Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16754 articles
Browse latest View live

விழா 2015 கடிதங்கள் -8

$
0
0

1

 

 

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு

விஷ்ணுபுரம் விழாவின் முந்தைய நாள் இலக்கிய விழாவில் கலந்து கொண்டேன்.

சராசரி பெண்களுக்கு  இல்லத்தை விட்டு ஒருநாள் பிரிந்து வர வேண்டுமெனில் எத்தனை முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும்..? என்னுள் சுவையூறி கிடந்த இலக்கியம் நோக்கிய ஆர்வமே அதை வழிநடத்தியது. கிடைத்த அனுபவங்கள் அதனை சிறிதும் ஏமாற்றவில்லை.
ஆனால் விழா நாளன்று நிகழ்ந்த நிகழ்வுகளாக பதியப்பட்ட தகவல்கள் என்னை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.
எத்தனையெத்தனை விஷயங்களை தவற விட்டிருக்கிறோம் என்று தவிக்க வைத்தது. இது போன்ற விழாக்கள் கல்லுாரிகளும் அரசும் முன்னெடுத்திருக்க வேண்டியது. ஏதோ ஒரு அல்லுப்புளிக் கணக்குடன் கல்லுாரிகள் இம்மாதிரியான அரங்குகளை முடித்து விடுகின்றன. அரசாங்கத்தின் கவலைகளே வேறு.
முன்னெடுப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்கும் காலம் தங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. ஏன் இலக்கியமும்தான்..
பொதுவாக எந்தவொரு நற்செயலையும் முன்னெடுப்பதென்பதே  நல்ல விஷயம்தான். அதிலும் இலக்கிய முன்னெடுப்பு என்பது வெகு சிலரால் மட்டுமே சாத்தியப்படும்.   தாங்கள் தொடரும் வெற்றிப் பயணத்தில் நாங்களும் உடனிருப்போம்.
 நன்றியுடன்
கலைச்செல்வி.
ஜெ,
கடந்த ஞாயிற்றுக் கிழமை விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் 2015 ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவில் ஒரு பார்வையாளனாய் கலந்து கொண்டேன். அந்நாள் என் வாசக உலக பிரம்மாவின் இரு தலைகளான நாஞ்சில் நாடன் மற்றும்  உம்மை சந்தித்தேன்.  அவ்வளாகத்திலேயே நான் தான் முதன்முதலில் உங்கள் இருவரையும் இரு கரம் கூப்பி  கைகுலுக்கி  வரவேற்றேன். பின் பேச வார்த்தையிழாது ஓரமாய் நின்றேன்.  பற்பலவர் அவர்கள் இருவருடனும் selfie எடுத்தனர், பேசி மகிழ்ந்தனர், நான் ஓரமாய் நின்று அவர்களது பேச்சை ரசித்துக் கொண்டிருந்தேன். ( நீர் மறந்திருப்பீர்)

இடையில் டொயோட்டா கரோலோவில் வந்து வெள்ள வெளேறென துள்ளளுடன் இறங்கி நாஞ்சில் நாடனுடன் ஒருவர் பேசலானார். அவரின் முகம் சற்று பரிச்சயப்பட்டிருந்தது ஆனால் யாரென்று புலப்படவில்லை.பின் வெற்றிமாறனும் ( இவருக்கும் வணக்கம் சொன்னேன், பின் selfi கள் பறந்தன அது வேற விடயம்),  ஜோடி க்ரூசும் வந்த பிறகு விழா ஆரம்பமாயிற்று.

எல்லோரும் கவிஞர் தேவதச்சனைப் பற்றி பேசினர், பாராட்டினர், அவரைப் பற்றிய ஆவணப் படம் ஒளிபரப்பப்பட்டது. அப்படத்தில் தான் நம் துள்ளல் நடைக்காரர் யுவன் சந்திர சேகர் என தெரிந்தது.

அவையினிலே யுவன்   தேவதச்சனைப் பற்றி் பேசலனார்,  அவருக்கும் தேவதச்சனுக்குமிடையேயிருந்த உறவைப் பற்றிப் பேசினார், செ மோ பற்றிப் பேசினார். எல்லோரையும் விட சுவாரசியமாய் பேசினார்,  கதை சொன்னார். அக்கதையில் ஆண்களைப் பற்றி உயர் திணையில் பேசாலானார். அக்கதையில் வரும் பெண்ணைப் பற்றி மட்டும் ” அது வந்தது, போனது” , என அஃறிணையில் பேசலானார்.

பெண்கள் மட்டும் எவ்வாறு அஃறிணையில் சேர்த்தீர் என அவர் பேச்சினூடே கேள்வியாய் கேட்கலாமென எழுந்த என் உள்ளுணர்வை ஒரு மாபெரும் கவிஞனின் விழாவின் போது ஒரு புதுப் பனையோலை கலகம் விளைவிக்கக் கூடாதென அடக்கி வைத்தேன்.

பெண்களை அஃறிணையில் அழைப்பதுதான் நம் மரபா செ மோ. உன் உன் அவையினிலே?…

ராஜாவெங்கடேஸ்வரன்.

தொடர்புடைய பதிவுகள்


குகைச்செதுக்கு ஓவியங்களும் டீக்கடையில் இலக்கியமும்

$
0
0

 

எனக்கு ஒரு செல்பேசி அழைப்பு. அப்துல் ஷுக்கூர் எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். என்னுடைய நூறு நாற்காலிகள் மலையாளத்தில் ஒரு சிறு நாவலாக வெளிவந்துள்ளது. அதற்கு பதிப்புரிமை இல்லை என அறிவித்திருந்தமையால் ஏழு வெவ்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. இரண்டு லட்சம் பிரதிகள் வரை விற்றிருக்கிறது அது. அந்நாவலைப்பற்றி ஒரு விவாதம் நிகழ்த்தவேண்டும் என ஷுக்கூர் அழைத்தார்.

நான் அமைப்புசார்ந்த இலக்கியக் கூட்டங்களை விரும்பாதவன். கல்லூரிகளின் கூட்டங்களைப்போல வீண்வேலையே வேறில்லை. ஆனால் ஷுக்கூரின் கூட்டம் என்னைக் கவர்ந்தது. காரணம் அவர் நடத்தும் டீக்கடையிலேயே அந்தக்கூட்டம் நடக்கும் என்றார். பயணச்செலவு ஏதும் தரமுடியாது. விற்கும் நூல்களின் பணத்தைக்கூட நோயுற்றிருக்கும் ஓர் எழுத்தாளருக்கு அளிக்கவிருக்கிறேன்” என்றார். அந்த இலட்சியவாதம் எனக்குப்பிடித்திருந்தது. ”வருகிறேன்” என்றேன்

 

முந்தைய நாளே நானும் ஈரோடு கிருஷ்ணனும் திருப்பூர் கதிரும் ராஜமாணிக்கமும் கதிரின் காரில் கோவையிலிருந்து கிளம்பினோம். மானந்தவாடிக்கு அருகே உள்ள இடைக்கல் என்னும் குகையிலுள்ள கற்செதுக்கு ஓவியங்களைப் பார்ப்பதற்காகச் சென்றோம். சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெரிய பாறை பிளந்து உருவானது இடைக்கல் என்னும் குகைப்பிளவு. அந்தப்பிளவில் விழுந்து சிக்கி நிற்கும் பெரும்பாறை அப்பெயரை அளித்திருக்கிறது

அம்புக்குட்டிமலை என்னும் இடத்தில் கடல்மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரத்திலுள்ளது இடைக்கல் குகை. புதிய கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்த குகை இது. தோராயமாக எட்டாயிரம் வருடங்களுக்கு முன்பு. இவை குகை ஓவியங்கள் அல்ல. கூரிய கற்களால் பாறையை தோண்டித் தோண்டி கோடுகள் அமைத்து வரையப்பட்ட சிற்ப ஓவியங்கள். தொல்லியலில் இவை Petroglyphs என அழைக்கப்படுகின்றன.

 

ஆளோய்ந்து கிடக்கும் என நினைத்தோம். ஆனால் மைசூர் அருகே என்பதனால் நல்ல கூட்டம். ஒரு சுற்றுலாமையத்தின் சூழல் இருந்தது. உப்பிலிட்டு ஊறவைக்கப்பட்ட நெல்லிக்காய் கிடைத்தது. எனக்கு மிகவும் பிடிக்கும் அது. வாங்கித் தின்றபடி மூன்று கிலோமீட்டர் தூரம் மலை ஏறிச் சென்றோம். கொஞ்சம் கஷ்டமான ஏற்றம்தான். அதன்பின் இரும்பால் படியமைத்து மேலே செல்ல வசதி செய்திருந்தனர். பலதட்டுகளாக நானூறுபடிகள். மேலே இருந்தது இடைக்கல் குகை
இடைக்கல் குகைச்செதுக்குகள் நம்முடைய தொல் வரலாற்றாய்வில் முக்கியமானவை எனக் கருதப்படுகின்றன. இவற்றுக்கிணையான கற்செதுக்கு ஓவியங்கள் இந்தியாவில் பிறிதில்லை. பிரான்ஸில் உள்ள குகைகளின் செதுக்கு ஓவியங்களுடன் இவற்றுக்குள்ள ஒற்றுமை பிரமிக்கச்செய்வது.

மலபாரின் பிரிட்டிஷ் போலீஸ் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஃப்ரெட் பாசெட்
[ Fred Fawcett] அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட குகை இது. பழங்குடிகள் இவற்றை அறிந்திருந்தனர். இவை தங்கள் தெய்வங்கள் தங்குமிடமென எண்ணியிருந்தனர். நெடுங்காலம் இக்குகை புழக்கத்தில் இருந்திருக்கலாமென ஊகிக்கிறார்கள். கிமு 5000 முதல் கிமு 1000 வரை. ஆரம்பகாலக் செதுக்குகளில் வளைவுகள் குறைவாக வரையப்பட்ட பறவைகளும் மனிதர்களும் மிருகங்களும் உள்ளனர். பிற்காலச் செதுக்குகளில் எழுத்துக்களைப்போன்ற வடிவங்கள் உள்ளன. அவை ஹரப்பன் நாகரீகத்தின் எழுத்துக்களுடன் காட்சிக்கு ஒத்துப்போகின்றன.

இக்குகை ஓவியங்களில் திரும்பத்திரும்ப வரும் படிமங்களில் முக்கியமானது சூரியன். மலர்போல சக்கரம்போல அதை வரைந்துள்ளனர். சூரியன் இவர்களின் தெய்வமாக இருந்திருக்கலாம். இன்னொரு சின்னம் வண்டி. நான்கு சக்கரங்கள் கொண்டது. ஆனால் மாடுகள் இல்லை. இப்பகுதிப் பழங்குடிகள் இப்போதுகூட மனிதர்கள் இழுக்கும் வண்டிகளைச் செய்கிறார்கள். அவையாக இருக்கலாம். எட்டாயிரம் வருடங்கள். நமக்கு மகாபாரதம் எத்தனை தொன்மைக்காலமோ அதேயளவுக்கு மகாபாரதகால மக்களுக்கு இவர்கள் தொன்மையானவர்கள்.

 

செதுக்கோவியங்களை முதலில் பார்த்ததும் கிருஷ்ணன் ‘மிருகமோ பறவையோ ஒண்ணும் இல்லை சார், வெறும் வடிவங்கள்தான்” என்றார். ஆனால் கொஞ்சம் கண்பழகியதும் உருவங்கள் தெரியத்தொடங்கின. வழிகாட்டி சுட்டிக்காட்டி விளக்கத்தொடங்கியது, ஒவ்வொரு உருவமாக எழுந்துவந்தன. முதலில் தெரிந்தது தலையில் இறகுகள் போல விரிந்த தலையணி அணிந்து மார்பில் கவசம் சூடி கைகள் விரித்து நிற்கும் அரசனின் உருவம். அருகே உள்ள படம் அவரது பின்பக்கத்தோற்றம். மேலே பெண்கள். யானை. மயில் அல்லது இருவாய்ச்சி பறவை.

இங்கே உள்ள வடிவங்களை இன்னமும் ஆய்வுசெய்து முடிக்கவில்லை. வரலாற்றாய்வாளார் எம் ஆர் ராகவவாரியர் இவற்றில் ஒரு வடிவம் நீர்க்குடம் ஏந்திய மனிதன் என அடையாளம் கண்டிருக்கிறார். அது இறுதிச்சடங்கு செய்யும் படமாக இருக்கலாம். குடமுடைத்துச் சடங்குசெய்வது இன்றும் நீளும் பழக்கம். இந்த இலச்சினை ஹரப்பன் பண்பாட்டிலும் இருப்பதனால் இந்தியாமுழுக்க ஹரப்பன் பண்பாடு இருந்திருக்கலாம் என அவர் சொல்கிறார். இங்குள்ள எழுத்துக்களுக்கு பிராமி லிபியுடன் அணுக்கம் உள்ளதை ஐராவதம் மகாதேவன் சுட்டிக்காட்டியிருக்கிறார். பலவகையிலும் இன்னமும் ஆய்வுக்குரிய ஒரு பெரிய சுரங்கம் இக்குகைச்செதுக்குகள்.

 

ஷுக்கூர் இக்கா பேசுகிறார்

ஒரு வரலாற்று இடம் சுற்றுலாமையம் ஆவதன் அனைத்துச் சிக்கல்களையும் இடைக்கலில் கண்டோம். எவருக்கும் அந்த ஓவியங்களில் ஆர்வமில்லை. ஒரே கூச்சல் . அங்கே நின்று ஒரு தற்படம் எடுத்துக்கொள்வதைத்தவிர எவரும் எதிலும் நிலைக்கவில்லை. காவலர் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தார். வேலியிடப்பட்டிருந்தமையால்தான் குகைச்செதுக்குகள் அழியாமல் எஞ்சியிருக்கின்றன.

பார்த்ததைவிட திரும்பும்போது கண்ணுக்குள் பெருகின அந்த ஓவியங்கள். மழையீரமும் குளிருமாக இருந்த சாலையில் காரில் சென்றோம். மதிய உணவை மாலை சாப்பிட்டோம். இருட்டிய பின்னர்தான் கண்ணனூரை அடைந்தோம். ஒரு விடுதியில் அறைபோட்டு தங்கினோம். காலையில் எழுந்து கண்ணனூர் கடலோரம் இருந்த செயிண்ட் அஞ்சலோ கோட்டையைச் சென்று பார்த்தோம்.

 

பெரும்பகுதி ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டை இது. போர்ச்சுக்கீசியர்களால் கட்டப்பட்ட கடல்கோட்டை. அவர்களின் பண்டகசாலையாக இருந்தது. பின்னர் பிரிட்டிஷாரின் சிறையாக இருந்தது. காலையில் ராணுவவீரர்கள் அதைச் சுத்தம்செய்துகொண்டிருந்தனர். கடலில் இப்பகுதிக்குரிய சிறிய டால்பின் மீன்கள் துள்ளி விழுவதைக் கண்டோம்.,

காலை உணவுக்குப்பின் ஷுக்கூர் வாழும் பெடயங்கூர் என்னும் சின்னஞ்சிறு கிராமத்திற்கு வழிவிசாரித்துச் சென்றோம். சாலையில் ஒரு பெட்டிக்கடையில் ஷுக்கூர் பற்றி கேட்டோம். கடைக்காரர் ஒரு கவிஞர், மூன்று தொகுதிகள் பிரசுரித்திருக்கிறார். ”அதோ அந்தக்கடைதான். நானும் வருவேன்” என்றார். ஷுக்கூர் எங்களை சாலையிலேயே கைகாட்டி அழைத்தார்

சின்னஞ்சிறிய டீக்கடை. ஷுக்கூர் சைக்கிளில் மீன் வாங்கிக்கொண்டுவந்து கூவிவிற்கும் தொழிலைத்தான் இருபதாண்டுகளாகச் செய்துவந்தார். அதற்குமுன் மண்வெட்டும் கூலித்தொழிலை பத்தாண்டுக்காலம் செய்தார். மகன் துபாயில் வேலைக்குப் போனபின் டீக்கடை நடத்துகிறார். ஐந்தாம் வகுப்புதான் படிப்பு. சுயமாக இலக்கியம் கற்று மூன்று தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். பெடயங்கூரில் வீடுவீடாக இலக்கியத்தை அறிமுகம் செய்து வருகிறார். என் நூறுசிம்ஹாசனங்ஙள் நூலை மட்டும் நாநூற்றைம்பது பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார். இந்த டீக்கடை இலக்கியம் அவரது கனவுகளில் ஒன்று

ஷுக்கூர் இக்காவின் வீட்டுக்குச் சென்று நெய்ச்சோறும் சிக்கனும் சாப்பிட்டோம். அவரது மனைவியும் திருமணமான மகளும் வீட்டில் இருந்தனர். அவர்களின் சமையல் வடக்குமலபாருக்கே உரிய மிதமான காரமுள்ள சுவைகொண்டது. அருகே உள்ள வளைபட்டணம் ஆற்றங்கரைக்குச் சென்று பகவதியின் காவலாளிகளாக கருதப்படும் மிகப்பெரிய மீன்கள் நிறைந்த நீர்ப்பெருக்கைப் பார்த்தோம்

 

 

1

இரண்டரை மணிக்குக் கூட்டம். வழக்கமாக முப்பதுபேர்தான் வருவார்கள். ஆனால் இக்கூட்டம் பற்றி மாத்ருபூமி, மலையாளமனோரமா நாளிதழ்கள் பெரிய அளவில் செய்திவெளியிட்டிருந்தமையால் நூறுபேர் வந்திருந்தனர். உட்கார இடமில்லாமல் பாதிப்பேர் சாலையில் அமர்ந்திருக்கநேரிட்டது.

மாவட்டம் முழுதிலிருமிருந்து கவிஞர்கள் , எழுத்தாளர்கள், விமர்சகர்கள் கலந்துகொண்டனர். நால்வர் நூலைப்பற்றிப் பேசியபின் நான் கேள்விகளுக்குப் பதிலளித்தேன். அத்தனைபேரும் நாவலை வாசித்திருந்தனர். சமானமான பிறநாவல்களுடன் ஒப்பிட்டும் பேசினர். உற்சாகமான உரையாடல். கூரிய மதிப்பீடுகள்.

 

மாலை ஆறுமணிக்கு சந்திப்பு முடிந்தபின்னரும் நின்றபடியே பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் நக்கலும் கிண்டலும் இல்லாமல் கேரளத்தில் இலக்கியக்கூட்டங்கள் முடிவடைவதில்லை. நவீன இலக்கியத்தை நாங்கள் டீக்கடைகளில்தான் பேசிப்பேசி உருவாக்கினோம் என்றேன். முன்பு கேரளத்தில் கம்யூனிசமும் டீக்கடைகளில் உருவானதுதான் என்றார் தாஹா மாடாயி என்னும் விமர்சகர்

கிருஷ்ணனும் நண்பர்களும் கோவை சென்றனர். நான் ஏழு மணிக்கு விடைபெற்றுக் கிளம்பினேன். ஷுக்கூர் இக்கா என் கைகளைப்பற்றி “முதல்கூட்டம் கன்னட எழுத்தாளர் சிவராம காரந்தின் சோமனதுடி பற்றி. அந்த வேகம் உள்ள நாவல் இது… எனக்கு மிகவும் பெருமை” என்றார். நான் சம்பிரதாயமாக ஏதும் சொல்லவிரும்பவில்லை. “இக்கா, மறுபடியும் சந்திப்போம்” என்று மட்டும் சொன்னேன்.

மாத்ருபூமி நாளிதழ் இந்த நிகழ்ச்சிக்காக தங்கள் நிருபரையும் புகைப்படக்காரரையும் அனுப்பியிருந்தது. அவர்களின் காரிலேயே நான் கோழிக்கோடு கிளம்பினேன். அங்கிருந்து எர்ணாகுளம் வழியாக நாகர்கோயில். கீதை சொற்பொழிவுக்காக ஐந்தாம்தேதி ஊரைவிட்டுக் கிளம்பி கிட்டத்தட்ட பத்துநாட்களுக்குப்பின் மீண்டும் வீடு.

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கோவை சங்கர் உரை

$
0
0

1

 

கோவையில் நான் ஆற்றிய சங்கரர் பற்றிய உரை. சவுண்ட் கிளவுட்

https://soundcloud.com/jeyamohan-writer/sankarar-jeyamohan 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 17

$
0
0

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 5

பரிசுகள் பெற்று சூதனும் கூட்டரும் அவை விட்டு வெளியேறும் வரை பானுமதி அப்பாடலில் இருந்து வெளிவரவில்லை என்று தோன்றியது. அணுக்கன் வந்து துரியோதனன் அருகே தலைவணங்கி மெல்லிய குரலில் “மாலை அவை கூட இன்னும் இரண்டு நாழிகையே பொழுதுள்ளது. தாங்கள் ஓய்வெடுக்கலாம்” என்றான். “ஆம். அதைத்தான் நானும் எண்ணினேன்” என்றபடி திரும்பி நோக்க அணுக்கன் சால்வையை எடுத்து அவன் தோளில் அணிவித்தான். கர்ணனை நோக்கி திரும்பிய துரியோதனன் “இக்குல வரலாறுகள் மீள மீள ஒன்றே போல் ஒன்று அமைவதென தோன்றுகிறது” என்றான்.

அவன் உள்ளம் எங்கு செல்கிறது என்று உணர்ந்து கொண்ட கர்ணன் “ஆம்” என்றான். துரியோதனன் மீசையை நீவியபடி திரும்பி சுபாகுவை நோக்க அவன் “நான் நமது தந்தையைத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன் மூத்தவரே” என்றான். அந்த நேரடியான குறிப்பு துரியோதனனை ஒரு கணம் அயரவைத்தது. உடனே முகம் மலர்ந்து உரக்க நகைத்தபடி கர்ணனிடம் “எவ்வளவு அறிவாளிகள் எனது தம்பியர் பார்த்தாயா? நுணுக்கமாக இங்கிதமாக சொல்லெடுக்கிறார்கள்” என்றான்.

சுபாகுவின் அருகிலிருந்த துச்சலன் “ஆம் மூத்தவரே, அவன் சொன்னது உண்மை. நானும் நமது தந்தையைத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். விழியிழந்தவர் என்பதற்காக அல்ல” என்றான். கர்ணன் சற்றே பொறுமை இழந்து போதும் என்று கையசைக்க துரியோதனன் கர்ணனை நோக்கி திரும்பி “இரு கேட்போம்” என்றபின் “சொல்லு தம்பி, எதற்காக? விழியிழந்தவரே இருவரும் என்பதை கண்டுபிடித்துவிட்டாயா?” என்றான்.

சுபாகு மகிழ்ந்து “அது மட்டுமல்ல, இருவருமே கரிய உடல் உள்ளவர்கள்” என்றான். துச்சலன் அவனை இடைமறித்து “நான் அதற்கு மேலும் எண்ணினேன். இருவருமே மைந்தரால் பொலிந்தவர்கள்” என்றான். “பிறகு?” என்றான் துரியோதனன். கர்ணன் “போதும். இதற்கு மேல் பேசுவது அரசர்பழிப்பாகும்” என்றான். “இங்கு நாம் அறைக்குள் அல்லவா பேசிக் கொள்கிறோம்?” என்றபின் துரியோதனன் திரும்பி “சொல் தம்பி, என்ன?” என்றான். துச்சலன் “அவரைப்போலவே நமது தந்தையும் காமம் மிகுந்தவர் என்று எனக்குத்தோன்றியது” என்றான். பின்பு சுபாகுவை நோக்கி “தெரியவில்லை. நான் மிகையாகக் கூட எண்ணியிருக்கலாம்” என்றான்.

துரியோதனன் தொடையில் அறைந்து உரக்க நகைத்து திரும்பி “என் தம்பியர் சிந்திக்கும் வழக்கமில்லாதவர்கள் என்று ஓர் அவதூறு அஸ்தினபுரியில் சூதர்களால் கிளப்பப்படுகிறது. இப்படி அனேகமாக நாளொன்றுக்கு இரு முறையாவது தங்களை இவர்கள் நிறுவிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை இச்சூதர்கள் அறிவதில்லை. நாமே இத்தருணங்களை கவிதையாக ஆக்கினால்தான் உண்டு” என்றான். பானுமதி சிரிப்பை அடக்கியபடி விழிகளை திருப்பி அறைக்கூரையை பார்த்தாள். “செல்வோம்” என்றபடி துரியோதனன் முன்னால் நடக்க பானுமதி சிரிப்பு ஒளிவிட்ட கண்களால் கர்ணனை நோக்கி மெல்லிய குரலில் “எப்படி இருக்கிறாள் விருஷாலி? இங்கு அழைத்து வருவதே இல்லையே?” என்றாள்.

கர்ணன் “அவள் உள்ளம் திரௌபதியிடம் இருக்கிறது” என்றான். “ஆம், எண்ணினேன்” என்றாள் அவள். “அவள் தந்தை முன்னரே பாண்டவருக்கு தேர் ஓட்டியவர். குந்தி அளித்த பொற்கங்கணம் ஒன்று அவர் இல்லத்தில் உள்ளது. எனவே தானும் தன் குடும்பமும் பாண்டவர்களுக்கு அணுக்கமானவர்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள்” என்றான் கர்ணன். “அது நன்று. ஏதேனும் ஒரு பிடிப்புள்ளது அரசியலில் ஒரு ஆர்வத்தை உருவாக்கும்” என்றாள் பானுமதி. முன்னால் சென்ற துரியோதனன் திரும்பி “இங்கு அவைக்கு வருவதில் அவளுக்கென்ன தயக்கம்?” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை.

பானுமதி சினந்து “தாங்கள் அறிந்ததே. அங்க நாட்டு அரசனுக்கு முதல் துணைவியானவள் முடிசூடி அரியணை அமர முடியாதென்று வகுத்தது வேறெவருமல்ல, நமது அவை. இங்கு வந்து எப்படி அவள் அமர்வாள்?” என்றாள். கர்ணன் இடைமறித்து “அதுவல்ல” என்றான். “பின்பு…?” என்றாள் பானுமதி. கர்ணன் “இங்கு அவள் தன்மேல் மிகையாக பார்வைகள் விழுவதாக உணர்கிறாள்” என்றான். “அதைத்தான் நானும் சொன்னேன். இங்கு அவள் இருந்தால் அவளை சூதப்பெண்ணாக நடத்துவதா அரசியாக நடத்துவதா என்று நமது அவை குழம்புகிறது.”

“இது என்ன வினா? அங்க நாட்டு மன்னன் என் தோழன். அவனது துணைவி அவள். அவள் அரசவைக்கு வரட்டும். உனக்கு நிகரான அரியணை அமைத்து நான் இங்கு அமரவைக்கிறேன். எழுந்து ஒரு சொல் சொல்பவன் மறுசொல் எடுக்காது தலை கொய்ய ஆணையிடுகிறேன். பிறகென்ன?” என்றான் துரியோதனன் உரத்த குரலில்.

பானுமதி “நாம் எப்போதும் நமது பிதாமகர்களுடனும் ஆசிரியர்களுடனும் பொருதிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறக்கவேண்டாம்” என்றாள். “நான் பொருதிக் கொண்டிருப்பது என்னைச் சூழ்ந்துள்ள சிறுமையுடன்” என்றான் துரியோதனன். “மண்ணாள்பவன் வென்று செல்ல வேண்டிய தடை என்ன அறிவாயா? அவனுள் வாழும் மண்ணுக்கு உரியவனென தன்னை உணரும் ஓர் எளியவன்.” சிறிய தத்தளிப்புடன் கர்ணன் “இதைப்பற்றி நாம் பிறகு பேசுவோமே” என்றான்.

“விருஷாலி இங்கு வரலாம்” என்றாள் பானுமதி. “அவள் இளமையில் எவ்வண்ணம் உணர்ந்தாலும் சரி, இங்கு இப்போது அவள் மன்னர் திருதராஷ்டிரரின் குடியாகவே இருக்கிறாள். தங்கள் துணைவியாக இருக்கையில் ஒரு போதும் அவள் இந்திரப்பிரஸ்தத்துக்கு செல்லப்போவதில்லை. ஆகவே இந்த அவை அவளுக்குரியது. அதை அவளுக்கு உணர்த்துங்கள்.”

துரியோதனன் “ஆம் அதை அவளிடம் சொல்! இந்த அவை அவளுக்குரியது” என்றான். கர்ணன் “நான் அதை அவளிடம் சொல்லியிருக்க மாட்டேன் என்று நினைக்கிறீர்களா?” என்றான். பானுமதி அவன் விழிகளை நோக்கி “ஆம், சொல்லியிருக்கலாம். ஆனால் மீள மீளச் சொல்பவையே நிலை பெறுகின்றன” என்றாள்.

கர்ணன் சில கணங்கள் தலைகுனிந்து கைகளை பின்னுக்குக் கட்டி சீரான நீள் காலடிகளுடன் நடந்தபின் தனக்குத்தானே என “எல்லாவற்றையும் சொல்லிவிடலாம் என்பதுதான் எவ்வளவு பெரிய மாயை” என்றான். பானுமதி அவன் அருகே வர திரும்பி “சொல்லிவிட்டால் அனைத்தும் சீராகிவிடும் என்பதற்கு நிகரான மாயை அது” என்றான். அவள் துயர் கடந்து சென்ற விழிகளுடன் ஒளியின்றி புன்னகைத்தாள்.

“உனக்கு சொல்லமைக்கத் தெரியாது என்பதை என்னளவுக்குத் தெரிந்த பிறரில்லை” என்று சற்று முன்னால் சென்ற துரியோதனன் திரும்பி கைநீட்டி சொன்னான். “நீ அவளிடம் என்ன சொன்னாய்? அஸ்தினபுரியின் அரசன் அவள் தமையனுக்கு நிகரென சொன்னாயா? அவளுடைய தன்மதிப்புக்கும் உவகைக்கும் என எனது வாள் என்றுமிருக்கும் என்று சொன்னாயா? இதோ இப்பேரரசின் ஒவ்வொரு படையும் அவளுக்குரியது. அதை அவளிடம் சொல்” என்றான்.

கர்ணன் “சொற்கள் மகத்தானவை. அவற்றை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அகம் விரியவேண்டுமல்லவா?” என்றான். “என்ன சொல்கிறாய்?” என்றான் துரியோதனன். “தாங்கள் சொல்பவற்றை புரிந்து கொள்ளும் அளவுக்கு அவள் உள்ளம் விரியவில்லை. அவள் வாழ்ந்த உலகு மிகச்சிறியது. ஒருபோதும் இன்றிருக்கும் இடத்தை விரும்பியவள் அல்ல. பிறிதொரு தேரோட்டிக்கு மணமகளாக சென்றிருந்தால் நெஞ்சு நிறைந்த உவகையுடன் கழுத்து நிறைக்கும் தாலியுடன் இப்போது வாழ்ந்திருப்பாள். இன்று ஒவ்வாத எங்கோ வந்து உகக்காத எதையோ செய்யும் துன்பத்தில் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறாள்” என்றான்.

துரியோதனன் முன்னால் செல்ல பானுமதி கர்ணன் அருகே நடந்தாள். மெல்லிய குரலில் “அதற்குதான் இங்கு வரச்சொன்னேன். அல்லது நான் அங்கு வருகிறேன். அவளிடம் பேசுகிறேன். ஒருநாளில் இருநாளில் சொல்லி முடிக்கக் கூடியதல்ல இது. மெல்ல மெல்ல அவள் உள்ளத்தை மாற்ற முடியும்” என்றாள். அவன் பெருமூச்சுவிட்டுக்கொண்டு மெல்ல காலடி எடுத்துவைத்தான். திருதராஷ்டிரரின் காலடிகள் பெருமுழக்கமிடுபவை என்பது அரண்மனை அறிந்தது. அக்காலடியோசைக்கு அடுத்து ஒலிப்பவை கர்ணனின் காலடிகள்.

உள்ளறைக்குச் சென்றதும் துரியோதனன் “நான் ஆடைமாற்றி வருகிறேன்” என்றபடி அணியறைக்குள் சென்றான். தம்பியர் அவனை தொடர்ந்தனர். துரியோதனனின் மஞ்சத்தில் பானுமதி அமர கர்ணன் வழக்கம் போல சாளரத்தருகே கிடந்த பீடத்தில் கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்தான். “அவளை அழைத்துவந்தால் என்ன மூத்தவரே?” என்றாள் பானுமதி.

“நான் முயலாமலில்லை” என்றான் கர்ணன். “ஆனால் பெண்கள் ஏதோ சிலவற்றில் முழுமையான உறுதியுடன் இருக்கிறார்கள். அதை மாற்ற தெய்வங்களாலும் இயலாது.” அவள் அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். “மேலும் விருஷாலியிடம் எதையுமே உரையாட இயலாது. நான் சொல்லும் சொற்களைவிட விரைவில் அவள் உள்ளம் மாறிக்கொண்டிருக்கிறது.”

“மணநிகழ்வு நாளில் அவள் முகத்தை பார்த்தேன். அது உவகையிலும் பெருமிதத்திலும் மலர்ந்திருக்கும் என்று எண்ணினேன். கூம்பிச் சிறுத்து விழிநீர் துளிர்த்து இருந்த அவள் முகத்தைக் கண்டு என்ன நிகழ்ந்ததென்றறியாமல் அதிர்ந்தேன். அவள் நோயுற்றிருக்கலாம் என்றோ அவளை எவரோ கண்டித்திருக்கலாம் என்றோதான் அப்போது எண்ணினேன். ஆனால் என் உள்ளத்தின் ஆழத்தில் அதுவன்று என்று அறிந்திருந்தேன். ஆகவேதான் என் உள்ளம் அதிலேயே படிந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு சடங்கிலும் அவள் உயிர்ப்பாவை போலிருந்தாள்.”

“முழுதணிக் கோலத்தில் என் மஞ்சத்தறைக்கு சேடியரால் அழைத்து வரப்படும்போது நோயுற்ற குதிரை போல் உடல் நடுங்கிக் கொண்டிருந்தாள். அது அவள் அறியாப்பெண் என்பதால் என்று எண்ணினேன்” என்றான் கர்ணன். “எழுந்து சென்று அவள் கைகளைப்பற்றி ’இன்று முதல் நீ விருஷாலி அல்லவா? அப்பெயர் உனக்கு பிடித்திருக்கிறதா?’ என்று கேட்டபோது கேவல் ஒலி ஒன்று எழுவதைக் கேட்டு அது எங்கிருந்து வருகிறது என்று அறியாமல் திரும்பிப் பார்த்தேன். சுவர் நோக்கித் திரும்பி முகத்தை புதைத்து அவள் குலுங்கி அழுவதைக் கண்டேன்.”

“என்ன ஆயிற்றென்று எனக்குப் புரியவில்லை. அவள் தோளை தொடப்போனேன். அவள் சீறித் திரும்பி தொடாதீர்கள் என்றபோது கையை எடுத்துக் கொண்டேன். இப்போதுதான் இதை சொல்கிறேன். அன்றிரவு முழுக்க அவ்வறையின் ஒரு மூலையில் உடல் குறுக்கி தலை சுருட்டி உடலிலிருந்து கழற்றி எறியப்பட்ட ஒரு ஆடை போல அவள் கிடந்தாள். அவளை நோக்கியபடி கைகளில் தலை தாங்கி நான் மஞ்சத்தில் அமர்ந்திருந்தேன். அன்றிரவில் நான் அறிந்த தனிமையை ஒருபோதும் உணர்ந்ததில்லை.”

“ஒவ்வொரு நாளும் அவ்வறையின் அந்த மூலையிலேயே உடல் சுருட்டி அவள் அமர்ந்திருந்தாள். ஒரு முறையேனும் விழிதூக்கி என்னை பார்த்ததில்லை. நான் எழுந்தால் என் காலடிகள் தரையில் பட்டு ஒலித்தால் அவள் பேர் சொல்லி நான் அழைத்தால் விரல் தொட்டு அதிரும் அட்டை போல் ஒரு அதிர்வும் சுருளிறுக்கமும் அவள் உடலில் எழுந்தன. உளநோய் கொண்டவள் என்று எண்ணினேன். அல்லது தீரா வலிப்பு நோய் கொண்டிருக்கலாமென்று எண்ணினேன். மருத்துவரை அழைத்து காட்டலாம் என்று தோன்றியது ஆனால் அதை பிறிதெவரும் அறியாமல் வைத்துக் கொள்ளவேண்டுமென்றே விடிந்தபின் முடிவெடுத்தேன்” என்றான்.

“ஏன்?” என்று பானுமதி அவன் முழங்கையை பற்றினாள். அவன் தாழ்ந்து சென்ற குரலில் “நான் அடையாத இழிவுகளில்லை. இவ்விரு இழிவையும் மேலும் சேர்த்துக் கொள்ளவேண்டுமா?” என்றான். “ஆனால் எங்களிடம் சொல்லியிருக்கலாமே?” என்றாள். “தாழ்வில்லை” என்று கர்ணன் தன் கையை அசைத்தான். “அவள் என்னிடம் சொல்லெடுத்துப் பேச ஒரு மாதம் ஆயிற்று. அவள் உள்ளத்தை சற்றேனும் நெருங்க என்னால் முடிந்தது.”

கருணை நிறைந்த கண்களால் அவள் அவன் கண்களை நோக்கிக்கொண்டிருந்தாள். “அடுத்த இருள்நிலவு நாளில் அவளுக்கு காய்ச்சல்நோய் கண்டது. அரண்மனை மருத்துவர் அவள் நோயுற்றிருப்பதாக சொன்னபோது அது அவள் சொல்லும் பொய் என்றே நான் எண்ணினேன். மறுநாளும் அதையே சொல்லவே உண்மையிலேயே காய்ச்சல் இருக்கிறதா என்று ஆதுரச்செவிலியிடம் கேட்டேன். உடல் எரிய ஆதுரசாலைக் கட்டிலில் மயங்கிக் கிடக்கிறாள் என்று கேட்டபோது அதுவரை துளித்துளியாக அவள் மேல் சேர்ந்திருந்த கசப்பு முழுக்க வழிந்தோடுவதை அறிந்தேன்” என்று கர்ணன் விழிகளை சாளரத்தை நோக்கித்திருப்பி தனக்கே என சொன்னான்.

ஆதுரசாலைக்குச் சென்று கைக்குழந்தையை எடுப்பது போல் உளங்கனிந்து அவளை அள்ளி நெஞ்சோடணைத்துக் கொள்ளவேண்டுமென்று தோன்றியது. எளிய பெண். என் அன்னை ராதை இளமையில் அவளைப்போல் இருந்திருப்பாள். இப்பிறவியில் எனக்கென அவளை அனுப்பிய தெய்வங்கள் தங்களுக்கென்று இலக்குகள் கொண்டிருக்குமல்லவா? என்னை அவளுடன் பிணைத்த ஊழை நான் அறியவே முடியாது. நான் அதன் சரடுப்பாவை என்பதுபோலத்தான் அவளும்.

அவளைப் பார்க்கச் சென்றேன். நெற்றியில் இட்ட வெண்பஞ்சில் தைலத்தை விட்டபடி அருகே அமர்ந்திருந்த மருத்துவச் சேடி என்னைக் கண்டதும் எழுந்தாள். அனலில் காட்டிய தளிர் போல அவள் முகம் இருந்தது. உலர்ந்த உதடுகள் மெல்ல அசைந்து எதையோ சொல்லிக் கொண்டிருந்தன. நான் அவளருகே நின்றேன். என் வரவை அவள் அறியவில்லை. சேடி ‘அரசி தன்னினைவழிந்துள்ளார்கள்’ என்றாள். அவள் உதடுகளைப் பார்த்தபின் ‘என்ன சொல்கிறாள்?’ என்றேன். ’தங்கள் பெயரைத்தான் அரசே’ என்றாள். சினம் கலந்த ஏளனத்துடன் ‘வெற்று முறைமைச் சொல்லெடுக்க வேண்டியதில்லை’ என்றேன். ‘இல்லை அரசே, தாங்களே குனிந்து அவர்களின் இதழ்களில் செவியூன்றினால் அதை கேட்கலாம்’ என்றாள்.

அதற்குள் நானே பார்த்துவிட்டேன் அவளது உதடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இழுபட்டு பிரிந்து மீண்டும் ஒட்டி ‘சூரிய!’ என்று சொல்லிக் கொண்டிருந்தன. செந்நிற உலர்சேற்றில் குமிழிகள் வெடிப்பது போல் என் பெயர் அவள் வாயிலிருந்து வந்து கொண்டிருப்பதை கண்டேன். தங்கையே, என் வாழ்நாளில் ஆண்மகன் என்று நான் வென்று நின்ற தருணங்களில் ஒன்று அது. இதோ ஒரு நெஞ்சில் முழுதமைந்துள்ளேன்! இதோ என் பெயர் சொல்லி ஓர் உயிர் தவம் கொள்வதை இறைவன் என அவள் மேல் எழுந்து நோக்கிக் கொண்டிருக்கிறேன்! அன்று நான் உணர்ந்த அக்கணத்தினாலேயே நான் என்றும் அவளுக்குரியவன் ஆகிவிட்டேன்.

அருகமர்ந்து அவள் கைகளைப்பற்றி முகத்தில் அமைத்துக் கொண்டேன் அதிலிருந்த வெம்மை என்னை வெம்மை கொள்ள வைத்தது. காய்ச்சலால் உலர்ந்து மலர்ச்சருகு போல் இருந்த அவள் உள்ளங்கையில் என் உதடுகளை பதித்தேன். அப்போது எழுந்த ஒர் உள்ளுணர்வில் விழிதூக்கியபோது அனல்படிந்த செவ்விழிகளால் அவள் என்னை நோக்கிக் கொண்டிருப்பதை கண்டேன். என் விழிகளை சந்தித்தபோது அவள் இரு விழிகளும் நிறைந்து பட்டுத் தலையணையில் வழிந்தன.

நான் அவள் கைகளை என் கைகளுக்குள் வைத்தபடி ‘இப்பிறவியில் உனக்கு துயர் வரும் எதையும் நான் இயற்றுவதில்லை. இது என் ஆணை’ என்றேன். இமைகள் மூட மயிர்நிரைகளை மீறி வழிந்த கண்ணீர் சொட்டுவதை நோக்கியபடி அமர்ந்திருந்தேன். காலம் முன்செல்வதை நாம் பதைபதைப்புடன் இழுத்திழுத்து நிறுத்த முயல்வோமல்லவா, அத்தகைய தருணங்களில் ஒன்று அது. அக்காய்ச்சலிலிருந்து அவள் எழ நான்கு நாட்கள் ஆயிற்று. ஒவ்வொரு நாளும் பெரும்பாலும் அவளுடன் இருந்தேன்.

பேசத்தொடங்கியபோது அவள் என் கைகளை பற்றிக் கொண்டிருக்க விரும்பினாள். ‘என்ன செய்கிறது உனக்கு?’ என்று கேட்டேன். ‘ஏன் என்னை அஞ்சுகிறாய்?’ என்றேன். ‘அஞ்சலாகாது என்று ஒவ்வொரு முறையும் எண்ணிக் கொள்கிறேன். ஆயினும் அஞ்சுகிறேன்’ என்று அவள் சொன்னாள். ‘ஏன்?’ என்றேன். ‘நீங்கள் சூரியன் மைந்தர். நான் எளிய சூதப்பெண். உங்கள் அரண்மனையில் சேடியாக இருக்கும் அளவுக்குக் கூட கல்வியும் அழகும் அற்றவள். தந்தை சொல்லுக்காக என்னை மணந்தீர்கள் என்று சேடியர் சொன்னார்கள். உங்கள் அன்பிற்கல்ல வெறுப்பிற்கும் தகுதியற்றவள் என்று என்னை எண்ணிக் கொண்டேன்’ என்றாள்.

‘இங்கு என் அருகே என் கைபற்றி நீங்கள் அமர்ந்திருக்கையில் இது என் கனவுதான் என்று உள்ளம் மயங்குகிறது’ என்று சொன்னபோது உடைந்து விசும்பியழத் தொடங்கினாள். ‘நான் ஆணவம் கொண்டவன் என்கிறார்கள். அகத்தனிமை நிறைந்தவன் என்கிறார்கள். ஆனால் அன்பைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவன் என்பதை நானறிவேன். ஐயமின்றி அதை எங்கும் சொல்வேன்’ என்றேன். ‘நான் உன் அன்புக்கு முற்றாக கடமைப்பட்டவன். நீ என் நெஞ்சிலுறையும் தெய்வமென என்றுமிருப்பாய்.’

என் கைகளை தன் நெற்றியில் சேர்த்து குமுறி அழுதாள். ‘சொல், உனக்கு என்ன வேண்டும்?’ என்றேன். ‘உன்னை என் நெஞ்சில் அரசியென அமரச்செய்துள்ளேன். அங்கத்துக்கு உன்னை அரசியாக்க இங்குள்ள குலமுறைகள் ஒப்பவில்லை. அதன்பொருட்டு என்னை நீ பொறுத்தருளவேண்டும்’ என்றேன். அவள் என் வாயைப்பொத்தி ‘எனக்கென நீங்கள் எத்துயரையும் அடையலாகாது’ என்றாள். ‘இல்லை, உன் பொருட்டு உவகையே அடைகிறேன்’ என்றேன்.

‘நீங்கள் ஷத்ரிய குலத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்து கொள்ளுங்கள். அவளே உங்கள் பட்டத்தரசியாக இடபாகத்தில் அமரட்டும். உங்கள் நெஞ்சில் ஓர் இடம் மட்டும் எனக்குப்போதும்’ என்றாள். ‘வா, அஸ்தினபுரியின் அவையில் அரசியின் அருகே உன்னை அமர்த்துவேன்’ என்றேன். ‘அங்கு வந்து அமர்ந்திருக்க என்னால் இயலாது. என் பிறப்பும் தோற்றமும் எனக்களிக்கும் எல்லைகளை என்னால் ஒருபோதும் மீற முடியாது. அவ்வண்ணம் மீறவேண்டுமென்றால் நான் பல்லாயிரம் முறை என் ஆணவத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். மேலும் பல்லாயிரம் மூறை என் விழைவை பெருக்கிக் கொள்ளவேண்டும். அதன் பிறகு நான் விருஷாலியாக இருக்க மாட்டேன். ஒருவேளை உங்கள் அன்புக்குரியவளாகவும் இருக்க மாட்டேன்’ என்றாள்.

நான் சினத்துடன் ‘எந்நிலையிலும் நீ என் துணைவி’ என்றேன். ‘நீ அரசிக்கு நிகராக அவையில் வந்து இரு. இங்கு எவர் சொல்கிறார் பார்க்கிறேன்’  என்றேன். அவள் கண்ணீருடன் ‘அது போதும். எனது சிறிய அறையில் எளிய வாழ்க்கையில் என்னை இருக்க விடுங்கள்’ என்றாள். உண்மையில் அதன் பின்னரே நான் அவை எழுந்து விருஷாலியை அரசியாக்குவதில்லை என்ற முடிவை முற்றுறுதியாக சொன்னேன். அவையமர்வதிலிருந்தும் அவளை தவிர்த்தேன்.

பானுமதி “அரசியாக்க வேண்டியதில்லை. ஆனால் அவை அமர்வதற்கென்ன?” என்றாள். கர்ணன் “அத்தனைக்கும் அப்பால் ஒன்றுண்டு பானு. அரசகுலத்தில் பிறக்காதவர்களுக்கு அவையமர்வது போல துன்பமிழைப்பது எதுவுமில்லை. நீ கோரியதற்கேற்ப ஒரே ஒரு முறை அவளை அவைக்கு கொண்டு வந்தேன். அன்று பகல் முழுக்க அங்கு அவள் கழுவிலேற்றப்பட்டது போல் அமர்ந்திருந்ததாக சொன்னாள். அங்குள்ள ஒரு சொல்லும் அவளுக்கு புரியவில்லை. அங்குள்ள அத்தனை விழிகளும் அவளை வதைத்தன” என்றான்.

கசப்புடன் புன்னகைத்து “ஒரே ஒரு முறை கொற்றவை பூசனைக்கு அவளை கொண்டு வந்தேன். இனி அரச குடியினர் நடுவே என்னை நிற்கச்செய்யாதீர்கள் என்றாள். ஏன் என்ன அவமதிப்பு உனக்கு என்றேன். ஒரு விழியில் ஒரு சொல்லில் ஏதேனும் இருந்தால் சொல் என்று கேட்டேன். சொல்லிலும் நோக்கிலும் எதுவுமில்லை. ஆனால் உள்ளத்தில் உள்ளது. அதை நான் அறிவேன். சிறுமை கொண்டு அரச குழாமில் நின்றிருப்பதை விட உவகை கொண்டு என் குலத்தார் நடுவே நிற்பதே எனக்கு உவப்பானது என்றாள். அதன் பின்னர் அவளை அரச விழாக்களுக்கும் கொண்டுவருவதை தவிர்த்தேன்” என்றான் கர்ணன். “ஏனென்றால், அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் என் அகம் முன்னரே உணர்ந்திருந்தது.”

பானுமதி பெருமூச்சுடன் தன் கைநகங்களையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் சொல்லோட்டம் முடிந்து சாளரம் வழியாக நோக்கிக்கொண்டு தன்னில் ஆழ்ந்து அமர்ந்திருந்தான். அப்பால் குறுங்காட்டின் மரக்கிளைகள் காற்றில் உலையும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. காலடிகள் கேட்டன. துரியோதனன் தம்பியரிடம் ஏதோ பேசிக்கொண்டு வந்தான். பானுமதி மெல்ல “மூத்தவரே, அரசர் விருஷாலி மேல் கொண்டிருக்கும் பேரன்பை அவள் சற்றேனும் அறிவாளா?” என்றாள்.

கர்ணன் சற்று தயங்கியபின் “இல்லை” என்றான். பானுமதி துயர்நிறைந்த புன்னகையுடன் “நினைத்தேன்” என்றாள். “அவள் இந்நாட்டின் பொதுமக்கள் அனைவரும் நம்பும் புராணங்களுக்கு அப்பால் உளம் வளராதவள். அரசரை அவள் கலியின் பிறப்பென்றே நம்புகிறாள். வெறுக்கிறாள்.” பானுமதி “இத்தனைக்கும் அப்பால் இதுதான் உண்மை மூத்தவரே. அவள் அரசரை வெறுக்கிறாள். ஆகவே அவையை தவிர்க்கிறாள்” என்றாள்.

“ஆம், உண்மை” என்றான் கர்ணன். “அந்த வெறுப்பு உங்கள்மேலும் படியும் ஒருநாள்” என்று பானுமதி சொன்னாள். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. பானுமதி துயரத்துடன் சிரித்து “ஆனால் தன் தங்கை அவையமரமுடியவில்லை என்னும் துயரத்தை எத்தனையோ இரவுகளில் அரசர் என்னிடம் சொல்லியிருக்கிறார். தானே நேரில் வந்து விருஷாலியை நோக்கி ஓரிரு சொற்கள் அழைத்தால் வந்துவிடுவாள் என நம்புகிறார்” என்றாள்.

கர்ணன்  துரியோதனனின் குரல்கேட்டு அமைதியாக இருந்தான். “ஆகவே தீர்க்கதமஸ் இசையை அறிந்தவர் என்கிறாய். நன்று” என்று சொல்லி சிரித்தபடி துரியோதனன் உள்ளே நுழைந்தான். தொடர்ந்து தம்பியர் வந்தனர்.

தொடர்புடைய பதிவுகள்

புதியவர்களின் வருகை -கடிதங்கள்

$
0
0

 

1

 

அன்புள்ள ஜெயமோகன்,

புறப்பாடு வாசித்த அந்தக் கணம் முதல் இதோ இந்த நொடிவரை எனது வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் மானசீகமாக உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த இரண்டு ஆண்டு காலத்தில் முதலில் சற்று குழம்பிய மனநிலையில்தான் இருந்தேன், ஒரு பாம்பு சட்டையை உரித்து வெளிவருவதற்கான காலம் அதுபோலும். இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இப்போது தான் உங்களை வாசிக்கத் தொடங்கியது போல் இருக்கிறது ஆனால் நிறைய தூரம் பயணித்து வந்திருக்கிறேன் என்பதை எனது பெட்டியில் உள்ள உங்களுடைய புத்தகங்கள் சொல்கின்றன. நேற்று தான் ‘காடு’ வந்து சேர்ந்திருக்கிறது. இன்று. தொடங்கிவிடுவேன். உங்களைப் போல் ஒரு அர்த்தமுள்ள வாழ்வை வாழ்ந்துவிட ஆசை.

வணக்கம்.

அன்புடன்

ஜானகிராம்

 

அன்புள்ள ஜானகிராம்

வாழ்த்துக்கள்

செயலில் இருப்பது அதன் விளைவுகளுக்காக அல்ல என்ற கீதையுரைக்கு அப்பால் சொல்வதற்கொன்றும் இல்லை.

வாழ்த்துக்கள். தொடர்பில் இருப்போம்.

உங்களைப்போன்ற புதியவர்கள் வழியாக நான் இன்றிருக்குமிடத்திலிருந்து முன்னகர விரும்புகிறேன்

ஜெ

 

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த வருடத்தில் என் வாழ்க்கை முறையை மாற்றிய மிக முக்கியமான ஒன்று வெண்முரசு. ஒரு நாவல் இவ்வளவு என் வாழ்க்கையோடு ஒன்றிடுமா என நான் திரும்ப திரும்ப கேட்டாலும் வெண்முரசு என் புத்தக அலமாரியில் இருந்து சிரித்து “ஆம்” என்று பதில் அளிக்கின்றது. போன வருடம் முழுதும் நீங்களே என் ஆசானாக இருந்துள்ளீர்கள் விசும்பு,அறம் வெண்முரசு என உங்களுடைய கொடையில்தான் வாழ்ந்தேன். இப்பொழுது இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் புடித்து கொண்டிருக்கிறேன். அலுவலகத்தில் அல்லது வெளியில் கற்பதை விட உங்களிடம் நிறைய கற்றுக்கொண்டிருக்கின்றேன். அதற்காக உங்களுக்கு மிக மிக நன்றி. உங்களின் இந்த அற்புத பணி மென் மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
இப்பொழுதுக்கூட உங்களின் “வரும் ஆண்டும்” படித்தேன். நீங்கள் கூறுவது போல் உங்களுக்கும் & உங்கள் குடும்பத்துக்கும் “நலம் திகழ்வதாக”.
இப்படிக்கு அன்புள்ள,
விஜி.
அன்புள்ள விஜி,

நலம்தானே?

இந்தவருடம் வந்த அத்தனை புதியவர்களின் கடிதங்களையும் எடுத்துப்பார்த்துக்கொண்டிருக்கிறேன். எவ்வகையிலேனும் என்னிடம் ஒரு தேக்கநிலை உருவாகியிருக்குமென்றால் இந்தப்புதியவர்கள் வழியாகவே முன்னகர வேண்டும் என நினைத்துக்கொள்கிறேன்

கேட்பவர்கள்தான் சொல்பவர்களை உருவாக்குகிறார்கள். நன்றி, நாம் சந்திப்போம்.

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வெண்முரசும் புத்தாண்டும்

$
0
0

 

6

 அன்புடன் ஆசிரியருக்கு

புத்தாண்டு வாழ்த்துக்கள். சென்ற வருட முடிவில் இப்படி யாருக்கேனும் புத்தாண்டு வாழ்த்து சொல்வேன் என நானே எதிர்பார்த்திருக்கவில்லை. சென்ற வருட டிசம்பர் மாதத்தில் நற்றிணை பதிப்பகம் வெளியிட்ட வெண்முரசின் முதல் நூலான முதற்கனலினை திருத்துறைப்பூண்டி கிருஷ்ணா புத்தக நிலையத்தில் வாங்கினேன். உங்களைப் பற்றி கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தாலும் உங்களை நான் வாசித்தது கிடையாது. ஆனால் வெண்முரசினுள் நுழைந்த பின்தான் நான் எதையுமே உருப்படியாக வாசித்ததில்லை என்பது எனக்குத் தெரிந்தது. சமூகம் குறித்து திரைப்படங்களும் வணிக இதழ்களும் தொலைக்காட்சி செய்திகளும் விவாதங்களும் எனக்குள் ஏற்படுத்தியிருந்த கொந்தளிப்பும் அவநம்பிக்கையும் கலந்த எளிமையான ஒரு சித்திரத்தை முதற்கனல் உடைத்தது.


எப்படியென சொல்ல இந்த நாள் முழுக்க எழுத வேண்டிவரும். சிறு வயதில் மின்சாரம் இல்லாத சிமெண்ட் பூசப்படாத எங்கள் சிறு வீட்டின் இருளில் விளக்கு வெளிச்சத்தில் என் அப்பாவின் பாட்டி முத்தம்மா கதை சொல்வாள். முதற்கனல் மீண்டும் மீண்டும் அவள் நினைவை எழுப்பியது. ஆனால் உங்கள் எழுத்தில் வந்த தொன்மங்கள் முத்தம்மா இறந்த பிறகு எனக்குள் விதைக்கப்பட்டிருந்த திராவிட கருத்துகளையும் எளிமையான உணர்ச்சியை தூண்டக் கூடிய கம்யூனிஸ கருத்துகளையும் பிடுங்கி எறிந்தன. என் பார்வையின் குறுகிய தன்மை என்னை அச்சம் கொள்ள வைத்தது. ஒரு நாளைக்கு பத்து பகுதிகள் படித்தும் கட்டுப்படுத்தி விலகுவேனே தவிர வெண்முரசு எனக்கு ஒரு நாளும் சோர்வளித்ததில்லை. இந்திரநீலத்தில் இணைந்து கொண்ட பிறகு எனக்கு வெகு நேரம் வீண் பொழுது கழிப்பது போல் இருந்தது .

உங்கள் வலைத்தளத்தின் ஒவ்வொரு பதிவும் ஒரு திறப்பினை அளித்தது. அது இன்னொன்றை நோக்கி என்னை தள்ளியது. நிச்சயம் அப்படி என்னதான் இருக்கிறது மகாபாரதத்தில் என்ற நினைப்பில் முதற்கனலினை தொட்ட சுரேஷ் இன்றில்லை. நான் உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று மட்டும் சொல்லி முடிக்கவே நினைத்தேன். நீண்டு விட்டது. வெண்முரசு எனக்களித்த அதிர்ச்சியையும் பரவசத்தையும் விளக்க தனியே வெகுநேரம் எழுத வேண்டும். கொற்றவையும் விஷ்ணுபுரமும் வெண்முரசின் வழியே நுழைந்ததால் மேலும் அணுக்கமாகி விட்டன.

மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்புடன்
சுரேஷ்

அன்புள்ள சுரேஷ்

ஒரு கலங்கியமனநிலையில் இந்தப்புத்தாண்டு. மகாபாரதத்தில் தீர்க்கதமஸின் கதை வருகிறது. அதன் மறு ஆக்கம் வெய்யோனில். அது மேலும் தொன்மையான கதை. வேதகாலத்தைச் சேர்ந்தது. தூய Id மட்டுமேயான தந்தை என்று அதைச் சொல்லலாம். அந்த உருவகம் மிகமிகத் தொன்மையானது என்பது மிகவும் தொந்தரவு செய்தது. மனிதன் அவன் தந்தையின் காமத்தின் விளைவு என்னும்போது அடிப்படையாக அமைவது கிறித்தவம் சொல்லும் ஆதிபாவம் போன்ற ஒன்றா என எண்ணிக்கொண்டேன். அவரது விழியின்மை, அவரது பெயர் எல்லாமே இப்போது நோக்குகையில் குறியீடுகள். ஆனால் அது இலக்கியம் உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த அப்பட்டமான ஒரு கதை மட்டுமே

புத்தாண்டில் புதிய நண்பர்களின் கடிதங்கள் பெரும் நிறைவை அளிக்கின்றன.

 ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வன லீலை

$
0
0

1 [விபூதிபூஷன் பந்த்யோபாத்யயா]
2 [மாணிக் பந்யோபாத்யாய]
3
தாராசங்கர் பானர்ஜி

இந்திய வரலாறு குறித்து டி.டி. கோசாம்பி அளிக்கும் சித்தரிப்பை படிக்கும்போது மெதுவாக நம் மனதில் ஒரு சித்திரம் உருவாகி வரும். இந்திய வரலாறென்பது வனத்திற்கும் பிற நிலப்பகுதிகளுக்கும் இடையேயான தொடர்ந்த போராட்டம் தான். கோசாம்பி இதை ஒரு கொள்கை போலவே முன்வைக்கிறார். அது செவ்வியல் மார்க்சியத்தின் கொள்கை. சேகரப்பண்பாடுX உற்பத்திப்பண்பாடு, மேய்ச்சல் பண்பாடுX வேளாண் பண்பாடு என மார்க்ஸியம் எப்போதுமே இருமைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

மழைக்காடுகள் நிரம்பிய ஒரு பெரும் நிலப்பரப்பு கோசாம்பி காட்டும் அதிபுராதன இந்தியா. அங்கு வனத்தாவரங்கள் போல, மிருகங்கள் போல பரஸ்பரத் தொடர்பற்ற பழங்குடிச் சமூகங்கள் வாழ்கின்றன. உயிர் வாழ்தல், பரவிப் பெருகுதல் ஆகியவற்றுக்காக அவை காலப்போக்கில் தங்களுக்குள் போரிட ஆரம்பித்தன. போர் மூலம் உறவாடிக் கொண்டு தங்களை விருத்தி செய்து கொண்டன.

வனம் நடுவே வனத்தின் ஒரு பகுதியாக இருந்த `ஊர்’ வளர்ந்து நாடுகளாகியது, நகரங்களாகியது. நகரங்களும் சாம்ராஜ்யங்களும் மேலும் மேலும் உக்கிரமாக வனத்துடன் போர் புரிந்தன. வனம் இயற்கையின் ஆயுதங்களுடன் களத்தில் இருந்தது. நகரம் கலாச்சாரத்தின் ஆயுதங்களுடன் . தேவ அசுர யுத்தங்களையும், ராமாயண மகாபாரதக் கதைகளில் வரும் பெரும் போர்களையும் எல்லாம் கோசாம்பி இப்படித்தான் புரிந்து கொள்கிறார்.

யோசிக்கப் புகுந்தால் இம்மனச்சித்திரத்தை முழுமைப்படுத்தும் தகவல்கள் நம்முன் வந்து குவிந்தபடியே இருக்கும். நமது நாடோடிக் கதைகளில் பாதி விறகுவெட்டிகளின் கதைகள் தான். நமது கதாபாத்திரங்கள் ஊரில் இருந்து (மன்னனாலோ கொடுமைக்கார சித்தியாலோ) புறக்கணிக்கப்படும்போது காட்டுக்குத்தான் ஓடுகின்றன. துறவிகள் `அனைத்தை’யும் துறந்து காட்டுக்குச் செல்கிறார்கள். மன்னர்கள் காட்டுக்கு வேட்டைக்குச் செல்கிறார்கள். `காடழித்து நிலம் பெருக்கி’ வளம் சேர்க்கிறார்கள்.

கலாச்சாரம் பகல் என்றால் காடுதான் இரவு. வாழ்க்கைக்கு எதிரானது அது; எனவே சுடுகாடும்கூட. மனிதன் என்பதற்கு நேர் எதிரான சொல்லாக நம் மனதில் காட்டுமிராண்டி என்ற சொல் உறைந்துள்ளது.’நாடா கொன்றோ காடா கொன்றோ’ என்கிறாள் அவ்வை. நிலத்துக்கு நலம் சேர்ப்பது மக்களே என்கிறாள்.

அதே சமயம் `வனவளம்’ தான் நமது நகரங்களை போஷித்து வந்துள்ளது. மலையிலிருந்து வரும் அருவி முதல் அகிலும் சந்தனமும் வரை நகரங்களை நோக்கிப் பெய்தபடியே இருந்தாக வேண்டியுள்ளது. காட்டிலிருந்து ஒரு தொப்புள் கொடி நகரத்தை வந்து பிணைத்துக் கொண்டு அதனூடாக உதிரமும் அமுதமும் தந்து கொண்டிருக்கிறது. இந்தியப் பெருங்காவியங்களில் பெரும்பாலானவை காடும் நாடும் உரையாடியதன் விளைவுகள். ஆதி காவியங்கள் முதல் `பிருகத் கதா’ வரை இதற்கான ஐதீகப் பின்புலத்துடன்தான் நம்முன் உள்ளன.

ஆனால், காடு நோக்கித் திரும்பும் பார்வை தொழிற்புரட்சியின் விளைவான நகர்மயமாக்கம் இந்தியாவை தழுவிக்கொண்ட பிறகுதான் தொடங்கியது. காடழிவையும் நகர்மயமாதலையும் பல கோணங்களில் அணுகும் நாவல்கள் இந்திய மொழிகளில் உள்ளன. காட்டை அழித்து வேளாண் நிலத்தை உருவாக்குவதை இயற்கைக்கும் மனிதனுக்குமான போராட்டமாகச் சித்தரிக்கும் நாவல்கள் ஒருவகை. எஸ்.கெ.பொற்றெக்காட்டின் ‘விஷக்கன்னி’ [மலையாளம்] சிறந்த உதாரணம். காட்டை ஒரு சொத்தாக , மூலதனமாக மட்டுமே பார்க்கும் இப்பார்வையையே மகாஸ்வேதா தேவியின் `காட்டின் உரிமை’ நாவலிலும் காண்கிறோம். காடு எளிய பழங்குடிகளிடமிருந்து பிடுங்கப்படுவதை சித்தரிக்கிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் காலகட்டத்தில் எழுதப்பட்ட விபூதி பூஷண் பந்தோபாத்யாயவின் `ஆரண்யக்’ இதிலிருந்து அலாதியாக வேறுபட்டு நிற்கும் பெரும் படைப்பு. தமிழில் த.நா. குமாரசாமியால் `வனவாசி’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டு 1968ல் சாகித்ய அகாதமியால் பிரசுரிக்கப்பட்ட இப்புதினம் பிறகு மறுபதிப்பு வராவிட்டாலும் தமிழ்ச் சூழலால் கூர்ந்து படிக்கப்பட்டு உள்வாங்கப்பட்ட ஒன்று.

1938ல் வங்க மொழியில் வெளியான இந்நாவலை அக்கால கட்டத்தின் பொதுவான கருத்தியல் உத்வேகங்களுடன் ஒப்பிட்டால் பெரும் வியப்புதான் ஏற்படும். அது இந்திய `நவீனமய’ மாதலின் காலகட்டம். மதிப்பீடுகள் மாற்றியமைக்கப்பட்டன. மதம் உருக்கி மறுவார்ப்பு செய்யப்பட்டது. கிராமங்கள், சாலைகள் மூலம் இணைக்கப்பட்டன. தகவல் தொடர்பு ஊடகங்கள் உருவாயின. ஒருங்கிணைந்த மைய அரசு உருவாயிற்று. இயந்திர யுகம் மீது அலாதியான காதல் பிறந்த காலம். இயந்திரம் மனிதனை மீட்கும் என்ற நம்பிக்கை மாற்று மதம் போல பரவிய காலகட்டம். சகல சக்தியாலும் இயற்கையை சுரண்டுவதே கலாச்சாரத்தின் இயல்பான இயங்குமுறை என்ற ஐரோப்பிய தொழில்யுக நம்பிக்கை இங்கு வேரூன்றியது அப்போது.

நவீனயுக மதம் (ராஜா ராம் மோகன் ராய்) நவீன கலைகள் (தேவேந்திர நாத் தாகூர்) நவீன இலக்கியம் (பங்கிம் சந்திர சட்டர்ஜி) நவீனப் பொருளாதாரம் (மகாலானோபிஸ்) என்று நவீன யுகத்தின் எல்லா முகங்களிலும் முக்கிய ஆளுமைகள் உருவானது வங்க மண்ணில்தான். மொத்த கலாச்சாரமே ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி பதற்றத்துடன் உத்வேகத்துடன் முன்னேறியபோது நேர் எதிராக திரும்பி நடந்தது. இந்நாவல். ஆரண்யக் `ஊரில்’ இருந்து `காட்டுக்கு’ செல்பவனின் கதை. ]

ஆரண்யக் 1932 முதல் பிரபாஷி என்ற வங்க இதழில் தொடராக வெளிவந்தது. பிகார் அருகே உள்ள பாகல்பூர் பகுதி காடுகளில் 1020களில் கொஞ்சநாள் விபூதி பூஷண் பந்த்யோபாத்யாய பணியாற்றினார். அந்நினைவுகள் அவரை தொடரவே இந்நாவலை அவர் எழுதினார். கதைநடக்கும் காலகட்டத்தில் இந்தியாவின் பெரும்பகுதி காடுகளாக இருந்தது. காடுகளை அழிப்பது முன்னேற்றமாக கருதப்பட்டு அந்த சிந்தனை பிரிட்டிஷாரால் இந்திய மனத்திலும் கட்டமைக்கப்பட்டது. 1970 வரைக்கும்கூட எந்தவித மனச்சங்கடமும் இல்லாமல் இந்திய அரசும் சமூகமும் தேவைக்கெல்லாம் காடுகளை அழித்தனர். இந்தியக்காடுகளில் 70 சதவீதம் இந்த ஐம்பது வருடங்களில் அழிந்து விட்டன என்பது வரலாறு. வனவாசி அந்த அழிவின் சித்திரம்

விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய இந்தியாவின் மாபெரும் நாவலாசிரியர்களில் ஒருவர். 1894ல் பிறந்த 1950ல் மறைந்தார். அவரது சுயசரிதைத்தன்மை கொண்ட நாவலான பாதேர் பாஞ்சாலி மற்றும் அதன் நீட்சியான அபராஜிதோ ஆகியவை சத்யஜித் ரேயால் மூன்று படங்களாக எடுக்கப்பட்டு உலகப்புகழ்பெற்றன. [பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர் சன்ஸார்] திரைப்படங்களை விட பல மடங்கு அழகியவை அவரது நாவல்கள்.தமிழில் பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ ஆகியவற்றை ஆர்.ஷண்முகசுந்தரம், த.நா.குமாரசாமி ஆகியோர் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.

மகானந்த பந்த்யோபாத்யாய என்ற ஏழை பௌராணிகரின் மகனாக பிறந்த விபூதிபூஷன் கல்கத்தாவில் சுரேந்திரநாத் கல்லூரியில் இளங்கலை பயின்றார். இளவயதில் கௌரிதேவி என்ற பெண்ணை மணாந்தார். குழந்தைப்பேறின்போது கௌரிதேவி மரணம்டைந்தார். அது விபூதிபூஷனின் பல கதைகளில் ஆழமான அகக்கொந்தளிப்பாக வெளிப்படுகிறது.
அதன்பின் ரமா சட்டோபாத்யாய என்ற பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஒரே மகன், தாராதாஸ். ஆசிரியராகவும் தோட்டநிர்வாகியாகவும் பணியாற்றிய விபூதிபூஷன் காட்டின்மேல் அபாரமான காதல்கொண்டிருந்தார். தினமும் பல கிலோமீட்டர் நடப்பது அவரது வழக்கம். செடிகள் பறவைகள் குறித்து மிகவிரிவான குறிப்புகள் எழுதி வைத்திருந்தார்.

*

வனவாசி நாவலின் கட்டமைப்பு இதன் அடிப்படைத் தரிசனத்துக்கு மிக உவப்பானதாக உள்ளது. நகரத்தில் குமாஸ்தா வாழ்வு வாழும் ஒருவன் தன் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வங்காள – பிகார் எல்லையில் உள்ள வனப்பிரதேசமொன்றுக்குச் சென்று தங்கியிருந்த நாட்களை நினைவுகூரும் விதமாக அல்லது தொடர்ந்து அந்நினைவுகள் அவனில் மீண்டபடியே இருக்கும் விதமாக, இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. வனம் நம்முள் உறையும் ஓரு பழைய `ஞாபகம்’ என்று இந்நாவல் கூறுகிறது போலும்.

கதை சொல்லியான சத்யாசரன் லுப்துலியா என்ற வனப்பகுதிக்கு ஒரு ஜமீன்தாரின் குமாஸ்தாவாக செல்ல நேர்கிறது. அக்காடு முழுக்க அவருக்குச் சொந்தமானது. அதை விவசாய நிலமாக மாற்றும் பொருட்டு விவசாயிகளுக்கு குத்தகைக்குப் பங்கிட்டு கொடுப்பதே அவன் பணி. உண்மையில் `வனவாசி’ காட்டுவது படிப்படியாக கையேறப்பட்டு அழிக்கப்படும் வனத்தின் சித்திரத்தையேயாகும். பிற்பாடு ஆழமான குற்றஉணர்வுடன் கதைசொல்லி நினைவு கூரும் துயரம் படர்ந்த கானகமே நாம் காண்பது. ‘என்னுடைய கைகளில் குருதி படிந்திருக்கிறது. இயற்கையின் ஆடரங்கை நான் என் கைகளாலேயே அழித்தேன்’ என்று அவன் பின்னாளில் எண்ணிக்கொள்கிறான்.

முதலில் காடு சத்யாசரனுக்கு முற்றிலும்பிடிக்கவில்லை. முதலில் அவன் அறிவது அதன் லௌகீகமான சிக்கல்களை. எங்கும் நடந்தே செல்லவேண்டும்.சரியான வழிகள் இல்லை. காட்டுமிருகங்களின் ஆபத்தும் உண்டு. அந்த இடத்தில் மனம் நிலைத்ததும் அவனை உக்கிரமான தனிமை வந்து மூடிக்கொள்கிறது. ‘தனிமை என் நெஞ்சை கல்லாக இறுகவைத்தது’ என்கிறான். பல்லாயிரம் சதுரகிலோமீட்டருக்கு விரிந்து பரந்து பல்லாயிரம் பல லட்சம் உயிக்குலங்களுடன் துலங்கும் காடு அவனுக்கு துணையாக ஆகவில்லை என்ற வசீகரமான மர்மத்தில் இருந்தே வனவாசி நம்மை சிந்திக்கச் செய்கிறது

ஏனென்றால் அவன் நகர மனிதன். அவன் என்பது அவனுடைய பிரக்ஞைதான். அது நகரின் காட்சிகளில், உறவுகளில், சிந்தனைகளில், கலைகளில் இருந்து வடிவமைக்கப்பட்டது. காட்டில் அவந் அன்னியனாகவே இருக்கிறான். காட்டை அவனால் வேடிக்கை பார்க்கவே முடிகிறது. ஆனால் சிலநாட்களில் காட்டின்வேடிக்கையும் பழகிப்போகிறது. காடு மிகச்சாதாரணமாக ,மிக மெல்ல, தன் மகத்தான மௌனத்துடன் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அவன் சலிப்புற்ற சாட்சியாக அந்த மலைக்கட்டிடத்தில் இருக்கிறான்

இன்னும் சிலநாட்களில் காடு அவனுக்குள் நுழைகிறது. அவனுடைய மனம் அறியாமலேயே ஆழ்மனம் காட்டுடன் தன்னை இணைத்துக்கொண்டுவிட்டது. அவன் வனவாசியாக ஆகிவிட்டதை அவன் அறிவதே இல்லை. இப்போது அவன் அங்கே இருக்கவில்லை, அங்கே வாழ ஆரம்பிக்க்கிறான். அவனது அந்த பரிணாமத்தை நாம் உணர்வதே இந்நாவலின் கதைபோக்கு. பின்னர் அவன் காட்டைவிட்டு வெளியே செல்லநேர்கிறது. இப்போது நகரத்தில் அவன் ஒன்ற முடியவில்லை. அவன் அகத்தில் காடு இருக்கிறது.

வனவாசி காட்டுவது ஒரே ஒரு மழைக்காலம் கொண்ட நடுநிலக் காடு. அதன் மடியில் கதைசொல்லி வந்திறங்கும்போது அது பூத்து மலர்ந்து அவனை எதிர்கொள்கிறது. நகரவாசியின் மன விலக்கத்துடன் வந்து சேரும் கதாநாயகனை காடு மெல்ல மெல்ல தன் பெரும் அழகுத் தோற்றத்தைக் காட்டி வசீகரித்து மடியில் அமர்த்திக் கொள்கிறது.

`ஆரண்யக்’ தாவரங்களினாலான நாவல். பலவகையான செடிகளும், பூக்களும் அதில் தங்கள் போக்கில் வளர்ந்து பூத்து மறைகின்றன. மழைக்காட்டின் பயங்கரம் இல்லாத வசீகரமான எளிய காடு இது. அட்டை இல்லாத நூலகப்பதிப்பாக இதை வாசித்த வண்ணதாசன் இதன் அட்டையைக் கண்டபோது அதுபச்சையாக இல்லாதது கண்டு மனமுடைந்ததாக சொல்லியிருக்கிறார்.

இந்நாவலில் கால நகர்வு வனத்தில் நிகழும் பருவ மாற்றங்களினூடாக சித்தரிக்கப்படுவதுதான் இதன் உச்சகட்ட காவியத் தன்மை. பசுமை நிரம்பிய காடு வரண்டு உலர்ந்து கருகி காட்டுத்தீ படர்ந்து பின் புதுமழையில் தளிர்த்து அடரும் காட்சி மனித விழிகள் முன் ஒரு பிரபஞ்ச சலனமே நிகழ்ந்து விடுவதுபோல பிரமை கூட்டுகிறது.

நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் கீழே, இருண்டு சூழ்ந்து விரிந்த காட்டின் ஒலிகளை கேட்டபடி குதிரைமீது போகும் கதாநாயகனின் சித்திரம் ஒரு கனவு போல நாவலில் பலமுறை வந்து நம் மனதில் ஆழப் பதிகிறது. காடு அவன் முன் காட்சிவெளியாக நிகழ்கிறது. நிலவில், அதிகாலையில், எரியும் மதியத்தில் , சிவந்தணையும் அந்தியில் புதிய தோற்றங்களுடன் வந்தபடியே இருக்கிறது. ஆரண்யக் அடிப்படையில் ஒரு வனதரிசனம்.

ஆரண்யத்தில் மனிதர்கள் நிறையவே வருகிறார்கள். ஆனால், அவர்கள் வெறும் மனிதர்கள்தான், கதாபாத்திரங்களல்ல. கதாபாத்திரங்களின் அகமோதல், பரிணாம வளர்ச்சி அவற்றுக்கு இல்லை. அவர்கள் அந்த இயற்கையின் உள்ளே பிற உயிர்களைப் போல உயிர் வாழ்வதற்காக ஒவ்வொரு கணமும் கடுமையாக உழைக்கிறார்கள்.

சத்யாசரனின் வேலைஎன்பது காட்டுநிலத்தை குடியானவர்களுக்கு பிரித்துக் கொடுத்து அவர்களை காட்டை அழித்து விவசாயம்செய்யவைத்து குத்தகையை வாங்கி ஜமீன்தாருக்குக் கொடுப்பது. ஒவ்வொரு குடியானவரும் ஒவ்வொரு வகை. இரவுபகலாக பக்தியில் மூழ்கி பட்டினிகிடக்கும் ராஜூ பனாரே ஓர் உதாரணம். கதைத்தொடர்ச்சிக்காக முயலாமல் நிகழ்ச்சிகளை கிட்டத்தட்ட ஒரு தினவிவரணை போல சொல்லிச்செல்கிறார் விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய. கதாபாத்திரங்கள் எளியமனிதர்கள்.

விதிவிலக்கு இரண்டு கதாபாத்திரங்கள். காடு முழுக்க பலவிதமான பூச்செடிகள் கொண்டு வந்து நட்டு வைப்பது தவிர வேறெதிலும் நாட்டமில்லாத யுகல பிரசாத் என்ற பித்தன். நடனமாடுவது தவிர வேறு எதுவும் அறியாத சிறுவனான தாதுரியா என்ற இடையச் சிறுவன். இவர்களையும் அதே இயற்கையின் மடியில் இயல்பாக உலவவிட்டு ஒரு கவித்துவமான முரண் சித்திரத்தை விபூதி பூஷண் உருவாக்குகிறார்.

யுகலபிரசாத், தாதுரியா இருவரும் இரு எல்லைகள். காட்டை இருவகையில் உள்வாங்கிக் கொள்பவர்கள். யுகலபிரசாத் படித்தவர், வங்காளி. நாகரீகம் அறிந்தவர். இந்தக்காடு அழியும் என அவர் அறிவார் அவர் காட்டுக்குள் வாழவில்லை, காட்டை கண்டபடி காட்டுக்கு வெளியே வாழ்கிறார். அவருக்கு காடு கவிதையாக இசையாக அனுபவமாகலாம். காட்டுக்குள் அவர் பரப்பும் மலர்ச்செடிகள் அவருக்கும் காட்டுக்குமான காதல் போன்றது. பின்னர் காட்டுக்குள் குதிரையில் செல்லும் சத்யாசரன் காடெங்கும் யுகலபிரசாத் நட்ட செடிகள் மண்டிப்பரந்திருப்பதைக் காண்கிறான். அவரது காதலாக காட்டில் பரவிய அந்த மலர்வெளி அவருக்கும் காட்டுக்கும் இடையேயான அகத்தொலைவுக்கும் சான்றுதான்.

ஆனால் தாதுரியா அப்படி இல்லை. அவனும் காடும் வேறல்ல. எந்தக்காட்டுமிருகமும் காட்டின் எதிர்காலம் பற்றி எண்ணுவதில்லை. காட்டை பேணவும் வளர்க்கவும் முனவதில்லை. காடு அதன் தாய்மண். மூச்சுக்காற்று. உணவு. கனவு. அது காட்டில் வாழ்ந்து காட்டில் மறைகிறது. தாதுரியாவின் உடல் வழியாக செல்லும் நடனம் காட்டுக்குள் காற்று நுழையும்போது மரங்கள் ஆடும் நடனமேதான். மிருகங்களுக்குள் காதல் நுழையும்போது நிகழும் நடனம்தான். அது காட்டின் நடனம். தன்னை ஒரு குதூகலமாக அவனூடாக வெளிப்படுத்துகிறது காடு.

ஆனால் காடு அது மட்டும் அல்ல. சென்ற உடனேயே அதைக் கண்டுகொள்கிறான் சத்யாசரன். சோறுபொங்கும்போது அந்த மணத்தை உணர்ந்தே சோறு கிடைக்கும் என்று நடந்து வந்து சேரும் மக்கள். காட்டின் விளையாட்டில் பட்டினி இருந்துகொண்டே இருக்கிறது. உயிர்கள் அனைத்துமே பசியால் சுழற்றியடிக்கப்படுகின்றன. உணவுக்காக ஒவ்வொரு கணமும் போராடிக்கொண்டிருக்கின்றன. வேனிற்காலத்தில் அடிமண் வரள காட்டின் ஒவ்வொரு இலையும் தாகத்தால் வரண்ட நாக்குகளாக மாறி துடிதுடித்து உதிர்கிறது

வனவாசி காட்டும் இன்னொரு காடும் உள்ளது, கதைகளின் காடு. நாவலெங்கும் காட்டுமனிதர்கள் உருவாக்கிய எளிமையான கதைகள் வந்துகொண்டே இருக்கின்றன. காட்டைச் சந்திக்கும் மானுடப்பிரக்ஞை அந்த கதைகளை முளைக்கவைக்கிறது. அதுவும் ஒரு மண்தான். காடு அங்கும்தான் விதைகளை விரவுகிறது. காட்டுமிருகங்களை வேட்டைக்காரர்களிடம் இருந்து காப்பாற்றும் எருமைத்தெய்வத்தின் கதையை முதலில் கேட்கும்போது அதன் எளிமையில் சத்யாசரன் வியந்து போகிறான். கூடவே சிறு ஏளனமும் அடைகிறான். மெல்ல மெல்ல அந்தக் கதைகள் வழியாகவே அவன் காட்டின் அந்தரங்கத்துக்குள் நுழைகிறான்.

இறுதியில் கதாநாயகன் காட்டின் சாராம்சத்தை அல்லது மையத்தை கண்டு கொள்கிறான். ராமாயண காலத்தைவிடப் பழைய வரலாறு கொண்ட காட்டு அரச வம்சமான சந்தாலர்களின் ஒரு பிரிவான தோபரு வம்சத்து மன்னர் தோபரு பன்னாவையும், அவர் மகள் பானுமதியையும் மகன் ஜகருவையும் அவன் சந்திக்குமிடம் இந்நாவலின் முக்கியமான ஒரு இடமாகும். 1862ல் நடந்த சந்தால் கலவரத்திற்கு தலைமையேற்று பிரிட்டிஷாரிடம் போராடித் தோற்ற பன்னா தன் வயோதிகத்தை காட்டுக்குள் குடிசை கட்டி மாடுமேய்த்து கழிக்கிறார். பன்னாவின் குடிலில் அமர்ந்து அவர்களது வம்ச மகிமையை கேட்கும் கதாநாயகன் நாமறிந்த வரலாற்றின் மறுபக்கத்தைக் கண்டு கொள்கிறான்.

ஒரு காலத்தில் வங்கக்காடுகள் முழுக்கவே அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தன. அவர்களுடைய மூதாதையர் சமாதிகள் வேரூன்றிப் பரந்த பெருமரங்களுக்கு அடியில் மலர்களால் மூடப்பட்டு தூங்குவதை அவன் கண்டான். அவர்களது புராதன அரண்மனை இடிபாடுகளாக கிடப்பதைக் கண்டான். காட்டுக் கூலிக்காரி போலிருந்த பானுமதியின் அழகிய முகத்தைப் பார்த்தபடி நிலவில் நடந்தபோது அவளை மணந்தாலென்ன என்ற எண்ணம் ஒரு கணம் கதை சொல்லிக்கு வந்தது. ஆனால், அவள் ஒரு ராஜகுமாரி, தான் ஒரு எளிய மானுடன் என்று உணரும் விவேகத்தை காட்டு வாழ்க்கை அவனுக்கு வழங்கியிருந்தது.

காடு மெல்லமெல்ல பின்வாங்கும் சித்திரம் வனவாசி வழியாக உருவாகிறது. ஒரு திரைச்சீலை சரிந்து மறைவதுபோல, ஒரு ஏரி வற்றுவதுபோல. அதன் மனிதர்கள் அதன் கதைகள் அதன் மன்னர்கள் அதன் நினைவுகள் அனைத்தும் அழிந்து இல்லாமலாகின்றன. சந்தால்கள் மெல்லமெல்ல மறைவார்கள். அந்த இனத்தின் உடல்கள் எஞ்சும், உள்ளே நவநாகரீகம் மட்டும் குடியேறும். அப்போது ஒருநாள் தங்கள் இனம் காடுகளை ஆண்டது என்பதை அவர்கள் நினைக்க மாட்டார்கள். தங்களை ‘நாகரீகத்தின்’ வால்நுனியில் கடைசிக்கண்ணியாக பொருத்திக்கொள்வார்கள்

பானுமதியின் முகத்தை கண்டபடி நிலவொளியில் நடக்கும்போது சத்யாசாரன் கண்டுகொண்டது அதையே. அவளிடம் அவன் கேட்கும் வினாக்கள் எல்லாமே அதைத்தான் சொல்கின்றன, அவளுக்கும் நிகழ்காலத்துக்கும் தொடர்பில்லை. தோற்கடிக்கப்பட்டு பின்வாங்கிவிட்ட ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவள் அவள். ஒரு ஆழ்நினைவு, ஒரு கனவு.

*

பதினேழாம் நூற்றாண்டுக்குப்பின்னர் ஐரோப்பிய இலக்கியத்தில் இயற்கைவாதம் என்ற அழகியல்-தத்துவக் கோட்பாடு உருவாகி ஆழமான செல்வாக்கைச் செலுத்தியது. இயற்கைவழிபாடே அதன் அடிப்படை மனநிலை. இறைச்சக்தியின் செய்தியை இயற்கை தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது என்ற நம்பிக்கை அவர்களுக்கிருந்தது. இயற்கைக்கு மாறான மனநிலைகளை உதறி மீண்டும் அதனுடன் இணையும் மனநிலையை அடைந்து அதில் ஈடுபட்டு வாழும்போது இயற்கை தன் ஆசியை நமக்களிக்கும் என்றும் அதுவே உண்மையான ஆன்மீகமாக இருக்கும் என்றும் இவர்கள் நம்பினார்கள்.

பிரிட்டனிலும் பிரான்ஸிலும் உருவாகி வலுப்பெற்ற இந்த கருத்தின் உலகளாவிய பிரச்சாரகர்கள் என்று வேர்ட்ஸ்வர்த் முதலிய கற்பனாவாதக் கவிஞர்களைச் சொல்லலாம். பின்னர் வால்ட்டேர் ,ரூசோ போன்றவர்களிலும் எமர்சன், தோரோ போன்றவர்களிடமும் விரிவானதோர் கருத்தியலாக இது வளர்ந்தது. எமர்சன், தோரோ போன்றவர்களின் எழுத்துக்கள் வழியாக இந்தியா முதலிய நாடுகளின் சிந்தனையாளர்களிடமும் ஆழமான பாதிப்பைச் செலுத்தியது. தமிழில்கூட ந.பிச்சமூர்த்தி முதல் தேவதேவன் வரையிலான கவிஞர்கள் அந்தப்பாதிப்பை சாட்சியப்படுத்தியிருக்கிறார்கள்.

இயற்கைவழிபாட்டாளர்களில் ஒருசாரார் ‘பண்படாத புனிதன்’ [Noble savage] என்ற கருத்தை உருவாக்கினர். ஜான் டிரைடனின் ஒரு கவிதையில் இருந்து உருவான இச்சொல் பின்னர் ஒரு முக்கியமான கருத்தாக்கமாக வளர்ந்தது. கிறித்தவத்தின் கருதுகோள்களுக்கு எதிராக, பண்டைய பாகன் வழிபாட்டுமுறைகளின் சாரத்தில் இருந்து உருவாகி வந்த இச்சொல்லின் உருவாக்கத்திலும் கிறித்தவ இறையியல்அடிப்படையே இருந்தது என்பது ஒரு முரண்நகை.

மனிதப் பண்பாடு ஆதிபாவத்தால் உருவானது, மனிதர்கள் பாவத்தில் கருத்தரிக்கப்பட்டவர்கள் என்ற கொள்கை கிறித்தவத்தால் நிலைநாட்டப்பட்டது. அதைமறுத்து மனிதர்கள் இயல்பில் நல்லவர்கள் என்றும் ‘நாகரீகம்’ என்று சொல்லப்படும் பிற்கால மானுட அமைப்பு மூலமே அவர்கள் சுயநலம், பேராசை, பரஸ்பர ஐயம் போன்ற உணர்வுகளை அடைந்தார்கள் என்றும் ‘பண்படா புனிதன்’ கொள்கை குறிப்பிடுகிறது. இதனை அவனே உணர்ந்தபின்னரே மனிதன் ஆன்மீகமீட்பு குறித்த கருத்துக்களை உருவாக்கிக் கொண்டான். அந்த இரு கருத்துநிலைகளுக்கும் நடுவே போராடுவதாக மனித அகம் மாறியது. பண்படாத மனிதன் இந்த இரு கருத்துநிலைகளுக்கும் முற்பட்டவன். அவனிடம் பாவம் இல்லை ஆகவே மீட்பும் அவனுக்கு தேவையில்லை.

இந்தக்கொள்கை சார்ந்து உருவான கருத்துக்களை பொதுவாக பண்படாமைவாதம் [Primitivism.] என்று குறிப்பிடுவது வழக்கம். இந்தக் கோட்பாடும் பரவலாக இலக்கியவாதிகளிடம் கூரிய செல்வாக்கைச் செலுத்தியது. தமிழில் ஐரோப்பிய இலக்கியங்களை மொழியாக்கம் செய்த க.நா.சு இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களையே அதிகமும் மொழியாக்கம்செய்திருக்கிறார். உதாரணம் நட் ஹாம்சனின் ‘நிலவளம்’

வனவாசியை இச்சிந்தனைகளின் பின்னணியில் ஆராய்வது பல அகவெளிச்சங்களை அளிக்கும். முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது இதுதான், காட்டின் சித்திரத்தை அளிக்கும் விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய அதை ஐரோப்பிய பாணி இயற்கைவாதத்துக்கு எவ்வகையிலும் சமானத்தன்மை இல்லாத ஒன்றாகவே உருவாக்கியிருக்கிறார் என்பதுதான். ஆகவேதான் வனவாசி முழுக்கமுழுக்க ஓர் இந்தியநாவலாக உள்ளது. அதைப்போன்ற நூற்றுக்கணக்கான ஐரோப்பிய நாவல்களுடன் அதை எவ்வகையிலும் சமானமாக காணமுடியாது. இந்த தனித்தன்மையே அதன் சிறப்பு.

அபாரமான கற்பனாவாதத் தன்மை கொண்ட ஆக்கம் வனவாசி. அதன் மொழிநடை மிக கவித்துவமானது. த.நா.குமாரசாமியின் மொழியாக்கமும் கவித்துவமானதே. ஆனால் விபூதிபூஷன் பந்தோபாத்யாய காட்டுவாழ்க்கையை மிகைப்படுத்தவில்லை, இலட்சியப்படுத்தவில்லை. அதேசமயம் அதை வரண்ட யதார்த்தம் நோக்கியும் கொண்டுசெல்லவில்லை. விபூதி பூஷனிடம் செயல்படுவது முதிர்ந்த இந்திய தத்துவ நோக்கு. அது இயற்கையை -பிரகிருதியை- ஒரு லீலையாக காண்பது. அந்த லீலை என்பது முரணியக்கம் மூலம் உருவாவது. ஆக்கமும் அழிவும், நன்மையும் தீமையும், இருளும் ஒளியும், வளமும் வரட்சியும் ஒன்றையொன்று சமன்செய்ய முயலும் சக்கரம் அது. வனவாசியில் பருவச்சுழற்சி மூலம் நாம் காண்பது அந்த மகத்தான லீலாசக்கரத்தை. அதுவே இந்த நாவலின் சாரம்.

அதையே மனிதனைப்பற்றிச் சொல்லும்போதும் ஆசிரியர் சொல்லக்கூடும். அவன் அகமும் நன்மைதீமைகளின் லீலையரங்குதான். அவனே பிரம்மாண்டமான ஒரு அரங்கின் ஒரு காய் மட்டும்தான். ஒரு சிறிய காட்டுப்பகுதிக்குள் ஒரு சிறிய காலப்பகுதிக்குள் இயங்கும் வாழ்க்கையைச் சொல்லும் விபூதிபூஷண் காட்டும் மனிதர்களில் அனேகமாக அனைவருமே காட்டுமிருகங்களைப்போல இலக்கு என ஏதும் இல்லாமல் இயல்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த இலக்கின்மை என்பது பொருளின்மை அல்ல. வெறுமை அல்ல. அவர்களின் வாழ்க்கை இயற்கை என்ற மாபெரும் அறியமுடியாத பொருள்கொண்ட விளையாடலுடன் இணைந்துள்ளது.

முற்றிலும் இந்தியத்தன்மை கொண்ட இந்த தரிசனத்தில் இருந்து விபூதிபூஷன் பந்தோபாத்யாய காட்டும் நுண்சித்திரங்களுக்குள் வந்தால் நாம் இன்னும் நுட்பமான ஒரு நாவலை வாசிக்க முடியும். அது ஐரோப்பிய இயற்கைவாதம் போன்ற ஒன்றல்ல. இயற்கைவாதம் ஓர் எதிர்வினை. கிறித்தவ விஸ்தரிப்பு வாதத்துக்கும் மையப்படுத்தல்நோக்குக்கும் எதிரானது. ஐரோப்பிய தொழில்மயமாதலுக்கு எதிரானது. அவை இரண்டு இணைந்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் பூர்வகுடிகளை கொன்றே அழித்த வரலாற்று உண்மைக்கு எதிரான மனசாட்சியின் எழுச்சி அது. ஆனாலும் அது எதிர்வினை மட்டும்தான். விபூதிபூஷன் பந்தோபாத்யாய முன்வைப்பது பலநூறு வருடங்களாக மெல்லமெல்ல உருவாகி முதிர்ந்த ஒரு தரிசனம்.

வனவாசி இந்திய மொழிகளில் நிகழ்ந்த பேரிலக்கியங்களில் ஒன்று. நமது வரலாற்றுப் பின்புலத்தில், நமது அகஉருவங்களின் சாயலுடன் இந்நாவலை படிப்போமெனில் இதன் ஒவ்வொரு வரியும் கவிதைக்குரிய எல்லையின்மையுடன் திறந்து கொள்வதைக் காணமுடியும். வயல்களாக மாறிக்கெண்டிருக்கும் காட்டில் யுகலப் பிரசாதன் நடும் மலர்ச்செடிகள் அப்போது நம்மை துயிலிலும் பின்தொடரும்.

[வனவாசி. வங்கநாவல் [ஆரண்யக்] விபூதிபூஷன் பந்தோபாத்யாய. தமிழாக்கம் த.நா.குமார்சாமி சாகித்ய அகாதமி வெளியீடு; 1968.]

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Oct 4, 2010

http://www.jeyamohan.in/?p=192 விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’

http://www.jeyamohan.in/?p=203 கண்ணீரைப் பின்தொடர்தல்

http://www.jeyamohan.in/?p=216 சாகித்ய அக்காதமி வெளியிட்டுள்ள முக்கியமான இந்திய நாவல்கள்

தேசியபுத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கியமான இந்திய நூல்கள் http://www.jeyamohan.in/?p=218

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 18

$
0
0

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 6    

துரியோதனன் அறைக்குள் நுழைந்தபடி மெல்ல ஏப்பம் விட்டான். ஆடைமாற்றச் சென்றபோது அவன் சற்று யவனமது அருந்தியிருக்கவேண்டும் என்றும் அதை பானுமதி அறிந்துவிடக்கூடாதென்பதற்காகவே அவன் வாயில் அந்த சுக்குமிளகுதிப்பிலி கலவையை மென்றுகொண்டிருந்தான் என்றும் உள எழுச்சியுடன் பேசினான் என்றும் கர்ணன் உய்த்தறிந்தான். ஆனால் அறைக்குள் நுழைந்தபோது எச்சரிக்கையுணர்வாலேயே ஏப்பம் எழுந்துவிட்டது. பானுமதியின் முகம் சிவந்ததைக் கண்டு அவன் சிரிப்பை அடக்கியபடி நோக்கினான். துரியோதனன் சற்று உளம்குன்றிக பார்வையைச் சரித்து கர்ணனை பார்த்தான். அவன் தன்னை மீட்கவேண்டும் என்பதுபோல.

கர்ணன் “ஏப்பம் வருகிறதே? உணவருந்தினீர்களோ?” என்றான். துரியோதனன் திடுக்கிட்டு “ஆமாம், இல்லை, சுக்குதான்… ஏனென்றால் தொண்டை” என்றபின் பானுமதியை பார்த்துவிட்டு கர்ணனை நோக்கி பற்களை கடித்தான். “ஆமாம், நீர்கோளுக்கு சுக்கு நல்லது” என்றான். சுபாகு உரக்க “அதைத்தான் நானும் சொன்னேன். யவனமது அருந்துவதைவிட சுக்குநீர் அருந்தலாமே என்று… ஆனால்” என்றபின் திகைத்து பானுமதியை பார்த்தான். அவள் சினந்து எழுந்து தன் மேலாடையை அணிந்தபடி அறையைவிட்டுச் செல்ல முயல துரியோதனன் சென்று அவளை மறித்து “என்ன இது? இப்போது என்ன நடந்துவிட்டது? ஒரே ஒரு, இல்லை அரைக்கோப்பை… அதுகூட… சினம்கொள்ளாதே…” என்றான்.

“நான் சினம் கொள்ளவில்லை. மதுவுண்டவர்களிடம் அரசியல் பேசுமளவுக்கு மதியின்மை எனக்கில்லை… நீங்களே பேசிக்கொள்ளுங்கள். எனக்கு பணிகள் உள்ளன” என்றாள். “இல்லை பானு. அது மதுவே இல்லை. வெறும் பழச்சாறு. நான் இனிமேல் அதைக்கூட அருந்துவதாக இல்லை” என்றான் துரியோதனன். துச்சலன் “நாங்களிருவரும் அதை அருந்துவதே இல்லை அரசி” என்றான். சுபாகு “ஆம், நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்” என்றான். துரியோதனன் கடும் சினத்துடன் திரும்பி அவர்களை நோக்க சுபாகு துச்சலனுக்குப் பின்னால் அறியாமல் தன் உடலை மறைக்க முயன்றான். துச்சலன் திகைத்து “ஆனால் மது அருந்துவது ஒன்றும் பிழையில்லை. அரசர்கள்…” என்றான்.

துரியோதனன் மேலும் சினம்கொள்ள துச்சலன் அப்படியே நிறுத்திவிட்டு கர்ணனை நோக்கினான். அந்த விழிகளில் இருந்த இறைஞ்சுதலைக் கண்ட கர்ணன் வாய்க்குள் நகைத்தபடி பார்வையை திருப்பினான். “சரி. நான் என்ன செய்யவேண்டும்? உண்ட மதுவை போய் வாயுமிழ்ந்துவிட்டு வரவா? தெரியாமல் நடந்துவிட்டது. ஆடை மாற்றிக்கொண்டிருந்தேன். பணியாளன் வந்து…” என்று சொல்ல பானுமதி சீறி “ஊட்டிவிட்டானா?” என்றாள். “ஆம், அதாவது… ஊட்டிவிடவில்லை… ஆனால்…” என்றபின் துரியோதனன் மீண்டும் கர்ணனை நோக்கினான்.

கர்ணன் “பெரிய அளவில் மது அருந்தவில்லை என்றே நினைக்கிறேன் பானு” என்றான். “மூத்தவரே, நீங்கள் சொல்லிக்கூட இவர் கேட்கவில்லை என்றால் நான் என்னதான் செய்வது?” என்று பானுமதி கண்களில் நீருடன் கேட்டாள். “நான் சொல்லிக்கொள்கிறேன். அவர் கேட்பார்…” என்றான் கர்ணன். துரியோதனன் “நான் என்ன செய்வது? எனக்கு இந்த அன்றாட அரசாடல் பெரும் சலிப்பையே உருவாக்குகிறது. எல்லைப்பகுதி சிற்றூரில் ஓடையில் நீர் வந்தாலென்ன வராவிட்டாலென்ன? போரால் தீர்க்கப்படும் இடர்கள் மட்டுமே என்னை கவர்கின்றன. அவை அன்றாடம் வருவதுமில்லை” என்றான் துரியோதனன்.

“நீங்கள் அஸ்தினபுரியின் அரசர். உங்களால் தீர்க்கப்படவேண்டியவை அனைத்து சிக்கல்களும்” என்றாள் பானுமதி. “நானேதான் தீர்க்கவேண்டுமா? நீ இருக்கிறாயே… நீதான் அஸ்தினபுரியின் சக்ரவர்த்தினி” என்றான் துரியோதனன். கர்ணன் “ஆம் பானு, அவர் என்னதான் சொன்னாலும் குடிகள் நீ ஒரு சொல் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். நீ சொல்லாதவரை அந்தச் சிக்கல் முடிவதுமில்லை. இந்நாடு உன்னால்தான் ஆளப்படுகிறது” என்றான்.

பானுமதி முகம் மலர்ந்து “இருக்கலாம். ஆனால் அதற்காக அரசர் அரியணை அமர்ந்து கொட்டாவி விடவேண்டுமா என்ன?” என்றாள். “இனிமேல் இல்லை” என்றான் துரியோதனன். “என்ன இல்லை?” என்றாள் அவள். “இனிமேல் கொட்டாவி விடமாட்டேன்” என்றான். அவள் சிரித்துவிட்டாள்.

அந்தச் சிரிப்பால் ஊக்கம் பெற்ற துச்சலன் “கொட்டாவி விட்டால் தீயஆவிகள் நம் உடலைவிட்டு வெளியே செல்கின்றன… அதை அடக்கினால் அவை உடலிலேயே தங்கிவிடும் என்று மருத்துவர் சொல்கிறார்கள்” என்றான். கர்ணன் “இல்லை, அவை கீழாவியாக வெளியே சென்றுவிடும்” என்றான். துச்சலன் ஐயத்துடன் சுபாகுவை நோக்கிவிட்டு “இருக்கலாம்… ஆனால்” என்றான். கர்ணன் “ஆனால் கீழாவிகளை அவையில் வெளியேற்றுவது மேலும் பிழை” என்றான். சுபாகு “அதை வெல்ல தமையனால் இயலாது” என்று சொல்ல பானுமதி சினந்து “போதும். என்ன பேச்சு இது?” என்றாள்.

தருணத்தை உணர்ந்த துரியோதனன் வெடித்துச் சிரித்து “ஆம்… இளையவன் எப்போதும் ஆவிகள் சூழ தெரிகிறான்” என்றான். துச்சலனும் கூச்சத்துடன் உடன் நகைத்தான். பானுமதி பேச்சை மாற்ற “நான் ஒரு முதன்மையான செய்தியை பேசவிழைந்தேன். ஆகவேதான் இங்கே இருந்தேன்” என்றாள். மிகையான எழுச்சியுடன்  முகத்தை வைத்தபடி “என்ன செய்தி? பேசுவோமே” என்றான் துரியோதனன். ஓரக்கண்ணால் கர்ணனை நோக்கி விழியசைவால் தப்பிவிட்டேன் என்றான். கர்ணன் புன்னகைக்க இரு உன்னை பிறகு பேசிக்கொள்கிறேன் என்று விழிக்குறிப்பு காட்டினான்.

ஆடும் திரைச்சீலைகளின் வண்ணம் மாறியது. உள்ளே இளம்காற்று வந்து அறைச்சுவர்களை தழுவிச்சென்றது. பானுமதி தன் கூந்தலிழையை சீரமைத்தாள். தூண்களைச் சுற்றி போடப்பட்டிருந்த பித்தளைக் கவசங்களில் தெரிந்த சாளரத்து நீள்வடிவங்களை, காற்றில் மெல்ல திறந்தசைந்த அறைக்கதவுகளை நோக்கியபடி கர்ணன் அமர்ந்திருந்தான். அவள் பேசப்போவது அவனைப்பற்றி என அவனுடைய உள்ளுணர்வு சொன்னது.

மீசையை நீவியபடி கால்நீட்டிய துரியோதனன் தம்பியரை நோக்கி “நன்று! அரசவையில் பார்ப்போம். இன்று காலை நான் சொன்னதற்கு மகதத்தின் செய்தி வந்தபின் முடிவெடுப்போம்” என்றான். அவர்கள் பானுமதியை நோக்கக்கண்டு “இளையவர் இருக்கலாமா கூடாதா?” என்றான் துரியோதனன். “அவர்கள் தங்கள் நிழல் வடிவங்கள் அல்லவா?” என்றாள் பானுமதி நகைத்தபடி. துச்சலன் புன்னகைத்து “ஆம். ஆனால் இது உச்சிப்போது. ஆகையால் மிகவும் குறுகியிருக்கிறோம்” என்றான். சுபாகு பேரொலி எழுப்பி சிரித்தான். துரியோதனன் கர்ணனை நோக்கி “பார்த்தாயா? நகைச்சுவை உணர்வும் இவர்களுக்கு மிகுதி” என்றான்.

சுபாகு “நாங்கள் இங்கிருப்பதனால் மூத்தவர் அடிக்கடி நகைக்கிறார். அது நன்று” என்றான். துச்சலனும் சிரித்து “ஆம், அதற்காகவே நானும் இங்கிருக்கிறேன்” என்றான். பானுமதி “மூத்தவரே, தங்களுடன் நான் ஒன்று பேச விழைகிறேன்” என்றாள். “இவ்வளவு நேரம் பேசிக்கொண்டுதானே இருந்தீர்கள்?” என்றான் துரியோதனன். “ஏதாவது போர்ச்செய்தி என்றால் சொல்லவே வேண்டாம். நாம் உடனே கிளம்பிவிடலாம். அரண்மனைக்குள் அமர்ந்து குடித்து தூங்கி சலித்துவிட்டேன்.” “இல்லை, இது வேறு செய்தி” என்றாள்.

“சொல். அரசியல் சூழ்ச்சி என்றால் கொஞ்சம் ஆர்வத்துடன் கேட்பேன். காவியமோ நெறி நூலோ என்றால் நான் படுத்து சற்று துயில்கிறேன்” என்றான். பானுமதி “நான் மூத்தவரின் மணம் பற்றி பேசவிருக்கிறேன்” என்றாள். “அதைப் பற்றித்தானே இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு வந்தீர்கள்?” என்றான் துரியோதனன். “இல்லை. அவர் மணம் முடிக்கப்போகும் ஷத்ரியப் பெண்ணைப்பற்றி பேசப்போகிறேன்.” துரியோதனன் “ஆம், நான் அதை மறந்துவிட்டேன். கலிங்கத்துக்கு செய்தி அனுப்பியிருந்தோமே?” என்றான்.

“கலிங்கத்திற்கா?” என்றான் கர்ணன். பானுமதி “ஆம், உபகலிங்கன் சித்ராங்கதனுக்கு…” என்றாள். துரியோதனன் “உண்மையில் எனக்குத்தெரியவில்லை, உபகலிங்கன் என்றால் யார்?” என்றான். “திரௌபதியின் மணநிகழ்வுக்கு ஒருவன் வந்திருந்தான். பெரிய மொந்தைபோல வயிறுள்ளவன்…” பானுமதி “கலிங்கம் இப்போது இருநாடுகளாக உள்ளது அரசே. கலிங்கத்தின் பேரரசர் ஸ்ருதாயுஷுக்கு இரு மைந்தர்கள். தலைநகர் தண்டபுரத்தை ஆள்பவர் மூத்தவராகிய ருதாயு. இளையவராகிய சித்ராங்கதர் ராஜபுரத்தை ஆள்கிறார்.”

துரியோதனன் “ஓ” என்றான். “சித்ராங்கதனுக்கு இருமகள்கள். இளைய அரசியின் மகள் சுப்ரியையை மூத்தவருக்கு மணம் முடித்து தரமுடியுமா என்று கோரி ஒரு செய்தியை நான் அனுப்பியிருந்தேன்.” கர்ணன் “செய்திகள் அனுப்பத் தொடங்கி நெடுநாட்களாகின்றன. மறுமொழி இருந்திருக்காதே?” என்றான் துரியோதனன் “முன்பு ஓர் இளவரசியை கேட்டு அனுப்பினோமே. அவள் பெயரும் சுப்ரியை அல்லவா?” என்றான். “ஆம், அவள் புளிந்த இளவரசி. நம் தூதை மறுத்து அவளை காம்பிலிக்கு மணமுடித்து அனுப்பினார் அவள் தந்தை. அவள் இரு மைந்தருக்கும் தாயாகிவிட்டாள்”

துரியோதனன் “சுப்ரியை என்னும் பெயர் இவனை வலம் வருகிறது” என்றான். கர்ணன் ”வீண்முயற்சி” என்றான்.”இம்முறை செய்தியுடன் ஒரு பரிசையும் வாக்களித்திருந்தேன்” என்றாள் பானுமதி. “என்ன பரிசு?” என்று துரியோதனன் உடலை நெளித்து சோம்பல் முறித்தபடி கேட்டான். “இளையவளை அங்க நாட்டரசருக்கு பட்டத்தரசியாக அளிப்பதென்றால் மூத்தவள் சுதர்சனையை அஸ்தினபுரியின் அரசர் தன் துணைவியாக கொள்வார். அவ்வாறென்றால் மட்டுமே இம்மணம் நிகழும் என்றிருந்தேன்.”

ஒருகணம் புரியாமல் உடலை அசைத்த துரியோதனன் அசைவிழந்து இருமுறை இமைத்தபின் சட்டென்று எழுந்து “என்ன சொல்கிறாய்?” என்றான். பின்னர் திரும்பி “இவள் என்ன சொன்னாள்?” என்று கர்ணனிடம் கேட்டான். கர்ணன் சொல்லிழந்து அமர்ந்திருந்தான். சுபாகு “நான் சொல்கிறேன். தங்களுக்கு இரண்டாவது மனைவியாக கலிங்க மன்னர் சித்ராங்கதனின் மகள் சுதர்சனையை மணமுடித்து வைக்க பட்டத்தரசி முயல்கிறார்” என்றான். துச்சலன் “ஆம், அப்படி மணமுடிப்பதற்கு நிகராக மூத்தவர் கர்ணனுக்கு இளையவர் மணமுடிக்கப்படுவார்” என்றான்.

துரியோதனன் உரக்க “என்ன இது? என்னிடம் கேட்காமலா இச்செய்தியை அனுப்பினாய்?” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “எனக்கு இது ஒன்றே வழி என்று தெரிந்தது. உபகலிங்கன் தன் மூத்தவரை அஞ்சிக்கொண்டிருக்கிறார். ருதாயு மகதனுடன் மணவுறவு கொண்டவர். அஸ்தினபுரிக்கு மகளை அளிப்பதன் வழியாக அவர் மூத்தவரை விஞ்சிவிடமுடியும்.” துரியோதனன் “இது ஒரு போதும் நடக்காது. நீ அறிவாய்” என்று கூவினான்.

அவள் கையசைத்து “நான் அறிவேன்” என்றாள். “உங்களுக்கு துணைவியாகவும் அன்னைக்கு நிகரெனவும் நான் இங்கிருப்பதை நான் மட்டுமல்ல, இவ்வரண்மனையில் அனைவரும் அறிவார்கள். அரசே, காதலுக்காக மணமுடிக்கும் வழக்கம் ஷத்ரியருக்கு இல்லை. அனைத்து மணங்களும் அரசியல் மணங்களே. இதை நீங்கள் செய்தே ஆக வேண்டும்” என்றாள். “இல்லை பானு. நீ…” என்று அவன் கைகளை விரித்தபடி அவளை நோக்கி செல்ல அவள் அவன் வலக்கையைப் பற்றி தன் நெஞ்சில் வைத்து “எனக்காக அல்ல அரசே. இது தங்கள் துணைவருக்காக” என்றாள்.

துரியோதனன் ஒரு கணம் செயலற்று நின்றபின் திரும்பி கர்ணனைப் பார்த்து “இவனுக்காகவா?” என்றான். “ஆம். இது வரை நாற்பது அரசர்களிடம் செய்தி அனுப்பிவிட்டோம். எவரும் அவருக்கு பெண் கொடுக்க சித்தமாக இல்லை. இவ்வாக்குறுதி அளிக்கப்பட்டால் உறுதியாக சித்ராங்கதன் ஒப்புக்கொள்வார் என்று எண்ணினேன்… அந்நம்பிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது” என்றாள் பானுமதி. துரியோதனன் தன் தொடையில் அறைந்து “நாம் படைகொண்டு செல்வோம். சித்ராங்கதனைக் கொன்று அப்பெண்ணை எடுத்து வருவோம். அதற்காக நான் பிறிதொரு பெண்ணை எண்ணுவதா? அது அப்பெண்ணுக்கு நாம் இழைக்கும் தீங்கு. என் உள்ளத்தில் பிறிதொரு பெண் இல்லை” என்றான்.

“நான் அதை அறிவேன். எப்போதும் அது அங்ஙனமே இருக்கும் என்றும் அறிவேன் ஆனால் ஆண்களின் அன்பு பகிர்வதற்கு எளியது” என்றாள் பானுமதி. “அவளை மணம் கொண்டு வந்தபின் அவள் உங்களுக்கு உகந்தவள் என்பதை நீங்களே உணர்வீர்கள்.” துரியோதனன் “இல்லை… ஒருபோதும் அது நிகழப்போவதில்லை” என்றபின் பதைப்புடன் திரும்பச் சென்று தன் இருக்கையில் அமர்ந்து “என்ன இது? எனக்கொன்றும் புரியவில்லை” என்றான். பானுமதி “வெறுமனே அச்செய்தியை நான் அனுப்பவில்லை. சுதர்சனை தங்கள் மேல் காதல் கொண்டிருக்கிறாள் என்ற செய்தியை சூதர்கள் வழி அறிந்தேன். அதனால்தான் அவளுக்கு முதலில் செய்தியனுப்பியபின் அவள் தந்தைக்கு முறைப்படி தூதனுப்பினேன்” என்றாள்.

“நீங்கள் ராஜபுரத்துக்குச் சென்று அவளை சிறையெடுத்துச் செல்வதாக முன்பொரு எண்ணமிருந்தது. அதை அறிந்த நாள் முதலே உங்கள் பெருந்தோள்களை சித்திரமாக எழுதி தன் மஞ்சத்தருகே வைத்து நோக்கி விழிவளர்பவள் அவள் என்றார்கள். அப்பெருங்காதலை புறக்கணிப்பதற்கு எனக்கு உரிமையில்லை என்று உணர்ந்தேன். ஒருவகையில் எனக்கு முன்னரே உங்களை தன் கொழுநனாக வரித்துக் கொண்டவள் அவள். அவள் இங்கு வரட்டும். எனக்கு நிகராக அரியணையில் அமரட்டும்” என்றாள்.

18

சினத்துடன் தலையசைத்து துரியோதனன் “அப்பேச்சை நான் கேட்கவே விழையவில்லை” என்றான். “இது உங்கள் கடமை. உங்கள் துணைவருக்காகவும் அவளுக்காகவும் செய்தாகவேண்டியது” என்றாள் பானுமதி. “அவள் இங்கு வந்தபின் அவளை நான் ஏறிட்டும் பார்க்கவில்லை என்றால் என்ன செய்வாய்? அவளை அணுகவே என்னால் முடியவில்லை என்றால் என்ன செய்வாய்?” என்றான் துரியோதனன். “முடியும்” என்றாள் பானுமதி. “ஏனெனில் அவள் பெருங்காதல் கொண்டவள். அத்தகைய காதலை தவிர்க்க எந்த ஆண்மகனாலும் முடியாது. எக்கணம் அவள் கண்களை நீங்கள் பார்க்கிறீர்களோ அதன் பின் உங்கள் உள்ளத்தில் அவள் இடம் பெறுவாள்.”

“இந்தப் பேச்சையே எடுக்கவேண்டியதில்லை” என்றான் துரியோதனன். கர்ணன் “பானு, உனது விழைவை நான் அறிந்து கொண்டேன். ஆனால் இதுவல்ல அதற்குரிய வழி. விட்டுவிடு” என்றான். பானுமதி துரியோதனனிடம் “நான் கேட்பது ஒன்றே. அரசே, உங்கள் தோழர் ஷத்ரியப் பெண்ணை மணக்க இது ஒன்றே வழி என்றால் அவர் பொருட்டு இதை செய்வீர்களா மாட்டீர்களா?” என்றாள். துரியோதனன் ஏதோ சொல்ல முயல “வேறெதுவும் வேண்டாம்… இதற்கு மட்டும் மறுமொழி சொல்லுங்கள். இது ஒன்றே வழி என்றால் செய்வீர்களா?” என்றாள்.

துரியோதனன் கர்ணனை நோக்கியபடி “நான் அவன் பொருட்டு எதையும் செய்வேன்” என்றான். “அரசே, படை கொண்டு சென்று கலிங்கத்தை வெல்வது எளிதல்ல. இன்று மகதமும் வங்கமும் இருபக்கமும் அவர்களுக்கு துணை நிற்கிறார்கள். நமது படைகளோ அஸ்தினபுரியிலிருந்து இந்திரப்பிரஸ்தம் பிரிந்தவுடன் பாதியாகிவிட்டன. படைகொண்டு சென்று நாம் பாரதவர்ஷத்தை வெல்லும் நாள் வரும். ஆனால் அது இப்போதல்ல. இப்போது நமக்கு இருப்பது அரசுசூழ்தல் மட்டுமே” என்றாள். நீள்மூச்சுடன் அவன் தோள்தளர்ந்து “சொல்! என்ன செய்வது?” என்றான். “அவளை நீங்கள் மணப்பீர்கள் என்றால் இளையவளை அளிக்க ஒப்புதல் என்று ஓலை வந்துள்ளது.”

துரியோதனன் மீசையை நீவியபடி “அவ்வாறே ஆகட்டும். ஓர் அரசமகள் வந்தால் மட்டுமே அங்கத்து மக்கள் கர்ணனை முழுமையாக ஏற்பார்கள். அவனை ஏற்க உளத்தயக்கம் கொண்டவர்கள்கூட அரசமகளைப் பணிந்து அவளிடமிருந்து ஆணைபெற்றுக்கொள்வார்கள். அந்த உளநாடகம் அங்குள்ள ஷத்ரியர்களுக்கு தேவைப்படும்” என்றான். “ஆம், கலிங்கன் மகளுடன் இவர் அங்க நாட்டுக்குள் சென்றால் அங்கு அரியணை அமர்ந்து முடிசூடி குடை கவிழ்ப்பதில் எந்தத் தடையும் இருக்காது” என்றாள் பானுமதி.

“என்ன சொல்கிறாய்?” என்றபடி கர்ணன் எழுந்தான். “இதை நான் ஏற்பேன் என நினைக்கிறாயா?” துரியோதனன் திரும்பி “முதல்கொந்தளிப்புக்குப் பின் எண்ணிப்பார்க்கையில் இவள் சொல்வதே சரி என்று நானும் உணர்கிறேன் கர்ணா. நீ கலிங்கனின் மகளை மணந்து கொள். அங்கமும் கலிங்கமும் ஒரு குருதியில் பிறந்த ஐந்து நாடுகள் என்பதை இப்போதுதானே கேட்டோம். அவற்றில் அங்கம் முதன்மையானது. கலிங்கம் வல்லமை மிக்கது. நீ கலிங்கன் மகளை மணப்பதென்பது உன் குருதியை புராணநோக்கிலும் உறுதிப்படுத்தும்” என்றான்.

“கலிங்கத்து இளவரசிக்கு அங்கத்தில் நிகரற்ற முழுதேற்பே அமையும்” என்றாள் பானுமதி. “அவள் குருதி வழியால் உங்களுக்கு கலிங்கமும் துணை நிற்பார்கள் என்றால் பிற மூவரும் உங்களை ஏற்றே ஆகவேண்டும். உங்கள் ஐவரின் கூட்டு பாரத வர்ஷத்தின் மிகப்பெரும் வல்லமையாக அமையும்.” கர்ணன் பேசமுற்படுவதற்குள் துரியோதனன் “கர்ணா, நீ கொண்ட அனைத்து மறுப்புகளையும் வென்று பிறிதொரு சொல்லற்ற அரசனாக ஆவதற்கான வழி இதுவே” என்றபின் திரும்பி “நன்று சிந்தித்து முடிவெடுத்திருக்கிறாய் பானு” என்றான்.

“இல்லை, இதை நான் ஏற்க மாட்டேன்” என்றான் கர்ணன். உரத்த குரலில் “இது என் ஆணை. இது இங்கே நிகழப்போகிறது” என்றான் துரியோதனன். துச்சலன் “ஆம், நானும் அது நன்று என்றே எண்ணுகிறேன். நமக்கு இன்னொரு அரசி அமைவதில் என்ன தடை? அங்கருக்கும் உகந்த துணைவி அமைகிறார்” என்றான். சுபாகு “நானும் அதையே எண்ணிக் கொண்டிருந்தேன். இங்கே நம்முடைய அரசவையிலேயே ஏவலரும் வினைவலரும் மூத்தவரின் துணைவியைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள். சூதர்மகனுக்கு உகந்த சவுக்கு அவள் என்று நம் அமைச்சர் ஒருவர் சொல்வதை நானே கேட்டேன். அவ்வண்ணம் என்றால் அங்கர் எப்படி அவளை ஏற்பார்கள்? கலிங்க அரசியை அவர்களால் மறுக்கவே முடியாது” என்றான்.

“கலிங்க இளவரசியை மணமுடித்து இங்கு அஸ்தினபுரியில் சடங்கு முறைமைகளை முழுமை செய்தபின் கலிங்க அரசின் தூதர் ஒருபுறமும் அஸ்தினபுரியின் தூதர் மறுபுறமும் வர அவர் அவைபுகுந்தால் அங்க நாட்டில் எந்த குலத்தவரும் எதிர் நிற்கமாட்டார்கள்” என்றான் துச்சலன். கர்ணன் “நான் சொல்லவிருப்பது…” என்று தொடங்க “சொல்லவிருப்பது ஏதுமில்லை. இதற்கு நீங்கள் உடன்பட்டேயாக வேண்டும். அஸ்தினபுரியின் அவையில் அன்று பிறிதொரு ஷத்ரிய இளவரசியை மணம் கொள்வதைப் பற்றி சொன்னபோது நீங்கள் ஒப்புக்கொண்டீர்கள். அஸ்தினபுரியின் அவையிலேயே இருக்கும் எதிர்ப்பை எதிர்கொள்ள இது ஒன்றே வழி” என்றாள் பானுமதி.

தளர்ந்தவன் என கர்ணன் கைகளை தொங்கவிட்டு “அவ்வாறே ஆகுக!” என்றான். துரியோதனன் “வந்திருக்கும் செய்தி என்ன?” என்றான். “இன்று காலைதான் செய்தி வந்தது. நேற்று அதை அனுப்பியிருக்கிறார்கள். மூத்தவளை தாங்கள் மணம்கொண்டு இணையரசியாக அவை அமர்த்துவதோடு உபகலிங்கத்துடன் எல்லா வகையான படைத்துணைக்கோடலுக்கும் உடன்படுவதாயின் இளையவளை அங்கருக்கு அளிக்க அவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்கிறார்கள்.” துரியோதனன் “ஒப்புதலே என்று செய்தி அனுப்பு” என்றான். கர்ணன் “அதற்கு முன் அனைத்தையும் விதுரருக்கும் அறிவித்து ஒரு சொல் கேட்பது நன்று” என்றான்.

பானுமதி “ஆம், அதையே நானும் எண்ணினேன். தங்களிடம் பேசிவிட்டு செய்தியை அவரிடம் பேசலாமென்றிருந்தேன்” என்றாள். துரியோதனன் “விதுரரை இங்கே வரும்படி சொல்” என்றான். சுபாகுவும் துச்சலனும் தலைவணங்கி வெளியே சென்றார்கள். துரியோதனன் பெருமூச்சுடன் “இத்தனை எளிதாக இச்சிக்கல் முடியுமென நினைக்கவில்லை” என்றான்.

பிறகு தலையை கையால் நீவியபடி “ஆனால் என் உள்ளம் நிலைகுலைந்திருக்கிறது. ஏன் என்றே தெரியவில்லை” என்றான். கர்ணன் “நீ உன்னுள் அமைதியை உணர்கிறாயா?” என்று பானுமதியிடம் கேட்டான். “ஆம்” என்று அவள் சொன்னாள். அவன் அவளுடைய சிறிய கண்களை நேரடியாக நோக்கினான். அங்கே சிரிப்பே ஒளிவிட்டது. “சொல்” என்றான். “ஆம், அதில் எந்த ஐயமும் இல்லை” என்றாள். அவன் அவளை சற்றுநேரம் நோக்கியபின் திரும்பிக்கொண்டான்.

அறைக்குள் காற்றின் ஓசைமட்டும் நிறைந்திருந்தது. துரியோதனன் “உண்மையில் வேறுவழியே இல்லையா? வேறு சிறிய ஷத்ரியர்களை நாம் வெல்லமுடியாதா?” என்றான். பானுமதி “அவர்கள் எவருக்கும் கலிங்க அரசிக்கு கிடைக்கும் இடம் அங்கத்தில் அமையாது அரசே” என்றாள். துரியோதனன் தலையை நீவி மீசையை முறுக்கியபடி “நான் அமைதியிழந்திருக்கிறேன்” என்றான். “ஏனென்றால் நீங்கள் அஞ்சுகிறீர்கள். அந்தப் பெண் வந்தால் உண்மையிலேயே அவளையும் விரும்பத் தொடங்கிவிடுவீர்கள் என எண்ணுகிறீர்கள்” என்றான் கர்ணன்.

“வாயைமூடு!” என்று துரியோதனன் சீறினான். பானுமதி “எதற்காக இந்தப் பேச்சு? நாம் ஒருவரை ஒருவர் துயரப்படுத்தி கொண்டாட விழைகிறோமா?” என்றாள். கர்ணன் “இல்லை, நாம் உண்மைகளை எதிர்கொண்டாகவேண்டும்… இப்போது ஒன்றின்பொருட்டு ஒருமுடிவை எடுத்தபின் வாழ்நாளெல்லாம் துயர்கொள்வதில் பொருளில்லை” என்றான். “அப்படி இறுதிவரை கணித்து எவரும் எம்முடிவையும் எடுக்கமுடியாது” என்றாள் பானுமதி. துரியோதனன் மீண்டும் தன் தலையை கோதிவிட்டு பெருமூச்சுவிட்டான். சற்றுநேரம் மீண்டும் அமைதி நிலவியது.

காலடியோசைகள் கேட்டபோது துரியோதனன் ஆறுதல்கொண்டவனைப்போல உடல் இளகினான். கர்ணனும் அசைந்து பெருமூச்சுவிட்டான். கதவு திறந்து சுபாகு “அமைச்சர் விதுரர்” என்றான். துரியோதனன் கைகாட்டியதும் அவன் கதவைத் திறந்து விதுரரை உள்ளே அழைத்தான். அவர் வந்து “அரசரை வணங்குகிறேன்” என்றார். துரியோதனன் “ஆசிரியருக்கு தலைவணங்குகிறேன். இங்கே ஓர் எண்ணத்தை பானுமதி சொன்னாள். அதைப்பற்றி…” என்று தொடங்கியதும் இடைமறித்த விதுரர் “நான் வரும்வழியிலேயே சுபாகுவிடம் கேட்டறிந்தேன். அரசே, உங்களை இளையகலிங்கன் ஏமாற்றிவிட்டான்” என்றார்.

பானுமதி “சொல்லுங்கள்” என்று படபடப்பை மறைத்தபடி கேட்டாள். “உங்களுக்கு வந்த செய்தி நான்குநாட்களுக்கு முன்னரே அனுப்பப்பட்டுவிட்டது. அச்செய்தியை அனுப்பிவிட்டு உடனடியாக இளையகலிங்கன் தன் இரு மகள்களுக்கும் ஏற்புமணம் ஒருக்கியிருக்கிறான். நாளை காலையில் ராஜபுரத்தில் நிகழும் மணநிகழ்வில் கங்கைப்பகுதிச் சிற்றரசர்கள் கலந்துகொள்கிறார்கள். மூத்தவளை ஜராசந்தனும் இளையவளை சிந்துநாட்டரசர் ஜயத்ரதரும் மணக்கவிருப்பதாக உளவுச்செய்திகள் சொல்கின்றன. அதன்பொருட்டே அந்நிகழ்ச்சி அமைக்கப்படவிருக்கிறது.”

“எப்போது இச்செய்தி வந்தது?” என்றாள் பானுமதி. அவள் குரலில் இருந்த நடுக்கத்தை கர்ணன் அறிந்தான். விதுரர் “நேற்றிரவு” என்றார். “உங்கள் தூது சென்ற செய்தியை நான் அறிந்திருந்தேன். உங்களுக்கு உபகலிங்கன் அனுப்பிய செய்தியை சற்றுமுன் சுபாகு சொல்லித்தான் அறிந்தேன். திட்டமென்ன என்று புரிந்துகொண்டேன்.” பானுமதி திரும்பி துரியோதனனிடம் “அதுவும் நன்றே. ஏற்புமணம் என்றால் எந்தவகையிலும் எவரும் மறுசொல் எடுக்கமுடியாது. அரசே, நீங்களிருவரும் சென்று அப்பெண்களை சிறைகொண்டு வருக!” என்றாள்.

“ஆனால், ஒரே இரவில்…” என்று விதுரர் தொடங்க “படை ஏதும் வேண்டியதில்லை. இருவர் மட்டிலும் செல்லட்டும். விரைவுப்படகுகள் ஓர் இரவில் கொண்டுசென்று சேர்த்துவிடும்…” என்றாள் பானுமதி. “மூத்தவரின் வில்லின் ஆற்றலை அவர்கள் அறியட்டும். அவர் பெண்ணைக் கவர்ந்து வந்தபின் எந்த ஷத்ரியர் எதிர்த்து வந்தாலும் களத்தில் சந்திப்போம்.” துரியோதனன் உரக்க நகைத்தபடி தொடையில் அறைந்து “ஆம், இதுதான் நான் விழைந்தது. கர்ணா, உடனே கிளம்புவோம். தம்பி, சென்று அனைத்தையும் சித்தமாக்கு. அரைநாழிகையில் நாங்கள் அஸ்தினபுரியிலிருந்து கிளம்பியாகவேண்டும்” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்


சங்கரர் உரை –கடிதங்கள்

$
0
0

1

 

ஜெ,

எப்படி இருக்கிறீர்கள்? இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். சென்ற ஆண்டு நடந்த விஷ்ணுபுர இலக்கியக் கூட்டங்களில் பங்குகொண்ட புதியவர்களுள் நானும் ஒருவன். ஓரிரு வார்த்தைகள் உங்களுடன் பேசும் வாய்ப்பு கிட்டியது. இதுவரை எனக்கு கடிதம் எழுதுவதற்கான அவசியம் ஏற்படவே இல்லை. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் உங்கள் புனைவுலகில் தான் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன். அதனுடன் தான் என் உரையாடல். அதன் அடுக்குகளின் விசாலங்களிலிருந்து சாமானியத்தில் வெளிவர முடிவதில்லை.

இப்பவும் இந்தக் கடிதம் எழுத மனம் இசைந்து வரக் காரணம் ஞாயிறு அன்று கோவையில் உங்கள் ‘அத்வைதம்’ உரையைக் கேட்டேன். ஒரு சிறிய மலைப்பாம்பு தன் உணவுக்குழாய்களின் அளவிற்கு சற்றும் பொருந்தாத ஒரு மாபெரும் இரையை உண்பது போல அந்த ஒன்றரை மணிநேரம் இருந்தது. அடுத்தடுத்து கனமான வாக்கியங்கள் வந்து விழுந்துகொண்டிருந்தது. ஒரு நல்ல இயற்பியல் விரிவுரையாளன் சார்பியல் கோட்பாடுகளை விளக்கும் பாங்கு உங்களின் பிற்பகுதி உரை இருந்தது.

என்னைக் கேட்டால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு தெளிவான உரை. அத்வைதத்தின் பிறப்பு, சங்கரரின் காலம், அப்போது இந்தியாவில் நிலவிய ஆன்மீக வறட்சி, ஞானயோகம் எப்படி எல்லா மதங்களையும் ஒன்று திறட்டுகிறது கடைசியாக அத்வைதக் கோட்பாடுகள் என்று ஒரு frameworkஐ உணர முடிந்தது . புனைவுகளில் காண்பது போல ஒரு மாபெரும் நிலத்தை, காலத்தை அடித்தளமாகக் கட்டிவிட்டு அதன் மேல் கோட்டைகளை எழுப்பிக்கொண்டே போகிறீர்கள்.

நீங்களே கூட கவனித்திருப்பீர்கள் அந்த ஒன்றரை மணிநேரம் ஐநூறுபேரின் கவனமும் ஒரு மையமாகக் குவிந்தது. ஒரு சலசலப்பைப் பார்க்கவில்லை நான். உரை முடிந்ததும் நச்சரவம் சிறுகதையில் வந்த அந்த பிரிட்டிஷ்க்காரர்கள் போல ஒரு மாதிரி பேதலித்துத் தான் வெளியே வந்தோம். மறுநாள் அதை மீட்டுருவாக்கம் செய்யும் போதுதான் சங்கரரின் சமூகப் பார்வை குறித்த வினாக்கள் எழுந்தது. உரையில் சண்டாளனாக சிவபெருமான் வருவது, சூத்திரர்களின் மீட்பு அத்வைதம் வழியாக நடந்தது என்று கூறினீர்கள். எனகென்னவோ உரையின் ஒரு கணிசமான பகுதி அத்வைத கோட்பாடுகளின் சமூகப் பார்வை குறித்து இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. சங்கரர் வெறும் ஆன்மீக விசாரணைகள் பற்றி மட்டுமே இயங்கிக்கொண்டிருந்தாரா என்று கேள்விகளுக்காக உங்கள் தளத்தைத் தேடிய போது ‘சங்கரப் புரட்சி’ கட்டுரை ஓரளவிற்கு பதில் சொன்னது.
உரை முடிவுக்கான சமிக்ஞைகள் எதையுமே போடாமல் ஒரு பாறாங்கல்லை கிணற்றுக்குள் போடுவது போல ழொழக் என்று நன்றி வணக்கம் கூறி கீழே ஓடிவிட்டீர்கள். மற்ற சில பேச்சுக்களிலும் இதை கவனித்திருக்கிறேன். இதைப் பாணியாகவே ஆக்கிவிட்டீரா என்ன ? ;).

விழா முடிந்து ஆர்எஸ் புரத்தில் ஒரு உணவகத்துக்குச் சென்றோம். டேபிளின் எதிர்புறம் பின்நாற்பதுகள் வயது மதிக்கத்தக்க தம்பதியினர் நாங்கள் இது பற்றியெல்லாம் பேசுவதைக் கேட்டுவிட்டு, ‘தம்பி நீங்க ரெண்டுபேரும் காலேஜு ஸ்டூடண்ட்ஸா. நாங்களும் விழாவுக்கு வந்திருந்தோம் .ஜெயமோகன் சார் சொல்றாப்ல சின்னப் பசங்க இந்த லெக்ச்சர்லாம் கேக்க வர்றதைப் பார்க்க சந்தோசமா இருக்குப்பா. என் பையனும் தான் இருக்கனே, கூப்பிட்டா வர்றதே இல்லை. லேப்டாப் முன்னாடி எப்பப்பாரு உக்கந்துக்கறான். அதுல என்ன இருக்கோ !’ என்று நொந்துகொண்டு ஒரு விள்ளல் இட்லியை விழுங்கினார். எங்களால் ஆனஉதவி அந்தப் பையனுக்கு கண்டிப்பாக இரவு ஒரு பெரிய வசவு உண்டு.

கிஷோர் ஸ்ரீராம்

அன்புள்ள கிஷோர்

இத்தகைய உரைகளின் சவால்கள் மூன்று. ஒன்று வழக்கமாக பக்தியுரைகளைக் கேட்டு அமர்ந்திருப்பவர்களின் கவனத்தை சுமார் ஒன்றரை மணிநேரம் பிடித்து நிறுத்தவேண்டும். இரண்டு தத்துவ அறிமுகமே இல்லாதவர்களுக்கு தத்துவத்தின் மையத்தைத் தொட்டுக்காட்டவேண்டும். கடைசியாக என் நோக்கில் இத்தகைய விஷயங்களை ஒரு விரிந்த வரலாற்றுப்பின்னணியின் வைத்து புறவயமாக அணுகவேண்டும்.

அந்நிலையில் முதல்தளத்தில் ஓர் அசைவை, கலைதலைத்தான் உருவாக்க முடியும். முழுமையாகப்புரியவைத்தல் அல்ல நோக்கம். ஒரு முன்வரைவை அளிப்பது. ஒரு தொடக்கத்தை உருவாக்குவது. அது நிகழ்ந்திருக்கிறதென நினைக்கிறேன்

ஜெ

அன்பு ஜெ ,

கீதை உரைக்கு இயல்பான தொடர்ச்சியாக வந்தது போலவே இருந்தது சங்கரர் உரை .வேதங்கள் , உபநிஷத்துகள் , பிரம்ம சூத்திரம் , பகவத் கீதை , அத்வைதம் என்ற வரிசையில் இந்திய நிலப்பரப்பின் மொத்த ஞானவெளியும் திரண்டு ஒரு சிறு முத்தாக உள்ளங்கையில் சேரும் பயணத்தை இந்த உரை காட்சிப்படுத்திவிட்டது .பால் தயிராகி வெண்ணை திரண்டு நெய்யாக – உருக்கி பின் நாவில் தடவியது போல .வரலாற்று நோக்கை அடித்தளமாகக் கொண்டும் சிந்தனையும் கற்பனையும் உள்ளுணர்வும் கவித்துவமும் இணைத்து முன் வைக்கும் கறாரான ஆய்வு நோக்கு மிகவும் தனித்தனிமையுள்ள ஒரு அடையாளத்தை பெற்று விட்டது , இதை உங்கள் signature style என்றே சொல்லலாம் :)

கீதையைப் போலவே சங்கரர் மற்றும் அத்வைதம் பற்றி மிக மேலோட்டமான புரிதலே எனக்கிருந்தது .இந்த உரைகளில் உள்ள முக்கிய அம்சம் அது முன்வைக்கும் கோணத்தில் இருக்கும் , வேறுபட்ட அறிதல்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்தும் தன்மையும் அதன் மூலம் நம் புரிதலில் இருக்கும் போதாமைகளை நிரப்பக்கிடைக்கும் வாய்ப்புமே .இந்த உரைகளில் பல தருணங்களில் எனக்கு அவ்வாறு நிகழ்ந்தது .குறிப்பாக எவ்வாறு வேதாந்தத்திலிருந்து அத்வைதம் எவ்விதம் ஒரு படி மேலே போனது , இந்து மதம் திரண்டதில் ஸமர்த்தர்களின் பங்கு , இந்திய நோக்கில் சமன்வயம் , பெளத்தம் ஏன் நாட்டார் தெய்வங்களை உள்ளிழுத்துக்கொள்ள முடியவில்லை , உவமைகள் மூலம் விளக்கப்படும் தத்துவமரபு என்று நம் புரிதலை தொடர்ச்சியான வலைப்பின்னல் ஆக்குகிறது.

அதே போல இந்த உரையில் சொல்லப்படாமலேயே சில விஷயங்கள் துலங்குகின்றன.இந்து மத இணைப்புமுறையில் உள்ள நுட்பங்கள் , இந்திய ஞானமரபின் கட்டுமானம் , (distributed yet loosely coupled architecture என்று சொல்வார்களே), அதன் மைய இழை , ஒரு வலுவான அரசுக்கு ஒரு வலுவான மெய்யியல் அளிக்கும் அடித்தளத்தின் தேவை , இந்திய மதங்களுக்கெல்லாம் கலசமாக இருக்கும் அத்வைதம் மதங்களையே சாராமல் கூட தூய தத்துவமான இருக்கும் தன்மை பற்றி , அனைத்திற்கு உச்சமாக கருதப்பட்டாலும் அதில் இருக்கும் மறுக்கவே முடியாத உள்ளார்ந்த சமத்துவம் பற்றி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அத்வைதம் பற்றிய ஒரு தொடக்க அறிமுகம் விரிவாகவே இருந்தது , குறிப்பாக பெளத்தத்தை வெல்ல சங்கரர் முன் வைத்த வாதங்கள்.இதே போல மீமாம்சகர்களுடனோ , சுத்த அத்வைத, துவைத தரப்புகளுடனோ ஏற்பட்ட வாதஙகளையும் சிறிது விவரித்திருக்கலாம்.

கீதை உரையையும் , சங்கரர் உரையையும் இந்தியத்தன்மையின் ஆதாரமான சாரத்தை மையமாக்கி அமைந்துள்ளன. இந்த மையத்தை சுற்றியும் அதன் மேலும் என்னும் பல உரைகள் வரும் என்று எதிர்பார்ப்பு கூடுகிறது .சொல்லப் போனால் இவ்வுரைகளை கேட்டபின் ஒருவர் இன்றைய காந்தியை படித்தால் அதை மேலும் எளிதாக உள்வாங்க முடியும் என்று தோன்றுகிறது.

ஆஸ்திரேலியாவில் வருடா வருடம் காட்டுத்தீ வருவது வழக்கம் , இங்கு எங்கும் பரவியிருக்கும் யூக்கலிப்டஸ் மரஙகள் இந்த காட்டுத்தீயிலிருந்து சமாளித்து வளரவே சாமர்த்தியமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக தோன்றும் . அதன் விதைகள் , உறுதியான வெளிக்கூடு தீச்சூட்டிற்கு உடைய வெளிவரும் தன்மை கொண்டவை . காட்டுத்தீ அணைந்த பின் தரையில் பரவும்க்கோ சாம்பல் மண்ணுக்கு அடியிலிருந்து எதையும் வளர விடாது , பெரிய மிருகங்கள் எல்லாம் வேறு பகுதி தேடிப் போயிருக்கும் , விதையை உண்ணும் தரையில் ஊறும் சிறூ பூச்சிகள் எல்லாம் அழிந்து போயிருக்கும் .எரிந்த மரத்திலிருந்து வெடித்து வெளியறும் யூகலிப்டஸ் விதைக்கு முளைத்து இலைவிட இதைவிட சிறந்த வாய்ப்பு அமையாது

.இந்திய ஞானமரபில் அத்வைதம் , என்றும் உள்ள ஒரு விதையாக அப்படி ஒரு தருணத்தை நோக்கி போய்க்கொண்டிருப்பதான நம்பிக்கையை இந்த உரை கிளர்த்தியுள்ளது நன்றி.

அன்புடன்
கார்த்திக்
அன்புள்ள கார்த்திக்

கட்டுரைக்கும் பேச்சுக்கும் உள்ள வேறுபாடென்பது பேச்சில் முன்னால் மனிதர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்பதே. எப்படியோ அவர்களுடனான ஒரு மானசீகமான உரையாடலாகவே உரை அமைகிறது. அவர்கள் அதை இட்டுச்செல்கிறார்கள். அதன் சாதகமும் பாதகமும் உரைக்கு உள்ளது. இந்த உரை பல திசைகளில் விரித்தெடுக்கவேண்டிய ஒரு முன்வரைவு மட்டுமே

யூகலிப்டஸ் விதை ஒரு மிகச்சிறந்த உவமை

ஜெ

 

சங்கரர் உரை

 

தொடர்புடைய பதிவுகள்

இ. மயூரநாதனுக்கு இயல் விருது – 2015

$
0
0

mayoora pic IMG_5445 (1)

 

இவ்வருடத்திற்கான இயல் விருது தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தை உருவாக்கி ஒருங்கிணைக்கும் மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அறிவு என்பதே உலகளாவிய ஒற்றைப்பேரியக்கம் என்ற அளவில் இணையத்தால் இன்று ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. விக்கிப்பீடியா அதில் ஆற்றும் பங்கு மிகப்பெரியது. தமிழில் அதன் பங்களிப்பை முன்னெடுக்கும் மயூரநாதன் அவர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது

திரு மயூரநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

 


இயல் அமைப்பின் செய்தி
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது ( இயல் விருது ) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.

 
இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம் ஆண்டிலேயே தொடங்கினார்.. முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். பின்னர் சிறிது சிறிதாக இணையத்தளத்தை விரிவாக்கி திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக்குழுமமாக அதை நிறுவினார்.

 
தமிழ் விக்கிப்பீடியாவே முதன்முதலாக அனைத்துலக பங்களிப்பாளர்கள் கூட்டாக இயங்கி ‘’Web 2.0’’ என்னும் முறையில் உருவாக்கப்பட்ட மாபெரும் படைப்பு. இதில் ஓரளவிற்குக் கணிசமாகப் பங்களித்திருப்பவர்கள் ஏறத்தாழ 100 பேர்தான் எனினும், இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். கலைக்களஞ்சியத்தில் ஏற்றப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 83,000. இதில் 80 வீதம் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டாலும்கூட 16,600 தரமான கட்டுரைகள் என்பது 24 தொகுதிகள் அடங்கிய அச்சுக் கலைக்களஞ்சியத்திற்கு சமமானது. இம்மாபெரும் படைப்பில் மயூரநாதன் மட்டுமே முதல் கட்டுரையிலிருந்து இன்றுவரை 4200-க்கும் மேற்பட்ட தரமான கட்டுரைகளைத் தொடங்கி உருவாக்கியுள்ளார். இவற்றை அச்சிட்டால், குறைந்தது 500 பக்கங்கள் கொண்ட எட்டு நூல்களாக அமையும்.

 

 

இந்தத் திட்டத்தை இவ்வளவு நேர்த்தியாக முன்னெடுத்துச் சென்றதிலும், கூட்டுழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்துவதிலும் இவருடைய இடையறாத உழைப்பும் நல்லறிவும் உதவியிருக்கிறது என்பது உண்மை. இன்று தமிழ் விக்கிப்பீடியா மாதந்தோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் பிரபல தளமாகவுள்ளது. உலகப் பன்மொழி திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசியதில், எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும், தரத்தின் அடிப்படையில் பல வகைளில் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக நிற்கின்றது ( சிச்சு ஆலெக்சு Shiju Alex 2010 இல் செய்த தர ஒப்பீடு ). இப்படிப்பட்ட தமிழ் விக்கிப்பீடியாவை தனியொருவராகத் தொடங்கி வளர்த்தெடுத்த மயூரநாதன் அவர்களின் பங்களிப்பு பெரும் பாராட்டுதலுக்குரியது.

 
மனித குலத்தின் அறிவு உருவாக்கத்தில் விக்கிப்பீடியாவின் தோற்றம் ஒரு பாய்ச்சல் எனலாம். தமிழ் மொழியை நவீன அறிவுத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஒரு மொழியாக வளர்த்தெடுப்பதிலும், தமிழ் மூலமான அறிவு உருவாக்கம் பரவல் தொடர்பிலும் தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் பல மட்டங்களிலும் உணரப்பட்டு வருகிறது. அண்மைக் காலங்களில், தமிழ்மொழி வளர்ச்சி தொடர்பான மாநாடுகளிலும், தமிழ் இணையத் தொழில்நுட்ப கருத்தரங்குகளிலும், அரசு சார்ந்த சில நிறுவனங்களின் தமிழ் வளர்ச்சிக்கான முன்னெடுப்புக்களிலும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

 
இன்று, தமிழ் விக்கிப்பீடியா மூலமான பங்களிப்புகள் மரபுவழியான பிற இலக்கிய முயற்சிகளுக்கு ஈடான முக்கியத்துவம் கொண்டவையாக வளர்ந்துள்ளன. அத்துடன் இது எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கான நம்பிக்கையாகவும் விளங்குகிறது. அதன் வளர்ச்சியில் முனைப்புடன் ஈடுபட்ட குழுமத்தை பாராட்டுவதுடன் விக்கிப்பீடியா நிறுவுநரான திரு இ.மயூரநாதனுக்கு வாழ்நாள் சாதனயாளர் விருதை வழங்கி கௌரவிப்பதில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் 2016 ஜூன் மாதம் நடைபெறவிருக்கிறது. அப்போது இயல் விருது கேடயமும் பரிசுத்தொகைப் பணம் 2500 டொலர்களும் வழங்கப்படும்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஆ.மாதவனுக்குப் பாராட்டுக்கூட்டம்

$
0
0

1

ஜெ

நாஞ்சில்நாடனும் பூமணியும் சாகித்ய அக்காதமி விருது பெற்றபோது பாராட்டுக்கூட்டம் நடத்தினோம். ஆ.மாதவனுக்காக பாராட்டுக்கூட்டம் நடத்தும் எண்ணம் உண்டா?
செல்வராஜ்

 

அன்புள்ள செல்வராஜ்

 

பொதுவாக பிறரால் பாராட்டப்படாத சிற்றிதழ்சார் எழுத்தாளர்களுக்கு மட்டும் பாராட்டுக்கூட்டம் நடத்துவது என்பது எங்கள் வழக்கம்

 

ஜோ டி குரூஸுக்கு பாராட்டுவிழா நடத்த விரும்பி கேட்டோம். அது தனக்குக் கூச்சமாக இருக்கிறது என்றும், பாராட்டுக்கூட்டம் என்பது மூத்த எழுத்தாளர்களை மிஞ்சி நிற்பதான தோரணையை அளிக்கும் என்றும் ஜோ சொன்னார். நண்பர் சிறில் அலெக்ஸ் ஏற்பாடு செய்த அவரது மக்கள் அளித்த பாராட்டுக்கூட்டம் லயோலாவில் நடந்தது. அதில் கலந்துகொண்டேன்

 

ஆ.மாதவனுக்குப் பாராட்டுக்கூட்டம் நடத்தும்பொருட்டு நான்குமுறை பேசினோம். அவர் உடல்நலம் குன்றியிருப்பதனால் பாராட்டுக்கூட்டத்திற்கு வரும்நிலையில் இல்லை என்று அவரது குடும்பத்தினர் சொன்னார்கள். அவரிடமும் அவரதுமருமகனிடமும் நேற்றுமுன்தினம் பேசினேன். நண்பர்களும் பேசினர். விமானத்தில் சென்னைக்கு அவரும் அவரது துணைவர் ஒருவரும் வந்துசெல்ல ஏற்பாடு செய்வதாகவும் சொன்னோம். அவர் தயங்கிக்கொண்டிருக்கிறார். வரமுடியும் என தன்னம்பிக்கை வரவில்லை.

 

திருவனந்தபுரத்தில் நடத்தலாமென ஓர் எண்ணம் இருந்தது. ஆனால் அதற்கும் அவரது உடல்நிலை இடம்கொடுக்காது என்றார்கள். முயன்றுகொண்டிருக்கிறோம்

 

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 19

$
0
0

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 7

மாளிகையின் முன் தேர் நிற்பதுவரை கர்ணன் எதையும் அறிந்திருக்கவில்லை. புரவிகளின் குளம்படியோசைத்தொடர் அடுக்கழிந்து உலைந்ததை உணர்ந்து அவன் விழித்து எழுந்தபோது சகடங்கள் கிரீச்சிட்டு தேர் முன்னும் பின்னும் சலித்தது. அவன் இறங்கி பாகனை நோக்கி தலையசைத்துவிட்டு தன் மாளிகை நோக்கி நடந்தான். காவலர் தலைவன் ஊஷரன் அவனை நோக்கி வந்து தலைவணங்கி, “பெரும்புகழ் அங்கத்தின் அரசரை வாழ்த்துகிறேன். இந்த மாலை இனிதாகுக!” என்றான். தலையசைத்துவிட்டு மாளிகையின் படிகளில் ஏறினான். ஊஷரன் பின்னால் வந்தபடி “அங்கத்தில் இருந்து செய்தியுடன் அணுக்கர் ஒருவர் தங்களைத் தேடி வந்துள்ளார்” என்றான்.

கர்ணன் திரும்பி நோக்க “எட்டாண்டுகள் அரசரின் அணுக்கமாக இருந்தவர். சிவதர் என்று பெயர். அங்க நாட்டு அவைமுறைமைகளையும் அரசுசூழ்தலையும் நன்கு அறிந்தவர் என்கிறார்” என்றான். “நான் எவரையும் வரச்சொல்லவில்லையே!” என்றான் கர்ணன். “இல்லை, ஆனால் பட்டத்து அரசி அவரைப்பற்றி ஒற்றர்கள் வழியாக விசாரித்து அறிந்திருக்கிறார். அரசியின் ஆணைப்படிதான் அவர் இங்கு வந்திருக்கிறார்” என்றான். ஆர்வமின்றி தலையசைத்தபடி அவன் கூடத்திற்குள் நுழைய அங்கே அவனுக்காகக் காத்து நின்றிருந்த வீர்ர்கள் தலைவணங்கி வாழ்த்துரை எழுப்பினர்.

உள்ளிருந்து சால்வையை சுற்றியபடி வந்த சிற்றமைச்சர் சரபர் “அங்கநாட்டரசை என் முடி பணிவதாக! அலுவலில் இருந்தேன்” என்றபின் மூச்சுவாங்க “அரசே, இவர்தான் சிவதர்” என்றார். சிவதர் தலைவணங்கி “என் அரசரை சந்திக்கும் பேறுபெற்றேன்” என்றார். சுருக்கங்கள் ஓடிய விழியோரங்களும் பழுத்த இலைபோன்ற நீள்முகமும் கூரிய மூக்கும் சிறியகைகள் கொண்ட சிற்றுடலும் கொண்டிருந்த சிவதரை நோக்கி கர்ணன் “அஸ்தினபுரிக்கு நல்வரவு” என்றான். “அங்க நாட்டரசரை அடிபணிகிறேன். தங்கள் பணிக்கு என் உடலும் சித்தமும் ஆன்மாவும் என்றென்றும் சித்தமாக உள்ளது” என்றார்.

“சத்யகர்மரிடம் இருந்தீரா?” என்றான் கர்ணன். “ஆம். அவருடைய நான்கு அணுக்கர்களில் நானும் ஒருவன்” என்றார் சிவதர். கர்ணன் அவர் விழிகளை நோக்கி தன்னுள் எழுந்த வினாவைத் தவிர்த்து “என்னை அங்க நாட்டில் தாங்கள் பார்த்ததுண்டா?” என்று கேட்டான். “இல்லை. இளமையில் அங்கு இருந்தீர்கள் என்று அறிந்திருக்கிறேன்” என்றார். அவரது விழிகளையே மேலும் சிலகணங்கள் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த பின் அவன் உதடுகளை ஏதோசொல்வதற்காக மெல்ல அசைத்தான். அவரும் விழிகளை விலக்கிக் கொள்ளவில்லை. தெள்ளிய இரு பளிங்கு நிலைகள் போன்ற விழிகள். அவற்றுக்கு அப்பாலும் எந்த மறைவுகளும் இருக்கவில்லை. கர்ணன் மீண்டுவந்து “நன்று” என்றான். “நன்று சிவதரே, தங்களை நாளை சந்தித்து விரிவாக உரையாடுகிறேன்” என்றான். அவர் தலைவணங்கி “அவ்வாறே” என்றார்.

திரும்பி ஊஷரனிடம் உளம் அமையாத வெற்றுச்சொல்லென “நன்று” என்றபின் கர்ணன் முன்னால் நடக்க சரபர் அவனுக்குப் பின்னால் வந்தபடி மெல்லிய குரலில் “சிவதரிடம் நான் உரையாடினேன். அரசியின் தேர்வு சரியானதே. சிறந்த அணுக்கர்களுக்கு வேண்டிய மூன்று பண்புகளும் அவரிடம் உள்ளன. தனக்கென்று விழைவுகள் இல்லாமல் இருக்கிறார். பணிவிடையாற்றுசெய்வதில் நிறைவு கொள்கிறார். செய்தோம் என்னும் ஆணவமும் அற்று இருக்கிறார்” என்றார். கர்ணன் “என் முதல் மனப்பதிவும் சிறப்பானதாகவே உள்ளது” என்றான்.

அமைச்சர் “அங்கு ஏழாம் நிலை அமைச்சராக ஹரிதர் என்பவர் இருக்கிறார். அமைச்சர்களில் அவரே இளையவர். மூத்தவர்கள் சத்யகர்மரை அன்றி பிறரை அமைச்சராக ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அங்க நாட்டின் கருவூலத்திலிருந்து அவர்களுக்குரிய அந்தணர்காணிக்கையை அளித்து வைதிகமுறைப்படி காடேகலுக்கான முறைமைகள் செய்யப்பட்டுள்ளன. ஹரிதரைப்பற்றி விரிவாகவே அரசி உசாவி அறிந்திருக்கிறார். தங்களுக்கு அனைத்து வகையிலும் அவரே வழிகாட்டியாகவும் செயற்கரமுமாக இருப்பார்” என்றார்.

“நன்று” என்று களைப்புடன் சொன்னபின் கர்ணன் படிகளில் ஏற ஆரம்பித்தான். அவர் தலை வணங்கி கீழேயே நின்று கொண்டார். மேலே செல்லச் செல்ல தன் உடல் எடை மிகுந்து வருவது போல் அவனுக்குத் தோன்றியது. படிகளின் பலகையடுக்குகள் முனகி ஓசையிட்டன. இறுதிப் படியில் காலெடுத்து வைத்து நின்று கைப்பிடியை பற்றியபடி திரும்பி கீழே நோக்கினான். அமைச்சர் மறுபடியும் தலைவண்ங்கியபோது தலை அசைத்துவிட்டு இடைநாழியில் நடந்தான்.

படுக்கை வரைக்கும் தன் உடலை சுமந்து செல்வதே கடினம் என தோன்றியது. அப்போது அவன் விழைந்ததெல்லாம் மஞ்சத்தை அடைவதுதான். உடலை நீட்டி கண்களை மூடிக்கொண்டு இருளில் படுத்திருக்க வேண்டுமென்று விழைந்தான். துயில் கொள்ள முடியுமென்று தோன்றவில்லை. துயில்வதா என்று உடனே உள்ளம் விழித்துக் கொண்டது. அரை நாழிகைக்குள் கவசங்களுடனும் படைக்கலன்களுடனும் அரண்மனை முகப்புக்கு சித்தமாகி வரும்படி துரியோதனன் ஆணையிட்டிருந்தான். அரை நாழிகை என்றால் அறைக்குள் சென்றதுமே உடைகளை மாற்றத்தொடங்கிவிட வேண்டும். அரண்மனை முற்றம் வரைக்கும் செல்வதற்கே கால் நாழிகை நேரம் தேவைப்படும்.

அவன் தன் அறைக்கு முன்பாக செல்வதற்குள் இடைநாழியின் மறு எல்லையிலிருந்து விருஷாலி அவனை நோக்கி வந்து ஆடையை திருத்தி கூந்தலை ஒதுக்கிக்கொண்டு “தாங்கள் உடனே கிளம்பவேண்டுமென்று அரண்மனையிலிருந்து செய்தி வந்தது. தங்களுக்குரிய மாற்று ஆடைகளையும் நீராட்டறைக்கான ஒருக்கங்களையும் செய்துள்ளேன்” என்றாள். அவள் மூக்குநுனி வியர்த்திருந்தது. குறுநிரைகள் நெற்றியில் ஒட்டியிருந்தன.

கர்ணன் சினத்துடன் அவளை நோக்கி ”உன்னிடம் யார் இதையெல்லாம் செய்யச் சொன்னது? நான் பல முறை உன்னிடம் ஆணையிட்டிருக்கிறேன். இவற்றை செய்வதற்காக நீ இங்கு இல்லை என்று” என்றான். அவள் முகம் ஒளி அணைந்தது. உதடுகள் அழுந்த கண்களில் நீர்ப்படலம் மின்னியது. இமைகளை சரித்தபோது விழிப்பீலிகளில் நீர்ப்பிசிறுகள் சிதரொளித்தன. உதடுகள் குவிய மெல்லியகுரலில் “இவற்றைச் செய்ய எனக்கு பிடித்திருக்கிறது” என்றாள்.

அவன் அவள் கன்னங்களில் இருந்த சிறிய பருவை பார்த்தான். உள்ளம் தழைந்தது. தன் கையை அவள் தோளில் வைத்து “சத்யை, நீ அங்கத்தின் அரசி. இவற்றைச் செய்வதற்கு இங்கு சேடியர் பலர் உள்ளனர். இவற்றை நீ செய்யும்போது உன்னை நீ இறக்கிக் கொள்கிறாய்” என்றான். அவள் விழிதூக்கி, “இங்கு எனக்கிருக்கும் ஒரே இன்பமென்பது இதுதான். இதையும் நான் செய்யலாகாது என்றால் இங்கு நான் எதற்காக?” என்றாள். “இங்கு அரசி என்றிரு. ,பார் நீ அணிந்திருக்கும் ஆடைதான் என்ன? அரசியர்க்குரிய ஆடைகளை அணிந்துகொள். அணிகலன்களை அணிந்து கொள். அஸ்தினபுரியில் எந்தப்பெண்ணும் விழையும் அணிக்கருவூலம் உனக்கென திறந்துள்ளது” என்றான் கர்ணன்.

அவள் உதடை அழுத்தி எச்சில் விழுங்கியபடி பார்வையை சாளரத்தை நோக்கி திருப்பினாள். அவன் அவள் தோளை வளைத்து அருகிழுத்து முகத்தை கைகளால் தூக்கி அவள் விழிகளை பார்த்தபடி “அணிகொள்வது உனக்கு பிடிக்கவில்லையா?” என்றான். “எனக்காக அணிசெய்துகொள்ளமாட்டாயா?” அவள் தலைமயிரை கோதி ஒதுக்கி கழுத்தை மெல்ல ஒசித்து “இப்போதே அணி செய்து கொண்டுதான் இருக்கிறேன். இந்த எளிய உடைகளும் நகைகளும் உங்கள் விழிகளுக்கு படுவதே இல்லை” என்றாள்.

“இல்லை. இத்தோற்றத்திலேயே நீ அழகாகத்தான் இருக்கிறாய். ஆனால் இத்தோற்றத்துடன் சேடிகள் நடுவே நின்றால் உன்னை தனித்தறிய முடியாது. நான் சொல்வதை புரிந்து கொள். ஆடையணிகள் அரசர்களை பிரித்துக் காட்டுவதற்காக மட்டுமே. அரசமுறைமைகள் வழியாகவே அரசர்கள் அமைகிறார்கள்.. மானுடர் அனைவரும் நிகரே. அரசநிலை என்பது ஒரு கூத்தில் நிகழும் நடிப்பு. எனவே இங்கு நாம் நடித்துதான் ஆகவேண்டும்” என்றான். “எனக்கு சலித்துவிட்டது” என்று அவள் சொன்னாள். “அந்த மின்னும் அணிகளை அணிந்து, தடித்த ஆடைகளை சுற்றிக்கொண்டு எப்போதாவது ஆடியில் என்னை நான் பார்த்தால் துணுக்குறுகிறேன். நீங்கள் சொன்னது போல இது ஒரு கூத்துமேடையின் மாற்றுரு என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்த அறைக்குள் மட்டுமேனும் நான் என் வடிவில் ஏன் இருந்து கொள்ளக்கூடாது?” என்றாள். மீண்டும் எழுந்த சினத்துடன் அவன் “நீ இந்த அறைகளுக்குள் மட்டும்தான் இருக்கிறாய். அறவே அரசவைக்கு வருவதில்லை. நீ ஏன் அரசவைக்கு வருவதில்லை என்று இன்று அரசர் கேட்டார்” என்றான்.

அவள் விழிகளைத் தூக்கி “அதற்கும் எனக்கு உரிமையில்லையா?” என்றாள். “உரிமையில்லை என்றல்ல. உன்னை தன் இளையவளாக எண்ணுபவர் அரசர். உனக்கென அங்கொரு அரியணை அமைக்கவேண்டும் என்றால் அதற்கும் சித்தமாக இருப்பவர். எதோ உளக்குறையால்தான் நீ வரவில்லை என்று அவர் எண்ணுகிறார்” என்றான். “நான் அவர் உள்ளத்தை அறிவேன். அவர் உனக்கென துயர்கொண்டிருக்கிறார்.”

“அத்துணை துயர்கொண்டவர் என்றால் அவர் சூதப்பெண்ணை உங்களுக்கு மணமுடிக்க ஒப்புக்கொண்டிருக்கலாகாது…” என்றாள் விருஷாலி. அவன் சொல்ல வாயெடுப்பதற்குள் உரக்க “நான் அங்கு வரமாட்டேன். ஒரு போதும் அஸ்தினபுரியின் அரசவையில் இனி என்னை எவரும் பார்க்கமுடியாது” என்றாள். கர்ணன் “விழவுகளுக்கு வருவதில்லை. களியாட்டுகளுக்கு செல்வதில்லை. நாளெலாம் இந்த அரண்மனையின் அறைகளுக்குள் இருக்கிறாய். இங்கு பணிப்பெண்களுக்கு நிகராக ஆடை அணிந்திருக்கிறாய்” என்றான்.

“இப்படித்தான் நான் இருப்பேன். சூதப்பெண் சூதப்பெண்ணாக இருந்தால்தான் மகிழ்வு ஏற்படும். மாற்றுருத் தோற்றங்களை நாளெலாம் சூடிக்கொண்டிருப்பது போல் துன்பம் பிறிதொன்றிலை” என்றாள் விருஷாலி. பெருமூச்சுடன் “நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றபடி கர்ணன் அறைக்குள் சென்றான். அவள் பின்னால் வந்து “சினம் கொள்ளாதீர்கள். எப்போதாவதுதான் இங்கு வருகிறீர்கள். வரும்போதும் இப்படி சினந்தால் நான் என்ன செய்வது?” என்றாள்.

அவள் குரலின் துயர் கண்டு அவன் கனிந்து மீண்டும் திரும்பி அவள் புறங்கழுத்தில் கையை வைத்து இழுத்து தன்னுடன் அணைத்துக் கொண்டான். அவள் கன்னங்களிலும் கழுத்திலும் முத்தமிட்டு “சினம் கொள்ளவில்லை. உன்னிடம் சினம் கொள்வேனா?” என்றான். அவள் உடல் வியர்வையின் உப்புடன் இருந்தது. அவன் நாவால் உதடுகளை வருடிக்கொண்டான். “சினம் கொள்கிறீர்கள்” என்று அவள் சொன்னாள். அவன் மார்புக்குழி அளவுக்கே அவள் முகம் இருந்தது. அவனுடைய புயத்தின் திரள்தசையில் தலையை சாய்த்து விழிகளை ஏறிட்டு “எப்போதும் என்னைப் பார்க்கையில் முதலில் உங்கள் புருவங்களில் ஒரு முடிச்சு விழுகிறது. யார் இவள் என்று பார்ப்பது போல். ஒரு வினா உங்கள் விழிகளில் வந்து செல்கிறது” என்றாள்.

“நீ கற்பனை செய்து கொள்கிறாய்” என்று அவன் அவள் காதருகே பறந்த சுருள் நிரையை தன் கைகளில் சுருட்டி இழுத்தான். “ஆ…” என்று சற்று ஒலியெழுப்பி அவன் விரலைத்தட்டியபின் “இல்லை, எனக்குத்தெரியும்” என்றாள். “முதல் நோக்கில் முகம் மலர்வதே அன்பு,”. கர்ணன் “அன்பில்லை என்று நினைக்கிறாயா?” என்றான். “இருக்கிறது. அது இயல்பாக எழும் அன்பல்ல. இரண்டாவது கணத்தில் அன்பாக இருக்கவேண்டும் என்று நீங்களே உங்களுக்கு ஆணையிட்டுக் கொள்ளும்போது எழுவது” என்றாள்.

“இப்படியெல்லாம் கீறி பகுக்கத் தொடங்கினால் ஒருபோதும் உன்னால் உறவுகளில் மகிழ்ந்திருக்க முடியாது. நூறு முறை உன் தலை தொட்டு ஆணையிட்டிருக்கிறேன். இந்தப்பிறவியில் நான் தொடும் முதல்பெண் நீ. என் நெஞ்சமர்ந்த தேவி. அந்த அரியணையிலிருந்து நீ ஒரு போதும் இறங்கப்போவதில்லை” என்றான். அவள் பெருமூச்சுவிட்டு “அதை அறிவேன்” என்றாள். “அதற்கப்பால் நான் என்ன செய்யவேண்டும் உனக்கு?” என்றான். “நீங்கள் ஒன்றும் செய்யவேண்டியதில்லை” என்றபின் அவள் அவன் கைகளை மெல்ல விலக்கி, “உடனே நீங்கள் கிளம்ப வேண்டுமென்றார்கள்” என்றாள்.

அவன் எட்டி அவள் கையை பிடித்தபோது சங்குவளைகள் நொறுங்கி கீழே விழுந்தன. அரைவளையம் புழுவென துள்ளித் துடித்து சுழன்று விழ “ஐயோ” என்று அவள் குனிந்தாள். “விடு” என்று அவளை இழுத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டு, “சொல், நான் என்ன செய்ய வேண்டும்?” என்றான். “நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. எனக்காக நீங்கள் எதைச் செய்யும்போதும் நான் மேலும் துயர் அடைகிறேன்” என்றாள் விருஷாலி. “என் உள்ளத்திற்கும் உடலுக்கும் நீங்கள் மிகப்பெரியவர். எனக்கென நீங்கள் கனியும்போதுகூட உங்களை கீழிறக்குகிறேன் என்ற குற்ற உணர்வு என்னை துயருறச் செய்கிறது. என் மேல் நீங்கள் அன்பை காட்டுகையில்கூட தகுதியற்று அவ்வன்பை பெற்றுக் கொள்கிறேன் என்பதால் மேலும் துயர் கொள்கிறேன்.”

“இவ்வுணர்வுகளை நீ வந்த உடனே அடைந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இத்தனை நாட்களுக்குப் பிறகும் என் உள்ளத்தை நீ அறியவில்லையென்றால் நான் எச்சொற்களால் அதை உன்னிடம் சொல்வேன்?” என்றான். “தாங்கள் சொல்ல வேண்டியதில்லை” என்றாள். “எனக்கென நீங்கள் எண்ணம் குவிக்கவேண்டியதில்லை. சொல்லடுக்கவும் வேண்டியதில்லை.” “நான் என்ன செய்யவேண்டும்?” என்று அவன் மீண்டும் கேட்டான். “என்னை முற்றிலும் மறந்துவிடுங்கள். எனக்கென எதையும் செய்யாதீர்கள். என்னை மணக்கவில்லையென்றே எண்ணிக் கொள்ளுங்கள்” என்றாள் விருஷாலி.

விழிகளைத் திருப்பி தரளிதமான குரலில் “காட்டில் மதவேழம் செல்வது போல என்று உங்கள் நடையை பார்க்கும்போது தோன்றுகிறது. நான் எறும்பு. என்னை உங்கள் பார்வையில் பொருட்படுத்தவே கூடாது” என்றாள். கர்ணன் சினத்துடன் “என்ன சொல்கிறாய் என்று உனக்கே தெரிகிறதா?” என்று அவள் தலையை தட்டினான். அவள் துயரத்துடன் புன்னகைத்து “தெரிகிறது. இந்த எண்ணமன்றி வேறெதுவும் எனக்கு வரவில்லை” என்றாள்.

“அப்படியென்றால் உன்னை நோக்கும்போது என் கண்களில் அன்பு வரவில்லை என்று ஏன் சொன்னாய்” என்றான். “உனக்கு என் அன்பு தேவையில்லை என்றால் ஏன் தேடுகிறாய்?” விருஷாலி “அன்பு வரவில்லை என்று சொல்லவில்லை” என்று தலைகுனிந்தபடி சொன்னாள். “உங்கள் பெரிய உயரத்திலிருந்து கண்ணுக்குத் தெரியாத படிகளில் இறங்கி நீங்கள் என்னை நோக்கி வருவதை அந்த முதல் கணத்தில் காண்கிறேன். நெஞ்சு துணுக்குறுகிறது. நானாக அந்தப் படிகளில் ஏறி உங்களை அடையவே முடியாது என்று தோன்றுகிறது.”

“இந்த அணிச்சொற்களெல்லாம் எனக்கு எவ்வகையிலும் பொருள் அளிப்பதில்லை” என்று கர்ணன் சலிப்புடன் சென்று தன் மஞ்சத்தில் அமர்ந்தான். “சேடியை அழைத்து சற்று யவன மது கொண்டு வரச்சொல்” என்றான். “நீராடவில்லையா?” என்று அவள் கேட்டாள். “இல்லை. நீராடி உடை மாற்றிச் செல்ல நேரமில்லை. அரை நாழிகைக்குள் நான் அரண்மனைக்கு செல்லவேண்டும்” என்றான். “அரைநாழிகைக்குள்ளா?” என்று அவள் கேட்டாள். “ஆம், உடனே கலிங்கத்துக்குச் செல்கிறோம்” என்றான்.

அவள் கண்களில் வந்த மாறுதலைக் கண்டதுமே அவள் அத்தனை எளிய பெண்ணல்ல என்று அவன் புரிந்து கொண்டான். மறுசொல் சொல்லாமல் அவள் அசைவற்று நின்றதை கண்டபோது அவன் நினைத்ததை விடவும் ஆழமானவள் என்று தெரிந்தது. “கலிங்க இளவரசியர் இருவரையும் நானும் அரசரும் சென்று சிறையெடுத்து வரப்போகிறோம்” என்றான் கர்ணன். “இருவரையுமா?” என்று அவள் கேட்டாள். “ஆம். இளையவளை நான் மணக்கவேண்டுமென்றும் அவளையே பட்டத்தரசி ஆக்க வேண்டுமென்று அரசரும் அரசியும் விழைகிறார்கள்” என்றான். “நன்று” என்று அவள் சொன்னாள்.

அவன் அவள் கண்களை உற்று நோக்கி “உனக்கு அதில் துயரில்லையா?” என்று கேட்டான். “இல்லை. நான் அதைத்தானே மீண்டும் மீண்டும் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அது உங்கள் கடமை. ஷத்ரிய அரசியின் கைபற்றி நீங்கள் அங்க நாட்டுக்குள் சென்றால் மட்டுமே அங்குள்ள மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவீர்கள். அங்குள்ள ஷத்ரியர்களின் நன்மதிப்பையும் பெறுவீர்கள்” என்றாள். “ஆம். அது உண்மை” என்றான் கர்ணன். “ஆனால் நானிதை செய்யக்கூடாதென்றே என் உள்ளம் சொல்லிக் கொண்டிருக்கிறது.”

“எனக்காகவா?” என்று அவள் கேட்டாள். அவள் கண்களை நோக்கி திரும்பி “ஆம், உனக்காகத்தான்” என்று கர்ணன் சொன்னான். அவள் “இதைத்தான் நான் சொன்னேன். எனக்காக நீங்கள் எதையும் செய்யக்கூடாது. எனக்காக நீங்கள் இறங்கி எதை செய்ய முயன்றாலும் பிழை செய்கிறேன் என்ற உணர்வை நான் அடைகிறேன். இத்தகைய பெரிய இழப்பொன்றை நீங்கள் அடைந்தால் அத்துயரிலிருந்து என்னால் ஒருபோதும் மீளமுடியாது. நீங்கள் கலிங்க இளவரசியை மணந்தாக வேண்டும்” என்றாள்.

“நீ முடிசூட முடியாதென்று அறியவாயல்லவா?” என்றான். “முடிசூட வாய்ப்பிருந்தாலும் நான் முடிசூட விரும்பல்லை” என்று விருஷாலி சொன்னாள். “அரசவையில் அரைநாழிகை நேரம் அமர்ந்திருக்கவே என் உடம்பு கூசுகிறது. மணிமுடி சூடி அரியணையில் அமர்ந்திருப்பதென்பது எண்ணிப்பார்க்கவும் முடியாத ஒன்று” என்றாள். “நீ என்னவாக இருக்க விரும்புகிறாய்?” என்று அவன் கேட்டான். “உங்கள் பாதங்களை சென்னிசூடும் எளிய அடியாளாக” என்றாள். “நீங்கள் அறை வரும்போது உங்கள் மேலாடையை வாங்கிக் கொள்ளவும் உங்கள் நீராட்டறை ஒருக்கங்களை செய்யவும் என் கையால் யவன மது கொண்டு தரவும் விரும்புகிறேன்.”

“பணிப்பெண்ணாக. அல்லவா?” என்றான். “ஆம், உங்களுக்குப் பணிவிடை செய்வதன்றி இன்பமெதையும் நான் காணவில்லை” என்றாள். “என் காதலில் கூடவா?” என்றான். அவள் பேசாமல் நின்றாள். “சொல்!” என்றான் கர்ணன். அவள் நிமிர்ந்து அவன் விழிகளை நோக்கி “ஆம். உங்கள் காதலில் கூடத்தான்” என்றாள். கர்ணன் உரக்க “என்ன சொல்கிறாய்?” என்றான். “அக்காதலுக்கு நான் தகுதியற்றவள்” என்றாள்.

“இது என்னவகையான எண்ணமென்றே எனக்கு புரியவில்லை. நீ சூதன்மகள் என்பதாலா? அப்படியென்றால் நானும் சூதன் மகனே” என்றான். அவள் சினந்து திரும்பி நோக்கி “இல்லையென்று நீங்கள் அறிவீர்கள்” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்று அவன் உரத்த குரலில் கேட்டபடி எழுந்தான். “உங்கள் தோற்றம்! அது சொல்கிறது நீங்கள் சூதன் மகன் அல்ல என்று. அதற்கப்பால்…” என்றபின் “நான் பார்த்தேன்” என்றாள். “எதை பார்த்தாய்?” என்று அவன் கேட்டான். “அன்றிரவு…” என்று அவள் சொன்னாள். “எந்த இரவு?” என்றான். அவள் பேசாமல் நின்றாள். “சொல்!” என்றான் கர்ணன். “அன்று மணநாளில்.” அவன் அவளை கூர்ந்து நோக்கி “என்ன கண்டாய்?” என்றான்.

“உங்கள் அருகே மணமேடையில் அமர்ந்திருக்கும்போதே என் உள்ளம் பதறிக்கொண்டேதான் இருந்தது” என்று அவள் தலைகுனிந்து மெல்லிய குரலில் சொன்னாள். “ஏன்?” என்றான். “நீங்கள் என் கைபிடிக்கவிருப்பதாக அறிந்த நாள்முதலே அந்த நடுக்கம் என்னுள் நுழைந்துவிட்டது. சூதர்களின் கதைகள் என்னுள் பெருகிக்கொண்டிருந்தன. பின்னர் உங்களை அவைமேடையில் கண்டேன். விண்ணில் முகில்களில் எழுந்த தேவன்போல. இவரா என்று என் தோழியரிடம் கேட்டேன். இவரேதான் சூரியன் மைந்தர் என்றார்கள்.”

அன்னையிடம் சென்று “அன்னையே, இவரை நான் மணக்கவிழையவில்லை” என்று சொல்லி அழுதேன். “வாயைமூடு, இந்த மணம் நம் குடிக்கே நற்கொடை. குடிமூத்தாரெல்லாம் பெருங்களிப்பில் இருக்கிறார்கள். மறுபேச்சு எழுந்தால் கொலைசெய்து புதைக்கவும் தயங்கமாட்டார்கள்” என்று அன்னை சினந்தாள். குதிரைக்கொட்டடிக்கு அப்பால் குடியிருக்கும் என்மூதன்னையிடம் சென்று அவள் கைகளைப்பற்றி நெற்றியில் வைத்துக்கொண்டு “நான் அஞ்சுகிறேன் அன்னையே” என்று கண்ணீர்விட்டேன்.

“அஞ்சாதே, வெய்யவனுக்கு நிகராக பெருங்கருணை கொண்டவன் என்று அவனை சொல்கிறார்கள். இப்புவியில் பிறிதின்நோய் தன்னோய் போல் நோக்கும் பெரியோன் அவன் ஒருவனே என்று பெரியோர் வாழ்த்துகிறார்கள். அணுகும்தோறும் தண்மைகொள்ளும் கதிரவன் என்று சூதர்கள் பாடுகிறார்கள். நீ அவன் தோளில் மரக்கிளையில் மயில் என இருப்பாய்” என்றாள் என் மூதன்னை. அவள் பழுத்த நகங்கள் கொண்ட கைகளை கன்னங்களில் அழுத்தியபடி “இனி ஏதும் செய்வதற்கில்லையா அன்னையே?” என ஏங்கினேன்.

தோழியர் கைபற்றி என்னை மணவறைக்கு அழைத்துச் சென்றபோது எங்குளேன் என்று அறியாதவளாக என் கட்டை விரலில் விழிநட்டு காலை காற்றில் துழாவி வைத்து நடந்து வந்தேன். நீங்கள் மணமேடையில் அமர்ந்திருப்பதை தொலைவிலேயே பார்த்துவிட்டேன். இடப்பக்கம் நின்ற .தோழி என் விலாவைக்கிள்ளி “பாரடி, ஒரு நோக்கு பார்ப்பதனால் ஒன்றும் கற்பு குறைபடாது” என்றாள். நான் விழிதூக்கி உங்களைப் பார்த்து கண்களை சரித்துக் கொண்டபோது ஒரு அதிர்ச்சியை அடைந்தேன். உங்கள் காதுகளில் இரு ஒளிமணிக் குண்டலங்களை கண்டேன்

கர்ணன் நகைத்து “நன்று. சூதர் கதைகளால் சூழப்பட்டிருக்கிறாய்” என்றான். “இல்லை, நான் பார்த்தேன். மீண்டும் விழிதூக்கி பார்த்தபோது அது அங்கில்லை. அது விழிமயக்கு என்று சொல்லலாம். ஆனால் நான் பார்த்த கணத்தில் அது உண்மை. அக்குண்டலத்தின் ஒளிக்கதிரை மிகத் தெளிவாகவே நான் கண்டேன். என் உடல் நடுங்கிவிட்டது. முன்னங்கால் வியர்த்து தரை வழுக்கியது. உங்கள் அருகே நான் அமரலாகாது என்றும் தோழியர் கைகளை உதறிவிட்டு திரும்பி ஓடிச்சென்று விடவேண்டுமென்றும் விழைந்தேன். ஆனால் என் உடல் தளர்ந்து மேலும் மேலும் எடை கொண்டு அசைய முடியாதாயிற்று. எண்ணுவதொன்றும் உடலை சென்றடையவில்லை. அதை அவரக்ள் ஒரு நனைந்த துணிப்பாவை என மணமேடையில் அமர்த்தினர்.

தங்கள் அருகே அமர்ந்திருக்கையில் ஏனோ இளமையில் இருந்த அத்தனை இன்பங்களும் ஒன்றன்மேல் ஒன்றாக நினைவுக்கு வந்தன. அவையனைத்தும் எனக்குள் துயரை நிறைத்தன. மணப்பறையின் ஓசை என்னை கோலால் அடிப்பது போலிருந்தது. நீள்குழல் இசை வாள் என என்னை கிழித்தது. மங்கலநாண் பூட்டி மாலை மாற்றி ஏழடி வைத்து இறைவிண்மீன் நோக்கியபின் என் அறைக்குள் திரும்பிச் சென்றதுமே தோழியரை உதறி ஓடிச்சென்று அறை மூலையில் அமர்ந்து முழங்கால் மேல் முகத்தை வைத்துக்கொண்டு குமுறி அழுதேன். அவர்கள் சூழ அமர்ந்து ஏன் ஏன் என்று என்னை கேட்டார்கள். ஒரு சொல்லும் என்னால் எடுக்கக் கூடவில்லை.

அன்றிரவு உங்கள் அறைக்கு வரும்போது என்னால் ஒரு அடிகூட இயல்பாக வைக்கமுடியவில்லை. அவர்கள் என்னை தூக்கிதான் கொண்டு வந்தனர். உடலெங்கும் நீர் விடாய் பழுத்து எரிவது போல. தலைக்கு மேல் கடுங்குளிர் கொண்ட முகில் ஒன்று அழுத்துவது போல. அந்நிலையை இப்போது எண்ணினாலும் என் உடல் நடுங்குகிறது. உங்கள் காதுகளில் தெரிந்த குண்டலங்களையே எண்ணிக் கொண்டிருந்தேன்.

உங்கள் அறைக்குள் வந்து நின்றபோது விழிதூக்கி உங்கள் குண்டலங்களைத்தான் தேடினேன். அவை என் விழிமயக்கு என்று தெரிந்தது. ஆயினும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீங்கள் எளிய சூதர் அல்ல, கதிர் மைந்தன். நான் கண்டது ஒளியோன் உங்களுக்கு அளித்ததாக சூதர் கதைகளில் வரும் அந்தக் குண்டலங்களைத்தான். ஐயமே இல்லை என எண்ணினேன். உங்கள் கைகளால் என்னை தொடவந்தபோது நினைவழிந்து விழுவதாக உணர்ந்தேன். நெடுநேரம் என் நெஞ்சிடிப்பை அன்றி எதையும் நான் கேட்கவில்லை. பின்னர் மீண்டும் அக்குண்டலங்களை கண்டேன்.

“கவசத்தையும் பார்த்தாயா?” என்றான் கர்ணன் சிரித்தபடி. “ஆம், பார்த்தேன். அன்றிரவு நீங்கள் சாளரத்தருகே பீடத்தை இழுத்துப் போட்டு இருண்ட குறுங்காட்டை பார்த்தபடி அமர்ந்திருந்தீர்கள். என் அறைமூலையில் முழங்கால் மேல் முகம் அமர்த்தி அமர்ந்திருந்த நான் தலை தூக்கியபோது, உங்கள் காதுகளில் அந்த மணிக்குண்டலங்கள் ஒளி விடுவதையும் ஆடையற்ற விரிமார்பில் பொற்கவசம் அந்திச் சிவப்பு போல சுடர்வதையும் என் விழிகளால் கண்டேன்.”

“விழிமயக்கல்ல அது. நெடுநேரம் நான் பார்த்திருந்தேன். உண்மையா இல்லை கனவா என்று நூறு முறை எனக்குள் கேட்டுக் கொண்டேன். எழுந்து வந்து அவற்றை நான் தொட்டுவிடமுடியும் போல் அத்தனை தெளிவாக கண்டேன். உங்களுக்குத் தெரியும் நீங்கள் சூதன் மகன் அல்ல, சூரியனின் மைந்தன்” என்றாள். “உன் தாழ்வுணர்வால் துன்பத்தை உருவாக்கி பெருக்கிக் கொள்கிறாய்” என்றான் கர்ணன். “உண்மையில் நான் ஏமாற்றம் கொண்டிருக்கிறேன் விருஷாலி. நான் பிறிதொரு பெண்ணை மணக்கவிருக்கிறேன் என்று சொல்லும்போது சற்றேனும் நீ துயர் கொண்டிருந்தால் ஒரு சொல்லேனும் அதைத் தடுத்து நீ சொல்லியிருந்தால் என் மேல் நீ கொண்டிருக்கும் காதலின் அடையாளமாக அதை எண்ணியிருப்பேன்.”

விருஷாலி அவன் விழிகளை நோக்கி “இல்லை. உங்கள் மேல் என் உள்ளத்தில் காதலென்று எதுவும் இல்லை” என்றாள். அச்சொல் அவன் மேல் குளிர்நீர்த்துளி விழுந்ததுபோல் ஓரு மெல்லசைவை உருவாக்கியது. அவள் மேலும் சொல்வதற்காக விழிகளை விரித்து காத்திருந்தான். “காதலென்பது நிகரானவரிடமே எழ முடியும். உங்களுடன் ஒரு நாளேனும் சிரித்துக் களியாடமுடியும் என்றோ ஒரு மலர்த்தோட்டத்தில் உங்களுடன் இளையோளென்றாகி ஆடமுடியும் என்றோ நான் எண்ணவில்லை.”

சற்று நேரம் அவளை நோக்கி அமர்ந்திருந்த கர்ணன் புன்னகையுடன் “நன்று” என்றபடி எழுந்தான். அருகறைக்கு தன் அணிகளுக்காக சென்றான். விருஷாலி அவனுக்குப் பின்னால் “ஆனால் அந்த கலிங்க இளவரசியும் தங்களுடன் விளையாடமுடியும் என்று எண்ணக் கூடவில்லை” என்றாள். அவன் திரும்பி “ஏன்?” என்றான். “ஏனென்றால் ஷத்ரியப் பெண் என்றாலும் அவள் வெறும் பெண்.” அவன் அவளை நோக்கி நின்றான். அவள் “ஒரே ஒருத்தி மட்டுமே உங்களை தனக்கு இணையானவராக எண்ணியிருக்கிறாள். அவள் மட்டுமே உங்களிடம் காதல் கொண்டு களியாடியிருக்கக் கூடும்” என்றாள்.

“யார்?” என்று விழிகளைத் திருப்பியபடி கர்ணன் கேட்டான். விருஷாலி “இப்போது அவள் ஐவருக்கு மனைவி. எனவே அதை நான் சொல்லக்கூடாது” என்றாள். கர்ணன் சற்று நேரம் கழித்து “அதெல்லாம் சூதப்பெண்களின் அடுமனைப் பேச்சு” என்றான். “இல்லை. இங்கு வருவதற்கு முன்பே நான் அதை அறிந்திருந்தேன். அன்று முழுவடிவில் தங்களைப் பார்த்ததுமே அதைத்தான் உணர்ந்தேன். இங்கிருக்க வேண்டியவள் இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசியல்லவா என்று எண்ணியபோது என் நெஞ்சு அடைத்துக் கொண்டது. இழிமகளே இழிமகளே என்று என்னை நானே அழைத்துக் கொண்டேன்” என்றாள்.

கர்ணன் பற்களைக் கடித்து இறுகிய குரலில் “துயரத்தை பெருக்கிக் கொள்வதில் உனக்கொரு பயிற்சி இருக்கிறது” என்றான். “இல்லை. இங்கு வருவதற்கு முன் நான் அப்படி இருக்கவில்லை. என் நினைவறிந்த நாள் முதலேயே சிரிப்பும் விளையாட்டும் மட்டும் அறிந்த சிறுமியாகத்தான் இருந்தேன். உங்களுக்கு என்னை மணம் முடித்துக் கொடுக்கப்போவதாக என் தந்தை சொன்ன நாள் முதல் நான் பிறிதொருத்தி ஆனேன். என் இளமை இனி நான் மீளவே முடியாத கனவு போல என்னுள் எங்கோ புதைந்துவிட்டது” என்றாள்.

கர்ணன் அந்தப் பேச்சை அங்கே முடித்து மீளவிரும்பினான். எங்கிருந்து தொடங்குவதென்று தெரியவில்லை. அவன் உடலசைவிலிருந்து அதை உய்த்துணர்ந்த விருஷாலி “நான் யவன மது கொண்டு வருகிறேன்” என்றாள். அவன் தலை அசைத்ததும் மெல்லிய பெருமூச்சுடன் திரும்பி வெளியே சென்றாள். இயல்பான கையசைவால் அவள் தன் ஆடையை திருத்துவதை கண்டான். அவ்வழகு அவனை வியக்கச்செய்தது. அவ்வண்ணமென்றால் அவளை அழகியல்ல என்று எண்ணுகிறேனா?

இல்லை என்றது சித்தம். ஆம் என்றது ஆழம். அவளை இயல்பாக எண்ணிக்கொள்ளும்போது ஒருபோதும் அழகி என்னும் எண்ணம் வந்ததில்லை. அவளைக் காணும் முதற்கணம் அவன் உளம் மலரவில்லை என்று அவள் சொன்னது உண்மை. ஆகவேதான் அவன் சினம் கொண்டான். ஏனென்றால் அவள் அழகியல்ல என்பதனால்தான். அவள் ஒரு பணிப்பெண்போலத்தான் இருந்தாள். ஆகவேதான் அவளை ஆடையணிகளின்றி காணும்போது எரிச்சல்கொண்டானா?

அவ்வெண்ணங்களை அள்ளி ஒதுக்கிவிட்டு அணியறைக்குள் சென்று பயண ஆடைகளை தானே அணிந்து கொண்டான். தோள்கச்சைகளை இறுக்கி அதில் வாளையும் குறுவாள்களையும் அணிவதற்கான கொக்கிகளை பொருத்தினான். கடலாமை ஓடாலான கவசத்தை அணிந்து அதன் மேல் பட்டுச் சால்வையை சுற்றிக் கொண்டான். ஆடியை நோக்கி திரும்பி மீசையை முறுக்கிக் கொண்டிருந்தபோது அவள் பொற்கிண்ணத்தில் யவனமதுவுடன் வந்து நின்றாள். ஆடியில் அவன் அவளை பார்த்தான். அவன் கண்களை அவள் சந்தித்தபோது நாணத்துடன் அவள் விலகிக் கொண்டான். அவன் திரும்பி அந்தக் கிண்ணத்தை வாங்கியபடி “காதலில்லை என்று சொன்னாயல்லவா? இப்போது உன் கண்களில் அதை பார்த்தேன்” என்று சொன்னான்.

அவள் கன்னங்கள் குழிய சிரித்தபடி “காதலில்லை என்று சொன்னதுமே நான் காதலைத்தான் உணர்ந்தேன்” என்றாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “ஏனெனில் நான் உங்களுடன் இருந்திருக்கிறேன். உங்கள் மைந்தர்களை பெறப்போகிறேன்” என்றாள். அவள் கன்னங்கள் அனல்பட்டவைபோல சிவந்தன. பின்பு சற்று விலகி அறை வாயிலை நோக்கி அவள் நகர அவன் அவள் கைகளைப்பற்றி இழுத்தான். “மாட்டேன்” என்று சொன்னாள். “ஏன்?” என்றான். “ஆடிக்குள் வரமாட்டேன்” என்றாள். “ஏன்?” என்று அவன் மீண்டும் கேட்டான். “நான் ஆடியை நோக்குவதேயில்லை.” “அணி கொள்ளும்போது கூடவா?” என்று கர்ணன் கேட்டான்.

“ஆம்.” அவன் “ஏன்?’ என்றான். “இளமையில் ஆடியை விட்டு நகரவே மாட்டேன். இப்போது ஆடியை நோக்கும்போதெல்லாம் இன்னும் சற்று அழகாக இருந்திருக்கக் கூடாதா என்ற எண்ணம் என்னை துன்புறுத்துகிறது” என்றாள். அவன் அவள் தலையை தட்டி “நீ ஒருபோதும் இந்த வீண்எண்ணங்களில் இருந்து விடுபடப்போவதில்லை” என்றான். அவள் “கிளம்புங்கள். இப்போதே அரை நாழிகை ஆகிவிட்டது” என்றாள். அவன் யவன மதுவை அருந்தி கோப்பையை அருகிருந்த மஞ்சத்தில் வைத்தான். பின்பு அவள் தோளில் கைவைத்து “சென்று வருகிறேன்” என்றான். “அரசியுடன் வாருங்கள்” என்றாள் விருஷாலி.

அவன் அவள் கண்களைப்பார்த்து “பொறாமையில்லையா?” என்றான். அவள் விழிகளை சாய்த்து “இருக்கிறது” என்றாள். “அதை எப்போது உணர்ந்தாய்?” என்றான். “இப்போது மது கொண்டு வரும்போது” என்றாள். உரக்க நகைத்து “நன்று. அது தேவை” என்று அவள் தோளை தட்டியபின் “கிளம்புகிறேன்” என்றான்.

மீண்டும் படிகளில் இறங்கும்போது தன் உடல் எடையற்றிருப்பது போன்று உணர்ந்தான். இரு தாவல்களில் இறங்கி கூடத்திற்கு வந்து திரும்பிப் பார்த்தபோது படிகளின் மேல் பிடியை பற்றியபடி புன்னகையுடன் விருஷாலி நின்றிருந்தாள். கர்ணன் கூடத்தில் தொழுது நின்றிருந்த சிவதரிடம் “நாங்கள் கலிங்கத்துக்குச் செல்கிறோம் சிவதரே” என்றான். அவர் “நான் அதை உய்த்துணர்ந்தேன்” என்றார். “எப்படி?” என்றான் கர்ணன். “நாளை அங்கு மணத்தன்னேற்பு விழா. அரை நாழிகையில் அரசர் கிளம்பவிருக்கிறார் என்று தேரோட்டி சொன்னபோது தாங்கள் செல்லவிருப்பதை உணர்ந்து கொண்டேன்.”

“உங்களுக்கு கலிங்க நாடு நன்கு தெரியுமா?” என்றான் கர்ணன். “அங்கமும் கலிங்கமும் ஒரே நிலம்” என்றார் சிவதர். “கிளம்புங்கள் உங்கள் வழிகாட்டல் எங்களுக்கு தேவைப்படும்” என்றான் கர்ணன். “படைகள் உண்டா?” என்றார் சிவதர். “நாங்கள் இருவர் மட்டுமே செல்கிறோம்” என்றான் கர்ணன். “அரசருக்கு வழிகாட்டுவது என் நல்லூழ்” என்றார் சிவதர். “அரசர் வருவதாக உங்களிடம் யார் சொன்னது?” என்றான். “நாங்கள் இருவரும் என்று அரசரை அன்றி பிறரை சேர்த்துக் கொள்ள மாட்டீர்கள்” என்றார் சிவதர். கர்ணன் நகைத்தபடி “நீர் எப்போதும் என்னுடன் இருக்கப்போகிறீர். வருக!” என்றான்.

தொடர்புடைய பதிவுகள்

சங்கரர் உரை -கடிதங்கள் 2

$
0
0

Adi Shankara statue in Nrusimha Vanam.

 

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு

நேற்று கோவையில் சங்கரரைப் பற்றிய உரை மிகப் பயனுள்ளதாக இருந்தது.[சங்கரர் உரை]

நீங்கள் கேட்டுக் கொண்டபடியே, அவை ஒத்துழைத்தது என நினைக்கிறேன் (ஒரே ஒரு முறை குறுக்கிட்டு படம் எடுக்க முயன்ற படப்பிடிப்பாளரைத் தவிர). மாபெரும் அறிவுப்பரப்பாக உள்ள அத்வைதத்தை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் திறனுள்ள இளைஞர்கள் உருவாகாமல், பணம் சம்பாதிக்கும் பிராய்லர் கோழிகளாக ஆக்கிவிட்டோம் என்று சொல்கையில் உங்களைப்போலவே அரங்கும் நெஞ்சு விம்மி பதைப்புடன் அமர்ந்திருந்தது.

சங்கரரைவிட வித்யாரண்யரே அதிகம் அலசப் பட்டார். புதையல் மீது அமர்ந்து பட்டினி கிடந்து ஊழ்கம் புரிந்த அந்தப் பெருமுனிதான் தன் குருமரபின் மூத்தோரான சங்கரரை முன்னிறுத்திப் பல புரட்சிகளுக்கு வித்திட்டிருக்கிறார். மர்மமான புதையல்களாக பிரமிப்பூட்டும் இரகசியங்களை அழுத்தி வைத்து நமுட்டுச் சிரிப்பு புரிகின்ற இந்தியவியல் அதன் வரலாற்று மந்தணங்களால் மயக்கூட்டி வருகிறது. நபர்கள், சம்பவங்கள் முக்கியமில்லை, உண்மைகளே, அறிவுத் தேடலே முக்கியம் என்பதாலோ;

சாமானியர்களுக்கு, ஒடுக்கப் பட்டவர்களுக்கு எழுச்சி பெற உதவும் தத்துவம் அத்வைதம் என்றுணரும் போது பெருமிதம் ஏற்பட்டது.

வற்றாத இவ்வறிவொழுக்குத் தொடரின் சமகால பிரதிநிதியாக, தங்கள் பணி சிறக்கவும், சோர்வுகள் மனத்தை மூடும்போது, உள்ளொளி உமிழவும் பிரம்மத்தை யாசிக்கிறேன்

அன்புடன்
ஆர் இராகவேந்திரன், கோவை
அன்புள்ள ஜெ

கோவை சங்கரர் உரைக்கு வந்திருந்தேன். நீங்கள் சிறந்த பேச்சாளர் அல்ல என்று சொன்னீர்கள். ஆனால் எனக்கு நான் கேட்டதிலேயே மிகச்சிறந்த பேச்சு அன்று நீங்கள் பேசியதுதான் என்றே தோன்றியது. நல்லபேச்சுக்குத்தேவையானது என நான் நினைக்கும் தகுதிகள் மூன்று. நிறையசெய்திகள். உணர்ச்சிகரம். ஆன்மிகமான கவித்துவமான நிறைய தருணங்கள். இது மூன்றுமே உரையில் நிறைந்திருந்தன

உரை சாதாரண பக்தர்களுக்கு அதிர்ச்சியை அளித்ததைக் கண்டேன்.சங்கரரின் வரலாறு என்று சொல்லப்படுபவை எல்லாமே அவர் மறைந்து ஐநூறு வருடங்களுக்குப்பிறகு உருவானவை என்று சொன்னீர்கள். சங்கரர் பெயரில் உள்ள பஜகோவிந்தம் சௌந்தரிய லஹரி போன்ற நூல்கள் அவரால் எழுதப்பட்டவை அல்ல என்று சொன்னீர்கள். இதெல்லாம் புதிய சங்கரரை வெளிப்படுத்தின. பக்தர்களுக்கு அவர் என்ன வேதாந்தம் சொன்னாலும் கடைசியில் பக்தியில் வந்துதானே சரண் ஆனார் என்று சொல்வதில் ஒரு திரில் இருக்கிறது. அதைத்தகர்த்துவிட்டீர்கள்.

ஆனால் வேதாந்தத்தில் இருந்து அத்வைதம் எப்படி வேறுபடுகிறது, சங்கரரின் தனிப்பட்ட பங்களிப்பு என்ன என்று விளக்கிய இடம் முக்கியமானது. வழக்கமாக விவாதங்களில் மறுதரப்பை கேவலப்படுத்துவார்கள். எதிர்தரப்பினர் சங்கரருக்கு விஷம் வைத்தார்கள், அவர் தப்பினார் என்றெல்லாம் சொல்வார்கள். அதெல்லாம் இல்லாமல் பௌத்தம் சங்கரவேதாந்தம் அளவுக்கே மகத்தான ஞானதரிசனம் என்று சொன்னீர்கள். அதுவும் எனக்கு ப்பிடித்திருந்தது.

எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது ரிச்சர்ட் கிங் போன்றவர்களை மேற்கோள் காட்டி சங்கரர் அவர் காலத்திலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை பெரும்பாலான இந்துஞானநூல்களிலும் எதிர்தரப்பாக இருந்த பௌத்த நூல்களிலும் பெரிதாகக்குறிப்பிடப்படவில்லை என்பதுதான். அது சங்கரர் முன்வைத்த ஆறுமதம் என்னும் அமைப்புக்கு சரித்திரபூர்வமான ஒரு தேவை வந்தபோது அந்த தரிசனம் விஸ்வரூபம் கொண்டதனால்தான் என்று விளக்கியது மிக முக்கியமானது. சங்கரர் இத்தனைபெரிய ஆளுமையாக ஆனது அவரது ஏகதண்டி சம்பிரதாயத்தின் உள்ளடக்கமாக இருந்த ஒருமைஞானத்தால்தான்

நானும் ஒரு ஸ்மார்த்தன் என்ற வகையில் ஸ்மார்த்த சம்பிரதாயம் என்பது ஒரு சாதி எல்ல ஒரு காலகட்டத்தில் இந்துமதத்தை பாதுகாப்பதற்காக உருவான மாபெரும் நிலைச்சக்தி என்றும் அவர்கள் ஆறுமதங்களையும் ஒன்றாக்கி ஒரே வழிபாட்டுமுறையாக ஆக்கி ஐநூறாண்டுக்காலம் நீட்டித்தனர் என்றும் இந்துக்கள் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறார்கள் என்றும் சொன்னது எனக்கு உத்வேகத்தை அளித்தது. ஒரு சாதியாக இன்றைக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அது உருவானது ஒரு பெரிய நோக்கத்துக்காக என்றபோது இதைத்தெரிந்துகொள்ளாமலிருந்ததை நினைத்து வருந்தினேன்

நன்றி

சந்திரமௌலி

 

 

சங்கரர் உரை

தொடர்புடைய பதிவுகள்

புதியவர்கள் கடிதங்கள் 2

$
0
0

5

பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் உங்கள் எல்லா எழுத்துகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். புத்தாண்டில் உங்கள் சோர்வு பற்றிய பதிவுகள் மிகுந்த மனஉளைச்சலை தந்தது. என் போன்ற பலபேர் சோர்வை போக்கும் எழுத்து உங்களுடையது. உங்கள் ஒவ்வொரு வரியையும் இக்கணம் வரை தொடர்கிறேன். உங்களோடு வாழ்வதாகவே உணர்கிறேன். அதிகம் கடிதம்/பிற தொடர்பு இல்லாமல் உங்களை பல்லாயிரம் பேர் தொடர்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களை பின் தொடரும் ஒரு புதிய தலைமுறையே உருவாகி வருகிறது. உங்கள் உடலும் மனமும் வலிமையாக இருக்க பிராத்திக்கிறேன். எதோ ஒரு திடீர் உந்துதலில் இக்கடிதம்.

கருணாகரன்.

 

அன்புள்ள கருணாகரன்,

அதைச் சோர்வு என்று சொல்ல முடியாது. ஊக்கம் என்பது ஒரு சிலகணங்களில் பின்னுக்கு வருவதுண்டு. அதற்கான காரணம் உண்மையைச் சொல்லப்போனால் வெண்முரசில் வந்த தீர்க்கதமஸ் என்னும் கதாபாத்திரம்தான் என நினைக்கிறேன். அது எனக்கு எப்படித்தெரிந்தது என்றால் இன்று சாயங்காலம் என் வீட்டுக்கு அருகே என்னைச்சந்தித்த ஒரு வெண்முரசு வாசகர் சொன்னபோதுதான்,

ஜெ]

 

==============================================
அன்பு ஜெமோ அண்ணா அவர்களுக்கு,
வெண்முரசு மூலம் உங்கள் எழுத்து பரிச்சயம் அதற்கு முன் உங்கள் பெயர் தெரியும், அவ்வளவே. ஒரு வார காலமாக தொடர்ந்து வீட்டிலும், அலுவலகத்திலும் ஜெயமோகன் தான். தாளவில்லை எழுதிவிட்டேன் கடிதம், கீதை உரை, நேற்று இரவு சங்கரர் உரை எத்தனை விஷயங்கள், புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் ஒரு குழப்பத்தில் இருக்கிறேன். உங்கள் வயது எனக்கு, இது வரை படித்ததெல்லாம் என்ன, தெரியவில்லை.

விஷ்ணுபுரம் படித்து, மீண்டும் படித்து, பயமாக இருக்கிறது, பல இடங்கள் புரியாமலே போய்விடுவோமா என்று. அறம் மீண்டும் மீண்டும் அழ வைக்கிறது. இந்திரநீலம் பல முறை அலுவலகத்திலேயே படித்து, தனியறை என்பதால் விசும்பி அழ முடிந்தது, பாதி கதை புரியாமலேயே. ஒரு நாள் புரியும் என்ற நம்பிக்கையில். இப்பொழுது ஒரு சோதனை முயற்சியாக வெண்முரசு, Richard Dawkins, இரண்டையும் ஒரு சேர மாற்றி மாற்றி படிக்கிறேன்.

வெய்யோன் – தீர்க்கதமஸ் முடிந்து இன்று அதன் தொடர்பு திருதஷ்டிரரோ என ஒரு சிறு எண்ணம் எழுந்து அடுத்த வரியில் துரியோதனன் தம்பிகள் அதை சொல்வதாக,அவர்கள் அறிவின் மாண்பு (வஞ்ச புகழ்ச்சியாக) புரிந்த பொது, அவர்களை விட மடையனாக உணர்ந்தேன்.

இறுதியில், செயல்கள் விளைவுகளுக்காக அல்ல என்ற உங்கள் கடித வரி, சட்டென்று எதோ உடைந்த உணர்வு.
அதே உணர்வுடன்,

ஜெ. ஆ. ஐங்கரன்,
மதுரை.
அன்புள்ள ஐங்கரன்

எந்தக் காலமானாலும் சிந்தனைக்குள் வந்துசேர்வது நல்ல தருணம்தான். உண்மையில் புரிந்தும் புரியாமலும் ஒரு விஷயம் நம்மை வந்தடைவதுதான் மிகமிக அற்புதமான காலகட்டம். அப்போதிருக்கும் பரவசமும் கனவும் பிறகு அமைவதில்லை.

வாழ்த்துக்கள்

ஜெ

 

===================================================================

இனிய ஆசிரியருக்கு,

விழா அனுபவங்களை பற்றி இத்தனை கடிதங்கள் வந்த பிறகும், நாம் என்ன புதிதாய் எழுதி விட போகிறோம் என்ற மன நிலையும், புத்தாண்டு விடுமுறை பயணங்களும், என்னைக் கடிதம் எழுத விடாமல் வைத்திருந்தது. எனினும் கமலக்கண்ணன் அவர்களுக்கு உங்கள் கடிதத்தில் புதியவர்களுக்கு நீங்கள் தரும் முக்கியத்துவத்தை குறிப்பிட்டதே என்னைக் கடிதம் எழுத தூண்டியது.

இதுவே நான் கலந்து கொள்ளும் முதல் விஷ்ணுபுரம் விழா. விருது விழாவில் அவசியம் இரண்டு நாட்களும் கலந்து கொள்ள வேண்டும் என முன்னரே முடிவு செய்து திட்டமிட்டிருந்தாலும், வைரஸ் காய்ச்சல் வந்து விட்டதால் இரண்டாம் நாள் மட்டுமே என்னால் கலந்து கொள்ள முடிந்தது. மேலும் திரும்புவதற்கு என் தம்பி தவறாக 8:00 மணி பேருந்திற்கே பதிவு செய்து விட்டதால், விழா நிறைவடைவதற்கு முன்பே யாரிடமும் சொல்லாமல் புறப்பட வேண்டியதாகிவிட்டது. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தாலும், அன்று ஒரு நாள் எனக்கு கிடைத்த அனுபவங்களும், விவாதங்களில் அறிந்து கொண்ட கருத்துகளும் அளித்த தூய அறிதலின் மகிழ்ச்சி, நிறைவான இன்பத்தையே தந்தது.

நான் 27 அன்று காலையில் கோவை வந்து முதலில் தவறாக கிக்கானி பள்ளிக்குச் சென்று விட்டேன். அங்கிருந்து ராஜஸ்தானி நிவாஸ்க்கு வழி விசாரித்து நடந்து வந்தேன். கோவையில் பலரும் நான் செல்ல வேண்டிய இடத்தை தெளிவாக கேட்டு மிகச் சரியாக வழி சொல்லினர். அருகிலேயே மற்றொரு ராஜஸ்தான் கல்யாண மண்டபம் இருந்தது. ஆயினும் நான் வழி கேட்ட அனைவரும் மிகச் சரியாக கேட்டு, ராஜஸ்தானி நிவாஸ்க்கு வழி சொன்னது தமிழகத்தின் பிற நகரங்களில் எனக்கு கிடைத்த அனுபவங்களுடன் ஒப்பிட்டு பார்க்க ஆச்சர்யத்தை அளித்தது.

ராஜஸ்தானி நிவாஸில் நுழைந்ததும் விஷ்ணுபுரம் சென்னை நண்பர்கள் இருந்தனர். அவர்களை சென்னை வெண்முரசு விவாதத்தில் ஒரு முறை சந்தித்து இருந்தேன். அவர்களுக்கு என்னை நினைவிருக்குமா எனத் தெரியவில்லை. நானும் தனியாக அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. எனினும் உற்சாகமான உரையாடல்களும், கிண்டல்களும், கேலிகளும் என்னையும் இயல்பாக இணைய வைத்தது.

சிறிது நேரத்தில் தேவதச்சன் கவிதை விவாதம் ஆரம்பித்தது. ஏற்கெனவே நான் தேவதச்சன் கவிதைகள் சிலவற்றையும், தளத்தில் வந்திருந்த தேவதச்சன் கவிதைகள் குறித்த அணைத்து கட்டுரைகளையும் வாசித்திருந்ததால் என்னால் இயல்பாக உரையாடலில் ஒன்ற முடிந்தது. எனக்கு மிகவும் பிடித்த
தேவதச்சன் கவிதையான,

குருட்டு ஈ

ஆஸ்பத்திரியில்
வெண்தொட்டிலில்
சுற்றுகிறது
இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்
மூச்சொலி
பார்க்கப்
பயமாக இருக்கிறது
சுவரில்
தெரியும் பல்லி
சீக்கிரம் கவ்விக் கொண்டு
போய்விடாதா
என் இதயத்தில்
சுற்றும் குருட்டு ஈயை

இந்த கவிதை எனக்கு முதல் முறையாக மிதி வண்டியில் ஏறிக் கிழே விழுந்த போதும், சாலை விபத்தில் மரணம் அடைந்த ஒரு பிணத்தை கண்ட போதும், இன்னும் பல பயமும் வருத்தமும் கலந்த தருணங்களில் என் இதயத்தில் நான் உணர்ந்த ஒரு குறுகுறுப்பை, உணர்ச்சியை, ஒரு குருட்டு ஈயாய் என் கண் முன்னே நிறுத்தியது. இந்த கவிதையை நான் வாசிக்க ஆசைப் பட்டேன். எனினும் அது முதல் நாளே வாசிக்கப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் வாசிக்கவில்லை.

பின்னர் நடந்த, கவிதை வடிவங்கள் பற்றிய உரையாடலும், மிளிர்கல் ஆசிரியர் முருகவேளுடன் நடந்த உரையாடலும், வரலாற்று எழுத்து குறித்த விவாதமும், உணவு இடைவேளைக்கு பின்னர் நடந்த உரையாடலும் எனக்கு பல புதிய கருத்துக்களை அறிந்து கொள்ள கிடைத்த சிறந்த வாய்ப்பு.

உணவு இடைவேளையின் போது நான் சுநீல் மற்றும் சுரேஷுடன் அறிமுகப் படுத்திக் கொண்டேன். வல்லபியிடம் அவர்கள் கட்டிடம் முடியும் தருவாயில் இருப்பதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். மாலை தேநீர் நடை மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தங்களுடன் கீதை உரை குறித்து பேச விரும்பினாலும் தருணம் கிடைக்கவில்லை. கீதை உரை மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக மூன்றாம் பகுதியில், பாரதத்தில் பீஷ்மரும், சுதந்திர போராட்டத்தில் காந்தியும் கர்ம யோகிகளாகவும், அதே போல விதுரரும் அரவிந்தரும் ஞான யோகிகளாகவும் குறிப்பிட்டது பல நாட்கள் என் சிந்தனைக்கான கச்சாப் பொருளாக அமைந்தது. வெண்முரசின் சில பாகங்களை இதைக் கொண்டே மறு வாசிப்பு செய்யவும், அரவிந்தரின் வாழ்கை வரலாற்றை வாசிக்கவும் நினைத்திருக்கிறேன்.

தேநீருக்கு பின் நாஞ்சில் நாடன், சங்க இலக்கிய வாசிப்பு குறித்து பேசியதை கேட்டது என்றும் என் நினைவில் இருக்கும். விழா மிகச் சிறப்பாகவே நடை பெற்றது. நான் இரண்டாவது வரிசையிலேயே அமர்திருந்ததால் எனக்கு ஒலிக் குறைபாடுகள் பெரிதாகத் தெரியவில்லை.ஆவணப் படம் மிகச் சிறப்பாக இருந்தது.

கமலக்கண்ணன் கூறியது போல இது ஓர் இனிய தொடக்கமே. எதிர்காலத்தில் நான் கலந்து கொள்ள போகும் விஷ்ணுபுரம் விழாக்களும், ஊட்டி இலக்கிய முகாம்களும் என் கண்முன்னே விரிகிறது.

நன்றி.
லெட்சுமிபதி ராஜன்

அன்புள்ள லெட்சுமிபதிராஜன்

இந்தமுறை சந்தித்தபுதியவர்களை எண்ணும்போது மிகுந்த மனநெகிழ்ச்சி உருவாகிறது. இன்னும் நுட்பமாகவும் விரிவாகவும் இந்த சந்திப்புகளை உருவாக்கவேண்டும் என்னும் எழுச்சி இப்போது எஞ்சியிருக்கிறது

ஜெ

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 20

$
0
0

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 8

நாணிழுத்து இறுக வளைத்த விற்களென பன்னிரு பாய்கள் தென்கிழக்கு நோக்கி தொடுத்துநின்ற விரைவுப்படகு திசை சரியும் விண்பருந்தின் அசைவின்மையை கொண்டிருந்தது. தொலைவில் பச்சைத்தீற்றலென இழுபட்டு மெல்ல சுழன்ற கரைகளே விரைவை காட்டுவனவாக இருந்தன. குடவீணை நரம்புகளென செவிக்கேள்வியின் கீழ்க்கோட்டில் விம்மி அதிர்ந்து கொண்டிருந்த பாய்வடங்களை கைகளால் பற்றி குனிந்து கர்ணன் அருகே வந்த துரியோதனன் “இன்னும் விரைவை கூட்டலாகாதா?” என்றான். “அஸ்தினபுரியின் உச்ச விரைவு இதுவே. பீதர் படகுகள் சில இதைவிட விரைவாகச் செல்லும் என்று அறிந்திருக்கிறேன். அவை கங்கையில் செல்லுமா என்று தெரியவில்லை” என்றான் கர்ணன்.

பொறுமையின்மையுடன் திரும்பி தொடுவானை நோக்கியபின் நீர்க்காற்றில் அரிக்கப்பட்டு முருக்குமுள் தொகுதியென ஆகியிருந்த இழுவடங்களை கையில் பற்றி உடலை நெளித்தபின் “நெடுநேரம் சென்று கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது” என்று துரியோதனன் சொன்னான். “நாம் கிளம்பி மூன்று நாழிகைகளே ஆகின்றன. இன்னும் சற்றுநேரத்தில் படுகதிர்வேளை எழும்” என்றான் கர்ணன். “எப்போது தாம்ரலிப்தியை அடைவோம்?” என்றான் துரியோதனன். “காலைக்கருக்கிருட்டுக்கு முன்பு” என்று கர்ணன் சொன்னான். “வெள்ளி முளைக்கையில் நாம் ராஜபுரத்திற்குள் நுழைந்திருக்கவேண்டும்.”

துரியோதனன் திரும்பி “தாம்ரலிப்திக்குள் நுழைகிறோமா?” என்றான். “இல்லை” என்றான் கர்ணன். “அங்கு நுழைந்து வெளியேறுவது கடினம். வணிகத்துறைமுகமாயினும் விரிவான காவல் ஏற்பாடுகள் அங்குண்டு. நாம் வழியிலேயே ஒரு குறுங்காட்டில் இறங்குகிறோம். அங்கு நமக்கென புரவிகள் சித்தமாக நின்றிருக்கும்.” துரியோதனன் தன்னருகே நீட்டி அதிர்ந்த வடத்தை கையால் குத்தி “இன்னும் எத்தனை நாழிகை நேரம்?” என்றான். கர்ணன் நீள்பலகையில் மெல்ல உடலை விரித்து படுத்தபின் “கிளம்பியதிலிருந்து படகுக்குள் அலைமோதிக் கொண்டிருக்கிறீர்கள் அரசே. தாங்கள் சற்று ஓய்வெடுப்பது நலமென்று நினைக்கிறேன்” என்றான்.

“ஆம், ஓய்வெடுக்க வேண்டும்” என்றபின் கர்ணனின் கால்மாட்டில் வந்து அப்பலகையில் அமர்ந்தான் துரியோதனன். அவன் பேரெடையால் அப்பலகை மெல்ல வளைந்து ஓசையிட்டது. தன் தோள்களைக் குவித்து முழங்கால்களில் முட்டுகளை ஊன்றி அமர்ந்து “ஆனால் அமர்ந்திருப்பதும் கடினமாக உள்ளது அங்கரே” என்றான். “ஏன்?” என்றான் கர்ணன். “அறியேன். இச்செயல் பிழை என்று என் உள்ளத்தில் எங்கோ ஒரு முள் குடைகிறது” என்றான். “இது பிழைதானே?” என்றான் கர்ணன். “ஆம்” என்றான் துரியோதனன். திரும்பி “எளிய சூதர்களைப்போல் ஒரு பெண்ணின் விழிகளுக்கு உண்மையாக நாம் ஏன் வாழ்ந்து நிறைவுற முடியவில்லை?” என்றான். “அரசர்கள் முதலில் மணப்பது அரசத்திருவைத்தான் என்று ஒரு சூதர் சொல்லுண்டு. அங்கு துவாரகையில் இளையவர் எட்டு திருமகள்களை மணந்து அமர்ந்திருக்கிறார்.”

துரியோதனன் அப்பேச்சை தவிர்க்கும்படி கையை விசிறினான். பின்பு எழுந்து இருவடங்களை பற்றியபடி நின்று தொலைவில் சரிவணைந்த செங்கதிரவனையும் அலைப்பளபளப்புடன் தெரிந்த கங்கை நீர்ப்பரப்பையும் நோக்கியபடி குழல் எழுந்து உதறிப்பறக்க ஆடை துடிதுடிக்க நின்றான். அவன் மேலாடை தோளிலிருந்து நழுவி எழுந்து நீண்டு கர்ணனின் தலைக்குமேல் படபடத்தது. அவன் உள்ளத்தில் என்ன நிகழ்கிறது என்று அறிந்த கர்ணன் மேற்கொண்டு சொல்லெடுக்காமல் கண்களை மூடிக்கொண்டான்.

பறவைகள் கங்கையை கடந்து சென்றுகொண்டிருந்தன. நீர் ஒளியணைந்து கருமைகொண்டது. கரையோரக்காடுகள் நிழலாகி மெழுகுக்கரைவென இழுபட்டு தெரிந்தன. மிகத்தொலைவிலெங்கோ ஒரு யானையின் குரலெழுந்தது. நீர்ப்பரப்பிலிருந்து மீன்கள் துள்ளி எழுந்து ஒளிமின்னி விழுந்து அலைவட்டங்களை உருவாக்கின. படகுப்பாய்களில் மட்டும் கதிரொளி சற்றே எஞ்சியிருந்தது. விரல்களுக்குள் தெரியும் விளக்கின் ஒளிக் கசிவென.

20

உள்ளறையிலிருந்து மேலே வந்த சிவதர் தலைவணங்கி நின்றார். துரியோதனன் திரும்பி “சொல்லும்” என்றான். “தேவைக்கு மேல் விரைவிலேயே சென்று கொண்டிருக்கிறோம். குறுங்காட்டில் புரவிகள் வந்து சேர்வதற்குள்ளேயே நாம் சென்று விடுவோம் என்று நினைக்கிறேன்” என்றார் அவர். “இங்கிருந்தே அந்தக் கணக்குகளை போடவேண்டாம்” என்று துரியோதனன் உரக்கச் சொன்னான். “செல்லும் வழியில் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். ஆற்றிடைக்குறைகள் அருகே நீரின் விரைவு குறையும். சுழல்கள் இருந்தால் அதைக் கடந்து போகவே அரை நாழிகை ஆகிவிடும். இன்னும் விரைவாக செல்வதே நல்லது.”

சிவதர் ஒன்றும் சொல்லவில்லை. கர்ணன் திரும்பி “கங்கையில் பலமுறை வந்துளீரா?” என்றான். “ஆம், இப்பாதையில் பலமுறை வந்துளேன்” என்றார் சிவதர். அவர் செல்லலாம் என்று துரியோதனன் தலையசைத்தான். “தாங்கள் இருவரும் படுத்துத் துயில்வது நன்று என்று எண்ணுகிறேன். ஏனெனில் அங்கு சென்றதுமே புரவிக் கால்களின் உயரெல்லை விரைவை நாம் அடைந்தாக வேண்டும். செல்லும் வழியோ முட்செறிக் குறும்புதர்களால் ஆனது” என்றார். கர்ணன் திரும்பி ஒருக்களித்து தலையை கையில் வைத்தபடி “சிவதரே, ராஜபுரத்தின் கோட்டை பெரியதா?” என்றான். “இல்லை. தண்டபுரம்தான் கலிங்கத்தின் பழைய தலைநகரம். அதன் கோட்டை அந்தக்கால முறைப்படி வெறும் களிமண்குவையாக கட்டப்பட்டது. அதன் மேல் முட்புதர்கள் பயிரிட்டு ஒன்றுடன் ஒன்று சேர்த்து கட்டியிருப்பார்கள். வேர்களால் இறுகக் கவ்வப்பட்டு உறுதிகொண்டிருக்கும். அங்குள்ள அரண்மனை பெரியது.”

சிவதர் தொடர்ந்தார் “தமையனும் இளையோனும் தங்களுக்கென நிலம் வேண்டுமென்று பூசலிட்டபோது குடிமன்று கூடி இளையவருக்கென்று ராஜபுரத்தை அளித்தனர். இது அன்று உக்ரம், ஊஷரம், பாண்டூரம், பகம் என்னும் நான்கு சிற்றூர்களின் தொகைதான். பெரும்பாலானவர்கள் வேளாண் குடியினர். சிலர் வேட்டைக் குடிகள். ஒரு நகர் அமைக்கப்படுவதற்கான எவ்வியல்பும் இல்லாத நிலம் அது. உள்ளே சதகர்ணம், குஜபாகம், கும்பிகம் என்னும் மூன்று குளங்கள் உள்ளன. அக்குளங்களை நம்பி உருவான தொன்மையான குடியிருப்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து உருவான சிற்றூர்கள் அவை.”

“ராஜபுரத்தை அமைத்தபோது கோட்டையை கல்லால் கட்ட வேண்டுமென்று சித்ராங்கதர் விழைந்தார். ஆனால் கருவூலத்திலிருந்து அத்தனை பெரிய தொகையை எடுத்து அளிக்க அமைச்சர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே குடிமக்கள் ஒவ்வொருவரும் கொடையளித்து அக்கோட்டையை கட்டவேண்டியதாயிற்று. குடிகளால் ஓர் எல்லைக்குமேல் அளிக்க இயலவில்லை. ஆகவே இக்கோட்டையும் மண்குவையாகவே அமைந்துள்ளது. அதன் மேல் வளர்க்கப்பட்ட மரங்கள் இன்னும் புதர்களாகவே உள்ளன. படைகள் உட்செல்வதை அவை தடுக்கும். படைக்கலம்கொண்டு மரம் வெட்ட முடிந்த மனிதர்கள் எளிதில் உட்சென்று வெளிவரலாம்” என்றார்.

“எத்தனை ஆண்டுகளாயிற்று அதை கட்டி?” என்று துரியோதனன் அவரை நோக்காமலே கேட்டான். “பதினெட்டு ஆண்டுகள். இரண்டாவது இளவரசி சுப்ரியை பிறந்த மூன்றாவது வாரத்தில்தான் கோட்டைப் பணிகள் முடிந்து பெருவாயில் பூசனைகள் நடந்தன. அன்று அங்கநாட்டரசருக்கும் அழைப்பிருந்தது. கோட்டைத்திறப்பு நாளன்று அக்கோட்டை மேலும் சில வருடங்களில் கல்லால் எடுத்து கட்டப்படும் என்று சித்ராங்கதர் சொன்னார். ஆனால் அரியணை அமர்ந்த சில ஆண்டுகளிலேயே அது எளிதல்ல என்று கண்டு கொண்டார்.”

துரியோதனன் சற்று சீற்றத்துடன் திரும்பி “ஏன்?” என்றான். சிவதர் தலைவணங்கி “அரசே, பாரதவர்ஷத்தில் எந்த அரசரும் முடிசூடிய ஐந்தாண்டுகளுக்குப்பின் கோட்டையை எடுத்துக் கட்டியதில்லை. அரசுகள் அமையும்போது கட்டிய கோட்டைகள் மட்டுமே இங்கு உள்ளன” என்றார். பொறுமையழிந்து “ஆம். அது ஏன் என்று கேட்டேன்” என்றான் துரியோதனன். “அவ்வாறு நிகழ்ந்தது என்பதே அடியேன் அறிந்தது. ஏன் என்பதை நூலோர் உய்த்துச் சொன்னதை நான் சொல்ல முடியும். எனக்கென்று சொல்வதற்கு ஏதுமில்லை” என்றார் சிவதர். கர்ணன் புன்னகையுடன் எழுந்து அமர்ந்தான். “சொல்லும்” என்றான் துரியோதனன்.

“அரியணை அமர்ந்ததுமே நகரங்கள் கோட்டைகளால் காக்கப்படுவதில்லை, சொற்களால் காக்கப்படுகின்றன என்று அரசர்கள் அறிந்து கொள்வதாக சொல்கிறார்கள். குருதியுறவுகளால் வேதவேள்விகளால் அவை அரணிடப்பட்டுள்ளன” என்றார். “இவை வெற்றுச் சொற்கள்” என்றான் துரியோதனன். “இல்லை அரசே, பாரதவர்ஷத்தில் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ள அனைத்து அரசுகளும் கண்ணுக்குத் தெரியாத அரண்களை கொண்டவை. துணையரசுகளும் குலங்களும் சூழ்ந்தவை” என்றார் சிவதர்.

“அதுவல்ல…” என்று துரியோதனன் அருகே இருந்த வடத்தை கையால் தட்டியபடி சொன்னான். “அரசனின் உளஎழுச்சி குறைந்துவிடுகிறது. அரியணையில் அமர்ந்ததுமே அனைத்தும் தனக்கு இயைந்ததாகவே நிகழ்வதாக எண்ணிக்கொள்ளும் மிதப்பு வந்துவிடுகிறது.” சிவதர் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்லும்” என்றான் துரியோதனன். “அவ்வாறு நான் எண்ணவில்லை. பாரதவர்ஷத்தில் இன்று ஒவ்வொரு கணமும் தன் ஆற்றலை பெருக்கிக் கொண்டிருக்கும் அரசு என்றால் மகதம் மட்டுமே. ஆனால் இன்று வரை தனது கோட்டைகளை அது எழுப்பிக் கட்டவில்லை. நெடுங்காலத்துக்கு முன் கட்டப்பட்ட உயரமற்ற கல் கோட்டையால் சூழப்பட்டுள்ளது ராஜகிருகம். அதன் பல பகுதிகள் தொடர் மழையால் அரிக்கப்பட்டு கல்லுதிர்ந்து கிடக்கின்றன. ஜராசந்தரோ மேலும் மேலும் அசுரர் குலத்திலிருந்தும் அரக்கர் குலத்திலிருந்தும் பெண் கொள்கிறார். படை பெருக்கிக் கொள்கிறார்.”

துரியோதனன் “அவன் கருவூலத்தில் செல்வம் இல்லை போலும்” என்றான். “பாரதவர்ஷத்தில் மிகப்பெரும் கருவூலம் அவருடையதே என்பதை அறியாதவர் எவருமிலர். அதற்கப்பால் ஒன்றுள்ளது அரசே” என்றான் கர்ணன். துரியோதனன் திரும்பிப் பார்த்தான். “போரை எதிர்கொள்பவன் கோட்டையை கட்டமாட்டான்.” “ஏன்?” என்றான் துரியோதனன். “கோட்டையைக் கட்டுவது அவனது அச்சத்தின் அறிவிப்பாக ஆகலாம். மேலும் கோட்டை கட்டுவதென்பது ஒரு படைப்புப் பணி. அது போருடன் இயைவதல்ல. அதில் ஒரு களியாட்டமும் நிறைவும் உள்ளது.”

“கோட்டை கட்டுவதென்பது வாள்களை உரசி கூர்மை செய்வது போல” என்றான் துரியோதனன். “இல்லை அரசே. அது தன் இல்லத்தில் இளையோருக்கு திருமணம் செய்து வைப்பது போல” என்றான் கர்ணன். சிவதர் புன்னகை புரிந்தார். துரியோதனன் பொறுமையை முற்றிலும் இழந்து “இந்தச் சொல்லாடல் எதற்காக? வீண்பேச்சு” என்றபின் பறந்த மேலாடையை இழுத்து சுற்றிக்கொண்டு தன் குழலை தோல்வாரால் முடிந்தான். “நாம் கேட்க வந்தது ராஜபுரத்தின் கோட்டையைப்பற்றி. அதற்குள் நுழைவது அத்தனை எளிதா?” என்றான் கர்ணன் சிவதரிடம்.

“எளிது என்று கோட்டையை வைத்து சொல்லலாம். நகரின் இயல்பை வைத்து அத்தனை எளிதல்ல என்றும் சொல்லலாம்” என்றார் சிவதர். “ஓரிருவர் உட்புகுவதற்கான வழியை அங்கு உருவாக்குவது சில நாழிகைகளுக்குள் நிகழக்கூடியதே. நகரைச் சுற்றியிருக்கும் குறுங்காடுகள் பெரும்பாலும் காவல் காக்கப்படுவதில்லை. நகரின் புற வளைவுகளில் உள்ள வேளாண் பணிக்குடிகளின் இல்லங்கள் அமைந்துள்ள தெருக்களுக்குள் நாம் செல்வது வரை எந்தத் தடையும் இல்லை.”

அவர் சொல்லட்டும் என்று இருவரும் நோக்கி நின்றார்கள். “ஆனால் ராஜபுரம் அஸ்தினபுரி போலவோ மகதத்தின் ராஜகிருகத்தை போலவோ பல நாட்டு மக்கள் வந்து குவிந்து கலைந்து நாள்நடந்து கொண்டிருக்கும் பெருநகரல்ல. உண்மையில் அது நகரே அல்ல. அங்கு வருபவர் ஒவ்வொருவரையும் அங்குள்ள மக்கள் அறிந்திருப்பர். அறியாத சிலர் அங்கு நுழைந்தால் சற்று நேரத்திலேயே அது ஒரு செவிதொற்றுச் சொல்லாக மாறிவிடும். மிக எளிதில் காவலர் அறிந்து கொள்வார்கள்.”

“ஆனால் இப்பொழுது அங்கு ஏற்புமணம் நிகழவிருக்கிறது. அதன் பொருட்டு பிற நாட்டினர் பலர் வரக்கூடும்” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் அதனாலேயே அந்நாட்டு மக்கள் மேலும் கூர்ந்து வருபவர் அனைவரையும் பார்ப்பார்கள். வாசல் வழியாக வரிசை பெற்று வராது அயலவர் இருவர் நகரத் தெருக்களில் நடப்பதை மேலும் கூர்ந்து நோக்குவார்கள்” என்றபின் “தாங்கள் இருவரும் சிம்மமும் யானையும் போல். காட்டில் அவை இரண்டும் எங்கும் ஒளிந்து கொள்ள இயல்வதில்லை” என்றார் சிவதர்.

“உண்மை, நாம் மறைந்து செல்ல முடியாது” என்றான் துரியோதனன். “செய்வதற்கொன்றே உள்ளது. நகரத்தில் நுழைந்தால் முழுவிரைவில் ஏற்பு மணம் நிகழும் நகர் முன்றிலை அடையவேண்டும். நம்மை எவரும் அடையாளம் கண்டு தடுப்பதற்குள் எதிர்ப்படுவோரை வென்று இளவரசியரை கைப்பற்றவும் வேண்டும்.” துரியோதனன் தன் இரு கைகளையும் விசையுடன் தட்டியபடி “ஆம், அதைச் செய்வோம். என் தோள்கள் உயிர்பருகி நெடுநாளாகின்றன” என்றான்.

கர்ணன் “அங்கு ஜயத்ரதன் வந்திருப்பான்” என்றான். “அதற்கென்ன…?” என்றான் சினத்துடன் சீறியபடி துரியோதனன். “அவனை எவ்வகையிலும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது” என்றான் கர்ணன். “நம்மை அவன் தடுப்பான் என்றால் அங்கொரு போர் நிகழும். நிகழட்டுமே” என்றான் துரியோதனன். கர்ணன் புன்னகைத்தபடி “போரில் நாம் அங்கு சற்று நேரம் தங்கியிருந்தால்கூட நம்மை ஜராசந்தனின் படைகள் வளைத்துக் கொள்ளக் கூடும். கலிங்கத்துடன் ஜராசந்தனின் உறவென்பது மிக அணுக்கமானது. உபமகதம் என்றே உத்தர கலிங்கத்தை சூதர்கள் நகையாட்டாக சொல்வதுண்டு” என்றான்.

ஜராசந்தனின் பெயர் துரியோதனன் தோள்களை சற்று தளரவைத்தது. “ஆம், ஜராசந்தனை எதிர்கொள்வது எளிதல்ல” என்றான். சிலகணங்கள் அங்கு அமைதி நிலவியது. பின்பு துரியோதனன் திரும்பிப் பார்க்காமல் “அவன் வருகிறானா?” என்றான். “யார்?” என்றார் சிவதர். பின்பு உடனே உணர்ந்து கொண்டு “செய்தியில்லை. நாம் கிளம்பியபோதுதான் இச்செய்தி நமக்கு வந்தது. ஆனால் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து எவரும் அங்கு செல்வதற்கான வாய்ப்பு குறைவு. ஜராசந்தன் அஞ்சுவது உங்களை மட்டுமல்ல. பீமனையும் கூடத்தான். கலிங்க இளவரசிகளை பாண்டவர் அடைவதை அவர் விரும்ப மாட்டார்” என்றார்.

துரியோதனன் திரும்பி “இவ்விரு பெண்களையுமே ஜராசந்தன் கொள்வதாகத்தான் திட்டமா?” என்றான். “அவ்வண்ணம் இல்லை. மூத்தவரை ஜராசந்தனும் இளையவரை ஜயத்ரதனும் கொள்வதாகத்தான் ஒற்றர் சொல்சொன்னது” என்று சிவதர் சொன்னார். “இளையவர் ஜயத்ரதன் மேல் அன்புடன் இருப்பதாகவும் தன்னை கொண்டு செல்லும்படி செய்தி ஒன்றை அவருக்கு அளித்ததாகவும் சூதர் சொல் உலவுகிறது. ஆனால் இதெல்லாம் சூதர்களே உருவாக்கும் கதைகளாக இருக்கலாம். பலசமயம் இக்கதைகளை உருவாக்கும் பொருட்டே சூதர்கள் ஏவப்படுவதும் உண்டு. ஜயத்ரதருக்கு கலிங்க மணவுறவால் நேட்டம் என ஏதுமில்லை. அத்தனை தொலைவுக்கு அவர் அரசோ வணிகவழிகளோ வருவதில்லை.”

துரியோதனன் இருகைகளையும் விரித்து உடலை நெளித்தபடி “போர் புரியலாம். போருக்கு முந்தைய இக்கணங்கள் பேரெடை கொண்டவை” என்றான். கர்ணன் “அரசே, நாம் ஈடுபட்ட அனைத்துப் போர்களிலும் தங்களின் இப்பொறுமையின்மையால் இழப்புகளை சந்தித்துள்ளோம்” என்றான். “ஆம்” என்றபடி துரியோதனன் தலையை அசைத்து “ஆனால் இதில் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றான். “எங்கும் வேட்டை என்பது பொறுமையின் கலையே” என்றான் கர்ணன்.

சிவதர் “தாங்கள் ஓய்வெடுக்கலாம் அரசே” என்றார். “மது கொண்டுவரச்சொல்லும். யவன மது வேண்டாம். உள்ளெரியும் இங்குள்ள மது…” கர்ணன் கையசைத்து மது வேண்டாமென்றான். “மது நாளை காலையில் நம்மை கருத்துமழுங்கச் செய்யக்கூடும்” என்றான் கர்ணன். “மதுவால் நான் ஒருபோதும் களைப்படைவதில்லை” என்று துரியோதனன் சொன்னான். “களைப்படைய மாட்டீர்கள். உங்கள் உடல் களைப்படையாதது” என்றான் கர்ணன். “உள்ளம் பொறுமை இழக்கும். நாம் செல்வது நுணுக்கமான ஓர் ஆடலுக்காக என்று நினைவு கூருங்கள்.”

துரியோதனன் “மதுவின்றி இவ்விரவில் என்னால் துயில முடியாது” என்றான். சிவதர் “துயிலவேண்டியதில்லை. படுத்துக் கொண்டால் போதும். உடல் ஓய்வு பெற்றாலே அது அரையளவு துயின்றது போல” என்றார். தலையசைத்தபின் அவர் செல்லலாம் என்று துரியோதனன் கையை காட்டினான். தலைவணங்கி சிவதர் பின்னால் காலெடுத்து வைத்து அறைக்குள் சென்றார். வடத்தில் சாய்ந்து விரைந்தோடிக் கொண்டிருந்த கரையின் கரிக்கோட்டை பார்த்தபடி “நாம் எங்கு வந்திருக்கிறோம்?” என்றான் துரியோதனன். “இவ்விரைவில் கரைகள் ஒரு கணக்கே அல்ல. விண்மீன்கள் இடம் சொல்லும். அணுகிக் கொண்டிருக்கிறோம்” என்றான் கர்ணன்.

விண்மீன்களை அண்ணாந்து நோக்கியபடி சற்று நேரம் நின்றதும் மெல்லிய பெருமூச்சுடன் துரியோதனன் கேட்டான். “அங்கரே, பானுமதியின் உள்ளம் இப்போது எதை எண்ணிக் கொண்டிருக்கும்?” அவ்வினாவால் சற்று அதிர்ந்த கர்ணன் “அதை எப்படி சொல்லமுடியும்?” என்றான். “ஆம், நாம் ஆண்கள் வென்று தோற்று ஆடும் இந்தக் களத்தில் பெண்களுக்கு இடமேயில்லை. யானைப்படைகளுக்கு நடுவே மான்கள் போல அவர்கள் இவ்வாடலுக்குள் வந்து நெரிபடுகிறார்கள்.” கர்ணன் “பிடியானைகளும் உண்டு” என்றான். துரியோதனன் வெடித்து நகைத்தபடி திரும்பி அவனைப் பார்த்து “ஆம், உண்மைதான். இவ்வாடலை நம்மைவிட திறம்பட ஆடும் பெண்கள் உள்ளனர்” என்றான். கர்ணன் புன்னகைத்தான்.

பின்பு நீள்மூச்சுவிட்டு “பானுவை எண்ண என் உள்ளம் மேலும் மேலும் நிலையழிகிறது” என்றான். கர்ணன் “அதை இனிமேல் எண்ணிப்பயனில்லை அரசே. கலிங்க அரசி பானுவை தன் தமக்கையாக ஏற்றுக் கொள்ளக்கூடும். பானு எவரிடமும் சென்று படியும் இனிய உள்ளம் கொண்டவள்” என்றான். துரியோதனன் “ஆம், அவ்வண்ணம் நிகழவேண்டும்” என்றான். கர்ணன் “உங்கள் இருபக்கமும் நிலமகளும் திருமகளும் என அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கக் கூடும்” என்றான். எரிச்சலுடன் கையசைத்து “நான் திருமால் அல்ல” என்றான் துரியோதனன். “நான் அன்னை மடி தேடும் எளிய குழந்தையாகவே இதுநாள்வரை அவளிடம் இருந்திருக்கிறேன்.”

“இளைய அன்னை ஒருத்தி இருக்கட்டுமே” என்றான் கர்ணன். “இருந்தால் நன்று. ஆனால் அவ்வண்ணம் நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை. நேற்றெல்லாம் அதைத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். எங்கேனும் இரு மனைவியர் உளமொத்து ஒரு கணவனை ஏற்றுக்கொண்டதாக நான் அறிந்ததேயில்லை. அவர்களிடையே அழியா பூசலே என்றுமுள்ளது. ஏனெனில் பெண்கள் எவரும் முழுதும் மனைவியர் அல்லர். அவர்கள் அன்னையர். தங்கள் மைந்தர்களின் முடியுரிமை என்னும் எண்ணத்தை என்று அவர்கள் அடைகிறார்களோ அன்று முதல் விழியில் வாளேந்தத் தொடங்குகிறார்கள். அமைதியற்ற உள்ளத்துடன் தங்கள் அரண்மனைக்குள் சுற்றி வருகிறார்கள்.”

கர்ணன் “அதை இப்போது எண்ணுவதில் பயனில்லை. நாம் அரசு சூழ்வதை மட்டுமே எண்ண முடியும். அரசர்கள் களத்தில் குருதி சிந்தவேண்டும், குடும்பங்களில் விழிநீர் சிந்தவேண்டும் என்பார்கள்” என்றான். துரியோதனன் “நீர் அதைப்பற்றி எண்ணியதில்லையா அங்கரே?” என்றான். கர்ணன் கரிய நீர்ப்பெருக்கென கடந்து சென்ற வானில் மிதந்து கொண்டிருந்த விண்மீன்களை பார்த்துக் கொண்டிருந்தான். “உம்?” என்றான். “விருஷாலிக்கு இணையென ஒருத்தியை கொண்டுவரப்போகிறீர்கள். அதைப்பற்றி…” என்றான் துரியோதனன். “இல்லை” என்றான் கர்ணன்.

சினத்துடன் திரும்பி “ஏன்? அவள் எளிய பெண் என்பதனாலா?” என்றான் துரியோதனன். கர்ணன் “எளிய பெண்தானே?” என்றான். “யார் சொன்னது? உமக்கும் எனக்குமான உறவுக்கும் அப்பால் அவளுடன் எனக்கோர் உறவுள்ளது. என் தங்கை அவள்…” என்றான். “அதை நான் அறிவேன்” என்றான் கர்ணன். “பின்பு…?” என்றபடி துரியோதனன் அணுகினன். “அவளைப்பற்றி நீ பொருட்டின்றி பேசுகிறாய்.” கர்ணன் “நான் சொன்னது நடைமுறை உண்மை. பானுமதி உயர்ந்த எண்ணங்களால் உந்தப்பட்டு இணைவி ஒருத்தியை ஏற்க ஒப்புக் கொண்டிருக்கிறாள். உயர்ந்த எண்ணங்கள் காலை ஒளியில் பொன்னென மின்னும் முகில்களைப்போல மிகக் குறுகிய பொலிவு கொண்டவை. விருஷாலி நடைமுறை உண்மையிலிருந்து இம்முடிவை ஏற்றுகொண்டவள். எனவே நான் இன்னொருத்தியை கைப்பற்றியே ஆகவேண்டும். இத்தகைய முடிவுகள் மலைப்பாறைகளைப்போல நமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவை என்றுமென நின்றுகொண்டிருக்கும்” என்றான்.

“எல்லாவற்றையும் இப்படி எண்ணங்களாக வகுத்து அமைத்துக் கொள்வது எனக்கு சலிப்பூட்டுகிறது” என்றபடி தொடையில் தட்டினான் துரியோதனன். “ஏன் இப்படி சொற்களை அடுக்கிக் கொண்டே இருக்கிறோம்?” கர்ணன் “மனிதர்கள் சொற்களால் தங்களுடைய உலகை உருவாக்கிக் கொள்கிறார்கள். நாம் வாழும் நகரங்களும் கோட்டைகளும் அரண்மனைகளும் உண்ணும் உணவும் உடைகளும் முடியும் கோலும் அனைத்தும் சொற்களால் ஆனவையே. அச்சொற்களுக்கு ஒரு நீட்சி எனவே பருப்பொருட்கள் வெளியே உள்ளன. இது அமரநீதியில் உள்ள சொற்றொடர். விதுரரிடம் கேட்டால் மொத்தத்தையும் சொல்வார்” என்றான்.

“விடும்! இனி அச்சொற்களைக் கேட்க நான் விரும்பவில்லை” என்றான் துரியோதனன். “ஏன்?” என்றான் கர்ணன். “அச்சமூட்டுகின்றன. இச்சொற்களைக் கொண்டு எவற்றை விளக்கிவிட முடியும்? எச்செயலையும் குற்றவுணர்வின்றி ஆற்ற முடியும் கூர்சொல்லேந்தியவனைப்போல அச்சத்துகுரியவன் எவருமில்லை” என்றபின் “நான் உள்ளே சென்று படுத்துக் கொள்ளப்போகிறேன்” என்றான் துரியோதனன். “வேண்டாம்” என்றான் கர்ணன். “ஏன்?” என்று துரியோதனன் கேட்டான். “உள்ளே சென்றால் நீங்கள் மது அருந்துவீர்கள். இங்கு படுத்துக் கொள்ளலாம்” என்றான்.

“இங்கா…?” என்றபடி நீள்பலகையில் ஓசையுடன் அமர்ந்துகொண்டான் துரியோதனன். மெல்ல உடலை நீட்டிக் கொள்ள பலகை முனகி வளைந்தது. “விண்மீன்களை பார்த்துக் கொண்டிருப்போம். அரசர்கள் வானை நோக்க வேண்டுமென்று அமர நீதி சொல்கிறது.” “ஏன்?” என்றான் துரியோதனன். “மண்ணில் இருந்து தன்னை விண்ணுக்கு தூக்கிக் கொள்ளாமல் எவரும் அரசனாக முடியாது. புகழ்மொழிகளால் அரசமுறைமைகளால் குலக்கதைகளால் சூதர்பாடல்களால் ஒவ்வொரு கணமும் கீழிருந்து மேலேற்றப்படுகிறான். மேலே இருந்து கொண்டிருப்பதாக அவன் எண்ணிக் கொண்டிருப்பது இயல்பே. விண்ணைநோக்கினால் எந்நிலையிலும் தான் மண்ணில் இருப்பதை அவனால் புரிந்து கொள்ள முடியும்.”

துரியோதனன் விண்மீன்களையே நோக்கிக் கொண்டிருந்தான். “ஆம்” என்று நெடுநேரத்துக்குப் பிறகு சொன்னான். கர்ணன் பெருமூச்சுவிட்டு தன் கைகால்களை நன்கு நீட்டி தளர்த்திக் கொண்டான். விரைந்து செல்லும் படகின் கொடி துடிக்கும் ஒலி மிக அண்மையில் என கேட்டது. சித்தம் சற்று மயங்கியப்போது அது நெருப்பொலியாகியது. வெண்ணிறமான நெருப்புத் தழல்களுக்கு நடுவே சிதை நடுவில் அவன் படுத்திருந்தான். நெருப்பு குளிர்ந்தது. ஆனால் அவன் தசைகள் உருகி வழிந்து கொண்டிருந்தன. கைகால்கள் வெள்ளெலும்பாயின. குனிந்து தன் நெஞ்சைப் பார்த்தபோது அங்கு பொற்கவசத்தை கண்டான். இரு கைகளாலும் செவி மடல்களைத் தொட்டு அங்கே மணிக் குண்டலங்களை உணர்ந்தான்.

நெஞ்சு பறையொலிக்க அவன் எழுந்து அம்ர்ந்தபோது திசை நோக்கி பறந்து செல்லும் அம்பு ஒன்றில் அமர்ந்திருக்கும் உணர்வை அடைந்தான். படகின் அமர முனையில் காற்று கிழிபட்டு பாம்பென சீறிக்கொண்டிருந்தது. சற்று அப்பால் துரியோதனன் நீண்ட மூச்சொலியுடன் துயின்று கொண்டிருந்தான். விண்ணில் எதையோ தான் கண்டதாக ஓர் உணர்வை கர்ணன் அடைந்தான். துரியோதனனை திரும்பிப் பார்த்தபின் எழுந்து நின்று தன் ஆடைகளை சீர்படுத்திக் கொண்டான். விண்ணிலிருந்து ஒரு விழி தன்னை நோக்கியது போல. உடனே அவ்வெண்ணம் வந்து தன் பிடரியைத் தொட அண்ணாந்து பார்த்தபோது அங்கே விடிவெள்ளியை கண்டான்.

பலகைகள் காலொலி பெருக்கிக் காட்ட அறைக்குள் சென்று “சிவதரே” என்றான். அறைக்குள்ளிருந்து கையில் தோல்சுருளுடன் வந்த சிவதர் “ஆம் அரசே, சற்று பிந்திவிட்டோம். வெள்ளி முளைத்துவிட்டது” என்றார். “எவ்வளவு பிந்திவிட்டோம்?” என்றான் கர்ணன். “ஒரு நாழிகை நேரம்” என்றார் சிவதர். “படகு முழு விரைவில் சென்றதல்லவா?” என்றான் கர்ணன். “ஆம். ஆனால் மகதத்தின் பெரிய வணிகக் கலத்திரள் ஒன்று நமக்கெதிராக வந்தது. பெருவிரைவில் அவர்களைக் கடந்து செல்வது ஐயத்தை உருவாக்கும் என்று பாய்களை அவிழ்க்கச் சொன்னேன்”.

“குறுங்காட்டில் நம்மைக் காத்திருப்பவர்கள் எவர் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது” என்றான். “ஆம்” என்றார் சிவதர். கவலையுடன் “நாம் கருக்கிருட்டிலேயே ராஜபுரம் நோக்கி செல்வதாக அல்லவா திட்டம்?” என்றான் கர்ணன். “ஆம். அதைத்தான் நோக்கிக் கொண்டிருந்தேன். நேரடியான குறும்புதர்ப் பாதையில் ராஜபுரம் நோக்கி செல்வதாக இருந்தது. சற்று வளைந்து குறுங்காடுகளுக்குள் ஊடுருவிச் சென்றால் மேலும் ஒரு நாழிகை ஆகும் என்றாலும் எவர் கண்ணிலும் படாமல் ராஜபுரத்திற்குப் பின்புறமுள்ள குறுங்காட்டை அடைந்துவிட முடியும்.”

“ஏற்புமணம் அப்போது தொடங்கிவிட்டிருக்குமல்லவா?” என்றான் கர்ணன். “ஆம். நாம் செல்லும்போது அனைத்து அவை முறைமைகளும் முடிந்து ஏற்புமணத்திற்கான போட்டி தொடங்கும் தருணம் முதிர்ந்திருக்கும்.” கர்ணன் உடல் தளர்ந்து “ஒவ்வொன்றும் மிகச் சரியாக நடந்தாக வேண்டும்” என்றான். “ஆம், நான் நம்பிக் கொண்டிருப்பது ஜராசந்தரை” என்றார் சிவதர். “ஜயத்ரதன் இளைய அரசியை கொண்டு செல்வதை ஜராசந்தர் விரும்பமாட்டார் என்று என் உள்ளம் சொல்கிறது. ஆகையால் அங்கு சொற்பூசல் ஒன்று நிகழாதிருக்காது.”

“இத்தகைய முன் எண்ணங்களைச் சார்ந்து திட்டங்களை அமைப்பது நன்றல்ல” என்றான் கர்ணன். “அல்ல. ஆனால் இதை நான் வலுவான செய்திகள் வழியாக உறுதி கொண்டிருக்கிறேன். ஜயத்ரதனை ஜராசந்தர் தடுப்பார். ஆகவே படைக்கலப் போட்டியோ அதை ஒட்டிய சொல்லெடுப்போ அங்கு நிகழும். நாம் அங்கு சென்று சேர்வது அத்தருணத்திலாகத்தான் இருக்கும்” சிவதர் சொன்னார். “அவ்வாறாகட்டும்” என்றபின் கர்ணன் திரும்பி படகின் அகல் மேடைக்கு வந்தான். அவன் காலடி ஓசையைக் கேட்டு விழித்தெழுந்த துரியோதனன் பலகையில் அமர்ந்து “வந்துவிட்டோமா?” என்றபின் வானைப்பார்த்து “விடிவெள்ளி” என்று கூவியபடி எழுந்தான்.

“நாம் சற்று பிந்திவிட்டோம். இன்னும் அரை நாழிகையில் சென்றுசேர்வோம்” என்றான் கர்ணன். “ஒளி வரத்தொடங்கியிருக்குமே?” என்றான் துரியோதனன். “ஆம். மாற்றுப்பாதை ஒன்றை சிவதர் வகுத்திருக்கிறார்” என்றான். துரியோதனன் தன் தொடைகளில் அறைந்தபடி “நன்று நன்று” என்றான். “இருளில் விழிகளுக்குத் தெரியாமல் நரிகளைப்போல் செல்வது எனக்கு சலிப்பூட்டியது. இது போர். ஒருவகையில் இது நேரடி களப்போர். இதுவே ஷத்ரியர்களுக்குரியது. வழியில் உபகலிங்கர்களின் சிறுபடை ஒன்றை எதிர்கொண்டு சில தலைகளை வீழ்த்தி குருதிசொட்டும் அம்புகளுடன் ராஜபுரத்திற்குள் நுழைவோம் என்றால் நாளை நம்மைப் பற்றி சூதர்கள் பாடும்போது சுவை மிகுந்திருக்கும்” என்றான். கர்ணன் புன்னகைத்தான்.

தொடர்புடைய பதிவுகள்


சங்கரர் உரை கடிதங்கள் 3

$
0
0

IMG_20160103_181332

அன்புள்ள ஜெயமோகன்,

சார் வணக்கம், கீதை உரை பற்றி கடிதம் எழுத எண்ணினேன்.முடியவில்லை. முடியவில்லை
என்பதைவிட வார்த்தைகள் அமையவில்லை. ஆனால். சங்கரர் உரைக்குப்பின் எனது பிரமிப்பை எழுதிவிடுவது என முடிவு செய்தேன். பள்ளி வரலாற்றுப்பாடத்தில் ஆதிசங்கரர் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்று கூறினார். இதுவே அத்வைதமாகும் என்று மனப்பாடம் செய்து ஆசிரியர் கூறியதை மனப்பாடம் செய்ததை தவிர வேறொன்றும் தெரியாது.  தங்கள் தளத்தில் தொடர்ந்து வாசிப்பதால் இந்த மாதிரி த்த்துவங்கள் கொஞ்சம் அறிமுகம். ஆனால் இந்த உரை கேட்டவர்களை எங்கோ கொண்டு சென்றது.

கீதை உரைக்கு முன்னால் தங்கள் கருத்துக்கள் இந்த அவையில் ஏதாவது ஏடாகூடமாகுமோ என்ற சந்தேகம் எனக்கிருந்தது உண்மை. ஏனென்றால் இதுவரை இருந்த பல நம்பிக்கைகள் சீண்டப்பட்டன.அத்வைத  உரைக்குப்பின் மேலும் சீண்டப்பட்டுள்ளது.ஆனால் அங்கு வந்தவர்கள் தரமான தங்கள் உரை கேட்க தகுதியானவர்கள்தான் என்பதை உணர முடிந்தது. இந்த புதிய திறப்பு பல புதிய உச்சங்களை நோக்கி தங்களை இட்டுச்செல்லும் என்பதை மட்டும் என்னால் உணர முடிகிறது. நன்றி

சி.மாணிக்கம் மந்தராசலம்,

செஞ்சேரிமலை.

 

*

Dear Jeyamohan

There is a lone inscription found on sankara bhashyam of Virarajendra period ( son of Rajenda 1)

 

*

 

அன்புள்ள சங்கர்

ஆர்வமூட்டும் செய்தி.

ஆனால் இதில்கூட சங்கரபாஷ்யம் என எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதே ஒழிய சங்கரர் பெயர் உள்ளதா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இத்துறையில் அறிஞர்கள் பலர் விவாதித்து பொதுமுடிவுக்கு எட்டுவதற்காக காத்திருக்கவேண்டியதுதான். வரலாற்றியலில் பொதுவாக அதுவே முறைமை.

சங்கரவேதாந்தம் எட்டாம்நூற்றாண்டு முதல் இரு சரடுகளாக  இருந்துகொண்டே இருந்திருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஏகதண்டி துறவிகளின் மரபாக ஒரு சரடு. வேதாந்திகளால் ஆராயப்படும் ஒரு வலுவான தத்துவத்தரப்பாக ஒரு சரடு. அதற்கான வரலாற்றுத்தருணம் வந்தபோது அவரது ஞானமரபினரில் இருந்து அது பேருருவம் கொண்டது

 

ஜெ

 

ஜெ

சங்கரர் உரை பலவகையிலும் திறப்பாக இருந்தது. நீங்கள் சொன்ன பலவிஷயங்களை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. சங்கரர் பற்றிய கதைகளை பிற்காலத்தைய புராணக்கற்பனைகள் என்று சொல்லலாம். ஆனால் சங்கரரின்சௌந்தரிய லஹரி போன்றவற்றை பிற்காலத்தையவை என்று சொல்லத்தோன்றவில்லை. அவை சாதாரண மனிதர்களால் இயற்றப்படக்கூடியவை அல்ல.

மேலும் ஷண்மத சமன்வயத்தை உருவாக்கிய சங்கரபகவத்பாதர்  ஞான கர்ம சமுச்சயத்தையும் உருவாக்கினார் என்று நம்புவதில் தவறில்லை என்பதே என்னுடைய எண்ணமாக உள்ளது. அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் ஞானநூல்களில் சங்கரர் பக்தியைக் கடுமையாகக் கண்டிப்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடியும்

ஆனால் உங்கள் உரை வரலாற்று நோக்கில் பல கோணங்களில் சிந்திக்கவைக்கிறது. நவீன இளைஞன் ஒருவன் சங்கரரை நோக்கி வருவதற்கு சம்பிரதாயமான எந்த ஒரு உரையையும் விட இதுவே பொருத்தமானது என்று தோன்றுகிறது. இன்றைக்குத்தேவை வெறுமே பக்தியை முன்வைக்கும் உரைகள் அல்ல. இந்தவகையான ஆழமான நவீன உரையாடல்கள்தான் என்று நினைக்கிறேன்

அனைத்துவாழ்த்துக்களும்

அன்புடன்

சங்கரநாராயணன்

 

 

 

ஜெமோ

சங்கரரின் ஷண்மத சமக்ரமார்க்கம் ஒரு விஸ்வரூபத்தை எடுப்பதற்கு இந்துஞான மரபின்மேல் நடந்த படையெடுப்புகள் காரணம் என்றும் ஸ்மார்த்த சம்பிரதாயம் அதைப்பாதுகாக்க எடுக்கப்பட்ட பெரும் முயற்சி என்றும் வெளிப்படையாகச் சொன்னதற்குப் பாராட்டுக்கள். ஆனால் கூடவே இஸ்லாமியத் தாக்குதலை நைச்சியமாக சுல்தானியத்தாக்குதல் என்று மாற்றிய நுட்பத்தையும் குறிப்பிடவேண்டும்

 

சங்கரராமன்

 

சங்கரர் உரை

தொடர்புடைய பதிவுகள்

நாட்டார்கதைகளும் வரலாறும்

$
0
0

images

அன்புள்ள ஜெ

நலமா ?

ஜன்னலில் உங்கள் கட்டுரைகளை வாசித்து வருகிறேன் .அவை தொகுக்கப்பட்டு புத்தகமாக வரும் நாளை ஆவலோடு எதிர் பார்க்கிறேன் காஞ்சிரகோட்டு யக்ஷியை குறித்து கீழ் கண்ட இணைப்பில் வாசித்தேன்.https://en.wikipedia.org/wiki/Kanjirottu_Yakshi.முழுமையான வரலாறு அல்ல .இருப்பினும் ஒரு சில விஷயங்கள் சுவாரஸ்யமாக உள்ளன .இந்த தொன்ம அமைப்பு பதிவான அமைப்புகளில் இருந்து வேறு பட்டு இருப்பதாக தோன்றுகிறது .பலராம உபாசனை ,ராமானுஜ பெருமாள் ஆகிய விஷயங்களும் தான்.(சுசிந்தரம் அருகே ஒரு பலராம க்ஷேத்ரம் இருந்தது என்றும் அது இப்போது கிருஷ்ணன் கோவில் ஆகி விட்டது என்றும் தந்திரி ஒருவர் கூறினார்).நீங்கள் இந்த தொன்மத்தை குறித்து கேள்விபட்டது உண்டா?

வேறு விசேஷம் ஏதும் இல்லை .ஆளுர் பக்கம் சென்று இருந்த போது கண்டன் நாயரும் நரசிம்ஹலு ரெட்டியும் உங்களை விசாரித்தார்கள் .நீங்கள் கடும் பணிச்சுமையில் இருப்பதாக கூறியதும் அனுமந்து ரெட்டி நாயர்களை நம்ப கூடாது என்றார் .

நன்றி

அனீஷ் க்ருஷ்ணன் நாயர்

 

அன்புள்ள அனீஷ் கிருஷ்ணன்

ஜன்னல் இதழின் கோரிக்கைக்கு ஏற்ப அக்கட்டுரைகளை வலையேற்றமும் செய்யவில்லை. நூலாக வரும்போது தருகிறேன்

குமரிமாவட்டத்தின் நாட்டார் கதைகளில் உள்ள கொடூரமான வசீகரம்தான் என் கட்டுரைத்தொடருக்கு ஊற்று. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இக்கதை நீங்கள் ஊகித்ததுபோல  ஒரு எளிய நாட்டார்க்கதை அல்ல. ஒரு வரலாற்றுக்கதையின் நாட்டார் வடிவம் – தம்பிமார் கதைபோல. இதிலுள்ளது அரசியலாடலில் வீழ்த்தப்பட்டவர்களின் வன்மம்

ரெட்டி பிரதர்ஸ் கொண்டுபோகும் பட்டும்பொன்னும் இல்லாமல் தலக்குளம் வலியதம்புராட்டியின் அரண்மனையில் புடவைக் கொடை எட்டாண்டுகளாக நின்றுகொண்டிருக்கிறது

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

விடலையும் குடும்பனும் –பூமணியின் அஞ்ஞாடி

$
0
0

அது நாவலாக, பூமணியின் படைப்பாக்கமாக இருந்து கொண்டிருக்கிற வரையில், அதைக் குறித்து பேசுவதில் சின்னதோ பெரியதோ ஒரு அசௌகரியம் இருந்து கொண்டே இருக்கிறது. எழுத்தின் சிடுக்குகளையும் உள்ளடங்கிய முரண்களையும் அடையாளப்படுத்துகையில் அதன் படைப்பாளியையே படுத்துவதாக விளங்கிக்கொண்டு விடுகிற சங்கடம் இது.

அதே எழுத்தை சிலாகிக்கையிலோ சூழல் இன்னும் அபத்தமாக மாறி கூச்சத்தின் நுனியைத் தொட்டு விடுகிறது.  நாவலை ‘ஆக்கமாகக்’ கருதி உரையாடுவதிலுள்ள இந்தத் தடுமாற்றங்களிலிருந்து தப்பித்து விடுவதற்கு, ‘ரோலாண் பார்த்’ன் ‘ஆக்கங்களும் பனுவல்களும் வேறு வேறானவை’ என்ற யோசனையை பயன்படுத்திக்கொள்கிறேன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கர்ணன்

$
0
0

 

1

மதுரையில் அலெக்ஸ் நடத்திய அயோத்திதாசர் விழாவுக்குச் சென்றிருந்தபோதுதான் எழுத்தாளர் கர்ணனை சந்தித்தேன். அவரது சில எழுத்துக்களை அந்தக்கால தீபம் இதழில் வாசித்த நினைவு இருந்தது. நா.பார்த்தசாரதி போன்றவர்களுடன் நெருக்கமாகப் பழகிய எழுத்தாளர். ஆனால் முற்போக்கு முகாமைச்சேர்ந்தவராக தன்னை நிறுத்திக்கொண்டவர்

அதற்குக் காரணம் அவரது வாழ்க்கை. எளியகுடும்பத்தில் பிறந்த கர்ணன் தையல்தொழிலாளராகவே வாழ்ந்தார். தன் அனுபவங்களின் பதிவுகளாகவே நூல்களையும் எழுதினார். அவை அன்றாட எளியவாழ்க்கை இலக்கியத்தில் பதிவான ஒருகாலகட்டத்தின் இலக்கியங்கள்.

இன்று தையல்பணி இல்லாதநிலையில் பொருளியல்சிக்கலில் அவர் இருப்பதாகச் சொன்னார். எஸ்.ராமகிருஷ்ணன் அவரது இணையதளத்தில் கர்ணனைப்பற்றி எழுதியிருக்கிறார்.

 

திரு. கர்ணன்

37,  சுயராஜ்யபுரம் 4 வது தெரு

செல்லூர். மதுரை – 2

தொலைபேசி.  9487950844

 

என கர்ணனின் முகவரியை அளித்து நண்பர்கள் உதவவேண்டும் என கோரியிருக்கிறார். அக்கோரிக்கையை நானும் முன்வைக்கிறேன்.

 

எஸ் ராமகிருஷ்ணன் கர்ணன் குறித்து எழுதிய கட்டுரை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 21

$
0
0

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 9

வடகலிங்கத்தின் கங்கைக்கரை எல்லையில் இருந்த சியாமகம் என்ற பெயருள்ள குறுங்காட்டின் நடுவே ஆளுயரத்தில் கங்கையின் உருளைக்கற்களால் கட்டப்பட்ட சிறிய கொற்றவை ஆலயம் இருந்தது. அதற்குள் இரண்டு முழ உயரத்தில் அடிமரக் குடத்தில் செதுக்கப்பட்ட பாய்கலைப்பாவையின் நுதல்விழிச் சிலை ஒன்று காய்ந்த மாலை சூடி காலடியில் குருதி உலர்ந்த கரிய பொடி பரவியிருக்க வெறித்த விழிகளும் வளைதேற்றைகள் எழுந்த விரியிதழ்களுமாக நின்றிருந்தது. கருக்கிருட்டு வடிந்து இலைவடிவுகள் வான்புலத்தில் துலங்கத்தொடங்கின. காலைப்பறவைகள் எழுந்து வானில் சுழன்று ஓசைபெருக்கின. காட்டுக்கோழிகள் தொலைவில் ‘கொலைவில் கொள் கோவே’ என கதிரவனை கூவியழைத்தன.

ஆலயமுகப்பில் நின்றிருந்த நான்கு புரவிகள் சிறு செவியை கூப்பி தொலைவில் நடந்த காலடி ஓசையைக் கேட்டு மெல்ல கனைத்தன. உடனிருந்த வீரர்கள் எழுந்து புரவிகளின் முதுகைத்தட்டி அமைதிப்படுத்தினர். தலைவன் கையசைவால் அனைவரும் சித்தமாக இருக்கும்படி ஆணையிட்டான். வீரன் ஒருவன் மரக்கிளை ஒன்றில் தொற்றி மேலேறி தொலைவில் பார்த்து கையசைவால் அவர்கள் தான் என்று அறிவித்தான். காலடிகள் அணுகிவந்தன.

ஆந்தை ஒலி ஒன்று எழ தலைவன் மறுகுரல் அளித்தான். புதர்களுக்கு அப்பால் இருந்து துரியோதனனும் கர்ணனும் பின்னால் சிவதரும் வந்தனர். அவர்களின் உடல் காலைப்பனியில் நனைந்து நீர்வழிய ஆடைகள் உடலோடு ஒட்டியிருந்தன. சிவதர் மெல்லிய குரலில் “அரசர்” என்றார். வீரர்கள் தலைவணங்கினர். “நேரமில்லை” என்றான் தலைவன். கர்ணன் துரியோதனனை நோக்கி கைகாட்டிவிட்டு முதல் வெண்புரவியில் கால்சுழற்றி ஏறிக்கொண்டான்.

சிவதர் பால்நுரைத்த நீள்குடுவை போன்றிருந்த கொக்கிறகுகள் பதித்த அம்புகள் செறிந்த அவனுடைய அம்பறாத்தூணியை அளிக்க தலையைச் சுற்றி எடுத்து உடலுக்குக் குறுக்காக போட்டு முதுகில் அணிந்து கொண்டான். வில்லை குதிரையின் கழுத்திலிருந்த கொக்கியில் மாட்டி தொடைக்கு இணையாக வைத்தான். புரவியின் பின்பக்கங்களில் சேணத்துடன் பிணைக்கப்பட்டிருந்த இரும்புக் கொக்கிகளில் மேலும் நான்கு அம்பறாத்தூணிகளை இரு வீரர்கள் எடுத்து வைத்தனர்.

துரியோதனன் எடையுடன் தன் புரவியிலேறிக்கொண்டு வீரர்கள் அம்பறாத்தூணிகளை மாட்டுவதற்கு உதவினான். அவன் புரவி முன் கால் எடுத்துவைத்து உடலை நெளித்து அவன் எடையை தனக்குரியவகையில் ஏந்திக்கொண்டது. சிவதர் பேசாமலேயே கைகளால் ஆணையிட மூன்று புரவிகளும் சித்தமாயின. சிவதர் புரவியிலேறிக் கொண்டதும் திரும்பி காவலர் தலைவனிடம் அவன் மேற்கொண்டு செய்வதற்கான ஆணைகளை பிறப்பித்தார்.

அவர்கள் வந்த படகு குறுங்காட்டுக்கு அப்பால் கங்கையின் கரைச்சதுப்புக்குள் பாய்களை முற்றிலும் தாழ்த்தி சுருட்டி கொடிமரத்தை சரித்து நீட்டி இழுத்துக்கொண்டுவரப்பட்டு இரண்டாள் உயரத்திற்கு எழுந்து சரிந்திருந்த நாணல்களுக்கு உள்ளே இருந்த சேற்றுக்குழி ஒன்றுக்குள் விடப்பட்டிருந்தது. அதனருகே காவல்நிற்கும்படி அவர் சொல்ல அவன் தலைவணங்கினான். அவன் விலகிச்செல்ல பிற வீரர்கள் தொடர்ந்தனர். மீன்கள் நீரின் இலைநிழல்பரப்பில் மறைவதுபோல் ஓசையின்றி அவர்கள் காட்டில் அமிழ்ந்தழிந்தனர்.

செல்வோம் என்று கர்ணன் தலையசைத்தான். சிவதர் தலையசைத்ததும் கர்ணன் கடிவாளத்தை இழுக்க அவன் புரவி மெல்லிய கனைப்பொலியுடன் முன்குளம்பை நிலத்தில் அறைந்து தலைகுனித்து பிடரி சிலிர்த்து தரை முகர்ந்து நீள்மூச்சுவிட்டது. அவன் கால்முள்ளால் தூண்டியதும் மெல்ல கனைத்தபடி சரவால் சுழற்றிப் பாய்ந்து குறுங்காட்டுக்குள் நுழைந்தது. இருபக்கமும் சிற்றிலைக் குட்டைமரங்கள் வீசி வீசி கடந்து செல்ல, முட்கிளைகள் வளைந்து அவர்களை அறைந்தும் கீறியும் சொடுக்கியும் பின்செல்ல குறுங்காட்டுக்குள் விரைந்தோடிச் சென்றன புரவிகள்.

குதிரையின் தலை உயரத்திற்குக் கீழாக தம் முகத்தை வைத்து கிளைகளின் எதிரடிகளை தவிர்த்தபடி அவர்கள் சென்றனர். காடெங்கும் புரவிகளின் குளம்போசை ஒன்று பத்தெனப் பெருகி துடியொடு துடியிணைந்த கொடுகொட்டி நடனத்தாளமென கேட்டுக் கொண்டிருந்தது. கருங்குரங்குகள் கிளைகளுக்கு மேல் குறுமுழவோசை எழுப்பி கடந்து சென்றன. ஆள்காட்டிக் குருவி ஒன்று அவர்கள் தலைக்கு மேல் பறந்து சிறகடித்துக் கூவியபடி எழுந்தும் அமைந்தும் உடன் வந்து பின் தங்கியது. நிலத்தில் விழுந்து சிறகடித்துச் சுழன்று மேலே எழுந்து மீண்டு வந்தது.

தலைக்கு மேல் எழுந்து வானில் கலந்த பறவைகளைக் கொண்டே போர்க்கலை அறிந்த எவரும் தங்களை அறிந்துவிட முடியுமென்று கர்ணன் எண்ணினான். அவன் எண்ணத்தை உணர்ந்தது போல சிவதர் தன் புரவியைத் தூண்டி அவன் அருகே வந்து “இப்பகுதியில் வேளாண்குடிகள் மட்டுமே உள்ளனர். இதை காவல்படைகளின் உலா என்றே எடுத்துக் கொள்வார்கள். ஏனெனில் இப்போது அங்கு மணத்தன்னேற்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றார். மேலே இலைப்பரப்புக்கு அப்பால் வானம் இளங்கருமையின் அடிவெளியெனத் தெரிந்தோடியது.

குறுங்காட்டின் ஆழத்திற்குச் சென்றபின் புரவிகளை சற்று விரைவழியச் செய்து மூச்சு வாங்க விட்டபடி பெருநடையில் சென்றனர். துரியோதனன் தன் தோல் பையில் இருந்து நீர் அருந்தினான். கர்ணன் அவனை நோக்க நீரை கர்ணனை நோக்கி நீட்டியபடி “நம் படைக்கலங்களுக்கு இன்னும் வேளை வரவில்லை” என்றான். “பொறுமை. இங்கு நாம் ஒரு போரில் இறங்கினால் நகருக்குள் அந்நேரத்தை இழக்கிறோம்” என்றான் கர்ணன். “ஆயினும் குருதியின்றி எப்படி எல்லை கடப்பது?” என்றான் துரியோதனன். கர்ணன் “பொறுங்கள் அரசே, தங்கள் வாளுக்கும் அம்புக்கும் வேலை வரும்” என்றான். “செல்வோம்” என்றார் சிவதர்.

புரவியை தட்டியபடி மீண்டும் விரைவெடுத்து குறுங்காடுகளில் மூன்று மடிப்புகளில் ஏறி இறங்கி காடருகே இருந்த சிற்றூர் ஒன்றின் மேய்ச்சல் நிலத்தின் விளிம்பை அடைந்தனர். கண்தெளிந்த காலை தொலைவை அண்மையாக்கியது. மரப்பட்டைக் கூரையிட்ட சிற்றில்லங்களுக்கு மேல் அடுமனைப் புகையெழுந்து காற்றில் கலந்து நிற்பதை பார்க்க முடிந்தது. புலரியொளி எழவில்லை என்றாலும் வானம் கசிந்து மரங்களின் இலைகளை பளபளக்கச் செய்தது. புல்வெளியிலிருந்து நீராவி எழுந்து மெல்ல தயங்குவதை காணமுடிந்தது.

சிற்றூரின் காவல்நாய்கள் புரவிகளின் வியர்வை மணத்தை அறிந்து குரைக்கத் தொடங்கின. இரு செவ்வைக்கோல்நிற நாய்கள் மேய்ச்சல் நிலத்தில் புகுந்து காற்றில் எழுந்த சருகுகளைப் போல அவர்களை நோக்கி ஓடி வருவதை கர்ணன் கண்டான். “இந்தச் சிற்றூரை நாம் கடந்து செல்ல வேண்டுமா?” என்று திரும்பி சிவதரிடம் கேட்டான். “ஆம். ஆனால் இதை இன்னும் இருளிலேயே நாம் கடந்து செல்வோம் என்று எண்ணினேன்” என்றார் அவர். “விரைவாக விடிந்து கொண்டிருக்கிறது” என்று துரியோதனன் சொன்னான். “இங்கு காவல் வீரர்கள் இருந்தால் தலைகொய்து கடந்து செல்லலாம்.”

“இது எளிய வேளாண்குடிகளின் சிற்றூர்” என்று மீசையை நீவியபடி கர்ணன் சொன்னான். “இன்று அவர்களின் நன்னாள். இல்ல முகப்புகளில் மாவிலைத் தோரணங்களும் மலர் மாலைகளும் சூட்டப்பட்டுள்ளன. புலரியிலேயே எழுந்து சமைக்கத் தொடங்கிவிட்டனர். அடுமனைப்புகையில் வெல்லத்தின் நறுமணம் உள்ளது” என்றார் சிவதர். “என்ன செய்வது?” என்று துரியோதனன் சிவதரிடம் கேட்டான்.

“செய்வதற்கொன்றுமில்லை அரசே. முழுவிரைவில் இச்சிற்றூரை கடந்து மறுபுறம் செல்லவேண்டும். அப்பால் ஒரு நிலச்சரிவு. அதன் மடிப்பில் உருளைக்கற்களும் சேறும் நிறைந்த சிற்றாறு ஒன்று ஓடுகிறது. அதைக் கடந்து புல்படர்ந்த சரிவொன்றில் ஏறினால் ராஜபுரத்திற்கு பின்னால் உள்ள குறுங்காட்டை அடைவோம். அரைநாழிகையில் அக்காட்டைக் கடந்து கோட்டையின் பின்பக்கம் உள்ள கரவு வழி ஒன்றை அடையலாம். அங்கு நமக்காக வழி ஒன்று ஒருக்கி காத்திருக்கும்படி இரு ஒற்றர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது” என்றார் சிவதர்.

“அப்படியென்றால் என்ன தயக்கம்? செல்வோம்” என்றபடி துரியோதனன் புரவியைத்தட்டி முழுவிரைவில் மேய்ச்சல் நிலத்தின் ஈரப்புல் படிந்த வளைவுகளுக்கு மேல் பாய்ந்தோடினான். அவனது புரவிக் குளம்புகளால் மிதிபட்ட புற்கள் மீது நீரில் கால்நுனி தொட்டுத் தொட்டு பறந்து செல்லும் பறவைத் தடமென ஒன்று உருவாயிற்று. “விரைக!” என்றபடி சிவதரும் தொடர்ந்து செல்ல மேலும் ஒரு சில கணங்கள் எண்ணத்தில் இருந்தபின் கர்ணன் தன் புரவியை தட்டினான்.

துரியோதனன் புரவியை எதிர்கொண்ட நாய் ஒன்று அதன் விரைவைக் கண்டு அஞ்சி வால் ஒடுக்கி ஊளையிட்டபடி பின்னால் திரும்பி சிற்றூரை நோக்கி குறுகி ஓடியது. அவ்வூளையின் பொருளறிந்து பிறநாய்களும் கதறியபடி ஊரை நோக்கி ஓடின. ஊருக்குள் அனைத்து நாய்களும் ஊளையிடத் தொடங்கின. அவ்வோசை கேட்டு தொழுவங்களில் பசுக்கள் குரலெழுப்பி கன்றுகளை அழைத்தன. சிலகணங்களிலேயே ஊர் கலைந்தெழுந்தது.

இல்லங்களுக்குள் இருந்து மக்கள் திண்ணைகளை நோக்கி ஓடி வந்து தங்கள் ஊர் மன்றை அடைந்த துரியோதனனின் புரவியை பார்த்தனர். இளைஞன் ஒருவன் கையில் நீள்வேலுடன் துரியோதனனை நோக்கி ஓடி வர இன்னொருவன் பாய்ந்தோடி ஊர் மன்று நடுவே இருந்த மூங்கில் முக்கால் மேடை ஒன்றின் மேல் தொற்றி ஏறி அங்கிருந்த குறுமுரசு ஒன்றை கோல் கொண்டு அடிக்கத் தொடங்கினான். துரியோதனனின் அம்பு அந்த முரசின் தோலைக் கிழித்து அதை ஓசையற்றதாக்கியது. இன்னொரு அம்பு முன்னால் வந்தவனின் வேலை இரு துண்டுகளாக்கியது.

திகைத்து அவன் இரு கைகளையும் வீசி உரத்து கூவ அனைத்து இல்லங்களுக்குள்ளிருந்தும் இளைஞர்கள் கைகளில் வேல்களும் துரட்டிகளும் கோல்களுமாக இறங்கி ஊர் மன்றை நோக்கி ஓடி வந்தனர். பெண்கள் கூவி அலறியபடி குழந்தைகளை அள்ளிக் கொண்டு உள்ளே சென்றனர். முதியவர்கள் திண்ணைகளில் நின்று கைகளை வீசி கூச்சலிட்டனர். இருவர் பெரிய மூங்கில்படல் ஒன்றை இழுத்துக்கொண்டுவந்து ஊர்முகப்பை மூடமுயன்றனர்

தாக்கப்படும் விலங்கு போல அச்சிற்றூரே அலறி ஒலியெழுப்புவதை கர்ணன் கண்டான். துரியோதனனின் புரவி ஊர்மன்றுக்குள் நுழைந்தது. அதைத் தொடர்ந்து வந்த சிவதர் கர்ணனை நோக்கி விரைக என்று கைகாட்டி குறுக்காக வந்த பெரிய கூடை ஒன்றை தாவி மறுபக்கம் சென்றார். அவரது கால்களால் எற்றுண்ட கூடை கவிழ்ந்து பறக்க அதற்குள் மூடப்பட்டிருந்த கோழிகள் கலைந்து குரலெழுப்பியபடி சிறகடித்தன.

கர்ணனின் புரவி ஊரை புல்வெளியிலிருந்து பிரித்த சிற்றோடையை தாவிக்கடந்து ஊர் மன்றுக்குள் நுழைந்தபோது படைக்கலன்களுடன் ஓடிவந்த இருவர் அவனை நோக்கி திகைத்தபடி கைசுட்டி ஏதோ கூவினர். முதியவர் ஒருவர் உரத்த குரலில் “கதிரவன் மைந்தர்! கதிரவன் மைந்தர்!” என்று கூச்சலிட்டார். அத்தனை பேரும் தன்னை நோக்கி திரும்புவதைக் கண்ட கர்ணன் வியப்புடன் கைகளைத் தூக்கினான். அவர்கள் படைக்கலன்களை உதிர்த்துவிட்டு தலைவணங்கினர். ஒருவர் “கதிரவன் மைந்தன்! இச்சிற்றூரில் கதிரவன் மைந்தன் எழுகிறார்” என்றார். ஒரு கிழவி “வெய்யோனே, எங்கள் இல்சிறக்க வருக” என்று கைகூப்பி அழுதாள்.

துரியோதனன் அவர்கள் நடுவே ஊடுருவிச் சென்ற தன் புரவியை கடிவாளத்தைப்பற்றி திருப்பி “உங்களை இங்கு அடையாளம் கண்டு கொண்டிருக்கின்றனர் அங்கரே” என்றான். அவனருகே சென்று நின்ற சிவதர் “இம்மக்கள் அவரை அறியார். வேறொருவரென அடையாளம் கண்டு கொண்டுவிட்டனர் போலும்” என்றார். “கதிரவன் மைந்தன் என்கிறார்களே?” என்றான் துரியோதனன். ஒரு முதுமகள் இரு கைகளையும் விரித்து தெய்வதமேறியவள் என “பொற்கவசம்! பொலியும் மணிக்குண்டலங்கள்! நான் கனவில் கண்டபடியே” என்றாள். “என் தந்தையே! என் இறையே! எவ்வுயிர்க்கும் அளிக்கும் கொடைக் கையே!”

“ஆம், ஒளிவிடும் குண்டலங்கள்” என்றாள் பிறிதொருத்தி. “புலரி போல் மார்புறை! விண்மீன் என காதணிகள்.” கர்ணன் தன் கைகளைத் தூக்கி அவர்களை வாழ்த்தியபடி அச்சிற்றூரின் இடுங்கிய தெருக்களை கடந்து சென்றான். இருபக்கமும் தலைக்கு மேலும் நெஞ்சுக்கு நிகரிலும் கைகூப்பி மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர். “கதிர் முகம் கொண்ட வீரர் வாழ்க! எங்கள் குடிபுகுந்த வெய்யோன் வாழ்க! இங்கெழுந்தருளிய சுடரோன் வாழ்க! அவன் மணிக்குண்டலங்கள் வாழ்க! அவன் அணிந்த பொற்கவசம் பொலிக! அவன் அணையில்லா கொடைத்திறன் பொலிக!”

துரியோதனன் கர்ணனை திரும்பித் திரும்பி பார்த்தபடி சென்றான். ஊரைக் கடந்து உருளைக்கற்கள் சேற்றுடன் பரவியிருந்த சரிவில் புரவிக் கால்கள் அறைபட்டு தெறிக்க கூழாங்கற்கள் எழுந்து தெறித்து விழும் ஒலிகள் சூழ இறங்கிச் சென்றபோது துரியோதனன் திரும்பி “எதைப் பார்த்தார்களோ அங்கரே? சூதர்கள் பாடும் அந்த மணிக்குண்டலங்களையும் பொற்கவசத்தையும் பார்க்காதவன் நான் மட்டும் தானா?” என்றான்.

கர்ணன் “எளிய மானுடர், கதைகளில் வாழ்பவர்கள்” என்றான். “இல்லை, கற்பனையல்ல. அவ்விழிகளை பார்த்தேன். அவை தெய்வங்களைக் காண்பவை என்றுணர்ந்தேன். கர்ணா, ஒரு சில கணங்கள் அவ்விழிகள் எனக்கும் கிடைக்கும் என்றால் உன் கவசத்தையும் குண்டலத்தையும் நானும் பார்த்திருப்பேன்” என்றான் துரியோதனன். “சொல்லாடுவதற்கான இடமல்ல இது. இன்னும் ஒரு நாழிகைக்குள் நாம் நகர் நுழைந்தாக வேண்டும்” என்று கர்ணன் சொன்னான். சிவதர் அங்கிலாதவர் போல் இருந்தார். “சொல்லுங்கள்” என்றான் கர்ணன். “நாம் முறையென சென்று கொண்டிருக்கிறோம் அல்லவா?” சிவதர் விழித்துக் கொண்டவர் போல திரும்பி “ஆம். நகர் நுழைந்துவிட்டால் நாம் களம் நடுவில் இருப்போம்” என்றார்.

புல்வெளிச்சரிவில் புரவிகள் மூச்சுவாங்கி பிடரிசிலிர்த்து எடைமிக்க குளம்புகளை எடுத்து வைத்து வால் சுழற்றி மேலேறின. அவற்றின் கடைவாயிலிருந்து நுரைப் பிசிறுகள் காற்றில் சிதறி பின்னால் வந்து தெறித்தன. அப்பால் இலைகள் கோடிழுத்து உருவான தொடுவானின் விளிம்பில் கதிர்ப்பெருக்கு எழுந்தது. பறவைகள் கொண்டாடும் பிறிதொரு புலரி. எங்கோ ஒரு பறவை சங்கென ஒலித்தது. பிறிதொரு பறவை மணியென இசைத்தது. யாழ்கள், குழல்கள், முழவுகள், முரசுகள். எழுந்து கலந்து ஒலித்தன செப்பல்கள், அகவல்கள், அறைதல்கள், கூவல்கள், துள்ளல்கள், தூங்கல்கள். விண்ணகம் சிவந்து கணந்தோறும் புதுவடிவு கொள்ளும் முகில்களின் ஊடாக வெய்யோன் எழும் பாதை ஒன்றை சமைத்தது. மிதந்தவை என கடற்பறவைகள் ஒளியுருகலை துழாவிக் கடந்து சென்றன. அவை சிறகுகளால் துழாவித் துழாவிச் சென்ற இன்மைக்கு அப்பால் இருத்தலை அறிவித்து எழுந்தது செவியறியாத ஓங்காரம்.

சிவதர் கர்ணனிடம் “அரசே அப்பால் உள்ளது ராஜபுரத்தின் உயிர்க்கோட்டை” என்றார். குறுங்காடுகளுக்கு மேல் பச்சைப் புதர்களின் சீர்நிரை ஒன்று சுவரென தெரிந்தது. “அதுவா?” என்றான் கர்ணன். “ஆம், மூன்று ஆள் உயரமுள்ள மண்மேட்டின் மீது நட்டு எழுப்பப்பட்ட முட்புதர்கள் அவை.”  துரியோதனன் “புதர்க்கோட்டை என்றபோது அது வலுவற்றதாக இருக்கும் என்று எண்ணினேன். இதை சிறிய படைகள் எளிதில் கடந்துவிட முடியாது” என்றான். கர்ணன் “ஆம். யானைகளும் தண்டு ஏந்திய வண்டிகளும் இன்றி இக்கோட்டையை தாக்குவது கடினம். பாரதவர்ஷத்தில் முன்பு அத்தனை கோட்டைகளும் இவ்வாறே இருந்தன. கற்கோட்டைகள் நாம் மேலும் அச்சம் கொள்ளும்போது உருவானவை” என்றான்.

துரியோதனன் தன் குதிரையை தொடைகளால் அணைத்து குதிமுள்ளால் சீண்டி “விரைவு” என்றான். வில்லை கையில் எடுத்து நாணை கொக்கியில் அமைத்து இழுத்து விம்மலோசை எழுப்பினான். அவ்வோசையை நன்கு அறிந்திருந்த மரத்துப் பறவைகள் கலைவோசை எழுப்பி வானில் எழுந்தன. கர்ணன் தன் வில்லை எடுத்துக் கொண்டான். சிவதர் அவர்களுக்குப் பின்னால் தன் புரவியை செலுத்தினார். மூவரும் இடையளவு உயரமான முட்புதர்கள் மண்டிய வெளியினூடாக சென்றனர். அவர்களின் உடலில் வழிந்த பனித் துளிகளின் ஈரத்தில் காலையொளி மின்னியது. புரவிகள் மிதித்துச் சென்ற மண்ணில் ஊறிய நீரில் செங்குருதியென நிறைந்தது.

துரியோதனன் அமைதி கொண்டுவிட்டிருந்தான். அவனுடைய உடலுக்குள் வாழ்ந்த ஆழுலகத்து பெருநாகங்கள் படமெடுத்துவிட்டன என்று தோன்றியது. தோள்களிலும் புயங்களிலும் தசைகள் இறுகி விம்மி நெளிந்து அமைந்துகொண்டிருந்தன. இரை நோக்கி பாயும் பருந்தென சற்றே உடல் சரித்து தலை முன்நீட்டி காற்றில் சென்றான். கர்ணனின் விழிகளில் மட்டுமே உயிர் இருப்பதாக தோன்றியது. குறுங்காட்டைக் கடந்ததும் சிவதர் அந்தப்பக்கம் என்று கையால் காட்டினார். கர்ணன் துரியோதனனை நோக்கி விழியசைக்க அவன் தலையசைத்தான். மூவரும் அக்கோட்டையை நோக்கி சென்றனர்.

முட்புதர்கள் ஒன்றோடொன்று தழுவிச் செறிந்து எழுந்த பசுங்கோட்டை முற்றிலும் மண் தெரியாததாக இருந்தது. அதன் மேல் வாழ்ந்த பறவைக்குலங்கள் எழுந்து வானில் சுழன்று அமைந்து எழுந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தன. சிவதர் தொலைவில் தெரிந்த மஞ்சள் அசைவொன்றைக்கண்டு “அங்கே” என்றார். அவர்கள் அணுகிச்செல்ல மஞ்சள் துணியொன்றை அசைத்தபடி நின்றிருந்த படைவீரன் ஓடிவந்து தலைவணங்கி “விடியலெழுந்துவிட்டது அரசே” என்றான். “மறுபக்கம் நகரம் முழுமையாகவே எழுந்துவிட்டது.” சிவதர் “விழவெழுந்துவிட்டதா?” என்றார். “முதற்கதிரிலேயே முரசுகள் முழங்கின” என்றான் அவன்.

கையால் இங்கு என்று காட்டி அழைத்துச் சென்றனர் வீரர். கோட்டைப்பரப்பில் நடுவே புதர்களை வெட்டி புரவி ஒன்று நுழையும் அளவுக்கு வழி அமைக்கப்பட்டிருந்தது. “புரவிகள் ஏறுமா?” என்றான் துரியோதனன். “தானாக அவை ஏறா. நாம் ஏறிய பிறகு கடிவாளத்தை பிடித்திழுத்து ஏற்றி மறுபக்கம் கொண்டு செல்ல வேண்டும்” என்றான் கர்ணன். “முதற்புரவி ஏறிவிட்டால் அடுத்த புரவிகள் அச்சமழிந்து கற்றுக்கொண்டுவிடும்” என்றார் சிவதர். வீரர்கள் மூவர் அங்கிருந்தனர். அவர்கள் ஓடிவந்து புரவிகளின் கடிவாளங்களை பற்றிக்கொண்டனர்.

துரியோதனனும் கர்ணனும் சிவதரும் புரவிகளிலிருந்து இறங்கி மண்மேட்டில் படிகளைப்போல் வெட்டப்பட்டிருந்த தடங்களில் கால்வைத்து முள்செதுக்கப்பட்ட கிளைகளை பற்றிக்கொண்டு மேலேறினர். அப்பால் சென்று இறங்கி மறுபக்கம் இருந்த குறும்புதர்க்காட்டில் நின்றபடி துரியோதனன் பொறுமையிழந்து கையசைத்தான். இரு வீரர்கள் கோட்டையின் மண்மேட்டின் உச்சியில் நின்றபடி முதல்புரவியின் கடிவாளத்தைப்பற்றி இழுக்க பின்னால் நின்ற இருவர் அதை பின்னாலிருந்து தள்ளி மேலேற்றினர்.

தும்மியபடியும் மெல்ல சீறியபடியும் தயங்கிய புரவி தன் எடையை பின்னங்காலில் அமைத்து தசைவிதிர்க்க நின்றது. பின்னால் நின்ற வீரன் அதன் வாலைப் பிடித்து தள்ள கடிவாளத்தைப் பற்றிய இருவர் இழுக்க அது முன்னிருகால்களையும் அழுந்த ஊன்றி அவர்களின் விசையை நிகர்செய்தது. “இப்படி புரவியை மூவர் இழுக்க முடியுமா?” என்றான் கர்ணன். சிவதர் “இழுத்து மேலேற்ற முடியாது. ஆனால் அது மேலேற வேண்டுமென்று நாம் விரும்புகிறோம் என்பதை அதற்கு தெரிவிக்க முடியும். மேலேறாமல் நாம் விடப்போவதில்லை என்று உணர்ந்து கொண்டால் அது மேலேறும்” என்றார்.

வலுவாக கால்களை ஊன்றி அசைவற்று புட்டம் சிலிர்க்க கழுத்துத்தசைகள் இழுபட்டு அதிர நின்ற புரவி அஞ்சியதுபோல கனைத்தபடி இரு அடிகளை பின்னெடுத்து வைத்து தலையை உதறியது. முன்னால் இழுத்த வீரர் இருவர் மரங்களை பற்றிக்கொண்டு தசைகள் புடைக்க முழு ஆற்றலுடன் அதை இழுத்தனர். திடீரென்று கால்களைத் தூக்கி முன்வைத்து குளம்புகளால் நிலத்தை அறைந்து மேலேறி உச்சிக்கு வந்து மறுசரிவில் சரிந்து பாய்ந்து குளம்புகள் நிலமறைய வந்து சுழன்று நின்றது. அதன் கனைப்போசை கேட்டதும் மறுபக்கம் நின்ற இருபுரவிகளும் எதிர்க்குரல் எடுத்தன. அவற்றில் ஒன்று தானாகவே பாய்ந்து மேலேறி மறுபக்கம் வந்தது.

மூன்றாவது புரவி உரத்த குரலில் அங்கு நின்று கனைத்தது. இரு புரவிகளும் எதிர்க்குரல் கனைத்ததும் அதுவும் துணிவுகொண்டு ஏறி மறுபக்கம் வந்தது. கர்ணன் தன் புரவியில் ஏறுவதற்காக திரும்பியபோது மறுபக்கம் ஓடி வந்த இரண்டு கலிங்க வீரர்களை கண்டான். அவன் விழி அவர்களைத் தொட்ட மறுகணத்தில் அம்புகள் அவர்களைத் தாக்க இருவரும் அலறியபடி புதர்களில் முகம் பதிய விழுந்தனர். திரும்பிய துரியோதனன் உரக்க நகைத்தபடி தன் வில்லை எடுத்து அம்பு தொடுத்து பின்னால் வந்த இருவரை வீழ்த்தினான். மேலும் இருவர் அப்பால் நின்றிருந்தனர். என்ன நடந்தது என்று அவர்கள் உய்த்துணர்வதற்குள் அவர்களில் ஒருவனின் கழுத்தில் அம்பு பாய்ந்தது.

பிறிதொருவன் குனிந்து புதர்களினூடாக பாய்ந்தோடி தன் புரவியை அடைந்து அதன் மேல் ஏறி முடுக்கினான். அப்புரவியின் காலை கர்ணனின் அம்பு தாக்க அது சுழன்று நிலையழிந்து சரிந்து கீழே விழுந்தது. அதன் மேலிருந்த வீரன் நிலத்தை அடைவதற்குள் அவன் நெஞ்சில் அம்பு பாய்ந்து அவனை ஓசையழியச் செய்தது. “தொடங்கிவிட்டது!” என்று தொடையை ஓங்கித் தட்டியபடி துரியோதனன் நகைத்தான். கையசைத்தபடி கர்ணன் முன்னால் பாய்ந்தான். சிவதரும் துரியோதனனும் அவனை தொடர்ந்து வந்தனர்.

ராஜபுரத்தின் தெருக்கள் மரப்பலகைகளை மண்ணில் பதித்து உருவாக்கப்பட்டவையாக இருந்தன. இருபக்கங்களிலும் உயரமற்ற மரக்கட்டடங்கள் நிரை வகுத்தன. குளம்புகள் தரைமரத்தில் பட்டு பேரோசை எழுப்ப அம்மூவரும் தெருக்களில் சென்றபோது இருபக்கங்களிலிருந்த அனைத்துக் கட்டடங்களும் எதிரொலி எழுப்பின. அவற்றின் திண்ணைகளுக்கு ஓடி வந்த கலிங்கக் குடிமக்கள் அவர்களை உடனே அடையாளம் கண்டுகொண்டனர். ஒருவன் “துரியோதனர்! அஸ்தினபுரியின் அரசர்!” என்று கூவினான். சில கணங்களுக்குள்ளாகவே அனைத்துக் கட்டடங்களிலும் குடிமக்கள் முகப்புகளில் குழுமி கூச்சலிடத் தொடங்கினர்.

முதல் காவல்கோட்டத்தில் இருந்த வீரர்கள் “எதிரிகள்! எதிரிகள்!” என்று கூவியபடி விற்களுடனும் வேல்களுடனும் இறங்கி வந்தனர். சாலையை அடைவதற்குள்ளாகவே அம்பு பட்டு கீழே விழுந்தனர். கர்ணனின் அம்பில் மேலே முரசறையச் சென்ற வீரன் அம்முரசின் மேலேயே விழுந்து முரசுடன் புரண்டு ஓசையுடன் கீழே விழுந்தான். என்னவென்றறியாமல் கீழே விழுந்த முரசை நோக்கிச் சென்ற பிறிதொரு வீரன் அம்புபட்டு விழுந்தான். ஒருவர் மேல் ஒருவராக அம்பு பட்டு அவர்கள் விழ விழுந்தவர்கள் மேல் பாய்ந்து புரவிகளும் நகரை அமைத்த வட்டப்பெருவீதியை நோக்கி சென்றன.

தடித்த மரப்பலகைகள் சேற்றில் பதித்து உருவாக்கப்பட்ட அரசவீதியில் இருபுறமும் எழுந்த நூற்றுக்கணக்கான அணித்தூண்களில் மலர் மாலைகளும் பட்டுப் பாவட்டாக்களும் தொங்கி காற்றில் அசைந்தன. வண்ணத்தோரணங்கள் குறுக்காக கட்டப்பட்டு சிட்டுக்குருவிச் சிறகுகளென காற்றில் துடித்துக் கொண்டிருந்தன. மூவரும் பெருவீதியை அடைவதற்குள்ளாகவே அவர்கள் வந்த செய்தியை அனைத்து காவல் மாடங்களுக்கும் முரசுகள் அறிவித்து விட்டிருந்தன.

யாரோ “அஸ்தினபுரியின் படைகள் அரசர் தலைமையில்!” என்று கூவ அக்குரல் ஒன்றுபல்லாயிரமெனப் பெருகி நகரமெங்கும் அச்சத்தை நிறைத்தது. நகர்வாயிலை நோக்கியே பெரும்படை திரண்டு ஓடியது. கோட்டைக்குமேல் எழுந்த காவல்மாடத்து பெருமுரசங்கள் “படைகள்! படைகள்!” என்று அறிவிக்க நகரம் அச்சம் கொண்டு அத்தனை வாயில்களையும் மூடிக்கொண்டது. கடைகளுக்குமேல் தோல்திரைகளும் மூங்கில்தட்டிகளும் இழுத்து போர்த்தப்பட்டன. மக்கள் அலறியபடி இல்லங்களை நோக்கி ஓட சாலைகளில் விரைந்த படைகள் அந்த நெரிசலில் சிக்கிக்கொண்டனர்.

“கோட்டை தாக்கப்படுகிறது! கர்ணன் வில்லுடன் படைகொணர்ந்திருக்கிறார்” என்று ஒரு செய்தி பறவைக்காலில் எழுந்து அரண்மனை நோக்கி சென்றது. பறவை செல்வதற்குள்ளாகவே தொண்டைகள் வழியாக அது அரண்மனையை அடைந்துவிட்டிருந்தது. அரசர் அணிப்பந்தலில் இருந்தமையால் பிறிது எதையும் எண்ணாத படைத்தலைவன் யானைப்படையை கோட்டைவாயில் நோக்கிச்செல்ல ஆணையிட்டான். மூன்று யானைப்படைகள் கோட்டையின் மூன்றுவாயில்களையும் நோக்கிச்செல்ல அப்படைகளால் புரவிகள் தடுக்கப்பட்டன.

கலைந்து குழம்பிய நகரம் சருகுப்புயலடிக்கும் வெளியென தெரிந்தது. அந்தக் கலைதலே அவர்களைக் காக்கும் திரையென்றாகியது. மூன்று புரவிகளில் என அவர்கள் தனித்து நகர்த்தெருக்களில் வரக்கூடுமென எவரும் எண்ணவில்லை. அவர்களைக் கண்டவர்கள் திகைத்து கூச்சலிடுவதற்குள் அம்புகளால் வீழ்த்தப்பட்டனர். சாலைகளில் அவர்களை எதிர்கொண்டவர்கள் அனைவரும் என்ன நடக்கிறதென்றே அறியாதவர்களாக இருந்தனர். ஆனால் அவர்களின் அச்சமே செய்தியென்றாக சற்று நேரத்திலேயே அவர்கள் நுழைந்தது அனைவருக்கும் அறியவரலாயிற்று. சாலையின் இருபுறங்களிலும் வீரர்கள் விற்களுடன் அவர்களை சூழ்ந்துகொண்டனர்.

கர்ணன் தன் புரவியில் பின்னால் திரும்பி அமர்ந்தபடி தொடர்ந்து வந்த வீரர்களை அம்பால் தாக்கி வீழ்த்திக்கொண்டே சென்றான். முன்னால் வந்தவர்களை துரியோதனன் அம்புகளால் வீழ்த்தினான். சிவதர் இருவருக்கும் நடுவே நான்கு திசைகளையும் நோக்கி அறிவிப்புகளை செய்தபடியே வந்தார். “மாளிகை மேல் எழுகிறார்கள்” என்று அவர் சொன்னதுமே பெருமாளிகையின் கூரைமேல் வில்லுடன் எழுந்த வீரன் அம்பு பட்டு சரிந்த மரக்கூரை மேல் உருண்டு கீழே வந்து விழுந்தான். அவனை தொடர்ந்து வந்தவனும் உருண்டு வந்து முதல்வன் மேல் விழுந்தான்.

“காவல் மாடங்கள் மூன்று உள்ளன” என்றார் சிவதர். அவர்களைத் தொடர்ந்து வந்தவர்கள் கீழே விழுந்த உடல்களை தாண்டத் தயங்கி வால்சுழற்றி சுற்றிவந்த புரவிகளால் தடுக்கப்பட அதற்குப் பின்னால் வந்தவர்கள் “ஓடுங்கள்! விரையுங்கள்! தொடருங்கள்!” என்று கூவினார்கள். தங்களை தடுத்த சிறிய படையை உடைத்து முன்னால் சென்ற மூவரும் வலப்பக்கம் திரும்பி அங்கிருந்த காவல் மாடத்தை நோக்கி சென்றனர். அதற்கப்பால் மணத்தன்னேற்பு நிகழும் மன்று கொடிகளாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அக்காவல் மாடத்தின் மேல் இருந்த முரசு “எதிரி !எதிரி! எதிரி!” என்று முழங்கிக் கொண்டிருந்தது. அதன் காவல் உப்பரிகைகளில் தோன்றிய வீரர்கள் போர்க்கூச்சல்களுடன் அம்புகளை எய்ய துரியோதனனின் தோளில் ஓர் அம்பு பாய்ந்தது. உலுக்கப்படும் மரத்தின் கனிகளென கர்ணனின் அம்பு பட்டு வீரர்கள் நிலம் அதிர விழுந்து கொண்டே இருந்தார்கள்.

ஒருகணமும் விரைவழியாமல் அந்தக் காவல் மாடத்தை கடந்து சென்றனர். அவர்கள் வருவதைக் கண்டதுமே அரண்மனை வளாகத்தை அணைத்திருந்த உயரமற்ற உள்கோட்டையின் தடித்த மரவாயிலை இழுத்து மூட வீரர்கள் முயன்றனர். கர்ணன் அந்தக் கதவின் இடுக்கு வழியாக அப்பால் இருந்த வீரனை அம்பால் வீழ்த்தினான். பிறிதொருவன் ஓடி வர அவனையும் வீழ்த்தினான். இரு கதவுகள் ஒன்றுடன் ஒன்று இணைவதற்குள்ளாகவே அவர்கள் அதைக் கடந்து உள்ளே சென்றனர்.

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16754 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>