Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16754 articles
Browse latest View live

வயதடைதல்

$
0
0

சிலசமயம் நாட்டுப்புறப்பாடல்களில் சில அற்புதங்கள் கண்ணுக்குப்படும். எப்படி என்றால் மற்ற எல்லாக் கலைகளும் மாறிக்கொண்டே இருக்கும். நாட்டுப்புறப்பாடல்களை மாற்றமாட்டார்கள். அவை காட்டுக்குள் ஆலமரத்தின் அடியில் இருக்கும் புராதன தெய்வங்கள் போல அப்படியே யாரும் கவனிக்காமல் அமர்ந்திருக்கும். திடீரென நாம் கவனிக்கும்போது நமக்கு இது என்ன என்ற அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்படும்.

இந்தப் பாடல் வரி அப்படி என்னை கவர்ந்தது. நான் சாதாரணமாக அந்த வழியாகப் பேருந்திலே சென்றுகொண்டிருந்தேன். ஒலிபெருக்கிவழியாக ஏதோ பெரியவர் பாடிக்கொண்டிருந்தார். நல்ல கனமான காட்டான்குரல். ஒரு வரி காதில் விழுந்தது -

ரெண்டு துறவறமும் லெச்சணமாய் இல்லறமும்
பண்டு சொன்னவிதம் பாங்காக முடிச்சானே

தெக்கன்பாடல்கள் என்று சொல்லப்படும் நாட்டார்பாடல்களில் ஒன்றான புலைமாடசாமி பாடல் எனப் பிறகு தெரிந்துகொண்டேன். புலைமாடசாமியின் அப்பா முத்துப்பட்டனின் வாழ்க்கைக்கதை. அந்த வரியின் அர்த்தம் என்ன? ஒரு வாழ்க்கையில் இரண்டு துறவும் இல்லறமும் இருக்கவேண்டும் என்று பழங்காலத்தில் இருந்தே சொல்லப்பட்டமுறையின்படி வாழ்ந்து தன்னுடைய பிறவியை நிறைவடையச் செய்தார் என்கிறது பாடல்.

என்னபொருள் அதற்கு? ஒரு வாழ்க்கையிலே எது இரண்டு துறவு? நான் அதைப் புராணமும் சாஸ்திரமும் படித்த சிலரிடம் கேட்டுப்பார்த்தேன். யாருக்கும் சொல்லத்தெரியவில்லை. நாலைந்துவருடம் கழித்து அதேபோல நாட்டுப்புறக் கதைப்பாடல் பாடும் பெரியவர் எனக்கு விளக்கம் அளித்தார்.

பண்டைய இந்திய மரபில் உலகியலில் ஈடுபடும் ஒரு மனிதனின் வாழ்க்கையை பிரம்மசரியம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம் என மூன்று கட்டங்களாகப் பிரித்திருந்தார்கள். அதாவது கல்விப்பருவம், இல்லறப்பருவம், துறவுப்பருவம். இதைத்தவிர சன்னியாசம் என்று ஒரு பருவம் உண்டு. அது உலகியலைத் துறந்து செல்பவர்களுக்கு உரியது. இவை நான்கு ஆசிரமங்கள் என்று சொல்லப்பட்டன.

எந்த ஒரு மனிதனும் இந்த மூன்று கட்டங்கள் வழியாகக் கடந்து சென்றால்தான் அவன் வாழ்க்கை முழுமை அடையும் என்று விஷ்ணுபுராணம் மூன்றாம் பருவம் ஒன்பதாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பழைய ஆசாரங்கள் என்று தள்ளிவிடாமல் இன்றைய நவீன சிந்தனையைக் கொண்டு இந்தக் கட்டங்களை நாம் அறிவுபூர்வமாக ஆராய்ந்து பார்த்தால் வாழ்க்கையைப்பற்றிய ஆச்சரியமான ஒரு தெளிவு இதில் இருப்பதைக் காணமுடியும்.

முக்கியமான விஷயம் குழந்தைப்பருவத்தை வாழ்க்கையின் ஒரு காலகட்டமாக இந்துமரபு நினைக்கவில்லை என்பதுதான். ஏனென்றால் எல்லாக் குழந்தைப்பருவமும் ஒன்றுதான். மகிழ்ச்சியாக விளையாடி வாழவேண்டிய பருவம் அது. சொந்தமாக எந்த முடிவும் எடுக்கவேண்டியதில்லை. குழந்தை செய்யும் எந்த விஷயத்துக்கும் அது பொறுப்பல்ல. ஆகவே அதை நம் வாழ்க்கையின் தொடக்கமாகக் கொள்ளவேண்டியதில்லை.

இன்றைய நிலையை வைத்து யோசித்துப்பார்த்தால் இதிலுள்ள நுட்பமான அனுபவ உண்மை நமக்குப் புரியவரும். ஒரு குழந்தைக்கு எந்தவகையான வாழ்க்கைச் சுமையையும் ஏற்றக்கூடாது. அதாவது ஒரு புரோகிதன் தன் குழந்தையை எதிர்காலப் புரோகிதனாக நினைத்துப் புரோகித வாழ்க்கைக்குள் கொண்டு வரக்கூடாது. ஒரு சிற்பி தன் குழந்தையை சிற்பவேலைக்குள் கொண்டுவரக்கூடாது. குழந்தைக்கு உலகவாழ்க்கையில் உள்ள எந்தப் பொறுப்பும் தெரியக்கூடாது. அப்போதுதான் உண்மையான குழந்தைப்பருவம் அதற்கு இருக்கும்.

நண்பர்களே, இன்றைய வாழ்க்கையை கவனித்துப்பாருங்கள். இரண்டு வயதில் பிரிகேஜி வகுப்பில் சேரப்போகும் குழந்தைக்குப் போட்டித்தேர்வு வைக்கிறார்கள். அதற்கு அந்தக் குழந்தையை ஒருவயதில் இருந்தே பழக்குகிறார்கள். குழந்தைப்பருவமே அதற்குக் கிடையாது. பிறந்து வெளியே வந்து மருத்துவச்சி குழந்தையைத் தன் கையில் எடுத்து அம்மாவுக்குக் காட்டியதுமே அம்மா முடிவுசெய்துவிடுகிறாள் – இந்தக்குழந்தை ஐஐடியில் படிக்கவேண்டும் என்று. தட்டாரப்பூச்சியின் வாலில் கல்லைக்கட்டி விடுவதுபோலக் குழந்தைகளிடம் வாழ்க்கையை சுமத்தி விடுகிறார்கள்.

நிகழ்காலமே ஆரம்பிக்காத குழந்தைகளுக்கு எதிர்கால பயத்தை ஊட்டிவிடுகிறார்கள். ஒரு அம்மா பையனிடம் சொல்வதைப் பார்த்தேன். ‘இப்டியே வெளையாட்டுத்தனமா இரு… குட்டிச்சுவராப்போயி ஓட்டலிலே தட்டுதான் எடுப்பே’ குழந்தைக்கு வயது இரண்டு. அது மகிழ்ச்சியுடன் ‘எவ்ளோ பெரிய தட்டு?’ என்று கேட்டது. ‘போ சனியனே’ என்று ஓர் அறை வைத்தாள் அம்மா. இதை ரயிலிலே பார்த்தேன். ரயில்பயணத்தில்கூட குழந்தையை அந்த ரயில்பயணத்தைப் பார்க்கவிடாமல் வீட்டுக்கணக்கு செய்யவைத்துக்கொண்டிருந்தாள்.

புராணமரபைப் பொறுத்தவரை ஒருவன் வாழ்க்கையை ஆரம்பிப்பதே அவனுடைய உபநயனம் நடந்த நாள்முதல்தான். அதற்குப்பின்னர்தான் அவன் தனிமனிதன். அதற்குப்பின்னர்தான் அவனுக்கு வாழ்க்கையில் பொறுப்பும் கடமைகளும் வருகின்றன. அதற்குப்பிறகுதான் அவன் தன் வாழ்க்கையில் என்ன செய்யவேண்டும், எதுவாக ஆகவேண்டும் என்பது தீர்மானமாகிறது.

உபநயனம் என்றதும் நாம் பிராமணர்கள் பூணூல் போடுவதை எண்ணிக்கொள்கிறோம். பழங்காலத்தில் ஏதாவது ஒன்றை முறைப்படி கற்றுக்கொள்ளும் எல்லாருமே பூணூல் போட்டார்கள். நான் சின்னப்பையனாக இருக்கும்போது பொற்கொல்லர்களும் தச்சர்களும் சிற்பிகளும் பூணூல் போட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். உபநயனம் என்றால் ‘இதோ ஒரு கல்வியைக் கற்றுக்கொள்ளப்போகிறேன்’ என்று ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் அடையாளம்தான். இன்றைக்கு பிராமணர்கள் மட்டும் பூணூல் போடுகிறார்கள். அதுவும் வெறும் சடங்காகப் போடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் திருமணம் நடப்பதற்கு முந்தையநாள் உபநயனம் செய்து பூணூல் போட்டுக்கொள்கிறார்கள்.

உபநயனம் எல்லாக் கல்விக்கும் உண்டு. கல்வி பல வகையாக இருந்தது. வேதம் கற்பது ஒரு கல்வி என்றால் மருத்துவம் கற்பது இன்னொரு கல்வி. சிற்பம் கற்பது இன்னொரு கல்வி. ஒரு குழந்தையை அது எந்தத் துறையில் கல்வி கற்கவேண்டுமோ அந்தத் துறையில் சேர்த்து விடுவது உபநயனம் மூலம்தான். இது எட்டு முதல் பன்னிரண்டு வயதுக்கு மேல்தான் செய்யவேண்டும். அதுவரை பிள்ளைகளை சும்மா அப்படியே விளையாட விட்டுவிடவேண்டும். இதுதான் சாஸ்திரம்.

வேடிக்கையாக இருக்கிறது இல்லையா? ஆனால் உலகம் முழுக்க இந்த வழக்கம் இருந்தது. ஆப்ரிக்காவில் உள்ள மாஸாய் [Maasai] பழங்குடிகளைப்பற்றி வாசித்துக் கொண்டிருந்தேன். உலகத்திலேயே மாஸாய் பழங்குடிகளைப் போல அந்த அளவுக்கு சந்தோஷமான குழந்தைகள் வேறு எங்குமே கிடையாது. பன்னிரண்டு வயது வரை மாஸாய் ஆண்குழந்தைகள் எந்த வேலையும் செய்யவேண்டியதில்லை. எந்தக் கல்வியும் கற்கவேண்டியதில்லை. எந்தப் பொறுப்பும் சுமக்கவேண்டியதில்லை. பெண்கள் ஒன்பது வயதுவரை அப்படி இருக்கலாம்.

ஆமாம், தூங்கி விழித்ததுமுதல் இரவுவரை பிடித்ததுபோல விளையாடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். மாஸாய் குழந்தைக்கு சொந்த வீடு என்ற பொறுப்பு கூட இல்லை. அந்த மாஸாய் சாதியின் எந்த வீட்டிலும் அது சாப்பிடலாம். குழந்தைகள் அந்த கிராமத்துக்கே பொதுவானவை. அவற்றை எவரும் கண்டிப்பதுகூட இல்லை.

மாசாய் பழங்குடிகளின் ’பட்டம்’ அளிப்பு சடங்கு

பதினைந்து வயதில் மாஸாய் பழங்குடிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு சடங்குகளை வைத்திருக்கிறார்கள். அந்தச்சடங்குகள் மிக விரிவானவை. அதைச்செய்ததும் ஆண்குழந்தைகளை வேட்டைக்குக் கூட்டிச்செல்கிறார்கள். வேட்டையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். பெண்களுக்கு பெண்களுக்குரிய தொழில்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. வாழ்க்கை ஆரம்பிக்கிறது. உபநயனம் என்பது அதுவேதான்.

உபநயனம் முடிந்த இளைஞனை பிரம்மசாரி என்று சொன்னார்கள். பிரம்மசாரி என்றால் இன்று திருமணமாகாதவன் என்ற அர்த்தம் உள்ளது. ஆனால் பழங்காலத்தில் மாணவன் என்றுதான் பொருள். பழங்காலத்தில் உபநயனம் முடிந்ததும் பிள்ளைகள் வீட்டில் இருப்பதில்லை. அவர்கள் குருகுலத்தில் சேர்ந்துவிடுகிறார்கள். குருவுடன் கூடவே தங்கிக் கல்வி கற்கிறார்கள்.

படிப்பு முடிந்ததும் குருநாதரிடம் விடை பெற்றுத் திரும்பத் தன்னுடைய குடும்பத்துக்கு வருகிறான் மாணவன். கிருஹஸ்தாசிரமம் ஆரம்பிக்கிறது. அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அவன் தன் தொழிலை செய்ய ஆரம்பிக்கிறான். பிள்ளைகள் பிறக்கின்றன. அவற்றுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவன் செய்கிறான். அதாவது குடும்பவாழ்க்கை வாழ்கிறான்.

பிள்ளைகள் வளர்ந்து அவர்களும் குடும்பவாழ்க்கைக்கு வந்ததும் ஒருவன் அதற்கு மேலும் வாழ்க்கையில் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடாது. அது அவனுக்கும் கஷ்டம் பிள்ளைகளுக்கு அதைவிடக் கஷ்டம். அவன் தன் மனைவியை பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பவாழ்க்கையை விட்டு முழுமையாக விலகிவிடவேண்டும். அதற்குப்பெயர்தான் வானப்பிரஸ்தம். வனம்புகுதல் என்று பொருள். மனைவியும் வானப்பிரஸ்தம் வர விரும்பினால் அவளையும் கூட்டிக்கொண்டு செல்லலாம்.

வானப்பிரஸ்தம் என்பது ஒருவகைத் துறவு. அதுவரை செய்துவந்த உலகியல் சார்ந்த விஷயங்கள் எல்லாவற்றில் இருந்தும் முழுமையாக விடுபட்டு, தன்னுடைய மனநிறைவுக்குரிய செயல்களை மட்டுமே செய்தபடி வாழ்வதுதான் அது.

பழங்காலத்தில் காட்டுக்குச் சென்றுவிடுவார்கள். இன்றைக்கு காட்டுக்குச் செல்லமுடியாது. ஆனால் இந்த விஷயத்துக்குப் பழங்காலத்தை விட இன்றுதான் அதிகமான முக்கியத்துவம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். கொஞ்சம் இதைப்பற்றி யோசித்துப்பாருங்கள்.

இன்றைக்கு நவீன மருத்துவம் வளர்ந்துவிட்டது. ஆகவே மக்களின் ஆயுள் நீள்கிறது. சாதாரணமாக எண்பது தொண்ணூறு வயது வரை வாழ்கிறார்கள். ஆனால் அறுபது வயதில் தொழிலில் இருந்து ஓய்வுபெற வேண்டியிருக்கிறது. அதன்பிறகும் முப்பது வருட வாழ்க்கை மிச்சமிருக்கிறது. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே தெரிவதில்லை. நகரங்களில் உள்ள அடுக்குமாடி வீடுகளில் முதியவர்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லாமல் சும்மா இருக்கிறார்கள்.

சும்மா இருக்க முடியுமா? அதுவும் முடியாது. வாழ்க்கையில் இருந்து விலகவில்லையே. பிள்ளைகளின் வாழ்க்கையில் தலையிடுகிறார்கள்.பேரப்பிள்ளைகளின் வாழ்க்கையில் தலையிடுகிறார்கள். பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வாழும் உலகம் என்ன என்றே அவர்களுக்குப் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆகவே ஆயிரம் பிரச்சினைகள். ‘யாருமே நான் சொல்றதைக் கேக்கறதில்லை’ ‘யாருமே என்னை வந்து பாக்கறதில்லை’ என்று புலம்பிக்கொண்டே அமர்ந்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய நரகம்.

நீங்கள் இன்று இளைஞர்கள். நீங்கள் உங்களைப்பற்றி யோசியுங்கள். இன்றைக்கு ஒரு தொழில்நுட்பத்தை நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். இனிமேல் வேலைக்குப் போவீர்கள். ஒரு நாற்பது வருடம் அந்த வேலையைச் செய்வீர்கள். உங்களுக்கு அறுபது வயது ஆகும்போது அன்றைக்கு வரக்கூடிய தொழில்நுட்பம் உங்களுக்கு என்ன என்றே தெரியாததாக இருக்கும். அன்றைக்கு உள்ள பையன்கள் அதை சும்மா போட்டு விளையாடுவார்கள். நீங்கள் கற்றுக்கொண்டதெல்லாம் நாற்பது வருடம் பழைய விஷயமாக இருக்கும்.

அன்றைக்கு நீங்கள் யோக்கியமாக ஒதுங்கிக்கொண்டால் நல்லது. ஒதுங்காமல் அந்த இளைஞர்கள் வாழ்க்கையில் தலையிட்டுக்கொண்டிருந்தால் என்ன ஆகும்? காலம் என்பது கண்ணில்லாத மிருகம். அதற்குக் குறுக்கே சென்றால் உங்களை முட்டித் தூக்கி வீசிவிட்டுச் செல்லும். அடிபட்டுக் கிடந்து புலம்பவேண்டியதுதான்.

ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் துறவு தேவை. அதைத்தான் வானப்பிரஸ்தம் என்கிறார்கள். நீங்கள் இன்றைக்குப் படிப்பது எதற்காக? உங்களுக்கு எது உள்ளூர ஆசையோ அதற்காக இல்லை. உங்கள் குடும்பத்துக்காக. சமூகத்துக்காக. நாளைக்கு நீங்கள் வேலை செய்வதும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும்தான். பல கட்டாயங்கள் இருக்கும் இல்லையா? அந்தக் கட்டாயங்களால் சில முக்கியமான விஷயங்களை நீங்கள் ஒத்திப்போடுவீர்கள். நாளைக்கு நாளைக்கு என்று தள்ளி வைப்பீர்கள். அந்த விஷயங்களை நீங்கள் செய்யவேண்டாமா? வாழ்க்கை திரும்ப வராது அல்லவா?

சுந்தர ராமசாமியின் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் அறிவியல்துறையில் பெரிய ஆய்வாளராக இருந்தார். கடுமையாக உழைத்துப் பல சாதனைகள் செய்தார். சட்டென்று ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தன்னுடைய சொந்த ஊருக்கே வந்து ஒரு பள்ளிக்கூடம் நடத்த ஆரம்பித்தார். நான் அவரிடம் கேட்டேன் ஏன் இதைச் செய்கிறீர்கள் என்று. ‘இது என் ஆத்ம திருப்திக்கான வேலை. சயண்டிஸ்டாக நான் செய்யவேண்டியதை செய்துவிட்டேன். பிள்ளைகளுக்கு செய்யவேண்டியதை செய்து விட்டேன். இனி எனக்கு செய்யவேண்டியதை நான் செய்யவேண்டும்’ என்றார். அதுதான் வானப்பிரஸ்தம்.

ஆம், ஒரு வாழ்க்கை துறவிலேதான் முழுமை அடையும். இருபது வயதிலே நீங்கள் கைகளை நீட்டி எல்லாவற்றையும் அள்ளி அள்ளி எடுக்கிறீர்கள். கல்வியை அள்ளுகிறீர்கள். வேலையை அள்ளுகிறீர்கள். அதிகாரத்தை அள்ளுகிறீர்கள். செல்வத்தை அள்ளுகிறீர்கள். புகழை அள்ளுகிறீர்கள். அதன் பின் ஒரு வயதில் அந்தக் கல்வி வேலை அதிகாரம் செல்வம் புகழ் எல்லாமே கனமாக ஆகும். நம் உடம்பு அந்த கனத்தைத் தாங்காது. அதற்குமேல் அவற்றை சுமந்துகொண்டிருந்தால் நரகம்தான். ஆகவே ஒவ்வொன்றாகத் துறக்கவேண்டும். அதுதான் வானப்பிரஸ்தம்.

காளிதாசனின் ரகுவம்சம் காவியத்தில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய திலீபன் தன்னுடைய மகன் வயது வந்ததும் நாட்டையும் பொறுப்புகளையும் மகனிடம் கொடுத்துவிட்டு வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு வந்து மாடுகளை மேய்த்துக்கொண்டு வாழ்கிறான் என்ற வருணனை வருகிறது. அப்படி ஒதுங்க முடிவது பெரிய மனபலம். அவனுக்கு நிம்மதி உண்டு.

நான் முதலிலே சொன்ன அந்தப் பாட்டுக்கு வருகிறேன். மனித வாழ்க்கையில் இரண்டு துறவு கண்டிப்பாகத் தேவை என்கிறது அந்தப்பாட்டு. அதில் ஒரு துறவு இதுதான். வானப்பிரஸ்தம் என்னும் துறவு. சரி, இன்னொரு துறவு என்ன?

நண்பர்களே, பிரம்மசாரி என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? பிரம்மசரிய விரதம் கொண்டவன் என்று அர்த்தம். பிரம்மத்தை உபாசிப்பது தவிர வேறேதும் செய்யாதவன் என்று சொல்லலாம். பிரம்மம் என்றால் கடவுள். இங்கே கல்விதான் கடவுள். ஆம், பிரம்மசாரி என்றால் கல்வியை மட்டுமே கடைப்பிடிப்பவன். அதுவும் ஒரு துறவுதான். என்னிடம் அந்த நாட்டுப்புறப் புலவர் சொன்னார். ‘ரெண்டு துறவறம் இருக்கு தம்பி…ஒண்ணு படிக்கிற காலத்திலே. ரெண்டு படிச்சதை எல்லாம் மறந்து கடைசிக்காலத்துக்கு வேண்டியத மட்டும் செய்ற காலத்திலே’

உபநயனம் வரை பிள்ளைகளைக் கட்டுப்பாடில்லாமல் ஏன் வளர்த்தார்கள் தெரியுமா? அதன்பின் கல்வியைத்தவிர வேறு எதைப்பற்றியுமே நினைக்கக்கூடாது என்பதற்காகத்தான். பழையகாலகட்டத்தில் பிரம்மசாரிகள் சுவையான உணவை உண்ணக்கூடாது. உயர்தரமான உடைகளை அணியக்கூடாது. வசதியான படுக்கைகளில் படுக்கக்கூடாது. ஒரு பற்றற்ற துறவி போலவே வாழ வேண்டும்.

விஷ்ணுபுராணத்தின்படி மூன்று விஷயங்களை பிரம்மசாரிகள் பேணவேண்டும். சௌசம், ஆசாரம், விரதம். உடலையும் மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்வது சௌசம். கட்டுப்பாடான வாழ்க்கை நெறிகளை ஆசாரம் என்றார்கள். புலன் இன்பங்களுக்கான நாட்டங்களை ஒடுக்கிக் கல்வியை மட்டுமே கவனிப்பதை விரதம் என்றார்கள்.

இதையெல்லாம் இப்போது சொன்னால் உங்களுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும். பழைய சரக்கு என்பீர்கள். நானும் இதெல்லாம் இப்போது தேவை என்று சொல்ல வரவில்லை. பழையகாலம் பழையகாலம்தான். அது திரும்பி வராது.

ஆனால் நாம் படித்தவர்கள், சிந்திப்பவர்கள். அகழ்வாய்விலே ஒரு பழைய சிலை கிடைத்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று பார்ப்போம் இல்லையா? அதைப்போல இதையும் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

கல்விக்கு ஒரு தியாகம் தேவைப்படுகிறது. அந்தத் தியாகத்தைச் செய்யாமல் உண்மையில் எதையும் நாம் கற்றுக்கொள்ளமுடியாது. இதுதான் கல்விப்பருவத்தை ஒரு துறவுப்பருவமாக நம் முன்னோர் உருவாக்கியிருப்பதற்கான காரணம்.

நீங்கள் கற்கும் முறையான தொழிற்கல்வியை விட்டுவிட்டு வேறு வகையான கல்வியைப்பற்றி யோசியுங்கள். உதாரணமாக உங்களிலே ஒருவர் ஒரு சினிமா இயக்குநர் ஆகவேண்டும் என விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் என்ன செய்யவேண்டும்?

முதல் விஷயம் துறவுதான் நண்பர்களே. உங்கள் சுகபோகங்களைத் துறந்தே ஆகவேண்டும். அப்படித் துறவியாக ஆனபின்னர் அடுத்து ஒரு இயக்குநரின் கீழே சென்று சேரவேண்டும். ஆயிரம் வருடம் முன்னால் ஒரு குருகுலத்திற்கு எப்படி மாணவன் சென்றானோ அதேபோலத்தான் இங்கேயும் குருவுடன் சென்று சேரவேண்டும். பழைய குருகுல அமைப்பில் குருவின் கூடவே இருக்கவேண்டும். குருவுக்கு சேவைசெய்யவேண்டும். குரு திட்டினாலும் அடித்தாலும் விட்டுவிடக்கூடாது. குரு செய்வதை நீங்களும் செய்யவேண்டும். அப்படித்தான் கற்றுக்கொள்ள முடியும். இன்றும் சினிமாவிலே அப்படித்தான்.

என்னுடைய இளம்நண்பர் ஒருவர் பொறியியல் படித்துவிட்டுக் கணிப்பொறித்துறையிலே வேலைபார்த்தார். அவருக்குத் திரைப்படத்துறை மேல் பெரும் மோகம். அவரை இன்றைய முக்கியமான இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டேன். பொறியியலாளராக இருந்தபோது சொகுசாக வாழ்ந்தவர் அவர். சோம்பேறியும்கூட. எப்படி வேலைசெய்யப்போகிறாரோ என்று நினைத்திருந்தேன்.

ஆனால் அவர் வேலைசெய்வதைப்பார்த்து எனக்கே பிரமிப்பாக இருந்தது. ஒருநாள் அவர் சொன்னார். ‘சார் நான் நேற்று ராத்திரி முழுக்க இசையமைப்பாளருடன் இருந்தேன். அதிகாலை நான்குமணிக்கு வீட்டுக்குச் சென்றேன். இரண்டுமணிநேரம் தூங்கிவிட்டு நேராக அலுவலகம் வந்தேன். இரவு வரை இங்கே வேலை. இரவில் மீண்டும் ஒலிப்பதிவுக்குச் செல்வேன். இப்படித்தான் ஒருமாதமாக வேலை செய்கிறேன். என்ன சாப்பிட்டேன் என்றே தெரியவில்லை. என்ன உடை அணிகிறேன் என்ற ஞாபகமே இல்லை. சார் கண்ணாடியில் முகம்பார்த்தே இரண்டுவாரமாகிறது…’

‘கஷ்டமாக இருக்கிறதா?’ என்றேன் ‘சார், இப்போதுதான் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த ஒரு மாசத்திலே நான் கற்றுக்கொண்டது மொத்த வாழ்க்கையிலும் கற்றுக்கொண்டதை விட அதிகம். கற்றுக்கொள்வதை விட சந்தோஷமானது உலகத்தில் வேறு எதுவுமே இல்லை சார்…’ சட்டென்று சோர்ந்து ‘…ஆனா கிட்டத்தட்ட இருபத்திரண்டு வருசம் பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் படித்தபோது கற்றுக்கொள்வதன் சந்தோஷத்தை அனுபவிக்கவே இல்லை சார்’.

‘அந்த சந்தோஷத்தை அனுபவிக்கவில்லை என்றால் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்’ என்றேன். ‘ஆமா சார்…வாழ்க்கையிலே பெரும்பகுதி வீணாப்போச்சு’ என்றார். ‘நல்லவேளை மிகவும் பிந்திவிடவில்லை’ என்றேன்.

கிட்டத்தட்ட இதே விஷயத்தைக் கொஞ்சநாள்முன் அமெரிக்கா சென்றிருந்தபோது என் வாசகி ஒருவர் சொன்னார். கணக்கியல்துறையில் உயர்கல்வி கற்றவர் அவர். ஆனால் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து முன்னோடியான ஒரு கணக்கியலாளரிடம் பணியாற்றியபோதுதான் கற்றுக்கொள்ளவே ஆரம்பித்தேன். அப்போதுதான் நான் நானாக உருவானேன்’ என்றார்.

வாழ்க்கையில் எதையாவது சாதித்த ஒவ்வொருவருக்கும் இதேபோல ஒரு குருகுலப்பருவம் இருக்கும். அது ஒரு துறவு வாழ்க்கையாக இருக்கும். கல்வியை மட்டுமே உபாசனை செய்யும் பிரம்மசரிய வாழ்க்கையாக இருக்கும் அது.

ஆனால் நம்முடைய சமூகம் இன்று எப்படி குழந்தைப்பருவத்தை அழித்திருக்கிறதோ அதைப்போலக் கல்விப்பருவத்தையும் அழித்துவிட்டிருக்கிறது. இன்று நாம் கல்வியை ஒரு தவமாகக் கற்கிறோமா? அதற்காக எதையாவது துறக்கிறோமா?

நம்முடைய கல்வி நிறுவனங்களில் ‘பயிற்சி’ [training ]யைத்தான் அளிக்கிறார்கள். ‘கல்வியை’ [education] அல்ல. கல்வியை ஒரு துறவாக ஒரு தவமாக மட்டுமே அடைய முடியும். சிலசமயம் நீங்கள் இருபது வருடம் கல்விநிறுவனங்களில் படிப்பீர்கள். நீங்கள் கல்வி பெறுவது ஆறுமாதகாலம்கூட இருக்காது. அந்த ஆறுமாதக் கல்வியை வைத்துக்கொண்டுதான் மிஞ்சிய வாழ்க்கையை முழுக்க நீங்கள் சந்திக்கிறீர்கள். இதுதான் உண்மை.

நமக்கு இன்று தேவையாக இருப்பது முதலில் நம் பிள்ளைகளுக்கு உண்மையான குழந்தைப்பருவம். அந்தக்குழந்தைப்பருவம் முடிந்ததும் அதற்குத் தேவை உண்மையான கல்விப்பருவம். அக்குழந்தையின் இயல்புக்கு ஏற்ற கல்வி. முழு ஈடுபாட்டுடன் பிற அனைத்தையும் துறந்து அது கற்கும் கல்வி. அதாவது பிரம்மசரியம்.

இன்று நமக்கு நம்முடைய அமைப்பு இவற்றை அளிப்பதில்லை. ஆகவே நாம்தான் இதை தேடிக்கொள்ளவேண்டும். இந்தக் கல்வியைக் கல்வி என நினைக்காதீர்கள். இது ஒரு சான்றிதழ் மட்டுமே. இதைவைத்துக்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது. இது ஒரு தொடக்கத்தை மட்டுமே அளிக்கும்.

இன்னும் சொல்லப்போனால் இந்த சான்றிதழ் என்பது ஒரு பூணூல். இந்த சான்றிதழ் கையில் கிடைப்பதுதான் உபநயனம். இனிமேல்தான் கல்விப்பருவம் ஆரம்பம். இனிமேல்தான் நீங்கள் பிரம்மசாரிகள். முன்பெல்லாம் உபநயனம் ஒருவாரம் நடக்கும். இப்போது இருபது வருடம் நீளமாக நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

இனிமேல் ஒரு பிரம்மசரியத்தை நீங்கள் கடைப்பிடித்தாகவேண்டும். உங்கள் துறையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். உங்கள் குருகுலத்தைக் கண்டுபிடிக்கவேண்டும். அந்த குருகுலத்தில் உங்களை முழுமையாக அர்ப்பணிக்கவேண்டும். அதற்காகப் பிற அனைத்தையும் துறந்து ஒரு துறவுவாழ்க்கையை வாழவேண்டும். அங்கே கற்றதுதான் உங்களுடைய கல்வி. அங்கேதான் நீங்கள் நீங்களாக ஆவீர்கள்.

அதுதான் நாம் நம்முடைய பாலியத்தில் இருந்து கரையேறும் இடம். அதுதான் நம்முடைய சுய அடையாளத்தின் தொடக்கம். அப்படி ஒன்றுக்காகத் தேடுங்கள்.

நன்றி

[சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலையில் ஆற்றிய உரை]

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Apr 5, 2012

தொடர்புடைய பதிவுகள்


‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 75

$
0
0

[ 24 ]

நிமித்திகர் சுதாமர் பன்னிரு களத்தில் ஒவ்வொன்றாக கைதொட்டுச் சென்று கண்மூடி ஒருகணம் உள்நோக்கி விழிதிறந்து “மீன் எழுந்து அமைந்துவிட்டது. களம் நிறையக்காத்துள்ளது. அமுதமாகி எழுக!” என்றார். சௌனகர் மெல்லிய குரலில் “நன்று சூழும் என்கிறீர்களா?” என்றார். “ஒற்றைச்சொல்லில் அதை உரைத்து முடிக்க முடியுமெனில் அப்போதே சொல்லியிருப்பேன். ஒரு களம் தொட்டு நோக்கினால் குருதிப்பெருக்கு என் கண்களுக்குள் விரிகிறது. மறுகளம் நோக்கித் திரும்புகையில் அமுதமென பெருகுகிறது. ஒன்றில் குளிர் நீரை காண்கிறேன். பிறிதொன்றில் எரியனலை. ஒன்று தொட்டு பிறிதொன்று உய்த்து மற்றொன்றை கணித்து நன்று தேர்ந்து இதை சொல்கிறேன்” என்றார்.

தருமன் “முன்னரே பன்னிரு பகடைக்களத்திற்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டோம். கிளம்பும் நேரத்தை குறிப்பதொன்றே இப்போது நம்மிடம் எஞ்சியுள்ளது. நன்றோ தீதோ இனி மறுக்க இயலாது” என்றாr. நிமித்திகர் “இம்முடிவுகள் எவையும் நம்மால் எடுக்கப்பட்டவை அல்ல. ஒவ்வொன்றும் விண்வெளியில் தங்கள் மாறாத்தடத்தில் ஓடும் கோள்களை சார்ந்துள்ளன என்பதனால் அவையும் மாறாதவையே”  என்றார். சௌனகர் “இறுதி உரை என்ன நிமித்திகரே?” என்றார்.

“மகரம் அலைவடிவானது. கும்பம் மங்கலம் கொண்டது. இம்மாத இறுதியில் அது நிறையும். பின்னர் மீனம் எரிவிண்மீனென தென்மேற்குத் திசையில் எழும்” என்றார். அவர் சொல்வது என்னவென்றுணராமல் ஒருவரை ஒருவர் விழிநோக்கி அவை அமர்ந்திருந்தது. “மார்கழி முதல் நாள் நன்று என்கிறீர்களா?” என்றார் தருமன். “ஏனெனில் நானும் அதை கணித்திருந்தேன்.” நிமித்திகர் “ஆம். அதைத் தேர்வோம். நன்று சூழ்க!” என்றார்.

தருமன் பெருமூச்சு விட்டு உடல் எளிதாகி “அச்சொல் போதும் நிமித்திகரே, அதுவென்றே முடிவெடுப்போம்” என்றபின் சௌனகரை நோக்கி “முதல் நாள் முதற்பொழுதில் இங்கிருந்து அஸ்தினபுரிக்கு கிளம்புவோம்” என்றார். சௌனகர் தயங்கி “நிமித்திகர் அத்தருணத்தை இன்னும் குறித்தளிக்கவில்லை அரசே” என்றார். “எத்தருணமும் நன்றே” என்றார் நிமித்திகர். “நன்றென நாம் எண்ணுவது நம்மைக்குறித்தே. நன்று சூழ்க! ஆடும் குழந்தைகளை நோக்கியபடி அன்னை விழியிமையாதிருக்கிறாள். அதை மட்டும் நெஞ்சில் நிறுத்திக் கொள்வோம்” என்றார். தருமன் “ஆம். அது ஒன்றே இவ்வச்சத்திற்கும் ஐயங்களுக்கும் அப்பால் மாறா உறுதியென என்னுள் உள்ளது” என்றார்.

நிமித்திகர் கைகூப்பி தலைவணங்கி தன் மாணவனை நோக்க அவன் பன்னிருகளம் வரையப்பட்ட பூர்ஜமரப்பட்டைத்தாளை மடிக்கத்தொடங்கினான். சௌனகர் குழப்பத்துடன் “இதில் இந்திரப்பிரஸ்தத்திற்கு வெற்றி உண்டா?” என்றார். “வருவது உரைக்க நிமித்திக நூல் அறியாது. அது ஊழையும் காலத்தையும் ஒரு களமென நிறுத்தி அதன் நெறிகளை மட்டுமே உய்த்துணர்கிறது” என்றார் நிமித்திகர். “சொல்லுங்கள், அந்த நெறி உரைப்பதென்ன? ஒற்றைச்சொல்லில்…” என்றார் சௌனகர். “நிறைகும்பம். அமுதகலம். பிறிதொன்றையும் இப்போது சொல்வதற்கில்லை” என்றபடி நிமித்திகர் தலைவணங்கினார்.

“போதும். முற்றிலும் எதிர்காலத்தை அறிந்தபின் நாம் செய்வதற்கென்ன உள்ளது? நன்று சூழும் என்று நம்புவோம்” என்றபின் தருமன் எழுந்து தன் அருகே நீட்டப்பட்ட வெண்கலத்தாலத்தில் இருந்து பொன்னும் பட்டும் மலரும் கொண்ட வெள்ளித்தட்டை எடுத்து நிமித்திகருக்கு அளித்தார். அவர் அதை தலைவணங்கி பெற்றுக்கொண்டு “நன்று சூழ்க! நாடு குடியும் நலம் பெறுக!” என்று வாழ்த்தினார்.

நிமித்திகர் சென்றபின் தருமன் தன் அரியணையில் அமர்ந்து திரும்பி அவைநின்ற சகதேவனிடம் “உனது நிமித்திக நூல் என்ன சொல்கிறது?” என்றார். “நல்ல முடிவு” என்றான் சகதேவன். “அதை நான் கேட்கவில்லை. உனது நூலின்படி கும்பம் முதல் நாள் நன்றோ?” என்றார் தருமன். “அவர் சொன்னதையே நான் சொல்வேன். எந்நாளும் நன்றே” என்றான் சகதேவன். “நன்றுசெய்வதென்றால் நாள் தேரவேண்டியதில்லை, அன்றெனில் நன்னாளால் பயனில்லை என்பார்கள்.”

“நீங்கள் அனைவரும் எப்படி ஒரே மொழியில் பேசத்தொடங்கினீர்கள் என்று தெரியவில்லை” என்று சலிப்புடன் தருமன் சொன்னார். “இவ்வாடலை முன்னெடுக்கலாமா என்று நான் கேட்டபோதும் இதையே நீ சொன்னாய்.” சகதேவன் “அப்படி தாங்கள் கேட்கவில்லை மூத்தவரே. முடிவெடுத்துவிட்டேன், நன்று விளையுமா என்றீர்கள்” என்றான். தருமன் பதற்றத்துடன் “அப்படியானால் நன்று நிகழாது என்று எண்ணுகிறாயா? என்றார். “நன்று நிகழும், முடிவில்” என்றான் சகதேவன். “முடிவில் என்றால்…?” என்று தருமன் மீண்டும் கேட்டார். “எப்போது முடியவேண்டுமென்று இயற்றி ஆடும் அன்னை எண்ணுகிறாளோ அப்போது” என்றபின் சகதேவன் தலைவணங்கி வெளியே சென்றான்.

“என்ன செய்வது சௌனகரே?” என்றார் தருமன். “இளையோர் இருவரும் என்ன சொல்கிறார்கள்?” என்று சௌனகர் கேட்டார்.  ”முடிவெடுத்த அன்றே பேசியதுதான். பிறகு அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. எனது விருப்பப்படி நிகழட்டும், தனக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை என்று பீமன் சொன்னான். அர்ஜுனனோ அவன் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை என்றான்.” சௌனகர் “சூது தங்களுக்குரியதல்ல அரசே. அதுதான் என்னை அச்சுறுத்துகிறது” என்றார். தருமன் “பகடைக்களத்தில் நானறியாத எதுவுமில்லை. நானாடிய எந்தப் பகடைக்களத்திலும் இதுவரை தோற்றதில்லை” என்றார்.

“பகடையின் நெறிகள் அனைத்தையும் தாங்கள் அறிவீர்கள் என்று நானும் அறிவேன். ஆடலின் ஒரு முனையில் ஒவ்வொரு முறையும் கலைந்தும் இணைந்தும் முன்னகரும் பிழை ஒன்றுள்ளது. அதை தாங்கள் அறிய முடியாது. அரச நெடும்பாதையில் செல்லும் பட்டத்து யானையென முன்னெழுவது தங்கள் உள்ளம். கரவு வழிகளை அது அறியாது” என்றார். தருமன் “கரவுப்பாதைகள் வழியாக வரும் எந்த குக்கலும் பட்டத்து யானையை எதுவும் செய்யாது அமைச்சரே. அங்கு என்னுடன் பகடை பொருதப்போவது சகுனி என்றார்கள். முதலிரு ஆட்டத்திலேயே அவரை வெல்வேன். அதை தாங்கள் காணலாம்” என்றார்.

அவரது தன்னம்பிக்கை நிறைந்த முகத்தை நோக்கி ஏதோ சொல்ல வாயெடுத்த பின் “அவ்வண்ணமே ஆகுக!” என்றார் சௌனகர். எரிச்சலுடன் தலையசைத்து “இங்கு ஒவ்வொருவரும் ஏன் இத்தனை அவநம்பிக்கை கொள்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை” என்று தருமன் சொன்னார். “போரைத்தவிர்த்து நிகரிப்போர் என பன்னிரு படைக்களத்தில் ஆடலாம் என்று என்னை அழைக்க வந்தவர் விதுரர். என்  வாழும் இரு தந்தையரில் ஒருவர். அவர் சொல்லுக்கு அப்பால் பிறிதொன்றை நான் எப்போதும் எண்ணியதில்லை.”

“அமைச்சரே, அஸ்தினபுரியின் துணையரசுகளும் உறவரசுகளும் இணைந்து இந்திரப்பிரஸ்தத்துக்கு எதிராக பெரும்போர் ஒன்றுக்கு படைசூழ்கை நிகழ்த்தவிருப்பதை அறிந்தபோது நான் கொண்ட பதற்றம் சிறிதல்ல. இளையவர் இருவருக்கும் அது வெறும் போர். எனக்கு அது பெருங்குருதி. எண்ணியதுமே அதன் பச்சைமணத்தை என் மூக்கு அறியும். என் உடல் நடுங்கத்தொடங்கும். போருக்கான முன்செயல்கள் தொடங்கியபின்  நான் ஒருநாள்கூட உளம் ஓய்ந்து துயின்றதில்லை” என்று அவர் தொடர்ந்தார்.

“போர்சூழ்தலின் செய்திகளை இங்கே ஒவ்வொருநாளும் கொண்டாட்டமாகவே அறிந்துகொண்டிருந்தனர். நம் படைகளை ஒருங்கமைப்பதற்காக இளையோர் பகலிரவாக ஆணைகளை இட்டும் நேர்சென்று நோக்கியும் செயலில் மூழ்கி அவ்விரைவில் உளம்திளைத்துக்கொண்டிருந்தனர். முடிவறியாது காத்திருப்பதன் சலிப்பை உதறி படைவீரர்கள் பரபரப்படைந்தனர். நகர்மக்கள் வெற்றி எவருக்கென்று பந்தயம் கட்டி சொல்லாடினர். இந்நகரில் போரை அஞ்சி ஒடுங்கி அமர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தவன் நான் மட்டிலுமே.”

சௌனகர் “போருக்கென நாம் எழுவது தேவையில்லை. ஆனால் குடிகாக்கப் போரிடுவது மன்னரின் கடமை” என்றார். தருமன் “ஆம், குடிகளைக் காக்கவே கோலேந்தி இங்கு அமர்ந்திருக்கிறேன். போரெனில் இருதரப்பிலும் உயிர்கள் அழியும். அமைச்சரே, பிணங்களில் நடந்துசென்று நான் அடையும் சிறப்பென ஏதுமில்லை. வரலாறு என் பேர் சொல்லாதொழியட்டும். குலக்கொடிவழிகள் என்னை கோழையென்றோ வீணன் என்றோ சொல்லட்டும். என் ஆட்சியில் குடிகள் ஒருபோதும் குருதி சிந்தலாகாது என்றே உறுதிகொண்டிருக்கிறேன்” என்றார்.

சௌனகர் “மண்ணில் ஒருபோதும் போர் ஓயாது அரசே” என்றார். “ஏனென்றால் இப்புவியில் வாழ்வென நிகழ்வதெல்லாம் போரே.” தருமன் “ஆம், போட்டியில்லாது வாழ்க்கை இல்லை. போட்டிகளினூடாகவே தங்களுக்குரிய ஊர்திகளை தெய்வங்கள் கண்டடைகின்றன” என்றார். “ஆனால் அப்போர் அழித்தும் கொன்றும்தான் நிகழவேண்டுமென்பதில்லை. வெறுப்பில்லாத பூசல்கள், கொலையில்லாத போர்கள், குருதியில்லாத பலிகள் நிகழலாம். அவற்றை தெய்வங்கள் வாழ்த்தும் என்பதில் ஐயமே இல்லை.”

“அமைச்சரே, மானுட வாழ்க்கை இங்கே தொடங்கும்போது ஒவ்வொன்றும் தனியுருவிலேயே இருந்தன. நாம் அவை ஒவ்வொன்றுக்கும் நிகரிகளை உருவாக்கிக்கொண்டுதான் இங்கு வந்திருக்கிறோம். அந்தணரின்  வேள்விகளில் பலியளிக்கப்படும் அன்னத்தாலான பசுவும் மஞ்சள்சுண்ணக் கலவையாலான குருதியும் கும்பளைக்காய் நிணமும் உயிர்ப்பலியின் நிகரிகள் அல்லவா? இவ்வரண்மனை, இந்த அரியணை, இம்மணிமுடி, செங்கோல், நான் அணிந்துள்ள அணிகள் அனைத்துமே முன்பிருந்தவற்றின் நிகரி வடிவங்கள்தானே? இவ்வீடும் ஆடையும் கூட நிகரிகளே என்று சொல்வேன்.”

“போர் தவிர்த்து பன்னிருபகடைக்களத்தில் ஆடிப்பார்க்கலாம் என்ற செய்தியுடன் விதுரர் இங்கு வந்தபோது நான் வழிபடும் தெய்வமே எழுந்தருளியதுபோல் உணர்ந்தேன். சொல்லி முடிப்பதற்குள்ளே அவர் கைகளை பற்றிக்கொண்டு “தங்கள் ஆணையை சென்னிசூடுகிறேன் அமைச்சரே என வாக்களித்தேன். அவர் ஆணை எதுவோ அதை கடைபிடிப்பதே எனது கடமை என்றுதான் இன்றுவரை வாழ்ந்திருக்கிறேன். இவ்வுயிர் அவர் அளித்த கொடை என்பதை மறவேன்” என்றார் தருமன். “அன்னையிடம் சென்று விதுரரின் ஆணை இது என்று சொன்னபோது அவர் அதுவே உன் தந்தையின் ஆணை என்று கொள்க என்று சொன்னதும் நான் செய்ததே உகந்தது என முழுநிறைவை அடைந்தேன்.”

சௌனகர் “சில தருணங்களில் போர்கள் சூதை விட உயர்ந்தவை அரசே” என்றார். “என்ன சொல்கிறீர்கள்?” என்று சினத்துடன் தருமன் கேட்டார். “போர்கள் பருப்பொருட்களின் வல்லமையை நம்பி இயங்குபவை பருப்பொருட்கள் ஐயத்திற்கிடமற்றவை. எனவே கள்ளமற்றவை. பகடை பல்லாயிரம் வழிகளை தன்னுள் கரந்த முடிவிலா ஆழம். அதில் உறைகின்றன நாமறியாத தெய்வங்கள்.”

தருமன் நகைத்து “பகடை ஆடாத ஒவ்வொருவரும் அதை அஞ்சுகிறார்கள் என்றொரு சொல்லுண்டு. அறியப்படாதவை பேருருவம் கொள்கின்றன” என்றார் “நான் பன்னிரு படைக்களத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் என் உள்ளம் போல் அறிவேன். எனக்கு ஐயமோ அச்சமோ இல்லை.” சௌனகர் பெருமூச்சுடன் “அவ்வண்ணமெனில் அதுவே ஆகுக!” என்றார்.

“நன்று நடக்கும் அமைச்சரே. இது உடன் பிறந்தார் தங்களுக்குள் ஆடும் ஒரு விளையாட்டென்றே கொள்க! இளவயதில் குருகுலமைந்தர் கூடி நிலவில் வட்டாடியதைப்போல. அன்னையர் சூழ்ந்திருக்க மகளிர்மாளிகையிலமர்ந்து சொல்லடுக்கு ஆடியது போல. இது எங்களில் எவர் மூப்பு என்றறிவதற்கான ஓர் எளிய பகடை விளையாட்டு மட்டுமே. அவன் வென்றால் அவன் இயற்றும் ராஜசூயத்தில் சென்றமர்ந்து தலை தாழ்த்தப் போகிறேன். நான் வென்றால் என்னை மூத்தவனாக ஏற்று அவன் அவ்வரியணைக்கு அருகே அமர்த்தப் போகிறான். இரண்டும் நன்றே. போர் நீங்கிவிட்டதென்பது மட்டுமே இதில் நாம் கொள்ள வேண்டியது” என்றார் தருமன்.

“அங்கு பன்னிரு படைக்களம் ஒருங்கிக் கொண்டிருக்கிறது என்று செய்திகள் வந்தன” என்றார் சுரேசர். “நம் செய்தி சென்றதுமே கட்டத்தொடங்கிவிட்டனர். நேற்று விஸ்வகர்மபூசனை நிகழ்ந்தது என்றார்கள். களத்தை அணிசெய்யும் பணிகள் இன்றுமுதல் தொடங்கிவிட்டன.” தருமன் “ஆம், இது ஒரு பெருநிகழ்வல்லவா? நம் கொடிவழியினர் எண்ணி மகிழப்போவது” என்றார். சுரேசர் “ஐநூறு கலிங்கச் சிற்பிகள் அதை அமைக்கிறார்கள்” என்றார்.

“பிற மன்னர்களுக்கு அழைப்புள்ளதா?” என்றார் சௌனகர். சுரேசர் “இல்லை என்றார் விதுரர். இது குருகுலத்தின் தோன்றல்களுக்கு இடையே நடப்பது என்றே அமையட்டும் என்பது பீஷ்மரின் ஆணை என்றார். ஆகவே குருதி உறவு இருந்தால் மட்டுமே களத்தில் இருப்பார்கள்” என்றார். “நன்று. பிற அரசர்கள் இல்லாதிருப்பது மிக நன்று” என்றார் தருமன். சௌனகர் “ஆம், அது சற்று ஆறுதல் அளிக்கிறது. பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அவ்வவையில் அமர்ந்திருப்பார்கள் என்றால் நன்றே” என்றார்.

“அவர்கள் அமர்ந்திருப்பார்கள். இதில் என்ன ஐயம்? இது அவர்களின் மைந்தர்கள் ஆடும் களிவிளையாட்டு. கேட்டீர்களா சௌனகரே? முன்பு நாங்கள் களம் வரைந்து வட்டாடுகையில் அப்பால் பிறிதொரு பணியிலென பிதாமகர் நின்றிருப்பார். ஓரவிழியால் எங்களது ஆடலை அவர் பார்க்கிறார் என்பது அவரது முகமலர்வில் தெரிந்துவிடும். முதிர்ந்து நரை கொண்டபின் மீண்டும் அவர் விழிமுன் நின்று விளையாடப்போகிறோம் என்னும் உவகை என்னுள் எழுகிறது” என்றார்.  சௌனகர் தணிந்த குரலில் தனக்கென்றே என “ஆம், அது நன்றே” என்று சொன்னார்.

[ 25 ]

இந்திரப்பிரஸ்தத்தின் தெற்குப்பெருவாயிலுக்கு அப்பால் காவல்காட்டுக்குள் அமைந்திருந்த கொற்றவை ஆலயத்தின் சிறு முற்றத்தில் தருமன் திரௌபதிக்காக காத்திருந்தார். இருபக்கமும் இருளெனச் செறிந்திருந்த குறுங்காட்டுக்குள் பறவைகளின் ஒலி எழுந்துகொண்டிருந்தது. காற்றில் இலைகள் சலசலக்கையில் மழைவிழுவதுபோல உளமயக்கு எழுந்தது.

இந்திரப்பிரஸ்த நகரை உருவாக்கிய மூத்த சிற்பியாகிய சயனர் கல்லில் கண்டடைந்த தேவி அவள். அந்நகரின் காவலன்னை நுதல்விழியும், பன்னித்தேற்றையெனப் பிறை எழுந்த  சடைமகுடமும், நெளிநாகப் படமெழுந்த கச்சையும் கொண்டு பதினாறுகைகள் ஏந்திய படைக்கலங்களுடன் விரித்த கால்களின் நடுவே அனலென அல்குல் விழியுமாக அமர்ந்திருந்தாள். அவள் கழல்முத்துகளில் மும்மூர்த்திகளின் முகங்கள் விழிதெறிக்க நோக்கினர். கணையாழிகளில் சூரிய சந்திரர்களும் ஆதித்யர்களும் ஒளிர்ந்தனர். எட்டு வசுக்களும் திசைத்தேவர்களும் நிரைகொண்ட ஒளிவளையத்தில் அனல் இதழ்கள் மலர்ந்திருந்தன.

சிற்றமைச்சர் சுஷமர் அரசருக்கு அருகே பணிந்து நின்றிருந்தார். காவல் வீரர்கள் அப்பால் படைக்கலங்கள் ஒளிர நின்றனர். அவர் வந்த தேர் புரவிகள் அகன்ற நுகத்துடன் காட்டின் இருளை தன் ஒளிர்பொன்செதுக்குகளில் காட்டியபடி நின்றது. தருமன் பொறுமையிழந்து பெருமூச்சுடன் சுஷமரை நோக்கினார். அவர் “கிளம்பிவிட்டார்கள் அரசே” என்றார். “ஆம்” என்று சொல்லி அவர் விழிகளை விலக்கி இலைப்பரப்பினூடாகத் தெரிந்த வானச்சிதறலை நோக்கினார்.

நெடுந்தொலைவில் சங்கொலி எழுந்தது. “வருகிறார்கள்” என்றார் சுஷமர். “நன்று” என்றார் தருமன். பல்லக்கு வருவதை உள்ளத்தால் கண்டபின்னர் அவரால் பொறுமை கொள்ளமுடியவில்லை. கணங்களை கணக்கிட்டார். ஒருகணத்தில் இலையொன்று சுழன்றிறங்கியது. பிறிதொன்றில் ஒரு பறவை சிறகடித்தது. இன்னொன்றில் எங்கோ மந்தி ஒன்று முழவுமீட்டியது. “எங்கு வந்திருக்கிறார்கள்?” என்றார். சுஷமர் “மந்தியொலி முழங்குவதைக்கேட்டால் அணுகிவிட்டார்கள் எனத்தெரிகிறது” என்றார். பறவைகள் எழுந்து சிறகடித்து காட்டுக்குள் பல்லக்கு அணுகும் பாதையை காட்டின.

அருகே எழுந்த சங்கொலி சிம்மக்குரல் போல் ஒலித்து திடுக்கிடச்செய்தது. கருங்கழல்கொற்றவைக்கு சிம்மம் காவலென்று இந்திரப்பிரஸ்தத்தில் அனைவரும் அறிந்திருந்தனர். இருமுறை அங்கு வந்த பூசகர்களை சிம்மம் கொன்றிருக்கிறது. அவர் எருதை வந்து பலிகொண்டுசென்ற சிம்மத்தின் செம்பழுப்புநிறக் கண்களை நினைவுகூர்ந்தார். பத்துமடங்கு பெரிய பாண்டிநாட்டு முத்துக்கள். அனலென்று அலைத்த பிடரி. அது சென்றபின் மண்ணில் பதிந்திருந்த காலடித்தடங்களில் குருதிமுத்துக்கள் உருண்டுகிடந்தன.

காட்டுக்குள்ளிருந்து இந்திரப்பிரஸ்தத்தின்  மின்கதிர்க்கொடியும் பாஞ்சாலத்தின் விற்கொடியும் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. சங்கு ஊதி வர அவருக்குப்பின்னால் வேலேந்திய வீரர் எழுவர் தொடர்ந்தனர். செம்பட்டுத்திரை உலைந்த பல்லக்குக்குப்பின்னால் வில்லேந்திய எழுவர் வந்தனர். பல்லக்கு வந்து மெல்ல அமைந்தது. ஒருவன் மரப்படி ஒன்றை எடுத்து அருகே இட்டான். திரையை விலக்கி உள்ளிருந்து திரௌபதியின் வலக்கால் வெளியே வந்தது.

அவள் வெண்பட்டுத்திரையால் முகத்தையும் உடலையும் மூடியிருந்தாள். ஊடாக முகிலுக்கு அப்பாலென அவள் உடல் சற்றே தெரிந்தது. சிலம்புகளும் வளைகளும் மேகலையும் ஒலிக்க மெல்ல நடந்து அவரருகே வந்து தலைதாழ்த்தி “அரசருக்கு மங்கலம்” என்றாள். “நலம் திகழ்க” என முறைமை சொன்னபின் தருமன் விழிகளை விலக்கிக்கொண்டார். நகுலனின் மாதம் அது என்பதனால் அவனுடைய யமுனைக்கரை மாளிகையிலிருந்து அவள் வந்திருந்தாள். ஆலயங்களில் மட்டுமே அவர்கள் சந்திக்கலாமென நெறியிருந்தது. அந்நெறிகளை அர்ஜுனன் மீறுகிறான் என்று உடனே தருமன் எண்ணிக்கொண்டார். அவ்வெண்ணத்தை மறுகணமே கலைத்தார்.

“அரசி அறிந்திருப்பாய், நாளை அஸ்தினபுரிக்கு கிளம்பவேண்டும்” என்றார். “ஆம், சொன்னார்கள்” என்றாள். “இன்று உச்சிப்பொழுதில் அன்னையை சந்தித்து வாழ்த்துபெற்றேன்.” அவள் “அறிவேன்” என்றாள். “போர் நீங்கியதை எண்ணி எண்ணி நிறைவடைகிறேன். வரலாற்றில் எப்படி அறியப்பட்டாலும் உடன்பிறந்தாரைக் கொன்றவன் என்ற பழியின்றி கடந்துசென்றால் போதும் என்றே உணர்கிறேன்” என்றார். அதை பல்வேறு சொற்களில் அவளிடம் சொல்லிவிட்டிருந்ததை எண்ணிக்கொண்டார். அச்சொற்களை வெவ்வேறு வகையில் சொல்லிக்கொண்டே இருப்பதை அவரே உணர்ந்தாலும் சொல்லாமலிருக்க இயலவில்லை.

“பன்னிருபடைக்களம் அங்கே ஒருங்கியிருக்கிறது. முன்பு மாமன்னர் ஹஸ்தி அமைத்த அதே படைக்களத்தை ஏழுமடங்கு பெரிய வடிவில் கலிங்கச்சிற்பிகள் கட்டியிருக்கிறார்கள். எனக்கு மறுபக்கமாக மாதுலர் சகுனி அமர்ந்தாடுவார் என்றார்கள்.” அவள் “ஆம், சொன்னார்கள்” என்றாள். “நான் வெல்வேன். என் உள்ளம் சொல்கிறது” என்றார் தருமன். “இன்றுவரை என்னை எவரும் வென்றதில்லை. அதை நீயும் அறிவாய்.” திரௌபதி ஒன்றும் சொல்லவில்லை.

“இன்று காலைதான் பேரரசரின் அழைப்பு வந்தது. பேரரசியின் சொல்லும் உடனிருந்தது” என்றார் தருமன். “அரசியையும் அந்நிகழ்வுக்கு அழைத்திருக்கிறார்கள்.” அவள் அசைவிலாது நின்றாள். “எனவே நீயும் எங்களுடன் கிளம்பலாம்” என்றார் தருமன். “பகடையாடலுக்கு அரசியர் செல்வது வழக்கமா?” என்றாள் திரௌபதி. தருமன் சிரித்து “பகடையாடுவதே வழக்கமில்லை. இது ஒரு குலவிளையாட்டுதானே? நீயும் வருவதில் பிழையில்லை” என்றார்

“நான் வரவேண்டுமென்று பேரரசரிடம் விழைவறிவித்தவர் யார்?” என்றாள். தருமன் “மூத்ததந்தையே விழைகிறார் என்றுதான் நினைக்கிறேன்.  இது தாதையர் கூடி அமர்ந்து தனயர்களின் ஆடலைக் கண்டு மகிழும் விழா. அனைவரும் உடனிருக்கவேண்டும் என்று அவர் எண்ணியிருக்கலாம்.” அவள் “அனைவரையும் அழைக்கிறார்களா?” என்றாள். “அனைவரும் எதற்கு? அன்னையும் பிற அரசியரும் இங்கிருக்கட்டும். நீதான் மூத்தவள். உனக்கு மட்டும்தான் அழைப்பு” என்றார்.

அவள் பேசாமல் நிற்கக்கண்டு “ஏன், நீ வர விழையவில்லையா?” என்றார். “பெண்கள் எதற்கு?” என்று அவள் சொன்னாள். “ஏனென்றால் பேரரசி அழைத்திருக்கிறார்கள். நீ அவர்களின் ஆணையை தட்டமுடியாது” என்று தருமன் சினத்துடன் சொன்னார். “தழல்முடிசூடி பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக நீ அமர்ந்தாலும் முதன்மையாக எங்கள் குடியின் மருமகள். அதை மறக்கவேண்டியதில்லை.”

பெருமூச்சுடன் அவள் “நன்று” என்றாள். “காலையில் பிரம்மதருணத்தில் கிளம்புகிறோம்” என்றார் தருமன். “நன்று” என்று அவள் மீண்டும் சொன்னாள். சுஷமர் அப்பால் வந்து பணிந்து நின்றார். தருமன் அவரை நோக்க “மெய்ப்பூச்சு முடிந்துவிட்டது. பூசனைகளை தொடங்கலாமா என்கிறார் பூசகர்” என்றார். “நிகழட்டும்!” என்றார் தருமன்.

திரௌபதி சென்று அன்னைமுன் நின்றாள். உடலெங்கும் குங்குமச்சாத்து சூடிய கொற்றவை பதினாறு  கிளைகளாக வழிந்த குருதித்தடம் போல விரித்த கைகளுடன் நின்றிருந்தாள். அவள் காலடியில் எண்மங்கலங்கள் பரப்பப்பட்டிருந்தன. பன்னிரு நெய்ப்பந்தங்கள் எரிந்தன. முதுபூசகர் வெளிவந்து “கண்மலர்கள் பொருத்தலாம் அல்லவா?” என்றார். “ஆம்” என்றார் தருமன்.

அவர் நீல வைரங்கள் பதிக்கப்பட்ட விழிமலர்களை எடுத்து அன்னையின் முகத்தில் பதித்தார். தருமன் திரும்பி சுஷமரை நோக்க அவர் எண்ணத்தை உணர்ந்த அவர் “இன்று சனிக்கிழமை. நீலக்கண்கள் என்று நெறி” என்றார். குளிர்ந்த இரு நீர்ச்சொட்டுகள் போலிருந்தன அவ்விழிகள். கண்ணீர் நிறைந்தவை போல. கனிந்தவை. கனவுகாண்பவை.

இளம்பூசகர் துடிமீட்டி பாடத் தொடங்கினார். “அன்னை எழுக! இமையாப்பெருவிழியே. வற்றா சுனைமுலையே. அருளும் வலக்கையே. ஆற்றும் இடக்கையே. அலகிலியே. அருகமர்பவளே. அன்னையென்றாகி வருக! அனைத்துமாகி சூழ்க! அளிப்பவளே, உன் மைந்தருக்குமேல் நிழல்தருவென்று கைவிரித்தெழுக!”

தொடர்புடைய பதிவுகள்

குறுங்கதைகள், அராத்து,கடிதம்

$
0
0

Arathu

அன்புள்ள ஜெயமோகன்

 

விகடன் தடம் இதழில் என் பெயரையும் குறிப்பிட்டு இருந்தீர்கள். மிக்க நன்றி. எங்கும் என் பெயரையெல்லாம் மெனக்கெட்டு குறிப்பிட மாட்டார்கள் :-) தேவையுமில்லை என்பதும் உண்மைதான் !

 

அதிலும் 100 ஆண்டுகால தமிழ் சிறுகதை  கட்டுரையில் கடைசியில் என் பெயர் இடம் பெறுவது எல்லாம் பனைமரத்து அடியில் அமர்ந்து மூச்சு விட பனம்பழம் விழுந்த கதைதான். உங்களின் பெருந்தன்மை அல்லது நீங்கள் கறாராக ப்ராக்டீஸ் செய்யும் அறம் மட்டுமே காரணமாக இருக்க முடியும் .

 

“அராத்து போன்றவர்களின் கதைகளும் இத்தகையவையே ” என்று எழுதி இருக்கிறீர்கள்  . அராத்து ” போன்றவர்கள் ” யாரும் இல்லை :-)

 

போகன் சங்கர் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதுகிறார். நான் சிறுகதை வடிவத்தில் நான்கைந்து சிறுகதைகள் எழுதி உள்ளேன்.

 

“அவர்கள் இதை குறுங்கதைகள் என்னும் வடிவமாகச் சொல்கிறார்கள் ” என்று எழுதி இருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்து நான் மட்டுமே குறுங்கதைகள் என தலைப்பிட்டு “தற்கொலை குறுங்கதைகள் ” எழுதினேன். பின் சயனைட் குறுங்கதைகள் , பிரேக் அப் குறுங்கதைகள் என எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

 

விகடனில் ஜெயகாந்தனிடம் பேட்டி எடுக்கும்போதும் , இப்போதெல்லாம் சிலர் குறுங்கதைகள் என எழுதுகிறார்களே என கேள்வி கேட்டனர். சரி , என்னையே  “சிலர் ” என பலர்பாலாக ஆக்கி விட்டார்கள் என சந்தோஷப்பட்டேன் :-)

 

இதை உங்களுக்கு எழுத காரணம் , எனக்கோ என் கதைகளுக்கோ இலக்கிய அந்தஸ்து போராடி பெற வேண்டி அல்ல. ஏதோ ஒரு செயல் சின்னதோ பெருசோ , அதை நான் செய்து இருந்தால் , நான் செய்தேன் என்றுதானே கூற வேண்டும் என்பது மட்டுமே காரணம். யதேச்சையாக ஒரு கொலை செய்து விடுகிறோம் , அந்த கொலையிலும் அடையாளம் தெரியாத பலர் பங்கு கேட்டால் எப்படி ?  கொலை கூட கெத்தாக இருக்கிறதா ? சரி ஒரு முட்டு சந்தில் சிறுநீர் கழித்ததாக வைத்துக்கொள்வோம் :-(

 

நீங்கள் சோஷியல் நெட்வொர்க்கிங்கில் இல்லை என சொல்லி வருவதால் , இங்கே எழுதப்படுபவை எல்லாம் யார் மூலமாகவோதான் உங்களுக்கு வந்து சேர வேண்டி உள்ளது. அதனால் ஏற்படும் தகவல் பிழையை களைய இதையெல்லாம் சொல்கிறேன்.

 

மட்டுமன்றி , என்னைப்”போன்றவர்கள்” யாரும் இல்லை என்பதையும் உங்களுக்கு நானே தெரிவித்துக்கொள்ளவுமே இந்த கடிதம் :-)

 

சிரில் ஓரிரு முறை வாங்களேன் சந்திக்கலாம் என அழைத்து இருந்தார். மது இல்லாமல் பெண்களை மட்டுமே சந்தித்து பழக்கப்பட்டு இருந்ததால் , துணிவில்லாமல் விட்டு விட்டேன். எப்போதேனும் விடிகாலை வேளையில் சந்தித்து விடலாம்.

 

அன்புடன்

 

அராத்து

 

 

அன்புள்ள அராத்து,

 

பொதுவாக அக்கட்டுரையில் பொதுப்போக்குகளை  அடையாளம் கண்டு அவற்றை இணைத்து ஒரு சித்திரத்தை உருவாக்க முயன்றேன். அத்துடன் ஒரு பரிசோதனை முயற்சியும் செய்தேன். வெறும் முப்பது நிமிடத்தில் அக்கட்டுரையை சொல்லி தட்டச்சு செய்வித்தேன். அந்த அரைமணிநேரத்தில் இயல்பாக நினைவுக்குவரும்  சித்திரமும் அதிலுள்ள பெயர்களும்தான் ஒருவகையில் ‘நினைவில் நின்றவை’. சென்ற முப்பதாண்டுக்காலமாக தமிழிலக்கியத்துடனேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்ட எனக்குள் எஞ்சுபவையே என் வகையில் முக்கியமானவை. இதுதான் என் கணிப்பு. கட்டுரையை உண்மையில் இன்னமும் நான் வாசித்துக்கூட பார்க்கவில்லை

 

இப்போது பார்க்கையில் ஒன்று தெரிகிறது. பொதுப்போக்குகளை நாம் உலகளாவிய சூழலில்தான் தேடுகிறோம். அதன் நீட்சியை இங்கும் கண்டடைகிறோம். உண்மையில் இந்த பார்வை தவறானதாக ஆனதே இல்லை. நவீன இலக்கியம் என ஒன்று உலகளாவத்தான் உருவாகியது. அதிலுள்ள அத்தனை போக்குகளும் உலகளாவியவை. எந்த ஒரு பண்பாடும் முற்றிலும் வேறிட்ட ஓர் இலக்கிய அலையை உருவாக்கிக்கொண்டதே இல்லை.

 

வணிகக்கலையிலும் இப்படித்தான். ராக் அன்ட் ரோல்,  டிவிஸ்ட், பிரேக் என எல்லா கலைவடிவங்களும் உலகளாவ உருவாகின்றன. சமீபமாக உடை மற்றும் பாவனைகள் கூட உலகளாவ ஒன்றே.

 

ஆகவே இன்று உலகளாவிய தளத்தில் வந்துகொண்டிருக்கும் குறுஞ்சித்தரிப்பு [மைக்ரோ நெரேஷன்] தமிழில் எவ்வகையில் உள்ளது என்று பார்த்தேன். முகுந்த் நாகராஜன் அதை கவிதையில் வெற்றிகரமாகத் தொடங்கிவைத்தார். இசை உள்ளிட்ட இன்றைய கவிஞர்கள் படிமங்களில் இருந்து குறுஞ்சித்தரிப்புக்குச் சென்றுள்ளனர். [குமரகுருபரன் அதிலிருந்து வெளியேறியிருக்கிறார்]

 

புனைகதையில் அப்படி ஒரு டிரெண்டுக்காகத் தேடும்போது நீங்கள் நினைவுக்கு வந்தீர்கள். போகன் சங்கர் அனுபவக்குறிப்பு, கவிதை, குறுங்கதை என்னும் வடிவில் எழுதியவை புனைவுகள் என்றே நினைவுக்கு வந்தன. அவருடன் அவ்வடிவைப்பற்றி ஒருமுறை முச்சந்தியில் நின்று பேசிக்கொண்டிருந்ததும் நினைவுக்கு வந்தது. அவருக்கு குறுங்கதை வடிவில் எழுதவே இயல்பாக வருகிறது , விரித்தெழுதுவதைவிட என்று சொன்னார்.

 

அராத்து போன்றவர்கள் எனச் சொல்லியது இது ஒரு புது ’டிரெண்டாக’ ஃபேஸ்புக்கில் இருக்கக்கூடும், நானறியாமல் இந்தப்போக்கை முன்னெடுக்கும் பிறரும் இருக்கக்கூடும், என்னும் அனுமானத்தால் மட்டுமே. ஓரிரு கதைகளை அவ்வகையில் நான் வாசித்துமிருக்கிறேன்.

 

அதை ஒரு தனி வடிவமாக நீங்கள் முன்னெடுப்பதாகப் புரிந்துகொள்கிறேன். எந்த ஒரு வடிவமும் அடிப்படையில் பிறவடிவங்களால் ஆகாத ஒன்றை தொட்டு எடுத்து ஒரு வாழ்க்கையைக் காட்டும்போதே பொருள்படுகிறது. வாழ்த்துக்கள்

 

தருணம் அமையும்போது சந்திப்போம்

 

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஸ்பிடி சமவெளி, சென்னை –எத்தனை குளறுபடிகள், எத்தனைமோசடிகள்!

$
0
0

bell11417699916823

 

ஸ்பிட்டி சமவெளியிலிருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு வந்தேன். ஜேம்ஸ்பாண்ட் சினிமாவின் கடைசிக்காட்சி போல ஆகிவிட்டது பயணம். சண்டிகரில் நண்பர் இளையராஜா என்ற ராக்கெட் ராஜாவின் இல்லத்திற்கு இரவு  ஒன்பது மணிக்கு வந்தோம். அங்கிருந்து முன்காலையில் கிளம்பி டெல்லிக்குச் சென்று ஏர்  இந்தியா விமானத்தில் சென்னை திரும்புவதாக திட்டம்.

 

பதினொரு மணிக்குப் படுத்தும் ஒன்றரை மணிக்கு எழுந்து இரண்டு மணிக்குக் கிளம்பினோம். ஐந்து மணிநேரம் காரில் பயணம். வழியில் ஆறு இடங்களில் விபத்துக்கள் நடந்து கார்கள் கவிழ்ந்து எரிந்துகொண்டிருந்தன. சேவிங் பிரைவேட் ரயான் படத்தில் போர்க்களத்தில் செல்லும்  காட்சியைப்போலிருந்தது அப்பயணம். ஓட்டுநர்களுக்கு எந்த முறைமையும் இல்லை. வரிமாறுவதெல்லாம் நினைத்தது போல. எங்கள் ஓட்டுநரும்தான்.

 

டெல்லி விமானநிலையம் வந்தோம். ஒன்பதரை மணிக்கு ஏர் இந்தியா விமானம். எழுநூறு நூபாய் லாபம் இருக்கிறது என்று போட்ட பதிவு. பதினொரு மணிக்குத்தான் உள்ளே அனுப்பினார்கள். ஒன்றரை மணிநேரம் நான் தூங்கினேன். விழித்தபோது விமானம் அங்கேயே நின்றிருந்தது. டயர் பஞ்சர். திரும்ப இறங்கி மீண்டும் பாதுகாப்புச்சோதனைகளை முடித்து அடுத்த விமானத்தில் ஏறி சென்னை வந்துசேர்ந்தபோது மாலை ஐந்தரை மணி.

 

நான் கூடுமானவரை ஏர் இந்தியா விமானங்களில் ஏறுவதில்லை. அவை வானில் பறப்பதே அதிசயம். அரசுத்துறையில் வேலைபார்த்தவன் என்பதனால் எனக்கு எந்த அரசுத்துறையும் நேர்மையுடனும் திறமையுடனும் நடைபெற முடியும் என்னும் நம்பிக்கையே இல்லை. பிற அனைத்துக்கும் மேலாக முதன்மைக்காரணம் அதிகாரிகள்தான். அவர்கள் பதவிபெற்றதுமே குறுநிலமன்னர்களாக உணர்கிறார்கள். அதன்பின்  ஊழல்,தீனி, குடி, பெண் தவிர எதிலும் ஆர்வமிருப்பதில்லை. இருபத்துநான்கு மணிநேரமும் அடிபணிவோரும் துதிபாடிகளும் சூழ்ந்திருக்கவேண்டும். எதற்கும் பொறுப்பேற்கவும் மாட்டார்கள். திறமையான அதிகாரிகள் இருக்கலாம், இருந்தாகத்தானே வேண்டும். அவர்களிடம் அதிகாரம் இருக்காது.

 

சென்னையில் மறுநாள் சினிமாவேலைகள். அன்று மாலை இன்னொரு விடுதியறையை பதிவிடச்சொல்லியிருந்தேன். மேக் மை டிரிப் என்னும் இணையதளம் வழியாக ஓர் அறையை நண்பர் முன்பதிவுசெய்திருந்தார். பெல் ஓட்டல் என்னும் விடுதி.அது ஒரு ஸ்டார் ஓட்டல் என்று இணையதளம் சொன்னது. வாடகை 5000 ரூபாய். எனக்கு இருந்த தள்ளுபடி தவிர 2500 அளித்தேன். மாலை அங்கே சென்று பார்த்தால் டீக்கடை போன்ற விடுதி. கார் பார்க்கிங் கூட இல்லை. சாலையோரமாக ஒரு அசைவ உணவகத்தின் மேலே அமைந்திருந்தது. புழுதி படிந்த அறைகள். இடிந்த படிக்கட்டு

 

”இதுவா ஸ்டார் ஓட்டல்? ”என்றேன். “இது த்ரீ ஸ்டார் ஓட்டல் ” என்றார் அங்கிருந்தவர். “இதற்கா ஐயாயிரம் ரூபாய் வாடகை?” என்று கத்தினேன். “அது இணையதளத்தில். நேரில் ஆயிரத்தைநூறு ரூபாய்தான்” என்று கார்டைக் காட்டினார். என்ன செய்வதென்று தெரியவில்லை. சினிமா தயாரிப்பு நிர்வாகி ஒருவரைக்கூப்பிட்டு இன்னொரு அறையை அவசரமாக போடச்சொல்லி இரவு பத்து மணிக்கு திநகர் ரெசிடென்ஸி டவர்ஸ் ஓட்டலுக்குச் சென்று தங்கினேன். அந்த இணைய தளத்திற்குச் சென்று புகார் செய்தால் அது ‘உங்கள் புகாரை பதிவுசெய்ய முடியாது மன்னிக்கவும்’ என்று திரும்பத்திரும்பச் சொன்னது. பணம் போனதுபோனதுதான்.

 

சென்னையில் வேலைகளை முடித்துக்கொண்டு திருவனந்தபுரம் செல்லவேண்டும். விமானநிலையம்  வரை சென்றிறங்கியபோதுதான் என்னிடம் பணமில்லை என்பதைக் கண்டேன்.  சென்னை உள்நாட்டு முனையத்தில் நான்கு ஏடிஎம் இயந்திரங்கள். நான்குமே பழுது. கனரா வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் வங்கி வாசலில்கூட பணமிருப்பதில்லை என்பதை பலமுறை கண்டிருக்கிறேன். வங்கிக்குள்ளேயே சென்று மேலாளரிடம் புகார்செய்திருக்கிறேன்.  ‘ஆளில்லை சார்’ என காதுகுடைந்தபடி சொல்வார்கள். ஒரு விமானநிலையத்தில் அத்தனை ஏடிஎம்களும் இயங்காமலிருக்கும் தேசம் பிறிதொன்று ஆப்ரிக்காவில்தான் இருக்கமுடியும். இந்தியாவில் ஏடிஎம் கார்டுகளை நம்பி எங்கும் பயணம்செய்யமுடியாது.

 

பன்னாட்டு முனையம் வந்தேன். அங்கே நல்லவேளையாக பணமிருந்தது. நான் செல்லவேண்டியதும் பன்னாட்டு முனையத்திலிருந்து கிளம்பும் அபுதாபி விமானத்தில்தான். பதினாறாம் வாசல். அப்பகுதியில் எங்கும் குடிநீர் இல்லை. குழாய் பழுது என வருந்தியிருந்தன. பன்னாட்டுமுனையத்தின் மூன்று குடிநீர் ஊற்றுக்களும் பழுது. ஒரு புட்டி குடிநீர் வாங்கினேன் எண்பது ரூபாய்.

 

ஒருவழியாக விமானம். இதுவும் ஏர் இந்தியா. சென்று சேரும் என நம்பிக்கை கொண்டேன். எனென்றால் தனியாரின் மோசடி அரசுத்துறையின் வெட்டித்தனம் இரண்டுக்கும் நடுவே இன்றும் தங்கிவாழும் ஒரு அபூர்வ சமூகம் அல்லவா நாம்?

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 76

$
0
0

பகுதி பதினொன்று : மாசி

[ 1 ]

மாசி முதல் நாள் படைப்போன்பொழுதில் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அரச அகம்படியினரும் அணிப்படையினரும் அஸ்தினபுரி நோக்கி எழவேண்டுமென்பது ஒருக்கப்பட்டிருந்தது. சௌனகரும் சிற்றமைச்சர்கள் சுரேசரும் சுஷமரும் அமைச்சு மாளிகையில் அதற்கான ஆணைகளை விடுத்துக்கொண்டிருக்க அரண்மனை முற்றங்களில் தேர்கள் அணிகொண்டன. படைவீரர்கள் கவசங்களும் படைக்கலங்களுமாக நிரைவகுத்து கோட்டை முகப்பில் கூடினர். பரிசும் வரிசையும் கொண்ட பெட்டகங்கள் வண்டிகளில் ஏற்றப்பட்டு படகுகளில் அடுக்கப்பட்டன. யமுனையில் பதினெட்டு அணிப்பெரும்படகுகள் அரசக்கொடிகளுடன் துறையணைந்திருந்தன.

இரவெல்லாம் தருமன் தன் மஞ்சத்தறையில் துயிலாதிருந்தார். முன்னிரவில் இந்திரப்பிரஸ்தத்தின் நகர் மையத்தில் அமைந்த மின்கதிரோன் ஆலயத்தில் வணங்கி மலர்பெற்று வெளிவந்தபோது சௌனகர் “புலரியில் குடித்தெய்வங்களையும் காவல் தெய்வங்களையும் வணங்கி விடைகொள்ள பொழுதிருக்காது, அரசே. இப்போதே அச்சடங்குகளை முடித்துவிடுவது நன்று” என்றார். “ஆம், நானும் அவ்வாறே எண்ணினேன். இளையோர் எங்கே?” என்றார். “நகுல சகதேவர் ஆலயத்திற்கு கிளம்பிவிட்டனர்” என்றார் சௌனகர். “பிறர்?” என்றார். அவர் ஒன்றும் சொல்லவில்லை. தருமன் தலையசைத்துவிட்டு நடந்தார்.

வைதிகர் குழுவுடனும் அமைச்சர்களுடனும் சென்று ஏழு எல்லைக் கொற்றவை ஆலயங்களிலும் எட்டு திசைக்காவலர் ஆலயங்களிலும் பதினாறு உருத்திரர்களின் ஆலயங்களிலும் பூசை முறைகளை முடித்து நள்ளிரவில்தான் அரண்மனைக்கு மீண்டார்.  களைத்துப் போய் உணவருந்த அமர்ந்தார். சௌனகரிடம் “பீமனையும் அர்ஜுனனையும் சென்று பார்த்து காலையில் அவர்கள் சித்தமாக இருக்கவேண்டுமென்று மீண்டுமொருமுறை சொல்லிவையுங்கள். ஓலைகள் எதுவென்றாலும் என்னிடம் கொண்டுவரத் தயங்கவேண்டியதில்லை” என்றார்.

“மூன்று நாழிகைப் பொழுது தாங்கள் துயில முடியும், அரசே” என்றார் சௌனகர். “ஆம், நான் உடனே மஞ்சத்திற்கு செல்லவேண்டும். படகில் என்னால் சீராக துயிலமுடிவதில்லை” என்றார் தருமன். மஞ்சத்தறையில் நுழைந்தபோது மறுகணமே துயின்றுவிடுவோம் என்றே எண்ணினார். வெண்பட்டு விரிப்புடன் இறகுச்சேக்கை மஞ்சம் புதுமணல்பரப்பென காத்திருந்தது. திறந்த சாளரத்தினூடாக காற்று திரையசைத்து உள்ளே வந்தது. தனிச்சுடர் அமைதி என நின்றசைந்தது. மஞ்சத்தில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டு எப்போதுமென பாண்டுவின் பாதங்களை விழிக்குள் நிறுத்தி “தந்தையே! தெய்வங்களே!” என்று நீள்மூச்செறிந்தபின் படுத்தார்.

வெகுநாட்களாக தன் மஞ்சத்தறையில் தனித்து உறங்குவதே அவர் வழக்கம். திரௌபதி அவருடனிருக்கும் மாதங்களிலும்கூட தன் இரவின் தனிமையை பேணிக்கொண்டார். தனிமை அமைதியென்றாகி சூழ்ந்துகொள்கையிலேயே துயில் அவர் மேல் படரும். பெரும்பாலான நாட்களில் பின்னிரவின் குளிர் உடலை தொடும்வரை நூல்தேரவோ தனக்குத்தானே என நாற்களமாடவோ செய்வது அவர் வழக்கம். பகடையற்ற யவனநாற்களமே அவருக்கு உகந்தது.

பனி அறையில் மரத்தூண்களை குளிர்ந்து விறைக்கச் செய்திருந்தது. அனைத்து மரப்பரப்புகளும் ஈரமாக இருப்பதைப்போன்ற மயக்கு எழுந்தது. வெளியே மரங்களில் இலைகளிலிருந்து பனித்துளிகள் சொட்டிக் கொண்டிருக்கும் ஒலி கேட்டது. பிரம்மாண்ட பேருருக் கொண்ட அன்னை விலங்கின் அடிவயிற்றில் ஒட்டி அதன் நரம்புத்துடிப்புகளை கேட்டுக் கொண்டிருப்பது போல. கரிய விலங்கு. ஒளிரும் பல்லாயிரம் விழிகள் கொண்டது. அவ்வப்போது உடல் சிலிர்த்து அசைந்து வெம்மூச்சு விடுவது.

இருளில் நெடுந்தொலைவுவரை கேட்ட ஒலிகளை செவி கூர்ந்தார். நகரம் எப்போதும் முழுமையாக துயில்வதில்லை. இரவடங்குகையில் அதன் ஒலிகள் மாறுபட்டபடியே செல்லும். பின்னிரவில்தான் அங்காடிகளுக்குரிய பொதி வண்டிகள் நகர் நுழைவது வழக்கம். அத்திரிகளின் குளம்போசை நகரத்தின் கல்பாவிய தெருக்களில் எழுந்தபடியே இருக்கும். இரவில் நகரில் அமைந்த பல்லாயிரம் கொடிகள் காற்றில் படபடக்கும் ஒலி தெளிவாக கேட்கும். இரவு மட்டுமே எழும் பெரும் சிறைப்பறவை கூட்டம் போல.

எண்ணிக் கொண்டது என யமுனையிலிருந்து எழுந்து நகர்மேல் சூழப்பறக்கும் காற்று புழுதிகலந்த பாசிமணத்தை காற்றில் நிறைக்கும். அங்காடிகளிலிருந்தென்றால் மட்கிய மலர்களும் தழைகளும் மடித்த எண்ணையும் சுண்ணமும் கலந்த மணம். சுழன்று ஆலயங்களிலிருந்து வந்ததென்றால் அகிலும் அரக்கும் கலந்த தூப மணம்.

அங்காடி வெளி முழுக்க கட்டப்பட்டிருக்கும் தோற்கூரைகளை காற்று உந்தி எழுப்ப அவை  உருண்டு புடைத்து பின் அமையும் ஒலி. அரண்மனையின் பல நூறு தாழ்கள் குலுங்கும் ஒலி. கதவுகள் முனகி திகிரியில் சுழன்றமையும் வலியோசை. மிகத் தொலைவில் யமுனையின் அலைகள் கரையை அறையும் ஒலிகூட கேட்பது போல் தோன்றியது. களிறின் பிளிறல் போல கொம்போசை எழுப்பியபடி கலம் ஒன்று படித்துறையில் இருந்து கிளம்பியது.

அதன் பெரும்பாய்கள் ஒவ்வொன்றும் எழுந்து புடைத்து கயிறுகளை இழுத்து விம்மி அதிர்வதை கேட்டார். அதன் கொடிகள் காற்றில் எழுந்து துடித்தன. அவற்றின் மேல் சேக்கை அடைந்திருந்த பறவைகள் கலைந்து இருளில் எழுந்து சிறகடித்து குழம்பி கரை நோக்கி சென்றன. அது விலகிய இடத்தில் அடுத்த கலம் இறங்குமுகத்தில் பிளிறியபடி அணைந்தது. அதிலிருந்த மாலுமிகளின் குரல்களை கேட்க முடிந்தது. சிறிய கொம்புகளும் சங்குகளும் ஒலித்தன. களிறுகள் இழுத்துச் சுழற்றும் எடைத்துலாக்களின் புரிமுள் உறுமியது.

ஒலிவடிவில் மொத்த நகரத்தையே அவர் பார்த்துக் கொண்டிருந்தார். செவியறியாத ஒலிகள். கேட்கும் ஒலித்துளிகளை நெஞ்சுக்குள் எஞ்சிய ஒலியால் நிரப்பி முழுமை செய்து அவர் வரைந்தெடுத்து பரப்பிய அப்பெருநகரம் உண்மையில் எங்குள்ளது? எத்தனை நகரங்களாக அது ஆடிப்பரப்பிலென தன்னை பெருக்கிக்கொண்டிருக்கிறது இப்போது?

எழுந்து சென்று சாளரம் வழியாக வெளியே தெரிந்த அரண்மனையின் செண்டுவெளி முற்றத்தை நோக்கி நின்றார். அதன் மறுஎல்லையில் கொற்றவை ஆலயத்தின் மேல் முப்புரிவேல் பதித்த செம்மஞ்சள் கொடி பறந்து கொண்டிருந்தது. அதன் முகப்பின் பெருவாயில் மூடப்பட்டு அதன் இருபக்கமும் வெண்கலத்தால் உருக்கிச் செய்து பொறிக்கப்பட்ட உக்ர சண்டிகை, ஊர்ஜ சண்டிகை  இருவரின் முகங்களும்  இருபக்கமும் எரிந்த பந்தத்தீயின் வெளிச்சத்தில் உருகித் ததும்பும் உலோகத்துளிகள் போல தெரிந்தன. மேலும் மேலும் விழி கூர்ந்து அவற்றின் விழிகளைக்கூட சந்தித்துவிடலாமெனத் தோன்றியது.

செண்டுவெளி முழுக்க அந்தியில் கூடியிருந்த மக்களின் கைகளிலிருந்து உதிர்ந்த சிறு பொருட்கள் விழுந்து கிடந்தன. மகளிர் குழலுதிர்ந்த மலர்மாலைகள், குழந்தைகள் ஆடிய பாவைகள், சிற்றுணவு பொதிந்த இலைகள். பந்தங்களின் செவ்வொளியில் செம்மண் பரப்பில் பதிந்து சென்ற அத்திரிகளின் கால் குளம்புகளின் சுவடுகளை விழிதொட்டு மீட்டு விடலாமென்று தோன்றியது.

ஏன் நிலையழிந்திருக்கிறோம் என்று தருமன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டார். அகம் சிதறிப்பறக்கையில் வெளி நோக்கி விழி திருப்பும்போது புற உலகம் பருப்பொருளால் ஆனது என்பது அளிக்கும் ஆறுதலைப்போல அழுத்தமான பிடி பிறிதொன்றில்லை. எண்ணங்களைப்போலன்றி தங்கள் வடிவை எந்நிலையிலும் காத்துக்கொள்ளும் தகைமையுடன் புறப்பொருட்களை அமைத்திருப்பதன் பெருங்கருணையை அவர் எண்ணிக் கொண்டார். இவையும் அணுகினால் அகல்பவையாக, தொட்டால் உருமாறுபவையாக, கணம் ஒன்றென பிறந்து கணம்தோறும் பிரிந்து பெருகுபவையாக, காணாதிருக்கையில் அகல்பவையாக இருந்தன என்றால் மானுடனுக்கு  சித்தமென்றே ஒன்றிருக்குமா?

சித்தமென்பது புழுதி. புற உலகெனும் பருவெளிமேல் அது படிந்து தன் உருவை அடைந்து தானென்று ஓர் உலகு சமைக்கிறது. அடியிலுள்ளது மாறா வடிவப்பருப்பெருக்கு. இந்த மாளிகை இவ்வடிவிலேயே ஊழியின் இறுதிவரை இருக்க உறுதி பூண்டது. பிறிதொரு பருப்பொருள் ஒன்று மோதி மாற்றாமல் அது உருவழிவதில்லை. இந்தத் தூண் என்றுமென நின்றிருக்கிறது. அந்தப் புரவி புரவியென்றே தன்னை முற்றாக வரையறுத்துக் கொள்கிறது.

தெய்வங்களே என்ன எண்ணிக் கொண்டிருக்கிறேன்! என் எண்ணங்களை வெறும் கொந்தளிப்பென்று உணர்கிறேன். அவை ஒவ்வொன்றையும் இப்பருப்பொருட்களுடன் முற்றாகப் பிணைக்க விரும்புகிறேன்.  துள்ளும் புரவியை தறியில் கட்டுவதுபோல. பருப்பொருளால் ஆனது அகம். என்  நூல்கள், என் அறங்கள், என் உணர்வுகள். அனலென புனலென அலைபாய்பவையும் பருப்பொருட்கள் அல்லவா?  ஆடிப்பாவையில் நெளிபவையும் பருப்பொருட்கள்தானே? ஒருவேளை புறவெளியென விரிந்திருக்கும் இப்பருப்பொருள் வெளியும் வெறும் அலையோ அதிர்வோதானா? எளியவனென இங்கிருக்கும் என் விழிமூக்குசெவிதோல்நாக்கில் அளிக்கும் மயக்குதானா?

இருள் சூழ்ந்துள்ள இப்புடவி என்பது ஒரு பெருக்கு. அண்ட வெளியின் ஆழத்தில் எவர் விழியும் தொடாமல் சுடர்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரம் கோடி ஆதித்யர்களுடன் அதை பிணைக்கிறது இவ்விருள். எந்த ஆதித்யனின் ஒளியாலும் தொடப்படாத பல்லாயிரம் கோடி கோள்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது இங்குள்ள ஒவ்வொரு மணல்பருவும்.  பகலில் உருதிரட்டி வரும் ஒவ்வொன்றும் இருளில் ஒளி அழிந்து ஒற்றைப் பெரும்பரப்பென ஒன்றாகி விடுகின்றன. இரவு பகலை கரைத்தழிக்கிறது. புள்ளியிட்டு கோடிணைத்து விரிந்த பெருங்கோலத்தை மிதித்துக் கலைக்கின்றன கரிய யானையின் கால்கள். யானை தோல்நலுங்க நடக்கிறது. மின்னுகின்றன ஒளிகொண்ட இருள்துளியென விழிகள்.

நீள்மூச்சுடன் அவர் திரும்பி வந்து மஞ்சத்தில் படுத்தார். உடல் ஓய்வை நாடுகையில் உள்ளம் எப்படி திமிறி எழமுடியுமென்று வியந்தார். ஒவ்வொரு தசையும் களைப்பை இனிய உளைச்சலென உணர்ந்து எலும்பின் இழுவிசைகளிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு தளர்ந்தது. இருபாதங்களும் இருபக்கமும் தொய்ந்தன. கைகள் உயிரிழந்தவை போல் சேக்கை மேல் படிந்தன. நுரை இறகை என சேக்கை அவரை உள்வாங்கிக் கொண்டது. விழுவது போல் உணர்ந்தார். உதிர்ந்த பட்டுச்சரடென நெளிந்து அவரை அணுகி அகன்ற பாதையில் ஒரு கால் நடந்து செல்வதுபோல் கண்டார். அறிந்த கால்கள். சிலம்பணிந்தவை. அவள்தான்! அவர் விழிதூக்கி அவளை நோக்கியதும் செவி அருகே சிரிப்பை கேட்டார்.

உடலதிர எழுந்து அமர்ந்தார். எழுந்தமர்ந்தது சித்தமே என்றும் உடல் இன்னமும் சேக்கையிலேயே கிடப்பதையும் உணர்ந்தார். கையூன்றி உடலை உந்தி எழுந்தார். மெல்லிய நடுக்கத்தை உணர்ந்தபடி எதை பார்த்தோம் என்று எண்ணினார். எதையோ ஒன்றை. இந்நாட்கள் புரியாத கனவுகளால் அலைக்கழிக்கப்படுகின்றன. உள்ளிருந்து எதுவோ ஒன்று மொழியோ ஓசையோ உணர்வோ இன்றி கூவி அழைத்துக்கொண்டே இருக்கிறது. தீங்கு ஒன்று நிகழும் என்ற எச்சரிக்கையா?  அவ்வண்ணம் தோன்றவில்லை. அச்சமா? அதுவுமில்லை. பிறிதென்ன?

விதுரர் இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்து அவைமுகமன் பெற்றபின் அவரை மந்தண அறையில் சந்தித்து பீஷ்மரும் துரோணரும் கிருபரும் திருதராஷ்டிரரும் ஒப்புக்கொண்ட வழி என்று பன்னிரு பகடைக்களம் ஆடுவதைக் குறித்து சொன்னதும் மறு எண்ணம் இல்லாமல் உவகைப்பெருக்குடன் அவர் கைகளை பற்றிக்கொண்டு “ஆம், மூத்தோரின் சொல். அதுவே எனக்கு இறையாணை”  என்றார். அது ஊழின் கணம். ஒரு துளியேனும் எண்ணம்பிறழாமல் எடுத்த முடிவு. வாழ்வில் ஒரு முறை கூட அத்தகைய ஒரு உடன்முடிவை எடுத்ததில்லை.

அதன் பின் நூறு கோணங்களில் எண்ணி சூழ்ந்த பின்னரும் அம்முடிவன்றி பிறிதெதும் உகந்ததென்று தோன்றவுமில்லை. அன்னையும் அவரிடம் சொன்னாள் அதுவே அவர் வழி என்று. திரௌபதி அவர் விருப்பம் அதுவென்றால் அவளுக்கும் அதுவே என்றாள். உடன்பிறந்தோர் நால்வரும் பிறிதொன்று சொல்லவில்லை. ஐயத்துடன் குழம்பிக் கொண்டிருந்த சௌனகராலும் மாற்று என ஒன்றை சொல்ல இயலவில்லை. அவ்வண்ணமெனில் எஞ்சுவது என்ன?

முடிவை இளையோரிடம் பேசியபோது நகுலன் “இளைய யாதவரிடம் சொல்சூழ்ந்த பின்னர் முடிவெடுத்திருக்கலாம், மூத்தவரே. எனினும் எடுத்த முடிவு இந்திரப்பிரஸ்தத்தின் அரசாணை. அவ்வண்ணமே ஆகட்டும்” என்றான். “பிறிதென்ன வழியை இளைய யாதவர் சொல்லியிருக்கக்கூடும், இளையோனே?” என்றார் தருமன். நகுலன் “அறியேன்” என்று மட்டும் சொன்னான். அன்றே துவாரகைக்கு ஒரு பறவைச் செய்தியை அனுப்பினார்.

ராஜசூயம் முடிந்ததுமே இளைய யாதவரை தேரிலேற்றி அர்ஜுனனே நகர்த் தெருக்களினூடாக ஓட்டிச் சென்று துவாரகைக்கு வழியனுப்பியதைப்பற்றி துவாரகா கமனம் என்னும் குறுங்காவியத்தை சாரதர் என்னும் புலவர் இயற்ற சூதர் அதை பாடிப்பரப்பினர். நீலவிழி திறந்த பீலி முடியும், அந்திப்பொன் பட்டாடையும் அணிந்து எப்போதுமுள்ள இன்சிரிப்புடன் இளைய யாதவர் தன் அரண்மனை விட்டு வெளிவந்தபோது அவரும் தம்பியரும் அரண்மனை வாயிலில் காத்து நின்றிருந்தனர். அவர் தலைவணங்கி “வருக, துவாரகைக்கரசே. இன்று நீங்கள் நகர் நீங்குகிறீர்கள். பல்லாயிரம் மடங்கு பெரிதாக உங்கள் நினைவு இங்கே நின்றிருக்கும்” என்றார்.

இளைய யாதவர் புன்னகைத்து “மூத்தவரே, தாங்கள் பாரத வர்ஷத்தின் சக்ரவர்த்தி. தங்கள் அவைக்கு வந்து விடை கொண்டு செல்ல வேண்டியதுதான் முறைமை” என்றார். “இங்கு வந்தது எங்கள் குலம் காக்கும் தெய்வத்தை வழிபடுவதற்கு உரிய உள நிலையில், யாதவரே” என்றார் யுதிஷ்டிரர். “சொல் சூழ தங்களுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை” என்று புன்னகைத்தார் இளைய யாதவர்.

ஐவரும் அவரை அரண்மனைக் கூடத்திற்கு அழைத்துக்கொண்டு சென்றனர். அங்கு குந்தியும், திரௌபதியும், சுபத்திரையும், பலந்தரையும், தேவிகையும், விஜயையும், கரேணுமதியும் சேடியர் சூழ காத்து நின்றிருந்தனர். அவர்களை நோக்கி சென்று குந்தியை வணங்கி “அத்தை, அரண்மனை விட்டு தாங்கள் வருவது முறையே அல்ல. நான் அங்கே வந்திருப்பேன்” என்றார். “இத்தனை காலம் இங்கிருந்தாய். உன்னை பார்க்கவேயில்லை என்று படுகிறது” என்றாள் அவள். திரௌபதியையும் பிறரையும் நோக்கி புன்னகைத்து “அரசியரும் வருவீர்கள் என்று எண்ணவே இல்லை” என்றார்.

“அனைத்து முறைமைகளையும் கைவிட்டு இங்கு வரவேண்டுமென்பது எனது ஆணை” என்றார் தருமன். “இந்நாள் ஒவ்வொருவரின் கண்களிலும் எஞ்சவேண்டும், யாதவரே. இனியவை அனைவருக்கும் உரியவையல்லவா?” இளைய யாதவர் “சென்றதுமே மீள்வதைப்பற்றித்தான் எண்ணுவேன்” என்றார். பீமன் “இளையோன் துவாரகைக்கு வரப்போவதாகச் சொல்கிறான்” என்றான். இளைய யாதவர் அர்ஜுனனை நோக்கிவிட்டு புன்னகைத்தார்.

குந்தி தேனும் பாலும் பழச்சாறும் கலந்த மதுபர்க்கத்தை பொற்கிண்ணத்தில் அவருக்கு அளித்தாள். அவர் இரு கைகளாலும் வாங்கி ஒருமுறை உறிஞ்சி  உண்டார். “வருகையில் அளித்த மதுபர்க்கம் அளவுக்கு  இதுவும் இனியதே” என்றார். “இன்னும் நூறு மதுபர்க்கங்கள் தங்களுக்கு அளிக்க எங்களை வாழ்த்தவேண்டும்” என்றாள் திரௌபதி. அவள் பொற்கிண்ணத்தில் அளித்த தேனமுதை வாங்கி ஒருவாய் குடித்து “இது அனலென சுவைகொண்டுள்ளது” என நகைத்தார்.

அரசியர் ஒவ்வொருவரும் முகமன் உரைத்து தேனமுதளித்தனர். நகுலனும் சகதேவனும் அவர் காலடிகளைத் தொட்டு சென்னி சூடினர். உபபாண்டவர்கள் அபிமன்யுவும் பிரதிவிந்தியனும் சுருதசோமனும்  சுருதகர்மனும் சதானீகனும் சுருதசேனனும் யௌதேயனும் சார்வாகனும் நிரமித்ரனும் சுகோத்ரனும் வந்து அவர் கால்கள் தொட்டு வணங்கினர். வாழ்த்துகளும் முகமன்களும் முடிந்து அவர் அரண்மனை முற்றத்திற்கு வந்தபோது அங்கிருந்த வைதிகர் அவரை வாழ்த்தி கங்கைநீரும் அரிமஞ்சளும் சொரிந்தனர். மங்கல இசை முழங்கியது.

அமைச்சர் சௌனகர் கைகாட்ட அரசத்தேர் வந்து நின்றது.  அதன்  பொன்வளைவுகளில் அரண்மனையின் வெண்ணிறத் தூண்களும் செம்பட்டுக் கொடிகளும் பட்டுப்பாவட்டாக்களும் எதிரொளித்தன.  “இது பட்டத்துத் தேரல்லவா?” என்றார். “ஆம். தங்களுக்கு இங்கு அனைத்தும் முதன்மையானதே அளிக்கப்படும்” என்றார் சௌனகர்.  இளைய யாதவர் வாயெடுப்பதற்குள் யுதிஷ்டிரர் “அனைத்து முறைமைகளையும் கடந்து விட்டோம்” என்றார். இளைய யாதவர் நகைத்தபடி “நன்று” என்று  சொல்லி மீண்டும் ஒருமுறை அனைவரையும் நோக்கி புன்னகைத்து கைகூப்பி தேரிலேறி அமர்ந்தார்.

அரண்மனைப் பெண்கள் அருகணைந்து ஒருவர் தோளை ஒருவர் பற்றிக்கொண்டு விழிகனிந்து அவரை நோக்கி நின்றனர். பார்த்தன் பொற்பட்டுத்தலைப்பாகையுடன் பீடத்திலமர்ந்திருந்த பாகனுக்கு கைகாட்ட அவன் கடிவாளத்தை வைத்துவிட்டு இறங்கினான். பார்த்தன் ஏறி பாகனுக்குரிய பீடத்தில் அமர்ந்து கடிவாளங்களை தன் இடது கையில் பற்றி வலது கையில் சம்மட்டியை எடுத்துக் கொண்டான். இளைய யாதவர் உரக்க நகைத்து “நன்று! நன்று!” என்றார்.

அவர் “செல்க!” என்று கைகாட்டியதும் அர்ஜுனன் கடிவாளத்தைச் சுண்டி இழுக்க ஏழு வெண்புரவிகளும் நுரையெழுந்த அலையென ஒன்றாக காலெடுத்து வைத்தன. தேர் இளங்காற்றில் மிதந்தெழும் இறகுபோல ஓசையின்றி முன் சென்றது.  இளைய யாதவர் புன்னகையுடன் திரும்பி “நல்லூழ் தொடர்க, அரசே! பாரதவர்ஷத்தின் மணிமுடி என்றும் தங்கள் தலைமேல் ஒளிவிடுக!” என்றார். “தங்கள் அருளிருக்கையில் என்றும் அவ்வண்ணமே” என்றார் தருமன்.

“ஆம், என்றும் அது அவ்வாறே இருக்கும்”  என்றபின் அவர் விழிகள் சற்று மாறுபட்டன. “அரசே, நாடாள்பவன் துறவிக்கு இணையானவன். துறந்து துறந்து அடைவதே அவன் பீடம் என்றறிக! விழைவுகளை, உறவுகளை, உணர்வுகளை துறக்கவேண்டும் அவன். மாமுனிவர்களோ அறங்களையும்  தெய்வங்களையும் துறந்தவர்கள்” என்றபின் திரும்பி அர்ஜுனனிடம் செல்லும்படி கைகாட்டினார்.

தேர் சென்று மறைவது வரை கூப்பிய கைகளுடன் நோக்கி நின்ற யுதிஷ்டிரர் அதன் பின்னரே அவர் சொன்னதற்கு என்ன பொருள் என்று எண்ணினார். அதைப்பற்றி எவரிடமாவது பேச வேண்டுமென்று உளம் எழுந்தபோது நெஞ்சடக்கி  அதை கடந்தார். பேசப்படாததால் அச்சொல் அவருள் புதைந்து மறைந்தது. தனிமையில் பலமடங்காக அது திரும்பி வந்தது. உறவுகளை, விழைவுகளை, உணர்வுகளை கடப்பது முறை.  அறங்களையும் தெய்வங்களையும் கடந்து அடையும் பீடமென்பதன் பொருள் என்ன?

இத்தருணத்தில் அறங்களைக் கடக்காது நின்றுவிட்டேனா? தெய்வங்களை அஞ்சிவிட்டேனா? உறவுகளையே கடக்க இயலவில்லை. விழைவுகளை, உணர்வுகளை கடப்பதும் கடினமாகத்தான் இருக்கிறது. விதுரர் வந்து கைபற்றி கோரியபோது பன்னிரு பகடைக்களம் கூடுவதென எடுத்த முடிவு சத்ரபதி என்று நின்று அடைந்தது அல்ல. அரசன் என்றுகூட அல்ல. நூற்றைவருக்கு மூத்தவன் என்ற வகையில் மட்டுமே.

“ஆம்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். அதை பிழை என்று இளைய யாதவர் சொல்லக்கூடும். பன்னிரு பகடைக்கு முடிவெடுத்ததை அவருக்கு எழுதி அனுப்புகையில்தான் அவர் இறுதியாக சொல்லிச் சென்ற அவ்வரி நினைவில் எழுந்தது. “எதையும் துறக்க என்னால் இயலவில்லை, யாதவரே. அனைத்தையும் அள்ளிச் சேர்த்து ஆவி தழுவி நின்றிருக்கும் பெருந்தந்தையாகவே இம்முடிவை எடுத்தேன். பிழையென்று தோன்றவில்லை. எனவே உகந்ததென்று உணர்கிறேன். உங்கள் வாழ்த்தொன்றை கோருகிறேன்” என்று எழுதியிருந்தார்.

துவாரகையிலிருந்து மறுமொழி நோக்கி ஒவ்வொரு நாளும் காலை எழுந்தார். பறவைத் தூது சென்றுமீள நாளாகவில்லை என்று சிலநாட்கள். வந்துவிடும் வந்துவிடும் என்று சில நாட்கள். பிறிதொன்று வர வாய்ப்பில்லை என்று மேலும் சில நாட்கள். கைவிடமாட்டார் என்று எஞ்சிய நாட்கள். அஸ்தினபுரிக்குச் செல்லும் நாள் அணைந்தபோது அர்ஜுனன் “இளைய யாதவரிடமிருந்து ஒரு சொல் எழாது செல்வதெப்படி, மூத்தவரே?” என்றான். “வந்துவிடும். பிறிதொரு சொல் வரவாய்ப்பில்லை” என்றார் தருமன்.

கிளம்புவதற்கு மூன்று நாட்களுக்கு முன் துவாரகையிலிருந்து பறவைச்செய்தி வந்தது. இளைய யாதவரின் முத்திரையுடன் அக்ரூரர் அமைத்த சொற்களில் அரச முறைப்படி ஒரு வாழ்த்து. “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் எடுத்த முடிவு நலம் பயக்குமென்று துவாரகை விரும்புகிறது. பன்னிரு பகடைக்களமும் போரே. போர் அனைத்திலும் வெற்றி கொள்பவரே சத்ராஜித் என அழைக்கப்படுவார். இப்போரிலும் அரசரின் ஆண்மையும் அறமும் வெல்வதாக!” ஓலையை வாசித்தபின் சௌனகரிடம் அளித்துவிட்டு தருமன் எண்ணச்சுமைகொண்டு  தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

“அரசமுறைமைச் சொற்கள்” என்றான் அர்ஜுனன். “ஆம், இது போர் என்பதால் போருக்குரிய முறையில் முறைமைச் சொற்கள் எழுதப்பட்டுள்ளன” என்றார் சௌனகர். “இளைய யாதவர் ஒருபோதும் முறைமைச் சொற்கள் அனுப்புவதில்லை” என்றான் அர்ஜுனன். “இத்தருணத்தில் பிறிதொன்றை அனுப்ப இயலாதே” என்றார் சௌனகர்.  தருமன் எழுந்து “அவரது சொல் வந்துவிட்டது, அதுவே போதும்” என்றார்.

ஆனால் தன் அறைக்குத் திரும்புவது வரை வெந்தசைக்குள் புகுந்த முள்மேல் நெருடுவது போல அதையே உழற்றிக் கொண்டிருந்தார். அதில் ஒவ்வொரு சொல்லையும் எடுத்து பிறிதொரு பொருளுண்டா என நோக்கினார். ஆண்மை, அறம் – என்ன பொருள் அதற்கு? சட்டென்று சினம் தொற்றிக் கொள்ள  திருமுக எழுத்தனை அழைத்து ஓலை எழுதச்சொன்னார். உணர்வெழுச்சியில் நடுங்கும் குரலுடன் சொல்லிக்கொண்டே சென்றார்.

“ஆம், ஆண்மை பிறழ்ந்தவன்தான், யாதவரே. கோழை. நூற்றைந்து தம்பியரையும் எண்ணுகையில் என் கைகள் தளர்கின்றன. எதற்காகவும் கொலைவாளின் கூர்கொள்ள என்னால் இயலவில்லை. என் அறமென்பது குடியறமே. மானுடம் கடந்த பேரறம் இன்றுவரை என் உள்ளத்தில் எழவில்லை. மைந்தரை தோளெங்கும் சுமந்து கனிமரமென சதசிருங்கத்தில் நின்ற பாண்டுவே என் உள்ளத்தில் தெய்வமாக நின்றிருக்கிறார். அவர் மைந்தனென நின்றே இம்முடிவை எடுத்தேன். அவ்வண்ணமே அமைந்து களமாடவிருக்கிறேன். அவர் அருளால் வெல்வேன் என்று எண்ணுகிறேன்.”

எழுத்தர் ஓலையைச் சுருட்டி குழலிலிட்டு முத்திரை இடும்போது குறுபீடத்தில் அமர்ந்து முகவாயைத் தடவியபடி அதை பார்த்துக்கொண்டிருந்தார். “இன்றே செய்தி சென்றுவிடும், அரசே” என்று திருமுகத்தன் தலைவணங்கியதும் “வேண்டாம்” என்றார். அவன் விழிதூக்கி நோக்க “அதை அனுப்ப வேண்டியதில்லை. கொடு” என்று சொல்லி வாங்கினார். தன் சிற்றறையைத் திறந்து அதற்குள் இட்டு, அவன் செல்லலாம் என்று தலையசைத்தார்.

தருமன் தன் சிற்றறையைத் திறந்து அந்தத் திருமுகத்தை பார்த்தார். உருளை வடிவ பகடை போல சிற்றறை இழுப்பை திறந்தபோது உருண்டு அவரை நோக்கி வந்தது. சிலகணங்கள் நோக்கிவிட்டு அதை மூடினார். மீண்டும் மஞ்சத்தில் சென்று படுத்து கண்களை மூடிக் கொண்டார். ஆயிரம் கைகள் நீட்டி கவ்வ வரும் நண்டு போல   ஒலிவடிவமாக நகரம் எழுந்து அவரை சூழ்ந்தது.  குறைகும்பத்தின் கார்வை நிறைந்த நகரம்.

எழுந்து நீரருந்தினார். பெட்டியைத் திறந்து பன்னிருகளத்தை எடுத்து மஞ்சத்தில் பரப்பி தந்தங்களால் ஆன பகடைக் காய்களை வெளியே எடுத்தார். கையிலிட்டுச் சுழற்றி விரித்து எண் சூழ்ந்து காய் நகர்த்தினார். பதினெட்டு முறை தன்னை தான் வென்று முடித்தபோது அறை வாயிலை மெல்ல ஏவலன் தட்டும் ஒலி கேட்டது. “வருக!” என்றார் தருமன். கதவு திறந்த மெய்க்காவலன் “அமைச்சர் சௌனகர்” என்றான்.

சௌனகர் உள்ளே வந்து வாழ்த்துரைத்து “இளைய யாதவரின் சொல்” என்றார்.  பதற்றத்துடன் “புதிய ஓலையா?” என்றபடி அவர் எழுந்து அருகே வந்தார். “ஆம்” என்று அவர் சொன்னார். அதை நடுங்கும் கைகளுடன் வாங்கி விரித்து எழுதப்பட்டிருந்த சொற்களை படித்தார். முதலில் ஒரு சொல்லும் பொருளாகவில்லை. விழிமயங்க எழுத்துக்கள் கலைந்து அலையடித்தன. பின் நெஞ்சறைதலை மெல்ல அடக்கி மீண்டும் வாசித்தார்.

“அனைத்தும் நன்றே என்றுணர்க! இறுதி வெற்றி உடனுறையும் என்பதில் ஐயம் கொள்ளற்க! என்றும் உங்களுடன் என் படையாழி நின்றிருக்கும். நன்று சூழ்க!” என்று இளைய யாதவர் தன் கைப்பட எழுதியிருந்தார். மந்தணக் குறி எழுத்துக்களில் அமைந்த அச்செய்தியை வாசிக்க வாசிக்க மீண்டும் விருப்பு எழுந்தது. விழிகளால் வாசித்து தீராது கைகளால் தொட்டு வாசித்தார். அதை நெஞ்சோடு அணைத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது. உளம் பொங்கி விழிகளில் நீரெழுந்தது. சௌனகரிடம் “செல்வோம், அமைச்சரே. இனி ஒன்றும் கவலை கொள்ள வேண்டியதில்லை” என்றார்.

தொடர்புடைய பதிவுகள்

வானப்பிரஸ்தம் –கடிதம்

$
0
0

IMAGE_095

அன்புள்ள ஜெயமோகன்

 

உங்கள்  வயதடைதல் கட்டுரையில்ஆனால் அறுபது வயதில் தொழிலில் இருந்து ஓய்வுபெற வேண்டியிருக்கிறது.” .

 

அது சில ஆண்டுகளுக்கு முன்னுடைய யதார்த்தம். இப்போது அரசுகளே ஓய்வு வயதை தூக்கிக் கொண்டு வருகின்றன. இப்போது பல அரசுகள் ஓய்வு வயதை ஆண்களுக்கு 65ம் பெண்களுக்கு 63ம் ஆக்கி விட்டன. இன்னும் சில ஆண்டுகளின் பிரித்தனில் ஓய்வு வயது 67 ஆகவும், அதன் பின்பு ஓய்வு வயதை முழுவதும் எடுத்து ஒருவர் எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் எனவும் திட்டங்கள் உள்ளன.

 

இதெற்கு இரு காரணங்கள் உள்ளனமனிதர்கள் சுவாஸ்தமாக 70, 80 வரை வாழ்கின்றனர். அதனால் அவர்கள் 60 ஓய்வு பெறுவதில் அர்த்தம் இல்லை. மேலும் இன்னும் பலர் வேலை செய்வதனால் அரசாங்களுக்கு வருமான, லாப வரி வருமானம் அதிகரிக்கும். மேலும் பல நாடுகளில் அரசுகள் எல்லா குடிமகஙளுக்கும் குறைந்த பக்ஷ ஓய்வூதியத்தை உத்தரவாதம் அளிக்கிரது, நபர்கள் 70 , அல்லது அதற்கு மேல் வரை வேலை செய்தால் , அவர்களை கவனிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், சமூகத்திற்க்கும் இல்லை, அரசு சமூக செலவுகள் குறைவாகும்.

 

இதற்கு மேல் உலகளவில் பெரிய மக்கள்சங்கியை பிரச்சினைகள் முளைத்து வருகிற. உலகின் எல்லா முக்கிய, பெரிய நாடுகளில் , ஜனத்தொகையில் 65க்கு மேல் உள்ளவர்கள் சதவிகிதம் அதிகரித்து வருகின்றது. இது ஐரோப்பிய நாடுகளுக்கும், ஜப்பானுக்கும், சீனத்திற்க்கும் பிகவும் பொருந்தும். இன்னும் 20-25 வருஷங்களில் இந்நிலமை இந்தியாவிற்க்கும் பொருந்தும். 65 வயது மேலுள்ள ஜனங்களின் நல்வாழ்வை எப்படி சமூகம் பாதுகாக்க போகின்றதுமக்கள் எவ்வளவு வருஷங்கள் உழைத்து ஊதியம் பெற முடியுமோ , அந்த அளவிற்க்கு அவர்களை மற்றவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டாம், அதிக வரி வருமானத்தில் இருந்து அரசு மிக கண்டிப்பாக உதவி செய்ய வேண்டுபவர்களை பார்த்துக் கொள்ளலாம், அதாவது 85 வயது மேற்பட்டவர்கள் போன்ரவர்கள்.

 

ஜப்பானில் பல ஊர்களில் 65 வயது மேல் உள்ளவர்கள் திகை அதிகம், சிறார் இல்லாமல் பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டு வருகிறன. சீனாவில் மாசேதுங்கின் உத்தரவினால், 60 வருஷங்கள்ஒரு குழந்தை கொளைகயை சீன அரசாங்கம் முரட்டுத்தனமாக அமல் படுத்தியது. அதன் விளைவு சீனாவில் ‍”கிழவர்கள்சங்கியை ஒப்பீட்டளவிள்இளைஞர்கள்சங்கியை விட அதிகமாகி விட்டது. இன்னும் 20, 30 வருஷங்களில் இது சீனாவிற்க்கு பெரிய தலைவலியாகப் போகின்றது. அதனால் போன வருஷம்தான் அந்த  கொள்கையை சிறிதாக தளர்த்தினனர் .

 

அதனால் வானப்ப்ரஸ்தத்தை இன்னும் 20 வருஷங்கள் தள்ளி வைக்கலாம் :)

 

 

 

மதிப்புடன்

 

வன்பாக்கம் விஜயராகவன்

ப்ரஸ்ஸல்ஸ்

அன்பு ஜெயமோகன்,

 

வயதடைதல் உரை நவீனகாலத் தலைமுறைக்கு அவசியமான ஒன்றாகவே எனக்குப் படுகிறது. திட்டவட்டமான, கறாரான வரையறைகளைக் கலாச்சாரம் எனும் பெயரில் சகித்துக் கொண்டிருந்த தலைமுறை காணாமல் போய்க்கொண்டிருக்க.. எதையும் கட்டுடைத்துப் பார்க்கும் நவீனத் தலைமுறை தலையெடுத்து வருகிறது. இப்படியான சூழலில், வயதடைதல் முன்வைக்கும் கருத்துக்கள் சிந்தனைக்கு உரியவை.

 

சிறு கூழாங்கற்களைச் சேகரித்துப் பாதுகாத்த குழந்தைப் பருவ வாழ்வின் சுவையைச் சொற்களால் பகிர்ந்து கொள்ளவே முடியாது. பதின்பருவத்தைக் கடந்து இளமைப்பருவத்துக்குள் நுழையும் நாட்களோ தொடர்ந்து பெய்யும் சாரல் மழையைப் போன்றவை. சொல்லப்போனால் இருபத்தைந்து வயது வரையிலான ஒருவன் அல்லது ஒருத்தியின் கால்நூற்றாண்டு கொண்டாட்டத்துக்கு உரியதாகவே இருக்கிறது. சமூகம், குடும்பம், உறவு மற்றும் நட்பு என அனைத்துத் தரப்பையும் மனப்பூர்வமாக நம்பி மகிவதும் அக்காலகட்டத்தில்தான். இருபத்தைந்தைக் கடக்கும் ஒருவன் அல்லது ஒருத்தியின் வாழ்வு பெரும்பாலும் துயரமாகவே தொனிக்கிறது அல்லது அப்படியாகவே அவன்(ள்) பார்க்கிறான். மேலும், வாழ்வின் மீதான் நம்பிக்கையும் அக்கறையும் படிப்படியாகக் குறையத் துவங்குகிறது. ”என்ன வாழ்க்கைடா இது?” எனும் ஆதங்கத்தோடுதான் பிற்பகுதி வாழ்க்கையை அவன்(ள்) கழிக்கவும் நேரிடுகிறது.

 

வாழ்வு எது என்பதே நமக்கான அடிப்படைத் தேடல். குழந்தைப் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, இல்லறம், முதுமை, நிம்மதியான சாவு போன்ற சொற்களைக் கோத்துப் பின்னி இருப்பதே வாழ்வு என நம் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டிருக்கிறது. என்னதான் முயன்றாலும், நம்மால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடிவதில்லை. கூர்மைச்சிந்தனையாளன் எனும் சொல்லிக்கொள்ளும் ஒருவனும் தனிமையில் மேற்கண்ட சொற்கள் தரும் பயத்தில் ந்டுங்கிக்கொண்டுதான் இருக்கிறான். வாழ்தல், பிழைத்தல் போன்ற சொல்லாடல்களைப் புழக்கத்துக் கொண்டு வந்து பம்மாத்து காட்டும் சொல்வீரர்களும் ஒருகட்டத்தில் பயந்துதான் ஆக வேண்டி இருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடந்து வரும் சமூகக்கட்டமைப்பில் வாழ்வைச் செயற்கையாகப் பின்னி அதனால் துயருருபவர்களாகவும் நாம் மாறிவிட்டோம். அதனால்தான் இல்லறம் மற்றும் முதுமைப்பருவக் காலங்களில் வாழ்வு பாலைச்சூட்டை நினைவூட்டுவதாக மாறி விடுகிறது.

 

என்னைப் பொறுத்த மட்டில், வாழ்வு என்பது ஒற்றைத்தளத்தில் ஒருதிசையை நோக்கி நகரும் நதி அன்று; பலதிசைகளிலும் பெயர் தெரியாத மீன்களுடனும், இன்னபிறவற்றுடனும் விரிந்து கிடக்கும் வானம். நதியைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் சலிப்பு வந்துவிடுவது இயல்புதான். ஏனென்றால், அது நம் வரையறைக்குப்பட்ட எல்லைக்குள் இருக்கிறது. வானமோ எவ்வளவு முயன்றாலும் நம்மால் கணித்துவிட முடியாத தொலைவில் இருக்கிறது. ஆகவே, அதைப் பார்ப்பது நமக்குச் சலிப்பைத் தருவதில்லை. அருகில் இருப்பதாகத் தோன்றினாலும் நம் வாழ்வு வானமே. நதியாக அதை மாற்ற முயல்பவர்க்கு சலிப்பும், துயருமே எஞ்சுகிறது. வானமாக அதைக் காணப்பழகிய்வருக்கு அது தீவிரச்சலிப்பையோ, துயரையோ ஒருபோதும் வழங்கியதில்லை. இதுவும் ஒருவிதமான பார்வையே தவிர, வரையறையன்று.

 

சுருக்கமாகச் சொல்வதானால், வாழ்வு என்பது நேற்று, இன்று, நாளை எனப் பகுத்துப் புரிந்து கொள்ளப்படுவதன்று. அப்படி இருக்குமாயின் அது வரலாறு. மேலும், அது புறவயமான அணுகுமுறை. வாழ்வோ இக்கணத்துக்கு மட்டுமான ஒன்று அடுத்த கணத்தில் அது இப்படித்தான் என்று நம்மால் விளங்கிக்கொள்வது சாத்தியமே இல்லை. அதாவது, வாழ்வு அகவயமானது. அதைப் புறவயமாகப் புரிந்து கொண்டதுதான் நமது ஆகப்பெரிய சிக்கல்.

 

முருகவேலன்,

படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,

கோபிசெட்டிப்பாளையம்.

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இங்கிலாந்து, ஐரோப்பா பயணம்

$
0
0

index

 

நாளை [ஜூன் 10] திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பி அபுதாபி வழியாக லண்டன் செல்கிறேன். அருண்மொழியும் உடன் வருகிறாள்.  லண்டனில் ஒருவாரம்.அங்கிருந்து காரில் நண்பர்களுடன் கிளம்பி இரண்டுவாரம்  ஐரோப்பாவை சுற்றிவருவதாகத் திட்டம். பாரீஸ், ரோம், வெனிஸ் எல்லாம் செல்வதாக இருக்கிறோம். லண்டன் நண்பர்களின் ஏற்பாடு

 

17 ஆம் தேதி மாலை லண்டனிலிருந்து ஐரோப்பாவுக்குக் கிளம்புவோம். முதலில் பாரிஸ், ஜெனிவா, பிசா, ஃப்ளோரன்ஸ், ரோம், வாட்டிகன், வெனிஸ், முனிக், ஜெர்மனி.

 

இது சொந்தச்செலவிலான பயணம் என்பதனால் இலக்கியக்கூட்டங்கள், இலக்கியவாசகர் சந்திப்புகள் எவற்றிலும் பங்கெடுப்பதாக இல்லை. முழுக்கமுழுக்க ஊர் சுற்றல் மட்டுமே. முடிந்தால் அவ்வப்போது எழுதுகிறேன் .

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சோ.தர்மன்

$
0
0

writer-dharman

தூர்வை என்று ஒருநாவல் எனக்கு தபாலில் வந்தது. பிரித்ததுமே தெரிந்தது, அது அத்தியாயங்களாகப் பகுக்கப்படாத நாவல். ஒரு சோர்வுடன் தூக்கி ‘அந்தால’ வைத்துவிட்டேன். பின்னொருமுறை எடுத்து பிரித்து எதையோ வாசித்தபோது அதில்வரும் காடுவெட்டி முத்தையா  ‘ஆங்கிலம்’ பேசும் பகுதி சிக்கியது. சிரித்துக்கொந்தளித்தேன். நாவலை வாசித்துமுடித்ததுமே சோ.தருமனுக்கு ஒரு நீண்ட கடிதம்போட்டேன். அதைப்பற்றி ஒரு மதிப்புரையும் எழுதினேன். இன்றுவரை சோ.தருமன் எனக்குப்பிடித்த எழுத்தாளர்.

 

சோ. தர்மனின் புனைவுலகம் அடித்தள மக்களைச் சார்ந்தது. ஆனால் கழிவிரக்கமோ அரசியல்சீற்றமோ அற்றது. இந்த தனித்தன்மையே அவரை முக்கியமான படைப்பாளியாக ஆக்குகிறது. கழிவிரக்கமும் அரசியல்சீற்றமும் இருக்கலாகாது என்றல்ல. ஆனால் அவை நிபந்தனைகள் அல்ல என்று, இலகுவான மனநிலையிலேயே அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதமுடியும் என்றும் ஓர் எழுத்தாளர் கண்டுகொள்வதிலிருக்கும் அந்தரங்கமான பயணத்தையே நான் கொண்டாடினேன்

காடுவெட்டி முத்தையா என்னும் கதாபாத்திரத்தை வாசித்தபோது அடைந்த இனிமையின் காரணம் அதுவே.  அடித்தள மக்களை பலியாடுகளாகவோ அரசியல் பேச்சாளர்களாகவோ மட்டுமே புனைவுலகில் பார்த்துவந்த எனக்கு அம்மக்களின் இயல்புகளில் ஒன்றான கேலியும் கிண்டலும் நிறைந்த காடுவெட்டி முத்தையா மிக அணுக்கமானவராகத் தெரிந்தார். இன்னும் சொல்லப்போனால் என் அப்பாவுக்கு அணுக்கச்சேவகனாகவும், அரசியல் விமர்சகனாகவும் திகழ்ந்த தங்கையனைப்போலிருந்தார் .

ஒருமுறை பூசைவைக்க பிள்ளையாருக்காக நான் அவசரமாக ஓடி சாணி கொண்டுவந்தேன். அதை உருட்டி வாழையிலையில் ஓரமாக வைத்து என் தாத்தாவுக்கு அப்பா படையலிட்டார். தங்கையன் “பிள்ளே, அது சாணிதானே? வெளையிலே இருந்து உருட்டி எடுத்ததாக்கும். மத்ததோண்ணு தோணுது கேட்டுதா“ என்றார். அப்பா கடுப்பாகி பின் சிரிப்பை அடக்கிக்கொண்டார். அந்தப்பகடி அடித்தளமக்களின் இயல்புகளில் ஒன்று. தமிழிலக்கியத்தில் அதை சோ.தருமனின் எழுத்தில்மட்டுமே காணமுடியும்.

 

தன்னை கோமாளியாக ஆக்கிக்கொண்டு தன்னை சூழ்ந்து நின்றிருக்கும் ஆதிக்கத்தை பகடிசெய்கிறார்கள் அவர்கள்.  நுணுக்கமாக தங்களுக்கு அளிக்கப்பட்ட எல்லைகளைக் கடந்துசெல்கிறார்கள். என் அப்பாவும் அம்மாவும் தற்கொலைசெய்துகொண்டபின் வீடு இடிந்து கிடப்பதைப்பற்றி என்னிடம் குலசேகரம் சந்தையில் சந்தித்தபோது தங்கையன் சொன்னார் “உள்ள ரெண்டு ஆவியும் கெடந்து நல்ல சண்டையாக்கும் கேட்டுதா? கொன்னுபோடுவேன்னு சொல்லமுடியாது, அதுக்க வெறியாக்கும் எஜமானுக்கு”

பிற எங்கும் காணக்கிடைக்காத ஓர் உலகத்தை நம்பகமாக தன் புனைவுலகில் உருவாக்கியளிப்பவரே  முக்கியமான புனைவெழுத்தாளர். சோ. தர்மனின் உலகம் அவரால் இந்த வாழ்க்கைவெளியில் இருந்து அள்ளித்திரட்டப்பட்டது. அவரது நடை நேரடியானது. அவரது வட்டாரவழக்கு ஆவணத்தன்மை கொண்டதல்ல, மாறாக நுணுக்கமான மொழிவெளிப்பாடாகவும் வேடிக்கைவிளையாட்டாகவும் மாறக்கூடியது. அவரது கதாபாத்திரங்கள் நாம் எங்கும் காணக்கூடியவர்கள், அவர்களின் அகம் சோ. தர்மனால் மட்டுமே முன்வைக்கப்படுவது.

பூமணியின் மருகன் சோ. தர்மன். பூமணியின் இயல்புவாத அழகியலும் கி.ராஜநாராயணனின் நாட்டாரியல்கூறுகளும் கலந்த புனைவுலகம் அவருடையது. பூமணியின் கதாபாத்திரங்கள் ஒருவகை ஆவணத்தன்மையுடன் பதிவுபெறுபவை. கி.ராஜநாராயணனின் கதாபாத்திரங்கள் நம்முடன் விளையாடுபவை.

தமிழின் முக்கியமான புனைகதையெழுத்தாளர்களில் ஒருவரான சோ. தர்மன் பெரிதும் கவனிக்கப்பட்டவர் என்று சொல்லமுடியாது. அவரது தூர்வை, கூகை என்னும் இரு நாவல்களையும் தமிழில் எழுதப்பட்ட முக்கியமான ஆக்கங்கள் என ஐயமின்றிச் சொல்லமுடியும்

 

 

சோ தருமன் பேட்டிகளைப்பற்றி 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77

$
0
0

[ 2 ]

இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்கொடி பறந்த அணிப்படகு அலைகளில் எழுந்து தெரிந்ததுமே அஸ்தினபுரியின் துறைமேடையில் முரசுபீடத்தில் நின்றிருந்த நிமித்திகன் தன் வெள்ளிக்கோலை தலைக்குமேல் தூக்கி மும்முறை சுழற்றினான். துறைமுற்றத்தின் இடதுநிரையில் அணிவகுத்திருந்த இசைச்சூதர்கள் முழங்கத் தொடங்கினர். நடுவே பொற்தாலங்கள் ஏந்திநின்ற அணிச்சேடியர் தங்கள் ஆடை சீரமைத்து தாலம் ஏந்தி நிரை நேர்நோக்கினர். வலது நிரையில் நின்றிருந்த வைதிகர்கள் கங்கைநீர் நிறைந்த பொற்குடங்களையும் மஞ்சளரிசியும் மலரும் நிறைந்த தாலங்களையும் எடுத்துக் கொண்டனர்.

அலைகளில் எழுந்தும் விழுந்தும் ஊசலாடி அணுகிய கொடிப்படகு துறைமேடையை நோக்கி பாய்களை மடித்தபடி கிளைதேரும் கொக்கு என வந்தது. அதன் அலகுபோல் நீண்டிருந்த அமரமுனையில் நின்ற படகுத்தலைவன் அணைகயிறுக்காக கையசைத்துக் காட்டினான். துறையிலிருந்து  இறுக வளைக்கப்பட்ட பெருமூங்கிலில் தொடுத்து நிறுத்தப்பட்ட பேரம்புடன் பிணைக்கப்பட்டிருந்த வடம் நீர்ப்பாம்பு போல எழுந்து வளைவு நீட்டி அப்படகை நோக்கி பாய்ந்துசென்று அதன் அமரமுனையில் விழுந்தது. மூன்று படகுக்காரர்கள் அதை எடுத்து படகின் கொடிமரத்தில் சுற்றினர். யானைகள் இழுத்த திகிரிகள் உரசி ஓலமிட்டபடி சுழல வடம் இழுபட்டு கழிபோலாகி அணிப்படகை துறைநோக்கி இழுத்தது. துறை அதை தன் உடலுடன் சேர்த்து அணைத்துக்கொண்டது.

படகிலிருந்து இந்திரப்பிரஸ்தத்தின் கொடியுடன் கவசவீரன் ஒருவன் இறங்கி நடைபலகை வழியாக வந்து படகுத்துறைமேல் ஏறி முழந்தாளிட்டு வணங்கி அக்கொடியை தரையில் ஊன்றினான். துறைமுற்றமெங்கும் நிறைந்திருந்த அஸ்தினபுரியின் முதற்படைவீரர்களும் அகம்படியினரும் ஏவலரும் வாழ்த்தொலி எழுப்பினர். அணிப்படகிலிருந்து மங்கலத்தாலங்கள் ஏந்திய பன்னிரு சேடியரும் உடன் மங்கல இசை எழுப்பியபடி சூதரும் இறங்கி வந்தனர். தொடர்ந்து வந்த காவல் படகுகள் ஒவ்வொன்றும் அணிப்படகிலிருந்தே வடம் பெற்று தங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துக்கொண்டு நீண்ட மாலையென்றாயின. அவற்றிலிருந்து வேலும் வில்லும் ஏந்திய படைவீரர்கள் நீர் மின்னும் கவசஉடைகளுடன் இறங்கி துறைமேடையில் அணிவகுத்தனர்.

துறைமுற்றத்திலிருந்து விதுரர் கனகருடனும் சிற்றமைச்சர்களுடனும் நடந்து துறைமேடைக்கு வந்தார். தருமனின் நந்த உபநந்த கொடியும் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்கொடியும் சூடிய அரசப்படகு கங்கையின் அலைகளில் பன்னிரு பாய்கள் புடைத்து நின்றிருக்க எழுந்தது. “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் வாழ்க! அறம் அமைந்த அண்ணல் வாழ்க! பாண்டவ முதல்வர் வாழ்க! குருகுல மூத்தோன் வாழ்க! ஹஸ்தியின் குருவின் கொடிவழியோன் வாழ்க!” என்று துறைமுகப்பு முழங்கியது. படகுத்துறையின் நான்கு பெருமுரசங்களும் இடியென ஒலிக்கத் தொடங்கின.

ஒவ்வொரு பாயாக சுருங்கி கொடிமரத்தை ஒட்டி சுற்றிக்கொண்டு இழுபட்டு கீழிறங்க தருமனின் படகு கூம்பிய மலரென்றாகி அருகணைந்தபோது அதன் அமரமுகப்பு முலைதேரும் கன்றின் மூக்குபோல நீண்டு படகுத்துறையை நாடியது. மாலையென கோத்துக்கொண்ட காவல்படகுகள் நீண்டு அதை வளைத்து கயிறுகளை வீசி  குழிபட்ட களிறை பயின்ற யானைகளென அதன் பேருடலை பற்றிக்கொண்டன. அலைகளில் அதை நிறுத்தி மெல்ல இழுத்து படகுத்துறை நோக்கி கொண்டுவந்தன. அருகணைந்ததும் நாணியதுபோல் சற்று முகம் விலக்கி ஆடி நின்றது. அன்பு கொண்ட நாய்க்குட்டியென விலாப்பக்கமாக நகர்ந்து படகுத்துறையை வந்து தொட்டு உரசியது. அதிலிருந்து நடைப்பாலம் எழுந்து படகுத்துறைமேல் படிந்தது. வீரர்கள் அதை சேர்த்துக்கட்டினர்.

இந்திரப்பிரஸ்தத்தின் செங்கோலுடன் படைவீரன் ஒருவன் தோன்றி நடைபாலத்தின் மேல் அணிப்படையினர் மின்னுருக்களென பதிந்த கவச உடைகளுடன் நடந்து வந்தான். அவனைத் தொடர்ந்து எண்மங்கலங்கள் நிறைந்த தாலங்களுடன் சேடியர் எழுவர் நடந்து வந்தனர். அரசனின் உடைவாளுடன் கவச வீரனொருவன் வர தொடர்ந்து தருமன் இடப்பக்கம் திரௌபதியும் வலப்பக்கம் சௌனகரும் உடன்வர நடைபாலத்தில் சிறிய சீரடி எடுத்து வைத்து ஏறி படகுத்துறையை அணுகினார். அவருக்குப் பின்னால் அரச உடையணிந்த பீமனும் அர்ஜுனனும் வந்தனர். நகுலனும் சகதேவனும் தொடர்ந்தனர்.

விதுரர் கைகூப்பியபடி அவர்களை அணுகி தலைவணங்கி “அஸ்தினபுரிக்கு இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசரை வரவேற்கிறேன். இவ்வரவு அனைத்தையும் இனிதாக்குக! என்றும் குருதியுறவும் இனிய நினைவுகளும் வளர்க!” என்றார். “வாழ்க! என்றும் அவ்வண்ணமே பொலிக!” என்று யுதிஷ்டிரர் மறுமொழி சொன்னார். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை வணங்கி வரவேற்கிறேன். தங்கள் கால்கள் பட்ட இம்மண்ணின் வயலிலும் கருவூலத்திலும் பொன் நிறையட்டும்” என்றார் விதுரர். அவள் புன்னகைத்து “நன்று நிறைக!” என்றாள்.

பாண்டவர் நால்வருக்கும் தனித்தனியாக முகமன் சொல்லி விதுரர் வரவேற்றார். வைதிகர்கள் அணுகி கங்கைநீர் தெளித்து அரிமலர் தூவி வேதமோதி இந்திரப்பிரஸ்தத்தின் அரசரை வாழ்த்தினர். வாழ்த்தொலிகளின் நடுவே முகம் மலர்ந்து கைகூப்பியபடி மெல்ல நடந்தார் தருமன்.

துறைமுற்றத்தில் அவர்களுக்காக ஆறு பொற்தேர்கள் காத்து நின்றிருந்தன. அகம்படி ஓடுவதற்கான பன்னிரு வெண்புரவிகள் அவற்றில் ஏறிய கவச வீரர்களுடன் கால்தூக்கி தலையுலைத்து பிடரி சிலிர்த்து நின்றிருந்தன. “அஸ்தினபுரியின் அரசமணித்தேர் தங்களுக்காக காத்திருக்கிறது” என்றார் விதுரர். “நன்று!” என்று முகம் மலர்ந்து சொன்ன தருமன் சௌனகரிடம் “தாங்கள் எனது தேரில் ஏறிக்கொள்ளுங்கள், அமைச்சரே” என்றார். அவர் தலைவணங்கினார்.

விதுரர் வழிகாட்டி அழைத்துச்செல்ல அஸ்தினபுரியின் பட்டத்துத் தேரில் யுதிஷ்டிரர் ஏறி அமர்ந்தார். வலப்பக்கம் சௌனகர் தூண்பற்றி நின்றார். ஏழு வெண்புரவிகள் இழுத்த அத்தேர் காற்றிலேறுவதுபோல அஸ்தினபுரியின் அரசப்பாதையில் எழுந்தது. பாண்டவர் நால்வரும் திரௌபதியும் தொடர்ந்து சென்ற தேர்களில் ஏறிக்கொண்டனர். முன்னால் சென்ற தேர்களில் முரசுகள் அவர்கள் நகர் நுழைவதை அறிவித்து ஓசையிட்டன. அகம்படியும் காவல்படையும் அவர்களை தொடர்ந்தன.

ஒவ்வொரு இலையும் நாவென மாறியதுபோல் வாழ்த்தொலிகள் அவர்களைச் சூழ்ந்து அலையடித்தன. தேர் நெடும்பாதையை அடைந்து சீர்விரைவு கொண்டபோது சேக்கைபீடத்தில் சாய்ந்தமர்ந்து கால்களை நீட்டிக்கொண்ட தருமன் சௌனகரிடம் “இந்திரப்பிரஸ்தத்திலிருந்து கிளம்பும்போதே எனது உள்ளம் இனிய உவகையால் நிறைந்தது, அமைச்சரே. நான் எண்ணி வந்தது பிழையாகவில்லை. பார்த்தீர்களல்லவா! அரசமணித்தேர்! அமைச்சரே வந்து வரவேற்கிறார். ஒவ்வொன்றும் இனிதென்றே நிறைவேறும்” என்றார். சௌனகர் “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

விழிசுருக்கி “ஐயம் கொள்கிறீரா?” என்றார் தருமன். “ஐயமல்ல” என்றார் அவர். “பின்…?” என்றார் தருமன். “படித்துறைக்கு கௌரவர்களில் ஒருவரேனும் வந்திருக்கலாம்” என்றார். “அவ்வாறு வரும் வழக்கமுண்டா?” என்றார் தருமன். “அரசர்கள் வரவேற்க வரவேண்டுமென்று நெறியில்லை. அமைச்சரோ படைத்தலைவர்களோ வந்தால் போதும். ஆனால் தாங்கள் அரசர் மட்டும் அல்ல. அவர்களின் குருதியுறவு. அவர்கள் அனைவருக்கும் மூத்தவர். தங்களை வரவேற்க அவர்கள் வந்திருக்க வேண்டும்” என்றார்.

தருமன் “அதையெல்லாம் எண்ணி நோக்கினால் வீண் ஐயங்களையே வளர்க்க நேரும். வரவேற்க எண்ணியிருக்கலாம். அவையில் எவரேனும் முறைமையை சுட்டிக்காட்டி மறுத்திருக்கலாம். ஏன், விதுரரே எந்நிலையிலும் முறைமைகளை மீறவிழையாதவர்” என்றார். “ஆம், அவ்வண்ணமே இருக்க வேண்டும் என்று விழைகிறேன்” என்றார் சௌனகர். தருமன் “அவ்வண்ணமே. நம்பிக்கை கொள்ளப் பழகுக, அமைச்சரே!” என்றார். “அமைச்சரும் வேட்டைநாயும் ஐயப்படுவதையே அறமெனக் கொண்டவை” என்றார் சௌனகர். தருமன் நகைத்தார்.

அஸ்தினபுரியை நோக்கி செல்லும் சாலையின் இருபக்கங்களிலும் நின்ற ஒவ்வொரு மரத்தையும் தனித்தனியாக அடையாளம் கண்டு தருமன் உளம் மலர்ந்தார். “கனிந்து முதிர்ந்த மூதன்னையரைக் கண்டதுபோல் இருக்கிறது, அமைச்சரே” என்றார். “ஒவ்வொரு கிளையின் வடிவும் நன்கு தெரிந்தவையாக உள்ளன. இந்தப் பாதையளவுக்கு என் உள்ளத்தில் நன்கு பதிந்த இடம் பிறிதுண்டா என்றே ஐயம் கொள்கிறேன்” என்றார். “அந்த மகிழமரம் முதல் முறையாக நான் பார்க்கும்போது ஒரு செங்கழுகை ஏந்தியிருந்தது” என்றார். மரங்கள் காலைவெயிலில் தளிரொளி கொண்டன. தழைப்பு கொந்தளிக்க கிளையசைத்தன. “நம் வரவை அவையும் அறிந்திருப்பதுபோல் தோன்றுகிறது” என்றார். சௌனகர் புன்னகையுடன் அவரை நோக்கி நின்றார்.

“நான் விண்ணுலகு செல்வேனென்றால் என் மூதாதையரை நோக்கி என்னை கொண்டு செல்லும் வழி இப்பாதையின் மறுவடிவாக இருக்கும், சௌனகரே” என்று உணர்வால் நெகிழ்ந்த குரலில் தருமன் சொன்னார். தொலைவில் அஸ்தினபுரியின் கோட்டை தெரிந்ததும் நிலைகொள்ளாமல் எழுந்து நின்று தூணைப்பற்றியபடி நின்று விழிதூக்கி அதை நோக்கினார். “இந்திரப்பிரஸ்தத்தின் பெருங்கோட்டையை பார்த்தபின் இது மிகச்சிறிதென தெரிகிறது. ஆனால் அது இன்னும் எனது நகராகவில்லை. அக்கோட்டையை நான் கவசமென அணிந்திருக்கிறேன். இதுவே என் ஆடை” என்றார். அது நெருங்கி வரும்தோறும் சிறுவனைப்போல தோள் துள்ள “கரிய சிறுகோட்டை.  ஆமை போல என்னை வரவேற்க தன் ஓட்டுக்குள்ளிருந்து அது தலைநீட்டப்போகிறது” என்றார்.

அதன் மேல் எழுந்த கொடிகள் தெரியத்தொடங்கியதும் “சிறகு கொள்கிறாள் நாக அன்னை!” என்றார். அவரது உவகைத் துள்ளலை சௌனகர் சற்று வியப்புடன் நோக்கியபின் தன்னை அடக்கும்பொருட்டு விழிதிருப்பிக் கொண்டார். கோட்டை அவர்களுக்கு மேல் கவிவது போல் எழுந்ததும் யுதிஷ்டிரர் “அதற்கு மேல் எனது கொடி பறக்கிறது, அமைச்சரே. நான் இன்னமும் அதற்குள்ளேயே இருப்பதுபோல் உணர்கிறேன். வெளியே செல்லவேயில்லை. அங்கு பிதாமகருடனும் தந்தையுடனும் அமர்ந்து சொல்லாடிக் கொண்டிருக்கிறேன். ஒருபோதும் அதை நீங்கியதே இல்லை… ஆம்!” என்றார்.

கோட்டையின் சரிந்த நிழல் தன் தேர்மேல் வந்து தொட்டபோது தருமன் கைகூப்பியபடி கண்ணீர் மல்குவதை சௌனகர் கண்டார். “தேரை நிறுத்து! நிறுத்து தேரை!” என்று பதறிய குரலில் அவர் கூறினார். பாகன் திரும்பி சௌனகரை நோக்க தேரை நிறுத்தும்படி அவர் கண்காட்டினார். தேர் சகடங்களின் மீது தடைக்கட்டை உரச விரைவழிந்து நின்றது. கடிவாளம் இழுக்கப்பட்ட புரவிகள் கழுத்தை வளைத்து புட்டம் சிலிர்க்க கால் தூக்கி நின்ற இடங்களிலேயே விரைவு ததும்பின.

“அரசே…” என்று சௌனகர் மெல்லிய குரலில் சொன்னார். பின்னால் திரும்பிப் பார்த்தபோது தொடர்ந்து வந்து கொண்டிருந்த தேர்கள் அனைத்தும் கடிவாளங்கள் இழுக்கப்பட்டு விரைவழிந்திருப்பதை கண்டார். அகம்படிப்படையினரும் காவல்படையினரும் ஒருவரிடமிருந்து ஒருவர் ஆணை பெற்று அமைந்தனர். தருமன் கூப்பிய கைகளுடன் தேரின் படிகளில் கால்வைத்து இறங்கி மண்ணில் நின்றார். நடுங்கும் உதடுகளும் ததும்பும் முகமுமாக அண்ணாந்து கோட்டையை பார்த்தார். தொடர்ந்து வந்த தேரிலிருந்து விதுரரும் கனகரும் இறங்கி அவர்களை நோக்கி வருவதை சௌனகர் கண்டார்.

அவரும் தொடர்ந்து இறங்கி தருமனுக்குப் பின்னால் நின்று “அரசே…” என்று மீண்டும் மெல்லிய குரலில் அழைத்தார். “முறைமைகள் பல உள்ளன, அரசே” என்றார். தருமன் அவர் குரலை கேட்கவில்லை. குனிந்து சகடங்கள் ஓடி அரைத்த மென்பூழியில் ஒரு கிள்ளு எடுத்து தன் நெற்றியில் அணிந்து கொண்டார். பாதக்குறடுகளை கழற்றி தேரின் அருகிலேயே விட்டுவிட்டு வெறும் கால்களுடன் மண்ணை மிதித்து கோட்டைக்குள் நடந்து சென்றார். சௌனகர் பின்னால் திரும்பி நோக்கியபடி பதைப்புடன் அவரைத் தொடந்து சென்றார்.

கைகூப்பியபடி நடந்து வரும் தருமனைக் கண்டு கோட்டையில் தேர்நிரையை வரவேற்கக் காத்திருந்த காவலர்தலைவனும் மெய்க்காவல் வீரர்களும் திகைத்தனர். அப்போது என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. காவலர்தலைவன் கைகளை வீசி முரசுகள் முழங்கும்படி ஆணையிட்டான். கோட்டை மேல் இருந்த அனைத்து முரசுகளும் இணைந்து பேரொலி எழுப்பின.

எவரையும் பார்க்காதவராக சீர் நடையுடன் வந்த தருமன் கோட்டை வாயிலுக்குள் நுழைந்து கடந்து மறுபக்கம் சென்றார். அவரை வணங்கிய வீரர்களை, தாழ்த்தப்பட்ட கொடிகளை அவர் காணவில்லை. கொம்புகளும் முரசுகளும் எழுப்பிய பேரொலியை கேட்கவில்லை. கோட்டைக்குள் பெருமுற்றத்தில் அவரை வரவேற்பதற்காக வந்த அஸ்தினபுரியின் குடித்தலைவர்களும் வணிகர் குழுத்தலைவர்களும் வைதிகர்களும் காத்திருந்தனர். அரசப் பொற்தேரை எதிர்பார்த்து நின்றிருந்தமையால் கூப்பிய கைகளுடன் தனித்து நடந்து வந்த தருமனை அவர்கள் முதலில் அறியவில்லை. எவரோ ஒருவர் உரத்த குரலில் “அரசர்…!” என்று கூவினார். ஒரே கணத்தில் பலர் அவரைக் கண்டு “அரசர்! அரசர்!” என்று ஒலியெழுப்பினர்.

முதிய குலத்தலைவர் ஒருவர் இரு கைகளையும் தலைக்குமேல் விரித்தபடி “பேரறச்செல்வர்! குருகுல முதல்வர்! புவியாளும் மாமன்னர்!” என்று வெறியாட்டெழுந்தவர் போல கூவியபடி அவரை நோக்கி வந்தார். “பாரதர்! பரதவர்ஷர்! பரதசார்த்தூலர்! பரதபிரவரர்! தர்மர்! தர்மஜர்! தர்மநந்தனர்!” என்று வாழ்த்தியபடி முழங்காலில் மடிந்தமர்ந்தார். “அஜமீடர்! அஜாதசத்ரு! குருசார்த்தூலர்! குருத்வஹர்! குருசிரேஷ்டர்! குந்தீ நந்தனர்!” நெஞ்சை அறைந்தபடி அவர் விம்மி அழுதார். “குரூத்தமர்! குருபுங்கவர்! குருவர்த்தனர்!”

அஸ்தினபுரியின் குடிமக்கள் அனைவரும் கண்ணீரும் கொந்தளிப்புமாக வாழ்த்தொலி எழுப்பினர். பலர் முழந்தாள் மடித்து நிலத்தில் அமர்ந்தனர். நெஞ்சை பற்றிக்கொண்டு விம்மி அதிர்ந்தனர். அரசரைத் தொடர்ந்து வந்த சௌனகர் தன்னைச் சூழ்ந்து நிறைந்த அவ்வுணர்ச்சிப்பெருக்கைக் கண்டு திகைத்து நின்றார்.

அவருக்குப் பின்னால் அணுகி வந்த விதுரர் “முறைமைகள் ஏதும் தேவையில்லை, அமைச்சரே. அவர்கள் இயல்புபடி இருக்கட்டும்” என்றார். “பாதுகாப்புகள்…?” என்றார் சௌனகர். “அவரிடம் அமைந்த அறத்தைவிட பெரிய பாதுகாப்பை தெய்வங்கள் அளிக்க முடியுமா என்ன?” என்றார் விதுரர்.

“அரசே, இந்நகருக்கு அறம் மீண்டுவிட்டது. இனி எங்கள் குடிகள் வாழும்” என்று கூவியபடி முதியவர் ஒருவர் ஓடிவந்து கால் தடுக்கியது போல் நிலைதடுமாறி தருமனின் கால்களில் விழுந்தார். புழுதி படிந்த அவர் கால்களை பற்றிக்கொண்டு அதில் தன் தலையை முட்டியபடி “இந்நகரை கைவிடாதிருங்கள், எந்தையே! எளியவர்கள் மேல் அளி கொள்ளுங்கள்! எங்கள் தொல்நகரை இருள விடாதீர்கள்!” என்று கதறினார்.

தலைக்குமேல் கையெடுத்துக் கூப்பி நெஞ்சில் அறைந்து அங்கிருந்தோர் அனைவரும் அழுது கொண்டிருந்தனர். ஈசல்புற்று வாய்திறந்ததுபோல் நகரத்தின் அனைத்துத் தெருமுனைகளில் இருந்தும் மக்கள் பெருகி அங்கு வந்தனர். நோக்கியிருக்கவே அஸ்தினபுரியின் கோட்டை முகப்புப் பெருமுற்றம் முழுக்க தலைகளால் நிறைந்தது. கையிலிருந்த மலர்களை ஆடைகளை அவரை நோக்கி வீசினர். “எங்களின் அரசே! எங்கள் தந்தையே! எங்கள் இறையே!” என்று கூவியது கூட்டம்.

தருமனை நெருங்க முயன்ற அரசியும் இளையவரும்கூட அக்கூட்டத்தால் உந்தி அகற்றப்பட்டனர். எந்த விசை அவர்கள் ஒவ்வொருவரையும் தங்கள் இல்லங்களிலிருந்து அங்கு அழைத்து வந்ததோ அதற்கிணையான விசையொன்றால் அவர்கள் அவரை முற்றிலும் அணுகாமல் வளைத்து நின்றனர். அரற்றியும் அழுதும் கொந்தளிக்கும் பெருந்திரளின் நடுவே உருவான சிறு வட்டத்தின் மையத்தில் கூப்பிய கரங்களுடன் புன்னகையும் கண்ணீருமாக தருமன் நின்று கொண்டிருந்தார்.

[ 3 ]

அஸ்தினபுரியின் அரச விருந்தினருக்கான மாளிகையின் தெற்குநோக்கிய சிற்றவைக்கூடத்தில் பாண்டவர்கள் நால்வரும் தருமனுக்காக காத்திருந்தனர். சாளரத்தின் அருகே நகுலனும் சகதேவனும் கைகட்டி நின்றிருக்க பீடத்தில் தடித்த கால்களைப்பரப்பி தசைதிரண்ட கைகளை மடிமேல் வைத்து பீமன் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்னால் போடப்பட்ட சிறிய பீடத்தில் சௌனகர் உடலை ஒடுக்கியபடி இடக்கையால் தாடியை நீவிக்கொண்டு எண்ணத்தில் ஆழ்ந்திருந்தார். பீமன் தன்னருகே நின்றிருந்த அர்ஜுனனை நோக்கி “இன்னுமா சடங்குகள் முடியவில்லை?” என்றான்.

“அஸ்தினபுரியின் அனைத்து குலத்தலைவர்களும் முறைமை செலுத்துகிறார்கள்” என்று அர்ஜுனன் தாழ்ந்த குரலில் சொன்னான். “ஆம். இங்குதான் குலங்களுக்கு முடிவே இல்லையே! குழந்தைகளைப்போல அவை பிறந்துகொண்டே இருக்கின்றன” என்றான் பீமன். தோளில் சரிந்த தன் குழலை தள்ளி பின்னால் செலுத்தி தோல் நாடாவால் முடிந்த பின்பு “இன்றென்ன சடங்கு முறைகள் உள்ளன நமக்கு?” என்றான்.

சௌனகர் “சடங்குகள் என ஏதுமில்லை, இளவரசே. மூத்தவரை சென்று சந்திப்பதென்பது ஒரு முறைமை. பிதாமகர் பீஷ்மரையும் ஆசிரியர் கிருபரையும் துரோணரையும் பின்பு பேரரசர் திருதராஷ்டிரரையும் பேரரசி காந்தாரியையும் தாங்கள் சந்திக்கவேண்டும்” என்றார். பீமன் “அவர்கள் நமக்குச் செய்யும் முறைமைகள் ஏதுமில்லையா?” என்றான். சௌனகர் அவ்வினாவிற்கு மறுமொழி உரைக்கவில்லை.

“அவர்களில் எவரும் இத்தருணம் வரை நம்மை வந்து பார்க்கவில்லை. அஸ்தினபுரியின் அரசர் வந்து பார்க்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இளையோர் நூற்றுவர் இருக்கிறார்கள்” என்றான். அர்ஜுனன் “அவ்வாறு சந்திக்காமல் இருப்பதுதான் அவர்களின் முறைமையோ என்னவோ?” என்றான். “இங்கு கிளம்பி வரும்பொழுது இது ஒரு குடிசூழ் களியாட்டு என்று மூத்தவர் சொன்னார். அவர் இருக்கும் உளநிலையே வேறு. இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பது அதுவல்ல. நாம் போருக்கு முன்னரோ பின்னரோ இங்கு வந்திருக்கும் அயல் நாட்டவர் போலவே எண்ணப்படுகிறோம்.”

சௌனகர் “அது அஸ்தினபுரியின் குடிகளுக்கு பொருந்துவதல்ல. இன்று காலையிலே அதை பார்த்திருப்பீர்கள்” என்றார். பீமன் “ஆம், அதைத்தான் சொல்லவருகிறேன். கௌரவர்களுக்கு நம்மீது எத்தனை காழ்ப்பு இருக்கும் என்பதை இதனாலேயே உய்த்துணர முடிகிறது. இன்றைய காலைநிகழ்வுக்குப்பின் காழ்ப்பு மேலும் உச்சத்திற்கு சென்றிருக்கும். இந்நகரத்து மக்களின் உள்ளத்தை ஆள்பவர் மூத்தவரே என்பதில் இனி எவருக்கும் ஐயமிருக்காது” என்றான்.

அர்ஜுனன் “நாம் ஏன் வீண் சொல்லாடவேண்டும்? எதற்காக வந்தோமோ அதை ஆற்றி திரும்பிச் செல்வோம்” என்றான். “என்ன நிகழும் என்று எண்ணுகிறாய், இளையோனே?” என்றான் பீமன். “நிகழ்வதில் ஐயத்திற்கு இடமில்லை, மூத்தவர் தோற்பார்” என்றான். பீமன் “அவரும் நெடுநாட்களாகவே பகடையாடுகிறார் அல்லவா?” என்றான். அர்ஜுனன் நகைத்து “பகடை என்ன அம்பா நேர் வழியில் செல்வதற்கு? இவரது பகடையாடலை இவரது ஆடிப்பாவையுடன் மட்டுமே இப்புவியில் ஆட முடியும், மூத்தவரே. உறவின் தகவுகளில் ஊடுவழிகள் எத்தனை உள்ளன என்று அறிவதற்காகவே பகடையாடுகிறார்கள் மானுடர்” என்றான்.

பீமன் சிறிய கண்களில் ஐயத்தின் ஒளிவிட “சகுனி ஆடுவாரென்றால் அதில் கணிகரின் ஆடலும் கலந்திருக்கும் என்கிறாய் அல்லவா?” என்றான். “இத்தருணத்திற்காகவே அவர்கள் பல்லாயிரம் முறை பகடை உருட்டியிருக்கிறார்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். நகுலன் “மூத்தவரே, அவர் வென்றால் என்ன நிகழும்?” என்றான். “நாம் படைக்களத்தில் தோற்றதாக ஆகும். மூத்தவர் தன் மணிமுடியை துரியோதனன் முன் வைக்க நேரும். அவர் இங்கு இயற்றவிருக்கும் ராஜசூயத்தில் சிற்றசராக சென்று அமர்வார். அவர்களின் வேள்விப்புரவி இந்திரப்பிரஸ்தத்தின் மண்ணை கடந்துசெல்லும்” என்றான்.

பீமன் யானைபோல் உறுமி “நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. விரும்பியணைந்து  இத்தோல்வியை வாங்கி சென்னி மேல் சூடிக்கொள்கிறார் மூத்தவர். இன்று காலை அவரைச்சூழ்ந்து பெருகிய கண்ணீர் வெள்ளம் இவ்வாறு அறத்தின் பொருட்டு அவர் தோல்வியை சூடுவதனால் அளிக்கப்படுவது. அதுவே அவருக்கு நிறைவளிக்கிறது” என்றான். கசப்புடன் நகைத்தபடி “பெரியவற்றின் பொருட்டு தோல்வியுறுபவர்களை மானுடர்கள் வழிபடுகிறார்கள்” என்றான்.

கைகளால் பீடத்தை தட்டி நகைத்து “வழிபடப்படுவதன் பொருட்டு தோல்வி அடையத் துடிக்கிறார்கள் தெய்வமாக விழைபவர்கள். அதற்கு உதவும் என்றால் மூத்தவர் தன் தலையை தானே அறுத்து அஸ்தினபுரியின் அரசனின் காலடியில் வைக்கவும் துணிவார். அதற்குப்பின் அவருக்கு அஸ்தினபுரியின் தெற்கு மூலையில் ஒரு ஆலயம் கட்டப்படவேண்டும் என்பது மட்டுமே அவரது முன்கூற்றாக இருக்கும்” என்றான். சௌனகர் புன்னகைத்துவிட்டார்.

அர்ஜுனன் “நாமே இத்தகைய சொற்களை சொல்லாமலிருக்கலாமே, மூத்தவரே?” என்றான். “எப்படி சொல்லாமல் இருப்பது, இளையோனே? நமது வீரத்தையும் வெற்றியையும் பணயப்பொருளென ஏந்தி இந்நகருக்குள் நுழைந்திருக்கிறார். அவர்கள் வெல்லப்போவது நமது மூத்தவரை அல்ல, நாம் ஈட்டிய வெற்றியையும் அதன் விளைகனியாக அவர் சூடியிருக்கும் மணிமுடியையும் செங்கோலையும்தான். தோற்பது அவர் மட்டுமல்ல, நாமும் கூடத்தான்” என்றான் பீமன்.

அர்ஜுனன் “நாம் எதையும் ஈட்டவில்லை, மூத்தவரே. நான் ஆற்றும் எச்செயலிலும் எனக்கென நான் கொள்வதென்று எதுவுமில்லை. அதுவே தங்களுக்கும். இறுதிநாள் வரை எங்கும் நில்லா தனியனாக நானும் காட்டிருளுக்குள் கலந்து மறையும் அரைநிஷாதனாக நீங்களும் வாழப்போகிறோம். வெற்றியென்றும் புகழென்றும் இவர்கள் சொல்வதனைத்தும் நம் மூத்தவருக்கு நாம் அளித்த காணிக்கை. அது அவரது செல்வம். அதை எவ்வண்ணம் செலவழிக்கவும் அவருக்கு உரிமையுண்டு. அதைக் கொண்டு அவர் பாரதவர்ஷத்தை ஆளலாம். அல்லது அதைத் துறந்து புகழ் மட்டுமே போதுமென்று முடிவெடுக்கலாம். நாம் சொல்வதற்கொன்றுமில்லை” என்றான்.

பீமன் ஒன்றும் சொல்லாமல் தன் மீசையற்ற மேலுதடை கைகளால் வருடியபடி சிறிய விழிகளைத் திருப்பி மாலையொளியில் சுடர் கொண்டிருந்த சாளரத்திரைச்சீலையை நோக்கினான். சகதேவன் “வந்த அன்றே பிதாமகரையும் ஆசிரியர்களையும் தந்தையையும் தாயையும் அரசர் பார்த்தாகவேண்டுமென்பது நெறி. இப்போதே மாலை சாய்ந்துவிட்டது. அந்திக்குள் சந்திப்புகளை முடித்துக்கொண்டால் நன்று” என்றான்.

பீமன் சிரித்தபடி அவனை நோக்கி “வந்த அன்றே அனைவரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் அரசர் என்று சூதன் ஒருவன் சொல்லவேண்டும், அவ்வளவுதானே?” என்றான். நகுலன் “ஆம், அரசர்கள் வாழ்வது சூதர்கள் பாடலில்தான்” என்றான். “அவர்கள் ஒவ்வொருநாளும் காவியத்திற்குள் சென்றபடியே இருப்பவர்கள்.” பீமன் நகைத்து “இப்படியே சென்றால் பிறக்காத அரசனொருவன் சூதர் சொல்லிலேயே உருவாகி வாழ்ந்து புகழ் கொண்டுவிடக்கூடும்” என்றான்.

வெளியில் வாழ்த்தொலிகள் கேட்டன. வரவறிவிப்போன் கதவைத் திறந்து உள்ளே வந்து “இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசர் யுதிஷ்டிரர்!” என்று அறிவித்தான். பீமனும் அர்ஜுனனும் சௌனகரும் எழுந்து நின்றனர். கைகூப்பியபடி அறைக்குள் வந்த தருமன் சௌனகரை நோக்கி “வணங்குகிறேன், அமைச்சரே” என்றபின் கைகூப்பி நின்ற பீமனையும் அர்ஜுனனையும் நோக்கி தலையசைத்தபடி பீடத்தில் அமர்ந்தார். “மிகவும் களைத்திருக்கிறேன், அமைச்சரே. இன்றே பிதாமகரையும் ஆசிரியர்களையும் தந்தையையும் அன்னையையும் பார்த்தாகவேண்டுமல்லவா?” என்றார்.

“ஆம், முறைமைச் சந்திப்பு என்பதால் மிகையான பொழுதை செலவிடவேண்டியதில்லை. அரண்மனைக்கு வந்து மீளவேண்டுமென்பதில்லை. பிதாமகரையும் ஆசிரியர்களையும் சந்தித்தபின் அப்படியே அரசமாளிகைக்குச் சென்று அங்கேயே பேரரசரையும் பேரரசியையும் சந்தித்துவிடலாம்” என்றார் சௌனகர். “துரோணரும் கிருபரும் நகருக்குள்ளேயேதான் இருக்கிறார்கள்.”

“அஸ்வத்தாமன் வந்துவிட்டானா?” என்றார் தருமன். “ஆம், அவரும் ஜயத்ரதரும் நகருக்குள்ளே தங்கியிருக்கிறார்கள்.” தருமனின் இதழ் அசைந்து நிலைத்ததிலிருந்து அவர் அங்கரைப்பற்றி கேட்கப்போகிறார் என்று உணர்ந்த சௌனகர் “அங்கநாட்டரசர் அரசருடன் அவரது மாளிகையிலேயே தங்கியிருக்கிறார்” என்றார். அதை கேட்டதுபோல் காட்டாமல் விழிகளைத் திருப்பி நகுலனை நோக்கிய தருமன் “அஸ்தினபுரியின் மக்களின் உணர்வெழுச்சியை பார்த்தாயல்லவா, இளையோனே?” என்றார்.

“ஆம், அவர்கள் உள்ளத்தில் தாங்கள் வாழ்கிறீர்கள், அரசே” என்றான் நகுலன். சகதேவன் “தாங்கள் விரைந்து நீராடி உடைமாற்றி வருவீர்கள் என்றால் பிதாமகரை சந்திக்கச் செல்லலாம்” என்றான். தருமன் சால்வையை இழுத்து அணியத் திரும்புகையில் பீமன் உரத்த குரலில் “மூத்தவரே, இத்தருணம் வரை உங்கள் குருதி வழியில் வந்த ஒருவர்கூட உங்களை வந்து சந்திக்கவில்லை என்பதை நோக்கினீர்களா?” என்றான்.

கையில் சால்வையுடன் திகைத்து நோக்கிய தருமன் “அவ்வாறு சந்திக்க முறைமை இல்லாமல் இருக்கலாம்” என்றார். “முறைமைகளை மீறி சந்திக்கவேண்டிய கடமை உள்ளது” என்றான் நகுலன். “நாம் உறவினராக இங்கு வரவில்லை என்பதை உணருங்கள், மூத்தவரே! பகையரசராக மட்டுமே இத்தருணம் வரை நாம் நடத்தப்பட்டிருக்கிறோம்” என்றான். தருமன் விழிகள் மாற “இருக்கட்டும். நான் பகையரசாக வரவில்லை. நூற்றைவருக்கும் மூத்தவனாக மட்டுமே வந்திருக்கிறேன். அவ்வண்ணமே என்றும் இருப்பேன்” என்றார்.

பீமன் சினத்துடன் “பகடையில் தோற்று, முடியும் கோலும் தாழ்த்தும்போதும் தாங்கள் அவ்வாறு கருதப்படுவீர்கள் என்றால் நன்று” என்றான். “இளையவனே, நான் எவ்வாறு கருதப்படுகிறேன் என்பதல்ல எனது வழியை அமைப்பது. என்னை எங்கு நான் வைக்க வேண்டுமென்று முடிவு செய்வது நான் மட்டிலுமே. எந்நிலையிலும் நூற்றைவருக்கும் மூத்தவன் மட்டுமே. அதன் பிறகே நான் அரசன்” என்றார். பீமன் தனக்குத்தானே சலிப்புற்றவன் போல தலையசைத்தான்.

தருமன் எழுந்து தன் சால்வையை எடுத்து தோளில் அமைத்துவிட்டு “நான் நீராடி வருகிறேன். நீங்கள் சித்தமாகிவிட்டீர்கள் என்று தோன்றுகிறது” என்றார். சௌனகர் “ஆம் அரசே, பொழுதில்லை” என்றார். அறை வாயிலை நோக்கி சென்ற தருமன் நின்று திரும்பி பீமனிடம் “ஆனால் நான் தோற்றுவிடுவேன் என்று ஐயமின்றி கூறினாய். எண்ணிக்கொள், எந்தப் பகடையிலும் நான் இதுவரை தோற்றதில்லை. பகடையின் பன்னிரு பக்கங்களிலும் அதன் பன்னிரண்டாயிரம் கோடி தகவுகளிலும் நான் அறியாத எதுவுமில்லை. அதை பகடைக்களத்தில் காண்பாய்!” என்றபின் வெளியேறிச் சென்றார்.

தொடர்புடைய பதிவுகள்

வெண்முரசு கலந்துரையாடல் –ஜூன் 2016

$
0
0

1

அன்புள்ள நண்பர்களுக்கு,

வரும் ஞாயிறறுக்கிழமை (12/06/2016) இம்மாதத்திற்கான வெண்முரசு கலந்துரையாடல் வடபழனியில் உள்ள நம் நண்பர் செளந்தரின் ‘சத்யானந்தா யோகா நிலையத்தில்’  நடக்கவிருக்கின்றது. நம் குழும நண்பர் வேணு தயாநிதி அவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்.

ஞாயிறு மாலை நான்குமணிக்கு கலந்துரையாடல் துவங்கும். வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

முகவரி மற்றும் நேரம்:

சத்யானந்தா யோகா நிலையம்

15/11 தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு

வடபழனி (ஆற்காடு சாலை ஓட்டல் சரவணபவன் அருகே)

சென்னை

செல்: 9952965505

நேரம்:- மாலை 4.00 முதல் 8.00 வரை

தொடர்புடைய பதிவுகள்

குளறுபடிகள், கடிதம்

$
0
0

 

bell11417699916823

அன்பின் ஜெ..

 

உங்களின் துயர் கண்டேன்.  இந்தியாவின் வான் வெளிப்பயணமும், விடுதித் தங்கலும், இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவின் பிட்ச்களில்  கிரிக்கெட் விளையாடுவது போன்றது. தகுந்த முன்பயிற்சியும், திட சித்தமும், மிக முக்கியமாக பிட்ச் பற்றிய முன்னறிவும் தேவை.

 

ஏர் இந்தியா ஒரு அற்புதமான விமான சர்வீஸ் – ஆனால் ட்ரங்க் வழிகளில். எடுத்துக்காட்டாக,  சென்னை மும்பை, தில்லி மும்பை – அதுவும் அதிகாலை / மாலை சர்வீஸ்கள்.. இந்த 9:30 மணி சர்வீஸ் போன்றவை, இன்னொரு சிறு நகரை இணைக்கும் சர்வீஸாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, உங்களின் விமானம், ஜெய்ப்பூர் போன்ற இன்னொரு ஊரில் இருந்து, தில்லி வந்து சென்னை செல்லும் விமானமாக இருக்கலாம். இவை பெரும்பாலும் இருப்பதிலேயே த்ராபை யான  விமானங்கள்..  9:30 மணிக்கு விமானம் பிடிக்கும் ஆளுக்கு நேரம் வெகு முக்கியமாக இருக்காது என்பதும் ஒரு காரணமும். அதே 6 மணிக்கு விமானம் பிடிப்பவர்கள், பெரும்பாலும், அன்று சென்று முடிக்க வேண்டிய வேலையாக வருவர்; எனவே, அந்த சர்வீஸுக்கு எப்பவும் நல்ல விமானங்கள் இருக்கும். நான் கடந்த 15 ஆண்டுகளாக மிக அதிகம் பயணம் சென்றிருக்கிறேன் – இந்த விமான தாமதம் என்பது ஜெட் ஏர்வேஸ் தவிர மீதி அனைத்திலும் (குளிர்காலத்தில் அனைத்து ஏர் லைன்ஸூகளும்) உண்டு என்பதுதான் என் அனுபவம்.

 

சமீப காலகட்டங்களில், ஸ்பைஸ் ஜெட் / கிங் ஃபிஷர் போன்ற விமானங்கள்,  மிக அதிகப் பிரச்சினைகளைத் தந்திருக்கின்றன.  ஏன், நேரம் தவறாமையின் மன்னர்கள் எனப் பீற்றிக் கொள்ளும் இண்டிகோ, ஒரு நாள் காலை 7  மணியில் இருந்து, மதியம் 2 மணி வரை ஒரு தீர்வும் சொல்லாமல், மும்பை ஏர்போர்ட்டில் (மும்பை / அமதாபாத் பயணம்) என்னை நிறுத்தி வெறுப்பேற்றியிருக்கிறார்கள் – நான் காரில் சென்றிருந்தாலே அமதாபாத் சென்று சேர்ந்திருப்பேன்.

 

இது போக, ஏர் இந்தியாவின் உணவு மற்றும் பயணிகள் பாதுகாப்பு (உங்களின் அம்மாயி வீட்டில் இருப்பது போல உணர்வு) – மற்றும் குளிர் காலத்தில், தில்லியில் விமானத்தை இறக்கி ஏற்றும் திறன் இவையெல்லாம் அதன் நேர்மறை அம்சங்கள்.. ஒரு முறைப் பயணத்தில், எனது சகாவின் முகத்தைப் பார்த்தே அவருக்கு மாரடைப்பு எனக் கண்டு கொண்டு அதற்கான மாத்திரை அளித்துக் காத்தார்.. (தனியார் ஏர்லைன்ஸ் அம்மணிகள் அவருக்கு, சாகும் முன்பு ஒரு அழகான புன்னகையை அளித்திருப்பார்கள்  ஸ்மைலி ஸ்மைலி..)

 

எனவே, சில மணி நேரம் தாமதம் என்பதை , இதெல்லாம் சகஜமப்பா என ஒரு சிரிப்புடன் எதிர்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.  ஏர் இந்தியாவைக் காக்க நீங்களும் நானும் தான் உதவ வேண்டும்..   வேற யார் இருக்காங்க?

 

விடுதிகள் விஷயத்தில், நம் முன்னோடியான நாஞ்சில் பல குறிப்புகளை அளித்திருக்கிறார்கள்.. நீங்களும் கடந்த 6-7 வருடமாகச் சென்னையில் தங்கிப் பழம் தின்று கொட்டையும் போட்டிருக்கிறீர்கள்.. இதற்குப் பின்னும் இணையத்தில் தேடியது உங்கள் தவறுதான் ஐயா..

 

நிற்க. இறுதியில், ஏடிஎம் விஷயத்தில் ஆஃப்பிரிக்க நாடுகளை இணைத்ததை, இன்றையா கிழக்கு ஆஃப்பிரிக்க வாசியான நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.  பண பரிமாற்றத்துக்கு, நாங்கள் ஏடிஎம்மை நம்புவதில்லை.  நாங்கள் மொபைல் வழி வங்கிகளை உபயோகிக்கிறோம்..   வேலை செய்யாதவரை ஏடிஎம் என்றும், ஒன்றுக்கும் உதவாதவரை ஏடிஎம்  ஏஸி என்றும் அழைக்கிறோம்.

 

பாலா

 

 

அன்புள்ள பாலா,

 

ஆப்ரிக்காவில் நீங்கள் பல மனைவிகளுடன் வாழ்வதாகச் சொல்லப்படுவது புரளிதான் என நம்புகிறேன்.

 

ஸ்பிடி சமவெளியின் படுபயங்கரமான சாலைகளில் பயணம் செய்யும்போது இந்திய ஓட்டுநர்கள் மேல் நம்பிக்கை வருகிறது. டெல்லியின் நாற்கரச்சாலையில் அவநம்பிக்கை.

 

உங்கள் அலுவலகத்தில் உங்களை எப்படி அழைக்கிறார்கள் என்பதைப்புரிந்துகொண்டேன்

 

ஜெ

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

புத்தகக் கண்காட்சி

$
0
0

23THBOOKFAIR_1339777f

 

அன்புள்ள ஜெ

 

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நீங்கள் வருவீர்கள் என எதிர்பார்த்தேன். அனேகமாக அத்தனை எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். நீங்கள் வராதது ஒரு குறையாகவே இருந்தது. புத்தகக் கண்காட்சிகள் உங்களுக்கு ஒவ்வாமையை அளிக்கின்றனவா?

 

சாம்

 

 

அன்புள்ள சாம்

 

நான் முதன்முதலாகப் புத்தகக் கண்ண்ட்காட்சிக்குச் சென்றபோது சென்னை உட்லாண்ட்ஸ் ஓட்டலுக்கு முன்னால் நாலைந்து கடைகளுடன் அதை நடத்திக்கொண்டிருந்தனர். அன்று உருவான அந்தப்பரவசம் அப்படியே இன்றும் இருக்கிறது

 

எழுத்தாளனாக நான் சென்ற புத்தகக் கண்காட்சி என் இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்திருந்த காலகட்டம். வசந்தகுமார் வடிவமைத்த மண் சிறுகதை தொகுதி. ஓர் இலை அதன் அட்டையில் இருக்கும். அதை ஒருவாசகர் அடையாளம் கண்டு பாராட்டியபோது பரவசம் அடைந்தேன்

 

வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் புத்தகக் கண்காட்சி அவர்களுக்கு மட்டுமே உரிய திருவிழா. அங்கே அவர்கள்தான் வி ஐ பிக்கள். அவர்கள் சொந்த வீடு உட்பட எங்குமே விஐபிக்கள் அல்ல என்பதை குறிட்த்த்துக்கொண்டால் இது எத்தனை முக்கியமான நிகழ்வு என்பது புரியும்

 

புத்தகக் கண்காட்சி என்பது நூல்களை வாங்குவதற்கு மட்டும் அல்ல. ஒருமுறை சுற்றிவந்தால் தமிழின் ஒட்டுமொத்த அறிவியக்கத்தையே கண்முன் கண்டுவிடலாம். நூல்களின் தலைப்புகள் வழியாகவே தமிழ் வாழ்க்கையை உணரமுடியும். அது ஒரு பேரனுபவம்.

 

குறிப்பாக புத்தகக்கண்காட்சி குழந்தைகளுக்கு மிக முக்கியமானது. நூல்களை கடைகளில்கூட வாங்கிக்கொடுக்கமுடியும். ஆனால் புத்தகங்களின் உல்லகம் ஒன்று உள்ளது என அவர்களுக்குக் காட்டுவதற்கு  புத்தகக் கண்காட்சி அன்றி வேறு வழியே இல்லை. அங்கே அவர்களுக்குள் அவர்கள் அறியாமலேயே ஒரு தொடக்கம் நிகழ்கிறது.

 

குஜராத் உட்பட பல மாநிலங்கள் வாசிப்பை ஊக்குவிக்க பலவகையான முயற்சிகளை எடுத்துள்ளன. புத்தகக் கண்காட்சிகளை அரசே நிகழ்த்துகின்றன. தமிழகத்தில் இதுவரை வந்த அரசுகள் அனைத்துமே புத்தகக் கண்காட்சிக்கு எதிரானவையாகவே இருந்து வந்துள்ளன. பலமுறை புத்தகக் கண்காட்சிக்கு வந்து சென்ற கருணாநிதி பொய்யான வாக்குறுதிகளை அளித்துச்சென்றார். ஜெயலலிதா அட்தை கண்டுகொள்வதே இல்லை . அவரது அரசதிகாரிகள் புத்தகக் கண்காட்சியை ஒரு வணிக முயற்சியாக மட்டுமே பார்க்கின்றன

 

தமிழ் மக்களும் பெரும்பாலும் புத்தகக் கண்காட்சியை உதாசீனத்துடனும் ஏளனத்துடனும் மட்டுமே பார்க்கிறார்கள் என்று பேச்சுகளிலிருந்து தெரிகிறது. புத்தகக் கண்காட்சிக்கு எதிரான மனநிலை என்பது ஒருவகையில் அறிவுக்கு எதிரான மனநிலையே

 

நான் சென்னை ,கோவை, ஈரோடு, திருச்சி, மதுரை என எல்லா புத்தகக் கண்காட்சிகளுக்கும் சென்றிருக்கிறேன். சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரமுடியாமல் போனது பயணங்களால்தான். அவை முன்னரே முடிவுசெய்யப்பட்டவை

 

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கதைகள், கடிதங்கள்.

$
0
0

அன்புள்ள ஜெ,

             நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். சமீபத்தில்  ரப்பர் நாவலை வாசித்தேன். வீழ்தலின் பதற்றம், நன்றாக வாழ்ந்த குடும்பங்கள் வீழும்போது சமூகத்தை எதிர்கொள்ள தயங்கும் தவிப்புகள் நாவல் முழக்க நிறைந்திருக்கிறது. எது உழைப்பதை தடுக்கிறது? என்ற பிரான்சிஸின் கேள்வியை மிக நெருக்கமாக உணர்ந்துகொண்டேன். நாவலில் மாலை பொழுதின் வர்ணணையில் சிவப்பு நதி என வருகிறது சோனாவின் தோற்றமாக அது இருக்கலாம். இளமை கால திரேஸ் நடாஷாவை நினைவூட்டினாள். பொன்னு பெருவட்டார், செல்லையா, திரேஸ், பிரான்சிஸ், கண்டன்காணி, குளம்கோரி, தங்கம், லிவி போன்ற கதா பாத்திரங்களும் குணாதிசயங்களும் நாவலின் மிக குறைந்த இடத்திலும் மின்னும் நட்சத்திரங்களாகி  விடுகின்றன. இறுதியாக நம்பிக்கையின் ஒளியை பிரான்சிஸிற்கு தந்து விட்டு பொன்னு பெருவட்டார் அணைந்து விடுகிறார்.

அன்புடன்
விஷ்ணு

8

ஜெ,

நதி வாசித்தேன். கண்களின் கண்ணீரை தவிர்க்க முடியவில்லை. புதிய மரங்களுக்கு இடம் விட்டு நிறைய தென்னை மரங்கள் பட்டு போகத்தான் செய்கின்றன. இடுப்பளவு ஆழம் கூட இல்லாத ஆற்றுக்கு பல்லாயிரம் மைல் ஆழமிருப்பதாக உணர்ந்தவர்கள் உடம்பு நடுங்கி சிலிர்ப்பதுடன் நகர்ந்துவிடுகிறார்கள். பாவம் இடுப்பளவிற்கு ஆழம் உணர்ந்தவர்கள்தான் நதியினால் அடித்துச்செல்லப் படுகிறார்கள்.
அன்புடன்,
பழனிவேல் ராஜா
கத்தார்.
அன்புள்ள ஜெ
வெண்கடல் தொகுதியில் கிறுக்கன் ஆசாரியைப்பற்றிய கதையை [அம்மையப்பம்] முதலில் உற்சாகமான ஒரு வாசிப்பனுபவமாகவே வாசித்தேன். இரண்டாம் வாசிப்பில்தான் அது கிரியேட்டிவிட்டி என்னும் வரமும் சாபமுமான ஒன்றைப்பற்றிப் பேசுகிறது என்று தெரிந்தது. மறுகணமே ஏணியின் கணக்குக்கும் கணக்குகளுக்கு அப்பாற்பட்ட சிற்பத்தின் நுட்பத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு புரிந்தது. மிகப்பெரிய அனுபவம் அது. நீங்கள் எழுதிய மிக முக்கியமான சிறுகதை என்று சொல்வேன்
ஜெயப்பிரகாஷ்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 78

$
0
0

[ 4 ]

தருமனைக் கண்டதும் பீஷ்மர் ஒருகணம் விழிதூக்கி நோக்கிவிட்டு தலைகுனிந்து கையால் மார்பில் மூன்று புரிகளாக நீண்டுபரவிய தாடியை நீவியபடி அமர்ந்திருந்தார். நீண்டுமெலிந்த வெண்ணிற உடல் நுண்ணிய சுருக்கங்கள் பரவி மெழுகுத்தன்மை கொண்டிருந்தது. மடியில் கோக்கப்பட்டிருந்த கைகள் நரம்புகள் எழுந்து தசை வற்றி காய்ந்த கொடியென மாறிவிட்டிருந்தன. கால்களும் மிக மெலிந்து நரம்புகள் பின்னி வேர்த்தொகையென தோன்றின. சாளரத்தின் வழியாக வந்த காற்றில் வெண்ணிறத் தலைமயிர் பறந்தது. அவரது குழல்தொகை மிகவும் குறைந்திருந்தது. மூக்கு வளைந்து உதட்டின்மேல் நிழல் வீழ்த்தி தொங்கியது. கண்கள் பழுத்த அத்திப்பழங்கள் போலிருந்தன.

தொலைவில் ஏதோ கதவு திரும்பிக் கொண்டிருக்கும் ஓசை கேட்டது. சிலகணங்கள் அவர்கள் அவரை நோக்கி நின்றனர். சின்னாட்களுக்குள் அவர் மிகவும் முதுமை எய்திவிட்டிருந்தார். அவரது கைவிரல் நகங்கள் பழுப்பு நிறம்கொண்டு பறவையலகுகள் போலிருந்தன.  தருமன் சென்று பீஷ்மரின் கால்களைத் தொட்டு சென்னி சூடி “வணங்குகிறேன், பிதாமகரே” என்றார். ஒருசொல்லும் இல்லாமல் இடது கையை தூக்கி அவர் தலைமேல் வைத்துவிட்டு எடுத்துக் கொண்டார் பீஷ்மர்.

பீமனும் அர்ஜுனனும்  நகுலனும் சகதேவனும் சென்று அவர் பாதங்களில் உடலமைத்து வணங்கினர். அவரறியாதவர் போல் அவரது கை வந்து அவர்களின் தலையை தொட்டுச் சென்றது. பீஷ்மரின் முதல் மாணவர் விஸ்வசேனர் அவர்கள் அமர்வதற்காக பீடங்களை சுட்டிக் காட்டியபின் வெளியே சென்று கதவை மூடிக்கொண்டார். தருமன் மட்டுமே அமர்ந்தார். அவருக்குப் பின்னால் நகுலனும் சகதேவனும் நின்றிருக்க பீமனும் அர்ஜுனனும் சற்று அப்பால் சென்று தூணில் சாய்ந்து நின்றார்கள். பீஷ்மர் சொல்லெடுக்கட்டும் என்று தருமன் காத்திருந்தார்.

அவர் தன் உடலிலிருந்து அகன்று தொலைந்துவிட்டவர் போலிருந்தார். பொறுமையின்றி பீமன் உடலசைத்தபோதுதான் சற்று நேரம் ஆகியிருப்பதை தருமன் உணர்ந்தார். மெல்ல கனைத்து “தங்கள் ஆணையை தலைக்கொண்டு இங்கு வந்திருக்கிறோம், பிதாமகரே” என்றார். “ஆம்” என்றார் அவர். “போரைத் தவிர்க்க பிறிதொரு வழியில்லை என்பதை நான் உணர்ந்திருந்தேன். தங்களின் ஆணை ஒரு நற்கொடையெனத் தோன்றியது” என்றார் தருமன். பீஷ்மர் தலையசைத்தார். அத்துடன் சொல்லாடல் மீண்டும் அறுபட்டது.

பேசாமலிருப்பதன் பொருத்தமின்மையை உணர்ந்து பீஷ்மர் அசைந்து அமர்ந்து பீமனை நோக்கி “காடுகளில் அலைகிறாயா?” என்றார். “ஆம், பிதாமகரே” என்றான் பீமன். “தாங்களும் காடுகளில்தான் பெரும்பாலும் இருக்கிறீர்கள் என்றார்கள்” என்றான். பீஷ்மரின் முகத்தில் மெல்லிய புன்னகை எழுந்தது. “ஆம். அங்கு அடிக்கடி மாறும் நெறிகளும் அறமும் இல்லை” என்றார். “அதையே நானும் உணர்கிறேன்” என்றான் பீமன். பின்பு “அது காட்டுவிலங்குகளுக்கு பேசும் மொழி இல்லை என்பதனால் இருக்கலாம்” என்றான்.

பீஷ்மர் சிரித்துவிட்டார். திரும்பி அதே சிரிப்பொலியுடன் தருமனிடம் “இங்கு நிகழ்விருப்பது ஒரு எளிய குலவிளையாட்டென்று எடுத்துக்கொள் மைந்தா! இதில் வென்றாலும் தோற்றாலும் இறுதியில் நீ வெல்வாய்” என்றார். ஒருகணம் அவர் விழிகளில் அறியாத ஒரு தத்தளிப்பு நிகழ்ந்து சென்றது. “எப்படியும் அறம் வெல்ல வேண்டும். இதுவரை வென்றிருக்கிறதா என்றால், அறியேன். வென்ற தருணங்களை மட்டுமே மானுடம் நினைவில் கொண்டிருக்கிறது. அவற்றை மட்டுமே இறுதி வெற்றி என்று எண்ணிக்கொள்கிறது. அந்நினைவுகளால் ஆன வரலாற்றை நம் காலடி மண்ணாக அமைத்திருக்கிறது. எனவே அறம் வெல்ல வேண்டும் என்றே விழைவோம். வெல்லாவிடில் நாம் நின்றிருக்க நிலமிருக்காது” என்றார்.

தருமன் “அறத்தின்மேல் நான் கொண்டுள்ள நம்பிக்கையென்பது அது வெல்லும் என்பதனால் அல்ல. அளிக்கும் என்பதனால் அல்ல. அழைத்துச் செல்லும் என்பதனாலும் அல்ல. அது எனக்கு உவப்பானது, அது ஒன்றே இயல்பானது என்பதனால்தான்” என்றார். பீஷ்மர் விழிகள் ஈரம் கொள்ள, நெகிழ்ந்து தொண்டை அசைய, கைநீட்டி அவன் கைகளை பற்றிக்கொண்டார். “அவ்வண்ணமே இரு, மைந்தா! இம்மண்ணில் எதுவும் உன்னை துயர்கொள்ளச் செய்யாதிருக்கட்டும்” என்றார். அவரது கைகள் தருமனின் கைகளுடன் சேர்ந்து நடுங்கின. “தங்கள் வாழ்த்து என்றும் என்னுடன் இருக்கும்” என்றார் தருமன்.

பீஷ்மரின் வலது கண்ணிலிருந்து நீர் வழியத்தொடங்கியது. முதியவர்களுக்குரிய வகையில் தலைநடுங்க தொண்டைநெகிழ்ந்தசைய அவர் விசும்பியழுதார். பின்பு மெல்ல எளிதாகி முகத்தை துடைத்தார். முகத்தில் இறுகியிருந்த தசைகள் ஒவ்வொன்றாக விடுபட்டன. “முதுமை!” என்றார். “எண்ணும்போதே அழுகை வந்துவிடுகிறது. அழுதுமுடித்ததும்தான் வாழ்க்கை இனிதெனத் தோன்றுகிறது.” தருமன் “அதை கனிவு என்பார்கள்” என்றார். “இறப்பு குறித்த அச்சம் என்பார்கள்” என்று பீஷ்மர் சிரித்தார். வாயின் பற்கள் பல உதிர்ந்திருந்தாலும் அவரது சிரிப்பு அழகாக இருந்தது. “வாழ்க்கையை புரிந்துகொள்ளாமையின் தவிப்பு என்று நான் சொல்வேன்” என்றார்.

தருமன் “இளமையில் நாம் புரிந்துகொள்ள ஒருவாழ்க்கை மட்டுமே முன்னுள்ளது. முதுமையில் அது பல்கிப்பெருகிவிடுகிறது” என்றார். பீஷ்மர் “இருக்கலாம். ஒன்றையும் அறியாமல் விட்டுச்செல்வதுதான் அனைவருக்கும் இயன்றது. நான் என்றாவது அவனை பார்க்கவேண்டும். என் இளையோன். அவன் எழுதும் காவியத்தில் விடைகளென ஏதேனும் உள்ளதா என்று கேட்பேன்” என்றார். பீமன்  ”அவர் உரிய வினாக்களை முன்வைத்திருந்தாலே நன்று, பிதாமகரே” என்றான். பீஷ்மர் “ஆம்” என்றபின் உரக்க நகைத்தார்.

தருமனிடம் திரும்பி “இதுவரை நாற்களம் ஆடியதே இல்லை. அதன் நெறிகள் என்னவென்றும் வழிகள் என்னவென்றும் நான் அறிந்ததில்லை. திரும்பத் திரும்ப நான்கு பகடைகளை உருட்டி பன்னிரண்டு மடங்குகளையும் வகுபடல்களையும் கொண்டு ஆடுவது ஏன் இவர்களுக்கு சலிப்பூட்டவில்லை என்று எண்ணி வியந்திருக்கிறேன்” என்றார் பீஷ்மர்.

“ஆழ்ந்துவிட்டால் எதுவும் சலிப்பூட்டுவதில்லை, பிதாமகரே” என்றான் அர்ஜுனன். “அம்பு முனை கொண்டு நாம் அறிந்ததல்லவா அது?” அவனை விழிதூக்கி நோக்கியபின் “ஆம், உண்மை. இப்புவியில் பல்லாயிரம் ஆடல்களில் நம்மைக்குவித்து நம்மை கண்டடைகிறோம்” என்றார் பீஷ்மர். “ஆனால் அம்பென்பது பறவையின் தூயவடிவம். ஆகவே அது அழகியது” என்றார். “பகடை என்பது சொல்லின் தூய வடிவம்” என்றார் தருமன். அவரை புரியாமல் திரும்பி நோக்கியபின் சிரித்து “ஆம், அதனால்தான் அதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை போலும்” என்றார் பீஷ்மர்.

மிக விரைவிலேயே பீஷ்மர் மீண்டு நெடுநாட்களுக்குமுன் அவர்கள் அறிந்த பிதாமகராக ஆனார். தன் மேலிருந்து அழுத்திய  அனைத்தும் உதிர்ந்து விழ உடலில் குடியேறிய சிறு துள்ளலுடன் எழுந்து சென்று அறைமூலையில் இருந்த வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு அர்ஜுனனிடம் “வா, புதிதாக என்ன கற்றுக் கொண்டாய்?” என்றார். அர்ஜுனன் புன்னகைத்து “தாங்கள் கற்றுக் கொள்வதற்குரிய எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை, பிதாமகரே” என்றான்.

உரக்க நகைத்து “அதையும் பார்த்துவிடுவோம்” என்றார் பீஷ்மர். “நான் கற்றதென்ன என்று சொல்லவா? தோளில் அல்ல. அம்பின் கூரிலும் இறகிலும் அல்ல. காற்றிலும் அல்ல.  வளைவதில்தான் விற்கலையின் நுட்பம் உள்ளதென்று இப்போது கண்டுகொண்டேன். மூங்கில் வில்லோ இரும்பு வில்லோ அதில் கட்டப்படும் நாணில் உள்ளது விசையின் பொருள். அதை இழுக்கும் வகையில் அம்பின் மீது நம் தோள்விசையை செலுத்த முடியும். வீணையில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் தந்தியின் நீளம் இசையை வகுப்பது போல. காட்டுகிறேன் வா!” என்றார்.

பாண்டவர்களின் முகங்கள் மலர்ந்தன. அர்ஜுனன் “அதை தங்களிடமிருந்து கற்க விழைகிறேன், பிதாமகரே” என்றான். “கற்பிப்பது நன்று மைந்தா. நாம் ஐயமறக் கற்பதற்கு அதுவே வழி” என்றார் பீஷ்மர். தருமன் “பிதாமகரே, நாங்கள் கிருபரையும் துரோணரையும் சந்தித்து வாழ்த்து பெற்றாகவேண்டும். அதன் பின் தந்தையையும் மூத்த அன்னையையும் பார்த்து வழிபட வேண்டும். பொழுது சாய்வதற்குள் இவற்றை முடித்தபின்னர் குடித்தெய்வங்களின் ஆலயங்களுக்குச் செல்வது முறை என்றார் சௌனகர்” என்றார்.

“நீ ஒரு மூடன்!” என்றார் பீஷ்மர் நகைத்தபடி. “நாளெல்லாம் அரசக் கடமைகளை செய்தபடி எப்படித்தான் உயிர் வாழ்கிறாய் என்று தெரியவில்லை. அரசர்களைப் பார்த்தால் தறியில் ஓடும் நாடாக்கழி போல் தோன்றுகிறார்கள். இரவும் பகலும் முன்னும் பின்னும் ஓடி ஒன்றையே நெய்துகொண்டு சலிப்பு என்பதை அவர்கள் அறிவதில்லை” என்றார். தருமன் “தான் நெய்யும் பட்டின் அழகை ரசிக்கத்தெரிந்த நாடாப்பட்டியல் சலிப்புறுவதில்லை, பிதாமகரே” என்றார்.

கையை ஓங்கி “எழுந்து போ அறிவிலியே!” என்று சொல்லி உரக்க நகைத்தார் பீஷ்மர். “எதைச் சொன்னாலும் அணியும் ஒப்புமையுமாக மறுமொழி சொல்லக் கற்றுவிட்டால் நீ அரசு சூழ்தல் அறிந்தவன் என்று ஆகிவிடுவாயா?” தருமன் “போர்க்கலையின் உச்சம் தடுப்பதல்லவா?” என்றார். “வாழ்நாளெல்லாம் தடுத்துக்கொண்டிருப்பவன் நீ” என்றபின் அர்ஜுனனிடம் திரும்பி “அவர்கள் இருவரையும் இங்கு வரச்சொல்கிறேன். என் பயிற்சி சாலையில் நீ அவர்களிடம் வாழ்த்துப்பெறலாம். பிறகென்ன?” என்றார் பீஷ்மர்.

அர்ஜுனன் அவர் அருகே செல்ல அவர் அவன் கையை பற்றியபடி பீமனிடம் திரும்பி “உன்னிடம் இன்றொரு கதைப்போர் நிகழ்த்தலாமென எண்ணுகிறேன்” என்றார். பீமன் “இப்போது தங்கள் தோள்கள் கதைப்போருக்குரியவையல்ல என்று தோன்றுகிறது, பிதாமகரே” என்றான். “ஆம். முதுமையால் தோள் வல்லமை குன்றும் தோறும் குறைந்த விசையில் கதை சுழற்ற கற்றுக் கொண்டிருக்கிறேன். நீ ஏந்தும் கதையில் பத்தில் ஒருபங்கு எடைகூட என் கதைக்கில்லை. ஆனால் ஒருமுறை உன் கதை என் உடலில் படுமென்றால் நான் பிறகு கதையேந்துவதில்லை என்று வாக்களிக்கிறேன்” என்றார்.

பீமன் நகைத்து “நான் அத்தகைய அறைகூவல்களை ஏற்றுக் கொள்வதில்லை. அது அயலூர் குளத்தில் நம்பி இறங்குவது போல. இந்நாள்வரை காடுகளில் தாங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று நானறியேனே!” என்றான். பீஷ்மர் நகைத்துக் கொண்டு அவனை அணுகி அவன் தோள்களில் தன் நீண்ட கைகளை இட்டு வளைத்து “பெருத்திருக்கிறாய். மல்லனுக்கு அது நன்று ஆனால் கால் விரைவை குறைக்கும் அளவிற்கு இடை பெருக்காமல் இருக்க வேண்டும்” என்றார். “என் விரைவை யானைகளுடன் பொருதி தேர்ந்துகொண்டே இருக்கிறேன் பிதாமகரே” என்றான் பீமன்.

பீஷ்மர் “யாரது?” என்று தன் மாணவரை அழைத்தார். விஸ்வசேனர் வந்து வணங்க “துரோணரையும் கிருபரையும் இங்கு வரச்சொல். இளையோர் இங்கிருக்கிறார்கள் என்று அறிவி” என்றபின் இன்னொரு கையால் அர்ஜுனன் தோளை வளைத்து  அணைத்தபடி பயிற்சி சாலையை நோக்கி நடந்தார்.

நகுலன் தருமனிடம் “தாங்களும் வந்து படைக்கலப் பயிற்சியை பார்க்க விழைகிறீர்களா மூத்தவரே?” என்றான். தருமன் “அதுதான் அங்கேயே இரவு பகலாக எந்நேரமும் நடந்து கொண்டிருக்கிறதே. மீண்டும் நோக்க என்ன இருக்கிறது? நீங்கள் செல்லுங்கள். நான் இங்கிருக்கிறேன். ஆசிரியர்கள் வரும்போது எதிர்கொண்டழைத்து பாதம் பணிய ஒருவராவது இங்கிருக்கவேண்டுமல்லவா?” என்றார்.  நகுலன் “நான் செல்கிறேன்” என்று அவர்களைத் தொடர்ந்து சென்றான்.

[ 5 ]

உளநிறைவுடன் கால்களை விரித்து கைகளை கைபீடத்தில் வைத்து தருமன் சாய்ந்துகொண்டார். கண்களை மூடி இனிய காற்றின் வருடலை தன் உடலில் உணர்ந்தார். கைகள் உள்ளமைந்த நாற்களமொன்றில் காயமைத்து ஆடின. இதழ்களில் அதன் சொற்கள் ஓசையின்றி அசைவுகொண்டன.

சகதேவன் வந்து தருமன் அருகே நின்றபடி “நான் தங்களுடன் இருக்கிறேன், மூத்தவரே” என்றான். தருமன் “பிதாமகர் உவகை கொண்டுவிட்டார். அனைத்தும் நன்றே முன் செல்கிறது அல்லவா, இளையோனே?” என்றார். “ஆனால் அவர் கவலை கொண்டிருந்தார். கவலை கொள்பவர்கள் அச்சுமையை உதறுவதற்கு ஒரு தருணத்தை எதிர்நோக்கியிருப்பார்கள். எங்கேனும் சிறு பழுது கிடைத்தால் அதிலிருந்து வெளியேறிவிடுவார்கள்” என்றான் சகதேவன். “வெளியேறிவிட்டமையினாலேயே அக்கவலைகள் அனைத்தும் சிறிதென ஆகிவிடும். கவலைகள் இறங்கிவிட்டதனாலேயே அத்தருணம் களியாட்டு நிறைந்ததாக ஆகிவிடும்” என்றான்.

தருமன் எரிச்சலுடன் “உங்களுக்கெல்லாம் என்ன ஆயிற்று? எந்நிலையிலும் உவகையோ நிறைவோ கொள்ளமாட்டீர்கள் என்று உறுதி கொண்டுவிட்டுதான் இங்கு கிளம்பி வந்தீர்களா?” என்றார். “இல்லை மூத்தவரே, இயல்பாகவே ஐயமும் கவலையும் கொண்டிருக்கிறோம்” என்றான். “ஏன்?” என்றார் தருமன். சகதேவன் “எண்ணத்தால் அல்ல. உள்ளிருக்கும் விலங்கின் ஐயம்” என்றான். “அவ்வண்ணம் எதை உணர்கிறாய்? சொல்!” என்றார் தருமன்.

சகதேவன் தயங்கியகுரலில் “இது அயலவர் நாடென்று தோன்றுகிறது. கங்கையிலிருந்து அஸ்தினபுரிக்கு வரும்வரை இருபுறமும் செறிந்த குறுங்காட்டுக்குள் பல்லாயிரம் நச்சம்புகள் என்னை நோக்கி குறி வைத்திருப்பதாக என் தோல் உணர்ந்தது. கரிய பெருந்திரையென அஸ்தினபுரியின் கோட்டையை பார்த்தபோது அச்சத்தில் உடல் நடுங்கினேன். இருளின் அலைபோல அது புரண்டு சுருண்டு என்னை நோக்கி வருவது போல் தோன்றியது .அறியாது ஒரு கணம் பின்னடைந்துவிட்டேன்” என்றான்.

“தாங்கள் இறங்கி புழுதியை எடுத்து நெற்றியில் சூடியபோது ஒரு கணம் என்ன நிகழ்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. பின்புதான் இந்நகரத்தில் மைந்தனாகப் பிறந்து இங்கு வளர்ந்தேன் என்று நினைவுகூர்ந்தேன். என் மூதாதையரின் நகர் இது. ஆனால் அந்த அஸ்தினபுரி மண்ணுக்குள் புதைந்து ஆழத்தில் எங்கோ மறைந்துவிட்டது. இன்றிருப்பது பிறிதொன்று” என்றான் சகதேவன்.

சினத்துடன் “நீ பித்தன். உன் உளமயக்கை என் மேல் சுமத்துகிறாய்” என்றார் தருமன். “அல்ல மூத்தவரே, இந்நகரின் கோட்டைவளைவு, இல்லங்கள், தெருக்கள் அனைத்தும் மாறிவிட்டிருக்கின்றன. இவற்றின்மேல் கரிய நஞ்சொன்று படிந்து இன்றும் எஞ்சுவது போல. உண்மையிலேயே தூண் மடிப்புகளிலும் சிற்பப்பொருத்துகளின் இடுக்குகளிலும் கரிய தூள் போன்ற பாசிப்படிப்பு ஒன்றை காண்கிறேன். விரல் கொண்டு அதை தொட்டு எடுத்து பார்த்தபோது அருகே நின்ற கனகர் என்னிடம் அதை நாவில் வைக்கவேண்டாம் என்றார். முன்பு இங்கொரு நஞ்சு பரவி மறைந்துள்ளது. அதன் எச்சங்கள் அவை.”

“அவையனைத்தும் சூதர்கதைகள்” என்றார் தருமன். “சூதர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் இயல்பை உருவாக்கி அளித்துவிடுகிறார்கள். பின்பு சொல்லிச் சொல்லி அவற்றை பெருக்குகிறார்கள். அந்தச் சித்திரத்திலிருந்து அதற்குரியவர்கள் எந்நிலையிலும் தப்ப முடியாது.” உரக்க நகைத்து “ஐம்பெரும் பழிகள் இயற்றினாலும்கூட என்னை அறத்தான் என்றே அவர்கள் சொல்வார்கள்” என்றார். சகதேவன் ஒன்றும் சொல்லவில்லை. தருமன் “சரி சொல். நீ என்ன உணருகிறாய்?” என்றார்.

“நஞ்சு இந்நகர்முழுக்க நிறைந்துள்ளது” என்றான் சகதேவன். தருமன் “இன்று காலை என் காலில் கண்ணீருடன் வந்து விழுந்த குடிமக்களின் உள்ளங்களிலுமா?” என்றார். “ஆம். அவ்வுள எழுச்சி உங்களுக்கு மிகையாகத் தோன்றவில்லையா?” என்றான் சகதேவன். தருமன் “உளறாதே! அவை எந்தை இங்கு வாழ்ந்த நாள்முதல் ஈட்டிய பேரன்பின் வெளிப்பாடுகள்” என்றார். சகதேவன் “அல்ல. இது அவர்கள் கொண்ட வஞ்சமும் காழ்ப்பும் மறுபுறமெனத் திரும்பி குற்றவுணர்வும் பேரன்புமாக திரும்பியிருக்கிறது. குற்றவுணர்வின்றி இப்பெரும் உளநெகிழ்வு நிகழாது என்று உணர்கிறேன்” என்றான்.

“உன்னிடம் பேசப்புகுந்தால் என் நெஞ்சில் இழிநம்பிக்கைகளை புகுத்திவிடுவாய். செல்!” என்றார் தருமன். “நான் எதையும் வகுத்துரைக்கவில்லை, மூத்தவரே. ஆனால் ஒவ்வொரு தருணத்திலும் அதை உணர்ந்து கொண்டிருக்கிறேன். இங்குள்ள ஒவ்வொரு விழியும் நீர்மை படிந்து கனிந்துள்ளது. ஒவ்வொரு இதழும் அன்பின் சொற்களால் துடித்துக் கொண்டிருக்கின்றது. மெல்ல விரல் தொட்டாலே தாவி அணைக்கும் தவிப்புடன் உள்ளன உடல்கள் அனைத்தும். அவற்றுக்கு அடியில் எங்கோ இங்கு பெய்த நஞ்சின் மிச்சங்கள் உள்ளன.”

“போதும்! நாம் இதைப்பற்றி மீண்டும் பேசவேண்டியதில்லை” என்றார் தருமன். “அவ்வாறே” என்று சகதேவன் தலைதாழ்த்தினான். இருவரும் ஒரு சொல் பேசாமல் ஒருவரை ஒருவர் உடலால் உணர்ந்தபடி அசைவிழந்து அமர்ந்திருந்தனர். நெடுநேரத்திற்குப்பின் தருமன் பெருமூச்சுவிட்டு “நீ என்ன நினைக்கிறாய்? இப்பகடைக்களத்தில் நான் வெல்வேனா?” என்றார். “தாங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?” “ஐயமே இல்லை, நான் வெல்வேன்” என்றார் தருமன். “அந்நம்பிக்கை துணையிருக்கட்டும்” என்றான் சகதேவன். தருமன் “அவ்வாறெனில், நான் வெல்ல மாட்டேன் என்கிறாயா?” என்றார்.

“மூத்தவரே, தாங்கள் ஆடப்போவது இங்கு ஊறி நிறைந்துள்ள நஞ்சுடன். அது விண்ணிலிருந்து பொழிந்தது. இம்மண்ணின் ஆழத்தில் ஊறி நிறைந்திருப்பது. மானுடரால் இது வெல்லப்பட முடியாது.” “பிறகு எப்படி அதை வெல்லலாம்?” என்றார் தருமன். “மண்ணிலுள்ள அனைத்து நஞ்சையும் கழுவிக்களையும் ஆற்றல் கொண்டவை அனலும் புனலும் மட்டுமே. குருதி என்பது அனல் கொண்ட புனலே.”

தருமன் அச்சொல்லில் இருந்த காலம் கடந்த தன்மையைக் கண்டு உடல் நடுங்கினார். “இளையோனே, ஒரு பேச்சுக்கெனவும் அதை சொல்லாதே. ஒவ்வொரு நாளும் நான் அஞ்சிக்கொண்டிருப்பது அக்குருதிப்புனலையே. அதை தவிர்க்கும் பொருட்டே களிமகனாக பகடையாட இங்கு வந்திருக்கிறேன். என் விழிமுன் ஒருபோதும் குருதி வீழலாகாது என்று ஒவ்வொரு நாளும் எந்தையையும் தெய்வங்களையும் வேண்டிக்கொள்கிறேன்.” சகதேவன் “நன்று சூழ்க!” என்று மட்டும் சொன்னான். மீண்டும் கல் சேற்றில் புதைவது போல அவர்கள் அமைதிக்குள் ஆழ்ந்தனர். தருமன் “எந்தையரே…” என்று பெருமூச்சுவிட்டார்.

தொடர்புடைய பதிவுகள்

”இதான் ஒரிஜினல் சார்!”

$
0
0

1

 

இன்றும் நேற்றும் நாகர்கோயிலில் அலைந்தேன். ஒன்றுமில்லை, வெளிநாட்டுப் பயணத்திற்கு முன் சில இன்றியமையாத பொருட்களை வாங்கவேண்டியிருந்தது. எப்போதும் நான் உணர்ந்ததை இவ்விரு நாட்களில் பிடரியிலறைந்ததுபோல உணர்ந்தேன். என் மனமயக்கமாக இருக்குமா என்னும் சந்தேகத்தில் பார்வதிபுரம் முதல் நாகர்கோயில் நகர்மையம் வரை சென்று ஏராளமான கடைகளில் நானே அதை சோதித்தும் பார்த்தேன். ஆம், நாகர்கோயிலில் கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான பொருட்கள் போலிகள்.

 

முதலில் ஜாக்கி ஜட்டிகள் நான்கு வாங்கவேண்டுமென முயன்றேன். எந்தக்கடைக்குச் சென்றாலும் ஏதாவது மலிவாக போலி பிராண்டுகளை எடுத்துப்போட்டு “கம்பெனி பொருள்சார்!” என்கிறார்கள். விலை ஜாக்கி ஜட்டியை விட அதிகம். ஜாக்கி ஜட்டி என குறிப்பாக கேட்டால் பெரும்பாலும் “அதெல்லாம் வர்ரதில்லை சார்!” என்று பதில் . ஓரிரு கடைகளில் jaky  என்றும் jakee என்றும் பெயருள்ள அதேபோன்ற ஜட்டிகளை எடுத்திட்டு “இதான் சார் ஒரிஜினல்” என்கிறார்கள்

 

நாகர்கோயிலின் மிகப்பெரிய ரெடிமேட் கடையான டவர் ரெடிமேட்டில் கூட ஜாக்கி இல்லை. பெயரறியா சில்லறை பிராண்டுகள்தான். கடைசியாக ஒரு நண்பரை ஃபோனில் கூப்பிட்டுக்கேட்டேன். ஒருகடை சொன்னார். அங்கே இருந்தது.

 

இப்படியே ஒவ்வொரு பொருளும். பேட்டரி வாங்கப்போனால் எழுத்துப்பிழை கொண்டவை மட்டுமே கிடைத்தன. ரெயினால்ட்ஸ் பேனாவுக்கு எத்தனை எழுத்துவடிவங்கள் உண்டு என்று இப்போதுதான் அறிந்தேன்.ஷேவிங் பொருட்களில் நம்பவே முடியாத அளவுக்குப் போலிகள். கிரீம்களில்கூட!

 

நண்பர் ஒருவர் மேஜை டிராயரைத்திறந்தபோது கத்தை கத்தையாக பேட்டரிகளைப் பார்த்தேன். “டிவி ரிமோட்டுக்குப்போட்டா மூணுநாள் வரமாட்டேங்கு சார். அதான் சேத்தே வேங்கிடுறது” என்றார். பார்த்தால் அதே எழுத்துப்பிழை பேட்டரிகள். ஒலிப்பதிவுக்கருவிக்காக டியூரோ செல் பேட்டரிக்காக முப்பது கடை ஏறி இறங்கி மனமுடைந்து ஒருகடையில் கேட்டேன் “எங்காவது டியுரோ செல் பேட்டரி கெடைக்குமா?” அவர் புன்னகைத்தார்.

 

கடைசியாக  லௌகீக மேதையான நண்பருக்கு போன்செய்து புலம்பினேன். ”நாலு சூப்பர் மார்க்கெட் தவிர எங்கியுமே  ஒரிஜினல் கெடைக்காது. பார்வதிபுரத்திலே சான்ஸே இல்லை”  திகைப்புடன் “ஏன்?” என்றேன். “பாருங்க, நாகர்கோயிலிலே ஃபேன்ஸி ஸ்டோர் எவ்ளவு இருக்குன்னு. ஒருகடையிலே நாளொன்னுக்கு பத்தாயிரம்ரூபா வித்தா அதிசயம். மூவாயிரமாவது லாபம் நின்னாகணும். ஒரிஜினல் வித்தா எப்டி கட்டும்? அதனால டூப்ளிகேட் மட்டுமே விக்கிறதுன்னு முடிவோட இருப்பாங்க. அசல் கெடைச்சா யாரும் டூப்ளிகேட் வாங்க மாட்டாங்க. ஏன்னா அது பெரிய நஷ்டம். அதனால அசல் எங்கியுமே கெடைக்காம பாத்துக்கிடுவாங்க”

 

“ஏன், அதை விக்கிற ஏஜெண்ட் கடையிலே போடமாட்டானா?” என்றேன். “என்ன நீங்க? அவனுக்கும் லாபம்தானே குறி? அது எப்டி வந்தா என்ன?” அவர் சொன்னார் “இங்க பெரும்பாலான கன்ஸ்யூமர் பெண்கள்தான். அவங்க புடவைதவிர எதிலயும் பிராண்ட் தெரிஞ்சுக்கிடறதில்லை. அதான் இப்டி” இரண்டு நாட்கள். இன்னமும் டியூரசெல் கிடைக்கவில்லை. வேறுவழியில்லை.

 

நாகர்கோயிலைப் பற்றி நான் எழுதும் இவ்விஷயங்கள் ஒருவேளை தமிழகத்தின் அனைத்துச் சிறு கிராமங்களுக்கும் பொருந்தக்கூடும். இது மிகப்பெரிய ஒரு கூட்டுக்கொள்ளை. உண்மையில் ஒட்டுமொத்தமாகப்பார்த்தால் டூஜீ த்ரீஜீக்களுக்கெல்லாம் குருஜீ இந்த திருட்டு. அரசதிகாரிகளும் வணிகர்களும் சேர்ந்து செய்வது. இரைகள் மக்கள். அவர்களுக்கு அதைத் தெரியப்படுத்துவதே கடினம்,

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மணம் கமழும் சிரிப்பு

$
0
0

1

 

 

துட்டி விசாரிக்க வருபவர் இழந்தவரின் அருகே அமர்கிறார். மறுதிசையை நோக்கிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருக்கிறார். இவர் இந்தத்திசையை நோக்கி வெறுமையாக அமர்ந்திருக்கிறார். காலம் சொட்டிக்கொண்டிருக்கிறது. பிறகு ஒரு பெருமூச்சு. பதிலுக்கு ஒரு மறுமூச்சு. துட்டிகேட்பவர் எங்கோ நோக்கி “நல்லாத்தானே இருந்தாங்க?” என்று முனகுகிறார்.

 

இழந்தவர் உடனே திரும்பி தன் மகளை நோக்கி “ஏட்டி, அந்த வெத்திலச்செல்லத்த எடுத்தாடி செத்த சவமே” என்கிறார். கதைசொல்லப்போவதற்கு ஆற்றல் திரட்டல். நீவி, பூசி ,நறுக்கி, அடுக்கி, சுருட்டி, அதக்கி, மென்று ,நுரைத்து, கிறங்கி ,துப்பி சமனமடைகிறார். பெருமூச்சுடன் கதையை ஆரம்பிக்கிறார். “என்னண்ணு சொல்ல மாப்ள? அந்நா கெடக்க நாயி. அதான் நீங்க…”

 

தூரத்தையும் காலத்தையும் துல்லியமாகச் சொல்லும் கதைமுயற்சி. “…இந்நா இங்க கெடக்குத கூடை நான். இவ்ளவுதூரம்தான் கேட்டுக்கிடுங்க. அப்டியே விளுந்துபோட்டா. மாப்ள நீங்க சாவுறப்ப நேரம் என்னாண்ணு நினைக்கிறீக? காலம்பற பத்து பதினெட்டுல்லா?”

 

சுகா பிரதாப் பிளாஸா ஓட்டலில் என் அறையில் அமர்ந்து அவரது தென்காசிச் சித்தப்பா துக்கம் சொன்ன வயணத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார். நான் சிரித்து கண்ணீர்மல்கி மெத்தையில் உருண்டேன். உடனிருந்த ஒருவர் வயிற்றைப்பிடித்தபடி எழுந்து ஓடினார்.

 

சுகா நானறிந்த உச்சகட்ட கதைசொல்லிகளில் ஒருவர். கதைசொல்லும்போது முகம் படுதீவிரமாக இருக்கும். சூழ இருப்பவர்கள்தான் சிரித்துக்கொண்டிருப்பார்கள். அவர் “அதுமட்டுமில்ல…”என அடுத்த கதைக்குச் செல்வார்.

 

நாங்கள் காசியில் நான்கடவுள் படப்பிடிப்பில் இருந்தோம். ஒருமாதம் காசியில். எங்கள் இருவரின் மிகச்சிறந்த நாட்கள் அவை. பண்டார வேஷத்தில் எப்போதும் ஆரியாவும் உடனிருந்தார்.  “சுகா, நீங்கள் எழுதலாம்” என்றேன். “மோகன், நான் எழுத்தாளன் இல்லை. அப்டி நினைக்கவே இல்லை” என்றார். “இல்லை, இப்ப சொல்றீங்களே இதையே எழுதுங்க. இலக்கியத்துக்கு முதல் தேவையே மனிதர்களைக் கவனிக்கிறதுதான். மிச்சமெல்லாம் தானா வரும்” என்றேன்

சுகா அப்போது எழுதவில்லை. ஆனால் பின்னர் படித்துறை படம் எடுத்து அது வெளிவராத சூழல் அமைந்தபோது சோர்ந்திருந்தவரிடம் மீண்டும் அவர் எழுதலாமே என்றேன். பி கே சிவக்குமார் ஒருங்கிணைத்த இணையக்குழுமமான எழுத்தும் எண்ணமும் தளத்தில் அவர் சில குறிப்புகளை எழுதினார். அவை மிகவும் ரசிக்கப்பட்டன. அவருக்கும் அது ஆறுதலாக இருந்திருக்கலாம். அந்த தளத்தை கழுத்தும் கன்னமும் என அவர் பகடி செய்தார். அதில்தான் நான் தொப்பி ,திலகம் முதலிய காலத்தாலழியாத காவியங்களை எழுதி கல்லடிபட்டேன்.

 

சுகாவை எழுத்தாளராக ஆக்கியது எழுத்தும் எண்ணமும். அவரை விகடன் பரவலாக அறிமுகப்படுத்தியது. பொதுவாக கறாரான வாசகியான அருண்மொழி அவரது ’தாயார் சன்னிதி’ தொகுதியின் பரம ரசிகை. ”என்ன அருணா அப்டி ரசிக்கிறே?” என்று ஒருமுறை கேட்டேன். “நகைச்சுவையா இருக்குங்கிறதனாலயா?’

 

“சிரிப்பு இருக்குங்கிறதனால இல்ல ஜெயன். எதையும் திருகிக்காட்டாமலேயே நகைச்சுவையாத்தான் வாழ்க்கை இருக்குன்னு காட்டுறார்ல , அதனால” என்றாள். மிகமுக்கியமான அவதானிப்பு அது என்று நினைத்துக்கொண்டேன். நகைச்சுவை இக்கட்டுகளில் உருவாகவேண்டியதில்லை. அபத்தங்களாக வெளிப்படவேண்டியதில்லை. சும்மா திருவண்ணாமலைக்குப் போய்வந்த அனுபவமாகவே இருக்கலாம் அது.

 

‘பஷீரியன்’ என்று இந்த அழகியலை மலையாளத்தில் சொல்வார்கள்.இயல்பிலேயே வாழ்க்கை ஒரு வேடிக்கைதான் என எண்ணும் ஓர் இலகுத்தன்மையை சாராம்சமாகக் கொண்ட எழுத்து அது. சற்றேனும் அந்த இலகுத்தன்மை தன்னுள் இல்லாதவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது என்றே தோன்றும். பஷீரை பல அதிதீவிரப்புரட்சியர்களும் கலகர்களும் தத்துவர்களும் அப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்குச் சாமி மலையேறுவது வரை மீட்பில்லை.

 

ஆங்கிலத்தில் வில்லியம் சரோயனின் அராம் கதைகளை நினைவுபடுத்திக்கொள்ளலாம். அசோகமித்திரனின் லான்ஸர் பாரக் கதைகளை எண்ணிக்கொள்ளலாம். புதுமைப்பித்தனின் பூசணிக்காய் அம்பியில் இதன் முன்வடிவை காணலாம். மொழியின் நுட்பமான ஒரு இடம், பண்பாட்டுக்குறிப்புணர்த்தல்களால் ஆன ஒரு தளம் இது.

 

சுகா இலக்கியச்சூழலில் வளர்ந்தவர். அவர் குடும்பத்தில் எப்போதும் புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும்  உடனிருந்திருக்கிறார்கள். அவரது இளமைப்பருவ வாசிப்பு மொழியை தேர்ச்சி தெரியாமல் கையாளப் பயிற்சியை அளித்திருக்கிறது. டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வட்டத்தொட்டி நிகழ்ந்த வீட்டுக்கு அருகேதான் அவரது வீடு. டி.கெ.சியின்  ‘பேரப்புள்ளை’ அவர். மணமுள்ள நெல்லையை அவர் எழுத்தில் வாசிக்கமுடிகிறது. விஞ்சை விலாசும் இருட்டுக்கடையும் கொண்டுள்ள மணம் அது.

 

சுகாவின் இக்கட்டுரைகளை நான் அவை இணையத்திலும் இதழ்களிலும் வெளிவந்தபோதே வாசித்திருக்கிறேன். பலகட்டுரைகளில் நானும் நடித்திருக்கிறேன். இதில் வரும் ஜெயமோகன் எனக்கு இன்னமும் பிடித்திருக்கிறார். நல்லவர் மட்டும் அல்ல, நகைச்சுவை உணர்ச்சி கொண்டவரும்கூட. இடங்கள், மனிதர்கள் , நிகழ்வுகள் என விரியும் இக்குறிப்புகளில் அனைத்தையும் எளிதாகக் கடந்துசெல்லும் ஒரு நெல்லைக்காரரை காணமுடிகிறது. என்னுடன் எத்தனையோ இரவுகளில் ‘என்னத்தைச் சொல்ல!” என்று சிரித்த நண்பர் அவர்

 

[தடம் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் சுகாவின் உபச்சாரம் தொகுதிக்கான முன்னுரை]

 

 வேணுவனம்

இரு சந்திப்புகள் 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79

$
0
0

[ 6 ]

கனகர் அறைவாயிலில் வந்து வணங்கி “ஆசிரியர்கள் துரோணரும் கிருபரும்” என்று அறிவித்ததும் தருமன் எழுந்து தலைக்குமேல் கைகூப்பியபடி வாசலை நோக்கி சென்றார். மரவுரியாடை அணிந்து நரைகுழலை தலைக்குமேல் கட்டி இடைக்கச்சையில் உடைவாளுடன் துரோணர் உள்ளே நுழைந்ததும் கையும் தலையும் மார்பும் இடையும் காலும் மண்ணில் பட விழுந்து அவரை வணங்கினார். அவர் குனிந்து தருமன் தலையைத் தொட்டு “நிகரற்ற புகழுடன் திகழ்க! பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியாக நிறைவுறுக! விண்ணில் பொலிக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார்.

சகதேவனும் எழுந்து வந்து துரோணரை வணங்கினான். தருமன் தன்னை வணங்கியபோது கிருபர் “நன்று சூழ்க! தொட்டவை அனைத்தும் பொலிக! அறம் என்றும் வழித்துணையாகுக!” என்று வாழ்த்தினார். தருமன் அவர்களை பீடங்களில் அமர்த்தி “பிதாமகர் தங்களை வரச்சொன்னார், ஆசிரியர்களே. நாங்கள் அங்கு வருவதாக இருந்தபோது என்னிரு இளையவரையும் படைக்கலப் பயிற்சிக்கு கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்” என்றார்.

துரோணர் எழுந்து கிளர்ந்த குரலில் “இளையவன் வந்திருக்கிறான் அல்லவா? அறை நுழைந்ததுமே அவனைத்தான் என் விழிகள் தேடின. எப்படி இருக்கிறான்?” என்றார். அவர் மறுவாயிலை நோக்கி செல்வதற்குள் அதன் வழியாக அர்ஜுனன் உள்ளே வந்தான். விரைந்த காலடிகளுடன் ஓடிவந்து அவ்விசையிலேயே முட்டி மடித்து குப்புற அவர் கால்களில் விழுந்தான். அவர் குனிந்து அவன் தோள்களைத் தொட்டு இழுத்து தன் நெஞ்சுடன் இறுக அணைத்துக்கொண்டு அவன் நெற்றியிலும் கன்னங்களிலும் முத்தமிட்டார். முகர்ந்து தீராதவர் போல மீண்டும் மீண்டும் முத்தமிட்டுத் தவித்தார்.

அவன் இரு செவிகளையும் பற்றி முகத்தை தூக்கி கண்களை பார்த்தபின் “என்ன இது? ஏன் இத்தனை நரை?” என்றார். “ராஜசூயப்பந்தலில் அரசணிக்கோலத்தில் எதுவும் தெரியவில்லை. இன்று என் மாணவனாக மீண்டு வந்திருக்கிறாய்” என்றார். “வயதணைகிறது, ஆசிரியரே” என்றான். அவர் கண்களில் நீர் ததும்ப சிரித்தபடி அவனை மேலும்கீழுமென பார்த்தார். “வயதா? என்ன வயது உனக்கு? இது நீ இடமறியாது அலைந்து அயல்நாட்டுச் சுனைகளில் நீராடியதால் வந்தது” என்றார். அவன் தோள்களைச் சுற்றி தன் தோள்களில் சேர்த்து அணைத்தபடி “கிருபரே, பார்த்தீர்களல்லவா? இன்னமும் இறுக்கி பூட்டப்பட்ட வில்நாண் போல் உடல் கொண்டிருக்கிறான். பாரதவர்ஷத்தில் இவனுக்கு நிகர் நிற்க ஒரு வில்வீரரில்லை” என்றார்.

கிருபர் சிரித்து “ஆசிரியரிலிருந்து அவரது சிறந்த வடிவம் ஒன்று வெளிவந்து மாணவனாகிறது என்பார்கள்” என்றார். “ஆம், இவன் வடிவில் நான் பாரதவர்ஷத்தை வெல்வேன். இவன் நாணொலியில் நான் என்றுமிருப்பேன்” என்றார் துரோணர். மீண்டும் உள்ளத்து வெறியெழ அவனை நெஞ்சோடணைத்து அவன் குழலிலும் தோள்களிலும் முத்தமிட்டார். “எப்படி இருக்கிறான்! அவன் இடை சற்றும் பெருக்கவில்லை” என்று தருமனிடம் சொன்னார். “இந்திரப்பிரஸ்தத்தில் எவனோ போலிருந்தான். மூத்தவனே, அவன் இடம் இது. அவன் பாண்டுவின் மைந்தன். என் மாணவன்.” அவன் தாடியை கைகளால் பற்றி “எதற்கு இந்தத் தாடி? இதை எடுத்துவிட்டால் என் குருகுலத்திற்கு வந்த அந்த இளையவனையே நான் காணமுடியும்” என்றார்.

பின்பு நினைத்திருக்காத ஒரு கணத்தில் உடைந்து “பார்த்தா! என் இறையே!” என்று கூவியபடி அவனை நெஞ்சோடணைத்து அழத்தொடங்கினார். “ஆசிரியரே! என்ன இது, ஆசிரியரே!” என்று அவர் தோள்களையும் முதுகில் சரிந்த குழல்களையும் வருடியபடி அர்ஜுனன் அழைத்தான். கிருபர் கண்ணீருடன் சிரித்து “தந்தையரின் தனிமையை நூறு காவியங்கள் பாடியுள்ளன. ஆசிரியரின் தனிமையை எவரும் உணர்வதே இல்லை” என்றார்.

தன்னைத் திரட்டிக்கொண்டு விலகிய துரோணர் மேலாடையால் கண்களை அழுத்தித் துடைத்து மீண்டும் உளம் பொங்க விம்மினார். “ஆசிரியரே, பொறுத்தருள்க!” என்றான் அர்ஜுனன். “நீ என்ன செய்தாய்? அடைகாத்த மரம் பறவைக்கு உரிமைகொண்டாட முடியுமா என்ன?” என்றார் துரோணர். “நீ சென்ற பின்பு ஒருநாளும் நான் நிறைவுடன் இரவுறங்கியதில்லை. உனக்குப்பின் என் நெஞ்சில் ஊறிய அனைத்துச் சொற்களையும் சொல்லிவிட்டேன் என்று ஒருபோதும் உணர்ந்ததில்லை.”

கிருபர் அர்ஜுனனின் கைகளைப்பற்றி தன் நெஞ்சுடன் வைத்துக்கொண்டு “ஆசிரியர் தன்னை மாணவனில் நிறைக்கிறார் என்பார்கள். தன்னைப் பெய்து ஒழிந்தவனின் வெறுமை என்றும் ஆசிரியனில் எஞ்சியிருக்கும்” என்றார். அவர் தோளில் தட்டி “அது வெறுமையல்ல மூடா, நிறைவு” என்றார் துரோணர். முதியவர்களுக்குரிய வகையில் அவ்வழைப்பின் வழியாக எதையோ கடந்துசென்று முகம் மலர்ந்து நகைத்தார். “ஆனால் நிறைவே ஆயினும் அதன் எடையைத் தாங்க முதுமையால் முடிவதில்லை.”

அர்ஜுனன் “ஒவ்வொரு நாளும் உங்கள் கால்களை எண்ணியே விழிக்கிறேன். உங்கள் கைகளை எண்ணியபடி இரவுறங்குகிறேன். உங்கள் சொல்லைத்தொடங்காமல் எதைப்பற்றியும் எண்ணியதில்லை” என்றான். “ஆம், உன்னை எண்ணாமல் ஒரு நாளும் நான் விழித்ததும் உறங்கியதும் இல்லை” என்று துரோணர் சொன்னார். அவன் கைகளைப்பற்றி இறுக்கி குலுக்கியபடி “எப்படி இதை நாம் நிறைவுறச்செய்வோம்? எப்படி இன்னும் நெருங்குவோம்?” என்றார்.

கிருபர் உரக்கச்சிரித்து “ஒன்று செய்யலாம், ஒருவரோடொருவர் படைக்களத்தில் பொருதலாம். ஒருவருக்குள் ஒருவர் புகுந்து கொள்ள அதுவே சிறந்த வழி” என்றார். துரோணர் உடன் நகைக்க அர்ஜுனன் திரும்பி கிருபரின் கால்களைத் தொட்டு தன் சென்னி சூடினான். அவர் அவன் தலையில் கைவைத்து “எங்கும் வெற்றியே திகழ்க!” என்றார்.

துரோணர் “எங்கே மந்தன்?” என்றார். “பிதாமகருடன் தோள் கோக்கிறார்” என்றான் அர்ஜுனன். “இந்நாள் இத்தனை இனிதாகும் என்று எண்ணவே இல்லை” என்றார் துரோணர். “நீங்கள் நகர் புகுகிறீர்கள் என்று கேட்டபோது பதற்றத்துடன் தவிர்க்கவே விழைந்தேன். விழையாத ஒன்று நிகழப்போகிறதென்று எங்கோ தோன்றிக்கொண்டிருந்தது. விழைந்தது அனைத்தும் இங்கு நிகழ்ந்துள்ளன.” மீண்டும் கைகளை விரித்து “வா! உன்னைத் தழுவி எனக்கு சலிக்கவில்லை” என்றார்.

அர்ஜுனன் புன்னகைத்து அருகணைந்தான். தருமன் “சிறுவன் போல் நாணுகிறான்” என்று நகைத்தார். துரோணர் அவனை மீண்டும் இழுத்து தன் நெஞ்சோடணைத்து அவன் தோள்களைத் தடவியபடி “நீ சென்ற ஊரெல்லாம் உன் கதைகள் முளைத்தன. அங்கிருந்து சொற்கள் ஒவ்வொரு நாளும் என இங்கு வந்து கொண்டிருந்தன. என் இத்தனை நாள் வாழ்க்கையில் இனிது நிற்பது நாளும் வந்தடைந்த உன் வெற்றிச் செய்திகளே” என்றார்.

தருமன் பணிந்து “ஒவ்வொன்றும் மேலும் மேலும் இனிதாகின்றன. இனி நாங்கள் தந்தையையும் அன்னையையும் சந்திக்கவேண்டும். இன்றிரவுக்குள் குலதெய்வங்கள் ஆலயங்கள் அனைத்திலும் பூசனை கொள்ளவும் வேண்டும்” என்றார். “ஆம், நாங்கள் வந்திறங்கியப்போது வாசலிலேயே அதை சௌனகர் சொல்லிவிட்டார்” என்றார் துரோணர். “நான் நெடுநேரம் இவனை நெஞ்சில் எடுத்துக்கொள்வேன் என்பதை முன்னரே அறிந்துவிட்டார் போலும்.”

“அனைத்தையும் அறிந்து அனைத்தின் மேலும் ஐயம் கொள்வது அவரது இயல்பு” என்றார் தருமன். துரோணர் அர்ஜுனனின் இரு கைகளையும் கையில் எடுத்துக்கொண்டு “உன்னை எண்ணும்போதெல்லாம் இளைய யாதவன் நினைவுக்கு வருகிறான். நான் உனக்கு வில்லை அளித்தது போல அவன் யோகத்தை அளித்தான் என்றான் ஒரு சூதன். ஏனோ அதை முதல்கணம் கேட்டபோது என் உள்ளம் இளைய யாதவன் மேல் பெரும் கசப்பை அடைந்தது. அவன் உனக்கு அதை அளித்திருப்பான் என்பதை என்னால் உணரமுடிகிறது. அதன் பொருட்டு அவனை நூறுமுறை வாழ்த்தவே உள்ளம் எழுகிறது. நூற்று ஒன்றாவது முறை பொறாமையால் என் ஆழம் வலிகொள்கிறது” என்றார்.

கிருபர் நகைத்து “அன்னையர் கொள்ளும் பொறாமைக்கு நிகர் அது” என்றார். “யாதவப் பேரரசியிடம் கேட்டால் அவரும் இதே உணர்வை சொல்லக்கூடும்.” அர்ஜுனனிடம் “இளையோனே, தோழனாக ஆசிரியனை அடைந்தவன் வாழ்த்தப்பட்டவன். அவனுக்கு மெய்மை அழகிய களித்தோழியென வந்தமையும். நீ வில்வெற்றியால் மட்டுமல்ல மெய்யுணர்ந்த யோகி என்றும் ஒரு நாள் புகழ் பெறுவாய்” என்றார்.

துரோணர் தன் கைகளை அவன் தலையில் வைத்து “நீ அடையக்கூடாததென்று எதுவும் இப்புவியில் இருக்கப்போவதில்லை. உன் பொருட்டு என் பெயரும் பாரதவர்ஷத்தில் என்றும் நிலை கொள்ளும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

[ 7 ]

திருதராஷ்டிரரின் இசைக்கூடத்தில் நுழைவதற்கு சற்று முன்னர்தான் அங்கு பேரரசியும் இருக்கிறார் என்பதை தருமன் அறிந்தார். அவர் சற்றே திகைக்க “அரசே, இது முறைமைசார் சந்திப்பென்பதால் பேரரசியும் இருக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது” என்றார் கனகர். அவர்களுக்குப்பின் வந்த பீமன் “எவர் எடுத்த முடிவு?” என்றான். கனகர் அவனை நோக்கி மீண்டும் பணிந்து “அமைச்சர் எடுத்தார்” என்றார்.

உரத்த குரலில் “ஆகவே இந்திரப்பிரஸ்தத்தின் அரசராக அஸ்தினபுரியின் பேரரசரை சந்திக்கும்படியும் உறவுமுறைச் சந்திப்பு அல்ல என்றும் எங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது அல்லவா?” என்றான் பீமன். “அவ்வாறல்ல. ஆனால் முறைமை பேணப்படவேண்டும் என்பதனால்…” என்று அவர் சொல்ல “நன்று” என்று அவன் அவரை கடந்தான்.

தருமன் “எவ்வாறெனிலும் நாம் நம்  அன்னையையும் தந்தையையும் சந்திக்கிறோம். நம்மை அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது அதை மாற்றுமா என்ன?” என்றார். அவரருகே நின்ற திரௌபதி தன் தலைமறைத்த வெண்பட்டை முகத்தின் மேல் இழுத்துக்கொண்டு நிமிர்ந்து மூடிய வாயிலை நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் அஸ்தினபுரிக்கு கிளம்பிய பின் ஒரு சொல்லும் உரைக்கவில்லை என்பதை தருமன் எண்ணிக்கொண்டார். சொல்லற்றவர்கள் சூழலில் இருந்து மறைவதே வழக்கம். அவளோ அனல்போல தன்னிருப்பை உணர்த்திக்கொண்டே இருந்தாள்.

அறைவாயிலைத் திறந்து வெளியே வந்த அறிவிப்பாளன் “நுழைவொப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்றான். “நன்று” என்றபின் தருமன் திரௌபதியை நோக்கி “வருக!” என்றழைத்து உள்ளே சென்றார். இளைய பாண்டவர்கள் தொடர்ந்தனர். கனகர் வெளியே நின்றார்.

இயல்பாகவே தருமன் விப்ரர் அமர்ந்திருந்த பீடத்தை நோக்க அங்கு அது இல்லாததை உணர்ந்த பின்னரே அவரது மறைவை நினைவுகூர்ந்தார். மரவுரி மெத்தையிட்ட இசைக்கூடத்தில் காலடி ஓசைகள் இன்றி மிதந்ததுபோல் அவர்கள் சென்றனர். இசைக்கூடத்தின் நடுவே தனது பீடத்தில் திருதராஷ்டிரர் இரு கைப்பிடிகளிலும் கைவைத்து முகம் சரித்து சற்றே செவி அவர்களை நோக்க அமர்ந்திருந்தார். அவரருகே சற்று சிறிய பீடத்தில் காந்தாரி நீலநாடாவால் கண்களை கட்டிக்கொண்டு பெருத்த வெண்ணிற உடல் மெழுகென பீடத்தில் உருகி வழிந்திருப்பதுபோல தெரிந்தாள். அவளுக்குப் பின்னால் காந்தார அரசியர் நின்றனர். உடனே சம்படையின் இன்மையை தருமன் உணர்ந்தார்.

திருதராஷ்டிரருக்கு வலப்பக்கம் நின்றிருந்த சஞ்சயன் குனிந்து பாண்டவர்கள் வருகையை அவர் செவிகளில் அறிவித்தான். அருகணைந்த தருமன் அவர்கள் முன் எண்சாண் உடல் நிலம் தொட விழுந்து வணங்கி “வாழ்த்துங்கள், தந்தையே. தங்கள் சொற்கள் என் குலம் பெருக வைக்கட்டும்” என்றார்.  உடலை மெல்ல அசைத்தமைந்து “நன்று நிகழ்க!” என்று தாழ்ந்த குரலில் திருதராஷ்டிரர் சொன்னார். திரௌபதி வணங்கியபோது திருதராஷ்டிரரின் குரல் எழவேயில்லை.

காந்தாரி தன்னை வணங்கிய திரௌபதியை கைபற்றி அருகணைத்து இடைசுற்றி “பெருத்துவிட்டாய்!” என்றாள். அவள் புன்னகையுடன் “ஐந்து மைந்தர்கள் பிறந்துவிட்டார்கள், அன்னையே” என்றாள். “ஆம், ஒவ்வொருவரையும் தொட்டுத் தழுவியதை நினைவு கூர்கிறேன்” என்றாள் காந்தாரி. மீண்டும் அவளை அணைத்தபடி “அரசமுறைமைகள் இன்றி இப்படி சந்திப்பதற்காகவே நீ முன்னரே இங்கு வந்திருக்கலாமடி” என்றாள். சத்யசேனை “ஆம், நான் உன்னை இந்திரப்பிரஸ்தத்தில் பார்த்தபோது அஞ்சி பின்னால் நின்றுவிட்டேன்” என்றாள்.

சத்யவிரதை திரௌபதியின் கைகளை பற்றிக்கொண்டு “அஸ்தினபுரிக்கு நெடுநாட்களுக்குப்பின் நீ வந்தது மகிழ்வளிக்கிறது, கிருஷ்ணை” என்றாள். சத்யசேனை “பிற மருகிகளையும் அழைத்து வந்திருக்கலாம். அவர்களும் இங்கு வந்து பல்லாண்டுகளாகின்றன” என்றாள். சுதேஷ்ணை “ஆம், நான் பலந்தரையை மிக விரும்பினேன். எளிமையான பெண். அங்கிருந்த நாளில் அவளிடம் நன்றாகப் பேசக்கூட முடியவில்லை” என்றாள். தேஸ்ரவை “இங்கேயே ராஜசூயம் நிகழவிருக்கிறது என்கிறார்கள். பிறகென்ன?” என்றாள். மிக இயல்பாக பெண்கள் ஒன்று கலந்ததை தருமன் வியப்புடன் நோக்கினார்.

பாண்டவர் ஒவ்வொருவரும் வந்து தன்னைப் பணிய ஒற்றைச் சொற்களில் அவர்களுக்கு வாழ்த்துரைத்தார் திருதராஷ்டிரர்.  அந்த அமைதியை கலைக்கும்பொருட்டு “தங்கள் ஆணையை ஏற்று பன்னிரு பகடைக்களம் சூழ இங்கு வந்துள்ளோம்” என்றார் தருமன். அவர் அச்சொற்களைக் கேட்டதாகத் தெரியவில்லை. எனவே தொடர்ந்து “எவ்வகையிலும் தங்கள் மைந்தர் களம் நின்று குருதி சிந்தக்கூடாதென்பதை நான் எண்ணிக்கொண்டிருந்தேன், தந்தையே. அவ்வண்ணமே இன்று நிகழவிருப்பது தங்கள் வாழ்த்தும் மூதாதையரின் அருளுமேயாகும்” என்றான்.

திருதராஷ்டிரர் உடலை மெல்ல அசைத்து இதழ்களைப் பிரித்து ஏதோ சொல்ல வந்தார். பின்பு சினத்துடன் சஞ்சயனை நோக்கி “மூடா, என்ன செய்கிறாய்?” என்றார். அச்சினத்திற்கு சற்றும் அஞ்சாமல் “சொல்லுங்கள், அரசே…” என்றான் சஞ்சயன். “இவர்களுக்கு நான் பரிசளிக்கவேண்டுமே, எங்கே அவை?” என்றார். “இங்குள்ளன” என்று சொல்லி சஞ்சயன் திரும்பி நோக்கி கைகாட்ட ஏவலர் அறுவர் சிறிய தாலங்களுடன் நிரையாக வந்தனர்.

திருதராஷ்டிரர் முதல் தாலத்திலிருந்து கணையாழி ஒன்றை எடுத்து தருமனுக்கு அணிவித்தார். “நன்று சூழ்க!” என்று வாழ்த்தினார். அவன் மீண்டும் அவர் காலைத் தொட்டு சென்னி சூடி “தங்கள் இனிய தொடுகையாக என் விரலில் என்றுமிருக்கட்டும் இது” என்றார். அவர் உறுமினார். பீமனுக்கு அணிவித்த கணையாழி சிறிதாக இருந்தது. அவன் ஆழிவிரலிலிருந்து சிறுவிரல் வரை மாறிமாறிப் போட்டு நோக்கியும் அது உள் நுழையவில்லை.

“பேருடல் கொண்டவனாக இருக்கிறாய்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். கசப்புடன் நகைப்பதுபோல அவரது முகத்தில் தசைகள் இழுபட்டு வாய் கோணலாகியது. “ஆம், தந்தையே. கதைப்பயிற்சியால் உடல் பெருத்துக்கொண்டே செல்கிறேன்” என்றான் பீமன். “இடைவிடாத பயிற்சியில்தான் எனது மூத்தவனும் இருக்கிறான். அவனும் உனக்கு நிகராகவே உடல் பெருத்திருக்கிறான்” என்றார் திருதராஷ்டிரர். பின்பு “நல்லூழாக போர் நிகழாது போய்விட்டது” என்றார்.

“நல்லூழாக அது மீண்டும் நிகழவும் கூடும்” என்றான் பீமன். முகம் சுருங்க “என்ன சொல்கிறாய்?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “போர் தெய்வங்களுக்கு உகந்ததல்லவா?” என்றான் பீமன். “ஆம். போர் உகந்தது. ஆனால் உடன் பிறந்தார் போர் அல்ல” என்று கூவியபடி திருதராஷ்டிரர் சினத்துடன் கையை ஓங்கினார். மெல்லிய குரலில் தங்களுக்குள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த பெண்கள் திகைத்து திரும்பிப் பார்த்தனர். “நான் நகையாட்டுக்கென சொன்னேன், தந்தையே” என்றான் பீமன். “இங்கு நிற்கட்டும் நகையாட்டு. இதற்கு மேல் சொல்லாடுவது எனக்கு உவப்பல்ல” என்றார் திருதராஷ்டிரர்.

அவருள் ஆழத்தில் ஏதோ சினம் கனன்றுகொண்டே இருப்பதை ஐவரும் உணர்ந்தனர். முறைமைச் சொற்களால் அதை மூடிவைக்க முயல்கையில் இடைவெளிகளில் எல்லாம் அது கொதித்துக் கசிந்துகொண்டே இருந்தது. தன் அகத்தை கடந்து வந்து தருமனிடம் இறுக்கமான புன்னகையைக் காட்டி “இளைப்பாறிவிட்டாயா?” என்றார் திருதராஷ்டிரர். பீமன் “அரச விருந்தினர் மாளிகையில் இளைப்பாறுகிறோம்” என்றான்.

காந்தாரி திகைப்புடன் “விருந்தினர் மாளிகையிலா? இவ்வரண்மனையின் மறுபக்கம் பாண்டவர்களுக்குரியதல்லவா? அங்கு தங்குமிடம் அமைத்தாலென்ன?” என்றாள். திரௌபதியிடம் “நீயும் அங்கேயா இருக்கிறாய்?” என்றாள். தருமன் சொல்லெழாது நிற்க சஞ்சயன் பணிந்து “அப்பகுதி மாற்றிக் கட்டப்பட்டுள்ளது, பேரரசி. அங்குதான் இப்போது கௌரவர்களில் இளையவர்கள் தங்கள் மனைவியருடன் வாழ்கிறார்கள்” என்றான். “அவர்களை வெளியேற்றுவதற்கு எவ்வளவு காலமாகப் போகிறது? இது என்ன விருந்தினர் மாளிகையில் இக்குடி பிறந்தோரை தங்க வைப்பது?” என்று காந்தாரி சொன்னாள்.

அதை கடந்துசெல்ல விரும்பிய தருமன் “பிதாமகரையும் துரோணரையும் கிருபரையும் சந்தித்தோம், தந்தையே. அவர்கள் கொண்ட உவகையையும் கண்ணீரையும் கண்டு இன்று எங்கள் நாள் நிறைந்தது” என்றார். “ஆம். துரோணர் ஒவ்வொரு நாளும் இளைய பாண்டவனுக்காக எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தார்” என்றார் திருதராஷ்டிரர். “அவர் மைந்தனும் அவரிடமிருந்து அகன்றுவிட்டான். அஸ்வத்தாமனை எண்ணும்போதெல்லாம் அர்ஜுனன் நினைவு வருகிறது என்று ஒருமுறை சொன்னார்.”

பீமன் “உத்தர பாஞ்சாலத்தில் அரசு சூழ்தலில் அஸ்வத்தாமன் அம்பு எய்வதை மறந்திருக்கமாட்டான் என்று எண்ணுகிறேன்” என்றான். அவன் சொன்னதில் பொருளேதும் உண்டா என்று புருவங்கள் சுருங்க தலையை சரித்த திருதராஷ்டிரர் “கற்ற கலை மறக்குமா என்ன? துரோணரின் குருதியென்றால் அது அஸ்வத்தாமனல்லவா?” என்றார். அர்ஜுனன் “ஆம், தந்தையே. அவருக்கு என்றும் முதன்மையானவர் அஸ்வத்தாமனே” என்றான்.

அச்சந்திப்பை முடித்துக்கொள்ள விரும்பியவனாக சஞ்சயன் உட்புகுந்து “பாண்டவ அரசரும் இளையோரும் அந்தியில் குலதெய்வப் பூசனைக்கு செல்ல வேண்டுமென்றும் அது முடிந்த பிறகே இன்றையபொழுது அமைந்ததென்று முரசறைய வேண்டுமென்றும் விதுரர் ஆணையிட்டுள்ளார், பேரரசே” என்றான். பெருமூச்செறிந்து “முறைமைகள் எதையும் மாற்றவேண்டியதில்லை. அவ்வண்ணமே ஆகுக!” என்றார் திருதராஷ்டிரர்.

காந்தாரி “பூசனைகள் முடிந்த பின்னர் நீ எதற்காக விருந்தினர் மாளிகையில் தங்குகிறாய்? நீ என் மாளிகைக்கு வந்துவிடு” என்று திரௌபதியிடம் சொன்னாள். திருதராஷ்டிரர் உரக்க “அவள் இன்று பாரதவர்ஷத்தின் அரசி. அதற்குரிய இடத்தில் அவள் இருப்பதே முறை” என்றார். “அதற்காக அவள் என் மருகி அல்ல என்றாகுமா என்ன?” என்றாள் காந்தாரி. “எதற்கு வந்தார்களோ அது முடியட்டும். அதன் பிறகு நாம் குருதி உறவுமுறைகளுக்கு திரும்புவோம்” என்றார் திருதராஷ்டிரர். “ஆம் தந்தையே, முறைமைகளை அதற்குப்பின் களைவோம். முதலில் இந்த பன்னிரு பகடைக்கள ஆடல் நிறைவுறுக!” என்றார் தருமன்.

பீமன் ஏதோ சொல்ல வாயெடுக்க அர்ஜுனன் அவன் கையை பற்றினான். தருமன் அதை அரைக்கண்ணால் நோக்கியபின் “நாங்கள் கிளம்புகிறோம், தந்தையே. மீண்டும் படைக்களம் சூழ்கையில் அவையில் தங்களை பார்க்கிறோம்” என்றார்.

“நன்று சூழ்க!” என்று மீண்டும் வாழ்த்தினார் திருதராஷ்டிரர். உரத்த குரலில் பீமன் “இத்தருணம்வரை கௌரவர்கள் எவரும் எங்களை வந்து சந்திக்கவில்லை. ஒருவேளை பன்னிரு பகடைக்களத்தில் மட்டும் சந்தித்தால் போதும் என்று எண்ணுகிறார்களோ என்று ஐயுறுகிறேன்” என்றான்.

திருதராஷ்டிரர் திகைத்து சஞ்சயனை நோக்கி முகம் திருப்பி “உண்மையா?” என்றார். “ஆம். முறைமைகளை மீற வேண்டியதில்லை என்று அரசர் எண்ணுகிறார்” என்றான் சஞ்சயன். திருதராஷ்டிரர் “ஆம், முறைமைகள் என்றால் அதைப் பேணுவதே உகந்தது” என்றார். “நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன்” என்றார் தருமன். “அஸ்தினபுரியின் அரசர் பன்னிரு பகடைக்களத்துக்குப் பிறகு எனது இளையவனாக அருகணையட்டும். காத்திருக்கிறோம். நன்றி” என்றபின் “செல்வோம்” என்று இளையோருக்கு கைகாட்டிவிட்டு திருதராஷ்டிரரை வணங்கி பின்பக்கம் காட்டாது நடந்தார்.

“நாளை பகலில் என் மாளிகைக்கு வா, இளையோளே” என்று சொல்லி காந்தாரி திரௌபதியின் கன்னத்தைத் தடவி தலையை இழுத்து வகிட்டில் முத்தமிட்டாள். “வருகிறேன், அன்னையே. துச்சளையைப் பார்த்து நெடுநாட்களாகிறது” என்றாள் திரௌபதி. காந்தாரியர் ஒவ்வொருவரின் கைகளையாகத் தொட்டு தலையசைத்து விடைபெற்று தருமனுடன் நடந்தாள்.

மீண்டும் தருமன் விப்ரரை நினைவு கூர்ந்தார். அவரது இருப்பு எத்தனை இயல்பாக முழுமையாக மறைந்துவிட்டது என்று எண்ணினார். புடவியின் உயிர்வெளியென்பது நீர்ப்பரப்பு போல எத்தனை அள்ளினாலும் தடம் எஞ்சாது என்றொரு சூதர் பாடலை நினைவுகூர்ந்தார். திருதராஷ்டிரராவது விப்ரரை எண்ணிக்கொள்கிறாரா என்றொரு எண்ணம் வந்தது. அவர் மறக்கவே முயல்வார் என்று தோன்றியது. மறக்க முயல்பவை கனவுக்குள் சென்று பதுங்கிக்கொள்கின்றன. புற்றுக்குள் நாகமென விழிமணியொளிரும் நஞ்சென அமுதத்தின் அருமணியென.

தொடர்புடைய பதிவுகள்

கடிதங்கள்

$
0
0

அன்புள்ள ஜெ.,

அராத்து தன் கடிதத்தில் “குறுங்கதை” எழுதுவது தான் மட்டுமே என்று குறிப்பிடுகிறார்..  Google-ல தேடினால் எஸ்.ராமகிருஷ்ணன் உட்படப் பலர் இந்த வடிவில், பெயரில் எழுதியிருக்கிறார்கள்..

இவரைப் போன்ற சிலர் போலிப்பணிவோடு உங்களுக்கு/உங்களைப்பற்றி எழுதும் பகடிகள் மிகவும் எரிச்சலூட்டுகிறது. உங்கள் வெண்முரசு விழா பற்றி அராத்து எழுதிய கடிதம் மற்றொரு உதாரணம்..

இவர்கள் பாஷையில் சொல்வதானால், கொசுத்தொல்லை தாங்கமுடியலை..

நன்றி,
ரத்தன்

 

 

அன்புள்ள ஜெ

 

எந்தவகையான ஆக்கப்பூர்வமான விமர்சனமும் இல்லாமல் வெறும் நக்கல்கிண்டல்களாகவே உங்களைப்பற்றி முகநூலில் எவ்வளவு எழுதிக்குவிக்கப்படுகிறதென அறிந்திருக்கமாட்டீர்கள். அவதூறுகள் கருத்துத்திரிப்புகளைக் கடந்தே இன்றைய வாசகன் உங்களை அணுகவேண்டியிருக்கிறது.

 

அத்தகையவர்களே சந்தர்ப்பம் கிடைக்கும்போது உங்கள் முன் பணிவுடன் நின்றிருப்பதையும் நீங்களும் சகஜமாக பேசுவதையும் காண்கிறேன். நீங்கள் இதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை. வாசகர்களை இது மிகவும் சங்கடத்திலாழ்த்துகிறது

 

சிவராம்

 

 

அன்புள்ள  ரத்தன் ,சிவராம்,

 

கேலியோ கிண்டலோ ஒன்றும் பிழையல்ல. அவற்றில் சாரமில்லை என்றால் அவை எளிய விளையாட்டுக்கள், அவ்வளவுதான். நான் அவற்றை சாதாரணமாகக் கடந்துசெல்லவே முயல்கிறேன்.

 

அனைவருடனும் உரையாடலில் இருக்கவேண்டுமென்பதே என் எண்ணம்

 

ஜெ

 

அன்புள்ள ஜெ.
வணக்கம். ஓரளவு சென்ற தலைமுறை எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகத்தோடு வளரந்து இன்று இணையத் தலைமுறை பொதுமைப்படுத்தலில் சிக்கிக்கொண்ட எளிய வாசகன் நான். மழைக்குடைகளாக முட்டி முட்டி வளர்ந்துகொண்டிருக்கும் சமகால இணைய எழுத்துக்கள்,எழுத்தாளர்கள் நிரம்பிய பொருள்காட்சியில் கண்பிதுங்கி விழிப்பது தொடர்பான என் குழப்பத்துக்கு இப்போது உங்களை விட்டால் வேறு மருந்தகம் இல்லை.
போதுமான அளவு இவர்களைப் படித்துவிட்டுதான் கேட்கிறேன்.. சமகால இலக்கிய விடிவெள்ளிகள், நவீன எழுத்தின் போர்வாள்கள் என தூக்கிப் பிடிக்கப்படுவோரின் எழுத்துகளும் வாசகனிடத்தே அவர்கள் நிகழ்த்தும் பரிமாற்றங்களும் ஏன் இத்தனை பலவீனமாக இருக்கின்றன?
அதற்காக ஆதவனோ நாஞ்சில்நாடனோ வந்து ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் இட்டால்தான் நான் தூங்குவேன் என  கேட்கவில்லை. ஆனால் இணையத்தில் எழுதப்படும் மிக மேலோட்டமான, அகம் சார்ந்த தேடல்கள் ஏதுமற்ற எழுத்து கூட ஏன் பல தளங்களில் மிகமிக ஆக்ரோஷத்துடன் முன்வைக்கப்படுகிறது? மூன்று பத்திகள் கோர்வையாக எழுதுவதற்கே backspace தந்தியடிக்கும் பேஸ்புக் எழுத்தாளர்கள்தான் இன்று எல்லாத் தொலைக்காட்சிகளிலும் சிந்தனைச்சிற்பிகள். எவ்வித தருணங்களையும் நல்கிச் செல்லாத வேகாதவை நிரம்பியிருக்கும் அவர்தம் புத்தகங்கள்தான் கவர்ச்சிகரமான பிரதேசங்களில் நாவல் வெளியீட்டு விழாக்களாக அரங்கேறுகின்றன. ஏதோ ஒரு மகத்தானதை நோக்கி முன்னேறுவதைப் போன்ற பாவனையுடனே பலரும் இங்கு பரபரக்கின்றனர். கை கொடுத்துக்கொள்கின்றனர். வாழ்வில் உய்வடைய எமக்கு உபதேசம் செய்கின்றனர்.
என் கேள்வியும் அங்குதான் வருகிறது. போதுமான இலக்கியப்பயிற்சி இல்லாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஓர் இனக்குழுவின் அறிவுப்போதாமையைப் பயன்படுத்தி mediocre எழுத்துகள் இங்கு சந்தைப்படுத்தப்படுகிறதாக உணர்கிறேன்.
இந்தத் தலைமுறையின் எழுத்தாக இணையத்தில் முன்னிறுத்தப்படும் முகங்கள் யாவும் – விதிவிலக்குகள் மிகச் சிலவே என விட்டுத்தள்ளினாலும் – எத்தகைய ஆழமும் உள்ளீடும் இன்றி ஜிகினாத்தாள்களாகவே இருக்கின்றனவே, இது அடுத்த தலைமுறை தமிழிலக்கியத்தின் மீது எத்தகைய சேதாரங்களை உண்டாக்கும் என நினைக்கிறீர்கள்? ஒரு வாசகன் இத்தகைய நிலைகுலைவுகளிலிருந்து தன்னை எங்ஙனம் காப்பாற்றிக்கொள்ளலாம்?
இப்படிப்பட்ட அவநம்பிக்கைச் சிந்தனைகள் தோன்ற காரணமாக இருந்ததையும் இணைத்துவிடுகிறேன். கீழ்க்கண்ட எழுத்தாளரின் பெயரை நீங்கள் இந்தத் தளத்தில் உச்சரித்தபிறகுதான் நான் அறிந்தேன். உங்களை விரிவாக பேட்டி கண்டவர் என்ற முறையிலோ என்னவோ, தவறான முன்முடிவுகள் ஏதுமற்றுதான் இச்சிறுகதையைப் படிக்கத் துவங்கினேன்.
நிமிரும்போது மிக அயர்ச்சியாக உணர்ந்தேன். ஓர் இலக்கியப்பிரதிக்கு உண்டான மொழிவளமோ உளவியல் முதிர்ச்சியோ ஆன்மச்சுத்தியோ எதுவும் தட்டுப்படாமல் மொத்தமாக இந்த எழுத்தே வாரமலர் தரத்தோடொத்துதான் என் கண்ணுக்குத் தெரிந்தது. இது நிஜமாகவே உருப்படியான படைப்புதானா  அல்லது சமகால இணைய இளைஞர்கள் வைத்துச் செல்லும் அகம்சார் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள எனக்குத்தான் பிரச்சினைகள் இருக்கின்றனவா?
தங்களின் மேலான கருத்துகளை தயவுசெய்து பகிர்ந்துகொள்ளவும்.
இப்படிக்கு
அருண்ராஜ்,
திருத்தணி.
அன்புள்ள அருண்ராஜ்
thiru kumaran என்னும் மின்னஞ்சலில் இருந்து எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் ஃபேஸ்புக்கில் செயல்படுபவராக இருக்கவேண்டும்
ஒரு கதையை, எழுத்தாளனை எதிர்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன. எவ்வகையிலும் பொருட்படுத்ததக்கவரல்ல என்றால் அப்படியே கடந்துசெல்லுங்கள். அப்படி எத்தனையோ பேர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
அல்ல, அவர் அல்லது அப்படைப்பு ஏதோ ஒருவகையில் பேசத்தக்கது என்றால் உங்கள் விமர்சனத்தை காரண காரியத்துடன் முன்வையுங்கள். அவருக்கும் உங்களுக்கும் உதவியானது
ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சுஜாதாவின் நடையின் பாதிப்பு

$
0
0

sujatha

 

அன்புள்ள ஜெ,

நான் கதை என்று சொல்லி என் நட்பு, உறவு வட்டத்தில் பரப்பும் விஷயங்களுக்கு இரண்டு விதமான எதிர் வினைகள் வரும்.  ஒன்று – Abrupt ஆக கதை முடிகிறது. இரண்டு – அப்படியே சுஜாதாவின் நடை.  இரண்டிலும் எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை.
சுஜாதாவை மட்டுமே 25 வயது வரை படித்து வந்தததன் பாதிப்பிலிருந்து விடுபடுவது சாத்தியமா?  பொதுவாக படித்த நடையின் பாதிப்பு இல்லாமால் எழுதுவது எப்படி?  என்னுடைய சில மாதிரி கதைகள்.

மாதிரி

பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு சிங்கம் - இது கொஞ்சம் காப்காவின் பாதிப்பு உள்ள ஒன்று.

 
அன்புடன்,
ஶ்ரீதர்
அன்புள்ள ஸ்ரீதர்
சுஜாதாவின் பாதிப்பு என்பது சரிதான்
சுஜாதாவின் நடை இளைய தலைமுறையினரில் தீவிர வாசிப்புப்பழக்கம் இல்லாதவர்கள் அனைவரையும் பாதித்திருப்பது. ஆரம்பகட்டத்தில் அனைவருடைய நடையிலும் இன்னொரு எழுத்தாளரின் பாதிப்பு இருக்கும். அது இயல்பே. ஆனால் சுஜாதாவின் பாதிப்பு அப்படி அல்ல. அதை சற்றே பிரித்தறியவேண்டும்
அசோகமித்திரனோ சுந்தர ராமசாமியோ உருவாக்கும் மொழிப்பாதிப்பு என்ன? அவர்கள் உள்ள ஓட்டத்தையோ புறவுலகையோ ஒரு குறிப்பிட்டவகையில் பார்க்கிறார்கள். அசோகமித்திரன் ஓர் அறிக்கையிடலாக விலகிநின்று நோக்குகிறார். சுந்தர ராமசாமி மெல்லிய கிண்டலுடன் கச்சிதமாக வகுக்க முயல்கிறார்
அவர்களை தொடர்ந்து வாசித்துப் பாதிக்கப்படுக்ம்போது நாமும் அம்மனநிலைக்குள் செல்கிறோம். நம் மொழிநடை அவ்வாறு மாறுபடுகிறது. அவர்களின் தனியுலகம் நம்முடையதென்றாகிறது. பின்னர் நாம் நம் தனியுலகை உருவாக்கிக்கொள்கையில் அதிலிருந்து மீண்டு கடந்துசெல்கிறோம்
சுஜாதா தனக்கென ஒரு தனியுலகை உருவாக்கிக்கொண்ட எழுத்தாளர். கூடவே மிகப்பெரிய வணிகப்படைப்பாளி. அத்தகைய படைப்பாளிக்குரிய ஒரு சிறப்புக்குணம் அவருக்குண்டு. சமகால வாழ்க்கையை, மோஸ்தர்களை, பேச்சுமொழியை கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார். அதிலுள்ள சுவாரசியமான பகுதிகளை எடுத்து தொகுத்து தன் உரைநடைக்குள் கொண்டுவந்தார். அவரது புனைகதையின் உரையாடல்களைப்பார்த்தால் அது தெரியும்
அதாவது அவரது உலகமென்பது அவரது அகம் சார்ந்தது அல்ல. அது தமிழ்ச்சமூகத்தின் சுவாசியங்களை நோக்கி வைக்கப்பட்ட கண்ணாடி.ஒரு பெருந்தொகுப்பு. சினிமா, வம்புகள், அன்றாட உரையாடல், இதழ்கள், செய்திகள் என அனைத்திலிருந்தும் எடுக்கப்பட்டது. என்ன சிக்கல் என்றால் ஒவ்வொன்றிலிருந்தும் அவர் மேலோட்டமான சுவாரசியங்களையே எடுத்துக்கொண்டார்.
இரு உதாரணங்களைச் சொல்கிறேன். சுஜாதா அறிவியல்குறித்தெல்லாம் எழுதியிருக்கிறார். இன்று விக்கிபீடியா யுகத்தில் அவரது ஏன் எதற்கு எப்படி போன்ற கட்டுரைகளில் மேலதிகமான ஒரு வேடிக்கை மட்டுமே எஞ்சியிருக்கிறது. அவர் இலக்கியக்கொள்கைகளைப் பற்றி எழுதிய கட்டுரைகளின்போதுதான் அவருக்கு அவை குறித்த மேலோட்டமான அறிதலே உள்ளது என்றும், அவற்றிலுள்ள பொதுசுவாரசியத்திற்கு அப்பால் அவர் செல்லவில்லை என்றும் எனக்குப்புரிந்தது
இன்னொரு உதாரணம், ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  ‘ஹோமியோ மருந்துபோல குறையக்குறையத்தான் வீரியம்’ என நக்கலாக எதைப்பற்றியோ சொன்னேன். அடுத்த வாரமே அந்த வரியை அவர் வாரஇதழ் கட்டுரை ஒன்றில் பயன்படுத்தியிருந்தார். அதை சுட்டி எனக்கு ஒரு கார்டும் போட்டிருந்தார்.
சுஜாதாவின் பாதிப்பு நம்மை சுவாரசியம் என்பதில் கட்டிப்போடுகிறது. கல்கி இதே பாதிப்பை ஒரு தலைமுறைக்கு முன் மிகப்ப்பரவலாக உருவாக்கியவர். சுவாரசியத்தை உருவாக்கிக்கொள்ளுதல் என்று அதற்குப்பொருள். சுஜாதா இயல்பாகவே கூர்மையும் மொழித்திறனும் கொண்டவர். ஆகவே அந்த சுவாரசியம் ஈர்த்தது. அவரைப்போல எழுதுபவர்களால் அந்த கூர்மையை அடையவே முடியவிலை.
சுஜாதாவிலிருந்து வெளிவராது நல்ல உரைநடை எழுதமுடியாது. சுஜாதா எஞ்சியிருந்தால் செயற்கையான சுவாரசியம் நோக்கியே செல்ல முடியும்.பண்பாட்டின் சுவாரசியமான பகுதிகளை மட்டுமே நக்கிப்பார்க்கத் தோன்றும்.
இலக்கியத்திற்கு சுவாரசியம் ஒரு நிபந்தனையே அல்ல. ஆர்வமுள்ள வாசகனுக்காக மட்டுமே அது எழுதப்படுகிறது. அதன் உள்ளடக்கத்தால், வாழ்க்கையுடன் அதுகொண்டுள்ள உறவால் அவனை அது ஈர்க்கிறது. அது ஞானத்தின் ஈர்ப்பே ஒழிய அரட்டையின் உற்சாகம் அல்ல
ஆகவே எதைச் சொல்லவேண்டுமோ அதைமட்டும் சொல்லுங்கள். வேடிக்கை காட்டவேண்டியதில்லை. அவதானிப்பை, உணர்வுகளை, கண்டடைதல்களை மட்டும் இலக்கியமாக ஆக்க முயலுங்கள்.
மானுட உள்ளம் சொல்லித்தீரா புதிர்கள் கொண்டது. நாம் வாழும் புறவுலகமோ முடிவிலாது மாறிக்கொண்டிருக்கும் விந்தை. அதை மொழியால் சந்திக்கமுயல்வதே இலக்கியமாக ஆகிறது
ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 80

$
0
0

[ 7 ]

அஸ்தினபுரியின் அரண்மனை வளாகத்தில் வடமேற்கு மூலையில் கலிங்கச்சிற்பி காளிகர் தலைமையில் நூற்றெட்டு பெருந்தச்சர்கள் தங்கள் ஆயிரம் மாணவர்களோடு நாற்பத்தெட்டு நாட்கள் இரவும் பகலுமென பணிபுரிந்து பன்னிரு படைக்களத்தை அமைத்து முடித்திருந்தனர். ஒன்றன்மேல் ஒன்று கவிழ்ந்த ஏழு குவைமுகடுகளுடன் இமயமலைச்சாரலில் முதிர்ந்த தேவதாரு மரத்தைப் போன்று வடிவு கொண்டிருந்தது அப்பெருங்கூடம். நான்கு பெருமுற்றங்களும் சுற்றிச்செல்லும் இடைநாழிகளும் கொண்டிருந்தது. கிழக்கு முகப்பில் இரு முரசுமேடைகள் எழுந்திருந்தன.

பழுதற்ற வட்ட வடிவமாக அதன் உட்புறம் அமைக்கப்பட்டிருந்தது. நூற்றெட்டு தூண்கள் அதன் கூரையைத் தாங்கியபடி நிரை கொண்டிருந்தன. சரிந்து சென்று வளைந்து தாமரை இதழென விளிம்பு சுருண்ட மரப்பட்டைக் கூரைக்கு அடியில் தூண்களுக்குப் பின்னால் இருபத்துநான்கு படிகளாக  எழுந்து சென்ற வளைவில் அஸ்தினபுரியின் குடிகள் மூவாயிரம்பேர் அமர்ந்து  பகடைக்களத்தைப் பார்ப்பதற்கு பீடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தூண்களை ஒட்டி  இன்னுணவும் மெல்பொருளும் கொண்டுசெல்லும் ஏவலரும் அடைப்பக்காரர்களும் செல்வதற்கான இடையளவு ஆழம் கொண்ட ஓடை போன்ற பாதை ஒன்று பன்னிரு படைக்களத்தை சுற்றி வந்தது.  அதிலிருந்து பிரிந்த சிறிய ஓடைவழிகள் ஒவ்வொரு பீடநிரைக்கும் அருகே சென்று முடிந்தன. கூடத்தின் அடித்தளத்திற்குள்ளிருந்து எழுந்து வந்த ஏழு சுரங்கப்பாதைகள் அதில் வந்து இணைந்தன. அப்பாதைகள் அனைத்தும் அப்பாலிருந்த அடுமனைக்கும் ஏவலர்கூடத்திற்கும் சென்று வாய்திறந்தன.

தூண்நிரைகளுக்குள் முதலில் பன்னிரண்டு பீட வரிசைகளாக அமைச்சர்களும் பெருவணிகர்களும் படைத்தலைவர்களும் அமரும் பகுதி இருந்தது. மீண்டும் ஒரு ஓடைப்பாதை சுற்றி வர அவ்வட்டத்திற்குள் ஏழு நிரைகளாக அரசகுடியினர் அமரும் பீடங்கள் போடப்பட்டிருந்தன. நடுவே பலகைகளால் அமைக்கப்பட்ட தரைமேல் செந்நிற மரவுரி விரித்த வட்ட வடிவ ஆடுகளம் அமைந்திருந்தது. அதற்கு வலப்பக்கமாக அரசர் அமர்வதற்கான அரியணை மேடை இருந்தது. இடப்பக்கம் நிமித்திகன் எழுந்து அறிவிப்புகளை அளிப்பதற்கான முறை மேடை. அதன் அருகே இருபுறமும் சிறுமுரசுகளுக்கான கட்டில்கள் இருந்தன.

மாளிகையில் பேரரசரும் அரசரும் வருவதற்கான செந்நிற மரவுரி மெத்தையால் மூடப்பட்டிருந்த பாதை கிழக்குப் பெருவாயிலில் இருந்து வலப்பக்கமாக வந்தது.  இடப்புறம் பிற அரசகுடியினர் வந்து அமர்வதற்கான பாதை அதே வடிவில் வழிந்து வந்தது. மேற்குப் பெருவாயில் வணிகர்களும் குடித்தலைவர்களும் வருவதற்குரியதாக அமைக்கப்பட்டிருந்தது. தெற்குப் பெருவாயில் நகர்குடிகள் வந்து அமர்வதற்குரியதாகவும் வடக்குப் பெருவாயில் காவல் வீரர்களுக்குரியதாகவும் ஒதுக்கப்பட்டிருந்தது.

அவைக்கு நடுவே பன்னிரு பகடைக்களம் விரிப்பதற்காக வட்டமாக அமைந்திருந்த தாழ்வான மரமேடைக்கு நேர் உச்சியில் படைக்களத்தின் குவைக்கூரையின் மையம் அமைந்திருந்தது. குடை போல கவிந்து வளைந்திறங்கிய கூரைக்கு அடியில் என நூற்றெட்டு சாளரங்கள் ஒவ்வொரு தூண் இடைவெளியிலும் வெளி நோக்கித் திறந்து ஒளியை உள்ளே பெருக்கின. ஒவ்வொரு சாளரத்திற்கும் நடுவே மான்கண் பலகணிகள் காற்றை உள்ளே ஊதி தூண்களில் முட்ட வைத்து பிரித்து அவைக்களம் முழுக்க சுழன்று வீச வைத்தன.

பகடைக்களம் அமைந்த மையத்தை நோக்கியபடி இருபக்கமும் தூண்களுக்குமேல் அரசமகளிர் அமர்வதற்குரிய அரைவட்ட உப்பரிகைகள் திறந்திருந்தன. அவர்கள் கிழக்கு முற்றத்திலிருந்தே இரண்டு மரப்படிக்கட்டுகளின் வழியாக ஏறி அந்த உப்பரிகைகளை அடைய முடியும். உப்பரிகை முகப்புகளில் அரசமகளிரை பிற விழிகளில் இருந்து மறைப்பதற்காக பீதர்நாட்டு மென்பட்டுத் திரைச்சீலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்களின் செய்தியை அவைக்கு அறிவிக்கும் நிமித்திகன் நிற்பதற்காக இரு சிறு அகல்வடிவ நீட்சிகள் உப்பரிகைகளின் வலது ஓரத்தில் கட்டப்பட்டிருந்தன.

அரசகுடியினருக்குரிய சிம்மக்கால் பீடங்கள் செந்நிறப்பட்டு உறைகள் போடப்பட்டிருந்தன. படைத்தலைவர்களுக்கும் குடித்தலைவர்களுக்கும் பெருவணிகர்களுக்கும் உரிய  மான்கால் பீடங்கள் வெண்பட்டு உறையால் மூடப்பட்டிருக்க குடிமக்களுக்குரிய கூர்கால் பீடங்கள் இளநீல மரவுரியால் மூடப்பட்டிருந்தன.

களத்தின் சுவரோரமாக படைக்கலமேந்திய காவலர் விழியறியாமல் நிற்பதற்கான  ஆயிரத்தெட்டு கரவு வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தூணும் கூரையைச் சென்றடையும் இடத்தில் மூன்று வில்வீரர்கள் நிற்பதற்குரிய இடத்துடன் ஏந்திய கிண்ணம் போன்ற உப்பரிகைகள் இருந்தன. அவர்களை கட்டுப்படுத்தும் படைத்தலைவன் கொடிகளுடன் நிற்பதற்கு கிழக்குக் கூரைச்சரிவில் சிறிய உப்பரிகை ஒன்று அகல்விளக்குபோல நீண்டிருந்தது.

தரையில் ஏழு வட்டங்களாக பீடிகைகள் அமைந்து அவற்றின்மேல்  பழுத்த செந்தேக்கினாலான தூண்கள் ஊன்றிப்பதிந்து எழுந்து மெழுகுப்பூச்சுடன் கன்னித்தோல் வளைவென ஒளிகொண்டிருந்தன. ஏழு வளையங்களாக விரிந்து கூரையைத் தாங்கிய வேதிகைகளைச் சென்றடைந்து பொருந்தியிருந்தன. குவைக்கூரையின் வளைவுகளில் வெண்சுண்ணம் பூசப்பட்டு  உடல்கொண்டு உடல்நிரப்பி பரப்பென நிறைந்த தேவர் உருவங்கள் வரையப்பட்டிருந்தன. வலப்பக்கம் தேவர்களும் இடப்பக்கம் அசுரர்களும் அணிவகுத்து நடுவே வெண்நுரைவட்டத்துடன் அலைகொண்டிருந்த பாற்கடலில் அமுது கடைந்து கொண்டிருந்தனர்.

வாசுகியின் செவ்விழிகள் எரிந்த பெருந்தலை முக்கண்ணன் அருகே வாய்திறந்திருந்தது.  அவனருகே சற்று அஞ்சியவனாக அவன் துணை நின்றிருந்தான். வாசுகியின் உடலின் முதல்வளைவை இந்திரன் பற்றியிருந்தான். முடிவுச்சுருளை அனலோன் பிடித்திருந்தான்.  உச்சகட்ட விசையுடன் உடல் திமிறிய தேவர்கள் பெரும்பரப்பென அவ்வரைவட்டத்தை நிறைத்திருந்தனர். அவர்களுக்கு நடுவே கருவண்ணக் கோல நெளிவுபோல வாசுகியின் உடல் புகுந்து வளைந்து வந்தது. மறுபக்கம் கருநீலநிற உடல் கொண்ட அசுரர்கள் வளைந்து தங்களுக்குள் புகுந்து கரந்து எழுந்து நிறைந்த வாசுகியின் வாலை பற்றியிருந்தனர். குவைக்கூரை முகடின் மையக்குமிழி மேரு மலையெனத் தெரிந்தது.

ஒவ்வொரு தூணுக்கு மேலும் ஏற்றப்பட்டிருந்த விளக்குகளின் ஒளி அவ்வோவியத்தின் மேல் விழும்படியாக அவற்றுக்குக் கீழ் மலர்ந்த அரைவட்டமாக உள்ளே வெள்ளி பூசப்பட்ட ஆடிக்கிண்ணங்கள் அமைந்திருந்தன. முற்றிலும் ஒலி கட்டுப்படுத்தப்பட்ட பகடைக்களத்தில் நடமாடும் வீரர்களின் காலடி ஓசைகளும் செருமல்களும்கூட தெளிவாக ஒலித்தன. எனவே அவைக்களம் முழுக்க தரைமேல் அழுத்தமான மரவுரி மெத்தை மூடியிருந்தது. அங்கு நுழைபவர்கள் மரவுரி காலணியணிந்து மட்டுமே நுழையவேண்டும் என்று வகுக்கப்பட்டிருந்தது.

நூற்றெட்டு தூண்களில் தேவர்களின் உருவங்கள் கைகோத்து உடல் நெளிந்து நிறைந்திருந்தன. எட்டு திசைக்காவலர் தூண்களின்மேல் புடைத்து எழுந்து ஆடுகளத்தை நோக்கி விழிவிரித்திருந்தனர். மையக்களத்தின் வலப்பக்கம்  மோகினி  அமுதுடன் புன்னகைத்து நின்றிருக்க இடப்பக்கம் தட்சன் நஞ்சுக் கலத்துடன் சீறி எழுந்திருந்தான். நடுவே  துலாக்கோல் ஒன்று ஊசிமுனையில் நின்று காற்றின் அசைவுக்கேற்ப ஆடிக்கொண்டிருந்தது.

பன்னிரு படைக்களத்தின் இறுதிப்பணி முடிந்த அன்று  முதற்காலைப் பொழுதில் தலைமைச்சிற்பி காளிகர் தன் இல்லத்திலிருந்து அதை பார்வையிடுவதற்காக வந்தார். வலக்காலெடுத்து முற்றத்தில் வைத்ததுமே உடல் நடுங்கி கைகூப்பி நின்றார். பெருந்தச்சர்களும் மாணவர்களும் அவரை நோக்கி திகைத்து விழிவிரித்தனர். அவர் விழிதிறந்து மேல்மூச்சுவிட்டு “செல்வோம்” என்றார்.

தன்னந்தனிமையிலென கடுகி நடந்து கிழக்கு வாயிலினூடாக பன்னிரு பகடைக்களத்துக்குள் நுழைந்தார். பிறர் தயங்கி வெளியே நின்றுவிட அவர் மட்டும் முகில்மேல் தேவனென கால்வைத்து கள மையத்துக்கு வந்து நின்றார். முற்றிலும் ஒழிந்து அவரைச் சூழ்ந்திருந்தது பன்னிரு படைக்களம். இதழ்களை விரித்து அவரை உள்வாங்கிய பெருந்தாமரை மூடிக்கொண்டது போல் இருந்தது. பின்பு முதல் நோக்குணர்வை அடைந்தார். திகைத்து விழிதூக்கிப் பார்த்து மெல்ல சுழன்றபோது தன்னை நோக்கி அங்கே நிறைந்திருந்த அனைவரையும் கண்டார்.  இருகைகளையும் தலைக்கு மேல் கூப்பி “யான் எளியேன்!” என்றார்.

உடல்நடுங்க மேற்கு வாயிலினூடாக நடந்து வெளியேறினார். பன்னிரு படைக்களத்தைச் சுற்றி ஓடிவந்த அவரது மாணவர்களும் தச்சர்களும் அவரைச் சூழ்ந்தனர். “பிழையற்றிருக்கிறது” என்றார். “பிழையற்றவை தெய்வங்களின் களம். இனி எவரும் அதை பார்க்கவேண்டியதில்லை. பன்னிரு படைக்களம் சூழும் நாளில் இதை திறந்தால் போதும். வாயில்களை மூடுங்கள்” என்றார். “அவ்வாறே” என்றார் தலைமைத்தச்சர்.

எவரையும் நோக்காமல் திரும்பி நடந்து சென்ற காளிகர் தன் மாளிகைக்குச் செல்லாமல் அஸ்தினபுரியின் பெருவீதியை அடைந்தார். அவர் எங்கு செல்கிறார் என்று தெரியாமல் தச்சர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர். தலைமைச்சிற்பி நடந்து செல்வதைக்கண்டு சாலையின் இருபுறமும் மக்கள் கூடினர். தனக்கென முன்பே வகுக்கப்பட்ட வழியில் நடந்து கோட்டை முகப்பை அடைந்து வெளியே சென்றார். அங்கு அவரருகே வந்து நின்ற தேரை விலகச்சொல்லிவிட்டு நடந்து சென்று மறைந்தார். கங்கைப் படகொன்றில் ஏறி “செல்க!” என்று அவர் ஆணையிட்டதும் அப்படகு ஒழுக்கிலேறி மறைந்ததாக ஒற்றர்கள் சொன்னார்கள். அவர் கலிங்கத்தையும் சென்றடையவில்லை.

[ 8 ]

முதற்பொழுதிற்கான பறவைக்குரல் எழுந்தபோது பன்னிரு பகடைக்களம் கூடுவதற்காக தருமன் முற்றிலும் சித்தமாக தன் அறையில் அமர்ந்திருந்தார். நறுமண நீராடி இளஞ்செம்பட்டாடை அணிந்து, மணிச்சரம் சுற்றிய தலைப்பாகை சூடி,   அரசமணியாரம் மார்பில் தவழ, செந்நிற இடைக்கச்சையில் வைரங்கள் பதிக்கப்பட்ட பிடிகொண்ட குத்துவாள் செருகி அரசணிக்கோலத்தில் இருந்தார். நெய்ப்பூச்சில் தாடி மின்னியது. குழற்சுருள்கள் தோளில் விழுந்துகிடந்தன.

முந்தையநாள் இரவு ஆலயப்பூசனைகள் முடித்து திரும்புகையில் அர்ஜுனன் அவரிடம் “மூத்தவரே, நாளைய ஆடலில் தங்கள் உள்ளம் தெளிவுற அமைந்தாக வேண்டியுள்ளது. எனவே இன்றிரவு தாங்கள் முற்றிலும் அமைந்து துயிலல் வேண்டும்” என்றான். “ஆம்” என்றார் தருமன். “தாங்கள் நிலைமறக்கச் செய்யும் கடுங்கள் அருந்தா நெறி கொண்டவர் என்று அறிவேன். இன்றிரவு தாங்கள் சற்றே அதை அருந்துவதில் பிழையில்லை. நல்ல துயில் நாளை உங்களை புத்துணர்ச்சியுடன் களமாடச்செய்யும்” என்றான். “நன்று சூழ்வதற்காக சிறு நெறிபிழை ஒன்றை ஆற்றலாம் என்று நெறிநூல்களும் சொல்கின்றன.”

தருமன் புன்னகையுடன் நோக்கி “இளையோனே, நெறியென்றால் என்னவென்று எண்ணுகின்றாய்? நன்றென நாம் உணரும் ஒன்றின் பொருட்டு எப்போது வேண்டுமானாலும் சுருட்டி வைத்துக் கொள்ளத்தக்க பட்டாடையா அது?” என்றார். “அது மணிமுடியல்ல, காலணி. முள்ளும் கல்லும் நிறைந்த பாதையில்தான் காலில் இருந்தாக வேண்டும்.”

“நான் சொல்லாட விழையவில்லை. தாங்கள் துயின்றாக வேண்டும்” என்றான் அர்ஜுனன். “நான் துயிலமாட்டேன் என்று எண்ணுகிறாயா?” என்றார் தருமன். அர்ஜுனன் “ஆம், அவ்வாறே எண்ணுகிறேன்” என்றான். “ஏனெனில் ஒவ்வொருநாளும் தங்கள் விழிகள் சிவந்திருக்கின்றன. பல நாட்களாக தொடர்ந்து துயில் நீப்பதன் தடங்கள் உங்கள் முகம் முழுக்க இருக்கின்றன. மூத்தவரே, இச்சில நாட்களுக்குள் எத்தனை முதிர்ந்துவிட்டீர்கள் என்று அறிவீர்களா?”

“ஆம்” என்று தருமன் தன் தாடியை தடவியபடி சொன்னார். “ஆனால் நான் வெல்ல வேண்டுமென்று எந்தையர் விரும்பினால் என்னை துயில வைக்கட்டும். அதன் பொருட்டு நெறிமீறலைச் செய்ய விரும்பவில்லை” என்றார். “இளையோனே, என் வாழ்வின் முதற்பெருங்களம் இது. இதை ஒரு நெறிப்பிழையுடன் தொடங்குவது எனக்கு உகந்ததல்ல.” அர்ஜுனன் “தங்கள் விருப்பம்” என்று சொல்லி நிறுத்திக்கொண்டான்.

தருமன் தன் மாளிகைக்குத் திரும்பியபோது அங்கே விதுரர் அவருக்காக காத்திருந்தார். முகமன் சொல்லி அவர் வணங்கியபோது மறுமொழி சொல்லி தலைவணங்கினார். “நாளைக்கென சித்தமாகுங்கள், அரசே. அதை சொல்லிச் செல்லவே வந்தேன்” என்றார். தருமன் அவரை நோக்க “தாங்கள் சின்னாட்களாகவே மிகவும் நிலையழிந்திருக்கிறீர்கள். துயில் நீப்பினால் விளைந்த நடுக்கம் விரல்களிலும் இதழ்களிலும் இருந்துகொண்டே உள்ளது. சொற்களும் குழறுகின்றன. இந்நிலையில் தாங்கள் களம் நிற்பது எளிதல்ல” என்றார் விதுரர்.

“ஆம், பகல் முழுக்க ஒவ்வொன்றும் தெளிவாக தங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றன. இரவு அனைத்தையும் ஒன்றாக குழப்பிவிடுகிறது. இருளுக்குள் முற்றிலும் தனியனாக இருக்கிறேன்” என்றார் தருமன். “தாங்கள் துயின்றாக வேண்டும். தேவையென்றால்…” என்று அவர் சொல்ல வாயெடுக்க தருமன் “சற்று முன்னர்தான் இளையவனும் நான் கடும்மது அருந்தலாம் என்று சொன்னான்” என்றார்.

விதுரர் “ஆம்” என்றார். “இல்லை. உள்ளம்பிழைக்க மதுவருந்துவதில்லை என்பது என் நெறி. நெறிப்பிழையுடன் களம் புக விரும்பவில்லை. அதை என் தெய்வங்களும் விரும்பாது” என்றார் தருமன். “அரசே, நாளை நிகழவிருப்பதன் விரிவை உண்மையிலேயே தாங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?” என்றார் விதுரர். “ஏன், நான் தோற்பேன் என்று எண்ணுகிறீர்களா?” என்றார் தருமன்.

“அவ்வாறல்ல. களம் அமைவதற்குமுன் வெற்றிதோல்விகளை தெய்வங்களும் சொல்லமுடியாது. ஆனால் இதன் இறுதி என்ன என்று தாங்கள் சற்றேனும் உணர்ந்திருக்க வேண்டும்” என்றார் விதுரர். “என்ன? என் இளையவனுக்கு முன் சிறியவனாவேன், அவ்வளவுதானே? அது நிகழுமென்றால் தெய்வங்கள் எனக்கு வகுத்தளித்த இடமென்றே கொள்கிறேன். பிறகென்ன?” என்றார் தருமன்.

விதுரர் நீள்மூச்சுவிட்டு “நன்று!” என்றார். தருமன் புன்னகைத்து “ஏன் அமைச்சரே, இத்தருணத்தில் தாங்கள் சென்று சகுனியிடமும் இதை சொல்ல வேண்டுமல்லவா?” என்றார். “அவர் துயில் நீப்பதற்கு வழியில்லை” என்றார் விதுரர். “இப்படைக்களத்தை அமைப்பவர்கள் அவர்கள். சிலநாட்களாக எனக்குத் தோன்றிக்கொண்டிருக்கிறது, பல்லாண்டுகளுக்கு முன்னரே இதை நோக்கி அவர்கள் அனைத்தையும் நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்று. மலை பிறக்கும் நதியொன்றை விரும்பிய வயலுக்கு கொண்டு செல்வது போல. உரிய இடங்களில் பாறைகளை அமைத்து, சிற்றணைகள் கட்டி, வாய்ப்புள்ள இடங்களில் கரையுடைத்து, வழியளித்து கொண்டுசென்றிருக்கிறார்கள். இன்று திரும்பிப்பார்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் அவர்களால் வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.”

“அவர்களால் என்றால்…?” என்றார் தருமன். “உண்மையில் ஒருமையில் சொல்ல வேண்டும். கணிகரால்” என்றார் விதுரர். எரிச்சலுடன் கைவீசி “அவரை நீங்கள் மிகைப்படுத்தி எண்ணுகிறீர்கள்” என்றார் தருமன். “அரசே, பல்லாயிரம் கைகளுடன் பகடையாடிக் கொண்டிருப்பவர்களாக என் கற்பனையில் விரியும் உச்ச எல்லை வரை மிகைப்படுத்திக்கொள்ளும் இருவரில் ஒருவர் அவர்” என்றார் விதுரர்.

“அது உளமயக்கு” என்றார் தருமன். “ஒரு பெருநிகழ்வுக்குப் பிறகு திரும்பிப்பார்த்தால் ஒவ்வொன்றும் அதை நோக்கியே அனைத்தையும் உந்திச் செலுத்திக் கொண்டிருப்பதை அறிவோம். அது  நமது பார்வையின் கோணம் மட்டுமே. இங்கு நிகழும் ஊழின் ஆடல் அனைத்தையும் ஒருவரே ஆற்ற முடியும் என்றால் அவர் மானுடர் அல்ல, தெய்வம்.” விதுரர் “தெய்வம் அருள் கொண்டதாக மட்டும் இருக்கவேண்டும் என்பதில்லை. பெரும் மருள் வடிவமாகவும் இருக்கமுடியும்” என்றார்.

“எவ்வாறாயினும் நன்று. நாளை மாதுலர் சகுனி நன்கு துயின்று விழித்து புன்னகையுடன் களமாட வரட்டும். நானும் அவ்வாறே செல்கிறேன். அவரை வெல்கிறேன். பல லட்சம் படைகளைக் கொண்ட போர் ஒன்றை நடத்தி முடித்த மாமன்னனுக்கு நிகரான புகழை நானும் அடைவேன்” என்றார் தருமன். பெருமூச்சின் ஒலியில் “அவ்வண்ணமே ஆகுக!” என்றார் விதுரர்.

தருமன் திரும்பி பீமனிடம் “மந்தா, மடைப்பள்ளிக்குச் சென்றுவிட்டு விரைவிலேயே நீயும் மாளிகைக்கு திரும்பு. முன்னரே துயின்று எழு” என்றபின் படியில் ஏறி இடைநாழியில் நடந்து தன் மஞ்சத்தறை நோக்கி சென்றார். நீராடி உடைமாற்றி உணவருந்தி தன் அறைக்குள் புகுந்தார்.

தனிமையை அடைந்த மறுகணமே அன்றிரவும் தான் துயிலப்போவதில்லை என்று தோன்றியது. அச்சத்துடன் திரும்பி வெளியே சென்று ஏவலனை அழைத்து திரிகர்த்த மதுவுக்காக ஆணையிட ஒருகணம் உன்னி உடனே உளம் குவித்து அதை வென்று திரும்பினார். “ஆம், இன்றும் துயில் நீத்து மதிமழுங்கி நாளை களம் அமைவதே தெய்வங்களின் ஆணை என்றால் அவ்வண்ணமே ஆகுக! நான் பொருதுவது தெய்வங்களுடன்!” என்று தனக்குள் தானே சொல்லிக்கொண்டார்.

சாளரத்தை அடைந்து திறந்து வெளியே மெல்லிருள் பரவிய வானத்தின் பகைப்புலத்தில் அடரிருள் வடிவங்களாகத் தெரிந்த மரக்கிளைகளின் இலைவிளிம்புகளை நோக்கிக் கொண்டிருந்தார். மிகத்தொலைவில் ஒரு விண்மீன் சிமிட்டிக் கொண்டிருந்தது. சொல் சொல் சொல் என்று. அவர் அதையே நோக்கிக்கொண்டிருந்தார். அணுகி வந்து மிக அருகே நின்றது. தனித்த விண்மீன். அப்படியென்றால் அது என்ன? துருவ விண்மீனா? அது வடதிசையா?

பகடைக்களத்தை எடுத்துப் பரப்பி ஒருமுறை ஆடலாமா என்று எண்ணினார். சகுனி பரப்பப்போகும் களத்தின் அனைத்து வழிகளையும் முன்னரே பலமுறை அமைத்து அமைத்து பயின்றிருந்தார். அவற்றில் எழாத பிறிதொரு முறை எழக்கூடுமோ? ஆமையோட்டுப் பேழையைத் திறந்து நாற்களத்தை எடுத்து விரித்தார். காய்களைப்பரப்பி தந்தப்பேழையிலிருந்த பகடையை கையில் எடுத்தபோது ஒருநாளும் உணராத பெரும் சலிப்பொன்றை அறிந்தார்.  அவற்றை திரும்பவும் தந்தப்பேழைக்குள்ளிட்டு தூக்கி வீசினார். நாற்களப் பலகையை மடித்து அப்பால் இட்டபின் மஞ்சத்தில் கால் நீட்டி மல்லாந்து படுத்தார்.

ஒரு கணத்தில் பல்லாண்டுகளாக அவர் பயின்று வந்த நாற்களமாடல் அத்தனை பொருளற்றதாக மாறிய விந்தையை திரும்பி நோக்கினார். மீள மீள எண்களில் சிக்கி மதியிழந்து களிக்கும் மாயைதானா அது? பொருளின்மையை இரண்டு நூறு  கோடியென பகுத்து பகுத்தாடும் தவமா அது?

இத்தருணத்தில் இப்பெரும் விலக்கு ஏன் உருவாகவேண்டும்? நாளை களம் அமைவதற்கு முன்னரே சலிப்புற்று விலகி நின்று பார்த்திருக்கப் போகிறேனா? கண்களை மூடிக்கொண்டு அவ்வெண்ணங்களை விலக்க முயன்றார். ராஜசூயம் தொடங்குவதற்கு முன்பும் இதே சலிப்பை அடைந்ததை நினைவுகூர்ந்தார்.

நாளை நாளை என்று காத்து, இதோ இதோ என்று எண்ணி, அந்நிகழ்வு அணுகிய நாளின் முந்தைய இரவில் பெரும் சலிப்பையே அடைந்தார். கிளம்பி எங்காவது சென்றுவிட வேண்டுமென்று தோன்றியது. அறியாத காடொன்றில் அழகிய சுனைக்கரையில் ஒரு சிறு குடிலில் விழையவும் எய்தவும் கடக்கவும் ஏதுமின்றி காலத்தை அவ்வக்கணங்களாக உணர்ந்தபடி வாழ்வதை கற்பனை செய்தார். அவ்வெண்ணம் அளித்த குளிர் தென்றல் கண்ணை வருடிச்செல்ல கண்ணயர்ந்தார்.

மறுநாள் காலையில் ராஜசூயத்தின் பெருமுரசு ஒலிக்கக் கேட்டபடி விழிதிறந்து எழுந்தபோது உள்ளம் தெளிந்திருந்தது. ராஜசூயம் குறித்த எழுச்சிகளோ மயக்குகளோ ஏதுமின்றி வெறும் சடங்குத் தொடராக அது நிகழ்ந்தது. ஆடிக் கடந்தாகவேண்டிய அங்கத நாடகம்.  முடிசூடி அமர்ந்திருந்தார். வேள்விக்கு தலைமை வகித்தார். வைதிகருக்கு பொருளளித்தார். மன்னர் நிரை வந்து பணிய கோல் ஏந்தினார். அனைத்திற்கும் அப்பால் தூரத்தில் அந்த தனிக்குடிலில் அமர்ந்திருந்தார். அங்கு இனிய தென்றல் வீசிக் கொண்டிருந்தது. ஒரு சொல்லும் செவியில் விழாத அமைதி அவரை சூழ்ந்திருந்தது. அந்த அமைதியின் கவசத்தை சூடியே சத்ராஜித்தென அமர்ந்திருந்தார்.

அந்தச் சிறுகுடிலை தன் உள்ளத்தில் எழுப்பிக்கொள்ள அவர் முயன்றார். மரப்பட்டைக்கூரை வேய்ந்தது. எழுந்து நின்றால் தலை முட்டுவது. நீர் வைக்க ஒரு கலம். உணவு சமைக்க பிறிதொரு கலம். மரவுரிப் பாய் ஒன்று. ஒரு மாற்றாடை. உணவு திரட்ட கூர்முனை கொண்ட கழி ஒன்று. அதற்கப்பால் இப்புவியிலிருந்து அவர் பெறுவதற்கொன்றுமில்லை. இப்புவிக்கு அளிக்க உடலின் உப்புக்களன்றி பிறிதில்லை. கொடுப்பதும் பெறுவதும் குறைகையில் எளிதாகிறது இவ்வணிகம். அதையே தவமென்கிறார்கள்.

தவம் என்பது மகிழ்ந்து வாழ்தல். மகிழ்வை மறிக்கும் பிறிதொன்றையும் ஏற்காதிருத்தல். தவம் என்பது துயர் என்று எண்ணுபவன் உலகியலின் வெல்லப்பசைப் பிசுக்கில் சிக்கிச் சிறகோய்ந்தவன். உண்டு தீராத இனிமையை தன்னுள்ளிருந்து எடுத்துப் பரப்பி அதில் திளைப்பவன் அங்கிருந்து திரும்பி நோக்கி நகைத்துக் கொள்வான். அவ்வாறு நோக்குகையில் இந்தப் பன்னிரு பகடைக்களம் எப்படித் தோன்றும்?

அவர் விழிமூடியபடி புன்னகைத்தார். துயிலில் புதைந்து இறங்கிக் கொண்டிருக்கையில் மிக அருகே அவர் பாண்டுவை உணர்ந்தார். “தந்தையே!” என்றார். பாண்டு ஒன்றும் சொல்லாமல் அவர் அருகே நின்றிருந்தார். அவரும் ஒரு சொல்லின்றி அவர் அருகமைவை உணர்ந்தபடி படுத்திருந்தார். அவர் மடியிலென துயின்றழிந்தார். அவர் அருகே நின்றபடி துயிலும் அம்முதியவரை புன்னகையுடன் நோக்கிக்கொண்டிருந்தார்.

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16754 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>