Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16823 articles
Browse latest View live

என் பெயர் டைகர்

$
0
0

டைகர்

 

சென்ற சில மாதங்களாகவே நான் நிறைய வாசிப்பது முத்து காமிக்ஸ் மற்றும் இணையத்தில் ஆஸ்ட்ரிக்ஸ் ஒபேலெக்ஸ் காமிக்ஸ்களை. என் எண்ணங்கள் இருந்துகொண்டிருப்பது மகாபாரதத்தில். அதிகம் வாசிப்பவை அதைச்சார்ந்த ஆய்வுநூல்கள். சொல்லப்போனால் நவீன ஆங்கிலமே ஏதோ அயல்மொழி போலத் தோன்றுமளவுக்கு எங்கோ இருக்கிறேன். நாளிதழ்களை, அன்றாட விஷயங்களை மிகமிகக்குறைவாகவே வாசிக்கிறேன். அவ்வப்போது சமகாலத்திற்கு வந்துவிட்டு மீண்டும் பின்வாங்கிச்செல்கிறேன்.

ஆகவே எழுத்தின், வாசிப்பின் இடைவெளிகளில் இளைப்பாறுவதற்கு வேறுவகைநூல்கள் தேவையாகின்றன. எப்போதுமே தனிவாழ்க்கையில், சிந்தனையில் ரொம்பவும் சீரியஸாக இருப்பது எனக்குக் கட்டுப்படியாவதில்லை. என் இயல்பே வேறு. சிரிப்பும் விளையாட்டும் இல்லாத ஒருநாள் கடந்தால் அது இழப்பென்றே மாலையில் தோன்றும். அதற்கான நண்பர்களே உடனிருக்கிறார்கள். சைதன்யா சொல்வதுபோல அப்பா ஒரு ‘கான்ஷியஸான லூசு’

துப்பறியும்நாவல்களையும் சாகசநாவல்களையும் விரும்பிப்படிப்பது ஒருவகையில் என் இளமையை தக்கவைக்கும் முயற்சியும்கூட. அவை என்னுள் உள்ள அழியாத சிறுவனை குதூகலப்படுத்துகின்றன. ஹாங்காங் சண்டைப் படங்கள், ஹாலிவுட் சாகசப்படங்கள் மேல் தணியாத மோகம் எப்போதும் எனக்கு உண்டு.

சினிமாவில் நான் சீரியஸ் படங்களை விரும்புவதில்லை. விதிவிலக்குகள் என்றால் மிகமிகச்சீரியஸான படங்கள், டெரென்ஸ் மாலிக் அல்லது ஹெர்ஷாக் போல. அதுவும் எப்போதாவது, மனதில் அந்த அளவுக்கு இடைவெளி இருக்கும்போது மட்டும். சினிமாவே பார்த்துக்கொண்டிருக்கவேண்டிய ஊடகம், நேரடியாக நிகழும் கனவு, அதிலென்ன சிந்தனை என்பதே என் எண்ணம். சினிமா பார்க்கும்போது எப்போதும் எனக்கு பன்னிரண்டுவயது.

நீண்ட இடைவெளிக்குப்பின் படக்கதைகளுக்கு வந்தது அவ்வாறுதான். தற்செயலாக கடையில் ஒரு டெக்ஸ்வில்லர் காமிக்ஸ் வாங்கினேன். என் கனவுநிலமான வன்மேற்குக்குச் சென்று சேர்ந்தேன். நேரில் சென்று அந்த நிலத்தை பார்த்தபோதும் அந்தக்கனவு கலையாமலிருக்கிறதென்பதே பெரிய ஆச்சரியம்தான். மோவே பாலை வழியாகச் செல்லும்போது நண்பர் திருமலைராஜன் இருந்தது தென்திருப்பேரையில். நான் இருந்தது கௌபாய் உலகில்

Blueberry25

முத்து காமிக்ஸ் என் இளமையில் பெரும் கனவை விதைத்த நூல்களை வெளியிட்டிருக்கிறது. சொந்தத் தோட்டத்திலேயே தேங்காயும் பாக்கும் திருடி விற்று வாங்கிய புத்தகங்கள் எத்தனை. முல்லை தங்கராசனை ஒருமுறை நேரில் காண வேண்டுமென்றெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். இன்று முத்து காமிக்ஸ் மீண்டு வந்துள்ளது.

சற்று முன் அவர்கள் வெளியிட்ட என்பெயர் டைகர் நூலை வாசித்தேன். முழுக்க வண்ணப்படக்கதை. உரையாடல்களும் உறுத்தாமல் உள்ளன [நல்லவேளையாக நம்மூர் பேச்சுமொழியை அமைத்து கொலை செய்யவில்லை]. இது ஒரு சாகஸப் படக்கதை என்பதை விட ஒரு முழுநாவல் என்பதே பொருத்தம். ஏராளமான கதாபாத்திரங்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான நுட்பமான குணாதிசயங்கள். கதைநிலம் விரிவான தகவல்களுடன் கண்முன் எழுகிறது. அங்கிருந்த சமூக வாழ்க்கையின் ஒட்டு மொத்தச் சித்திரத்தையே அளிக்கிறது

அத்துடன் மிகக்கவனமாக முன்னும் பின்னும் நெய்யப்பட்ட கதைச்சரடுகள் ஆச்சரியமூட்டுகின்றன. ஒன்று டைகரின் நினைவு. இன்னொன்று அவனைக் கொல்லத் தொடர்பவர்களின் கதை. இன்னொன்று அந்த சிறுநகரில் நிகழும் கொலை கொள்ளைகளின் பின்னணியும் அதற்கு எதிராகப் போராடும் காவலர்களும் .இன்னொன்று செவ்விந்தியர்களின் போராட்டம். இவையனைத்தையும் எழுத வரும் எழுத்தாளர்களின் வாழ்க்கை கடைசியாக. கச்சிதமாக அத்தனை கதைகளும் ஒன்றிணைகின்றன.

அனைத்துக்கும் மேலாக செவ்விந்தியர்களை வெறும் காட்டுமிராண்டிகளாக காட்டாமல் அந்நிலத்தின் உரிமையாளர்களாக, வாழ்க்கைக்காகப் போராடுபவர்களாகக் காட்டும் கோணம் நமக்கு முக்கியமானது. செவ்விந்தியர் தலைவனின் பெருந்தன்மையும் ஆண்மையும் மிகச்சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.

பலவகையிலும் ஆஸ்திரேலியாவின் கதையுடன் ஒத்துப்போகிறது இக்கதை. செவ்விந்தியக் குழந்தைகளைப் பிடித்துவந்து ஓர் அனாதை இல்லம் நடத்தி அங்கே அவர்களை வலுக்கட்டாயமாக கிறித்தவர்களாக ஆக்குகிறார்கள். தங்கள் குழந்தைகளைச் சிறைமீட்கப்போராடும் செவ்விந்தியத் தலைவனின் கதையே மைய இழை

”கிறித்தவர்களாக ஆன செவ்விந்தியர்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நாம் அவர்களை கீழ்மக்களாகவே நடத்துவோம். அவ்வாறாக அவர்களின் வாழ்க்கையை நாம் அழிப்போம்” என கதாநாயகன் டைகர் சொல்கிறான். அதுவே கதையின் மைய வரி என நினைக்கிறேன். அவ்வகையில் இது ஒரு மாபெரும் சூறையாடலின் வரலாறும்கூட.

எளிமையான நம்மூர் வணிகக் கதைகளுக்குப் பழக்காமல் குழந்தைகளை இந்தவகை ஊடுபாவுகள் கொண்ட கதை சொல்லலுக்குப் பழக்குவது நல்லது என்று தோன்றுகிறது. சுஜாதாவிலிருந்து நவீன இலக்கியத்திற்கு வரும் பாதையை விட இது இன்னும் அணுக்கமானது, நேரடியானது

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–30

$
0
0

30. அறியாமுகம்

மேலை நாககுலத்தைச் சேர்ந்த விப்ரசித்தி என்னும் அரசனின் மைந்தனாகிய ஹுண்டன் ஒவ்வொரு குலத்திலும் அதற்கென அமைந்த எல்லைகளை மீறி கிளைவிட்டு எழும் விசைமிக்க விதைகளில் ஒருவனாக இருந்தான். அவன் பிறந்தபோதே படைமுதன்மை கொள்பவன் என்றனர் குலப்பூசகர். இளமையிலேயே நாகர்குலத்திற்குரிய நான்கு போர்க்கலைகளான நச்சுமிழ்தல், இமையாவிழிகொள்ளுதல், ஓசையின்றி அமைதல், பறந்தெழுதல் ஆகியவற்றை கற்றான்.

பின்னர் தன் அணுக்கத்தோழனாகிய கம்பனனுடன் குடிவிட்டுக் கிளம்பி பிறிதொருவனாக ஆகி அசுரகுலங்களில் அடிமையென்று சென்று இணைந்து அவர்களின் போர்க்கலைகளான காற்றில் மறைதல், விண்ணேறிச் செல்லுதல், உடலை விழியாக்குதல், இரக்கமின்றி இருத்தல் ஆகியவற்றையும் கற்றான். மலைவணிகனாக மானுடருக்குள் ஊடுருவி காவலனாக உருமாற்றம்கொண்டு அவர்களின் போர்க்கலைகளான படைக்கலம் தேர்தல், சூழ்மதி கொள்ளுதல், சேர்ந்தமைந்து ஓருடலாதல், வருவதை முன்னுணர்தல் ஆகியவற்றை அறிந்தான்.

அவன் தோழனுடன் திரும்பி தன் நிலம் வந்துசேர்ந்தபோது நோக்கிலும் நடையிலும் பேரரசன் என்றாகிவிட்டிருந்தான். நாகர்குடிகள் அவனை முதன்மைத்தலைவன் என ஏற்றன. நாகநிலம் முழுதும் வென்று வைப்ரம் என்னும் தன் சிற்றூரைச் சுற்றி நச்சுமுட்கள் சிலிர்த்துநிற்கும் கோட்டை ஒன்றைக் கட்டி கொடிபறக்க கோல்நிறுத்தி ஆளலானான். அவனை நாகாதிபன் என்றும் மகாநாகன் என்றும் வாழ்த்தின நாகர்குலங்கள்.

ஏழுஅடுக்கு அரண்மனையில் விபுலை வித்யுதை என்னும் இரு மங்கையரை மணந்து ஹுண்டன் வாழ்ந்தான்.  எட்டாண்டுகளாகியும் தேவியர் கருவுறாமையால் துயருற்றிருந்தான். குலப்பூசகரை அழைத்து அவர்கள் வயிறு நிறையாமை ஏன் என வினவினான். “அரசே, படைப்பென்று எழுவதெல்லாம் உளம்குவியும் தருணங்களே. சிறுபுழுவும் காமத்தில் முழுதமைகிறது என்பதே இயற்கை. உங்கள் காமத்தில் அவ்வண்ணம் நிகழவில்லை. உடலுடன் உள்ளம் பொருந்தவில்லை. குவியாக் காமம் முளைக்காத விதையாகிறது” என்றார் பூசகர்.

“ஆம்” என்று ஹுண்டன் சொன்னான். “நான் பிறிதெங்கோ எவரையோ எண்ணத்தில் கொண்டிருக்கிறேன். முற்பிறவிக் கனவில் கண்ட முகம் ஒன்று ஊடே புகுகிறது.” பூசகர் “ஊழ் பின்னும் வலையின் மறுமுனைச் சரடு. அது தேடிவரும்வரை காத்திருப்பதன்றி வேறு வழியில்லை” என்றார். “அது நன்றா தீதா?” என்றான் ஹுண்டன். “ஊழை அவ்வண்ணம் வகுக்கவியலாது. அது நன்றுதீதுக்கு அப்பாற்பட்டது” என்றார் பூசகர். “அது எனக்கு அளிப்பது என்ன?” என்றான். “அரசே, மெய்க்காதலை அறியும் நல்லூழ் கொண்டவர் நீங்கள் என்கின்றன தெய்வங்கள். ஆனால் அது இன்பமா துன்பமா என்பதை அவையும் அறியா” என்றார் பூசகர்.

தன் உள்ளத்தை ஒவ்வொருநாளும் துழாவிக்கொண்டிருந்தான் ஹுண்டன். கம்பனனிடம்  “நான் எதற்காக காத்திருக்கிறேன்? பிறிதொன்றிலாது ஏன் அதையே எண்ணிக்கொண்டிருக்கிறேன்?” என்றான். அவர்கள் காட்டில் ஒரு மரநிழலில் அமர்ந்திருந்தனர். “நாம் நம்மையறியாமலேயே செலுத்தப்படுகிறோம், அரசே. நம்மில் விழைவென, அச்சமென, ஐயமென எழுபவை எவரோ எங்கிருந்தோ நம்மில் புகுத்தும் எண்ணங்களே” என்றான் கம்பனன். “நாம் எங்கு செல்கிறோம் என ஒருபோதும் நாமறிய முடியாதென்பதையே அனைத்து நூல்களும் சொல்கின்றன.”

“இந்த முகம்… இது முகமென என்னுள் திரளவுமில்லை. கலையும் ஓர் எண்ணமென அன்றி இதை நான் இன்றுவரை அறியேன்” என்றான் அரசன். “அமுதென்றும் நஞ்சென்றும் ஆன ஒன்றே அத்தனை விசையுடன் நம்மை இழுக்கமுடியும்” என்றான் கம்பனன். “அது நம்மை தன் உள்ளங்கையில் வைத்து குனிந்துநோக்கும் ஒன்றின் புன்னகையை வானமென நம்மீது படரச்செய்கிறது.” ஹுண்டன் நீள்மூச்செறிந்து “ஆம், ஆனால் நன்றோ தீதோ பெரிதென ஒன்று நிகழும் வாழ்வமைவது நற்கொடையே” என்றான்.

அணுக்கனிடம் அரசை அளித்துவிட்டு தன்னந்தனியாக அலைந்து திரியலானான் ஹுண்டன். அருகமைந்த நகர்களில் ஏவலனாகவும் வணிகனாகவும் பயணியாகவும் அலைந்தான். காடுகளினூடாக கடந்துசென்றான். ஓவியங்களையும் சிற்பங்களையும் சென்று நோக்கினான். நிமித்திகர்களை அணுகி உரையாடினான். அந்த முகத்தை ஒவ்வொரு கணமும் விழிதேடிக்கொண்டிருந்தான்.

ஒருநாள் காட்டில் மரக்கிளைகளுக்குமேல் பறந்தவனாக உலவுகையில் சுதார்யம் என்னும் சிற்றோடையின் கரையிலமைந்த சிறுதவக்குடில் ஒன்றை கண்டான். அதைச் சூழ்ந்திருந்த மலர்க்காட்டில் மலர்வண்ணங்களால் அங்கு நிறைந்திருந்த ஒளியையும் மணத்தையும் வண்டுகள் எழுப்பிய யாழொலியின் கார்வையையும் அறிந்து மண்ணிலிறங்கி அருகே சென்றான். அக்குடிலில் ஓர் அழகிய இளநங்கை தனித்துறைவதை கண்டான்.

அவன் சென்றபோது அவள் ஒரு முல்லைக்கொடிப் பந்தலுக்குக் கீழே அமர்ந்து வெண்மொட்டுகளால் கழற்சியாடிக் கொண்டிருந்தாள். அவளை நோக்கிய அக்கணமே அவன் அறிந்தான் தன் ஊழின் மறுநுனி அவளே என. அவன் எண்ணிய அறியாமுகம் அது. பிறிதொன்றை எண்ண இனி தன்னால் இயலாது என்று தெளிந்ததும் அருகணைந்து அவளிடம் “இனியவளே, இக்காட்டில் தனித்துறையும் நீ யார்?” என்றான். அவள் அயலவரை அறியாதவள் என்பதனால் எச்சரிக்கையும் அச்சமும் விலக்கமும் அற்ற விழிகளால் அவனை நோக்கினாள்.

“நான் அசோகசுந்தரி. என்னை கல்பமரத்தில் பிறந்தவள் என என் தந்தை சொன்னார். அவர் தவமுனிவர். அவர் அளித்த நற்சொல்லால் அழியா இளமைகொண்டு என் கணவனுக்காக இங்கே காத்திருக்கிறேன்” என்றாள். வியப்பில் அருகே வந்து அவன் தலையிலணிந்த நாகபடக் கொந்தையை நோக்கி “அது என்ன? மெய்நாகமா?” என்றாள். “நான் நாகர்குலத்து அரசன், என் பெயர் ஹுண்டன். என் குடி ஏழிலும் முதல்வன். எங்கள் நிலத்தின் பெருந்தலைவன்” என்றான் அவன்.

அவள் மகிழ்ந்து “நான் இன்றுவரை அரசர்களை சந்தித்ததில்லை. அவர்கள் படைசூழ கொடிசூடி வாழ்த்தும் இசையும் சூழ எழுந்தருள்வார்கள் என்றே அறிந்துள்ளேன்” என்றாள். “ஆம், அவை எனக்கும் உள்ளன. நச்சுவாளி தொடுத்த நாகவிற்களுடன் என்னைச் சூழ பெரும்படை உண்டு. இன்று நான் காடுகாண தனியே வந்தேன். தனித்தலைந்தாலும் நான் ஒரு படைக்கு நிகரானவனே” என்றான் ஹுண்டன். அவளுடைய அஞ்சாமையை அவன்மீதான விருப்பென அவன் எண்ணிக்கொண்டான். அவள் கண்களின் கள்ளமின்மையைக் கண்டு மேலும் மேலும் பித்துகொண்டான்.

“நீ காத்திருப்பது யாருக்காக?” என்றான். “உன் அழகு அரசர்கள் அணியென சூடத்தக்கது. அரியணையில் அமரவேண்டியவள் நீ.” அவள் புன்னகைத்து “ஆம், இந்திரனுக்கு நிகரான அரசனின் மணமகள் நான் என்றார் என் தந்தை” என்றாள். “அவன் நானே. இன்று இந்நிலத்தின் ஆற்றல்மிக்க பேரரசன் நான்” என்றான் ஹுண்டன். “நீ காத்திருந்தது எனக்காகத்தான். என்னை ஏற்றுக்கொள்க!” அவள் அவனை கூர்ந்து நோக்கி “நீர் அழகர். உம்மை ஏற்பதில் எனக்கு தயக்கமும் இல்லை. ஆனால் நான் மண்ணுக்கு வந்தபோது ஒரு மலரும் உடன் வந்தது. அந்த வாடியமலர் என்னிடம் உள்ளது. எவர் என் தலையில் அதைச் சூட்டுகையில் அது மீண்டும் புதிதென மலர்கிறதோ  அவரே என் கணவர் என்றார் எந்தை. இருங்கள், கொண்டுவருகிறேன்” என குடிலுக்குள் ஓடினாள்.

திரும்பி வந்தபோது அவள் கையில் ஓர் அசோகமலர் இருந்தது. வாடிச்சுருங்கி ஒரு செந்நிறக் கீற்றென ஆகிவிட்டிருந்தது. “அசோகம்” என்று அவள் சொன்னாள். “துயரின்மையின் அழகிய மலர் இது. இதை தாங்கள் கையில் வாங்கும்போது மலர்ந்து முதற்காலை என மென்மையும் ஒளியும் கொள்ளவேண்டும்.” அவன் தயங்கியபடி அதை வாங்கினான். அது அவ்வாறே இருந்தது. அவள் அதே புன்னகையுடன் “பொறுத்தருள்க, அரசே! அவ்வண்ணமென்றால் அது நீங்கள் அல்ல” என்றாள்.

அவன் சீறி  எழுந்த சினத்துடன் “என்ன விளையாடுகிறாயா? நான் எவரென்று அறிவாயா? நீ தனித்த சிறுபெண். பருந்து சிறுகுருவியை என உன்னை கவ்விக்கொண்டு வானிலெழ என்னால் இயலும். உன் கள்ளமின்மையை விரும்பியே சொல்லாடினேன்” என்றான். “இனி உன் விருப்பென்ன என்பதை நான் கேட்கப்போவதில்லை. நீ என் துணைவி” என அவள் கையை பற்றச்சென்றான். அவள் பின்னால் விலகி கூர்ந்த கண்களுடன் “அரசே, அறிக! இது என் இடம். இங்கு எல்லைமீறி என்னை கைக்கொள்ள முயல்வது பிழை… முனிவராகிய என் தந்தை எனக்கருளிய காவல் கொண்டுள்ளன இந்தக் குடிலும் சோலையும்” என்றாள்.

“நாகத்திற்கு வேலிக்காவல் இல்லை, அழகி” என சிரித்தபடி அவன் அவளை பற்றப்போனான். “விலகு, மூடா! இதற்குள் வந்து என் ஆணை மீறும்  எவரையும் அக்கணமே கல்லென்றாக்கும் சொல் எனக்கு அருளப்பட்டுள்ளது. இதோ, இச்சிம்மம் அவ்வாறு என்னால் கல்லாக்கப்பட்டது. அந்தப் புலியும் அப்பாலிருக்கும் கழுகும் செதுக்கப்பட்ட சிலைகளல்ல, உயிர்கொண்டிருந்தவை” என்றாள். “இந்தக் குழவிக்கதைகளுக்கு அஞ்சுபவர்களல்ல நாகர்கள்” என்று சிரித்தபடி அவன் மேலும் முன்னகர அவள் கைநீட்டி “உன் வலக்கால் கல்லாகுக!” என்றாள்.

அவன் தன் வலதுபாதம் கல்லாகி எடைகொண்டதை உணர்ந்து அஞ்சி குளிர்ந்து நின்றான். “அணுகவேண்டாம்! உன்னை கல்லென்றாக்கி இங்கு நிறுத்த நான் விழையவில்லை. அகன்று செல்க!” என்று அவள் கூவினாள். அவன் காலை இழுத்துக்கொண்டு பெருஞ்சினத்தால் உறுமியபடி சோலையைவிட்டு வெளியே சென்றான். அங்கு நின்றபடி “விழைந்ததை அடையாதவன் நாகன் அல்ல. நான் உன்னை பெண்கொள்ளாமல் மீளப்போவதில்லை” என்றான்.

அவள் அதுவரை இருந்த பொறையை இழந்து சினந்து “இழிமகனே, விரும்பாப்பெண்ணை அடைவேன் என வஞ்சினம் உரைப்பவன் வீணரில் முதல்வன். நீ என் கணவன் கையால் உயிரிழப்பாய்” என்றாள். தன் கையை ஓங்கி “ஆம்! ஆம்! ஆம்!” என மும்முறை உரைக்க வானில் ஓர் இடி எழுந்தது. அச்சொல் பிறிதிலாது நிலைபெற்றுவிட்டதை அறிந்த ஹுண்டன் ஒருகணம் நடுங்கினாலும் கோல்கண்டால் மீண்டும் படமெடுக்கும் நாகத்தின் இயல்பு மீண்டு “எஞ்சியதை என் மஞ்சத்தில் சொல், பெண்ணே” என்றபின் மரங்களின்மேல் ஏறிக்கொண்டான்.

tigerதன் அரண்மனைக்கு மீண்ட ஹுண்டன் கம்பனனை அழைத்து எவ்வண்ணமேனும் அசோககுமாரியை அவள் வாழும் சோலையின் எல்லைகடத்தி அழைத்துவரும்படி ஆணையிட்டான். கம்பனனின் திட்டப்படி அரண்மனைச்சேடி ஒருத்தி நிறைவயிறென உருவணிந்து அசோககுமாரி நீராடும் சோலைச்சுனையருகே நின்றிருந்த மரத்தில் காட்டுவள்ளியில் சுருக்கிட்டு தன்னுயிரை மாய்க்க எண்ணுவதுபோல நடித்தாள். அங்கே வந்து அதைக் கண்ட அசோககுமாரி ஓடிவந்து அவளைப் பிடித்து தடுத்து “என்ன செய்கிறாய்? என்ன ஆயிற்று உனக்கு?” என்றாள்.

கதறியழுத சேடி தன்னை அந்தணப் பெண்ணாகிய  சுதமை என்றும் தன்னை விரும்பி கவர்ந்து கொண்டுசெல்ல முயன்ற நாகர்குலத்து அரசனாகிய ஹுண்டன் அதைத் தடுத்த தன் கணவனை கொலை செய்துவிட்டான் என்றும் சொன்னாள்.  இறுதிச் சொல்லை அவனை பழித்துச் சொன்னபடி உயிர்விட்டு அவன்மேல் தெய்வங்களின் பழி நிலவச்செய்யும்பொருட்டே அங்கு வந்ததாகச் சொல்லி கதறினாள்.

அசோககுமாரி உளம்கலங்கி அழுதாள். பின் தான் தேறி அவளுக்கு ஆறுதலுரைத்தாள். “பழியை மறந்துவிடுக! தெய்வங்கள் நின்று கேட்கட்டும். உன் வயிற்றிலுள்ள மைந்தனுக்கு வாழும் உரிமை உள்ளது. அதை அளிக்கவேண்டியது உன் கடன்” என்றாள். “வாழாது இறந்து உன் மைந்தன் நிகழாதுபோன கனவாக வெறும்வெளியில் பதைக்கலாகாது. நீ உயிர்தரித்தே ஆகவேண்டும்” என்றாள்.  “இல்லை, என்னால் இயலாது. துயர் என் உள்ளத்தை அனல்கொண்ட பாறைபோல வெம்மையேற்றி வெடிக்கச்செய்கிறது” என்றாள் சுதமை.

அசோககுமாரி தன் தோட்டத்திலிருந்து துயரிலி மலர் ஒன்றைப்பறித்து “இதை உன் நிலத்தில் நட்டு வளர்ப்பாயாக! இது உன் துயர்களை களையும்” என்றாள். “இல்லை, என் துயர்மிக்க கைகளால் இதைத் தொட்டால் இது வாடிவிடும். நீயே வந்து என் சிறுகுடில் முற்றத்தில் இதை நட்டு ஒரு கை நீரூற்றிவிட்டுச் செல்!” என்றாள் சுதமை. அசோககுமாரி “நான் என் குடில்வளாகத்தைவிட்டு நீங்கலாகாதென்பது எந்தையின் ஆணை” என்றாள். சுதமை மீண்டும் மீண்டும் கைபற்றி கண்ணீர்விட்டு மன்றாடவே உடன்செல்ல இசைந்தாள்.

சுதமை அவளை காட்டுவழியே இட்டுச்சென்றாள். நெடுந்தொலைவு ஆவதை அறிந்த அசோககுமாரி “நாம் எங்கு செல்கிறோம்?” என்றாள். “அருகிலேதான்… நீ காட்டுவழி சென்றதில்லை என்பதனால்தான் களைப்படைகிறாய்” என்றாள் சுதமை. பின்னர் அவளுக்கு மெல்ல புரியலாயிற்று. அவள் திரும்பிச்செல்ல முயல நகைத்தபடி சுதமை அவள் கைகளை பற்றிக்கொண்டு “எங்கு செல்கிறாய்? நீ என் அரசரின் அடிமை” என்றாள். கையை உதறிவிட்டு அசோககுமாரி தப்பி ஓட நாகர்கள் மரங்களிலிருந்து பாய்ந்து அவளைச் சூழ்ந்தனர்.

அவள் முன் தோன்றிய கம்பனன் “நீ என் அரசனின் கவர்பொருள். திமிறினால் உடல் சிதையப்பெறுவாய்” என்றான். அவர்கள் அவளை கொடிகளால் கட்டி இழுத்துக்கொண்டு வந்து ஹுண்டனின் அவையில் நிறுத்தினர். அவையமர்ந்திருந்த அரசன் அவளைக் கண்டதும் வெடிச்சிரிப்புடன் எழுந்து அருகே வந்தான். “உன் எல்லைக்குள் நீ ஆற்றல்கொண்டவள். முதலையைப் பிடிக்க இரையை பொறியிலிட்டு அதை கரை வரச்செய்யும் கலை அறிந்தவர் நாகர்” என்றான். அவள் அவன் சொல்வதென்ன என்று அறியாமல் நோக்கி அமர்ந்திருக்க “நீ என் ஆணையை மீறினாய்! விரும்பியதைக் கொள்ள அரசனுக்கு உரிமை உள்ளது. ஆணைமீறுபவரை தண்டிக்கவும் அவன் கடமைப்பட்டவன். நீ இன்றுமுதல் என் அரசி. அது என் விழைவு. என் அரண்மனைவிட்டு வெளியே செல்ல உனக்கு இனி என்றும் ஒப்புதல் இல்லை, அது உனக்கு அரசன் அளிக்கும் தண்டனை” என்றான் ஹுண்டன்.

அவள் கதறியழுது தன்னை விட்டுவிடும்படியும், தன் தந்தையின் ஆணைப்படி நெடுங்காலமாக தன்னை வேட்டு வரும் தலைவனுக்காகக் காத்திருப்பதாகவும் சொன்னாள். அவைமுன் நீதிகேட்கவும் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. சிறுமியைப்போல அழுதபடி அமர்ந்து கைகளை உதறி அடம்பிடிக்கவே அவளால் இயன்றது.

அரசனின் ஆணைப்படி அவளைப் பிடித்து இழுத்துச்சென்றனர் நாகசேடியர். அவளை நீராட்டி நாகபடக் கொந்தையும் நாககங்கணங்களும் நாகக்குழையும் சூட்டி அணிசெய்து  ஏழு நாகங்கள் எழுந்து விழிசூடி நின்றிருந்த குலதெய்வத்தின் ஆலயத்திற்கு கொண்டுசென்றனர். அவள் கழுத்தில் நாகபட மாலையை  அணிவித்து ஹுண்டன் அவளை வலுமணம் கொண்டான். அவள் அழுது சோர்ந்து ஆற்றலிழந்து நனைந்த தோகைமயில்போல கைகால்கள் தளர்ந்திருந்தாள். அவளை தன் காமமண்டபத்திற்கு கொண்டுசெல்லும்படி அவன் ஆணையிட்டான்.

அவர்கள் அவளை இரவுக்கான மென்பட்டு ஆடைகளும்  உறுத்தாத நகைகளும் அணிவித்து அந்திமலர்கள் சூட்டி அவன் மஞ்சத்திற்கு கொண்டுசென்றனர். அவள் மஞ்சத்தில் அவர்களால் அமரச்செய்யப்பட்டபோது எங்கிருக்கிறோம் என்பதையே அறியாதவள் போலிருந்தாள். ஏதோ ஒற்றைச்சொற்களை எவரிடமோ எனச் சொல்லி மெல்ல அழுதுகொண்டிருந்தாள். “அழுதுகொண்டிருக்கிறார்” என நாகசெவிலி அரசனிடம் சொன்னாள். “நாளை நாணமும் நகையாட்டுமாக வருவாள்” என்று சொன்னபின் அரசன் மஞ்சத்தறைக்குள் புகுந்தான்.

இரவுக்கான வெண்பட்டாடை அணிந்திருந்தான். மார்பில் மெல்லப் புரளும் முல்லை மலர்தார். காதுகளில் ஒளிரும் கல்குழைகள். அவன் குறடோசை கேட்டு அவள் விதிர்த்தாள். அவன் அருகே வந்து அவளிடம் குனிந்து மென்குரலில் “அஞ்சவேண்டாம். நீ அரசனின் துணைவி ஆகிவிட்டாய். நாகர்குலத்துக்கு அரசியென்று அமரவிருக்கிறாய்” என்றான். அவள் அதை கேட்டதாகவே தெரியவில்லை. அவனை நோக்கிய விழிகளில் அவன் தோற்றம் தோன்றவுமில்லை. உதடுகள் ஏதோ சொல்லை உச்சரித்து அசைந்துகொண்டே இருக்க விழிகள் சிறார் விளையாட்டில் பிடித்து  சிறுகிண்ணத்து நீரில் இட்ட பரல்கள் இறுதிமூச்சுக்குத் துடிப்பதுபோல அசைந்தன.

அவள் செவிகள் மட்டுமே கேட்கும்படியாக  “நீ எனக்கு உன் காதலை மட்டும் கொடு, உனக்கு நான் இவ்வுலகை அளிக்கிறேன்” என்று ஹுண்டன் சொன்னான். அவள் முகம் மாறாததைக் கண்டு உடனே சினம்கொண்டு “அதை நீ மறுத்தால் நான் நஞ்சு என்றும் அறிய நேரும்” என்றான். அவள் அசையும் உதடுகளும் தத்தளிக்கும் விழிகளுமாக அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். “என்னடி சொல்கிறாய்?” என்று அவன் கேட்டான். அவள் அதையே சொல்லிக்கொண்டிருக்க அவள் தோள்களைப்பற்றி உலுக்கி “இழிமகளே, சொல்… என்ன சொல்கிறாய்?” என்றான்.

அவள் அணங்குகொண்டவள் போலிருந்தாள். அண்மையில் அவள் உதடுகளை நோக்கிய அவன் அவை மட்டுமே கண்களை நிரப்புவதுபோல் உணர்ந்தான். “என்னடி சொல்கிறாய்? பிச்சியா நீ? சொல்!” என அவளைப் பிடித்து உலுக்கினான். “சொல், கீழ்மகளே! என்ன சொல்கிறாய்?” என அவளை ஓங்கி அறைந்தான். அந்த அறையைக்கூட அவள் உணரவில்லை. அவன் “இது ஒரு சூழ்ச்சியா? இதனால் நீ தப்பிவிடுவாயா?” என்று கூவியபடி அவளை  பிடித்துத்தள்ளி மஞ்சத்தில் சரித்து அவள் உடலை ஆளமுயன்றான்.

அவள்மேல் படுத்து அவள் முலைகளைப் பற்றியபோதும் அவள் அதை அறியவில்லை. அவன் எழுந்த அச்சத்துடன் அவள் உதடுகளை நோக்க ஒரு கணத்தில் அச்சொல் அவனுக்குப் புரிந்தது. அவன் உடல் குளிர்ந்து கால்கள் செயலிழந்தன. எடைகொண்டுவிட்ட உடலைப்புரட்டி அவன் படுக்கையில் மல்லாந்தான். அவன் இடைக்குக்கீழே கல்லாகிவிட்டிருந்தது.

அவள் எழுந்து ஓடுவதை அவன் சொல்லில்லாமல் நோக்கிக்கொண்டிருந்தான். அவள் வெளியே சென்று அரண்மனை முற்றத்தை அடைந்து தெருக்களினூடாக அலறியழுதபடி ஓடி நகர்நீங்கினாள். அவளை அரசன் விட்டது ஏன் என காவலர் குழம்பினர். அழியா தீச்சொல் ஒன்று நகர்மேல் கவிந்ததோ என ஊரார் அஞ்சினர். அவள் ஒருமுறை நின்று நகரை திரும்பி நோக்கியபின் கண்ணீர்த்துளி நிலத்தில் சிதற குழல் உலைய கால்சிலம்பு கறங்க நடந்தாள் என்றனர் கோட்டைக்கு வெளியே நின்றிருந்த நகர்க்காவலர்.

விடியும்போது அவள் மீண்டும் தன் குடில்சோலையை அடைந்தாள். ஓடி அவ்வெல்லையைக் கடந்தபோது கால்தடுக்கியதுபோல நினைவழிந்து விழுந்தாள். பின்னர் இளவெயில் முகத்தில் விழ விழித்தெழுந்தபோது அவள் தான் ஏன் அங்கு கிடக்கிறோம் என வியந்தாள். தன் உடலில் இருந்த அணியும் ஆடையும் எவ்வண்ணம் அமைந்தது எனத் திகைத்து நோக்கியபின் அவற்றை பிடுங்கி வீசினாள். குடிலுக்குள் சென்று மரவுரி அணிந்து முகம்கழுவி ஆடியில் தன் முகத்தை நோக்கியபோது அதில் இளமைப்புன்னகை திரும்பியிருந்தது.

மீண்டும் குடில்முற்றத்திற்கு வந்தபோது அங்கே சிதறிக்கிடந்த அணிகளும் ஆடைகளும் எவருடையவை என்று அறியாது குழம்பி கையிலெடுத்து நோக்கினாள். தன் உடல்மேல் வைத்து அவை பெண்கள் அணிபவை என உய்த்தறிந்து புன்னகைத்தாள். பின்னர் சற்றுநேரம் எண்ணிநோக்கியபின் அவற்றை கொண்டுசென்று அக்குடில்சோலையின் எல்லைக்கு அப்பால் வீசினாள். பின்னர் துள்ளியபடி அங்கே பூத்துநின்ற மலர்மரம் ஒன்றை நோக்கி ஓடினாள். அதன் அடியில் சென்றுநின்று அடிமரம் பிடித்து உலுக்கி மலர்மழையில் கைவிரித்துத் துள்ளி கூச்சலிட்டுச் சிரித்தாள். அவள் அக்குடில்வளைவு விட்டு அகன்றபோது அவள் உடலில் அகவை நிகழத்தொடங்கிவிட்டிருந்தது. அந்த இரண்டுநாட்களின் மூப்பைக் களைந்து மீண்டும் சென்றகணத்தில் இருந்த காலத்தை அடைந்தது அவள் உடல்.

காவலர் ஓடிவந்து நோக்கியபோது ஹுண்டன் மஞ்சத்தில் நடுங்கியபடி படுத்திருந்தான். “அரசே, அரசி ஓடிச்செல்கிறார்கள்” என்றான் அணுக்கனாகிய அமைச்சன் கம்பனன். அவனால் மறுமொழி சொல்லமுடியவில்லை. “என்ன ஆயிற்று தங்களுக்கு? ஏன் படுத்திருக்கிறீர்கள்?” என்றபடி அருகணைந்த கம்பனன் அப்பார்வையிலேயே அரசனின் கால்கள் கல்லென்றாகிவிட்டிருப்பதை கண்டான். அவன் கைநீட்ட ஹுண்டன் அவன் தோள்களை பற்றிக்கொண்டான். கம்பனன்  அவனைப் பற்றி எழுப்பினான். அவன் உடல் எடைமிகுந்து கற்சிலைபோல அவன் மேல் அழுந்தியது.

அரசனை மருத்துவர்கள் வந்து நோக்கி திகைத்தனர். “கால்கள் எப்படி கல்லாயின? அமைச்சரே, இது தெய்வங்களின் தீச்சொல்” என்றனர். எவரும் எச்சொல்லும் எவரிடமும் உரைக்கலாகாது என அமைச்சனின் ஆணையிருந்தபோதும்  அரசனின் கால் கல்லானதை மறுநாள் புலரியிலேயே நகர் அறிந்தது. குலங்கள் அறிந்து அஞ்சி தெய்வங்களை நோக்கி படையல்களும் பலிகளுமாக நிரைவகுத்தன. “பெண்பழியும் கவிப்பழியும் அறப்பழியும் அகலாது” என்றனர் மூத்தோர்.

பின்னர் ஹுண்டன் படுக்கையிலிருந்து எழவே இல்லை. அவனை கல்படுக்கை ஒன்றைச்செய்து அதில் கிடத்தினர். அவனுக்குப் பணிவிடை செய்ய சேடியரும் ஏவலரும் எப்போதும் சூழ்ந்திருந்தனர். கைபற்றி எழுந்து அமர்ந்தும் சிறுசகடத்திலேறி வெளியே செல்லவும் அவனால் இயன்றது. அமைச்சனைக்கொண்டு அவன் நாடாண்டான்.  உணவுண்ணுதலும் நூல்தோய்தலும் இசைகேட்டலும் குறைவின்றி நிகழ்ந்தது. என்ன நிகழ்ந்தது என அவன் எவரிடமும் சொல்லவில்லை. அதை உசாவும் துணிவும் எவருக்கும் இருக்கவில்லை. அதைக் குறித்து ஒவ்வொருநாளும் எழுந்த புதிய கதைகளை எவரும் அவன் செவிகளில் சேர்க்கவுமில்லை.

ஆனால் ஒவ்வொரு நாளும் அவன் சோர்ந்துவருவதை அமைச்சன் கம்பனன் கண்டான். அவன் அருகே அமர்ந்து அரசுசூழ்தலின் வெற்றிகளைப்பற்றி சொன்னான். குலங்கள் அவனைப் புகழ்வதையும் குடிகளின் பணிவையும் கூறினான். அவர்கள் கூடி காட்டிலாடிய இளமைநாட்களைப்பற்றி கதையாடினான். எச்சொல்லும் அரசனில் பற்றிக்கொள்ளவில்லை. ஒருமுறை பேச்சின்போக்கில் அமைச்சன் அசோககுமாரியைப்பற்றி சொன்னான். அரசனின் விழிகளில் அசைவைக் கண்டு அவள் காத்திருக்கும் இந்திரனுக்கு நிகரான அரசனைப்பற்றி பேசினான். அரசனின் முகம் உயிர்ச்செம்மை கொண்டது. அவன் சினத்துடன் முனகினான்.

அதுவே அவனை மீட்கும் வழி என உணர்ந்த கம்பனன் அதன்பின் அவ்வஞ்சத்தைப் பற்றியே அரசனிடம் பேசினான். ஒற்றர்களும் படைத்தலைவர்களும் அதைக் குறித்து அவனிடம் பேசும்படி ஆணையிடப்பட்டனர். வஞ்சம் ஹுண்டனை மீண்டெழச் செய்தது. கல்லான கால்களை நீட்டி கல்படுக்கையில் அமர்ந்தபடி அவன் செய்திகளை எட்டுத் திசைகளிலிருந்தும் சேர்த்துக்கொண்டிருந்தான். குருநகரின் அரசனாகிய ஆயுஸ் தத்தாத்ரேய முனிவரின் அருள்பெற்று மைந்தன் ஒருவனை ஈன்ற கதையை அவனிடம் ஒற்றர்கள் சொன்னார்கள். தாயைப் பிளந்து மண்ணுக்கு வந்த அம்மைந்தன் இந்திரனை வெல்வான் என நிமித்திகர் எழுவர் களம்பரப்பி குறித்ததை அவன் அறிந்தான்.

அரசனின் ஆணைப்படி அம்மைந்தனின் பிறவிநூலை ஓர் ஒற்றன் திருடிக்கொண்டு வந்தான். அதை தன் குலப்பூசகர் எழுவரிடம் அளித்து நிலைநோக்கச் சொன்னான் ஹுண்டன். அவர்களும் இந்திரனை வெல்லும் ஊழ்கொண்டவன் அவன் என்றனர்.   “அவன் மணக்கப்போவது எவரை?” என சிறிய கண்களில் நச்சு கூர்ந்துநிற்க ஹுண்டன் கேட்டான். அவர்கள் கருக்களை நோக்கியபின் “அவள் முன்னரே பிறந்துவிட்டாள். அவனுக்காக காத்திருக்கிறாள்” என்றனர். “ஆம், அவனே” என்று பற்களைக் கடித்தபடி ஹுண்டன் சொன்னான். “அவன் பெயர் நகுஷன்” என்றான் கம்பனன்.

தொடர்புடைய பதிவுகள்

நிச்சயமாக?

$
0
0

வாயசைவுக்கு நான் வசனம் எழுதியிருக்கிறேன் – பழசிராஜாவுக்கு. அது எவ்வளவு சள்ளைபிடித்தவேலை என்பதை அறிவேன். இந்த டப்பிங் கலக்கியிருக்கிறார்கள் பையன்கள்.

 

https://www.youtube.com/watch?v=-FEvdKGh4C0

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஸ்வராஜ்யா, ஜக்கி, இயற்கை எரிவாயு -கடிதங்கள்

$
0
0

index

ஜெ

வணக்கம். ஜக்கி கட்டுரை ஒரு அருமையான கட்டுரை. அதை Swarajyaவில் மொழி பெயர்த்தவர் அதள பாதாலத்தில் தள்ளி விட்டார்.

தமிழ் வாக்கிய மொழியை அப்படியே ஆங்கிலாக்கம் செய்துள்ளார். கட்டுரை முழுதும் pronoun அள்ளி தெளித்துள்ளார். அதுவும் உங்கள் பெயரிலேயே கட்டுரை வெளியாகியுள்ளது. மொழி பெயர்பாளர் பெயரும் இல்லை.

அந்த கட்டுரையின் முக்கிய பகுதி; உங்களுக்கு வந்த கேள்விகளை தொகுத்து, நீங்கள் அதற்கு அளித்த பதில்கள். அந்த பகுதி இல்லை.

அ.நீ அவரது முகநூலில், நீங்கள் கிரும்பானந்த வாரியார் பற்றி எழுதியதை, முற்றும் தவறான(குதர்கமான) கோணத்தில் புரிந்து கொண்டு ஒரு ஆட்சேபனை பதிவு செய்தார். அதனால் ஆங்கில மொழியாக்கத்தில் கிருபானந்த வாரியார் பெயர் இல்லை.

உங்களிடம் அனுமதி வாங்கி தான் வெளியிடுகிறார்களா?

இறுதியில் இதை ஆங்கிலத்தில் மட்டும் படிப்பவர்; ஜக்கியை ஆதரித்து இவ்வளவு மோசமான ஆங்கிலத்தில் கட்டுரை என்றால், ஜக்கி அவர்களின் நிறுவனம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்ற சற்று நினைக்க தான் செய்வார்

அன்புடன்

சதிஷ்
(பெயரில் குறில் உங்களுக்கு மட்டும்)

*

அன்புள்ள சதிஷ்

அது மொழியாக்கக் கட்டுரை. அனுமதி பெற்றது. அப்படி மொழியாக்கம் செய்தவரின் பெயருடன்தான் வெளிவந்திருக்கவேண்டும். இல்லையேல் அது பிழை. நான் பார்க்கவில்லை.

ஜெ

***

ஜெமோ

ஜக்கி அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டுவதாக தமிழக அரசே நீதிமன்றத்தில் சொல்லிவிட்டதே, உங்கள் சப்பைக்கட்டு என்ன?

திருநாவுக்கரசு

*

அன்புள்ள திருநாவுக்கரசு

முதல் கட்டுரையிலேயே இதைத் தெளிவாகச் சொல்லியிருந்தேன். விதிமீறல் இருக்கும் என்றே நினைக்கிறேன், அதற்கு எதிராக சட்டநடவடிக்கைகளை வரவேற்கிறேன் என. ஏனென்றால் இங்கே விதிமீறலில்லாத பெரிய அமைப்புக்கள் ஏதும் இல்லை. அனேகமாக ஒரு பொறியியல்கல்லூரி கூட இருக்காது. சென்னையிலுள்ள ஒரு வணிகவளாகம்கூட மிஞ்சாது. இத்தகைய நடவடிக்கைகள் எந்நோக்கம் கொண்டவை என்றாலும் வரவேற்கத்தக்கவை.

அவரது கட்டிடங்கள் பஞ்சாயத்து அனுமதியுடன் கட்டப்பட்டவை. அவை சட்டபூர்வமாகப் போதாதவை என்பது முன்னரே சிலரால் எழுதவும்பட்டுவிட்டது. சட்டப்படி நிகழட்டும்.

ஆனால் இதனால் ஜக்கி காட்டை அழிக்கிறார், நிலம் மோசடியானது, அவருடைய யோகா முறைபோலியானது, அவர் ஏமாற்றுக்காரர் என்று ஆகாது. வசைபாடித்தள்ளுவது நியாயப்படுத்தவும்படாது. இத்தனைவசைபாடிவிட்டு கடைசியில் இதைவைத்துக்கொண்டு பார்த்தீர்களா என்று தாண்டிக்குதிப்பதைக் கண்டு பரிதாபமே எஞ்சுகிறது. பிழைத்துப்போங்கள்

ஜெ

***

அன்புள்ள ஜெ,

நீங்கள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

அருண். எஸ்

*

அன்புள்ள அருண்,

நான் எனக்குத் தெரிந்த, ஏதேனும் சொல்வதற்கு இருக்கும் விஷயங்களில் மட்டுமே பேசமுற்படுகிறேன். பொதுவான கருத்தே எனக்கும் என்றால் ஏதும் சொல்வதில்லை.

எரிபொருள் எடுப்பது, அதன் விளைவுகள் குறித்து அறிவியலாளர்தான் சொல்லவேண்டும். ஆனால் நான் நன்கறிந்த ஒன்று உண்டு. இந்திய யதார்த்தம். அதனடிப்படையில் நான் ஒன்றைச் சொல்லமுடியும்

பொதுத்திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது அளிக்கப்படவேண்டிய இழப்பீட்டை அரசு எப்போதும் ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கிறது. அந்த பணம் முறையாக அளிக்கப்படுவதுமில்லை. ஆகவே கிட்டத்தட்ட நிலம் பறிக்கப்படுகிறது என்பதே உண்மை

சென்னை அருகே நெடுஞ்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மிகச்சிறிய தொகையைக்கூட பல பகுதிகளாகப்பிரித்து ஒரு பகுதியை மட்டுமே அளித்திருக்கிறார்கள். எஞ்சிய பகுதிக்காக ஐந்தாண்டுக்காலமாக அந்த மக்கள் அமைப்பு சேர்ந்து மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரிடம் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இது சிலநாட்களுக்கு முன்னால் வந்த செய்தி. இந்த அராஜகமே இந்தியாவில் எந்த அரசுத்திட்டமும் எதிர்ப்புக்குள்ளாக காரணம்.

1998ல் நான் பலியபாலின் பாடங்கள் என்னும் சிறுநூலை மொழியாக்கம் செய்தேன். அதை ஞானி வெளியிட்டார். ஒரிசாவில் பலியபால் என்னுமிடத்தில் ஏவுகணைத்தளம் அமைக்க வளமான விளைநிலம் கையகப்படுத்தப்பட்டது. அம்மக்களின் போராட்டம் ஒடுக்கப்பட்டது. இழப்பீடு அளித்து முடிக்க இருபதாண்டுகளுக்கும் மேல் ஆகியது. பெரும்பாலான பயனாளிகள் அதற்குள் அடையாளம் காணமுடியாமல் எங்கெங்கோ சிதறிப்போனமையால் அந்நிதியை வாங்கவுமில்லை. இந்த கதியே இந்தியாவின் பெரும்பாலும் அனைத்து ‘வளர்ச்சி’த்திட்டங்களிலும் உள்ளது.

இந்த அராஜகம் இங்கே நடந்துகொண்டே இருக்கிறது. அதிகாரிகளின் ஆணவம், ஊழல், அரசியல்வாதிகளின் அறியாமை, மூர்க்கம். இரண்டும் இணைந்து உருவாக்கும் அழிவு. இத்தனைக்குப்பின்னரும் எவரும் இதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்தப்போராட்டமும் உண்மையில் அடிப்படைக்காரணமாக இதையே கொண்டுள்ளது

இங்குள்ள அனைத்து நிலம் கையகப்படுத்தல், இயற்கைவளங்களை எடுத்தல் திட்டங்களிலும் ஊழல் அதிகாரிகளின் நேரடிக்கொள்ளையே முதன்மையான தடை. அதை இங்குள்ள எந்த அரசும் எதுவும் செய்யமுடியவில்லை. அவர்களின் உதவியில்லாமல் செய்துமுடிக்கமுடியாதென்றே நினைக்கிறார்கள். இதுவே உண்மை

ஜெ

***

கூடங்குளம் விவாதம்

மீண்டும் அண்ணா- பாஜக அரசின் நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இன்னும் அழகிய உலகில்…

$
0
0

q

 

நெடுங்காலத்திற்கு முன் சுந்தர ராமசாமியின் இல்லத்தில் ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். சி.சு.செல்லப்பா அவருடைய நூல் ஒன்றுக்கு அவரே வெளியிட்டுக்கொண்ட படம். “கொன்னிருவேன்! என்பதுபோல விரலைக் காட்டுவார். விரல் கருமையாக இருக்கும். அதன்பின்னர் தெரிந்தது அது பேனா. “என்ன கண்ராவியான படம்என்றேன். “அந்தக்காலத்திலே பேனாவோட போஸ் தர்ரது பெரிய ஃபேஷன் என்றார்

அது மிக இயல்பானது. பேனா அன்றுதான் வந்துகொண்டிருந்தது. சொந்தமாக பேனா வைத்திருப்பதே ஓரு சமூக அடையாளம். பேனாவுடன் போஸ் கொடுக்கையில் முதலில் ஆணித்தரமாக நிறுவப்படுவது ஒன்று உண்டு. ”நான் எழுதுபவன். இந்தியாவில் அன்று அது ஒருவகை போர் அறைகூவல்

புத்தகங்கள் வாசிப்பது எழுதுவது போன்ற புகைப்படங்கள் பின்னர் வரலாயின. அவற்றிலிருந்து எழுத்தாளர் தப்ப முடியாது. “சார் ப்ளீஸ், ஒரு ஸ்நாப் என்று சொல்லி அவற்றுக்கு நம்மை போஸ்கொடுக்க வைத்துவிடுவார்கள்.நானெல்லாம் பாறைமேல்கூட ஏறி அமரவைக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் சுந்தர ராமசாமியை டைட்டானிக் கதாநாயகன் போல கைவிரித்து நிற்கவைத்த பாண்டி இளவேனில் ஒரு கலைஞர்மக்கள்தொடர்பில்.

இன்று யோசிக்கையில் பலவகையான போஸ்கள் நினைவுக்கு வருகின்றன. சி.என். அண்ணாத்துரை நூலுடன் சால்வை போர்த்தியபடி அமர்ந்திருக்கும் காட்சி. அதுகட்டமைக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது ஒரு செய்தி. அன்றுமட்டுமல்ல இன்றும் அச்செய்தி தேவைதான். சொல்லப்போனால் கையில் நூலுடன் நின்றிருக்கும் அம்பேத்கர் எவ்வளவுபெரிய நவீன விக்ரகம்!

ஸ்டாலின் வாசிப்பாரா என்பது ஐயம், எழுதுவாரா என்பது அதைவிட ஐயம். ஆனால் வாசிப்பதுபோல எழுதுவதுபோல நிறைய புகைப்படங்கள் போஸ்டர்களில் வருகின்றன. திராவிட இயக்கம் அதன் அடிப்படையில் ஓர் அறிவியக்கம் என்பதனால் அதன் முன்னோடிகள் பெரும்பாலானவர்கள் தங்களை வாசகர்களாக வெளிப்படுத்திக்கொண்டார்கள். அந்த மரபு ஸ்டாலினில் தொடர்கிறது. அழகிரி பெரும்பாலும்டேய் அவன அடிச்சு தூக்கி கொண்டாங்கடா என்று செல்பேசியில் ஆணையிடும் கோலத்தில்தான் போஸ்டர்களில் சிரிக்கிறார்.

எழுத்தாளர் படங்கள் இன்று பல்வேறுவகையில் வெளிவரத் தொடங்கிவிட்டன. நடனமாடும் எழுத்தாளர்களின் படங்கள் கூட வந்துள்ளன. அபூர்வமாகவே சில படங்கள் அவர்களின் சரியான தருணமொன்றை வெளிப்படுத்துகின்றன. அல்லது நாம் அவர்களைப் பார்க்க விரும்பும் காட்சித்துளியாக அமைந்துள்ளன

இந்தப்படம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நாய் நம் மூக்கை, உதடுகளை நாவாலும் மூக்காலும் தொடுவதற்கு நாய்மொழியில்நீ எனக்குப் பிடித்தமானவன். நாம் நண்பர்கள் என்று பொருள். காது பின்னிழுக்கப்பட்டிருப்பது அந்த நாய் அன்பால் உள எழுச்சிகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அதன் வால் சுழன்றுகொண்டே இருக்கும். கண்கள் சற்று நீர்மைகொண்டிருக்கும். மெல்ல முனகும்.

டோரா அவள் கூண்டுக்குள் நான் சென்றால் ஒரு முத்தமாவது இடாமல் அமையாது. இல்லையேல் கத்த ஆரம்பித்துவிடும். தங்கள் வாழ்விடத்திற்கு வரும் விருப்பமானவர்களை முத்தமிட்டு வரவேற்பது நாய்களின் இயல்பு. உல்லாஸ் காரந்த் அவருடைய நூலில் அதே இயல்புகள்தான் புலிக்கும் என எழுதியிருந்தார்

அந்த குட்டிமண்டை அதை அனேகமாக ஒருவயதுக்குள் உள்ள நாய் எனக் காட்டுகிறது. அந்த வயதுவரை நாய்கள் மிகுந்த விளையாட்டுத்தன்மையுடன் இருக்கும். உலகையே நக்கியும் முகர்ந்தும் அறிந்துவிடத்துடிக்கும். நாலைந்து வயதானதும்சரிதான் எல்லாம் இப்டித்தான் என்னும் ஒரு வகை நிறைந்த சலிப்பு. அதன்பின்னர் ஒரு கனிந்த விவேகம்.

சாருவின் முகம் அவர் நாய்களின் உலகில் நாய்களால் அனுமதிக்கப்பட்டவர் என்பதைக் காட்டுகிறது. பத்தடி தொலைவிலேயே நாய்கள் அதைக் கண்டுகொள்ளும். தெருநாய்களே வாலாட்டிநல்லாருக்கிகளா? பாத்து நாளாச்சு என்று சொல்லிவிட்டுச் செல்லும். முதிய நாய்கள் படுத்தவாறே வாலை அசைத்துநல்லா இருடே மக்கா என்று வாழ்த்தும். அவர்களின் உலகம் அன்பால் அழகாக ஆக்கப்பட்ட ஒன்று

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–31

$
0
0

31. நற்கலம்

மைந்தன் பிறந்தபோது ஆயுஸ் அதுவரை அவனிலிருந்த உளநிகரை முற்றிலுமாக இழந்தான். தந்தையிடம் இரந்து பெற்ற தீச்சொல் எப்போதும் நினைவில் இருந்தமையால் ஒருபோதும் அவன் நிலைமறந்து உவகை கொண்டதில்லை. களியாட்டுகளில் கலந்துகொண்டதில்லை. பல்லாயிரம்பேர் சூழ்ந்திருக்கையிலும் தனிமையில் இருந்தான். எண்ணி சொல்லெடுத்தான். எப்பிழையும் நிகழலாகாதென்பதில் உளம் செலுத்தினான். கருணையே தீர்வென்று ஒவ்வொரு முறையும் தெரிவு செய்தான்.

அவனுக்கான மணநிகழ்வு  குறித்த பேச்சுகளை அரசியரும் அமைச்சரும் குலமூத்தாரும் எடுத்தபோது அவர்கள் கூடிய அவையில் “என் தலைக்குமேல் எந்தையின் தீச்சொல் சினந்த தெய்வமென நின்றிருக்கிறது. அதை அறிந்து என்னை மணக்க ஒருங்கும் பெண்ணே எனக்குரியவள். மணம்பேசச் செல்லும் முன்னரே இது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும்” என்றான். “அது எங்ஙனம்? அரசர் காந்தருவ முறையிலும் பைசாச முறையிலும்கூட பெண்கொள்ளலாம் என்றல்லவா நெறிகள் சொல்கின்றன?” என்றாள் அரசி. “நான் அவ்வண்ணம் செய்ய விழையவில்லை. எவர் விழிநீரிலும் என் குடி பெருகவேண்டியதில்லை” என்றான் ஆயுஸ்.

குருநகரி அன்று பாரதவர்ஷத்தின் பெருநகரென அறியப்பட்டிருந்தது. அறச்செல்வனென்று அரசன் கருதப்பட்டான். எனினும் மணம் நாடிச்சென்ற இடங்களில் குருநகரியின் தூதர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். “தீராப் பெருநோய் கொண்டவன் போன்றவன் உங்கள் அரசன்” என்றார் மாளவத்தின் அரசர். “இப்பிறவியில் ஈட்டிய நோய் ஒருவேளை நீங்கலாகும். முற்பிறவி நோய் அவனுடையது” என்றார் பாஞ்சாலத்தின் அரசர். சிந்துவின் அரசர் “தந்தைப் பழியை அவன் ஏற்றுக்கொண்டது முறை. அதைப் பகிர என் மகளை அவன் கோருவது எவ்வகையிலும் பிழை” என்றார். பிற அரசர்களோ மெய் மறைத்து பிறிதொன்று சொல்லி தயங்கினர்.

அரசகுடியிலன்றி பிறிதொரு இடத்தில் பெண்கொள்வது குருநகரியின் குருதித் தூய்மையை பிற்காலத்தில் இல்லாமலாக்கக்கூடும் என்று குலத்தலைவர்களும் அமைச்சர்களும் அஞ்சினர். நான்காண்டுகாலம் பெண் தேடி சலித்தனர். அரசி நிமித்திகர் ஒருவரிடம் சென்று வழிகோரினாள். “நகரின் தென்மேற்கு மூலையில் அமைந்த துர்க்கை ஆலயத்தில் பன்னிரு மலர்கொண்டு பூசனைசெய்து மீள்கையில் முதலில் காதில்விழும் பெயருக்குரியவள் அரசனுக்கு துணைவியாவாள்” என்றார் நிமித்திகர். அவ்வண்ணம் வணங்கி மீள்கையில் எவரோ இந்துமதி எனச் சொல்லியது அவள் செவியில் விழுந்தது.

அயோத்தி அரசரின் இளையமகள் இந்துமதி அழகி என்றும் அறிந்தவள் என்றும் ஒற்றர்கள் வழியாக செய்தி வந்தது. அவளை பெண்கேட்க தூதனொருவனை அனுப்ப அவைகூட்டினார் குலத்தலைவர். தூதன் அத்திருமுகத்துடன் செல்லும்பொருட்டு எழுந்தபோது அவையிலமர்ந்திருந்த பத்மரின் மைந்தனும் அமைச்சனுமாகிய சுதர்மன்  “பொறுங்கள், மூத்தவரே” என்று சொல்லி எழுந்தான்.

“இது பெண்கோள் நிகழ்வென்பதனாலும் முன்னர் இதை நான் அறிந்ததில்லை என்பதனாலும் இதுவரையிலும் என் சொல்லென எதுவும் எடுக்கவில்லை. இத்தனை முறை இது பிழைத்தமையால் இன்று நான் ஒன்றை செய்யலாம் என்று எண்ணுகிறேன். ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்றான். “சொல்க!” என்றார் அக்குலமூத்தார். “இத்திருமுகத்துடன் சென்று அயோத்தியின் அரசனைப் பார்ப்பதில் பொருளில்லை. முன்பு பெற்ற மறுமொழிகளன்றி பிறிதொன்று இங்கு வருமென்பதற்கான சான்றுகள் ஏதும் நம்மிடம் இல்லை” என்றான் சுதர்மன்.

“இதுவே முறை. பிறிதென்ன வழி?” என்றார் குலத்தலைவர். “ஒன்று செய்யலாம். இம்முறை தூதன் செய்தியுடன் செல்வதற்கு முன்பு சொல்திறனும் இசைநுணுக்கமும் பயின்றுதேர்ந்த விறலி ஒருத்தியை அனுப்புவோம். அரசரின் தோள்திறமும் மெய்யழகும் உளக்கனிவும் அவளிடம் பாடல்களாக இருக்கவேண்டும். தேர்ந்த ஓவியர்கள் வரைந்த அரசரின் முகம் அவள் கையில் பட்டுச்சுருளென அமையவேண்டும். அரண்மனைக்குள் சென்று இந்துமதியைக் கண்டு அந்த முகத்தை அவளுக்கு  காட்டட்டும். அரசரின் பெருமையை எடுத்துரைக்கட்டும். இந்துமதியின் உள்ளத்தில் அரசர் எழுந்த பின்னர் இங்கிருந்து நாம் தூதனுப்புவோம்” என்றான் சுதர்மன்.

“பெண்விழைவை மறுப்பது ஷத்ரிய குலநெறி அல்ல. உளம்கொண்டவனை மறப்பது ஷத்ரியப் பெண்ணின் இயல்பும் அல்ல. அவ்வாறு அயோத்தியின் அரசர் பெண்கொடை மறுப்பாரென்றால் இங்கிருந்து படைகொண்டு அவ்விளவரசியை கொண்டுவருவதும் முறையென்றாகும்” என்றான். முதுதாதை ஒருவர் “படைவிட்டு பெண்கொள்வதை எப்போதோ செய்திருக்கலாம். ஆனால் அதற்கு அரசர் ஒப்புதல் அளிக்கவில்லை” என்றார்.

“ஆம். விரும்பாத பெண்ணை கவர்ந்து வருவதை அவர் ஒப்பமாட்டார். ஆனால் தன்மேல் பெருவிருப்பு கொண்டிருக்கும் பெண் ஒருத்தியின் ஓலை அவருக்கு வருமென்றால் படைகொண்டு சென்று பெண் கவர்ந்து வர அவரே ஆணையிடுவார்” என்றான் சுதர்மன். “அவ்வாறு அவளைக் கவர்ந்து வருவது அவருடைய அறம். அவள் கன்னியென்று வாழ்ந்தாலோ பிறன்கைபடாதிருக்க உயிர் மாய்த்தாலோ அவர் பழி கொள்ளவேண்டியிருக்கும்.” அவன் சொல்வதை உய்த்துணர்ந்தபின் “அவ்வாறே ஆகட்டும்” என்றார் குலமூத்தார்.

வைசாலி என்னும் விறலி தன் தோழியர் இருவருடன் தென்னகத்திலிருந்து பாடிப் பரிசில் பெற்றுவரும் பயணத்தில் எனக் காட்டி  அயோத்திக்கு சென்றாள். கோட்டைமுகப்பில் நின்று பாடியே தன்னை அறிமுகம் செய்த அவளை எதிர்கொண்டு அரண்மனைக்கு அழைத்துச்சென்றனர் அங்குள்ள காவலர். கரிய திண்ணுடலும் துள்ளும் நீள்விழிகளும் வெண்கலமணி போன்ற குரலும் கொண்டிருந்த வைசாலியைப் பார்த்ததுமே அரண்மனைப் பெண்டிர் திரண்டு வந்து அவளுக்குச் சுற்றும் அமர்ந்தனர். கைவளைகள் குலுங்க முலைப்பந்துகள் எழுந்தாட அமர்ந்தபடியே நடனமிட்டு அவள் கதை சொல்லலானாள்.

வைசாலி இந்திரன் விருத்திரனை வென்ற பெருங்கதையை பாடி நடித்தாள். கண்ணெதிரே விண் நிகழ்ந்த காட்சிகள் விரிய சொல்லிழந்து அமர்ந்திருந்தனர் சூழ்ந்த பெண்கள். ஆடல் முடிந்ததும் அயோத்தியின் அரசி மாதவி வைசாலிக்கு அருமணி மாலை ஒன்றையும் பொற்காசுகளையும் பரிசளித்தாள். அரசியை  வணங்கி பரிசிலுக்கு மகிழ்வுரைத்து மேலும் சிலநாள் தங்கி கதை சொல்வதாக ஒப்புக்கொண்டாள் வைசாலி.

அன்று அரண்மனையின் பாணர் இல்லத்தில் தங்கியிருந்த அவள் தன் தோழியை அனுப்பி இளவரசி இந்துமதியுடன் தனிச்சொல்லாட விழைவதாக தெரிவித்தாள். ஐயத்துடன் “எதற்கு?” என்று கோரிய முதுசெவிலியிடம் “இளமகள் அறியவேண்டிய காமக்கலைகள் சிலவற்றை கற்றுத்தர விழைகிறேன். இங்கு எவரும் அதை அவளிடம் உரைக்க இயலாது” என்றாள். முதுசெவிலி நகைத்து “ஆம். அதுவும் தேவைதான். துவர்க்கும் காய் போலிருக்கிறாள், அகம் சிவக்கட்டும்” என்றாள்.

செவிலி மலர்த்தோட்டத்தில் தனித்தமர்ந்திருந்த இந்துமதியிடம் வைசாலியை அழைத்துச்சென்றாள். தோழியரும் அகன்றபின் இந்துமதியுடன் தனித்திருந்த வைசாலி இந்திரன் விருத்திரனை வென்ற கதையிலிருந்தே பேச்சை தொடங்கினாள். இந்திரனின் அழகையும் மாண்பையும் ஊசிமுனையால் நகையின் அணிச்செதுக்குகளை தொட்டுக்காட்டும் பொன்வணிகன்போல் சொல்லிக்கொண்டே சென்றாள். விழைவு எரியும் விழிகளும் அணைப்பதற்கென்றே விரிந்த தோள்களும் கொண்ட இந்திரன் ஏதேதோ உருவில் எல்லா பெண்களுக்குள்ளும் உறைவதை அவள் அறிந்திருந்தாள். சொல் ஒன்றே அங்கு சென்று அக்கனவை தொடுமென்றும் கற்றிருந்தாள். ஊசிமுனை மட்டுமே தொடும் அந்நகையின் செதுக்குகள், சிதர்கள் சிலிர்த்துக்கொண்டன.

இந்துமதி இரு கைகளாலும் தலையைத் தாங்கி விழிகள் நீர்மைகொண்டு தாழ்ந்திருக்க சிற்றிலை உதிரும் சுனைநீர்ப்பரப்பென உடல் ஆங்காங்கே மெய்ப்புகொள்ள, மூச்சில் இளமுலைகள் அசைய அதைக் கேட்டு அமர்ந்திருந்தாள். பெருமழைக்குப் பின் செம்மண் நிலமென அவள் கனிந்துவிட்டதை அறிந்ததும் பாடினி மெல்ல சொல்முதிர்ந்து அவ்விந்திரனை வெல்லும் ஒரு மைந்தன் மண்ணில் எழப்போவதைப் பற்றி சொல்லலானாள். அவன் பெருந்தோள்களை, விரிந்த நெஞ்சை, நிலம் அழுந்த ஊன்றும் கால்களை, கூர்ஒளிர் விழிகளை, முரசுக்குள் கார்வை என முழங்கும் குரலை அவள் சொல்லிக்கொண்டே செல்ல கைநீட்டி பாடினியின் கைகளைத் தொட்ட இந்துமதி போதும் என்று தலையசைத்தாள்.

பாடினி “அப்பேருருவன் பிறக்கவிருப்பது குருநகரியின் அரசன் ஆயுஸின் குலத்திலென்று நிமித்திகர் கூறுகின்றனர், இளவரசி” என்றாள். “யாரவர்?” என்று அவள் கேட்க தன் கையிலிருந்த பட்டுச்சுருளை நிமிர்த்தி விரித்து ஆயுஸின் முகத்தைக் காட்டினாள். இந்திரனும் அவன் வடிவென எழவிருக்கும் மைந்தனும் இருபுறமும் சுடர்விட அவ்வொளியில் தெரிந்தது ஆயுஸின் அழகிய முகம். அவள் விழிகள் அம்முகத்தைத் தொட்டதுமே மிகத் தாழ்ந்த குரலில் பாடினி ஆயுஸின் புகழ் பாடத்தொடங்கினாள். அவன் நகர்ப்பெருமை, குலப்பெருமை, கோல்மாண்பு, போர்மறம் என அச்சொற்கள் விரிந்தன.

மிகத் தாழ்ந்த குரலில் சொல்லப்படும் சொற்கள் செவியைத் தொடாமலே நெஞ்சில் நுழைபவை. தன் நெஞ்சுள் இருந்தே முளைத்தனவோ என கேட்பவர் ஐயுறும் தன்மைகொண்டவை. பாடினி சொல்லி முடிப்பதற்குள் இந்துமதி ஆயுஸை தன் கணவனென ஏற்றுக்கொண்டுவிட்டிருந்தாள். பாடினி எழுந்தபோது அந்த ஓவியத்தை தனக்கென அளிக்க முடியுமா எனக் கேட்டு வாங்கினாள். அதை  மறைக்கும்பொருட்டு தன் ஆடைக்குள் உள்ளாடையென அணிந்தபடி தன் அறைக்குள் சென்றாள். சேடியர் சென்று மறைந்த பின் மஞ்சத்தில் படுத்து அதை விரித்து அதன் அருகே முகம் வைத்து அவ்விழிகளை நோக்கிக்கொண்டு கனவிலாழ்ந்தாள்.

இரவெல்லாம் அந்த முகத்துடன் அவள் இருந்தாள். நடுங்கும் வியர்த்த விரல்களால் அம்முகத்தை வருடினாள். இதழ் கனல்கொள்ள மூச்சு ஆவியென்று எழ அவன் முகத்தை முத்தமிட்டாள். ஓசைகேட்டு எழுந்து அதை மீண்டும் தன் உள்ளாடையாக்கிக்கொண்டு கதவைத் திறந்தாள். அவள் உடலில் அவன் எப்போதும் அறியா அணைப்பென கைசுற்றியிருந்தான். பதினைந்து நாட்களுக்குப் பிறகு குருநகரியின் தூதன் அயோத்தியை அடைந்தபோது இந்துமதி ஆயுஸின் மனைவியாக நெடுங்காலம் வாழ்ந்து முடித்திருந்தாள்.

tiger தூதனின் சொல்கேட்டு அயோத்தியின் அரசர் திகைத்து “முன்னரே என் மூத்த மகளைக் கோரி இங்கு வந்தபோது நான் பெண்மறுத்து திருப்பி அனுப்பினேன் என்பது நினைவிருக்கும். இரண்டாமவளைக் கோரி நீங்கள் இங்கு வந்தது என்னை சிறுமை செய்வதற்கல்ல என்று எண்ணுகின்றேன்” என்றார். குருநகரியின் முத்திரை சூடிய தலைப்பாகையுடன் அவை நின்ற தூதன் “அல்ல அரசே, இம்முறை எங்கள் அரசின் தூது வந்தது உங்கள் இளவரசியின் விழைவை ஏற்றுத்தான்…” என்றான். “என்ன சொல்கிறீர்?” என்று அரசர் பாய்ந்து எழ “ஆம், உங்கள் இளவரசியின் காதலை எங்கள் அரசர் ஏற்றதனாலேயே இச்செய்தி” என்றான் தூதன்.

பெருஞ்சினத்துடன் “இளவரசியின் காதல் உமக்கு எப்படித் தெரிந்தது?” என்றார் அயோத்தி அரசர். “இளவரசி அனுப்பிய பாடினி ஒருத்தி எங்கள் அரண்மனைக்கு வந்து அரசரிடம் செய்தியை சொன்னாள்” என்றான் தூதன். “இது அரசியல் சூழ்ச்சி. வீண்சொல். இக்கணமே அவை நீங்குக! கொலைக்களத்தில் இறப்பு காத்திருக்கும் பிணையன் போன்றவன் உமது அரசன். அவனுடன் அவையமர இங்கு என் மகள்கள் எவருமில்லை. செல்க!” என்றார் அரசர்.

தூதன் நிமிர்ந்த தலையும் முழங்கும் குரலுமாக “செல்கிறேன். இளவரசி அவைக்கு வந்து எங்கள் அரசரை அவர் விரும்பவில்லை என்று ஒரு சொல் சொல்லட்டும். அச்சொல்லின்றி நான் மீளப்போவதில்லை. நீங்கள் என்னைக் கொல்லலாம். அது குருநகரியிடம் அயோத்தி போருக்கு அறைகூவுகிறது என்றே பொருள் கொள்ளப்படும்” என்றான். சினத்தால் சுருங்கிய கண்களுடன் நோக்கியிருந்த அரசர் “இந்த அவையின் சொல் உமக்குப் போதாதா?” என்றார். “இளவரசியின் விழிகளை நோக்கி அச்சொற்களை நான் கேட்கவேண்டும். அதுவே எனக்கிடப்பட்ட ஆணை” என்றான் தூதன்.

நாலும் எண்ணியபின் மெல்ல நிலைமீண்ட அயோத்தியின் அரசர் திரும்பி தன் அருகே அமர்ந்திருந்த அரசியிடம் “அவ்வண்ணம் ஏதேனும் விருப்பு நமது இளவரசிக்கு உண்டா?” என்றார். “குருநகரியின் அரசனை எவ்வண்ணம் அவள் அறிவாள்? ஒவ்வொரு நாளும் அவளுடன் இருந்துகொண்டிருக்கிறேன். அப்படி ஒரு விழைவு அவளிடம் இருப்பதற்கான எந்தச் சான்றும் இதுவரை என் கண்களுக்குப்படவில்லை” என்றாள் அன்னை. அப்பால் நின்றிருந்த சேடி குனிந்து “நானும் அவ்வண்ணம் எத்தடயமும் இதுவரை கண்டதில்லை, அரசே” என்றாள்.

மறுபக்கம் நின்றிருந்த மூதமைச்சர் பணிந்து “அரசே, கன்னியர் உள்ளத்தை அன்னையர் ஒருபோதும் அறிவதில்லை. அவர்களை தங்கள் மடியமர்ந்த மழலையர் என்றே இறுதிவரை எண்ணுவார்கள். இளவரசியின் உள்ளம் இந்த அவையில் அவர் வந்து சொல்லெடுப்பது வரை எவரும் அறிய முடியாது…” என்றார். பெருமூச்சுடன் “ஆனால் எனக்கு பிறிதொரு வழியில்லை” என்று சொன்ன அரசர் திரும்பி முதுசேடியிடம் “சென்று சொல், என் மகளிடம்! இந்த அவைக்கு வந்து குருநகரியின் அரசனை அவள் விரும்பவில்லை என்று சொல்லவேண்டுமென்பது என் ஆணை என்று” என்றார். அவள் தலைவணங்கினாள்.

அவர் மேலும் குரல் தாழ்த்தி “அங்கு அவள் முடிசூடி வாழப்போகும் நாட்கள் சிலவே என்று விளக்கு. மூத்தார் பழிகொண்ட மன்னனின் துணைவியாக அமர்ந்து பெருந்துயருற வேண்டாம் என்று நான் சொன்னேன் என்றுரை. தந்தையென்று என் விழைவையும் அரசனென்று என் ஆணையையும் அறிந்தபின் அவள் அவை வரட்டும்” என்றார். அன்னை “அவளிடம் என் விழைவும் அதுவே என்று சொல்” என்றாள். “அவ்வாறே” என்று சேடி பின்னடி வைத்து விலகினாள்.

தன் அறைக்குள் தனிமையில் மஞ்சத்தில் படுத்து ஆயுஸின் முகத்தை விழிநட்டு நோக்கியிருந்த இந்துமதியை கதவைத் தட்டி அழைத்தாள் சேடி. ஓவியத்தைச் சுருட்டி ஆடைக்கு அடியில் உடுத்திவிட்டு மேலாடை திருத்தி வியர்த்து சிவந்த முகத்துடன் கதவைத் திறந்த இந்துமதியின் முகத்தைக் கண்டதுமே அவளுக்குப் புரிந்துவிட்டது. இத்தனை  நாள் இதை எவ்வண்ணம் காணாமலிருந்தேன் என்று அவள் வியந்தாள். உறுதியை மீட்டுக்கொண்டு “வருக, இளவரசி! தங்கள் தந்தை அவை புகுந்து இவ்வண்ணம் உரைக்கும்படி ஆணையிட்டிருக்கிறார்” என்று அரசனின் சொற்களை சொன்னாள்.

விழிதாழ்த்தி முலையிணை எழுந்தமைய பிறிதெவரிடமோ எவரோ பேசுவதை அருகே கேட்டு நிற்பதுபோல் நின்றிருந்த அவளை நோக்கி நன்று நிகழப்போவதில்லை என்று தன்னுள் சொல்லிக்கொண்டாள் சேடி. இளஞ்சேடியர் ஓடிவந்து இளவரசிக்குரிய பட்டாடையையும் அணிகளையும் அவளுக்கு அணிவித்தனர். ஆடை உலையும் ஒலியும், அணிகள் சிலம்பும் இசையும் பொருந்திவர காலெடுத்து வைத்து அவள் நடந்தபோது ஒருத்தி பிறிதொருத்தியிடம் “இது மணவறைக்குச் செல்லும் நடையல்லவா?” என்றாள். “பேசாமலிரு” என்றாள் மற்றவள்.

அவைக்குள் புகுந்து அரசமேடை மேலேறி நின்று தலைகுனிந்து கால்நகம் நோக்கினாள் இந்துமதி. அரசர் அவளிடம் திரும்பி “மகளே, சொல்க! இவர் குருநகரியின் அரசனின் தூதனாக வந்துள்ளார். நீ அவரை மணம்கொள்ள விழைவதாக அங்கொரு செய்தி சென்றிருக்கிறது. அதன்பொருட்டே உனைக் கோரி இங்கு மணத்தூது அனுப்பப்பட்டுள்ளது. அவ்வண்ணம் விழைவேதும் உன் நெஞ்சில் உள்ளதா?” என்றார். அவள் தலைகுனிந்து நிற்க “என் சொல்லென்ன என்பதை சேடி சொல்லி அறிந்திருப்பாய். அதையும் எண்ணி இங்கு உன் முடிவைச் சொல்” என்றார்.

உடல் முழுக்க மெல்லிய நடுக்கம் ஓட தலைகுனிந்து நின்றிருந்தாள் இந்துமதி. “சொல் மகளே, நீ வெறும் பெண்ணல்ல. இந்நகரின் இளவரசி. அரச மேடையில் நின்று நீ சொல்லும் சொற்கள் என்றும் நினைக்கப்படுபவை” என்றார் அரசர். அவள் தலைநிமிர்ந்து இதழ்களை அசைத்தாள். சொல் திரளாமையை உணர்ந்து மீண்டும் தலைகுனிந்தாள். அரசி எழுந்து அவள் தோளைப்பற்றி “தயங்க வேண்டியதில்லை. உன் முடிவைச் சொல்” என்றாள்.

மூச்சை இழுத்து தன்னுடலை இறுக்கி, கழுத்திலொரு நீல நரம்பு புடைக்க தலைதூக்கி, அவையை விழிகளால் ஒரு சுற்று நோக்கியபின் தூதனை நோக்கி அவள் சொன்னாள் “தூதரே, சென்று சொல்க, குருநகரியின் அரசர் ஆயுஸின் துணைவியாகவே நான் இங்கு வாழ்கிறேன் என்று. பிறிதொருவரை மணம்கொள்ள இப்பிறவியில் எந்நிலையிலும் ஒப்பேன். அறிக இந்த அவையும்!” என்றாள். முந்தைய கணத்தில் அவள் உடலில் திகழ்ந்த தயக்கத்திற்கும் அச்சத்திற்கும் மாறாக குரல் மணிக்கூர்மையுடன் அவை நிரப்பி ஒலித்தடங்கியது.

அரசர் எழுந்து “என்ன சொல்கிறாய்? இளவரசி, உன் சொற்களை எண்ணித்தான் சொல்கிறாயா?” என்றார். குலமூத்தார் ஒருவர் எழுந்து “அவையில் இச்சொற்களை இளவரசி சொன்னபிறகு மறுத்தொரு சொல் சொல்ல அரசருக்கோ குலத்திற்கோ குலதெய்வங்களுக்கோகூட உரிமையில்லை, அரசே” என்றார். உடல் எடை அரியணையை அழுத்தி ஒலியெழுப்ப கால் தளர்ந்து அமர்ந்த அரசர் “ஆம்” என்றார்.

குருநகரியின் தூதன் “எனது திருமுகத்தை அரசர் முறைப்படி பெற்றுக்கொள்ள வேண்டும். அரசகுல முறைப்படி இளவரசியை எங்கள் அரசருக்கு மணமளிக்கவும் வேண்டும்” என்றான். “இனி நான் சொல்வதற்கொன்றுமில்லை. அவ்வாறே ஆகுக!” என்றார் அரசர். பின்னர் தலையைப் பற்றியபடி “ஊழ் எனும் சொல் காதில் விழாத நாள் ஒன்று இல்லை. ஆயினும் கண்முன் எழுகையில் ஒவ்வொருமுறையும் அது அச்சுறுத்துகிறது” என்றார்.

தன் அறை நோக்கி செல்கையில் இந்துமதியைத் தொடர்ந்து ஓடிவந்த அவள் அன்னை “அறிவிலியே, என்ன சொன்னாய் என்று தெரிகிறதா?  நீ எவருக்கு மணமகளாகப் போகிறாய் என்று தெரிகிறதா?” என்றாள்.  “தெரியும். அனைத்துக் கதைகளையும் அறிந்துள்ளேன்” என்றாள் இந்துமதி. “தந்தைப் பழி ஏற்றவன் வாழமாட்டான். கல் பிணைத்து நீரில் இட்டதுபோல் உன் வாழ்க்கை அமையும்” என்றாள் அன்னை. “விரும்பி ஒருவருடன் வாழ்ந்து அழிவதும் இன்பமே. இனி பிறிதொன்றை நான் எண்ணுவதற்கில்லை” என்றபின் அவள் நடந்து சென்றாள்.

அவ்வுறுதியை ஒருபோதும் அவளில் கண்டிராத அன்னை தன் தோழியாகிய முதுசேடியிடம் திரும்பி உளம்பதைக்க “என்னடி இது?” என்றாள். “பெண் முதிரும் கணம், அதை நாமனைவரும் அறிவோம்தானே…?” என்றாள் அவள். “இவள் வாழ்க்கை…” என மேலும் அரசி சொல்லப்போக “அதற்கு தான் பொறுப்பேற்றுக்கொண்டதாகத்தானே இப்போது அவர் சொன்ன சொற்களின் பொருள்… இனியொரு சொல்லெடுக்க நமக்கு உரிமையில்லை. நன்று நிகழுமென்று எண்ணுவோம்” என்றாள் முதுசேடி.

மூன்று நாட்கள் அரண்மனை சொல்லெழாத் துயரத்திலிருந்தது. சினத்துடன் தன் அறைக்குள்ளே அடைந்து கிடந்தார் அயோத்தியின் அரசர். அமைச்சர்கள் அவரை ஆறுதல்படுத்தினர். “ஒரு பழங்கதையின் அடிப்படையில் நாம் தயங்கினோம். அதை இனி பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அரசமுறையிலும் குலமுறையிலும் நமக்கு நிகரானவர் குருநிலத்து அரசர்” என்றார் ஒரு குலமூத்தார். “நாம் பிறவிநூல் நோக்கி, நாளும் கோளும் கணித்து இளவரசியை பிறிதொருவருக்கு மணம்செய்து கொடுத்தால்கூட அவ்வரசன் போரில் மடியமாட்டான், நோயில் படுக்கமாட்டான் என்பதில் என்ன உறுதியிருக்கிறது?” என்றார் அமைச்சர்.

மெல்ல அரசர் உளம்தேறி எழுந்தார். மணநாள் குறிக்கப்பட்ட பின்னரே மகளை நோக்கி அகம் கனிந்தார். “நீங்கள் இளவரசியை பின்னர் அழைத்துப்பேசவில்லை, அரசே. உங்கள் உளம்நிறைந்த வாழ்த்துக்களுடன் அவர் நகர்நீங்கவேண்டும். இல்லையேல் நீங்கள் நிறைவுடன் இங்கு அமையமுடியாது” என்றார் அமைச்சர். “ஆம்” என்றபின் அரசர் மாமங்கலைகளை அடிவணங்கி அருள்கொள்ளும் நாளில் அவள் அணிபுனைந்துகொண்டிருந்தபோது  அவளை அழைத்து வரச்சொன்னார். “அவள் பிறந்த நாளிலிருந்து என் உள்ளத்தில் அவள் நீங்கிய கணமொன்றில்லை, அமைச்சரே” என குரல்கசியச் சொன்னார்.

எவ்வித அச்சமும் இன்றி, தயங்கா காலெடுத்து தன்முன் வந்துநின்ற மகளை நோக்கியதுமே அவள் பிறிதொருத்தி என்று அறிந்துகொண்டார். அந்த நிமிர்வு தன் அன்னையிடம் இருந்தது அல்லவா என்று நினைவுகூர்ந்தார். அவ்வெண்ணத்தால் முகம் மலர்ந்து அவள் அருகே சென்று சிறுதோள்களில் கைவைத்து “நன்று மகளே, உன் முடிவை நீ எடுத்தாய். அதன் இனிப்புக்கும் கசப்புக்கும் பொறுப்பேற்கையில் நீ அரசி என்றானாய். உனது காலடியில் குலங்கள் பணியும். உனது வயிற்றில் புவியாளும் பெருமன்னன் பிறப்பான். நன்று சூழ்க!” என்று அவளை வாழ்த்தினார்.

கைகூப்பி தந்தையின் வாழ்த்தை ஏற்ற இந்துமதி “இம்முடிவை நான் எடுத்தது குருநகரின் அரசரின் அழகிய தோற்றம்மேல் நான் கொண்ட மையலால்தான் என்று சிலநாள் முன்னர்வரை எண்ணினேன், தந்தையே. அவரை நான் மணப்பது உறுதியாகி மணமேடை என் அகவிழியில் தெரியத்தொடங்கியதுமே அவர் பின்னுக்கு நகரத்தொடங்கினார். இன்று என்னுள் நிறைந்திருப்பது என் உடலில் முளைத்து எழப்போகும் மைந்தன் மட்டுமே. தந்தையே, இந்திரனை வென்று அவ்வரியணையில் அமரும் அரசன் அவன் என்று நான் அறிவேன். இக்கணம் அதில் எனக்கு ஐயமேதுமில்லை” என்றாள்.

“அவ்வண்ணமே ஆகுக! இவை அனைத்தும் அவன் மண்நிகழ்வதற்காக எங்கிருந்தோ இயற்றும் செயல்களாக இருக்கலாம். நீத்தவர் தெய்வங்கள் எனில் பிறக்காதவர்களும் தெய்வங்களே” என்றார் அரசர். அச்சொற்களால் உணர்வெழுச்சிகொண்டு அவள் விசும்பி அழத்தொடங்கினாள். அவள் தோள்களைவருடி குழல்நீவி சொல்லின்றி அவளை வாழ்த்திக்கொண்டிருந்தார் தந்தை.

இரு அரசகுலங்களும் மனமுவந்து நிகழ்த்திய விழவென்பதால் பதினைந்து நாட்கள் நீடித்த களியாட்டமாக அமைந்தது அந்தத் திருமணம். நாள்தோறும் விருந்துகளும் கலைநிகழ்வுகளும் களமாடல்களும் நூலாய்வுகளும் நிகழ்ந்தன. வைதிகரும் முனிவரும் வந்து பொருளும் பெருமையும் பெற்றுச்சென்றனர். மணம் நிகழ்ந்த அன்று விண்ணில் இளமுகில்கள் குவிந்து விழுந்த வெள்ளித்தூறலால் தெய்வங்களின் வாழ்த்தே அவர்களுக்கு அமைந்தது என்று புலவர் பாடினர்.

இந்துமதி கணவனுடன் குருநகரிக்கு வந்தாள். முதல் இரவில் அவள் கைகளை பற்றிக்கொண்டு ஆயுஸ் சொன்னான் “என்னை முனியவும் தீச்சொல்லிடவும் உனக்கு முற்றுரிமை உண்டு. உன்னை இம்மஞ்சம்வரை கொண்டுவந்து சேர்த்தது என் அமைச்சரின் சூழ்வல்லமை என நேற்றுதான் அறிந்தேன். சொல்லெனும் மெல்லிய வலையால் கட்டி உனை இங்கு இழுத்து வந்தார் அவர். எனக்கும் பிறிதொரு வழி தெரியவில்லை.” அவள் “இல்லை அரசே, இது என் ஊழ் கொண்டுவந்து சேர்த்த இடம்” என்றாள்.

“இக்குலம் வாழவேண்டுமெனில் உன் கருவில் ஒரு மைந்தன் பிறக்கவேண்டும். அவன் இந்திரனை வெல்வான், நாகர்குலத்தை ஆள்வான் என்று நிமித்திகம் சொல்கிறது. குருதி செல்லும் வழி அமைய வேண்டுமென்பதற்கப்பால் நான் எதையும் இப்போது விழையவில்லை” என்று ஆயுஸ் துயருடன் சொன்னான். “எந்தையின் தீச்சொல் பழியை நீ அறிவாய். அதை நான் இரந்து வாங்கி மணிமுடியுடன் சேர்த்து என் தலை சூடியிருக்கிறேன். என் இடம் அமர்ந்து இம்மணிமுடிக்குரியவள் என்பதால் நீயும் அதை அடையவிருக்கிறாய். அதன்பொருட்டு உன்னிடம் வாழும் ஒவ்வொரு கணமும் பொறுத்தருள்க பொறுத்தருள்க என்றே சொல்வேன்.”

உளம் கனிந்து அவள் அவனை அணைத்து “ஒட்டாது வாழும் நெடுநாள் வாழ்வல்ல, நான் விழைந்தது. உளம் ஒன்றாகித் திகழும் கணங்களேயானாலும் அவையே முழுவாழ்வு. பிறிதொன்றும் விழையவில்லை” என்றாள்.  துயர் இறுகிநின்ற அவன் முகத்தை நோக்கி புன்னகைத்து “நான் விழைந்த வாழ்வு இது. என் கருவிலெழும் மைந்தனால் இங்கு அழைத்துவரப்பட்டேன்” என்றாள். அவன் நீள்மூச்சுடன் அவள் அருகே அமர்ந்தான். “நான் எனை மறந்த உவகை என எதையும் இன்றுவரை அடைந்ததில்லை” என்றான். “நம் மைந்தன் பிறக்கையில் அதை அடைவீர்கள்” என்று அவள் சொன்னாள்.

தொடர்புடைய பதிவுகள்

கதையாளனும் கலைஞனும்

$
0
0

sujatha

 

இனிய ஜெயம்,

எப்போதுமே தீவிர இலக்கிய உரையாடலில் நண்பர்கள் சுஜாதாவின் சிறுகதையை எடுத்து பேசும்போதெல்லாம். அவர்களுக்கு சுஜாதா படைப்புகளில் இலங்கும் ”கலைத் தருணம்” குறித்து, அவற்றை ஹாலிவுட் திரைப்படங்களுடன் ஒப்பிட்டு விளக்குவேன். ஹாலிவுட் படங்கள் கலை ரசிகனுக்கும் தன்னுள் இடம் அளிக்கும் முழுமையான வணிக சினிமா. சுஜாதா கதைகளும் அதேதான். அவை கலை ரசிகனுக்கும் தன்னுள் இடம் அளிக்கும் வெகுஜன எழுத்துக்களே என்பேன். [பதிலுக்கு அவர்களின் சாபங்களை பெறுவேன்].

இதோ இந்த வார விகடனில், கண்டு பிடித்து தந்தால், மகளைக் கட்டிக் கொடுத்து பாதி ராஜ்யமும் தருவேன் என சுஜாதா அறிவித்து தேடிய அவரது முதல் கதை ”எழுத்தின் ஹிம்சை” வெளியாக்கி இருக்கிறது. சுஜாதாவின் முதல் கதையுடன் அசோக மித்ரனின் முதல் கதையை ஒப்பு நோக்கினால், தீவிர இலக்கியத்தின் மாஸ்டர், அமி, யின் திறனும். சுஜாதாவின் எல்லைகளும் தெளிவாகவே துலங்குகிறது.

எழுத்தின் ஹிம்சை கதையின் நாயகன் ஒரு [இடையில் குத்திய கத்தி போல கூச்செரிய செய்யும் தலைப்பில் கதைகள்] க்ரைம் கதை. எழுத்தாளர். ஒரு நாள் அவர் முன் ஒரு யுவதியால் கொலை செய்யப்பட்ட யுவனின் ஆவி எழுகிறது. அவர் எழுதும் கதையில் வருவது போல [தனக்காக] தன்னைக் கொன்ற பெண்ணை கொலை செய்யப் பணிக்கிறது. தமாஷ் கதை. இறுதியில் இப்படி முடிகிறது. எழுத்தாளர் இப்போதெல்லாம் குடும்பக் கதைகள் மட்டுமே எழுதுகிறார். அவர் கதையில் ஒரு எறும்பு கூட கொல்லப்படுவதில்லை.

 

asokamithran

சுஜாதாவுக்கே உரிய கச்சித வர்ணனை, துள்ளும் மொழி,

சரளம், சும்மா ஒரு கதை எனும் விளையாட்டுத்தனம் என எது சுஜாதாவோ அனைத்தும் அவரது முதல் கதையிலேயே உருவாகி வந்திருக்கிறது.

அசோகமித்திரனை எடுத்துக்கொண்டால் அவரது முதல் கதையும் எழுத்தாளனை குறித்ததுதான். நாடக எழுத்தாளன். அவனது நாடக பாத்திரம் ஒன்றே அவனது மரணத்துக்கு காரணம் ஆகிறது. அதாவது அவனது படைப்பு திறனே அவனுக்கான யமன். படைப்பாளி மற்றும் அவனது படைப்புத்திறன் இவற்றுக்கு இடையான உறவை கலாபூர்வமான விவாதித்த வகையில் ஒரு மாஸ்டர் தனது முதல் கதையிலேயே தான் யார் என நிரூபித்து விடுகிறார்.

அசோகமித்திரன் கதைகள் பெரும்பாலானவை [அவரது சிறந்த கதைகள் எனும் தளத்தைக் கடந்து] மனித அகத்தின் ஆழத்து விகாரங்கள், விசாரங்களில் கவனம் குவிப்பவை. கலை முழுமை கூடாதுபோன கதைகளில் கூட, மனித அகத்தின் புதிர் அவிழா அடிப்படைச் சிக்கல் மீதான அவரது அவதானம் தனித்துவமானது. மனிதவாழ்வை கண்ணில் விழுந்த துளி மணல் முதல் ஆளைப் புதைக்கும் புதைமணல் வரை இத்தளங்களில் நிறுத்திப் பார்த்த நவீனத்துவத்தின் பெரும் படைப்பாளி

அவரது முதல் கதை *நாடகத்தின் முடிவு *. நாடக ஆசிரியர் ஆனந்த குமார் தான் 7 வருடம் பாடுபட்டு உருவாக்கிய நாடகம் அடைந்த பெரு வெற்றியில் ஆனந்தம் தாளாமல், இரவு 11 மணிக்குமேலும் உறங்காமல் தவிக்கிறார். ஒரு மாயக் கணத்தில் அவரது நாடகத்தின் நாயகி சரோஜா, உருவெளித் தோற்றமாக அவர் முன் தோன்றுகிறாள். மரித்த தனது காதலனுக்காக வாதாடுகிறாள். விவாதம் முற்றுகிறது. காலையில் ஆனந்தகுமார் மாரடைப்பால் காலமான செய்தியை தினசரிகள் தெரிவிக்கின்றன.

அமி தனது முதல் கதையிலேயே, படைப்பாளியும் அவனது படைப்பின் சாரத்துடன் அப்படைப்பாளியின் அகம் கொள்ளும் உறவும், எனும் உலகப் படைப்பாளிகளின் பிரத்யேக முரண் வகைமைக்குள் சென்றுவிடுகிறார். ஆனந்தகுமார் தனது ஆன்மாவால் சலித்து துளித்துளியாக சேகரித்து உருவாக்கிய அவரது உயிர் உருக்கும் கனவின் பிரதிமை. சரோஜா. சரோஜாவை நோக்கி உதடுக்குள் முணுமுணுக்கிறார் ”ஆம் உன்னிலும் சிறந்த பெண், இனி கற்பத்திலோ, கற்பனயிலோ சாத்தியமில்லை ”. நாடகத்தின் இறுதியில் அவளது காதலன் சுகுமாரன் கொல்லப்படுகிறான். ஆனந்தகுமாரின் கனவுப்பெண் கண்நீர்வடித்துக் கதறுகிறாள். அவளது காதலன் சுகுமாரனை சாகடிக்காதிருக்கும்படி. ஆனந்த் நாடகத்தின் தர்க்கசாத்தியத்தை எடுத்துக் கூறி மறுக்கிறார். உரையாடல் தொடர்ந்து கோபம் மீதூர சரோஜா ஆனந்தின் அடிமன வக்கிரத்தை கண்டடைந்து சபிக்கிறாள். இந்த உரையாடல்கள் வழி ஆனந்த் தனது ஆழத்து இருளை தரிசிக்கிறான். மாரடைத்து இறந்துபோகிறான்

ஒரு மனிதனின் படைப்பாளியின், மரணத்தருவாயின் மனக்கொந்தளிப்புகளை, அவன் அகம் குலைந்து பொங்கிவரும் விசித்திரத் தோற்றங்களை, அவனது அகத்தின் கீழ்மையை அவனது மேலான பாத்திரம் ஒன்றே துலங்கச் செய்யும் விசித்திர கனவை, அமி நேரடியான நடையில் தாகூரின் செவ்வியல் கதைகள் போல சொல்லிச் செல்கிறார். ஆனந்த் ஒரு நாடகாசிரியன் என்பதால் சிறுகதையின் மொத்த ஓட்டமும், ஒரு நாடக நிகழ்வு போலவே முன்வைக்கப்படுவது இக்கதையின் அழகியல். சுகுமாரனின் பிணம் மிதந்துவரும் போது ஆனந்த் அதை தன்னில் இறந்துபோன லட்சிய உருவமாகக் காண்கிறான். ஜெயம் ரிபு என்று சொல்வார். மனிதன் தன் சுய அழிவுக்கான காரணியை தானே விரும்பி வளர்ப்பதின் பெயர். சரோஜா ஆனந்தின் ரிபு. எளிய, ஆனால் ஆற்றல் வாய்ந்த கதை. [முன்பு உங்களுக்கு எழுதிய கடிதத்தில் உள்ளது மேற்கண்ட அமி கதை குறித்த பத்தி].

இரு விதைகள். எது காலம் கடந்து நிற்கும் ஆலம் வித்து என்பது இதோ நம் முன்னால்.

கடலூர் சீனு

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கடவுள் இல்லாத நிலம்

$
0
0

tex

 

டெக்ஸ்வில்லர் பாணி கௌபாய் படக்கதைகள் ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்குமுன் எனக்கு அறிமுகமானவை. மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே கதையை திரும்பத்திரும்பப் படித்திருக்கிறேன். எனக்கு வன்மேற்கு பற்றிய பெரியதொரு கனவை அவை உருவாக்கின. நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் அந்நிலத்தை அசையும் காட்சிகளாக மெக்கன்னாஸ் கோல்ட் படத்தில் பார்த்தேன். உண்மையில் அதைப் பார்க்கும்போது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. கருப்பு வெள்ளை கோட்டுப்படங்கள் வழியாகவே நான் உருவாக்கிக் கொண்டிருந்த நிலம் மேலும் பன்மடங்கு விரிந்தது உக்கிரமானது.

இப்போது முத்து காமிக்ஸ் வெளியிட்ட அந்நூல்கள் மீண்டும்  வெளிவருகின்றன.  பல்லாண்டுகள் கழித்து அந்நிலத்தின் வழியாக பயணம் செய்த போது அக்கற்பனையைக் கடந்து அந்நிலம் விரிந்து கிடப்பதைக் கண்டேன். நிலம் கடவுள் போல. மனிதனின் எல்லாக் கற்பனைக்கும் அப்பால் தன் மாபெரும் தோற்றத்துடன் அது நின்றிருக்கிறது. மனிதனை துளியாக, தூசியாக மாற்றித் தன்னுள் வைத்துக் கொள்கிறது.

வன்மேற்கு உண்மையில் ஒரு புனைவு. புகழ்பெற்ற கௌபாய்களின் காலகட்டம் 1800-களின் தொடக்கத்தில் அதிகம் போனால் ஒரு முப்பது ஆண்டுகாலம் இருந்திருக்கலாம் என்கிறார்கள். அதுவும் அங்குசென்ற ஐரோப்பியப் பயணிகளின் குறிப்புகள் வழியாக வடக்கு அமெரிக்க எழுத்தாளர்களாலும் ஐரோப்பிய எழுத்தாளர்களாலும் உருவாக்கப்பட்ட புனைவுகளை ஒட்டித்தான் அது உருவானது. அவர்களின் மிகைக்கற்பனை அதில் பெரும்பங்கு வகிக்கிறது. அரசு ஆவணங்களும் சரி தொழில்முறையாக அங்கு பயணம் செய்தவர்களும் சரி மேற்கைப்பற்றி அளிக்கும் சித்திரம் இப்புனைவின் சித்திரங்களுடன் ஒத்துப்போவதல்ல.

ஐரோப்பாவின் சாகசமோகத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு கற்பனைநிலமே கௌபாய்களின் வன்மேற்கு என்பது இன்று பரவலாக ஏற்கப்படுகிறது. இத்தகைய ஒரு நிலத்தை மேலைமனம் கட்டமைத்துக்கொண்டது ஏன், அதற்கான காரணிகள் என்றெல்லாம் விரிவான ஆய்வுகள் வந்துள்ளன.

சாகசம் என்றைக்குமே மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அது ஒரு குழந்தை மனநிலை. கையூன்றி எழுந்தமரும் குழந்தை தன் உடலும் சூழலும் அமைக்கும் எல்லைகளை தன் உயிர்விசையால் மீறிச்செல்லும் பெருமுயற்சியிலேயே எப்போதும் இருந்துகொண்டிக்கிறது. சாளரங்களில் தொற்றி ஏறுகிறது. நாற்காலிகளின் கைப்பிடிகளை பற்றி ஏறி விழுகிறது. வீட்டை விட்டுக் கிளம்பிச் செல்கிறது. மிருகங்களின் வால்களைப்பற்றி இழுக்கிறது. சாகசம் அதன் நீட்சிதான்.

ஒற்றை வரியில் சொல்லப்போனால் தன் எல்லைகளை மீறுவதற்கான மானுடனின் துடிப்பும் கனவுமே சாகசம் எனப்படுகிறது. தன்னால் எளிதாக முடியும் ஒன்றை சாகச விரும்பிகள் செய்வதில்லை. மலை ஏறுகிறார்கள். அலைகளில் சறுக்குகிறார்கள். பள்ளங்களில் பாய்கிறார்கள். விமானங்களில் பறக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் முந்தைய எல்லையில் இருந்து சற்றேனும் முன்னால் சென்று தன்னை எண்ணி மகிழ்கிறார்கள்.

இந்த சாகச உணர்வே மானுடப் பண்பாட்டைக் கட்டமைத்தது என்றால் மிகையாகாது. இறுதிப்பனிக்காலத்தில் மனிதர்கள் உறைந்த கடல்கள்மேல் நடந்தே ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருக்கிறார்கள். ஐஸ்லாந்து வழியாகச் சென்று தென்னமெரிக்கா வரைக்கும் சீனத்து மஞ்சளினம் குடியேறியிருக்கிறது. அவ்வகையில் பார்த்தால் மனித இனத்தின் சாகசங்களின் உச்சங்கள் அனைத்தும் அப்போதே நிகழ்த்தப்பட்டுவிட்டன. அனைத்து எதிர்ச்சூழல்களையும் கடந்து மானுட இனம் இப்புவியை ஆள்வதற்கு இந்த சாகச உணர்வே அடிப்படை என்று தோன்றுகிறது.

பெருவிலங்குகளை வென்று வயப்படுத்தவும், இயற்கைச் சக்திகள் களியாடும் விரிநிலங்களை வென்று ஆளவும் மனிதனை தூண்டியது அதுவே. சாகச உணர்வே போர் என்றும் கொலை வெறி என்றும் திரிபடைகிறது என்பதும் உண்மை மாவீரர்களை உருவாக்கும் அதே உணர்வுதான் கொடுங்கோலர்களையும் கொள்ளையர்களையும் கட்டமைக்கிறது. குற்றங்களை நோக்கி ஈர்க்கப்படும் மனிதர்களின் உளவியலைப் பார்த்தால் சாகசமே அவர்களைக் கவர்கிறது என்று தெரியும். அன்றாட வாழ்க்கையின் சாகசமற்ற இயல்பு நிலையில் சலிப்புற்றே பெரும்பாலும் அவர்கள் அங்கு செல்கிறார்கள்.

comics

ஒரு வங்கிக் கொள்ளையன் அதை விட அதிகப்பணம் கிடைத்தாலும் நிதிமோசடி செய்வதை விரும்ப மாட்டான். சாகசத்தின் பிறிதொரு வடிவமே சூதாட்டம். தன் இறுதி உடைமையையும் சூதாட்டக்களத்தில் வைத்துவிட்டு அந்த சதுரங்கக் காயை நோக்கி அமர்ந்திருப்பவனில் தெறிப்பது சாகச உணர்வுதான். பல நாடுகளில் ஆறுக்கு ஐந்து குண்டுகள் இடப்பட்ட துப்பாக்கியை மும்முறை சுழற்றிவிட்டு தலையில் வைத்து இழுத்து அதை ஒரு சூதாட்டமாக ஆடும் வழக்கம் உள்ளது. கௌபாய்க் கதைகளில் கௌபாய்கள் சுட்டுக்கொள்ளாதபோது சூதாடுவதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். ஐரோப்பிய மனதில் இரண்டையும் பிரிக்கமுடியாது. ஜேம்ஸ்பாண்ட் ஒரு நவீன கௌபாய். அவரும் மாபெரும் சூதாடிதான்.

பல்வேறு விடுதலைப்போராட்டங்கள் மக்கள் புரட்சிகள் இளைஞர்களின் சாகச உணர்வினால் மட்டுமே எழுந்தவை. நாம் போற்றும் பல புரட்சியாளர்களை சிந்தனையின் கிளர்ச்சிக்கு நிகராகவே சாகசத்தின் கிளர்ச்சியும் செயலுக்கு உந்தியிருக்கிறது. கால்நடையாக இந்தியாவைச் சுற்றிவந்த சங்கரரோ விவேகானந்தரோ காந்தியோ சாகசத்தையே முதன்மை நாட்டமாகக் கொண்டவர்கள்தான்.

அன்றாட வாழ்க்கையில் நாம் அறியும் நமது எல்லைகள் அளிக்கும் சோர்வைக் கடக்க உதவுகிறது சாகசம். அதில் நம்மை நாமே கண்டுபிடிக்கிறோம். நமது உச்சநிலைகளில் வாழ்கிறோம். மனிதகுலம் உருவாக்கிய மாபெரும் காவியங்கள் பெரும்பாலும் சாகசங்களைப் பேசுபவை. ராமனோ கிருஷ்ணனோ சாகசங்களினூடாக தெய்வமானவர்கள்தான். அர்ஜுனனும் பீமனும் அனுமனும் சாகசங்களினூடாக நம் பண்பாட்டில் நிலைநிறுத்தப்படுகிறார்கள். ஹெர்குலிசும் யுலிசஸும் ஐரோப்பாவை ஆளும் வடிவங்களானது சாகசங்களினூடாகவே.

சாகசங்கள் கதைப்பாடல்களாகின்றன. மாவீரர்களை பாணரும் சூதரும் குலப்பாடகரும் பாடி நிலைநிறுத்துகிறார்கள். அந்த சாகசங்களுக்கு தத்துவார்த்தமான அர்த்தங்கள் அளிக்கப்படும்போது பெருங்காவியங்கள் உருவாகின்றன. சீவகனின் சாகசங்கள் ஆன்மப் பயணங்களாகி சீவகசிந்தாமணியெனும் காவியமாயின. யுலிசஸின் பயணம் தன்னைக் கண்டுபிடிப்பதற்கான அலைவு. அதையே தாந்தேயும் விர்ஜிலும் தங்கள் காவியங்களில் குறியீடுகளாக்கி மேலும் விரிவு படுத்தினார்கள்.

உலகெங்கும் அகவயப் பயணங்கள் மாவீரனின் சாகசப்பயணங்களுடன் இணைத்து புனையப்பட்டு காவியங்களாக்கப்பட்டுள்ளன. தன்னுள் சென்று தன்னைக் கண்டடைந்த ஞானி மகாவீரர் என்று சமணத்தில் அழைக்கபடுவது அதனால்தான். வீரனின் பயணம் உள்ளும் புறமும் எல்லைகளைக் கடப்பதற்காகவே. கையில் அம்புடன் சுனையில் மிதக்கும் மீனை நோக்கி குறிவைக்கும் அர்ஜுனன் அவனுள் மிக ஆழத்தில் எங்கோ இருக்கும் ஒரு இலக்கை நோக்கி அம்பை பொருத்தியிருக்கிறான்.

கீழைநாட்டுச் சூழலில் நாட்டுப்புறக் கதைகளாகவும் தொன்மங்களாகவும் இதிகாசங்களாகவும் புராணங்களாகவும் சாகசக் கதைகள் நிரம்பி வழிகின்றன. மாயாண்டி சாமியும் சுடலைமாடனும் மாபெரும் சாகச நாயகர்கள். களம் நின்று பட்ட வீரர்களின் கதைகளால் நிரம்பியிருக்கின்றன பழங்குடி வாழ்க்கைகள். ஆனால் மேலும் மேலும் நவீன மயமான ஐரோப்பா அதன் சாகசத் தொன்மங்களின் பெரும்பகுதியை முன்னரே இழந்துவிட்டிருந்தது. பேகன் மதத்தை முற்றாக அழித்து அங்கே தன்னை நிறுவிய கிறிஸ்தவம் பல்லாயிரம் ஆண்டுகளாக அது திரட்டி வைத்திருந்த வீரசாகசக்கதைகளின் பெரும்பகுதியை இழந்துவிட்டது.

ஆனால் சாகசக்கதைகள் வாழும். கிறித்தவத்தில் எஞ்சியது மதம் பரப்புவதற்கான பயணங்கள் மட்டுமே. தன் 35 ஆவது வயதில் சார்போன் பல்கலைக்கழகத்தில் தத்துவக்ககல்வியை முடித்து கிளம்பி பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் தமிழகத்திற்கு வந்து அறியாமக்களிடம் மதப்பணி ஆற்றிய தூய சவேரியாரை இயக்கியது கிறித்தவத்தின் ஆன்மிகச் செய்தி மட்டுமல்ல, இளைமையின் சாகசத்தன்மையும் கூடத்தான்.

பின்னர் ஐயோப்பிய மறுமலர்ச்சி எழுந்த போது கிரேக்க சாகசக்கதைகள் மீண்டு வந்தன. ஆங்காங்கே அழியாது எஞ்சிய பேகன் மதத்தின் வீர நாயகர்கள் மறுஆக்கம் செய்யப்பட்டனர். வாக்னரின் இசைநாடகங்களில் பெருகியெழும் பாகன் தொன்மங்களின் சாகசத்தன்மை புத்தெழுச்சி கொண்ட ஐரோப்பா தன் அழிந்த மரபை கனவிலிருந்து மீட்டு எடுக்க முயன்றதைக் காட்டுகிறது

ஆயினும் வாசிப்பு பெருகிய அந்த மறுமலர்ச்சிக் காலகட்டத்திற்கு அந்தக் கதைகள் போதவில்லை. ஆகவேதான் ஐரோப்பா புதிய சாகசக்கதைகளை கற்பனையால் உருவாக்க ஆரம்பித்தது. புதிய தொன்மங்கள், புதிய வீர கதைகள், புதிய காவியங்கள் உருவாகி வந்தன. அந்த சாகச மோகத்தை நக்கலடிக்கும் டான்குவிசாட் போன்ற நாவலும் எழுந்தது.

ஐரோப்பாவின் சாகச களங்களில் முதன்மையானது கடல் பயணம்தான். நவீன ஐரோப்பா கடற்பயணங்களில் ஊடாக உருவானதென்பதில் ஐயமில்லை. காற்றை நம்பிக் கலமேறி அறியாத நிலங்களுக்குச் சென்று புதையல் கொண்டு வரும் கனவு முந்நூறு ஆண்டுகாலம் ஐரோப்பிய உள்ளங்களை ஆட்டிப்படைத்திருக்கிறது. எத்தனை கடல்சாகசக் கதைகள். கடற்கொள்ளையர்கள், தீவுகள், அரக்கர்கள். என் இளமையில் சார்லஸ் கிங்ஸ்லியின் வெஸ்ட்வேர்ட் ஹோ என்னை பித்துப்பிடிக்கச் செய்திருக்கிறது

2

பீகிள் என்ற கப்பலில் ஏறி உலகத்தைச் சுற்றி வந்த டார்வினின் சாகச உணர்வுதான் பரிணாமக் கொள்கையாக மாறியது. கொலம்பஸொ மாகெல்லனோ புதிய நிலங்களைக் கண்டுபிடித்தது சாகத்தேடலால்தான். தன் 22 வயதில் திருவிதாங்கூரில் வந்து இறங்கிய பெனெடிக்ட் டி லென்னாயை எண்ணி நான் வியக்காத நாளில்லை.

எப்போதுமே புதையல் தேட்டம் ஐரோப்பிய மனங்களைக் கொள்ளை கொண்டுள்ளது. அறியாத்தொலைநிலங்களில் பெரும் செல்வம் புதைந்துள்ளது அதை வென்று வருவது குறித்த கனவு அவர்களிடம் எழுந்தது. பெருஞ்செல்வம் என்பது அதை வெல்லும் திராணி உடையவனுக்கு உரிமைப்பட்டது என்னும் சிந்தனை அதற்குப் பின்னால் இருந்தது. அதுவே இந்தியாவை ஆஸ்திரேலியாவையோ ஆப்பிரிகாவையோ வெல்வதற்கான மனநிலை அமைத்தது

தங்க வேட்டை ஐரோப்பாவின் சாகசக்கதைகளின் ஒரு முக்கியமான கரு. புதிய நிலங்களைத் தேடிச் செல்லுதல் என்னும் கனவின் ஓரு பகுதி அது. அவ்விரு சாகசக் கருக்களும் சேர்ந்து மேலும் உருவாகி வந்ததே வன்மேற்கு. வென்று அடையவேண்டிய புதிய நிலம். அங்கே புதையுண்டிருக்கும் தங்கம். அந்நிலத்தை உரிமை கொண்டு நின்று எதிர்க்கும் பழங்குடிகள் தோற்கடிக்கப்படவேண்டிய இயற்கைச் சக்திகள் மட்டுமே. அங்கே எரியும் கடும் வெயிலைப்போல, இரக்கமற்ற பாலைநிலத்தைப்போல, உருண்டு சரியும் நிலையற்ற மலைகளைப்போல, கொள்ளைநோய்களைப்போல. அதற்கப்பால் அவர்களை மனிதர்கள் என்றோ ஒரு மானுட அறத்தின்படி அம்மண்ணுக்கு உரிமை அவர்களுக்கே என்றோ தொடக்க கால வெள்ளைமனம் உணர்ந்ததில்லை.

அப்பார்வையின் அடிப்படையில் சமைக்கப்பட்டன ஆரம்ப கால கௌபாய் கதைகள். திரும்பத் திரும்ப அக்கதைகளில் அந்நிலத்தின் இரக்கமற்ற விரிவே சித்தரிக்கப்படுகிறது. பாலைவனத்தைக் கடக்கும் சாகசம், தனித்து அலைவதன் அறைகூவல், எதிராபாராத இறப்பு ஆகியவையே கௌபாய் கதைகளின் ஆதார நிகழ்வுகள். அந்நிலம் மக்களை அவ்வாறே ஆக்கிவிடுகிறது. அவர்களும் ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் இயற்கைச்சக்திகளாக ஆகிவிடுகிறார்கள்.

இன்று பார்க்கையில் நவீன அமெரிக்காவை ஆக்கிய அடிப்படை மனநிலைகள் பலவும் கூர்மையாக வெளிப்படும் ஒரு களமாக கௌபாய்உலகைப் பார்க்க முடியும். தணிக்கமுடியாத உலகியல் வேட்கை, தனிமனிதனின் உளஉறுதியும் தாக்குப்பிடிக்கும் தன்மையும், தன்னை மேலும் மேலும் கூர்தீட்டிக்கொண்டு வெல்ல முடியாத ஆயுதமாக மாற்றிக் கொள்ளுதல், வேட்டைக்காரனின் நீடித்த பொறுமை ஆகியவை கௌபாயின் அடிப்படை இயல்புகள்.

அமெரிக்கா விவசாயியால் அல்ல வேட்டைக்காரனால் உருவாக்கப்பட்ட நாடு என அதன் அரசியலும் வணிகமும் சொல்கிறதோ என ஒரு எண்ணம் எனக்குண்டு. அமெரிக்காவின் மனநிலைகளை மிகச்சரியாக வெளிப்படுத்தியவர்கள் என நான் எண்ணும் ஜாக் லண்டன், ஹெமிங்வே, ஃபாக்னர் போன்ற படைப்பாளிகள் அடிப்படையில் கௌபாய்மனநிலை கொண்டவர்கள் என எண்ணிக்கொள்வேன்

கௌபாய்களில் திறன்வாய்ந்தவர்கள் அனைவருமே தன்னை ஒரு சிறந்த படைக்கலமாக மாற்றிக் கொண்டவர்கள்தான். துப்பாக்கி ஒரு ஆயுதம். ஆனால் அத்துப்பாக்கியைக் கையாண்டு அதுவே ஆகி மாறியவர்கள் டெக்ஸ் வில்லர், டியுராங்கோ போன்றவர்கள். துப்பாக்கி ஒருவிதை, அது முளைத்து மரமானது போல் இருக்கிறார்கள் அவர்கள். தன் தனித்திறனால் தொடர்ந்து வென்று கொண்டே செல்கிறார்கள். அதே சமயம் ஒவ்வொரு தருணமும் சாவின் எல்லை வரைக்கும் சென்று தற்செயலாக மீள்கிறார்கள்.

அவர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் கடவுளை நம்புவதில்லை என்பது மிக முக்கியமானது. உச்சகட்டங்களில் கூட அவர்கள் பிரார்த்தனை செய்வதில்லை. ஒவ்வொரு கணமும் தற்செயலை நம்பியிருக்கும்போது கூட விதியை நம்புவதில்லை. முழுக்க முழுக்க தங்கள் கையிலிருக்கும் அந்த ஆயுதத்தைத் தான் நம்புகிறார்கள். அதுவே அவர்களுடைய கடவுள். அவர்களை வாழ வைப்பதும் கொல்வதும் அதுதான் வெறிபிடித்த பக்தர்களைப்போல் துப்பாக்கியை ஆராதிக்கிறார்கள். அவர்களின் ஆலயத்தின் மையச்சிலையாக அதுவே அமர்ந்திருக்கிறது.

ஆயிரமாண்டுக்காலம் கடவுள் என்னும் சொல்லால் ஆளப்பட்டது ஐரோப்பா. ஐரோப்பிய மறுமலர்ச்சி என்பது அந்தக் ஒற்றைக்கடவுளின் மேலாதிக்கம் என்னும் கருத்திலிருந்து அச்சமூகம் அடைந்த விடுதலைதான். வாக்னரின் இசைநாடகங்கள் அந்த திமிறலின் துயரையும் குருதிப்பெருக்கையுமே சித்தரிக்கின்றன. இயற்கைவழிபாடு போன்ற மாற்று ஆன்மிகங்கள் முதல் முழுமையான நாத்திகவாதம் வரை பலவகையான ஒற்றைத்தெய்வ மறுப்புகள் ஐரோப்பாவில் எழுந்து உலகமெங்கும் பரவின

கடவுளின் பிடியிலிருந்து விடுதலை அடைந்த ஐரோப்பிய உள்ளத்தின் கொண்டாட்டமே கௌபாய் கதைகள் எனத் தோன்றுகிறது. கடவுளற்ற உலகின் களியாட்டம். சூது, காமம், கொள்ளை, கொலை, அவையனைத்திற்கும் எதிரான வீரம். ஐரோப்பிய உள்ளத்திலிருந்து இந்தக் கடவுளற்ற நிலம் மறைவதே இல்லை. வெவ்வேறுவகையில் இந்நிலம் மறுபிறப்பு எடுத்துக்கொண்டே இருக்கிறது. அணுப்பேரழிவுக்கு பின்னர் உருவாகும் உலகமாக, வேற்றுக்கிரகங்களின் சமூகங்களாக கௌபாய்களின் நிலமே அவர்களின் புனைவுகளில் தோன்றுகிறது. வாட்டர்வேர்ல்டும் சரி, அவதாரும்சரி சற்றே உருமாறிய கௌபாய் கதைகள்தானே?

கௌபாய்களில் கெட்டவர்கள் இரக்கமற்றவர்கள். அறமற்றவர்கள். எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். அவர்களை எதிர்ப்பவர்களும் அதே எல்லைக்கு எளிதில் செல்கிறார்கள். கௌபாய் கதைகளில் முன்னர் குற்றவாளியாக இருந்தவனே ஷெரீஃபாகவும் ரேஞ்சராகவும் ஆவதைப்பார்க்கலாம். அவர்களுக்கிடையே எந்த வித்தியாசமும் இல்லை. குற்றவாளி செல்வத்தாலும் போகத்தாலும் துரத்தப்படுகிறான். ரேஞ்சராகும்போது தான்  ஒரு ரேஞ்சர் எனும் ஆணவத்தால் இயக்கப்படுகிறான். வேட்டைக்காரனும் வேட்டை மிருகமும் ஒரே ஆளுமையின் இருபக்கங்கள். ஒரே நாடகத்தில் மாறி மாறி வேடமிடும் ஒரே நடிகர்கள்.

கௌபாய் கதைகளின் மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எவரும் எவரிடமும் இரக்கத்துக்காக மன்றாடுவதில்லை என்பது. ஏனென்றால் இரக்கத்திற்கு அங்கே செல்மதிப்பு இல்லை. கொல்வது எளிதாக இருப்பது போலவே கொல்லப்படுவதும் இயல்பாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த வேட்டைச் சூழலில் சட்டத்தை நம்புபவர்கள், அடிப்படை அறம் மீது பற்றுகொண்டவர்கள் அனைவரும் பலமற்றவர்களாகவும் கோமாளிகளாகவும் குழந்தைத்தனமானவர்களாகவும் தெரிகிறார்கள்.

images

கௌபாய்களின் நிலம் முழுக்க முழுக்க ஆண்களின் உலகம் பெண்கள் பெரும்பாலும் அங்கு வேசிகள்தான். ஆண்களின் குரூரத்தை தங்கள் காமத்தைக் கொண்டு எதிர்கொள்ளத் தெரிந்தவர்கள். தங்கள் உடலைக் கொண்டு அவர்களை ஏமாற்றிப் பணம் பறிப்பவர்கள். வன்மேற்கில் மதம் பெரும்பாலும் ஒரு கேலிக்குரிய விஷயமாகவே இருக்கிறது. கட்டற்ற கௌபாய்களையோ செவ்விந்தியர்களையோ மதமாற்ற வரும் பாதிரியார்கள் ஒன்று இறுக்கமான மத நம்பிக்கையாளர்களான குரூரமான மனிதர்கள். அல்லது ளிதில் ஏமாற்றப்படும் கோமாளிகள். கௌபாய்களால் குருவிகளைப்போலச் சுட்டுத்தள்ளப்படுகிறார்கள்

வன்மேற்கின் கதைகளில் மூன்றுவகைத் தீயவர்கள் வருகிறார்கள். முதல் வகைத் தீயவர்கள் பணத்திற்காக, குடிக்காக, காமத்திற்காக குற்றங்களை இழைக்கிறார்கள். கோச் வண்டிகளைத் தாக்குகிறார்கள். வங்கிகளைக் கொள்ளையிடுகிறார்கள். வீடுகளுக்குள் புகுந்து திருடுகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் உதிரிக் கொள்ளையர்கள். தங்கள் தொழிலுக்கேற்ப தங்களை எளிய வேட்டை விலங்குகளாக மாற்றிக் கொண்டவர்கள். அவர்களின் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் முழுக்க இந்தக் குற்றங்களில் தான் இருக்கிறது. ஒரு கொலைக்குப்பின் கூவி நகைத்தபடி தன் குதிரையில் செல்லும் கௌபாய் தன் வாழ்க்கையின் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறான். திரும்பத் திரும்ப ரேஞ்சர்களாலும் ஷெரீஃபுகளாலும் உதவாக்கரைகள் பொறுக்கிகள் என்று இவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். எந்த மறு எண்ணமும் இல்லாமல் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள்.

இரண்டாம் வகை எதிரிகள் செவ்விந்தியர்கள். அவர்கள் தங்கள் நிலங்களைக் காக்கப்போராடுபவர்களாகவே பெரும்பாலும் பிற்காலத்திய கௌபாய் கதைகளில் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் அதேசமயம் தங்கள் பழங்குடித் தன்மையினாலேயே இரக்கமற்றவர்களாக இருக்கிறார்கள் அவர்கள். கொல்லப்பட்டவர்களின் மண்டைத்தோலைக் கிழித்துச் செல்கிறார்கள் அபாச்சேக்கள். உடல்களைச் சிதைக்கிறார்கள். அவர்களின் நோக்கில் தங்கள் மண்ணுக்குள் நுழையும் வெறுக்கத்தகுந்த, நாற்றமடிக்கும் உயிர்களாகவே வெள்ளையர்கள் தென்படுகிறார்கள்.

மூன்றாம் வகைக் குற்றவாளிகள் மெக்சிகோவிலும் கொலம்பியாவிலும் வாழும் தங்களின் கலப்பின மக்களுக்கு ஒர் அரசை அமைப்பதற்காகவோ அல்லது ஒரு கொடுங்கோலனிடம் இருந்து விடுதலை பெறுவதற்காகவோ போராடுபவர்கள். அத்தகைய இலட்சியவாதிகள் இக்கதைகளில் அடிக்கடி வருகிறார்கள். அவர்களும் கொள்ளையடிக்கிறார்கள்.ரேஞ்சர்களால் கௌபாய்களாக கருதப்பட்டு வேட்டையாடப்படுகிறார்கள்

ஆனால் அனைவரையும் விட கொடுமையான, முதன்மையான குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படுபவர்கள் மூன்றுதரப்பினர். பெரும்பாலும் அவர்கள் அதிகாரம் கொண்டவர்கள், செல்வந்தர்கள். அனைத்துப்பிரச்சினைகளுக்கும் அடியில் அவர்களே இருப்பார்கள். அந்த அராஜகச் சூழலில் தங்களுக்கென்று தனிஅரசுகளை உருவாக்க முயலும் ஆதிக்கவாதிகள் ஒருசாரார். கொலம்பியாவிலோ மெக்சிகோவிலோ சிற்றரசுகளை உருவாக்க விழையும் ராணுத்வ தளபதிகள் அல்லது ஒரு கிராமத்தை தன் கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் பண்ணையார்கள் அல்லது பெரும் செல்வத்தை திரட்டிக் கொண்டு செனட்டர்கள் ஆகி அரசியலில் மேலெழத் துடிப்பவர்கள்.

இன்னொரு சாரார் சுரங்க உரிமையாளர்கள், வங்கியாளர்கள் போன்றவர்கள். மூன்றாம்சாரார், ஆயுதவணிகர்கள், கடத்தல்காரர்கள். கௌபாய் கதைகளில் முற்றிலும் தீமை நிறைந்தவர்களாக முழுமையாக ஒழிக்கத் தக்கவர்களாக எப்போதும் இவ்விரு சாராருமே காட்டப்படுகிறார்கள். மற்ற அனைவருக்குமே அவர்களுக்குரிய நியாயங்கள் உண்டு, நியாயமே அற்றவர்கள் இந்தச் சுயநலவாதிகள்தான்

ஆச்சரியம் என்னவென்றால் உண்மையில் இவர்கள் அனைவருமே அந்த அராஜகவெளியில் ஏதேனும் நிலையான அமைப்பை உருவாக்க முனைபவர்கள். ஒரு வட்டத்திற்குள் தங்கள் அதிகாரத்தை உருவாக்க நினைத்தாலும் அதற்குள் ஒரு ஒழுங்கையும் அரசாட்சியையும் கட்டி எழுப்புகிறார்கள். வன்மேற்கில்ன் அராஜகமே இயல்பான மதமென்பதனால் நேர் எதிர்த்தரப்பினராக இவர்கள் காட்டப்படுகிறார்கள். கௌபாயின் கதாநாயகர்களால் இறுதியாக சுட்டுத்தள்ளப்படுபவர்கள் இந்த ஆட்சியாளர்களும் முதலாளிகளும் அரசியல்வாதிகளும்தான்.

ஆனால் துயரம் நிறைந்த வரலாறென்பது இறுதியாக இவர்களே வென்றார்கள் என்பது தான். கௌபாய் கதைகளிலேயே அது திரும்ப திரும்ப வருகிறது. அங்கே மிக விரைவாக அழிந்து கொண்டிருக்கும் இனம் கௌபாய்களும் செவ்விந்தியர்களும்தான். செவ்விந்தியர் எப்படி வெள்ளையர்களுக்கு எதிராக போராடி அழிந்து கொண்டிருக்கிறார்களோ அதே போல உருவாகி வரும் முதலாளித்துவத்திற்கு எதிராக போராடி அழிந்து கொண்டிருக்கிறார்கள் கௌபாய்கள். மிக விரைவிலேயே அமெரிக்க முதலாளித்துவம் வென்றது. சுரங்க முதலாளிகளும் பண்ணையார்களும் இணைந்து உருவான அமெரிக்கக் குடியரசு அமைப்பு தன் ராணுவத்தால், தகவல் தொடர்பால், போக்குவரத்தால் மொத்த நிலத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்தது.

பெரும்பாலான கௌபாய் கதைகள் இந்த வரலாற்று பரிணாமத்தை எப்படியோ சுட்டித்தான் முடிகின்றன என்பது மிக ஆச்சரியகரமான ஒன்று. எளிமையான சாகசக்கதைகள் இவை. ஆனால் வரலாற்றுச் சித்திரம் ஒன்றை ஒட்டுமொத்தமாக நமக்கு அளித்துவிடுகின்றன. ஏதோ ஒருவகையில் இன்றைய அமெரிக்காவை புரிந்து கொள்வதற்கு உதவுகின்றன.

இன்றைய அமெரிக்காவின் முதலாளித்துவத்திற்குள் அந்த கௌபாய் மனநிலைகள் உள்ளே ஊடுருவி இருக்கின்றன என்று சொல்லலாம். கௌபாய் உலகம் என்பது தலைக்கு மேல் ஓர் அரசோ, அறமோ, கடவுளோ இல்லாத மோதல்வெளி. வெறும் ஆற்றல் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு வாழ்க்கைப்பரப்பு. மூளைத்திறன், பயிற்சி, உடலாற்றல் ஆகிய மூன்றும் மட்டுமே அங்கே செல்லுபடியாகும் விசைகள். நட்பு, அன்பு, நம்பிக்கை போன்றவற்றுக்கு இடமே இல்லை. அது வேட்டைக்களம். நீ இரையா ஊனுண்ணியா என்பது மட்டுமே வினா

இன்று அமெரிக்கபாணித் தொழில்துறையில் ஒருவகையில் அவ்வகை வாழ்க்கைதான் இருக்கிறதென்று தோன்றுகிறது. சட்டதிட்டங்களாகவோ நெறிகளாகவோ நீதிமன்றங்களும் அரசும் அவர்களுக்கு மேல் இருக்கலாம். ஆனால் அவை நெடுந்தொலைவில் உள்ளன. தொழில் – வணிகத்துறையில் இருப்பது ஆற்றல் மட்டுமே வெல்லும் என்ற ஈவு இரக்கமற்ற நெறி. அங்கு பண்டைய கௌபாய் உலகின் உளநிலைகளே செயல்படுகின்றன.

கௌபாய் உலகின் அடிப்படை விதிகள் நான்கு.

 

அ. தனித்திறனை முடிந்தவரை வளர்த்து அதன் உச்சத்தை அடைவது.

ஆ. தற்காலிகமான நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு குழுவாக செயல்படுவது. அதே சமயம் எப்போதும் எவரையும் முழுமையாக நம்பாமல் இருப்பது.

இ. வெற்றி ஒன்றே குறி. அதற்காக எந்த எல்லைக்கும் செல்வது. அதன் பொருட்டு நெறிகளையோ முறைமைகளையோ மிக இயல்பாக மீறிச்செல்வது.

ஈ. உச்சகட்டங்களில் முழு உயிராற்றலையும் கொண்டு தாக்குப் பிடிப்பது. பாலைவனத்தில் கைவிடப்படும்போதோ, பனிவெளியில் உருட்டி விடப்படும்போதோ, துப்பாக்கிமுன் நிற்கும்போதோ, தூக்குக்கயிற்றை கழுத்தில் அணிந்திருக்கும்போதோ ஒரு கணம் கூட விட்டுக் கொடுக்காமல் வெல்லவும் வாழவும் முயல்வது.

 

கௌபாய் கதைகள் வழியாக கட்டமைக்கப்படும் அமெரிக்காதான் உண்மையான அமெரிக்காவோ என்ற எண்ணம் இக்கதைகளை வாசிக்கையில் உருவாகிறது. அமெரிக்கக் குடிமகன் தன் இளமைப்பருவத்தை இக்கதைகளினூடாகவே கடக்கிறான். அவனுடைய அடிப்படைக் குணாதிசயங்கள் பலவும் இக்கதைகளினூடாகவே வார்த்தெடுக்கப்படுகின்றன. அதை ஒருவகை Quick Gun culture என்றே சொல்லிவிடலாம்போலும்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அழகிய உலகு

$
0
0

 

எழுத்தாளர் அவர்களுக்கு

http://www.jeyamohan.in/95854 – இன்னும் அழகிய உலகில்…
இந்த பதிவுக்கு பின் இதை அனுப்ப தோன்றியது.
நன்றி
வெ. ராகவ்
unnamed

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–32

$
0
0

32. விண்பறந்து வீழ்தல்

இந்துமதி கருவுற்ற நாள் முதலே அவள் இறப்பாள் என்பது ஆயுஸின் உள்ளத்தின் ஆழத்தில் தெரிந்தது. அவள் அஞ்சியும் பதைத்தும் தன்னுள் நிகழ்வதை சொல்ல முயல்வதையெல்லாம் உவகையுடனும் எதிர்பார்ப்புடனும் பேசி அதை அவன் கடந்து சென்றான். சோர்ந்து வெளுத்து உலர்ந்து உடல் கிழிந்து அவள் இறந்தபோது அவ்வண்ணம் நிகழவே இல்லையென்பதுபோல் பிறிதொரு எல்லையில் தன்னை விலக்கிக்கொண்டான். தெற்குக்காட்டில் எரியுண்டு அவள் மறைந்தபோது அனல் வைத்து வணங்கி மீண்டுவரும் வழியில் ஒவ்வொரு காலடியிலும் அவளை தன் உள்ளத்தின் ஆழத்தில் அழுத்திச் செலுத்தி மறைத்துவிட்டு பிறிதொருவனாக அரண்மனைக்குள் நுழைந்தான்.

மூன்றுநாள் ஒருபொழுதும் தனிமையும் நோற்றான். பதினாறாவது நாள் உயிர்மீட்பு விருந்தும் நாற்பத்தோராவது நாள் விண்ணேற்றச் சடங்கும் முடிந்தபிறகு அவன் அவளை எண்ணவேயில்லை. அதற்குள் அக்குழந்தை அவனை முழுமையாக ஆட்கொண்டது. அதன் ஒவ்வொரு கணமும் அவனுள்ளம் நிறைந்தது. குழந்தை வளர்வதன் முறைமைகள் குறித்து மருத்துவர்கள் சொன்ன அனைத்தையும் கடந்து எழுந்து கொண்டிருந்தது அது. நூறு ஓநாய்களின் பசி, நூறு குதிரைக்குட்டிகளின் துடிப்பு, நூறு யானைக்குட்டிகளின் ஆற்றல் என்று அதைப்பற்றி அவைப்புலவன் பாடினான்.

அரசுப் பணிகள் அனைத்தையும் ஆயுஸ் துறந்தான். அமைச்சர்களிடம் அவையை ஒப்படைத்துவிட்டு பொழுதும் இரவும் கனவும் மைந்தனுடனேயே இருந்தான். மடியில் மைந்தனை படுக்க வைத்துவிட்டு பொற்கிண்டியில் பாலை பரிந்து அணைத்து அவன் ஊட்டுகையில் அக்கிண்டி முலையென்றே ஆகும் விந்தையை சேடியர் கண்டு விழிபரிமாறிக் கொண்டனர். இரவில் மைந்தனை தன் அருகிலேயே படுக்கவைத்து துயில் கொண்டான். ஆழ்துயிலிலும் இடக்கை துயிலாது மைந்தனை தொட்டுக் கொண்டிருந்தது. சிற்றொலியிலேயே எழுந்து மைந்தன் முகம் தொட்டு கனிந்த கனவுக்குரலில் “என்ன என் செல்வமே?” என்று அவன் கேட்டான். தாயுமானவன் என்று அவனை அவன் குடி வாழ்த்தியது.

பிறந்து நினைவறிந்த நாள்முதல் ஒருபோதும் அறிந்திராத பேருவகையை மைந்தனூடாக ஆயுஸ் அறிந்தான். “பிறிதொன்றிலாது ஒன்றில் ஆழ்ந்திருத்தலின் பெயர்தான் உவகை என்பது. அதை இப்போது அறிகிறேன்” என்று அவன் அமைச்சனிடம் சொன்னான்.  “விண்ணில் தெய்வங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தோற்றத்தில் எழுந்தருளுகின்றன, அரசே” என்றான் சுதர்மன்.  “பொன்னென்றும், பொருள்மிக்க நூலென்றும், உறவென்றும், உயிர்மீட்பென்றும் தெய்வங்கள் இறங்கி வரலாம். பிள்ளையென்று வருகையில் மட்டுமே அவை முழுமை கொள்கின்றன” என்று மலர்ந்த சிரிப்புடன் அரசன் சொன்னான்.

மைந்தனுக்கு விளையாடுவதற்காக மணிமுடியை சகடமென உருட்டிவிட்டான். அரசக் கணையாழியை நூலில் கட்டி ஆட்டிக் காட்டி நகைக்க வைத்தான். குரங்குபோல மார்பில் பற்றியிருக்கும் குழவியுடன் நகருலாவுக்குச் சென்றான்.  “இத்தகைய பெரும்பற்று பெருந்துயரையே கொண்டு வரும். அரசே, நாம் பற்றுவதெதுவும் நம்மையும் பற்றிக்கொள்வனவே. மீட்சியை விழைந்தால் அதை உடையுங்கள் என்று அவன் குலமூத்தார் சொன்னார். “அமைச்சரே, அரசரிடம் சொல்சூழும் அணுக்கம் எவரையும்விட தங்களுக்கே உள்ளது” என்றார். “சென்று சொல்க, அவர் கால்கள் புதையத் தொடங்கிவிட்டன!” சுதர்மன் “நான் இதை அறியேன். இப்போதுதான் மணம் கொண்டிருக்கிறேன். மைந்தரைப்பெற்ற மகிழ்வை இதுவரை அறிந்திலேன். நான் சொல்லும் எச்சொல்லும் அவர் செவிக்கு பொருள் கொள்ளா. சிறுவர் குழறலென்று நோக்கி சிரித்துக் கடந்துசெல்வார்” என்றான்.

“ஆம், எச்சொல்லும் சென்றடையாத இடம் ஒன்றுள்ளது. அங்கு மட்டுமே மனிதர்கள் பெரும் உவகையில் இருக்கிறார்கள். இங்கு சூழ்ந்துள்ள அனைத்தும் உள்ளூறும் அவ்வுவகையை நீர்த்துப்போகவே செய்கின்றன என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள்” என்றார் முதிர்ந்து விழிபழுத்த குலமூத்தார் ஒருவர். அனைவரும் திகைப்புடன் திரும்பி அவரை நோக்கினர். “அரசன் மேல் வீற்றிருக்கிறது பிள்ளைத்துயர் என்னும் தீச்சொல். அவர் கேட்டுப்பெற்ற தந்தைக்கொடை அது” என்று ஒருவர் சொல்ல பிற அனைவரும் அவரை திரும்பி நோக்கினர்.

“என்ன நிகழப்போகிறது என்று அறியேன். இப்பிள்ளையை அவர் இழக்கப்போவதில்லை என்பது மட்டுமே ஆறுதலளிக்கிறது. ஏனெனில் இந்திரனை வெல்லும் மைந்தன் இவர் என்று நிமித்திகர்கள் மீண்டும் மீண்டும் உரைக்கிறார்கள். அதுவே நிகழட்டும்” என்றான் சுதர்மன். “அரசரிடம் சொல்வோம், கடிவாளமற்ற புரவி தேரை கவிழ்த்துவிடும்” என ஒருவர் சொல்ல “அது எவ்வகையிலும் கவிழும் தேர் என நாம் அறிவோம். முடிந்தவரை அது ஓடட்டும், செல்லும் இன்பத்தையாவது அவர் அடையட்டுமே!” என்றார் பிறிதொருவர். எவரும் எதுவும் சொல்லவில்லை.

tigerஏழு மாதம் ஆயுஸ் தன் இருத்தலின் கூர்முனையின் ஒளிமட்டுமென இருந்தான். ஒருநாள் மைந்தனை கூடத்தில் விளையாடவிட்டு அப்பால் அமர்ந்து அவன் ஆடலைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். உருண்டு செல்லும் களித்தேரை கையால் தட்டி தவழ்ந்து பின்தொடர்ந்து, செல்லும் வழியிலேயே சிமிழ் ஒன்றை கையில் எடுத்து, அதை வாயில் வைத்து கடித்துச் சுழற்றி அப்படியே நழுவவிட்டு, பாய்ந்து சென்று மரயானை ஒன்றை எடுத்துச் சுழற்றி அப்பால் எறிந்து,  குனிந்து தன் இடை அணிந்த சங்கிலியைப்பற்றி இழுத்து, பிறிதொரு எண்ணம் தோன்ற திரும்பி அவனை நோக்கி சிரித்தான் நகுஷன்.

பித்தன் என மலர்ந்த முகத்துடன் அவனை நோக்கிக் கொண்டிருக்கும் தந்தையின் அக்காட்சியை அன்றி பிறிதொன்றையும் அவன் கண்டதே இல்லை. “ந்தை, ந்தை” என்றபடி கைகளை நிலத்தில் ஓங்கி அறைந்தபடி எச்சில்குழாய் நெஞ்சில் ஒழுக    அவனை நோக்கி வந்தான். மைந்தனை எடுத்து தூக்கிச் சுழற்றி நகைத்து நெஞ்சோடணைத்து இரு கன்னங்களில் முத்தமிட்டான் தந்தை. “உணவூட்ட வேண்டும், அரசே” என்றாள் அப்பால் நின்ற சேடி. “கொண்டு வருக! நான் ஊட்டுகிறேன்” என்றான். பொற்கிண்ணத்தில் பருப்பும் பாலும் நெய்யும் விட்டுப்பிசைந்த அன்னத்தை சேடி கொண்டுவர கைகளால் அள்ளி விரல்களால் மசித்து அதை மைந்தனுக்கு ஊட்டினான். அவ்வுதடுகளில் கைபடுந்தோறும் அவன் விரல்கள் கனிந்து குழைந்து உருகிய நெய்யாலானவை என்றாயின.

இளஞ்சுடர் நெய்யேற்பதுபோல் உண்ணும் மைந்தனை அப்போது பிறர் நோக்கலாகாதென்று நினைத்தான்.  சுவர் நோக்கி திரும்பி அமர்ந்து உணவை ஊட்டி முடித்த பின்னர் உடலெங்கும் உணவு சொட்டியிருந்த மைந்தனுடன் எழுந்து  ”என்னவென்றறியேன். இப்போதெல்லாம் அவன் நன்கு உண்பதேயில்லை. நான்கு வாய் உண்டான். எஞ்சியதை நான் உண்டேன்” என்றான் சேடியிடம். அவனை அறிந்திருந்த முதுசேடி “ஆம், அவர் உண்பது குறைந்துவிட்டது. மருத்துவரிடம் சொல்ல வேண்டும்” என்றபின்  ”கொடுங்கள் அரசே! கழுவித் துடைத்து வருகிறேன்” என்றாள்.

மைந்தனை அளிக்கையில் அவன் கைகால்களை உதைத்து முகம் சுளித்து வீரிட்டழுதான். அவ்வாறு அவன் அழுவதில்லை என்பதனால் “என்ன என்ன?” என அவன் உடலை நோக்கினான் ஆயுஸ். “நகை குத்தியிருக்கும்… நான் நோக்குகிறேன்” என்றாள் முதுசேடி. அவனுக்கு உகந்த முதுமகள் என்பதனால் எப்போதும் சிரித்தபடி உடன்செல்லும் நகுஷன் கைநீட்டி கண்ணீர் வழிய சிறு உதடு குவிந்து விதும்ப அழுதபடியே சென்றான். அவன் உடலின் பொன்னகை ஒளியை தொலைவுவரை நோக்கியபின் உரக்க “நான் உடை மாற்ற வேண்டும். விரைந்து கொண்டு வருக!” என்றபின் ஆயுஸ் அறைக்குச் சென்றான்.

ஏவலனிடம் பிறிதொரு உடை வாங்கி அணிந்து கைமெய் கழுவி வெளிவந்தபோது மைந்தனை சேடி கொண்டு வரவில்லை என்று கண்டான்.  ”எங்கே மைந்தன்?” என்று அங்கு நின்ற காவலனிடம் கேட்டான்.  ”மெய்கழுவ கொண்டு சென்றார்கள்” என்றான் அவன். “அதை நான் அறிவேன் அறிவிலியே, சென்று நெடுநேரமாயிற்று என்ன செய்கிறாள் என்று பார்த்துவா!” என்றான் ஆயுஸ் எரிச்சலுடன். சென்று மீண்ட காவலன் “அரசே, மைந்தனை பிறிதொரு சேடியிடம் கொடுத்திருக்கிறார் முதுசெவிலி. உடல் ஈரத்தை துடைத்து எடுத்து வரச்சென்ற அவள் எங்கோ மைந்தனுடன் விளையாடச் சென்றுவிட்டாள்” என்றான்.

“விளையாடச் சென்றாளா? எவருமறியாமலா? இக்கணமே மைந்தனையும் அச்சேடியையும் இங்கு கொண்டு வருக! என் அறிதலின்றி மைந்தனை எங்கும் கொண்டு செல்லலாகாதென்று எத்தனை முறை ஆணையிட்டிருக்கிறேன்” என்று கூச்சலிட்டான். தன் உடல் பதறிக்கொண்டிருப்பதை உணர்ந்ததுமே எப்போதும் அணையாமல் ஆழத்திலிருந்த அச்சத்தை பேருருவாக கண்டான். அத்தனை பெரும் பித்தெழுவதற்கு அதுவே அடிப்படை என்று உணர்ந்தான். “இக்கணமே என் மைந்தன் இங்கு வரவேண்டும்… செல்க!” என்று அவன் கைவீசி கூவினான்.

அவனுடைய சினத்தை காவலர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்பால் சென்று “விரைந்து குழவியை அரசரிடம் கொண்டுசெல்லுங்கள். உடல்தீப்பற்றியதுபோல அங்கு நின்று கூச்சலிடுகிறார்” என்றான். முதுசேடி “எங்கு சென்றாள் அவள்? என் ஆடையை மிதித்து அவிழச்செய்துவிட்டார். ஆகவேதான் அவளிடம் அளித்தேன். ஆடை திருத்துவதற்குள் கொண்டுசென்றுவிட்டாள்” என்றாள். “கன்னியருக்கு மைந்தரென்றால் பித்து” என்றாள் ஒருத்தி. குழந்தையுடன் சென்றவளை சிரித்தபடியும் எரிச்சல்கொண்டபடியும் தேடியவர்கள் மெல்ல அச்சம்கொண்டனர்.

“எங்கே? என் மைந்தன் எங்கே? இக்கணம் இங்கு வரவில்லை என்றால் தலைகளை வெட்டி உருட்ட ஆணையிடுவேன்” என்று அரசன் கூவினான். ஏதோ ஒருகணத்தில் அனைவரும் அறிந்தனர், பிழை ஒன்று நிகழ்ந்துவிட்டது என்று. முகங்கள் அனைத்தும் மாறின. “மைந்தனை காணவில்லை. அரண்மனையில்தான் எங்கோ இருக்கிறான். தேடிக்கொண்டிருக்கிறோம்” என்றான் காவலர்தலைவன். “அமைச்சரை அழையுங்கள்! அமைச்சரை அழைத்து வாருங்கள்!” என்று கூவியபடி இடைநாழியில் ஓடினான்.

அரசனின் பதற்றம் எதனால் என்று தெரியாத அமைச்சர்கள் ஒருவரோடொருவர் விழிதொட்டுக் கொண்டு இதழ் விரியாது புன்னகைத்தனர். இயல்பாக வெளியே சென்று “எங்கே அந்தச் சேடி? அரசர் கேட்கிறார். அவளை ஒளித்துவிட்டு மைந்தனை மட்டும் கொண்டு வரச்சொல்லுங்கள். வாளை உருவி அவள் தலையை கொய்துவிடுவார் போலிருக்கிறது” என்றார் சிற்றமைச்சர்.  ஆனால் சேடியர் முகங்களில் இருந்த அச்சம் அவரை பாதியிலேயே சொல் முறியச்செய்தது.

“அரண்மனையின் அகத்தளங்களில் எங்கும் மைந்தனுடன் அச்சேடியை பார்க்கவில்லை. இவ்விடைநாழி வழியாக சென்றால் மூன்று வாயில்கள் உள்ளன. ஒருவாயில் நெடுங்காலமாக பூட்டியுள்ளது. அதைத் திறக்க தச்சரால் அன்றி முடியாது. பிற இருவாயில்களிலும் சேடியர் நின்றிருந்தனர். எவரும் மைந்தனுடன் சென்ற சேடியை பார்க்கவில்லை” என்றார் பெண்மாளிகையின் காவலரான ஆணிலி. ஐயம் எழ முதுசேடி “இத்திறவாவாசலை திறந்து பாருங்கள்” என்றாள். ஆணிலிகளின் தலைவி வந்து திறந்தபோது அக்கதவு இயல்பாக விரிந்தது. முன்னரே அதை உடைத்து வைத்திருந்தார்கள் என்று தெரிந்தது.

“வஞ்சம்! ஏதோ வஞ்சம் நிகழ்ந்துவிட்டது” என்று முதியசேடி கூவினாள். கதறியபடி நிலத்தில் விழுந்து தலையிலறைந்துகொண்டு அழுதாள். “இல்லை, அன்னையே! பார்ப்போம்… பொறுங்கள்” என்று ஆணிலி சொன்னாள்.  அவ்வாயிலைத் திறந்து மறுபக்கம் சென்றபோது அங்கு செறிந்திருந்த செடிகளுக்கு நடுவே இளவரசனின் அணிகளும் ஆடைகளும் சிதறிக்கிடப்பதை கண்டனர். செவிலியர்தலைவி ஓடி வந்து காவலர்தலைவனிடம் “இளவரசரை யாரோ கவர்ந்து சென்றுவிட்டார்கள்” என சொல்லி அழுதாள். அவன் “முரசுகள் முழங்கட்டும். கோட்டைக்காவல் அனைத்தும் கூர் கொள்ளட்டும். இளவரசருடன் செல்லும் அச்சேடியை உடனடியாக பிடித்தாக வேண்டும்” என்றபடி ஓடினான்.

செய்தி அறிந்ததும் சுதர்மன் “ஆம்” என்னும் சொல்லை தன்னுள் உணர்ந்தான். எதிர்நோக்கியிருந்தது அதுவே. சொல் சொல்லாக தன் உள்ளத்தை கோத்துக்கொண்டு அரண்மனைக்குள் சென்றான். இடைநாழிகளிலும் அறைகளிலும் பதறியபடி ஓடி காண்போரிடமெல்லாம் கூச்சலிட்டு “என் மைந்தன்! என் மைந்தன்!” என்று தவித்துக் கொண்டிருந்த ஆயுஸை கண்டான். இதற்குத்தானா எனும் சொல்லென அவன் உள்ளம் மாறியது. அச்சொல் மீள மீள ஒலிக்க அவன் நீள்மூச்செறிந்தான். வெளிவந்து  ”நகரெங்கும் எவ்வடிவிலும் எக்குழந்தையும் வெளிச்செல்லலாகாது. இந்நகரின் அனைத்துக் குழந்தைகளையும் அரண்மனை முகப்புக்கு கொண்டுவர ஆணையிடுங்கள்” என்றான்.

அருகிலிருந்த ஒற்றனிடம் “அரச மைந்தனாக அவர் வெளிக்கொண்டு செல்லப்பட மாட்டார். உருமாற்றப்பட்டிருப்பார்” என்றான். “எனவே குழவிகளும் குழவிவடிவு கொண்ட எதுவும் குழவியை வைக்கத்தக்க எக்கலமும் நோக்கப்படவேண்டும்” என்றான். “ஆம்” என்று உரைத்த ஒற்றன் விரைந்தான்.   நகரெங்கும் எச்சரிக்கை முரசுகள் முழங்கலாயின.

திகைத்து முரசு மேடைகளுக்கு முன் கூடிய மக்களிடம் இளவரசனை எவரோ கவர்ந்து சென்ற செய்தி சொல்லப்பட்டது. கிளர்ந்தெழுந்த மக்கள் எவரிடம் சினம் கொள்வதென்றறியாது கூச்சலிட்டனர். ஒருவரோடொருவர் பூசல் கொண்டனர். செய்தி அறிந்ததுமே அன்னையர் பாய்ந்து சென்று தங்கள் மைந்தரை அள்ளி நெஞ்சோடணைத்து நடுங்கலாயினர். கோட்டை வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. கோட்டைக்கு வெளியே இருந்த குறுங்காடுகளிலும் கால்வழிகள் அனைத்திலும் ஒற்றர்களும் காவலர்களும் புரவிகளில் ஏறி கூர் நோக்கியபடி அலையத் தொடங்கினர்.

மாபெரும் வலையொன்று குருநகரியிலிருந்து கிளம்பி எட்டுத்திசைக்கும் விரிந்து சென்றது. பரல்மீன் அள்ளும் சிறுவலையென காவல் படையொன்று நகரைச் சூழ்ந்து  குறுகி அணைத்து ஒவ்வொரு இடமாக நோக்கி, ஒவ்வொரு குழந்தையாக தொட்டு அறிந்து அரண்மனையை அணுகி வந்தது. அத்தொன்மையான கட்டிடத்தின் கருவூலங்களையும் கரவறைகளையும் சுரங்கங்களையும் மறைவிடங்களையும் பொந்துகளையும் நீர்நிலைகளையும் ஆராய்ந்தது.

மைந்தன் சென்ற பாதையை வந்து பார்த்த காவலர்தலைவன் அங்கு மண்ணில் பதிந்த காலடியை கூர்ந்து நோக்கினான்.  ”இது அப்பெண்ணின் காலடியா?” என்றான். “ஆம், இங்கு பிறர் வருவதில்லை” என்றாள் ஆணிலியர் தலைவி. நிமித்த கணிகன் வந்து குனிந்து நோக்கி “இது நாகர் குலத்துப்பெண்” என்றான். “எப்படி தெரியும்?” என்றான் காவலர்தலைவன்.  ”மரங்களில் ஏறும் பொருட்டு சிறுவயதிலேயே கால்களை பழக்குபவர் அவர்கள். ஆகவே பாதங்கள் வெளிப்பக்கமாக திரும்பியிருக்கும்” என்றான் நிமித்தகணிகன்.

காவலர்தலைவன் சிலகணங்கள் விழிநிலைத்துவிட்டு மீண்டு “நாகர் குலப்பெண் கவர்ந்து சென்றாள் என்றால் மைந்தனை மீட்பது எளிதல்ல. தனித்து வந்திருக்கமாட்டாள். வெளிச்செல்லும் வழியொன்றை அமைக்காமல் உள்ளே நுழைந்திருக்க மாட்டாள். நாகம் வளைபுக வல்லது. தலையை வாயிலில் வைத்தபின்னர் உடலை வளைத்து உள்ளிழுப்பது. கட்செவிகொண்டது. இங்கிருந்து தன் நகர் வரை மைந்தனை கொண்டுசெல்லும் தொடரமைப்பொன்று முன்னரே உருவாக்கப்பட்டிருக்கும். நம் கால்களுக்குக் கீழே அல்லது கண்களுக்குத் தெரியாமல் அது அமைந்திருக்கும்” என்றான்.

“எவ்வண்ணம் இதை அரசரிடம் சொல்வது?” என்று குலத்தலைவர் ஒருவர் சொன்னார். “சொல்லியாக வேண்டுமென்பது நமது கடமை. அவர் எதிர்பார்த்திருந்ததும் இப்பெருந்துயரை அல்லவா?” என்றார் பிறிதொருவர். “அதை சொல்லியே ஆகவேண்டும்… நம் வாழ்வில் இப்பெருங்கடனையும் அடைந்தோம் என்றே கொள்க!” என்றார் இன்னொருவர். சொல்லவேண்டியதென்ன என அவர்கள் செய்யுள் யாப்பதுபோல் சொல்சேர்த்து சமைத்துக்கொண்டனர்.

ஆனால் அவர்கள் அணுகியதுமே கண்ணீரும் சிரிப்பும் சிந்த ஓடிவந்த  அரசன் “கிடைத்துவிட்டானா? கிடைத்துவிட்டான் அல்லவா? நன்று நன்று. நான் அறிவேன்… கிடைத்துவிடுவான் என நான் முன்னரே அறிந்திருந்தேன். என் மூதாதையரும் தெய்வங்களும் என்னை கைவிடுவதில்லை. நான் அறத்திலமர்ந்தவன் என அவர்கள் அறிவார்கள்” என்று கூவியபடி அவர்களின் கைகளை பற்றிக்கொண்டான். மூத்தகுடித்தலைவர் “ஆம் அரசே, கிடைத்துவிட்டதுபோலத்தான். செய்திகளுக்காக காத்திருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு திரும்பி வந்தார்.

ஏழுமுறை அவர்கள் செய்தியை சொல்லும்பொருட்டு அவனை அணுகினர். அவர்களால் அதை அவனிடம் சொல்லவே முடியவில்லை. அவர்கள் சுதர்மனிடமே சென்று அதை சொன்னார்கள். “அவரே அறிவார். அவர் அறிந்ததில் அவர் மெல்ல சென்று அமரட்டும். நாம் அவரை ஏன் பிடித்து அதன்மேல் தள்ளவேண்டும்?” என்றான் சுதர்மன். அவர்கள் சிலகணங்கள் நோக்கி அமர்ந்தபின் நீள்மூச்சுடன் எழுந்துசென்றார்கள்.

tigerகாற்றில் கரைந்தழிவதுபோல இளமைந்தன் குருநகரியிலிருந்து முற்றிலும் மறைந்து போனான். பதினைந்து நாட்கள் எறும்புகள்போல கொசுக்கள்போல குருநகரியின் படைவீரர்களும் ஒற்றர்களும் அந்நிலத்தை அணுவிடை வெளியின்றி தேடிச் சலித்தனர். ஒவ்வொருவரும் மும்முறை உசாவப்பட்டனர். ஒரு பொந்தோ புழையோ எஞ்சாமல் துழாவப்பட்டது. பின்னர் உறுதியாயிற்று மைந்தன் மீளப்போவதில்லை என.

உண்மையில் தேடத்தொடங்குகையிலேயே ஒவ்வொருவரும் உள்ளூர அதை அறிந்திருந்தார்கள். தங்கள் விழைவால் அதை தள்ளி பின்னால் செலுத்தி இதோ எழுந்துவிடுவான், இங்கு இருப்பான்போலும் என்று உள்ளத்தை பயிற்றுவித்தனர். ஆகவே தேடும் இடங்களில் அவனில்லாதபோது எழுந்த ஏமாற்றம் அவர்களுக்கு துயரளிக்கவில்லை. மேலும் மேலும் என நம்பிக்கையை ஊட்டிக்கொள்ளவே அது பயன்பட்டது. தேடத் தேட அச்செயலே அவர்களை பயிற்றுவித்தது. பின்னர் நம்பிக்கையின் பொருட்டோ எதிர்பார்ப்பின் பொருட்டோ அன்றி அச்செயலை முழுதுறச்செய்வதன் பொருட்டே அதை செய்யலாயினர்.

ஆனால் ஏதோ ஒரு கணத்தில் அந்நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் முற்றாக அணைந்தன. அக்கணமே அச்செயல் வீணென்றாயிற்று அவ்வுணர்வு அந்தத் தேர்ச்சியை பொருளில்லாமலாக்கியது. மேலும் சில நாள் நிகழ்ந்தபோது அது வெறும் சடங்கென்று ஆகியது. அலைநீரில் கட்டி நிறுத்தப்பட்ட மீன்வலையென நகரம் பொருளில்லாமல் நெளிந்துகொண்டிருந்தது.

தேடலை நிறுத்தலாம் என்று சுதர்மன் சொன்னபோது “ஏன், அது நிகழ்ந்து கொண்டிருக்கட்டுமே?” என்றார் குலமூத்தார் ஒருவர். “என்றோ ஒருநாள் நம் மைந்தன் கிடைப்பான் என்றே நான் எண்ணுகிறேன். நிமித்த நூல்படி இந்நகரை அவர் ஆள்வார். ஆகவே அவர் கிடைத்துதான் ஆகவேண்டும்” என்றார். “அதை நானும் நம்புகிறேன்” என்றான் சுதர்மன் “ஆனால் நம்பிக்கை இழந்தபின் இத்தேடல் வெறும் சடங்கென்றே ஆகும். அதில் ஒருபோதும் மைந்தன் சிக்கப்போவதில்லை. மாறாக தேடுதலை முழுமையாக நிறுத்திக் கொண்டுவிட்டபின் நம் உள்ளம் அதை மறக்க ஆழம் எடுத்துக்கொள்ளும். நம் புலன்களை அது ஆளும். மிகச்சிறிய தடயத்தைக்கூட அது கண்டு சிலிர்த்தெழும்.”

“நாம் தேடாமலாகும்போது மைந்தனை கொண்டுசென்றவர்கள் இயல்பு மீளக்கூடும். எவ்வண்ணமோ அவன் இங்கு மீள அது வழிவகுக்கும்” என்றான். “எனக்கு இது புரியவில்லை. ஆயினும் தங்கள் ஆணை” என்றார் குலமூத்தார். தேடல் நிறுத்தப்பட்டது. அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை, ஏனென்றால் தேடுவதை நிறுத்துவது அனைவரிலும் குற்றவுணர்ச்சியை உருவாக்கும் என்றும் அதைவெல்ல பிறர்மேல் பழிசார்த்த முயல்வார்கள் என்றும் அவர்களுக்கு அரசே முதல்பழிநிலை எனத் தோன்றும் என்றும் சுதர்மன் சொன்னான். தேடும் பணியிலிருந்த ஒற்றர்கள் நாளுக்கொருவராக வேறு பணிக்கு அனுப்பப்பட்டனர். மெல்ல எவருமறியாமலேயே தேடல் நின்றது. ஆனால் ஒவ்வொருவரும் எங்கோ தேடல்நிகழ்வதாகவும் தாங்கள் மட்டும் வேறுபணிக்கு சென்றதாகவும் எண்ணிக்கொண்டார்கள்.

அரசன் முதலில் பலநாட்கள் வெறியன்போல எதிர்ப்படும் அனைத்து வீரர்களையும் அறைந்தும் செவிலியர்களை மிதித்தும் அரண்மனையை சுற்றி வந்தான். அரண்மனையிலேயே எங்கோ மைந்தன் இருக்கிறான் என்னும் எண்ணத்தை அவன் தன்னுள் அணையாது வைத்திருந்தான். பலநாட்களுக்குப்பின்னர் ஒருநாள் கனவுகண்டு மைந்தன் நகருக்குள் எங்கோ இருப்பதாகச் சொல்லி இறங்கி ஓடினான். அவனைத்தொடர்ந்து காவலரும் அமைச்சரும் ஓடினர். “‘இங்கிருக்கிறான்… ஆம், நான் அறிவேன்! மூடர்களே, இங்கே!”  என்று அவன் கூவினான். மூடியகதவுகளைச் சுட்டி “இங்கே… இதை உடையுங்கள்!” என்று ஆணையிட்டான். அவன் ஆணைப்படி நூற்றுக்கணக்கான கதவுகள் உடைக்கப்பட்டன. சுவர்கள் இடிக்கப்பட்டன.

நகர் முழுக்க அவன் கூச்சலிட்டபடி அலைந்தான். கண்ணில்பட்ட குழந்தைகளை எல்லாம் மைந்தன் என எண்ணி கைநீட்டியபடி ஓடினான்.  அவனைக் கண்டதுமே அன்னையர் குழவியருடன் ஓடி ஒளிய அவன் வாளை உருவி கூவியபடி அவர்களை துரத்திச்சென்றான். பின்னர் நகரிலிருந்து வெளியேறி காட்டுக்குள் தேடலானான். பலநாட்கள் அவனும் படைவீரர்களும் புறக்கோட்டைக் காடுகளுக்குள் அலைந்தனர். மெல்ல அவன் அடங்கலானான். கொந்தளிப்பு அடங்கி சொல்நின்றது. அதற்கு உண்ணாமல் உறங்காமலிருந்தமையால் அவன் உடல் அடைந்த சோர்வே வழிகோலியது. எலும்புருவாக ஆன அவன் புரவிமீது அமரும் ஆற்றலை இழந்தான். தேரில் அமர்ந்தாலும் சோர்ந்து துயிலலானான்.

பின்னர் அவன் நாளெல்லாம் மஞ்சத்திலேயே கிடந்தான். எண்ணி நெஞ்சுகலுழ்ந்து அழுதான். பின் கனவுகளில் எதையெதையோ கண்டு “தெற்குவாயிலுக்கு அருகே ஒரு சுரங்கப்பாதை உள்ளது… சென்று நோக்குக… அறிவிலிகளே… உடனே செல்க!” என்று ஆணைகளிடத் தொடங்கினான். பின்னர் ஆணைகள் குறைந்து விழிநீர் மட்டும் வழிந்துகொண்டிருக்க வெறித்த முகத்துடன் படுத்திருந்தான். நாட்பட அந்த அழுகையே அவன் முகமென்றாகியது. தன்னை சாளரத்தருகே அமரச்செய்யும்படி கைகாட்டினான். அவனை ஆணிலிச் சேடியர் தூக்கி சாளரத்தட்டில் அமர்த்தினர். அவன் இரவும் பகலும் அங்கேயே அமர்ந்திருந்தான்.

பெருந்துயர் தான் அமர்வதற்கான இடத்தை உருவாக்கும்பொருட்டு பிறிதனைத்தையும் அழித்துவிடுகிறது என்றார் நிமித்திகர். அவன் உள்ளத்தில் பழையநினைவுகளும் அன்றாட நிகழ்வுகளும் நாளைக்கனவுகளும் விலகின. சூழலை புலன்கள் உள்வாங்கவில்லை. முகங்களை அறியவில்லை. ஒழிந்த அவன் உளவெளியில் அத்துயர் அன்றி பிறிதொன்றும் இருக்கவில்லை. “அது தெய்வத்துயர். அதற்கு மானுடர் செய்வதற்கு ஒன்றுமில்லை. நாம் காத்திருப்போம்” என்றார் மருத்துவர்தலைவர்.

இரவும் பகலும் மாறாநோக்குடன் சாளரங்களின் அருகிலேயே அமர்ந்திருந்த அரசனை பேண ஆணிலிக் காவலரும் சேடியரும் அடங்கிய குழு ஒன்று அமைந்தது. மருத்துவர் நாள்தோறும் வந்து அவனை நோக்கினர். நிமித்திகர் ஒவ்வொரு நாள்நகர்வையும் கணித்தனர். “வரவிருப்பது ஒன்றே. எதிர்பாராதபோது அது எளியதோர் காற்று. வழிநோக்கி நின்றிருந்தால் பேருருக்கொண்டு எழும் கொடுந்தெய்வம்” என்றார் நிமித்திகர். “உடலை எண்ணியே நான் வியக்கிறேன். அது எவ்வளவுதான் தாங்கிக்கொள்கிறது!” என்றார் மருத்துவர்.

ஆயுஸின் உடல் மெலிந்து எலும்புக்குவை என்று ஆயிற்று. ஒற்றைக்காவலன் அவனை எளிதாக தூக்கிச் சென்று நீராட்டி ஆடை அணிவித்து அரண்மனையின் சாளரங்கள் அருகே அமரச்செய்ய முடிந்தது. உந்திய கன்னஎலும்புகளும், எலும்புவிளிம்புடன் குழிந்த கண்களும், உள்ளடங்கிச் சுருங்கிய வாயும், மெலிந்து குரல்வளை புடைத்த கழுத்தும், எலும்புச் சட்டமென்றான தோள்களுமாக மூன்றாக மடிக்கப்பட்ட தொன்மையான மரச்சட்டம் போல அவன் அசையாமல் நாள் முழுக்க அமர்ந்திருந்தான். “அவ்வுடலுக்குள் உள்ளமென ஒன்று இயங்குகிறதா? இல்லை என்றால் அப்புலன்கள் எங்கிருந்து ஆணைபெறுகின்றன?” என இளமருத்துவர் ஒருவர் வியந்தார். “உள்ளம் என்பது உள்ளிருப்பதன் ஆடை மட்டுமே. அதை களைந்துவிட்டது அது” என்றார் முதியமருத்துவர்.

அரசன் இமைப்பதே இல்லை என்பதை முதிய மருத்துவர்தான் கண்டடைந்தார். “விந்தைதான். இமையா விழி மிக விரைவிலேயே நோக்கிழந்துவிடும். நீர் படர்ந்து வீங்கும். இவர் விழிகள் நெற்றுகள்போல வறண்டுள்ளன. விழிகள் அசைவதுமில்லை” என்றார். இளமருத்துவர் “அவ்வுடலில் மூச்சு ஓடுவதே தெரியவில்லை. முன்னரே இறந்த உடல் ஒன்று எதன்பொருட்டோ உறுதிபூண்டு தன்னை காற்றில் தொடுத்துக்கொண்டு அமைந்திருப்பதுபோல் தெரிகிறது” என்றார். “பெருந்துயர்! பிறிதொன்றும் சொல்வதற்கில்லை… எதன் பொருட்டென்றாலும் பெருந்துயர் என்பது ஒன்றே. எவ்வடிவு கொண்டாலும் தெய்வம் ஒன்றே என்பது போல” என்றார் நூறாண்டு கடந்த குலமூத்தார் ஒருவர்.

தொடர்புடைய பதிவுகள்

கார்ல் சகன் ,கடிதம்

$
0
0
karl sagan

கார்ல் சகன்

 

இனிய ஜெயம்.

நீங்கள் அன்னை கல்லூரியில் பேசியது எதுவோ அந்த பேசுபொருள் இங்கே கார்ல் சாகன் மொழியில். நீத்தார் வழிபாட்டில் துவங்கி, அவரது ”காண்டாக்ட்” இன் அடிப்படைகள் முதல் பகுதியில். இரண்டாம் பகுதி அடிப்படை பேசுபொருள், அதிலிருந்து தனது கருதுகோளை முன்வைக்கவேண்டிய முறை, நிரூபணவாதத்துக்கு வழிமுறை, அதன் மறுப்பு வாதத்துக்கான இடம் என ஒருவர் ஒன்றினை நம்பும் முன் அதை பரிசீலித்து ஏற்கும் வகைமைகளை கற்றுத் தருகிறார்.

கொஞ்சம் குழப்பமான உதாரணங்கள். இரண்டாவது முறை கடந்து வாசிக்கையில் பிடி கிடைத்தது. மொழிபெயர்ப்பு சார்ந்து குற்றம் சொல்ல மாட்டேன். [மொழியாக்கம் புதுவை ஞானம்]. திண்ணை இணையத்தளம் சென்று தேடினால் கிட்டும் என நினைக்கிறேன்.

பகுதி ஒன்று.

http://kalappayani.blogspot.in/2013/03/blog-post_19.html

பகுதி இரண்டு.

http://kalappayani.blogspot.in/2013/03/2-tom-paine-age-of-reason.html

உங்களது ஜகன்மித்யை கதையில் வரும் என்டர்னல் ரெகரன்ஸ் தியரி இங்கே கார்ல் சாகன் சிந்தனையில் வேறு பரிமாணத்தில் இன்னும் ஆழமாக …

கடலூர் சீனு

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

காமிக்ஸ் -கடிதங்கள்

$
0
0

LionComicsIssueNo164DatedOct2000Mara[3]

 

மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் சாருக்கு,

வணக்கம். உங்களின் இன்றைய வலைப்பக்கத்தில் எங்களது சமீப வெளியீடு (என் பெயர் டைகர்) பற்றியதொரு விரிவான பதிவுக்கு நன்றிகள். வெகுஜன ரசனையிலிருந்து வெகு தூரத்தில் ஒதுங்கி நிற்கும் காமிக்ஸ் இலக்கியத்துக்கு, தங்களைப் போன்ற ஆற்றலாளர்களின் பங்களிப்பு பெரிதும் உதவிடும் என்பதில் துளியும் ஐயமில்லை.

கதையின் மையத்தில் வந்திடும் அந்தச் “செவ்விந்தியச் சிறார்களைக் கிருத்துவர்களாக மதமாற்றம் செய்யும் யுக்திக்கு” நாயகர் டைகர் எதிர்ப்புச் சொல்வது போலவே கதை சித்தரிக்கப்பட்டுள்ளது சார். அதனை முன்மொழியும் மேல் அதிகாரிகளின் பேச்சுக்கு டைகர் மறுப்புச் சொல்கிறார். அந்தச் சிறு பிசிறைத் தவிர்த்து தங்களின் மற்ற வரிகள் சகலமும் மிகுந்த உயிரோட்டத்துடன் இருந்தன! தங்களின் பரந்த வாசக வட்டத்துக்கு காமிக்ஸ் எனும் சுவையினை அறிமுகம் செய்திட இது நிச்சயம் உதவிடும்! எங்களது நன்றிகள் சார்!

அன்புடன்,

S .விஜயன்

எடிட்டர்

LION – MUTHU COMICS

8/D-5, Chairman PKSAA Arumuga Nadar Road,

Ammankoilpatti, SIVAKASI 626 189. South India.

Tel : 04562-272649.

www.lion-muthucomics.com

Our Online Sales Website : http://lioncomics.in/

Our Paypal id: lioncomics@yahoo.com

*

அன்புள்ள விஜயன் அவர்களுக்கு

நானும் நீங்கள் சொன்ன பொருளில்தான் எழுதியிருந்தேன். ஆனால் கதையை முழுமையாகச் சொல்லிவிடக்கூடாதென்பதனால் குறைவாகவே சொன்னேன். உங்கள் பதிப்பு முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்

ஜெ

***

அன்புள்ள ஜெ

காமிக்ஸ் பற்றிய உங்கள் கட்டுரைகளை வாசித்தேன். நுணுக்கமான கட்டுரைகள். எத்தனை தீவிரமான வாசிப்புக்குள்ளும் நாம் நம் சிறுவனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை நானே எனக்கும் ஒரு பாடமாக வைத்திருக்கிறேன். இல்லை என்றால் என்ன ஆகும் என்றால் புத்தியை வைத்து உடைத்துப்பார்க்கும் விஷயங்களில் மட்டுமே நமக்கு ஆர்வம் இருக்கும். மற்ற அனைத்தும் பெரிதாகப்படாது. முக்கியமாக நாம் இலக்கியங்களை வாசிக்கும்போது அப்படியே அதற்குள் கனவுபோல புகுந்து நாமும் அங்கே வாழ ஆரம்பிக்கவேண்டும். அந்த அனுபவம் இல்லாமலாகிவிடும். வெறுமே தெரிந்துகொள்ளும் அனுபவம் மட்டுமே எஞ்சும். இதை நீங்களும் எழுதியிருக்கிறீர்கள் என நினைகிறேன்

ஜெயராமன்

***

அன்புள்ள ஜெ

அசோகமித்திரன் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பேட்டியிலே அவருக்கு பிடித்த புஸ்தகம் என்று கேட்டபோது கௌண்ட் ஆஃப் மாண்டிகிரிஸ்டோ என்னும் நூலைச் சொன்னார். ‘கற்பனையைத் தூண்டிவிட அருமையான சாதனம்’ என அவர் சொன்னது ஞாபகம் இருக்கிறது. எப்போதானலும் சரி கற்பனையைத்தூண்டுவதே இலக்கியத்தின் முதல் அம்சம். அசோகமித்திரன் போன்ற ஒரு யதார்த்தப்படைப்பாளி அப்படிச் சொன்னது அன்றைக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்று அதனப்புரிந்துகொள்ளமுடிகிறது. காமிக்ஸில் மூழ்கும் மனம் கொண்ட ஒருவரால்தான் போரும் அமைதியும் நாவலையும் உணர்ந்து வாசிக்கமுடியும் என நினைக்கிறேன்

சாரங்கன்

***

என்பெயர் டைகர்

கடவுள் இல்லாத நிலம்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நாட்டியப்பேர்வழி

$
0
0

Padmini_Actress

 

சைதன்யா பாய்ந்துவந்த வழியில் ஒரு செம்பும் இரு டம்ளர்களும் உருண்டன. நான் ”என்ன பாப்பா இது? இப்டியா அவுத்துவிட்ட கண்ணுக்குட்டி மாதிரி வாறது?” என்றேன். மதியவேளையாதலினால் உபதேசிக்க நேரமிருந்தது. ”பின்ன எப்டி வாறது?”என்று வந்து அமர்ந்து நான் ஆய்ந்துகொண்டிருந்த முருங்கைக்கீரையை அள்ளி ஊதிப்பறக்க வைத்தாள்.

”வைடி அங்க… எரும மாடு”என்று பின்னணிக் குரல்கேட்க நான் நிதானமாக விளக்கினேன் ”நீ இப்ப பெரிய பொண்ணுல்ல? பெரிய பொண்ணுங்கல்லாம் ஸ்டைலா, ஒருமாதிரி பந்தாவா நடந்துவரணும்.. சினிமால வாறதுமாதிரி…”

”போப்பா. அதுக்குண்ணு நாட்டியப்பேர்வழி மாதிரி கைல சொப்பு வச்சுக்கிட்டு ஆட்டிட்டே வரணுமா?” என்று சொல்லி தொற்றி ஜன்னல்மேல் ஏற நான் அவளைப்பிடித்து உட்காரவைத்து விசாரிக்கத்தலைப்பட்டேன். ”அதென்னதுடீ நாட்டியப்பேர்வழி?”

”அஜிதான் சொன்னான்….அந்த மாமிக்கு அப்டி ஒரு பேரு உண்டுண்ணுட்டு” திகைப்புடன் ”எந்தமாமி?” என்றேன். ”புருவத்திலே கசவு ஒட்டி வச்சுகிட்டு அதை ஆட்டி ஆட்டி கண்ணெமைய இப்டி படபடாண்ணு மூடிமூடி பேசுவாங்களே? வாயி கூட சின்னதா டப்பி மாதிரி இருக்குமே…” என சைதன்யா விளக்கத்தலைப்பட்டாள்.

எனக்குப் பிடிகிடைக்கவில்லை ”ஆருடீ?” அவள் கண்களை நாகப்பழம் போல உருட்டி ” மூஞ்சியிலே செவப்பா பெயிண்டு அடிச்சிருப்பாங்களே? மூக்குத்தியும் போட்டிருப்பாங்க…தோளை இப்டி பயில்வான் மாதிரி தூக்கிட்டு நடப்பாங்க…” சைதன்யா செய்யுள் தெரியாமல் பெஞ்சுமேலேறி நிற்க நேரிட்ட முகபாவனைகளைக் காட்டி சட்டென்று தெளிந்து ”ஆ! அவுங்க பத்துமணிக்கு…இல்ல..அவங்க பேரு வந்து பத்துமணி…இல்ல அது அஜி சொல்றது. அவுங்கே…–”

நாட்டியப்பேரொளி பத்மினி என்னுடைய அப்பாவின் கனவுக்கன்னியாக இருந்திருக்கிறார்கள் என்று அவரது பாலியநண்பர் நாராயணன் போற்றி சொன்னார். அப்பாவுக்கு நாயர் ஸ்திரீகளை மட்டுமே கனவுக்கன்னிகளாக ஏற்க முடியும். பத்மினிக்குப் பின்னால் அவர் கனவு காண்பது குறைந்துவிட்டாலும் ஒரே ஒருமுறை அப்பு அண்ணனிடம் அம்பிகா படத்தைக் காட்டி ”ஆருடே இது?” என்று கேட்டார். நாயர்தான் என்றும் உறுதிசெய்துகொண்டார்.

ஆகவே நான் பள்ளி நாட்களிலேயே பத்மினியை ஒரு சித்தி அந்தஸ்து கொடுத்துத்தான் வைத்திருந்தேன். கறுப்புவெள்ளைப் படமொன்றில் அவர்களின் குட்டைப்பாவாடை குடையாகச் சுழன்றெழுந்தபோது தலைகுனிந்து மேப்புறத்து பகவதியிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தேன்.’நீலவண்ண கண்ணா வாடா’ என்று அவர்கள், பக்கத்துவீட்டிலிருந்து தூக்கிக் கொண்டுவரப்பட்டமையால் திருதிருவென விழிக்கும் குண்டுக் குழந்தையை கொஞ்சியபடி, பாடும் பாட்டைப் பார்த்து மனமுருகியும் இருக்கிறேன்.

அப்படியானால் சைதன்யாவுக்கு பாட்டி முறைதானே?”..அப்டில்லாம் சொல்லப்பிடாது பாப்பா…அவுங்கள பத்மினிப் பாட்டீண்ணுதான் சொல்லணும்… என்ன?” என்றேன் .”அப்ப நாட்டியப்பேர்வழிண்ணு அஜி சொல்றான்?” என்று புருவத்தைச் சுளித்தாள். பொறுமையை சேமித்து ”அப்டீல்லாம் சொல்லப்படாது பாப்பா. அவங்க எவ்ளவு கஷ்டப்பட்டு டான்ஸெல்லாம் ஆடறாங்க… பத்மினிப்பாட்டீண்ணுதான் சொல்லணும்” பத்மினி நாயர்தானே, ஏன் அம்மச்சி என்றே சொல்லிவிடக்கூடாது? ஆனால் அஜிதனை அப்படிச் சொல்லவைப்பது கஷ்டம் என்று உணர்ந்தேன். அவனுக்கு பத்மினி என்றாலே சிரிப்பு. சிவாஜியுடன் அவர் சேர்ந்து நிற்பதைக் கண்டாலே அவன் வயிறு அதிரும்.

”செக்கச் சிவந்திருக்கும் முகத்தில்ல்ல்ல் புளிரசமும்…” என்று பாடி அறுபது பாகை சாய்ந்து முகத்தில் விரல்களை சரசரவென பரவ விட்டு புருவத்தை நெளிந்தாடச் செய்து ஆடிக்காட்டினான். எனக்கே தாங்க முடியவில்லை. முன்கோபக்காரரான அப்பா இருந்திருந்தால் உடனே குடையை எடுத்துக் கொண்டு நிரந்தரமாக வீட்டைவிட்டுக் கிளம்பி சென்றிருப்பார்– குடை இல்லாமல் அப்பா எங்கும் போவதில்லை.

இம்மாதிரி மூன்றாம்தலை முறை பிறவிகளுடன் சேர்ந்து பழைய விஷயங்களைப் பார்ப்பது எப்போதுமே சிக்கல்தான், நம் கண்களும் அப்படியே ஆகிவிடுகின்றன. நாட்டியப்–சரிதான்- பேரொளி பத்மினியின் நடிப்பையும் நடனத்தையும் இப்போது பார்க்கும்போது சிரிப்பு வராமலிருக்க வேறு பத்திரிகை ஏதாவது புரட்டி கண்களை தாழ்த்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும் காதுகளில் அவர்களின் நடிப்பு வந்து கொட்டியபடியேதான் இருக்கிறது.

அவர்களின் குரல் நல்ல நாயர்ப்பெண் குரல். ஓரம் உடைந்திருக்கும். என் சொந்தக்கார மாமா ஒருத்தர் திருவனந்தபுரத்தில் பத்மினி சாயலிலேயே ஒரு பெண்ணைப் பார்த்து மேற்கொண்டு யோசிக்காமல் கல்யாணம் செய்து கொண்டார். முதலிரவில் ”எந்தா பேரு?” என்றார். நாணத்துடன் தலை குனிந்து இருந்த மாமியிடம் ”எத்ர தவண கேட்டேன், பேரு சொல்லியால் எந்து, சியாமளே?” என்று பரிதாபமாக அவர் பத்தாம் முறை கேட்டபோது மாமி எம்.ஆர்.ராதா குரலில் ”சியாமளை”என்றார். அதன்பின் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை குறைவு, எட்டு குழந்தைகள்.

தொலைக்காட்சியில் கேட்டிருக்கிறேன், நாயர் நடிகைகள் அம்பிகா, ராதா, சோபனா எல்லாருக்குமே அதே குரல்தான். சமீபத்தில் பாவனா பேசக்கேட்டபோது பக்கத்தில் யாரோ பேசுகிறார்கள் என்றே தோன்றியது. வால்மாட்டிய எலிபோன்ற டப்பிங் குரல்களுக்கு அதுவே மேல் என்று எனக்குப் படுவதற்கு சாதி காரணமல்ல என நினைக்கிறேன்.

மோகனாம்பாளாக வேஷமிட்ட சித்தி பதவிசாக நடந்துவரும்போது சைதன்யா சொன்னதுபோல இடது உள்ளங்கையில் ஒரு சின்ன செம்பையோ சம்புடத்தையோ வைத்து வலது உள்ளங்கையால் அதைப் பொத்தி வயிற்றுடன் சேர்த்து வைத்திருக்கிறார்கள். இருதோள்களையும் முன்னுக்கு சற்றே தள்ளி அவற்றை ‘லெ·ப்ட் ரைட்’ என அசைத்தசைத்து வருகிறார்கள். நடையழகுக்கு அவர்கள் பின்னழகை நம்புவதில்லை, அவர்களுக்கு அப்படி ஒன்று இல்லை. பட்டுப்புடவைக் கொசுவம் விரிய விரைப்பாக நின்று கழுத்தை ஒருபக்கமாகத் திருப்பி ”வரதா அவரிட்ட சொல்லு…”

பத்மினியின் நடிப்புக்கு தோள்கள் உறுதுணையாக இருக்கின்றன. சோகத்தில் அவை எகிறி முன்னுக்கு வளையும்போது நடனத்தில் விம்மிப்புடைத்து ‘வெற்பெனத் தூக்கிய தடந்தோள்’ களாக ஆகின்றன. தோள்களுக்கு இத்தனை அருகே மார்பகங்கள் அமைந்துள்ள வேறு நடிகை உலகில் கிடையாது என்று படுகிறது. இது இப்போது கண்ணில்படுவது,அப்போதெல்லாம் கண்களை எப்படிக் கீழே கொண்டுவருவேன்? பத்மினி சோகத்தில் ஒரு கோணத்தில் சாய்கிறார். அடுத்த வசனத்தைக் கேட்டு புழுவாய் துடித்தபடி வெடுக் என திரும்பி மறுகோணத்தில் சாய்கிறார். புழுவாய் துடிப்பதே நடிப்பு என்பது அவர் நம்பிக்கை. புருவங்கள் சின்னப்புழுக்கள்.இதே சாய்வு நடனத்திலும் உண்டு. கேவி அழும்போது சிறியவாயை லேசாக திறந்தபடி முகத்தைத்தூக்கி அண்ணாந்து விடுகிறார்.கண்ணீர் சரிகையுடன் சேர்ந்து மினுமினுக்கிறது

தமிழ்க் கதாநாயகிகளின் நடிப்புக்கு பத்மினியின் கொடை என சில உண்டு. எதையாவது கண்டு அஞ்சி கிரீச்சிட்டு அலறும்போது இடக்கையை சுழற்றி மேலெடுத்து புறங்கையால் வாயை மூடிக்கொண்டு விழிபிதுங்குவது அவற்றில் தலையாயது. வலக்கையில் அனேகமாக விளக்கோ விளக்குமாறோ இருக்கும். வேகமாக வந்து நின்று வேறுபக்கம் முகம்திருப்பி பார்வையை சரித்து ஒரு புருவத்தைமட்டும் வளைத்து தூக்கி ‘ம்?’ என்பது. அதை சரோஜாதேவி அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றார். அப்போது பின்னல் நுனியை கையால் சுழற்றுவது சரோஜாதேவியின் கொடை. கடைசியாக, எப்போதுமே புருவங்களை வில்லென வளைத்து வைத்திருப்பது. சித்தியை எப்போது பார்த்தாலும் ‘படிச்சியாடா? ” என்று அவர்கள் அதட்டுவதுபோன்ற அச்சம் எனக்கு ஏற்பட்டமைக்குக் காரணம் அதுதான்.

அழும்போது வாயை கையால் பொத்திக் கொள்வது பத்மினியின் வழக்கம். அப்போதுதான் குலுங்கச் சௌகரியமாக இருக்கும். தமிழ்த் திரையுலகின் சீர்மிகு கண்டுபிடிப்பான ‘எதிரொலி வசனமுறை’யை உச்சகட்டத் திறனுடன் கையண்டவர் பத்மினியே. ”அப்படிச் சொல்லாதீர்கள் அத்தான், அப்படிச் சொல்லாதீர்கள்! உங்கள் காலில் விழுகிறேன் அத்தான், காலில் விழுகிறேன்!”

பத்மினி நடித்த வண்ணப்படங்களில் அவர் உடலில் எப்போதுமே ஏழுவண்ணங்களும் இருக்கும்.அவர்களைத்தான் ‘வண்ணத்தமிழ்ப்பெண்’ என்று சொல்ல வேண்டும். தில்லானா மோகனாம்பாள்’ படத்தைப் பார்த்துவிட்டு ஒளிப்பதிவாளர் மார்க்கஸ் பட்லே ”ஒருமுறை நன்றாக உரசிக் கழுவிவிட்டு புரஜக்டரில் விட்டு ஓட்டினால் கண்ணுக்கு நன்றாக இருந்திருக்குமோ?”என்று அபிப்பிராயபப்ட்டதாகச் சொல்வார்கள். பத்மினியை இன்னொருமுறை கழுவவேண்டியிருக்கும்.

பத்மினி புகழ்பெற்றது நடனத்துக்காகத்தான். சமீபத்தில் ஓட்டல் அறையொன்றில் நள்ளிரவில் பார்த்த ஒரு பழைய பாடலில் இருபெண்கள் ஒரு மன்னன் முன்னால் நின்று இடுப்பில் கைவைத்து ”அய்யே மூஞ்சியப்பாரு மூஞ்சிய ,ஏய்யா நீயும் ஒரு ஆளா?” என்பதுபோல சைகை காட்டுவதைக் கண்டு சுவாரஸியமாக பார்த்தால் அது அக்கால அரசவை நடனக் காட்சி. ஆடுவது பத்மினியும் சகோதரி ராகினியும். இருவர் முகங்களிலும் சீனிப்பருக்கைகள் போல ஏதேதோ மினுக்கங்கள். இறுக்கமான கால்ராய் போட்டு ஒட்டியாணம் கட்டி தோள்வளை அணிந்து ஒரே இடத்தில் நின்று சுழன்று ஆடினார்கள். ஒருத்தி ஆடும்போது இன்னொருத்தி இடுப்பில் ஒரு கைவைத்து மறுகையை வளைத்து தொங்கவிட்டு ”ஆமா போடி” என்பதுபோல சில முகச்சுளிப்புகளை காட்டினாள். ராஜாவுக்கு கனிந்த வயோதிகம். அவர் ‘மாதம் மும்மாரி பொழிந்தாலே இப்படித்தான்’ என்பதுபோல பார்த்துக் கொண்டிருந்தார்.

பின்னர் பத்மினியின் நடனங்கள் புகழ்பெற்றன. தமிழ் நடனங்களுக்கு அவரது கொடை என மூன்றைச் சொல்லலாம். தென்னைஓலை, புல்கதிர் போன்றவற்றை பிடித்து இழுத்துமுகத்தின் குறுக்காக அசைத்துச் சரிந்து புருவத்தை ‘எப்டி எப்டி?’ என்பதுபோல அசைத்துச் சிரித்தல். மெல்லிய புடவை முந்தானையை தூக்கி அதனூடாக பார்த்துச் சிரித்து உடனே அதை உதறி ஓடுதல். கதாநாயகன் பிடிக்க வந்ததும் துள்ளி ஓடி எள்ளுக்கதிர் மிதிப்பதுபோல கால்சலங்கைகளை ஒலிக்க வைத்தல்.

ஆனால் தில்லானா மோகனாம்பாள்தான் அவரது நடனக்கலையின் உச்சம். ‘மறைந்திருந்து பார்க்கும் மருமகனே’ என அஜிதன் பாடும் அந்தப்பாட்டில் கோபுரப் பொம்மையைப் பார்க்கும் கோணத்தில் நாம் அவரைப் பார்க்க அவர் காலை தூக்கித் தூக்கி வைத்து ஆடும் அந்த அசைவு அதில் முதலிடம்.’நலம்தானா?’ பாட்டில் இருகைகளையும் கயிற்றில் கட்டி இழுத்து மேலே தூக்கியிருப்பது போன்ற பாவனையுடன் அவர் சுழன்றுவரும் சோகம் மிக்க அசைவு. அதன்பின் அவர் செய்வதற்கு ஒன்றுமே இல்லை, இவற்றை அமெரிக்க மாமிகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைத் தவிர.

ஆனால் பாலும் பழமும் கைகளில் ஏந்தி மடிசார் உடுத்து பதவிசாக வந்த அவர் ‘பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா…’ பாட்டுக்கு திடீரென்று பின்னலை தூக்கிப் பின்னால் போட்டு ஆடிய ஆட்டத்துக்கு இணையாக எதுவுமே என் நினைவில் இல்லை. அப்போது குலசேகரம் செண்டிரல் திரையரங்கில் நான் திடுக்கிட்டு கையிலிருந்த மொத்த பட்டாணிக்கடலையையும் கொட்டிவிட்டேன்.

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம்

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–33

$
0
0

33. பெருந்துயர் சாளரங்கள்

எட்டாண்டுகாலம் ஆயுஸ் அவ்வரண்மனையின் சாளரங்களினூடாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். மைந்தன் மீண்டு வரும் பாதையை பார்க்கிறான் என்று முதலில் அரண்மனையில் பேசிக்கொண்டனர். பின்னர் வருங்காலம் அவன் கண்களில் தெரிகிறது போலும் என்றனர். அவ்வாறு அமர்ந்திருக்கும் அரசனைப்பற்றிய செய்திகள் மக்கள் நாவில் பெருகின. சூதர் கதைகளாக மாறின. ஒவ்வொரு நாளும் மூதாதை தெய்வங்கள் வந்து அரசனிடம் பேசிச்செல்வதாக சொன்னார்கள். இருளில் தனித்து விழிகள் மட்டும் மின்னித் தெரிய அமர்ந்திருக்கும் அரசனைச் சூழ்ந்து நிழல் உருவங்கள் அசைவதைக் கண்டதாக ஏவலர் கதை வளர்த்தனர்.

ஓரிரு ஆண்டுகளுக்குள் அக்கதைகளாலேயே அவன் மறைக்கப்பட்டான். பின்னர் அக்கதைகள் வழியாகவே அவர்கள் அவனை அறிந்தனர். அணுக்கச்சேடியர் நால்வரன்றி எவரும் அவனை எண்ணாதாயினர். அரசனை முலைகொடுத்து வளர்த்த முதுசெவிலி அவனை மீண்டும் அவள் கையில் தவழ்ந்த மழலை என அடைந்தாள். அவள் மார்பிலும் கைகளிலும் விழிநோக்கா பைதல் என அவன் வாழ்ந்தான். ஆண்டுக்கொருமுறை அரசன் கோல் சூடி அரியணை அமரும் நிகழ்வுகளில் மட்டுமே அவனை குடிகள் நினைவு கூர்ந்தனர். ஒழிந்த அரியணையில் அரசனின் மணிமுடியையும் கோலையும் வைத்து முடிபூசெய்கை, கோல்நிலைச் சடங்கு, அடிகாணிக்கை போன்றவற்றை முடித்து அவை கூட்டி அவ்வாண்டும் அனைத்து முடிவுகளை எடுக்கும் பொறுப்பை அமைச்சர் சுதர்மனுக்கு அளித்தனர்.

நாளடைவில் ஒவ்வொன்றும் அதன் ஒழுக்கை தானே அடைகின்றது. நதிப்பெருக்கில் வீசப்பட்ட பொருட்கள் பெருகுதிசைக்கு முகம் திருப்பி, ஒன்றோடொன்று முட்டிமோதி தங்கள் ஒழுகுவடிவை தாங்களே அமைத்துக்கொள்வதுபோல. அன்றாடம் என்னும் பெருக்கு. அரிதையும் பெரிதையும் எளிதுக்கும் சிறிதுக்கும் வேறுபாடில்லாமலாக்கி தன்னுள் அடக்க அதனால் இயலும். சென்றதையும் வருவதையும் அக்கணம் என்று உருமாற்றகூடிய மாயம்  அது. அன்றாடத்தில் அனைத்தும் பயன்பாட்டுப் பொருள் மட்டுமே கொள்கின்றன. செயல்பாட்டு வடிவம் மட்டும் பூண்கின்றன. ஆகவே அனைத்தும் தங்கள் உட்பொருள் அழிகின்றன. நிலைவடிவு கரைகின்றன.

உட்பொருளும் நிலைவடிவும் அழிந்த ஒன்று இல்லை என்றாகிறது. அன்றாடத்தில் அன்றாடம் அன்றி பிறிதொன்றில்லை. அதை அறியும் உள்ளத்தின் தன்னிலை அன்றி பிறர் எவரும் இல்லை. அன்றாடத்திற்கு அப்பால் உண்மையில் ஏதேனும் உள்ளதா? அது அன்றாடத்தின் எளிமைகண்டு அகம்கசிந்த உள்ளம் விழைவது மட்டும்தானா? வெறும் எண்ணம் மட்டுமா? ஈவிரக்கமற்றது, இடைவெளியின்றி நிறைவது, எதிரீடற்றது, இறைவடிவமோ என்று மயங்கச்செய்வது. அன்றாடத்தின் பெருக்கில் முற்றிலும் மூழ்கி மறைந்து காலத்துளி ஒன்றாக மாறிப்போனான் ஆயுஸ்.

எட்டாண்டுகளுக்குப் பின்பு ஒருநாள் அவனை காலையில் நீராட்டி உணவூட்டுவதற்காக அவன் இரவெலாம் அமர்ந்திருந்த சாளரத்தை நோக்கி சென்ற முதுசெவிலி அவன் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதை கண்டாள். அணுகிச் சென்று தொட்டபோது அது வெம்மை கொண்டிருந்தது. எப்போதும் இறந்த உடலென அது குளிர்ந்து உலர்ந்திருக்கும். துணுக்குற்று மீண்டும் தொட்டபோது உள்ளிருக்கும் அனலை உணர்ந்தாள். “அரசே! அரசே!” என அழைத்தபோது எப்போதும்போல அவன் குரலறியவில்லை. அவனை கையிலேந்தி நீராட்டறைக்கு கொண்டுசெல்வதற்குள்ளாகவே அவ்வெம்மையால் அவள் கை கொதிக்கலாயிற்று. நீராட்டாமல் வெந்நீரால் உடல் துடைத்து திரும்ப மஞ்சத்தில் கொண்டு படுக்க வைத்தபின் அவள் ஓடிச்சென்று மருத்துவரிடம் சொன்னாள். அரசனின் செவிலியன்னையாகிய அந்த முதுமகள் மட்டுமே பதறி அழுதுகொண்டிருந்தாள். மருத்துவருக்கும் அமைச்சருக்கும் அரண்மனையில் பிற எவருக்கும் பதற்றமோ விரைவோ இருக்கவில்லை.

சேற்றுக்குள் மண்புழு நெளியும் அதிர்வை மேலே தொட்டறிவதுபோன்றது அவன் நாடி நோக்குவது என மருத்துவர் ஒவ்வொருமுறையும் உணர்வதுண்டு. அது கையில் அமைந்து உளம்காட்டும் மாயம்தானா என்றே எண்ணம் குழம்பும். அன்று நாடி அதிர்ந்து புரண்டுகொண்டிருந்தது. ஊர்த்துவம் எழுந்துள்ளது என்றே நாடி மீண்டும் மீண்டும் காட்டியது. கையை மெல்ல மஞ்சத்தில் வைத்துவிட்டு ஏறிட்டு நோக்கிய மருத்துவர் “கடும் சுரம். கவண்சரடென இழுபட்டுள்ளன நரம்புகள், உயிரை தெறிக்கவிட விழைகின்றன. இக்காய்ச்சலை உடல் தாங்குவது அரிது” என்றார்.

“என்ன சொல்கிறீர், மருத்துவரே? காய்ச்சல் என்பது நற்குறி அல்லவா? உடல்தளர்ந்தவர் காய்ச்சலில் எழுந்ததுண்டு அல்லவா?” என கேட்டபடி அவர்களின் பின்னால் சென்றாள் முதுசேடி. “ஆம், அதையே எதிர்நோக்குகிறேன்” என்றார் மருத்துவர். அவள் திரும்பி ஓடுவதைக் கண்டபின் “அன்னையரின் உள்ளம்போல விந்தை பிறிதேது? எதையும் நற்குறியென்றே அவர்களால் காணமுடியும்” என்றார் முதிய மருத்துவர். “முலையூட்டியவள். அவளால் தன் முலைகளில் இருந்து விடுபடவே முடியாது” என்றான் அவர் மாணவன்.

அரசன் அங்கிருக்கிறான் என்பதை அச்செய்தியினூடாகவே அறிந்தது அரண்மனை. அவன் இறக்கக்கூடுமென்ற எண்ணமே அச்செய்தியை விரைந்து பரவச்செய்தது. அதனூடாகவே தாங்கள் அதுவரை அவனை மறந்துவிட்டதை உணர்ந்து ஒவ்வொருவரும் குற்றவுணர்வு கொண்டனர். ஆகவே மிகைநெகிழ்வுடன் அரசனின் பெருமையை பேசிக்கொண்டார்கள். கண்ணீருடன் அவன் தோற்றத்தை, சிரிப்பை, கனிவை விதந்தனர். “சில பிறவிகள் இவ்வாறுதான், பிழை ஒன்றில்லாமலேயே வாழ்க்கையை தண்டனையாக ஏற்பவை” என்றார் முதியவர் ஒருவர். “அறத்தின்பொருட்டு இப்பெருந்துயரை இழுத்து தன் தலையில் சூடிக்கொண்டவர் மாமன்னர். அறம் அவரை அறியும்” என்றார் பிறிதொருவர்.

“இங்கு குருதிப்பழி அவர்மேல் கற்பாறையென அமைந்து நசுக்குகிறது. விண்ணில் அவர் தலையில் பல்லாயிரம் ஒளிமணிகள் பதிந்த அணிமுடிபோல் அது அமைந்திருக்கும்” என்றார் கவிஞர் ஒருவர். “ஆயினும் இது கொடுமை. தீங்குக்கும் அழிவுக்கும் முறையென ஒன்று உண்டு என நம்பியே மானுடர் இங்கு வாழ்கிறார்கள். தீங்கற்றோர் துயருறும்போது மானுடத்தை கட்டியிருக்கும் தொல்லறத்தின் சரடு அறுபடுகிறது” என்றான் ஓர் இளைஞன். “அறம் என்றால் ஆட்கொல்லி நோயா? எவரென்று அதற்கு தெரியாதா?” என சினந்தான் இன்னொருவன். ஆனால் அனைவரும் அவன் இறப்புக்காக காத்திருந்தனர், ஒரு துயரக்கதை உகந்த முறையில் உச்சத்துயரில் முடிவுறும் நிறைவுக்காக.

நாளுமென ஆயுஸ் நோய் முதிர்ந்தான். முற்றி உலர்ந்து ஒடுங்கினான். இடைநாழியிலும் அருகமைந்த கூடத்திலுமாக குலமூத்தாரும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் காத்திருந்தனர். உள்ளே சென்று மீண்டுவரும் மருத்துவர் ஒவ்வொருமுறையும் மாற்றமென ஏதுமில்லை என்றனர். அருகிருந்து சேடியர் அவன் உடலெங்கும் மென்பஞ்சை ஒட்டவைத்து அதில் குளிர்ந்த நீரூற்றி காய்ச்சலை தணித்துக்கொண்டிருந்தனர். முதியசெவிலி அவன் அருகிருந்து அகலாது உடலை வருடிக்கொண்டே இருந்தாள். “நீரும் உண்ணவில்லை, சொல்லுக்கு விழியசைவும் இல்லை. மூச்சு ஓடுகிறது, நெஞ்சு அடிக்கிறது, பிறிதொன்றும் உயிர் என காட்டவில்லை” என்றார் மருத்துவர். “என் குரலை அவர் கேட்கிறார். குரலுக்கேற்ப விழி அசைகிறது” என்றாள் முதுசெவிலி.

நான்காவது நாள் அந்தியில் அவன் மெல்ல முனகினான். அருகிருந்த முதுசெவிலி  உவகைப்பெருக்குடன் கைகள் பதற வெளியே ஓடிவந்து “முனகுகிறார்” என்றாள். முதுகுலத்தலைவர் “அமைச்சரே, நீங்கள் செல்லுங்கள்” என்றார். “நானா? மருத்துவர் வரட்டும்” என்றான் சுதர்மன். “இக்கணம் தாங்களே அவர் அருகே இருக்கவேண்டும். இனி மருத்துவர் செய்வதற்கொன்றும் இல்லை. சொல் ஒன்று எஞ்சியிருப்பதனாலேயே இவ்விழிப்பு. அவ்வண்ணம் சொல்லென்று ஏதேனும் எழுமென்றால் அது தங்களுக்குரியது மட்டுமே” என்றார் குலத்தலவர். தயங்கியபடி கைகூப்பி சுதர்மன் உள்ளே சென்றான்.

தூசுமணம்போல, இருட்டின் மணம்போல, மட்குதலின் மணம்போல, இறப்பின் மணம் நிறைந்திருந்த அறைக்குள் ஆயுஸ் மென்பட்டுச் சேக்கையில் பிறிதேதோ கலத்திலிருந்து சிந்திய வடிவம் என கிடந்தான். உலர்ந்த இதழ்கள் அசைய இரு கைகளும் பளிங்கில் புழு என தவிக்க மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது அவன் உடல். முனகலென ஏதும் கேட்கவில்லை என அவன் எண்ணிய பின்னர்தான் அந்த வீணொலியே அம்முனகல் என உள்ளகம் உணர்ந்தது. அருகே சென்று காலடியில் வணங்கி நின்ற சுதர்மனை நோக்கி முதுசெவிலி அவன் முகத்தருகே செல்லும்படி கைகாட்டினாள்.

மஞ்சத்தருகே மண்டியிட்டு ஆயுஸின் இதழ்களுக்கு மிக அருகே தன் முகத்தை கொண்டுவைத்து “அரசே” என்றான் சுதர்மன். அவ்வொலியை உடல் பொருட்படுத்தவில்லை. மீண்டும் ஒருமுறை அழைத்தபோது நீண்ட குகைவழிக்கு அப்பால் எங்கோ எதிரொலி எழுவதுபோல ஓர் உணர்வு ஏற்பட்டது. அரசன் எங்கிருந்தோ கேட்கிறான் என்ற உணர்வு.  மீண்டும் மீண்டும்  “அரசே” என்று அழைத்தான். ஒவ்வொரு அழைப்பும் ஒன்றை பிறிதொன்று பின்னின்று உந்த முன்னகர்ந்து நீண்டு சென்று அவனுள் நுழைவதுபோல. ஓர் அழைப்பு சென்று தொட்டதும் இமைகளுக்குள் உருண்ட விழிகள் நிலைத்தன. இருகைகளும் பதைத்து எழத்துடிப்பவைபோல் அசைந்தன. நாக்கு வெளிவந்து கருகிய இதழ்களை நீவிச்சென்றது.

“அரசே நான்…” என்றான் சுதர்மன். “பத்மரா? பத்மரே!” என்றான் ஆயுஸ். ஒருகணம் திகைத்து உளம்நின்று பின் “ஆம், பத்மர்தான்” என்றான் சுதர்மன். “நன்று செய்தீர். நான் அதற்கு உற்றவனே” என்றான் ஆயுஸ்.  அவன் என்ன சொல்கிறான் என்று புரியாது சுதர்மன் நோக்கியிருந்தான். “இல்லையேல் நான் விடுதலை கொண்டிருக்கமாட்டேன். அது முடிவிலா வல்லமைகொண்டது.” முகத்தின் உணர்வு துணைக்கவில்லை என்றால் சொற்கள் எத்தனை பொருளற்றவை என்று சுதர்மன் திகைப்புடன் எண்ணிக்கொண்டான்.

“என் மைந்தன் ஆயுஸ்… என்னைப்போல் அவனும் இறப்பை அருகே நின்று காண்பான் போலும். பெருந்துயர் ஒன்றை என்னிடம் கோரிப்பெற்றான்” என்றான் ஆயுஸ். அவன் சொல்வதென்ன என்று உணர்ந்ததும் சுதர்மனுக்கு மெய்விதிர்ப்பு ஏற்பட்டது. தன் கைகளால் ஆயுஸின் கைகளை பற்றிக்கொண்டான். தொடுகையை உணர்ந்ததும் ஆயுஸ் கண்களைத் திறந்து இறுகிய கழுத்தை அசைக்காமல் விழி சரித்து சுதர்மனை நோக்கி  “சுதர்மரே” என்றான்.  “அரசே, தங்கள் அடியவன்” என்றான் சுதர்மன். “என் மைந்தன் மீண்டு வருவான். அதை நான் நன்கு அறிவேன். அவனை மீண்டும் காணும் பேறு எனக்கு மட்டும்தான் இல்லை” என்றான் ஆயுஸ்.

சுதர்மன் விழிநீர் வழிய கேட்டு அமர்ந்திருந்தான். “எந்தை எனக்களித்த உடைவாள் ஒன்று கரவறையில் உள்ளது. என் தந்தைக்கொடையென  அதை நகுஷனுக்கு அளிக்கிறேன். விண்ணுலகுக்குச் சென்று இந்திரனை வென்று அவ்வரியணையில்  அமருகையில் அவன் கையில் அந்த வாள் இருக்கவேண்டும், அது புரூரவஸின் வாள் என அவன் அமரர்க்கரசனிடம் சொல்லவேண்டும்.” சுதர்மன் “ஆணை” என்றான். மீண்டும் விழிகளை மூடி நா பதைத்தான் ஆயுஸ். சுதர்மன் விழிகாட்ட தேன் கலந்த நீரை சிறுகரண்டியால் அள்ளி அவன் நாவில் விட்டாள் முதுசெவிலி. மும்முறை அதை விழுங்கியபோது மீண்டும் சற்று உயிர்த்தெளிவு கொண்டான்.

பலமுறை நீள்மூச்சிழுத்து இருமுறை இருமியபின் அவன் சிலம்பிய குரலில்  “பெண்கள்!” என்றான். “என்ன?” என்று சுதர்மன் கேட்டான்.  “இச்சாளரங்களிலெல்லாம் பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள்” என்று அவன் சொன்னான். “யார்?” என்று சுதர்மன் மீண்டும் கேட்டான். “அறியேன்” என்றான் ஆயுஸ். “இளங்கன்னியர். மெலிந்த முதுபெண்டிர்.” சுதர்மன் “மூதன்னையரா?” என்றான். “அறியேன். அவர்களுடன்தான் நான் இதுநாள்வரை பொழுதும் இரவும்  பேசிக்கொண்டிருந்தேன்…” என்றான். “என்னைப்போலவே துயர்சுமந்தவர்கள். இங்கு சூழ்ந்திருக்கிறார்கள்.”

சுதர்மன் “யார்?” என்று மீண்டும் கேட்டான். “அறியேன். ஆனால் அரசிகள்” என்றபின் ஆயுஸ் நீண்ட மூச்சொன்றை விடுத்தான். மீண்டுமொரு மூச்செழும் என்று இயல்பாக எண்ணி சுதர்மன் நோக்கியிருந்தான். அது எழவில்லை என்பது சற்றுநேரம் கழித்தே தெரியவந்தது. ஐயுற்று சற்றே அருகில் சென்று அரசனின் முகத்தை பார்த்தான். வற்றி வெடித்த சேற்றில் எழுந்த பாறை என மூக்கு எழுந்த வறண்ட முகம் சிலைபோலிருந்தது. மூக்கருகே கை வைத்தபோது மூச்சிருக்கிறதா என்று அறியக்கூடவில்லை. சாளரக்காற்றில் வியர்வை குளிர்ந்தது. முதுசெவிலி அரசனின் கழுத்தில் கைவைத்தபின்  “நிறைவடைந்துவிட்டார்” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

அரண்மனை முறைப்படி உணர்ச்சிகளை அடக்கி “நற்பொழுது நோக்கவேண்டும், முறைப்படி அறிவிப்புகள் எழவேண்டும்… பணிகள் உள்ளன” என்று சொல்லி எழுந்த முதுசெவிலியின் தன்கட்டுகள் ஒரே கணத்தில் அறுந்தன. வெடித்து அழுதபடி திரும்ப மஞ்சத்தில் சரிந்து அரசனின் தலையை எடுத்து தன் மார்போடணைத்தபடி “என் மைந்தா… என் செல்வமே…” என அவள் கதறினாள். “இப்பிறவியில் இதற்குமேல் துயர் எஞ்சியுள்ளதா? என் தெய்வமே… சென்று வா, என் குழந்தையே!” என்றாள். வெறியுடன் தன் தலையிலறைந்தபடி “எவர் பழிக்கோ துயர்சுமந்தாய். இனி தெய்வங்கள் சுமக்கட்டும் உன் பழியை.  உன்னை நின்று வாட்டிய அறம் நாண்கொள்ளட்டும். இனி இந்த வேளையில் இந்நகரின் அகல்சுடர்கள்  அனைத்தும் நடுங்கி அதிரட்டும். என் கண்ணே, என் அமுதே… உனக்கு முலைகொடுத்த மார்பில் அறைந்து சொல்கிறேன். உன் பழி இனி இக்குடியில் என்றும் தொடரட்டும்!” என கூவி அழுதாள்.

சுதர்மன் எழுந்து அரசனின் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். அழுகைக்குரல் கேட்டு கதவு திறக்க உள்ளே வந்த குலமூத்தோர் முதுசெவிலி நெஞ்சிலறைந்தபடி மயங்கி அரசன் உடல் மேலேயே விழுந்துவிட்டதை கண்டனர். நிமித்திகன் வெளியே சென்று அங்கே காத்து நின்றிருந்தவர்களிடம் “முரசுகள் முழங்குக! குருநகரியின் பேரரசர், சந்திரகுலத்துத் தோன்றல், பெரும்புகழ் புரூரவஸின் மைந்தர் விண்புகுந்தார்” என்று அறிவித்தான்.

tigerநகுஷனை அரண்மனையிலிருந்து கவர்ந்து செல்லும்பொருட்டு ஹுண்டனின் அமைச்சன் கம்பனன் உருவாக்கிய ஒற்றர் அமைப்பு மூன்றடுக்கு கொண்டிருந்தது. சேடியரென உருமாறி அரண்மனைக்குள் நுழைந்து  அனைவரும் ஏற்க பரவியிருந்த ஏழு நாகப்பெண்கள் அகத்தளங்கள், கரவறைகள், சுரங்கவழிகள் உட்பட அனைத்துப் பகுதிகளையும் ஆராய்ந்து அவர்களுடன் மந்தணமுறையில் தொடர்புகொண்டிருந்த வெளியொற்றர்களுக்கு செய்தி சொன்னார்கள். அரண்மனைக்கு வெளியே கோட்டை முகப்பு வரை செறிந்திருந்த மரங்களின் இலைப்பரப்பினூடாகவே பரவியிருந்தனர் பச்சைப் பாம்புபோல் பிறர் விழிக்குத் தெரியாமல் இலையடர்வுக்குள்  இருக்கத்தெரிந்த பறக்கும் நாகர். அப்பால் அவர்களின் விரைவுப்படை வணிகர்கள் என புரவிகளுடன் காத்திருந்தது.

மைந்தனை தன் கையில் வாங்க பல நாட்கள் முயன்றாள் நாகசேடி. இறுதியில் வழக்கத்துக்கு மாறாக அவன் திமிறித் துள்ளவே ஆடை அவிழ்ந்த நிலையில் அவனை அவள் கையில் கொடுத்தாள் முதுசேடி. அக்கணமே தன் கையிலிருந்த கணையாழியால் அவன் தொடையில் மெல்ல குத்தி வலுகுறைக்கப்பட்ட நாகநஞ்சை உடலுக்குள் செலுத்தி அவனை துயில்கொள்ளச் செய்தாள். அவள் முன்னரே வெட்டி வழியமைக்கப்பட்டிருந்த வாயில் வழியாக வெளிப்போந்ததும் அவளிடமிருந்து அவனைப்பெற்று தோல்கிழியில் சுற்றி உடலில் கட்டிக்கொண்டு மரங்களினூடாகவே தாவி வெளிவந்தனர் பறக்கும் நாகர். கீழே மணம் குழப்பப்பட்ட நாய்கள் திசையறியாது குரைத்துக்கொண்டிருந்தன. அவர்களிடமிருந்து மைந்தனைப்பெற்ற விரைவுப்படையினர் புரவியில் காட்டைக் கடந்து மறுநாள் புலரிக்குள் ஹுண்டனின் நகரை அடைந்தனர்.

முன்னரே ஹுண்டனுக்கு செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது. உள்ளக்கிளர்ச்சியுடன் எழுந்து படுக்கையில் அமர்ந்திருந்த ஹுண்டனின் முன்பு மயங்கி கைகால் தளர்ந்து விரியக்கிடந்த மைந்தனை தூக்கிக்காட்டினான் கம்பனன். வாய் கோட புன்னகைத்து “நன்று, ஒரு காய்நகர்வில் இக்களத்தில் நான் வென்றேன். இனி நீ ஆடுக!” என எவரிடமோ என நோக்கி சொன்னான். விழிகளில் வினாகொண்ட கம்பனனிடம் “நான் இங்கிருந்து ஒரு நாற்களமாடுகிறேன். மறுதரப்பில் இருந்தாடுவது நூலோரால் ஊழென்று சொல்லப்படும் அறியமுடியாமை. பார்ப்போம்” என்றபின் குனிந்து  “இவனா அவளை மணக்கவிருப்பவன்? இவனா எனக்குப் போட்டியாக எழுந்த மணமகன்?” என்றான்.

அறியாது உரக்க நகைத்துக்கொண்டே கம்பனனிடம்  “மாபெரும் வேடிக்கை! பால்மணம் மாறாத இந்த மைந்தன் நான் விழையும் பெண்ணை என்னிடமிருந்து கவர்ந்து செல்லும் காதலன். கைக்குழவியுடன் பெண்போர் புரிந்த முதல் நாகன் நான்” என்றான். அவனால் நகைப்பை அடக்கவே முடியவில்லை. புன்னகைத்தபடி கம்பனன் சொன்னான் “அறியுந்தோறும் நாம் அறிவதொன்றே, இப்புவியில் எதுவும் இயல்பானது” என்றான். விழிவாங்காமல் அக்குழவியையே நோக்கினான். “பிறிது எதையும் நோக்கமுடியவில்லை. எதையும் எண்ணவும் இயலவில்லை. இக்குழவி என் மறுபகுதி எனத் தோன்றுகிறது. ஊழ் இதை மறுமுனையாக அமைத்துள்ளதா?” என்றான். குனிந்து நோக்கி கைகளைச் சுருட்டி இறுக்கியபடி “அள்ளி அணைத்து உடலுடன் இறுக்கவேண்டுமென வெறி கிளர்கிறது. கொன்று குருதி பூசிக்கொள்ளவேண்டும் என்று வஞ்சமும் எரிந்தெழுகிறது” என்றான்.

கம்பனன் “அது உண்மையிலேயே உங்கள் மறுபாதியென்றிருக்கலாம்” என்றான். ஹுண்டன் விழிதூக்க “அந்த முனிவர்மகளின் தீச்சொல்லின்படி இவன் உங்களை கொல்லவிருப்பவன்” என்றான். “ஆம்!” என கற்தொடையில் அறைந்து சிரித்த ஹுண்டன் “அதையும் நோக்கிவிடுவோம். என் விழைவையே மெய்யாக்குகிறேன். இவன் என் உடல்புகுந்து நான் என்றே ஆகுக!” என்றான்.  மீசையை நீவியபடி தனக்கே “நன்று!” என்றபின் திரும்பி தன் துணைவியரை அழைத்து வரச்சொல்லி ஆணையிட்டான்.

அரசியரான வித்யுதையும் விபுலையும் வந்து அவன் அருகே நின்றனர். “தேவியரே கேளுங்கள், பிறிதொருவரை முற்றிலும் என்னால் நம்ப இயலாதென்பதனால் இம்மைந்தனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். இன்றிரவே இவன் கொல்லப்பட வேண்டும். இவன் ஊனை சமைத்து எனக்கு அந்தியுணவென பரிமாறுக! இது என் ஆணை” என்றான். அவர்கள் மெல்ல நடுங்குவது தெரிந்தது. “என்ன?” என்றான் ஹுண்டன். “ஆணை” என்றபடி வித்யுதை  மைந்தனை கையில் வாங்கிக்கொள்ள அவள் ஆடைநுனியை பற்றிக்கொண்டாள் விபுலை. இருவரும் தலைவணங்கி வெளியேறினர்.

“நானே அதை செய்திருப்பேனே? எதற்கு இங்கே கொண்டுவரவேண்டும்? கொல்வதென்றால் அங்கு அரண்மனையிலேயே இவனை கொன்றிருக்கலாம் அல்லவா?” என்றான் கம்பனன். “நான் இவனை காணவேண்டுமென்று விரும்பினேன். இவன் என் உடலென்றாக வேண்டுமென்பது ஊழ்போலும்” என்றான் ஹுண்டன். “இறுதிவரை என்னுடன் இவனும் இருப்பான்” என்றபடி மீண்டும் உரக்க நகைத்தான். உளக்கொந்தளிப்பில் நகைப்பவர்களின் விழிகள் நகைப்புக்கு மிக அப்பாலிருக்கும் என கம்பனன் கண்டிருந்தான். “அதை ஏன் அரசியர் செய்யவேண்டும்?” என்று அவன் கேட்டான்.

“இருவரும் மைந்தர் பிறக்காத துயரிலிருக்கிறார்கள். தங்கள் கைகளால் ஒரு மைந்தனைக் கொன்றால் அத்துயரிலிருந்து மீள்வார்கள்” என்றான் ஹுண்டன். “திகைக்காதே. நான் உளச்சிதைவடையவில்லை. நான் சொல்வது ஓர் மாறா உண்மை. நான் தொட்டு அறிந்து எடுத்துச் சூடிய ஒன்று” என்றபின் மெல்ல உடல் அசைத்து முன்னெழுந்து “ஒளிநோக்கி எழுந்து துயர்மீளலாம் என்று நூல்கள் சொல்லுகின்றன. அது கடினமான பாதை. இருள் நோக்கி விழுந்து துயர் மீள்வது மிக மிக எளிது. நான் நன்கு அறிந்திருக்கிறேன் அதை. அவ்வண்ணமே நான் மீண்டேன்” என்றபின் மீண்டும் உரக்க நகைத்தான்.

உடல் பாதி கல்லென்றானபின் எஞ்சியதில் நஞ்சு நிறைய அரசன் பித்தனைப்போல் ஆகிக்கொண்டிருப்பதை கம்பனன் உணர்ந்திருந்தான். அவ்வெண்ணத்தை விழிகளில் காட்டாமல்  “நன்று” என்றான். “பாதி கல்லென்றானால் மீதி உடலென்றமைய முடியாது, மூடா. அது அனலென்று எரிந்தாகவேண்டும்” என்றான் ஹுண்டன். “ஆம், அதை தாங்களே அறிவீர்கள்” என்ற கம்பனன் “நான் விடைகொள்கிறேன், அரசப்பணிகள் மிகுதியாக உள்ளன” என்றான். “அஞ்சாதே. உன்னை உண்ணும்படி சொல்லப்போவதில்லை. ஏனென்றால் இவ்வூனின் மொத்தமும் எனக்கே. இவனை நான் பகிர்ந்துகொள்ளமுடியாது. நான் என்னையும் இவனுடன் மட்டுமே இதுகாறும் பகிர்ந்துகொண்டுள்ளேன்” என்றான்.

கம்பனன் தலைவணங்க “நீ எண்ணுவதென்ன என்று எனக்குத் தெரியும். பித்தன் என்று, அல்லவா?” என்றான் ஹுண்டன். “ஆம், ஆனால் இளிவரலாகவோ வசையாகவோ அல்ல. பித்தும் வீரனுக்குப் பெருமையே” என்றான் கம்பனன். “அதை சொல்… சூதர்களும் பாடகர்களும் அவ்வாறே பாடுக!” என்று சொல்லி மீண்டும் நகைத்த ஹுண்டன் “ஒவ்வொரு நாளும் இருண்டு, கீழ்மை கொண்டு, கசந்து, கடுமையாகிறேன். அதனூடாக மேலும்மேலுமென கூர்கொள்கிறேன். அது என்னை விடுவிப்பதையே ஒவ்வொருகணமும் காண்கிறேன்” என்றான்.

எண்ணச்சுமையேற மீசையை நீவியபடி “கொன்றிருக்கிறேன், குறை எஞ்சாது வென்றிருக்கிறேன், மிதித்துக் கடந்திருக்கிறேன், தருக்கி நின்றிருக்கிறேன். இதுவரை என் உள்ளாழம் நடுங்கும் பெரும்பழி எதையும் இயற்றியதில்லை. இன்று அதற்கு ஆணையிட்டிருக்கிறேன். இவ்வாணையை இடும்போது என் உளம் தயங்குகிறதா, குரல் நடுங்குகிறதா என்று நானே நோக்கினேன். இல்லை, என் உள்ளே துலாமுள் அசைவுறவில்லை. அமைச்சரே, அவ்வண்ணமெனில் நான் முற்றிலும் விடுபட்டுவிட்டேன் என்றல்லவா பொருள்?” என்றான் ஹுண்டன். கம்பனன் “ஆம், அரசே” என்றான்.

“முதுநாகம் தன் நஞ்சை முத்தென்றாக்கிக் கொள்கிறது. அதன் ஒளியில் பிறர் காணா உலகொன்றை அது அடைகிறது” என்றான் ஹுண்டன். “நச்சுமணி சூடிய நாகத்தால் விண்ணில் பறக்க முடியும். நோக்குக, இத்தீமையின் விசையாலேயே என் கல்லுடலைத் தூக்கி எழுவேன். காற்றில் பறப்பேன். இந்நகரும் என் குடியினரும் அதைக் காணத்தான் போகிறார்கள்” என்று ஹுண்டன் சொன்னபோது முகம் சிவந்து கழுத்துநரம்புகள் புடைத்து அசைந்தன. “அதன்பின் அவளிடம் செல்வேன். அவள் மட்டுமே அறிந்த ஒரு வினாவை கேட்பேன். பிற எவரிடமும் நான் பகிராத ஒன்று அது.” கம்பனன் “நன்று அரசே, அவ்வண்ணம் நிகழட்டும்” என்றபடி வெளியேறினான்.

தொடர்புடைய பதிவுகள்

ரவிசுப்ரமணியன் ஆவணப்படங்கள்

$
0
0

ravi subramaniyan

 

ரவி சுப்ரமணியனின் ஆவணப்படங்களின் தொகுப்பு அழியாச்சுடர்கள் இணையதளத்தில். ரவி சென்ற பத்தாண்டுகளாக எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப் படங்களை எடுத்துவருகிறார். ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா.அரங்கநாதன், திரிலோக சீதாராம், சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன் ஆகியோரைப் பற்றிய அவரது ஆவணப்படங்கள் தமிழ்ச்சூழலில் முன்னோடி முயற்சிகள்.

ரவிசுப்ரமணியன் ஆவணப்படங்கள்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஊட்டி வேதாந்த வகுப்பு –ஒரு நினைவுப்பதிவு

$
0
0

பூர்ணமது , பூரணமிது

பூரணத்தில் இருந்து பூர்ணம் வெளிப்பட்டது

எடுத்தாலும் சேர்த்தாலும் எடுத்ததும் சேர்த்ததும்

எஞ்சுவதும் கொண்டதும் பூர்ணமே

சாந்தி சாந்தி சாந்தி

சாந்தி மந்திரம் ஈஷா உபநிஷதம்

 

vyasaprasad

ஊட்டி நாராயண குருகுலம் முன்னெப்போதும் இப்படி இருந்ததில்லை. அதே சூழல், அதே கட்டிடம் ஆனால் மதிப்புணர்வு வேறு.  கடந்த பிப். 25,26 இருநாட்கள் 12 பேர்களுடன்  ஸ்வாமி வியாஸப்ரசாத்தின் வேதாந்த வகுப்பில் கலந்து கொண்டேன். பத்து பேரே அதிகம் என்பது அவரின் எண்ணம். ஆகவே அதிக ஆட்களை அழைத்துச் செல்ல இயலவில்லை. இது “விஷ்ணுபுரத்தின்” இன்னுமொரு நிகழ்வு.

சில ஐயங்களை தீர்க்கும் பொருட்டு மீண்டும் புதன் கிழமை அவரை சந்தித்தேன்.

2

ஸ்வாமி வியாஸாவின் காணொளிகளை கடந்த ஒரு வாரகாலமாகவே பார்த்து எங்களுக்குள் உரையாடி ஒரு தயாரிப்புடனேயே சென்றிருந்தோம். அந்த காணொளியில் அவர் வகுப்பெடுத்த விதமே மிக சுவாரஸ்யமாக இருந்தது.

ஒரு காணொளியில் யதியின் ஒரு உதாரணத்தை வரைந்து கூறி இருப்பார். இரண்டு வெண் குவியல்கள் உள்ளது, ஒன்று சக்கரை மற்றொன்று உப்பு. குழந்தை இரண்டையும் அதன் நிறத்தை வைத்து ஒன்றெனக் கூறும், ஒரு சமையற்காரி இரண்டும் வேறெனக் கூறுவாள், ஒரு விஞ்ஞானி இரண்டும் அணுக்களால் ஆனது ஆகவே இரண்டும் ஒன்றே என்பார்.

எனது பயணம் குழந்தையில் இருந்து விஞ்ஞானிக்கு, உப்பிலிருந்து சக்கரைக்கு.

இனி காணொளியிலும் வகுப்பிலும் ஸ்வாமி வியாஸப்ப்ரசாத்தின் வார்த்தைகளில் :

தொழிற்புரட்சிக்கு பின் மேற்குலகம் ஆச்சர்யத்தில் இருந்து ஐயத்திற்கு சென்றது (from wonder to doubt), அறிவியல் பூதாகரமாக வளர்ந்து அது அனைத்து மீபொருள் (meta phisical field) துறையையும் பரிசோதித்து, அதன் அடித்தளத்தை ஆட்டம் காண செய்த்து. பின்னர் குவான்டம் கொள்கை வந்ததும் மீபொருள் துறை மறுமலர்ச்சி கண்டது. பிற்கால வேதாந்தம் உத்திர மீமாம்சை எனப்படும், இது இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று, பிற்கால வேதாந்தம் என்றால் அது அத்வைதம், துவைதம் மற்றும் விஷிட்டாத்வைதம்.

ஊட்டி நாராயண குருகுலம் அத்வைத தரிசனத்தில் நம்பிக்கை கொண்டது. நாராயணகுருவுக்குப்பின் வேதாந்தம் தன்னை நவீனமயமாக்கியது, வறட்டு வேதாந்தம் என்கிற அடைமொழியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. முன்னேறிய அறிவியலின் கூறுகளையும், மேற்கு தத்துவஞானிகளையும் உதவிக்கு அழைத்துக் கொண்டது. ஆகவே முன்னெப்போதும் இல்லாத அளவு அது சுவாரஸ்யமானது. பர்மனைட்சும், ஹெராக்லிடீசும், ஸ்பினோசாவும், கான்ட்டும், ஹெகலும், ஷ்ரோடிங்கரும், பெர்க்சனும் அறிதல் வட்டத்திற்குள் வந்தனர். ஹெகலைத் தவிர்த்து இவர்கள் அனைவரும் வேதாந்ததால் ஈர்க்கப் பட்டார்கள், ஷோபெண்ஹரர் மற்றும் நீட்ஷே தமது அறிதலை பெரிதும் வேதாந்தத்தை முன்வைத்தே பேசினார்.

3

Uncertainty principle, Schrodinger’s cat போன்றவை இந்த வேதாந்த வகுப்பில் புழங்கியது. நவீன அறிவியலுடன் வேதாந்தத்துக்கான ஓர் உரையாடல்முனையை திறக்கவே நாராயணகுருகுலம் முயல்கிறது. வேதாந்தத்தை நவீன அறிவியலைக்கொண்டு ‘நிறுவும்’ முயற்சி அல்ல இது

நாராயண குருகுல மரபு, பிரஸ்தானத் த்ரயத்தை (பிரம்ம சூத்திரம், கீதை மற்றும் உபநிஷத்துக்கள்) தமது அடிப்படை நூல்களாக கொள்கிறது. நாராயண குருவின் ஆத்மோபதேச சதகம் ஸ்வாமி வ்யாஸப் பிரசாத்தின் அடிப்படை நூல், அவர் இதை தனது சுருதியாகக் கொள்கிறார்.

அ. வாழ்க்கையை இரு பிரிவுகளாக பிரிகிறார்கள், செங்குத்து வாழ்க்கை அதாவது ஆன்மிகம் சார்ந்தது, பக்கவாட்டு பார்வை அது லௌகீகம் சார்ந்தது. செங்குத்து வாழ்க்கை மதீப்பீட்டையும் பக்கவாட்டு வாழ்க்கை வெற்றி, பொருள், புகழ் போன்ற சாதனைகளையும் சார்ந்தது. இரண்டும் சந்திக்கும் வெட்டு புள்ளியே சுயம். அங்கிருந்து லௌகீகமாக பக்கவாட்டில் நகரலாம், ஆன்மீகமாக செங்குத்தாக உயரலாம். இந்த செங்குத்து வாழ்க்கை மட்டுமே இலக்கு.

 

4

ஆ. ஒரு மாணவனுக்கு முதலிலேயே வேதாந்தத்தின் உச்சகட்ட ஞானம் அறிமுகப்படுத்தப்படும். இதுபடிப்டியான கல்வியில் நம்பிக்கை வைப்பதில்லை. இந்த அதி உயர் வேதாந்தத்தை அவன் அறிவது உடனடியாக இருந்தாலும் உணர்வதற்கு சில காலம் பிடிக்கும். பொதுவாக சுமார் 12 ஆண்டுகள்.

இ. வேதாந்தக் கல்வி ஒரு முழுமைநோக்கில் (contemplation)   கூர்உயர்தல் (transcendental) என்கிற வழியைக் கொண்டுள்ளது அதன் இலக்கு முழுமை (absolute) . யோகக் கல்வி மாறுபட்டது அது. யோகம் உள்ளொடுங்குதலையும் செய்பயிற்சியையும் தனது தியானமாகக் கொண்டுள்ளது அதன் இலக்கு கைவல்யம். ஒரு பெரும் நோக்கில் இரண்டு அடைதலும் ஒன்றே.

1

ஈ. தத்துவக் கல்வியை நோக்கி வருபவனுக்கு பொதுவாக இரண்டு கேள்விகள் இருக்கும் அது “நான் யார்” மற்றும் “இப்பிரபஞ்ச காரணி எது”.

இவ்வகுப்பில் பெரிதும் பேசப்பட்டது முக்குணக்கங்கள் மற்றும் சுதர்மம். சத்வ, ரஜோ, தமோ குணங்கள் ஒரு சுழலும் முக்கோணம், சிலநேரங்களில் சத்வம் மேலிருக்க பிற இரண்டும் கீழிருக்கும். அதே போல மற்றவையும் மேற்செல்லும். எது பிரதான ஆதிக்கத்தை செலுத்துகிறது எனப் பார்த்து அக்குணத்தை சேர்ந்தவன் அவன் என ஒருவாறு வகைப்படுத்தலாம். ஆனால் குணங்களும் உயர்தலுக்கு தடையே, குணங்களை கடந்த குணாதீத நிலையை அடைவதே இலக்கு.

சுதர்மம் ஒரு தொழில்படுதலில் நாம் நிறைவுகொள்ளல். நிறைவுறும் தொழிலை தேடிக் கொள்ளலாம், அல்லது ஒரு சுதர்ம தரிசனமடைந்து தமது வாய்க்கப்பட்ட  தொழிலை சுதர்மமாகக் கொள்ளலாம்.

மேலுச்சங்களைப் போலவே கீழும்சங்களும் ஆன்ம உணர்வை அடைய உதவுமா என்றால் அல்ல, கீழ்மைகளை மேன்மைகளுடன் குழப்பிக் கொள்வது அவித்யா எனப்படும். இந்த முதல் படியில் இருந்து தான் வேதாந்தக் கல்வி துவங்குகிறது.

ஒரு மாணவனுக்கு ஷமா, தாமா, உபர்மா, தீக்ஷா, ஷ்ரத்தா மற்றும் சமாதானா ஆகியவை தகுதிகள், அதேபோல ஒரு குருவுக்கு தரிசனமடைந்திருத்தல், சுருதிகளில் நல்ல பயிற்சி மற்றும் சீடனை பயன்படுத்திக் கொள்ளாதிருத்தல் ஆகியவை தகுதிகள்.

அறிதலில் உள்ள தடைகள் கிளேஷைகள் எனப்படும். அவித்யா, அஸ்மிதா, ராகா, த்வேஷா மற்றும் அபிநிவேஷா ஆகும் இதை பதஞ்சலி யோக சூஸ்திரத்தில் காணலாம்.

முற்பிறப்பு மறுபிறப்பு, மேற்கத்திய தத்துவவியல் மறுத்தல் வாதத்திற்கும் நமது தத்துவ நோக்கில் முரண்பாடுகளும் உள்ள வேறுபாடு, ஆகியவை பற்றியும் கேட்கப்பட்டது. மே மாதம் முதல் சீராக அடுத்த வகுப்புகளுக்கு செல்ல இருக்கிறோம்.

ஸ்வாமி வியாசரை எனக்கு 8 ஆண்டுகளாகத் தெரியும், அவரை அணுக இத்தனை ஆண்டுகள் தேவைப் பட்டிருக்கிறது. ஆம் வேதாந்தத்தில் உயர்தத்துவம் முன்னரே அறிமுகப் படுத்தப்பட்டு விடும், உணர்வதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும்.

கிருஷ்ணன்

 

சுவாமி வியாசப்பிரசாத் காணொளி வகுப்புகள்

நாராயணகுருகுல துறவியர்

 

வியாசப்பிரசாத் வகுப்புகள்

வேதாந்தவகுப்புகள்

குருகுலமும் கல்வியும்

நாராயணகுருகுலம் நிதியுதவி

 

ஒரு விண்ணப்பம்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மீண்டும் அறிவியலுக்கு…

$
0
0
Ivan Illich / Foto Duesseldorf 1977

இவான் இல்யிச்

 

அன்புள்ள ஜெ

இன்று அஜிக்கு ரூபெல்லா தடுப்பூசி கொடுத்தோம்,அருகில் உள்ள அரசு மருத்துவமனையில்…

ஏதேனும் அவசர உதவி தேவை என்றால், அழைக்க செவிலியர்களின் செல்பேசி எண்ணும் எழுதப்பட்டு, அட்டையும் கொடுக்கப்படுகிறது.

எங்கள் குடும்ப மருத்துவர், அஜிக்கு இந்த ஊசியை முன்னமே கொடுத்திருந்தார்.. 4000 ரூபாய் கட்டணத்தில்… அவரிடம் கேட்டு, இன்னொரு முறை கொடுப்பதில், பிழை இல்லை என்று தெரிந்து கொண்டோம் முதலில்…

ஒரு கோடியே எழுபத்தைந்து இலட்சம் பயனாளர்களுக்கு, இந்த தடுப்பு மருந்தை இலவசமாக கொடுக்க, அரசு திட்டமிட்டுளது. இறுதி நாள் நெருங்கியும், இதுவரை எழுபத்தி ஐந்து இலட்சம் பேர் மட்டுமே மருந்து எடுத்து கொண்டுள்ளனர்.. அரசு இன்னும் பதினைந்து நாட்களுக்கு, இந்த திட்டத்தை நீட்டியுள்ளது…

ஏன் / எங்கிருந்து இவ்வளவு எதிர்ப்பு குரல் வருகிறது? வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே போடப்படும் இந்த தடுப்பு ஊசியை, அரசாங்கம் மக்களுக்கு இலவசமாக வழங்கினால், இந்த ஊசியை தயாரித்து விற்கும் / பயனாளர்களுக்கு வழங்கும் கார்ப்பரேட்டுகள் மற்றும் மருத்துவர்களின் மொத்த வியாபார இழப்பு (4000 x 17500000) 7000 கோடி ரூபாய்…

தங்கள் வியாபார நலனை முன்னிட்டே, இத்தகைய பொய் பிரச்சாரம் கார்ப்பரேட்டுகளினால் விதைக்கப்படுகிறது.

குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக வாட்சாப்பில் வரும் தகவல்கள் உண்மையாக இருந்தால், குழந்தைகளின் பெயர் / பள்ளியின் பெயர் /தாய் தந்தையர் விவரம் என எதுவும் ஏன் இல்லை? தொலைகாட்சிகளிலோ /பத்திரிக்கைகளிலோ ஏன் குழந்தைகள் பாதிக்கப்பட்ட தகவல் வரவில்லை…

தமிழக அரசாங்கம், அதன் மக்களுக்கு செய்யும் மிக மிக குறைந்தபட்ச மருத்துவ நலத்திட்டம் இது. இதையும் வீணடிக்காமல், உபயோகித்து பயன் பெறுவது நம் உரிமை…

பிரசாத்

சேலம்

***

அன்புள்ள பிரசாத்,

20 ஆண்டுகளுக்கு முன்னர் இவான் இலியிச் எழுதிய Medical Nemesisஎன்ற நூலுக்கு ஒரு விரிவான அறிமுகத்தை நான் எழுதினேன். அந்த நூல் காந்திய இயக்கம் ஒன்றால் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. அப்போது சுந்தர ராமசாமிக்கும் எனக்கும் ஒர் உரையாடல் நிகழ்ந்ததை நினைவுகூர்கிறேன்

ராமசாமி சொன்னது இது

தமிழ்ச் சமூகம் அடிப்படை அறிவியலையே அறியாதது. அறிவியல் மனநிலை என்பது இங்கே அறிவியல் கல்வி கற்றவர்களிடம் கூட இல்லை. நாம் வாழ்வது மதம் உருவாக்கிய அடிப்படை மனநிலைகளில். மதத்தின் அகவயமான, நம்பிக்கை சார்ந்த அணுகுமுறைக்கு மாற்றாக அறிவியலின் புறவயமான, தர்க்கம் சார்ந்த அணுகுமுறை இங்கே இன்னும் அறிமுகமாகவே இல்லை.

மதத்தை எதிர்க்கும் ஈவெரா கூட இன்னொரு மதத்தையே உருவாக்கினார். அவரை தந்தைப் பெரியார் என எப்போது பெயர் சொல்லாமல் அடையாளப்படுத்த ஆரம்பித்தார்களோ, எப்போது சிலைக்கு மாலை போட ஆரம்பித்தார்களோ அப்போதே அதுவும் இங்கிருக்கும் பலவகையான மதங்களில் ஒன்றாக மாற ஆரம்பித்துவிட்டது.

இவான் இலியிச் மேலைச் சமூகத்திற்காகப் பேசியவர். அங்கே அறிவியல் பொது உண்மையாக நிறுவப்பட்டுவிட்டது. அதன் அடுத்தகட்டமாக அறிவியல் செயல்படும் முறையில் உள்ள சில குறைகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதை கடந்து செல்லவேண்டுமென சிலவற்றைச் சொல்கிறார். அதையும் அறிவியலின் மொழியிலேயே சொல்கிறார்.

ஆனால் இங்கே இந்த அணுகுமுறைகள் எல்லாமே அறிவியலுக்கு எதிரான, மேலும் பின்னகரும் போக்குகளாகவே புரிந்து கொள்ளப்படும். நாம் அலோபதியையே மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய நிலை இங்குள்ளது. இன்னமும் நாட்டுமருத்துவம் போலிமருத்துவம் இங்கே ஓங்கியிருக்கிறது. இவான் இலியிச்சை கொண்டு வந்து வேப்பிலை அடிக்க வைத்துவிடுவார்கள்

அன்று சுரா சொன்னதை எதிர்த்து நான் வாதாடினேன். அலோபதி மேல் எனக்கு இன்றும் கடுமையான விமர்சனங்கள் உண்டு. மாற்றுமருத்துவம் மேல் ஏற்பும் உண்டு. அதேபோல சூழியல், இயற்கை வேளாண்மை, இயற்கை சிகிழ்ச்சை ஆகியவற்றில் எல்லாம் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. இவற்றைச் சார்ந்த ஆரம்ப கட்ட நூல்கள் சிலவற்றை நான் மொழியாக்கம் செய்திருக்கிறேன். பல துண்டு பிரசுரங்களை மொழியாக்கம் செய்திருக்கிறேன்

ஆனால் இன்று சுந்தர ராமசாமி சொன்னது சரியோ என எண்ணிக் கொண்டிருக்கிறேன். இங்கே இயற்கை வேளாண்மை, மாற்று மருத்துவம், சூழியல் பாதுகாப்பு குறித்த அனைத்துப் பேச்சுக்களுமே வெறும் மூடநம்பிக்கைகளாகவும் வெற்று வெறுப்புரைகளாகவும் மாறிவிட்டிருக்கின்றன. இதைச்சார்ந்து பேசுபவர்களிடம் உள்ள நம்பிக்கை சார்ந்த மனநிலை, அறிவியல் மறுப்பு என்னை கசப்படையச்செய்கிறது. சமீபத்தில் ஜல்லிக்கட்டு நாட்டுமாடு சார்ந்தெல்லாம் பேசப்பட்டவற்றைக் கேட்டபோது தமிழகம் வெற்றிகரமாக பதினெட்டாம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது என தோன்றியது.

உண்மையில் நான் இருபதாண்டுக் காலமாக நம்பி செயல்பட்ட அனைத்து விஷயங்களையும் இப்போது மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறேன். நவீன வேளாண்மை நம் பசியைப் போக்கியது, ஆனால் அதில் தவறுகள் உள்ளன, அது நச்சுக்களை பயன்படுத்துகிறது, நீரை வீணடிக்கிறது, அதற்கான மாற்றுக்களைக் கண்டடையவேண்டும் – இது அறிவியல். நவீன வேளாண்மையே ஒரு சதிவேலை என்பது அறிவியல் அல்ல, மூடநம்பிக்கை. உலகின் மூத்தகுடியாகிய தமிழனை அழிப்பதற்காக ஐரோப்பியன் கண்டுபிடித்த சதி அது என்பது மூடநம்பிக்கையின் உச்சம்.

இந்தத் தளத்தில்தான் இன்று அலோபதிக்கு எதிரான பேச்சுக்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எவருக்கும் அறிவியல் என்னும் பேரமைப்பு சென்ற ஐநூறாண்டுகளாக தன்னைத்தானே திருத்தி மேம்படுத்திக் கொண்டு உருவாகி வந்தது என்பது தெரியாது. அதன் பலன்கள் மேல்தான் அவர்களின் அன்றாட வாழ்க்கையே அமைந்துள்ளது என்று தெரியாது. அறிவியலின் கண்டுபிடிப்புகளுக்கு மாற்று கூட அறிவியலின் தர்க்கப்படி அமையவேண்டும் என்பது தெரியாது. ஒட்டுமொத்த அறிவியல் நிராகரிப்பு.

எதையும் மூர்க்கமான ஒற்றைப்படையான கோஷமாக ஆக்கி உணர்ச்சிக் கொந்தளிப்புடன் சொன்னால் நம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இந்த ஊசி விஷயத்திலும் அதுவே நிகழ்கிறது. பகுத்தறிவு பேசி மதத்தை எதிர்ப்பவர்கள் கூட இந்த வகையான மாற்று நம்பிக்கைகளில் மத மூர்க்கத்தையே வெளிப்படுத்துகிறார்கள்

இத்தருணத்தில் அறிவியலைப்பற்றி மட்டும் பேசலாம் என்றும் நாமும் சதிகளைப் பற்றிப் பேச வேண்டாம் என்றும் படுகிறது.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–34

$
0
0

34. கைகள் அறிவது

கைகளில் மைந்தனை ஏந்தியபடி அகத்தளத்திற்குச் சென்ற விபுலையும் வித்யுதையும் உடல் நடுங்கிக்கொண்டிருந்தனர். உயிரற்றவைபோல ஆகிவிட்டிருந்த தன் கைகளில் இருந்து மைந்தன் நழுவி விழுந்துவிடுவான் என்று வித்யுதை அஞ்சினாள். தங்கள் அறைக்குச் சென்று வாயிலை மூடியதுமே கையிலிருந்த குழவியை மெத்தைமேல் வீசினாள் வித்யுதை.  அருவருத்ததுபோல் கைகளை உதறியபடி சுவரோடு சாய்ந்து நின்று மூச்சிரைத்தாள். திகைப்புடன் அதை நோக்கியபடி ஏதோ சொல்ல நாவெடுத்து அவளே எண்ணியிராத சொற்களை சொன்னாள் “இது ஏன் இத்தனை எடை கொண்டிருக்கிறது?”

“இந்திரனை வெல்லும் மைந்தன் இவன் என்கிறார்கள். ஆகவே அகவைக்கு மேல் வளர்ச்சி கொண்டிருக்கிறான்” என்றாள் விபுலை. சொற்கள் அவர்களின் உறைந்த உள்ளத்தை அசைவுகொள்ளச் செய்தன. “இவனை நம் கைகளால் கொல்ல வேண்டுமென்று அரசரின் ஆணை” என்றாள் வித்யுதை. விபுலை வெறித்த விழிகளுடன் நோக்க “கொன்று கறிசமைத்து அவர் உண்ணக்கொடுக்கவேண்டும் என்பது…” என்றாள். விபுலை மெல்ல முனகினாள். “பிள்ளைக்கறி…” என்றாள் வித்யுதை. “நம் குலங்களில் முன்பு அவ்வழக்கம் இருந்துள்ளது” என விபுலை முனகினாள். “என்ன?” என்றாள் வித்யுதை புருவம் சுளிக்க.

“முதன்மை எதிரியை கொன்றுவிட்டால் அவன் ஊனை உண்பது.” வித்யுதை “உண்மையாகவா?” என்றாள். “நான் கதைகளில் கேட்டதுதான். எதிரி நம்மையே  எண்ணிக்கொண்டிருந்தவன். ஆகவே நம்முடைய ஒரு பகுதியென்றே ஆனவன். அவனைக் கொல்கையில் நம்மில் ஒரு பகுதியும் இறக்கிறது. அந்த இழப்பிலிருந்து நாம் மீள்வது அரிது. ஆகவேதான் முதன்மை எதிரி இல்லாமலானதுமே எதிர்த்து வாழ்ந்தவர்கள் தனிமைகொண்டு நோயுற்று அழிகிறார்கள். ஆகவே எதிரியை உண்டு தன் உடலென்று ஆக்கிக்கொள்கிறார்கள்.” வித்யுதை பெருமூச்சுவிட்டாள். பின்னர் “அப்படியென்றால் இவன் இனிமேல் அவருடன் இருப்பான்” என்றாள். “இவன் இந்திரனை வெல்வது அவர் உடலில் ஏறித்தான் போலும்” என்றாள் விபுலை. அந்தத் தருணம்பொருந்தா நகையாடலுக்கு வித்யுதையும் சிரித்துவிட்டாள்.

அவர்கள் இயல்பாகி பீடங்களில் அமர்ந்து பேசத்தொடங்கினர். “இவனைக்  கொல்ல என்னால் இயலுமென்று எனக்குத் தோன்றவில்லை” என்றாள் வித்யுதை. “அரசர் ஆணையை நாம் மீறலாகாது. கொன்றே ஆகவேண்டும்” என்றாள் விபுலை. “ஆம்” என பெருமூச்சின் ஒலியில் வித்யுதை சொன்னாள். இருவரும் மீண்டும் திரளாத சொற்கள் உள்ளே குமிழிகளென அலைவுற கைகளை நெரித்தபடியும் உதடுகளை கடித்தபடியும் அமர்ந்திருந்தனர். வித்யுதையின் முகம் பெருவலி கொண்டதுபோல் இருப்பதை விபுலை கண்டாள். தன் முகமும் அவ்வாறுதான் இருக்கிறதுபோலும் என எண்ணிக்கொண்டாள்.

“இல்லை” என்று உரத்த குரலில் வித்யுதை கூவினாள். “என்னால் முடியாது. நான் இதைச் செய்யப்போவதில்லை. மாறாக குறுவாளால் என் கழுத்தை அறுத்துக்கொள்ளப் போகிறேன்.” விபுலை “அதை நீ செய்தாலும் அரசரின் ஆணையை மீறியவளாவாய். அது நீ நம் குலத்து மூதன்னையர் முன் நாகச்சுருளைத் தொட்டு அளித்த சொல்லுறுதியை மீறுவதுதான்” என்றாள். வித்யுதை மூச்செறிந்து முகம் வியர்க்க “கண்ணை மூடிக்கொண்டு அக்கத்தியை இதன் நெஞ்சில் ஆழ்த்தினால் என்ன?” என்றாள். “ஆம், அதுவே நாம் செய்யவேண்டியது” என்றாள் விபுலை. வித்யுதை தன் இடையில் இருந்த குறுவாளை எடுத்து தரையில் வீசி “இதோ கிடக்கிறது. உன்னால் முடியுமென்றால் சென்று குத்தி அதை கொல்!” என்றாள்.

இருவருக்கும் நடுவே உலோக ஒலியுடன் வந்து விழுந்து ஒளிர்ந்தது கத்தி. அதன் உறையிலிருந்து சற்றே வெளிவந்து நா காட்டியது. அறியாத எவரோ அதை பாதி உருவிவிட்டதுபோல. விபுலை அதை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்து கண்ணுக்குத் தெரியாத காலொன்றால் உதைக்கப்பட்டவள்போல் பதறி பின்னகர்ந்தாள்.  “எளிதல்ல” என்றாள். “நம் இருவராலும் எண்ணவும் இயலாது” என்று வித்யுதை சொன்னாள். “ஆம்” என்றாள் விபுலை. குழந்தையை நோக்கிக்கொண்டிருந்த வித்யுதை “ஏன் அதை அரசர் நம்மிடம் சொன்னார்? நாம் அதைச் செய்வோம் என ஏன் அவர் எண்ணினார்?” என்றாள். “அவர் செல்லும் பாதைக்கு நம்மை இழுத்துச் செல்கிறார். நீயும் நானும் அவருடன் சென்றுகொண்டிருக்கவில்லை என்று அவர் அறிவார்” என்றாள் விபுலை.

வித்யுதை “நாம் இருவரும் அன்னையர். நம் வயிறுதிறந்து மைந்தரை பெறாதிருக்கலாம். பெறாத மைந்தர் பல்லாயிரவரை முலையூட்டி மடி நிறைத்து தோள்சூடி வளர்த்திருக்கிறோம். நம்மைச் சூழ்ந்திருக்கும் தனிமையில் அம்மைந்தரின் சிரிப்புகளும் விழியொளியும் நிறைந்திருக்கின்றன. நம்மையன்றி பிறர் அதை அறிய முடியாது” என்றாள். “என் தலை வெடிக்கிறது. நினைவறிந்த நாள் முதல் கொழுநனுக்கு எதிராக ஒரு சொல் எண்ணலாகாது என்று பயிற்றுவிக்கப்பட்டவள் நான். இதைச் செய்யவில்லையென்றால் நான் செய்வதற்கு ஒன்றே உள்ளது. மீண்டும் சென்று அவர் காலில் விழுந்து என்னைக் கொல்லும்படி கோரவேண்டும்” என்றாள் விபுலை.

“அவர் உன்னை கொல்வார்” என்றாள் வித்யுதை. “பின் அப்பழிக்காக மேலும் உளம் இருண்டு நகைப்பார். நீ இருள்வெளியில் உழல்வாய்.” விபுலை விழிதூக்கி “வேண்டாம். அப்பழியையும் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டாம். மைந்தனை அளித்து அவர் குலம்வாழச் செய்யாத இழிமகளாகிய நான் அவருக்களிப்பது இப்பழியொன்றே என்றாக வேண்டாம்” என்றாள். அச்சொல்லைக் கேட்டதும் வித்யுதையும் உளம்விதும்பிவிட்டாள். மீண்டும் நெடுநேரம் அவர்கள் தங்களுக்குள் ஆழ்ந்திருந்தனர். மூச்சொலிக்க விழித்த வித்யுதை “என்ன செய்வது?” என்றபின்  “இதுவரை அனைத்திலும் நாம் செய்வது ஒன்றே. முதுசேடி மேகலையிடம் கேட்போம்” என்றாள்.

“ஆம்” என்று சொல்லி கதவைத் திறந்து வெளியே சென்று அங்கே முன்னரே வந்து பணிந்து நின்றிருந்த முதுசேடியை உள்ளே வரச்சொன்னாள். அவர்களின் சொற்களை எல்லாம் அவள் கேட்டிருந்தாள் என மேகலையின் விழிகள் காட்டின. அவள் வந்து கட்டிலில் கிடந்த மைந்தனைப் பார்த்து “கவர்ந்து வரப்பட்ட குருநகரியின் இளவரசன் இவன் அல்லவா?” என்றாள். “ஆம், இவனைக் கொல்லும்படி எங்களுக்கு அரசரின் ஆணை. அதை நாங்கள் மீற முடியாது என நீ அறிவாய். கொல்லும் துணிவும் எங்களுக்கு வரவில்லை” என்றாள் வித்யுதை. “ஆம். உங்களால் முடியாது, அரசி” என்றாள் மேகலை.  “நாங்கள் என்ன செய்வது?” என்றாள் விபுலை. “அரசர்கள் கொலை செய்ய வேண்டுமென்பதில்லை. அவர்கள் ஆணையிட்டாலே போதும், அது அவர்கள் செய்ததாகவே பொருள்படும். இக்குழவியைக் கொல்லும்படி எவருக்கேனும் ஆணையிடுங்கள். உங்கள் கணவரின் ஆணையை நிறைவேற்றியவர்களாவீர்கள்” என்றாள் மேகலை.

இருவரும் தங்களைக் கட்டியிருந்த சரடுகள் அனைத்திலிருந்தும் விடுபட்டவர்கள்போல் முகம் மலர்ந்தனர். “ஆம், அது நெறியென்றால் அதை செய்வோம்” என்றாள் வித்யுதை. “எவரிடம் ஆணையிடுவது?” என்றாள் விபுலை. “தங்கள் சேடி நான். எனக்கு ஆணையிடுங்கள். தங்களின் பொருட்டு இக்குழவியை நான் கொல்கிறேன்” என்றாள். “நன்று, அதை செய்” என்றாள் வித்யுதை. “ஆம்” என்றாள் விபுலை. “உன்னால் முடியுமா?” மேகலை “நான் பழிகொள்ளப்போவதில்லை, ஆகவே தயங்கமாட்டேன். அரசப்பணியில் அறப்பொறுப்பு ஏவலர்க்கில்லை” என்றாள். “நன்று, அது நிகழ்க!” என்று வித்யுதை சொன்னாள்.

மேகலை குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள். அவளுக்குப்பின் மெல்ல நடந்து சென்று அவள் விழிமறைவதைப் பார்த்தபின் நீள்மூச்சுவிட்டு உடல் தளர்ந்தாள் விபுலை. வித்யுதை கதவை மீண்டும் தாழிட்டாள்.  கால்கள் குளிர்ந்து வலுவிழக்க கைகளால் பீடத்தைப்பற்றியபடி சென்று மஞ்சத்தில் அமர்ந்த விபுலை  “உண்மையிலேயே அவளால் கொல்ல முடியுமா?” என்றாள். வித்யுதை “அது அவள் பணி. கொல்லவில்லை என்றால் அவள் பணிமுறை பிறழ்ந்தவள். நாம் ஆணையிட்டுவிட்டோம். ஆகவே நம் கடன் முடிந்தது. அதற்குப்பின் நாம் எண்ண வேண்டியதில்லை”  என்றாள். “அந்தப் பழி நம்மைச் சூழும்” என்றாள் விபுலை. “ஆம், அதை நாம் சுமக்கவேண்டும். அதுவே அரசரின் ஆணை” என்றாள் வித்யுதை.

“அரசர் கேட்டால் என்ன சொல்வது?” என்றாள் விபுலை. “மைந்தனை கொன்றுவிட்டோம் என்று சொல்வோம். அவ்வாணையை இடும்போதே நாம் அதை செய்துவிட்டோம் என்றுதான் பொருள்” என்றாள் வித்யுதை. இருவரும் ஒருவரையொருவர் நோக்கிக்கொண்டனர். “நான் சற்று படுக்க விரும்புகிறேன்” என்றபடி அதே மஞ்சத்திலேயே வித்யுதை படுத்துக்கொண்டாள். விபுலை கால்களை நீட்டிக்கொண்டு  “நீ உணவருந்தி வரலாம்” என்றாள்.  “என்னால் இயலாது” என்றாள் வித்யுதை. விபுலை “ஆம், இன்றிரவு என்னால் துயிலவும் முடியுமென்று தோன்றவில்லை” என்றாள்.  இருவரும் நீள்மூச்சுகள் விட்டுக்கொண்டனர்.

நெடுநேரத்திற்குப் பின் விபுலை “நீ உன் சொற்களால் அம்மைந்தனை கொல்லும்படி ஆணையிடவில்லையே?” என்றாள். “ஆம், அதை செய் என்றே  சொன்னேன். கொலை என்று நான் சொல்லவில்லை. அச்சொல் என் நாவுக்கு பேரெடை” என்றாள் வித்யுதை. “நானும் வெறுமனே ஆமென்றே சொன்னேன்” என்றாள் விபுலை.  வித்யுதை “நம்மால் சொல்லமுடியாது” என்றாள். விபுலை “அரைப்பழியே உனக்கு வரும், அதில் கால்பழியே எனக்கு, அல்லவா?” என்றாள். “நாம் ஏன் இதை பேசவேண்டும்?” என்று வித்யுதை  சொன்னாள்.  “இதை சொல்லிச் சொல்லி நாம் பெருக்கிக்கொள்ள வேண்டியதில்லை. இக்கணம் இதை மறந்துவிடுவோம் என்று முடிவெடுப்போம்.”

“ஆம்” என்றாள் விபுலை. இருவரும் விழிகளை மூடி படுத்திருந்தனர். மீண்டும் நெடுநேரத்திற்குப் பின் விபுலை  “அழகிய மைந்தன்! அவனில் பிற மைந்தரிடமில்லாத ஒன்று இருந்தது” என்றாள். “ஆம், அவன் எளிதில் இறக்கக்கூடியவன் அல்ல” என்றாள் வித்யுதை. விபுலை ஒருக்களித்து கைகளை நீட்டி அவளைத் தொட்டு “உண்மையாகவா? அவன் இறக்கப்போவதில்லையா?” என்றாள்.  “நீயே எண்ணிப்பார். இந்திரனை வெல்வான் என்று நிமித்திகர் குறியுரைத்த மைந்தன் அவன். இவ்வாறு ஒரு எளிய சேடியின் கையால் உயிர் துறக்கும் ஊழ் கொண்டவன் அல்ல.” விபுலை பரபரப்புடன் “அப்படியென்றால் அவன் உயிர் பிழைத்திருப்பானா?” என்றாள்.

“நாம் அதை ஒருபோதும் அறிய முயலக்கூடாது. நாம் ஆணையிட்டுவிட்டோம். நம் கடன் முடிந்தது” என்றாள் வித்யுதை. “ஆம்” என்றாள் விபுலை. மீண்டும் இருவரும் அமைதியாயினர். பின்னர் விபுலை மெல்ல விசும்பும் ஒலி கேட்டது. வித்யுதை விழிதிருப்பி நோக்க “பெண்ணென்று படைத்து கருவறை அமைக்காத வீண்தெய்வங்கள்…” என்றாள். வித்யுதை கலங்கிய விழிகளுடன் நோக்கியிருந்தாள். “நம் வயிறு திறந்திருந்தால் இந்த ஆணையை முகம் நோக்கி சொல்லியிருப்பாரா அரசர்? பிள்ளையில்லாதவள் என்றால் எப்பழிக்கும் அஞ்சாள் என எண்ணுகிறார்கள் அல்லவா?” என்றாள் விபுலை.  “நம்மைச் சூழ்ந்த ஒவ்வொருவராலும் நாம் நாள்தோறும் தீச்சொல்லிடப்படுகிறோம், தோழி” என்றாள் வித்யுதை.

அன்று பகல் முழுக்க அவர்கள் அவ்வறையில் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளாமலேயே அமர்ந்திருந்தனர். உச்சிப்பொழுது அணைந்ததும் அறைக்கு வந்த மேகலை  “தங்கள் ஆணை நிறைவேற்றப்பட்டுவிட்டது, அரசியரே. மைந்தனைக் கொன்று ஊன் சமைக்கப்பட்டு சித்தமாக உள்ளது” என்றாள். “அரசரிடம் சொல்!” என்றாள் வித்யுதை. மேகலை தலைவணங்கி வெளியே சென்றாள். இருவரும் மீண்டும் அமைதிக்கு திரும்பினர். “அது குழவியின் ஊன் அல்ல” என்றாள் வித்யுதை. “ஒருவேளை அவ்வாறு இருந்தால்?” என்று விபுலை கேட்டாள். “இருக்காது…” என்றாள் வித்யுதை. “ஆயிரத்தில் பல்லாயிரத்தில் ஒரு பங்கு வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது அல்லவா?” என்று விபுலை கேட்டாள். “ஊழுக்கு அவ்வாய்ப்பை அளிப்போம்” என்று வித்யுதை சொன்னாள்.

சற்றுநேரத்தில் அவர்களுக்கு அரசனிடமிருந்து அழைப்பு வந்தது. இருவரும் சென்று அவன் மஞ்சத்தின் அருகே நின்றனர்.  “என் ஆணை நிறைவேற்றப்பட்டுவிட்டதா?” என்று ஹுண்டன் கேட்டான்.  “ஆம் அரசே, நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஊனுணவு சித்தமாக உள்ளது” என்றாள் வித்யுதை. “என் உடல் தொட்டு ஆணையிடுங்கள்” என்றான் ஹுண்டன். இருவரும் அவன் உடலைத் தொட்டபடி “தங்கள் ஆணை எங்களால் நிறைவேற்றப்பட்டது” என்றார்கள். முகம் மலர்ந்த அவன்  “கொண்டுவருக!” என்றான்.

அவர்கள் வெளியே சென்றபோது வெள்ளிக்கலங்களில் ஊனுணவு வெம்மை பறக்க ஒருங்கியிருக்க மேகலையும் ஏழு சேடியரும் காத்து நின்றனர். “இந்த ஊன் அந்த மைந்தனுடையதா?” என்றாள் வித்யுதை. “இல்லை, இருக்க வாய்ப்பில்லை” என்று விபுலை சொன்னாள். “ஒரு வாய்ப்பு உள்ளது. கடலில் கைப்பிடி என” என்றாள் வித்யுதை. அவ்வெண்ணமே அவர்களின் முகங்களை கோணலாக்கி கண்களில் ஈரம் படரச்செய்தது. நடுங்கும் கைகளுடன் அவர்கள் பரிமாறிய ஊனுணவை ஹுண்டன் அள்ளி உண்டான். ஒரு கை எடுத்ததும் நிமிர்ந்து அவர்களின் கண்களை நோக்கினான். வெடித்து நகைத்துக்கொண்டு “ஆம், இது அவன் ஊனே” என்றபடி உண்டான்.

“நன்று, என்னால் தயக்கமில்லாது உண்ணமுடிகிறது. முற்றிருளை அடைந்துவிட்டேன். இனி ஒளியின் அழைப்பு அளிக்கும் இடர்கள் இல்லை” என்றபின் கற்தொடையில் அறைந்து வெறிசிவந்த கண்களுடன் நகைத்தான். “இனி இருள் நிறைந்த ஏழுலகங்களில் உங்கள் இருவரின் தோள்களையும் பற்றியபடி என்னால் நடக்க முடியும்” என்றான். நகைத்து நகைத்து அவன் விழிகளில் இருந்து நீர் வழியத்தொடங்கியது.

tigerமேகலை இளமைந்தனை தனக்கு அணுக்கமான ஓர் ஒற்றனிடம் அளித்து காட்டில் எங்கேனும் கொண்டு விட்டுவிடச் சொன்னாள். “காட்டிலா? விலங்குகளுக்கு உணவாகவா?” என்றான் அவன். “அவன் அவ்வாறு இறக்கமாட்டான். அவனுக்குப் பின்னால் ஊழின் பணியாட்கள் தொடர்கிறார்கள்” என்றாள் மேகலை. ஒற்றன் அக்குழவியை கொண்டுசென்று காட்டுக்குள் ஒரு முதுபலவின் பொந்தில் வைத்துவிட்டு மீண்டான். நாகநஞ்சின் வீச்சு குறைந்ததும் விழித்துக்கொண்ட நகுஷன் பசிகொண்டு வீரிட்டு அலறத்தொடங்கினான்.

அவ்வழுகையைக் கேட்டது காட்டில் வாழ்ந்த குரங்குக்குலம் ஒன்று. அதன் மூதன்னை எச்சரிக்கையுடன் அருகே வந்து மைந்தனை நோக்கியது. பின்னர் அருகே வந்து அவனை எடுத்து முலைகளுடன் அணைத்துக்கொண்டது. மைந்தன் அவனே முலைதேடி உறிஞ்சி உண்ணத்தொடங்கினான். இன்னொரு அன்னைக்குரங்கு அருகே வந்து “எனக்கும்…” என்றது. ஏழு அன்னையரின் பாலையும் ஆண்குரங்குகள் கொண்டுவந்து அளித்த கனிகளையும் தேனடையையும் உறிஞ்சிக் குடித்தபின் அவன் பசியடங்கி அவர்களை நோக்கி சிரித்தான். “நீ எங்களுடன் இரு” என்றாள் மூதன்னை.

குரங்குகளுடன் குரங்கு என அவன் காட்டில் வாழ்ந்தான். மரங்களுக்குமேல் தாவவும் கனிதேர்ந்து உண்ணவும் கிளைகளிலேயே உறங்கவும் கற்றுக்கொண்டான். அவனை காட்டில் சந்தித்த குரங்குக்குலத்தில் ஒரு குரங்கு “முன்பு எங்கள் குலத்துடன் ஒருவன் இதைப்போல வாழ்ந்தான்” என்றது. “அவன் பின்னர் காட்டில் ஒரு மரத்தடியில் அமர்ந்து மட்கி மண்ணில் மறைந்தான்.” குரங்குகளுடன் செல்கையில் அவன் காட்டுக்குள் அமைந்த சோலைசூழ் சிறுகுடில் ஒன்றை கண்டான். “அங்கு ஓர் அழகிய இளம்பெண் வாழ்கிறாள். எங்கள் தந்தையர் காலம் முதலே அங்கிருக்கிறாள். அந்த மலைப்பாறைபோலவே அவளும். மாறுவதே இல்லை” என்றது முதுகுரங்கு.

அவன் அச்சோலையை அணுகி மரக்கிளையில் ஒளிந்து அமர்ந்து அவளை நோக்கினான். அவள் ஒரு மலர்மரத்தடியில் தனியாக அமர்ந்து தனக்குள் சிரித்துக்கொண்டு மலர்மொக்குகளைக் கொண்டு நாற்களமாடிக்கொண்டிருந்தாள். அவள் பற்களின் ஒளியை அவன் விடாய் அகலா உள்ளத்துடன் நோக்கிக்கொண்டிருந்தான்.  உள்ளே சென்று அவளிடம் பேசவேண்டுமென விழைந்தான். “அவர்கள் மானுடர். நம் மொழி அவர்களுக்கு புரிவதில்லை. அவர்கள் போடும் ஓசை நமக்கும் பயனற்றது” என்றாள் குரங்கன்னை. “அவள் அழகி” என்றான் நகுஷன். “ஆம், உன் விழிகளுக்கு அவள்தான் அழகியெனத் தெரிவாள். நம் குலத்தில் நீ மணம் கொள்ளமாட்டாய்” என்றாள் குரங்கன்னை.

அன்னையின் ஆணைப்படி மறுநாள் மூன்று குரங்குகள் காட்டுக்குள் ஊடுருவிச்சென்றன. அங்கே ஒரு தவக்குடிலில் முனிவர் ஒருவர் மாணவர்களுக்கு சொல்புகட்டுவதைக் கண்டபின் திரும்பிவந்து அன்னையிடம் இடமுரைத்தன. அன்னை நகுஷனிடம் வந்து “உன்னை இங்குள்ள முனிவர்குடிலுக்கு அனுப்ப முடிவுசெய்துள்ளோம், செல்க!” என்றாள். “நானா? நான் எதற்காக அங்கே செல்லவேண்டும்?” என்றான் நகுஷன் திகைத்து. “நீ விழைபவள் மானுடப்பெண். அவள் உன்னை விழையவேண்டும் என்றால் நீ அவள் சொல் பழகவேண்டும். அவளைப்போல் ஆடையணிந்து அணிபுனைந்து அவள் உலகில் நுழையவேண்டும்” என்றாள் அன்னை. “இல்லை, நான் விழையவில்லை” என அவன் அன்னையை தழுவிக்கொண்டான். “நீ சென்றாகவேண்டும்… இது என் ஆணை!” என்ற அன்னை அவன் தழுவலை விடுவித்து விலகிச்சென்றாள்.

குரங்குகள் நகுஷனைக் கொண்டுவந்து அந்த குருநிலையின் வாயிலில் இறக்கிவிட்டுச் சென்றன. உள்ளே அப்போது மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். உணவைக் கண்டதும் நகுஷன் பாய்ந்து சென்று பிற மாணவர்களை உந்தியும் பற்களைக்காட்டிச் சீறியும் நகங்களால் கீறியும் விரட்டிவிட்டு அள்ளி வெறியுடன் உண்ணலானான். மாணவர்களின் குரல்கேட்டு குடிலில் இருந்து வெளியே வந்த வசிட்டர் அவனைக் கண்டதும் முதலில் திகைத்தார். அப்பால் நோக்கிநின்றிருந்த குரங்குகளைக் கண்டதும் புரிந்துகொண்டு அவனருகே வந்தார். அவனிடம் குரங்கு மொழியில் “நீ யார்?” என்றார். “நான் மனிதமொழியை கற்கவேண்டும் என என் அன்னை சொன்னாள்… அதோ அவள்” என்று அவன் சொன்னான்.

வசிட்டர் அவனை தன் கல்விநிலையில் சேர்த்துக்கொண்டார். அவனுக்கு மானுடச் சொல் பயிற்றுவித்தார். முதலில் குரங்கன் என அவனை வெறுத்த பிற மாணவர்கள் அவன் கற்றுக்கொண்ட விரைவைக்கண்டு திகைப்படைந்தனர். பன்னிரு நாட்களில் அவன் மானுடமொழி பேசலானான். ஒரு மாதத்தில் நூல் நவிலத் தொடங்கினான். அவன் கைத்திறனும் விழிக்கூர்மையும் கண்டு இயல்பால் அவன் ஒரு ஷத்ரியன் என வசிட்டர் முடிவெடுத்தார். அவனுக்கு வேலும் வாளும் வில்லும் கற்பிக்க தன் மாணவர்களில் ஷத்ரியர்களாகிய இருவரை ஏற்படுத்தினார். “அவன் கற்றுக்கொள்ளவில்லை, வெறுமனே நினைவுகூர்கிறான். நாங்கள் அறிந்தவைக்கு ஒருபடி மேல் என்றே எப்போதும் சென்று நிற்கிறான்” என்றனர் அவர்கள்.

வசிட்ட கல்விநிலையின் அத்தனை மாணவர்களும் அவனுக்கு அணுக்கர்களாயினர். அவர்களை ஒன்றெனத் திரட்டவும் மேல்கீழ் வகுக்கவும் அவனால் எளிதில் இயன்றது. ஆணையிடும் குரலை அவன் குருதியிலேயே கொண்டிருந்தான். வானில் குரங்குகளும் மண்ணில் மாணவர்களுமாக அவன் ஒரு சிறுபடையை வைத்திருக்கிறான் என்றனர் குருநிலையின் ஆசிரியர்கள். “அவன் படைநடத்தி நிலம்வென்று முடிசூடுவான், ஐயமே இல்லை. ஈரிலையே சொல்லிவிடும், விதை ஏதென்று” என்றார் வசிட்டர்.

பாஞ்சாலத்து அரசன் தன் அமைச்சருடன் வந்து வசிட்டருக்கு குருவடி பணிவுச் சடங்கு முடித்து திரும்பிச்சென்ற மறுநாள் ஊர்ச்சந்தைக்கு பொருள்வாங்கச் சென்ற குருநிலையின் மாணவர்களைத் தொடர்ந்து வழிநோக்கி வந்த ஒரு கொள்ளையர் கூட்டம் கொலைப்படைக்கருவிகளுடன் காட்டுக்குள் ஊடுருவி வசிட்டகுருநிலை மேல் தாக்குதல் நடத்தியது. குரங்குகளும் குருநிலை மாணவர்களுமாக அவர்களைத் தோற்கடித்து சிறைப்பிடித்து கைபிணைத்துக்கட்டி இழுத்துச்சென்று சந்தை வணிகர்களுக்கு அடிமைகளாக விற்று அச்செல்வத்தை சாலைபேணும் அறநிலைகளுக்கு அளித்துவிட்டு திரும்பிவந்தனர்.

ஆயினும் நகுஷன் தனித்தவனாகவும் இருந்தான். நண்பர்களுடனும் குரங்குகளுடனும் ஆடிமகிழ்ந்து களைத்து அமர்கையில் அள்ளி விலக்கப்பட்ட தனிமை அவன்மேல் வந்து படியும். அதை அவர்களும் உணர்ந்திருந்தனர் என்பதனால் அப்போது ஓசையின்றி விலகிச்செல்ல வேண்டுமென்றும் அறிந்திருந்தார்கள். அத்தனிமையை அவனே கலைத்து மீண்டு எழும்போது புன்னகையுடன் அருகிருக்கும் குரங்கிடமோ மானுடனிடமோ “நன்று, நான் இங்கிருக்கிறேன்” என்பான்.

அதையும் கடந்த ஆழ்ந்த தனிமை அவனில் அமைகையில் கிளம்பிச்சென்று காட்டில் அமைந்த அந்த சோலைக்குடிலின் எல்லைக்கு அப்பால் நின்றிருக்கும் மாபெரும் சாலமரத்தின் இலைத்தழைப்புக்குள் அமர்ந்து அங்கே விளையாடிக்கொண்டிருக்கும் கன்னியை நோக்கிக்கொண்டிருப்பான். இளமைந்தனாக அவன் காணத்தொடங்கியபோது இருந்ததுபோலவே அவள் இருந்தாள். ஒவ்வொரு நாள் காலையிலும் புதிதாகப் பிறந்தெழுவதுபோல. “ஒவ்வொருநாளும் மலர்கள் மலர்ந்து மாலையில் உதிர்வதைக் கண்டபின்னரும் எப்படி அவள் மாறாமலிருக்கிறாள்?” என்று அவன் வசிட்டரிடம் கேட்டான். “ஒவ்வொரு மலரும் வாடாமலிருக்கும் அருள்கொண்டே வருகின்றன. ஏதோ வடிவில் இவ்வுலகு அதைத் தொடுகிறது. அக்கணமே அவை காலத்தால் பற்றப்படுகின்றன” என்றார் வசிட்டர்.

ஒவ்வொருமுறையும் அங்கு சென்று முழுநாளும் நோக்கியிருந்தபின்பும் அவன் ஆசிரியரிடம் திரும்பாமல் காட்டின் எல்லையில் இருந்த ஒரு பெரிய மரப்பொந்துக்கு சென்றான். பெரும்பன்றிபோல பலநூறு சிறுமுலைகள் தொங்க குறுங்கிளை விரித்து நின்ற அப்பலாமரத்தின் பொந்துக்குள் சிறுவன் ஒருவன் படுக்குமளவே இடமிருந்தது. அங்கே இலைகளைத் திரட்டி அடுக்கி மெத்தை செய்து வைத்திருந்தான். மலைப்பாம்புபோல அவன் அதற்குள் சுருண்டு இறுகிப்படுத்து கண்களை மூடிக்கொள்வான். ஓரிருநாட்கள்கூட உணவும் நீருமின்றி உறக்கமும் விழிப்புமின்றி அவன் அங்கே கிடப்பதுண்டு. அவன் அங்கே கிடப்பதை அவன் நண்பர்களும் குரங்குகளும் அறிவர் என்பதனால் எவரும் அவனை தேடுவதில்லை. பின்னர் எழுந்து காய்ச்சல் படர்ந்த விழிகளுடன் திரும்பிச்செல்வான். செல்லும்வழியில் உள்ள சுனையில் இறங்கி மூழ்கி நீராடி எழும்போது  மீண்டுவந்திருப்பான்.

அங்கே படுத்துக்கொண்டால் மட்டும் அவனுக்கு விந்தையான கனவுகள் எழுந்தன. பேருவகையில் வாய்விரிந்து பற்கள் மின்ன கண்கள் துறுக்கும் ஒரு முகம் அண்மையில் எனத் தெரிந்தது. சிரிப்பு கலந்த குரல். வலுவான பெரிய கைகள் அவனைத் தூக்கி சுழற்றுகின்றன. மென்சேக்கையில் படர்ந்த உடல்வெம்மையும் வியர்வை மணமும். மயிர்படர்ந்த மார்புக்குரியது அந்த மணம். பிறிதொன்று முதுமை மணம்கொண்ட  முலைமென்தசை. காதில் மட்டுமே ஒலிக்கும் அவள் குரல். சாளரங்களின் ஒளி வெள்ளிப்பட்டைகளாக விழுந்துகிடக்கும் அரண்மனை  இடைநாழி. சிலம்பொலிக்கும் கால்கள். உலைந்து நெளியும் ஆடைநுனிகள். பெண்குரல்கள், சிரிப்புகள்.

பிறகொரு படுக்கை. அதில் உடலுறைந்துகிடக்கும் பேருருவனின் கரிய முகம். அவன் மீசையின் நாகவால் நெளிவு. இரு பெண்கள். இருவரும் அவனை நோக்கி பேசிக்கொண்டிருந்தனர். அழுது தேறி மீண்டும் பேசினர். ஒருத்தி குறுவாளை எடுத்தபோது அவன் நெஞ்சு அதிர்ந்தது. அவள் அதை வீசிய ஒலியை அவன் மணியோசை என கேட்டான். அவனை ஒருத்தி கொண்டுசெல்கிறாள். அவன் காதில் “இந்திரனை வெல்வாயா? இந்திரனையேவா?” என அவள் கேட்டாள். அடுமனையின் எரிதழல். அவன் ஒரு வெள்ளாட்டை பார்த்தான். இளமையானது. அதன் சுண்ணக்கல் போன்ற கண்கள். அது அவனை குனிந்து முகர்ந்தது. பெருமூச்சு அவன்மேல் பட்டது. “சென்றுவருக!” என்றது. அவன் அதை நோக்கிக்கொண்டிருந்தான். “இப்படித்தான் எப்போதும். அந்தத் துலா இரக்கமற்றது.”

அவன் கைகால்களை உதைத்து மெல்ல நெளிந்தான். “நஞ்சு நெகிழ்கிறது, விரைவில்.” எவர் குரல் அது? அவனை கைகள் தூக்கியபோது அந்த வெள்ளாட்டின் ஓசையை கேட்டான். அதை எவரோ பிடிக்கிறார்கள். பின்னர் துருத்திமூச்சு என ஓர் ஒலி. குமிழிவெடிக்கும் ஒலி.  குருதிமணம். அல்லது முலைப்பால் மணம். அவனுக்கு குளிரத்தொடங்கியது. அவன்மேல் எறும்புகள் ஊர்ந்தன. அவன் அழத்தொடங்கினான். அந்த வெள்ளாடு இறங்கி வந்தது. குனிந்து அவனை நோக்கியது. “நானேதான்” என்றது. அவன் அதை நோக்கி கைநீட்டினான். அது அவனை அள்ளி முலைகளில் சேர்த்துக்கொண்டது. ஆட்டின் மொழியில் “அழாதே” என்றது. அக்குருதியின் மணம். அவன் அதை ஆவலுடன் அள்ளிக்கவ்வி சுவைக்கலானான்.

அவன் ஓசைகேட்டு விழித்தபோது மூங்கில்பாடையில் ஓர் உடலுடன் எண்மர் அந்த மரத்தடி நோக்கி வந்தனர். முன்னால் ஒருவன் சங்கு ஊதியபடி நடந்தான். இருவர் பறையொலிக்க தொடர்ந்தனர். பிறர் தலைகுனிந்து நடந்தனர். பாடை சுமந்தவர்கள் அதை அந்த மரத்தடியில் வைத்தனர். பாடையில் இருந்த உடலில் கண்கள் அசைவதை அவன் கண்டான். “உயிர் எஞ்சியிருக்கிறது” என்று ஒருவன் சொன்னான். முதியவர் ஒருவர் “அவர் இறுதிநினைவில் இட்ட ஆணை. மைந்தனாக உன்னை அது ஆள்கிறது. பிறிதேதும் நீ செய்வதற்கில்லை” என்றார். இன்னொருவன் “நாம் என்ன செய்வது?” என்றான். “இறந்துவிட்டாரென்றே கொண்டு அனைத்துச் சடங்குகளையும் செய்து ஊர்மீள்வோம். இது இருக்கப்பிண்டம் என்னும் தொல்சடங்கு. முன்னரும் பலமுறை நம் குடியில் இது நிகழ்ந்துள்ளது” என்றார் முதியவர்.

அவர்கள் அந்த உடலில் வாய்க்கரிசி இட்டு, காலடியில் மலர்சொரிந்து சுற்றிவந்து வணங்கினர். மைந்தர்கள் இருவரும் தோள்குலுங்க அழ பிறர் அவர்களை அணைத்து ஆறுதல்சொல்லி நடத்திச்சென்றனர். தெற்குநோக்கி மும்முறை சங்கை முழக்கியபின் அவர்கள் திரும்பிச்சென்றனர். மைந்தன் ஒருவன் திரும்பி நோக்கி கைநீட்டி அழுதான். முதியவர் “திரும்பிநோக்கலாகாது” என அவனை கைபற்றி தோள்தள்ளி கொண்டுசென்றார். செல்லும் வழியில் ஒருவன் கால்தளர்ந்து விழப்போனான். இருவர் அவனை பற்றிக்கொண்டனர். அவர்கள் காட்டைவிட்டு அகன்றதும் மீண்டும் மும்முறை சங்கு முழங்கியது.

நகுஷன் இறங்கி கீழே வந்து எச்சரிக்கையுடன் அருகே சென்று குனிந்து அந்த உடலை நோக்கினான். அதன் மூச்சு அவ்வப்போதுமட்டும் எழுந்தது. விழிகள் இமைக்குள் உருண்டுகொண்டே இருந்தன. அவன் அவ்வுடலை தொட்டு உலுக்கினான். மெல்லிய முனகலுடன் வாய் திறந்து உள்நாக்கு தவளைவாய் என தவித்தது. அவன் ஓடிச்சென்று இலைகோட்டி சுனைநீர் அள்ளி வந்து அசைந்த  வாயில் விட்டான். விடாயணையும் தண்மையை உணர்ந்த தலை சற்று மேலெழுந்தது. நீரை துழாவித்துழாவி உண்டது வாய். விழிகள் தொடப்பட்ட புழு என அசைந்து அசைந்து பின்பு விரிசலிட்டன. அவன் உருவை நிழலென அறிந்து திடுக்கிட்டு திறந்தன.

“யார்?” என்றார் அவர். “என் பெயர் கானிகன்… இங்கே வசிட்டர்குருநிலையின் மாணவன்” என்றான் நகுஷன். அவருடைய பழுத்துச்சிவந்த விழிகள் அவனை நோக்கி தவித்தன. பின் நோக்கு நிலைக்க நிலம் வளைந்து அவரை மேலே உந்தியதுபோல உடல் எழுந்தது. கைகள் மேலெழுந்து அவன் கைகளை தொட்டன. “இளவரசே!” என்று காற்றென அவர் கூவினார். மூச்சும் சொல்லும் ஒன்றாக பீரிட்டுத் தெறித்தன. “நீங்கள் குருநகரியின் அரசர் ஆயுஸின் மைந்தர். உங்கள் பெயர் நகுஷன்.” எஞ்சிய ஆற்றலும் அழிய மெல்ல மண்ணில் படிந்து கைகள் தளர்ந்தன. இமைகள் எடைகொண்டு அழுந்தின. வாய் நிலைத்தது. மூச்சு எழவில்லை என்பதை சற்றுநேரம் கழித்து அவன் உணர்ந்தான்.

தொடர்புடைய பதிவுகள்

அறிவியல் -கடிதம்

$
0
0

unnamed

 

அன்பின் ஜெ,

ரூபெல்லா தடுப்பூசி பற்றிய கடிதத்துக்கான பதிலில், இரண்டு முக்கியமான வாக்கியங்களை எழுதியிருந்தீர்கள்:

1.தமிழ்ச் சமூகம் அடிப்படை அறிவியலையே அறியாதது. அறிவியல் மனநிலை என்பது இங்கே அறிவியல் கல்வி கற்றவர்களிடம் கூட இல்லை

2.இன்னமும் நாட்டுமருத்துவம் போலிமருத்துவம் இங்கே ஓங்கியிருக்கிறது.

நான் மருத்துவத்துறை சார்ந்தவன் இல்லை. அதனால், இது பற்றிக் கொஞ்சம் விக்கியில்தான் தேடினேன்.

கீழ்க்கண்ட ஒரு விக்கி பக்கம் கிடைத்தது.

https://en.wikipedia.org/wiki/Indian_states_ranking_by_vaccination_coverage

Indian states ranking by vaccination coverage – Wikipedia

en.wikipedia.org

This is a list of the States of India ranked in order of percentage of children between 12–23 months of age who received all recommended vaccines.

சீக்கிம் மணிப்பூருக்கு அடுத்த படியாக  86.7% தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முதல் பெரும் மாநிலம் தமிழ் நாடுதான்.  கேரளம் 79.7%  குஜராத் 55%, ஆந்திரம் 49.6%, உத்திரப்பிரதேசம் 29.9% என மாநிலங்களின் திறன் பட்டியலிடப்பட்டுளது. .

உங்களது இரண்டாவது வாக்கியத்தை இப்பிண்ணணியில் வைத்துப் பார்த்தால், குஜராத்தை / ஆந்திரத்தை என்ன சொல்வது?

http://rchiips.org/NFHS/pdf/NFHS4/TN_FactSheet.pdf

State Fact Sheet Tamil Nadu – rchiips.org

rchiips.org

1 . Introduction . The National Family Health Survey 201516 (NFHS- -4), the fourth in the NFHS series, provides information on population, health and nutrition for …

தமிழகத்தின் புள்ளி விவரங்களை வைத்து, மருத்துவர் ஒருவர், தமிழகம் முண்ணனியில் உள்ள மாநிலம் என்றேதான் சொல்கிறார்.

இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தியின் ஒரு புகழ் பெற்ற பஞ்ச் டயலாக் ஒன்று உண்டு:

”கடவுளை நாங்கள் நம்புகிறோம். மற்றவர்கள் தயவு செய்து புள்ளி விவரங்கள் தாருங்கள்”

இந்த ரூபெல்லா விஷயத்தில், சமூக சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு டாக்டர் இது பற்றிய விவாதஙக்ளை எழுப்பினார். அதனால், பெரும் சலசலப்புகள் எழுந்தன.  என்னைப் போன்ற சிலரும் அவர் சொல்வதன் காரணம் என்ன எனப் புரிந்து கொள்ள முயன்றோம் – கேள்விகளுக்கு, அருண் என்னும் குழந்தை மருத்துவர் பொறுமையாகப் பதில் சொன்னார்.

ஆனால், பொது வெளியில், இதுபற்றி கேள்விகள் கேட்பதே மடத்தனம் என கருத்துக்கள் உலவுகின்றன.

அவர்கள் அனைவருக்கும், டாக்டர் ஹெக்டேயின் இந்த விடியோவைக் காணிக்கையாக்குகிறேன். பேச்சு நீரிழிவில் துவங்கினாலும், மருத்துவத் துறையின் வருங்காலப் போக்கையும் பேசுகிறார். முக்கியமான ஒன்று என நான் நினைக்கிறேன்.

அவரின் பேச்சு கூட மருந்து நிறுவனங்களின் சதியைப் பற்றிப் பேசுகிறது. சதியெனில், ரூம் போட்டு உலகை அழிக்க யாரும் திட்டமிடுவதில்லை. அந்தத் தொழிலைச் செய்ய அவர்கள் பெரும் மார்க்கெட்டிங் ப்ளாண் போடுகிறார்கள். அவர்களின் தொழில் மக்களுக்குப் பலனளிககாது எனத் தெரிந்த பின்னும் செய்கிறார்கள் என்பது நிஜம். அது சதியல்ல – பேராசை. கொட்டும் வரை பணம் கொட்டட்டுமே என்பதுதான்.

 

பாலசுப்ரமணியம்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விசா, உலகம் யாவையும்…

$
0
0

gariகாரி டேவிஸ்

 

அன்புள்ள ஜெயமோகன்,

அ.முத்துலிங்கம் அவர்களின் ‘விசா’ சிறுகதையை படித்தேன். படித்து முடித்ததிலிருந்து மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கதை.

‘விசா’ மெல்லிய அங்கதம் கூடிய நடையுடன் துவங்குகிறது. கோணேஸ்வரன் என்ற முதிய கணித ஆசிரியர் ஒரு இயற்கை உபாசகர். குறிப்பாக ஒரு வண்ணத்துப்பூச்சி ஆர்வலர். எட்டு வயதில் வண்ணத்துப்பூச்சியை வலையில் பிடிக்க கற்றுக்கொண்டு, இருபது வயதில் ஆயிரம் வகைகளை சேகரித்தவர். கல்யாணம் முடிந்து முதலிரவில் மனைவி யாமினியின் சேலை வண்ணங்களை பார்த்து பூச்சிவகை ஞாபகத்தில் எழ இரவு மூன்று மணி வரை ஆராய்ச்சியில் மூழ்கிவிடுகிறார். அவர் எடுத்துக் கொண்டிருக்கும் கணித வகுப்புக்குள் “நர்த்தனம்” ஆடும் வண்ணத்துப்பூச்சியை தொடர்ந்து, சாக்பீஸும் கையுமாக, வகுப்பை அப்படியே விட்டுவிட்டு, சென்றுவிடுகிறார்.

கோணேஸ்வரன் மூன்று முறை விண்ணப்பித்து அமெரிக்கா செல்வதற்கு விசா பெறுகிறார். பத்து வருடங்களுக்கு முன் விண்ணப்பித்திருந்த பொழுது மறுக்கப்பட்டது. அவர் செல்வது வண்ணத்துப்பூச்சிகளை பார்க்க, என்ற விளக்கத்தை நம்ப மறுக்கிறார்கள். இரண்டாவது முறை சம்பிரதாயமான காரணங்களை சொல்லியும் பெற முடியவில்லை. எப்படியாவது பெற வேண்டுமென்று மூன்றாவது முறை உண்மையை சொல்லியே விண்ணப்பித்து பெற்றுவிடுகிறார். அலாஸ்காவிலிருந்து மெக்ஸிகோ வரை, குளிர்காலங்களை கடப்பதற்காக பயணம் செய்யும் ‘மொனார்க்’ பட்டாம்பூச்சியை கலிஃபோர்னியாவில் பார்க்க ஒரு வழியாக செல்கிறார் கோணேஸ்வரன். ”நந்தனார் சிதம்பரதரிசனத்துக்கு தவித்ததுபோல” பாடுபட்டு கடைசியில் “ஆதர்ஸம் கைகூடுகிறது”.

அமெரிக்காவில் சுங்க அதிகாரிகள் கோணேஸ்வரன் வைத்திருக்கும் அரிய வண்ணத்துப்பூச்சி specimen ஒன்றை குப்பையில் போட்டுவிடுகிறார்கள். நெஞ்சு பதைபதைக்கிறது. ஆனால் வெளியே வந்ததும் “தன் மனோரதம் ஈடேறப்போகிறதென்ற மகிழ்ச்சியில்” திளைக்கிறார் கோணேஸ்வரன். அவரை வரவேற்க வந்த தூரத்து சொந்தம் கணேசனுக்கு அவரின் பயண நோக்கம் மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது. இவர் கிறுக்கா மேதையா? என்று எண்ணவைக்கிறது.

அடுத்த நாள் மொனார்க் வண்ணத்துபூச்சியை பார்க்க செல்கிறார்கள். காடு முழுவதும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மொனார்க் வண்ணத்துபூச்சிகள் இலைகளையும், மரங்களையும் மறைத்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றன. காட்சியை பார்த்து பூரித்துப் போகிறார் கோணேஸ்வரன். அவ்வளவு இன்பத்தை தாங்க முடியாதவராக, பரவசம் ததும்புகிறார். நடுங்கும் அவரை கையை பிடித்துக் கொண்டு போய் மர இருக்கையில் அமரவைக்கிறான் கணேசன்.

கணேசனிடம் விம்மியபடியே பேசிச்செல்கிறார், “தம்பி! இது ஒரு புண்ணியபூமி. இதில் காலணியுடன் நிற்கக்கூட எனக்கு கூசுகிறது. பத்தாயிரம் மைல் நான் பறந்து வந்தது இதை பார்க்க அல்லவோ…இதற்காக எத்தனை கஷ்ட்டப்பட்டேன், எவ்வளவு அவமானம்… இந்த விசாவுக்கு எவ்வளவு பாடு படுத்திவிட்டார்கள். எவ்வளவு கேள்விகள்…? இந்த வண்ணத்துப்பூச்சிகள் அலாஸ்காவிலிருந்து மெக்ஸிகோ வரை பறக்கின்றனவே! இவைக்கெல்லாம் விசா யார் கேட்கிறார்கள்? இவைக்குள்ள சுதந்திரம்கூட இந்த மனிதனுக்கு கிடையாதா? வாஸ்கொட காமாவுக்கும் கொலம்பஸுக்கும் யார் விசா கொடுத்தார்கள்? அவர் உலகை விரித்தது இப்படி நாட்டுக்கு நாடு இரும்பு வேலி போடுவதற்கா? இயற்கை அளித்த இந்த மகா அற்புதத்தை பார்பதற்கு விசா கேட்பது எவ்வளவு அநியாயம்? இமயமலையும், சகாரா பாலைவனமும், நயாகரா வீழ்ச்சியும், அமேசன் காடுகளும் உலகத்து சொத்தல்லவா?”

 

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்

கணேசன் வாங்கி வந்த குளிர்பானத்தை ஒரு மிடறு குடித்துவிட்டு, கோணேஸ்வரன், “தம்பி, 180 நாடுகளுக்கும் போக விசா வேண்டும், ஆனால் ஒரு இடத்துக்கு மட்டும் விசா தேவையில்லை. அது என்ன தெரியுமா?” என்று கேட்கிறார். கைகளை மேலே தூக்கிக்காட்டி “அங்கே போவதற்கு மட்டும் விசா தேவையில்லை. அதுவரையில் பெரிய ஆறுதல்.” என்கிறார். அவருடைய வண்ணத்துப்பூச்சி சேகரிப்புக்கு ஒரு மொனார்க்கை பிடிக்கவில்லையே என்கிற கணேசனிடம் “உலகத்தில் இருக்கும் எல்லா வண்ணத்துப்பூச்சிகளுக்கும் இது தான் அரசன். கோவிலிலே வந்து இந்தக் காரியத்தை செய்ய முடியுமா? இதை எப்படி பிடிப்பேன்?” என்கிறார். விருப்பமில்லாமல் ஆனால் நேரம் ஆகிவிடுவதனால் கோணேஸ்வரன் கணேசனுடன் அங்கிருந்து விலகுகிறார். அப்பொழுது ஒரு மொனார்க் வண்ணத்துப்பூச்சி அவரை வருடிச்செல்கிரது. பூரித்துப்போகிறார். காரில் ஏறிக்கொள்கிறார். அவருக்கு நந்தனாரின் ஞாபகம் வருகிறது. அந்த பக்தியை அவரும் உணர்ந்து தேகம் நடுங்குகிறார். கணேசன் காரை ஓட்டிக்கொண்டிருக்கையிலேயே விசா தேவையில்லாத ஓர் உலகத்துக்கு சென்றுவிடுகிறார்.

எல்லைகளில்லா உலகத்தை பற்றி ஒரு தனி மனிதனின் கோணத்தை சொல்லும்பொழுது ‘விசா’ அறம் வரிசையில் வந்த ‘உலகம் யாவையும்’ கதையை நினைவுறுத்தியது. அதையும் திரும்ப படித்தேன்.

நடையளவில் வேறுபாடுகள் பல இருந்தாலும், ஒரே விழுமியத்தின் தனிமனிதப்பார்வையை விசா முன்வைப்பதாகவும், அதே விழுமியத்தின் உலகளாவிய பார்வையை உலகம் யாவையும் சொல்லுவதாகவும் பார்க்கிறேன்.

‘உலகம் யாவையும்’ கதையில் டாக்டர் சாமி கார்ல் சகனின் புரோக்காஸ் பிரெய்ன் பற்றிச்சொல்லும் பொழுது “ராத்திரியில் உலாவும் கிறுக்கர்கள் இல்லாவிட்டால் அறிவியலே இல்லை.”, என்கிறார். அ.முத்துலிங்கத்தின் கோணேஸ்வரனும் அந்த வகையில் ஒரு கிறுக்கனே. காரி டேவிஸ்ஸும் ஆசிரியரிடம் “நீ சிரிக்கிறாய். இதை கிறுக்குத்தனம் என்கிறாய். நான் உலகின் இருநூற்று ஐம்பது நாடுகளில் பல்லாயிரம் பேர் இந்தச் சிரிப்பை சிரிப்பதை கவனித்திருக்கிறேன்… நூறுவருடங்களுக்கு முன் கறுப்பனும் வெள்ளையனும் சமம் என்று சொன்னபோது இப்படித்தான் சிரித்திருப்பார்கள்.”, என்கிறார். ஒரே விதமான கிறுக்குத்தனத்தின் உந்துதலால்தான், காரி டேவிஸ்ஸும், கோணேஸ்வரனும் இட்டுச்செல்லப்படுகிறார்கள். காரி டேவிஸ்ஸை கொள்கையளவில் பின்தொடரும், அவரை ஒரு ஆதர்ச ஆளுமையாக மதிப்பிடும் கோணேஸ்வரனை நம்மால் கற்பனை செய்ய முடிகிறது.

காரி டேவிஸ்ஸின் தனிச் சிறைவாச பகுதியில், எல்லைகளில்லா உலகத்தை வேதாந்தம் வழியாக அவர் தனக்கென உருவகித்துக் கொள்ளுகிறார். பல தேசங்கள் அவரின் உலகக் குடிமை சிந்தனையை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், புற உலகால் அது நடைமுறைக்கு ஒத்துவராத இலட்சியவாத நோக்காகவே பார்க்கப்பட்டாலும், தென்னாப்ரிக்காவின் சிறையில் அவர் அந்த எல்லையில்லா வாழ்க்கையை அருவமாக, பரிபூர்ணமாக வாழ்ந்துவிடுகிறார். சிறையை விட்டு வெளியே வந்த பிறகு, புறஉலகம் மூச்சடைக்கும் அளவுக்கு சிறியதென்றுணரும் அளவுக்கு, அவர் சிறையில் சுதந்திரத்தை உணருகிறார். ஆம், அவர் சிறையினுள், கண்டங்களை தாவித்தாவி கடக்கும் ஒரு மொனார்க் வண்ணத்துப்பூச்சியாகவே வாழ்கிறார்.

– விஜய்

 

 

 

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16823 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>