Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16718 articles
Browse latest View live

நத்தையின் பாதை -கடிதங்கள்

$
0
0

thay

வணக்கம்..

இந்தக் கட்டுரை படித்தேன்..

மிக அழகாக, நுணுக்கமாக நாம் நம் பெருமையை திரும்பிப் பார்க்காமல், அருமை தெரியாமல் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லி இருக்கிறீர்கள்..

இந்தியக்கலையின் தனித்தன்மையைக் குறித்த சிந்தனைகளைத் தொடங்கிவைத்த ஆனந்தக்குமாரசாமியின் சிவநடனம் ஒரு முன்னோடி நூல்

இது எனக்கு மிகவும் புதிய தகவல்.. படிக்கிறேன்..

அவர் என்னிடம் “இதைப்பற்றி இங்கு என்ன எழுதப்பட்டுள்ளது?” என்றார். நான் சொல்லத் தொடங்குகையில் “அதெல்லாம் பழையவரிகள். நவீன இலக்கியத்தில், தத்துவத்தில்?” என்றார். “இதுவரை சொல்லப்படாததாக என்ன உள்ளது?”

இதில் சொல்லும் விஷயம் எப்படிப்பட்டது என்பது பிடிபடவில்லை..

எனக்குப் புரியும்படியாக, வேறு ஏதேனும் உதாரணத்துடன் விளக்க இயலுமா..

அதாவது இது போன்ற பழமை குறித்து, வேறு எங்காவது நவீன வடிவப் பதிவு இருப்பது பற்றி..

குறிப்பு: கட்டுரையில் இருக்கும் புகைப்படச்சிற்பம் ஸ்ரீவைகுண்டம் கோவிலில் உள்ளது என நினைக்கிறேன்..

நன்றி

பவித்ரா.

***

ஜெமோ,

“உணர்கொம்பு”. பயணத்தின் முதல் தலைப்பே அருமையாக என்னை உள்வாங்கிக் கொண்டது. தடத்தில் என் ஆதர்ச எழுத்தாளரைக் காண்பது, தடம் மேல் நான் வைத்திருக்கும் மதிப்பை கூட்டியிருக்கிறது.

“பார்ம்பரியத்தை உதாசீனப்படுத்தும் சமூகம், நவீனத்தில் எந்தப் புதுமையையும் அடைவதில்லை. அச்சமூகம் தேங்கித்தான் போகும். மரபுகளை மீறும் சமூகத்தை விட, அதை அறியாத சமூகமே பரிதாபத்திற்குரியது”.

“நவீனத்தின் விதைகள், மரபில் தான் உள்ளன என்பதைக் கண்டுகொண்ட தேசங்கள் ஒரு முழுமையான வளர்ச்சியை எட்டிப் பிடித்தன. “

இது தான் உணர்கொம்புகளின் சாராம்சம் (எல்லாம் தங்களிடம் இருந்து கற்றுக் கொண்டது) என்று எண்ணுகிறேன்.

“தேனீக்களின் உணர்கொம்புகள் தான் பூக்கள்”, “புலிகளின் உணர்கொம்புகள் தான் காடு” என்ற வரிகள் புனைவு போல தோன்றினாலும், அத்வைதத்தை பூடகமாக உணர்த்தியுள்ளீர்கள் என்றே அவதானிக்கிறேன்.

சமீபகாலமாக இங்கு நடக்கும் விஷயங்களை உற்று நோக்கும்போது, உணர்கொம்புகள் சீவப்பட்டவர்கள் தான் களத்தில் இருப்பது போல் உள்ளது. சாதியமும் மதமும் தான் அவ்வுணர்கொம்புகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளதோ? என ஒரு ஐயம் எழுகிறது.

உணர்கொம்புகளை இழக்காதவர்கள், தங்களைப் போன்று, இலக்கியத்திற்குள் தீவிரமாக இயங்குவதில்லையோ என்ற ஐயமும் எனக்குண்டு.

அன்புடன்

முத்து

குறிப்பு: இக்கடிதத்தை தடத்திற்குதான் நேரடியாக எழுதலாம் என்றிருந்தேன். அதுதான் முறையும் கூட. ஆனால், நான் எழுதிய ஒரு எதிர்வினை( சுகுணா திவாகர் மணிரத்னத்தை பற்றி எழுதியதற்காக) அனுப்பி ஒரு வாரத்திற்கு பின்பு receiver inbox ல் இடமில்லை என்று திரும்பி வந்து விட்டது. ஆதலால் உங்கள் மின்னஞ்சலுக்கே இக்கடிதத்தை எழுதியிருக்கிறேன்.|தடத்திற்கு copyயும் செய்திருக்கிறேன்.‎

நத்தையின் பாதை 1

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

சிற்பம் தொன்மம்

$
0
0

senthii

இனிய ஜெயம்,

உத்ரகண்ட். கேதார்நாத் நோக்கிய பயணத்தில் கௌரிகுண்ட் அருகே ஃபடா எனும் கிராமத்தில் நின்றிருந்தோம். குளிர்பொழியும் அதிகாலையில் தேநீர்க்கடை ஒன்றினில் உறைந்த விரல்களை அனலில் அருகில் காட்டி உறுக்கிக் கொண்டிருந்தேன். வெளியே நில விளிம்பில் வானுயர்ந்த மலை. வெண்க்ரீடம் சூடிய பனிவரை. கேதார்நாத். கண்கள் பின்வாங்கி சாலையை அடைய, பனிமுடியே உடலெனக் கொண்டு, முற்றிலும் சாம்பல் மூடிய திகம்பர கோல, பைராகி ஒருவர் வந்து கொண்டிருந்தார். வெண்பனியும் வெண் சாம்பலும் ஒன்றா? அக்கணம் உணர்ந்ததை எப்படி சொல்ல? திகைப்பிலிருந்து மீளுமுன் என்னைக் கடந்து போயே போய்விட்டார்.

பைரவ் பாத்தீங்களா என்றார் எனக்குப் புரியும் மழலை ஹிந்தியில் தேநீர்க்கடைக்காரர். நெற்றியில் செந்திலகம். அவர்பின்னால் சட்டமிட்ட புகைப்படத்தில் மல்லாந்து கிடந்த சிவத்தின் நெஞ்சில் மிதித்து நின்றிருந்தாள் பன்னிருகை காளியன்னை. அன்றைய தினமெல்லாம் என்னுள் நிகழ்ந்ததை ஒருபோதும் வார்த்தையில் சொல்லிவிட முடியாது என்றே எண்ணுகிறேன்.

அன்றிரவு அறைக்குள் ஒடுங்கி, துயிலா எண்ணங்களை, பெருகும் சித்திரங்களை அளைந்து கொண்டிருக்கையில் ஒரு கணம் பேலூர் ஹளபேடு கலை மேன்மைகளை எண்ணி அகம் விம்மி அடங்கியது. கிளாசிசம் இந்த மண்ணின், இங்கு விளைந்த பண்பாட்டின் செழுமையில் இருந்து உதித்தது அது. ஒரு பக்கம் கலைமகளின் நடனம். உளியை உதடுகள் என்றாக்கி முத்தி முத்தி அந்த சிற்பி வடித்தெடுத்த கலை மேன்மை அவளை பாரதி பார்த்திருந்தால் இன்னும் பலநூறு பாடல் கொண்டு அந்த வெள்ளைக் கமலத்தவளை கொண்டாடி இருந்திருப்பான். அதே சிற்பிதான் அதே கோவிலின் மற்றொரு மூலையில், இடது கை சுண்டுவிரலை கடித்தபடி சிருங்கார இளிப்புடன், பிணங்களை உண்டு, சுடலையில் கூத்தாடும் சுடலைமகள், மயான காளியையும் செய்து நிறுத்தி இருக்கிறான். விஸ்வரூபம் கொண்டு கூத்தாடும் மயான காளி காலடியில், ஒரு கிங்கரன் நிற்கிறான். மனிதக் காலின் அருகே தேங்காய் அளவு. மற்றொரு படிமையில் விஸ்வரூபம் கொண்ட சிவனின் ருத்ர தாண்டவம். அவன் காலின் கீழ் அதே தேங்காய் அளவு, மயான காளி. [எனில் அந்த கிங்கரனுக்கு சிவனின் பாதமன்றி வேறெதுவும் தெரியாது] துளியை அணுகி, பெருக்கிக் காட்டி, அத்துளியை மாபெரும் கடலொன்றின் துமியென காட்டுகிறான் சிற்பி. க்ளாஸிஸம்.

தனி வாழ்வில் என் தாத்தா திக. அப்பா காலத்தில்தான் அதிலிருந்து இறங்கி வந்தார். பின் மொத்த கூட்டு குடும்பமும் தீவிர பக்தியில் விழுந்தது. அப்பா வழி கிடைத்த வாசிப்பு, தொடர் [பக்திதான்] கோவில் பயணங்கள். தேடல்கள் பல்வேறு அலைக்கழிப்புகள், பின்னர் கைக்கு கிடைத்த விஷ்ணுபுரம் நாவலே என் விழிகளை திறந்து விட்ட நாவல் என்பேன். பெரும்பாலும் மாலை நெல்லையப்பர் அம்மன் சன்னதியில்தான் கிடப்பேன். இத்தனை வருடம் கழித்து முதன் முறையாக அக்கோவிலின் சிற்பங்கள் முதன் முதலாக எனது குருட்டுப் புள்ளியைக் கடந்து பார்வைப் புலனுக்குள் வந்தது விஷ்ணுபுர வாசிப்புக்குப் பிறகே. இன்று இந்த நிலமெங்கும் திரிந்து, திளைக்கும் கலை அளிக்கும் உவகை அனைத்துக்கும் தோற்றுவாய் விஷ்ணுபுரம் நாவலே.

சிலவருடம் முன்பு ஆண்டாள் கோவிலில் நின்றிருந்தேன். ஒப்பற்ற செல்வங்கள் மீது [பாவாடை ஏற்றி கட்டி] துகில் போர்த்திக் கிடந்தது. அர்ச்சகர் சொன்னார் ”இளவட்ட பசங்க பொண்ணுங்க வர்ற இடம், இது பத்தி யாருக்கும் ஒண்ணும் தெரியாம விசேஷ நாளெல்லாம் வெறும் கேலியும் கிண்டலுமா ஆகிப் போகுது அதனாலதான் இப்டி ”என்றார். திருச்சி அருகே நாம் பார்த்த கோவில் ஒன்றினில் கோபித்து செல்லும் உமையை சிவம் சமாதானம் செய்கிறார். வலது கரம் உமையின் முகத்தை ஏந்த, இடது கரம் உமையின் இடது ஸ்தனத்தின் பாரம் தாங்க, ஊடல் நிறைந்து கூடலுக்கு நகரும் துவக்க கணத்தில் உறைந்த கலையழகு, துகிலுக்குள்தான் பொதிந்து வைக்கப்பட்டு இருந்தது. இன்று ஒட்டுமொத்தமாக பீடித்திருக்கும் இந்த குருட்டுப் புள்ளியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி வரும் இளம் தலைமுறையையும் சரி சமமாக காண முடிகிறது. அன்று காஞ்சிபுரம் கைலாச நாதர் கோவிலில் நின்று, தோழிக்கு அடித்தளம் முதல் சிகரம் வரை கோவில் என்ற கட்டுமானத்தில் இடம்பெறும் அமைப்புகள் குறித்து குடவாயில் பாலசுப்ரமணியம் அவரது கட்டுரைகளில் சொன்னவற்றை சொல்லிக்கொண்டிருந்தேன். [வாசித்தது எனக்குள் சேகரம் ஆக எனக்கு நானே சொல்லிக்கொண்டதுதான் அது] அருகே ஒரு இளைஞர் அது குறித்து மேலதிக தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டார். பொதுவாக நான் என்னுள் நானே மூழ்கிக் கிடக்கும் பித்துக்குளி. அவரை எங்கோ தவறவிட்டு விட்டேன். தோழி அவருக்கு நல்ல புக்ஸ் சஜஸ்ட் பண்ணிருக்கலாம் விட்டுட்டோம் என்று வருத்தப்பட்டார். ஆம் இன்றைய சூழலில், எதிர் படும் அனைத்து, லௌகீக லாபங்கள், பொருளற்ற கேளிக்கைகள் அனைத்தையும் கடந்து, ஒரு கோவிலுக்குள் நின்று, ஒரு சிற்பத்தைக் கண்டு, இது என்ன எனும் வினாவை ஒரு இளம் மனம் எழுப்பிக்கொள்ளும் நிலை அபூர்வத்திலும் அபூர்வமே. அவன் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட பிறவி என்பதை அக் கணம் அவனுக்கு உணர்த்தக்கூட அவன் கடந்து வந்த கல்வி அவனுக்கு உதவுவதில்லை.

நமது சிற்பக் கலை மீது, நமது இளம்தலைமுறை கவனம் திருப்பும் இந்த சூழலில், நமது கோவில் கலை மரபு சார்ந்த, தெளிவான, சரியான, சரளமான, தீவிரம் குன்றாத, அறிமுக நூல்கள் சிலவே தமிழில் கிடைக்கின்றன. இவ்வாண்டு வெளியான நூல்களில், பாரத சிற்பவியல் கலை சார்ந்த, என்சிபிஎச் வெளியீடான செந்தீ நடராஜன் அவர்களின் சிற்பம் தொன்மம் மிக முக்கிய நூல்.

………………………………………………………………………………………………………………………………..

பேளூர் ஹளபேடு, நாட்டிய சரஸ்வதி, பிரம்மா, கோவர்தனன், ஹிரண்யவத நரசிம்மர், அணிப்பாவைகள், கங்கைகொண்ட சோழபுரம், நடராஜர், மகிஷாசுர மர்த்தினி, சண்டேச அனுக்கிரக மூர்த்தி, கஜலக்ஷ்மி, ஆந்திரா வாரங்கல் ராமப்பா கோவில் ருத்ரகணிகை, ஸ்ரீவைகுண்டம் ராமர் ஆஞ்சநேயர், வீரபத்ரர், குறவன் குறத்தி, சாஞ்சி யோகினி, சிதறால் அம்பிகா யக்ஷி, வேனூர் பாகுபலி.

அகோபிலம் நரசிம்மம் வேட்டுவத்தி. ரதி மன்மதன். போல பாரதக் கோவில் மரபின் முக்கியமான இருபத்து எட்டு படிமைகளை அறிமுகம் செய்து கொள்வதற்கான முழுமையான அடிப்படைகளை வாசகர்களுக்கு அளிக்கிறது செந்தீ நடராஜன் அவர்கள் எழுதிய இந்த சிற்பம் தொன்மம் நூல்.

காவல்கோட்டம் நாவலின் சாகித்ய அகாடமி வெற்றிக்குப் பிறகான விற்பனை அரங்கில், தமிழினி வசந்தகுமார் அண்ணன் மிக உற்சாகமாக இருந்தார். நூல் வாங்கிய புதிய வாசகர்களில் சிலர், காவல்கோட்டம் நாவலின் முகப்பு அட்டைப்படமான நவகண்டம் செய்துகொள்ளும் புடைப்பு சிற்பத்தை சுட்டி ஆவலுடன் அது என்ன என விளக்க சொல்லி கேட்க, வசந்தகுமார் அண்ணன் ஒவ்வொரு முறையும் உற்சாகம் குன்றாமல், சலிக்காமல் அந்த சிற்பம் குறித்து விளக்கிக்கொண்டு இருந்தார். தீவிர வாசக தளத்தில் அவரது தமிழினி இதழின் அட்டைப்படங்கள் உருவாக்கிய உரையாடல்கள் மிக முக்கியமானவை [அதில் எத்தனை எழுத்தாக பதிவாகி இருக்கிறது என தெரியவில்லை.உங்கள் தளத்தில் நீங்கள் எழுதிய கட்டுரை தவிர்த்து]. தமிழினி இதழின் முகப்பை அலங்கரித்த நமது சிற்ப கலை மேன்மைகளில் தேர்வு செய்யப்பட்ட இருபத்து எட்டு படிமைகள் மீதான அறிமுகம் இந்த நூல்.

இந்த நூல் எனக்குள் பல கதவுகளை திறந்து வைத்தது. குறிப்பாக மங்கி துங்கி அருகமலையில் நான் கண்ட கிருஷ்ண பலராமர் படிமைகளுக்கு இந்த நூல் அளித்த பின்புலம். வ்ருஷ்ணி குலம் எகானம்சா எனும் அன்னை வழிபாட்டை அடிப்படையாக் கொண்ட தாய் வழி சமூகமாக இருக்கும் போது, கிருஷ்ண பலராமர் துணை தெய்வங்களாக இருந்து, தந்தை வழி சமூகமாக மாறுகையில் எவ்வாறு கிருஷ்ணர் மேலெழுந்து வந்தார், மருத நில இந்திரனுக்கு, முல்லை நில உபரி செல்வதை, முல்லை நில கிருஷ்ணன் தடுத்ததால் எழும் இந்திர கிருஷ்ண சமர், அதில் வெல்லும் கிருஷ்ணன் தொட்டு உருவாகி வந்த கோவர்தனன் படிமை என இப்படிமைகள் பின்னுள்ள சமூக வரலாற்று வளர்ச்சியின் சித்திரத்தை அளிக்கிறார் நடராஜன்.

செந்தீ நடராஜன் அவர்கள் மார்க்சியர். அவரது கருவியும், இந்துத்துவர் ஜடாயுவின் கருவியும் எந்த அளவு முரணே இன்றி, ஒரு படிமையைக் கொண்டு முன்னெடுக்கும் சமூக பண்பாட்டு ஆய்வில் இணைகிறது என்பதை இந்த நூலின் முதல் அத்யாயமான நரசிம்மன் வெட்டுவத்தி படிமைக்கும், இறுதி அத்யாயமான ஹிரண்ய வத நரசிம்மர் படிமைக்கும் நடராஜன் அளிக்கும் ஆய்வு பின்புலத்தையும், ஜடாயு அவர்களின் காலம்தோறும் நரசிங்கம் கட்டுரையையும் இணை வைத்து வாசித்தால் புரியும். [அரசியல்நோக்கு என்று வரும்போதே இந்த இரண்டுகருவிக்குள்ளும் அடிதடி பிறக்கிறது.]

எழுதப்போனால் ஒவ்வொரு அத்யாயம் குறித்துமே எழுதித் தள்ளிவிட வேண்டும் என ஆவல் பொங்குகிறது. பிரம்மா படிமத்தை முன்வைத்து, வேதத்தில் இருக்கும் பிரம்மம் என்ன? பிரம்மா எனும் படைப்பு கடவுள் யார்? கிமு எட்டு முதல் கிமு ஐந்து வரை உயரம் கண்ட பிரம்மா வழிபாடு, பின் வைணவத்தில் பத்மநாபன் எனும் தத்துவம் வழியே பிரம்மன் வைணவத்தில் கரைந்தது, ஐந்து தலை பிரம்மனின் தலைகளில் ஒன்றினை கிள்ளி, பைர சிவம் பிரம்மனை கர்வபங்கம் செய்யும் புராணம் வழியே சைவம் பிரம்மனின் மேலே கடந்து சென்றது, என இதில் பேசு பொருளாக இருக்கும் ஒவ்வொரு படிமைக்குமான அடிப்படையான பின்புலத்தை, செறிவும் தெளிவுமாக அறிமுகம் செய்கிறார் ஆசிரியர்.

உங்களது தெய்வங்கள், பேய்கள் தொடரில் அருகொலை தெய்வங்கள் எவ்வாறு நாட்டுப்புற தெய்வமாக மாறுகின்றன, அதில் சில எவ்வாறு பௌத்தத்தாலும் சமணத்தாலும் உள்ளிழுக்கப்பட்டு பலியேற்பு விடுத்து அருள் வழங்கும் தெய்வங்களாக ஆகின்றன என்ற சித்திரம் வரும், அந்த தொடரின் துணை நூல்களாக நான் வாசித்த நூல்களில் ஒன்று, வே.வெங்கடாசலம் அவர்கள் எழுதிய தமிழகத்தில் யக்ஷி வழிபாடு நூல். அந்த நூலில் வெங்கடாசலம் அம்பிகா யக்ஷியின் நாட்டார் பின்புலத்தை அதன் கதை கொண்டு விளக்குகிறார். அம்பிகாவின் கணவன் அம்பிகாவின் தெய்வாம்சம் கண்டு பயந்து அவளை விட்டு பிரிகிறான். துயர் தாளா அம்பிகா குழந்தைகளை விட்டு விட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். மனம் ஆறாத அம்பிகா ஆவியாக வந்து குழந்தைகளை அவ்வப்போது காண்கிறாள். மனம் திருந்தி அவள் கணவன் திரும்ப வருகிறான். மீண்டும் குடும்பம் துவங்க, ஒரு சூழலில் கணவன் அம்பிகாவை அணுக, அவள் பேய் உருவம் கொள்கிறாள். அம்பிகா தற்கொலை செய்து பேயாக அலைவது அறிந்து கணவனும் தற்கொலை செய்து கொள்கிறான். இந்த நாட்டுப்புற தெய்வம் சமணத்தால் உள்ளிழுக்கப்பட்டு நேமிநாதரின் பரிவார தேவதை அம்பிகா யக்ஷியாக மாறுகிறாள் அம்பிகா, அவளது சிம்ம வாகனமாக ஆகிறான் அவளது கணவன். இப்படி தொட்டு தொட்டு விரித்து செல்கிறது அந்த நூல். இந்த சிற்பம் தொன்மம் நூலில் கூடுதலாக நடராஜன் அம்பிகா யக்ஷி கதைக்கும், காரைக்கால் அம்மையார் கதைக்கும் உள்ள ஒற்றுமையை விளக்குகிறார் சித்ரால் அம்பிகா யக்ஷி குறித்த இந்த நூலின் அத்யாயத்தில்.

சரஸ்வதி படிமைகளிலேயே தனித்துவம் கொண்டது ஹளபேடு நடனமிடும் சரஸ்வதி. அவள் குறித்த அத்யாயம் பல சிந்தனை ஓட்டங்களை அளித்தது. நமது சமணப் பயணத்துக்குப் பின் நான் தேடி வாசித்த நூல்களில் ஒன்று, அருண வசந்தன் அவர்கள் எழுதிய ஜைனத் திருமேனிகள் நூல். அதில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் பரிவார தேவைதைகளும் எந்தெந்த வாணிகளின் அம்சம் என்றொரு அத்யாயம் வருகிறது. இருபத்து நாலு வாணிகளுக்கும் மேலானவள், ரிஷபதேவரின் மூத்த மகளான பிராமி [எழுத்துக்கு சொந்தக்காரி] மற்றும் இளயமகளான சுந்தரி [எண்களுக்கு சொந்தக்காரி] [குறள் ஒரு சமண நூல் என்பதன் மற்றொரு ஆதாரம். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப..] இவர்களுக்கும் மூத்தவள் முதல்வள் வாக்தேவி. மகாஜீன வாணி. மகாஜீனவாணி அமர்ந்திருக்க சுற்றிலும் இருபத்து நான்கு வாணி இருக்கும் பளிங்கு சிலையின் படம் அதில் கண்டிருந்தது. கடலூர் அருகே பிற்படுத்தப்பட்டோர்கள் ஒரு சிறிய கோவிலை காட்டியுள்ளனர். அக்கோவின் சரஸ்வதி ஒரு கையில் பறையை ஏந்தி அலர்மேல் அமர்ந்திருக்கிறாள்.

…………………………………………………………………………………………………………………………….

கடந்த ஊட்டி வகுப்பில் சிற்பக்கலை மீதான அறிமுக வகுப்பின் பின்னான உரையாடலில், கலாக்ஷேத்ரா நண்பர் ஜெய்குமார் சொன்னார், நாம் பொதுவாக பல்லவர் பாணி, பாண்டியர் பாணி, நாயக்கர் பாணி, என்றே கோவில் கலையை புரிந்து கொள்கிறோம். இது எவ்வாறானது என்றால் கம்பன் இயற்றிய ராமாவதாரம் சோழர் பாணி என்பதை போன்றது.அது அவ்வாறு அல்ல, சிற்ப கலை பொதுவாக சாக்தம், தாந்த்ரீக உபாசகர்களின் கொடை என்றார். பிடரியில் அடி வாங்கியது போல இருந்தது. இந்த நூலில் சிற்ப ரத்னம், காசியம், பூக்காரணா, அம்சுமத்பேதா, சுப்ரபேதா, விஷ்ணு தர்மேந்திரா போன்ற வெவ்வேறு சிந்தனைப்பள்ளிகள் தந்த சிற்ப சாஸ்திர நூல்கள் குறித்த குறிப்பு வருகிறது. ஒரு மகிஷாசுர மர்த்தினி சிலையை பார்க்கையில் அது எந்த சிந்தனைப் பள்ளியின் சிற்ப நூலை அடிப்படையாக கொண்டது என்று சொல்லிவிட முடியும் என்பது எனது ஆச்சர்யத்தை அதிகரித்தது.

கீழ்வாலை பாறை ஓவியங்களை காணும் போது ஒன்று புரிந்தது. மீன்பிடி குடி, இருந்திருக்கிறது, [ஒருவன் குதிரையில் அமர்ந்திருக்க ஒருவன் அந்த குதிரையை வழி நடத்துகிறான்] குதிரை பழக்கும் குடி இருந்திருக்கிறது, மாட்டிலிருந்து மிருகத்தில் இருந்து தோலை உரித்து எடுக்கும் நுட்பமான கருவியை செய்யும் கருமார் குடி இருந்திருக்கிறது, வேட்டை குடி இருந்திருக்கிறது [ஒரு ஊகம்தான்], அத்தனையும் அந்த ஓவியத்தில் சக்கரம் எனும் [அல்லது சூரியன்] குலசின்னத்தின் கீழ் கூடி இருக்கிறது. ”நாங்கள் ” எனும் தன்னுணர்வு ”இங்கே இருக்கிறோம் ” என்ற இட கால வரலாற்று உணர்வு. எல்லாம் அங்கே துவங்கி விட்டது. இதன் விரிவாக்கமே நெல்லையப்பர் கோவில் வரை நீள்கிறது. பரதவர்களும் குன்றக் குறவர் குடிகளும், நாம் என்று இணைந்ததன் கலை பண்பாட்டு சாட்சியமே அக்கோவிலின் மேன்மைமிகு குறவன் சிலையும், முத்துக் குமரன் படிமமும்.

இந்த நூல் அந்த கலைப்பண்பாட்டு பொக்கிஷங்கள் வழியே பயணிக்கிறது. நூலின் துவக்கத்திலேயே இந்த படிமைகளை முற்ற முழு கலை அனுபவமாக உள்வாங்க தேவையான அடிப்படைகளை நடராஜன் அளித்து விடுகிறார். மகுடங்களின் வகைமாதிரிகள், அபய வரத போன்ற கரங்களின் முத்திரைகள், கரங்களின் அத்தனையிலும் அலங்கரிக்கும் ஆயுதங்கள், நின்று, இருந்து, கிடக்கும் கோலங்களின் இலக்கணங்கள், அணிகலன்கள், ஆடைகள் என ஒரு சிற்பத்தை கேசாதிபாதம் உள்வாங்க தேவையான அனைத்தும் நூலின் துவக்கத்திலேயே கோட்டு சித்திரமாக இடம்பெறுகிறது.

பின்னர் வேதம், வேத மறுப்பு பண்பாடு வழியே, குல வழிபாடுகள், மதங்கள் உருவாகிவந்த நாட்டார் கதைகள், புராணக்கதைகள், அதன் வேறுபாட்டு வகைமைகள் வழியே, ஒரு தொன்மம் காலாகாலமும் உயிர்கொண்டு வளர்ந்து வரும் சித்திரத்தை [சமுக பண்பாட்டு ஆய்வு வழியே] சிகரமுகமாக அதில் விளங்கும் சிற்பங்கள் [இருபத்தி எட்டு கருப்பு வெள்ளை புகைப்படங்கள்இடம்பெறுகிறது] எனும் கலை செல்வங்களை அதன் முழுமையான பின்புலத்துடன் அறிமுகம் செய்கிறார் நடராஜன். ஒரு தொன்மம் சமூக ஆழ்மனத்தில் அகத்தில் என்னவாக உரு திரண்டு, புறத்தில் எவ்வாறு வளர்ந்து நிற்கிறது என்பதை அந்தரங்கமாக உணரசெய்யும் கொற்றவை நாவல் இந்த நூலில் வாசகருக்கு சுட்டப்படுகிறது. வாசித்து வளரும் அனைவருக்கும் என்றென்றும் மேலதிக வாசிப்புக்கு துணைநிற்கும் மூலநூல்கள் பட்டியல் நூலின் இறுதியில் இடம்பெறுகிறது. கிட்டத்தட்ட முழுமையான கலை சொற்களின் பட்டியல் கொண்டு நூல் நிறைகிறது.

இந்த நூலில் இலங்கும் நடராஜரை அறிமுகம் செய்துகொள்ளுவது வழியே, சிற்பக்கலையின் ரசிகனாக உள்ளே நுழையும் ஒரு கலா ரசிகன் வெகு நிச்சயமாக உணர்கொம்புகள் கட்டுரையில் வரும் நடராஜ தத்துவத்துக்கு விரைவாகவே வந்து சேர்ந்து விடுவான்.

ஆம் இன்றைய உணர்கொம்புகள் பதிவு அளித்த உதேகத்தில்தான் அமர்ந்து இந்த பதிவை எழுதினேன். இவ்வாண்டின் மிக முக்கிய நூல் வரவுகளில் தனித்துவமான ஒன்று செந்தீ நடராஜன் அவர்கள் எழுதிய இந்த சிற்பம் தொன்மம் நூல்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இரு நிகழ்ச்சிகள்

$
0
0

1

கண்பிரச்சினை, வெண்முரசு, மழை, வெக்கை என நாட்கள் சென்றுகொண்டிருந்தாலும் பொதுவெளிச்செயல்பாடுகள் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. கண் ஒவ்வாமை அனேகமாகச் சரியாகிவிட்டது.மீண்டும் வராமல் இரண்டுவாரம் கவனமாக இருக்கும்படி டாக்டரின் ஆலோசனை. மழைவந்துவிட்டதனால் இனி தூசுப்பிரச்சினை இருக்காதென்று நினைக்கிறேன்.

சென்ற மே 25 ஆம் தேதி தொடங்கியது. ஐந்துநாட்கள் தொடர்ச்சியாக கண்ணுக்கு ஓய்வுகொடுத்திருந்தால் விரைவிலேயே சரியாகிவிட்டிருக்கும் என்று டாக்டர் சொன்னார். ஒருநாளும் ஓய்வுகொடுக்கவில்லை. விமானத்தில்கூட. வேறுவழியில்லை. பொதுவாக உடலைக் கவனித்துக்கொள்ளும்படி எனக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வருவதுண்டு. நானும் அளிப்பதுண்டு. உடலை உதாசீனம் செய்வதில்லை. ஆனால் உடலை ஓம்பி வளர்ப்பதற்காக இங்கே வரவில்லை அல்லவா?

2

23 ஆம் தேதி தக்கலையில் அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் மூன்றுநூல்கள் வெளியீட்டு – விவாத நிகழ்ச்சி. எச்.ஜி.ரசூலின் குறுங்கதைத்தொகுதி [போர்ஹேயின் வேதாளம்] எஸ்.ஜே..சிவசங்கரின் சிறுகதைத் தொகுதி [சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை], நட சிவக்குமாரின் கவிதைத்தொகுதி [தம்புராட்டியின் பரியங்கம்]. கறுப்புக்கண்ணாடியுடன் காரில் சென்றிறங்கிய என்னை ஒரு வட்டச்செயலாளர் என பலர் நினைப்பது தெரிந்தது.

இடதுசாரிகளுக்கே உரிய எளிய நிகழ்ச்சி. அரங்கம் 1917ல் கட்டப்பட்டது. ஓடுபோட்டு உள்ளே மரம் வேய்ந்தகூரை. செங்குத்தான கம்பிகள் கொண்ட பெரிய ஜன்னல்கள். இடிந்த தரை

சங்ககாலத்தில் கொல்லனும் கணியனும் கவிதை எழுதினர்.சங்ககாலத்திற்குப் பின் நவீன இலக்கியத்தின் யுகம் வரை அடித்தளத்திலிருந்து நேரடியாக இலக்கியக்குரல் எழுந்துவருவதைக் காணமுடியாது. காரணம் இலக்கியவாதி என்னும் தொழில்முறையாளன் உருவாகிவிட்டிருந்தமை, இந்த ஒரு அம்சத்தாலேயே நவீன இலக்கியத்தில் அடித்தள வாழ்க்கையில் இருந்து எழுந்துவரும் நேரடிக்குரல்கள் பெரும் முக்கியத்துவம் கொண்டவை. அவற்றை வழக்கமான இலக்கிய அளவுகோல்களைக்கொண்டு அளப்பதோ வழிநடத்த முயல்வதோ பிழை. அவை தன்னிச்சையாக வெளிப்படுவதை கவனிப்பதும் ஆராய்ந்து மதிப்பிடுவதுமே நாம் செய்யக்கூடுவது.

நட.சிவக்குமாரின் கவிதைகளில் பெரும்பாலும் நேரடியான கோபமும் சீற்றமும் புழக்கமொழியில் வெளிப்படுகின்றன. அந்த உணர்வுகளின் நேர்மை அவற்றை படைப்புக்களாக ஆக்குகிறது. அத்தளத்திலிருந்து எழுந்து மேலும் அடுக்குகள் கொண்ட கவிதைகளை எழுதுகையில் முக்கியமான கவியுலகம் ஒன்றை அவர் உருவாக்குகிறார். நான் இருபதுநிமிடம் சுருக்கமாகப்பேசினேன்

எச்.ஜி.ரசூலின் நூலைப்பற்றி மீனான் மைதீன் பேசினார். பிரேம்குமார் சிவசங்கரின் தொகுதியைப் பற்றிப் பேசினார். விழாவில் நோன்புக்கஞ்சி அளிக்கப்பட்டது. மேலும் பலர் பேசியிருக்கக் கூடும். நெடுங்காலமாக பார்க்காமலிருந்த ஜி.எஸ்.தயாளன்,சொக்கலிங்கம், ஹாமீம் முஸ்தபா, பென்னி போன்றவர்களைப் பார்க்கமுடிந்தது. ஆனால் எனக்கு உள்ளூர கண் ஒவ்வாமை பற்றிய பதற்றம். உடனே கிளம்பி வீடுவந்து சொட்டுமருந்து போட்டுக்கொண்டேன். நல்லவேளையாக ஒன்றும் ஆகவில்லை

umapathi

டாக்டர் கே உமாபதி

25 ஆம் தேதி கன்யாகுமரியில் உலக வெண்புள்ளிகள் நாளை ஒட்டிய ஒரு நிகழ்ச்சி. உலக அளவில் பெரிய நோயாக கருதப்படாதது வெண்புள்ளிகள். நிறமித்திசுக்களின் அழிவால் உருவாகும் ஒரு வண்ண வேறுபாடு அது.ஆனால் பலவகையான மனத்தடைகளும் சமூகத்தடைகளும் நிறைந்த இந்தியாவில் அது ஒரு பெரிய சமூகப்பிரச்சினை. தமிழகத்தில் பல லட்சம்பேர் அச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கணிசமானவர்களுக்கு இயல்பாகவே சரியாகியும்விடும்.

வெண்புள்ளிகள் சிக்கலை வெண்குஷ்டம் என்னும் வார்த்தையால் அடையாளப்படுத்தும் நம்முடைய மரபு மருத்துவர்கள் மிகப்பெரிய தீங்கை அதை அடைந்தவர்களுக்குச் செய்திருக்கிறார்கள். இருபதாண்டுகளுக்கு முன்பெல்லாம் உணவகங்களிலும் திரையரங்குகளிலும் சிலசமயம் பேருந்துகளிலும்கூட அவர்களை அனுமதிப்பதில்லை. கூசிச்சுருங்கி வாழ்க்கையை ஒடுக்கிக்கொள்பவர்களே அதிகம்

வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட டாக்டர். உமாபதி அந்த மனத்தடைகளுக்கு எதிரான ஒரு போராட்டமாக தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். அதை விளக்க நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். நூற்றுக்கணக்கான விழிப்புணர்வுக்கூட்டங்களை நடத்திவருகிறார். அவர் ஒருங்கமைத்த நிகழ்ச்சி கன்யாகுமரியில் நடந்தது. கூட்டு ஓவியம் ஒன்று வரைவது நிகழ்ச்சியின் மக்கள்பங்கேற்பு நிகழ்ச்சி. நான் அதை தொடங்கிவைத்தேன்.அ.கா.பெருமாள், நாஞ்சில்நாடன், மலர்வதி ஆகியோர் பேசினார்கள்.

venpu

சரஸ்வதி என்னும் முன்னோடியான முற்போக்கு இதழை நடத்தி சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜி.நாகராஜன் ஆகிய மூவரையுமே அறிமுகம் செய்த இதழாளரான வ.விஜயபாஸ்கரன் வெண்புள்ளிகளால் சோர்வுற்று எங்கிருக்கிறார் என நண்பர்களுக்கே தெரியாமல் இருபதாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்ததைச் சொல்லி பேச்சைத் தொடங்கினேன். நீண்டநாளுக்குப்பின் அவர் பொதுவெளிக்கு வந்தபோது அச்செய்தியைக் கேட்டு சுந்தர ராமசாமி கண்கள்கலங்க ‘என்ன இது? என்ன இது?” என்று கேட்டுக்கொண்டிருந்தார். அந்நாளையச் சூழல் அது

வெண்புள்ளிகள் சார்ந்து அரசாணை ஒன்றைப் பெறுவதில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் சென்னை வெற்றிபெற்றுள்ளது. அதன் முக்கியமான கூறுகள் இவை. வெண்குஷ்டம் என்னும் சொல் தவிர்க்கப்படவேண்டியது. அது மருத்துவரீதியாகப் பிழையானது. அதைப் பயன்படுத்துவது சட்டபூர்வமாகக் குற்றம். அவமதிப்பு உட்பட வழக்குகளுக்கு ஆளாகநேரும், வெண்புள்ளிகள் உடையவருக்கு எந்த இடத்திலும் நுழைவு அனுமதி மறுப்பதோ பிற வகையில் ஒதுக்கிவைப்பதோ சட்டப்படி குற்றம்.

வெண்புள்ளிகள் தொற்றுபவை அல்ல. மரபணுச்சிக்கலால் எழுபவை அல்ல. பாரம்பரியமாக வருபவை அல்ல. பெரும்பாலான குறைபாடுகள் தானாக சரியாகக்க்கூடியவை. இவற்றை முன்வைத்துப்பேசிய டாக்டர். உமாபதி இன்றும் முக்கியமான கல்விநிலையங்களில்கூட தொடரும் அவமதிப்புகளை, ஒதுக்கிவைத்தல்களைப்பற்றிச் சொன்னார்

விழாவுக்கு நண்பர்கள் போகன், அனீஷ்குமாரன் நாயர் ஆகியோருடன் சென்றிருந்தேன். திரும்பி வருகையில் மருத்துவாழ்மலைக்குச் சென்றோம். கடற்காற்று ஒவ்வாமலாகக்கூடும் என்று டாக்டர் எச்சரித்திருந்தார். ஆகவில்லை.

*

டாக்டர். உமாபதியை தொடர்புகொண்டு இவ்விழிப்புணர்வுநிகழ்ச்சியை தங்கள் ஊர்களிலும் கல்விநிலைகளிலும் நண்பர்கள் ஒருங்கிணைக்கலாமென நினைக்கிறேன்.

டாக்டர்.கே. உமாபதி

வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் இந்தியா

எண் 4/8 தெய்வநகர் முதல்தெரு பட்டேல் தெரு

மேற்குத்தாம்பரம் சென்னை 600045

தொலைபேசி எண் 044 22265507- 22265508.

*

வெண்புள்ளிகளுக்கு முற்றுப்புள்ளி!

வெண்புள்ளிகள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அஞ்சலி: கழனியூரன்

$
0
0

kazani

நாட்டாரியல் ஆய்வாளரான கழனியூரனை நான் நாலைந்துமுறை நெல்லையில் சந்தித்திருக்கிறேன். ஒருமுறை சவேரியார் கல்லூரியில் நிகழ்ந்த நாட்டாரியல் அரங்கில் பிறகு தி.க.சிவசங்கரன் அவர்களின் இல்லத்தில். சற்றே நாணத்துடன் தாழ்ந்த குரலில் பேசுபவர். உரையாடும்போது நம் கைகளைப்பற்றிக்கொள்ளும் வழக்கம் கொண்டவர்

 

கி.ராஜநாராயணனின் தாக்கத்தால் நாட்டாரியலாய்வுக்கு வந்தவர் கழனியூரன் என்னும் புனைபெயர் கொண்ட எம். எஸ். அப்துல் காதர். நாட்டார்கதைகளை சேகரிப்பதிலும் ஆவணப்படுத்துவதிலும் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகாலமாக பணியாற்றியவர்.ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைத்திரட்டுக்களின் ஆசிரியர்.கி.ராஜநாராயணனின் கதைச்சேகரிப்பில் கழனியூரன், பாரததேவி இருவரின் பங்களிப்பும் மிக அதிகம்

 

கழனியூரனுக்கு அஞ்சலி

 

கழனியூரன் இணையதளம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 35

$
0
0

34. பெருங்கைவேழம்

flowerநிஷத நாட்டு எல்லைக்குள் நுழையும் பாதையின் தொடக்கத்திலேயே திரௌபதி தருமனிடமிருந்து சிறுதலையசைவால் விடைபெற்றுக்கொண்டாள். “சென்று வருகிறேன்” என்று சொல்ல அவள் நெஞ்செழுந்தும்கூட உதடுகளில் நிகழவில்லை. தருமன் திரும்ப தலையசைத்தார். அவள் சிறு பாதையில் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றென விழுந்த தன் காலடிகளை நோக்கியபடி நடந்தாள். ஒருபோதும் அவ்வாறு தன் காலடிகளை தான் நோக்கியதில்லை என்பதை இரு நாட்களுக்கு முன்னரே அறிந்தாள். கிளம்பிச்செல்லவிருந்த பீமனை “நீங்கள் அடுமனையிலும் புழக்கடைகளிலும் புழங்கியிருக்கிறீர்கள், இளையவரே. நான் எதையும் நோக்கியதில்லை. ஏவற்பெண்டுகளின் இயல்புகளில் முதன்மையானதென்ன?” என்றாள். “தலைகுனிந்து நிலம் நோக்கி நடப்பது” என்று பீமன் சொன்னான்.

அக்கணமே அவள் தானறிந்த ஏவற்பெண்டுகளின் நடைகள் அனைத்தையும் சித்தத்திற்குள் ஒழுங்குபடுத்தி நோக்கிவிட்டாள். “ஆம், அவர்கள் அனைவரும் அவ்வாறுதான் நடக்கிறார்கள்” என்று சொன்னாள். பின்னர் “ஏன்?” என்று பீமனிடம் கேட்டாள். பீமன் நகைத்து “அவர்கள் செல்லும் வழியெல்லாம் படுகுழிகள் காத்திருக்கின்றனவோ என்னவோ?” என்றான். “விளையாடாதீர்கள்” என்றாள். “விழி தணிவதை பணிவென்று மானுடர் கொள்கிறார்கள். விழியோடு விழி நோக்குவது நிகரென்று அறிவித்தல். நிகரென்று கூறுதல் எப்போதுமே அறைகூவல். குரங்குகளும் நாய்களும்கூட அவ்வாறே கொள்கின்றன” என்று பீமன் சொன்னான். “ஏவற்பெண்டு இவ்வுலகில் உள்ள அனைவரிடமும் விழிதணிந்தவள். ஏவலர் ஏவற்பெண்டுகள் முன் விழிதூக்குபவர்.”

“விழிதணித்துச் சென்றால் எங்கிருக்கிறோம் என்றும் எப்படி செல்கிறோம் என்றும் எப்படி தெரியும்?” என்று திரௌபதி கேட்டாள். பீமன் “ஏவற்பெண்டு அதை அறியவேண்டியதில்லை. அவள் இருக்குமிடம் பிறரால் அளிக்கப்படுகிறது. செல்லும் வழி முன்னரே வகுக்கப்பட்டிருக்கிறது. பின் தொடர்வதற்கு விழி தேவையில்லை. செவி ஒன்றே போதும்” என்றான். அவள் பெருமூச்சுடன் “நான் அதை பயில வேண்டும்” என்றாள். “பயில்வதல்ல, அதில் அமையவேண்டும். உனது தோள்களும் விழியும் ஒடுங்க வேண்டும்.” அவள் நிமிர்ந்து அவன் விழிகளை சிலகணங்கள் நோக்கிவிட்டு “என்னால் அது இயலும் என்று எண்ணுகிறீர்களா?” என்றாள். அவன் “உண்மையை சொல்வதென்றால் ஒருகணமும் உன்னால் அது இயலாதென்றே தோன்றுகிறது” என்றான்.

“சைரந்திரியாக நான் எப்படி அவ்வரண்மனையில் இருப்பேன்? என்னால் எண்ணவே கூடவில்லை” என்று விழிதிருப்பி அப்பால் இருந்த காட்டை நோக்கியபடி திரௌபதி சொன்னாள். “ஆனால் அது நிகழ்ந்துவிடுமென்றும் தோன்றுகிறது” என்றான் பீமன். அவள் அவனை ஐயத்துடன் நோக்கி “எவ்வாறு?” என்றாள். “உன்னில் எழவிருக்கும் சைரந்திரி யார் என்று நமக்குத் தெரியாது. இச்சிக்கல்கள் அனைத்தையுமே புரிந்துகொண்டு தன்னை உருமாற்றி நேற்றிலாத ஒருத்தியென எழக்கூடும் அவள்” என்றான் பீமன். புரியாமல் “ஆனால்…” என்றபின் புரிந்துகொண்டு “அவ்வாறே நிகழ்க” என்று தலையசைத்து திரௌபதி பேசாமலிருந்தாள்.

மறுநாள் காலை விழித்தெழுகையில் குடிலில் பீமன் இருக்கவில்லை. அத்திடுக்கிடல் படபடப்பென உடலில் நெடுநேரம் நீடித்தது. பின்னர் எழுந்து சென்று நோக்கினாள். நீராடி வந்து ஈரக்குழலைத் தோளில் பரப்பி மடியில் கைவைத்து கிழக்கு நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்திருந்த தருமனின் அருகே சென்று “கிளம்பிவிட்டார்” என்றாள். “ஆம்” என்று அவர் சொன்னார். மீண்டும் மெழுகு உறைவதுபோல் அவரில் ஊழ்கம் நிகழ திரும்பி வந்து பீமன் படுத்திருந்த இடத்தை பார்த்தாள். பீமன் எடுத்துக்கொண்டிருந்த இடம் என்னவென்பது அப்போதுதான் தெரிந்தது. நிலையழிந்தவளாக குடிலுக்கு வெளியே வந்து சூழ்ந்திருந்த வறண்ட குறுங்காட்டில் சுற்றிவந்தாள்.

விடிந்த பின்னரே அவளால் காட்டுக்குள் செல்ல முடிந்தது. சுனைக்குச் சென்று நீராடி மீள்கையில் தன்னுள் இருந்துகொண்டே இருந்த அச்சத்தையும் பதற்றத்தையும் உணர்ந்தபோது ஓர் எண்ணம் எழுந்தது. பீமன் இல்லாதபோது தான் அரசி அல்ல. இக்காடுகளை, விலங்குகளை, மானுடரை, விண்ணோரை, ஒருகணமும் அஞ்சியதில்லை. அடுத்த பொழுது உணவென்ன என்று எண்ணியதில்லை. விரும்பிய ஒன்று கைப்படாதிருக்கக்கூடுமென்று ஐயம் கொண்டதே இல்லை. அங்கு இந்திரப்பிரஸ்தம் என்றும் அஸ்தினபுரியென்றும் காம்பில்யமென்றும் எழுந்துள்ள பெருநகரங்களல்ல. அறமுணர்ந்தவனோ வில்லெடுத்தவனோ இணைத்தம்பியரோ அல்ல. தந்தையோ உடன் பிறந்தவனோ அல்ல. பீமன் ஒருவனால் மட்டுமே பேரரசியென்று இப்புவியில் நிலை நிறுத்தப்பட்டேன்.

அவ்வெண்ணம் எழுந்ததும் கால் தளர சிறிய ஒரு பாறை மேல் அமர்ந்து உளம் உருகி கண்ணீர்விட்டாள். விழிநீர் வழிய தனித்து அமர்ந்திருக்க தன்னால் இயல்வதை விட்டு எழுந்தபோதுதான் உணர்ந்தாள். அது அவளுக்கு அறியா இனிமை ஒன்றை அளித்தது. ஒரு பெண்ணென முற்றுணர்வது ஆண் ஒருவனுக்காக தனித்திருந்து விழிநனைகையில்தான் போலும். அவன் ஒருவனுக்காக அன்றி தன் உள்ளம் நீர்மை கொள்ளப்போவதில்லை. அவள் தன் பொதிக்குள் இருந்த சிறு மரச்சிமிழில் இறுக மூடப்பட்டிருந்த கல்யாணசௌகந்திக மலரை நினைவுகூர்ந்தாள். புன்னகைத்துக்கொண்டபின் அதை எவரேனும் பார்க்கிறார்களா என்று சுற்றும் நோக்கினாள்.

உலர்ந்த விழி நீர்த்தடத்தை கைகளால் துடைத்தபின் புன்னகை எஞ்சிய உதடுகளை இழுத்துக்குவித்து அவள் திரும்பிவந்தாள். சைரந்திரி என நடிப்பது இனி மிக எளிது. முடியுடன் குடியும் குலமும் அகன்று சென்றுவிட்டது. எஞ்சியிருப்பது கைகளும் கால்களும் மட்டுமே. இப்புவியில் வாழ மானுடர் கற்று அடைந்திருக்கும் திறன்கள் எதுவும் இல்லாதவை அவை. அன்று முழுக்க அத்தன்னுணர்விலேயே அலைந்தாள். இங்கிருந்து தருமனும் கிளம்பிச்சென்றுவிட்டால் இக்காட்டில் எதை உண்டு வாழ்வேன்? எப்படி என்னை காத்துக்கொள்வேன்? அவ்வெண்ணமே அவளை உருமாற்றியது. அவள் நடையும் நோக்கும் மாறிக்கொண்டிருந்தன.

அன்றிரவு துயில்கையில் வாழ்வில் முதல் முறையாக ஒவ்வொரு சிறு ஒலிக்கும் அஞ்சி உடல் விதிர்த்தாள். வெளியே தொலைவில் காட்டு யானைக்கூட்டம் ஒன்று கிளையொடியும் ஒலியுடன் கடந்து சென்றதைக்கேட்டு எழுந்தமர்ந்து நெஞ்சில் கைவைத்து சூழ்ந்திருந்த இருளை நோக்கி நெட்டுயிர்த்தாள். துயிலின் அடுக்குகளுக்குள் அணிப்பெண்டு என்றும் காவல்மகள் என்றும் அடுமனையாள் என்றும் ஆகி விழித்து புரண்டு படுத்தாள். புலர்ந்தபோது சைரந்திரி என உருமாறியிருப்பதை உணர்ந்தாள். அடிமேல் விழி வைத்து நடப்பதென்பது எம்முயற்சியுமின்றி அவளுக்கு வந்தது. அதுவே காப்பென்று தோன்றியது.

பெருஞ்சாலையை அடைந்தபோது தன் உடலைத் தொட்டு வருடிச்செல்லும் விழிகளை ஒவ்வொரு கணமும் உணர்ந்துகொண்டிருந்தாள். பிறந்த நாள்முதல் விழிகளை உணர்ந்திருந்தாள். ஆனால் அவையனைத்தும் அவள் காலடி நோக்கி தலை தாழ்த்தப்படும் வேல்முனைகளின் கூர்கொண்டவை. இவ்விழிகள் வில்லில் இறுகி குறிநோக்கும் வேடனின் அம்புமுனைகள். இவ்விழிகளை புறக்கணித்து செல்வதற்குரிய ஒரே வழி தன் உடலை ஒரு கவசமென்றாக்கி உள்ளே ஒடுங்கி ஒளிந்துகொள்வது. அந்நோக்குகளெதையும் நோக்காமல் விழிகளை நிலம் நோக்கி வைத்துக்கொள்வது.

எல்லைகளை குறுக்கும்தோறும் இருப்பு எளிதாகிறது. இந்தக் காலடிகளில் பட்டுச் செல்லும் மண், இவ்வுடல் அமரும் இடம், இவ்வுள்ளம் சென்று திரும்பும் எல்லை அனைத்தும் குறுகியவை. ஆணையிடப்படும் செயல்களன்றி பிறிதொரு உலகு இனி எனக்கில்லை. ஆழத்திலெங்கோ மெல்லிய புன்னகை ஒன்று எழுந்தது. உலகை வெல்ல எழுந்தவளென்று பிறந்த குழவியை கையிலேந்தி உள்ளங்காலில் விரிந்த ஆழியையும் சங்கையும் நோக்கி வருகுறி உரைத்த நிமித்திகர் இத்தருணத்தை எங்கேனும் உணர்ந்திருப்பாரா என்ன?

flowerநிஷதபுரிக்குச் சென்ற நெடுஞ்சாலையில் வண்டிகளின் சகட ஒலிப்பெருக்கை காட்டுக்கு அப்பால் அவள் கேட்டாள். அனைத்து காலடிப்பாதைகளும் சிறு சாலைகளாக மாறி அப்பெருஞ்சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தன. இளைப்பாறும் பொருட்டு சற்று அமர்ந்த சாலமரத்தடியில்  பறவைகள் எழுந்து சென்ற ஒலி கேட்டு நோக்கியபோது ஒற்றை மாட்டுவண்டி ஒன்றை தொடர்ந்து சென்ற சூதர் குழு ஒன்றை அவள் கண்டாள். வண்டிக்குள் கருவுற்ற பெண்கள் இருவரும் நான்கு குழந்தைகளும் இருந்தனர். ஓரிரு மூங்கில் பெட்டிகளும் இருந்தன. வண்டிக்கு இருபுறமும் குத்துக்கட்டைகளில் பொதிகளும் பைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன. வண்டியோட்டி நுகத்தில் அமராமல் கயிறுகளைப் பற்றியபடி வண்டியுடன் நடந்துகொண்டிருந்தான்.

வண்டிக்குப் பின்னால் அதன் பின்கட்டையைப் பற்றியபடி எட்டு சிறுவர்கள் ஒருவரோடொருவர் பேசி பூசலிட்டவாறு நடக்க தலையில் பொதிகளும் கலங்களும் பெட்டிகளுமாக சூதர் பெண்களும் அவர்களைச் சூழ்ந்து இளைஞர்களும் நடந்தனர். முதியவர்கள் தோளில் பைகளுடன், வெற்றிலை மென்ற வாயுடன் மூச்சிரைக்க நடந்தனர். அவர்கள் வளம்நோக்கி இடம்பெயர்பவர்கள் என்பது தெரிந்தது. வண்டியின் சகட ஒலியும் கலங்கள் முட்டும் ஒலியும் காளையின் கழுத்துமணியொலியும் இணைந்து ஒலித்தன.

அவர்கள் அருகே வந்தபோது திரௌபதி எழுந்து நின்றாள். கையில் தோளுக்குமேல் உயர்ந்த குடிக்கோல் ஏந்தியிருந்த அவர்களின் தலைவர் அவளை கூர்ந்து நோக்கியபின் “எக்குலம்?” என்றார். திரௌபதி “விறலி” என்றாள். “பெயர் சைரந்திரி. அரசியருக்கு அணுக்கப்பணிகள் செய்வேன்.” அவர் கூர்ந்து நோக்கிவிட்டு “நகருக்கா செல்கிறாய்?” என்றார். “ஆம்” என்றாள். “தனித்தா…?” என்று ஒரு பெண் கேட்டாள். “ஆம், நான் தனியள்” என்றாள் திரௌபதி. “வருக!” என்று இன்னொரு முதிய பெண் அவளை நோக்கி கைநீட்டினாள். அவள் சென்று உடன் இணைந்துகொண்டதும் “ஒரு நோக்கில் எவரும் சூதப்பெண் என உன்னை உரைத்துவிடமாட்டார்கள். அரசிக்குரிய நிமிர்வும் நோக்கும் கொண்டிருக்கிறாய்” என்றாள். “நான் பாஞ்சாலத்தை சேர்ந்தவள். எங்கள் அரசியும் நெடுந்தோற்றம் கொண்டவர்” என்றாள் திரௌபதி.

முதியவள் அவள் தோளில் கைவைத்து “எனக்கு உன்னைப்போல் மகள் ஒருத்தி இருந்தாள். முதற்பேற்றிலேயே மண்மறைந்தாள். வண்டிக்குள் துயில்வது அவள் மகன்தான்” என்றாள். திரௌபதி புன்னகைத்து வண்டிக்குள் எட்டிப்பார்த்து இரு வெண்ணிற பாதங்களைக்கண்டு “அந்தப் பாதங்கள்தானே?” என்றாள். “எப்படி தெரிந்துகொண்டாய்?” என்று அவள் மீண்டும் திரௌபதியின் கைகளைப் பற்றியபடி கேட்டாள். “தாங்கள் இதை சொன்ன கணத்திலேயே அன்னையென்றானேன். மைந்தனை கண்டுகொண்டேன்” என்றாள். உள்ளிருந்து பிறிதொரு குழந்தை உரக்க கை நீட்டி “உயரமான அத்தையை நான்தான் முதலில் பார்த்தேன்” என்றான். இன்னொரு குழந்தை அவனை உந்தியபடி எட்டிப் பார்த்து “உயரமான அத்தை! உன்னை நான்தான் முதலில் பார்த்தேன்” என்றாள். “போடி” என்று அவன் சொல்ல மாறி மாறி பூசலிட்டு இரு குழந்தைகளும் முடியை பற்றிக்கொண்டன.

“என்ன அங்கே சத்தம்? கையை எடு… நீலிமை, கையை எடு என்று சொன்னேன்” என்றாள் அவர்களின் அன்னை. “இவன்தான் என் முடியை பற்றினான்” என்றாள் நீலிமை. “இவள்தான்! இவள்தான்!” என்று சிறுவன் கூவினான். “நான் உயரமான அத்தையை மரத்தடியிலேயே பார்த்தேன்” என்று நீலிமை அழுகையுடன் சொன்னாள். “மரத்தடியிலே நான் பார்த்தேன்” என்று சிறுவன் கூவினான். அன்னை திரௌபதியிடம் “எப்போதும் பூசல்… ஒரு நாழிகை இவர்களுடன் இருந்தால் பித்து பெருகிவிடும்” என்றாள்.

“இரட்டையரா?” என்றாள் திரௌபதி. “இல்லை. ஓராண்டு வேறுபாடு. ஆனால் மூத்தவள் பிறந்தபோது எங்களூரில் கடுமையான வறுதி. அன்னைப்பாலுக்காகவே நான் வீடு வீடாக அலைந்த காலம். இளையவன் பிறந்தபோது ஊரைவிட்டு கிளம்பிவிட்டோம். பிறிதொரு ஊர். அங்கு அவ்வப்போது ஊன் வேட்டையாடி கொண்டுவர இயன்றது. இருவர் வளர்ச்சியும் அவ்வாறுதான் இணையாக ஆயிற்று” என்றாள். “என் பெயர் கோகிலம். நான் அடுமனைப்பெண்.” திரௌபதி “என் பெயர் சைரந்திரி” என்றாள். “ஊரைச் சொல்ல விரும்பவில்லை என்றால் நான் கேட்கவில்லை” என்றாள் கோகிலம். அவளுக்குப் பின்னால் நின்றிருந்த இளம்பெண்ணொருத்தி “ஊர் துறந்து வருபவர்கள்தான் தனியாக கிளம்பியிருப்பார்கள்” என்றாள். பிறிதொருத்தி “ஊரென்றால் பெண்களுக்கு ஆண்கள்தான். ஆணிலாதவள் ஊரிழந்தவளே” என்றாள்.

அவர்களே தனக்குரிய வரலாறொன்றை ஓரிரு கணங்களுக்குள் சமைத்துவிட்டதை திரௌபதி உணர்ந்தாள். அவ்வாறு உடனடியாகத் தோன்றுவதனாலேயே அதுவே இயல்பானதென்று தோன்றியது. “ஆம், இந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த கணத்திற்கு முன்னால் எனக்கு வாழ்க்கையென்று ஏதுமில்லை” என்றாள். “நன்று, அவ்வண்ணமே இரு. பெண்கள் விழைந்ததுபோல் வாழ்க்கை அமைவது மிக அரிது. விரும்பாத வாழ்க்கையை எண்ணத்திலிருந்து முற்றிலும் வெட்டி விலக்கிக்கொள்ளும் பெண்ணே மகிழ்ச்சியுடன் வாழலாகும். அக்கணத்துக்கு முன்னால் உனக்கு என்ன நிகழ்ந்திருந்தாலும் அவையனைத்தும் இப்போது இல்லை. இனி நிகழ்வனவே உன் வாழ்க்கை. அது இனிதென்றாகுக!” என்று கோகிலம் சொன்னாள்.

“என் பெயர் மலையஜை” என்று சொன்ன இளையவள் “நீ உணவருந்தியிருக்க வாய்ப்பில்லை” என்றாள். “ஆம்” என்றாள் திரௌபதி. “உணவுக்காக இன்னும் சற்று நேரத்தில் வண்டிகளை நிறுத்துவோம். அங்கு நீ எங்களுடன் உணவருந்தலாம். நிஷதத்தின் எல்லைக்குள் நுழைந்ததுமுதல் உணவுக்கு எக்குறையுமில்லாதிருக்கிறது. பேரரசி தமயந்தியின் ஆட்சிக்காலத்தில் அவர்கள் அமைத்த மூவாயிரம் அன்னநிலைகள் இப்பகுதியெங்கும் உள்ளன. இடையில் இங்கு அரசின்மை நிலவியபோதுகூட அருகநெறியினர் அவற்றை குறைவிலாது ஓம்பினர். ஓர் அன்னநிலையில் பெற்ற உணவை உண்டு பசியெழுவதற்குள் அடுத்த அன்னநிலைக்கு சென்றுவிடலாம்” என்றாள் மலையஜை.

திரௌபதி “இன்னும் எத்தனை தொலைவு நிஷதபுரிக்கு?” என்றாள் “விராடநகரி இங்கிருந்து எட்டு அன்ன சத்திரங்களின் தொலைவில் உள்ளது. களிற்றுயானை நிரைபோல கரிய கோட்டை கொண்டது. கவந்தனின் வாய்போல அருகணைபவரெல்லாம் அதன் வாயிலினூடாக உள்ளே சென்று மறைகிறார்கள். எத்தனை நீர் பெய்தாலும் நிறையாத கலம்போல ஒவ்வொரு நாளும் உள்ளே நுழைந்துகொண்டிருக்கும் எங்களைப் போன்ற அயலவருக்கு அங்கு இடமிருக்கிறது. அடுமனைகளிலும் அகத்தளங்களிலும் இன்னும் பலமடங்கு சூதர்கள் சென்று அமையமுடியுமென்றார்கள்” என்றார் குடித்தலைவர். “என் பெயர் விகிர்தன். நான் அங்கு சென்று நோக்கிய பின்னரே என் குடியை அழைத்துச்செல்ல முடிவெடுத்தேன்.”

“நீ படைக்கலப்பயிற்சி பெற்றிருக்கிறாயா?” என்று ஒரு குள்ளமான முதியவள் திரௌபதியின் கைகளை தொட்டுப்பார்த்தபின் விழிகளைச் சுருக்கியபடி கேட்டாள். அக்குழுவில் இணைந்த தருணம் முதல் அவள் தன்னை கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பதை திரௌபதி உணர்ந்திருந்தாள். திரும்பிப் பார்த்து “ஆம். எங்களூரில் புரவிப்பயிற்சியும் படைக்கலப்பயிற்சியும் பெண்களுக்கு அளிப்பதுண்டு. நாங்கள் புரவிச் சூதர்களின் குலம்” என்றாள். மலையஜை “அவள் பெயர் மிருகி. எப்போதும் ஐயம் கொண்டவள்” என திரௌபதியிடம் சொல்லிவிட்டு “புரவிச் சூதர்களுக்கு படைக்கலப்பயிற்சி அளிக்கும் பழக்கம் மகதத்திலும் அயோத்தியிலும் உண்டு என்பதை அறியமாட்டாயா?” என்றாள். “ஆம். தேவையென்றால் அவர்கள் போர்களில் ஈடுபடவும் வேண்டும். ஆனால் பெண்களுக்கு அப்பயிற்சிகள் அளிக்கப்படுவதை இப்போதுதான் அறிகிறேன்” என்றார் விகிர்தர். “அத்தனை பெண்களுக்கும் அளிக்கப்படுவதில்லை. இளவயதிலேயே எனது தோள்கள் போருக்குரியவை என்று என் தந்தை கருதினார். ஆகவே அப்பயிற்சியை எனக்களித்தார்” என்று திரௌபதி சொன்னாள்.

மிருகியின் விழிகளில் ஐயம் எஞ்சியிருந்தது. ஆனால் “ஆம், உனது உடல் உனக்கு என்றும் பெரிய இடரே. எவ்விழியும் வந்து இறுதியாக நிலைக்கும் தோற்றம் உனக்கு அமைந்துள்ளது. அரசகுடியினர் உன்னை விரும்புவர். அவர்கள் விரும்புவதனாலேயே இடர்களுக்குள்ளாவாய். தோள்களை குறுக்கிக்கொள். குரலெழாது பேசு. ஒருபோதும் அரசகுலத்து ஆண்கள் சொல்லும் சொற்களை நம்பாதே” என்றாள். திரௌபதி “இனி நம்புவதில்லை” என்றாள். மிருகி விழிகளில் ஐயம் அகல நகைத்தபடி “ஆம், நீ சொல்லவருவது எனக்கு புரிகிறது. இனி அனைத்தும் நன்றாகவே நடக்கட்டும்” என்றாள்.

flowerஅவர்கள் தழைத்து கிளைவிரித்து நின்றிருந்த அரசமரத்தடி ஒன்றை அணுகினர். சூதர்கள் இருவரும் முன்னால் சென்று அந்த இடத்தை நன்கு நோக்கிவிட்டு கைகாட்ட வண்டியை ஓட்டியவர் கயிற்றை இழுத்து அதை நிறுத்தினார். கட்டைகள் உரச சகடங்கள் நிலைத்து வண்டி நின்றதும் சூதப்பெண்கள் உள்ளிருந்து குழந்தைகளைத் தூக்கி கீழே விட்டனர். அவை குதித்துக் கூச்சலிட்டபடி அரசமரத்தை நோக்கி ஓடின. கருவுற்றிருந்த பெண்களை கைபற்றி மெல்ல கீழே இறக்கினர். அவர்களில் ஒருத்தி குருதி இல்லாமல் வெளுத்திருந்த உதடுகளுடன் அவளை நோக்கி புன்னகைத்து “இக்குழுவில் ஆண்களின் தலைக்கு மேல் எழுந்து தெரிகிறது உங்கள் தலை” என்றாள். “ஆம், அதை மட்டும் நான் ஒன்றும் செய்வதற்கில்லை” என்று திரௌபதி சொன்னாள். “ஏன் தலைதணிக்க வேண்டும்? நிமிர்ந்து நடவுங்கள். சூதர்களில் ஒருவர் தலைநிமிர்ந்து நடந்தாரென்று நாங்கள் எண்ணிக்கொள்கிறோம்” என்றாள் அவள்.

அவள் கைகளை பற்றிக்கொண்டு “எத்தனை மாதம்?” என்று திரௌபதி கேட்டாள். “ஏழு” என்றபின் கையை இடையில் வைத்து மெல்ல நெளித்து “இந்த வண்டியில் அமர்ந்து வருவதற்கு நடந்தே செல்லலாம். நடனமிட்டபடி செல்வதுபோல் உள்ளது” என்றாள். “என் பெயர் சிம்ஹி. அதோ, அவர்தான் என் கணவர்.” அவள் சுட்டிக்காட்டிய இளைஞன் பெரிய பற்களைக் காட்டி புன்னகைத்தான். “அவர் பெயர் அஸ்வகர். நளமன்னர் இயற்றிய அடுதொழில் நூலை உளப்பாடமாக கற்றவர் எங்களுள் அவர் ஒருவரே.”

சிம்ஹிக்குப் பின்னால் இறங்கிய கருவுற்ற பெண் பதினெட்டு வயதுகூட அடையாதவள். சிறுமியருக்குரிய கண்களும் சிறிய பருக்கள் பரவிய கன்னங்களும் கொண்டிருந்தாள். அவளும் உதடுகள் வெளுத்து கண்கள் வறண்டு தோல் பசலைபடர்ந்து வண்ணமிழந்த பழைய துணிபோலிருந்தாள். “உனக்கு எத்தனை மாதம்?” என்று திரௌபதி கேட்டாள். “ஆறு” என்று அவள் சொன்னாள். பின்னர் விழிகளைத் திருப்பி வேறெங்கோ நோக்கினாள். சிம்ஹி “அவள் பெயர் சவிதை. அவளிடம் பேசவே முடியாது” என்றாள். “ஏன்?” என்று திரௌபதி கேட்டாள். “இப்புவியே அவளுக்கு தீங்கிழைக்கிறது என்று எண்ணிக்கொண்டிருக்கிறாள். அவள் கணவன் அவளைக் கொல்லும் நஞ்சொன்றையே கருவாக அவள் உடலில் செலுத்தியிருப்பதாக நேற்று சொன்னாள். அக்கரு வளர்ந்து தன்னை கிழித்துக்கொண்டுதான் வெளியே வரும் என்று ஒவ்வொரு நாளும் கனவில் காண்கிறாள்.” திரௌபதி சவிதையின் கைகளை பற்றிக்கொண்டு “என்ன கனவு அது?” என்றாள்.

அவள் கைகள் குளிர்ந்து இறந்த மீன்கள் போலிருந்தன. கையை உருவ முயன்றபடி “ஒன்றுமில்லை” என்று சொன்னாள். “அத்தகைய கனவுகள் வராத கருவுற்ற பெண்கள் எவருமில்லை” என்றாள் திரௌபதி. “ஆம், எனக்குத் தெரியும்” என்றாள் அவள். “சரி, நான் சொல்கிறேன். நீ இக்கருவால் உயிர் துறக்கப்போவதில்லை. அறுபதாண்டு வாழ்ந்து உன் மூன்றாம் கொடிவழியினரைக் கண்ட பின்னரே இங்கிருந்து செல்வாய். போதுமா?” என்றாள் திரௌபதி. அவள் விழிகளையும் சொல்லுறுதியையும் கண்ட கோகிலம் “தெய்வச்சொல் கேட்டதுபோல் உள்ளது, அம்மா” என்றாள்.

சவிதை சினத்துடன் “அதைச் சொல்ல நீங்கள் யார்?” என்று கேட்டாள். சுளித்த உதடுகளுக்குள் அவள் பற்கள் தெரிந்தன. “சொல்வதற்கு எனக்கு ஆற்றலுண்டு என்றே கொள்” என்றாள் திரௌபதி. சவிதை முகம் திருப்பிக்கொண்டாள். அரசமரத்தடியில் பெண்கள் ஒவ்வொருவராக அமர்ந்துகொண்டனர். ஆண்கள் வண்டியிலிருந்து பொதிகளையும் பெட்டிகளையும் கலங்களையும் இறக்கி வைத்தனர். பொதி சுமந்துவந்த பெண்கள் முதுகை நிலம்பதிய வைத்து மல்லாந்து படுத்தனர். கலங்களில் இருந்து இன்கடுங்கள்ளை மூங்கில் குவளைகளில் ஊற்றி ஆண்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர். பெண்கள் துணிப்பொதிகளை அவிழ்த்து உள்ளே வாழையிலையில் பொதிந்து தீயில் சுட்டெடுத்த அரிசி அப்பங்களை எடுத்து குழந்தைகளுக்கு அளித்தனர். ஒருவரோடொருவர் பூசலிட்டு கூவிச்சிரித்தபடி குழந்தைகள் அவற்றை வாங்கிக்கொண்டனர்.

தேங்காய் சேர்த்து பிசைந்து சுடப்பட்ட பச்சரிசி அப்பம் அந்த வழிநடைப் பசிக்கு மிக சுவையாக இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. மிருகி “நான் ஊனுணவு மிகுதியாக உண்ணவேண்டும் என்கிறார்கள். நான்கு மாதம் எதை உண்டாலும் வெளியே வந்துகொண்டிருந்தது. உண்மையில் இப்போது ஓரிரு மாதங்களாகத்தான் வயிறு நிறைய உண்கிறேன். ஆயினும் முன்பு வாயுமிழ்ந்த நினைவு எழும்போது மேற்கொண்டு உண்ண முடியவில்லை” என்றாள். “அதற்கு எளிய வழி உன் வயிறு ஒரு சிறு குருவிக்கூடு, அதிலுள்ள குஞ்சு ஒன்று சிவந்த அலகைப் பிளந்து சிறு சிறகுகளை அடித்தபடி எம்பி எம்பி இந்த உணவுக்காக குதிக்கிறது என்று எண்ணிக்கொள்வதே. ஒரு துண்டுகூட வீணாகாமல் உண்பாய்” என்றாள் திரௌபதி. அவள் முகம் மலர்ந்து “ஆம், அதை கேட்கையிலேயே மெய் விதிர்ப்பு கொள்கிறது” என்றபடி திரௌபதியின் கைகளை தொட்டாள்.

கோகிலம் “நன்றாக பேசுகிறாய். கதை சொல்வாயா?” என்றாள். “நிறைய கதை கேட்டிருக்கிறேன் எதையும் இதுவரை சொன்னதில்லை” என்றாள் திரௌபதி. “நீ எதில் தேர்ந்தவள்?” என்றாள் மிருகி. “அணிச்சேடி வேலையை செய்ய முடியுமென்று எண்ணுகின்றேன். காவல்பெண்டாகவும் அமைவேன்” என்றாள் திரௌபதி. “அதை அடுமனைகளில் செய்ய முடியுமா என்ன? அதற்கு அரண்மனைப்பழக்கம் இருக்க வேண்டுமே?” என்றாள் கோகிலம். “அவளை பார்த்தாலே தெரியவில்லையா அவள் அடுமனைப்பெண் அல்ல என்று? அரண்மனைகளில் வளர்ந்தவள் அவள்” என்றாள் மிருகி. திரௌபதி “எப்படி தெரியும்?” என்றாள். “உன் கால்களைப் பார் அவை நெடுந்தூரம் வழி நடந்தவை ஆயினும் எங்களைப்போல இளமையிலிருந்தே மண்ணை அறிந்தவையல்ல. கடுநடையில் வளர்ந்த கால்களில் விரல்கள் விலகியிருக்கும். பாதங்கள் இணையாக நிலம் பதியாது.”

திரௌபதி புன்னகையுடன் “மெய்தான். நான் அரண்மனையில் வளர்ந்தேன்” என்றாள். “நீ சொல்ல மறுக்கும் அனைத்தும் அரண்மனைகளில் நிகழ்ந்தவை” என்றாள் மிருகி. அவளை கூர்ந்து நோக்கியபடி “அழகிய சூதப்பெண்கள் அனைவருக்கும் ஒரு பெருங்கலத்தை நிறைக்கும் அளவுக்கு நஞ்சும் கசப்பும் நெஞ்சில் இருக்கும்” என்றாள். திரௌபதி “கடுங்கசப்பு” என்றாள். கோகிலம் “ஆம், உன் புன்னகை அனைத்திலும் அது உள்ளது. நீ சிறுமை செய்யப்பட்டாயா?” என்றாள். “ஆம்” என்றாள் திரௌபதி. “எங்கு?” என்றாள் சிம்ஹி. “அவை முன்பு” என்றாள் திரௌபதி. “அவை முன்பா?” என்றபடி இரு பெண்கள் எழுந்து அருகே வந்தனர். “அவையிலா?” என்றனர். “ஆம்” என்று குனிந்து அப்பத்தை தின்றபடி திரௌபதி சொன்னாள்.

கோகிலம் “பெண்களுக்கு சிறுமையெல்லாம் தனியறையில்தான். அவை முன்பிலென்றால்…?” என்றாள். மிருகி சீற்றத்துடன் “சிறுமையில் பெரிதென்ன சிறிதென்ன? தன்மேல் மதிப்பில்லாத ஆண் ஒருவனால் வெறும் உடலென கைப்பற்றி புணரப்படும் சிறுமைக்கு அப்பால் எவரும் பெண்ணுக்கு எச்சிறுமையையும் அளித்துவிட முடியாது” என்றாள். மூச்சு சீற “புணர்ச்சிச் செயலே அவ்வாறுதான் அமைந்துள்ளது. பற்றி ஆட்கொண்டு கசக்கி முகர்ந்து துய்த்து துறந்து செல்லுதல். எச்சில் இலையென பெண்ணை உணரச்செய்தல்” என்றாள். கோகிலம் “நாம் அதை ஏன் பேசவேண்டும்?” என்றாள். மிருகி “நீ அரண்மனைகளில் பணியாற்றியதில்லை” என்றாள். கோகிலம் “ஆம், அது என் நல்லூழ்” என்றாள். சிம்ஹி “உணவின்போது கசப்புகளை பேசவேண்டியதில்லை” என்றாள்.

“ஆயினும் அவை நடுவே என்றால்…” என்றாள் கோகிலம். “எண்ணவே முடியவில்லை.” மிருகி “கேளடி, இருண்ட அறையில் எவருமே இல்லாமல் கீழ்மைப்பட்டு தன்னுடலை அளிக்கும் ஒரு சூதப்பெண்கூட பல்லாயிரம் பேர் நோக்கும் அவை முன்புதான் அதற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறாள். இல்லையென்று சொல் பார்க்கலாம்” என்றாள். கோகிலம் “எனக்குத் தெரியவில்லை” என்றாள். “அப்போதும் பிறந்திருக்காத தலைமுறையினரும் அதை பார்க்கிறார்கள், அறிக!” என்றாள் மிருகி. சிம்ஹி பதற்றத்துடன் “நாம் இந்தப் பேச்சையே விட்டுவிடுவோமே…” என்றாள். கோகிலம் “ஆம், நாமிதை பேச வேண்டியதில்லை” என்றாள். மிருகி “பெண்ணுக்கு இழைக்கப்பட்ட சிறுமைக்கு குருதியை மட்டுமே நிகர் வைக்கமுடியும். அப்பெண்ணின் மைந்தன் அதை செய்யவேண்டும்… அக்குருதியை அவன் முலைப்பால் என அள்ளிக் குடிக்கவேண்டும்” என்றாள். “போதும்” என்றாள் சிம்ஹி.

விகிர்தர் அரைத்துயில் மயங்க அஸ்வகனும் இரு இளஞ்சூதர்களும் வெல்லமிட்ட கொதிக்கும் அன்னநீரை ஒரு கலத்தில் கொண்டுவந்தனர். மூங்கில் குவளைகளில் விட்டு அவர்களுக்கு அளித்தனர். அஸ்வகன் திரௌபதியிடம் நீட்டியபடி புன்னகையுடன் “இது கள்ளல்ல” என்றான். “நான் கள்ளருந்துபவள் என்று தோன்றுகிறதா?” என்றாள் அவள். “இல்லை. ஆனால் உங்கள் விழிகள் கள்ளிலூறியவை என்று தோன்றுகின்றன” என்று அவன் சிரித்தான். “எங்கள் குடியில் அடுமனைத்தொழிலில் முதன்மைத் திறனோன் இவன். நாங்கள் சிறுகுடி அடுமனையாளர். எளியோருக்கான உணவைச் சமைப்பவர். இவன் அரண்மனைச் சமையலை அறிந்தவன். சம்பவன் என்று பெயர்” என்றாள் கோகிலத்தின் இளையோள். “இவனுக்கு மூத்தவர் இருவர் முன்பே மறைந்துவிட்டனர். எனக்கென்று எஞ்சும் உடன்பிறந்தான் இவனே.”

சம்பவன் “அடுமனைத்திறன் அரண்மனையை கோருகிறது. நிஷதபுரியின் அரண்மனை இன்று நல்ல திறனுள்ள அடுமனையாளர்களுக்கான இடமென்றார்கள்” என்றான். திரௌபதி “அடுமனையாளர் எவரிடமாவது பயின்றிருக்கிறீர்களா?” என்றாள். “எந்தையிடம் அன்றி எவரிடமும் பயின்றதில்லை. அஸ்தினபுரியின் பீமசேனர் எனது ஆசிரியர். அவருக்கு மாணவனாக வேண்டும் என்பதற்காகவே நான் நளபாகத்தை பயில மறுத்தேன்” என்றான். திரௌபதி “அவரை பார்த்திருக்கிறீரா?” என்று கேட்டாள். சம்பவன் “பார்த்ததில்லை. ஆனால்…” என்றபின் தன் கச்சையை நெகிழ்த்து அதிலிருந்து சிறிய பட்டுத்துணி ஒன்றை எடுத்துக் காட்டினான். அதில் பீமனின் உருவம் வண்ண நூல்களால் வரையப்பட்டிருந்தது.

“இந்த ஓவியத்தை பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திசைச்சூதரிடமிருந்து எட்டு பணம் கொடுத்து வாங்கினேன். என் கையில் தந்தை அணிவித்திருந்த பொற்கங்கணத்தை விற்று அப்பணத்தை ஈட்டினேன். ஒவ்வொரு நாளும் இது என்னுடன் இருக்கிறது. என் ஆசிரியர், என் இறைவடிவம். அவர் எங்கிருந்தோ என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறார். நான் கற்ற அடுமனைத்தொழிலனைத்தும் என் உள்ளத்தில் அறியாத குரலென ஒலித்து இவர் கற்பித்ததே” என்றான். குரல்நெகிழ “சொல்லுங்கள் அக்கா, ஆசிரியரின் அணுக்கம் இருந்தால்தான் கற்க முடியுமா?” என்று கேட்டான்.

திரௌபதி “இல்லை. தந்தை, ஆசிரியன், காதலன் என்னும் மூன்றும் உளஉருவகங்கள் மட்டுமே. ஆனால் மெய்யன்பு என்றால், முழுப்பணிவு என்றால் காதலனும் ஆசிரியனும் தந்தையும் ஏதேனும் ஒரு தருணத்தில் அத்தவத்தை அறிந்து நம்மைத் தேடி வருவார்கள். யார் கண்டது, நீர் இப்போது சென்றுகொண்டிருப்பதே உமது ஆசிரியரின் காலடிகளை தேடித்தானோ என்னவோ?” என்றாள்.

சம்பவன் உள எழுச்சியுடன் அவள் அருகே வந்து மண்டியிட்டமர்ந்து அவள் கால்களைத் தொட்டு “இச்சொற்களுக்காகவே நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன், அக்கா. இச்சொற்கள் போதும் எனக்கு. என்றேனும் ஒரு நாள் அவரை நான் காண்பேன். இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசரின் இளையவர் அவர். எதிரிகள் எண்ணியே அஞ்சும் பெருவீரர். என்றேனும் ஒரு நாள் நேரில் கண்டால்கூட நெடுந்தொலைவில் நின்றபடிதான் கைகூப்புவேன். அவரது கால்தடங்கள் படிந்த மண்ணை எடுத்து என் தலையில் அணிந்துகொள்வேன். அந்த பிடிமண்ணைச் சூடும் வாய்ப்பு என் சென்னிக்கு கிடைக்குமென்றால்கூட என் மூதாதையர் என்மேல் பெருங்கருணை கொண்டிருக்கிறார்கள் என்றே கொள்வேன்” என்றான்.

திரௌபதி “ஆசிரியரின் பெருங்கருணைக்கு இணை நிற்பது தெய்வங்களின் கருணை மட்டுமே. நம் எளிமையை எண்ணி நாம் அஞ்ச வேண்டியதில்லை. நம்மில் ஆணவமும் சிறுமையும் மட்டும் இல்லாதிருக்கும்படி பார்த்துக்கொண்டால் போதும். சிறு கோழிக்குஞ்சை செம்பருந்து பற்றிச்செல்வதுபோல நம்மை இப்புவியிலிருந்து தேடி வந்து பற்றிச் சென்று மலைமுடியில் அமர்த்துவார்கள். அன்னைமடியில் என அவர் அருகே நாம் அமரலாம்” என்றாள். சம்பவன் கன்னங்களில் நீர்ச்சால்கள் வழிய விம்மி அழுதபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். கோகிலம் “நற்சொற்கள் சொன்னாய், சைரந்திரி. உனது நா நிகழட்டும்” என்றாள். “நான் சொன்ன சொற்கள் எதுவும் நிகழாதிருந்ததில்லை” என்றாள் திரௌபதி.

பின்னாலிருந்து அவள் கையைத் தொட்ட சவிதை “அவ்வாறென்றால் நானும் பெற்றுப் பிழைப்பேனா, அக்கா?” என்றாள். “நீ பெருந்தோள் கொண்ட மாவீரனை பெறுவாய்” என்றாள் திரௌபதி. அவள் மெய்ப்புகொள்வது கழுத்தில் தெரிந்தது. “எப்படி?” என்று மூச்சொலியுடன் கேட்டாள். திரௌபதி “அடுமனைக்குச் செல். அங்கு உன்னைக் கண்டதுமே உனக்கு அருள்பவர் ஒருவர் வருவார். இப்புவி கண்டவற்றிலேயே பெருந்தோள் கொண்டவர். இளையவளே, யானை துதிக்கையை எண்ணுக! கருங்கால்வேங்கைப் பெருமரம் பறித்தெடுக்கும் ஆற்றல் கொண்டது அது. இதழ் கசங்காது மலர்கொய்யவும் அறிந்தது. உன்மேல் அக்கருணை பொழியும். ஆலமரத்தடியில் என அவர் காலடியில் அமைக! உன்னில் எழுவதும் பிறிதொரு பெருந்தோளனாகவே இருப்பான்” என்றாள். அவள் தலையில் கைவைத்து “தெய்வமெழும் சொல் இது, இளையவளே. நெடுந்தொலைவில் அவரைக் கண்டதுமே நீ அறிவாய், இப்புவியில் இனி அஞ்சவேண்டியதென்று எதுவுமே இல்லை என” என்றாள்.

துணி கிழிபடும் ஒலியில் விசும்பியபடி சவிதை தன் முட்டில் முகம் புதைத்து அழத்தொடங்கினாள். அவ்வொலியைக் கேட்டபடி விழிநீர் வழிய அப்பெண்கள் அமர்ந்திருந்தனர்.

தொடர்புடைய பதிவுகள்

சபரி -கடிதங்கள்

$
0
0

sapari

ஜெ அவர்களுக்கு

வணக்கம்.. சபரிநாதனைப் பற்றி உங்கள் தளத்தில் தான் தெரிந்து கொண்டேன். அவர் படைப்புகளைப் பற்றி வந்த கட்டுரைகளையும் படித்தேன்.இனிமேல் தான் புத்தகங்கள் வாங்க வேண்டும். இருப்பினும், அவர் எழுதிய தேவதச்சம் கட்டுரை உங்கள் தளத்தில் படித்தேன். பல முறை வாசித்தேன். இப்படி ஒரு கட்டுரை கிடைப்பதற்கு தான் அவர் இத்தனை வருடம் எழுதினாரோ என்று தோன்றுகிறது.. தேவதச்சன் அவர்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த விருது என்றே தேவதச்சம் விளங்கும்.

பின் மர்மநபர் வெளியீட்டு விழாவில் அவர் பேசிய காணொளி முழுதும் பார்த்தேன்..

பிரமிப்பாய் இருக்கிறது.. இத்தனை சிறு வயதில்,என்ன ஒரு ஞானம்!! வாசிப்பு தந்த அறிவின் சுடரொளி முகத்தில் ஜொலிக்கிறது.. அழகாய் தன் கருத்துகளை,பதிவு செய்தார்.

உங்களுடன் அவர் விருதுவிழாவில் அமர்ந்த புகைப்படம் பார்த்தேன். அது மிகச்சிறந்த புகைப்படம்.. உங்களுக்கும், அவருக்குமான உறவு அவ்வளவு அழகாய் அதில் தெரிகிறது..

சபரிநாதன் ஏற்புரை வாசித்து முடித்தபின், ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி, அசோகன் பெயரை சொல்ல திணறி, பின் ஒரு சிரிப்பு சிரித்தாரே, அது தான் அவரின் மிகச்சிறந்த கவிதைக் கணம்.. அந்தக் குழந்தைமை அவருக்கு என்றும் இருக்கட்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்..

ஒரு வேளை நேரில் பார்த்தால், வீட்டில் அம்மாவிடம் சொல்லி திருஷ்டி சுத்திப்போடச் சொல்லுப்பா என்று சொல்லியிருப்பேன்..

வாழ்த்துகள்..

பவித்ரா

***

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். சபரிநாதன் விழாவில் கலந்துகொண்டேன். அருமையான உரையொன்றைத் தந்தீர்கள். நன்றி. நிகழ்வின் முடிவில் தேவதேவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். உங்களுடன் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மேடையருகே வந்து நீங்கள் நின்ற பொழுது உங்கள் பக்கத்தில் வந்து நின்று எவ்வளவு முயன்றும் வார்த்தை வெளிவரவில்லை. பயந்து நடுங்கி பின் நண்பரை, அவரைக் கூப்பிட பயமாய் இருக்கிறது. அப்படியே எடுங்கள் என்று படம் எடுத்துக்கொண்டேன். அடுத்த முறைப் பார்த்தால் தைரியமாக வணக்கம் தெரிவிக்கவேண்டும்

அன்புடன்,
சங்கர்

அன்புள்ள ஜெ

நீங்கள் விருது அளித்ததனால் நான் சபரிநாதனின் கவிதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். நீங்கள் சொல்வது சரிதான். அவருடைய கவிதைகளை நான் வழக்கமாகக் கவிதை என நினைத்திருக்கும் மொழிக்குள் வைத்துப்புரிந்துகொள்ள முடியவில்லை. [நீங்கள் சொன்ன அந்த ஓமியோபதி உதாரணம் பெர்ஃபெக்ட். ]

அதன்பின் அவரது உரையைக் கேட்டேன். தேவதச்சனைப்பற்றிய அவருடைய கட்டுரையை வாசித்தேன். மெதுவாக அவரை அணுக ஆரம்பித்தேன். அவர் தன் கவிதைகளைப்பற்றித்தான் பேசுகிறார் என்ற எண்ணம் ஏற்பட்டது. அது பெரிய திறப்பு. அவை கவிதைகள் அல்ல, உள்ளத்தில் உள்ள கவித்துவமான ஓர் எழுச்சியைப்பற்றிய சிந்தனைகள் என வகுத்துக்கொண்டேன். எளிதாக இருந்தது. அந்தச்சிந்தனைகள் வழியாக அவருக்குள் நிகழ்ந்த கவிதைக்குள் போகமுடிந்தது.

அதன்பின் சிலநாட்களாக சபரியின் கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். போகிறபோக்கில் அவருடைய ரசிகனாக ஆகிவிடுவேன் என நினைக்கிறேன்

மகேஷ்

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘மல்லிகை’ஜீவாவுக்கு 90

$
0
0

mallikai

 

இலங்கையின் முன்னோடி இதழாளர்  ‘மல்லிகை’ ஜீவா என்னும் டொமினிக் ஜீவா. இடதுசாரி நோக்குள்ளவர். மல்லிகை என்னும் சிற்றிதழை பிடிவாதமாக அரைநூற்றாண்டுக்கும் மேலாக நடத்திவந்தவர். இலங்கையில் இன்றிருக்கும் மூத்த இலக்கியவாதிகளில் ஒருவர். 27 -6-2017 அன்று அவருக்கு 90 அகவை நிறைவடைகிறது. தமிழிலக்கியவாதிகளால் நிறைவுடன் நினைக்கத்தக்க ஆளுமை

 

ஐந்தாண்டுகளுக்கும் மேலாக மல்லிகை முன்பு எனக்கு வந்துகொண்டிருந்தது. இலங்கையின் இலக்கியச்சூழலை காட்டுவதாகவும், இலங்கையின் இளமெழுத்தாளர்களுக்கான களமாகவும் அது அமைந்திருந்தது

aug2006.0Malliaki Feb_NEW

‘மல்லிகை’ ஜீவா அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

அவரை போற்றும்விதமாக நண்பர் முருகபூபதி [ஆஸ்திரேலியா] எழுதியது இக்குறிப்பு

மல்லிகை ஜீவா வாழ்க்கை வரலாறு நூல்- இலவச வாசிப்புக்காக

=================================

மல்லிகை 43வது ஆண்டு மலர் மதிப்புரை
ஈழத்திலிருந்து ஒலித்த இலக்கியக்குரல் மல்லிகை ஜீவா  நோயல் நடேசன் 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கருவிமாமழை

$
0
0

monsoonமுன்பு ஒருமுறை என் நண்பர் சதக்கத்துலா ஹசநீ என்னுடன் தங்கியிருந்தபோது “ஆ மழை!” என்றார். “எங்கே மழை?” என்று நான் கேட்டேன். அவர் முற்றத்தைக் காட்டினார்.  “அதை நாங்கள் தூறல் என்றுதான் சொல்வோம்” என்றேன். எங்களூரில் மழை என்பதன் பொருளே வேறு. நாங்கள் மழையின் மக்கள்

 

ஆனால் சென்ற ஓராண்டாகவே பெருமழை இங்கே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். சென்ற ஜூன் மாத தென்மேற்குப் பருவமழை சரியாகப்பெய்யவில்லை. டிசம்பரில் வடகிழக்குப் பருவமழையும் வலுக்கவில்லை. மீண்டும் இந்த ஜுனில் மழையை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தோம். பெய்தது, ஆனால் எங்கள் கணக்கில் அது மழை அல்ல

 

நேற்றுதான் பருவமழை என்றபொருளில் நாங்கள் சொல்லும் மழை பெய்தது. நேற்று[ 26- 6-2017] பின்னுச்சிப் பொழுதில் கருமைகொண்டு மாலையில் தொடங்கியது. இரவில் நிலைக்காமல் மழை. காலையில் விடியவே இல்லை. இன்று முன்மதியம்தான் வெயிலெழுந்தது. அத்தனை ஓடைகளும் செம்பெருக்காயின. வயல்கள் செம்பரப்பென நெளிந்தன. வடமேற்கு வடகிழக்குமலைகள் முழுமையாக முகிலில் புதைத்தன

monsoon

இரவில் இருட்டுக்குள் மழை இறங்கும் ஒலியைக் கேட்டுக்கொண்டு படுத்திருந்தேன். காலையில் எழுந்து வந்து நோக்கி நின்றேன்.  மழையிருட்டு . இரவிருட்டின் உக்கிரமும் ரகசியங்களும் இல்லாதது. மழையை இருட்டுக்குள் பார்க்க முடியவில்லை.நீர்த்தாரைகளே இருட்டென்றாகிவிட்டிருந்தன. கூரைவழிவு அதை மேலுமொரு திரையென மறைத்தது.

 

பெருமழை என்னை எப்போதும் பேச்சிப்பாறை காட்டுக்குக் கொண்டுசெல்கிறது. குட்டப்பனின் , கீறக்காதனின் ,நீலியின் காடு. பேச்சிப்பாறைப்பகுதியின் மழைக்காடு இயல்பாகவே இருண்டுதான் இருக்கும். மழைக்கார் மூடுகையில் இலைதெரியாத இருட்டு. அவ்விருட்டுக்குள் ஒரு கள்ளக்காமம் போல மழை மூடிப்பெய்துகொண்டிருக்கும். அதிலும் நள்ளிரவில் என்றால் அது ஓசையின் உக்கிரம் மட்டுமே.

 

காலையில் மழைவெளுக்கையில் காட்டுக்குள் புதிய சுடர்கள் எழுந்து எரிந்து நின்றிருக்கும். அத்தனைப் பாறையிடுக்குகளிலும் வெண்ணிற வெளிச்சம் சிதறும் அருவிகள். காட்டுக்குள் சென்றால் ஒருபோதும் கண்துலங்க கண்டிராத இடங்களெல்லாம் மிளிர்ந்து நின்றிருக்கும். அந்த மரங்கள் பிறகெப்போதும் நிழல்கொள்வதில்லை. விழிபிதுங்கி இலைநுனிகளிலாடும் அந்த சிறு பச்சைத்தவளைகள் அந்த ஒளியை முன்பு கண்டிருப்பதில்லை.

 

கருவிமாமழை என்று கபிலர் பாடுகிறார். நான் எப்போதுமே சொல்லிவருவதுபோல கபிலர் எங்கள் சேரநாட்டவர். பிறருக்கு அவர் சொல்லும் பெரும்பாலான செய்திகளும் அனுபவங்களும் புரியாது. கருவிமாமழை என்பதற்கு பல அர்த்தங்கள். இடி மின்னல் என படைக்கலங்களைச் சூடி எழுந்து வரும் மாமழை என்பது பெரும்பாலானவர்களின் பொருள்.

 

கருவி என்பதை கருமையுடன் இணைத்துக்கொள்ளலாம்.இப்போதைக்கு இலக்கண ஒப்புதல் இல்லை என்றாலும் அதை ஒரு தொன்மையான சொல்லாட்சி என்று கொள்ளவே தோன்றுகிறது.கருமையே ஆன மழை!

 

யாமத்துக் கருவிமாமழை என்னும் சொல்லை உணர பேச்சிப்பாறையில் ஒரு மழையை நேரில்காணவேண்டும்.இருளின் அகக்கூச்சல் அது. முடிவிலாத ஒன்று தன்னுள் தன்னை நிகழ்த்திக்கொள்வது. நம்மைச்சூழ்ந்திருக்கிறது அது ,ஆனால் அதனுள் என்ன நிகழ்கிறதென்று நம்மால் அறியமுடியாது

kerala

காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்

கருவி மாமழை வீழ்ந்தென அருவி

விடரகத்து இயம்பும் நாட

எம் தொடர்பு தேயுமோ நின்வயினானே?

 

நீ காதலை மறந்துவிடலாம். நள்ளிரவில் காட்டில் இருண்ட மாமழை பெய்ததை அருவி காலையில் மலைச்சரிவுகளில் எழுந்து விழுந்து கூச்சலிட்டுச் உரைக்கும் நாட்டைச் சேர்ந்தவனே. எம் உறவு உன் உள்ளத்தில் தேய்ந்தழியுமா என்ன?

 

காட்டுக்குள் பெய்யும் கருவிமாமழையை அறிவித்த சிரிப்புகளை இப்போது சுற்றிலும் காண்கிறேன். கூவிநகைத்து பொழிகின்றன. இன்னும் சற்றுநேரத்தில் இளவெயில் எழும். வேளிமலையின் சரிவுகளில் வெள்ளிவழிவென அருவிகள். ஈரத்தின் வளைவொளிகள். தென்மேற்கே சவேரியார் குன்றின்மேல் கருமைதிரண்ட முகில்கள் மீண்டும் என்ற சொல்கொண்டு நின்றிருக்கின்றன

 

 27-june 2017

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 36

$
0
0

35. வேழமருப்பு

flowerசூதர்குழுவுடன் திரௌபதி விராடபுரியின் பெருங்கோட்டை வாயிலை அடைந்தபோது அந்தி கவியத் தொடங்கியிருந்தது. தொலைவிலேயே சூதர்குழுவின் தலைவர் விகிர்தர் “விரைந்து சென்றால் பெருவாயில் மூடுவதற்குள் நாம் நகருக்குள் நுழைந்துவிட முடியும். அந்திக்குப் பின் அயலவர்களை நகர்நுழைய ஒப்புவதில்லை. நாம் திறந்த வெளியில் தங்க வேண்டியிருக்கும்” என்றார். “நோக்குக, தென்மேற்கில் மின்னுகிறது. இப்பகுதிகளில் தென்மேற்கு முகிலூறினால் மழை உறுதி என்றே பொருள். திறந்த வெளியில் குழந்தைகளுடன் தங்குவதென்பது கடினம்.”

திரௌபதி “கோட்டைமுகப்பில் தங்கும் இடங்கள் இல்லையா?” என்றாள். “உண்டு. பெருவணிகர்களுக்கு நீள்விடுதிகள் அமைந்துள்ளன தொகைக்கொட்டகைளும் உண்டு. இப்பொழுதிற்குள் அங்கே பலர் சென்று இடம் பற்றியிருப்பார்கள். சூதர்களுக்கு தனியாக தங்குமிடங்கள் உண்டு. பலர் கூடாரங்கள் கட்டி தங்குவார்கள்” என்றார் விகிர்தர். “ஆனால் இது வைகாசி மாதம். தொகைச்சந்தை ஒன்று நாளை மறுநாள் கூடவிருக்கிறது. பன்னிரு நாட்கள் அச்சந்தை நீடிக்கும். நகருக்குள் பெருங்கூட்டம் நுழையும். அனைவருக்கும் கூரைகளில் இடமிருக்காது.” முதியவரான சுந்தரர் “அத்துடன் எங்கும் அடுமனைச்சூதர் ஒரு படி தாழ்ந்தவர்கள்தான். மாமன்னர் நளன் கோல்கொண்டு ஆண்ட தொல்நகரியான இந்திரபுரியிலும் அவ்வாறே இருந்திருக்கும்” என்றார். விகிர்தர் “விரைந்து செல்வோம்” என்றார்.

“இன்னும் சற்று விரைவு” என்று அஸ்வகன் கூவினான். வண்டியோட்டி சினத்துடன் திரும்பி நோக்கி “தரையை பார்த்தீர்களல்லவா? புழுதியில் ஆழ்கிறது சகடம். ஒற்றைக்காளை இதுவரை இழுத்து வந்ததே நமது நல்லூழ். இனிமேலும் அதை துரத்தினால் கால் மடித்து விழுந்துவிடக்கூடும் அதன் பின் இந்த சாலையோரத்து மரத்தடியில் இரவை கழிக்க வேண்டியிருக்கும், மழைக்கு வந்து ஒதுங்கும் காட்டு விலங்குகளுடன் சேர்ந்து” என்றான். விகிர்தர் “பூசல் வேண்டாம். முடிந்தவரை விரைந்து செல்வோம்” என்றார்.

ஆனால் அவர்கள் அனைவருமே களைத்திருந்தனர். விரைந்து நடக்க முனைந்தோர் எஞ்சியிருந்த தொலைவை கணக்கிட்டு உள்ளம் சோர்ந்தனர். முதிய பெண்டிர் இடையில் கைவைத்து அவ்வப்போது வானை நோக்கி “தெய்வங்களே” என்று ஏங்கினர். “எவராவது இருவர் விரைந்து முன்னால் சென்று கோட்டைக்கு வெளியே தங்குமிடம் ஒன்றை பிடித்து வைத்துக்கொண்டால் என்ன?” என்று திரௌபதி கேட்டாள். “பிடித்து வைத்துக்கொண்டால் கூட அதை அவர்கள் நமக்கு அளிக்க வேண்டுமென்பதில்லை. படைக்கலமேந்தியவர்களோ இசைக்கலம் ஏந்தியவர்களோ அல்ல நாம். எளியவர். அடுமனைக் கலங்கள் மட்டுமே அறிந்தவர்கள். மானுடரின் பசி தீர்க்கும்போது மட்டுமே நினைவுகூரப்படுபவர்கள்” என்றார் சுந்தரர்.

செல்லச் செல்ல அவர்களின் விரைவு குறைந்து வந்தது. எடை சுமந்த பெண்கள் நின்று “எங்களால் முடியவில்லை. இத்துயருக்கு நாங்கள் மழையிலேயே நின்றுகொள்வோம்” என்றனர். “மழைக்கு நம்மிடம் கூரையென ஏதுமில்லையா?” என்றாள் திரௌபதி. விகிர்தர் அவளை நோக்கி புன்னகைத்து “நாங்கள் நாடோடிகளாக வாழ்பவர்களல்ல. நல்ல அடுமனை ஒன்றை அடைந்தால் அங்கிருந்து தெய்வங்களால் மட்டுமே எங்களை கிளப்ப முடியும். அங்கு மச்சர் நாட்டில் அடுமனைப் பணியாளர்கள் தேவைக்குமேல் மிகுந்துவிட்டனர். வாய் வளரும் குழந்தைகளுடன் அங்கு வாழ முடியாததனால்தான் கிளம்பினோம். அது தோற்ற நாடு. இது வென்ற நாடு. இங்கு நாள்தோறும் மனிதர்கள் பெருகுகிறார்கள். கருவூலம் பெருகுகிறது. அடுமனை கொழிக்கிறது” என்றார்.

சூரியன் கோட்டைச்சுவருக்கு அப்பால் முழுதடங்குவதை தொலைவிலேயே அவர்கள் கண்டனர். “அவ்வட்டம் விளிம்புக்கு கீழே இறங்குவதுதான் கணக்கு. அந்தி முரசொலிக்கத் தொடங்கிவிட்டால் காவல் யானைகள் சகடங்களை இழுக்கத் தொடங்கிவிடும்” என்று விகிர்தர் சொன்னார். “இங்குள்ள அடுமனையை நோக்கி உறுதி செய்வதற்காக சென்றமுறை நான் வந்தேன். அது ஆடி மாதம். தொலைவிலேயே அந்திக்கதிர் இறங்குவதை கண்டேன். முழுஇரவும் மெல்லிய மழையில் நனைந்தபடி மரவுரியை தலையிலிட்டு உடல் குறுக்கி கோட்டை முகமுற்றத்தில் அமர்ந்திருந்தேன். மறுநாள் காலையில் காய்ச்சலில் என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. கண்களிலும் வாயிலும் அனல் எழுந்தது. தள்ளாடி நடந்து கோட்டையை அடைந்தால் நோயுடன் உள்ளே செல்ல ஒப்புதல் இல்லை என்றார் காவலர்.”

“கண்ணீருடன் கால்களைத் தொட்டு சென்னிசூடி நான் எளிய அடுமனையாளன் என்று மன்றாடினேன். நோய்கொண்டு நகருக்குள் நுழைய முடியாது என்றனர். நேற்றிரவு இந்த மழையில் அமர்ந்திருந்த நோயென்று சொல்லியும் கேட்கவில்லை. மீண்டும் வந்து முற்றத்திலேயே அமர்ந்திருந்தேன். கோட்டைக்குமேல் கதிரெழுந்தபோது வெயில் என்னுடலை உயிர்கொள்ளச் செய்தது. அருகநெறியைச் சேர்ந்த பெருவணிகர் ஒருவர் கோட்டை முன் அமர்ந்திருப்பவர்களுக்காக ஏழு இடங்களில் அன்னநிலைகளை அமர்த்தியிருந்தார். அங்கு சென்று இன்கூழ் வாங்கி அருந்தினேன். அதன் பின்னரே உடல் எழமுடிந்தது.”

“மீண்டும் சென்று கோட்டை வாயிலை அடைந்தபோது பெருந்திரளாக மக்கள் உள்ளே சென்றுகொண்டிருந்தார்கள். எவரையும் கூர்ந்து நோக்க காவலர்களுக்கு பொழுதிடை அமையவில்லை. அவ்வெள்ளத்தால் அள்ளி உள்ளே கொண்டுசெல்லப்பட்டேன்” என்று விகிர்தர் சொன்னார். “இந்நகரம் பெரிது. சிறியவர் எவரையும் பிறர் கூர்ந்து நோக்குவதில்லை. எவரும் நமக்கு இரக்கம் காட்டுவதில்லை. ஆனால் எவரும் நம்மை தேடிவந்து அழிப்பதும் இல்லை. பிறர் அறியாமல் வாழ ஓர் இடம் கிடைத்தால் அதுவே நமது இன்னுலகம்.” சுந்தரர் உரக்க நகைத்தபடி “ஆம், நாமெல்லாம் அடுமனைப் பாத்திரங்களின் மடிப்புக்குள் பற்றியிருக்கும் ஈரப்பாசிபோல. எவரும் பார்க்காதவரை மட்டுமே தழைத்து வளரமுடியும்” என்றார்.

கோட்டைக்குப்பின் சூரியன் இறங்கி மறைந்ததும் அவர்கள் அனைவருமே விரைவழிந்து நின்றுவிட்டனர். “இனி விரைந்து பயனில்லை. காளை சற்று ஓய்வெடுக்கட்டும்” என்றார் மூத்த சூதரான தப்தர். வாயில் இருந்து நுரைக்குழாய் இறங்கி மண்ணில் துளியாகிச் சொட்ட, மூச்சு சீறியபடி தலையை நன்கு தாழ்த்தி, கால்களை அகற்றி வைத்து நின்றது ஒற்றைக்காளை. வண்டிக்குள் இருந்த சிம்ஹி தலையை நீட்டி “காளையை பார்க்கையில் உளம்தாங்க முடியவில்லை. நாங்கள் நடந்தே வருகிறோம். இன்னும் சற்று தொலைவுதானே” என்றாள். “வேண்டியதில்லை. சற்று ஓய்வெடுத்தபின் அது மீண்டும் கிளம்பும்” என்றார் விகிர்தர்.

“இனிமேலும் இவ்வெளிய உயிர்மேல் ஊர எங்களால் இயலாது” என்று சொல்லி அவள் கையூன்றி மெல்ல இறங்கினாள். “அது என்னை இழுத்துச் செல்லும்போது வயிற்றுக்குள் என் குழவியை நான் இழுத்துச் செல்வதுபோல தோன்றியது. சுமை இழுப்பதென்றால் என்னவென்று அதைப்போலவே நானும் அறிவேன்” என்றாள். “நாம் எளிய அடுமனையாளர்கள், அயல்நாட்டவரல்ல என்று சொல்லிப்பார்த்தால் என்ன?” என்று அஸ்வகன் கேட்டான். “நம்மை பார்த்தாலே தெரியும்” என்றார் குடித்தலைவர். “நம்மிடம் எந்த அயல்நாட்டு அடையாளங்களும் இல்லை” என்றான் அவன். “எந்த நாட்டு அடையாளமும் நம்மிடமில்லை. செல்லும் ஊரே நமது ஊர்” என்று சுந்தரர் சொன்னார். “ஆனால் நம்மைப் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஓவ்வாத ஊரைச் சேர்ந்தவர்களாகவே நம்மை அடையாளப்படுத்துவார்கள். ஏனெனில் நாம் அவர்களுக்கு எதுவும் அளிக்க முடியாத ஏழைகள்.”

“சென்று பார்ப்போம். அங்கிருக்கும் காவலர்களில் எளியோரைப்பார்த்து உளமழியும் ஒருவராவது இருக்கலாம். கருவுற்ற பெண்களையும் குழவிகளையும் முன்னிறுத்துவோம். வெளியே எங்களுக்கு தங்குமிடமில்லை. நகர்நுழைந்தால் அடுமனையை அடைந்து அதன் விளிம்புகளில் எங்காவது அமர்ந்து மழையை தவிர்ப்போம். நாளை எங்கள் கைகளால் அவர்களுக்கு உணவளித்து கடன் தீர்ப்போமென சொல்வோம்” என்றான் அஸ்வகன். “வீண் முயற்சி அது. நமக்காக எந்த நெறிகளும் தடம் பிறழ்வதில்லை” என்றார் விகிர்தர். சுந்தரர் நகைத்து “அது இளமையின் விழைவு. சில இடங்களில் இழிவுபடுத்தப்பட்டு ஓரிரு இடங்களில் தாக்கப்படும்போது எங்கிருக்கிறோம் எந்த அளவு இருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். அப்படி புரிந்துகொள்ள வாய்ப்பு கொடுப்போமே” என்றார்.

அவர்கள் மீண்டும் கிளம்பி கோட்டைமுகப்பை அடைந்தபோது காவல்மாடங்கள் அனைத்திலும் மீன்நெய்ப்பந்தங்கள் தழலாடத் தொடங்கிவிட்டிருந்தன. அதன் அருகே நின்றவர்களின் கையிலிருந்த படைக்கலங்கள் தழல்துளிகளை சூடியிருந்தன. எண்ணியது போலவே கோட்டைமுகப்பில் அனைத்து விடுதிகளும் பெருவணிகர்களாலும் அவர்களின் சுமைதூக்கிகளாலும் காவலர்களாலும் நிறைந்திருந்தன. பொதி சுமந்த அத்திரிகளும் கழுதைகளும் வண்டிக்காளைகளும் கட்டுத்தறிகளில் கட்டப்பட்டு கழுத்து மணி ஓசையுடன் கால்மாற்றி நின்று மூச்சு சீறி உலர்புல் மென்றுகொண்டிருந்தன. புரவிகளுக்குமேல் தேன்மெழுகு பூசப்பட்ட ஈச்சம்பாய்களை வயிற்றில் சரடு இழுத்துக் கட்டியிருந்தனர்.

சூதர்குழுத் தலைவர் விகிர்தர் திரௌபதியிடம் “மழை வருமென்று நன்கு அறிந்திருக்கிறார்கள். புரவிகள் நனையாமலிருக்கும்” என்றார். திரௌபதி அதை பார்த்தபின் “இப்படி ஒன்றை இதற்குமுன் பார்த்ததில்லை. வேண்டுமென்றால் இரவில் சென்று ஒன்றிரண்டை எடுத்துவந்து குழந்தைகளையும் பெண்களையும் மட்டும் மழையிலிருந்து காத்துக்கொள்ளலாம்” என்றாள். விகிர்தர் “புரவிகளை நெருங்கவே நம்மால் முடியாது. படைக்கலத்துடன் ஒரு காவல்வீரனாவது விழித்திருப்பான். வேல் நுனியால் முதுகு கிழிபட்டு குருதி வழிந்து இங்கு கிடப்போம்” என்றார். திரௌபதி “எங்கும் எதிலும் அச்சத்தையே காண்கிறீர்கள்” என்றாள். அவர் கோணலான புன்னகையுடன் “என் தந்தை அஞ்சுவதெப்படி என்று எனக்கு கற்பித்தார். அஞ்சத்தெரிந்ததனால்தான் இதுநாள் வரை வாழ்ந்தேன். அச்சத்தை கற்பித்ததனால்தான் என் குடியை இன்று வரை காத்தேன்” என்றார்.

அவர்கள் முற்றத்தில் நின்றிருக்க இளைஞர்கள் இரு திசைக்கும் சென்றபின் திரும்பி வந்து “எங்கும் இடமில்லை, மூத்தவரே. குழந்தைகளும் கருவுற்ற பெண்டிரும் இருக்கிறார்கள் என்றேன். எவரும் எங்கள் சொற்களை செவிகொள்ளவில்லை. ஷத்ரியர் விடுதிகளில் காவலர் குதிரைச்சவுக்குடன் எழுந்து தாக்க வருகிறார்கள். சூதர்கொட்டகைகளில் ஒருவர் இங்கு திறந்தவெளியில் தங்கியிருப்பவர் அனைவருமே உங்களைப் போன்றவர்கள்தான். ஒருநாள் மழை தாங்கமுடியவில்லை என்றால் நீங்கள் எதைத்தான் தாங்குவீர்கள் என்றார்” என்றான் அஸ்வகன்.

சம்பவன் “ஒரு ஷத்ரியர் பதினைந்து நாட்கள் பெருமழையில் திறந்த வெளியில் தங்கி திருவிடத்தில் தாங்கள் போரிட்டதாக சொன்னார். நாம் அத்தகைய இடர்களையோ இறப்பையோ எதிர்கொள்ளவில்லை அல்லவா?” என்றான். சுந்தரர் “என்றோ ஒருநாள் எதிர்கொள்ளப்போகும் இறப்பின் பொருட்டு முந்தைய வாழ்நாள் முழுக்க பிறரது குருதியை உண்டு வாழ தங்களுக்கு உரிமையுண்டென்று நம்புகிறவர்கள் ஷத்ரியர்” என்றார்.

“நாம் சென்று காவலரிடம் கேட்டுப் பார்ப்போம்” என்றான் அஸ்வகன். “காவலனிடமா? நான் வரப்போவதில்லை. வேண்டிய இழிசொற்களையும் சவுக்கடிகளையும் வேல்முனைக்கீறல்களையும் இளமையிலேயே பெற்றுவிட்டேன்” என்றார் விகிர்தர். “நாங்கள் சென்று கேட்கிறோம். நீங்கள் நோயுற்றவர்போல் வண்டிக்குப்பின் நின்றால் போதும்” என்றான் சம்பவன். மிருகி “வேண்டாம். காவலர்கள் எந்த உளநிலையிலிருப்பார்கள் என்று நமக்குத் தெரியாது” என்றாள். “தாழ்வில்லை. ஒருமுறை கேட்டுப் பார்ப்போம்” என்று சொல்லி சம்பவனும் அஸ்வகனும் வண்டியோட்டியிடம் “வருக!” என்றனர்.

அவர்கள் கோட்டைமுகப்பை நோக்கி செல்வதை ஆங்காங்கே வெட்டவெளியில் வண்டிகளை அவிழ்த்துவிட்டு பொதிகளை இறக்கி அமர்ந்தும் படுத்தும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தவர்கள் விந்தையாக நோக்கினார்கள். கோட்டையின் முகப்பில் பெருவாயில் மூடியிருக்க திட்டிவாயிலினூடாக காவல்புரவிகள் மட்டும் உள்ளே சென்றன. புரவிவீரர்கள் நன்றாகக் குனிந்து எறும்பு புற்றுக்குள் நுழைவதுபோல் அதை கடந்தனர். அவர்களின் வண்டி காவல்முகப்பில் வந்து நிற்க கோட்டத்திலிருந்து கையில் வேலுடன் வெளியே வந்த காவலன் சினத்தால் சுளித்த முகத்துடன் “யாரது? ஏய் அறிவிலி, கோட்டை மூடியிருப்பது உன் விழிகளுக்கு தெரியவில்லையா? உன் வண்டியுடன் திட்டிவாயிலுக்குள் நுழையப்போகிறாயா, கீழ்பிறப்பே?” என்றான்.

“நாங்கள் அயலூர் சூதர். அடுமனையாளர்” என்றபடி சம்பவன் கைகூப்பி முன்னால் சென்றான். “இங்கு எங்கள் குழந்தைகளுடன் திறந்தவெளியில் தங்கமுடியாது. மழை பெய்யுமென்றால் அவர்கள் நனைந்துவிடுவார்கள். நீர்காக்கும் பாய்கூட எங்களிடமில்லை” என்றான் அஸ்வகன். “எவரையும் அந்திக்குப்பின் உள்ளே விடமுடியாது” என்றபின் காவலன் திரும்பியபோது இயல்பாக விழி சென்றுதொட முகம் உயிர்கொண்டு திரௌபதியை நோக்கி “அவர்கள் யார்?” என்றான். அஸ்வகன் திரும்பி அவளை பார்த்தபின் “அவர்தான் எங்கள் குழுத்தலைவி. அரசஅழைப்பின் பேரில் அரண்மனைக்குச் செல்கிறார். எங்களையும் அழைத்துச்செல்கிறார்” என்றான்.

“அவர்கள் பெயரென்ன?” என்று காவலன் கேட்டான். அஸ்வகன் தயங்காமல் “கிருஷ்ணை…” என்றான். திரௌபதி அவர்களின் உரையாடலை மிக மழுங்கிய சொற்களாகவே கேட்டாள். விழிகூர்ந்து அவர்களின் உதட்டசைவிலிருந்து அவர்கள் பேச்சை ஊகித்தறிய முயன்றாள். அதை உணர்ந்த அஸ்வகன் உதடுகளை சரியாக அசைக்காமலேயே பேசினான். “அவர்கள் வங்க அரசகுடியை சேர்ந்தவர்கள். விராட அரசகுடியின் தனியழைப்பை ஏற்று வந்திருக்கிறார்கள். நாங்கள் நேராக அரண்மனைக்குத்தான் செல்கிறோம். கீசகரை நேரில் சந்திக்கும்படி ஆணை” என்றான்.

காவலன் குழப்பத்துடன் அவளை நோக்கிவிட்டு காவலர்தலைவன் இருந்த சிற்றறையை நோக்கினான். பின்னர் “அவர்களிடம் அரச இலச்சினை ஏதாவது இருக்கிறதா?” என்று உள்ளிருந்து வந்த பிறிதொரு காவலன் கேட்டான். “இல்லை. அவர்களைப் பார்த்தாலே தெரிகிறதல்லவா? சூதர் வடிவிலேயே எங்களுடன் நடந்து வந்திருக்கிறார். பிறர் அறியாமல் நகருக்குள் நுழைந்து அரசரைக் காணும்படி அவருக்கு ஆணை. இதை நான் சொல்வதுகூட அவர்களுக்குத் தெரியாமல்தான்” என்றான் அஸ்வகன்.

முதுகாவலன் ஒருவன் வெளியே வந்து திரௌபதியைப் பார்த்தபின் “கணவனை இழந்தவரா?” என்றான். “கூந்தல் அவிழ்த்திட்டிருக்கிறார்களே?” “ஆம், உடன்கட்டை ஏற மறுத்து நிலம்நீங்கியவர்” என்றான் அஸ்வகன். உள்ளிருந்து ஓர் இளம்காவலன் “கீசகர் அவருக்கு உகந்த பெண்ணை கண்டுவிட்டார்போல. அவர் தோள்களை பாருங்கள். களம் நின்று மற்போரிடவும் அவரால் இயலும்” என்றான். முதுகாவலன் அவனை நோக்கி சீற்றத்துடன் “எவராயினும் அரசகுடியினரைப்பற்றி சொல்லெடுக்கையில் ஒவ்வொரு சொல்லையும் உன் சித்தம் மும்முறை தொட்டுப்பார்த்திருக்க வேண்டும். ஒரு சொல்லின் பொருட்டு கழுவேறியவர்கள் பல்லாயிரம் பேர் இந்நகரில் அலைகிறார்கள்” என்றான். அவன் திகைத்து “நான் நமக்குள் வேடிக்கையாக சொன்னேன்” என்றான்.

அஸ்வகன் சினத்துடன் “ஆம். இச்சொல் எங்கள் தலைவியை இழிவுபடுத்துவது. இதை அவர்களிடம் சொல்லாமலிருப்பது எனக்கு கடமைமீறல்” என்றான். முதுகாவலன் கைநீட்டி “பொறுங்கள், சூதரே! இதை அவர்களிடம் ஏன் சொல்லவேண்டும்? புரிந்துகொள்ளுங்கள், இந்தக் காவல்பணி என்பது திரும்பத் திரும்ப ஒன்றையே செய்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது. நாவால் துழைந்துதான் இச்சலிப்பை போக்க வேண்டியிருக்கிறது. பொறுத்தருள்க!” என்றான். “அரசகுடியினரைப்பற்றி இழிசொல்லை எப்படி அவர் சொல்லலாம்? மேலும் அச்சொல் கீசகர் மீதும் இழிவு சுமத்தியது” என்றான் அஸ்வகன்.

“பொறுத்தருள்க! இதை உங்கள் தலைவி அறியவேண்டியதில்லை. இங்கு எதுவும் நிகழவில்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உள்ளே செல்லலாம். கோட்டைவாயிலை சற்று திறந்து வண்டியை உள்ளே விடச்சொல்கிறேன்” என்றபின் முதுகாவலன் எழுந்து உள்ளே சென்று சிறு கயிறொன்றை இழுத்தான். அப்பால் எங்கோ மணியோசை ஒலிக்க சகடங்கள் முனகி எழுந்து பின் அலற கோட்டைவாயில் மெல்ல விலகி திறந்துத் வழிவிட்டது.

அஸ்வகன் ஓடிச்சென்று விகிர்தரிடம் “உள்ளே செல்ல ஒப்புதல் அளித்துவிட்டார்கள். கதவு அகல்கிறது” என்றான். “மெய்யாகவா? இதில் சூழ்ச்சி ஏதும் இல்லையே? இதன் பொருட்டு உள்ளே சென்று நாம் தலைகொடுக்க வேண்டியதில்லை அல்லவா?” என்றார் விகிர்தர். “இல்லை, வாருங்கள் உள்ளே செல்வோம்” என்று அஸ்வகன் சொன்னான்.

திறந்த வாயிலினூடாக அவர்கள் உள்ளே செல்லும்போது திரௌபதி திரும்பி காவல்மாடத்தை பார்த்தாள். காவலர்கள் அனைவரும் தலைவணங்கினார்கள். அவள் திரும்பி அஸ்வகனை பார்த்தாள். தாழ்ந்த குரலில் “அவர்களிடம் என்ன சொன்னீர்?” என்றாள். “நான் எதுவும் சொல்லவில்லை” என்றான். “சொல்க! என்ன சொன்னீர்?” என்றாள். அவன் தயங்கி “அவர்கள்தான் கேட்டார்கள், தாங்கள் அரசகுடியா என்று. ஆம் என்றேன்” என்றான். திரௌபதி “அரசகுடியினள் என்றா?” என்றாள். “ஆம். அவர்கள் கேட்டபோது நானும் திரும்பிப்பார்த்தேன். அந்தத் தொலைவில் நிழலுருவில் பேரரசுகளை ஆளும் சக்ரவர்த்தினிகளுக்குரிய நிமிர்வுடன் தோற்றமளித்தீர்கள். நீங்கள் அரசகுடியேதான். அதை எங்கும் உங்களால் மறைக்க முடியாது” என்றான் அஸ்வகன். “வெறுமனே நடக்கையிலும் வேழமருப்பில் அமர்ந்த அசைவுகள் உங்களில் உள்ளன.”

சம்பவன் “நீங்கள் யாரென்று நான் கேட்கவில்லை. அந்த இடத்தில் நாங்கள் இல்லை” என்றான். திரௌபதி பெருமூச்சுவிட்டாள். “கீசகரைப் பார்க்க நீங்கள் செல்வதாக சொன்னேன்” என்றான் அஸ்வகன். அவர்களுக்குப் பின்னால் கோட்டைவாயில் திரும்ப மூடிக்கொண்டது. “அடுமனைக்கு செல்லும் வழி உசாவுக!” என்று சுந்தரர் சொன்னார். அவர்கள் உள்முற்றத்திலிருந்து பிரிந்த அரசத் தெருவை விலக்கி அங்காடித் தெருக்களில் ஒன்றில் நுழைந்தார்கள்.

flowerவிராடபுரியின் தெருக்களில் ஒளியொடு ஒளி சென்று தொடும் தொலைவில் நிரையாக கல் விளக்குத்தூண்கள் நடப்பட்டு அவற்றின்மேல் பன்னிரு சுடர்கள் எரியும் மீன்நெய் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. இருபுறமும் நிரைவகுத்த மாளிகைகளின் முகப்புகளிலெல்லாம் வேங்கைமலர்க்கொத்துபோல தொகைச்சுடர் நெய்விளக்குகள் எரிய அவற்றுக்குப் பின்னால் ஒளியை குவித்துப்பரப்பும் சிப்பி வளைவுகளும் பளிங்கு வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. பகல் முழுக்க கடும் வெயில் எரிந்தமையால் இல்லங்களுக்குள் முடங்கியிருந்த மக்கள் வெயில் தாழ்ந்த பின்னர் வெளியே இறங்கி அங்காடித் தெருக்களிலும் ஆலய வீதிகளிலும் நிறைந்து தோளொடு தோள் முட்டி உவகைக் குரல்களுடன் ததும்பிக்கொண்டிருந்தனர்.

வண்டியை செலுத்திய சூதர் இடக்கையில் மணி எடுத்து குலுக்கி ஓசையெழுப்பி சிறிது சிறிதாக வழி கண்டுபிடித்து கூலவாணிகத் தெருவிலிருந்து நறுஞ்சுண்ணத் தெருவில் நுழைந்து மையச்சாலையில் ஏறினார். வண்டி செல்லும் இடைவெளியில் அதைத் தொடர்ந்து சூதர் குழு சென்றது. அந்தி மயங்கியபின் நகருக்குள் வண்டிகள் நுழைவதில்லை என்பதால் அதை வியப்புடன் திரும்பிப்பார்த்த மக்கள் அனைவருமே திரௌபதியை திகைப்புடன் நோக்குவதையும் ஒருவரோடொருவர் அவள் எவளென்று பேசிக்கொள்வதையும் அஸ்வகன் கண்டான். பின்னர் அவர்கள் அனைவருமே அவளையன்றி வேறெதையும் நோக்காதவர்களானார்கள்.

அந்நோக்குகளால் எச்சரிக்கையுற்ற அவள் தன் நீண்ட குழலை உடலை சுற்றிக்கட்டிய ஒற்றையாடையால் மறைத்து முகத்தையும் பாதி மூடிக்கொண்டு தலை குனிந்து நடந்தாள். ஆயினும் அவள் உயரமும் தோள் விரிவும் அவளை தனித்துக் காட்டின. விளக்குத்தூண்களை கடந்து செல்கையில் சுடரொளியில் எழுந்து அருகிலிருந்த சுவர்களில் விழுந்த அவள் நிழலுருவம் பேருருக்கொண்ட கொற்றவைச் சிலையென தோற்றமளித்தது.

அவளை திரும்பித் திரும்பி நோக்கிய சம்பவனிடம் விகிர்தர் “நகர்மக்கள் அனைவரும் அவளையேதான் நோக்குகிறார்கள். நீயும் நோக்கி காலிடற வேண்டியதில்லை” என்றார். “பொறுத்தருள்க!” என்றபடி அவன் முன்னால் சென்றான். வழிகேட்டு சென்ற அஸ்வகன் திரும்பி வந்து “வலப்பக்கமாக செல்லும் சிறிய பாதை பொதுமக்களுக்கான அடுமனைகளை அடைகிறது. நாம் செல்ல வேண்டியது அங்குதான்” என்றான்.

திரௌபதி தாழ்ந்த குரலில் “நான் விடைகொள்கிறேன்” என்றாள். விகிர்தர் “எங்கு?” என்றார். “அரண்மனைக்கு. வேறெங்கும் நான் வாழவியலாது” என்றாள். விகிர்தர் ஒருகணம் நோக்கிவிட்டு “ஆம்” என்றார். அஸ்வகனிடம் “நீயும் உடன் செல்க!” என்றார். “வேண்டியதில்லை” என்றாள் திரௌபதி. “தங்களை தனியாக அனுப்ப முடியாது. நீங்கள் சென்று அரண்மனையை அடைந்தபின் அவன் திரும்பி வந்து என்னிடம் செய்தி சொல்லவேண்டும்” என்றார் விகிர்தர். அவள் அவரை பார்க்காமலே “அவ்வண்ணமே” என்றபின் அஸ்வகனிடம் “செல்வோம்” என்றாள்.

அஸ்வகன் அவள் அருகே வந்து “நான் தங்களுக்காக எந்தப் பணியும் ஆற்ற சித்தமாக இருக்கிறேன்” என்றான். “வேண்டியதில்லை. என் உடன் வந்தாலே போதும்” என்றாள் திரௌபதி. “உயிர் கொடுப்பதென்றாலும் கூட” என்றான் அஸ்வகன். திரௌபதி புன்னகைத்தாள். அரண்மனையை அணுக அணுக மக்கள் திரள் குறையத்தொடங்கியது. படைத்தலைவர்களின் இல்லங்களும் அமைச்சர்களின் இல்லங்களும் இரு மருங்கிலும் தழலாடும் பெரிய விளக்குத்தூண்கள் சூழப்பரப்பிய செவ்வொளியில் செம்பட்டுத் திரைச்சீலையில் வரைந்த ஓவியங்கள்போல மெல்ல நெளிந்துகொண்டிருந்தன. குருதி சிந்தியதுபோல் ஒளி விழுந்துகிடந்த பாதையில் தேர்ச்சகடங்களும் குளம்புகளும் சென்ற தடங்கள் தசை வடுக்கள்போல் பதிந்திருந்தன.

அவர்களை நோக்கி வந்த காவலன் ஒருவன் “யார் நீங்கள்? எங்கு செல்கிறீர்கள்?” என்றான். திரௌபதி அவனிடம் “அரண்மனைக்கு வழி இதுதானே?” என்றாள். அவன் அவள் கண்களை பார்த்தபின் தலைவணங்கி “அரச ஆணை உள்ளதா?” என்றான். “ஆம்” என்றாள் அவள். “அவ்வழி” என்று அவன் பணிந்து கைகாட்டினான். மாளிகை உப்பரிகையில் இருந்து எட்டிப்பார்த்த இருவர் அவளை கைசுட்டி ஏதோ கேட்க ஓர் ஏவல்பெண்டு அருகே வந்து “தாங்கள் யாரென்று அறியலாமா?” என்றாள். திரௌபதி “பேரரசியைப் பார்க்க சென்றுகொண்டிருக்கிறேன்” என்றாள். பிறிதொருத்தி மேலும் அருகே வந்து “அரசி இப்போது கொற்றவை ஆலயத்தின் பூசனை முடித்து அரண்மனைக்கு திரும்பியிருக்கிறார்கள். அரண்மனைக்குச் சென்று அவர்களை பார்க்கவேண்டும் என்றால் இவளைத் தொடர்ந்து செல்க” என்றாள்.

திரௌபதி அச்சேடியைத் தொடர்ந்து நடந்தபோது இருபுறமும் இருந்த அனைத்து இல்லங்களிலும் உப்பரிகைகளிலும் திண்ணைகளிலும் ஆண்களும் பெண்களும் வந்து குழுமி அவளை பார்த்தனர். அஸ்வகன் அவள் அருகே வந்து தணிகுரலில் “தாங்கள் எங்கும் மறைந்துகொள்ள முடியாது. அனலை உமியால் மூடமுடியாது என்பது அடுமனைச்சூதர் சொல்” என்றான். அவள் புன்னகை புரிந்தாள். “உண்மையில் இந்த அழுக்கு ஒற்றையாடையே தங்களை அரசியென காட்டுகிறது” என்று அஸ்வகன் சொன்னான். திரௌபதி திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.

ஏழு அடுக்குகளாக எழுந்து நூற்றுக்கணக்கான சாளரங்களும் வாயில்களும் நெய்விளக்கொளியில் செவ்வந்தித் துண்டுகள் என இருள்வானில் தெரிந்த அரண்மனைத்தொகையின் முதற்கோட்டை வாயிலில் அவள் சென்று நின்றபோது காவலர் எழுந்துவந்து தலைவணங்கி தாழ்குரலில் அஸ்வகனிடம் உசாவினர். “அரசபணியின் பொருட்டு பேரரசியைப் பார்க்க செல்கிறார்கள்” என்று அவன் சொன்னான். பிறிதொரு வினாவும் இன்றி காவலர்தலைவர் ஒரு காவலனை அழைத்து அவளை பேரரசியிடம் அழைத்துச் செல்லும்படி கேளாச் சொற்களால் ஆணையிட்டார்.

அரண்மனை முற்றத்தில் அந்தணர்களின் மஞ்சல்களும், அரசகுடியினரின் வளைமூங்கில் பல்லக்குகளும், வணிகர்களின் தொங்குபல்லக்குகளும் ஒருபுறம் நின்றன. நடுவே அரசரின் வெள்ளிப்பல்லக்கு சுடரொளிகள் அணிந்து எரிவதுபோல நின்றது. புரவிகள் அவிழ்க்கப்பட்ட தேர்கள் மறுபுறம் நிரைகொண்டிருந்தன. கட்டுத்தறிகளில் வரிசையாகக் கட்டப்பட்ட புரவிகள் வாயில் கட்டப்பட்ட பைகளிலிருந்து கொள்ளு மென்றபடி தலைசிலுப்பி வால் சுழற்றிக்கொண்டிருந்தன. வால் நிழல்கள் தரையில் அலையடித்தன. அரண்மனைக்குள் ஏதோ ஆடல் நிகழ்கிறது என்பது அங்கிருந்து சிந்திவந்த சிற்றிசையிலிருந்து தெரிந்தது.

அரண்மனை முற்றத்தின் வலப்பக்கமாகச் சென்று கூரையிடப்பட்ட இடைநாழி ஒன்றில் நுழைந்து அவர்கள் நடந்தனர். எதிர்கொண்ட சேடிப்பெண்களும் காவலரும் திரௌபதியை நோக்கி வழிவிட்டு விழிதாழ்த்தி நின்றனர். அவள் தலைநிமிர்ந்து விழிதொடாமல் கடந்து சென்றாள். மகளிர் மாளிகையின் முற்றத்தை அடைந்ததும் காவலன் “அரசி மேலே இசைக்கூடத்தில் இருக்கிறார். விறலியரின் இசை நிகழ்கிறது. தாங்கள் எவரென்று தெரிவித்தால் தங்கள் வருகையை நான் அறிவிப்பேன்” என்றான். “வடக்கிலிருந்து சைரந்திரி ஒருத்தி வந்துள்ளேன் என்று சொல்லும்” என்றாள். அவன் ஒருகணம் தயங்கியபின் “அவ்வாறே” என்று சொல்லி உள்ளே நுழைந்தான்.

மகளிர் மாளிகையின் முற்றத்தில் மூன்று களிறுகள் நின்றிருந்தன. நடுவே வெண்படகுகள் போன்ற பெரிய தந்தங்களும் பூத்த கொன்றை மரமென துதிக்கையில் எழுந்து செவிகளில் பரவிய செம்மலர்த் தேமலும் கொண்ட பட்டத்து யானை, மணிகள் அசைவில் ஒலிக்க, இருளுக்குள் இருளசைவென உடல் உலைய நின்றிருந்தது. அதன் துதிக்கை எழுந்து வளைந்து திரௌபதியை மோப்பம் பிடித்து மூச்சு சீறி இருமுறை நெளிந்து மீண்டது. மீண்டும் நீட்டி சுருட்டிய துதிக்கையை தந்தங்களில் இழிந்திறங்க விட்டு வயிறுக்குள் பெருங்கலத்தை இழுத்ததுபோல் ஓர் ஓசையை எழுப்பியது. அது செவி நிலைத்ததும் உப்பரிகையில் இரு சேடியருடன் தோன்றிய கேகயத்து அரசி சுதேஷ்ணை குனிந்து அவளைப் பார்த்து “யாரது?” என்றாள்.

“வடக்கிலிருந்து வருகிறேன். கேகயத்து அரசி சுதேஷ்ணையை பார்க்க” என்றாள் திரௌபதி. தன் பெயரை அவள் நாத்தயங்காமல் சொன்னதைக் கேட்டு அரசி முகம் சுளித்து “எதன் பொருட்டு?” என்றாள். “நான் காவல்பெண்டாகவும் அவைத்தோழியாகவும் அணிசெய்பவளாகவும் பணியாற்றும் சைரந்திரி. கேகயத்தில் தங்களைப்பற்றி கேட்டேன். தங்களைப் பார்க்கும் பொருட்டு இங்கு வந்தேன்” என்றாள்.

சலிப்புடன் கைவீசி “இங்கு உன்னைப்போல் பலர் இருக்கிறார்கள்” என்றாள் சுதேஷ்ணை. திரௌபதி “அரசி, என்னைப்போன்ற பிறிதொருத்தியை நீங்கள் பார்க்கப்போவதில்லை. நான் அரசகுடிப் பிறந்தவள். ஐந்து கந்தர்வர்களை கணவர்களாகப் பெற்றவள். இப்புவியில் நான் ஆற்ற முடியாததென்று எதுவுமில்லை. கண்ணுக்குத் தெரியாத ஆற்றல்களாக என்னைச் சூழ்ந்து அவர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

“என்ன சொல்கிறாய்?” என்றாள் சுதேஷ்ணை. “நோக்குக!” என்றபின் அவள் திரும்பி பட்டத்துயானையை நோக்கி கை நீட்டினாள். அது துதிக்கையைச் சுழற்றி தலைமேல் வைத்து உரக்க சின்னம் விளித்தது. பின்பு கால்களை மடித்து தரையில் படுத்தது. பிற யானைகளையும் நோக்கி அவள் கைநீட்ட அவையும் அவ்வாறே தரையில் படுத்தன. சுதேஷ்ணை திகைப்புடன் “மதங்க நூல் அறிவாயா?” என்றாள். “நான் அறியாத நூலென ஏதுமில்லை” என்றாள் திரௌபதி. பட்டத்துயானையின் கால்மடிப்பில் கால்வைத்து ஏறி அதன் மத்தகத்தில் அமர்ந்தாள். அது அவளுடன் எழ அவள் அதன் மருப்புமுழையில் வலக்கால் எடுத்து வைத்து நின்றாள்.

திரௌபதி விழிகாட்ட அஸ்வகன் யானையின் கால்களை கட்டியிருந்த சங்கிலியை அவிழ்த்தான். அது உப்பரிகை நோக்கி சென்றது. சுதேஷ்ணைக்கு நிகராக தலை எழுந்து தோன்ற சரிந்த ஒற்றைஆடை முனையின் உள்ளிருந்து குழல்கற்றைகள் பொழிந்து புறம் நிறைக்க நின்றாள். சுதேஷ்ணை தன் இருபக்கமும் நின்ற காவல்பெண்டுகளை நோக்கி ஏதோ சொல்ல வாயசைத்தபின் அடைத்த தொண்டையை அசைத்து ஒலி கூட்டி “உள்ளே வருக, தேவி!” என்றாள்.

தொடர்புடைய பதிவுகள்

கடிதங்கள்

$
0
0

nanjil me

அன்புள்ள ஜெ,

நலமா!  நான் உங்களின் ஆரம்ப நிலை வாசகன் ,  நான் உங்களின் வாசகன் ஆவதற்கு மூல காரணம் தங்களின் தனிமனித அறமும் அது சார்ந்து இயங்கும் உங்கள் வாழ்வும் எழுத்தும், ஏனென்றால் கடந்த சில மாதங்களாகவே உங்கள் வலை பக்கத்தை தொடர்ந்து வசிக்கும் ஒரு மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்,காரணம் அணைத்து கட்டுரைகளிலும் வெளிப்படுவது அறம்சார்ந்த உணர்வும் , லட்சியவாத நோக்கும் போலித்தனமற்ற உண்மையும். குறிப்பாக உங்களின் அறம் சிறுகதையில் நீங்கள் முடிவாக வைக்க கூடிய அந்த சொல் “ஆமா அறம்தான். ஆனா அது அவகிட்ட இல்ல இருந்தது “என்று முடித்திருப்பீர்கள் ஆமாம் உண்மைதான் அறம் மேண்மையானதுதான் அனால் அது அனைவரிடமும் இருப்பதில்லை.முடங்கிப்போன இந்த வாழ்வின் மறந்துபோன அறத்தை மட்டும் உங்கள் கதைகள் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. அறம் சார்ந்த சொல்லையும் பொருளையும் நானும் பின் தொடருகிறேன்.மேலும் உங்களின்  வணங்கான், நூறு நாற்காலிகள்,

ஓலைசிலுவை இவை அனைத்தும் லட்சியவாதத்தை விதைக்கிறது.உங்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது, மேலும் வாசிப்பேன்.தங்களின் எழுத்து பனி தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன்,

ந முரளி .

***

அன்புள்ள முரளி,

தொடர்ந்து வாசியுங்கள். என் எழுத்துக்களை வாசிப்பதென்பது என்னுடன் நீண்ட உரையாடல் ஒன்றை தொடங்குவதுதான்.

ஜெ

***

ஜெ அவர்களுக்கு

வணக்கம்..

உங்களுக்கு அஞ்சல் அனுப்பினால், இது பிரசுரத்திற்கு அல்ல என்று ஒரு வரி சேர்க்க வேண்டுமா??

இப்படியா ஒரு வரி கூட மாற்றாமல் அப்படியே போடுவீர்கள்..

குறுந்தொகை உரை கேட்டேன்…

மிக அழகாய் மலர்கள் பற்றி கூறினீர்கள்…

ஒரு புதுமண ஜோடியைப் பார்த்தது பற்றி கூறினீர்களே… என்ன அழகாய், அப்பெண் அவன் மேல் ஒரு சால்வையைப்போல் இருந்தாள் என்றீர்கள்..

குறுந்தொகை படிக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் உரை..

நன்றி

பவித்ரா

***

அன்புள்ள பவித்ரா

பொதுவாக கடிதங்களை ஓர் உரையாடலின் பகுதியாகவே நான் எண்ணுகிறேன். ஆகவே அவை வெளியிடப்படவேண்டாம் என்று சொல்லப்படாவிட்டால் வெளியாகிவிடும்

ஏனென்றால் எழுதுவோர் சிலர். எழுத நினைப்பவர்கள் பலர். எழுதாதவர்கள் கடிதங்களின் தங்கள் குரலை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்

ஜெ

***

வணக்கம்

அவ்வப்போது உங்கள் எழுத்துக்களைப் படிப்பேன்.

ஆதிகேசவப்பெருமாள் தொடங்கி அறத்தைப்பற்றி நீங்கள் எழுதியிருப்பது அருமை.

உங்களைப்போன்ற சிந்தனாவாதிகள் ஆரோக்யத்துடன் பல ஆண்டுகள் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

வாசுதேவன்  எஸ்

***

அன்புள்ள வாசுதேவன்

நன்றி.

எழுத்தினூடாக எதையும் சொல்லவில்லை, தேடுகிறேன் என்றே உணர்கிறேன்

ஜெ

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெளி

$
0
0

kumarak

மழையில் ஒரு காலைநடை சென்று வந்தேன். சற்றுத்தொலைவில் ஓர் உருவம் திடுக்கிடச்செய்தது. குமரகுருபரன். அதே நடை. புன்னகை வேறு. எப்படி விழாமலிருந்தேன் என்பதே ஆச்சரியம். அணுகிவந்தபோது இன்னொருவராக மாறினார். என்னிடம் “பார்வதிபுரத்துக்கு இப்டி போலாம்ல?’

 

புன்னகை வேறு. கண்கள் வேறு. குரலும் வேறு. முற்றிலும் வேறு ஆள்தான். ஆனால் குமரகுருபரன் நெல்லைக்காரர். இப்பகுதியில் பெரும்பாலும் எல்லாம் ஒரே குருதிக்குழுவினர்தான். என்னால் அவர் இரண்டாம் முறை கேட்டபின் தலையசைக்க மட்டுமே முடிந்தது

 

அவர் நடந்து அகன்று செல்வதைக் கண்டேன். அதே நடை. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் குமரகுருபரன். தொலைவில் மீண்டும் நெஞ்சு அதிர்ந்தது. அவரேதான்

 

வெளிதான் விளையாடுகிறதுபோல

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இந்த டீ சூடாறாதிருக்கட்டும்..

$
0
0

hampi

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.

நேற்று ஹம்பியில் உடைந்த கோபுரத்தை மழைமேகங்களின் பின்னனியில் புகைபடம் எடுக்க என் கேமராவில் நோக்கினேன். ஒரு கணம்தான் உடல் அதிர்ந்தது. ஒரு நிலைகுலைவு. அந்த அச்சம் ஏன் என தெரியவில்லை. கோபுரம் பின்னோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. அதற்குள் தர்க்க மனம் விழித்துகொண்டது. மழைமேகம் மெதுவாக வானில் ஊர்ந்துகொண்டிருந்தது. தானாக மனதில் தேவதேவன் அவர்களின் இக்கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.

 

deva

”அசையும்போது தோணி

அசையாதபோதே தீவு

தோணிக்கும் தீவுக்குமிடையே

மின்னற் பொழுதே தூரம்”

இந்த அசைதல் அகத்தில் நிகழ்வதல்லவா. இது உள்ளுணர்வுக்கும், தர்க்கத்திற்கும் உள்ள தூரம்தானே. இவ்வரிகள் இரண்டு நாட்களாக ஒரு நிலைகுலைவை ஏற்படுத்திவிட்டது. அந்த அச்சம் ஏன், நான் அறிந்த விதிகள் எல்லாம் பொய்த்துவிடுகின்றன என்பதாலா. அதனாலேயே அது நிலையற்றதா. ஆனால் இக்கவிதையில் ”அசையாதபோதே தீவு” என அவர் அப்புறமிருந்தே கூறுகிறார். சாதாரணமாக தோன்றிய வரிகள். ஆனால் ஸ்திரமற்ற உலகில், கனவில், கற்பனையில், உள்ளுணர்வை மட்டுமே நம்பியிருக்கிறார். அதுதானே கவிஞனின் இடம். படைப்பு மனம் எப்போதும் அசைந்து கொண்டிருபவர்கள்தான். கான்கிரீட் தரையில் வாழும் என் போன்றவர்களுக்கு அது மிகவும் தூரம்தான். அப்படியே வாய்த்தாலும் அச்சத்துடன் ஓடி வந்து “அப்பாடா அது உண்மையல்ல” என நம்பிக்கையுடன் இருப்பதுதான். உங்கள் வாரிகுழி கதையில் வரும் உண்ணிலட்சுமி யானை போல. அல்லது காலடியில் சுழன்று ஒடும் காட்டாற்றை கடக்க பயந்து இறக்கும் கீரகாதனைபோல (காடு நாவலில்). அசைவற்றது மரணம்தான், படைப்பின் மறுபக்கம்.

உச்சவழு போன்ற தருணம் அமைந்து, உள்ளுணர்வின் தடத்தை பின்தொடர, அதில் வாழ கொஞ்சம் “பைத்தியம் தேவைதான்”. அதில் வாழ தெய்வத்தை வேண்டிகொள்கிறேன்.

 

தெய்வமே !

இந்த டீ

சூடாறாதிருக்கட்டும்..

சுவை குன்றாதிருக்கட்டும்

 

அன்புடன்

ஆனந்தன்

புனே

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

உதயகுமாரின் பிராமண எதிர்ப்பு

$
0
0

uthaya

 

ஜெ,

 

எஸ்.பி.உதயகுமாரின் இக்கருத்துக்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

https://m.facebook.com/story.php?story_fbid=1422050687818637&id=100000411583309

 

ராம்

 

அன்புள்ள ராம்,

 

ரத்தினச்சுருக்கமாகச் சொல்லப்போனால் அசட்டுத்தனம். அரசியல்ரீதியாகச் சொல்லப்போனால் முதிராநாஸிஸம்.

 

ஆனால் இங்கே இந்தமாதிரி எதிர்ப்பரசியல் பேசப்போகிறவர்கள் மிகப்பெரும்பாலானவர்கள் இந்த குட்டையில்தான் சென்று விழுகிறார்கள். இன்னொரு உதாரணம் மறைந்த நம்மாழ்வார்.சிறுவயதிலேயே மார்க்ஸியம் போன்றவற்றுக்குள் சென்றவர்களுக்கு இந்த மனச்சிக்கல் இருப்பதில்லை

 

இது ஏன் என்பதை நானும் பலவாறாக யோசித்ததுண்டு.  இவர்கள் அனைவருக்கும் குடும்பப்பின்னணியில் இருந்து பெரியாரியம் சார்ந்த வெறுப்பரசியல்தான் ஆரம்பத்தில் கிடைக்கிறது. அறிவியலோ சூழியலோ பின்னர் கற்றுக்கொள்வதுதான். அந்த மேற்கட்டுமானம்  பலவீனமான அடித்தளம் மீது நின்றுகொண்டிருக்கிறது. கொஞ்சம் ஆட்டம் கண்டால் மேலே உள்ள சுமையை உதிர்த்துவிட்டு அடித்தளம் மட்டும் எஞ்சுகிறது

 

முப்பதாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. எஸ்.வி.ராஜதுரை அன்று சுந்தர ராமசாமியின் நண்பர்.தீவிர இடதுசாரி. அவர் சுந்தர ராமசாமிக்கு எழுதிய உணர்ச்சிக்கொந்தளிப்பான கடிதங்களை நான் வாசித்ததுண்டு

 

திடீரென சோவியத் ருஷ்யா உடைந்தது. எஸ்.வி.ராஜதுரை நேராக பார்ப்பன எதிர்ப்பு, பெரியாரியம் என சென்று அமர்ந்தார். சுந்தர ராமசாமி சொன்னார். “தலைக்கு அடி பட்டால் சிலர் சட்டென்று ஆறுவயதிலோ ஏழுவயதிலோ திரும்பிச் சென்று நின்றுவிடுவார்கள். உண்மையில் அவர்களின் அறிவுவளர்ச்சியும் ஆன்மிக வளர்ச்சியும் அங்கேதான் நின்றுகொண்டிருக்கின்றன. மிச்சமெல்லாம் சுமந்துகொண்டிருந்ததுதான். பாவம் எஸ்.வி,ஆர்”

 

உதயகுமாருக்கும் தலையில் அடிபட்டுவிட்டது. அமெரிக்காவின் பல்கலைகளில் பாடம்நடத்தும் சமூகவியலாளரின் இந்த ஒரு சின்னக்குறிப்பிலேயே உள்ள தகவல்பிழைகள் ! காயஸ்தர்களும், சீக்கியர்களுமெல்லாம் பிராமணர்களாக ஆகும் இந்த மாய வித்தையின் அடிப்படையில் அவருடைய நண்பர் லட்சுமி மணிவண்ணனையும் என் நண்பர் அனீஷ்கிருஷ்ணன் நாயரையும் பிராமணராக ஆக்கினால் வேண்டிய செலவுகளை அவர்கள் செய்வார்கள் என நான் உறுதியளிக்கிறேன்.

 

ஆனால் இது ஓர் அப்பாவித்தனமான அரசியல் அல்ல. நுட்பமாகத்  திட்டமிடப்பட்டது. ஆழ்மனதால் திட்டமிடப்பட்டதனாலேயே இதன் கூர்மை மிக அதிகம். பிராமண வெறுப்பு என்பது அப்பட்டமான ஒரே நோக்கம் கொண்டது – வேறெந்த நோக்கமும் இல்லாதது. சாதிய அமைப்பின் கடந்தகாலக் கொடுமைகளுக்கான பொறுப்பை பிராமணர் மேல் சுமத்திவிட்டு தாங்கள் கழன்றுகொள்வது. இது மீனவர்கள், தலித்துக்கள் உட்பட கடந்தகாலத்தில் உதயகுமாரின் சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் மேல் அவர் தலைமைகொள்வதற்கான நியாயப்படுத்தலாக ஆகிறது.

 

உதயகுமார் சார்ந்த நாடார் சாதியும் சென்றகாலத்தில் இங்கே எல்லாவகையான சாதியக்கொடுமைகளையும் அவர்களைவிடக் கீழே இருந்த சாதியினருக்குச் செய்தவர்களே. இன்றும் அவர்களின் ‘அக்ரஹாரங்களில்’ தலித்துக்கள் குடியேறிவிடமுடியாது.  அதற்கு எதிராக  உதயகுமார் குரலெழுப்பிவிடமுடியாது.

 

நேர்மையான முறையில் தன் குலத்தின், குடியின் சென்றகாலப் பிழைகளுக்கு தான் பொறுப்பேற்பவர், தன்னை அதிலிருந்து விடுவித்து மேம்படுத்திக்கொள்ள விழைபவர் இந்தவகையான வெறுப்புக்கூச்சல்களை எழுப்ப மாட்டார். உதயகுமார் தெரிந்தெடுத்திருப்பது தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கும் குறுக்குவழி

 

அவருடைய தனிப்பட்ட நேர்மை, வன்முறை அற்ற வழியில் அவர் முன்னெடுக்கும் சூழியல்போர்கள் மீதான பெருமதிப்புடன் இதைச் சொல்கிறேன். எதிர்மறைமனநிலைகள் கொண்ட அரசியல்நோக்கு இதேபோல எளிய வெறுப்புகளை நோக்கியே கொண்டுசெல்லும். வெறுப்பின் விளைவு தன்னை மறுபரிசீலனை செய்யமுடியாதவராக ஆதல்தான்

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 37

$
0
0

36. புற்றமை நாகம்

flowerஅணிச்சேடியர் இருவரும் சற்று விலகி தலைவணங்கி முடிந்துவிட்டதென்று அறிவிக்க சுதேஷ்ணை மீண்டும் ஒரு முறை ஆடியில் தன்னை பார்த்துவிட்டு எழுந்தாள். அவளுக்கு வலப்பக்கமாக நின்றிருந்த திரௌபதி “சற்று பொறுங்கள்!” என்று அவள் ஆடையின் மடிப்பொன்றை சீரமைக்கும்பொருட்டு சற்றே குனிந்து கையெடுத்தாள். “வேண்டாம்” என்று அவளை விலக்கிய சுதேஷ்ணை சுட்டுவிரலைக்காட்டி அணிச்சேடியிடம் அந்த மடிப்பை சீரமைக்க ஆணையிட்டாள். அவள் வந்து மண்டியிட்டு அந்தப் பனையோலைக்குருத்துபோன்ற மடிப்பை அடுக்கி அதில் சிறிய ஊசியொன்றை குத்தினாள்.

அணிச்சேடியர் செல்லலாம் என்று கையசைத்து ஆணையிட்டு அவர்கள் சென்று கதவு மூடுவதற்காக காத்து பின் திரும்பி திரௌபதியிடம் “நீ இத்தொழில்களை செய்யலாகாது. எனக்கு அணுக்கத் தோழியென்றும் காவற்பெண்டு என்று மட்டும் திகழ்ந்தால் போதும். இவர்கள் எவரும் தங்களுக்கு நிகரானவள் என்று உன்னை ஒருபோதும் எண்ணிவிடலாகாது” என்றாள் சுதேஷ்ணை. திரௌபதி புன்னகைத்து “ஆம், ஆனால் ஒரு குறைகாணுமிடத்து கை நீளாமல் இருப்பதில்லை. பிறிதொருவர் அணிபூணுகையில் நோக்கி நிற்கும் நாம் நம்மை சேடியர் என்றோ ஏவற்பெண்டென்றோ உணர்வதில்லை. ஓவியமொன்றை வரைந்து குறைதீர்க்கும் உணர்வுதான் ஏற்படுகிறது” என்றாள்.

சுதேஷ்ணை அவள் சொன்னதை புரிந்துகொள்ளாமல் ஆமென்பதுபோல் தலையசைத்து பிறிதெங்கோ சென்ற தன் எண்ணங்களை சற்றுநேரம் தொடர்ந்தபின் “உண்மையில் இன்று அவை நுழையவே எனக்கு உளம் கூடவில்லை. இந்த அவையமர்தல் சொல்லுசாவுவதெல்லாம் வெறும் அவல நடிப்புகளன்றி பிறிதொன்றுமில்லை. இங்கு என்ன நிகழ்கிறது என்று இதற்குள் நீயே உய்த்துணர்ந்திருப்பாய்” என்றாள். திரௌபதி ஆமென்றோ இல்லையென்றோ சொல்லவில்லை.

“நீ என்ன அறிந்தாய் என்று தெரியவில்லை. நானே கூறிவிடுகிறேன். நான் கேகயத்து இளவரசி. தொல்குடி ஷத்ரியப்பெண். கீசகன் என் உடன் பிறந்தான் ஆயினும் ஷத்ரியனோ கேகயத்தானோ அல்ல. அவன் சர்மாவதிக்கரையில் அமைந்த மச்சர்நாட்டில் ஓர் அன்னைக்கு பிறந்தவன். உண்மையில் அவன் அன்னை எந்த குலத்தைச் சார்ந்தவள் என்பதே உறுதியற்றுதான் இருக்கிறது. அவள் நிஷாதர்களுடன் தொடர்புடைய மச்சர் குலத்தைச் சார்ந்தவளென்றும் இந்த விராட நிஷாத கூட்டமைப்பின் முதற்குடி அவர்களே என்றும் அவைச்சூதர்களும் குடிமுறை நூல்களை ஏற்று புலவர்களும் சொல்லிச் சொல்லி நிறுவிவிட்டிருக்கின்றனர். பிறிதொன்றை இனி சொல்லவோ நூல்பொறிக்கவோ எவராலும் இயலாது.”

“எந்தைக்கு மைந்தர் இல்லாதிருந்த காலம் அது. நீர்முதலைகளை வேட்டையாடும்பொருட்டு கங்கை வழியாக சர்மாவதிக்குச் சென்றபோது மச்சர்களின் சிற்றூரொன்றில் அவர் தங்கினார் என்றும் அங்கு கீசகனின் அன்னையை மணந்துகொண்டாரென்றும் சொல்லப்படுகிறது. பின்னர்தான் அவர் காசிநாட்டு இளவரசி கிருஷையை மணந்து என் அடுத்த இளையவனை பெற்றார். இன்று கேகய நாட்டை ஆள்பவன் அவனே” என்றாள்.

“பிறந்தபோது அவனுக்கு சுப்ரதன் என்று பெயர்திருஷ்டகேது என்ற பெயருடன் இன்று அவன் கேகயத்தை ஆட்சி செய்கிறான்அவனுக்கும் அரசி சுருதகீர்த்திக்கும் மகளாகப் பிறந்தவளே இளைய யாதவனால் காந்தர்வமணம் கொள்ளப்பட்ட பத்ரை. கைகேயி என்ற பெயரில் இன்று அவள் துவாரகையில் அவைவீற்றிருக்கிறாள்”என்றாள் சுதேஷ்ணை.

அப்போதே கேகய மணிமுடிக்காக கீசகனின் தரப்பில் பேச மச்சகுடிமூத்தார் எந்தையை சந்தித்தனர். மச்சர் குலத்து அரசரின் மகள் அவன் அன்னை என்றும், கேகய முடி அவனுக்களிக்கப்படுமென்றால் நிஷதகுடிகளின் ஒருமித்த ஆதரவு கேகயத்துக்கு இருக்குமென்றும் கோசலமும் மகதமும் பாஞ்சாலமும் அளிக்கும் அனைத்து அச்சுறுத்தல்களையும் வென்று கேகயம் பெருநாடென எழமுடியுமென்றும் சொன்னார்கள்.”

எந்தை சற்றே ஏளனத்துடன் பேசி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டார். அவையில் அன்று நான் இருந்தேன். மச்சர்களின் குலத்தலைவர்கள் பேசி முடித்ததும் எந்தை பெருந்துயர் கொண்டவர்போல கைகளைக்கூப்பி வேதம் எழுந்த முன்னாளில் நுண்சொல் தொல்முனிவர் ஆரியவர்த்தத்தை பதினாறு ஜனபதங்களாக பிரித்ததைப்பற்றி சொல்லத் தொடங்கினார். “அப்பதினாறில் ஒன்றென இருப்பதின் துயரென்ன என்றால் நூறு கட்டுத்தறிகளில் நான்குபக்கமும் இழுத்துக்கட்டப்பட்ட களிறு போன்றமைதல். நூல்நெறிகளும் குலநெறிகளும் குடிமுறைமைகளும் அவர்களது ஒவ்வொரு சொல்லையும் செயலையும் கட்டுப்படுத்துகின்றன. மச்சர்களோ பறவைகளைப்போல் விட்டு விடுதலையானவர்கள். அவர்கள் எக்கிளையிலும் அமரலாம், எவ்வுணவையும் உண்ணலாம், எதுவும் தீட்டு அல்ல, எதனாலும் அவர்கள் தூய்மைகெடுவதில்லை” என்றார்.

“அவர் தங்களை ஏளனம் செய்கிறார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தங்கள் நாடுகளுக்குத் திரும்பி அச்சொற்களை எண்ணத்தில் மீட்டுகையிலே அதிலிருந்த ஆணவத்தையும் நஞ்சையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியும்” கசப்புடன் கையசைத்து சுதேஷ்ணை சொன்னாள். “அன்று அவர் சொன்னதில் ஓர் உண்மை உள்ளது. பதினாறு தொல்குலங்களில் ஒன்றாக பூர்வஷத்ரியராக இருப்பதென்பது பெரிய சிறை. மீள மீளச் சொல்லப்படும் சொற்கள் பொருளிழந்து குருட்டுவிசை கொண்டு அவர்களிடையே வாழ்ந்தன.”

நாள்பட்ட அனைத்தும் நஞ்சே என்று மருத்துவர் சொல்வது போல. எங்கள் அவையில் அமர்ந்து அங்கு நிகழும் சொல்லாடல்களை செவி கூர்ந்திருக்கிறேன். சொல்லிச் சொல்லி தீட்டப்பட்ட முறைமைக் கூற்றுக்கள். முள்முனையை முள்முனையால் தொடும் நுண்மைகள். பூமுள்ளெனப் பதிந்து நஞ்சு ஊறச்செய்யும் வஞ்சங்கள். இன்று எண்ணுகையில் அங்கு அமர்ந்து நான் மகிழ்ந்த ஒவ்வொன்றுக்காகவும் நாணுகிறேன்.

எந்தை நன்கறிந்திருந்தார், தங்கள் அரசுக்கு எதிராக திரும்புமென்று. மச்சர்கள் தன் நாட்டை தாக்கினால் உடனெழுந்த பதினாறு ஜனபதங்களில் எந்த அரசரும் தனக்கென ஒரு வாள் முனையைக்கூட தூக்கமாட்டாரென்று. ஆயிரம் ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் முற்றழிப்பதைப்பற்றி எண்ணி கனவு கண்டு வாழ்பவர்கள் அவர்கள். அவ்வாறே நிகழ்ந்தது. கோசலத்தின் எல்லைகளை மச்சர்கள் தாக்கத்தொடங்கினர். கோசலத்தின் படகுகள் எதுவும் கங்கையில் செல்ல முடியாதாயிற்று. வணிகர்கள் வரவு நின்றது. ஒவ்வொரு நாளுமென நாட்டின் செல்வம் மறைந்துகொண்டிருந்தது.

ஆயினும் பதினாறில் ஒரு குடி. நாள்தோறுமென நாடெங்கும் நிகழும் வேள்விகள் எதிலும் ஒரு கிண்ணம் நெய்யைக்கூட எங்களால் குறைக்க முடியவில்லை. அரசவிருந்துகளில் பொற்கோப்பைகளில் யவனமது ஒழியாதிருக்க வேண்டும். எத்தனை எளியதென்றாலும் எத்தனை நூறுமுறை சொல்லப்பட்டதென்றாலும் பொய்ப்புகழ்மொழியொன்றைச் சொல்லி அவையிலெழுந்து நிற்கும் புலவருக்கு பத்து விரலும் பட பொன்னள்ளிக் கொடுத்தாகவேண்டும். கண்ணெதிரிலேயே ஓட்டைக்கலத்தில் நீர் என என் நகர் ஒழிவதைக்கண்டேன்.

அப்போதுதான் இங்கு விராடபுரியிலிருந்து இளவரசர் தீர்க்கபாகுவுக்காக மணத்தூது வந்தது. அவர் விராடநிஷதசம்யோகத்தின் அடுத்த மகாவிராடராக பட்டம் கட்டப்பட்டிருந்தார். இவர்களின் தூதன் கலிங்கத்திற்கும் வங்கத்திற்கும் சேதிக்கும் அங்கத்திற்குமெல்லாம் சென்றிருக்கிறான். செல்லுமிடங்களிலெல்லாம் ஏளனமும் சிறுமையுமே அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அச்செய்தி ஒவ்வொரு நாளும் சூதர் நாவுக்கு மகற்கொடை மறுத்த மன்னர்களாலேயே அளிக்கப்பட்டது. அவர்கள் மகற்கொடை மறுப்பதன் வழியாகயே தங்கள் குலமேன்மையை நிலை நிறுத்துபவர்கள். விராட மன்னர் சுபாகுவோ சலிக்காது மணத்தூது அனுப்பிக்கொண்டிருந்தார்.

நிஷாதர்களுக்குத் தெரியும் ஷத்ரியர் என்று இக்கங்கைவெளி முழுக்க வென்றிருக்கும் அரசர்களில் பலர் வெளியேற வழியின்றி கல்லிடுக்குகளில் மாட்டிக்கொண்ட தேரை போன்று வாழ்பவர்கள் என்று. பல அரண்மனைகளில் ஒருமாதம் மழை நின்றுபெய்தால் இடும்பை வந்து அமையும் என்று. ஒருவர் துணிந்தால்கூட விராடபுரி தேடிக்கொண்டிருக்கும் ஷத்ரியக்குருதி கிடைக்கும் என்றும் அது உறுதியாகநிகழும் என்றும் தெளிந்திருந்தனர்.

எங்கள் அரசவைக்கு நிஷதமன்னர் தீர்க்கபாகுவின் மணச்செய்தி வந்திருப்பதை முதல்நாள்தான் நான் அறிந்தேன். மறுநாள் அவையில் அத்தூதை அறிவிக்கும்படி எந்தை விராடரின் தூதரிடம் சொல்லியிருந்தார். ஏனெனில் அவையில் அதை உரிய ஏளனத்துடன் மறுக்க அவர் விழைந்தார். அதற்குரிய நுண்ணிய நஞ்சு நிரம்பிய சொற்களை அவர் கவிஞர்களோடு அமர்ந்து யாத்து உளம் கொண்டிருந்தார். ஆனால் நான் முடிவு செய்திருந்தேன். அவையில் மணத்தூதை முதலமைச்சர் ஆபர் உரைத்து கைகூப்பி அமர்ந்ததுமே நான் எழுந்து விராட இளவரசரை நான் முன்னரே என் கணவரென உளம் கொண்டிருக்கிறேன் என்றேன். எனது வேண்டுதலை காற்றுகளை ஆளும் பன்னிரு மாருதர்களுக்கும் நான் உரைத்ததனால் அதுசென்று விராட இளவரசரின் செவியில் விழுந்தது என்றேன். அதனாலே இந்த மணத்தூது அமைந்தது என்றும் கேகயத்தின் நல்லூழ் அது என்றும் சொன்னேன்.

எந்தை அரியணையில் கைதளர்ந்து அமர்ந்துவிட்டார். கேகயத்தின் பேரவை சொல் திகைத்து வெறும் விழிகளென மாறி என்னைச் சூழ்ந்திருந்தது. முகம் மலர்ந்த ஆபர் எழுந்து கைகூப்பி “விராடநகரியின் பேரரசியாக தாங்கள் அமைவது எங்கள் நல்லூழ். இது இவ்வாறே நிகழவேண்டுமென்று தெய்வங்கள் வகுத்திருக்கின்றன போலும்” என்றார். எந்தை மணத்தூதை மறுக்க அப்போதும் ஓரு வாய்ப்பிருந்தது. கன்யாசுல்கம் கேட்டு பெற்றுக்கொள்வது அவருடைய உரிமை. கொடுக்கவே முடியாத கன்யாசுல்கமொன்றை கேட்கலாம். அதைச் சொல்ல எங்கள் அமைச்சர் ஸ்மிதர் எழுந்து எந்தையை நோக்கி வருவதை ஆபர் கண்டார். எந்தையோ அவையோ மறுசொல் எடுப்பதற்குள் முன்னால் எட்டுவைத்து அங்கிருந்த மங்கலத்தாலத்தில் இருந்த மஞ்சளரிசியை எடுத்து மணமகளை வாழ்த்துவதற்குரிய வேதச்சொல்லை உரைத்தபடி என் தலையில் இட்டார்.

“நிஷாதகுலத்து சபரகுடிப்பிறந்த சுபாகுவின் மைந்தர் தீர்க்கபாகுவின் மணமகளே, அவளைச் சூழ்ந்திருக்கும் கந்தர்வர்களே, தேவர்களே உங்களை வாழ்த்துகிறேன்! இக்குலமகள் அவள் கணவனின் கருவைத் தாங்கி மாவீரகளைப் பெறுக! மாதரசியரை அடைக! அவர்கள் பேரரசர்களாகவும் அரசியராகவும் அரியணை அமர்க! அவர்களின் கொடிவழி நீள்க! ஆம் அவ்வாறே ஆகுக! வேதம்திகழும் அந்தணனின் இச்சொல் என்றும் அழியாது திகழ்க!” என எங்கள் இருவரையும் வாழ்த்தினார். பாரதவர்ஷத்தில் எங்கும் அந்தணர்சொல் பொய்யென்றாகக் கூடாதென்பது தொல்நெறி. ஸ்மிதர் மஞ்சளரிசி எடுத்து என் மேல் வீசி இருகைகளையும் தூக்கி “பொய்யாமொழி அந்தணர்சொல் திகழ்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

எந்தைக்கு அதன்பின் வேறு வழி ஏதுமில்லை. உதடுகளை இழுத்து நீட்டி முகத்தை மலரச்செய்து எழுந்து கைகூப்பி “ஆம், இது எங்கள் குலதெய்வத்தின் ஆணை என்றே கொள்கிறோம். இந்த மண உறவால் இரு நாடுகளும் பகை கடந்து வளம் கொழிக்கட்டும். இருகுடிக்குருதிகளின் கலப்பால் மைந்தர் பிறந்து கொடிவழிகள் பெருகட்டும்” என்றார். அவை எழுந்து கைகளைத்தூக்கி வாழ்த்துரைத்தது. அத்தனைபேரும் உளமின்றி ஒற்றை நடிப்பை வழங்குவதைக் கண்டு என்னுள் கசப்புடன் புன்னகைத்துக்கொண்டேன். உண்மையில் முதற்கணத்தில் எழுந்த திகைப்புக்குப்பின் ஒவ்வொருவரும் உள்ளூர ஆறுதல் கொள்வதையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். இனி மச்சர்களை வெல்ல முடியும். கேகயத்தின் களஞ்சியங்களில் நெல்லும் கருவூலங்களில் பொன்னும் வரத்தொடங்கும்.

அவர்கள் ஒவ்வொருவரும் கையொழியாது வாழக்கற்றவர்கள். தொல்பெருமை சொல்லி சோம்பி அமர மட்டுமே அறிந்தவர்கள். இல்லையென்று சென்று நிற்பதை தங்கள் மூதாதையருக்கான இழிவென்று எண்ணுபவர்கள். கேகயத்து அந்தணர் பாரதவர்ஷத்தின் மூத்த குருமரபினர். முதல்குருமரபினர் என்று அவர்கள் சொல்லிக்கொண்டனர். தொல்வேதம் மூன்றையும் தாங்களே அமர்ந்தெழுதியவர்கள்போல் தோற்றமளிப்பவர்கள். பதிபெயர்ந்து கிளம்பிச் செல்வார்கள் என்றால் பிற நாடுகளில் அங்குள்ள அந்தணர்களுக்கு இரண்டாமிடத்தில் சென்று அமைய வேண்டியிருக்கும். முதற்பெருமை மீளாது.

அந்தணர் தங்கள் உவகையை வெளிக்காட்டாமல் இறுகிய நெஞ்சுடன் அவ்வாழ்த்தை ஏற்றுரைப்பதுபோல் நடித்தனர். ஆனால் அவர்களின் உடலில் இருந்தே அவ்வுவகையை உணர்ந்த மற்றகுடிகள் நிறைவுகொண்டு தாங்களும் எழுந்து எங்களை வாழ்த்தின. அவை முறைமைகள் ஒவ்வொன்றாக முடிந்து ஓசையில்லாத நடையுடன் கலைந்து செல்கையில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டபோது அவ்விழிகளில் தெரிந்த மெய்யான களிப்பை தொலைவிலிருந்து நிறைவுடனும் அறியாச் சிறு கசப்புடனும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

flowerவிராடபுரியின் அரசியாக வந்து அமர்வதுவரை இங்குள்ள அரசியல் என்னவென்றே எனக்கு தெரிந்திருக்கவில்லை. மாமன்னர் நளனுக்குப்பின் சிதறிப்போன நிஷதகுடிகளின் பெருங்கூட்டே இது, இரண்டாம் கீசகரால் இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த விராடநிஷாதசம்யோகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரே அரசர் எனப்படுகிறார். கோல் கைக்கொண்டு முடிசூடி அரியணை அமர்ந்துகொள்ள அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அவரது ஆணைகளை பிறர் ஏற்க வேண்டுமென்ற எந்த மாறாநெறியும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான ஆணைகள் ஏற்கப்படுவதில்லை. ஆங்காங்கே அக்குடிகளின் தலைவராலும் அவர்களை ஆளும் மூத்தோரவையாலும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

முதலாம் மகாகீசகர் நிஷதகுடிகளை ஒற்றைப் படையென திரட்டுவதற்குரிய நெறிமுறைகளை வகுத்திருந்தார். அதில் ஒவ்வொருவருக்கும் என்னென்ன பணி என்றும் உரிமை என்றும் நிறுவப்பட்டிருந்தது. அதை அக்குடிகளின் தெய்வங்களே வெறியாட்டென பூசகரில் எழுந்து ஆணையிட்டிருந்தன. எதன்பொருட்டும் அஞ்சும் வழக்கமில்லாத தொல்குடிகள் இவர்கள். இவர்களின் புரவித்தேர்ச்சி நிகரற்றது. ஆகவே நிஷதர்கள் போர்முனைகளில் எப்போதும் வெற்றிகொள்பவராக இருந்தார்கள். சூழ்ந்திருந்த ஷத்ரிய அரசர்கள் அனைவரும் இவர்களை அஞ்சுகின்றனர். ஆனால் வெளியே இருந்து நோக்குபவர்கள் காணும் ஒற்றைப் பெரும்கோட்டை அல்ல இந்நகரென்று உள்ளே நுழைந்த சில நாட்களிலேயே எவரும் அறியலாம்.

அரசர் சுபாகு நோயுற்று படுக்கையில் இருந்தமையால் என்னை மணந்த அன்றே தீர்க்கபாகு விராடபுரியின் அரசர் என முடிசூடினார். மூதரசர் சிலநாட்களிலேயே இறந்தார். அவருடைய அரசியென்று அரியணையில் அமர்ந்து நான் ஓர் ஆணையிட்டால் மறுநாள் பிறிதொரு எளிய குடித்தலைவி இடும் ஆணை அதை மறுக்கமுடியும் என அறிந்தேன். நானும் ஓர் எளிய நிஷத குலத்தலைவி மட்டுமே என்று புரிந்துகொண்டேன். விராடநிஷதக் கூட்டின் பெரிய குலம் சபரர்கள். ஆகவே தீர்க்கபாகு அரசரானார். குடிக்கூட்டம் நினைத்தால் எப்போது வேண்டுமென்றாலும் அவரை விலக்கி பிறிதொருவரை அரசர் என்றாக்க முடியும். அன்று நான் உத்தரனை கருவுற்றிருந்தேன். ஆனால் என் வயிற்றில் பிறக்கும் அம்மைந்தன் அரசனாவான் என்பதற்கு எந்த உறுதியுமில்லை. அதை எண்ணி நான் சில அரசியல்சூழ்ச்சிகளை வகுக்கலானேன்.

அந்நாளில் என் இளையோனாகிய கீசகன் அவன் பிறந்த மச்சர்குடியை ஒரு சிறு தனிநாடு என நிலம்வளைத்து நகர் அமைத்து உருவாக்கிக்கொண்டிருந்தான். மச்சர் குடிகள் எழுவர் அவன் தலைமையில் ஒன்றாயினர். கங்கையில் செல்லும் கலங்களை மறித்து சுங்கம் கொள்ளத்தொடங்கினர். உண்மையில் நீர்க்கொள்ளையர்களாகவே அவர்கள் அங்கு இருந்தனர். மகதமோ காசியோ அஸ்தினபுரியோ அவனை தனித்து அறிந்து முற்றொழிக்க வேண்டுமென்று எண்ணும் தருணம் வரைதான் அவன் அங்கு திகழ முடியும் என்று கீசகன் அறிந்திருந்தான். மகதப்பேரரசர் ஜராசந்தரின் ஒரு படகுப்படை போதும் மச்சர் குலத்தையே அழித்து அவன் தலையை வெட்டிக்கொண்டு செல்வதற்கு.

அவர்களின் படை எழுவதற்கு முன்னரே போதிய செல்வம் சேர்த்து நகரொன்றை அமைத்து சூழ்ந்து கோட்டையையும் கட்டிவிடவேண்டுமென்று அவன் எண்ணினான். அதைவெல்ல படையிழப்பு தேவைப்படும் என்றால் ஷத்ரியமன்னர்கள் தயங்குவார்கள். மகதத்திற்கோ காசிக்கோ கப்பம் கொடுத்து தனிக்கோலையும் முடியையும் பெற்றுவிட்டால் பிற மச்சநாடுகளை வென்று மச்சர்கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கமுடியும். அவன் உள்ளத்திலிருந்தவர் விராடநிஷதக் கூட்டமைப்பை உருவாக்கிய இரண்டாவது மகாகீசகர். ஆனால் அதற்கு அவன் கொள்ளையடித்தாக வேண்டியிருந்தது. கொள்ளையடிக்குந்தோறும் மகதத்தின் வாள் அவனை கண்ணுக்குத்தெரியாமல் அணுகியது.

அந்த இக்கட்டுநிலையில் நான் அவனை அழைத்துக்கொண்டால் அவனுக்கு வேறுவழியில்லை என கணித்தேன். அவன் எனக்கு படைக்கலமாக இருப்பானென்று எண்ணினேன். என் தூதர்களை அனுப்பி அவனை வரச்சொல்லி இந்நகருக்கு வெளியே சோலையொன்றில் நிஷதகுடிகள் எவரும் அறியாமல் சந்தித்தேன். தன்னை விராட நாட்டின் முதற்படைத்தலைவனாக ஆக்கவேண்டும் என்று அவன் கோரினான். எந்நிலையிலும் எனக்கோ மைந்தருக்கோ மாறுகொள்வதில்லை என்று வாள்தொட்டு ஆணையிட்டான்.

சிலநாட்களுக்குப் பின் எனக்கு உத்தரன் பிறந்தான். கேகயத்தில் இருந்து என் இளையோன் சத்ருக்னன் பரிசில்களுடன் அணியூர்வலமாக விராடபுரிக்கு வந்து என்னை வாழ்த்தினான். அதை வெல்லும் வரிசைகளும் பரிசில்களுமாக கீசகன் இந்நகருக்கு வந்தான். விராடருக்கு அவன் அளித்த பரிசில்களும் அவர் முன் வாள்தாழ்த்தி பணிந்து நின்றதும் அவரை மகிழ வைத்தது. அவனுடைய பெருந்தோள்களைக் கண்டு நிஷாதர்கள் விழிகளுக்கு அப்பால் அஞ்சுவதை நான் கண்டேன். அவனை என் இளையோனாக இங்கேயே சிலநாட்கள் தங்க வைத்தேன்.

அப்போது தெற்கே வாகாடக குலம் எங்களுக்கு எதிராக கிளர்ந்திருந்தது. ஒரு படைநீக்கம் நிகழவிருந்தது. அதற்கு உதவும்படி ஆணையிட்டேன். நிஷாதர்களுக்குரிய படைக்கலங்களை கலிங்கத்திலிருந்து கொண்டுவரும் பணியை அவனிடம் அளித்தேன். நிஷாதர்களுக்கு பொருட்களை வாங்கவோ விலைபேசவோ தெரியாதென்பதனால் மூன்றில் ஒன்றே தேறும் என்ற நிலையே இங்கிருந்தது. கீசகன் அதை மிகத்திறமையாக செய்தான். அவன் தெரிவுசெய்த படைக்கலங்களில் ஒன்றுகூட பழுதென்றிருக்கவில்லை. அவன் அளித்த பணத்திற்கு நிஷாதர்கள் எவரும் அவற்றை பெற்றிருக்கமுடியாது.

சதகர்ணிகளின் உடல் சிதைந்த உதிரி அரசுகளாகத் திகழ்ந்த வாகடர்களும் பல்லவர்களும் இணைந்து படைதிரட்டினர். அவர்களுக்கு அமைந்த ராஜமகேந்திரபுரித் துறைநகரமே அவர்களை ஆற்றல்கொண்டவர்களாக ஆக்கியது. அங்கிருந்து பீதர்நாட்டுப் படைக்கலங்களை பெற்றுக்கொண்டார்கள். திருவிடத்திலிருந்து வில்லவர்களைத் திரட்டி ஒரு படையை அமைத்தனர். தெற்குப்புயல்கள் என அவர்களை நம் அமைச்சர்கள் அழைத்தனர். அவர்கள் நமது தென்னெல்லைகளை தாக்கினார்கள். அவர்களின் இலக்கு கிருஷ்ணையை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. அதை எய்திவிட்டார்கள் என்றால் ஒரு தலைமுறைக்குள்ளாகவே வெல்லமுடியாதவர்களாக ஆகிவிடுவார்கள் என நாங்கள் அறிந்திருந்தோம்.

எங்கள் குடித்தலைவர்கள் படைஎழுச்சிக்கு நாள் குறித்த அன்று அடுத்த செய்தி வந்தது. மகாகீசகரால் சிதறடிக்கப்பட்டு தெற்கே கிஷ்கிந்தைக்கும் ரேணுநகரிக்கும் பின்வாங்கிச்சென்றிருந்த சதகர்ணிகள் படைதிரட்டிக்கொண்டு வந்து திருமலைத்துவாரத்தை கைப்பற்றி அதை மையமென வலுவாக்கிக் கொண்டனர். நல்லமலையும் பல்கொண்டா மலையும் கோட்டைச்சுவர்கள் என காக்கும் அந்நகரை படைகொண்டு வெல்வது அரிது. சதகர்ணிகளுக்கும் பல்லவர்களுக்கும் வாகாடகர்களுக்கும் இடையே படைக்கூட்டு ஒன்று கைச்சாத்தாகியது.

அத்தனை பெரிய படைக்கூட்டை எதிர்கொள்ளும் ஆற்றல் அன்று விராட அரசுக்கு இருக்கவில்லை என அனைவரும் அறிந்திருந்தனர். வடக்கே ஷத்ரியர்களின் வஞ்சமிருந்தது. அன்று மகதத்திற்கும் அஸ்தினபுரிக்குமிடையே போரென விளைய வாய்ப்புள்ள பூசல் நடந்து கொண்டிருந்ததால் மட்டுமே நாங்கள் ஆறுதல் கொண்டு ஒதுங்கியிருந்தோம். தெற்கில் எங்கள் படைமுனைகள் சற்று ஆற்றல் இழந்தாலும்கூட வடக்கிலிருந்து கலிங்கனும் வங்கனும் சேந்திநாட்டானும் படைகொண்டு வரக்கூடுமென அறிந்திருந்தோம். ஆனால் வேறுவழியில்லை, அஞ்சி வாளாவிருந்தால் அதுவே அழைப்பென்றாகிவிடும். தென்னக முக்கூட்டு எங்கள் மேல் நேரடியாக படைகொண்டுவந்தால் நாங்கள் அழிவோம்.

யார் போர்முகம் நிற்பது என்ற கேள்வி எழுந்தபோது ஒவ்வொரு போருக்கும் நான் நான் என்று முந்தி வந்து நிற்கும் குலத்தலைவர்கள் அனைவரும் தயங்கி பின்வாங்கினார்கள். அப்போர் தோல்வியில்தான் முடியும் என்றும் அதன் பழியை தங்கள் குலங்கள் சுமக்க வேண்டியிருக்கும் என்றும் நிஷதகுடியின் அழிவுக்கான தொடக்கமாக அது அமையுமென்றும் ஒவ்வொருவரும் எண்ணினர். “எவர் படைகொண்டு எழுவது?” என்றார் விராடர். அவர் அன்றே படைத்திறனில்லாதவர் என்றும் மதுக்களியில் அரண்மனையில் அமைவதற்கு மட்டுமே அறிந்தவர் என்றும் அறியப்பட்டிருந்தார். அந்தப்போரையே பிறருடைய பணி என்று அவர் எண்ணினார். அப்பொறுப்பை எவரிடமேனும் அளித்து அவையை முடித்துவிட்டு அகத்தளத்திற்கு செல்வதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தார்.

“எவர் படைமுகம்கொள்வது? கூறுக!” என்று நான் அவையிடம் கேட்டேன். அவை அவ்வினாவின் முன் பாவைநிரை என அமைதியாக இருந்தது. நான் “குடிமூத்தார் ஒப்புக்கொண்டால் என் இளையோன் கீசகன் படைநடத்துவான்” என்றேன். திகைப்புடன் அனைவரும் கீசகனை நோக்கி திரும்ப அவன் எழுந்து கைகூப்பி “குடிப்பெரியோரின் நல்வாழ்த்து அமையும் என்றால் வாகடர்களையும் பல்லவர்களையும் கொன்று தலைகொண்டு மீள்வேன்” என்றான். “சதகர்ணிகளை மீண்டும் ரேணுநகரிக்கே துரத்திவிட்டுத்தான் இந்நகர்புகுவேன், ஆணை!” என்று வாளைத் தூக்கி வஞ்சினம் உரைத்தான்.

அவை அப்போதும் அமைதியாக இருந்தது. என்ன முடிவெடுப்பதென்று அவர்கள் அறியவில்லை. ஆனால் அவர்களுக்குள் ஆறுதல் எழுவது தோள்கள் தளர்வதில் தெரிந்தது. “என்னுடன் பன்னிரண்டு மச்சர்குலங்களின் படைகள் உள்ளன. நிஷதர்களுக்காக படைஎதிர்கொண்டு நிற்பதில் பெருமை கொள்பவர்கள் அவர்கள்” என்றான் கீசகன். மூத்தகுடித்தலைவரான பீடகர் எழுந்து “இத்தருணத்தில் மகாகீசகரின் பெயர்கொண்ட ஒருவர் இந்த அவையில் இருப்பதும், இப்பொறுப்பை ஏற்பதும் நம் தெய்வங்களின் ஆணை போலும். அவ்வாறே ஆகுக!” என்றார். அவை உயிர்கொண்டு “ஆம், அவ்வாறே ஆகுக!” என குரலெழுப்பியது.

தலைமை அமைச்சர் ஆபர் எழுந்து “இந்த அவை மாற்று ஒன்றும் சொல்லாதபோது அதை ஒப்புகிறது என்றே கொள்ளலாம்” என்றார். விராடர் அவையில் என்ன ஒலிக்கிறதோ அந்த திசை நோக்கி தலையாட்டுவதையே ஆட்சி என்று நெடுங்காலமாக எண்ணி வருபவர். “ஆம், அரசாணையென அதை வெளியிடுக!” என்றார். கீசகன் என்னை ஒருகணம் நோக்கிவிட்டு “அவ்வாணையை தலைசூடுகிறேன்” என்றான். அவையினர் எழுந்து கீசகனை வாழ்த்தி குரலெழுப்பினர்.

குடித்தலைவர்கள் எழுவர் எழுந்து சென்று தனியறையில் சொல் சூழ்ந்தபின் திரும்பி வந்து கீசகனை விராடநிஷதக்கூட்டமைப்பின் முழுமுதல்படைத்தலைவனாக அமர்த்துவதாக அறிவித்தனர். பல போர்க்களங்களில் மகாகீசகர் ஏந்தி படைமுகம் நின்ற அவருடைய பெரிய உடைவாளை கொண்டுவந்து அவையிலேயே கீசகனிடம் அளித்தனர். அவன் மண்டியிட்டு அமர்ந்து அதை பெற்றுக்கொண்டு அவைக்குமுன் நின்று தலைக்குமேல் தூக்கி மும்முறை ஆட்டி “வென்றுவருவேன்! உயிர் வைத்தாடுவேன்! ஒருபோதும் பணியேன்!” என வஞ்சினம் உரைத்தான். அதுவரை இருந்த தயக்கங்கள் விலக நிஷாதர்களின் பேரவை எழுந்து கைகளை விரித்து அவனை வாழ்ந்த்தி பெருமுழக்கமிட்டது.

“நான் விரும்பியதே நிகழ்ந்தது. கீசகன் அப்போரில் வெல்வது எளிதல்ல என்றாலும் எவரேனும் வெல்லக்கூடுமென்றால் அவனே என அறிந்திருந்தேன். ஆனால் உள்ளிருந்து முட்டை ஓடை குத்தி உடைக்கும் சிறகுகொண்ட குஞ்சு என என் உள்ளத்தில் அறியாத அச்சம் ஒன்று சிறகடித்துக்கொண்டே இருந்தது” என்றாள் சுதேஷ்ணை. “நான் அன்று அஞ்சியது என்ன என்பதை நெடுங்காலம் கழித்தே புரிந்துகொண்டேன், அவனுடைய பெயரை. கீசகன் என்னும் பெயரை அவனுக்கு இட்ட அந்த அன்னையின் விழைவை நான் அப்போது கணிக்கத் தவறிவிட்டேன்.”

தொடர்புடைய பதிவுகள்

ஆரியர் வருகை -கடிதங்கள்

$
0
0

இனங்களும் மரபணுவும்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

ஏற்கனவே திராவிட -ஆரிய இனம் பற்றிய சமீபத்திய கட்டுரையை “ஹிந்து ஆங்கில பதிப்பில்’கடந்த வாரம் படித்ததில் இருந்து அது பற்றிய தங்கள் கருத்தை கேட்கவேண்டும் என நினைத்திருந்தேன்.இன்று.வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு தங்களின் விரிவான இந்த – இனங்களும் மரபணுவும்-பதிலின் மூலம் தெளிவு பெற்றேன்.இருந்தபோதிலும் எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் அக்கட்டுரையில் கொடுத்திருந்த திரு.அரவிந்த நீலகண்டன் அவர்களின் எதிர்வினையில் மிகச் சரியாக குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல் – when writing on a much-debated topic like this one, they should at least show the intellectual sincerity to mention divergent points of view, and not try to create a false impression for the lay reader that they have been conclusively addressed. That is neither very honest nor commendable-இது ‘ஹிந்து’போன்ற பாரம்பரிய செய்தி நிறுவனங்களுக்கு பெருமை சேர்ப்பதாகுமா? பாரபட்சமில்லாத இரு தரப்பு உண்மைகளையம் தங்கள் வாசகர்களுக்கு அளிக்கவேண்டும் என்ற தொழில் தர்மம்( !?) இவர்களுக்கெல்லாம் கிடையாதா? இதில் இவர்களின் உள்நோக்கம்தான் என்ன?

அன்புடன்,

அ .சேஷகிரி.

***

ராஜீவ்

டியர் ஜெமோ,

சமீபத்தில் வந்த ஆரிய வருகை பற்றிய இரண்டு கட்டுரைகள் அவற்றின் மூல ஆராய்ச்சி கட்டுரையும் உங்கள் கவனத்திற்கு.

http://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece

https://m.facebook.com/story.php?story_fbid=1586551481363460&id=100000258690178

https://bmcevolbiol.biomedcentral.com/articles/10.1186/s12862-017-0936-9

ராஜீவ்

இனங்களும் மரபணுவும்

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பொய்த்தேவு –நாலாம் தலைமுறை வாசகர் நோக்கில்

$
0
0

sugadev

ஜெயமோகன் அவர்களின் வலைத்தளம் மூலமாக சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் உள்ள நாவல்களை வாசிக்க தொடங்களாம் என்று க.நா.சுப்ரமண்யம் அவர்களின் “பொய்த் தேவு ” படிக்க ஆராம்பித்தேன்.

படிப்பதற்கு மிகவும் எளிய நடையில் தான் இருந்தது. நாவல் சோமு முதலியார் என்ற சாத்தனூர் மேட்டுத்தெரு வாசியை வைத்து நகர்கிறது, அவன் தேடலையும் அவன் அடைந்த உச்சத்தையும் பின் எல்லா வற்றையும் உதறி விட்டு அவன் அடையும் நிலையையும் காண்பிக்கிறது.  நான் காவேரி கரையில் இருக்கும் நிலத்தை சேர்ந்தவன் (மேட்டூர்) என்பதானாலோ என்னவோ இந்த நாவல் எனக்கு மிகவும் அனுக்கமான ஒன்றாக கருதுகிறேன்.

” காவேரி நதியை கவிகள் பாடியிருக்கிறார்கள். இரண்டாயிரம் வருஷ காலமாகப் பாடியிருக்கிறார்கள். இன்னமும் இரண்டாயிரம் வருஷங்களோ, இருபதினாயிரம் வருஷங்களோ, இரண்டு லட்சம் வருஷங்களோ பாடிக்கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். ” முடிவில்லாம் காவேரியை வர்ணித்துக்கொண்டு தான் இருப்பார்கள். காவேரி ஆற்றை பற்றி வரும் வர்ணனைகள் எல்லாம் என்னை மிகவும் உவகைக் கொள்ள செய்தது. நம் நிலத்தையும் நதியையும் பற்றி படிக்கும் போது எல்லாம், இவ்வகை மனத்துள்ளலுக்கு என்ன தான் காரணமோ. நதியையும் மண்ணையும் எவ்வளவு தான் வர்ணித்தாலூம் முடிவில்லாமல் அது வந்துக்கொண்டே தான் இருக்கும் போல. காவேரி ஆறு ஆனியில் இருந்து தை, மாசி வரை கரை புரண்டு ஓடும் பின் மூன்று மாதம் வற்றி விடும், பின் ஆடியில் மீண்டும் புது வெள்ளம் ஓடும், காவேரி ஆறு எப்படி உருமாறி உருமாறி இப்படி முடிவில்லாம் ஆடிக்கொண்டு இருக்கும் ஆட்டத்தை காட்சியப் படுத்துகிறார் ஆசிரியர். இதை என் அம்மா சொல்லிக் கூட கேள்வி பட்டு இருக்கிறேன் ஆனால் இப்போது இந்த காட்சிகள் இங்கு பார்ப்பது கஷ்டம் தான். தண்ணீர் நான் கரைப்புரண்டு ஓடி கடைசியாக 10 வருடங்கள் மேல் இருக்கும்.

நாவல் சாத்தனூர் மேட்டுத் தெரு பற்றி வர்ணிக்க ஆரம்பித்து அவனின் பெற்றோர் பற்றி மற்றும் காவேரி இப்படி ஆரம்பம் ஆகிறது.

ka.na.su

மூன்று வயதில் அந்த கோவில் மணி ஓசையும், வீட்டினுள் வரும் சூரிய ஒளி ஆரம்மாகிறது சோமுவின் தோடல். பின் தந்தையை இழக்கிறான். ஆனால் அவன் தந்தை கறுப்பன் ஒரு முரடன், எங்கு சென்றாலும் கறப்பன் மவன் என்று இழிவு செய்யப்படுகிறான். ஐந்து வயதில் அவன் கொள்ளும் ஆசைகள், தாகங்கள், அளவில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது. மொத்த சாத்தனூரையே அவன் தன் கால்களால் அளந்து விடுகிறான். மொத்த கடைத்தெருவையுமே காசு கொடுத்து வாங்க வேண்டும் என்று ஆசை கொள்கிறான். கல்வி கற்க வேண்டும் என்று ஆசை கொள்கிறான். ஒரு ஏழையாக இருக்கும் அவன் இப்படி பல ஆசைகள் மூலம் ஒவ்வறு அசையாக கடந்து செல்கிறான்.

அவன் “கறுப்பனின் மகன் இப்படி தான் இருப்பான்” என்ற பெயரை மண்டும் அவனால் துறக்க முடியவில்லை. ஆதற்கு பிறகு தான் அவன் ராயர் வீட்டில் வேலைக்கு சேர்ந்து எதிர் பாத்திராத சில நிகழ்வுகளால் அந்த பெயரை விட்டு முன் செல்கிறான். ஒரு நல்ல பயள் என்று பெயர் பெற்றும், கல்வி பெறுகிறான். மற்றும் சாம்பமூர்த்தி ராயரின் உதவியால் ஒரு கடை அமைந்து வெற்றி பெற்றுக்கொண்டு செல்கிறான். காவேரி உருமாறுவது போல அவன் பெயரும் உருமாற தோடங்குகிறது, கறுப்பன் மவனில் இருந்து ராயர் வீட்டு வேலைக்காரன், சோமு முதலியார், மளிகைக்கடை சோமு முதலியார், மளிகை மர்ச்சண்டு சோமு முதலியார், இன்சுரன்ஸ் ஏஜண்டு, கும்பகோணம் மளிகை பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகஇயக்குனர், போன்ற பல பெயர்கள் பெற்று முன்னேறுகிறான், சோமு முதலி.

ஆனால் அவனால் எந்த உயரத்துக்குச் சென்றாலும் மேட்டுத் தெரு வாசி என்கிற அடையாளத்தை துறக்க முடியவில்லை, ஒரு வழியாக அவன் துறந்து விட்டு வந்தும் கூட அது அவனின் ஆழத்தில் உறைந்து கொண்டு தான் இருந்தது.

எப்படி எல்லா கதைகளில் வருவது போல, உழைப்பால் உயர்ந்த சோமு முதலிக்கு நேர் எதிரான ஒரு மகனாக நடராஐன் ஊதாரியா திரிகிறான். கறுப்பன் மகன் என்ற பெயர் போய் இப்போது நடராஐனின் தந்தை என்ற பெயர் பெற்றான் அவனுக்கு அவ பெயர்கள் மாறி மாறி வரத்தான் செய்தது. ஒரு காலத்தில் அவன் தந்தையால் என்றால் இப்போது அவன் மகனால், முதலாவதர்க்கு அவன் காரணம் இல்லை என்றாலும் இரண்டாம்வற்றிர்க்கு அவன் தான் முழுக்காரணம்.

பின் இக்கதைகளில் வரும் சகதர்மிணிகள் க.நா.சு இங்கு கற்பை மிகவும் பரந்த மனதுடன் எதார்த்தமாக சொல்லி செல்கிறார், இங்கு அவர் எதார்த்த வாழ்வில் நிகழ்வனவற்றை அல்லவா கூறுகிறார். ராயரின் மனைவியை கற்புக்கு ஆதாரமாக கூறினாலும், அவர்களை பற்றி அதிகம் விவரிக்கவில்லை,

ஆனால் அதற்கு நேர் எதிராக க.நா.சு இங்கு இரண்டு தரப்பிலும் உள்ள வல்லியமையையும் கோமளவல்லியையும் காட்டுகிறார். அவர்களின் கற்பு நிலைகளை விரிவாக சொல்கிறார். அதை பற்றி பல கொணங்களில் சொல்கிறார். “கற்பு கற்பு என்று கதைக்கிறார்களே இது தான் ஐயா பொன்னகரம் ” என்ற புதுமைப்பித்தனின் தளத்தில் எழுதியவர் அல்லவா க.நா.சு. என்ன வியப்பு என்றால் சுகந்தர போராட்டம் உச்சம் பெற்ற காலத்தில் வெளி வந்த இந்த கதை அப்போது எப்படி பட்ட ஒரு அலையை கிளப்பி இருக்கும்.

பின் ராயரின் குடும்பம், சொத்துகள் எல்லாம் தான, தருமத்தில் அழிந்து கொண்டு இருந்ததை எண்ணி எண்ணி வருந்துகிறார், ஆனால் சாம்பமூர்த்தி ராயர் ஏழை, எளியவர்களுக்கு செய்து புன்னியம் ஈட்டுவது என்ற உயர்ந்த இலட்சியம் உடன் இருந்தார், ஒரு கட்டத்தில் அவர் அனைத்தையும் விட்டு பண்டாரம் ஆகி இறக்க நேர்ந்த செய்தி அறிந்த சோமு முதலியார் மிகுந்த மனவேதனை கொள்கிரார்.

“கண்களை முடிக்கொள்ள வேண்டும் போல இருந்தது, காதுகளை பொத்திக் கொள்ள வேண்டும் போல இருந்தது, ஆனால் மனசை, உள்ளத்தை, இருதயத்தை என்ன செய்வது? “

சோமு முதலியாரும் பணம் பணம் என்று இத்தனை வருடமாக சேர்த்து வைத்ததை எல்லாம் உதரிவிட்டு பண்டாரம் ஆகிரார், சோமு முதலிக்கு பணத்தாசை இல்லை தான், ஆனால் பணத்தையே தெய்வமாக வணங்க கூடியவர். நேர்மையாக தான் தொழில் செய்தார் ராயரின் மரணம் அவரில் ஒரு மணியை ஒலிக்க செய்கிறது அதை கடக்க அவர் எவ்வளவு முயன்றும், தொழில் முழுவதும் ஈடுபட்டும் அதை கடக்க பார்கிறார் ஆனால் இறுதியில் இதை எல்லா வற்றையும் உதறிவிட்டு செல்கிறார்.

ராயரும் ஒரு பெரும் லட்சியத்துடன் தான் தானமும், தர்மங்களும், பூஜைகளும் செய்து வந்தார் அவரும் ஒரு கணத்தில் இதை துறந்து செல்கிறார். “பொருள் என்று மட்டுமல்ல, மனிதன் ஏற்றுக்கொள்கிற எல்லா லட்சியங்களையும் இப்படிப் புறக்கணிக்க முடியும் என்பதுதான் திருவாசகத்தின் வரிகள் எனக்குச் சொன்ன மனித உண்மை ” என்கிறார் க.நா.சு. கதையில் ஒரு வரி “நான் பிறந்த அதே வினாடியில் பிறந்தது தான் இவ்வுலகமும் “. இறுதியில் சோமு முதலியே சொல்லி முடிக்கிறான் ” உலகம் பொறந்த நாள் முதல் இன்னிவரையில் எவ்வளவு விநாடி உண்டோ அவ்வளவு தெய்வங்களும் உண்டு — இனி இருக்கப்போற விநாடிக்கும் விநாடிக்கொரு தெய்வம் உண்டு “. சோமு முதலி மேட்டுத் தெரு வாசியாகவே மறைகிறான்.

பா.சுகதேவ்

மேட்டூர்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மழைப்பயணம் 2017

$
0
0

paruva

 

நாகர்கோயிலிலும் மழைதான். இருந்தாலும் முறைப்படி செய்யவேண்டியதைச் செய்துவிடுவோம் என மழைப்பயணம் செல்ல முடிவெடுத்திருக்கிறோம். இன்று மாலை ரயிலில் நானும் ஜான் பிரதாப்சிங்கும் திண்டுக்கல் செல்கிறோம். அங்கே கிருஷ்ணன், சக்திகிருஷ்ணன் கும்பல் எங்களை எடுத்துக்கொள்கிறது. நேராக பீர்மேடு. அங்கிருந்து வாகமண். மேலும் சில புதிய புல்வெளிக்குன்றுகள்.

தென்னகத்தில் மேகாலயம் என்றால் வாகமண்தான். நூறு வெண்ணிறக் கால்களில் வானம் நின்றிருப்பதைப் பார்க்கலாம். புல்வெளி என்றால் நீரின் பிறிதொரு வண்ணம் என தோன்றும். செல்ல ஆரம்பித்து பன்னிரு ஆண்டுகளாகின்றன. இது எட்டாவது மழைப்பயணம் என நினைக்கிறேன்

==============================================

பழைய கட்டுரைகள்

பருவமழைப்பயணம்-மழையில்லாமல்

கவி சூழுலா

கவி சூழுலா 2

மழையில் நிற்பது….

அட்டப்பாடி, திரிச்சூர், ஆதிரப்பள்ளி, வால்பாறை

பருவமழைப் பயணம் 2012

பருவமழைப்பயணம் 2010

பருவமழைப்பயணம் 2008

பருவமழைப்பயணம்

அக்காமலையின் அட்டைகள்.

பருவமழை:ஒரு கடிதம்

பருவமழைப் பயணம் 2009

பருவமழைப் பயணம்-2010 – படங்களுடன்

அவலாஞ்சி பங்கித்தபால்

மூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பிராமணர்களின் சாதிவெறி

$
0
0

maxresdefault

அன்புள்ள ஜெ

உதயகுமாரின் பிராமண எதிர்ப்பு பற்றி வாசித்தேன். பிராமணர்களின் சாதிவெறியை நீங்கள் பார்ப்பதே இல்லையா? சமூகவலைத்தளங்களில் உலவுங்கள், தெரியும். முடைநாற்றமெடுக்கும் சாதிவெறியை, எந்த அடிப்படை அறமும் இல்லாத கீழ்மையை, கணிசமான பிராமணர்கள் நேரடியாகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி நீங்கள் பேசுவதுண்டா?

செந்தில்

 

ems

அன்புள்ள செந்தில்,

அந்தச் சாதிவெறியை நானும் நிறையவே சந்தித்திருக்கிறேன், சந்தித்துக்கொண்டும் இருக்கிறேன். மிகநெருக்கமானவர்களாக இருந்தவர்கள்கூட தருணம் கிடைக்கையில் சாதிய நச்சுப்பற்களுடன் எழுவதைக் காணும் அனுபவம் அடிக்கடி வந்துவிட்டது. அதன்பின் நட்பு, நேர்மை எதுவும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவும் இல்லை.எல்லா சாதி, மதவெறியர்களையும்போல அவர்களின் பேச்சுக்களும் தங்களவர் அல்லாத அனைவரும் அயோக்கியர்கள் என்பதாகவே உள்ளது

ஆனால் நான் எப்போதும் கேட்டுக்கொள்ளும் வினா இது. இந்தச்சாதிவெறிக்கு எதிர்வினையாகவா பெரியாரியச் சாதிவெறி எழுந்தது? இல்லை. பெரியாரிய இனக்காழ்ப்பே இன்றைய இச்சாதிவெறியை உருவாக்கியிருக்கிறது.

இந்தியாவின் பிற சாதியினரைப்போலவே பிராமணர்களும் தங்கள் குறுகலான குடியிருப்புகளில் பிறசாதியினருடன் ஒட்டும் உறவும் இல்லாமல் வாழ்ந்தவர்கள்தான். பிறசாதியினரைப்பற்றிய உளவிலக்கமும் கசப்புகளும் எள்ளல்களும் கொண்டவர்கள்தான். பிறரைப்போலவே சென்ற நூற்றாண்டில்தான் நவீனக் கல்விபெற்று மெல்ல அதிலிருந்து அவர்கள் மீண்டு வரத்தொடங்கினர்.பிறரைப்போலவே அவர்களின் குடும்பச்சூழல் இன்னமும்கூட சாதிய முன்முடிவுகளும் காழ்ப்புகளும் நிறைந்ததே.

பிறரைவிட அவர்களுக்கு நவீனமாதலில் சிக்கல்கள் அதிகம். காரணம் அவர்கள் மதச்சடங்குகள், ஆலயங்கள் ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர்கள். பிராமணர்கள் இந்துப்பண்பாட்டில் நிலைச்சக்திகள். பண்பாட்டின் அடிப்படைகளைப் பேணவேண்டிய கடமைகொண்டவர்கள். அந்தப்பொறுப்பை சென்ற ஈராயிரமாண்டுகளாக உலகுக்கே முன்மாதிரி எனக்கொள்ளத்தக்கவகையில் நிறைவேற்றியவர்கள்

ஆகவே எளிதில் மரபை முற்றாக உதறிவிட்டு வெளியேற முடியாது. மேற்கிலிருந்து வந்த சில நம்பிக்கைகளையோ கொள்கைகளையோ உடனே ஏற்றுக்கொண்டு அவர்கள் நேர் தலைகீழாகத் திரும்பவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு பண்பாட்டு வரலாறு தெரியாது. அப்படி அவர்கள் திரும்பியிருந்தால் இந்தியாவில் இன்றுநாம் காணும் இந்து மரபு எஞ்சியிருக்காது

அவர்களிடம் சிலரால் குறையெனக் கருதப்படும் பழமைப்பிடிவாதம் எகிப்தின் பூசகர்களுக்கோ ஜரதுஷ்டிர மதகுருக்களுக்கோ இருந்திருந்தால் எகிப்தும் ஈரானும் கொண்டிருந்த தொன்மையான பண்பாடுகள் எஞ்சியிருந்திருக்கும்

ஆகவே எதை உதறுவது, எதை தக்கவைத்துக்கொள்வது, எதுவரை என்பது அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல். அந்த விவாதம் இருநூறாண்டுகளாக நம் பண்பாட்டுவெளியில் நிகழ்கிறது… நூற்றைம்பதாண்டுகளுக்கு முன் அந்த விவாதம் தொடங்கிய சித்திரத்தை தாகூரின் ’கோரா’ நாவலில் வாசிக்கலாம். பாரதியின் ’ஆவணி அவிட்டம்’ போன்ற சிலகட்டுரைகளில் பார்க்கலாம்

பிராமணர்களின் இந்தமாபெரும் பண்பாட்டுவிவாதத்தில் பலவகையான தரப்புக்கள் உண்டு அதில் மரபை மாறாமல் தக்கவைக்க விரும்பும் ஒரு பழைமைவாத நோக்கு உண்டு. அது என்றும் இருக்கும். மறுஎல்லை புதுயுகசிந்தனைகளை பெரும் ஆர்வத்துடன் தழுவிக்கொண்டு அவற்றை முன்னெடுத்துப் பரப்பியவர்களின் தரப்பு. டி..டி. கோசாம்பி, விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய, சிவராம காரந்த், ஈ.எம்.எஸ், மகாவைத்யநாத அய்யர், க.நா.சு, சி.சு.செல்லப்பா, எஸ்.என்.நாகராசன், சுந்தர ராமசாமி என அந்த நவீனவாதிகள் இல்லாமல் இந்திய நவீனச் சிந்தனையே இல்லை.

நான் ஆசிரியர் எனக்கொள்பவர்களில் அவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிது. ஒருநாளில் ஒருமுறையாவது அவர்களைப் பேசாமல் சிந்தனை கடந்து செல்வதில்லை. நான் முன்வைக்க விரும்பும் பிராமணர்கள் தங்கள் மரபை உள்வாங்கி நவீன உலகம் நோக்கி எழுந்தவர்கள் மட்டுமே.

sura

ஆனால் பெரியாரிய மூர்க்கம் என்ன செய்கிறது? அவர்கள் அத்தனைபேரையும் அப்படியே பழைமைவாதத் தரப்பாக பார்த்து கண்மூடித்தனமாக வசைபாடுகிறது. அவர்களில் ஆக நவீனமானவர்களைக்கூட அது ‘பார்ப்பனர்கள்’ என இழிவுசெய்கிறது. அதற்கு கல்வியில் நம்பிக்கை இல்லை. தர்க்கசிந்தனை இல்லை. ஏன் செவிகளே இல்லை. சும்மா தேடிப்பாருங்கள், இ.எம்.எஸ் சுந்தர ராமசாமி எவரைப்பற்றியானாலும் அவர்களை பார்ப்பனச் சதிகாரர் என பழிக்கும் சொற்களே உங்களுக்குக் கிடைக்கும்.

அதன் இறுதிவிளைவாக இன்று உருவாகி வந்திருப்பதே நீங்கள் சொல்லும் பிராமண அடிப்படைவாதம்.அவர்களில் எழுந்துவந்த நவீனச் சிந்தனையாளர்கள்கூட பொதுவெளியில் சிறுமைசெய்யப்படுவதை அவர்கள் காண்கிறார்கள். அவர்களில் மிகச்சிலர் மட்டுமே மெய்த்தேடலால் ஈர்க்கப்பட்டு அந்த நவீனச்சிந்தனையாளர்களை நோக்கி வருகிறார்கள். பிறர் அந்த நவீனச்சிந்தனையாளர்களை தங்கள் சாதிக்குத் துரோகம் செய்தவர்களாகவே பார்க்கிறார்கள்.

ஆகவே இன்று பிராமணத்தரப்பாக ஒலிப்பது காழ்ப்பும் கசப்பும் கொண்ட குரல்கள்.அவர்கள் தங்கள் மேல் பாயும் வெறுப்பைச் சுட்டிக்காட்டி தாங்களும் அதேபோல் ஆனால் என்ன தப்பு என்கிறார்கள். நான் அவர்களை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்வதுமில்லை.  அவர்களை ஆதரிக்காவிட்டால் அவர்கள் நம்மை பிராமணவிரோதி என்று பெரியார் பக்கம் தள்ளிவிடுவார்கள். காழ்ப்புக்கு எந்ததரப்பானாலும் ஒரே மொழிதான்.

நான் மேலே சொன்ன பட்டியலில் உள்ளவர்களை பிராமணர்களும் பழிப்பதை நீங்கள் காணலாம். அவர்களுக்கு தங்கள் சாதிக்காக கூச்சலிடும் அடிப்படைவாதிகளும்  சென்ற நூற்றாண்டுகளில் வாழும் ஆசாரவாதிகளும்தான்  முன்னுதாரணங்கள்

பெரியாரியர்களால் நம் சூழலில் உருவாக்கப்பட்டிருக்கும் இனக்காழ்ப்பின் விளைவாக பிராமணர்கள் கசப்படைகிறார்கள். கசப்பு உருவாக்கும் வீம்பு ஆன்மிகமான அகம் அற்ற எளிய பிராமணர்களை ‘ஆமா இப்ப என்ன?’ என்ற மனநிலைக்குத் தள்ளுகிறது. அவர்கள் அந்நிலை எடுக்கும்போது இவர்களுக்கும் எல்லாம் எளிதாக ஆகிவிடுகிறது. இதுதான் இன்றைய சூழல்.

ஆம், பிராமணர்களும் சமூக அதிகாரம் பொருளியல் அதிகாரத்துக்காக போராடுகிறார்கள். அனைத்துவகையிலும் முட்டி மோதுகிறார்கள். அதற்காக ஒருங்கு கூடுகிறார்கள். ஆனால் அதைச் செய்யாத சாதி எது? அவர்கள் தங்களிடம் உள்ள அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை. அதற்கு தயாரானவர்கள் வேறு யார்?

நான் பிராமணர்களிடம் உள்ள சாதிய அடிப்படைவாதத்தை கண்டிக்கிறேன். ஒரு பிராமணன் தன் சாதிசார்ந்த வாழ்க்கை அளித்த உளக்குறுகலையும், மூடநம்பிக்கைகளையும், மனிதவிரோதத் தன்மைகொண்ட பழைமையான ஆசாரங்களையும் விமர்சிக்கவேண்டும். உதறிமுன்னெழவேண்டும். கூடவே தன் மரபின் சிறப்புகளை, தன் குலத்தின் பல்லாயிரமாண்டுக்கால வரலாறு அளித்த பண்பாட்டுக்கொடைகளை பேணிக்கொள்ளவும் வேண்டும்.

அவ்வாறு ஒரு அறிவார்ந்த நோக்கு இல்லாமல் வெறுமே பிராமணனாகப் பிறந்தமையாலேயே அசட்டுமேட்டிமை நோக்கு கொண்டிருப்பவர்களை புறக்கணிக்கிறேன்.அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள் என்றால், சிந்தனைத் தரப்பாக அதை முன்வைத்தால் கண்டிக்கிறேன்.

ஆனால், அதே சமயம் வேளாளர், முதலியார், செட்டியார், கவுண்டர் ,நாடார்,தேவர் போன்றவர்களின் சாதிவெறி அதற்குச் சற்றும் குறைந்தது அல்ல என்றே சொல்லவிரும்புகிறேன். அவர்களையும் அதே அளவுகோலைக்கொண்டே பார்க்கிறேன். நம் சூழலில் உள்ள அதே சாதிப்பற்றும் மேட்டிமைநோக்கும்தான் பிராமணர்களிடமும் உள்ளது. அவர்கள் மட்டும் ஏதோ தனியாக ஒரு அடிப்படைவாதம் பேசவில்லை

பிராமணர்களுக்காகவது மீறி எழுந்த மாமனிதர்களின் நீண்ட பட்டியல் உண்டு. அவர்கள் பழைமைபேசினாலும் பேணி நமக்களித்த பண்பாடு காரணமாக அவர்களின் அடிப்படைவாதத்தை ஓரளவு மன்னிக்கலாம். தன் சாதியின் நீண்ட பண்பாட்டை முற்றாக இழந்து நின்றிருக்கும் பிறருக்கு அந்தச் சலுகையும் இல்லை என்கிறேன்.

மற்றசாதியினர் தங்கள் சாதியின் அறிஞர்களையும் ஆன்மீகவாதிகளையும் புறக்கணித்து முண்டாமுறுக்கி நிற்கும் ரவுடிகளை தங்கள் முகங்களாக முன்வைக்கும் காலம் இது. அவர்களுக்கு பிராமணச்சாதியை விமர்சிக்க என்ன தகுதி?

ஆகவே நான் உட்பட பிறசாதியினர் முதலில் சுயவிமர்சனம் செய்வோம். மேலே செல்வோம். பிராமணக்காழ்ப்பு நம்மை எதிர்மறை மனநிலைகொண்டவர்களாக, நம் கீழ்மைகளை மறைப்பவர்களாக மட்டுமே ஆக்கும்..

ஜெ

ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்?
ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்- கடைசியாக.
பிராமணர்- பழியும் பொறுப்பும்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 38

$
0
0

37. குருதிகொளல்

flower“சபரர்களின் போர்த்தெய்வமான அசனிதேவனின் ஆலயம் கிரிப்பிரஸ்தமலைக்கு வடக்காக இருந்த தீர்க்கப்பிரஸ்தம் என்னும் குன்றின்மேல் இருந்தது. இடியையும் மின்னலையும் படைக்கலமாகக் கொண்ட தொல்தெய்வம் அது. வலக்கையில் இடியை உடுக்கின் வடிவிலும் இடக்கையில் மின்னலை துள்ளும் மானின் வடிவிலும் ஏந்தியிருக்கும். திரையம்பகன் என்று அதை சொல்வார்கள். அதன் நெற்றிக்கண் எப்போதும் அரக்கு கலந்த மண்பூச்சால் மூடப்பட்டு அதன்மேல் மலர் அணிவிக்கப்பட்டிருக்கும். நிஷதகுடிகள் போருக்கு எழும்போது மட்டும் அசனிதேவனுக்கு மோட்டெருமையை பலி கொடுத்து அக்குருதியைக்கொண்டு முழுக்காட்டு நிகழ்த்துவார்கள்” என்று சுதேஷ்ணை சொன்னாள்.

நூற்றெட்டு பந்தங்கள் எரியும் நள்ளிரவில் பூசகர் அந்த மலர்ச்சாத்தை அகற்றி அரக்குப்பூச்சை விலக்கி அசனிதேவனின் விழிகளை திறப்பார். ஆலயத்தை சூழ்ந்திருக்கும் ஏழு முரசுமேடைகளில் இருக்கும் பெருமுரசுகளை பாரதவர்ஷத்திலேயே மிகப்பெரியவை என்பார்கள். அவற்றை அசைக்கமுடியாது. பிறநாட்களில் வறண்ட குளம் போன்றிருக்கும் அவற்றுக்குள் சருகுகள் குவிந்து கிடக்கும். யானைத்தோலை இழுத்துக்கட்டி முழைத்தடியால் அவற்றை முழக்கி இடியோசையை எழுப்புவர். தீப்பந்தங்களை நீள்சரடில் சுற்றிக்கட்டி விரைந்து சுழற்றி மின்னல்களை உருவாக்குவார்கள். அவ்வாறு அனல்சுழற்றுவதற்கான பயிற்சி சபரர்குலத்தின் பூசகர்கள் குலமுறையாக கற்று அடைவது.

போர் குறித்தபின் படைகிளம்பும் நாள்வரை மன்னரின் உடைவாளும் மகாகீசகரின் உடைவாளும் அசனிதேவனின் முன் செம்பட்டு சுற்றப்பட்டு செம்மலர்மாலை அணிவிக்கப்பட்டு வழிபாட்டில் அமைந்திருக்கும். கிளம்புவதற்கு முந்தையநாள் இரவு குடித்தலைவர்களும் அரசரும் படைத்தலைவர்களும் மட்டும் சென்று அசனிதேவனை வணங்கி அந்த வாள்களை எடுத்துக்கொள்வார்கள். வாள்களை பூசகர் எருமைக்குருதியில் நீராட்டி எடுத்து அளிப்பார்கள். அதை உருவி மும்முறை அசனிதேவன் முன் தாழ்த்தி வஞ்சினம் உரைத்தபின் தன் கையை அறுத்து மூன்றுதுளிக்குருதியை அப்பலிபீடத்தில் சொட்டி வணங்குவர்.

அக்குருதியை சோற்றில் கலந்து ஏழு கைப்பிடிகளாக உருட்டி முதல் உருளையை துந்துபகுடிகளின் தெய்வமாகிய தாபையை மணந்த சபரகுடியின் தெய்வமான மாகனுக்கு படைத்தனர். காளகக்குடிகளின் தெய்வமான கரிவீரனுக்கு அடுத்த உருளை. சிபிரகுடிகளின் யானைத் தெய்வமான காளகேதுவின்மேல் ஏறிய அஸ்வககுடிகளின் மூதாதையான தாமஸனுக்கு அடுத்த உருளை. எஞ்சிய குருதியன்னத்தை அன்னக்குவையுடன் கலந்து அத்தனை குடிதெய்வங்களுக்கும் படைத்தனர். போருக்கு எழும் அனைவரும் அதில் ஒரு வாய் உண்ணவேண்டுமென்பது நெறி. ஆகவே அன்னம் மேலும் பெரிய குவையுடன் கலந்து கலந்து விரிவாக்கப்பட்டது. அதை அன்னம்பெருக்குதல் என இங்கு கூறுகிறார்கள்.

படை எழுந்தது. அதன் முன் மகாகீசகரின் உடைவாளுடன் கீசகன் யானைமேல் அமர்ந்து கிளம்பினான். குருதிசூடிய உடைவாளை ஏந்தி விராடர் கோட்டைமுகப்புவரை சென்று அவர்களை வாழ்த்தி குருதிப்பொட்டு இட்டு வழியனுப்பிவைத்தார். அவருடைய உடைவாள் படைகள் திரும்பும்வரை அரண்மனையின் படைக்கலநிலையில் செம்பட்டு சுற்றப்பட்டு பூசெய்கைக்கு வைக்கப்பட்டது.

அப்பொழுது கீசகனின் நல்லூழ் திரண்டிருந்த காலம். அன்றுதான் அஸ்தினபுரியின் பீமன் மகதநாட்டுக்குள் புகுந்து ஜராசந்தனை கொன்றான். யமுனைக்கரையில் பாண்டவர்கள் அமைத்த இந்திரப்பிரஸ்தம் பெருவல்லமையுடன் எழத்தொடங்கியிருந்தது. வடமேற்கே யாதவர்களின் துவாரகாபுரியும் செல்வமும் படையும் கொண்டு வளர்ந்தது. அப்படைக்கூட்டை அன்று அத்தனை தொல்குடி ஷத்ரியர்களும் அஞ்சினர், வடக்கே ஒவ்வொருவரும் பிறிதொருவருக்கு எதிராக கச்சை முறுக்கி நின்றிருந்தார்கள். கீசகன் தெற்கே நோக்கிக்கொண்டிருந்த மற்ற நிஷாதர்களைப்போலன்றி கங்கைக்கரை அரசியலை எப்போதும் கூர்ந்து நோக்கிவந்தவன். அச்சூழலை நன்குணர்ந்த அவன் வடக்கிலிருந்த மொத்தப்படைகளையும் எவருமறியாமல் விராடபுரிக்கு கொண்டுவந்தான்.

அந்தப் படைசூழ்கையில் இருந்த துணிச்சலும் திட்டமிடலும் கீசகனை முதன்மையானவனாக ஆக்கின. தன் படைகளை அவன் நேராக விராடபுரிக்கு கொண்டுவரவில்லை. அவர்களை காடுகளினூடாக கரவுப்பாதையில் வரச்செய்து செல்லும் வழியெங்கும் தன்னுடன் இணையச்செய்தான். வழக்கமாக படகுப்பாலம் அமைத்து கோதாவரியைக்கடந்து விரிந்த சதுப்பு நிலத்தினூடாக தெற்கே படைகொண்டு போவது நமது வழக்கம். கோதாவரியில் படகுப்பாலம் அமைக்கையிலேயே செய்தி தென்னிலத்து அரசர்களுக்கு சென்றுவிடும். அவர்கள் விரும்பிய இடத்தில் நமது படைகள் சதுப்பில் சகடங்களும் கால்களும் புதைந்திருக்க அவர்களை எதிர்கொள்ளும். நமது புரவித்திறனாலும் நமது படைகளின் விற்திறனாலும் பெரும்பாலும் வென்றோம். ஆனால் அனைத்து போர்களிலும் பேரிழப்புகள் நமக்கே ஏற்பட்டன.

மச்சர்கள் மென்மரம் குடைந்தமைத்த எடையற்ற விரைவுப் படகுகளைக் கொண்டு மீன்கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள். அதில் பாய்மரம் நட்டு கொள்ளைக்கும் போருக்குமென பறக்கச்செய்யமுடியும் என கீசகன் அவர்களுக்கு கற்பித்திருந்தான். மரமுதலைகள் என அழைக்கப்பட்ட அப்படகுகளை வண்டிகளிலேற்றி காடுகளினூடாகவும், சிறு ஆறுகளினூடாகவும் கொண்டுவந்து கோதாவரியில் இறக்கினான். கோதாவரியின் பரப்பே முதலைகளால் நிறைந்தது. கலிங்கத்திலிருந்து வாங்கிக்கொண்டுவந்த பெரும்படகுகளில் யானைகளையும் தேர்களையும் ஏற்றிக்கொண்டனர். மொத்தப் படையையும் படகுகளில் ஏற்றிக்கொண்டு இரண்டேநாளில் கலிங்கத்தின் தண்டபுரத்தை அடைந்தார்கள்.

கீசகன் படைவரவை அறியாமல் விழவுகொண்டாடிக்கொண்டிருந்த கலிங்கனை ஓரிரவில் வென்றான். கலிங்கத்தின் கலங்களையும் தண்டபுரத்திலிருந்த அத்தனை வணிகப்படகுகளையும் கைப்பற்றிக்கொண்டான். நிஷதப்படைகள் அனைத்தையும் படகுகளில் ஏற்றிக்கொண்டு கடல் வழியாகச் சென்று வாகடர்களின் ராஜமகேந்திரபுரியை தாக்கி வென்றான். அங்கிருந்து கிருஷ்ணைக்குள் நுழைந்து தென்னிலம் மீது பரவினான். அங்கிருந்து அனைத்து நகர்களுக்கும் செல்வதற்கு சிறந்த வண்டிப்பாதைகளை அவர்களே அமைதிருந்தனர். பல்லவர்கள் தோற்றுவிழ பன்னிரண்டு நாட்களாயின.

இரு வெற்றிகளால் அஞ்சி குழம்பியிருந்தபோது மிக எளிதாக வாகடர்களை வென்றான். சதகர்ணிகளை சிதறடித்து மீண்டும் ரேணுநாட்டுக்கு துரத்தினான். பல்லவனையும் வாகடனையும் பிடித்து அவர்களின் தலைகளை வெட்டி காவடியாகக் கட்டி தானே தோளில் ஏற்றிக்கொண்டு வந்து விராடபுரிக்குள் நுழைந்தான். அன்று நிஷதகுடிகள் அனைவரும் நகர்த்தெருக்களில் திரண்டு அவனுக்கு வாழ்த்து கூறினர். அவன் பெயரின் முழுப்பொருளும் அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது. ஒவ்வொரு நாவிலும் அப்பெயர் ஒலித்தது. ஒவ்வொரு பாடலிலும் அது மட்டும் பொன்னொளிகொண்டு தெரிந்தது.

விராடர் அரண்மனை முற்றத்தில் உடைவாளை உருவி ஏந்தியபடி அவனை எதிர்கொண்டார். அவன் அந்த்த் தலைகளை அவர் காலடியில் வைத்து வாள்தாழ்த்தி வணங்க சூழ்ந்திருந்த விராடப்படைகள் வெடிப்பொலி எழுப்பி வாழ்த்தின. குலமூத்தார் ஒவ்வொருவராக அவனை அணுகி தோள்தழுவினர். அதன்பின் பிறிதொருவர் இந்நாட்டுப்படைகளுக்கு தலைமை தாங்கவேண்டுமென்ற எண்ணமே எழுந்ததில்லை. விராடபுரி தென்னகத்தின் வெல்லமுடியாத பேரரசென்று நிறுவப்பட்டது. அதன்பின் எப்படி என்று அறியாமலேயே இப்பேரரசின் முதன்மைச் சொல் கீசகனுடையதாக மாறியது.

flowerஅதன் பின்னரே நான் கீசகனின் அன்னையைப்பற்றி அறிந்துவர ஒற்றர்களை அனுப்பினேன். அவன் அன்னை எதன் பொருட்டு அப்பெயரை அவனுக்கிட்டாள் என்பதை அறியவிரும்பினேன். அவள் உள்ளத்தில் ஒரு கனவு இருந்திருக்கிறது. பெரும்பாலும் அன்னையின் அத்தகைய நுண்கனவுகளே கீசகனைப் போல பேருருக்கொண்டு எழுந்து நிற்கின்றன. அவன் அன்னையின் பெயர் சுகதை. அவள் மச்சர்குலத்து சிற்றரசர் தப்தனின் முதல்மகள். அவர்கள் மூன்றுதலைமுறைக்கு முன்பு வரை சர்மாவதியில் மீன்வேட்டையாடிய சிறுகுடியே. சர்மாவதியின் தோல்படகுகளில் சுங்கம் கொள்ளத் தொடங்கியபின்னர்தான் புற்குடிலை இல்லமாக ஆக்கிக்கொண்டவர்கள்.

அவன் அன்னையின் குடியை மேலும் முற்சென்று ஆராய்ந்தேன். அவள் யமுனைக்கரையின் தொன்மையான மச்சர்குடியான களிந்தகுடியில் பிறந்தவள். அதில்தான் முன்பு சிற்றரசர் சத்யவானுக்கு மகளாக அஸ்தினபுரியின் பேரரசி சத்யவதி பிறந்தாள். அக்குடியின் கிளைகளில் ஒன்றில்தான் சூரியனுக்கும் சரண்யுவுக்கும் மகளாக இளைய யாதவனின் அரசியான காளிந்தி தோன்றினாள். கனகை என்ற பெயர்கொண்ட அவள் இன்று துவாரகையில் என் மருமகளுக்கு நிகராக அவையமர்ந்திருக்கிறாள். கீசகனின் அன்னையின் கனவு என்ன என்று தெரிந்ததும் நான் சென்று சிக்கியிருக்கும் வலை என்ன என்று தெளிவுகொண்டேன்.

அதுவரை கீசகனின் வெற்றியை முதலில் நான் என் வெற்றியாகவே நினைத்தேன். எனது சொல் இந்நகர்மேல் நிற்பதற்கு படைக்கலமாக அவன் அமைவான் என்று கருதினேன். அந்நம்பிக்கையில்தான் உத்தரன் பிறந்த அன்று நான் உவகையில் சில பிழைகளை ஆற்றினேன். பேற்றறையின் குருதி மணத்தில் மடியில் குழந்தையை படுக்க வைத்து அமர்ந்திருக்கையில் உள்ளே வந்த கீசகனை நோக்கி “இதோ உனது மருமகன். நீ அரியணை தாங்க அமரவிருக்கும் பேரரசன். தென்னகத்தை ஆளும் மணிமுடிக்குரியவன்” என்றேன்.

ஒருகணம் கீசகனின் முகம் சுருங்கி கண்கள் நானறியாத ஒளியொன்றைக்காட்டி மறைந்தன. புன்னகையுடன் “ஆம், விராடபுரி என்றும் காத்திருந்த இளவரசன் இவன்” என்றான். குழந்தையை கையில் வாங்கி அதன் கால்களில் மும்முறை முத்தமிட்டு என்னிடம் திருப்பி அளித்தான். அன்று முறைமைப்படி அக்கால்களை அவன் சென்னியில் சூடவில்லை என்பதை நான் உணர்ந்ததே ஐந்தாண்டுகளுக்கு பின்னர்தான். மச்சநாட்டிலிருந்து அவன் கொண்டுவந்திருந்த அருமணிகள் பதித்த இரு கால்தண்டைகளை மைந்தனுக்கு அணிவித்தான். “என் வாளும் சொல்லும் என்றும் இவனுக்கு துணைநிற்கும் மூத்தவளே” என்றான். நான் விழிநீர் பரவி தோற்றம் மறைய “நீ இருப்பதுவரை நான் வெல்லப்படமுடியாதவள்” என்றேன்.

ஆனால் அவன் கண்களில் வந்து சென்ற அந்த ஒளியை என் உள்ளே வாழும் ஏதோ ஒன்று பதிவு செய்துகொண்டது. ஆனால் நானும் அப்போது அதை உணரவில்லை. மாமன் பெருங்கைகளில் மருமகன் அவருக்கிணையான வீரனாக வளர்வான் என்று எண்ணினேன். விராடர் அரண்மனைக்குள்ளேயே வாழ்ந்து பழகியவர். பகல் ஒளி எழுகையிலேயே குடிக்கத் தொடங்கிவிடுவார். எப்பொழுதும் அவருடைய அவைக்கூடத்தில் விறலியரும் சூதாடிகளும் நிறைந்திருப்பார்கள். பேரரசி என நிஷாதர்களின் அத்தனை குலதெய்வங்களையும் நாள்தோறும் நான் வணங்கியாகவேண்டும். என் ஒருநாளின் பெரும்பகுதிப்பொழுது இத்தெய்வங்களை வணங்கும் சடங்குகளுக்காகவே சென்றுவிடும். ஆகவே குழந்தையை முற்றிலும் செவிலியர்களிடம் ஒப்படைத்தேன். அவன் கால்திருந்தி எழுந்து குதலைகொள்ளத் தொடங்கியபோது கீசகன் அவனை தன் கையிலெடுத்துக்கொண்டான்.

ஆலமரத்தடியில் சிறுசெடி என என் மைந்தன் வளர்ந்தான். இன்று என் மைந்தன் இப்படி இருப்பதற்கு பொறுப்பு என் இளையவனே என்று சொன்னால் சிலர் சிரிக்கக்கூடும். ஆனால் நீ அறிவாய் நிகழ்ந்தது என்ன என்று. ஒழுக்கை எதிர்த்து நீந்துவதற்கு குஞ்சுகளுக்கு கற்றுக்கொடுக்கிறது அன்னைமீன். குருதிமணம் கொள்ள குருளையை பயிற்றுவிக்கிறது வேங்கை. மத்தகத்தால் வேங்கை மரத்தை உலுக்க வேழம் தன் மைந்தனுக்கு கற்றுக்கொடுக்கிறது. கீசகன் என் மைந்தனுக்கு அவன் விரும்பியதை மட்டுமே அளித்தான். மைந்தர் இயல்பாக விரும்புவது பெண்களைத்தான். அன்னையை முழுதும் அடையாத என் மகன் பெண்களின் கைகளில் திளைத்தான். செவிலியரும் சேடியருமே அவன் உலகென்றாயினர்.

அதை கீசகன் திட்டமிட்டு உருவாக்கினான் என இன்று அறிகிறேன். சுற்றியிருந்து விறலியர் அவனை புகழ்ந்துகொண்டே இருந்தனர். படைக்கலப் பயிற்சியோ புரவிப்பயிற்சியோ அளிக்கையில் முதல் சில நாட்களிலேயே பெரும்புண்கள் அவனுக்கு நிகழும்படி செய்தான். அவ்வச்சத்தை அவன் உள்ளத்தில் பெருக்கினான். என் மைந்தன் இயல்பில் கோழை அல்ல. அச்சமற்ற நிஷதகுடியினன். தொல்குடியாகிய கேகயத்தினன். இன்று நிஷதபுரியே அவனை எண்ணி ஏளனம் கொள்கிறது. என் சொல் அவ்வேளனத்தை மேலும் பெருக்கும். ஆனால் அன்னையென்றல்ல, வெறும் பெண்ணென்று நின்று அவனை எண்ணுகையில் என் உள்ளம் அவன் வெறுங்கோழை அல்ல என்றே உணர்கிறது. அவனுள் வாழ்கிறது அனல். தன்னை உணரவோ தன் தோள்களில் சித்தத்தை நிலைக்கச் செய்யவோ அவனுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அவன் சிறுமை செய்யப்பட்டான். சிறுமைசெய்யப்படுபவர்கள் அதை எதிர்கொள்ள முடியாமலிருக்கையில் சிறுத்துக் குறுகி அமைவதை கண்டிருப்பாய்.

இன்று இந்த நகரம் கீசகனின் கையில் உள்ளது. என்னையும் அரசனையும் சுட்டுவிரல் அசைவால் சிறையிலிட்டு மணிமுடியை கைப்பற்ற அவனால் இயலும். அவ்வாறு அவன் கைப்பற்றுவானென்றால் இந்நகரின் குடிகளில் எவர் எதிர்ப்பாரென்று அவனால் இன்று சொல்லமுடியவில்லை. எவரும் எதிர்க்கமாட்டார்கள் என்பதே மெய். நான் அறிந்த இந்த உண்மை இன்னமும் அவனுக்கு உறுதியாகத் தெரியாது. அந்த அச்சம்தான் முடிசூடிக்கொள்ள முடியாமல் அவனை தடுக்கிறது. அத்தயக்கம் இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் அந்தி இறங்குகையில் நன்று இன்றொரு நாள் நீட்டிக்கப்பட்டதென்றே என்னுள்ளம் ஆறுதல் அடைகிறது. ஒவ்வொரு நாள் காலையில் இன்றென்ன நிகழும் என்ற பதற்றம் ஓங்குகிறது.

“ஒருபுறம் மதுக்களியாட்டன்றி பிறிதொன்றறியாத அரசர்… இன்னொரு பக்கம் பொய்யுணர்வுகளில் தடுமாறி வீணனென்றே வாழும் மைந்தன். கன்னியுள்ளத்தின் கனவுகளில் திளைத்து இங்கிலாதிருக்கும் மகள். நான் ஒருத்தி இவ்வனைத்தையும் தொட்டுத் தொட்டுத் தவித்தபடி இவ்வரண்மனையில் அமர்ந்திருக்கிறேன்” என்றாள் சுதேஷ்ணை. “நேற்று முன்தினம் நீ என் அரண்மனைக்கு வந்த அன்று பின்னுச்சிப்பொழுதில் எனக்கொரு செய்தி வந்தது. நிஷதப்படைகளின் தலைமையில் கீசகனுக்கு மாற்றென்றும் நிகரென்றும் சிலரால கருதப்பட்ட எஞ்சியிருந்த மூவரையும் கீசகன் படைத்தலைமையிலிருந்து அகற்றிவிட்டான் என்று.”

“அவ்வாறு கருதப்பட்ட ஒவ்வொருவரும் போர்க்களங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அறியாநோயுற்று இறந்திருக்கிறார்கள். எஞ்சிய இம்மூவருமே எனது நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தார்கள். கீசகன் மலை உச்சியில் உருண்டு இந்நகர் மேல் உருளக்காத்திருக்கும் பெரும்பாறையென்றால் மூன்று தடைக்கற்கள் அவர்கள். அவர்களை அகற்றிவிட்டான். இனி அவனுக்குத் தடையொன்றுமில்லை. இன்னும் எத்தனை நாள் என்று எண்ணியிருக்கையிலேயே உன்னை பார்த்தேன். ஒருகணத்தில் நீ எனக்குக் காப்பு என்று தோன்றியது. ஏன் என்று தெரியவில்லை. கேகயத்தில் பதினாறுகைகளிலும் படைக்கலங்களுடன் கோயில்கொண்டிருக்கும் அன்னை கொற்றவையே யானைமேல் எழுந்ததுபோல் தோன்றினாய்.”

“நான் என் உயிரை அஞ்சுகிறேனா என்றால் ஆமென்றே சொல்ல முடியும். என்ன நிகழ்கிறதென்பதை உணர்ந்தவள் நான் மட்டுமே. என் மைந்தனிடமும் கணவரிடமும் இதைச் சொல்லி மன்றாடும் வாய்ப்புள்ளவள். கீசகன் முடிசூட்டிக்கொண்டான் என்றால் அவையில் எழுந்து மாற்றுக்குரலெழுப்பும் இறுதி நா என்னுடைது. இங்கு என்ன வேண்டுமானாலும் நிகழலாம். என்னை சூழ்ந்திருக்கும் இந்தக் காவற்பெண்டுகளில் ஒருத்தி கூட என்மேல் அன்புள்ளவள் என்றோ எனக்கெதிராக வாளோ நஞ்சோ எடுக்காதவளென்றோ என்னால் சொல்ல முடியவில்லை. தேவி, உன்னைச் சூழ்ந்திருக்கும் அந்த ஐந்து கந்தர்வர் அன்றி இனி எனக்கு நம்பிக்கைக்குரிய எவரும் இல்லை” என்று சுதேஷ்ணை அவள் கைகளை பற்றிக்கொண்டாள். அவள் கண்களில் நீர் வழிந்து அடிவிழியின் சுருக்கங்களில் பரவியது.

திரௌபதி அவள் கைகளை தானும் பற்றியபடி “இரு சொல்லுறுதிகளை நான் அளிக்கிறேன், பேரரசி. என் கந்தர்வர்களால் இந்நகர் முற்றிலும் காக்கப்பட்டுள்ளது. நீங்களும். காவல்கொண்டுள்ளீர்கள். இந்நிலத்தை உங்கள் மைந்தன் உத்தரன் மட்டுமே ஆள்வான். அவனது கொடிவழியினர் இங்கு கோல் கொண்டு திகழ்வர்” என்றாள். அக்கைகளைப் பற்றி தன் இரு கண்களில் ஒற்றியபடி “நீ யார் என்று அறியேன். ஷத்ரியப்பெண் என்கிறாய். சேடி என்று வந்திருக்கிறாய். பேரரசிகளுக்குரிய சொற்களை சொல்கிறாய். என்னை அரசியென்று எண்ணவேண்டாம். உன் அன்னை என்று கருதுக! உன் கால்களை சென்னி சூடும் எளிய அடியவள் என்றே எண்ணுக! உன் அருளால் நான் இங்கு வாழவேண்டும். என் குடி விளங்கவேண்டும்” என்றாள் சுதேஷ்ணை. “நன்று நிகழும்” என்றாள் திரௌபதி.

முகம் மலர்ந்து அரசி “சின்னாட்களுக்கு முன் அவையில் அருகநெறிக்கணியன் ஒருவன் வந்தான். என் மகள் குருதியில் பேரரசர்கள் பிறப்பார்கள். பாரதவர்ஷத்தை ஒருமுடியும் கோலும் கொண்டு ஆள்வார்கள் என்றான். அன்று அவை கொண்ட திகைப்பை நான் இன்று நினைவுகூர்கிறேன் சில சொற்கள் காலமே முகம் கொண்டு வந்தவைபோல ஒலிக்குமல்லவா? அப்படி எழுந்தது அவன் கூற்று. அதை மறுத்து ஓர் எண்ணம் கொள்ள எளிய மனிதர்கள் எவராலும் இயலாது. அன்று கீசகன் அங்கில்லை. அச்செய்தியை அறிந்து இரவெல்லாம் நிலைகுலைந்து தன் அறைக்குள் உலவிக்கொண்டிருந்தான் என்றார்கள். அவனுக்கு விலங்குகளுக்குரிய உள்ளுணர்வு உண்டு. இன்று அவையில் உன்னைப்பார்க்கையில் அவன் அனைத்தையும் தெரிந்துகொள்வான். உன் நிமிர்ந்த தலையும் தோள்களும் போதும், ஒரு சொல் எழவேண்டியதில்லை” என்றாள்.

flowerசுதேஷ்ணையும் திரௌபதியும் தலைமைச் சேடியால் வழிநடத்தப்பட்டு இடைநாழிக்குள் நுழைந்தனர். இடைநாழியின் எல்லையில் அவர்களின் வருகையை நோக்கி நின்றிருந்த இசைச்சூதர் கையை அசைக்க கேகயத்தின் கொடியை ஏந்திய படைவீரன் முன்னால் சென்றான். மங்கல இசை முழக்கியபடி சூதர் குழு முன்னால் சென்றது. எண்மங்கலம் கொண்ட தாலங்களுடன் அணிப்பரத்தையரின் நிரை தொடர்ந்தது.

சுதேஷ்ணை பெருமூச்சுடன் “உண்மையில் இதை நான் எவரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. இங்கு எவர் ஒற்றர் என்று கண்டுபிடிப்பது எளிதல்ல” என்றாள். திரௌபதி “இவற்றை நீங்கள் முற்றிலும் மறந்துவிட்டு அவை நுழையலாம்” என்றாள். “நாம் பேசுவது எவர் காதிலும் விழாது” என்றாள் அரசி. “இல்லை. பேசும் சொற்களின் உணர்ச்சிகள் உங்கள் முகத்தில் இருக்கும். தொலைவில் இருந்தே நீங்கள் எதைப்பற்றி என்னிடம் சொல்கிறீர்கள் என்பதை உங்களை அறிந்தவர்கள் உணர்ந்துகொள்ளமுடியும்” என்று திரௌபதி சொன்னாள். “மெய்யாகவா?” என்று கேட்டு சுற்றிலும் பார்த்தபின் “தெரியவில்லை. ஆனால் நீ சொன்னால் நான் பேசவில்லை” என்றாள் சுதேஷ்ணை.

அரசவைக்குச் செல்லும்பொருட்டு மகளிர்மாளிகையின் முதன்மைக்கூடத்தில் கூடி நின்றவர்களுடன் அவர்கள் சென்று சேர்ந்தபோது அங்கு வாழ்த்தொலிகள் எழுந்தன. சேடியர் நடுவே உத்தரன் இருப்பதை திரௌபதி பார்த்தாள். முதற்கணத்தில் பெண்களின் நடுவே அவன் இருப்பதை விழி தனித்தறியாததை எண்ணி இதழ்களுக்குள் அவள் புன்னகைத்துக்கொண்டாள். கண்களால் தேடி தன் சேடியருடன் முழுதணிக்கோலத்தில் நின்றிருந்த உத்தரையை கண்டாள். உத்தரன் அன்னையைப் பார்த்ததும் இருகைகளையும் விரித்து “பாரதவர்ஷத்தை ஆளும் பேரரசி எவ்வண்ணம் இருக்கவேண்டுமோ அப்படி இருக்கிறீர்கள், அன்னையே” என்றான்.

சுதேஷ்ணை ஆர்வமில்லாமல் உத்தரையைப் பார்த்து “இன்று காலைகூட நடனப்பயிற்சிக்கு சென்றாய் என்றார்கள்” என்றாள். “ஆம், ஒவ்வொரு நாளும் செல்ல வேண்டுமென்று ஆசிரியரின் ஆணை” என்றாள். உத்தரன் சினத்துடன் திரும்பி “ஆணையா? நிஷதஅரசகுமாரிக்கு ஆணையிடுவதற்கு அந்த ஆணிலிக்கு என்ன உரிமை? அவள் பணிந்து உன்னிடம் பேசவேண்டும். மாறாக ஒரு சொல் எடுத்தாளென்றால் என்னிடம் சொல். அவளுக்கு முறைமை என்ன, நெறி என்ன என்று நான் கற்பிக்கிறேன்” என்றான்.

உத்தரை அவனை திரும்பிக்கூட பார்க்காமல் அன்னையிடம் “இப்போதுதான் எனக்கு ஆடலில் மெய்யான ஆர்வம் வந்திருக்கிறது. ஒருநாள் செல்லாமலிருப்பது எனக்கும் கடினமானது” என்றாள். “அவையில் நீ ஏழெட்டு நாழிகை அமர்ந்திருக்கவேண்டும். அங்கு சென்று இருநாழிகைப்பொழுது துள்ளிவிட்டு வந்தால் அவையில் அமர்ந்து அரைத்துயில் கொள்வாய். முன்னரே இங்கு எவரும் அவை நிகழ்வுகளை நோக்குவதில்லை என்பது நகருக்குள் இளிவரலாக சுற்றிவருகிறது” என்றாள் சுதேஷ்ணை. உத்தரை “அவைநிகழ்வுகளை நோக்கி என்ன பயன்? யாரோ எதையோ செய்கிறார்கள். நாம் கொலுப்பாவைகள் போல் அமர்ந்திருக்கிறோம். இதற்கு நாம் செல்ல வேண்டிய தேவையே இல்லை. நம் வடிவில் ஓவியத்திரைச்சீலைகளை வரைந்துகொண்டு சென்று தொங்கவிட்டாலே போதும்” என்றாள்.

“என்ன சொல்கிறாய்? நீ நிஷத அரசகுமாரி” என்று உத்தரன் சொன்னான். “உனது சொற்கள் பாரதவர்ஷத்தின் ஐந்திலொரு பங்கு பகுதியை ஆள்கின்றன என்பதை மறக்காதே.” அரசி “நீ முதலில் உன்னை இளவரசி என நினை. நாம் எவரென்று உணராதிருக்கையில்தான் இத்தகைய சொற்கள் எழுகின்றன” என்றாள். திரௌபதி தாழ்ந்த குரலில் “இவை சேடியர் முன்வைத்து பேச வேண்டியவை அல்ல, அரசி” என்றாள். “ஆம். ஆனால் இவர்களை தனியாக நான் சந்திப்பதே இல்லை. தனியாக சந்திப்பதற்கு அழைத்தால் இருவருமே வருவதில்லை” என்றாள் அரசி. உத்தரை “வந்தாலென்ன? மீண்டும் மீண்டும் ஒன்றையேதான் சொல்வீர்கள். அதனால் எந்தப்பயனும் இல்லை என சொல்லும் நீங்களும் கேட்கும் நானும் அறிந்திருப்போம்” என்றாள்.

உத்தரன் உத்தரையிடம் “அன்னையிடம் முறைமை மீறி பேசவேண்டியதில்லை. உனக்கு உளக்குறை ஏதிருந்தாலும் என்னிடம் சொல்லலாம்” என்றான். உத்தரை “என்ன செய்வீர்கள்?” என்றாள் புருவத்தை தூக்கி. “கீசகரை அழைத்து ஆவன செய்யும்படி ஆணையிடுவேன். இங்கு நமது ஆணைகளை நிறைவேற்றுவதற்காகவே அவர் பொறுப்பேற்றிருக்கிறார்” என்றான். “சென்று ஆணையிடுங்கள்” என்றாள் உத்தரை. “என்ன ஆணை?” என்று அவன் கேட்டான். அவள் வெறுப்பு தெரியும் முகத்துடன் “அவையிலிருக்கும் எவரேனும் ஒருவரை தலைகொய்ய ஆணையிடுங்கள் பார்ப்போம்” என்றாள்.

அவன் திடுக்கிட்டு “எவரேனும் ஒருவரையா? அது அறமல்ல” என்றான். அவள் “நன்று. எவரேனும் ஒருவர் அவையின் பின்நிரையிலிருந்து முன்நிரையில் வந்து அமரட்டும். அதற்கு ஆணையிடுங்கள்” என்றாள். “முறைமீறுவது அவையின் ஒழுங்கை கலைப்பது” என்று உத்தரன் சொன்னான். அவள் “சரி, அவையிலிருக்கும் அணிபடாம்களில் எதையேனும் ஒன்றைக் கழற்றி அப்பால் மாற்றுவதற்கு ஆணையிடுங்கள்” என்றாள். உத்தரன் “அணிபடாமை கழற்றுவதென்றால்…” என்றபின் “அதன் அரசியல் உட்பொருட்கள் என்ன என்பதை அமைச்சரிடம் உசாவியபின்னர் அந்த ஆணையை இடுவேன். இன்றல்ல நாளை” என்றான். உத்தரை உதடுகள் கோண திரும்பிக்கொண்டாள்.

கோல்காரன் அறைவிளிம்பில் வந்து நின்று “அவைகூடிவிட்டது, பேரரசி. பேரரசர் அவை நுழையப்போகிறார். தங்களை அழைத்துவரும்படி படைத்தலைவரின் ஆணை” என்றான். உத்தரை “அதற்கும் படைத்தலைவர் ஆணை வேண்டுமா என்ன?” என்றாள். உத்தரன் குரல்தாழ்த்தி “நேரடியாக அவரைப்பற்றி எதுவும் இங்கு பேசவேண்டியதில்லை” என்றபின் சேடியரைப் பார்த்து “இவர்களில் எவர் ஒற்றரென்று நமக்குத் தெரியாது” என்றான். “அதையும் அவர்களை வைத்துக்கொண்டே சொல்லுங்கள். நன்று” என்று தலையை சிலுப்பியபடி உத்தரை தன் அணுக்கச்சேடியை நோக்கி மேலாடைக்காக கைநீட்டினாள்.

பொன்னூல் பணி நிறைந்த பீதர்நாட்டு இளஞ்செந்நிறப்பட்டாடையை சேடி அவள் கைகளிலும் தோள்களிலுமாக சுற்றி அணிவித்தாள். இன்னொரு அணிச்சேடி அவள் கழுத்திலிட்டிருந்த மணிமாலைகளை சீரமைத்தாள். அதை பார்த்தபின் உத்தரன் தன்னருகே நின்ற இன்னொரு சேடியிடம் மெல்ல “நான் உனக்களித்த கல்மணிமாலை எங்கே?” என்று கேட்டான். “பேழையிலிருக்கிறது” என்று அவள் மெதுவாக சொன்னாள். “அணிந்திருக்கலாமே?” என்றான் உத்தரன். சுதேஷ்ணையின் காதில் அவ்வுரையாடல் விழுந்தாலும்கூட அவள் அதைகேளாதவள் போல கோல்காரன் அருகே சென்று “செல்வோம்” என்றாள்.

வெள்ளிக்கோலை தூக்கியபடி கோல்காரன் “கேகயத்து அரசி, விராடப் பேரரசி, வருகை” என கூவியபடி முன்னால் செல்ல கேகயத்தின் கொடியுடன் கவசவீரன் தொடர்ந்தான். இசைச்சூதரும் அணிச்சேடியரும் அவர்களுக்குப் பின்னால் செல்ல, வலப்பக்கம் அரசியின் நீளாடையின் முனையை கையிலேந்தியபடி திரௌபதி தொடர, சுதேஷ்ணை அவை நோக்கி சென்றாள்.

தொடர்புடைய பதிவுகள்

ஆஸ்திரேலியா ஒரு கடிதம்

$
0
0

index

ஆஸ்திரேலியா, சூடாமணி -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

சூடாமணி அவர்களது கடிதம் தொடர்பாக எனது தனிப்பட்ட கணிப்பின்படி, இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும் சம்பவங்களின் பின்னணி காரணங்கள் இவையே:

பெரும்பாலான இந்தியர்கள் மாணவர்கள் அல்லது சமீபத்தைய குடியேற்ற வாசிகளில் அநேகம் பேர்

இரவு நெடு நேரம் சிற்றுண்டிச்சாலைகள், துப்புரவுப்பணிகளில் பகுதி நேரமாக பணியாற்றுகின்றர்.

இவர்கள்சொந்த வாகன வசதிகளற்ற பஸ், ரயில் பிரயாணிகள்.

வெகுதூரங்களில், குறைந்த வாடகையுள்ள வீடுகளில் வசிப்பவர்கள். இரு அறைகள் கொண்ட பிளாட் ஒன்றில் குறைந்தது 6,7 பேர் வாழக்கூடும் -காலை ஷிப்ட்டில் 4 பேரும், இரவுப்பணியில் 4 பேரும் சென்றால் எல்லோருக்கும் கட்டிலும், மெத்தையும் கிடைப்பது உறுதி!!.

பகுதிநேர வேலைகளுக்கு பெரும்பாலும் கரன்சியே சம்பளமாக அளிக்கப்படுகிறது.(உபயம், வருமானவரி இலாகா!!) ஆக, இவர்களது பைகளில் எப்பவும் பணம் இருக்கும்.

இவர்கள் வர்க்க ரீதியாக, திருடர் மற்றும் பிக்பாக்கட்காரர்களால் குறி வைக்கப்படும் ஒரு சாதி, மத சார்பற்ற தனி இனம்.

1980-90களில் சீனர்கள், வியட்நாமியர், இலங்கையர்கள் இவ்வாறான வன்முறைக்கு ஆளானார்கள். தற்போது இந்தியரகள் இங்கு இடம் வகிக்கிறார்கள்.

எனில், இது இனவாதம் அல்ல, திருடர்கள் குறிவைக்கும் தனிஒரு பிரிவு. இதை சம்பந்தப்பட்டோர் உணர்ந்தால் தம்மை உரிய முறையில் பாதுகாத்துக் கொள்ளலாம்.

அன்புடன்,

மைத்ரேயி நாத்.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 16718 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>