்தடி ஒன்று தன் உடலில் இருந்து பிறந்ததாகவும், அது நாளும் வளர்ந்து கொண்டிருப்பதாகவும், தன் குருதியை பாலென அது அருந்துவதாகவும் சொன்னார். அதற்கு பிழைநிகர் என்ன செய்வது, எவ்வண்ணம் ஆற்றி ஒழிப்பதெனத் தெரியாமல் அமைச்சர்கள் திகைத்தனர்.”

‘பல பூசனைகளுக்கும் சடங்குகளுக்கும் பின் வேறு நிமித்திகர்களிடம் கோரலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி நிமித்திகர் எழுவர் அவை கூடி, களம் வரைந்து, கல் பரப்பி, தெய்வங்களிடம் உசாவி ஒரு மறுமொழி உரைத்தனர். அதன்படி ஒரு பிழைநிகர் செய்யப்பட்டது” என்றார் சாத்யகி. நான் “அவர்கள் துவாரகையின் நிமித்திகர்கள் அல்ல. துவாரகையின் நிமித்திகர்கள் முனிவரின் தீச்சொல்லுக்கு மாற்றே இல்லை என்றே கூறினர். எவரும் அதிலிருந்து தப்பமுடியாது என்றே அறிவுறுத்தினர். மூத்தவர் சுருதன் சினந்து அவர்களை அறைந்தார். சாம்பன் அவர்களை அரியணையில் இருந்து எழுந்து வந்து ஓங்கி உதைத்து வீழ்த்தினார்” என்றேன். “அதன் பிறகு அசுர குலத்தைச் சேர்ந்த நிமித்திகர் எழுவர் அழைத்து வரப்பட்டனர். அவர்களே இந்தப் பிழைநிகர்ச் செயலை கூறினர்.”

“கூறுக, என்ன அது?” என்று கிருதவர்மன் கேட்டார். “அக்கனவு ஒரு முன்னெச்சரிக்கை. அவ்வண்ணம் ஒரு தீய கனவு வருமெனில் அக்கனவை அவ்வண்ணமே நிகழ்த்தி தீங்கிலாது முடிப்பதே அக்கனவிலிருந்து தப்பும் வழியாக அசுரர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இல்லத்தில் பாம்பு வருகிறது என்று கனவு கண்டால் நஞ்சிலாத பாம்பு ஒன்றை இல்லத்திற்கு கொண்டுவந்து விட்டு அதை பிடித்து திரும்பக் கொண்டு சென்று விட்டுவிட்டால் அந்த வருநிகழ்வில் இருந்து மீள முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதைப்போல இதற்கும் செய்யலாம் என்றனர்” என்றேன்.

“அவர்களின் சொற்களின்படி ஒரு பூசனைச் சடங்கு ஒருங்கிணைக்கப்பட்டது. சாம்பன் கனவில் கண்டவை என்னென்ன என்று விரிவாக உசாவப்பட்டு அவ்வண்ணமே அனைத்தும் ஒருக்கப்பட்டன. அரண்மனையில் பெண்ணுக்குரிய ஆடையை அணிந்து சாம்பன் மஞ்சத்தில் படுத்திருந்தார். அவர் உடலில் வயிற்றுடன் சேர்த்து ஒரு இரும்புத்தடி வைத்து கட்டப்பட்டது. பின்னர் சுண்ணமும் மஞ்சளும் கலந்த செங்குருதிக் கலம் ஒன்று அவர் கால் நடுவே உடைக்கப்பட்டது. மெய்யாகவே அந்த இரும்புத்தடியை அவர் ஈன்று புறந்தருவதுபோல நடித்தனர். குழவியென அதை எடுத்துக்கொண்டு சென்று நீராட்டு, பெயர்சூட்டு முதலிய அனைத்து பிறவிச் சடங்குகளையும் செய்தனர். அச்சடங்கில் நானும் பங்கேற்றேன். என் மைந்தனுக்குச் செய்யவேண்டிய அனைத்தையும் செய்தேன். இனிப்பு தொட்டு நாவில் வைப்பது, மலர் எடுத்து இட்டு வணங்கி வாழ்த்துவது என…”

“அன்னையர் இச்சடங்கு நடந்ததை அறியவில்லை. அரண்மனையில் யாதவ மைந்தர் மட்டுமே அறிய இது நடந்தது. அதன் பிறகு அந்த இரும்புத்தடி இறந்துவிட்டது என அவர்கள் அறிவித்தனர். நாங்கள் அதற்கு இறுதிச்சடங்குகள் அனைத்தையும் செய்தோம். நாவில் பால்தொட்டு வைத்தோம். அரிமலரிட்டு வணங்கினோம். ஆடை நீக்கி அதை அவர்கள் ஒரு தொட்டிலில் வைத்து எடுத்துச் சென்றனர். என்ன செய்யப்போகிறீர்கள் என்று சாம்பன் கேட்டார். அதை கீழே கற்களை நொறுக்கும் இரும்பு உருளைகளுக்கு நடுவே கொடுத்து துண்டு துண்டாக பொடித்து தொலைவில் எங்கேனும் வீசப்போவதாக சொன்னார்கள். அவர்கள் அதை கொண்டுசெல்வதை சாம்பன் நெடுந்தொலைவு வரை பார்த்துக்கொண்டிருந்தார்” என்று நான் சொன்னேன். “மெய்யாகவே சாம்பன் அதன்பின் அக்கனவிலிருந்து விடுபட்டார். அதை மறந்தும்போனார்.”

“அவர்கள் கொண்டு வீசிய நிலம்தான் பிரபாச க்ஷேத்ரம்” என்று சாத்யகி சொன்னார். “தங்களுக்கு எவ்வண்ணம் தெரியும்?” என்று நான் கேட்டேன். “அனைவருக்கும் தெரிந்ததுதான் அது. அங்கு கொண்டு வீசியவர்கள் இங்கு வந்து சொன்னார்கள். சில நாட்களிலேயே துவாரகை முழுக்க பிரபாச க்ஷேத்ரத்தில் அந்த ஊன் தடி வீசப்பட்ட செய்தி தெரிந்துவிட்டது. அங்கு அந்த ஊன்தடியின் பொடிகள் மணலில் விதைகளாக முளைத்து கூரிய இரும்புமுனை கொண்ட புற்களாக செறிந்திருப்பதாக சூதன் ஒருவன் பாடினான். அவை இயற்கையாகவே முளைத்த கூரிய அம்புகள் என்றான். யாதவர்களின் குலத்திற்கு காவலாக அந்த அம்புகளை தெய்வங்கள் படைத்திருப்பதாகவும் அவை மூதாதையரின் வாழ்த்து என யாதவருக்கு வழங்கப்பட்டவை என்றும் சொன்னான்.”

“லோகநாசிகை என்று அந்தப் புல்லை இங்கே சூதர்கள் சொன்னார்கள். லோகநாஸிகா பிரபோதனம் என்று ஒரு குறுங்காவியம்கூட ஒரு புலவரால் இயற்றப்பட்டது. இங்கு சில நாட்கள் அந்தப் பாடல் புழங்கியது. அவ்வப்போது சிறு பூசைகளிலோ இல்லக்களியாட்டுகளிலோ அந்தப் பாடல் ஒலிக்கிறது” என்றார் சாத்யகி. “தங்கள் மூதாதையரின் படைக்கலங்கள் புற்களாக எழுந்து நிற்கும் நிலம் என்று இம்மக்கள் பிரபாச க்ஷேத்ரத்தை நம்புகிறார்கள். இங்கிருந்து முதலில் சிறுகுழுக்களாக கிளம்பியபோதே ஒரு சிலர் அங்கு செல்லவிருப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். அங்கு சென்றுவிட்டால் எவரும் தங்களை தாக்க முடியாதென்றும், மூதாதையரின் புல்முனைப் படைக்கலங்கள் தங்களுக்கு காவல் இருக்கும் என்றும் சொன்னார்கள். அவர்களின் உறுதியான நம்பிக்கை பிறரிடமும் பரவியிருக்கலாம்.”

“அனைவரும் சேர்ந்து அந்த முடிவை எடுத்துவிட்டார்கள். அனைவரின் பொருட்டும் ஃபானு அதை அறிவித்துவிட்டார்” என்று நான் சொன்னேன். “அங்கு செல்ல வேண்டியதில்லை என்றே எனக்கு தோன்றுகிறது” என்று கிருதவர்மன் சொன்னார். சாத்யகி “ஆனால் இனி ஒரு மறுசொல் எழவியலாது. அரசர் ஒன்று உரைத்த பின்னர் நாம் அதை மாற்றக்கூடாது. மேலும் இன்று ஃபானு அரசரல்ல. அவருக்கு நிலமில்லை, முடியில்லை, அரண்மனையில்லை. நமது நம்பிக்கையால், நம் சொல்லால்தான் அவர் அரசராகிறார். அவரை மறுத்தோமெனில் அவர் அரசராக அல்லாமல் ஆவார். எனில் அரசரில்லாத வெற்று மக்கள்திரளாக இது ஆகும். பின்னர் இதை ஆணையால் கட்டுப்படுத்த இயலாது” என்றார்.

கிருதவர்மன் “நான் சொல்வதை அவனிடம் சொல்லியாகவேண்டும்” என்றார். “இனி சொல்லி ஒன்றும் ஆவதில்லை. முதலில் பிரபாச க்ஷேத்ரத்திற்கு செல்வோம். அது உகந்ததல்ல என்று அங்கிருந்து பிற நிலங்களுக்கு செல்வோம். இப்போது செய்வதற்குகந்தது அது ஒன்றே” என்றார் சாத்யகி. “இல்லை, இது அழிவுக்குச் செல்லும் பாதை. இதை தடுத்தாகவேண்டும்” என்று கிருதவர்மன் சொன்னார். “நாம் உடனே கிளம்புவோம். புறப்பாட்டை நிறுத்தியே ஆகவேண்டும்.”

சாத்யகி “பிரபாச க்ஷேத்ரத்தை நோக்கிய யாதவர்களின் பயணம் எவராலும் ஆணையிடப்படவில்லை. உண்மையில் அது யாதவர்களின் உள்ளுறைந்த ஏதோ விசையால் முடிவெடுக்கப்பட்டது. அவ்விசை அவர்களை கொண்டுசெல்கிறது. ஃபானு பிரபாச க்ஷேத்ரத்திற்குச் செல்லவேண்டுமென்ற முடிவை எடுப்பதற்கும் அறிவிப்பதற்கும் யாதவர்களின் தொகைக்குள் வாழ்ந்த அறியாத் தெய்வமொன்றே வழி வகுத்தது என்றே நான் கொள்கிறேன்” என்றார்.

“நான் முற்கூறும் நம்பிக்கைகளை ஏற்பவனல்ல. எனினும் இதில் ஏதோ ஒவ்வாமை இருக்கிறது. பிரபாச க்ஷேத்ரம் உகந்த இடம்தானா என்பதை நாம் முதலில் முன்னோடி ஒற்றர்களைக் கொண்டு நோக்கவேண்டும். அவர்கள் அங்கு நாம் தங்குவதற்கும் பெருகுவதற்கும் வழியிருக்கிறதென்று கூறிய பின்னரே நாம் கிளம்பவேண்டும். இங்கிருந்து கிளம்பிச் சென்ற பின்னர் அந்த இடம் பொருத்தமல்ல எனில் மீண்டும் ஒரு நெடும்பயணத்தை நாம் செய்யமுடியாமலாகும். அது அழிவுக்கே வழிவகுக்கும்” என்றார் கிருதவர்மன்.

சாத்யகி “ஆம், ஆனால்…” என்று தொடங்க கிருதவர்மன் இடைமறித்து “ஆம், அங்கிருந்து பிற நாட்டு நிலங்களின் தொலைவு என்ன, எதிரிகள் எளிதில் வந்து தாக்கும் வாய்ப்புண்டா என்றெல்லாம் ஆராய வேண்டும். தகுதியுடைய ஒற்றர்களும் அவர்களுடன் வழிநடத்தும் அரசகுடியினரும் சென்று நோக்கி வந்தாலொழிய இங்கிருந்து கிளம்புவது அறிவின்மை” என்றார். நான் “இத்தருணத்தில் எவரும் அதை மூத்தவர் ஃபானுவிடம் உரைக்க இயலாது” என்றேன். “உரைக்கலாம். அது நமது கூட்டான முடிவாக இருக்குமெனில்” என்று சாத்யகி சொன்னார்.

“நாம் இங்குள்ள மூன்று அரசத் தரப்பினரிடமும் பேசுவோம். நான் பிரத்யும்னனிடம் பேசுகிறேன். அவன் இதை ஏற்பான். ஃபானுவைவிட அரசுசூழ்தலில் பழக்கமும் அதில் நம்பிக்கையும் கொண்டவன். அதன்பின் கிருஷ்ணையுடன் பேசுவோம். அதன்பின் அவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பதை நமது எண்ணத்துடன் கலந்து ஃபானுவிடம் சொல்வோம்” என்று கிருதவர்மன் சொன்னார். “ஆனால் எடுத்த முடிவை அரசன் மாற்றலாகாது” என்றார் சாத்யகி. “பிரபாச க்ஷேத்ரத்திற்கு கிளம்பப்போவதில்லை என்பதை அவன் அறிவிக்க வேண்டியதில்லை. நற்செய்தி ஒன்றுக்காக காத்திருக்கிறோம் என்று மக்களிடம் கூறலாம்” என்றார் கிருதவர்மன்.

நான் “எனில் நாம் அனைவரும் ருக்மிக்காக காத்திருக்கிறோம், அவர் நமக்கு உரிய பொருட்களுடன் வந்துகொண்டிருக்கிறார் என்று மக்களிடம் கூறுவோம். மெய்யாகவே அவர் இங்கு வந்துகொண்டிருக்கிறார் என்று செய்தி வந்திருக்கிறது. மக்களும் அதை அறிவார்கள். அதன்பொருட்டு காத்திருக்கலாம்” என்றேன். “ஆம், அதன்பொருட்டு காத்திருக்கலாமே. அனைத்து வகையிலும் அது உகந்ததே. ருக்மி பொருட்களுடனும் படைகளுடனும் கிளம்பி ஃபானுவை பார்க்க வருகிறார் என்பது ஃபானுவின் நிமிர்வை மேலும் கூட்டுவதுதான். எந்த வகையிலும் அவனுக்கு இழிவல்ல” என்றார் கிருதவர்மன்.

“எவ்வகையிலாயினும் நாம் காத்திருக்கத்தான் வேண்டும். உடனே இங்கிருந்து கிளம்புவது என்பது அறியா நிலம் ஒன்றிற்குள் நாம் இறங்குவதுபோல. தவளை எங்கும் பாயும். யானை ஏழுமுறை தொட்ட பின்னரே முதல் காலெடுத்து வைக்கும் என்பார்கள்” என்றார் கிருதவர்மன். “ஆம், முயல்வோம்” என்றார் சாத்யகி.

தொடர்புடைய பதிவுகள்

நஞ்சு, இறைவன் –கடிதங்கள்

$
0
0

நஞ்சு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

நஞ்சு சிறுகதை ஒரு கசப்பில் முடியும் கதை. நாம் நினைவில் நிறுத்தியிருப்பவை கசப்புகள்தான். ஆகவே நம் வாழ்க்கையை பெரும்பாலும் கசப்புகள்தான் தீர்மானிக்கின்றன என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அது அப்படித்தான். கசப்புகளை வளர்த்துக்கொள்ளவும் புதிய அர்த்தங்களை அளிக்கவும் மனிதனுக்கு ஒரு இயல்பான மோகம் உள்ளது

நஞ்சு கதையில் அந்தப்பெண் அவன் மனதில் பெண் என்று இருந்த இனிமையை இல்லாமலாக்கிவிட்டாள். அது பெரிய ஒர் இழப்பு. இது பலருக்கும் நிகழும். பலசமயம் மனைவியிடமிருந்தே இந்த நஞ்சு கிடைக்கும். அந்தக்கதையில் அவன் படும் அவஸ்தையும் அவன் அவளை துரத்திச் செல்வதும் எல்லாம் அத்தனை கூர்மையாகவும் முழுமையாகவும் சொல்லப்படவில்லை என்றால் இந்த இழப்பின் வலி பதிவாகியிருக்காது. இந்த இழப்பு ஒரு ஆன்மீகமான விஷயம். நமக்கு பல்விழுந்து முளைப்பது மாதிரி ஒரு பரிணாமம்

அந்த வலியே அவனை அலைக்கழிக்கிறது. அவன் கடைசியில் அறிவதும் ஒன்றுதான். அவனால் அவன் இழந்த அந்த மானசீகமான பெண்ணை திரும்ப அடையவே முடியாது

 

எஸ்.ரவீந்திரன்

 

அன்புள்ள ஜெ,

‘நஞ்சு’ சிறுகதையில் அந்தச் சந்திப்பில் அவள்  இருவருக்குமே நஞ்சை அளித்துவிடுகிறாள். மூவரின் சந்திப்பும் ஒரு ஜங்ஷனில் நிகழ்வதும் பொறுத்தம்தான். சந்தேகக்கணவனுக்கு அளித்தது antidote இல்லாத நஞ்சு. அந்தக் கண்ணீரே இருவருக்கும் வேறுவேறு வகையில் நஞ்சாகிவிடுகிறது.  உளவியல் ஆட்டம்தான். அதை ஒர் ஆட்டம் என்று சொல்வதை விட உள ஓட்டம் என்று சொல்லலாம். ஏனெனில் அதீதமான ஒரு உணர்வின் பிடியில் இருக்கும் ஒரு மனித உள்ளத்திற்கு என்று ஒரு path way இருக்கிறது. அதில்தான் எப்போதுமே அது ஓடுகிறதோ என்ற மாயம் ஏற்படுகிறது. சந்தேகத்தின் பிடியில் இருக்கும் உள்ளம் அவமதிப்பு-சித்திரவதை என ஒரு பாதையில் ஓட அதற்கு எதிர்வினை ஆற்றும் அவள் உள்ளம் தண்டனை-வஞ்சம் என இன்னொரு பாதையில் ஓடுகிறது.

அந்த ’நச்சு’ சந்திப்பிற்குபின் மூவருமே மூன்றுவகையில் தங்கள் உணர்வுகளை வளர்த்துக்கொள்கிறார்கள்.  உண்மையா பொய்யா என்று அந்தக் கணவன் எரிகிறான். உணர்வுகள் தீவிரமாகி கதைசொல்லியைத் தேடி அந்த ஜங்க்‌ஷனில் மீண்டும் வந்து நிற்கிறான்.

அந்தச்சந்திப்பில் கதைசொல்லியை அவள் victim ஆக்கிவிடுகிறாள். உள்ளத்தில் பட்டு நூல் போல மெலிதாக ஒர் இடம் இருக்குமே அந்த இடத்தை அவளின் நஞ்சு பொசுக்கிவிடுகிறது.  கதைசொல்லி அதன்பின் உணர்வது ஒருவகை righteous anger. அவன் மனம்  கோபம் – வெறுப்பு- கொலை என்று சென்றுகொண்டிருக்கிறது.

அவள் பகற்கனவை வளர்த்து வளர்த்து உச்சத்திற்கே கொண்டுச்செல்கிறாள்.  கற்பனையில் நூறுதடவை நின்று ஒரு நாள் ’நின்றுபார்த்தால் என்ன?’ என்று கிளர்ந்து உண்மையிலேயே அந்தச் சந்திப்பில் சென்று நிற்கிறாள். அப்போது  துளித்துளியாக நஞ்சு திரண்டு மீண்டும் இன்னொரு  செயல்வடிவம் கொள்கிறது.  ‘ஸ்வீட்டா இருந்தது’, ‘இனிச்சு கிடந்தது’ என்று இனிமை போல காட்சியளிப்பது நஞ்சின் நிழல்தான்.

கடைசியில் ‘ஆமாண்டா அப்படித்தானு சொல்லிடுவேன்’ என்று அவள் முன்னடி வைப்பது உண்மையிலேயே நஞ்சில் நனைவோமா என்ற அழைப்புதான். ஆனால் அவளை உந்தித்தள்ளும்போது அவனுள் அந்த விக்டிம் மகிழ்ச்சி அடைகிறான். ஏனெனில் அது ஒரு get even moment. ஆனால் அந்த திளைப்பு ஒருகணம்தான். பின்பு வெறுமை. ஏனெனில்  அவன் இளமை முதலே உருவாக்கி வைத்திருந்த ‘இனிமையான’  ஒர் இடத்தில் மீண்டும் நஞ்சு கலந்துவிடுகிறது. அதுதான் அவனில் எழும் கசப்பிற்கு காரணம். கதை அந்த இடத்தில் முடிகிறது.

இனி அந்த நஞ்சின் கசப்பை எப்படி அவன் transcend செய்யப்போகிறான்? ஆனால் அது வேறொரு கதை.

அன்புடன்,
ராஜா

 

இறைவன் [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

இறைவன் கதை இன்னும் மனதில் நீடிக்கிறது. அந்தக் கதை எழுப்பும் கேள்வி ஒன்றுதான். கலைஞனின் இடம் என்ன? கடவுளை உருவாக்கியவனே ஒரு கலைஞன் அல்லவா? இருட்டில் அவன் வரைந்த ஒளிதானே கடவுள்? அவன் கடவுளை படைக்கும் கடவுள். பிரம்மனை படைக்கும் பரம்பொருள்.

மதம் மனிதனுக்கு அபின் என்றார் மார்க்ஸ். இதயமற்ற உலகின் இதயம். கலை கருணையற்ற உலகின் கருணை. மதத்தையே படைத்த கருணை. அவள் ஏன் பகவதியிடம் கேட்கவில்லை? ஏன் ஆசாரியிடம் கேட்கிறாள்? ஏனென்றால் பகவதியை வரைந்தவனே ஆசாரிதானே?

இதுவரை மனிதன் படைத்த உச்சகட்ட படைப்பு என்றால் கடவுள்தான். கலை இலக்கியம் எல்லாமே சேர்ந்து படைத்த ஓர் உன்னதம் அது. அதைப்பிடித்துக்கொண்டுதான் மனிதர்கள் இங்கே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்கிறார்கள்

 

குமார் முருகேசன்

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

 

இந்தப் பருவத்தின் ஆகச் சிறந்த கதையாகவே இதை நான் கருதுகிறேன். வாசகர்களுக்கு பல்வேறு கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறீர்கள்.

கடவுள் உருவங்கள் என்பது மனித உருவாக்கம்தான் என்றபோதிலும் அதை உருவாக்கும் கலைஞனின் உள்ளார்ந்த ஈடுபாடே அந்த கடவுளுக்கு சக்தியை அளிக்க வல்லதாக இருக்கிறது. அந்த சக்தியை இங்கே மாணிக்கம் ஆசாரி  தருகிறான். அவன் மூலம் இசக்கியம்மையும் பெற்றுக்கொள்கிறாள். பகவதியை விட்டு விட்டு மாணிக்கத்தை அவள் கடவுளாக பார்க்க ஆரம்பிக்கிறாள்.

படைக்கும் தொழில் இங்கு ஆரம்பமாகிறது.

 

இளம்பரிதி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பொலிவதும் கலைவதும்,முத்தங்கள் -கடிதங்கள்

$
0
0

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

மதிப்புக்குரிய ஆசிரியருக்கு,

 

திபெத்திய புத்த பிக்குகள், பல நாட்களாக வரையும் வண்ண கோலம் – கானொளி பார்க்க நேர்ந்தது .

முடிவில், அவர்களே அதை அழித்து, ஒன்றும் இல்லாது ஆக்கும்போது , ‘  பொலிவதும் கலைவதும்   ‘ நினைவில் எழுந்தது .

மிக்க நன்றி .
-ஓம் பிரகாஷ்

 

அன்புள்ள ஜெ

பொலிவதும் கலைவதும்தான் உங்களுக்கு பிடித்த தலைப்பு என்று எழுதியிருந்தீர்கள். எனக்கும்தான். அந்த தலைப்பு ஒரு அற்புதமான கவிதைபோல ஒரு மந்திரம்போல மனசுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. வாழ்க்கை என்பது பொலிவது பிறகு மெல்ல கலைவது. சொல்லப்போனால் ஒரு நாற்பதாண்டுகள் பொலிவு. ஒரு நாற்பதாண்டுகள் கலைவு

அழகான கதை அது. ஆயுஷ்ரேகை ஒன்று வெண்மையாக குறுக்கே ஓடி அந்த களத்தை இரண்டாகப் பகுக்கிறது. அதன் வண்ணங்கள் அழிவதே இல்லை. அந்தக்கதையின் அழகே அவனும் அவளும் நின்றிருக்கையில் பூசாரி வந்து அவர்கள் கணவனும் மனைவியுமா என்று கேட்பது மிக இயல்பாக அவர்களின் உடல்மொழியில் அது நிகழ்ந்திருக்கிறது

எஸ்.ராஜ்குமார்

 

முத்தங்கள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

முத்தங்கள் பலவகையில் விரிந்துசெல்லும் கதை. ஒன்று திருடன். ஏன் திருடன்? ஏனென்றால் அவனால்தான் பேய்களின் உலகில் இயல்பாக ஊடாட முடியும். அதேசமயம் கூத்துக்கலைஞன். ஏனென்றால் அவனுக்குத்தான் பொழுது இருக்கிறது. வாய்ச்சவடால் இருக்கிறது. திருடன் நடித்துக்கொண்டே இருப்பவன் தானே? கூத்துக்கலைஞன் நம்முள் திருட்டுத்தனமாக நுழைபவன்தானே?

அந்தக்கதை அவன் அந்தக் கிணற்றுக்குள் நடித்துக்கொண்டது. ஒரு கனவு. அல்லது ஒரு டிரான்ஸ் நிலை. அவனை நாய் அடையாளம் கண்டுகொண்டது. குரைக்கிறது, அவனை மீட்டுவிடுகிறார்கள். ஆனால் அந்த நாயாக மாறி அவனே அவனைப்பார்த்துக் குரைக்கவும் செய்கிறான்

கிணற்றுக்குள் அவன் பார்த்த அந்தப் பெண்ணின் கதை அவனுடைய மனம் என்னும் ஆழத்தில் வாழ்வதுதான். முகலாயப்படையெடுப்பில் கொல்லப்பட்டவள். ஒரு கிணற்றிலிருந்து இன்னொரு கிணற்றுக்குள் வந்து சேர்ந்து வாழ்பவள். அவள் ஒரு கனவு. ஆகவேதான் அவனால் அவளை தொடவே முடியவில்லை. அவளை எவரும் முத்தமிடவில்லை. முத்தமிடவே முடியாத கன்னி அவள்

செல்வக்குமார்

 

அன்புள்ள ஜெ.

 

முத்தங்கள் சிறுகதை வாசித்தேன். மூக்கன் என்ற திருடன் தன்னைப் பைரவன் ஆக்குவது வரைக்கும் அற்புதமான கதை நிகழ்வு என்றே கூறுவேன். ஆரம்பத்தில் அந்தத் திருட்டுக்கான முன்னேற்பாடுகளை அழகியல் பூர்வமாகக் கூறியுள்ளீர்கள். நான் கதை ஒரு திருட்டைப் பற்றி மட்டுமே கூறப்போகிறது என்று நினைத்து வேறொரு சுவாரசியத்தை உள்ளே புகுத்து இருந்தேன்.  வள்ளுவரின்

இடனறிதல் அதிகாரத்தில்  கடைசிக் குறள்தான் ஞாபகம் வந்தது மூக்கன் அங்கிருந்து வெளியேற தன்னை பைரவனாக்கியது.

மேலும் இந்தக் கதையில் ஒருவித நாட்டாரியல் கூறுகள் இருப்பதாகவும் எனது வாசிப்பில் தெரிகிறது. குறிப்பாகக் கதையின் இறுதியில் மூக்கன் முத்தாலம்மனிடம் ஓடித்தப்ப முனைவது.

நாய்கள் பற்றிய பிம்பங்களை வேறான பார்வையில் முன்வைக்கிறீர்கள் ஜெ. நம்மால் ஊகிக்க முடியாத வகையில் கதையின் அழகியல் வளர்கிறது. அன்பு, காதல், காமம் என்பவை மனிதருக்கு மட்டுமேயானவை என்ற கருத்து நிராகரிக்கப்பட்டு, இம்மூன்றின் இணைப்பாகவுள்ள முத்தமிடல் என்பது கச்சிதமாகக் கதையில் பரவவிடப்படுகிறது.

பிற்காலச் சோழர்- விஜயநகர நாயக்கர்- இஸ்லாமிய படையெடுப்பு- பிற்கால நாட்டாரியல் என்று வரலாறு குறியீடானாலும் (நான் நினைக்கிறேன்) முத்தங்கள்  பரவசப்படுத்துகிறது. ஏதோ ஒரு சாகச உணர்வு கதைக்குள்.

 

சுயாந்தன்.

தொடர்புடைய பதிவுகள்

தேவி,நற்றுணை -கடிதங்கள்

$
0
0

 

தேவி [சிறுகதை]

வணக்கம் ஜெயமோகன்.

மூன்று நான்கு நாட்களாக வாசிக்கவும் அணுகவும் ஒன்றவும் கடினமாக இருந்த கதைகளைப் படித்துவந்த எனக்கு, இன்றைய கதை ‘ தேவி’ நெருக்கமாக இருக்கிறது. முடியலாம் உங்களுக்கு. இதை உங்கள் இடது கையால் எழுதமுடியும் அளவுக்கானது எனக் கூட – உங்களுக்குத் தோன்றாது – உங்களின் தர்க்கபூர்வமான வாசகர்க்குத் தோன்றலாம். ஆனால் இந்தக் கதை முக்கியமான கதை.

அந்த ஸ்ரீதேவியாகிய சரஸ்வதி அக்கா முக்கியம், அனந்தன் முக்கியம், லாரன்ஸ் முக்கியம், ஆர்மோனியம் காதர் சாய்பு முக்கியம், ஜெயமாருதி என்று கும்பிட்டு சீன் படுதாவை இழுத்துப் போடும் வடிவுடையான் முக்கியம். இப்படி ஒவ்வொருவராகச் சொல்லிக்கொண்டே போவதற்குப் பதிலாக ஒன்றைச் சொல்லி நிறைவு செய்து கொள்ளலாம். எல்லோரையும் விட நீங்கள் முக்கியம் ஜெயமோகன். – நல்லா இருங்க.

வண்ணதாசன்

 

அன்புள்ள ஜெ,

எனக்கு பிரியமான ஒரு பொம்மை உண்டு. Matryoshka Doll எனச்சொல்லப்படும் ரஷ்ய மரப்பாவை பொம்மைகள். ஒன்றுக்குள் ஒன்றுக்குள் ஒன்று என விசேஷமான வடிவம் கொண்ட nested மரப்பாவைகள்.  அதாவது பாவைக்குள் பாவைக்குள் பாவை. அளவு ரீதியாக குட்டிக்குள் குட்டி என வைக்கப்பட்ட குட்டிகுட்டிப் பாவைகள்.

இந்தபொம்மை சில கதைகளுக்கு மிகப்பொருத்தம். ஏனெனில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒருசில குணாதிசயங்களுடன் இருக்கும். அதைவைத்து ஒரு மையப்பாவையை கற்பனை செய்துகொள்ளலாம். வீணையை மீட்டுவது போல முன்னும் பின்னும் மீட்டி  கதைக்கு ஏற்ப மையப்பாவையிலிருந்து பிற பாவைகளுக்குச் செல்லலாம். ’லீலை’ கதையில் அவள் மையமே புகைபோலத்தான் உள்ளது. அவள் அங்கிருந்து  பெயரையும் அடையாளத்தையும் மாற்றிக்கொண்டே செல்கிறாள். அவள் சூழலுக்கு ஏற்ப எண்ணற்ற பாவைகளின் வழியே  ஒழுகிச்செல்லும் ஒரு பாவை. அதனால்தான் அது லீலை.

’தேவி’ கதையில் அவள் நடிகை. கலைப் பாவை. அந்தப்பாவையிலிருந்து அம்மை, காதலி, வில்லி என்று எண்ணற்ற பாவைகள் வந்துகொண்டே இருக்கின்றன. தன் core identity ல் (Identity என்று சொல்வது ஒரு வசதிக்குத்தான். அதுவும் ஒன்றுக்குள் ஒன்றுக்குள் ஒன்று எனச் செல்லும் ஒன்றுமற்ற ஒரு அருவம்தானே!) இருந்து விரிந்துகொண்டே செல்பவள். அப்போது அவள் அனைத்தையும் தன்னுள் உள்ளடக்கிய ’தேவி’ போல விஷ்வரூபம் கொண்டுவிடுகிறாள்.  அதை உணர்ந்தவன் அவள் காலில் விழுகிறான்.

பாவையின் பாலினத்தை மாற்றினால் (என்னைப்பொறுத்தவரை மாற்றக்கூட வேண்டாம்) இங்கிருந்தே ’குருவி’ மற்றும் ’இறைவன்’ கதைகளுக்கும் சென்றுவிடலாம்.  கலைஞர்களைப் பற்றிய கதைகள். அந்தக் கதையில் மையப் பாவை அல்லது Identity  போல ஒன்று காட்டப்படுகிறது. ’ஒழுக்கமில்லாதவன்’ மாடன்பிள்ளை. ’கோளிதிருட வந்தவன் போல இருக்கிறான்’ என்பது  இறைவன் ஆசாரி. ஆனால் அந்த மையத்திலிருந்து கலைஞனின் அடையாளம் கதையில் விரிந்துக்கொண்டே செல்கிறது. கடைசியில்   குருவிகூட்டின் வழியே கலைஞனும் இயற்கையும் அருகருகில் வைக்கும்போது உருவாகும் கலைஞனின் அடையாளம்தான் கதை. இயற்கைச்சார்ந்த ஒர் அடையாளம்.  இறைவனின் ஆசாரி அதனுடன் நின்றுவிடவில்லை. இன்னும் ஒரு படி மேலேச் சென்று cosmic identity எடுத்து படைக்கும் இறைவன் ஆகிவிடுகிறான்.

இன்னும் கூட சில கதைகளை சொல்லலாம். ‘பெயர்நூறான்’ . அந்த குழந்தைதான் மையப்பாவை. ரியாலிட்டி அளித்த ஒற்றை உடல். ஒன்றே ஒன்று. ஆனால் சொல்லில், கற்பனையில் அந்த குழந்தையை நூற்றுக்கணக்கான பாவைகளாக ஆக்கிவிடலாம். Literature is reality-multiplying device.  ’யா தேவி!’ யின் எல்லா ஆன்ஸெல். பார்ன் நடிகை. அவளே எண்ணற்ற அறுவை சிகிழ்ச்சையின் வழியே உருமாறிய பலபெயர்களுடையப் பாவை. மேலும் பதினெட்டாயிரத்திற்கும் மேற்பட்ட அவளின் பொம்மைகள். நுரைபோல பெருகும் ஒருவகை விஷ்வரூப பாவை. அந்த நுரையை முடிவிலி  வரை கொண்டுச்செல்ல முடிந்தால்  ‘யா தேவி சர்வஃபூதேஷு சக்திரூபேண’  தரிசனம் கிடைக்கும்.

இந்த உவமையை இலக்கியத்திற்கே கூட பொருத்திப்பார்க்கலாம்.  ஒரு எழுத்தாளனே இப்படி ஆயிரக்கணக்கான பாவைகளை தன்னுள் கொண்டுள்ள ஒரு  nested மனம்தானே!  ஆனால் இந்தப் பாவைகள் தர்க்கவடிவம் கொண்டதாக இருக்கிறதே! எனவே கற்பனையால் அதை உடைப்போம். இந்தப்பாவைகளை புகைபோல வடிவமற்ற வடிவமாக மாற்றுவோம். உயிரையும் அளிப்போம்.

கதையின் தரிசனத்தை இருள்-தீமை-உன்னதம்-ஒளி என்ற இடைவெளி அற்று நீண்டுச்செல்லும் ஒரு continuum ஆக எடுத்துக்கொள்ளலாம். அப்போது கதைமாந்தர்கள் இருளிலிருந்து ஒளி வரை இடைவெளி இல்லாமல் ஒழுகிச்செல்லும் எண்ணற்ற பாவைகள் போல ஆகிவிடுகிறார்கள். சில சமயம் கதை ஒளி-ஒளி-ஒளி எனச் சென்று இருள் பாவையை அடைகிறது. அல்லது இருள்-இருள்-இருள் என்று சென்று கடைசியில் ஒளிப்பாவை. ஆனால் இது நேர்கோடாக இருக்கிறது. இதையும் கற்பனையில் வளைத்து ஒரு வட்டத்தில் அமைத்துக்கொள்ளலாம். அப்போது இருளும் ஒளியும் அருகருகே வந்துவிடுகின்றன. இல்லை! இல்லை!! அதையும் இன்னும் நெகிழ்வாக்கி fluid தன்மைக் கொண்டதாக மாற்றிவிடலாம். அப்போது கதை என்பது எந்தவொரு அருவமான பாவையிலிருந்தும் முன்னும்பின்னும் சென்று ஒரு வாழ்க்கை தரிசனத்தை முன்வைக்கும் ஒன்றாக ஆகிவிடுகிறது.

அன்புடன்,
ராஜா.

SV-AS10 ImageData

நற்றுணை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நற்றுணை கதையை பல கோணங்களில் பலர் எழுதிவிட்டார்கள். ஒருபக்கம் வரலாறு முழுக்க அந்த நிகழ்வு எப்படியெல்லாம் வெவ்வேறுவகையில் இருந்திருக்கிறது என்று மணிமேகலை முதல் ஜோன் ஆஃப் ஆர்க் வரை சொன்னார்கள். இன்னொரு பக்கம் தனிப்பட்ட பெண்கள் தங்கள் வாழ்க்கையில் அதை பொருத்திக்கொண்டு எழுதியிருந்தனர். இரண்டுமே ஆச்சரியமாகத்தான் இருந்தது

Possession என்ற இந்த phenomenon எங்கள் உளவியலில் எப்போதுமே பேசப்படுவது. அது எங்கே கட்டுப்பாடில்லாமல் போகிறதோ அங்கேதான் நோய். இலக்கியவாதிகள் கலைஞர்கள் மட்டும் அல்ல அறிவுத்துறையில் செயல்படக்கூடியவர்கள் அரசியல்வாதிகள் சேவை செய்பவர்கள்கூட இப்படிப்பட்ட ஆட்கொள்ளல்களுக்கு ஆளாகிறார்கள். ஒரு அந்தரங்கமான விஷயமாக அது இருக்கவேண்டும். அவர்கள் வேறு ஒரு objective formatக்குள் அதை அடக்கிக்கொண்டு வெளிப்படுத்தினால்தான் சாதனையாளராக ஆகிறார்கள்.

உதாரணமாக ஒருவருக்கு சங்கீதம் சார்ந்த Possession இருக்கிறது, சங்கீதப்பயிற்சியும் இருக்கிறது, அதில் அது வெளிப்படுகிறது என்றால் அது creative. அப்படி இல்லாமல் வெறும் பிரமைகளாகவும் கட்டிப்பாடில்லாத செயல்பாடுகளாக்வும் வெளிப்படுகிறது என்றால் நோய்

எஸ்.ஜெயராமன்

அன்புநிறை ஜெ,

தளத்தின் பழைய பதிவுகளில் தொடங்கி வாசித்து வந்து கொண்டிருக்கிறேன். அதில் ஆவுடையக்கா குறித்த நாஞ்சில் நாடனின் பதிவை வாசித்தேன். பின்னர் கடலூர் சீனு தந்த சுட்டியிலிருந்து பாடல்களைத் தரவிறக்கினேன்.

அந்தணர் குலத்து இளம் விதவை, ஊர் வம்பை எதிர்த்து நின்று கல்வி கற்றார், ஞானம் பெற்றார். அவரது காலம் இருநூறு முதல் நானூறு ஆண்டுகளுக்குள் இருக்கலாம் என்று நாஞ்சில் எழுதியிருந்தார். உன்மத்தையாக இருந்திருக்கிறார், தீர்த்தயாத்திரை போயிருக்கிறார், பாடல்கள் புனைந்திருக்கிறார், பெரும் போராட்டங்களை சந்தித்திருக்கக் கூடும். அந்த உன்மத்தமே அவரது நற்றுணையாக இருந்திருக்கும் என நினைத்துக் கொண்டேன்.

யட்சிகள் மனிதரைப் போல நோக்காடில் மறைவதில் ஒரு நியாயம் இல்லை. அதனால் அவரது முடிவு குறித்த கதையும் மிகப் பொருத்தமாக இருக்கிறது “ஆடி அமாவாசையன்று குற்றால அருவியில் நீராடிய ஆவுடையக்காள் பொதிகை மலைமேல் ஏறிச் சென்றாள் எனவும் என்ன ஆனாள் என யாருக்கும் தெரியவில்லை”

மிக்க அன்புடன்,
சுபா

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நிழல்காகம்[சிறுகதை]

$
0
0

நித்யா சொன்னார். பல்லாயிரக்கணக்கான குழந்தைக்கதைகளிலும் சிலநூறு நீதிக்கதைகளிலும் அவ்வப்போது நவீன இலக்கியத்திலும் இடம்பெறுவதும், கன்னங்கரியதாகையால் காலவடிவென்று கருதப்படுவதும், காலமேயென்றாகிவிட்ட மூதாதையராக தோற்றம் அளிப்பதும், காலம் கடுமைகொண்ட தெய்வ வடிவமான சனீஸ்வரரின் ஊர்தியென்று வணங்கப்படுவதும், இவையனைத்துக்கும் அப்பால் பிறிதொரு சொல்லற்ற வான்வெளியில் தன்னியல்பாக பறப்பதும், இரைதேடவும் குலம்பெருக்கவும் மட்டும் மண்ணில் வந்தமர்வதும், கரைந்தும் தலைசரித்து நோக்கியும் சலிப்புற்று எழுந்து சென்றும் சிற்றடி எடுத்துவைத்து எல்லைமீறியும் நம்முடன் உறவாடுவதும், சற்றே செவிகூர்ந்தால் ஓயாத குரலோசையாக நம்மைச் சூழ்ந்திருப்பதாகத் தெரிவதுமான காகம் என்னும் பறவையைப்பற்றிய கதைகளில் இன்னும் ஒன்றுதான் இது.

இதை இன்னமும்கூட சிக்கலான சொற்றொடராக ஆக்கலாம், நான் அர்ஜெண்டினாவின் ஜோர்ஜ் லூயி போர்கெஸை அவர் பாட்டுக்கு விட்டுவிட விரும்புகிறேன். பாவம் ஏற்கனவே அவர் பைபிள் அளவுக்கே தவறாக வாசிக்கப்பட்டு, மேலும் தவறாக மேற்கோள் காட்டப்பட்டு, மேலும் தவறாக விளக்கப்பட்டு, மூலத்தையே ஒரு போலி என தோன்றச்செய்யும் அளவுக்கு மிகச்சரியாக நகலெடுக்கப்பட்டு தான் உத்தேசித்ததை அடைந்து நிறைவுபெற்று விட்டார். ஆகவே சொல்லவேண்டியதற்கு வருகிறேன்.

இது 1971. அப்போது இங்கே ஏப்ரல் குருபூஜைக்கு அசிதானந்தர் என்ற துறவி வந்திருந்தார். அசிதர் என்பது பௌத்தப் பெயர். அவர் சுத்தோதன மன்னரின் ஆசிரியரான துறவி, ஞானி. புத்தரின் பிறப்பை முன்னுணர்ந்து கூறியவர்.

கதைகளின்படி அசிதர் ஒரு காட்டில் தன்னந்தனியாகச் சென்றுகொண்டிருந்தபோது பசித்து உயிர்விடும் நிலையில் கிடந்தார். அவரை உபசரிக்கும் பொருட்டு ஒரு காட்டு முயல் தன்னைத்தானே காட்டுத்தீயில் போட்டு சுட்டுக்கொண்டு அவருக்கு உணவளித்தது. அந்த மாபெரும் தியாகம் அசிதருக்கு ஒரு பெருநிகழ்வு வரவிருக்கிறது என்பதை முன்னுணர்த்தியது. உலகைவெல்லும் ஒரு சக்கரவர்த்தி அல்லது முற்றும் துறந்த புத்தர் பிறக்கவிருக்கிறார் என்று அவர் அறிவித்தார். ஆனால் அசிதருக்கு அத்தனை கூர்மை இல்லை என்பது என் கருத்து, பக்கத்திலிருந்த முயலை பிடித்து தீயிலிட்டு அசிதரை உபசரித்திருந்தால் பிறக்கப்போவது சக்கரவர்த்தி என்று சொல்லியிருக்கலாம்.

அசிதர் என்றால் நிலைத்து நிற்காதவர் என்று பொருள். அவருக்கு காலதேவர் என்றும் கன்ஹஸ்ரீ என்றும் பெயர் உண்டு. கன்ஹஸ்ரீ என்றால் கரியஒளி. அவர் கரியநிறத்தவராக இருந்தார் என்று ஒரு பொருள். ஆனால் கன்ஹஸ்ரீ என்பது நேரடியாகவே காகத்தை குறிக்கும் சொல். காகம் காலதேவனின் வடிவம்.

அசிதர் என்ற பெயரை அவருக்கு பூட்டானில் ஒரு தொன்மையான மடாலயத்தில் அவர் தங்கியிருக்கையில் அவருக்கு துறவு அளித்த மூத்த பிக்ஷுக்கள் போட்டார்கள். அவர் புத்த பிட்சுவாக பல மடாலயங்களில் இருந்தார். அதன்பின் தெற்கே வந்தார். நாராயணகுருவை இலங்கையில் சந்தித்தார்.

பௌத்த மெய்யியலை அவர் நாராயணகுருவுக்கு விளக்கியதாகச் சொல்லப்படுகிறது. நாராயண குருநான் ஏற்கனவே பௌத்தன்என்றார். அசிதருக்கு அது புரியவில்லை. “புத்தரின் பெயர்களைச் சொல்லுங்கள்என்று நாராயணகுரு சொன்னார். அசிதர் சொல்லி வந்தபோது அத்வைதன் என்ற பெயர் வந்தது. கைதூக்கி நாராயணகுரு புன்னகைத்தார். அசிதர் நாராயணகுருவின் மாணவராகி பணியாற்றினார். அசிதானந்தராக மாறினார். ஆனால் கடைசிவரை பௌத்தராகவும் இருந்தார்.

அன்று இங்கே ஒரு பரதநாட்டியம் நடைபெற்றது. தொடர்ந்து மோகினியாட்டம். வெவ்வேறு மடங்களிலிருந்து துறவிகள் வந்திருந்தனர். நடனம் அறிவிக்கப்பட்டதும் அவர்களில் ஒரு சாரார் எழுந்து வெளியே சென்றார்கள். தனியாக குறுங்காட்டுக்குள் சென்று அமர்ந்துகொண்டார்கள். நிகழ்ச்சி முடிந்தபின் அவர்கள் குருவைச் சென்று சந்தித்து தங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள். துறவிகள் பரதநாட்டியம் மோகினியாட்டம் போன்ற சிற்றின்பக் கலைகளில் ஈடுபடக்கூடாது, அது அவர்களை உலகியலில் வீழ்த்தும் பொறி, அதை ஒரு குருகுலத்திலேயே ஏற்பாடு செய்வது பெரிய பிழை என்றனர்.

அவர்களுக்கு குரு வேதம் மருவிய காலத்தில் பிராமணங்கள் உருவாகிக் கொண்டிருந்தபோது முனிவர் ஸ்வேதகேது சந்தித்த நடைமுறை சார்ந்த தத்துவச்சிக்கலை பற்றிச்ச் சொன்னார். வேதமாணவர்கள் தேன் அருந்தலாமா என்ற கேள்வி அன்று எழுந்துவந்தது. தேன் அன்று காட்டில் கிடைத்த ஒரே இனிப்பு. இனிப்பு புலன் இன்பங்களை தூண்டுவது அல்லவா?

அது ஒரு பெரிய விவாதமாக ஓடியது. ஸ்வேதகேது அதற்கு பதில் சொன்னார். தேன் என்பது மது. எந்த ஒரு புலன்வழி அறிதலும் அதன் உச்சத்தை அடையும்போது மதுவாகிறது. ஓசை இசையாகிறது. வண்ணங்கள் ஓவியமாகின்றன. பொருட்கள் சிற்பமாகின்றன. அசைவுகள் நடனமாகின்றன. மொழி கவிதையாகிறது. அதைப்போன்றே சுவை என்பது தேனாகிறது. அந்த மதுவை காமம் என்று கொள்வது உலகியலோர் இயல்பு. அதை பிரம்மம் என்று கொள்வதே துறவிகளின் வழி. வேதம் கற்கும் மாணவர்கள் தற்காலிகமாக துறவுபூண்டவர்கள். ஆகவே பிரம்மத்தின் சுவை என அவர்கள் தேனை அருந்தலாம்.

ஆனால் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து இங்கே வந்த துறவிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அது துறவிகள் கொண்டுள்ள வைராக்கியத்திற்கு எதிரானது என்று வாதிட்டனர். கலையை அறிவால் எப்படி வேண்டுமென்றாலும் விளக்கிக் கொள்ளலாம், ஆனால் புலன்களும் அதை ஆளும் காமமும் அதை நாம் விரும்பியபடி எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. காமம் தனக்கென உறைவிடம் அற்றது, ஆகவே எல்லா உறைவிடங்களையும் தான் எடுத்துக்கொள்வது. தனக்கென தோற்றம் அற்றது, ஆகவே எல்லா தோற்றங்களையும் தானே எடுப்பது. காமம் குரோதத்துடனும் மோகத்துடனும் இணைந்து அவற்றை ஊர்தியாக்கிக் கொள்வது. அறிவுடனும் ஞானத்துடனும்கூட அது அவ்வாறே இணையும்.

அவர்களில் மூத்தவரான விஸ்வானந்தர் சொன்னார்கலை என்பது குயில் போன்றது. மிகமிக இனிமையான குரல் கொண்டது அந்தச் சிறு பறவை. ஆனால் அதன் கள்ளத்தனத்தை நினைத்துப் பாருங்கள். அது காகத்தின் கூட்டில் முட்டையிடுகிறது. காகம் முட்டை பொரிக்கும் முன்பே குயில் முட்டைபொரித்து வெளிவந்து காகத்தின் முட்டைகளை கீழே தள்ளிவிட்டுவிடுகிறது. கூவிக்கூவி காகத்தை அதுதான் நல்ல ஓசை என்று நம்பவைத்து காகக்குஞ்சுகளையே கொல்லவும் செய்யும்

ஆமாம்என்றார் குருகுலத்தைச் சேர்ந்த ராமசந்திரன். சோகமான அவர் மெலும் சோகமாக ஆனார்.

அது விஸ்வானந்தரை ஊக்கம் கொள்ளச் செய்தது. அவர் சொன்னார். “கலைக்கு முகப்புவாயில் வழியாக நுழையத் தெரியாது. அது திருடனைப்போல இரவில் கொல்லைப்புறம் வழியாகவே உள்ளே நுழையும். அதற்கு எந்த விளக்கம் அளித்தாலும் அதை ஆதரிப்பதாகவே அமையும். ஒரு கைவிடும் இடைவெளியை போட்டால் போதும் உள்ளே நுழைந்து கருவூலத்தை காலியாக்கிவிடும்.”

அவர்கள் எதிர்ப்புடனேயே கிளம்பிச் சென்றார்கள். குரு சொன்னார், இந்தப் பிரிவினை . ஸ்வேதகேதுவின் கிருஹ்யசூத்திரம் எழுதப்பட்டபோதும் உருவானது. அதை தவிர்க்கவே முடியாது. உலகியலை எதிர்கொள்வதன் இரு வழிகள். இரண்டில் எது தேவை என ஒருவர் அவரேதான் முடிவுசெய்ய வேண்டும், அவருக்குத் தானே அவரைப் பற்றி தெரியும்

நான் கேட்டேன், எவருக்கு உலகியலின் மது ஒத்துவரும்? குரு சொன்னார், கலையில் மெய்யாகவே ஈடுபடும் மனம் சிலருக்கு மட்டுமே உள்ளது. கலை அவர்களின் கற்பனையை தூண்டும். அவர்களை மேலும் மேலும் மலரச் செய்யும். கலையில் இருந்து அவர்கள் நெடுந்தொலைவு பயணம் செய்வார்கள். கலையிலிருந்து பரவசத்தையும் மெய்மறந்த நிலையையும் மட்டுமே அடைவார்கள். அவர்களுக்குரியது அந்த மது. சிலருக்கு கலை வெறும் பொருளும் நிகழ்வுமே. அவர்கள் கலையை தங்கள் கற்பனையால் விரித்துக்கொள்ளாதவர்கள். அவர்களுக்கு கலை உலகியல் மட்டும்தான். அது அவர்களுக்கு பெரும் சுமை, தளை.

வேறுபாட்டை உணர்வது மிக எளிது என்றார் குரு. கற்பனையால் கலையை அடைபவர்கள் அதுவரை அடைந்த கலையனுபவங்களை திரட்டிக்கொண்டு அதன்மேல் ஏறி புதிய கலையைச் சென்றடைவார்கள். புதியகலையை அறிவதற்கான நுண்ணுணர்வை முந்தைய கலையனுபவங்கள் அவர்களுக்கு அளிக்கும். மற்றவர்கள் முன்பு அவர்கள் அறிந்த கலையில் இருந்து சில புரிதல்களையும் வரையறைகளையும் உருவாக்கிக்கொண்டு அவற்றை முன்வைத்து புதியகலையை எதிர்கொள்வார்கள். கலையில் ஈடுபட ஈடுபட அவர்கள் நுண்ணுணர்வு குறைந்து, பிடிவாதமான முரடர்களாக ஆவார்கள்.

நித்யா சொன்னார், அன்று சமையலறையில் பேசிக் கொண்டிருந்தோம். இந்த விவாதம் மீண்டும் எழுந்து வந்தது. அப்போது அசிதர் சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டிருந்தார். அவர் இதையெல்லாம் கவனிப்பவர் அல்ல. அவர் மிகமிக நடைமுறைவாதி. தத்துவம், தியானம், சேவைஅவ்வளவுதான். கவிதை கலை எல்லாம் கிடையாது. நான் அவரை உள்ளே இழுக்க ஆசைப்பட்டேன்.

சொல்லுங்கள் அசித சாமி, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பரத நாட்டியம் பார்க்கலாமா கூடாதா?” என்று நான் கேட்டேன்.

ஏன் பார்ப்பதற்கு என்ன? நன்றாகத்தானே ஆடுகிறார்கள்?” என்றார்.

ஆனால் அது முழுக்க முழுக்க காமம். கண்களால் சுண்டி அழைக்கிறார்கள், சொற்களும் உடலசைவுகளும் முழுக்க முழுக்க காமத்திற்குரியவைஎன்றேன்.

ஆமாம், ஆனால் அது காமம் அல்ல, காமத்தைப் போன்ற நடிப்புஎன்றார் அசிதர்நாம் ஒன்றை நடிக்கத் தொடங்கும்போது அதிலிருந்து விடுபடுகிறோம் அல்லவா?”

அப்படியா?” என்றேன்.

மனிதகுலமே அப்படித்தான் விடுபட்டிருக்கிறதுஎன்று அவர் சொன்னார். “அச்சத்தில் இருந்து அறியாமையில் இருந்து.

ஆமாம் போலி செய்வதே மூலத்தை அறிவதற்கும் அதை கடப்பதற்கும் சரியான வழிஎன்று அப்பால் அமர்ந்திருந்த சிதானந்த சாமி சொன்னார்.மகனே, இந்த சிவன் விஷ்ணு எல்லாம் யார்? பிரம்மத்தை நாம் நகல்செய்த வடிவங்கள்தானே?”

அசிதரை எப்போதுமே சீண்டுவது அவருடைய வழக்கம். பொதுவாகவே ஒரு சீண்டலும் நையாண்டியும் அவருடைய எல்லா பேச்சிலும் உண்டு. குருகுலத்திலேயே பீடி பிடிப்பவரும் அவர்தான். அது அவருடைய அடையாளம். பீடியை ஆழமாக இழுத்து புகை விட்டு “யோசித்துப்பார் புத்தர் மகாவீரரை நகல்செய்த வடிவம்என்றார் 

அசிதர் அவரை பொருட்படுத்துவதில்லை. அவர் சம்பந்தமே இல்லாமல் சொல்லத் தொடங்கினார். “எனக்கு மகாசேக்கோ தர்மபிரபவர் ஏன் அசிதர் என்று பெயரிட்டார் தெரியுமா ?”

நாங்கள் அவர் பேசுவதை கேட்க செவி கொடுத்தோம்.

அசிதர் சொன்னார். என் ஊர் ஆலப்புழா அருகே கொந்நமங்கலம். ஊரில் என் வீட்டுக்கே காக்காதோஷத்துவீடு என்றுதான் பெயர். ஊரில் இறங்கி காக்காதோஷத்து வீட்டில் சங்கரன் என்று கேட்டால்தான் என் அப்பாவை அடையாளம் காட்டுவார்கள்..

என் தாத்தா ஐயப்பன் வைத்தியர் ஒரு அடிமுறை ஆசான். வர்ம வைத்தியமும் செய்வார். மந்திரவாதத்திலும் ஈடுபாடு உண்டு. கொஞ்சம் முரட்டுத்தனமான ஆள். ஊரில் பொதுவாக எவரையும் மதிக்காதவர்.

திடீரென்று அப்போது கொப்பரைக்கு ஆலப்புழாவில் நல்ல விலைகிடைக்க தொடங்கியது. தேங்காயை வாங்கி கீறி உலர்த்தி கொப்பரையாக்கி படகில் கொண்டுசென்று ஆலப்புழையில் இறக்கினால் கப்பல்காரர்கள் வந்து வாங்கிக்கொள்வார்கள். இரண்டு மடங்கு விலை. தாத்தா அந்த தொழிலில் இறங்கினார். அவர் படகில் அலைந்து தேங்காய் வாங்கி வருவார். அந்தத் தேங்காயை பாட்டி கீறி உலரவைப்பார்.

முற்றத்தில் பகலெல்லாம் தேங்காய் காயும். அதற்குப் பெரிய சிக்கல் காகங்கள். அவை உலர்ந்த கொப்ரையை எடுத்துக்கொண்டு போகும். கொத்தியப் பின் ஓடையில்போட்டுவிடும். காகங்களை விரட்ட அங்கேயே அமர முடியாது. பாட்டிக்கு தேங்காய் உடைத்துக் கீறும் வேலை. என்ன செய்வது என்று கேட்டபோது கறுப்புத்துணியை கட்டி வைத்தால் காகம் வராது என்று யாரோ சொன்னார்கள். காகம் ஒன்று செத்துக்கிடக்கிறது என்று நினைத்துக்கொள்ளுமாம்

தாத்தா உண்மையான காகத்தையே ஏன் அங்கே வைக்கக்கூடாது என்று நினைத்தார். அப்படி நினைக்கக்கூடியவர், எல்லாரும் செய்வதை அவர் செய்யமுடியாது. அவர் என்ன செய்தார் என்பதை ஊரில் நாலுபேர் பேசவும் வேண்டும்.

ஆனால் செத்த காகம் கண்ணுக்கே படவில்லை. அவை எங்கே சாகின்றன என்றே தெரியவில்லை. ஆகவே காகத்தை பிடிக்க முயன்றார். எப்படி பிடிக்கலாம் என்று யோசித்தபோது மலையன் கொக்குபிடிக்கும் உத்தியை கண்டுகொண்டார்.மீன்பிடிக்கும் தூண்டிலில் கருவாட்டைக் கோத்து செடியில் கட்டி காயலோரமாகப் போட்டார். காகங்கள் வந்து கருவாட்டை விழுங்கியபோது தொண்டையில் தூண்டில் கொக்கி சிக்கி மாட்டிக்கொண்டன.

அவர் காகங்களின் ஓசை கேட்டு அங்கே போய் பார்த்தார். அங்கே காகங்கள் மண்ணில் கிடந்து துள்ளின. மேலே மரங்கள் முழுக்க காகங்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்தன. காகங்கள் அவ்வாறு கூச்சலிட்டது அவருக்கு ஒரு நிறைவை அளித்தது. அவற்றின் பார்வை நடுவே அவர் நிதானமாக நடந்து சென்று கீழே கிடந்த நான்கு காகங்களை பிடித்து தூக்கினார். மரங்களிலும் தரையிலும் சூழ்ந்து அமர்ந்தும் எழுந்து பறந்தும் கூவிக்கொண்டிருந்த காகங்கள் பார்க்கும்படியாக அவற்றின் கழுத்தை நெரித்து கொன்றார்

அவற்றின் காலைப்பிடித்து தலைகீழாக தூக்கிக்கொண்டு கையில் மூங்கில் கழியுடன் நடந்தார். அவரைச் சூழ்ந்து காகங்கள் கூச்சலிட்டபடி வீடுவரை வந்தன. அவர் கையில் காகங்களைக் கண்ட பாட்டி கூச்சலிட்டு அழுதார். “அய்யோ என்ன செய்தீர்கள்? காகத்தை கொல்லலாமா! அது பெரும்பாவம்என்று சொன்னார்.

என்ன பெரும்பாவம்? கோழியை நாம் கொல்லவில்லையா? மலையன் நாள்தோறும் கொக்கு பிடிக்கிறான்என்றார் தாத்தா

அதை நாம் சாப்பிடுகிறோம். காகத்தை நாம் சாப்பிடுவதில்லைஎன்று பாட்டி சொன்னாள். “காகம் பித்ரு வடிவம்இது தந்தையைக் கொலை செய்த பாவத்தை கொண்டுவருவது

போடி, இந்த கறுப்புக் காக்காவா என் அப்பா மலையத்து கொச்சாமன்? அவர் புலிபறவையில் என்றால் அவர் கழுகுஎன்றார் தாத்தா.

முற்றத்திலேயே அமர்ந்து நான்கு காகங்களின் உடல்களையும் குடலை வெட்டி நீக்கி பழந்துதுணி செருகி பாடம் செய்து குச்சிகளில் பொருத்தி கொப்பரை காயும் களத்தில் நான்கு மூலைகளிலும் வைத்தார். “இனி கொப்பரை தின்ன எந்த காக்கா வருகிறது என்று பார்ப்போம்!”என்றார் தாத்தா

அதன்பின் காகங்கள் கொப்பரை தேடி வரவில்லை. அவர் வீட்டைச் சுற்றியே எந்த காகமும் வரவில்லை.பாட்டி அந்த வேறுபாட்டை ஒருவாரம் கழித்துத்தான் உணர்ந்தாள். ஊரில் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும் பறவைச்சத்தம் அவர்களின் தோட்டத்தில் எழவில்லை. செவிகளை மங்கவைக்கும் ஓர் அமைதி. காகங்கள் மட்டுமல்ல எந்தப் பறவையும் அவர்களின் தோட்டத்திற்கு வரவில்லை.

ஆனால் பறவைகள் வராமலானபோது சீவிடு ஒலி பெருகியது. ரீரீ என்ற இடைவிடாத ஓசை. பகலிலும்,நடு வெயிலிலும்கூட அந்த ஓசைதான். அவர்களின் வீட்டைச்சுற்றி நிறைந்திருந்த அந்த இரவின் ஓசை ஊரில் அத்தனைபேரையும் பயமுறுத்தியது. உண்மையில் தாத்தாவின் மீதான பயத்தை கூட்டியது. அவரிடம் மந்திரவாதம் செய்துகொள்ள மேலும் நிறையபேர் வரத் தொடங்கினர்.

பிறகுதான் பிரச்சினை தொடங்கியது. தாத்தா எங்கு சென்றாலும் காகங்கள் அவரை வந்து கொத்த ஆரம்பித்தன. முதலில் அவர் கைவள்ளத்தில் ஆற்றில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு காகம் செங்குத்தாக இறங்கி அவர் தலையை கொத்தியது. அவர் துடுப்பை தூக்கி அதை அடிக்க முயல்வதற்குள் வேறு இரண்டு காகங்கள் பக்கவாட்டில் பாய்ந்து வந்து கொத்தின.

அவரால் தன்னை காத்துக்கொள்ளவே முடியவில்லை. தலை உடைந்து ரத்தம் கொட்டியது. காது கிழிந்தது. கண்ணைக் காப்பாற்றிக்கொள்ளவே போராடவேண்டியிருந்தது. படகில் குனிந்து அமர்ந்து கையால் துடுப்பிட்டு கரையை வந்தடைந்து ஓடி அருகில் இருந்த சிறுகுடிலுக்குள் புகுந்துகொண்டார். அதுவரை அவை அவருடைய முதுகை கொத்தி கிழித்தன.

அது தற்செயலாக இருக்கும் என்று நினைத்தார். தன் படகிலிருந்த கருவாட்டுக்காக கொத்தவருகின்றன என்று விளங்கிக்கொண்டார். அதன்பின் அவர் கடைக்குச் சென்று கொண்டிருந்தபோது பக்கத்திலிருந்த மரத்தில் இருந்து ஒரு காகம் அவர்மேல் பாய்ந்து கொத்திவிட்டுச் சென்றது.

அவை குறிவைத்து தாக்குகின்றன, தன் முகம் அவற்றுக்கு தெரிகிறது என்று அவர் கண்டுபிடித்தார். முண்டாசு கட்டிக்கொண்டு போனாலும், முகத்தையே துணிபோட்டு மூடினாலும் அவை கண்டுபிடித்தன.

ஒரே காகம் அல்ல. வெவ்வேறு காகங்கள். சில காகங்கள் வயதானவை. சில காகங்கள் இளமையானவை. அவை எந்த தனி ஓசையையும் எழுப்பவில்லை. கொத்திய பிறகே அவை அவரை கவனித்துக் கொண்டிருக்கின்றன என்று உணர முடியும்.

அவர் தனியாக எங்கே சென்றாலும் காகங்கள் அவரை வந்து தாக்கின. கண்ணை பாதுகாப்பதற்காக அவர் குனிந்து தரையில் அமர்ந்துகொள்வார். தலையை கொத்தி உடைத்து புண்ணாக்கிவிட்டு அவை செல்லும்.

கையில் ஓலைக்குடை வைத்துக்கொள்ள ஆரம்பித்தார்.அப்போதுகூட காகம் எங்கிருந்தோ பார்த்துக்கொண்டிருக்கும். குடையை கொஞ்சம் சரித்தால் வந்து கொத்திவிட்டு போய்விடும். அவர் உடலெங்கும் காகம் கொத்திய புண்களும் வடுக்களும் நிறைந்தன.

ஊரெல்லாம் இது பேச்சாகியது. காக்காதோஷம் என்று அவருக்கு பெயர் விழுந்தது. வியாபாரத்தை நிறுத்திக்கொண்டு பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தார். வீட்டு முற்றத்திற்கே குடை இல்லாமல் இறங்கமுடியாது.

நிறைய பரிகாரங்கள் செய்தார். பூஜை, மந்திரவாதம் என நிறைய பணம் செலவாகியது. என்ன செய்தாலும் காகங்களை சமாதானப்படுத்த முடியவில்லை. அவரோ அவர் மனைவியோ சாப்பாடு போட்டால் அவை சாப்பிடுவதில்லை. அருகே வருவதே இல்லை. பித்ருசாபம் என்றார்கள். அவர் பலிச்சாதம் வைத்தால் அந்த பகுதிக்கே காகங்கள் வருவதில்லை. ஆகவே பித்ருபலி இடும் இடத்திலேயே அவரை உள்ளே விடமாட்டார்கள்

என்ன ஆச்சரியம் என்றால் அவர் வெளியூர் சென்றாலும் காகங்கள் கொத்தின. அங்கே உள்ள காகங்கள். அவர் அம்பலப்புழா போனாலும் வைக்கம் போனாலும் காகங்கள் சட்டென்று பறந்திறங்கி அவரைக் கொத்தின. ஒருமுறை அவர் கொல்லம் போனார் அவர் படகிலிருந்து இறங்கியதுமே அங்கே தென்னைமேல் அமர்ந்திருந்த ஒரு வயதான காகம் அவரை பாய்ந்து கொத்தியது.

அவர் மனம் பேதலித்தவர் போல ஆனார். கருப்பான எதைப்பார்த்தாலும் பதறுவார். கடைசிக் காலத்தில் அவர் வீட்டு முற்றத்திற்கே வருவதில்லை. ஆனால் காகங்கள் கனவில் வந்து அவரை கொத்திக்குதறின. பெரும்பாலான இரவுகளில் அவர் கூச்சலிட்டபடி பாய்ந்தெழுந்து அமர்ந்து நடுங்குவார்.

தாத்தா அறுபத்தெட்டு வயதில் இறந்தார். அவருடைய உடலை ஆற்றின் கரையில் மயானத்தில் சிதையேற்றம் செய்தபோது காகங்கள் சூழ்ந்திருந்த மரங்கள் முழுக்க சூழ்ந்து அமர்ந்து வெறிகொண்டவைபோல கூவிக்கொண்டிருந்தன.

அப்பாவுக்கு அப்போது பத்தொன்பது வயது. அவர் மொட்டைத்தலையுடன் குடமுடைத்து சிதைத்தீ போட்டுவிட்டு திரும்பும்போது சட்டென்று ஒரு காகம் பாய்ந்து அவருடைய மொட்டைத்தலையை கொத்திவிட்டு போயிற்று. அவர் அலறியபடி மயங்கி விழுந்துவிட்டார். கூட வந்தவர்கள் ஓடிவந்து அவரை தூக்கினார்கள் . அவர் முகத்தில் ரத்தம் வழிந்தது.

அதன்பின் காகங்கள் அவரை கொத்தத் தொடங்கின. எங்கே சென்றாலும் காகங்களால் அவர் வேட்டையாடப்பட்டார். அவர் வீட்டையும் தோட்டத்தையும் விற்க முயன்றார், காக்காதோஷம் தோட்டத்தை எவரும் வாங்க முன்வரவில்லை. அந்த தோட்டத்தில் எந்த செடியும் வளராது. தளிர்விட்டதுமே பூச்சிகள் பெருகி அழித்துவிடும்

அப்படியே அனைத்தையும் விட்டுவிட்டு அப்பா ஆலப்புழாவுக்கும் அங்கிருந்து கொல்லத்திற்கும் சென்று குடியேறினார். ஆனால் காகங்கள் அவரை விடவே இல்லை. எல்லா ஊரிலும் அவரை தொடர்ந்து வந்தன அவை. மிகமிக கவனமாக இருந்தாலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது காகம் அவரை கொத்தியது.

இந்த விசித்திர நிகழ்வு பற்றி 1906ல் ஸ்வதேசாபிமானி நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டது. ஆனால் அதன்பிறகுதான் அது ஒன்றும் அவ்வளவு அரிய நிகழ்வு அல்ல, எல்லா ஊரிலும் நடப்பதுதான் என்று தெரியவந்தது

அப்பா நாற்பத்தெட்டு வயதில் இறந்தார். அவர் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்தார். தலையில் பெரிய முண்டாசு கட்டி தடிமனான கண்ணாடி அணிந்து பெரிய குடையுடன் தான் எங்கும் செல்வார். அவர் காகங்களை விரட்ட செய்த முயற்சிகள் ஏராளம். ஆனால் குடை தவிர எதுவுமே பயன்படவில்லை. ஆனாலும் அடிக்கடி கொத்து படுவார். குடையை மடித்துவிட்டு வகுப்புக்குள்ளோ டீக்கடைக்குள்ளோ நுழையும் கணத்தில் எதிர்ப்பக்கமிருந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும்

அப்பா சனிபிரீதி செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தார். எரமத்தூர் சனிதேவன் கோயிலில் நாற்பத்தொருநாட்கள் தங்கி விரதம் இருந்து வழிபட்டார். பாலக்காட்டில் நூரனியில் உள்ள ஒரு சனிதேவன் கோயிலில் பதினெட்டு நாட்கள். கோட்டையம் அருகே குருப்பம்துறை சனீஸ்வரர் ஆலயத்திற்கு ஏழு ஆண்டுகள் எல்லா சனிக்கிழமையும் சென்றுகொண்டிருந்தார். தமிழகத்தில் திருநள்ளாறு ஆந்திரத்தில் மண்டப்பள்ளி என்று தேடித்தேடிச் சென்று வழிபட்டார். எதுவுமே பயன் அளிக்கவில்லை. மகாராஷ்டிரத்தில் டிட்வாலா என்ற ஊரில் ஒரு சனிதேவன் கோயிலின் முற்றத்திலேயே அவரை காகங்கள் சூழ்ந்துகொண்டு தாக்கி சட்டையை கிழித்தன.

அப்பா இறந்தபோது அவருடைய உடல் கொல்லம் காயல்கரை சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. சுற்றியிருந்த எல்லா மரங்களிலும் கூட்டம் கூட்டமாக காகங்கள் அடைந்திருந்தன. நான் கொள்ளிவைத்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். நாங்கள் வந்த மாட்டுவண்டி அப்பால் மண்சாலையில் நின்றிருந்தது. என்னை காகங்கள் கொத்த ஆரம்பிக்குமா என்பதுதான் எல்லார் மனதிலும் உள்ள கேள்வியாக இருந்தது. அதற்காகவே என்னை கொஞ்சம் தனியாக விட்டார்கள் என நினைக்கிறேன்.

நான் விலகி நடந்த அக்கூட்டம் நடுவே நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று நேர்மேலே வானிலிருந்து காகம் ஒன்று செங்குத்தாக என் மேல் இறங்கியது. கத்தியால் குத்தப்பட்டதுபோல என் தலையில் வலியை உணர்ந்தேன். அப்படியே விழுந்துவிட்டேன். என்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரும் தப்பி ஓடினார்கள். நான்கு காகங்கள் என் மேல் பாய்ந்து கொத்தத் தொடங்கின. நான் எழுந்து விழுந்தேன். அவை என் தசையை கிழித்தன. அலறியபடி மாட்டுவண்டியை நோக்கி ஓடி அதன் உள்ளே பாய்ந்து ஏறினேன். அதுவரை கொத்திக்கொண்டே இருந்தன

அன்றே நான் அகம் நடுங்கிவிட்டேன். என் அப்பாவை காகங்கள் வேட்டையாடுவது எனக்கு தெரியும். அவருடைய அப்பா கதையும் தெரியும். ஆனால் என்னை அவை தொடர்ந்து வரும் என நான் நினைக்கவில்லை. உண்மையில் அதை நான் பொருட்படுத்தாமலிருக்க பழகியிருந்தேன். என் அப்பாவுக்கு ஏதோ நோய் என்பதுபோல. எனக்கு அது வந்தபோது என் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். என் நண்பர்கள் அனைவரும் விலகிப்போனார்கள். அப்போது கல்லூரியில் பிஏ முதலாண்டு படித்துக்கொண்டிருந்தேன். படிப்பைத் தொடரவில்லை.

நான் குடையுடன் அலைய ஆரம்பித்தேன்.எவ்வளவோ கவனமாக இருந்தும் பலமுறை என்னை காகங்கள் தாக்கின. கடைசியாக காகம் என்னை கொத்தியது என் நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்தில். நல்ல கூட்டம். நான் நடுவே நின்றிருந்தேன். சட்டென்று காகம் என்னை தாக்கியது. நான் அலறியபடி ஓட என் வேட்டி அவிழ்ந்தது. அடியுடையுடன் நான் ஓடி அறைக்குள் புகுந்துகொண்டேன். கல்யாணக்கூட்டமே கலைந்து கூச்சலிட்டது. கல்யாணப்பெண்ணின் அப்பா என்னிடம் கசப்பு நிறைந்த முகத்துடன்நீ ஏன் வருகிறாய்? அம்மா வந்தால் போதாதா?” என்றார். இன்னொருவர்நீயெலாம் வீட்டில் இருக்கவேண்டியதுதானே? ஏன் இங்கெல்லாம் வருகிறாய்?” என்றார்

நான் கதறி அழுதபடி அன்று வீட்டுக்கு வந்தேன். அன்று இரவே வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டேன். கையில் பணமில்லை. திருட்டுரயில் ஏறி பட்டினியாக சென்னை சென்றேன். அங்கே இரண்டுநாட்கள் அலைந்து ஒரு மலையாளியின் டீக்கடையில் வேலை கிடைத்தது. கொஞ்சம் பணம் சேர்ந்ததும் விசாகப்பட்டினம் சென்றேன். அங்கிருந்து புத்த கயா. அங்கே படித்துறையிலும் ஸ்தூபியின் அருகிலும் அலைந்து கொண்டிருந்தேன். ஓட்டல்களில் வேலை செய்யப் பழகியிருந்தேன்

கயாவில் பிக்ஷுக்களுக்கு பழக்கமானேன். திபெத்திய பௌத்த மடாலயத்தில் உதவியாளனாக இருந்தேன். பின்னர் நானும் பிரம்மசாரியாக ஆனேன். ஆனால் அப்போதும் காகங்கள் என்னை துரத்தி கொண்டேதான் இருந்தன. கையில் குடை இல்லாமல் செல்ல முடியாது. குடை இருந்தாலும் கூட கவனமாக இருக்கவேண்டும். பறந்து வந்து தரையில் அமர்ந்து சட்டென்று இடுப்பை நோக்கி பாய்ந்து கொத்திவிட்டு போன காகங்கள் உண்டு

ராஜ்கீரில் ஒரு பிட்சுவுடன் சென்றிருந்தபோது என் குடையை காற்று அடித்துச் சென்றது. அதை பதறி பிடுங்குவதற்குள் என்னை காகங்கள் சூழ்ந்துகொண்டு கொத்தின. உடலெங்கும் புண்ணுடன் அழுதபடி மடாலயத்தின் இருண்ட அறைக்குள் கிடந்தேன்.

மூத்த பிக்ஷு வந்து என்னிடம் எல்லாவற்றையும் கேட்டார். ஏற்கனவே என்னைப் பற்றி பிக்ஷுக்களுக்கு தெரியும். அவர் பொதுவாக மிக அகன்று தனியாக இருப்பவர். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அவர் சொன்னார். “உன் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் இது ஒரு அறப்பிரச்சினை. உனக்கு ஒரு தத்துவப்பிரச்சினை. நீ அதை தீர்த்துக்கொண்டால் போதும்என் தலைமேல் கைவைத்துதத்துவப் பிரச்சினைகளை சந்திப்பவர்கள் அதிருஷ்டசாலிகள், அவர்களுக்கு விடுதலைக்கான உறுதியான ஒரு வழி திறக்கப்பட்டுள்ளது. துணிந்து தொடர்ந்து செல்வது மட்டுமே அவர்களின் வேலைஎன்றார்.

அவர் சொன்னதை அப்போது நான் சரியாக புரிந்துகொள்ளவில்லை. காகங்களிடமிருந்து தப்புவது எப்படி என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். இமாச்சலப் பிரதேசத்திற்கு கோரி வாய்ப்பு பெற்றுச் சென்றேன். சிம்லா மடாலயத்தில் சிலநாட்கள் இருந்தேன். அங்கிருந்து ஸ்பிடி சமவெளிக்குச் சென்றேன். டங்கர், லாலங் மடாலயங்களில் இருந்தேன். அங்கும் காகங்கள் என்னை தேடிவந்து கொத்தின.

ஒவ்வொரு புதிய இடத்திற்குச் சென்றதும் காகங்கள் என்னைக் கொத்துகின்றனவா என்று நானே சோதனை செய்து பார்ப்பேன். முற்றத்தில் இறங்கி நிற்பேன். என் உடலே எதிர்பார்ப்பால் துடித்துக்கொண்டிருக்கும். காகங்களின் சத்தம் கேட்கின்றனவா? இமையமலையில் காகம் சற்று பெரியது. ரேவன் என்றுதான் வெள்ளைக்காரர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். நம்மூர் போல கூச்சலிடாது. பெரும்பாலும் கிளையில் இலைநிழலில் அமைதியாக இருக்கும்.

காத்திருக்கையில் காதுகள் கூர்கொண்டிருக்கும். சட்டென்று சிறகடிப்பு ஓசைகேட்கும். என் உடல் சிலிர்க்கும். காகம் என்மேல் பாய்ந்து கொத்திவிட்டு செல்லும். நான் இறுக்கம் தளர்ந்து பெருமூச்சு விடுவேன். சிலசமயம் ஒருவகை நிறைவுகூட ஏற்படும்

ஆனால் ஒன்று கவனித்தேன், காகங்கள் என்னை முன்புபோல கொத்திக் கிழிக்கவில்லை. வெறிகொண்டு கொத்தவில்லை. ஓரிரு கொத்துகள், கிளம்பிவிடும். ஏனென்றால் நான் அவற்றை அஞ்சுவதில்லை. ஓடி ஒளிவதில்லை. கண்ணைமூடி அவை கொத்துவதற்காக காத்து நின்றிருப்பேன். கொத்தி முடித்து அவை செல்வது வரை மடாலய முற்றத்தில் இருந்து அகல்வதில்லை

ஒருமுறை டாபோ மடாலயத்தின் முற்றத்தில் நான் நின்றிருந்தேன். அங்கே சென்று நான்குநாட்கள்தான் ஆகியிருந்தன. ஒரு பெரிய காகம் வந்து எதிரே ஸ்தூபத்தில் அமர்ந்தது. அதன் கண்களைப் பார்த்தேன். மிக அருகே. மணிக்கண்கள். அதில் எந்த உணர்வும் இல்லை. அச்சமோ ஐயமோ ஆர்வமோ. அவை என்னை அறியவே இல்லை. அவற்றுக்கு நான் ஒரு பொருட்டே அல்ல.

பிறகு ஏன் கொத்துகின்றன? கொத்துவது அவற்றுக்கு ஒரு குலக்கடமையாக மாறிவிட்டிருக்கிறது. ஏதோ உயிரியல் தொடர்பால் அவற்றுக்கு அந்த ஆணை வந்து சேர்ந்துவிட்டது. ஏன் என்று அவை உண்மையாகவே அறிந்திருக்கவில்லை. என்னையும் அறிந்திருக்கவில்லை. எப்படி என்னை அவை அடையாளம் கண்டுகொள்கின்றன என்றுகூட அவற்றுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

வானை நிறைத்து பல்லாயிரம் பல லட்சம் காகங்களாக பரவியிருக்கும் காகம் என்ற அந்த ஒற்றைப் பேரிருப்புக்கு ஒருவேளை தெரிந்திருக்கும். அல்லது அதுவும் அறிந்திருக்காது. அதன் மாபெரும் வெளியில் என்னை கொத்துவதும் தன்னியல்பாகச் சென்று படிந்திருக்கும். சிறகில் காற்றின் நுட்பங்கள் படிந்திருப்பதுபோல. உணவின் ஊர்களின் பல்லாயிரம் கோடி செய்திகள் சென்று அமைந்திருப்பதுபோல.இனி அதுவும் ஓர் உயிரியியல் தடம். ஒரு பிரபஞ்ச விதி.

அந்தக் காகம் எழுந்து வந்து என்னை கொத்தியது. ஒரு தொன்மையான மதச்சடங்குபோல. தவிர்க்கமுடியாதது, பொருளறியாதது. என் சதை கிழிந்து துளி ரத்தம் வந்தது. காகம் ஒருமுறை உடல்தாழ்த்தி கரைந்துவிட்டு எழுந்து வானில் மறைந்தது. நான் அதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். அப்போது தோன்றிய முதல் எண்ணம், நல்லவேளை எனக்கு மகன் பிறக்கப்போவதில்லை என்பதுதான்

அங்கிருந்து மிகமிக தொலைவில் இமைய மலையடுக்குகளுக்குள் இருந்த டான்லே என்னும் சிறிய மடாலயத்திற்குச் சென்றேன். அது அன்று கைவிடப்பட்டு கிடந்தது. பழுதடைந்த மடாலயம். இருண்டு புழுதிபடிந்து பின்பக்கம் சற்று சரிந்து ஏதோ பூச்சியின் கழற்றப்பட்ட குருதிச்செந்நிறமான ஓடு போல.

நான் அங்கே சென்று ஊர்க்காரர்களின் உதவியுடன் அதை பழுதுபார்த்து தூய்மை செய்தேன். அதில் அடிப்படை வசதிகளை அமைத்தேன். குளிர்காலம் வந்துகொண்டிருந்தது. டான்லே வெறும் இருபத்தேழு வீடுகள் கொண்ட சின்னஞ்சிறு ஊர். அவர்கள் அனைவருமே குளிர்காலத்தில் கீழே இறங்கி லகுல் என்ற ஊருக்குச் சென்றுவிடுவார்கள்

நான் ஒரு முடிவு எடுத்தேன், நான் செல்லக்கூடாது என்று. மடாலயங்களை விட்டுவிட்டு பிக்ஷுக்கள் செல்லும் வழக்கம் இல்லை. அங்கே குளிர்காலத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். நிறைய விறகுகளைச் சேர்ந்த்தேன். உலர்ந்த உணவுகள், தானியங்களை நிறைத்து வைத்தேன். நான் மட்டும்தான் அந்த ஊரில் இருக்கப்போகிறேன் என்று தெரிந்தது.

ஒவ்வொருவராக கிளம்பிச் சென்றனர். ஊர் முற்றாக ஒழிந்தது. மடாலயத்தில் நான் மட்டும் எஞ்சியிருந்தேன். சிலநாட்களாக தொடர்ந்து வீசிய கடுங்குளிர்காற்று நின்றுவிட்டது. இன்னும் சிலநாட்களில் பனி பொழியும். சூழ்ந்திருக்கும் மலைகள் ஏற்கனவே வெண்மை மூடிவிட்டன. அங்கிருந்து பனி இறங்கி வந்துகொண்டிருக்கிறது. மிகமென்மையான காலடிகளுடன்.

ஜேம்ஸ் வில்ட்டின் ஒரு கவிதைவரி நினைவுக்கு வந்தது.

The snow has started falling.
It is falling over mountain and plain.
The trees bend under their burden.
Shake free, and are draped again.

இந்த வகையான சூழல்களில் ஒரு வரி தோன்றினால் அப்படியே நினைவில் பதிந்திருக்கும். Shake free, and are draped again என்று மந்திரம்போல சொல்லிக்கொண்டிருந்தேன். உதறுவது போர்த்திக்கொள்வது, வேறென்ன?

நான் பலநாட்களாக வெளியே செல்லவே இல்லை. குளிர் அப்படி அடித்தது. செல்லும்போது கனமான மூங்கில்கூடை போன்ற ஒன்றை தலைக்குமேல் போட்டுக்கொண்டு குனிந்து ஆமைபோலத்தான் நடப்பேன். விறகை முதுகின்மேல் சுமக்கையில் அதை விறகின்மேல் போட்டுக்கொள்வேன். போதிய அளவு எல்லாவற்றையும் முடித்துவிட்டேன் என்று தோன்றியபோது ஒரு டீ போட்டு எடுத்துக்கொண்டு வந்து மடாலயத்தின் முகப்பில் அமர்ந்தேன்.

நேர் எதிரே ஒரு பிர்ச் மரம். அதை சம்ஸ்கிருதத்தில் பூர்ஜமரம் என்பார்கள். மடாலயத்தைச் சுற்றி அந்த மரங்கள்தான். அவற்றின் பட்டை வெண்மையானது. முன்பு அவற்றை ஏடுகளாக பயன்படுத்தியிருக்கிறார்கள். எல்லா மரங்களும் இலையை உதிர்த்துவிட்டு வெறுங்கிளைகளுடன் நின்றிருந்தன. முற்றத்தில் நின்ற மரத்தில் மட்டும் கொஞ்சம் பழுத்த இலைகள் எஞ்சியிருந்தன. அதில் ஒரு காகத்தை பார்த்தேன்

முதலில் அது காகம் என்றே தோன்றவில்லை. கூர்ந்து பார்த்த பின்னர்தான் தெரிந்தது. கழுத்தை உள்ளிழுத்து அலகை மேலே தூக்கி உடல்குறுக்கி அமர்ந்திருந்தது. குளிரில் உறையாமலிருக்க அது உடலை உப்பியிருப்பது தெரிந்தது. அது ஏன் வலசை போகவில்லை?

எனக்கு தோன்றியது, அது எனக்காகத்தான் காத்திருக்கிறது என்று. தன் பணியைச் செய்வதற்காக. சட்டென்று என் மனதின் இறுக்கம் தளர்ந்து சிரிப்பு வந்துவிட்டது. என்ன ஒரு கடமையுணர்ச்சி!

நான் வெளியே இறங்கி அதை நோக்கிச் சென்றேன். அது என்னைக் கண்டதும் சிறகடித்து எழுந்தது. ஆனால் சிறகு பனியில் நனைந்திருந்தமையால் எடை கொண்டு அப்படியே முற்றத்தில் விழுந்துவிட்டது.

நான் அதை தூக்கிக்கொண்டு வந்து மடாலயத்தில் எரிந்த கணப்பின் அருகே வைத்தேன். விரைவிலேயே அது சீரடைந்தது. அதற்கு ஒரு கிண்ணத்தில் கோதுமை கொண்டுவந்து வைத்தேன். மெல்ல தத்தி வந்து அதை தின்றது.அதன் பின் தலைசரித்து என்னை குழப்பத்துடன் பார்த்தது.

நான் என் மேலாடையை கழற்றிவிட்டு முழந்தாளிட்டு என்னை கொத்தும்படி உடலைக் காட்டினேன். அது தலையை சரித்துச் சரித்து பார்த்துக் கொண்டிருந்தது. நான் என் அசைவுகளை ஒரு நடனம் போல ஆக்கிக்கொண்டேன். சட்டென்று காகம் சிறகடித்து எழுந்து என்னை கொத்தியது. ஆனால் கொத்து ஒரு மென்மையான தொடுகையாகவே இருந்தது

மீண்டும் அது என்னை கொத்தியது. இம்முறையும் அது வெறும் முத்தம்தான். அது அந்தச் செயலை நடிக்கிறது என்று நான் புரிந்துகொண்டேன். பயப்படுவது போல அஞ்சுவதுபோல நடித்தேன். இருவரும் அந்த நாடகத்தை கொண்டாடினோம். நெடுநாட்களுக்கு பின் நான் வெடித்துச் சிரித்துக் கும்மாளமிட்ட நாள் அது

அந்தக் காகம் குளிர்காலம் முழுக்க என்னுடன் மடாலயத்தில் இருந்தது. ஒருநாளில் இரண்டுமுறை கோதுமையை உண்ணும். அதுவே மடாலயத்தின் இருட்டுக்குள் சென்று எலிகளை வேட்டையாடும். கணப்பின் அருகே வந்து சிறகை ஒடுக்கி அலகை உள்ளிழுத்து அமர்ந்து தூங்கும். காலடி கேட்டால் கண்விழித்து என்னை கண்டதும் கா என்று ஒரு சொல்லில் முகமன் உரைத்துவிட்டு மீண்டும் தூங்கும்

அவ்வப்போது அது விழித்துக்கொண்டு என்னை கொத்தும். எத்தனை வேகமாக வந்தாலும் அலகு மிகமெல்லத்தான் படும். நாங்கள் அந்த நாடகத்தை குளிர்காலம் முழுக்க நடித்தோம். குளிர்காலம் முடிந்தபின் அது கிளம்பிச் சென்றது

வசந்தகாலத்தில் வெண்பனி மேலேறிக்கொண்டே சென்று மலைமுடிகளில் மட்டும் எஞ்சியது. வானம் கண்கூசும் ஒளியுடன் இருந்தது .மக்கள் திரும்பி வந்தனர். அவர்களுடன் ஆடுகளும் யாக்குகளும் வந்தன. அவற்றைத் தொடர்ந்து பல்லாயிரம் சிறுகுருவிகள் வந்தன. தரையெல்லாம் புல் எழுந்தது. மொட்டை மரங்களின் கிளைகளில் தளிர்கள் கசிந்து வெளிவந்தன. இலைகளின் தளிர்களின் பலநூறு வண்ணங்கள். அவை நாளுக்குநாள் மாறின. பகலிலும் இரவிலும் பூச்சிகளின் ரீங்காரம்.நிலம் உயிர்த்தெழுந்துவிட்டது.

நான் யாக்கின் பால் வாங்கிவருவதற்காக கிராமத்திற்குச் சென்றுகொண்டிருந்தேன். குடை ஏதும் கொண்டு செல்லவில்லை. மெல்லிய ஆடையையே அணிந்திருந்தேன். சட்டென்று ஒரு காகம் என்னை தாக்கியது. ஆனால் எனக்கு வழக்கமாக ஏற்படும் உள்ளதிர்ச்சி உருவாகவில்லை. ஓர் இனிய உணர்வே எழுந்தது. அப்படி பழகிவிட்டிருந்தேன். அந்தக் காகமும் அலகால் என்னை மெல்ல முத்தமிட்டது.

மேலும் இரு காகங்கள் என்னை செல்லமாகக் கொத்தின. நாங்கள் அந்த உற்சாகமான நடனத்தை ஆடினோம். அவை கரைந்தபடி பறந்தன. என்னைச் சூழ்ந்து அமர்ந்து கூவின. அவற்றின் கண்களை பார்த்தேன். என்னை அந்த பெருங்காகம் ஏற்றுக்கொண்டுவிட்டது என்று அறிந்தேன்

அன்றுமுதல் காகங்கள் என்னை கொத்துவதை ஒரு நடிப்பாக, விளையாட்டாகவே செய்தன. நான் விதிஷா சென்றேன். அங்கிருந்து குண்டூர் வந்தேன். எங்கும் அப்படித்தான். மாதத்தில் ஒருமுறை அந்த விளையாட்டு நடக்கும். நான் செல்லும்போது காகங்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டு கூவி அறிவிக்கும். நான் தயார் என்றால் விளையாட எழுந்துவரும்.

நான் துறவுபூண்டபோது எனக்கு மாகாசேக்கோ அசிதர் என்று பெயரிட்டார். அசிதர் அவருடைய மெய்ஞானத்தை ஒரு காகத்திடமிருந்துதான் பெற்றுக்கொண்டார் என்று அவர் சொன்னார்என்றார் அசிதர்.

நாங்கள் அந்த விசித்திரமான கதையால் வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆளாகியிருந்தோம். அசிதர் சொன்னார்கலை என்பது ஒரு நடிப்புதானே? அதிலுள்ளவை எதுவும் மெய் அல்ல. நிழல்நாய் கடிப்பதில்லை. ஆனால் அதனுடன் விளையாடலாம்.

அப்பால் அமர்ந்திருந்த சிதானந்த சாமிஆம், துறவு என்பதும் வாழ்க்கையை வேறு ஒருவகையில் நடிப்பதுதான்என்றபின் எழுந்து சென்று டீ கொதித்த அடுப்பில் இன்னொரு பீடியை பற்ற வைத்துக்கொண்டார்.

நித்யா சொல்லி முடித்தார்பித்ருகடன்கள் இல்லாத ஒரு துறவியிடம் காகம் என்ன சொல்லும் என்று அன்று நான் அசிதரிடம் கேட்டேன். ’நான் பித்ருவே அல்ல, இவர்கள் நம்புகிறார்கள் ஆகவே சும்மா நடிக்கிறேன்’ என்று சொல்லும் என்று சிரித்தார்

***

தொடர்புடைய பதிவுகள்

மூன்று டைனோசர்கள்

$
0
0

மூன்று வருகைகள்.

செங்கோலின் கீழ்

பல்லிகளை பற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். அவை டைனோசர் வம்சம் என்று தோன்றும். ஆனால் பல்லிகளைவிட பறவைகள்தான் டைனோசர்களுக்கு நெருக்கமானவை என்று தெரிந்துகொண்டேன். அவற்றின் கால்களும் நடையும் கழுத்தும் எல்லாமே டைனோசரின் நீட்சிகள். அலகு வந்தது, வால் அகன்றது.

நேற்று காலை அருண்மொழி வந்து “குருவி குஞ்சு விரிஞ்சிருக்கு” என்றாள்.

“அப்டியா?நான் பாக்கலையே?”என்றேன்

“கீ கீன்னு சத்தம் வந்திட்டே இருக்கு… நீ என்ன பாத்தே?”என்றாள்

நான் சைதன்யாவிடம் சொன்னேன். அவள் உடனே சென்று நாற்காலியை இழுத்துப்போட்டு செல்பேசியில் புகைப்படம் எடுத்து வந்தாள். மூன்று வாய்கள் அவள் அசைவை கண்டதுமே திறந்திருக்கின்றன. அந்தப் படம் அவற்றின் அசைவால் மங்கலாகிவிட்டது

அதன்பின் அவள் தங்கள் அன்னை அல்ல என்று உணர்ந்து தூங்கிவிட்டன. மூன்று சிறகில்லா சிற்றுயிர்கள். ஆச்சரியமாக, அவை பறவைகள் அல்ல மூன்று டைனோசர்துளிகள்

அவற்றின் பசி பயங்கரமானது. ஒருவகையான பிரபஞ்சப்பசி. அம்மாவும் அப்பாவும் மாறிமாறி வந்து ஊட்டிக்கொண்டே இருக்கின்றன. எவ்வளவு ஊட்டினாலும் போதாது. வளர்வன அனைத்தும் பசிகொண்டவை. பசி என்பது ஒரு வகை தீ. தீயால் வளராமலிருக்க முடியாது. அதற்கு திகழ்வதும் வளர்வதும் ஒன்றே.

வீட்டுக்குள் மூன்று புதிய உயிர்கள். மூன்று டைனோசர்கள். ஆனால் நல்லவேளை அவற்றுக்கு சிறகு முளைத்துவிடுகிறது. பறந்தேயாகவேண்டும் என்ற நிலை வந்துவிடுகிறது. அவை டைனோசர் ஆவதில்லை. இனிய சிறிய கிள்ளைமொழிப் பறவைகளாகவே நீடிக்கின்றன

ஆனால் ஒருநாளைக்கு நூறுமுறைக்குமேல் அவை புழுக்களையும் பூச்சிகளையும் பிடித்துக்கொண்டுவந்து ஊட்டுகின்றன. அந்த சிற்றுயிர்களுக்கு அவை டைனோசர்கள்தான். புகைப்படத்தை பார்க்கையில் குட்டி டைனோசர்களின் தூக்கத்தைக் கண்டு மனம் மலர்கிறது. அவற்றின் ஆவேசமான வாய்திறப்பைக் கண்டு சிரிப்பு வருகிறது. வளர்க என்றுதான் சொல்லத் தோன்றுகிறது

60 லாசர் [சிறுகதை ]

59 தேவி [சிறுகதை]

58 சிவம் [சிறுகதை]

57 முத்தங்கள் [சிறுகதை]

56 கூடு [சிறுகதை]

55 சீட்டு [சிறுகதை]

54 போழ்வு [சிறுகதை]

53 நஞ்சு [சிறுகதை]

52 பலிக்கல்[சிறுகதை]

51 காக்காய்ப்பொன் [சிறுகதை]

50 லீலை [சிறுகதை]

49 கரவு [சிறுகதை]

48.ஐந்து நெருப்பு[ சிறுகதை]

47.நற்றுணை [சிறுகதை]

46.இறைவன் [சிறுகதை]

45.மலைகளின் உரையாடல் [சிறுகதை]

44.முதல் ஆறு [சிறுகதை]

43.பிடி [சிறுகதை]

42.கைமுக்கு [சிறுகதை]

41.உலகெலாம் [சிறுகதை]

40.மாயப்பொன் [சிறுகதை]

39.ஆழி [சிறுகதை]

38.வனவாசம் [சிறுகதை]

37மதுரம் [சிறுகதை]

36ஓநாயின் மூக்கு [சிறுகதை]

35 வான்நெசவு [சிறுகதை]

34 பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

33பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

32 வான்கீழ் [சிறுகதை]

31 எழுகதிர் [சிறுகதை]

30 நகைமுகன் [சிறுகதை]

29 ஆட்டக்கதை [சிறுகதை]

28 குருவி [சிறுகதை]

27 சூழ்திரு [சிறுகதை]

26 லூப் [சிறுகதை]

25 அனலுக்குமேல் [சிறுகதை]

24 பெயர்நூறான் [சிறுகதை]

23 இடம் [சிறுகதை]

22.சுற்றுகள் [சிறுகதை]

21.பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20வேரில் திகழ்வது [சிறுகதை]

19.ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18.தங்கத்தின் மணம் [சிறுகதை]

17.வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16.ஏதேன் [சிறுகதை]

15.மொழி [சிறுகதை]

14.ஆடகம் [சிறுகதை]

13.கோட்டை [சிறுகதை]

12.துளி [சிறுகதை]

11.விலங்கு [சிறுகதை]

10.வேட்டு [சிறுகதை]

9.அங்கி [சிறுகதை]

8.தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7.பூனை [சிறுகதை]

6.வருக்கை [சிறுகதை]

5.“ஆனையில்லா!” [சிறுகதை]

4.யா தேவி! [சிறுகதை]

3.சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2.சக்தி ரூபேண! [சிறுகதை]

1 எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–63

$
0
0

பகுதி ஆறு : படைப்புல் – 7 

பிரத்யும்னனை சந்திக்க கிளம்பிக்கொண்டிருந்த கிருதவர்மனிடம் நான் “தந்தையே, தாங்கள் நேரில் செல்லத்தான் வேண்டுமா? ஒரு சொல்லில் ஆணையிட்டால் போதுமல்லவா?” என்றேன். அவர் “அல்ல, அன்று அவர்கள் இருந்த உளநிலை வேறு. இன்று ஒவ்வொருவரும் நகரிழந்த நிலையில் இருக்கிறார்கள். ஒரு நகருள் திகழும் நெறிகள் அந்நகரைவிட்டு வெளியேறியதுமே மறைந்துவிடுகின்றன. ஓர் இல்லத்தில் வாழ்பவர்கள் அதைவிட்டு வெளியேறி தெருவில் வாழத்தொடங்கினால் ஓரிரு நாட்களிலேயே நாடோடிகளின் இயல்பை கொள்வதை நீ பார்க்கலாம்” என்றார்.

“இங்கு இப்போது எந்த அரச நெறியும் திகழாது. இங்கு மேலெழுந்து ஆள்வது ஃபானுவின் ஐயமும் அச்சமும் மட்டும்தான். இத்தருணத்தில் எவரும் தன்னை மதிக்கமாட்டார்கள், தன்னைக் கடந்துசென்று படைகொள்வார்கள் என்ற அச்சம் அவனை ஆட்டிப்படைக்கிறது. இன்று அவன் இரவும்பகலும் தன் கருவூலத்தைப் பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறான். அதை எவர் வேண்டுமானாலும் கைப்பற்றிக்கொள்வார்கள் என்ற அச்சமே துயிலவிடாது தடுக்கும். இப்போது எவர் எதைச் சென்று சொன்னாலும் கருவூலத்தை கைப்பற்றும் முயற்சி என்றே அவனுக்குத் தோன்றும்” என்றார் கிருதவர்மன். “அந்த உளநிலையில் அவன் இருக்கையில் அதற்கு எதிரான எதிர்வினைகளாகவே பிற உளநிலைகள் அனைத்தும் இருக்கும்.”

“எனில் பிரத்யும்னனையும் கிருஷ்ணையையும் சென்று பார்ப்பதில் பொருளில்லை அல்லவா?” என்று நான் கேட்டேன். “அல்ல, கூட்டான முடிவென்பது ஃபானுவைச் சற்று தயங்கவைக்கும். அவன் கிளம்பிச்செல்லவேண்டும் என்று ஆணையிட்ட பிறகு, அதை தவிர்த்து பிரத்யும்னனையும் கிருஷ்ணையையும் பின் தொடரும் யாதவர்கள் இங்கு நின்றுவிட்டால் மூன்றில் ஒரு பங்கினரே அவனுடன் கிளம்புவார்கள். அது மெய்யாகவே அவன் மூன்றிலொரு பங்கினருக்கு மட்டுமே தலைவன், எஞ்சியவர்கள் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கண்கூடாக காட்டியதாகவே அமையும். ஆகவே அவன் அதை எண்ணி தயங்குவான். நாம் அதை எடுத்துக் கூறி அவனுக்கு உணர்த்தினால் அவனால் புரிந்துகொள்ள முடியும்” என்று கிருதவர்மன் கூறினார்.

 

நான் அவருடன் சென்றேன். அந்தப் பொழுதில் துவாரகையை ஒட்டிய அந்த மணற்பரப்பு முழுக்க மக்கள் புயலுக்குப் பின் சருகுக்குவியல் என நிறைந்திருந்தனர். சருகின் வண்ணம்தான். அழுக்கும் மண்ணும் மட்டும் அல்ல மானுட உடலே கூட சருகின் வண்ணமே. பிரத்யும்னன் தன் படைகளுக்கு நடுவே மணலில் இழுத்துக் கட்டிய கூடாரங்களுக்கு வெளியே சுற்றத்துடன் அமர்ந்திருந்தார். வெயில் படாமலிருக்க அங்கு நின்றிருந்த முள்மரங்களை இணைத்து மூங்கிலை வைத்து அவற்றுக்கு மேல் மூங்கில் தட்டிகளை அடுக்கி குடில்போல் கட்டியிருந்தார்கள். கீழே மணல்மேல் விரிக்கபட்ட கம்பளத்தில் அவர் அமர்ந்திருக்க சூழ அவருடைய இளையவர்கள் அமர்ந்திருந்தனர்.

தொலைவிலேயே அவர்களின் உடல்மொழியைக் கொண்டு உளநிலையை உணரமுடிந்தது. பிரத்யும்னன் பதற்றம் கொண்டவராக இருந்தார். அவர் இளையவர்களில் மூவர் ஃபானுவுடன் சென்று சேர்ந்திருந்தனர். இருவர் கொல்லப்பட்டுவிட்டனர். சேர்ந்து அமர்கையில் கண்ணெதிரே தன் உடன்பிறந்தார் பாதியெனக் குறைந்திருப்பதை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். அவர்களில் எவர் தனக்கான கத்தியுடன் இருப்பார் என்று அவர் அகம் ஐயமும் கொண்டிருந்தது. ஆகவே படைத்தலைவர்களால் சூழப்பட்டவராக படைக்கலத்தை மடியிலேயே வைத்திருப்பவராக ஐயத்துடன் சூழ விழியோட்டிக்கொண்டிருப்பவராக இருந்தார்.

அவருக்கு நேர்க்குருதி மரபினனாகவும் இளவரசனாகவும் இருந்த அநிருத்தன் அங்கே அவருடன் இல்லை. அவருடைய படைப்பிரிவுக்குள்ளேயே அவர்கள் தனியாக பிறிதொரு இடத்தில் இருந்தனர். தந்தைக்கும் மைந்தனுக்கும் இடையே எக்கணத்திலும் பூசல் நிகழும் என்று சொல்லப்பட்டது. “அநிருத்தனை தனியாக சந்திக்கவேண்டுமா?” என்று நான் கிருதவர்மனிடம் கேட்டேன். “தேவையில்லை என நினைக்கிறேன். முரண் என ஏதேனும் தெரிந்தால் சந்திக்கலாம். ஆனால் நமக்கு பொழுதும் இல்லை” என்றார் கிருதவர்மன்.

கிருதவர்மனும் நானும் அவரை சந்திக்கவேண்டும் என விரும்புவதை ஏவலரிடம் அறிவித்தோம். அவன் சென்று அவரிடம் தெரிவித்தபோது தொலைவிலேயே பிரத்யும்னன் மாறி மாறி வினாக்களை கேட்டும் அவ்வப்போது எங்களைப் பார்த்தும் குழம்பிக்கொண்டிருப்பதை பார்த்தோம். கிருதவர்மன் சலிப்புடன் “சந்திப்பதற்கு எதற்கு இவ்வளவு தயங்குகிறான்?” என்றார். நான் எரிச்சலுடன் “நாம் நேராகச் சென்று பார்ப்போம்” என்று நடந்து செல்லத்தொடங்கினேன். கிருதவர்மன் “இல்லை, இங்கு கோட்டையும் அரண்மனையும் இல்லை. ஆயினும் கோட்டையையும் அரண்மனையையும் நாம் கற்பனையில் உருவகித்துக் கொண்டாலொழிய இங்குள்ள அரசமுறைமைகளை கடைபிடிக்க இயலாது. அரசமுறைமைகள் கடைபிடிக்கப்படாவிட்டால் அவன் அரசன் அல்லாமல் ஆகிவிடுவான். அரசன் இல்லாத சூழலில் எவரும் வாழ இயலாது” என்றார்.

நான் அங்கே மாளிகைக்கதவுகளையும் இடைநாழிகளையும் பார்க்கத்தொடங்கினேன். அப்போதுதான் அங்குள்ள ஒவ்வொரு ஏவலரும் அங்கே ஓர் அரண்மனையை உளப்படமாக வரைந்திருப்பதை கண்டேன். பிரத்யும்னன் வெட்டவெளியில் அமர்ந்திருந்தாலும் கூட அவர் ஏவலன் அவன் வாசல் என நினைத்திருந்த ஓர் எல்லைக்கு வெளியிலேயே நின்றான். அதற்கு அப்பால் செல்லும்போது காலெடுத்து வைத்து மெல்ல தயங்கி கதவைத் திறப்பவன்போல உடல் அசைவு காட்டி மேலே சென்றான். வணங்கி மீண்டு வரும்போதும் அவன் அந்த கற்பனையான கதவைத் தாண்டி வருவதை காணமுடிந்தது.

சில கணங்களில் அங்குள்ள அனைவருமே கோட்டைகளை, காவல்மாடங்களை, தெருக்களை, இல்லங்களை நடித்துக்கொண்டிருப்பதை பார்த்தேன். சூழவும் நோக்க நோக்க என் வியப்பு விரிந்துகொண்டே சென்றது. இல்லாத ஒன்று இருப்பவர்களினூடாக அங்கே திகழ்ந்து வந்தது. புரவிகளும் யானைகளும் எழுந்தன. முரசுகளும் கொம்புகளும் வந்தன. காவலர்களும் ஏவலர்களும் உருவாயினர். அரண்மனை என்பது பொருளில் இல்லை, உள்ளத்தில் இருக்கிறது என்பதை அப்போது கண்டேன். மறுகணம் ஒரு புன்னகையுடன் எண்ணம் எழுந்தது, கால் நோக்கி சிறுநீர் கழிக்கும் நாயின் அருகே அது தன் உள்ளத்தில் கண்ட மரம் ஒன்றிருக்கிறது என்று முன்னர் என் ஆசிரியர் கூறினார். அவர் விளையாட்டாக அதை உரைத்திருந்த போதிலும்கூட அது என் உள்ளத்தில் பல தளங்களில் விரிந்த ஒன்றாக இருந்தது. சில தருணங்களில் அது தெய்வத்தை புரிந்துகொள்வதற்கான உருவகமாகவே ஆகிவிட்டிருந்தது.

ஏவலன் வந்து பிரத்யும்னனை சந்திக்க ஒப்புதல் கிடைத்திருப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்றான். காவல்நிலைகளையும் கதவுகளையும் கடந்து சென்று பிரத்யும்னனை அணுகி வணங்கி முகமன் உரைத்தோம். பிரத்யும்னன் வணங்கி அமரும்படி கைகாட்டினார். அமர்ந்ததும் இருவரும் அனைத்து சொற்களையும் அரசமுறைப்படியே உரைத்தனர். பின்னர் கிருதவர்மன் நிகழ்வினை சுருங்க சொன்னார். “பிரபாச க்ஷேத்ரத்திற்குப் போவதில் பிழையென ஒன்றுமில்லை. எனினும் இவ்வண்ணம் ஒரு முற்சொல் உள்ளது. அது பொய்யென்றாகலாம். ஆயினும் அவ்வண்ணம் ஒன்று உள்ளது என்பதே உகந்ததல்ல” என்றார் கிருதவர்மன்.

“ஒரு இல்லத்தில் பூசல் நிகழக்கூடுமென நிமித்திகரின் சொல் இருந்தால் அங்குள்ள அனைவரும் இயல்பாக அனைத்து சொல் செயல் வழியாகவும் பூசல் நோக்கி செல்வதை பார்க்கலாம். ஓர் அவையில் உளவிரிசல் நிகழுமென்று முன்னரே ஐயமிருந்தால் அனைத்து நிகழ்வுகளும் அவ் உளவிரிசல் நோக்கியே ஒழுகும்” என்று கிருதவர்மன் சொன்னார். “ஆகவே நாம் பிரபாச க்ஷேத்ரத்திற்குச் செல்வது இன்று உகந்ததல்ல. மேலும் இத்தகைய முடிவுகளை நாம் மிக எண்ணி எடுக்கவேண்டும். சிறந்த பிற இடங்கள் உள்ளனவா, வேறு எங்கேனும் மேலும் உகந்த எதையேனும் நாம் கண்டடைய முடியுமா என்ற விரிவான தேடலுக்குப் பின்னரே கிளம்பவேண்டும்.”

ஆனால் பிரத்யும்னன் எதையும் செவி கொள்ளவில்லை. ஆர்வமில்லாமல் தலையை அசைத்து “தாங்களே முடிவை எடுக்கலாம். எங்கு சென்றாலும் எனக்கு ஒப்புதலே. உண்மையில் நான் பிரபாச க்ஷேத்ரத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனது படைகளுடன் கிளம்பி விதர்ப்பத்திற்கே செல்லலாம் என்று எண்ணுகிறேன்” என்றார். “விதர்ப்பத்திற்குச் செல்வது உகந்த எண்ணமல்ல. அங்கு தாங்கள் அரசர் அல்ல. விருந்தினராக அரசர் ஒருவர் பிறிதொரு நாட்டில் நெடுநாள் இருக்கமுடியாது” என்றார் கிருதவர்மன். “ஆம், ஆனால் நான் மாதுலர் ருக்மியிடம் விதர்ப்பத்தின் ஒரு நிலப்பகுதியை விலைகொடுத்து வாங்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கான செல்வம் அவரிடம் முன்னரே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக அவர் நிலத்தை கொடுக்கட்டும். அங்கு ஒரு அரசை நான் அமைத்துக்கொள்கிறேன். பின்னர் எனக்குரிய நிலத்தை நான் வென்று பெறுவேன்” என்றார் பிரத்யும்னன்.

“இன்று பிரபாச க்ஷேத்ரத்திற்கு வந்தால்கூட ஒரு புதிய சதுப்புநிலத்தில் பிறிதொருவரின் இளையவனாக இருப்பதில் பெரிய பொருளில்லை” என்றார் பிரத்யும்னன். “ஆனால் நாம் எடுத்த முடிவு ஃபானுவை அரசராக்குவதென்று” என்று கிருதவர்மன் சொன்னார். “மெய். ஆனால் அது துவாரகையின் அரசர் என்னும் நிலை. அன்று துவாரகை மண்ணில் இருந்த மாபெரும் நகர் என்று இருந்தது. இன்று நம்மிடம் நகரில்லை. ஒரு சதுப்பை பங்குவைப்பதற்காக நான் எதற்கு இவருடன் இருக்கவேண்டும்?” என்றார். “மெய்தான்” என்று கிருதவர்மன் சொன்னார். “நீ கிளம்புவதாக இருப்பினும் அது ஒருவகையில் நன்றே. ஆனால் எதுவாயினும் நாம் இங்கு ருக்மி வந்துசேர்வது வரை காத்திருப்போம். அதுவே முறை.” பிரத்யும்னன் “ஆம், எனக்கு மாற்றுச்சொல் இல்லை” என்றார்.

 

பிரத்யும்னனின் முடிவை அங்கிருந்து கிளம்பிச்செல்லும்போது கிருதவர்மனும் நானும் எங்களுக்குள் பேசிக்கொள்ளவில்லை. சாத்யகி அப்போதும் சாம்பனை சந்திக்க கிளம்பியிருக்கவில்லை. அவர் எங்களுக்காக காத்திருந்தார். அவரை சந்தித்ததும் கிருதவர்மன் பிரத்யும்னனின் எண்ணத்தை சொன்னார். சாத்யகி “அவர் கிளம்பிச்செல்வது எவ்வகையிலும் உகந்த முடிவல்ல. குறிப்பாக யாதவருக்கு” என்றார். “நாம் சென்று நின்றிருக்கப்போவது ஒரு திறந்தவெளியில், புதுநிலத்தில். எந்தப் புதுநிலமும் எவருக்கும் உரியதாக எளிதில் ஆவதில்லை. அங்கு எவருக்கேனும் ஏதேனும் உரிமை இருக்கும். அவர்கள் கிளம்பிவருவார்கள். போரிடாது வெல்லாது எந்த நிலத்தையும் அடைய முடியாது. போரிட்டு வென்ற நிலத்திற்கு மட்டுமே மக்கள் மனதில் மதிப்பும் இருக்கும். அநிருத்தனும் பிரத்யும்னனும் இல்லாமல் ஃபானுவால் ஒரு புதுநிலத்தை வென்று தனக்கென முடிசூட்டிக்கொள்ள இயலாது.”

“ஆனால் நிலம் வென்று மூத்தவருக்கு கொடுங்கள் என்று நாம் எப்படி பிரத்யும்னனிடம் கேட்க முடியும்?” என்றார் கிருதவர்மன். “பிரத்யும்னன் ருக்மிக்கு செல்வத்தை அளித்திருக்கிறார். பெற்ற செல்வத்தை எவரும் திருப்பிக்கொடுக்கமாட்டார்கள். அதற்கு நிகராக ஒரு பொருளைப் பெறுவதே எளிது” என்றார். சாத்யகி “ஆம்” என்றார். “ருக்மி துவாரகையே தனக்கு வேண்டுமென்று விரும்பியவர். இன்று அவர் விரும்பியது போலவே இளைய யாதவரின் பெயர் எஞ்சாது துவாரகை அழிந்துவிட்டது. இளைய யாதவரின் மைந்தரை அழைத்துச்சென்று தன் நிலத்தில் ஒரு பகுதியை அவருக்கு அளித்து அங்கு ஓர் அரசை உருவாக்கி இளைய யாதவரின் பெயர்கூட இல்லாத மணிமுடியொன்றை அங்கு எழச் செய்தால் ருக்மி வெற்றி அடைந்தவராவார். அதை அவர் விரும்பத்தான் செய்வார்” என்று கிருதவர்மன் சொன்னார்.

“எனில் சாம்பனை நாம் உடனழைத்துச் செல்கிறோமா?” என்றார் சாத்யகி. “சாம்பன் களிமகனாயினும் கட்டற்றவனாயினும் போர்க்களத்தில் வெல்பவன். அசுரர்கள் புதுநிலத்தை வென்று கோல்கொள்வதில் இயல்பான ஊக்கமும் பயிற்சியும் கொண்டவர்கள். புதுநிலத்தில் அவர்கள் வெல்லலாம்” என்றார் கிருதவர்மன். சாத்யகி “ஆனால் அது நாம் அடையும் புதுநிலம் மேய்ச்சல் நிலமா காடா என்பதைப் பொறுத்தது. மேய்ச்சல் நிலமெனில் யாதவர் கை ஓங்கும். காடெனில் அசுரர் கை ஓங்கும்” என்றார். கிருதவர்மன் “நாம் இன்னும் முடிவெடுக்கவில்லை. மேய்ச்சல் நிலத்தில் புல்வெளிகளும் நீர்நிலைகளும் நமக்கு உகந்தது. ஆனால் பிறரால் எளிதில் தாக்கத்தக்கது. படைக்கலம் இல்லாது வெட்டவெளியில் நின்றிருப்பது அது” என்றார்.

“புல்வெளியில் ஆ புரக்கலாம். ஆனால் சில நாட்களேனும் எவருக்கேனும் கப்பம் கொடுத்தே ஆகவேண்டும். அல்லது கடும்போரிட வேண்டும். காட்டில் வாழ்பவர்களுக்கு காடே கோட்டையாகிறது. காட்டை தெரிவு செய்வதா அல்லது மேய்ச்சல் நிலத்தையா என்பதை பிறகு முடிவெடுக்கலாம். கிருஷ்ணை என்ன சொல்கிறார் என்பதை அவரிடம் கேட்போம்” என்று சாத்யகி சொன்னார். “கிருஷ்ணை ஒருபோதும் புல்வெளி வாழ்வை விரும்பமாட்டார். காட்டையே தெரிவுசெய்வார். எனக்கும்கூட புல்வெளிமேல் ஒவ்வாமை உண்டு. மேயும் விலங்குகளில் மாறாதிருக்கும் அச்சமும் பதற்றமும் எனக்கு அருவருப்பூட்டுவன” என்றார் கிருதவர்மன்.

சாம்பனின் படைப்பிரிவை அடைந்தபோது அங்கு மானுட உடல்களாலான கோட்டை ஒன்று இருப்பதை கண்டேன். எட்டு பேராக படைவீரர்கள் நீண்ட நிரை அமைத்து ஒரு கோட்டையை உருவாக்கியிருந்தார்கள். அந்தக் கோட்டைக்கு வாயிலும், அதற்குள் நெடுஞ்சாலையும் இருந்தது. உள்ளே சென்றபோது நிரைவகுத்த மனித உடல்களாலான அரண்மனை. அவ்வரண்மனைக்கு நடுவே கூடங்கள், அவைகள் ஆகியவை இருந்தன. “எறும்புகளின் வழி இது. அவை உடலாலேயே பாலங்களையும் கோட்டைகளையும் அமைக்கும். உடலே படகும் தெப்பமும் ஆக மாறும்” என்று சாத்யகி சொன்னார்.

எங்கள் வருகையை அறிவித்தபோது சாம்பன் மது அருந்தி துயின்றுகொண்டிருக்கிறார் என்று ஏவலன் கூறினான். நாங்கள் அரசி கிருஷ்ணையை சந்திக்க விழைகிறோம் என்று சொன்னோம். அதையே எதிர்பார்த்துமிருந்தோம். கிருஷ்ணையை சந்திக்கும்பொருட்டு எங்களை அழைத்துச் சென்றான் ஏவலன். அவனுடன் மானுட உடல்களால் ஆன இடைநாழி வழியாக சென்றோம். மானுட உடலால் ஆன வாயிலைக் கடந்து கூடத்துள் நுழைந்தோம். கிருஷ்ணை வழக்கம்போல் தனக்கு வந்த ஓலைச்செய்திகள் அனைத்தையும் தொகுத்து படித்துக்கொண்டிருந்தார். சாத்யகியையும் கிருதவர்மனையும் ஏவலன் அறிவித்ததுமே எழுந்து வந்து கைகூப்பி வணங்கினார். இருவரையும் அழைத்துச் சென்று அமர வைத்தார்.

அங்கு மணலை அள்ளி மேடாக்கி பீடங்கள்போல உருக் கொடுத்து, அவற்றுக்கு மேல் கம்பளங்களை விரித்து மெய்யாகவே ஓர் அவை உருவாக்கப்பட்டிருந்தது. அமர்ந்தபோது மிக உகந்த பீடங்களாக அவை இருந்தன. மூங்கில் கழிகள் நடப்பட்டு அனைத்து சுவர்களும் கண்கூடாக வரையறுக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தையும் ஓரிரு நாட்களில் பேரரசி உருவாக்கிக்கொண்டிருக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். பெண்கள் எங்கும் ஒரே நாளில் அடுமனைகளை உருவாக்கிக்கொள்வதைப்போல அரசியர் எங்கும் சில கணங்களிலேயே அரசை உருவாக்கிவிடுகின்றனர்.

சாத்யகி தன் வருகையின் நோக்கத்தை உரைத்தார். கிருஷ்ணை அதை விழிசரித்து கேட்டிருந்தார். பின்னர் “நானே தங்களிடம் வந்து இதை கூறுவதாக இருந்தேன். இங்கு நாம் சற்று நாட்கள் தங்குவதே உகந்தது. இங்கிருந்து எங்கு செல்லவேண்டும் என்பதை முடிவெடுப்பதற்கு நாம் சற்று பொழுதை அளிக்கவேண்டும்” என்றார். “ஏனெனில் நம் எதிரிகள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். அவர்களில் எவர் நம்முடன் இருக்கிறார்கள் எவர் இப்போது நம்மை வெல்ல முயல்வார்கள் என்பதை உணரக்கூடிய பொழுது இது.”

அந்தக் கோணத்தில் சாத்யகியும் கிருதவர்மனும் எண்ணியிருக்கவில்லை. அவர்கள் வியப்பது தெரிந்தது. “ஒருவேளை நமது எதிரிகள் நம்மை ஆதரிக்கக்கூடும். நண்பர்கள் நம்மை கைவிடவும் கூடும். எந்த நிலத்திற்குச் சென்றாலும் அங்கு நம்மை எதிர்க்கப்போவது யார், நம்முடன் இருக்கப்போவது யார் என்பது தெளிவடைந்த பின்னர் கிளம்புவதே உகந்தது. அறியா நிலத்தில் நின்று நட்பும் பகையும் அறியாது இருப்பதைபோல் இடர் ஏதுமில்லை” என்றார் கிருஷ்ணை. “ஆம், மெய். நாங்கள் இதை எண்ணவில்லை” என்றார் கிருதவர்மன்.

“பிரபாச க்ஷேத்ரத்தைப் பற்றி இப்போதுதான் ஒற்றர்கள் சொன்னார்கள். அது எவ்வகையிலும் உகந்த இடமல்ல. அது கடலோரமாக அமைந்திருக்கிறது, ஆனால் அங்கு ஒரு துறைமுகம் அமைய முடியாது. சேற்றுப்பரப்பு அது. சேற்றுப்பரப்பை எவ்வகையிலும் நம்மால் உருமாற்றமுடியாது. ஓர் இடத்தில் எதனால் சேறு உருவாகிறதோ அங்கே அந்த அடிப்படைகள் இருக்கும் வரை சேறே உருவாகும். சேற்றில் சிறு படகுகள் மட்டுமே வரமுடியும். பெருங்கலங்கள் ஒருநாளும் அந்தக் கரையை அணுகமுடியாது” என்று கிருஷ்ணை சொன்னார்.

“அது புல்வெளி. ஆனால் ஆழமான சதுப்பு. அடியில் பாறை ஏழு கோல் ஆழத்தில் உள்ளது. ஆகவே அங்கு நாம் பெரிய கட்டடங்களை அமைக்கமுடியாது. சென்றதுமே குடில்களைத்தான் அமைக்கமுடியும். அங்கு உறுதியான பாதைகள் அமைய முடியாது. ஆகவே பெரிய சந்தைகள் அமையாது. எவ்வகையிலும் நாம் செழித்து வளர்வதற்கு உகந்த பகுதியல்ல. அங்கு செல்லலாம் என்ற எண்ணம் எவ்வண்ணம் இவர்களுக்கு ஏற்பட்டது என்று எனக்கு தெரியவில்லை. பிரபாச க்ஷேத்ரத்திற்கு செல்ல வேண்டியதில்லை என்பதே எனது முடிவு. அதை விரிவாக எழுதி சற்று முன்னர்தான் ஃபானுவுக்கு அனுப்பினேன்” என்றார் கிருஷ்ணை.

“அனுப்பிவிட்டீர்களா?” என்றார் சாத்யகி. “ஆம், நான் எனது எண்ணத்தை தெரிவிக்கவேண்டும்” என்றார் கிருஷ்ணை. “ஆனால் தாங்கள் எத்தனை தெளிவாக சொன்னாலும் தாங்கள் சொன்னதனாலேயே அது பொருட்படுத்தப்படமாட்டாது” என்றார் சாத்யகி. “ஆம், நான் அறிவேன். என்னை சிறையிட்ட பிறகுதான் பெருவெள்ளம் அங்கு வந்தது. அந்நகரை ஒழிந்து இங்கு வந்தபோதிலும்கூட அரசரிடமிருந்து எனக்கு சிறைமீட்பு ஆணை வராதவரை நான் சிறையில் இருப்பவளாகவே கருதப்படுவேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனது சொற்களை சொல்லியாகவேண்டும்” என்றார் கிருஷ்ணை.

“எந்த வகையிலும் பிரபாச க்ஷேத்ரம் யாதவர்கள் சென்று குடியேற உகந்ததல்ல” என்று கிருஷ்ணை தொடர்ந்தார். “இன்று யாதவர்கள் சென்று குடியேற உகந்த இடம் காடுதான். ஜாம்பவானின் நிலம் இன்னும் வெல்லப்படாததாகவே உள்ளது. அங்கு மிக எளிதில் ஓர் அரசை அமைக்கமுடியும். ஜாம்பகிரி எனும் மலை அருகே உள்ளது. அது நெடுங்காலமாக எவராலும் குடியேறப்படாதது. மலைகளில் அடுக்கடுக்காக நமது அரசை அமைத்துகொள்வோம். பல வகையிலும் அது உகந்தது. ஏனெனில் ஏற்கெனவே மலைகளில்தான் நமது அரசை அமைத்திருக்கிறோம். அந்தப் பழக்கமும் உளப்பதிவும் நம்மிடம் உள்ளது. நமது புரவிகளும் தேரும் அனைத்துமே குன்றில் அமைந்த நகருக்காக உருவாக்கப்பட்டவை.”

“மேலும் இன்று நம்மிடம் இருக்கும் மிகப் பெரிய ஆற்றல் என்பது கருவூலம்தான். எவர் வேண்டுமானாலும் நமது கருவூலத்தை தேடி வரக்கூடும். தேனீ சேர்த்து வைத்திருக்கும் தேன்போல அது சூழ்ந்திருக்கும் அனைத்து அரசர்களுக்கும் அழைப்பு. ஒரு தலைமுறைக்காலம் நமது கருவூலத்தை நாம் பாதுகாத்துக் கொண்டோம் எனில் இயல்பாகவே நாம் ஒரு அரசாக ஆகிவிடுவோம். நாம் சந்தைகளை அமைக்கமுடியும். சாலைகளை விரிக்கமுடியும். இன்று நமக்குத் தேவை அணுகமுடியாத ஓர் இடம். வெல்லமுடியாத ஒரு கோட்டை. திறந்த வெளியில் கருவூலத்தை கொண்டு வைப்பதல்ல, எவரும் அணுக முடியாத உச்சத்தில் கொண்டு வைப்பதே இன்று உகந்தது.”

“இது தங்கள் முடிவென்றால் நாங்கள் ஃபானுவிடம் பேசுகிறோம்” என்றார் கிருதவர்மன். “நான் இதை அவருக்கு அனுப்பிவிட்டேன். அந்த ஓலையை இந்நேரம் அவர் படித்துவிட்டிருப்பார். அவர் முடிவெடுக்க தயங்கி இருக்கும் நேரம் இது. உடனே நீங்கள் சென்று அவரிடம் பேசலாம். சற்று வற்புறுத்தினால் அவர் இணங்குவார்” என்று கிருஷ்ணை சொன்னார். “நன்று, அரசி. தங்களின் தெளிவான பார்வை உடனிருந்தால் ஃபானுவுக்கு தாங்கள் பெருமளவுக்கு உதவியாக இருக்கக்கூடும். அதை அவர் உணரவேண்டும்” என்றபின் சாத்யகி கிருதவர்மனுடன் எழுந்தார்.

நாங்கள் வெளிவந்தோம். ”உடனே ஃபானுவை நோக்கி செல்வோம். கிருஷ்ணையின் ஓலை ஃபானுவை மிரள வைக்கும். இத்தனை தெளிவாக எண்ணம் ஓட்டும் ஒருவரை தன் எதிரியாகவே கருதுவார். ஒருபோதும் அவர் அச்சொல்லை ஏற்றுக்கொள்ளமாட்டார்” என்று சாத்யகி சொன்னார். கிருதவர்மன் “இல்லை, அவ்வண்ணம் அச்சம் எழுந்தாலும் கூட இத்தருணத்தில் ஒரு முடிவையே அவன் எடுப்பான். அவனால் மற்றொரு கருத்தை எண்ணமுடியாது” என்றார். “அவன் இன்று அஞ்சிக்கொண்டிருப்பது கருவூலத்தைப்பற்றி. வெட்டவெளியில் கருவூலத்துடன் சென்று நின்றிருப்பது சாவுக்கு நிகர் என்று அரசி சொல்லியிருக்கிறார். அந்த வரியிலிருந்து அவனால் வெளியே வரமுடியாது” என்றார்.

 

ஃபானுவின் அவையை நெருங்கினோம். அங்கு ஃபானு தன் உடன்பிறந்தாருடன் உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தோம். கிருதவர்மனையும் சாத்யகியையும் கண்டதும் ஃபானு அவரே முன்னால் ஓடிவந்து “மூத்தவரே, பிரபாச க்ஷேத்ரத்திற்கு செல்வதாக தெரிவித்திருந்தேன். இன்று சற்று பொறுத்து இங்கு வரும் ருக்மியையும் பிற அரசர்களையும் கண்டு பேசிய பிறகு கிளம்பலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறேன். தங்கள் கருத்தென்ன?” என்றார். “எங்கள் எண்ணமும் அதுவே. அதை சொல்லவே நாங்கள் வந்தோம்” என்று சாத்யகி சொன்னார்.

“நான் ஒன்றை எண்ணினேன், நமது கருவூலமே நமது ஆற்றல். கருவூலத்தை கொண்டுசென்று வெட்டவெளியில் திறந்து வைப்பதைப்போல் அழிவை வரவழைப்பது வேறெதுவும் இல்லை. கருவூலம் உயரமான அணுகமுடியாத இடமொன்றில் இருக்கையில் மட்டுமே நம்மால் வெல்ல முடியும். அதற்கான இடம் ஒன்றை தேர்வோம். அதுவரை இங்கு காத்திருப்போம்” என்றார் ஃபானு. “ஆம், உகந்தது அதுவே” என்றார் கிருதவர்மன்.

ஆனால் அதற்குள் முரசொலிகள் கேட்டன. “என்ன நிகழ்கிறது?” என்று ஃபானு திரும்பிப் பார்த்தார். “எல்லையில் முரசொலிகள்…” என்றான் ஃபானுமான். பிரஃபானு ஓடிவந்து “மூத்தவரே, நம் மக்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களை ஆணையிட்டு நிறுத்த முடியவில்லை. ஆணைமுரசுகள் வீணே ஒலிக்கின்றன” என்றார். ஃபானு இருந்த இடமே அப்பகுதியின் மேடு. அங்கு நின்றபோது தெளிவாகவே பார்க்க முடிந்தது, பள்ளத்தில் விழிதொடும் எல்லை வரை தேங்கி நின்றிருந்த யாதவர்களின் கிழக்குப் பகுதி உருகி ஓடையென்றாகி வழிந்து நீண்டு முன் செல்லத் தொடங்கியிருந்தது.

“எங்கு செல்கிறார்கள்? எங்கு செல்கிறார்கள்?” என்று ஃபானு கூவினார். புரவியில் ஓடி இறங்கி அருகே வந்த எல்லைப்படைவீரன் “அரசே, எண்ணியிராக் கணத்தில் பெருந்திரளின் விளிம்பு உடைந்து அத்தனை பேரும் பிரபாச க்ஷேத்ரம் நோக்கி செல்லத்தொடங்கிவிட்டார்கள்!” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்

கூடு,பலிக்கல்- கடிதங்கள்

$
0
0

கூடு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நான் சில ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகேஷ் சென்றிருந்தபோது அங்கே மகரிஷி மகேஷ் யோகியின் பழைமையான ஆசிரமம்- கம்யூன் கைவிடப்பட்டு கிடப்பதை கண்டேன். இடிபாடுகள். குட்டிச்சுவர்கள். அவற்றிலிருந்த ஓவியங்கள் திகைப்பூட்டின. அற்புதமனா பல ஓவியங்கள் அழிந்து கிடந்தன

அதைப்பற்றி விசாரித்தேன். மகேஷ் யோகி எழுபதுகளில் ரிஷிகேஷில் அந்த இண்டர்நாஷனல் கம்யூனை உருவாக்கினார். உலகம் முழுக்க இருந்து ஹிப்பிகளும் யோகம் பயில்பவர்களும் அங்கே வந்தார்கள். அது விரிந்துகொண்டே சென்றது. அங்கே இசைக்கலைஞர்கள் ஓவியர்கள் எல்லாம் இருந்தனர். ஆனால் சீக்கிரமே அந்த கம்யூன் கலைந்தது. மகரிஷி மகேஷ் யோகி அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. அது மறைந்து இடிபாடுகளாக நீடித்தது

இப்படி ஏராளமான பெரிய அமைப்புக்கள் கைவிடப்பட்டு கிடப்பதைப் பார்க்கிறேன். அவை ஒரு மனிதரின் கனவால் உருவாக்கப்பட்டவை. அந்த மனிதருடன் அப்படியே மறைபவை. சில அமைப்புக்களும் அப்படித்தான். சில மதங்களேகூட அப்படித்தான். பிரம்மசமாஜம் ராஜா ராம்மோகன் ராய் மறைந்ததும் தானும் மறைந்தது

கூடு என்பது உடல். தன் உடலை பலமடங்கு பெருக்கி அப்படியே சுருக்கி கைவிட்டு மறைகிறார் லாமா. அந்த மகத்தான நாடகம் பிரமிக்க வைக்கிறது

ராம்குமார்

***

ஜெ

அகத்தேடலின் ஆகிருதி காரணமாக பித்தெழுந்து உலகம்பூராவும் சுற்றி ,கண்டதையும் கற்று அனைத்தையும் செரிக்க முற்பட்டு, உள்ளெரியும் காலாக்னி மிதப்படும்போது ஓரிடத்தில் பிரமாண்டமாக நிலை கொண்டு,அகப்பயணமாக த்யாணித்து தியாணித்து புறவயமாகசுருங்கியும் அகவயமாக விஸ்வரூபீயாக மாறும் ஒரு பிரயாணத்தை நிலக்காட்சியாலும் மடாலய விவரிப்பாலும் போகாதவர்களைக்கூட அருகிருந்து பார்க்கும்படியான எழுத்தால் பிரம்மிக்க வைக்கிறீர்கள்.

நமது 2012 பூட்டான் பயணத்தின் போது தாக்க்ஷிங் மடாலயத்தை தரிசித்ததும் அங்கு பிரமாண்ட தரிசனமாக வஜ்ராயண புத்தரையும் தாராதேவியையும் கண்டதும் நினைவலைகளாக வந்து கொந்தளித்தது.

விஜயராகவன்.

***

பலிக்கல்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

பலிக்கல் ஒரு திகைக்கவைக்கும் கதை. இந்தக்கதை பலமுறை தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. ஒரு கோயில்திருட்டு என்றால் முதலில் அர்ச்சகர் கைதாவார். சென்ற பத்தாண்டுகளுக்கு முன்புவரை அவர்களுக்கு எந்த அமைப்புசார்ந்த உதவியும் இருக்காது. அவரை விசாரிக்கையிலேயே திருட்டு- அர்ச்சகர் கைது என்று செய்தி வரும். அர்ச்சகர்மேல் பிழை இல்லை என்று சொல்லி அவரை விடுவித்தாலும்கூட பழியும் அவமானமும் மிஞ்சும். ஆனால் கோயில்சொத்தை கையாடினார் என்று கைதுசெய்யப்பட்ட அறங்காவலர்கள் அறநிலை அதிகாரிகள் எவருக்கும் அந்த ஏளனமோ வசையோ இருக்காது.

அதற்கும் அப்பால் சென்று நல்லா இரு என்று வாழ்த்தும் ஒன்று அந்தக்கதையில் தோன்றுகிறது. அது என்றைக்கும் இருக்கவேண்டும்

ராமநாதன் தணிகாசலம்

***

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின் பலிக்கல் கதையை படிக்கும் பொழுது நீங்கள் எழுதிய முற்ற ழிவு என்னும் கட்டுரை ஞாபகத்தில் வந்தது. பலிகல்லின் கதை அந்த கட்டுரையோடு தொடர்புடையதாக படுகிறது. அப்பொழுது அதைப் படித்துவிட்டு நீண்ட ஒரு கடிதம் எழுதினேன். இப்பொழுது இந்த கதையும் படிக்கும் பொழுது அதே உணர்வுகள் தான்.சிந்தனைகள் வெவ்வேறு வழியில் பரவினாலும் கடைசியில் முட்டிக்கொள்வது விதியில் தான்.  ஒட்டுவாரொட்டி நல்ல பிரயோகம். சிறிது நாட்கள் அதை வைத்தே மனசை உருட்டிக்கொண்டு இருக்கலாம் . இருந்தாலும் பாபங்களை அடுத்த சந்ததியினருக்கு கடத்துவது என்பது கொடூரமாக தான் உள்ளது. Freewill என்பது கானல் நீர்தான்.

குழந்தைகளுக்கு கேரி ஓவர் கூட்டல் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். இரண்டு இலக்க எண்களை கூட்டும் பொழுது அடுத்து இலக்கத்திற்கு மீதியை கொண்டு செல்வது என்பது அவர்களால் ஒப்பு கொள்ள முடியவில்லை. எதற்கு அம்மா அனாவசியமாக அடுத்து இலக்க எண்ணின் தலையில் கட்ட வேண்டும் இதை என்று குழம்பி விட்டார்கள். ஒரு இலக்கத்தின் கூட்டுத்தொகை அந்த இலக்கத்திற்கு மட்டுமே சொந்தம் , அடுத்த இலக்கம் அதை உரிமை கொண்டாட முடியாது என்பது அவர்கள் வாதம். கடைசியில் பஷீர் கதையில் வரும் பையனைப் போல, 9-க்கு மேல் போனால் நாங்கள் பெரிய சைஸ் ஒன்பது போட்டுக் கொள்கிறோம் என்று கூறி முடித்து விட்டார்கள்.

குழந்தைகள் கூட்டலை இரண்டு மூன்று வாரத்தில் புரிந்து கொண்டு விடுவார்கள், ஆனால் எங்களுக்குத்தான் போற்றி எதற்கு இவ்வளவு துன்பப்பட்டார் என்பதற்கு விடை தெரியாது. விடை தெரிந்தால் வெண்முரசில் வரும் குரு வம்ச ஜாதகங்களை ஆராய்ச்சி செய்யும் நிமித்திகன் நிலைதான்.

அன்புள்ள

மீனாட்சி

***

தொடர்புடைய பதிவுகள்

தேவி, சிவம்- கடிதங்கள்

$
0
0

தேவி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

தேவி உற்சாகமான ஒரு கதை. ஒருவகையில் இது ஒரு Coming of age கதை என்று சொல்லலாம். லாரன்ஸின் முதிர்ச்சியின் கதை. அவனுக்கு முதலில் பெண் என்பவள் ஒரு வெறும் உடல்தான். காமம்தான் அவனை செலுத்துகிறது. அவன் தேடுவது ஹீரோயினைத்தான். ஆனால் ஸ்ரீதேவி வந்து முப்பெரும்தேவியராக மேடையில் தோன்றுகிறாள். காதலி அம்மா வில்லி என மூன்று முகம். அப்படியே சூழ்ந்துகொள்கிறாள். அவளை ஒன்றுக்குள் ஒன்றாகவே அவன் பார்க்கிறான். காதலியில் அம்மாவும் வில்லியும். வில்லியில் அம்மாவும் காதலியும். மூன்றுமுகமான ஒன்றை அவன் கண்டுகொள்கிறான். அவன் பெண்ணை அறியும் இடம் அது. மூன்றாகி நின்று நடிக்கும் வேறொன்றை. சரஸ்வதி லட்சுமி பர்வதி மூன்றும் ஆன ஸ்ரீதேவியை அவன் காண்கிறான்

மக்கா  கிளம்பி மதினா செல்லும் ஏழரைக்கட்டை பெட்டி காதருக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட்

ராஜசேகர்

***

வணக்கம்

தேவி சிறுகதை வாசித்தேன் – நாடகம் தொடங்குவதற்கு முன்  லாரன்ஸ் குழம்பி நிற்பது அனைத்து ஆண்களுக்குமான தருணம் – லாரன்ஸுக்கும் அனந்தனுக்கும் முதல் நாடகத்திலேயே குழப்பம் தெளிந்தது அவர்கள் நல்லூழ் – சில ஆண்களுக்கு இது வாழ்நாள் முழுவதும் புரிவதில்லை

அனந்தனின் ஆணவம் அழிந்து யாரோ நடத்தும் நாடகம்  என்று அவன் உணரும் இடம் அருமை

அன்புடன்
மணிகண்டன்

***

சிவம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

சிவம் ஒரு spiritual parable என்று தோன்றியது. ஒரே வரியில் சொல்லப்படவேண்டிய கரு. ஒரு குட்டிக்கதையாகச் சொல்லிவிடலாம். ஆனால் அதன்மேல் அந்த சூழலும் அந்தச் சூழல் பற்றிய சிந்தனைகளும் தொடுத்துத் தொடுத்து வேறுவேறு திசைநோக்கி விரிகின்றன. அது உருவாக்கும் கேள்விகள் அந்த கதையை ஒரு parable அல்லாமலாக்கி ஒரு நவீனச் சிறுகதையாக ஆக்குகின்றன

அந்த விவாதம் இல்லாமலிருந்தால் உயிரை காப்பாற்றுபவன் கொலையும் செய்வான் என்ற ஒற்றைவரியாக ஆக்கிவிடலாம். எளிமையாக அப்படி நாம் வாசிக்கும் எல்லா வாசிப்புகளையும் முதலில் இருக்கும் அந்த நீண்ட விவாதம் ஏற்கனவே தகர்த்துவிடுகிறது. மேலதிகமாக சிந்திக்கும்படி கட்டாயபப்டுத்துகிறது

ராஜசேகர்

***

வணக்கம் ஜெ

சிவம் சிறுகதையை வாசித்தேன். நாம் அறியமுடியாத உலகில் வாழும் மனிதர்களாகவே காசியில் இருக்கும் மனிதர்களைக் காண முடிந்தது. சாக முனையும் பைத்தியத்தைத் தடுத்து நிறுத்துகிறார்கள். சாக முடிவெடுத்துவிட்ட சாமியாரை அதிலிருந்து விலகாமல் இருக்க கயிற்றால் பிணைக்கிறார்கள். ஆழ்ந்த தியானத்தின் நிறைவாக மரணம் நிகழ்கிறது.

அரவின் குமார்

***

தொடர்புடைய பதிவுகள்

கரு [குறுநாவல்]- பகுதி 1

$
0
0

நிகோலஸ் ரோரிச் – ஷம்பாலா

மழை நிலைக்காமல் வீசியறைந்து யூகலிப்டஸ் மரங்களை சுழற்றியடித்துக் கொண்டிருந்த இரவில், கண்ணாடிச் சன்னல்களுக்கு உள்ளே, குளிருக்கு கம்பிளிகளை போர்த்தியபடி அமர்ந்திருந்தபோது சுவாமி முக்தானந்தா சொன்னார். “நேற்று நான் டாக்டர் ரிதுபர்ணனிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார், நம் உடலில் அத்தனை நோய்களுக்கும் முதல்விதைகள் உள்ளன என்று. அவை உறங்கிக் கொண்டிருக்கின்றன. அல்லது இன்னொன்றால் சமன்செய்யப்பட்டுள்ளன. அல்லது நம் உடலால் கட்டி வைக்கப்படுகின்றன. நோய் என்பது அதிலொன்று முளைப்பதே.”

“நான் அவரிடம் கேட்டேன். ‘அப்படியென்றால் சாவும் அப்படி மனித உடலில் ஒரு கருத்துத் துளியாக உறங்கும் அல்லவா?’ அவர் ‘இருக்கலாம்’ என்றார். நான் கேட்டேன் ‘டாக்டர் சொல்லுங்கள், அப்படியென்றால் மறுபிறப்பும் மீட்பும் கூட அவ்வாறு உள்ளே இருக்கும் அல்லவா? மனிதன் அடையவிருக்கும் எல்லா மெய்மையும் ஏற்கனவே கருவடிவில் அவனுக்குள் இருக்கும் அல்லவா?’ டாக்டர் சிரித்துவிட்டார். ‘அதெல்லாம் தத்துவம், நான் எளிய டாக்டர்’ என்றார்.”

“டாக்டர்கள் பாவம்தான்” என்றார் சிதம்பரானந்தா.

“நாம் இழந்தவை எல்லாம் இங்கே எங்கோ துளியாக உள்ளன. அதைப்போல நாம் சென்றடைய வேண்டியவையும் எங்கோ துளியாக உள்ளன. மனிதன் தனக்குள் தேடவேண்டிய அனைத்தையும் இந்த பூமியெங்கும் அலைந்தும் தேடலாம். வெளியே தேடுவதே எளிது. ஏனென்றால் அங்கே இடம் வரையறைக்கு உட்பட்டது. வழிகாட்டிக் குறிப்புகள் பொதுவானவை. வழிகள் புறவயமானவை” என்றார் முக்தா.

“மனிதன் தன்னுள் தேடுவன எல்லாம் ஆழுள்ளத்தில், கனவில், துரியத்தில் தேடுபவை. அவை வரலாறு என்று, சமூகம் என்று, மதம் என்று ,தத்துவம் என்று ,அறிவு என்று, இன்னும் என்னென்னவோ வடிவில் தொகுக்கப்பட்டவைதான்” என்றார் முக்தா. “அவன் தேடுவனவற்றை அவன் ஒரு சாத்தியக்கூறாகவே கண்டுகொள்கிறான். அதை அவனே வளர்த்தெடுக்கிறான்.”

“நான் அவ்வெண்ணத்தை அடைந்தது 1950-ல் முதல்முறையாக திபெத்துக்குச் சென்றபோது” என்று முக்தா சொன்னார். “திபெத் ஒரு விதைத் தொகுதி. இங்கே விதைகளை கலசங்களில் அடைத்து கோபுரங்களின் உச்சிகளில் சேமிக்கிறார்கள். அதைப்போல மானுட இனத்தின் உச்சிக்குமேல் சேமிக்கப்பட்ட விதைக் களஞ்சியம் அது.”

முக்தா சொன்னார். முப்பரிமாணப் படம் எப்படி உருவாகும் என்று தெரியுமே? ஒரே பொருளின் இரண்டு வெவ்வேறு கோணங்களிலான படங்கள் நம் பார்வையால் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. உண்மையில் நம் கற்பனையில் நிகழ்கிறது அந்த இணைப்பு. அவற்றுக்கு இடையிலான இடைவெளியே முப்பரிமாணத்தை அளிக்கிறது. நேரில் நாம் பார்க்கும் முப்பரிமாணம்கூட இரண்டு கண்கள் காணும் காட்சிகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டின் விளைவுதான்.

திபெத் அப்படிப்பட்டது. ஒரு திபெத் நாம் நேரில் காண்பது. இன்னொரு திபெத் உலகம் சென்ற பல நூற்றாண்டுகளாக கற்பனையில் உருவாக்கிக் கொண்டது. இரண்டையும் இணைத்துக் கொள்பவர்களால் தான் திபெத் என்னும் அனுபவத்தை பெறமுடியும். இரண்டில் ஒன்றைப் பெறுபவர் அறிந்திருப்பது திபெத்தையே அல்ல.

உலகம் முழுக்க பல்லாயிரம் பேர் திபெத்தை அதைப் பற்றிய கற்பனைகள் வழியாக அறிந்திருக்கிறார்கள். முந்நூறாண்டுகளுக்கும் மேலாக திபெத் ஐரோப்பியர்களின் கற்பனையை கட்டில்லாமல் பறக்கவிடும் ஓர் இடமாகவே இருந்திருக்கிறது. கடலுக்குள் மறைந்திருக்கும் அட்லாண்டிஸுக்கு அடுத்தபடியாக ஐரோப்பியர் கனவு கண்டது திபெத்தைப் பற்றித்தான். எகிப்தும், ஜெருசலேமும் அதற்குப்பிறகுதான்.

அந்த மயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு எழுதித் தள்ளிய எழுத்தாளர்கள் சிதல் புற்று கட்டுவதுபோல திபெத் என்னும் கனவை பெருக்கினார்கள். மிகச்சிறந்த உதாரணம் லாப்சங் ராம்பா. திபெத்தியப் பின்னணியில் அவர் எழுதிய நூல்கள் மிகப் பிரபலமானவை.

லாப்சங் ராம்பாவை பற்றிய அறிதல் திபெத் பற்றிய ஒரு புரிதலை உருவாக்கும். நாம் அவரில் இருந்து தொடங்கி அவரை கொஞ்சம் கொஞ்சமாக ரத்துசெய்துகொண்டே சென்று திபெத்தைச் சென்றடையலாம்.பெரும்பாலான ஐரோப்பியரின் வழி அது, ஆகவே காலடிபட்டுத் தேய்ந்தது.

லாப்சங் ராம்பாவின் The Third Eye என்ற நூல் 1956ல் வெளிவந்தது. அவர் ஒரு பௌத்த மடாலயத்தில் இளமையிலேயே எப்படி பிட்சுவாக பழக்கப்பட்டார், தன் நெற்றியில் ஓர் ஊசித்துளை இட்டு எப்படி நெற்றிக்கண்ணை உருவாக்கினார்கள் என்று அந்நூலில் சொல்லியிருந்தார். அந்த அறுவை சிகிச்சையை மிக நுட்பமாக விவரித்திருந்தார்.

அதற்குப்பின் அவர்  ‘வேறு’ உலகங்களை பார்க்க ஆரம்பித்தார், அவ்வுலகங்கள் பற்றிய விவரணைகள் அந்நூலில் விரிவாக இருந்தன. அவை மறைஞானத் தன்மைகொண்டவை, உருவக வடிவில் சொல்லப்பட்ட திபெத்திய பௌத்த தத்துவ தரிசனங்கள் என்று வாசிக்கப்பட்டன.

அந்நூல் ஒரு பெரிய அலையை உருவாக்கியது. ஐரோப்பா முழுக்க அந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டது. ஆனால் ஜெர்மனிய திபெத்தியல் நிபுணர் ஹென்ரிச் ஹேரர் புலனாய்வாளர்களின் உதவியுடன் அந்த நூலின் பொய்மையை வெளிக்கொண்டு வந்தார். அதை எழுதியவருக்கும் திபெத்துக்கும் சம்பந்தமில்லை. அவர் பெயர் சிறில் ஹென்றி ஹாஸ்கின். அயர்லாந்துக்காரர். திபெத்துக்கே போனதில்லை.

ஆனால் ஹாஸ்கின் அசரவில்லை. அவர் நுண்வடிவில் திபெத்துக்குச் சென்றதாகவும் அங்கே அதெல்லாம் நிகழ்ந்ததாகவும் அவர் உடலில் அப்போதும் லாப்சங் ராம்பா என்ற லாமா ஆவியாகக் குடியிருப்பதாகவும் சொன்னார்.

மர்மம் வெளியான பிறகும் லாப்சங் ராம்பா மீதான மயக்கம் குறையவில்லை. அவர் மேலும் பதினேழு நூல்களை எழுதினார். அவையெல்லாம் பெரிய வெற்றி பெற்றன. கடைசியாக எழுதிய Living with the Lama என்ற நூல் லாப்சங் ராம்பா என்ற லாமா ஹாஸ்கினின் உடலில் தோன்றி அவருடைய சயாமிய பூனைக்கு சொன்னது.

நல்லவேளையாக 1949-ல் நான் திபெத் செல்லும்போது லாப்சங் ராம்பா நூல் எழுதப்படவில்லை. 1972-ல் கனடா சென்றபோது கால்கரியில் அவரை சென்று சந்தித்தேன். நம்மூர் பூசாரிகளைப்போல ஒரு வகையான பித்துநிலையும் கூடவே பாவனைகளும் அற்பமான திருட்டுத்தனமும் கலந்தவராக இருந்தார். இருபது நிமிடத்தில் சலித்துவிட்டார்.

லாப்சங் ராம்பா ஒரு தனிநிகழ்வு அல்ல. 1875ல் தியாசஃபிகல் சொசைட்டி தோன்றியது முதல் தொடர்ச்சியாக திபெத் பற்றி கற்பனைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அவற்றைத்தான் லாப்சங் ராம்பா பயன்படுத்திக் கொண்டார். அக்கற்பனைகளில் திளைப்பதென்பது ஒருவகை பகற்கனவு. அது சீக்கிரத்திலேயே சலிக்கவும் வாய்ப்புண்டு.

ஆனால் அந்த கற்பனைகளை நாம் முழுமையாக புறந்தள்ள வேண்டியதில்லை. அந்த கற்பனைகள் ஏன் எழுந்தன என்றுதான் பார்க்க வேண்டும். அது தொழிற்புரட்சி, செய்தித்தொடர்பு, போக்குவரத்து போன்றவை வளர்ந்து வந்த காலம். ஒவ்வொரு இடமும் எளிதாக அவற்றின் மர்மங்களை இழந்துகொண்டே வந்தது.ஆகவே மக்களுக்குக் கனவுகாண சில இடங்கள் தேவைப்பட்டன. எல்லாமே மர்மமாக இருக்கும் இடங்கள்.

ஏன் அவை மர்மமாக இருக்கவேண்டும் என்றால் மர்மமானவைதான் குறியீடாக ஆகமுடியும் என்பதனால்தான். ஆச்சரியம் அச்சம் ஆகியவற்றை உருவாக்கும் பொருட்களே கவித்துவமாகின்றன, உருவகங்கள் ஆகின்றன. அத்தகைய நிலம் மக்களுக்கு தேவைப்பட்டது.

அதை தாந்தே போலவோ மில்டனைப்போலவோ வானத்தில் வெறும் கற்பனையால் நிறுவ முடியாது. ஏனென்றால் நவீனக்கல்வியும் நவீன அறிவியலும் உருவாகிவிட்டிருந்தன. எல்லாவற்றுக்கும் தர்க்கம் தேவைப்பட்டது. ஒவ்வொன்றும் இங்கே புலன்களால் அறியப்படுவனவாக இருக்கவேண்டும். சொர்க்கம் என்றாலும் நரகம் என்றாலும் மண்ணில் இருந்தாகவேண்டும். பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பி சென்றால் கண்டுபிடித்துவிடக்கூடியதாக இருக்கவேண்டும்.

எத்தனை சொர்க்கங்கள், எத்தனை நரகங்கள் அன்று கற்பனையால் உருவாக்கப்பட்டன என்று பார்த்தால் திகைப்போம். புனைவிலக்கியத்தையே கவனிப்போம். பிராம் ஸ்டாக்கர் எழுதிய நாவல்கள் மூன்று பின்புலங்களில் அமைந்தவை. ஒன்று ரொமேனியா. இன்னொன்று மெசபடோமியா. மூன்றாவதாக எகிப்து. இவை மூன்றும் பிரிட்டிஷார் கற்பனை செய்துகொண்ட நரகங்கள். அச்சுறுத்தும் பேய்கள் ஒளிந்திருக்கும் மர்மநிலங்கள். ஒரு காலத்தில் பிரிட்டிஷார் இப்புனைவுகள்மேல் பித்து கொண்டிருக்கிறார்கள். நான்காவதாக அமெரிக்காவின் வன்மேற்கு. அங்கிருந்த ‘சட்டமில்லாத’ கொலைநிலம்.

அதேபோல சொர்க்கங்களும் கற்பனை செய்யப்பட்டன. அட்லாண்டிஸ் போல. திபெத் அதில் ஒன்று. இந்தியாவும் அதில் வரும். ஆனால் அந்த மர்மங்களை எல்லா இடங்களிலும் நாம் கண்டபடி கூட்டம்போட்டு, சமூசா சுட்டு கூவிக்கூவி விற்று, அழித்துவிட்டோம். இமையமலை மட்டுமே எஞ்சியது. பரமஹம்ச யோகானந்தரின் Autobiography of a Yogi அத்தகைய ஒரு நூல். அது லாப்சங் ராம்பாவின் நூலுக்கு சமானமானது.

நம் கற்பனையை வளர்க்கும் விஷயங்களால் ஆனதுதான் திபெத். உலகின் உச்சிநிலம். சூழ்ந்திருக்கும் பனிமலைகளின் எல்லையற்ற அமைதி. ஒன்றுமே நிகழாத வெளி. மடாலயங்களின் நூற்றாண்டுப் பழமை கொண்ட சடங்குகள். வெண்பனியும் சிமிண்ட்நிற மலைகளும் அன்றி நிறங்களே இல்லாத மலையடுக்குகளின் நடுவே கருஞ்செந்நிறம் கொண்ட மடாலயங்கள். அவற்றில் பொன்னொளிரும் புத்தர்கள், பளிச்சிடும் வண்ணங்களில் டாங்காக்கள், மாபெரும் மணிகள், உறுமும் முழவுகள், ஓசையிடும் சல்லரிகள், ஜலதரங்கச் சட்டிகள், சுழன்றுகொண்டே இருக்கும் தர்மசக்கரங்கள்.

அந்தக் கற்பனையே இல்லாமல் திபெத்துக்குச் சென்றால் காண்பது வெறும் வெளிறிய வண்ணங்களை. பழைமையான மடாலயங்களின் அரையிருளையும் தூசியையும். வளர்ச்சியின்றி உறைந்திருக்கும் ஒரு தொன்மையான வாழ்க்கையை. பல சுற்றுலாப் பயணிகளுக்கு திபெத் எந்த ஆர்வத்தையும் உருவாக்காத ஒரு மொட்டைநிலமாகத் தோன்றியிருக்கிறது. இன்று திபெத் செல்பவர்களில் பலர் பனிச்சறுக்கு விளையாட்டுக்களுக்காக போகிறார்கள்.

ஆகவேதான் சொன்னேன். ஒருகண்ணில் கற்பனை, ஒருகண்ணில் யதார்த்தம். பொருத்தி ஃபோகஸ் செய்துகொண்டே இருக்கவேண்டும். ஓர் இடத்தில் அவை மிகச் சரியாக பொருந்தி திபெத் உருவாகி வந்துவிடும்.

திபெத் என்றால் இன்று சீனாவிடமுள்ள நிலம் மட்டும் அல்ல. திபெத், ஸ்பிடி சமவெளி, லடாக் மூன்றும் இணைந்ததே தொன்மையான தவநிலமாகிய திபெத். மூன்று நிலத்தையும் பார்ப்பவனே பத்மசம்பவரை அணுகியறியும் பயணம் செய்தவனாகிறான். அவ்வாறு பார்க்கும் திபெத் ஒரு மெய்ஞான மார்க்கத்தை நிலப்பரப்பாக நேரில் பார்ப்பதேதான்.

நான் சொல்வது சற்று நுட்பமானது. நம்பிக்கைகள், தத்துவங்கள், மெய்த்தரிசனங்கள் பொருட்களாக மாறி கைக்குச் சிக்கும்படி ஆவதுண்டு தெரியுமல்லவா? கோயில்சிலைகள் நாம் அப்படி உருவாக்கிக் கொள்ளும் பொருட்கள். சாளக்கிராமம் அப்படி இயற்கையில் கண்டெடுக்கும் ஒரு பொருள். சில இடங்கள் அப்படி ஆகிவிடுகின்றன. அகோர சைவ மரபு ஒரு நகரமாக ஆனதே காசி. ஆனால் திபெத் ஒரு நாடே, ஒரு நிலவெளியே தத்துவமாக, தரிசனமாக ஆனது.

உண்மை, இன்று அப்படி அல்ல. இன்றைய திபெத் சீனாவால் கொடூரமாக அழிக்கப்பட்டு பின்னர் உருவாக்கப்பட்ட  ஒரு சுற்றுலா மையம். அதன் தொன்மை நவீனத்தன்மையால் அழிக்கப்பட்டது. அதன் குறியீட்டுத்தன்மை சிதைக்கப்பட்டது. இன்றைய திபெத்தில் புத்தமதமே மறைந்து கொண்டிருக்கிறது. கம்யூனிஸ சைனாவில் பௌத்தம் ரகசியமாகப் பின்பற்றவேண்டிய ஓர் ஆசாரம். திபெத்திய பௌத்தத்தை பின்பற்றுவது அரசுக்கு எதிரான குற்றம்.

ஆனால் கிறிஸ்தவ மதம் என்பது எப்போதுமே கம்யூனிசத்தால் ஏற்கப்படுகிறது, அல்லது குறைந்தபட்சம் மறுக்கப்படுவதில்லை. அதிலும் புரட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் என்பது வரலாற்றுரீதியாக கம்யூனிசத்தின் ஒரு முன்வடிவம் மட்டுமே. எங்கும் கம்யூனிசம் பகுத்தறிவு என்ற பேரில் அங்குள்ள தொன்மையான மதமரபுகளை அழிக்கும், ஆசாரங்களையும் தத்துவங்களையும் ஒடுக்கும். அந்த வெற்றிடத்தில் புரட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் வந்து அமையும். வியட்நாம்கூட இன்று நடைமுறையில் ஒரு கிறிஸ்தவநாடுதான்.

திபெத்தின் மேல் கிறிஸ்தவம் மோத ஆரம்பித்தது நூறாண்டுகளுக்கு முன்பு. இங்கிலாந்தைச் சேர்ந்த மிஷனரிகள் வெவ்வேறு பாதைகளினூடாக திபெத்திற்குள் ஊடுருவினர். அவர்கள் ஆங்கிலேயரின் ஒற்றர்களாகவும் இருந்தனர். மிஷனரிகளாகச் சென்றவர்கள் திரட்டிய செய்திகள் ஆங்கிலேயப் படையெடுப்புக்கு உதவின.

1904-ல் திபெத்தின்மேல் பிரிட்டிஷார் நடத்திய படையெடுப்பு Younghusband Expedition எனப்படுகிறது. கர்னல் ப்ஃரான்ஸிஸ் யங்ஹஸ்பெண்ட் தலைமையில் நடந்த இந்த தாக்குதல் முழுக்க முழுக்க மிஷனரிகளின் உதவியுடன் செய்யப்பட்டது. திபெத்தின் ‘மர்மத்தை’ அழிப்பது, அதன் ‘புனித எல்லைகளை மீறுவது’ அந்த நிலத்தின் மேல் பிரிட்டிஷ் ஆட்சியை நிறுவுவது ஆகியவை அதன் குறிக்கோளாகக் கொள்ளப்பட்டன.

உண்மையில் திபெத் என்னும் உருவகநிலம் மெல்லமெல்ல அழிக்கப்பட்ட நிகழ்வின் தொடக்கம் அதுதான். இன்று சீனா திபெத்தை ஆக்ரமித்திருக்கிறது. பிரிட்டிஷார் செய்ய முடியாததை சீனா செய்கிறது. கடைசியாக திபெத்தை அது கிறிஸ்தவத்திற்குள் கொண்டுவந்து சேர்க்கும், அதை ஐரோப்பா அறியும்.

எத்தனையோ தேசிய விடுதலைப் போர்களை ஐரோப்பா ஆதரித்து வெற்றி பெறச் செய்துள்ளது, திபெத்தியர் முக்கால் நூற்றாண்டாகப் போரிடுகிறார்கள். அவர்களை ஐரோப்பிய முற்போக்கு- ஜனநாயக அறிவுஜீவிகள் கூட பொருட்படுத்தியதில்லை. ஏனென்றால் சீனாவின் ஆதிக்கம் கிறிஸ்தவத்தின் வெற்றியாகவே முடியும் என அவர்கள் அறிவார்கள்.

விளைவாக திபெத்தின் தொன்மையான ஆன்மிகப் பண்பாடு வெறும் ஆய்வுப்பொருளாக மாறி அருங்காட்சியகங்களுக்குச் செல்லும். அதை அவர்கள் விரும்புகிறார்கள். ஐரோப்பா ஆதரிக்கும் தேசிய விடுதலைப் போர்கள் எல்லாமே அவர்களுக்கு சாதகமான மதஅரசியலை உள்ளடக்கமாகக் கொண்டவையாகவே இருக்கும்.

இன்று திபெத் என்னும் ஞானபூமி நம் விழிமுன் இருந்து மறைந்துவிட்டது. ஆனால் அது அங்கே வேறொரு வடிவில் இருந்துகொண்டிருக்கும் என்றே நான் நம்ப விரும்புகிறேன்.

முக்தா சொன்னார். நான் லடாக்கில் இருந்து காப்டன் ஆடம் பேக்கர் என்னும் பயணியின் குழுவுடன் சேர்ந்துகொண்டேன். அவர்கள் மலைப்பாதை வழியாக திபெத்துக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். அது ஒரு சட்டவிரோத பயணம்.

ஆனால் அப்பகுதியில் அன்று சட்டத்தை நிலைநிறுத்த எவருமே இல்லை. இந்தியாவில் 1947-ல் சுதந்திரம் கிடைத்தபின் நேருவின் தலைமையில் காபந்து அரசு இருந்தது. புகழ்மிக்க பிரிட்டி இந்திய ராணுவம் கிட்டத்தட்ட கலைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்திய பாகிஸ்தானிய ராணுவங்களாக பிளந்து, வெள்ளைய அதிகாரிகளால் கைவிடப்பட்டு, ஒருங்கிணைப்பும் செய்தித்தொடர்பும் இல்லாம ஆங்காங்கே அப்படியே விடப்பட்டிருந்தது. அந்தந்த பகுதியின் காப்டன்கள், கர்னல்களின் தனிப்பட்ட அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வுவுமே இந்தியாவை காப்பாற்றிக் கொண்டிருந்தன.

நல்லவேளையாக மறுபக்கம் சீனா பலவாகச் சிதறி உள்நாட்டு போரில் அலைக்கழிந்து கொண்டிருந்தது. சியாங் கை ஷெக்குக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் நேரடிப்போர் தொடங்கி சில நாட்களே ஆகியிருந்தன. சியாங் கை ஷெக்கின் நிலத்திற்குள் கம்யூனிஸ்டுப் படைகள் ஊடுருவிய செய்தியை நான் லடாக்கில் இருக்கும்போது ரேடியோவில் கேட்டேன்.

வடக்கே இந்திய எல்லை எது என்பதே அப்போது தீர்மானமாகவில்லை. அன்றைய ஆட்சியாளர்களில் வடக்குப் பகுதியைப் பற்றி தெரிந்தவர்கள் எவருமில்லை. லடாக்கும் திபெத்தும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்தன. திபெத்தில் என்ன நடக்கிறது என்றே எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. எல்லைகளில் எந்த காவலும் இல்லை. பனிநிலத்தில் பயணம் செய்வது அன்று மிகமிகக் கடினம் என்பது ஒன்றே காவலாகவும் இருந்தது.

ஆகவே சட்டபூர்வமாக திபெத்திற்குள் நுழைய வழியே இல்லை. எல்லா நுழைவுகளும் சட்டவிரோதமானவைதான். நான் லடாக்கில் இருந்து திபெத்துக்குள் செல்ல எண்ணிக் கொண்டிருக்கையில் ஒரு ஷெர்பா வழிகாட்டிதான் ஆடம் பேக்கர் பற்றிச் சொன்னான். ஆடம் பேக்கர் லடாக் எல்லையில் இருந்த டெம்ஜோக் [Demchok] என்னும் ஊரில் தங்கியிருந்தான். நான் லாஸாவிலிருந்து அந்த வழிகாட்டியுடன் டெம்ஜோக்குக்கு கிளம்பிச் சென்றேன்.

டெம்ஜோக் ஒரு சிறிய ராணுவநிலை. முந்நூறு இந்திய ராணுவவீரர்கள் காப்டன் செபாஸ்டின் ஃப்ளேசர் என்பவரின் தலைமையில் அங்கே இருந்தனர். ஃப்ளேசர் இந்திய ராணுவத்திலிருந்து பிரிந்து இங்கிலாந்து செல்ல அனுமதிக்காக காத்துக்கொண்டிருந்தான். ஆடம் ஃப்ளேசருக்கு முன்னரே அறிமுகமானவன். அவன் ஸ்பிடி சமவெளியில் அவருடன் இணைந்து பணியாற்றியிருந்தான். ஆடம் பிரிட்டிஷ் ராணுவத்தில் காப்டனாக இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு இரண்டு ஆண்டு ஆகியிருந்தது.

அவன் நான் அவனைச் சென்று சந்தித்தேன். அவன் வழக்கம்போல என்னை ஓர் இந்திய உளவாளி என சந்தேகப்பட்டான். அவனை நான் ஓர் ஆங்கில உளவாளி என்று சந்தேகப்பட்டேன். ஆனாலும் பேசிக்கொண்டிருந்தோம். இருவருக்கும் டெல்லியில் பொதுவாக தெரிந்திருந்த வெள்ளையர் பற்றியே பெரும்பாலும் பேச்சு அமைந்திருந்தது. அது இருவர் நடுவே நம்பிக்கையை உருவாக்கியது. நான் தியோசஃபிக்கல் சொசைட்டியுடன் தொடர்பில் இருந்த எல்லா வெள்ளையர்களையும் தெரிந்து வைத்திருந்தேன். அவர்களில் பலர் முன்னால் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள்.

எங்கள் பேச்சு லடாக்கின் மடாலயங்கள் நோக்கிச் சென்றது. எனக்கு லடாக்கிய மொழி ஓரளவு தெரியும், திபெத்திய மொழியையும் உதிரிச் சொற்களாகப் பேசமுடியும் என்பது ஆடமுக்கு என்னை தவிர்க்க முடியாதவனாக ஆக்கியது. அவனுடன் இருந்த வழிகாட்டிகளை எந்த அளவுக்கு நம்பமுடியும் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவர்களில் இருவர் முஸ்லீம்கள். ஒருவன் திபெத்தியன். ஃப்ளேசர் அவனிடம் ஓர் இந்திய துறவியை அழைத்துக் கொண்டு திபெத் செல்வது கூடுதல் பாதுகாப்பு என்று சொன்னபின் அவன் என்னை ஏற்றுக்கொண்டான்.

ஆடமின் குழுவில் நான் ஓர் உறுப்பினராக ஆனேன். ஆடம் சுருக்கங்கள் மண்டிய செக்கச்சிவந்த சதுரமுகம் கொண்ட உயரமான ஆங்கிலேயன். மெல்லிய செம்புக்கம்பிச் சுருள்கள் போல சிவந்த முடி மண்டிய மிகக்கனமான கைகள். இருபுறமும் அழுத்தப்பட்டதுபோல நீண்ட மூக்கு. நிலநரம்போடிய பெரிய தாடைகள். இளநெல்லிக்காய்கள் போன்ற கண்கள். கூழாங்கல் நிறமான பற்கள். சரியான ஆங்கிலோ சாக்ஸன் தோற்றம். இந்தியாவில் இருபதாண்டுக்காலம் இருந்தவன் என்பதனால் இந்திய உச்சரிப்பில் ஆங்கிலம் பேசத் தெரிந்து வைத்திருந்தான்

நாங்கள் 1950, மார்ச் மாதம் லடாக்கில் இருந்து திபெத்தில் காரி [Ngari] என்ற ஊர் நோக்கி கிளம்பினோம். திபெத்திற்குள் நுழைய அன்று மிக உகந்த வழி அருணாச்சலப் பிரதேசம்தான். ஆனால் அது சாத்தியமே அல்ல. அங்கே தான் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லைப்பூசல் உருவாகத் தொடங்கியிருந்தது. நாங்கள் சென்றவழி வெவ்வேறு மலைச்சிற்றூர்களை இணைத்து இணைத்து நாங்களே உருவாக்கிக் கொண்டது. எங்கள் வழிகாட்டிகள் அவ்வப்போது பேசி முடிவுசெய்து அந்த வழியை வகுத்தனர். எப்பகுதியில் பிரச்சினை இல்லை, எந்த இடம் திறந்திருக்கிறது என்றெல்லாம் முடிவுசெய்து அழைத்துச் சென்றனர்.

எங்கள் குழுவில் ஆடம் மட்டும்தான் நான் விரும்பிய விஷயங்களில் ஆர்வம் உடையவன். மற்றவர்கள் வெறும் மலையேறிகள். ஆகவே நாங்கள் இரவில் ஒரே கூடாரத்தில் தங்கினோம். போர்வைக்குள் உடலை புதைத்து சூடுநிறைத்துக் கொண்டபின் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருப்போம். இமையமலைகளில் நடக்கும்போதும் சரி, அமர்ந்திருக்கும்போதும் சரி பேசமுடியாது. மூச்சு ஆற்றல் வீணாகும்.

ஆடம் திபெத் மீது அவனுக்கு ஆர்வம் வந்ததைப் பற்றிப் சொன்னான். அவருடைய குடும்பம் ஆங்கிலிகன் சர்ச் பின்னணி கொண்டது. இருநூறு ஆண்டுகளாக அவனுடைய குடும்பத்திலிருந்து மிஷனரிகளாக உலகமெங்கும் சென்று கொண்டிருந்தார்கள். அவனுடைய தந்தை சார்ல்ஸ் பேக்கர் தென்தமிழகத்தில் நெல்லை அருகே டோனாவூர் என்னும் இடத்தில் மிஷனரியாக பணியாற்றியவர். புகழ்பெற்ற மிஷனரியான ஏமி கார்மிக்கேலுடன் இணைந்து செயல்பட்டார். அவர் ஒரு மருத்துவப் பணியாளர்.

ஆடமின் அப்பா அவனுக்கு தொடர்ச்சியாக கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். ஆடம் அக்கடிதங்கள் வழியாகவே வளர்ந்தான். ஏமி கார்மிக்கேலின் நூல்களை அவர் அவனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். பிறகு ஒரு நாள் அவர் டோனாவூரிலிருந்து கிளம்பி சென்றுவிட்டார். அவரிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை.

ஏமி கார்மிக்கேல் 1901-ல் Raisins என்ற நூலை எழுதினர். அது புதிய கீழைநாட்டு நிலங்களைப்பற்றி அவர் கொண்ட கனவுகளைப் பேசியது. அந்த நூல் ஆடமின் மனதில் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியது. ஏனென்றால் அவர் பிறந்தது அந்த ஆண்டுதான். ஆடம் ஏமி கார்மிக்கேல் எழுதிய Lotus buds என்றநூலை நூறுதடவைக்குமேல் வாசித்திருக்கிறான். ஏமி கார்மிக்கேல் வர்ணிக்கும் இந்தியா, அதன் மக்கள் செறிந்த, வெயில் பொழியும் நிலம் அவனை கனவில் ஆழ்த்தியது. இயல்பாக செலவிடப்படும் வாழ்க்கை வீணாக்கப்பட்ட ஒன்று என்ற எண்ணத்தை அவன் அடைந்தான். அவன் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சேர்ந்ததே அதற்காகத்தான்.

ஆடமின் வாழ்க்கையில் அடுத்த ஆழமான செல்வாக்கு அவன் லண்டனில் இருந்தபோது சந்தித்த ஒருவர் வழியாக உருவானது. ஆடம் அதுவரை தென்னிந்தியா வரவேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான். அந்த சந்திப்பு அவனை திபெத் மேல் பித்துகொண்டவனாக ஆக்கியது.

அவன் திபெத் பயணியான ஆன்னி டெய்லர் [Hennah Royle Taylor] பற்றிய ஒரு செய்திக்குறிப்பை ஆங்கிலிகன் மிஷனரி இதழ் ஒன்றில் வாசிக்க நேர்ந்தது. அது அவன் வாழ்க்கையில் ஒரு பெரிய தொடக்கம்.

ஆன்னி டெய்லர் திபெத்துக்குள் நுழைந்த முதல் ஐரோப்பியப் பெண்மணி. தன் பதிமூன்று வயதில் ஏசுவை கனவில் கண்ட ஆன்னி கிறிஸ்தவ மிஷனரியாக மாற முடிவெடுத்தார். லண்டனில் மருத்துவம் படித்தார். லண்டனின் சேரிகளிலேயே பெரும்பாலும் தங்கி பணியாற்றினார். China Inland Mission என்னும் அமைப்புடன் தொடர்பு கொண்டு சீனாவுக்குள் கிறிஸ்தவ மிஷனரியாக நுழைந்தார்.

1884-ல் ஷாங்காய் நகருக்கு கப்பலில் சென்று சேர்ந்தார் ஆன்னி. 1886-ல் திபெத் எல்லையில் உள்ள லான்ஷௌ நகருக்கு மதப்பணிக்காகச் சென்றார். அப்போதுதான் திபெத் என்னும் மறைக்கப்பட்ட நிலம் பற்றி தெரிந்துகொண்டார். அவருடைய மிஷனரி மனம் அந்த மக்கள் கிறிஸ்துவிடமிருந்து நெடுந்தொலைவில் இருப்பவர்கள் என்ற எண்ணத்தை அடைந்தது. அந்த ‘சபிக்கப்பட்ட’ மக்களுக்கு கிறித்தவத்தை அளிக்கவேண்டும் என்று அவர் உறுதிகொண்டார்.

மிஷனரிப் பணிக்காக ஆஸ்திரேலியா சென்ற ஆன்னி அங்கிருந்து 1889-ல் டார்ஜிலிங் வந்தார். அங்கிருந்து சிக்கிம் சென்று ஒரு திபெத்திய பௌத்த மடாலயத்தில் திபெத்திய மொழி கற்றுக்கொண்டார். அங்கே போண்ட்ஸோ என்ற திபெத்திய சிறுவனை கிறித்தவனாக மாற்றி அவனை உடனழைத்துக்கொண்டு மார்ச் 1891-ல் சீனாவுக்குக் கிளம்பினார். தியான்ஷுய் என்ற ஊருக்கு சென்று அங்கிருந்து திபெத் நோக்கி சென்றார்.

பதினாறு குதிரைகளுடன் இரண்டு மாதத்திற்கு தேவையான உணவு மற்றும் பொருட்களுடன் தடைசெய்யப்பட்ட நகரம் என அன்று அழைக்கப்பட்ட லாஸா நோக்கி ஆன்னி பயணமானார். அன்று அன்னியர் எவரும் அந்நகருக்குள் நுழைவதற்கு தடை இருந்தது, ஆன்னி தலையை மழித்து கடுஞ்செந்நிற ஆடை அணிந்து திபெத்திய ஆண் போலவே தோற்றத்தை மாற்றிக்கொண்டார். வழியில் கொள்ளைக்காரர்களுடன் போரிட்டனர். பனிப்புயலில் சிக்கி திசைமாறி சுற்றி அலைந்தனர்.

சீன முஸ்லீம் வழிகாட்டியான நோகா என்பவன் அவருடன் சென்றான். அவன் இன்னொருவரிடமிருந்து ஆணை பெறுவதற்கு சம்மதிக்கவில்லை. ஆகவே தொடர்ச்சியாக அவனுக்கும் ஆன்னிக்கும் பூசல் ஏற்பட்டது. அவன் பனிவெளி நடுவே அவர்களை விட்டுச்சென்றுவிட்டான்.

1893 ஜனவரி 3 ஆம் தேதி ஆன்னிyuம் குழுவினரும் லாசாவிற்கு நூறு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் ஒரு சிற்றூரை அடைந்தனர். கொலோக் என்னும் மலையிடையர்களின் ஊர் அது. அது போ-சு என்னும் ஆற்றங்கரையில் இருந்தது. அந்த ஆற்றை அவர்கள் தெப்பங்களில் கடந்தனர். அவர்கள் தெப்பங்களில் ஆற்றைக் கடக்கும் செய்தியை அறிந்து திபெத்திய அதிகாரிகளால் சூழப்பட்டனர். சிறைப்பிடிக்கப்பட்டு நாக்சு என்ற ஊருக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

அப்போது ஆன்னியிடம் இரண்டு குதிரைகள் மட்டுமே இருந்தன. துணைவர்களில் திபெத்தினனான போண்ட்சோ, சீனனான பெண்டிங் என இருவர் மட்டும்தான் எஞ்சினார்கள். லாசாவுக்குச் செல்லும் பாதையில் நுழையவே அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆன்னி நாக்சுவிலிருந்த படைத்தலைவனிடம் பலமுறை கெஞ்சினாலும் அவர்கள் நெறிகளில் உறுதியாக இருந்தனர்.

குறைந்தபட்ச பயண உதவியுடன் திபெத்திய படையினரால் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்னி சீனா சென்று அங்கே பிரெஞ்சுப் படைகளிடம் சிக்கி அங்கிருந்து லண்டன் மீண்டார். அவருடைய மதப்பரப்பு எண்ணம் ஈடேறவில்லை. ஆனால் திபெத்திற்கு கிறிஸ்தவ மதத்தை கொண்டுசெல்லும் துடிப்புடன் ஆன்னி இறுதிவரை இருந்தார். அதற்காக திபெத்திய மிஷன் ஒன்றை சிக்கிமில் உருவாக்கினார். ஆனால் அது வெற்றி பெறவில்லை.

“ஆனால் எனக்கு மதம் பரப்பும் எண்ணம் ஏதும் இல்லை” என்று ஆடம் கண்சிமிட்டியபடிச் சொன்னான் “ஏனென்றால் பரப்பப்படக்கூடிய ஒன்று மதம் அல்ல என்று எனக்கு இன்று தெரியும். என்னை தூண்டியது வேறொன்று..” நான் இரவின் குளிரில், கூடாரத்தை பனிக்காற்று உலுக்கிக்கொண்டிருக்க எனக்குள் ஒலிப்பதுபோல ஆடமின் குரலை கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஆடம் சொன்னான்.1922-ல் ஆன்னி டெய்லர் மறைந்தார். அதற்கு ஓராண்டுக்கு முன் 1921 ஜூலையில் நான் அவரைச் சென்று பார்த்தேன். அப்போது எனக்கு இருபது வயது. எங்காவது சென்று எதையாவது செய்து உலகுக்கு என்னைக் காட்டிவிடவேண்டும் என்ற வெறியுடன் இருந்தேன். அப்போதுதான் ஆன்னி டெய்லரின் பயணம் பற்றிய கட்டுரையை வாசித்தேன். ஒருநாள் அவரை சந்திக்க கிளம்பிச் சென்றேன்.

லண்டனில் கென்ஸிங்க்டனில் குரோம்வெல் என்னும் இடத்தில் ஆன்னி அன்று வாழ்ந்தார். அப்போதும் ஒரு திபெத்திய மிஷனரி அமைப்பை உருவாக்குவதைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தார். ஆகவே இளைஞர்களை ஆர்வத்துடன் வரவேற்றார். அவருடைய இல்லத்தில் சன்னலோரம் அமர்ந்து நான்கு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அந்த நாளை நான் மறக்க மாட்டேன். நான் சன்னலின் பின்னணியில் ஆன்னியின் முதிய முகம் உணர்வெழுச்சி கொள்வதை, பதைப்பதை, அழுவதை, சிரிப்பதை, மெய்மறப்பதை, தன்னில் ஆழ்ந்து பிரமை கொள்வதை, திடுக்கிட்டு மீள்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். வெளியே நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. கண்ணாடிமேல் நீர் வழிந்து கொண்டே இருந்தது. பைன் மரங்களின் பச்சைக்கொந்தளிப்பு. ஆன்னியின் சொற்களுடன் இணைந்து அந்த கொந்தளிப்பை நினைவில் கொண்டிருக்கிறேன்

ஆன்னி அவருடைய திபெத் பயணம் பற்றிச் சொன்னார். அவர் சென்றபாதை மிகமிகச் சுற்றுவழி. உண்மையில் வழிதெரியாமல் அலைந்து எப்படியோ சென்று சேர்ந்தார். அது ஒரு முட்டாள்தனமான சாகசமுயற்சி. ஆனால் மிஷனரிகளுக்கு அப்பணியில் உயிர்விடுவதே உச்சகட்ட சாதனை என்னும்போது அதில் ஆபத்து எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

ஆன்னி என்னிடம் பேசும்போது சொன்ன ஒன்றை நான் உண்மையில் அப்போது கவனிக்கவில்லை. அந்த வயதில் அப்படிப்பட்ட கவனம் இருக்க வாய்ப்பும் இல்லை. 1926-ல் நான் இந்தியா வந்து பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சேர்ந்தேன்.

1937-ல் லடாக்கில் பணியாற்ற வந்தேன். லே நகருக்கு அருகே எங்கள் ராணுவ முகாம் அமைந்திருந்தது. ஒருநாள் பனிபொழியும் இரவில் அவ்வழியே ஒரு புத்தபிக்ஷுக்களின் குழு சென்றது. அவர்கள் எங்களிடம் அடைக்கலம் கோரினார்கள். அவர்கLai எங்களுடன் தங்கவைத்தோம். அவர்கள் திபெத்தின் நாகு என்ற ஊரில் இருந்த மடாலயத்தில் இருந்து லே நகருக்குச் சென்று கொண்டிருந்தனர். அந்த ஊரின் ஆங்கில உச்சரிப்பு நாக்சு.

எனக்கு எங்கோ ஒரு அசௌகரியம் தோன்றியது. அது ஏன் என்றும் புரியவில்லை. நாக்சு என்ற ஊருக்கு என்ன மேலதிக அர்த்தம் என் ஆழத்தில் உள்ளது? அன்று நான் என் அறைக்குச் சென்று என் குறிப்பேட்டை எடுத்து என் பழைய நாட்குறிப்புகளை வாசித்தேன். அன்றன்றைய சிந்தனைகளை போகிற போக்கில் குறித்துப் போடுவது என் வழக்கம்.

நாக்சு லாசாவுக்கு அடுத்தபடியாக திபெத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த நகரம். முன்பு லாஸாவின் காவல்படை ஒன்று அங்குதான் இருந்தது. ஆன்னியை வழிமறித்த திபெத்தியக் காவல்படை அவரை நாக்சுவுக்குத்தான் அழைத்து சென்றது. அங்கிருந்துதான் அவர் திருப்பி அனுப்பப் பட்டார். ஆனால் அந்த செய்தி அல்ல, வேறொன்று. அது என்னை அலைக்கழியச் செய்தது

சற்று பிராந்தி அருந்திவிட்டு படுத்துக் கொண்டேன். இதமாக குருதி வெம்மைகொண்டது. என் அறைக்குள் கணப்பின் வெப்பம் நிறைந்திருந்தது. நான் தூங்கி பின்னிரவில் போர்வையின் உள்ளே என் உடல்வெம்மை நிறைந்திருக்க விழித்துக் கொண்டபோது என் அறைக்குள் ஆன்னி அமர்ந்திருந்தார். அவருக்கு பின்னால் சன்னல் திறந்திருந்தது. யார் சன்னலைத் திறந்தது என்று நான் திகைத்தேன். என் ஆடர்லியை அழைத்து அதை மூடச்சொல்லவேண்டும். ஆன்னி வயதானவர், இந்த குளிரில் அவர் நோயுற்றுவிடக்கூடும். ஆனால் நான் வெறுமே பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஆன்னி கூர்ந்த பார்வை என்னை நோக்கி நிலைத்திருக்க என்னிடம் சொன்னார் .நாக்சுவை நான் மறக்கவே முடியாது. வெண்பனி மூடிய அந்த சிற்றூர் செத்தமீன் போலிருந்தது. மீன்செதில்கள் போல பொருக்குப் பனி. அதன்மேல் கிழிந்த சப்பாத்துக்களுடன், கிழிந்து நீரில் ஊறிய தோலாடையுடன் உடலைக் குறுக்கி நடந்தேன். அந்த ஊரின் தெருக்களெல்லாம் வழுக்கின. எங்கும் ஒரு மட்கும் நாற்றம்.

அதன் கூரைகள் மரத்தாலானவை. அவை பனியின் ஈரத்தில் கருமை கொண்டிருந்தன. எந்த கட்டிடத்திற்கும் சன்னல்கள் இல்லை. ஏனென்றால் திபெத்தில் அன்று கண்ணாடிகள் அனேகமாக புழக்கத்தில் இல்லை. ஆகவே அவை மூடப்பட்ட பெட்டகங்கள் போலிருந்தன. வெளிச்சமே இல்லை. இரவிலும் பகலிலும் இருட்டு. தெருக்களில் வீட்டு முகப்புகளில் எங்கும் எவரும் இல்லை

இம்முறை ஆன்னி உணர்வேதும் இல்லாமல் ஒப்பித்துக் கொண்டே சென்றார். கோவேறு கழுதைகளில் சென்ற இரண்டு ராணுவவீரர்களை பார்த்தேன். இங்கே பிக்ஷுக்களையும் ராணுவ வீரர்களையும் பிரித்தறிவதே கடினம். அவர்கள் எறும்புகள் போல ஒருவருக்கொருவர் சைகையால் பேசிக்கொண்டார்கள். திடீரென்று ஊரின் நடுவே இருந்த மடாலயத்தில் இருந்து உலோகமணியோசை கேட்டது. அந்த விந்தையான நரகநிலத்தில் எழும் ஒரே உயிரோசை அது

ஆன்னி ஏதோ நூலில் இருந்து வாசித்துக் கொண்டே செல்கிறாரா என்று சந்தேகம் வந்தது.நாக்சுவைப் பற்றி என்னிடம் பிறிதொருமுறை ஒருவர் பேசினார். நீண்ட நாட்களுக்குப்பிறகு. 1903-ல் கர்னல் ஃப்ரான்ஸில் யங்ஹஸ்பெண்ட் தலைமையில் பிரிட்டிஷ் படை சிக்கிமில் இருந்து திபெத் நோக்கிச் சென்றது. திபெத்தை ரஷ்யா கைப்பற்றிவிடும் என்று கர்சன் பிரபுவை நம்பவைத்து அந்த படையெடுப்பை உருவாக்கினர். அதனூடாக புரட்டஸ்டாண்ட் மதம் திபெத்தில் காலூன்றும் என்று மிஷனரிகள் நம்பினர்.

நான் பிரிட்டிஷ் படைகளுக்கு வழிகாட்டி, மொழிபெயர்ப்பாளர், நர்ஸ் ஆக பணியாற்றினேன். லாஸாவில் நாங்கள் தங்கியிருந்தோம். பிரிகேடியர் ஜெனரல் ஜேம்ஸ் ரொனால்ட் லெஸ்லி மெக்டொனால்ட் படைகளை நடத்திச் சென்றார்.

மிகக்கொடூரமான படையெடுப்பு அது. பழமையான ஆயுதங்களும் வழிமுறைகளும் கொண்ட முந்தைய யுகத்தைச் சேர்ந்த திபெத்திய ராணுவத்திற்கும் தொழிற்புரட்சிக்கு பிந்தைய நவீன உலகைச் சேர்ந்த பிரிட்டிஷ் ராணுவத்திற்கான போர்.

சுமிக் ஷெங்கோ [Chumik Shenko] என்ற ஊரில் திபெத்தியப் படைகளுக்கும் பிரிட்டிஷ் படைகளுக்கும் மோதல் நடந்தது. பழமையான முறையில் மண்தடுப்புகள் கட்டி ஒளிந்துகொண்டு போரிட்ட முப்பதாயிரம் திபெத்தியப் படைவீரர்களை பிரிட்டிஷ் ராணுவம் சுட்டுத்தள்ளியது. சுமித் ஷெங்கோ படுகொலை என்று இதை வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.

அந்தப் படை லாஸாவை நெருங்கியபோது தலாய் லாமா சீனாவுக்கு தப்பி ஓடினார். தடைசெய்யப்பட்ட நகரை பாதுகாத்த திபெத்தியப் படைவீரர்கள் வாள்களும் ஈட்டிகளுமாக பிரிட்டிஷ் பீரங்கிகளுக்கு முன் பாய்ந்தனர். அங்கே பத்தாயிரம் பேர் கொன்று வீழ்த்தப்பட்டனர். லாஸா வீழ்ந்தது. ஆங்கிலோ திபெத்திய ஒப்பந்தம் கையெழுத்தாகியது. திபெத்திடமிருந்து மிகப்பெரிய கப்பம் பெறப்பட்டது. திபெத் கிட்டத்தட்ட பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது.

அந்தப் போரில் நான் பங்கெடுத்ததே கிறிஸ்துவின் பொருட்டு திபெத்தை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையால்தான். ஆனால் அது நிகழவில்லை. திபெத் உச்சகட்ட விசையுடன் எங்கள் சொற்களை எதிர்த்து நின்றது. ஏமாற்றம்தான் எங்களுக்கு மிஞ்சியது.

நான் லாஸாவில் பிரிட்டிஷ் முகாமில் தங்கியிருந்தேன். பகலில் என் உதவியாளர்களுடன் நகருக்குள் சென்று காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் பார்த்தேன். நோயுற்றவர்களுக்கு மருந்து அளித்தேன். ஒருநாள் லாஸாவின் புறப்பகுதியில் இருந்த பழைய வீடு ஒன்றுக்குள் இருந்து ஒரு கிழவி என்னை கைநீட்டி அழைத்தாள். அங்கே ஒரு நோயாளி இருக்கிறார் என்று தெரிந்தது.

உள்ளே இருந்த நோயாளி ஒரு வயோதிக பிக்ஷு. அவர் கடுமையான காய்ச்சலில் இருந்தார். அவருடைய காலில் குண்டுக்காயம் ஆழமாக பட்டிருந்தது. அது அழுகத் தொடங்கியிருந்தது. அவர் வாழமாட்டார் என்று நன்றாகவே தெரிந்தது. நான் அவருக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. வலிகுறைக்க அபினை கொடுப்பது ஒன்றைத்தவிர.

அபின் அவர்களுக்கு பழக்கம்தான். அவர் அபினை உண்டதும் சற்று தெளிந்தவர் போல் ஆனார். அவர் என்னிடம் “நீண்டகாலம் முன்பு நீங்கள் நாகு நகருக்குச் சென்றீர்களா?” என்று கேட்டார்.

நான் “ஆமாம்” என்றேன்.

“உங்கள் மகன் அங்கே இருக்கிறான்” என்றார்.

“என்ன சொல்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன்.

“அங்கிருக்கிறான், உங்கள் மகன், நான் அவனைப் பார்த்தேன்” என்றார் “அங்கே போ-சு ஆற்றின் கரையில்”

அதன்பின் அவர் பேசவில்லை. நான் அவர் ஏதோ குழம்பியிருக்கிறார் என்று நினைத்தேன். அவரை விட்டுவிட்டு வந்துவிட்டேன். அவர் அன்று மாலையே உயிரிழந்தார்.

அவர் வேறெவரையோ நினைத்திருக்கலாம். ஆனால் அந்த வரி என்னை ஏதோ செய்கிறது. எனக்கு மகன் இல்லை. என் வாழ்க்கையை மதப்பணிக்காக அளித்துக்கொண்டேன். ஆனால் எனக்கு ஒரு மகன் இருப்பதாக எவரோ நினைக்கிறார்கள். அது விசித்திரமாக இருந்தது

ஆடம் சொன்னான். ஆன்னி பேசிக் கொண்டிருந்தபோதே நான் எழுந்துவிட்டேன். மெய்யாகவே என் சன்னல் திரை திறந்து கிடந்தது. வெளியே வெண்பனி பொழிந்து பரவிய வெளிச்சம் உள்ளே நிறைந்திருந்தது.

ஆன்னியின் ஒவ்வொரு சொல்லாக நினைத்துக் கொண்டிருந்தேன். நாக்சு நகர் பற்றி ஆன்னி லண்டனில் பேசும்போது சொன்னதை நான் கருத்தில் கொள்ள எந்தக் காரணமும் இல்லை, அது அப்போது எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு வரி. வாழ்நாள் முழுக்க ஒரு நம்பிக்கைக்காக நாட்களைச் செலவிட்ட ஒரு பெண்மணியின் ஒரு அந்தரங்க எண்ணம் அது. ஆனால் மீண்டும் என் உருவெளித்தோற்றமாக அப்பேச்சை கேட்டபோது ஏதேதோ தொடர்ச்சிகள் உருவாகி வந்தன.

ஆனால் நாக்சுவைப் பற்றி அதற்குப் பின்னரும் கேள்விப்பட்டேன். இதுவல்ல, வேறொன்று. அந்த நினைவுதான் இந்த நினைவுக்குமேல் சென்று பொருந்திக்கொண்டது. என்ன அது?

சட்டென்று என் மேல் ஓர் அறைவிழுந்ததுபோல அதை அடைந்தேன், அது ஆன்னி அல்ல. அந்த பிக்ஷு ஆள்மாறிச் சொல்லிவிட்டார். அது சூசன்னா கார்ஸன் ரிஞ்ச்ஹார்ட் [Susanna Carson Rijnhart] திபெத்திற்குள் நுழைந்த இரண்டாவது பெண்மணி. அவருடைய மகன் சார்ல்ஸ் கார்ஸன் ரிஞ்ச்ஹார்ட்தான் திபெத்தை நோக்கிய பயணத்தில் நாக்சு நகருக்கு அப்பால் மலைப்பாதையில் உயிர் துறந்தவன். அப்போது அவனுக்கு ஒருவயதுதான்.

முக்தா சொன்னார். ஆடம் அதைச் சொன்னபோது நான் கூடாரத்திற்குள் எழுந்து அமர்ந்துவிட்டேன். “மெய்யாகவா?” என்றேன்.

“ஆம்” என்று ஆடம் சொன்னான். “நான் இப்போது திபெத் செல்வதே அதற்காகத்தான்.”

நான் வியப்புடன் அவனைப் பார்த்தேன்.

“அன்று நான் நாக்சுவிலிருந்து வந்த பிக்ஷுக்களிடம் அவர்கள் சார்ல்ஸ் என்ற வெள்ளைக்கார இளைஞனை அங்கே எங்காவது பார்த்ததுண்டா என்று கேட்டேன். அவர்களுக்கு திகைப்பாக இருந்தது. அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை.”

நான் “ஆனால் வெள்ளையர் என்றால் திபெத்தில் அவரை எவரும் தவறவிடுவதற்கு வாய்ப்பில்லை… இப்போதுகூட திபெத் எல்லைக்குள் ஓரிரு வெள்ளையர்கூட இருக்கமாட்டார்கள்” என்றேன்.

“ஆம், ஆகவேதான் கண்டுபிடித்துவிடமுடியும் என்று நம்புகிறேன்” என்றான் ஆடம்.

நான் முதலில் அவனிடமிருந்தே சூசன்னா கார்ஸன் பற்றி அறிந்துகொண்டேன். பின்னர் அவருடைய நினைவுக்குறிப்புகளை வாசித்தேன். சூசன்னா கார்ஸன் தன்னுடைய நினைவுகளை சொல்லி எழுதவைத்த நூல் ஒன்று 1901ல் சிகாகோவிலிருந்து வெளிவந்துள்ளது. With the Tibetans in tent and temple -Narrative of four years’ residence on the Tibetan border, and of a journey into the far interior. ஆனால் அது அவரை ஒரு தேசிய வீராங்கனை, கிறிஸ்தவப் போராளியாக காட்டும் நோக்குடன் பலவகையான சமரசங்கள் மழுப்பல்களுடன் உருவாக்கப்பட்டது.

நான் 1962-ல் கனடாவில் எழுபத்தாறு வயதான எலெனா ஜெஸி கார்சன் என்னும் இதழாளரைச் சந்தித்தேன். அவர் திபெத்தியவியல், இந்தியவியல், பௌத்தம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். அவர் சூசன்னாவுடன் நெருக்கமாக பழகியவர். உறவுமுறையில் சூசன்னாவின் மருமகளும்கூட. அவர் சூசன்னா தன்னிடம் கூறிய நினைவுகளை என்னிடம் சொன்னார். நான் அவற்றையே நம்புகிறேன்.

ஏனென்றால் அவை இயந்திரத்தனமாக இல்லை. அத்துடன் அவை நூல் தொகுப்பாளர்களால் மறுகட்டமைப்பும், சுருக்கமும் செய்யப்படவில்லை. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நினைவுநூல்கள் வாழ்க்கைக் குறிப்புகள் அனைத்துக்கும் இந்தப் பிரச்சினை உண்டு. அவை நூல் தொகுப்பாளர்களால் முற்றாக மாற்றியமைக்கப்படுகின்றன. சராசரி அமெரிக்கனின் உலகப்பார்வை, தர்க்கபுத்தி ஆகியவற்றுக்கு உகந்த முறையில் அவை வடிவம் கொள்கின்றன. ஆகவே அவற்றிலிருந்து அசாதாரணமான நம்பிக்கைகளும் உணர்ச்சிகளும் வடிகட்டப்படுகின்றன. அபூர்வங்கள் எல்லாமே அகற்றப்படுகின்றன.

மக்கள் அசாதாரணமான மனிதர்களைப் பற்றி வாசிக்க விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் தங்களைப் போன்ற சாதாரணர்களின் நம்பிக்கைகளும் உணர்ச்சிகளும் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். விளைவாக இத்தகைய தன்வரலாறுகளிலும் நினைவுகளிலும் நம்மைப்போன்ற ஒருவர் எதன்பொருட்டு அவற்றை வாசிக்கிறோமோ அது கவனமாக வெட்டிநீக்கம் செய்யப்பட்டிருக்கும். சூசன்னாவை எனக்கு அறிமுகம் செய்த எலெனா ஜெஸி கார்சன் என் நன்றிக்குரியவர்.என் அறிதல்களை இப்படிச் சுருக்கிச் சொல்கிறேன்.

1868-ல் கனடாவில் ஒண்டோரியோ மாகாணத்தில் சாந்தொம் என்ற ஊரில் பிறந்த சூசன்னா டொரொன்றோ டிரினிடி பல்கலையில் மருத்துவப் படிப்பில் பட்டம்பெற்றார். ஆறாண்டுக்காலம் மருத்துவராக அங்கே பணியாற்றினார். அங்கிருந்து அவர் ஒரு மாபெரும் பயணத்தை தொடங்கியது ஏன் என்று புரிந்துகொள்வது கடினம்.

அதை இப்படி வகுத்துக் கொள்கிறேன். 1800கள் ஐரோப்பாவில் பெண்களின் வாழ்க்கையில் மிகமிக முக்கியமான காலகட்டம். அவர்களுக்கு கல்வியுரிமையும் போக்குவரத்து உரிமையும் கிடைத்தது. அவர்கள் பாரம்பரியமான குடும்ப அமைப்புகளில் இருந்தும் மதக்கட்டுப்பாடுகளில் இருந்தும் விடுதலைபெற்றனர். உருவாகிவந்த முதலாளித்துவம் அவர்களை கருப்பைகளாக பார்க்கவில்லை, உழைப்பாளிகளாகப் பார்த்தது.

அது காலனியாதிக்க காலம். அன்றைய ஐரோப்பியர் தங்கள் நாடு என்ற மன உருவகத்தை தங்களால் ஆக்ரமிக்கப்பட்ட காலனியாதிக்க நாடுகளையும் இணைத்தே உருவாக்கிக் கொண்டார்கள். ஒரு பிரிட்டிஷ் குடிமகன் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்றே தன் நாட்டை உணர்வான். அது உலக உருண்டையில் பெரும்பகுதியை உள்ளடக்கியது

அது உருவாக்கிய பேருணர்வை இந்த தலைமுறை புரிந்துகொள்வது கடினம். இரண்டாம் உலகப்போருக்கு முன்பிருந்த தலைமுறையினரின் உணர்வு அது. அவர்களில் பலர் அதை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். சிறிய தீவுகளில் பிறந்து வளர்ந்தவர்களின் வழித்தோன்றல்கள். சட்டென்று உலகமே அவர்களுக்கு உரியதாகிவிட்டது.

ஆகவே அவர்கள் உலகளாவ விரியத் துடித்தனர். பஞ்சுவிதை போல காற்றில் வெடித்துப் பரவி தொலைதூர நிலங்களுக்கெல்லாம் சென்றனர். அறியா மானுடர் நடுவே பணியாற்றினர். போரிட்டனர், சேவை செய்தனர், கொன்றனர், இறந்தனர். நிறுவனங்களை உருவாக்கினர். பல்லாயிரம் பேருக்கு வாழ்க்கையை உருவாக்கி அளித்தனர். அந்த தலைமுறையின் அகவிசை அப்படிப்பட்டது.

இந்தியாவில் பௌத்தம் தோன்றிய முதல் முந்நூறு ஆண்டுகளில் அந்த மகத்தான விரிவு நிகழ்ந்திருக்கிறது. அதற்குப்பின் நாமறிந்ததெல்லாம் குறுகல்தான். நம்மை நாம் சிறிதாக்கிக் கொள்வது. நம்மை நாமே மேலும் மேலும் பிரித்துக் கொண்டே செல்வது. ஒருகாலடி வைக்க மட்டுமே இடமிருக்கும் வெளியில் நின்று கொண்டு நாற்புறமும் உலகை மூடிவிடுவது. இந்துமதம் என்பது முற்றாக மூடப்பட்ட பல்லாயிரம் சிறிய அறைகள் கொண்ட ஒரு மாபெரும் அமைப்பு.

எழுநூறுகளின் ஆண்கள் அடைந்த அந்த உலகைவெல்லும் எழுச்சியை, சாகச உணர்வை எண்ணூறுகளில் பெண்கள் அடைந்தனர். சாகசக்கார ஆணின் மேல் பெண்கள் பித்துகொண்டனர். மாலுமிகளை, மலையேற்றக்காரர்களை ,படைவீரர்களை அவர்கள் கனவுகண்டனர்.

சூசன்னாவின் கணவரான பெட்ரூஸ் ரிஞ்ச்ஹார்ட் அப்படிப்பட்டவர். ஹாலந்தில் பிறந்தவர். சீனாவின் புரட்டஸ்டன்ட் மிஷனரியான China Inland Mission இல் பணியாற்றியவர். மிகச்சிறப்பான உரைகளை ஆற்றும் திறன்கொண்டவரும் நகைச்சுவை உணர்ச்சிமிக்கவரும் அழகருமான பெட்ரூஸ் சூசன்னாவை கவர்ந்ததில் வியப்பில்லை

பெட்ரூஸ் நெதர்லாந்தில் சால்வேஷன் ஆர்மியில் பணியாற்றுகையில் Rijnhart’s hornet’s nest என்ற அமைப்பை உருவாக்கினார். இது ஒரு வகையான கம்யூன். இதில் இருந்த எல்லா பெண்களிடமும் அவர் உடலுறவு கொண்டார். இது பிரச்சினையாக ஆனபோது அவரை அவர்கள் வெளியேற்றினர். அவர் கனடாவுக்கு சென்றார்.

பெட்ரூஸ் ஒரு மதநம்பிக்கையாளரா என்றால் ஆம், ஆனால் மதம்தான் அவரை இயக்கியதா என்றால் இல்லை. அவர் சாகசக்காரர், மிஷனரி வாழ்க்கை அதற்கு உதவிகரமானது, அவ்வளவுதான்.தன் வாழ்நாளின் ஒவ்வொரு கணமும் தன் எல்லைகளை தானே மீற முயன்றுகொண்டிருந்த ஒரு மனிதர் அவர்,

பெட்ரூஸ் சூசன்னாவை கனடாவில் சந்தித்தார். இனம்புரியாத அக எழுச்சியால் பறக்கத் துடித்துக் கொண்டிருந்த சூசன்னாவை பெட்ரூஸ் கையில் எடுத்துக்கொண்டார். இத்தகைய சந்திப்புகளில் இருக்கும் மாயமும் கொண்டாட்டமும் மிக அரிதானவை. அவை கடைசியில் பெரும்பாலும் கடும் நெருக்கடிகளை, அழிவுகளையே சென்றடைகின்றன. ஆனால் எண்ணையை தீ சந்திப்பதுபோலத்தான் அத்தருணம் அமைந்திருக்கும்.அதை மானுடர் தவிர்க்கமுடியாது, அது தெய்வத்தருணம்.

சூசன்னா முற்றாகவே மாறினார். உலகை நோக்கி சிறகடித்து எழ விரும்பினார். எதை வேண்டுமென்றாலும் செய்ய துணிந்தவரானார். அவருக்குள் பெட்ரூஸ் தன் கனவுகளை, தன் அராஜகத்தை, தன் தவிப்பை செலுத்திக்கொண்டே இருந்தார்.

1894-ல் அவர்கள் மணம் புரிந்துகொண்டனர். சீனாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் மிஷனரி அமைப்பு ஒன்றை பெட்ரூஸ் சுயமாக உருவாக்கினார். அதன்பொருட்டு கனடாவில் மதச்சொற்பொழிவுகள் நடத்தி நிதிவசூல் செய்தார். எஞ்சியவாழ்நாள் முழுக்க வாழ்வதற்கு தேவையான நிதி அவருக்கு வந்துசேர்ந்தது.

1895-ல் பெட்ரூஸ் தன் மனைவியுடனும் சில தோழர்களுடனும் சீனாவில் கும்பும் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்குதான் திபெத்திய பௌத்தத்தின் மாபெரும் மடாலயம் இருந்தது. அங்கே அவரும் சூசன்னாவும் திபெத்திய மொழியை பயின்றனர்.

அவர்கள் அங்கே சென்ற மறு ஆண்டு கும்பும் பகுதியில் இருக்கும் இஸ்லாமியர் மடாலயத்தை தாக்கினார்கள். பல பிக்ஷுக்கள் காயமடைந்தனர். ஆகவே சூசன்னா மடாலயத்திற்கு அழைக்கப்பட்டார். அங்கிருந்த தலைமைப் பிக்ஷுவுக்கு அணுக்கமானவர் ஆனார். மடாலயத்திலேயே தங்கி சிகிச்சை அளிக்கத் தொடங்கினார் சூசன்னா. திபெத்திய மொழியையும் ஓரளவு கற்றுக்கொண்டார்.

அவ்வாறுதான் லாசாவுக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தை சூசன்னா அடைந்தார். பெட்ரூஸ் அதை ஒரு சாகசப் பயணமாகவே கண்டார். சூசன்னா அதில் மதமாற்ற நோக்கத்தையும் கொண்டிருந்தார்.

அன்றைய கிறிஸ்தவ மிஷனரிகளின் வழி என்பது தலைமையை கவர்ந்தோ வென்றோ மதமாற்றம் செய்வதுதான். அது பல ஊர்களில் வெற்றிகரமாகவே நடந்தது. இந்தியாவில் அவர்களால் அரசியல் தலைமையை, மதத்தலைமையை மதமாற்றம் செய்யவே முடியவில்லை. ஆகவே பின்னர் இரண்டாம் முயற்சியில்தான் அடித்தளத்தில் இருந்து மதமாற்றத்தை செய்யத் தொடங்கினர்.

1896-ல் சூசன்னா பெட்ரூஸுடன் கும்பும் மடாலயத்திலிருந்து இருபத்துநான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்த டங்கர் என்னும் ஊருக்குச் சென்று குடியேறினார். அங்கே ஒரு சிறு மருத்துமனையை நிறுவினார். திபெத்திய உடை அணிந்து, திபெத்திய உணவை உண்டு அங்குள்ள வாழ்க்கைக்கு பழகினார்.

பெட்ரூஸ் அப்போது அவ்வழியாக திபெத்தின் உட்பகுதிக்குச் சென்ற பிரிட்டிஷ் மலையேற்றக்காரர்களுக்கும் உளவாளிகளுக்கும் வழிகாட்டியாக செயல்பட்டார். பெரும்பாலான நாட்களில் சூசன்னா தனியாகவே அங்கே தங்கியிருந்தார். மிகமிக வசதிக்குறைவான இல்லத்தில் கடும்போராட்டத்துடன் அவர்கள் வாழ்ந்ததாக அவ்வழிச் சென்ற சில பிரிட்டிஷ் பயணிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.

1897ல் அவர்களுக்கு மகன் பிறந்தான். ஜூன் மாதம். அவனுக்கு சார்ல்ஸ் கார்சன் என்று பெயரிட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின் அவர்கள் லாஸாவுக்கு கிளம்புவதாக திட்டமிட்டிருந்தனர். அதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தனர். உலருணவுகள் சேர்ப்பது, உடைகள் உருவாக்கிக் கொள்வது, சரியான வழிவரைபடங்களை தேடிக்கொள்வது என்று ஏராளமான பணிகள் இருந்தன. டங்கரில் பெட்ரூஸுக்கு தொடர்புகள் குறைவு, ஆகவே எதையுமே முழுமையாக ஒருங்கிணைக்க முடியவில்லை.

குழந்தை சார்ல்ஸ் தன்னுடைய முதல் திபெத்தியக் குளிர்காலத்தை எதிர்கொண்டபடி இருந்தான். ஜூன் முதல் திபெத் நிலத்தில் கடும்குளிர்காற்று உச்சகட்ட விசையுடன் அடிக்கும். அது கீழே இந்தியப்பெருநிலத்தில் பருவமழை பொழியும் காலம். குழந்தை அந்த கடுங்குளிர் காற்றில் கருப்பை என்று சூசன்னா குறிப்பிட்ட ஒரு மென்மயிர் பைக்குள்ளேயே பெரும்பாலும் இருந்தது. செப்டெம்பர் முதல் பனி விழ தொடங்கியது. அக்டோபரில் மொத்தநிலமும் பனியால் மூடியது. நவம்பர் டிசம்பர் ஜனவர் பிப்ரவரி என தொடர்ச்சியாக ஐந்து மாதம் திபெத் வெண்பனிக்குள்ளேயே இருந்தது.

திடீரென்று பெட்ரூஸ் அந்த கோடையிலேயே கிளம்பலாம் என்றார். அவர் மலையேற்றப் பயிற்சி கொண்ட ஒரு குழுவைச் சந்தித்தார். அவர்கள் உண்மையில் ஒரு மலைக்கொள்ளைக் கூட்டம். இரண்டு திபெத்தியர்கள், ஒரு முஸ்லீம், எட்டு ஷெர்பாக்கள். அவர்கள் திபெத்திய மலைநிலங்களில் அலைந்து சிற்றூர்களையும் மடாலயங்களையும் கொள்ளையடித்து வந்தனர். அவர்களை திபெத்திய ராணுவம் வேட்டையாடிக் கொண்டிருந்தது. அவர்களிடமிருந்து தப்பி டங்கர் வரும் வழியில் அவர்கள் பெட்ரூஸைச் சந்தித்தனர்.

பெட்ரூஸ் அவர்களுக்கு கொள்ளையை விடப் பெரிய ஒரு வாய்ப்பை அளித்தார். தங்களை லாஸாவுக்கு கொண்டுசென்று சேர்த்தால் அவர்கள் திரும்பி வந்து பணமாக ஆக்கிக்கொள்ளக்கூடிய முத்திரையிடப்பட்ட கடிதங்களை அளிப்பதாகச் சொன்னார். அவர்கள் பலவாறாக எண்ணிக் குழம்பினார்கள். அந்த ஏற்பாட்டை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பெட்ரூஸ் இன்னொரு வாக்குறுதியை அளித்தார். அவர் டங்கரில் ஓர் இடத்தில் இரண்டாயிரம் பிரிட்டிஷ் ரூபாயை புதைத்து வைப்பார். அதை எடுப்பதற்கான வரைபடத்தை லாஸாவுக்குச் சென்று சேர்ந்தபின் அளிப்பார். அவர்கள் திரும்பி வந்து எடுத்துக்கொள்ளலாம். வழியில் அவர்கள் கைவிடப்பட்டலோ, இறந்தாலோ அந்த பணம் கிடைக்காது.

பெரிய ஒரு தொகை முன்பணமாகக் கொடுக்கப்பட்டதும் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். அக்குழுவின் தலைவன் பாட்ஸே என்னும் முதிர்ந்த திருடன். அவன் திபெத்திய மலைப்பாதைகளை நன்கறிந்தவன். நாற்பதாண்டுகளாக மலைகளில் அலைவதையே வாழ்க்கையாகக் கொண்டவன். அவனைப்போன்ற ஒரு துணை கிடைப்பது மிக அரிது என்று பெட்ரூஸ் நினைத்தார்.

பணம் அளிக்கப்பட்டதும் மிக எளிதில் அவர்கள் பயணத்திற்குரிய எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தனர். பதினெட்டு குதிரைகளும் தேவையான தோல்பைகளும். நீர் புகாத பயணப்பைகள், குளிருக்கான மென்மயிர் ஆடைகள், உலர்ந்த இறைச்சியும் பழங்களும் தானியப்பொடியும் கொண்ட உலருணவுப் பொதிகள்,. மலையேறுவதற்குரிய சப்பாத்துக்கள்,குளிர் தாங்குவதற்குரிய மது…

அது ஒரு மாபெரும் பயணம். லாஸா அங்கிருந்து எண்ணூறு மைல் தொலைவில் இருந்தது, ஆனால் மலையேறி இறங்கும் வழிகளை கருத்தில்கொண்டால் மூவாயிரம் மைல்களுக்கு அப்பால். ஆறாயிரம் அடி உயரமான மலைகளை கடந்து செல்லவேண்டும்.

சூசன்னா திகைப்புடன் “சார்ல்ஸை என்ன செய்வது?” என்று கேட்டார்.

“அவனையும் கொண்டுசெல்ல வேண்டியதுதான்” என்றார் பெட்ரூஸ்

சூசன்னா “என்ன சொல்கிறீர்கள்? அவனுக்கு ஒருவயதுகூட ஆகவில்லை. அத்தனை தொலைவு அவனை எப்படி கொண்டுசெல்ல முடியும்?” என்றார்

“நாமா கொண்டு செல்கிறோம்? அவனை குதிரைகள்தானே சுமக்கப் போகின்றன?”

“இந்தக் குளிரையே அவனால் தாங்கமுடியவில்லை. மேலும் உச்சிக்குச் செல்வது அவனுக்கு மிக ஆபத்தானது….” என்று சூசன்னா சொன்னார். “இந்தப் பயணம் பெரியவர்களுக்கே தாங்க முடியாதது. கைக்குழந்தையுடன் செல்வது என்றால் அது முழுக்கிறுக்குத்தனம்.”

”இந்த வாய்ப்பு இனி வராது. இவர்களைப்போல வேறு வழிகாட்டிகள் நமக்கு கிடைக்க மாட்டார்கள்.”

“இவர்கள் குற்றவாளிகள்” என்று சூசன்னா கூவினார்.

“நாம் செய்யப்போவதும் இங்கே பெரிய குற்றம். குற்றவாளிகள்தான் நமக்கு உதவுவார்கள். இதுவரை நாம் செய்த பிழை என்பது சட்டபூர்வமாக நமக்கு உதவுபவர்களை திரட்ட முயன்றதுதான்.”

“நான் வரமாட்டேன். இந்த திருடர்களை நம்பி குழந்தையுடன் தனியாகக் கிளம்புவது என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாதது.”

“நீ வராமல் நான் மட்டும் எப்படி போகமுடியும்? நீதான் டாக்டர். நீதான் அந்த மக்களிடையே பணிபுரியமுடியும்.”

“நான் வரமாட்டேன்… சார்ல்ஸுக்கு மூன்றுவயதாவது ஆவது வரை மலையேற்றத்திற்கு கிளம்பப் போவதில்லை.”

ஆனால் மறுநாள் காலை சூசன்னா கிளம்புவதற்குச் சம்மதித்தார். ஆண் பெண்ணில் செய்யும் மாயம் அது. வரலாறு முழுக்க அது அப்படித்தான். பெண் எல்லா ஆணிலும் ஒரு பொதுவான மாயத்தைச் செலுத்துகிறாள். குறுகியகாலம் மட்டுமே நீடிப்பது அது. ஆண் அவனுக்குரிய ஒருசில பெண்களில் மிகமிக ஆழமானதும், அவளை முற்றாகவே மாற்றியமைத்து அவனுடைய உள்ளத்தின் உடலின் ஒரு பகுதியாகவே ஆக்கிக் கொள்வதுமான மாயத்தை செலுத்துகிறான். அவள் எந்நிலையிலும் மீளமுடியாது. அவளுக்கென சிந்தனையோ ஆளுமையோ இருக்கமுடியாது.

ஆனால் விந்தை என்னவென்றால் அத்தகைய ஆண்கள் மிகமிக ஆற்றல் கொண்டவர்கள். அவர்களிடமிருந்து ஆற்றல்பெறும் அந்தப் பெண் தன்னுள் இருக்கும் பெண்ணியல்பையும் சேர்த்துக் கொள்ளும்போது தனக்குரிய தனி வழி ஒன்றில் அவனளவுக்கே எழுகிறாள். சிலசமயம் அவனைவிட மிகமிக மேலே செல்கிறாள். அந்த உச்சத்தை அவ்வாறு ஆணிடமிருந்து ஆற்றல் பெறாத பெண்கள் அடையமுடியாது. அடையலாம், ஆனால் அப்படி ஒன்று இதுவரை பூமியில் நிகழ்ந்ததில்லை.

அவர்கள் எல்லா ஏற்பாடுகளையும் பழுதறச் செய்தனர். அவர்களுடைய வழிகாட்டிகளுக்கு அதில் நீண்ட அனுபவம் இருந்தது. இம்முறை இருமடங்கு எச்சரிக்கையும் கொண்டிருந்தனர். பணத்துக்கும் குறைவில்லை. வழிதவறி எங்காவது மாட்டிக்கொண்டால்கூட தாக்குப் பிடிக்கவேண்டும் என்ற முன்னேற்பாடுடன் இரண்டு ஆண்டுகளுக்குத் தேவையான உணவை அவர்கள் எடுத்துக்கொண்டனர். திபெத்திய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூறு பைபிள் பிரதிகள் அவர்களிடம் இருந்தன. 1898 மே 20 ஆம் தேதி அவர்கள் லாஸாவுக்கு கிளம்பினர்.

அந்தப் பயணம் தொடக்கம் முதலே ஒரு தற்கொலைத்தனமான முயற்சி. அவர்கள் கொள்ளையர்களுக்கு மட்டுமே பழக்கமான மிகக்கடினமான பனிப்பாதை வழியாகச் சென்றார்கள். கொள்ளையர்கள் அரசப்படையினர் வராத அரியபாதையையே பழகியிருப்பார்கள். பல இடங்களில் அவர்கள் நல்ல பாதைகளை தவிர்த்துச் சென்றனர். அவர்கள் சென்ற வழி பெரும்பாலும் பாறைப்பிளவுகளின் வழியாக அமைந்திருந்தது. சற்று அப்பால் செல்பவர்கள் கூட அறியமுடியாது என்பதே அதன் சிறப்பு. ஆனால் மிகச்சிக்கலான வழி அது.

இரண்டு மாதங்களில் அவர்களின் பயணத்துணைவர்கள் அவர்களை கவனித்துக்கொண்டே இருந்தார்கள். பாட்ஸே அமைதியானவன். அபின் உண்ணும் வழக்கம் அவனுக்கு உண்டு. அவன் கோபமோ ஆத்திரமோ கொள்வதில்லை. மிகமிகக் குறைவாகவே பேசினான். எப்போதும் பிறரை பார்த்துக் கொண்டும் அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டும் இருந்தான். பெரும்பாலான நேரங்களில் அசையாமல் அமர்ந்திருந்தான். அந்தப் பண்புகளால்தான் அவன் உயிருடன் இருந்தான்

இன்னொருவன் இளைஞன், அவன் பெயர் நோர்டே. அவனுக்கு எப்போதுமே கொந்தளிப்பான மனநிலை இருந்தது. சிட்டுக்குருவி போல அவன் எப்போதும் எல்லா திசைகளையும் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிய விஷயங்களுக்கே எச்சரிக்கை அடைந்தான். இரவில்கூட அவன் நிறைவாக உறங்குவதில்லை. சட்டென்று எழுந்து கையில் கூரிய எறிகத்தியுடன் சூழ்ந்திருக்கும் பனிவெளியில் பனிவெளிச்சத்தில் துலங்கும் நிழலுருவங்களைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

மூன்றாமவனைத்தான் அவர்களால் வகுத்துக்கொள்ளவே முடியவில்லை. நடுவயதினனான செபோ நீண்ட வாள் ஒன்றை வைத்திருந்தான். திபெத்திய வாள்கள் அலங்காரமான உறைகள் கொண்டவை. குத்துவாளாக பயன்படுத்த ஏற்றவை. தேவை என்றால் அவற்றை ஈட்டி போல எறியவும் முடியும். அவன் ஒருமுறைகூட வாளை உறையிலிருந்து உருவவில்லை. தன் உடலில் இருந்து அவற்றை விலக்கவும் இல்லை. எப்போதுமே மடியிலோ நெஞ்சிலோ தோளிலோ வைத்திருந்தான். அதன்மேல் உடலைவைத்துத்தான் படுத்து தூங்கினான்.

எஞ்சியவர்கள் சுமைதூக்குபவர்கள், மலைப்பொறுக்கிகள். அவர்கள் அனைவருமே அபினுக்கு அடிமைகள். கரியபற்களும் பீளைநிற்கும் சிறிய கண்களும் சுருக்கம் மண்டிய முகங்களும் கொண்டவர்கள். அவர்களுக்கு நீராடும் வழக்கம் இல்லை. முகம்கழுவுவதும் பல்தேய்ப்பதும்கூட அவர்கள் அறியாததே. அவர்கள் அணிந்த உடைகள் பல ஆண்டுகள் கழற்றவே படாதவை. ஆகவே அவர்களிடமிருந்து ஒரு மட்கிய முடியின் வாடை எழுந்துகொண்டே இருந்தது.

சூசன்னா அவர்களை நேருக்குநேர் பார்க்கக்கூட முடியாதபடி வெறுத்தார். ஆனால் அவர்களுடன் சேர்ந்தே பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதைவிட இரவில் அனைவரும் சேர்ந்து ஒரு கூடாரத்திற்குள் ஒற்றை உடற்குவியலாக மாறி ஒருவர் வெப்பத்தை இன்னொருவருக்கு அளித்து துயிலவேண்டியிருந்தது.

அந்தப்பயணத்தில் சூசன்னா ஒவ்வொருநாளும் பலமுறை பிரார்த்தனை செய்தார். ஒவ்வொரு முறை கால்பட்டு ஒரு கல் உருண்டு கீழே அடியிலாதது எனத்தெரிந்த பாதாளத்திற்கு செல்லும்போதெல்லாம் அவர் “விண்ணிலிருக்கும் ஏசுவே!” என்று குரலெழுப்பி சிலுவை போட்டுக் கொண்டார். ஒவ்வொரு வாய் நீருக்குமுன்னும் பிரார்த்தனையைச் சொல்லிக் கொண்டார். உணவுண்பதற்கு முன் கையில் ரொட்டியுடன் தலைகுனிந்து அமர்ந்து ஆழமாக ஜெபம் செய்தார். இரவில் தூங்குவதற்கு முன் அவர் தன் உடலுடன் சார்லஸை சேர்த்துக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்து நெடும்பொழுது பிரார்த்தனை செய்தார்.

ஆனால் அந்த பனிவெளியில் அவர் கிறிஸ்துவின் அருகாமையை உணரவில்லை. தன் சொற்கள் காற்றில் வீணாகின்றன என்றே தோன்றியது. “என் தேவனே, உன்பொருட்டு செல்கிறேன். உனக்காக உயிர்விடச் சித்தமாகிறேன். நீர் என்னுடன் இருக்கிறீரா? என் சொற்களைச் செவிகொள்கிறீரா? எனக்கு துணைவருகிறீரா?” என்று அவர் கேட்டார் “என் வாழ்க்கையை உமக்கு அளிக்கிறேன்.‘தேவனே, அவ்வாறு முழுதாக என்னை உமக்கு அளிக்கும் துணிவை மட்டும் எனக்கு நீர் அருளவேண்டும்.”

சூசன்னா அப்பயணத்தில் ஒருமுறைகூட ஏசுவை அறியவில்லை. அது ஏன் என்பது அவருக்குள் உழற்றிக்கொண்டே இருந்தது. ஒருவேளை அந்த பயங்கரநிலம் அவரை அச்சுறுத்தியிருக்கலாம். அவருடைய ஆழத்தை அது குலைத்துவிட்டிருக்கலாம். திபெத்தியப் பனிவெளியில் அவர் எப்போதும் உணரும் ஒரு அச்சமூட்டும்தன்மை உண்டு. அங்கே கனவுகளிலும் அந்நிலமே வரும். வெண்மை வெறித்துக்கிடக்கும் நிலம். அமைதியாக சூழ்ந்திருக்கும் மலைமுடிகள். காற்றின் சொல்லற்ற ஓலம்.

அங்கே விலங்குகளே இல்லை. இருந்தால் அவை மானுடர் இருக்குமிடங்களுக்கு வருவதே இல்லை. ஆனால் அங்கே ஒரு பார்வையை உணரமுடியும். அது மலைகளின் பார்வை. அவை சூழ்ந்து நின்று குனிந்து நோக்கிக்கொண்டிருக்கும். அமைதியாக.

அங்கே மனிதர்கள் செத்துக் கொண்டே இருந்தனர். பெரும்பாலானவர்கள் தன்னந்தனியாகவே செத்தனர். அவர்கள் உயிர்பிழைக்கமாட்டார்கள் என்று உணந்தால் உடன் சென்றவர்கள் கைவிட்டுவிட்டுச் சென்றனர். அவர்கள் அந்த வெறுமையை பார்த்தபடி தனிமையில் கிடந்து மெல்ல மெல்ல உயிர்நீத்தனர்.

சூசன்னாவும் கூட்டமும் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு மெல்லிய முனகலை ஒருமுறை கேட்டனர். ஒரு பாடல்போல. அது ஏதோ பேயின் குரல் என்று சூசன்னா எண்ணினார்.

“நம்முள் இருந்து எழுவது அது, ஒரு பிரமை, செவிகொடுக்காதே” என்றார் பெட்ரூஸ்.

ஆனால் நோர்டே ஐயத்துடன், உருவிய கத்தியுடன் குனிந்து பதுங்கி ஓசையில்லாமல் சென்றான். அவன் அங்கே சென்றடைந்தபின் கைகாட்டினான். அவர்கள் அங்கே சென்றனர். அங்கு ஒருவன் நோயுற்று சாகக் கிடந்தான். ஒரு மலைவிரிசலில் தனியாக படுத்திருந்தான். அவன் செத்துவிடுவான் என்பதனால் அவனுடைய மென்மயிர் ஆடைகளையும் உடன்சென்றவர்கள் எடுத்துக்கொண்டு விட்டனர். ஆகவே அவன் மெல்லிய ஆடையுடன் பனியில் உறைந்தவனாக கிடந்தான்.

அவன் ஏன் சாகவில்லை என்பதே திகைப்பூட்டுவதாக இருந்தது. அவன் உடலின் விளிம்புகள் பனிப்பொருக்கால் மண்ணுடன் இணைந்திருந்தன. அவன் விரல்கள் வெண்பனியில் இறுகி ஒட்டியிருந்தன. ஆனால் அவன் நெஞ்சில் துடிப்பு இருந்தது, அவன் விழிகள் வெறித்திருந்தாலும் உயிர் கொண்டிருந்தன. அவன் முனகியபடி பாடிக் கொண்டிருந்தான்.

“அவன் என்ன பாடுகிறான்?”என்று பெட்ரூஸ் கேட்டார்.

நோர்டே “அவனா?”என்றபின் செவிகூர்ந்து “வானிலே வானிலே வானிலே …. அந்த ஒரு சொல்மட்டும்தான்”

“இல்லையே அவன் நிறையச்சொற்களை பாடுகிறானே?”

“திபெத்திய மொழியில் ஒரே சொல்லை வெவ்வேறு வகையில் எழுதவும் உச்சரிக்கவும் முடியும்.”

அவனை அவர்கள் கடந்துசெல்ல முற்பட பெட்ரூஸ் “நாம் அவனுடன் நிற்போம்…” என்றார்.

சூசன்னா அவனருகே அமர்ந்து அவனுக்காக ஜெபித்தார். அவன் கையைப் பிடித்து அவன் நெற்றியில் வைத்து சிலுவை போடச் செய்தார். அவன் செவியில் “நீ மீட்கப்பட்டாய். நீ கர்த்தரை வந்தடைந்தாய்” என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.

அவனுடைய பாடல் நின்று உதடுகள் உறைந்தன. கண்கள் முன்பெனவே நிலைகுத்தியிருந்தாலும் உயிர் அகன்றுவிட்டிருந்தது.

அங்கிருந்து விலகிச் செல்லும்போது பெட்ரூஸ் “விசித்திரமாகவே இருக்கிறது. வானம் என்ற ஒரு சொல் அத்தனை சொற்களாக மாறுவது” என்றார். பின்னர் சிரித்து “ராணித்தேனீ முட்டையிடுவாது போல” என்றார். அவரே தலையசைத்து புன்னகைத்து “அந்த ஒருசொல்லே ஒரு மொழியாக ஆகிவிடும் தகுதி கொண்டது” என்றார்.

சூசன்னா பிரார்த்தனை செய்துகொண்டே சென்றார். அவ்வப்போது நீண்ட பெருமூச்சு விட்டார். அவர் திபெத்துக்கு வந்தபின் மதம் மாற்றிய முதல் ஆத்மா அவன். அவன் ஆத்மா அதை மெய்யாகவே அறிந்திருந்ததா?

சார்ல்ஸ் ஒரு பொம்மை போல அவள் உடலுடன் ஒட்டிக் கொண்டிருந்தான். பெரும்பாலான பொழுதுகளில் அவன் தூங்கிக் கொண்டே இருந்தான். அந்தக்குளிர் அவன் உடலுக்கு “துயில்க” என்ற செய்தியை அளித்தது.

“அவன் பனிவெளியில் சிறுபூச்சிகளைப்போல ஆகிவிட்டான். அப்படியே பனித்துயிலுக்குள் சென்றுவிடுவான்” என்று பெட்ரூஸ் சொன்னார். “கூடு ஒன்றை கட்டிக்கொண்டு உள்ளே சென்றுவிடுவான். கோடையில் உடைத்துக்கொண்டு வெளிவரும்போது ஏழுவண்ணச் சிறகுகள் கொண்டிருப்பான்”.

சூசன்னா “போதும், இது என்ன பேச்சு?”என்று அவரை நோக்கி சீறினார்.

பெட்ரூஸ் எப்போதுமே வேடிக்கையாகப் பேசுபவர். எதையும் சற்று நையாண்டியுடன் சொல்லும் பாவனை அவருக்கு உண்டு. கண்களைச் சிமிட்டியபடி அவர் பேசும் அந்த நகைச்சுவையே அவரிடம் அவரை ஈர்த்தது.

அதனுடன் கலந்த இயல்பான பொறுக்கித்தனம். அவர்களுடன் திபெத்துக்கு வந்து சேர்ந்த வில்லியம் நீல் ஃபெர்கூசன் ஒருசில நாட்களிலேயே அந்தப் பொறுக்கித்தன்மையை தாளமுடியாமல் விலகிச் சென்றார்.  அவரைப்பற்றி பேசும்போது பெட்ரூஸ் “அவர் நல்ல பாதிரியார். அவர்கள் எளிதில் வீடுபேறு அடைகிறார்கள்” என்று சொல்லி  கண்களச் சிமிட்டி சிரித்தார்.

எதிலும் ஒரு இழிசுவையை அவரால் சேர்த்துக் கொள்ள முடியும். முதல்முறை பேசும்போது பிரார்த்தனை செய்யும் கிழவிகள் குசுவிடுவதை எப்படி பெருமூச்சாக மாற்றிக் கொள்கிறார்கள் என்று நடித்துக் காட்டினார். அன்று அவள் சிரித்துக் குழைந்து கையூன்றி சரிந்துவிட்டாள். அந்த கீழ்ச்சுவையில் இருந்து விந்தையான ஒரு பறந்தெழலாக அழகிய கவித்துவத்தை, கூரிய தரிசனத்தை நோக்கிச் செல்லவும் அவரால் முடிந்தது.

வழக்கமாக கிறிஸ்தவ போதகர்களிடம் உள்ள நேர்மை, அந்த நேர்மையை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் தன்மை, நேர்மையற்றவர் என்று எவரேனும் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம் எதுவுமே அவரிடம் இல்லை. அவர் பொதுப்பணத்தை எடுத்து தனக்காகச் செலவழிக்கத் தயங்காதவர். ஒருவரிடம் பொய்யாக நடித்து பணம்பெறுவதிலும் கூச்சமற்றவர்.

பணக்காரக் கிழவிகளிடம் அவர் மிகையுணர்ச்சி பொங்க சொற்பொழிவாற்றினார் அதைவிட அவரிடம் இருந்த பலகுரல்திறன் அவருக்கு பெரிதும் உதவியது. வாயோ தொண்டையோ அசையாமல் அவரால் பேசமுடியும்.வெவ்வேறு குரல்களில். அவர் ஜெபம் செய்யும்போது அதன் உச்சத்தில் எங்கிருந்தோ ஆசிச்சொல் எழுந்து ஒலித்து கிழவிகளை திகைப்புறச் செய்தது. அவர்கள் அழுதபடி மண்டியிட்டனர். அவருக்கு நிதியை அள்ளி வழங்கினர். அதற்கும் அப்பால் கிளம்பி வருகையில் ஒரு கிழவியின் மெலிந்த கைவிரல்களில் கிடந்த வைரமோதிரத்தை அவளறியாமல் கழற்றிக் கொண்டுவரவும் அவருக்கு தயக்கமிருக்கவில்லை.

அவர் நெதர்லாந்திலும் அதற்குமுன் சீனாவிலும் நிகழ்த்திய பாலியல் சாகசங்களை சூசன்னா அறிந்திருந்தார். உண்மையில் அதுதான் அவளை மேலும் அவரிடம் ஈர்த்தது. அவர் திபெத்திலும் பெண்களை துரத்திக் கொண்டிருந்தார்.

“அவர்களிடம் விசித்திரமான விலங்குவாடை வீசுகிறது. கெட்டுப்போன நெய்யும் சற்றே மட்கும் மாமிசமும் கலந்த வாடை. அது குமட்டுகிறது. ஆனால் ஒன்று உண்டு, காமத்தில் கெட்டவாடை மெல்ல மெல்ல பெரும் ஈர்ப்பு கொண்டதாக ஆகிவிடும். நாற்றத்தை நறுமணமாக்குபவன் சாத்தான். அவன் நம்மை அலைக்கழிக்கிறான்”

முதல்முறையாக சூசன்னா பெட்ரூஸை வெறுத்தார். அவர் சாத்தானுக்கு அணுக்கமானவரோ என்ற எண்ணத்தை அடைந்தார். சாத்தானும் கிறிஸ்துவும் மிகமிக நெருக்கமானவர்கள். சாத்தானைநோக்கி ஓடி கிறிஸ்துவை வந்தடைந்தவர்கள் உண்டு. கிறிஸ்துவை நோக்கி செல்லும் பயணத்தால் சாத்தானை சென்றடைந்தவர்களும் உண்டு

பெட்ரோஸ் என்பது பீட்டரின் ஹீப்ரு மொழிப் பெயர். பாறை என்பது நேர்ப்பொருள். கிறிஸ்துவின் அரசை உருவாக்கும் பொருட்டு போடப்பட்ட முதல் கடைக்கல் பீட்டர். அவள் எண்ணி எண்ணி வியந்துகொண்டிருந்தார். பிழைசெய்துவிட்டேனா? இந்த மனிதனை ஏன் இப்படி வெறுக்கிறேன்? இந்த மனிதனிடம் ஏன் இப்படி பித்தாக இருக்கிறேன்?

ஆனால் இந்த பனிபடிந்த வெற்றுநிலத்தையும் நான் அஞ்சுகிறேன், வெறுக்கிறேன். ஆனால் இங்கேயே என் வாழ்க்க்கையை நிகழ்த்தி முடிக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன். என்னை கர்த்தரிடம் கொண்டுசெல்லும் ஊர்தி இந்த நிலம் என்று நம்புகிறேன். “இருநிலைகளில் இருந்து என்னை விடுவித்தருள்க என் மீட்பரே” அவள் எப்போதும் சொல்லும் பிரார்த்தனை வாசகம் அது. ஆனால் எந்த மானுடராவது முற்றாக அதிலிருந்து விலகமுடியுமா? அவர்களுக்கு அதன்பின் பிரார்த்தனை தேவையாக இருக்குமா?

முக்தா சொன்னார்.சூசன்னாவின் உளநிலைகளை நான் என் பார்வையில் கூர்ந்து தொகுத்துக்கொண்டேன். இதை என் புனைவாகவே கருதலாம். எங்கோ ஓரிடத்தில் நாம் நம்மை இழந்து நாம் நோக்குபவரின் இடத்தில் இருந்து நம்மை நிகழ்த்திக்கொள்ள தொடங்குகிறோம். ஒருவரை அறிய மிகச்சிறந்த வழி முறை அதுவே

சூசன்னா  பெட்ரோஸின் அந்த பொறுக்கித்தனத்திற்குப் பழகியபின் அதை அஞ்ச தொடங்கினாள். அதிலிருந்தது ஆற்றல், கூர்மை. உறைக்குள் இருக்கும் திபெத்திய வாள் போல. ஆற்றலும் கூர்மையும் இரக்கமற்றவை.

அவள் பெட்ரூஸை விரும்பினாள், ஆனால் அவர் தன்னுடன் இல்லாதிருக்கவேண்டும் என்றும் எண்ணினாள். அவர் எங்கோ இருக்க அவரை எண்ணிக் கொண்டிருப்பதையே மகிழ்ச்சியாக உணர்ந்தாள்.

அவருடன் அத்தனை அணுக்கமாக அத்தனை நாட்கள் அவள் கூடவே இருந்ததில்லை. அது அவளை பதறச்செய்தது. அவர் அவள் அறிந்த மனிதரே அல்ல. முற்றிலும் இன்னொருவர். அந்த உடலை கிழித்து திறந்து தான் பார்த்தே இராத ஒருவர் எழுந்துவிடுவாரோ என அவள் எண்ணினாள். ஆகவே அவருடன் உடல்சார்ந்து நெருக்கமாகச் செல்லும்போதே உள்ளத்தால் விலகிக்கொண்டாள்.

வேறெங்கோ தன் மனதை நிலைகொள்ளச் செய்ய முயன்றாள். ஒண்டேரியோவின் மாபெரும் நன்னீர் ஏரிகளை, ஊசியிலைக் காடுகளை, மேஃப்ளவர் பூக்கும் டொரொண்டோவின் சாலைகளை, தீப்பற்றி எரிவதுபோல இலைகள் பழுத்துச் சிவந்து பரவியிருக்கும் மேப்பிள் காடுகளை வலிந்து வலிந்து கற்பனையில் உருவாக்கிக் கொண்டாள்.

அது முதலில் மிகமிகக் கடினமாக இருந்தது. அவள் உள்ளம் அந்த வெண்ணிற வெறுமையிலேயே சிக்கிக் கிடந்தது. ஆனால் மெல்ல மெல்ல அதைப் பிடுங்கிக்கொள்ள முடிந்தது. ஏதேனும் ஒரு கடந்தகாலக காட்சியில் அவள் உள்ளத்தை பதியவைத்தாள். அதன்பின் அதை திட்டமிட்டு அணுவணுவாக விரித்துக்கொண்டாள். அதிகபட்சம் நாலைந்து நிமிடங்களில் அந்த உளச்சித்திரம் கலைந்து சூழ்ந்திருக்கும் பனிவெளி வந்து ஊடுருவும்.

ஆனால் அந்த கனவுவின் காலம் நீடித்துக் கொண்டே இருந்தது. பின்னர் ஒருமணிநேரம் வரை அவள் அந்த அகநிலத்தில் வாழமுடிந்தது. அவள் உடல் நலிந்து ஆற்றலை இழக்குந்தோறும் கனவுகளில் ஈடுபடுவது எளிதாயிற்று. நாளடைவில் கனவுகள் நெடுநேரம் நீடித்தன. பகலில் விழித்திருக்கையிலும் தன்னியல்பாக எழுந்து வந்து முற்றாக மூடிக்கொண்டன. கண்கள் நோக்கிழந்து வெறிக்க, முகம் மெழுகென்று அசைவிழக்க ,அவள் எங்கோ இருந்தாள்.

மெல்ல கனவும் நனவும் இணையாக அவள் பொழுதை எடுத்துக் கொண்டன. பின்னர் வெறும் கனவிலேயே சென்று கொண்டிருந்தாள். அது கட்டற்று பெருகிச் சென்று கொண்டிருந்தது அவள் எண்ணியிராத இடங்களுக்கெல்லாம் தூக்கிச் சென்றது. மிக முயன்று உடலில் எடையை கட்டிக்கொண்டு நீரில் மூழ்குவதுபோல மெய்யுலகுக்கு மீண்டு வரவேண்டியிருந்தது.

அவள் உடல்நிலை சீர்கெட்டபடியே வந்தது. முகம் பனியால் வெடித்தது. உதடுகள் இரு புண்பொருக்குகளாக ஆயின. தோலுறைச் சப்பாத்துக்குள் மென்மயிர்ப்பொதிக்குள் இருந்த கால்கள் புண்ணாகி இரு அழுகிய கிழங்குகள் போல மாறின. அவள் உடல் எடை குறைந்தபடியே சென்றது.

அவள் சார்ல்ஸுக்கு முலையூட்டிக்கொண்டும் இருந்தாள். அவன் அவள் உடலின் கொழுப்பையும் புரோட்டீனையும் உறிஞ்சி உண்டான். ஆகவே அவளுடைய தோல் வெளிறி, செதில்கள் படர்ந்து, கன்ன எலும்புகள் மேலெழுந்து, கண்கள் குழிக்குள் சென்று வெளுத்த பேயுரு போல ஆனாள். அவள் தன் முகத்தை பார்த்துக் கொண்டதே இல்லை. பின்னர் பார்த்தபோது அவளுக்கு அறிமுகமே இல்லாத ஒருத்தி கண்ணாடியில் தெரிந்தாள். கோதிக் காலகட்டக் கதைகளில் வரும் கொடூரமான சூனியக்காரக்கிழவி.

அவள் சார்லஸை மார்போடு அணைத்திருந்தாள். முடிந்தவரை அவனுக்கு முலைப்பாலையே ஊட்டினாள். தொடக்கத்தில் அவ்வப்போது மக்காச்சோள மாவு சூப்பையும் அளித்தாள். மக்காச்சோள சூப் அவனுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவன் அதை கக்கினான், அல்லது கழிந்தான். ஆகவே முதல் சிலநாட்களுக்குப்பின் வெறும் முலைப்பால்.

ஆனால் அவனுக்கு அது போதவில்லை. அவன் எந்நேரமும் பசியுடன் உறிஞ்சிக் கொண்டிருந்தான். முலைக்கண்களில் பால் வராதபோது கூச்சலிட்டு அழுதான். முலைக்கண்களை கடித்தான். அவனை அடித்து அவள் கூச்சலிட்டாள். பலமுறை தன் உடலில் இருந்து ஓர் ஒட்டுண்ணியை பிடுங்கி எடுப்பதுபோல அவனை அவள் விலக்கினாள். வெறியுடன் வசைபாடினாள். ஓரிருமுறை கடும் சினத்தால் மூளை அமிலம் பட்டதுபோல எரிய தூக்கி மலைச்சரிவில் வீசிவிடலாமா என்று வெறிகொண்டாள்.பின்னர் அதற்காக தன்னை சபித்து கண்ணீர்விட்டு அழுதாள்.

பெட்ரூஸ் அவனை ஒருமுறைகூட கையால் தொடவில்லை. “அவன் உன்னுடன் இருக்கவேண்டியவன். இங்கே உடலில் இருந்து உடலுக்கு நோய்கள் சில மாறக்கூடும். இன்னொரு உடல் அவனுக்கு நோயை அளிக்கும்” என்று சொல்லிவிட்டார்.

அவள் சிலசமயம் போர்வைக்குள் பரவும் உடல் வெப்பத்தால் தாகம் எடுத்து விடியற்காலையில் விழித்தெழுகையில் உளம்தெளிந்து இனிமையை உணர்வாள். சூழவும் வெண்பனியின் வெளிச்சம். மண்ணிலிருந்து எழும் நிலவொளி அது. நிழலற்றது. நோக்க நோக்க அது மெல்ல அதிர்வதுபோல் இருக்கும். மலைவிளிம்புக் கோடுகள் நீர்ப்பிம்பம் போல் நெளியும். அவள் அவற்றைப் பார்த்துக்கொண்டே இருப்பாள். நெதர்லாண்டின் பெரும் பசுக்களை போல மலைமுடிகள் தோன்றும். கருமையில் வெள்ளை வழிந்திருக்கும் வடிவம்.

எத்தனை இனியது. எத்தனை அழகானது. ஆனால் கொல்லும் நஞ்சு போன்றது. இரக்கமே அற்றது. இத்தனை அழகாக மரணத்தை ஏன் இறைவன் படைக்கவேண்டும்?. இத்தனை மகத்தானதாக, பேருருக்கொண்டதாக, அமைதியானதாக, சூழ்ந்துகொள்வதாக, சிறிதாக்கி பொருளற்றதாக்கி ஒவ்வொன்றையும் தன்னுள் இழுத்துக்கொள்வதாக?

இழுத்து என்ன செய்கிறது? எங்கோ கொண்டுசென்று வைத்துக்கொள்கிறது. ஐயமே இல்லை, எங்கோ கொண்டுசென்று சேர்க்கிறது. எவருமறியாத ஓர் இடத்தில். அவள் அழுதுகொண்டே இருந்தாள். பிரார்த்தனை புரியத் தோன்றவில்லை. முழுமையாகவே தோற்று கண்ணீர்விட மட்டுமே முடிந்தது.

அன்று சென்றுகொண்டிருக்கையில் அவள் பெட்ரூஸிடம் தன் புலரிப்பொழுதைப் பற்றிச் சொன்னாள். அந்த இனிய தரிசனத்தை.

பெட்ரூஸ் திகைப்புடன் நின்றுவிட்டார். “இதை எவரேனும் உன்னிடம் முன்னர் சொன்னார்களா?” என்றார்.

“இல்லையே” என்றாள்.

“நீ எங்காவது கேட்டிருக்கலாம்”

அவளுக்கு அவர் சொல்வது புரியவில்லை. “என்ன சொல்கிறாய்?”என்றாள்.

“இது இங்கே முன்னரே உள்ள ஒரு கதை” என்றார் பெட்ரூஸ். “இங்கே அப்படி ஓர் இடம் உண்டு என்பார்கள். இந்த திபெத்திய பனிவெளியை ஒரு மாபெரும் லென்ஸ் என்று கொண்டால் அதன் குவிமையம் அது. அதை ஷம்பாலா என்கிறார்கள்”

அவள் அதைக் கேள்விப்பட்டிருக்கவில்லை. “ஷம்பாலாவா? அப்படி ஓர் இடமிருக்கிறதா?”என்றாள்

“அது இங்குள்ள நம்பிக்கை. பழைய போன் மதத்தில் இருந்து அந்த நம்பிக்கை பௌத்தர்களிடமும் பின்னர் ஐரோப்பியரிடம் பரவியது. ஷம்பாலா என்பது ஒரு மாயநகரம். அங்கே பிறக்காதவர்களும் இறந்தவர்களும் வாழ்கிறார்கள். அங்கிருந்து வந்து இங்கே திகழ்ந்து அங்கே மீள்கிறார்கள். அங்கே அவர்களுக்கு ஒளிவடிவம்தான். அங்கே காலம் இல்லை. அங்குள்ளவர்கள் வெறும் எண்ணத்தால் இங்கே எங்கும் திகழமுடியும்”

அவள் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள். “இந்த திபெத்தியப் பனிவெளி ஒரு ஆடி என்றேனே, இதில் திகழும் நானும் நீயும் உட்பட எல்லாமே பொய்க்காட்சிகள். ஆடியின் குவிமையத்தில் இருக்கும் ஷம்பாலாதான் மெய்யானது. அங்கிருக்கும் உண்மையை இது திபெத் என்ற மாபெரும் மாயத்தோற்றமாக விரித்திருக்கிறது” என்று பெட்ரூஸ் சொன்னார்

“போதும், எனக்கு தலைசுழல்கிறது” என்று சூசன்னா சொன்னாள்.

ஆனால் அதைப்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள். மூன்றாம்நாள் அவள் அவரிடம் கேட்டாள் “பேட், உண்மையிலேயே அப்படி ஓர் இடம் உண்டா?”

“நீ என்ன பைத்தியமா? பைபிள் சொல்வதற்கு அப்பால் ஒன்று இருக்கக்கூடுமா?”

“பிறகு ஏன் அப்படி தோன்றுகிறது?”

“இந்த நிலம் உருவாக்கும் மனப்பிரமை அது. இந்த வெண்மை இதை ஒரு மாபெரும் ஆடி என்று நினைக்க வைக்கிறது. இங்கே பனிக்கோளங்களை நீ கூர்ந்து பார்க்கவேண்டும். அவை அவற்றுக்குப் பின்னால் உள்ள மிகச்சிறிய பொருட்களை பெரிய காட்சிகளாக விரித்து காட்டுகின்றன. அதை மக்கள் நெடுங்காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் நாம் இங்கே காண்பவை எல்லாம் இந்த பனிவெளி என்னும் ஆடிக்கு அப்பால் நுண்வடிவில் உள்ளன என்று கற்பனை செய்துகொண்டார்கள்.”

“இந்தப் பனிவெளியில் நான் இறந்தால் உண்மையில் ஷம்பாலாவுக்குச் செல்லவே விரும்புவேன்.”

“ஏசுவிடம் செல்ல விரும்ப மாட்டாயா?”

“பேட், ஏசு அங்கேதான் இருப்பார்.”

“உன் மனம் பேதலித்துவிட்டது… பேசாமல் வா.”

அந்த பயணம் முடிவே அற்றது போல் இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒன்று போலவே நிகழ்ந்தது. பனிவெளியில் நடக்க நடக்க நிலவேறுபாடுகள் அழிந்தன. நாள்வேறுபாடுகள் மறைந்தன. பொழுதுவேறுபாடும் தெரியாமலாயிற்று. தெரிந்ததெல்லாம் கால்வைப்பு மேலும் கால்வைப்பு மேலும் மேலும் கால்வைப்பு. வெண்மலைக்குமேல் இன்னொரு வெண்மலை.ஒவ்வொரு மலைகளுக்கு பின்னாலும் மலைகள்.

அவர்கள் கிளம்பி ஒரு மாதத்திற்குப்பின் அவர்களுடன் வந்த சீனர்களில் இருவர் காலையில் மறைந்துவிட்டிருந்தனர். அவர்கள் குதிரைகளையும் எடுத்துச் சென்று விட்டிருந்தமையால்தான் அவர்கள் விட்டுச் சென்றுவிட்டார்கள் என்று தெரிந்தது. திரும்பிச் செல்வதற்கு தேவையான பொருட்களையும் கொண்டு சென்றுவிட்டிருந்தனர்.

“அவர்கள் மனம் சோர்ந்திருப்பார்கள். இந்தப் பனிவெளியில் அத்தகைய சோர்வு வழக்கமானதுதான்” என்று பாட்ஸே சொன்னான்.

பதற்றத்துடன் தேடிக்கொண்டிருந்த பெட்ரூஸ் அவனுடைய பீளைபடிந்த சிறிய கண்களை சற்றுநேரம் நோக்கிக்கொண்டிருந்தார்.

அவர்களை பற்றி நினைக்க பொழுதில்லை. ஒரு பனிப்புயல் அடிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்தது. அதற்குள் மலைவிரிசல் ஒன்றை சென்றடைந்து உள்ளே நுழைந்து கொண்டாகவேண்டும்

நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் இருவர் விட்டுவிட்டுச் சென்றார்கள். மேலும் இரண்டு நாட்களுக்கு பின் மூவர். மீண்டும் இருவர். “இதுதான் நம் பயணத்தின் கடினமான பகுதி. மனம் சோர்வு கொள்கிறது. ஒருவர் விட்டுவிட்டுச் சென்றால் பிறரும் சென்றுவிடலாமென்னும் நம்பிக்கையை அடைகிறார்கள். ஆனால் அவர்கள் சென்று சேரப்போவதில்லை. அவர்களால் இந்தப் பனிவெளியை கடக்கமுடியாது” என்றார் பாட்ஸே.

நான்கு நாட்களுக்கு பின்னர் ஒருநாள் அவர்கள் மலைப்பிளவுக் குகை ஒன்றில் காலையில்  போர்வைக் குவியலுக்குள் கண்விழித்தபோது அவர்களை நோக்கி நீட்டப்பட்ட வாளுடன் செபோ நின்றிருந்தான். அவனுக்குப் பின்னால் பாட்ஸேயும் நோர்டேயும் நின்றிருந்தனர்.

செபோ “எழுந்து அமருங்கள்… நாங்கள் உங்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறோம்” என்றான்.

“என்ன?” என்று பெட்ரூஸ் கேட்டார்

“அந்த தங்கம் புதைக்கப்பட்டுள்ள இடத்தை நீங்கள் எங்களுக்குச் சொல்லவேண்டும்…” என்றான் செபோ

“இல்லை, நான் சொல்லமுடியாது. நான் சொல்லமாட்டேன் என்று உங்களுக்கு தெரியும்.”

“இங்கேயே உங்களை கொன்று போட்டுவிட்டுச் செல்வோம்” என்றான் செபோ.

“அதை எதிர்பார்த்தே வந்தோம். நாங்கள் செத்தாலும் சரி, தங்கம் இருக்கும் இடத்தைச் சொல்ல மாட்டோம்” என்று பெட்ரோஸ் சொன்னார்.

பாட்ஸே “வெள்ளையனே, நாங்கள் உங்களைக் கொல்ல வேண்டியதே இல்லை. இங்கேயே இப்படியே விட்டுவிட்டுச் சென்றாலே போதும், நீங்கள் பிழைக்கப் போவதில்லை” என்றான் “உங்களுக்கு உணவு நீர் எதையுமே நாங்கள் விட்டுவைக்கவில்லை.”

“ஆம், நான் அந்த புதையல் இருக்கும் இடத்தைச் சொன்னாலும் நீங்கள் என்னை உயிருடன் விடப்போவதில்லை” என்று பெட்ரூஸ் சொன்னார்.

“இல்லை, உங்களை கொல்லமாட்டோம் என்று வாக்குறுதி அளிக்கிறோம்”

“நான் உங்களை எப்படி நம்புவது? பாட்ஸே நீ அங்கிருந்து கிளம்பும் முன் மண்ணைத் தொட்டு எனக்கு சத்தியம் செய்து தந்தாய்.”

அவன் சிரித்து “நான் எல்லா சத்தியங்களையும் மண்ணைத் தொட்டே செய்கிறேன்… ஆனால் நான் விவசாயி இல்லை” என்றான்.

“நீதான் அந்த பணியாளர்களை மிரட்டி திருப்பி அனுப்பினாயா?”என்றார் பெட்ரூஸ்

“மிரட்டவில்லை. அவர்களிடம் தங்கம் புதையுண்டிருக்கும் இடத்தை ரகசியமாகச் சொன்னேன். கிளம்பிவிட்டார்கள்”

பெட்ரூஸ் சிரித்தார் “நானும் அப்படி ஒரு பொய்யைச் சொல்லவா?”

“நீ உண்மையைச் சொல்லவில்லை என்றால் உன்னை இப்போதே கொல்வோம்.”

“சரி கொல், நான் அதற்கு தயார்தான்.”

“உன் மனைவியையும் மகனையும் கொல்வோம்.”

“கொல்லுங்கள்.”

அந்த பேச்சு நடந்துகொண்டிருக்கையிலேயே சூசன்னா தன் ஆடைக்குள் இருந்து சிறிய கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்தாள். அதை நீட்டி அவள் சொன்னாள் “விலகிச் செல்லுங்கள் சரணடையுங்கள்… இல்லாவிட்டால் மூவரையும் சுடுவேன்.”

அப்படி ஒரு துப்பாக்கி அவளிடம் இருப்பதை பெட்ரூஸ் கூட அறிந்திருக்கவில்லை. அவரும் திகைத்தார். ஒருமுறை மட்டுமே சுடக்கூடிய சிறிய பிஸ்டல் அது. Aston’42. டங்கர் வழியாகச் சென்ற பிரிட்டிஷ் மலைப்பயணியான மாண்டேகு சிங்க்ளேயர் வெல்பி அதை அவளுக்குப் பரிசாக அளித்தார். அவள் அதை மறந்தே விட்டாள். கிளம்பும்போது நினைவு வந்து அதை எடுத்து தன் ஆடைக்குள் வைத்துக்கொண்டாள். ஒருமுறை கூட வெளியே எடுக்கவில்லை.

துப்பாக்கி அவர்களை அச்சுறுத்தியது. அவர்கள் முன்னரே துப்பாக்கி என்றால் என்ன என்று அறிந்திருந்தார்கள். அவர்கள் “சுடாதீர்கள்! சுடாதீர்கள்!” என்று கூவியபடி கைகளை தூக்கினார்கள்.

“வாளை கீழே போடு” என்று பெட்ரூஸ் செபோவிடம் சொன்னார். அந்த வாளையும் பாட்ஸேயின் குத்துவாளையும் நோர்டேயின் எறிகத்தியையும் வாங்கிக் கொண்டனர். அவற்றை குதிரைகளில் வைத்து கட்டினர்.ஆனால் அவர்களிடம் வேறு கத்திகள் இருக்க வாய்ப்பிருந்தது. ஆகவே பெட்ரூஸ் அந்த துப்பாக்கியை தன் கையிலேயே வைத்திருந்தார்.

அவர்கள் மீண்டும் கிளம்பினர். அவர்களை தங்களுக்கு முன் துப்பாக்கி முனையிலேயே செல்லவைத்தார். தென்படும் முதல் கிராமம் வரை அவர்களை கொண்டு செல்வது என்று பெட்ரூஸ் திட்டமிட்டார்.

ஆனால் மலைச்சரிவில் அவர்களை முன்னால் விட்டுக்கொண்டு செல்லும் அந்தப் பயணம் மிக ஆபத்தானது என்றும் தெரிந்திருந்தது. அதுவே நிகழ்ந்தது. ஓர் ஓடைக்கரையை அணுகியதும் செபோ சட்டென்று திரும்பி மலைப்பிளவு ஒன்றுக்குள் பாய்ந்தான்.

பெட்ரூஸ் “நில்… நில்! என்று கூவிக்கொண்டிருக்கையிலேயே அவர்கள் இருவரும் அவனை தொடர்ந்து சென்றனர். அவர்கள் ஏற்கனவே பிற குதிரைகளை தங்கள் குதிரைகளுடன் சேர்த்து கட்டியிருந்தனர். ஆகவே சரக்குப்பொதிகளுடன் அந்தக்குதிரைகளும் அவர்களை தொடர்ந்து ஓடின.பொதிகளும் வாள்களும் எல்லாம் போய்விட்டன.

அவர் ஒருமுறை சுட்டார். அந்த பதற்றத்தில் குண்டு குறி தவறியது. துப்பாக்கியின் ஓசை நெடுநேரம் இடியோசை போல கேட்டுக்கொண்டே இருந்தது. அது ஓய்ந்த போது அவர்களின் குதிரைகளின் குளம்படியோசை நெடுந்தொலைவில் கேட்டது.

அவர்கள் இருவரும், அவர்கள் அமர்ந்து பயணம் செய்த இரண்டு குதிரைகளுடன் குறைவான உணவுடன் வழிதெரியாத திபெத்திய பனிப் பாலையில் தனியாக விடப்பட்டனர். பெட்ரூஸ் முதல்முறையாக அவருடைய தன்னம்பிக்கையை இழந்து சலிப்புடன் தலையசைத்தார். ஆனால் சூசன்னா தைரியமாக இருந்தாள். “பார்ப்போம், இது கர்த்தரின் சோதனையாக இருக்கலாம்” என்றார்.

அந்தப் பாதையிலேயே தொடர்ந்து செல்வது என்று அவர்கள் முடிவெடுத்தனர். அவர்கள் அந்த மலைப்பாதையில் இரண்டு பகல்பொழுது பயணம் செய்தனர். இரவில் தங்குவதற்குரிய பாறை இடுக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே ஒரு பாறையின் ஓரமாக தங்கினர். பெரிய போர்வைச்சுருளை பாட்ஸேயின் கும்பல் எடுத்துச் சென்றுவிட்டிருந்தது. ஆகவே முடிந்தவரை எல்லா மென்மயிர்ப் போர்வைகளையும் ஆடைகளையும் தங்கள்மேல் போட்டுக்கொண்டு சுருண்டுகொண்டார்கள்

காலையில் எழுந்தபோது சார்ல்ஸின் உடல் வலிப்பு கொண்டிருப்பதை சூசன்னா கண்டாள். அவன் கைகால்கள் இழுத்துக் கொண்டிருந்தன. அவள் பெட்ரூஸ்சை உலுக்கி “பேட், சார்ல்ஸ்… சார்ல்ஸைப் பாருங்கள்” என்றாள்.

பெட்ரூஸ் சார்ல்ஸை தொட்டுப்பார்த்தார். அவர் முகம் மங்கலடைந்தது. “பார்ப்போம்” என்றார்.

“அவன் நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.. குளிர் அவனை பாதித்திருக்கிறது” என்று சூசன்னா சொன்னாள். “நம்மிடம் இருக்கும் மருந்து என்பது விஸ்கியும் அபினும்தான்.”

“அபினை குழந்தைக்கு கொடுக்கமுடியுமா?”

“தெரியவில்லை…. ஆனால் வெந்நீரில் சற்று விஸ்கி கொடுப்பது கொஞ்சம் பயன் அளிக்கலாம்.”

ஆனால் அடுப்பை பற்றவைக்க முடியவில்லை. காற்று சுழன்று சுழன்று வீசிக்கொண்டிருந்தது. அவள் விஸ்கி குப்பியின் மூடியிலேயே ஊற்றி சார்ல்ஸுக்கு அளித்தாள். குழந்தையின் உதடுகள் நீலம் பாரித்திருந்தன. அதன் முகம் வெண்களிமண் பொம்மை போல இறுகியிருந்தது. அதனால் விஸ்கியை உறிஞ்சவோ உண்ணவோ முடியவில்லை. அதன் வாயிலிருந்து அது கன்னங்களில் வழிந்தது.

அதன் விழிகள் இரு கண்ணாடிக் குண்டுகள் போல அசைவில்லாமலிருந்தன. சூசன்னா அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு பெரிய உலுக்கல். உள்ளே ஏதோ சரடு அறுந்தது போல. அதன் இடதுகால் நீட்டிக்கொண்டது. வாய் கோணலாகி அசைவிழந்தது.

சூசன்னா அதன் நெஞ்சை தொட்டுப்பார்த்தாள்.

பெட்ரூஸ் “என்ன?” என்றார்

“அவன் இப்போது இல்லை” என்று சூசன்னா சொன்னாள் “அவன் தன் வீட்டை சென்றடைந்துவிட்டான்.”

பெட்ரூஸ் சிலுவை போட்டுக்கொண்டார்.

அவள் அதை பார்த்துக் கொண்டே இருந்தாள். சின்னஞ்சிறிய உடல், சிறிய கைகள், சிறிய மூக்கு, சிறிய வாய். ஒரு ஆண்டுகூட அவன் மண்ணில் வாழவில்லை. அவன் விழித்திருந்த பொழுதே குறைவு. வெளியுலகை அவன் அறியவேயில்லை. கருப்பைக்குள் இருந்து தோல்பைக்குள் வந்தான்.அங்கிருந்து தன் உலகுக்கே மீண்டான்

அவள் நெஞ்சு மிகமிகமிகக் குளிராக இருந்தது. ஒரு பெரிய பனிக்கட்டி உள்ளே இருப்பதுபோல. சிந்தனைகளுக்கு தொடர்ச்சி இல்லை. வெறும் சொற்கள்.புழுக்கள் போல தழுவிக்கொண்டு தனித்தனியே நெளியும் சொற்கள்.

“நாம் இவனை அடக்கம் செய்துவிட்டு மேலே செல்லவேண்டியதுதான்.. நம்மிடம் இப்போது உணவு நீர் எல்லாமே குறைவு. வழியும் தெரியாது. இந்த வழி ஏதேனும் ஒரு ஊருக்கோ இடையர் முகாமுக்கோ செல்லக்கூடும். அதை நம்பி விரைந்து செல்வது மட்டும்தான் ஒரே வழி.” என்றார் பெட்ரூஸ்

சூசன்னா அந்தச் சொற்களை ஆறுதல் அளிப்பதாகவே உணர்ந்தாள். அந்த உணர்வைப் பற்றி பின்னர் வாழ்நாளெல்லாம் வியந்திருக்கிறாள். அந்தச் சமயம் அந்த உடலை எப்படியாவது கைவிட்டுவிட்டுச் செல்லவேண்டும் என்றுதான் தோன்றியது. அதற்கு வலுவான ஒரு சாக்கு தேவைப்பட்டது. எதையாவது செய்வதென்பதே பெரும் விடுதலையாக பட்டது.

பனியில் மண் பாறைபோல உறைந்திருந்தது. தோண்டுவதற்குரிய கருவிகளும் அவர்களிடம் இல்லை. ஆகவே சாலையோரப் புழுதிக்குவியல் ஏதேனும் இருக்குமா என்று தேடிச் சென்றார்கள். ஒரு மண்கூம்பை காட்டி பெட்ரூஸ் சொன்னார். “இங்கே அவனை அடக்கம் செய்வோம்… கர்த்தருடன் அவன் மகிழ்ந்திருக்கட்டும்”

அந்த மண்ணில் கையிலிருந்த சிறிய பாத்திரங்களைக் கொண்டு குழி எடுத்து அதில் சார்லஸின் சிறிய உடலை கிடத்தி புதைத்தனர். அவன் முகம் எதையோ எண்ணி வருந்துவதுபோல் இருந்தது. மண்ணால் முகத்தை மூடும்போது சூசன்னா பார்வையை விலக்கிக் கொண்டாள்

பெட்ரூஸ் பைபிளில் இருந்து சில வரிகளை வாசித்தார். ஒரு கழியை உடைத்து சிலுவையாக ஆக்கி அதன்மேல் வைத்துவிட்டு அவர்கள் முன்னால் சென்றனர்.

முக்தா சொன்னார். திபெத்தின் மலைமடிப்புகளினூடாக சிறு பூச்சிகளாக ஊர்ந்து கொண்டிருக்கையில் நான் கேட்டேன் “ஆடம், நீ இதற்காகவா திபெத் செல்கிறாய்? இத்தனை செலவில், இத்தனை கஷ்டப்பட்டு?”

“ஆமாம், அதற்காக மட்டும்தான். ஆனால் சொன்னால் இதை எவரும் நம்பமாட்டார்கள்… ஆகவே சொல்வதில்லை. இந்திய ராணுவத்திலிருந்து நான் விடுவித்துக் கொண்டேன். இந்தியாவில் நினைத்தபடி சுற்றும் வாய்ப்பு குறைந்துவிட்டது. எனக்கும் நாற்பத்தொன்பது வயது. இன்னும் சில ஆண்டுகள் கடந்தால்கூட என்னால் முடியாமல் போகலாம். ஆகவே கிளம்பிவிட்டேன்.

“ஏன்” என்று நான் கேட்டேன் “அவனை தேடிப்போக என்ன காரணம்?”

“தெரியவில்லை. திபெத் செல்வதற்கு ஒரு காரணம் தேவை என்பதனாலாக இருக்கலாம்” என்ற ஆடம் “சரி நீ எதற்காகச் செல்கிறாய்?” என்றான்.

“உன்னளவுக்கு காரணம்கூட எனக்கு இல்லை, நான் சும்மா செல்கிறேன். திபெத்துக்கு என்று அல்ல எங்கு வேண்டுமென்றாலும் நான் செல்வேன். இலக்கே இல்லை” என்றேன்.

“இலக்கு இருப்பது நல்லது அல்லவா?” என்றான் ஆடம் “குறைந்தது திட்டம் வகுப்பதற்காகவாவது உதவும்”

“ஆம், அதுதான் மேற்குக்கும் கிழக்குக்குமான வேறுபாடு” என்று நான் சொன்னேன்.

டெம்ஜோக்கில் இருந்து கிளம்பிய எங்கள் குழு குறுகலான மலையிடைவெளிகள் வழியாக சிறிய ஒரு எறும்புக்கூட்டம் போலச் சென்றது.

இந்தமலைப் பாதைப் பயணத்தில் நம் குதிரைகளின் காலடியோசை நம்முடன் நாமறியாத எவரோ வந்துகொண்டிருப்பதுபோல பிரமையூட்டுகிறது.அது பாறைகளால் எதிரொலியாக திருப்பி அளிக்கப்படும்போது மலைகள் நம்மிடம் பேசுவதுபோல தோன்றுகிறது. நாம் அமைதியாகச் செல்ல வேறு ஏதோ இரு பேரிருப்புக்கள் தங்களுக்குள் உரையாடிக்கொண்டிருப்பதாக உள்ளம் மயங்குகிறது

இமையமலையின் வழி என்று சொல்வது பனி உருகி வழிந்த ஆறுகள் உருவாக்கும் ஆழமான பள்ளங்கள்தான். அந்த ஓடைகளை ஒட்டி ஒற்றையடிப்பாதை செல்லும். சில இடங்களில் அந்த ஓடை அருவியென ஆகும். அங்கே மேலேறிச் செல்லவேண்டும்.

கழுதைப்பாதை Z வடிவில் மேலேறிச்செல்வது. அதன்மேல் அமர்ந்திருக்கையில் ஒருபக்கம் பாதாளம் நோக்கிய சரிவு வரும். மறுபக்கம் மேலேறிச் செல்லும் பாறைக்குவியல். ஆனால் நம் கண்கள் கீழே பாறைச்சரிவின் ஆழத்தில் ஒழுகிக் கொண்டிருக்கும் ஆற்றை நோக்கி இறங்கிச் செல்லும் பள்ளத்தையே நோக்கிக் கொண்டிருக்கும்.

விளிம்புகளில் பனி உறைந்திருக்க நடுவே  ஓடும் நீர் மேலிருந்து பார்க்கையில் மின்னும் வெள்ளி வாள் போல தெரியும். அது விரிசலிட்டு உடையும்போது ஏற்படும் கண்ணாடியோசைக்கே ஒரு கூர்மை உண்டு. அடிவயிற்றில் அந்த பிளேடு வந்து கிழிப்பதுபோல தோன்றும்.

திபெத்தின் அப்பகுதியில் சிறிய ஏரிகள் உண்டு. அவை தற்காலிகமானவை. மலைச்சரிவில் மண் இடிந்து விழுந்து நீரின் வழிமூடுவதனால் உருவாகி வருபவை. அந்த தடை ஊறி உடைந்தால் சட்டென்று அந்த ஓடைகளில் நீர்ப்பெருக்கு எழும். அதிலிருந்து தப்ப முடியாது.

ஆனால் மலைவணிகர்கள் எங்கே எந்த ஏரி நிறைந்திருக்கிறது, எந்த அளவுக்கு அதன் கரை வலுவானது என்பதை கணித்து வைத்திருப்பார்கள். உடையும் தன்மை கொண்ட கரையை சற்றே உடைத்து நீர் வெளியேற வழிசெய்து பாதுகாப்பாக ஆக்கிக்கொள்வதும் உண்டு.

நிறைந்து ததும்பி விம்மிக்கொண்டிருந்த ஏரிகளின் விளிம்புகள் வழியாகச் சென்று கொண்டிருந்தோம். மலையிடுக்குகளில் இரவுகளில் தங்கினோம். நான்கு அடுக்குகொண்ட போர்வையை போர்த்திக் கொண்டு தூங்கி காலையில் விழித்துப் பார்த்தால் அதன்மேல் பனிப்படலம் பொருக்காகவும் கட்டிகளாகவும் படிந்திருக்கும். எடுத்து தூசியை உதறுவதுபோலவே உதறி சற்றுநேரம் வைத்திருந்தால் காற்றிலேயே நன்றாக உலர்ந்துவிடும்.

சூழலில் இருக்கும் நீராவி முழுக்க பனியாக உதிர்ந்து விடுவதனால் இங்கே காற்று மிகமிக வரண்டது. சூழ்ந்திருக்கும் பனியின் நடுவே மூச்சுவிடுவதனால் மூக்குத்துளைகள் வரண்டு வெடிக்கும். காற்றுவெளி நீராவியோ தூசியோ இல்லாமல் மிகமிகத் தெளிந்தது என்பதனால் வெயிலொளி கண்களைக் கூசவைக்கும். பனிபடிந்த மலைச்சரிவுப் பரப்புகள் கண்ணாடிவெளிபோல சுடர்கொண்டிருக்கும். நேர்விழியால் பார்க்கவே முடியாது. கண்கள் கலங்கி வழியும்.

அன்று கருப்புக் கண்ணாடியெல்லாம் இல்லை. ஆடம் ஒரு கண்ணாடி அணிந்திருந்தான், அது ராணுவத்திற்குரியது. நானும் மற்றவர்களும் மெல்லிய கருப்புத்துணியை முகத்தின்மேல் தொங்கவிட்டு அதன் வழியாகவே அனைத்தையும் பார்த்தோம். உண்மையில் அது மிக நல்லது. நம் மூச்சிலிருக்கும் நீராவி நம் முகத்தருகே குளிர்வதனால் நம் மூக்கும் உதடுகளும் வரண்டு போகாமலிருக்கும்

இரவில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஆடம் வெள்ளையர்களுக்குரிய, குறிப்பாக பிரிட்டிஷாருக்குரிய, தன்னிறுக்கம் நிறைந்தவன். நான் வேறுநிறம் கொண்டவன்கூட. ஆகவே பெரும்பாலும் அவன் என்னிடம் எதையும் பகிராமலேயே பலநாட்கள் இருந்தான். மிகமிக மெல்லத்தான் தன்னை விரித்துக் கொண்டான். ஆனால் கீழைநாட்டவர்போல தற்பெருமையையோ குலப்பெருமையையோ சொல்லிக்கொள்ளவில்லை. தன்னைப்பற்றிய பிரமைகளை முன்வைக்கவில்லை. குறிப்பாக தன்னிரக்கத்திற்குள் செல்லவே இல்லை

ஆடம் அவனுடைய பல்வேறு நம்பிக்கைகள், பயணங்கள் பற்றிச் சொன்னான். தீவிரமான கிறிஸ்தவப் பின்னணியில் இருந்து வந்த அவன் மெல்லமெல்ல தியோசொஃபிக்கல் சொசைட்டியின் ஆதரவாளனாக ஆகிவிட்டிருந்தான். அவர்களின் பொதுநிகழ்ச்சிகளில் பங்கெடுக்கத் தொடங்கி அவர்களின் ரகசியச் சடங்குகளில் ஈடுபடுபவனாக மாறியிருந்தான்.

1934-ல் அவன் லண்டன் சென்றபோது பிரான்ஸுக்குச் சென்று பியூசொல்யூ நகரில் வாழ்ந்த இந்திய தாந்த்ரீகவியல் நிபுணரான சர்.ஜான் வுட்ரோஃபை அவருடைய இல்லத்தில் சந்தித்திருந்தான். ஆர்தர் ஆவ்லோன் என்றபேரில் அவர் எழுதிய கட்டுரைகள் இந்திய தாந்த்ரீகவியலை ஆவணப்படுத்தியவை.

அவர் அவனிடம் ஆறுமணிநேரம் இந்தியாவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அவருடைய பயணங்கள் பற்றி, அவர் சந்தித்த திகைப்பூட்டும் ரகசிய ஆற்றல்கள் கொண்ட மனிதர்களைப் பற்றி.அந்தப்பேச்சு திபெத்தின் வஜ்ராயன பௌத்தம் பற்றி திரும்பியது. சிந்துநாட்டில் பிறந்த பத்மசம்பவர் திபெத்துக்குச் சென்று வஜ்ராயன பௌத்தத்தை திபெத்திய பௌத்தமாக ஆக்கினார்.

அவரை அங்கே செல்லவைத்தது அவர் அடைந்த ஒரு தரிசனம். அது ஷம்பாலா என்னும் நகரம் என்றார்  ஜான் வுட்ரோஃப்

ஆடம் என்னிடம் “ஷம்பாலா பற்றி நீ என்ன எண்ணுகிறாய்?” என்று கேட்டான். எதிர்பாராமல் அவன் அப்படிக் கேட்டதனால் நான் திகைத்தேன்.

“என்ன?” என்றேன்

“ஷம்பாலா என்னும் அறியப்படாத நிலம் பற்றி?”

நான் அப்போது அதைப்பற்றி ஓரளவுதான் தெரிந்து வைத்திருந்தேன். “அது திபெத்தில் உள்ள ஓர் கற்பனைநகரம், ஒரு மாயநிலம்” என்றேன்.

“கற்பனை அல்ல” என்று அவன் சொன்னான்.

அந்த குரலில் இருந்த அசாதாரணமான உறுதி என்னை திகைக்கச் செய்தது. நான் அவன் மேலும் சொல்வதற்காகக் காத்திருந்தேன்.

“இந்து புராணங்களில் ஒவ்வொன்றும் முன்னரே சொல்லப்பட்டுள்ளது. சத்யபாலபுரம் என்பதுதான் ஷம்பாலா என மருவியிருக்கிறது” என்று ஆடம் சொன்னான் “இந்து மரபின்படி கிருதயுகத்திற்கு முன்பிருந்தது சத்யயுகம். ஒவ்வொரு யுகத்திலும் அதற்கு முந்தைய யுகங்களில் நீடிக்கும் சிலபகுதிகள் உண்டு. இது கலியுகம், ஆனால் இங்கேயே துவாபர யுகத்தில் நீடிப்பது காசி. திரேதாயுகத்தில் நீடிப்பவை கேதார்நாத் அமர்நாத் போன்றவை. கிருதயுகத்தில் நீடிப்பது திபெத். அதற்கும் முந்தைய சத்யயுகத்தைச் சேர்ந்தது ஷம்பாலா.”

நான் அதை ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டேன். அவன் நெடுங்காலமாக அதில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. ஆர்தர் ஆவலோனுக்குப் பின்னர் வெள்ளையர் இந்திய தொன்மவியலில் குறிப்பாக தாந்த்ரீகத்தில் ஈடுபாடு காட்டுவது பெருகியிருந்தது.

திபெத்திய மொழியிலும் சீனமொழியிலும் ஷம்பாலா என்று சொல்லப்படும் இடம் பற்றிய நிறைய குறிப்புகள் உள்ளன. திக்ஸே உள்ளிட்ட மடாலயங்களில் தொன்மையான போன் மதத்தின் சுவடிகளில் ஏராளமான விவரிப்புகள் உள்ளன. டக்ஸக் ஒல்மோ லங் ரிங் என அவை அந்த இடத்தை குறிப்பிடுகின்றன. நூற்றுக்கணக்கான டாங்காக்களில் ஷம்பாலா அழகான ஓவியங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. நானே நிறையப் பார்த்திருக்கிறேன்

திபெத்திய தாந்திரீக நூலான காலசக்ர தந்தரா ஷம்பாலா பற்றி விரிவாகச் சொல்கிறது. அனுத்தரயோக தந்த்ர நூல்கள் என நூற்றெட்டு மறைஞான நூல்கள் திபெத்திய பௌத்தத்தில் பிறர் அறியாமல் பேணப்படுகின்றன. அதிலொன்று காலசக்ர தந்த்ரம் என்னும் நூல். அதன் அடிப்படையில்தான் திபெத்தின் காலசக்ரம் என்னும் காலக்கணிப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளது. அதை திபெத்திய மடாலயங்களின் வாயிலில் வலப்பக்கச் சுவரில் நீ ஓவியங்களாக பார்த்திருக்கலாம்.

டோல்போவின் புத்தர் என்று அழைக்கப்படும் ஷெராப் கியால்ஸ்டன் காலசக்ரதந்த்ராவுக்கு எழுதிய உரையில் ஷம்பாலாவின் இடம், அங்கே செல்லும் வழி, அங்கே சென்று மீண்டவர்கள் பற்றி பேசப்பட்டுள்ளது. ஷம்பாலா மைத்ரேய புத்தர் நுண்வடிவில் உறையும் இடம். அங்கே அவர் ஒரு ஊசிமுனையளவுள்ள ஒளிப்புள்ளியாக திகழ்கிறார். அந்த ஒளியால் அந்த நிலமே ஒளியாலானதாக மாறிவிட்டிருக்கிறது.

இந்த உலகில் பௌத்த அறம் அழிந்து அறச்சக்கரத்தின் சுழற்சி நின்றுவிடும் நிலை ஒன்றுவரும். அப்போது ஷம்பாலாவில் ஒளி மிகுந்தபடியே வரும். அது இன்று எங்கிருக்கிறதென்று சாதாரணமாக நம்மால் பார்க்க முடியாது. சிலதருணங்களில் பிப்ரவரி மாதத்தின் உறைபனியில் ஷம்பாலாவில் இருந்து குளுமையான வெண்ணிற ஒளி ஊடுருவி நம் ஊர்களுக்குள் நிலவின் வெளிச்சம் போல நிறைவதுண்டு. பத்து பௌர்ணமிகளின் வெளிச்சம் அதில் இருக்கும். ஆனால் சிலரே அதைப் பார்த்திருப்பார்கள்.

ஷம்பாலா ஒளிகொள்ளுந்தோறும் எப்போதும் அந்த வெளிச்சம் இருக்கும். இரவுகளும் பகல்களும் வேறுபாடில்லாமலாகும். ஷம்பாலாவிலிருந்து ஒளி உலகை முழுமையாக மூடும்போது மைத்ரேய புத்தர் அங்கே இருந்து வானில் எழுவார். இமையப் பனிமலைகளுக்கு மேல் அவர் வானை நிறைக்கும் பேருருவராக தோன்றுவார். ஒருகோடி விண்மீன்களை அவர் வைரங்கள் போல தன் மணிமுடியில் அணிந்திருப்பார்.

வங்காளத்தின் வைணவ தாந்த்ரீக நூல்களில் ஷம்பாலா பற்றி சொல்லப்பட்டுள்ளது. அங்கே விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி வடிவம் கருவடிவில் குடிகொள்கிறது. அங்கிருந்து பேருருக்கொண்டு எழுந்து அது உலகை மூடும். இந்த பூமி பெரும்பிரளயத்தால் அழிந்தபின் கல்கி அவதாரத்திலிருந்து புதிய யுகம் உருவாகும். அது சத்யயுகம். அந்த எழவிருக்கும் சத்யயுகத்திற்கான விதைச் சேகரிப்புதான் அங்கே ஷம்பாலாவாக அமைந்திருக்கிறது.

பனாரஸ் பல்கலையில் நான் ஓர் அமெரிக்க இளைஞனைப் பார்த்தேன்.லியோபால்ட் ஃபிஷர் என்று பெயர். துறவுபூண்டு அகேகானந்த பாரதி என்று பெயர் சூட்டிக்கொண்டிருக்கிறான். அவன் ஷம்பாலா என்னும் மறைநகர் பற்றிய செய்திகளை தென்னகத்து தாந்த்ரீகநூல்களில் இருந்தும் திரட்டி வைத்திருக்கிறான்.என்றாவது அவனை நீ சந்திக்கலாம்.

ஷம்பாலா வெறும் கற்பனை அல்ல. பதினேழாம் நூற்றாண்டு போர்ச்சுக்கீசிய மிஷனரியான எஸ்டேவோ காசெல்லா அதைப்பற்றி எழுதியிருக்கிறார். ஹங்கேரிய ஆய்வாளர் சாண்டோர் கொரோஸி ஸோமா அதை பற்றி எழுதி அங்கே செல்லும் வழியைக்கூட விவரித்திருக்கிறார். தியோஸொபிக்கல் சொசைட்டியின் மேடம் பிளவாட்ஸ்கி அதன் தன் நுண்விழியால் கண்டதாகவே எழுதியிருக்கிறார்.

பலர் ஷம்பாலாவை தேடி நீண்ட பயணங்கள் செய்திருக்கிறார்கள். ரஷ்ய ஓவியரான நிகோலஸ் ரோரிச்சும் அவர் மனைவி ஹெலெனா ரோரிச்சும் இணைந்து ஷம்பாலாவை தேடி 1924 முதல் நான்காண்டுகாலம் ஒரு பெரிய ஆய்வுப்பயணத்தைச் செய்திருக்கிறார்கள். நான் 1931ல் ஹெலெனா ரோரிச்சை குல்லுவில் அவருடைய இல்லத்தில் சந்தித்திருக்கிறேன்.

அதற்குப் பின்னர் தெரிந்தும் தெரியாமலும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஷம்பாலாவை தேடிச் சென்றிருக்கிறார்கள். ரஷ்யாவின் கம்யூனிஸ்டு ஆட்சி தன் உளவுத்துறையை பயன்படுத்தி விரிவான ஆய்வுகளைச் செய்திருக்கிறது. எவருமே சென்றடையவில்லை. ஆனால் அனைவருமே ஒரு சிறு புதியசெய்தியையாவது கண்டடைந்திருக்கிறார்கள்.

ஆடம் உத்வேகத்துடன் சொன்னான் அது கருநிலம். இங்கே இன்று திகழ்பவை ஒவ்வொன்றும் அங்கே கருவடிவில் உள்ளன. இங்கிருந்து அரியவை சில அங்கே சென்று சேர்வதும் உண்டு. ஷம்பாலா என்று ஒரு இடம் உண்டு, ஐயமே இல்லை. மகத்தான உள்ளங்கள் பல அந்த மெய்யைச் சென்று தொட்டிருக்கின்றன.

நான் ஒன்றும் சொல்லவில்லை. கண்மூடி படுத்திருந்தேன்.

“நீ நம்பவில்லையா?” என்றான்.

“நாம் நம்பிக்கைகளை பகிர்ந்துகொள்ளப் போகிறோமா என்ன? ஒருவர் நம்பிக்கையை இன்னொருவர் ஏற்றாகவேண்டுமா?”

“வேண்டாம். நான் உன்மேல் எதையும் சுமத்தவில்லை. ஆனால் சில விந்தையான நிகழ்வுகளை நான் சொல்லியாகவேண்டும்” என்று ஆடம் சொன்னான்.

“ஆடம், நீ விந்தையான செய்திகள் அல்லாத எதையாவது சொல்லியிருக்கிறாயா?”

ஆடம் வெடித்துச் சிரித்துவிட்டான். அந்தச் சிரிப்புதான் ஆங்கிலேயரை உலகின் அனைத்து மக்களிடமிருந்தும் வேறுபடுத்துகிறது.

[தொடர்ச்சி கரு [குறுநாவல்]- பகுதி 2 ]

தொடர்புடைய பதிவுகள்

கரு [குறுநாவல்]- பகுதி 2

$
0
0

ஷம்பாலா நிகோலஸ் ரோரிச்

கரு [குறுநாவல்]- பகுதி 1 – 

தொடர்ச்சி….

முக்தா சொன்னார். ஆடம் என்னிடம் அன்று திபெத்திற்குள் பயணம் செய்த முதல் இரு பெண்களின் கதையையும் அவன் நோக்கில் மேலும் சொன்னான். விந்தையான முறையில் அவன் அந்த இருகதைகளையும் கோத்திருந்தான்.

சூசன்னா கார்சன் ரிஞ்ச்ஹார்ட்டின் மகன் சார்ல்ஸ் கார்சன் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இறந்தான். அது நிகழ்ந்தது நாக்சு நகரில் இருந்து வடக்கே எழுபது மைல் தொலைவில் இருந்த ஒரு மலைப்பாதையில். 14850 அடி உயரத்தில், பனிமலைகளின் உச்சியில்.

அவர்கள் தன்னந்தனியாக அந்த மலைப்பாதையில் நடந்து கொண்டிருந்தனர். ஓரிரு நாட்களுக்கே அவர்களிடம் உணவும் நீரும் இருந்தது. சுற்றிலும் மானுடவாழ்க்கைக்கான எந்த தடையத்தையும் அவர்கள் காணவில்லை. அவர்கள் தனித்து, களைத்து, உயிரின் துளி மட்டுமே உடலில் எஞ்ச நடந்து கொண்டிருந்தனர்.

ஓர் இடத்தில் சூசன்னா கீழே விழுந்துவிட்டார். மேலே செல்வதற்கான உடலாற்றலை இழந்திருந்தாள். அதைவிட உள்ளம் நம்பிக்கை இழந்திருந்தது. பெட்ரூஸ் அவளை ஆறுதல்படுத்தி கூட்டிக்கொண்டு செல்ல முயன்றார்.

“இங்கே இப்படி விழுந்து கிடந்தால் நாம் செத்துவிடுவோம்” என்று பெட்ரூஸ் சொன்னார்.

“இங்கிருந்து நடந்தாலும் நாம் உயிர்பிழைக்கப் போவதில்லை. நம்மிடம் ஒருநாளுக்குரிய உணவே உள்ளது… கண்ணுக்கெட்டிய தூரம்வரை எவரும் இல்லை.”

“அருகே எவரேனும் இருப்பார்கள், பார்போம்” என்றார் பெட்ரூஸ்.

“மனிதர்கள் இருந்தால் வானத்தில் ஒரு பறவையாவது தென்படும்.. இல்லை, இது சூனியமான பனிவெளி… இங்கே எவருமே இல்லை” என்று சூசன்னா சொன்னாள்.

“நாம் கடைசிவரை முயலவேண்டும் சூசி… அதை நாம் பலமுறை பேசியிருக்கிறோம்.”

“ஆமாம், இதுதான் என் கடைசி எல்லை… இனி நான் அமைதியாக என் தேவனிடம் என்னை அளிக்க நினைக்கிறேன்.”

பெட்ரூஸ் என்ன செய்வது என்று அறியாமல் அவள் அருகே அமர்ந்திருந்தார். அவருக்குள் துயரமும் எரிச்சலும் நிறைந்திருந்தது.

சூசன்னா ”நீங்கள் என்னை விட்டுவிட்டுச் செல்லலாம் எனக்கு அதில் வருத்தமில்லை என்று புன்னகையுடன்  சொன்னாள்.

“அதெப்படி போகமுடியும்?” என்றார் பெட்ரூஸ்.

“இந்த வெறுமையின் வெளியில் பொய்யும் உண்மையும் ஒன்றுதான்” என்று சூசன்னா சொன்னாள். “நான் அறிவேன், உங்களுக்கு நான் ஒரு பொருட்டே அல்ல.”

பெட்ரூஸ் அதை மறுக்கவில்லை.

“உங்களுக்கு எந்த மனிதரும் ஒரு பொருட்டல்ல. மெய்யான தேவனே கூட பொருட்டல்ல” என்று மீண்டும் சூசன்னா சொன்னாள். அப்படிச் சொல்லும்போது வலுவான ஒரு மறுப்பை எதிர்பார்ப்பது மனித வழக்கம், ஆனால் அவள் அப்படி எதிர்பார்க்கவில்லை.

“சூசி , நீ சொல்வதை நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் எனக்கு நானே கூட ஒரு பொருட்டு அல்ல… அதனால் நீ சொல்வதெல்லாம் சமன்படுத்தப்பட்டு விடுகிறது” என்றார் பெட்ரூஸ்.

அவரைப் பார்த்து சூசன்னா புன்னகைத்தாள். அப்போது போல அவருக்கு மிக அருகே, மிகமிக இணக்கமாக அவள் தன்னை உணர்ந்ததே இல்லை. அவர் கையை பற்றியபடி “நான் உன்னை காதலிக்கிறேன் பேட்” என்று அவள் சொன்னாள்.

பெட்ரூஸ் புன்னகைத்தார்.

‘ஏனென்றால் நீ சாத்தான்”

பெட்ரூஸ் கண்களில் நீர் படர சிரித்தார்

“எனக்கு சற்று நீர் வேண்டும்… பிராந்தி இருக்குமென்றால் அது” என்றாள்

பெட்ரூஸ் திரும்பி பார்த்தபோது அவருடைய குதிரை மெல்ல நடந்து மிக விலகிச் சென்றுவிட்டிருந்ததைக் கண்டார். அதன்மேல் பொதிகள் இருந்தன

“நான் அதை கட்டாமல் வந்துவிட்டேன்… இரு” என்று அவர் அதன்பின் சென்றார். அவர் வருவதைக் கண்டதும் அது விரைந்து நடக்கத் தொடங்கியது.

சூசன்னா கண்களை மூடிக்கொண்டு மூச்சிரைத்தபடி பாறையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். பனியின் குளிர் உடலில் காய்ச்சலாக வெளிப்பட்டது. அந்த வெப்பத்தில் நெற்றியும் கண்களும் கொதித்தன.

அவள் கண்களை திறந்தபோது நீர்ப்பிம்பம்போல அலைபாய்ந்த காட்சியில் ஒருவன் மலைச்சரிவில் இறங்கி வருவதைப் பார்த்தாள்.

“யார்? அது யார்?”என்றாள்.

அவள் அருகே எவரும் இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தாள். அவன் மிகமெல்ல மலைச்சரிவில் இறங்கி வளைந்து அவளை நோக்கி வந்தான்.

ஆச்சரியமாக அவன் ஒரு வெள்ளையன். இருபது வயதான இளைஞன். நீண்ட சிறிய முகம். கோடு போன்ற உதடுகள். பச்சைக்கண்கள். சிவப்புத் தலைமயிர்

அவன் அருகே வந்து புன்னகைத்தான்.

சூசன்னா பதற்றத்துடன் “உதவி… உதவி நாங்கள் இங்கே சிக்கிக் கொண்டிருக்கிறோம். வழிதவறிவிட்டிருக்கிறது.. நீ ஆங்கிலம் பேசுவாயா? பிரெஞ்சு?” என்றாள்.

அவன் புன்னகைத்து சொல்லுங்கள் என்பதுபோல தலையசைத்தான்.

“அருகே எங்கே கிராமம் இருக்கிறது? எங்கே நாங்கள் செல்லவேண்டும்?”

அவன் தெற்கே செல்லும் ஒரு சிறிய மலையிடுக்கைச் சுட்டிக்காட்டினான்.

“நீ என்ன செய்கிறாய் இங்கே? நீ யார்? இங்கே ஏதாவது மலையேற்ற முகாமில் இருக்கிறாயா?”

அவன் ஏதும் சொல்லாமல் தலைவணங்கி முன்னால் சென்று மறைந்தான்.

அவள் அவனை பதைப்புடன் பார்த்திருக்கையில் பெட்ரூஸ் கையில் குதிரையின் கடிவாளத்தை பிடித்தபடி வந்தார். “இது சலிப்புற்றிருக்கிறது. நம்மை விட்டுவிட்டுச் செல்ல விரும்புகிறது” என்றார்.

“பேட், நாம் செல்லவேண்டிய வழி அது. அந்த மலைப்பிளவு…”

“அதற்கப்பால் வழி இல்லை… அது செங்குத்தான மலைவிளிம்பு” என்றார் பெட்ரூஸ் “இந்தவழியாகச் செல்வோம்… நமக்கு வேறுவழியில்லை”

“இல்லை, அதுதான் வழி. இங்கே இப்போது ஒர் இளைஞன் வந்தான். அவன் அந்த வழியை எனக்குச் சுட்டிக்காட்டினான்.அவன் இங்கேயே இருப்பவன், அவனுக்கு தெரிந்திருக்கும்.”

“உளறாதே… இங்கே எவர் வரமுடியும்? வந்தால் அவன் எங்கே?”

“அவன் அந்த வழியாகச் சென்றான்… அவன் இங்கே எங்கோ அருகில் இருப்பவன்” அப்போதுதான் அவள் அவனுடைய தோற்றத்தை நினைவுகூர்ந்தாள். “அவன் முறையான குளிராடைகள் கூட அணிந்திருக்கவில்லை.”

பெட்ரூஸ் அவளை கூர்ந்து நோக்கி “சொல், அவன் எப்படி இருந்தான்?” என்றான்.

“அவன் வெள்ளையன்… “ என்றசூசன்னா ‘அவன் எனக்கு அறிமுகமான முகம் கொண்டிருந்தான்” என்றாள்.

பெட்ரூஸ் புன்னகைத்து “சரி… நாம் கிளம்புவோம். நீ பிராந்தியை குடி… இந்த ஒரு மிடறு மட்டும்தான் மிஞ்சியிருக்கிறது” என்றார்.

அவள் அந்த பிராந்தியை வாயில் நெடுநேரம் வைத்திருந்து மெல்ல மெல்ல உள்ளே இறக்கியபின் கையூன்றி எழுந்துகொண்டாள். “பேட், எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது… அதுதான் வழி. அந்த இளைஞன் வழிகாட்டியிருக்கிறான்… செல்வோம்”

பெட்ரூஸ் ஒன்றும் சொல்லவில்லை. அவளை தூக்கி குதிரையில் ஏற்றினார். அவரும் ஏறிக்கொண்டார்.

ஆனால் அந்த மலைப்பிளவை அடைந்ததும் அவர் நேராகச் சென்றார்.சூசன்னா கூச்சலிட்டாள். “பேட் என்ன செய்கிறீர்கள்? இதுதான் வழி… இதுதான்…”

அவர் “நீ மனம் குழம்பிவிட்டாய்… பிரமைகள் வரத்தொடங்கிவிட்டன… அது மலையுச்சியின் விளிம்பு. அந்தப்பக்கம் நீயே பார், மேகம் நின்றிருக்கிறது”

“பேட் அதுதான் வழி… அதுதான். எனக்கு தெரியும். அந்தப் பையன் காட்டிய வழி அதுதான்”

“பேசாமல் வா” என்று பெட்ரூஸ் அதட்டினார்.

சூசன்னா சட்டென்று குதிரையை தட்டிச் செலுத்தி விசைகூட்டி அந்த மலைப்பிளவு நோக்கிச் சென்றாள். குளம்படி ஓசை எழுந்தது. மணலும் கூழாங்கற்களும் தெறித்தன.

“நில், சூசி, நில்!” என்று கூவியபடி பெட்ரூஸ் அவளுக்குப் பின்னால் குதிரையில் வந்தார்.

குதிரை அந்த மலைப்பிளவை அடைந்து அப்பால் சென்று மேலும் ஏறி ஒரு பாறையை அடைந்து நின்றுவிட்டது. மெய்யாகவே அதற்கப்பால் ஆழமான மலைப்பள்ளம். அவள் அதன்மேல் அமர்ந்தபடி மூச்சிரைத்தாள். ஏதோ கெட்ட கனவு முடிந்ததுபோல் தோன்றியது.

ஆனால் மிக ஆழத்தில் மலையின் மடிப்பில் ஒரு சிறு கூட்டத்தை அவள் பார்த்தாள். திபெத்திய படைவீரர்கள். அவர்கள் அவளை பார்த்துவிட்டனர்.

அவர்கள் வானை நோக்கிச் சுட்டனர். மலையில் டப் டப் டப் டப் என அந்த ஓசை எதிரொலித்துக் கொண்டே இருந்தது. ஒரு சிறிய வெண்ணிற லில்லி போல அங்கே அந்த வேட்டின் புகை தெரிந்தது.

அவளுக்கு பின்னால் வந்து நின்ற பெட்ரூஸ் தன் சிவப்பு ஆடையை எடுத்து வீசினார். அவர்கள் அதை கண்டுகொண்டார்கள்.

பெட்ரூஸ் “நல்லவேளை” என்றார்.

“நான் சொன்னேனே, அவன் வழிகாட்டியிருக்கிறான்” என்றாள்

“அவனுக்கு அவர்கள் அங்கே இந்நேரம் செல்வார்கள் என்று எப்படித் தெரியும்?” என்றார் பெட்ரூஸ்.

“அவன் அறிந்திருக்கிறான்… மிகச்சரியாக அறிந்திருக்கிறான்”

பெட்ரூஸ் ஒன்றும் சொல்லவில்லை.

ஒருமணிநேரத்தில் அவர்களை திபெத்தியப் படை சூழ்ந்துகொண்டது. அவர்கள் வந்துகொண்டிருப்பதை கீழிருந்து வேட்டு வழியாக மேலே அறிவித்தனர். வேட்டுக்கள் வழியாக பேசும் ஒரு மொழி அவர்களுக்கு இருந்தது. மேலிருந்த படை இறங்கிவந்தது.

அவர்களுக்கு உணவும் நீரும் அளித்த திபெத்தியப் படை நாக்சு நகருக்கு அழைத்துச் சென்றது. நாக்சு நகருக்குள் நுழையும்போது சூசன்னா அந்த இளைஞனை மீண்டும் கண்டாள். அவன் நகரின் தெருவிலிருந்து நேராக அவளை நோக்கி வந்தான்.

ஆனால் அப்போது அவள் மிகவும் களைத்திருந்தாள். அரைத்தூக்கத்தில் இருந்தாள். அவளால் அவனை வெறுமே வெறித்துப் பார்க்கத்தான் முடிந்தது. அவன் புன்னகைத்துக் கொண்டே கடந்துசென்றான்.

நாக்சு நகரின் ஆட்சியாளர் அவர்கள் லாசா செல்லக்கூடாது என்று ஆணையிட்டார். அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். ஆட்சியாளரின் மாளிகையிலேயே ஒரு சிறிய அறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.

மென்மயிர் கம்பிளித்தரையும், யாக்கின் தோலால் ஆன சுவர்களும் கொண்ட அந்த வெம்மையான அறை விண்ணுலகில் இருப்பதுபோல அவர்களுக்கு தோன்றியது. உலர்ந்த இறைச்சி போடப்பட்ட மக்காச்சோளக் கஞ்சியை குடித்து, தொடர்ச்சியாக இரண்டுநாட்கள் தூங்கி விழித்த பின்னர் அவர்கள் முழுமையாக மீண்டுவந்தனர்.

ஆட்சியாளர் மிகத்தெளிவாகவே சொல்லிவிட்டார். அவர்கள் எந்நிலையிலும் எதற்காகவும் தடைசெய்யப்பட்ட நகருக்குள் நுழைய முடியாது. அந்தப் பாதையில் செல்வதற்கே அனுமதி இல்லை. நாக்சுவிலிருந்து அப்படியே திரும்பிவிடவேண்டியதுதான்.

அவர்கள் ஒருவாரகாலம் அங்கே ஓய்வெடுத்துக் கொள்ளலாம். உரிய உணவும் பிற பயணப்பொருட்களும் வழங்கப்படும். நாக்சுவிலிருந்து ஒரு வணிகர்குழு கீழே காங்க்டிங் என்னும் ஊருக்குச் சென்று கொண்டிருந்தது. அக்குழுவுடன் அவர்களிருவரையும் அனுப்பிவைக்க அவர் முடிவெடுத்தார். அவர்களுக்கு உதவியாக நாக்சுவிலிருந்து இரண்டு திபெத்திய வழிகாட்டி வீரர்களையும் அனுப்பி வைத்தார். செல்லும் வழியில் அவர்களுக்கு உதவட்டும் என்று திபெத்திய வெள்ளிக் காசுகளையும் அளித்தார்.

செப்டெம்பர் ஆறாம்தேதி அவர்கள் கிளம்பியபோது கடுமையான பனிப்புயல் வீசியது. அது ஓய்வதற்காக காத்து நின்றிருந்தனர். அதன்பின் கிளம்பி நகரிலிருந்து வெளியே சென்றபோது அத்தனை கட்டிடங்களிலும் சுவரோரமாக மலைமலையாக பொருக்குப்பனி குவிந்து கிடந்தது. செத்த மீன் போலிருந்தது நாக்சு நகரம். வெள்ளி மின்னிய அதன் தெருக்களில் இருந்து அழுகல்வாடை எழுந்தது.

அவர்கள் நகரிலிருந்து வெளியேறும்போது பனித்துகள்கள் பறந்துகொண்டிருந்த சாலையோரத்தில் சூசன்னா மீண்டும் அந்த வெள்ளை இளைஞனைக் கண்டாள்.

அவள் பரபரப்புடன் “அதோ, அதோ அவன்” என்று சுட்டிக்காட்டினாள்.

ஆனால் பெட்ரூஸ் பார்ப்பதற்குள் பனிப்படலத்தை தூக்கி அனைத்தின்மேலும் திரையென இறக்கியது காற்று.

“அவன்தான்… அவன் இங்கே இருக்கிறான்… பேட், அவன் என் சிறியதந்தை மைக் போல தோன்றுகிறான். அவனுக்கு எங்கள் இனக்குழுவுடன் ஏதோ தொடர்பு இருக்கிறது.”

பெட்ரூஸ் புன்னகையுடன் “ஓய்வெடு” என்றார்.

கிழக்கு நோக்கிச் செல்லும் அந்தப் பாதை தேனீர்ச்சாலை என அழைக்கப்பட்டது. கீழே சிக்கிமில் இருந்து டீத்தூள் பெட்டிகள் வரும் பாதை அது. மிகச்சிறிய குதிரைப்பாதை. பெரும்பாலும் மலையிடுக்குகள் வழியாக இறங்கிச் செல்வது. அது பனிமூடிக் கிடந்தது. வழிகாட்டிகளின் நினைவாலேயே அதற்கான தடத்தை கண்டடைய முடிந்தது. செப்டெம்பரிலேயே கடுமையான பனிப்பொழிவு தொடங்கிவிட்டது.

செல்லும்போது அவர்களை ஊக்கிய அனைத்தும் வடிந்துவிட்டிருந்தன. உள்ளம் சோர்வை பெருக்கிக்கொண்டது. சோர்வு தளர்வை, தளர்வு துயிலை உருவாக்கியது. அவர்களுக்குமேல் பனிப்பொழிவு வெண்ணிற துகள்களாக விழுந்துகொண்டிருந்தது. குதிரைக்குளம்படிகளை கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

செப்டெம்பர் 17 ஆம் தேதி அவர்களின் பயணக்குழுவை பனிவெளிக் கொள்ளையர் தாக்கினார்கள். அரைத்தூக்கத்தில் குதிரைமேல் அமர்ந்திருந்த சூசன்னா சுற்றிலும் எழுந்த கலைந்த ஓசைகளை கேட்டு கண்விழித்தாள். என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அவளுடன் வந்துகொண்டிருந்த காவலர்களில் ஒருவன் வானை நோக்கி வேட்டு போட்டான். அந்த ஓசையை மலைகள் முழக்கமிட்டன. புகை காற்றில் வெண்ணிறத் துணிச்சுருள் போல அசைவில்லாமல் நின்றது

அதன்பின்னரே அவள் மலையின் சரிவான விளிம்பில் நின்றிருந்த கரிய உடை அணிந்த மனிதனைப் பார்த்தாள். அவன் கையில் நீண்ட ஈட்டியை வைத்திருந்தான். யாக்கின் தோலால் ஆன மயிராடையை அணிந்திருந்தான். அவன் முகம் தெரியவில்லை. ஒரு யாக் எழுந்து நின்றதுபோல தோன்றினான்.

“கொள்ளையர்! கொள்ளையர்!” என்று காவலர்கள் கூவினர். வாள்களையும் ஈட்டிகளையும் உருவிக்கொண்டனர். அவர்களிடம் இருந்தது ஒரே துப்பாக்கி. அதில் அவர்கள் குண்டு நிறைத்தனர். பெட்ரூஸ் தன் துப்பாக்கியில் குண்டு நிறைத்தார்.

அந்த முதல் மனிதன் கையை தூக்கினான். அவனருகே மேலும் கொள்ளையர் தோன்றினார்கள். பதினைந்து பேருக்குமேல் இருக்கும். அவர்கள் பெருகி நிறைந்து கொண்டிருப்பதாக தோன்றியது. அவர்களை நோக்கி மிகமெல்ல வணிகக்குழு முன்னேறியது.

சட்டென்று பக்கவாட்டில் மலைச்சரிவில் பாறைகள் உருண்டு வரத்தொடங்கின. எருமைகள் குளம்போசையுடன் மலையிறங்கி வருவதாகத் தோன்றியது. அவர்கள் கூச்சலிட்டுச் சிதறினர். அலறியபடி முட்டிமோதினர்.

அவர்கள் மேல் மலைப்பாறைகள் பொழிந்தன. வணிகர்களில் பலர் நசுங்கி இறந்தனர். பனிப்பரப்பெங்கும் ரத்தம் தெறித்தது. ரத்தமணம் சூசன்ன்னாவை அலறச் செய்தது.

மேலிருந்து கூச்சலிட்டபடி ஈட்டிகளும் வாள்களுமாக கொள்ளையர் இறங்கி வந்தனர். அவர்கள் வந்த வேகம் நம்பமுடியாததாக இருந்தது. அவர்களின் கால்கள் பட்டு உருண்ட பாறைகள் பாதையில் மழையாக விழுந்தன. அவற்றுடன் அவர்களும் குதித்தனர்.

பெட்ரூஸ் “சூசி, வேறுவழியில்லை. நம் குதிரைகளுடன் நாம் தப்புவோம்…” என்று கூவினார். அவர்களில் ஒருவனைச் சுட்டார். அவன் உருண்டு விழ அவன்மேல் பாறைகள் உருண்டன.

அவர்கள் அலறியபடி விலக அந்த இடைவெளி வழியாக சூசன்னாவும் பெட்ரூஸும் குதிரைகளை செலுத்தி ஊடுருவிக்கடந்து முன்னால் சென்றனர். பின்பக்கம் அவர்கள் அந்த வணிகக்குழுவினரை கொன்று பொருட்களைச் சூறையாடும் ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்தன

நெடுந்தொலைவு சென்றபின்னரே அவர்கள் மீளமுடிந்தது.சூசன்னா அழுதுகொண்டிருந்தார். பெட்ரூஸ் ‘நல்லவேளை நாம் தப்பினோம்” என்றார்.

அவர்களுக்கு மேலே செல்ல வழி தெரியவில்லை. அந்தப்பாதையில் முன்னேறிச் செல்வது தவிர வேறு வழியே இல்லை. அவர்களிடம் இருந்த உணவு பத்து நாட்களுக்கு போதுமானது. வேண்டுமென்றால் மேலும் இரண்டுநாட்கள் கூட்டமுடியும். அதற்குள் அவர்கள் எவரையாவது சந்தித்தாக வேண்டும். ஆனால் வழிகாட்டிகள் இல்லை, வழியின் வரைபடங்கள் இல்லை, அந்த நிலம் பற்றிய எந்த செய்தியும் இல்லை.

அவர்கள் சென்றுகொண்டே இருந்தனர். அது வணிகப்பாதை என்பதனால் ஆங்காங்கே இரவு தங்குவதற்கான இடங்கள் இருந்தன. அவை பளிச்சிடும் செம்மஞ்சள் கொடிகளால் அடையாளப் படுத்தப்பட்டிருந்தன.

செப்டெம்பர் 26 ஆம் தேதி அவர்கள் ஒரு வழிமுனையைச் சென்றடைந்தனர். இரண்டு பாதைகள் அங்கே பிரிவதுபோல தோன்றியது. இரண்டில் எதை தெரிவுசெய்வது என்று தெரியவில்லை. அவர்கள் அங்கே திகைத்து நின்றனர். பெட்ரூஸ் அப்போது தொலைவில் ஒரு புகையை கண்டார். அது ஓர் ஆற்றுக்கு அப்பால் எழுந்தது. அது போ-சு என்னும் ஆறு.

“அது புகைதானா?”என்றார் “அல்லது மேகமா?”

“புகையேதான்… நாம் அங்கே செல்வோம்”

“வேண்டாம் நீ இங்கே நில், நான் இந்த ஆற்றை கடந்து அப்பால் சென்று அங்கே என்ன என்று பார்த்து வருகிறேன்…” என்றார் பெட்ரூஸ் “இங்கே நின்றிரு…”

அவர் பாறைகள் வழியாகத் தாவி அப்பால் சென்றார். அவள் அவர் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். நெடுநேரமாகியது. இருட்டத் தொடங்கியது. அவர் அங்கிருந்து வரப்போவதில்லை என்று தோன்றியது.

ஆற்றைக் கடந்துசென்று என்ன நடந்தது என்று பார்க்கவேண்டும் என்று அவள் முடிவெடுத்தபோது அவளுக்குப் பின்னால் காலடியோசை கேட்டது. அவள் திரும்பிப் பார்த்தாள். அந்த இளைஞன். அவன் நாக்சேயில் இருந்து அத்தனை தொலைவு வந்திருக்கிறானா?

“உதவி உதவி!” என்று அவள் கூவினாள். “உதவி! என் கணவர் மறுபக்கம் சென்றிருக்கிறார்…”

அவன் அவளை அணுகி அவள் கண்களுக்குள் கூர்ந்து நோக்கி “செல், அவர் இறந்துவிட்டார்” என்றான்.

“என்ன சொல்கிறாய்?”

“சென்றுவிடு… அவர் இறந்துவிட்டார். பனிப்புயல் அணுகிக்கொண்டிருக்கிறது”

“நான் எப்படிச் செல்வது?”

“என்னுடன் வா”

அவள் அவனை கூர்ந்து பார்த்தாள். “நீ யார்? ஏன் இங்கே இருக்கிறாய்?”

அவன் ஒன்றும் சொல்லாமல் நடந்தான். அவள் குதிரையில் ஏறி அவனை தொடர்ந்து சென்றாள்.

“சொல், யார் நீ? ஏன் இங்கே இருக்கிறாய்?”

அவன் ஒன்றும் சொல்லவில்லை அவள் குரலை கேட்டதாகவே தெரியவில்லை.

“நீ என் குடும்பத்தின் முகம் கொண்டிருக்கிறாய்.”

அவன் திரும்பியே பார்க்கவில்லை. அவன் பேசப்போவதில்லை என்று தெரிந்தது. அவளுடன் பெட்ரூஸின் குதிரையும் வந்தது.

“இந்தக்குதிரையில் ஏறிக்கொள்”

அவன் அதற்கும் பதில் சொல்லவில்லை. அவள் தங்கவேண்டிய பாறையிடுக்கை அடைந்ததும் திரும்பிச் சுட்டிக்காட்டினான்.

“நன்றி, நீயும் இங்கே தங்கலாம்”

ஆனால் அவன் ஒன்றும் சொல்லாமல் மேலே நடந்தான். பனிப்படலத்திற்குள் மறைந்தான்.

அவள் அங்கே மென்மயிர்ப்போர்வைகளால் நன்றாகப் போர்த்திக் கொண்டு அமர்ந்தாள். உடல்நடுங்கிக் கொண்டிருந்தது. என்னென்னவோ உணர்வுகளால் அவள் உள்ளம் பித்துப்பிடித்தது போல பாய்ந்து கொண்டிருந்தது. அவள் பெட்ரூஸின் சாவுக்காக அழவேண்டும். ஆனால் அச்சமும் பதற்றமும் அவற்றையும் மீறிய திகைப்பும் அவளை ஆட்கொண்டிருந்தன.

அந்த இளைஞன் யார்? அங்கே எப்படித் தோன்றினான்? கூடவே வந்துகொண்டிருக்கிறானா? அவள் எண்ணங்களின் விசையாலேயே களைப்படைந்தாள். அப்படியே தூங்கிவிட்டாள்.

கனவில் அவள் அவனைக் கண்டாள். அவன் அவளருகே அமர்ந்திருந்தான். அவனுடைய மென்மையான புன்னகையை பார்த்துக் கொண்டிருந்தாள். அறிந்த முகம், யார் அவன்? அவனிடம் அவள் எதையோ சொல்ல விரும்பிnனள். அவன் திரும்பி அவள் கையைப் பிடித்தான்

அவள் விம்மியழுதபடி “உன் அப்பா இறந்துவிட்டார், தெரியுமா?” என்றாள்.

அவள் அச்சொற்களுடன் விழித்துக் கொண்டாள். திடுக்கிட்டதனாலேயே பாய்ந்து எழுந்து நின்றாள். சுற்றிலும் பார்த்தாள். அவளுடைய இரு குதிரைகளும் போர்வைகளை போர்த்திக்கொண்டு தலைகுனிந்து தூங்கியபடி நின்றன. அவளுடைய அசைவொலிக்கு செவி திருப்பின. ஒரு குதிரை மெல்ல முனகியது

குகைக்கு வெளியே பனிவெளியின் ஒளி. பனிப்படலங்கள் மெல்ல நொறுங்கும் ரகசியமான உறுமலோசை. அவள் நெஞ்சில் கைவைத்து நின்று ஏங்கி அழுதாள்.

அவள் தன்னந்தனியாக அந்தப்பாதையில் சென்றாள். அடுத்த சிற்றூரில் சில பனிவெளிக் கொள்ளையர்களைச் சந்தித்தாள். அவர்களுக்கு வெள்ளியை ஊதியமாகக் கொடுத்து வழிகாட்டியாக அமைத்துக் கொண்டாள். அவர்களை துப்பாக்கி முனையில் தன்னுடன் வைத்துக் கொண்டாள். அவர்கள் அவளை கொன்றுவிட்டு திருடிச்செல்ல, கற்பழிக்க எல்லா வாய்ப்பும் இருந்தது.

இறுகியாக கெய்கு [Gyegu]வைச் சென்றடைந்தாள். அங்கிருந்த திபெத்திய பௌத்த மடாலயத்தில் அவள் அடைக்கலம் புகுந்தாள். அங்கே சிலநாட்கள் தங்கியிருந்து அவர்களிடம் உதவிபெற்று மீண்டும் மலையிறங்கினாள். பெரும்பாலான இடங்களில் தனியாக நடந்தாள். அவ்வபோது இடையர் கிராமங்களில் இருந்து உதவிபெற்றாள்.

1898 நவம்பர் 26 ஆம் தேதி அவள் காங்டிங் நகரைச் சென்றடைந்தாள். காங்டிங்கில் இருந்த சைனா இன்லாண்ட் மிஷன் அலுவலகத்திற்கு அவள் சென்று சேர்ந்தபோது கிழிந்த ஆடை அணிந்த பிச்சைக்காரியாக இருந்தாள். அவள் மனநிலை பிறzவுற்றிருந்தது. அவள் தன்னுடன் வேறு ஒருவரும் இருப்பதாகவே நம்பி அவனிடம் பேசிக்கொண்டே இருந்தாள். அவள் தன்னந்தனியாக அத்தனை தூரம் எப்படி வந்தாள் என்று அவர்களால் நம்பமுடியவில்லை. அவர்கள் கேட்ட எல்லா கேள்விக்கும் தன்னை தன்னுடன் வந்த ஓர் இளைஞன் கூட்டிவந்ததாகவே சொன்னாள்.

சைனா இன்லாண்ட் மிஷன் பொறுப்பாளராக அப்போது இருந்தவர் ஜேம்ஸ் மோயெஸ்.[James Moyes] சூசன்னா பிறகு அவரைத்தான் திருமணம் செய்துகொண்டாள்.அவர் சூசன்னாவுக்கு மருத்துவம் அளித்து உடலும் உள்ளமும் தேற ஏற்பாடு செய்தார்.

பெட்ரூஸ் என்ன ஆனார் என்று கண்டுபிடிக்க பிரிட்டிஷ் அரசு ஓர் ஆய்வுக்குழுவை அனுப்பியது, எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை.தொடர்ச்சியாக எட்டு ஆண்டுக்காலம் அந்த தேடல் நிகழ்ந்தது

1900த்தில் சூசன்னா கனடாவுக்கு திரும்பினாள். தன் அனுபவங்களை கனடாவில் அவள் பல சர்ச்சுகளில் சொற்பொழிவாக ஆற்றினாள். அவையெல்லாம் வழக்கமான மிஷனரி சொற்பொழிவுகளகவே இருந்தன. அவளுக்கு பணம் தேவைப்பட்டிருக்கலாம்.

1902ல் மீண்டும் சூசன்னா சீனாவுக்கு திரும்பினாள். 1905ல்தான் மோயெஸை திருமணம் செய்துகொண்டாள். பெட்ரூஸ் சைனா இன்லாண்ட் மிஷனில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர், அவருடைய பாலியல் சாகசங்களும் நிதி முறைகேடுகளும் அதற்குக் காரணம். ஆகவே மோயெஸ் சூசன்னாவை திருமணம் செய்துகொள்ள சைனா இன்லாண்ட் மிஷன் ஒத்துக்கொள்ளவில்லை. மோயெஸ் சைனா இன்லாண்ட் மிஷனில் இருந்து ராஜினாமா செய்து விட்டு சூசன்னாவை மணந்துகொண்டார்.

சூசன்னாவின் உடல்நிலை மோசமாகியது. அவள் உளநிலையிலும் மாற்றங்கள் இருந்தன. அவள் விந்தையான கனவுகளில் மூழ்கியிருக்கத் தொடங்கினாள். அவ்வப்போது தன்னை ஓர் இளைஞன் வந்து பார்த்துச் செல்வதாகச் சொன்னாள். புரட்டஸ்டன்ட் சபையில் பேயோட்டும் சடங்குகளுக்கு அனுமதி இல்லை என்றாலும் மோயெஸ் ரகசியமாக அவ்வாறு சில சடங்குகளைச் செய்து பார்த்தார். எந்தப்பயனும் இல்லை.

சூசன்னாவின் உடல்நிலை மேலும் மோசமாகியது. அவளுடைய நுரையீரல் திபெத்தியப் பயணத்தால் முழுமையாகவே பழுதடைந்துவிட்டது, அதில் நிறைய துளைகள் இருந்தன என்றனர் மருத்துவர். நுரையீரலில் நீர்நிறைவது நியூமோனியாவுக்கு நிகரான நிலை. நியுமோனியா நோயாளியின் உள்ளத்தில் மயக்கத்தையும் கனவுகளையும் நிறைக்கும் ,விசித்திரமான உருவெளித்தோற்றங்களை அளிக்கும். சூசன்னாவின் உளமயக்கமும் கனவுகளும் அவள் நுரையீரல் கெட்டுவிட்டதனால்தான் என்றனர் டாக்டர்கள்.

1907ல் சூசன்னா மோயெஸ் இருவருமே கனடாவுக்கு திரும்பினர்.1908ல் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்தது. அந்த ஆண்டே சூசன்னா இறந்தாள் 1911ல் மோயெஸ் அமெரிக்கன் பைபிள் சொசைட்டி ஊழியராக மீண்டும் சீனாவுக்கு கிளம்பினார்.

சூசன்னா இறக்கும்போது நல்ல உளநிலையில் இல்லை என்று அவள் மருமகள் எலெனா ஜெஸி கார்சன் சொன்னார். சூசன்னா இறந்தபோது எலெனா உடனிருந்தார். மூன்றுமாதங்களுக்கும் மேலாக சூசன்னா இடவுணர்வும் காலவுணர்வும் அற்று எங்கோ ஒரு கனவிலென இருந்தார். உடனிருப்பவர்க்ளை அவர் சிலபோது அடையாளம் கண்டாள், சிலபோது அடையாளம் காணவில்லை. ஆச்சரியமென்னவென்றால் அவள் மோயெஸை அறியவேயில்லை.

சூசன்னா மானசீகமாக திபெத்தின் பனிவெளியில் இருந்தாள் என்று எலெனா சொன்னார். அவள் குளிர்கிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். மூச்சிரைத்தது. அவள் வாழ்வது திபெத்தில் என்று தொடர்ந்து அவள் அருகே இருந்தமையால்தான் அவருக்கு புரிந்தது. ஏனென்றால் சூசன்னா மிகுதியாகப் பேசவில்லை. ஓரிரு சொற்கள் மட்டும்தான். ஏராளமான திபெத்திய மொழிச் சொற்கள் அவள் நாவிலிருந்து வந்துகொண்டிருந்தன.

முதலில் எலெனா கவனித்தது சூசன்னா அவ்வப்போது எவரையோ சந்திக்கிறார் என்பது. மெய்யான சந்திப்பு போலவே அனைத்து உணர்ச்சிகளும் கொண்டது அது. முகம் மலரும், கண்கள் நோக்கு கொள்ளும், உடலில் அசைவுகள் எழும். உடனிருப்பவர்களுக்கே அறைக்குள் எவரோ வந்துவிட்டிருப்பதாகத் தோன்றும்.

சூசன்னா அவ்வாறு வந்தவரிடம் பேசுவதில்லை. வந்தவரும் பேசுவதில்லை. அவர் சூசன்னாவின் கைகளை பற்றிக்கொண்டு அருகே அமர்வதுபோல, அவர்கள் ஒருவரை ஒருவர் வெறுமே நோக்கிக் கொண்டிருப்பதுபோல தோன்றும்.

சூசன்னா இறந்த அன்றும் அவ்வாறே நிகழ்ந்தது. சூசன்னா வந்தவரின் முகத்தை மலர்ச்சியுடன் நோக்கிக் கொண்டிருந்தாள். சற்றுநேரத்தில் ஏதோ தோன்ற எலெனா எழுந்து சென்று பார்த்தார். சூசன்னா இறந்திருந்தாள்.

முக்தா சொன்னார். அன்று அந்த குளிர்நிறைந்த சிறுகூடாரத்தில் ஒரு முட்டைக்குள் இரு குஞ்சுகள் போல மென்மயிர்ப் போர்வைக்குள் ஒண்டிக்கொண்டு ஆடம் சொன்ன கதைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். அந்தக்கதைகள் அவனில் மிகவும் வளர்ந்து உருமாறியிருந்தன. அவன் வெவ்வேறு கதைகளை கோத்துக்கொண்டிருந்தான்.

ஆனால் அறிந்த அனைத்தையும் அறியமுடியாத ஒன்றைக்கொண்டு பொருத்திக் கோத்துக்கொள்வது நாம் அனைவருமே செய்வது. அதற்கேற்ப ஒவ்வொன்றின் முனையிலும் அறியமுடியாமை ஒன்று உள்ளது. அது ஒரு கொக்கி போல இன்னொன்றுடன் கவ்விக்கொள்கிறது

இப்படிச் சொல்கிறேன், ஒரு வாழ்க்கை நிகழ்வில், ஒரு நினைவில் நாம் அறியமுடியாத ஒரு சிறுபகுதி உள்ளது, அதுவே இன்னொரு வாழ்க்கை நிகழ்வுடன் அல்லது நினைவுடன் அதைப் பொருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கிறது.

அதை மேலும் விரித்துக் கொள்கிறேன், இப்புவியின் வாழ்க்கை என நாம் அறிவது அறியமுடியாமைகளால் கோத்து நாம் உருவாக்கிக்கொள்வது. இது வினாக்களின் பெருந்தொகை. ஆனால் அறிவால் தொகுத்துக்கொள்வது என்று நாம் நம்புகிறோம். இவற்றை நேரில் உணர்ந்த பின்னரே வேதாந்தத்தில் இவை ஃபாஸம் என்றும் ஃபானம் என்றும் விளக்கப்படுகின்றன என்று படித்துணர்ந்தேன்.

பிறிதொருநாள் நான் ஆடமிடம் கேட்டேன், சூசன்னாவின் மகனை அந்த பிட்சு எப்படிப் பார்த்தார்? ஆன்னி அதைப்பற்றி மேற்கொண்டு ஆர்வம் காட்டவில்லையா என்ன?

ஆடம் சொன்னான், அந்த பிட்சு எப்படிப் பார்த்தார் என்று எனக்குத்தெரியாது. அவர் பார்த்ததற்கு காரணம் அவர் அதை ஆன்னியிடம் சொல்லவேண்டும் என்பதுதான். ஆன்னியிடம் அது ஏன் சொல்லப்படவேண்டும் என்றால் அது அவ்வண்ணம் பிணைக்கப்படவேண்டும் என்பதுதான்.

ஆன்னியின் உள்ளம் நான் சந்திக்கும்போது ஒரு சிக்கலான நிலையில் இருந்தது. அவர் கிறித்தவ மிஷனரிகளுக்குரிய ஆழமான மதநம்பிக்கைகளால் ஆனவர். புரட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் என்பது ஓர் அடிப்படையான மதநம்பிக்கையும் அதைச்சூழ்ந்து சமகால உலகியல் சார்ந்த பகுத்தறிவும் கொண்டது. அந்த மதநம்பிக்கை இந்த பகுத்தறிவால் பாதுகாக்கப்படுகிறது. பகுத்தறிவின் ஐயங்களையும் பதற்றங்களையும் மதநம்பிக்கை போக்குகிறது.அந்த பகுத்தறிவு ஒரு கோட்டை, ஒரு வாள்.

அதோடு பெண்களுக்கு நாற்பது வயதைக் கடக்கும்போது உருவாகும் பதற்றங்களும் ஐயங்களும் அவரை அலைக்கழித்தன. தன் வாழ்க்கை பொருளில்லாமல் முடிந்துவிட்டதோ என்று அவர் சந்தேகப்பட்டார், ஆகவே எதையாவது பெரிதாகச் செய்யவேண்டும் என்று முயன்றார்

ஆன்னி அந்த பிக்ஷு சொன்னதை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. திபெத்தை மதமாற்றம் செய்தவர் என்ற பெருமைக்காக விழைந்தார். அதற்கான அமைப்பு ஒன்றை உருவாக்கி அதை தூக்கிக்கொண்டு அலைந்தார். அதைப்பற்றியே பேசிப்பேசி சலிப்பூட்டும் கிழவி என அடையாளப் படுத்தப்பட்டிருந்தார். அந்த வயதுக்கான தூக்கமின்மையும், அவ்வப்போது எழும் உளச்சோர்வும் அவரை வாட்டியது. அத்துடன் லண்டன்வாசிகளுக்கே உரிய மூட்டுவலிகள்.

ஏதோ வெள்ளையனைக் கண்டு தன் மகன் என அந்த பிக்ஷு நினைத்துவிட்டார் என்று அவள் நினைத்தார். வேறேதாவது வெள்ளைக்காரப் பெண்மணி தன் குழந்தையை அங்கே தொலைத்திருக்கலாம். அதைத் தொடர்ந்து செல்ல அவருக்கு மனமும் பொழுதும் இல்லை.

ஆனால் நான் இந்தியா வந்தபின் லடாக்கில் பணியாற்றியபோதெல்லாம் அனைத்து பிக்ஷுக்களிடமும் பிடிபடும் சிறு கொள்ளையர்களிடமும் சார்ல்ஸ் பற்றி விசாரித்துக் கொண்டே இருந்தேன். வெள்ளைக்காரக் குழந்தை அல்லது இளைஞனை திபெத்தில் காண வாய்த்ததுண்டா என்று விசாரிப்பேன்.

எனக்கு நேரடியாக தகவல் கிடைக்கவில்லை. ஆனால் மேஜர் ஜெனரல் டக்ளஸ் விலியம்ஸ் வைட்பரோஸ் அவருடைய மாலைநேர மதுவிருந்து ஒன்றில் தன்னுடைய லடாக் அனுபவங்களைச் சொல்லி வருகையில் இந்த திபெத்திய பனிவெளிக் கொள்ளையர்களைப் பற்றி சொன்னார். அவர்கள் வாழ்நாள் முழுக்க தன்னந்தனிமையில் வாழ்பவர்கள். பனி ஓநாய்களைப்போல சிறு குழுவாக பனிவெளியில் எப்போதும் அலைந்து கொண்டே இருப்பவர்கள்.

அவர்களுக்கு ஊர்களுடன் தொடர்பே இல்லை. அரிதாக ஊர்களுக்குள் நுழைந்து பெண்களை தூக்கிக் கொண்டு சென்றுவிடுவார்கள். பாலுறவு வைத்துவிட்டு பனிவெளியில் விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். காதல் பாசம் அன்பு போன்ற மெல்லுணர்வுகள் இல்லை. ஒருவன் புண்பட்டு விழுந்தால் உடனே அவன் பனியாடைகளையும் சப்பாத்துக்களையும் கழற்ற தொடங்கிவிடுவார்கள். அவனை அங்கேயே சாகவிட்டு கடந்து செல்வார்கள். நன்றி, சொல்நம்பிக்கை என்பவை அவர்கள் அறியாதவை. தன் உயிரைக் காப்பாற்றியவனைக் கூட சற்று அசந்திருந்தால் கொன்றுவிட்டு கொள்ளையடித்து தப்பிச் செல்பவர்கள்.

ஏனென்றால் அவர்கள் அறிவாலோ நினைவுகளாலோ இயக்கப்படுபவர்கள் அல்ல. முழுக்க முழுக்க உள்ளுணர்வுகளால் செலுத்தப்படுபவர்கள். அவர்களுக்கு வழிகாட்டுபவை பிரமைகளும் உருவெளிக் காட்சிகளும்தான். பனிவெளியில் அவர்கள் இல்லாத உயிரினங்களை பார்ப்பார்கள். மனிதர்களையும் தெய்வங்களையும் பார்ப்பார்கள். அவர்களின் ஆணைகளின்படிச் செயல்படுவார்கள்

யதி எனப்படும் பனிமனிதனைப்பற்றி அவர்கள் அனைவருமே பேசிக்கொண்டிருந்தனர். யதியை அவர்கள் அஞ்சினர், வழிபட்டனர். பனிவெளிகளில் அவர்கள் சிக்கிக்கொண்டபோது அது தோன்றி அவர்களை பலமுறை காப்பாற்றியிருக்கிறது. ’பெரியபாதம்’ என்று அவர்கள் அதைச் சொன்னார்கள். பனிவெளியில் மனிதன் காலடியைவிட எட்டு மடங்கு பெரிய காலடித்தடங்களாக அது சென்ற வழி தெரியும்.

அதேபோல ஒளிவடிவமான மனிதர்களைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் திபெத்தின் பனிவெளியின் ஆழத்தில் ஏழு பனிமலைகளால் சூழப்பட்டு அமைந்திருக்கும் ஒளிவடிவமான ஷம்பாலா என்னும் நிலத்தைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து அவர்கள் தங்கள் நினைப்பால் எங்கும் செல்லமுடியும்.

அங்கே இறந்தவர்கள் செல்லமுடியாது. வாழ்பவர்களும் செல்லமுடியாது. தெய்வநிலையை அடைந்தவர்களின் நிலம் அது என்று பனிக்கொள்ளையர் சொன்னார்கள். இறந்தவர்களைச் சூழ்ந்து அவர்களின் வினைமிச்சங்கள் இருக்கும். அவர்கள் இப்பிறவியில் செய்த செயல்களின் விளைவுகள் அவர்களைச் சூழ்ந்த வெட்டவெளியில் காத்திருக்கும். அவை பஞ்சை நீர் ஈரமாக்குவதுபோல அந்த ஆத்மாக்களை பற்றி இறுக்கிவிடும். அந்த வினைமிச்சங்கள் நிகழும்பொருட்டு அவர்கள் மீண்டும் பிறந்தாகவேண்டும். பிறவிச்சுழலில் சிக்கிக்கொள்ளவேண்டும்

வாழ்பவர்கள் அங்கே செல்லமுடியாது. ஏனென்றால் ஒவ்வொரு கணத்திலும் அவர்கள் முந்தைய கணம்வரை செய்த செயல்களின் தொடர்ச்சியில் இருக்கிறார்கள். அடுத்த கணத்தில் செய்யவேண்டிய செயல்களின் தொடக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த இரு காலங்களில் இருந்தும் விடுதலை இல்லை

அங்கே செல்பவர்கள் யோகிகள், லாமாக்கள். அவர்கள் இப்பிறப்பில் முற்றாக நேற்றை அறுத்துவிடுகிறார்கள். முழுமையாகவே நாளை இல்லையேன்ற நிலைக்கு செல்கிறார்கள். இன்றுமட்டுமே கொண்டவர்களாகிறார்கள். அப்போது அவர்களின் உடலில் ஒர் ஒளி எழும். அவர்களின் கைநகங்கள் விளக்குகள் போல சுடர்விடும். அவர்களின் உடலில் இருந்து எழும் ஒளியால் உடைகளே நிழலுருக்களாக தெரியும். அவர்களை மஞ்சுஸ்ரீ என்று திபெத்திய மெய்நூல்கள் சொல்கின்றன

அவர்களில் அந்த ஒளி எழுந்துவிட்டதென்றால் அவர்களின் ஆடைகளை நீக்கம் செய்வார்கள். அவர்களை கொண்டுசென்று பனிவெளியின் ஒளிரும் பரப்பில் வைத்துவிடுவார்கள். திரும்பிவந்து இரவும் பகலும் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பார்கள். அவர்களின் உடல் அங்கே இருக்கும். அவர்களுக்குரிய நாளும்பொழுதும் அமைகையில் அவர்கள் எழுந்து சென்று மறைந்துவிடுவார்கள்.

பனிவெளியில் அவர்களின் உடல் இருக்காது. அதை பிற உயிர்கள் உண்டதன் தடங்கள் இருக்காது. காலடிச்சுவடுகளும் இருக்காது. அவர்கள் எப்படி மறைந்தார்கள் என்றே தெரியாது, அவர்கள் ஷம்பாலாவைச் சென்றடைந்துவிட்டிருப்பார்கள்.

மேஜர் ஜெனரல் டக்ளஸ் விலியம்ஸ் வைட்பரோஸ் சரியான பிரிட்டிஷ் உள்ளம் கொண்டவர். நான் சொன்னேனே ‘பகுத்தறிவுப் புரட்டஸ்டண்ட்’ உள்ளம் அது. ஆகவே அவர் உலகம் ஏழுநாட்களில் படைக்கப்பட்டது என்பதையும், மனிதனின் முதல்மூதாதையர் ஆதமும் ஏவாளும்தான் என்பதையும், ஏசு உயிர்த்தெழுந்தார் என்பதையும் அறிவார்ந்த செய்திகள் என்று நினைத்தார். பிற அனைத்தும் வெறும் நம்பிக்கைகள் என்று சொல்லி அறிவியல் நிரூபணம் கோரினார்.

கேலியும் கிண்டலுமாக அவர் பேசிவந்தபோது ஒரு விஷயத்தை கொஞ்சம் வியப்புடன் சொன்னார். அவர் சந்தித்த முதிய பனிக்கொள்ளையர்களில் ஒருவன் மெய்யாகவே அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை கண்டிருக்கிறான். அவனுடன் இருந்த அவன் தோழர்கள் இருவரும்கூட அதைக் கண்டிருந்தனர். அவர்களும் அதை ஆமோதித்தனர்.

அவன் பெயர் ஜிக்மே. அறுபது வயதானவன். பனிவெளியிலேயே பெரும்பாலும் வாழ்ந்து குறுகிச் சுருண்டு இறுகிய உடல்கொண்டவன். தெள்ளுப்பூச்சி போல அவனால் தாவமுடியும். மிகக்குறைவான உணவில் நெடுநாட்கள் வாழமுடியும். முகம் சுருக்கங்கள் படர்ந்தது. கண்கள் அச்சுருக்கங்களில் ஒன்றுக்குள் மின்னும் இரு துண்டு கண்ணாடிகள். வாய் இன்னொரு சுருக்கம்.

அவர்கள் ஐவர் இளைஞர்களாகப் பனிவெளியில் கொள்ளையடித்து வாழ்ந்த காலம் அது. அவர்களுக்கு ஒரு பாறைமுகடு இருந்தது. அதன்கீழே இருந்த குகையில் அவர்கள் ஒடுங்கிக் கொள்வார்கள். ஒருவன் மேலிருந்து வேவுபார்ப்பான். அவன் கீழே தனிப்பாதையில் இருவர் தள்ளாடி நடந்த குதிரையில் செல்வதை கண்டான்

அவர்கள் ஓசையில்லாமல் இறங்கி வந்து அந்த இருவரையும் பின்தொடர்ந்தனர். அவர்கள் அணிந்திருந்த தரமான மென்மயிர் ஆடைகள் அவர்கள் கீழிருந்து வந்தவர்கள் என்று காட்டியது. அவர்கள் கையில் மென்மயிர் சுருளில் எதையோ வைத்திருந்தனர். துயர்கொண்டவர்கள் போலிருந்தனர்.

மேலிருந்து பொழிந்த புழுதியும் மண்ணும் கூம்புபோல ஆகி பாதையோரமாக நின்றிருந்த இடத்தில் அவர்கள் நின்றனர், அவர்கள் இருவரும் வெள்ளையர், ஒருவர் பெண் என்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர்களிடம் துப்பாக்கி இருக்கக்கூடும் என ஜிக்மே கையால் சைகை காட்டினான். பிறர் தயங்கினர்.

அவர்கள் அந்த மென்மயிர்ச் சுருளுக்குள் இருந்து ஒரு குழந்தையை வெளியே எடுத்தனர். அது அசைவற்றிருந்தது. ஆனால் உயிருடன் இருந்தது. பனிநிலத்தில் கடுங்குளிருக்கு ஆளாகும் குழந்தைகள் அப்படி நரம்புகள் உறைந்து இறந்தது போல ஆகக்கூடும். அதை திபெத்தியர் அறிவார்கள்.

அந்த வெள்ளைத் தம்பதியினருக்கு அது புரியவில்லை என்றும் அவர்கள் அதை புதைக்கப் போகிறார்கள் என்றும் தெரிந்தது. ஆனால் ஜிக்மேவும் கூட்டமும் அவர்களை எந்தவகையிலும் தடுக்க முயலவில்லை. அவர்களுக்கு அந்தவகையான உணர்வுகளேதுமில்லை. அவர்கள் அந்த வெள்ளையரிடம் துப்பாக்கி இருக்கிறதா என்றுமட்டும்தான் பார்த்தனர்.

அந்த வெள்ளைத் தம்பதியினர் மண்ணை சிறுகத்தியாலும் சாப்பிடுவதற்கான தட்டாலும் தோண்டினர். அதில் அக்குழந்தையை புதைத்தனர். மண்ணை அள்ளி மேலே போட்டு அதன்மேல் குச்சிகளை சேர்த்து சிலுவை போல ஆக்கி வைத்தனர். அவர்களில் ஆண் ஏதோ பிரார்த்தனை போலச் சொன்னான். அந்தப்பெண் அழுதாள்.

அதன்பின் அவர்கள் மீண்டும் சென்று குதிரைகளில் ஏறிக்கொண்டனர். அந்த ஆணின் கையில் துப்பாக்கி இருந்ததை ஜிக்மே பார்த்துவிட்டான். அவன் சைகையால் தன் கூட்டத்தினருக்கு துப்பாக்கி என்று காட்ட மற்றவர்கள் தலையசைத்தனர்.

அவர்களை ஓசையின்றி பின்தொடர்ந்த ஜிக்மேயும் குழுவும் அந்த மண்மேட்டை கடந்துசென்றபோது அங்கே ஓர் அசைவை கண்டனர். புதைக்கப்பட்ட குழந்தை அசைந்தது. அதன்மேல் போடப்பட்ட மண் விரிசலிட்டது.அந்த மண்குவையிலிருந்து புகை எழுந்தது

அவர்கள் அருகே சென்று அந்த மண்கூம்பை குனிந்து பார்த்தனர். என்ன நடந்தது என்று ஜிக்மே புரிந்துகொண்டான். அந்த மண்குவைக்கு அடியில் சிறுவிரிசல் வழியாக கந்தக வெண்புகை வெளிவருகிறது. அது அங்கே நல்ல வெப்பத்தை உருவாக்கும். அங்கே செல்லும் நீர் சூடாக இருக்கும். சில இடங்களில் உணவை வேகவைக்கும் அளவுக்குக் கொதிக்கும். அந்த விரிசல்மேல் மண்பொழிந்து உருவான கூம்பு அது. அதை குழந்தையை புதைக்கும்போது அவர்கள் கலைத்துவிட்டனர்

அவர்கள் மண்ணை விலக்கினர். உள்ளே கைபொறுக்கும் அளவுக்கு வெம்மை உருவாகியிருந்தது. கந்தகமணம் கொண்ட நீராவி எழுந்தது. குழந்தை உடலின் உறைவு அகன்று கண்களை திறந்து கைகால்களை அசைத்தது.

ஜிக்மே அந்தக்குழந்தையை கைகளில் எடுத்தான். அது ஒருவயதுகூட ஆகியிருக்காத வெள்ளைக்காரக் குழந்தை. அத்தகைய சூழல்களில் குழந்தைகள் அழவேண்டும், ஆனால் அது அவனைப் பார்த்துச் சிரித்தது. மேல் ஈற்றில் இரண்டு பால்பற்கள் கொண்ட சிவந்த வாயும், நீலக்கல் போன்ற கண்களும் குருவிவால் போன்ற சிவப்புத் தலைமுடியும் கொண்ட அழகான குழந்தை. அதன் கன்னங்கள் பனியில் வெந்து சிவந்திருந்தன.

ஜிக்மே அதன் விரல்களில் தன் விரலை வைத்தான். அது சிறுவிரல்களால் பிடித்துக்கொண்டு துள்ளித்துள்ளி எழமுயன்று கால்களை உதைத்துக் கொண்டது. ஜிக்மேவின் நண்பன் “நாம் இதை என்ன செய்வது?” என்று கேட்டான்.

ஜிக்மேவுக்கும் ஒன்றும் புரியவில்லை, அவன் அந்தக்குழந்தையை வசியம் செய்யப்பட்டதுபோல பார்த்துக்கொண்டிருந்தான். அது சூரிய ஒளியில் பனிக்கட்டி போல ஒளிவிடுவதாகத் தோன்றியது.

“நாம் இதை கொண்டுசெல்ல முடியாது. நம்மிடம் இதற்கான உணவும் இல்லை” என்று நண்பன் சொன்னான்.

“இதை இங்கேயே விட்டுவிட்டுச் செல்வோம்…” என்றான் இன்னொருவன்.

வேறுவழியே இல்லை. ஜிக்மே அந்தக் குழந்தையை அந்த மண்மேட்டிற்கு அருகே சாலையோரமாக வைத்துவிட்டான். அவர்கள் அந்த வெள்ளையரை பின்தொடர்ந்து சென்றார்கள்.

ஆனால் சற்று தொலைவு சென்றபின்னர் மனம்கேட்காமல் ஜிக்மே திரும்பி வந்தான். அந்தக்குழந்தையை கொண்டுசென்று ஏதாவது மலைக்கிராமத்தின் முகப்பில் இருக்கும் ஸ்தூபத்தின் அறைக்குள் வைத்துவிடலாம், அது உயிர்பிழைக்க ஒரு வாய்ப்பு என்று அவன் நினைத்தான். அவன் தோழர்கள் அவனுக்காக காத்து நிற்க அவன் விரைந்து நடந்தான்

ஆனால் அவன் வைத்த இடத்தில் அக்குழந்தை இல்லை. அதன் பனியாடை மட்டும் அங்கே கிடந்தது. உள்ளிருந்து குழந்தையை எவரோ எடுத்துச் சென்றிருந்தார்கள்.

அவன் அந்தப்பகுதியை முழுக்க குனிந்து கூர்ந்து நோக்கினான். அவர்கள் பனிநிலத்தில் தடம்தேடி கண்டடைவதில் நிபுணர்கள். அங்கே மனிதர்களோ விலங்குகளோ வந்ததற்கான எந்த தடையமும் இல்லை

ஜிக்மே அஞ்சி திரும்பி ஓடினான். அவன் சென்று சொன்னதும் அவன் தோழர்களும் அஞ்சிவிட்டனர். அவர்கள் ஓடி பனிச்சரிவில் ஏறி இன்னொரு குகைக்குச் சென்று ஒடுங்கிக் கொண்டனர். அவர்களிடம் எதுவுமே இருக்கவில்லை. பசியும் குளிருமாக ஏழுநாட்கள் அங்கிருந்தனர். ஆனாலும் வெளியே வரமுடியாதபடி அவர்களை அச்சம் ஆட்டிப்படைத்தது.

மேஜர் ஜெனரல் டக்ளஸ் விலியம்ஸ் வைட்பரோஸ் சொன்னார். “அந்த குழந்தை பசியால் மென்மயிர் ஆடைக்கு உள்ளிருந்து எழுந்து தவழ்ந்திருக்கும். அதன்மேல் மலைசரிவில் ஒழுகி வந்த மண் பொழிந்து மூடியிருக்கும். அருகே மண்கூம்பு புதிதாக இருந்ததா என்று அந்த முட்டாள்கள் தேடியிருந்தால் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் இவர்கள் ஒவ்வொன்றிலும் முதலில் பிரமைகளைத்தான் அடைவார்கள், அவற்றையே நம்புவார்கள்.”

ஆடம் சொன்னான். “நான் மேஜர் ஜெனரல் டக்ளஸ் விலியம்ஸ் வைட்பரோஸ் அவர்களிடம் எதையுமே விவாதிக்கவில்லை. என் உடல் அதிர்ந்துகொண்டிருந்தது. அன்று எழுந்து என் அறைக்கு திரும்பும்போது நான் உடல் உடைந்து வெளிப்பட்டுவிடுவேன் என்ற அளவுக்கு விம்மிக்கொண்டிருந்தேன்.”

முக்தா சொன்னார். ஆடம் என்னிடம் சொன்ன கதைகள் எல்லாமே ஒரே கதையின் வெவ்வேறு பகுதிகள். நான் அவற்றை என் வாசிப்பைக்கொண்டு இணைத்துக்கொண்டேன். அவன் ஆன்னி பற்றி என்னிடம் இன்னொரு நிகழ்வை சொன்னான்.

ஆடம் சொன்னான். நான் ஓராண்டுக்குப்பின் ஆன்னி டெய்லரின் தனிப்பட்ட குறிப்புகளை நகலை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. 1894ல் ஆன்னி டெய்லரின் My Experiences in Tibet என்ற நூல் வெளிவந்தது. ஆனால் அது ஒரு தெளிவான evangelical odyssey. அதில் அதன் வாசகர்கள் எண்ணுவதன்றி வேறேதும் இல்லை. கிறிஸ்துவின் மீதான நம்பிக்கை, அது அளித்த அற்புதங்கள். கூடவே பிரிட்டிஷ் நிமிர்வையும் துணிவையும் வெளிப்படுத்தும் இடங்கள். மிஷனரிகள் விசுவாசத்தை வேளாண்மை செய்து அறுவடை புரிபவர்கள்.

அத்துடன் இன்னொன்றும் உண்டு. 1904 ல் நிகழ்ந்த திபெத் மீதான கர்னல் யங்ஹஸ்பெண்ட் படையெடுப்பில் தானும் பங்குபெற்று திபெத்தின் அழிவுக்கு காரணமாக அமைந்தது ஆன்னியில் ஆழமான குற்றவுணர்வை உருவாக்கியிருந்தது. அந்தப் படையெடுப்பை நியாயப்படுத்தும் வகையில் திபெத்தின் பின்தங்கிய நிலை, வறுமை, அந்த மக்களின் ஆன்மிகமான இருள் ஆகியவற்றை அவர் சொல்லியாக வேண்டியிருந்தது.

ஆனால் அவ்வப்போது அவர் திபெத்தின் மக்களின் உபசரிப்பையும் உதவிகளையும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. அந்த இடங்களில் அவர் உணர்ச்சிவசப்பட்டார். உடனே நிலைமீண்டு தன்னுடையைது தெய்வ ஆணைப்படி நிகழ்ந்த ஒரு பயணம் என்று சொல்ல தொடங்கினார். கடைசிவரை திபெத்துக்குள் அவர் ஊடுருவியது பிழையா சரியா என்றே ஆன்னி ஊசலாடினார். அது ஏசுவின் ஆணைப்படி நடந்தது என்பதே அந்த குழப்பத்திலிருந்து அவர் வெளிவருவதற்கான வழியாக இருந்தது.

அந்நூலுக்காக ஆன்னி எழுதிய குறிப்புக்களின் நகல் அவருடைய குடும்பத்தினரிடம் இருந்தது. எந்த ஒழுங்குமில்லாத நினைவுகளின் பெருந்தொகுப்பு அது. அதை நான் 1944ல் லண்டன் சென்றபோது அவர்களின் வீட்டுக்குத் தேடிச்சென்று வாசித்தேன். அதில் நான் தேடிய ஒரு நிகழ்வு இருந்தது.

ஆன்னி டெய்லரின் குழு போ-சு ஆற்றின் கரையை அடைந்தபோது சுருங்கி எழுவர் மட்டுமே கொண்டதாக ஆகிவிட்டிருந்தது. நோகா என்ற சீனமுஸ்லீம் வழிகாட்டியும் அவனுக்கு கட்டுப்பட்ட நால்வரும் ஆன்னியின் மொத்தக் குழுவையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். அது தொடர்ந்து பூசல்களை உருவாக்கிக்கொண்டிருந்தது.

பயணத்திற்கு தேவையான பணத்தை வெள்ளிக்கட்டிகளாக மாற்றி ஆன்னி தன் பையில் வைத்திருந்தார். திபெத்தில் அன்று வெள்ளிதான் பொதுவான நாணயமாக இருந்தது. அது சீனர், ஆங்கிலேயர், திபெத்தியர், மேற்கிலிருது வரும் முஸ்லீம்கள் ஆகிய அனைவருக்குமே பொதுவானது. நோகா அதை அவள் தன்னிடம் அளிக்கவேண்டும் என்று கோரினான். அதை அளித்தால் பயணமே நின்றுவிடும் என்று ஆன்னி அறிந்திருந்தார்.

இரண்டுமுறை நோகா ஆன்னியை அதட்டி அவரிடமிருந்து வெள்ளிக்கட்டிகளை பறித்துக்கொள்ள முயன்றான். ஆன்னி தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அவனை மிரட்டினார். அது பழையபாணி பிஸ்டல். ஒருமுறை குண்டுபோட்டால் மீண்டும் திறந்து குண்டு போடவேண்டும். அவரிடமிருந்ததே இரண்டு குண்டுகள்தான். ஆனால் நோகா துப்பாக்கியை அஞ்சினான்.

நோகா கடைசியில் ஒரு வழியை கண்டுபிடித்தான். அவர்கள் ஒரு கோலோக் கிராமத்தை கடந்துசெல்லும்போது அவன் அவர்களிடமிருந்து பிரிந்து சென்றான். அவர்கள் அதை அறியவில்லை. கொலோக் மக்கள் மலையிடையர்கள். அன்னியரை மிக அஞ்சுபவர்கள். அவர்களின் கிராமங்களை பதினாறாம் நூற்றாண்டு முதலே ஆப்கானிய கொள்ளையர் தாக்கியதுண்டு. அவர்களுக்கு அன்னியர் அனைவருமே ஆப்கானியர்தான்

நோகா அவர்களிடம் ஒரு கொள்ளைக் கூட்டம் கிராமம் நோக்கி வருவதாகச் சொன்னான். அவர்கள் சீற்றத்துடன் ஈட்டிகள், கவண்கள், வாள்களுடன் கிளம்பினர். ஆன்னியின் கூட்டத்தை அவர்கள் தாக்கினர் ஆன்னியின் சீன உதவியாளன் ஈட்டியால் குத்தப்பட்டு இறந்தான். ஆன்னி சரண் அடைந்தார்.

அவர்கள் அவளை இழுத்துச்சென்று அடித்தனர். கட்டிவைத்து விசாரித்தபின் வெள்ளிக்கட்டிகளை எடுத்துக் கொண்டனர். நோகா துப்பாக்கியையும் வெள்ளிக்கட்டிகளில் ஒரு பகுதியையும் எடுத்துக் கொண்டு அவர்களை விட்டுச் சென்றான். ஆன்னியும் போன்ட்ஸோவும் பெண்டிங்கும் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிறிதளவு உணவு மட்டுமே அளிக்கப்பட்டது.

அவர்கள் கால்நடையாக போ-சு ஆற்றின் கரையோரமாக நடந்தனர். உணவு தீர்ந்துவிட்டது. வழி எத்தனை தொலைவு என்று தெரியவில்லை. அவர்கள் முற்றாகவே நம்பிக்கை இழந்தனர். ஓர் இடத்தில் வழி இரண்டாக பிரிந்தது. இரண்டுமே மலைகளின் விலாக்களில் வளைந்து கண்ணுக்குத் தெரியாத திசைவெளியில் சென்று புதைந்தன. எங்கும் உயிர்ச்சாயலே இல்லை.

போன்ட்ஸோவும் பெண்டிங்கும் ஆன்னியிடம் அங்கே ஒரு பாறைமேல் அமரும்படிச் சொன்னார்கள். இருவழிகளிலும் சற்றுதொலைவு வரைச் சென்று மலைவிளிம்பை அடைந்து அங்கே நின்று அருகே எங்கேனும் வானில் புகையோ பறவையோ தெரிகிறதா என்று பார்த்துவருவதாகச் சொல்லிச் சென்றார்கள்..

ஆன்னி களைத்திருந்தார். நம்பிக்கை இழந்திருந்தார். அவர் பிரார்த்தனை செய்ய விரும்பினார். ஆனால் நாவிலிருந்து பிரார்த்தனைச் சொற்கள் வெறுமே உதிர்ந்தன, உள்ளம் பிரார்த்தனையைச் செய்ய ஒப்பவேயில்லை. அவர் மெல்ல தூங்கிவிட்டார். தன் குரட்டையை தானே கேட்டு விழித்துக்கொண்டார். அவருக்கு முன்னால் ஓர் இளைஞன் நின்று குனிந்து பார்த்துக் கொண்டிருந்தான்

நீலக்கண்களும் சிவப்புத்தலைமுடியும் கொண்ட வெள்ளைக்கார இளைஞன். அவள் அவனைக் கண்டதும் திடுக்கிட்டு எழுந்து நின்று “யார்?” என்றார்.

அவன் புன்னகைத்தான்.

“இங்கே அருகே கிராமம் இருக்கிறதா? உன் கிராமம் அருகேதானா?”

அவன் அந்த மலைச்சரிவைச் சுட்டிக்கட்டி “ஆற்றைக் கடந்து செல்லலாம்” என்றான்.

“ஆங்கிலம் தெரியுமா உனக்கு?”

அவன் புன்னகைத்துவிட்டு நடந்து சென்றான்.

“உன் பெயர் என்ன?” என்று ஆன்னி கேட்டார்.

அவன் திரும்பி புன்னகைத்துவிட்டு சென்று திரும்பி மறைந்துவிட்டன்.

அது கனவா பிரமையா என்று அவள் திகைத்து அமர்ந்திருந்தாள். பெண்டிங்கும் போண்ட்ஸோவும் திரும்பிவந்தனர். இரு எல்லைகளிலும் ஊர் என எதுவும் தென்படவில்லை என்றார்கள். போண்ட்ஸோ ஒரு பனிப்புயல் அணுகிக்கொண்டிருக்கிறது என்றான். கீழே ஒரு கரிய மேகம்போல அது தெரிகிறது. கரடிபோல மலைச்சரிவில் தொற்றி ஏறி வந்துகொண்டிருக்கிறது. உடனே கிளம்பியாகவேண்டும்

“ஆற்றைக் கடந்துசெல்வோம்… ஆற்றை கடந்தால்போதும்” என்று ஆன்னி சொன்னார்.

நடந்ததைச் சொன்னதும் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். “செல்வோம்… நாம் ஆற்றைக் கடக்கமுடியும்”

அவர்கள் அவளை மறுத்தனர். போண்ட்ஸோ “ஆற்றை நம்மால் கடக்கவே முடியாது… ஆறுவிசைகொண்டது. நீர் மிகக்குளிரானது” என்றான்

‘நம்மால் முடியும்… அவன் சொன்னான்” என்றார் ஆன்னி. திரும்பத்திரும்ப “ஆறுதான் வழி… அவன் சொன்னான்”என்றார்.

அவர்கள் வேறுவழி இல்லாமல் அவருடன் வந்தனர். ஆற்றைக் கண்டதும் அவர் பின்வாங்கிவிடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் மலைச்சரிவில் இறங்கிச் சென்றபோது தொலைவில் ஒரு சிறுகூட்டம் ஆற்றை தெப்பத்தில் கடந்துகொண்டிருப்பதை கண்டனர். உரக்கக் கூவி கையசைத்தபடி போண்ட்ஸோ அவர்களை நோக்கி ஓடினான்.

அது போ-சு என்னும் ஆறு. அவர்கள் அதை அந்த வணிகர்குழுவின் தெப்பங்களில் கடந்தனர். அவர்கள் தெப்பங்களில் ஆற்றைக் கடக்கும் செய்தியை அறிந்து திபெத்திய அதிகாரிகளால் சூழப்பட்டனர். சிறைப்பிடிக்கப்படு நாக்சு என்ற ஊருக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

முக்தா சொன்னார். நான் ஆடமிடம் கேட்டேன். அவன் சொன்ன கதையில் பல சிக்கல்கள் இருந்தன. அந்த இளைஞன் யார்? சூசன்னாவின் குழந்தையா? அக்குழந்தை அது உயிர்விட்ட சில நாட்களுக்குள்ளாகவே எப்படி இளைஞனாக வந்து தன் அன்னைக்கு வழி காட்டியது? அதைவிட ஆன்னி டெய்லர் அந்த இளைஞனைப் பார்த்தபோது அக்குழந்தை பிறக்கவே இல்லை.

ஆடம் கைவீசி “நீ காலம் முன்னோக்கி மட்டுமே ஒழுகும் ஒரு பரிமாணத்தில் இருக்கிறாய். அங்கே, ஷம்பாலாவில் இருப்பவர்கள் காலம் எல்லா திசைகளுக்கும் செல்லும் ஒரு ஐம்பரிமாணத்தில் இருப்பவர்கள்”

“அதெப்படி?”என்று நான் கேட்டேன்

“நதி ஒரே திசைக்கே செல்கிறது. அதிலிருக்கும் மீன்கள் நான்கு திசைக்கும் செல்வன. மீன்களை பிடிக்கும் பறவைகள் ஐந்தாவது திசையையும் அறிந்தவை. அருகே மரத்தடியில் அமர்ந்து தவம் செய்யும் யோகியின் உள்ளம் ஆறாவது திசையையும் அறிந்தது” என்று ஆடம் சொன்னான்

நான் பிறகு அவனிடம் பேசவில்லை. அவனுடைய நம்பிக்கைகளுடன் நான் உரையாட முடியாது. அதோடு என் நம்பிக்கைகளை பேணிக்கொள்ளும் வழியும் அதுதான்.

நாங்கள் முப்பத்தாறுநாட்கள் பயணம் செய்து காரியை சென்றடைந்தோம். அங்கிருந்து மேலும் கிளம்பி நாக்சு நோக்கிச் சென்றோம். நான் லாஸாவுக்குச் செல்லும் எண்ணம் கொண்டிருந்தேன். ஆடம் நாக்சுவுக்குச் செல்லும் வழியில் ஓர் இடத்தில் பிரிந்து நான் லாசா செல்லமுடியும் என்று தோன்றியது

ஆடம் திபெத்தில் நுழைந்தது முதலே அமைதி இழந்திருந்தான். அவனிடம் ஏராளமான வரைபடங்களும் குறிப்புகளும் இருந்தன. இரவெல்லாம் கூடாரத்தில் அமர்ந்து சிறிய பாரஃபின் விளக்கின் ஒளியில் அவற்றை ஆராய்ந்தான். என்னிடம் பேசுவதே குறைந்துவிட்டது

“நாம் எங்கே செல்கிறோம்?”என்று நான் அவனிடம் கேட்டேன்

“இந்தப் பயணக்குறிப்புகளில் பிழைகள் மிகுதி” என்று அவன் சொன்னான். “இவை இந்தப்பயணிகள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பியபின் நினைவுகளைக்கொண்டு எழுதியவை. அவற்றை மீண்டும் நூல்தொகுப்பாளர்கள் திருத்தி எழுதியிருக்கிறார்கள். ஆகவே இவற்றை நம்பி பயணம் செய்யவே முடியாது”

“உதாரணமாக போ-சு என்ற ஆற்றைப்பற்றி ஆன்னி, சூசன்னா இருவருமே சொல்கிறார்கள். நாக்சு நகரின் அருகே அந்த ஆற்றைக் கடப்பதைப்பற்றிய குறிப்பு வருகிறது. ஆனால் அப்படி ஓர் ஆறு திபெத்தில் இல்லை. சு என்றாலே திபெத்திய மொழியில் ஆறுதான். யார்லங் ஸாங்போ [Yarlung Tsangpo] என்ற ஆற்றை குறிப்பிடுகிறார்கள் என்றால் அந்த ஆறு இந்த இடத்தில் இல்லை”

ஆடம் சொன்னான்“அப்படியென்றால் இந்த ஆறு எது? நாக்சு இன்று நாகு என்று அழைக்கப்படுகிறது. இதனருகே ஓடும் ஆறு இன்று நாகு ஆறு என பெயர்பெற்றுள்ளது. ஆன்னியும் சூசன்னாவும் குறிப்பிடும் போ-சு ஆறு இந்த நாகு ஆறாகவே இருக்கவேண்டும். கானோங் ஏரியிலிருந்து கிளம்பி நாக்சு நகர் அருகே ஒழுகி கைகு ஆற்றில் இணைந்து நாகு ஏரியில் கலக்கிறது இது”

ஆடம் வரைபடத்தை சுட்டிக்காட்டினான்“இந்த ஆற்றை தெப்பம் வழியாக கடப்பது என்றால் அது இந்த இடமாகவே இருக்கவேண்டும். இதுதான் இங்கே மிகக்குறுகலான இடம். இதற்குமேல் பாறைகள் இருப்பதனால் நீரின் வேகம் குறைவு. மேலே சென்றால் பாறைகள் வழியாகக்கூட ஆற்றை கடந்துவிடமுடியும். கோடையில் மரத்தடிகளை பாறைகள் நடுவே போட்டு வழி உண்டுபண்ணப்பட்டிருக்கலாம். பெட்ரோஸ் அந்தவழியாகச் சென்றிருக்கலாம்”

நான் அவனுடைய முகத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வெறி மின்னிக்கொண்டிருந்தது. அதை எங்கெல்லாம் எப்படியெல்லாம் பார்த்திருக்கிறேன்! அதை நம்மால் ஏற்கமுடியாது, அது நம்மை அதலபாதாளங்களுக்கு இழுத்துச் செல்லக்கூடும். ஆனால் அதை நம்மால் தவிர்க்கவும் முடியாது. ஏனென்றால் புதியபாதைகளை கண்டடைந்தது புதிய கண்டுபிடிப்புகளை அடைந்தது புதிய சிந்தனைகளை உருவாக்கியது அந்த வெறிதான்

“நீ அங்கே சென்று என்ன செய்யப்போகிறாய்?”என்று நான் கேட்டேன்

“மிகச்சரியாக ஒரே இடத்தில்தான் ஆன்னியும் சூசன்னாவும் அவனைச் சந்தித்திருக்கிறார்கள். அவன் அங்கே தோன்றியிருக்கிறான் என்றால் அது ஒரு மையம். இதை சக்திமையங்கள் அல்லது வெளிப்பாட்டு புள்ளிகள் என்று நாங்கள் சொல்கிறோம். நான் அங்கே சென்று பார்ப்பேன். அங்கிருந்து எனக்கு ஒரு தொடக்கம் கிடைக்கும். ஒரு வழிகாட்டல் வரும்”

நான் ஒன்றும் சொல்லவில்லை

மேலும் நாற்பது நாட்கள் நாங்கள் பனிபடிந்த திபெத்திய நிலம் வழியாகச் சென்றோம். அந்த இடத்தை கண்டடைந்தோம். கோலோக் மக்களின் ஒரு கிராமம் சற்று அப்பால் இருந்தது. அங்கிருந்து புகை எழுந்துகொண்டிருந்தது. குதிரைத்தடங்கள் இரண்டாகப் பிரியும் இடத்தை அடைந்ததும் ஆடம் “இந்த இடம்தான்” என்றான்

அங்கே நாங்கள் முகாமிட்டோம். “இங்கே நீ என்ன செய்யவிருக்கிறாய்?”என்று நான் கேட்டேன். “

‘இங்கே காத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.இந்த இடத்தை நன்றாக பார்க்கிறேன். கூர்மையாக தியானம் செய்கிறேன். எனக்கு அழைப்பு வரும்”

“உன் நோக்கம்தான் என்ன ஆடம்?”என்றேன்

“நான் சொன்னேனே, ஷம்பாலாவுக்குச் செல்வது”

“இதோபார், அங்கே சாமானியர் செல்லமுடியாது என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது?”

“ஆமாம், ஆனால் அங்குள்ளோர் விரும்பினால் நம்மை அழைத்துச் செல்லமுடியும்” என்று ஆடம் சொன்னான்

நாங்கள் அங்கே கூடாரம் அமைத்து தங்கினோம். ஆடம் அந்த இடத்தை சுற்றிவந்து விரிவாக ஆராய்ந்தான். முதல் இருநாட்களுக்கு பின்னர் அந்த சாலைச் சந்திப்பில் ஒரு பாறையை கண்டடைந்தான். “இதுதான் ஆன்னி டெய்லரும் சூசன்னாவும் அமர்ந்திருந்த இடம்” என்றான். அங்கே கண்மூடி கைகளை மடியில் வைத்து அமர்ந்திருந்தான்.

நான்கு நாட்களுக்குப்பின் நான் பொறுமையிழந்தேன். “நாம் இங்கே எத்தனை நாட்கள் தங்கப்போகிறோம்?”என்றேன்

“இங்கே அழைப்பு வரும்.. இது ஒரு வாசல்”என்று அவன் சொன்னான்

“இதோ பார், இங்கே அவர்கள் அழைப்பை பெற்றார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அவர்கள் இங்கே சிக்கிக் கொண்டார்கள். அவர்களுக்கு சார்ல்ஸ் உதவி செய்தான். நீ வெறுமே காத்திருக்கிறாய்”

“இது ஆற்றல்மையம். இங்கே என்னால் அதை மிகமிகத் தெளிவாக உணரமுடிகிறது”என்றான் ஆடம்

“சரி, ஆனால் எத்தனைநாள்?”

“நான் செல்லுமிடமெல்லாம் வருவதற்கும் காத்திருப்பதற்கும் பணம்கொடுத்துத்தான் இவர்களை கூட்டிவந்தேன். விருப்பம் இல்லை என்றால் இவர்கள் செல்லலாம். நான் இங்கேயே காத்திருப்பேன்”

“நான் செல்வதைப்பற்றி பேசவில்லை. இதிலுள்ள அபத்தத்தை உன்னிடம் புரியவைக்க முயல்கிறேன். சார்ல்ஸ் வந்தது அவன் அன்னைக்காக”

“இதில் தர்க்கபூர்வமாக ஏதுமில்லை” என்றான் ஆடம். “நான் என் உள்ளுணர்வை நம்பியே சென்றுகொண்டிருக்கிறேன்”

அவனிடம் பேசிப்பயனில்லை என்று தெரிந்தது. நான் கிளம்பிச் சென்றிருக்கலாம். ஆனால் சென்று ஆற்றுவதற்கு ஒன்றும் இல்லை. சரி இந்த மலைப்பாதையில் தங்குவதென்றால் தங்கலாம் என்று முடிவுசெய்தேன். பனிவெளியில் கொஞ்சம் உலவுவேன். கொஞ்சம் தியானம் செய்வேன். என் குறிப்பேட்டில் கொஞ்சம் கவிதைகள் எழுதுவேன். ஆங்கிலத்தில் கவிதை எழுதுவது என் குழப்பமான, மங்கலான உணர்வுகளை கூராக்கிக்கொள்ள உதவுவது.

மேலும் இரண்டு நாட்களுக்குப்பின் ஆடம் காலையில் என்னை எழுப்பினான். நான் மென்மயிர்ப்போர்வையை தழைத்தபோது அவன் முழுப் பயண உடையில் நின்றிருப்பதைக் கண்டேன்

“என்ன? கிளம்புகிறோமா?”என்றேன்

“நான் கிளம்புகிறேன்… எனக்கு அழைப்பு வந்துவிட்டது”

“யாரிடமிருந்து? எப்படி?”

“இன்று புலர்காலை” என்று ஆடம் சொன்னான் “நான் கிளம்பிச் செல்கிறேன். தனியாக. பிறரிடம் சொல்லிக்கொள்ளவில்லை. நீ இவர்களை அழைத்துக்கொண்டு நாக்சு போ. அங்கிருந்து லாசாவுக்கு செல்லமுடியும். இனிய பயணம் அமையட்டும்… நீ தேடுவதெல்லாம் கைவசப்படட்டும்”

“ஆடம்”என்றபோது என் குரல் தழுதழுத்தது. “நீ யாரை கண்டாய்? எப்படிச் செல்வாய்?”

“எனக்கான வழி தெளிவாகிவிட்டது… என்னை வழிகாட்டி அழைத்துச் செல்வதாகச் சொன்னான்”

“யார்?”

“இன்றுகாலை என்னை வந்து சந்தித்த இளைஞன்”

“சார்ல்ஸா?”என்றேன்

“இல்லை, என் அப்பா” என்று ஆடம் சொன்னான்.

அவன் தலைவணங்கி விடைபெற்றுச் சென்றான். அவன் நடந்து செல்வதை பார்த்தபடி போர்வைக்குள் நடுங்கும் உடலுடன் அமர்ந்திருந்தேன். அவன் மறைந்ததும் திடீரென்று உணர்வு கொண்டு போர்வையை தள்ளி வீசிவிட்டு எழுந்து “ஆடம்” என்று அழைத்தபடி வெளியே ஓடினேன்

ஆடம் வெளியே சென்றுவிட்டான். மிகவேகமான காலடிகளுடன் அவன் பனிவெளியில் நடந்து மறைந்தான். என் உடலில் மெல்லிய ஆடைகள்தான் இருந்தன. ஆகவே குளிர் நடுக்கியது. நான் உள்ளே ஓடி மென்மயிர் மேல்சட்டையை அணிந்துகொண்டு வெளியே வந்து பார்த்தேன். அவன் மறைந்துவிட்டிருந்தான்.

முக்தா சொன்னார். நான் நாக்சு சென்று அங்கிருந்து லாசாவுக்குச் சென்றேன். அங்கிருந்து சீனா. சிக்கிம் வழியாக பூட்டான். அது ஒரு பயணம். அது வேறுகதை. வேறுவேறு கதைகள் என்று கொள்

அதன்பின் நான் ஆடமை பற்றி எதுவுமே கேள்விப்படவில்லை. ஆனால் இப்போதுகூட அவனைப்பற்றி ஒரு செய்தி வராது என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் நான் எண்ணியவையும் எண்ணாதவையுமாக ஏதேதோ செய்திகள் என்னை வந்து முட்டுகின்றன, நான் சென்று முட்டிக்கொள்கிறேன். தேடினால் சிக்காதவை தேடிவந்து முன்னால் நின்றிருக்கின்றன

ஏனென்றால் இந்த மறைஞானப் பயணங்கள் எல்லாமே ஒருவகையில் தனியாரால் ரகசியமாகச் செய்யப்படுபவை. அவர்களில் பெரும்பாலானவர்கள் ஏதேதோ குறிப்புகளை பதிவுசெய்து விட்டுச் செல்கிறார்கள். நூற்றில் ஒருபகுதியே பிரசுரமாகின்றன. பிரசுரமாகும் குறிப்புகளில் நூற்றில் ஒருபகுதியே படிக்கப்படுகின்றன. உலகம் முழுக்க மறைஞானப் பயணங்கள் பற்றி பல லட்சம் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த பூமி எந்த அளவுக்கு பெரும்பகுதி அறியப்படாததாக உள்ளதோ அந்த அளவுக்கே அந்த அறிவியக்கமும் அறியப்படாததாக உள்ளது.

ஆடமைப் பற்றி ஏதேனும் ஒரு பயணக்குறிப்பில், ஒரு நினைவுப்பதிவில் ஒரு செய்தி எழுந்துவரலாம். பெட்ரோஸ் பற்றிய செய்திகூட வரலா, ஆனால் நான் எதையும் தேடிக்கொண்டிருக்கவில்லை. நான் எதையும் தேடாதவனாக ஆகி இருபதாண்டுகள் கடந்துவிட்டன.

நான் இவையனைத்தையும் சொல்லத் தொடங்கியது ஏன்? நெடுந்தொலைவு சுற்றிவிட்டேன். இன்னொரு செய்தியில் கொண்டுசென்று முடிக்கிறேன். நீ ஓவியர் ஸ்வெஸ்திலோவ் ரோரிச்சை கேள்விப்பட்டிருக்கிறாயா?”

“ஆம், பெங்களூரில் இருந்தார். குரு நித்யாவுக்கு தெரிந்தவர். முன்னாள்நடிகை தேவிகாராணியின் கணவர்… நான் அவரைப்பற்றி ஒரு கதைகூட எழுதியிருக்கிறேன்” என்றேன்

“அவரேதான் அவரை நான் 1961ல் குலு- மணாலியில் சந்தித்தேன். அவர்களின் கலை-அறிவியல் ஆய்வுமையம் அங்கிருக்கிறது. 1962ல் அங்கே ரோரிச் அவருடைய தந்தை நிகோலஸ் ரோரிச்சின் ஓவியங்களை வைத்து ஒரு அருங்காட்சியகத்தை திறந்தார்”

முக்தா சொன்னார். நான் ஏற்கனவே சொன்னேனே. ஹெலெனா ரோரிச் ஷம்பாலாவை தேடி சென்று விரிவான ஆய்வை நிகழ்த்திய மலையேற்றக்காரர்களில் ஒருவர். ஹெலெனா ரோரிச்சை விட்டுவிட்டு இந்தியாவின் நவீன ஆன்மிக வரலாற்றை எவரும் எழுதிவிடமுடியாது. அவர் தியோசஃபிக்கல் சொசைட்டியுடன் நெருக்கமானவர். 1879ல் ரஷ்யாவில் பிறந்தவர். மேடம் பிளவாட்ஸ்கியின் நண்பர், மாணவி.

அக்னி யோகம் என்றபெயரில் ஒரு தத்துவ- யோக முறையை உருவாக்கியவர் ஹெலெனா ரோரிச். அவரும் அவர் கணவர் நிகோலச் ரோரிச்சும் இந்திய மெய்யியலை உலகமெங்கும் கொண்டுசெல்வதற்கு பெரும்பணி ஆற்றினார்கள். திபெத்திய பௌத்தம் உலகளாவ அறியப்பட்டதே அவர்களால்தான். Urusvati என்ற பேரில் Institute of Himalayan Studies என்னும் அமைபை உருவாக்கி தலைமை ஏற்று நடத்தியவர். ஆசிய கலைச்செல்வங்களை காக்கும்பொருட்டு International Treaty for Protection of Artistic and Scientific Institutions and Historical Monuments என்னும் ஒப்பந்தத்தை உருவாக்கியவர். இது ரோரிச் ஒப்பந்தம் என்றே அழைக்கப்படுகிறது.

நிகோலஸ் ரோரிச் ஷம்பாலா பற்றி ஏராளமனா நவீன ஓவியங்களை வரைந்திருக்கிறார். அவை உலக ஓவியச்செல்வங்களில் முதல்வரிசையைச் சேர்ந்தவை என்று கருதப்படுகின்றன. மறைஞானப் பயணிகளுக்கும் அவை முக்கியமானவை, பலவகையான குறியீடுகளும் உட்பொருட்களும் கொண்ட்வாஇ அவை.

ஹெலெனா ரோரிச்சும் அவர் கணவர் நிகோலஸ் ரோரிச்சும் 1924 முதல் 1928 வரை ஷம்பாலாவை தேடி திபெத்தின் வட எல்லைவரை மிகவிரிவான ஆய்வுப்பயணத்தை மேற்கொண்டனர். அப்பயணத்தைப் பற்றி ஹெலெனா விரிவாகவே எழுதியிருக்கிறார். அவற்றில் பிரசுரிக்கப்படாத கையெழுத்துப்பிரதிகளும் உள்ளன.

நான் குலுவில் ஸ்வெஸ்திலோவ் ரோரிச்சைச் சந்தித்தபோது அவர் தன் அன்னையின் திபெத்தியப் பயணங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கையில் மீண்டும் போ-சி ஆற்றங்கரை பற்றிய பேச்சுவந்தது

நாக்சு நகரின் அருகே போ-சி என்னும் ஆற்றின் கரையோரத்தில் ஹெலெனா ரோரிச்சின் ஆய்வுக்குழு வழி அறியாது திகைத்து நின்றபோது நீலக்கண்களும் சிவப்புத் தலைமுடியும் கொண்ட ஒரு வெள்ளைக்கார இளைஞன் வந்து அவர்களுக்கு வழிகாட்டி உதவி செய்திருக்கிறான். அவன் அப்பகுதியில் எங்கும் இருப்பவன் என்று தோன்றவில்லை. களைத்து சோர்ந்து மலைப்பாறை ஒன்றின்கீழ் அமர்ந்திருந்த ஹெலெனா மட்டுமே அவனைப் பார்த்தார். அது ஓர் உருவெளித்தோற்றமாக இருக்கும் என்று நிகோலஸ் ரோரிச் சொன்னார்.ஆனால் அது மயக்கநிலை அல்ல, மிகமிகக்கூரிய விழிப்புநிலை என்று ஹெலெனா எழுதியிருந்தார்

அதுவரை ஆடம் சொன்னதுகூட சற்றே கற்பனைதானோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஏனென்றால் இத்தகையவர்கள் அனைத்தையும் மறைஞானக் குறியீடுகளாக எடுத்துக்கொள்பவர்கள். குறியீடுகள்மேல் கற்பனைகளை செலுத்தி வளர்த்துக்கொள்பவர்கள். ஆனால் ஹெலெனா ரோரிச்சின் குறிப்புகளில் உள்ள செய்தி எனக்கு ஓர் உறுதிப்பாட்டை அளித்தது. நாம் அறியாத ஏதோ ஒரு திறப்பு அந்த இடத்தில் இருக்கிறது

ஆனால் நெடுங்காலம் கழித்து ஒன்று தோன்றியது, சார்ல்ஸ் ஷம்பாலாவில் இருக்க வாய்ப்பில்லை என்று. நான் அதை ஒரு நீண்ட கவிதையாக எழுதி நித்ய சைதன்ய யதிக்கு அனுப்பினேன்.

சார்ல்ஸ் தோற்றமளித்தவர்கள் அனைவருமே பெண்கள், அன்னையர். வாழ்வில் ஏதும் மிச்சமில்லாமல் மறைந்ததனால், ஷம்பாலாவுக்கான நுண்ணிய வழியொன்றின் வாசலில் நின்றமையால் அவன் ஷம்பாலாவுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் அங்கே அவன் முழுமையாக இருந்தானா? கைவிடப்பட்ட குழந்தைக்குள் அன்னைக்கான ஏக்கம் ஒரு துளியினும் துளியினும் துளியாக எஞ்சியிருந்ததா?

இருக்காமலிருக்க வழியில்லை. அந்த ஏக்கமே அவனை இளைஞனாக அன்னையர் முன் தோன்றச் செய்தது. அவன் மறுபிறப்பு அடைந்திருப்பான். அன்னையொருத்தியின் முலைப்பாலை விடாய் தீர அருந்தி வளர்ந்து மீண்டும் இந்தச் சக்கரத்தை முழுக்கச் சுற்றி ஷம்பாலாவுக்குச் சென்று சேர்வான்.

அது அவ்வாறுதான் நிகழும். நிகழவேண்டும் என்று நான் வேண்டிக்கொண்டேன் என்று முக்தா சொன்னார். பிரபஞ்சத்தின் முடிவின்மை நமக்குச் சொல்வது ஒன்றே. அது முடிவிலாப்பேருருக் கொண்டது என்பதனாலேயே அதற்கும் ஒரு அணுவுக்கும் அடிப்படை வேறுபாடு என்பது இல்லை.கேட்க வேடிக்கையாக இருக்கலாம், இது ஓர் உண்மை. எல்லா உண்மைகளையும்போல.

முக்தா கைகளை கட்டிக்கொண்டு மழையை பார்த்தபடி அமர்ந்திருந்தார். நான் யூகலிப்டஸ் மரங்களின் நடனத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த ஒவ்வொரு அசைவுக்கும் பொருள் உண்டு என்றால், இந்த ஒவ்வொரு மழைத்துளிக்கும் இலக்கு உண்டு என்றால் நான் என்னுள் ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த தர்க்கத்திற்கு என்னதான் பொருள் என்னும் எண்ணம் என்னுள் எழுந்து சாவை கண்முன் கண்டதுபோல மெய்சிலிர்ப்பு கொள்ள செய்தது. உடனே ஒரு சூடான டீ தேவை என்று தோன்ற எழுந்து குடையை எடுத்தபடி சமையலறைக்குக் கிளம்பினேன்.

***

[நிறைவு]

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16724 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>