Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16718 articles
Browse latest View live

விருதுகள் மதிப்பீடுகள்

$
0
0

manusshi

இந்த வருடத்தின் யுவ புரகாஸ்கர் விருது இளம் கவிஞர் மனுஷிக்கு வழங்கபட்டு இருக்கிறது.

மனுஷியின் கவிதைகளை வாசித்து இருக்கிறேன். ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார். இந்த விருது அவருக்கு பொருந்துவதாக இல்லை.
ராஜீவ்,
DSC_6806 copy

ராஜீவ்,

அன்புள்ள ராஜீவ்,

 

விருதுகளுக்கான அளவீடுகள் எப்படி இருக்கவேண்டும் என எனக்கு ஓர் எண்ணம் உண்டு. பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை. என் கோணம் இது

 

இலக்கிய விருதுகள், குறிப்பாக அரசு போன்ற அமைப்புக்களைச் சார்ந்தவை மிகச்சரியான இலக்கிய மதிப்பீடுகளுடன் அமைவது இன்றைய சூழலில் அரிது. ஒரு திறனாய்வாளனின் மதிப்பீடுகளில் உள்ள தொடர்ச்சியும் தர்க்க ஒழுங்கும் அவற்றில் இருக்க வாய்ப்பில்லை.

 

ஒருவருக்கு வாழ்நாள் சாதனைக்கான விருது, ஞானபீடம், சரஸ்வதி சம்மான் போன்ற முதன்மையான இலக்கியவிருதுகள் கிடைக்கும்போது அவருடைய ஒட்டுமொத்தப் பங்களிப்பு கருத்தில் கொள்ளப்படவேண்டும். அவர் ஓர் இலக்கிய முன்னுதாரணமாக முன்வைக்கப்படலாமா என்பது விவாதிக்க வேண்டும். ஏற்பும் மறுப்பும் அவ்வடிப்படையிலேயே நிகழவேண்டும்

 

சாகித்ய அக்காதமி போன்ற பிற விருதுகளைப் பொறுத்தவரை கருத்தில் கொள்ளப்பட வேண்டியது இரண்டு அம்சங்களே.

 

ஒன்று, அப்படைப்பாளிக்கும் இலக்கியம் என்னும் இயக்கம் மீது நம்பிக்கை இருக்கிறதா? அந்நம்பிக்கையுடன் அவர் தொடர்ந்து செயல்பட்டுள்ளாரா? தமிழின் நவீன இலக்கிய மரபின் தொடர்ச்சியை அறிந்து அதில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறாரா?

 

இரண்டு, அவருடைய படைப்புக்கள் குறைந்த  அளவிலேனும் படைப்பூக்கம் கொண்டவையா? இலக்கியம் என்னும் வட்டத்திற்குள் வருவனவா?

 

இரண்டுக்கும் ஆம் என்றால் அவர் விருதுபெறுவதை வாழ்த்துவதே முறை. அவ்வகையிலேயே நான் பல படைப்பாளிகளை வாழ்த்தி எழுதியிருக்கிறேன். உதாரணமாக, எனக்கு மேலாண்மை பொன்னுச்சாமி எவ்வகையிலும் முக்கியமான படைப்பாளி அல்ல. ஆனால் அவரை நான் வாழ்த்தி எழுதினேன்.

 

அதே சமயம் அது அவர்களின் புனைவுகள் மீதான ஏற்பு அல்ல என்பதையும் தெளிவுபடுத்தினேன். அவர்களின் புனைவுகளை என் கறாரான அழகியல் கோணத்திலேயே விமர்சனம் செய்தேன்.

 

இளம்படைப்பாளிகள் விருதுபெறுகையில் நான் முன்வைக்க விரும்பும் அளவீடு இன்னமும் நெகிழ்வானது. இளம்படைப்பாளி பலசமயம் ஒரு சாத்தியக்கூறையே வெளிப்படுத்துகிறார். அவர் விருதுபெறும்போது கடுமையாக விமர்சனம் செய்து அவரைச் சோர்வுறச்செய்வதில் பொருளில்லை. என் வரையில் நான் இரண்டு விஷயங்களையே பார்ப்பேன்

 

ஒன்று, அவர் இலக்கியம் என்னும் இயக்கம் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறாரா? இத்தொடர்ச்சியில் அவரும் இருக்கிறாரா? இரண்டு, அவர் இனிமேல் எழுதக்கூடும் என்னும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறாரா? இரண்டுக்கும் ஆம் என்றால் விருதுபெறுவதை விமர்சிப்பது தேவையில்லை என்பதே என் நிலைபாடு

 

ஆனால் அதற்கு அவருடைய படைப்புக்களை கறாராக விமர்சிக்கக்கூடாது என்று பொருள் இல்லை. அவருடைய ஆக்கங்களின் குறைகளை, தோல்விகளை சுட்டிக்காட்டலாம். அவ்விமர்சனம் அவரை சோர்வுறச்செய்யாமல் முன்னகர உதவிசெய்வதாக அமையவேண்டும்.

 

மனுஷி அவர்களின் கவிதைகளை வாசித்திருக்கிறேன். ஒரு கவிதையைக்கூட என்னை கவர்ந்தது என்று சொல்லத்தோன்றவில்லை. நவீனக் கவிதைக்குரிய மொழியும் வடிவமும் எவ்வகையிலும் கைவரவில்லை. நேரடியான அறிவிப்புகளும் உணர்ச்சிவெளிப்பாடுகளுமாகவே அவை நிற்கின்றன.

 

கணிசமான கவிதைகளில் மனுஷ்யபுத்திரன் மொழிநடையின் சாயல் உள்ளது. பல கவிதைகள் தமிழின் வழக்கமான ‘என்னைப் புரிந்துகொள். நான் வேறு ஆள்’ வகை பெண்ணியக்கவிதைகள்.அவர் கவிஞராக ஆக செல்லவேண்டிய தொலைவு மிக அதிகம்.

 

அதேசமயம் அவரிடம் ஒரு வேகம் இருக்கிறது. எழுதவேண்டுமென்ற துடிப்பு. அவர் தமிழின் கவிமரபை மேலும் கூர்ந்து கற்பதும், எளிய வம்புகளைப்புறமொதுக்கி கவிதைக்கான மனநிலையை நீட்டிக்க முயல்வதும், நல்ல கவிதைகளுடனான உரையாடலில் இருப்பதும் அவசியமானது.

 

விமர்சனங்களை ஆக்கபூர்வமாக எடுத்துக்கொண்டு, இப்போது எழுதுவது எவ்வகையிலும் இலக்கியமதிப்பு கொண்டது அல்ல என அவர் உணர்வார் என்றால், தன்னிடம் உள்ள வேகத்தால் தன் மொழியைக் கண்டடையக்கூடும்.

 

இன்று அவருக்கு மிகப்பெரிய தடை அவருடைய இந்த முதிரா எழுத்தை பொய்யாகச் சிலாகிக்கும் சிறு கூட்டம். அவர்களை உதறி மேலே செல்லும் துணிவும் சுயவிமர்சனமும் அவருக்கு வரவேண்டும். போலியான பாராட்டுக்களால் படைப்பாளிக்கு ஆகவேண்டியதொன்றும் இல்லை.

 

இவ்விருது அவருக்கு பாராட்டு அல்ல, அறைகூவல். அதை அவர் எதிர்கொண்டு சென்று சேரட்டும்

 

ஜெ

sanyanthan

சயந்தன்

 

இயல் விருதுகள்

ஜெ

 

கனடா இலக்கியத் தோட்ட விருது அறிவிப்புகள் கண்டேன். சென்ற ஆண்டு சிறந்த படைப்பாளிகளின் பட்டியல் ஒன்றை தமிழ் இந்து நாளிதழில் வெளியிட்டிருந்தீர்கள். அந்தப் பட்டியலே விருதுப்பட்டியலாகவும் இருக்கிறது. ஆனால் அந்தச் சிபாரிசை ஒட்டித்தான் நான் ஆதிரை நாவலையும் ஆயிரம் சந்தோஷ இலைகளையும் வாசித்தேன். தமிழிலக்கியத்தின் முக்கியமான படைப்பாளிகள் என இருவரையும் சந்தேகமில்லாமல் சொல்வேன்.

 

ஆதிரை ஒரு கொந்தளிப்பான வரலாற்றுசூழலை கொந்தளிப்பே இல்லாமல் எப்படிச் சொல்வது என பாடம் கற்கவேண்டிய படைப்பு. சென்ற நாலைந்து ஆண்டுகளில் தமிழில் நிகழ்ந்த இலக்கியச்சாதனை ஆதிரை.

 

அதேபோல ஆயிரம் சந்தோஷ இலைகள் நவீனக்கவிதையின் அடுத்த முகம். அந்தத் தொகுதியை காரின் டாஷ்போர்டில் வைத்திருந்து கிட்டத்தட்ட மூன்றுமாதம் வாசித்தேன். வாசித்துவிட்டு நிமிர்ந்தால் நாம் பார்க்கும் ஒவ்வொன்றும் கவிதையாகத் தோற்றம் அளிக்கும் அற்புதம் நிகழ்ந்தது. கவிதையை மிகமிகச்சாதாரணமான மொழிலேயே நிகழ்த்திவிட முடியும் என்று காட்டியகவிதைகள்.

 

இருவருக்கும் ஆரம்பத்திலேயே இந்த விருது வழங்கப்பட்டிருப்பது தொடர்ச்சியாக அவர்களை வாசகர்கள் கவனிக்கவும் விவாதிக்கவும் வழிவகுக்கும். கனடா இலக்கியத் தோட்டத்திற்கு வாழ்த்துக்கள்

 

பிரபாகர்

சங்கர ராமசுப்ரமணியன்

 

அன்புள்ள பிரபாகர்,

 

என் தேர்வுகள் என் சொந்த ரசனையை, நானே இரக்கமில்லாமல் அமைத்துக்கொள்ளும் தேர்வை, சார்ந்தவை. ஆகவே இலக்கியத்தை ரசனைசார்ந்து அணுகும் பெரும்பாலானவர்களின் அணுகுமுறையில் அவையே முக்கியமானவையெனத் தோன்றுகின்றன. அது இயல்பானதுதான். ரசனை தனிநபர் சார்ந்தது. ஆனால் எப்போதும் அது கூட்டாகவே நிகழ்கிறது

 

ஜெ

SUKUMAR

அன்புள்ள ஜெ

 

சுகுமாரனுக்கு இயல்விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கனடா சென்று அவ்விருதை பெற்றிருக்கிறார் என அறிகிறேன். தமிழின் தலைசிறந்த சில கவிஞர்களில் ஒருவர் அவர். இன்றைய கவிதை இயக்கத்தையே தொடங்கிவைத்த சிலரில் ஒருவர். அவருக்கு கிடைத்த இவ்விருது தமிழகம் பெருமைகொள்ளவேண்டியது. சாகித்ய அக்காதமி போன்ற விருதுகள் அவருக்குக் கிடைக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்

 

அருண்

 

அன்புள் அருண்,

 

சாகித்ய அக்காதமி சமீபகாலமாக கவிதைகளுக்கு அளிக்கப்படுவதில்லை. கண்ணதாசனுக்குக் கூட சேரமான்காதலி என்ற [திராபை] நாவலுக்குத்தான் அளிக்கப்பட்டது

 

ஜெ

 

இயல் விருதுகள்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கதைகள் –கடிதம்

$
0
0

soun

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். கடந்த ஒரு வருடமாக, தங்களின் கதைகளையும், கட்டுரைகளையும் உங்கள் இணையதள மூலமாகவும், நேரடியாக புத்தகங்கள் வங்கியும் படித்து வருகிறேன். அமெரிக்காவின் தென் பகுதியில் ஆஸ்டின் என்ற  ஊரில் கம்ப்யூட்டர் வேலை பார்த்துக்கொண்டு, உங்களின் கதைகளையும் கட்டுரைகளையம் அன்றாடம் படிக்கும் வழக்கத்தை உடையவன் நான்.  ஒரு நல்ல இசையைக் கேட்கும்பொழுது ஒரு இன்பம் கிடைக்குமே , அப்படித்தான் உங்களின் கதைகளை (கட்டுரைகளை) படித்தால் கிடைக்கிறது. நீங்கள் வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’ புத்தகத்தின்  முகவுரையில், ‘வண்ணதாசனின் சிறுகதைகள் தமிழ் சேர்த்துக்கொண்ட செல்வம்’ என்று சொல்லியிருப்பீர்கள். அதை படிக்கும்பொழுது உங்கள் கதைகளும்தான் தமிழுக்கு கிடைத்த செல்வம் ஜெ என்று உரக்கவே வாய்விட்டுச் சொன்னேன்.   தூர தேசத்தில் நான் முனங்கவது உங்கள் காதில் விழப்போவதில்லை. ஆதலால்தான் இந்தக் கடிதம். நான் பெயருக்குச் சொல்லவில்லை , கீழே காணும் எனது பேஸ்புக் பதிவுகளை பாருங்கள். தேதிவாரியாக கொடுத்திருக்கிறேன். நீங்கள் பேஸ்புக் பிரியர் அல்ல என்பதும் எனக்குத் தெரியும். நீங்கள் இந்தக் கடிதத்தை (ஈமெயில்) , நேரம் இருந்து படித்திருந்தால், ஆமாம் சௌந்தர் படித்தேன் என்று பதில் போடுங்கள்.

வீட்டில் அருள்மொழி, அஜிதன், சைதன்யா அனைவரையும் கேட்டதாகச் சொல்லவும். நீங்கள் பாகுபலி 2 படத்தை    வெய்யிலில் நின்று அவதிப்பட்டு பார்க்கமுடியாமல் திரும்பிச் சென்ற சமயம் கூட்டமே இல்லாத (வெறும் 14 பேர்) , ஆஸ்டின் திரையரங்கு ஒன்றில் நான் படம் பார்த்தபொழுது எனக்கு ஒரு வலி வந்தது. ஒரு நல்ல எழுத்தாளனுக்கு வீடு தேடி வந்து டிக்கெட் கொடுக்கும் நாள் என்று வரும்.

அன்புடன்,

வ. சௌந்தரராஜன்

 

 நல்ல நல்ல கதைகள் படிப்போம்

சுஜாதாவின் ‘நகரம்’ சிறு கதைபோல, எஸ். ராமகிருஷ்ணனின் ,’உனக்கு 34 வயதாகிறது’ என்கின்ற கதைபோல, இனிமேல், இன்று படித்த ஜெயமோகனின் கதையான ‘சோற்றுக்கணக்கும்’ என் மனதை வருடிக்கொண்டே இருக்கும்.

http://www.jeyamohan.in/11992

– வ சௌந்தரராஜன்

06/29/2016

 

  அறம் தந்த சுவையை அசைபோடுகிறேன்

(புத்தக விமர்சனம்)

காதுவழியாக கேள்விப்பட்டோ , விமர்சனங்களின் மூலமோ, எழுத்தாளர் ஜெயமோகன் கவனிக்கப்படவேண்டிய எழுத்தாளர் என்று குறித்து வைத்திருந்தேன்.  ஆனால், அவரது கதையையோ கட்டுரையையோ, நானாக  படித்துவிட்டு எனக்கென்று ஒரு அபிப்ராயம் இருந்ததில்லை. இந்த வருடம் ஜூன் மாதத்தில் ஒரு நாள் அவரது வலைதளத்தில், சோற்றுக்கணக்கு கதை படித்தேன். என்னை மிகவும் பாதித்த (பிடித்த) கதைகளில் ஒன்றாக உடனே இடம் பிடித்தது.

கதை சொல்லி, தன் கையில் காசு இல்லாதபோது கெத்தேல் சாகிப் கடையில்  சாப்பிட்டுவிட்டு, நல்ல வேலை கிடைத்ததும் சீட்டுப் பணம் பெற்றுக்கொண்டு அவர் வைத்திருக்கும் உண்டியலில் பணம் போடுகிறார். அந்த வகையில் சோற்றுக்கணக்கை அடைக்கிறாரா? இல்லை, தான் படிக்கும்போது கணக்குப் பார்த்து சாப்பாடு (தண்ணீர்விட்ட சோறு அதிலேயே விடப்பட்ட குழம்பு)  போட்ட மாமியின் மகளை கல்யாணம் செய்து சோற்றுக்கணக்கை அடைக்கிறாரா. எந்த வகையில் பார்த்தாலும் கதையில் வரும் ஒவ்வொரு நிகழ்வும், கதை மாந்தர்களும் , வறுமையும், பசியும், கெத்தேல் சாகிப்பின் மீன்குழம்பும், தனது மகனின் எழுநூறு ரூபாய் சம்பளத்தை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பார்த்த  தந்தையின் பார்வையும், பசியிலும் வறுமையிலும் குழந்தைகளை வளர்த்த தாய்க்கு,  பணம் வந்தபிறகும் போதும் போதுமென குழம்பை  ஊத்தும் பழக்கம் வராது என்ற நிதர்சனமும், மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.

 

கஷ்டங்கள் அல்லாமல்,  வாழ்வியலில் பார்க்கும் நல்ல மனிதமும்  நிகழ்வுகளும் கதையில் உண்டு., கணக்கே பார்க்காமல்,  மீண்டும் மீண்டும் சாப்பிடச் சொல்லி மீனைப் பரிமாறும் கெத்தேல் சாகிப்பின்  கனத்த கரடிக்கரங்கள். ஏழைப் பெண்ணிடம் தப்பாக நடந்துகொண்ட கொச்சுகுட்டன்பிள்ளைக்கு  , கெத்தேல் சாகிப் ஓங்கி கொடுக்கும் ஒர்அறை.  கதை சொல்லி,  அரிசி மண்டியில் கணக்கு எழுதி, வரும் வருமானத்தில் கல்லூரியில் ஃபீஸ் கட்டி, மிச்சம் பிடித்து வீட்டுக்கும் அனுப்பி , படித்த கல்லூரியிலேயே விரிவுரையாளர் ஆவது என  வாழ்வில் நம்பிக்கை கொடுக்கும் ஆதார விஷயங்கள்.

கதையில் விவரிக்கப்பட்டிருக்கும் பல வகையான உணவும், மணமும் வந்து போகும். உதாரணத்திற்கு – எலிசம்மா கடை இட்லி, சாலைமகாதேவர்கோயில் பாயசம், கெத்தேல் சாகிப் சாப்பாட்டு  கடையின் – சிவப்பு சம்பா சோறு, பொரித்த சிக்கன் கால், பொரித்த மீன், கறி பொரித்த மிளகாய்காரத்தின் தூள், கருகிய கோழிக்கால்.

இவையல்லாமல் ஒரு இழையோடும்  காதலும் இந்தக் கதையில் இருக்கிறது என்றே நினைக்கிறேன். பிறகு ஏன் கதை சொல்லி, ராமலட்சுமியை ஒரு சூட்டிகையான பெண் என்று சொல்லிவிட்டு  , கூட்டு வட்டி கணக்கை அவளுக்குச் சொல்லிக் கொடுக்க இருபது நாள் என்று கொஞ்சம் கிண்டலும் செய்கிறார்.

மேலும் மேலும் இந்தக் கதையை ஆராய்ச்சி செய்யப் போய், இது அறம் என்ற சிறுகதைகளின் தொகுப்பாக வந்த நூலில் ஒரு கதை என அறிந்தேன். கடந்த இரு வாரங்களில், மீதம் இருந்த பனிரெண்டு கதைகளையும் படித்துவிட்டேன். ஒவ்வொரு கதையும் ஒரு விதம். எல்லாக் கதைகளும் தரமானவை.  வித்தியாசமானவைகள். மனங்கொத்திப் பறவைகள்.

அறம், வணங்கான், யானை டாக்டர், நுறு நாற்காலிகள், ஓலைச்சிலுவை, உலகம் யாவையும் என்னை மிகவும் பாதித்தன. என்னை எழுதவிட்டால், ஒவ்வொரு கதை பற்றியும் , மேற்கண்டவாறே , ஒன்று அல்லது இரண்டு  பக்கங்கள் அவைகளை பற்றி விமர்சனம் எழுதுவேன். இப்போதைக்கு அவைகளை , மனதில் அசைபோட்டுக்கொள்வதே சுகமாய் இருக்கிறது.

– வ. சௌந்தரராஜன்

10/30/2016

 எப்பொழுதும் ஒரு கிறக்கத்திலேலேயே இருக்கிறேன்

கடந்த ஒரு வருடமாக , எப்பொழுது பார்த்தாலும்,  நான் ஒரு கிரக்கத்திலேலேயே இருக்கிறேன்.  எப்படி இவரது எழுத்துக்களைப் படிக்காமல் இத்தனை வருடம் கழித்தேன். தேடி தேடி அவசர அவசரமாக, இதுவரை படிக்காமல் விட்டதை எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு கட்டுரை அல்லது ஒரு கதை என்று படித்துவிடுகிறேன். ‘தேவகிச் சித்தியின் டைரி படித்துவிட்டு , நினைவுகளிலிருந்து  தப்பமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும்  சமயத்தில்,   ‘டார்த்தினியும்’ படித்துவிட்டு, அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருக்கிறேன். நான் எந்த ஒரு பத்திரிகைக்கும் எனது ஈமெயில் விலாசத்தை கொடுத்ததில்லை,  இவரது வலைதளத்திற்கு மட்டும்  கொடுத்துவிட்டு , அன்றைய  தினத்தில்  வந்த பதிப்புகளில்  ஒன்று அல்லது இரண்டைப்  படித்துவிட்டு, எழுத்து என்றால் இது எழுத்து என்று பத்தாயிரம் மைல் கடந்து இருக்கும் அவரை உளமார  பாராட்டுகிறேன்.

காதலிக்கும் பருவத்தில் உள்ள ஒரு வயது பையன் தனது காதலியைப் பற்றி ,  சொன்னதையே திருப்பி திருப்பி சொல்வதுபோல் (உதாரணம் – அச்சம் என்பது மடமையடா – சிம்பு), கொஞ்சம் காது கொடுத்து கேட்பவர்களிடம், இவரைப் பற்றியும் இவரது எழுத்துக்கள் பற்றியும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

நான் ஜெயமோகனின் எழுத்துக்களை படித்துவிட்டுட்டு ஒரு  கிரக்கத்தில் இருக்கிறேன். எனக்கு அது பிடித்திருக்கிறது. மற்றபடி எந்த பாதிப்புமில்லை.

 

– வ. சௌந்தரராஜன்.
03/18/2017

 

 

அன்புள்ள சௌந்தர்

 

உங்கள் குறிப்புகளை வாசித்தேன். எப்போதுமே புனைவிலக்கியம் குறித்து முன் முடிவுகள் இல்லாமல் இயல்பாக உள்ளே சென்று சொல்லப்படும் கருத்துக்களுக்கு பெருமதிப்புண்டு.அவை பெரும்பாலும் கதைகளை அல்ல வாழ்க்கையையே பேசுகின்றன. நன்றி

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி- அடுத்த சூழ்ச்சி

$
0
0

 

அன்புள்ள ஜெயமோகன்.,

 

நேற்றைக்கு திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியை மூடி சீல் வைக்க அரசு முயன்றிருக்கிறது. பள்ளியிலிருந்து வெளியேற முடியாது என்று மாணவர்களும் பெற்றோரும் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

 

பாலியல் புகாரின் நோக்கமே  அந்தத் தாளாளர் வாய் திறக்க முடியாதபடிக்கு கூனி நிற்கச் செய்ய வேண்டித்தான்; உலகமும் அதை நம்பத் தயாராகத் தான் இருக்கும். இந்நிலையில்  புகாரை மறுத்துக் குழந்தைகளே போராடியிருப்பதில் கொஞ்சம் நிம்மதி.

 

ஊர் ஊமையானதால்; அந்தக் குழந்தைகள் பேசிவிட்டன. இப்போது ஊர் செவிடுமாகிவிட்டது. இனி  அறங்கூற்றாகுமெனக் காத்திருக்க வேண்டியதுதான் அல்லவா!?

 

 

ராஜன் ராதாமணாளன்.

 

 

அன்புள்ள ராஜன்

 

உண்மையிலேயே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. கறாராகப்பார்த்தால் இதுவரை என்ன நடந்துள்ளது? பற்பல ஆண்டுகளுக்கு முன் அப்பள்ளியில் படித்த ஒரு பெண் ஒரு குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார். எந்த ஆதாரமும் அதற்கு இல்லை. நீதிமன்றத்தில் எதுவுமே முன்வைக்கப்படவில்லை. ஒரு வழக்கு மட்டும் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஆனால் அதைப்பயன்படுத்தி திரு முருகசாமி அவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். ஊடகங்களுக்கு ஒரு கூட்டம் நேரடியாகச் சென்று அந்த காட்சிகளை வழங்கி அவை தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும்படிச் செய்திருக்கிறார்கள்.

 

 

அதன்பின் அங்கே பணியாற்றுபவர்களிடமும் குழந்தைகளிடமும் குற்றச்சாட்டு கூறும்படி வலியுறுத்துகிறார்கள். அப்படி குற்றச்சாட்டுகள் எழாதபோது குழந்தைகளை அழைத்துச்செல்லும்படி பெற்றோர் அறிவுறுத்தப்படுகிறார்கள். அப்படியும் பெரும்பாலான குழந்தைகள் எஞ்சவே வலுக்கட்டாயமாக பள்ளியைப் பூட்ட முயல்கிறார்கள். வெறும் ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் முப்பதாண்டுக்கால வரலாறும் பலருடைய தியாயங்களும் கொண்டு வளர்ந்த ஒரு நிறுவனம் முற்றாக அழிக்கப்படுகிறது.

 

ஏன் என்றால் அந்த நிலம். அது ஒருகாலத்தில் பொட்டல். இன்று பலகோடி ரூபாய் மதிப்புள்ளது. அவ்வாறு மதிப்புக்குரியதாக அது ஆனதே அப்பள்ளியால்தான். அப்பள்ளி முருகசாமியின் சொத்து அல்ல. ஏராளமான மக்களின் நன்கொடை அதில் உள்ளது. என் நன்கொடையும் ஒரு சிறு துளி உள்ளதனால் இதைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. இன்று அதை ஒரு குடும்பச் சொத்தாக எடுத்துக்கொள்ளும் முயற்சி நிகழ்கிறது.

 

குறைந்தபட்சம் அப்பள்ளி திருப்பூரின் சொத்து என்றாவது மக்கள் நினைக்கவேண்டும். அதை அரசியல்வாதிகள் சூறையாட அவர்கள் அனுமதிக்கலாகாது. அதை சம்பந்தமில்லாதவர்கள் எவ்வகையில் எடுத்துக்கொண்டாலும் அதை அழிப்பார்கள். ஏனென்றால் அந்த நிலம் மட்டுமே அவர்களின் இலக்கு. அப்பள்ளி அதை உருவாக்கிய முருகசாமியால் மட்டுமே நடத்தப்படவேண்டும். அதன் அன்றாடச்செயல்பாடுகளில் எவரும் தலையிடக்கூடாது

 

உண்மையில் முருகசாமி அவர்கள்மேல் ஐயம் இருக்குமென்றால் அவருக்குமேல் அவரைக் கண்காணிக்கும்படி பொதுமக்கள் அடங்கிய ஒரு சிறுகுழுவை நியமிக்கலாம். அவர் சட்டவிரோதமாக ஏதேனும் செய்கிறாரா என கண்காணிக்கலாம். சட்டபூர்வமாகவே அப்படி அமைக்க நீதிமன்றம் ஆணையிடலாம்.

 

ஆனால் ஆரம்பம் முதலே மிகமிக ஒருதலைப்பட்சமாக, உள்நோக்குடன்  அனைத்து அரசுசார் அமைப்புக்களும் செயல்படுகின்றனவா என ஐயம் இருக்கிறது. அந்நிறுவனத்தை அழிப்பதற்கான முயற்சிகள் மட்டுமே நிகழ்கின்றன.

 

சோர்வூட்டும் ஒரு நிலை. அதற்குப்பின்னாலிருப்பவை இரண்டு மனநிலைகள். பொதுச்சொத்து என்பது சொந்த மரம், வெட்டி வீழ்த்தி அள்ளித்தின்னவேண்டியதுதான் என்னும் உறவினர்களின் மனநிலை. எந்த அவதூறையும் உடனடியாக வம்புப்பேச்சாக மாற்றி ரசிக்கும், எந்தப்பொதுவிஷயத்திலும் ஈடுபடத் தயங்கும் மக்கள்

 

திருப்பூரில் ஒரு மக்கள்குழு அமைந்து இந்தவிஷயத்தில் தலையிடவேண்டும். அப்பள்ளியை அழிக்க அவர்கள் அனுமதித்தால் அது அவர்களை மொண்ணைகள் என்றுதான் உலகுக்குக் காட்டும்

 

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 31

$
0
0

30. முதற்களம்

flower“தாங்கள் அறிந்திருப்பீர்கள், நெடுநாட்களுக்கு முன் இங்கு நளமாமன்னருக்கும் அவரது தம்பிக்குமான பூசல் ஓர் உணவுக்களத்தில்தான் வெடித்தது. எந்தப் பூசலும் பின்திரும்ப முடியாத ஒரு புள்ளியில் உச்சம்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்லும். அப்புள்ளி ஒரு சொல்லாக, ஒரு செயலாக இருக்கலாம். ஆனால் ஒரு துளிக் குருதி முற்றிலும் வேறானது. குருதி ஒருபோதும் நினைவிலிருந்து அகல்வதில்லை” என்றார் பூர்ணர்.

“குருதியிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று மூத்தவர் சொல்வது அதனால்தான். அது நம் உடலில் ஓடலாம். ஆனால் அது நம்முடையது அல்ல. அது தெய்வங்களால் நேரடியாக கையாளப்படுவது. ஆகவேதான் குருதி தெய்வங்களுக்குரிய பலியுணவு எனப்படுகிறது. சமையலில் முற்றிலும் குருதிநீக்கம் செய்யப்பட்டு நன்கு கழுவிய உணவையே சமைக்கவேண்டும் என நளபாகநூல் சொல்கிறது. குருதியை பொரித்து உண்ணும் வழக்கம் முன்பு நிஷாதர்களிடமிருந்தது. அதை நளமாமன்னர் முற்றிலும் தடைசெய்தார். குருதியை உண்பவன் அவ்விலங்கின் ஆன்மாவில் குடிகொள்ளும் தெய்வங்களை அறைகூவுகிறான் என்பது அவரது சொல்” என்றார் சங்கதர்.

“அன்று என்ன நிகழ்ந்தது என்பது வரலாறு. ஆகவே அது முழுதுணரமுடியாதபடி மிகுதியாக சொல்லப்பட்டுவிட்டது. அத்தருணத்தை வெவ்வேறு வகையில் எழுதியிருக்கிறார்கள் கவிஞர்கள். சூதர்கள் பாடியிருக்கிறார்கள். தங்கள் குலச்சார்பின்படி மூத்தோர் விளக்கியிருக்கிறார்கள்” என்றார் பூர்ணர். பீமன் “கதைகளென சில கேட்டிருக்கிறேன்” என்றான். பூர்ணர் “நிகழ்ந்தவற்றை இன்று நம்மைக்கொண்டு நாம் உணரலாம். நமக்காக நாம் புனைந்துகொள்ளலாம்” என்று தொடர்ந்தார்.

மூத்தவருக்கும் இளையவருக்கும் இடையே முன்னரே மோதலும் பிளவும் இருந்து வந்தது. இளையவர் நிஷாதரின் குலதெய்வமான கலியை முதன்மை தெய்வமாக முன்னெடுக்கலானார். மூத்தவர் இந்திரனை தெய்வமென நாட்டியவர். அவர் துணைவி இந்திர வழிபாட்டை தலைமுறைமரபெனக் கொண்ட ஷத்ரியகுடிப்பெண். ஒருகுடை நாட்டி பாரதத்தை ஆள அமர்ந்த சக்ரவர்த்தினி அவர். நிஷதகுடிகளில் பெரும்பாலானவர்கள் தங்கள் குடி வாழ வந்த மூதாதை வடிவமென நளனை எண்ணியவர்களே. அவன் விண்ணுலகு சென்று வென்று வந்த திருமகளென்று தமயந்தியை வழிபட்டவர்களும்கூட. ஆனால் அவர்கள் உள்ளத்தின் ஆழத்தில் கலி முதல் தெய்வமென வாழ்ந்தது. அவர்களின் தொல்குடி மூதாதை வேனனிடமிருந்து அந்த நம்பிக்கை தொடங்குகிறது.

கலி வழிபாட்டை முன்னெடுத்ததுமே குடிகளில் பெரும்பாலானவர்கள் இளவரசர் புஷ்கரரின் ஆதரவாளராக மாறிவிட்டிருந்தனர். தமயந்தி கலி வழிபாட்டுக்கு வந்தது அவர்களின் உள்ளங்களை சற்றே குளிரச்செய்தது. ஆனால் படைகொண்டுசென்றபின் நகர் மீண்ட நளன் கலி வழிபாட்டுக்கு ஆலயத்திற்கு வரவில்லை. அச்செய்தியை புஷ்கரரின் அணுக்கர் குடிகள் நடுவே வாய்ச்செவி வழக்கென பரப்பினர். நளனையும் தமயந்தியையும் வணங்கிய மக்களின் உள்ளம் எளிதில் மாறவில்லை. ஆனால் அவர்கள் அதை உள்ளொதுக்கியமையாலேயே உள்ளிருளில் வாழ்ந்த தெய்வங்கள் அவற்றை பற்றிக்கொண்டன. அவ்வெண்ணங்களை அவியென உண்டு அவை அங்கே வளர்ந்து பேருரு கொண்டன.

நாள்தோறும் ஐயமும் கசப்பும் வளர்ந்தாலும் அவர்கள் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. உண்மையில் தங்களுக்கேகூட தங்கள் உள்ளம் மாறிவிட்டதை அவர்கள் காட்டவில்லை. பகலில் அரசிக்கு அணுக்கமும் பணிவும் கொண்டவர்களாக மெய்யாகவே திகழ்ந்தனர். இரவின் இருண்ட தனிமையில் கலியின் குடிகளென மாறினர். புஷ்கரர் கலிதேவனுக்கென நாள்பூசனைகளை தொடங்கினார். நிஷத குடிகள் ஒவ்வொன்றிலுமிருந்தும் பூசகர்களை கொண்டுவந்து அங்கு புலரி முதல் நள்ளிரவு வரை பூசனைகளுக்கு ஒருங்கு செய்தார். நள்ளிரவுக்குப்பின் கருக்கிருட்டு வரை அபிசாரபூசனைகள் அங்கே நிகழ்ந்தன. கூகைக்குழறல் என அங்கே கைமுழவு ஒலிப்பதை பந்தவெளிச்சம் நீண்டு சுழல்வதை நகர்மக்கள் அறிந்தனர்.

முன்பெல்லாம் பிறர் அறியாமல் கலியின் ஆலயத்திற்கு சென்று வருவதே கிரிப்பிரஸ்த குடிகளின் வழக்கமாக இருந்தது. அஞ்சியவர்கள் அனைவரும் தங்கள் எண்ணிக்கை மிகுந்ததும் முகம் தெரிய செல்லலானார்கள். பின்னர் அது ஒரு மீறலாக, ஆண்மையாக மாறியது. இறுதியிலொரு களியாட்டாக நிலைகொண்டது. முப்பொழுதும் கலியின் ஆலயம் தேன்கூடுபோல நிஷாதர்களால் மொய்க்கப்பட்டிருந்தது. இந்திரன் ஆலயத்திற்கு செல்பவர் முன்னரே மிகச் சிலர்தான். செல்பவரை பிறர் களியாடத் தொடங்கியதும் அவர்களும் குறைந்தனர். அரச காவலரும் அரண்மனை மகளிரும் அன்றி மலையேறி எவரும் அங்கு செல்லாமலாயினர். விதர்ப்பத்திலிருந்து வந்த ஷத்ரியர்கள் மட்டும் அங்கு சென்று வணங்கலாயினர்.

படைகளில் இருந்த விதர்ப்ப வீரர்களின் எண்ணிக்கை ஒப்புநோக்க சிறிது. அவர்களுக்கே படைநடத்தும் பயிற்சி இருந்தது. அவர்களால் படையென நடத்தப்படுவது நிஷாதர்களுக்கு மேலும் உளவிலக்கை அளித்தது. ஓரிரு மாதங்களுக்குள் நிஷாதர்கள் இந்திரனை வெறுக்கலானார்கள். இல்லங்கள் அனைத்திலுமிருந்து இந்திர வழிபாட்டின் அடையாளங்களான மஞ்சள்பட்டு சுற்றிய வெண்கலச்செம்பும் மயில்தோகையும் அகன்றன. பிளவுகள் உருவாகி வளர்வதுபோல இப்புவியில் வியப்பூட்டுவது பிறிதொன்றில்லை.

அந்நாளில் இளவரசர் புஷ்கரரின் திருமணப் பேச்சுக்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. அவருக்கு பாரதவர்ஷத்தின் முதன்மை ஷத்ரிய குலங்களில் எதிலிருந்தாவது இளவரசியை கொள்ளவேண்டுமென்று பேரரசி தமயந்தி விரும்பினார். ஆரியவர்த்தத்தின் அரசகுடிகள் அனைத்திற்கும் தூதர்கள் ஓலைகளுடன் சென்றனர். பல ஷத்ரிய குடிகளுக்கும் பேரரசியின் உறவில் மணம்கொள்ள உள்விழைவு இருந்தது. இந்திரபுரியுடனான மணத்தொடர்பு அவர்களை பிற இணைமன்னர்களுக்குமேல் வல்லமை கொண்டவர்களாக ஆக்கும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் ஒருவர் அவ்வாறு மணம்கொள்ள முன்வந்தால் பிறர் அவர்களை இழிவுசெய்து ஒதுக்கி தங்கள் சினத்தை காட்டுவார்கள் என்று அனைவரும் அறிந்திருந்தனர்.

உண்மையில் அவ்வாறு மணம்கொண்டு படையாற்றல் பெற்ற ஓர் அரசரை எதிர்கொள்ளும் சிறந்த வழியென்பது அவரை இழிசினன் என அறிவித்து அதனடிப்படையில் பிற அரசர்கள் ஒருங்குதிரள்வதே ஆகும். ஷத்ரியர் எப்போதும் அம்முறையையே கைக்கொள்கிறார்கள். ஷத்ரிய அரசர்களில் எவரேனும் ஒருவர் அம்மணத்தூதை ஒப்புக்கொண்டு அடுத்த கட்ட பேச்சுக்கு முன்வருவாரென்றால் உலுக்கப்பட்ட கிளையிலிருந்து கனிகள் உதிர்வதுபோல பிற அனைவருமே தூதுஏற்பு செய்துவிடுவார்கள் என்று தமயந்தி அறிந்திருந்தார். ஆகவே அந்த முதல் நகர்வுக்காக அவர் காத்திருந்தார். துலாவின் இரு தட்டுகளும் அசைவற்று காலமில்லாது நின்றிருந்தன.

அந்நாளில் நிஷாதகுலத்தின் ஒற்றன் ஒருவன் கலிங்கத்திலிருந்து வந்து புஷ்கரரை சந்தித்தான். கலிங்க அரசர் பானுதேவரின் மகள் மாலினிதேவி புஷ்கரரை தன் உளத்துணைவராக எண்ணி அவர் ஓவியத்திற்கு மாலையிட்டிருப்பதாக அவன் சொன்னான். இளவரசி கொடுத்தனுப்பிய கணையாழியையும் திருமுகத்தையும் அளித்தான். பானுதேவர் தாம்ரலிப்தியை ஆண்ட அர்க்கதேவரின் இளையவர். அர்க்கதேவரை வென்றபின் கலிங்கத்தை நளமாமன்னர் இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை பானுதேவருக்கு அளித்திருந்தார். தண்டபுரத்தை தலைநகராகக்கொண்டு அவர் ஆண்டுவந்தார்.

உண்மையில் அது ஓர் அரசியல் சூழ்ச்சி. மாலினிதேவி அச்செய்தியை அனுப்பவில்லை. மகதனும் மாளவனும் கூர்ஜரனும் சேர்ந்து இயற்றியது அது. பிறிதொரு தருணத்தில் என்றால் ஷத்ரிய இளவரசி ஒருத்தி தன்னை அவ்வாறு தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்னும் செய்தியை புஷ்கரர் நம்பியிருக்கமாட்டார். ஆனால் அப்போது அவர் நளமாமன்னருக்கு எதிராக எழுந்து நின்றிருந்தார். எண்ணி எண்ணி தன்னை பெருக்கிக்கொண்டு மெல்ல அவ்வெண்ணத்தை தானே நம்பத் தொடங்கியிருந்தார். அவ்வண்ணமொரு வாய்ப்பு வராதா என்ற ஏக்கம் அவருக்குள் எங்கோ இருந்தது. விழைந்த ஒன்று எதிர்வரும்போது அதன்மேல் ஐயம் கொள்ள மானுடரால் இயல்வதில்லை.

மேலும் கலிங்கம் நிஷத நாட்டுக்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்தது. அதன் வணிகம் முழுக்க நிஷாதர்களின் நிலங்களில் இருந்து கோதாவரியினூடாக வரும் பொருட்களால் ஆனது. கீழ்நிலங்கள் புஷ்கரரின் ஆளுகையில் இருந்தன. எனவே அவ்வுறவு எவ்வகையிலும் கலிங்கத்துக்கு நன்றே என்று அரசியல் அறிந்த எவரும் உரைக்கும் நிலை. விரைவில் அவளை மணம்கொள்ள வருவதாக மாலினிதேவிக்கு செய்தி அனுப்பினார் புஷ்கரர். உடன் தன் குறுவாள் ஒன்றையும் கன்யாசுல்கமென கொடுத்தனுப்பினார்.

செய்தி வந்ததை அவர் தன் குடியின் மூத்தாரிடம் மட்டும்தான் சொன்னார். அவர்கள் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். எவரும் ஐயம் கொள்ளவில்லை. ஒவ்வொரு நாளும் காளகக்குடியின் ஆற்றல் பெருகுவதாக அவர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். கலியின் பூசகர்கள் அது கலியின் ஆணை என நாளும் நற்சொல் உரைத்துக்கொண்டிருந்தார்கள். அந்நம்பிக்கையை அச்செய்தி உறுதி செய்தது. அத்தகைய முதன்மை அரசமுடிவை அரசியிடம் கேளாது, அவைமுன் வைக்காது புஷ்கரர் எடுத்திருக்கக் கூடாது. அதை அவரோ அவர் குடியோ உணரவில்லை. அவர்களின் உள்ளம் எதிர்நிலையால் திரிபுகொண்டிருந்தது.

மறுதூதனுப்பி அதற்கு மாலினிதேவி அனுப்பிய மாற்றோலையையும் அவளுடைய காதணியின் ஒரு மணியையும் பெற்ற பின்னரே  அச்செய்தியை அவரே இந்திரபுரியின் பேரவையில் எழுந்து தமயந்தியிடம் சொன்னார். உண்மையில் அவர் அரசியையோ தன் மூத்தவரையோ தனியறையில் கண்டு அதை சொல்லியிருக்கவேண்டும். அல்லது அமைச்சர் கருணாகரரைக் கண்டு உரைத்திருக்கலாம். பேரவையில் சபரர்களும் காளகர்களும் பிற குடித்தலைவர்களும் பெருவணிகர்களும் அந்தணர்களும் நிறைந்திருந்தனர். மாமன்னர் நளன் காட்டுப்புரவிக்குட்டிகளை பிடிக்கும்பொருட்டு சென்றிருந்தார். அவை நிகழ்வுகள் முடிந்து தமயந்தி எழுந்து செல்லவிருந்த தருணம் அது. கைதூக்கி எழுந்த புஷ்கரர் “அவைக்கும் அரசிக்கும் ஒரு நற்செய்தி!” என்றார்.

அவ்வாறு எழுந்தமையே முறைமீறல். அதிலிருந்த ஆணவம் உறுத்துவது. தமயந்தியின் இடதுவிழி சற்று சுருங்கியது. ஆனால் புன்னகையுடன் “நற்செய்தி கேட்க விழைவுடன் உள்ளேன், இளவரசே” என்றார். காளகக்குடிகளின் தலைவரான சீர்ஷர் “நம் குடிக்கு புதிய அரசி ஒருவர் வரவிருக்கிறார்” என்றார். தமயந்தியின் விழிகள் சென்று கருணாகரரைத் தொட்டு மீண்டன. “சொல்க!” என்றார். புஷ்கரர் நிகழ்ந்ததை மிகமிகச் செயற்கையான அணிச்சொற்களால் சுழற்றிச் சுழற்றிச் சொல்லி முடிக்க நெடுநேரமாயிற்று. அதற்குள் காளகக்குடிகள் எழுந்து கைக்கோல்களைத் தூக்கி வாழ்த்தொலி எழுப்பலாயினர். பிறர் என்ன என்றறியாமல் நோக்கி அமர்ந்திருந்தனர்.

அதைக் கேட்டதுமே அது ஓர் அரசியல் சூழ்ச்சி என்று தமயந்தி அறிந்துகொண்டார். ஒற்றர் மூலம் ஓரிரு நாட்களிலேயே அதை அவரால் உறுதி செய்துகொள்ள முடியும் என்றும் உணர்ந்திருந்தார். ஆனால் அந்த அவையில் அதைச் சொல்வது புஷ்கரரை இழிவுபடுத்துவதாகும் என்று தோன்றியது அவருக்கு. கலிங்கத்து இளவரசி ஒருத்தி அவரை விரும்புவது நிகழ வாய்ப்பில்லை என்பதுபோல அது பொருள்கொள்ளப்படலாம். அவருக்கு அத்தகுதியில்லை என்று அவர் குடியில் சிலரால் திரிபொருள் கொள்ளப்படவும்கூடும். அவர் அதை அவையிலிருந்து எவ்வகையிலேனும் வெளியே கொண்டுசெல்ல விழைந்தார். அப்போது அதை சிடுக்கில்லாது முடித்துவைக்க வேண்டுமென்று வழிதேடினார். ஆனால் புஷ்கரர் பேசிக்கொண்டே சென்றார்.

புஷ்கரர் உரைத்த சொற்களிலேயே பல உள்மடிப்புகள் இருந்தன. அரசியை வணங்கி பலவகையிலும் முகமன் கூறிய பின்னர் “பேரரசிக்கு வணக்கம். பேரரசி அறிந்த கதை ஒன்றை நினைவுறுத்த விரும்புகிறேன். நெடுங்காலத்துக்கு முன் விதர்ப்ப நாட்டின் ஷத்ரிய இளவரசி பெருந்திறல் வீரனாகிய நிஷத அரசனை விரும்பினார். அவர் புரவித்திறனையும் மேனியழகையும் கண்டு தன்னை இழந்தார். அன்னப்பறவை ஒன்றை தன் தூதென்றனுப்பி தன்னை ஏற்குமாறு கோரினார். இன்று காவியம் கற்ற அனைவரும் அறிந்த கதை அது. நிஷதஅரசனின் இளையோனுக்கும் அதுவே நிகழ்கிறது” என்றார். அதற்குள் காளகர்கள் கூவி ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். சீர்ஷர் எழுந்து நின்று கைகளைத் தூக்கி மெல்ல நடனமிட்டபடி “காளகக்குடியின் வெற்றி! நிஷதர்களின் வெற்றி!” என்று கூவினார்.

அவர்களை முகமலர்ச்சியுடன் கைகாட்டி அமர்த்திவிட்டு “இம்முறை கலிங்கத்திலிருந்து அச்செய்தி வந்துள்ளது. இரு கால்கள் எழுந்து நடக்கும் அந்த அன்னத்தின் பெயர் சலஃபன். கலிங்கத்தில் இருக்கும் நமது தலைமைஒற்றன்” என்றார். காளகக்குடியினர் சிரித்து உவகையொலி எழுப்பி புஷ்கரரை வாழ்த்தினர். “என் ஓவியத்திற்கு மாலையிட்டிருக்கிறாள் கலிங்கத்தின் இளவரசி. அவளுக்கு நிஷதகுடிகளில் மூத்ததான காளகக்குடியின் மரபுப்படி தாமரை மாலையை அணிவிக்கவேண்டியது என் கடன். அதை அறிவித்து என் குறுவாளை அனுப்பியிருக்கிறேன்” என்றார். அவையின் பிற குடிகளும் எழுந்து கோல்களைத் தூக்கி வாழ்த்து முழக்கமிட்டனர்.

காளகக்குடித்தலைவர் சீர்ஷர் கைகளைத் தூக்கி “எங்களுக்கு எவர் ஒப்புதலும் தேவையில்லை. கலிங்கத்தின் இளவரசி எங்கள் இளவரசரை விரும்பினால் அவர்களை சேர்க்கும்பொருட்டு ஆயிரம் தலைகளை மண்ணிலிட நாங்கள் சித்தமாக உள்ளோம்” என்று கூவினார். “அதற்கு இங்கு என்ன நடந்தது? எவர் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்?” என்றார் கருணாகரர். “எதிர்ப்பு தெரிவியுங்கள் பார்ப்போம். இனி எந்த எதிர்ப்பையும் நாங்கள் அஞ்சப்போவதில்லை” என்றார் சீர்ஷர். “சொல்லமையுங்கள், சீர்ஷரே. அரசி இன்னும் தன் சொல்லை முன்வைக்கவில்லை” என்றார் நாகசேனர்.

தமயந்தி பெருநகையை முகத்தில் காட்டி “நன்று! நாம் எதிர்பார்த்திருந்த செய்தி இது. மிக நன்று. இனி பிறிதொன்றும் எண்ணுவதற்கில்லை. நமது அமைச்சரும் பிறரும் சென்று பானுதேவரிடம் நிஷதகுடியின்பொருட்டு இளவரசியின் வளைக்கையை கோரட்டும். கலிங்க இளவரசி வந்து இங்கு இளைய அரசியென அமர்வது நம் மூதன்னையரை மகிழ்விக்கும். குலமூத்தோரை பெருமிதம் கொள்ள வைக்கும். நம் அரசு ஆற்றல் கொண்டு சிறக்கும்” என்றாள். புஷ்கரரை வாழ்த்தி அனைத்து குடிகளும் முரசென குரல் எழுப்பினர். பலமுறை கையமர்த்தி குரலெழ இடைவெளி தேடவேண்டியிருந்தது. “நாளையே தலைமை அமைச்சர் கிளம்பிச்செல்லட்டும். இதுவரை பாரதவர்ஷத்தில் எந்த மணக்கோரிக்கையுடனும் செல்லாத அளவுக்கு பரிசில்கள் அவரை தொடரட்டும்” என்று தமயந்தி ஆணையிட்டார்.

flowerகருணாகரர் நான்கு துணையமைச்சர்களுடன் பன்னிரு வண்டிகளில் பட்டும் பொன்னும் அருமணிகளும் அரிய கலைப்பரிசில்களுமாக கீழ்க்கலிங்கத்திற்கு சென்றார். அவர் செல்லும் செய்தியை முன்னரே தூதர்கள் வழியாக தண்டபுரத்திற்கு அறிவித்திருந்தார். அவர்களை நகரின் கோட்டை முகப்பிற்கே வந்து பேரரசி வழியனுப்பி வைத்தார். அச்செய்தி நகரெங்கும் பரவியது. காளகக்குடிகளில் ஒவ்வொரு நாளும் களிவெறி மிகுந்து வந்தது. அவர்கள் எண்ணுவதன் எல்லையைக்கடந்து எண்ணினர். நளனுக்குப்பின் நிஷதப்பேரரசின் பெருமன்னரென புஷ்கரர் அமைவதைப்பற்றி புஷ்கரரினூடாக காளகக்குடி பாரதவர்ஷத்தின் தலைமை கொள்வதைப்பற்றி விழைவுகள் கணமெனப் பெருகி நிறைந்தன.

கருணாகரர் கலிங்கத்திற்கு சென்றுசேர்ந்த செய்தி தமயந்தியை வந்தடைந்தது. பதற்றத்துடன் என்ன நிகழ்கிறதென்று அவர் பறவைச்செய்திகளை பார்த்திருந்தார். கலிங்க இளவரசி புஷ்கரருக்கு அளித்த செய்தியைக் கேட்டு அவர் சினங்கொண்டு மறுப்பார் என்று அச்சூழ்ச்சியை செய்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அவர் நினைத்தார். ஏனெனில் அவர் மகதனோ மாளவனோ கூர்ஜரனோ புஷ்கரருக்கு மகள்கொடை அளிக்கவேண்டுமென்று எதிர்பார்த்திருந்தார். கீழ்க்கலிங்கம் மிகச் சிறிய அரசு. அவர்கள் அளிக்கும் படைத்துணையென பெரிதாக ஏதுமில்லை. அவர்களின் துறைநகருக்கு பொருள்கொண்டு அளிக்கும் பேரியாற்றை முழுமையாக ஆளும் நிஷதத்தை ஒரு நிலையிலும் அவர்களால் மீறிச்செல்ல முடியாது. கலிங்கத் தூதை அவர் மறுக்கையில் புஷ்கரருக்கும் அவருக்குமான பூசல் முதிருமென்று அவர்கள் கருதுகிறார்கள் என்று கணித்தார். ஆகவேதான் அதை ஒப்புக்கொண்டு அவர்கள் மறுஎண்ணம் எடுப்பதற்குள் பெரும்பரிசில்களுடன் அமைச்சரையே அனுப்பினார்.

அத்திருமணம் நிகழ்ந்து புஷ்கரர் உளம் குளிர்ந்தால் சிறிது காலத்திற்கேனும் அவருள் எழுந்த ஐயமும் விலக்கமும் அகலும் என்று எண்ணினார். காளகக்குடிகள் தாங்களும் ஒரு வெற்றியை பெற்றுவிட்டோம் என்று எண்ணக்கூடும். அவர்களின் தாழ்வுணர்ச்சியை கடக்க அது வழியமைக்கலாம். தென் எல்லையில் தான் வென்ற விஜயபுரியை புஷ்கரருக்கு அளித்து அவரை தனியரசென்றாக்கி நளனுக்கு இளையோனாகவோ தொடர்பு மட்டும் உள்ள இணைநாடாகவோ அமைத்தால் காளகக்குடிகளிலிருந்து எழுந்த அந்த அரசுமறுப்பை கடந்துவிடலாமென்று அவர் கருதியிருந்தார்.

ஆனால் நிகழ்ந்தது மற்றொன்று. கருணாகரரை வரவேற்று உரிய முறைமைகளுடன் அவையமரச் செய்தார் பானுதேவர். அங்கு குலத்தாரும் குடிமூத்தாரும் அந்தணரும் கூடிய அவையில் அவர் எழுந்து தன் தூதுச்செய்தியை சொல்ல வைத்தார். முறைமைகளும் வரிசையுரைகளும் முடிந்தபின் கருணாகரர் கலிங்கத்து இளவரசி புஷ்கரருக்கு அனுப்பிய ஓலையையும் கணையாழியையும் காட்டி அந்த விழைவை பேரரசி தமயந்தி ஏற்றுக்கொள்வதாகவும் அதன்பொருட்டு மணஉறுதி அளிக்க தூதென வந்திருப்பதாகவும் சொன்னார். அவை எந்த விதமான எதிர்வினையுமில்லாமல் அமர்ந்திருந்தது. வாழ்த்தொலிகள் எழாதது கண்டு கருணாகரர் அரசரை நோக்கினார். பானுதேவர் தன் நரையோடிய தாடியைத் தடவியபடி ஏளனமும் கசப்பும் நிறைந்த கண்களுடன் அவரை நோக்கிக்கொண்டிருந்தார்.

கருணாகரர் அந்தத் தூது கலிங்க இளவரசியின் விழைவை ஒட்டியே என அழுத்த விரும்பினார். “எங்கள் அரசி முன்பு தன் கொழுநர் நளமாமன்னருக்கு அனுப்பிய அன்னத்தூது இன்று காவியமென பாடப்படுகிறது. அதற்கு நிகரான காவியமாக கலிங்கத்து இளவரசி மாலினிதேவி அளித்த இக்கணையாழித்தூதும் அமையுமென எண்ணுகிறோம். தன்னுள்ளத்தைப் போலவே இளவரசியின் உள்ளத்தையும் உணர்ந்தமையால் நிகரற்ற பரிசுகளுடன் என்னை அனுப்பியிருக்கிறார் பேரரசி” என்றார்.

தான் உன்னுவதை எல்லாம் ஊன்றிவிட சொல்லெடுத்து “கலிங்கம் நிஷதப்பேரரசின் ஒரு பகுதியே என்றாலும் இம்மணம்கோள் நிகழ்வு இரு நாடுகளுக்கிடையே குருதித் தழுவலாக ஆகும். தென்திசையின் இரு தொல்குடிகளின் இணைவால் ஆயிரமாண்டுகளுக்கு வெல்ல முடியாத அரசென்று எழும். மலைமுடிபோல் இப்பெருநிலத்தை நோக்கியபடி காலம் கடந்து நின்றிருக்கும் அது” என்றார் கருணாகரர். தன் சொற்கள் அமைதியான அவையில் அறுந்த மணிமாலையின் மணிகள் என ஒவ்வொன்றாக ஓசையுடன் உதிர்ந்து பரவுவதை உணர்ந்தார்.

பானுதேவர் தன் அமைச்சர் ஸ்ரீகரரை நோக்கி “இவ்வண்ணம் ஒரு செய்தியை நான் எதிர்பார்க்கவில்லை. நமது இளவரசி புஷ்கரருக்கு கணையாழியும் திருமுகமும் அனுப்பியிருப்பதாக சொல்கிறார்கள். தாங்கள் நோக்கி இதை மதிப்புறுத்த வேண்டும், அமைச்சரே” என்றார். அமைச்சர் ஸ்ரீகரர் எழுந்து வணங்கி “நிஷதப்பேரரசின் அமைச்சர் வந்து அளித்த இச்செய்தியால் இந்த அவை பெருமைகொள்கிறது. அந்தக் கணையாழியையும் ஓலையையும் இந்த அவையின் பொருட்டு நான் பார்க்க விழைகிறேன். அது எங்கள் இளவரசியின் செய்தி என்றால் அதைப்போல் இனியதொரு நோக்கு எனக்கு இனிமேல் அமையப்போவதில்லை” என்றார்.

கருணாகரர் கைகாட்ட துணையமைச்சர் அந்தத் திருமுகமும் கணையாழியும் அமைந்த பொற்பேழையை ஸ்ரீகரரிடம் அளித்தார். அதை வாங்கித் திறந்து கணையாழியை எடுத்து கூர்ந்து நோக்கியதுமே அவர் முகம் மாறியது. ஐயத்துடன் ஓலையை இருமுறை படித்தபின் அரசரிடம் தலைவணங்கி “சினம் கொள்ளலாகாது, அரசே. இது எவரோ இழைத்த சூழ்ச்சி. இது நம் இளவரசியின் கணையாழி அல்ல. இந்தத் திருமுகமும் பொய்யானது” என்றார். பானுதேவர் சினந்து அரியணைக்கையை அறைந்தபடி எழுந்து “என்ன சொல்கிறீர்?” என்றார்.

“ஆம் அரசே, இவை பொய்யானவை” என்றார் ஸ்ரீகரர். “அரசகுடிக்குரிய கணையாழிகளின் எந்த அமைப்பும் இதில் இல்லை. இதிலுள்ள அருமணிகள் மெய்யானவை. அவை அமைந்திருக்கும் முறை பிழையானது. இவ்வோலையின் முத்திரை உண்மையானது, ஆனால் கணையாழி பொய்யென்பதால் இதன் சொற்களையும் ஐயுற வேண்டியிருக்கிறது.” பானுதேவர் உரக்க “எவருடைய சூழ்ச்சி இது?” என்றார். கருணாகரர் “சூழ்ச்சி இங்குதான் அரங்கேறுகிறது. கலிங்க அரசமுத்திரை எவரிடம் இருக்கமுடியும்?” என்றார்.

ஸ்ரீகரர் “சினம்கொள்ள வேண்டாம், அமைச்சரே. தங்களுக்கு ஐயம் இருப்பின் இளவரசியை இந்த அவைக்கு கொண்டு வருவோம். இந்த ஓலையும் கணையாழியும் அவர் அளித்ததென்று அவர் சொல்வாரேயானால் அனைத்தும் சீரமைகின்றன. அல்ல என்றால் இது சூழ்ச்சி என்று கொள்வோம்” என்றார். பானுதேவர் “ஆம், அதை செய்வோம். பிறகென்ன?” என்றபின் திரும்பி ஏவலனிடம் “இளவரசியை அழைத்துவருக!” என்று ஆணையிட்டார்.

கருணாகரருக்கு அனைத்தும் தெளிவாகிவிட்டது. அவர் அரசரின் முகத்தை சிலகணங்கள் கூர்ந்து நோக்கியபின் உடல் தளர்ந்து தன் பீடத்தில் அமர்ந்தார். ஸ்ரீகரர் நிலையழிந்த உடலுடன் இருவரையும் பார்த்தபடி அவையில் நின்றார். அச்சூழ்ச்சியை அவரும் அறிந்திருக்கவில்லை என்பதை கருணாகரர் உணர்ந்தார். இளவரசி அவை புகுந்தபோது திரும்பி அவர் முகத்தை பார்த்ததும் சூழ்ச்சியை இளவரசியும் அறிந்திருக்கவில்லை என்று தெளிவுற்றார். அவை மேடை வந்துநின்ற இளவரசியை நோக்கி பானுதேவர் “மாலினிதேவி, கீழ்க்கலிங்கத்தின் இளவரசியாகிய நீ இந்த அவையில் ஒரு சான்று கூற அழைக்கப்பட்டிருக்கிறாய். உன் பெயரில் ஒரு திருமுகமும் கணையாழியும் நிஷத இளவரசராகிய புஷ்கரருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஓவியத்திற்கு நீ மாலையிட்டு கணவனாக ஏற்றுக்கொண்டதாக அத்தூது சொல்கிறது. அது நீ அனுப்பியதா?” என்றார்.

அவர் முதலில் அச்சொற்களை செவிகொள்ளவே இல்லை. ஆனால் ஏதோ ஒன்று புரிய திகைத்து கருணாகரரையும் அமைச்சரையும் பார்த்தபின் வாயை மட்டும் திறந்தார். அரசி மீண்டும் அவ்வினாவை கேட்டார். “தூதா? நானா?” என்றார். பின்பு உரக்க “இல்லை, நான் எவருக்கும் தூதனுப்பவில்லை. இளவரசர் புஷ்கரரின் பெயரையே இப்போதுதான் அறிகிறேன்” என்றார். “பிறகென்ன தேவை, கருணாகரரே?” என்று பானுதேவர் கேட்டார். கருணாகரர் எழுந்து வணங்கி “இளவரசி என்னை பொறுத்தருள வேண்டும். நிஷதப் பேரரசி தமயந்தியின் பெயரால் இந்த விண்ணப்பத்தை வைக்கிறேன். இந்நிகழ்வை மறந்துவிடுக! சூழ்ச்சியொன்றை மெய்யென்று நம்பி இங்கு வந்தோம்” என்றார்.

ஸ்ரீகரர் நடுவே புகுந்து “சூழ்ச்சியே ஆனாலும் நன்று ஒன்று நடந்துள்ளது. விதர்ப்பப் பேரரசியின் மணத்தூது இங்கு வந்தது ஒரு நல்லூழே. நிஷத இளவரசருக்கு நிகரான மணமகன் இளவரசிக்கு அமைவது அரிது. இந்த மணத்தூதை நமது அரசர் ஏற்பதே நன்றென்பது என் எண்ணம்” என்றார். சினத்துடன் எழுந்த பானுதேவர் “ஆம் ஏற்றிருக்கலாம், உரிய முறையில் இத்தூது வந்திருந்தால். இச்சூழ்ச்சி எவருடையதென்று உங்களுக்குத் தெரியவில்லையா? என் மகளைக் கோரி தூதனுப்பும்போது தான் ஒரு படி கீழிறங்குவதாக நிஷதப் பேரரசி எண்ணுகிறார். ஆகவேதான் பொய்யாக ஓர் ஓலையும் கணையாழியும் சமைத்து என் மகளே அவ்விளவரசனை களவுமணம் கோரியதாக ஒரு கதையை சமைக்கிறார். நாளை இது சூதர்நாவில் வளர வேண்டுமென்று விழைகிறார்” என்றார்.

அவர் மேற்கொண்டு சொல்லெடுப்பதற்குள் கருணாகரர் “தங்கள் சொற்களை எண்ணிச்சூழ்வது நன்று, அரசே” என்றார். பானுதேவர் உரக்க “ஆம், எண்ணிச் சொல்கிறேன். இது கலிங்கத்தை கால்கீழிட்டு மிதித்து மணம்கோர நிஷதர் செய்யும் சூழ்ச்சி. அருமணி பொறிக்கப்பட்ட கணையாழிகளை பேரரசுகள் மட்டுமே உருவாக்க முடியும். இதிலுள்ள அருமணிகள் பேரரசர்களின் கருவூலங்களுக்குரியவை. அவை மெய்யான அருமணிகள் என்பதனால்தான் நானும் ஒரு கணம் நம்பினேன். இது தமயந்தியின் சூழ்ச்சியேதான். ஒருவேளை அமைச்சருக்கு இது தெரியாமல் இருக்கலாம்” என்றார்.

தன் நிலையை குவித்து தொகுத்து சீரான குரலில் கருணாகரர் சொன்னார் “அத்தகைய எளிய சூழ்ச்சிகளினூடாக உங்கள் மகளைக் கொள்ளும் இடத்தில் பேரரசி இல்லை என்று அறிக!” பானுதேவர் சினத்தால் உடைந்த குரலுடன் “நிஷத இளைஞனுக்கு தூதனுப்பும் இடத்தில் தொல்குடி ஷத்ரியப் பெண்ணாகிய என் மகளும் இல்லை” என்றார். கருணாகரர் “சொல்தடிக்க வேண்டியதில்லை. நா காக்க. இல்லையேல் கோல் காக்க இயலாது போகும்” என்றார்.

அவை மறந்து கொதிப்பு கொண்ட பானுதேவர் கைநீட்டி “இனியென்ன காப்பதற்கு? இந்த அவையில் என் மகளை இழிவுபடுத்திவிட்டார்கள். இந்த மணத்தை நான் ஏற்றால் அதன் பொருளென்ன? இவர்கள் இப்படி மணத்தூதுடன் வரவேண்டுமென்பதற்காக இவ்வோலையையும் கணையாழியையும் நான் சமைத்தளித்திருப்பதாகத்தானே உலகோர் எண்ணுவர்? எனக்கு இழிவு. ஓர் இழிவு போதும், பிறிதொன்றையும் சூட நான் சித்தமாக இல்லை” என்றார். “போதும்! வெளியேறுங்கள்! எனக்கு இழிவு நிகழ்த்தப்பட்டமைக்கு நிகர் இழிவை அந்தணராகிய உம் மேல் சுமத்த நான் விரும்பவில்லை.”

அத்தருணத்தில் ஸ்ரீகரரும் அனைத்தையும் உணர்ந்துகொண்டார். அது அவரறியாத பெருஞ்சூழ்ச்சி வலையென்று. கருணாகரர் “நன்று! இனியொன்றே எஞ்சியுள்ளது. நான் சென்று அரசியிடம் சொல்லவேண்டிய சொற்களெவை? அதை சொல்க!” என்றார். “இருங்கள், அமைச்சரே. இந்த அவையில் நாம் எதையும் இறுதி முடிவென எடுக்கவேண்டாம். நாளை இன்னொரு சிற்றவையில் அனைத்தையும் பேசுவோம்” என்றார் ஸ்ரீகரர். “இனியொரு அவையில் நான் இதை பேச விரும்பவில்லை. என் சொற்களை இதோ சொல்கிறேன்” என்றார் பானுதேவர். “அரசே, அரசியல் சொற்களை எழுத்தில் அளிப்பதே மரபு” என்றார் ஸ்ரீகரர். “இது அரசச்சொல் அல்ல. என் நெஞ்சின் சொல்” என்றார் பானுதேவர்.

சிவந்த முகமும் இரைக்கும் மூச்சுமாக “இவ்வாறு சொல்லுங்கள், அமைச்சரே. இச்சொற்களையே சொல்லுங்கள்” என பானுதேவர் கூவினார். “நிஷதப் பேரரசி நானும் ஒரு அரசனென்று எண்ணி என்னை நிகரென்றோ மேலென்றோ கருதி இம்மணத்தூதை அனுப்பியிருந்தால் ஒருவேளை ஏற்றிருப்பேன். எவரோ வகுத்தளித்த இழிந்த சூழ்ச்சியொன்றால் எனது மகளை சிறுமை செய்தார். அதற்கு அடிபணிவேன் என்று எதிர்பார்த்ததனால் என்னை சிறுமை செய்கிறார். ஆகவே இந்த மணத்தூதை நான் புறக்கணிக்கிறேன். நிஷத அரசுக்கு முறைப்படி மகள்கொடை மறுக்கிறேன்.”

“போரில் தோற்றமையால் கலிங்கம் நிஷதத்திற்கு கப்பம் கட்டலாம். ஆனால் நிஷதகுடிகள் சமைத்துண்ணத் தொடங்குவதற்கு முன்னரே சூரியனின் முதற்கதிர் இறங்கும் மண்ணென கலிங்கம் பொலிந்திருக்கிறது. நூற்றெட்டு அரச குடிகள் இங்கு ஆண்டு அறம் வாழச்செய்திருக்கிறார்கள். என் கடன் என் மூதாதையரிடம் மட்டுமே. என் செயல்களினூடாக என் கொடிவழியினருக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். இன்று சிறுத்து மண்ணில் படிந்திருக்கலாம் எனது குடி. நாளை அது எழும். அந்த வாய்ப்பைப் பேணுவது மட்டுமே இத்தருணத்தில் நான் செய்யக்கூடுவது” என்றார் பானுதேவர். பின்னர் மூச்சுவாங்க அரியணையில் அமர்ந்தார்.

“நன்று! இச்சொற்களையே அரசியிடம் உரைக்கிறேன்” என்று சொல்லி தலைவணங்கிய கருணாகரர் “இச்சொற்களை இளவரசி ஏற்கிறாரா என்று மட்டும் கேட்க விழைகிறேன்” என்றார். மாலினிதேவி “ஆம், அவை என் சொற்கள்” என்றார். “நன்று, உங்கள் அவைக்கும் கோலுக்கும் நிஷத அரசின் வாழ்த்துக்கள்! நன்றே தொடர்க!” என வணங்கி கருணாகரர் அவை நீங்கினார்.

தொடர்புடைய பதிவுகள்

மலேசியா, கண்கள், கருத்துக்கள்

$
0
0

 

b

ஜெமோ,

பயணித்துக் கொண்டிருக்கும் வண்டி திடீரென்று நிறுத்தப்படும்போது, அதில் தூங்கிக் கொண்டிருக்கும் பயணி திடுக்கிட்டு எழுவது போல் தான் இருந்தது நீங்கள் மலேசியாவில் ஆற்றிய உரையை கேட்ட பிறகு.

 

எழுதுவதற்கு பரந்த மற்றும் ஆழ்ந்த வாசிப்பு தேவை என்பதை மீண்டும் மூர்க்கமாக நிறுவியிருக்கிறீர்கள். மரபிலக்கியங்களில் உள்ள குறைகளான பிறதுறை தொடர்பில்லாத ஒற்றைப்படைத் தன்மையை சுட்டிக்காட்டி நவீன இலக்கியத்தின் பன்முகத்தன்மையை உணர்த்தியுள்ளீர்கள்.

 

ஆனால், என்னைப்போல எழுதும் வாயிலுக்கு உங்களின் எழுத்தால் இழுத்து வரப்பட்டவர்களுக்கு அந்த அளவுகோல்கள் தொடுவானமாய் தெரிந்தாலும், அவை கலங்கரை விளக்கமும் கூட.

 

இந்த அளவுகோல்களை நீங்கள் மூர்க்கமாக வைக்காவிடில், நீங்கள் சொல்வது போல் அரைவேக்காட்டுப் படைப்புகள் நவீன முலாம் பூசிக்கொண்டிருப்பது வாசகர்களுக்கு தங்கமாகவே இருந்திருக்கும்.

 

அன்புடன்

முத்து

 

அன்புள்ள முத்து,

 

அது எவ்வகையிலும் ஒரு சோர்வுறுத்தும் முயற்சி அல்ல.  ஓர் அறைகூவல். நாம் ஒவ்வொருவருக்கும்தான். செல்லக்கூடும் தொலைவு மிகுதி. அதைத்தான் சொல்லவந்தேன்

 

ஜெ

a

அன்புநிறை ஜெ,

 

கிளம்பும்போது விடைபெற்றுக் கொள்ள முடியவில்லை. கண்களின் வலியும் சிரமமும் பொறுத்துக்கொண்டு ஒவ்வொரு நிகழ்விலும் தீவிரம் சற்றும் குறையாது உரையாற்றி, அனைவரோடும் உற்சாகமாக உரையாடிக் கொண்டு, வினோதமான மனிதர்களின் எதிர்வினைகளையும் எதிர்கொண்டு,

இடைப்பட்ட நேரங்களில் எல்லாம் வெண்முரசு!!

 

கண்களின் வேதனை தற்போது குறைந்திருக்குமென நம்புகிறேன்.

 

அரங்கிலும் வெளியிலும் அறையிலும் உடனிருந்த, பேசிய தருணங்களைப் பேசிப் பேசி மீட்டிக் கொண்டிருக்கிறோம்.

 

மிகத் துல்லியமாக போர்வையை விரித்து ஒரு புறத்துக் கட்டிலில் நாஞ்சில்நாடும், அதனதன் இயற்கையான ஒழுங்கின்மையில் வேணாடு இன்னொரு பக்கத்திலுமாக என்று எண்ணும்போது உதட்டில் ஒவ்வொரு முறையும் புன்னகை வந்தமர்கிறது.

வளையாத கோதண்டத்தின் இராமாயணம் ஒரு புறமும் ஊழிச்சுழியென வளையும்

மகாபாரதம் ஒருபுறமும் ஒரே அறையில் என்றும் சொல்லலாம் .

 

இனிமையான நினைவுகள். நிகழ்ச்சிக்குப் பின்னர் கணேஷ் கதைக்கு மேல் கதையென கனவிலும் கதைக்கருக்களில் உலவிக்கொண்டிருக்கிறார். குணமாகுமா எனத் தெரியவில்லை.

 

சில புகைப்படங்கள்.

 

பொதிகை நாடக தருணம் போல நீங்கள் ஒருபறம் படுத்திருக்க, கணேஷ் நாஞ்சில் அவர்களிடம் கைநீட்டிப் பேசும் புகைப்படமும், ஆலமர்ந்த  ஆசிரியன் அடியில் நீங்கள் அபய முத்திரை காட்டும் புகைப்படமும் மனதுக்கு நெருக்கமானவை.

 

மிக்க அன்புடன்,

சுபா

c

அன்புள்ள சுபா

 

இனிய நினைவுகள். கொஞ்சம் காலம் கடந்தால் அவஸ்தையும் இனிமையே

 

கண் பயங்கரமாக உறுத்திக்கொண்டிருந்தது. கண்ணீர் வழிதல். கூடவே இலக்கியம். அரட்டை. வெண்முரசு. திரும்பி வந்தபின்னர்தான் 12 நாட்கள் சென்றதே தெரிந்தது

 

இப்போதும் கண் முழுக்க குணமாகவில்லை. நன்றாக இருந்தது. திடீரென்று பயணம், தூசு. அதிகமாகிவிட்டது. இன்றுதான் சற்று குறைந்துள்ளது. இதையே ஒற்றைக்கண்ணை ஈரத்துணியால் மூடியபடித்தான் எழுதுகிறேன்

 

நலம்தானே? உங்கள் கருப்புக்கண்ணாடி அது. உலகமே கொஞ்சம் குளுமையாக ஆகிவிட்டது

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பெண்வெறுப்பும் பாரதியும்

$
0
0

 

bharathi

விதவைகள் மறுமணம் செய்து கொள்வது பற்றிய விவாதத்தில் பாரதியின் பெயர் இடம் பெறாமல் போகுமா? அவ்விவாதத்தின் தொடர்ச்சியாகப் பெண்ணுரிமை பற்றிப் பாரதியின் கருத்துகளும் பேசப்பட்ட போது எழுத்தாளர் அம்பை பாரதி ‘சக்ரவர்த்தினி’ எனும் பத்திரிக்கையில் அரசியல் உரிமை கோரும் பெண்கள் “அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள்” என்று குறிப்பிட்டதாகச் சொன்னார். இத்தகைய முரனையும் சேர்த்தே நாம் பாரதியை புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அம்பை. பாரதியிடம் முரன் இருந்ததா என்பதையும் அது முரனா இல்லை ஒரு சறுக்கலா இல்லை ஒரு காலக்கட்டத்தில் சாதாரணமாகச் சொல்லப்பட்டதா என்பதைப் பார்ப்போமே.

பாரதி பெண் வெறுப்பாளர் என்று அம்பை போகிறபோக்கில் முத்திரை குத்தியதற்கு எதிராக அரவிந்தன் கண்ணையன் எழுதிய கட்டுரை

https://contrarianworld.blogspot.in/2017/06/blog-post.html

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பாவைக்களியாட்டம்

$
0
0
p.l.samy

பி. எல்.சாமி

 

ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நான் பி.எல்.சாமி எழுதிய ‘தமிழகத்தில் பாவைநோன்பு’ என்னும் நூலை முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நூலகத்தில் எடுத்து வாசித்தேன். அன்று எனக்கு ஆய்வுநூல்களை வாசிக்கும் வழக்கம் ஆரம்பித்திருக்கவில்லை. பி.எல்.சாமியின் நூல்களில் நான் முதன்முதலாக வாசித்ததும் அதுதான். பின்னர் அவருடைய அனைத்து நூல்களையும் தேடித்தேடி வாசித்தேன். அவருடைய தமிழகத்தில் தாய்த் தெய்வ வழிபாடு என் சிந்தனையில் ஆழமான பாதிப்பை உருவாக்கிய நூல்

 

பி.எல்.சாமி என்ற பேரில் ஆய்வுநூல்களை எழுதிய பி.லூர்துசாமி ராமநாதபுரம் சிவகங்கை பகுதியை பூர்விகமாகக் கொண்டவர். கத்தோலிக்கக் குடும்பத்தினர். இவருடைய தந்தையார் கோவைப்புலவர் பெரியநாயகம் திருச்சபையின் வரலாற்றை தமிழில் எழுதியவர். தாயார் மரிய மதலேன். எட்டாவது மகனாக 1925 அக்டோபர் 2 அன்று பிறந்தார். கடலூர் மஞ்சக்குப்பத்தில் பள்ளியிறுதியை முடித்தபின் திருச்சி வளனார் கல்லூரியில் தாவரவியலில் இளங்கலைப் படிப்பை முடித்தார்

 

திருச்சி வளனார் கல்லூரியிலேயே இவர் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பாண்டிச்சேரி சுதந்திரப்போராட்டத்தில் பங்குபெற்றவர் பாண்டிச்சேரியின் விடுதலைக்குப்பின் விலியனூரில் வட்டார வளர்ச்சி அலுவலராக ஆனார். மாவட்ட ஆட்சித்தலைவர் தேர்வு எழுதி வென்று ஆட்சியராகவும் செயலராகவும் உயர்பதவிகளை வகித்தார்.

 

பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை அவர்களுடன் கொண்ட உறவால் தமிழாய்வுக்கு வந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழ்ச்செல்வி இதழில் முக்கியமான கட்டுரைகளை எழுதினார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இவரது நூல்களை தொடர்ச்சியாக வெளியிட்டது

 

தமிழிலக்கியத்தை அறிவியல் ஆய்வுமுறைமைகளுடன் அணுகுவது இவருடைய வழிமுறை. தமிழிலக்கியங்களில் உள்ள தாவரங்கள், விலங்குகள், பயன்பாட்டுப்பொருட்கள் ஆகியவற்றை பற்றிய இவருடைய விரிவான ஆய்வுகள் பழந்ததமிழக வாழ்க்கையைப்பற்றிய புதிய வெளிச்சங்களை அளித்தவை. சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம், சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், சங்க இலக்கியத்தில் மீன்கள், சங்க இலக்கியத்தில் மணிகள், இலக்கியத்தில் அறிவியல் போன்ற பலநூல்கள் இவரால் எழுதப்பட்டவை.

 

தமிழிலக்கியம் காட்டும் செய்திகளின்படி பாவை என்பது முதன்மையாக ஓவியம்தான்.நீரில் காணப்படும் பிம்பமும் கண்ணாடியில் தெரியும் தோற்றமும் கூட பாவை என்றே குறிப்பிடப்பட்டன. குகைகளில் வரையப்பட்ட ஓவியங்களை வழிபடும் முறை தமிழ்ப்பண்பாட்டின் தொடக்கத்தில் இருந்துள்ளது. பின்னர் தரையிலும் சுவர்களிலும் வரையப்பட்ட ஓவியங்கள் வழிபடப்பட்டன. இதுவே பாவை வழிபாட்டின் தொடக்கம்.

 

இன்றும் தென்கேரளத்தில் இவ்வழக்கம் உள்ளது. இங்கு கொற்றவை சுவரோவியமாக வழிபடப்படுகிறாள். களமெழுத்துபாட்டு என்னும் கலை புள்ளுவர் என்னும் தொல்குடிப்பூசகர்களால் வண்ணப்பொடிகளால் தரையில் தெய்வ உருவங்களை வரைந்து வழிபடுவது.

 

கன்னியரையும் பெண்களையும் தெய்வங்களாக உருவணிவித்து வழிபடுவது இவ்வழிபாட்டின் தொடர்ச்சி. இதுவும் பாவை வழிபாடு என்றே சொல்லப்பட்டன. சிலப்பதிகாரம் சிறுமி ஒருத்தியை கொற்றவைபோல தோற்றம் அணிவித்து எயினர் வழிபடுவதை சித்தரிக்கிறது. வடகேரளத்தில் உள்ள தொன்மையான கலையான தெய்யாட்டம் என்பது மனிதர்கள் தெய்வ வடிவத்தில் வந்து வழிபடப்படுவது

 

அதன் தொடர்ச்சியாகவே சைவ வைணவ மதங்களில் பாவை வழிபாடு உருவானது. காலப்போக்கில் பாவை என்பது சிறிய சிலையை குறிப்பதாக ஆகியது. அதை பெண்கள் புலரியில் எழுந்து ஆற்றுக்குக் கொண்டுசென்று நீராட்டி மலர்சூட்டி வழிபடுவதே பாவை வழிபாடு. பின்னர் அது ஆலயவழிபாடாக மாறியது. ஒரு வகை நோன்பாக மட்டும் எஞ்சியது.

 

ஆனாலும் வழிபாட்டின் மனநிலை பெரிதும் மாறவில்லை. பெண்கள் நோன்பிருப்பதும் புலரியில் எழுந்து ஒருவரை ஒருவர் அழைத்து சேர்த்துக்கொண்டு நீராடச்செல்வதும் ஆண்டாளால் திருப்பாவையில் பாடப்படுகின்றது. பிற பெண்களை எழுப்புவதற்காக சிறிய பறைகளை அடித்தபடி விடியற்காலை இருட்டில் அவர்கள் செல்கிறார்கள்.

thay

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!

 

 

 

சைவ மரபில் பாவை நோன்பிருந்ததை மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடலில் இருந்து அறிகிறோம்

 

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே

ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்!

 

 

தமிழகத்தில் அனேகமாக எங்குமே இந்த நோன்பும் சடங்கும் இன்றில்லை. ஆனால் என் இளமையில் எங்களூரில் இருந்தது. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்திற்கு ஒன்பதுநாள் முன்னர் இது தொடங்கும். பெயர் திருவாதிரப்பாவ நோன்பு. பெண்கள் ஒருபொழுது உண்டு வண்ண ஆடைகள் அணியாமல் மலர்சூடாமல் நோன்பிருப்பார்கள்.

 

விடியற்காலையில் மூன்றுமணிக்கே பெண்கள் குளிக்கக் கிளம்பிவிடுவார்கள். அவர்களின்பொருட்டு ஒரு ஊர்க்கட்டுப்பாடு இருந்தது. நோன்பு முடித்து அவர்கள் சிவன் கோயிலில் பூசை செய்து வீடுதிரும்புவது வரை ஆண்கள் எவரும் எதன்பொருட்டும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. அவர்கள் சூரியன் உதிப்பதற்கு முன்னரே கோயிலுக்கு வந்து வணங்கிவிட்டு வீடுதிரும்பிவிடுவார்கள். அதன்பின்னர் கோயில்மணி அடிக்கும். ஓ என ஊர் எழும் ஓசை கேட்கும்

 

அக்காக்களுக்கெல்லாம் அது பெரிய கொண்டாட்டம். அன்றெல்லாம் நாயர் , வேளாளர், செட்டியார், ஆசாரி, நாடார் சாதிப் பெண்களுக்கு இற்செறிப்பு உண்டு. கன்னியாக ஆனபின்னர் சாதாரணமாக வீட்டைவிட்டு வெளியே செல்லமுடியாது . எங்கே போனாலும் உடன் ஆண்களோ அன்னையரோ இருப்பார்கள்.. திருவாதிரை நோன்பு மிகப்பெரிய விடுதலை.

 

கருக்கிருட்டிலேயே தென்னையோலைச் சருகை பந்தமாகக் கொளுத்தி சுழற்றியபடி சிறிய இடைவழிகளினூடாகச் செல்வார்கள். “பூஹேய்! பூஹேய்!” என்ற கூச்சல் கேட்டு ஒவ்வொருவராகச் சென்று சேர்ந்துகொள்வார்கள். குளிப்பதற்காக ஆற்றுக்குச் செல்வதாக பாவனை. சுற்றிவளைத்து சென்றுசேர நெடுநேரமாகும். குளித்துக்கரையேற மேலும் பொழுதாகும். அந்தச் சுதந்திரத்திற்காகவே விடியற்காலை இரண்டுமணிக்கெல்லாம் எழுந்து வெளியே செல்ல ஆரம்பித்துவிடுவார்கள். சிரிப்பு நக்கல். நினைத்ததை எல்லாம் செய்யலாம்.

 

என் அம்மா அந்தக்காலத்தில் பெரிய சண்டிராணி. ஆற்றில் சாய்ந்து நின்றிருக்கும் தென்னைமேல் ஏறி ஆடி அங்கிருந்து நீரில் குதிப்பாள். யக்‌ஷி ஆலயத்தின் மேலேறி நின்று நடனமிடுவாள். நான் சின்னப்பையனாக இருக்கையில் அம்பிகா அக்கா ஒரு ராஜநாகத்தையே கவண் குச்சியால் பிடித்து விட்டாள் என்றார்கள். நினைக்க முடியாததை எல்லாம் செய்வார்கள். அது பெண்களுக்கு மட்டுமேயான ஒரு கொண்டாட்ட காலம்

 

கடைசியில் திருவாதிரை நாள் வரும். அன்று நோன்பிருந்தவர்கள் வண்ண ஆடை அணிந்து பூச்சூடி வந்து ஏற்றிவைக்கப்பட்ட குத்துவிளக்கைச் சுற்றிச்சுற்றிவந்து ஆடுவார்கள். பெரும்பாலும் ஆனந்தபைரவியில் அமைந்த திருவாதிரைப்பாடல் சிவபார்வதி காதலைப்பற்றியதாக இருக்கும். திருவாதிரை நோன்பிருந்த பெண்களுக்கு சிறந்த மணவாழ்க்கை அமையும் என்பது அக்கால நம்பிக்கை

 

மலையாளப்படங்களில் திருவாதிரகளி நிறையவே பதிவாகியிருக்கிறது. ஆச்சரியமாக ஒரு பழைய படத்தில் நோன்புக்கு குளிக்கச்செல்வதே வருவதை பார்த்தேன். பழையநினைவுகள். அந்த அக்காக்களில் பெரும்பாலானவர்கள் இன்று அந்நினைவுகளுடன் முதுமையில் இருப்பார்கள். அல்லது மறைந்துவிட்டிருப்பார்கள்.

 

தனுமாசத்தே திருவாதிர திருநொயம்பின் நாளாணல்லோ

திருவைக்கம் கோயிலில் எழுந்நெள்ளத்து

திருவேதப்புரையிலும் எழுந்நெள்ளத்து

 

 

 

 

பி எல் சாமி அவர்களின் வாழ்க்கை. முனைவர் மு. இளங்கோவன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 32

$
0
0

31. நிழற்கொடி

flowerபறவைத்தூது வழியாக கலிங்கத்தில் நிகழ்ந்ததென்ன என்று அன்றே தமயந்தி அறிந்தார். என்ன சூழ்ச்சி என்று அவரால் கணிக்கக் கூடவில்லை. பேரரசி என்றாலும் அவர் சூழ்ச்சியறியாதவராக இருந்தார். களம்நின்று எதிர்கொள்ள எவராலும் இயலாத நிஷதப்புரவிப்படைகளால் வென்றவர். எவரையும் விழிநோக்கிப் பேசுபவர். பானுதேவரை மூன்று முறை மட்டுமே அவர் பார்த்திருந்தார். அவருக்கு கீழ்க்கலிங்கத்தில் முடிசூட்டி வைத்ததே அவர் கைகளால்தான். அன்று தன்முன் நன்றியும் பணிவுமாக கைகட்டி நின்றவனின் முகமே அவர் நெஞ்சில் இருந்தது. ஆகவே அச்சூழ்ச்சி பானுதேவருக்கு எட்டாமல் பிறிதெவராலோ நிகழ்த்தப்படுகிறதென்று அவர் எண்ணினார்.

அவர் இயல்புப்படி செய்வதற்கொன்றே இருந்தது. அனைத்தையும் உடைத்துச்சொல்லி அடுத்தது சூழ்வது. ஆகவே புஷ்கரரை தன் தனியறைக்கு அழைத்து நிகழ்ந்த அனைத்தையும் கருணாகரர் அனுப்பிய ஓலையைக் காட்டி விளக்கினார். அந்தத் தனி அவையில் நாகசேனரும் சிம்மவக்த்ரனும் உடனிருந்தனர். செய்தி கேட்டதும் முதலில் அதிர்ந்து சொல்லிழந்து நோக்கி நின்ற புஷ்கரர் பின்னர் உடல் தளர்ந்து பின்னிருந்த பீடத்தில் அமர்ந்துகொண்டார். அவர் கைகள் நடுங்கிக்கொண்டிருக்க விரல்களைக் கோத்து நெஞ்சோடு சேர்த்தார். விழிதாழ்த்தி நிலம்நோக்கி இருந்தார்.

“புரிந்துகொள்ளுங்கள் இளவரசே, நிஷதகுடி இன்று பாரதவர்ஷத்தை ஆள்கிறது. இரு தலைமுறைகளுக்கு முன்பு கூட இழிசினர் என்று கருதப்பட்டது இக்குலம். இன்று இதன் கொடியை மகதம் முதல் திருவிடம் வரை பறக்க வைத்திருக்கிறோம். இதற்கெதிராக ஆயிரம் குரல்கள் ஒவ்வொரு கணமும் எங்கெங்கோ குமுறிக்கொண்டிருக்கின்றன. பல்லாயிரம் உள்ளங்களில் சினம் நொதிக்கிறது. பலநூறு கரவறைகளில் சூழ்ச்சிகள் இயற்றப்படுகின்றன. தொல்குடிகளுக்குரிய உளஎல்லையை நமது பேரரசரின் சுவைத்திறனால், புரவி நுட்பத்தால் வென்று கடந்தோம். படைதிரட்டி ஷத்ரிய குடிகளை அடக்கினோம். இவர்களின் சூழ்ச்சியை வெல்ல வேண்டியது மூன்றாவது படி. இதிலும் ஏறிவிட்டால் மட்டுமே நமது கொடிவழிகள் இங்கு வாழும்” என்றார்.

புஷ்கரர் மின்னும் விழிகளுடன் அவரையே நோக்கிக்கொண்டிருந்தார். “இச்சூழ்ச்சி உங்களையும் பேரரசரையும் பிரிக்கும் நோக்கம் கொண்டது. இதை அரசர்களே ஆற்றமுடியும். அருமணிகள் பெருங்கருவூலத்திற்குரியவை. உறுதியாக இதில் மகதனின் கை உள்ளது” என்றார் நாகசேனர். புஷ்கரர் எவர் விழிகளையும் நோக்காமல் மெல்லிய குரலில் “அவள் மறுத்தாளா? அவைக்கு வந்து சொல்லிறுத்தாளா?” என்றார். “ஆம், கருணாகரரின் சொற்களில் நாம் ஐயங்கொள்வதற்கு ஏதுமில்லை. நாளையோ மறுநாளோ அவர் இங்கு வந்துவிடுவார். முழுமையாக அனைத்தையுமே அவரிடம் கேட்டு தெரிந்துகொள்வோம். இச்சூழ்ச்சி ஏன் இயற்றப்பட்டது, இதன் விரிவுகளென்ன என்பதை பார்ப்போம்” என்றார் தமயந்தி.

புஷ்கரர் பெருமூச்சுவிட்டுக்கொண்டு பேசாமலிருந்தார். “அவளை நாம் வென்று கைபற்றுவோம். அது மிக எளிது. ஆனால் நம் இலக்கு அதுவல்ல. நாம் கொள்ளவேண்டியது வடக்கே விரிவடையும் நிலம் கொண்ட அரசொன்றின் இளவரசியை. மகதமோ கூர்ஜரமோ அயோத்தியோ கோசலமோ. நாம் தெற்கே இனி செல்வதற்கு தொலைவில்லை. கிருஷ்ணையை இன்னும் சின்னாட்களில் சென்றடைவோம். அதன்பின் நம் படைகள் விரியவேண்டிய திசை இமயம் நோக்கியே” என்றார் தமயந்தி. “நாம் முதன்மை ஷத்ரியகுடியின் இளவரசி ஒருத்தியை கொள்வோம். அதன்பின் இந்த கலிங்கச் சிறுநாட்டின் இளவரசியை அடைவோம். அவள் முடியிலா அரசியாக இருக்கட்டும்” என்றார் நாகசேனர்.

சினத்துடன் எழுந்த புஷ்கரர் “நான் மாலினியை மட்டுமே மணம்செய்வதாக இருக்கிறேன். அவளுக்கு என் குறுவாளை அனுப்பியிருக்கிறேன்” என்றார். “இளவரசே, அது சூழ்ச்சி. அக்குறுவாளை அவள் கண்டிருக்கவே வாய்ப்பில்லை” என்றாள் தமயந்தி. “இல்லை, சூழ்ச்சிகள் தெளிவாகி வரட்டும். நான் இன்னும்கூட அவள் சொல்லை நம்புகிறேன்” என்றார் புஷ்கரர். “இளவரசே…” என சிம்மவக்த்ரன் சொல்லத் தொடங்க “போதும்” என்று கைகாட்டியபின் அவர் எழுந்து வெளியே சென்றார். அவரது சீற்றம் மிக்க காலடியோசை இடைநாழியின் மரத்தரையில் நெடுநேரம் ஒலித்துக்கொண்டிருந்தது.

நீள்மூச்சுடன் “அவர் புரிந்துகொள்வார் என எண்ணுகிறேன். ஏனென்றால் இந்நாட்டின் வாழ்வு அவர் வாழ்வேயாகும்” என்றார் தமயந்தி. நாகசேனர் “அவ்வாறு எண்ணவேண்டியதில்லை, பேரரசி. இதுவரை உலகில் நிகழ்ந்த பேரழிவுகள் பலவும் மானுட இனங்கள் ஐயத்தால், சிறுமையால், பிரிவுப்போக்கால், தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டமையால் எழுந்தவையே” என்றார். அரசி திடுக்கிட்டதுபோல அவரை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் “நான் மீண்டும் அவரிடம் பேசுகிறேன்” என்றார். “ஆம், அது ஒன்றே நாம் செய்யவேண்டியது” என்றார் நாகசேனர்.

flowerஓருநாள் கடந்து கருணாகரர் இந்திரபுரியை வந்தடைந்தார். அவரை தனியவையில் தமயந்தி சந்தித்தார். முறைமைச் சொல்லுக்குப்பின் “பேரரசி, நிகழ்வது ஒர் அரசியல்சூழ்ச்சி. அது கலிங்கன் மட்டும் நிகழ்த்துவதல்ல. அவன் அதில் ஒரு தரப்பு மட்டுமே. நோக்கம் இளவரசரை நம்மிடமிருந்து பிரிப்பது” என்றார். “ஆனால் இப்போது அனைத்தும் தெளிவாகிவிட்டனவே? கலிங்க இளவரசி புஷ்கரரை விரும்பவில்லை என அவையெழுந்து சொல்லிவிட்டாள். அவர் கலிங்கன்மேல் கடுஞ்சினம் கொண்டிருக்கிறார்…” என்றார் நாகசேனர். “எனக்கும் என்ன இது என புரியவில்லை. ஆனால் இதை இவ்வண்ணமே விட்டு நாம் காத்திருப்பது சரியல்ல என உள்ளுணர்வு சொல்கிறது” என்றார் கருணாகரர்.

“என்ன செய்யலாம்?” என்றார் தமயந்தி. கருணாகரர் “அரசி, இளவரசர் ஒரு போருக்கு செல்லட்டும்” என்றார். “போருக்கா? எவருடன்?” என்றார் தமயந்தி. “சதகர்ணிகளிடம்… விஜயபுரிக்கு அப்பால் ரேணுநாடுக்கு அவர்கள் பின்வாங்கியிருக்கிறார்கள். தென்னகக் காடுகளில் அவர்களின் குருதியுறவுகொண்டுள்ள தொல்குடிகள் உள்ளனர். அவர்களை திரட்டிக்கொண்டிருக்கிறார்கள்” என்று கருணாகரர் சொன்னார். “ஆம், எப்படியும் அவர்களை எதிர்கொண்டே ஆகவேண்டும். அப்போர் இப்போது நிகழ்க!” தமயந்தி “ஆனால்…” என சொல்லெடுக்க கருணாகரர் புரிந்துகொண்டு “சதகர்ணிகளாக நம் படைகளே கிளர்ந்தெழுந்து விஜயபுரியை தாக்கும். மாமன்னர் நளன் வடக்கே இருக்கிறார். விஜயபுரியின் காவலர் புஷ்கரரே. ஆகவே அவர் களமிறங்கியாகவேண்டும்” என்றார்.

“அவர் தயங்க முடியாது. களம்நிற்கையில் பிற உணர்வுகளனைத்தும் விலகி உள்ளம் கூர்கொள்ளும். அவர் சதகர்ணிகளை வென்றுவந்தால் அவரது ஆணவம் நிறைவடையும். அவருக்கே விஜயபுரியை அளிப்போம்” என்றார் நாகசேனர். “அவ்வெண்ணம் முன்னரே என்னிடமிருந்தது” என்றார் தமயந்தி. “ஆனால் அவருக்கு தனிநிலம் என்பது காளகக்குடிகளை நம்மிடமிருந்து பிரிக்கும். அவர்கள் மெல்லமெல்ல அந்நிலம் நோக்கிச் சென்று அங்கே குவிவார்கள். அவர்களுக்கு ஒரு நாடு உருவாவது நம்முடனுள்ள பிறகுடிகளை காலப்போக்கில் நம்மிடமிருந்து அகற்றும் ஆசைகாட்டலாக ஆகக்கூடும்.” சிலகணங்களுக்குப்பின் “இப்போது இதை நாம் வெல்வோம். பின்னர் நிகழ்வதை அப்போது பார்ப்போம்” என்றார்.

அன்று மாலையே ஒற்றனிடமிருந்து புஷ்கரர் நகரிலிருந்து கிளம்பிச்சென்றுவிட்டதாக செய்தி வந்தது. தன் அறையில் ஒற்றனை சந்தித்த தமயந்தி திகைப்புடன் “எங்கே?” என்றார். “அதை அறிந்துவர ஒற்றர்களை அனுப்பியிருக்கிறோம், பேரரசி. உச்சிப்பொழுதில் வழக்கமாக துயில்கொள்ளும் கொட்டகைக்கு சென்றிருக்கிறார். கொட்டகைக்கு வெளியே விசிறியாட்டும் ஏவலனாக அமர்ந்திருந்த ஒற்றன் அவர் பின்பக்கம் அமைக்கப்பட்ட புதிய வாயிலினூடாக வெளியேறியதை பார்க்கவில்லை. அவர் கோட்டைவாயில் வழியாக வெளியே செல்லவில்லை. தெற்குச் சிறுவாயில் வழியாக மயானங்களுக்குச் சென்று அங்கிருந்து காட்டுப்பாதையில் நுழைந்திருக்கிறார்.”

“தனியாகவா?” என்றார் தமயந்தி. “இல்லை, உடன் பத்து தேர்ந்த வீரர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் காட்டிலிருந்து பெருவழிக்கு வந்தபோது வணிகனாக சாலையில் சென்ற நம் ஒற்றனால் பார்க்கப்பட்டனர். புஷ்கரர் உருமாற்றம் கொண்டிருந்தாலும் அவன் அடையாளம் பெற்றான்” என்றான் ஒற்றன். “அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை எனக்கு சொல்லுங்கள். அவர்கள் பெரும்பாலும் விஜயபுரிக்கே செல்லக்கூடும்” என்றார். விஜயபுரிக்கான பாதையில் முழுக்காவலையும் முடுக்குவதாகச் சொல்லி ஒற்றன் சென்றான்.

“ஆனால் அவர்கள் கலிங்கத்திற்கு செல்லக்கூடும்” என்றார் கருணாகரர். “அவர் நாம் சொல்வதை நம்பவில்லை. இளவரசியை நேரில் கண்டு கேட்க சென்றிருக்கிறார். அவரைப்போன்ற முதிரா இளைஞரின் உள்ளம் அப்படித்தான் இயங்கும்.” தமயந்தி “அதுவும் நன்றே. அங்கு சென்று உண்மையை உணரட்டும்” என்றார். ஆனால் கலிங்கம் செல்லும் பாதைகள் எதிலும் புஷ்கரர் தென்படவில்லை. அவர் எங்கு சென்றார் என்பதை ஒவ்வொரு நாழிகைக்கும் வந்தபடி இருந்த ஒற்றுச்செய்திகள் வழியாக அவர் உய்த்தறிய முயன்றபடியே இருந்தார். இரண்டு நாட்கள் எச்செய்தியும் வரவில்லை. “அவர் கலிங்கத்திற்கு செல்லவில்லை. கலிங்கத்தின் நமது ஒற்றர்கள் அவரை பார்க்கவில்லை” என்றார் ஒற்றர்தலைவர் சமரர்.

புஷ்கரர் விஜயபுரியை சென்றடைந்துவிட்டார் என்ற செய்தியுடன் தமயந்தியை புலரியில் நாகசேனர் எழுப்பினார். “விஜயபுரியிலா இருக்கிறார்?” என்றபோது தமயந்தி ஆறுதல்கொண்டார். “ஆம், அரசி. ஆனால் அவருடன் கலிங்க இளவரசி மாலினியும் இருக்கிறாள்” என்றார் நாகசேனர். தமயந்தி “அவளை சிறையெடுத்து வந்துவிட்டாரா?” என்றார். பின்னர் புன்னகைத்து “அவ்வண்ணம் நிகழ்ந்தாலும் நன்றே” என்றார். “இல்லை, பேரரசி. அவருக்கு கலிங்க இளவரசி அனுப்பிய தூதுச்செய்தி அவர் இங்கிருக்கையிலேயே வந்திருக்கிறது. அவள் அவர்மேல் கொண்ட காதல் மெய் என்றும் அவருடன் கலிங்கத்தை விட்டு வர ஒப்புதலே என்றும் சொல்லியிருந்தாளாம். அவள் அழைப்பின்பொருட்டே இங்கிருந்து சென்றிருக்கிறார்.”

தமயந்தி ஒன்றும் புரியாமல் நோக்கி நிற்க கருணாகரர் “அவர் அங்கே சென்றதும் கலிங்கத்தின் ஒற்றர்கள் அவரை எதிர்கொண்டிருக்கிறார்கள். இளவரசியை அரண்மனையை அடுத்த மலர்த்தோட்டத்தில் சந்தித்திருக்கிறார். அவருடன் வர இளவரசி ஒப்பினாள். அவளை அங்கிருந்தே அழைத்துக்கொண்டு விஜயபுரிக்கு சென்றுவிட்டார்” என்றார். “விஜயபுரியில் காளகக்குடிகள் இப்போது பெரும்கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இளவரசரின் மணநிகழ்வை எட்டுநாள் விழாவாக அங்கே எடுக்கவிருப்பதாகவும் இரவலருக்கும் சூதருக்கும் கவிஞருக்கும் வைதிகருக்கும் இல்லை எனாது வழங்கவிருப்பதாகவும் முரசறைவிக்கப்பட்டிருக்கிறது.”

flowerஅமைச்சு அவையைக் கூட்டி வந்து அமரும்போதே முழுச்செய்தியும் வந்துசேர்ந்துவிட்டதென தமயந்திக்கு புரிந்தது. நிகழ்ந்ததை கருணாகரர் தெளிவாக சுருக்கி சொன்னார். “அரசி, சூழ்ச்சியின் முழுவடிவும் இப்போது தெளிவாகிவிட்டது. நான் அங்கிருக்கையிலேயே கலிங்கனின் தூதன் இங்கு வந்துவிட்டான். இளவரசரிடம் அவன் சொன்னதென்ன என்று நம் தூதரிடம் இளவரசரே தன் வாயால் சொல்லி அனுப்பியிருக்கிறார்” என்றார். தமயந்தி தலையசைத்தார். “இளவரசர் சொன்னதை அப்படியே சொல்கிறேன். கலிங்க இளவரசி புஷ்கரருக்கு அனுப்பிய தூது முற்றிலும் மெய். அவள் அவரை உளமணம் புரிந்து கன்யாசுல்கத்துடன் அவர் வருவதற்காக காத்திருந்தாள். அவருடைய குறுவாளும் செய்தியும் அவளுக்கு கிடைத்தது. அதை நெஞ்சோடணைத்தபடி அவள் அவருக்காக காத்திருந்தாள். ஆனால் அந்த மணஉறவு நிகழலாகாதென்று நீங்கள் விரும்பினீர்கள். ஆகவே என்னை தூதனுப்பினீர்கள்.”

தமயந்தி அனைத்தையும் புரிந்துகொண்டு சலிப்புடன் பீடத்தில் சாய்ந்தமர்ந்தார். கருணாகரர் தொடர்ந்தார் “நான் அங்கு சென்று சொன்னதாக நீங்கள் புஷ்கரரிடம் சொன்னவை முற்றிலும் பொய். நான் அங்கே சென்று கலிங்க இளவரசியை மணக்க புஷ்கரருக்கு விருப்பமில்லை என்றும் நிஷதத்தின் காலடியில் கிடக்கும் கலிங்கம் எப்படி அந்த மணவுறவை விரும்பலாம் என்றும்தான் கேட்டேன். அவையிலிருந்த இளவரசி எழுந்து புஷ்கரரை அவள் முன்னரே உளமணம் புரிந்துவிட்டாள் என்று சொன்னபோது அவள் விரும்பினால் இளவரசருக்கு உரிமைப்பெண்ணாக திகழலாம் என்று நான் சொன்னேன். அவள் சீற்றத்துடன் புஷ்கரர் அவளுக்கு அளித்த குறுவாளைக் காட்டியபோது அந்த வாள் அவளை புஷ்கரர் அரண்மனை மகளிரில் ஒருவராக ஏற்கவே உறுதியளிக்கிறது என்று நான் சொன்னேன்.”

“என்ன இது?” என்று தமயந்தி கூவினார். உடல் பதற எழுந்து “அரசுசூழ்தலில் இத்தனை கீழ்மை உண்டா என்ன? அங்கே அவைப்பெரியவர்கள் இல்லையா? அந்தணர் எவருமில்லையா?” என்றார். “அவையிலிருந்த அந்தணர் ஸ்ரீகரரை காசிக்கு அனுப்பிவிட்டனர். பிறர் வாய்திறக்கப்போவதில்லை” என்றார் கருணாகரர். “இப்படி அவைநிகழ்வை மாற்றி சொல்லமுடியுமா? ஒரு சான்றுக்கூற்று கூடவா எழாது?” என்றார் தமயந்தி. “பேரரசி, அந்த அவையே திட்டமிட்டுக் கூட்டப்பட்டது. அதில் அந்தணர் ஒருவர் இருந்தால் மட்டுமே நான் நம்புவேன் என்பதற்காக ஸ்ரீகரர் மட்டும் அங்கு நிறுத்தப்பட்டார்” என்றார் கருணாகரர்.

“புஷ்கரர் இவையனைத்தையும் நம்புகிறாரா?” என்றார் தமயந்தி ஏமாற்றத்துடன். “ஆம், அவர் நம்ப விழைவது இது” என்றார் கருணாகரர். “அத்துடன் இச்சூழ்ச்சியின் கண்சுழியாக விளங்கியவரே இப்போது அவருடைய துணைவியென்றிருக்கிறார். அவர் எண்ண விழைவதை இனி கலிங்க இளவரசியே முடிவுசெய்வார்.” தமயந்தி நெடுநேரம் ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் “ஆக, இப்போது நான் இளவரசருக்கு ஒரு ஷத்ரிய மனைவி அமைவதை தடுத்தவள். அவர் குலமேன்மை கொள்வதை அஞ்சுபவள்” என்றார். அவை மறுமொழி சொல்லவில்லை. “அவர் ஐயம்கொள்ள விழைகிறார். வெறுக்க முயல்கிறார். இனி அவர் நாடுவதே விழிகளில் விழும். பிறிதொன்றை நோக்கி அவர் திரும்பவேண்டும் என்றால் அவர் வாழும் முழு உலகே உடைந்து சிதறவேண்டும்… அது எப்போதும் அனைத்தும் கைவிட்டுப்போன பின்னரே நிகழ்கிறது.”

சிம்மவக்த்ரன் “இனி ஒன்றும் செய்வதற்கில்லை. நாம் மீண்டும் உடன்பட்டே ஆகவேண்டும்” என்றான். “கலிங்க இளவரசிக்கும் புஷ்கரருக்குமான மணநிகழ்வை இங்கேயே சிறப்புற நிகழ்த்துவோம். அதில் தாங்களும் பேரரசரும் கலந்துகொண்டு வாழ்த்துங்கள். குடிகளிடையே பரவிக்கொண்டிருக்கும் ஐயமும் சினமும் ஓர் அறிவிப்பிலேயே விலகும்” என்றான். நாகசேனர் “கூடவே புஷ்கரரை விஜயபுரியின் அரசர் என அறிவிப்போம். காளகக்குடிகளின் எதிர்ப்பு அடங்கிவிடும்” என்றார்.

தமயந்தி “இல்லை, அமைச்சரே. அது நிகழலாகாது” என்றார். “என் கொடையாக புஷ்கரர் விஜயபுரியின் முடியைப் பெற்று நான் அளித்த கோலை ஏந்தி அமர்வது வேறு. இப்போது வஞ்சத்தால் அவரை வீழ்த்த எண்ணிய என்னை வென்று அதை அவர் அடைந்ததாகவே அவரது குலம் எண்ணும். இன்று அவர்களிடமிருக்கும் ஐயமும் வஞ்சமும் எஞ்சும் வரை அவர்கள் ஒருங்கிணையவும் நிலைகொள்ளவும் நான் வாய்ப்பளிக்கப் போவதில்லை.” நாகசேனர் “ஆனால்…” என்று சொல்ல நாவெடுக்க அவரை அடக்கி “நான் முடிவுகளை எடுத்துவிட்டேன்” என்றார் தமயந்தி.

தாழ்ந்த உறுதியான குரலில் “புஷ்கரரின் மணநிகழ்வு இங்கே அமையும். அது அரசப்பெருவிழவென்றே ஒருங்கிணைக்கப்படும். அவள் கையைப்பற்றி அவர் கைகளில் என் கொழுநரே கொடுப்பார். விஜயபுரியின் மணிமுடியை அவ்விழவிலேயே அவர் தலையில் நான் சூட்டுவேன். ஆனால் விஜயபுரியின் படையினர் அனைவருமே விதர்ப்ப நாட்டவராகவே இருப்பார்கள். என் ஆணைகொள்ளும் சிம்மவக்த்ரரே அங்கிருந்து அனைத்தையும் இயற்றுவார்” என்றார் தமயந்தி. “ஒருபோதும் அவர் படைகுவிக்க ஒப்பேன். காளகக்குடிகள் இனி ஒருதலைமுறைக்காலம் ஓரிடத்தில் ஒருங்கிணைய முடியாமல் செய்வேன்.”

“ஆணை, அரசி” என்றார் கருணாகரர். பிறர் தலைவணங்கி “ஆம்” என்றனர். “அரசருக்கு செய்தி செல்லட்டும். விழவுக்கான நாளை நிமித்திகருடன் சூழ்ந்து அறிவியுங்கள்” என்றார் தமயந்தி. “தலைமையமைச்சரே நேரில் சென்று இங்கு இளவரசரின் மணவிழவை அவரது தமையன் நின்று நடத்திவைக்க விழைவதாகச் சொல்லி அழைத்துவாருங்கள். அவர் வருவார். அவ்விழவை எனக்கெதிரான ஒரு வெற்றிக் களியாட்டாக மாற்றிக்காட்டமுடியும் என எண்ணுவார். அதற்கு நாமும் அவருக்கு ஒரு வாய்ப்பு அளிப்போம்.”

flowerநளமாமன்னர் இந்திரபுரிக்குத் திரும்பியபோது அவரிடம் அனைத்தையும் கருணாகரர் சொன்னார். ஆனால் சொல்லத்தொடங்கிய சற்றுநேரத்திலேயே நளனின் சித்தம் அதிலிருந்து விலகிவிட்டதை அவர் உணர்ந்தார். இறுதியில் மணவிழவு குறித்த செய்தியைச் சொன்னதும் அவர் முகம் மலர்ந்தது. “பெரிய விருந்தொன்றை நிகழ்த்தவேண்டுமென நானும் எண்ணியிருந்தேன். வடபுலத்தில் முற்றிலும் புதிய உணவுகள் சிலவற்றை கற்றேன். பலவற்றை நானே வடிவமைத்தேன். என் மாணவர்கள் என பதினெண்மர் உடனிருக்கிறார்கள். இவ்விழவின் அடுதொழிலை நானே முன்னின்று நடத்துகிறேன்” என்றார். கருணாகரர் பெருமூச்சுடன் “ஆம், அது ஒரு நற்பேறு” என்றார்.

தமயந்தி அதை கேட்டதும் புன்னகைத்து “ஆம், அவரது சித்தம் இப்போது அடுதொழிலில் மட்டுமே அமைந்துள்ளது. அதுவும் நன்றே. இச்சிறுமைகளை அவர் அறியவேண்டியதில்லை” என்றார். கருணாகரர் குழப்பத்துடன் “இல்லை, பேரரசி. அவர் ஆர்வம் கொள்ளவில்லை. ஆனால் ஒரு தருணத்தில் அனைத்தையும் உணர்ந்தார் என்றால் அதிர்ச்சி அடைவார். நிலைபிறழக்கூடும்” என்றார். “அதை நாம் பின்னர் நோக்குவோம். பிற அனைத்தையும் நீங்களே ஒருங்கிணையுங்கள். பேரரசர் அடுமனையில் ஈடுபட்டிருக்கட்டும். அரியணையமர்வதற்கு மட்டும் அவர் வந்தால் போதும்” என்றார் தமயந்தி. கருணாகரர் தலை வணங்கினார்.

இந்திரபுரியின் மிகப் பெரிய விழவுகளில் ஒன்றாக இருந்தது புஷ்கரரின் மணப்பேறு. நகரம் பன்னிரு நாட்களுக்கு முன்னரே அணிகொண்டது. கோட்டைமுகப்பிலிருந்து நிஷதபுரியின் எல்லைவரை சாலையை தோரணவளைவுகளால் அழகுசெய்தனர். கோட்டைமுகப்பிலிருந்து அரண்மனைவரை மலர்விரிக்கப்பட்ட சாலை அமைக்கப்பட்டது. நகர்மக்கள் அனைவரும் வந்தமரும் அளவுக்கு பெரிய ஏழுநிலை அணிப்பந்தல் செண்டுமுற்றத்தில் கட்டப்பட்டது. அதன் மேலெழுந்த கொடி அரண்மனை மாடத்துக் கொடிக்கு நிகராகப் பறந்தது. மணமேடையை அரியணைகள் அமையும்படி கட்டியிருந்தனர். அவையில் புஷ்கரர் விஜயபுரியின் மணிமுடியை சூடுவார் என்ற செய்தியை காளகக்குடிகளிடமிருந்து பிறர் அறிந்திருந்தனர். அது இயல்பாக நிகழவேண்டியது என்பதே அனைவரும் எண்ணுவதாக இருந்தது.

நளன் முழுநேரமும் அடுமனையிலும் கலவறையிலும் இருந்தார். அடுமனையாளர்கள் அவரால் எண்ணி எண்ணி சேர்க்கப்பட்டனர். ஒவ்வொருவருக்குமான ஆணைகள் அவராலேயே முகச்சொல்லாக அளிக்கப்பட்டன. சமையலுக்கான பொருட்கள் ஒவ்வொன்றும் நளனால் நோக்கி தெரிந்து உறுதிசெய்யப்பட்டன. செம்புத் துருவலென அரிசியும் பொன்மணிகளென கோதுமையும் வெள்ளித்தூள் என வஜ்ரதானியமும் வந்து நிறைந்தன. கனிகளும் காய்களும் அவற்றின் மிகச் சிறந்த தோற்றத்தில் இருந்தன. முத்தெனச் சொட்டியது தேன். பொன்விழுதென அமைந்திருந்தது நெய். கலவறை நிறைந்திருப்பதை நோக்கியபடி நின்றிருந்த நளன் திரும்பி தன்னருகே நின்றிருந்த அடுமனைத்தலைவர் கீரரிடம் “கலவறைப் பொருட்களில் திருமகள் அமைந்தால் போதும். பந்தியில் கலைமகள் சுவையென எழுவாள்” என்றார்.

அன்றைய சமையலை இந்திரபுரியில் நிகழ்ந்தவற்றில் பெரிய வேள்வி என்றனர் கவிஞர். நூறு உருவம் கொண்டு எங்கும் நிறைந்திருந்தார் நளன். அவரது ஆணைகள் ஒவ்வொருவர் காதிலும் தனித்தனியாக ஒலித்தன. பலநூறு கைகளால் கண்களால் அவரே அங்கு நிறைந்திருந்து அச்சமையலை நிகழ்த்தினார். ஒவ்வொன்றும் பிறிதொன்றாக உருமாறின. வேறொரு உலகில் அவை ஒன்றென இருந்தன என ஒன்றை ஒன்று கண்டடைந்தன. உப்பில் நிறைவுற்றது புளிக்காய். புளியில் கரைந்தது இஞ்சி. ஒவ்வொரு பொருளிலும் எழுந்து முரண்கொண்டு நின்றது ஒரு சுவை. அது தன் எதிர்ச்சுவையைக் கண்டு தழுவிக்கொண்டதும் நிறைவடைந்தது. அறியா விரல்களால் பின்னிப்பின்னி நெய்யப்படும் கம்பளம்போல சுவைகளை முடைந்து முடைந்து சென்றது ஒரு விசை. விரிந்தெழுந்தது சுவை என்னும் ஒற்றைப்பரப்பு.

திருமகள் கலைமகளாகிய கணம் எழுந்தது. அடுமனைக்குமேல் நறுமணப்புகையின் அன்னக்கொடி ஏறியது. ஊண்முரசு ஒலிக்கத் தொடங்கியதும் மக்கள் ஆர்ப்பொலியும் சிரிப்பொலியுமாக அன்னநிலை நோக்கி வந்து குழுமினர். பேரரசரின் கையால் உண்பதென்பது அவர்கள் நாள் எண்ணிக் காத்திருப்பது. அவர் படைகொண்டு அயல்நாடுகளில் சென்றமையத் தொடங்கியபின் அது பல்லாண்டுகளுக்கொருமுறை நிகழ்வதென்றாகியது. ஒவ்வொரு மூத்தவரும் அறிந்த சுவைகளை சொல்லிச் சொல்லி இளையோர் உள்ளத்தில் அதை பெருக்கினர். சுவையை மானுடரால் நினைவுகூர இயலாதென்பதனாலேயே அதற்கு நிகரென்று பிறிதொன்றை சொன்னார்கள். பிறிதொன்றுக்கு நிகரெனச் சொல்லப்படுவது அதை எட்டும்பொருட்டு எழுந்து எழுந்து வளர்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் எண்ணியிருந்த விருந்து விண்ணவர் அமுதுக்கு நிகரானது. ஆனால் முன்பு அவ்வாறு எதிர்பார்த்துச் சென்றபோதெல்லாம் அதைக் கடந்து நின்றது அவர் கை அளித்த சுவை.

ஊட்டு மண்டபத்தில் எடுத்து வைக்கப்பட்ட உணவுநிரைகளை நோக்கி நின்றிருந்த நளனை அணுகிய கருணாகரர் “அரசே, மணநிகழ்வுக்கு அவை ஒருங்குகிறது. தாங்கள் அணிகொண்டு எழுந்தருள வேண்டும்” என்றார். “ஆம், இதோ” என்றார் நளன். மீண்டும் ஆணைகளை இட்டபடி சுற்றிவந்தார். அந்த உணவுக்குவைமுன் இருந்து அகல அவர் உள்ளம் கூடவில்லை என உணர்ந்த கருணாகரர் “இளவரசர் நகர்புகுந்துவிட்டார், அரசே. அவர் அரண்மனைக்குள் நுழைவதற்கு முன் தாங்கள் அணிகொண்டாகவேண்டும்” என்றார். “இதோ” என்று நளன் சொன்னார். நினைத்துக்கொண்டு “பழத்துண்டுகள். இவ்வன்னத்துடன் விரல்நீளத்தில் வெட்டப்பட்ட பழத்துண்டுகள் அளிக்கப்படவேண்டும் என்றேனே?” என்றார். “அவை இதோ உள்ளன, அரசே” என்றார் அடுமனையாளர் ஒருவர்.

கருணாகரர் மீண்டும் “அரசே…” என்றார். “இதோ” என்றார் நளன். கருணாகரர் “இளவரசரை எதிர்கொள்ளவேண்டிய புரவிகள் ஒருங்கியுள்ளன. தாங்கள் வந்து உரியனவற்றை தெரிவுசெய்யவேண்டும்” என்றார். “ஆம், நான் சிம்மவக்த்ரனிடம் சொல்லியிருந்தேன்… இதோ…” என மேலும் சில ஆணைகளை இட்டுவிட்டு அவருடன் சென்றார். ஏழு வெண்புரவிகள் அரண்மனை முற்றத்தில் ஒருங்கி நின்றிருந்தன. அவை நளனின் மணத்தை நெடுந்தொலைவிலேயே உணர்ந்து கால்களால் கல்தரையை உதைத்தும் தலைகுனித்து பிடரி உலைய சீறியும் மெல்ல கனைத்தும் வரவேற்றன. அவற்றை அணுகி ஒவ்வொன்றாக கழுத்திலும் தலையிலும் தொட்டு சீராட்டி சிறுசொல் உசாவினார். “ஆம், இவைதான். நான் உரைத்தவாறே அமைந்துள்ளன” என்றார்.

“அரசே, கிளம்புக! அணிகொள்ள நேரமில்லை” என்றார் கருணாகரர். “ஆம், இதோ” என மீண்டும் புரவிகளை கொஞ்சிவிட்டு அவருடன் சென்றார். வெந்நீர் ஏனத்திற்குள் படுத்துக்கொண்டே ஏவலரை அழைத்து அடுமனைக்கான ஆணைகளை விடுத்துக்கொண்டிருந்தார். முந்தையநாள் அந்தியிலேயே புஷ்கரரும் காளகக்குடியின் மூத்தவர்களும் வந்து இந்திரபுரிக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பாடிவீட்டில் தங்கியிருந்தனர். பிறிதொரு அணியாக காளகக்குடிப் பெண்டிருடன் கலிங்க இளவரசி வந்து சோலைக்குடிலில் தங்கியிருந்தாள். அவர்கள் நகர் நுழைவதற்காக நிமித்திகர் வகுத்த பொழுது அணுகிக்கொண்டிருந்தது. நகர்மக்கள் சாலைகளின் இரு பக்கமும் உப்பரிகைகளின் மீது செறிந்து கைகளில் மஞ்சள்பொடியும் மங்கல அரிசியும் மலரிதழ்களும் நிறைந்த தாலங்களுடன் காத்திருந்தார்கள்.

அணியறைக்குள் ஓடிவந்த கருணாகரர் “அரசே, அரசி கிளம்பி அவைக்கு சென்றுவிட்டார்கள். தாங்கள் கிளம்பும்பொழுதைக் கேட்டு ஏவலன் வந்துள்ளான்” என்றார். “உடனே கிளம்புகிறேன். அங்கே கோட்டைவாயிலில் எதிர்கொள்பவர் எவர்?” என்றார். “நாகசேனரும் சிம்மவக்த்ரரும் சென்றுள்ளனர். அவர்கள் அரண்மனை முற்றத்திற்கு வருகையில் நான் இளவரசர் இந்திரசேனருடன் அவர்களை எதிர்கொண்டழைத்து அவைக்கு கொண்டுவந்து சேர்ப்பேன். அவையில் அவருடைய மணநிகழ்வை அரசி முறைப்படி அறிவித்த பின்னர் மங்கல இசைஞரும் அணிச்சேடியரும் சூழ நிஷதர்களின் கொடியுடன் அவர் மணவறைக்குள் செல்வார்.”

நளன் எழுந்தபோது அணிஏவலன் அவர் கால்களின் கழலை திருத்தியமைத்தான். “அடுமனைப்பணி முடித்து பரிமாறும்போது உப்பு குறித்த ஐயம் எழாத அடுமனையாளனே இல்லை” என்றார் நளன் சிரித்தபடி. “இவர்களும் பிறிதொரு நெறியில் இல்லை.” கருணாகரர் புன்னகைத்து “கலைஞர்கள்” என்றார். நளன் சால்வையை எடுத்து அணிந்தபடி கிளம்பினார். கருணாகரர் உடன் வந்தபடி மெல்லிய குரலில் “ஒரு செய்தியை நான் தங்களிடம் சொல்லியாகவேண்டும். அதை இன்னமும் அரசியிடம் சொல்லவில்லை” என்றார். “சொல்க!” என்றார் நளன். “இளவரசர் காகக்கொடியுடன் வந்துகொண்டிருக்கிறார்.”

நளன் புருவங்கள் சுருங்க நின்றார். “நிஷதகுலங்களின் கொடி. அதை நாம் கலிதேவனுக்கான விழவுகளில் அன்றி ஏற்றுவதில்லை இப்போது” என்றார் கருணாகரர். நளனில் எந்த உணர்வும் நிகழாமை கண்டு மேலும் அழுத்தி “இந்திரனின் மின்கதிர்கொடியே நம் அடையாளமென்றாகி நெடுங்காலமாகிறது” என்றார். நளன் அவரையே ஏதும் புரியாதவர்போல நோக்கியபின் புன்னகைத்து “சரி, அதிலென்ன? மூத்தவன் இந்திரனின் அடியவன். இளையவன் கலியின் பணியன். இரு தெய்வங்களாலும் புரக்கப்படுக நம் நகர்” என்றார்.

“இல்லை…” என கருணாகரர் மேலும் சொல்ல “இதையெல்லாம் எண்ணி நம் உள்ளத்தை ஏன் இருள்கொள்ளச் செய்யவேண்டும்? நிகரற்ற விருந்தை இன்று சமைத்துள்ளேன். நானே அதை அவனுக்கு விளம்புகிறேன். சுவையிலாடி தேவர்களைப்போன்று ஆன நம் குடியினர் நம்மை சூழ்ந்திருப்பார்கள். நம்புக அமைச்சரே, இன்று இனியவை அன்றி பிறிது நிகழ வாய்ப்பே இல்லை. இன்றுடன் அத்தனை கசப்புகளும் கரைந்து மறையும். மலர்ந்தும் கனிந்தும் விளைந்தும் கலம்நிறைந்துள்ளது அமுது. அமுதுக்கு மானுடரை தேவர்களாக்கும் ஆற்றலுண்டு” என்றார். கருணாகரர் இதழ்கோட புன்னகை செய்தார். “வருக!” என அவரை அழைத்தபடி நளன் அவைநோக்கி சென்றார்.

தொடர்புடைய பதிவுகள்


கன்யாகுமரியில்…

$
0
0

venpu

இன்று [25- ஜூன் 2017] மாலை கன்யாகுமரியில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறேன். “எனது அடையாளம் தோல் அல்ல- நான்’ என்பது நிகழ்ச்சியின்  பெயர். வெண்புள்ளிகள் [leucoderma] நோய் அல்ல, அது தொற்றாது, பரம்பரையாக வராது என்னும் கருத்துக்களை முன்வைத்து நிகழும் ஒரு நூல்வெளியீடு. கே.உமாபதி எழுதிய வெண்புள்ளிகளைப்பற்றிய விளக்கநூல் வெளியிடப்படும்.

இடம் சுனாமி பூங்கா, கன்யாகுமரி

நேரம் மாலை 4 மணி

நாள் 25 6 2017

கவிஞர் தேவேந்திரபூபதி, ஜி.தர்மராஜன் ஐபிஎஸ், மயன் ரமேஷ்ராஜா, மலர்வதி. டி.இ.திருவேங்கடம், பொன்னீலன், நாஞ்சில்நாடன், அ.கா.பெருமாள். எச்.ஜி.ரசூல், மீரான் மைதீன் போன்றவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

விரல்கள் நுண்கலைகளுக்கான அரங்கம் சார்பில் கூட்டு ஓவியம் வரையும் நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருக்கிறது

*

இரண்டுநாட்களாக கண் ஒவ்வாமை நிலைமீண்டு காட்சிகள் தெளிவாக ஆரம்பித்திருக்கிறது. கன்யாகுமரிக் காற்று என்ன செய்யும் என்று கொஞ்சம் குழப்பமாகவே உள்ளது. ஆனால் கறுப்புக்கண்ணாடியில் நான் திராவிடர் இயக்க ஆதரவாளன் போலத் தெரிவதாக சொன்னார்கள்.அப்படி தோற்றமளித்து வைப்போம், எதிர்காலத்திற்காக என்று நினைக்கிறேன்.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மனுஷியும் வளர்ச்சியும்

$
0
0

manusshi

விருதுகள் மதிப்பீடுகள்
இலக்கியவாதி வளர்கிறானா?

அன்புள்ள ஜெ,

கவிஞனுக்கு ‘வளர்ச்சி’ என்பது இல்லை என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் மனுஷி பிற்காலத்தில் கவிதை எழுதக்கூடும் என்கிறீர்கள். முரண்படுவதற்கு கொஞ்சகால இடைவெளியை நீங்கள் எடுத்துக்கொள்ளலாமே?

சதீஷ்குமார்

***

அன்புள்ள சதீஷ்

அந்தக்காலத்தில் கருப்பையா மூப்பனார் என்ன கேட்டாலும் ‘நல்லகேள்வி’ என்று சொல்லிவிட்டுக் கடந்துசெல்வார். அதைத்தான் செய்யவேண்டியிருக்கிறது

கவிதை பற்றிய அந்த உரையில், அதைத் தொடர்ந்த விளக்கத்தில் திரும்பத்திரும்ப ஒன்றைச் சொல்லியிருக்கிறேன். கவிஞனுக்கு அவன் ’தன்னைக் கண்டடையும் காலகட்டம்\ ஒன்று உண்டு. தன் மொழியை, படிமங்களை, தரிசனங்களை அவன் அப்போது தேடிக்கொண்டிருப்பான். அக்காலகட்டத்தில் அவன் கவிஞனாக வெளிப்பட்டிருக்க மாட்டான், ஆனால் சாத்தியங்களாக வெளிப்படுவான். தேவதேவனுக்கு குளித்துக்கரையேறாத கோபியர்கள் என்னும் முதற்தொகுதிபோல என உதாரணமும் காட்டியிருந்தேன். அவர் வெளிப்பட்டது இரண்டாவது தொகுதியான ‘மின்னற்பொழுதே தூரத்தில்’தான் மனுஷியின் கவிதைகளில் எனக்கு அவர் கவிஞராக எழுவதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன. போதுமா?

என் தலையெழுத்து நான் எல்லாவற்றையும் முப்பதுமுறை விளக்கவேண்டியிருக்கிறது. ஆகவே இந்தக் குறிப்பின் முதல்வரியை மீண்டும் படிக்கும்படியும் இருபத்தொன்பதுமுறை திரும்ப வாசிக்கும்படியும் அன்புடன் கோருகிறேன்

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சீ.முத்துசாமி சிறுகதைகளில் குறியீட்டு மொழி

$
0
0

c mu

தலைப்பு: அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும் (சீ.முத்துசாமி)

1970களில் மலேசிய இலக்கியத்தில் தடம் பதித்து தமிழின் மிக முக்கியமான பரிசுகளையும் விருதுகளையும் பெற்று மலேசிய இலக்கிய உலகிற்குப் பெருமை சேர்த்தவர் ‘மண் புழுக்கள்’ நாவலின் எழுத்தாளர் சீ.முத்துசாமி. மலேசிய நவீன இலக்கியத்தின் உந்துகோல் என்றே சொல்லலாம். அவருடைய சிறுகதை நூலைக் கொண்டு சீ.முத்துசாமி குறியீட்டு மொழியைக் கையாண்டிருக்கும் விதத்தைக் காணலாம்.

பாலமுருகன் எழுதிய கட்டுரை

http://balamurugan.org/2017/06/21/சீ-முத்துசாமி-சிறுகதைகளி/

=================================================

மலேசிய எழுத்தாளர் சீ முத்துசாமி 2017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதைப் பெறுகிறார். விழா இவ்வருடம் டிசம்பரில் கோவையில் நிகழும்

 

சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது
——————————————————————————————————-
சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன்
சீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்
சீ முத்துசாமியின் மண்புழுக்கள் –ரெ.கார்த்திகேசு
சீ முத்துசாமியின் மொழி கே.பாலமுருகன்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஜோ டி குரூஸ் – காத்திருக்கும் பணிகள்

$
0
0
Joe D Cruz

ஜோ.டி.குரூஸ் தமிழ் ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியை வாசித்தேன். பேட்டியைப்பற்றி நான்கு கடிதங்கள். நான்குமே கொந்தளிப்பானவை. ஒன்று, ஜோ ‘துரோகம்’ செய்துவிட்டார் என்று. இன்னொன்று அவர் ‘எதிர்பார்த்ததை’ அளிக்கவில்லை என்பதனால் விலகிச்செல்கிறார் என்று இன்னொன்று அவர் ‘தகுதிக்குமேல் எதிர்பார்த்தார்’ என்று. ஒரு கடிதமாவது  ‘அவர் அப்பவே அப்படித்தான்’ என்று இருந்தாகவேண்டுமே என்று பார்த்தேன். இருந்தது.

பொதுவாக தன்முனைப்பு கொண்டு தன்னை முன்வைத்தே அனைத்தையும் அணுகுபவர்களுக்கு எவரிடமும் உண்மையான மதிப்பு இருப்பதில்லை. தன் திறனை, ஆளுமையை முன்னிறுத்துபவர்களைச் சொல்லவில்லை. அவர்களின் தன்முனைப்பு ஓர் அழகு.

அவர்களுக்கு பிற சாதனையாளர்களை அடையாளம் காணத்தெரியும். பணியவேண்டிய இடத்தில் பணியவும் முடியும்.

எதையும் செய்யாதவர்கள், எவரும் அல்லாதவர்களுக்குள் நுரைக்கும் தன்முனைப்பை நாம் பலசமயம் அறிவதில்லை. அது கழிவிரக்கமாக; தனித்தவன், அயலவன், கலகக்காரன், தியாகி என பலவகையான போலிப்பாவனைகளாக வெளிப்படுகிறது.

அவர்கள் தேடியிருப்பது ஒரு தருணத்தை. எதையாவது செய்தவர்கள், எவராவது ஆனவர்கள் மேல் கசப்பையும் வெறுப்பையும் உமிழும் ஒரு வாய்ப்பை. அது அமைந்ததும் உரிய அரசியல், ஒழுக்கவியல்   நிலைபாடு எடுத்துக்கொண்டு ரத்தமும் புகையும் கக்குகிறார்கள். ஜோ சாதித்துக்காட்டியவர். ஆகவே அவர் அதைச் சந்தித்தே ஆகவேண்டும்.

இரண்டாவதாக, ஏதேனும் அமைப்பு அல்லது கருத்தியல் சார்ந்த நிலைபாடு கொண்டவர்கள். அவர்களுடையது ஒரு கூட்டுத் தன்முனைப்பு. அவர்களுக்கும் எவர் மேலும் மதிப்பில்லை. தாங்கள் தலைமேல் கொண்டாடும் தலைவர்கள்மேல்கூட. நிலைபாடுகள் வழியாக அவர்கள் தங்கள் தன்முனைப்பை முன்வைக்கிறார்கள். ஆகவே தங்கள் நிலைபாட்டுக்கு எதிரானவர் என்றால் எவர் மேலும் எந்த கீழ்மையையும் சுமத்தத் தயங்கமாட்டார்கள்.

இரண்டையும் ஒருவகை  ‘பரிதாப உளவியல்’ என்றே நான் சொல்லத்துணிவேன். அவற்றுக்கு கருத்துமதிப்பு ஏதுமில்லை. அவற்றை எதிர்நிலை வைத்துப் பேசுவது வீண்முயற்சி. ஆகவேதான் ஒருபோதும் அவர்களை நான் பொருட்படுத்தி சுட்டுவதில்லை. இக்கடிதங்களையும் அப்படித்தான் பார்க்கிறேன்.

ஜோ டி குரூஸ் 2015 டிசம்பரில் விஷ்ணுபுரம் விருதுவிழாவில் வாசகர்களை நேரில் சந்தித்து விரிவாக உரையாடினார். அதன்பின் பலமுறை சந்தித்திருக்கிறேன். சிலமாதம் முன்பு என் வீட்டுக்கும் வந்தார். ஜோ டி குரூஸிடம் நான் காண்பது அவருடைய மக்கள் மீதான பெரும் பற்றை.சமரசமே அற்ற நேர்மையை. கனவுகளுடன் எப்போதுமிருக்கும் எளிமையை.

ஜோ டி குரூஸ்- ஐ இலக்கியவாதியாக அறிமுகமான காலம் முதலே நான் அறிந்திருந்தேன். இலக்கியவாதியாக அவர் பெற்ற அங்கீகாரம் அவர் எதிர்பாராதது. தன் மக்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்ய அவர் விரும்பினார். அது அவருடைய நேர்மை, வேகம், அவதானிப்புத்திறன் காரணமாகவே இலக்கியம் ஆனது. அந்த அங்கீகாரமே அவருக்குச் சில அரசியல் எண்ணங்களை உருவாக்கியது. அந்நாவலால் பெற்ற அடையாளத்துடன் அவர் கடற்கரைகளில் பயணம் செய்தார். அதிலிருந்து சில கருத்துக்களைச் சென்றடைந்தார்.

அதில் முக்கியமானது மீனவர்கள் அரசியல்படுத்தப்படவேண்டும் என்பது. மீனவர்கள் அரசியல்படுத்தப்படுவதற்குத் தடையாக இருப்பது மதம். குறிப்பாக மிகமிக வலுவான அமைப்பாக அவர்களை ஆளும் கத்தோலிக்கத் திருச்சபை. இரண்டு வகைகளில் அது மீனவர்கள் அரசியல் சக்தியாகத் திரள்வதற்கு எதிராக இருக்கிறது.

தமிழகத்திலுள்ள மீனவர்களில் நேர்பாதியினர்தான் கிறித்தவர்கள். பிறர் இந்துக்கள். திருச்சபையே மீனவர்களின் முகமாக அடையாளப்படுத்தப்படும்போது மீனவச்சமூகம் இரண்டாகப் பிரிந்துவிடுகிறது. திருச்சபையின் அமைப்புபலமும் நிதியாற்றலும் பிறரிடம் அவநம்பிக்கையை உருவாக்குகின்றன.

இரண்டாவதாக, திருச்சபை கிறித்தவ மக்களை எப்போதும் தன் சிறகுக்குள்ளேயே வைத்துள்ளது. அதன் எளிய கோரிக்கைகளைக்கூட திருச்சபை மூலமே முன்வைக்கவேண்டியிருக்கிறது. திருச்சபையே போராட்டங்களை அமைக்கிறது. அதுவே சமரசமும் பேசுகிறது. அது என்ன செய்தாலும் இயல்பாக மதமுத்திரை வந்துவிடுவதனால் மீனவப்பிரச்சினைகள் எப்போதும் மதப்பிரச்சினையாகவே பார்க்கப்படுகின்றன.

திருச்சபையின் சர்வதேச நிர்ப்பந்தங்கள், பொருளியல் கட்டாயங்கள் மீனவப்பிரச்சினைகளை பாதிக்கின்றன. ஆக, திருச்சபையே மீனவசமூகத்தின் பாதுகாப்பு. கூடவே அது அதன் ஆதிக்கத்தால் மீனவச்சமூகம் அரசியல்மயமாகாதபடி பார்த்துக்கொள்கிறது.

இக்காரணத்தால்தான் ஜோ.டி.குரூஸ் திருச்சபையை மீறி மீனவர்கள் அரசியல்ரீதியாக திரளவேண்டும், மதம் அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கையாக மட்டும்தான் இருக்கவேண்டும் என்று கூறினார். அவர் திருச்சபைக்கு எதிரானவர் அல்ல. இதை நான் அவருக்கு கொற்கைக்கு சாகித்ய அக்காதமி விருது கிடைத்தபோது நடந்த பாராட்டுக்கூட்டத்திலும் குறிப்பிட்டேன். காகு சாமியார் போன்ற ஒரு இலட்சிய கிறித்தவ ஊழியரை அவர் ஆழிசூழ் உலகு நாவலில் முன்வைத்ததை நாம் மறந்துவிடக்கூடாது. திருச்சபையின் சமூகப் பணிகளை, அதன் மத ஆதிக்கத்தை ஜோ எதிர்க்கவில்லை. அவர் அது மீனவர்களின் அரசியலைக் கட்டுப்படுத்தவேண்டாமே என்றுதான் வாதிட்டார்.

அந்த அரசியல்நோக்கே அவரை பாரதிய ஜனதாக் கட்சி நோக்கிக் கொண்டுசென்றது. அதற்கான காரணங்களை அவர் விஷ்ணுபுரம் சந்திப்பில் குறிப்பிட்டார்.. சுருக்கமாக இரண்டு கோரிக்கைகளாக அவற்றை சொல்லலாம். ஒன்று தென்கடலின் மாபெரும் மீன்வளம் ஒரு தேசியப்பொதுச்சொத்து என அவர் கருதுகிறார். அது பலசர்வதேச மீன்பிடிப்பு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகவே அரசியல்வாதிகளால் அளிக்கப்படுகிறது. மீன்வளம் சூறையாடப்படுகிறது. சென்ற ஐம்பதாண்டுக்காலம் மத்திய மாநில அரசுகளை ஆண்ட காங்கிரஸ், திமுக கட்சிகளே அதற்குப் பொறுப்பு.

அதில் கொள்ளையடித்துப்பெருகிய அரசியல்வாதிகள் பலர். விஷ்ணுபுரம் சந்திப்பில் பேசும்போது “திரீ ஜி ஊழல் என்கிறோம். அதை பொரிகடலை ஆக ஆக்குமளவுக்குப் பெரியது மீன்வளக்கொள்ளை” என்றார் ஜோ.

இரண்டாவதாக, தென்கடலின் மீன்வளமும் இங்குள்ள மீனவர் வாழ்க்கையும் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ளன. இங்கே பெருந்தொழிலாக மீன்பிடிப்பை அனுமதித்தான் மீன்வளம் அழியும், மீனவர்களும் அழிவார்கள். ஆகவே பெருந்துறைமுகக் கட்டுமானங்கள் போன்றவை தவிர்க்கப்படவேண்டும். மீனவர்களின் நலன்களை கலந்தாலோசித்தபின்னரே எந்த திட்டமும் முன்னெடுக்கப்படவேண்டும் என்கிறார்.

சென்றகால காங்கிரஸ் ஆட்சிகளில் இந்தச் சூறையாடல் தொடங்கியது என்பதனாலும், கடற்கரை ஒழுங்காற்று வரைவுத்திட்டம் போன்று கடற்கரைமேல் மீனவர்களுக்கு இருக்கும் ஆதிக்கத்தை அழிக்கும் திட்டங்கள் அவர்களால் கொண்டுவரப்பட்டன என்பதனாலும் அவர் மாற்று அரசியலாக பாரதிய ஜனதாவைக் கண்டார். பாரதிய ஜனதாவுக்கு மீனவ வாக்குகள் ஒரு ‘போனஸ்’ என்பதனால் அவர்களுடன் அதன்பொருட்டு பேசமுடியுமென நினைத்தார்.

ஆனால் அவர் கண்டது பாரதிய ஜனதாவின் அரசும் பெருந்தொழில் உட்பட பலவற்றில் காங்கிரஸின் நகல் என்றுதான். பெரும் சுரண்டல் திட்டங்களுக்கு அரசியல் இல்லை என்றுதான். அவருடைய எதிர்பார்ப்புகள் பொய்ப்பதை அவர் நேரடியாகவே அந்த வாசகர்ச்சந்திப்பில் சொன்னார். ஆனால் அன்று அப்போதும் மோடிமேல் நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அவருக்கு பாரதிய ஜனதா முக்கியமான தனிப்பட்ட வாக்குறுதிகளை அளித்தது என எனக்குத் தெரியும். ஆனால் தன் அரசியல்கோரிக்கைகளுடன் சமரசம் செய்துகொண்டு அவற்றை ஏற்க அவர் சித்தமாக இருக்கவில்லை. குமரிமாவட்டத்தில் நிகழும் துறைமுகப்பணிகள், மீன்வளக்கொள்ளை ஆகியவற்றைப் பற்றி அவர்களுக்குச் சங்கடமூட்டும் வினாக்களை கேட்பவராகவே நீடித்தார். மெல்ல அவர்களால் ஒதுக்கப்பட்டு தானும் ஒதுங்கிக்கொண்டார்.

ஜோ.டி.குரூஸ், நேற்று நம் முற்போக்காளர்கள் அவரை ‘விலைபோய்விட்டவர்’ என வசைபாடியதை எப்படி ஏற்றுக்கொண்டாரோ அதே மனநிலையுடன் இன்று அவரது முன்னாள் சகாக்கள் ’கேட்ட விலை கிடைக்காமல் போகிறார்’ என வசைபாடுவதையும் எதிர்கொள்ள வேண்டும். இந்தக்கும்பல் விலைபோகச் சித்தமாக கடைவிரித்து அமர்ந்திருப்பது. இலட்சியவாதம் என்றால் என்னவென்றே அறியாதது.ஆகவே எவரையும் விலைகொண்டே பேசமுடியும் இவர்களால்.

ஜோ டி குரூஸ் முன்னெடுக்கும் அரசியல் இன்றைய சூழலில் மிகமிக இன்றியமையாதது. அது ஒரு முன்னோடிக் கருத்து என்பதனாலேயே எளிதில் அதை பிறர் புரிந்துகொள்ள முடியாது அவர் பெரிய அமைப்புகளுக்கு எதிரான தனிமனிதர் என்பதனாலேயே அவர்மீதான கசப்புகளும் தாக்குதல்களும் அதிகம் இருக்கும். ஆனால் மீனவர்களை அரசியல்படுத்துவதும் மதத்திற்கு அப்பாற்பட்டு அவர்கள் திரள்வதும் இன்றைய அவசியத்தேவை. மிகமெல்ல அவர்களின் பூர்விக நெய்தல் நிலமும்  கடலும் அவர்களை விட்டுச்சென்றுகொண்டிருக்கிறது வருங்காலத்தில் அதைக்காக்க அவர்கள் போராடுவதற்குரிய அடித்தளப்பணி ஜோ செய்துகொண்டிருப்பது.

ஜெ

ஜோ டி குரூஸ், அ.மார்க்ஸ், நவயானா ஆனந்த்- எளிய விளக்கம்
கொற்கை: ஆர். என். ஜோ டி குரூஸ்
விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 19- பேசபட்டவை… கிருஷ்ணன்
விழா 2015 – விஷ்ணுபுரம் விருது
மீன்குருதி படிந்த வரலாறு
ஜோ -சில வினாக்கள்
ஜோ- ஞாநி-விமர்சனங்கள்
ஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி
ஓராயிரம் கண்கள் கொண்டு
ஆழிசூழ் உலகு- நவீன்
எழுதப்போகிறவர்கள்
ஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஜோ டி குரூஸும் இனையம் துறைமுகமும்

$
0
0

Joe D Cruz

 

ஏற்கெனவே பல துறைமுகத் திட்டங்கள் அவசரமாகத் தொடங்கப்பட்டு எல்லாம் பாதியிலேயே செயலிழந்து கிடக்கின்றன. இனையம் பகுதி சரக்குத் துறைமுகத் திட்டம் அப்படியானதுதான். அதற்கான தேவை அந்தப் பகுதியில் இல்லை. மீனவர்கள் அதிகம் வசிக்கும், ஏற்கெனவே மீன்பிடித் துறைமுகம் கட்டிமுடிக்கப்படாமல் பாதியிலேயே விடப்பட்டிருக்கும் அந்தப் பகுதியில் இந்தச் சரக்குத் துறைமுகத் திட்டத்தை மக்களிடம் திணித்தால் இந்திய அரசு பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும். இதனை எனது முப்பது வருட துறைமுகம் சார்ந்த அனுபவத்தில் சொல்கிறேன்.”

 

ஜோ டி குரூஸ் –இனையம் துறைமுகம் பற்றி

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

நற்றிணை நூல்கள் ஆயுள் சந்தா திட்டம்

$
0
0

narri

 

நற்றிணை நூல்கள் ஆயுள் சந்தா திட்டத்தில் ரூ. 5000 செலுத்தி உறுப்பினர் ஆகுங்கள். இலக்கியவாசகரான உங்களுக்கு இதில் பல சலுகைகள் உள்ளன.

  1. உறுப்பினர்கள் நற்றிணை பதிப்பக நூல்களை 30% சலுகையில் சென்னை, மதுரை நற்றிணை அலுவலகங்களிலும் அனைத்துப் புத்தகக்கண்காட்சிகளிலும்பெற்றுக்கொள்ளலாம். ரூ.500க்கு மேல் நூல்கள் வாங்கினால் தபால் கட்டணம் இலவசம் (இந்தியாவுக்குள் மட்டும்).
  2. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை உண்டு. உறுப்பினராகச்சேர்ந்தவுடனேயே ரூ.1000 மதிப்புள்ள நற்றிணை நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்படும். பின்னர் ஆண்டுதோறும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ரூ.1000க்கான நற்றிணை வெளியீடுகள் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
  3. நாங்கள் புதிதாகத் தொடங்க உள்ள நம் நற்றிணை காலாண்டிதழ் அன்பளிப்பாகத் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும்.
  4. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் உறுப்பினர்களுக்கு எழுத்தாளர்களின் உருவச் சித்திரம் தாங்கிய டைரி, மாத காலண்டர், தினசரி காலண்டர் அன்பளிப்பாக வழங்கப்படும்.

அதிரடிச்சிறப்புத் திட்டம்

ஒவ்வொரு வருடமும் உறுப்பினர்களிலிருந்து ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்ற அந்த உறுப்பினருக்குரூ. 25,000 மதிப்பிலான புத்தகப் பரிசுக் கூப்பன் வழங்கப்படும்.

அந்தப் பரிசுக் கூப்பனை பயன்படுத்தி நற்றிணை உள்ளிட்ட அனைத்துத் தமிழ்ப்பதிப்பகங்களிலிருந்தும் நூல்களை வாங்கிக்கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான நூல்களின் பட்டியலை எங்களிடம் அளித்தால் அந்தப் புத்தகங்களை வாங்கி உங்கள் இல்லத்திற்கே (இந்தியாவிற்குள் மட்டும்) அனுப்பிவைப்போம்.

வரும் 2018ஆம் ஆண்டிற்கான குலுக்கல் சென்னைப் புத்தகக்கண்காட்சியின் இறுதி நாளில் தனியாக வேறு ஓர் அரங்கில் நடைபெறும். அன்று தேநீருடன் இலக்கிய விருந்து, அதன்பின் குலுக்கல், வெற்றி பெற்றவர் அறிவிப்பு, எழுத்தாளர் – வாசகர் உரையாடல் என அந்நிகழ்ச்சி அமையும்.

பணம் செலுத்தும் முறை

  1. சென்னை, மதுரை நற்றிணை அலுவலகம் மற்றும் நடைபெற உள்ள கோவை, ஈரோடு, சென்னை, மதுரை புத்தகக்கண்காட்சியில், நற்றிணை அரங்கில் ரொக்கமாகச்செலுத்தலாம்.
  2. காசோலை அல்லது வரைவோலை அனுப்புவதாக இருந்தால் Natrinai Pathippagam Pvt. Ltd. என்ற பெயரில் (Payable at Chennai) சென்னை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

வங்கியின் மூலம் பணம் செலுத்தும் முறை

Account Name:   NatrinaiPathippagam Pvt. Ltd.
Account Number: 512120020011966
Bank Name:  City Union Bank, Teynampet Branch, K.B. Dhasan Road, Chennai – 600018.
IFSC Code: CIUB0000403

 

www.natrinaibooks.comஎன்ற இணையதளத்தின்மூலமாகவும் பணம் செலுத்தலாம்.

 

தொடர்புக்கு:

நற்றிணை பதிப்பகம்
6/84, மல்லன் பொன்னப்பன் தெரு,
திருவல்லிக்கேணி,
சென்னை – 600 005.
தொலைபேசி எண்: 044 2848 2818
கைப்பேசிஎண்கள்: 9486177208, 9095091222, 9095691222
மின்னஞ்சல்: natrinaipathippagam@gmail.com

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 33

$
0
0

32. மின்னலும்காகமும்

flowerகாகக்கொடியை அதுவரை புஷ்கரன் தேர்முனையில் சூடியிருக்கவில்லை. இந்திரபுரியின் மின்கதிர்கொடியே அவன் தேரிலும் முகப்பு வீரனின் கையிலிருந்த வெள்ளிக்கோலிலும் பறந்தது. விஜயபுரியிலிருந்து கிளம்பும்போது அவனுடன் குடித்தலைவர் சீர்ஷரும் மூத்தோர் எழுபதுபேரும் அகம்படியினரும் அணிப்படையினரும் வந்தனர். கிளம்பும்போதே எவரெவர் வரவேண்டும் என்று அங்கே சிறிய பூசல்கள் நிகழ்ந்தன. “இது ஒரு அரசச் சடங்கு. இதை நாம் மறுக்க இயலாது. ஆனால் இதை நாம் பெரிதாக எண்ணவில்லை என்றும் அவர்களுக்கு தெரிந்தாகவேண்டும். எண்ணி அழைக்கப்பட்ட எழுவர் மட்டிலும் பங்கெடுத்தால் போதும்” என்றார் சீர்ஷர்.

“ஆம்” என்று சொன்னாலும் குடிமூத்தார் அனைவருமே வரவிழைந்தார்கள். எவரை விடுவது என்று புஷ்கரனால் முடிவெடுக்க இயலவில்லை. அதை அவன் சீர்ஷரிடமே விட்டான். அவர் தன் குடும்பத்தினரிலேயே அறுவரை தெரிவுசெய்து உடன் சேர்த்துக்கொண்டார். அதை குடிமூத்தாராகிய சம்புகர் வந்து புஷ்கரனிடம் சொல்லி “அரசநிகழ்ச்சியை மட்டுமல்ல அதன்பின் இங்கு நிகழவிருக்கும் மணநிகழ்வையே நாங்கள் புறக்கணிக்கவிருக்கிறோம்” என்றார். பதறிப்போய் அவர் விரும்பும் அனைவரையும் சேர்த்துக்கொள்ள அவன் ஒப்புதலளித்தார். அன்றுமாலைக்குள் பன்னிரு மூத்தார் வந்து அவனெ சந்தித்தனர். இரவுக்குள் நாற்பதுபேர் கிளம்புவதாக ஒருங்கு செய்யப்பட்டது. புலரியில் எழுபதுபேர் வந்து முற்றத்தில் நின்றிருந்தனர்.

புலித்தோலும் கரடித்தோலும் போர்த்தி, தலையில் குடிக்குறியான இறகுகளுடன், குடிமுத்திரை கொண்ட கோல்களை வலக்கையில் ஏந்தியபடி நின்றிருந்த காளகர்களை அவன் திகைப்புடன் நோக்கினான். இவர்களைக்கொண்டு ஓரு தென்னிலத்துப் பேரரசை உருவாக்க கனவு காண்பதன் பொருளின்மை அவனை வந்தறைய சோர்வு கொண்டான். அவனுடைய சோர்வை உணராத சீர்ஷர் “நல்ல திரள்… நாம் சென்றுசேரும்போது இன்னமும் பெருகும். அவர்கள் அஞ்சவேண்டும்” என்றார். அவர்தான் திரள்தேவையில்லை என்று சொல்லியிருந்தார் என்பதையே மறந்துவிட்டிருந்தார்.

புரவியில் சென்ற கொடிவீரனையும் அறிவிப்பு முரசுமேடை அமைந்த தேரையும் தொடர்ந்து இசைச்சூதரும் அணிப்பரத்தையரும் சென்றனர். அதைத் தொடர்ந்து குடிமூத்தார் தேர்களிலும் வண்டிகளிலும் செல்ல அவனுடைய தேர் தொடர்ந்தது. அவனுடன் ஏறிக்கொண்ட சீர்ஷர் “நாம் விஜயபுரியை வென்றதும் முதலில் வெள்ளிக் காப்பிடப்பட்ட தேர் ஒன்றை செய்தாகவேண்டும். இந்தத் தேர் அரசர்களுக்குரியதல்ல. நம் குருதியை கையாளும் அந்த ஷத்ரியப்பெண் வெள்ளித் தேரில் செல்கையில் நாம் இப்படி செல்வதே இழிவு” என்றார். அவர் சற்றுநேரம் பேசாமல் வந்தால் நன்று என்று புஷ்கரன் எண்ணினான்.

ஆனால் அனைத்தையும் தானே நிகழ்த்துவதாக சீர்ஷர் எண்ணிக்கொண்டிருந்தார். தேரை அவ்வப்போது நிறுத்தி வீரர்களுக்கு ஆணைகளை பிறப்பித்தார். திரும்பி அவனிடம் “நான் எப்போதும் கூர்நோக்குடன் இருப்பவன். இப்போது விஜயபுரியில் நாம் இல்லை. எதிரிகள் படைகொண்டுவந்தால் என்ன செய்வது?” என்றார். புஷ்கரன் எரிச்சலுடன் “இருந்தால் மட்டும் என்ன? நானாவது போர்க்களம் புகுந்திருக்கிறேன். நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்றான். அவர் வாய்திறந்து சிலகணங்கள் நோக்கிவிட்டு “இல்லை… ஆனால் அரசுசூழ்தல்… அல்ல, படைக்கள வரைவு…” என்றார்.

புஷ்கரன் ஏளனத்துடன் “நமக்கு எதுவும் தெரியாது. என்னால் எந்தக் களத்திலும் நிற்க முடிந்ததில்லை. இந்த நகரம் மூத்தவரால் பயிற்றுவிக்கப்பட்ட புரவிப்படையாலும் அவற்றை நடத்தும் விதர்ப்ப நாட்டு படைத்தலைவர்களாலும் கைப்பற்றப்பட்டது. அவர்களால் ஆளப்படுகிறது இந்நிலம்” என்றான். அவர் திகைத்து வாயை சிலமுறை அசைத்தார். பின்னர் நடுநடுங்கியபடி “என்ன சொல்கிறாய்? நீ எவரென நினைத்தாய்? நான் உன் தாதனையே பார்த்தவன். அவர் காட்டில் அரக்கு தேடிச்சேர்த்து தலையில் எடுத்துக்கொண்டு சென்று சந்தையில் விற்கையில் கண்களால் கண்டு அருகே நின்றவன். இப்போது நீ இளவரசனாகிவிடுவாயா?” என்று கூவினார்.

அனைத்து தோற்றங்களையும் களைந்து வெறும் கானகனாக மாறி நெஞ்சில் ஓங்கி அறைந்து கூச்சலிட்டார். “மூடா. நான் உன்னை இளவரசன் என்று எண்ணுவது ஒரு சடங்காகத்தான். நீ என்னை சிறுமைசெய்து பேசினால் கைகட்டி நிற்பேன் என எண்ணினாயா?” அவருடைய வாயோரம் எச்சில் நுரைத்தது. “உன் தந்தையின் ஆண்குறி சிறிதாக இருக்கையிலேயே பார்த்தவன் நான். என்னிடம் பேசும்போது சொல்லெண்ணிப் பேசு… ஆமாம்… என்னிடம் எண்ணிப் பேசவேண்டும் நீ.”

புஷ்கரன் “அவருடைய குறியை பார்க்கையில் நீங்களும் அதேபோலத்தான் சிறிய குறி கொண்டிருந்தீர்கள்” என்றான். அவர் விம்மலுடன் ஏதோ சொல்லவந்து சொல்லெழாமல் தவித்து “நிறுத்து! தேரை நிறுத்து! நான் செல்கிறேன்” என்றார். அவன் பேசாமல் நிற்க “நான் இல்லாமல் நீ இந்நகரத்தை ஆள்வாயா? அதையும் பார்க்கிறேன். கீழ்மகனே, நீ யார்? காட்டில் கல்பொறுக்கி அலையவேண்டிய சிறுவன். ஒரு ஷத்ரியப்பெண் உன்னை மணந்தால் நீ ஷத்ரியனாகிவிடுவாயா? அவள் யார்? அவள் உண்மையான ஷத்ரியப்பெண் அல்ல. உண்மையான ஷத்ரியப்பெண் காட்டுக்குலத்தானை மணப்பாளா? அவள் அன்னை சூதப்பெண். அவள் குருதி சூதக்குருதி. அவளுடன் சேர்ந்து நீயும் குதிரைச்சாணி அள்ளிக்கொட்டு. போ!” என்று உடைந்த குரலில் இரைந்தார்.

புஷ்கரன் “இறங்குவதாக இருந்தால் இறங்குங்கள்” என்றான். அவர் இறங்கி கையிலிருந்த கோலை தூக்கி சூழவந்த காளகக்குடிகளை நோக்கி கூச்சலிட்டார். “என்னை சிறுமை செய்தான். காளகக்குடிகளை இழிவுறப் பேசினான். ஒரு ஷத்ரியப்பெண் வந்ததும் குருதியை மறந்துவிட்டான். மூடன்… அடேய், அந்த ஷத்ரியப்பெண் ஒருபோதும் உன் குழவியரை பெறமாட்டாள். அவளுக்கு வெண்குருதி அளிக்க அவள் குலத்தான் இருளில் வருவான்… தூ!”

மூத்தவர் இருவர் அவரை வந்து அழைத்துச்சென்றனர். “விடுங்கள் என்னை. நான் இவனுக்கு படைத்துணையாக வந்தவன். இந்தக் கீழ்மகனின் அன்னத்தை உண்டுவாழவேண்டிய தேவையில்லை எனக்கு” என்று அவர் திமிறினார். “மறந்துவிடுங்கள், மூத்தவரே. இது என்ன சிறிய பூசல்… வாருங்கள்” என்றார் ஒருவர். “இன்கள் இருக்கிறது” என அவர் செவியில் சொன்னார். அவர் விழிகள் மாறின. “காட்டுப்பன்றி ஊனும்” என்றார். அவர் “என்னால் இதை தாங்கிக்கொள்ள முடியாது. என்ன என்று நினைத்தான் என்னை? நான் காளகக்குடிகளின் முதற்தலைவன். இன்னமும் இந்தக் கோல் என் கைகளில்தான் உள்ளது” என்றார்.

“வருக… நாம் நாளை பேசுவோம்” என்று அவர்கள் இழுத்துச்சென்றார்கள். அவர் “இவனை என் மைந்தனைப்போல வளர்த்தேன். கோழை. இவன் செய்த அருஞ்செயல் என்ன, போருக்குப் போனபோதெல்லாம் புண்பட்டு விழுந்ததல்லாமல்? இவன் தொடையில் பாய்ந்தது எவருடைய வேல்? அறிவீரா? இவனே வைத்திருந்த வேல் அது. அதன் முனைமேல் தவறி விழுந்தான். சிறுமதியோன்” என்றார். அவர்கள் “போதும். அதை பிறகு பேசுவோம்” என அவரை பொத்தி அப்பால் அழைத்துச்சென்றார்கள்.

புஷ்கரன் தன் முகத்தில் ஒரு புன்னகை இருப்பதை அதன் பின்னரே உணர்ந்தான். அவரை புண்படுத்தி எதை அடைந்தேன்? அவரை சிறுமை செய்வதனூடாக எதையோ நிகர்செய்கிறேன். அவ்வெண்ணம் மீண்டும் எரிச்சலை கிளப்ப அவன் முகம் மாறுபட்டது. என்னவென்றறியாத அந்த எரிச்சலுடனும் கசப்புடனும்தான் அப்பகலை கடந்தான். விஜயபுரியில் இருந்து இந்திரபுரிக்கு தேர்ச்சாலை போடப்பட்டிருந்தது. பல இடங்களில் சிற்றோடைகளுக்குமேல் மரப்பாலங்கள் இருந்தன. இரு இடங்களில் பெருநதிகளுக்குமேல் மிதக்கும்பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நிஷதர்களின் புரவிகள் மட்டுமே அந்த அலைபாயும் பாலங்களில் நடக்க பயின்றிருந்தன.

அவர்கள் இரவில் தங்கிய வழிமாளிகைக்கு அப்பால் படையினர் அமைத்த பாடிவீட்டில் கலிங்க இளவரசி மாலினிதேவியும் அவளுடன் வந்த நிஷதநாட்டுப் பெண்களும் தங்கியிருந்தனர். மாளிகையின் உப்பரிகையில் நின்றபடி அந்தக் கட்டடத்தை அவனால் பார்க்க முடிந்தது. அதைச் சூழ்ந்து நிஷதப்படைவீரர்கள் காவல் நின்றனர். அதன் முற்றத்தில் கலிங்க இளவரசியின் பட்டுத்திரைகொண்ட தேரும் அவள் தோழிகளின் தேர்களும் நின்றன. கலிங்கத்தின் சிம்மக்கொடி பறந்துகொண்டிருந்தது.

அவன் தன்னுள் உள்ள எரிச்சல் ஏன் என்று அப்போதுதான் உணர்ந்தான். அவள் ஓலையை ஏற்று கலிங்கத்திற்கு மாற்றுரு கொண்டு சென்று இரவில் கோட்டைக்குள் நுழைந்து அணித்தோட்டத்தின் கொடிமண்டபத்தில் அவளை கண்டபோதெல்லாம் அவன் நெஞ்சு எகிறி துடித்துக்கொண்டிருந்தது. சூதர்கள் பாடப்போகும் ஒரு பெருநிகழ்வு. வாள்கொண்டு போரிட நேரிடலாம். குருதி வீழலாம். அவளை சிறைகொண்டு தேரில் மேலாடை பறக்க விரையலாம். அவர்கள் வேல்கள் ஏந்தி துரத்தி வரலாம். அம்புகள் அவர்களை கடந்து செல்லலாம்.

அவளை நேரில் கண்டதும் அவனுடைய பரபரப்பு அணைந்தது. அத்தனை எதிர்பார்த்திருந்தமையால், அவ்வெதிர்பார்ப்பு ஏமாற்றமும் நம்பிக்கையும் ஐயமும் அச்சமும் விழைவும் ஏக்கமும் என நாளுக்குநாள் உச்ச உணர்வுகள் கொண்டு வளர்ந்தமையால் அவளும் வளர்ந்து பெரிதாகிவிட்டிருந்தாள். காவியங்களின் தலைவியருக்குரிய அழகும் நிமிர்வும் கொண்டவள். எண்ணி எடுத்து ஏட்டில் பொறிக்கும்படி பேசுபவள். எதிர்வரும் எவரும் தலைவணங்கும் நடையினள்.

ஆனால் அவள் மிக எளிய தோற்றம் கொண்டிருந்தாள். சற்று ஒடுங்கி முன்வளைந்த தோள்களும், புடைத்த கழுத்தெலும்புகளும், முட்டுகளில் எலும்பு புடைத்த மெலிந்த கைகளும் கொண்ட உலர்ந்த மாநிற உடல். நீள்வட்ட முகத்தில் சிறிய விழிகள் நிலையற்று அலைந்தன. அனைத்தையும் ஐயத்துடன் நோக்குபவள் போலிருந்தாள். அடுத்த கணம் கசப்புடன் எதையோ சொல்லப்போகிறவள் என தோன்றினாள். அவள் கன்னத்திலிருந்த கரிய மருவில் அவளுடைய முகநிகழ்வுகள் அனைத்தும் மையம்கொண்டன. பிற எதையும் நோக்கமுடியவில்லை.

அவள் தாழ்ந்த குரலில் “நான்தான்… இங்கே உங்களுக்காக காத்திருந்தேன். என் காவலர்கள்தான் உங்களை அழைத்துவந்தவர்கள்” என்றாள். அவன் அக்குரலின் தாழ்ந்த ஓசையை வெறுத்தான். இரவின் இருளில் அவ்வாறுதான் பேசக்கூடும் என தோன்றினாலும் அக்குரல் அவனை சிறுமை செய்வதாகத் தோன்றியது. அவன் “நான் எவருமறியாமல் வந்தேன்” என்றான். என்ன சொல்லவேண்டும்? காவியங்களில் என்ன சொல்லிக்கொள்வார்கள்? “நீங்கள் எதையும் அஞ்சவேண்டியதில்லை. இங்கிருப்பவர்கள் அனைவரும் என் வீரர்கள்.” அவன் உளம் சுருங்கினான். “அஞ்சுவதா? நானா?” ஆனால் அச்சொற்களை அவன் சொல்லவில்லை. அவள் முகத்திலிருந்த சூழ்ச்சியை எச்சரிக்கையை விளக்கமுடியாத சிறுமை ஒன்றை மட்டுமே உணர்ந்துகொண்டிருந்தான்.

“நாம் கிளம்புவோம். எந்தையின் ஒற்றர்கள் எக்கணத்திலும் உங்களை கண்டுகொள்ளக்கூடும்” என்றாள். “உடனேயா?” என்றான். “அஞ்சவேண்டியதில்லை. நானே அனைத்தையும் ஒருங்கு செய்துள்ளேன். நமக்காக விரைவுத்தேர் ஒன்று வெளியே காத்து நிற்கிறது. எனக்கு உடல்நிலை சரியில்லை என்றே என் தோழி அன்னையிடம் சொல்வாள். நாம் எல்லையை கடந்த பின்னரே கலிங்கம் நான் கிளம்பிச்சென்றதை அறியும்.” அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உண்மையில் அப்போது அவையனைத்தும் கனவென்றாகி மீண்டும் இந்திரபுரியில் விழித்தெழ விழைந்தான்.

“நேராக விஜயபுரிக்கே செல்வோம். நம்மை இணையவிடாது தடுக்க விழைபவர் கலிங்கத்திலும் இந்திரபுரியிலும் உள்ளனர். அவர்களை வெல்வோம்” என்றாள். “நன்று” என்று அவன் சொன்னான். அவள் “ரிஷபரே” என்று அழைக்க அருகே புதருக்குள் இருந்து இளைய கலிங்க வீரன் ஒருவன் வந்து தலைவணங்கினான். “கிளம்புவோம். அனைத்தும் சித்தமாக உள்ளன அல்லவா?” அவன் தலைவணங்கி “ஆணைப்படியே, இளவரசி” என்றான். “ரிஷபர் என் ஆணையை தலைசூடிய ஒற்றர்” என்றாள். அவன்தான் அவர்களை கோட்டைக்கு வெளியே வந்து எதிர்கொண்டவன். சுருள்முடி தோள்கள் மேல் சரிந்த கூர்மீசை கொண்ட இளைஞன். சற்று ஓரக்கண் கோணல் கொண்டிருந்தமையால் அவனுடைய கரிய முகம் அதன் அமைப்பின் அழகனைத்தையும் இழந்திருந்தது.

அவன் சென்றதும் “இங்கே அருகிலேயே நின்றிருந்தானா இவன்?” என்றான். “ஆம். ரிஷபர் எப்போதும் மிகமிக எச்சரிக்கையானவர்” என்றாள். அவன் மேலும் ஏதோ சொல்ல எண்ணி நிறுத்திக்கொண்டான். அவர்களை ரிஷபன் புதர்களினூடாக அழைத்துச்சென்றான். தெற்குச் சிறுவாயில் வழியாக மயானங்களுக்குள் சென்று அப்பாலிருந்த குறுங்காட்டுக்குள் நுழைந்தனர். உள்ளே அவர்களுக்கான விரைவுத்தேரும் புரவிகளும் நின்றிருந்தன. அவன் அவளுடன் தேரில் ஏறிக்கொண்டதும் அவனுடன் வந்தவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டனர். “பெருநடை போதும். குளம்போசை எழலாகாது” என்றான் ரிஷபன்.

அவர்களை அவனே வழிநடத்தி அழைத்துச்சென்றான். இருளிலேயே அவர்கள் மையச்சாலையை அடைந்தனர். வழியில் எதிர்கொண்ட வணிகக்குழுக்கள் எதிரீடு தவிர்த்து அவர்களுக்கு இடைவிட்டன. விடிகையில் அவர்கள் ஒரு குறுங்காட்டுக்குள் நுழைந்து ஓய்வுகொண்டார்கள். பின்னர் காடுவழியாகவே சென்று மாலையில் பிறிதொரு காட்டில் தங்கினர். மறுநாள் காலையில் கலிங்க எல்லையைக் கடந்து விஜயபுரியின் எல்லைக்குள் நுழைந்தனர். பெரும்பாலான பொழுதுகளில் மாலினி அவனிடம் ஏதும் பேசாமல் பாதையை பார்த்துக்கொண்டிருந்தாள். ரிஷபனை அழைத்துச்சென்று தனியாக நின்று ஆணைகளை பிறப்பித்தாள். அவளிடம் அச்சமில்லை என்பதை அவன் கண்டான். அவர்கள் துரத்திவரமாட்டார்கள் என அறிந்திருக்கிறாளா?

அவளிடம் அதைப்பற்றி கேட்கமுடியாது என்று தோன்றியது. அவள் பேசும்போது அவன் மறுசொல் எடுக்கக்கூடும் என்று எதிர்பாராதவளாக தோன்றினாள். அவள் உள்ளம் முழுக்க தமயந்தியே இருந்தாள். “அவள் அன்னைச்சிலந்தி. நச்சுக் கொடுக்கினள். அங்கிருந்து இழைநீட்டி பின்னிக்கொண்டிருக்கிறாள். நிஷதநாடு என்பது அவள் பின்னும் வலையால் மூடப்பட்டுள்ளது” என்றாள். “அவளை ஒருமுறை ஏமாற்றினோம் என்றால் அறைகூவல் ஒன்றை விடுக்கிறோம் என்றே பொருள். அவள் வாளாவிருக்கமாட்டாள்.”

நிஷதநாடென்பதே தமயந்தியால் உருவாக்கப்பட்டது என அவள் எண்ணுவதுபோல் தோன்றியது. மேலும் உற்றுநோக்கியபோது ஷத்ரியர்களால் நிஷதர்களைக்கொண்டு அமைக்கப்பட்டது இந்திரபுரி என அவள் கருதுவது உறுதியாகத் தெரிந்தது. அதை மறுக்கவேண்டும் என விழைந்தான். தமயந்தி வருவதற்கு முன்னரே தென்னகத்தில் பெருநிலப்பரப்பை நளனின் படைகள் வென்றுவிட்டன என்றும் அவள் அடைந்த அனைத்து வெற்றிகளும் நளன் பயிற்றுவித்த புரவிப்படைகளால்தான் என்றும் அவன் தனக்குள்ளேயே சொல்லாடிக்கொண்டான்.

அவள் ஒர் உரையாடலுக்கு வருவாள் என்றால் அவற்றை சொல்லமுடியும். ஆனால் அவள் செவிகொண்டவளாகத் தெரியவில்லை. அவனுக்கும் சேர்த்து முடிவுகளை எடுத்தாள். ஆற்றவேண்டியவற்றை ஆணைகளாக முன்வைத்தாள். “நாம் இன்றிரவே இந்திரபுரிக்கு முறைப்படி செய்தியை அறிவித்துவிடுவோம். அவர்களை நாம் சிறுமை செய்தோமென அவர்கள் சொல்ல வாய்ப்பளிக்கலாகாது. ஆனால் உங்கள் குடிகள் அவர்கள் உங்களை சிறுமை செய்தார்கள் என்பதை அறியவேண்டும். தொல்குடிகள் அவர்களுக்கு உரிய மதிப்பு கிடைக்கிறதா என்பதையே எப்போதும் கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். மதிப்பு மறுக்கப்பட்டதென்பதை பெருஞ்சினத்துடன் எதிர்கொள்வார்கள். அவர்களின் நிலையா உணர்வுகளை நாம் கூர்ந்து கையாளவேண்டும்” என்றாள்.

சற்றே கோடிய புன்னகையுடன் “தொல்குடிகள் நுரைபோன்றவர்கள் என்பார்கள். அவர்களை எண்ணி ஒரு படையை அமைக்கவியலாது என்றும் போர்க்களத்தில் அவர்களை சிறுசிறு குழுக்களாக்கி ஒருவரோடொருவர் காணாதபடி நிறுத்தவேண்டும் என்றும் நெறிநூல்கள் சொல்கின்றன” என்றவள் சிரித்து “அவர்களில் ஒருவர் அஞ்சி ஓடினால் ஏரி கரை உடைவதுபோல மொத்தப் படையினரும் உடன் ஓடத்தொடங்குவார்கள்” என்றாள். அச்சிரிப்பு அவனை எரியச் செய்தது. “ஆனால் அவர்களை உரிய முறையில் கையாளும் அரசுகள் ஆற்றல்கொண்டவையாக நீடிக்கின்றன. உண்மையில் அங்கமும் வங்கமும்கூட தொன்மையான கானகக்குடிகளே.”

அவன் “அதே வரலாறுதானே உங்களுக்கும்? தீர்க்கதமஸின் குருதி கலந்த பழங்குடிகளில் முளைத்தெழுந்தவைதானே உங்கள் அரசுகள் அனைத்தும்?” என்றான். அவள் முகம் சிறுத்தது. கண்களில் வந்த வெறுப்பு அவனை அஞ்சவைத்தது. “எவர் கற்பித்த பாடம் அது?” என்றாள். பேசியபோது சீறும் நாயென பற்கள் தெரிந்தன. “கலிங்கம் சூரியனின் கால்கள் முதலில் படும் நிலம். இருண்டிருந்த பாரதவர்ஷத்தில் முதலில் ஒளிகொண்ட பரப்பு.” அவன் “நான் சொன்னது பராசரரின் புராணமாலிகையில் உள்ள கதை. தீர்க்கதமஸ்…” என்று தொடங்க “அந்தக் கதை பொய்யானது. தீர்க்கதமஸின் குருதியிலெழுந்தவை அங்கம் வங்கம் பௌண்டரம் சேதி என்னும் நான்கு நாடுகள் மட்டுமே” என்றாள்.

அவன் அவளிடம் பேசமுடியாது என கற்றுக்கொண்டான். அவள் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பி “உங்களை வருத்த எண்ணவில்லை. தொல்குடியினர் உரிய தலைமை இருந்தால் வெல்லமுடியும் என்பதற்குச் சான்றே இந்திரபுரி அல்லவா?” என்றாள். அவன் “ஆம்” என்றான். “அவளுக்குத் தெரியும் உங்கள் குடியின் உணர்வுநிலைகள் அனைத்தும். அந்த நாற்களத்தில் மறுபக்கம் நான் அமர்ந்து ஆடவேண்டும். அதைப்பற்றித்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.”

அவன் சோர்வுடன் தேர்த்தட்டில் சாய்ந்தான். கண்களை மூடிக்கொண்டு நீள்மூச்செறிந்தான். “ஆம், உங்கள் சோர்வை அறிகிறேன். உங்கள் உள்ளம் எளிதில் சோர்வுறுவது. அரசுசூழ்வதென்பது உண்மையில் உள்ளத்தின் ஆற்றலுக்கான தேர்வு மட்டுமே. அதை நான் பார்த்துக்கொள்கிறேன்.” அவன் தன் உளச்சோர்வு எதனால் என அறிந்தான். அவளை அவன் தமயந்தியைப்போன்ற ஒருபெண் என எண்ணிக்கொண்டான். அவையில் அவன் அவளைப்பற்றி தமயந்தியிடம் சொல்லும்போதுகூட அதைத்தான் சொன்னான். அவன் சலிப்புடன் தலையை அசைத்தான்.

அவள் அவனை நோக்கவில்லை. சாலையின் இரு மருங்கையும் நோக்கியபடியே வந்தாள். விஜயபுரியை அடைந்ததும் அதன் கோட்டையை ஏறிட்டு நோக்கியபடி “மிகச் சிறிய கோட்டை. எதிரிகளின் தாக்குதலை ஒரு வாரம்கூட தாங்கி நிற்காது” என்றாள். பெரிய போர்த்திறனர் என தன்னைக் காட்டுகிறாள் என்று அவன் கசப்புடன் எண்ணிக்கொண்டான். “உன் நகரம் எதிர்கொண்ட போர்கள் என்னென்ன? உன் தந்தை எந்தப் போரில் வாளேந்தினார்?” என்று கேட்க எண்ணி நாவசையாமல் நின்றான். “ஆம், நாம் இந்நகர் வரை எதிரிகளை வரவிடப்போவதில்லை. ஆயினும் அனைத்துக்கும் சித்தமாக இருக்கவேண்டும் அல்லவா? சரி, இதை எடுத்துக் கட்டிவிடுவோம்” என்றாள்.

நகருக்குள் நுழைந்ததும் அவர்களை காளகக்குடிகள் மலரள்ளி வீசியும் வாழ்த்துக்கூச்சலெழுப்பியும் வரவேற்றனர். தலைப்பாகைகளை அவிழ்த்து வானில் சுழற்றி வீசினர். வீரர்கள் தேரின் பின்னால் கூவியபடி ஓடிவந்தனர். “வாழ்த்துரைப்பது நன்று. ஆனால் அது கட்டற்றதாக இருக்கக்கூடாது. வாழ்த்தொலிகளை முன்னரே நாம் அளிக்கவேண்டும். அதைமட்டுமே அவர்கள் கூவவேண்டும்… இன்னும் இவர்களை பயிற்றுவிக்க வேண்டியிருக்கிறது” என்றாள்.

அவள் அரண்மனையைப்பற்றி என்ன சொல்வாள் என அவன் எண்ணினாரோ அதையே சொன்னாள். “இதுவா அரண்மனை? காவலர்கோட்டம்போல் இருக்கிறதே?” அவன் புன்னகையுடன் “காவலர்கோட்டமேதான்” என்றான். அவளுக்கு அவன் புன்னகை புரியவில்லை. முதல்முறையாக அவள் அதை பார்ப்பதனால் குழப்பம் கொண்டு விழிவிலக்கிக்கொண்டாள். “இடித்துக் கட்டுவோம்” என்றான். அவன் தன்னை ஏளனம் செய்கிறானா என அவள் ஓரவிழிகளால் நோக்கினாள்.

 flowerகாலையில் கிளம்பும்போது சீர்ஷர் வந்து அவனிடம் முந்தையநாள் நடந்த எதையுமே நினையாதவர்போல பேசலானார். “இளவரசி கலிங்கக் கொடியை ஏந்தி முன்செல்ல ஒரு கரும்புரவியை கோரினாள். கலிங்க வீரன் ஒருவன் அக்கொடியுடன் முன்னால் செல்வான் என்றாள்.” அவன் “யார்? ரிஷபனா?” என்றான். அவர் விழிகளுள் ஒரு ஒளி அசைந்து மறைந்தது. “அல்ல, அவன் இளவரசியின் படைத்தலைவன் அல்லவா? ஷத்ரியக்குருதி கொண்டவர்கள் கொடியேந்திச் செல்லமாட்டார்கள். அதற்கு கலிங்க வீரன் ஒருவனை தெரிவுசெய்திருக்கிறாள்” என்றார். “உயரமானவன். அத்தனை உயரமானவர்கள் நம் குடியில் இல்லை.”

“அதனாலென்ன?” என்று அவன் கேட்டான். “தெரியாமல் பேசுகிறீர்கள், இளவரசே. நான் பார்த்துக்கொள்கிறேன். என்னிடம் விடுங்கள்” என்றார் அவர். புஷ்கரன் மேலும் ஏதோ பேசத்தொடங்க “நானே இதை கையாள்கிறேன். இது மிகவும் நுட்பமானது” என்றார். மேலும் பேச அஞ்சி தலைதிருப்பிக்கொண்டான் புஷ்கரன். அவர் கண்களில் தெரிந்த அந்த ஒளி அவனை அச்சுறுத்தியது. அறிவற்ற முதியவர் என்று தோன்றினாலும் சிலவற்றை அந்த அறிவின்மையின் கூர்மையாலேயே உணர்ந்துகொள்கிறார், அவர் உள்ளே நுழைந்து தீண்டும் நாகம் எது என்று. அவர் முந்தையநாள் சொன்ன சொற்றொடர் ஒன்றை சென்றடைந்து அஞ்சி பின்னடைந்தது அவன் நினைவு.

அவர்கள் அன்றுமாலை சுகிர்தபாகம் என்னும் காவலூரை சென்றடைந்தனர். அங்கே அவர்களை எதிர்பார்த்து காளகக்குடிகள் தங்கள் குடிமுத்திரை கொண்ட தோல்பட்டங்களை ஏந்தி வந்து தங்கியிருந்தார்கள். காவலர்தலைவன் அவர்களை எதிர்கொண்டழைத்துச் சென்று அவனுடைய மாளிகையில் தங்கச்செய்தான். காளகக்குடிகள் அவனுக்கு பரிசில்கள் அளித்து உவகை கொண்டாடினர். “நாம் முடிசூடும் நாள் அணுகுகிறது என்கின்றன தெய்வங்கள். நேற்றுகூட எங்கள் பூசகரில் காகதேவர் எழுந்தருளி நற்சொல் உரைத்தார்” என்றாள் விழுதுகளாக சடைதொங்கிய மூதாட்டி ஒருத்தி. “நம் குலம் பெருகி இம்மண்ணை ஆளும். ஐயமே இல்லை. அது தெய்வச்சொல்” என்றார் மூத்தார் ஒருவர்.

வணிகர்தலைவரின் பெரிய இல்லத்தில் மாலினிதேவி தங்கினாள். அங்கே அவளுக்கு மஞ்சமும் நீராட்டறையும் உகந்ததாக இல்லை என்று காவலன் வந்து சொன்னான். வணிகர்தலைவரின் மனைவியை அதன்பொருட்டு அவள் கடுஞ்சொல் சொன்னாள் என்றான் காவலன். அருகே நின்றிருந்த சீர்ஷர் “அவள் இளவரசி அல்ல. இளவரசியர் இத்தனை சிறுமை கொள்வதில்லை” என்றார். புஷ்கரன் அவரை திரும்பியே பார்க்கவில்லை. அவன் கேட்கவேண்டும் என்று “அவளை இப்போதே நாம் உரிய இடத்தில் வைத்தாகவேண்டும். காளகக்குடியின் நெறிகளை அவள் அறியவேண்டும். காளகக்குடி இப்புவியின் முதல்குடி. நாளை உலகாளவிருப்பது. அதை அறியாமல் எங்கள் குடியின் முத்திரை கொண்ட தாலியை அவள் அணியக்கூடாது” என்றார் சீர்ஷர்.

“என்ன நடந்தது?” என அவன் எரிச்சலுடன் கேட்டான். “அவள் என் அரசி அல்ல. அவள் ஆணையை ஏற்குமிடத்திலும் நான் இல்லை” என்றார் சீர்ஷர். “அவள் உங்களிடம் ஆணையிட்டாளா?” என்றான். “ஆணையிட்டால் அவள் நாவை பிழுதெடுப்பேன். என் ஆணையை அவள் மதிக்கவில்லை. மதிக்கவேண்டும் என அவளிடம் சொல்.” புஷ்கரன் “நான் இப்போது எச்சொல்லும் உரைக்கும் நிலையில் இல்லை” என்றான். “அதுதான் இடர். நீ அவளுக்கு அடிமையாகிவிட்டாய். அவள் காலடியை தலைசூடுகிறாய். அவள் காளகக்குடியின் தலைமேல் கால்வைத்து அமர விரும்புகிறாள்” என்றார் சீர்ஷர்.

மறுநாள் அவர்கள் கிளம்பும்போது காளகக்குடிகளின் பல குழுக்கள் வந்து அவர்களுடன் இணைந்துகொண்டன. செல்லச் செல்ல அப்பெருக்கு வளர்ந்தபடியே சென்றது. அவர்கள் இந்திரபுரியின் எல்லையை அடைந்தபோது இரு முனைகளும் ஒன்றையொன்று பார்க்கமுடியாதபடி அது நீண்டு கிடந்தது. தேர்த்தட்டில் நின்று அவன் நோக்கியபோது அதுவரை இருந்த சோர்வு அகன்று உள்ளம் உவகையில் எழுந்தது. அருகே நின்றிருந்த சீர்ஷர் “ஆம், நம் குடி. நாளை உலகாளப்போகும் கூட்டம்” என்றார். அவன் புன்னகையுடன் “அதை மீளமீள கூவிச் சொல்லவேண்டியதில்லை” என்றான்.

“அதை தெய்வங்கள் சொல்லிவிட்டன. தெரியுமல்லவா?” என்றார் சீர்ஷர். “நாளை நாம் நகர்நுழையும்போது பார்ப்பீர்கள், இளவரசே. காளகக்குடி மட்டுமல்ல சபரர்களும் மூஷிகர்களும் சுவனர்களும் பாரவர்களும் பரிதர்களும் என நிஷாதகுடிகள் அனைத்தும் திரண்டு வந்து அவர்களின் மெய்யான அரசர் எவர் என அறைகூவுவதை கேட்பீர்கள். நாளை அனைத்தும் முடிவாகிவிடும்.” அவன் இனிய சலிப்புடன் “பேசாமலிருங்கள், மூத்தவரே” என்றான். “நாம் இன்று வெளியே தங்கும்படி ஒழுங்கு செய்திருக்கிறார்கள். நாளை முதற்புலரியில் நகர்நுழைகிறோம். அதுவும் நன்றே. பயணக்களைப்புடன் நுழையக்கூடாது. எழுகதிர்போல நகர்மேல் தோன்றவேண்டும்” என்றார். “இன்றிரவு எனக்கு துயில் இல்லை. ஆகவேண்டிய பணிகள் பல உள்ளன.”

அன்றிரவு முழுக்க அவன் பாடிவீட்டுக்கு வெளியே பெருமழை சூழ்ந்ததுபோல காளகக்குடிகளின் ஓசையை கேட்டுக்கொண்டிருந்தான். நெடுநேரம் துயில் மறந்து புரண்டுப்புரண்டு படுத்தபின் விழிமயங்கினான். அக்கனவில் அவனருகே காளைமுகத்துடன் பேருருவம் ஒன்று அமர்ந்திருந்தது. காளைவிழிகள் அவனை நோக்கின. அவ்விழிகளிலேயே அது சொல்வதை அவன் கேட்டான். அவன் “ஆம் ஆம் ஆம்” என்றான். விழித்துக்கொண்டபோது வெளியே ஓசை அதேபோல ஒலித்துக்கொண்டிருந்தது. ஆகவே துயிலவே இல்லை என எண்ணிக்கொண்டான். ஆனால் அவன் உடலசைவைக் கண்ட காவலன் வந்து தலைவணங்கி “விடிவெள்ளி தோன்றிவிட்டது, இளவரசே” என்றான்.

அவன் எழுந்து அமர்ந்தபோது நெஞ்சு அச்சம் கொண்டதுபோல அடித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தான். அந்த அறைக்குள் பிற இருப்பு ஒன்று திகழ்வதுபோல. அறைமூலைகளின் இருட்டை நோக்கும் உளத்துணிவு அவனுக்கு எழவில்லை. வெளியே சீர்ஷரின் குரல் ஒலித்தது. அவர் உரக்க கூவியபடி அறைக்குள் வந்தார். “கிளம்புவோம். எழுக! அணிகொள்க!” அவன் “ஏன் கூச்சலிடுகிறீர்கள்?” என்றான். சீர்ஷர் “இது உவகைக்குரல், இளையோனே. அங்கே நகருக்குள் மக்கள் கொப்பளித்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் உள்ளே நுழைந்ததும் நகரம் அதிரப்போகிறது. நான் சில ஏற்பாடுகளை செய்துள்ளேன்” என்றார்.

“என்ன?” என்றான். “அவள் மிகப்பெரிய சிம்மக் கொடியை கொண்டுவந்திருக்கும் செய்தியை நள்ளிரவில்தான் அறிந்தேன். பட்டுத்துணியாலான கொடி. ஒருவர் படுத்துறங்குமளவுக்கு பெரியது. ஆகவே நான் உடனடியாக நமக்கு ஒரு கொடியை உருவாக்கினேன். நம் குடியின் கொடி. காக முத்திரை கொண்டது.” அவன் “என்ன சொல்கிறீர்கள்? நான் இந்திரபுரியின் படைத்தலைவன். என் கொடி” என தொடங்க “அதெல்லாம் முன்பு. இப்போது நாம் நகரை வெல்லப்போகும் தொல்குடி. நம் தொல்குடியின் அடையாளம் காகம். நாம் வணங்கும் கலிதேவனின் முத்திரை அது.. அக்கொடியுடன் நாம் உள்ளே நுழைவோம். நம்மைக் கண்டதுமே நகரம் புயல்பட்ட கடல் என்றாவதை காண்பீர்கள்” என்றார் சீர்ஷர்.

“வேண்டாம்… இப்போது இதை செய்யக்கூடாது” என்றான் புஷ்கரன். “நான் நம் குடியினர் அனைவரிடமும் காட்டிவிட்டேன். கொடியை நாற்பதடி உயரமான மூங்கிலில் கட்டிவிட்டோம். அந்த மூங்கிலை ஒரு தேரில் நட்டு அதை நாற்புறமும் கயிறுகட்டி இழுத்து நிற்கச்செய்தபடி நகர்புகவிருக்கிறோம். அனைவரும் அங்கே திரண்டிருக்கிறார்கள்” என்றார் சீர்ஷர். “கிளம்புங்கள், இளவரசே. வரலாறு வந்து வாயிலில் முட்டி அழைக்கிறது. ஆண்மை இருந்தால் அதை எதிர்கொள்க! அறிக, மாமன்னர்கள் இவ்வாறு தங்களை வந்து ஏற்றிக்கொண்ட பேரலைகளின்மேல் துணிந்து அமர்ந்திருந்தவர்கள் மட்டும்தான்!”

தொடர்புடைய பதிவுகள்


தேவதேவனின் அருகே…

$
0
0

11

வணக்கம்.

மே 29ஆம் தேதி திருவண்ணாமலையில் நடந்த தேவதேவன் கவிதைகள் குறித்த கூட்டம். நான் பங்கேற்வில்லை. மனுஷி எழுதிய குறிப்பு மட்டுமே அந்நிகழ்வு பற்றி வாசிக்கக்கிடைத்தது. பவா செல்லத்துரை புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். கலந்துரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்த தளம் அமைப்புக்கு என் அன்பும் நன்றியும். ஸ்ருதி டிவி ஏமாற்றிவிட்டது. எதிர்பார்த்ததுதான். மே 29 மதியம்தான் எனக்கு இந்நிகழ்வு பற்றித் தெரிந்தது. கொஞ்சூண்டு வருத்தம் பங்கேற்க முடியாமையால். ஆனால், மகிழ்ச்சிக்கு முன் அது தெரியாது.

படங்களில் தேவதேவன் கவிதைகள் பெருந்தொகுப்பு தென்படவில்லை. அந்த நூலின் மறுபதிப்பு தயாராகி வருகிறது.

மனுஷி பதிவு

https://m.facebook.com/story.php?story_fbid=1480318975323363&id=100000358248887

படங்கள் – நிகழ்வில்

https://m.facebook.com/story.php?story_fbid=1614529385224533&id=100000024626565

படங்கள் – பவா செல்லத்துரையோடு தேவதேவன்

 https://m.facebook.com/story.php?story_fbid=1308781795895702&id=100002916811783

(மேலும் சில படங்களை இணைத்திருக்கிறேன்)

வானும் இறங்கிவந்தமர விரும்பும்

தேன்மலர்த் தோட்டம்

ஒரு வண்ணத்துப் பூச்சிக்குச் சொந்தம்

- தேவதேவன்

நன்றி.

ஸ்ரீனிவாச கோபாலன்

***

வணக்கம்

‘வீட்டிலிருந்து ஒரு சின்ன டப்பாவில் மிளகாய் பொடி/இட்லி பொடி கொண்டு வந்தேன். இன்றுதான் அதைத் திறந்தேன். தோசைக்குத் தொட்டுக்கொள்ள. மிளகாய் பொடியை நல்லெண்ணெயில் கலந்து தொட்டுக்கொள்வது வழக்கம். நல்லெண்ணெய் இல்லாததால் தலைக்கு வைக்கும் Parachute தேங்காய் எண்ணெய் ஊற்றிக்கொண்டேன். அப்பாவுக்கு தேங்காய் எண்ணெய்தான் பிடிக்கும். எல்லா பதார்த்தத்திலும் ஒரு முட்டை தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்வார். அதை தங்கையும் இப்போது பின்பற்ற தொடங்கிவிட்டாள். நான் தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்க்க மட்டும். மேலுக்கு மட்டும் என்று வலியுறுத்துபவன். இன்று இப்படி மிளகாய் பொடியில் கலந்து சாப்பிடும் போது அப்பாவையும் தங்கையையும் மயங்கிய அந்த ருசி தெரிகிறது. தேங்காய் எண்ணெய் ஸ்பெஷல்தான். இனிமேல் தேங்காயைப் பார்த்தாலே அதிலிருக்கும் எண்ணெய்தான் வேண்டும் என்று நினைப்பேன் போலிருக்கிறது. நாக்கிலிருந்து தொண்டை வரை அதன் ருசி ஆக்கிரமித்திருக்கிறது. வயிற்றிற்குள் சிறிது நேரத்தில் வேலையைக் காட்டுமோ என்னவோ. இன்று அதிகாலை பெருங்கூட்டமாக கிளம்பி சென்றுகொண்டிருந்த சாம்பல் நிற மேகங்களைப் பார்த்தபோதே என்னவோ புதுசா நடக்கப்போகிறது என்று பட்டது. சரியாப்போச்சு. தேங்காய் எண்ணெய் குழைத்த ஆள்காட்டி விரல் மணத்தை எப்படி உங்களுக்குச் சொல்வது?’

இதை யமுனை செல்வன் அண்ணாச்சியிடம் சொன்னேன். நான் இப்போதிருக்கும் மனநிலையை எப்படிச்சொல்ல? தேங்காய் எண்ணெய் குழைத்த ஆள்காட்டி விரல் மணத்தை எப்படி உங்களுக்குச் சொல்வது? நீங்களும் அப்படி தின்றால்தான் தெரியும். என் அறை, அறையில் அவ்வப்போது அடிக்கும் (துர்)நாற்றம், பக்கத்து கட்டிடத்தின் ஓட்டுக்கூரை அருகே இருக்கும் பூனைக்குடும்பத்தின் இடம், நண்பர்கள் கையொப்பமிட்ட சிறு ஜவுளி அட்டை, கார்ட்டூன் ஸ்டிக்கரை உரித்து ஒட்டிய பின் மிஞ்சும் தாளில் உள்ள மற்றொரு படம் எல்லாம் எப்படிச்சொல்ல என்று தெரியவில்லை. எழுத்தில் பிடிக்கவே முடியாத வாசனை! விரலில் இருக்கிறது. பறை ‘ஓசையை’ திருப்புகழில் ‘எழுதி’வைத்து போல ஏதாவது வாசனையை எழுதிவைத்திருக்கிறார்களா?

இன்றையநாள் எனக்கு அடித்திருக்கும் ஜாக்பாட்.

‘இரவெல்லாம் விழித்திருந்த நிலா’ நான்.

அன்பின் அணைப்பு.

 ஸ்ரீனிவாச கோபாலன்

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிறுகதைப் போட்டி

$
0
0
kizhakku lo

சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி

வணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது. அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

* சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்.

* சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 20, 2017.

* வெற்றி பெற்ற சிறுகதைகள் பற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் 4ம் வாரம் அறிவிக்கப்படும்.

* யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் கதைகளை அனுப்பி வைக்கவேண்டும்.

* அனுப்பி வைப்பவரின் நிஜப் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண், இமெயில் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்.

* கதையை தட்டச்சு செய்து பிரிண்ட் எடுத்து தபால் மூலமும் அனுப்பலாம். கதைகள் தேர்ந்தெடுக்கப்படாத பட்சத்தில் அதைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே தேவையான பிரதிகளை எடுத்து வைத்துக்கொண்டு கதைகளை அனுப்பவும்.

* கையெழுத்துப் பிரதிகள் ஏற்கப்படமாட்டாது. தெளிவாக தட்டச்சு செய்து மட்டுமே கதைகளை அனுப்பவேண்டும்.

* தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் தொகுக்கப்பட்டு தனியே புத்தகமாக கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியிடப்படும்.

* தேர்ந்தெடுக்கப்படாத கதைகள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதற்கான விளக்கங்கள் தரப்படமாட்டாது.

* கதைகளின் காப்புரிமை ஆசிரியர்களுக்கே. புத்தகத்தின் காப்புரிமை கிழக்கு பதிப்பகத்தைச் சேர்ந்தது.

நிபந்தனைகள்:

* கதைகள் சென்னையைப் பின்னணியாகக் கொண்டதாக இருக்கவேண்டும். சென்னையில் நடக்கும் கதையாகவோ அல்லது சென்னையைப் பற்றிய கதையாகவோ அல்லது சென்னையைக் களமாகக் கொண்டு நிகழும் கதையாகவோ இருக்கலாம். சென்னையை மையமாகக் கொள்ளாத கதைகள் நிராகரிக்கப்படும்.

* சிறுகதைகள் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

* மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஏற்கப்படமாட்டாது.

* இக்கதைகள் இதுவரை எங்கும் (இணையத்தளம், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட) பிரசுரிக்கப்படவில்லை என்பதற்கு ஆசிரியர் உறுதிமொழி அளிக்கவேண்டும்.

* கதைகள் தொடர்பாக நடுவர்களுடனோ போட்டியை நடத்துபவர்களுடனோ எந்த ஒரு கடிதப் போக்குவரத்தோ தொலைபேசி தொடர்புகளோ மேற்கொள்ளக்கூடாது.

* நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

நடுவர்கள்:

எழுத்தாளர் இரா. முருகன்

எழுத்தாளர் கே.என். சிவராமன்

பரிசு விவரம்:

முதற்பரிசு: 7,500 ரூ

இரண்டாம் பரிசு: 3,000 ரூ

மூன்றாம் பரிசு: 1,500 ரூ

ஆறுதல் பரிசுகள் (பத்து கதைகளுக்கு): தலா 750 ரூ

இது போன்ற ஒரு போட்டியை ஒவ்வொரு வருடமும் நடத்த கிழக்கு பதிப்பகம் திட்டமிட்டுள்ளது.

உங்கள் கதைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: kizhakkupathippagam@gmail.com

அச்சுப் பிரதிகளை அனுப்ப விரும்புகிறவர்கள், கிழக்கு பதிப்பகம்,  177/103, அம்பாள்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை – 600014 என்ற முகவரிக்கு அனுப்பவும். அனுப்பும்போது, உள்ளே தெளிவாக, “இக்கதை கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டிக்கானது” என்று குறிப்பிடவும்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அந்திமம் -கடலூர் சீனு

$
0
0

old

இனிய ஜெயம்,

நேற்று இரவு வழமை போல மொட்டைமாடியில் அமர்ந்து வெண்முரசு அப்டேட் ஆகும் தருணத்துக்காக்க காத்திருந்தேன். மின்சாரம் வெட்டு. நிலவுண்டு ஒளிரும் மேகம் போர்த்திய இரவு வானம். மிக மிக மெல்லிய, இளம்பெண்களின் மேலுதட்டு வியர்வைப்பொடிப்பு மழைத்துளிகள். காற்றின்றி உறைந்த தென்னைகளின், நிழல்வெட்டு தெரு வீட்டு வடிவங்களின் உறக்கம்.

தெரு முனையில் நாயின் ஊளை. உள்ளே ஒரு புலன் அதன் அபயம் அபயம் என்ற விளியை உணர சென்று பார்த்தேன். எங்கள் வீட்டு வாசலில்,முதுமை எய்தி, செவியும், விழியும், மோப்பமும் கைவிட்டு,  மரணம் வேண்டி காத்துக் கிடக்கும் ஒற்றைக் கண் பிளாக்கி நாயை, பக்கத்து தெரு நாய்கள் இரண்டு அதன் குரல்வளையை கவ்வி தரதரவென எங்கோ இழுத்துச் சென்று கொண்டு இருந்தது.

பிளாக்கி பிறந்த சில வாரங்களில் அதன் சகோதரனும் தாயும் இறந்து விட்டது. அப்போது எங்கள் வீட்டுக்கு காம்பௌண்ட் சுவர் கிடையாது. வராண்டாவுக்கு வலது புறம் ஜன்னலுக்கு கீழே தளத்தின் அடிவாரத்தில், பெருச்சாளி தோண்டிய பெரிய போந்து உண்டு. அடைத்து வைத்திருந்த அதை மண்பறித்து நீக்கி பிளாக்கி அம்மா அவனை அங்கே ஈன்றாள்.

அம்மா பிளாக்கிக்கு அள்ளி அள்ளி வைப்பார்கள். தாயில்லா பிள்ளை இல்லையா. நல்ல எருமைக் கண்ணுக்குட்டியின் வளத்தி.  நள்ளிரவில் சந்தேகத்துக்கு இடமான யாரையும் வீட்டை கடக்க விடாது. அதில் ஒருவன் கையில் கிடைத்ததைக் கொண்டு பிளாக்கியை தாக்க அதன் விழிகளில் ஒன்று பறி போனது. அண்ணன் தனது விழிகளில் ஒன்றில் பார்வை குறைந்த போது, பிளாக்கியுடன் மேலும் சிநேகம் கொண்டார். இவர் அதனிடம் ஏதாவது பேசுவார். அது மூசு மூசு என்று அதன் பாஷயில் வாலை குழைத்து குழைத்து எதோ பேசும். அவர் தெரு கடக்கும் வரை அவர் பின்னால் நடக்கும். கொஞ்சம் சோப்லாங்கி காலபைரவர் என எண்ணிக் கொள்வேன்.

கற்களை வீசி துரத்தி பிளாக்கியை விடுவித்தேன். எழுத்து இருள் உலகில் தடுமாறி என் கால்களில் முட்டிக் கொண்டு வாசனை பிடித்து, வால் குழைத்து, உடல் பதறி, தாள இயலா மெல்லிய கேவல் அழுகை ஒன்றினை எழுப்பியது. தலையை தடவி சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தேன். மாடிக்கு ஏறி இறங்கியது, எங்கெங்கோ வாசனை பிடித்தது. மூன்றடி உயர காம்பௌண்டு சுவரை தடுமாறி ஏறி அந்தப் பக்கம் விழுந்து, வீட்டு சுற்றை வாசனை பிடித்து சுற்றி வந்தது.

அது பிறந்த இடத்தை தேர்ந்து படுத்துக்கொண்டது. விழிகளில் கண்ணீர்.

இன்று அபிலாஷ் சந்திரன் தளத்தில் இந்த கவிதையைக் கண்டேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்களுமான கவிதை. என் பிளாக்கிக்கான கவிதை. எனது இன்றைய நாளின் கவிதை.

ஒரு சுட்டெரிக்கும் மதியப்பொழுதில் வீடு திரும்பும் அவன்

எங்கும் எங்கும் அம்மாவைத் தேடுகிறான்.
அவள் அடுக்களையில் இல்லை, புழக்கடையில்
இல்லை, அவள் எங்குமே இல்லை,

அவன் தேடினான், தேடினான், கடும் பதற்றத்தால் பீடிக்கப்பட்டான்.
கட்டிலடியில் தேடினான், அங்கு அவன் பழைய ஷூக்களையும் அழுக்குருண்டைகளையும் கண்டான், அம்மாவை அல்ல.
அம்மா என அலறியபடி வீட்டை விட்டு ஓடினான்.

எங்கிருக்கிறாய்? நான் வீட்டுக்கு வந்து விட்டேன். எனக்கு பசிக்கிறது!
ஆனால் பதில் இல்லை, வெயில் சுடரும் பாழடைந்த தெருவில்
ஒரு எதிரொலி கூட இல்லை. திடீரென அவனுக்கு நினைவு வந்தது
தனக்கு வயது அறுபத்து ஒன்று என

மேலும் தனக்கு நாற்பது வருடங்களாய் அம்மா இல்லை என.

(Uncollected Poems and Prose: R.K Ramanujan; ed. Molly Daniels-Ramanujan and Keith Harrison, Oxford India Paperbacks)

கடலூர் சீனு

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இனங்களும் மரபணுவும்

$
0
0

gene

அன்பின் ஜெமோ,

வணக்கம்.நான் தங்களின் படைப்புகளை கடந்த எட்டு வருடங்களாக படித்து வருகிறேன்.விஷ்ணுபுரத்தில் உள்ள தத்துவ உரையாடல்கள்தான் என்னை தூய கணிதத்தில் உள்ள dialectic ஐ அனுபவமாக உள்வாங்கி கொள்ள உதவின.

நேற்றைய The hindu வில் இந்தியாவில் ஆரியர் குடியேற்றம் என்பது கருதுகோள் அல்ல, உண்மை என்பதற்கான genome தரவுகள் கண்டறியப்பட்டுள்ளது என்றும் மேலும் இந்தியா என்பது குடியேற்றங்களின் நிலபரப்பாக இருந்து வந்திருக்கிறது. மேலும்,திராவிடம் என்பது கற்பனையான கருதுகோள் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். தங்கள் கருத்தை அறிய.விழைகிறேன்.

ஜானகிராமன்

***

அன்புள்ள ஜானகிராமன்,

இவ்விஷயத்தில் நான் ஒரு பொதுவாசகன் மட்டுமே. நிபுணனாக என் கருத்துக்களைச் சொல்லமுடியாது. ஆனால் மிக எளிய பொதுவாசகனாகவே ஒன்றைச் சொல்வேன். எவ்வகையிலும் நம்பகத்தன்மையை உருவாக்காத, ஆய்வுகளை இதழியல் நோக்கில் எளிமைப்படுத்தி திரித்து எழுதிய ஒரு கட்டுரை இது. இவ்வகையில் நான் வாசிக்கும் முதல்கட்டுரையும் அல்ல.

இந்தியவியலை ஆராயும் ஒருதரப்பினருக்கு இந்தியாவையே அழித்தாலும்கூட நிறுவியாகவேண்டிய கொள்கையாக ஆரியப்படையெடுப்பு இருக்கிறது. அதற்காக எந்த எல்லைக்கும் செல்லமுடியும் என நினைக்கிறார்கள். அதன்மேல் நிறைய கட்டி எழுப்பிவிட்டார்கள்

இத்தகைய சில பிடிவாதங்களை மேலை ஆய்வுலகில் காணலாம். உதாரணமாக பரிணாமவாதத்தை கிறித்தவத்தின் படைப்புக்கொள்கைகளையும் உள்ளடக்கியதாக விளக்கும்பொருட்டு அங்கே மேற்கொள்ளப்பட்டுவரும் Creationism என்னும் கருத்தியல் கழைக்கூத்தாட்டம். அறிவியலை எப்படியெல்லாம் அதன்பொருட்டு வளைக்கமுடியும், எப்படிப்பட்ட அறிவியல்மேதைகளை எல்லாம் அதைச்சார்ந்து பேசவைக்கமுடியும் என்பது பிரமிப்பூட்டக்கூடியது.

எந்த ஒரு பொதுப்புத்திக்கும் தெரியும் ஒரு விஷயம் உண்டு. மரபணு சார்ந்த ஆய்வுகள் எவையும் ’சமீப’ கால வரலாற்றை புறவயமாக நிறுவ உதவக்கூடியவை அல்ல. மரபணுச்சோதனைகள் மானுட இனத்தின் கலப்பு, பரவல் பற்றிய மிகமிகப் பொத்தாம்பொதுவான சித்திரத்தையே அளிக்க முடியும். பல்லாயிரம்காலத்து உயிரினவிரிவாக்கத்தை மட்டுமே அதைக்கொண்டு சித்தரிக்கமுடியும். ஒப்புநோக்க மானுட வரலாற்றில் மிகச்சமீபத்தைய நிகழ்வான ’இன’ கொள்கையை அல்ல.

அவ்வப்போது இந்த வகையான ‘உயிரியல்’ ‘மரபியல்’ ஆய்வுமுடிவுகள் ஊடகங்களில் தென்படுவதும் ஆறுமாதம் கழித்து அபத்தமானவை என்று பேச்சுவாங்குவதும் இங்கே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. என்ன சிக்கல் என்றால் இவை அபத்தமானவை என்பது அறிஞர் நடுவே நிறுவப்பட்டாலும் வாட்ஸப் – மேடையுரை வழியாக மெய்ஞானம் புழங்கிவரும் தமிழ்ச் சூழலில் அதை மறுக்க எவராலும் இயலாது. திரும்பத்திரும்ப நம் காதுக்கே வந்துகொண்டிருக்கும்.

இந்தியாவில் மட்டும் அல்ல உலகமெங்குமே கூட எப்படியும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மானுட இனங்களின் பரவலும் கலப்பும் தொடங்கிவிட்டன. அதை ஜாரேட் டைமண்ட் [தமிழிலும் அவரது துப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு – ஜாரேட் டயமண்ட் : வெளிவந்துள்ளது. தமிழாக்கம் பிரவாகன்] முதற்கொண்டு மானுடவியல்- புவியியல் அறிஞர்கள் விரிவாக பேசி நிறுவியிருக்கிறார்கள். இன்றைக்கு தோராயமாக இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறுதிப்பனிக்காலத்தில் வாழ்வதற்குரிய நிலங்களைத் தேடி மானுட இனம் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பயணம்செய்து புதியநிலங்களைக் கண்டடைந்துள்ளது

இந்தியப்பெருநிலம் பூமத்தியரேகையை ஒட்டியது. பலவகையான இயற்கைச் சூழல் கொண்டது. ஆகவே ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு பல மக்களினங்கள் குடியேறியிருக்கலாம். அவர்கள் கலந்து பரவியிருக்கலாம். மகாபாரதமே பலவகையான அயலவர்களின் வருகை பற்றிச் சொல்கிறது. ஹூணர்கள், கிரேக்கர்கள், மங்கோலியர், துருக்கியர் என இந்தியாவுக்கு அயலவர் வந்துகொண்டே இருந்திருக்கிறார்கள். இந்தியர்களின் மரபணுக்களில் அக்கலவையின் சித்திரம் இருக்கும் என்பது மிக இயல்பானதே. அதில் இன்ன ஆண்டுகள் முதல் இன்ன ஆண்டுகள் வரை இன்ன இனத்தினர் வந்தனர் என மரபணுச்சோதனையில் நிரூபிக்கிறார்களாமா?

அந்த மானுடப் பரவலும் கலவையும் நிகழத்தொடங்கி மேலும் பற்பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தபின்னரே நாம் இன்றுபேசும் மானுடப்பண்பாடு ஆரம்பிக்கிறது. நாம் பேசும் மானுடப்பண்பாடு என்பதே எப்படி இழுத்தாலும் ஏழாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் செல்லாதது. அதன்பின்னரே மொழிகள் பிறக்கின்றன. குலங்களும் குடிகளும் உருவாகின்றன.இன அடையாளங்கள் கண்டடையப்படுகின்றன

இங்கே பேசப்படும் ஆரியதிராவிட இனப்பிரிவினையும், பண்பாட்டுப் படையெடுப்புகளும் அதற்குப்பின்னர் நிகழ்ந்தவை என்றுதான் சொல்லப்படுகின்றன. திராவிடநாகரீகம் இந்த மண்ணில் வேரூன்றியிருந்தது என்றும் ஆரியர் வந்து அதை வென்றார்கள் என்றும் சொல்லப்படும் ஊகங்களுக்கும் மானுடப்பரிணாமத்தின் தொடக்க காலத்தில் நிகழ்ந்த இனப்பரவலுக்கும் என்ன உறவு இருக்கமுடியும்?

ஆரியம்-திராவிடம் என்னும் பிரிவினை இந்தியாவின் தொன்மையான சில நூல்களில் இருந்த நிலம்சார்ந்த ஒரு பகுப்பு மட்டுமே. சிற்பநூல்களின்படி திராவிடம் என்பது கிருஷ்ணைக்கு கீழே காஞ்சிவரையிலான நிலம். அந்தப்பிரிவினையை இந்திய மொழிகளைப் பிரித்து ஆராய எல்லிஸ், கால்டுவெல் போன்ற ஆங்கிலேய ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். அதை சில ஆய்வாளர்கள் உடனடியாக இரு இனங்களாக உருவகித்துக்கொண்டனர்.எந்த விவாதமும் நிகழவில்லை. எந்த ஆதாரபூர்வமான தரவுகளும் பரிசீலிக்கப்படவில்லை.

விவேகானந்தர் முதல் அம்பேத்கர் வரை அத்தனை இந்திய சிந்தனையாளர்களாலும் அந்த ஆரிய- திராவிடக் கோட்பாடு நிராகரிக்கப்பட்டாலும் ஐரோப்பிய இந்தியவியலாளர்கள் அதை நம்பி, எழுதி பரப்பி ஒரு நிரூபிக்கப்பட்ட கொள்கையாக நிறுவிவிட்டுச் சென்றனர். இன்று அது அடிப்படையற்ற ஊகம் என்பது ஆய்வாளர் மத்தியில் பெரும்பாலும் கருதப்படுகிறது. அதை எதிர்க்கும் கடைசி மோசடி முயற்சி இம்மாதிரியான ‘அறிவியல்’ ஊகங்கள். இதற்கெல்லாம் ’அடச்சீ’ என்பதற்கு அப்பால் எதிர்வினையாற்றுவதே தவறு.

இரண்டு கருதுகோள்கள் மிக வன்மையாக நிராகரிக்கப்படவேண்டியவை. ஒன்று, இந்தியபெருநிலத்தில் ‘தூய’ இனம் என ஒன்று இருக்க முடியாது. ஆரிய இனமும் சரி, திராவிட இனமும் சரி. ஏனென்றால் கற்கருவிகளை கையாளத் தொடங்கிய காலத்திலேயே இங்கே இனக்கலப்பு நிகழத் தொடங்கிவிட்டது.இங்குள்ள பண்பாடு அந்த கலவையினத்தால் உருவாக்கப்பட்டதே.இனமோ சாதியோ குருதித்தூய்மை என்பது நம்மவர் உருவகித்துக்கொள்ளும் ஒரு மாயை.

இரண்டு, இங்கு ஐரோப்பியர்களால் முன்வைக்கப்பட்ட இரண்டு இனங்களின் மோதல் என்னும் கொள்கை மிக மிக பிழையானது. இங்கு தூய இனம் என ஏதும் இல்லை. மேலோங்கியிருக்கும் உடற்கூறுகளைக் கொண்டு நோக்கினால்கூட குறைந்தது நான்கு வெவ்வேறு இனங்கள் இருக்கிறார்கள். ஆகவே இங்குள்ள பண்பாடு இனமோதலால் உருவாகிவந்தது என்பது நம் மீது பிறர் சுமத்தும் இழிவான வரலாறு. மோதல்கள் இல்லாமல் பண்பாடு இல்லை. ஆனால் மிக விரிவான உரையாடல், உள்ளடக்கிக்கொள்ளுதல் மூலம் உருவான பண்பாடு இது

*

நீங்கள் இடதுசாரி என்றால் சோவியத் ருஷ்யாவின் ராதுகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘மானுட இனங்கள்’ என்னும் முக்கியமான நூலை வாசிக்கலாம். தமிழில் வெளிவந்துள்ளது.

ஐரோப்பாவின் அறிவுத்துறையில் பதினேழாம் நூற்றாண்டு முதல் இனவாதக் கொள்கைகள் எப்படி போலி அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு அரசியல்ரீதியாக பரப்பப் பட்டன, எப்படி பல நாடுகளின் வரலாறுகளே அவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டன , இனமோதல்கள் உருவாக்கப்பட்டு பேரழிவுகள் நிகழ்ந்தன, அவற்றின் அடிப்படையில் சில தரப்பினரால் அதிகாரம் கையகப்படுத்தப்பட்டது என்பதை விரிவாக பேசுகிறது அந்நூல்.

தோலின் நிறம். கண்ணின் நிறம், மூக்கின் அளவு அளவு என வெவ்வேறு உயிரியல் அடிப்படைகள் அவ்வாறு மானுட இனங்களை பகுப்பதற்கு செயற்கையாக ஆய்வாளர்களால் கட்டமைக்கப்பட்டன. மண்டை ஓட்டியல் என்னும் போலி அறிவியல்துறை நூறாண்டுகளுக்கும் மேல் பலநூறு அறிவியலறிஞர்களின் ஆதரவுடன் செயல்பட்டது. அவையனைத்தும் மிகப்போலியானவை என்பதை அந்நூல் ஆணித்தரமாக நிறுவுகிறது.

நூலின் இறுதியில் மானுட இனங்களைப்பற்றிய நூறு அறிவியலாளர்களின் பொது அறிக்கை ஒன்றும் உள்ளது.ஒரு சிந்திக்கும் மனிதன் மானசீகமாக கையொப்பமிடவேண்டிய ஆவணம் அது.

இன்று இடதுசாரிகள் கூட இனவாதம் பேசும் கீழ்மையைக் காண்கிறோம். ஒருகாலத்தில் சோவியத் ருஷ்ய நூல்களுக்குள் அவர்கள் சிந்தனையை தேக்கி நிறுத்தியிருந்ததை அறிவியக்கத்தவர் விமர்சித்தனர். இன்று அவற்றை வாசிப்பதை நிறுத்தி நாலாந்தர மேடைப்பேச்சாளர்களை மட்டுமே அறிந்தவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள் நம் இடதுசாரிகள் . ‘அய்யா சாமி, குறைந்தது ராதுகா பிரசுர நூல்களையாவது வாசிங்க’ என்று மன்றாடவேண்டியிருக்கிறது

நீங்கள் வலதுசாரி என்றால் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இந்த எதிர்வினையை வாசிக்கலாம்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 34

$
0
0

33. குருதிச்சோறு

flowerமுழங்கும் பெருமுரசின் அருகே நின்றிருப்பதுபோல் பேரோசை வந்து செவிகளை அறைந்து மூடி சித்தத்தின் சொற்களனைத்தையும் அழித்தது. கண்களுக்குள்ளேயே அவ்வோசையை அலைகளென காணமுடிந்தது. நளன் கருணாகரரிடம் “என்ன ஓசை அது?” என்றான். “இளவரசர் நகர்புகுகிறார்” என்றார் கருணாகரர். புன்னகையுடன் “இத்தனை பெரிய வரவேற்பா அவனுக்கு?” என்றான். “எங்கெங்கோ தேங்கி நின்றிருந்த பல விசைகள் அங்கு சென்று சேர்கின்றன, அரசே” என்றார் கருணாகரர்.

அம்முகத்திலிருந்த கவலையை திரும்பிப்பார்த்து “அதற்கென்ன? ஒரு நாட்டின் படைத்தலைவன் மக்களால் வாழ்த்தப்படுவதென்பது வெற்றிக்கு இன்றியமையாததுதான் அல்லவா?” என்றான் நளன். “அதுவல்ல. நீங்கள் எதையுமே கூர்ந்து நோக்காமலாகி நெடுங்காலமாகிறது, அரசே” என்று கருணாகரர் சொன்னார். “இங்கு இந்திரனின் சிலை நிறுவப்பட்ட நாள்முதலே அடக்கப்பட்ட கசப்பொன்று நமது குடிகளுக்கிடையே இருந்தது. ஷத்ரிய அரசி வந்து நமது அரியணையில் அமர்ந்தது பிறிதொரு கசப்பென வளர்ந்தது. நமது படைகள் அனைத்திற்கும் படைத்தலைவர்களாக விதர்ப்ப நாட்டவர் இருப்பது ஒவ்வொரு நாளும் அதை வளர்க்கிறது. இன்று இளவரசர் காகக்கொடியுடன் நகர்புகும்போது இத்தனை எழுச்சியுடன் நமது மக்கள் எதிர்கொள்கிறார்களென்றால் அவர்கள் தங்களிடமிருந்தும் பேரரசியிடமிருந்தும் பெரிதும் விலகிச்சென்றிருக்கிறார்கள் என்றுதான் பொருள். அது நமக்கு நற்செய்தி அல்ல.”

நளன் “எண்ணி அஞ்சி ஒடுங்கியிருக்கும் காலத்தை நான் கடந்துவிட்டேன், அமைச்சரே. இன்னும் என் இளையோனாகவே அவன் இருப்பான். இக்கணம்வரை பிறிதொன்று நிகழும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் நான் காணவில்லை. அவனுக்கு நான் அடைந்த வெற்றிகளும் புகழும் சிறிய உளக்குறையை அளித்திருக்கின்றன என்று எனக்கு தெரியும். இன்று நமது மக்கள் அளிக்கும் இப்பெரிய வரவேற்பும் கொண்டாட்டமும் அதையும் இல்லாமலாக்கும்” என்றான். “மேலும் அவனுக்கென்று தனியாக அரசொன்றை அளிக்கவே தமயந்தி எண்ணியிருக்கிறாள். நேற்று முன்தினம் என்னிடம் அதைப்பற்றி பேசினாள். விஜயபுரியை தலைநகராகக்கொண்டு அவன் ஒரு அரசை நிறுவி தென்னகத்தில் விரிந்து செல்வானென்றால் நிஷத குடிகள் அதன்பொருட்டு பெருமைப்படலாம்.”

கருணாகரர் மேற்கொண்டு சொல்லெடுக்கத் தயங்கி அவனுடன் சென்றார். குடிப்பேரவை கூடி அரசனின் வருகைக்காக காத்திருந்ததை வெளியே பறந்த கொடிகள் காட்டின. அரசவையை ஒட்டிய சிறிய துணை அறையில் முழுதணிக்கோலத்தில் தமயந்தி காத்திருந்தாள். நளன் உள்ளே நுழைந்ததும் எழுந்து தலைவணங்கி “அரசருக்கு நல்வரவு” என்றாள்.

பத்து கால்விரல்களிலும் அருமணிகள் பதித்த மெட்டிகள். அனல் வளையம்போல் செம்மணிகள் சுடர்விட்ட சிலம்புகள். பொன்னலைகளென உலைந்த தொடைச்செறியும் கொன்றை மலர்க்கதிரென மேகலையும். பொன்னருவிகளென மணியாரங்களும் மாலைகளும் சரங்களும் பரவிய யானைமருப்பு மார்பு. பொற்பறவையின் இரு இறகுகளெழுந்த தோள்மலரும் சுற்றிய நாகமென தோள்வளையும். முழங்கை வரை செறிந்திருந்தன சிறுவளைகளும் மணிவளைகளும் செதுக்குவளையலும் நெளிவளைகளும். பத்து விரல்களிலும் கல்மணி கணையாழிகளும் கன்னங்களில் அனற்செம்மையைப் பாய்ச்சிய செம்மணிக்குழைகளும் நெற்றியில் துளித்துதிரா பனி என நின்ற நீலமணிச் சுட்டியும். கூந்தல் முழுக்க பொன்வரிகளாகப்பரவிய குழற்சரங்கள். நீண்ட பின்னலை அணிசெய்தன செவிமலர்கள்.

அணிகள் அவளை மண்ணிலிருந்து அகற்றி கண்ணுக்குத் தெரியா திரையொன்றில் வரையப்பட்ட ஓவியமென மாற்றின. ஒருகணம் அவளை முன்பொருபோதும் கண்டதில்லையென்ற உளமயக்கை நளன் அடைந்தான். பின்னர் புன்னகையுடன் “ஓவியம் போல…” என்றான். அவளும் சிரித்து “ஆம், ஆடியில் நோக்கியபோது தொன்மையானதோர் சிற்பத்திற்குள் நுழைந்து அதை தூக்கிக்கொண்டு நின்றிருப்பதுபோல் தோன்றியது” என்றாள். “நன்று. அவை நிறைந்திருக்கும் விழிகளுக்கு முன்னால் நாம் உரைக்கும் ஒவ்வொரு சொல்லையும் இந்த அணிகளும் முடியும் செங்கோலுமே ஆணைகளென்றாக்குகின்றன” என்றான் நளன்.

கருணாகரர் அவைக்குச் சென்று நோக்கிவிட்டு திரும்பி வந்து “அனைத்தும் சித்தமாக உள்ளன, அரசி” என்றார். தமயந்தி தன்னருகே நின்ற சேடியிடம் விழி காட்ட அவள் தமயந்தியின் ஆடையின் சற்று கலைந்திருந்த மடிப்புகளை சீரமைத்தாள். கருணாகரர் வெளியே மெல்லிய குரலில் ஆணையிட மங்கல இசைக்கலங்கள் பெருகியொலித்தன. நகரெங்கும் ஒலித்துக்கொண்டிருந்த வாழ்த்தொலிகளுக்குள் அவ்விசை நதிநீர்ப்பெருக்கில் விழுந்த சிறு செந்தூரத்துளிபோல கரைந்து உருவழிந்தது.

நளனும் தமயந்தியும் இணைத்தோள் கொண்டு நடந்து இடைநாழியினூடாக அரசப்பேரவைக்குள் நுழைந்தனர். நீள்வட்ட வடிவமான அந்த அவையில் இருக்கைகள் அனைத்தையும் நிறைத்திருந்த வேதியரும் சான்றோரும் வணிகரும் குடித்தலைவர்களும் அயல்வருகையாளரும் எழுந்து உரத்த குரலில் “பேரரசர் வாழ்க! இடம் அமர்ந்த அரசி வாழ்க! இந்திரபுரி வெல்க! எழுக மின்கதிர்க்கொடி!” என்று வாழ்த்துரைத்தனர். இரு கைகளையும் கூப்பி மலர்ந்த புன்னகையுடன் நளனும் தமயந்தியும் சென்று அரியணையை அணுகி அதை தொட்டு சென்னி சூடியபின் அகம்படியர் ஆடை ஒதுக்க அமர்ந்தனர். அவர்கள் அமர்ந்தபின் குடிகள் வாழ்த்தொலி எழுப்பி கைகூப்பியபடி தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

ஏழு வைதிகர்கள் அரசமேடைமேல் ஏறி கங்கை நீர் தெளித்து அவர்களை முடித்தூய்மை செய்து வேதச்சொல் உரைத்து வாழ்த்தி மீண்டனர். குடிமூத்தார் மூவர் பொற்தாலத்தில் நிஷத அரசின் மணிமுடியைக்கொண்டு வந்து நீட்ட சபர குடித்தலைவர் அம்மணிமுடியை எடுத்து நளன் தலையில் வைத்தார். காளகக்குடி மூத்தவர் ஒருவர் இரு ஏவலர்கள் கொண்டு வந்த செங்கோலை அவனிடம் அளித்தார். மூதன்னையர் மூவர் கொண்டு வந்த மணிமுடியை மூதாட்டி ஒருத்தி எடுத்து தமயந்தியின் தலையில் அணிவித்தாள். அவர்களுக்குப் பின்னால் மூன்று வீரர்கள் பெரிய வெண்குடை ஏந்தி அதன் விளிம்புகளில் தொங்கிய முத்துச் சரங்கள் மெல்ல பறக்கும்படி சுழற்றினர்.

மங்கல இசையும் அணிச்சேடியரின் குரவையொலியும் உரக்க ஒலித்தன. நளன் கையசைத்து நிமித்திகரை அழைத்து “அவை நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன்பு இளையவனுக்கும் இந்த அவை வாழ்த்து தெரிவிக்கட்டும்” என்றான். விழிகள் விரிந்து பின் அணைய பணிந்து “அது முறையல்ல” என்றார் நிமித்திகர். “நிகழ்க!” என்றான் நளன். அவர் தலையசைத்தபின் அறிவிப்பு மேடைமேல் ஏறி தன் வெள்ளிக்கோலை மும்முறை சுழற்ற அவை செவிகூர்ந்தது ஆனால் அவர் கூவியறிவித்ததை அவையினர் கேட்கவில்லை. மும்முறை நிஷத இளவரசருக்கு வாழ்த்துரைத்த நிமித்திகர் தன் குரல் கரைந்து மறைந்ததைக்கண்டு திரும்பி நளனை பார்த்தார். நளன் சிரித்தபடி “இன்று இந்த அவையில் ஒன்றும் நிகழ முடியாது. இளையோன் வரட்டும். நாம் காத்திருப்போம்” என்றான்.

தமயந்தி நளன் அருகே குனிந்து “இளையவர் காகக்கொடியுடன் நகர் நுழைகிறார்” என்றாள். “அறிவேன்” என்று அவன் சொன்னான். தமயந்தி “அது ஓர் அறைகூவல்” என்றாள். “நான் அவ்வாறு எண்ணவில்லை. தனக்கென தனி அடையாளம் கொள்ளும் எளிய முயற்சி அது. முதிரா அகவையில் அனைவருக்கும் அத்தகைய விழைவுகள் உண்டு.” தமயந்தி சிலகணங்களுக்குப்பின் “கலிங்க இளவரசியைப்பற்றி உசாவினேன். அவள் இயல்பு குறித்து நல்ல செய்தி எதுவும் என் செவிக்கு எட்டவில்லை” என்றாள். நளன் புன்னகைத்து “பிறிதொரு வழியில் அமைய வாய்ப்பில்லை” என்றான். புருவம் சுருங்க “என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள் தமயந்தி. “அவள் நிஷத குடியில் உனக்கு இணையாக அல்லவா வருகிறாள்?” என்றான். தமயந்தி “நன்று” என்றபின் இயல்பாக முகம் திருப்பிக்கொண்டாள்.

நளன் சிரித்து “சினம் கொள்ளவேண்டாம். உன்னை சீண்டுவதற்காக சொன்னேன்” என்றான். “எனக்குள் எழும் உள்ளுணர்வுகள் எவையும் நன்று அல்ல” என்றாள் தமயந்தி. நளன் “அவ்வுள்ளுணர்வுகள் ஏன் எழுகின்றன என்று எண்ணிப் பார்” என்றான். தமயந்தி “ஏன்?” என்றாள். நளன் “நமது அரசு விரிந்துகொண்டு செல்கிறது. வடக்கே நாம் வெல்ல இனி சில நாடுகளே எஞ்சியுள்ளன. அவ்வாறு விரிவடைகையில் இரு உணர்வுகள் எழும். தெய்வங்களுக்கு அறைகூவல் விடுக்கிறோம் எனும் ஆணவம். தெய்வங்களின் வாயில் சென்று முட்டுகிறோமோ என்னும் தயக்கம். உனக்கிருப்பது இரண்டாவது உணர்வு. அது நன்று. முதல் உணர்வு எழுமென்றால் தெய்வங்களால் வீழ்த்தப்படுவோம். அசுரர்களென்று ஆவோம்” என்றான். தமயந்தி புன்னகைத்து தலையை மட்டும் அசைத்தாள்.

அவைக்குள் நுழைந்த மூன்று நிமித்திகர்கள் தலைவணங்கி சொல்காத்தனர். நளன் கையசைக்க அவர்களில் ஒருவன் நளனுக்கும் அவைக்குமாக உரத்த குரலில் “நிஷத இளவரசர், காளகக்குடித் தோன்றல், கலியருள் கொண்ட மைந்தர் புஷ்கரர் அவை நுழைகிறார்” என்றான். நளன் “நன்று. இந்த அவை இளவரசரை உவகையுடன் வரவுகொள்கிறது” என்றான். கையில் தன் குடிக்கோலை ஏந்தி, காளகக்குடிக்குரிய காகச்சிறகு சூடிய கரும்பட்டுத் தலையணியுடன் இரு மூத்தகுடியினர் சூழ சீர்ஷர் அவைக்குள் நுழைந்தார். நளனையும் தமயந்தியையும் வெறுமனே வணங்கிவிட்டு அவையை நோக்கி இடைவளைத்து வணங்கினார். அவருக்கான இருக்கையில் சென்று அமர்ந்து செருக்குடன் தலை நிமிர்ந்து ஏளனமோ என தோன்றிய புன்னகையுடன் அவையை ஏறிட்டார்.

வெளியே மங்கல ஓசைகள் எழுந்தன. வலம்புரிச் சங்கை முழக்கியபடி இசைச்சூதர் ஒருவர் அவைக்குள் நுழைந்தார். தொடர்ந்து காகக்கொடியை ஏந்தியபடி கவச உடையுடன் நிஷத வீரனொருவன் நுழைந்து அக்கொடியுடன் அரச மேடைக்கருகே வந்து நின்றான். அதைத் தொடர்ந்து மங்கல இசைக்கலங்களுடன் சூதர்கள் பன்னிருவர் வந்து இசைத்தபடியே சென்று முன்னரே அவையில் இடதுமூலையில் நின்றிருந்த இசைச்சூதர்களுடன் சேர்ந்துகொண்டனர். பொலிதாலங்களுடன் தொடர்ந்து வந்த அணிப்பரத்தையர் பன்னிருவர் அவைக்கு வந்து மங்கலம் காட்டி நின்று தலைவணங்கி பின் நகர்ந்து அங்கு முன்னரே நின்றிருந்த பரத்தையருடன் இணைந்துகொண்டனர்.

அமைச்சர் கருணாகரரால் வழி நடத்தப்பட்டு புஷ்கரன் அவைக்குள் நுழைந்தான். காளகக்குடிகளுக்குரிய காகஇறகு சூடிய பட்டுத்தலையணியை அணிந்திருந்தான். அதில் அருமணிகள் கோத்த மாலைகள் சுற்றப்பட்டிருந்தன. அவன் அணிந்திருந்த ஆடை நளன் அணிந்திருந்தது போலவே உருவாக்கப்பட்டிருந்தது. கங்கணங்களும், தோள்சிறகும், பொற்கச்சையும், அதில் அணிந்த குத்துவாளின் நுண்தொழிற் செதுக்குகள் கொண்ட கைப்பிடியும், கழுத்திலணிந்திருந்த ஆரங்களும், மகரகுண்டலங்களும் முழுக்க நிஷத அரசகுடித் தலைவருக்குரியவையாக இருந்தன. அரசவையினர் எழுந்து நின்று அவனுக்கு வாழ்த்துரைத்தனர். கைகளை தலைக்குமேல் தூக்கி அவ்வாழ்த்தை அவன் ஏற்றுக்கொண்டான்.

கருணாகரர் அவன் காதருகே குனிந்து “இரு கைகளையும் கூப்பி தலைகுனிந்து அவ்வாழ்த்தை ஏற்கவேண்டும், இளவரசே” என்றார். உதடசைவிலிருந்து அவர் சொல்வதென்ன என்பதை புரிந்துகொண்ட நளன் இடக்கையால் மீசையை நீவியபடி புன்னகைத்தான். புஷ்கரன் அக்கூற்றை புறக்கணித்து மூன்றடி எடுத்து வைத்து நளனின் முன் வந்து நின்று சற்றே தலைவணங்கி “மூத்தவருக்கு தலைவணங்குகிறேன். நான் கலிங்க இளவரசியை மணம்கொள்ளும் சூழலொன்று உருவாகியுள்ளது. இளவரசி என்னை விரும்புகிறாள் என்று செய்தி அனுப்பப்பட்டது. வீரர்களுக்குரிய முறையில் அதை நானும் ஏற்றுக்கொண்டேன். எனது ஓவியத்திற்கு மாலையிட்டு உளம்கொண்ட அவளை உடைவாள் அனுப்பி நானும் உளம்கொண்டேன்” என்றான். அவன் அச்சொல் அவைக்கு முழுக்க கேட்கவேண்டுமென எண்ணியது தெரிந்தது.

கருணாகரரை நோக்கியபின் “நமது தூதர்களின் நாப் பிழையால் கலிங்கர் நமது மணத்தூதை ஏற்கவில்லை. இளவரசி பிறரை ஏற்க இயலாதென்றும் நான் சென்று அவளை கொள்ளவில்லையென்றால் வாளில் குதித்து உயிர் துறப்பதாகவும் எனக்கு செய்தி அனுப்பினாள். ஆகவே நானே சென்று அவளை கவர்ந்து விஜயபுரிக்கு கொண்டு சென்றேன். நமது குலமுறைப்படி அவளை மணக்க விரும்புகிறேன். அதற்கு தங்கள் ஒப்புதலை கோருகிறேன்” என்றான். நளன் நகைத்தபடி எழுந்து அவன் தோளில் கைவைத்து “நன்று. நிஷதபுரிக்கு பெருமை சேர்ப்பதே உன் செயல்” என்றான். புஷ்கரன் “நம் குடிவீரத்தை ஒருபோதும் நாம் இழப்பதில்லை, மூத்தவரே” என்றான்.

தமயந்தியை அவன் வணங்கி முறைமைச்சொல் சொல்லவேண்டுமென அவர்கள் காத்திருக்க புஷ்கரன் அவை நோக்கி திரும்பி “இந்த அவைக்கும் செய்தியை அறிவிக்கிறேன். நற்சொல் நாடுகிறேன்” என்றான். தமயந்தி முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் எழுந்து “நிஷதகுடி மகிழ்வு கொள்ளும் மணஉறவு இது, இளையவரே. ஆகவேதான் இந்திரபுரி இதுவரை அறிந்தவற்றில் மிகப் பெரிய விழவென இதை நிகழ்த்தவேண்டுமென்று நான் ஆணையிட்டேன்” என்றாள். அவளை நோக்கி விழிதிருப்பாமல், மறுமொழி உரைக்காமல் புஷ்கரன் பொதுவாக தலைவணங்கினான்.

சீர்ஷர் எழுந்து “இந்த மணவிழவு காளகக்குடியின் மூத்தோரால் விஜயபுரியில் நிகழ்த்தப்படவிருந்தது. பேரரசி கேட்டுக்கொண்டதற்கேற்ப நாங்கள் இங்கு வந்தோம்” என்றார். அவைமுறைமை அனைத்தையும் மீறி அவர் எழுந்ததும் பொருந்தாக் குரலில் உரக்க பேசியதும் அவையெங்கும் ஒவ்வாமை நிறைந்த அசைவுகளை உருவாக்கியது. கருணாகரர் அவரை நோக்கி மெல்லிய குரலில் “நன்று மூத்தவரே! அமர்க! நிகழ்வுகள் தொடங்கட்டும்” என்றார். “ஆம், இங்கு அவை நிகழ்வுகள் நடக்கட்டும்” என்றார் சீர்ஷர், ஒப்புதல் அளிக்கும் அரசரின் கையசைவுகளுடன். நளன் அவையினரை நோக்கி “நிஷதகுடியின் அவையினரே, எனது இளையோன் கலிங்க இளவரசியை மணப்பது இந்த அவைக்கு முற்றொப்புதல் என்று எண்ணுகிறேன்” என்றான். அவையினர் எழுந்து தங்கள் குலக்குறி பொறித்த கோல்களைத் தூக்கி “ஆம், ஒப்புதலே” என்று குரல் எழுப்பினர்.

தலைவணங்கிய நளன் “குலமுறைப்படி நான் எனது அமைச்சரையும் குடிமூத்தாரையும் அனுப்பி நகருக்கு வெளியே தங்கியிருக்கும் கலிங்கத்து இளவரசியை அழைத்து வர ஆணையிடுகிறேன். இளவரசிக்கும் என் இளையோனுக்குமான மணவிழா நம் குடிகள் நிறைந்து அமர்ந்திருக்கும் செண்டு வெளிப்பந்தலில் இன்று இரவு நிகழும்” என்றான். அவை “இளைய நிஷாதர் வாழ்க! காளகர் புஷ்கரர் வாழ்க! விஜயபுரிக்காவலர் வாழ்க!” என்று வாழ்த்தொலி எழுப்பியது. நளன் “இந்த மணநிகழ்வுக்குரிய அரசு அறிவிப்புகள் அனைத்தையும் அமைச்சர் அவையில் அறிவிப்பார்” என்றபின் கைகூப்பி மீண்டும் அரியணையில் அமர்ந்தான்.

கருணாகரர் தலைவணங்கி புஷ்கரனை அழைத்துச்சென்று அவனுடைய பீடத்தில் அமரவைத்தபின் மேடைக்கு வந்து முகமனுரைத்துவிட்டு “அவையீரே, இம்மண நிகழ்வை ஒட்டி பன்னிரு அறிவிப்புகள் உள்ளன” என தொடங்கினார். “கலிங்க அரசரிடம் அவருடைய மகளை எல்லை மீறிச்சென்று கவர்ந்து வந்ததற்காக பொறுத்தருளக்கோரி மாமன்னர் நளன் விடுக்கும் வணக்க அறிவிப்பு முதன்மையானது. இவ்விழவு முடிந்தபின் கலிங்க அரசர் விரும்பினால் குருதியுறவுகொண்ட அரசென்ற முறையில் அவர்கள் கட்ட வேண்டிய கப்பத்தை முழுமையாகவே நிறுத்துவதற்கும், இந்நகர் புகுந்து நளமாமன்னருக்கு இணையாக அமர்ந்து அவை முறைமைகளை ஏற்பதற்கும் அவர்களுக்கு விடுக்கும் அழைப்பு இரண்டாவது.”

“மாமன்னர் நளனின் இளையோனாகிய புஷ்கரரை விஜயபுரியின் அரசரென முடியணிவிக்கும் அறிவிப்பு மூன்றாவதாகும்” என்றார் கருணாகரர். அவையிலிருந்த காளகக்குடிகள் அனைவரும் எழுந்து தங்கள் கோல்களைத் தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர். அவ்வொலி அடங்குவதற்காக காத்திருந்த கருணாகரர் மீண்டும் “விஜயபுரியின் அரசர் இந்திரபுரிக்கு இணையரசராகவும் அரசுமுறை உறவுகள் அனைத்தையும் பேணுபவராகவும் திகழ்வார். இரு நாடுகளுக்கும் ஒரே கொடியும் ஒரே அரச அடையாளமும் திகழும்” என்றார். அவை கலைவோசையுடன் அமைதியடைந்தது. கருணாகரர் “விஜயபுரியின் படைத்தலைவராக சிம்மவக்த்ரரை பேரரசி தமயந்தி அறிவிக்கிறார். விஜயபுரியை சூழ்ந்துள்ள சதகர்ணிகள், திருவிடத்தவர் அனைவரையும் எதிர்கொண்டு காக்க அவரால் இயலும்” என்றார். அவையில் ஆழ்ந்த அமைதி நிலவியது. எவரோ இருமும் ஒலி உரக்கக் கேட்டது.

“விஜயபுரியின் அரசர் என முடிசூட்டிக்கொண்ட புஷ்கரர் கலிங்க இளவரசியை முறைப்படி மணம்கொள்வதற்கான ஆணை இத்துடன் அமைகிறது. காளகக்குடிகளுக்கு அளிக்கப்படும் சிறப்பும் விருதுகளும் குறித்த அறிவிப்புகள் தொடரும். அதற்குப்பின்…” என்று கருணாகரர் தொடர சீர்ஷர் எழுந்து தன் கோலைத் தூக்கி “காளகக்குடிகளுக்கு எவரும் கொடையளிக்க வேண்டியதில்லை. நாங்கள் ஆளும் மண்ணை எங்கள் உடமையென கொள்ளவும் காக்கவும் எங்களால் இயலும்” என்றார். அவர் அருகே சென்று “அமர்க! அறிவிப்புகள் முடியட்டும்” என்று நாகசேனர் சொன்னார். “நீ துணையமைச்சன். உன் சொல்கேட்டு நான் அமரவேண்டியதில்லை” என்றார் சீர்ஷர்.

பொறுமையுடன் “அமர்க, குடித்தலைவரே!” என்றார் நாகசேனர். சீர்ஷர் “நீ அந்தணன் என்பதனால்…” என்றபின் அமர்ந்து உரக்க “இங்கு நிகழும் சூழ்ச்சியென்ன என்று எங்களுக்கு புரியாமல் இல்லை” என்றார். கருணாகரர் அவரை நோக்காமல் “நமது எல்லைகள் மிகுந்துள்ளன. இந்த மணம்கொள்ளலை கலிங்கர் விரும்பவில்லையென்றால் அவர் மகதனுடனும் மாளவனுடனும் கூர்ஜரனுடனும் கூட்டுச் சூழ்ச்சியில் ஈடுபடக்கூடும். ஒருவேளை எல்லைகளில் படைநகர்வு நடக்கலாம். அதை எதிர்கொள்ளும்பொருட்டு நமது எல்லைகள் அனைத்திலும் படைகளை நிறுத்த வேண்டியுள்ளது. அப்படைநகர்வுக்கான ஆணைகள் இங்கு இவ்வவையில் பிறப்பிக்கப்படும்” என்றார்.

மீண்டும் கைதூக்கி எழுந்த சீர்ஷர் “அந்த ஆணையின் உள்ளடக்கமென்ன என்று இப்போது என்னால் சொல்ல முடியும். காளகக்குடிகளை பல குழுக்களாகப் பிரித்து எல்லைகளுக்கு அனுப்பப்போகிறீர்கள். விஜயபுரியின் அரசருக்கு விதர்ப்பப் படைத்தலைவன் சிம்மவக்த்ரன் காவலனா? அன்றி சிறைக்காப்பாளனா?” என்றார். நளன் ஏதோ சொல்வதற்குள் நாகசேனர்  “இந்த அவை மங்கல அவை. அரசுசூழ்தலை நாம் தனியவையில் பேசலாம்” என்றார். “இந்த அவையில்தான் இவ்வறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன” என்றார் சீர்ஷர். “ஆம், அறிவிப்புகளில் உடன்பாடு இல்லையென்றால் மறுபரிசீலனை செய்ய முடியும். இந்த அவையில் அயல்நாட்டு வருகையாளர் பலர் உள்ளனர்” என்றார் நாகசேனர்.

நளன் எழுந்து “பொறுத்தருள்க, மூத்தவரே. இவ்வறிவிப்புகளில் பலவற்றை நானே இப்போதுதான் கேட்கிறேன். தங்களுக்கு உடன்பாடில்லாத அனைத்தையுமே குறித்துக்கொள்ளுங்கள். தனியவையில் நாம் அவற்றை பேசுவோம். உங்கள் ஒப்புதல் இல்லாமல் எந்த ஆணையும் இங்கு நிறைவேற்றப்படாது. இதை நான் உறுதியளிக்கிறேன்” என்றான். சீர்ஷர் “எவரும் எங்களுக்கு கொடையளிக்க வேண்டியதில்லை. இந்நகரே இன்று அரசனென ஒருவனை ஏற்றுக்கொண்டுள்ளது. பிறிதெவரையும் அது ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையை உணர்வதற்கு அறிவுகூடத் தேவையில்லை, விழிகூர்ந்தால் போதும். ஏன், இங்கமர்ந்து செவிகூர்ந்தாலே போதும்” என்றார். “நன்று, நாம் அனைத்தையும் பிறகு பேசுவோம். அவை நிறைவுகொள்ளட்டும்” என்று நளன் சொன்னான்.

அவைமங்கலத்தை நிமித்திகர் அறிவித்து தலைவணங்கியதும் இசை முழங்கியது. நளன் எழுந்து அவையை மும்முறை வணங்கினான். அவன் முடியையும் கோலையும் ஏவலர் பெற்றுக்கொண்டனர். வலப்பக்கம் திரும்பி வெளியேறும் வழியில் சீரடி வைத்து நடந்தான். முடியை அளித்தபின் தமயந்தியும் எழுந்து அவனை தொடர்ந்தாள். அவள் ஆடைதாங்கிய சேடிகள் பின்னால் சென்றனர். அவர்களின் அருகே வந்த கருணாகரர் தாழ்ந்த குரலில் “முதலில் இந்த மணநிகழ்வு நிறைவடையட்டும், அரசே. பிற ஆணைகள் அனைத்தையுமே ஒரு மாதம் கடந்தபின் நாம் கூடி முடிவெடுப்போம்” என்றார். தமயந்தி “ஆணைகளை மாற்றிக்கொள்ளும் வழக்கம் எனக்கில்லை, அமைச்சரே” என்றாள்.

கருணாகரர் “ஆம், அதை நான் அறிவேன். ஆனால் சீர்ஷர் உளநிலை பெரிதும் திரிபடைந்திருக்கிறது. நகர்மக்கள் புஷ்கரருக்கு அளித்த வரவேற்பு அவரது ஆணவத்தை தூண்டிவிட்டிருக்கிறது” என்றார். தமயந்தி “வெறும் ஆணவங்களாலோ கனவுகளாலோ அரசுகள் கைப்பற்றப்படுவதில்லை, ஆளப்படுவதுமில்லை. படைவல்லமையே இறுதி” என்றாள். “அதைக் கண்டபின்னரே அவர்களுக்குப் புரியும் என்றால் அதன் முதற்குறிப்பை அவர்களுக்குக் காட்டவும் நான் சித்தமாக இருக்கிறேன்.” நளன் எரிச்சலுடன் “இது என்ன பேச்சு? அவன் என் இளையோன். எதையும் அவனிடம் நேரடியாக சொல்லுமிடத்தில்தான் என்றும் நான் இருக்கிறேன்” என்றான்.

கருணாகரரிடம் “அமைச்சரே, அவனை உணவுக்கூடத்துக்கு வரச்சொல்லுங்கள். அங்கு அனைவரும் அமர்ந்து உண்போம். அமுதின் முன் உள்ளங்கள் கனியும். எளிய ஆணவங்களும் காழ்ப்புகளும் கரைந்து மறையும். அங்கு பேசுவோம்” என்றான். “ஆம், அது நன்று” என்றார் கருணாகரர். தமயந்தி “எனக்கு சற்று தலைநோவு உள்ளது. என் அறைக்குச் சென்று ஓய்வெடுத்துவிட்டு குடியவைக்கு வருகிறேன்” என்றாள். “இல்லை. இன்று என் சமையல். வெளியே குடிகளுக்கும் அதுவே. நாம் சேர்ந்தமர்ந்துண்ணவேண்டும்” என்று நளன் சொன்னான். தமயந்தி சிலகணங்கள் எண்ணம் கூர்ந்தபின் “அவ்வாறே” என்றாள்.

flowerகுடியினருக்கான உணவுக்கூடங்களை ஒட்டியே அரசகுடிகளுக்கான உணவுக்கூடம் இருந்தது. நளனும் தமயந்தியும் அவைக்கோலம் களைந்து கைகால் தூய்மை செய்து அங்கு சென்றபோது முன்னரே கால்குறைந்த நூற்றெட்டு ஊண்பீடங்கள் போடப்பட்டு அவற்றில் தளிர்வாழை இலைகள் விரிக்கப்பட்டிருந்தன. ஊண்கூடத்தின் செயலகர் வந்து வணங்கி “அமர்ந்தருள்க, அரசே!” என்றார். நளன் தமயந்தியிடம் “முதலில் நீ சென்று அமர்ந்துகொள்” என்றான். தமயந்தி “அரசர் முதலில் அமரவேண்டுமென்பது நெறி” என்றாள். “இல்லை, இங்கு நான் உணவை பரிமாற நிற்கிறேன்” என்றான். தமயந்தி முகம் சுளித்து “விளையாடுகிறீர்களா?” என்றாள். நளன் சிரித்து “முடி கழற்றிவிட்டேன். வேண்டுமென்றால் இந்த அணிகளையும் கழற்றிவிடுகிறேன். அடுமனையாளனாக நிற்கும்போது நான் அடையும் உவகை எப்போதும் பெற்றதில்லை” என்றான்.

தமயந்தி ஏதோ சொல்ல வாயெடுத்தபின் “சரி” என்றாள். அரசிக்குரிய உலையா நடையில் சென்று தந்தத்தால் குறுங்கால்கள் அமைக்கப்பட்ட பீடத்தின் மேல் அமர்ந்தாள். அவளைத் தொடர்ந்து இந்திரசேனையும் இந்திரசேனனும் அமர்ந்தனர். நளன் “குடித்தலைவர்கள் வருக!” என்றான். தங்கள் கோல்களை வைத்துவிட்டு உள்ளே வந்த குடித்தலைவர்கள் ஒவ்வொருவரையாக அவனே அழைத்து வந்து மணைகளில் அமரவைத்தான்.

காளகக்குடி மூத்தவர்கள் அவரிடம் வந்ததும் முகம் மலர்ந்து “இனிய உணவு, அரசே. அந்த மணமே அது என்ன என்பதை காட்டுகிறது. நீண்ட நாள் ஆயிற்று, தங்கள் கையால் உணவுண்டு” என்றனர். “இன்று இரவும் நானே அடுமனை புகலாம் என்று நினைக்கிறேன்” என்றான் நளன். கருணாகரர் “இரவு தாங்கள் குடியவையில் அமரவேண்டும்” என்றார். “ஆம். என்ன செய்ய வேண்டுமென்று ஆணைகளை கொடுத்துவிட்டு வருகிறேன். இரவு உணவுக்கும் இந்நகரத்தவர் எனது சமையலையே உண்ணவேண்டும்” என்றான் நளன். கருணாகரர் “நான் சென்று இளவரசரையும் பிறரையும் அழைத்து வருகிறேன்” என்றார். நளன் அடுமனையாளர்களுக்கு ஆணைகளை இட்டு உணவுக்கலங்களை கொண்டுவரச் செய்தான்.

ஊண்கூடம் நிறைந்துகொண்டிருந்தது. கருணாகரர் புஷ்கரனுடன் வந்தார். புஷ்கரன் நளன் அருகே வந்து “நான் புலரியில் எழுந்ததனால் சற்று தலைசுற்றலாக இருக்கிறது. நல்லுணவுகூட எனக்கு சுவைக்குமென்று தோன்றவில்லை” என்றான். நளன் சிரித்து “எந்நிலையிலும் எவருக்கும் சுவைக்கும் உணவு இது, இளையோனே. அமர்க!” என்று அவன் தோளைத் தழுவி அழைத்துச்சென்று அவனுக்கான பீடத்தில் அமரவைத்தான். அடுமனை உதவியாளன் ஒருவன் ஓடிவந்து நளனிடம் “கன்னல் சுவையுணவு ஒன்று உள்ளது, அரசே. அது தொடக்கவுணவா, நிறைவுணவா?” என்றான். “தேன் கலந்ததா?” என்றான் நளன்.

இரு குலத்தலைவர்களுடன் நடந்து வந்த சீர்ஷர் நளன் தன்னை வரவேற்பதற்காக காத்து நின்றார். நளன் “இரு, நானே காட்டுகிறேன். அது மகதநாட்டு உணவு” என்றபடி .உள்ளே சென்றான். மேலும் சற்று நோக்கிவிட்டு சீர்ஷர் உள்ளே சென்றபோது அவருக்கான இருக்கை மட்டும் ஒழிந்துகிடந்தது. அதை நோக்கி ஓர் எட்டு வைத்தபின் அவர் நின்று “காளகக்குடிகளுக்கு முதன்மை இடம் இங்கு இல்லையா?” என்றார். கருணாகரர் “அமர்க காளகரே… அனைத்தும் முறைப்படியே நிகழ்கிறது” என்றார். அவர் அமர்ந்துகொண்டு தலையை நிமிர்த்தி சுற்றி நோக்கினார். இலைகளில் சிறிய தொடுகறிகள் முன்னரே விளம்பப்பட்டிருந்தன. அடுமனையாளர்கள் தேனமுதையும் தோயமுதையும் புட்டமுதையும் கனியமுதையும் பாலமுதையும் சீராக விளம்பிவந்தனர். ஐந்தமுதுக்குப் பின் அன்னமும் அப்பமும் பரிமாறப்பட்டன.

இடைவலி கொண்டவர்போல நெளிந்தும் திரும்பியும் அமர்ந்திருந்த சீர்ஷர் உரத்த குரலில் “இந்த உணவு இந்திரனுக்கு படைக்கப்பட்டதா?” என்றார். உள்ளிருந்து வணங்கியபடி விரைந்து வந்த நளன் “ஆம், இங்கு அடுமனைகளில் சமைக்கப்படும் அனைத்து உணவுகளும் முதலில் நகராளும் விண்தேவனுக்கு படைக்கப்படுகின்றன. அதுவே நெடுநாள் முறைமை” என்றான். சீர்ஷர் “அப்படியென்றால் இந்திரன் உண்ட மிச்சிலா இங்கு கலியின் குடிகளுக்கு அளிக்கப்படுகிறது? காளகர் அமர்ந்து நக்கி உண்ணப்போவது அதையா?” என்றார். காளகக்குடியினர் திகைப்புடன் நோக்க “கலியின் குடிகளே, நீங்கள் உண்பது எதை?” என்று அவர் கைவிரித்து கூச்சலிட்டார்.

நளன் முகம் சுருங்க “உணவு எப்போதுமே தேவர்களின் மிச்சில்தான், மூத்தவரே. தேனீக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் வண்டுகளும் என அவர்கள் வந்து உண்ட மிச்சத்தை மட்டுமே உயிர்க்குலங்கள் உண்ணமுடியும்” என்றான். சீர்ஷர் வெறுப்பில் சுளித்த முகத்துடன் “நான் இங்கு நெறிநூல் பேச வரவில்லை. நாங்கள் கலியின் குடிகள். எங்கள் தெய்வத்தை இழித்து தென்னகக்காட்டுக்குத் துரத்திய பிற தெய்வம் அதோ அக்குன்றின் மேல் எழுந்து நிற்கிறது. அதற்கு படைக்கப்பட்ட மிச்சிலை உண்ணும் நிலை உங்களுக்கு இருக்கலாம், காளகருக்கு இல்லை” என்றார்.

காளகக் குடித்தலைவர்கள் இருவர் அவர் தோளைத்தொட்டு ஏதோ சொல்ல அதைத் தட்டி விலக்கியபடி அவர் பாய்ந்து எழுந்தார். “ஆண்மையற்று சோற்றுக்காக வந்தமர்ந்து காளகக்குடியையே இழிவுபடுத்துகிறீர்கள், மூடர்களே…” என்றார். “எழுக… இந்த உணவு நமக்குத் தேவையில்லை.” நளன் குரல் சற்றே மாற அழுத்தமாக “உண்ணுங்கள், மூத்தவரே” என்றான். “எனக்கு ஆணையிடுகிறாயா?” என்றபடி சீர்ஷர் அவனை நோக்கி கை நீட்டினார். “நான் காளகப்பெருங்குடியின் தலைவன். அதை மறக்காதே!” நளன். “ஆம், நான் உங்களுக்காக சமைத்த உணவு இது, மூத்தவரே” என குரல் தழைய சொன்னான். “சீ” என்று சீறிய சீர்ஷர் தன் இடதுகாலால் ஊண்பீடத்தில் இலையில் பரிமாறப்பட்டிருந்த உணவை மிதித்து எறிந்தார். அன்னம் கூடம்முழுக்க சிதறியது. சிலம்பிய குரலில் “இது எனக்கு நாய் வாய்வைத்த இழிவுணவு… கீழ்மகன் கைபட்ட நஞ்சு!” என்றார். நளன் உடல் பதற “மூத்தவரே…” என்றான். “எழுங்கள், மூடர்களே!” என்ற சீர்ஷர் மீண்டும் ஒருமுறை அன்னத்தை காலால் எற்றினார். “இந்த மிச்சிலை உதைத்தெறிந்துவிட்டு கிளம்புங்கள்! நாம் யாரென்று காட்டுங்கள்!” காளகக்குடி மூத்தவர் அனைவரும் எழுந்தனர்.

சிறியதொரு சிட்டின் குரலென நளனின் உடைவாள் உறையிலிருந்து வெளிக்கிளம்பும் ஒலி எழுந்தது. மின்னலொன்று அறைக்குள் வெட்டி ஒடுங்கியதுபோல வாள் சுழன்றமைந்தது. சீர்ஷரின் தலை குருதி சுழன்று சிதறி மாலையென நீர்க்கலம் விழும் ஒலியுடன் நிலத்தில் விழுந்து உருண்டு தமயந்தியின் காலடியில் சென்று அமைந்தது. கொதிக்கும் கலமென சிறுகொப்புளங்கள் ஓசையுடன் வெடிக்க சீர்ஷரின் உடல் பின்னால் சரிந்து சுவரில் மோதி நின்று கைகால்கள் உதறிக்கொள்ள அனல்பட்டதென சிலமுறை துடித்து விதிர்த்து மெல்ல சரிந்து விழுந்தது.

குருதி வழியும் வாளை ஆட்டி தாழ்ந்த குரலில் நளன் சொன்னான் “அமுதைப் புறக்கணித்து இந்த அவையிலிருந்து எழும் எவரும் தலையுடன் வெளிச்செல்ல ஒப்பமாட்டேன்… உண்ணுங்கள்!” காளகக்குடியினர் தங்கள் இலைகளில் அமர்ந்தனர். அவர்களின் உடல்கள் உருளைக்கல் தேரில் அமர்ந்திருப்பவர்கள்போல நடுங்கித் துள்ளின. உணவை அள்ள முடியாமல் கைகள் ஆடின. புஷ்கரன் இரு கைகளாலும் தலையை பற்றிக்கொண்டு உடல் பதற குனிந்தமர்ந்திருந்தான். “உண்ணுங்கள்!” என்று நளன் ஆணையிட்டான். அனைவரும் திடுக்கிட்டு பதறிய கைகளால் அன்னத்தை அள்ளி உண்ணத் தொடங்கினர்.

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16718 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>