Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16754 articles
Browse latest View live

ஆற்றூர்

$
0
0

attoor

 

சுந்தர ராமசாமியின் வீட்டிற்குச் சென்றபோது ராமசாமி ஒரு சிறு பரவசநிலையில் இருந்தார். ”என்ன சார்?” என்றேன். ”ஆற்றூர் ரவி வர்மா வந்திருக்கார்…”என்று சொன்னார். அவரது ‘ஜே.ஜே.சிலகுறிப்புக’ளை மலையாளத்துக்கு மொழியாக்கம்செய்ய ஆற்றூர் முனைந்திருப்பதைப்பற்றி நான் அறிவேன். ஆற்றூர் ரவிவர்மா மலையாளத்தில் முக்கியமான கவிஞர் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். முன் அறைக்குள் மேஜையில் அமர்ந்து பெரிய ஊற்றுப்பேனாவால் கைப்பிரதியை திருத்திக் கொண்டிருந்தவரை நான் எட்டிப்பார்த்தேன்.கரிய நிறம், உயரமில்லை. மெல்லிய உடல்வாகு. கரிய பட்டையான சதுரக் சட்டம் கொண்ட மூக்குக் கண்ணாடிக்கு வெளியே சிறிதே மூக்கு மிஞ்சியிருக்கும். பிரெஞ்சுதாடிதான் அவரது அடையாளம்.

”உள்ள வாங்க”என்று அழைத்த சுந்தர ராமசாமி ”…இவர்தான் ஜெயமோகன், சொன்னேனே”. ஆற்றூர் ரவிவர்மா ‘ஹ-ஹ-ஹ-ஹ!’ என்று சிரித்தார். அப்படி என்ன சொல்லியிருந்தார் என நான் பீதியுடன் சுந்தர ராமசாமியைப்பார்த்தேன். ஒருவரை வரவேற்பதற்கு ஆற்றூர் ரவிவர்மா எழுப்பும் ஒலி என்பதை பிறகுதான் புரிந்துகொண்டேன். அவ்வளவாக நெருக்கமில்லாதவர் என்றால் ‘அ-அ-‘ என்ற ஒலி. ”… ஜெயமோகன் தமிழிலே நல்ல பிடி உள்ளவர். சங்க இலக்கியம்லாம் நல்லா படிப்பார்….”என்றார் சுந்தர ராமசாமி.

”இரிக்யா” என்று திரிச்சூர் மலையாளத்தில் ஆற்றூர் ரவிவர்மா என்னை அமரச்சொன்னார். நான் பிருஷ்டத்தை நாற்காலியில் வைத்ததுமே வேலையைத் தொடங்கிவிட்டார்.”கற்பழிப்பு எந்நால் எந்தாணு?”. நான் சங்கடமாக சுந்தர ராமசாமியைப்பார்க்க அவர் புன்னகையுடன் ”பேசிண்டிருங்கோ”என்று நகர்ந்தார் நான் என்னால் முடிந்தவரை விளக்க முற்பட்டேன். பத்துநிமிடம் கழிந்துதான் ஆற்றூர் ரவிவர்மா மனதில் கற்பு — கறுப்பு இரண்டும் ஒன்றாக பதிந்திருப்பதை புரிந்துகொண்டேன். ”ஆட்டே, ஈ கற்பு எவிடயா உண்டாவுக?” என்ற கேள்விமூலம்.

இதன்பின் சுந்தர ராமசாமியின் விசேஷமான சொல்லாட்சியின் பொருளை புரிந்துகொள்ள நாங்களிருவரும் சேர்ந்து முயன்றோம். ‘உழைப்பு இல்லாமல் கற்பழிப்பு இல்லை’. கற்பழிப்பது என்பது கடுமையான உடலுழைப்பு உடைய செயல் என்றே சினிமாக்களில் மட்டும் அதைக் கண்டுவந்த நான் புரிந்துகொண்டிருந்தேன். வில்லனும் கடுமையாக மூச்சு வாங்குவாரே. இங்கே சுந்தர ராமசாமி இயற்கையைப்பற்றி ஏதோ சொல்கிறார் என்ற பொதுப்புரிதலை இருவரும் அடைந்தபோது ஆற்றூர் ரவிவர்மா களைத்து ”இனி ஒரு இடவேள”என்றார்.

ஆற்றூர் ரவிவர்மாக்கு ஒரு ரேசர் வாங்கவேண்டியிருந்தது. பிரெஞ்சுதாடியை பராமரிப்பதென்பது ஓர் அன்றாடவேலை. தினமும் வடிவம் மாறுவது அது. நாங்கள் இருவரும் சேர்ந்து நாகர்கோயில்–ஆசாரிப்பள்ளம் தெருவில் நடந்தோம். ”சார், ஒரு நிமிஷம்!” என்றேன். ”என்ன?” என்று பதறினார். சாலையோரம் ஒரு பெரிய பெண்பன்றியின் பெரிய காதுகள் மட்டும் சாக்கடைக்கு வெளியே தெரிவதை காட்டினேன். தலைவி சாலையை வேவு பார்க்கிறது.இதோ படை சாலையைக் கடக்கப்போகிறது. ஆற்றூர் ரவிவர்மா சுவாரசியத்துடன் நின்றுவிட்டார்.

முலைகள் அலைபாய ஓடும் சாக்குமூட்டை போலப் பாட்டிப்பன்றி ஒன்று ‘ம்றக்’ என்ற ஒலி எழுப்பி சாலையைக் கடக்க கரிய சேறு தடம் போட பத்துப்பதினைந்து பன்றிகள் ஆடியாடி வால் சுழற்றி மறுபக்கம் பாய்ந்தன. ”ஒரே ஒரு பண்ணிக்குட்டி மட்டும் வித்தியாசமா ஏதாவது பண்ணும் சார்” என்று நான் சொல்லி முடிப்பதற்குள் ஒரு குழவி ஆற்றூரை நோக்கி வந்து மூக்கை நிமிர்த்தி ‘ம்ம்ம்றே?” [மலையாளத்தானா ஓய்?] என்று கேட்டது. அதன் தாயார் ‘ம்ம்ரீஈ…றக்!” [ கழிச்சலிலே போறவனே, வாலே இந்தால] என்று அதட்ட துள்ளி திரும்பி ஓடியது. ”கொள்ளாமல்லோ…இது எங்ஙினெ அறியும்?” என்றார் ஆற்றூர் ரவிவர்மா பிரமிப்புடன். ”பண்ணிக்கூட்டத்திலே எப்பவும் ஒரு ரிபல் உண்டு சார்!” என்று சொல்லி பன்றிகளைப்பற்றிய என் ஞானத்தை பகிர்ந்துகொண்டேன்.

திரும்பும் வழியில் ஆற்றூர் ரவிவர்மா ”எழுதாறுண்டோ?” என்றார் .அப்போது நிகழ் இதழில் ‘படுகை’ வந்திருந்தது. ”ஒண்ணு ரெண்டு கதை…”என்று தயங்கியபடி சொன்னேன். ”எழுதணும். தான் எழுத்துகாரனாணு….”என்றார் ஆற்றூர் ரவிவர்மா — என் ஒரு வரியைக்கூட படித்திராமல். அது என் குருநாதனின் ஆசி. இன்றுவரை என் பேனா வற்றியதில்லை. எதை எழுதவும் ஒரு கணம்கூட தயங்கியதில்லை. அமர்ந்தால் எழுதவேண்டியதுதான். கைமட்டுமே களைக்கும். ஆம், ‘உப்புக்கும் பாடி புளிக்கும் ஒருகவிதை ஒப்பிப்பவ’ளைவிட நான் ஒருபடி மேல்தான். அவ்வருடமே ‘ரப்பர்’ எழுதி அதை ஆற்றூர் ரவி வர்மாவுக்கும் ஸ்ரீதேவி வர்மாவுக்கும் சமர்ப்பணம்செய்தேன். என் முதல் நூல்.

தமிழ் ஆற்றூர் ரவிவர்மாவை போட்டுப் பாடாய்ப்படுத்தியது. அவரது முதல் சிக்கலே தமிழில் முதலெழுத்தைப் போடும் பழக்கம்தான். அது கேரளத்தில் இல்லை. ”ஆராணு சிசு செல்லப்பா?” ”சார்!” என்று அலறிவிட்டேன் ”அவரு சிசு இல்லை. வயசு எழுபதுக்கும் மேலே. கேள்விப்பட்டா கொலையே செஞ்சிருவார்…” ஆற்றூர் ரவிவர்மா சுந்தரராமசாமியையே சொல்லக் கஷ்டப்படுவார். அதிலுள்ள ரரா அவருக்கு வராது. ஆனால் அஞ்சி பின்வாங்குபவரல்ல. மூச்சுபிடித்து சுந்த-ரரா-மசாமி என்று சற்றே ஜப்பானியச் சாயலுடன் சொல்லி விடுவார். தமிழ் எழுத்தாளர்களை அவரது பேச்சில் அடையாளம் காண்பது கொஞ்சம் கஷ்டம். கூலிங் கிளாஸ் மாட்டி, தொப்பி வைத்து, கன்னத்தில் மரு ஒட்டி கருப்புப் பல்லுடன் தென்படுவார்கள். ‘வவே’ சுப்ரமணிய அய்யர், ‘குப’ ராஜகோபாலன், ‘தீ’ ஜானகிராமன் ‘நீலா’ பத்மநாபன்….

எத்தனை தடைகள்! நள்ளிரவில் ·போன் போட்டு தெரியாத வார்த்தைகளை எழுதி வைத்து கேட்பார். திறன்? ”ஓ, திறக்குந்நவன் அல்ல அல்லே? சரி, அடுத்தது, ‘ஒட்டிக்’ எந்நால் எந்து அர்த்தம்?” எனக்கு ஒன்றும்புரியவில்லை. ”சார் ‘பத்திக்’ தானே? மெழுகுவச்சு சேலைகளிலே படம் வரைவாங்களே அது? ”அது எனிக்கு அறியும். இது ஒட்டிக்.” அப்படி ஒரு சொல்லே தமிழில் இல்லை என்றேன். இருக்கிறதே என்றார். சரி அந்த வரியை முழுதாகப் படியுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். ”கையில் – ஒட்டிக் – கொண்டது” என்று வாசித்தார். நான் விளக்கியதும் ”அதுசரி இதினே ஞான் நாலு மணிக்கூர் நேரமாய் டிக்ஷனரியில் தேடியல்லோ” என்றார். ஒற்றெழுத்து மிகுதலை அவருக்குப் புரியவைக்க என் எளிய மொழித்திறனால் இயலவேயில்லை–கடைசிவரை. ‘நல்லக்க்க் குழந்தை!’ ‘அடித்துக்க்க்க் கொலை!’ தான்.

அதைவிடச் சிக்கல் உச்சரிப்புக்கும் எழுத்துக்குமான உறவு. அவர் மூச்சுப்பிடித்து உரக்கப் படிப்பார், ‘ச்சூரியன்!’. நான் திருத்துவேன் ‘சார் அதை ஸ¥ரியன்னு சொல்லணும்’ உடனே ”ஸற்றே ஸாய்வான ஸ¥ரல் நாற்காலியில்…” நான் ”சார்! சார்!” என்றேன். மூக்குக் கண்ணாடியை தூக்கி விட்டு ”எந்தா?” என்றார். அப்படியில்லை. ஏன் அப்படி இல்லை என்று சொல்ல முடியாமல் நான் ஸற்றே ஸாய்ந்து கறுப்பு டீ குடிக்கத் தலைப்பட்டேன். இதிலே நக்குலன் என்று ஸொல்லக்கூடாது நஹ¤லன் என்று சொல்ல வேண்டும் என்றெல்லாம் ஜொள்ளி எனக்கே மொத்தமாகக் குழப்பமாகிப்போய்விட்டது.

தமிழாய்வாளர்களை அவரால் நெருங்கவே முடியவில்லை. இவ்வளவுக்கும் அவர் ஒரு தூய்மைவாதி, கச்சிதவாதி. அவ்வகை தீவிரங்கள் மேல் அவருக்கு மோகம் உண்டு. தீவிரங்களுக்கு வாழ்க்கையில் பொருளே இல்லை, ஆனால் தீ£விரம் இல்லையேல் வாழ்க்கையே இல்லை என்பது அவரது கோட்பாடு. ஞானி சாதிப்பெயர் எழுதமாட்டார். ஆகவே அவரை ஆற்றூர் ரவி என்றுதான் சொல்வார். ”அதெப்டி நம்ம வீட்டு நாய் வாலை பக்கத்துவீட்டுக்காரன் கட் பண்ணலாம்? ”என்று சுந்தர ராமசாமி சினந்தார். ” இரிக்கட்டே…”என்று ஆற்றூர் ரவிவர்மா சமாதானமடைந்தார். தமிழர்கள் சாதிகளைப்பற்றியும் பாலுறவு பற்றியும் பேசமாட்டார்கள், ராப்பகலாக நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்று நான் அவருக்கு விளக்கினேன். ஞானியிடம் பொற்றேக்காட் என்பது சாதிப்பெயர் என்று சொல்லி அவர் ‘எஸ்.கெ.’ என்று மட்டுமே சொல்லலானார்.

வட்டார வழக்கு ஆற்றுரை விழி பிதுங்க வைத்தது. கேரளத்தில் உரைமொழிக்கும் வரைமொழிக்கும் இடையே இவவ்ளவு பெரிய அகழி இல்லை. உரைமொழிகளுக்கு இடையேயும் இத்தனை பெரிய பிளவுகள் கிடையாது. ”ன்னா நன்சுக்னு கீறே நைனா? பட்டா, உட்டு ஆட்டிருவேன். ஒத துண்ணப்போற அக்காங். ஏய், ஸொம்மா டின்னு கட்ருவேன்..ன்னா மொறக்றே? நம்ம கைல வச்சுக்காதே…ன்னா ?” போன்ற வசனங்களை பொறுமையாக வாசித்து ஒருமுறை மலையாள எழுத்தில் எழுதி மந்திரம் போல சொல்லிப்படிக்கும் ஆற்றூரைக் காண பரிதாபமாக இருக்கும்

ஆனால் சளைக்காமல் எல்லாரையும் வாசித்துவிடுவார். மலையாளப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகுதான் ஆற்றூர் ரவிவர்மா தமிழ் ஆனா ஆவன்னா [எதுக்கு தமிழ் எழுத்துக்களை ஆனையில் தொடங்கணும்? ஆனை கணபதியானதினாலேயா?] சிலேட்டில் எழுதிக் கற்றுக் கொண்டார். பதினைந்துவருடங்களுக்குள் மொழிபெயர்ப்புக்கு கேந்திர சாகித்ய அகாதமி விருது பெற்றார். பக்தி காலகட்ட கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் இருபெரும் தொகைகளாகக் கொண்டுவந்து தமிழைப்பற்றிய மலையாளக் கண்ணோட்டத்தையே மாற்றியமைத்தார்.

ஆற்றூர் ரவிவர்மாவின் வாழ்க்கையில் இருபது சதவீதம் நேரம் பிரம்மனால் கண்ணாடியை தேடுவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. எங்கும் இருக்க வாய்ப்புள்ளது அது. ஒருமுறை நான் அவர் வீட்டை நெருங்கும்போது முன்முற்றத்து மாமரத்துக் கிளைமேல் இருந்தது. அதை கையில் எடுத்தபடி கதவை தட்டினேன். திறந்து கண்ணாடியை கொடுத்ததும் ‘ஹ-ஹ-ஹ’ என்று சாதாரணமாக அதை வாங்கிக் கொண்டார். கைமறதியாக எனக்கு தபாலில் அனுப்பிவிட்டதாக நினைத்துக் கொண்டாரோ என்னவோ.

ஆற்றூர் ரவிவர்மாவை எல்லாரும் சிரித்த முகத்துடன்தான் அறிந்திருக்கிறார்கள். எப்போதும் அச்சிரிப்பு அவர் வீட்டுக்குள் கேட்டுக் கொண்டிருக்கும். எல்லா புகைப்படங்களிலும் வெடிச்சிரிப்புடனேயே பதிவாகியிருக்கிறார். சிந்திப்பதுபோன்ற ஒரு படத்துக்காக மாத்ருபூமி புகைப்படக்காரர் அவரிடம் பலவகையான சோகச்செய்திகளை சொல்லிப்பார்த்ததாகவும் அவற்றில் உள்ள வேடிக்கைகளை கண்டெடுத்து அவர் ‘பொட்டிச் சிரித்ததாகவும்’ சொல்லப்படுகிறது. கடைசியில் சோகமாக ஆற்றூர் இருக்கும் அந்தப் புகைப்படம் ஏதோ கம்ப்யூட்டர் மோசடி என்று அவரை அறிந்தவர்கள் நினைக்க நேர்ந்தது. அதை எடுத்தபோது நிருபர் அவரே எழுதிய ஒரு கவிதையை வாசித்தாராம்

ஆனால் இளம் வயதில் ஆற்றூர் ரவிவர்மா ஒரு அனல் பறக்கும் புரட்சியாளராக இருந்திருக்கிறார். பிளவுபடாத கம்யூனிஸ்டுக் கட்சியின் வெடிகுண்டு அணி. அவரது தலைக்கு திருவிதாங்கூர் அரசு விலை வைத்திருக்கிறது. சென்னை ராஜதானிக்குத் தப்பி அங்கேதான் மலையாளம் ஆனர்ஸ் முடித்தார்.நக்சலைட் புரட்சியாளர்களுடன் உறவு கொண்டு பணியாற்றியிருக்கிறார். எல்லாம் முடிந்து பிறகு வந்தது அந்த வெடிச்சிரிப்பு. அப்போதுதான் காதல் கல்யாணம். புரட்சிவாதி காதலித்துக் கல்யாணம் செய்யவேண்டுமென்றுதானே வங்க நாவல்கள் அறைகூவுகின்றன. காதல் கடிதத்தை கவிதைமயமாக எழுதியாகிவிட்டது. பார்த்தால் ‘சாய்ஸே’ இல்லை. ஊரில் ஒரே ஒரு பெண்ணுக்குத்தான் எழுதப்படிக்கத்தெரியும். அதிருஷ்டவசமாக அவளுக்குக் கல்யாணம் ஆகியிருமிருக்கவில்லை. கோவிலுக்கு வந்த ஸ்ரீதேவி வாரியஸ்யரை நிறுத்தி கடிதம் கொடுக்க காதல் கைகூடி திருமணம்

ஆனால் அம்மையார் கடிதத்தை படிக்கவேயில்லை. ஆற்றூரின் கையெழுத்து அப்படிப்பட்டது. அப்படியானால் காதல் எப்படி தெரியவந்தது? இதென்ன அசட்டுச் சந்தேகம்? ஊரிலே ஒரு பையன் பெண்ணுக்கு கடிதத்தை வேறு எதற்காகக் கொடுப்பான்? பின்னர் அம்மணி ஆற்றூரின் பிரதம வாசகியாக விளங்கினார் என்பது கையெழுத்து பழகியதனால் அல்ல, அவர் வாசித்துக் கேட்கவைத்ததனால்தான்.

ஆற்றூர் வேகமாக எழுதுபவரல்ல. ஒருநாள் இரண்டுவரி எழுதினால் அபூர்வம். அதை மீண்டும் மீண்டும் சொல்லியபடி கைகை ஆட்டிக் கொண்டு வீட்டுக்குள் நடப்பார். சேப்பக்கிழங்கு வறுவல் தின்றவரைப்போல அவஸ்தைப்படுவார். எழுதி முடித்ததும் வனமிருகங்கள் எலும்பை புதைத்துபோடுவதுபோல புத்தகங்களில் எங்காவது குழிதோண்டி புதைப்பார். ஆறுமாதம் வரை ஆகும் பதம் வருவதற்கு. பத்திரிகைகளில் இருந்து கட்டாயப்படுத்தி கேட்டால் புத்தகங்களை திறந்து தேடினால் கவிதை அகப்படும். அது அனேகமாக ஓண மலர்களில். ஆகவே அவருக்கு ‘சீசன்’ கவிஞர் என்று பெயருண்டு. கவிதை சீசனில் அவரது முகம்சிவந்து காதருகே மதஜலம் வடியும் என்ற கூற்று பொய், நான் பார்த்தது இல்லை.

மேடைகளில் ஆறரைவரிக்குமேல் பேசமாட்டார். ஆனால் அந்தக்கூட்டத்திலேயே நினைவில் நிற்கும் வரி அவர் சொன்னதாகவே இருக்கும். வகுப்புகளில் ரத்தினச்சுருக்கமாக பேசுவார் என்கிறார்கள். ஒரு சிறு குரல் பிரச்சினை நாற்பதுவயதில் வந்ததனால் குரல் உடைந்திருக்கும். பையன்கள் செல்லமாக கிளிவர்மா என்பார்கள். ஆனால் அவரது வகுப்புகள் எப்போதும் மாணவர்களாலும் ஆர்வலர்களாலும் நிறைந்து வழியும். ஓய்வுபெற்ற பின்னும் இன்றுவரை தனியார் கல்லூரிகளின் நட்சத்திர ஆசிரியராக இருக்கிறார். கற்பிக்காமல் அவராலும் இருக்க முடியாது.

”பாடம் படிப்பிக்க ஆயிரம்பேர் உண்டு. சார் மட்டும்தான் புதிதாக ஏதாவது சொல்ல முடியும்”என்றான் அவரது இளம் மாணவன். ஒவ்வொரு வகுப்புக்கும் விரிவாகப் படித்து குறிப்புகள் எடுப்பார் ஆற்றூர் ரவிவர்மா. கச்சிதமான சிறு சொற்றொடர்களை மாணவர் மனதில் விதைத்து சிந்தனை பாரத்துடன் எழுந்துசெல்ல வைப்பார். இன்று அவரது மாணவர்களில் மூன்றாம்தலைமுறை மலையாள சிந்தனைத்தளத்தில் வேர் பரப்பி எழுந்திருக்கிறது. அவர் கேரள இலக்கியத்தில் ஒரு வலுவான, நுட்பமான மையம்.

எவரையும் விமரிசனம்செய்வதில்லை ஆற்றூர். யாரையுமே வெறுப்பதில்லை. எல்லா மனிதர்களுக்கும் பிரியமானவர். அவர் நடை சென்றால் ஆயிரம் வணக்கங்கள். லௌகீக உசாவல்கள். ஆனால் அவர் வாழ்வது வேறு ஓர் உலகில். அவரைப்பற்றி ஒரு புகழ்பெற்ற கதை உண்டு. அவரது புகழ்பெற்ற மாணவர் கல்பற்றா நாராயணன் சொன்னது. ஆற்றூர் ரவிவர்மா தலைசேரி கல்லூரியில் வேலைபார்த்த காலம். கையில் ஒரு பையுடன் மறுகையால் பஸ்ஸின் மேல்க்கம்பியை பிடித்தபடி ஆடியாடி நிற்கிறார். மனதில் கவிதைச் சிந்தனை. கண்டக்டர் வந்து ”டிக்கெட் டிக்கெட்” என்றபோது மேலே கம்பியை மோவாயால் சுட்டி ”இதைக் கொஞ்சம் பிடி… பையிலிருந்து பணமெடுத்து தருகிறேன்”என்று சொன்னாராம் 

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம்Apr 2, 2010

தொடர்புடைய பதிவுகள்


‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 67

$
0
0

[ 8 ]

துரியோதனன் கர்ணனுடன் தனியாக வருவதை படகில் ஏறியபின்னரே  விதுரர் அறிந்தார். பறவைச்செய்திகள் வழியாக ஒற்றர்களுக்கு செய்தி அறிவித்து இருவரும் வரும் பாதையை கண்காணிக்க வைத்தார். புறாக்கள் படகிலேயே திரும்பி வந்து அவர்களின் பயணத்தை காட்டின. விரித்த தோல்வரைபடத்தில் செந்நிற மையால் இருவரும் வரும் வழியை அவர் அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார்.

கௌரவர்கள் படகில் ஏறிய போதே தனிமையும்  துயரும் கொண்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தத்திற்குள் நுழைந்த போதும் ராஜசூய வேள்வியின் போதும் இருந்த கொண்டாட்டமும் சிரிப்பும் முழுமையாக மறைந்திருந்தன. சிசுபாலனின் இறப்புக்கு என்ன பொருள் என்று அவர்கள் அனைவருமே அறிந்திருந்தனர்.

துச்சாதனன் விதுரரின் அருகிலேயே  இருந்தான். “தனித்து வருகிறார்கள், அமைச்சரே. நான் அரசரை விட்டுவிட்டு வந்திருக்கக்கூடாது” என்று அவன் நிலையழிந்தவனாக சொன்னான். படகின் வடங்களைப் பற்றியபடி  இருமுனைகளுக்கும் பதற்றத்துடன் நடந்து கொண்டிருந்தான். பெரிய கைகளை ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டு “அவர்கள் உடலை எவரும் மறைக்க முடியாது. அவரை அறியாத எவரும் அப்பாதையில் இருக்க வாய்ப்பில்லை” என்றான்.

விதுரர் “அவர்களை எவரும் ஒன்றும் செய்துவிட முடியாது” என்றார். “வேண்டுமென்றால் செய்யலாம்” என்று உரக்கச் சொன்னபடி அவர் அருகே வந்தான். “எதிரிப்படை ஒன்று அவர்களை சிறையெடுத்தால் என்ன செய்வோம்?” என்றான். விதுரர் “அவ்வாறு செய்வதற்கு பாரதவர்ஷத்தில் முறைமை ஒப்புதல் இல்லை” என்றார். “முறைமைப்படியா இங்கு அனைத்தும் நடைபெறுகின்றன?” என்று துச்சாதனன் சினத்துடன் சொன்னான். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசரே அதை செய்யக்கூடும் என்று நான் ஐயுறுகிறேன். அவர்களை நச்சு அம்பு எய்து கொன்றுவிட்டு அப்பழியை நிஷாதர்கள் மேல் போடலாம். நெருப்பு வைத்து எரித்துவிட்டு நான்கு வேடர்களைக் கழுவேற்றி முடித்துக் கொள்ளலாம்.”

விதுரர் சினத்துடன் “இதை என்னிடம் பேசவேண்டியதில்லை” என்றார். “நான் அப்படி எண்ணுகிறேன். அதைப் பேசுவதிலிருந்து தடுக்க எவராலும் முடியாது” என்று துச்சாதனன் கூவினான். “அங்கு அவையில் ஒன்று தெரிந்தது. இந்திரப்பிரஸ்தத்திற்கு இனி பாரதவர்ஷத்தில் தடை என்பது அஸ்தினபுரி மட்டுமே. எங்களை அகற்ற அவர்கள் எதுவும் செய்வார்கள்…” விதுரர் ஒன்றும் சொல்லாமல் தன் வரைபடத்தை சுருட்டிக் கொண்டு உள்ளே சென்றார். அவருக்குப் பின்னால் துச்சாதனன் சினம் கொண்டு உறுமுவது கேட்டது.

அஸ்தினபுரி படித்துறையில் படகுகள் நின்றபோது கௌரவர்கள் ஒவ்வொருவராக இறங்கி தலைகுனிந்து ஒருவருக்கொருவர் ஒரு சொல்லும் உரைக்காமல் தேர்களை நோக்கி சென்றனர். விதுரர் இறங்கி  ஒருகணம்  திரும்பி அம்பையின் ஆலயத்தை பார்த்தார். அன்று காலை அணிவிக்கப்பட்ட செந்நிற மலர் ஆரம் சூட்டப்பட்டு நெய்யகல் சுடரின் ஒளியில் பெரிய விழிகளுடன் அன்னை அமர்ந்திருந்தாள். அவர் திரும்பி ஆலயத்தை நோக்கி நடக்க கனகர் அவருக்குப் பின்னால் வந்து “சொல்லியிருந்தால் பூசகரை நிற்கச் சொல்லியிருப்பேன்” என்றார். விதுரர் வேண்டாம் என்பது போல் கையசைத்துவிட்டு ஆலயத்திற்கு முன் சென்று நின்றார்.

காவல்நிலையிலிருந்து காவல்நாயகம் ஓடி வந்து பணிந்து  “பூசகர் காலையிலேயே சென்றுவிட்டார். இங்கே குகர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் பூசை செய்கிறார்கள். முதிய பூசகன் ஒருவன் படகில் இருக்கிறான். தாங்கள் விரும்பினால் அவனை வரவழைத்து மலரும் நீரும் சுடரும் காட்டச் சொல்கிறேன்” என்றார். விதுரர் சரி என்று தலையசைத்தார். காவல்நாயகம் இடைகழியினூடாக  ஓடினார்.

சிறிது நேரத்திலேயே நீண்ட புரிகுழல்கள் தோள்களில் பரவியிருக்க சிவந்த பெரிய விழிகளும் நரம்புகள் இறுக்கிக் கட்டப்பட்ட எலும்புக்குவை போல மெலிந்த உடலும் கொண்ட முதியகுகன் வந்து நின்றார். விதுரரை அவர் வணங்கவில்லை. “நிருதரின் குலத்தின் முதன்மைப்பூசகர் இவர். இன்று முதற்கலமொன்று நீரில் இறங்குவதனால் அதில் ஏறி வந்திருக்கிறார்” என்றார் காவல்நாயகம். விதுரர் “பூசகரே, அன்னைக்கு மலர் நீராட்டு காட்டுங்கள்” என்றார்.

பூசகர் கால் வைத்து ஆலயத்திற்குள் ஏறியபோது மெலிந்திருந்தாலும் அவர் உடல் மிகுந்த ஆற்றல் கொண்டது என்று தெரிந்தது. கைகள் தோல்வார் முறுக்கி முடையப்பட்டவை போலிருந்தன. தண்டு வலித்து காய்த்த பெரிய விரல்கள். காகங்களின் அலகு போல நீண்ட நகங்கள். குகன் கங்கைக்கரையோரமாகவே சென்று காட்டு மலர்களை ஒரு குடலையில் பறித்துக்கொண்டு வந்தார். மரக்கெண்டி எடுத்து சிறிது கங்கை நீரை அள்ளி வந்தார். நெய்யகலில் இருந்து சுற்றி விளக்கொன்றை பற்றவைத்துக் கொண்டு மலரிட்டு நீர் தெளித்து சுடர் சுழற்றி அவர் பூசனை செய்வதை கூப்பிய கைகளுடன் விதுரர் நோக்கி நின்றார். அன்னையே என்று எண்ணியபோது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழியத்தொடங்கியது. கனகர் அவர் முகத்தை நோக்கியபடி சற்று தள்ளி கைகூப்பி நின்றார்.

சுடரை குகன் தன் முன் நீட்டியபோது தன்னால் கைநீட்டி அதை தொட முடியாது என்று விதுரர் உணர்ந்தார். “சுடர், அமைச்சரே!” என்றார் கனகர். “ஆம்” என்றபடி விழித்தெழுந்து கைநீட்டி சுடரைத் தொட்டு கண்களிலும் நெற்றியிலும் சூடினார். பூசகர் அளித்த மலரை வாங்கி தன் சென்னியில் வைத்தபின் மீண்டும் அன்னையை தலைவணங்கிவிட்டு திரும்பி நடந்தார். சுடர் வணங்கி மலர் கொண்டு கனகர் அவருக்குப் பின்னால் வந்தார்.

நகர் நுழைந்து அரண்மனைக்கு வரும்வரை விதுரர் தேரில் உடல் ஒடுக்கி கலங்கிய கண்களுடன் சொல்லின்றி அமர்ந்திருந்தார். நகரமே அவர்களின் உணர்வுகளை அறிந்துகொண்டதுபோல் இருந்தது. எங்கும் வாழ்த்தொலிகள் எழவில்லை. கௌரவர்களின் நகர்நுழைவை அறிவிப்பதற்காக முரசொலி மட்டும் முழங்கி அமைய வீரர்களின் முறைமைசார்ந்த வாழ்த்துக்குரல்கள் மட்டும் ஒலித்து ஓய்ந்தன. அரண்மனைக்குச் சென்றதுமே அமைச்சுநிலைக்குச் சென்று அதுவரை வந்து சேர்ந்த அனைத்து ஓலைகளையும் அடுக்கிப் பார்த்தார்.

கனகர் “பாதிவழி வந்துவிட்டனர்” என்றார். விதுரர் ஆம் என தலையசைத்தார். கனகர் “ஏன் புரவியில் வரவேண்டும் அத்தனை தொலைவு?” என்றார். விதுரர் “புரவி அவர்களுக்கு தேவைப்படுகிறது போலும்” என்றார். அவர் சொல்வது புரியாமல் கனகர் “நெடுந்தூரம். புரவியில் வருவது பெரும் அலுப்பு” என்றார். “அவர்களின் உடல் களைத்து சலிக்கட்டும். அப்போதுதான் உளம் சற்றேனும் அடங்கும்” என்றார் விதுரர். “அவர்களின் வருகை பற்றிய செய்தியைப் பெற்று அடுக்கி வையுங்கள். நான் இல்லத்திற்கு சென்றுவிட்டு வருகிறேன்” என்றார்.

அவரது இல்லத்தில் நுழையும்போதே முதன்மைச்சேடி அருகணைந்து “அன்னை நோயுற்றிருக்கிறார்” என்றாள். அவள் அவருக்காக காத்திருந்தாள் என்று தெரிந்தது. “என்ன நோய்?” என்று விதுரர் கேட்டார். “நேற்றிலிருந்து தலைவலி உள்ளது” என்றாள். விதுரர் “மருத்துவச்சி வந்து பார்த்தாளா?” என்று கேட்டார். “ஆம். இருமுறை வந்து பார்த்தார்கள்” என்று சொன்னபடி அவருக்குப் பின்னால் சேடி வந்தாள். “அரசர் இன்னும் நகர்புகவில்லை. நான் இன்றிரவு அமைச்சுநிலையில்தான் இருப்பேன்” என்றபடி அவர் தன் அறைக்கு சென்றார்.

விரைந்து நீராடி உடை மாற்றி அமைச்சுநிலைக்கே மீண்டார். வீட்டிலிருந்து கிளம்புகையில் அவர் பின்னால் வந்த சேடியிடம் “மருத்துவச்சி என்ன சொன்னாள் என்பதை அமைச்சுநிலைக்கு வந்து என்னிடம் சொல்” என்று திரும்பிப் பாராமலே சொல்லிவிட்டு தேர் நோக்கி நடந்தார். துச்சாதனன் அவருக்காக அமைச்சுநிலையில் காத்திருந்தான். “அவர்களுக்கு ஏதாவது படைபாதுகாப்பு செய்யப்பட்டிருக்கிறதா, அமைச்சரே?” என்றான். “படைபாதுகாப்பு செய்வதுதான் பிழை. அரசருக்கு அது தெரிந்தால் சினம் கொள்வார்” என்றார் விதுரர்.

துச்சாதனன்  “அவர்கள் தனித்து வருகிறார்கள் என்பதை எண்ணாது ஒருகணம்கூட இருக்கமுடியவில்லை. எங்கும் அமரமுடியவில்லை” என்றான். கைகளை முறுக்கியபடி அறைக்குள் எட்டுவைத்து  “நான் வேண்டுமென்றால் சென்று அவர்களுடன் வருகிறேனே” என்றான்.  “நீங்கள் செல்வதற்குள் அவர்கள் அஸ்தினபுரியை அணுகிவிடுவார்கள்” என்றார் விதுரர். “என்ன செய்வது? ஏதாவது ஒன்று நிகழ்ந்துவிட்டால்…” என்று துச்சாதனன் முனகினான். “நான் பாரதவர்ஷத்தின் அரசர்களை நம்புகிறேன். அஸ்தினபுரியின் அரசரையும் அங்கரையும் அதைவிட நம்புகிறேன்” என்றபின் விதுரர் சுவடிகளை பார்க்கத் துவங்கினார்.

அன்றிரவு அமைச்சுநிலையிலேயே சாய்ந்த பீடத்தில் அமர்ந்து சற்று துயின்றார். காலையில் அஸ்தினபுரியின் எல்லைக்குள் இருவரும் நுழைந்துவிட்ட செய்தி வந்து அவரை சற்று எளிதாக்கியது.  சுருதையின் நிலை பற்றி சேடி வந்து சொன்ன செய்தியை அவர் நினைவுறவேயில்லை. மீண்டும் தன் இல்லத்திற்கு ச்சென்றபோது அவரைக் காத்து சேடி வாயிலில் நின்றிருந்தாள். “உடல்நிலை எப்படி இருக்கிறது?” என்றார் விதுரர். “தலைவலி நீடிக்கிறது” என்றாள் அவள் சற்று சலிப்புடன்.

அதை உணராமல் “உடல் வெம்மை இருக்கிறதா?” என்றார். “சற்று இருக்கிறது” என்றாள். “நான் வந்து பார்க்கிறேன்” என்றபின் தன் அறைக்கு சென்றார். மஞ்சத்தில் அமர்ந்து இந்திரப்பிரஸ்தத்திற்குச் சென்ற நிகழ்வுகளை விழிகளுக்குள் ஓட்டினார். பின்பு எழுந்து சுவடி அறைக்குள் சென்று சுவடிகளை எடுத்துவந்து குந்திக்கும் சௌனகருக்கும் இரு நீண்ட ஓலைகளை எழுதினார். அவற்றை குழலிலிட்டு தன் ஏவலனிடம் கொடுத்தார். “இவை இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்ல வேண்டும். மந்தணச்செய்திகள். கனகரிடம் சொல்” என்றார்.

அச்செய்திகளை சீராக எழுதி முடித்ததுமே தன் உளக்கொந்தளிப்புகள் அனைத்தும் ஒழுங்கு கொண்டுவிட்டன என்று தோன்றியது. உடல் துயிலை நாடியது. மஞ்சத்தில் படுத்ததுமே துயின்றார். உச்சிவெயில் ஆனபிறகுதான் விழித்துக் கொண்டார். அப்போது கனகர் அவரைத் தேடி வந்திருந்தார். “அரசர் அணுகிக் கொண்டிருக்கிறார்” என்று சொன்னார்.

துயிலில் இருந்து எழுந்து அமர்ந்தபோது அதுவரை நிகழ்ந்த எவற்றையும் அவரால் தொகுத்துக்கொள்ள முடியவில்லை. துயிலுக்குள் அவர் சத்யவதியின் அவையில் அமர்ந்திருந்தார். சத்யவதி மகத அரசைப்பற்றி கவலையுடன் பேசிக்கொண்டிருக்க தாடியை நீவியபடி புன்னகையுடன் அவள் உணர்ச்சிகளை நோக்கிக் கொண்டிருந்தார். கனகரை அவ்வுலகுக்குள் கொண்டு செல்ல முடியாமல் திகைத்தபின் எழுந்து சால்வையை தோளில் இட்டபடி “என்ன செய்தி?” என்றார்.

“தங்களை பேரரசர் சந்திக்க விழைகிறார். தாங்கள் வந்துவிட்டீர்களா என்று கேட்டு இருமுறை செய்தி வந்தது” என்றார் கனகர். விதுரர் “அரசர் இன்னும் நகர்புகவில்லை என்று அவருக்குத் தெரியுமா?” என்றார். “தெரியும். அதை சஞ்சயனிடமே கேட்டு அறிந்துவிட்டார்” என்றார். “பீஷ்மபிதாமகர் படைக்கலச் சாலையிலேயே இருக்கிறார். அவரும் இன்று காலை அரசர் நகர் புகுந்துவிட்டாரா என்று இருமுறை தன் மாணவனை அனுப்பி கேட்டார்” என்றார்.

விதுரர் நிலையழிந்தவராக “என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை” என்றார். பின்பு “காந்தார அரசரும் கணிகரும் என்ன செய்கிறார்கள்?” என்றார். “அவர்கள் இருவரும் வழக்கம்போல நாற்களத்தின் இருபக்கங்களிலாக அமர்ந்துவிட்டார்கள்” என்றார் கனகர். “இங்கு என்ன நிகழ்கிறது என்று அறிய அந்நாற்களத்தைத்தான் சென்று நோக்கவேண்டும்” என்று விதுரர் சொன்னார். அவர் சொன்னது விளங்காமல் கனகர் நோக்க “நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். பேரரசரிடம் சென்று சொல்லுங்கள்” என்றார்.

விதுரர் நீராடி ஆடையணிந்து அரண்மனையை சென்றடைந்தபோது அவருக்காக கனகர் காத்து நின்றிருந்தார். “தாங்கள் வந்ததும் அழைத்து வரும்படி பேரரசர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார். “எதற்காக என்று உணரமுடிகிறதா?” என்றார் விதுரர். “சினம் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. கடும் சினம் கொண்டால் இசை கேட்காமல் முற்றிலும் அசைவின்றி அமைந்துவிடுவார். அதை அறிந்தவர்கள்போல சூதர்களும் பிறரும் அவரை அணுகுவதில்லை. சஞ்சயன் கூட அவர் கைக்கு எட்டாத தொலைவில் நின்று கொண்டிருக்கிறான். விப்ரர் ஒருவரே அவரை அணுக முடிகிறது” என்றார் கனகர்.

[ 9 ]

திருதராஷ்டிரரின் இசையவைக்குள் நுழையும்போதே விதுரர் தன் நடையை எளிதாக்கி முகத்தை இயல்பாக்கிக் கொண்டார். உள்ளம் உடல் அசைவுகளில் வெளிப்படுகிறது என்றும், உடல் அசைவுகள் காலடி ஓசையில் ஒலிக்கின்றன என்றும், ஒலியினூடாக உணர்வுகளை திருதராஷ்டிரரால் அறிந்துவிட முடியும் என்றும் அவர் பலமுறை அறிந்திருக்கிறார். முகத்தில் ஒரு புன்னகையை செயற்கையாக உருவாக்கிக் கொண்டால் சற்று நேரத்திலேயே உள்ளம் அதை நம்பி நடிக்கத் தொடங்கிவிடும் என்பதையும், அது உடலை ஏமாற்றிவிடும் என்பதையும் கற்றிருந்தார்.

ஓசைகள் ஒவ்வொன்றும் துல்லியமாக ஒலிக்கும் வகையில் அமைந்திருந்த திருதராஷ்டிரரின் இசைக்கூடம் அவரது காலடியோசையை சுட்டு விரலால் குறுமுழவின் தோல்வட்டத்தை தொட்டது போல் எழச் செய்தது. எதிரொலிகளே இல்லாமல் தன் காலடி ஓசையை அவர் அங்குதான் கேட்பது வழக்கம். தன் வலக்காலைவிட இடக்கால் சற்று அதிகமாக ஊன்றுவதையே அவர் அங்குதான் முன்பு அறிந்திருந்தார். திருதராஷ்டிரரின் அருகே சென்று வணங்கி பேசாமல் நின்றார்.

யானை போல தன் உடலுக்குள்ளேயே உறுமல் ஒன்றை எழுப்பிய திருதராஷ்டிரர் மெல்ல அசைந்தபோது அவர் உடல் முழுக்க பரவி இழுபட்டு இறுகியிருந்த பெருந்தசைகள் மெல்ல இளகி அமைந்தன. அவர் மேல் சுனைநீர்ப் பரப்பில் இளங்காற்று போல அவ்வசைவு கடந்து சென்றது. விதுரர் “அரசர் நகரை அணுகிக் கொண்டிருக்கிறார்” என்றார். மீண்டும் திருதராஷ்டிரர் உறுமினார்.

“தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாமே? நீண்ட பயணத்திற்குப் பிறகு…” என்று விதுரர் சொல்லத்தொடங்க “அவன் அவையிலிருந்து கிளம்பும்போதே பார்த்தேன். அவனை நான் அறிவேன்” என்று திருதராஷ்டிரர் பேசத்தொடங்கினார். விதுரர் அவர் எதை சொல்லப்போகிறார் என்று அறியாமல் நிமிர்ந்து அவர் உடலை பார்த்தார். கழுத்தின் இருபக்கமும் இருபாம்புகள் போல நரம்புகள் புடைத்து நெளிந்தன. “அவன் காலடியோசையிலேயே அவன் உடலைக் கண்டேன். அவன் என்ன எண்ணுகிறான் என்று எனக்குத் தெரியும்.”

“அவர் வரட்டும், நாம் பேசிக் கொள்வோம்” என்றார் விதுரர். “அவனைக் கட்டுப்படுத்தும் மறுவிசையாக இருந்தவன் மூத்தவன். இன்று அவனும் இவனும் ஒன்றென இணைந்து கொண்டுள்ளனர். அவர்களை இன்று எவரும் கட்டுப்படுத்த முடியாது. நீயோ நானோ கூட” என்றார் திருதராஷ்டிரர். “பீஷ்மர் ஒருவரே அதை செய்ய முடியும். பிதாமகரிடம் சென்று சொல்…! அதற்காகவே உன்னை வரச்சொன்னேன்.”

விதுரர் “ஆம், நானும் அதையே எண்ணுகிறேன்” என்றார். “ஆனால் அவர் வரட்டும் என்று எண்ணுகிறேன்.” திருதராஷ்டிரர் “அவன் வரவேண்டியதில்லை. அவன் என்ன எண்ணிக்கொண்டு வருகிறான் என்று எனக்குத் தெரியும்” என்றார். அதுவரை தாழ்ந்திருந்த அவர் குரல் வெடித்ததுபோல் மேலோங்கியது. “என் விழிமுன் மைந்தருக்கிடையில் ஒரு பூசலை ஒருபோதும் ஒப்ப மாட்டேன். இங்கொரு ராஜசூயமோ அஸ்வமேதமோ நிகழ்த்த அவன் எண்ணுவானென்றால் அதில் பேரரசனாக நான் வந்து அமரப்போவதில்லை. என்னைத் தவிர்த்துவிட்டு அதை அவன் செய்யமுடியலாம். ஆனால் பீஷ்மரும் ஒப்பவில்லை என்றால் இங்கு அது நிகழாது” என்றார்.

“இப்போது அதற்கான எண்ணம் அவருக்கு இருக்கும் என்று நான் எண்ணவில்லை. அவர் உள்ளம் எதையேனும் எண்ணி கொந்தளித்துக் கொண்டிருக்கக்கூடும். சிலநாட்கள் இங்கு வந்து இங்குள்ள சூழ்நிலைகளை அறிந்துகொள்ளும்போது மெல்ல அடங்கும்” என்றார் விதுரர். திருதராஷ்டிரர் திரும்பி “இன்று முழுக்க அதைப்பற்றித்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஒருவேளை அவன் அன்னை அவனை கட்டுப்படுத்த முடியுமா அல்லது அவன் துணைவி அவனை கட்டுப்படுத்த முடியுமா என்று. முடியாதென்றே தோன்றுகிறது. அவனை உள்ளிருந்து எதுவும் இனி நிறுத்தாது” என்றார்.

“இன்று அவனுக்குத் தளையாக இருக்கக்கூடியது புறத்தடைகளே. இன்று அது ஒன்றே ஒன்றுதான். இந்நகரின் குடிகளின் மேல் முதல் ஆணையிடும் நிலையிலிருக்கும் பீஷ்மபிதாமகரின் சொல். அதுவுமில்லை எனில் அவன் பித்தன் கையில் வாள் போலத்தான்.” திருதராஷ்டிரர் இரு கைகளையும் விரித்தார். “விதுரா! மூடா! இன்று எனக்கு ஏனோ உள்ளம் நடுங்குகிறது. அவன் பிறந்தபோது நிமித்திகர் சொல்லெழுந்ததை நினைவுகூர்கிறாயா? அவன் இக்குலம் அழிக்கும் நஞ்சு என. பாதாள தெய்வங்களில் ஒன்று அவன் வடிவில் வந்து ஹஸ்தியின் நகரை எரித்தழிக்கப்போகிறது என. அவன் கலியின் வடிவம் என்றனர்.”

“நான் அதை அன்றே மறக்க விழைந்தேன். மறப்பதற்குரிய அனைத்தையும் செய்தேன். மறந்தும்விட்டேன். ஆனால் என் கனவுகளில் அவன் எப்போதும் அவ்வாறுதான் வந்து கொண்டிருந்தான்.” அவர் கைகாட்டி “இவ்வறைக்கு வெளியே உள்ள சோலைகளில் எங்கும் ஒரு காகம் கூட கரையலாகாது என்று ஆணையிட்டிருக்கிறேன். அறிந்திருப்பாய். காகத்தின் குரல் எனக்கு என்னில் எழும் இருண்ட கனவுகளை நினைவுறுத்துகிறது. நீ என்ன நினைக்கிறாய்? உண்மையிலேயே அவன் கலியின் வடிவம்தானா? சொல்…!” என்றார்.

விதுரர் “இனி அதைப்பற்றிப் பேசி என்ன?” என்றார். “அவன் கலியின் வடிவம் என்றால் கலியை உருவாக்கியவன் நான் அல்லவா? அப்படியென்றால் நான் யார்? ஹஸ்தியின் குலத்தை அழிக்கும் மைந்தனைப் பெற்றேனா? அவனைப் பெருக வைப்பதற்குத்தான் விழியிழந்தவனாக வந்தேனா?” விதுரர் “வீண் எண்ணங்களில் அலைய வேண்டாம், பேரரசே. நான் அரசரிடம் பேசுகிறேன். உண்மை நிலை என்னவென்று உணர்த்துகிறேன். அவர் அதைக் கடந்து வந்துவிட முடியும் என்று எண்ணுகிறேன்” என்றார்.

“நான் துயில் இழந்திருக்கிறேன், விதுரா! இசை கேட்க முடியவில்லை. இசை கேட்காத போது எனது ஒவ்வொரு நாளும் நீண்டு நீண்டு நூறு மடங்காகிவிடுகிறது. ஒவ்வொரு எண்ணமும் இரும்பென எடைகொண்டு என்மேல் அமர்ந்திருக்கிறது” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “நான் சூதர்களை வரச்சொல்கிறேன்” என்றார் விதுரர். “வேண்டாம். சற்று முன்னர்கூட ஒரு சூதன் இங்கு வந்து யாழ் மீட்டினான். அவ்வோசையை என்னால் செவி கொடுத்துக் கேட்கவே முடியவில்லை. உடல் கூசி உள்ளம் அதிர்கிறது” என்றார் திருதராஷ்டிரர்.

“தாங்கள் இவற்றை எண்ணி எண்ணி மிகைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. நான் அவரிடம் பேசுகிறேன்” என்றார் விதுரர். திருதராஷ்டிரர் “பானுமதியிடம் சொல். அவள் பெண் என்று கொண்ட அனைத்தையும் பயன்படுத்தும் தருணமென்று. காதலோ கனிவோ கடுமையோ எதுவாக இருப்பினும் அது எழட்டும் என்று. அவன் அன்னையிடம் சொல். இத்தருணத்தில் அவனை வெல்லாவிட்டால் பிறகொருபோதும் மைந்தனென அவன் எஞ்சமாட்டான் என்று” என்றார்.  “அவர்கள் அனைவரையும்விட தாங்களே சொல்லலாம் என்று எண்ணுகிறேன்” என்றார் விதுரர்.

திருதராஷ்டிரர் தன் இரு கைகளையும் ஓங்கித் தட்டியபடி பேரோசையுடன் பீடம் பின்னால் நகர்ந்து தரையில் அறைந்துவிழ எழுந்தார். “மூடா! மூடா! இதைக்கூட அறியாமலா நீ ஒரு தந்தையென்று இங்கிருக்கிறாய், மூடா!” என்றார். விதுரர் அறியாமலே சற்று பின்னகர்ந்து நின்றார். “தந்தைக்கும் மகனுக்கும் நடுவே ஒரு புள்ளி உள்ளது. அதை அடைந்ததும் தெரிந்துவிடுகிறது இனி அவ்வுறவு அவ்வாறு நீடிக்காதென்று. இன்று அவன் என் மைந்தனல்ல. எங்கு எப்போது முறிந்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் முறிந்துவிட்டதை மிகத் தெளிவாக உணர்கிறேன். இனி அவன் நான் சொல்வதை கேட்க மாட்டான்” என்றார்.

“இவையனைத்தும் நாம் உருவாக்கிக் கொள்வதல்லவா? இன்பங்களை விழைவதைப் போலவே துன்பங்களை விழையும் தன்மை நமக்கிருக்கிறதல்லவா?” என்றார் விதுரர். “இருக்கலாம், இவையனைத்தும் என் வெற்று உளமயக்கென்றே இருக்கலாம். அவன் நாளை வரும்போது இவையனைத்தும் புகை என கலைந்து போகலாம். அறியேன். ஆனால்…” என்றபின் அவர் கைகளால் பீடத்திற்காக துழாவினார். அவருக்கு சற்றுப்பின்னால் நின்ற ஏவலன் வந்து அப்பீடத்தை தூக்கி வைக்க அதில் உடலை அமர்த்தி “அவ்வாறே இருக்கலாம். இருக்க வேண்டுமென்று விழைகிறேன். ஆனால் என்னால் ஒருகணமும் உறுதியுறச் சொல்ல முடியவில்லை. விப்ரா, மூடா!” என்று அழைத்தார்.

அறை வாசலில் சிறுபீடத்தில் கால்மடித்தமர்ந்திருந்த விப்ரர் விழியின்மை தெரிந்த நரைத்த கண்களுடன் எழுந்து வளைந்த உடலை மெல்லிய கால்களால் உந்தி முன் செலுத்தி வந்து “அரசே” என்றார். “நீ என்னடா எண்ணுகிறாய்? அவன் இப்போது என் மைந்தனா? இனி அவன் என் சொற்களை கேட்பானா? நீ என்ன எண்ணுகிறாய்? உண்மையைச் சொல்” என்றார். “அவர் உங்களிடமிருந்து முளைத்து எழுந்தவர். சுஷுப்தியில் நீங்கள் புதைத்திட்ட ஆலமரத்தின் விதையணு. அது வேரும் கிளையும் விழுதுமாக எழுந்துவிட்டது… நீங்கள் அமர்ந்திருப்பதே அதன் நிழலில்தான்” என்றார் விப்ரர்.

விதுரர் உளநடுக்கத்துடன் அவரைத் திரும்பிப் பார்த்தார்.  “இது பாறை வெடிப்பது போல, அரசே. இனி ஒருபோதும் இணையாது” என்றார் விப்ரர் மீண்டும். அனைத்து தசைகளும் தொய்ந்து திருதராஷ்டிரரின் பேருடல் மெல்ல தணியத் தொடங்கியது. அவரது கைகள் பீடத்தின் கைப்பிடியிலிருந்து நழுவி தரையைச் சென்று தொடும்படி விழுந்தன. தலையை பின்னுக்குச் சரித்து இருமுறை நீள்மூச்சுவிட்டு “ஆம், உண்மை. உண்மை” என்றார். விதுரர் தலைவணங்கி “நாம் காத்திருப்போம். பிறிதொன்றும் செய்வதற்கில்லை” என்றபின் வெளியே நடந்தார்.

தொடர்புடைய பதிவுகள்

இறங்கிச்செல்லுதல் –நித்ய சைதன்ய யதி

$
0
0

திருவண்ணாமலையிலிருந்து மழித்த தலையுடனும் காவி ஆடைகளுடனும் துறவிக் கோலத்தில் திரும்பிய பின் எனது புதிய பெயர் எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. என்னைச் சுற்றியும் அதே பழைய உலகம்தான். ஆனால் என் மனதுக்குள் ஏதோ மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சீருடை அணிந்த போலீஸ்காரன் அந்த உடுப்புக்குத் தகுதியானவனாகத் தன்னைத் தானாகவே வளர்த்துக் கொள்வது போன்றது அந்த அனுபவம் என்று நடராஜகுரு ஒருமுறை குறிப்பிட்டார். உண்மையிலேயே அது அத்தகைய அனுபவம்தான். எந்தத் துறவியையும் நான் முன்மாதிரியாக வைத்துக்கொள்ளவில்லை. உலக வாழ்வை எல்லாரும் போல வாழ்ந்துகொண்டிருக்கும் போதே, வித்தியாசமான முறையில் நடக்கவும் பார்க்கவும் பேசவும் விரும்பினேன்.

“இளவயதுத் துறவிக் கோலம் தோல்வியில் முடியக்கூடும். நாடக மேடையின் துறவிக் கோலம் ஒரு நடிகனுக்குப் புகழைக் கொண்டுவரக்கூடும். ஆனால் அக்கோலம் வெறும் பாவனை என்பதும், உண்மையல்ல என்பதும் மக்களுக்குத் தெரிந்தே இருக்கும்.” என்று நீண்ட காலத்துக்கு முன்னால் நடராஜகுரு செய்த ஒன்றிரண்டு அறிவுரைகளை நினைத்துக் கொண்டேன். எனக்குள் பல மாற்றங்கள் உருவாகின. என் தத்துவ விளக்கங்களாலும் நியாயத் தீர்ப்புகளாலும் மற்றவர்கள் மெச்சும்படி நடந்துகொள்வதை எனக்கு நானே தடைவிதித்துக் கொண்டதே என்னிடம் நிகழ்ந்த முதல் மாற்றம்.

பல்கலைக் கழக இறுதித் தேர்வுகள் மிக வேகமாக நெருங்கிவிட்டன. வெறும் கல்லூரிப்பாட வினாவிடைகளுடன் என்னை நான் முடக்கிக் கொள்ளவில்லை. தேர்வுக்கான பாடங்களைப் படிப்பதைத் தாண்டிப் பலவிதமான நூல்களையெல்லாம் படித்துக் கொண்டிருந்தேன். என் இரு நண்பர்கள் முதல் வகுப்பில் தேறுவதற்காகவும் முடிந்தால் முதல் தகுதிநிலை பெறுவதற்காகவும் பெருமுயற்சி செய்து வந்தார்கள். ஏறத்தாழ நடமாடும் தத்துவஞானி என்னும் நிலையை நான் அடைந்துவிட்டதால் ஒரு சாதாரணச் சான்றிதழின் உதவியுடன் உலகின் கவனத்தை ஈர்ப்பதில் எனக்கு நாட்டமில்லை!

தேர்வுகள் முடிந்ததும் அன்றே திருவனந்தபுரத்திலிருந்து வெளியேறி சுவாமி விவேகானந்தர் சென்றதைப் போல என் முக்கியமான தேடலை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. ஸ்ரீபரமஹம்ஸர் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரியை நோக்கிப் பயணமானார் விவேகானந்தர். வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்களால் சூழப்பட்ட கன்னியாகுமரியில் கரைப்பகுதியிலிருந்து தள்ளியிருந்த பாறையொன்றை அடைந்து அதன் மீது உட்கார்ந்தார்.

இதற்கிடையில் என் ரகசியத் திட்டம் பற்றிய செய்தி, அடுத்தவர்கள் சொல்லும் எந்தச் செய்தியையும் காது கொடுத்துக் கேட்கிற பொறுமையே இல்லாத என் குடும்ப உறவினர் ஒருவரை எட்டிவிட்டது. ஒரு நண்பகல் வேளையில் என்னைப் பார்க்க வந்தார் அவர். மறுநாள் நடக்க இருந்த நுண்பொருள் கோட்பாட்டியல் பற்றிய எழுத்துத் தேர்வுக்குப் பாடங்களை அன்று படிக்கத் திட்டமிட்டிருந்தேன். வகுப்பில் ஏற்பட்டிருந்த பொதுவான எண்ணம் நுண்பொருள் கோட்பாட்டில் பாடப்பிரிவு தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்பதுதான். வகுப்பில் கொடுக்கப்படும் குறிப்புகளை நான் சரியாகக் கவனிப்பதில்லை என்பதால் பேராசிரியர்களும் அவ்வண்ணமே நினைத்திருந்தனர். இந்தியப் பல்கலைக் கழகங்களில் – குறிப்பாக கேரளத்தில் – பாடப்புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கான பதில்களை மனப்பாடம் செய்து எழுதாவிட்டால் தேர்வுத்தாள்களைத் திருத்துபவர் எழுதுபவனுக்கு எதுவும் தெரியாது என்றே நினைப்பார்.

இந்துக் குடும்பமொன்றில் தலைமகனாகப் பிறந்த ஒருவனுடைய கடமைகளைப் பற்றியும் தம்மைத் தொடர்ந்து பிறந்தவர்களையெல்லாம் ஒரு தந்தையின் இடத்திலிருந்து எவ்வாறு பாதுகாப்பது பற்றியும் என் உறவினர் மிகப்பெரிய சொற்பொழிவை நிகழ்த்தத் தொடங்கிவிட்டார். ஒரு நாடோடியைப் போல மறுபடியும் குடும்பத்தைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு வெளியேறுவது பெருங்குற்றம் என்று உணர்த்த அவர் படாதபாடுபட்டார். ஏற்கனவே எட்டு ஆண்டுக் காலம் வீட்டைவிட்டு வெளியேறி வாழ்ந்த அனுபவம் எனக்கிருந்தது. என் உதாசீனத்தால்தான் என் தந்தையின் இதயம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் நம்பினார்.

துறவிக் கோலத்துக்குரிய ஆடைகளை அணிந்து கொண்டிருந்ததாலும் என்னுடைய பெயரோடு யதி என்கிற சொல்லைச் சேர்த்திருந்ததாலும் என் கோபத்தை உள்ளுக்குள்ளேயே விழுங்கிக் கொள்ளவும் தொண்டைக்கடியில் குமுறும் சூடான வார்த்தைகளை விழுங்கவும் வேண்டியிருந்தது. என் தேர்வுகள் முடியும் வரையில் என்னைத் தனிமையில் விடும்படி அவரிடம் கேட்டுக் கொண்டேன். ஆனாலும் அவர் தம் அறிவுரை மழைகளைத் தொடர்ந்து பொழிந்தபடி இருந்தார்.

இரவு பன்னிரண்டு மணியளவில் விளக்குகளை அணைத்துவிட்டுத் தூங்கச் செல்ல நினைத்திருந்தேன். அந்த நாட்களில் பல்கலைகழக நூலகத்தையே படிப்பறையாகவும் வசிக்கும் அறையாகவும் வைத்துக் கொண்டிருந்தேன். பெரியமேசை ஒன்றின் மீது படுத்துத் தூங்கி விடுவேன். அன்று அந்த உறவுக்காரரும் என்னோடு அந்த மேசையில் படுத்துத் தூங்கினார். அவர் தொடர்ந்து அந்த மேசையில் புரண்டு கொண்டே இருந்தார். என் காதுக்கருகே அவர் வாய் இருந்ததால் கடுமையான குறட்டையொலி கேட்ட வண்ணம் இருந்தது. அதிகாலை நான்குமணி வரையில் இந்த நிலை தொடர்ந்தது.

ஒன்பதரை மணியளவில் தேர்வு நடந்த அறைக்குச் சென்றபோது, தூக்க மயக்கம் என்னைக் கலக்கியது. என்னால் தலையை நிமிர்த்தவே முடியவில்லை. கேள்வித் தாளை ஒருமுறை பார்த்தேன். எல்லாம் தெரிந்த கேள்விகளாகவே இருந்தன. ஆனால் என் இமைகள் திறக்கவே இயலாதபடி கனமாக இருந்தன. விரல்களிடையே பேனா நிற்க முடியாமல் தடுமாறியது. மூளையில் எதுவும் தோன்றவில்லை. மேசை மீது கிடந்த வலது கையே தலையணையாக, கைமீது தலைவைத்துத் தூங்கத் தொடங்கிவிட்டேன்.

மாணவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் மிகவும் இரக்க குணமுள்ளவராக இருந்தார். எனக்கு என்ன ஆனது என்று கேட்டார் அவர். அரைமணி நேரம் கழித்து என்னை எழுப்பும்படி அவரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். முதல்நாள் இரவு நடந்த குழப்பங்களையெல்லாம் அவரிடம் எடுத்துச் சொன்னேன். அவர் என்னைப் புரிந்து கொண்டார். அரைமணி நேரம் கழித்து என்னை எழுப்பி முகம் கழுவச் சொல்லி எஞ்சிய நேரத்தில் தேர்வெழுதும்படி சொன்னார். ஏதோ நிறைவு தரும் வகையில் அத்தேர்வை எழுதினேன் நான்.

தேர்வுகள் எல்லாம் முடிந்தபிறகு, எனக்காக இரு ஜோடி துணிமணிகளை மட்டும் வைத்துக் கொண்டு நான் வைத்துக் கொண்டிருந்த எல்லாவற்றையும் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட நினைத்தேன். என்வசம் இருந்த எல்லாப் புத்தகங்களையும் கடிகாரம், எழுதுபொருட்கள் ஆகியவற்றையும் என் நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன். நேர்முகத்தேர்வு நடைபெற்ற தினம் எனக்கு மிகவும் பிடித்தமான பேராசிரியரான திரு. சேஷாத்ரி அவர்களே கேள்விகள் கேட்க வந்தார். அவருடன் வேறு வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து மூன்று பேராசிரியர்கள் வந்திருந்தார்கள்.

நேர்முகத்தேர்வுக்குப் பிறகு, என் பேராசிரியர் வெளியே வந்து என்னை வாழ்த்தினார். நுண்பொருள் கோட்பாட்டியல் தாளில் நான் விடையெழுதிய விதம் எல்லாருக்கும் பெருத்த ஏமாற்றம் தந்ததென்று சொன்னார். யாருக்கும் முதல் வகுப்பு தருவதில்லை என்று நிர்வாகம் தீர்மானித்திருப்பதாகச் சொன்னார் அவர். அதனால் எனக்கு இரண்டாவது வகுப்பும் முதல் தகுதியும் தரப்பட்டன. இதனால் ஹானர்ஸ் இளங்கலைப் பிரிவில் பல்கலைக்கழக விருது எனக்குத் தரப்பட்டது. இத்தகுதியின் காரணமாக அடுத்தபடியான முதுகலைப்பட்டப் படிப்பில் எழுத்துத் தேர்வு இல்லாமலேயே சேர்ந்து கொள்ள முடியும்.

என் எதிர்காலத்திட்டம் பற்றி என் பேராசிரியர் என்னிடம் கேட்டார். எந்த நோக்கத்துக்காகத் தத்துவத்தைப் பாடமாக எடுத்துப் படித்தேனோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு தெரியாத இடம் நோக்கிச் செல்ல இருப்பதாகச் சொன்னேன். அவர் பட்டம் பெற்ற தருணத்தில் அதுவே அவர் குறிக்கோளாகவும் இருந்ததாகச் சொன்னார். கூடவே ஒரு அறிவுரையையும் வழங்கினார். “கடவுள் எல்லாருடைய இதயங்களிலும் நிறைந்திருக்கிறார். சாலைகளில் சந்திக்க நேர்கிற எல்லாரிடமும் கடவுளை அடையாளம் காண முடியும். எனவே எப்போதும் கடவுளின் துணையோடு இரு. இந்தக் கல்லூரியில் நீ கற்ற தத்துவம் வெறும் ஆரம்ப அடிகள் மட்டுமே. பிளேட்டோ, சங்கரர், கான்ட், ஹெகல் என எந்தத் தத்துவவாதிகளின் தத்துவக் கண்டுபிடிப்புகளையும் உன் வாழ்வில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. அதற்கு மாறாக, மற்ற அசலான தத்துவஞானிகளைப் போலவே நீயே ஒரு தத்துவத்தைக் கண்டுபிடி” என்றார்.

“ஒரு தத்துவஞானியின் கையில் தருக்கம் என்பது வலிமையான ஆயுதமாக விளங்க முடியும். ஆனால் அதே நேரத்தில் கவிதையின் நுட்பமான அழகை ரசிப்பதிலிருந்தும் இசையில் கரைவதிலிருந்தும் குறிப்பாக இந்திய பக்திப் பாடல்களின் உருக்கத்தால் கரைவதிலிருந்தும் உன்னை நீயே விலக்கிக்கொள்ளக் கூடாது” என்றும் எச்சரித்தார். இறுதியாக நான் எப்போதும் ஆசிரியராக இருக்கவேண்டும் என்றும் எனக்கு முழுக்க முழுக்கத் தெரிகிற விஷயத்தையே மற்றவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும் என்றும் சொன்னார்.

என்னைத் தழுவி என் கைகளில் முத்தமிட்டார். அவர்காலில் விழுந்து வணங்கினேன். ஒரு துறவி ஒரு சம்சாரியின் காலில் விழுவதை ஒரு மரபுவாதியான அவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. சிறிது நேரம் வருத்தத்தில் மூழ்கினார். அக்கணத்திலிருந்து அடுத்த நடவடிக்கைக்கும் எனக்கும் இடையே எப்போதும் நடக்கும் இடைக்காட்சியாக இந்த ஐயப்பாடுடன் கூடிய உறுதியின்மை தொடரத் தொடங்கியது.

கன்னியாகுமரிக்குச் சென்று மூன்று நாட்களில் திரும்பி வரும்படி டாக்டர். மெஸ் அவர்கள் என்னிடம் சொன்னபோது பலவிதமான விதிகளை விதித்தார். இப்போது, அதே இடத்துக்கு விடுதலையான மனிதனாகப் புறப்பட்டேன். திரும்பி வரும் நோக்கமோ, கால அளவோ எதுவுமின்றிப் புறப்பட்டேன். என் தோள்பையில் நான் வைத்திருந்த மாற்றுத் துணிகளைத் தவிர பகவத் கீதையும் நாராயண குருவின் எல்லாப் படைப்புகளும் மட்டுமே என்னிடம் இருந்தன. கூடவே ஓவியம் வரையவும் பயணக் குறிப்புகளை எழுதவும் ஒரு குறிப்பேடும் இருந்தது.

இந்தியாவில் பழங்காலத்திலிருந்து ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்தை நோக்கித் தொடர்ந்து செல்வதும் எந்த இடத்திலும் மூன்று இரவுகளுக்கு மேல் தங்காமல் செல்வதும் துறவிகளின் பழக்கமாக இருந்தது. அப்பயணத்தின் போது நான் குறித்து வைத்த பல குறிப்புகள் காணாமல் போய்விட்டன. எந்த இடத்திலும் இரண்டு இரவுகளுக்கு மேல் தங்கவில்லை என்பது மட்டும் நன்றாக நினைவில் உள்ளது. என் பயணத்தில் நான் தங்கிய சில இடங்கள் கன்னியாகுமரி, திருச்செந்தூர், குமாரகோவில், மருத்துவமலை, அருவிபுரம், சிவகிரி மற்றும் சுவாமி வித்யானந்தா தீர்த்தபாதர் அவர்களின் வாழும் ஆசிரமம் ஆகியவை ஆகும்.

செங்கோட்டை அருகே கேரள எல்லையைக் கடந்து தமிழக எல்லைக்குள் நுழைந்தேன். அதற்கப்புறம் வெப்பநிலை மிகவும் கடுமையாக இருந்தது. மேல்சட்டை அணிந்துகொள்ளும் அவசியமே இல்லாமலிருந்தது. அதனால் என் சட்டைகளை அவை தேவைப்படக்கூடிய ஒருவருக்குக் கொடுத்துவிட்டேன். பல கோயில்களுக்குச் சென்றேன். அவை தோன்றிய விதம், அவை தொடர்பான கதைகள் ஆகியவற்றைச் சேகரித்தேன். அக்கோயில்களையும் கோயில்களில் காணப்படும் அழகான சிற்பங்களையும் ஓவியங்களாக என் சுவடியில் தீட்டிக் கொண்டேன்.

முடிவின்மையை நோக்கி விரிந்திருக்கும் கித்தானாக வாழ்க்கை தோன்றியது. வாழ்வில் என் கற்பனைக்கு அகப்படக்கூடிய எல்லாவற்றையும் வாழ்நாள் முழுக்க அதில் தீட்டிக்கொண்டே இருந்தேன். சிறிய கோயிலாக இருந்தாலும் சரி, பெரியகோயிலாக இருந்தாலும்சரி, வழியில் கண்ட எல்லாக் கோயில்களுக்கும் சென்றேன். வடிவ அழகுடனும் தனிமையுடனும் காணப்படும் சில தேவாலயங்களிலும் சில மாலைவேளைகளைக் கழித்தேன். மசூதிக்குள் செல்லும் துணிச்சல் மட்டும் வரவில்லை. ஆனால் பல முஸ்லீம்கள் தம் வீடுகளுக்கு என்னை அழைத்துச் சென்று உபசரித்தார்கள். இஸ்லாமியப் பாடல் முறைகள் மரபான இந்து முறைகளுக்கு நெருக்கமானவை ஆகும். அவர்கள் வசிக்கும் பகுதிகளிலே, இந்துக்களுக்கு இருப்பதைப் போலவே அங்கிருந்த விநாயகர், முருகன், அம்மன் ஆகிய கடவுள்களின் சக்தி தொடர்பான நம்பிக்கை அவர்களுக்கும் இருந்தது.

அந்த நாட்களில் நுட்பமான அனுபவங்களினூடே இந்தியாவின் பண்பாட்டை அறிவதற்கு இந்தியாவெங்கும் பிரயாணம் செய்வது ஒன்றே கவர்ச்சியான வழியாக இருந்தது. அநேகமாக ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புதிரை அவிழ்க்க எனக்குத் துணையாக இருந்த ஒரு புதுமனிதனை நான் சந்தித்தேன். ஆழ்ந்த தியானத்தில் அமிழ என்னைத் தூண்டுகிற ஒருவரை அல்லது திரும்பத் திரும்ப உச்சரிக்கும் மந்திரத்தின் ஆற்றலை எடுத்துரைக்கும் ஒருவரை நான் ஒவ்வொரு நாளும் சந்தித்தேன். பழமையான இந்தியாவில் இது இன்றும் சாத்தியமாகலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிற வாழ்க்கை முறைகளின் அசிங்கங்களாலும் வன்முறைகளாலும் இந்தியாவின் நிகழ்கால முகம் மூடிக்கிடக்கிறது. ஒரு காலத்தில் இந்தியப் பண்பாட்டு வரலாற்றை உச்சரித்துக் கொண்டிருந்த மக்கள் அழகான இதயம் கொண்ட பழைய இந்தியாவை மறந்துவிட்டார்கள். அவை அனைத்தும் தொடர்ச்சிகளற்ற துண்டுத்துண்டுக் கதைகளாகச் சிதறி மறக்கப்பட்டுவிட்டன.

[குரு நித்ய சைதன்ய யதியின் நினைவுக்குறிப்புகளில் இருந்து. மலையாளத் தலைப்பு இறங்ஙிப்போக்கு. ஆங்கிலம் வழி தமிழாக்கம் பாவண்ணன்]


நித்ய சைதன்ய ய்தி பழைய படங்கள்Jul 16, 2012

 

மறுபிரசுரம்/முதற்பிரசுரம்Jul 16, 2012

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 68

$
0
0

[ 10 ]

துரியோதனன் நகர் புகுந்த செய்தியை விதுரர் அறியவில்லை. அவர் சுருதையின் மஞ்சத்திலேயே அமர்ந்திருந்தார். மாலையில் அவரது ஏவலன் வந்து அமைச்சுநிலையின் அறைவாயிலில் நின்றிருப்பதை சற்று நேரம் கழித்தே அவர் கண்டார். “என்ன?” என்று கடுகடுப்புடன் கேட்டபோது அவன் தலைவணங்கி “அன்னை” என்றான். “மருத்துவர் பார்க்கிறார்களல்லவா?” என்றபடி அவர் கனகரிடம் இறுதியாக வந்த ஓலைக்காக கைநீட்டினார். கனகர் தொகுத்தளித்த நான்கு ஓலைகளை சுருள்நீவி படித்தபடி ஏவலன் மறுமொழி சொல்லவில்லை என்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தார்.

“மருத்துவர் தங்களை வரச்சொன்னார்” என்றான் ஏவலன். “ஏன்?” என்றார் விதுரர் ஓலைகளை புரட்டியபடி. அவன் பேசாமல் நிற்க “மருத்துவர்களிடம் என்ன நிகழ்கிறது என்பதை விரிவாகக் கேட்டு வா” என்றார். ஏவலன் அகலாமல் அங்கேயே நிற்பதை உணர்ந்து விழிதூக்கி சினத்துடன் “என்ன?” என்றார்.

“அமைச்சரே, அன்னையார் இன்றிரவு உயிர் துறக்கக்கூடும் என்று மருத்துவர் எண்ணுகிறார்” என்றான். கையில் ஓலையுடன் விதுரர் சற்றே வாய்திறந்து அவனை நோக்கி நின்றார். கனகர் உரத்த குரலில் “என்ன சொல்கிறாய்?” என்றார். “அவரது காய்ச்சல் உள்ளுறுப்புகளுக்குள் நிறைந்திருக்கிறது. சித்தம் கலங்கியிருக்கிறது. தாங்கள் இறுதியாக ஒருமுறை பார்ப்பதற்கு வரவேண்டும் என்று மருத்துவர் ஆணையிட்டார்.”

விதுரர் கையில் இருந்து ஓலைகள் நழுவி விழ கனகர் அவற்றை பற்றிக் கொண்டார். சரடு ஒன்று அறுபட்டதுபோல சற்று நிலையழிந்து பீடத்தில் விதுரர் சாய்ந்தார். கனகர் இன்னொரு கையால் அவர் தோளை பற்றிக்கொண்டு “இரு ஏவலரை வரச்சொல். அமைச்சரை அழைத்துச் செல்” என்றார். ஏவலனுக்குப் பின்னால் இருந்த இரு காவலர் “நாங்கள் அழைத்துச் செல்கிறோம்” என்றனர்.

கனகர் விதுரரிடம் “செல்வோம், அமைச்சரே” என்றார். “ஆம்” என்றார் விதுரர். கைகளால் துழாவி தன் மேலாடையை எடுத்தார். “ஆனால்… அரசர் இங்கு வந்து கொண்டிருக்கிறாரல்லவா?” என்றார். “அதை நான் பார்த்துக் கொள்கிறேன். தாங்கள் செல்லுங்கள்” என்ற கனகர் திரும்பி இன்னொரு துணை அமைச்சரைப் பார்க்க அவர் அருகே வந்து விதுரரின் கைகளை பற்றிக்கொண்டு “செல்வோம், அமைச்சரே” என்றார். விதுரர் தளர்ந்த காலடிகளுடன் அவருடன் சென்றார்.

அது தான் கண்டுகொண்டிருக்கும் கனவு என்றும் எப்போது வேண்டுமானாலும் சற்று புரண்டு விழித்துக் கொள்ளமுடியும் என்றும் அவர் எண்ணினார். கனவில் மட்டும்தான் இடைநாழிகள் அத்தனை நீண்டதாக இருக்கும். கனவில் மட்டும்தான் ஓசைகள் அசைவுகளுடன் சரியாகப் பொருந்தாமல் இருக்கும். நீருக்குள் மூழ்கி இருந்து ஒலிகளைக் கேட்பது போல் அரண்மனைக்குள் எங்கும் எழுந்து கொண்டிருந்த கலவையான உரையாடலை கேட்டார். வலப்பக்கம் முற்றத்தில் நின்றிருந்த புரவி ஒன்று முன்னங்காலால் கற்தரையை தட்டிக்கொண்டிருந்தது. இரு தேர்களின் கடையாணிகள் அசைந்தன. எங்கோ ஒரு திரைச்சீலை சிறகோசை போல் படபடத்துக் கொண்டிருந்தது. நீரில் மூச்சடைக்க எடையில்லாது ஒழுகிச் செல்வதுபோல் அவர் சென்றார்.

பின்பு அவர் இளைஞனாக சத்யவதியை பார்ப்பதற்கு படிகளில் ஏறிச் சென்று கொண்டிருந்தார். சத்யவதி தன் மஞ்சத்தறையில் பட்டுவிரிப்பின்மேல் கால் மடித்தமர்ந்து ஓலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். அவ்வறைக்குள் அம்பிகையும் அம்பாலிகையும் நின்றிருந்தனர். சத்யவதி அவரைப் பார்த்து “நெடுநேரமாயிற்று” என்றாள். “ஆம். நான் வந்து கொண்டிருந்தேன்” என்றார் விதுரர். “இந்த ஓலைகள்…” என்று அவள் விரித்துக் காட்டினாள். “அரசர்  வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு இடர் ஒன்றும் நிகழவில்லை” என்றார் விதுரர். “ஆம், எனக்கும் ஓலைகள் வந்தன” என்றாள் அம்பாலிகை.

அம்பிகை “அவன் நகர் நெருங்கிய பிறகு எனக்குத் தெரிவி” என்றாள். விதுரர் அவர்கள் மூவரின் விழிகளை நோக்கினார். நெஞ்சு திடுக்கிட்டு ஒன்றை உணர்ந்தார். அவர்கள் மூவரும் முன்னரே இறந்துவிட்டிருந்தனர் என்பது அவர்களின்  கண்களில் தெரிந்தது. மெல்லிய காலடி ஓசை கேட்டது. மறுபக்க அறைக்கதவு திறந்து சுருதை உள்ளே வந்தாள். “நீ…? நீ எப்படி?” என்று விதுரர் கேட்டார். “நான் இன்றுதான் வந்தேன்” என்றாள் சுருதை. அவள் மிக இளையோளாக, மெலிந்த மாநிற உடலும், நீண்ட முகமும், இரு கருங்குருவி இறகுகள் போன்று பீலி செறிந்த இமைகளும் கொண்டிருந்தாள்.

“உன்னை அங்கு தேடுவார்கள்” என்றார் விதுரர். “சொல்லிவிட்டுத்தான் வந்தேன்” என்றபின் அவள் புன்னகையுடன் அந்த ஓலைகளை எடுத்து அடுக்கத் தொடங்கினாள். அவள் விழிகளிலும் அதுவே தெரிவதை விதுரர் உணர்ந்தார். அவளும் முன்னரே இறந்துவிட்டிருந்தாள். “சுருதை, நீ எப்படி இறந்தாய்?” அச்சொல்லுடன் அவர் தன்னை உணர்ந்தபோது தன் மாளிகை முற்றத்தில் நடந்து கொண்டிருந்தார். கனவா? விழிப்பில் நடந்து கொண்டிருக்கையில் கனவு நிகழுமா என்ன? ஆனால் அவர்கள் உண்மை. அவர்கள் நிகழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.

மாளிகை முற்றத்தில் இருந்து செவிலியர் அவரை நோக்கி வந்தனர். முதுசெவிலி வணங்கி “இளவரசர்களுக்கு செய்தி அனுப்பிவிட்டோம்” என்றாள். அவர் “ஆம், அங்கரும் அரசரும் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றார். அவர் சொல்வதன் பொருளென்ன என்று தெரியாமல் அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினர். பின்பு அவர் நின்று “மைந்தருக்கு சொல்லிவிட்டீர்களா?” என்றார். அவர்கள் “ஆம், பறவைச்செய்தி சென்று சேர்ந்திருக்கிறது” என்றார்கள். “வருக!” என்று மாளிகை ஸ்தானிகர் அவர் கையை பற்றினார். “ஆம்” என்று சொல்லி அவருடன் சென்றார்.

தன் கால்கள் மட்டும் தனியாக அசைந்துகொண்டிருப்பது போல, அந்த மாளிகையின் ஒவ்வொரு பகுதியும் முற்றிலும் அறியாததாக மாறிவிட்டது போல தோன்றியது. சுவர் மடிப்புகளில் எல்லாம் இருள் தேங்கியிருப்பதை இதற்கு முன் பார்த்ததேயில்லையே என்று எண்ணினார். படிகளில் ஏறி சுருதையின் மஞ்சத்தறை வாயிலை அடைந்ததும் வெளியே நின்றிருந்த மருத்துவர் தலைவணங்கி “மூன்று நாட்களாக காய்ச்சல் இருக்கிறது, அமைச்சரே. ஒவ்வொரு நாளும் அது கனன்று கொண்டே செல்கிறது. முதல் நாளிலேயே உள்காய்ச்சல் என்று தெரிந்து கொண்டேன். இப்போது உடலெங்கும் அனல் பரவிவிட்டது. மருந்துகள் எதையும் உடல் ஏற்கவில்லை. மருத்துவம் சென்று நின்றுவிட வேண்டிய எல்லை ஒன்றுள்ளது. அதை நாங்கள் உணர்ந்துவிட்டோம்” என்றார்.

தலையசைத்து விதுரர் உள்ளே நுழைந்தார். சுருதையின் பீடத்தருகே அமர்ந்து முழங்கையை தொடையில் ஊன்றி குனிந்து அவள் முகத்தை பார்த்தார். காய்ச்சலினால்  அவள் முகத்தின் தோல் சருகுபோல் உலர்ந்திருந்தது. உதடுகள் காய்ந்த புண்போல சற்றே குவிந்திருக்க மூக்கு  எலும்பு புடைப்புடன் எழுந்து  தெரிந்தது. மூடிய இமைகளுக்குள் விழிகள் அதிர்ந்து கொண்டிருந்தன. இரு தவளைகள் போல என்று அவர் நினைத்தார். இப்படியா இருக்கிறாள் இவள்? இத்தனை மெலிந்தா? இத்தனை முதுமை கொண்டா? அனலணைந்த வெண்சாம்பல் நிறமான தலைமுடி அவிழ்ந்து தலையணை மேல் பரவியிருந்தது. அன்று காலையும் அவளுக்கு நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் அணிவித்திருந்தனர். நரை முடியில் ஓரிரு மலர்களையும் சூட்டியிருந்தனர்.

இத்தோற்றத்தில் அவளை ஒருபோதும் பார்த்ததில்லை என்று எண்ணிக்கொண்டார். அவளை பார்க்கும்போதெல்லாம் மணநாள்  முதல் ஒவ்வொரு முறையும் பார்த்துவந்த ஒரு உடலின் ஒட்டுமொத்தமே தெரிந்து கொண்டிருந்தது. தன் விழைவுகளால் அன்பால் அவர் அவ்வுடலை பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது வெறும் விழிகளால் பார்க்கையில் அவ்வுடல் முன்னரே உதிரத்தொடங்கிவிட்டதென்று தெரிந்தது. இப்படித்தான் இருந்திருக்கிறாள் சென்ற சில ஆண்டுகளாக. அவர்தான் அறியவில்லை.

அவர் வந்திருப்பதை எவ்வண்ணமோ உணர்ந்து கொண்டதைப்போல அவள் விழிகள் அதிர்ந்தன. உலர்ந்து ஒட்டிய உதடுகள் மெல்ல விரிந்து முனகின. அதுவும் அவள் குரல் அல்ல. நோயுற்ற விலங்குகள் இப்படித்தான் ஒலிக்கின்றன. இது நோயின் ஒலி. வலியின் ஒலி. அவர் அவள் கையை தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டு குனிந்து “சுருதை” என்றார். அவர் குரல் அவள் காதில் விழவில்லை என்று தோன்றியது. அவள் கைகளின் நகங்கள் சற்றே கருமை கொண்டு நீண்டிருந்தன. மேல் கையில் கிளைகளுடன் நரம்புகள் புடைத்து மணிக்கட்டில் ஏறி மேலே சென்றன. அவர் அவள் அழகிய மார்புகளை நினைத்தார். நெடுநாட்கள் அவளை எண்ணும்போதெல்லாம் அவையே நினைவில் வந்துகொண்டிருந்தன. அவளுடைய சொற்களைவிட விழிகளைவிட அணுக்கமானவை அவை. அவள் நெஞ்சு அதிர்ந்துகொண்டிருந்தது.

அவள் கைகளை தன் விரல்களுக்குள் கோத்துக்கொண்டு “சுருதை” என்று மீண்டும் அழைத்தார். அவள் மெல்ல விழிகளைத் திறந்து அவரை பார்த்தாள். “வந்துவிட்டீர்களா?” என்றாள். அவர் “ஆம்” என்றார். அதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு சொற்கள் எழவில்லை.  அவள் தன் இன்னொரு கையை அவர் கைமேல் வைத்து “எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை” என்றாள். “இல்லை, நான் கவலைப்படவில்லை” என்றார். அவள் கண்கள் அவர் முகத்தையே நோக்கி அசைந்து கொண்டிருந்தன. அவளும் சொல்லெடுக்க விழைபவள் போல தோன்றினாள்.

இப்போது என்ன சொல்லவேண்டும்? நோயுற்று படுத்திருக்கையிலும் இங்கு வருவதை தவிர்த்ததற்காக மன்னிப்பு கோரவேண்டுமா? அப்படியென்றால் ஒவ்வொரு நாளுமென மன்னிப்பு கோர வேண்டும். மன்னிப்பு கோரியபடியே சென்று முதல் நாள் அவள் மஞ்சத்தறைக்கு வந்த தருணத்தை சென்றடைய வேண்டும். அவருக்குத் தோன்றியது மன்னிப்பு கோரலாகாது என்று. அது அவளுடைய நாற்பதாண்டு கால அன்பை சிறுமை செய்வதாகும். பிறகென்ன சொல்வது? சென்று வா என்றா? அங்கு காத்திரு என்றா? ஒரு கணத்தில் பேரலைபோல அவர் நெஞ்சை துயர் வந்து தாக்கியது. கண்களில் இருந்து கண்ணீர் அவள் கைகளிலும் மரவுரிச் சேக்கையிலும் கொட்டியது.

அவள் கை அவர் விழிநீர்த்துளி பட்டு சற்று அதிர்ந்தது. விழி தூக்கி அவரைப் பார்த்து “என்ன இது?” என்றாள். கண்ணீரை துடைப்பதற்கென அவள் கை மெல்ல எழுந்து அதற்குரிய விசை இல்லாமல் மீண்டும் தணிந்தது. “வேண்டாம்” என்றார். “நான் இங்கு தனித்திருப்பேன்” என்று அவர் சொன்னார். “ஆம்” என்று அவள் மெல்ல சொன்னாள். “தனித்து விடுவீர்கள்” என்று தனக்குத்தானே என முனகினாள். பின்பு அவள் அவர் விரலைப்பற்றி அழுத்தி “எதுவும் நம்மிடமில்லை” என்றாள்.

வாழ்நாள் முழுக்க அவள் சொன்ன அனைத்திற்கும் அவ்வொரு சொல்லே சாரம் என்று அத்தருணத்தில் அவர் உணர்ந்தார். “ஆம் சுருதை, உண்மை.” “எதிலும் முட்டிக் கொள்ளாதீர்கள்” என்று மீண்டும் அவள் சொன்னாள். “முயல்கிறேன்” என்றபின் “என்னுடன் இரு. எங்கிருந்தாலும் என்னுடன் இரு” என்றார். “இன்னும் சில நாட்கள்தானே” என்று அவர் சொன்னார். “இல்லை…” என்று அவள் சொன்னாள். “இன்னும் நெடுநாட்கள் இருக்கிறது.” அவள் முகம் புன்னகையில் விரிந்தது. ஒட்டி நெற்று போலான முகத்தில் புன்னகை அத்தனை ஒளியேற்ற முடியும் என்பதை அவர் திகைப்புடன் பார்த்தார். அவள் அப்புன்னகையினூடாக ஆண்டுகளை ஒரே கணத்தில் கடந்து சென்று நாணமும் உவகையும் மிகுந்த சிறுமியென்று ஆனாள்.

“நான் இருப்பேன்” என்றாள். அவரது சுட்டுவிரலை இரு கைகளாலும் பற்றிக் கொண்டாள். அப்புன்னகையுடன் விழிகளை மூடி அது அவ்வாறே நீடிக்க அசைவற்று படுத்திருந்தாள். மூச்சு சீராக ஓடிக் கொண்டிருந்தது. அவள் முகத்தை நோக்கிக்கொண்டிருந்த விதுரர் பெருமூச்சுடன் இயல்பு நிலைக்கு மீண்டு வாயிலில் இருந்து உள்ளே செறிந்த நிழலைப்பார்த்து விழிதூக்கினார். அங்கு நின்றிருந்த ஸ்தானிகர் “அரண்மனையிலிருந்து செய்தி” என்றார். “என்ன?” என்றார் விதுரர். “அரசரும் அங்கரும் அரண்மனை புகுந்துவிட்டனர்.” “சரி” என்றபின் அவர் மீண்டும் அவளை பார்த்தார்.

தன் இடக்கையை நீட்டி அவள் நெற்றியில் கைவைத்து பிசிறி நின்றிருந்த நரைமுடிகளை நீவி பின்செலுத்தி காதுக்குப்பின் செருகினார். அவள் காது மடல்களை பற்றினார். குழை அணிந்த காதில் துளை இழுபட்டிருந்தது. மெல்ல கைசரிந்து  அவள் தோளை தொட்டார். தோளின் முழைஎலும்பை சுட்டுவிரலால் அழுத்திப்பார்த்தார். ஏவலன் அருகே வந்து வாயில் முன் நின்றான். திரும்பி “என்ன?” என்றார். “வந்ததுமே அரசர் படைத்தலைவர்களையும் அமைச்சர்களையும் அவைக்கு வரச்சொல்லியிருக்கிறார்.”

“நன்று. நான் இங்கு இருந்தாகவேண்டுமென்று சென்று சொல்” என்றார் விதுரர். ஸ்தானிகரும் ஏவலனும் சென்றபின் பீடத்தில் சாய்ந்து கைகளை மார்பில் கட்டியபடி சுருதையின் முகத்தையே நோக்கிக் கொண்டிருந்தார். அப்புன்னகை அங்கேயே தங்கிவிட்டிருந்தது. அதில் ஒரு மெல்லிய மாறுதல் நிகழ்ந்திருக்கிறதா என்று அவர் எண்ணினார். இல்லையென்று தோன்றியது. ஒரு மெல்லிய அசைவு வந்து சென்றதா? அல்லது அது அசைவின்மையா?

ஓசையற்ற காலடிகளுடன் அருகே அணைந்த மருத்துவர் அவள் அருகே குனிந்து கைகளை எடுத்து நான்கு விரல்களால் நாடியை அழுத்தி விழிசரித்து உளம் கூர்ந்தபின் “விண்மீண்டுவிட்டார், அமைச்சரே” என்றார். “எங்கு?” என்றார் விதுரர். “கற்பரசிகளின் உலகுக்கு” என்றார் மருத்துவர்.

[ 11 ]

நகர் நுழைந்து தன்னை எதிர்கொண்ட முதல் வீரனிடமே துரியோதனன் உறுதியான ஆணையிட்டான். அரச முறைமைப்படி முரசுகள் முழங்கட்டும், ஆனால் வாழ்த்தொலிகளோ வரவேற்புகளோ பிறசடங்குகளோ எதுவும் தேவையில்லை என. அவன் புழுதி படிந்த உடலுடன் களைத்து மெல்லடி எடுத்து வைத்த புரவியின் மேல் அஸ்தினபுரியின் தெருக்களில் சென்றபோது அதற்கு முன்னதாகவே குரல் வழியாக அவன் ஆணையை அறிந்திருந்த அஸ்தினபுரியின் வீரர்கள்  வாள் தாழ்த்தியும் வேல் தூக்கியும் ஓசையின்றி தலைவணங்கினர். முற்றங்களிலோ உப்பரிகைகளிலோ எவரும் ஓடி வந்து பார்க்கவில்லை. சாலையின் இருபுறமும் நின்றிருந்த அஸ்தினபுரியின் குடிகள் தலைதாழ்த்தி வணங்கி பின்நகர்ந்தனர்.

கர்ணன் களைத்திருந்தான். துரியோதனனை நோக்கிய அஸ்தினபுரியின் குடிகள் ஒவ்வொருவரையும் தனித்து நோக்கியபடி அவன் சென்றான். அவற்றில் அச்சமும்  விலக்கமும் இருந்தாலும் அவர்கள் அவனை வழிபடுவதும் தெரிந்தது. தன் சினத்தாலேயே துரியோதனன் பல மடங்கு ஆற்றல் அடைந்துவிட்டான் என்று பட்டது. கைநீட்டி மலைகளை விலகச்சொல்லும் விசை அவனுக்குள் இருப்பது போல. ஒரு சொல்லால் நகரங்களை எரிக்கும் அனல் அவனுள் கொதிப்பது போல. மனிதர்கள் தங்கள் அச்சத்தால் விழைவால் சினத்தால் மாமனிதர்களாகக் கூடும். தவத்தால் கொடையால் அன்பால் எழுந்தவர்களுக்கு நிகராக தலைதூக்கி நிற்கக்கூடும். இதுவும் ஒரு தவமே. இதிலும் தன் உடலையும் உள்ளத்தையும் உருக்கி அவியென்று அளித்து அவற்றை மானுடர் அடைகிறார்கள்.

அரண்மனை முற்றத்தை அடைந்து பாய்ந்திறங்கி கடிவாளத்தை சூதன் கையில் வீசிவிட்டு படிகளில் ஏறும்போதே துரியோதனன் “நான் நீராடி வருவதற்குள் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அவை அமர்ந்திருக்க வேண்டும்” என்று ஆணையிட்டான். அவனைத் தொடர்ந்து புரவியில் வந்திறங்கிய கர்ணன் எதிரே வந்த கனகரிடம் “விதுரர் எங்கே?” என்றான். “அவரது துணைவி உடல் நலமில்லை என்று சென்றார். துணைவியார் இன்றிரவை கடக்கமாட்டார் என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார்கள்” என்றார். கர்ணன் “யார்? சுருதையன்னையா?” என்றான். “ஆம்” என்றார் கனகர்.

அக்கணத்தில் தன் முன் எழுந்த சுருதையின் உருவமே அவர் இறப்பை நோக்கி சென்று கொண்டிருப்பதை உணர்த்துவதை கர்ணன் அறிந்தான். அதற்கு முன்பு ஒருபோதும் அது தோன்றவில்லை. இறப்பை தான் தெளிவாக பார்க்கமுடிகிறது. இறப்பை பார்ப்பதைத்தான் விழிகள் தவிர்க்கின்றன. “நான் நீராடி வருகிறேன்” என்று கர்ணன் சொன்னான். “அவை கூடட்டும். நான் சற்று பிந்தி வருவேன். அமைச்சரை பார்த்துவிட்டு… அரசர் கேட்டால் சொல்லிவிடுங்கள்” என்றான்.

தன் அறைக்குச் சென்று நீராடி உடை மாற்றி அவன் படியிறங்கி வரும்போது சுருதை உயிர் நீங்கிவிட்டாள் என்று ஏவலன் சொன்னான். அவன் கீழே வரும்போது துச்சாதனன் அவனுக்காக காத்திருந்தான். “சுருதை அன்னை உயிர் நீங்கிவிட்டார். அரசர் அவை கூட்டியிருக்கிறார். அவரிடம் சென்று இப்போது அவை கூட்ட வேண்டாமென்று நாம் உரைக்கவேண்டும்” என்றான். மறுமொழி சொல்லாமல் கர்ணன் “நான் விதுரரை பார்த்துவிட்டு வருகிறேன்” என்றபின் தேரை நோக்கி நடந்தான்.

விதுரரின் இல்லத்தின் முன் இறங்கி படிகளில் ஏறி உள்ளே செல்லும்போது ஸ்தானிகர் அவன் அருகே வந்து “அரசருக்கும் பீஷ்மபிதாமகருக்கும் செய்தி சென்றுவிட்டது. இறப்புக்கான மணியோசை ஒரு நாழிகைக்குப்பின் போதும் என்று அமைச்சர் சொன்னார்” என்றார். “ஏன்?” என்று கர்ணன் நின்று திரும்பி கேட்டான். “அரசர் நகரணைந்தபின்னர் அம்முரசுகள் ஓய்ந்து ஒரு நாழிகைக்குப்பின்  இறப்புச் செய்தி அறிவித்தால் போதும், வருகைமுரசுடன்  தொடர்ந்து இறப்பொலிப்பது அமங்கலம் என்றார்.” கர்ணன் ஒன்றும் சொல்லாமல் மரப்படிகளில் தன் எடை ஒலிக்க மேலேறி சென்றான்.

சுருதையின் உடலை பெண்கள் கீழே பெருங்கூடத்திற்கு எடுத்துச் சென்று தரையில் விரிக்கப்பட்ட மரவுரிசேக்கை மேல் படுக்க வைத்திருந்தனர். மாமங்கலையாக உயிர் நீத்த பெண்களுக்குரிய சடங்குகள் தொடங்கிவிட்டிருந்தன. “விதுரர் இங்கிருக்கிறார்” என்றார் உடன் வந்த ஸ்தானிகர். “தன் தனியறைக்குள் இருக்கிறார். உடலை நீராட்டி அணிசெய்த பின்னரே ஆண்கள் அருகே செல்ல ஒப்புவார்கள்” என்றார்.

கர்ணன் விதுரரின் சிற்றறை வாயில் முன் நின்றான். “அமைச்சரே” என்று அழைத்தான். உள்ளே ஓலைகளைப் பரப்பி எதையோ தேடிக் கொண்டிருந்த விதுரர் அவற்றை கலைத்துவிட்டு அவனை நோக்கினார். “வந்துவிட்டீர்களா?” என்றபடி எழுந்து வந்தார். “அரசர் வந்துவிட்டாரா?” என்றார் “ஆம்” என்றபடி கர்ணன் அவர் கைகளை பற்றிக்கொண்டான். விதுரர் “அமருங்கள்! அமர்ந்து கொள்ளுங்கள்!” என்றார். அவரது உடல்  நடுங்கிக் கொண்டிருப்பதையும் உதடுகள் ஓசையற்ற சொற்களுடன் அசைந்து கொண்டிருப்பதையும் கர்ணன் கண்டான். ஒருபோதும் அவரை அப்படி நிலையழிந்தவராக பார்த்ததில்லை என்று எண்ணிக்கொண்டான். அவர் அமர்ந்தார்.

“உரிய முறையில் இறந்தாள், புன்னகையுடன். புன்னகையுடன் இறப்பது ஒரு அரிய பேறு என்றார்கள். மாமங்கலைகளுக்கே உரியது என்றார்கள். நன்று! என் வாழ்க்கைக்கு ஒரு பொருள் கிடைத்தது” என்று அவர் சிரித்தார். “அவளை மாமங்கலையாக விண் அனுப்புவது நான் உயிர் வாழ்வதனால்தான்” என்று மீண்டும் சிரித்து “விண்ணிலிருப்பாள். அங்கே சத்யவதியும் அம்பிகையும் அம்பாலிகையும் இருப்பார்கள்” என்றார். பின்பு எழுந்து அவனருகே வந்து “இந்நகருக்குள் நுழையும்போது ஏனோ அம்பா தேவி ஆலயத்துக்கு முன் சென்று நின்றேன். அன்னையைப் பார்த்தபோது எதையும் வேண்டிக்கொள்ளவில்லை. சுருதையை எண்ணிக் கொண்டேன். ஏன் எண்ணிக் கொண்டேன் என்று இப்போது தெரிகிறது. ஏனென்றால் அவள் சென்று அமரப்போவது அம்பையின் அணியில்தான்” என்றார்.

“அமருங்கள்! நீங்கள் சற்று ஓய்வெடுக்கலாம்” என்றான் கர்ணன். “ஆம், ஓய்வெடுக்க வேண்டியதுதான். நான் நன்கு ஓய்வெடுத்து இரண்டு நாட்களுக்கு மேலாகிறது. என்ன ஆயிற்று?” என்றார் விதுரர். “அரசர் என்ன செய்கிறார்? நிலையழிந்திருக்கிறாரா? கடும் சினத்துடன் அங்கிருந்து கிளம்பினார் என்றார்கள்.” கர்ணன் அதற்கு மறுமொழி சொல்ல வாயெடுப்பதற்குள் “மாமங்கலைகள் இறுதி வரை அவர்கள் சொல்லவேண்டியவற்றை சொல்லாமலே இங்கிருந்து சென்றுவிடுகிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்களுடைய உலகம் அவர்கள் சொல்ல விழைந்த சொற்களால் ஆனவையாக இருக்கும்” என்றார்.

மீண்டும் நகைத்து “மாமங்கலைகள் உலகில் ஆண்களுக்கு நுழைவு ஒப்புதலே இருக்காதென்று எண்ணுகிறேன். முற்றிலும் பெண்களால் ஆன உலகாக இருக்கும். என்ன சொல்கிறீர், அங்கரே?” என்றார். கர்ணன் “ஆம்” என்றான். “இதில் எந்தக் காவியத்திலாவது மாமங்கலைகள் விண்புகுதலைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்த்தேன். அவர்களை தேவர்கள் அழைத்துச் செல்ல முடியாது. மூன்று பெரும் தெய்வங்களும் அவர்களுக்கு அருளமுடியாது. அனல்முடியுடன் கொற்றவை அமர்ந்திருக்கும் ஒரு விண்ணுலகாக இருக்கும் அவர்களின் விண்ணகம். அங்கு இதுவரை இப்புவியில் நிகழ்ந்து மறைந்த அனைத்து மாமங்கலைகளும் கதிர்முடி சூடி அமர்ந்திருப்பார்கள். அங்கு ஆண்கள் எவர் நுழைந்தாலும் எரிந்து சாம்பலாகி விடுவார்கள், மும்மூர்த்திகளாக இருந்தாலும் சரி. என்ன சொல்கிறீர்?” “ஆம்” என்றான் கர்ணன்.

“சொல்லுங்கள்! அரசர் எவ்வாறு இருக்கிறார்? என்ன சொல்கிறார்?” என்றார் விதுரர். “நன்றாக இருக்கிறார்” என்று கர்ணன் சொன்னான். “அவைகூட்டியிருக்கிறார் என்றார்கள். அவைக்கு இப்போது என்னால் உடனடியாக வரமுடியாது. ஏனென்றால் இவளை உரிய முறையில் காடேற்றுவதற்குள் நாளை உச்சிப்பொழுதாகிவிடும். அதன் பின்னரே நான் அவை நுழைய முடியும்” என்று விதுரர் சொன்னார்.

கர்ணன் மறுமொழி சொல்வதற்குள் “கன்னியர் இறந்தால் அவர்கள் மங்கல உலகுக்குள் செல்வதில்லை என்று சொல்வார்கள். அவர்களுக்குரியது வேறு உலகம். ஏனென்றால் அவர்கள் ஆண்களை அறிந்ததில்லை. ஆண்களை அறியும்போதுதான் பெண்கள் தங்களை அறிகிறார்கள். தங்கள் எல்லையை அல்லது தங்கள் ஆற்றலை. ஆண்களை அறியாத பெண் மாமங்கலையாக முடியாதென்றால் இந்த மாமங்கலையர் அனைவரையும் ஆண்கள்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களா?” என்றார்.

கண்களில் சிரிப்பில்லாமல் உரக்க நகைத்து “முன்பொரு சூதன் பாடினான், படுகளத்தில் வீழ்ந்த வீரர்களுக்கென்றொரு விண்ணுலகம் உள்ளது என்று. அவ்விண்ணுலகில் அரசர்களுக்கு இடம் இல்லை, அமைச்சர்களுக்கும் நுழைவு இல்லை என்று. ஏனெனில் அவ்வுலகுக்கு மண்ணிலிருந்து மனிதர்களை அனுப்பிக் கொண்டிருப்பதே அவர்கள்தான்” என்றார். அவன் தோளைத் தட்டி “மாமங்கலையாக சென்றுவிட்டாள். அவள் மைந்தன் துவாரகையில் இருக்கிறான். அவன் வருவதற்குள் இவள் எரியேறிவிடுவாள்…” என்றார்.

ஸ்தானிகர் வந்து அறைவாயிலில் நின்று தலைவணங்கி “பேரரசியும் அரசியும் வந்திருக்கிறார்கள். பிற அரசியரும் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றார். “நான் அவர்களை வரவேற்க வேண்டுமா? அதற்கான முறைமை என்ன?” என்றார் விதுரர் எழுந்தபடி. “அல்ல, தாங்கள் அவர்களை பார்க்கவேண்டியதில்லை. அவர்கள் நேரடியாகவே மேலே சென்றுவிடுவார்கள்” என்றார். “பீஷ்மபிதாமகர் வந்து கொண்டிருக்கிறார் என்றார்கள். அவரை நான் எப்படி வரவேற்க வேண்டும்? இதே ஆடை போதுமா?” என்றபடி விதுரர் எழுந்தார்.

அவர் சித்தம் அழிந்துவிட்டதா என்று கர்ணன் எண்ணினான். “முறைமை என ஏதுமில்லை, அமைச்சரே. அவர்கள் வரும்போது தாங்கள் வெளியே கூடத்தில் இருந்தால் நன்று” என்றார் ஸ்தானிகர். கர்ணன் இருப்பதையே மறந்ததுபோல “ஆம். கூடத்தில் இருக்கிறேன். அவர்களும் கூடத்தில்தான் என்னை சந்திக்க விரும்புவார்கள்… மூத்தவர் வருகிறாரா?” என்றார். “அவரிடம் சொல்லப்பட்டுவிட்டது. சஞ்சயன் வருவதற்காக காத்திருக்கிறார்கள். வந்ததும் இங்கு வருவார்” என்றார் ஸ்தானிகர்.

விதுரர் மீண்டும் உள்ளே வந்து கர்ணனைப் பார்த்து “நீங்களா? எப்போது வந்தீர்கள், அங்கரே?” என்றார். கர்ணன் “தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாமே!” என்றான். விதுரர் நகைத்து “ஆம். ஓய்வெடுக்கவேண்டும். இப்போது பீஷ்மபிதாமகர் வந்துகொண்டிருக்கிறார். அவர் சென்றபின் சற்று ஓய்வெடுக்கலாம் என்று எண்ணுகிறேன்” என்றார். ஸ்தானிகர் “வருக, அமைச்சரே!” என்று அவர் தோளைத் தொட “ஆம், நான் எனது சால்வையை இங்கே விட்டுவிட்டேன்” என்றபின் திரும்பி சால்வையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு திரும்பி நடந்தார். கர்ணன் எழுந்து அவனைத் தொடர்ந்து வந்த ஏவலனிடம் “நான் சென்று அரசருடன் வருகிறேன். பேரரசர்  வரும்போது இங்கு இளையவர்கள் இருக்க வேண்டுமல்லவா?” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்

குலதெய்வங்கள் பேசும் மொழி

$
0
0

1

சமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது அம்முக்குட்டி அத்தையைப்பார்த்தேன். நொந்துபோனவர்களாக தனியாக வெளியே அமர்ந்திருந்தார்கள். ‘என்ன அத்தை உள்ளே யாருமில்லையா?’ என்றேன். அத்தைக்கு வயது எண்பதுக்கும் மேல். வாழ்நாள் முழுக்க உறவுகளைத்தான் முக்கியமான விஷயமாக எண்ணிவந்திருக்கிறார்கள். திருமணம், பிரசவம், சண்டைகள், சமரசங்கள்,மரணம் ஆகியவையே வாழ்க்கை என ரத்தினச்சுருக்கமாக- ஆனால் சரியாக- புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆகவே அவற்றைப்பற்றி பேசவும் உறவினர்களைச் சந்திக்கவும் பெரிதும் விரும்புவார்கள்.

‘என்ன சொல்ல? உள்ளே எல்லாரும் பேசும் மொழி எனக்குப்புரியவில்லை. நான் பேசினால் அவர்கள் சிரிக்கிறார்கள்’ என்றாள் அத்தை சோகமாக. எனக்கு வருத்தமாக இருந்தது. நானே அத்தையின் மொழியை கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் பேசமுடியும்

இப்பகுதிக்கே உரிய பழைமையான மலையாள வட்டாரவழக்கு ஒன்று உண்டு. அதில் சி.வி.ராமன்பிள்ளை போன்றவர்கள் செவ்வியல் படைப்புகளை எழுதியிருக்கிறார்கள். தமிழும் மலையாளமும் கலந்த ‘மலையாண்மை’ என்று அதைச் சொல்வார்கள். அத்தை அறிந்த ஒரே மொழி அதுதான். சின்னவயதில் நானெல்லாம் அதைத்தான் பேசிக்கொண்டிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் மொழி மாறியது. தரப்படுத்தப்பட்ட பொதுமலையாளம் நோக்கி நகர்ந்தது. அத்தையைப்போல சில அழிந்துவரும் உயிரினங்கள் இன்னும் அம்மொழியில் வாழ்கிறார்கள். அவர்களுக்கும் பிறருக்குமான தொடர்பே முழுமையாக அழிந்துவிட்டது.

இதே நிலைதான் குமரிமாவட்டத்தின் வட்டாரத்தமிழ்பேசுபவர்களுக்கும். பெரும்பாலும் கிராமத்து வயதானவர்கள்தான் அதை இன்று பேசுகிறார்கள். அடுத்த தலைமுறை முழுமையாகவே வெளியே வந்துவிட்டது. நானோ நாஞ்சில்நாடனோ புனைவுகளில் எழுதும் தமிழ்  இன்றும் வேணாட்டிலும் நாஞ்சில்நாட்டிலும் அனேகமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவை நாட்டுப்புறக்கலைகள், நாட்டாரிலக்கியங்கள், பல்வேறு கிராமிய விளையாட்டுக்கள் போல முழுமையாகவே அழிந்துவிடும் நிலையில் உள்ளன.

நடந்துகொண்டிருப்பது ஒரு பிரம்மாண்டமான சமப்படுத்தல். சராசரிப்படுத்தல். பழங்கால பழங்குடி மற்றும் நிலப்பிரபுத்துவப் பண்பாடு என்பது சின்னச்சின்ன பண்பாட்டு பகுதிகளை உருவாக்குகிறது. அவை பிறபண்பாட்டுப்பகுதிகளுடன் தேவையான அளவுக்கு மட்டுமே உறவுள்ளவை. மக்கள் அன்று இடம்பெயர்வது மிகக்குறைவு. தங்கள் நிலப்பகுதிக்குள்ளேயே முழுமையாக வாழ்ந்து நிறைவார்கள். வணிகமும் படையெடுப்புகளும் மட்டுமே புறத்தொடர்பை உருவாக்குகின்றன. ஆகவே அந்தப் பகுதியின் பண்பாடு தனக்கான தனித்தன்மைகளை வளர்த்துக்கொள்கிறது.

இந்த பண்பாட்டுப்பகுதிகளை காட்டில் ஊறித்தேங்கியிருக்கும் சிறிய நீர்த்தேக்கங்கள் எனலாம். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளின் பண்பாடு என்பது ஒரு பெருமழை. பெருவெள்ளமாக அது வருகையில் இந்த நீர்த்தேக்கங்களை எல்லாம் இணைத்து ஒன்றாக்கி தானும் வளர்கிறது. அனைத்தையும் அடித்துக்கொண்டு செல்கிறது. அந்த பெருக்கில் எல்லா நீர்நிலைகளின் நீரும் உள்ளது, ஆனால் எதற்கும் தனித்தன்மை இல்லை.

பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளை தகவல்தொழில்நுட்பத்தின் யுகம் எனலாம். அச்சு ஊடகம், போக்குவரத்து, மின்னணு ஊடகம் ஆகியவை வளர்ச்சியடைந்தன. கூடவே பெருந்தொழில்கள் உருவாகி மக்கள் இடம்பெயரவும் ஒருவரோடொருவர் கலக்கவும் கட்டாயத்தையும் உருவாக்கியது. ஆகவே எல்லா தனிப்பண்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று கலக்க நேர்ந்தது. குமரிமாவட்டத்தில் வேணாடும் நாஞ்சில்நாடும் வெவ்வேறு மொழியும் பண்பாடும் கொண்டவை. அவை ஒன்றாயின. குமரிப்பண்பாடு தமிழின்பொதுப்பண்பாட்டுடன் கலந்தது. தமிழ்ப்பண்பாடு இந்தியப்பண்பாட்டின் பகுதியாகியது. இந்தியப்பண்பாடு உலகளாவிய பண்பாட்டின் ஒரு துளியாகியது. இரு நூற்றாண்டுகளாக இந்த அடையாளமிழப்பும் கலப்பும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன

இந்தக்கலப்பு மெல்ல ஆரம்பித்து வேகம் பிடித்து தகவல்தொழில்நுட்பம் அடுத்தடுத்த கட்டத்துக்குச் செல்லச்செல்ல உச்சத்தை அடைகிறது. இது நவீன காலகட்டத்தின் ஒரு தேவையும் ஆகும். பல்வேறு மக்கள் ஒன்றுகலந்து வாழ்ந்தாகவேண்டுமென்ற நிலையில் பொதுமையையும் சராசரியையும் உருவாக்கித்தான் ஆகவேண்டும். அதுதான் வசதியானது.

உதாரணமாக ,ஓர் ஆலையில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் ஒரே மொழிபேசி ஒரே வகையான பழக்க வழக்கங்கள் கொண்டிருந்தால்தான் ஆலை சுமுகமாக நிகழமுடியும். பொதுமை இரண்டும் இல்லாமல் தொடர்பு நிகழாது. அது இல்லாமல் நிர்வாகமே சாத்தியமில்லை. சென்ற இருநூறாண்டுகளில் நாம் எல்லாத் துறைகளிலும் பொதுமை சராசரித்தன்மை ஆகியவற்றை உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம்.

சென்ற நூற்றாண்டின் மாபெரும் தகவல்தொழில்நுட்பம் சினிமா. தமிழ்சினிமாவை கூர்ந்து நோக்கினால் வணிகசினிமா எப்படி மெல்லமெல்ல பொதுமையையும் சராசரியையும் உருவாக்குகிறது என்பதைக்கண்டு வியப்போம். தமிழ்சினிமா தமிழ்நாடு முழுக்கச் சென்று அனைவரையும் மகிழ்வித்தாகவேண்டும். இங்கே வட்டாரத்துக்கு ஒரு மொழியும் பண்பாடும் இருந்தது. சாதிக்கொரு மொழியும் பண்பாடும் இருந்தது. சினிமா இவற்றில் ஒரு பொதுவான சராசரியான வடிவத்தை மெல்லமெல்ல அமைத்துக்கொண்டது

ஆரம்பகாலத் தமிழ்சினிமா தரப்படுத்தப்பட்ட ‘அச்சு’ மொழியை பேசியது. கதாபாத்திரங்கள் இன்ன சாதி, இன்ன வட்டாரம் என தோராயமாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டார்கள். அது ஏற்கனவே இருந்த வணிகநாடகத்தால் உருவாக்கப்பட்ட பொதுமையும் சராசரியும். மெல்லமெல்ல எம்ஜிஆர் காலகட்டத்தில் சினிமா பிரம்மாணடமாக வளர்ந்தபோது அந்தப் பொதுமை இன்னும் பெரிதாகியது, சராசரி இன்னும் துல்லியமாகியது. எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் பொதுவாக சாதி அடையாளம் இல்லாதது. எந்த வட்டார வழக்கையும் அது பேசவில்லை. [கூர்ந்து நோக்கினால் அது தமிழின் இடைநிலைச் சாதியைச் சேர்ந்தது என ஊகிக்க இடமிருக்கும்]

இவ்வாறு சினிமா உருவாக்கிய சராசரிப்பொதுமொழி கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே புழங்க ஆரம்பித்தது. அது வசதியானதாக இருந்தது. பொதுவெளியில் கையாள்வதற்குரிய கருவியாக இருந்தது. நாமெல்லாம் அந்தப் பொதுமொழி நோக்கி நம்மையறியாமலேயே நகர்ந்துகொண்டிருந்தோம். நம் தாத்தாவின் மொழிக்கும் நம் மொழிக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டால் இது தெரியும். தொலைக்காட்சி வந்ததும் இந்தவேகம் உச்சநிலையை அடைந்தது. வட்டார வழக்குகள் ஏறத்தாழ முழுமையாகவே அழிந்தன.

இந்த அழிவு ஒருவகையில் தவிர்க்கமுடியாதது. வட்டார வழக்கு என்பது சென்றகாலத்தைய ஒரு அடையாளம். இன்று அந்த வட்டார அடையாளங்களுடன் நாம் இல்லை என்னும்போது அந்த மொழியை மட்டும் வைத்துக்கொண்டிருக்கமுடியாதுதான். ஆனால் அதில் மிகப்பெரிய ஓர் இழப்பு உள்ளது. அந்த வட்டாரவழக்கு ஒரு நெடுங்காலப் பண்பாட்டுப்பதிவு. ஒரு வட்டாரத்துக்கு மட்டுமே உரிய வேளாண்மை, கலைகள், வாய்மொழி இலக்கியங்கள் ஆகியவை அம்மொழியில் வட்டாரத்தனித்தன்மையாக உறைந்துள்ளன.

நம் வாழ்க்கை விவசாயத்துடன் தொடர்புடையது என்பதனாலேயே விவசாயம் சார்ந்த சொற்கள் நம்மிடம் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. ஒவ்வொன்றிலும் நூற்றாண்டுகளாக நம் முன்னோடிகள் நிகழ்த்திய அனுபவம் சார்ந்த அறிதல்கள் உள்ளன.

உதாரணமாக குமரிமாவட்ட வட்டாரவழக்கில் உள்ள வேளாண்மை குறித்த சொற்கள். தறுப்பு என்றால் நெல்லின் அடிக்கற்றையின் கனம். அது எவ்வளவு கதிர் நிற்கும் என்பதற்கான ஆதாரம். மாட்டின் உடலுறுப்புகளைக்குறிப்பதற்காக மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட வட்டாரச்சொற்கள் உள்ளன. பூஞ்ஞ அல்லது புள்ளிருக்கை என்றால் திமில். கொண்டமணி என்றால் கொம்புக்கு நடுவே உள்ள குமிழ்.

மண்ணைக்குறிக்கத்தான் எத்தனை சொற்கள்! எனக்கே எவ்வளவு சொற்கள் தெரிந்திருக்கின்றன! செம்மண், கருமண்,களிமண்,களர்மண்,உவர்மண், கடுமண் போன்ற மண்வகைகள் அனைவரும் அறிந்தவை. பாருமண் என்றால் உறைந்து கல்லான மண். வெட்டியெடுத்து வீடுகட்டுவார்கள். காரைமண் என்றால் சுண்ணாம்புமண். பன்ன மண் என்றால் வேர்கள் மண்டிய மண். பொற்றைமண் என்றால் மேட்டுநிலத்துமண்.பொருமண் என்றால் பொலபொலவென்ற மண். பதக்குமண் என்றால் நீர் ஊறி நிற்குமளவுக்கு இலைகள் மட்கிய மண்.சதம்பு மண் என்றால் வளமற்ற சதுப்புமண். சொத்துமண் என்றால் வளமான காட்டுச்சதுப்பு மண்….யோசித்தால் ஐம்பது மண்வகைகளைப் பட்டியலிட்டுவிடமுடியும்.

நாட்டுப்புற வைத்தியம், நாட்டுப்புறக் கலைகள் போன்றவற்றை வட்டார வழக்கிலிருந்து பிரிக்கவே முடியாது. ஊரை என்றால் வாயிலிருந்து வரும் புளித்தவாடை என்பது நாட்டுப்புறவைத்தியனுக்குத் தெரியும். கொந்தை என்றால் கணியான் வைக்கும் மரத்தாலான மணிமுடி என அதன் ரசிகர்களுக்குத்தெரியும்.

வட்டார வழக்கு அழிவதென்பது நாம் பழங்குடிக்காலத்தில் இருந்தே சேர்த்துவைத்த ஞானம் அமர்ந்திருக்கும் பீடம் உடைந்துச்சரிவதுதான். வட்டாரவழக்கு அழிந்துபட்டமையால்தான் இன்று நம்மில் பெரும்பாலானவர்களுக்கு பத்து பறவைகளின் பெயர்கள் சொல்லத்தெரியவில்லை. பத்து மரங்களை அடையாளம் காட்டத்தெரியவில்லை. அந்திக்கும் மாலைக்கும் நடுவே உள்ள மஞ்சள்முறுகும் வெளிச்சத்தைச் சுட்டிக்காட்ட நம்மிடம் சொல் இல்லை. [மணிவெளிச்சம்] நம் அனுபவமும் அறிதலும் சூம்பிவிட்டன

அதற்காக வட்டாரவழக்குக்குச் செல்லமுடியுமா என்ன? அது சாத்தியமில்லை. நதி ஒரே திசைக்குத்தான் ஓடமுடியும். அடாடா அழிகிறதே என்ற ஒப்பாரிகள் வெறும் பாவனைகள் மட்டுமே. எவரும் அப்படி பழைமைக்குச் செல்லப்போவதில்லை.

அப்படியென்றால் செய்யக்கூடியதொன்று உள்ளது. வட்டாரவழக்கையும் அதிலுள்ள நாட்டார் அறிதல்களையும் முழுக்க நவீன மொழியில் நிறைத்துக்கொள்வதுதான். அந்தச் செம்புப்பாத்திரத்திலிருந்து இந்த கண்ணாடிக்குடுவைக்குக் கொண்டுவருவது. நாட்டார் ஞானத்தையும் வட்டார வழக்குகளையும் நம் செல்வங்கள் என்று கொண்டால் நாம் இதைச் செய்யமுடியும்.

ஐரோப்பா இதில் ஒரு முன்னுதாரணம்- எதிர்மறையாக. அவர்கள் மிகவேகமாக நவீன வாழ்க்கைக்குள் வந்தவர்கள். அந்தவேகத்தில் தங்கள் ஒட்டுமொத்த நாட்டார் ஞானத்தையும் இழந்தார்கள். ஐரோப்பா இருவகையில் தங்கள் நாட்டார் ஞானத்தை இழந்தது. ஒன்று பதினேழாம்நூற்றாண்டு முதல் அவர்கள் செவ்வியல்மீது பெரும் நாட்டம் கொண்டு செவ்வியலை உச்சகட்ட சாதனையாக முன்வைத்து அதைநோக்கிச் சென்றார்கள். இரண்டாவதாக நடைமுறை சார்ந்த நவீனத்தன்மையை மிகவும் சார்ந்திருந்தார்கள். முதல்விஷயம் உச்சியிலும் இரண்டாம் விஷயம் அடித்தளத்திலும் நிகழ்ந்தது. ஆகவே அங்கு நாட்டாரியலும் வட்டாரவழக்குகளும் அழிந்தன

அழிவை அவர்கள் இருபதாம்நூற்றாண்டில் உணர்ந்துகொண்டார்கள். எஞ்சியதை மீட்பதற்கான பெருமுயற்சிகள் செய்யப்பட்டன. இன்று நாட்டார்ஞானத்தில் மிகப்பெரிய கவனம் கொண்டவர்கள் ஐரோப்பியர்களே. இந்தியாவிலும் கீழைநாடுகளிலும் வாழும் நாட்டார்ப்பண்பாட்டையும் கலைகளையும் வட்டாரவழக்கையும் ஆவணப்படுத்துவது நவீனமொழியில் நினைவில் நிறுத்திக்கொள்வது இரண்டுக்கும் ஐரோப்பிய அறிஞர்களின் பங்களிப்பே அதிகம். அவர்களால் நிதியூட்டப்பட்டு இங்கே சில போலிமுயற்சிகள் நிகழ்கின்றனவே ஒழிய உண்மையான பணிகள் அனேகமாக இல்லை என்றே சொல்லலாம்.

வட்டாரவழக்கையும் நாட்டார் ஞானத்தையும் இருவகையில் நவீனவாழ்க்கையில் நிலைநிறுத்த முடியும். ஒன்று ஆவணப்படுத்துதல். முறையாகப் பதிவுசெய்து தொகுத்தல். இது கல்விநிறுவனங்கள்சார்ந்த ஒரு பணி.நாட்டார்அறிவுகள் சார்ந்து இது பெரிதும் பயனுள்ளதே. மருத்துவம் வேளாண்மை போன்ற தளங்களில் உள்ள நாட்டார்ஞானம் அவ்வாறு தொகுக்கப்படலாம்.

ஆனால் நாட்டார் ஞானத்தையும் வட்டாரவழக்கையும் இன்றைய வாழ்க்கைக்குள் நிலைநாட்ட கலையிலக்கியங்களால்தான் முடியும். இன்று ஒரு தூயநாட்டுப்புறக்கலையை எத்தனைபேர் அமர்ந்து ரசிப்பார்கள் என்பது கேள்விக்குரியதே. அந்தக்கலைகள் உருவாகி வந்த பண்பாட்டுப்புலமும் நிகழ்ந்த வாழ்க்கைக்களங்களும் இன்றில்லை. அவற்றின் மனநிலைகளை நாம் பகிர்ந்துகொள்வது இன்று சாத்தியமும் இல்லை. ஆய்வாளர்கள் அல்லாத பிறர் அவற்றை இன்று முழுமையாக அமர்ந்து பார்க்கவே முடியாது

நான் தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டார்கலைகளை அணுகியபோது இந்தச் சிக்கலைச்சந்தித்தேன். என்னால் அவற்றின் நிதானமான நகர்வை ரசிக்கமுடியவில்லை. அவற்றில் உள்ள வேகமும் தீவிரமும் என்னைக் கவர்ந்தபோதே அவற்றில் உள்ள பழைமையான மதிப்பீடுகளும் பழைய கலைக்கூறுகளும் என்னை அன்னியப்படுத்தவும் செய்தன. அவற்றில் உள்ள உணர்ச்சிகரமோ நகைச்சுவையோ என்னைக் கவரவில்லை.

இன்று ஒரு நவீனக்கலை அந்தநாட்டார்க்கலைகளின் சாரத்தை உள்வாங்கி எனக்காக மறுஆக்கம் செய்து தருமென்றால் அது என்னை ரசிக்கச்செய்யும். திரிச்சூர் ரூட்ஸ் என்ற அமைப்பு நவீன நாடகத்துக்குள் கொண்டுவந்த உண்மையான நாட்டார்க்கலைக்கூறுகள் என்னை மரபின் பிரம்மாண்டத்தை உணரச்செய்தன, நவீனக்கலையனுபவத்தையும் அளித்தன.

அதேதான் இலக்கியத்துக்கும். உண்மையில் வட்டார மொழி கொண்ட நாட்டார் இலக்கியம் என்பது இங்குள்ள ’சந்தைப்பதிப்பு’ நூல்களிலேயே உள்ளது. அந்த நூல்களை நாம் வாசிக்கவோ ரசிக்கவோ முடியாது. அந்த வட்டாரமொழி நாஞ்சில்நாடனின் கண்மணி குணசேகரனின் இலக்கியப்படைப்புகளில் வரும்போதே நம்மால் ரசிக்கமுடிகிறது. நாட்டார்பண்பாடும் வட்டாரமொழியும் நவீனகாலகட்டத்தில் நம்மிடம் வந்துசேர, நம்மில் வாழ இலக்கியமே சிறந்த வழி.

கலைகளும் இலக்கியமும் செவ்வியலுடன் கொண்டிருக்கும் அதே வேர்ப்பற்றை நாட்டார்பண்பாட்டுடனும் கொண்டிருக்கவேண்டும். அப்போதுதான் அவை உண்மையான வீரியத்துடன் வெளிப்படமுடியும். பண்பாட்டுத்தொடர்ச்சியை உருவாக்கமுடியும். அதற்கு இன்று வட்டாரமொழி மிகமிக முக்கியமான வாகனம்.

[அந்திமழை இதழில் எழுதிய கட்டுரைNov 7, 2012, மறுபிரசுரம்/

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 69

$
0
0

[ 12 ]

சுருதையின் பதினாறாவதுநாள் நீர்க்கடன்களை முடித்து அமைச்சுநிலைக்கு திரும்பியபோதுதான் அஸ்தினபுரியின் அனைத்துப்படைகளும் போர் ஒருக்கம் கொண்டிருக்கும் செய்தியை விதுரர் அறிந்தார். பதினாறுநாட்கள் அவர் மண்ணென்றும் கல்லென்றும்  மரமென்றும் மானுடரென்றும் புலன்களால் அறியப்பட்ட  அஸ்தினபுரியில் இல்லை. நினைவென்றும் கனவென்றுமான பிறிதொரு அஸ்தினபுரியில் இருந்தார். அங்கே காலம் கரைந்து சுழன்றது. இருத்தலும் இன்மையும் முயங்கின. இருநிலையழிந்த சித்தவெளியில் மிதந்துகிடந்தார்.

பதினாறாம் நாள் காலை நீர்க்கடனுக்காக கங்கையில் இடைவரை நின்றிருக்கையில் ஒருகணத்தில் அனைத்தும் முடிந்துவிட்டன என்னும் உணர்வை அடைந்தார். குளிர்போல அவர் உடலை அவ்வெண்ணம் நடுக்கியது. கால் நீரொழுக்கில் இழுபட்டுச்செல்வது போலிருந்தது.

விழுந்துவிடப்போனவரை அவரது மைந்தன் சுபோத்யன் பற்றிக்கொண்டான். “மூழ்குங்கள், தந்தையே” என்று அவன் மெல்லிய குரலில் சொன்னான். “ஆம்” என்றபடி அவர் நீரில் மூழ்கி எழுந்தார். நீரின் அழுத்தம் மூச்சுத்திணறச் செய்தது. எழுந்து ஈர ஆடை சிக்கி கால்தடுக்க கரைக்கு வந்தார். இளைய மைந்தன் சுசரிதன் மரவுரியாடையை அளித்து “துடைத்துக்கொள்ளுங்கள்” என்றான்.

அவர் தலைதுவட்டிக்கொண்டிருக்கையில் கீழே கேட்டுக்கொண்டிருந்த நீத்தாருக்கான சொற்கள் நீருக்குள் என ஒலித்தன. காதைக்குடைந்து தலையை உலுக்கினார். மூச்சுத்திணறல் என அவர் உணர்ந்தது உள்ளத்தின் வெறுமையைத்தான் என்று சற்று பிந்தியே அறிந்தார்.

தேரில் அஸ்தினபுரி நோக்கி செல்கையில் மெல்ல எண்ணங்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்தன. பதினாறுநாட்கள் அவர்மேல் ஈரமான மரவுரிமூட்டைகள் போல ஏறியமர்ந்திருந்தவை அவை. வெறுமை மிகுந்தபடியே சென்றது. அரண்மனையை அடைந்தபோது உடலே இறகுபோல ஆகிவிட்டிருந்தது. படிகளை ஏறி தன் அறைக்குள் செல்லும் ஆற்றலே உடலில் எஞ்சியிருக்கவில்லை.

அறைக்குச் செல்லும்வழியில் மூடப்பட்டிருந்த சாளரம் ஒன்றை நோக்கியபடி நின்றார். நெஞ்சு ஏக்கம் கொண்டபடியே வந்தது.

ஏவலன் வந்து அருகே நின்றான். அந்தச்சாளரக் கதவை திறக்கும்படி சொன்னார்.  அவன் விழிகளில் வினாவுடன் நோக்க அவர் “ம்” என்றார். அவன் இன்னொரு ஏவலனுடன் வந்து  கதவை உடைத்துத் திறந்தான். பல்லாண்டுகாலமாக மூடப்பட்டிருந்த கதவின் பொருத்துக்களில் தூசி படிந்த தடம் தெரிந்தது. மறுபக்கம் ஒட்டடை படிந்திருந்தது. நெடுங்காலமான புண்வடு போல கதவுப்பொருத்து வெளுத்துத் தெரிந்தது.

அவர்கள் அதை தூய்மைசெய்வதை அவர் நோக்கிக்கொண்டு நின்றார். அவர்கள் அதை சித்தமாக்கியபின் விலகி நிற்க அவர் அதில் ஏறியமர்ந்து தெருவை நோக்கிக்கொண்டிருந்தார். வெளியே தெரிந்த தெரு அவர் முற்றிலும் அறியாத ஒன்றாக இருந்தது. அங்கே இரண்டு யானைகள் இரு  நீர்க்குமிழிகள் போல மிகமெல்ல ஒழுகிச்சென்றன. மனிதர்கள் பஞ்சுப்பிசிறுகள் போல சென்றனர். ஓசைகள் இல்லாத ஒரு மாய உலகம்.

அன்று பகல் முழுக்க அவர் அங்கேயே அமர்ந்திருந்தார். எண்ணங்கள் அனைத்தும் முழுமையாக அடங்கி உள்ளம் அசைவற்றுக் கிடந்தது. ஒரு மெல்லிய ஏக்கமாக மட்டுமே உள்ளத்தை, இருப்பை உணரமுடிந்தது. அவ்வுணர்வு எழுந்ததும் மெல்ல அசைந்து மூச்செறிந்து மீண்டும் அமர்ந்தார். ஓர் எண்ணத்துடன் இன்னொரு எண்ணம் கொண்டிருக்கும் தொடர்பே  சித்தம்  என்பது. கல்வியும் அறிவும் அனைத்தும் அந்தத் தொடர்பை மட்டும்தான் உருவாக்குகின்றன. அத்தொடர்பு முற்றிலும் அறுந்துவிடும்போது உள்ளம் மட்டுமே எஞ்சுகிறது. அறிவால் அறியப்படாத ஒன்று. பெயரிடப்படாத, அடையாளங்களற்ற ஒன்று.

மாலையில் சுபோத்யன் அவரிடம் வந்து “தாங்கள் அமைச்சுநிலைக்கு செல்லலாம், தந்தையே” என்றான். அவனுக்கு அப்பால் சுசரிதன் நின்றான். “என்னை நாற்பத்தெட்டாம் நீரூற்றுக்குப்பின் சென்றால் போதும் என்று சொன்னார் மூத்தவர்” என்றார் விதுரர். சுசரிதன் “நீங்கள் சென்றாகவேண்டும்… உங்கள் இடம் அதுவே” என்றான். விதுரர் அச்சொற்களை விளங்கிக்கொள்ளாதவராக பார்த்தார்.

“தந்தையே, நினைவறிந்த நாளிலிருந்து இந்த பதினாறுநாட்கள் மட்டுமே நீங்கள் அரசுசூழ்தலில் இருந்து விலகி நின்றிருக்கிறீர்கள்… செல்லுங்கள்!” என்றான். “தங்களால் அவ்வுலகிலல்லாமல் வாழமுடியாது. அங்குதான் உங்கள் புலன்கள் விழிப்புகொள்கின்றன.” விதுரர் பெருமூச்சுவிட்டார். “இனி இம்மாளிகையில் நீங்கள் இருக்கவேண்டியதில்லை, தந்தையே” என்றான் சுசரிதன். அவர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

அவர் அவர்களால் செலுத்தப்பட்டு ஆடையணிந்து கிளம்பினார். அமைச்சுநிலை வரை சுசரிதன் வந்தான். அமைச்சுநிலை வாயிலில் அவரை எதிர்கொண்டழைத்த கனகர் வணங்கி வாழ்த்துரைத்தபின் “படைபுறப்பாடு முடிவடைந்துவிட்டது, அமைச்சரே. படைகள் முரசு காக்கின்றன” என்றார். “ஏன்?” என்றார் விதுரர். கனகர் திகைப்புடன் “அனைத்துச் செய்திகளையும் நான் தங்களுக்கு அறிவித்துக்கொண்டிருந்தேன்…” என்றார். அவர் தடுமாற்றத்துடன் “ஆம்…” என்றார்.

அவரது திகைப்பை பார்த்துவிட்டு கனகர் அனைத்தையும் சொன்னார். அஸ்தினபுரியின் அனைத்து படைப்பிரிவுகளும் போர் ஒருக்கம் கொண்டுவிட்டன. எல்லைகளில் படைநீக்கம் முடிவடைந்துவிட்டது. கர்ணனும் ஜயத்ரதனும் துச்சாதனனும் படைகளை இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இரவுபகலாக துரியோதனர் அரசுசூழ் அறையிலிருந்தபடி அவர்களை பறவைச்செய்திகள் வழியாக வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.

விதுரர் எந்த உணர்ச்சியையும் அடையாதவராக நோக்கி நின்றார். “அனைத்து ஓலைகளையும் நானே கொண்டுவந்து அளித்தேன், அமைச்சரே” என்றார் கனகர்.  “நான் பார்க்கவில்லை” என்று விதுரர் மெல்லியகுரலில் சொன்னார். சுசரிதன் “தந்தை இன்றுதான் மீண்டு வந்தார். பதினாறுநாட்களும் ஈமச்சடங்குகளின் நிரை முடிவே இல்லாமல் இருந்தது…” என்றான். கனகர் “வருக!” என உள்ளே அழைத்துச்சென்றார்.

ஓலைகள் நடுவே அமர்ந்தபோதுதான் பதினாறுநாட்களில் நெடுந்தொலைவு விலகிச்சென்றுவிட்டிருப்பதை விதுரர் உணர்ந்தார். எந்த ஓலையும் பொருள்படவில்லை. அவற்றின் மந்தணமொழி அவர் சித்தத்துக்குமேல் தொடாமல் ஒழுகிச்சென்றது. அந்த இடமே புதியதாகத் தோன்றியது.  முதன்முறையாக பதின்மூன்றுவயதுச் சிறுவனாக அங்கு வந்து அமைச்சக உதவியாளனாக பொறுப்பேற்றதை நினைவுகூர்ந்தார்.

உள்ளம் ஏன் அசைவற்றுக் கிடக்கிறது? ஏன் பொருளே இல்லாமல் சத்யவதியின் சிற்றூருக்குச் சென்ற நினைவு எழுகிறது? சத்யவதியை அவர் அத்தனை அணுக்கமாக உணர்ந்திருக்கிறாரா?  காலம் அவளை மேலும் அருகே கொண்டுவருகிறது. அவள் அடைந்த முதுமையை அகற்றி நாணம் படிந்த கன்னங்களும் ஒளிரும் கண்களும் கொண்டவளாக காட்டுகிறது.

ஒரு திடுக்கிடலுடன் ஏன் சுருதையின் நினைவே எழவில்லை என நினைவுகூர்ந்தார். உடனே அவ்வெண்ணத்தை விலக்கினார். பதினாறுநாட்களும் அவளை விலக்கவே முயன்றுகொண்டிருந்தார். வாழ்ந்தபோதிருந்ததைவிட அவள் பலமடங்கு பேருருக்கொண்டிருந்தாள். எப்போதுமே அவள் அப்படித்தான் இருந்தாள். அவர் அவளை விட்டு விலகி உலாவ முடிந்தது முன்பு. இனி அவளிலேயே இருந்தாகவேண்டும். அவர் சலிப்புடன் ஓலைகளை அடுக்கி வைத்து கண்களை மூடிக்கொண்டார்.

“பிதாமகருக்கும் பேரரசருக்கும் பேரரசிக்கும் படைநீக்கச் செய்திகள் சென்றுகொண்டிருக்கின்றன. பிதாமகர் பலமுறை அரசரை கூப்பிட்டனுப்பினார். அரசர் செல்ல மறுத்துவிட்டார். அரசரை சந்திக்க வருவதாகச் சொல்லி செய்தியனுப்பினார். அதற்கும் அரசர் ஒப்பவில்லை. பேரரசர் இருமுறை நேரில் அரசரைப் பார்க்க வந்துவிட்டார். அரசர் பின்வாயில் வழியாக வெளியேறினார். அமைச்சரே, இன்று இவ்வரண்மனையே அவர்களின் சந்திப்பைத்தான் எதிர்நோக்கியிருக்கிறது…”

கனகர் அருகே நின்று சொல்லிக்கொண்டிருந்தார். அச்சொற்களும் அவருக்கு பொருள்படவில்லை. பீடத்தில் சாய்ந்து அமர்ந்து சற்று துயின்றார். விழித்தெழுந்தபோது அவர் எங்கிருக்கிறார் என்று உணரவே நெடுநேரமாகியது. கனகர் தன்னை அழைத்ததுபோல் உணர்ந்தார். கனகர் அவரை அழைத்திருந்தார்.

“பீஷ்மபிதாமகர் தங்களை அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்… உடனே கிளம்பும்படி ஆணை” என்றார் கனகர். “ஆம்” என்றபடி விதுரர் எழுந்தார். “நானும் வருகிறேன். தங்களால் எவ்வினாவுக்கும் மறுமொழி சொல்லமுடியாது…” என்றார் கனகர். “வேண்டியதில்லை” என்றபின் விதுரர் நடந்தார்.

திரும்பி இல்லத்திற்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமே வலுவாக எழுந்தது. அங்கே அந்தச் சாளரப்படியில் அமர்ந்தால் எண்ணங்கள் தொடர்பழிந்து பெருகிவழியும் அந்த  இனிய ஒழுக்கில் சென்றுகொண்டே இருக்கமுடியும். அவர் என ஏதும் எஞ்சுவதில்லை அங்கே. அந்தச் சாளரத்தை  எண்ணிக்கொண்டதுமே உள்ளம் ஓர் இனிமையை உணர்ந்தது. தன்னைப் பிடுங்கி அகற்றி பீஷ்மரின் படைக்கலச்சாலைக்கு கொண்டுசெல்லவேண்டியிருந்தது.

 

[ 13 ]

பீஷ்மர் அவரிடம் முகமனோ வாழ்த்தோ சொல்லவில்லை. கையில் கூரம்புடன் பயிற்சிசாலையில் நின்றவர் திரும்பி “என்ன நிகழ்கிறது? உங்கள் அரசன் என்னை மீறி படைகொண்டுசெல்ல விழைகிறானா?” என்றார். விதுரர் “ஆம்” என்றார். சினத்துடன் பற்களைக்கடித்து  ”மூடன்! ஒரே ஆணையால் படைகளனைத்தையும் மீண்டும் நிலைமீளச்செய்ய என்னால் முடியும். வேண்டுமென்றால் அவனை சிறையிடவும் ஆணையிடுவேன்” என்றார்.

“அதைத்தான் அவர் எதிர்பார்க்கிறார் போலும்” என்றார் விதுரர். “என்ன சொல்கிறாய்?” என்றார் பீஷ்மர். “ஒரு மோதலை…” என்று விதுரர் சொன்னார். கைபட்டு சீறி எழும் நாகம் போல ஒரே கணத்தில் அவரது அனைத்து அகச்சொற்களும் மீண்டு வந்தன. “எழுவது அஸ்தினபுரியின் பிதாமகரின் குரல் மட்டும் அல்ல, மலைக்கங்கர்குலத்தவரின் குரலும்கூட. ஒருமோதலெழுந்தால் அது அனைவருக்கும் தெளிவாகிவிடும்.”

பீஷ்மர் மெல்ல தளர்ந்தார். “சொல்!” என்றார். தான் அத்தனை ஓலைகளையும் வாசித்திருப்பதை, அவற்றின் ஒவ்வொரு சொல்லும் நினைவிலிருப்பதை விதுரர் உணர்ந்தார். அத்தருணத்தில் சொல்திரளுடன் அவ்வாறு ஓங்கி நின்றிருப்பதன் உவகை அவரை ஏந்திக்கொண்டது. “இங்கு நிகழ்ந்தவற்றை அறிந்திருக்கமாட்டீர்கள், பிதாமகரே. பாரதவர்ஷத்தின் தொன்மையான ஷத்ரிய குலங்கள் அனைத்திலிருந்தும் துரியோதனருக்கு ஓலைகள் வந்துகொண்டிருக்கின்றன. வேதத்திற்கும் வேதமறுப்பாளர்களுக்குமான போர் என இது இப்போதே உருப்பெற்றுவிட்டது…”

“நீங்கள் எத்தரப்பு என்பதே இன்று கேட்கப்படுகிறது. முறைமையோ மூப்போ அல்ல” என்று விதுரர் தொடர்ந்தார். “குலமிலியாகிய யாதவனால் வேதம் மறுக்கப்படுவதை ஏற்கிறீர்களா, வேதம் காக்க வாளேந்தி ஷத்ரியர்களின் பக்கம் நிற்கிறீர்களா?” பீஷ்மரின் பதைப்பு நிறைந்த விழிகளை நோக்கி புன்னகைத்து “இது குலமிலிகள் தங்களை ஷத்ரியர்களாக ஆக்கிக்கொள்ள ஒரு வாய்ப்பு. ஒருசொல்லும் வேதம் கேட்டிருக்காதவர்கள்கூட இன்று வேதத்திற்காக உயிர்விட எழுகிறார்கள்” என்றார்.

பீஷ்மர் அம்பின் கூர்முனையை வருடிக்கொண்டு கண்களைச் சுருக்கி தலைகுனிந்து நின்றார். “சொல், இன்று நான் ஆணையிட்டால் அஸ்தினபுரியின் படையினர் என்பொருட்டு  எழமாட்டார்களா என்ன?” என்றார். “எழக்கூடும். எழாமலும் போகக்கூடும். நாம் அதைத் தொட்டு உசுப்பிநோக்கும் நிலையில் இல்லை” என்றார் விதுரர். “அஸ்தினபுரியின் படைகளில் பாதிக்குமேல் காந்தாரர்கள். அவர்கள் சகுனிக்கே கட்டுப்பட்டவர்கள். வேதமே வினா என்பதனால் ஷத்ரியரில் ஒருசாரார் உங்களை மறுக்கக்கூடும்.”

“ஒரு பிளவுபோல பெருநோய் பிறிதில்லை இப்போது” என்றார் பீஷ்மர். “ஆகவேதான் அனைத்தையும் பார்த்தும் வாளாவிருக்கிறேன். நீ மீண்டு வரட்டும் என எண்ணினேன்.” விதுரர் “இருபத்தெட்டு ஷத்ரிய அரசர்கள் படையனுப்ப சித்தமாக இருக்கிறார்கள்…” என்றார். பீஷ்மர் “சிசுபாலனைக் கொன்றது மிகமிகப் பிழையான அரசுசூழ்ச்சி. அனைத்துமறிந்த அவன் எப்படி அதை செய்தான் என்றே விளங்கவில்லை” என்றார்.

“ஜராசந்தனிடமிருந்து ஷத்ரியரை மீட்டதை அவர் மிகையாக நம்பியிருக்கலாம்” என்றார் விதுரர். “அவர்கள் சிறுகுடி ஷத்ரியர். அரசர்கள் அவர்களை பொருட்டென எண்ணமாட்டார்கள். மேலும் ஷத்ரியர்கள் தாங்கள் யாதவப்படையால் காப்பாற்றப்பட்டதை ஓர் இழிவென்றே எண்ணுவர்… ஒரு போர் வழியாக அப்பழியை நீக்கவே முயல்வர்” என்றார்.

சினத்துடன் பீஷ்மர் “விதுரா, அந்தச் சூதன் மகன் இதில் என்ன செய்கிறான்? ஷத்ரியர்களின் படைகளை அவனா நடத்திச்செல்லவிருக்கிறான்?” என்றார். பற்களைக் கடித்து “இந்திரப்பிரஸ்தத்தில் அவன் நாகர்களை சந்தித்தான் என்றும் அவர்களின் வஞ்சத்தை ஏற்றான் என்றும் சொல்கிறார்கள். அவன் எதற்காகப் போரிடுகிறான், நாகவேதத்திற்காகவா?” என்றார்.

“நாகவேதமும் நால்வேதமும் முரண்படுவன அல்ல” என்றார் விதுரர். “காடாளத்தியான அன்னையின் தேவமைந்தர் நால்வர் என வேதங்களை வியாசர் சொல்கிறார். நாகவேதத்திற்கும் முதல் எதிரி அவன்தான்.” பீஷ்மர் “என்னால் இதெல்லாம் என்ன என்றே புரிந்துகொள்ள முடியவில்லை. யாதவர் அரசுகொள்வதை ஷத்ரியர் ஏற்கவில்லை என்பதை புரிந்துகொள்கிறேன். ஆனால் அவன் பேசுவது என்ன? அதை ஏன் இவர்கள் எதிர்க்கிறார்கள்…? ஒன்றும் தெளிவாக இல்லை.”

“எவருக்கும் தெளிவாக இல்லை. ஆனால் அமைந்து நிலைத்த ஒன்றை அவர் எதிர்க்கிறார் என்று மட்டும் புரிந்துகொள்கிறார்கள்  வைதிகரும் ஷத்ரியரும். சொல்லும் வில்லுமேந்தி அவர்கள் காத்து நின்றிருக்கும் ஒன்றை அழிக்கவிடக்கூடாதென வஞ்சினம் கொண்டிருக்கிறார்கள்.” பீஷ்மர் பெருமூச்சுடன் “நீ திருதராஷ்டிரனை பார்த்தாயா?” என்றார். “இல்லை” என்றார் விதுரர். “இங்கு என்னிடம் வந்து கொந்தளிக்கிறான். மைந்தனை போருக்கு அழைத்து கொல்லப்போவதாக நேற்று கூவினான்…”

“மைந்தனைப் போலவே தந்தையும் கொந்தளிப்பானவர். நான் சென்று பார்க்கிறேன்” என்றார் விதுரர்.  “அவனை நீ பார்ப்பதனால் பயனில்லை” என்று பீஷ்மர் சொன்னார். “நீ சகுனியை சென்று பார். அல்லது…” அவர் குரல் தழைந்தது. விழிகளை விலக்கி “கணிகரை பார்” என்றார்.

விதுரர் “ஆணை” என்றார். பீஷ்மர் மேலும் குரல் தழைய “நான் கோரினேன் என்று சொல். என் மைந்தர் போரிட்டழியக்கூடும் என்றெண்ணி கண்ணீர் வடிக்கிறேன் என்று சொல்…” என்றார். திரும்பி கண்களின் நீர்மை ஒளிர “நான் அவர் கால்களைப்பற்றி கோருகிறேன் என்று சொல்… என் மைந்தரை அவரால் மட்டுமே காக்க முடியும்” என்றார்.

“கணிகராலா?” என்றார் விதுரர். “மைந்தா, இங்கு இருவர் மட்டுமே எண்ணியவற்றை எய்துபவர்கள். இங்கு நிகழ்வனவற்றின் பொருளறிந்தவர்கள். அவனிடம் நான் கோரமுடியும். ஆனால் அவன் என்னை செவிகொள்வான் என தோன்றவில்லை. அவன் நெடுந்தொலைவுக்கு நோக்க உச்சிமுடியேறி நின்றிருக்கிறான். மானுடரும்  குடிகளும் குலங்களும் அவன் காலடியில் எறும்புகள். நகரங்களும் நாடுகளும் கூழாங்கற்கள்…”

பீஷ்மர் தலையை அசைத்து பெருமூச்சுவிட்டு “இவர் ஏதேனும் செய்யக்கூடும்… சற்று கருணை காட்டக்கூடும்” என்றார். “ஆனால் இவரும் மானுட உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர். கொலைப்படைக்கருவியின் இரக்கமற்ற கூரொளிகொண்டவர். ஆனால் ஒருவேளை என் நல்லூழால் ஏதேனும் ஒரு வழி அவர் உள்ளத்தில் எழக்கூடும். அவரது ஆடலுக்கு உகந்ததாகவே அது எனக்கு உதவுவதாக ஆகக்கூடும்” என்றார்.

விதுரர் “போரை நாம் தவிர்ப்போம்” என்றார். “நாமா?” என பீஷ்மர் கசப்புடன் சிரித்தார். “நாம் என்ன செய்ய முடியும்? நாம் எண்ணுகிறோம், சூழ்ந்துநோக்குகிறோம். அவை நாமறிந்த சிறிய வாழ்க்கையைக் கொண்டு நாம் செய்யும் எளிய பயிற்சிகள் மட்டுமே. இது பல்லாயிரம் கைகள் பல லட்சம் காய்களை நகர்த்தி ஆடிக்கொண்டிருக்கும் நாற்களம்.”

“நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனாலும் புழு இறுதிக்கணம் வரை நெளியத்தான் செய்கிறது. அதை செய்வோம். நீ கணிகரிடம் பேசு.” விதுரர் “ஆணை” என்று தலைவணங்கி வெளியே சென்றார். கணிகரைக் கண்டு பேசவேண்டிய சொற்களை அவர் உள்ளம் கோக்கத் தொடங்கியது.

பீஷ்மர் மீண்டும் ஒரு அம்பை எடுத்து வில்லில் பொருத்துவதை அப்பால் நின்று கூர்ந்து நோக்கினார். அவர் உடல் பதறுகிறதா? கை நடுங்குகிறதா? எதுவும் தெரியவில்லை. அவர் எப்போதும்போல வில்லம்புடன் தானுமொரு படைக்கலமென இணைந்தார். விதுரர் திரும்பும்போது அவர் நிழலை நோக்கினார். அது மெல்ல அதிர்ந்ததுபோல தோன்றியது.

வெளியே செல்லும்போது விதுரர் தன் உள்ளத்தைப்பற்றி எண்ணிக்கொண்டார். பீஷ்மரின் விழிநீரிலிருந்து அது முற்றிலும் அகன்று நின்றிருந்தது. ஒருவேளை ஒரு போர் நிகழக்கூடும். அனைத்து முயற்சிகளும் பயனற்று குருதிப்பெருக்கே எஞ்சக்கூடும். முதல்முறையாக நெஞ்சு நடுங்காமல் அவர் அதைப்பற்றி எண்ணினார்.

உண்மையில் அது ஒரு பொருட்டே அல்லவா? உடன்பிறந்தோர் போரில் களமெதிர் நின்றால் அவர் துயருறப்போவதில்லையா? இல்லை என்றே அவர் அகம் சொன்னது. அது நிகழ்ந்தால் அகன்று வெறுமை நிறைந்த விழிகளுடன் அவர் நோக்கி நிற்பார்.

அவ்வாறெனில் ஏன் இப்போது கணிகரை பார்க்கச்செல்கிறார்? இல்லம் மீண்டாலென்ன? இல்லை, இது ஒரு பணி. அவர் தன் எல்லையையும் வாய்ப்புகளையும் அறியும் களம். தன்னை உருவாக்கி தன்னை நிகழ்த்தி தன்னைக் கடந்துசெல்லும் வழி. பிறிதொன்றுமில்லை.

விதுரர் நின்று அஸ்தினபுரியின் அரண்மனைத்தொகுதியை ஏறிட்டு நோக்கி பெருமூச்சுவிட்டார். ஓங்கிய அதன் முகடுக்குமேல் வானம் ஒளியுடன் நிறைந்திருந்தது. சால்வையை சீரமைத்தபடி நடந்தார்.

தொடர்புடைய பதிவுகள்

காடு வாசிப்பனுபவம்

$
0
0

KAADU

 

2004ஆம் வருடம். கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு ரயிலில் பயணம். விடாத மழையில் விரைந்து கொண்டிருந்த ரயிலில்தான் முதன்முறையாக காடு நாவலைப் படித்தேன். கோவையில் ஆரம்பித்த நாவலை, நான் முடிக்கும் போது ஹைதராபாதை நெருங்கியிருந்தேன்.

அந்தப் பயணம் முழுவதும் நான் என் வசம் இல்லை. சமயம் வாய்க்கும் போதெல்லாம் காடுகளில் சுற்றிய எனக்கு, இந்த நாவல் ஒரு அந்தரங்கமான அனுபவமாக இருந்தது.கடந்த பன்னிரண்டு வருடங்களில், மேலும் மூன்று வாசிப்புகள் முடித்திருந்தேன்.

 

காடு நாவல் பற்றி மோகன்ஜி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இலக்கியமும் சமகாலமும்

$
0
0

ஆசிரியருக்கு,

நேற்று பாரதி புத்தகாலயத்தில் நண்பர்களுக்கு இடையே ஒரு உரையாடல் நடந்ததது, அதில் சில ஐயங்கள் எங்களுக்கு :

1. செவ்வியல் காலகட்டம் முதல் பின் நவீனத்துவ காலகட்டம் வரை உலகெங்கும் ஒரே நேரத்தில் ஒரே போக்கு நிகழ்ந்ததா? உலகின் நவீன காலகட்டத்தின் முடிவில்தான் நாம் (தமிழர்கள் ) அதற்கு வந்து சேர்ந்தோமா?குறைந்தபட்சம் இந்தியாவெங்கிலும் ஒரே போக்கு எல்லா சம காலத்திலும் நிகழ்ந்து வந்ததா? நிகழ்கிறதா ?

2. இது போன்ற சிந்தனைகள், அரசியல் அல்லது சமூக மாற்றத்தின் விளைவாக எழுத்தில் பிரதிபலிக்கிறதா, அதை விரைவு படுத்திப் பரப்புகிறதா ? (உதாரணமாக ருஷ்யப் புரட்சி, சேவின் வெற்றி போன்றவை, புரட்சி இலக்கியம் பெருமளவில் எழுதப்பட்டது மற்றும் மொழிபெயர்க்கப் பட்டது) அல்லது மாறாகவா, இரண்டும் என்றால் விகிதம் என்ன, வகை என்ன?

இந்த 50 ஆண்டுகளில் உலகில் எழுத்தால் சிந்தித்துப் புகுத்தப்பட்ட சமூகப் போக்கு ஏதேனும் உண்டா? அமர்வு நாற்காலி எழுத்தின், வாசிப்பின், சிந்திப்பின் பெறுமதிப்பு என்ன, பாதிப்பு மற்றும் விளைவுதான் என்ன?

கிருஷ்ணன்,
ஈரோடு

[விஜயராகவன், கிருஷ்ணனுடன் நான்]

அன்புள்ள கிருஷ்ணன்,

புத்தகாலயத்துக்கு வருபவர்களை பயமுறுத்துகிறீர்கள்.

இலக்கியப்போக்கு வாழ்க்கை போல வரலாறு போல அதன் இயல்பான விசைகளால் தன்னிச்சையாகப் பெருக்கெடுக்கிறது. அதன் இயல்புகளை எவரும் முழுமையாகவும் அறுதியாகவும் வகுத்துரைத்துவிட முடியாது. உலகமெங்கும் என்றல்ல நம் சூழலில் கூட இலக்கியத்தின் பிரவாகத்துக்கு நம்முடைய கணக்குகளுக்குள் அடைபடும் எந்த விதமான ஒழுங்கும் இல்லை.

செவ்வியல், கற்பனாவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்றெல்லாம் நாம் வகுத்துக்கொள்ளும் இந்த இலக்கணங்களும் அதனடிப்படையிலான காலகட்டப்பிரிவினைகளும் எல்லாம் நாம் இந்தப் பெருக்கை நம்முடைய சமகாலத் தேவைக்கு ஏற்ப, நம்முடைய வாசிப்புக்கு உகந்த முறையில் பகுத்துக்கொள்வதேயாகும். இந்த வகையான பகுப்புகள் எல்லாம் பிரிட்டிஷ் இலக்கியவிமர்சன மரபில் பதினெட்டாம் நூற்றாண்டுகளில்தான் உருவாயின. இவ்வகையான இலக்கணங்கள் வகுக்கப்பட்டன. அவை முழுக்க முழுக்க ஐரோப்பிய இலக்கியத்தை மட்டுமே ஆய்வுப்பரப்பாக எடுத்துக்கொண்டு செய்யப்பட்டவையே.

காலனியாதிக்கம் மூலம் ஐரோப்பிய இலக்கியமும் ஐரோப்பிய இலக்கிய விமர்சனமும் உலகம் முழுக்க சென்று சேர்ந்த காரணத்தால் உலகம் முழுக்க இந்த இலக்கணங்களும் காலகட்டப்பிரிவினைகளும் பரவலாகக் கையாளப்படுகின்றன. கல்வித்துறையால் கற்பிக்கப்படுகின்றன. மேலும் பதினெட்டாம் நூற்றாண்டுக்குப்பின்னர் உலகத்தில் பெரும்பாலான மொழிகளின் இலக்கியங்கள் ஐரோப்பாவை முன்மாதிரியாகக் கொண்டு உருவாகி வளர்ந்து வருகின்றன. ஆகவே இந்த இலக்கணங்களும் அளவுகோல்களும் பெருமளவுக்குப் பொருந்திப்போகின்றவையாக உள்ளன. ஆகவே எல்லைக்குட்பட்டு இவற்றைப் பயன்படுத்துவதில் பிழை இல்லை.

ஆனால் பண்டைய இலக்கியங்களை இந்த அளவுகோல்களைக் கொண்டு நம்மால் வகுத்துவிட முடியாது. அப்படி இயந்திரத்தனமாகச் செய்யும்போது பெரும் பிழைகள் உருவாகும். உதாரணமாக பிரிட்டிஷ் இலக்கியவிமர்சனக் கொள்கையின்படி செவ்வியல் [கிளாசிசம்] என்பது மிகையின்மை, சமநிலை, நுட்பம் போன்ற பண்புகளைக் கொண்டது. கற்பனாவாதம் [ரொமாண்டிசிசம்] என்பது எழுச்சி, ஒற்றைப்படைத்தன்மை, வேகத்தின் அழகு ஆகியவற்றைக் கொண்டது. தமிழில் அவ்வகையில் பார்த்தால் கம்பராமாயணத்தை அல்லது நம்மாழ்வாரின் பாடல்களைக் கற்பனாவாதப் பண்புள்ளவை என்றே சொல்லவேண்டும். ஆனால் அவை நமக்குச் செவ்வியல் ஆக்கங்கள்.

ஐரோப்பாவின் விதிகள் எவையும் சீனா போன்ற முற்றிலும் வேறான இலக்கிய உலகுக்குப் பொருந்தாது. ஐரோப்பா நவீன இலக்கியப் பண்புகள் என எதையெல்லாம் சொல்கிறதோ அவை எல்லாம் சிறப்பாகக் கைகூடிய ஆக்கங்களை சீனாவில் ஆயிரம் வருடம் முன்னரே எழுதியிருக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பை ஜூயி என்ற சீனக்கவிஞரின் கவிதைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பியக் கவிதைகளை விட நவீனமானவை.

ஐரோப்பா பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கிய நாவல்களை விட மகத்தான நாவல்களை சீனா பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே உருவாக்கியிருக்கிறது. அவற்றில் இன்று கிடைக்கும் நான்கு பிரம்மாண்டமான நாவல்கள் நவீன நாவல்வகையின் முதல் வடிவங்கள் என இன்று கருதப்படுகின்றன. சீனப் பெருநாவல்மரபு என இலக்கியத்தில் அவை குறிப்பிடப்படுகின்றன.

நீர்க்கோடு [ஆங்கிலத்தில்-Water Margin] ஷி நைஆன் எழுதிய மாபெரும் சீனநாவல். மூன்று அரசுகளின் கதை [ஆங்கிலத்தில்-Romance of the Three Kingdoms] லுஓ குவான்ஷாங் பதினாலாம் நூற்றாண்டில் எழுதிய நாவல். மேற்குநோக்கியபயணம். [ஆங்கிலத்தில்-Journey to the West] வு செங் கென் எழுதிய நாவல். சிவப்பு அறை கனவு [ஆங்கிலத்தில்-Dream of the Red Chamber] சியாவோ ச்யுகின் எழுதியது. இந்நான்கு நாவல்களையும் இன்று உலக உரைநடை இலக்கியத்தின் சிகரங்கள் என்கிறார்கள். இவை எழுதப்பட்டு ஐநூறாண்டுகள் கழித்துத்தான் ஐரோப்பா உரைநடை புனைகதைகளை உருவாக்கியது. நவீன இலக்கியத்திற்கு வந்துசேர்ந்தது.

ஆகவே உலக இலக்கியத்தை ஐரோப்பா உருவாக்கிய அளவுகோல்களைக் கொண்டு மதிப்பிட முடியாது. நவீன காலகட்டத்திலும் கூட சீன இலக்கியம் சீன திரைப்படம் போன்றவை ஐரோப்பாவின் பொதுப்போக்குகளுக்குக் கட்டுப்பட்டவையாக இல்லை. அவை இன்றும் உணர்ச்சிகரமான யதார்த்தவாதத்தன்மை கொண்டவையாகவே உள்ளன. அவை பெரும்படைப்புகளாக அங்கீகரிக்கவும்படுகின்றன.

இந்தியாவில்கூட மரபிலக்கியத்தில் அப்படி ஒரு பொதுப்போக்கு காணக்கிடைப்பதில்லை. சம்ஸ்கிருதம், பாலி ,பிராகிருதம், தமிழ் போன்ற செவ்வியல் மொழிகளின் இலக்கியப்போக்குகளுக்குள் எந்தப் பொதுவான அம்சமும் இல்லை. கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற வழிமொழிகள் [அபபிரஹ்ம்ஸ மொழிகள்] ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் தோன்றி வளர்ச்சி கண்டுள்ளன. இலக்கிய வரலாற்று நோக்கில் சில பொதுக்கூறுகளைக் கண்டுகொள்ளலாம். மற்றபடி அவற்றின் போக்கில் எந்தப் பொதுவான முறைமையும் இருப்பதாகச் சொல்லமுடியாது.

ஐரோப்பிய பாதிப்பு உருவான பின்னர் பொதுவான வளர்ச்சிப்போக்கு காணக்கிடைப்பது உண்மை. எல்லா இந்திய மொழிகளிலும் 1880 களில் உரைநடை இலக்கியம், நவீன இலக்கியம் தோன்றியது. அவை சமூகசீர்திருத்த நோக்கம் கொண்டவையாக இருந்தன. அரசசபை, சான்றோர் ஆகியோரிடமிருந்து மக்களை நோக்கி இலக்கியம் வந்து சேர்ந்தது. 1920 கள் முதல் எல்லா மொழிகளிலும் யதார்த்தவாத இலக்கியம் உருவாகியது. 1960 களில் நவீனத்துவம். 1970 களில் தலித்தியம். 1990 களில் நவீனத்துவத்தை நிராகரித்தெழும் எழுத்துக்கள். காலம் கொஞ்சம் முன்னுக்குப்பின் இருக்கலாம்.

தமிழ் போன்ற கீழை மொழிகள் எல்லாமே ஐரோப்பிய நவீன இலக்கியத்தின் பாதிப்புக்கு உட்பட்டது 1800களில்தான். நவீனத்துவம் [மாடர்னிசம்] தமிழில் புதுமைப்பித்தன் வழியாக முப்பதுகளிலேயே, ஐரோப்பாவுக்குச் சமகாலத்திலேயே வந்து சேர்ந்தது. பிற இந்திய மொழிகளில் அது அறுபதுகளில்தான் நிகழ்ந்தது.

பொதுவாக இலக்கிய சிந்தனைகள் சமூக மாற்றங்களை ஒட்டியே நிகழ்கின்றன என்று சொல்வதே வழக்கம். நவீன முதலாளித்துவ சமூக அமைப்புதான் நவீன இலக்கியத்தை உருவாக்கியது. முதலாளித்துவம் ஒருங்கிணைந்த உற்பத்தியை உருவாக்கியது. அதற்கு ஒரேமாதிரியான திறன் கொண்ட உழைப்பாளர் தேவைப்பட்டனர். ஆகவே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரே வகையான கல்விமுறை உருவாகி வந்தது. இவ்வாறான கல்விமுறை மூலம் உருவாகி வந்தவர்கள் வாசிக்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்காக நேரடியாகப் படைப்பாளிகள் எழுத ஆரம்பித்தபோது நவீன இலக்கியம் உருவாகி வந்தது.

அன்றுவரை கற்றறிந்தோருக்காக எழுதப்பட்ட இலக்கியம் வாசகர்களுக்காக எழுதப்பட்டது. நவீன எழுத்து நேரடியாக வாசகர்களுக்காக எழுதப்பட்டு அவர்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டடது . கூடவே ஜனநாயகமும் உருவாகி வந்தபோது கருத்து என்பது நேரடியான அதிகாரவிசையாக ஆகியது. ஆகவே இலக்கியம் என்பது அரசியல்செயல்பாடாகவும் ஆகியது. பாரதிக்கும் அவருக்கு முன்னால் இருந்த கவிஞர்களுக்கும் உள்ள வேறுபாடு இதுவே. பாரதி மக்களுக்காக எழுதினார். அச்சு ஊடகம், போக்குவரத்து வசதி போன்றவை அதற்கு உதவிசெய்தன.

ஆனால் இலக்கியப்போக்குகள் அனைத்துக்கும் அப்படி சமானமான சமூக-பொருளியல் காரணங்களைக் கண்டுபிடிக்கமுடியும் என நான் நினைக்கவில்லை. அது குறுக்கல்வாதமாகவே முடியும். இலக்கியத்தின் பொதுவான வடிவம் மற்றும் போக்குகளை சமூக-பொருளியல் கூறுகள் மாற்றியமைக்கின்றன என்று கூறலாம்.

அதேபோல இன்னின்ன இலக்கியப்போக்குகளால், இன்னின்ன நூல்களால் இன்னவகையான சமூக மாறுதல்கள் உருவாயின என்று சொல்வது அபத்தமான குறுக்கல்வாதமாகவே இருக்கும். சமூகமாறுதல்களில் மக்களிடமிருக்கும் கருத்தியலுக்கு முக்கியமான இடம் உண்டு. அந்தக்கருத்தியலை உருவாக்குவதில், வளர்ப்பதில் இலக்கியத்துக்கு ஒட்டுமொத்தமான ஒரு பங்களிப்பு உண்டு. அதில் ஒவ்வொரு இலக்கிய ஆக்கமும் தன் பணியை ஆற்றத்தான் செய்கிறது.

உலக அளவில் பார்த்தால் ஜனநாயகம் பற்றிய, மனித உரிமைகள் பற்றிய, சூழியல் பற்றிய இன்றைய சமூகமனநிலை இலக்கிய ஆக்கங்களாலும் பிற கருத்தியல் செயல்பாடுகளாலும் உருவாக்கப்பட்டது என்று சொல்லமுடியும். அவ்வாறு சமூக மனதில் மாற்றத்தை உருவாக்குவதில் பங்குவகித்த நூல்களின் பட்டியலைக் கூட நாம் உருவாக்கமுடியும்.

தமிழ்நாட்டிலேயே இரு உதாரணங்களைக் காண்போம். 1880களில் பெண்கல்வி, பெண்சமத்துவம் பற்றிய சிந்தனைகள் முழுக்கமுழுக்க இலக்கியத் தளத்திலேயே உருவாகி வந்தன. இலக்கியம் மட்டுமே அதை முன்வைத்துப் பேசியது. அ.மாதவையா, பாரதி ,வை.மு.கோதைநாயகி அம்மாள், மூவலூர் ராமாமிருதம் அம்மையார் போன்றவர்கள் அதைப்பற்றிப் பேசி எழுதி முன்னெடுத்தனர். அடுத்தடுத்த தலைமுறையில் அந்தக் கருத்து வளர்த்தெடுக்கப்பட்டது. ராஜம் கிருஷ்ணன், அம்பை போன்ற இலக்கியவாதிகளும் லட்சுமி, சிவசங்கரி போன்ற வணிகப்பிரபல எழுத்தாளர்களும் அதில் பங்களிப்பாற்றினர். இன்று இவ்விஷயத்தில் தமிழக மக்களிடம் உள்ள மனநிலை மாற்றம் இலக்கியத்தால் உருவாக்கப்பட்டதே.

இன்னொரு சமகால உதாரணம் என்றால் திருநங்கைகள் பற்றிய சமூகக் கண்ணோட்டம் மாறியதை சுட்டிக்காட்டவேண்டும். எழுபதுகளில் ஒருதலைராகம் போன்ற படங்களில் திருநங்கைகள் கிண்டலடிக்கப்பட்டபோது அதில் எந்தப் பிழையையும் நாம் காணவில்லை. சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ நாவல் முதல் பிரியா பாபுவின் ‘மூன்றாம் பாலின் முகம்’ வரை பல படைப்புகள் அந்தக் கருத்துநிலைகளை மெல்லமெல்ல மாற்றிக்கொண்டிருக்கின்றன.

ஜெ 

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jan 6, 2012

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 70

$
0
0

[ 14 ]

ஏவலன் தலைவணங்கி வாயில் திறக்க விதுரர் சகுனியின் அறைக்குள் நுழைந்தபோது அவர்களிருவரும் கைகளை கட்டிக்கொண்டு நாற்களத்தை நோக்கிக் கொண்டிருந்தனர். அடுத்த நகர்வுக்காக காய்கள் காத்திருந்தன. அவர் வருகையை அவர்கள் அறிந்ததாகவே தெரியவில்லை. காலடியோசை கேட்ட பின்னரும் அவர்களின் நோக்கு நிலைவிலகவில்லை.

விதுரர் வந்து வணங்கியதும் சகுனி விழிவிலக்காமலேயே முகமனுரைத்து  அமரும்படி கைகாட்டினார். கணிகர் அங்கிருக்கும் எதையுமே காணாதவர் போன்ற விழிகளுடன் நிமிர்ந்து நோக்கி புன்னகைத்து முகமன் சொன்னபின் காயமைவில் நெஞ்சாழ்ந்தார். அவர்கள் அந்தத் தருணத்தின் முடிவின்மையில் முற்றிலும் மூழ்கி நிகர்விசைகள் என செயலற்று அமர்ந்திருப்பதை விதுரர் நோக்கிக் கொண்டிருந்தார்.

அவருக்கு நாற்களம் புரிபடவேயில்லை. இளமையில் சத்யவதி அவரிடம் நாற்களமாட விழைந்து பலமுறை அதை கற்பித்தாள். எளிதில் தோற்கடிக்கக்கூடிய எதிர்த்தரப்பாக அமைய மட்டுமே அவரால் இயன்றது.  அடிப்படை நெறிகளுக்கு அப்பால் சென்று அதன் உள்ளடுக்குகளை தொட்டறிய முடியவில்லை. ஆனால் அவள்முன் அமர்ந்து ஆடுவது அவருக்கு பிடித்திருந்தது. ஒளிவிடும் கண்களுடன் சிறு உதடுகளை அழுத்தி அவள் குனிந்து நாற்களத்தை நோக்கும்போது அவர் அவளையே நோக்கிக் கொண்டிருப்பார்.

“என்னைப் பார்க்காதே மூடா, நாற்களத்தை பார். உன்னை வெல்லப்போகிறேன்” என்று அவள் சிரித்துக்கொண்டே அவன் தொடையில் அறைவாள். “தாங்கள் என்னை எப்போதும் வென்றுகொண்டே இருக்கிறீர்கள், அன்னையே. பாரதவர்ஷத்தின் பேரரசியை எவர் வெல்லமுடியும்?” என்பார். அவளுக்கு அவன் கூறும் புகழுரைகள் பிடிக்கும். வழக்கமான சொற்களாக இருந்தாலும்கூட முகம் மலர்ந்து சிரித்துக்கொள்வாள்.

“பகடையாடலின் இந்த முறை அஸ்தினபுரியிலேயே உருவாகி வந்தது என்பார்கள். மாமன்னர் ஹஸ்தி பகடையாடுவதில் தேர்ந்தவர். முன்பிருந்தது நாலிரண்டு எட்டு என அமைந்த படைக்களம். பன்னிரு ராசிகளுக்குரிய முறையில்  அதை அவர் மாற்றியமைத்தார்” என்றாள். “ஹஸ்தி அமைத்த அரண்மனையில் பகடைக்கென ஒரு தனி மாளிகையே இருந்தது. பன்னிருபடைக்களம் என அதை அழைத்தனர் சூதர். பாரதவர்ஷத்தின் அரசர்கள் அனைவரும் இங்கு வந்து அரசருடன் அமர்ந்து ஆடியிருக்கிறார்கள். நாட்கணக்கில் வாரக்கணக்கில் அன்றெல்லாம் ஆடல் நிகழும். மாமன்னர் குருவை ஒருமுறைகூட எவரும் வென்றதில்லை” சத்யவதி சொன்னாள்.

“பிரதீபரின் காலத்தில் பகடைமாளிகை இடிக்கப்பட்டது.   பகடையாடலை அவர் வெறுத்தார். அது போர்க்களத்தை தவிர்க்கும் கோழைகளுக்குரிய ஆடலென்று சொன்னார். அதன்பின்னர் இங்கே எந்த அரசருக்கும் பகடை கையகப்படவில்லை.” பகடையை உருட்டி அதில் விழுந்த ஏழை நோக்கி மகிழ்ந்து அவனை ஏறிட்டாள். “ஆனால் மன்ணிலும்  குருதியிலும் விதைகள் ஒருபோதும் முற்றிலும் மறைவதில்லை என்பார்கள். அஸ்தினபுரியின் அரசகுடியில் பகடையாடும் மன்னர்கள் வரக்கூடும்.”

“மூத்தவன் ஆடமுடியாது. இளையவன் ஆடுவான் என எண்ணினேன். அவன் தன் அன்னையுடன் பாவையாடுவதிலேயே இளமையைக் கடந்துவிட்டான்” என்று சொல்லி “நீக்கு” என்றாள். அவன் நீக்கியதும் “மூடா! இப்படியா ஆடுவாய்?” என்றாள். “அருகே இருந்த காயை நகர்த்தினேன்…” என அவன் சிரித்தான். அவளும் சிரித்து ஒரு காயை நீக்கி அவனை மீண்டும் வென்றாள்.

“ஏன், நாற்களத்தில் அப்படி என்ன சிறப்பு?” என்றான் விதுரன்.  அவள் திரும்பி சேடியை நோக்க அவள் வாய்மணத்தாலத்தை நீட்டினாள். அதிலிருந்து கிராம்பையும் பாக்கையும் எடுத்து வாயிலிட்டு மென்றபடி பீடத்தில் சாய்ந்துகொண்டாள்.  “மைந்தா, நாற்களம் நம் அகம்போலவே நான்கு நிலைகளால் ஆனது. முதல் நிலை விழிப்பு. இவ்வாடற்களத்தின் கணக்குகளால் மட்டுமே ஆனது. எவரும் கற்று தேரக்கூடியது. இரண்டாம் நிலை கனவு. புறவுலகெனச் சமைந்து நம்மைச் சூழ்ந்துள்ள அனைத்தையும் இக்களத்தில் மாற்றுருவாக கொண்டுவந்து பரப்புவது அது.  உள்ளுணர்வுகளை  வாள்வீரன் வலக்கையை என  பயிற்றுவித்தால் அதை ஆளலாம். மூன்றாம் நிலை தற்செயல்களின் பெருக்கென நாமறியும் ஊழ்ப்பெருவலை. அங்கே வாழ்கின்றன நம்மை ஆட்டுவிக்கும் தெய்வங்கள். நான்காம் அடுக்கு முடிவிலி. அதை ஆள்கிறது பிரம்மம்” என்று அவள் சொன்னாள்.

“நாற்களம் ஒன்றினூடாகவே அரசன் அரசுசூழ்தலை முற்றறியமுடியும் என்று நூல்கள் சொல்கின்றன. அரசுசூழ்தலே அவன் அறம். ஒவ்வொரு மெய்யறத்திலும் முடிவிலி என எழும் பிரம்மம் இதிலும் முகம் கொள்ளும்.” அவள் அவன் விழிகளின் புன்னகையைக் கண்டு “நீ ஐயுறுகிறாய். இன்று உன் இளமையில் வெளியே இறங்கி நின்று வானாகவும் மண்ணாகவும் பொருளாகவும் மொழியாகவும் விரிந்துள்ள அனைத்தையும் எதிர்கொள்வதைப் பற்றியே கனவு காண்பாய். ஆனால்  இவை எப்படி நாமே அமைத்துக்கொண்ட களமோ அப்படித்தான் அவையும். அக்களத்திலும் ஆடல் நிகழ்வது நமக்குள்தான்” என்றாள்.

அவன் புன்னகைத்து “பேரரசி, இதில் ஏன் யானைகளும் குதிரைகளும் போர்வீரர்களும் அமையவேண்டும்? ஏன் மேழியும் வளைகோலும் துலாவும் வாளும் வேள்விக்கரண்டியும் அமையக்கூடாது?” என்றான்.  அவள் அவ்வினாவை அதற்குமுன் எதிர்கொண்டதில்லை என்பதனால் சற்று குழம்பி பின் தெளிந்து “ஏனென்றால் இங்கு நிகழும் அனைத்துமே போரென்றாலும் குருதி சிந்தி களமாடலே போரின் முழுமை” என்றாள். “அனைத்துமே கருவிகள் என்றாலும் படைக்கலங்களே தெய்வங்களுக்கு உகந்தவை, மைந்தா.”

பிறர் நாற்களமாடுவதை நோக்கி அமர்ந்திருக்கையிலெல்லாம் அதை ஆடுபவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்றே உணர்வார். வண்ணங்களும் வடிவங்களும் உறவுகளும் பிரிவுகளும் உணர்வுகளும் அறிதல்களுமாக விரிந்து கிடக்கும் வாழ்வெனும் பெருக்கை தங்கள்முன் எளிய நாற்களத்தில் எண்ணி அடுக்கிய காய்களெனப் பரப்பி அதன் நெறிகளை தாங்களே வகுத்துக்கொண்டு அதன் நுட்பங்களை மட்டுமே மேலும் மேலும் தேடிச்செல்கிறார்கள்.

நுட்பங்களில் மட்டுமே இவையனைத்துமென ஆகி நின்றிருக்கும் அதன் முடிவின்மை வெளிப்படுகிறதென்பது எத்துறையிலானாலும் அதில் தேர்ச்சிபெற்றோர் சென்றமையும் மாயை. அது இங்கே பேருருவாகவும், பெருங்கொந்தளிப்பாகவும், அப்பட்டமான எழுச்சியாகவும்கூடத்தான் வெளிப்படுகிறது. அதை அவர்கள் அறிவதேயில்லை.

நுட்பங்களை உணரும் திறன் தங்களுக்கு அமைந்துவிட்டமையாலேயே நுட்பங்களே உண்மை என நம்பத்தலைப்படுகிறார்கள். வியாசர் சொல்லில், பீஷ்மர் படைக்கலத்தில், திருதராஷ்டிரர் இசையில், கணிகரும் சகுனியும் நாற்களத்தில். தாங்களே பின்னிய அவ்வலையில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதை பின்னியவர்கள் தாங்களென்பதனால் அதை தங்கள் வெற்றியென்றே எண்ணிக்கொள்கிறார்கள்.

“நாற்களம் ஆடுபவனின் முதன்மைத்திறன் என்பது உணர்வுகளை வெல்வதே. இங்கு யானையும் குதிரையும் வீரனும் அரசனும் என இவை வண்ணமும் வடிவமும் கொண்டிருப்பது உண்மையில் நம் உணர்வுகளை சீண்டுவதற்கே. ஆடத்தொடங்குபவன் இவற்றில் ஈடுபடுகிறான். நிகர்வாழ்வென இதை கொள்கிறான். ஆடித்தேர்பவன் இவற்றை வெறும் அடையாளங்களென ஆக்கிக் கொள்கிறான். கணக்கின் புதிர்களும் சூழ்கைகளும் மட்டுமாக ஆடல் ஆகும்போதே களம் கைகூடுகிறது.  கனவின் வழிகளென ஆகும்போது சூழ்ந்து நின்றிருக்கும் தெய்வங்களின் விழிகளை காணத்தொடங்குகிறான். இக்களத்திலன்றி வேறெங்கும் அவை வெளிப்படுவதில்லை.”

மிக இயல்பாக கணிகரின் கை நீண்டு ஒரு காயை நீக்கியது. சத்யவதியின் சொற்களிலிருந்து விதுரர் மீண்டு வந்தார். அது எளிய குதிரைவீரன் என்று கண்டதும் விதுரர்  குனிந்து அவ்வாட்டத்தை புரிந்துகொள்ள முயன்றார். அதற்குள் சகுனி பெருமூச்சுடன் களத்தைக் கலைத்து அருகிலிருந்த பெட்டிக்குள் போட்டபின் தாடியை நீவியபடி புன்னகையுடன் அவரை நோக்கித் திரும்பி “பொறுத்தருள்க, அமைச்சரே. உச்சகட்டம்” என்றார். கணிகர் பகடைகளை எடுத்து வைத்து களப்பலகையை அப்பால் விலக்கினார். “தெய்வங்களே” என்னும் வலிமுனகலுடன்  அசைந்தமர்ந்தார்.

“நான் பீஷ்மபிதாமகர் அனுப்பி இங்கே வந்திருக்கிறேன்” என்றார் விதுரர். “அவர் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கும்படி சொல்லி என்னை அனுப்பினார்.” சகுனி சிரித்து “என்னிடமா, இல்லை கணிகரிடமா?” என்றார். விதுரர் திகைப்புடன் கணிகரை நோக்க சகுனி “அமைச்சரே, என்னிடம் என்றால் என்னை அவர் தன் படைக்கலநிலைக்கு வரச்சொல்வார். உங்களை அனுப்பிவைக்கமாட்டார்” என்றார்.

“கணிகரிடம்தான்” என்றார் விதுரர். “சொல்லுங்கள், நான் கேட்கலாமல்லவா?” என்று சகுனி சொன்னார். “நீங்களிருவரும் ஒன்றல்லவா?” என்றார் விதுரர். சகுனி சிரித்து “உண்மையில் உங்களை நாங்கள் எதிர்நோக்கியிருந்தோம். இந்நகரம் நீங்கள் மீண்டெழுவதற்காக காத்திருக்கிறது” என்றார். “பேரரசரை சந்தித்தீர்களா?” விதுரர் “இல்லை” என்றார்.

கணிகர் “படைநகர்வுகளைப் பற்றி பிதாமகர் கவலைகொண்டிருப்பார் போலும்” என்றார். “ஆம், அஸ்தினபுரி தன் கட்டுப்பாட்டில் உள்ள நாடு என்னும் நம்பிக்கை எப்போதும் அவருக்கு உண்டு. அதை உள்ளூர அவர் இழந்துவிட்டிருந்தார். தான் நினைத்தால் அஸ்தினபுரியின் படைகளை முற்றாளமுடியும் என்று என்னிடம் அவர் பெருமைசொன்னபோதே அவர் ஆழம் அந்த ஐயத்தை அடைந்துவிட்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். உண்மைநிலை எது என்பதை நான் அவரிடம் சொன்னேன்” என்றார் விதுரர்.

“ஆம், அவருக்கு அது உணர்த்தப்பட்டுவிட்டது” என்று சகுனி சிரித்தார்.  “அவர் ஜயத்ரதனையும் கர்ணனையும் தன்னை வந்து சந்திக்கும்படி ஆணையிட்டார். அவர்கள் அவரை சந்திப்பதை ஒத்திப்போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். துரியோதனனை சென்று சந்திக்க முயன்றுகொண்டே இருக்கிறார். அவன் சந்திக்க விரும்பவில்லை. அவர் இடமென்ன என்று அவருக்கு மெதுவாக தெளிவாகிறது.”

விதுரர் அச்சிரிப்பால் சற்று சீண்டப்பட்டு “அவர் இன்னும் இந்நாட்டின் பிதாமகர். இங்குள்ள படைகளும் மக்களும் அதை அறிவார்கள்” என்றார். “பிதாமகர்களை மீறிச் செல்லவும் சிறுமை செய்யவும் விழையாதவர் எவர்? வல்லமை கொண்ட விளக்கம் ஒன்று தேவைப்படுகிறது, அவ்வளவுதான். அது கிடைத்துவிட்டது!” என்று சகுனி சொன்னார். கைதூக்கி “நால்வேதத்தின் முழுமையை மறுத்த  யாதவர்களை எதிர்கொள்வதென்பது வேள்விக்காவலேயாகும். ஷத்ரியர்களுக்கு மூதாதையர் வகுத்தளித்த கடமை அது. வேதம் மூத்தோரை விட, மூதாதையரை விட, தெய்வங்களை விட மேலானது. நெறிகளுக்கெல்லாம் விளைநிலம் அதுவே. பிறகென்ன வேண்டும்?” என்றார்.

“ஐயமே வேண்டியதில்லை, அமைச்சரே. இனி பீஷ்மரோ பேரரசரோ ஒன்றும் செய்யமுடியாது. என் மருகனைக் கட்டியிருந்த அனைத்து தளைகளும் நெக்குவிட்டிருக்கின்றன. அவன் அவற்றை அறுக்க இன்னும் இழுத்துப் பார்க்கவில்லை, அவ்வளவுதான்” சகுனி சொன்னார்.

“இனி என்ன, போரா?” என்றார் விதுரர். “ஆம், ஒரு போர் எவ்வகையிலும் தவிர்க்க முடியாதது. அதை இப்போதல்ல, முன்பு சதசிருங்கத்தில் யுதிஷ்டிரன் பிறந்த அன்றே நான் உணர்ந்தேன். அது இப்போதென்றால் நிகழட்டுமே” என்றார் சகுனி. “இதுவே மிகச்சிறந்த தருணம், விதுரரே. தொன்மையான ஆரியவர்த்தத்தின் முற்றுரிமையாளர்களான ஷத்ரிய அரசர்கள் வலுவிழந்துகொண்டே இருக்க புதிய நிலங்களில் குலம்முதிர்ந்து அரசமைத்த யாதவர்களும் நிஷாதர்களும்  சென்ற இரண்டு தலைமுறைகளாக தென்வணிகத்தாலும் கடல்வணிகத்தாலும் செழித்துக்கொண்டே வருகிறார்கள். அவர்கள் புதிய ஷத்ரியர்கள் என தங்களை உணர்கிறார்கள். இருதரப்பும் ஒரு போர்முனையில் சந்தித்தாகவேண்டும். எதிர்காலம் எவருடையதென்று முடிவு செய்யப்படவேண்டும்…”

“இதையெல்லாம் நானும் சலிக்கச்சலிக்க பேசியவனே” என்றார் விதுரர். “இதில் எப்பொருளும் இல்லை. இந்த நாற்களம் போல பாரதவர்ஷமெனும் பெருவெளியை எளிய கணக்குகளாக சுருக்கும் ஆணவம் மட்டுமே இதிலுள்ளது.” சகுனி “இருக்கலாம்” என்றார். “நான் அறிய விரும்புகிறேன். அறியக்கூடுவதைக் கொண்டு அறியவேண்டுவதை நோக்கி முயன்றபடியே இருப்பதே அறிவின் வழி…”

“போர் என்பது எப்போதும் மண்ணுரிமைக்காக மட்டுமே. ஆனால் அதை அதற்குரியதென்று ஏற்க நம் உள்ளம் தயங்குகிறது. ஷத்ரியர்களை ஒருங்கிணைக்க  வல்லமைகொண்ட அடிப்படை ஒன்று தேவைப்பட்டது. வைதிகர்களின் ஆதரவைப் பெறுவதும் முனிவர்களை நிறைவடையச் செய்வதுமான ஒன்று. அது எந்த அளவுக்குப் பொய்யானதாக, எத்தனை தொலைவிலிருப்பதாக உள்ளதோ அந்த அளவுக்கு பயனுள்ளது. இன்றைய வேதப்பூசல் அத்தகையது.”

சிரித்துக்கொண்டே சகுனி தொடர்ந்தார் “இன்றுவரை எவர் தலைமையை ஏற்பது எவர் படைநடத்துவது என்ற குழப்பமே ஷத்ரியர்களை நிறுத்திவைத்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் பழைய பெயர்கள் மட்டுமே.  ஆற்றல் கொண்ட அரசு இரண்டுதான். மகதம் தொன்மையான ஷத்ரிய அரசு.  ஆனால் அதையாண்ட ஜராசந்தன் அரைஅசுரன். அஸ்தினபுரியின் அரசோ நிலையற்றிருந்தது. அதன் அரசனாக யாதவக்குருதி கொண்டவன் அமையக்கூடுமென்னும் நிலை இருந்தது. இன்று அனைத்தும் தெளிவாகிவிட்டன. பேராற்றல் கொண்ட நாடு ஒன்றின் தலைவனாக தூய ஷத்ரியக்குருதி கொண்ட மாவீரன் ஒருவன் வந்து அமர்ந்திருக்கிறான். அவனுக்குப் பின் ஷத்ரியர்  அணிதிரள்வது மட்டுமே ஒரே வழி. அதுவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.”

“அமைச்சரே, பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசுகள் அனைத்தும் அசுரர்களும் நிஷாதர்களும் அரக்கர்களும் வென்றடக்கப்பட்டு அவர்களின் வேர்ப்பின்னல்களுக்கு மேல் அமைந்தவை. தங்க அம்பாரிக்கு அடியில் காட்டின் இருளென நடந்து வந்துகொண்டிருக்கிறது யானை. அத்தனை ஷத்ரியர்களும் கனவில் கண்டு அஞ்சி எழுந்தமர்வது அதன் விழிகளைத்தான்” என்று சகுனி தொடர்ந்தார். “அவர்கள் அஞ்சுவது யாதவர்களை அல்ல. யாதவர்கள் ஒரு தொடக்கமென அமையக்கூடுமோ என்றுதான்.”

“காந்தாரத்தில் ஒட்டகக் கன்றுகளை இளமையிலேயே வெண்சுண்ணத்தாலான கோடுகளை கடந்து செல்லாதபடி பழக்கி வளர்ப்போம். கடந்து செல்லும் கன்றுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும். அவற்றின் குருதியில் அச்செய்தி அச்சத்தால் பொறிக்கப்பட்டுவிடும். பின்னர் அவற்றை கட்டிப்போட வேண்டியதில்லை. சுற்றிலும் வெண்சுண்ணக் கோடு வரைந்து எந்த பாலைநிலத்திலும் விட்டுச்செல்லலாம். ஆனால் எப்போதேனும் அஞ்சியோ ஆவலுற்றோ ஒரு கன்று எல்லை கடக்குமென்றால் கோடு அக்கணமே பயனற்றதாகிவிடும். எல்லை கடக்கும் ஒட்டகம் பிற ஒட்டகங்களின் கண்முன் கொல்லப்பட்டாகவேண்டும்.”

சகுனியின் வெண்பளிங்கு விழிகளை நோக்கியபடி விதுரர் எந்த உணர்வெழுச்சியும் இல்லாமல் அமர்ந்திருந்தார். “அமைச்சரே, நான் காந்தார நாட்டிலிருந்து ஒரு வஞ்சினத்துடன் கிளம்பி இந்நகருக்கு வந்து அறுபதாண்டுகளாகின்றன இப்போது. ஒவ்வொரு நாளும் நான் காத்திருந்த தருணம் வந்திருக்கிறது. பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசர்கள் அனைவரும் இன்று என் மருகனின் கொடிக்குக் கீழ் அணிவகுத்திருக்கிறார்கள். அணிவகுக்காதவர்கள் அனைவரையும் வென்று அழிக்கும் வல்லமை திரண்டுள்ளது. அவன் சக்ரவர்த்தியாக அரியணை அமர்வான். அருகே போடப்படும் பேரரசிக்குரிய அரியணையில் என் மூத்தவள் அமர்வாள். அதைப் பார்த்தபின் நான் என் நாட்டுக்கு கிளம்பிச் செல்வேன். என் பிறவி நிறைவுகொள்ளும்.”

விதுரர் என்ன சொல்வதென்று அறியாமல் அமர்ந்திருந்தார். “என் இலக்குக்கு எதிராக இன்று நின்றிருப்பது இந்திரப்பிரஸ்தம் ஒன்றே. அது ஒரு முகமூடி. அதை அணிந்திருப்பவன் இளைய யாதவன். அவனை வென்று இந்திரப்பிரஸ்தத்தை  கப்பம் கட்ட வைக்காமல் இது முடியாது” என்றார் சகுனி. “என் மருகனின் கொடியை ஏற்று திரண்டுகொண்டிருக்கும் ஷத்ரியர்களுக்கும் முதல் எதிரி இளைய யாதவனும் அவனுடைய எழுவடிவமாகிய இந்திரப்பிரஸ்தமும்தான். அவர்களை வெல்வதே தொடக்கம், வேறுவழியே இல்லை.”

“சிசுபாலனின் கொலை அனைத்தையும் தெள்ளத்தெளிவாக அவர்களுக்கு காட்டிவிட்டது” என்று கணிகர் சொன்னார். அவர் அங்கிருப்பதையே அப்போதுதான் உணர்ந்ததுபோலிருந்தது விதுரருக்கு. முற்றிலும் இல்லாமலாகும் கலை அறிந்தவர் அவர் என எத்தனையோ முறை உணர்ந்திருந்தும் அவர் உள்ளம் படபடத்தது. “ஐயத்திற்கிடமில்லாமல் ஷத்ரியர்களுக்கு சொல்லப்பட்டுவிட்டது, இனி இத்தனை நாட்கள் அவர்கள் சொல் அளைந்து மழுப்பிவந்த எதற்கும் பொருளில்லை.”

விதுரர் அவரது எலிக்கண்களை நோக்கி வினாவெழா உள்ளத்துடன் அமர்ந்திருந்தார். “அந்த அவை பாரதவர்ஷத்தின் அரசியல் களமாகவே இருந்தது அன்று. பெருங்குடி ஷத்ரியர், சிறுகுடி ஷத்ரியர், யாதவர், நிஷாதர், அசுரர் என அனைவரும் அவையமர்ந்திருந்தனர். தன் படையாழியை ஏந்தி எழுந்து நின்று அவர் இரண்டு அறைகூவல்களை விடுத்தார்” என்றார் கணிகர். “இனி ஷத்ரியர் என்னும் குலம் குருதியாலோ வைதிகச் சடங்குகளாலோ அல்ல வல்லமையால் மட்டுமே வகுக்கப்படும் என்றார். நாமறிந்த அனைத்து ஸ்மிருதிகளையும் வெட்டிக் கடந்துசென்றார்.”

“புதியதோர் வேதத்தை அங்கே அவர் முன்வைத்தார்” என்று கணிகர் தொடர்ந்தார். ”ஒவ்வொருவருக்குமான வேதங்களிலிருந்து எழுந்தது அனைவருக்குமான நால்வேதம். அவர் அதைக் கடந்துசென்று அளித்தது பிறிதொரு வேதம்.” விதுரர் “அது வேதமுடிவு. முந்நூறாண்டுகளுக்கும் மேலாக மெய்யறிவு தேடும் குருமுறைமைகளில் கற்று கற்பிக்கப்பட்டு கடந்து வந்துகொண்டிருப்பது” என்றார்.

“அமைச்சரே, புதிய வேதம் பழைய வேதத்திலிருந்தே எழமுடியும். நால்வேதம் முன்பிருந்த வேதங்களைக் கடந்த அமுது என்பார்கள் அறிவோர்” என்றார் கணிகர். “வேதமுடிவென்பதனால் அது வேதமென்றாவதில்லை. வேண்டுதலே வேதம். படைத்து கோரி பெற்று பெருகி நிறைதல் அதன் நோக்கம்.”

“இவர் கூறும் வேதம் அறிந்து ஆகி அமர்ந்து நிறைவது. விண்ணென நிறைந்த வெளி நோக்கி இங்கெலாம் அது என்றறிவது. அறிதலே அது என்று கடப்பது. அதுவே நான் என்று அமைவது. நானே அது என்று ஆவது. அது குருகுலங்களின் அறிவாக இருக்கும் வரை உறையிடப்பட்ட வாள். அவர் அதை உருவி அவை நின்றுவிட்டார். அவர் முன்வைத்தது புதிய சுருதி.”

மிகத்தாழ்ந்த குரலில் “எந்த மெய்யறிவும் அதற்குரிய குருதியுடனேயே எழும்” என்று கணிகர் சொன்னார். விதுரர் கடுங்குளிர் வந்து பிடரியைத் தொட்டதுபோல உடல்சிலிர்த்தார். “நாமறிந்த வரலாறனைத்தும் அவர் சிசுபாலனைக் கொன்று கையில் படையாழி ஏந்தி நின்றிருந்த அத்தருணத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதென்றறிக! இனி பிறிதொன்றும் பேசப்படுவதற்கில்லை. இனி  கடக்கப்படுவதேது கடந்துசெல்வதேது எனும் வினாவொன்றே எஞ்சியிருக்கிறது.”

“கணிகரே, அத்தருணத்தை நீங்கள் சமைத்தீர்களா?” என்று விதுரர் தணிந்த குரலில் கேட்டார். சிறியபறவைபோல ஒலியெழுப்பி கணிகர் சிரித்தார். “நானா? ஆம், ஒருவகையில் நான்தான். ஆம், நான் சமைத்தேன்.” மீண்டும் உடல்குலுங்க நகைத்து “எத்தனை அரிய தருணம் அல்லவா? பேருருவன் ஒருவனை துகிலுரிந்து நிறுத்துதல்… ” அவரே மகிழ்ந்து தலையாட்டி நகைத்து குலுங்கினார். “ஜராசந்தன் அவரை அவைநடுவே அறைகூவுவான் என்று எண்ணினேன். அவர் தன் கைகளை விலக்கிக்கொண்டார். சிசுபாலனிடம் சிக்கிக்கொண்டார். நன்று! நன்று!”

பின்பு மெல்ல அடங்கி முகம் மாறினார். விழிகள் சற்றே இடுங்க “அமைச்சரே, அங்கே இரு படையாழிகள் இணைந்து ஒன்றானதை பார்த்தீர்களல்லவா?” என்றார். “ஆம்” என்றார் விதுரர். “நன்று” என்றபின் கணிகர் அமைதியானார். அவர் சொன்னதன் பொருளென்ன என்று சித்தத்தை அளைந்தபின் தன்னை விலக்கிக் கொண்டு விதுரர் “நான் பீஷ்மபிதாமகரின் பொருட்டு வந்துள்ளேன்” என்றார்.

“அதற்கு முன் ஒரு வினா” என்றார் கணிகர். “இதில் உங்களுக்கென உணர்வுகள் ஏதுமில்லையா?” விதுரர் தயங்கி “இல்லை” என்றார். “அதைத்தான் எண்ணி வியந்துகொண்டிருக்கிறேன். இவையனைத்திலுமிருந்தும் விலகிவிட்டிருக்கிறது என் அகம். பிறர் ஆடும் களம் என்றே இதை உணர்கிறேன்.”

கணிகர் புன்னகைத்து “சொல்க!” என்றார். விதுரர் “சொல்வதற்கேதுமில்லை, பீஷ்மர் எதை கோரியிருப்பார் என தாங்களே அறிவீர்கள்” என்றார். “ஆம், ஆனால் அச்சொற்களை கேட்க விழைகிறேன்” என்றார் கணிகர்.

சொல் சொல்லாக பீஷ்மரின் மன்றாட்டை விதுரர் சொன்னார். கணிகர் இமைதாழ்த்தி அதை கேட்டிருந்தார். பின்பு மெல்ல அசைந்து கலைந்து “அவரது கோரிக்கை இயல்பானது, அமைச்சரே. பெருந்தந்தைக்கு தன் மைந்தர் போர் புரிந்து மறைவதை பார்ப்பதுபோல் துன்பத்தின் உச்சம் பிறிதில்லை” என்றார். “ஆனால்…” என்றபின் சகுனியை நோக்கி “இத்தருணம் நன்கு முதிர்ந்துவிட்டது. இனிமேல் துரியோதனரிடம் எவர் சென்று சொல்லமுடியும், போர்வேண்டாம் என்று? அவர் எண்ணியிருப்பது ராஜசூயமும் அஸ்வமேதமும் இயற்றி அரியணையமர்ந்து மகாசத்ரபதியென்றாவதை. அவரிடம் சென்று அதை தவிர்க்கும்படி எப்படி கோருவது?” என்றார்.

“அந்த எண்ணமே வேண்டியதில்லை” என்று சகுனி உரக்கச் சொன்னார். “பீஷ்மருக்கு ஒரு வழியே உள்ளது. அவர் சென்று யுதிஷ்டிரனிடம் சொல்லி போரை தவிர்க்கச் செய்யட்டும். தன் மணிமுடியுடனும் செங்கோலுடனும் வந்து யுதிஷ்டிரன் இங்கே அவைபணியட்டும், அனைத்தும் அவர் விழைந்ததுபோலவே முடிந்துவிடும்.”

விதுரர் “ராஜசூயத்திற்கு வில்லளிப்பதைக்கூட சொல்லமுடியும். அதை ஒரு சடங்காக ஏற்க முறைமை உள்ளது. அஸ்வமேதத்தின் புரவி தன் எல்லைக்குள் வந்து செல்ல ஒப்புக்கொண்டால் அவர் அஸ்தினபுரிக்கு அடங்கிய மன்னரென்றாகும் அல்லவா? அதை சத்ராஜித்தான அவர் எப்படி ஏற்பார்?” என்றார்.

“ஏற்க மாட்டான். ஏற்க இளைய யாதவன் ஒப்பவும் போவதில்லை” என்றார் சகுனி. “பாரதவர்ஷத்தின் தலைமகனாக யுதிஷ்டிரனை நிறுத்துவதென்பது இளைய யாதவனின் செயல்திட்டத்தின் முதல் அடிவைப்பு. இங்கு ஒரு புதிய ஸ்மிருதியையும் புதிய சுருதியையும் நாட்டிச் செல்ல வந்தவன் அவன். அதற்குரிய ஏவலனே யுதிஷ்டிரன். ஆகவே அவன் ஒருபோதும் பணியமாட்டான்.”

இதழ்கோட நகைத்து சகுனி தொடர்ந்தார் “ஆனால் பீஷ்மர் சென்று அங்கே கையேந்தி நிற்கட்டும். அப்போது தெரியும் உண்மையில் அவரது இடமென்ன என்று. இத்தனை நாட்களாக இவர்களின் சொற்கட்டுகளுக்குள் நின்றாடியவன் என் மருகன் மட்டுமே. பாண்டவர்கள் அவரது ஒரு சொல்லையும் இன்றுவரை  ஏற்றதில்லை. இனி ஏற்கப்போவதுமில்லை.”

வெறுப்பு எழுந்த விழிகளுடன் “அவர் உள்ளத்திற்குள் இன்றும் பாண்டவர்களே இனியவர்கள். அதை இங்கு அனைவரும் அறிவர்” என்று  சகுனி சொன்னார். “அன்று வேள்வியவையின் முதல்வனாக இளைய யாதவனை அழைத்தவர் பீஷ்மர். சென்று இளைய யாதவனிடம் கோரட்டுமே, போரை தவிர்க்கும்படி. செய்யமாட்டார். தந்தையென தன்னை வணங்குபவர்களின் நெஞ்சுமேல் எழுந்து நின்றாடவே அவரால் முடியும்.”

விதுரர் சற்று எரிச்சலுடன் “நான் கோர வந்தது கணிகரிடம். அவரது மறுமொழியை சொன்னாரென்றால் பீஷ்மரிடம் சென்று உரைப்பேன். என் கடமை அவ்வளவே” என்றார். “அவர் சொல்வதையே நானும் சொல்கிறேன்” என்று சகுனி சொல்ல கணிகர் கையசைத்து “குருதியை தவிர்க்கும்படிதானே பீஷ்மர் கோரினார்? போரைத் தவிர்க்கும்படி அல்ல, அல்லவா?” என்றார். “ஆம்” என்றார் விதுரர் குழப்பத்துடன். “குருதியில்லாத போர்கள் பல உள்ளன. நிகரிப்போர்களைப் பற்றி நூல்கள் சொல்கின்றன” என்றார் கணிகர்.

“அவை நாடுகளுக்குள் நிகழ்வன அல்ல” என்று சகுனி எரிச்சலுடன் சொன்னார். “குலக்குழுக்களுக்குள்ளும் குடிகளுக்குள்ளும் பூசல்கள் எழும்போது அவை குருதிப்பெருக்காக ஆகாமலிருக்கும்பொருட்டு கண்டறியப்பட்ட வழிமுறை அது.  தன் படைக்குலத்தோர் தங்களுக்குள் பூசலிட்டால் படைவல்லமை அழியுமென்பதனால் அரசர் அதை நெறியாக்கினர்.”

கணிகர் “இங்கும் நிகழவிருப்பது ஒரு குடிப்போர் அல்லவா?” என்றார். “நாடுகளுக்குள் நிகரிப்போர் நடந்ததை நான் கேள்விப்பட்டதே இல்லை”  என்று சகுனி எரிச்சலுடன் கைகளை வீசினார். “நிகழ்ந்துள்ளது. முன்பு சத்ராஜித்தின் ஆட்சிக்காலத்தில் கோசலத்திற்கும் மகதத்திற்குமான எல்லைப்போர் வெண்களிற்றுச் சண்டை வழியாக முடித்துவைக்கப்பட்டது. பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தருக்கும் வங்கத்துக்குமான போர் எழுவர் போர் வழியாக முடித்துவைக்கப்பட்டது” என்றார் கணிகர்.

சகுனி கணிகர் என்ன சொல்லப்போகிறார் என்று நோக்கி அமர்ந்திருந்தார். “நிகரிப்போர் பல உண்டு. காளைச்சண்டை, யானைப்போர், இணைமல்லர்களின் அடராடல்…” சகுனி “மல்லர்கள் என்றால்…” என இழுக்க “அது உகந்ததல்ல. முதலில் மல்லரைத் தெரிவுசெய்யும் தரப்பு எதிர்த்தரப்பு எவரை தெரிவுசெய்யப்போகிறதென்று அறியாதிருப்பதனால் தன் தரப்பின் முதன்மைப் பெருவீரனையே முன்வைக்கும். நிகரிப்போர் கோருவது நாம். எனவே  பாண்டவர் தரப்பிலிருந்து பீமனே வருவான். நம் தரப்பிலிருந்து அரசர். அது கூடாது” என்றார் கணிகர்.

“அப்படியென்றால் யானைச்சண்டையா?” என்று சொன்ன சகுனி “யானைகள் பூசலிட இருசாராரும் நின்று நோக்குவதா? இளிவரலுக்கு இடமாகும் அது” என்றார். “ஏன் அது பகடையாடலாக ஆகக்கூடாது?” என்றார் கணிகர். புருவம் சுருக்கி “பகடையா?” என்றார் சகுனி.

“லகிமாதேவியின் சுருதியில் அதற்கான நெறி உள்ளது. பகடையும் போரே. அரசர்களுக்குரியது, தெய்வங்கள் வந்தமர்வது. இருதரப்பும் ஒரு நாற்களத்தின் இருபக்கமும் அமரட்டும். வெற்றிதோல்வியை அக்களம் முடிவெடுக்கட்டும்.” கணிகர் புன்னகை செய்து “அவர்கள் தரப்பில் ஒருவர் ஆடட்டும். நம் தரப்பிலும் திறனுளோர் ஒருவர் அமரட்டும்” என்றார்.

ஒரே கணத்தில் அதன் அனைத்து கரவுவழிகளையும் கண்டறிந்து சகுனி புன்னகைத்து நிமிர்ந்தமர்ந்தார். “ஆம், இதுவே உகந்த வழி. போர் அல்லது நிகரிப்போராக பகடை. தெரிவுசெய்வதை பாண்டவருக்கே விட்டுவிடுவோம்.” கணிகர் விதுரரை நோக்கி புன்னகைத்து “பீஷ்மர் முதலில் முடிவுசெய்யட்டும்” என்றார். “சென்று சொல்லுங்கள், அமைச்சரே. இனி மாற்றுப் பேச்சில்லை.”

விதுரர் சற்றுநேரம் அதை சித்தத்தில் சுழற்றியபடி அமர்ந்திருந்தார். “சொல்லுங்கள், அமைச்சரே” என்றார் கணிகர். “ஆம், சொல்வதற்கொன்றுமில்லை. இதை பிதாமகரிடம் சொல்கிறேன்” என்றார்.

“பிதாமகர் ஏற்பார்” என்றார் கணிகர். “ஏற்காது முரண்படுபவர் பேரரசர். அவர் விலங்குகளைப்போல, உள்ளுணர்வால் முடிவுகளை எடுப்பவர்.” விதுரர் “ஆம்” என்றார். “ஆனால் வேறு வழியில்லை. இம்முடிவைக்கூட என்னிடம் பீஷ்மர் தலைதாழ்த்தினார் என்பதற்காகவே எடுத்தேன். பழைய வஞ்சம் ஒன்று நிறைவடையும் இனிமையை சுவைப்பதற்காக”  என்றார் கணிகர்.

“துரியோதனரை ஆதரிக்கும் அரசர்கள் போரை இப்படி முடித்துக்கொள்ள ஒப்புவார்களா?” என்றார் விதுரர். “ஒப்பச்செய்ய முடியும். உண்மையில் இன்று உள்ளூர எவரும் போரை விரும்பவுமில்லை. இத்தருணத்தில் போரை தொடங்குவது எளிது, முடிப்பது கடினம் என்று அனைவரும் அறிவர். இது பலலட்சம்பேர் செத்துக்குவியும் பேரழிவாக அன்றி முடியாதென்று ஷத்ரியர்கள் உணர்ந்திருப்பார்கள்.” அவர் மீண்டும் உடல்குலுங்க நகைத்து “போர் நிகழவும் வேண்டும், குருதியும் ஒழுகாதென்றால் அதைவிட நன்று எது?” என்றார்.

விதுரர் “ஆம், பிதாமகரிடம் சொல்கிறேன்” என்றபடி எழுந்துகொண்டார். சகுனி “இதுவே ஒரே வழி என்று சொல்லுங்கள். ஒருவேளை உடன்வயிற்றோரின் குருதிப்பெருக்கு தடைபடுமென்றால் அது அவர் என்னிடம் கைகூப்பிய இத்தருணத்தின் விளைவு மட்டுமே” என்றார். விதுரர் “ஆம்” என்றார்.

விதுரர் எவ்வுணர்வுமின்றி கைகூப்பி விடைபெறும் சொற்களை சொன்னார். கணிகர் விதுரரை அண்ணாந்து நோக்கி “பீஷ்மரிடம் அவரது அச்சத்தை நான் புரிந்துகொள்கிறேன் என்று சொல்லுங்கள்” என்றார்.

“அச்சத்தையா?” என்றார் விதுரர். கணிகர் புன்னகை மேலும் விரிய “அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரின் படைக்கலம் காத்து நின்றிருக்கிறது அஸ்தினபுரியின் நுழைவாயிலில்…” என்றார். விதுரர் நெஞ்சு நடுங்க பார்வையை விலக்கிக்கொண்டார். “தெய்வங்களின் வணிகத்தில் செல்லாத நாணயமே இல்லை என்பது சூதர் சொல்” என்றார் கணிகர். மறுமொழி சொல்லாமல் தலைவணங்கி விதுரர் விடைகொண்டார்.

தொடர்புடைய பதிவுகள்

இலக்கியம், இருள்…

$
0
0

puye

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

 

வாழ்க்கையின் மிக உணர்ச்சிகரமான அல்லது உணர்ச்சிகளே இற்றுப்போகக்கூடிய அளவு விரக்தி நிறைந்த ஒரு காலகட்டத்தைக் கடக்கும்போது உங்கள் எழுத்துகளைப் படிக்கக் கிடைத்ததை என் அதிர்ஷ்டம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

 

எனக்கு சிறு வயதிலிருந்தே படிக்கும் பழக்கம் உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் தாயாரை இழந்தபோது சில நாட்கள் மனம் மிக மரத்திருந்த நாட்களில் மனதின் கனத்தைக் குறைப்பதற்காகவே படித்தேன். படிப்பில் களைத்து மனம் எதையும் யோசிக்கக்கூடாது என்ற ஒரே குறிக்கோளுடன் படித்தேன். அதுவரை கனமான இலக்கியங்கள்பால் கொஞ்சங்கொஞ்சமாக முன்னேறிக்கொண்டிருந்த நான் அதன்பின் சில காலம் என்ன படிக்கிறோம் என்ற வரைமுறையும் யோசனையும் இல்லாமல் ஆங்கிலத் துப்பறியும் நாவல்களும் ராஜேஷ் குமாரும் ரமணி சந்திரனுமாகப் படித்துக் கொண்டிருந்தேன். இதற்கு நடுவில்தான் முதல் முறையாக உங்கள் குறுநாவல் தொகுப்பு மூலம் உங்கள் புனைவெழுத்து அறிமுகமானது. அடுத்து ரப்பர். பின் விஷ்ணுபுரம். (விஷ்ணுபுரம் படித்ததும் மின்னஞ்சல் அனுப்பினேன்.) அடுத்தது ஏழாம் உலகம்.

 

என் தாயின் இழப்பைவிட என்னை மிகவும் பாதித்த விஷயம் அவர் அனுபவித்திருந்த துன்பங்கள். (மரணத்தில்தான் அவருக்கு அமைதி கிடைத்திருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.) ஆசாரமான பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்து அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவர்களுக்கு எத்தனை துன்பங்கள் நேரலாமோ அவ்வளவு. மிகுந்த இலக்கியப் பற்றும் (எனது வாசிக்கும் பழக்கத்துக்கு வித்திட்டது அம்மாதான்.) நுண்ணுணர்வுகளும் ரசனைகளும் மிகுந்த நகைச்சுவை உணர்வும் நிறைந்தவர். இந்தத் தகுதிகள் எதுவும் இல்லாத- இவற்றில் அவர் எதிரே நிற்கக்கூடத் தகுதியற்றவர்களால்அவர்களைப் போன்ற அந்தஸ்து மற்றும் லௌகீக வெற்றிகள் பெறாத ஒரே காரணத்துக்காகத்  தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டவர்.

 

பிராமணக் குடும்பங்களில் மற்ற உழைக்கும் சாதிகளில் அதிகம் இருப்பது போல் தலைமுடியை இழுத்து அடிக்கும் பழக்கமில்லை. ஆனால் நுட்பமாக Subtle ஆக எத்தனையோ அவமானங்கள், கொடுமைகள். பார்ப்பனீயம் என்று இணையத்தில் வசைபாடப்படுவது இதுதானோ? இதைப் பார்ப்பனப் பெண்களைத்தவிர வேறு யாரால் முழுதாக உணர முடியும்? (நான் ஒன்றும் புரட்சியாளரோ புதுமையாளரோ அல்ல. சொந்த சாதி பற்றி ஒரு சிறிய சுய விமர்சனம் அவ்வளவுதான்.)

 

என் அம்மா சிறு பெண்ணாக மனம் நிறையக் கனவுகளுடன் தனது வாழ்க்கையைத் துவங்கியபோது யாரெல்லாம் அவருக்கு அவமானமும் கொடுமைகளும் இழைத்தார்களோ அனைவரும் அவளது மரணம் நிகழ்ந்தபோதுசுமங்கலியாப் போய்ட்டா. தெய்வமா இருந்து காப்பாத்துவாஎன்றபோது அத்தனை துக்கத்துக்கு நடுவிலும் எனக்கு சிரிப்புதான் வந்தது. அவர்களுக்கும் வயதாகிவிட்டதல்லவா? வயதானால் ஆன்மீக வேடம் தானாகவே கனகச்சிதமாகப் பொருந்திவிடுகிறதல்லவா?

 

இந்த முன்னாள் கொடுமையாளர்களின் இந்நாள் ஆன்மிக வேடம் பற்றி மனம் கொதித்துப்போயிருந்த எனக்கு ஏழாம் உலகம் ஏதோ வலி நிவாரணி போலிருந்தது. அம்மாவின் வாழ்வு பற்றி நினைக்கும்போதெல்லாம் ஏற்பட்ட மனக்கசப்பின் ஆடிபிம்பம் போலிருந்தது இரப்பாளிகளின் உலகம் பற்றி அறிந்தபோது ஏற்பட்ட கசப்பு.

 

உயிரோடிருக்கும்போது என் அம்மாவைத் துன்புறுத்திவிட்டுக் கூச்சமில்லாமல் தெய்வம் என்றவர்களை நினைக்கும் போதெல்லாம்  அடப்பாவிகளா, உங்களுக்கெல்லாம் குற்ற உணர்வே கிடையாதா என்று அடிக்கடி தோன்றும் எனக்கு. ஏழாம் உலகத்தில் போத்திவேலுப் பண்டாரம் தான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை என்று மனமார உணர்ந்து புலம்பும் போது என் அம்மாவை இழந்த துக்கத்துக்கு நடுவே வந்த சிரிப்புபோல ஒரு கசந்த சிரிப்பு வந்தது. குற்றம், கொடுமை என்பதற்கெல்லாம் அவரவருக்கு அவரவர் நியாயங்கள் இருக்கும்போலும்! ஒவ்வொருவரும் வாழ்வில் அடுத்தவரை மிதித்தே வாழ வேண்டும்போலும். அதுதான் தான் மிதிபடாமல் இருப்பதற்கானநியாயமானவழிமுறையோ என்னவோ?

 

விஷ்ணுபுரத்தில் கொலையும் செய்துவிட்டு கொலையுண்டவரை தெய்வமாக ஆக்கிப் புனைந்துவிடும் சூரியதத்தரின் தந்திரத்தை என் அம்மாவைத் துன்புறுத்தியவர்களுடன் பொருத்திப் பார்க்க முடிந்தபோது கொதித்துப் போயிருந்த மனது சற்றே ஆறி, கொதிப்பு கசப்பானது. காலங்காலமாக இதுதான் நடந்து வருகிறது. என் அம்மா ஒன்றும் தனி நபர் அல்ல, ஒருகலாசாரத்தின்பிரதிநிதி என்று புரிந்தபோது சற்றே ஆறுதலாக இருந்தது.

 

கதைக்கும் இலக்கியத்துக்கும் உள்ள வேறுபாட்டை உங்கள் எழுத்துதான் எனக்குப் புரிய வைத்தது. இலக்கியம் வாழ்வையும் உணர்ச்சிகளையும் தனக்குள் பொதிந்து வைத்திருக்கும் காப்ஸ்யூல் மருந்து என்பது உங்கள் எழுத்துகளில் புரிகிறது. அது ரப்பரோ, விஷ்ணுபுபுரமோ குறுநாவல்களோ நூறு நாற்காலிகளோ எல்லாவற்றிலும் என் அம்மா போல ஒடுக்கப்பட்டவர்களின் குரலை என்னால் கேட்கமுடிகிறது. அவளைப்போல நியாயம் மறுக்கப்பட்டவர்களின், அன்புக்கு ஏங்குகிறவர்களின் துடிப்பையும் பதைப்பையும் உங்கள் எழுத்துகளில் ரத்தமும் சதையுமாகக் காண முடிகிறது. எல்லாரின் குரலையும் நியாயங்களையும் பதிவு செய்யும் உங்களுக்கு உங்கள் சொந்த வாழ்வில் இதுபோல் எவ்வளவு நிகழ்ந்திருக்குமோ தெரியவில்லை.

 

அனுபவத்திலிருந்துதான் படைப்பு பிறக்கிறது. ஆனால் படைப்பாளி பண்படப்பட தான் அனுபவிக்காதவற்றையும் படைக்கும் சக்திபெற்றவனாகி விடுகிறான் என்று தோன்றுகிறது. அதனால்தான் உங்கள் எழுத்துகள் மிகவும் கூர்மையுடன் மனதின் அடியாழத்தைத் தொட்டு வாசகர்களுக்கு அந்தரங்க பாவத்தை ஏற்படுத்துகின்றன.

 

கடிதம் நீண்டதற்கு மன்னிக்கவும். இது சம்பிரதாயமான வாசகர் கடிதமல்ல. தட்டச்சு செய்யும்போது கண்ணீர் வந்து ஒவ்வொரு சொல்லையும் மறைக்கிறது. அநேகம் கோடி நன்றிகள்.

 

வி

 

அன்புள்ள வி,

 

இலக்கியம் வாழ்க்கையைப்புரிந்துகொள்ள ஒரு முன்வரைவை அளிக்கிறது. அது விடைகளை அளிப்பதில்லை. இப்படியெல்லாம் யோசிக்கலாமே என்ற பலவகையான சாத்தியங்களைத் திறந்து அளிக்கிறது. இலக்கியவாசிப்பில்லாமலேயே அடையமுடியும் அதை. ஆனால் அதற்கு நாநூறு ஐநூறாண்டுக்காலம் வாழவேண்டும்.

 

மனிதர்களைப்பற்றி பொதுவாகவே இலக்கியம் எதிர்மறையாகவே சொல்கிறது என்று ஒரு கூற்று உண்டு. அது உண்மை. ஏனென்றால் அது மானுட அகத்தை கூர்ந்து நோக்கும்தோறும் காமகுரோதமோகம் என்னும் இருளையே காண்கிறது. அந்த இருளைக்கடந்துச் என்று அது காணும் ஒளி அதனாலேயே முக்கியமானது

 

ஏழாம் உலகம் அதன் அத்தனை இருட்டுடனும் மானுடமனம் அன்பின்மூலமும் அதையும் கடந்த சமநிலை மூலமும் அடையச்சாத்தியமான விடுதலையைப்பற்றியும் சொல்கிறது. இருளிலிருந்து ஒளிக்கு என்பதுதான் ரிக்வேத காலம் முதல் இலக்கியத்தின் பிரார்த்தனை

 

அதையே மீண்டும் சொல்கிறேன்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நித்ய சைதன்ய யதி

$
0
0

nithyachaithanyayathi.jpg.image.784.410

 

‘ஒரு துறவி அதுவும் குரு என்றால் ஒருவகையான அதிகாரம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு பலரும் உள்ளூர ஆசைப்படுகிறார்கள். அதில் தப்பில்லை. ஆனால் குருக்களின் கஷ்டம் குருக்களுக்குத்தான் தெரியும்” என்றார் நித்ய சைதன்ய யதி

”என்ன கஷ்டம்? என் காலில் இத்தனைபேர் விழுந்தால் நான் உயிரைப்பணயம் வைத்து தினமும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு பகவத் கீதை படிப்பதற்கும் தயார்” என்றேன்

”அது சாதாரணக் கொடுமை. வேறு எவ்வளவு இருக்கிறது!” நித்யா சொன்னார். ”பிரச்சினை ஒன்று, சாமியார்களுக்கு காவி இன்றியமையாதது. ஆனால் சாயம்போகாத காவித்துணி பருத்தியில் கிடைக்கவே கிடைக்காது. இது என் ஐம்பதாண்டுக்கால துறவு வாழ்க்கையின் அனுபவம். காவிச்சாயம் வியர்வையில் ஒட்டி இரவில் உடலில் பல இடங்களில் அடிபட்ட தடம் போல தெரியும். சாமியார் அடிபட்டிருக்கிறார் என்றால் அபவாதம் ஆகும்தானே? எங்காவது ஆற்றில் குளத்தில் குளித்தால் சாயம் கலங்கி ஓடும். அதை அழுக்கு என்று நினைத்து நம்மை குளிக்காத அழுக்குச்சித்தர் என்று நினைத்து பக்தர்கள் நமக்கு அணிமா மகிமா சக்திகள் உண்டா என்று கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.சாயம் போகிறது என்றால் சாமியார் சாயம் வெளுத்துவிட்டதே என்பார்கள்…”

”பாலிஸ்டர் சாயம்போகாதே”

”போகாது.ஆனால் நான் அதை ஒற்றைவேட்டியாகத்தானே கட்ட முடியும்? கோவணம் வெளியே தெரியும். நான் அந்தராத்மா பற்றி ஆழமாக பேசிக் கொண்டிருக்கும்போது அடியவர்கள் அடியுடையைப்பார்த்தால் குழம்பிப்போக மாட்டார்களா? மேலும் அது காற்றடித்தால் இருபக்கமும் எழுந்து பறக்கும். சிறகுகள் போல. குரு உடலுடன் சொற்கத்துக்கு எழுந்து செல்லப்போகிறார் என்று சில பக்தர்கள் எண்ணி பரவசம் அடைந்துவிட்டால் வேறுவழியே இல்லை. போய்த்தான் ஆகவேண்டும். எல்லாருமாகச் சேர்ந்து தூக்கி மேலே ஏற்றிவிட்டாலும் விடுவார்கள்… வம்பு”

நித்யா படும் பாட்டை நானும் நேரில் பார்த்திருக்கிறேன். வேன் பிடித்து பக்த மகாஜனங்கள் கூட்டம்கூட்டமாக வந்து இறங்குவார்கள். ”சசீ எடீ. அச்சன்றெ கையில் பிடிச்சு கொள்ளூ…நாராயணா மிண்டாதே வா” என்றெல்லாம் கூச்சல்கள். எல்லாரும் இறங்கியபின் சின்னப்பிள்ளைகளை வரிசையாக நிறுத்தி உபதேசம். ”குரு கேட்கும்போது பெயரை நன்றாகச் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் குச்சியாலே அடிப்பார். பாடச்சொன்னால் ‘தெய்வமே காத்துகொள்க’ பிரார்த்தனையை தெளிவாக பாடவேண்டும். அம்புஜம் நீ தெளிவாக பாடுவே தானே. நீ முன்னால் நில்லு. டேய், ராமா நீ சொதப்புவே. நீ பின்னால் நில்லு. உன் ஓட்டைப்பல்லைக் காட்டக்கூடாது. வீட்டுக்குப்போனால் கழட்டி கையில் கொடுத்துவிடுவேன்… அடீ பாகீரதீ பார்த்துவாடீ…தறவாட்டில் பிறந்தவளைப்போல இருடீ எரப்பே…”

”எரப்ப உங்க தந்தை, கோரடிக்கல் கேசவன் வைத்தியர். …வந்திட்டாரு…” ”சீ வாய மூடு நாயே..அடிச்சேன்னா” ”ஆமா அடிப்பீங்க… ஒருமாதிரி நல்லவார்த்தை வாயிலே வருது எனக்கு” ”அப்பா இங்க வச்சு சண்டை வேண்டாமே…இது குருகுலம்” ”குருகுலம் நொட்டிச்சு…இவளையும் கொன்னுட்டு நானும் சாவேன். பத்து முப்பது வருஷமா இந்த மாரணத்தை நான் கெட்டி சுமக்கிறேன்…” ”மாரணம் சுமக்கத்தானே எங்கப்பா நாப்பது பவனும் எட்டேக்கர் ரப்பரும் தந்தார்?” ”உங்கப்பன் குடம் உடைச்சான்…சும்மா வாடீ எரப்பே…”

ஒருவழியாக பக்தர்குழு குருகுல வாசலை அணுகுகிறது. அத்தனைபேரும் பிரமைபிடித்ததுபோல அமைதியாகிறார்கள். முகத்தில் எப்போதும் பாய்ந்து ஓடப்போவதற்கு முந்தைய பாவனை எஞ்சிநிற்கும் குடும்பத்தலைவர் கைகூப்பி வணங்கி உள்ளே செல்கிறார். வெளியே வரும் பிரம்மசாரி ”ஆரு?”என்றதும் ”குரு தர்சனத்துக்கு வந்ததாக்கும். குருவருள் அடியங்களுக்கு வேணும்…” ”உள்ள போங்க.சத்தம் போடப்பிடாது…” அனைவரும் கனவில் செல்பவர்கள்போல மெல்ல நகர தரையில் அவர்களின் நிழல்கள் கூடவே செல்ல குழந்தைகள் பராக்குபார்த்து ”அம்மா ஆனை” ”சும்ம வாடா”. ”ஆனை கையிலே பூ..” ”சத்தம் போடாதே” ”பூவிலே ஒரு லைட்டு”’ . அம்மா பல்லைக்கடித்து உறுத்துப்பார்க்க ”ஏன், ஆனையப் பாத்தா கிள்ளுறே?”. மேலும் ரகசியக்குரலில் ”ஆனையை பாக்கக்கூடாதா?”

உள்ளே சென்று குருவைக் கண்டதும் குடும்பத்தலைவர் உரக்க ”குருர் பிரம்மா குருர் விஷ்ணோ குருர் தேவோ மஹேஸ்வரஹ! குரு சாட்சாத் பரப்பிரம்ஹா தஸ்மைன் ஸ்ரீ குருவேஹ் நமஹ!” என்று கர்ஜித்தபடி ஓடிப்போய் குருகாலில் விழப்போக கடிதங்களை உறைகிழித்து படித்துக் கொண்டிருந்த நித்யா கிழித்தஉறைகளை போடுவதற்கு வைத்திருந்த குப்பைக்கூடை நடுவே இருக்க குடும்பத்தலைவர் குழம்பி குப்பைக்கூடை வழியாகச் சுற்றி அவர் காலைத்தொட்டு வணங்கி மும்முறை கண்களில் ஒற்றிக் கொண்டு பல்லைக் கடித்தபடி கிசுகிசுப்பாக ”கும்பிடுங்க…ம்ம்” என்றார். பிள்ளைகள் மிரண்ட கண்களுடன் திறந்த வாய்களுடன் கும்பிட பதின்பருவக்குமரி சிரிப்பை அடக்க கீழுதட்டை கடித்தபடி தவிக்க நித்யா ”நந்நாயி வரட்டே”என்று ஆசியளித்தார்

”குரு இவளுக்கு கணக்கு கொஞ்சம் மோசம்…டியூஷன் வச்சாலும் படிக்க மாட்டாள். வெளையாட்டு… கும்பிடுடீ” பெண்மணி வணங்கி ”மனசுக்கு ஒரு சுகமில்ல குரு” நித்யா புன்னகையுடன் ”…இனியும் ஒரு நூறுவருஷம் ஸ்த்ரீகள் ஆண்களை சகித்தும் மன்னித்தும்தான் ஆகவேண்டும் .வேறே வழியில்லை…அவர்கள் அப்படித்தான்…போகட்டும்” என்றார். ”குரு இவளுக்கு எப்போதும் ஒரு கோபம். அடிக்கடி ஒற்றைத்தலைவலி. மூட்டுவலியும் உண்டு…” ”…எல்லாம் சரியாய் போய்விடும்”என்றார் நித்யா. குழந்தையிடம் ”…உன்பேர் என்ன சஸிதரனா?” நெற்றியில் சந்தனக்குறி போட்டிருந்த, மூக்குவியர்த்த சஸிதரன் அதை சரியாக கவனிக்காமல் உடனே பதற்றத்துடன் கைகூப்பி ”தெய்வமே கைதொழாம் காத்தருள்க என்னெ நீ…”. என கீச்சுக்குரலில் அரைக்கால் கட்டையில் எடுக்க ”அய்யே…” என்று அக்கா வாய்பொத்திச் சிரிக்க குடும்பத்தலைவர் ”..அவன் அப்டி ஒரு மடயனாக்கும் குரு…இன்னும் ஏபிசிடி படிச்சு முடியல்ல” என்றார். ”ஆனா நல்லா பாடுறானே… நல்ல தைரியசாலியாகவும் இருக்கான். சஸி இங்கவா நாம ரெண்டுபேரும் சேர்ந்து பாடுவோம். தெய்வமே கைதொழாம். காத்தருள்க என்னை நீ….”

சஸிதரன் ஆங்காங்கே தப்பான இடங்களில் மூச்சு வாங்கியும் ஓரக்கண்ணால் சகோதரர்களை பார்த்தும் பாடி முடித்துவிட்டு திருப்தியுடன் ”நான் ஜனகணமனயும் பாடுவேன்…” என்று சொல்ல ”அதைச் சாயங்காலம் பாடலாம்…” என்றார் நித்யா. ”நீங்க இந்தக் கம்பாலே அடிப்பீங்களா?” ”இதுவா? இது சிங்கம் புலி காண்டாமிருகம் எல்லாவற்றையும் அடிப்பதற்கான கம்பு தெரியுமா?” ”ஏன்?” ”சின்னப்பிள்ளைகளை கடிக்கவந்தால் பின்னே சும்மா விடுவதா? அடிக்க வேண்டாமா?” ”துப்பாக்கியாலே டோ டோன்னு சுடணும்..” ”அப்படியெல்லாம் சுடக்கூடாது. அப்புறம் அவர்களெல்லாம் போய் அப்பாவிடம் சொல்லி விடுவார்கள். அப்பா நம்மைக் கூப்பிட்டு காதைப்பிடித்து கசக்கி இனிமே சுடுவியா சுடுவியா என்று கேட்பார்…” சஸி ஓரக்கண்ணால் குடும்பத்தலைவரை பார்த்து ”அப்பாவா?” என்றான். ”ஆமா. இந்த அப்பா இல்லை. இது ஒரு பாவம் அப்பா. பெரிய அப்பா இருக்கார். என்னோட அப்பா…” ”அவருக்கும் தாடி உண்டா?” ”பின்ன? எனக்கே இவ்வளவு பெரிய தாடி இருக்கிறதே? அவர்தான் ஆடு மாடு நாய் கோழி எல்லாத்துக்கும் அப்பா….”

குடும்பத்தலைவர் ‘சின்னப்பிள்ளை விளையாட்டை’ ஒருவழியாக முடிவுக்குக் கொண்டு வந்து தன் ஆன்மீகச் சிக்கல்களைச் சொல்கிறார். ஆபீஸில் மதிப்பு இல்லை. மாடுமாதிரி வேலை செய்தாலும் வசைதான் மிச்சம். பெண் வயதுக்கு வந்தாகிவிட்டாள். அவள் படிப்பதில்லை. எப்போது பார்த்தாலும் டிவி. ஏதாவது சேர்த்து வைக்கலாமென்றால் வீட்டுக்காரி கண்ணில்பட்டதையெல்லாம் வாங்குகிறாள். பிரிட்ஜ் இல்லாவிட்டால் தான் என்ன? குளிரவைத்த உணவு உடம்புக்கு கேடு. ஆயுர்வேதத்தில் சொல்லியிருகெகெ. குருவுக்குத்தெரியும்…பேசாமல் எல்லாத்தையும் தலைமுழுகிவிட்டு குருகுலத்துக்கே சாமியாராக வந்துவிடலாமென்றால் பிள்ளைகளின் முகத்தைப்பார்த்தால் அப்படி மனம் வரவில்லை. குருவருள் இருந்தால் எப்படியாவது சமாளித்து மேலேபோகலாம். நித்யா அவர் தலையில் தொட்டு கண்மூடி ஏதோ சொல்லி ஆசீர்வாதம் அளித்தார். ”எல்லாம் சரியாகப்போய்விடும்…” என்றார். அவர் வணங்கி பின்பக்கம் காட்டாமல் நகர்ந்தார்.

நான் ”நித்யா, நீங்கள் என்ன மந்திரம் சொன்னீர்கள்?” என்றேன். ”மந்திரம் அவருக்காக அல்ல. எனக்காக. ஆசியளிப்பவன் அந்த இடத்தில் இருக்கவேண்டுமென்றால் அவனுக்கு மனவலிமை வேண்டும். அதற்குத்தான் மந்திரம்…” ”என்ன மந்திரம்?” ”…மனிதர்கள் வருவார்கள். மனிதர்கள் போவார்கள். நான் மட்டும் சென்றபடியே இருப்பேன்!” என்றார் நித்யா ஆங்கிலத்தில் ”…எனக்கு ஆழமான ஒரு வலிமையை அளிக்கும் மந்திரம் அது..பள்ளிக்கூடத்திலேயே படித்துவிட்ட வரி…”

பக்தர்கள் நித்யாவை கடவுளுக்கு நிகராக கொண்டுசெல்லும் இடங்கள் உண்டு. பேதி கண்டிருந்தாலும் பாலும் பழமும்தான். சமயங்களில் மூன்றுவேளையும் அதுவே. ஒருமுறை நித்யாவின் ஆசிரியர் நடராஜ குருவை அழைத்துச்சென்ற ஒரு கூட்டத்தில் நீர் தெளித்து தெளித்து காலைமுதலே வைக்கப்பட்டிருந்த ரோஜாமாலையை சூட்டினார்கள். உடம்பெங்கும் படைபடையாகக் கொட்டிக் கடித்த சிற்றெறும்புகளால் நடராஜ குரு பல்லைக்கடித்துச் சிவந்து நடந்தபோது ”என்ன ஒரு தேஜஸ் இல்ல?”என்று கூட்டம் மகிழ்ந்தது.”தேள் கீள் இருந்திருந்தால் நடராஜ நிருத்யமே கண்டிருப்பார்கள்” என்றார் நித்யா

சொற்பொழிவாற்றும்போது எந்த ஓசையும் இல்லாமல் கண்மூடி அமர்ந்து ஆழ்ந்து தியானம் செய்பவர்களே அதிகம். பேச்சுமுடிந்து கூட்டமாக ‘ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி’ என்று சொன்னதுமே சரியாக விழித்துக் கொண்டு நிறைவுடன் பெருமூச்சுவிடப் பழகியவர்கள். குரு ஆசியளித்து ஏதேனும் கொடுக்க வேண்டுமென்றுன் ஆசைப்படுவார்கள். அவருக்கு கூழாங்கல் பொறுக்கும் வழக்கம் உண்டு. அழகிய கற்களைப்பொறுக்கி ஒரு சின்ன ஜாடியில் போட்டு வைப்பார். கொஞ்சநாள் அதில் ஒன்றை எடுத்துக் கொடுத்தார் — பக்தர்களில் ஒருவர் வந்து குரு ஆசியளித்துக் கொடுத்த சிவலிங்கத்தை பூஜையறையில் வைத்து மூவேளை நைவேத்யம் செய்து வணங்குவதாகச் சொல்லும்வரை.

இன்னொருவருக்கு அது சாளக்கிராமம் என்று எண்ணம். சைவ வைணவப்போரே நிகழ வாய்ப்பிருந்தது. ”அடாடா, இனி என்ன கொடுப்பது?”என்றார் நித்யா. ”நாமெல்லாம் இந்துக்கள். கொடுக்கும் எதையுமே கடவுளாக ஆக்க நம்மால் முடியும் குரு. ஆலஞ்சோலையில் ஒரு இடத்தில் பழைய இரும்புவாளி ஒன்று கவிழ்க்கப்பட்டு வழிபடப்படுகிறது”என்றேன். நித்யா பெருமூச்சுடன் ”தெய்வங்களை திட்டக்கூடாது. திட்டத்திட்ட தெய்வம் பெருகும். தெய்வம் இல்லை என்று சொன்னவன் உடனே தெய்வமாகி விடுவான். அதனால்தான் யாராவது என்னிடம் கேட்டால் நான் அவன் என்ன சொல்கிறானோ அதையே சொல்லி தப்பித்து விடுகிறேன்”

வேறுவகை ஆட்களும் வருவதுண்டு. ஞானம் தேடி. பரட்டத்தைலை,முகவாயில் மட்டும் தாடி, ஒல்லியான உடலில் ஜிப்பா. தோளில் பை. அதில் ஆன்மீக நூல்கள். குறிப்பேடு. பெரும்பாலும் நல்ல கணீர் குரல் இருக்கும். சம்ஸ்கிருதம் ஒலிக்கும் மலையாளம் . சிலசமயம் ஆங்கிலம். அபூர்வமாக தமிழ். வந்ததுமே சம்பிரமமாக ஒரு நமஸ்காரம். சிலசமயம் நல்ல சம்ஸ்கிருத மந்திரம். ஒருவர் ”யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை !”என்று கூவியதை பார்த்திருக்கிறேன்.

ஒல்லி மனிதர் அமர்ந்ததும் ஆழமாக பெருமூச்சுவிட்டு குனிந்தே அமர்ந்திருக்க நித்யா அவர் பாட்டுக்கு புத்தகம் வாசித்தார். அவர் ஓரக்கண்ணால் பார்க்க நித்யா பொருட்படுத்தவில்லை. பார்வை நகம் கடித்து அமர்ந்திருந்த என்னைத் தீண்டிச் சென்றது. மீண்டும் ஒரு பெருமூச்சு. அதற்கும் எதிர்வினை இல்லை என்று கண்டு அறுந்தது போல சடேரென்று ”…இப்பதான் பாண்டிச்சேரியிலேருந்து வரேன்…”

”ஓகோ? அங்கயா வீடு?” என்றார் நித்யா. பதிலுக்கு ஒரு சுயஏளனக் கசப்புச் சிரிப்பு .”ஏது வீடு, என்ன வீடு? விட்டாத்தானே அது வீடு? விட்டவனுக்கு விட்டதெல்லாம் வீடுதானே? குரு, நீங்க என்ன சொல்றீங்க?” ”வாஸ்தவம்” என்றார் குரு தாடியை தடவியபடி கண்கள் சிரிக்க.

”அரவிந்தாஸ்ரமத்திலேருந்து அப்டியே எறங்கிட்டேன்…” ‘அடாடா , பஸ்ஸ¤க்கு பணம்?” ”அதை நான் எப்பவுமே பையிலே வச்சிருப்பேன்…குரு, அரவிந்தர் ஸமாதியிலே புஷ்பங்கள் வைக்கிறாங்க. ஸமாதியிலே எதுக்கு புஷ்பம்? அது சாயங்காலமானா வாடும். வாடாத புஷ்பங்களை அல்லவா நாம் தேடணும்?”. ” சமாதியிலே பிளாஸ்டிக் பூ வைக்கமாட்டாங்களே” அவர் சற்று தடுமாறி ”நான் அதைச் சொல்லல்ல. ஞானம் வாடாத பூ அல்லவா?” ”பரமார்த்தம்” என்றார் குரு.

”அதுக்கு முன்னாடி புட்டபர்த்தியிலே கொஞ்சநாள் இருந்தேன். ஆத்மாவிலே கேள்விகள் பெருகிட்டே இருந்தது…” ”ஆமாமா அங்க இருந்தா அப்டித்தான்…”. ”… அதுக்கு முன்னாடி ரிஷிகேசத்திலே….”.”சிவானந்தாஸ்ரமத்திலேதானே?” .ஆச்சரியத்துடன் அவர் ”எப்டித்தெரியும்?” ”அங்க சாப்பாடு நல்லா இருக்கும். சப்பாத்திக்கு நெய்விட்ட டாலும் சப்ஜியும் உண்டு. கோடைகாலமானா தயிர்..”

ஒல்லி சற்று சிந்தனை செய்து என்னை புருவம் வளைத்து நோக்கி ”சிவானந்தர் ஒரு ஞானி இல்லை. வெறும் சாமியார்…” ”ஆமா. மொட்டைவேறு போட்டிருக்கிறார்” என்றார் நித்யா. ”””தாடி இலேன்னா என்ன சாமியார்?”

”குரு, இனி எனக்கு நீங்கதான் குரு. எனக்கு மெய்ஞானம் வேணும் குரு…” ”நீங்க சாப்பிட்டாச்சா?” ”இல்லை. வந்ததுமே நேரா இங்கதான் வந்தேன். குருசரணம் மம ஸ்வஸ்தின்னு…” ”போய் சாப்பிடுங்க. இங்கயும் இண்ணைக்கு சப்பாத்திதான். பச்சைப்பட்டாணிக் குருமா…”

”குரு, இதுக்கு என்ன மந்திரம்?” என்றேன் அவர் போனதும். நித்யா கண்களால் சிரித்து ”தண்ணீர்! தண்ணீர்! எங்கும் தண்ணீர்! குடிக்கத்தான் ஒரு துளி இல்லை!”என்றார்.

 

Apr 6, 2010 முதற்பிரசுரம்/ மறுபிரசுரம்

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 71

$
0
0

[ 15 ]

பீஷ்மர் விதுரர் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே கூச்சலிடத் தொடங்கிவிட்டார். கையிலிருந்த அம்பை வீசிவிட்டு அவரை நோக்கி விரைந்து காலடி எடுத்துவைத்து “என்ன சொல்கிறாய்? மூடா! இதையா அந்த முடவன் உன்னிடம் சொல்லியனுப்பினான்? என்னவென்று நினைத்தான்? அஸ்தினபுரியின் அரசகுலத்துடன் விளையாடுகிறானா அவன்?” என்று கூவினார். “இல்லை, இது ஒருபோதும் நிகழப்போவதில்லை. குருவின் குருதிவழிவந்தவர்கள் களிமகன்கள் போல் சூதாடி இழிவுசூடமாட்டார்கள்” என்றார்.

“அப்படியென்றால் போர்தான். நான் அனைத்து வழிகளையும் எண்ணிவிட்டேன்” என்றார் விதுரர். பீஷ்மர் தோள்தளர “ஆனால், சூதாடுவதென்பது…” என்றபின் பெருஞ்சினத்துடன் அப்பால் நின்றிருந்த ஏவலனிடம் “அம்புகளைப் பொறுக்கி அடுக்கு மூடா! என்ன செய்கிறாய்?” என கையை ஓங்கியபடி சென்றார். அவன் பதறி பின்னால் ஓடினான். அருகிலிருந்த பீடத்தில் வைக்கப்பட்டிருந்த மரக்குவளையைத் தட்டி ஓசையுடன் உருளவிட்டார். திரும்பி “விதுரா, சூதாடுவதென்றால் என்னவென்றறிவாயா?” என்றார். “ஆம் அறிவேன். ஆனால் சூதாட்டத்தில் அஸ்தினபுரிக்கு ஒரு தொல்மரபு உள்ளது. ஹஸ்தி அமைத்த பன்னிரு படைக்களம் இங்கே இருந்திருக்கிறது.”

“அதை பிரதீபர் இடித்தழித்தார்” என்று பீஷ்மர் கூவினார். “ஆம், நான் பகடையாடுவது சிறப்பு என்று சொல்லவரவில்லை. ஆனால் மீண்டும் ஆடும்போது அது நாம் தொடங்கிய புதியவழக்கம் என்று எவரும் சொல்லமுடியாது என்று சொல்கிறேன்” என்றார் விதுரர். “வேண்டுமென்றால் ஒரு பூசகன் வெறியாட்டெழுந்து சொல்லட்டும். தன் மைந்தர் பூசலிடுவதை ஹஸ்தி விரும்பவில்லை என்று. பன்னிருபடைக்களத்தை மீண்டும் அமைத்து பகடையாட்டம் நிகழும்படி அவர் ஆணையிடட்டும்.” பீஷ்மர் “வெறும் சூழ்ச்சிகள். நான் அதை சொல்லவில்லை” என்றார். ஆனால் அவரது குரல் தணிந்துவிட்டது.

“நம்முன் வேறுவழியில்லை. வேறு எந்தப் போட்டி என்றாலும் அது பீமனும் துரியோதனனும் நேரில் மோதிக்கொள்வதாகவே அமையும்” என்றார் விதுரர். “இருவரில் எவர் உயிரிழந்தாலும் அது தீரா வஞ்சமாகவே எஞ்சும்.” பீஷ்மர் “அதற்காக மாவீரர் வழிவந்த நம் குடியினர் வணிகர்களைப்போல அமர்ந்து பகடையாடுவதா? இழிவு…” என்றார். “அது சூதர் பாடலாக வாழும். நம் கொடிவழியினர் நம்மை அதன்பொருட்டு வெறுப்பார்கள்.” விதுரர் “போர் நிகழ்ந்து உடன்பிறந்தார் கொலையுண்டால் அதைவிடப்பெரிய இழிவு நம்மை சூழும். நம் கொடிவழியினர் மூதாதையரின் பழிசுமந்து வாழ்வார்கள்” என்றார்.

பீஷ்மர் கால்தளர்ந்து ஒரு பீடத்தில் அமர்ந்தார். “பிறிதொரு வழியை சகுனி சொன்னார்” என அவர் விழிகளை நோக்கி சொன்னார் விதுரர். “நீங்கள் தருமனிடம் சென்று அவன் அஸ்தினபுரியின் வேள்விப்புரவியை வணங்கி திறையளிக்கவேண்டுமென ஆணையிடலாம். அனைத்தும் முடிந்துவிடும் என்றார்.” ஒரு கணம் பீஷ்மர் கண்களில் சினம் எழுந்தணைந்தது. கைவீசி அதை விலக்கிவிட்டு தன்னுள் ஆழ்ந்தார். “ஒருவேளை உங்கள் ஆணையை தருமன் ஏற்கலாம்” என்றார் விதுரர். சினத்துடன் தலைதூக்கி “அறிவிலியே, ஏற்கவேண்டியவன் அவனா என்ன? அவள் அல்லவா?” என்றார்.

“ஆம்… திரௌபதி ஏற்கமாட்டாள்” என்றார் விதுரர். “திரௌபதி ஏற்றாலும் பிருதை ஏற்கமாட்டாள்” என்றார் பீஷ்மர். விதுரர் அவர் அவள் பெயரை அப்படி சொன்னதைக்கேட்டு ஓர் ஒவ்வாமை தன்னுள் எழுவதை உணர்ந்தபடி பேசாமல் நின்றார். “மேலும் இவன் கொள்ளும் இந்தக்கொந்தளிப்பு எதற்காக? வெறும் முறைமைக்காக இந்திரப்பிரஸ்தத்தின் அரசனும் இளவரசர்களும் வந்து வணங்கி நிற்கவேண்டும் என்பதா இவன் விழைவு? அதை அவர்கள் ராஜசூயப்பந்தலில் பலமுறை செய்துவிட்டனர். இவன் விழைவது பாஞ்சாலி வந்து இவன் அவையில் குறுநிலத்து அரசியாக ஒடுங்கி நிற்கவேண்டும் என்பதல்லவா? அவளை சிறுமைசெய்து செருக்கி எழவேண்டும் என்றுதான் அங்கனும் விழைகிறான்…”

“ஆம்” என்றார் விதுரர். “அது நிகழாது…” என்றார் பீஷ்மர். “இளைய யாதவன் அதை ஒப்பமாட்டான். இவர்கள் சற்றே அடங்கவேண்டும், வேறு வழியே இல்லை.” விதுரர் “போர்முரசுகள் சித்தமாகிவிட்டிருக்கின்றன. இத்தருணத்தில் எவர் சென்று சொல்லமுடியும்? எந்த அடிப்படையில்?” என்றார். “ஒரே அடிப்படைதான். இந்திரப்பிரஸ்தம் அஸ்தினபுரியைவிட வல்லமை மிக்கது. எவ்வகையிலும் அவர்களுக்கு இவன் நிகரல்ல. யாதவர்களின் செல்வமும் பெரும்படையும் இந்திரப்பிரஸ்தத்துடன் இணைந்துள்ளன. ஒருபோர் நிகழ்ந்தால் அஸ்தினபுரி வெல்லாது, ஐயமே இல்லை” என்றார் பீஷ்மர்.

“விதுரா, இந்த ஷத்ரியர் எவரும் புதியநாடுகளை புரிந்துகொண்டவர்கள் அல்ல. நான் அந்நிலங்களில் அலைந்திருக்கிறேன். அவர்களுக்கு மண்ணும் கடலும் வழங்கிய வாய்ப்புகள் எளியவை அல்ல. அந்நாடுகள் அப்பெயலை வேர்களால் உண்டு எழுந்து தழைத்து பேருருவாக நின்றிருக்கின்றன. போர் என்பது முதன்மையாக கருவூலங்களால் செய்யப்படுவது. அவர்களின் கருவூலங்கள் நீர்ஒழியா ஊற்றுபோன்றவை” என்றார் பீஷ்மர். “யவனநாட்டுப் படைக்கலங்களும் பீதர்நாட்டு எரிகலங்களும் அவர்களிடம் சேர்ந்துள்ளன. தொலைநிலங்களில் உதிரிகளாக சிதறிவாழ்ந்த பல்லாயிரம் தொல்குடிகள் சென்ற ஐம்பதாண்டுகாலத்தில் மெல்லமெல்ல படைகளாக திரண்டுள்ளனர். இந்தப்புதிய மன்னர்கள் எவரும் நம்மைவிட பெரிய படையை திரட்டிவிடமுடியும்.”

“மாறாக ஷத்ரியர் பலநூறாண்டுகளாக தங்கள் வாயில்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். சுற்றி நோக்கினால் தெரியும் உண்மைநிலை தங்களை சிறுமையும் துயரும் கொள்ளவைக்கும் என்பதனாலேயே அவற்றை அறியாமலிருக்கிறார்கள். அவ்வறியாமையை அவைப்பாடகர் போற்றி வளர்க்கிறார்கள். இந்தச் சிறுமக்களின் வீண்பேச்சுக்கு அளவே இல்லை. வேள்விப்பந்தலில் கோசலன் என்னிடம் சொன்னான், ஒரு ஷத்ரியன் ஆயிரம் நிஷாதர்களுக்கு நிகரானவன் என்பதனால் அவனிடம் இருக்கும் படை இங்குள்ள அனைத்து நிஷாதர்களின் படைகளை விடப்பெரியது என்று. என்ன சொல்வது? ஒருவனைக்கொல்ல ஓர் அம்புதான் கோசலனே என்றேன். அம்மூடனுக்கு புரியவில்லை.”

“போர் நிகழ்ந்தால் அஸ்தினபுரி அழியும். இவன் தன் தம்பியருடன் குருதிக் களத்தில் கிடப்பான்…” என்று பீஷ்மர் சொன்னார். “அத்துடன், அனைத்துக்கும் மேலான ஒன்றும் உள்ளது. இளைய யாதவனை மானுடர் எவரும் வெல்லமுடியாது.” விதுரர் “ஆம், அதையே நானும் உணர்கிறேன்” என்றார். “இந்த அப்பட்டமான உண்மையை அஸ்தினபுரியின் அரசன் உணர்ந்தாகவேண்டும். அது மட்டுமே இப்போது நிகழவேண்டியது” என்றார் பீஷ்மர். “உணர்ந்தால் அவர் தலைதாழ்த்தவேண்டும்” என்றார் விதுரர். “ஆம், வேறுவழியில்லை. ஆனால் அதை தனிப்பட்ட சிறுமை ஏதும் இல்லாமல் இனிய குலமுறைச்சடங்காகவே செய்து முடிக்க முடியும்” என்றார் பீஷ்மர்.

“அப்படியென்றால் இனி பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி யுதிஷ்டிரன் மட்டுமே. துரியோதனனுக்கு வாய்ப்பே இல்லை” என்றார் விதுரர். பீஷ்மர் “ஆம், அது உண்மை” என்றார். “ஆனால் உண்மைகளை ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்?” விதுரர் புன்னகைத்து “பிதாமகரே, அவர் பிறந்ததே பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியென அமர்வதற்காக என எண்ணுபவர். அவரில் அவ்வெண்ணத்தை நாட்டியபடி இங்கே அறுபதாண்டுகாலமாக அமர்ந்திருக்கிறார் சகுனி. அந்தத் தவத்திற்கு இணையாக இங்கே பிறிது எதுவும் நிகழவில்லை” என்றார். “ஆம்” என்று பீஷ்மர் பெருமூச்சுவிட்டார்.

“இவ்வுண்மையை பிறிதிலாது உணர்ந்தால் அக்கணம் அவர்களிடம் போரிட்டு அக்களத்தில் இறக்கவே அரசர் முடிவெடுப்பார். ஐயமே வேண்டியதில்லை” என்றார் விதுரர். “தன்னியல்பிலேயே தலைவணங்காதவன் அவன்” என்றார் பீஷ்மர். “ஆற்றுவதற்கொன்றுமில்லை” என்று சொல்லி கைவிரித்து தலையை அசைத்தார். “ஆகவேதான் பன்னிருபடைக்களத்தை அமைக்கலாமென்கிறேன்” என்றார் விதுரர். பீஷ்மர் “மீண்டும் அதையே சொல்கிறாயா?” என்றார். விதுரர் “பகடைக்களம் நிகழுமென்றால் அதில் அஸ்தினபுரியே வெல்லும்” என்றார். “ஏனென்றால் அறுபதாண்டுகாலமாக சகுனி ஆற்றிய தவம் நிகழ்ந்தது பகடைக்களத்திலேயே. அவர் எண்ணுவதும் கனவுகாண்பதும் பகடைகளின் வழியாகத்தான். அவரை எவரும் வெல்லமுடியாது.”

“வென்றால்…” என்றார் பீஷ்மர். “ஒரு சடங்காக யுதிஷ்டிரன் முடிதாழ்த்தவேண்டியிருக்கும். அஸ்தினபுரி ஒரு ராஜசூயத்தையும் அஸ்வமேதத்தையும் ஆற்றும். பாரதவர்ஷத்தின் சத்ராபதி என்று துரியோதனன் முடிசூடமுடியும். சகுனி சூள் முடித்து காந்தாரத்திற்கு மீள்வார். கணிகரும் உடன் செல்வார்” என்றார் விதுரர். “ஆனால் அது வெறும் சடங்கே. போரில் வெல்லாத வரை இந்திரப்பிரஸ்தத்தை வென்றதாக பொருள் இல்லை. அதை அனைவருமறிந்திருப்பர். அகவே இளைய யாதவர் எண்ணியிருப்பவை எவற்றுக்கும் தடையில்லை. ஒருமுறை சடங்குக்காக முடிதாழ்த்தியதை தவிர்த்தால் பாரதவர்ஷத்தை உண்மையில் ஆளும் நாடாக இந்திரப்பிரஸ்தமே நீடிக்கும்.”

“ஆனால் இந்த முரண்பாடு எங்கோ மோதலாக மாறியாக வேண்டுமே?” என்றார் பீஷ்மர். “ஆம், ஆகவேண்டும். ஆனால் அதை இருபதாண்டுகாலம் ஒத்திப்போடலாம். அதற்குள் துரியோதனருக்கு வயது ஏறிவிடும். அவர் வனம்புகக் கூடும். லட்சுமணன் முடிகொள்வான் என்றால் அனைத்தும் சீராகிவிடும். அவன் ஆணவமற்றவன். யுதிஷ்டிரனைப் போலவே அறத்தில் நிற்பவன். திருதராஷ்டிரரைப்போல உள்ளம் கனிந்தவன்” என்றார் விதுரர். “அங்கே மறுபக்கம் யுதிஷ்டிரன் முடிதுறக்கலாம். திரௌபதி தன் விழைவை ஒடுக்கி உடன் செல்லலாம். தருமனின் மைந்தன் பிரதிவிந்தியன் எளிய உள்ளம் கொண்டவன். வேதம்கற்று வேள்விகளில் உள்ளம் தோய்பவன். பிதாமகரே, இந்த வஞ்சமும் விழைவும் எல்லாம் இந்தத் தலைமுறைக்குரியது. அடுத்து வருபவர்கள் கனிந்தவர்கள். அவர்கள் தோள்தழுவிக்கொள்வார்கள். ஐயமே இல்லை.”

“ஆம், அதில் உண்மை உள்ளது” என்றார் பீஷ்மர். மீண்டும் தனக்குத்தானே என தலையை அசைத்தபடி “ஆனால் பகடையாடல் என்பது ஊழுடன் ஆடுவது. எல்லையின்மைகளை சீண்ட மானுடனுக்கு உரிமையில்லை” என்றார். விதுரர் மெல்லிய எரிச்சல் ஒன்றை தன்னுள் உணர்ந்தார். “கணிகர் சொன்னார் உங்கள் அச்சம் அவருக்குத் தெரியும் என்று” என்றார், பீஷ்மர் வெறுமனே நோக்க “காசிநாட்டரசியை நினைவுறுத்தினார்” என்றார். அதைச் சொன்னதுமே அத்தனை எல்லைக்கு சென்றிருக்கலாகாதோ என்னும் பதைப்பை விதுரர் அடைந்தார். தந்தையரிடம் மைந்தர் பெறும் இடம் என்பது அவர்கள் அளிப்பதாகவே இருக்கவேண்டும் என்ற ஸ்மிருதிச்சொற்றொடர் நினைவில் எழுந்தது.

பீஷ்மர் பெருமூச்சுடன் “ஆம், நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். விதுரர் “தங்கள் விருப்பத்தை மீறி…” என சொல்லத்தொடங்க “என் விருப்பம் என ஏதுமில்லை. அனைத்தையும் நான் அடைந்தாகவேண்டும்” என்றார் பீஷ்மர். பின்பு ஓர் அம்பை கையில் எடுத்துக்கொண்டு பயிற்சிமுற்றம் நோக்கி சென்றார். விதுரர் அவரை நோக்கி நின்றார்.

[ 16 ]

திருதராஷ்டிரர் சினந்து எழுவார் என்பதை விதுரர் எதிர்பார்த்திருந்தார். ஆகவே அவர் தாடைகள் இறுக விழிக்குழிகளில் குருதிக்குமிழிகள் ததும்ப “ம்” என உறுமியபோது மேற்கொண்டு சொல்லில்லாது அமர்ந்திருந்தார். “சொல்!” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் அப்பால் நின்றிருந்த சஞ்சயனை நோக்கினார். பின்னர் “எனக்கும் இதுவே உகந்த வழி எனத் தோன்றுகிறது…” என்றார். தன் மேல் விப்ரரின் விழியூன்றலை உணர்ந்தார்.

தலையை அசைத்து பற்கள் அரைபட திருதராஷ்டிரர் “பீஷ்மபிதாமகருக்கும் ஒப்புதல் என்றால் நான் என்ன சொல்வது?” என்றார். கதவருகே நின்றிருந்த விப்ரர் உரத்தகுரலில் “இதிலென்ன எண்ணிச் சொல்ல இருக்கிறது? பேரரசர் ஒருபோதும் தன் மைந்தர் அவையமர்ந்து சூதாட ஒப்புக்கொள்ளப் போவதில்லை” என்றார். “சூதாடுதல் இழிகுலத்தார் செயல் என வகுத்தவர் அவரது பெருந்தந்தை பிரதீபர். அவர் அதை ஒருபோதும் மீறப்போவதில்லை.”

“ஆம்” என்றார் திருதராஷ்டிரர். “நான் விண்மீளும் நாளுக்கென காத்திருப்பவன். அங்கே என் தந்தையரை சந்திக்கையில் என்ன சொல்வேன் என்பதே என் வினா.” விதுரர் “சூது தீங்கென்பதில் ஐயமில்லை மூத்தவரே. ஆனால் போரைத்தவிர்க்க அதுவன்றி வேறுவழியே இல்லை என்னும்போது…” என்றதுமே விப்ரர் அங்கிருந்து கைநீட்டி “சூது உள்ளத்தால் நிகழ்த்தப்படும் போர். உள்ளத்தில் நிகழ்த்தப்பட்ட ஒன்று பருவெளியில் உருப்பெற்று வந்தே தீரும்…” என்றார்.

விதுரர் எரிச்சலுடன் “தத்துவத்தை எல்லாம் நானும் அறிவேன். பிறிதொரு வழி இன்றில்லை. இருந்தால் அதை சொல்லுங்கள்” என்றார். “வழி ஒன்றே. இரு உடன்பிறந்தாரும் தங்கள் தலைக்குமேல் குடைகொண்டுள்ள வானில் வாழும் மூதாதையரை எண்ணி தோள்தழுவிக்கொள்ளட்டும். இணைந்து நீரளிக்கட்டும். மானுடவாழ்வென்பது நேற்றிருந்தோரின் நீட்சி. நாளைவருபவர்களின் தொடக்கம். அதை அறிந்து வாழ்பவர்களே முழுமையாக வாழ்கிறார்கள். தானென்று எண்ணி தன்னதென்று இவ்வாழ்வை காண்பவன் துயரை அன்றி பிறிதை அடைவதில்லை. அதை அவர்களிடம் சொல்வதே உங்களைப் போன்றவர்களின் கடன்” என்று விப்ரர் சொன்னார்.

மூச்சிரைக்க வளைந்த உடல் ஊசலாட திருதராஷ்டிரரை நோக்கி வந்தபடி விப்ரர் சொன்னார் “இது அவரது இறுதிக்காலம். பெருந்தாதையென அமர்ந்த அரியணையாலேயே இன்றுவரை பேரரசர் சிறப்புற்றார். இனியும் அவ்வண்ணமே நீடிப்பார்.” இடையில் கைவைத்து நின்று “ஒருவேளை அவருக்கு கைநிறைய மைந்தரை அளித்த தெய்வங்கள் அவர் அதற்குத் தகுதியானவரா என்று பார்க்கும் ஆடலாகக்கூட இருக்கலாம் இதெல்லாம்” என்றார்.

“என் சொற்களை சொல்லிவிட்டேன். அவை முற்றிலும் மதிசூழ்ந்து அமைக்கப்பட்டவை. அவற்றை ஏற்பதும் புறந்தள்ளுவதும் அரசரின் தேர்வு.” விப்ரர் “அமைச்சரே, நீங்கள் கற்றது நெறிநூல்களை. நான் அறிந்தவை மானுட உள்ளங்களை. சொல்லுங்கள், பகடைக்கென காய்களை கையிலெடுத்தபின் அதில் கள்ளம் இயற்றாமல் களமாடி முடித்த மானுடர் எவரேனும் உண்டா?”

விதுரர் சினத்துடன் “இங்கே பன்னிரு படைக்களம் அமைந்திருக்கிறது முன்பு… மாமன்னர்களான ஹஸ்தியும் குருவும் ஆடியிருக்கிறார்கள்” என்றார். “அவர்கள் மானுடர்களும்கூட என்றால் கள்ளம் கலந்தே ஆடியிருப்பார்கள். ஆகவேதான் தெய்வமானபின் வந்து பிரதீபரிடம் அக்களத்தை அழிக்கும்படி ஆணையிட்டனர்” என்றார் விப்ரர். “நான் சொல்லாட விரும்பவில்லை. இது என் மதிசூழ்கை. இப்போது அணுகிவருவது குருதிபெருகக்கூடும் பெரும்போர். அதை கடந்து செல்ல ஒரே வழி இதுவே” என்றார் விதுரர்.

திருதராஷ்டிரரிடம் “அரசே, நாம் தவிர்க்க எண்ணும் அப்போர் வெறுமனே உடன்பிறந்தாரின் அரியணைப்பூசல் அல்ல. பாரதவர்ஷம் தன்னை உருக்கி பிறிதொன்றாக ஆக்கிக்கொள்வதற்காக புகவிருக்கும் உலை. அது நம் மைந்தர் குருதியினூடாக நிகழவேண்டியதில்லை என்பது மட்டுமே நம் இறைவேண்டுதல். வரலாறென்றாகி எழுந்து சூழ்ந்துள்ள ஊழின் விசைகளை நம்மைச்சுற்றிலும் காண்கிறேன். நம் எளிய அச்சங்களும் கொள்கைகளும் அதன்முன் பயனற்றவை” என்றார்.

“எதற்காக இதை என்னிடம் வந்து சொல்கிறாய்? நான் என்ன செய்யவேண்டும்?” என்றார் திருதராஷ்டிரர். “நீங்கள் உங்கள் ஒப்புதலை அளிக்கவேண்டும்” என்றார் விதுரர். “இன்று அதற்கான தேவை என்ன?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “தெளிவாகவே சொல்லிவிடுகிறேன். இது போரல்ல, குடும்பத்தார் கூடி மகிழும் நகைவிளையாட்டே என்ற தோற்றத்தை குடிகளிடம் அளிக்கவேண்டியிருக்கிறது. நீங்களும் பீஷ்மரும் அமர்ந்த அவையில் பகடையாட்டம் நிகழுமென்றால் மட்டுமே அவ்வண்ணம் எண்ணப்படும்.”

திருதராஷ்டிரர் கசப்புடன் சிரித்து “ஷத்ரியர்களுக்கு போர், குடிகளுக்கு விளையாட்டு… இல்லையா?” என்றார். “ஆம், அவ்வாறே” என்றார் விதுரர். “நான் மறுத்தால் என்ன ஆகும்?” என்றார் திருதராஷ்டிரர். “அஸ்தினபுரியின் மக்களையும் படைகளையும் நான் ஆள்கிறேனா இன்று?”

விதுரர் நேராக அவரை நோக்கி “உண்மையை சொல்லப்போனால் இல்லை. உங்கள் சொல்லுக்கு குலமுறைமை சார்ந்தும் குருதியுறவு சார்ந்தும் மட்டுமே இடமிருந்தது. அவற்றை அரசர் மீறினாரென்றால் நீங்கள் செய்யக்கூடுவது ஒன்றே. குலத்தலைவர்களைத் திரட்டி உங்களை ஆதரிக்கும் படைகளுடன் சென்று அரசரிடம் போரிடலாம். வென்று முடிநீக்கம் செய்து உங்கள் மைந்தரில் ஒருவனை அரசனாக்கலாம்.”

“நீ சொல்வது புரிகிறது. எல்லா பொருளிலும்…” என்று திருதராஷ்டிரர் ஆழ்ந்த குரலில் சொன்னார். “ஆனால் நான் ஒன்று செய்யமுடியும். அவன் அரியணை அமர்ந்துள்ள அவையில் சென்று நின்று அவனை போருக்கழைக்கலாம். மற்போருக்கோ கதைப்போருக்கோ. அவன் நெஞ்சைக்கிழித்து இட்டு மிதித்து அவன் மணிமுடியை நான் பெறுவேன். அதை யுயுத்ஸுவுக்கு அளிக்கிறேன். இந்த முரட்டு மூடனல்ல, அவனே இவ்வரியணையில் அமரத்தகுதியனாவன். அவன் அமரட்டும்.”

விதுரர் தன்னுள் ஒரு தசைப்புரளல் போல உணர்வசைவை உணர்ந்தார். திருதராஷ்டிரர் உரத்த குரலில் “ஆம் அவன்தான். அவன்தான் அரியணைக்குரியவன். இதோ நான் சொல்கிறேன். அஸ்தினபுரியை யுயுத்ஸு ஆளட்டும்” என்றார். விதுரர் “மூத்தவரே, சொற்களில் வாழும் தெய்வங்களை எண்ணாது பேசுதலாகாது என்பது அரசர்களுக்குரிய நெறி” என்றார். “அதிலும் பெற்றோர் தன் மைந்தரைப்பற்றி பேசும்போது கருமி வைரங்களைத் தொட்டு எடுப்பதுபோல சொல்சூழவேண்டும். என்றோ ஒருநாள் ஏனிது என்று நாம் திகைத்து வினவுகையில் உன் சொல்லில் எழுந்ததே இது என்று தெய்வமொன்று எழுந்து நம்மிடம் சொல்லும்படி ஆகலாம்.”

திருதராஷ்டிரர் திடுக்கிட்டவர் போல அவரை நோக்கி முகம் திருப்பினார். விழிகள் தத்தளிக்க உதடு இறுகியது. உடனே வெறியுடன் தன் நெஞ்சில் ஓங்கி அறைந்து “ஆம்! அவனை களத்துக்கு அழைக்கிறேன். என்னைக்கொன்றால் அவன் விருப்பப்படி இந்நகரை ஆளட்டும்” என்று கூவினார். “நானறிந்த நெறிநூல்களனைத்தும் சொல்வது இதுவே. அரசனை அறைகூவ ஷத்ரியன் எவனுக்கும் உரிமையுண்டு. அவனோ அவன் சொல்பெற்ற பிறனோ என்னுடன் களம்நிற்கட்டும்.” மூச்சிரைக்க அவரை நோக்கி வந்து “சொல், அவ்வாறு நெறியுள்ளதா இல்லையா? சொல்!” என்றார்.

“உண்டு” என்றார் விதுரர். “ஆனால் அந்நெறிக்கு சில விலக்குகளும் உண்டு. நோய்கொண்டவர், உறுப்புகுறைந்தவர், சித்தம்பிறழ்ந்தவர், தீயதெய்வத்தை உபாசிப்பவர், மாயம் அறிந்தவர், குலமுறையும் குருவழியும் வெளிப்படுத்தாதவர் என்னும் அறுவரை அரசன் தவிர்த்துவிடலாம். அவர்களை படைகொண்டு கொல்லலாம். சிறையிடலாம்.” திருதராஷ்டிரரின் உதடுகள் ஏதோ சொல்ல விழைபவை போல அசைந்தன. தன் தலையை கையால் வருடியபடி கால்மாற்றினார். அவர் உடலில் தசைகள் நெளிந்தன. பின்னர் பெருமூச்சுடன் தளர்ந்து “ஆம், அதையும் செய்வான். இன்று அவனுடனிருப்பவர்கள் அவர்கள்…” என்றார்.

“கணிகர் இதை சொல்லிவிட்டதனால் இனி சகுனி பிறிதொன்றை எண்ணப்போவதில்லை. அரசர் தன் மாமனின் மடிக்குழவியென்று இருக்கிறார்” என்றார் விதுரர். “அவன் எங்கே மூத்தவன்? அவனை வரச்சொல்! நான் அவனிடம் பேசுகிறேன்” என்றார் திருதராஷ்டிரர். “அங்கரும் அரசரும் இன்று முற்றிலும் இணைந்துவிட்டிருக்கின்றனர். அவர்களை இன்று தெய்வங்களால்கூட பிரிக்க முடியாது” என்றார் விதுரர். “மூத்தவரே, வஞ்சத்தால் இணைபவர்கள் மட்டுமே அவ்வாறு முழுமையாக ஒன்றாகிறார்கள்.”

திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் மெல்ல தளர்ந்து சுற்றிலும் நோக்கினார். சஞ்சயன் அருகணைந்து பீடத்தை இழுத்துப் போட அதிலமர்ந்தார். அவரிடமிருந்து பெருமூச்சுகள் வந்துகொண்டிருந்தன. காற்றில் சீறும் அனல்குவை போலிருந்தார் திருதராஷ்டிரர். விதுரர் அவரே கனன்று அணையட்டும் என காத்திருந்தார்.

“ஒன்று செய்யலாம்” என்றார் விப்ரர். “தன்னை ஏற்காத மைந்தரின் அன்னத்தை முற்றிலும் துறக்க தந்தையருக்கு உரிமை உண்டு. இதோ இத்தருணம் முதல் நீங்கள் உணவை மறுக்கலாம். பசித்து உடல் வற்றி இறக்கலாம். விண்புகுந்தபின்னரும் இவர்கள் அளிக்கும் அன்னத்தையும் நீரையும் ஏற்காமலிருக்கலாம்.”

திருதராஷ்டிரர் இரு கைகளையும் விரித்துக்கொண்டு எழுந்து “ஆம், அதுவே ஒரே வழி… அதுவே நான் செய்யக்கூடுவது” என்றார். “மூதாதையரே, இதோ நீங்கள் கேட்பதாக! நான் தந்தையென்றே வாழ்ந்தேன். தந்தையென்றே இறக்கிறேன். நான் மண் மறையும்போது என்னைச்சூழ்ந்து என் சிறுமைந்தரும் பெயர்மைந்தரும் சூழ்ந்திருக்கட்டும்…”

“மூத்தவரே, அதனால் ஆகப்போவதொன்றுமில்லை… அத்தகைய கட்டாயங்களை மைந்தருக்கு அளிப்பது எவ்வகையிலும் அறமல்ல” என்றார் விதுரர். “கட்டாயமல்ல. எனக்கு வேறுவழி இல்லை. என் மைந்தர் பகடையாடுவதை ஒப்புக்கொண்டவனாக விண்ணேறுவதைவிட உண்ணாநோன்பிருந்து உடலையும் ஆன்மாவையும் தூய்மைசெய்து மேலேறுவது எனக்கு மாண்பு… ஆம், அதுவே உகந்த வழி.”

“மூத்தவரே, இது என்ன எதையும் காணாத வெறி? அரசருக்கு அழகா இது?” என்றார் விதுரர். “ஆம், நான் விழியிழந்தவன். வெருண்டெழும் கண்ணற்ற பன்றி. எனக்கு என் மணங்களும் ஒலிகளுமே உலகம். அங்கே சொற்களில்லை. நூல்களுமில்லை. நான் பெற்ற உள்மணம் சொல்வது இதையே” என்றார் திருதராஷ்டிரர். “இதோ… இது என் ஆணை. துரியோதனன் உடனே படைப்புறப்பாட்டை நிறுத்தவேண்டும். கர்ணனும் ஜயத்ரதனும் தங்கள் நாடு மீளவேண்டும். உடன்பிறந்தார் தோள்தழுவ வேண்டும். பகடையாடலோ போரோ நிகழுமென்றால் நான் வடக்கிருந்து இறப்பேன். என் பழிச்சொல் இக்குலத்தின்மேல் என்றும் அழியாமல் நின்றிருக்கும். சென்று சொல் உன் அரசனிடம்!”

“மூத்தவரே…” என மேலும் சொல்லவந்த விதுரர் விப்ரரை நோக்கினார். அவரது ஒளியற்ற பழுத்த விழிகள் ஏற்கனவே விண்புகுந்து தெய்வமாகிவிட்டவை போல தெரிந்தன. பெருமூச்சுடன் “ஆணை!” என தலைவணங்கி திரும்பி நடந்தார். “சஞ்சயா, யுயுத்ஸுவை அழைத்து வா! நான் வடக்கிருக்கவிருப்பதை அவனிடம் சொல்! ஆவன செய்ய நான் ஆணையிட்டேன் என்று கூறு” என்றார் திருதராஷ்டிரர்.

தொடர்புடைய பதிவுகள்

போரும் வாழ்வும் –முதல் வாசிப்பனுபவம், சுரேஷ் பிரதீப்

$
0
0

MTE5NTU2MzI0OTQxMDA2MzQ3

 

அன்புடன் ஆசிரியருக்கு

புதுமைப்பித்தன்  சிறுகதைகள்  பலவற்றை சில வருடங்களுக்கு  முன்பே  படித்திருந்த  போதிலும்  திரு. எம். வேதசகாயகுமார் அவர்கள்  குறித்து  நீங்கள்  எழுதிய  ஒரு கட்டுரையை  படித்த பின்பு அவர்  தொகுப்பித்த “103 புதுமைப்பித்தன்  சிறுகதைகள்” என்ற நூலினை படித்தேன். அதற்கு  முன்பு  சிறுகதை  தொகுப்புகளை படிப்பதில்  பெரிதாக  ஆர்வம்  இருந்ததில்லை.

ஆனால்  அத்தொகுப்பு காலத்தில்  பின் சென்ற ஒரு படைப்பாளியை மிக அருகில்  உணரச்  செய்தது. திரு . வேதசகாயகுமார்  அத்தொகுப்பிற்கு எழுதியிருந்த  முன்னுரையும் கால வரிசைப்படி படைப்புகளை அடுக்கி  இருந்ததும் அச்சிறுகதைகளின் வழியாக  அப்படைப்பாளியை அவர் படைப்புகள் செயல்பட்ட  சமூகத்  தளத்தை அந்த   சமூகத்தின் வரலாற்றினை அக்கால  மக்களின்  உளநிலையை  திறனாய்வு  செய்திருந்ததும் பெரும்  உழைப்பினை கோரியிருக்கும் அரும்பணியே.

அறத்துடன் நண்பர்களுக்கு  பரிந்துரைப்பதிலும் பரிசளிப்பதிலும் இந்த  நூலையும்  இணைத்துக்  கொண்டுள்ளேன். அச்சிறுகதை தொகுப்பின் வழியாக  நான்  உணர்ந்தவற்றில் தலையாயது பெரும்  படைப்புகள்  எல்லாக்  காலங்களிலும்  தாக்கத்தை  ஏற்படுத்தக் கூடியவை என்பதே. “ச்சே அந்தக்  காலத்திலேயே என்னமா  எழுதியிருக்கான் பாரு” என்பது அபத்தமான புகழ்ச்சியாக தோன்றத் தொடங்கியது  அத்தொகுப்பினை படித்த  பிறகுதான்.

போரும்  வாழ்வும்  படிக்கத்  தொடங்கியபோது பின்னாட்களில் வெளிவந்த பெரு நாவல் முயற்சிகளுக்கு  அது முன்னோடி என்றோ நூற்றைம்பது  வருடங்களுக்கு  முன்னர்  எழுதப்பட்டது என்றோ  எனக்குள்  எதுவித  எண்ணமும்  உருவாகி இருக்கவில்லை. ஆங்கிலப்  பிரதியில் சில அத்தியாயங்கள்  படித்த பின்பு  தமிழில்  அந்நூலினை வாசிக்க  வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின்  மொழிபெயர்ப்பு சில அத்தியாயங்களிலேயே வாசித்துக் கொண்டிருப்பது ஒரு மொழிபெயர்ப்பு நாவல் என்பதை மறக்கடித்துவிட்டது.

பிரெஞ்சு  கலாச்சாரம்  வலுவாக  ஊடுருவிய ரஷ்ய  உயர்குடியை பகடி செய்தவாறே நெப்போலியனுக்கு எதிராக  ரஷ்யா  நடத்தப்  போகும்  போருக்கான ஆயத்தங்களுடனும் போரில் கலந்து கொள்ளக் கூடிய உயர்  வகுப்பு இளைஞர்களுடனும் அவர்களின்  குடும்பங்களுடனும் தொடங்குகிறது. பீயரும் பால்கோன்ஸ்கிகளும் ராஸ்டோவ்களும் குராகின்களும் டோலாகாவும் விருந்துகளின் வழியாகவும் உரையாடல்கள்  வழியாகவும் அறிமுகமாகின்றனர். அவர்கள்  குறித்த  ஒரு சித்திரம் உருவான பின்பு போர் நோக்கி  நகர்கிறது.

இரண்டு  படைப்பிரிவுகளாக பிரிந்து நின்று  சண்டையிடும் வகைப்  போர்களையே உருவகப் படுத்தியிருந்த மனதிற்கு  டால்ஸ்டாய்  அறிமுகம்  செய்யும்  போர்க்களம் அதிர்ச்சி  தரவே செய்கிறது. தளபதியின்  கட்டுப்பாட்டில் அனைத்தும்  இருப்பதாக  நம்பும்  ஆண்ட்ரூ யுத்தம்  செல்லும்  போக்கிற்கு ஏற்றவாறு  பாக்ரேஷன் அளிக்கும்  உத்தரவுகளை  கண்டு ஆச்சரியம்  கொள்வதும் இளமைத் துடிப்பில் முன்னேறி காயம்படும் நிக்கலஸ் ஒற்றை பீரங்கிப் படையுடன்  எதிர்த்து நிற்கும்  டூஷின் வீரத்துடன்  சண்டையிட்டு போரின் அன்றைய  நாள் முடியும்  போது தாங்கள்  கைப்பற்றிய பதக்கங்களுடனும் உடுப்புகளுடனும் பதவி உயர்வுக்காக கெஞ்சும்  வீரர்கள்  என போர் குறித்த ஒவ்வொரு  பிம்பத்தையும் சிதறடிக்கிறது முதற் போர்களம்.

மேலும்  நடக்காதவற்றை  நடந்ததாக  நம்பி அதனையே உண்மையாக ஏற்று அதை மேலு‌ம்  பெருக்கிச் சொல்லுவதையும் நுண்மையாக  பகடி செய்கிறது.

சார் மன்னர் அலெக்சாண்டரை ஒரு பரிதாபமான  சூழலில்  நிக்கலஸ்  பார்ப்பதும்  மனோகரமான இயற்கைக்கு முன் அதுவரை  பேருருவமாக ஆண்ட்ரூ  மதித்த  நெப்போலியன் சிறுத்துப் போவதும் மனதில்  எஞ்சியிருந்த பிம்பங்கள் குறித்த கற்பனையையும்  இல்லாமல்  ஆக்குகின்றன.

ஒவ்வொருவர் மீதும்  அன்பு பொழியும் சிறுமியாக அறிமுகமாகும் நட்டாஷா போரிஸின் விலகலை உணர்ந்து  வருந்தாததும் டெனைசாவிற்காக அவள் அம்மாவிடம் குழப்பத்தோடு வருந்துவதும் நடன அரங்கில்  முதலில்  தனித்து  விடப்பட்டு பின் அனைவர்  மனதையும்  ஈர்ப்பதும் ஆண்ட்ரூவிடம் காதல்  கொள்வதும்  என உற்சாகம்  மிக்கவளாய் வலம் வருகிறாள். ஆண்ட்ரூவின் குடும்பத்தை சந்தித்த பிறகு  மாஸ்கோ நாடக  அரங்கில்  அனடோலினால் நட்டாஷாவின் மனதினுள் நடப்பதை நாடகம்  வழியாகவே நுண்மையாக  விவரிப்பது  அவளைப் போலவே பரிதவிக்கச் செய்கிறது.

நிக்கலஸ்  பால்கோன்ஸ்கி மேரியின்  மீதான  அன்பை  எரிச்சலாகவே  வெளிப்படுத்துவதும் லிசா இறக்கும்  சமயத்தில்   ஆண்ட்ரூ  அவளைப் பார்ப்பதும்  நிக்கலஸ்  ராஸ்டோவை போர்  முடிந்து வரும்போது அவர் குடும்பம்  வரவேற்பதும் வெவ்வேறு  வகையான  தொடர்பே இல்லாத  உணர்வுகளை  தோற்றுவிக்கின்றன.

பீயரின் ஆன்மீக  மலர்ச்சி உத்வேகமும்  நம்பிக்கையும் தருகிறது. பீயர் ப்ரீமேசன் சங்கத்தில்  சேர்ந்து  நன்மை செய்வதாக நினைத்து  பணத்தை வாரி இறைக்கும்  போது  அது போல் அல்லாமல் ஆண்ட்ரூ  தன் அடிமைகளை விடுதலை செய்வதற்கு முன்  அவர் சிறுத்துப் போகிறார். ஆனால்  அதன் பிறகு  மற்ற பிரபுக்கள்  போருக்கு நிதியும்  ஆட்களும் தருவதாகக் கூறிய  பிறகு ஏன் அவ்வாறு  கூறினோம் எனத் தவிக்கும்  போது ஆட்களும்  நிதியும்  தந்ததோடு போர்  முனையில்  சிறுவனைப் போல்  ஆர்வத்துடன்  நிற்பதும்  பிரெஞ்சு  ராணுவத்தால்  கைது  செய்யப்பட்டு  வதைபடுவதும் பிளாட்டோனின் கள்ளமற்ற தன்மையை வியப்பதும் வதைகளின் ஊடாகவே தன்னுடைய  மகிழ்ச்சியைக்  கண்டு கொள்வதும் என அவர்  ஒவ்வொரு  படியாக  மேலேறுகிறார். சோரபுத்திரனாக அறிமுகமாவது தைரியமும்  பெருந்தன்மை உடையவராக எளிதில்  மனம்  இரங்குவது பெரிய  உருவம் பெற்றவராக இருப்பது  என பீயர்  அடிக்கடி  கர்ணனை நினைவுறுத்துகிறார்.

அனடோலினைப் பற்றி அறிந்த பிறகு  ஆண்ட்ரூவை நட்டாஷா விலகிய பின் பீயருக்கு அவள் மீது தோன்றும்  அன்பினை வெளிப்படுத்தும் இடம் உச்சம்.

ஆஸ்டர்லிட்ஜில் தோற்ற பின்  நெப்போலியனுடன் அலெக்சாண்டர்  சமாதானம்  செய்து கொள்கிறார். மீண்டும்  ஸ்மாலென்ஸ்கை நெப்போலியன் கைப்பற்றுவதும் அது நடைபெறும்  விதமும்  மாஸ்கோ வரை ரஷ்யத்  துருப்புகள்  கைப்பற்றுவதும் “திட்டங்கள்”  வழியாக அல்லாமல்  அவற்றை மீறிய  ஒன்றினால்  என்பது தெளிவாகிறது. ஒரு சக்ரவர்த்திக்கு ஜலதோஷம் பிடிப்பது  போரில்  தோற்பதற்கு காரணமாக முடியாது  என்பதை  விலக்குவதன் வழியாக காரணமறிய முடியாத  விசித்திரமான  சரித்திரப் போக்குகளை டால்ஸ்டாய்  விளக்குகிறார்.

மாஸ்கோவிற்குள் நெப்போலியன் “வெற்றி விஜயம்” செய்யும்  போது அது காலியாக இருப்பதைக்  கண்டு அடையும்  ஏமாற்றத்தை கிண்டல்  செய்கிறார். ரஷ்யத்  தளபதியான  குட்டுஜோவ் போரினை நடத்திச்  செல்லும்  விதத்தை விளக்கும் இடங்கள்  பிரமிக்க வைக்கின்றன. சிதறிய ராணுவ  வீரர்களும்  பொது மக்களும் கைவிடப்பட்ட  ஒரு நகரத்தில்  எவ்வகையான மனநிலையில்  இருப்பார்கள்  என்பதற்கு  ராஸ்டாப்சைன் பிரச்சினையை திசை திருப்புவதற்காக ஒரு குற்றவாளியை மக்களே  தண்டிக்கட்டும் என விடும்  போது நடைபெறுபவையே உதாரணம்.

ஆறு லட்சம்  பிரெஞ்சு  வீரர்களும் அதே அளவில் ரஷ்ய வீரர்களும்  பங்கேற்கும்  யுத்தம்  நடக்கிறது.  ஒரு மாநகர்  கைவிடப்படுகிறது . மக்கள்  இடம்  பெயர்கிறார்கள். இவ்வளவு  நடக்கும்  போதும்  எதையும்  வியக்காமலும் பரிதாபப்படாமலும் அந்த நாவல் சென்று கொண்டிருக்கிறது. ப்ளாட்டோன்  மீது பீயர்  எவ்வளவு  அன்பு  கொண்ட போதிலும் அவனுக்கு  ஏற்படும்  காய்ச்சல்  கடுமையான  போர்ச் சூழலில்  தனக்கு தொற்றிவிடக் கூடாது  என்பதில்  கவனம்  கொள்கிறார் என்பது  போன்ற  சித்தரிப்புகள் வழியாகவே  எந்த  உறவும்  அதீத  நாடகத்  தன்மையை  தொட்டு விடுவதைத் தவிர்க்கிறார். கைவிடப்ட்ட மாஸ்கோவை விட்டு பிரெஞ்சு  துருப்புகள்  ஓடுவதும் அவர்களை ரஷ்யத்  துருப்புகள்  விரட்டுவதும் யார் கட்டுப்பாடுமின்றி நிகழ்பவை என்பதை  குட்டுஜோவ்  ஒருவரே அறிந்திருக்கிறார். பிரெஞ்சு  ராணுவம்  சிதைந்து  வெளியேறுகிறது.

ஆண்ட்ரூவின்  இறுதி நாட்களை மேரியும் நட்டாஷாவும் கடந்து  செல்வதும் நிக்கலஸ்  மேரியை திருமணம்  செய்த பின்னர்  சோனியாவின் நிலை அவள் வழியாக  சொல்லப்படாததும் அமைதியின்மையை விளைவிக்கின்றன.

சிலரை  ஆங்காங்கே  டால்ஸ்டாய்  விட்டுவிடுகிறார். ஜூலி போரிஸின் காதலை நுண்மையாக  பகடி செய்த பின் அனடோலை ஆண்ட்ரூ  மரணத்  தருவாயில்  பார்த்த பின்  அவர்கள்  அப்படியே  விடப்படுகின்றனர். ஹெலனுடைய இறப்பு ஒரு செய்தியாக  மட்டுமே  ஒலிக்கிறது. தேடலற்றவர்களை ஒழுக்கக் குறைவு உடையவர்களை அவர் பொருட்டாக எடுத்துக்  கொள்வதில்லை போலும். பீயரின்  மலர்வாகவே நாவல் நிறைவடைகிறது.

நிக்கலஸ்  ராஸ்டோவ் இறந்த  அவர் மாமனாரைப் போன்று மாறுகிறார். நட்டாஷா  அன்பும்  கண்டிப்பும்  நிறைந்து அன்னையாகிறாள். கொந்தளிப்பும் குழப்பங்களும் இலட்சியங்களும் நிறைந்த இளமை முடிந்து  அடுத்த தலைமுறை  எழுவதோடு நிறைவடைகிறது.

அதன்பின்  பின்னுரையாக விளக்கப்பட்டுள்ள சரித்திரத்தின் போக்குகள் அதுவரை  நிகழ்ந்தவற்றை தொகுக்க முயலாமல்  தீர்ப்பு  கூறாமல்  சம்பவத் தொடர்களின் வழியாக  தன்னிச்சையாக  ஒரு பெருநிகழ்வு நிகழ்ந்து விடுவதை உணர்த்துகின்றன. சரித்திரத்தில்  வாழ்ந்த அனுபவம் போரும்  வாழ்வும். இன்னும்  நிறைய  எழுதத்  தோன்றுகிறது. எழுத எழுத  ஒவ்வொருவரும்  விரிவடைகிறார்கள். சிரமப்பட்டு  நிறுத்துகிறேன்.

அன்புடன்

சுரேஷ்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வாழும் கணங்கள்

$
0
0

 

 

Tamil_News_large_696867

ரயிலில் ஒருவர் கூடவே பயணம் செய்தார். என்னைப்பற்றி விசாரித்தார். நான் எழுத்தாளன் என்று பொதுவாகச் சொல்லிக்கொள்வதில்லை, உடனே எழுத்தாளன் என்றால் யார், அவனுக்குப் பொதுவாகத் தமிழில் என்ன வருமானம் வரும், அவன் எப்படி முதல்வகுப்பு அறையில் பயணம்செய்யக்கூடியவனாக ஆனான், எல்லாவற்றையும் நான் விளக்கியாகவேண்டியிருக்கும். ’பிஸினஸ் செய்கிறேன்’ என்று மட்டும் சுருக்கமாகச் சொல்வேன். ‘என்ன பிஸினஸ்?’ என்று கேட்டால் ‘கொடுக்கல்வாங்கல்’ என்று சொல்வேன். உண்மையில் இந்த வார்த்தைக்குச் சரியான அர்த்தம் என்ன என்று எனக்கு இன்றுவரை தெரியாது. ஆனால் அதைக்கேட்டதுமே எதிர்த்தரப்பு அனேகமாக மௌனமாகிவிடும்.

ஆனால் இந்த நபர் அங்கே நிற்கவில்லை. என் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். ’உங்கள எங்கியோ பாத்திருக்கேனே?’ என்றார். ’கேரளாவிலே இருந்தீங்களோ?’ என்றார். ஒரே கணம் யோசித்து ‘ஆ, உங்க படத்தை மாத்ருபூமியிலே பாத்தேன்’ என்றார். என் அனுபவமென்னவென்றால் பொதுவாக அச்சிட்டபடங்களை வைத்து அதிகம்பேர் மனிதர்களை நேரில் அடையாளம் கண்டுகொள்வதில்லை.ஒரேமுறை தொலைக்காட்சியில் வந்தால் போதும் சிக்கல். நான் கூடுமானவரை தொலைக்காட்சியைத் தவிர்ப்பேன்.

’நீங்க தமிழ் எழுத்தாளர் இல்லியா சார்? ஜெயமோகன்னு பேரு..இல்லசார்? கிளாட் டு மீட் யூ’ . ஆச்சரியம்தான். வாசகர் போலிருக்கிறது. ’வாசிப்பீங்களா?’ என்றேன். ‘எங்க சார்? அதுக்கெல்லாம் நேரமே இல்ல.நான் மார்க்கெட்டிங்லே இருக்கேன்…என்னோட வேல ராத்திரி ஒரு ஒம்பது மணிக்கு முடியும். உடனே ஒரு லார்ஜ் போட்டுட்டு அப்டியே தூங்கிடறதுதான்…நியூஸ்பேப்பர் மட்டும்தான் வாசிப்பேன்’ எனக்குப் புரியவில்லை. ‘எர்ணாகுளத்திலே என் ஓட்டல் லௌஞ்சிலே மாத்ருபூமி பத்திரிகை கெடந்தது. எனக்கு மலையாளம் கொஞ்சம் தெரியும். புரட்டிப்பாத்தேன். உங்க படம் இருந்தது. நாலஞ்சு வரி வாசிச்சுப் பாத்தேன்…’

சிரித்துக்கொண்டு ‘என்ன எழுதியிருந்திச்சுன்னு ஞாபகமில்ல சார். படமும் பேரும் மட்டும் பதிஞ்சிட்டுது..அது என்னோட கிஃப்ட். எனக்கு மனுஷ முகமும் பேரும் மட்டும் எப்பமுமே மறக்கிறதில்லை…’ நான் ‘அப்படியா?’ என்றேன் மையமாக. ‘நான் ஆரம்பத்திலே பலவேலைகள் செஞ்சிருக்கேன். செய்யாத வேல கெடையாது. எவ்ளவு தொழில் செஞ்சிருப்பேன்னு நினைக்கிறீங்க?’ நான் வேடிக்கையாக ‘அம்பது?’ என்றேன் ‘இருக்கும்சார் ,அம்பது இருக்கும்’ என்றார் ஆவலாக.

‘படிப்பு வரலை சார்…எஸ்எஸ்எல்சியோட சரி. அந்தக்காலத்திலே எவன் வேலைகுடுக்கான்? திண்ணவேலியில மளிகைக்கடையிலே நின்னேன். நானே சின்னதா மளிகைக்கடைவச்சேன். என்னென்னமோ செஞ்சிருக்கேன். தியேட்டர் முன்னால பிளாஸ்டிக் செருப்பு வித்திருக்கேன். கேரளாவிலே வட்டிக்குப் பணம் விட்டிருக்கேன். முந்திரிக்கொட்டை வாங்கிக் கடையிலே போட்டிருக்கேன். ஒண்ணுமே வெளங்கல்லை. நல்லவேள நமக்குப் பெரிய குடும்பம் கெடையாது. அம்மா மட்டும்தான்… ஒருகட்டத்திலே வெக்ஸ் ஆயிட்டேன். இனிமே நமக்குத் தொழில் கதியில்லேன்னு ஒரு ஓட்டலிலே கணக்கு எளுதினேன். அங்கயும் மரியாதையா வேலைசெய்யமுடியலை சார். கணக்கு தப்புன்னு அனுப்பிட்டாரு ரெட்டியாரு.

’சரீன்னு நேரா குருவாயூர் போய்ட்டேன். என்னத்துக்கு போனேன்னா, தற்கொலைக்குத்தான். போய் ஒரு சின்ன ரூமைப்போட்டுட்டு ராத்திரி வரை படுத்தே கெடந்தேன்.ராத்திரி கெளம்பி ரோட்டிலே நடந்து போனேன். எதுத்தாப்ல ஒருத்தரைப் பார்த்தேன். தூரத்துச் சொந்தக்காரரு. அப்பாவோட மச்சினன் மொறை. பரமக்குடியிலே இருக்கிறவரு. எனக்குத் தெரிஞ்சவங்கள பாத்தாலே மனசு நெறைஞ்சு ஒரு சிரிப்பு வந்திரும்சார். ‘மாமா நல்லா இருக்கேளா’ன்னு கேட்டுட்டேன் ‘தம்பி ஆரு’ன்னு அவரு கேக்காரு…பாத்து முப்பத்தாறு வருசமாயிருக்கு. நான் எங்கப்பா பேரைச்சொன்னேன். அவரோட பேரையும் வீட்டையும் எல்லாத்தையும் சொன்னேன்…அடடான்னு கட்டிப்புடிச்சாரு…என் நெலைமைய சொன்னேன். நீ என் கூட வான்னு கூட்டிட்டு போனாரு’

‘அவருகூட சில்லறை வேலைகள் செஞ்சுட்டு ஒரு வருஷம் இருந்தேன்… அவரு ஊரூரா போய் வத்தல் மல்லி மொளகா மொத்தமாப் புடிப்பாரு. அதைக் கேரளாவுக்கு ஏத்தி அனுப்புவாரு. நான் கணக்குப்புள்ள. அவருக்கு டூவீலர் ஆக்ஸிடெண்ட் ஆகிப் படுத்திட்டார்.எங்கிட்ட அவருக்குப்பதிலா போகச்சொன்னார். எனக்கானா அப்டி ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெஸ் சார். ஆளு கறுப்பா இருக்கேன். பேச்சும் சரியா வராது. மனுஷங்க கிட்ட பேசிக் கவுக்கிறதுக்குண்டான சாமர்த்தியமும் கெடையாது…மாட்டேன்னு சொன்னேன். கோவிச்சுகிட்டார். வேற வழியே தெரியல்லை…சரீன்னு கெளம்பிட்டேன்.

‘’சொல்லப்போனா ஒரு மூணுநாளு ஒருத்தரையுமே பாக்கலை. மஞ்சப்பையோட கெளம்பிப் போறது வெயிலிலே சுத்தி நாலெஞ்செடத்திலே டீயக்குடிச்சிட்டுத் திரும்பி வர்ரது. இதான்… ஒண்ணுமே ஓடலை. எங்கேயாவது ஓடிப்போய்டலாம்னு ஒரு நெனைப்பு…அதுக்கும் தைரியமில்லை…அப்டியே போய்ட்டிருக்கு சார்…அப்ப ஒருநாள் ரோட்டிலே ஒருத்தர பாத்தேன். பாத்ததுமே ஆளைத்தெரிஞ்சுகிட்டு ‘என்ன மாமா நல்லாருக்கேளா’ன்னு கேட்டேன். அவருக்கு நம்மளத் தெரியல. பழைய மளிகைக்கடைக்கு வார ஆளு. நான் அவரப்பத்தி சொன்னதும் ‘ஏலே மறக்காம வச்சிருக்கியே’ன்னு சொல்லி டீ குடிக்கக் கூப்பிட்டார். டீ குடிச்சுட்டிருக்கிறப்ப அவரே என்ன செய்றேன்னு கேட்டார். சொன்னேன். ‘டேய் நான் மல்லி வச்சிருக்கேண்டா…நீ வெலையச்சொல்லு குடுக்கறேன்’னார்

‘என்ன சொல்றது? ரொம்ப சகாயவெலைக்கு நாப்பதுமூட்ட மல்லியோட திரும்பிவந்தேன். அன்னைக்கு நில கொள்ளல்ல. துள்ளலா இருக்கு. நேரா கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டேன். சுத்திட்டு வர்ரப்ப ஒரு வெளிச்சம் மாதரி தெரிஞ்சுது சார். நம்ம கிட்ட ஒரு தனித்தெறம இருக்கு. நமக்கு மனுஷங்கள மறக்கிறதே கெடையாது. இந்த ரயிலிலே ஒருத்தர ஒருவாட்டி பாத்து ஹலோ சொல்லிட்டேன்னா ஆயுசுக்கும் அவரையும் அவரப்பத்தின எல்லா டீட்டெயிலையும் மனசுக்குள்ள வச்சுக்கிடுவேன்

‘அது சாதாரண விஷயம் கெடையாது…நாட்டிலே பெரும்பாலும் சனங்களுக்கு மத்தமனுஷங்க முகம் ஞாபகத்திலே நிக்காது சார். அவனவன் தன்னைப்பத்தியே தான் நினைச்சுட்டிருக்கிறான் பாருங்க. நான் ஆரைப்பாத்தாலும் என்னையறியாமலேயே சிரிச்சு வணக்கம் சொல்லி மாமா சித்தப்பான்னு கூப்பிட்டு எல்லா விசயமும் கேட்டிருவேன். சின்னவயசுப் பழக்கம். அந்தத் தெறம இருக்கக்கொண்டுதானே நான் குருவாயூரிலே சாவாம தப்பினேன். அதனாலத்தானே இப்ப வியாபாரம் அமைஞ்சுது.

’அப்ப ஆரம்பிச்சேன் சார். நம்ம ஏரியா சேல்ஸுன்னு தெரிஞ்சுது. முதலு போடுறது, வாங்கி விக்கிறது, கணக்கு வச்சுகிடுறது ஒண்ணும் நமக்கு ஒத்துவராது. ஆனா மனுஷங்க கிட்ட பழக முடியும். இந்த மண்டைக்குள்ள ஒரு லெச்சம்பேருக்க முகமும் அட்ரஸும் மத்த விசயங்களும் இருக்கு… தொண்ணித்தி ஒம்பதிலே ஆடர் புடிச்சுக் குடுக்கிற வேலைய ஆரம்பிச்சேன். ‘தனா சேல்ஸ் செர்வீஸஸ்’னு பேரு. எல்லாத்துக்கும் ஆர்டர் புடிச்சுக் குடுப்பேன்…நாலஞ்சு பயக இருக்கானுக. ஆனா நான்தான் மெயின்… ராத்தூக்கம் ரயிலிலேன்னு வச்சுக்கிடுங்க…ஆனா இப்பம் நாலஞ்சுகோடி தேத்திட்டேன் சார்’

ஆச்சரியமாக இருந்தது. கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கேட்டேன் ‘சரியா எப்ப உங்களுக்கு இந்த நினைப்பு வந்தது? அதாவது உங்க ஒரிஜினல் திறமை இதுன்னு எப்ப தோணிச்சு’ ‘கோயிலிலே சார்’ ‘ஆமா…ஆனா கோயிலிலே எப்ப? என்ன செஞ்சுட்டிருந்தப்ப?’ அவர் முகம் மலர்ந்து ’அதுகூட நல்லா ஞாபகமிருக்கு சார். சுத்தி வர்ரப்ப ஒரு செலையப் பார்த்ததும் என்னமோ அது என் மாணிக்கமாமா முகம் மாதிரின்னு ஞாபகம் வந்தது. சிரிச்சுக்கிட்டேன். உடனே இப்டித் தோணிச்சுது’

‘அதுதான் ஜென் தருணம்னு சொல்றாங்க’ என்றேன். ‘அப்டீன்னா?’ ‘கடவுள் நமக்கு ஞானத்தைக் குடுக்கிறது கொஞ்சம் கொஞ்சமா இல்ல…சட்டுன்னு ஒரு நிமிஷத்திலே அப்டியே வாசலத் தெறந்திடுறார். அந்த வாசலை நாம தட்டிக்கிட்டே இருக்கலாம். சிலசமயம் ஆயுசுபூராக்கூடத் தட்டலாம். ஆனா நினைச்சிருக்காத நேரத்திலே சட்டுன்னு அது தெறந்திருது…’ ‘ஆமாசார்…நான் இப்பமும் மாசம் ஒண்ணாம்தேதி திருச்செந்தூரு போய்டறது’ என்றார்.

அறிதல் என்று நாம் சாதாரணமாகச் சொல்கிறோம். ஆனால் தெரிந்துகொள்ளுதலுக்கும் அறிதலுக்கும் நிறைய வேறுபாடுண்டு. தெரிந்து கொள்ளுதல் நம் அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக நடந்துகொண்டே இருக்கிறது. நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ளும்போது நம்மிடம் ஒரு தகவல் அல்லது ஒரு அனுபவம் வந்து சேர்கிறது. சிலசமயம் நமக்கு அது பயன்படுகிறது. பெரும்பாலும் பயன்படுவதில்லை. நம்மிடம் வந்துசேரும் விஷயங்களில் பெரும்பாலானவை நம்மிடமிருந்து உதிர்ந்து விடுகின்றன. நல்லவேளை, அப்படி அவை உதிர்வதனால்தான் நாம் மனச்சமநிலையுடன் இருக்கமுடிகிறது.

என்னென்ன விஷயங்கள் வந்துசேர்கின்றன! முருங்கைக்காயில் இரும்புச்சத்து இருக்கிறது, வீட்டுக்கடனைத் தனியார் வங்கியில் வாங்கினால் கூட்டுவட்டி போடுவார்கள், பெங்களூர் சென்னை ரயிலுக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் என்று பெயர்….தகவல்களைத் தெரிந்துகொண்டே இருக்கிறோம். தகவல்கள் வழியாக நாம் சென்றுகொண்டே இருக்கிறோம். இல்லையேல் தகவல் நம் வழியாக சென்றுகொண்டே இருக்கிறது. பலவருடங்களாக நாம் வார இதழ்களை வாசிக்கிறோம். சென்ற இதழ் விகடனில் என்ன இருந்தது சொல்லுங்கள் பார்க்கலாம்.

நம்முடைய கல்வி என்பதே தெரிந்துகொள்வதைத்தான் நடைமுறைப்படுத்துகிறது. தகவல்களை நம்மீது இருபது வருடங்கள் வரை கொட்டிக்கொண்டே இருக்கிறது அது. இருபத்தைந்து வயதில் நாம் கல்விமுடித்து வாழ்க்கையை எதிர்கொள்ளும்போதுதான் அனேகமாக முதல் அறிதல் நிகழ்கிறது. ‘நாம் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை’; என்ற அறிதல்!

அறிதல் என்பது வேறு. தெரிந்துகொள்ளுதல் என்பது எப்போதுமே ஒரு துண்டு அறிவைத்தான். அறிதல் என்பது ஒரு முழு அறிவை. எல்லா அறிதலும் நம்மை அறிவதுதான். நம்மைச்சுற்றி உள்ள உலகை நாம் அறிவதும்கூட நம்மை அறிந்துகொள்ளுதல்தான் இல்லையா?

அறிதலை எப்படி வகுத்துக்கொள்வது? தெரிந்துகொள்ளும் விஷயங்களில் இருந்து அதைப் பிரித்துப்பார்ப்பதன்மூலம்தான்.தெரிந்துகொள்ளும் விஷயங்களில் நமக்குப் பயனற்றவை உள்ளன. ஆனால் அறிந்துகொள்ளும் விஷயங்களில் பயனற்றவையே இல்லை.

தெரிந்துகொள்ளும்போது சலிப்பும் சோர்வும் உண்டு. நம் கல்விக்கூட வகுப்புகள் பெரும்பாலும் அப்படித்தான். ஆனால் அறிந்துகொள்ளுதல் ஒருபோதும் சோர்வோ சலிப்போ அளிப்பதில்லை. சொல்லப்போனால் மனித வாழ்க்கையிலேயே உச்சகட்ட இன்பம் என்றால் அறிதலின் இன்பம்தான். ஆகவேதான் உண்மையான குரு சீடனுக்கு அளிக்கும் ஆனந்தத்தை வேறெந்த மனிதரும் அளிப்பதில்லை என நம் மரபு சொல்கிறது.

சிலசமயம் அறிதலின் அந்த முகாந்திரம் வேதனை மிக்கதாக இருக்கும். பெரும் இழப்புகள் வழியாக பெரும் அவமதிப்புகள் வழியாக உச்சகட்ட துயரங்கள் வழியாக நம் அறிதலின் கணங்கள் நிகழக்கூடும். அப்போது அது கடினமாகவே இருக்கும். ஆனால் நாம் வாழ்நாளெல்லாம் அந்தத் தருணங்களை நினைவில் கொண்டிருப்போம். அதையே சொல்லிக்கொண்டிருப்போம். மீளமீள நினைக்க ஆசைப்படுவோம். அப்போது ஒன்று தெரியும், நாம் உள்ளூர அந்த அறிதலின் கணத்தை விரும்பவும் செய்கிறோம். உண்மையிலே நாம் விரும்பாத ஒன்றை நாம் பிறகு நினைக்கவே மாட்டோம். அப்படி அந்த எதிர்மறை விஷயங்களையும் நம்மை ரசிக்கச்செய்வது எது? அப்போது நிகழும் அந்த அறிதலில் மாயம்தான்.

தெரிந்துகொள்ளுதல் நம் நினைவை நிரப்புகிறது. அறிதல் அப்படி அல்ல. அது நம் ஆளுமையை மாற்றியமைக்கிறது. ஒன்றைத் தெரிந்துகொண்டதுமே நாம் மாறிவிடுகிறோம். அதற்கு முன்பிருந்த நாம் அல்ல அதற்குப்பின். அதற்குமுன் இருந்த உலகம் அல்ல அதற்குப்பின்.

நாம் மானசீகமாக வளர்வதே அறிதலின் மூலம்தான். நாம் ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக வளர்வதில்லை, ஒவ்வொரு அறிதல் அறிதலாக வளர்கிறோம். நாம் வளர்வதை எப்படி உணர்வதில்லையோ அப்படித்தான் நாம் அறிவதையும் பெரும்பாலும் உணர்வதில்லை. இருபது வயதில் உங்களுக்கு உறவுகளைப்பற்றி என்ன எண்ணம் இருந்தது , இப்போது என்ன இருக்கிறது என்று மட்டும் பாருங்கள். ஒரு பெரிய அறிதல் நிகழ்ந்திருக்கிறது. அந்த அறிதல் வழியாக நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள்.

ஆனால் அந்த அறிதல் எப்போது நிகழ்ந்தது என்று உங்களால் வகுத்துக்கொள்ள முடியுமா? பலசமயம் நாம் நினைப்போம், அந்த அறிதல் படிப்படியாக, கிணற்றில் நீர் ஊறி நிறைவது போல கொஞ்சம் கொஞ்சமாக ஊறியது என்று. ஆனால் நம்மை நாமே கூர்ந்து நோக்கும் வழக்கம் நமக்கிருந்தால் , நம்முள் என்ன நிகழ்கிறதென்பதை நாம் கவனித்திருந்தால், ஒன்று தெரியும் அந்த அறிதல் ஒரு விதை மரமாவது போல நம்முள் வளர்ந்து வந்த ஒன்று என.

அந்த விதை நம்முள் விழுந்த கணம்தான் அறிதலின் கணம். அதன் மேல் நாம் நம் கற்பனையை நீராக ஊற்றுகிறோம். நம்முடைய சிந்தனைகளை உரமாகப் போடுகிறோம். நம்முடைய தர்க்கத்தால் வேலி கட்டுகிறோம். அது நம்முள் மரமாக ஆகிறது. அந்த விதை விழுந்த கணத்தை நம்மால் கொஞ்சம் கவனித்தால் கண்டுபிடிக்கமுடியும். அத்தகைய கணங்களே வாழும் கணங்கள். நாம் மிக முக்கியமாக நினைத்து மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கும் கணங்கள். நாம் அறிதலின் பரவசத்தை அடைந்த கணங்கள்.

சிலசமயம் சில தருணங்கள் ஓர் அர்த்தமும் இல்லாமல் நம் நினைவில் கிடக்கும். ஏனென்றே தெரியாது. சும்மா ஒருமுறை சேர்மாதேவி போய் பேருந்து நிலையத்திலே நின்றுகொண்டிருக்கும்போது ஒருவர் வெள்ளரிக்காய் வேணுமா என்று கேட்ட தருணமாக இருக்கும். ஆனால் கவனியுங்கள் அங்கே நாமறியாத ஏதோ ஓர் அறிதலை நம் ஆழ்மனம் அடைந்திருக்கும். நமக்குள் உள்ள சிப்பி வாய்திறந்து ஒரு மணலை உண்டிருக்கும். அது அங்கே முத்தாக ஆகிவிட்டிருக்கிறது

அறிதல் என்பது ஒரு மாயக்கணத்தில் நிகழ்கிறது. அதன் சாத்தியங்கள் எல்லையே இல்லாதவை. சட்டென்று நம் மலர்ந்து விடுகிறோம். சட்டென்று உலகம் தெளிவாகி விடுகிறது. சட்டென்று சத்தங்கள் சங்கீதமாகிவிடுகின்றன. சட்டென்று நிறங்கள் ஓவியமாகிவிடுகின்றன

பூதப்பாண்டி கோயிலில் நின்று பின்னால் பார்த்தால் ஒரு மலை தெரியும். அது தாடகை மலை என்று சொல்வார் ஒருவர். எது கூந்தல் எது மூக்கு நுனி எது மார்பகம் எது இடுப்பு என்று சுட்டிக்காட்டுவார். சட்டென்று மல்லாந்து படுத்திருக்கும் பேருருவம் கண்ணுக்குத்தெரியும். அதன்பின் அதை நம்மால் மலை என பார்க்கமுடியாது. அது அரக்கிவடிவமாகவே தெரியும். அதுதான் அறிதலின் கணம்.

அறிதல் எனபதை வெவ்வேறு வகையாக விளக்கமுயன்றிருக்கிறார்கள் இந்திய ஞான மரபில். ஓஷோ,அறிதல் என்பது கடந்துசெல்லுதலே என்கிறார். அறிதல் என்பது எப்போதுமே ஒருகணம். அது நிகழ்ந்ததுமே நாம் அதைகடந்து வந்துவிட்டோம். அந்த அறிதலால் ஆன ஓர் உலகில் வாழ ஆரம்பித்துவிட்டோம். ஆகவே ஒன்றைகடந்துசெல்வது என்பது அதை அறிதலே என்கிறார்

தொன்மையான கருத்து. அந்தி இருளில் சுருண்டுகிடக்கும் கயிறை பாம்பு என நினைக்கிறோம். அந்த பாம்பை நாம் கடந்து செல்ல ஒரே வழிதான், அது கயிறென அறிதல். அத்வைதத்தின் முக்தி என்பதே அறிதல்தான். முழுமையான அறிதலின் மூலம் அடையும் விடுதலை.

அறிதல் நிகழும் கணத்தை அறிவும் அறிபடுபொருளும் அறிபவனும் ஒன்றாக ஆகும் கணம் என்கிறார் நாராயணகுரு. அதை அறிவிலமர்தல் என்கிறார். ஆம், அந்தக் கணத்தில் அந்த அறிவு நாமே ஆகிவிடுகிறது. நாம் அந்த அறிவே ஆகிவிடுகிறோம். நாம் அறியும் அந்த உச்ச பரவச கணத்தில் நாம் இருப்பதே நமக்குத் தெரிவதில்லை. அந்த அறிதல் மட்டுமே நமக்குத்தெரிகிறது. அதைத்தான் நாம் மெய்மறத்தல் என்று சொல்கிறோம்

ஏன் அப்படி நிகழ்கிறது? நாம் என நம்மைப்பற்றி சொல்கிறோமே அந்த சுயம் என்பது என்ன? நாம் இதுவரை அடைந்த அறிதல்களின் தொகை அல்லவா? ஆறுமாதத்தில் பாப்பா எங்கே என்று அம்மா கேட்கும்போது குதூகலமாக சொந்த குட்டித்தொப்பையில் தட்டி எம்பி எம்பி குதிக்கிறோமே அந்த முதல் அறிதல் முதல் எத்தனையோ அறிதல்களால் ஆனது நம் சுயம். நாம் ஒன்றை அறியும்போது நாம் என நாம் வகுத்திருக்கும் இந்த சுயம் உடைபடுகிறது. அந்த அறிவை உள்ளிழுத்து அந்த சுயம் இன்னொரு வடிவத்தை அடைகிறது.

நம்முடைய ஒரு வாழ்க்கையில் சாதாரணமாக அப்படி எத்தனை அறிதல்கள் நமக்கு நிகழமுடியும்? மிக சாகசத்தனமாக வாழ்பவர்களுக்குக் கூட வாழ்க்கையனுபவங்கள் என்பவை மிகமிகச் சிலவே. மற்றவர்களுக்கு என்ன பெரிய வாழ்க்கை? சின்னவயசில் எல்கெஜி யுகெஜி எனப் பள்ளிக்கூடம். கோடைவிடுமுறையில் கொஞ்சம் கிரிக்கெட். பிளஸ்டூ பரீட்சை. காலேஜ் தேர்வுகள். வேலை. ஒருபெண்ணைப்பார்த்துக் காதல் கல்யாணம்,குழந்தைகுட்டி, லோன்போட்டு ஒரு வீடு,பிள்ளைகளுக்குக் கல்யாணம் ஓய்வு,கிருஷ்ணா ராமா……அவ்வளவுதான்.

நாம் அறிதல்களை நோக்கி நம்மைத் திறந்து வைப்பதே இல்லை. நாம் நம்மைச்சுற்றி ஒரு வேலி கட்டியிருக்கிறோம். அது நம்மை ஆபத்துகளில் இருந்து காக்கிறது என்று நினைக்கிறோம். உண்மையில் அது நம்மை அறிதல்களில் இருந்து தடுக்கிறது. நாம் நிச்சயமின்மையை அஞ்சி அறிதல்களே இல்லாத வழக்கமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நம்மை ஒரு வாழ்க்கைக்குள் பல வாழ்க்கை வாழச்செய்கிறது இலக்கியம். நாம் செல்லாத இடங்களுக்கு நம்மைக் கற்பனைமூலம் செல்லச்செய்கிறது. நாம் அனுபவிக்காதவற்றை அனுபவிக்கசெய்கிறது. வாழ்க்கையில் மிக அதிசயமாக, மிகமிக அபூர்வமாக நிகழும் அறிதல்கணங்களை எளிதாக நாம் அடையச்செய்கிறது. அதனூடாக நாம் வளர்கிறோம்.

தெரிந்துகொள்வதற்கான நூல்கள் பல உள்ளன. அவற்றை நாம் பயனெழுத்து என்று சொல்கிறோம். கோழி வளர்ப்பது எப்படி ,நண்பர்க்ளை சேர்ப்பது எப்படி, லெபனானின் பொருளாதாரம், ஹோஸ்னி முபாரக்கின் எதிர்காலம் எல்லாவற்றையும் நாம் தெரிந்துகொள்ளலாம். ஆனால் சிலநூல்களே அறிதலின் கணங்களைச் சாத்தியமாக்குகின்றன.

அந்தக் கணங்களைத்தான் ஒரு நல்ல நூலில் நாம் அடையும் பேரனுபவம் என்கிரோம். அது ஒரு மெய்ம்மறந்த நிலை. தான் அழியும் நிலை. மனிதனுக்கு இந்த பூமியில் சாத்தியமானதிலேயே மிகப்பெரிய ஆனந்தம் அதுவே என்கிறார் சாக்ரடீஸ். அறிவின் ஆனந்தம் பிற எதற்குமே நிகராகாது. அதை அறிந்தவன் அதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறான்

எதற்கு நூல்கள் என்று கேட்பவர்கள் உண்டு. நூல்கள் தேவை என்று சொல்பவர்கள்கூட இந்த நூல் அருமையான செய்திகளைச் சொல்கிறது, நல்ல கருத்துக்களைச் சொல்கிறது என்கிறார்கள். அதைப்போல அசட்டுத்தனமான பேச்சே கிடையாது. ஒரு நல்ல நூல் அளிக்கும் அறிவனுபவத்தை அடைந்தவர் அது செய்திகளை அளிக்கிறது கருத்துக்களை அளிக்கிறது என்று ஒருபோதும் சொல்லமாட்டார்.

இன்னும் சிலர் அசட்டுத்தனமாக எல்லாத் தகவல்களும் எல்லாக் கருத்துக்களும் இணையத்திலேயே உள்ளன, புத்தகங்கள் எதற்கு என்பார்கள். இணையத்தில் நிறையப் புத்தகங்கள் உள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாக இணையம் வெறும் தகவல் வெளி. அந்தத் தகவல்களை நாம் அறிதலாக ஆக்காவிட்டால், சிந்தனையாக ஆக்காவிட்டால் அவற்றால் பயனில்லை. சொல்லப்போனால் வெற்றுத்தகவல்களாக நினைவை நிரப்பி நம்மை முட்டாள்தனமான தகவல்மூட்டைகளாக ஆக்கவும்கூடும்.

நூல்களை அவை அளிக்கும் அறிதல்களுக்காகத் தேடுங்கள். அந்த அறிதல்கணங்கள் ஒவ்வொன்றும் நாம் வாழும் கணங்கள். நாம் வளரும் படிகள்.

அசோகமித்திரனின் அற்புதமான சிறுகதை ஒன்றுண்டு. ‘திருப்பம்’. மல்லையா என்ற ஆந்திர கிராமத்து இளைஞன் சென்னைக்கு டிரைவிங் கற்பதற்காக வருகிறான். ஊரிலே அவன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான். அவன் அண்ணன் இங்கே டிரைவர். அவன்தான் இவனுக்குப் பணம் கட்டி டிரைவிங் கற்றுக்கொள்ள சேர்த்திருந்தான். ஆனால் மல்லையாவுக்கு எவ்வளவு சொல்லியும் கிளட்ச் பிடித்து கியர் மாற்றும் நுட்பம் பிடிகிடைக்கவில்லை. எல்லாமே சொல்லிக்கொடுத்துவிட்டார். ஆனால் ஒவ்வொருமுறையும் ஏதோ தப்பாக ஆகும். வண்டி உதறும். கிரீச் என்று ஓலமிடும். அந்த விஷயம் ஒரு தகவலாக மூளைக்குள் இருந்தது. அறிதலாக ஆகிக் கைக்கு வந்துசேரவில்லை.சொல்லிக்கொடுக்கும் மாஸ்டர் பொறுமையிழந்து வெறிபிடித்தது மாதிரி அடிக்கிறான். கொடுமை என்னவென்றால் தனக்குத் தெரியாத தெலுங்கில் தப்புத்தப்பாக வசைபாடியபடி அடிக்கிறான்

வீங்கிய கன்னங்களுடன் அன்றும் மல்லையா டிரைவிங் கற்கச் செல்கிறான். தனக்கு டிரைவிங் வராது, ஓடிவிடவேண்டியதுதான் என்று நினைத்தபடியே கிளம்புகிறான். எவ்வளவோ விளக்கியாகிவிட்டது. எவ்வளவோ சொல்லியாகிவிட்டது. என்னென்னவோ செய்தும் அவனுக்கு கியர்மாற்றி கிளட்ச் போடுவது பிடிகிடைக்கவே இல்லை. அன்றும் கார் சாலையில் செல்லும்போது கிளட்சைப்போடு என்று மாஸ்டர் கத்துகிறான். மல்லையா தப்பாகப் போட கார் எங்கோ ஓட அவனை மாஸடர் ‘நீங்கள் இறங்குங்கள் கீழே இப்போது நானே’ என்று தெலுங்கில் உளறிக்கொண்டு அடிக்கிறான். காருக்கும் மல்லையாவுக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் இருக்கிறது.

மீண்டும்மீண்டும். மல்லையாவுக்கு டிரைவிங் தனக்கு வராது என உறுதியாகிவிட்டது. அன்றோடு ஊருக்குப் போக முடிவெடுத்தும்விட்டான். மீண்டும் சாலையில் கார் செல்கிறது. மல்லையாவை மீறி கார் ஒரு திசை நோக்கிச் செல்கிறது. அவன் பீதியுடன் செயலற்று இருக்க மாஸ்டர் கத்திக்கொண்டே இருக்கிறான். கார் பிடிவாதமாக ,சடமாக, ஒரு லாந்தர் கம்பம் நோக்கியே செல்கிறது.ஒரு போலீஸ்காரன் கையைத் தூக்குவதை மல்லையா கண்டான். மல்லையா வெறி பிடித்தது போல கன்னாபின்னாவென்று கிளட்சைத் திருப்ப அப்போது சட்டென்று அதன் நுட்பம் அவனுக்குத் தெரிந்துவிட்டது. எப்படி? சொல்லமுடியாது. ஆனால் அவன் கைக்கு அது தெரிந்துவிட்டது. மீண்டும் பலமுறை போடுகிறான். ஒவ்வொருமுறையும் சரியாக விழுகிறது. அவ்வளவு சின்ன விஷயம் அது என அவனுக்குத் தெரிகிறது. ஆச்சரியமாக இருக்கிறது. உற்சாகமாக இருக்கிறது.

அவ்வளவுதான். அவன் டிரைவர் ஆகிவிட்டான். ஒரு பரவசக் கணத்தைத் தொட்டுவிட்டான். அந்த வாசலைத் தாண்டிவிட்டான். அதற்கு முன் அவன் டிரைவர் அல்ல. அதன்பின் அவன் டிரைவர். இதுவே அறிதலின் கணம். ஜென் கணம். அற்புதமாக அதைத் தன் சிறுகதையில் தொட்டுக்காட்டியிருக்கிறார் அசோகமித்திரன். தமிழில் எழுதப்பட்ட மகத்தான சிறுகதைகளில் ஒன்று அது.

ஜென் பௌத்தம் அத்தகைய மாயக்கணங்களைப்பற்றியே பேசுகிறது. வானத்தில் ஒரு பறவை பறக்கிறது. ‘என்ன பார்க்கிறாய்?’ என்கிறார் குரு. ‘வானில் பறக்கும் ஒரு பறவை’ என்று சீடன் சொல்கிறான். பறவை பறந்து போய்விட்டது. ‘இப்போது என்ன பார்க்கிறாய்?’ ‘பறவை பறந்துசென்றுவிட்டது’ என்றான் சீடன். குரு தன் கைத்தடியால் அவன் மண்டையில் ஓர் அடிபோடுகிறார். சீடனுக்குச் சட்டென்று மொத்தமும் புரிந்து விடுகிறது. பறவையும் அவனும் காலமும் தூரமும் எல்லாம் கலந்த அந்த பிரம்மாண்டமான ஆடல். ஜென் குருக்கள் அப்படி ஓர் அதிர்ச்சி மூலம் சீடனின் பார்வையை விரியச்செய்வதைக் காணலாம்.

நல்ல இலக்கியம் அத்தகைய அடிகளை நமக்குப் போட்டபடியே இருக்கும். நாம் பல நூல்களை வாசிக்கிறோம். ஆனால் மிக அபூர்வமாக நாம் ஒரு எழுத்தாளனை மிக அந்தரங்கமாக நேருக்கு நேராக மிக அந்தரங்கமாகச் சந்திக்கிறோம். அது ஒரு மகத்தான கணம். நான் சின்னப்பையனாக இருக்கும்போது என் அறைக்குள் வந்துவிட்ட ஒரு பூனையை அடிக்கத் துரத்தினேன். பூனை பலபக்கங்களுக்குத் தாவியது . ஒரு சுவர்முடுக்கில் சரியாக மாட்டிக்கொண்டது. நான் அதை நோக்கிச் சென்றபோது அது என் கண்களைச் சந்தித்தது. உடல்முடிகள் எல்லாம் சிலிர்க்க மிக மெல்ல ர்ர்ர் என்றது. அந்தக்கணம் நான் அதையும் அது என்னையும் அறிந்தோம். என் உடம்பும் சிலிர்த்தது. நான் விலகிக்கொண்டேன். அது மிக நிதானமாக, எந்த அச்சமும் இல்லாமல் மிக நிதானமாக நடந்து வெளியே சென்றது. இரு மிருகங்கள் ஒன்றை ஒன்று கண்டுகொண்ட தருணம் அது.

நாம் ஒரு பெரிய எழுத்தாளனை முதலில் அந்தரங்கமாகச் சந்திக்கும் தருணமும் அத்தகையதே. புதுமைப்பித்தனின் மகாமசானம் என்ற கதையை முதன்முதலில் வாசித்த தருணத்தை சுந்தர ராமசாமி எழுதியிருக்கிறா. உடல்ரீதியாகவே ஓர் கிளர்ச்சி, உயிர் போவது போல ஓர் வலிப்பு, அவருக்கு ஏற்பட்டது என. அதன்பின் அவர் பழைய சுந்தர ராமசாமி அல்ல. அதுதான் வாசிப்பின் ஜென் கணம்.

ஒரு வாசகனாக நான் தல்ஸ்தோயை, தஸ்தயேவ்ஸ்கியை, ஹெர்மன் ஹெஸ்ஸை, பஷீரை, அசோகமித்திரனை அந்தரங்கமாகச் சந்தித்த தருணங்கள் பல. இரு மனிதர்கள் மிகமிக ஆழத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து ‘சிருஷ்டியின் ஆதிகாலம் முதல் நாம் அறிவோம்’ எனப் பரஸ்பரம் அங்கீகரிக்கும் தருணங்கள் அவை.

இங்கே கூடிக்கிடக்கும் நூல்களில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியவை அடங்கிய நூல்கள் பல்லாயிரம். அவை இந்தத் தகவல்நூற்றாண்டின் சிருஷ்டிகள். நாம் அறிந்து அதுவாக வேண்டிய மாயக்கணங்கள் கொண்ட நூல்களும் பல இங்குள்ளன. நீங்கள் யார் என்பதே அந்த நூல் எது என்பதைத் தீர்மானிக்கிறது. அதை நோக்கிச் செல்லுங்கள். வேட்டைநாய் இறைச்சியைக் கண்டுகொள்வது போல, முமுட்சு ஞானத்தைக் கண்டுகொள்கிறான். நீங்களும் கண்டுகொள்வீர்கள்.

அவ்வாறே நிகழ்வதாக

வணக்கம்

[17-08-2011 அன்று கோவை புத்தகக் கண்காட்சி அரங்கில் ஆறிய உரை]

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 72

$
0
0

[ 17 ]

அஸ்தினபுரியில் பன்னிருபடைக்களம் அமைப்பதைப் பற்றிய செய்தியை சகுனி துரியோதனனிடம் சொன்னபோது சற்று அப்பால் தரையில் போடப்பட்டிருந்த சேக்கைப் பீடத்தில் அங்கிலாதவர் என கணிகர் படுத்திருந்தார். கர்ணனும் ஜயத்ரதனும் துரியோதனனின் இருபக்கமும் பீடங்களில் அமர்ந்திருக்க பின்னால் துச்சாதனன் நின்றான். சாளரத்தின் ஓரமாக துர்மதனும் துச்சலனும் சுபாகுவும் நின்றிருந்தனர். படைநகர்வு குறித்த செய்திகளை சகுனிக்கு துரியோதனன் உளஎழுச்சியுடன் சொல்லிக் கொண்டிருந்தான். அவர்கள் படைநகர்வுப்பணிகளுக்குப்பின் களைப்புடன் அரண்மனைக்கு மீண்டிருந்தனர்.

“பதினெட்டு படைப்பிரிவுகளும் கங்கைக்கரை ஓரமாக நிரை கொண்டுவிட்டன மாதுலரே. அவற்றை ஏற்றிச் செல்லும் படகுகளும் பிழைநோக்கப்பட்டு நீர்வெளியில் சித்தமாக உள்ளன. அவை முன்னோடிப் பறவைகளென இந்திரப்பிரஸ்தத்தை சென்றடையும்போதே மறுபக்கம் கரைவழியாக நமது பன்னிரண்டு படைப்பிரிவுகள் இந்திரப்பிரஸ்தத்தை நோக்கி செல்லும். செல்லும் வழியிலேயே பிற ஆதரவு நாட்டுப்படைகளும் நம்முடன் இணைந்துகொள்கின்றன. கடற்படையை கர்ணனும் தரைப்படையை நானும் நடத்துகிறோம். ருக்மியின் படைகளுடன் ஜயத்ரதன் தன் படைகளை இணைத்துக்கொண்டு இருவரும் இந்திரப்பிரஸ்தத்தை மறுபக்கம் வந்து சூழ்வர்” என்றான்.

சகுனி “மிகப்பெரிய படைசூழ்கையின் இடர் என்னவென்றால் அதை மறைக்க முடியாதென்பதே. இப்பொழுதே நம் படைசூழ்கையின் அனைத்து உட்கூறுகளும் இளைய யாதவனுக்கும் அர்ஜுனனுக்கும் தெரிந்திருக்கும்” என்றார். கர்ணன் “ஆம் தெரிந்திருக்கும். இந்திரப்பிரஸ்தத்தை எதிர்பாராத வகையில் தாக்க முடியாது என்பதை உணர்ந்த பின்னரே இதை இத்தனை விரிவாக தொடங்கினோம்” என்றான். “பாரதவர்ஷத்தின் அனைத்து ஷத்ரிய அரசுகளும் கங்கைக்கரையில் உள்ளன. கங்கையில் இருந்து எதிர் நீரோட்டத்தில் ஏறிச்சென்றே யமுனைக்கரையில் அமைந்துள்ள இந்திரப்பிரஸ்தத்தை அணுக முடியும். ஆகவே எந்தப்படகுப்படையும் விரைந்து செல்ல முடியாது. எதிர்பாராத்தாக்குதல் நிகழமுடியாதென்றால் பெருஞ்சூழ்கைத்தாக்குதலே உகந்தது என்பதனால் இம்முடிவை எடுத்தேன்” என்றான்.

ஜயத்ரதன் “அத்தனை பெரிய நகரம் யமுனைக் கரையில் அமையும்போது அது எண்ணாது எடுக்கப்பட்ட முடிவோ என்று எண்ணினேன். இப்போது தெரிகிறது. கங்கைக் கரையில் நகர் அமைப்பது விரைந்து கிளம்புவதற்கு உகந்தது போலவே எதிர்பாராது தாக்கப்படுவதற்கும் எளிது” என்றான். சகுனி “இந்திரப்பிரஸ்தம் பாஞ்சாலத்தின் ஐங்குடிப்படைகளை இடக்கையாகவும் யாதவ குலத்திரளை வலக்கையாகவும் கொண்டது. பாஞ்சாலம் தொன்மையான ஷத்ரிய நாடென்பதால் பல சிறுகுடி அரசர்களை அவர்கள் தங்களுடன் சேர்த்துக்கொள்ள முடியும். மணஉறவு நாடுகளும் ஒப்புறவு நாடுகளும் உடன் நிற்கும். இது எளிய போரென அமையாது” என்றார்.

“ஆம் அமையாது. நான் எளிதில் வெல்ல விரும்பவில்லை” என்றபடி துரியோதனன் எழுந்தான். “ஆயிரமாண்டுகள் இம்மண்ணில் பேசப்படும் ஒரு போரையே நான் நாடுகிறேன். மத்தகம் தூக்கி எழும் களிறு போல அவர்களின் நகர்க்கோட்டை முன் சென்று நிற்கப்போகிறேன். எக்கரவும் இல்லை. எச்சூழ்ச்சியும் இல்லை. வெற்றி ஐயத்திற்கிடமற்றது. பாரதப்பேரரசின் முதன்மை அரசன் நான் என்பதை அப்போருக்குப்பின் மறுசொல்லின்றி ஒவ்வொருவரும் ஏற்றாக வேண்டும்.”

அவர்கள் பேசத்தொடங்கியபோது ஒவ்வொருவரும் தங்கள் ஓர விழிகளால் கணிகரின் இருப்பையே உணர்ந்து கொண்டிருந்தனர். போர்குறித்த சொல்லாடலும் உணர்வு அலைகளும் கணிகரை அவர்களின் சித்தங்களிலிருந்து முற்றாக உதிர்க்க வைத்தன. விழி உலாவும் உயரத்திற்குக் கீழாக எப்போதும் அமர்ந்திருப்பதனாலேயே உள்ளங்களிலிருந்து விலகிவிடும் வாய்ப்பை பெற்றிருந்த கணிகர் செவிகளை மட்டும் அவ்வுரையாடலுக்கு அளித்து விழிகளை சுவர் நோக்கி திருப்பியிருந்தார். விழிகள் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவை என்பதை அவர் அறிந்திருந்தார்.

கர்ணன் சகுனியிடம் “படைகள் திரளத் திரளத்தான் நமது வல்லமை நமக்கு தெரிகிறது. பாரதவர்ஷத்தின் ஆற்றல் கொண்ட ஷத்ரியப்படையின் பெரும்பகுதி நம்முடன் உள்ளது” என்றான். சகுனி படைத்திரள் குறித்த எழுச்சியை பகிர்ந்துகொள்ளவில்லை என்னும் உணர்வே அவனை அப்பேச்சை எடுக்கவைத்தது. கணிகர் விழிசுருக்கி கர்ணனை நோக்க அப்பார்வையுணர்வைப்பெற்று கர்ணன் திடுக்கிட்டது போல அவரை நோக்கினான். கணிகர் புன்னகை புரிய அதுவரை தொகுத்துக் கொண்ட அனைத்தும் சிதறப்பெற்று கர்ணன் விழிதிருப்பிக் கொண்டான்.

சகுனி “தாங்கள் என்ன எண்ணுகிறீர்கள் கணிகரே?” என்றார். அங்கிருந்த அனைவரும் கணிகரின் இருப்பை சிறு அதிர்வுடன் உணர்ந்து அவரை திரும்பி நோக்கினர். கணிகர் மெல்லிய குரலில் முனகி உடலைத் திருப்பி “ஷத்ரியப்படைகள் அங்கரின் தலைமையில் திரள ஒப்புவார்களா?” என்றார். துரியோதனன் திடுக்கிட்டு உடனே கடும் சினம்கொண்டு தன் இரு கைகளையும் ஓங்கி கைப்பிடியில் அடித்தபடி “ஏன் ஒப்பமாட்டார்கள்? அவர் இன்று அஸ்தினபுரியின் பெரும் படைத்தலைவர். அதை அறிந்த பின்னரே அவர்கள் இங்கு படைக்கூட்டுக்கு வந்திருக்கிறார்கள்” என்றான்.

“அவர்கள் அறிந்திருப்பார்கள், ஒப்பியும் இருப்பார்கள். ஆனால் அஸ்தினபுரியின் வெற்றி என்பது தூய ஷத்ரியர்களின் வெற்றியல்ல என்றொரு சொற்பரவலை இளைய யாதவரின் ஒற்றர்கள் உருவாக்கினார்கள் என்றால் பலர் பின்னடையக்கூடும்” என்றார் கணிகர். “அர்ஜுனனுக்கு படை எதிர் நிற்கும் வல்லமை கொண்டவர் அங்கர் மட்டுமே என்றறியாத ஷத்ரியர் எவர்?” என்றான் ஜயத்ரதன். கணிகர் பறவைக்குரல் போல மெல்ல நகைத்து “ஆம் அறிவார்கள். ஆனால் அவ்வறிவு உள்ளத்தில் நிலைப்பது. ஆழத்திலோ ஒவ்வொருவரும் தாங்களும் அர்ஜுனர்கள்தான்” என்றார்.

சகுனி “நேரடியாகவே சொல்கிறேன் மருகனே, நமது தரப்பில் ஷத்ரியப் பெருவீரர்களென நாம் மூவர் மட்டுமே உள்ளோம். உன்னால் படைநடத்த இயலாது. நானோ சூழ்கைகளை அமைப்பேனே ஒழிய களம் நின்று போரிட வல்லவன் அல்ல. ஜயத்ரதன் இன்னும் இளையோன். இந்திரப்பிரஸ்தத்திற்கு நிகரான வில்லவன் என்றால் அங்கர் மட்டுமே. எவ்வகையிலேனும் அவரை பிற ஷத்ரியர் ஏற்க முடியாதென்று ஆக்கினால் நமது படைகள் ஆற்றல் இழக்கும்” என்றார்.

கர்ணன் “அவ்வகையில் எத்தனையோ வஞ்சங்களை அவர்கள் செய்யலாம். அவற்றையெல்லாம் எண்ணி முன்னரே உளம் சோர்வதில் என்ன பொருள்? அவை எழுகையில் நிகர் வஞ்சத்தை நாம் செய்வோம். அதுவே வீரர்களின் வழி” என்றான். கணிகர் “அது அத்தனை எளிதல்ல அங்கரே” என்றார். கர்ணன் சினம் எழ, உடனே அதை வென்று மீசையை முறுக்கியபடி கணிகரை கூர்ந்து நோக்கினான். “யாதவர்கள் ஒரே வினாவை கேட்கக்கூடும். இப்போர் எதன் பொருட்டு? செம்மை செய்தமைந்த நால்வேதத்தின் பொருட்டு நாம் நிற்கிறோம் என்றால் செதுக்கிக் கூராக்கிய புதுவேதத்தின் பொருட்டு அவர்கள் நிற்கிறார்கள். இதில் அங்கர் எங்கே நிற்கிறார்?” என்றார் கணிகர்.

கர்ணன் “என்ன சொல்கிறீர்?” என்றான். “நாகவேதத்தை காக்க உறுதி ஏற்றவர் நீங்கள் என்று இங்கொரு சொல் உலவுகிறது” என்றார் கணிகர். கர்ணன் “ஆம். நான் அவர்களுக்கொரு வாக்கு கொடுத்தேன். அவர்களின் குலம் அழியாது காப்பேன் என்று. அவர்களின் வஞ்சத்திற்கு நிகர் செய்வேன் என்று” என்றான்.

கணிகர் “அங்கரே, அது ஓர் எளிய வாக்கு அல்ல. இந்நிலம் நாகர்களுக்குரியது. இங்கு முளைத்தெழுந்த சொற்களும் அவர்களுக்குரியதே. அதில் விளைந்த முதல் கனியான வேதமும் அவர்களுக்குரியதே. அவர்களை வென்று நின்றது நமது குலம். மண்ணுக்கடியில் நாகங்கள் வாழ்கின்றன என்று சூதர் பாடும் தொல்கதை நேர்ப்பொருள் மட்டும் கொண்டதல்ல. நாடுகள் நகரங்கள் ஊர்கள் குடிகள் என்று பெருகியிருக்கும் நம் வாழ்வுக்கு அடியில் என்றும் இமையாத விழிகளுடன் அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தரப்பில் வஞ்சமொன்றை ஏற்ற நீங்கள் இவ்வேதத்தின் காவலராக எப்படி களம் நிற்க முடியும்?” என்றார்.

துரியோதனன் தன் தொடையை அறைந்தபடி உரக்க “களம் நிற்பார். இது எனது ஆணை! எனக்கு ஷத்ரியர்களின் துணை தேவையில்லை. என் துணைவர் படை மட்டுமே போதும் இந்திரப்பிரஸ்தத்தை வெல்ல” என்றான். அமைதியாக “போதாது” என்றார் சகுனி. துரியோதனன் “என்ன சொல்கிறீர்கள் மாதுலரே?” என்றான். “நமது படைகள் இந்திரப்பிரஸ்தத்தை வெல்ல போதுமானவை அல்ல. ஷத்ரியர்களின் முழுமுற்றான ஆதரவின்றி நம்மால் களம் வெல்ல இயலாது. ஒருகால் வெல்லக்கூடும். ஆனால் பேரழிவின்மீது மட்டுமே நமது குருதிக்கொடி எழும். நம்மில் வீரர்கள் எஞ்சுவதும் அரிது.  அவ்வாறு வென்று ஒரு வேள்வியை நாம் இங்கு செய்வோமென்றால் மிகச்சில ஆண்டுகளிலேயே நம்மைச்சூழ்ந்துள்ள நிஷாதர்களும் அசுரர்களும் நம்மை வெல்வார்கள். நாம் நம்முள் போரிட்டு வலுகுன்றி இருக்கும் தருணத்தைக் காத்து இங்குள்ள அத்தனை மலைக்காடுகளிலும் சினம்கொண்ட விழிகள் நிறைந்திருக்கின்றன என்பதை மறக்க வேண்டியதில்லை” என்றார் சகுனி.

கணிகர் “அவற்றில் முதன்மையானவை நாகர்களின் விழிகள். நாகர்களுக்காக குருதி தொட்டு உறுதி கொடுத்த ஒரு வீரனை நாம் நம் தரப்பிலேயே கொண்டிருக்கிறோம்” என்றார். கர்ணன் எழுந்து சினத்துடன் “உங்கள் நோக்கமென்ன? படைப்புறப்பாடு முழுமை பெற்ற பின்னர் இதை சொல்வதற்கு ஏன் துணிகிறீர்கள்? என் முதல் கடப்பாடு அஸ்தினபுரி அரசரிடம் மட்டுமே”  என்றான். “அவ்வண்ணமெனில் இங்கு இவ்வவையில் நாகர்களை துறப்பேன் என்று உறுதி கொடுங்கள்” என்றார். கர்ணன் தளர்ந்து “அது ஒரு சிறுமைந்தனின் தலை தொட்டு நான் அளித்த சொல்” என்றான்.

மெல்ல நகைத்து “இரு தெய்வங்களை உபாசனை செய்ய இயலாது அங்கரே” என்றார் கணிகர். “இவ்வவையில் அங்கர் சொல்லட்டும் நாகர்களை ஆதரிக்கப்போவதில்லை என்று. ஷத்ரியர் கோருவார்களென்றால் அச்சொல்லையே நாம் பதிலாக அளிக்க முடியும்” என்றார் சகுனி.

உதடுகள் துடிக்க விழிகள் நீர்மை கொள்ள “இப்புவியில் பிறிதெவரும் எனக்கு முதன்மையானவரல்ல. இதுவே உங்கள் கோரிக்கை என்றால்…” என்று கர்ணன் கைநீட்ட அக்கையை துரியோதனன் பற்றிக் கொண்டான். “இல்லை. மாதுலரே, எனது தோழர் அவர் கொடுத்த சொல்லில் இருந்து ஒரு அணுவும் பின்னடையப்போவதில்லை. வேண்டுமெனில் அச்சொல்லுக்காக அஸ்தினபுரியை இழக்கவும் நான் சித்தமாக இருக்கிறேன்” என்றான். “அரசே…” என்று கர்ணன் உணர்வெழுச்சியுடன் சொல்ல “போதும் அமருங்கள்” என்று அவர் தோள்தொட்டு பீடத்தில் அமரவைத்தான் துரியோதனன்.

முகம் உணர்வெழுச்சியால் ததும்ப சகுனியிடம் “என் பொருட்டு இப்புவியையும் மூன்றுதெய்வங்கள ஆளும் அவ்விண்ணையும் அங்கர் துறப்பார் என்று எனக்கு தெரியும். அவர் பொருட்டு அவையனைத்தையும் நானும் துறப்பேன். அவர் சொல் நிற்கட்டும்” என்றான். “நன்று, ஆனால் அச்சொல் நின்றால் அஸ்தினபுரி எப்படி வேதங்களுக்கென வாளெடுத்து முன் நிற்க முடியும்?” என்றார் கணிகர். “வேதங்களுக்கென வாளெடுக்கவில்லை. என் விழைவுக்கென வாளெடுக்கிறேன், என் மண்ணுக்காக மட்டுமே குருதி சிந்தப்போகிறேன்” என்றான் துரியோதனன். “ஆம், வெல்ல முடியாது போகும். வீழ்கிறேன். அழிகிறேன். அதுவும் விண்ணுலகேகும் வழியே.”

ஜயத்ரதன் “இப்போது நாமே ஏன் மிகையான உணர்வுகளை அடைய வேண்டும்” ஷத்ரியர்கள் இவ்வினாக்களை இன்னும் எழுப்பவில்லை” என்றான். சகுனி “இப்போது அவர்கள் எழுப்புவார்கள் எனில் நன்று. படையெழுந்து இந்திரப்பிரஸ்தம் நெருங்கும்போது அவ்வினா எழுமென்றால் சிறுமையையே ஈட்டித்தரும்” என்றார். துரியோதனன் கைதூக்கி “போதும் சொல்லாடல். நான் முடிவெடுத்துவிட்டேன். படைப்புறப்பாடு நாளை மறுநாள் நிகழும்” என்றான்.

சகுனி “இத்தருணத்தில் படைப்புறப்பாடைவிட உகந்த வழியொன்றுண்டா என்று ஏன் நாம் எண்ணக்கூடாது?” என்றார். துரியோதனன் ஐயத்துடன் கணிகரை நோக்க சகுனி “மருகனே, இன்று பிதாமகரின் கோரிக்கையுடன் விதுரர் கணிகரை பார்க்க வந்தார்” என்றார். “கணிகரையா?” என்றான் துரியோதனன். “ஆம். உடன் பிறந்தார் பொருதிக்கொண்டு குருதி சிந்தலாகாது என்று கணிகரின் கால்களை சென்னி சூடி பிதாமகர் வேண்டியிருந்தார்.”

துரியோதனன் ஏளனத்துடன் நகைத்து “ஆம், நானறிவேன். அவர் அதைத்தான் செய்வார். அதன் பொருட்டே அவரை முற்றிலும் தவிர்த்தேன். அவரோ எந்தையோ இனி எனக்கு ஆணையிடலாகாது. நான் என் இறுதித் தளையையும் அறுத்துவிட்டேன்” என்றான். கணிகர் “பிதாமகரின் கோரிக்கை என் முன் வந்தபோது நான் எண்ணியது ஒன்றே. அவர் நம் பொருட்டு படைநிற்கமாட்டார்” என்றார். “ஆம். நிற்கமாட்டார். இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக அவர் எப்படி வில்லெடுக்கமுடியும்? தன் சிறுமைந்தரை கொன்றொழிப்பாரா என்ன?” என்றான் கர்ணன்.

“அவர் வரவில்லையென்றால் கிருபரும் துரோணரும் நமது பக்கம் நிற்கமாட்டார்கள்” என்றார் கணிகர். “அவ்வெண்ணத்தை அடைந்ததுமே நான் முடிவெடுத்துவிட்டேன். குருதிசிந்தும் போர் நிகழ முடியாது. நிகழ்ந்தால் வெல்வதரிது.” கர்ணன் சினத்துடன் “போரென்றால் உங்களுக்கென்ன தெரியும்? பகடையாடுதல் என்று எண்ணினீரா? வந்து பாருங்கள், களத்தில் பாண்டவர் ஐவருக்கும் யாதவர் இருவருக்கும் நானொருவனே நிகரென்று காட்டுகிறேன்” என்றான்.

கணிகர் ஏதோ சொல்ல வாயெடுக்க சகுனி அவரைத் தடுத்து “மருகனே, மிகைச்சொற்களை இங்கு சொல்ல விழையவில்லை. அத்தருணத்தில் கணிகர் ஒரு முடிவெடுத்தார். அதுவே நன்றென்று நானும் உணருகிறேன். நமக்குத் தேவை வெற்றி. அது களத்தில் குருதியில்தான் நிகழவேண்டும் என்று என்ன இருக்கிறது? குருதி சிந்தி நாம் வென்றால் அப்பழியைச் சொல்லியே உனது முடியையும் கோலையும் ஏழு தலைமுறைக்காலம் இழிவுபடுத்துவார்கள்” என்றார்.

“பிறகென்ன செய்வது?” என்றான் ஜயத்ரதன். “பிதாமகர் சென்று இந்திரப்பிரஸ்தத்தை நமக்கு கப்பம் கட்டும்படி கோரப்போகிறாரா?” சகுனி “அது நிகழாது என்று நாமனைவரும் அறிவோம். ஏனெனில் இது இளைய யாதவனின் போர்? என்றார். “கணிகர் சொன்னது பிறிதொருவழி. நிகரிப்போர்.”

“களிறாடலா?” என்றான் கர்ணன் புருவத்தை சுருக்கியபடி. “அல்ல. போர் ஒரு பகடைக்களத்தில் நிகழட்டும்” என்றார் சகுனி. துரியோதனன் திகைப்புடன் “என்ன சொல்கிறீர்கள் மாதுலரே?” என்றான். “ஆம், பகடைக்களம்தான். இங்கு ஹஸ்தியின் காலம் முதலே பன்னிரு படைக்களம் அமைந்திருந்தது. மாமன்னர் பிரதீபரால் அழிக்கப்படும் வரை அங்கு பாரதவர்ஷத்தின் மன்னர் அனைவரும் வந்து ஆடியிருக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தமும் அஸ்தினபுரியும் பகடைக்களத்தில் நிற்கட்டும். நம் தரப்பில் நான் ஆடுகிறேன். அவர்கள் தரப்பில் உகந்த ஒருவர் வரட்டும்.”

“களியாட்டு உரைக்கிறீர்களா மாதுலரே? பகடையாட்டத்தில் வென்று ராஜசூயம் செய்வதா?” என்றான் துரியோதனன். “அதை நம் கோரிக்கையாக நாம் சொல்ல வேண்டியதில்லை. நம் தாள் பணிந்து பிதாமகர் கோரியதனால் நாம் எடுத்த முடிவென்று சொல்வோம். அதுவும் நமது பெருந்தன்மைக்கொரு சான்றாகவே ஆகும்” என்றார் சகுனி.  தலையை அசைத்து “இல்லை. அது எனக்கு சிறுமையென்றே தோன்றுகிறது” என்றான் துரியோதனன்.

“மருகனே, நாம் உறுதியாக வெல்ல வாய்ப்புள்ள போர் இங்கு பன்னிரு படைக்களத்தில் நிகழ்வதே. ஐயமின்றி சொல்வேன். இப்பாரதவர்ஷத்தில் என்னிடம் பகடை கோக்கும் திறனுடைய இருவரே உள்ளனர். ஒருவர் இங்கு அமர்ந்திருக்கும் கணிகர்.” இடைமறித்து “பிறிதொருவன் இளைய யாதவன்” என்றான் கர்ணன். “பகடையுடன் அவன் வந்து அமர்ந்தால் நாம் என்ன செய்வோம்?”

“அவன் வரமுடியாது” என்று சகுனி நகைத்தார். “முடிசூடி அரசனென்று துவாரகையில் அமர்ந்திருக்கும் வரை இந்திரப்பிரஸ்தத்துக்காக அவன் வந்து ஆட முடியாது. வருபவன் யுதிஷ்டிரனின் ஆணைக்கு கட்டுப்பட்டவனாகவே இருக்கமுடியும்.” “இதெல்லாம் வீண்பேச்சு. பகடையில் வென்று ராஜசூயம் வேட்பதை என்னால் ஏற்கவே முடியவில்லை. இழிவு!” என்றான் துரியோதனன். துச்சாதனன் “ஆம். மாதுலரே, அது உரிய வழி அல்ல” என்றான்.

சகுனி சினத்துடன் “இழிவென்று யார் சொன்னது? உமது பெருந்தந்தையர் ஆடிய ஆடல் எப்படி இழிவாகும்? இழிவெனில்கூட உடன் பிறந்தோரைக் கொன்று முடிசூடுவதன் பழி அதில் இல்லை. இன்று இது இழிவெனத் தெரிந்தாலும்கூட வென்று வேள்வி இயற்றிய பின்னர் அது ஒரு இனிய விளையாட்டே என்று பாரதவர்ஷத்தின் மக்கள் முன் நாம் கதையமைத்துவிட முடியும். ஒரு குடும்பத்தார் அவர்களுக்குள் மூத்தவர் எவர் என்று முடிவு செய்ய பெரியவர் கூடிய அவையில் விளையாட்டொன்றை நிகழ்த்துவதில் இழிவென்ன உள்ளது?” என்றார்.

ஜயத்ரதன் “இன்று படைதிரண்டு நம்மை அடுத்துள்ள பெருங்குடி ஷத்ரியர்கள் அதை ஏற்பார்களா?” என்றான். “ஏற்பார்கள். இவ்வண்ணம் ஒரு திட்டமுள்ளது என்று சொல்லுங்கள், பொய்யாக சினந்து பின் மெல்ல ஒப்புவார்கள்” என்றார் சகுனி. “ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவரும் அஞ்சிக் கொண்டிருப்பது போரையே. உறுதியாக வெல்லும் போர் மட்டுமே உவகைக்குரியது. நிகர் ஆற்றல்கள் இடையே நிகழும் போர் முற்றழிவையே எஞ்சச் செய்யும். அதை அறியாத ஷத்ரியர் எவர்?”

கணிகர் மெல்ல கையை ஊன்றி “அத்துடன் ஷத்ரியர்களுக்கு ஒன்று தெரியும், சென்ற பலநூறாண்டுகளாக ஷத்ரியர் எவரும் சூத்திரர்களையும் நிஷாதர்களையும் அசுரர்களையும் ஒற்றைப் பெருங்களத்தில் சந்தித்ததில்லை. அவர்களின் உள்ளுறைந்த வல்லமை என்ன என்பது இதுவரைக்கும் முட்டிப்பார்க்கப்படவில்லை” என்றார்.

கர்ணன் “ஆம். அந்த மெல்லிய ஐயமும் குழப்பமும் ஷத்ரியர்களிடம் இருப்பதை நான் உணர்கிறேன்” என்றான் .”யார் சொன்னது? என்ன சொல்கிறீர் அங்கரே?” என்று உரக்க கூவினான் துரியோதனன். கர்ணன் “ஷத்ரியர் ஒவ்வொருவரும் மிகையாக வஞ்சினம் உரைக்கிறார்கள். அதிலேயே அவர்களின் தன்னம்பிக்கையின்மையும் உட்கரந்த ஐயமும் வெளிப்படுகிறது” என்றான்.

“இப்போர் எளிதில் முடியப்போவதில்லை” என்றார் சகுனி.  ”நாம் அவர்களை வென்றால்கூட இந்திரப்பிரஸ்தத்தை கைவிட்டு விட்டு தருமன் தன் மணிமுடியுடனும் கோலுடனும் துவாரகைக்கு செல்லக்கூடும். துவாரகை வரை படை கொண்டு சென்று அவனை வெல்லாமல் அஸ்தினபுரியில் ராஜசூயம் நிகழ இயலாது.” உரத்தகுரலில் “ஏன் அங்கு செல்ல முடியாது? செல்வோம்” என்றான் துரியோதனன்.  ”வஞ்சினம் எளிது. இன்று கங்கை நிலத்தின் எந்த அரசும் பெரும்பாலை நிலத்தைக் கடந்து துவாரகையை சென்றடைய முடியாது. துவாரகையின் கடல் வல்லமையை எதிர் கொள்ளும் ஆற்றல் நம்மிடம் இல்லை” என்றார் சகுனி.

துரியோதனன் சலிப்புடன் “போருக்கு முன்னரே தோல்வி குறித்த ஐயங்களை உருவாக்குகிறீர்கள் மாதுலரே” என்றான். “தோல்வி அணுகுகிறது என்று நான் இப்போதும் எண்ணவில்லை. வெற்றி எளிதல்ல என்றே சொல்ல விழைகிறேன். எளிய வெற்றிக்கு ஒரு வழியிருக்கையில் அதை ஏன் நாம் ஏற்கக்கூடாது?” என்றார் சகுனி.

துரியோதனன் மறுத்துரைக்க கையை தூக்குவதற்குள் கர்ணன் “ஆம், கணிகர் சொன்னதை என் உள்ளம் இப்போது ஏற்கிறது” என்றான். “என்ன சொல்கிறீர்கள்?” என்று துரியோதனன் கூவ “சற்று பொறுங்கள் அரசே, எனக்கும் பகடையாட்டத்தைப் பற்றி சொல்லப்பட்டதும் பெருஞ்சினமே எழுந்தது. ஆனால் ஒவ்வொன்றாக எண்ணி நோக்குகையில் ஒரு போர் உருவாக்கும் அழிவை எளிதில் கடந்து செல்லவும் உறுதியான வெற்றி ஒன்றை அடைந்து நாம் எண்ணியதை இயற்றவும் பன்னிரு படைக்களமே உகந்ததென்று தோன்றுகிறது” என்றான் கர்ணன்.

துரியோதனன் “இழிவு! அங்கரே, இத்தனை படைபயின்று தோள்பெருக்கி இறுதியில் இவ்வண்ணமொரு சூதுக்களத்திலா நான் நின்று வெல்ல வேண்டும்?” என்றான். கர்ணன் “நாம் வெல்லும் களங்கள் பிறகு வரும். இத்தருணத்தை கடந்து செல்ல இதுவே சிறந்த வழி” என்றபின் திரும்பி “காந்தாரரே, பன்னிரு படைக்களம் ஒருங்கட்டும்” என்றான். துரியோதனன் ஏதோ சொல்ல வாயெடுக்க “நான் சொல்லியாகிவிட்டது. பகடைக்களத்தில் நாம் அவர்களை சந்திப்போம்” என்றான்.

துரியோதனன் சலிப்புடன் தலையை அசைத்தபின் எழுந்து மறுபக்கச் சாளரத்தை அணுகி வெளியே நோக்கி நின்றான். “பகடைக்களம் அமைக!” என்றான் கர்ணன். புன்னகையுடன் “நன்று” என்றார் கணிகர். துரியோதனன் சினத்துடன் விரைந்து வந்து குனிந்து தன் சால்வையை எடுத்தபின்  காலடிகள் ஓசையிட மந்தண அறையைவிட்டு வெளியே சென்றான். துச்சாதனனும் அவன் பின்னால் சென்றான்.

சுபாகு அருகே வந்து “நம் தந்தை ஏற்றுக் கொள்வாரா?” என்றான். சகுனி “எளிதில் ஏற்றுக் கொள்ளமாட்டார். ஆனால் ஏற்கச்செய்ய முடியும்” என்றார். கர்ணன் எழுந்து “இத்தருணத்தில் அரசரை தனித்துவிடலாகாது. நான் செல்கிறேன்” என்றான். கணிகர் புன்னகையுடன் “நன்றி அங்கரே, நான் எண்ணியிருந்தது பிழையாக இல்லை” என்றார்.

கர்ணன் சீறித்திரும்பி “எதை எண்ணியிருந்தீர்?” என்றான். “உம்மை நம்பியே உடன் பிறந்தோர் போரை தவிர்க்க முடிவெடுத்தேன்” என்றார். “ஏன்?” என்றான் கர்ணன் மேலும் சினத்துடன். கணிகர் உரக்க நகைத்து “நீரும் பீஷ்மரல்லவா?” என்றார். மேலும் ஒரு சொல் இதழ் வரை வந்து உடல் ஒரு கணம் தடுக்க கர்ணன் தலையை அசைத்து அதை தவிர்த்து வெளியே சென்றான்.

தொடர்புடைய பதிவுகள்


நகர்நடுவே நடுக்காடு

$
0
0

A.k.-Perumal-1

நாகர்கோவிலில் மிக முக்கியமான நகரச்சந்திப்பு ஒன்றுக்கு ‘ நடுக்காட்டு இசக்கியம்மன் பேருந்து நிறுத்தம் ‘ என்று பெயர் .திருவனந்தபுரம் நெடுஞ்சாலை ஆகையால் சரசரவென்று பேருந்துகள் ஓடும், கடைகளும் பங்களாக்களும் நிரம்பிய ,இப்பகுதியில் சாலையோரமாகவே நடுக்காட்டு இசக்கியம்மனின் கோயில் உள்ளது . கோயில் என்பது சரியல்ல. குடில். வெள்ளைபூசப்பட்ட சிறு களிமண் சுவர்கள் கொண்ட ஓலைவேயப்பட்ட சிறு அமைப்பு ஒன்று. சுற்றிலும் மரத்தடிகளில் வேறு துணைத்தெய்வங்கள். அங்கே சென்று நின்றால் சற்று நேரத்தில் எல்லா சந்தடிகளையும் மறந்து காட்டின் தனிமையும் அமைதியும் பயங்கரமும் நம் மனதில் படர்கின்றன.

நாகர்கோவில் நகரை அதிகபட்சம் இருநூறு வருடங்களுக்கு முன்னால் கொண்டுபோக முடியாது. நகரின் அப்பகுதி லண்டன் மிஷன் பாதிரியார் ‘மெட் [Mead] அவர்களால் நூற்றைம்பது வருடம் முன்பு விரிவுபடுத்தப் பட்டது. நடுக்காட்டு இசக்கியம்மனுக்கு எத்தனை வருட வரலாறு இருக்கும் ? ஆயிரம் , இரண்டாயிரம் ? சொல்ல முடியாது. அவள் கண்முன் யுகங்களே கடந்து சென்றுவிட்டிருக்கலாம்.

நமது கலாச்சாரத்தின் மையத்தில் உறங்கும் இந்த அதிபுராதனக் கூறு நமது சக்திமையங்களில் ஒன்று. நாகர்கோவில் நகரை நமது நவீன மனம் என்றால் நடுக்காட்டு இசக்கியம்மன் வாழ்வது நமது ஆழ்மனத்தில் எனலாம் .நமது பேரிலக்கியங்களின் ஆழத்தில் , நமது மதங்களின் சாரத்தில் இந்த தொல்பழைமை உறைகிறது. நம் மனதை, நமது கலாச்சாரத்தை அறிய அதை நாம் அறிந்தே ஆகவேண்டும்.

**

நாட்டார் வழக்காற்றியல் என்ற அறிவுத்துறைக்கு மேற்கே உள்ள அர்த்தங்கள் வேறு . அது அவர்களின் அழிந்துவிட்ட பண்பாட்டுக் கூறுகளை ஆராய்வதாகவோ , அவர்களைவிட பிற்பட்டவை என அவர்கள் நம்பும் கலாச்சாரங்களைப்பற்றிய ஒப்பாய்வாகவோ அவர்களுக்கு பொருள்படலாம். அவர்கள் உருவாக்கிய ஆய்வு முறைமை மற்றும் அவர்களுடைய அடிப்படைக் கொள்கைகள் ஆகியவற்றிலிருந்தே அத்துறை இங்கே உருவாயிற்று . ‘நாட்டார் ‘ என்ற சொல்லேகூட ஒரு மொழிபெயர்ப்புக் கலைச்சொல் தான் . ஃபோக் லோர் என்ற சொல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி ஆய்வாளர் பேரா: தெ.லூர்து ‘ நாட்டார் வழக்காற்றியல் ‘ என எண்பதுகளில் மொழிபெயர்த்தார். அது மெல்ல ஏற்றுக் கொள்ளப்பட்ட சொல்லாயிற்று. நம்முடைய சூழலில் நாட்டாரியல் ஆய்வு என்பது ஆழமான ஒரு சுய கண்டடைதலுக்குரிய பயணம் . ஆகவே மேலைநாடுகளைப்போல அது இங்கு ஒரு தனித்த அறிவுத்துறையாக அல்லது கல்விநெறியாக இயங்கக்கூடியதல்ல. வரலாற்றாய்வு, தத்துவம் மற்றும் மெய்யியல் , அரசியல், இலக்கியம் , கலைகள் ,மாற்று வேளாண்மை மற்றும் மாற்று மருத்துவம் போன்ற பலதுறைகளையும் தொட்டு விரியக்கூடிய ஓர் அடிப்படை அறிவுத்துறையாக உள்ளது.

நாட்டார் இலக்கியம் நம் மக்கள் வாழ்க்கையுடன் இரண்டறக்கலந்த ஒன்றாகையால் அதன் பெரும்பகுதி எப்போதும் உயிர்ப்புடந்தான் இருந்து வந்துள்ளது. அச்சு முறை உருவானதுமே செவ்விலக்கியங்களைவிட வேகமாக நாட்டாரிலக்கியங்கள் அச்சில் வந்தன. அல்லி அரசாணி மாலை முதலியவை பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே அச்சாகிவிட்டன. நாட்டார் வழக்கற்றியல் துறைகள் நம் கல்வித்தளத்தில் உருவாவதற்கு முன்னரே நாட்டார் வழக்காற்றியலில் முன்னோடி ஆய்வுகளும் தரவு தொகுப்புகளும் நடைபெற்று விட்டிருந்தன. பேராசிரியர் .நா வானமாமலை தன் ஆய்வுகள் மூலமும் , தான் நடத்திய ‘ஆராய்ச்சி ‘ என்ற இதழ் மற்றும் ஆய்வு வட்டம் மூலமும் நாட்டாரியல் என்ற தனித்த அறிவுத்துறைக்கான அடித்தளத்தை அமைத்தார். அ.கா.பெருமாள் உள்ளிட்ட ஆய்வாளர்களுக்கு உந்துவிசையாக அமைந்த துவக்கம் அது. அரசு உயரதிகாரியாக பணியாற்றி தன்னுடைய சுய ஆர்வத்தாலும் சொந்த பணத்தாலும் நாட்டாரியலில் முக்கியமான தரவுகளை சேர்த்து , வழிகாட்டியான முடிவுகளை உருவாக்கிய பி. எல். சாமியின் ஆய்வுகள் வெளிவந்துவிட்டிருந்தன.ஆனால் கல்வித்துறை சார்ந்த அங்கீகாரம் நாட்டாரியலுக்கு கிடைத்ததுமே அதன் எல்லைகள் விரிந்தன. அதன் ஆய்வுமுறைகள் தரப்படுத்தப்பட்டன. அதே சமயம் பல்கலை ஆய்வுகளில் கணிசமானவை வெறும் குப்பைகளாக , பொய்யான ஆய்வுகளாக வெளிவரும் நிலை உருவாகியுள்ளது என்று சொல்லப்படுகிறது. இன்று நாட்டாரியல் மீதுள்ள கவனத்தை , அது வகிக்கக்கூடிய பங்கை நமது கல்வித்துறையாளர் பெரும்பாலும் உணரவில்லை என்பதே தொடர்ந்து இவ்வாய்வுகளை கவனித்து வருகையில் எனக்குத் தோன்றிய எண்ணம்.

**

‘இந்திய வரலாற்றுக்கு ஒரு முகவுரை ‘ என்ற தன் பிரபல நூலில் நவீன இந்திய வரலாற்றாசிரியரான டி.டி.கோசாம்பி இந்திய வரலாற்றை ஆய்வு செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையைப் பற்றிய கவலையுடன்தான் துவங்குகிறார் . நமக்கு கிடைக்கும் ஆதாரங்களில் பெரும்பாலானவை எங்கும் ஒட்டாத உதிரித்தகவல்கள். வரலாற்றை மன்னர்கள் மற்றும் நகரங்கள் குறித்த தகவல்களிலிருந்து உருவாக்கிவிடமுடியாது. மக்கள் வாழ்ந்த முறை தெரியவேண்டும்.வவர்களுடைய பொருளியல் உற்பத்தி வினியோக முறைகள் மிக முக்கியமான்வை. அவை குறித்த நேரடி தரவுகள் இல்லாத நிலையில் வரலாற்றை அறிய டி.டி. கோசாம்பி இரு முக்கியமான வழிமுறைகளைக் கண்டடைகிறார். மக்களிடையே புழங்கும் ஐதீகங்களையும் வாய்மொழி வரலாறுகளையும் ,மக்கள் வணங்கும் கடவுள்களையும் குறித்த தகவல்களை திரட்டி அவற்றுக்கு குறியீட்டுரீதியான விளக்கம் அளித்து வரலாற்றை அறிதல். இன்னொன்று மானுடவியல் சார்ந்த பார்வை. இன்னும் இந்தியாவில் மக்கள் நிர்வாணமான பழங்குடி நிலை முதல் நாகரீகத்தின் எல்லா படிநிலைகளிலும் வாழ்கிறார்கள். இவர்களைப்பற்றிய தகவல்களை திரட்டி அடுக்கி ஒரு பரிணாம வரலாற்றை உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த கோணம் வரலாற்றாய்வில் நாட்டாரியல் மற்றும் மானுடவியலுக்குலுள்ள முக்கியத்துவத்தை பெரிதும் வலியுறுத்துகிறது.

நமது வரலாற்றாய்வில் நாட்டரியல் வகிக்கக் கூடிய பங்கு பற்றி இன்னமும் வரலாற்றாய்வாளர்களிடையே விழிப்பு இல்லை என்பதை இத்துறை சார்ந்த ஆய்வேடுகளில் நாட்டாரியல் சான்றுகள் மிகக் குறைவாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதிலிருந்து அறியலாம் . நாட்டாரியல் சார்ந்த ஆதாரம் இன்னமும் வரலாற்றாய்வில் முதல் கட்ட ஆதாரமாக கொள்ளப்படவில்லை . நாம் வரலாற்றை இன்னமும் செவ்வியல் முறைப்படி தொல்பொருள் ஆதாரங்கள் மற்றும் இலக்கிய ஆதாரங்களிலிருந்தே உருவாக்கிக் கொள்கிறோம். இது குறித்து ஒரு முக்கிய வரலாற்றாய்வாளரிடம் பேசியபோது அவர் நாட்டாரியல் தரவுகள் நிலைத்த தன்மை இல்லாமல் மாறிக் கொண்டிருக்கும் இயல்பு கொண்டவை என்பதனால் அவற்றை மூல ஆதாரங்களாக கொள்ள முடியாது என்றார் . அதை நாட்டாரியல் அறிஞர்கள் அனைவருமே திட்டவட்டமாக மறுக்கிறார்கள் . நாட்டாரியல் தரவுகள் பல்லாயிரம் மக்களின் பங்களிப்புடன் நீடிப்பவை. பெரும்பாலானவை நிகழ்கலைகளுடனும் சடங்குகளுடனும் தொடர்புடையவை .ஆகவே அவற்றில் மாறுதல் செயற்கையாக நிகழ்வது மிக மிக அரிது என்றார்கள் .மாறுதல் நிகழ்வது மெல்லமெல்ல மக்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றம் வழியாகவே. அப்போதுக்கூட அம்மாறுதல்களின் தடம் தெளிவாகத் தெரியும்படித்தான் அவை நிகழ்கின்றன. நேர் மாறாக செவ்விலக்கியங்கள்தான் ‘சான்றோர் ‘ உடைமையாக தனிச்சொத்துபோல இருந்தன, அவற்றில்தான் இடைச்செருகல்கள் அதிகம் என்கிறார்கள். நூறு வருடப் பதிவுகளை வைத்துப் பார்த்தால் செவ்விலக்கியங்கள்தான் பாடபேதங்கள் கொண்டிருக்கும் நாட்டார் நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளில் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிட்டிருக்காது என்கிறார்கள்

தொல்லியல் , இலக்கியத் தடையங்களை பயன்படுத்தி எழுதப்பட்ட முதல்கட்ட வரலாறு அதிகமும் மன்னர்களைப்பற்றியதாக ,அதிகார சக்திகளைப்பற்றியதாக இருக்கும். இதன் அடுத்த கட்டமாக மக்களின் வரலாற்றை எழுத முற்படும்போதுதான் நாட்டாரியல் போன்ற துறைகளின் தரவுகள் தேவைப்படுகின்றன. மக்கள்வரலாற்றை அடித்தளம் நோக்கி கொண்டு வரும்தோறும் நாட்டாரியல் தரவுகள் இன்றி வேறு தரவுகளே இல்லாமலாகின்றன. மக்கள் வரலாறே வரலாறு என எழுத முற்பட்ட டி. டி. கோசாம்பியே நாட்டாரியல் தரவுகளை மிக அதிகமாக பயன்படுத்திய முன்னோடி வரலாற்றாசிரியர் என்று காணலாம். கோசாம்பியின் நூல்கள் வெளியாகி அரை நூற்றாண்டு ஆனபிறகும் கூட நம் ஆய்வுகளில் அவற்றின் பாதிப்பு மிக மிகக் குறைவேயாகும்.பிரபலமான ‘ஐதீகமும் உண்மையும் ‘ [Myth and Reality] என்ற அவரது நூல் நாட்டாரியல் தரவுகளை ஆதாரமாகக் கொண்டு வரலாற்றை ஆராய்வதற்கு சிறந்த உதாரணமாகும். இதிலிருந்து தாய்தெய்வங்களைப்பற்றிய ஒரு கட்டுரையை நான் சுருக்கி தமிழாக்கம் செய்தேன். மகாராஷ்டிர மாநிலத்தின் பலநூறு தாய்தெய்வங்களின் தோற்றம், இடமாற்றம், உறவு ஆகியவற்றை ஆராயும் கோசாம்பி அதன் வழியாக அத்தெய்வங்களை வழிபட்ட, குல அடையாளமாகக் கொண்டிருந்த மக்கள்கூட்டங்களின் வரலாற்றையே உருவாக்கிக் காட்டுகிறார். உதாரணமாக மகிஷாசுர மர்தனி பற்றிய அவரது ஆய்வை சொல்லலாம். நிலையான வாழ்க்கைகொண்ட வேளாண்குடிகள் தாய் தெய்வங்களை வழிபட்டன. நிலையற்ற அலைச்சல் வாழ்க்கை கொண்ட இடையர்குடிகள் எருமை[ மகிஷம்] போன்Tஅ தெய்வங்களை வழிபட்டன. நாட்டார் தெய்வ மரபில் ஒரு இடத்தில் மகிஷன் தேவியின் கணவனாக சித்தரிக்கப்பட்டிருப்பதை டி டி கோசாம்பி கண்டடைகிறார் . இரு குலங்களும் நட்புறவு கொண்டதை அது காட்டுகிறது என்கிறார். பிறகு வேளாண்குலம் இடைக்குலத்தை வென்றதை மகிஷாசுர மர்தனி மகிஷனை கொல்லும் ஐதீகம் காட்டுகிறது.

நமது மாரியம்மன்கள் திரெளபதை அம்மன்கள் கன்னியம்மன்கள் பற்றிய தகவல்கள் இன்னும் நமது வரலாற்றாய்வுக்கு பயன்படுத்தப்படவில்லை. அப்படி பயன்படுத்தப்பட்டிருந்தால் நம் வரலாறு இப்போது இருக்கும் வடிவிலிருந்து முற்றாக மாறுபட்டு புதிய வடிவங்களை அடையக்கூடும். எழுதப்படாத பல வரலாறுகள் திறக்கக் கூடும். இரு உதாரணங்களை மட்டும் சொல்கிறேன். தன்னுடைய கட்டுரை ஒன்றில் ஆ.சிவசுப்ரமணியம் அவர்கள் நெல்லை மாவட்ட பெண்தெய்வங்களில் பெரும்பாலானவை ஜமீந்தார்களால் கற்பழித்துக் கொல்லப்பட்ட பெண்கள்தான் என்று விரிவான தரவுகளை முன் வைக்கிறார். நமது மத்தியகால வரலாற்றின் மீது எந்தக் கல்வெட்டைவிடவும் வெளிச்சம் வீசும் தகவல் இது. இந்நூலின் ஒரு கட்டுரையில் அ.கா.பெருமாள் அவர்கள் சோழ மன்னனிடம் கைக்கோளப்படையாக [மெய்க்காவல் படையாக ] உயர்ந்த அந்தஸ்தில் இருந்த ஒரு கூட்டம் மன்னனிடம் கோபித்துக் கொண்டு குமரிமாவட்டம் வந்து பிழைக்க வழிதேடி நெசவாளர்கள் ஆகி ‘கைக்கோள முதலியார் ‘ ஆனதைப் பற்றி சொல்கிறார். ஏற்கனவே இருந்த , தாழ்ந்த சாதியினரான சாலியர்களைவிட கீழான இடைத்தை இவர்கள் பெற்றனர். அவர்கள் தரைக்குமேல் தறிவைத்து இருக்கைபோட்டு அமர்ந்து நெசவு செய்தபோது இவர்கள் குழிக்குள் அமர்ந்து நெசவு செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டது . இதைப் போன்ற தரவுகள் வரலாற்றாய்வுக்கு பயன்படுத்தப்படும்போதுதான் நமது வரலாற்றாய்வு முழுமைப்படமுடியும். முதல் தரவு நமது மன்னர்கள் உண்மையில் எப்படி தங்கள் பிரஜைகளை ஆண்டார்கள் என்பதற்கான ஆதாரமாகும். அவர்கள் மெய்கீர்த்திகளிலிருந்து நாம் உருவாக்கும் வரலாறுகளுக்கு நேர் மாறான வரலாறு இது. இரண்டாம் தரவு சாதிகள் எப்படி தொழிலையும் சமூகஅதிகாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு மறுநிர்ணயம் செய்யப்படுகின்றன என்பதற்கான ஆதாரம். இன்றுள்ள சாதி அமைப்பை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் அதன் படிநிலை மாற்றங்களைப்பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள நம்மை இது தூண்டுகிறது.

நமது வரலாற்றாய்வில் உள்ள மாபெரும் இடைவெளிகள் பல இன்னமும் நிரப்பப்படவில்லை. கடுமையாக சொல்லப்போனால் சதாசிவப்பண்டாரத்தார் , சீனிவாச சாஸ்திரி தொடங்கி கே.கே.பிள்ளை , ஆரோக்கிய சாமி வரையிலான ஒரு காலகட்டத்துக்கு பிறகு வரலாற்றாய்வில் என்ன நடக்கிறது என்பதே பொதுஅறிவுச்சூழலுக்கு வரவில்லை. ஆய்வேடுகளை கவனித்தால் பெரிதும் தொழில்நுட்ப விவாதங்களையே காணமுடிகிறது. இரு கேள்விகளை உதாரணமாக சொல்லலாம். ஒன்று : தமிழகத்தில் சமண பெளத்த மதங்களின் அழிவுக்கு பிறகு அம்மதங்களின் கலாச்சாரக்கூறுகள் எங்கு சென்றன, எப்படி உருமாறின ? இரண்டு : தமிழகத்தில் இப்போது நிலமற்ற தலித் சாதிகளாக இருக்கும் பல சாதிகள் முன்பு நிலவுடைமை சாதிகளாக இருந்தன என்று சொல்லப்படுகின்றன. அதற்கு ஆதாரம் உண்டா ? அந்த நில இழப்பு நடந்தது எப்படி ? இக்கேள்விகளுக்கு அரசியல் சார்ந்த ஊகங்கள்மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. இவற்றை ஆராயப்புகும்போது முக்கியமான தரவுகளை நாட்டாரியலே தரமுடியும். பல சமண பெளத்த தெய்வங்கள் நாட்டார் தெய்வங்களுடன் கலந்துள்ளன, நாட்டார் தெய்வங்களாகவே ஆகியுள்ளன. தலித் சாதிகளின் வாய்மொழிப்பாடல்களை ஆராய்வதும் , அவர்கள் குலதெய்வங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் இடப் பெயற்சியின் சித்திரத்தை அமைப்பதும் இக்கேள்விகளுக்கு பதில் அளிக்கக் கூடும்.

வரலாற்றாய்வில் நாட்டாரியல் உரிய முறையில் பயன்படுத்தப்படும்போதே தமிழக வரலாற்றின் அடுத்த கட்ட நகர்வு சாத்தியமாகும் என்று சொல்லலாம்.

**

தத்துவமும் மெய்யியலும் [அதாவது ஆன்மீகமும் மதமும்] இங்கே பிரித்துப்பார்க்கபடாமல் இணைந்தே உள்ள விஷயங்கள். ஆகவே நமது தத்துவ ஆராய்ச்சிக்கும் மேலைநாட்டு தத்துவ ஆராய்ச்சிக்கும் அடிப்படை வேறுபாடுகள் உள்ளன. மேலைநாட்டில் தத்துவம் நீண்ட காலம் முன்னரே தனியாக பிரிந்து தன்னளவில் முழுமையான ஓர் உலகை உருவாக்கிக் கொண்டு வளர்ந்து வந்தது. தொடர்ச்சியான தத்துவ விவாதத்தை அங்கே பல நூற்றாண்டுகளாக காணமுடிகிறது. நம் நிலை அப்படி அல்ல. இந்திய தத்துவத்தை தத்துவம் என்று சொல்வதுகூட மிகைதான். அது இறையியலும் மெய்யியலும் கலந்த ஓர் அமைப்பு. ஆகவே அதில் தருக்கங்களைவிட படிமங்களுக்கே முக்கியத்துவம் அதிகம். அப்படிமங்களுக்கு அடிப்படையாக அமையும் ஆழ்படிமங்கள் இங்கே தத்துவ சிந்தனையில் மிக மிக ஆழமான பங்கை ஆற்றுகின்றன. உதாரணமாக நான் விஷ்ணுபுரம் நாவலை எழுதியபோது எனக்கு ஏற்பட்ட ஒரு மனப்பயணத்தை இங்கே நினைவுகூரலாம். பிரபஞ்ச ரூபனாக மல்லாந்து படுத்த விஷ்ணுவின் பேருடலே அந்நாவலின் தத்துவ தரிசனத்தின் மையம். அந்த சிற்பத்தின் முன்னோடி வடிவம் பரிநிர்வாணபுத்தரின் ‘தர்ம காய ‘ உடல் என கண்டடைந்தேன். புத்த தர்மத்தின் படி பிரபஞ்சம் தர்மத்தின் தூல வடிவம் .ஆகவே தர்மகாய புத்தர் தத்துவார்த்தமாக ‘பிரபஞ்ச ரூபன் ‘ தான். அச்சிலையையும் ஊடுருவிச்சென்றால் நாம் காண்பது இறந்த மூதாதையை இறந்த வடிவில் [படுத்த வடிவில் ] சிற்பமாக செய்து வழிபடும் பழங்குடி மரபை . பல்வேறு நாட்டாரிீயல் ஆய்வுகள் மூலமாக இன்றுகூட நம் பழங்குடிமதமரபில் இப்படி மண்ணில் படுத்த சிலைகளைச் செய்து வழிபடும் வழக்கம் இருப்பதை அறிந்தேன். நுட்பமாக பார்க்கும் போது இது ஒரு சிற்பத்தின் பரிணாமம் மட்டுமல்ல. இது ஒரு தத்துவத்தின் பரிணாமம் . இறந்த மூதாதை மண்ணாகி , பின் பிரபஞ்சமாகி, பின் பிர்பஞ்ச ரூபனாக வடிவம் கொள்ளும் வளர்ச்சிப்போக்கை நாம் இங்கே காண்கிறோம். அதை நான் என் நாவலில் எழுதினேன்.

‘இந்திய தத்துவ சிந்தனை வளர்ச்சியை தத்துவ அமைப்புகளைப்பற்றிய ஆய்வினூடாக மட்டும் நாம் அறிந்துவிட முடியாது. பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படும் எந்த மத நம்பிக்கையிலும் பழங்குடி மரபின் அம்சங்கள் உண்டு. நாகரீகத்தின் தொடக்கம் முதல் இன்றுவரை இருந்துவரும் சில ஐதீகங்களையும் தொன்மங்களையும் படிமங்களையும் அவற்றில் காணலாம். அவற்றை பகுப்பாய்வு செய்துபார்க்கும்போது வரலாற்றின் வளர்ச்சிப்படிகளும் தத்துவ சிந்தனையின் பரிணாமமும் தெளிவுபடக் கூடும். இவ்வாய்வை புறக்கணித்துவிட்டு உன்னத தளங்களை வைத்து மட்டும் இந்திய சிந்தனை வரலாற்றை எழுத முற்படுவது உண்மையை திரிபடைய செய்வதற்கு நிகர் ‘ என்ற கருத்தை டி. டி கோசாம்பி தன் ஐதீகமும் உண்மையும் நூலில் உள்ள முன்னுரையில் விளக்கமாகச் சொல்கிறார் . மறைந்த கே. தாமோதரன் அவர்கள் ரிக்வேதத்தை புரிந்துகொள்ள நாட்டாரியலை மிக அழகாக பயன்படுத்துவதை அவரது ‘ இந்திய சிந்தனை ‘ என்ற நூலில் காணலாம். பழங்குடி மரபின் மந்திர பாடல்கள் மற்றும் பூசைச் சடங்குகள் எப்படி படிம வடிவம் கொண்டு வேதம் போன்ற செவ்விலக்கிய வடிவம் கொண்டன என அவர் ஆராய்கிறார். கேரள பழங்குடிகளிளான மலைவேடரின் மந்திரப்பாடலை அதே போன்ற வரிகளைக் கொண்ட ரிக் வேத பாடலுடன் ஒப்பிடும் கே.தாமோதரன் அதனூடாக ரிக்வேத காலத்துக்கு முந்தைய மதம் பழங்குடி மந்திரச் சடங்குகளிலிருந்து கிளைத்ததே என வாதிடுகிறார். என் தத்துவ நூலான ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் ‘ -ல் சாங்கியம் யோகம் போன்ற ஆதி தரிசனங்களுக்கு பழங்குடி மரபில் வேர்கள் இருக்கக் கூடும் என்பதற்கான சில காரணங்களை விவரித்துள்ளேன். அதைப்போல நமது தாந்திரிக மதங்களை புரிந்துகொள்ளவும் , நம் மரபில் உள்ள பல சிற்பங்களின் ஆதிவடிவங்கை புரிந்துகொள்ளவும் நாட்டாரியல் ஆய்வுகளை மிக நுட்பமாக பயன்படுத்த முடியும். தத்துவவாதிகளால்உரிய முறையில் நாட்டாரியல் அணுகப்படும்போது பல கேள்விகளுக்குத் தெளிவான பதில் கிடைக்கக் கூடும்

**

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் அரசியல் சாதி சார்ந்தது . இங்கே மக்கள் சாதிகளாகவே குவிகிறார்கள், சாதிகளுக்கு இடையேயான அதிகாரப் போராட்டமே நமது அரசியலின் போக்குகளை தீர்மானிக்கிறது. நமது சாதி அரசியலில் நாட்டாரியல் நேரடியாக பங்கு கொள்ள ஆரம்பித்து பல காலமாயிற்று. இதன் துவக்கம் என ‘ மதுரைவீரன் ‘ திரைப்படத்தை சொல்லலாம் . தலித் மக்களுக்குரிய இந்த நாட்டார்தெய்வமாக எம்.ஜி.ஆர் நடித்தது தமிழ் அரசியலில் ஒரு முக்கியமான நிகழ்வு. அம்மக்களின் அரசியலாக்கம் அதன் மூலமாக நிகழ்ந்தது என்று கூட சொல்லலாம். அதன் பிறகு இப்போது அரசியலுக்கு தங்களை அணிதிரட்டிக் கொண்டு வந்துள்ள எல்லா பிற்பட்டசாதியினருமே நாட்டாரியலில் இருந்தே தங்கள் வீரநாயகர்களை கண்டெடுத்துள்ளனர். காரணம், மிகவும் பிற்பட்ட சாதிகள் அரசியலுக்குள் நுழைகையில் அவர்கள் தங்களை சாதி ரீதியாக திரட்டிக் கொள்ளவேண்டியுள்ளது. அப்படி திரட்ட அவர்கள் தங்கள் சாதியின் பெருமையையும் தொன்மையையும் நிலைநாட்டி சாதி சார்ந்த பெருமிதங்களை உருவாக்கவேண்டியுள்ளது. அப்பெருமிதங்களின் அடிப்படையிலேயே தங்கள் உரிமைகளை அவர்கள் கோரமுடியும். இதற்காக எல்லா சாதிகளும் தாங்கள் பழங்காலத்தில் நாடாண்ட பரம்பரை என்ற சித்திரத்தை தகவல்களையும் கற்பனையையும் கலந்து உருவாக்குகின்றன. பல காரணங்களினால் தங்களுக்கு நிகழ்ந்த வீழ்ச்சியை இவை உருவகித்துக்காட்டி பழையநிலையை அடைவதற்கான அறைகூவலை விடுக்கின்றன. இதன் அவசியமாக தங்கள் சாதி சார்ந்த அடையாளங்களை உருவாக்கிக் கொள்கின்றன. இவ்விரு கூறுகளின் சந்திப்பினால் நாட்டார்மரபு சார்ந்த கதாநாயகர்கள் மறு ஆக்கம்பெற்று அரசியல் சார்ந்த முக்கியத்துவம் பெறுகிறார்கள் இந்த அரசியல் செயல்பாட்டின் நாட்டாரியல் வகிக்கும் பங்கு மிகப்பெரியது

1984ல் கோவைப்பேராசிரியர் ‘ சக்திக்கனல் ‘ நாட்டார் பாடலான ‘அண்ணன்மார் சாமி கதை ‘ யை முழுமையாகப் பிரசுரித்தார். அக்கதை இன்று ஒரு முக்கியமான கலாச்சார அரசியல் குறியீடு . ‘பொன்னர்-சங்கர் ‘ சகோதரர்கள் இன்று அச்சாதிக்குரிய அடையாளங்கள். பண்டார வன்னியன், சுந்தரலிங்கம் , வெங்கலராசன் என அனேகமாக எல்லா சாதியும் இன்று தங்கள் நாயகர்களை கட்டி எழுப்பி நிலைநிறுத்தியுள்ளது. இவர்கள் அனைவருமே நாட்டார் மரபிலிருந்து எழுந்து வந்தவர்கள். நாட்டாரியலாளர்களால் ‘கண்டுபிடித்து ‘ கொடுக்கப்பட்டவர்கள்.றூதாரணமாக வீரன் சுந்தரலிங்கம் பற்றிய சிறு குறிப்பு பாஞ்சாலங்குறிச்சி பற்றிய வீரகதைப்பாடல்களில் உள்ளது. வெள்ளீயப்படை வருவதை கண்டு கட்டபொம்மனுக்கு சொல்ல வரும் சுந்தரலிங்க குடும்பனார் தாக்கப்பட்டு உயிர் பிரியும் நிலையிலும் குதிரை மீது விரைந்து வந்து அச்செய்தியை சொல்லிவிட்டு உயிர் துறக்கின்றார். புகழ்பெற்ர வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் கூட இவ்ர் ஒரே காட்சியில் வரும் சிறு கதாபாத்திரம் மட்டுமே. எண்பதுகளில் கோவையில் குருசாமி சித்தர் நடத்திய கருத்தரங்கு ஒன்றில்தான் சுந்தரலிங்க குடும்பனார் தேவேந்திர குல வேளாளர் சாதியைசேர்த ஒருவர் என அடையாளப்படுத்தப்பட்டு ஒரு கட்டுரை வாசிக்கப்பட்டது . சீக்கிரத்திலேயே அவர் ஒரு வீரநாயகனாகி , அவர் பேரை முன்வைத்து அரசியல் போராடங்கள் ஆரம்பித்தன.

இன்னும் சொல்லப்போனானால் எண்பதுகளில் நமது கல்வித்துறையில் நிகழ்ந்த நாட்டாரியல் புரட்சியானது நேரடியான விளைவை ஏற்படுத்தியது நம் அரசியல்சூழலில்தான். இங்கே இன்னொரு விஷயத்தை , இது அரசியல் என்பதனால், சுட்டவேண்டியுள்ளது .உலகளாவிய தளத்தில் ஒர் அறிவுத்துறை அலை பரவுகிறதென்றால் அதற்கு மேற்கத்திய, அமெரிக்க பல்கலைகழகங்கள் முக்கியமான காரணம். எழுபதுகளில் அமெரிக்கப் பல்கலைகளில் நாட்டாரியல் மற்றும் மானுடவியல் சார்ந்த ஓர் அலை கிளம்பியது . வணிக நிறுவனங்களும் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளும் அளித்த நிதி இதற்கு முக்கியமான காரணம். உலகம் முழுக்க இருந்து நாட்டாரியல் மானுடவியல் தகவல்கள் சேகரிக்கப்பட்டு மேற்கு நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன. உலகளாவிய வணிக நோக்கின் ஒரு பகுதியாக விற்பனைக் கொள்கைகளை உருவாக்கவே இவை சேகரிக்கப்பட்டன, சேகரிக்கப்படுகின்றன என்பது பொதுவான கூற்று. அரசியல் மற்றும் உளவறிதல் சார்ந்தும் அவற்றுக்கு தனி நோக்கங்கள் இருந்தன . அமெரிக்க அலையே நம் கல்வித்துறையில் பாதிப்பை உருவாக்கியது. ஃபோர்ட் ஃபவுண்டேஷன் முதலிய அமைப்புகள் நேரடியான நிதி உதவி அளித்து நம் நாட்டில் நாட்டாரியல் அலையை உருவாக்கின. மதுரை பல்கலை நாட்டாரியல் ஆய்வுத்துறை, பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி உட்பட எல்லா நாட்டாரியல் நிறுவனங்களும் ஃபோர்ட் ஃபவுண்டேஷனின் நிதி உதவியால் நடத்தப்படுபவையே. ஆக ஒரு தொலைதூரப்பார்வையில் நமது தமிழக அரசியலை வடிவமைப்பதில் மேலைநாட்டு வணிக, அரசியல் சக்திகளும் பெரும்பங்காற்றுகின்றன[ அமெரிக்க மானுடவியல் கூட்டமைப்பில் 1947ல் 500 பிரதிநிதிகள் இருந்தனர். 1970ல் அது 5000 ஆக அதிகரித்தது. அமெரிக்க பல்கலைகளில் மொத்தம் இருபது துறைகள் இவ்விஷயம்சார்ந்து செயல்பட்டது 1970ல் 217 ஆக பெருகியது.இப்பெருக்கம் மூலம் அத்துறை எண்ணற்ற சித்தாந்தங்களாலும் கணக்கிலடங்கா தரவுகளினாலும் நிரம்பி அசைவாற்ற பிண்டமாக் ஆகியது என குறிப்பிடப்படுகிறது [ Perspective in Recent Ameican anthropology Cora Du BoisP74. ]இத்தகைய வீக்கம் நம் கல்வி மற்றும் அரசியல் துறைகளில் வடிவது ஏற்படுத்தும் பாரதூரமான விளைவுகள் பல.

ஆகவே நமது இன்றைய அரசியல்போக்குகளைப் பற்றிய ஆய்வை நாம் நாட்டரியல் ஆய்வுகளின் துணையின்றி பொருளுடன் நிகழ்த்திவிடமுடியாது. உதாரணமாக தேவேந்திர குல வேளாளர் அரசியலையே எடுத்துக் கொள்ளலாம். டாக்டர் குருசாமி சித்தர் என்ற ஆய்வாளர் தனது ‘மள்ளர் மலர் ‘ இதழ் மூலம் தொடர்ந்து நாட்டாரியல் ஆய்வுகளை வெளியிட்டார் .அவ்வாய்வுகளில் பள்ளர்கள் என்ற சாதியினர்தான் சங்க காலத்தில் ‘மள்ளர் ‘ என்று குறிப்பிடப்பட்ட பழம்பெரும் சாதி என்று வலியுறுத்தினார் . அவர்களுடைய ஐதீக சமயப் பெயர் ‘தேவேந்திர குல வேளாளர் ‘ என்று பிறகு விளக்கப்பட்டது. இவர்கள் நிலவுடைமையாளராக இருந்து நிலம் பறிீக்கப்பட்டு தாழ்ந்த நிலைக்கு வந்தார்கள் என சான்றுகள் காட்டப்பட்டன. இந்த நாட்டாரியல் விவாதமே முதலில் ‘தேவேந்திர குல வேளாளர் சங்க ‘மாக வளர்ந்தது. பிற்பாடு ‘புதிய தமிழகம் ‘ என்ற கட்சியாக மாறியது. இதன் எதிர்வினையாக மற்ற சாதிகளில் என்ன நடந்தது என ஊகிக்கலாம். நாட்டாரியல் தரவுகள் இல்லாமல் இன்றைய தமிழக அரசியலை விவாதிக்கவே முடியாது

***

எண்பதுகளில் தமிழின் நவீனத்துவ இயக்கம் முடிவுக்கு வர ஆரம்பித்தது . அசோகமித்திரன், சுந்தர ராமசாமி , ஜி நாகராஜன், நகுலன், ஆ.மாதவன் ,வண்ணதாசன், வண்ண நிலவன், பூமணி, நாஞ்சில்நாடன், பிரபஞ்சன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட பொதுவான இலக்கிய நோக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றம் எப்படிப்பட்டது என பொதுவாகச் சொல்லப்போனால் ஒன்றையே சுட்டவேண்டியிருக்கும் — நாட்டார் மரபு சார்ந்த நோக்கு ஒன்று இலக்கியத்தை ஊடுருவியதுதான் அது. கோணங்கியின் ஆரம்பகாலச் சிறுகதைகள் , என்னுடைய கதைகள் மற்றும் நாவல்கள், எஸ் .ராமகிருஷ்ணனின் கதைகள் அடுத்த கட்டத்தில் சு வேணுகோபாலின் கதைகள் ஆகியவை உதாரணமாக கொள்ளத்தக்கவை. அதுவரை இருந்துவந்த நவீனத்துவத்தின் அழகியலானது நாசூக்கு, கச்சிதம் ஆகியவற்றை முக்கிய குணாதிசயமாக கொண்டதாக இருந்தது. மொழியில் அடக்கமும் , வெளிப்பாடுகளில் மிதமான தன்மையும் அதன் இலக்கணமாக வலியுறுத்தப்பட்டன. நவீனத்துவம் தன் ‘ உண்மையை ‘ தனிமனித மனதிலிருந்து மட்டுமே பெற்றுக் கொள்வதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த மனத்தை வடிவமைத்தவை கல்வி மூலம் கிடைக்கப்பெற்ற செவ்விலக்கியங்களே. நாட்டார் மரபு ஆழத்தில் இருந்துகொண்டு தன் மறைமுக பாதிப்பை செலுத்தியிருக்கலாம். ஆனால் அப்பாதிப்பு பிரக்ஜைபூர்வமாக வடிகட்டப்பட்டது.

இலக்கியம் என்பது ‘பண்பட்டது ‘ எனவே அது நாட்டார்கூறுகளுக்கு எதிரானது, நாட்டார் கூறுகளைக்கூட ‘பண்படுத்தியே ‘ அது பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற மனப்பயிற்சி நவீனத்துவகால படைப்பாளிகளிடம் இருந்தது. உதாரணமாக சுந்தர ராமசாமி , வண்ணதாசன் இருவரையும் சொல்லலாம். நாட்டார் வழக்குகளின் பெரும் குவியல் கொண்ட குமரி நெல்லை மாவட்டங்களில் இருந்து இவர்கள் எழுதியபோதும் படைப்புகளில் நாட்டார் அழகியலின் சாயல்களே இருக்கவில்லை . ‘ ஒருபுளிய மரத்தின்கதை ‘ நாவலில் நாட்டார் கதைமரபு முன்வைக்கப்படுகிறது, ஆனால் அது நவீனத்துவ அழகியல் வடிவத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கதைசொல்லி அவற்றை திருப்பி சொல்கிறான். சீக்கிரமே நாவல் அதைக் கடந்து அடுத்த கட்டத்துக்குச் சென்றும் விடுகிறது. இதெல்லாம் எப்போதுமே விதிகள் அல்ல என்பதற்கு கி ராஜநாராயணனின் ஆக்கங்கள் ஓர் உதாரணம். நவீனத்துவ காலகட்டத்திற்குள் நாட்டார் அழகியலின் நேரடியான வெளிப்பாடாக அமைந்த ஆக்கங்கள் அவர் உருவாக்கியவை. ஆனாலும் அவர் கதைகளில் நவீனத்துவப் பண்புகூறுகள் வலுவாகவே உள்ளன. நாட்டாரியல் கூறுகள் அவற்றில் இயல்பாக இடம்பெறுகின்றனவே ஒழிய வளர்த்தெடுக்கப்படவில்லை. கி ராஜநாராயணன் கதைகளில் எங்குமே நாட்டார் மரபு சார்ந்த படிமங்கள் சமகால நவீன வாழ்க்கையை விளக்கவும் விமரிசிக்கவும் பயன்படும் விதமாக மலர்ச்சி கொள்ளவில்லை என்பதை இங்கே சுட்டிக் காட்டவேண்டும். கி ராஜநாராயணனின் பார்வை சமகால முற்போக்கு அழகியலையே பெரிதும் சார்ந்துள்ளது.

நாட்டரியல்மரபு சார்ந்த தனி அழகியலை தமிழில் நிறுவியவர் ‘ கோணங்கி ‘. அவரது கதைகள் அன்று பெற்ற முக்கியத்துவம், இன்று அவர் அபத்தமான சொற்குப்பைகளைகொட்டும்போதுகூட அவர் மீது உள்ள கவனம் , அக்கதைகள் மூலம் உருவானதேயாகும். கோணங்கியின் கதைகளில் நாட்டார் கூறுகள் வரலாறாகவோ, பின்புலச் சித்தரிப்பின் பகுதியாகவோ தகவலளவில் வரவில்லை என்பதை சுட்டிக் காட்டவேண்டும். அவர் தன் ஆரம்பகால கதைகளில் நாட்டார் மரபின் கதைகளுக்குப் பதிலாக படிமங்களையே அதிகமும் பயன்படுத்தினார். நாட்டார் வாய்மொழி இலக்கியங்களின் மொழியை படைப்பாளுமையுடன் பயன்படுத்தினார். இவ்வாறு இரு ஆழமான படைப்பியக்க அடிப்படைகளை அவர் கதைகள் கொண்டபோது அவரது மையமான அணுகுமுறையும், அவரது வடிவப் பிரக்ஞையும் நவீனத்துவத்திலிருந்து முற்றிலும் விலகிசென்றன. கோணங்கியின் கதைகள் சொல்லிச்சொல்லி செல்வன. உதாரணமாக ‘மதினிமார்கள் கதை ‘ இழந்துபோன கிராமத்து உறவுகளைப்பற்றிய ஒரு பெரும் புலம்பல். வடிவக்கச்சிதம் நுட்பம் ஆகியவற்றுக்குப் பதிலாக தன்னிச்சையான ஓட்டம் என்பதை அவர் கதைகள் முன்வைத்தன. அடங்கிய குரலுக்கு மாறாக நேரடியான உணர்ச்சிவேகத்தை முன்வைத்தன. செவ்விலக்கியங்கள் உருவாக்கிய நாகரிகத்துக்கு எதிரான ஆதிக் குரல்களை நாம் அவற்றில் காண்கிறோம் — உதாரணம் தாத்தாவின் கைத்தடி கேட்ட நூறு கேள்விகள் . அவ்வாறாக அதுவரை எழுதப்படாத ஓர் உலகம் அவரால் எழுதப்பட்டது. தோற்கடிக்கப்பட்ட மனிதர்களின் , தோற்று உள்ளே அழுத்தப்பட்ட மரபின், நனவிலிக்கு துரத்தப்பட்ட படிமங்களின் உலகம்.

என்னுடைய ஆரம்பகாலக் கதைகள் முதல் தொடர்ந்து நாட்டார் கூறுகளைக் காணலாம். நான் இளமையில் கேட்டு வளர்ந்த பழங்கதைகளின் நீட்சியாகவே நான் நவீன இலக்கியத்தை உருவகித்தேன். ‘படுகை ‘ ‘மண் ‘ போன்ற கதைகள் நாட்டார் மரபின் மொழியையும் படிமங்களையும் இலக்கியஆக்கம் செய்தவை. ‘ நாகம் ‘ போன்ற கதைகள் நாட்டார் மரபின் படிமங்களை மட்டுமே எடுத்தாண்டவை. இதன் நீட்சியாக தொன்மங்களின் உருவாக்கத்தில் , இணைவுகளில் உள்ள தருக்கம் என்ன என்று என் கவனம் குவிந்தது. அது என்னை புராணங்களை நோக்கி இட்டுச்சென்றது. உதாரணமாக என் கதையான ‘ நாகம் ‘ என் குலக்கதைகளில் உள்ள ஒரு நாட்டாரியல் கரு. பல நூற்றாண்டுகளாக நாக வழிபாடு செய்பவர்கள் நாங்கள். இக்கதையை நவீன இலக்கியமாக ஆக்கியபோது அதில் ஒரு பெளராணிக தன்மையும் குடியேறுவதைக் காணலாம். அந்த நாகத்துக்கும் நமது புராணங்களில் வரும் பலநூறு நாகங்களுக்கும் இடையேயான உறவென்ன என்றவினா அடிப்படையான ஒன்று. அவ்வாறாக நாட்டாரியலுக்கும் புராணங்களுக்கும் இடையேயான உரையாடலை நோக்கி என் கவனம் குவிந்தது.

என் ஆர்வத்தின் ஒரு பக்கமாக தத்துவமும் வரலாறும் எப்போதுமே இருந்து வந்தன. நாம் வாழும் உலகம் வரலாற்று நீட்சியாகவும் வாழ்க்கையின் பக்க விளைவான தருக்கங்களாலும் உருவானது என்பது என் நம்பிக்கை . நம் மனம் வெளியுலகின் எதிர்வினை. ஆகவே இலக்கியத்தை வரலாற்றுக்கும், தத்துவத்துக்கும், ஆழ்மனதுக்கும் இடையேயான சந்திப்புப் புள்ளியாகவே நான் கண்டேன். இந்நோக்கு செவ்வியல் தன்மை கொண்டது. ஆகவே என் அழகியலில் எப்போதுமே செவ்வியல் அம்சம் உள்ளது. அதேசமயம் செவ்வியல்தன்மையை ஓர் இறுக்கமான சுய இயல்பாக கொள்ள நான் தயாராக இல்லை . என் வளர்ப்பிலிருந்து எனக்கு வந்து சேர்ந்த நாட்டரியல் கூறுகள் அதை ஊடுருவின. ஆக நாட்டாரியலால் ஊடறுக்கப்பட்ட செவ்வியல்தன்மை என் படைப்புகளுக்கு மெல்ல ஏற்பட்டது. இதற்குச் சிறந்த உதாரணம் விஷ்ணுபுரம்.

எஸ்.ராமகிருஷ்ணனின் நாட்டாரியல் தொடர்பு அவரது முதல் தொகுப்பான ‘வெளியிலிருந்து வந்தவனி ‘ல் வெளியாகவில்லை. பிறகு வந்த தொகுப்புகளான ‘காட்டின் உருவம் ‘ அதன் துவக்கப்புள்ளியை அடையாளம் காட்டியது. வாய்மொழியாக பரவிச்செல்லும் கதைகளின் சாரத்தை நவீனமுறையில் மறு ஆக்கம் செய்பவை அவரது கதைகள். சிறந்த உதாரணமாக சொல்லப்படவேண்டியது ‘தாவரங்களுடன் உரையாடல் ‘ என்ற கதைதான். ராமகிருஷ்ணனுக்கும் புராணமரபு நாட்டார் கதைகளை தழுவும் புள்ளி மீது படைப்பாக்கம் சார்ந்த ஆர்வம் உண்டு.

நாட்டரியலின் இலக்கிய பாதிப்பே நவீனத்துவக் கூறுகளை வென்று புதுவகை இலக்கியம் தமிழில் உருவாக வழியமைத்தது என்பதைக் காணலாம். பொதுப்பிரக்ஞைக்கும், அறிவார்ந்த தருக்கத்துக்கும் முதலிடம் கொடுப்பது நவீனத்துவம். அவற்றைத்தாண்டி படைப்பாளியின் அகமனம் வெளியாகும் இடங்களே நவீனத்துவத்தின் ஆழம். நவீனத்துவத்தை தாண்டி சென்ற எழுத்துமுறையானது தொல்படிமங்களாகவும் , ஐதீகங்களாகவும் சமூக ஆழ்மனம் பதிவாகியிருப்பதை அடையாளம் கண்டது. அந்த சமூகஆழ்மனதை படைப்பாளி தன் ஆழ்மனதால் அடையாளம் கண்டு மறு ஆக்கம் செய்யும் போது அவனது ஆழ்மனம் சமூக ஆழ்மனதின் உறவால் வரலாற்று ஆழத்துக்குச் செல்லமுடியும் என கொண்டுகொண்டது. இதற்கு உதவியது நாட்டாரியலே. தொகுக்கப்பட்ட நாட்டார் பாடல்கள், நாட்டார் கதைகள் இலக்கிய படைப்பாளிகள்மீது நேரடியாகவே பாதிப்பு செலுத்தின. மேலும் தீவிரமான பாதிப்பை செலுத்தவும் உள்ளன.

***

சமகாலக் கலைகள் மீதான நாட்டாரியல் பாதிப்பு இருவகையானது. சில கலைகளுக்குள் நாட்டாரியல் ஃபோர்டு ஃபவுண்டேஷன்போன்ற பெரு நிறுவனங்களாலும் பல தன்னார்வக் குழுக்களினாலும் ‘ ஊசி ‘ மூலம் செலுத்தப்பட்டது. இதை ஏற்கனவே வெங்கட் சாமிநாதன் போன்ற கலைவிமரிசகர்கள் சற்று கடுமையான சொற்களினால் சுட்டிக் காட்டியுள்ளனர். நவீன நாடகத்தில் நாட்டார் அரங்க கலைகளான கதகளி , தெருக்கூத்து, யட்ச கானம் போன்றவற்றின் கூறுகளை கலக்கும் போக்குக்கு எழுபதுகளில் நாடகக் கலைக்கு நிதியுதவி செய்த சர்வதேச நிறுவங்கள் ஊக்குவித்தன, பல சமயம் வற்புறுத்தின. தூண்டுதலினல் நிகழ்ந்தமையால் இந்த மாறுதல் பெரும்பாலும் மிக செய்ற்கையாக இருந்தது என்பதே என் அனுபவம். இங்கே நாடகம் போன்ற கலைகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை. நிதியை நம்பியே அவை இருக்கின்றன. மக்கள் ஆதரவுடன் நடக்கும் கேரள வணிக நாடக அரங்கில் நாட்டாரியல்கூறுகள் மிக குறைவாகவே பாதித்துள்ளன என்பது என் கணிப்பு. ஆனால் வீதிநாடகம் போன்ற அரங்குகள் உருவானபோது நட்டார் அரங்கக் கூறுகள் அவற்றில் ஆக்கபூரவமாக பயன்படுத்தப்படமுடியும் என நிரூபிக்கப்பட்டது .வெகுஜனக் கலையான சினிமாவில் எப்போதுமே நாட்டார்கலைகளின் மேலோட்டமான பாதிப்பு உண்டு. இதற்குமேல் விவாதிக்கும் அளவுக்கு எனக்கு கலைகளில் பழக்கம் இல்லை.

ஆனால் நாட்டார் கலைகளில் நாட்டரியல் என்ற அறிவுத்துறையின் பாதிப்பு மிக மிக அதிகம். நாட்டரியல் நாட்டார் கலைகளை முதலில் பதிவுசெய்ய ஆரம்பித்தது. எவ்விதத்திலும் அவற்றில் தலையிடாமல் பதிவு மட்டுமே செய்யவேண்டும் என்ற திட்டவட்டமான விதிமுறை நாட்டாரியலில் இருந்தாலும் நடைமுறையில் பதிவு செய்தல் என்பதே கூட பெரிய விளைவுகளை உருவாக்குவதாக அமைந்தது .முதலில் , ஒரு நாட்டார் கலை பதிவுசெய்யப்படுகையிலேயே அதன் ‘காற்றில் கரைந்து மறையும் ‘ தன்மை இல்லாமலாகிவிடுகிறது. பதிவுசெய்யப்படுவதன் மூலம் அந்த நாட்டார்கலையின் வகைபேதங்கள் , ஆட்ட ஒழுங்குகளிலும் சடங்குகளிலும் உள்ள பல்வெறு வேறுபாடுகள் பதிவாகின்றன. அவை ஒப்பிடப்படுகின்றன. அது மெல்ல ஒரு தரப்படுத்துதலுக்கும் சீரமைப்புக்கும் இட்டுச்செல்கிறது . நாட்டார்கலைகளை ஆவணப்படுத்தி அவற்றை பொதுவான கலாச்சார ஆர்வலர் கண்களுக்கு கொண்டு வருகிறது நாட்டாரியல். அவற்றின் வரலாற்று, கலாச்சார முக்கியத்துவத்தை அது வெளிப்படுத்துகிறது. அவற்றின் சீீரழிந்த நிலையை, அவற்றில் சில அழிவதை பதிவு செய்கிறது. இதன் விளைவாக நாட்டார்கலைகள் பேணப்படுவதற்கான விழிப்புணர்வை நாட்டாரியல் ஓரளவேனும் உருவாக்கியது. உண்மையில் பல்வேறு நாட்டாரியல் ஆய்வு அமைப்புகள் மற்றும் சேவை நிறுவங்கள் மூலம் வரும் வருமானம் பல நாட்டார் கலைகளுக்கு வேர்நீராக அமைந்து அவை அழியாமல் காத்துவருவதை காணமுடிகிறது. சில கலைகள் நாட்டாரியல் கவனம் விழுந்த பிறகு அழிவிலிருந்து மீண்டு புதிய முக்கியத்துவத்தை அடைந்துள்ளன. உதாரணமாக சொல்லவேண்டுமானால் தப்பாட்டத்தை குறிப்பிடலாம் .

இப்போக்கில் நாட்டாரியல் ஆய்வாளர் பலர் நாட்டாரியல் கலைகளிலும் அக்கலைஞர்களின் வாழ்விலும் மேலும் ஈடுபட்டு அவற்றை மேம்படுத்த உழைப்பதும் சாதாரணமாக நடக்கிறது. நாட்டுப்பாடல் ஆய்வளர்களான பேராசிரியர் விஜயலட்சுமி, பேராசிரியர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் பெரும்புகழ்பெற்ற உதாரணங்கள். டாக்டர் அ .கா. பெருமாள் கூட தோல்பாவைக்கூத்து கலை பற்றிய ஆய்வில் ஈடுபட்டு அவர்கள் வாழ்க்கைமேம்பாட்டுக்காக உழைத்திருக்கிறார். தன் தோல்பாவை கூத்து என்ற ஆய்வு நூலில் அதை பதிவு செய்துள்ளார். பல சமயம் நாட்டாரியல் ஆய்வாளர்கள் நாட்டார் கலைகளின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் பெரிய மாற்றங்களை செய்பவர்களாகவும் இருந்துள்ளனர். உதாரணமாக ந. முத்துசாமி தன் கூத்து ஆய்வுகள் மூலம் தெருக்கூத்தின் அமைப்பிலும் உள்ளடக்கத்திலும் குறிப்பிடத்தக்க பாதிப்பை செலுத்தினார் என்று சொல்லப்படுகிறது. இன்று நமது நாட்டார்கலைகள் இயல்பான சமூக ஆர்வத்தை விட நாட்டாரியல் ஆய்வாளர் ஆர்வத்தால்தான் பிழைத்திருக்கின்றன என்று கூட சொல்லிவிடலாம்.

***

நாட்டரியல் முக்கியமான பங்களிப்பை ஆற்றக் கூடிய ஒரு தளம் என இன்று அவசியத்தேவையாக எழுந்துவரும் மாற்று வேளாண்மை மற்றும் மாற்று மருத்துவம் போன்ற துறைகளை குறிப்பிடலாம். ஓரு உதாரணம்.இயற்கைவேளாண் அறிவியலாளரான நம்மாழ்வார் இன்று வழக்கொழிந்து போய்விட்ட பல்வேறு நெல்விதைகளை சேகரிக்கும் பணியில் அவ்விதைகளைப் பற்றிய தகவல்களை நாட்டார் பாடல்களில் இருந்துதான் பெற்றுக் கொண்டதாக சொல்லியிருக்கிறார். நாட்டார்பாடல்களில் உள்ள வேளாண்மை மற்றும் மருத்துவம் குறித்த தரவுகளை சேகரிப்பது மாற்று வழிகளைத்தேடும் போராட்டக் காரர்களாலும், மேலைநாட்டு ஆய்வு மாணவர்களாலும் ஒரே சமயம் செய்யப்படுகிறது. நவீன வேளாண்மையும் மருத்துவமும் பெரும் அமைப்புகளாக எழுந்து , பெரும் சுரண்டல் சக்திகளாக மாறியுள்ள இன்று அவற்றுக்கு எதிரான போராட்டம் ஒரு வகை மக்கள் விடுதலைப்போராட்டமேயாகும். அப்போராட்டத்தின் மக்களின் மரபுசார்ந்த அறிவியலும் மெய்யியலும் திரண்டிருக்கும் ஊற்றுமுகங்களாக நாட்டார் மரபு குறிப்பிடப்படுகிறது

[ 2 ]

அ.கா. பெருமாள் அவர்களின் இந்நூல் ஆய்வாளர்களை முன்னால் கண்டு எழுதப்பட்டது. ஆய்வாளர்களுக்கான அரங்குகளில் முன்வைக்கப்பட்டது. ஆனால் இது பொது வாசகர்களுக்கு அவர்களுடைய சிந்தனையின் எல்லையை விரிவு படுத்த பெரிதும் உதவக் கூடிய ஒன்று. குறிப்பாக இலக்கியவாதிகள் இந்நூலை ஆழமாக பயிலவேண்டுமென்று எண்ணுகிறேன். இம்மாதிரி ஒரு நூல் முன்வைக்கும் தகவலின் முக்கியத்துவம் என்ன என்ற கேள்வி சாதாரணமாக ஒரு இலக்கிய வாதியின் மனதில் எழுவதே. காரணம் பெரும்பாலான சிறந்த இலக்கியவாதிகள் தங்கள் சுய அனுபவத்தை பெரிதும் சார்ந்துள்ளனர், அதுவே போதும் என்ற எண்ணம் அவர்களிடம் இருப்பதும் இயல்பே. இக்கேள்வியை ஒரு முறை நாஞ்சில்நாடன் தனிப்பேச்சில் எழுப்பியபோது நான் சொன்ன உதாரணம் இது. அம்மன் கொண்டாடி ஆபாசப் படம் பார்க்க பிக்சர்பாலஸ் தியேட்டர் வாசலில் முண்டியடிப்பதை நாம் காணும்போது ஒரு மனநகர்வு ஏற்படுகிறது. அது ஒருஅக அனுபவம் ,அதை நாம் தீவிரமாக பதிவும் செய்யலாம். ஆனால் அந்த அம்மனின் முழுவரலாற்றுடன் பொருத்தி சித்தரிக்கும்போது அதே சம்பவம் ஒரு பெரிய உளவியல் அலையாக , வரலாற்று நகர்வாக ஆகிவிட்டிருக்கிறது. அதற்கு நமது சொந்த அனுபவம் மட்டும் போதாது. வரலாற்று, சமூகவியல் பின்புலம் குறித்த தகவல்கள் தேவை. நாட்டாரியல் போன்ற துறைகளின் உதவி இங்குதான் வருகிறது .

அதாவது நமது அணுகுமுறையை கறாராக மாற்றிக் கொள்வதற்கான ஆயுதங்கள் இவை. ஒரு எளிய மனப்பிம்பமாக நம் உள்ளே பதியும் எண்ணங்களை வரலாற்றிலும் சமூகச்சூழலிலும் வைத்து பரிசீலிப்பதற்கும் நமது கருத்துக்களின் உண்மையான மதிப்பை அறிந்துகொள்வதற்கும் நமது தர்க்கங்களை கூர்மைசெய்துகொள்வதற்கும் இவை உதவுகின்றன. இலக்கியப்படைப்பை பொறுத்தவரை நமது மனதில் எழும் படிமங்களை புறவயமான இலக்கியப்படிமங்களாக, குறியீடுகளாக வளர்த்தெடுத்துக் கொள்ள உதவக்கூடியவை. அதே போல சமகால இலக்கியப் படைப்புக்ளை மதிப்பிடுவதற்கும் இவை அடித்தளங்களை உருவாக்கி அளிக்கின்றன. படைப்பில் தன்னிச்சையாக நம்பிக்கைகளும் படிமங்களும் கொள்ளும் மாற்றம் அப்படைப்பாளியின் அக இயல்பைப்பற்றிய ஆய்வுக்கு மிக முக்கியமானது. நவீன இலக்கியத்தை மதிப்பிட நாட்டாரியல் வலுவான ஆயுத்ங்களை அளிக்கும்

அ.கா. பெருமாள் அவர்கள் கடந்த முப்பது வருட காலமாக தொடர்ந்து குமரிமாவட்ட வரலாறு மற்றும் நாட்டாரியல் துறைகளில் ஆய்வுகள் செய்து முக்கியமான பங்களிப்புகளை ஆற்றி வந்துள்ளார். கவிமணி தேசிகவநாயகம் பிள்ளை , எஸ்.வையாபுரிப்பிள்ளை, கே.கே.பிள்ளை ஆகியோரின் ஆய்வுமரபின் இன்றைய தொடர்ச்சி என அவரை குறிப்பிடுவது மிகப்பொருத்தம். கவிமணியின் வரலாற்றை ஆராய்ந்து அரிய குறிப்புகளுடனும் புகைப்படங்களுடனும் அவரது கவிதைகளை நூலாகத் தொகுத்துள்ளார். கவிமணியைப்ப்ற்றி ‘கவிமணியின் இன்னொரு பக்கம் ‘ ‘கவிமணியின் வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள் ‘ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கையையும் ஆய்வுகளையும் பற்றி ‘ தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியாரின் கணிப்பு/ என்ற நூலை எழுதியுள்ளார். இம்மூவரும் செய்த ஆராய்ச்சிகளின் நீட்சியாக தன் ஆய்வுகளை நிகழ்த்தி வருகிறார் என்று சொல்லலாம். கவிமணியால் கண்டெடுக்கப்பட்டு கேரள அரசால் பிரசுரிக்கப்பட்ட முதலியார் ஓலைச்சுவடிகளில் அச்சேறாத சுவடிகளை அச்சேற்றி அவை காட்டும் தகவல்களை ஆராய்ச்சி செய்து நாஞ்சில்நாட்டு முதலியார் ஓலைச்சுவடிகள் என்ற நூலை எழுதியுள்ளார். கவிமணியையும் எஸ்.வையாபுரிப்பிள்ளையையும் அடியொற்றி குமரிமாவட்ட வரலாற்றை ஆராய்ந்து நாஞ்சில்நாட்டு வரலாறு என்ற நூலை எழுதியுள்ளார். அதன் விரிவான பதிப்பு வரவிருக்கிறது. கே.கே.பிள்ளையின் வரலாற்றாய்வுகளின் தொடர்ச்சியாக , குறிப்பாக சுசீந்திரம் கோயில் பற்றிய அவரது ஆய்வின் நெறிநின்று குமரிமாவட்ட கல்வெட்டுகளைப்பற்றிய ஆய்வை செய்துள்ளார். தன் முந்னோடிகளிடம் இல்லாத ஒரு சிறப்பம்சம் அ.கா.பெருமாள் அவர்களிடம் உண்டு. நாட்டாரியல் சார்ந்த ஆய்வுபார்வை. அது அவரது பார்வையையும் முடிவுகளையும் பெரிதும் வேறுபடுத்துகிறது.

அ.கா.பெருமாள் அவர்கள் தனது முன்னோடிகளாகக் கொண்டுள்ள இம்மூவருக்கும் அவருக்கும் சில பொதுமைக்கூறுகள் உண்டு. இவர்கள் அனைவருமே ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை சார்ந்து ஆராய்ச்சிகளை நடத்துபவர்கள். கவிமணி கவிஞர், கூடவே வரலாற்றாய்வாளர். எஸ்.வையாபுரிப்பிள்ளை இலக்கிய விமரிசகர் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர். கே.கே.பிள்ளை மரபார்ந்த வரலாற்றாய்வாளர் மட்டுமல்ல சமூகவியலை அதற்கு பயன்படுத்திக் கொண்டவரும் கூட . இத்தொடர்ச்சி அ.கா.பெருமாள் அவர்களுக்குள்ளும் செயல்படுகிறது. அவரது முக்கியமான ஆய்வுத்துறையாக காலப்போக்கில் நாட்டாரியல் உருவாகி வந்தது என்றாலும் வரலாற்றாய்வும் இலக்கிய ஆய்வும் தன் அவரது துவக்கம். அவ்விரு துறைகளும் அவரது ஆய்வின் துணைகளாக எப்போதுமே இருந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு பல்துறை சார்ந்து ஆய்வுசெய்கையில் ஒரு ஆய்வுமுறையின் உள்ளார்ந்த போதாமையை இன்னொன்று ஈடு கட்டுகிறது. உதாரணமாக குமரி நெல்லை மாவட்ட நாட்டரியலாய்வாளர் கதைப்பாடல்களை சேகரிக்கும்போது பப்புதம்பி ராமன்தம்பி கதை, இரவிக்குட்டிப்பிள்ளை போர் போன்ற கதைகளை ஆராய்ந்து வகைப்படுத்த வேண்டுமென்றால் திருவிதாங்கூர் வரலாறு சார்ந்த பயிற்சி இருக்கவேண்டியுள்ளது. பழந்தமிழுக்கும் நாட்டு மலையாளத்துக்கும் இடைப்பட்ட பழைய மொழியை புரிந்துகொள்ள ஒப்பிலக்கியப்பயிற்சியும் தேவையாகிறது. இந்நூலில் அ.கா.பெருமாள் அவர்களின் பலதுறை சார்ந்த ஆய்வுமுறை அவருக்கு தொடர்ந்து கைகொடுப்பதைக் காணலாம்.

முன்னோடிகளிடமிருந்து அ.கா.பெருமாள் பெற்றுக் கொண்ட இன்னொரு முக்கிய சிறப்பம்சம்யாய்வின் தகவல்தன்மையை பெரிதும் நம்பியிருப்பதும் வெகுதூரத்துக்கு எறியப்படும் ஊகங்களைச் செய்யாதிருப்பதும் ஆகும். இந்நூலை வாசிக்கும் பொதுவாசகன் அவனுக்கு அதிர்ச்சி ஊக்கம் பெருமிதம் போன்ற உணர்வுகளைத்தரும் ஊகங்களோ முடிவுகளோ இல்லாமலிருப்பதை காணலாம். தமிழ் ஆய்வுநூல்களைப் பொதுவாக வாசித்துப் பார்ப்பவர்கள் ஒரு சொல்லை மட்டும் விருப்பப்படி அசைபிரித்து பொருள்கொண்டு சிந்து சமவெளிநாகரீகமே தமிழருடையதுதான், உலகாயத சிந்தனையே தமிழர் உற்பத்தி செய்ததுதான் என்பதுபோனற ஏழுகடல் ஏழுமலை தாவிக்கடக்கும் ஊகங்கள் நடத்தப்பட்டிருப்பதைக் கண்டு மெய்சிலிர்ப்பு கொள்வதே வரலாற்று வாசிப்பு என நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.இம்மாதிரியான ஊகங்கள் தான் வரலாற்றய்வுக்குள் செயல்படும் படைப்பூக்கம் என்ற நம்பிக்கை நம்மிடமுண்டு. அத்தகைய வாசகன் இந்நூலுக்குள் செல்லும்போது இது சீராக தொகுக்கப்பட்ட தகவல்கள் மட்டும்தானா என்ற சலிப்பை அடையக் கூடும். ஆனால் தன் முன்னோடிகளிடமிருந்து அ.கா. பெருமாள் அவர்கள் பெற்றுக்கொண்ட முக்கியமான பாடம் ஒன்று அவரை எப்போதும் கட்டுப்படுத்துகிறது. ‘நம்பிக்கைகொள்வதல்ல, அவநம்பிக்கை கொள்வதே ஆய்வின் முதல் படி ‘ . அவநம்பிக்கை காரணமாக தமிழ்நாட்டுக் கலாச்சார அரசியலால் வெறுத்து ஒதுக்கப்பட்ட எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களிடமிருந்தும் , வரலாற்றாய்வாளராக பொருட்படுத்தப்படாத கவிமணியிடமிருந்தும் இப்போக்கை அ.கா.பெருமாள் அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கலாம்.

இந்நூலில் உள்ள ஆய்வுமுறை தகவல்களை முழுமையாக ஒட்டி நிற்கும் கவனத்தில் தன் அடிப்படை வலிமையை கொண்டிருக்கிறது. நாட்டாரியல் இவ்வகையில் மிகக் கவனமாக ஈடுபடவேண்டிய ஆய்வுத்துறையாகும். அதற்குக் காரணம் இரண்டு. ஒன்று: நாட்டாரியல் தரவுகள் நேரடியான கள ஆய்வுகளின் விளைவுகளானதனதால் நுட்பமான திரிபுகளை அவற்றில் நிகழ்த்துவது எளிது. பிறிதொரு கள ஆய்வு தான் அதை மறுபரிசீலனை செய்யமுடியும். இரண்டு: நாட்டாரியலில் முக்கிய இடம் வகிப்பவை படிமங்கள். சடங்குகள் , தெய்வங்கள் என்ற வடிவில் இவை உள்ளன. இவை நம் ஆழ்மனதுடன் பலவகையில் உரையாடுபவை . ஆகவே நம்மை கட்டுக்கடங்காத கற்பனைகளை நோக்கி தள்ளிவிடக்கூடியவை. திட்டவட்டமான பழைய வரலாறுகளிலேயே கற்பனைப்பாய்ச்சல்களை நிகழ்த்துபவர்கள் நாம். நாட்டாரியலில் நமது குதிரைகள் கடிவாளங்களில்லாமல் துள்ளிப்போகின்றன.நம் மனதுக்கு ஓர் இயல்பு உண்டு. நம் மனதில் ஒரு சிந்தனைக் கோணம் எழுந்துவிட்டாலே அது உண்மையானது என நம்ப ஆரம்பித்து விடுகிறோம், அதை நிரூபிக்க முனைகிறோம்.அந்த வேகத்தில் அக்கோணம் தவிர பிறிது எதுவுமே தெரியாமலும் ஆகிவிடுகிறது. இந்த அபாயத்துக்கு ஆளான நாட்டாரியலாய்வுகளே நம் சூழலில் அதிகம். ஆகவேதான் அ.கா.பெருமாள் அவர்களின் நிதானமான தகவல்சார்ந்த அணுகுமுறை முக்கியமானதாகிறது.

அ.கா.பெருமாள் அவர்கள் இநூலில் குமரிமாவட்ட நாட்டார் தெய்வங்களுக்கு சிவனிடம் / சைவமரபில் உள்ள ஆழமான தொடர்பு குறித்து பேசுமிடத்தை உதாரணமாக காட்டலாம். கயிலைக்கு சென்று வரம்பெற்றுத்தான் பெரும்பாலான நாட்டார்தெய்வங்கள் தெய்வங்களாகின்றன என்பதை அ.கா.பெருமாள் அவர்கள் பல இடங்களில் சொல்கிறார். ஏன் வைணவ மரபில் இத்தெய்வங்கள் இணையவில்லை என்ற வினா வாசகன் மனதில் எழும். எனக்கு ஏற்பட்ட எண்ணம் வைணவ மரபில் உக்கிர தெய்வங்களுக்கு இட்மில்லை என்பதே. ஆனால் இம்மாதிரி கொள்கைவகுக்கும் மனத்தாவ்ல்களை அ.கா.பெருமாள் அவர்கள் கவனமாக தவிர்த்து விடுகிறார் .ஆனால் மெல்ல மெல்ல தரவுகள் மூலம் ஒரு ஒட்டுமொத்த சித்திரத்தை உருவாக்கவும் செய்கிறார். இந்நூலை வாசிக்கும் ஒருவர் நாட்டார் தெய்வங்களுக்கு மரணத்துடன் உள்ள உறவைப்பற்றிய ஆழமான மனப்பதிவை அடைவார் . நாட்டார் தெய்வங்களின் பழிவாங்கும் உணர்வை குரோதத்தை அறிவார். அத்தெய்வங்கள் ‘அருள்மிகு ‘ க்களாக மாற்றப்படும்போது ஏற்படும் மாற்றத்தைக் காண்பார். 1991ல் நான் எழுதிய கதையான மாடன் மோட்சம் இங்கே நினைவு கூரத்தக்கது.அதி எழுதும்போது நாட்டரியலில் எனகு அறிமுகம் இல்லை . அது நேரடி மனப்பதிவின் விளவி. இப்போது வரலாற்று ரீதியான ஆய்வுகளினூடாக நாடாரியல் அக்கதை முன்வைத்த சமூக மாற்றத்தை மேலும் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் நிறுவுவதை இந்நூலின் கட்டுரைகளில் காணலாம்.

[ 3 ]

அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூல் அடிப்படையில் நாட்டாரியல் சார்ந்தத்தாயினும் தமிழாய்வாளர்களுக்கும் , வரலாற்றாய்வாளர்களுக்கும் , தத்துவ ஆய்வாளர்களுக்கும், அரசியல் சித்தாந்திகளுக்கும், இலக்கியவாதிகளுக்கும் , பல கோணங்களில் பெரிதும் பயன்படக்கூடிய ஒரு தொகுப்பாகும் . அ.கா.பெருமாள் அவர்கள் எழுதிய முந்தைய நூல்கள் பரவலாக வாசகர்கள் கவனத்துக்கு வராமல் ஆய்வாளர்கள் குறிப்பாக கல்வித்துறையாளர்கள் கவனத்துடனேயே நின்று விட்டன. இந்நூல் அந்த தேங்கலை உடைத்து பரவலான கவனத்தை அடையுமென எண்ணுகிறேன்.

**

பழந்தமிழ் இலக்கியத்தை பயிலும்போது ஏற்படும் பல முக்கியமான வினாக்களுக்கு நாட்டரியலில் பதில் தேடமுடியும். தமிழிலக்கியத்தின் போக்கை எடுத்துப் பார்த்தால் செவ்வியலாக்கம் நோக்கி திசைகொள்ளும் ஒரு போக்கும் நாட்டாரிலக்கியம் நோக்கி மீளும் ஒரு போக்கும் எப்போதுமே இருப்பதைக் காணலாம். முன்னதை செய்நேர்த்தி , நுட்பம் , தத்துவார்த்த தன்மை, பெருமதம் சார்ந்த தரிசன நோக்கு ஆகியவை நோக்கிய நகர்வென கொள்ளலாம். பின்னது சரளத்தன்மை, உணர்ச்சிகரம் , பொதுவிவேகம் , சிறு மதங்கள் அல்லது மாற்று தரிசனமரபுக்கள் ஆகியவற்றை நோக்கிய நகர்வு. சங்க காலம் செவ்வியலாக்கத்தின் ஓர் உச்ச நிலை. சிலப்பதிகாரம் நாட்டாரிலக்கியக் கூறுகளை உள்வாங்கியது. [ ஆய்ச்சியர் குரவை உதாரணம் ] கம்ப ராமாயணம் நமது உச்ச கட்ட செவ்விலக்கியம். தொடரும் பக்தி இலக்கியக் காலகட்டத்தில் நாட்டாரிலக்கியக் கூறுகள் ஊடுருவின. [ இசைப்பாடல்தன்மை ] சிற்றிலக்கியங்களின் இறுதிப்பகுதி செவ்விலக்கியங்களை போலி செய்த பண்டித விளையாட்டின் காலம். அதை உடைத்த பாரதி சிந்துக்கள் முதலிய நாட்டாரியல் கூறுகளை பயன்படுத்தினார். இந்த முரணியக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பவை நாட்டரிலக்கியங்கள். ஆனால் நம் இலக்கிய ஆய்வுக்கு நாட்டாரிலக்கியங்கள் மிக மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. நமது செய்யுள் வடிவங்களையும் கருக்களின் வேர்களையும் ஆராய நாட்டாரிலக்கியங்கள் பெரிதும் உதவக்கூடியவை.

அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூல் அளிக்கும் கட்டுரைகள் நமது இலக்கிய மரபு குறித்த பல நுட்பமான உள்ளுறை அறிதல்களை அளிக்கின்றன. உதாரணமாக இநூலில் உள்ள வில்லிசை பாடல்கள் குறித்த ஆய்வை குறிப்பிடலாம் . வில்லிசையானது ‘புலவர் ‘ என்றழைக்கப்பட்ட கிராமத்துப் பண்டிதர்களால் நிகழ்த்தப்பட்ட கலைவடிவம். அதை முழுக்க நாட்டார் கலையென சொல்ல முடியாது. காரணம் அதை நிகழ்த்துபவர்களுக்கு ஓரளவு செவ்வியல் பயிற்சி உண்டு . அதன் பாடல் கருக்கள், பாட்டுடைதெய்வங்கள், அதனுடன் இணைந்த சடங்குகள் அனைத்துமே நாட்டார் மரபில் முளைத்தவை, ஆழ வேரோடியவை. ஆகவே நாட்டார் பாடல் மரபு செவ்வியலை நோக்கி நகரும் சலன நிலையில் உள்ளன இப்பாடல்கள்.

பூசை புரிந்து அனலை வளர்க்க

புகழுடனே உருவளருது பாராய்

கடுகுடனே மல்லி மிளகு போலாகி

கருத்த அவரை குமிழி போலாகி

அரியே நெல்லிக்காய் புன்னைக்

காயாகி அஞ்சுபூதம் அஞ்சு வர்ணமுமாகி…

என்பது போன்ற வரிகளில் நமது விருத்தப்பாவின் மூல வடிவம் உள்ளது. எப்படி நமது நாட்டாரிலக்கிய பாடல்வடிவுகள் செவ்வியல் பாக்களாக செம்மை செய்யப்பட்ட்ன என்ற புரிதலை உருவாக்குகின்றது இது. விருத்தப்பாடலுக்குரிய நீட்டிப் பாடும் ஒசைநயமே இவ்வில்லிசைப் பாடலை வடிவமைக்கிறது. அதனுடன் எதுகையும் மோனையும் ஓரளவு தளை ஒழுங்கும் இணையும் போது விருத்தம் பிறந்துவிடுகிறது– எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்!

கதைப்பாடல்களிலிருந்துதான் காவியங்கள் உருவாயின என்பது உலகளாவிய காவிய ஆய்வாளர்களின் கொள்கைகளில் முக்கியமானது. குறிப்பாக வம்சகதைப்பாடல்கள் மற்றும் குலதெய்வப்பாடல்களின் அழகியலின் தத்துவார்த்தமான விரிவாக்கமே காவியங்கள் . தமிழில் நமக்கு காவியங்களின் மூலமாக விளங்கும் குணங்கள் கொண்ட கதைப்பாடல்கள் பல உள்ளன. அண்னன்மார் சுவாமி கதை, சுடலைமாடன் கதை போன்ற கதைப்பாடல்களில் வம்சவரலாறு, ஐதீகம் ,வழிபாட்டுமரபு ஆகிய மூன்று காவிய அடிப்படைக்குணங்களும் குவிகின்றன. இக்கதைப்பாடல்களை ஆராய்ந்தால் நமது நாட்டார் மரபில் சிலப்பதிகார காலத்துக்கு முன்னரே இருந்துவந்த கதைப்பாடல் மரபை ஊகித்துவிட முடியும். இதற்கு எனக்கு உறுதியான ஆதாரமாக உள்ளது நீலகேசியின் கதை . அது நேரடியாக நாட்டர் மரபிலிருந்து பெறப்பட்ட கதை. அதன் வடிவுக்கும் சுடலைமாடன் கதை , இசக்கியம்மன் கதை போன்ற நாட்டார்தெய்வங்களின் கதைகளுக்கும் உள்ள நேரடியான ஒற்றுமை .ஆனாலும் இக்கதைப்பாடல் மரபிலிருந்து நமது காவிய மரப் எப்படி உதயமாகி வளர்ந்தது என்பது குறித்த குறிப்பிடத்தக்க ஆய்வுகள் இன்னும் ஏதும் நிகழ்ந்ததாக தெரியவில்லை .

அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூலில் உள்ள முத்தாரம்மன் கதை பற்றிய ஆய்வும் குறிப்புகளும், சுடலைமாடன் கதை பற்றிய ஆய்வுகளும் குறிப்புகளும் இந்த தளத்தில் முக்கியமான தகவல்களை முன்வைத்து ஆழமான புரிதல்களை உருவாக்குவனவாக உள்ளன. விரிவான ஆய்வுக்கு ஒரு முன்னுரை இடமளிக்காது என்றாலும் ஒரு விஷயம் மட்டும் குறிப்பிடவேண்டும். இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள முத்தாரம்மன் கதையில் நாட்டர் தெய்வங்கள் பெருந்தெய்வங்களுடன் கொண்டுள்ள உறவு நமது காவிய உருவாக்க முறை குறித்த பல எண்ண அலைகளை உருவாக்கக் கூடியது. முழுமுதல் தன்மைகொண்ட பெருந்தெய்வங்களின் அருளைப்பெற்ற நாட்டார் தெய்வங்கள் அவற்றை மீறி இயங்கும் தனித்தன்மையையே வரமாக பெறுகின்றன. அவை அழிக்கப்படுவதில்லை , படிமங்களுக்குள் நிலையாக அமரச்செய்யப்படுகின்றன. புராணஉருவகங்கள் சிறு மாற்றங்களுடன் நாட்டார் மரபில் இணைக்கப்படுகின்றன. உதாரணமாக முப்பிடாதி [அல்லது முப்பிடாரி] என்று புகழ்பெற்ற நாட்டார் தெய்வம் முப்புராதி அம்மன்கள் என்ற பேரில் முத்தாரம்மன் கதையில் வந்து சிவனால் எரிக்கப்பட்ட முப்புரம் குறித்த ஐதீகத்துடன் அழகாக இணைவதை குறிப்பிடலாம். அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூல் முன்வைக்கும் தரவுகளினூடாக அப்படி பல வகைப்பட்ட ஆழமான பயணங்களை நிகழ்த்த வாய்ப்புள்ளது.

**

அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூலில் உள்ள வரலாற்றுத்தகவல்கள் நமது வரலாற்றாய்வின் முக்கியமான இடைவெளிகள் பலவற்றை நிரப்பவல்லவை. இரு உதாரணங்களைச் சொல்லலாம் . ஒன்று இந்நூலில் தரப்பட்டுள்ள குமரிமாவட்ட நாட்டார் தெய்வங்களின் விரிவான பட்டியல் . டி டி கோசாம்பி தன் தாய்தெய்வ ஆய்வுக்கு தானே கள ஆய்வுக்கு சென்று தரவுகளை சேகரித்தார் . இங்கு சேகரிக்கப்படு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்த தரவுகளின் அடிப்படையில் நம்து வரலாற்றை, குறிப்பாக் நமது சாதிசமூகங்களின் பரிணாம வரலாற்றை ஒரு வரலாற்றாய்வாளர் ஆராயப்புகுந்தால் அவருக்கு ஏராளமான வாசல்கள் திறக்கக் கூடும். இப்பட்டியலில் உள்ள தெய்வங்களின் பெயர்களே ஏராளமான் ஊகங்களை சொல்ல வல்லன. அகத்தியர்,உதிர உலை இயக்கி,கொம்புமேலழகர் போன்ற தூய பழந்தமிழ் பெயர்கள் கொண்ட தெய்வங்கள் இப்பட்டியலில் உள்ளன. அயனிமூட்டு தம்புரான், துள்ளுமாடன் போன்ற தெய்வங்கள் பழங்குடி மரபை சுட்டுகின்றன. பிரம்ம சக்தி அம்மன், அட்டதிக்கன்னியர் முதலிய தெய்வங்களில் புராண பின்புலம் தெரிகிறது. குலசேகரத்தம்புரான், அரிய குலசேகர நங்கை போன்ற தெய்வங்கள் உடனடியக சேர வரலாற்றுடன் தொடர்புளவையாக இருக்கலாம். உச்சினிமாகாளி, குரங்கணி அம்மன் போன்ற தமிழ்நாடு முழுக்கவும் பரவலாக உள்ள தெய்வங்களும் கைமுறிவாள் வாதை போல மிக மிக பிராந்தியத்தன்மை கொண்ட தெய்வங்களும் இப்பட்டியலில் உள்ளன. ஆக நமது நாட்டார் தெய்வங்கள் வரலாற்றுப்பிரவாகத்தான் உருட்டப்பட்டு அடியில் தங்கிய கூழாங்கற்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இத்தெய்வங்களை முறைப்படி அடுக்கி படிமங்களை அவிழ்த்து ஆராயும் ஒருவர் வரலாற்றின் உள்ளறைகளுக்குள் எளிதில் புகுந்துவிடமுடியும்.

இந்நூலில் உள்ள வலங்கை இடங்கை சாதிகளைப்பற்றிய ஆய்வு நமது சமூக வரலாற்றைபற்றிய சித்திரத்தை உருவாக்கிக் கொள்வதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது . ஏறத்தாழ பத்து நூற்றாண்டுகளாக இப்பிரிவினை அமைப்பு நம் சமூக இயக்கத்தின் கொள்கையாக இருந்து வந்துள்ளது. பல்வேறு பூசல்களுக்கும் போர்களுக்கும் ஆட்சிமாற்றங்களுக்கும் வழியமைத்துள்ளது. இந்த அடிப்படையான விஷயம் கே.கே.பிள்ளை எழுதிய சோழர்வரலாறு நூல் மூலமாகத்தான் நமது அரசியல் சிந்தனையாளர்களுக்கும் ஓரளவு இலக்கியவாதிகளுக்கும் [ அன்றையை நவீனத்துவ இலக்கியவாதிக்கும் அவனது அந்தரங்கம் மட்டுமே ஒரே பேசுபொருள் .படிகள் இதழில் சிவராமன் அவர்களால் கே கேபிள்ளை அவர்களின் ஆய்வுச்செய்திகள் தொடர்ந்து பிரசுரமானபோதும்கூட இலக்கியவாதிகளிடம் அவை எந்தவிதமான மாற்றங்களையும் உருவாக்கவில்லை] அறிமுகமாயிற்று. இலங்கை வலங்கை சாதிப்பிரிவினை தொழிலை மையமாகக் கொண்டு துவங்கி மெல்ல சமூகத்தில் எந்த இடம் என வகுப்பதாக பரிணாமம் கொண்டது. [ மிகப் பொதுவாகப் பார்த்தால் உற்பத்தியுடன் மட்டும் நேரடியாக தொடர்புள்ள மக்கள் இடங்கை. வினியோகம் நிர்வாகம் முதலிய பணிகளையும் சேர்த்து செய்பவர்கள் வலங்கை ] நமது செவ்விலக்கியங்களில் வலங்கை இடங்கை பற்றிய செய்திகள் அனேகமாக இல்லை. சோழர்காலக் கல்வெட்டுகள் ,நாயக்கர் கால சாசனங்கள் முதலியவற்றில்தான் குறிப்புகள் உள்லன. நாட்டாரியல் தரவுகள் இலக்கியத்துக்கு பயன்படத் துவங்கிய காலத்துக்குப் பிறகே இப்பிரச்சினையின் விரிவு தெளியலாயிற்று. ஆனாலும் இன்றும் நமது வரலாற்றை தீர்மானித்த அடிப்படை விஷயங்களில் ஒன்றான இது தெளிவுபடுத்தப் படாத விஷயமாகவே உள்ளது.

அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூலில் பல முக்கியமான தகவல்களை அளிக்கிறார் . அச்சில் வராத வலங்கைபுராணம் என்றநூல் இப்பிரிவினை கரிகால்சோழனால் உருவாக்கப்பட்டது என்று கூறும் தகவல் முக்கியமானது. அ.கா.பெருமாள் அவர்களின் முடிவுப்படிபிப்பிரிவினையே பிற்கால சோழர் காலத்தில் உருவான ஒன்றுதான்.ஏற்கனவே கல்வெட்டுகள் சார்ந்து வலங்கை இடங்கை சாதிகள் குறித்து செய்யப்பட்டுள்ள ஆய்வுகளுக்கு நாட்டரியலில் இருந்து ஆதாரங்களை திரட்டி அளித்து மேலும் பலவகையில் விரிவுபடுத்துகிறது இந்நூலில் உள்ள கட்டுரை. அத்துடன் கேள்விகளையும்தான் விரிவுபடுத்துகிறது. இந்நூலில் இடங்கை சாதிகளுக்கு தாய்மைய மரபு இருந்தது, பெண்தெய்வங்கள் இருந்தன என்றும் வலங்கை சாதிகளுக்கு தந்தை மைய சமூக மரபு இருந்தது என்றும் அ.கா.பெருமாள் சொல்லிச்செல்லும் ஊகம் எழுப்பும் கேள்விகள் முடிவற்றவை. அப்படியானால் இடங்கை சாதிகள்தான் பழைமையும் வேர்பிடிப்பும் கொண்டவையா ? அவை தோற்கடிக்கப்பட்ட சாதிகளா ? நமது அரசியல் பரிணாம வரலாற்றையே இக்கோணத்தில் யோசிக்கதூண்டுகின்றது இந்த தகவல்.

**

நமது மதமரபின் வேர்களை நாட்டார்தெய்வங்களில் காணலாம். டி டி கோசாம்பி தன் நூலில் இந்திய வரலாறென்பதே தோற்கடிக்கப்பட்டு உருமாற்றம் செய்யப்பட்ட தாய்த் தெய்வங்களின் வரலாறுதான் என்று சொல்லமுனைகிறார். அ.கா.பெருமாள் அவர்கள் இந்நூலில் விவாதிக்கும் நாட்டார் தெய்வங்கள் குறித்த செய்திகளிலிருந்து நமது மததத்துவ ஆய்வுக்கான புதிய கேள்விகளும் புதிய தரவுகளும் கிளம்பி வந்தபடியே உள்ளன. பலவகையான உக்கிரமான நாட்டார்தெய்வங்கள் தொடர்ந்து சைவ மரபில் இணைகின்ற சித்திரமானது நேற்றும் இவ்வாறு பல தெய்வங்கள் இணைதிருக்கக் கூடுமென்ற எண்ணத்தை உருவாக்குகிறது. காளாமுக, பாசுபத மரபுகள் அப்படி இணைந்து உருவானவையாக இருக்கலாம். கங்கை சமவெளிநாக்ரீகம் தோன்றுவதற்கு முன்னர் ருத்ரன் என்ற வேதகால சுடுகாட்டுத் தெய்வம் சிவ வழிபாட்டில் இணைந்தது என்ற கோசாம்பியின் கண்டுபிடிப்பு இங்கே நினைவில் எழுகிறது. அது ஒரு வகை சுடலை . இப்படி பற்பல சுடலைதெய்வங்கள் இணைந்து வளர்ந்து உருவான ஒன்றுதான சைவ மதத்தின் மையமாக உள்ள சிவன் ? அப்பிம்பத்தில் உள்ள பல்வேறு முரண்பட்ட கூறுகளை [ உதாரணம் அழகன், சுந்தரன் அதேசமயம் சுடலை காப்பவன், நீலகண்டன் ஆனால் பொன்னார்மேனியன், உக்கிரமான மயானமூர்த்தி ஆனால் ஆடவல்லான்] இப்படி பகுப்பாய்வு செய்வதன் மூலம் நாம் புரிந்துகொள்ளமுடியுமா ? அது சிவ தத்துவத்தையே பகுப்பாய்வு செய்வதற்கு சமம். பொதுவாக சுடலைமாடன் கதையையும் புராதன மயானருத்ரர்களின் உருவகங்களையும் கோசாம்பியின் கோணத்தில் நமது வரலாற்று ஆசிரியர்கள் ஒப்பிட்டு ஆராயவேண்டிய அவசியம் உண்டு என்று படுகிறது.

அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூலில் துவக்கத்தில் பெருந்தெய்வங்களுக்கும் சிறுதெய்வங்களுக்கும் இடையேயான ஒப்பீடு மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய பகுதி. அதன் அடிப்படையில் அவர் பிற்பாடு விளக்கும் முத்தாரம்மன் , சுடலைமாடன் கதைகளை ஆராயவேண்டும். இங்கே குறிப்பாக சொல்லவேண்டியது ஒன்றுண்டு . இன்றும் நமது பெருந்தெய்வ வழிபாட்டுமுறைக்குள் இந்த நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகள் குறியீடாக மாற்றப்பட்ட வடிவில் உள்ளன. உதாரணமாக சுடலைமாட சாமிக்கு மயானக் கொள்ளை என்ற சடங்கு உள்ளது . பல கேரள சிவன் கோவில்களில் அபூர்வமாக வைணவ ஆலயங்களிலும் மிக உருமாற்றப்பட்ட வடிவில் இச்சடங்கு தொடர்கிறது. இது வேட்டை என்று குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் இது ஒரு குறிப்பிட்ட சிறுதெய்வ ஆலயம் வரை சென்று பலி கொண்டு திரும்புவதாக உள்ளது.நமது வலிமையான அடிப்படை தத்துவ உருவகங்களுக்கு நமது பழங்குடி மரபில் உள்ள வேர் இங்கே புலனாகிறது.

***

இக்கட்டுரையில் எற்கனவே சொல்லப்பட்டதுபோல நமது அரசியலை புரிந்துகொள்ள நாட்டாரியல் மிக முக்கியமான பங்கை ஆற்றுகிறது. அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூலில் தரப்பட்டுள்ள தகவல்களை ஒரு அரசியல் சித்தாந்தி மிக விரிவாகவே பயன்படுத்திக் கொள்லமுடியும். உதாரணமாக வலங்கை சாதிகளின் பாடல்களில் கடுமையான பிராமண வெறுப்பு காணப்படுகிறது. ஆனால் அவர்கள்தான் வரிவசூலிக்கும் உரிமைகொண்டிருந்த சாதியினர். கொடுமையான முறையில் சுரண்டலை நிகழ்த்தியவர்கள் . இங்கிருந்து துவங்கும் ஒருவர் நமது திராவிட இயக்கங்களின் உளவியலுக்குள் நுழையமுடியும். அது அடிப்படையில் ஒரு வலங்கை எழுச்சி என்று நான் எண்ணுகிறேன். இந்நூலில் உள்ள முத்தாரம்மன் கோவில்களின் சமூகப் பங்களிப்பு என்ற கட்டுரை இக்கோணத்தில் முக்கியமான ஒன்றாகும்.

**

ஓர் இலக்கிய ஆசிரியனுக்கு இந்நூலின் தகவல்களும் , பின்னிணைப்புகளில் உள்ள கதைகளும் அளிக்கும் அகவெளிச்சங்களும் புனைவுச்சாத்தியங்களும் எண்ணற்றவை. உதாரணமாக சுடலைமாடன் மயானக்கொள்ளை குறித்த அ.கா.பெருமாள் அவர்களின் சித்தரிப்பை இந்நூலில் உள்ள முக்கியமான இடங்களில் ஒன்றாக சொல்லலாம். மதுசூதனப்பெருமாள் மாடனின் கதை இன்னொரு உதாரணம். இலக்கியவாதியின் கற்பனைக்கு சவாலாக ஆகும் வினா ஒன்று இங்கே உள்ளது . பெரும் கொடுமைகள் செய்து அதனால் கொல்லப்பட்ட ஒருவன் மாடனாக , தெய்வமாக ஆகிறான். அது அம்மக்களின் குற்ற உணர்வின் வெளிப்பாடு அல்லது மரணம் மீதான அச்சம் வெளிப்பட்ட விதம் என்று சொல்லலாம். ஆனால் பிறகு அந்த மனிதன் செய்த பாவங்கள் எல்லாம் என்னவாக பொருள்படுகின்றன ? நமது அகமனம் எப்படி அவற்றை உருமாற்றிக் கொள்கிறது ? சுடலைமாடசாமி பாடல்களில் பல இடங்களில் அத்தெய்வத்தின் தீய இயல்புகளுடன் பக்தர்கள்மனம் தங்களை அடையாளம் கண்டு கொள்கிறது என எனக்கு பட்டிருக்கிறது. மனித மகத்துவங்களின் உச்ச உருவகமாக மட்டும் கடவுள் உருவாக்கப்படவில்லை ,மனிதனின் இருளின் நீட்சியாகவும் கூடத்தான். இது கிரேக்க புராணக்களிலும் இந்து புராணக்களிலும் உள்ளபல்வேறு தெய்வங்களின் குரோதம் போட்டிகள் முதலியவை பற்றிய அகவெளிச்சத்தை நமக்கு அளிக்கிறது. ஏன் லூசிஃபர் கிறிஸ்துவின் சகோதரனாக கணிக்கப்படுகிறான் என்ற கேள்விக்கு பதிலாகிறது.

ஒரு இலக்கியவாதியை பொறுத்தவரை மனிதமனம் என்பது இருளும் ஒளியும் நிரம்பிய ஒரு வெளி என்றால் இரண்டையுமே உக்கிரப்படுத்திக் கொள்ளவேண்டியதேவை மனிதனுக்கு உள்ளது என்று தெளிவு படுத்துகிறது இது . ஆகவேதான் பேரிலக்கியங்களிலெல்லாமே தீமை அதன் மாபெரும் தோற்றத்துடன் வீற்றிருக்கிறது . இருளை சொல்லத் தெரிந்தவனே பெரும் கலைஞன் என்ற விதி உருவாகியிருக்கிறது. கம்ப ராமாயணத்தில் ஏன் யுத்தகாண்டம் பிற அனைத்து காண்டங்களையும் விழுங்குமளவு பெரிதாக இருக்கிறது , ஏன் கதேயின் ஃபெளஸ்டில் சாத்தான் அத்தனை கதாபாத்திரங்களையும் விட உக்கிரம் கொள்கிறான் என்பதை விளக்குகிறது. இந்நூலில் இருந்து ஒரு இலக்கியவாசகன் வெகுதூரம் செல்லமுடியும். அவனது கற்பனை முளைக்க எண்ணற்ற விதைகள் இங்குள்ளன.

[ 4 ]

நடுக்காட்டு இசக்கி அம்மன் நகர் நடுவே இருப்பதுவரை நமது சாலைகளில் கண்டஸாக்களும் டொயோட்டாக்களும் ஃபோர்டுகளும் ஓடினாலும் நமது மண் நம்மிடமிருந்து அன்னியமாவதில்லை.

 [2000த்தில் வெளிவந்த அ.கா.பெருமாள் எழுதிய ‘தெய்வங்கள் முளைக்கும் நிலம் :நாட்டார் தெய்வங்களும் கதைப்பாடல்களும் ‘ என்ற நூலின்முன்னுரை ] 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73

$
0
0

[ 18 ]

இரவெல்லாம் கர்ணன் துரியோதனனுடன் அவனது மஞ்சத்தறையில் துணையிருந்தான். ஒருகணமும் படுக்க முடியாது எழுந்து உலாவியும், சாளரத்தினூடாக இருள் நிறைந்த வானை நோக்கி பற்களை நெரித்து உறுமியும், கைகளால் தலையை தட்டிக் கொண்டும், பொருளெனத்திரளா சொற்களை கூவியபடி தூண்களையும் சுவர்களையும் கைகளால் குத்தியும் துரியோதனன் கொந்தளித்துக் கொண்டிருந்தான். இரும்புருக்கை குளிரச்செய்வதுபோல படிப்படியாக அவனை மெல்ல கீழிறக்கிக் கொண்டு வந்தான் கர்ணன்.

ஒருபோர் அத்தருணத்தில் எப்படி பேரழிவை கொண்டுவரக்கூடுமென்று சொன்னான். “அரசே, இப்போரில் நாம் வெல்லலாம். ஆனால் வெற்றிக்குப்பின் நம் படைகளை இழந்து வலுக்குறைந்தபின் ஒரு நிஷாதனிடம் தோற்க நேர்ந்தால் அது பேரிழிவை கொண்டு வராதா?” என்றான். “இன்று நமது நோக்கம் ராஜசூயம் என்றால் அது எவ்வகையில் நிகழ்ந்தாலென்ன? வென்று முடிசூட்டி சக்ரவர்த்தியான பின்னர் மேலும் நம் வலிமையை பெருக்கிக் கொள்வோம். பிறிதொரு சரியான தருணத்தில் நாம் படை சார்ந்த வெற்றியை அடையலாம்” என்றான்.

சொல்லடுக்கிப் பேசுவதைவிட உணர்த்தவிரும்பிய கருத்துக்களை ஓரிரு சொற்றொடர்களில் அமைத்து மீள மீளச்சொல்வதே துரியோதனனிடம் ஆழ்ந்த பதிவை உருவாக்கும் என்பதை அவன் அறிந்திருந்தான். உள்ளம் கொந்தளிக்கையில் சலிக்காத உடலாற்றல் கொள்பவன் அவன். உள்ளம் சலிக்கையில் அவன் உடல் குழைந்து துவண்டு விடுவதையும் கர்ணன் கண்டிருந்தான்.  அவன் ஆற்றலடங்கி அமைவதற்காக காத்திருந்தான். முற்புலரியில் மெல்ல குளிர்ந்து எடைமிக்க காலடிகளுடன் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்த துரியோதனனின் விழிகள் துயில் நாடி சரியத்தொடங்க அவன் கால்கள் மரத்தரையில் உரசி தள்ளாடின.

கர்ணன் எழுந்து அவன் கைகளைப் பற்றியபோது காய்ச்சல் கண்டவை போல வெம்மையும் அதிர்வும் கொண்டிருப்பதை உணர்ந்தான். “படுத்துக் கொள்ளுங்கள் அரசே” என்றபோது சிறுகுழந்தையென வந்து மஞ்சத்தில் படுத்தான். அவன் உடலில் மூட்டுக்கள் சொடுக்கொலி எழுப்பின. அவன் இமைகள் அந்தியில் வாகையிலையடுக்குகள் என சரிந்து மூடின. இமைப்படலத்திற்குள் கருவிழிக்குமிழி ஓடிக்கொண்டே இருந்தது. உதடுகள் ஒலியென மாறாத சொற்களை உச்சரித்துக் கொண்டிருந்தன. விரல்கள் எதையோ பற்றி நெரித்துக் கொண்டிருந்தன.

மஞ்சத்தில் அருகமர்ந்த கர்ணன் அவன் வலக்கையை தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டு “ஆம் அரசே, இதுவே இப்போதைக்கு உகந்த வழி. இதை கடந்து செல்வோம். மாதுலர் சகுனியும் கணிகரும் நமக்கு முன்னரே விரைந்தோடும் சித்தம் கொண்டவர்கள். இத்தருணத்தை அவர்களுக்கு விட்டுக் கொடுப்போம். அவர்கள் இதை வென்று நமக்கு அளிக்கட்டும். நமது வெற்றியை பிறிதொரு முறை அடைவோம்” என்றான். மிகத்தொலைவிலென எங்கோ இருந்து துரியோதனன் “ஆம்” என்று முனகினான்.

“இது சிறுமை அல்ல. பீஷ்மருக்கும் தங்கள் தந்தைக்கும் கனிந்து தாங்கள் தங்கள் வீரத்தையும் நிமிர்வையும் விட்டு சற்று இறங்கி வந்திருக்கிறீர்கள் என்றே பொருள். நாம் இறுதியில் வெல்வோம். உடனே வெல்வதற்கான சிறுவழி இதுவென்றால் இப்போதைக்கு இதுவே ஆகுக!” என்றான் கர்ணன். “ஆம்” என்றான் துரியோதனன். அவன் மூச்சு சீரடையத்தொடங்கியது. “இன்று இது ஒன்றே வழி” என்றான் கர்ணன். உலர்ந்த உதடுகளைத் திறந்து “ஆம்” என்று அவன் முனகினான்.

அவன் கொந்தளிப்புகள் அடங்க இருண்ட ஆழத்திலிருந்து விழிமின்னும் தெய்வங்கள் எழுந்து வருவதை கர்ணன் உணர்ந்தான். அவற்றிடமென தாழ்ந்த குரலில்  அவன் சொன்னான். “நமது வஞ்சம் அழியாது. பாரதவர்ஷத்தின் அனைத்து தலைகளையும் அறுத்திட்டாலும் அது பலிநிறைவு கொள்ளாது. ஆனால் நமக்குத் தேவை ஒரு  முகம் மட்டுமே. அதில் எழும் ஒரு துளி விழிநீர் மட்டுமே. அதை வெல்வோம். முற்றிலும் வென்று கடந்து செல்வது வரை அமையமாட்டோம்” என்றான். “ஆம்” என்று துரியோதனனுக்குள்ளிருந்து அத்தெய்வம் மறுமொழி சொன்னது.

துரியோதனனின் விரல்கள் நாண் தளர்ந்த சிறிய விற்கள் போல ஒவ்வொன்றாக விடுபட்டன. சீரான மூச்சில் அவன் நெஞ்சுப்பலகைகள் ஏறி இறங்கத்தொடங்கின. கர்ணன் ஓசையின்றி எழுந்து அகன்று நின்று இடையில் கைவைத்து நண்பனை நோக்கினான். துரியோதனன் நன்கு துயின்றுவிட்டான் என்று உணர்ந்ததும் மெல்ல குனிந்து குறுபீடத்தில் இருந்து தன் மேலாடையை எடுத்து அணிந்து வாயிலை நோக்கி சென்றான். கதவில் கைவைத்து மெல்ல திறக்க முயன்றதும் பின்னால் துரியோதனன் முனகியது போல் ஒலியெழுந்தது. அவன் விழித்துக் கொண்டானா என்று கர்ணன் திரும்பிப் பார்த்தான்.

அதுவரை அவன் கண்ட துரியோதனனுக்கு மாறாக தெய்வச் சிலைகளுக்குரிய அழகும் அமைதியும் கொண்ட முகத்துடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவனை பார்த்தான். அம்முகத்திலிருந்தும் விரிந்த பெருந்தோள்களிலிருந்தும் நோக்கை விலக்க முடியவில்லை. பகலெல்லாம் தான் நோக்கிக் கொண்டிருந்தது அலைகளை மட்டுமே என்றும் அப்போது அங்கிருப்பதே சுனை என்றும் அவன் எண்ணினான். பெருமூச்சுடன் கதவைத் திறந்து வெளியே வந்து தாழ் ஒலிக்காது மெல்ல சார்த்தினான். பலகைப்பொருத்து இறுகும் தருணத்தில் உள்ளே “குருதி” என்றொரு சொல் ஒலிக்கக் கேட்டான்.

மயிர்க்கால்கள் ஒவ்வொன்றும் சிலிர்த்து நிற்க, அச்சிறு இடைவெளி வழியாக உள்ளே பார்த்தான். அதே தெய்வமுகத்துடன் துரியோதனன் துயின்று கொண்டிருந்தான். அவ்வறைக்குள் பிறிதெவரோ இருந்து சொன்ன சொல்லா அது? அல்லது தன்னுள் இருந்த ஏதோ ஒன்று உரைத்தது செவிமயக்கா? அச்சத்தில் என சிலிர்த்து முனையில் நின்ற உடலுடன் அசையா  விழிகளுடன் கர்ணன் நோக்கி நின்றான். பின்பு உடல் தளர்ந்து திரும்ப எண்ணிய கணம் மீண்டும் அச்சொல் ஒலித்தது. “குருதி.” இம்முறை தெளிவாகவே அதை கேட்க முடிந்தது. அது எவருடைய குரல் என்பதில் எந்த ஐயமும் இருக்கவில்லை.

[ 19 ]

கர்ணன் மீண்டும் மந்தண அறைக்கு வந்தபோது அங்கு விதுரர் அவனுக்காக காத்திருந்தார். அவனைக் கண்டதும் எழுந்து அவர் முகமன் சொன்னபோதே என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை கர்ணன் உய்த்துணர்ந்து கொண்டான். துச்சாதனன் உரத்த குரலில் “தந்தையார் வடக்கிருந்து உயிர் துறக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் அங்கரே” என்றபடி அவனை நோக்கி வந்தான். “அவர் வீண் சொல் சொல்வது இல்லை. அவரது உள உறுதி பெரும் களிறுகளுக்குரியது.”

கர்ணன் திகைப்புடன் விதுரரை நோக்கி திரும்ப அவர் “ஆம்” என்று தலையசைத்தார். அதுவரை உடலை இயக்கிய உளவிசை முற்றிலும் வழிந்தோட கர்ணன் தளர்ந்தான். நான்கு அடிகள் எடுத்து வைத்து பீடத்தை அணுகி அமர்வதற்குள் உடலின் பொருத்துக்கள் அவிழ்ந்து உதிர்ந்துவிடுமோ என்று தோன்றியது. தலையை கையில் தாங்கி எண்ணங்களற்று அமர்ந்திருந்தான். விதுரர் அவன் முன் அமர்ந்து “என்னால் முடிந்தவரை விளக்க முயன்றேன். அவரது உறுதி கற்கோட்டையைப்போல் குறுக்கே நிற்கிறது. கடப்பது எளிதல்ல” என்றார்.

துர்மதன் ஆங்காரத்துடன் “அவரிடம் சொல்லுங்கள், அவருடைய மைந்தர் நூற்றுவரும் அவருடன் இல்லை என்று” என்றான். விதுரர் விழிநோக்கி புன்னகைத்து “உங்கள் நூற்றுவரின் கால்களால் நிற்பவர் அல்ல அவர். இதுநாள் வரை உங்கள் நூற்றுவரையும் தாங்கி நின்ற அடிமரம் அது” என்றார். துச்சலன் மேலும் சினத்துடன் ஏதோ சொல்ல வாயெடுக்க கர்ணன் கைதூக்கி அவனை அமரச்செய்தான்.

“நான் என்ன செய்வது அமைச்சரே? நேற்றிரவு முழுக்க தெய்வங்களுக்கு நுண்சொல்லால் ஆற்றலேற்றுவது போல் அரசரின் உள்ளத்திற்குள் சொல்புகுத்தி பகடையாடுவதற்கு ஒப்புதலை பெற்றிருக்கிறேன். அங்கிருந்து இங்கு வருவது வரை மட்டுமே அந்நிறைவு நீடித்திருக்கிறது” என்றான். “அவர் அதை இழிவென்று எண்ணுகிறார். அவரது மூதந்தையின் ஆணை அது” என்றார் விதுரர்.

“பகடையாடுவதை தவிர்த்தால் போர்தான் என்று சொல்லுங்கள் தந்தையிடம்” என்றான் சுபாகு. விதுரர் “போர் அல்லது பகடை எதுவானாலும் உடன் பிறந்தோர் முட்டிக் கொள்ளுதல் ஆகாது என்று அவர் எண்ணுகிறார் அதைப் பார்ப்பதைவிட உயிர் துறப்பதே மேல் என்று என்னிடம் சொன்னார்” என்றார்.

சுபாகு பற்களைக்கடித்து, “இது அவரது எண்ணமல்ல. அவரது நிழலென அங்கிருக்கும் விப்ரரின் எண்ணம். முதலில் அந்த முதியவரை வெட்டி வீசவேண்டும்” என்றான். விதுரர் கசப்புடன் சிரித்து “உங்கள் நூற்றுவரும் பலமுறை உள ஆழத்தில் அவரை கொன்றிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். விப்ரரை அழிக்காமல் உங்களால் பேரரசரை வெல்ல முடியாது” என்றார். “என்ன வீண் பேச்சு?” என்று கர்ணன் கையசைத்தான். “ஆவதென்ன என்று பார்ப்போம்.”

விதுரர் “மிகக் குறைவான சொற்களில் சொல்லப்படும் முடிவுகளுக்கு எதிராக சொல்லாடுவது எவராலும் இயலாது அங்கரே. இனி பேரரசர் ஒரு சொல்லேனும் எடுப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை” என்றார். “ஏன்?” என்று சுபாகு உரக்க கேட்டான். “அவருக்கு என்னதான் வேண்டும்? ஏன் இந்த முரட்டு உறுதி?” விதுரர் அமைதியாக “ஏனெனில் அவர் தந்தை” என்றார்.

“தந்தையா? அப்படியென்றால் அவருக்கு மைந்தராகிய நாம் என்ன பொருள் அளிக்கிறோம்? மைந்தரை தளையிட்டு வீணர்களும் கோழைகளும் ஆக்கிவிட்டு அவர் தந்தையென அமர்ந்திருப்பது எதற்காக? அமைச்சரே, பெருந்தந்தையென அவரை ஆக்குபவர்கள் நாங்களே. நாங்கள் ஈன்ற எங்கள் மைந்தர்களே. தன் குலமே தன்னை வெறுத்து ஒதுக்குகையில் தந்தையென்று அமர்ந்திருக்கும் அப்பீடத்திற்கு என்ன பொருள் என்று அவர் எண்ணியிருக்கமாட்டாரா?”

துச்சாதனன் “இது என் ஆணை! நம் நூற்றுவரில் எவரும் அவரைச் சென்று பார்க்கலாகாது. நூற்றுவர் மைந்தரில் ஒரு குழவியேனும் அவரருகே அணுகலாகாது” என்றான். கர்ணன் எழுந்து தன் சால்வையை தோளிலிட்டுக் கொண்டு “நான் சென்று பார்க்கிறேன்” என்றான். “மூத்தவரே…” என்றான் துச்சாதனன். கர்ணன் “நான் நூற்றுவரில் ஒருவன் அல்ல” என்றபின் வெளியே நடந்தான்.

விதுரர் அவனுக்குப்பின்னால் வந்தபடி “அதனால் ஏதும் பயனில்லை அங்கரே. அவர் கரும்பாறையைப்போல் இறுகிவிட்டார்” என்றார். கர்ணன் தலை குனிந்து ஒரு கையால் மீசையை நீவியபடி நடக்க விதுரர் விரைந்து அடிவைத்து அவனுக்குப்பின்னால் வந்து “இன்றுகாலை காந்தாரத்து அரசியரும் சிந்து நாட்டரசியும் சென்று அவர் முன் அமர்ந்து மன்றாடினார்கள். எச்சொல்லேனும் அவருக்குள் கடக்கும் என்றால் அது அவர்களின் சொல்லே. அவையும் வழிகாணாது பயனற்றன” என்றார்.

கர்ணன் முற்றத்துப் படிகளில் இறங்க விதுரர் மூச்சிரைத்து நின்றுவிட்டார். அவருக்குப்பின்னால் வந்த துச்சாதனன் “நம்மை புறக்கணிப்பவர்களிடம் ஏன் தலை தாழ்த்தவேண்டும்? மைந்தருக்கு தந்தையுடன் கடமையுண்டு. தந்தைக்கு மைந்தருடனும் கடமைகள் உண்டு” என்றான். துச்சலன் “அங்கரே, உறுதிபட ஒன்றை அவர் செவியிலிட்டு வாருங்கள். நாங்கள் எங்கள் மூத்தவரின் நிழல்கள் மட்டுமே. இப்பிறப்பில் தந்தையரோ மூதாதையரோ தெய்வங்களோ எங்களுக்கில்லை” என்றான்.

கர்ணன் தேரில் ஏறி அமர்ந்ததும் “புஷ்பகோஷ்டத்துக்கு” என்றபின் கண்களை மூடிக் கொண்டான். தேர்ச்சகடங்களின் ஒலி தனது குருதிக் குமிழிகளில் அதிரவைப்பதை விழிகளுக்குள் உணர்ந்தான். தடைக்கட்டை சகடங்களின் மேல் அழுந்தி கூச்சலிட தேர் நின்றபோது அதை ஒரு அடியென தன் பின் தலையில் உணர்ந்தான். “அரசே, புஷ்பகோஷ்டம்” என்று பாகன் சொன்னதும் எழுந்து படிகளில் கால்வைத்திறங்கி நின்றபோது பழமையான தூண்களும் முரசுப் பரப்பென கால்பட்டுத் தேய்ந்த படிகளும் கொண்ட அந்த மாளிகை முற்றிலும் அயலாகத் தெரிந்தது.

அவனுக்கு எப்போதும் மிக அணுக்கமாக இருந்தது அது. இக்கட்டுகளில், சோர்வுகளில் இயல்பாகவே நெஞ்சில் கோயிலென எழுவது. அதனுள் வாழ்ந்த தெய்வம் கல்லென மாறியதும் அதுவும் கற்குவியலென மாறிவிட்டது. திரும்பிச் சென்றுவிடவேண்டுமென்ற உணர்வை அடைந்தான். அங்கு வந்ததனால் எந்தப்பொருளும் இல்லை என்று தோன்றியது. அவ்வெண்ணத்தை உள்ளத்தால் உந்திக் கடந்து படிகளில் ஏறி இடைநாழியில் நடந்தான்.

அவன் அங்கே குண்டாசியை எதிர்பார்த்தான். இடைநாழியில் ஒரு தூணருகே குண்டாசி நின்றிருப்பதைக் கண்டதும் கால்கள் விரைவுகுறைந்தன. குண்டாசி அவனைக்கண்டதும் கள்மயக்கு கொண்டவர்களுக்குரியவகையில் அவனை நோக்கி கைசுட்டினான். “அங்கரே, நீர் வருவீர் என நான் நினைக்கவில்லை” என்றான். அவன் முன்வாயின் பற்களனைத்தும் உதிர்ந்திருந்தமையால் முகமே சிறுத்திருந்தது. மூக்கு வாயின் மேல் வளைந்திருந்தது. கழுத்தில் இரு நரம்புகள் புடைத்து நிற்க மெல்ல நடுங்கியபடி சிரித்து “வேதம்காக்க எழுந்த சூதன்மகன்! நன்று!” என்றான்.

“வருகிறாயா?” என்றான் கர்ணன். “எங்கே? கிழவரைப்பார்க்கவா?” என்றான் குண்டாசி. கர்ணன் “ஆம், வா…” என்றான். “நூற்றுவரில் எவரும் கிழவரைப்பார்க்கக் கூடாதென்ற ஆணை சற்றுமுன்னரே வந்தது. உடனே சென்று பார்க்கவேண்டுமென நினைத்தேன். ஆனால் உடனே வேண்டியதில்லை என்று தோன்றியது. என்னை ஆணையிட்டு நிறுத்த அஸ்தினபுரியின் அரசனுக்கும் அவனைச்சூழ்ந்து பறக்கும் நூறுவௌவால்களுக்கும் உரிமை இல்லை. ஆனால் அதற்காக இந்தக் குருட்டுக்கிழவருக்கு அவர் தன்மைந்தர்கள் நூற்றுவராலும் புறக்கணிக்கப்பட்டார் என்னும் தண்டனை கிடைப்பதை ஏன் நான் மறுக்கவேண்டும்?”

தொண்டைமுழை ஏறியிறங்க அவன் சிரித்தான். “மைந்தரில் ஒருவன் வந்தாலும் அவர் உள்ளம் நிறைவடையும் என்று தோன்றியது. ஆகவே நின்றுவிட்டேன்.” குழிந்த கன்னங்கள் அதிர கருகிய குழிகளுக்குள் குருதிபடிந்த சளி போன்ற விழிகள் உருள அவன் நகைத்தான். “அதுவே அவர் ஊழ் என்றால் அந்த ஊழாகி நிற்பதல்லவா என் பொறுப்பு? என் கடமையைச் செய்ய முடிவெடுத்தேன்.” கர்ணன் “யுயுத்ஸு அங்கிருப்பான்” என்றான். “இருக்கட்டும். இந்தப் பெருநகரின் கொடிவழி ஆற்றிய குருதிப்பழி முழுக்க அவன் தோள்களில் அல்லவா ஏறியமரப்போகிறது? ஷத்ரியனின் அழுக்கை சூத்திரன் சுமக்கட்டும்” என்றான் குண்டாசி.

கர்ணன் அவனை கடந்து சென்றான். “சினம் கொள்ளவேண்டாம் அங்கரே. நீங்கள்தான் ஷத்ரியராக ஆகிவிட்டீர்களே” என்றபடி குண்டாசி நடந்துவந்தான். “விழியற்றவரை நான் வெறுக்கிறேன் என்று நினைக்காதீர்கள். அவரது விழியின்மையையே வெறுக்கிறேன். எத்தனை தேர்ச்சியுடன் அவர் தான் விழையாதவற்றை நோக்கி விழியிலாதாகிறார்…!” கர்ணன் நின்று திரும்பி நோக்கி “என்ன சொல்கிறாய்?” என்றான். “ஆ! விழியின்மை எனும் தற்காப்பு இல்லாத மானுடர் எவர்? அங்கரும் விழிமூடக்கற்றவர் அல்லவா?” என்றான் குண்டாசி.

“விலகு களிமகனே” என்றான் கர்ணன். “இதுநாள்வரை குருகுலத்தின் பெருங்களிமகன் என்னும் புகழுடனிருந்தேன். இன்று அரசன் என்னை கடந்துசென்றுவிட்டான்” என்றான் குண்டாசி. “என்னைப்போல அவன் குடித்துவிட்டு உண்மைகளை சொல்வதில்லை. உண்மையை எதிர்கொள்பவர்களை குடி கோமாளிகளாக ஆக்குகிறது. அவர்களை கரைத்தழிக்கிறது. உண்மையை விழுங்குபவர்களை அது எரித்தழிக்கிறது…” அவன் கைநீட்டி “இவ்விரைவில் சென்றால் அஸ்தினபுரியின் அரசருக்கு விண் துணையாக இன்னொரு களிமகனாகிய நானே செல்லவேண்டியிருக்கும்” என்றான்.

கர்ணன் அவன் சொற்களைக் கேட்டபடி நடந்துசென்றான். “கிழவர் இந்நாள் வரை அனைத்தையும் பிறர்மேல் ஏவி தன்னை காத்துக்கொண்டவர் அங்கரே. இன்று ஏவியவை அனைத்தும் எதிர்மீண்டு அவர்மேல் பாய்கின்றன. அவர் உண்ணாநோன்பிருந்து உயிர்துறப்பதில் அழகிய ஒருமை உள்ளது. விழியிழந்தவருடன் போரிட எவர் விழைவார்? ஆகவே அவருக்கு கதையாலோ கைச்சுருளாலோ இறப்பில்லை. பசி விழிநோக்கா பெரும்பகை. அது அவரைக் கொல்லும் என்றால் அஸ்தினபுரிக்கு இன்னொரு மூதாதைதெய்வம் கிடைப்பார்.”

கர்ணன் பின்னால் குண்டாசியின் குரலை கேட்டுக்கொண்டே சென்றான். “இந்த மூதாதை தெய்வத்திற்கு நாம் எப்படி சிலைவைக்கவேண்டும் தெரியுமா? ஓர் ஆமைவடிவில். ஐந்தும் உள்ளிழுத்து அமைந்த பெரும் கடலாமை. முட்டைகளைப்போட்டுவிட்டு திரும்பாமல் சென்றுவிடும் பெருந்தந்தை.” குண்டாசியின் குரல் அவனுள் இருந்து என கேட்டுக்கொண்டே இருந்தது. “வணங்குபவரை பொருட்படுத்தா தகுதியாலேயே அவர் தெய்வமென ஆகிவிட்டார்…”

[ 20 ]

கர்ணன் தனது காலடியோசையை கேட்டபடி சென்று இசைக்கூடத்தின் வாயிலை அடைந்தான். அங்கு நின்றிருந்த காவலர் தலைவணங்கி  ”எவரையும் உள்ளே விடவேண்டாம் என்று ஆணை உள்ளது அரசே” என்றான். “நான் உள்ளே செல்லவேண்டும், விலகு” என்று  சொல்லி அவன் தோளில் கைவைத்து விலக்கி கதவைத் திறந்து உள்ளே சென்றான். இயல்பாகவே விப்ரர் அமர்ந்திருக்கும் குறுபீடத்தை நோக்கி திரும்பி அங்கு அவரது இல்லாமையைக் கண்டு சிறு அதிர்வை அடைந்தான்.

பாதக்குறடுகளை விலக்கி மரவுரி இட்ட மெத்தைமேல் இரை நோக்கிச் செல்லும் புலிபோல் காலெடுத்துவைத்து நடந்தான். இசைக்கூடத்தின் மையத்திலிருந்த சுனை காலையொளி பட்டு நீலச்சுடர் எரியும் பேரகல் போல் ஒளிகொண்டிருந்தது. அவ்வொளியின் அலையில் சூழ்ந்திருந்த தூண்கள் நெளிந்தன. ஓசைமுழுமைக்காக அங்கே தேக்கப்பட்டிருந்த அமைதி நெடுநேரமாக கலைக்கப்படாமையால் குளிர்ந்து நீர்மை கொண்டு பெருகியிருந்தது.

நடுவே தரையில் விரிக்கப்பட்ட தர்ப்பைப்புல் அடுக்கின்மீது கால் மடித்து அமர்ந்து மடியில் கைகோத்து சற்றே தலைதூக்கி தன்னுள் மூழ்கி இருந்த திருதராஷ்டிரரை அவன் முதலில் கண்டான். அவரது இமைகள் மூடியிருக்க உள்ளே கருவிழிகள் ஓடின. அருகே வலப்பக்கம் விப்ரர் நாய்போல உடலைச் சுருட்டி படுத்திருந்தார்.

சற்று அப்பால் தரையில் பதினொரு காந்தாரியரும் துச்சளையும் அமர்ந்திருந்தனர்.  அசைவின்மை திரைச்சீலை ஒவியமென  அவர்களை ஆக்கியது. கர்ணனைக் கண்டதும் அப்பால் தூண்சாய்ந்து நின்றிருந்த சஞ்சயன் அருகே வந்து கைகூப்பி முறைமை வணக்கம் செய்தான். தலையசைத்து அதை ஏற்றபின் தாழ்ந்த குரலில் “உண்ணாநோன்பென்று அறிந்தேன்” என்றான். அவன்  “ஆம்” என்றான். “நீரும் அருந்த மறுக்கிறார். ஏனென்பதை விதுரரிடம் சொல்லிவிட்டேன் என்றார்.”

கர்ணன் சென்று திருதராஷ்டிரரின் முன் குனிந்து அவரது மடித்தமைத்த வலக்கால் கட்டை விரலைத் தொட்டு சென்னி சூடிவிட்டு அவர் முன் அமர்ந்தான். அவன் வந்ததை அவர் அறிந்தது உடலில் பரவிய மெய்ப்பில் தெரிந்தது.  ”தங்கள் கால்களை சென்னி சூடுகிறேன் தந்தையே” என்றான் கர்ணன். அவரது விழிக்குழிகள் மட்டும் அசைந்து கொண்டிருந்தன.

“தங்கள் ஆணையை விதுரர் சொன்னார். நான் தங்கள் மைந்தன். ஆனால் தங்கள் மைந்தனுக்கு முற்றிலும் கடன் பட்டவன். இப்பிறவியில் அவரது விழைவன்றி பிறிது எதுவும் எனக்கு முதன்மையானதல்ல. தாங்களேகூட” என்றான். உறுதியானகுரலில் “அவர் பொருட்டு இங்கு பேசவந்துள்ளேன்” என்று தொடர்ந்தான்.

திருதராஷ்டிரரின் முதிர்ந்து ஒட்டிய உதடுகள் மெல்ல பிரியும் ஒலியைக்கூட கேட்க முடிந்தது. “நேற்று மாலை காந்தார இளவரசரும் கணிகரும் அரசரைக்காண வந்தனர். போரை தவிர்க்கும்படி பீஷ்மபிதாமகரின் ஆணையை ஏற்று கணிகர் வகுத்த மாற்றுத் திட்டமே இப்பகடைக்களம் என்றனர். இதற்கு அஸ்தினபுரியில் முன் மரபு உள்ளது. பகடை ஆடுதல் என்பது தீங்கென்று நூல்கள் கூறுகின்றன என்பது உண்மை. ஆனால் போரெனும் பெருந்தீங்கை தவிர்ப்பதற்கு பிறிதொரு வழியில்லை என்றனர்.”

“தங்கள் மைந்தர் ஏற்கவில்லை. பகடைபோல் இழிவில்லை என்று கொதித்தார். நேற்றிரவு முழுக்க தங்கள் மைந்தரின் அருகமர்ந்து போரிலிருந்து அவரை விலக்கி பகடைக்களத்தை ஏற்க வைத்துள்ளேன். உடன்பிறந்தார்குருதியை தவிர்க்க உகந்த வழியென்றே நானும் அதை எண்ணுகிறேன்” என கர்ணன் தொடர்ந்தான். “ஆனால் இன்று பகடைக்களத்துக்கு தங்கள் எதிர்ப்பை அறியவந்தபோது என்ன செய்வதென்று அறியாது நின்றிருக்கிறேன்.”

“மீண்டும் அரசரின் உள்ளம் போர் நோக்கி சென்றால் அதைத் தடுக்க எவராலும் இயலாது. இம்மண்ணில் உடன்பிறந்தார் குருதியொழுகாமல் இருக்க ஒரே வழி பன்னிரு பகடைக்களம் மட்டுமே. ஏற்றருளுங்கள்” என்றான்.

திருதராஷ்டிரரின் முகத்தில் எவ்வுணர்வும் தென்படாமை கண்டு “அரசே, தாங்கள் தந்தை மட்டுமல்ல, பேரரசரும் கூட. தங்கள் மைந்தருக்கு மட்டுமல்ல இந்நகரின் அத்தனை மக்களுக்கும் தந்தையானவர். ஒரு பெரும் போர்க்களம் எழுமென்றால் அதில் இறந்து வீழும் ஒவ்வொருவருக்கும் நீர்ப்பலி அளிக்கப்படுகையில் மூதாதையர் நிரைக்கு நிகராக உங்கள் பெயரும் சொல்லப்படும் என்று அறிவீர்கள். தங்கள் மைந்தரை மட்டுமல்ல இந்நகரின் படைவீரர் அனைவரையும் கருத்தில் கொண்டு முடிவெடுங்கள். போர் தவிர்க்கப்படுவதற்கு ஒரே வழி பகடைக்களம் மட்டுமே” என்றான்.

மதம் கொண்டு நின்றிருக்கும் களிறு ஆணைகளை புரிந்து கொள்ளாது என்று கண்டிருந்தான் கர்ணன். தன் மொழியே அவர் சித்தத்தை அடையவில்லை என்று தோன்றியது. “தந்தையே, பெருந்தந்தையென்று தாங்கள் இங்கமர்ந்திருப்பதும் உங்கள் குருதியிலிருந்து பெற்றுப் பெருகிய மைந்தராலேயே. அவர்களில் ஒருவர்கூட இன்று தங்களுடன் இல்லை. முற்றிலும் தனித்து தாங்கள் அடைவதுதான் என்ன?” என்றான்.

அவர் அசைவற்றிருப்பதை நெடுநேரம் நோக்கிக் கொண்டிருந்தான். பின்னர் நீள்மூச்சுடன் “என் சொற்களை சொல்லிவிட்டுச் செல்லவேண்டும் என்றே வந்தேன். தங்கள் முடிவால் உடன்பிறந்தார் கொலைக்கு கூடுதலாக தந்தைக்கொலை செய்தாரென்ற பெரும்பழியையும் தங்கள் மைந்தர் மேல் சூட்டிவிட்டு செல்கிறீர்கள். இத்தவத்தின் விளைவென்பது அது மட்டுமே” என்றபின் எழுந்து மீண்டும் அவர் கால் தொட்டு சென்னி சூடி வெளியே நடந்தான்.

வெளியே வந்து இடைநாழியில் வீசிய காற்றில் உடலை உணர்ந்தபோது கர்ணன் விழி இலாதாக்கும் இருளிலிருந்து ஒளிக்கு வந்ததுபோல் உணர்ந்தான். எழுமூச்சுவிட்டு மேலாடையை சீரமைத்து திரும்பியபோது கனகரும்  மருத்துவர் கூர்மரும் அவனுக்காக காத்து நின்றிருந்தனர். கனகர் தலைவணங்கி அவனை அணுகி “நேற்று மாலை மூவந்தி வேளையில் அமர்ந்தார். இத்தருணம் வரை உணவோ நீரோ அருந்தவில்லை. ஐந்து நாழிகை வேளைக்கு மேலாக அவர் எதுவும் அருந்தாமல் இருந்ததே இல்லை” என்றார்.

“அரசியர்?” என்று அவன் கேட்டான். “அவர்களும் உணவருந்தவில்லை. இன்று காலைதான் அவர்களுக்கு அரசர் வடக்கிருக்கும் செய்தி தெரிந்தது. அனைவரும் வந்து அருகமர்ந்துகொண்டனர்” என்றார் கனகர். “பேரரசி என்ன சொன்னார்?” என்றான். “அவர் பேரரசரின் கால்களைத் தொட்டு சென்னிசூடி வாழ்வெனினும் நீப்பெனினும் இறப்பெனினும் உடனுறைதல் எங்கள் கடன் என்று மட்டும் சொல்லி இடப்பக்கமாக சென்று அமர்ந்தார். அவர் தங்கையரும் சூழ்ந்து அமர்ந்து கொண்டனர். பின்பு ஒரு சொல்லும் அவர்கள் சொல்லவில்லை” என்றார்.

“ஆனால் சிந்து நாட்டரசி தந்தையிடம் பேசினார்” என்று மருத்துவர் சொன்னார். “அப்போது நான் உடனிருந்தேன். தன் தமையர்களை பழிசூழ்ந்தவர்களாக்க வேண்டாம் என்றும், அவர்கள் தங்கள் தந்தையிடமிருந்தே உளஉறுதியை பெற்றுக்கொண்டவர்கள் என்பதால் ஒருபோதும் இறங்கிவரப்போவதில்லை என்றும் சொன்னார். எச்சொல்லும் அரசரை சென்றடையவில்லை.”

கர்ணன் “அவர் உடல்நிலை என்ன?” என்றான். “பேரரசரின் உடல்நிலை நன்றாகவே உள்ளது. நிகரற்ற ஆற்றல் கொண்டவர் என்பதால் இருபது நாட்கள் வரைக்கும் கூட உணவோ நீரோ இன்றி அவர் நலமாக இருப்பார். ஆனால் விப்ரர் இன்னும் இருநாட்கள்கூட உணவின்றி இருக்க முடியாது” என்றார்.  ”ஆம், இப்போதே மிகவும் சோர்ந்திருக்கிறார்” என்றான் கர்ணன். “அவர் உடலில் நெடுநாட்களுக்கு முன்னரே நீர்வற்றத் தொடங்கிவிட்டது. மிகக்குறைவாகவே உணவு அருந்திக் கொண்டிருந்தார். இன்று காலை அவர் நாடியை பற்றினேன். வீணைநரம்பென அதிர்ந்து கொண்டிருக்கிறது” என்றார்.

“என்ன செய்வதென்று அறியேன். இருதரப்பும் இப்படி உச்ச விசை கொண்டுவிட்டால் எவர் என்ன செய்யமுடியும்?” என்றான் கர்ணன்.  கனகர் “செய்வதொன்று உள்ளது” என்றார். கர்ணன் அவரை நோக்க “சென்று அரசரை இங்கு வரச்சொல்லுங்கள் அங்கரே” என்றார் கனகர். கர்ணன் “அவர் வந்து ஆகப்போவது ஒன்றுமில்லை. இதற்கு நிகரான உறுதி கொண்டவர் அவர்” என்றான்.

“அவர் தன் முடிவிலிருந்து இறங்க வேண்டியதில்லை. ஆனால்  அவர் மைந்தனென வந்து நின்று தந்தையிடம் இறைஞ்சினால் பேரரசரின் உறுதி கரையும். அவர் சினந்தெழுந்தது அஸ்தினபுரியின் அரசருக்கு எதிராகவே. பேரரசரால் தோளிலும் தலையிலும் சூடப்பட்ட அச்சிறுமைந்தனாக மாறி அரசர் இங்கு வந்தால் பேரரசரால் ஒருபோதும் மறுக்க முடியாது” என்றார் கனகர். “அங்கரே, மைந்தர் தந்தையின் நெஞ்சின் ஆழத்தில் அறியாக் குழவி என்றே எப்போதும் வாழ்கின்றனர்.”

கர்ணன் சிலகணங்களுக்குப்பின் “ஆம், உண்மை. நான் அரசரிடம் பேசிப்பார்க்கிறேன்” என்றபின் நடந்தான்.

தொடர்புடைய பதிவுகள்

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் –ஒரு வாசிப்பு

$
0
0

NTA

 

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு,
பொருளடக்கத்தைப் பார்த்த கணமே நான் நவீனத் தமிழிலக்கிய அறிமுகத்தையும் தாண்டி உள்ளேயே போய்விட்டேன். வாசிப்பு வாசிப்பு என்கிறார்களே, வாசிப்பு என்றால் என்ன? வாசிப்பனுபவம் என்றால் என்ன? வாசித்து வாசித்து என்னதான் அறிந்தாய்? என்று இந்நூலைப் படிக்க ஆரம்பிக்கும்வரை ஒன்றும் அறியாமலும் கேட்பவர்களுக்கு ஒரு மனநிறைவான பதிலைக் கூற இயலாமலும் இருந்தேன். பல சிறுகதைகள், பல நாவல்கள் படித்திருந்தாலும் அனைத்தையும் படித்த படித்த அக்கணமே மறந்துவிடும் எனக்கு. ஏனெனில் அனைத்தும் ஒரு பொழுதுபோக்குக்காக படிக்கப்பட்டவை. எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்டு யோசித்ததில்லை.

 

அதனால் அத்தனை படித்திருந்தாலும் அதனால் ஒரு நல்விளைவுகளும் ஏற்படவில்லை. என் சிந்தனையிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. படிக்கும்போது உண்டாகும் கிளர்ச்சியை மட்டுமே அனுபவித்திருக்கிறேன். இந்தக் கருத்து சமீப காலங்களில் நான் படித்த தங்கள் அறத்துக்கும் கொற்றவைக்கும் காடுக்கும் முதற்கனலுக்கும் கிடையாது. அவற்றை ஆராயாமல் படித்தேனே தவிர அவற்றால் நான் எவ்வாறு உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டேன் என்றும் அவற்றால் தோன்றிய சிந்தனைகளையும் ஏற்கெனவே நான் கொண்டிருந்த எண்ணங்களில் ஏற்பட்ட மாற்றங்களையும்  விரிவாகத் தெரிவித்திருக்கிறேன்.

 

 

ஆனால் இப்போது கூடுதலாக, தங்கள் நவீனத் தமிழிலக்கிய அறிமுக நூலைப் படிக்கப் படிக்க தங்களது படைப்புகளையே ஆராயத் தொடங்கிவிட்டேன், காடு நாவல் இவ்வரலாற்றுச் சூழலில் என்ன பங்காற்றுகிறது, வெண்முரசு இவ்வரலாற்றுச் சூழலில் என்ன பங்காற்றுகிறது என.

 

 

பொருளடக்கத்தில் அடங்கியுள்ள அறிமுகத்திலுள்ள “இலக்கியத்தை எதிர்கொள்ளுதலிலிருந்து கடைசி அத்தியாயத்திலுள்ள இதுவரை எனக்கு தெரியாத விளங்காத மார்க்ஸியக் கோட்பாடை ” மிக எளிதாகப் புரியவைத்தது வரை மிகவும் வியந்து ஆழ்ந்து படித்துக்கொண்டேயிருந்தேன். உண்மையைச் சொல்லப்போனால் தங்கள் இந்த தமிழிலக்கிய நூலிலிருந்து அறிவியலையும் வரலாறையும் அறிந்தேன் என்று சொன்னால் அது மிகையாகாது.

 

 

இந்நூலில் தாங்கள் படித்த புத்தகங்களை விமர்சித்திருக்கிறீர்கள். அந்நூல்களில் சிலவற்றையாவது நானும் வாசிக்கவேண்டும் என்று என் டைரியில் குறிப்பெடுக்க ஆரம்பித்தால் அது மட்டுமே பத்து பக்கங்களைத் தாண்டுகிறது. ஒவ்வொன்றையும் படித்து அவற்றை மதிப்பீடு செய்து தாங்கள் அளித்திருக்கும் இந்நூல் மிக மகத்தானது. ஒவ்வொரு தமிழனும் அவன் படைப்பாளியோ வாசகனோ கட்டாயம் இதைப் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒரு படைப்பானது வெறுமனே அதைப் படித்து ரசிக்க மட்டும் அல்ல; அந்தப் படைப்பு எந்த வரலாற்றுச் சூழலில் எழுதப்பட்டது; அது இவ்வரலாற்றுச் சூழலில் என்ன பங்காற்றுகிறது என்று பார்க்கவேண்டும் என்று கடைசியாக தாங்கள் ஆணியடித்ததுமாதிரிக் கூறியது என் நெஞ்சில் பசுமரத்தாணிபோல பதிந்துவிட்டது.

 

தங்களின் இந்நூலைப் படித்துமுடிக்குமுன்பே எனக்கு தாங்கள் கூறியபடி எல்லாவகைக் கோணங்களிலிருந்தும் இன்னும் அதிகமாய் புத்தகங்களை வாங்கி வாசித்து ஆராயவேண்டும் என்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனையை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகமும் உருவாகிவிட்டது. இதைப் படிப்போர் நெஞ்சத்தில் எளிமையாக, மிக நுட்பமாக வாசகனுக்கு வாசிக்கும் ஆர்வத்தையும் படைப்பாளிக்கு எழுதும் ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறீர்கள். தங்களின் இந்தக்கொடை தமிழுக்கு ஆற்றப்பட்டுள்ள மாபெரும் சேவையென்றே எண்ணுகிறேன்.

 

 

நவீன தமிழிலக்கிய முன்னோடியாக சுப்ரமணிய பாரதி முதல் ஐந்து தலைமுறைகளையும் தாண்டி இன்றைய இலக்கியம் வரை பல எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும்  ஒரு படைப்பாளியாகவும் ஒரு விமர்சகனாகவும் அறிமுகப்படுத்தியும் அவை அமையும் வாதங்களையும்  கோட்பாடுகளையும் நுணுக்கமாக ஆராய்ந்தும் எளிய வகையில் புரியவைத்துள்ள இந்நூலின் மீதான வியப்பை சொல்லிக்கொண்டேயிருக்க விழைகிறேன். இருந்தாலும்  என்னைப் போன்றோர்க்கு புரியாதவற்றைத் தெளிவுபடுத்த மேலும் மேலும் சிறந்த படைப்புகளை வழங்கிட எல்லாம் வல்ல இறைவனிடம் தங்களுக்கு நல்ல உடல் நலத்தைத் தந்தருளும்படி வேண்டி நிறைவு செய்துகொள்கிறேன்.

 

 

இப்படிக்கு,
தங்கள் அன்புள்ள வாசகி,
பி. மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி.

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”

$
0
0

D. Jayakanthan

‘நல்ல கதை என்பது எலியின் உயிர்வாதையையும் பூனையின் பசியையும் ஒரேசமயம் சொல்வது’– மிகப்பழைமையான சொலவடை இது. சொல்வது எத்தனை எளிதோ அத்தனை சிரமமானது சாதிப்பது. இன்னொரு கோணத்தில் நிரந்தரமான விவாதத்துக்கு உரியது. ‘அம்மையை அடித்தாலும் அதிலிமிருக்கும் இரண்டு பக்கம்’ என்று மலையாளப் பழமொழி. அப்படியானால் நியாயம் என்றும் தர்மம் என்றும் ஒன்றுமில்லையா என்ன?

உண்டுதான். கலைஞன் எப்போதுமே நீதியின்குரல்தான். நீதி என்பது பலவகை. அன்றாட உலகியல் நீதி ஒன்று நம் கண்ணுக்குப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மண்ணில் மனிதரை இதுகாறும் வாழவைத்த பெருநீதி ஒன்று அழியாமல் என்றுமுள்ளது. சிறுநீதிகளின் அன்னை அது. காலம்தோறும் தன்னை உருமாற்றி காட்டிக் கொண்டே இருக்கும் ஆழம் அது. அரசியல்வாதிகள் அப்படி ஒரு அழியாத நீதி உண்டு என்பதை மறுப்பார்கள். நேற்று மதவாதிகள் மறுத்தார்கள். அரசியல்நீதியும் மதநீதியும் மட்டுமே அவர்கள் கண்ணுக்குப்படும். மானுடநீதி எப்போதும் அதனுடன் முரண்பட்டு குற்றம்சாட்டப்பட்டு கழுவிலேறும். ஆயினும் அதுவே அழியாமல் இக்கணம் வரை மனிதகுலத்தைக் கொண்டுவந்துள்ளது. இலக்கியம் என்றும் அதன் குரல்.

நீதிக்கும் அப்பாற்பட்ட ஒன்று இலக்கியத்தில் உள்ளது என்றால் இப்பிரபஞ்சத்தின், மானுட வாழ்வின் அறிந்துகொள்ள முடியாத இயக்கவிதியைப் பற்றிய அகத்தரிசனம்தான். பிரபஞ்சத்தின் பேரியக்கத்தின் முன் மனிதகுலமே ஒரு நடுங்கும் புல்நுனி நீர்த்துளிதான் என்ற பிரக்ஞையிலிருந்து பிறப்பது அந்த தரிசனம். அந்த கோணத்தில் மானுடப்பெரும் நீதியே கூட பிரபஞ்சத்தில் நாம் ஏற்றிக் கொள்ளும் ஒரு பாவனை மட்டுமே. அல்லது அந்த உக்கிரமான பெருவிரிவின் முன் நாம் முன்வைக்கும் ஒரு விண்ணப்பம் அல்லது மன்றாட்டு மட்டுமே. அந்த உச்சத்தை தன் புனைவால் சென்று தொடும் கலைஞன் அழியாநீதியை தன் புனைவால் நிராகரித்து பெருவெளியின் புரிந்துகொள்ள முடியாத மௌனத்தை தன் கலையில் தேக்கி வைப்பான். இயற்கையைப்போலவே கருணையற்றதாகவும் மர்மம் மிக்கதாகவும் இருக்கும் அப்படைப்பு.

எலியையும் பூனையையும் இயக்கும் பெருநியதியைக் கண்டு அங்கே பிரமித்து நின்றுவிடுபவை என்பதனால் உலகப்பேரிலக்கியங்களை பெரும்பாலும் மனிதாபிமானப் படைப்புகள் என்று சொல்ல முடிவதில்லை. ஹென்றி ஜேம்ஸ் தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ நாவலைப்பற்றி ”காடுபோல வடிவமற்றது, மனிதத்தன்மையற்றது ” என்று இதனால்தான் சொன்னார்.

ஜெயகாந்தன் எப்போதுமே மனிதாபிமானி. தமிழின் மனிதாபிமான இலக்கியத்தின் முதல்பெரும்பெயர் அவர்தான். அப்படித்தான் அவர் அறியவும்பட்டிருக்கிறார். ஆனால் எந்த உயிர்ப்புள்ள படைப்புலகையும்போல பொது இலக்கணத்தில் வகுத்துவிடமுடியாத கதைகள் அவரது எழுத்திலும் உள்ளன. அவை பொதுவாக அதிகம் விவாதிக்கப்பட்டதில்லை, விவாதிக்கப்படும்போதுகூட அவை அவரது மைய ஓட்டமான மனிதாபிமான நோக்குடன் இணைத்தே புரிந்துகொள்ளப்படுகின்றன. ‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’ அத்தகைய கதை.

இந்து ஞான மரபு உருவாக்கிய உதாரண ஆளுமை ஒன்றை ஜெயகாந்தன் முன்னிறுத்துகிறார். இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு தவம் மட்டுமே என்ற புரிதலில் இருந்து உருவான நெறிகள் கொண்டவர் அவர். கற்றல் கற்பித்தல் மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டவர். சபலங்களும் சஞ்சலங்களும் இல்லாதவர். ஆகவே தன்னளவில் முழுமை கொண்டவர். விடுதலை பெற்றுவிட்டவர். பூமியுடன் தனது தர்மத்தால் மட்டுமே கட்டுபட்டவர். ஏதோ ஒருபுள்ளியில் அதையும் கைவிட்டு ‘சர்வ தர்மான் பரித்யக்ஞ மாமேகம் சரணம் விரஜ’ என்ற பெருவெளியின் அழைப்பை ஏற்று அடிபதறாமல் அவரால் சென்றுவிட முடியும்.

அவருக்கு மனைவியாகவே முழு வாழ்க்கையையும் அறிந்தவளின் பார்வையில் சொல்லப்படுகிறது கதை. சகதர்மிணி என்ற சொல்லுக்கு அனைத்து வகையிலும் பொருந்தும் வாழ்க்கை. சக்கரத்தில் ஒட்டியிருக்கும் பல்லி சுற்றிச் சுற்றி வெகுதூரம் செல்வதுபோல என்று சங்கப்பாடல் அந்த அறத்தை உவமை சொல்லி விளக்குகிறது. அவள் அறிந்தது அவரை மட்டுமே. ஆகவே அவரது தர்மத்துக்கு அவளும் கட்டுப்பட்டவளாகிறாள். சின்னச் சின்ன சஞ்சலங்களை அவரது சொற்கள் இல்லாமல் செய்கின்றன.

அவள் ஒரு லாட்டரிச்சீட்டு வாங்குகிறாள். ஒரு சிறுவன் கட்டாயப்படுத்தினான் என்று வாங்க நேர்ந்ததுதான். அதற்கு லட்சரூபாய் விழுகிறது. பெரும் செல்வம். அதைக் கொண்டு வந்து அவர் காலடியில் வைக்கிறாள் ”நமக்கு எங்கே விழப்போறதுன்னு அசட்டையா இருந்துட்டேன்… பிரைஸ் விழப்படாதுன்னு ஸ்வாமிய வேண்டிட்டேன்…. இப்போ இப்படி ஆயிடுத்தே… மன்னிச்சு இதையும் என்னையும் ஏத்துண்டே ஆகணும்..”

அவர் எளிதாக அதை நிராகரித்துவிடுகிறார். ”நான் எப்பவுமே உஞ்சவிருத்தி பிராமணன்தான். என் தோப்பன், பாட்டன் – எல்லோரும் வந்த வழி அதுதான். லட்சாதிபதிக்கு புருஷனா இருக்கற அந்தஸ்து, கொணம் எதுவும் எனக்குக் கெடையாது…” ஏனென்றால் நிராகரிப்பதனூடாகவே அவர் முன்னால் சென்றுகொண்டிருக்கிறார். அவர் உதறிய ஒவ்வொன்றையும் புன்னகையுடன் வென்றிருக்கிறார். அவருக்கு அதுவும் ஒரு சுயசோதனைக் களமாக இருக்கலாம்.

‘இந்த மாயை வலையிலே நான் மாட்டிக்கலே; எனக்கு இது வேண்டாம்’னு அந்தத் தரித்திரச் சீட்டைக் கிழிச்சு எறி. ஆமாம் கிழிச்சு எறிஞ்சுடு. வேறே யார் கிட்டேயாவது குடுத்து அதுக்கு வட்டி வாங்கிண்டாலும் ஒண்ணுதான், நன்றியை வாங்கிண்டாலும் ஒண்ணுதான். சூது மனசுக்கு அதெல்லாம் தோணும். அதுக்கெல்லாம் பலியாகாம எந்த விதத்திலயும் அந்தச் சூதுக்கு ஆட்படாமே அதை கிழிச்சு எறிஞ்சுடு. இரண்டும் உன்னோட இஷ்டம். அது பாவமா, பாக்கியமான்னு முடிவு பண்ண வேண்டியது நீ…”

ஆனால் அவளால் அதை கிழிக்க முடியவில்லை. லட்சுமி அல்லவா என்கிறாள். ஆனால் ஒரு கணத்தில் அவளுள் உள்ள ஒரு பொறி வெளியே தெறித்து வருகிறது. ”பணம் பெரிசா, ஞானம் பெரிசாங்கிறதெல்லாம் நேக்குத் தெரியாது. ஆனால், பணம் – அது எவ்வளவு அதிகம்னாலும் எப்படி நிலையில்லையோ அதே மாதிரி மனுஷாளும் எவ்வளவு பெரிய ஞானியாயிருந்தாலும் வாழ்க்கை சாசுவதமில்லையே! …அப்படி நினைக்கிறதோ சொல்றதோ மகா பாவம். ஆனால் இந்தக் காலத்திலே எப்பேர்ப்பட்ட பதிவிரதையும் உடன்கட்டை ஏறிடுறதில்லையே! இவருக்கு அப்புறம் ஒருவேளை நான் இருக்க வேண்டி வந்ததுன்னா… சிவ! சிவா!…”

ஆம் அதுதான் உண்மை. சக்கரம் ஆணிகழன்றபின் பல்லி எங்கு செல்லும்? அவளுடைய இடமென்பது அவருடைய நிழல் என்பதே. அதற்குப் பின்? உடன்கட்டை ஏறிவிடமுடியாதே. அனாதைக்கிழவியாக பசித்து இரந்து தெருவில் சாகவேண்டுமா என்ன? ஒரு உன்னதமான உறவின் பயனாக அவளுக்குக் கிடைப்பது அதுவாகத்தான் இருக்குமா? எத்தனை காலமாக அந்த அச்சம் உள்ளூர இருந்திருக்கும். பிள்ளைகள் இல்லையே என்று உணரும்போதெல்லாம். கணவர் அவருக்கு தேடிவந்த பெரிய பதவிகளை உதறும்போதெல்லாம். அனைத்துச் சஞ்சலங்களையும் அவரிடம் பேசியே வென்ற அவளால் இந்த சஞ்சலத்தை மட்டும் அவரிடம் பேசவே முடியாது. அவள் லாட்டரி சீட்டு எடுத்துப்பார்த்தது தற்செயல்தானா?

”நேக்கு ஒரு குறையும் இல்லை… ஆமாம்… எந்தக் கோயிலிலே வந்து வேணாலும் நின்னு ஈரத் துணியைக் கட்டிண்டு சொல்வேன் – எனக்கு ஒரு குறையும் இல்லை… ”என்று அவள் கதையில் சொல்கிறாள். ஆனால் அது அவளுக்குள் உள்ள ஓர் உண்மைக்கு எதிராக அவளே சொல்லிக் கொண்டதுதான் போல. ”…உஞ்சவிருத்தி பண்றதிலே எனக்கென்ன பெருமை! எல்லோரும் பிச்சைக்காரின்னு சொல்லுவா. கட்டினவளைப் பிச்சைக்காரியா விட்டுட்டான்னு இந்த மகா ஞானியைப் பத்தியும் பேசுவா. அவர் கிழிச்சு எறியலாம். நான் அதைச் செய்யலாமா? ”எத்தனை சொற்கள் எத்தனை மாய்மாலங்கள். தன்னைத்தானே ஒளித்துக்கொள்ள!

மறுபக்கம் கிழவர் இந்த நவீனகாலத்தைக் கண்டு பதைத்து சாபமிட்டு பழமையில் அவர் கண்ட உன்னதத்தில் முகம் புதைத்துக் கொள்கிறார். அவரை நோக்கும்போது அந்த பற்றின்மையின் குரூரத்துக்கு அப்பால் உள்ள நியாயமும் தென்படுகிறது. தன் வாழ்க்கையை இறைவனுக்கும் விதிக்கும் அர்ப்பணம் செய்து அச்சமில்லாது ஆயுளைக் கழித்து காலத்தில் மறையக் காத்திருப்பவன் தன் மனைவியை மட்டும் தானே சுமப்பானா என்ன? அதுவும் விதிப்படி என்றுதானே அவன் ஆத்மா சொல்லும்? அப்படி சுமப்பவனாக இருந்திருந்தால், அத்தகைய சிந்தனையின் துளியாவது அவனிடம் இருந்திருந்தால், அவன் அத்தோடு நின்றிருக்க மாட்டான். மனைவி உறவு சுற்றம் நாடு என விரிந்து பற்றில் திளைத்து பிறிதொருவனாக இருந்திருப்பான். எதையுமே அவனால் நிராகரித்திருக்க முடியாது.

ஆனாலும் அந்த துறவின் பின்னால் உள்ள குரூரம் கூரிய சவரக்கத்தி முனைபோல அச்சுறுத்தவே செய்கிறது. ஆடையை கழற்றுவது போல பாசங்களை கழற்றலாமா என்ன? ஞானத்தின் பின்னால் எப்போதுமே ஒரு குரூரம் இருக்கிறது. ஞானம் அஞ்ஞானத்தை நிராகரிப்பதன் குரூரம் அது. பேதமையின் எளிமையை காலெடுத்து தாண்டிச்செல்வதன் குரூரம். அதை ஞானத்திலிருந்து பிரிக்க முடியாது.

நீ இறந்தால் நான் என்ன செய்வேன் என்று கேட்கும் மனைவியிலும் உள்ளது மர்மமான ஒரு குரூரம். அவருடன் ஒட்டியிருந்த அந்த முழுவாழ்விலும் அவர் நம்பி ஒழுகிய வாழ்க்கையின் மீது அவளுக்கு ஆழமான அவநம்பிக்கை இருந்திருக்கிறது. அந்த லாட்டரிச்சீட்டை கொண்டுவந்து அவள் காட்டிய கணம் அவருக்கு அகவிழி திறந்து அவளுடைய ஆழம் பிடிபட்டிருக்கும். ஒருவகையில் அது அவருக்கு ஒரு மரணத்தருவாய். அவள் மனதில் தனக்கிருப்பதாக அவர் நம்பியிருந்த ஒரு சித்திரம் கலைகிறது. அது ஒரு மரணமே. இன்னொருவகையில் அவர் நெஞ்சிலிருந்த அவளுடைய மரணமும்கூட.

அவளை சற்றேனும் மீட்டுக்கொள்ள முடியுமா என்ற ஆசையால்தான் கிழித்தெறி என்றாரா? அவள் அதை கிழித்தால் தன்னை அவருக்கு பூரண சமர்ப்பணம் செய்கிறாள் என்று பொருள். அவர் நம்பி வாழ்ந்தவற்றை அவளும் முழுமையாக நம்புகிறாள் என்று பொருள். கிழிக்கவில்லை என்றால் அது ஒரு முழு நிராகரிப்பு. அவள் என்ன செய்யப்போகிறாள்?

கதைகளுக்குள் பேசுவதும் கதையை முடித்து தீர்ப்பளிப்பதும் ஜெயகாந்தனின் இயல்புகள். நவீனத்துவம் அதை ஓர் பெரும் அழகியல் பிழையென நம்ப நம்மை பயிற்றுவித்திருக்கிறது. அதை மட்டும் சொல்லியே நாம் அவரது உலகை முழுக்க நிராகரிக்கவும் பழகிவிட்டிருக்கிறோம். ஆனால் எந்த நவீனத்துவ எழுத்தாளனும் தொடாத பல இக்கட்டு நிலைகளை சாதாரணமாக ஜெயகாந்தன் கதைகள் கையாண்டிருப்பதை உணரலாம். கதைகளில் ஒலிக்கும் ஜெயகாந்தனின் குரலை அதன் பல்வேறு குரல்களில் ஒன்றாக மட்டும் காணும் இன்றைய வாசகன் அவற்றுக்கு பலதளங்களிலான வாசிப்பை அளிக்கமுடியும். அத்தகைய மறுவாசிப்புக்குரிய ஜெயகாந்தன்கதைகள் பல. அதில் ஒன்று இக்கதை.

ஜெயகாந்தனின் பெரும்பாலான கதைகளுக்கு யுகசந்தி என்று பெயரிடலாம். அவரைப்பற்றி என் நண்பர் சுகா எழுதிய கட்டுரை ஒன்றில் [வார்த்தை மாத இதழ்] அவரையே ஒரு யுகசந்தி என்று சொல்கிறார். பழங்கால மதிப்பீடுகளும் நவீன யுக மதிப்பீடுகளும் கொள்ளும் மோதலையும் சமரசத்தையுமே மீண்டும் மீண்டும் ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார். அவ்வகையில் நமது பிற புனைவெழுத்தாளர்கள் எவரும் கவனிக்காத அளவுக்கு அம்மோதலின் உக்கிரமான, நுண்மையான புள்ளிகளை அவர் கண்டிருக்கிறார். அக்கினிபிரவேசம், பிரம்மோபதேசம்,சுயதரிசனம் என அவரது எந்தக் கதையை எடுத்தாலும் இந்த இலக்கணம் பொருந்தும்.

ஜெயகாந்தனின் புனைவுலகில் கணிசமான கதைகள் பிராமணசமூகம் பற்றியவை. பெருநகர் சார்ந்த பிராமண சமூகம் சார்ந்தவை என்றும் சொல்லலாம். அவர் ஆனந்தவிகடனில் எழுதியமையாலும், அன்றைய அவரது வாசகர்கள் அதிகமும் பிராமணர்கள் ஆதலினாலும்தான் அப்படி நிகழ்ந்தது என்று அதற்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. உண்மையில் நேர் எதிராகவே நான் காண்கிறேன். அவர் பிராமணர்களைப்பற்றி எழுதியமையால்தான் அவருக்கு பிராமண வாசகர்கள் அமைந்தார்கள். ஆகவேதான் அவை ஆனந்த விகடனில் பிரசுரமாயின.

ஜெயகாந்தனின் ஒரு மனம் மரபில் ஆழ வேரூன்றியது. இன்னொரு மனம் நவீனயுகத்தை புத்தெழுச்சியுடன் வரவேற்கும் மார்க்ஸிய நம்பிக்கை கொண்டது. ஆரம்பகால கதைகளில் புதிய காலத்துக்கான அறைகூவலாகவும் எக்காளமாகவும் மட்டும் நின்றன அவரது கதைகள். பின்பு அவர் தன்னுள் உறையும் மரபை அடையாளம் கண்டதும் – ஜெயகாந்தனைப் பொறுத்தவரை திருவள்ளுவர், தாயுமானவர், விவேகானந்தர், வள்லலார், பாரதி ஆகியோரின் சொற்கள் வழியாகவே அதை அவரே கண்டு கொள்கிறார்– மரபுமனத்துக்கும் நவீன மனதுக்குமான மோதல் அவரில் உக்கிரம் கொள்கிறது. அக்காலகட்டத்தில்தான் அவர் ஆனந்த விகடனில் எழுத ஆரம்பித்தார்.

அவருக்கு நிகராகவே அன்று நவீனத்துவத்தை ஏற்க தன்னை மறு ஆக்கம் செய்தாகவேண்டிய நிலையில் இருந்த பிராமண சமூகம் அவருக்கு இயல்பாகவே களமாக ஆகியது. அந்த அகமோதலுக்கு ஆளான பிராமணர்களே அவரது முதல் வாசகர்களாக ஆனார்கள். அவரது கணிசமான கதைகள் மரபின் வெற்று அடையாளத்தை உதறத்துடிக்கும் மனங்களை மையமாக்கியவை– சுயதரிசனம் போல. நவீனத்துவத்தின் உள்ளூர உறையும் மனிதாபிமானத்தை அடையாளம் கண்டு கொள்பவை– யுகசந்திபோல.

‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ..’ கூட அப்படிப்பட்ட ஒரு யுகசந்திதான். லாட்டரி சீட்டு வடிவில் மாமி கையில் வந்து அமர்ந்திருப்பது நவீனத்துவ யுகமேதான். சென்ற நூற்றாண்டில் நங்கூரமிட்ட அவள் கணவர் சஞ்சலமே இல்லாமல் அதை நிராகரித்து தன் யுகப்பழைமையில் நிலைகொள்கிறார். மாமியின் கையிலிருந்து துடிக்கிறது நவீனத்துவம். அதன் அறைகூவல், அதன் அழைப்பு, அதன் வாக்குறுதி. …என்ன செய்வதென்று தெரியாமல் அதை வைத்துக் கொண்டு நிற்கிறாள். ”நான் கையிலே சீட்டை வச்சுண்டு நிக்கறேன். கனக்கறது. இதுக்கு நான் என்ன செய்யட்டும் – சொல்லுங்கோ? ”

பெரும்பாலான கதைகளில் ஜெயகாந்தனுக்கும் ஏதாவது சொல்வதற்கு இருக்கும். அதையும் அக்கதையின் வாசிப்புகளில் ஒன்றாக கண்டு முன்னகர வெண்டும். இக்கதையில் ஜெயகாந்தனே திகைத்து பேசாமல் நின்றுவிடுகிறார். மாமியின் கேள்விக்கு அவருக்கும் ஒன்றும் பதில்சொல்வதற்கில்லை. அந்தரங்கமாகக் கேட்டிருந்தால் அவருள் உறையும் முற்போக்குவாதி ”ஏன் அலட்டிக்கறே, சத்தமில்லாம பணமா மாத்தி பாங்கிலே போட்டு வை” என்று சொல்லிவிடுவாரோ என்னவோ. மரபுவாதி கிழவரை எண்ணி ஓர் அனுதாபப்புன்னகையும் புரிவார்தான்.

ஜெயகாந்தன் – நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ? (1967-1969)

முதற்பிரசுரம் 2008 ஜூலை/ மறுபிரசுரம்

======================================================================

[embedyt]http://www.youtube.com/watch?v=iy0xpl5NztA[/embedyt]

http://www.tamilnation.org/literature/modernwriters/jeyakantan/20.htm

கலைஞனின் உடல்மொழி:ஜெயகாந்தன் ஆவணப்படம்

கடவுள் எழுக! ஜெயமோகனின் ஏழு நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2

 

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74

$
0
0

[ 21 ]

நான்கு நாட்கள் துரியோதனன் இளகவில்லை. கர்ணன் “நீங்கள் சென்று ஒருமுறை நேரில் கேளுங்கள், அரசே. உங்கள் தந்தை என அவர் என்றும் நெகிழ்வுடனேயே இருந்திருக்கிறார். இன்று நீங்கள் மானுடனாக வாழ்வதும் அவரது கருணையினாலேயே” என்றான். “அந்நாட்கள் கடந்துசென்றுவிட்டன… எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கப்போகிறார்? இருபது நாட்களா? களிறு உணவில்லாது முப்பது நாட்களிருக்கும் என்கிறார்கள். முப்பது நாட்கள் பார்க்கிறேன். எரிமேடையில் உடல் அனல்கொண்ட பின்னர் விடுதலை பெறுகிறேன்” என்றான். “ஆனால் அவர் என் தந்தை அல்ல. மைந்தன் என அவர் மடியிலமர்த்திய யுயுத்ஸு அதை செய்யட்டும்.”

தன் உடன்பிறந்தவர்களிடம் “எவருக்கும் என் ஆணை என ஏதுமில்லை. விழைபவர் சென்று அவரது கால்தாங்கலாம். முடிசூட்டி அரசனாக்குவார் என்றால் அமரலாம்…” என்றான். துச்சாதனன் “மூத்தவரே, நீங்கள் வீண்சொற்கள் எடுக்கவேண்டியதில்லை. உங்களை அன்றி பிறிதெதையும் அறியாதோர் நாங்கள்” என்றான். சுபாகு “உங்கள் முகமென்றே பேரரசரையும் அறிந்திருக்கிறோம். உங்கள் எண்ணங்கள் எங்களுக்கு இறையாணைகள்” என்றான்.

“எதையும் மாற்றவேண்டியதில்லை. பன்னிரு படைக்களம் அமைக்க ஓர் ஒப்புதல் தேவை… அதை அவர் அளிக்கவேண்டியதுமில்லை. மறுக்காமலிருந்தால் போதும்” என்றான் கர்ணன். “பன்னிரு களத்திற்கு முறைப்படி யுதிஷ்டிரனை அழைக்கவேண்டியவர் அவர். அவரது ஆணையிருந்தால் மட்டுமே விதுரர் செல்வார். விதுரரன்றி எவர் சென்றாலும் யுதிஷ்டிரனை ஒப்புக்கொள்ளச் செய்ய முடியாது.” சகுனி “ஆம், நான் அவரிடம் பலமுறை பேசிவிட்டேன். சொற்களை அவர் அறியவேயில்லை” என்றார்.

கணிகர் புன்னகைத்து “எதிர்வினையாற்றப்படாத சொற்கள் நன்று. அவை விதைகள்” என்றார். சீற்றத்துடன் திரும்பி “உங்கள் சிரிப்பு என்னை எரியச் செய்கிறது, அமைச்சரே. நாம் எத்தகைய இடரில் வந்து நின்றிருக்கிறோம் என உண்மையிலேயே அறிவீரா?” என்றார் சகுனி. “ஆம், அறிவேன்” என்றபின் “ஆறு நாட்களுக்குமேல் தாங்கமாட்டார்” என்றார். “அவரா? அவர் உடல்…” என சகுனி தொடங்க “அவர் உடல் தாங்கும். ஆன்மா தாங்காது. அது ஏற்கெனவே மெலிந்து நீர்வற்றி இருக்கிறது…” என்று சொல்லி கணிகர் உடல்குலுங்க சிரித்தார்.

கர்ணன் நாள்தோறும் வடக்கிருக்குமிடத்திற்கு சென்று வந்தான். அங்குள்ள குளிர்ந்த அமைதி பெருகியபடியே வந்தது. ஒட்டடைகளைக் கிழித்து அகற்றி செல்வது போல செல்லவேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் மேலும் மேலுமென வஞ்சம்கொள்ளும் தெய்வத்தின் சிலை அமைந்த கருவறைமுன் சென்றமர்ந்து மீள்வதைப்போல் திரும்பிவரவேண்டியிருந்தது. நான்காவது நாள் காந்தாரியும் திருதராஷ்டிரரும் மட்டுமே அமர்ந்திருந்தனர். பிறர் சோர்ந்து விழுந்துவிட்டனர்.

அவன் திரும்பும்போது எதிரே பானுமதி வருவதைக்கண்டு நின்றான். தலைவணங்கி முகமனுரைத்தான். அவள் பெருமூச்சுடன் விழி தாழ்த்தினாள். “பேரரசியிடம் பேசினீர்களா?” என்றான் கர்ணன். “இல்லை…” என்றாள் அவள். அவன் மேலும் கேட்க எண்ணியதை தவிர்த்து முன்னால் சென்றபோது அசலையும் கிருஷ்ணையும் வருவதை கண்டான். அணிகளும் சிலம்பும் ஒலிக்க ஓடிவந்து அசலையின் தோளை பற்றிக்கொண்ட கிருஷ்ணை “நான் சொன்னேன் அல்லவா? அந்த யாழின் பெயர் மகரம். அதை தெற்கின் பாணர்கள் வாசிக்கிறார்கள். அங்கே பாருங்கள், சிற்றன்னையே” என்றாள்.

“இருடி” என்றாள் அசலை. அதற்குள் கர்ணனை பார்த்துவிட்டு தலைவணங்கி “பணிகிறேன், மூத்தவரே” என்றாள். “என்ன பார்த்தாய்?” என்று கர்ணன் புன்னகையுடன் கிருஷ்ணையிடம் கேட்டான். அவள் கரிய முகம் நாணத்தால் அனல்கொண்டது. “இல்லை” என விழி தாழ்த்தி சிரிப்புடன் சொன்னாள். அசலை “ஒரு விறலியாக ஆகிவிடவேண்டும் என்பதே அவள் விருப்பமாம். விறலியாக எப்படியெல்லாம் ஏழு மலைகளுக்கும் ஏழு ஆறுகளுக்கும் அப்பாலுள்ள நாடுகளுக்கு செல்லப்போகிறாள் என்பதைப் பற்றியே எப்போதும் பேச்சு” என்றாள்.

கர்ணன் சிரித்து “பாரதவர்ஷத்தின் பேரரசியாக வேண்டியவர் விறலியாவதா?” என்றான். கிருஷ்ணை நாகம்போல தலைதூக்கி “பாரதவர்ஷத்தின் அரசியென்றானால் இதே அரண்மனையில் இதே முகங்கள் நடுவே அரியணை அமர்ந்திருக்கவேண்டும். பாரதவர்ஷம் ஏடுகளாகவும் காணிக்கைகளாகவும் வந்து முன்னால் நிற்கும். விறலியென்றானால் உண்மையிலேயே இந்த மண்ணையும் மக்களையும் பார்க்க முடியும்” என்றாள்.

“நன்று” என்றான் கர்ணன் நகைத்தபடி. “நான் பொய்யாகச் சொல்லவில்லை. விறலியாக ஒருநாள் இந்த அரண்மனையிலிருந்து கிளம்பிச் செல்லத்தான் போகிறேன்” என்று கிருஷ்ணை சொன்னாள். “உனக்கு எவர் பெயர் இடப்பட்டிருக்கிறதென்று அறிவாயா?” என்றான் கர்ணன். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசியின் சிறுவடிவம் நீ.” கிருஷ்ணை முகம் சுளித்து “இல்லை. நான் சூததேவரின் துணைவியின் மறுவடிவம். அவள் பெயரும் கிருஷ்ணைதான்… அங்கே தென்னகத்தில் ஓடும் ஒரு பேராற்றின் பெயரும் கிருஷ்ணை” என்றாள்.

கர்ணன் “சரி… நான் சொல்சூழவில்லை… செல்க!” என்றான். அவள் தலையில் கைவைத்து வாழ்த்தியபின் சென்று படிகளை அணுகியபோது ஓர் எண்ணம் எழுந்தது. அங்கே நின்றபடி “கிருஷ்ணை” என்றான். “சொல்லுங்கள், பெரியதந்தையே” என்றபடி அவள் கால்சிலம்பு ஒலிக்க அவனை நோக்கி ஓடிவந்தாள். “எதற்காக ஓடுகிறாய்? மெல்ல செல்” என்றாள் அசலை. கிருஷ்ணை அவனருகே வந்து “இப்படி ஓடினால்தான் உண்டு. இளவரசியர் ஓடக்கூடாதென்கிறார்கள்…” என்றாள்.

“அரசரை இறுதியாக எப்போது பார்த்தாய்?” என்றான் கர்ணன். “ஒருமாதம், இல்லை இரண்டு மாதம் இருக்கும். இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்வதற்கு முன்பு.” கர்ணன் “அவர் உன்னிடம் என்ன சொன்னார்?” என்றான். “ஒன்றும் சொல்லவில்லை. என்னைப் பார்த்தால் முகம் மலர்ந்து சற்றுநேரம் நோக்கிக்கொண்டிருப்பார். பிறகு திடுக்கிட்டதுபோல நோக்கை விலக்கிக்கொள்வார். என்னிலிருந்து ஏதோ புதிய பூதம் பேருருக்கொண்டு எழக் கண்டதுபோல கண்களில் திகைப்பு தெரியும்” என்றாள் கிருஷ்ணை.

“அன்று என் தலையைத் தொட்டு இந்திரப்பிரஸ்தத்திற்கு வருகிறாயா என்றார். நான் ஏன் என்றேன். இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை பார்க்கலாமே என்றார். அவரை நான் ஏன் பார்க்கவேண்டும்? அவர் என்ன இசையரசியா, எளிய நாட்டரசிதானே என்றேன். புன்னகையுடன் ஆம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்” என்றாள் கிருஷ்ணை. “எப்போதும் அவர் என்னிடம் நெடுநேரம் நகையாடுவதில்லை. நான் பேசுவது அவருக்குப் புரிவதில்லை. என்னை இன்னமும் சிறுமி என்றே எண்ணுகிறார்.”

கர்ணன் சிரித்து “நீ மிகப்பெரிய பெண் அல்லவா?” என்றான். “பேரரசரை பார்த்தபின் சேடியை அழைத்தபடி அரசரின் மந்தண மாளிகைக்கு வா!” கிருஷ்ணை “நானா?” என்றாள். “ஆம், நீ அரசரை பார்த்தாகவேண்டும்.” அவள் விழி சுருக்கம் கொள்ள “ஏன்?” என்றாள். “உன் தாதை இங்கே உண்ணாநோன்பிருக்கிறார் தெரியுமா?” என்றான். “ஆம், அதனால்தான் அவரை பார்க்க வந்தேன். இங்கே எனக்கு மிகமிகப் பிடித்தமானவர் அவரே. அவர் உண்ணாநோன்பிருக்கிறார் என்றதுமே பார்க்கவேண்டுமென விழைந்தேன். எவரும் செல்லக்கூடாதென்று அரசரின் ஆணை என்றாள் செவிலி. நான் செல்வேன், என்னை நாடுகடத்தட்டும், விறலியாக யாழுடன் கிளம்பிவிடுகிறேன் என்று சொல்லி நான் சிற்றன்னையுடன் கிளம்பிவந்தேன்.”

“உன் தாதை உணவருந்தாமலிருப்பது உன் தந்தை வந்து அவர் பாதம் பணிந்து உண்ணும்படி கோராததனால்தான்” என்றான் கர்ணன். “நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை. உன் அன்னை சொல்லையும் ஏற்கவில்லை. நீ வந்து சொன்னால் கேட்பார்.” அவள் “நான் சொன்னாலா?” என்றாள். “ஆம், அதை உன்னால் உணரமுடியவில்லையா?” என்றான். அவள் எண்ணிநோக்கி “ஆம், நான் சொன்ன எதையுமே அவர் தட்டியதில்லை” என்றாள். “ஆம், வருக!”

“நான் இப்போதே வருகிறேன்” என்றாள். “இல்லை, நீ பேரரசரை பார்ப்பதற்காக வந்தாயல்லவா?” என்றான். “ஆம், ஆனால் அவர் உண்ணாநோன்பிருக்கையில் வெறுமனே நோக்குவதிலென்ன பொருள் உள்ளது? நான் முதலில் தந்தையை வரச்செய்கிறேன். அவர் சொல்லி தாதை உணவருந்தியபின் அவரிடம் இசைபற்றி பேசிக்கொள்கிறேன்” என்றாள் கிருஷ்ணை. “ஆம், அது நன்று. அன்னையிடம் சொல்லிவிட்டு வா” என்றான்.

அவள் பானுமதியிடம் விடைபெற்று அவனுடன் வந்தபடி “பெரியதந்தையே, நான் உண்மையிலேயே விறலியாகத்தான் விரும்புகிறேன். யாழ் எனக்கு இசைகிறது. நானே பாடல் கட்டி பாடவும் செய்கிறேன். நேற்றுமுன்நாள் இங்கே வந்த கோசலநாட்டு விறலியும் என்னை மிகச்சிறந்த பாடகி என்றாள். அது நானே இயற்றிய பாட்டு” என்றாள். “என்ன பாடல்?” என்றான் கர்ணன். “அம்பையன்னையின் கதை. அவரை நிருதர் படகில் வைத்து ஓட்டிக்கொண்டு வருகிறார். அப்போது அவர் சீதையின் வாழ்க்கையை பாடுகிறார். அதைக் கேட்டு அம்பையன்னை புன்னகைசெய்கிறார்…”

“அது முன்னரே எழுதப்பட்டுவிட்டதல்லவா?” என்றான். அவள் சினந்து “ஆம், ஆனால் அதில் வேறுவகையில் எழுதப்பட்டிருந்தது. அன்னை அழுவதாக எழுதியிருந்தார்கள். அன்னை ஏன் அழவேண்டும்? அவர் இவர்களைப்போல அரண்மனைக்குள் அடைபட்ட வெறும் அரசகுலப் பெண்ணா? சீற்றம் கொண்ட சிம்மம் என்றல்லவா அவரைப்பற்றி பாடுகிறார்கள்? ஆகவேதான் சிரிப்பதாக மாற்றிக்கொண்டேன்” என்றாள். கர்ணன் “ஏன் சிரிக்கவேண்டும்?” என்றான். அவள் குழம்பி “அந்தக் கதையைக் கேட்டு…” என்றபின் “அவர் சிரிப்பதை நான் பார்த்தேன்” என்றாள்.

கர்ணன் அவள் தலையை செல்லமாக தட்டினான். “நான் சொல்வதை எவருமே நம்புவதில்லை” என்றபடி அவள் அவனுடன் வந்தாள். “சிறியதந்தை விகர்ணரிடம் மட்டுமே நான் பேசுவேன். அவர்தான் நான் என்ன சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்கிறார். நான் விறலியாக இங்கிருந்து செல்லும்போது அவரும் உடன்வருவதாக சொன்னார்.” கர்ணன் “அவன் இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்தான் அல்லவா? என்ன சொன்னான்?” என்றான்.

“அவர்தான் இந்திரப்பிரஸ்தத்தின் அரசி நாடகவிறலி போலிருக்கிறார் என்றார். செந்நிற மணிமுடி சூடியபோது அவர் தலை தீப்பற்றி எரியும் கரும்பனை போலிருந்தது என்றார். நான் சிரித்தேன்.” கர்ணன் அவளை ஓரப்பார்வையால் நோக்கிக்கொண்டு நடந்தான். கைகளைத் தூக்கி எம்பிக்குதித்து ஒரு தோரணத்தைப் பிடித்து இழுத்தாள். அதை வாயில் வைத்து கடித்து உரித்து அப்பால் வீசினாள். “மாவிலை. கட்டி ஒருவாரமாகிறது” என்றாள்.

தேரில் பாய்ந்து ஏறிக்கொண்டு “பெரியதந்தையே, நானே தேரை ஓட்டினால் என்ன?” என்றாள். “பிறகு… இப்போது நாம் அரசப்பணியாக சென்றுகொண்டிருக்கிறோம்” என்றான் கர்ணன். “ஆம், நான் அரசரிடம் என்ன சொல்லவேண்டும்?” என்றாள். “நீ அவரை நோக்கிச் சென்று அவர் கைகளைத் தொட்டு கொஞ்சலாக தந்தையே தாதையிடம் சென்று பேசுங்கள் என்று மட்டும் சொல். அவர் சினந்தால் கெஞ்சு!” என்றான் கர்ணன். “அவ்வளவு போதுமா?” என்றாள். “வேறென்ன சொல்வாய்?” என்றான். “அரசுசூழ்தல் என்றால் சிக்கலான பெரிய சொற்றொடர்கள் தேவை அல்லவா?” என்றாள்.

“ஆம், ஆனால் அதை நாம் பேசவேண்டியதில்லை. நாம் பேசி முடித்தபின் சூதர்கள் அதை உருவாக்கிக்கொள்வார்கள்” என்றான் கர்ணன். “அப்படியா? நான் அதையெல்லாம் அரசர்களும் அரசியரும் பேசுவார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.” கர்ணன் “உன் தந்தையும் தாயும் அப்படியா பேசிக்கொள்கிறார்கள்?” என்றான். “அவர்கள் பேசிக்கொள்வதேயில்லை இப்போதெல்லாம். அன்னை தனித்திருந்து அழுகிறார்கள்.” கர்ணன் “உன் தந்தை தாதையிடம் பேசிவிட்டால் எல்லாம் முடிந்துவிடும்” என்றான்.

துரியோதனனின் அவை முன் நின்றிருந்த துச்சலன் கிருஷ்ணையைக் கண்டதும் திகைத்து “மூத்தவரே” என்றான். “நான் அழைத்துவந்தேன்” என்றான் கர்ணன். சுபாகு உடனே புரிந்துகொண்டு “ஆம், இது உகந்த வழிமுறையே” என்றான். துர்மதன் “என்ன வழிமுறை?” என்றான். துச்சகன் “அரசர் படைநகர்வு தொடர ஆணையிட்டிருக்கிறார், மூத்தவரே. படைத்தலைவர்கள் அனைவரையும் இன்றுமாலை கங்கைக்கரையில் சந்திக்கிறார்” என்றான்.

“எங்கிருக்கிறார்?” என்றான் கர்ணன். “ஓலைகளை நோக்குகிறார்” என்றான் சுஜாதன். கர்ணன் கதவைத் திறந்து உள்ளே செல்ல கிருஷ்ணை அஞ்சிய காலடிகளுடன் தொடர்ந்து உள்ளே வந்தாள். ஓசை கேட்டு திரும்பிய துரியோதனன் அவளைக் கண்டு புருவம் சுருங்க கர்ணனை நோக்கினான். “பேரரசரை நோக்க சென்றிருந்தேன். உடன் வந்தாள். உங்களைப் பார்க்கவேண்டும் என்றாள்” என்றான்.

“ஏன்?” என்றான் துரியோதனன். அவளை நோக்காமல் விழிவிலக்கி “இது போர்க்காலம்…” என்றான். “தந்தையே, தாதையிடம் சென்று பேசுங்கள்” என்று அவள் சொன்னாள். அக்குரலில் இருந்த தெளிவைக்கண்டு கர்ணன் திரும்பி அவளை நோக்கினான். பிறிதொருவள் எனத் தோன்றினாள். “என்ன?” என்றான் துரியோதனன். “தாதை உணவருந்தாமலிருந்தால் இந்நகர் அழியும். நீங்கள் எதையும் வெல்லப்போவதில்லை” என்றாள் கிருஷ்ணை.

திகைத்தவன்போல துரியோதனன் அவளை நோக்கினான். “தாதை உணவருந்தாவிட்டால் நானும் உணவருந்தப்போவதில்லை” என்றாள் கிருஷ்ணை. சீற்றத்துடன் துரியோதனன் “போ… மகளிர்மாளிகைக்குச் செல். இது உன் இடமல்ல” என்றான். “நான் பிறிதேதும் சொல்வதற்கில்லை” என்றபின் அவள் திரும்பி கதவைத் தொட “நில்… என்னை அச்சுறுத்துகிறாயா?” என்றான். “இல்லை, நான் சொன்னவற்றை உறுதிப்படுத்துகிறேன்” என்றாள் கிருஷ்ணை.

“சரி, நான் சென்று அவரிடம் பேசுகிறேன்” என்றான் துரியோதனன். “இன்றே பேசுங்கள்… இப்போதே செல்லுங்கள்” என்றாள். துரியோதனன் “சரி… நீ உன் விளையாட்டறைக்குச் செல்” என்றான். அவள் பெருமூச்சுவிட்டாள். “சரி என்றேனே?” என துரியோதனன் கூச்சலிட்டான். “நன்று, தந்தையே” என்றபின் அவள் வெளியே சென்றாள்.

துரியோதனன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “பேரரசரிடம் நீங்கள் ஒரு இளமைந்தனாகப் பேசினால் போதும், அரசே” என்றான் கர்ணன். “அதை நான் பார்த்துக்கொள்கிறேன்…” என்று துரியோதனன் கூவினான். புன்னகையுடன் கர்ணன் “சரி” என்று சொல்லி கதவைத் திறந்து வெளியே சென்றான்.

அவள் சாளரத்தருகே நின்றிருந்தாள். முகத்தில் ஒளி அனல்செம்மையெனத் தெரிந்தது. அவன் அருகே வந்து “செல்வோம்” என்றான். “ஆம்” என அவள் அவனுடன் வந்தாள். இடைநாழியைக் கடந்து படியிறங்குவது வரை அவர்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. தேரில் அவளை ஏற்றி கர்ணன் “நன்று செய்தாய், கிருஷ்ணை. உன்னால் மட்டுமே முடியும்” என்றான். அவள் அவனை கனவு காண்பது போன்ற விழிகளுடன் நோக்கி “ஆம்” என்றாள். புரவிகள் வால்சுழற்றி குளம்பெடுக்க தேர் மணியோசையுடன் கிளம்பிச்சென்றது.

[ 22 ]

திருதராஷ்டிரரின் அருகே அமர்ந்து துரியோதனன் தணிந்த குரலில் “வணங்குகிறேன், தந்தையே” என்றான். அவர் விழிகள் மட்டும் அசைந்துகொண்டிருந்தன. “நான் நான்கு நாட்களாக வெறிபிடித்தவன் போல உண்டேன். நீங்கள் அருந்தாத உணவையும் சேர்த்து உண்டேன்” என்றான். அவர் மறுவினை காட்டவில்லை. “தந்தையே, என்னை நீங்கள் ஏன் வாழவைத்தீர்கள்? நிமித்திகர் சொன்னபோதே என்னைத் தூக்கி காட்டில் வீசியிருக்கலாமே? அன்றே நாயும் நரியும் கிழித்துண்ண மண்வாழ்வை முடித்திருப்பேனே?” என்றான்.

அவன் குரல் இடறியது. “நினைவறிந்த நாள் முதல் சிறுமைகளை அன்றி எதை அறிந்தேன்? கலிப்பிறப்பென்றனர். கரியவிசை என்றனர். இன்றும் நான் குலம் அழிக்கும் நச்சு என்றே கருதப்படுகிறேன். உங்களைப்போல விழியிலாதவனாக இருந்திருக்கலாம். பிறவிழிகளையாவது நோக்காமலிருந்திருப்பேன்.”

பெருமூச்சுடன் அவன் தொடர்ந்தான். “நான் வெல்ல எண்ணுவது மண்ணை அல்ல, தந்தையே. புகழையும் அல்ல. இவ்விழிகளைத்தான். உளம் அமைந்த நாள்முதலாக நான் கண்டுவரும் இந்த நச்சு விழிகளின் முன் தலைதருக்கி எழுந்து நிற்கவிரும்புகிறேன். பாரதவர்ஷத்தை முழுதாள விழைகிறேன் என்றால் அது பாரதவர்ஷமே என்னை வெறுக்கிறதென்பதனால்தான்…”

இசைக்கூடத்தில் செறிந்திருந்த அமைதியில் விப்ரரின் சளிச்சரடு அதிரும் மூச்சு மட்டும் ஒலித்தது. அவரது கால்கள் நீர்வற்றிய வாழைமட்டை போலிருந்தன. “இந்திரப்பிரஸ்தத்தின் அவையில் யுதிஷ்டிரன் சூடி அமர்ந்த அந்த மணிமுடியை என்னால் ஒரு கணமும் மறக்கமுடியவில்லை, தந்தையே. ஆம், அதுவேதான். அந்தப் பெருநகரம். அதன் எண்ணக்குறையாத கருவூலச்செல்வம். அங்கே வந்து பணிந்த மன்னர்நிரை. அதைத்தான் நான் விழைகிறேன். இனி அதை மறந்து ஒருகணம் கூட என்னால் வாழமுடியாது.”

“நான் எதையும் மழுப்பவில்லை. நான் பொறாமையால் எரிகிறேன். பொறாமை. அல்லது அதை ஆற்றாமை என்று சொல்லவேண்டுமா? நான் அந்த அரியணையில் அமர முடியும். அந்த மணிமுடியை சூடவும் முடியும். அதற்கான தகுதியும் ஆற்றலும் எனக்குண்டு. ஆனால் அறத்தால் கட்டுண்டிருக்கிறேன். தங்கள் ஆணையில் சிக்கியிருக்கிறேன்.” கசப்புடன் சிரித்து “ஆனால் அறச்செல்வன் என்ற பெயரும் அவனுக்குரியதே” என்றான்.

“தந்தையே, இத்தனை நாள் பெருந்தந்தையாக குல அறம் பேணி இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். இக்குடியின் அச்சு நீங்களே. ஆனால் உங்களைப்பற்றி இன்று பாரதவர்ஷம் என்ன சொல்கிறதென்றறிவீர்களா? ஏன், இந்நகர் மாந்தர் என்ன சொல்கிறார்கள்? விழியிழந்தான் வஞ்சம் பாண்டவர்களை விரட்டியது என்கிறார்கள். உங்கள் இருள்விழி எல்லையைவிட்டு விலகியதனால் அவர்கள் பெருகி வளர்ந்தனர் என்கிறார்கள். அங்கே நீங்கள் சென்று அவையமர்ந்து அவர்களின் ராஜசூயத்தை வாழ்த்தினீர்கள். நீங்கள் பொறாமையால் விழிநீர் விட்டு உளம் பொருமினீர்கள் என்கிறார்கள்.”

“தந்தையே, இது களம். இங்கே வெற்றி மட்டுமே போற்றப்படும். தோல்வியும் விட்டுக்கொடுத்தலும் இதில் நிகர். அச்சமும் பெருந்தன்மையும் ஒன்றே” என்று துரியோதனன் தொடர்ந்தான். “ஆம், நான் போருக்கெழுந்தேன். என் தோள்தோழர் கொலையுண்டபின் வாளாவிருந்தால் நான் வீணனென்றே பொருள். அதையும் உங்கள்பொருட்டே அடக்கிக்கொண்டேன். நிகரிப்போர் நிகழட்டும். அதில் வென்று ராஜசூயம் வேட்டேன் என்றால் இன்று என்னைச் சூழ்ந்துள்ள இழிவிலிருந்து சற்றேனும் மீள்வேன்.”

“தந்தையே, அன்று பழிச்சொல் கேட்டு உங்கள் மடியில் கிடந்த பைதல் நான். ராஜசூயம் வேட்டு வைதிகர் அருள்பெற்று சத்ராஜித் என அரியணை அமர்ந்தால் பிறந்த அன்று என் மேல் படிந்த பழி விலகும். நாளை என் கொடிவழியினர் என்னையும் உங்களையும் எண்ணி நாணமாட்டார்கள். நான் வாழ்வதும் அழிவதும் இனி உங்கள் சொல்லில்” என்றபின் அவன் தன் தலையை திருதராஷ்டிரரின் கால்களில் வைத்தான். அவர் உடல் மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. ஆனால் அவர் கை எழுந்து அவனை வாழ்த்தவில்லை. அவன் சற்றுநேரம் அப்படியே அமர்ந்திருந்தபின் எழுந்து வெளியே சென்றான்.

[ 23 ]

மறுநாள் விடியலில் கர்ணன் கனகரால் எழுப்பப்பட்டான். கனகர் சிறு பதற்றத்துடன் “அங்கரே, விப்ரர் மறைந்தார்” என்றார். அவன் தன் உள்ளத்திலிருந்து ஓர் எடை அகன்ற உணர்வையே அடைந்தான். அதை அவன் அகம் எதிர்நோக்கியிருந்தது. “எப்போது?” என்றான். “காலை சஞ்சயன் சென்று நோக்கியபோது அவர் உடல் அசைவிழந்து குளிர்ந்திருந்தது.” கர்ணன் “பேரரசர் அறிந்திருக்கவில்லையா?” என்றான். “அவர் சிலைபோல அசைவற்று அமர்ந்திருந்தார் என்கிறான். அவருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் எவரையும் அழைக்கவில்லை. அழவும் இல்லை.”

கர்ணன் புஷ்பகோஷ்டம் நோக்கி செல்லும்போது கனகர் உடன் வந்தார். “அமைச்சர் அங்கே சென்றுவிட்டார். அரசரையும் இளையோரையும் அழைத்துவர யுயுத்ஸுவை அனுப்பினேன். சஞ்சயனை அரசரின் அருகே நிற்கும்படி ஆணையிட்டேன்” என்றார். அவன் தேரில் ஏறிக்கொண்டதும் அருகே நின்றபடி “பதினெட்டு வயதில் விப்ரர் பேரரசருடன் இணைந்தவர். பிறிதொரு வாழ்க்கை இல்லாதிருந்தார். அரசரின் அதே வயதுதான் அவருக்கும்” என்றார்.

“நூல்கற்றவர். நெறிநூல்களை நெஞ்சிலிருந்து சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் விரும்பியிருந்தால் அமைச்சர் ஆகியிருக்கக்கூடும். ஆனால் நிழலென ஆவதையே விரும்பினார். அவரையும் அரசரையும் பிரித்து எண்ணவே முடியவில்லை.” கர்ணன் விப்ரரை முதன்முதலாக எப்போது நோக்கினோம் என்று எண்ணிக்கொண்டான். திருதராஷ்டிரரின் முதல் அணைப்புதான் நினைவிலெழுந்தது. அப்போது அருகே நீர் மின்னும் விழிகளுடன் விப்ரர் நின்றிருந்தார். அவரது கழுத்தில் நரம்பு ஒன்று புடைத்து அசைந்துகொண்டிருந்தது.

அவன் செல்லும்போது விப்ரரின் உடல் வெளியே கொண்டுசெல்லப்பட்டு மையக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது. விதுரர் அருகே நின்று ஆணைகளை இட்டுக்கொண்டிருக்க சிற்றமைச்சர்களும் ஏவலரும் ஓடிக்கொண்டிருந்தனர். விதுரர் அவனைக் கண்டதும் அருகே வந்து “பேரரசர் திகைத்துப்போயிருக்கிறார். இரவிலேயே இறப்பு அவருக்கு தெரிந்துவிட்டது. அவர் உடல் நடுங்கிக்கொண்டிருக்கிறது” என்றார். “நான் உள்ளே சென்று பார்க்கிறேன்” என்றான் கர்ணன்.

“அரசகுலத்தோருக்குரிய சடங்குகள் நிகழவேண்டும். அரசகுடியினரின் மயானத்தில் அவர் எரியவேண்டுமென பேரரசர் முன்பு ஆணையிட்டிருந்தார். விப்ரரும் தன்னுடன் விண்ணுக்கு வந்தாகவேண்டும் என சொல்லிக்கொண்டிருப்பார்” என்றார் விதுரர். இறப்பு அவரை விடுதலை செய்துவிட்டதெனத் தோன்றியது. கர்ணன் குனிந்து வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்த விப்ரரின் உடலை நோக்கினான். அவன் நோக்குவதைக் கண்ட ஏவலன் முகத்தை திறந்து காட்டினான். விப்ரரின் முகம் துயிலும் குழந்தை போலிருந்தது.

கர்ணன் உள்ளே சென்றான். தர்ப்பைப்பாயில் திருதராஷ்டிரர் முன்பு அவன் பார்த்த அதே தோற்றத்தில் அமர்ந்திருந்தார். ஆனால் அவர் மாறிவிட்டிருப்பதை முதல்நோக்கிலேயே உணரமுடிந்தது. அருகே காந்தாரியர் அமர்ந்திருக்க விழிமூடிக்கட்டிய முகத்துடன் பேரரசி தலைசரித்து செவிகூர்ந்தாள். அவன் அருகே அமர்ந்தான். அவன் காலடியோசைகள் அவர் உடலில் எதிரசைவை உருவாக்கின. அவர் வாயை அழுத்தி மூடி கழுத்துத்தசைகள் இறுகி நெளிய மறுபக்கம் முகம் திருப்பியிருந்தார்.

“பீஷ்மபிதாமகருக்கு செய்தி சென்றிருக்கிறது. துரோணரும் கிருபரும் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று அப்பால் நின்ற சஞ்சயன் சொன்னான். கர்ணன் தலையசைத்தான். திருதராஷ்டிரர் மெல்லிய குரலில் “மூத்தவனே, அரசன் எங்கே?” என்றார். “வந்துகொண்டிருக்கிறார்” என்றான் கர்ணன். “அவனிடம் சொல், அவன் விழைவதுபோல பகடைக்களம் நடக்கட்டும்” என்றார் திருதராஷ்டிரர்.

நினைத்ததுபோல நிறைவோ உவகையோ அவன் உள்ளத்தில் எழவில்லை. மெல்லிய குரலில் “தாங்கள் உணவருந்தலாமே” என்றான். “அவன் போகட்டும். அவன் எரியணைவது வரை அங்கே நான் உடனிருக்கவேண்டும்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “எரிகளத்தில் என்னுடன் எவரும் இருக்கலாகாது. சஞ்சயன் கூட.” கர்ணன் “ஆணை!” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16754 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>