Quantcast
Channel: எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 16743 articles
Browse latest View live

நஞ்சு, காக்காய்ப்பொன் -கடிதங்கள்

$
0
0

நஞ்சு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இந்தக்கதைகளின் விதவிதமான கருக்கள், களங்கள் மட்டுமல்ல மட்டுமல்ல வாழ்க்கைப்பார்வைகளும் மாறிக்கொண்டே இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. உங்களுக்கென வாழ்க்கைப்பார்வை ஏதுமில்லையா என்ற கேள்வி எழுகிறது. வாழ்க்கைப்பார்வை என்ற ஒன்றில் கட்டுண்டது அல்ல எழுத்தாளனின் எழுத்து. அது அந்தந்த தருணங்களில் இயல்பாக வெளிப்படுவது என்று நீங்கள் ஏற்கனவே அதற்கு விளக்கமும் அளித்திருக்கிறீர்கள்.

நற்றுணை போன்ற ஒரு கதையை வாசித்தவருக்கு நஞ்சு கதை அதிர்ச்சியையேதரும். அது மானுட மனதிலே உள்ள அழியாத நஞ்சைப் பற்றிச் சொல்வது. அந்தப்பெண் அவள் கணவனுக்கு அந்த நஞ்சை கொடுக்கிறாள். மிகக்கொஞ்சமாக. அப்போதுதான் அவன் நீண்டநாள் துடித்துச் சாவான். அந்த நோக்கத்தில் இவனுக்கும் நஞ்சை கொடுத்துவிடுகிறாள். அவள் குற்றவுணர்ச்சியை அடையவில்லை. அவளிடம் இருப்பது நஞ்சின் போதை. கசப்பின் சுவை. அதற்காகத்தான் அந்த இடத்திற்கு வருகிறாள்

அவனுக்கு ஒரு வாய்ப்பு வருகிறது, அவன் அவளை மன்னித்திருந்தால் அந்த தருணத்தை தாண்டி மேலே எழுந்திருக்கமுடியும். அதுதான் அமுதம் ஆனால் அவனால் முடியவில்லை. அந்த நஞ்சை இழக்க மனமில்லை. அதை அவன் பழகிவிட்டான். அந்த போதையை விடமுடியாது. அதை அவன் வளர்த்துக்கொண்டு திரும்பச் செல்கிறான்

நான் பலசமயம் இதை உணர்ந்திருக்கிறேன். உண்மையில் மனிதர்களுக்கு பொறாமை காழ்ப்பு பகைமை ஆகியவற்றை விட மனமில்லை என்று. விட்டால் அவர்களின் வாழ்க்கையில் ஒன்றுமே மிச்சமிருக்காது

ராஜசேகர்

***

அன்புள்ள ஜெ,

உங்களுடைய நஞ்சு கதை வாசித்தேன்.

‘நஞ்சு’ கதை தருணங்களை அபத்தமாக மாற்றுதல் என்ற வகையறாவாகவும், மௌனியின் நினைவுச் சுழல் போன்றதான ஒருவித கவித்துவம் மிக்க கதையாகவும் இருந்தது என்று நினைக்கிறேன்.

தூய வெறுப்புக்கும், யாரும் காணமுடியாத அந்தரங்கத்துக்கும் இடையேயான உரையாடல் என்றே நஞ்சு கதையின் மையக்கருத்தைக் கூறவேண்டும். அந்தப் பெண்மீது வெறுப்பு இரண்டு பக்கங்களில் இருந்து உண்டாகிறது. யாரும் காணமுடியாத அந்தரங்கச் சம்பாஷணையில் காணாமல் போகிறது தூய வெறுப்பு. மற்றையது வெறும் நஞ்சாகவே இருக்கிறது. அந்தரங்கம் இருவரையும் பற்றிக் கொள்கிறது. அவன் மட்டும் வெறுமையை உணர்கிறான்.

இந்தக்கதையின் சம்பவங்கள் போகன் சங்கருக்கு நடந்தது போலவே தோன்ற வைக்கிறது. ஏனென்றால் போகன் சங்கரின் போகப்புத்தகம் வாசிக்கும் ஒவ்வொருவரும் அதில் போகனின் குணாதிசயம் வெளிப்பட்டு நிற்கிறது என்பதை உணர்ந்து கொள்ளமுடியும்.

இந்தச் சந்தேகம் எனக்கு வலுத்தது நஞ்சு கதையில் வரும் இப்பகுதியில்தான்.

“பைக்கில் ஏறிக்கொண்டபோது முதலில் தோன்றிய எண்ணம் காரை துரத்திச் சென்று மறித்து அவனை இழுத்து கீழே போட்டு மிதிக்கவேண்டும் என்றுதான். ஆனால் அப்போது என் உடலே நடுங்கிக்கொண்டிருந்தது. எதையெல்லாமோ நினைத்து அஞ்சினேன்”. இந்த அச்சம் போகனுடையதுதான்!!.

அது ஒருபுறமாக இருக்கட்டும்.

எனக்கு மீந்திருக்கும் சந்தேகம் யாதெனில்,

“இளமை முதலே வளர்த்துப் பேணிவரும் ஒன்றை. நான் என்று எண்ணும்போதே திரண்டு வரும் ஒன்றை” அவனுக்குள் காட்டுவது அந்தப் பெண் அவனை அவமானப்படுத்தியது மட்டும்தானா?. அவன் இறுதியில் வெறுமையை உணர அவளது அணைப்பு மட்டும்தான் காரணமா?. எவ்வளவு அற்புதமான நஞ்சு என்றல்லவா உணரவைக்கிறது.

சுயாந்தன்

***

அன்புள்ள சுயாந்தன்

உங்கள் வாசிப்பு ஆச்சரியமளிக்கிறது. போகனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.அவர் இனிப்பை வினியோகம் செய்வதாகவே கேள்விப்பட்டேன்

ஜெ

காக்காய்ப்பொன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

காக்கைப்பொன் ஒரு பேரபிள் போன்ற கதை. அதை ஓர் உரையாடலில் அமைத்து பலவழிகளை திறந்து புதியகதையாக ஆக்கியிருக்கிறீர்கள். தவம், மீட்பு ஆகியவற்றை பற்றிய கதையாக அதை ஆக்குவது அந்த உரையாடல்கள்தான்

காக்கை சதானந்தரை ஒரு மனிதர் என்று அடையாளம் காண்கிறது. அவருக்கு மனிதனுக்குரிய பொருளை அளிக்கிறது. நீ மனிதன் என்று சொல்கிறது. ஆனால் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் துறவி நான் யோகி என்கிறார். தன்னை காக்கை சீண்டுவதாகவே நினைக்கிறார்

ஆனால் அந்த ஆணவம் அழிந்து தன்னை ஒரு மனிதன் என அவர் உணரும்போது கதை நிறைவடைகிறது. அதுவே அவருடைய வீடுபேறு

சாந்தகுமார்

***

அன்புள்ள ஜெ

காக்கைப்பொன் கதையை வாசிக்கும்போது ஞாபகம் வந்தது. பல சாமியார்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் அவர்களை நாம் ஐயா என்றோ சார் என்றோ அழைத்தால் கடுமையாக கோபம் கொள்வார்கள். அது அவர்களின் தனித்தகுதியை நாம் மறுப்பது என்று நினைத்துக்கொள்வார்கள். பொதுவாக தமிழ்நாட்டில் சில இடங்களில் பாதிரிமார்களின் உடை பழக்கமில்லை. அவர்களை சார் என்று சொல்லிவிடுவார்கள். அவர்கள் அப்படியே முகம்சிவந்துவிடுவதை கண்டிருக்கிறேன். அதேபோல தமிழக அரசின் பல உயரதிகாரிகள் சார் என்றால் கோபித்துக்கொள்வார்கள். ஐயா என்றுதான் சொல்லவேண்டும். நீதிமன்றத்தில் சார் என்று சொல்லக்கூடாது. ஐயா என்றுதான் சொல்லவேண்டும் என்று சொல்லி உள்ளே அனுப்புவார்கள். இந்த சுய அடையாளங்கள் எதையும் அறியாதது காக்கா. அது நீ மனிதன்தானே, வேறே என்ன என்று சொல்லிக்கொண்டிருக்கிறது

எம்.சரவணன்

***

தொடர்புடைய பதிவுகள்


மூன்று வருகைகள்- கடிதங்கள்

$
0
0

மூன்று வருகைகள்.

 

அன்பு ஜெ,

 

நலமா?

 

இன்று தங்களின் மூன்று வருகைகள் வாசித்தவுடன், தேவதேவன் அவர்களின் கவிதை ஒன்று நினைவிற்கு வந்தது அது,

 

ஒரு சிறு குருவி

 

என் வீட்டுக்குள் வந்து

தன் கூட்டைக் கட்டியது ஏன்?

அங்கிருந்தும்

விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு?

பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து

இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது

மரத்திற்கு

மரக்கிளையினை

நீச்சல்குளத்தின் துள்ளுப்பலகையாக மிதித்து

அங்கிருந்தும் தவ்விப்பாய்கிறது

மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி

சுரேலென தொட்டது அக்கடலை என்னை

ஒரு பெரும் பளீருடன்

நீந்தியது அங்கே உயிரின்

ஆனந்த பெருமிதத்துடன்

நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை

ஓட்டுகூரையெங்கும்

ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்

உள் அறைகளெங்கும்

சிரிப்பும் அழுகையும் மரணங்களும்.

 

*தேவதேவன்*

 

பிறகு தான் தெரிந்தது இன்று தேவதேவன் அவர்களின் பிறந்தநாள் என்று, அவரின் கவிதைகள் அனைத்தும் நேரடியாக என் ஆத்மாவை தோட்டு எழுப்புவதாக இருக்கும், மற்ற கவிஞர்களின் கவிதைக்கும் இவரின் கவிதைக்கும் ஏதோ ஒரு நூலிழை வித்தியாசம் அந்த இழைதான் பிரபஞ்சமுடன் ‘நான்’ எனும் என்னுடன் அது உரையாட செய்கிறது. அவரின் கவிதைகள் அனைத்தும் மெல்லிய வருடல்கள் போல்வன. அவரை முதலாவதாக விஷ்ணுபுர விழாவில் தான் சந்தித்தேன் அந்த இரண்டு நாட்களும் அவருக்கு அருகில் அமரும் பெரும் வாய்ப்பை பெற்றேன் பெரிதாக எதுவும் உரையாடிக்கொள்ளவில்லை. நான் அறிமுகம் செய்துக்கொண்டேன். ஒரு சிறு புன்னகை. பிறகு மெளனம் தான் பெரும்பாலும். என் ஆத்ம கவியுடன் வெறும் சொற்கள் தாண்டிய மௌன உரையாடல் போதுமே. அந்த இரண்டு நாட்கள் அவ்வப்போது பேசிக்கொண்டோம் சில கவிதைகள் வாசித்துக் காண்பித்தார் அந்த நாட்கள் பெரு மகிழ்வு கொண்ட நாட்கள். இப்பெரு கவியை நீங்கள் அறிமுகம் செய்யவில்லை என்றால் அந்த வெறுமையை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாதவை. இந்த வீடுறைவு காலத்தில் அவரின் கவிதைகள் காலம் கடந்து நிற்கும் நதியில் பயணம் செய்பவை போல. எனக்கான கவியை அடைந்தேன் தங்கள் மூலம் அறிந்துக்கொண்ட அப்பெரு கவிக்கு உங்கள் வாயிலாக என் வாழ்த்துகளை சமர்பிக்கிறேன்.

 

மிக்க அன்பும் நன்றியும்

ரா. பாலசுந்தர்

அன்பு ஜெ,

 

ஆகா. அந்த அடைகலாங்குருவிகள் பார்த்ததும் எனக்கு அத்துனை மகிழ்ச்ச்சி. ஒரு வாரமாக ஒருத்தி வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறாள். அவள் அடைக்கலாங்குருவியென்றே நீங்கள் சொல்லித்தான் தெரிந்தது. அவள் மாடியில் தன் சோடி சகிதம் வந்து அலவலாவுவதுண்டு. படம் எடுக்க முயற்சி செய்யும் அனைத்து தருணங்களும் ஏமாற்றப்பட்டேன். அவள் விர் விர் என ஓடிவிடுவாள். கூடுகட்ட இந்த பால்கனியில் முற்பட்டு தோற்றுப்போயிருந்தாள்.

என் மாமனிடம், கண்டிப்பாக வீட்டில் ஓட்டை மாதிரி ஓர் தங்கும் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கூறினேன். அவன் உம் போட்டு வைத்தேன். அடுத்ததாக சூழலுக்கு ஒவ்வாத அந்த கண்ணாடிகளை மாற்ற வேண்டுமென்றேன். சற்றே தயங்கிய அவன், ஆத்தா இது நம் வீடு அல்ல, நமக்கான கூட்டைக் கட்டும்போது அப்படி செய்வோம் என்று சொல்லிவிட்டேன். உங்கள் பதிவிற்குப் பிறகு வீட்டிலுள்ள காத்தாடிகளை களற்றச் சொல்லலாமென்றிருக்கிறேன். துரத்தி துரத்தி அடிப்பான் என்பது உறுதி ஜெ.

மன்னரின் இராச்சியத்தில் (பெரிய பல்லி)உங்களைத் தவிர்த்து அடைக்கலாம் குருவிகளும் அடைக்கலமாகியிருக்கின்றன. வாழ்க மன்னர்!

இந்த சிறிது கால லாக்டௌனில் வீட்டில் தொடர்ந்து தங்கியிருப்பதால், பறவைகள் மற்றும் இயற்கையை இரசித்து எழுதிக் கொண்டிருந்தேன்.

அதை அடுத்தடுத்த என் இமெயிலில் பகிர்கிறேன் ஜெ. குருவிகளின் முட்டை பொறிந்தவுடன் படங்களைப் பகிரவும். பார்க்க ஆர்வமாக உள்ளேன்.

 

அன்புடன்

இரம்யா.அ

 

தொடர்புடைய பதிவுகள்

சீட்டு [சிறுகதை]

$
0
0

Sailoz Mookherjea

“அவன் விட்டாத்தானே?” என்று அழகப்பன் சொன்னான். “அவன் பேசிட்டிருக்கிறதை கேட்டேன். ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிற மாதிரி தெரிஞ்சுது.

ஏன்?” என்று உமையாள் கேட்டாள். அவள் மூக்கைச் சுளித்தபடி அதைக் கேட்டபோது கண்களில் வந்த மங்கல் அவனுக்கு ஒவ்வாமையை உருவாக்கியது. அப்படி அவளை பார்க்கையில் அவன் பார்வையை விலக்கிக்கொள்வது வழக்கம்.

வீட்டுவேலை நடக்குதுல்ல? லிண்டில் வரை வந்தாச்சுகட்டிமுடிச்சு . போயி பார்த்து செர்டிஃபை பண்ணினாத்தான் அடுத்த இன்ஸ்டால்மென்ட் லோன் கிடைக்கும். அதுக்கு ஒருமாசம் ஆயிடும். அதுவரை வேலையை நிப்பாட்ட முடியுமா? கடனை வாங்கி வேலையை கொண்டுட்டு போகவேண்டியதுதான்… ” என்றான் அழகப்பன்அவன் ஏற்கனவே கோவாப்பரேட்டிவ் சொசைட்டி லோன், பேங்க் . டி எல்லாம் வாங்கியாச்சு. ராகவன் சார்கிட்ட வட்டிக்கு பணம் கேட்டுட்டு இருந்தான்.

அப்ப விட மாட்டாரா?” என்றாள்.

ரொம்ப கீழே போனா விடுவார். அது நமக்கு பயங்கர நஷ்டம்… ” என்றான்.

அவள்அம்மா எடுத்துட்டு வாடீன்னு சொன்னாங்கஅண்ணாவும் அண்ணியும் வந்து கேட்டுட்டு போயிருக்காங்க. அண்ணியோட அப்பா ஆஸ்பத்திரியிலே இருக்கார். திங்கள்கிழமை டிஸ்சார்ஜ்அதுக்குள்ள வேணும்லோன் அது இதுன்னு போனா லேட் ஆகும். எம்பத்தஞ்சு வரைக்கும் போயி கேளுன்னு சொன்னாங்கஎன்றாள்.

நாராயணன் கண்டிப்பா எம்பத்தஞ்சுலே நிப்பாட்ட மாட்டான். எழுபத்தஞ்சுக்கும் கீழே கூட போவான். ராகவன் சார்கிட்ட வட்டிக்கு வாங்கினா அதுக்கு இருபதுமாசம் கணக்குபோட்டா அறுபது அறுபத்தஞ்சுதான் மதிப்பு. அப்ப எழுபதுன்னான்னா கூட அவனுக்கு லாபம்தான்.

அவள் உதட்டை சுருக்கியபடி ஏதோ யோசித்துக் கொண்டு அமந்திருந்தாள். பிறகு மெல்லசூப்பர்வைசர்என்றபடி ஃபைல்களை எடுத்தாள்.

செக்ஷன் சூபர்வைசர் முருகேசன் வந்துஎன்ன டூயட்டா?” என்று சொன்னபடி நாற்காலியில் அமர்ந்து வெற்றிலைப் பொட்டலத்தை வெளியே எடுத்தார்.

அவன் ரெஜிஸ்டரை விரித்து என்ட்ரிகள் போட்டுக்கொண்டே அவளை பார்த்தான். அவள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவன் பக்கத்து இருக்கைக்கு வந்தாள். கிராமத்திலிருந்து நேராக வந்ததுபோல தோற்றம். காலையில் குளித்துவிட்டு ஈரமான கூந்தலை சீவி பின்னால் சிறு முடிச்சு போட்டிருப்பாள். கூந்தல் திரிதிரியாக தெரியும். புடவை முந்தானையை அள்ளி போட்டிருப்பாள். கணுக்கால் தெரிய கட்டிய புடவைக்கு கீழே ரப்பர் செருப்பு. அதில் கட்டைவிரல் வெளியே நீட்டியிருக்கும். கையில் நகங்கள் நீண்டு சற்றே தேய்ந்திருக்கும். இத்தனைக்கும் அவள் எம்சிஏ படித்தவள். அவன் பிளஸ்டூதான். அப்பா மஞ்சள்காமாலையில் தவறியதனால் கருணை அடிப்படையில் கிடைத்த வேலை.

அவளுக்கு வேலையும் ஒன்றுமே தெரியவில்லை. அவனிடம்தான் எல்லாவற்றையும் கேட்டாள். ரிஜிஸ்டர்களையும் ஃபைல்களையும் தூக்கிக்கொண்டு அவனருகே வந்து நின்றுஇது என்ன சார், இப்டி போட்டிருக்கு?” என்றாள். விரல்சுட்டிஇது ஒண்ணுமே புரியலை சார்என்றாள்.

அவன் அவளுக்கு படிப்படியாக விளக்கினான். அவளுக்கு கவனிக்கும் வழக்கம் மிகக்குறைவு. நினைவில் நிற்பதும் குறைவு. ஆகவே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. அவனருகே அவள் நிற்கையில் அவள் தலையில் தேய்த்திருந்த காய்ச்சிய தேங்காயெண்ணையும், முகப்பௌடரும் வியர்வையுடன் கலந்து மணம் வீசின. காற்றில் அவள் புடவை அவன்மேல் பட்டது.

அவன் பெரும்பாலும் அவளை நிமிர்ந்து பார்க்காமலேயே அவளிடம் பேசினான். ஆனால் அவன் மனம் அவளை பார்த்துக் கொண்டிருந்தது. அவள் சென்று தன் இருக்கையில் அமர்ந்த பின் அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்.

அவள் அவன் மனதில் ஓரக்காட்சியாகவே பதிந்திருந்தாள். கன்னத்தின் பூமயிர், புறங்கழுத்தின் மயிர்ப்பிசிறுகள், சிறிய காதில் அசையும் தங்க தொங்கட்டான், சற்றே மழுங்கிய மூக்கு, மென்மையாக படிந்த கருஞ்சிவப்பு நிறமான உதடுகள், கழுத்தின் மடிப்புகளில் ஈரக்கோடு. அவள் கல் வைத்த மூக்குத்தி அணிந்திருந்தாள். முதலில் அவனுக்கு அது கிராமியத்தனமாகத் தெரிந்தது. பிறகு அவளுடைய அடையாளமாக ஆகியது. அதன்பின் பிடிக்க ஆரம்பித்தது.

அவள் சருமம் அத்தனை மெருகுடன் இருப்பதைப் பற்றித்தான் அவன் எண்ணினான். அந்த வயதில் அப்படித்தான் இருக்குமா என்ன? அவன் அத்தனை கூர்ந்து எந்தப் பெண்ணையும் பார்த்ததில்லை.

அவன் பார்ப்பது அவளுக்கும் தெரியத் தொடங்கியது. அவள் சட்டென்று திரும்பி அவன் கண்களை சந்தித்தாள். அவன் பதறி கண்களை விலக்கிக் கொண்டான். அவள் அவனிடம் பேசும்போது மிகச்சிறிய புன்னகை ஒன்றை அளித்தாள். அது அவனுக்கு மட்டுமேயானது. வெளியே அவனை பார்க்கையில் மெல்லப் புன்னகைத்து தலைகுனிந்து நடந்து சென்றாள்.

ஒருநாள் அவன் வழக்கம்போல டிபன் பாக்சை எடுத்து மேஜைமேல் வைத்து சாப்பிட தொடங்கும்போது அவள் அவன் அருகே ஒரு வாழையிலைக் கீற்றில் எதையோ வைத்தாள். வாழைக்காய் பொரியல். அவன் திடுக்கிட்டு அவனை பார்த்தான். அவள் புன்னகைத்தாள். அவன் அதை சாப்பிட்டபோது படபடப்பாக உணர்ந்தான்.

சாப்பிட்டு முடித்து கைகழுவி வந்தபின் அவன் அவளை பார்க்காமல் அமர்ந்து குமுதத்தை எடுத்து வாசித்தான்.

அவள்நான் வைச்சதாக்கும்என்றாள்.

அவன் திடுக்கிட்டுஎன்ன?” என்றான்.

வாழைக்காய் பொரியல்” .

அவன்ம்என்றான். மூச்சுத்திணறுவதுபோல் உணர்ந்தான்.

நல்லா இருக்கா?” என்றாள்.

அவன் மீண்டும் திடுக்கிட்டுஆமாஎன்றான்.

அவன் எப்போதுமே உணவை பாராட்டி எதையும் சொன்னதில்லை.

பிடிச்சிருக்கா?” என்றாள்.

அவன்ஆமாஎன்றான்.

அதன்பின் அவள் அவனுக்கு தினமும் ஏதாவது கொண்டுவந்தாள். தன் வீட்டைப்பற்றியும் சினேகிதிகளைப் பற்றியும் சொன்னாள். அவர்கள் காதலிப்பதாகவோ திருமணம் செய்துகொள்வதாகவோ பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அது இயல்பாகவே உறுதியாகியது. அலுவலகத்தில் எல்லாருக்குமே தெரிந்திருந்தது.

வந்தநாள் முதல் அவள் ஸ்ரீனிவாசனிடம் சீட்டு போட்டுக் கொண்டிருந்தாள். அவனிடம் ஒருமுறைநீங்க சீட்டு போடலையா?” என்று கேட்டாள்

இலலை, பிடித்தம் போக வர்ரது குடும்பச் செலவுக்கே சரியாப் போகுது. சந்திரா இந்த வருசத்தோட காலேஜ் முடிச்சிருவா. அதுக்குப்பிறகு கொஞ்சம் செலவு கம்மியாகும். பாப்பம்என்றான்.

அவ்ளவு செலவாகுதா என்ன?” என்று அவள் கேட்டாள்.

அவன் செலவுக் கணக்கைச் சொன்னான். அவள் அவன் சொல்லச் சொல்ல குறித்துக் கொண்டாள்.

செல்ஃபோனுக்கெல்லாம் இவ்ளவு செலவா?” என்றாள் உமையாள்நீங்க சந்திராகிட்ட பேசி கொஞ்சம் செலவை குறைச்சுக்க சொல்லுங்கசுடிதார் ஒண்ணு தைச்சா நாலைஞ்சு டாப்ஸ் மட்டும் எடுத்தா போரும்சிக்கனமா இருக்கணும்ல?”

அவன் குடும்பச் செலவை முழுக்க அவளிடம் அளிப்பான். அவள் கணக்கு பார்த்து சொல்வாள். அவனுக்கு பிஎஃப் லோன் எப்போதுமிருந்தது. கோஆபரேட்டிவ் லோன் அதற்கு மேலாக. அப்பாவின் சேமிப்பைக் கொண்டுதான் சரஸ்வதியை திருமணம் செய்து கொடுத்தான். அவளுக்கு இன்னமும் சீர் செய்துகொண்டிருந்தான்.

முத ஒருவருஷம் செய்றதுதான் சீர். மத்தபடி அது ஒரு சாதாரண சடங்குதான். எல்லா வருஷமும் தீபாவளிக்கு புடவை எடுத்து குடுக்கணும்னு இல்லைஎன்று உமையாள் சொன்னாள்.

அவன் வீட்டுக்கும் அவள் நாலைந்து தடவை வந்திருக்கிறாள். அப்போது சந்திராவிடம் சிரித்துச் சிரித்துத்தான் பேசினாள். ஆனால் அவள் போனபின் அம்மாகொஞ்சம் கெட்டியான பொண்ணுடாசாமர்த்தியம் ஜாஸ்தி பாத்துக்க. நீ இளிச்சவாய் மோணையன். அதான் சொல்றேன்என்றாள்.

அப்பதான் ஜோடி சரியா இருக்கும்என்றாள் சந்திரா.

போடிஎன்று அம்மா சந்திராவை திட்டினாள்.

சிஏஓ அழைப்பதாக குமார் வந்து சொன்னான். ஒரு ஆனுவல் ரிப்போர்ட் கேட்டிருந்தார். அவன் ஃபைல்களுடன் மாடிக்குச் சென்று அவரைப் பார்த்தான். அவர் அவனிடம் பேசுவதற்குள் பல முறை ஃபோன் பேசினார். ஆகவே ஆரம்பத்தில் இருந்தே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருந்தது. ஒருவழியாக வேலைமுடிந்து அவன் திரும்ப ஒன்றரை மணிநேரம் ஆகிவிட்டது.

அவன் அவளைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டு வந்தான். ஒரு லட்சத்தை எழுபதுக்கும் குறைவாக எடுப்பது வீண். நாராயணன் விட்டுக்கொடுக்காமல் அவளால் எழுபத்தைந்தாயிரத்திற்கு தள்ளி எடுக்கமுடியாது.

அக்கவுண்ட் செக்ஷனில் அவள் நாராயணனிடம் பேசிக்கொண்டிருப்பதை அவன் கண்டான். ஜன்னல் வழியாக கடந்துபோனபோது ஒரு கீற்றுபோல தெரிந்தது அந்தக் காட்சி. அறைக்குள் அவர்கள் இருவரும்தான். நாராயணன் காஷியர் ஆகையால் தனி அறை.

அழகப்பன் உடலெங்கும் பரவிய படபடப்புடன் நின்று அவள் பேசுவதை கவனித்தான். அவள் கையால் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள். உடலெங்கும் சிரிப்பின் அசைவு. நாராயணனின் முகம் மலர்ந்திருந்தது. அவன் மிகவும் வெட்கியது போலவும் கள்ளத்தனம் கொண்டது போலவும் தோன்றினான். உமையாள் கையை தாழ்த்தியபோது முந்தானை சரிந்தது அவள் எடுத்து மேலே போட்டாள்.

அவன் நெஞ்சு படபடக்க அப்படியே படியிறங்கி நேராக காண்டீன் சென்றுவிட்டான். நெடுநேரம் என்ன ஏது என்றே தெரியவில்லை. ரங்கராட்டினத்தில் சுற்றி இறங்கியதுபோல இருந்தது. பின்னர் மிகப்பெரிய களைப்பு வந்து அவன்மேல் படிந்தது. அழுகை அழுகையாக வந்தது.

மேலே போய் அவளைப் பார்ப்பதை பற்றி நினைத்தே பார்க்கமுடியவில்லை. “ஏன் சார், உங்க செக்ஷன் சூபர்வைசர் இல்லையா?” என்று கேண்டீன் சாமுவேலே கேட்டான்.

இருக்காருஎன்று அவன் கிளம்பி மேலே சென்றான். ஒவ்வொரு படியாக ஏறினான். உடல் எடை கூடியிருந்தது. அவ்வப்போது கைப்பிடியை பிடித்துக்கொண்டு நின்றான். மூச்சு வாங்க தன் இருக்கையைச் சென்றடைந்தான்.

அவள் அப்பால் வேலையாக இருந்தாள். அந்த அசைவுகளை அவன் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான். நெஞ்சுக்குள் பெரிய எடை இருப்பது போலத் தோன்றியது. எழுத்துக்கள் எதுவும் கண்ணுக்குப் படவில்லை.

சூபர்வைசர் எழுந்து போனதும் அவள் அவனிடம்நாராயணன் சாரிட்ட பேசிட்டேன். விட்டுக்குடுக்கறேன்னு சொல்றார்இன்னிக்கே ஏலம். பணம் நாளன்னிக்கு கிடைச்சிரும்என்றாள்.

அவன் திகைப்புடன் அவள் கண்களைப் பார்த்தான். தெளிவான கண்கள், இயல்பான சிரிப்பு.

எழுவத்தஞ்சுக்கு மேலே கூட நிப்பாட்டிக்கலாம். எண்பதுன்னா நல்ல லாபம்தான்

ஆமாஎன்று அவன் சொன்னான்.

அம்மாக்கிட்ட ஃபோன் பண்ணி சொல்லிட்டேன்

அவன் தலையசைத்தான்.

என்ன?” என்று அவள் கேட்டாள்.

ஒண்ணுமில்லை.

உடம்பு சரியில்லையா?”

தலைவலி… ”

கண்ணாடிய மாத்தணும்னு நினைக்கிறேன்மாத்தி ரெண்டு வருசம் இருக்கும்ல?”

ஆமா.

அவன் சட்டென்றுநான் வாறேன்… ” என்று எழுந்துகொண்டான்.

முதலில் அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும் என்றுதான் தோன்றியது. கிளம்பியதுமே ஆறுதலும் ஏற்பட்டது. வெளியே வந்து பஸ் ஏற நின்றபோதெல்லாம் வீடுபோய் சேர்ந்துவிடவேண்டும் என்ற எண்ணம்தான் மனசில் இருந்தது.

வீட்டில் அம்மா இருந்தாள். “என்னடா?” என்றாள்.

ஒண்ணுமில்லை, கொஞ்சம் தலைவலிஎன்று போய் சட்டையை கழற்றிவிட்டு படுத்துக்கொண்டான்.

ஆனால் படுத்ததும் உடலுக்குள் நூற்றுக்கணக்கான ஸ்பிரிங்சுருள்கள் விரிந்ததுபோல் இருந்தது. எழுந்து அமர்ந்தான். அவன் உடலே பதறிக்கொண்டிருந்தது. தாகம் எழுந்ததுபோல தோன்றியது. எழுந்து கூஜாநீரை குடித்தபோது உண்மையாகவே கொஞ்சம் குளிர்ந்தது.

மனம் எங்கோ சற்றே விலகி மீண்டும் அந்தக் காட்சியைச் சென்றடைந்தபோது குப்பென்று வியர்த்து கைகால்கள் நடுங்கத் தொடங்கின. டிவியை போட்டான். சற்றுநேரம்கூட அதைப் பார்க்கமுடியவில்லை. அணைத்து விட்டான். எழுந்து வெளியே சென்றான் மீண்டும் திரும்பி வந்தான். பதற்றமாக இருந்தது. மிகப்பெரிய எதையோ தொலைத்துவிட்டதுபோல, அது அவ்வப்போது நினைவுக்கு வருவதுபோல. அழவேண்டும் என்று தோன்றியது. மீண்டும் அறைக்குச் சென்றான்.

அம்மா டீயுடன் வந்தாள். “என்னடா? காய்ச்சலடிக்குதா?” தொட்டுப்பார்த்துகொஞ்சம் கணகணண்ணுதான் இருக்கு.

டீயை குடித்தான். வெளியே எங்காவது சுற்றிவிட்டு வரலாம் என்று தோன்றியது. வடசேரி அந்நேரத்தில் நல்ல நெரிசலாக இருக்கும். நெரிசலான சாலையில் நடப்பது அவனுக்கு பிடிக்கும். எல்லா கடைகளும் திறந்திருக்கும். விளக்குகளும் சத்தங்களுமாக. அந்த இடத்தில் சுற்றிச்சுற்றி வருவதுதான் அவனுடைய இனிய மாலைநேரம்.

அவன் பிறந்து வளர்ந்ததே அந்த இடத்தில்தான். அப்பாவுக்கு குடும்பசொத்து பாகம் வைத்தபோது வந்த வீடு அது. ஒன்றன்பின் ஒன்றாக நான்கு நீளமான அறைகள். கடைசியில் சமையலறை. அதற்கு அப்பால் கொல்லைப்பக்கம். அப்பா முகப்பு அறையை ஒட்டி ஒரு கட்டில் போடுமளவுக்கு ஓர் அறையை அஸ்பெஸ்டாஸ் கூரைபோட்டு நீட்டிக்கொண்டார். அதுதான் அவனுடைய அறை. ஒரு சன்னல் அதற்கு. ஆனால் மறுபக்கம் சாக்கடை இருப்பதனால் அதைத் திறப்பதே இல்லை.

வீடு பழையது. ஆகவே சாலையை விட பள்ளத்தில் இருந்தது. குடிநீர் வரும் குழாய் வீட்டைவிட பள்ளத்தில் ஒரு சதுரவடிவ குழிக்குள் இருந்தது. வீட்டின் மற்றபகுதிகளை சித்தப்பாக்கள் விற்றுவிட்டார்கள். ஒரு மெடிக்கல் கம்பெனியும் இரண்டு குடும்பங்களும் அங்கே இருந்தன.

அவன் சட்டையை போட்டுவிட்டு வெளியே சென்றான். கிருஷ்ணன்கோயில் வரை நடந்தான். ஆனால் ஏதோ பெரிய ஒரு பயம் நெஞ்சுக்குள்ளே இருப்பதுபோல படபடப்பாக இருந்தது. ஆயிஷா மெடிக்கல் ஷாப் அருகே நின்றுவிட்டான். திரும்பிவிடலாம் என்று தோன்றியது.

மெடிக்கல் ஷாப்பில் ஷாகுல் இருந்தார். “நல்ல தலைவலி இருக்குஏதாவது மாத்திரை இருந்தா குடுங்கஎன்று கேட்டான்.

சளி இருக்கா?”

இல்லை.

காய்ச்சல்?”

இல்ல பாய். ஆபீஸிலே ஒரு பிராப்ளம் அதான் ஒரு படபடப்பு.

அப்ப இந்த மாத்திரையை போடுங்கதூக்கம் கொண்டு அடிக்கும்காலையில் எந்திரிச்சா செரியாப் போயிரும்.

இது என்னது?”

அவாமின், சாதாரண வாந்தி மாத்திரைதான்.

அவன் வீட்டுக்கு திரும்பிவந்தான். அம்மாஎன்னடா?” என்றாள்.

தலைவலிஎன்றான்.

அவாமினை விழுங்கிவிட்டு என்ன நடக்கிறது என்று பார்த்தபடி அமர்ந்திருந்தான். வாய் முறுமுறுவென்றது. களைப்பாகவும் கைகால் ஓய்ச்சலாகவும் தோன்றியது. படுத்தபோது உடல் கீழே அமிழ்வதுபோல இருந்தது. தூங்கிவிட்டான்.

அம்மா அவனை எழுப்பினாள். “ஏலே தோசை தின்னுலே

சந்திரா வந்திருந்தாள். அவன் கட்டிலிலேயே எழுந்து அமர்ந்து தோசையை சாப்பிட்டான். மீண்டும் அப்படியே படுத்துக்கொண்டான்.

காலையில் ஏழுமணிக்குத்தான் விழிப்பு வந்தது. எழுந்து டாய்லெட்டுக்கு நடந்தபோது தலைசுழன்றது. கைகால்கள் ஓய்ச்சலாக இருந்தது. அவன் மீண்டும் வந்து படுத்துக்கொண்டான்.

அம்மா வந்துஏண்டா ஆபீஸ் போகலையா?” என்றாள்.

இல்லைஎன்று அவன் சொன்னான்ஆத்தலா இருக்கு… ”

காய்ச்சல் இருக்கா?” என்று அம்மா தொட்டுப் பார்த்தாள்.

இல்லைஎன்று அவன் சொன்னான்.

கணகணண்ணுதான் இருக்குஎன்று அம்மா சொன்னாள். “நீ பேசாம இன்னிக்கு ரெஸ்ட் எடுத்துக்க.

சரி.

அவன் காலை பத்துமணிக்குத்தான் எழுந்தான். அப்போதும் தூக்கம் மிச்சமிருப்பதுபோல தோன்றியது. இட்லி சாப்பிட்டுவிட்டு கொஞ்சநேரம் பேப்பர் வாசித்தான். டிவியில் ஏதோ பார்த்தான். அவ்வப்போது ஏதோ கெட்டசெய்தி மங்கலாக நினைவுக்கு வருவதுபோல ஒரு பகீரிடல். இன்னொரு அவாமின் இருந்தது. அதை போட்டுக்கொண்டு படுத்துக்கொண்டான்.

மீண்டும் எழுந்தபோது மாலை மூன்றுமணி. அதன்பின்புதான் மதிய உணவு சாப்பிட்டான். ஒருமணிநேரம்கூட டிவி பார்க்கவில்லை. மீண்டும் படுத்து ஏழுமணிக்கு எழுந்தான். அன்றிரவும் ஒரு நல்ல தூக்கம் போட்டால் நல்லது. ஆனால் பகலெல்லாம் தூங்கிவிட்டான். இரவு தூக்கம்போனால் என்னென்னவோ நினைப்புக்கள் வரும். அவனுக்கு இரவு தூக்கம்பிடிக்கவில்லை என்றால் சிலசமயம் தற்கொலை எண்ணம்கூட வரும்.

கிருஷ்ணன்கோயில் சந்திப்புவரை நடந்தான். மாணிக்கம் மெடிக்கல் ஷாப்பில் சொல்லி நான்கு அவாமின் மாத்திரைகளை வாங்கிக்கொண்டான். திரும்ப வந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது அம்மா கஞ்சி கொண்டுவந்தாள். அதை குடித்துவிட்டு மீண்டும் ஒரு அவாமின் போட்டுக்கொண்டு படுத்தான்.

மறுநாள் அவன் விழித்துக்கொண்டது காலை பத்துமணிக்கு. “காய்ச்சலாத்தான் இருக்குஇன்னிக்கும் ரெஸ்ட் எடுக்கறேன்என்று அம்மாவிடம் சொன்னான்.

அவனுடைய செல்போனில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மிஸ்ட்கால் இருந்தது. பெரும்பாலும் உமையாள்தான். இருபது முப்பது எஸ். எம். எஸ்கள். அவன் செல்போனை தூக்கி மேஜை டிராயருக்குள் போட்டான்.

அன்றும் பெரும்பாலும் தூங்கிக்கொண்டேதான் இருந்தான். மாலையில் மீண்டும் அவாமின் போட்டுக்கொண்டான்.

மறுநாள் காலையில் எழுந்தபோது அம்மாஏண்டா, என்ன ஆச்சு உனக்கு? ஆஸ்பத்திரி போறியா?” என்றாள்.

இல்லை, இன்னிக்கு சரியாயிடும்என்றான்.

நீ லீவு சொல்லலையா?”

சொல்லிட்டேன்என்றான்.

நான் சரஸ்வதி வீடுவரை போய்ட்டு வந்திடறேன்குமரேசனோட அம்மா வந்திருக்காளாம். போய் பாக்காம இருந்தா நல்லா இருக்காது

சரிஎன்றான்.

ஒரு எரநூறு ரூபா குடுடாபிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கிட்டுப் போகணும்ல?”

அவன் மேஜை டிராயரை திறந்தபோது உள்ளே செல்போன் இறந்துவிட்டிருப்பதைக் கண்டான். அதை எடுத்து சார்ஜில் போடலாமா என்று நினைத்தான். சரி பிறகு பார்ப்போம் என்று சலிப்பாக இருந்தது. பணத்தை எடுத்து அம்மாவுக்கு கொடுத்துவிட்டு படுத்துக்கொண்டான்.

சாப்பிடுடாசோறு எடுத்து வச்சிருக்கேன்என்று அம்மா சொன்னாள்.

அவன் மீண்டும் படுத்துக்கொண்டான். எல்லாமே மிகமிகப் பழைய விஷயங்களாக மாறிவிட்டிருந்தன. எதுவுமே முழுமையாக நினைவுக்கு வரவில்லை. முதலில் என்னதான் நடந்தது? அவள் நாராயணனிடம் சிரித்துப் பேசினாள். ஆனால் அலுவலகத்தில் சிரித்துப் பேசாமலிருக்கமுடியுமா என்ன? எல்லாரும்தான் எல்லாரிடமும் பேசுகிறார்கள். அவன் எதையாவது எண்ணிக்கொண்டால் அவளா பொறுப்பு?

அவன் தூங்கிவிட்டான். கனவில் என்னென்னவோ வந்தன. அப்பா வந்தார். ஒரு பழைய சூட்கேஸ். அதற்குள் கட்டுகட்டாக நோட்டுகள். கூடவே சில நண்டுகள். ஆமாம் நண்டுகள்தான். அவற்றை தொட்டபோது ஷாக் அடித்தது. ரீரீ என்ற ஓசை கேட்டது.

அவன் விழித்துக்கொண்டான். காலிங்பெல் அடித்துக்கொண்டிருந்தது. எழுந்து லுங்கியை சரியாக கட்டிக்கொண்டு சென்று கதவைத் திறந்தான். உமையாள் நின்றிருந்தாள்.

அவன் எதிர்பார்க்கவில்லை. “நீயா?” என்றான்.

ஏன் ஃபோன் எடுக்கலை?”

உடம்பு முடியலை.

அதைச் சொல்லலாம்லஎங்கிட்ட உங்க அம்மா நம்பரும் இல்லை.

உள்ள வாஎன்றான்.

அவள் உள்ளே வந்து அம்மா இல்லையா?” என்றாள்.

இல்லை, சரஸ்வதி வீட்டுக்கு போய்ட்டாங்க.

நீங்க மட்டுமாதனியா விட்டுட்டு போயிருக்காங்க?”

எனக்கு பெரிசா ஒண்ணுமில்லை. கொஞ்சம் தளர்ச்சிதான்… ”

காய்ச்சல் இருக்கா?” என்று அவள் அவன் நெற்றியில் கையை வைத்தாள். “தெரியலைஎன்றாள்.

அவள் அவளை தொடுவது முதல்முறை. அவன் நெஞ்சு படபடத்தது.

சாப்பிட்டீங்களா?”

இல்லை.

ஏன் மணி மூணாவுதே.

தூங்கிட்டேன்.

இருங்க பாக்கிறேன். எடுத்து வச்சிருப்பாங்க.

அவள் சமையலறைக்குள் சென்றாள். அவனுக்கு தாளமுடியாத அளவுக்கு மனம் படபடத்தது. சட்டென்று வெளிக்கதவை தாழிட்டான்.

மெல்ல சமையலறைக்குச் சென்றான். அவள் அம்மியின் மேல் மூடிவைத்திருந்த தட்டை எடுத்துக்கொண்டு திரும்பியபோது அவன் அவள்முன் சென்று நின்றான்.

என்ன?” என்றாள்

அவன் அந்த தட்டை பிடித்து அம்மிமேல் வைத்துவிட்டு அவள் கையை பிடித்தான்.

அவள் மெல்லவேண்டாம்என்றாள்.

அவன் அவளை சுற்றிக் கட்டிப்பிடித்துக்கொண்டான்.

அய்யோஎன்னது இதுவேண்டாம்.

அவன் அவளை கழுத்திலும் கன்னத்திலும் முத்தமிடத் தொடங்கினான். அவள் உடலின் இறுக்கம் தளர்ந்தது. அவன்மேல் சாய்ந்தாள். அவள் கைகள் அவனை சுற்றிப் பிடித்துக்கொண்டன. அவள் உதடுகளை தேடி கவ்விக்கொண்டான்.

முயங்கல் அத்தனை பழக்கமானதாகவும் அசௌகரியமானதாகவும் இருந்தது. கைகால்கள் நடுநடுவே வந்தன. உடல்கள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டன. ஏதோ கருவி ரிப்பேர் செய்கிற மெக்கானிக்கல் செயல்பாடு போல சிலசமயம் இருந்தது. அப்போது அவனுடைய மனம் அதிலிருந்து விலகியது. மீண்டும் ஈடுபட்டது. வாசனைதான் அதில் ஈடுபடுத்தியது.

அவர்கள் படுக்கையில் தங்களை உணர்ந்தபோது அவனுக்கு ஒரு நகக்கீறலுக்கு பிந்தைய எரிச்சல்போல ஓர் உணர்வுதான் இருந்தது. ஒருவகை ஏமாற்றம் இன்னொருவகை நிறைவு. விசித்திரமான ஓர் இழப்புணர்வு.

அவள் எழுந்து சேலையை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள். அங்கே கழிப்பறை வீட்டின் பின்பக்கம் சமையலறைக்கு அப்பால். இயல்பாக அவள் சேலையை கட்டாமல் உடலில் வைத்து பொத்தியபடிச் செல்வதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்

செல்போனை எடுத்து சார்ஜில் போட்டான். அம்மா வந்துவிடுவாள் என்ற பதற்றம் வந்தது. கதவு உட்பக்கம் தாழிடப்பட்டிருக்கிறது. சந்திராகூட காலேஜிலிருந்து வரலாம்.

அவளுக்கு எந்த பதற்றமும் இல்லை. அவன் கூடத்தில் நிலைகொள்ளாமல் நின்றுகொண்டிருந்தான். அவள் சேலைகட்டி முகம் கழுவி வந்தாள். அவனைப் பார்த்துச் சிரித்துஎன்ன திமிர், ம்ம்?” என்றாள்.

அவன் கதவை திறந்துவைத்தான்.

ஆமா, இப்ப பயப்படுங்கஎன்று அவள் சொன்னாள்.

அவள் வயர்கூடை நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். தன் கைப்பையை திறந்து செல்ஃபோனை எடுத்துப் பார்த்தாள்.

அவன்நீ கெளம்புஎன்றாள்.

அம்மா வரட்டுமே.

வேண்டாம். . அம்மாவுக்கு தெரிஞ்சா.

எப்டி தெரியும்?”

எப்டியோ தெரியும்நீ கெளம்புநான் நாளைக்கு ஆபீஸ் வாரேன்.

அவள்தொரத்திவிடுங்கஎன்றபின் எழுந்து புன்னகைத்துவரேன்என்றாள்.

அந்தப் பணம் என்ன ஆச்சு? குடுத்திட்டானா?”

எம்பத்திரெண்டுக்கு பிடிச்சாச்சுநாளைக்கு குடுத்திருவான். ஆனா அம்மா சொல்றா இப்ப வேண்டாம்டீன்னு.

“ஏன்?” என்றான்.

அண்ணா நேத்துவந்திருக்கான். அண்ணி கூட வந்ததனாலே அப்ப அப்டி சொல்லியிருக்கான். அண்ணியோட அப்பாவுக்கு உடம்புசரியில்லேன்னா அவரோட பையனுங்க ரெண்டுபேரு இருக்காங்க, அவங்க செலவுபண்ணட்டும், நான் ஏன் பண்ணணும்னு கேட்கிறான்.

இது கடன் தானே?”

கடன்னு சொல்லுவாங்கவட்டியா குடுக்கப்போறாங்க? அண்ணி அதெல்லாம் செம கெட்டி” என்றாள். “அம்மா சொன்னா, அப்டியே வைச்சுக்கோநகை ஏதாவது வாங்கிக்கலாம்னு. அண்ணிகிட்ட பணம் கிடைக்கலைன்னு அம்மாவே சொல்லிடுவா. ”

எம்பத்திரெண்டுன்னா லாபம்தான்என்றான் அழகப்பன்.

எம்பத்தஞ்சுக்குமேலே கூட பிடிச்சிருக்கலாம். ராமச்சந்திரன் பிடிவாதமா நின்னாரு. நாராயணன்சார் முதல்லயே நின்னுட்டார்.

ஆமா சொன்னே.

அப்றம் யோசிச்சு பாத்தேன். நகைய வாங்கி வச்சா நஷ்டம்அதனாலே அப்றமா பிடிச்சுக்கலாம்னு நினைச்சு ராமச்சந்திரன் சார் கிட்டே சொல்லிட்டேன், அவரே பிடிச்சுக்கட்டும்னு… ”

அப்டியா?”

அது அந்த பணத்தை நாம வட்டிக்கு விடுறதுமாதிரித்தானே? நகைய வாங்கினா வட்டிபோட்டு பாத்தா பெரிய நஷ்டம்… ”

சரி போஅம்மா வந்தா வம்பு.

என்ன வம்பு? என்னமோ பெரிசா.

அம்மாவுக்கு தெரிஞ்சிரும்.

எப்டி தெரியும்?”

நீ இங்க இருந்தா தெரியும்… ”

சரிஎன்று அவள் எழுந்தாள். “வாரேன்நாளைக்கு வருவீங்கள்ல?”

ஆமா.

அவள் போனபிறகு அவன் மெல்லிய எரிச்சலுடன் நாற்காலியில் அமர்ந்தான். டிவியை ஆன் செய்து பார்த்துக் கொண்டிருந்தான். சட்டென்று ஒரு ஏதோ பழைய நினைவு போல ஒர் இனிமை மனதில் வந்தது. டிவியில் ஓடிக்கொண்டிருந்த பாட்டில் அவன் அப்போது கேட்ட இசைப்பகுதி தித்திப்பாக இருந்தது.

அது என்னவகையான இனிப்பு என்று அவனுக்குப் புரியவில்லை. இரும்புக்கம்பியை நாக்கால் தொட்டதுபோல ஒருவகையான இனிமை. அவன் சினிமாப் பாட்டுக்களையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆணும் பெண்ணும் கொஞ்சுவதுதான் பெரும்பாலான பாடல்கள். அதை அவன் அதற்குமுன் கவனித்ததே இல்லை. பாடலைத்தான் கவனிப்பான். சிவாஜி எம்ஜிஆர் ஜெமினி ரஜினி கமல் எல்லாருமே பெண்களைக் கொஞ்சிக் கொண்டுதான் இருந்தார்கள். பெண்கள் ஜாலம் காட்டினார்கள். சிரித்தார்கள் கோபித்தார்கள். ஓடினார்கள். பிடிகொடுத்தார்கள்.

அம்மா வந்த ஓசை கேட்டபோது அவன் சென்று கதவை திறந்தான். அம்மா அவனை கூர்ந்து பார்த்துஎன்னடா?” என்றாள்.

என்ன?” என்றான்

யாரு வந்தா?”

ஏன்?”

ஒண்ணுமில்லைஅம்மா உள்ளே வந்து கூடத்தை கண்களால் சுற்றிப்பார்த்தாள். கையில் இருந்த பையை கீழே வைத்துவிட்டு அவனை பார்த்தாள். “உமையாள் வந்தாளா?”

அவன் கண்களை திருப்பி கொண்டுஆமாஎன்றான்.

அம்மா மேலும் ஒன்றும் சொல்லவில்லை. அவன் மீண்டும் அமர்ந்து டிவி பார்த்தான்.

அம்மாடீ குடிக்கிறியா?” என்றாள்.

ம்என்றான்.

அம்மா டீ கொண்டுவந்தாள். ஆனால் ஏதாவது சொல்லாமல் அவள் வழக்கமாக கோப்பையை நீட்டுவதில்லை. அன்று அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் கண்களைப் பார்க்கவுமில்லை.

அவள் அவன் முன் அமரப்போகிறாள் என்று அவன் நினைத்தான். ஆனால் உள்ளே போய்விட்டாள். அவளிடம் இருந்த அந்த மாற்றம் அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. ஆனால் அவள் வந்து அவன் முன் அமர்ந்துகொண்டால்கூட அவனால் அவளிடம் கண்களைப் பார்த்து இயல்பாகப் பேசமுடியாது.

அம்மா உமையாள் பற்றி ஏதாவது கேட்பாள் என அவன் எதிர்பார்த்தான். அம்மா அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. உள்ளே அவள் ஆடைமாற்றிக் கொண்டாள். டீ கோப்பையுடன் இரண்டாம் அறையில் பெஞ்சில் அமர்ந்து காலை நீட்டிக்கொண்டாள்.

வேலை போயிருச்சுன்னு சொன்னான்என்று திடுதிப் என்று அம்மா சொன்னாள்

யாரு?” என்று அழகப்பன் கேட்டான்

குமரேசன்… ”

ஏன்?”

அங்க ஆட்குறைப்பு.. இப்ப எல்லா மில்லிலயும் ஆட்குறைப்புதான்என்று அம்மா சொன்னாள்ஒரு எண்ணைக்கடையை வைக்கலாம்னு சொன்னான். என்ன இருந்தாலும் நம்ம தொழிலு.

அதுக்கு?”

நாலு லெச்சம் வச்சிருக்கான்நம்மகிட்ட ஒரு லெச்சம் கேக்கிறான்

ஒரு லெச்சமா? நாம எங்க போவ? இங்க பிடித்தம்போக என்ன வருதுன்னு தெரியும்ல?”

அம்மா சிலகணங்களுக்கு பிறகுஉமையாள்கிட்ட கேளுடாஎன்றாள்.

அவகிட்ட ஏது பணம்?”

கல்யாண வயசுன்னா கண்டிப்பா பணம் வச்சிருப்பாங்க.

அதுக்காக?”

குடுக்கணும்ல?”

அவன் ஒன்றும் சொல்லவில்லை.

கேளுஎன்று அம்மா சொன்னாள். “நாம இப்ப சரஸ்வதிக்கு குடுக்கலைன்னா பெரிய மனஸ்தாபமா நின்னுரும்.

நான் கேட்டுப்பாக்கிறேன்.

கேளு, குடுப்பாஎன்று அம்மா சொன்னாள்இனிமேலாவது ஆம்புளை மாதிரி இரு.

அவன்சரிஎன்றான்.

அம்மா எழுந்து உள்ளே சென்றாள். அவன் எழுந்து சட்டையை போட்டுக்கொண்டு செல்போனுடன் வெளியே சென்றான்.

வடசேரி சாலை பரபரப்பாக இருந்தது. அந்த நெரிசலில் நடந்தபோது நிறைவாக உணர்ந்தான். உடலில் ஒரு விதமான மதர்ப்பும் திமிரும் தோன்றியது. உமையாளை அழைத்தான்.

உமை, நாந்தாண்டி

சொல்லுங்கஎன்ன இப்ப?” என்று அவள் கொஞ்சினாள்.

சரஸ்வதி புருஷனுக்கு வேலை போயிடுச்சு.

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

எண்ணைக்கடை வைக்கிறானாம். நான் ஏதாவது குடுக்கணும். . நீ அந்த பணத்தை பிடிச்சிரு.

அவள்ஆனா நான் ராமச்சந்திரன் சார்கிட்டே சொல்லிட்டேனே. அவரும் இதை நம்பி இருக்கார்என்றாள்.

அவன் சிறு எரிச்சலுடன்அவசியம்னு சொல்லுடிஎன்றான்.

ஸ்ரீனிவாசன் சார்கிட்டயும் சொல்லிட்டேன். அவர் பணத்தை ராமச்சந்திரன் சார்கிட்டே நாளைக்கே குடுப்பார்.. ”

அவருக்கு இதிலே என்ன?நாமள்லா சீட்டு பிடிக்கோம்?”

ராமச்சந்திரன் சார் ஒப்புக்கவே மாட்டார்

அவன் சிலகணங்களுக்கு பின்நீ கொஞ்சம் நைசா சொல்லிப்பாருஎன்றான்.

அவள்பாக்கிறேன்என்றாள்.

***

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–57

$
0
0

பகுதி ஆறு : படைப்புல் – 1

தந்தையே, காளிந்தி அன்னையின் மைந்தனாகிய சோமகன் நான். நானே அவ்வாறு கூறிக்கொண்டாலொழிய எங்கும் எவரும் என்னை யாதவ மைந்தர் எண்பதின்மரில் ஒருவர் என்று அடையாளம் கண்டதே இல்லை. எந்தத் தருணத்திலும் எந்த அவையிலும் நான் எழுந்து ஒரு சொல் உரைத்ததில்லை. தங்கள் மைந்தன் என்று அன்னையால், அவையால் கூறப்பட்டிருக்கிறேன். அவை அதை ஏற்றிருக்கிறது. அரசமைந்தனுக்குரிய அடையாளங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒருபோதும் அவ்வண்ணம் உணர்ந்ததில்லை.

தங்களை நான் கண்டதுண்டு. அன்னையைப் பார்க்க தாங்கள் வரும்போது என்னை அருகணைத்து இடைவளைத்து உடல் சேர்த்து ஓரிரு சொல் சொல்வீர்கள். அன்று என்னை கூச வைக்கும் ஒரு தொடுகையாகவும் உளம் விலக வைக்கும் சில சொற்களாகவுமே தாங்கள் இருந்தீர்கள். உங்களை சிறுசாளரப் பழுதுகளினூடாக ஒளிந்துநின்றே பெரும்பாலும் பார்த்திருக்கிறேன். அரசப்பேரவையில் தாங்கள் அரியணை அமர்ந்திருக்கையிலும், பெருவீதியில் யானைமேல் அமர்ந்து அணிவலம் செல்கையிலும்கூட ஒளிந்திருந்து பார்ப்பவனாகவே என்னை உணர்ந்திருக்கிறேன்.

தங்களை அறிந்துகொள்வதற்கான எந்தப் பாதையையும் தாங்கள் திறந்து தரவில்லை. தங்களிடமிருந்து அகல்வதற்கான அனைத்துப் பாதைகளும் திறந்திருந்தன. எத்தனை தடைகள், எத்தனை திரைகள் தங்களை என்னிடமிருந்து மறைத்தன! முதன்மையான திரை தாங்கள் கொண்ட பேருருதான். நான் சொல்லறிந்தபோதே தொல்கதைகளிலிருந்து எழுந்துவந்த பெருந்தெய்வமென நீங்கள் மாறிவிட்டிருந்தீர்கள். இளமையில் கோகுலத்தில் நீங்கள் ஆற்றிய விந்தைகள், வீரச்செயல்களை அன்னையரும் விறலியரும் பாடிக் கேட்டேன். கம்சனை வென்றதும் மதுராபுரியை கொண்டதும் சூதர்களின் சொற்களினூடாக எனக்கு உரைக்கப்பட்டது.

துவாரகை உங்களைப் பாடும் ஓர் இசைக்கலம் அன்றி வேறல்ல. இந்திரமாயக்காரன் கோலை அசைத்து உருவாக்கியதுபோல நீங்கள் மாயதுவாரகையை மின்னற்பொழுதென அமைத்ததைப்பற்றி பாடினர் பாணர். உங்கள் திசைவெற்றிகளை நடித்தனர் ஆட்டர். நீங்கள் தெய்வப்பேருரு என பாரதவர்ஷத்தால் வணங்கப்படுவதை சொல்லினர் அயல்நிலத்து கவிஞர். துவாரகையில் உங்கள் புகழ்பாடலைச் செவிகொள்ளாமல் நூறு காலடி எடுத்து முன்வைக்க இயலாது, எங்கும் எந்தப் பொழுதிலும்.

விண்ணில் ஆழிவெண்சங்கம் அணிந்து அமுதக்கடலில் பள்ளிகொண்டிருக்கும் அந்தத் தொல்தெய்வமே என் முன் மஞ்சளாடையும் பீலி முடியும் என்று எழுந்தருள்கிறது என நினைத்துக்கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவிருந்ததில்லை. அவ்வாறு எண்ணிக்கொள்ள மைந்தர் எண்பதின்மராலும் இயன்றதில்லை. ஏன் என்று எண்ணிப்பார்க்கிறேன். அவ்வாறு உங்களை தெய்வம் என்று தலைக்கொண்டால் தெய்வத்தின் மைந்தர் நாங்கள். நாங்களோ அவ்வண்ணம் எங்களை உணர்ந்ததே இல்லை. அச்சமும் தனிமையும் ஐயமும் விழைவுகளும் ஆட்டிவைக்கும் எளிய மைந்தராகவே எங்களை அறிந்தோம். எங்கள் தந்தை என்பதனால் நீங்களும் எங்களைப் போன்றவரே என்று துணிந்தோம்.

பெருமானுடரின் மைந்தர்கள் அவர்களை பொருட்டென நினைக்காமல் போகிறார்கள். ஏனென்றால் மைந்தரிடம் அப்பெருமானுடர் தங்கள் மணிமுடிகளை கழற்றிவிடுகிறார்கள். தங்கள் அணிகளை அகற்றிக்கொள்கிறார்கள். புகழையும் கல்வியையும் மறைத்து எளிய மானுடர்போல களிக்கிறார்கள். கையருகே சிக்கும் ஒன்று விண்வாழ்வது என்று எவ்வண்ணம் நம்ப முடியும்? பெருமானுடர் மைந்தர்களால் கொண்டாடப்படுவது அவர்கள் விண்புகுந்த பின்னரே. அதன்பின் அவர்கள் தெய்வங்களென்று ஆகிவிடுகிறார்கள். தெய்வங்களை நாம் கையாளலாம். மானுடருடன் புழங்கலாம். மானுடதெய்வங்கள் எங்கும் நிலைகொள்ளாதவர்.

ஆகவே நான் உங்களை விலக்கிக்கொண்டேன். உங்களைப்பற்றி எண்ணாதிருக்க என்னால் இயலாது. எனவே உங்களை பிறிதொருவர் என்று எண்ணிக்கொண்டேன். உங்களுடனான எனது தொடர்புகள் அனைத்தையும் நானே இல்லாமலாக்கிக் கொண்டேன். உங்கள் பெயரை நான் சொல்வதே இல்லை. காலையில் ஒவ்வொருநாளும் துவாரகையில் நிகழும் குடிவணக்கப் பாடலில் இறுதியில் உங்கள் பெயர் வரும். அதை நான் என் நாவால் சொல்லமாட்டேன். உங்கள் படங்களை ஏறிட்டுப் பார்க்கமாட்டேன். தந்தையே, நான் மயிலை கண்களால் பார்ப்பதில்லை. குழலோசையை செவிகொள்வதில்லை.

ஆனால் அவையிலும் பிற இடங்களிலும் துணையின்றி இருக்கமுடியாதவன், தனக்கென தனி வீரமோ கல்வியோ குடிச்சிறப்போ அற்றவன் நான். எனவே என்னை என் மூத்தவர் பத்ரனுடன் ஒட்டிக்கொண்டேன். அவருடைய அணுக்க விலங்காக, ஏவலனாக மாறினேன். அதனூடாக எனக்கான சிறு இடத்தை உருவாக்கி அதில் வாழ்ந்துகொண்டேன். தந்தையே, முள் முனைகளில் சொட்டி நிற்கும் நீரை மட்டுமே அருந்தி பாலையில் உயிர்வாழும் சிற்றுயிர்கள் உண்டு. அதைப்போன்றவன் நான்.

எப்பொழுதேனும் என் அன்னையின் சிற்றூருக்கு செல்வேன். அங்கு யமுனையில் படகோட்டி வாழும் மீனவர் குடிகளுடன் இணைந்துகொள்கையில் என் இடத்தை உணர்வேன். அங்கு பிறிதொருவனாக இருப்பேன். யமுனையில் நீந்தி திளைக்கையில் என் கைகளும் கால்களும் அந்நீர்ப்பெருக்கை முன்னரே உணர்ந்திருப்பதை அறிந்து நான் நான் என்று எழுவேன். நதியிலேயே பிறந்து வளர்ந்தவர்களைவிட விரைவாக என்னால் நீந்த முடியும். அவர்களை பின்னுக்குத் தள்ளி முன்னும் பின்னும் அதை ஊடுருவிக் கடக்க முடிந்தது. அது நான் யாரென எனக்குக் காட்டியது. அங்கு அவர்களில் ஒருவனாக உணர்கிறேன். அவர்களில் மேலானவனாகவும். அவ்வண்ணம் அவர்களால் தலைவன் என உணரப்படுவதில் மகிழ்ந்தேன்.

மீண்டும் துவாரகைக்கு வரும்போது என் சிறகுகளை நீவி மடித்து என் அலகுகளைக் குவித்து முட்டைக்குள் மீண்டும் நுழையும் பறவைபோல மாறினேன். எத்திசையிலும் உள்நுழைய வாயில்கள் இல்லாத ஓர் உருளைபோல என்னை ஆக்கிக்கொண்டேன். எங்குமிருந்தேன், நாளுமிருந்தேன், எங்கும் திகழவில்லை, கணமும் வெளிப்பட்டதில்லை. இன்று இப்பேச்சை இவ்வண்ணம் விரித்துரைக்கையிலேயே நான் தோன்றுகிறேன். என்னை நானே வியந்து வியந்து இச்சொற்களினூடாக காண்கிறேன். என்னை நானே வரைந்துகொள்கிறேன்.

நான் உங்களை வெறுத்ததில்லை தந்தையே, ஒருகணமும் விரும்பியதும் இல்லை. அவ்வண்ணம் நான் சொல்லிக்கொள்வதுண்டு. ஆனால் தந்தையை வெறுப்பவர் மட்டும் தந்தைக்கு எதிரியல்ல, தந்தையை விரும்பாதவரும் தந்தைக்கு எதிரிதான் என்று மிக மிக பிந்திதான் புரிந்துகொண்டேன். இன்று தங்கள் முன் நின்றிருக்கையில் என்னை சிறுமை கொள்ளச் செய்வது இதுவே. தங்களை விலக்கி விலக்கி சிறுமை கொண்டு அச்சிறுமையுடன் இங்கு வந்து நின்றிருக்கிறேன். அச்சிறுமையையே தகுதியென்றாக்கி உங்களிடம் இரக்க வந்துள்ளேன்.

தங்களை அணுகினால் சிறுமை கொள்வேன் என்று அஞ்சியவன் நான். அணுகியிருந்தால் சிறுமையை உணர்ந்திருப்பேன் என்பதில் ஐயமில்லை. ஆனால் அச்சிறுமையிலிருந்து என் ஆழத்தை நான் கண்டிருக்க முடியும். எனக்கென ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்க முடியும். இப்பயணம் எதிர்த்திசையில் அமைந்திருந்தால் இன்று இவ்வண்ணம் வந்து நின்றிருக்கமாட்டேன். தந்தையே, இத்தருணம் என் சாவுக்கு நிகர்.

 

காளிந்தியின் மைந்தனான சோமகன் சொன்னான். தந்தையே, நான் துவாரகையின் பேரழிவை கண்களால் பார்த்தேன். பிறந்து வளர்ந்து தன் நிலமென்றும் தன் அகமென்றும் ஆன ஒரு நகர் கண்ணெதிரே உடைந்து கல்மேல் கல்லென விழுந்துகிடப்பதைக் காணும் தீயுழ் கொண்டவ்ன் நான். அதைவிட அவ்வாறு இடிந்து சரிவதைக் கண்டு அகம் மகிழ்வதை தானே உணர்ந்து தருக்கி பின் தற்சிறுமை கொண்டு கூசி விழிநீர் சிந்தி அமர்ந்து, தன்னைத் தானே வெறுத்து, பலமுறை இறந்தவன் என ஆகும் பெருந்தீயூழ் கொண்டவன்.

துவாரகை எனக்கு என்னவாகப் பொருள்பட்டிருக்கிறது என அதன் சரிவிலேயே நான் உணர்ந்தேன். அதை நான் வெறுத்தேன். அது என் நகரல்ல என்று எண்ணினேன். அதிலிருந்து கிளம்பிவிடவேண்டும் என்று விழைந்தேன். அவ்வாறு கிளம்புவதைப் பற்றி கனவு கண்டேன். தந்தையே, கிளம்பிச்சென்று குகர்களின் பேரரசு ஒன்றை அமைத்து பெரும் படையுடன் திரும்பிவந்து துவாரகையை வென்று கைப்பற்றுவதை, பின் அதை கற்குவியல் என்று இடித்துத் தள்ளிவிட்டு மீள்வதை நான் பகற்கனவில் கண்டிருக்கிறேன். கீழ்மை நிறைந்த காமக்கனவுகூட அத்தகைய தற்கூச்சத்தின் உவகையை எனக்கு அளித்ததில்லை.

ஆனால் அந்நகர் எனக்கு அரியது. ஏனென்றால் என் இனிய நினைவுகள் பல அதனுடன் இணைந்தவை. நான் அதை கனவுகளில் கண்டிருக்கிறேன். நான் உருவாக்க எண்ணிய நகர் ஒன்றுண்டு. களிந்தபுரி துவாரகையின் அதே வடிவிலேயே என் உள்ளத்தில் இருந்தது. அது நான் விரும்பும்படி சற்றே உருமாற்றப்பட்ட, சிறிதே வண்ணம் மாற்றப்பட்ட துவாரகை அன்றி வேறல்ல. நான் துவாரகையை அங்கிருந்து கொண்டுசென்று யமுனைக்கரையில் வைத்து எனக்குரியதாக்கிக் கொண்டிருக்கிறேன். நான் கண்டது துவாரகையின் அழிவு மட்டும் அல்ல, களிந்தபுரியின் அழிவும்தான்.

அரண்மனையின் உப்பரிகையில் நான் நின்றிருந்தேன். துவாரகையில் அன்று காலைதான் சிறிய நிலநடுக்கம் ஒன்று வந்திருந்தது. பல மாளிகைகள் விரிசலிட்டிருந்தன. நிலநடுக்கத்தை நான் உணர்ந்தபோது மூத்தவர் சுருதனின் அவையில் உடன்பிறந்தாருடன் பேசிக்கொண்டிருந்தேன். அனைவருமே மது அருந்தியிருந்தோம். எனக்கு நோக்கு அலைபாய தலைசுழன்றது. குமட்டல் எழ எழுந்து விரிகலம் நோக்கி சென்றேன். அதற்குள் மூத்தவர் சுருதனும் கவியும் குமட்டி வாயுமிழ்ந்தனர். விருஷன் “என்ன மது இது… குமட்டுகிறது” என்றார். சுருதன் “அடுமனையாளன் எவன்? அழை அவனை” என்றார்.

அப்போதுதான் ஏவலன் ஒடி வந்து அறிவிப்பின்றி “அரசே, நகரில் நிலநடுக்கம் தோன்றியிருக்கிறது” என்றான். “என்ன?” என்று அவர் கேட்டார். “மண் அதிர்ந்திருக்கிறது… கட்டடங்கள் விரிசல்கொண்டிருக்கின்றன” என்றான் ஏவலன். வெளியே மக்களின் கூச்சலும் கொந்தளிப்பும் அவர்களை அடக்கமுயலும் முரசுகளின் முழக்கமும் கேட்டது. சுருதன் எழுந்துகொண்டு “மூத்தவர் ஃபானுவை பார்க்கவேண்டும்… உடனே” என்றார். “நகர் நிலையழிந்துள்ளது. நாம் அவருடன் இருக்கவேண்டும்” என்று மேலாடையை எடுத்துப் போட்டுக்கொண்டு கிளம்பினார்.

நான் மாளிகை முகப்பில் நின்று விரிசல்விட்டு நின்ற கட்டடங்களை பார்த்தேன். அவை விரிசலிடுவதற்கான அடிப்படைகள் எதுவும் இல்லை. துவாரகையில் நிலம் நடுங்கினாலும் கட்டடங்கள் நிற்கும் பொருட்டு பாறைகளின் மீதாகவே அடித்தளங்கள் அமைக்கப்பட்டு அனைத்தும் கட்டப்பட்டிருந்தன. நடுங்கியது நிலம் அல்ல, நகர் அமைந்திருந்த பெரும்பாறைதான் என்று சிலர் கூவினர். நிலம் நடுங்கியமைக்கு அடிப்படை நிலமல்ல, நிலமென்றாகி அந்நகரைக் காத்திருந்த பிறிதொன்று அகன்றதே என்று அமைச்சர்கள் பேசிக்கொண்டனர்.

நகரம் கலைந்து குழம்பி சுழன்று கொண்டிருந்தது. அதை அமையவைக்கும் ஆணையென எதுவுமில்லை. அவ்வாறு ஆணையளிக்கும் தகுதிகொண்ட எவரும் மேலெழுந்து வரவுமில்லை. தன் இளையோனை தானே கொன்றதனால் பிரத்யும்னன் உளம் சிதறி மாறி மாறி உடன்பிறந்தாருடன் பேசிக்கொண்டிருந்தார். ஃபானு எழுந்து ஆணையிட வேண்டுமென்ற ஆணையை தனக்குத்தானே விடுத்துக்கொண்டு, அதற்கு ஏன் தன் உள்ளம் ஒருங்கவில்லை என்று தானே வியந்துகொண்டு, தன்னறையில் தன் உடன்பிறந்தாருடன் இருந்தார். தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருந்தார். எந்த முடிவையும் எடுக்க முடியாதவர்கள் கண்டடையும் வழி அது, பேசுவது. பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்றும், செயல்படக்கூடும் என்றும் ஒருவர் தனக்கும் தன்னவர்க்கும் காட்டிக்கொள்வதற்கான வழி. ஆனால் பொய்யான வழி, உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதை எவரும் மறைத்துவிட முடியாது.

சாம்பன் அத்தகைய அருந்தருணங்களுக்கு ஏற்ற வண்ணம் எழும் ஆற்றல் எப்போதும் உடையவரல்ல. அவர் குழம்பி நடுங்கி தன் அறைக்குள் ஒடுங்கியிருந்தார். அவர் உடன்பிறந்தார் ஒவ்வொருவரும் அவரைச் சென்று பார்த்தபோது பதறி எழுந்து வந்து “என்ன நிகழ்கிறது? என்ன நிகழ்கிறது?” என்று கேட்டார். “நகரம் அலைகொண்டிருக்கிறது”
என்றபோது “முற்றாக இடிந்துவிட்டது என்றார்களே?” என்றார். “இல்லை, சில நூறு கட்டடங்களில் விரிசல்கள் விழுந்திருக்கின்றன. அவை நிலைகொள்ளவும்கூடும். பெரிதாக ஒன்றுமில்லை, இங்குள்ள கட்டடங்களை எளிதாக சீரமைத்துவிட முடியும் என்கிறார்கள் சிற்பிகள்” என்றார் சுமித்ரன்.

சாம்பன் உடனே எழுந்து கைநீட்டி “எங்கே? சிற்பிகள் எங்கே? சிற்பிகளை கூட்டிவாருங்கள்” என்றார். “சிற்பிகளை தேடித்தான் படைவீரர்கள் சென்றிருக்கிறார்கள். விரைவில் வந்துவிடுவார்கள்” என்று அவர்கள் கூறினர். “சிற்பிகள்! சிற்பிகள் உடனே செயல்படட்டும். இது அரசாணை! இன்றே கட்டடங்கள் சீரமைக்கும் பணி தொடங்கட்டும். அவர்கள் கட்டடங்களை சீரமைத்த பின்னர் நான் அவற்றை பார்க்க விரும்புகிறேன்” என்றார் சாம்பன். அவருடைய உடன்பிறந்தோர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். “மூத்தவரே, முதலில் இங்கு நிகழவேண்டியது ஒழுங்கு. இத்தருணத்தில் குடிகள் அனைவரும் தெருவில் இறங்கி என்ன செய்வது என்று அறியாமல் நகரின் எல்லைகளில் ததும்பிக்கொண்டிருக்கையில் இங்கு வேறெதைப்பற்றியும் நாம் எண்ண முடியாது” என்றனர்.

“ஆம், ஒழுங்கமைய வேண்டும். ஒழுங்கமைய ஆணைகளை பிறப்பியுங்கள்” என்றபின் “ஆனால், நான் அரசன் அல்ல. எனக்கு மணிமுடி இல்லை. எந்தை எனக்களித்த பொறுப்பை அந்த யாதவ மூத்தவனுக்கு அளித்துவிட்டேன். இன்று நான் எழுந்து கூறினால் எவரும் கேட்கப்போவதில்லை” என்றார். “ஆணைகளை கடைபிடிக்கும்படி அவர்களுக்கு நாம் அறிவுறுத்தவேண்டும்” என்று சுமித்ரன் சொன்னார். சாம்பன் “ஆம், அறிவுறுத்தவேண்டும். நான் ஆணையிடுகிறேன். நமது படைகள் நகரில் இறங்கட்டும். ஆணைகளை கடைபிடிக்காத அனைவரின் தலைவெட்டி வீழ்த்தும்படி ஆணையிடுகிறேன்” என்றார்.

“எனில் மொத்த நகரையும் தலைவெட்டி வீழ்த்தவேண்டியிருக்கும். அதற்குரிய தருணம் இது அல்ல” என்று விஜயன் பொறுமையிழந்து சொன்னார். சித்ரகேது “தாங்கள் இங்கு இருங்கள் மூத்தவரே, வெளியே வரவேண்டியதில்லை. நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்கிறோம்” என்றார். “அவன் என்ன செய்கிறான் என்று கேட்டு வா… அவன் செய்யாவிட்டால் நான் செய்கிறேன். இந்நகரை நானே ஆள்கிறேன். என் தகுதியால்தான் என்னை எந்தை இந்நகரின் அரசராக ஆக்கினார்” என்று சாம்பன் சொன்னார். “அந்தக் கோழை அரசமரக்கூடும் என்பதனால்தான் தெய்வங்கள் நிலமசைத்து எச்சரிக்கின்றன.” கைவிரித்து “இந்நகரின் விரிசல்களை இணைக்க முடிந்தவன் நான் மட்டுமே” என்றார்.

வெளியே வந்து உடன்பிறந்தார் ஒருவரை ஒருவர் நோக்கினர். “இவரால் இத்தருணத்தை எதிர்கொள்ள இயலாது. இவருடைய தகுதி என்பது போர்க்களங்களில் எழும் கட்டற்ற வெறி மட்டுமே. அப்போது ஆயிரம் கைகள் கொண்டவர் போலாவார், நூறு விழிகொண்டவர் என மாறுவார். சூழ்ந்திருந்தவர்களை அழித்து காட்டெரி என உருகி முன் செல்வார். அதை பெருவீரம் என்று எண்ணிக்கொள்கிறோம். எதிர்விசையை தாங்குவதொன்றே அரசனின் வீரம் என்பார்கள். அதில் இவர் பாலாடைபோல மென்மையானவர்” என்றார் சுமித்ரன்.

வசுமான் “நாம் ஒன்று செய்யலாம்…” என்றார். “சொல்” என்று சுமித்ரன் திரும்பினார். “நாம் அரசியிடம் கூறுவோம். முழுப் பொறுப்பையும் அரசியிடம் ஒப்படைப்போம்” என்றார். “ஆம், அவரால் இயலும். அதுவே வழி” என்று புருஜித் கூறினார். “அரசி இப்போது அவைச்செயல்பாடுகளில் இல்லை. செய்திகளை மட்டும் தெரிந்துகொள்கிறார். இப்போது ஃபானுவை அரசர் என இளையவர்கள் கூடி முடிவெடுத்திருப்பதனால் அரசப்பொறுப்பில் இருந்து அவர் எதையும் செய்யவும் முடியாது” என்றார் சுமித்ரன். “ஆம், ஆனால் இடர்க்காலங்களில் எதைச் செய்யவும் ஒப்புதல் உண்டு. இன்று மக்கள் நம்பும் ஒரு அரசவடிவம் அரசி கிருஷ்ணை மட்டுமே” என்றார் வசுமான்.

சாம்பனின் உடன்பிறந்தவர்கள் சென்று அரசி கிருஷ்ணையை பார்த்தனர். அரசி தன் தனியறையில் தனக்குரிய ஒற்றர்களிடம் கூடிப்பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் அங்கு சென்று வணங்கினர். ஒற்றர்களை அனுப்பிவிட்டு அவர்களை உள்ளே அழைத்த அரசி அவர்கள் சொல்வதை கண்களை தாழ்த்தியபடி கேட்டுக்கொண்டார். “அரசி, தாங்கள் இந்நகரின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். நகரிலுள்ள அனைத்துச் சரடுகளையும் தாங்கள் பற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் இது தன்னைத் தானே சிதறடித்துக்கொள்ளும்” என்றார் வசுமான்.

“ஆம், ஒற்றர்களை இங்கு வரவழைத்து உசாவினேன். என்ன நிகழ்கிறது என்று நன்று அறிந்துள்ளேன்” என்று அவர் சொன்னார். “மக்களுக்கு எதுவுமே தெரியாது. உண்மையில் இங்கிருந்து மொத்த நகரையும் பார்ப்பதற்கு எவராலும் இயலாது. கண்ணெதிரே ஒரு கட்டடம் அல்லது இரு கட்டடம் சிதறுண்டு விழுவதைத்தான் பார்த்திருக்கிறார்கள். ஆகவே மொத்த நகரும் இடிந்து சரிந்திருக்கிறது என்ற கற்பனையை அடைகிறார்கள். அக்கற்பனையை தானே நம்பும்பொருட்டு பிறரிடம் சொல்கிறார்கள். சொல்லிச் சொல்லி பெருக்கி நகரமே இடிந்து அனைவர் தலைமேலும் விழுந்துகொண்டிருக்கிறது என்ற உளமயக்கை அனைவரும் அடைந்திருக்கிறார்கள்” என்றார்.

அவருடைய குரலின் உறுதி அவர்களை ஆறுதல்கொள்ளச் செய்தது. “ஒருசில சிறு விரிசல்கள்தான் நிகழ்ந்திருக்கின்றன என்பதுதான் நாம் அவர்களிடம் தெரிவிக்க வேண்டியது” என்று அரசி சொன்னார். “ஆம், ஆனால் அதற்கு இயற்றவேண்டியது என்ன என்று தெரியவில்லை” என்றார் சுமித்ரன். கிருஷ்ணை “நகரின் எல்லையில் துர்க்கை அன்னையின் ஆலயம் ஒன்றுள்ளது. இன்று எட்டாம் எழுநிலவு. அன்னைக்கு மாதந்தோறும் செய்யப்படவேண்டிய தனிப்பூசனைகளுக்கான நாள்” என்று அவர் சொன்னார். “நான் வழக்கம்போல அணியூர்வலமாக அப்பூசனைக்கு செல்கிறேன்.”

அவர் அதை சொன்னபோது ஒவ்வொருவரும் தங்களுக்குள் பூசனைக்குரிய தருணமா இது என்றனர். ஒருவரை ஒருவர் விழிநோக்கினர். “உண்மையில் இப்போது நான் மக்கள் முன் எழுந்தாகவேண்டும். இந்நகரைக் கைவிடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் நாம் அஞ்சிக்கொண்டிருக்கவில்லை என்றும் எல்லாமே நம் ஆட்சியில்தான் உள்ளன என்றும் மக்களுக்கு தெரிவித்தாக வேண்டும். இந்நகரத்தில் ஒவ்வொன்றும் தனக்குரிய நிலையிலேயே நீடிக்க வேண்டுமென்று நாம் ஆணையிடுவதை அவர்களுக்கு அறிவிக்கவேண்டும். அதற்கு ஒரே வழி அவர்கள் முன் தோன்றுவது. நேரில் ஆட்சியாளர்களை பார்க்காமல் இத்தருணத்தில் எவரும் எதையும் நம்ப மாட்டார்கள்.”

“அரசு என்பது பெரும்பாலான பொழுதுகளில் ஒரு நம்பிக்கை, ஓர் உருவகம், அருகிருக்கும் சில தொடர்பு அமைப்புக்கள். ஆனால் இடர்க்காலங்களில் அரசு என்பது கண்முன் எழும் அரசனே. அவனுடைய மணிமுடியும் செங்கோலுமே. மனிதர்கள் மனிதர்களை மட்டுமே தலைவர்கள் என ஏற்கமுடியும்” என்று கிருஷ்ணை சொன்னார். “ஆனால் அறிவிப்புகள் அளிக்கவோ, அறிவுறுத்தவோ, ஆணையிடவோ அவர்களிடையே தோன்றினால் அதுவே மேலும் அச்சத்தை அளிக்கும், நான் வழக்கமான இறைபூசனைக்குச் சென்றால் மட்டும் போதும், இங்கு நிகழ்ந்த விரிசல்களைப் பற்றி நாம் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை என்று குடிகள் அதிலிருந்தே அறிவார்கள்.”

“ஆனால்” என்று ஐயத்துடன் சுமித்ரன் சொன்னார். “அதுவே நிகழட்டும்” என்று கிருஷ்ணை ஆணையிட்டார் “முழு அணிவகுப்பு எனக்குத் தேவை. படைக்கலங்கள் கொண்ட வீரர்கள் என்னைச் சூழ்ந்து வரவேண்டும். மங்கலச்சேடியரின் அணிநிரை, இசைச்சூதர்களின் சூழ்கை, பட்டங்கள், பரிவட்டங்கள் என அனைத்தும் தேவை. துவாரகை பொலிந்த நாட்களில் என்ன நடந்ததோ அது நடக்கவேண்டும்” என்று கிருஷ்ணை சொன்னார்.

தொடர்புடைய பதிவுகள்

போழ்வு, பலிக்கல்- கடிதங்கள்

$
0
0

போழ்வு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

“போழ்வு”கதையை படித்தேன் .

என் கிராமத்தில் பழைய தலைமுறை வீடுகளில் சில இன்றும் இருக்கிறது. அங்கு சாலை வழியாக கடந்து செல்வோர் கண்களில் படும் நிலையில் சமீப காலம்வரை சில பெரிய படங்கள் சுவரில் கம்பீரமாக வைத்திருப்பார்கள். அதேபோன்று நாயர்கள் வைத்திருக்கும் கடைகளிலும் ஸ்ரீராமன், மன்னத்து பத்மநாபன், வேலுத்தம்பி தளவாய் படங்களை பெரிய கட்டி மர சட்டம் உடைய படங்கள் மாட்டி வைத்திருப்பார்கள்(இப்போது அதிகமாக காண்பதில்லை). இப்பொழுதும் அது இருக்கும் இடங்கள் சில இருக்க வாய்ப்பு உள்ளன.

வேலுத்தம்பி தளவாய் மிகப்பெரும் பிம்பம். கரார் பேர்வழி .மண்ணடியில் கத்தியால் குத்தப்பட்டு சுய மரணமடைந்த வரலாறும்அவர் பெரிய தியாகியாக பார்க்கப்படுகின்றன நிலை உருவாகி சாதி சிலரால் வழிபடுகின்றனர்.

இந்த பின்னணியில் சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கு பெற்றோர் கதை சொல்லி கொடுப்பது போல என் அப்பாவும் வேலுத்தம்பி தளவாய் வரலாறை கதையாக தூங்க செல்கையில் சொல்லித்தந்தது உண்டு .மாபெரும் வீரனாய், தியாகியாய்  உள்ளத்தில் சிலகாலம் வாழ்ந்தவர் வேலுத்தம்பி தளவாய்.

ஆனால் தங்களது “போழ்வு” கதை மிகப்பெரிய பிம்பமாய் உள்ளத்தில் இன்னும் மிச்சம் வைத்திருப்பவர்களின் கனவுகள் உடைபடும் தருணம். இக் கதையின் கடைசி பகுதி உருவாக்கி உள்ளது அதிர்வு.வரலாறை கதைகளாக மாற்றும் பொழுது கற்பனையோடு நிஜங்களும் இழுகி இணைந்து பேரதிர்வு எண்ணைத்தையே உருவாக்கி விடுவதுண்டு .

இங்கும் களக்காடு மக்களை தலைகொய்து கழுவேற்றி படுகொலைச் என்ற  உச்சமாய் துவங்கி, தன் பதவிக்கு ஊன்றுகோல் ஆனவரை யானைகளால் கிழித்து வீசும் கொடூரம் இறுதியில் உச்சத்தின் உச்சமாகவும் உள்ளது .

ஏற்கனவே ராஜா கேசவதாஸின் வீழ்ச்சி இடமும்  உச்சத்தில் இருந்து கீழ்நோக்கி விழுந்ததைப் போன்று, தன்னை பாதுகாத்துக்கொள்ள தான் நம்பிய படை இல்லை என்றதும் துரைகளிடம் சரணாகதி ஆனது வீரனின் லட்சணம் அல்ல .

தன் தாயை கொடூரமாக தண்டித்தல், தன் குருவின் மருமகனும் தனக்கு எல்லா வகையிலும் துணை சென்றவரையும் படுகொலை செய்வது நீதிமானின் லட்சணம் அல்ல.

இதுபோன்ற வீழ்ச்சிகளை அரசியலிலும் நாம் பார்த்துக்கொள்ள முடிகிறது. அரசர்களின் வீழ்ச்சிகள் அரசியலிலும் தென்படுகிறது.

படிப்பவர்களுக்கு வரலாறு தெரிந்து கொள்ளலாம். வரலாறு வழியாய் ஒரு கதையும் பூத்திருக்கிறது. பிம்பம் உடைபடும் நேரம் எழுத்துவடிவில் திகிலாய் பிறக்கிறது.

பொன்மனை வல்சகுமார்

***

அன்புள்ள வல்சகுமார்

வேலுத்தம்பி தளவாய் கேரளத்தின் வீரபாண்டிய கட்டப்பொம்மன். சுதந்திரப்போராட்ட காலத்தில் எல்லா இடங்களிலும் வெள்ளையருக்கு எதிராகப் போராடி உயிர்விட்ட வீரர்கள் கண்டடையப்பட்டனர். தேசியநாயகர்களாக ஆக்கப்பட்டார்கள்.

வேலுத்தம்பி மாவீரர், நேர்மையான ஆட்சியாளர், களப்பலியானவர். ஆகவே அவரை வீரநாயகர் என்று சொல்வதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை.

ஆனால் எல்லா வீரநாயகர்களைப் பற்றியும் எனக்கு ஏறத்தாழ ஒரே மதிப்புதான். அவர்கள் வன்முறையின் வெளிப்பாடுகள். அந்த வன்முறை நம் எதிரிமேல் திரும்பியிருக்கும்போது நாம் கொண்டாடுகிறோம். நம் மீதும் அது திரும்பும் என்பதை மறந்துவிடுகிறோம்.

வீரநாயகர்களின் வரலாற்றில் இப்படி ஒரு வழக்கமான வளர்ச்சிக்கோடு இருக்கும்.

அ. ஈவிரக்கமற்ற ஒரு செயல்பாடு வழியாக அவர்கள் கவனம் ஈர்ப்பார்கள். அது வீரம் என வழிபடப்படும். அதை சாமானியர் செய்யமுடியாது. ஆகவே அவர்கள் மாமனிதர்களாக கருதப்படுவார்கள். அவர்களின் வீரம் பாடல்பெறும்

ஆ. மக்கள்நாயகர்களாக அவர்கள் உயர்வார்கள். மக்களுக்காக போராடுவர்கள். அதிகாரத்தை அடைவார்கள்.

இ. அவர்கள்  ‘ஒற்றைப்பெருந்தலைவர்’ ஆக மாறவேண்டுமென்றால் போட்டியோ சமானமோ ஆக எவரும் இருக்கக்கூடாது. ஆகவே அவர்களை ஆதரித்து துணைநின்ற அத்தனைபேரையும் அழிப்பார்கள்

ஈ. அவர்கள் வரலாற்றில் இடம்பெற்றபின் அங்கே நின்றிருக்கவேண்டும். ஆகவே சமரசம்செய்துகொள்வார்கள். அதில் இரண்டாக பிரிவார்கள். ஒருபக்கம் நடைமுறைசமரசம் செய்பவர் மறுபக்கம் இலட்சியவாதி.

உ. தங்கள் ஈகோவுக்காக மக்களை பேரழிவில் ஈடுபடுத்தி அழிப்பார்கள்.

ஊ. அத்தனை அழிவை மக்களுக்கு அளித்தபின்னரும் அவர்கள் அதே மக்களால் வீரநாயகர்களாக வணங்கப்படுவர்கள்.

வேலுத்தம்பியின் கதையும் அதுதான். அவர் செய்த மிகப்பெரிய பிழை என்பது மெக்காலேவை நம்பி நாயர்படையை கலைத்தது. திருவிதாங்கூரின் உள்நாட்டு விஷயத்தில் வெள்ளையர் நேரடியாக தலையிட வழிவகுத்தது. நாயர் படையை அயலவரை கொண்டு அழித்தது

அந்த தவறால் அவர் அழிந்தார். மெக்காலே அவரை தூக்கி அப்பால் போட்டபோது அவர் எதிர்த்து கலகம் செய்தார். குண்டறையில் வெளியிட்ட அறிக்கையில் வெள்ளையருக்கு எதிரான கலகத்தை ஆரம்பித்தார்.  கொல்லம்போரில் மெக்காலேயிடம் தோற்றார். மண்ணடியில் தற்கொலைசெய்துகொண்டார்.

அது எல்லா வீரநாயகர்களும் சென்றடையும் விதி. அப்படிச் சாகாமலிருந்தால் அவர் கொடூரமான ஆட்சியாளராக நினைவில் நின்றிருப்பார். நல்லவேளை.

பிகு. கிருஷ்ணபிள்ளை யானையால் பிளக்கப்பட்ட செய்தி கற்பனை அல்ல. பி.சங்குண்ணிமேனனின் திருவிதாங்கூர் வரலாற்று நூலில் உள்ள செய்திதான்.

ஜெ

***

பலிக்கல்[சிறுகதை]

இனிய ஜெயம்

முதலாறு எனும் ஊரைத் தேடி பின் தொடரும் நிழலின் குரலுக்கு வந்து கடந்த ஐந்து நாட்களாக அந்த நாவலுக்குள்தான் இருக்கிறேன்.  இந்த பலிபீடம் கதையின் போத்தி சிறைக்குள் என்னவாக இருந்திருப்பார்? அவர் போன்றோர் நிலை அங்கே என்னவாக இருந்திருக்கும் என்பதை நாவலுக்குள் ப்ரோஹரோவ் புகாரின் இருவரின் உரையாடல் வழியே இக் கணம் அணுகி அறிய முடிகிறது.

இத்தனை வருடமாக இரண்டு பயல்களும் போத்தியை ‘புடம்’ போட்டு விட்டார்கள். ரெண்டு பயலுகளுமே சின்னப்ப பயலுக என்று உணரும் நிலைக்கு சென்று விட்டார்.

சரி தவறுக்கு அப்பால் ஒரு வெளி உண்டு . அங்கு உன்னை சந்திப்பேன்.

இப்படி ஒரு வரி உண்டு. ரூமியின் வரிகள் என்று நினைவு.  சரி தவறுக்கு அப்பால் உள்ள அந்த வெளியில் நின்று இப்போது ஆசீர்வதிக்கிறார் போத்தி.

கடலூர் சீனு

***

வணக்கம் ஜெ

பலிக்கல் சிறுகதையை வாசித்தேன். சங்கரன் போற்றி, ‘அப்ப கடவுள் இருக்காரு ,அவரு நியாயத்தை நடத்துறார்னுதானே அர்த்தம்?’ என்ற வரியைக் கொண்டே இந்தக் கதையின் திறப்பை அறிய முடிகிறது. பலிக்கல்லில் நின்ற போற்றி தன்னை அழகியநம்பியா பிள்ளையாகக் கற்பனை செய்து கொள்கிறார். உலகம் பலிக்கல், நீதி, தண்டனை என முன்வைப்பதை அவர் மனம் அவ்வாறே ஏற்றுக் கொள்கிறது. அந்த ஆழமான அவநம்பிக்கையிலிருந்து விடுபட தன்னை உலகம் குறிப்பிடும் நல்லோனாகக் கற்பனை செய்து கொள்கிறார். இந்தச் சிறுகதையில் இன்னொரு புறத்தில் அழகியநம்பியாப்பிள்ளை தன்னை போற்றியின் இடத்தில் வைத்து எண்ணி கொள்கிறார். பலிக்கல் ஏறியவுடன் இருவருமே இடம் மாறி நின்றிருக்கின்றனர் என எண்ணத் தோன்றுகிறது.

அரவின் குமார்

மலேசியா

***

தொடர்புடைய பதிவுகள்

சுற்றுகள், காக்காய்ப்பொன்- கடிதங்கள்

$
0
0

சுற்றுகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கதைகளை கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் வாசித்து வந்துகொண்டிருக்கிறேன். கதைகளை வாசித்தபின் கடிதங்களையும் வாசிப்பது என் வழக்கம். அவை வாசிப்பின் பலவகையான வழிகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

இன்றுதான் சுற்றுகள் கதையை வாசித்தேன். அதை வாசிக்கும்போது நினைத்துக்கொண்டேன். ஒரு நீரோடையை வைத்து இந்தக்கதையை எழுதியிருக்கலாம். ஆனால் அதை நிறையபேர் எழுதியிருப்பார்கள். இப்படி ஒரு தொழிற்சூழலுக்குள் கதையை கொண்டுசென்று எழுத எது நமக்கு தடையாக இருக்கிறது?

எலக்டிரானிக் பொருட்கள் கருவிகள் போன்றவை போதிய அளவுக்கு கவித்துவமானவை அல்ல என்ற எண்ணம் நமக்கு இருக்கிறதா என்ன?

ராம் மனோகர்

***

அன்புள்ள ஜெ

இந்த நாட்கள் மிகவும் இன்பமான நாட்கள். ‘கிருஷ்ணன் நாயக்’ போன்றே ‘சுவீட் ஷாக்’கில் போகும் நாட்கள். உங்கள் வெவ்வேறு கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளம்.

எனக்கு தேவையான ‘ஆடகம்’ உங்கள் கதைகள் வழியாக கண்டுகொண்டிருக்கின்றேன். இன்னமும் முடியவில்லை. முடியவே முடியாத சர்க்யூட் இது.

‘சுற்றுகள்’ பலவிதத்தில் என்னை ஈர்த்த மிகச் சிறந்த படைப்பு. ஏனென்றால் யார் வேண்டுமானாலும் – கரண்ட் சர்க்யூட் ஆண் பெண் உவமை உருவகங்கள் எழுத முடியும் . அவை அந்த ‘ரிலே’ போல தான்.

ஆனால் அந்த தரிசனம் என்பது அதன் எளிமையில் தான் உண்டு. நீங்கள் முன் எங்கோ சொன்ன அந்த ‘மீ’ மொழி (மெட்டா லாங்குவேஜ்) அதை கிருஷ்ண நாயக் கண்டுகொள்ளும் தருணம் உன்னதமான அற்புத தருணம்

பெரும்பாலான மாணவர்கள் இயற்பியலில் (பிஸிக்ஸ்) பாடங்கள் ஆரம்ப நிலைகளில் ‘டப்பா’ அடித்து எழுதிவிடுவார்கள்.

நான் பிலானிக்கு படிக்க சென்ற போது – மற்றவை புரிந்தது. ஆனால் பிஸிக்ஸ் புரியவே இல்லை (இத்தனைக்கும்  199/200 ‘ப்ளஸ் டூ’ தேர்வில் – இதை பெருமையாக சொல்லவில்லை முரணாக சொல்கிறேன்)
குறிப்பாக கரண்ட் மற்றும் மேக்னெட்டிசம்.

இவை இரண்டும் பெர்ஸப்ட் (நேரடியுணர்வு) மூலம் சொல்லும் விஷயமல்ல “சில கூறுகள் உள்ளது. அதை தனியாக படி. கணக்காய் மட்டும் பார். செஸ் போல ஒரு பார்மலிசம் (formalism) ஒரு கோட்பாடு” – என்று முடித்து விட்டனர் கடைசி வரை பிடிபடவே இல்லை. அந்த காலங்களில் காதல் வயது வேறு :) காதல் இயற்பியல் இரண்டும் – ஒரு-பக்கமாகவே இருந்தது… சர்க்யூட் முடியவில்லை !

கிருஷ்ணன் நாயக் அப்படி கோட்பாடாக படித்தால் அது வெறும் ‘டப்பா அடிக்கும்’ வேலை. வெற்று தர்க்கம் . ஒரு கணத்தில் தரிசனமாக வரும்போது. அது நீங்கள் சொல்லும் மீ மொழி அந்த நிலையை அடைகிறது. டெக்னாலஜிக்கு அம்மை சயன்ஸ் அதன் அம்மை தத்துவம் என்பது போல :)

இங்கு சர்க்யூட் ஒரு விளையாட்டாக நாகமணி-நாயக் இருவரின் காதலையும் சொல்லிவிட்டு போகிறது. ஆனால் அதை தாண்டி ஒரு சாகச உணர்வு ஒரு தரிசனம். நாம் எப்படி அதை அடைந்த பின் வேறொரு மனிதராகவே மாறுகிறோம்? என்பதையும் சொல்கிறது

ஏன், இந்த தரிசனமே கூட ‘ரிலே’ போல காலம் காலமாக மனிதர்கள் வாயிலாக  நமக்கு வந்து சேர்கிறதா ?

பெரும்பாலும் அறிவியல் என்றால் – நடப்பதை உணர்ச்சியின்றி பார்ப்பது – நோட்ஸ் எடுப்பது …ரீடிங் எடுப்பது…பின் அதை கணக்காக்கி சொல்வது என்று தவறாக ஒரு சித்திரம் எல்லோரிடத்திலும் உண்டு.

ஒரு குழந்தையின் ஆ (awe)ச்சரிய மற்றும் சாகச மனம் கொண்டவரால் தான் (sense of awe and adventure) அறிவியலில் ஒரு புதிய தரிசனம் ‘ஒரிஜினல் தாட்’ கொடுக்க முடியும். கலீலியோ ஐன்ஸ்ட்டின் என்று அந்த மனநிலையை தக்கவைத்தவர்கள் தான் மிகப்பெரிய பாய்ச்சல் கொண்டுவந்தார்கள்

// செஸ் மேதைகளுக்குரிய தர்க்கஅறிவு, இலக்கியவாதிகளுக்குரிய கற்பனைத்திறன், ரிஷிகளுக்குரிய உள்ளுணர்வு ஆகியவை கொண்டவர் அவர். சொன்னேனே, அவர் ஒரு ஜீனியஸ் // என்று இந்த விஷயம் ‘வேரில் திகழ்வது’ என்னும் சிறுகதையில் ரோசாரியோ குறித்து  ஔசேப்பச்சன் கூறுகிறார்

நன்றி ஆசான்

ஸ்ரீதர்

***

காக்காய்ப்பொன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

காக்காய்ப்பொன் இந்த வரிசை கதைகளில் வேறு ஒருவகை. கதை, கதைபற்றிய விவாதம் இரண்டுமே கதைக்குள் உள்ளது. கதை பற்றிய விவாதம் அந்த கதையை பலகோணங்களில் திறந்துவிடுகிறது.

காக்காய்ப்பொன் என்பது என்ன? காக்காயின் கண்ணின் பொன் என்று நான் எடுத்துக்கொண்டேன். காக்காய் நீ மனிதன் உனக்கு பொன் தானே வேண்டும் என்று சொல்கிறது.

ஆனால் அது அல்ல கதை. காக்காயின் எளிய அன்பின் முன் எளிமையான மனிதனாக நிற்க சதானந்த சாமிக்கு முடியும்போதுதான் அவர் ஞானம் அடைகிறார்

ஆர்.கண்ணன்

***

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு

நலம் தொடர்க!

காக்காய்ப்பொன்னை இப்படிப் புரிந்துகொள்கிறேன். பிரபஞ்சம் மானுடனின் கீழ்மைகளை எப்போதும் சுட்டிக்காட்டியபடியே இருக்கிறது. சிறிதாயினும் பெரிதாயினும். ஏதோ ஒரு வடிவில், நிகழ்வில், சொல்லில், நினைவில், நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. அதை முற்றுமாக உதாசீனப்படுத்தி கீழ்மையிலேயே திளைத்து அதிலேயே மாள்பவர் கீழ்மையைத்தவிர வேறொன்றும் அறிவதில்லை. தன் கீழ்மைகளை உணர்ந்து உதறிக்கொண்டு மேலெழும்போது இரு நிலைகள் இருக்கக்கூடும். ஒன்று, மேலெழும்போது தான் மேலெழுந்துகொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஓங்கி ஒரு ஆணவமாக மாறலாம். சதானந்தரின் ஒரு வரி ” “மின்னுவதன் மீதான பற்று என்பது பொன்மீதான பற்றுதான். பொன்மீதான பற்று என்பது காமம்தான். பொருள் மோகம்தான். ஆணவமும்தான்….” .

அனைத்தையும் விட்டெழுவதை உணர்வதும் வெளிப்படுத்துவதும் கூட ஒரு ஆணவம் தானே. அந்த ஆணவத்தையும் சுட்டும் பிரபஞ்ச நிகழ்வை எதிர்கொள்வது என்பது அதற்கு ஒப்புக்கொடுத்தலே. வேறு நிலையில்லை. அந்த இடைப்பட்ட மனநிலையில் அது தெரிந்தும் முதலில் ஆணவத்தின் மூலமும் பிறகு மௌனத்தின் மூலமும் விலக்க முயற்சிக்கிறார் சதானந்தர். மௌனத்தின் வழியே நிகர் செய்ய முற்பட்டு

இறுதியில் ஒப்புக்கொடுக்கும்போதுதான் இரண்டாவது நிலை வாய்க்கிறது. ஆணவம் சென்றடையமுடியாத குழந்தையின் சிரிப்போடு நிறைகிறார். மலர்ந்து கனிவது அப்பொழுது மட்டுமே எட்டும் ஒரு நிலையாகக் கொள்கிறேன்.

இதை யோசித்துக்கொண்டிருக்கும்போதே ‘எரிசொல்-ஒன்றாம் பகுதி படித்தேன். அப்படியே இதன் நீட்சியாகத் தோன்றியது. “எதன் பொருட்டென்றாலும் ஆணவத்தை தெய்வங்கள் பொறுத்துக் கொள்வதில்லை”. காக்கைப் பொன்னின் கேள்விகளுக்குப் பல வடிவில் எரிசொல்லில் பதில் கிடைத்தது.

மிகுந்த எண்ண ஓட்டத்தை நிகழ்த்திய சிறுகதை. வாழ்வில் என் சிறுமைகளை என்னைத்தவிர முற்றாக யாரரிவார்? இந்தக் கேள்வி எழும்போதே, ‘ பிரபஞ்சம் அறியும். அது எவ்வகையிலேனும் உன்னைச் சுற்றி உணர்த்திக் கொண்டேயிருக்கும்’ என்ற பதிலும் கூடவே வருகிறது.

மின்னும் பொருளின் மீதான மனித குலத்தின் பற்று ஒரு ஆச்சரியமான திறப்பாக இருந்தது. பொன் அணிவதில்லை எனினும் என்னைச் சுற்றிப் பார்த்துக்கொண்டேன். ஆம். பல பொருட்கள் மின்னிக்கொண்டுதான் இருந்தன.

யான் எனது எனும் செருக்கழிப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகல் என்ற குறளை விரித்துணர காக்காய்ப் பொன்னை சேமித்து வைத்திருக்கிறேன்.

பேசி முடிக்க முடியாத ஒன்றை இரு நாட்களாக நினைவில் கொண்டிருக்கிறேன். நன்றி.

நா. சந்திரசேகரன்

சென்னை.

***

தொடர்புடைய பதிவுகள்

கதைகள் கடிதங்கள்

$
0
0

J,

The short stories are fantastic. Not just the fact that we are getting one a day (which is unbelievable), but each one that I have read, is a gem. The content, the characters, the art of storytelling, the depth, the questions they rise… fascinating.

Mani Ratnam

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஒன்றன் பின் ஒன்றாக வந்து விழுந்து கொண்டே இருக்கும் கதைகள் பிரமிக்கவைக்கின்றன. உங்கள் கையில் இருப்பது எழுதுகோலா இல்லை மந்திரக்கோலா?

சரி! நீங்கள் நினைவு தெரிந்த நாளிலிருந்தே உங்களைச்சுற்றி நடந்தவற்றை, ஒன்றைக்கூடத் தவறவிடாமல் உற்றுகவனித்திருக்கிறீர்கள், அந்த நினைவுகளை அப்படியே மனதில் சேதாரம் இல்லாமல் சேகரம் செய்துவைத்திருக்கிறீரகள்.

ஆனால்  அவற்றை  இப்படி கதைகளாக மாற்ற இவை மட்டும் போதுமா? அவை கதைகளாகும் தருணத்தை ஸ்புரிக்க (லாசராவின் பாஷையில்) செய்த மாயம் எது?  சத்தியமாக புரியவில்லை.

இந்த கதைகள் அனைத்திலும் மையச்சரடாக நான் உணர்ந்தது  மனிதனுக்கு உள்ளே  இருக்கிற தெய்வதத்தை மீட்டுகிற பொற்தருணங்கள்தான்.

ஓவ்வொன்றைப் பற்றியும் நிறைய எழுதவேண்டும் என்று ஆசைதான் . (எங்களுக்காக நீங்கள் எழுதிக் குவிப்பதற்கு அந்த குறைந்த பட்ச மரியாதையாவது செய்யவேண்டும் என்ற நினைப்புதான்). நான்கு வாக்கியங்கள் எழுதுவதற்குள் இங்கே நமக்கு நாக்கு  தள்ளுகிறது. ஆனாலும்  உங்கள் புரிதல் மீது உள்ள நம்பிக்கைதான் எழுத வைக்கிறது.

நற்றுணை படித்ததும்  தோன்றியது கேசினி மாதிரி ஒரு யஷி உங்களுக்கு அருகில் உடகார்ந்து கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறதோ என்று.

அன்புடன்
மாலதி சிவா

***

அன்புள்ள ஜெ

கதைகளை தொடர்ந்து வாசித்துவருகிறேன். ஒரு தொடர்ச்சியில் வரும் கதைகள். எந்த தொடர்ச்சியும் இல்லாமல் தாவிச்செல்லும் கதைகள் என்று பலவகை கதைகள். ஒரு ஆழமான madness நிகழாமல் இதை எழுத முடியாது. நிறைவில்லாமல் வேறு வேறு வாழ்க்கைகளில் புகுந்து வாழ்ந்து பார்ப்பது. இது கதைகேட்கும் குழந்தைகளில் ஒரு வயதில் இருக்கிறது. பிறகு இல்லாமலாகிவிடுகிறது. அந்த குழந்தைத்தனம் எஞ்சியிருப்பவர்களால்தான் இதை எழுதமுடியும்.

உலகில் உள்ள மாபெரும் எழுத்தாளர்கள் எல்லாம் தத்துவம் அரசியல் எதனாலும் ஆட்டுவிக்கப்பட்டவர்கள் அல்ல. கதை என்பதனால் ஆட்டுவிக்கப்பட்டவர்கள். கதை என்பது parallel life. அங்கே ஒரு unityயை உருவாக்க அவர்கள் முயல்வார்கள். ஆனால் அந்த unityயை அதற்கு வெளியே உள்ள வாழ்க்கைக்கு போட்டு அதை ஒரு தத்துவம் கொள்கை என்றெல்லாம் ஆக்க முயலமாட்டார்கள்.

இந்தக்கதைகள் அனைத்திலும் உள்ள கதைக்கொண்டாட்டம்தான் இலக்கியத்தின் முக்கியமான அழகு. சென்ற தலைமுறையில் இலக்கியவாதிகளுக்கு reality மீது ஒரு obsession இருந்தது. அதற்கு முன்பு அவர்கள் தங்களை தத்துவவாதிகளாகக் கற்பனைசெய்துகொண்டிருந்தார்கள். இன்றைக்கு கதைசொல்லி மட்டும்தான் என்ற தெளிவை அடைந்திருக்கிறார்கள். கதைகளின் பொற்காலம். வாழ்த்துக்கள்

எஸ்.ஸ்ரீனிவாஸ்

***

போழ்வு [சிறுகதை]

நஞ்சு [சிறுகதை]

பலிக்கல்[சிறுகதை]

காக்காய்ப்பொன் [சிறுகதை]

லீலை [சிறுகதை]

கரவு [சிறுகதை]

ஐந்து நெருப்பு[ சிறுகதை]

நற்றுணை [சிறுகதை]

இறைவன் [சிறுகதை]

மலைகளின் உரையாடல் [சிறுகதை]

முதல் ஆறு [சிறுகதை]

பிடி [சிறுகதை]

கைமுக்கு [சிறுகதை]

உலகெலாம் [சிறுகதை]

மாயப்பொன் [சிறுகதை]

ஆழி [சிறுகதை]

வனவாசம் [சிறுகதை]

மதுரம் [சிறுகதை]

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

வான்நெசவு [சிறுகதை]

பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

வான்கீழ் [சிறுகதை]

எழுகதிர் [சிறுகதை]

நகைமுகன் [சிறுகதை]

ஏகம் [சிறுகதை]

ஆட்டக்கதை [சிறுகதை]

குருவி [சிறுகதை]

சூழ்திரு [சிறுகதை]

லூப் [சிறுகதை]

அனலுக்குமேல் [சிறுகதை]

பெயர்நூறான் [சிறுகதை]

இடம் [சிறுகதை]

சுற்றுகள் [சிறுகதை]

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

வேரில் திகழ்வது [சிறுகதை]

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

தங்கத்தின் மணம் [சிறுகதை]

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஏதேன் [சிறுகதை]

மொழி [சிறுகதை]

ஆடகம் [சிறுகதை]

கோட்டை [சிறுகதை]

துளி [சிறுகதை]

விலங்கு [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

தொடர்புடைய பதிவுகள்

கூடு [சிறுகதை]

$
0
0

குருகுலத்தின் சமையலறையில் காரட் நறுக்கிக்கொண்டிருக்கையில் சுவாமி முக்தானந்தா சொன்னார், “இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து சென்றேன். அன்று நடராஜகுரு இருந்தார். இன்று திரும்பி வந்திருக்கிறேன். ஏன் சென்றேன் என்று தெரியாது. அதைப்போலவே ஏன் திரும்பி வந்தேன் என்றும் தெரியாது”

அவருடைய கைகள் விசைகொண்டு செயலாற்ற அவர் வேறெங்கோ இருந்தார். காரட் சீரான துண்டுகளாக மாறிக்கொண்டிருந்தது. மாக்ரோபயாட்டிக்ஸ் என்னும் ஜப்பானிய மருத்துவ – வாழ்க்கைமுறை மீது நம்பிக்கை கொண்டவர். அது காய்கறிகளை எப்படி வெட்டவேண்டும் எப்படி சமைக்கவேண்டும் எப்படி உண்ணவேண்டும் என்றெல்லாம் வகுத்து வைத்திருக்கிறது. முக்தா ஜப்பானிலும் அமெரிக்காவிலும் நெடுங்காலம் வாழ்ந்தவர்.

முக்தா சொன்னார். நான் காற்றில் இறகுகள் போல ஏதோ ஓர் அறியா விசையால் இந்தியப்பெருநிலம் எங்கும் அள்ளிச்சுழற்றப்படும் துறவிகளைப் பார்த்திருக்கிறேன். எல்லாவகையான மெய்மரபுகளிலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். மிகத்தெளிவான நடைமுறை நெறிகள் கொண்ட சீக்கியமதத்தில் அப்படிப்பட்டவர்கள் இருக்க மாட்டார்கள் என்று நம்பியதுண்டு. ஆனால் அவர்களிலும் அலைபவர்களைக் கண்டிருக்கிறேன். அது ஓர் ஆதி அக எழுச்சி, அது மானுடனைக் கடந்த ஒரு விசை.

அலைபவர்களில் சிலர் சட்டென்று எங்கேனும் படிந்துவிடுகிறார்கள். பறக்கும் இறகுப்பிசிர்கள் முள்ளிலோ சேற்றிலோ ஒட்டிக்கொள்வதுபோல என்று தோன்றியிருந்தது. ஆனால் அங்கே அவர்கள் செழித்து பெருகி எழுவதைக் காண்கையில் அது விதையின் பயணம், தெளிவான இலக்கு கொண்டது என்று தெரிந்தது. வேரூன்றி எழுந்தவர்கள் அனைவரிடமும் அவ்வாறு காற்றில் மிதந்த காலகட்டம் ஒன்று இருந்திருக்கிறது.

விந்தைதான், சிலசமயம் வேரும் விழுதும் நீட்டி பரவிய ஆலமரங்கள் அப்படியே தங்களை பெயர்த்துக்கொண்டு எழுந்துவிடுகின்றன. அவை இறகுப்பிசிர்கள் போல பறந்தலைகின்றன. எங்குமே அமையாமல் ஒரு மேகத்துணுக்கு போல வானில் கரைந்தழிகின்றன. அவை நின்றுசெய்த தவம் முழுக்க அவ்வண்ணம் எழுவதற்கே என்பதுபோல. வாழ்க்கையைக்கூட வகுத்துவிடலாம், வாழ்க்கையை துறந்தவர்களின் பயணங்களை வகுத்துவிடமுடியாது.

அன்று மீண்டும் அவர் தன் பயணங்களைப் பற்றிச் சொன்னார். அதே குருகுல அறை. அதே குளிர்காற்றின் பீரிடல். அதே யூகலிப்டஸ் மரங்களின் சீறல். அறைந்து அறைந்து அமைதியிழந்து ஓசையிட்டுக் கொண்டிருப்பவை நான் நன்கறிந்த சன்னல்கள். அப்போது அந்த அந்தியில் வெளியே சென்றால் மிகமிக ரகசியமான ஏதோ ஒன்று திரண்டு உருக்கொள்வதாகத் தோன்றும். வரவிருக்கும் இரவில் இருள் செறிந்து செறிந்து எடைகொண்டு ஏதோ ஒரு புள்ளியில் வெடித்து சிதறிவிடுமென பிரமை ஏற்படும்.

எல்லாம் மறுநாள் காலை வரைதான். ஊட்டியில் காலை இளங்குழந்தையின் சிரிப்பு போல, அத்தனை ஒளிமிக்கது, முற்றிலும் திறந்தது. இலைத்தளிர்கள் சுடர்விடுகின்றன. வானமெங்கும் முகில்தளிர்கள் கண்கூச ஒளிர்கின்றன. பறவையொலிகளில் தைலம் மணக்கும் காற்றில் எங்கும் ஒரு களியாட்டே நிறைந்திருக்கிறது. அன்று பிறந்த கன்று போல காலை துள்ளிக் குதிக்கிறது.

முக்தா சொன்னார். நெடுங்காலம் முன்பு நான் பௌத்தனாக மாறிவிடலாமென்று எண்ணுமளவுக்கு திபெத்திய பௌத்தம் மீது ஈடுபாடு கொண்டிருந்தேன். அதற்கு முன்பு சாக்தவழிபாட்டு முறைகளில் ஈடுபாடு கொண்டு ஒரு சாதகனாக இருந்திருக்கிறேன். பௌத்த மரபிற்குப் பிறகுதான் ராதாமாதவ மரபில் பித்தானேன். இவற்றை ஒவ்வொன்றாக நிராகரித்து வேதாந்தியானேன் என்று எண்ண வேண்டியதில்லை. இவற்றில் ஒவ்வொன்றினூடாகவும் வந்து வேதாந்தியானேன் என்றுதான் நான் சொல்வேன்.

அது 1949, இந்தியா சுதந்திரம் பெற்று இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தது. திபெத் சீனாவால் கைப்பற்றப் படவில்லை. பௌத்தம் அன்று ஒரு மர்மமான மதம்தான். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலும் இலங்கையிலும் பர்மாவிலும் அலைந்து திரிந்து ஹென்றி ஸ்டீல் ஆல்காட் பௌத்த வழிபாட்டு முறைகளை ஒருங்கிணைத்து ஒரு சமகாலப் பௌத்தத்தை உருவாக்க முயன்று சற்றே வெற்றி கண்டிருந்தார். அமெரிக்காவில் ரைஸ் டேவிட்ஸ் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பௌத்த தத்துவம் பற்றி எழுதிக் குவித்துவிட்டிருந்தார். பால் காரஸின் ‘காஸ்பல் ஆஃப் புத்தா’ என்ற எளிமையான நூல் ஐரோப்பாவெங்கும் பெரும்புகழ் பெற்றுக்கொண்டிருந்தது.

பௌத்தம் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உலகளாவ திரட்டிக்கொண்டிருந்த காலம் அது. ஜப்பானில் மெய்ஜி மறுசீரமைப்புக்குப் பிறகு ஜென் பௌத்தம் ஐரோப்பியர் கவனத்தை கவர்ந்திருந்தது. ஆல்காட்டால் ஊக்கம் பெற்ற அநகாரிக தம்மபாலாவின் முயற்சியால் இலங்கையில் தொடங்கிய பௌத்த மறுசீரமைப்பு அலை அடுத்தகட்ட வளர்ச்சியில் இருந்தது. அவர்கள் பௌத்தத்தை ஐரோப்பியர்களுக்கு உகந்ததாக, தர்க்கபூர்வமானதாக ஆக்கினார்கள். அதற்கு மறுபக்கமாக நூறாண்டுக்கு முன்னரே மேடம் பிளவாட்ஸ்கி இந்தியாவைப்பற்றியும் பௌத்தத்தை பற்றியும் ஐரோப்பியர் நம்பவிரும்பும் அத்தனை மாயங்களையும் கட்டிக்கட்டி எழுப்பியிருந்தார். நூறடுக்கு மாளிகைபோல, தேன்கூடு போல, நுரைபோல. அவருடைய நூல்களையே ஒரு புதையுண்ட ரகசியத்தை போல மக்கள் கண்டுபிடித்துக் கொண்டிருந்தனர்.

மொத்தத்தில் பௌத்தம் பற்றிய பேரார்வம் சூழலில் திகழ்ந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை திறந்து முன்வைக்க ஒவ்வொன்றும் பிறிதுடன் முரண்பட்டமையால் அதில் மர்மமும் பெருகியது. அந்த மர்மமே பெரும்பாலானவர்களை அதை நோக்கி இழுத்தது. அத்துடன் சமநிலத்தில் சிதறித் திறந்து கிடந்த ஜைனமதம், இந்துமதம் போலன்றி பௌத்தம் தொலைதூர இமையமலைக்குள் ஒளிந்திருந்தது மலையடுக்குகளால் வெண்பனியால் பொதித்து பொதிந்து வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றி அகற்றி கண்டுபிடிப்பதே ஒரு ஆன்மிகத் தேடல் என்று கருதப்பட்டது.

எப்போதுமே அகப்பயணத்தை புறத்தே நடத்திக்கொள்ள மனிதர்கள் விரும்புகிறார்கள். அகப்பயணம் வெறும் கற்பனையோ என்ற சந்தேகம் அடிக்கடி வரும். அதன் பாதைகள் வகுக்க முடியாதவை. அதன் அடையாளங்கள் நிலையற்றவை. அதன் வெற்றி தோல்வி சென்றவனால் மட்டுமே அறியப்படுவது. ஆகவே அதை ஒரு புறப்பயணமாக நிகழ்த்திக் கொள்கிறார்கள். கிளம்பிச் செல்கிறார்கள், அலைகிறார்கள், தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தை எல்லாரும்தான் கடந்துவர வேண்டியிருக்கிறது.

நான் அப்போது Institute of Parapsychology And Marginal Psychologyயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஹெலெனா ப்ளவாட்ஸ்கியின் நூல்கள், ஆர்தர் ஆவலானின் நூல்கள் ஆகியவற்றில் திளைத்துக் கொண்டிருந்தேன். அந்தபயணத்தில் சரத் சந்திரதாஸின் திபெத்திய நூல்களை வாசித்துக் கொண்டிருந்தேன். அவருடைய ‘Narrative of a journey to Lhasa’ என்னை பித்துப்பிடிக்க வைத்த நூல்களில் ஒன்று. பிரிட்டிஷ் உளவாளியாக லாஸாவுக்குச் சென்று அங்கே சீனர்களுக்கு எதிராக உளவறிந்த சரத் சந்திரதாஸ் மெல்ல மெல்ல திபெத்திய அறிஞரும் ஆய்வாளருமாக மாறினார். ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டின் நண்பர். என்னை அவராகவே கற்பனை செய்துகொண்டு வாசித்தேன். அந்த வயது அப்படி.

ஒருநாள் ஓர் உந்துதலில் டெல்லியில் இருந்து கிளம்பினேன். ஒரு நீண்ட பயணம் அது. நான் மீண்டும் டெல்லிக்கு வந்தது ஏழாண்டுகளுக்குப் பின்னர். முதலில் சிம்லா வழியாக ஸ்பிடி சமவெளி சென்றேன். அங்கிருந்து லடாக். அங்கிருந்து திபெத். அந்தப் பயணம் அன்று மிகக் கடினமானது, ஏனென்றால் இந்தியாவெங்கும் அலைந்து திரிந்துகொண்டிருந்த சில லட்சம் இந்து துறவிகளின் வழி அல்ல அது. அவர்களுக்கு கேதார்நாத், முக்திநாத், அமர்நாத் போன்று சில எல்லைகள் இருந்தன. கங்கோத்ரி, யமுனோத்ரி, கைலாசம் என சில மலையேற்றங்கள். அதன் உச்சம் என்பது மானசரோவர். பௌத்தர்களுக்கு அப்படியொரு பழகிய வழி இல்லை. பயணியர் குழுவும் இல்லை.

ஆனால் அன்று நல்ல ஊக்கம் கொண்ட மலையேற்றப் பயணிகள் இருந்தனர். பெரும்பாலானவர்கள் வெள்ளையர்கள். இமைய மலைமுடிகளில் ஏறிவிடவேண்டும் என்னும் வெறி ஐரோப்பியரை ஆட்டிப்படைத்த காலகட்டம். சென்றவர்கள், வீழ்ந்தவர்கள் பற்றிய கதைகள் வந்துகொண்டே இருந்தன. அவை பிறரை மேலும் வெறிகொள்ளச் செய்தன. பலர் முன்னாள் ராணுவத்தினர். ராணுவ அதிகாரிகள் விடுப்பு எடுத்துக்கொண்டு மலையேறினர். புதியவழிகளினூடாக இமைய மலையடுக்குகளை கடந்தனர். அதற்கெல்லாம் பிரிட்டிஷ் ராணுவம் நிதியுதவியும் பிற உதவிகளும் செய்தது. அந்த மரபு இந்திய ராணுவத்திலும் தொடர்ந்தது.

1949ல் இன்று பயன்படுத்தப்படும் பல வழிகள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. ராணுவ வண்டிகள், மலையேற்றக்காரர்களின் வண்டிகள் வழியாகவே முக்கால்பங்கு தொலைவை கடக்கமுடிந்தது. ஆங்கிலம் அறிந்தவன் என்பதனால் அவர்களுடன் என்னால் தேவைப்படும் போதெல்லாம் இணைந்துகொள்ள முடிந்தது. அவர்களுடன் மலைமேல் செல்வது மிகக் கடுமையானதாக இருக்கவில்லை. ஒரு சுயசரிதையில் வேண்டுமென்றால் மேலும் கடுமையாக்கிக் கொள்ளலாம், அவ்வளவுதான்.

என்னை அன்று கவர்ந்திருந்தவை இந்த இமையமலை அடுக்குகளில் கைவிடப்பட்டவை போலக் கிடந்த மாபெரும் பௌத்த மடாலயங்கள். இன்று அவையெல்லாமே சுற்றுலா மையங்களாக ஆகிவிட்டன. திபெத்தை சீனா தாக்கி கைப்பற்றியதற்கு பிறகே திபெத்திய பௌத்தம் ஐரோப்பிய சாமானியர்களால் அறியப்பட்டது. தலாய்லாமா இந்தியா வந்து, தர்மசாலாவில் தலைமையிடம் அமைத்துக் கொண்டு, உலகமெங்கும் பயணம் செய்யத் தொடங்கி ஐரோப்பாவெங்கும் பக்தர்களையும் ஆதரவாளர்களையும் பெறத்தொடங்கிய பின்னரே திபெத்திய பௌத்தமும் குறிப்பாக அவருடைய கெலுக்பா பிரிவும் போதிய நிதி பெறலாயின. அது ஒரு பெரிய மறுமலர்ச்சிக்கு வழியமைத்தது.

அதன் பின்னரே தொன்மையான மடாலயங்கள் பழுதுபார்க்கப்பட்டன. பல மடாலயங்களுக்கு வண்டிப் பாதைகள் அமைக்கப்பட்டன. ஒரு துறவிகூட இல்லாமல், ஒர் ஊழியர்கூட இல்லாமல் முற்றாகவே கைவிடப்பட்டு கிடந்த மடாலயங்களில் துறவிகளும் காவலர்களும் அமைந்தனர். ஐரோப்பியச் சுற்றுலாப்பயணிகள் வரத் தொடங்கினர். மடாலயங்களைச் சுற்றி அவர்களுக்கான உலகம் உருவானது. உணவுவிடுதி, கைவினைப்பொருட்கள் விற்பனை, தங்குமிடம் என அதையொட்டிய தொழில்கள் வளர்ந்தன.

நான் அன்று பயணம் செய்யும்போது ஸ்பிடி சமவெளியின் ஷாஷுர் மடாலயம், லடாக்கின் ஹெமிஸ் மடாலயம் போன்றவை அவ்வப்போது யாராவது வந்து செல்பவையாக இருந்தன. அங்கே துறவிகள் சிலர் இருந்தனர். இளையோர் சிலர் துறவிகளுக்கான பயிற்சியில் இருந்தனர் லே நகரில் இருந்த திக்ஸே போன்ற மடாலயங்கள் நன்றாகவே பேணப்பட்டு நிறைய துறவிகளுடன் இருந்தன. ஆனால் தொலைவில் மலையடிவாரத்தில் தனித்திருந்த லிகிர், ஸ்பிடுக் போன்ற மடாலயங்களில் எவருமே இருக்கவில்லை.

இந்த மலைச்சிற்றூர்களில் கோடைகாலத்தில் நான்குமாதங்கள் மட்டும்தான் விவசாயம் தொழில் எல்லாமே. எஞ்சிய நீண்ட குளிர்காலம் முழுக்க அரைமயக்கம்தான். மொத்த மலைகளும் வெண்பனி போர்த்தி தூங்கும். மரங்கள் விலங்குகள் பூச்சிகள் மனிதர்கள் எல்லாருமே தூங்கிக் கொண்டிருப்பார்கள். மடாலயங்கள் ஆழ்ந்த தவத்தில் இருக்கும். பனிமூட்டத்திற்குள் இருந்து மடாலயங்களின் மணியோசை தினம் இருமுறை எழும். அதுதான் நாட்களை உருவாக்குவது. காலையை மாலையை வகுப்பது. இவை ஒவ்வொன்றும் ஒரு பெருநெறியின் சிறுநிகழ்வுகளே என உணர்த்துவது.

வண்ணங்களே அற்றவை இமையமலைச்சரிவின் இக்கிராமங்கள். மலைகளும் வண்ணங்களற்றவை. சேற்றுச்சாம்பல் நிறமானவை மலைகள். வானம் கலங்கிய சாம்பல் நிறம் கொண்டது. அந்த மண்ணைக் குழைத்து கட்டப்பட்ட தாழ்வான வீடுகளும் சேற்றுச்சாம்பல் நிறமாக அந்த மண்ணிலேயே கலந்து தெரிபவை. மடாலயங்கள் மட்டும் குருதிச்சிவப்பாக, ஆழ்சிவப்பாக, எவரோ மேலிருந்து கொண்டுவந்து வைத்துச்சென்ற விந்தையான பொருளாக மலையடுக்குகள் நடுவே தெரியும்.

இமையமலையின் பல சிற்றூர்களில் தங்கியிருக்கிறேன். காலை எழுந்ததும் முதலில் நம் கண்கள் அந்த மடாலயங்களைத்தான் நாடிச்செல்லும். அந்த ஆழ்நிறம் உருவாக்கும் ஆறுதல் சாதாரணமானது அல்ல. நாம் ஒரு வெட்டவெளியில் வீசப்பட்டிருக்கிறோம். காற்றிலும் ஒளியிலும் வானில் கரைந்து கொண்டிருக்கிறோம். நாம் அள்ளிப்பற்ற ஒரு சிறு கைப்பிடி, நம்மை மேலெடுக்கும் ஒரு சரடின் நுனி அந்த மடாலயங்கள். அவற்றைப் பார்த்த பின்னர்தான் நாம் வெண்பனியின் அலைகளாக சூழ்ந்திருக்கும் மலையடுக்குகளைப் பார்ப்போம். கசியும் ஒளிமட்டுமே கொண்ட வானத்தை பார்ப்போம். பார்த்து விரிந்து எழுந்து அலைந்து மீண்டு நம்மை நாமே உணர்ந்தபின் மீண்டும் அந்த மடாலயத்திற்கு கண்கள் திரும்பிவரும்.

அங்கே பகலெல்லாம் அமர்ந்திருப்பதே குளிர்காலத்தைச் செலவிடும் வழி. பெரும்பாலான இல்லங்கள் மலைச்சரிவு நோக்கி திறந்தவை. ஏனென்றால் பெரும்பாலான இல்லங்கள் பின்பக்கம் மலைச்சரிவின் பாறைகளுடன் சேர்த்து கட்டப்பட்டவை. இப்பகுதியின் நிலநடுக்கத்தையும் மலைச்சரிவையும் எதிர்கொள்ள இவர்கள் கண்டடைந்த வழி அது. திறந்த முற்றத்திலோ திண்ணையிலோ அமர்ந்து கையில் ஹூக்காவுடனோ சுருட்டுடனோ மலைகளை கண்சுருக்கி பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பதே இங்கே வாழ்க்கை என்பது. அந்த பார்வை மலைகளையும் மடாலயத்தையும் தொட்டுத்தொட்டு ஓடும் ஒரு தறியோட்டம். ஒரு நெசவு.

நான் லடாக்கில் திக்ஸே மடாலயத்தில் இருந்தேன். அங்கே லடாக்கிய மொழியில் ஐம்பது சொற்களைக் கற்றுக்கொண்டேன். அவற்றை நான் பலமுறை சொன்னால் அவர்கள் புரிந்துகொள்வார்கள். அவர்கள் பலமுறை சொன்னால் நான் புரிந்துகொள்வேன். லடாக்கிய மொழிச் சொற்களில் பலவற்றுக்கும் சம்ஸ்கிருத வேர் இருந்தது. அது அவற்றை நினைவுகூர எனக்கு உதவியாக இருந்தது. மொழிபற்றிய ஒரு தன்னம்பிக்கை வந்தபின் லடாக்கின் மடாலயங்கள் தோறும் சென்றேன்.

சிந்துவின் கரையில் இருக்கும் சிற்றூர்களில் ஒன்று ஸ்பிடுக். அங்கே அன்று நாற்பது வீடுகள் மட்டும்தான். ஸ்பிடுக் கோம்பா என்று அழைக்கப்படும் தொன்மையான மடாலயம் ஊரின் நடுவே இருந்தது. லடாக்கின் மிகப்பெரிய மடாலயங்களில் ஒன்று. திபெத்திய மடாலயங்களின் பாணியில் மலைச்சரிவின் மேலேயே அடுக்கடுக்காக எழுந்த பெரிய கட்டிடம் அது. அங்கே நான் சென்றபோது நான்கு துறவிகள் மட்டுமே இருந்தார்கள். ஒருவர் முதியவர், மற்றவர்கள் நடுவயதினர். இளைஞர் எவருமில்லை. அந்த மாளிகைத் தொகுதியில் அவர்கள் நால்வருமே முழுமையான தனிமையில் இருந்தனர். அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதே அரிது என்று தோன்றியது.

அங்கே நான் எட்டுநாட்கள் தங்கியிருந்தேன். யாக் என்னும் மலைமாட்டின் கெட்டியான பாலில் மக்காச்சோள மாவை விட்டு காய்ச்சி செய்யும் களியை மட்டும்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதை நானே செய்து கொள்வேன். அவர்கள் உலர்ந்த பன்றியிறைச்சியை நூடில்ஸ் கஞ்சியில் போட்டு குடிப்பார்கள். குளிரும் அமைதியும் கலக்கும்போது ஒரு விசித்திரமான விளைவு ஏற்படுகிறது. காலம் நின்றுவிடுகிறது. சிந்தை நின்றுவிடுகிறது. காற்றுமட்டும்தான் அசைந்துகொண்டிருக்கும்.

அங்கே முதிய துறவியான டென்ஸின் வாங்சுக் லோர்ட்சவா என்னிடம் பேசிக் கொண்டிருக்கையில் அங்குள்ள மேலும் தொன்மையான மடாலயங்களைப் பற்றிச் சொன்னார். சிந்துவிலிருந்து வடக்கே பியாங் கோம்பா என்னும் மடாலயம் இருந்தது. பியாங் இருபத்தேழு வீடுகள் கொண்ட சிற்றூர். நான் அங்கிருந்து பியாங் கோம்பாவுக்குச் செல்ல விரும்பினேன். “அங்கே எவருமில்லை. முற்றாக கைவிடப்பட்டு கிடக்கிறது. அந்த ஊரில் எவரிடமாவது மடாலயத்தின் சாவி இருக்கலாம்” என்று டென்ஸின் சொன்னார். “அங்கு செல்வதும் கடினம். இது கோடைகாலமானாலும்கூட உருளைக்கற்களால் ஆன சிறிய பாதைதான் உண்டு. குளிர்காலத்தில் அதுவும் இல்லை.”

நான் ஒரு வழிகாட்டியை அமர்த்திக் கொண்டு பியாங் கோம்பாவுக்கு கிளம்பினேன். நாங்கள் இரண்டு கழுதைகள் மேல் ஏறிக்கொண்டோம். ஒரு கழுதைமேல் எங்களுக்கான பொருட்கள். கழுதைகள் பார்வைக்கு சிறியவை. நாம் ஏறி அமர்ந்தால் கால் கீழே தொடுமோ என்று தோன்றும். ஆனால் ஆற்றல்மிக்கவை. அவற்றின் முன்னோடிகள் அந்த மலைகளில் இன்றும் காட்டு விலங்குகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

மலைமேல் சாம்பல்நிற மண்சரிவில் மண்புழுத்தடம் போல தெரியும் ஒற்றையடிப்பாதைதான் வழி. சில இடங்களில் அது ஆங்கில Z எழுத்துபோல செங்குத்தான மலைச்சரிவின் மேல் ஏறிச்செல்லும். இப்பகுதியில் புழுதிதான் மலைச்சரிவாக அமைந்துள்ளது. மிகமிக நுண்மையான மணல்புழுதி முதல் நம் தலையளவு பெரிய பாறை நொறுங்கல்கள் வரை பல கிலோமீட்டர் நீளம் கொண்ட பொழிவாக சரிந்திறங்கியிருக்கும். நுண்புழுதியின் அதே இயல்பைத்தான் நொறுங்கல் குவியலும் கொண்டிருக்கும்.

அவற்றின்மேல் செல்லும் பாதை கழுதைக் கால்களால் நன்கு புரிந்து கொள்ளப்பட்டது. கழுதைமேல் அமர்ந்திருக்கையில் பக்கவாட்டுப் பள்ளத்தை பார்த்தால் வயிறு இறுகி உள்திரவங்கள் கலங்கிவிடும். இன்னொரு கழுதையின் குளம்புகள் பதியும் விதத்தைப் பார்த்தால் சட்டென்று உயிர்விட்டு மீளும் கணம் ஒன்று அமையும். ஒழுக்கில் உருண்டு நிற்கும் கற்களின்மேல் குளம்புகளை வைத்து எறும்பு போல சென்றுகொண்டே இருக்கும் கழுதை. அது காலை எடுத்ததும் அந்தக் கல் உருண்டு அடியாழத்திற்குச் சென்று விழும். கழுதைக் காலின் குளம்புகளுக்கு மேலே உள்ள பகுதியை நீ பார்க்கவேண்டும் இரண்டு விரல்களால் வளைத்துவிடலாம். அந்தச் சிறிய நான்கு எலும்பு மூட்டுகள் எங்களை மலைமேல் கொண்டு செல்கின்றன என்று எண்ணிப் பார்க்கையில் ஒரு மெய்மறந்த நிலை உருவாகும்.

ஒவ்வொரு குளிர்காலத்திற்கு பிறகும் பாதை புதிதாக உருவாக்கப்படும். அந்தப்பாதையின் மிகப்பெரிய இடர் என்பதே மேலிருந்து பொழியும் கல்மழைதான். கற்களால் ஆன அருவி. பொழிந்து பொழிந்து கோபுரமாக ஆகி வழியை மூடிவிடும். அதை சுற்றிவளைத்துக் கொண்டு கழுதை செல்லும். நேரடியாக அதில் சிக்கிக் கொண்டால் ஓரிரு கற்களிலேயே மண்டை பிளந்துவிடும். சிலசமயம் எருமைகளைப்போன்ற யானைகளைப்போன்ற கற்களே உருண்டு வந்து விழுவதுண்டு. அரிதாக பெரிய வீடுகளைப்போன்ற பாறைகளே இடியோசையுடன் கீழிறங்கி வரும்.

பியாங்க் கோம்பா செல்ல இரண்டு பகல்கள் ஆயிற்று. நடுவே மலையின் இடுக்கு ஒன்றுக்குள் இரவு தங்கினோம். வெட்டவெளியில் இப்பகுதியில் இரவு தங்குவது இயலாது. ஆகவே பயணிகள் தங்குவதற்கான மலைப்பிளவுகள் மற்றும் இடுக்குகளை கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். விலங்குகளுடன் நாலைந்து பேர் உள்ளே சென்றுவிட முடியும்.

பெரும்பாலும் மென்பாறையாலானவை இந்த பொந்துகள். அந்த பாறையில் இருந்த உப்புப்பொருள் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு குழிந்து குகைகளாக ஆகிவிடும். அவற்றை மேலும் குடைந்து தங்குவதற்குரிய வகையில் ஆக்கியிருப்பார்கள். உள்ளே சென்று கனத்த போர்வைகளை சிறிய கூடாரக் குவியலாக அமைத்து உள்ளே ஒடுங்கிக் கொண்டோம். அடியில் யாக்கின் தோலும் வெளியே யாக்கின் மயிரும் கொண்ட இரண்டு அடுக்கான அந்தப் போர்வைகள் அற்புதமாக குளிர்தாங்குபவை. கூட்டுப்புழுக்களைப் போல சுருண்டு கொண்டால் உடலுக்கு தூங்கு என்ற ஆணையை நாமே விடுக்கிறோம். நான் இமையமலைகளில் போல எங்குமே ஆழ்ந்து தூங்கியதில்லை

பியாங் கோம்பா சாதாரணமான மடாலயம். அப்பகுதியின் சாம்பல்நிற மண்ணை சுண்ணாம்புடான் குழைத்து கட்டப்பட்டது. சாணிமெழுகிய சுவர் என்று தோன்றும் அடர்சிவப்புநிறமான விளிம்புகள் கொண்ட சிறிய சன்னல்கள் வரிசையாக இருந்தன. சிவப்புநிறம் பூசப்பட்ட உத்தரங்களுக்குமேல் அமைந்திருந்த மரத்தாலான கூம்புக்கூரை பெரும்பாலான இடங்களில் உடைந்து உள்ளே சரிந்திருந்தது. கதவு பூட்டப்படாமல் வெறுமே கொண்டி போடப்பட்டிருந்தது. புழுதியின், மட்கும் துணிகளின் மணம் வந்தது.

என் வழிகாட்டி நான் டென்ஸின் அவர்களால் அனுப்பப் பட்டவன் என்று சொன்னான். ஊர்த்தலைவரான கிழவர் வந்து என்னை இடையளவு குனிந்து வணங்கி அவருடைய சிறிய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். தரையில் தடிமனான யாக் மென்மயிர் விரிப்புகள் போடப்பட்டு சுவர்களும் கூரையும் தோலால் உறையிடப்பட்ட சிறிய அறைக்குள் அமர்ந்து அவர் அளித்த மக்காச்சோள கூழை குடித்தேன். என் உடலுக்குள் அது வெம்மையை நிறைத்தது. உயிர் என்பது வெம்மையே என்று நாம் உணரும் தருணம் அது.

பியாங் கோம்பாவில் அப்போது துறவி எவரும் இல்லை. அங்கிருந்த முதிய துறவி சமாதியாகி பதினேழு ஆண்டுகளாகின்றன புதியவர் எவரும் அனுப்பப் படவில்லை. மடாலயம் பழுது பார்க்கப்படவில்லை. எட்டாண்டுகளுக்கு முன்பு அதன் கூரை பனிப்பொழிவின் சுமை தாளாமல் விரிசலிட்டது. நீர் ஒழுகி சுவரும் சற்றே பிளந்தது. அடுத்தடுத்த பனிப்பொழிவுகளில் அதற்குள் பனி நிறைந்து அது உருகி செடிகளும் பாசிகளும் முளைத்தன. அவற்றை ஓரளவே தூய்மை செய்ய முடிகிறது. ஆனால் மடாலயம் அழிந்து கொண்டிருக்கிறது என்றார் ஊர்த்தலைவர்.

நான் பியாங் கோம்பாவின் உள்ளே சென்றேன். பதினாறாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட அமிதாப புத்தர் கையில் அமுதலகத்துடன் மையப்படிமமாக அமர்ந்திருந்தார். வலப்பக்கம் மைத்ரேய புத்தர். இடப்பக்கம் நான்கு தலைகள் கொண்ட காலாபுத்தர். நேர் எதிரே காலதேவரின் சிலை. மென்மரத்தாலான சிலைகள். அவற்றின்மேல் தங்க ரேக்கு படிய வைக்கப்பட்டிருந்தது. அது பல இடங்களில் மறைந்து போய் ஆங்காங்கே மென்மையான மஞ்சள்நிற ஒளிபோல தெரிந்தது. சுவரில் சிற்றறைகளில் ஆயிரம்புத்தர் சிலைகள். ஒரு பெரிய நூலடுக்கு முழுக்க பழங்கால தோல்சுருள், பட்டுச்சுருள் சுவடிகள். யாக் நெய்யாலான மெழுகுவத்திகளில் சுடர்கள் அசையாமல் நிற்க புத்தர் மாபெரும் சுடர் என தோன்றினார்.

இடுங்கலான அறையொன்றில் மென்மையாக மரக்கீல்களில் சுற்றிக்கொண்டிருந்த ஏழு  மணிபத்ம அறச்சக்கரங்கள். அவற்றில் ‘ஓம் மணிபத்மே ஹும்’ என்னும் மந்திரம் திபெத்திய மொழியில் எழுதப்பட்டிருந்தது.அவற்றை வெளியே இருந்து சுழற்றுவதற்குரிய பற்சக்கரங்கள் இருந்தன. அவ்வப்போது ஊரிலிருந்து வந்து எவரோ அவற்றைச் சுழற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அங்கே சுற்றிக் கொண்டிருக்கையில் எனக்குள் இயல்பாக எழுந்த ஐயத்தை நான் ஊர்த்தலைவரிடம் கேட்டேன். அதை என் வழிகாட்டி மொழியாக்கம் செய்து சொன்னான். “இந்தச் சிறிய ஊருக்கு ஏன் இத்தனைபெரிய மடாலயம்?”

முதியவர் சிரித்துவிட்டார் “பௌத்தர்களுக்கு மடாலயமே தேவையில்லை. மடாலயங்கள் அமைவது துறவிகளுக்காகத்தான்.”

“அவர்களுக்கு எதற்காக மடாலயங்கள்?” என்று நான் கேட்டேன்.

“கூட்டுப்புழுக்களுக்கு கூடுபோல” என்றார்.

மிகச்சுருக்கமான பதில். ஆனால் என்னை அது திகைக்கச் செய்தது. கூட்டுப்புழுவுக்கு எவரும் அதை செய்து கொடுப்பதில்லை. அதுவே தனக்காக கட்டிக்கொள்கிறது, தன் உயிரால், உடற்திரவத்தால். அதன்பின் உள்ளே தவம் செய்கிறது. சிறகு முளைத்தபின் உடைத்து வெளியே செல்கிறது.

நான் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டேன் “ஒரு மடாலயத்தின் அளவு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?”

“அந்த பிட்சு தீர்மானிக்கிறார். அவருடைய அளவு அவருக்குத்தான் தெரியும்” என்றார் ஊர்த்தலைவர். “இங்கே முன்பு இருந்த பிட்சு இந்த பெரிய மடாலயத்தில் இதோ இந்தச் சிறிய அறையில் மட்டும்தான் வாழ்ந்தார். வேறெங்கும் அவர் போனதே இல்லை.”

நான் அந்தச் சிறிய அறையை நோக்கிக் கொண்டு நின்றேன். அது ஒரு சிறிய பெட்டிதான். ஒருவர் கால்நீட்டி படுக்கலாம். இன்னொருவர் உள்ளே நுழைந்தால் இருவரும் அமர்ந்து கொள்ளவேண்டும். மரத்தாலான மிகச்சிறிய, திறந்த அலமாரா. பத்து புத்தகங்கள் வைக்கலாம். ஒரு மிகச்சிறிய மெழுகுவத்தி மேஜை. அவ்வளவுதான் இடம். ஆனால் அது போதும் ஒருவருக்கு. வசதியாகவே இருக்கமுடியும்.

என் எண்ணத்தை அறிந்ததுபோல ஊர்த்தலைவர் “இங்கே மேலும் வடமேற்கில் உம்லா என்று ஒர் ஊர் உள்ளது. அங்கே மொத்தமே ஏழு வீடுகள்தான். பதிமூன்றுபேர்தான் வாழ்கிறார்கள். அனைவருமே மலையில் யாக்குகளை மேய்ப்பவர்கள். ஆனால் அங்கிருக்கும் மடாலயம்தான் லடாக்கிலேயே பெரியது” என்றார்.

நான் “அப்படியா?”என்றேன். “திக்ஸே மடாலயம்தான் மிகப்பெரியது என்றார்கள்.”

“ஆமாம், இப்போது அதுதான். உம்லாவின் மடாலயத்தின் பெரும்பகுதி சரிந்துவிட்டது… ஆனால் எஞ்சியிருப்பதேகூட டிக்ஸிட் மடாலயத்தைவிட பெரியதுதான்”

“நான் கேள்விப்பட்டதே இல்லை” என்றேன்.

“எவருமே கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்… இதுவரை அங்கே வெள்ளைக்காரர்கள் எவருமே போனதில்லை. அப்படி ஒரு சிறிய ஊர். போய்ச் சேரவே மூன்றுநாட்களாகும்.”

“நான் அங்கே போகவேண்டும்” என்றேன்.

“அங்கேயா? இதேபோன்ற மடாலயம்தான், இதைவிட பத்துமடங்கு பெரியது என்று வைத்துக்கொள்ளுங்கள்”. நான் கிளம்புவேன் என அவர் நினைக்கவில்லை. ஆகவே ஊக்கம் குறைந்தவரானார்.

“அங்கே போகவேண்டும், என்னவழி?” என்றேன்.

என் வழிகாட்டி அங்கே வரமாட்டேன் என்று சொல்லிவிட்டான். அவனுக்கு வழி தெரியாது. அவன் திரும்பிப் போகவும் விரும்பினான். அவனை ஒருவாரம் அங்கே தங்கச் சொன்னேன். என்னை பியாங் ஊரைச்சேர்ந்த ஒருவனே மேலே கூட்டிச் சென்றான். வழக்கம்போல மூன்று கழுதைகள். ஒன்றில் எங்களுக்கான குளிராடைகளும் உணவும் நீரும். இரண்டில் நாங்கள்.

மூன்று பகல்களாயிற்று நாங்கள் உம்லாவுக்குச் சென்றுசேர. நன்கு வழிதெரிந்த ஒருவர் இல்லாமல் அங்கே செல்லவே முடியாது. பாதை மாறிக்கொண்டே இருப்பது. நிலமே ஆண்டுதோறும் முற்றிலும் மாறிவிடுவது. புதிய பாறைகள் உருண்டு வந்து அமைந்திருக்கும். புதிய மண்குன்றுகள் உருவாகியிருக்கும். அதைவிட மிகமிக அருகே செல்வதுவரை நம்மால் உம்லாவை கண்டுபிடிக்கவே முடியாது.

மிகச்சிறிய ஊர். ஊர் கூட அல்ல, ஏழு சிறுவீடுகளின் தொகுப்பு. ஊருக்கு வெளியே அங்கே ஊர் இருப்பதை அறிவிக்கும் சுடுமண் ஸ்தூபி. அதைச் சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்தாலான கொடித்தோரணம் கட்டப்பட்டிருந்தது. சரிவிலிருந்து எழுந்துவீசிய காற்றில் பலநூறு தேன்சிட்டுகள் போல தோரணக்கொடிகள் அதிர்ந்துகொண்டிருந்தன. நல்ல பளிச்சிடும் வெயில். ஆனால் மேல்மூக்கின் தோலை எரியவைக்கும் குளிரும் இருந்தது.

புழுதியில் கால்கள் புதையப் புதைய உம்லாவுக்குச் சென்றுசேர்ந்தோம். அங்கே மடாலயம் ஏதும் தென்படவில்லை. “அது உம்லா தானா?” என்று நான் கேட்டேன்.

“அதுதான்” என்று வழிகாட்டி சொன்னான்.

உம்லாவின் ஊர்த்தலைவர் தொலைவில் வந்தபோது சிறுவன் போல தோன்றினார். அருகே வந்தபோது முதுமை அடைந்து என் முன் வந்து நின்றபோது நூற்றுக்கிழவராக ஆனார். தன் பெயர் சோடக் யார்க்யே என்று அறிமுகம் செய்துகொண்டார். இவர்களின் பெயர்களெல்லாம் பல அடுக்குகள் கொண்டவை. முதல் சொல்லை நினைவில் வைத்துக்கொள்வதுதான் நல்லது.

சோடக் எங்கள் வருகையால் மகிழ்ந்தவராக தெரியவில்லை. இந்த மலைச்சிற்றூர்களில் புதிதாக வருபவர்கள் ஒரு நிலைகுலைவை உருவாக்குகிறார்கள். ஆகவே எப்போதுமே விருந்தினர்களை இவர்கள் ஐயத்துடனும் எரிச்சலுடனும்தான் பார்க்கிறார்கள். தூங்குபவனை எழுப்பினால் வரும் எரிச்சல்.

மேலும் புன்னகை, முகமன் உரைத்தல், நலம் உசாவுதல் போன்ற சம்பிரதாயங்களும் இவர்களுக்குத் தெரியாது. ஆகவே நம் வருகையை இவர்கள் விரும்பவில்லை என்று தோன்றும். அவர்கள் இயல்பாக நமக்கு வேண்டியதைச் செய்வதையும் முடிந்தவரை உதவுவதையும் கண்டபின்னரே அவர்கள் நம்மை விரும்புவது புரியும்.

கிளம்பும்போதும் அவர்கள் மெல்லுணர்வுகள் எதையும் வெளிப்படுத்துவதில்லை. கண்களைச் சுருக்கி சிரித்து விடைகொடுப்பார்கள். இங்கிருந்து கிளம்பும் ஒவ்வொருவரும் மீண்டும் வராதவர்களே. ஆகவே அது ஒருவகை சாவுதான். ஆனால் அவர்களின் வாழ்வே ஒரு பெரிய தியானம். அங்கே வாழ்வும் சாவும் நாமளிக்கும் மிகையான எடையேதும் இல்லாத நிகழ்வுகள்.

உம்லாவின் ஊர்த்தலைவரின் சிறிய அறையில் மக்காச்சோள நூடில்ஸை சாப்பிட்டுக்கொண்டு ஓய்வெடுத்தபோது நான் கேட்டேன். அங்கே மடாலயம் எங்கே இருக்கிறது என்று. அவர் மலைகளைச் சுட்டிக்காட்டினார். அது ஒரு சோர்வையே அளித்தது. இடம் மாறிவந்துவிட்டோமா? உம்லா மடாலயம் உம்லாவில் இல்லையா?

நான் லடாக் மொழியில் எனக்குத் தெரிந்த சொற்களை கொண்டு பேசிப்பேசி மெல்ல புரிந்துகொண்டேன். உம்லா இடம் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. நூறாண்டுகளில் அது கிட்டத்தட்ட ஒரு முழு மலைச்சரிவையே தாண்டிவந்துவிட்டது. அவர்களின் பழைய இடத்தில் மலையடிவாரத்தில் உம்லா மடாலயம் இருக்கிறது. அது மிகப்பெரியது, அதன் இடியாத பகுதிகள் சில எஞ்சியிருக்கின்றன

அங்கே ஓய்வெடுத்தபின் மறுநாள் நான் சோடக்குடன் மடாலயத்தைப் பார்க்க கிளம்பிச் சென்றேன். நடந்துதான் சென்றோம். இரு நீளமான மூங்கில்களை ஊன்றியபடி நடந்தோம். அதன் முனை கூர்மையானது, நான்கு விரற்கடை உயரத்தில் ஒரு மரவட்டம் உண்டு. புழுதியில் அதை ஊன்றினால் கூர்முனை குத்தி இறங்கும். வட்டப்பரப்பு புழுதியில் அழுந்தி நிற்கும். பனியில் நடப்பதற்குரியது, புழுதிக்கும் உதவியானது. கழுதை ஒன்று உடன்வந்தது, எங்களுக்கான பொருட்களுடன்.

மலைச்சரிவை சுற்றிக்கொண்டு சென்றபோதே நான் உம்லா மடாலயத்தை கண்டுவிட்டேன். எதிரே மலைச்சரிவில் அது மேலிருந்து விழுந்து வழுக்கியபடி வந்து அப்படியே வழிந்து நின்றிருப்பதுபோல தெரிந்தது. ஒன்றன்மேல் ஒன்றாக எட்டு அடுக்குகள் கொண்ட கட்டிடம். சிவப்பான ஓட்டுக்கூரையும் சாம்பல்நிறமான சுவர்களும் கொண்டது. சன்னல்கள் குருதிச் சிவப்பானவை. அதன் வடக்குப்பகுதி சரிந்து சிதைந்து சரிவில் இறங்கியிருப்பதைக் கண்டேன்.

இமையமலைப் பகுதியின் விந்தைகளில் ஒன்று, ஓர் இடத்தை நாம் கண்ணால் பார்த்தபிறகு அங்கே சென்றடைய பலமணிநேரம் ஆகும் என்பது. பார்த்ததுமே அங்கே மனதால் சென்றுவிடுவோம். ஆனால் செல்லச்செல்ல பாதை சுருளவிழ்ந்து நீண்டுகொண்டே இருக்கும். ஒருமுறை பார்த்தபின் கண்களை தாழ்த்திக்கொள்ள வேண்டும். மீண்டும் இலக்கை பார்க்கவே கூடாது. கணக்கிடாதபடி சென்றபடியே இருக்கவேண்டும்.அப்போதுதான் உளம்சோராமல் சென்றுசேரமுடியும்

நாங்கள் அந்த மடாலயத்தை சென்றடைந்தபோது மாலையாகியிருந்தது. மிகப்பெரிய மடாலயம். அணுக அணுக அது பெரிதாகியபடியே வந்தது. அதன்கீழே ஒரு முற்றம். ஒருகாலத்தில் அங்கே பல்லக்குகளும் மஞ்சல்களும் வந்து நின்றிருக்கலாம். அது கூழாங்கல்பரப்பாக கிடந்தது. வெயிலில் கூழாங்கற்கள் அனைத்தும் நிழல்கொண்டிருந்தன. அங்கிருந்து மேலேறிச் சென்றன படிகள். அவற்றில் ஏறியபோது அந்த மடாலயத்தின் அளவு திகைப்பை உருவாக்கியது. அத்தனை பெரிய கட்டிடத்தில் ஒருவருமே இல்லை என்பது அளித்த பதற்றம் உடனே திரும்பிவிடவேண்டும் என்ற தவிப்பாக மாறியது.

கீழே இருந்தே கட்டிடங்கள் தொடங்கி ஒன்றன்மேல் ஒன்றாகச் சென்றுகொண்டே இருந்தன. படிகள் இமையமலையில் கிடைக்கும் உருளைக் கற்களை சுண்ணத்துடன் குழைத்து செய்யப்பட்டவை. கட்டிடங்களுக்கு மண்ணால் கட்டப்பட்டு சுண்ணம் பூசப்பட்ட சுவர்கள். அவற்றுக்குமேல் லடாக்முறைப்படி தடிகளை செறிவாக பரப்பி, அதற்குமேல் சுள்ளிகளை மூன்றடி உயரத்திற்கு அடுக்கி, அதற்கு மேல் மண்போடப்பட்டு உருவாக்கப்பட்ட கூரை. சிறிய கதவுகள். பெரும்பாலானவை சும்மா சாற்றப்பட்டிருந்தன. உள்ளே இருளும் அமைதியும் நிறைந்திருந்தன.

மேலே செல்லச்செல்ல கட்டிடங்கள் பெரிதாயின. கூரை மிக உயரத்தில் மரப்பட்டைகளால் ஆனதாக மாறியது. உத்தரங்களின் முனைகளுக்குச் செம்பு உறை போடப்பட்டிருந்தது. உத்தரங்களும் பட்டியல்களும் செந்நிறச் சாயம் பூசப்பட்டவை. சன்னல் கதவுகள் நிலைகள் எல்லாமே கருஞ்சிவப்புச் சாயம் கொண்டவை. அவற்றின் எல்லைகளில் எல்லாம் நாகங்களும் யாளிகளும் வாய்திறந்திருந்தன. கதவுகளின் நாதாங்கிகளும் பிடிகளும் குமிழிகளும் பித்தளையாலானவை.

உள்ளே மிகப்பெரிய நீள்சதுரக் சைத்ய கூடத்தில் அமிதாப புத்தர் கையில் அமுதகலத்துடன் அமர்ந்திருந்தார். இருபதடி உயரமான பெரிய சிலை. மரத்தால் செய்யப்பட்டு பொன்வண்ணமும் செந்நிறமும் கருநிறமும் பூசப்பட்டது. புத்தரின் உடல்பொன். ஆடை சிவப்பு. சுருள்முடி கருமை. விழிகள் நீண்டு கனவில் மயங்கியிருந்தன. உதடுகளில் புன்னகையோ என்னும் சிறிய மலர்வு. அமுதகலம் பொற்கனி என மின்னியது.

புத்தரின் வலப்பக்கம் புலிமேல் நின்றிருக்கும் பத்மசம்பவர். இடப்பக்கம் கரிய பன்னிரு தலைகள் கொண்ட காலவடிவான புத்தர். ஒரு தனித்த பீடத்தில் வஜ்ரயோகினியுடன் சம்போகநிலையில் வஜ்ரயோகபுத்தர். சுவரெங்கும் சகஸ்ரபுத்தர். சிறிய அறைகள் நிறைய சுவடிகள். சிலசுவடிகள் பொன்பூச்சுள்ள அடிக்கட்டை போட்ட தோல்சுருட்கள்.

அந்தக் கூடத்தைப் பார்த்தபோது அது நெடுங்காலம் முன்பு கைவிடப்பட்டது என்று தெரிந்தது. மலையெருதின் தோலால் ஆன இருக்கைகள் மட்கியிருந்தன. மிகப்பெரிய உருட்டுமுரசு தோல்கிழிந்து நின்றது. வெவ்வேறு உலோக இசைக்கருவிகள் ஆங்காங்கே புழுதி படிந்து அமைந்திருந்தன

சூழ்ந்திருந்த உயரமான சுவர்களில் டாங்காக்கள் மங்கலடைந்த வண்ணங்களுடன் மேலிருந்து தொங்கி தலைக்குமேல் வரை வந்த பட்டுக் குச்சலங்களுடன் நின்றன. அவற்றில், காலாபுத்தர், ஓங்கிய வஜ்ராயுதத்துடன் வஜ்ரதர புத்தர், தாமரை ஏந்தி நின்ற போதிசத்வ பத்மபாணி, இந்திரன், யமன். பௌத்தர்களின் பிரபஞ்ச அடுக்குச் சித்தரிப்புகள். பிரக்ஞை மண்டலச் சித்தரிப்புகள்.

நான் அந்த மடாலயத்தை மார்பில் கட்டிய கைகளுடன் பார்த்துக் கொண்டு சுற்றி வந்தபோது சட்டென்று அவரைப் பார்த்தேன். ஓவியங்களுக்கும் சிற்பங்களுக்கும் நடுவே அவரைக் கண்டதும் என் அகம் அதிர்ந்தது. அவர் அவற்றிலிருந்து உயிர்கொண்டவர் போல என்னை நோக்கி தலைவணங்கினார். ஒர் உறுதியான உடல்கொண்ட பிட்சு.

கருஞ்சிவப்பு நிறத்தில் கம்பிளியாலான ஆடையை சுற்றிச்சுற்றி தோளில் அணிந்திருந்தார். தலை முண்டனம் செய்யப்பட்டிருந்தது. செம்புத்தவலை போன்ற முகம். சிறிய கண்கள் திபெத்தியர்களிடம் இல்லாத ஒரு பச்சைநிறம் கொண்டிருந்தன. இந்த முகங்களை அறியத்தொடங்கியவர்கள் அவருக்கு அறுபது வயதுக்குமேல் இருக்கும் என்று ஊகிப்பார்கள். நுணுக்கமான சுருக்கங்களால் ஆன வட்டமுகத்தில் கன்னத்தசைகளின் தளர்வே வயதைக் காட்டுவது.

அங்கே அப்படி ஒருவர் இருப்பதை சோடக் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் திகைப்புடன் தலைவணங்கினார். அவர்கள் லடாக்கிய மொழியில் பேசிக்கொண்டனர். என்னை டென்ஸினால் அனுப்பப் பட்டவர் என்று சோடக் சொன்னார்.

அந்த பிட்சு என்னிடம் ஆங்கிலத்தில் “உங்கள் ஊர் தெற்கா?” என்றார்.

“ஆமாம்” என்றேன். “நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்கள் என எண்ணவேயில்லை.”

“நான் தெற்கே புத்த கயாவில் இருந்திருக்கிறேன்” என்றார்.

“நான் மேலும் தெற்கே, கேரளத்தில் இருந்து வருகிறேன்.”

“கன்யாகுமரியில் இருந்தா?”

“ஆமாம்” என்றேன்.

“அதற்கு அப்பால் இலங்கை” என்று அவர் சொன்னார்.

“நீங்கள் இங்கே லாமாவாக பொறுப்பில் இருக்கிறீர்களா?”

“இல்லை, என் பயணத்தில் இங்கே வந்தேன். இதற்குமுன் திக்ஸே மடாலயத்தில் இருந்தேன்.”

“நானும் அங்கே இருந்தேன்” என்றேன்.

அவர் புன்னகைக்கவில்லை.

“இங்கே எவ்வளவு நாட்களாக தங்கியிருக்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன்.

“எட்டுமாதங்களாக” என்றார் துறவி.

“எட்டுமாதங்களகவா!” என்றபின் “இவர்களுக்கு தெரியாமலா?” என்றேன்.

“ஆமாம், இவர்கள் எவரும் இங்கே வருவதில்லை.”

“உணவுக்கு என்ன செய்கிறீர்கள்?”

“இங்கே எல்லாமே இருக்கிறது…” என்று அவர் சொன்னார். “இங்கே வேண்டியதை கொண்டுவர வேறு வழிகள் இருக்கின்றன. இந்த மலையிடுக்கு வழியாக கீழே செல்லும் சீன வணிகர்கள் உண்டு”

சோடக் கைகூப்பியபடி நின்றார்.

நான் “தங்கள் பெயர் என்ன என்று அறியலாமா?”.என்றேன்.

“ராப்டன் ஓர்க்யின் லிங்பா. என்றார் முழுப்பெயரும் உனக்கு நினைவில் நிற்காது. ராப்டன் என்றால் உறுதியான காலடிகள் என்று பொருள்.”

நான் “துறவிக்கு உகந்த பொருள்” என்றேன்.

“வா” என்று அவர் எங்களை அழைத்துச் சென்றார்.

உள்ளே ஓர் அறையை அவர் தூய்மைசெய்து வைத்திருந்தார். செந்நிறமான மென்மயிர்த்தோல் பரப்பப் பட்ட அறை. தரை சுவர் கூரை எல்லாமே தோல் போர்த்தப்பட்டவை. இருப்பிடங்கள் தோல்மெத்தையாலானவை

“இது இங்கே மிக வசதியான அறை, ஏனென்றால் சிறியது” என்று ராப்டன் சொன்னார். “இத்தகைய எழுபது அறைகள் இங்கு உள்ளன. இங்கே வசதியாக நாநூறு பேர் தங்கலாம்.”

நாங்கள் அமர்ந்து கொண்டோம். நான் கால்மேல் கம்பிளியை எடுத்துப் போட்டு கைகளை மார்பின்மேல் கட்டிக்கொண்டேன். சோடக் அவர்களுக்குரிய முறையில் குந்தி அமர்ந்தார்.

அந்த அறைக்குள் பழைமையான முறைப்படி வெப்பம் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெளியே ஓர் அடுப்பில் எரியும் விறகின் கனல் மண்குழாய் வழியாக அறைக்குள் வந்து அங்கே பதிக்கப்பட்டிருந்த பெரிய இரும்புத்தகடின் அடியில் பட்டு அதை பழுக்கக் காய்ச்சி சிவக்கச் செய்துவிட்டு மண்குழாய் வழியாக மேலே சென்று புகையாகி வானில் மறையும். அறைக்குள் தீயோ புகையோ வருவதில்லை. அறையின் ஆக்ஸிஜனும் எடுக்கப்படுவதில்லை.

அந்த இரும்புத்தகட்டின்மேல் அவர் தட்டையான அடித்தளம் கொண்ட செம்புக்கெட்டிலில் நீரை ஊற்றி வைத்தார். கீழே அடுப்பு அமைந்திருக்கும் விதம் மலைச்சரிவில் ஏறிவரும் காற்று நேராக உள்ளே புகுந்துகொள்வதுபோல இருக்கும் என நான் ஊகித்தேன். சிறிய துளைகள் வழியாக அந்தக் காற்று அனலை ஊதிக்கொண்டே இருக்கும். ஆகவே துருத்தி ஏதும் தேவையில்லை. விறகு சீராகவே எரியும். அந்தவகை அடுப்பை நான் மடாலயங்களில் கண்டிருக்கிறேன்

இரும்புத்தகடு சூடாகி செந்நிறமாகி ஓசையிட்டது. அறைக்குள் வெம்மை நிறைந்தது. இதமான சிறிய அறை. ஒரு புழுவின் கூடுபோல. பெரும்பாலான புழுக்கள் தங்கள் உடலின் அதே வடிவில் கூடுகளை அமைத்துக்கொள்கின்றன. சில பதங்கங்கள் தங்கள் உடலையே கூடாக ஆக்கி உள்ளே பிரிந்து தனியாக வளர்கின்றன.

மிகச்சிறிய இடத்தில் அனைத்தையும் அமைத்துக் கொள்ள முடியும். அதை முதலில் லடாக்கில்தான் பார்த்தேன். அது குளிருக்கு உகந்தது. காற்று அங்கே அலைகொள்வதில்லை. வெப்பம் நிலைநிற்கும். அதோடு எழுந்து எழுந்து செல்ல வேண்டியதில்லை, அனைத்தும் கையருகிலேயே இருக்கும்.

அவருடைய படுக்கையிலேயே அவர் அமர்ந்திருந்தார். எதிரில் இருந்த மெத்தைத் திண்டின்மேல் நாங்கள். அவருடைய படுக்கையின் தலைமாட்டில் ஓரடி உயரமான பீடம். அதன்மேல் எண்ணை விளக்கு. சிலநூல்கள். ஆங்கிலநூல்களும் இருந்தன சீராக வெட்டப்பட்ட காகிதங்கள், நாலைந்து பென்சில்கள். காலடியில் ஒரு பீடம், அதில் குடிநீர் இருக்கும் தோலுறையிடப்பட்ட கொப்பரை.

மிகவிரைவிலேயே கெட்டிலில் நீர் தளதளத்தது. அதை பீங்கான் கோப்பைகளில் ஊற்றி டீயிலைகளை போட்டு எங்களுக்கு தந்தார். அந்த குளிரில்தான் டீ என்றால் உண்மையில் என்ன என்று புரியும். ஒவ்வொரு துளியும் உயிருக்கு அமுது.

“நான் ஓரிரு நாட்கள் இங்கே தங்கமுடியுமா?” என்று கேட்டேன்.

“உடல்நலச் சிக்கல் ஏதும் இல்லாவிட்டால் தங்கலாம்” என்றார்.

நான் சோடக்குக்கு விடைகொடுத்து அனுப்பினேன். அதன்பின் அந்த மடாலயத்தைச் சுற்றிப் பார்த்தேன். பார்க்கப் பார்க்க விரிவாகிக்கொண்டே சென்றது அது. ஒன்றிலிருந்து ஒன்றென தொடுத்துக் கொண்டும், ஒன்றுடன் ஒன்று இணையாமலும் இருக்கும் அறைகள். அது ஒரு மாபெரும் தேன்கூடு என்று தோன்றியது. இரண்டு கூடங்கள் செந்நிறமானவை. ஒன்று பொன்னிறம்.

அகன்ற பிரார்த்தனைக் கூடத்தின் நடுவே வெண்கலக் குன்றுபோல பெரிய மணி. லடாக்கின் மணிகள் மிகக்கனமான தலைகீழ் குவளைகள். வாய்வட்டம் விரிவடையாமல் செங்குத்தாகவே சென்றிருக்கும். அவை மணியோசை எழுப்புவதில்லை. ஓங்கார ஓசையையே எழுப்பும். இரு சரடுகளில் தொங்கும் நீண்ட கழியை உந்தி அவற்றை அடிப்பார்கள்.

அந்த மணியை தாங்கி நிறுத்திய மர அமைப்பு சரிந்து அது தரையில் பதிந்துவிட்டிருந்தது. அதை தொட்டபோது பாறை என்றே தோன்றியது. அதிலிருந்து ஓசையெழும் என்று சொன்னால் நம்பமுடியாது. தனக்கென நாவில்லாத மணி. வெளியே இருந்து தொடப்பட்டால் மௌனத்தின் ஓசையை எழுப்பி அமைவது. தன் ஓசையின்மைக்கே திரும்பிவிட்டிருந்தது.

அன்றிரவு அந்த சிறுஅறையில் நானும் அவருடன் தங்கிக்கொண்டேன். அமர்வதற்கான மெத்தையை படுக்கையாக்கிக் கொண்டேன்.

இரவில் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். இயல்பாக பேச்சு ஆரம்பித்தது. இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் விசாரித்துக்கொள்ளவில்லை. ஆகவே அந்த மடாலயம் பற்றிப் பேசினோம்.

“இந்த சிறிய ஊரில் இத்தனை பெரிய மடாலயம் எதற்கு என்று நான் சோடக்கிடம் கேட்டேன்” என்றேன் .“அவர் இது கூட்டுப்புழுவின் கூடு போல என்றார்.”

ராப்டன் சிரித்து “அது இங்கே வழக்கமான வர்ணனை” என்றார். “ஆனால் மிகவும் பொருத்தமானது. இந்த மடாலயம் நோர்பு திரக்பா என்ற லாமாவால் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது”

நான் அவரைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. மலைகளில் பெரும்பாலான லாமாக்கள் வரலாற்றில் பதிவுசெய்யப்படுகிறார்கள். மொழியிலும் ஓவியத்திலும் நம்பிக்கைகளிலும். எவரும் மறைந்துபோவதில்லை.

“நோர்பு திரக்பா என்றால் ஒளிவிடும் வைரம் என்று பெயர். அவர் இந்த சிற்றூரில்தான் பிறந்தார். அன்றும் இங்கே ஏழே ஏழு வீடுகள்தான். நூறு யாக்குகளுக்குமேல் வளர்க்கப்பட்டன. ஆகவே வறுமை இல்லை. வளர்ச்சியோ வீழ்ச்சியோ இல்லை.” என்று ராப்டன் சொல்லத் தொடங்கினார்.

திபெத்திலும் லடாக்கிலும் இருக்கும் இந்த ஊர்களை முள்முனையில் ஆயிரம் வருடமாக ததும்பி நின்றிருக்கும் பனித்துளிகள் என்பார்கள். அவை முத்துக்களேதான். இங்குள்ளவர்கள் எங்கும் செல்வதில்லை. வெளியே எங்கிருந்தும் எவரும் இங்கே வருவதுமில்லை. சில ஊர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளில் ஒருவர்கூட வந்ததில்லை என்பார்கள்.

ஆனால் அவர்களில் இருந்து ஒருசிலர் கிளம்பிச் செல்வார்கள். அவர்கள் ஏன் செல்கிறார்கள் என்று எவராலும் சொல்லிவிடமுடியாது. இந்த நிலைபெற்று நிறைந்துவிட்ட வாழ்க்கைக்குள் இருந்து வெளியே செல்லவேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவாகிறது? இங்கே இல்லாத எதை அவர்கள் உணர்கிறார்கள்? அப்படி ஒன்று உண்டு என்று அவர்களுக்கு மட்டும் எப்படி தெரிகிறது? அதை நம்மால் உணரவே முடியாது. அது கனவில் இருந்து அதற்கு அப்பாலுள்ள ஆழத்தில் இருந்து எழுந்து வரும் ஓர் அழைப்பு. அல்லது இதோ இந்த மலைகளின் பெருவிரிவில் இருந்து எழுவது.

நோர்பு திரக்பா இங்கிருந்து கிளம்பி திபெத்துக்கும் அங்கிருந்து சீனாவுக்கும் சென்றதாகச் சொல்லப்படுகிறது. சீனாவிலிருந்து அவர் பூட்டான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார். சாரநாத், புத்தகயா, சாஞ்சி வழியாக தெற்கே அமராவதி வரை அவர் சென்றார். இருபதாண்டுகளுக்குப் பின் இங்கே திரும்பிவந்தார். இங்கு தன் கூட்டுப்புழு வாழ்க்கையை தொடங்கினார். அவர் தனக்கென கட்டிக்கொண்டதுதான் இந்த கூடு

அவர் இதை இத்தனை பிரம்மாண்டமாக ஏன் கட்டினார்? அதை அவர் மட்டுமே சொல்லமுடியும். அவர் தன்னுள் அத்தனை பேருருவம் கொண்டிருந்தாரா? அவர் வைரச்சுரங்கம் ஒன்றை இந்த மலையில் எங்கோ கண்டடைந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை, தேவையானபோது அவர்கள் அனைவருமே தங்களுக்குரிய வைரச்சுரங்கங்களைக் கண்டடைகிறார்கள்.

இந்த மடாலத்தை பெரும்பாலும் சீனத் தொழிலாளர்கள்தான் கட்டியிருக்கிறார்கள். சீனவணிகர்கள் இவ்வழியாகச் செல்லும் பாதை அப்போது உருவானதுதான். இன்றைக்கும் அது நீடிக்கிறது. இருபது ஆண்டுகள் நோர்பு திரக்பா இதைக் கட்டிக்கொண்டே இருந்தார். கட்டக்கட்ட பெரிதாகியது. ஒரு கட்டத்தில் ஐந்தாயிரம் பேர் இதில் வேலைபார்த்திருக்கிறார்கள். அத்தனைபேருக்கும் அவர் கூலி கொடுத்திருக்கிறார்.

கட்டிமுடித்தபின் இங்கே நாநூறு பிட்சுக்கள் தங்கியிருந்தனர். நூறுபேர் ஆசிரியர்கள். அவர்களின் தலைமை ஆசிரியராக அவர் திகழ்ந்தார். அவரை தேடி நெடுந்தொலைவுகளில் இருந்தெல்லாம் வந்துகொண்டிருந்தார்கள். சீனாவிலிருந்து கோடைகாலத்தில் ஆயிரக்கணககனவர்கள் இங்கே வந்தனர். இருபது ஆண்டுக்காலம் இந்த மடாலயம் அவருடைய போதனைகளின் மையமாகச் செழித்தது. அவருக்குப்பின் இருநூறு ஆண்டுக்காலம் புகழுடன் விளங்கியது.

அன்று கோடைகாலத்தில் இங்கே இடம் போதாமல் ஆகும் என்கிறார்கள். இந்த மடாலயத்தில் அன்று எட்டு பெரிய கூடங்கள் இருந்தன. அவற்றில் மக்கள் நெருக்கி அமர்ந்திருப்பார்கள். எட்டிலும் நோர்பு திரக்பா மாறி மாறி சென்று அமர்ந்து ஆசியுரை வழங்குவார். அவர் ஒரு கூடத்தில் இருக்கும்போது இன்னொரு கூடத்தில் மக்கள் நிறைந்துகொண்டிருப்பார்கள். இந்த மாபெரும் மடாலயத்தில் அவர் நிறைந்திருந்தார். நுரைக்கும் மது கோப்பையை நிறைத்து மேலே எழுவதுபோல இதை மீறி எழுந்தார்.

இங்கே ஒவ்வொன்றும் பெரியது. நோர்பு திரக்பா அமரும் ஞானபீடம் எட்டு அடி உயரமானது. ஐந்தடி அகலம் ஆறடி நீளம் கொண்டது. இங்குள்ள முரசுகள்தான் இந்நிலத்திலேயே பெரியவை. எங்கள் மரபிலேயே மிகப்பெரிய மணி இங்கேதான் உருவாக்கப்பட்டது. நோர்பு திரக்பா அவைநுழையும்போது அந்த மணி முழக்கமிடும். அப்போது அருகிலிருக்கும் முரசுகள் எல்லாம் தாங்களே விம்மி ஓசையிடும் என்கிறார்கள்.

அவருடைய தனியறையை நான் நாளை உனக்குக் காட்டுகிறேன். அதுவே ஒரு கூடம் போல் இருக்கும். பதினெட்டு சாளரங்கள் கொண்ட அறை. பதினெட்டு சாளரங்கள் வழியாகவும் கீழே விரிந்துகிடக்கும் மலைச்சரிவை பார்க்கலாம். அவருடைய படுக்கையே பன்னிரண்டு அடி நீளமும் பத்தடி அகலமும் கொண்டது. அவருடைய நாற்காலிகள் எல்லாமே மிகப்பெரியவை.

நான் அன்று முழுக்க அவரைப்பற்றி ராப்டன் பேச கேட்டுக்கொண்டிருந்தேன். கெலுக்பா மரபுக்குள் பிந்தித்தான் அந்த மடாலயம் வந்து சேர்ந்தது. நோர்பு திரக்பாவின் காலத்தில் வஜ்ரயோகாசாரம் என்னும் ஒரு மரபை அது பின்பற்றியது. நோர்பு திரக்பா தன் மாணவர்களுக்கு கற்பித்த அந்த மரபின் சூத்திர வாக்கியங்களில் ஒன்று ‘மூன்றுமுறை உங்கள் உடலை திறந்து வெளியேறுங்கள்’ என்பது. பூச்சிகள் அவ்வாறு வாழ்க்கையில் இருமுறையேனும் தங்கள் உடலை தாங்களே உடைத்து திறந்து வெளியேறுகின்றன. அதன் வழியாகவே அவை முழுமை அடைகின்றன.

மறுநாள் காலை ராப்டன் என்னை நோர்பு திரக்பாவின் படுக்கையறைக்குள் அழைத்துச் சென்றார். மிகப்பெரிய மரக்கதவின் முன் என்னை நிறுத்திவிட்டு அதன் வெண்கலத் தாழை திறந்தார். உள்ளிருந்து தூசியும் பூசணப்பொடியும் கலந்த மணம் வந்தது.

அவர் உள்ளே சென்று அந்த அறையின் சன்னல்களை ஒவ்வொன்றாகத் திறந்தார். முதற்சன்னல் திறக்கப்பட்டபோது விசித்திரமான ஓர் ஓவியம் போல அறை தெளிந்து வந்தது. இன்னொரு சன்னலை திறந்தபோது இன்னொரு ஓவியம். ஓவியங்கள் இணைந்து இணைந்து அறை முழுமையாக உருவாகியது. மிகப்பிரம்மாண்டமான அறை. மேலே வளைவான மரக்கூரையில் வானமே ஓவியமாக வரையப்பட்டிருந்தது.

போதிசத்வர்களுடன் புத்தர் திகழும் வானம். உறுத்துநோக்கும் கண்களும், புன்னகைக்கும் உதடுகளும் கொண்ட தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷிகள், யானைகள், குதிரைகள், அன்னங்கள், தாமரைகள். திபெத்திய ஓவியங்களுக்கு உரிய பளிச்சிடும் வண்ணங்கள். விரைவான கோட்டுச்சுழல்களாக முகில்களின் அலைகளும் பறக்கும் ஆடைகளும்.

சுவர்கள் முழுக்க டாங்காக்கள் தொங்கின. அவற்றின் வண்ணங்கள் மங்கத் தொடங்கிவிட்டிருந்தன. அவற்றில் மையமாக போதிசத்வர்கள். சுற்றிலும் மறைந்த லாமாக்களும் தேவர்களும். ஓவியங்கள் கொடிகளைப்போல மலர்களைப்போல பின்னிப்படர்ந்து உருவான வண்ணப்பட்டுப் பரப்புகள்.

சன்னல்களின் கதவுகள் ஆழ்ந்த சிவப்பு வண்ணம் கொண்டவை. எட்டு பெரிய மேஜைகள். தோலுறையிடப்பட்ட நாற்காலிகளுக்கு பின்னால் வெண்கலத்தாலான வளைவுகளில் சீனத்து டிராகன்கள் உடல் வளைத்து சுருண்டு செறிந்து வாய்திறந்து வெறித்தன. அவற்றின் கால்கள் நாகங்களின் வால்களால் ஆனவை. வெண்பனிபோன்ற மென்மயிர்த் தோலால் ஆன மெத்தை விரிக்கப்பட்ட கட்டில் தாழ்வானது, ஆனால் ஐந்தாறுபேர் வசதியாகப் படுக்கலாம். அதற்குச் சிங்கக்கால்கள். அதன் நான்கு முனைகளிலும் சிஙகங்கள் வாய்திறந்திருந்தன.

திகைக்க வைக்கும் அறை. நான் அப்போது பல அரண்மனைகளை பார்த்துவிட்டிருந்தேன். குவாலியரிலும் ஜெய்சால்மரிலும் அரண்மனைகளைப் பார்க்க அப்போது ஆண்டுக்கு ஒருசிலநாட்கள் அனுமதி உண்டு. அவைதான் இந்தியாவின் மாபெரும் அரண்மனைகள். அவற்றின் படுக்கையறைகள் இங்கே மனிதர்கள் எப்படி தூங்கமுடியும் என்ற வியப்பை எழுப்பும்படி ஆடம்பரமானவை. ஆனால் அந்த மடாலயத்தின் தலைமை லாமாவின் படுக்கையறை அவற்றைவிட இருமடங்கு பெரியது. மும்மடங்கு ஆடம்பரமானது. அங்கிருந்த டாங்காக்களின் மதிப்பு எனக்கு தெரியும். அவை பட்டுத்துணியில் தங்கக்கம்பிகளைக் கொண்டு பின்னி செய்யப்பட்டவை. அவற்றில் ஒன்றை விற்றாலே என் நகரில் ஒர் அரண்மனையை கட்டிக்கொள்ள முடியும்.

“அருகில்தான் நோர்பு திரக்பா அவர்களின் படிப்பறை” என்றார் ராப்டன். நான் அப்போதே கண்மலைத்து உள்ளம்தெவிட்டி விட்டிருந்தேன். அக்கறையே இல்லாமல் அவருடன் சென்றேன். அதுவும் படுக்கையறை அளவுக்கே பெரியது. இருபது பேர் அமரும் அளவுக்கு தாழ்வான திபெத்திய பீடங்கள் போடப்பட்டிருந்தன. அவையெல்லாமே செந்நிறமான மென்மயிர்த் தோல் உறையிடப்பட்டவை. அதை நோக்கி மாபெரும் சிம்மாசனம் போல நோர்பு திரக்பா அவர்களின் இருக்கை.

அந்த சிம்மாசனத்தில் அவர் ஏறி அமர்வதற்கே எட்டு படிகள் கொண்ட அமைப்பு இருந்தது. அவருடைய தலைக்குமேல் பொன்முலாமிட்ட வெள்ளி டிராகன் வாய்திறந்திருந்தது. அதன் உடல் அலையலையாக சாய்மானத்தை சூழ்ந்து கீழிறங்கி வளைந்து சிம்மாசனத்தின் கால்களாகியிருந்தது. அதன் கைப்பிடிகளில் சிம்மங்கள் வாய்திறந்திருந்தன. அவற்றின் கண்களில் செந்நிறமான கற்கள் மின்னின. வைரங்களாகக்கூட இருக்கலாம்.

மிகப்பெரிய நூலக அடுக்கு. அதை ஒட்டி ஜன்னல்களின் திறப்பு. ஜன்னல்களை நோக்கியதுபோல போடப்பட்ட பெரிய படிப்பு மேஜைகள். அவையும் தோலுறை போடப்பட்டவை. சீனத்து வெண்பீங்கான் மைப்புட்டிகள். நீலம் சிவப்பு பொன்மஞ்சள் நிறங்களில் வண்ணக் கண்ணாடிக் குடுவைகள். முத்துசிப்பி ஓட்டின் விளிம்பில் பொன் கட்டி அமைக்கப்பட்ட கிண்ணங்கள். தரை மென்மையான பாசிப்புல்லால் ஆனதுபோல மென்மயிர் தோல் வேயப்பட்டது. அங்கே எங்கும் அமரமுடியாது. அங்கிருக்கும் பீடங்களில் அமர இன்று எவருக்குமே துணிவு வராது.

“இங்கே பிற லாமாக்களுக்கான படுக்கையறைகளும் வாசிப்பறைகளும் இதேபோலவே மிகப்பெரியவை” என்று ராப்டன் சொன்னார். “இந்த மடாலயத்தைப் பார்த்து முடிக்க நாலைந்து நாட்களாவது ஆகும்.”

“இங்கே தன்னந்தனியாக இருக்கிறீர்கள்” என்றேன்.

“ஆமாம்” என்றார் உடனே சிரித்து “வீடுகளில் குளவி கூடுகட்டுகிறது அல்லவா? தனக்கான சிறிய வீட்டை அது கட்டிக்கொள்கிறது, அப்படி ஒன்றை நானும் கட்டிக்கொண்டேன்” என்றார்.

நீளமான அறை ஒன்றில் நூற்றெட்டு அறச்சக்கரங்கள் இருந்தன. அவை பித்தளைக் கீல்களில் அமைந்திருந்தமையால் மெல்லிய உரசல் ஓசையுடன், மணிமுழங்கச் சுழன்றுகொண்டிருந்தன. அவை வரிசையாகச் சுழல்வதை நான் நின்று பார்த்தேன்.

ராப்டன் என்னிடம் “வெளியே பெரிய மரக்காற்றடியுடன் அவை பற்சக்கரங்களால் இணைக்கப்பட்டுள்ளன. தானாகவே சுழலும்…”என்றார்.

“ஆனால் அவை மனிதர்களால் சுழற்றப்படவேண்டியவை” என்றேன்

“ஆம், ஆனால் அறம் மனிதர்களால் கைவிடப்பட்டாலும் நிகழும்” என்றார் ராப்டன்

நோர்பு திரக்பா புழங்கிய இடங்கள் வழியாகச் சென்றுகொண்டிருந்தோம். அவர் பயணிகளைச் சந்திக்கும் மாபெரும் கூடங்கள். அவை மரத்தாலான மாபெரும் கூரைக்குக்கீழே அமைந்த மைதானங்கள் போலிருந்தன. ஒரு கூடத்தில் ஐநூறுபேர் அமரலாம். குருதிச் சிவப்பான மென்மயிர் மெத்தைகளால் மூடப்பட்டவை.

“இந்த தோலுறைகள் சீனாவில் வண்ணம் பூசப்பட்டவை” என்று ராப்டன் சொன்னார். “பட்டில் வண்ணமிடும் அதே முறைப்படி அவர்கள் மென்மயிர் தோல்களில் வண்ணமிட்டார்கள். திபெத்திலும் இங்கும் குருதிச்சிவப்பும் ஆழ்சிவப்பும் மட்டுமே விரும்பப்பட்டன.”

“மிகப்பெரிய இடம்…” என்றேன்.

“ஆமாம். ஆனால் அவருக்கு இது போதவில்லை. அவர் இந்தச் சிறிய இடத்தில் அவர் சிக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்ந்தார். இங்கே அவர் மேலும் மேலும் அறைகளைக் கட்டிக்கொண்டே இருந்தார். இந்த மடாலயத்தில் அவர் குடியேறியபின் மேலும் இருபதாண்டுகள் இதை விரிவாக்கிக்கொண்டே இருந்தார்” என்றார் ராப்டன்.

ஆனால் அவருக்கு எண்பது வயது ஆனபோது அவர் ஒடுங்கத் தொடங்கினார். முதலில் பேச்சு குறைந்தது. நாள் ஒன்றுக்கு பன்னிரண்டு மணிநேரம்கூட வருகையாளர்களிடமும் மாணவர்களிடமும் பேசிக்கொண்டிருந்தவர் பேச்சை குறைத்துக் கொண்டே வந்தார். கூடவே அவருடைய உடல் வளைந்து சுருங்கியது. தசைகள் வற்றின. ஒவ்வொருநாளும் அவர் சுருங்கினார் என்கிறார்கள். அவர் தன் அறைக்குள்ளேயே ஒடுங்க தொடங்கினார். காலையில் ஒருமுறை மட்டும் மக்களைச் சந்தித்து அருட்சொற்களை அளித்தார். அதன்பின் புத்தருக்கான தம்மவணக்கத்திற்கு வந்துவிட்டு தன் அறைக்குத் திரும்பினார்.

பின்னர் அவர் அதற்கும் வராமலானார். தன் படுக்கை அறையிலேயே இருந்தார். பெரும்பாலான நேரம் படிகமணிமாலையை உருட்டியபடி கண்மூடி ஜெபம் செய்துகொண்டிருந்தார். கைகளை மடியில் வைத்து அமர்ந்து தியானம் செய்தார். மடாலயத்திற்கு வரும் பயணிகள் வரிசையாக நின்று அவரை ஒரு சாளரத்தின் வழியாக பார்த்துச் சென்றார்கள்.

அங்கிருந்து அவர் மேலும் சிறிய அறை ஒன்றுக்குச் சென்றார். முற்றிலும் சொல்லற்றவராக ஆனார். அங்கிருந்து இன்னொரு சிற்றறைக்கு தன்னை கொண்டு செல்லும்படிச் சொன்னார். அங்கே இருக்கையில் அவர் பிறரை விழிதூக்கிப் பார்க்கவே இல்லை. எவருக்கும் அவருடன் எந்த தொடர்பும் இருக்கவில்லை. அவர் மூன்றுநாளுக்கு ஒருமுறை மட்டும் முதற்காலையில் ஒருகிண்ணம் சூப் அருந்தினார். எஞ்சிய பொழுதெல்லாம் தன் சிறு பீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்தார்.

மடாலயத்தில் அவரைத் தொடர்ந்து வேறு லாமாக்கள் பொறுப்பேற்றனர். முதன்மை லாமாக்கள் மட்டுமே அவரை பார்க்கமுடியும் என்ற நிலை உருவானது. அவர் ஒரு தொன்மையான சிற்பம் போல மாறினார். அவர்கள் அவரை பராமரித்தனர். தொடும்போது அவர் உயிருடன் இருப்பது தெரிந்தமையாலேயே அவர் இருக்கிறார் என்று நம்பினர்.

ராப்டன் ஒரு சிறு அறையை திறந்து “இது அவருடைய இரண்டாவது அறை” என்றார். முந்தைய அறையின் மூன்றில் ஒன்றே இருந்தது, ஆனால் வசதியானது. அவர் இன்னொரு அறையை திறந்து “இது அவருடைய மூன்றாம் அறை” என்றார். அது ராப்டன் தங்கியிருந்த அறையளவுக்கே இருந்தது.

நோர்பு திரக்பாவின் நான்காவது அறை ஒரு கட்டில் அளவுக்கே இருந்தது. “அங்கிருந்து அவர் இங்கே வந்தார்” என்று ராப்டன் என்னை அழைத்துச் சென்றார்.

உருளைக்கற்களால் ஆன குறுகிய படியினூடாக இறங்கிச் சென்றோம். மிகக்குறுகலான படிகள் மூன்றுமுறை மடிந்து மடாலயத்தின் அடித்தளத்திற்குள் இறங்கின. அங்கே காதைக் குத்தும் அமைதி இருந்தது. லடாக்கில் ஓசையென எழுவது காற்று. அது முற்றாக தடுக்கப்பட்டிருந்தது. அங்கே தடித்த கற்சுவர்களின்மேல் மரத்தாலான இரண்டாம்சுவர் அமைக்கப்பட்டு அதன்மேல் மென்மயிர்த்தோல் மெத்தையாலான உட்சுவர் அமைக்கப்பட்டிருந்தது.

ராப்டன் உள்ளே நிமிர்ந்து நின்றால் தலைதட்டும் ஒரு சிறு அறைக்குள் சென்றார். அங்கிருந்த மரத்தாலான கூடை ஒன்றை சுட்டி “இறுதியில் அவர் இந்த பெட்டிக்குள் இருந்ததாகச் சொல்வார்கள்” என்றார்

நாம் மண்ணள்ளப் பயன்படுத்தும் அளவைவிட சற்றே பெரிய கூடை. அதில் ஒரு ஐந்துவயது சிறுவன் உடலை ஒடுக்கி அமரமுடியும்.

“இதற்குள்ளா?” என்றேன்.

“ஆமாம், இங்கேதான் அவர் எட்டாண்டுகள் இருந்தார்” என்றபின் அவர் “வாருங்கள்” என அழைத்துச் சென்றார்.

“அந்த அறைக்குள் வெளிக்காற்றும் வெளியே இருந்து வெளிச்சமும் வராது. கொழுப்பு மெழுகுவத்தியின் வெளிச்சம் மட்டும்தான். ஓசையே இருக்காது. தரை மென்மயிர் மெத்தையால் ஆனது. காலிலும் மென்மயிர் மெத்தையாலான காலணிகள் அணிந்துதான் உள்ளே செல்வார்கள். நாம் வந்த படிகள்கூட அன்றெல்லாம் தடிமனான நாரால் மெத்தையிடப்பட்டிருந்தன. உள்ளே எவரும் பேசக்கூடாது. தும்மவோ இருமவோ கூடாது.  உலோகப்பொருட்களும் மரப்பொருட்களும் ஓசையெழுப்பும் என்பதனால் அவற்றுக்கு இடமில்லை. எடையற்ற கொப்பரைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஒரு விரல் நொடிக்கும் ஓசை கேட்டாலே அவர் திடுக்கிட்டார். அழுத்தமான அதிர்ச்சியால் அவர் உயிர்துறக்கக்கூடும் என்று மருத்துவர் கூறினார்கள். எனவே அவரை முற்றமைதியில் மூழ்கடித்து பேணினர்.” என்றார் ராப்டன்.

அவர் மிகமிக மெல்ல பேசிக்கொண்டிருந்தார். ஆனால் எனக்கு அவருடைய உதடுகள் தொட்டுக்கொள்ளும் ஓசைகூட கேட்டது. அத்தனை அமைதி அங்கிருந்தது. அவர் ஒரு சாளரத்தை திறந்து “பாருங்கள்” என்றார்.

சுவரில் இருந்த ஓவியத்தில் ஒரு கூடையில் மிகச்சிறிய உடல்கொண்ட வற்றிய மனிதர் கையில் படிகமணி மாலையுடன் வளைந்து அமர்ந்திருந்தார்.

“கருக்குழந்தைபோல தோன்றுகிறது” என்றேன்.

“ஆமாம், உண்மையில் அவருக்கு அப்போது அதுதான் பெயர். கருவிலிருக்கும் மஞ்சுஸ்ரீ” என்றார் ராப்டன்.

நான் அந்த அறைக்குள் நின்று சுவர்களில் இருந்த ஓவியங்களை பார்த்தேன். பெரும்பாலும் அழிந்துவிட்டிருந்தன.

“அவர் இறுதிக்காலத்தில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு குவளை பால்மட்டுமே அருந்தினார்” என்று ராப்டன் சொன்னார்.

“அவர் எங்கே சமாதியானார்?” என்றேன் “அவருடைய சமாதியிடம் இருக்கிறதா?”

“காட்டுகிறேன். நாம் அங்கே செல்வோம்” என்றார் ராப்டன்.

அவர் என்னை மடாலயத்திற்கு பின்புறம் அழைத்துச் சென்றார். லடாக்கின் பெரும்பாலான மடாலயங்களைப் போல அதுவும் மிகப்பெரிய மலையடுக்கு ஒன்றின் சரிவின்மேல் அமைந்திருந்தது. அமிதாப புத்தரின் கையில் அமுதகலம் போல இமையமலையின் மடிப்பில் மடாலயங்கள் இருக்கும் என்பார்கள்.

அரைவட்ட வளைவாகச் சூழ்ந்திருந்த மலையடுக்கில் மிக அருகே இருந்தமலை செங்குத்தாக நெடுந்தொலைவு எழுந்து நின்றது. அதன் மேல் காலையொளி மங்கலாக ஊறியிருந்த வானம் நின்றது.

நாங்கள் புழுதியாலான பாதை வழியாக ஏறிச்சென்றோம். சுழன்று சென்றபாதை பின்னர் Z வடிவில் செல்லத் தொடங்கியது. மேலேறிச்சென்று மூச்சிரைக்க நிமிர்ந்து நோக்கியபோதுதான் சேற்றுநிறத்தில் அமைந்த அந்த மலையின் விலாப்பாறைப் பரப்பில் தேன்கூடுபோல ஏராளமான குகைகளைக் கண்டேன்.

“அந்தக் குகைகள் இங்கே நெடுங்காலமாக இருக்கின்றன. சொல்லப்போனால் புத்தர் பிறப்பதற்கும் நெடுங்காலம் முன்னரே இருக்கும் குகைகள் அவை” என்றார் ராப்டன் “அவை இங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் மூதாதையரின் உடல்களை கொண்டு சென்று வைக்கும் இடுகுழிகள்.”

நாங்கள் மேலே சென்று அவற்றை அடைந்தோம். ஒவ்வொரு குகையும் ஒருவர் அமர்ந்துகொள்ளும் அளவுக்கு விட்டம் கொண்டவை. ஆனால் ஆழமானவை.

“காற்று அரித்து இயற்கையாக உருவானவை, பின்னர் குடைந்து விரிவாக்கப்பட்டவை” என்று ராப்டன் சொன்னார். “இவை தொன்மையான பான் [Bon] மதத்தின் தெய்வங்களுக்கு உரியவை. பான் மதம் மூதாதை வழிபாட்டில் இருந்து தோன்றியது. பலவகையான ஆவிகளையும் நுண்வடிவில் உள்ள இயற்கைச் சக்திகளையும் அவர்கள் வழிபட்டனர். திபெத்திய பௌத்தம் என்பது இந்திய பௌத்தமும் இந்திய தாந்த்ரீக மரபுகளும் பான் மதமும் இணைந்து உருவானது என்பதை அறிந்திருப்பீர்கள்.”

அந்த குகைகள் வழியாக நடந்தேன். குகைகள் என்று சொல்லமுடியாது, சிறிய துளைகள் அவை. மொட்டையானவை. உள்ளே ஒன்றுமே இல்லை. சிமிண்டாலானவை போல சொரசொரப்பான சுவர்கள். தரையில் சிறுசிறு குழிகள். பனித்துளி விழுந்து உருவானவை.

ராப்டன் ஒரு சிறிய குகை அருகே சென்றார். “நோர்பு திரக்பா தன் ஏழுவயதில் இங்கே வந்திருக்கிறார். ஊரிலிருந்து அவர் காணாமலானபோது தேடினார்கள். ஊரிலிருந்த ஒரு நாய் மோப்பம் பிடித்து அவருடைய பெற்றோரை இங்கே கூட்டிவந்தது. இந்த குகைக்குள் அவர் இருந்திருக்கிறார்.”

“இதற்குள்ளா?” என்றேன்.

அது மிகச்சிறிய துளை. ஒரு ஏழுவயதுப் பையன்கூட அங்கே நுழைந்தால் கார்க் வைத்து இறுக்கப்பட்டது போலத்தான் இருக்கமுடியும்.

“இங்கேதான். உள்ளே சென்று பாம்புபோல சுருண்டு இருந்தார். அவரை கண்டுபிடித்தபோது பன்னிரண்டு நாட்கள் கடந்துவிட்டிருந்தன. உணவு தண்ணீர் ஒன்றுமில்லை. ஆகவே மயங்கியிருந்தார். நாய் மட்டும் இல்லாமலிருந்தால் கண்டுபிடித்திருக்கவே முடியாது.”

ராப்டன் சொன்னார். உள்ளே ஒரு மூங்கில் கழியில் சுருக்கு கயிற்றை வீசி அவருடைய காலில் மாட்டி இறுக்கி மெல்ல இழுத்து வெளியே எடுத்திருக்கிறார்கள். அவர் பிழைத்துக் கொண்டார். ஆனால் பேச்சு நின்றுவிட்டது. பிறரை கண் பார்ப்பதும் இல்லை. பெரும்பாலான நேரம் தனிமையில் இருந்தார். தன் இல்லத்தின் இருண்ட மூலைகளில் ஒடுங்கி அமர்ந்திருப்பார். அவருக்கு மனம் பேதலித்துவிட்டது என்றார்கள். அவரை பழைய மூதாதையரின் ஆவிகள் பற்றிக்கொண்டுவிட்டன என்றார்கள்.

ஏழாண்டுகளுக்கு பின் அவர் இங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவர் சென்றதை எவரும் அறியவில்லை. சீனப்பகுதியில் இருந்து இங்கே வரும் வணிகன் ஒருவன் அவரை பார்த்ததாகச் சொன்னான். பின்னர் அவர் உலகம் சுற்றி, பதிமூன்று மொழிகள் கற்று, பௌத்த மெய்யியலை தேர்ந்து, லாமாவாக மாறி இங்கே மீண்டு வந்தார். உம்லா மடாலயத்தைக் கட்டினார்.

“நோர்பு திரக்பா தன் நூற்றியெட்டாம் வயதில் சமாதியானார். அதன்பின் இங்கே கொண்டுவரப்பட்டார்” என்றார் ராப்டன் “இங்கே திபெத்திய பௌத்த மரபில் இறந்தவர்களை புதைப்பதும், பறவைகளுக்கு இரையாக கொடுப்பதும் வழக்கம்…”

“பார்ஸிகள் கழுகுகளுக்கு இரையாக்குவதுபோல?” என்றேன்.

“அந்தவழக்கமே இங்கிருந்து சென்றதுதான்” என்றார் ராப்டன். “அத்துடன் இன்னொரு வழக்கமும் உண்டு. அது அரிதுதான், புனிதர்களுக்கு மட்டும் அப்படிச் செய்யபடுகிறது. நாங்கள் மம்மிகளை உருவாக்குகிறோம்.”

“எகிப்திய மம்மிகளைப்போலவா?” என்றேன்.

“இல்லை, அவர்கள் உடல்களை பதப்படுத்தி துணியில்சுற்றி கல்லால் ஆன பெட்டிகளுக்குள் பாதுகாக்கிறார்கள். எங்கள் நிலத்தின் குளிர் உடல்களை கெடச்செய்வதில்லை. இங்கே நுண்ணுயிரிகளும் சிற்றுயிர்களும் வாழ்வதில்லை” என்றார். ராப்டன் “எங்கள் முறை உடல்களை பதப்படுத்தி சிலதைலங்களை பூசி அப்படியே வைத்துவிடுவது. ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான மம்மிகள் கூட உள்ளன.”

“நோர்பு திரக்பா மம்மியாக ஆக்கப்பட்டாரா?”

“ஆமாம்.”

“இங்கே இருக்கிறதா அந்த மம்மி?”

“ஆமாம்” என்றார் “உள்ளே பாருங்கள்.”

நான் மண்டியிட்டு அந்த சிறிய குகையை பார்த்தேன். உள்ளே இருட்டாக இருந்தது. “மண்டியிட்டு நன்றாகப் பாருங்கள்…” என்ற ராப்டன் பின்னால் நகர்ந்து வெளியே சென்று தன் கையில் இருந்த கண்ணாடித்துண்டை வெயிலில் காட்டி அந்த வெளிச்சத்தை திருப்பி குகைக்குள் வீழ்த்தினார்.

உள்ளே ஒரு சுருண்ட வடிவம் தெரிந்தது. முதலில் அது என்ன என்று எனக்கு தெரியவில்லை. பின்னர் மெல்லமெல்ல அந்த வடிவம் தெளிவடைந்தது. ஒரு பூனை அளவுக்கான மனித உடல். அதன் தலைமட்டும் பெரியது. உடல் நன்றாக வற்றி ஒடுங்கியது. அது தலையை மையமாகக் கொண்டு நன்றாக அழுத்திச் சுருட்டப்பட்ட வடிவில் இருந்தது. கைகளும் கால்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருந்தன. ஒரு விதையுறைக்குள் விதை அமைந்திருப்பதுபோல.

“அவர்தானா?” என்றேன்.

“அவர்தான்” என்றார் ராப்டன்.

அருகே வந்து அவர் வணங்கினார். நானும் பௌத்த முறைப்படி வணங்கினேன். அங்கே சற்றுநேரம் அமர்ந்து தியானம் செய்தோம்.

பின்னர் மலையிறங்கி கீழே செல்லத் தொடங்கினோம். ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. மடாலயத்தை அணுகியதும் நான் கேட்டேன் “ராப்டன், நான் ஒன்று கேட்கலாமா?”

“கேளுங்கள்”

“நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்? இந்த மம்மி இங்கே இருப்பதை அறிந்து இதைப் பார்க்க வந்தீர்களா?”

“லடாக்கிலும் திபெத்திலும் பல மம்மிகள் உள்ளன. சில மம்மிகள் தரைக்கு அடியில் உள்ளன. சில மம்மிகள் மடாலயங்களில் பேணப்படுகின்றன” என்று அவர் சொன்னார். “மம்மிகளை சென்று வழிபடுவது லாமாக்களின் ஞானப்பயணத்தில் முக்கியமானது. நான் அதன்பொருட்டும்தான் வந்தேன்.”

“ஆனால் இங்கேயே இவ்வளவுநாள் தங்கியிருந்ததற்கு காரணம் வேறு ஒன்று. நான் பதினேழாம் நூற்றாண்டில் இங்கே தங்கியிருந்த பிட்சு ஒருவர் எழுதியிருந்த குறிப்பு ஒன்றை டிக்ஸே மடாலயத்தின் நூல்தொகுப்பில் வாசித்தேன். அவர் இங்கே நோர்பு திரக்பாவை பார்த்தார் என்று எழுதியிருந்தார்” என்றர் ராப்டன்.

அவர் மறுபக்கம் எழுந்து விண்ணைத் தொடுவது போல நின்றிருந்த மலையின் உச்சியைச் சுட்டிக்காட்டி “அந்த மலைக்கு டோல்மா என்று பெயர். தாராதேவியின் பெயர்களில் ஒன்று. ஞானம் என்றும் வீடுபேறு என்றும் பொருள் கொள்ளலாம். அந்த பிட்சு நிலவு நிறைந்த கோடைகால இரவில் அந்த மலைக்குமேல் நோர்பு திரக்பா ஒளிவடிவாக நின்று வானத்தை நோக்கி கைவிரித்ததை கண்டார். அவர் மலைமுடி அளவுக்கே பேருருவம் கொண்டிருந்தார்” என்றார் “அதை நானும் பார்க்கவேண்டும் என்றுதான் வந்தேன்.”

நான் என்ன சொல்வதென்று தெரியாமல் அந்த மலைமுடியை பார்த்தபடி வந்தேன். வானின் மங்கலான வெளிச்சத்தில் அந்த மலைமட்டும் ஒளிகொண்டு எழுந்து நின்றது.

நீண்ட மௌனத்திற்குப் பின்பு நான் கேட்டேன். “ராப்டன், நீங்கள் பார்த்தீர்களா?”

அவர் ஒன்றும் சொல்லவில்லை.

***

தொடர்புடைய பதிவுகள்


‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–58

$
0
0

பகுதி ஆறு : படைப்புல் – 2

தந்தையே, பேரரசி கிருஷ்ணையின் ஆணைப்படி மிக விரைவில் ஓர் அணி ஊர்வலம் ஒருங்கமைக்கப்பட்டது. அரண்மனையில் இருந்து அணிச்சேடியர் அனைவரும் அழைத்து வரப்பட்டு விரைந்து அணிகொள்ளச் செய்யப்பட்டனர். யானைகள் முகபடாமும் பட்டமும் அணிவிக்கப்பட்டு ஒருக்கப்பட்டன. குதிரைகள் கவசம் பூண்டன. இசைச்சூதர்களும் அந்தணர்களும் நிரைவகுத்தனர். அனைத்தையும் பூர்ணநமாம்ஷுவும் நானும் சேர்ந்து ஒருங்கிணைத்தோம்.

முதலில் அனைவரும் எங்கள் ஆணைகளால் திகைத்தனர். என்ன செய்வதென்றறியாது குழம்பினர். ஆனால் மிக விரைவில் அவர்கள் அதில் அமைந்தனர். அது அவர்களுக்கு ஒவ்வொன்றும் அதன் பழைய நிலையிலேயே இருக்கிறது என்ற உறுதிப்பாட்டை அளித்தது. அனைத்தும் நிலைமீள்கிறது என்ற செய்தியை கொடுத்தது. ஒவ்வொருவரும் அதை பற்றிக்கொண்டு மீண்டு வந்தனர். அவர்களின் முகங்கள் தெளிந்தன. சிரித்தனர், கூவினர், ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டனர். கண்ணெதிரிலேயே களமுற்றத்தில் அணி ஊர்வலம் ஒருங்கி நின்றது. அனைத்து முகங்களும் மலர்ந்திருந்தன.

அணியெழுகைக்கான முரசுகள் முழங்கின. கொம்பொலிகள் எழுந்தன. அணிநிரை அசைவு கொண்டது. அரண்மனையின் உப்பரிகையில் முழுதணிக்கோலத்தில் பேரரசி கிருஷ்ணை தோன்றியதுமே அனைவரும் மேலே பார்த்து “எழுகதிர் வாழ்க! தலைநூறுகொண்டோன் மகள் வாழ்க! அஸ்தினபுரியின் அரசி வாழ்க! துவாரகையின் பேரரசி வாழ்க!” என்று வெறிகொண்டு கூச்சலிட்டனர். ஒளிர்முடி சூடி, மின்னும் பொற்பட்டாடைகள் அணிந்து, உடலெங்கும் அருமணி நகைகள் சுடர்விட அங்கு நின்றிருந்த கிருஷ்ணையும் இளங்கதிர் என்றே தோன்றினார்.

உப்பரிகையில் இருந்து படிகளில் இறங்கி கைகூப்பியபடி அவர் வந்துநின்றபோது அமைச்சர் சுகிர்தர் சென்று வணங்கி “அரசி, தங்களுக்குரிய பல்லக்கு ஒருங்கியிருக்கிறது” என்றார். “வேண்டியதில்லை, பட்டத்து யானை வரட்டும்” என்றார் கிருஷ்ணை. முன்செலவுக்காக பட்டத்து யானையை ஒருக்கியிருந்தனர். முகபடாமும் பட்டுப் புறச்சீலையும் அருமணி மின்னும் நகைகளும் அணிந்து நின்றிருந்த பெருங்களிறான மகாரதம் அசைந்து வந்து நின்றது. அரசி கிருஷ்ணை அதன்மேல் ஏறி நாற்புறமும் திறந்த அம்பாரியில் கையில் செங்கோலுடனும் மணிமுடியுடனும் அமர்ந்தார்.

அணி ஊர்வலம் அரசமுற்றத்திலிருந்து கிளம்பி நகரத்தெருக்களூடாக சென்றது. நகரத்தெருக்கள் முழுக்க நெரிந்து தோளோடு தோள்முட்டி மோதி சரிந்து விழுந்து எழுந்து தவித்துக்கொண்டிருந்த கூட்டம் வேல் சுழற்றி முரசறைந்து கூச்சலிட்ட படைவீரர்களால் பிளந்து விலக்கப்பட்டது. அந்த இடைவெளியில்தான் அணியூர்வலம் முன்னால் சென்றது. முதலில் அது என்னவென்றே எவருக்கும் புரியவில்லை. அதை கண்டவர்கள் முதலில் திகைத்தனர். பின்னர் சொல்லிழந்து வாய்பிளந்து சுவரோரங்களில் ஒண்டினர்.

வீட்டு முகப்புகளில், அங்காடி முகப்புகளில் நின்று மக்கள் அதை பார்த்தனர். அணியூர்வலத்தின் முரசொலி அருகில் இருந்த காவல்மாடங்களில் இருந்து பெருகி மேலெழுந்தது. அதுவரை ஆணைகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்து பதறிக்கொண்டிருந்த காவல்மாடங்கள் அனைத்திலும் இருந்து மங்கலப் பேரொலி எழத் தொடங்கியது. அது தன்னைத்தானே பெருக்கிக்கொண்டது. முரசறைவோர் உடல் வியர்த்துவழிய வெறிகொண்டவர்களாக மங்கல இசை எழுப்புவதை கண்டேன். அவர்கள் உடலில் தெய்வம் எழுந்ததெனத் தோன்றியது. பலர் கண்ணீர்விட்டுக்கொண்டும் கூச்சலிட்டுக்கொண்டும் வெறியுடன் நகைத்தபடியும் முரசறைந்தனர். மின்னும் வியர்வையை அவர்கள் உடலில் காணமுடிந்தது.

முரசுகளிலிருந்து முரசுகளுக்கென மங்கல இசை பரவியது. சூழ்ந்திருந்த பெரு நிலத்திலிருந்து எதிரொலித்து திரும்பி வந்தது. துவாரகை மேல் அது படிந்தது. மங்கல இசை எத்தனை நினைவுகளை மீட்டுகிறது என்று நான் வியந்து நோக்கினேன். இந்நகர் பொலிந்த நாட்கள். பெருவிழவுகள், களியாட்டுகள். இதன் தலைவன் என்று மணிமுடி சூடி நீங்கள் அமர்ந்திருந்த கோலம். தந்தையே, மொத்த நகரும் மெல்ல அமைவதை கண்டேன். ஆங்காங்கே மக்கள் அசைவிழந்து நின்றனர். முதலில் பெருங்கூட்டம் எழுப்பிய முழக்கத்திற்குள் தனி அதிர்வென ஒலித்துக்கொண்டிருந்த மங்கல இசை மெல்ல மெல்ல வலுத்தது. பின்னர் அது மட்டுமே ஒலித்தது.

நகரின் அனைத்து அரண்மனைகளின் உப்பரிகைகளிலும் ஏவலர்கள் வந்து நின்றனர். பின்னர் அரசமைந்தர் பிரத்யும்னனும் சாம்பனும் ஃபானுவும் இளையோரும் கூட வந்து உப்பரிகையில் நின்று கீழே பார்த்தனர். கிருதவர்மனும் சாத்யகியும் தங்கள் மாளிகையில் இருந்து நோக்கினர். நகரினூடாக அந்தி ஒளியில் மின்னியபடி அரசி செல்வதை நான் என் உப்பரிகையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அரசி செல்லும் வழியெங்கும் மக்கள்திரள் நாவாய்க்குப் பின் நீளலை எழுவதுபோல் விரிந்து கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் துவாரகை முற்றாகவே நிலைமீண்டது. பேரரசி கிருஷ்ணை துர்க்கை ஆலயம் வரை சென்று இறங்கினார். அங்கு வழக்கமான பூசனைகளை முடித்து மீண்டும் பல்லக்கில் ஏறி நகருக்குள் நுழைந்தார். ஒருகணம் எங்கோ ஓர் உடைவென ஒரு வாழ்த்தொலி எழுந்தது. பின்னர் முழு நகரமுமே வாழ்த்தொலியால் மூடியது. “அன்னை! அன்னை!” என்று கூத்தாடினர் மக்கள். “எழுக கிருஷ்ணை! இளங்கதிர்போல் எழுக எங்கள் அரசி!” சிலர் அழுதனர். சிலர் கைவீசி கூவினர். குழந்தைகளை தலைக்குமேல் தூக்கிக் காட்டினர்.

நான் மெய்ப்பு கொண்டேன். தந்தையே, பெண் வடிவில் பீலிசூடி நீங்களே அங்கு எழுந்தருளியதென உணர்ந்தேன். கைகூப்பி கண்ணீர் மல்கி அங்கு நின்றேன். அரசி நகரினூடாக நிறைந்து ஒழுகி வந்தார். அரண்மனையை அவர் நெருங்கும்போது பழைய துவாரகை எழுந்திருந்தது. நான் திரும்பிப்பார்த்தபோது எல்லா உப்பரிகைகளிலும் துவாரகையின் அரசமைந்தர் நின்றிருப்பதை கண்டேன். ஃபானுவும் பிரத்யும்னனும் அங்கே நின்றிருந்தனர். பிரகோஷனும் சுருதனும் விருகனும் வீராவும் சங்க்ரமஜித்தும் என அனைவரும் ஒரே முகமும் உணர்வும் கொண்டிருந்தனர்.

 

கிருஷ்ணையின் அவைக்குச் செல்லும்படி எங்களுக்கு அழைப்பு வந்தது. பூர்ணநமாம்ஷுவும் நானும் அங்கே சென்றபோது அமைச்சர்களையும் படைத்தலைவர்களையும் அரசி அங்கே வரச்சொல்லியிருந்தார். பூர்ணநமாம்ஷு வணங்கியதும் “இப்போதே செய்யவேண்டியவற்றைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். நகரிலிருந்து எட்டு மூத்த அரசியரும் அகன்று சென்றாகவேண்டும்” என்றார். சுமித்ரன் “இது பெரிய முடிவு. நாம் எடுக்க முடியாது” என்றார். “அவர்கள் எடுக்கலாம், அவர்கள் எடுக்கவேண்டிய முடிவு இது என அவர்களிடம் தெரிவிக்கவேண்டும் நாம்” என்று கிருஷ்ணை சொன்னார். “இம்முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்பதை நாம் அரச மைந்தர்களுக்கு பின்னர் விளக்கலாம். நமக்கு பொழுது இல்லை.”

“ஏன்? ஒவ்வொன்றும் நிலைமீண்டு கொண்டிருக்கின்றன” என்று சுமித்ரன் சொன்னார். கிருஷ்ணை சீரான குரலில் “இல்லை, நகரில் ஏதேனும் பெரிய அழிவு தொடரக்கூடும் என்று அறிந்தோர் சொல்கிறார்கள். நிலநடுக்கம் என்பது ஓர் அறிவிப்புதான். தொடர்வது என்ன என்று நாம் பார்க்கவேண்டும். இப்போது நாம் செய்தது மக்களின் அச்சத்தை போக்குவதை மட்டுமே. அவர்கள் அஞ்சி கலைந்திருந்தால் நாம் செய்யக்கூடுவன ஒன்றுமில்லை. ஆனால் மக்களையும் நாம் அச்சுறுத்தாமல் சீராக இந்நகரிலிருந்து அகற்றவேண்டும்” என்றார்.

“நிமித்திகர்கள்…” என சுமித்ரன் ஏதோ சொல்ல கையமர்த்தி “நான் பேசுவது நிமித்திகர் கூற்றைப் பற்றி அல்ல. சிற்பிகள்கூட இப்போது சொல்ல ஏதுமில்லை. இப்போது சீற்றம்கொண்டிருப்பது கடல். கடலை அறிந்தவர்கள் கடலோடிகள். முதிய கடலோடிகள் எழுவரை நான் அழைத்துவரச் சொன்னேன். அவர்கள் எண்ணுவதை கேட்டேன். இந்த நிலஅதிர்வு கடலுக்குள் இருந்து வந்திருக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள். ஆகவேதான் நிலம் நடுங்கியபோது அலைகள் பெரிதாக எழவில்லை. ஆகவே இது முழுமையாகவே கடல்சார் நிகழ்வு” என்றார்.

“அவர்கள் சில குறிகளை தேர்ந்து சொன்னார்கள். கடல் உள்வாங்கியிருக்கிறது. திறந்த வாய்க்குள் நாக்கு உள்வளைவது போன்றது அது. வாய் விழுங்க வருகிறதென்றே பொருள். நகரிலிருந்து அத்தனை காகங்களும் பறவைகளும் அகன்றுவிட்டன. அதைவிட கடலோரத்தில் கடற்காகங்கள் ஒன்றுகூட இல்லை. கடலில் இருந்து எதுவோ வரவிருக்கிறது. எதுவென்று சொல்ல எவராலும் முடியாது. அது இங்கு வராமல் திசைமாறிப் போகலாம். ஒன்றும் நிகழாமலும் போகலாம். ஆனால் இது எச்சரிக்கை. நாம் அதற்கு ஒருங்கவேண்டும்.”

சுமித்ரன் “நான் அரசியரிடம் என்ன சொல்ல?” என்றார். “விளக்கவேண்டாம். என் சொல் என்று மட்டுமே சொல்க! அவர்கள் எவரும் மீறப்போவதில்லை” என்று கிருஷ்ணை சொன்னார். “அத்தனை அரசியரும் அவர்களின் பிறந்த நிலத்திற்கு செல்லட்டும். நாம் அறிவிக்கும் வரை அவர்கள் அங்கே இருக்கட்டும். ஆனால் அவர்கள் செல்வது எவருக்கும் தெரியலாகாது. இன்று மாலைக்குள் அவர்கள் படகுகள் மூலமாக சென்றுவிடவேண்டும். ஆனால் கடலில் நெடுந்தொலைவு செல்லக்கூடாது. துவாரகையின் எல்லைக்கு அருகே இருக்கும் இறுதி படகுத்துறைவரை படகில் சென்றால் போதும். மிஞ்சிப்போனால் இரண்டு நாழிகைப் பொழுது ஆகும். அங்கே கரையேறி கரைவழியாக சிந்துவை அடைந்து அங்கிருந்து மீண்டும் படகில் சிந்துவின் வழியாக செல்லட்டும்.”

“கடலில் இருப்பது உகந்தது அல்ல. ஆனால் நகர்ச்சாலைகள் அனைத்தும் மக்களால் நிறைந்துள்ளன. நகரின் எல்லைகளில் மக்கள் நெரிபடுகிறார்கள். அவர்கள் அறிய கடந்துசெல்ல முடியாது. அறிவது நன்றும் அல்ல. துறைமேடைகள் ஒழிந்து கிடக்கின்றன. அவர்கள் உடனே கிளம்பவேண்டும்… எந்த மரபுகளும் முறைமைகளும் பேணப்பட வேண்டியதில்லை. எத்தனை விரைவாக கிளம்பமுடியுமோ அத்தனை விரைவாக கிளம்பவேண்டும்” என்று கிருஷ்ணை சொன்னார்.

சகஸ்ரஜித் “ஆனால் அரசியர் கிளம்புவது எளிதல்ல. அவர்கள் கிளம்புவதற்கு முன்னர் செய்யவேண்டியவை என பல உள்ளன. அவர்கள் எந்தெந்தப் பொருட்களை எடுத்துக்கொள்வது என்பதை முடிவெடுக்கவே நெடும்பொழுதாகும். ஒவ்வொரு அரசியுடனும் ஓரிரு மூத்த சேடியர் உள்ளனர். அனைத்து முடிவுகளையும் அவர்களே எடுப்பார்கள். தங்கள் மூப்பை காட்டும்பொருட்டு புதிய இடர்களை உருவாக்குவார்கள்” என்றார்.

கிருஷ்ணை “எனில் என் ஆணையை நான் ஏட்டில் அளிக்கிறேன். இன்னும் ஒரு நாழிகைக்குள் அரசியர் அனைவரும் படகுகளில் ஏறிக்கொள்ளவேண்டும். அதற்கு மாற்றோ தடையோ உரைக்கும் எவரும் அக்கணமே தலைவெட்டி வீழ்த்தப்படவேண்டும்… ஒரு நாழிகைக்கு மேல் எந்த அரசியாவது அரண்மனையில் இருந்தால் அந்த அரசியின் தலைமைச் சேடியர் அனைவரும் அங்கேயே கொல்லப்படவேண்டும்” என்றார்.

நான் நடுங்கிவிட்டேன். அப்போது அவரைப் பார்க்க கொற்றவை போலிருந்தார். அனைவருமே நடுங்கிவிட்டனர். அமைச்சர்களின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. “எட்டு அரசியரிலும் எவரேனும் மறுப்போ தயக்கமோ காட்டினால் அவர்களை சிறைப்பிடித்து கட்டி படகுக்கு கொண்டு செல்க! எழுதுங்கள் ஆணையை” என்றார் கிருஷ்ணை. திருவெழுத்தனின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அவனால் எழுத முடியவில்லை. கிருஷ்ணை எழுந்து கொண்டு “நான் ஒற்றர்களை சந்திக்கவேண்டும்… ஃபானுவுக்கும் பிறருக்கும் ஓலைகளை கூறியிருக்கிறேன். அவை உடனே செல்லட்டும்” என்றார்.

அவர் சென்றதும் ஒவ்வொருவரும் பரபரத்தனர். ஓலைகள் எழுதப்பட்டன. அங்கே நின்ற மூத்த கடலோடியிடம் “நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?” என்றேன். “ஆழிப்பேரலை ஒன்று…” என்றார். “நான் அதை பார்த்ததில்லை. என் தந்தையோ பாட்டனோ பார்த்ததில்லை. ஆனால் அனைவரும் அதை சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதைப் பற்றிய எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.” பிறர் எவரும் அவர் சொற்களில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் நான் எச்சரிக்கை அடைந்தேன். அவரை கூர்ந்து நோக்கினேன். “அலைகள் என்பவை கடலோரமாக எழுபவை. கடலுக்கு மேலே எழுபவை. ஆழத்தில் இருந்து எழும் பேரலை இது.”

“கடலின் ஆழத்தில் வருணன் பேருருவனாக துயில்கிறான். மாமலைகள் கூழாங்கற்களாகத் தோன்றும் அளவு பேருரு அவனுடையது. அவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை புரண்டு படுக்கிறான். அது எப்போது என்று நம்மால் கணிக்க முடியாது. ஆனால் அவனுடைய அசைவால் கடலில் ஓர் அலை எழுகிறது. அலைகள் அல்ல, ஒற்றை அலை. அது நீராலான மலைபோல் கரை நோக்கி வரும் என்கிறார்கள். சேடனின் படம்போல் இருக்கும் என்கிறார்கள்.” நான் “அது அணுகிக்கொண்டிருக்கிறது என்கிறீர்களா?” என்றேன். “என்னால் சொல்லக்கூடவில்லை. ஆனால் அறிகுறிகள் உள்ளன” என்றார்.

ஓலைகளுடன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு ஓடினார்கள். எனக்கான பணி கிருதவர்மனை சந்திப்பது. நான் ஓலையுடன் மையஅரண்மனையின் முகப்பிலிருந்து புரவியில் அவருடைய அரண்மனைக்கு சென்றேன். அங்கே சாத்யகியும் இருந்தார். அவர்கள் ஒரே அறையில் நாற்களம் ஆடிக்கொண்டிருந்தனர். ஆனால் அருகணைந்ததும் தெரிந்தது, அவர்கள் விளையாடவில்லை. நாற்களப் பலகைக்கு இருபுறமும் அமர்ந்திருந்தார்கள். கைகள் செயலற்றிருந்தன. என் வருகையை ஏவலன் அறிவித்ததும் சாத்யகி வெறுமனே அணுகச்சொல்லி கைகாட்டினார். நான் அணுகினேன்.

என் ஓலையை பார்த்ததும் சாத்யகி “என்ன நிகழ்கிறது? முழுப் பொறுப்பையும் துரியோதனனின் மகள் எடுத்துக்கொண்டதுபோல் உள்ளதே?” என்றார். “அது நன்று… அவ்வாறே நிகழட்டும். அவர் ஆணைத்திறன் கொண்டவர்” என்ற கிருதவர்மன் ஓலையை படித்த பின் “தீங்கு எதையோ எதிர்பார்க்கிறார் அரசி” என்றார். “அவர் கடலோடிகளிடம் உசாவியிருக்கிறார்” என்று நான் சொன்னேன். சாத்யகி “ஆணையின்படி என் படைகளை சீராக அணிவகுத்து பாலைக்குள் செல்ல வைக்கிறேன் என்று அரசியிடம் கூறுக!” என்றார்.

நான் திரும்பி வந்தபோது விஜயனும் சித்ரகேதுவும் வந்தனர். “எட்டு அரசியரையும் படகில் ஏற்றிவிட்டோம்… படகு இன்னும் சற்றுநேரத்தில் கிளம்பிவிடும்” என்றார் விஜயன். “எவரேனும் ஏதேனும் சொன்னார்களா?” என்றேன். “அதுதான் விந்தை, எவருமே எந்த மாற்றுச்சொல்லுமே உரைக்கவில்லை. ஆனால் எதிர்பார்த்ததுபோல மூத்த சேடிகள் ஒருநாள் பொழுதேனும் அளிக்காமல் முடியாது என்று பேசத்தொடங்கினர். அரசியின் ஓலையைக் காட்டிய மறுகணமே எலிகளைப்போல சிதறி ஓடினர்.”

ஃபானுவிடமிருந்து அழைப்பு என்று சந்திரஃபானு வந்து மூத்தவர் பூர்ணநமாம்ஷுவிடம் சொன்னார். வருகிறேன் என்று சந்திரஃபானுவை அனுப்பிவிட்டு “என்ன நிகழ்கிறது?” என்று அவர் என்னிடம் கேட்டார். “பெரும்பாலும் அரசி கிருஷ்ணையின் ஆணைகளைப் பற்றிய தன் நிறைவின்மையையே அரசர் நம்மிடம் சொல்வார். இன்று நகரம் இயல்பாக அரசியின் கைகளுக்கு சென்றுவிட்டது.” பூர்ணநமாம்ஷு “இவர் முடிவெடுக்காமல் இருந்தால் அவ்வாறுதான் ஆகும்” என்றார். “அதைத்தான் நம்மிடம் சொல்வார், எண்ணிச் சூழ்ந்து அவர் முடிவெடுக்கவிருக்கையில் முந்திக்கொண்டு முடிவுகள் எடுத்து அரசி கிருஷ்ணை என்னென்ன சிக்கல்களை உருவாக்கியிருக்கிறார் என்று” என்றேன்.

நாங்கள் ஃபானுவின் அவைக்கு சென்றோம். அங்கே நிகழ்ந்துகொண்டிருப்பது என்ன என்று எனக்கு புரியவில்லை. எப்போதும் ஃபானுவுடன் இருந்துகொண்டிருக்கும் சுஃபானுவை அங்கே காணவில்லை. பிரத்யும்னனின் இளையவர்கள் அங்கே இருந்தனர். ஃபானு எங்களைக் கண்டதுமே “எந்த உரிமையின்படி அரசி கிருஷ்ணையின் ஆணைகள் நிறைவேற்றப்பட்டன? ஓலைகள் கொண்டுசென்ற ஒவ்வொருவரும் அதற்கு பொறுப்பு” என்று கூவினார். பூர்ணநமாம்ஷு “அரசே, நாங்கள் கொண்டுசென்றது ஆணை ஓலைகளை அல்ல, நாங்கள் அரசியருக்கான வேண்டுகோளையே கொண்டுசென்றோம்” என்றார். “உடன் சென்ற ஓலையில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று எனக்கு தெரியும். இந்த அரசில் எவரை தலைவெட்டுவது என்று அரசரன்றி எவரும் முடிவெடுக்க இயலாது” என்று ஃபானு சொன்னார்.

நான் “அரசே…” என்றேன். ஃபானு என்னை பார்த்தார். “நாங்கள் கொண்டுசென்ற ஓலை தங்கள் ஆணையென்றே இப்போது கொள்ளப்படும். அந்த எண்ணத்தை தாங்களே இல்லாமலாக்க வேண்டியதில்லை” என்றேன். அவர் திடுக்கிட்டு என்னை பார்த்தார். நான் சொன்னதன் பொருள் புரிந்தவராக “ம்ம்ம்” என்று உறுமினார். “நான் ஆணையிடுவதற்குரிய தருணம் வரும். ஆணை என்னவென்று எனக்கும் தெரியும்… இடர்ப்பொழுதை பயன்படுத்திக்கொண்டு எவரும் ஆள எண்ணவேண்டாம்” என்றார். நான் தலைவணங்கினேன். “செல்க!” என்றார். நாங்கள் வெளியேறினோம்.

எங்களுடன் வந்த ஃபானுமான் “இங்கே பூசல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது” என்றான். “அவந்தியின் எல்லையிலிருந்து ருக்மி வந்துகொண்டிருக்கிறார். அவர் வந்த பின்னர்தான் சுஃபானுவுக்கும் சுதேஷ்ணனுக்கும் இடையேயான உறவு என்ன என்பது தெரியவரும்” என்றார். எனக்கு திகைப்பாக இருந்தது. “என்ன உறவு?” என்று கேட்டேன். “அவர்கள் ஏதோ திட்டமிட்டதாக மூத்தவர் எண்ணுகிறார்” என்றான் ஃபானுமான். எங்களுடன் வந்து சேர்ந்துகொண்ட தர்ஷனிடம் மூத்தவர் “எங்கே சென்றாய்?” என்றார். தர்ஷன் “விதர்ப்பராகிய ருக்மி இங்கே வந்துகொண்டிருப்பதாக செய்தி வந்தது. வரவேண்டியதில்லை, இந்நகரை ஒழிந்துகொண்டிருக்கிறோம் என்று செய்தி அனுப்பும்படி அரசியின் ஆணை” என்றார்.

ஃபானுமான் திகைத்துவிட்டான். “அரசர் ருக்மியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்றான். “ஆம், அறிவேன். ஆனால் இந்நகரை பல சிறுபகுதிகளாக பிரித்து மக்களை சீராக வெளியேற்றும்படி அரசி ஆணையிட்டிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் அதற்கான பொறுப்புகளை பகிர்ந்து அளித்துக்கொண்டிருக்கிறார்” என்றார். “அரசியின் செய்தி ருக்மிக்கு சென்றுவிட்டதா?” என்று ஃபானுமான் கேட்டான். “ஆம், அது சென்று சற்றுநேரமாகிறது” என்று தர்ஷன் சொன்னார். ஃபானுமான் “மூத்தவரிடம் சொல்லவேண்டும்” என்று கூறிவிட்டு திரும்பி ஓடினான்.

நாங்கள் அரசியின் அரண்மனை நோக்கி சென்றோம். நான் சூழ்ந்திருக்கும் காற்றுவெளியை பார்த்துக்கொண்டே நடந்தேன். ஒரு கொடிகூட அசையவில்லை. ஒரு இலையில்கூட அசைவில்லை. புழுதியில்கூட அசைவில்லை. வழக்கமாக நகரில் எப்பொழுதும் காற்று சீறிக்கொண்டிருக்கும். ஆகவே அங்கு கொசுக்களோ சிறு பூச்சிகளோ இருப்பதில்லை. அங்கு வீசும் காற்றில் உடைகளும் தலைகளும் பறக்க நின்று பழகியவர்கள் நாங்கள் அனைவரும். அவ்வண்ணம் ஒரு அசைவிலா நிலை நினைவறிந்த ஒரு நாளும் வந்ததில்லை.

நகரில் கட்டுண்டிருக்காத அத்தனை விலங்குகளும் விலகிச்சென்றுவிட்டிருந்தன. யானைகள் கட்டுக்கயிற்றை இழுத்து சுற்றி வந்தன. புரவிகள் நிலையழிந்து காலை உதைத்து வாலை சுழற்றிக்கொண்டிருந்தன. கட்டுகளில்லாத புரவிகள் அனைத்தும் அனைவரையும் உதைத்தும் கடித்தும் விலக்கி வெறிகொண்டவைபோல் பல்லிளித்தபடி நகரிலிருந்து கடலுக்கு மறுபக்கமாக சென்றுகொண்டிருந்தன. உப்பரிகையிலிருந்து பார்த்தபோது நுற்றுக்கணக்கான புரவிகள் வடகிழக்கு வாயிலை நோக்கி திரண்டு செல்வதை கண்டேன். அவை தெருக்களில் நிறைந்திருந்த கூட்டத்தை முட்டி பிளந்து சென்றன. அந்த கலைந்த உணர்வுநிலையில் அவ்வாறு புரவிகள் தங்களை முட்டி விலகி நகரிலிருந்து அகன்று செல்வதை எவரும் அறியவில்லை.

அதைவிட நகருக்கு மேல் ஒரு பறவை கூட இல்லை. பல கோடி பறவைகளால் சூழப்பட்டது துவாரகை. துவாரகையின் அனைத்துப் பாறைகளிலும் அவற்றின் எச்சம் வில்லையாக வழிந்திருக்கும். முதல் மழையில் சுண்ணப்பெருக்கென கரைந்து வழியும். நகரிலுள்ள அனைத்துச் செடிக்கும் நல்லுணவாக ஆவது அந்த வெண்மை. தலைக்குமேல் அலையோசைக்கு நிகராக நிறைந்திருக்கும் வானத்தின் ஓசை என்றும் அதை சூதர் சொல்வதுண்டு. அன்று ஒரு சிறகசைவு கூட தென்படவில்லை என்பது என்னை அச்சமுறச் செய்தது.

அச்சத்துடன் சாளரம் வழியாகச் சென்று கடலை பார்த்தேன். முதற்கணம் எனக்கு அங்கே ஒரு கடல் இருந்ததே எங்கே என்ற திகைப்புதான் ஏற்பட்டது. பின்னர்தான் கடலின் எல்லை மிகத் தொலைவில் துறைமேடைக்கு அருகே சென்றிருப்பதை கண்டேன். அங்கே நின்றிருந்த பீதர் நாட்டுப் பெருங்கலம் அலைவிலாதிருந்தது. அதன் கொடிகள் அனைத்தும் துவண்டு கிடந்தன. நகரின் ஓசைகள் அனைத்தும் உருமாறிக்கொண்டிருந்தன. என் அச்சத்தை மூத்தவர் பகிர்ந்துகொள்ளவில்லை. “அரசி ஆட்சியை கைக்கொள்வதை ஃபானு ஒப்புக்கொள்ள மாட்டார். இப்போது பூசல் அவர்களிடையேதான் எழும் என நினைக்கிறேன்” என்றார்.

நாங்கள் மடப்பள்ளிக்குச் சென்று உணவுண்டு அரசி கிருஷ்ணையின் அவைக்கு சென்றோம். செல்லும் வழியிலேயே ஸ்ரீகரர் எங்களை எதிர்கொண்டு “என்ன நடக்கிறது? நகரிலிருந்து மக்களை எல்லா வழிகள் வழியாகவும் பகுதி பகுதியாக வெளியே கொண்டுசெல்லும் திட்டம் ஒன்றை வகுக்க அரசி சொன்னார். நான் வகுத்த திட்டப்படி ஆணைகள் விடப்பட்டன. ஆனால் ஆணைகளுடன் படைகள் நகரில் இறங்குவதற்குள் அனைத்து ஆணைகளையும் நிறுத்திவைக்க வேண்டும் என்று மூத்தவர் ஃபானு ஆணையிட்டிருக்கிறார். அனைவரும் திரும்பி வந்திருக்கின்றனர்” என்றார்.

மூத்தவர் “நான் அதை எதிர்பார்த்தேன்… அரசி மூத்தவரிடம் சென்று பேசவேண்டும்” என்றார். “என்ன பேசுவது? பேசிப் புரியவைத்து செயல்படவேண்டிய நேரமா இது? நமக்கு பொழுதில்லை. மிஞ்சிப்போனால் நாலைந்து நாழிகை நமக்கு கிடைக்கும் என்கின்றனர் கடலோடிகள்…” என்றார் ஸ்ரீகரர். “அமைச்சரே, நீங்கள் வாருங்கள். என்ன நிகழ்கிறது என்று நாம் மூத்தவர் ஃபானுவுக்கு விளக்குவோம். இனி ஓலைகள் எல்லாம் மூத்தவரின் பெயராலேயே வெளியிடப்படும் என்று அரசியிடமிருந்து ஓர் ஓலையைப் பெற்று அதை ஃபானுவிடம் அளிப்போம். அவர் ஒரு தலையசைப்பை அளித்தால் போதும், பணிகளை தொடங்கிவிடலாம்” என்றார் பூர்ணநமாம்ஷு.

நாங்கள் கிருஷ்ணையின் அவை நோக்கி கிட்டத்தட்ட ஓடினோம். ஸ்ரீகரர் “என்ன நிகழ்கிறது என்றே எனக்கு புரியவில்லை. செய்தி கேட்டு சாம்பன் உடனே தன் படைகளைத் திரட்டி ஃபானுவின் படைகளுடன் மோதவிருப்பதாக கூச்சலிடுகிறார். அவர் ஆணைகளை தனியாக பிறப்பிக்கிறார். அவர் எந்த ஆணையை இட்டாலும் அதை நிறைவேற்றவேண்டியதில்லை என்று சொல்லிவிட்டு வந்தேன்” என்றார். பூர்ணநமாம்ஷு “அது நன்று” என்றார். “ஆனால் அவருக்கு ஓர் அமைச்சர் இருக்கிறார், வக்ரர். தனக்கு மேல்கோன்மை வருவதற்காக சாம்பனை தன் கைப்பாவை என கையாள்பவர். அவர் எதை வேண்டுமென்றாலும் செய்யக்கூடும்.”

நாங்கள் கிருஷ்ணையின் அரசவைக்குச் சென்றபோது வாயிலிலேயே மறிக்கப்பட்டோம். காவலர்தலைவன் நான் அறியாதவன். அவன் “அரசியை சந்திக்க எவருக்கும் ஒப்புதல் இல்லை. அரசர் ஃபானுவின் ஆணையின்படி சாம்பனும் அவர் துணைவி கிருஷ்ணையும் அவர்களின் அரண்மனையிலேயே சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றான். “சிறைவைப்பதா? என்ன சொல்கிறாய்?” என்று ஸ்ரீகரர் கூவினார். “அரசியின் அமைச்சன் நான்.” அவன் “ஆம் அமைச்சரே, தங்களையும் சிறைவைக்கவேண்டும் என்று ஆணை” என்றான். இரு வீரர்கள் ஸ்ரீகரரை அழைத்துச் சென்றனர்.

நானும் பூர்ணநமாம்ஷுவும் அரண்மனையின் இடைநாழியின் வழியாக ஓடினோம். ஃபானுவை சென்று பார்க்கலாம் என்றுதான் எண்ணினோம். பூர்ணநமாம்ஷு வழியிலேயே நின்று “இப்போது சென்று ஃபானுவை பார்த்தால் நாமும் சிறைப்படுவோம்” என்றார். “நாம் கிருதவர்மனையோ சாத்யகியையோ சென்று பார்ப்போம். அவர்கள் இன்றிருக்கும் நிலையினை சற்றேனும் புரிந்துகொண்டால் நன்று” என்றார். “ஆம், சாத்யகியை புரிந்துகொள்ளச் செய்ய முடியும்” என்றபடி நானும் அவருடன் ஓடினேன்.

ஆனால் கிருதவர்மன் சாத்யகி இருவருமே அவர்களின் அரண்மனையில் இல்லை. திரும்பிவரும் வழியில் பூர்ணநமாம்ஷு “நாம் பிரத்யும்னனை பார்ப்போம். இன்னும் சற்று உளத்தெளிவுடன் பேசக்கூடியவர் அவர்” என்றார். நாங்கள் அங்கே சென்றபோது வழியிலேயே படைகளால் தடுக்கப்பட்டோம். சுதேஷ்ணன் கொல்லப்பட்ட பின் அவருடைய ஆதரவுப்படைகளால் பிரத்யும்னன் தாக்கப்படலாம் என்பதனால் கடுமையான பாதுகாப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக காவலன் சொன்னான். அனிருத்தனுக்கும் பிரத்யும்னனுக்கும் பூசல் உருவாகியிருப்பதாக அவன் அருகே நின்ற காவலன் சொன்னான்.

நாங்கள் அதன் பின்னரும் அலைந்தோம். “முழு நகரையும் பாலைநிலத்திற்குள் இடம்பெயர்த்துவிட்டிருக்கலாம். அரிய பொழுது வீணாகிக்கொண்டே இருக்கிறது” என்று பூர்ணநமாம்ஷு சொன்னார். “சாத்யகியும் கிருதவர்மனும் இங்கே இருந்திருக்க வேண்டும்” என்று நான் சொன்னேன். “பொழுது சென்றுகொண்டிருக்கிறது… இந்நேரம் முழு நகரும் வெளியேறியிருக்க முடியும்” என்று பூர்ணநமாம்ஷு புலம்பினார். “நாம் இதை ஊழ் என்றே கருதவேண்டும். நாம் செய்வதற்கொன்றும் இல்லை” என்றேன்.

சோர்ந்து திரும்பும்போது நான் மீண்டும் கடலை பார்த்தேன். அங்கே அந்த பீதர் மரக்கலம் இல்லை. கடல் மிக உள்வாங்கியது. அலைகள் பின்னிழுபட்டு கடல் ஒரு பெரிய அலையாக விலகிச் செல்வதுபோல தோன்றியது. திகைப்புடன் கடலை நான் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அந்தப் பெருங்கலம் தொலைவில் ஒரு வெண்பறவை என தெரிந்தது. அலகு நீட்டி சிறகு குவித்து பாய்ந்து வருவதுபோல் முழு விசையுடன் அது வந்து துவாரகையின் துறைமேடையை முட்டுவதை பார்த்தேன்.

அதன் விசையில் நகரின் அனைத்துக் கட்டடங்களும் அதிர்ந்தன. கற்கள் பெயர்ந்து ஒன்றின்மேல் ஒன்று விழுந்தன. தீபமுகப்பு உடைய தன்னை சிதைத்துக்கொண்டு அது துறைமேடைக்குள் புகுந்து கல்மண்டபங்களை நொறுக்கி கல்மேடைகளை கலைத்து பாதி தரையிலும் மீதி நீரிலுமாக நின்றது. கட்டடங்களின் கற்கள் பெயர்ந்து ஒன்றுடன் ஒன்று விழுந்தன. அந்த அதிர்வில் நகரில் விரிசலிட்டு நின்றிருந்த பலநூறு கட்டடங்கள் விழுந்தன. நகரெங்கும் ஓலம் எழுந்தது.

தந்தையே, அதைத் தொடர்ந்து மொத்தக் கடலும் ஒற்றைப் பேரலையென மாறி திசையை நிறைத்து ஓசையே இல்லாமல் அணுகி வந்தது. கடல் வானை நோக்கி எழுந்து அசைவிலாது நின்றது போலிருந்தது. நீராலான பெருங்கோட்டை என தோன்றியது. என்ன நிகழ்கிறது என்ற எண்ணம் அற்று நான் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே ஆழித்திரை வந்து நகரை அறைந்தது. அனைத்துக் கட்டடங்களையும் அலை அறைந்து அனைத்து வாயில்கள், சாளரங்களினூடாகவும் அறைகளை நிறைத்தது. நகரில் நடுவே பீதர்கலம் உருவாக்கியிருந்த பிளவினூடாக ஆழிப்பேரலையின் நீர் உள்ளே புகுந்து துவாரகையை இரு பிளவுகளாக மாற்றியது.

தொடர்புடைய பதிவுகள்

போழ்வு,முதல் ஆறு- கடிதங்கள்

$
0
0

போழ்வு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

போழ்வு இந்த வரிசையில் நீங்கள் எழுதிவரும் 80 சதவீதம் வரலாறு எஞ்சியது புனைவு வகையான கதைகளில் ஒன்று. விக்கிப்பீடியாவுக்குச் சென்று வேலுத்தம்பி தளவாய் பற்றி வாசித்தேன். அவர் கேரளத்தின் தேசியவீரர். அவர் ஆங்கிலேயருக்கு எதிராக வெளியிட குண்டரை விளம்பரம் என்ற அறிவிப்பில்தான் தேசியம் பற்றிய முதல்குறிப்பு உள்ளது. அந்த நால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

அதேசமயம் இந்தக்கதையில் நீங்கள் சொல்லியிருப்பவையும் உண்மை. கிருஷ்ணபிள்ளையை அவர் கொன்ற விதம் வரலாற்றில் உள்ளது. வெள்ளைக்காரர்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களைக்கொண்டே திருவிதாங்கூர் ராணுவத்தை ஒடுக்கியவரும் அவர்தான்

இந்தக்கதையின் இன்றைய இடம் என்ன? அச்சு அசலாக, ஒரு சின்ன மாற்றமும் இல்லாமல் அப்படியே நமது இன்றைய மாவீரர்களுக்கும் இது பொருந்துகிறது என்பதுதான். இவர்களும் இதே வார்ப்பில் இருப்பவர்கள்தான். அவர்கள் மாவீரர்கள், மக்கள்தலைவர்கள். ஆனால் சுயமையம் கொண்டவர்கள். மக்களை பொருட்டாக நினைக்காதவர்கள். தங்கள் ஆணவத்தாலும் சுயநலத்தாலும் மக்களுக்கு அழிவை கொண்டுவந்தவர்கள். ஆனால் அப்படியிருந்தாலும் மக்களால் கொண்டாடப்படுபவர்கள்.

நெப்போலியன் முதல் எல்லாருமே ஒரே வார்ப்புதான். வீரவழிபாடு என்பதே எந்த வகையிலானாலும் ஒரு பழங்குடி மனநிலை. ஒரு காலாவதியான மனநிலை.வீரவழிபாடு என்பதே அடிப்படையில் வன்முறை வழிபாடுதான்

ராஜசேகர்

***

வணக்கம் ஜெ,

போழ்வு சிறுகதையை வாசித்தேன். வேலுபிள்ளை குரூரமானவர், நீதியுணர்வு மிக்கவர் என்று சித்திரிக்கப்படுகிறார்.அந்தக் குரூரம் நெருப்பைப் போன்றது. ஆனால், அதிகாரத்தில் நிலைப்பதற்காக அனைத்தையும் அள்ளி உண்ண நெருப்பு படர்கிறது.  தனக்கு முன்னால் இருந்த பலரின் வீழ்ச்சி அவரை அச்சமடையச் செய்கிறது. அவ்வச்சமே அவரில் பிளவை ஏற்படுத்துகிறது.

அரவின் குமார்

***

முதல் ஆறு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

முதல் ஆறு ஒரு விசித்திரமான கதை. ஒரு கதையில் நிகழ்வுகள் செறிந்துகிடக்கின்றன- உதாரணம் பத்துலட்சம் காலடிகள். இந்தக்கதையில் ஒன்றுமே நிகழவில்லை. இருவர் பஸ்ஸில் போகிறார்கள். பஸ் வழிமாறி செல்கிறது. அவ்வளவுதான்

ஆனால் அது அவர்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள். அவர்கள் என்றென்றுமாக நினைத்திருக்கும் நாள் இது. .அப்படிப்பட்ட சிலநாட்கள் எல்லாருடைய மனதிலும் இருக்கும். அதை இன்னொருவரிடம் சொன்னால்கூட அதற்கு மதிப்பிருக்காது.

ஜெயராணி

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

முதல் ஆறு மிகப்பிரமாதமான காதல் கதை. பேருந்தில் மலரும் காதல்கள் சுவாரஸ்யமானவை. அதிலும் அந்த இளைஞனாகவே நீங்கள் இருந்து அவன் பரிதவிப்பை எழுதியிருக்கிறீர்கள். அவன் பதற்றம் கைகால்கள் தளர்வது, பெருமூச்சுவிடுவது, வீண்கற்பனை செய்துகொண்டு கண் நிறைவது  என்று அவனாகவே இருந்து வாசிக்க முடிந்தது.

உள்ளே யாரையும் பார்க்காதது போல பேருந்தின் படிக்கட்டில் ஒற்றைக்கையில் கம்பியை பிடித்துக்கொண்டு தொங்கியபடி கேசம்காற்றில் அலைபாய பயணிக்கும் இளைஞர்கள் இல்லாத   பேருந்துகளே இல்லையே கல்லூரி வழித்தடங்களில், வெகுகாலத்திற்குப்பிறகு  ஸ்டெல்லாபுரூசின் அது ஒரு நிலாக்காலத்தின் பேருந்துக்காதலையும் ராம்குமாரையும் நினைத்துக்கொண்டேன். அந்தபெண்ணின் உதடுகளையும் உலர்ந்த பிளாஸ்டிக் தாளைப்போல என்று சொல்லியிருந்தது புதிதாகவும் பொருத்தமாகவும் இருந்தது

2வருட பயணத்தில் அன்றைய இந்து கிறிஸ்தவ சண்டையும் அதன்பொருட்டு சுற்றுவழிப்பயணமும் அது வரையில்  காதலியின் தரிசனத்தை மட்டுமே கண்டவனுக்கு இயற்கையின் தரிசனமும் கிடைக்க வழிசெய்கின்றது.. காதலைக்காட்டிலும் பெரியதொன்றை அவன் அன்று காண்கிறான்.

அன்றைக்கு சுற்றுவழியில் செல்லும் பேருந்துக்குள்ளும் அவன் மனதிற்குள்ளுமே  ஒளி நிறம் மாறிவிட்டிருக்கிறது, ஒளியே நீர் என ஓடிக்கொண்டிருக்கும் முதலாறும் தெளிந்த வானும் முகிலும் பருந்தும் அதன் நிழலும் சரிவெங்கும்

மஞ்சளாக பூத்திருந்த ஆவாரையும் பட்டாம்பூச்சிகளும் மைனாக்களின் சிறகடிப்புமாக தரிசித்து கொண்டிருப்பவனுக்கு அவள் அழைத்ததே தெரியவில்லை அவளின் தரிசனத்துக்காக அத்தனை வருடம் காத்திருந்தவன் அவன். அவள் இருக்கும்   அந்த பேருந்தின் தரிசனமே அவனை படபடக்க வைத்துக்கொண்டிருந்த நிலையெல்லாம் இயற்கையின் தரிசனத்தின்பின்னர் பெரிதாக இல்லாமல் போய்விட்டது, அவனும் அவளும் மட்டுமே பேருந்தில், இவனிடமே அவள் நேராகப்பேசுகிறாள். எந்த படபடப்பும் இன்றி  அவளிடம் அவனால் பேசமுடிகின்றது.

அவன் விம்மும் உள்ளத்தில் இனி அவளின் முகத்திலும் கழுத்திலும் விழும் ஒளியும் அவள் காதோரத்தின் மென்மயிர்ச்சுருளும் கூட இயற்கையின் பகுதிதான்.  கல்லூரியில் இறங்கி அவள் அன்று அவனைப்பார்த்து புன்னகைக்காதிருந்தாலும், தலையசைப்பில் போய்வருகிறேன் என்று சொல்லி இருக்காவிட்டாலும் அவனுக்கு அது பொருட்டல்ல. இனி அவன் அந்த முதலாற்றின் மேல் பறந்துசென்ற பருந்தைப்போல   வேளிமலையின் ஒளிரும் முகடுகளையும் நுரைத்துத் துள்ளி சரிவிலிறங்கும் ஓடைகளையும் பின்தொடர்ந்து பறந்து செல்லுவானாயிருக்கும்.

நன்றி

லோகமாதேவி

***

தொடர்புடைய பதிவுகள்

பலிக்கல், லீலை- கடிதங்கள்

$
0
0

பலிக்கல்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

கலை ஒரு விஷயத்தை கண்டு சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கு அரசியலில் சட்டத்தில் நடைமுறை அன்றாட வாழ்க்கையில் பெரிய மதிப்பும் இல்லை. ஆனால் கலை அதைச் சொல்வதையும் விடவில்லை. அதைத்தான் பழிபாவம் என்று சொல்கிறோம். திருவள்ளுவர் சொல்கிறார். எல்லா ஞானிகளும் சொல்கிறார்கள். ஆனால் நமக்கு நம்பிக்கை வரவில்லை. அப்படியென்றால் இது என்ன என்றுதான் திருவள்ளுவரிடமும் கேட்போம்

ஏனென்றால் இதில் நம்முடைய சொந்த லாஜிக் சரியாக பொருந்தவில்லை. கொஞ்சம் சரியாக இருக்கிறது. கொஞ்சம் வெளியே கிடக்கிறது. நமக்கு நம்மிடம் இருக்கும் லாஜிக் மேல் அபாரமான நம்பிக்கை. இந்த லாஜிக் இந்த பிரபஞ்சத்தின் எல்லா விஷயங்களையும் அறிந்துகொள்ள உதவியானது என்ற எண்ணம். ஆகவே முட்டிக்கொண்டே இருக்கிறோம். இந்த அலைக்கழிப்புதான் நம் வாழ்க்கை. நம்மில் பாமரர்கள் எல்லாருமே இந்த இரட்டைநிலைகளுக்கு நடுவே கிடந்து அலைமோதிக்கொண்டே இருப்பவர்கள்தான். இந்த கதையை எந்த ஒரு பாமரரிடம் சொன்னாலும் இந்த ஐயமும் குழப்பமும் தான் கேள்வியாக வெளிப்படும். இதிலிருந்து மீட்பே இல்லை

நான் பணியாற்றிய காலத்தில் விசாரணைக் கைதியாக எந்த ஆவணமும் இல்லாமல் ஏழெட்டு வருசம் ஜெயிலில் கிடந்தவர்களை பார்த்திருக்கிறேன். இப்போதுகூட அப்படி பலர் ஜெயிலில் கிடக்கிறார்கள். வெளியே எவராவது தொடர்ந்து மூவ் செய்யவில்லை என்றால் ஜெயிலுக்கு போனால் அவ்வளவுதான். ஃபைல்கள் இல்லை என்றால் ஒருவர் உள்ளே இருக்க நியாயமே இல்லை. ஆனால் உள்ளே ஒருவர் ஏன் இருக்கிறார் என்றால் சம்பந்தப்பட்ட ஃபைலே காணும்சார் என்பது பதிலாக இருக்கும். நம்பவே முடியாத ஆச்சரியம் இது. இதெல்லாம் பலர் எழுதிவிட்டார்கள். நிறைய பேசியிம் விட்டார்கள். ஒன்றும் நடக்கவில்லை.

அங்கே பழிபாவம் பற்றி பேசிக்கொண்டு வேலைசெய்ய முடியாது. டிபார்ட்மெண்டில் அந்த நம்பிக்கை உண்டா என்றால் ஆச்சரியம் 90 சதவீதம்பேருக்கும் அந்த நம்பிக்கையும் உண்டு. ஒருசிலருக்குத்தான் இல்லை. அதோடு அனியாயம் செய்து அழிந்துபோன போலீஸ்காரன் குடும்பம் பற்றிய பேச்சு எப்போதுமே இருந்துகொண்டும் இருக்கும்

அந்த மன்னிப்புக்குரல் அந்த பெண்மணியுடையதுதான் என நினைக்கிறேன். ஒரு அம்மன் மாதிரி நின்று அந்தம்மாதான் ரெண்டுபேருமே எனக்கு ஒண்ணுதான், சின்னப்பிள்ளைகள்தான் என்கிறாள். கொன்றவனும் செத்தவனும் சமமாக ஆகும் நிலை. அந்தமாதிரி இரண்டுபேரை எனக்கு தெரியும். டீடெயிலுடன் தனியாக அனுப்பியிருக்கிறேன்

கி.குமரேசன்

***

அன்புள்ள ஜெ, வணக்கம்,

நற்றுணை போலவே பலிக்கல் கதையிலும் போற்றி தன்னை மற்றொருவராக மாற்றிக்கொள்கிறார். அம்மிணி அம்மச்சி அவ்வப்போது கேசினியைக் காட்டுகிறார், ஆனால் போற்றியோ தன்னை அழகிய நம்பியா பிள்ளையாகவே முற்றிலும் மாற்றிக் கொண்டார். இதில் நம்பியா பிள்ளைக்கு இரு சாபங்கள், கோவில் சொத்தைக் கொள்ளையடித்தது மற்றும், பழியை அப்பாவி மேல் போட்டது.

என்னுடைய உறவினர் குடும்பத்தில் கூட இது போல் ஒரு சாபம், நான்கு தலைமுறைகளாக தொடர்ந்து (இன்னும் கூட) வந்து கொண்டிருக்கிறது.  தம்பியின் பங்குச் சொத்தையும் அண்ணன் கைப்பற்றிக்கொள்ள, தம்பியின் குடும்பம் தடுமாறியது. அண்ணன் குடும்பத்திற்கு பணம் குறைவில்லை ஆனால் குடும்பத்தில் அகால மரணங்களும், வீட்டிற்கு ஒருவர் மனநிலை பிறழ்வதும் தொடர்கிறது.  இன்று அண்ணனின் வாரிசுகள் பிழைநேர் செய்ய முன்வந்தாலும் தம்பியின் வாரிசுகள் ஒப்பவில்லை.  அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை என்ற குறளுக்குப் பொருத்தமான கதை.

நன்றி ஜெ.

நாரா.சிதம்பரம்.

***

லீலை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

லீலை கதையின் ஒரு அம்சம் எனக்கு ஆச்சரியமாக இருந்ததுஅந்த சைக்கிள்சர்க்கஸ் எங்களூரிலும் நடந்திருக்கிறது. அது இன்றைக்கு இல்லை. அதன் முக்கியமான அம்சமே வெளியே கூடும் கூட்டம்தான். வேலையில்லாமல் வேடிக்கைபார்க்க அலைபவர்கள். அவர்கள்தான் ஆடியன்ஸ். அவர்கள் இன்றைக்கு இல்லை. அதேபோல ரிக்கார்டு டேன்ஸ். அது ஒரு மிமிக்ரி. சினிமாவை நடித்துப்பார்ப்பது. அன்றைக்கு சினிமா ரொம்பதூரத்தில் இருந்தது. செலவும் கூடுதல். ஆகவே அதை நடித்துக்கொண்டார்கள். என்றைக்கு டிவி வந்து சினிமா மலிந்ததோ அன்றைக்கே ரிக்கார்டு டேன்ஸ் இல்லை. இன்றைக்கு அதை குடும்பப்பெண்கள் டிக்டொக் செயலியில் செய்கிறார்கள்.

லீலை அந்தக் காலகட்டத்தை, அந்த கலாச்சாரப்பகுதியை அழகாக சொல்கிறது. அதில் மயங்கிப்போய் பார்க்கும் ஒருவனின் பார்வையில் அது சொல்லப்படுவதனால் இன்னும் ஆழமாக இருக்கிறது. அந்த சர்க்கஸ் உட்பட எல்லாமே ஒரு ஏமாற்றுதான். அவர்களை அவள் ஏமாற்றுகிறாள். அவள் தேன்சிட்டு போல. அப்படி ஏமாற்றி தேன் குடித்து அலைபவள். அவள் ஒரு சாக்சக்காரப் பெண். அந்தப்பெண் உருவாக்கும் மயக்கம் கலையவே கலையாது

ஜி.பழனிவேல்

***

வணக்கம் ஜெ

லீலை சிறுகதையை வாசித்தேன். அப்டி மாறினா அது ஆட்டம் என்று அவள் சொல்வதில்தான் கதையின் முடிச்சு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு தேவை. அதற்குத் தோதாக ஒரு ஆடல். இப்படியாக லீலைகள் புரியும் ஒரு ஆட்டக்காரியின் கதை. தெய்வங்களையுமே அப்படிதான் உருவகம் செய்திருக்கிறோம் என எண்ணத்தோன்றச் செய்யும் கதை.

அரவின்குமார்

***

தொடர்புடைய பதிவுகள்

நஞ்சு, காக்காய்ப்பொன் –கடிதங்கள்

$
0
0

காக்காய்ப்பொன் [சிறுகதை]

இனிய ஜெயம்

நஞ்சு வாசித்தேன். மிக வித்யாசமானதொரு ஆண் பெண் ஆடல் சார்ந்த உளவியல் கதை. அந்த இறுதிக் கணத்தில் அவன் அதுவரை திரட்டி வைத்திருந்த நஞ்சை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, இனிமையை ஏந்தி இருக்கலாம். எது மறித்தது? அவளை மன்னிப்புக் கேட்க சொல்லி காலில் விழவைத்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அவளுக்கு இந்த நிலையை அவன் அளிப்பது …

இனிமையில் திளைப்பதை விடவும், நஞ்சு பெய்வது மேலும் இனிமை கொண்ட ஒன்றா?

கடலூர் சீனு

***

அன்புள்ள ஜெ,

தன்னிச்சையான செயல்கள் என்று ஒன்று உண்டா அல்லது அது ஆழ்மனதின் வெளிப்பாடா? தர்க்க ரீதியாக பார்த்தால் நம் செயல்களுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அனைத்து செயல்களிலும் தர்க்கம் இருப்பதாக தெரியவில்லை. காலத்தின் ஒரு புள்ளியில் ஒரு தன்னிச்சையான செயலில் எப்படி வாழ்க்கை முழுவதும் மாறி விடும் என்பதற்கு லீலாவும், ‘நஞ்சு’வும் ஓர் உதாரணம் என்றே தோன்றுகிறது.

உலகில் அனைவரும் எப்போதுமே ஒரு விடுதலைக்காக காத்திருக்கிறார்கள். அந்த காத்திருப்பும் எதிர்பார்ப்பும் இல்லை என்றால் மனிதனுக்கு செய்வதற்கு ஒன்றுமே இல்லை. அது சின்ன எதிர்பார்ப்பிலிருந்து மிகப்பெரிய இலட்சியங்கள் வரை பொருந்தும். லீலாவிற்கு வறுமையினிடமிருந்து, ‘நஞ்சு’விற்கு பிடிக்காத கணவனிடமிருந்து.

அதே சமயம் உலகில் அனைவரும் எப்போதும் ஒரு பொருளை அடைய செயல்படுகிறார்கள். விடுதலை வேட்கை தூண்டியதால் பொருள் மீது நாட்டமா  அல்லது பொருள் மீது கொண்ட பற்றால் விடுதலை மீது வேட்கையா. இந்த இரண்டும் ஒன்று தானா இல்லை வெவ்வேறா? லீலாவின் பொருள் பற்றும் ‘நஞ்சு’வின் காதல்/காம பற்றும் அவ்வாறே என்னால் காண முடிகிறது.

லீலாவின் சோகத்தைக் கேட்டு உரப்பன் வருந்தியது அவளின் உண்மையான கஷ்டங்களை எண்ணி என்பதைவிட , அவன் அவள் துன்பத்துக்கு தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற தன்னிரக்கத்தாலே அதிகம் வருந்தினான். அதனாலே அவள் நாடகம் தெரிய ஆரம்பித்தபின் அவன் தன் இயலாமையிடம் விடுதலை அடைந்து, உதட்டில் ஒரு பும்முறுவல் பூத்தான்.  இது ஒரு ஆழ்மன நாடகம் என்றே எனக்குப்படுகிறது. இரு மனங்கள் தாங்கள் பேசி உறவாட சில செயல்களை அது நம்மேல் தன்னிச்சையாக செய்ய வைக்கிறதோ.

‘நஞ்சு’ காரில் விசும்பியதை ஒரு நாடகம் என்றும் அதற்குள் தான் ஒரு கதாபாத்திரம் என்றும் உணர்ந்த அவன், அவள் மேல் தீராக்  கோபம் கொண்டதும், அவளின் நினைவு அடிக்கடி வந்து சென்றதும், அவளை மறுபடியும் எதேச்சயாக  பார்க்க நேர்ந்து, அவளை துரத்தி அவன் தன் சந்தேகத்தை கேட்டு தெரிந்து முடித்து, அவளை தொட்டதும் அவள் தன் மார்மீது விழுந்ததும் ஒரு தற்செயலா. இல்லை ஆழ் மனக்கனவா.  அந்த கனவு நடந்ததனால் தன் எண்ணத்தை அவன் உணர்ந்து திரும்பி சென்றானா. இதில் யார் நஞ்சு?

மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடாக தினம் வரும் ஒவ்வொரு சிறுகதையும் ஒரு கலை பொக்கிஷமாகவே நான் உணர்கிறேன்.

அன்புடன்,

பிரவின்.

***

நஞ்சு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

காக்காய்ப்பொன் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். என்ன கதை என்று என் தங்கை கேட்டாள். கதையைச் சொன்னேன். அதன்பின் பேச ஆரம்பித்தோம். கதையில் நடக்கும் விவாதப்பகுதியை சொல்லவில்லை. ஆனால் பேசப்பேச அந்த விவாதப்பகுதி தானாகவே மேலே எழுந்து வந்தது.

அந்த விவாதப்பகுதிதான் கதையின் மையம் என்று தெரிந்தது. ஒரு வித்தியாசமான நடத்தை கதையில் இருக்கிறது. அது ஏன் என்பதுதான் கதை. அதை பறவைகளின் இயல்பு – மனிதனின் அப்செசன் என்று முடித்துவிடலாம். அதன்மேல் அத்தனை ஸ்பிரிச்சுவலான கேள்விகளை எழுப்பிக்கொள்ளும்போதுதான் அதற்கு அர்த்தமே வருகிறது

ஸ்ரீராம்

***

வணக்கம் ஜெ

காக்காய் பொன் சிறுகதையை வாசித்தேன். இந்தக் கதையை இருவகையில் புரிந்து கொள்ள முடிகிறது. முதலாவதாக, காக்காய் ஒட்டுமொத்த மனிதத்திரளின் ஒருபகுதியாகவே சதானந்தரைக் காண்கிறது. பொன்மணியும் அலுமினிய மணியும் அதன் பார்வையில் ஒன்றே. மற்றொன்று கனிந்த தவத்தை நோக்கியே மின்னுகின்றவற்றைக் காகம் போடுகிறது போலும்.

அரவின் குமார்

***

தொடர்புடைய பதிவுகள்

முத்தங்கள் [சிறுகதை]

$
0
0

ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துத்தான் செய்தான் மூக்கன். அவனுக்கு அது பதினெட்டு ஆண்டுகால பழக்கமும்கூட. ஆனால் ஒன்றே ஒன்று தவறிவிட்டது. அது மொத்தமாக எல்லாவற்றையும் குலைத்துவிட்டது.

அதை அவனுக்கு கூத்துச் சொல்லிக்கொடுத்த வாத்தியார் மருதப்பிள்ளை பலமுறை சொல்லியிருக்கிறார்.எல்லாம் சரியாக அமைந்துவிட்டது என்று ரொம்ப துள்ளக்கூடாது, சாயம்பூசியதும் பாட்டு மறந்துவிடும்.பெரிய பெரிய வாத்தியார்கள் எல்லாம் கூத்துமேடையில் கல்லடி வாங்கியதுண்டு.

திருட்டு இன்னும் பெரிய கூத்து.எல்லாம் மிகமிகச் சரியாக அமைந்துவிட்டால் சங்கிலிக்கருப்பு உள்ளே புகுந்து புறவாசலை திறந்து வைத்துவிடும். அதற்கு எல்லாம் ஒரு விளையாட்டு. ஒருத்தன் மாட்டிக்கொண்டு வேல்கம்பால் குத்துபட்டோ, கல்லால் அடிபட்டோ செத்துவிட்டான் என்றால் பரிவாரங்களில் ஒன்று கூடுகிறது, அவ்வளவுதானே?

மூக்கன் எப்போதுமே தனியாகத்தான் செல்வான். சைக்கிளைக் கொண்டு சென்று பொட்டலுக்குள் வாகான புதருக்குள் ஒளித்துப் வைப்பான். மேலே உடைமுள் கற்றைகளை தூக்கி போட்டுவிட்டால் இருட்டில் எவரும் பார்க்கமுடியாது. அதன்மேல் வந்து கால்முட்டிக் கொள்ளவும் வாய்ப்பில்லை.

அதைவிட கிணற்றுக்குள் முதல் படியில் வைத்து கயிற்றில் கட்டி முனையை இழுத்து வெளியே புதரில் பிணைத்து வைத்தால் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தாலொழிய சைக்கிளைக் கண்டுபிடிக்க முடியாது. இரவில் கிணற்றுக்குள் எட்டிப்பார்ப்பவர்கள் யார்? சைக்கிளில் பாலிதீன் கவரும் சாக்கும் இருக்கும். வேட்டியும் மாற்றுச்சட்டையும் வைத்திருப்பான். குடிநீரும் இருக்கும்.

அப்படியே நழுவி நடந்து ஆட்டுப்பட்டியருகே வருவான். பொதுவாக இரவில் எழுந்து நடப்பதில்லை. பொட்டல்காடுகளில் உடைமுட்புதர்கள் ஆளுயரத்திற்கு எல்லாம் எழுவதில்லை. அவற்றுக்குமேல் தலை எழுந்து நடப்பவனை அரைகிலோமீட்டருக்கு அப்பால் பார்க்க முடியும். கையூன்றிச் சென்றால் எட்டடிக்கு அப்பால்கூட தெரியாது. விலங்குகள் கூட உயரமில்லாமல் வருபவனை கண்டு எச்சரிக்கை ஓசை அளிப்பதில்லை. சிலசமயம் மனிதர்களேகூட அவனை கண்டு என்னமோ என்று இயல்பாக விலகிச் சென்றதுண்டு.

மூக்கன் கால்களுக்கு டயர் செருப்பு அணிந்திருந்தான். கைகளுக்கும் எருமைத் தோலால் உறை தைத்து வைத்திருந்தான். குலுங்கும் பொருட்கள் ஏதுமில்லை. பைசாக்களைக் கூட வைத்துக் கொள்வதில்லை. இடையில் ஒரு தண்ணீர்ப்பை. அது ஃபுட்பாலின் இன்னர்பலூன். அதில் நீர் நிறைத்து கார்க்கால் மூடி வைத்திருப்பான். குடிக்கக் குடிக்கச் சுருங்கும். குடித்தபின் சுருக்கி பைக்குள் போட்டுக்கொள்ள முடியும்.

ஏற்கனவே எல்லாம் கணக்கிட்டிருந்தாலும்கூட ஒவ்வொருமுறையும் மீண்டும் காற்றோட்டத்தை கணக்கிடவேண்டும். மூக்கன் நாக்கை நீட்டி எந்தப் பக்கம் எச்சில் குளிர்கிறது என்று வைத்து காற்றை கண்டுபிடிப்பான். வருகாற்றில்தான் எந்த இடத்தை நோக்கியும் செல்லவேண்டும். அணுகும் வரை வாசனையை அறியமுடியாது.

அதன்பிறகு தன் பையில் இருந்து பொடித்த ஆட்டுப்புழுக்கைகளை எடுத்து நீரூற்றி கரைத்து கைகளிலும் சட்டைக்குமேலும் பூசிக்கொள்வான். ஆனால் அது கிடாவின் புழுக்கையாகவோ குட்டி ஆட்டின் புழுக்கையாகவோ இருக்கக்கூடாது. கிடா என்றால் பட்டிக்கிடா உறுமத் தொடங்கும். குட்டி என்றால் அத்தனை தாய்ஆடுகளும் கூச்சலிடும். சாதாரண ஆடு என்றால் மெல்ல கனைத்துவிட்டு அடங்கிவிடும்.

பட்டியை அடைந்ததும் தொலைவிலேயே எந்த ஆடு என மூக்கன் முடிவு செய்துவிடுவான். பெரும்பாலும் முதிய ஆடு. அதுதான் துள்ளாது. பெரும்பாலும் அதுதான் பட்டிச்சுவருக்கு அருகே நின்று வெளியே மூக்கை நீட்டிக்கொண்டிருக்கும்.

அதிக நேரம் இல்லை. கிடைப்பது ஐந்துநிமிடம், அதைவிடக் குறைவு. பையில் இருந்து கருவாட்டுப் பொடியுடன் கலந்து உருட்டி உலரவைத்த மைதாமாவு உருண்டையை தூக்கி பட்டி நாயின் அருகே வீசுவான். ஏற்கனவே அது அணுகும் மணத்தைப் பெற்று, ஆனால் ஆட்டுவாடை என்பதனால் குழம்பி, மூக்கை நீட்டிக்கொண்டிருக்கும். அதன் செவி மடங்கிக்கொண்டே இருக்கும். அது எழுந்து முகர்ந்து பார்த்து கவ்வி கடிக்கத் தொடங்கும். உடைத்து விழுங்கியதும் சற்று அப்பால் ஒன்றை வீசுவான். நாய் அதை நோக்கி ஓடியதும் சட்டென்று பட்டி நோக்கிப் பாய்வான்.

மூக்கன் அச்செயலை முந்நூறுமுறைக்கு மேல் செய்திருக்கிறான். ஆயிரம் முறையாவது சும்மா செய்து பார்த்து பயிற்சி எடுத்திருக்கிறான். ஆனாலும் அது ஒரு கணநேர பதற்றம்தான். கையில் நைலான் கயிற்றுடன் பாய்ந்துசென்று ஆட்டின் கழுத்தில் அதை போட்டு ஒரே இறுக்காக இறுக்கி காலால் அதன் கழுத்தை மிதித்து மறுபக்கமாக தள்ளி உடைத்து மடிப்பான். ஓசையே இருக்காது. உள்ளே எலும்பு முறியும் ஓசை கேட்கும்.

அது கால்கள் அதிர துள்ளிக் கொண்டிருக்கையிலேயே தூக்கி கழுத்தின்மேல் காவடியாகப் போட்டபடி குனிந்து புதர்களின் வழியாக ஓடுவான். பிரமித்து நின்ற ஆடுகள் அதன்பிறகே கலைந்து கூச்சலிடத் தொடங்கும். பட்டிநாய் திரும்பி வந்து முகர்ந்து பார்த்து குரைக்கத் தொடங்கும். தூங்குபவர்கள் எழுந்து டார்ச் அடித்து பார்ப்பார்கள். அதற்குள் முடிந்தவரை ஓடிவிடவேண்டும்.

எங்கும் நிற்கமுடியாது. ஆனால் சுழன்றுவரும் டார்ச்சின் ஒளி மேலே படுவதற்கு முன் உறைந்துவிடவேண்டும். தொலைவில் சுழலும் டார்ச் ஒளிவட்டத்தால் அசைவுகளைத்தான் கண்டுபிடிக்கமுடியும். அவன் நீலநிற நிஜார் மட்டும்தான் அணிந்திருப்பான். அவன்மேல் ஒளி கடந்துசெல்லும்

சைக்கிளை அணுகி அதன்மேல் ஆட்டை வைத்து கட்டி ஏறி அமர்ந்து மிதித்து முடிந்தவரை விலகிச்செல்வான். முடிந்தவரை என்றால் மிக அருகே ஒரு சாலை வரும் வரை. அருகிலேயே பள்ளமான ஓர் இடத்தில் இறங்கி சைக்கிளில் இருந்து ஆட்டை இறக்கி கால்களையும் தலையையும் குடலையும் வெட்டி வீசி இறைச்சி முண்டத்தை அப்படியே பாலிதீன் கவரில் நுழைத்து அதை சாக்குக்குள் போட்டு கட்டி கைகால்களில் ரத்தத்தை மண்ணாலும் நீராலும் துடைத்த பிறகு சாலையில் நுழைந்து சாதாரணமாக ஓட்டிப்போவான். ஆட்டை தேடி வந்தவர்கள்கூட அவனை கடந்துசென்றிருக்கிறார்கள்

அன்று சங்கிலிக் கருப்பு விளையாடிவிட்டது. அவன் ஆட்டைநோக்கி பாய்ந்த கணம் இன்னொரு நாய் தொலைவிலிருந்து குரைத்தபடி வந்து அவனைக் கவ்விக்கொண்டது. அது பட்டிநாய் அல்ல, தெருநாய். அந்தப்பக்கம் அது நின்றிருந்ததை அவன் கவனிக்கவே இல்லை. இன்னொரு நாய் இருந்தால் அதை பட்டிநாயின் பழக்க வழக்கத்தில் இருந்தே அவன் ஊகித்திருப்பான். அந்தப் பட்டிநாய் தெருநாயை பொருட்டாகவே நினைக்கவில்லை. தெருநாய் தன்னை பட்டிநாயாகவே நினைத்துக்கொண்டிருந்தது.

அவன் நாயை உதறிவிட்டு திரும்புவதற்குள் பட்டிநாயும் ஓடிவந்து பற்றிக்கொண்டது. இரண்டு நாய்களை உதறிவிட்டு அவன் ஓடத் தொடங்குவதற்குள் அங்கிருந்த அனைவரும் எழுந்துவிட்டனர். நாலைந்து டார்ச் ஒலிகள் அவன் மேல் விழுந்தன. அவன் நாய்களை தூக்கி வீசிவிட்டு வெறிகொண்டவன் போல ஓடினான்.

“ஏலே மாணிக்கம், லெஃப்டுலே போலே… லெஃப்டு! லெஃப்டு!”

“ஒத்த ஆளுதான்லே”

“கையிலே என்னலே வச்சிருக்கான்!?”

கூச்சல்கள், காலடியோசைகள். அவன் எதையும் எண்ணாமல் வாயால் மூச்சுவிட்டபடி உடலெங்கும் வியர்வை தீயாக பற்றி எரிய ஓடினான். நாய்கள் குரைத்தபடி ஓடிவரும் ஓசை கேட்டது. நாய்கள் வந்தால் ஓடி தப்பவே முடியாது.

சைக்கிள் இருந்த திசை ஏது என்றே தெரியவில்லை. சைக்கிள் இருந்த இடத்திற்கு நேர் எதிராக வந்துவிட்டது போலிருந்தது. அவன் ஓட்டத்தின் விசை குறைந்தது. ஆனால் நேர் எதிரில் நாய்களின் குரைப்போசை. அங்கே ஓர் ஊர் இருக்கக்கூடும்.

அவன் திரும்பி இன்னொரு திசையில் ஓடினான். தரை முழுக்க முள். அவனுடைய செருப்புகள் அதற்குள் உருவித் தெறித்துவிட்டிருந்தன. கால் முழுக்க கல்லும் முள்ளும் கிழித்து விட்டிருந்தன. உடலெங்கும் உடைமுள் அறைந்து கீறிய எரிச்சல்.

சட்டென்று என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவன் அடிவயிற்றில் ஓர் விதிர்ப்பு, ஒரு குளிர். அவன் கனவில் எங்கோ சென்றுகொண்டிருப்பதாக உணர்ந்தான். அல்லது விழுந்துகொண்டிருப்பதாக. தன் குடிலுக்குள் படுத்திருந்தான். பாண்டியம்மாளும் குழந்தைகளும் அப்பால் தூங்கிக்கொண்டிருந்தனர். வெளியே நாய்களின் குரைப்போசை.

அவன் “ஏளா நாய்லா குரைக்குது?” என்றான்.

“போயிப் பாருங்க… சும்மா” என்றாள் பாண்டியம்மாள்.

அவன் ஒரு சிறிய அறைக்குள் இருந்தான். “ஏளா கதவை ஏன் மூடிவச்சிருக்கே?”

ஆனால் அந்த அறைக்குள் எவருமில்லை. சன்னல்கள் கதவுகள் எல்லாமே மூடியிருந்தன. இருட்டான அறை.

“ஏளா கதவ தெறடி”

அவன் குரலை எவரும் கேட்கவில்லை. இருட்டு அவனைச் சூழ்ந்திருந்தது. அவன் தூக்கத்தில் ஆழ்ந்தான். மணல் சரிந்து சரிந்து விழுந்து மூடுவதுபோல. புதைந்து புதைந்து அமிழ்ந்து போனான்.

அவன் விழித்துக்கொண்டபோது அந்த இடம் சற்று வெளிச்சமாக இருந்தது. ஒருகணம் என்ன ஏது என்று புரியாமல் திகைத்தபின் அவன் எழுந்து நின்றான். தள்ளாடி திரும்ப விழுந்துவிட்டான். அமர்ந்தபடியே அந்த இடத்தை சுற்றிலும் பார்த்தான். மிகமேலே வெளிச்சம் தெரிந்தது. அது கசிந்து உள்ளே பரவியிருந்தது. அது ஒரு கிணறு.

கமலை இறைக்கும் அகன்ற கிணறு அல்ல. குடிநீர்க் கிணறு. மிக ஆழமானது. ஐம்பது அறுபது அடி ஆழம் இருக்கும். பத்தடி விட்டமுள்ள வட்டம். நல்ல உறுதியான சொறிக்கல் பாறையாலானது. சுத்தமாக நீரே இல்லை. ஆனால் பற்பல ஆண்டுகளாக உள்ளே விழுந்த சருகும் செத்தையும் மட்கி ஒரு மெத்தை உருவாகியிருந்தது. அவன் அதன்மேல்தான் விழுந்திருந்தான்.

தாவிச் செல்கையில் நடுக்கிணற்றில் உள்ளே விழுந்தமையால் எங்கும் உரசாமல் நேராக அடியாழத்திற்கு வந்து விட்டிருந்தான். கிணற்றின் மேலே விளிம்பில் ஓரிரு உடைமுட்களின் கிளைகள் தெரிந்தன. மற்றபடி மேலிருந்து கீழே வரை ஒரே செம்மண்நிறமான பாறைதான்

நீரில்லாமல் நெடுங்காலத்திற்கு முன்னரே அந்தக் கிணறு கைவிடப்பட்டிருக்கவேண்டும். உள்ளே ஏராளமான எலும்புகள் கிடந்தன. பெரும்பாலும் நாய்களின் எலும்புகள், மண்டையோடுகள். ஒரு பசுவின் கொம்பும் மண்டையோடும் பாதி புதைந்து கிடந்தது. முதலில் மீன்முட்கள் என்று தோன்றியவை பாம்பின் எலும்புக்கூடுகள்.  அவன் காலால் நீக்கிப் பார்த்தான். பாம்பு எப்படி உள்ளே விழ முடியும்? அது ஊர்ந்து செல்லும் உயிர். எப்படி அந்த ஆழத்தை அது அறியாமல் போயிருக்கும்?. எதையாவது பிடிக்க உட்சுவரில் இறங்கியிருக்கும். பிடிப்பில்லாமல் உள்ளே சரிந்து உதிர்ந்திருக்கும்

நாய்கள் உள்ளே விழுந்திருந்தால் கடுமையாக குரைத்திருக்கும். குரல் மேலே கேட்டிருக்காது. அப்படியானால் மிகமிக உயரத்தில் இருக்கிறது நிலம். ஓசை அங்கே செல்லாது. சுற்றிலும் மனிதர்கள் வராத பொட்டல்காடு இருக்கலாம். வரும் வழியிலேயே வெறும் உருளைப்பாறைகளும் கூழாங்கற்களுமாகவே இருந்ததை அவன் நினைவுகூர்ந்தான். அப்படியென்றால் ஆடு கடிக்கவும் அங்கே ஏதும் இருக்காது.

ஆனால் பசு உள்ளே விழுந்திருக்கிறது. பசுவை அப்படி விட்டுவிட மாட்டார்கள். அது இரவில் கட்டு அவிழ்த்துக்கொண்டு வந்திருக்கலாம். ஆனாலும் காலடித்தடங்களை தேடி வருவார்கள். மிக எளிதாக கிணறுவரை வந்துவிடலாம். எப்படி விட்டார்கள்? காலடிகளும் பதியாத கடும்பொற்றை நிலமா கிணற்றைச் சூழ்திருக்கிறது?

அவன் மேலே பார்த்து “அய்யா! கூ! அய்யா!” என்று அழைத்தான். ஓசை மேலே செல்லாது என்று தெரிந்தும் அவ்வாறு அழைக்காமலிருக்க முடியவில்லை. பலமுறை கூவியபிறகுதான். அது தொண்டையை வரளச்செய்துவிடும் என்று உணர்ந்தான். சீழ்க்கை அடிப்பது தொண்டையை உடைக்காது. ஓசை நெடுந்தொலைவுக்குச் செல்லும். மேலும் இடையர்களின் செவிகளை சீழ்க்கை நன்றாகச் சென்றடையும். அவனுக்கு இடையர்களின் சீழ்க்கைமொழியும் தெரியும்.

அவன் சீழ்க்கை அடித்துக் கொண்டே இருந்தான். இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தான். பின்னர் களைத்து அமர்ந்து கொண்டான். பசியும் தாகமும் கூடிக்கூடி வந்தன. அங்கே ஏதாவது உண்பதற்கு கிடைக்குமா என்று பார்த்தான். வெறும் செத்தை, மொட்டைப் பாறையாலான கிணற்றுச்சுவர் வளைவு. நீர் ஒரு துளிகூட இல்லை. ஒரு பச்சிலைகூட இல்லை.

அவன் அப்படியே சாய்ந்து அமர்ந்து சற்றே கண்ணயர்ந்தான். எப்படி அவ்வளவு ஆழ்ந்து உறங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. பின்னிரவில் விழித்துக்கொண்டான். தாகத்தால்தான் விழிப்பு வந்தது என்று அப்போதுதான் புரிந்தது. நாக்கால் உதடுகளை நக்கி கொண்டு எழுந்து நின்று பார்த்தான். ஆழ்ந்த இருட்டு. வெளியே சீவிடுகளின் ஓசை. காற்று ஓடும் ஓசை.

பொட்டலில் இரவுகளில் ஓசை நெடுந்தொலைவுக்கு கேட்கும். அவன் சீழ்க்கை அடிக்க முயன்றான். ஓசை எழவில்லை. நாக்கு மிகவும் வரண்டிருந்தது. ஏதாவது குழல் கிடைத்தால் அதைக்கொண்டு ஓசை எழுப்பமுடியும். இயல்பான மூச்சே அதற்குப் போதும், நெஞ்சுக்காற்று தேவையில்லை. கீழே உற்றுநோக்கி துழாவினான். ஒரு எலும்பு கிடைத்தது. சாண் அளவு பெரியது. ஆட்டின் முழங்காலாக இருக்கலாம்

அவன் அதை சுவரில் தட்டி உள்ளே இருந்த மண்ணை உதிர்த்தான். ஊதி உள்ளிருந்து புழுதியை வெளியேற்றினான். பின்னர் வாயில் வைத்து விசில் ஓசையை எழுப்பினான். கூரிய ஓசை, அவன் செவிகளையே கிழிக்கும் அளவுக்கு ஒலித்தது.

மீண்டும் மீண்டும் ஊதிக்கொண்டிருந்தான். எந்த எதிர்வினையும் எழவில்லை. ஆனால் அப்படிச் சொல்லமுடியாது. சிலர் அந்த ஓசையை கேட்டிருப்பார்கள். காலையில் எழுந்ததும் அது என்ன என்று தேடுவார்கள். சிலர் தேடிவரக்கூடும். காலையில் மீண்டும் அதை ஊதவேண்டும். விடியற்காலையில். பறவைச் சத்தங்கள் எழுவதற்கு முன்பு. பிறகு மக்கள் ஆடுமாடு மேய்க்க கிளம்பி பின்பு. நாளையே எவராவது கவனிக்கவேண்டும். இல்லாவிட்டால் மயங்கிவிடுவான்.

தாகம்தான் கொல்லப்போகிறது. அந்த குழியின் சுவர்களில் கந்தகம் இருக்கிறது. சுண்ணாம்பும் உண்டு. வெயிலில் உள்ளே வெக்கை நிறைந்திருக்கும். உடலில் தண்ணீர் முழுக்க வெளியேறிவிடும். தாகத்தால் நினைவழிந்துவிட்டால் அப்படியே உயிர்பிரியக்கூடும்.

அவன் கால்களை நீட்டிக்கொண்டு சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான். ஆழ்ந்து தூங்கிவிட்டான். கனவில் அவன் அருகே ஒரு பெண் அமர்ந்திருந்தாள். கன்னங்கரேலென்ற நிறம். வெண்விழிகளும் பற்களும் மட்டும் பளிச்சிட்டு தெரிந்தன. ஆனால் காக்காய் அலகின் மினுமினுப்பு கொண்ட உடல். வட்டமான சிறிய முகம், சிறிய மூக்கு, மேலுதடு சற்றே எழுந்த குவிந்த வாய். மெலிந்த கழுத்து. சிறிய மார்பகங்கள். இளநீலநிறத்தில் சேலை அணிந்திருந்தாள். காதோரம் சுருள்மயிர்கள் காற்றிலாடின.

அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். குழிக்குள் அமர்ந்திருக்கிறேன். இவள் எப்படி உள்ளே வந்தாள்? இவளும் உள்ளே விழுந்துவிட்டாளா? இரவில் வழிதவறி அலைந்தபோது விழுந்திருப்பாள். அல்லது காதலனை தேடிவந்திருக்கலாம். அல்லது தற்கொலைக்காக குதித்திருக்கலாம்.ஆனால் சத்தமேதும் கேட்கவில்லை.

இல்லை, இது கனவு. கனவுக்குள் வந்திருக்கிறாள். இப்போது நான் கண்களை திறப்பேன். இந்த சிறிய கிணற்றுக்குள் அமர்ந்திருப்பேன். இருட்டுக்குள். தன்னந்தனியாக. மட்கிய சருகுகளும் எலும்புகளும் நிறைந்த மெத்தைக்குமேல். அவன் கண்களை திறந்தான். நெஞ்சு திடுக்கிட்டது, அவள் அவன்முன் அப்படியே அமர்ந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் கண்களை மூடினான். அப்போதும் அப்படியேதான் இருந்தாள். கண்களை திறந்தான். அப்போதும் எந்த மாறுதலும் இல்லை. அவன் தன் உடலை அசைத்தான். கையை கிணற்றின் சுவரில் வைத்து அறைந்துகொண்டான். வலித்தது. எழுந்து நின்றான். அவள் உருவம் கலையவில்லை. அவள் கண்கள் அவன்மேலெயே பதிந்திருந்தன.

“யாரு?” என்றான்.

“வேலாள்” என்று அவள் சொன்னாள்.

உண்மையாகவே பேசுகிறாள். கனவு அல்ல, பேசுகிறாள்.

“நீ யாரு? இங்க என்ன பண்ணிட்டிருக்கே?”

“நான் இங்க இருக்கேன்”

“இங்கேயா? இதுக்குள்ளேயா?”

“ஆமா” என்று அவள் சொன்னாள். “நீ உள்ளே விழுறதைப் பாத்தேன். அப்றம் நீதான் எலும்பை எடுத்து ஊதி என்னை கூப்பிட்டே”

அவன் பெருமூச்சுவிட்டான். பிறகு மெல்ல அமர்ந்துகொண்டான். “சரியான தாகம். சாவுற மாதிரி இருக்கு. அதான் நீ தெரியறே….” என்றான்.

“அப்படியா தோணுது?”

“ஆமா, நான் திருடன். பேயை நம்பினா அப்றம் நான் இருட்டிலே வெளிய நடமாடவே முடியாது”.

“நான் பேய் இல்லை, வேலாள்”.

“அப்டி ஒரு பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லியே”.

“இல்லியா? ஏன்?” என்றாள்.

“இதுக்குள்ள நீ எப்ப வந்தே?” என்று அவன் கேட்டான்.

“நேத்து”.

“நேத்தா?”

“ஆமா…” அவள் அழகாக கண்களை உருட்டி யோசித்து “முகிலனுங்க வந்தாங்களே அப்ப”.

“முகிலனுங்களா? எப்டி இருப்பானுக?”.

“தாடி வச்சிருப்பாங்க. சிவப்பா பெரிய தாடி. பெரீய குதிரைமேலே வருவாங்க. நீளமா வாளும் தொரட்டி மாதிரி ரொம்ப நீளமான ஈட்டியும் வச்சிருப்பாங்க. காலிலே இரும்பு அடிச்ச சப்பாத்து. கையிலே தோலுறை. குதிரையிலேயே ரொம்பதூரம் வருவாங்க. குதிரையிலேயே தூங்குவாங்க. குதிரையோட ரெண்டுபக்கமும் சாப்பாடும் தண்ணீரும் வச்சிருப்பாங்க” என்றாள். “ஆனா அவங்களை நான் பார்த்ததே இல்லை. என் அச்சம்மாதான் சொன்னாள்”.

“அச்சம்மான்னா?”

“அப்பாவோட அம்மா.. கிழவி” அவள் சிரித்து “காதிலே பெரிய பாம்படம் போட்டிருப்பா. கூனிக்கூடி உக்காந்திருக்கிறப்ப அது அவ தோளிலே படிஞ்சிருக்கும்”

“அப்பன்னா ரொம்ப காலம் ஆச்சு…. நீ சொல்றதை வச்சுப் பாத்தா முந்நூறு வருசம் முன்னாடி” என்றான். “இந்தக் கிணறு அம்புட்டு பழசா என்ன?”

“இது வீரசோழியன் சத்திரத்து கிணறு” என்று அவள் சொன்னாள். “இது ஒரு கரட்டுப் பொத்தை. இங்கே இப்படி ஒரு கிணத்தை பழையகால சோழராஜாக்கள் தோண்டியிருக்காங்க. இது பக்கத்திலே ஒரு கல்மண்டபம் இருந்தது. அதுதான் சத்திரம். சோழராஜாக்களோட காலத்திலே வண்டியெல்லாம் இந்த வழியாத்தான் போகும். தூரத்திலேயே தெரியறதுக்காகத்தான் பொத்தைமேலே சத்திரத்தை கட்டியிருக்காங்க”,

“சத்திரம் இங்கே இருந்திச்சா என்ன?”

“இல்லை, மங்கம்மா ராணி பெரிய பாதை போட்டதும் இந்த வழி மறைஞ்சுபோச்சு. மண்டபம் மட்டும் இருந்திச்சு. நான் சின்னவயசிலே பாத்திருக்கேன். இங்கே தண்ணி நல்ல ருசியா இருக்கும். இந்த பொட்டக்கருக்கல் முழுக்க உப்புத்தண்ணிதான். இங்கே மட்டும் தண்ணி நல்ல நெல்லிச்சாறு மாதிரி இனிக்கும்… ரொம்பதூரத்தில் இருந்து பெண்கள்ளாம் இங்க தண்ணீர் பிடிக்க வருவாங்க. நான் சின்னக் குழந்தையா இருக்கிறப்ப வேலைக்காரி இடுப்பிலே உக்காந்துட்டு ஒரு வாட்டி வந்திருக்கேன். அப்ப இந்த கிணத்தைச் சுத்தி காக்கா மொய்ச்சுக்கிட்டது மாதிரி ஒரே சந்தடியா இருக்கும்”.

அவன் அவள் முகத்தை பார்த்தான். அழகான பெண். மிகமிக கனிவானவள். குழந்தை போல. பதினெட்டு வயது இருக்கலாம். அதைவிட குறைவாகவே முகம் காட்டியது. “நீ எதுக்கு உள்ள குதிச்சே?”

“நான் குதிக்கலியே”.

“தவறி விழுந்திட்டியா?”

“இல்ல, ரொம்பநாளா முகிலப்படை வருதுன்னு ஒரே பயமா இருந்திச்சு. ஊரிலே இருந்து ஜனங்கள்லாம் மூட்டைய கட்டிட்டு மலையாளக்கரைப் பக்கமா போய்ட்டிருந்தாங்க. நாங்களும் போயிடவேண்டியதுதான்னு சொல்லிட்டே இருந்தாங்க. ஆனா காடுகரை வீடு எல்லாமே இங்கதான். பெரிய குடும்பம். எட்டு ஊரு எங்களுக்கு கட்டுப்பட்டது. பத்தாயத்து நெல்லு அறையிலே பொன்னு எல்லாம் இருக்கு. எல்லாத்தையும் விட்டுட்டு எப்டி போறது? எல்லாரையும் கூட்டிட்டு போகமுடியுமா? எம்பிடு வண்டி இருக்கு. வழியிலே கள்ளன் வந்தா என்ன காவல்? என்னென்னமோ பேசிட்டே இருந்தாங்க. நான்லாம் அதை கவனிக்காம சின்னப்புள்ளைங்க கூட வெளையாடிட்டு இருந்தேன்”.

“அப்பதான் நடுராத்திரியிலே என்னை எழுப்பினாங்க. அம்மா எங்கிட்ட குளிச்சுட்டு வான்னு சொன்னா. ஊரைவிட்டுத்தான் கெளம்பப் போறோம்னு நினைச்சு நான் உற்சாகமா போயி குளிச்சேன். நல்ல புடவை கட்டி நகை போட்டுக்கச் சொன்னாங்க. எங்க சித்தப்பா வந்து பாப்பா, முகிலனுங்க திருணவேலி வரை வந்தாச்சு, இங்க வந்திருவாங்க, உன்னைய ஒரு எடத்திலே ஒளிச்சு வைக்குதோம், வான்னு சொன்னாரு. எங்க அம்மா அம்மாச்சி அச்சம்மா எல்லாம் அழுதாங்க… கும்பிட்டுக்கோ தாயீன்னு சித்தப்பா சொன்னாரு. நான் எல்லாரையும் கும்பிட்டுகிட்டேன். கையிலே ஒரு சின்ன அகல்வெளக்கை குடுத்தாங்க. அதிலே சுடர் அணையாம பொத்திக் கொண்டுவான்னு சொன்னாங்க. நான் கையாலே பொத்திகிட்டு மெதுவா காலெடுத்து நடந்து வந்தேன்”.

“எங்க அப்பா சித்தப்பா தாய்மாமா மூணுபேருமா என்னைய கூட்டிட்டு இங்க வந்தாங்க. இந்த எடத்துக்கு வந்ததும் அப்பா கெணத்துச் சுவருமேலே ஏறி தீபத்தை உள்ள விட்டுருடீன்னு சொன்னாரு. நான் உள்ள போடுறதுக்குள்ள அப்பா என்னை பின்னாலே பிடிச்சு உந்தி தள்ளிட்டாரு. நான் தலைகீழா உள்ள விழுந்தேன். எனக்கு முன்னாலே அந்த சுடர் அப்டியே கீழே போயிட்டிருந்தது”

அவள் வாய்பொத்தி சிரித்து “நான் அந்த தீபத்தை பிடிக்க கைநீட்டினேன். பிடிக்கவே முடியல்லை… அது அப்டியே ஆழமா போய்ட்டே இருந்தது. நான் இங்க நின்னுட்டேன்”.

“அதிலே இருந்து உள்ளதான் இருக்கிறியா?”

“ஆமா, ஏன்?”

“வெளியே போகமுடியாது, இல்ல?”

“போகலாமே”.

“அப்ப ஏன் போகலை?”

“ஏன் போகணும்?”

“வெளியே போய் பாக்கவேண்டாமா? அங்க என்னென்ன இருக்குன்னு”.

“ஆமா” என்றாள். “ஆனா அங்க என்ன இருந்தாலும் எனக்கு ஒண்ணுமே தெரியாதே…”.

“இப்ப நீ சொன்னியே, அதெல்லாம் எப்டி மாறியிருக்குன்னு பாக்கலாமே”.

“நான் எங்க வீட்டை மட்டும்தான் பாத்திருக்கேன்… அப்றம் வீட்டுத் தோட்டம்”.

“பிறவு?”

“வீடு மட்டும்தான்… மூணுவயசுக்குமேலே வீட்டைவிட்டு வெளியே வந்ததே இல்லை…”.

“ஓ” என்றான். பின்னர் சிரித்து “அப்ப  அதுவரை இருந்தது ஒரு கிணத்துக்குள்ள… அதிலே இருந்து இந்த கிணறு” என்றான்.

அவள் சிரித்து “ஆமா, எனக்கு ஒண்ணுமே வித்தியாசமா தெரியலை”

அவன் “நான் யாரு தெரியுமா?” என்றான்.

“இல்ல. யாரு?”

“பாத்தா மனுஷன் மாதிரி இருப்பேன்… ஆனால் நான் நாயாக்கும்”.

“அய்யோ!” என்றாள் “நாயா?”

“ஆமா, சாதாரண நாய் இல்லை. நாய்களிலே ஒரு கந்தர்வன். பைரவன்ன்னு பேரு”.

“பொய்யி” என்றாள்

“சத்தியமா… என்னோட மூர்த்திதான் காசி ஸ்தல்த்தோட அதிபதி. அகோர காலபைரவன்… இந்தாலே சீவைகுண்டம், சங்கரன்கோயில் எல்லா இடத்திலயும் நமக்கு சிலைகள் இருக்கு”

அவள் வியப்புடன் என்னை பார்த்து “தெரியவே இல்லை” என்றாள். கைநீட்டி என்னை தொட்டு “மனுஷ உடம்புதான்”.

“எனக்குன்னு உடம்பே கெடையாது. சூச்சும உடம்புதான். ஆனா அந்த சூச்சும உடம்போட சுபாவம் நாய்ங்கிறதனாலே நான் நாய் உடம்பிலே புகுந்துகிடுவேன். அதிலேதான் சந்தோசமா இருப்பேன். நல்லா வாலை ஆட்டிக்கிட்டு மோந்துகிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டு துரத்திப் பிடிச்சுக்கிட்டு…”

அவன் புன்னகைத்து “கார்த்திகை மாசம்னா கொண்டாட்டம்தான்… ராப்பகலா பொம்புளை நாய்களை துரத்தித் துரத்தி பிடிச்சு பொணையுததுதான். ஒருநாளுக்கு ஏளு தடவைகூட பொணைஞ்சிருக்கேன்”.

அவள் முகம் சிவந்து உதட்டை கடித்துக் கொண்டு வேறுபக்கம் பார்த்தாள். சிரிப்பை அடக்க முயன்று சட்டென்று வெடித்து சிரித்து அப்படியே மடிந்து முகத்தை கையால் மூடி மடிமேல் கவிழ்ந்து விட்டாள்.

“நாய்களிலே எது ராஜா நாயோ அதுக்குத்தான் எல்லா பெட்டைநாயும். நாம நாய்களிலே கந்தர்வன்ல? எந்த நாய் பக்கத்திலே வரமுடியும்?”

அவள் உடல் அதிர்ந்துகொண்டே இருந்தது. பின்னர் நிமிர்ந்தபோது கண்கள் நீர் கோத்திருந்தன. கருமைக்குள் அனல் ஓடியதுபோல சிவப்பு கலந்திருந்தது. பெருமூச்சு விட்டபோது சிறிய முலைக்குமிழ்கள் விம்மின. கைகளை கோத்துக்கொண்டாள். விரல்கள் பின்னிக்கொண்டே இருந்தன

“நான் உண்மையான நாய்க்குள்ளேதான் பூந்துகிட முடியும்… இருக்கிறதிலேயே நல்ல ஊக்கமான நாய்க்குள்ளே பூந்திருவேன். அந்த உடம்புக்குள்ள இருக்கிற நாயை உந்தி வெளியே தள்ளீருவேன். அது எஙகாவது செத்த நாய் கிடந்தா உள்ள நுழைஞ்சுகிடும். நான் இருக்கிற நாய் உடம்பிலே சீக்கு வந்தாலோ அடிபட்டாலோ அப்டியே இன்னொரு நாய்லே நுழைஞ்சிருவேன்” என்றான். “நாய்தான் பூமியிலேயே சந்தோசமான உசிரு தெரியுமா?”

“அப்டியா?” என்றாள்.

“பின்ன? என் கதையைச் சொல்லுதேனே. என்பேரு நாசிக ரிசி. சதுரகிரி மலைமேலே தபஸு செஞ்சிட்டிருந்தேன். ஒத்தைக்காலிலே வானத்தை நோக்கி கும்பிட்டுட்டு நிப்பேன். காலையிலே சூரியன் உதிக்கிறப்ப என் முகம் சூரியனை பாத்து வளைஞ்சு மண்ணிலே தொட்டுட்டு இருக்கும். சூரியன் மேலே போகப்போக கூடவே என் உடம்பு வளைஞ்சு தலையும் சூரியனை நேரா பாத்துட்டு இருக்கும். சாயங்காலம் நேரா மறுபக்கம் திரும்பி வளைஞ்சிருக்கும்”.

“ராத்திரியிலே?” என்று அவள் சிறு துள்ளலுடன் கேட்டாள்.

“ராத்திரியிலே அப்டியே மூஞ்சியை கால்மேலே வைச்சு சுருண்டு இறுகி ஒரு உருண்டையா ஆயிடுவேன். அப்டியே ஆயிரம் வருஷம் தவம் பண்ணினேன்”.

“ஆயிரம் வருசமா?”

“பின்ன? ரிசிகளுக்கு சாவும் மூப்பும் இல்லை பாத்துக்க”

“செரி”.

“அப்ப ஒரு இடி. ஒரு மின்னல். வானத்திலே ஒரு வெள்ளைமேகம் அப்டியே யானையா மாறி வந்தது”.

“வெள்ளையானையா?”

“ஆமா, ஐராவதம்! அதுமேலே இருக்கப்பட்டது யாரு?”

“யாரு?”

“இந்திரன்!” என்றான் “வஜ்ரகிரீடம். கையிலே வஜ்ராயுதம்… மின்னலா அடிச்சது அதோட வெளிச்சம்தான்.. கண்ணு இருக்கே கண்ணு, அது அப்டியே ரெண்டு வெளக்குச்சுடர் மாதிரி”.

“பிறகு?”

“இடிச்சத்தம். அது குரலா மாறிச்சு”

“என்ன சொல்லிச்சு?”

“இந்திரனோட சத்தம் மேகங்களிலே எதிரொலிச்சது  ‘முனிவரே, என்னை நாடி தவம்செய்பவர் குறைவு. என்னால் வீடுபேறை அளிக்கமுடியாது. ஏழுலகத்தையும் வெல்லும் வரம் அளிக்கமுடியாது. சாகாவரம் அளிக்கவும் முடியாது’ன்னு இந்திரன் சொன்னான்”.

“அய்யோ, அப்றம் என்ன கேக்கிறது?”

“நான் சொன்னேன், ‘இந்திரனே நான் தவம் செய்தது வீடுபேறுக்காகவோ உலகவெற்றிக்காகவோ சாகாமைக்காகவோ இல்லை. நான் தவம்செய்தது காதல், அன்பு, காமம் மூணையும் தெரிஞ்சுகிட்டு முழுசா அனுபவிக்கிறதுக்காக’ அப்டீன்னுட்டு…”

“யம்மா!”என்று அவள் கன்னத்தில் கைவைத்தாள்  “அதையா கேட்டே?”

“ஆமா, இந்திரனுக்கே ஆச்சரியம்.  ‘அது மட்டும்போருமா?’ அப்டீன்னு மூணுதடவை கேட்டான். எனக்கானா கடுப்பு.  ‘ஓய் எத்தனை வாட்டி சொல்றது? எனக்கு வீடுபேறும் ஏளுலகும் சாகாநிலையும் எல்லாம் மயிரு மாதிரி… நான் கேட்டதை குடுப்பேருண்ணா குடும், இல்லேன்னா நடையை கட்டும். சும்மா கெடந்து சலம்பாம’ன்னு சொல்லிட்டேன். சிரிச்சிட்டான். ‘செரி உனக்கு அருளுதேன்… சந்தோசமா இரு’ன்னு சொன்னான்”.

“வரம் கிடைச்சுதா?”

“ஆமா.” என்றான் “இந்திரன் என்னைய நாயுருவான பைரவனா ஆக்கிட்டாரு… அதுக்குப்பிறகு நான் ஆயிரம் வருசமா இப்டி நாயா இருந்திட்டிருக்கேன்.

“நாயாவா?” என்று மூக்கைச் சுளித்தாள்.

“ஏன்? யோசிச்சுப்பாரு. இந்த பூமியிலே காதல், அன்பு, காமம் மூணையும் முளுசாட்டு அனுபவிக்குதது யாரு?”

“யாரு?” என்று ரகசியமாகக் கேட்டாள்.

“நாய்!”

“அப்டியா?”

“பின்ன?” என்றான் “நாய்க்க மூக்க தொட்டுப் பாத்திருக்கியா? குளுந்து கனிஞ்ச நாகப்பளம் மாதிரி இருக்கும். அதாக்கும் காதல். நாய் மாதிரி இந்த உலகத்தை முத்தம் குடுத்திட்டே இருக்கிற வேற எந்த உசிரு இருக்கு?”

“ஆமா”.

“ஒரு நாய் ஒருநாளைக்கு எப்டியும் பத்தாயிரம் இருபதாயிரம் முத்தம் குடுத்திரும். அது பாக்கிற எல்லாத்தையும் முத்தம் குடுத்திட்டே இருக்கு. ஒரு விஷயம் என்னன்னு பாக்கணும்னா முத்தம். அது பிடிக்கலைன்னா இன்னொரு முத்தம். பிடிச்சிருந்தா முத்தத்தோட முத்தம்… நாயோட வாழ்க்கையே முத்தம் குடுக்கிறதுதான்… காதலை நாய் மாதிரி தெரிஞ்ச எந்த தெய்வம் இருக்கு? நாய் காதலிலே அப்டியே திளைச்சிட்டிருக்குல்ல?”

“உண்மைதான்… நாயை பாக்கணும்போல இருக்கு”.

“அன்பை பத்திச் சொல்றேன். இப்ப அன்புன்னா என்ன?”

“என்ன?”

“ஏட்டி கோட்டிக்காரி, அன்புன்னா அன்பை காட்டுறதுதான். காட்டுற அன்பு பத்து மடங்கா திரும்பி வருது. அதை மறுபடியும் காட்டினா மறுபடியும் பத்துமடங்கு… அன்புன்னா ஒரு நொரை மாதிரி. கலக்கக் கலக்க பெருகும். கலக்கிட்டே இருக்குதது யாரு?”

“நாயா?”

“பின்ன? நீ நாய்க்க வாலை பாத்திருக்கியா? ஆடிக்கிட்டே இருக்கும். மனசிலே அன்பை வச்சுகிட்டு அதை காட்டத்தெரியாம இருக்கானுக மனுஷனுங்க. நாய் அப்டி இல்லை. மனசிலே அன்பிருந்தா வால் டான்ஸ் ஆட ஆரம்பிச்சிரும்… அன்பு அப்டியே துள்ளிகிட்டே இருக்கும்… அத்தனை அன்பை வேற எங்க அப்டி கண்ணாலே பாத்துக்கிட முடியும்?”

அவள் பெருமூச்சுவிட்டாள். முகம் அழுவதுபோல ஆகிவிட்டது

“அப்றம் காமம்… நாய்க்குள்ள காமம் வேற எந்த உசிருக்கு இருக்கு? மனுசனெல்லாம் எங்க காமத்தை அறிஞ்சிருக்கான்? பாதிபேருக்கு பயம், மிச்சபேருக்கு வெக்கம். ரெண்டும் இல்லாதவனுக்கு சுயநலம். தோசைக்கு மாவூத்துதது மாதிரி ஊத்திட்டு போறான்… எங்கிட்டு நெறைய? அவளுக்கு நெறைஞ்சாத்தானே அவனுக்கு நெறையும்? நாயை பாரு,நாய் கொளுவிக்கிட்டுதுன்னா முச்சந்தியானாலும் மெய்மறந்து அப்டியே நின்னுட்டிருக்கும். அப்டியே ஓடும் சாடும். நிறைஞ்ச பிறவுதான் விடும்…”

அவள் மீண்டும் நாணி முகம் சிவந்து தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.

அவன் “அதனாலத்தான் இந்திரன் என்னை நாயா ஆக்கினான். எனக்கே சலிக்கிறப்ப நான் திரும்பவும் முனிவரா ஆகி சொர்க்கத்துக்குப் போலாம்னு சொன்னான். இப்ப ஆயிரம் வருசமாச்சு, சலிக்கலை. காதலிலே திளைச்சு அப்டியே அன்பிலே துள்ளி காமத்திலே மூழ்கிருவேன். மறுபடியும் காதல்… எப்ப நெறைஞ்சு எப்ப நான் திரும்பி நாசிகனா மாறுறது?”

“அப்ப ஏன் இந்த உருவம்?”

“இது ஒரு சின்ன விசயத்துக்காக எடுத்தது… நான் காட்டுவழியா போய்ட்டிருந்தப்ப ஒரு நாயை ஒருத்தன் கட்டிப்போட்டிருந்ததைப் பாத்தேன்… அது என்னைப்பாத்து பைரவன் சாமீ காப்பாத்தூன்னு கூச்சல் போட்டுது. சரி அவுத்து விட்டுடலாம்னு பக்கத்திலே போனேன். பாத்தா களவாணிப்பய பூட்டு போட்டிருக்கான். அதை நாயா இருந்து திறக்கமுடியாது. அந்தாலே ஒருத்தன் நின்னுட்டிருந்தான். அவன் உடலுக்குள்ளே பூந்து பூட்டை திறந்தேன்…”

“ஓ” என்றாள்.

“ஆனா அவன் திருடன்… நாயை அவன் அவுத்துவிட்டதும் அது அவனைப்பாத்து குரைச்சுது”.

“ஏன்?”

“அது நாய்லா? அதுக்க குணத்தை காட்டுமே”.

“பிறகு?”

“அத்தனைபேரும் எந்திரிச்சிட்டாங்க. திருடன் திருடன்னு ஒரே கூச்சல். கத்தி கம்பு கல்லுன்னு எடுத்துட்டு துரத்த ஆரம்பிச்சிட்டாங்க. நான் பைரவசாமி. திரும்ப அந்த நாயிலே ஏறிட்டாப்போரும். ஆனா அந்த திருடன் உடலை சிதைச்சிருவாங்க… பாவம் நம்மாலே அவன் அழியக்கூடாது. அதனாலே ஓடினேன். கண்ணுமண்ணு தெரியாம ஓடுறப்ப கால்தவறி இந்த கிணத்திலே விழுந்துட்டேன்”.

“நாய் உடல் அங்கே கெடக்கா?”

“ஆமா, அங்க எங்கியாம் நிக்கும்”

அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் பார்த்தபோது அவளுடைய பெரிய இமைகள் தழைந்தன.

“என்ன?” என்றான்.

“ஒண்ணுமில்லை”.

“சொல்லு”.

“ஒண்ணுமில்லை”.

“ஏய், சொல்லு”.

“ஒண்ணுமில்லைன்னு சொன்னேனே?” என்று அவள் சிடுசிடுத்தாள்.

“நான் சொல்றேனே, நீ நாயைப் பத்தி நினைச்சிட்டிருந்தே”.

“இல்லை”.

“நாய்க்காமம் பத்தி”.

“சீ!” அவள் அவனை ஓர் எலும்பை எடுத்து அடித்தாள். அவன் சிரித்தான்.

அவள் “நான் நினைச்சது வேற”.

“என்ன?”

“என்னைய யாருமே முத்தமிட்டது இல்லை”.

“யாருமேன்னா?”

“சின்னப்பிள்ளையிலே முத்தம் குடுத்திருப்பாங்க… அதுக்குப்பிறகு”.

“நாய்கிட்ட போ… ஆயிரம் முத்தம் குடுக்கும் உனக்கு”.

அவள் அவனை மின்னும் கண்களால் கூர்ந்து பார்த்தாள். அவள் மூச்சிரைப்பது கழுத்தின் அசைவில் தெரிந்தது. மூச்சொலியால் “நீ குடு” என்றாள்..

“இல்ல, இந்த உடம்பு என்னுது இல்ல… இதனாலே நான் என்னோட முத்தத்தை குடுக்கமுடியாது”.

“ஏன்?”

“அதான் பைரவ முறை… நான் நாயா மாறித்தான் முத்தம் குடுக்க முடியும்…”.

“அதுக்கு என்ன செய்யணும்?”

“நான் மேலே போகணும்… என்னோட நாய் உடம்பிலே பொருந்திக்கிடணும்” என்றான் “காதல் அன்பு காமம் எல்லாமே நாயா இருந்துதான் நான் அடையமுடியும்”

“நான் என்ன பண்ணணும்?”

“என்னை மேலே கொண்டுபோ”.

“நானா?”

“ஆமா”.

“ஆனா எனக்கு மேலே ஒண்ணுமே தெரியாதே”.

“நீ என்னைய கொண்டுபோ, நான் காட்டுறேன்”.

அவள் எழுந்து சுவரில் தொற்றி ஏறிக்கொண்டு கைநீட்டினாள். “வா” என்றாள்.

அவன் அவள் கையை பிடித்துக்கொண்டான். அவள் கை மிகமென்மையாக இருந்தது. ஆனால் அவன் உடல் எடையற்று புகைபோல் மாறிவிட்டிருந்தது.

மேலே வந்து அவன் சுற்றிலும் பார்த்தான். பாதி நிலவின் ஒளி. தொலைதூரம் வரை அலையலையாக பொட்டல் நிலம் சூழ்ந்திருந்தது. மிகத்தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் செல்லும் வெளிச்சம் செம்புள்ளிகளாக தொடர்ச்சியாக தெரிந்தது.

“எங்கே அந்த நாய்?” என்று அவள் கேட்டாள்.

“அங்கே, வா” என்று அவன் நடந்தான்.

அப்படியே ஓடிவிடவேண்டும். ஆனால் இவள் பேயுருக்கொண்டவள். இவளால் என்னை தொடர்ந்து வரமுடியும். பேய்கள் கோயில்களுக்குள் நுழையாது. ஏதாவது சங்கிலிக்கருப்பன், சுடலைமாடன், முத்தாலம்மன் ஆலயம் கண்ணுக்குப் பட்டால் ஓடிச்சென்று உள்ளே புகுந்துகொள்ளலாம். விடியும் வரை அங்கே ஒளிந்திருந்தால் போதும். வெயில் வேறு ஒரு உலகை கொண்டு வந்துவிடும். அங்கே அவன் திருடன் அல்ல. பசிவெறித்திருக்கும் கண்கள் கொண்ட இரண்டு குழந்தைகளின் தந்தை. காய்ந்து கரி போலான  உடல்கொண்ட பாண்டியம்மாள் என்ற கூலிக்காரப் பெண்ணின் கணவன்.

அவன் பார்த்துக்கொண்டே சென்றான். அவள் “எங்க போறோம்?” என்றாள்.

“நாய் ஆகணும்ல?”

அவர்கள் மேலும் நடந்தனர். “எவ்ளவு தூரம்?” என்றாள்.

“பக்கம்தான், வா”.

தொலைவில் முத்தாலம்மன் கோயில் தெரிந்தது. ஒரே ஓட்டமாக ஓடிவிடலாமா.

அவள் “ம்ம்”என்றாள்.

பனையில் காற்று உறுமுவது போன்ற அந்த ஓசையை கேட்டு அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அவள் கண்கள் மாறிவிட்டிருந்தன. முகம் அகன்று வாயில் கொடும்பற்கள் தோன்றின. கூந்தல் காய்ந்த பனையின் ஒலைப்படப்பு போல விரிந்து எழுந்தது. அவள் விரிந்து உயர்ந்து எழுந்தபடியே சென்றாள்.

அவன் சட்டென்று நிலத்தில் விழுந்து நாய் போல கைகளை ஊன்றி அவள் கால்களை முத்தமிடச் சென்றான். அவன் உடல் உடனே நாயாக ஆகிவிட்டது. வால் சுழல்வதை அவனால் உணரமுடிந்தது.

அவள் கூசி காலை விலக்கி விலக்கி சிரித்துச் துள்ளினாள். அவன் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். சிறுமியின் முகம். சிரிப்பு நிறைந்த கண்கள்.

அவன் முனகியபடி உடல்குழைத்தபடி அவள் கால்களை முத்தமுட முயன்று மூக்கை நீட்டி நீட்டி முன்னால் சென்றான். அவள் சிரித்து துள்ளி கூச்சலிட்டு பின்னால் சென்றபின் ஓடத்தொடங்கினாள்

அவன் வாலாட்டி குரைத்து துள்ளியபடி அவளைத் தொடர்ந்து சென்றான். அவள் அந்தக் கிணற்றுக்குள் சென்று மறைந்தாள். அவன் கிணற்றின் விளிம்பில் நின்று வெறிகொண்டு குரைத்து, தரையைப் பிராண்டி, வாய் தூக்கி ஊளையிட்டான்.

***

தொடர்புடைய பதிவுகள்

பித்திசைவு

$
0
0

நேற்று சட்டென்று ஒரு வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது, மொட்டை மாடியில் நடந்துகொண்டிருக்கையில் harmonious madness. படைப்பூக்கம் என்பதற்கு இதைவிடச் சிறந்த வரையறை இல்லை. கட்டற்றநிலைதான், பைத்தியம்தான். ஆனால் வடிவம் என்ற ஓர் ஒத்திசைவு, அல்லது ஒழுங்குக்கு கனவையும் மனதையும் மொழியையும் பழக்கிவைத்திருப்பதனால் அது சீராக வெளிப்படுகிறது.

வரலாறு நெடுகிலும் அந்தச் சிறுவட்டத்திற்கு வெளியே உள்ளவர்களால் அது புரிந்துகொள்ளப்பட்டதில்லை. அவர்களுக்கு படைப்பு என்பது அவர்கள் செய்வதைப்போல ஒரு செய்திறன் அல்லது சூழ்ச்சி மட்டும்தான். அதை அவர்கள் வியக்கிறார்கள். அல்லது அஞ்சுகிறார்கள். வசைபாடுகிறார்கள், ஒடுக்கமுயல்கிறார்கள், பழிப்பு காட்டுகிறார்கள். அவர்களின் உலகியல் அளவுகோல்கள் எதுவும் அதற்கு பொருந்துவதில்லை.

உலகியல் சார்ந்த நியாயங்கள் கருத்துக்கள் சித்திரங்களுக்கு அப்பால் படைப்பியக்கம் என்னும் இசைவுள்ள பித்தின் ஓயா அலைபாய்தலும் பாய்ச்சல்களும் நிகழ்கின்றன. அது மனிதகுலத்திற்கு உண்மையில் தேவையா என்பது எனக்கே தெளிவில்லை. ஆனால் அது நிகழ்ந்துகொண்டிருக்கிறது, பல ஆயிரம் ஆண்டுகளாக.

நினைத்துக்கொள்கிறேன், என் நினைவறிந்த நாளில் இருந்தே ஒழுங்கமைவுக்குள் நின்றதில்லை. பள்ளிக்கு மிகமிகக் குறைவாகவே சென்றிருக்கிறேன். பெரும்பாலும் மாடுமேய்ப்பவர்களுடன் காட்டில் அலைதல்தான். கல்லூரியில் பெரும்பாலும் நூலகம்,சினிமா, அலைதல். கல்லூரி இரண்டாம் ஆண்டிலிருந்து வெறிகொண்ட அரசியல் செயல்பாடு. இந்துப்பேரரசை அமைத்தபிறகுதான் அடுத்த வேலை என்னும் அவேசம்.

கல்லூரியின் எல்லா ஆண்டிலும் மருத்துவச் சான்றிதழ் அளித்து, மேலும் பலநூறு ரூபாய்  அபராதம் செலுத்தித்தான் தேர்வு எழுதியிருக்கிறேன். மூன்று ஆண்டுகளும் எனக்கான நுழைவுச்சீட்டு பல்கலையில் இருந்து தனியாகவே வந்துசேரும். இத்தனைக்கும் அன்றெல்லாம் மாதம் இரண்டுமூன்றுநாள் போராட்டங்கள் இருக்கும். ஆசிரியர்களே வந்து நுழைந்ததும் “என்னடே ஸ்டிரைக்கு இல்லியா இண்ணைக்கு?” என்றுதான் ஆர்வமாக கேட்பார்கள்

கடைசி ஆண்டில் என்ன செய்தாலும் எழுதமுடியாத நிலை- மொத்தமே நாற்பது நாள்கூட வருகைப்பதிவு இல்லை.நண்பனின் தற்கொலை, அலைக்கழிப்புகள். ஆகவே படிப்பை முடிக்கமுடியவில்லை. புறப்பாடுகள். அலைச்சல்கள். மீண்டும் கொஞ்சம் அரசியல்.காசர்கோட்டில் வேலை. அங்கும் அதே கிறுக்குநிலை. பெற்றோரின் மரணம். அங்கேதான் வெறிகொண்டு எழுத ஆரம்பித்தது. தன்னந்தனியாக கும்பளா சாலையில் ஒருகடலோர வீட்டில் தங்கியிருந்தபோது. அங்கே வந்த கோணங்கி சொன்னார். “தேவையான கிறுக்கு இருக்கு உங்கிட்ட”

இத்தனை ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஒரு நாளொழுங்குக்குள் இருந்த நீண்டகாலம் என்றால் என் டைரிகளின் படி பதினாறு நாட்கள்தான். எங்காவது கிளம்பிச் சென்றுகொண்டே இருந்தேன். நாளொழுங்கு நாட்களுக்குள்ளேயே வாசிப்பு எழுத்து இரண்டும் எனக்கு போதவில்லை.தொழிற்சங்க அரசியலின் வெறியும் தேவைப்பட்டது- தொண்ணூறுகளில் அது இன்றைய கட்சி அரசியலைவிட உச்சகட்ட விசைகொண்டது.

இன்றுவரை அப்படித்தான் இருந்திருக்கிறேன். என் விசை என்பது madness ஆல் உருவாக்கப்படுவது. அதை harmonious ஆக மாற்றத்தான் இலக்கியம் பழகியிருக்கிறேன். இதன் வடிவம்- மொழி ஆகிய இரண்டுமே தேர்ந்த சிற்பியின் கையில் சிற்பக்கலை திகழ்வதுபோலத்தான். தொழில்நுட்பம் இல்லாத கலை என்பது இல்லை. தொழில்நுட்பத்தின் உச்சியில் இருந்து கலை தொடங்குகிறது. கலை செல்லும் தொலைவுக்கு தொழில்நுட்பம் கூடவே வரவேண்டும். எந்த முயற்சியும் இல்லாமல்

ஆனால் அது மீளமீள ஒன்றையே செய்வது அல்ல. தாண்டுவது, தன்னை மறுப்பது. வடிவமும் வடிவப்பிழையும் மொழியும் மொழிப்பிழையும்  என தன்னை தானே மேலும் செலுத்திக்கொள்வது.. கட்டி, உடனே சிதைத்து, மீண்டும் கட்டி தொடரும் ஓர் ஆடல்.  உருவாக்கியதுமே கடந்துசெல்லப்படும். தூக்கிச் சுமக்க கடந்தகாலமே இல்லை.

ஒரு மாதமாகிறது சட்டென்று ஏதோ மூடி திறந்துகொண்டதுபோல இந்தக் கதைகள் எழுதத் தொடங்கி. சட்டென்று எழுந்து எங்கேனும் கண்காணா நிலத்திற்குள் சென்றுவிட உந்தும் கிறுக்கை இப்படி மொழிக்குள் திருப்பிவிட்டுக்கொண்டேன். நினைவுகள், கனவுகள், கட்டற்ற அகப்பாய்ச்சல்கள் என்று என் தனித்த பித்துவெளியில்உலவினேன்.

என்னுள் இருந்து மனிதர்கள் எழுந்து எழுந்து வந்துகொண்டிருந்தார்கள். கைத்துடைக்கும் காகிதக்குட்டை போல, ஒன்றை எடுத்தால் அடுத்தது வந்து நின்றிருக்கும். எதையும் எண்ண வேண்டியதில்லை, எழுதாமல் இருக்கமுடியாது அவ்வளவுதான்.

ஒருநாளுக்கு ஒன்பது மணிநேரம். சிலநாட்கள் பன்னிரண்டு மணிநேரம். சிலகதைகளை எழுத வாசிப்பே பலமணிநேரம் தேவைப்படும். முழுவெறியுடன், முழுக்குவிதலுடன். இத்தனை கிறுக்கின்றி இதை இயற்றமுடியாது. எழுத எண்ணும் எவருக்கும் நான் சொல்லவிழைவது ஒன்றே,Create your own madness,harness it.

குறையாத விசையுடன் சென்றது என் பாய்ச்சல். அதை ஒன்றுமே செய்யவேண்டியதில்லை, அகம் அதன் கட்டின்மையை அடைந்தது. மொழியும் வடிவமும் உடன் சென்றன. கனவென ஒன்றரை மாதம். அதை நான் அறிவேன், ஆனால் அதன்மேல் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஒன்று இன்னொன்றை நிரப்பி நிறையும் ஒரு வெளி அது. எனக்கு முன்னரே இலக்கிய மேதைகள் அதைப்பற்றி நிறைய எழுதிவிட்டார்கள்.

இரண்டுநாட்களுக்கு முன்பு சட்டென்று நின்றுவிட்டது. இரண்டு நாள் முழுக்க எதுவுமே எழுதவில்லை. அப்போதுதான் தெரிந்தது sanity என்பது எனக்கு எத்தனை சலிப்பூட்டுவது, எத்தனை தாளமுடியாது என்பது. ஒருநாளில் இருநூற்றுநாற்பது மணிநேரம் என்று ஆகிவிட்டது போல. ஒவ்வொன்றும் அசைவில்லாது ஆகிவிட்டது போல. மண்டையை எங்காவது கொண்டுசென்று முட்டவேண்டும் என்ற வெறி எழுந்தது

மெய்யாகவே எனக்கு இங்குள்ள உலகியல் எதிலும் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. அரசியல்,சமூகவியல் எதிலும். இப்போது அல்ல, அவற்றில் வெறிகொண்டு செயல்பட்டுக்கொண்டிருந்தபோதும் கூட. அதெல்லாம் என் விசையை தணிக்க நானே இழுத்துப் போட்டுக்கொள்வதுதான். சொல்லப்போனால் ஒருநாளுக்கு நாலைந்துபேர் என்னை அடிவயிற்றை எரித்து ஆவேசமாக வசைபாடினால்தான் எனக்கு ஒருமாதிரி பொழுது நிறைந்து சமநிலையே கைகூடுகிறது.  ஆகவே அவற்றையெல்லாம் அப்படியே உதறி வெளியேறும்போது எந்த இழப்பையும் உணரவில்லை.

சலிப்பூட்டுவது உலகியல். பதற்றம் ஊட்டுவது. ஒரு சாதாரண படிவத்தை நிரப்புவது கைநடுங்க செய்வது. பேங்க் சலான்கூட பேங்க் ஊழியரே நிரப்பித்தரவேண்டும் என விரும்புபவன் நான். இந்த ஊரடங்கு நாட்களில் இணையத்தில் உரையாடுவதற்கான சின்னச்சின்ன தொழில்நுட்ப வேலைகள், அதில் சிறு இடர்கள் என் மூளையை அமிலம் பட்டதுபோல எரிய வைத்தன

மூளையை நிரப்பியாகவேண்டியிருந்தது அந்த இரண்டு நாளும். ஆகவே இணையத்துக்குச் சென்று சமகாலப் பூசல்கள் சிலவற்றை வாசித்தேன். இப்போது ஒவ்வொன்றும் சலிப்பு மட்டுமே அளிக்கின்றது. அரசியல்கள், வியூகங்கள், சூழ்ச்சிகள் ,விவாதங்கள். என்னதான் கிறுக்குக்கு தீ என்றாலும் அவற்றில்போய் மோதமுடியும் என்று தோன்றவில்லை. எனில் இத்தனைபெரிய insane space ஐவைத்துக்கொண்டு நான் என்னதான் செய்வது? இரண்டுநாளில் ஒர் ஆயுள்தண்டனையை அனுபவித்தேன்

மீண்டும் வந்து மண்டையால் முட்டினேன். மீண்டும் திறந்தது, முன்பு போல் அல்ல. புரவி செல்கிறது, ஆனால் வெறிகொண்டு அல்ல. அது நின்றுவிடும் என்று தெரிகிறது. அதற்குள் வேறேதன் மீதாவது ஏறிக்கொள்ளவேண்டும். என்ன செய்யலாம்? எங்காவது கிளம்பிச் செல்லலாம்.ஆட்கொள்ளும் பேய் ஒன்றை உபாசனை செய்யலாம்.ஏதாவது அலைமேல் ஏறிக்கொள்ளலாம்.

ஷெல்லியின் வரிகளை மேலே நோக்கிச் சொல்லிக்கொள்கிறேன். இதே கிறுக்குடன் முன்னால் சென்றவர்களை நோக்கி. இந்த சலிப்பூட்டும் sane உலகில் நின்றபடி

Teach me half the gladness
That thy brain must know
Such harmonious madness
From my lips would flow
The world should listen then as I am listening now.

***

To a Skylark BY PERCY BYSSHE SHELLEY

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–59

$
0
0

பகுதி ஆறு : படைப்புல் – 3

தந்தையே, என் இடப்பக்கம் மிக மெல்ல ஒரு வருகை ஒலியை உணர்ந்தேன். நத்தை ஒன்று இலைச்சருகின்மேல் படிவதுபோல நொறுங்கும் ஒலி. பொருட்கள் அடிபணிவதன் முனகலோசை. காய்ந்த கற்பரப்பின்மீது அனல் என நீர் எழ அவை பற்றிக்கொள்ளும் அரவம். திடுக்கிடலுடன் நான் திரும்பிப் பார்த்தபோது என் அருகே கடல் நின்றிருந்தது. கடலா, இங்கா, எவ்வண்ணம் என்று நான் அதை பார்த்து நின்றேன். தலைக்கு மேல் எழுந்த நீல நிற நீர்க்குன்று. நீர் அவ்வண்ணம் வானில் எழுந்து நிற்கக்கூடுமா என்ற திகைப்பை நான் அடைந்து முடிப்பதற்குள்ளாகவே அத்தனை கட்டடங்களையும் ஓங்கி அறைந்தது அலை. சரிந்து நின்ற மாளிகைகளுக்குள் புகுந்த நீர் அதன் மாடிகளின் சாளரத்தினூடாக பீறிட்டு வெளியே பாய்வதை பார்த்தேன். கட்டடங்களுக்கு மேலே அதன் அறைதல் நுரைத்தொகுதிகளென கிழிபடுவதை கண்டேன்.

கடலலை அத்தனை ஓசையிலாது வரக்கூடும் என்று நகரில் எவருமே எண்ணியிருக்கமாட்டார்கள். கடற்கரையில் பிறந்து வளர்ந்த நான் அலையையும் ஓசையையும் எப்போதும் இணைத்தே புரிந்துகொண்டிருக்கிறேன். பாம்பு எழுப்பும் அச்சத்தின் முதல் அடிப்படையாக அமைவது அதன் ஓசையின்மை. மாபெரும் பாம்புபோல பத்தி எழுப்பி வந்தது அந்த அலை. அலை என்று அதை கூறுவது பிழை. அது ஒரு நீர் எழுகைமட்டுமே. கடலின் கை ஒன்று நீண்டு வந்து விடுத்த அறை. அல்லது கடலென்னும் நீலப் பெருந்தவளையின் நாக்கு. நீண்டுவந்து சுழற்றி நக்கி இழுபட்டு பின்சென்று மறைந்தது.

என் கண் முன் கட்டடங்கள் முன்னரே அவ்வண்ணம் வகுக்கப்பட்டு, அதற்கேற்ப அவ்வண்ணம் அமைவதுபோல நொறுங்கி ஒன்றன்மேல் ஒன்றென விழுந்து படிந்துகொண்டிருப்பதை விழிகளும் செயலிழக்க பார்த்துக்கொண்டிருந்தேன், உடலற்று, உளமற்று. மாளிகைகளின் உப்பரிகைகளில் மட்டுமல்ல கீழே தரைத்தளங்களில்கூட பலநூறு பேர் அதை பார்த்துக்கொண்டிருந்தனர். எவரும் தப்பி ஓடவில்லை. அலறவோ பதறவோ இல்லை. அவர்கள் அசைவிலாது நின்று அந்த நீரறைதலுக்கு தங்களை அளித்து முற்றாக மறைந்துபோனார்கள்.

கீழே துறைமுகப்பில் இருந்து படகுகளும், இல்லங்களின் மரக்கூரைச் சட்டகங்களும், மரமேடைகளும் பொங்கி எழுந்து வந்து கற்சுவர்களில் அறைபட்டன. கற்பலகைகளும் கற்தூண்களும் கூட எழுந்து வந்து அறைந்தன. நான் நின்றிருந்த மாளிகையின் கீழே இரண்டாம் தளம் வரை தண்ணீர் பெருக்கெடுத்தது. மாளிகையின் அடித்தளம் சரிய நான் நின்றிருந்த ஏழாவது தளம் நொறுங்கி விரிசல் ஓசையிட்டு பக்கவாட்டில் சரிந்து அமைவதை உணர்ந்தேன்.

கால் கீழ் நிலம் நொறுங்குவது நம்முள்ளிருக்கும் உயிர் நீர்மையை நலுங்க வைக்கிறது. நான் சரிந்து அமர்ந்து வாயுமிழ்ந்தேன். முற்றிலும் சரிந்து நீண்டு கிடந்த இடைநாழியில் சறுக்கி கீழே சென்றேன். செல்லும் வழியிலேயே தூண் ஒன்றை பற்றிக்கொண்டேன். பின்னர் அதைப் பற்றி ஏறி அச்சரிவினூடாக நடந்து வந்தேன். சிலகணங்களிலேயே சரிந்த நிலத்தை காலடி நிலம் என உணர்ந்து அதற்கேற்ப தன்னை அமைத்துக்கொண்ட உடல் விந்தையான காட்சிகளை கண்டது. சாளரத்திற்கு வெளியே கோணலாக விரிந்திருந்தது நிலம். தூண்கள் சரிந்து வடிவுகள் குழம்பிப்போய் நின்றன. ஒவ்வொன்றும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தது.

கண்களைத் திறந்து என்னால் நடக்க முடியவில்லை. என் உடலை உந்தி உந்தி மேலே தள்ளவேண்டியிருந்தது. தலைசுழன்று குமட்டி வாயுமிழ்ந்தேன். ஆகவே கண்களை மூடியபடி அந்தப் பாதையில் தொற்றி நடந்தேன். பின்னர் சிறுசாளரத்தினூடாக மறுபக்கம் குதித்தேன். அங்கு இடிந்து நின்ற பிறிதொரு இல்லத்தின் கூரை மேல் விழுந்தேன். அதன் சரிவில் சறுக்கி உருண்டு விளிம்பிலிருந்து கீழே உதிர்ந்தேன்.

அங்கு மணல் சேர்ந்திருந்தமையால் நான் புதைந்து இடைவரை சென்று எழுந்து கைவீசி நீச்சலிட்டு வெளியே வந்தேன். புதுமழைக்குப் பின் கூரையடியில் தேங்கும் மணல்போல இடையளவு குவிந்து பரவியிருந்தது. எங்ஙனம் வந்தது அத்தனை மணல் என்று எனக்கு தெரியவில்லை. மணலில் கால் புதைய, விழுந்து உடல் புதைய எழுந்து நடந்து ஓர் உடல் மேல் முட்டிக்கொண்டேன். வாயிலும் கண்களிலும் காதுகளிலும் மணல் புகுந்து செறிந்திருக்க உப்பிய வயிறுடன் ஒரு வீரன் சுவருடன் ஒட்டிக்கிடந்தான். அவன் உடலெங்கும் மணல் படிந்திருந்தது. மணலால் ஆன சிற்பம் போலிருந்தான்.

பின்னர்தான் நான் உடல்களை பார்த்தேன். இடிபாடுகள் முழுக்க இறந்த உடல்களே கிடந்தன. அத்தனைபேரும் மணலால் ஆன சிற்பங்கள். பாதி புதைந்தவை. பாதி எழுந்தவை. மணலை உந்தி எழமுயன்று மணலாக ஆனவை. மணல்முகங்களின் வெறிப்பு. மணற்கைகளின் முறுக்கல். மணல் செறிந்து உப்பிய வயிறுகள். ஓர் அலை அத்தனை பேரை கொல்ல முடியுமா? ஓர் அலை அத்தனை மணலைக்கொண்டு வந்து நகர் முழுக்க நிறைக்க முடியுமா? ஒற்றை அலை மட்டுமென கடல் மாறிவிட முடியுமா? அவ்வண்ணம் ஒன்றை அறிந்ததே இல்லை. எப்போதும் தன் எல்லை மீறாத பெண் தெய்வமொன்று சினந்தெழுந்து விழிகோர்த்து மாபெரும் தீச்சொல் ஒன்றை அறியாது உரைத்துவிட்டதுபோல்.

நான் அந்தப் பகுதியை என் நெஞ்சுக்குள் அழியாத வரைவு என கொண்டவன். அங்கு பிறந்து வளர்ந்தவன். பல்லாயிரம் முறை அத்தெருக்களில் அலைந்தவன். ஆனால் துவாரகையின் அப்பகுதி எனக்குள் முற்றாகவே அழிந்துவிட்டிருந்தது. அங்கிருந்த தெருக்களும் அரண்மனைகளும் ஊடுபாதைகளுமென அனைத்தும் சிதைந்து கலந்து எந்த நெறிகளிலும் நில்லாத எண்ணக் குவியல்களாக மாறியிருந்தன.

என் காலடியில் ஒரு சடலம் மிதிபட்டது. தசைமென்மை விதிர்க்க நான் துள்ளிப்பாய்ந்து அப்பால் சென்றேன். அதன் நெஞ்சில் மணற்பரப்பில் என் காலடி. நான் கூர்ந்து நோக்கியபின் காலால் அதை தட்டினேன். மணல் உதிரவில்லை ஓங்கி உதைத்தேன். மணல் உதிர்ந்தபோதும் உடல் மணலால் ஆனதாகவே இருந்தது. அப்போது தெரிந்தது, மணல் அவற்றின் தோலின்மேல் தன்னை அறைந்து புகுந்து தைத்துக்கொண்டிருக்கிறது என்று.

நான் என் உடன்பிறந்தாரை சந்திக்க விழைந்தேன். ஏவலரும் காவலருமென எனக்குத் தெரிந்த எவரேனும் தேவை என்று எனக்கு தோன்றியது. ஆனால் அங்கு மேலும் நீடிக்கக் கூடாதென்று உள்ளுணர்வு சொன்னது. தலைக்கு மேல் நொறுங்கி சரிந்து அசைவின்றி நின்றிருந்த எந்த மாளிகையும் மீண்டும் ஒரு சிறுநடுக்கத்தில் கல்மழையென பொழிந்துவிடக்கூடும். என் தலை பதைத்து ‘வெளியே ஓடு! ஓடு வெளியே! ஓடு!’ என்று பதறிப்பதறி எனக்கு ஆணையிட்டது. நான் சிறிய சந்துகளினூடாக ஓடினேன். வழி சுழன்று வழிபிழைத்து மீண்டும் கண்டுபிடித்து மீண்டும் சுவர்களில் சென்று முட்டிக்கொண்டேன். திரும்பி மீண்டும் வழியறிந்து ஓடிக்கொண்டிருந்தேன்.

ஒரு தருணத்தில் உணர்ந்தேன், நான் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததை. எப்பொருளும் இல்லாத சொற்களை நான் சொல்லிக்கொண்டிருந்தேன். “ஓடு! ஓடு!” என்றேன். “எங்கே? எங்கே?” என்றேன். “யாரங்கே? யாரங்கே?” என்று கூச்சலிட்டேன். “இரண்டு! இரண்டு!” என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அச்சொல்லுக்கு என்ன பொருள் என்று உணர்ந்து திடுக்கிட்டு நானே நின்றுவிட்டேன். அதன்பின் “தந்தையே! தந்தையே!” என்று கூவியபடி ஓடினேன். தந்தையே, நாக்கூச்சம் உளக்கூச்சம் இன்றி உங்களை அவ்வண்ணம் நான் அழைத்தது அதுவே முதல்முறை. நெஞ்சிலறைந்து கூவினேன். கண்ணீருடன் அலறினேன். அழுதுகொண்டே ஓடினேன்.

நாவில் கூச்சலில்லாது ஓட இயலாது என்று தெரிந்துகொண்டேன். என்னைச் சூழ்ந்து அங்கங்கே ஓடிக்கொண்டிருந்த ஒவ்வொருவரும் எதையோ சொல்லி கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். தங்கள் உற்றாரின் பெயர்களை கூறினர். பலர் “கிருஷ்ணா! கிருஷ்ணா! யாதவா! மாயவா!” என்று வெறிகொண்டு அலறினர். துவாரகையினர் தங்களை அன்றி எவரையும் உற்றாரென, காப்பவர் என, தலைவர் என, தெய்வம் என கருதவில்லை என்று அப்போது உணர்ந்தேன். என் உடன்பிறந்தார் அனைவருமே தங்கள் மாற்றுமுகங்கள்தான். தந்தையே, நீங்களன்றி எனக்கு இப்புவியில் எவருமில்லை என நான் அப்போதுதான் தெளிவுற உணர்ந்தேன்.

 

நகருக்கு வெளியே நெடுந்தொலைவு வந்த பின்னர்தான் நான் என்னை உணர்ந்தேன். என் உடலெங்கும் மணல் படிந்திருந்தது. என் ஆடைகள் கிழிந்து தொங்கின. நின்று மூச்சிரைத்து துப்பியபோது வாயிலிருந்து குருதியும் கோழையும் கொட்டியது. மலைநீர் ஊறி பெருகி இணைந்து சிற்றோடைகளாக மாறி வெளிவருவதுபோல் துவாரகையிலிருந்து மக்கள் வெளிவந்தனர். ஒவ்வொருவரும் நெஞ்சில் அறைந்து கதறிக்கொண்டிருந்தனர். தலையிலும் மார்பிலும் அறைந்துகொண்டனர். சிலர் இறந்த குழந்தைகளின் உடல்களை தோளோடு அணைத்திருந்தனர். புண்பட்ட குழந்தைகளை நெஞ்சிலும் தோளிலும் அழுத்திக்கொண்டிருந்தனர். உடைந்த கால்களையும் கைகளையும் இழுத்துக்கொண்டு உந்தியும் தள்ளாடியும் நடந்தனர். சூழ நோக்கியபோது துயரற்ற, வலியற்ற ஒரு முகமும் காணக் கிடைக்கவில்லை. ஒவ்வொருவரும் “கிருஷ்ணா! பெருமானே!” என்று கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். “தெய்வமே! விண்ணளந்தோனே, நீயே காப்பு…” என்று வானோக்கி அலறினர்.

விந்தையானதோர் நரகக் காட்சி. துயர் துயர் என்று ஒவ்வொரு முகமும் தன்னை காட்டியது. வலி வலி என்று ஒவ்வொரு உடலும் துடித்துக்கொண்டிருந்தது. இத்தனை துயர் மானுடத்தில் திகழமுடியும். இத்தனை வலி இதன் உடல்களில் எழமுடியும். துயரும் வலியும் சேர்ந்து சூழுணர்வையும் தன்னுணர்வையும் முற்றாக அழித்து ஒவ்வொருவரையும் பித்தர்கள் என்று ஆக்கியிருந்தன. எதற்கென்று அறியாமல் ஒவ்வொருவரும் மாறி மாறி கூவினர். வானை நோக்கி அலறினர். சிலர் நெஞ்சிலும் சிலர் தரையிலும் அறைந்து கூவி அழுதனர். நான் ஒவ்வொருவரையும் பிடித்து விலக்கி முட்டி மோதி சென்று கொண்டிருந்தேன். துவாரகையின் மக்கள்தொகையில் பாதிக்கு மேல் உயிரிழந்திருக்கக்கூடும் என்று தோன்றியது.

நிலையழிந்திருந்த புரவி ஒன்றை தொலைவில் கண்டேன். அதை நோக்கி நான் செல்லச் செல்ல அது கனைத்து வாய் சீறி என்னை கடிக்க வந்தது. அதன் தோல்நாடா ஒரு கல்லில் சிக்கியிருந்தது. நகரில் எங்கேனும் பிணைக்கப்படாத எல்லா உயிர்களும் கிளம்பிச் சென்றுவிட்டிருந்ததை அதன் பின்னர்தான் உணர்ந்தேன். அவை முன்னரே அறிந்திருக்கின்றன இவ்வண்ணம் ஒன்று நிகழும் என்று. அந்த முதல் நிலநடுக்கத்திற்கு முன்னரே பெரும்பாலான புரவிகளும் யானைகளும் காளைகளும் அத்திரிகளும் கட்டறுத்து திமிறி ஓடி பாலைநிலத்தை சென்றடைந்திருந்தன. அவற்றை பிடிப்பதன் பொருட்டு ஒரு சாரார் தேடிச் சென்றுகொண்டிருந்தனர். காகங்களும் பறவைகளும் அகன்றுவிட்டிருந்தன.

ஒற்றர்கள் சிலர் நகரிலிருந்து பல்லாயிரம் எலிகள் அழுக்கு நீரின் சிற்றலைகள்போல பாலைநிலத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக மூத்தவர் ஃபானுவிடம் கூறினார்கள். அப்போது நான் உடனிருந்தேன். “எங்கு செல்கின்றன அவை?” என்று அவர் கேட்டார். “அறியேன். நான் வரும்போது தொலைவில் கரிய நீர் சிற்றலைகளாக பெருகி வருவதை கண்டேன். எங்கிருந்து வருகிறது மழையேதேனும் பெய்ததா என்று எண்ணி அருகணைந்தபோதுதான் அவை எலிகள் என்று தெரிந்தது. பல்லாயிரம் எலிகள். அவை ஒன்றின் பின் ஒன்றாக அலைகளாக பாலைநிலம் நோக்கி சென்றுகொண்டிருந்தன. இந்நகரில் இத்தனை எலிகள் வாழ்ந்தன என்பதே விந்தையானது” என்றான். “அவை ஏன் இப்போது கிளம்பிச்செல்கின்றன?” என்றார் மூத்தவர். “அறியேன்” என்று ஒற்றன் சொன்னான். “எவ்வண்ணமாயினும் நன்று. இனி இந்நகரில் எலிகள் இல்லை” என்று மூத்தவர் கூற மற்றவர் சிரித்தனர். ஆனால் எனக்கொரு விந்தையான அச்சம்தான் ஏற்பட்டது.

அப்புரவியை நோக்கி செல்லச் செல்ல அது நின்று என்னை பார்த்தது. அதன் உடல் விதிர்ப்பு கொண்டது. பற்கள் தெரிய வாய் திறந்து என்னை கடிக்க வந்தது. கைநீட்டி அதன் கடிவாளத்தை பிடித்தேன். அதன் மூக்கையும் கழுத்தையும் தடவினேன். மெல்ல அது ஆறுதலடைந்து பெருமூச்சுவிட்டது. அதுவே ஒரு மனிதனின் உதவி நாடி நின்றிருக்கிறது. அது தன்னுள் வாழ்ந்த வழியுணர்வையும் தன்னுணர்வையும் முற்றிழந்திருக்கையில் அதை ஆளும் ஒருவன் அதை நடத்த முடியும். நான் அதை தட்டி அதன்மேல் அமர்ந்தேன். அதை முன்செலுத்தினேன்.

துவாரகையின் தெருக்கள் முழுக்க பதிக்கப்பட்டிருந்த எடைமிக்க கற்பாளங்கள் மறைந்திருந்தன. அவை எங்கு சென்றிருக்க முடியும்? அவற்றுக்கு மேல் மணல் படிந்திருக்கிறதா என்று முதலில் எண்ணினேன். பின்னர் பக்கவாட்டில் பார்த்தபோது அக்கற்பாளங்கள் அனைத்தும் அருகிலிருந்த மாளிகையின் கூரைகளுக்கு மேல் தூக்கி வீசப்பட்டிருப்பதை கண்டேன். கற்பாறைகளை தூக்கி வீசும் நீரலைகள் பற்றி எங்கும் எந்த நூலிலும் அறிந்ததில்லை. கற்தூண்கள் கூரைகள் மேல் சென்று அமைந்திருந்தன. நீர் பின்விலகிய பின் மணல் உலரத்தொடங்கியமையால் சரிந்து நின்ற மாளிகைகளின் விளிம்புகளில் இருந்து மணல் மழை பொழிந்து கொண்டிருந்தது.

புரவி கனைத்தபடி சிறிய தடைகளை தாவிக்கடந்து, விழுந்து கிடந்த மனிதர்களின் உடல்மேல் கால் படாமல் துள்ளி சென்று கொண்டிருந்தது. துவாரகைக்கு வெளியே அதன் தோரண நுழைவாயில் அவ்வண்ணமே நின்றுகொண்டிருந்தது. எதையும் அறியாததாக. வேறொரு காலத்தில் ஊன்றியதாக. நான் அதை நோக்கி செல்லச் செல்ல பெருகிப் பெருகி என் தலைக்கு மேல் எழுந்தது. அதன் சிற்பங்கள் திகைப்புடன் கண்விழித்து என்னை பார்த்தன. அவற்றின் திறந்த வாய்களில் அமைந்த சொற்களை அருகெனக் கண்டேன்.

நெடுநாட்களாக அச்சொற்கள் என்ன என்று நான் எண்ணியிருக்கிறேன். அவற்றுக்கு பொருள் சொல்லும் சூதர்களும் புலவர்களும் ஆளுக்கொன்றை அளிப்பதுண்டு. அப்போது உணர்ந்தேன், அவை துவாரகையின் அழிவை சொல்லிக்கொண்டிருக்கின்றன என்று. முன்னரே அவை அதனை கண்டுவிட்டன. அலை என்றன, ஆழி என்றன, ஆம் என்றன, ஆனால் என்றன, அப்பால் என்றன, அதுவே என்றன. தொலைவு என்றன, தொன்மை என்றன. இனி என்றன, இல்லை இப்போது என்றன, இங்கே என்றன. ஏன் என்றன, எவர் என்றன, எது என்றன. தந்தையே, பெரும்பாலானவை ஏன் ஏன் என்றே சொல்லிக்கொண்டிருந்தன.

நான் அந்தத் தோரணவாயிலை அணுகி அதை தாங்கி நின்ற பெரும் பூதத்தின் காலடியில் அமைந்திருந்த ஆமையின் ஒற்றைக்கால் அருகே சென்று நின்றேன். அதன் மேல் என் தலையை வைத்து மூச்சிளைத்தேன். ஆமை என்னை தன் காலால் அழுத்தி மண்ணுக்குள் செலுத்த முயல்வதுபோல் தோன்றியது. புரவி தானும் தலை தாழ்த்தி நுரை உதிர்த்து மூச்சுவாங்கியது. அதன் உடலிலிருந்து வியர்வை வழிந்தது. நான் ஓர் எண்ணம் எழ புரவியை அங்கேயே நிறுத்திவிட்டு கீழிறங்கி தோரணவாயிலின் உள்ளே சென்றேன். அதன் மேலே செல்வதற்கான குறுகலான படிக்கட்டுகளை கண்டேன்.

அக்கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அருகிருந்த கல்லை எடுத்து அதை உடைத்து திறந்தேன். அதன்மீது ஏறி படிகளினூடாக மேலே சென்றேன். அங்கு அப்போதும் காவலர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவருமே அதை அவ்வண்ணமே விட்டுவிட்டு விலகிச்சென்றிருந்தார்கள். முதல் மூன்று நிலைகளில் உள்ளே காவலர்கள் தங்குவதற்கான விரிந்த கூடங்களே இருந்தன. அலை அடிப்பது வரை அங்கு தங்கியிருந்த காவலர்களின் ஆடைகளும் படைக்கலங்களும் படுக்கைகளும் பரவியிருந்தன. தரை முழுக்க அவர்கள் ஆடிய தாயங்களும் பாம்பேணி ஆட்டத்திற்காக வரையப்பட்ட கட்டங்களும் தெரிந்தன. நாற்கள வரைவின்மேல் சிதறிய காய்கள்.

அறைச்சுவர்களில் யாதவர்களின் தொல்கதைகள். யயாதிக்கு தேவயானியில் நம் குல மூதாதையான யது பிறக்கும் தருணம். யது தன் குடியினருடன் மேய்ச்சல் நிலம் தேடிச் செல்லும் காட்சி. அவர் மைந்தர்களான சகஸ்ரஜித், குரோஷ்டா, நளன், ரிபு ஆகியோருடன் அரசுவீற்றிருக்கும் காட்சி. சகஸ்ரஜித் சதஜித்துடன் கன்றோட்டுகிறார். சதஜித் தன் மைந்தர்களான மகாபயன், வேனுஹயன், ஹேகயன் ஆகியோருடன் மன்றமர்ந்திருக்கிறார். கார்த்தவீரியர். ஜயத்வஜன், சூரசேனன், விருஷபன், மது, ஊர்ஜிதன் எனும் அவருடைய மைந்தர்கள். மதுவின் மைந்தரான விருஷ்ணி. நான் விருஷ்ணியின் முகத்தை நோக்கியபடி நின்றேன். தந்தையே, அது தங்கள் முகமெனத் தோன்றியது.

மேலே செல்லச் செல்ல அறைகள் குறுகி வந்தன. அவற்றின் உட்சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. கந்தர்வர்களும் தேவர்களும் விழித்து நோக்கிக்கொண்டிருந்தனர். கீழ் அடுக்குகளில் அவர்கள் குனிந்து நோக்கி அருட்சொல் கூவி புன்னகைத்தனர். மேலே செல்லச் செல்ல அவர்கள் சினந்து அச்சுறுத்தினர். மேலும் ஏறிச்சென்றபோது இளிவரல் நகைப்புடன் கைசுட்டி ஏதோ சொல்லினர். அதற்குமேல் தேவர்கள் ஊழ்கத்திலென கண்மூடி அமர்ந்திருந்தனர். மானுடர் இருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதுபோல.

அதற்குமேல் சென்று தோரணவாயிலின் உச்சியை அடைந்தேன். அதன் சுவர்களில் நாற்புறமும் உங்கள் முகம் மட்டுமே. ஆழியும் வெண்சங்கும் கொண்டு விண்ணளந்தோன் என நின்றீர்கள். புற்குழல் மீட்டி விழிகனிந்து அமர்ந்திருந்தீர்கள். வேதம் உரைத்து குருக்ஷேத்ரத் தேர்மேல் அமர்ந்திருந்தீர்கள். அனைத்தையும் விடுத்து கையை மடிமீதமைத்து ஊழ்கத்தில் அமர்ந்திருந்தீர்கள். அவ்வறையிலிருந்து பக்கவாட்டில் திறந்த ஒரு வாசலினூடாக சென்றேன். தோரணவாயிலின் மையத்தை அடைந்தேன். அதன் மாபெரும் சாளரம் திறந்து கிடந்தது. அங்கிருந்து பார்த்தபோது இருபுறமும் நீலவானம்தான் தெரிந்தது.

கையூன்றித் தாவி அந்தக் கற்பீடத்தில் ஏறிநின்று விளிம்பை சென்றடைந்து கீழே பார்த்தேன். துவாரகையிலிருந்து மக்கள் எறும்புத்திரள்கள்போல கிளம்பிவந்து, தயங்கி, செறிந்து பருத்து, முட்டி மோதி தோரணவாயிலை நோக்கி வந்து கடந்து அப்பால் சென்றுகொண்டிருப்பதை பார்த்தேன். ஒரு கலங்கிய சிற்றோடை என. அதற்கப்பால் துவாரகையை கண்டேன். அங்கு நான் கண்டது ஒரு மாபெரும் கற்குப்பைமேட்டை மட்டுமே. பொருளற்ற வடிவற்ற இடிபாடுகளின் தொகை.

ஒரு கணத்திற்கு மேல் எனக்கு அதை பார்க்க இயலவில்லை. விம்மலுடன் நான் திரும்பிப் பாய்ந்தேன். கண்களை மூடி உடல் குறுக்கி நின்று அழுதேன். பின்னர் மறுமுனைக்கு ஓடி அந்தச் சாளரத்தின் நிலைப்படியை தாவி ஏறி மறுபுறம் பார்த்தேன். விழி தொடும் நெடுந்தொலைவு வரை விரிந்திருந்த வெறும் பாலைவெளியைப் பார்த்து கண்ணீர்விட்டு அழுதபடி அங்கு நின்றிருந்தேன்.

தொடர்புடைய பதிவுகள்


நஞ்சு சீட்டு மற்றும் கதைகள் –கடிதங்கள்

$
0
0

நஞ்சு [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

தங்களின் நஞ்சு மற்றும் சீட்டு சிறுகதை வாசித்தேன். புனைவு களியாட்டு தொடர் சிறுகதைகளில் சற்றே மாறுபட்ட கதை. மனித மனத்தின் கீழ்மைகளை போகின்ற போக்கில் பேசுகின்றன. எனக்கு ஒன்றன் தொடர்ச்சி தான் அடுத்த கதை என்று படுகிறது. ஆனால், முறை மட்டும் மாறிவிட்டது. சீட்டு முதல் பாகம், அதன் தொடர்ச்சி நஞ்சு. சீட்டு கதையின் நாயகன் அழகப்பன் சித்தரம் தெளிவாக காட்டப்படுகிறது. அவன் அம்மா, இப்போதாவது ஆணாக நடந்துகொள் என்று சொல்லும்போது, அந்த சித்திரத்திற்கு ஒரு அவுட்லைன் வரையப்படுகிறது. அழகப்பன்

உமையாளை ஓரக்கண்ணால் பார்த்து மையல்  கொண்டாலும் , அவள்தான் அவனிடம் முதலில் நெருங்குகிறாள். மிகவும் உரிமை எடுத்துக்கொள்கிறாள். தன்னை அவன் குடும்பத்தில் ஒரு அங்கமாக பாவிக்கிறாள். அழகப்பன் அவ்வாறு அல்ல. அவளுக்கு ஒரு நெருக்கடி என்கிற போது உள்ளார விலகுகிறான். ஶ்ரீனிவாசனிடம் அவள் சீட்டு பணத்திற்காக பேசுவதைக் கண்டு, சந்தேகத்தில் சுழல்கிறான். நம்மிடம் வலிய வந்தவள் அவனிடமும் வலியமாட்டாளா? என்ற கேள்வி தான். அவனுடைய கழிவிறக்கமும் , சந்தேகமும் சேர்ந்து நஞ்சாக மாறுகிறது. தக்க நேறும் வரும்போது அவள்மீது உமிழ்கிறான். இந்த ஆண்மனதின் கீழ்மையை நாம் அணுதோரும் சந்தித்து வருகிறோம்.

இதன் தொடர்ச்சியாக நஞ்சு சிறுகதை. இக்கதையில் வரும் நாயகிக்கும் அவள் கணவனுக்கும் பெயர் வைக்கவில்லை என்பதை பிறகு தான் கவனித்ததேன். சீட்டு கதையின் பெயரையே வைத்துக்கொள்ளட்டும் என ஆசிரியர் நினைத்துவிட்டாரோ ! இங்கே அழகப்பனுக்கும் உமையாளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. காதலின் போது சிறிதாக உமிழப்பட்ட அழகப்பனின் நஞ்சு , நாளடைவில் பெருகியது. உமையாள்  சீண்டப்பட்டதால் , அவளும் தக்க தருணம் பார்த்து நஞ்சை திருப்பி அளிக்க காத்திருக்கிறாள். அதற்கு கல்லட்டி ஜங்ஷனில் அவளுக்கு லிப்ட் குடுத்து இறக்கிவிடும் ஒரு அப்பாவி தேவைப்பட்டடிருக்கறான் . பெண் பாம்பு உமிழப்பட்ட நஞ்சிற்கு வீரியம் அதிகம்போலும். சுற்றி இருந்தவனையும் சேர்த்து நிலைகுழைய வைத்துவிட்டது. உமையாள் தன்னை தற்காத்துக்கொள்ளவே அவனை பலிவாங்கினாலும், அவளிடம் இருந்து வெளிப்பட்டதும் நஞ்சே. இக்கதைகளின் கேள்வியாக எனக்கு எஞ்சுவது, மனித மனம் என்னும் கடலை கடைய கடைய மிஞ்சுவது எனவோ நஞ்சு தானோ ?

இன்னொறு பார்வையாக, ஏதோ ஒரு வகையில் நம் மனம் பிறரிடமிருந்து சிறிதளவேனும் நஞ்சை எதிர்பார்த்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது. வாழ்வை சுவரசியமாக்க. நாம் எதிர்பார்பது, ஆடகம் சிறுகதையில் வரும் ராஜநாகம் உமிழ்வது போல் சிறு மில்லிகிராம் அளவுதான், அமுதமாக மாறுவதற்காக. ஆனால் நம்மீது உமிழப்படுவதோ !

கார்த்திக் குமார் 

***

ஜெ

எப்படி பொளர்னமி பித்து சீனுவிடம் வருவதை மறந்து போனேன்? மற்றொரு பொளர்னமியும் கடந்து போயிற்று – மறுபடியும். காலையில் அந்த நிலவு மறைதலையும் சூரிய உதயத்தையும் இரு திசைகளில் பார்க்கனும் என்பதும் முடியாமல் போயிற்று. பூர்ணசந்திரன்களில் சித்திரையும் கார்த்திகையும் ஒரு போதையான ஈர்ப்பு. அந்த பெயரே அழகு. ”கார்த்திகை பொளர்னமி இல்லம் ”என பெயர் இட வேண்டும் என ஒரு வயதில் நினைத்தது உண்டு. வெயிலின் தொடக்கத்தில் ஒரு முறையும், குளிர் தொடங்கலில் ஒன்றும் பெரிய ஈர்ப்பு. பெண் பெயர் சாயலின் கொண்டதாக கூட இருக்கலாம்.

எத்தனை கதைகள். சிறுகதையில் ஒரு தொடலை, விக்கித்தலை, தவிப்பை, அமைதியை என உச்ச உணர்வுக்கு கொண்டு செல்லும் ஒவ்வொரு தினுசில் ஒவ்வொரு கதைகளும்.

இறைவன் [சிறுகதை]

இறை எனும் மழை

இறைவன் – ப்ரதீப் சொன்னது போல விம்மல். இசக்கி அம்மை கை விரித்து கதறுகையில், மாணிக்கம் இறைவன் ஆகி விட்டான் என நினைத்து கொண்டேன். இல்லாதவைகளை, தெரியாதவைகளை, உருவம் தந்து உயிர் தருபவன் இறைவனே. –  வரைந்தால் என்ன, எழுதினால் என்ன? வெறுமையில் வெண்சுவற்றில் தொடங்குகிறது அனைத்தும். அந்த புது இடத்தில் உள் அமர்ந்த பின்னரே கைகளில் அருள் வர தொடங்குகிறது மாணிக்கத்துக்கு. ஆனால் பறக்காமல் காத்து இருப்பவனுக்கு தான் ஆசிர்வாதங்கள். சந்நதம் முடித்து போற்றி வந்த பின் கீழ் வந்து நடக்கிறான். உச்ச உணர்வு தந்த தருணக்கதை.

காக்காய் பொன் – குணங்களில் ஒரு அடைதல் வந்தபின் வருவது ஒரு மின்னல். அதற்கு பிறகு அனைத்தும் மின்ன முடியும் அல்லவா// கல், கனி,மலர், மனிதம் என.. நித்யா சொல்லில் பொன் மின்னியது. எது நெருடலோ அதுவே மீட்பின் வழி போல. அதுவரை அவர் அந்த இடத்தில் இருந்த இருப்பை -ஸ்திரத்தை தெரிந்து தெரியாமல் கலைத்து விட்டு நித்யா சென்று விட, பின்னர் வேறு வகை தவம் சதானந்தர் தொடர்கிறார். அவர் அறியாமல் அவருள் ”தான்’ “துறவு”” பணம் தொடாத’ என்கிறைவை வளர்ந்து விட்டதை கண்டு தடி எடுத்து விரட்டி பின் ஒடுங்கி கண்டு கொள்கிறார். இறுதியில் சதானந்தர் கையில் ஒரு மின்னும் மணி எனபது ஒரு கவிதை.

உலகெலாம்மில் அதுவே. பயமாக ஒரு இருப்பாக அந்த பேஸ்மேக்கர் கருவி அவரை ஆக்ரமித்து பின்னர் அதிலிருந்து ஒரு திறத்தலை ஒரு மீட்பை தந்து விட்டது. சுகுமாரன் நாயருக்கு நெஞ்சில் விடாத கேள்வியாக, தொடர் பயமுறுத்தலாக இருந்தது ஒன்று ஒரு பெரிய மறுபிறப்பின் வாசல் திறப்பாக ஆன்ம விடுதலை ஆகிறது.சற்று வலுக்கட்டாயமாக தொகுத்து கொண்டால் மாயப்பொன்னில் சாராய ‘சொட்’டிலும் ஸ்பைலைசிங் செய்யும் விரல்களிலும் இறைவன் எனும் அடைதலை கர்ம யோக வழி என புனைந்து கொண்டு இருக்கிறீர்கள்.நீங்கள் எழுதி செல்லும் வேகம் விட படித்து தவித்து எழுதுவது கடினம்.

சுய வதை தன்னையும் தின்று பிறரையும் கொன்று வாழும் அட்டை. நஞ்சு தான் அது. வீர்யம் கரையாத , அளவு தீராத நஞ்சு. ”உடலே நடுங்கி”,” அஞ்சி’…அவளின் கணவனை அடித்திருந்தால் முடிந்து போய் இருக்க கூடும். ஒரு தீண்டல் ஒருமித்து நடந்து இருந்திருந்தால் இத்தனை குரூரம் மேலே வருமா? பின்னர், மீண்டும் காரணம் தேடி அந்த தீயை வளர்த்து எடுத்து, ..  வரும் வாய்ப்பை விடாத அவளும் பழி தீர்த்து கசந்து திரும்பும் இவனும் .. எனக்கு என்னவோ அந்த மாலை- இரவின் முதல் பயணத்திலேயேஅவனுக்கு உள் அவனுக்கு தெரியாமல், உதற முடியா ஒரு ஈர்ப்பும், பிடிப்பும் அவள் மேல் வந்து விட்டதாக தோன்றுகிறது..ஆனால் அது வளர்வதற்கு தருணம் அமைவதை விட , அந்த தொடக்க ஸ்பரிசங்கள் தொடங்கி வைத்த மின்னலை , அடித்து நடந்த அவமானம் மிக ஆழத்தில் கீழே தள்ளி விட்டு அந்த நஞ்சு உட்கார்ந்து ஆட்கொண்டு விட்டது. அதனால் தான் இறுதியில் அவளும் வந்ததை பற்றி சொன்னவுடன், அந்த நஞ்சு அவளின் அந்த உணர்வை ஒதுக்கி விட்டு கிளர்ந்து நடந்து பின் கசந்து தளர்கிறது….. உங்களின்  பெண்அருகாமை வர்ணனைகள் எப்போதும் சிறு குளிரில் மென் நடுக்கம் என சிலிர்ப்பு என ஆழம் தொடும் வகை. ‘இரவு’ அவள் வீட்டுனுள் நுழையும் போது அவன் முதலில் பார்த்தது பற்றியவையும் இன்று இவர்களின் அருகாமை அந்த காட்டில் இருட்டில் தனிமையில் தொடலில் .. அதிகபட்சம் ஒரு பெருமூச்சுடன் ஒரு பேரோசையுடன் உள்ளே செல்லும் – அந்த ததும்பல் வரிகள் … அமரம் படத்தில் மம்மூட்டியும் சித்ராவும் ஒரு கணம் கண்ணில் காதல் வந்து, பேசி, கட்டியபின் ஒரு முத்தம் அமையும் முன் பிரிவதை நினைவு வந்தது.

பிடி [சிறுகதை]

கால ஆற்றின் போக்கில்,..

ஒவ்வொன்றும் ஒரு தினுசு… ஆறு போல பாடியபடி, ‘பிடி” கொண்டு விளையாட்டு முடிந்து தன் போக்கில் பாடி காட்டி விட்டு வானில் சென்ற படி இருக்கும் மேகம் என எதையும் விட்டு செல்லாத ராமையா ஒரு புறம் என்றால், தன்னில் நிகழும் ஆட்டத்தை நின்று பார்த்தபடி வாழ்ந்து விட்டு , இறப்பதற்கு முன் அந்த இரட்டை பெண்கள் வெகு எளிதாக கிழவி ஆகி சில வார்த்தைகளில் விடை பெறுதலாக முடிந்து போனதை சர சரவென வேகமாக சொல்லி முடித்த  ‘ஆட்டக்கதை” என்பது ஒரு முழு வாழ்வின் வேறு வகை .. பார்க்க பார்க்க பார்த்தது காணாமல் ஒடும் காலநதி .. மனைவியின் மறைவு ‘அப்படியா” எனும் படியாக அவரின் வார்த்தைகள் .   அவரின் அந்த முதல் இரவு வரிகளை அவரே பெரிதாக பேசாமல் கடந்து செல்கிறார். ஆனால் அந்த இரவும்  “அனலுக்கு மேல்’  இருட்டில் இருவரும் கவ்வி செல்லும் அந்த இரவின் காட்சியும் ஒரு கோட்டில் என தோன்றியது…ஆனால் “கூடு’ அக்கணத்தில் என ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுவிட்ட வாழ்வின் கதை.  நின்று விட்ட காலத்தின் – புத்தரின் தரிசனம், அப்படியே அந்த மலைகளில் நடந்து , அந்த மடாலயத்தில் வாழ்ந்து காற்றில் இருக்கும் அந்த ஆசிரியனை காண முடிந்தது, வேற்றுவர் வராத நில வரைபடம் அந்த குளிர் கால வாழ்வின் தினங்கள் என்று விரிந்தபடி சென்றது. \

ஒரு அன்னையின் ஓரு முத்தத்தின் ’ஆயிரம் ஊற்றுகள்’ சட்டென அழுகை என நெகிழ வைத்தது. எத்தனை எத்தனை கண்ணங்கள் சிறு , சில முத்தங்கள் கிடைக்காமல் உதடு படாமல் மரித்து போய் இருக்கும் இந்த கால ஒட்டத்தில்? எண்ணக் எண்ணக் குறைவது தான் வாழ்வின் தினங்கள். வாழ்ந்து முடித்து விட்டு உதிர தயாராக இருப்பதின் அவரின் வரிகள் எந்த தத்துவ வகைகளிலும் இல்லை எனினும் அதுவே உன்னத வாழ்வின் தரிசனம். முதுமையை சாமான்யர்கள் எடுத்து கொள்ளும் வரிகள் சங்கடபடுத்துபவை. வாழ்வு எனும் பயணத்தின் முடிவு அருகில் தெரிய ஆரம்பிக்கும் போது வரும் பார்வைகள், சிந்தனைகள், வார்த்தைகள் எத்தனை சொன்னாலும் பேசினாலும் அங்கு கூடி இருப்பவர்களால் ஏற்க முடியவில்லை. பழுத்து தன் முடிவின் போக்கில் விழுதல் மனிதனுக்கு இல்லை.

இப்படி எல்லா கதைகளையும் ஒரு சில வார்த்தைகளில் சொல்லிச் செல்வது சங்கடப்படுத்துகிறது.  சுஜாதா பாலகுமாரனுக்கு சிறுகதை எழுதுவதை ஒரு சந்திப்பில் சொன்னதை அவர் பற்றிக்கொண்டதை போல, சிறுகதை எனும் வகுப்புக்கு இந்த  தனிமையில் வந்த அத்தனை கதைகளும் பாடங்கள். கதாபாத்திரங்கள், வட்டார பேச்சு வழக்குகள், நகைச்சுவை, தரிசனங்கள், கவித்துவ கணங்கள், தொடக்க மற்றும் முடிவுகளில் பல வகை மாதிரிகள், நெருப்பு எனும் செம்மண் வாழ்வின் நிலம் oரு புறம் முதலாறு போன்ற உச்ச பச்சை நிலம் மறு புறம் என நில விவரணை, வழக்கம் போல புதிய வார்த்தைகள் (நஞ்சு, அனலுக்கு மேல் – முகம் பற்றிய “அதைத்து ’), கதை சொல்லலில் பெயரின்றி வரும் நஞ்சு வகை கதைகள் முதல் கிராமத்தின் பெரும் மாந்தர் வரை, குட்டி பாப்பாவின் ’மொழி” முதல் கூத்து கலைஞன் வயது வரை மாந்தர்களை தொட்டு எடுத்து காண்பித்தாயிற்று.வெடித்து சிரிக்க வைத்தவை நிறைய.. அதில் இவை சில

அம்புரோஸுக்க அம்மை நல்ல அளகுள்ள குட்டியாக்கும்”

– “அம்புரோஸுக்க அம்மையா?” என்றேன் அம்புரோஸுக்கே அறுபது வயதுக்குமேல் இருக்கும்.

அது முளுக்க இரும்புல்லா? நான் மர ஆசாரி” என்றார் பிரமநாயகம் ஆசாரி. “எங்கிளுக்க வேதம் வேறயாக்கும்… உளியெறங்காப் பொருள் எங்க கணக்குலே இல்ல” “பின்ன நீரு எதுக்குவே அம்புஜத்துக்க வீட்டுக்கு போறீரு?” என்றான் லாரன்ஸ் “அவ மூசாரில்லா?

எழுதிகொண்டே இருக்கலாம், – ஒவ்வொரு கதை போகும் வழியில் வரும் தருணங்கள் அவை தரும் தரிசனங்கள் , திகைப்புகள் என.  ஆங்கிலம் போல ஒரு எழுத்துக்கு ஒரு தடவை என டைப் செய்தால் இன்னும் கொஞ்சம் நிறைய எழுதி இருப்பீர்கள் போல

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

ஜெ,

பீஷ்மர் இறப்புக்கு பின், பதற வைத்து கொண்டு இருக்கிறது  வர போகும் இளைய யாதவனின் மரண தினம்>… நீங்கள் கடந்து சென்று விட்டீர்கள் என தோன்றுகிறது.

அன்புகளுடன்,

லிங்கராஜ் 

***

தொடர்புடைய பதிவுகள்

கடிதங்கள் பதில்கள்

$
0
0

 

அன்புள்ள ஜெ

நான் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் ஆவேசமாகச் சொன்னார். கோவிட் வைரஸில் மக்கள் சாகிறார்கள். பல்லாயிரம் ஏழைகள் வறுமைக்கு தள்ளப்படுகிறார்கள். பலநூறு கிலோமீட்டர் தூரம் நடந்து சாகிறார்கள். அதைப்பற்றி கவலையே படாமல் இலக்கியவாதிகள் இலக்கியம் படைக்கிறார்கள். இவர்களெல்லாம் மனிதவிரோதிகள்.நீங்கள் நினைப்பது சரிதான், அவர் ஒரு மார்க்சியர்.

ஆனால் உண்மையில் அப்படி ஒரு கேள்வி உங்கள் முன் வந்தால் எப்படி பதில்சொல்வீர்கள்? நான் அந்தக்கேள்விக்கு ஒரு பதிலைச் சொன்னேன் அது வேறு விஷயம்

மகேஷ்

***

அன்புள்ள மகேஷ்

தமிழகம் போல படைப்பியக்கத்திற்கு எதிரான மனநிலைகொண்டவர்களால் சூழப்பட்ட இலக்கியச்சூழல் வேறெங்கும் இல்லை. இது நூறாண்டுகளாக இப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது. ‘மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் இப்ப இலக்கியமா முக்கியம்?’ ‘ஃபாசிசத்துக்கு எதிராக போராடிட்டு இருக்கோம், இப்ப இலக்கியமா முக்கியம்?’ இப்படி கேள்விகள் வந்துகொண்டே இருக்கும்.

ஒட்டுமொத்தமாக இலக்கியம் முக்கியமே அல்ல என்பதுதான் இதன் சாரம்.  ‘எழுதாதே நிறுத்து, நாங்கள் செய்வதையே செய்’,  ‘எங்களால் இவ்வளவுதான் முடியும், உன்னாலும் இதற்குமேல் முடியக்கூடாது’—இவ்வளவுதான். இந்தக் குப்பைக்குரல்களை கடந்தே புதுமைப்பித்தன் எழுதினான். ‘நாடு சுதந்திரப்போராட்டத்தில் எரிகிறது, உனக்கென்ன இலக்கியம்?’ என்று அவனிடம் கேட்டார்கள்.

இலக்கியவாதியின் உள்ளம், இலக்கியம் உருவாகும் விதம் நேர்கோடு அல்ல. அங்கே என்ன நிகழ்கிறது என்று எழுத்தாளனால் கூட சொல்லிவிடமுடியாது. போர்க்காலங்களில் காதல்கவிதை எழுதியிருக்கிறார்கள். பஞ்சகாலங்களில் கனவுகளை எழுதியிருக்கிறார்கள். உலகின் பேரிலக்கியங்களில் பல கொள்ளைநோய்க் காலகட்டத்தில் எழுதப்பட்டவை.

சமகால நிகழ்வுகளை இலக்கியவாதி பிற எந்த குடிமகனையும்போல உணர்வுரீதியாக எதிர்கொள்கிறான். உணர்ச்சிகளை அடைகிறான். ஆனால் உடனே அவற்றை அப்படியே பதிவுசெய்வது இலக்கியமல்ல என்று அவனுக்கு தெரியும். அது இலக்கியமாக ஆக ஏதோ ஒன்று நிகழவேண்டியிருக்கிறது. அது எழுத்தாளனுக்குள் வளர்ந்து உருக்கொள்ளவேண்டியிருக்கிறது.

அவ்வப்போது செய்திகளைக் கண்டு எதிர்வினையாற்றுவது இலக்கியப்படைப்பு அல்ல. அத்தகைய எதிர்வினைகளில் வழக்கமாகச் சூழலில் இருந்துகொண்டிருக்கும் உணர்வுகளில், கருத்துத் தரப்புகளில் ஒன்று இருக்கும். அதுதான் ஏற்கனவே இருக்கிறதே, அதை எழுத எழுத்தாளன் எதற்கு?

இந்த மார்க்ஸியர்கள் முகநூலில் பொங்கல் வைப்பதற்கு அப்பால் என்ன செய்தார்கள்? என்ன செய்ய முடியும்? சுனாமி வந்தபோது நான் களத்தில் இறங்கிப் பணியாற்றினேன். என் கைகளால் பிணங்களை அகற்றினேன். அதை அன்றன்று பதிவும் செய்தேன். ஆனால் இன்றுவரை ஒருகதை அதைப்பற்றி எழுதவில்லை—எழுதவரவில்லை.

ஆனால் ஐம்பதாண்டுகளுக்கு முன் ஒரு அனாதை விதவைக்கு முழுநாளும் அமர்ந்து ஒரு குழந்தைப்பொம்மையைச் செய்துகொடுத்துவிட்டுச் சென்ற ஓர் ஆசாரியை எண்ணி இந்த தனியறையில் அமர்ந்து நான் மனமுருகி கண்ணீர் சிந்தினேன். அதுதான் கலையின் பாதை.

எது கலையாகிறது, ஏன் என்பதை அறியாமல் அதைநோக்கி தவம் செய்வதே கலை. அது கருமாதி வீட்டில் குழந்தைபோல சிரிக்கலாம். கல்யாணவீட்டில் அழவும் செய்யலாம். ஆனால் அது பொருளற்றது அல்ல. சிலசமயம் கலை சமன்செய்கிறது. சிலசமயம் நம்பிக்கை ஊட்டுகிறது. சிலசமயம் எச்சரிக்கிறது, அச்சுறுத்துகிறது. சிலசமயம் நம்பிக்கையிழந்து கண்ணீர்விடுகிறது. அரிதாக சாபமிடுகிறது.

கலையின் வழியை ஒற்றைப்படையாக வகுக்கக்கூடாது. அதிலும் அரசியல் கும்பலிடம் அந்த வாய்ப்பே அளிக்கக்கூடாது. ’வழியில்நின்று குரைக்காதே, தள்ளிப்போ’ என்று சொல்லிவிடவேண்டும்.

ஜெ

***

அன்புள்ள ஜெ.

உங்களது கதைகளை ஒரே வீச்சில் படிக்கும்போது, கதைகளின் தலைப்புகளின் ஆழமும் கவித்துவமும் பிடிபடுகிறது.

கதையின் ஒரு அம்சமாகவே, பிரதியின் ஓர் அங்கமாக தலைப்பு இருக்கிறது.  எப்படி, கதையின் ஒரு வரியை எடுத்துவிட்டால்,  கதையின் முழுமை சீர்குலையுமோ, எப்படி அநாவசியமான ஒரு வார்த்தைகூட கதையில் இருக்காதோ, அதுபோல அத்தியாவசியமான / நீக்கவோ மாற்றவோ முடியாத ஓர் உறுப்பாக தலைப்புகள் இருக்கின்றன

சிறுகதைகளுக்கு எப்படி தலைப்பிட வேண்டும் ..  அது கூடாது என நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்.ஆனாலும் நீங்கள் எப்படி தலைப்பிடுகிறீர்கள் ,  அதற்கு நீங்கள் எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள் என்பதை அறிய ஆவல்

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

***

அன்புள்ள பிச்சைக்காரன்

தலைப்புக்கள் கதையை நினைவுகூர உதவியானவை. தலைப்பு கதை என்னும் வடிவின் ஒரு பகுதி. இந்த உணர்வுடன் தலைப்பிடுவேன்

தலைப்பு கதையை விளக்கக்கூடாது- ஆனால் சம்பந்தம் அற்றதாகவும் இருக்கலாகாது. கதையில் ஒரு சிறு அர்த்தத்தை கூடுதலாகச் சேர்க்கவேண்டும், அவ்வளவுதான்.

சிலசமயம் கதையின் மையமே தலைப்பாக வந்துவிடும்- துளி போல. அது இயல்பானது

தலைப்பு மிக அரிதாக கதையின் மையத்தை சற்றே மூடிவைப்பதற்கு பயன்படும். அப்படியும் சிலகதைகள் உள்ளன. அதுவும் கதை என்ற ஆடலின் ஒரு பகுதியே.

சிலசமயம் தீவிரமான ஒரு கதையை எளிய தலைப்பால் சற்று சமன்செய்வதும் உண்டு.

சிலசமயம் ஒரு வார்த்தையை சொல்லிச் சொல்லி அதிலிருந்து கதையை உருவாக்குவோம். முதலாறு அப்படிப்பட்டது.

ஆனால் தலைப்பை ‘யோசித்து’ வைப்பதில்லை. சட்டென்று தலைப்பு தோன்றிவிடவேண்டும். கதை தோன்றுவதைப்போலவே

இந்த வரிசையில் எனக்குப் பிடித்த தலைப்பு ‘பொலிவதும் கலைவதும்’

ஜெ

***

போழ்வு [சிறுகதை]

நஞ்சு [சிறுகதை]

பலிக்கல்[சிறுகதை]

காக்காய்ப்பொன் [சிறுகதை]

லீலை [சிறுகதை]

கரவு [சிறுகதை]

ஐந்து நெருப்பு[ சிறுகதை]

நற்றுணை [சிறுகதை]

இறைவன் [சிறுகதை]

மலைகளின் உரையாடல் [சிறுகதை]

முதல் ஆறு [சிறுகதை]

பிடி [சிறுகதை]

கைமுக்கு [சிறுகதை]

உலகெலாம் [சிறுகதை]

மாயப்பொன் [சிறுகதை]

ஆழி [சிறுகதை]

வனவாசம் [சிறுகதை]

மதுரம் [சிறுகதை]

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

வான்நெசவு [சிறுகதை]

பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

வான்கீழ் [சிறுகதை]

எழுகதிர் [சிறுகதை]

நகைமுகன் [சிறுகதை]

ஏகம் [சிறுகதை]

ஆட்டக்கதை [சிறுகதை]

குருவி [சிறுகதை]

சூழ்திரு [சிறுகதை]

லூப் [சிறுகதை]

அனலுக்குமேல் [சிறுகதை]

பெயர்நூறான் [சிறுகதை]

இடம் [சிறுகதை]

சுற்றுகள் [சிறுகதை]

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

வேரில் திகழ்வது [சிறுகதை]

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

தங்கத்தின் மணம் [சிறுகதை]

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஏதேன் [சிறுகதை]

மொழி [சிறுகதை]

ஆடகம் [சிறுகதை]

கோட்டை [சிறுகதை]

துளி [சிறுகதை]

விலங்கு [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

போழ்வு, பலிக்கல்- கடிதம்

$
0
0

[வேலுத்தம்பி தளவாய்- ஆவணப்படம்]

போழ்வு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

போழ்வு கதை ஒரு பெரிய அதிர்ச்சியை உருவாக்கியது. ஏனென்றால் வீரநாயகர்களை எனக்கும் பிடிக்கும். நானும் சின்னவயசில் கோஷம் போட்டு அலைந்தவன். சம்பந்தமே இல்லாத இன்னொரு சூழலில் இன்னொரு வரலாற்றை படிக்கும்போது நமது பிடரியில் அடிப்பது போல தோன்றுகிறது

விக்கியில் படிக்கும்போதே ஆச்சரியமாக இருக்கிறது. கட்டப்பொம்மன், பழசிராஜா அனைவருமே பிரிட்டிஷாருக்கு கொஞ்சநாள் விசுவாசமாக இருந்தவர்கள்தான். பிரிட்டிஷார் ரொம்ப நெருக்கியபோதுதான் அவர்கள் எதிராக திரும்பியிருக்கிறார்கள். வேலுத்தம்பியும் அப்படித்தான்

எல்லா மாவீரர்களும் சென்றடையும் இடம் இது. அவர்கள் வரலாற்றில் நீடிக்கவேண்டும் என்றால் வரலாற்றை சூறையாடியாக வேண்டும். விளைவாக அவர்கள் இரட்டைமனிதர்களாக ஆகிவிடுகிறார்கள். அதன்பின் அவர்களிடம் எவரும் எதையும் பேசமுடியாது. ஏனென்றால் அவர்கள் சொல்லும் எந்த சொல்லுக்கும் செயலுக்கும் அவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள மாட்டார்கள்

ஒரு வரலாற்று தரிசனமாகவே ஒலிக்கும் வரிகள்.

வேலுத்தம்பி தளவாயைப் பற்றி சம்பிரதாயமான பார்வையை முன்வைக்கும் ஆவணப்படம். தூர்தர்சன் தயாரிப்பு

ராம்குமார்

***

ஜெ

போழ்வு கதை படித்தவுடன் வேலுத்தம்பியின் முழு வரலாற்றையும் படித்தேன். போழ்வு என்ற சொல்லின் பொருள் தேடி பிளவு என கண்டவுடன் கதையின் பெயரே தரிசனத்தை கண்டு கொள்ள உதவியது.

மாவிங்கல் கிருஷ்ண பிள்ளையை இரண்டாக பிளந்த தருணத்தில் வேலுத்தம்பிக்குள் இருந்த வேலாயுதம் தளவாயிடம் இருந்து பிரிந்து  பின்னர் ஆங்கிலேயரை எதிர்க்க ஆரம்பித்து கொல்லம் போருக்கு பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.

அன்புடன்

சதீஸ் குமார்

***

பலிக்கல்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

பலிக்கல் கதை உறைய வைத்தது. அந்தக்கதையில் உள்ள குரூரம் அப்பட்டமான அநீதி இதெல்லாம் அபூர்வமானவை என்பதனால் அல்ல, அவையெல்லாம் அன்றாட வாழ்க்கையிலேயே நடந்துகொண்டிருக்கின்றன என்பதனால்.

என் வாழ்க்கையிலேயே இதைப்போன்ற பல சம்பவங்களை பார்த்திருக்கிறேன். பலவற்றை கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தனை துரோகங்கள் மன்னிப்புகளுக்கு நடுவிலேதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோ. இந்தக் கதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இதேபோல ஒரு கதை அவர்கள் அறிந்த சூழலில் இருந்து சொல்வதுற்கு இருக்கும் என்பதே இந்த கதையை அபூர்வமானதாக ஆக்குகிறது

சி.ஜெகதீசன்

***

ப்ரியமுள்ள ஜெயமோகன் சாருக்கு…

பலிக்கல் படித்து இரண்டு நாளாகாகிறது. ஆனால் அது எழுப்பும் ” நீதி, நியாயம் “ குறித்தக் கேள்வி இன்னமும் மனதிற்குள் காற்றில் இலை போல அசைந்து கொண்டிருக்கிறது. போத்தியின் ஆன்மீக விடுதலைதான் கதையின் உச்சம் என உணர்கிறேன். ” அதே சமயம் பலிக்கல் எது என்கிற கேள்வியும் எழுகிறது. பதினேழு வருசமா கழுவிலே ஏத்தி உக்கார வைச்சிருக்குடா..ஆண்டவன் என்னைய கழுவிலே ஏத்திட்டாண்டா”ன்னு அழகிய நம்பியா பிள்ளை கதறுகிறார். பதினேழு வருடங்களாய் அப்படியான ஒரு வாழ்க்கையைத்தான் அவர் வாழ்கிறார் .குரூரமான நோயுடன் இறந்தும் போகிறார். ஆனால் போத்தி தன் மனதில் கற்பனை செய்துகொள்ளும் அழகிய நம்பியா பிள்ளையின் வாழ்க்கை மிகுந்த  பிரகாசமாக இருந்திருக்கிறது. அதனால்தான் போத்தியால் அழகிய நம்பியா பிள்ளையை வெற்றி பெற்றவராக நினைக்க முடிந்திருக்கிறது. அதுதான் உண்மையில் போத்தி புகுந்து கொண்ட இருள் சூழ்ந்த சிறை.

சமூக மனிதனாக மட்டும் எண்ணிக் கொள்ளும் எல்லாரும் நீதி, நியாயம் எல்லாவற்றையும் அப்படித்தான் நினைக்க முடிகிறது. போத்தியின் அளவுகோலைதான் எல்லாரும் கையில் வைத்திருக்கின்றனர். அழகிய நம்பியா  பிள்ளையின் வாழ்க்கை அவரைத் தவிர யாருக்கும் தெரியாது.  பலிக்கல் என்பதை சமூகம் தீர்மானித்து விட முடியாது. நம் ஆன்மா முடிவு செய்ய வேண்டும். ஆன்மாவின் கதவு சாத்தப்படும் போது. இருள் சூழ்கிறது.  போத்தி சிக்கிக் கொண்ட சிறையை விட அவரது ஆன்மா சிக்கிக் கொண்ட சிறைதான் முக்கியமாகப் படுகிறது. போத்தியின் உருவ அமைப்பை கதை விவரிக்கும் போது அவர் மனதின் விசித்திரங்களை உணர முடிந்தது. ஒவ்வொரு முறை போத்தி தன் கைகள் இரண்டையும் தன் தொடைகளுக்குள் வைத்திருக்கிறார் . நடுங்கியபடி  ஜன்னலைப் பார்த்தவாறே அமர்ந்திருக்கிறார். “ஏண்டா குருவி எல்லாம் உள்ள வருதே ? பூட்டிவைன்னு சொன்னா அவன் கேக்குறதில்லை..” எனத் திரும்பத் திரும்பச் சொல்வது கதை சொல்லும் உச்ச அனுபவத்திற்கு இழுத்துச் செல்கிறது.  இறுதியில் சண்முகலிங்கம் போத்தியின் முன் குப்புற விழுந்து அழுகிறார். அழகிய நம்பியா பிள்ளையின் உண்மையான வாழ்க்கை போத்தியின் ஆழ்மனதினை தட்டித் திறக்கிறது.

ஜன்னல் வழியாக பறந்து வந்த குருவியின் குரல் ” சரி விடுடா..ரெண்டுபேருமே சின்னப்பசங்க. நமக்கு எல்லாருமே ஒண்ணுதான்” என போத்தியின் வழியாக  வந்து விழும் போது கதை மேலெழுந்து பறக்க ஆரம்பிக்கிறது. கதை கொடுக்கும் நிகர் அனுபவம் திகைப்பில் வைக்கிறது.  அப்பாவை ஜான் கட்டிலில் படுக்கவைத்து போர்த்தி விட்டான். அவர் மார்பின்மேல் கையை கோத்து வைத்து வாய் திறந்திருக்க தூங்கிக்கொண்டிருந்தார். என வாசிக்கும் போது அதுவரை தொடைகளுக்கு அடியில் அழுத்திப் பிடித்திருக்கும் கைகள் மார்பின் மேல் வருகிறது. இப்போதுதான் போத்தி விடுதலை அடைகிறார்.

போத்தியின் ஆன்மீக விடுதலை நிறைவினை கொடுக்கிற அதே வேளையில்  நீதி, நியாயம் குறித்த கேள்விகள் மறுபடியும் எழுகிறது. கதையின் சொல்லப்படாத பகுதிகளை கற்பனை செய்து பார்க்கிறேன். போத்தி தன்னை அழகிய நம்பியா பிள்ளையாக கற்பனை செய்யத் துவங்குவது சிறைக்குச் செல்வதற்கு முன்பாகவேத் துவங்கியிருக்குமா? கொஞ்சம் கொஞ்சமாக கோயில் நகைகளையும், சிலைகளையும் அழகிய நம்பியா பிள்ளை திருடிக் கொண்டிருக்கிறார் என்பது போத்திக்கு தெரிந்திருக்கும். போத்தி அதை யாரிடமும் சொல்லவில்லையா?.  அதில் அவருடையப் பங்கு இல்லை என்றாலும். மனதிற்குள் அனுமதித்திருக்கிறாரா? தன்னால் முடியவில்லை ஆனால் அப்படி திருடுவது தப்பு இல்லை என நினைத்திருக்கிறாரா? எந்த விசை நேரடியான  வாழ்க்கையில் அவருக்கு அவ்வளவு பெரிய வீழ்ச்சியைக் கொடுத்தது ? ஏன் கொடுத்தது ? அதில் அவரது பங்கு என்ன ?  சிறு உமி அளவு கூட தவறின் எண்ணம் இல்லாத ஒருவரை பலிக்கல்லை நோக்கித்தான் தள்ளூம் என்றால்  தர்மம் என்பதில் நீதி, நியாயம் என்பதின் அர்த்தம் என்ன?  அதில் இறையின் பங்கு என்ன? என விரித்துக் கொண்டே செல்கிறேன் ?

பா.கின்ஸ்லின்

***

தொடர்புடைய பதிவுகள்

சிவம் [சிறுகதை]

$
0
0

நித்யா சொன்னார். “இன்று காலை இவன் என்னிடம் நித்யா உங்களுக்கு அன்பென்பதே இல்லையா என்று கேட்டான்” என்றார்.

நான் தலைகுனிந்து அமர்ந்திருந்தேன். அனைவரும் என்னைப் பார்த்தனர்.

“இங்கே, பதினெட்டு ஆண்டுகள் இருந்த லக்ஷ்மணன் வலியங்காடி செத்துப்போன செய்தி வந்தது. நான் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். செய்தியை கேள்விப்பட்டதும் குருகுலம் மாத இதழுக்கான அஞ்சலிக் குறிப்பைச் சொல்லிவிட்டு வகுப்பை தொடர்ந்தேன். இவன் அதிர்ச்சி அடைந்துவிட்டான்”.

“நேற்று இரவு என் அறைக்குள் வந்து கண்ணீருடன் இவன் கேட்டான், ‘குரு, நாளை நான் செத்துப்போன செய்தி வந்தாலும் அப்படித்தான் இருப்பீர்களா?’ என்று.  ‘ஆமாம், அதிலென்ன சந்தேகம்/’ என்று நான் சொன்னேன். அப்படியே திரும்பி சென்றுவிட்டான். காலையில் வந்தபோது முகம் வீங்கியிருந்தது. என்ன என்று கேட்டேன். அப்போதுதான் கேட்டான், உங்களுக்கு அன்பே இல்லையா என்று”.

“நான்  ‘இல்லை, அப்படி எதையும் நான் உணரவில்லை’ என்றேன். உணர்ந்திருந்தால் அதை வெளிப்படுத்தியிருப்பேனே. இவன் ஆவேசமாக ‘ஸ்னேகமாணு அகிலசாரம் ஊழியில் என்று குமாரன் ஆசான் சொன்னது பொய்யா ?’ என்றான்.  ‘அன்பே சிவம் என்று திருமூலர் வேறு சொல்லியிருக்கிறார்’ என்றான்” என்றார் நித்யா

கண்களில் சிரிப்புடன் “நான் சொன்னேன்.‘இல்லையே, நான் அன்பென்ற சிவத்தை அறியவே இல்லையே’ என்று.  நான் கண்டதெல்லாம் ஆவுடை மேல் அபிஷேகம் செய்து செய்து எண்ணைப் பளபளப்புடன் மொழமொழவென்று அமர்ந்திருக்கும் சிவம். அதுதான் அன்பு என்றால் நல்ல உறுதியானது அது. நம்பி யார் தலைமேல் வேண்டுமென்றாலும் எடுத்துப் போடலாம்”.

நான் எழுந்துவிட்டேன்.

நித்யா “என்ன?” என்றார்.

“நான் போகிறேன்”.

“எங்கே?”

”வீட்டுக்கு”.

“எப்படியும் வீட்டுக்குத்தான் போகப்போகிறாய்… உட்கார்” என்றார் நித்யா.

நான் அமர்ந்துகொண்டேன்.

“வீடுபேறுக்கு என்ன அவசரம்?”

நான் தலைகுனிந்து அமர்ந்திருந்தேன்.

“நான் காசியில் கண்ட ஒரு சம்பவம் இது. ஒரு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு. அன்று நான் குருவிடமிருந்து அனுமதி பெற்று கிளம்பி நாடோடியாக அலைந்துகொண்டிருந்தேன்” என்று நித்யா சொன்னார்.

இந்தியா அலைந்து திரிபவர்களுக்கு மிக வசதியான நாடு, ஒரே இடத்தில் வாழ்பவர்களுக்கு மிகமிக வசதிக்குறைவான நாடு. இந்த நாடே ஒவ்வொருவரிடமும் எதற்கு இங்கே இருக்கிறாய், கிளம்பு என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. துறவியாக போகவேண்டும் என்ற ஆசை இல்லாத ஓரிருவர் கூட இங்கே இருக்கமாட்டார்கள். அவ்வாறு இருந்தால் அவர்களுக்கு பொதுவாக எந்த ஆசைகளும் இருக்காது.

இங்கே ஓரிடத்தில் வாழ்வது கடினம். முதலில் இடமே இல்லை. கேரளத்தில் ஐந்துசெண்ட் நிலமிருந்தால் அவன் நிலக்கிழார். பத்துசெண்ட் நிலமிருந்தால் அவன் சிற்றரசன். ஒரு ஏக்கர் நிலமிருப்பவன் என்ன செய்வது என்று தெரியாமல் பக்கத்து நிலம் மீது படையெடுப்பான். எங்கே போனாலும் கூட்டம். கும்பல். அடிதடி. இந்தியர்களாகிய நாம் சக இந்தியர்களை இரு தோள்களால்தான் அதிகமாக அறிந்திருக்கிறோம்.

அந்த சின்ன இடத்தில்கூட நிம்மதியாக இருக்கமுடிகிறதா? பக்கத்து வீட்டுக்காரன் எட்டிப் பார்க்கிறான். “அதென்ன, உன் மூக்குக்குக் கீழே?” என்று விசாரிக்கிறான். இங்கே முன்பு முகுந்ததாஸ் என்று ஒருவர் வந்தார். அவருக்கு சன்யாசம் வேண்டும். ஏனென்றால் பக்கத்து வீட்டுக்காரனின் தொல்லை. இவர் மனைவியிடம் பேசுவதுகூட அவனுக்கு கேட்கிறது. அப்படியே முற்றிமுற்றி இவர் கனவில் கண்டதெல்லாம்கூட அவனுக்கு தெரிய ஆரம்பித்ததும் இங்கே வந்துவிட்டார்.

இங்கே ஆறுமாதம் இருந்தார். இங்கே பக்கத்துவீடே இல்லை. சுற்றிலும் மலைகள். காற்றும் குளிரும். மனிதனை ஒரு பொருட்டாக மதிக்காத யூகலிப்டஸ் மரங்கள். என்ன செய்வார்? உண்மையில் அவர் யூகலிப்டஸ் மரங்களைப் பற்றி ஆத்திரத்துடன் என்னிடம் கேட்டார். ‘‘குரு ,ஒரு மரத்திற்கு ஏன் இத்தனை உயரம்?” ஆறுமாதம் வரை தாக்குப்பிடித்தார். அதன்பின் மேலே மேட்டிலேறி நின்றுகொண்டு உலகைப் பார்த்து தன்னுடைய மனதில் உள்ள நினைப்புகளை கூவி அறிவிக்கத் தொடங்கினார்.

அதன்பின் இங்கிருந்து கிளம்பிச்சென்றார். என்ன நடக்கும் என்று எனக்கு தெரிந்திருந்தது. ஆறுமாதம் கழித்து ஃபாதர் தாமஸ் கோலஞ்சேரியைப் பார்க்கச் சென்றபோது அங்கே ஒருவரைப் பார்த்தேன். அவர் அங்கே கரிஷ்மாட்டிக் பிரேயருக்கு வந்திருந்தார். பக்கத்து வீட்டுக்காரர்தான் அவருக்குப் பிரச்சினை. அவர் தன் மனதிலுள்ள எல்லாவற்றையும் இவரிடம் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார். கனவுக்குள்கூட புகுந்து சொல்ல ஆரம்பித்ததும் இவர் ஓடி தொடுபுழையில் ஃபாதரின் ஆசிரமத்திற்கு வந்துவிட்டார்.

என்ன சொன்னேன்? இந்தியா அலைந்து திரிபவர்களுக்கு உகந்த நாடு. முதல்விஷயம் இமையமலை தவிர எங்கும் பெரிய குளிர் கிடையாது. தார்ப்பாலை தவிர எங்கும் குடிநீர் இல்லாத நிலையும் கிடையாது. எங்கே சென்றாலும் எவராவது சோறு போடுவார்கள். காலில் விழுவார்கள்.காணிக்கை தருவார்கள். நாம்  உளறுவதை பக்தியுடன் கேட்டுக்கொள்ளவும் செய்வார்கள்.ஒரு காவி மட்டும் போட்டுக்கொள்ளவேண்டும், அவ்வளவுதான்.

அதைவிட முக்கியமானது இங்கே நமக்கு சலிப்பே கிடையாது என்பது. ஐம்பது கிலோமீட்டருக்கு நிலம் மாறிவிடும். மக்களின் முகங்களும் வீடுகளும் மாறிவிடும். நூறுகிலோமீட்டர் போனால் மொழி மாறிவிடும். இருநூறு கிலோமீட்டர் போனால் மத ஆசாரங்களே மாறிவிடும். மத்தியப்பிரதேசம் சந்தால் பகுதியில் ஒரு கோயில். இடிந்த பழைய கோயில். பக்தர்கள் நிறைய வந்து வழிபடுகிறார்கள். சாமி சுவரில் ஒரு சிறிய புடைப்புச் சிற்பமாக உள்ளது. அதன்மேல் செந்தூரம் பூசி வணங்குகிறார்கள்.

பூசாரி ஒரு கல்லின்மேல் ஏறி அதற்கு தீபம் காட்டுவதைக் கண்டேன். அந்தக்கல் என்ன என்று பார்த்தேன். அன்பு! நல்ல கருமையான வழவழப்பான அன்பு. மிகமிகத் தொன்மையானது. அந்த புடைப்புச் சிற்பம் என்ன என்று பார்த்தேன். ஒரு பல்லி.

நாம் நிரந்தரமாக தங்கினால் நம் ஐந்து செண்ட்டில் வாழ்கிறோம். அதைவிட்டுவிட்டு “ஹரிஓம்! சிவோகம்!  சோறு போடுங்கள்!” என்று கோவணத்தை இறுக்கிக்கொண்டு கிளம்பினால் இந்தியா நம் வீடு ஆகிவிடுகிறது. ஏகப்பட்ட அறைகள், ஏகப்பட்ட பாதைகள். என்னென்னவோ நடக்கும் மறைவிடங்கள், வெட்டவெளிகள். அதன்பின் நாம் திறந்தவெளியில் தூங்கவே விரும்புவோம்.! இந்தியாவின் துறவிகளில் மிகச்சிலர்தான் அறைகளுக்குள் வாழ்பவர்கள். அறைகளுக்குள் வாழும் துறவிகள் கொஞ்சம் கொஞ்சமாக சம்சாரிகள் ஆகிவிடுகிறார்கள். வெளியே எது கிடைத்தாலும் அறைக்குள் கொண்டு வைத்துவிடுவார்கள். அறைக்குள் இருந்தாக வேண்டியவற்றை வெளியே கொண்டு வைப்பார்கள். அது சம்சாரிகளின் குணம்.

ஆகவே நான் ஊரைவிட்டு கிளம்பி பல ஆண்டுகள் திரும்ப வரவில்லை. ரிஷிகேசம், ஹரித்வார், மேலே கேதார்நாத்தில்கூட ஆறுமாதம் இருந்திருக்கிறேன். காசியில்தான் நீண்டநாள் இருந்தேன். ஒன்றரை ஆண்டுக்காலம். ஏனென்றால் இந்தியா அலைந்து திரிபவர்களின் நிலம் என்றால் காசி அதன் தலைநகரம்.

நீ காசி போயிருக்கிறாய் அல்லவா? இங்கே எல்லாருமே காசியை பார்த்திருப்போம். அது ஒரு மாபெரும் சாக்கடை முகப்பு. பனாரஸ் என்ற மாநகர் அங்கே இருக்கிறது. பட்டுப்புடவைகள், பித்தளைப் பாத்திரங்கள், தோல்பொருட்கள் ஆகியவற்றுக்கு புகழ்பெற்றது. பல்லாயிரம் தொழிற்சாலைகள். அவை வெளியேற்றும் சாக்கடைகள் வந்து கங்கையில் கலக்கும் இடமே நாம் பேசிக்கொண்டிருக்கும் காசி.

வரணா, அசி என்னும் இரண்டு ஓடைகள். அவை மிகப் புனிதமானவை என்று கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். அந்த இரு ஓடைகளுக்கு நடுவே உள்ள நிலம் வரணாசி. நிகழ்காலத்தின் அழுக்குகளை நாம் மண்ணுக்குள் புகுத்திவிடுகிறோம். காசி மண்ணுக்குள் புதைந்ததுபோல் தோன்றும். பனாரஸ் அதன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்கள் தியேட்டர்கள் ஆஸ்பத்திரிகளுடன் தலைக்குமேல் இருக்கும்.

அந்த புதைவில் வளைகள் போல சிறுசிறு சந்துகள். அவற்றில் எலிகள் போல ஊடுருவி அலையும் மனிதர்கள். எலிகளின் சுறுசுறுப்பை அனைவரிலும் பார்க்கலாம். கண்ணுக்குப்படும் பெரும்பாலானவர்கள் கடந்த காலத்தைச் சேர்ந்தவர்கள். அவர் சென்ற நூற்றாண்டிலோ பத்தாம் நூற்றாண்டிலோ வேதகாலத்திலோ எப்போது வேண்டுமென்றாலும் வாழ வாய்ப்புள்ளவர்கள்.

என்னென்ன முகங்கள்! காசியின் அழகே அந்த முகங்கள்தான். பழுத்த வைதிகர்கள். பழுக்கவைக்கப்பட்ட முதியவர்கள்.பழுக்க முயலும் சிறியவர்கள். பித்ரு கடன்களுக்காக வந்த தற்காலிக வைதிகர்கள் மிகத்தீவிரமான முகத்துடன் இருப்பார்கள். அவர்களில் வசதியான விடுதிகளில் தங்குபவர்கள் உண்டு. சத்திரங்களில் தங்குபவர்கள் உண்டு. சத்திரங்கள் பெரும்பாலும் இருநூறாண்டுக் காலம் பழைமையானவை.

பலநூறு மைல் தொலைவில் வரண்ட நிலங்களில் இருந்து அழுக்கு உடைகளும் மூட்டைகளுமாக வருபவர்கள் பல்லாயிரம்பேர். அவர்கள் தெருக்களிலும் படிகளிலும் தங்கிக் கொள்வார்கள். கிழவர்களை மூங்கில்களில் துணித் தொட்டில் கட்டி தூக்கி வருவார்கள். கங்கையில் நீராடாமல் சாகக்கூடாது என்பதற்காக.

காசியின் காலம் எருமைகளில் திகழ்கிறது. மிகமிக மெல்ல அவை நடந்துசெல்கின்றன. வேதகாலத்தை, அல்லது அதற்கும் முந்தைய காலத்தை அசைபோடுகின்றன. ஓங்கார ஒலியெழுப்புகின்றன. அவற்றின்மேல் அமர்ந்து காகங்கள் செல்கின்றன. எந்த சாக்கடையை தொடர்ந்து சென்றாலும் கங்கையை அடைந்துவிடலாம்.

காசி சாவின் நகரம். தலைக்கு மேலிருக்கும் நகரங்களில் இருந்து சாவுநோக்கி வருபவர்கள், செத்தவர்கள் காலத்தில் மூழ்கி மூழ்கி காசிக்கு வருகிறார்கள். சைக்கிள்களில் நெடுக்குவாட்டில் பிணத்தை கட்டிவைத்து தள்ளியே கொண்டுவருவார்கள். ஒற்றைமூங்கிலில் கட்டி இருவர் தூக்கி சந்துகள் வழியாக கொண்டு வருவார்கள். சாய்த்து நிறுத்திவிட்டு டீ குடிப்பார்கள்

இரண்டு சுடுகாடுகள். ஹரிச்சந்திர கட்டம், மணிகர்ணிகா கட்டம். இரண்டிலும் சிதைகள் எரிந்துகொண்டே இருக்கும். அணையவே அணையாது. நம்மூர் சிதைகள் போல அல்ல. நான்கடி நீளம் மட்டுமே கொண்டவை. பிணத்தின் தலையும் முழங்காலுக்கு கீழும் வெளியே நீட்டியிருக்கும். தீ ஏற்கனவே எரிந்துகொண்டிருக்கும். வயிறு வெந்து உள்ளிருந்து நீர் விழுந்து பொசுங்கி அனலால் உறிஞ்சப்படும். அப்படியே பிணத்தை மடிப்பார்கள். எந்த யோகாசன நிபுணரும் அந்த ஆசனத்தை செய்யமுடியாது. வயிறு மார்பின் மேல் படியும் கால் அதற்குமேல் வந்து அமையும். அப்படியே அனல்விட்டு கொழுந்தாட வேண்டியதுதான்.

சொல்லே உடலில் வாழும் அனல் என்பது வேதாந்த மரபு. சொல்லப்படாத சொற்களெல்லாம் அனலாக எரியும். காதலில் உறவில் அன்பில் பகைமையில் சொல்லப்படாத சொற்கள். எத்தருணத்திலும் சொன்ன சொற்களைவிட சொல்லப்படாதவையே மிகுதி. அவை மானுடனின் உள்ளே நிறைந்துள்ளன. மானுடன் சொல்நிரம்பிய கலம். அது உடைந்து தழலாக எழுவதை அங்கே காணலாம்.

வரணாவுக்கும் அசிக்கும் நடுவே உள்ள படிக்கட்டுகள் பண்டாக்களும் குகாக்களும் சேர்ந்து கைவசப்படுத்தியவை. அங்கே எந்நேரமும் சந்தடி. செத்தவர்களை கொண்டுவருபவர்கள் மண்ணிலிருந்து விண்ணை நோக்கி கூவிக்கொண்டே இருக்கிறார்கள்.  “எடுத்துக்கொள்க!, எடுத்துக்கொள்க!’. இன்னொரு சாரார் அங்கே வந்து விண்ணை நோக்கி  “மைந்தரைக் கொடு , மைந்தரைக் கொடு” என்று யாசிக்கிறார்கள்.உண்மையில் மானுடர் விண்ணில் இருந்து பிற மானுடரால் கறந்து எடுக்கப்பட்டு புளித்தபின் திரிந்தபின் திருப்பி அனுப்பபடுகிறார்கள்.

பிரார்த்தனைகள், நீர்க்கடன்கள், கூச்சல்கள். தையல் இலைக்கிண்ணங்களில் இட்லி. பூரிக்கிழங்கு. சுருட்டப்பட்ட சப்பாத்திகள். கஞ்சா பிடிக்கும் சம்சாரிகள். பிச்சைக்காரர்களின் அரசத்தோரணை. ஊடே ஹிப்பிகள் அலைகிறார்கள். அவர்கள் கஞ்சாவுக்காக வந்தவர்கள். சிலர் மேலும் சிலவற்றை நம்பி. சிலருக்கு மயக்கங்கள் கலைகின்றன. சிலர் புதிய மயக்கங்களில் விழுகிறார்கள்.

நான் தங்கியிருந்தது. அஸ்ஸி கட்டுக்கு மிகத்தள்ளி. அங்கே பக்தர்கள் வரமாட்டார்கள். கங்கையின் விரிந்த கரை முழுக்க இடிந்த சிறிய கோயில்கள் உண்டு. பல்வேறு பெயரறியா தெய்வங்களின் ஆலயங்கள் அவை. அவற்றிலும் அவற்றைச் சூழ்ந்துள்ள இடங்களிலும் சாமியார்களின் குடிசைகளும் கூடாரங்களும் நிறைந்திருக்கும். ஒரு காவிக்கொடி பறந்தால் அது ஒரு சாமியாரின் குடில் என்று பொருள்.

அன்றெல்லாம் பழைய லாரிகளின் டார்ப்பாய்களைக் கொண்டுதான் கூடாரங்கள் அமைப்பது. சமைப்பது கிடையாது. காலையில் கிளம்பி சென்றால் ஓரிரு மணிநேரத்திலேயே உணவும் கஞ்சாவுமாக திரும்பி விடுவார்கள். பிச்சையெடுத்து கொண்டு வரவேண்டியது இளையவர்களின் வேலை. மூத்த சாமிகள் காலையில் சும்மா அமர்ந்திருக்கும். மாலையில் கஞ்சா புகைத்து சும்மா அமர்ந்திருக்கும். சொன்னேனே, காசி சும்மா அமர்ந்திருப்பதற்கான இடம்.

இரவில் அனல் மூட்டுவார்கள். கங்கை வழியாகப் படகில் சென்றால் கரைமுழுக்க நூற்றுக்கணக்கான செந்தழல்களைக் காணலாம். பாடல்களின் ஒலிகள் கேட்கும். நெருப்பை சுற்றி ஆடும் ஆடல்களின் அசைவுகள் தெரியும். பின்னிரவு வரை ஆட்டம் இருக்கும். கூச்சல்கள் இருக்கும். அதன்பின் எப்போதோ அவை ஓயும், ஆனால் அனல் சுடர்விட்டபடியே இருக்கும்.

நிதம்பசூதனி, வக்ரகாளி, பிரத்யங்காரா, சின்னமஸ்தா போன்ற விபரீதமான தெய்வங்களின் ஆலயங்களின் அருகே மக்கள் நடமாட்டமே இருக்காது. அங்குதான் அகோரிகளின் குடியிருப்புகள். அவை அகாடாக்கள் எனப்படும். அகாரா என்று சொல்வார்கள். ஒரு அகாடா என்பது ஒரு தேன்கூடு. அதில் இன்னொரு தேனீ நுழைய முடியாது. கடுமையான காவல் கொண்டது அது. ஐயம் நிறைந்த கண்களுடன் ஓரிரு அகோரிகள் அவர்களின் முகாமின் தொடக்கத்திலேயே அமர்ந்திருப்பார்கள். அகோரிகளின் உலகம் வேறு. அவர்களை குளவிகள் என்று பிற சாமியார்கள் சொல்வார்கள்.

சாமியார்கள் அங்கே என்ன செய்கிறார்கள்? சில தியானம். சிலர் யோகம். பெரும்பாலானவர்கள் எதையும் செய்வதில்லை. தொழிலென்றோ வணிகமென்றோ எதையாவது செய்பவர்கள் என எவருமில்லை. காசியின் புதையுண்ட உலகில் வாழ்கிறார்கள் அவர்கள். அவர்களின் தலைக்கு மேல் சுல்தான்களின் ஆட்சி வந்துசென்றது. முகலாயர் வந்து சென்றனர். ஆங்கிலேயர் வந்து சென்றனர். தொழில்நுட்ப நாகரீகம் வந்துசென்றது. அவர்கள் அங்கேயே இருக்கிறார்கள், புதைவில்.

ஆனால் இந்த நாட்டின் மதிப்பு மிக்க அனைத்தும் புதைவில்தான் உள்ளனவா? இங்கிருக்கும் ஞானம் இன்றும் புதைவுண்டதே. இதன் வரலாறு இன்னமும் அகழப்படவில்லை. புதைவில் இருப்பவை வெறுமே இருக்கின்றனவா? கிளைகள் வளர்ந்து விரிகின்றன. காற்றில் ஆடுகின்றன. தளிர்த்து பழுத்து உதிர்ந்து தளிர்க்கின்றன. மலர்கின்றன, கனிகின்றன. வேர்கள் வெறுமே புதைந்திருக்கின்றன. பற்றிக்கொண்டு, உறிஞ்சிக்கொண்டு.

ந்நாளில் நான்  காலாபாபா என்ற சாமியாரின் கூட்டத்துடன் ஒரு கூடாரத்தில் தங்கியிருந்தேன். காலையில் எழுந்ததும் அவருடைய உடலை தூக்கி கொண்டுசென்று வெயில் படாத இடமாக படுக்க வைக்கவேண்டும். அவர்மேல் ஒரு துணியை போர்த்திவிடவேண்டும். கூடாரத்தின் உட்பகுதியை தூய்மைசெய்து கஞ்சாக்குழல்களை சீராக எடுத்து அடுக்கி வைக்கவேண்டும்.

அதன்பின் நான் கங்கைக்குச் சென்று குளிப்பேன். ஆடையை துவைத்து கொண்டுசென்று கூடாரத்திற்கு பின்னாலிருக்கும் கொடியில் காயப்போடுவேன். உலர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு படித்துறைக்குச் செல்வேன். ஒரே இடம்தான். அந்த படித்துறை மிகப் பரபரப்பானது. அங்கே காலையிலேயே பல்லாயிரம் பேர் நீர்க்கடன் செலுத்தி விட்டிருப்பார்கள். அனைவருமே உயர்ந்த உள்ளத்துடன் உடனே தர்மத்தை பேணியாகவேண்டும் என்ற துடிப்புடன் இருப்பார்கள்.ஒருமணி நேரத்திலேயே நூறு ரூபாய்க்குமேல் கிடைத்துவிடும். கஞ்சா வாங்கிக்கொள்வேன். அவசியமான சிறிய பொருட்கள்.

பத்துப்பதினைந்து கடைகளில் நீர்க்கடன் செலுத்தியவர்கள் அன்னதானம் செய்ய பணம் கொடுத்து வைத்திருப்பார்கள். அங்கே செல்பவர்களுக்கு உணவு கிடைக்கும். என் முகாமில் எவருமே அரிசி சாப்பிடமாட்டார்கள். சப்பாத்தி, பூரி வாங்கிக்கொள்வேன். வெல்லம் நிறையவே தேவைப்படும். பெரும்பாலானவர்கள் ஒருநாளைக்கு அரைக்கிலோ வெல்லம் உண்பார்கள். கஞ்சா வெல்லத்தின் மீதான விருப்பத்தை உருவாக்குவது.

திரும்பி வரும்போது எல்லாரும் எழுந்து கங்கைக் கரையோரமாக அமர்ந்திருப்பார்கள். உணவை நானே பரிமாறுவேன். காலாபாபா ஒருவேளைக்கு நான்கு சப்பாத்தி சாப்பிடுவார். இரவில் கொஞ்சம் வெல்லம். அவ்வளவுதான். அவருக்கு தொண்ணூறு வயதுக்கும் மேல். உடல் நெற்றுபோல இருக்கும். என்ன ஆச்சரியம் என்றால் இருபதாண்டுகள் கழித்து நான் அங்கே போனேன். அவர் அப்படியே அங்கேயே இருந்தார்.

மழைக் காலம் கடினமானது. கூடாரங்கள் மழைக்கு போதாது. கங்கைச் சமவெளியின் மழை ஆக்ரோஷமானது. ஜூனில் தொடங்கி ஆகஸ்ட் வரை வீசி அடிக்கும். ஆனாலும் அத்தனை பேரும் அங்கேயேதான் இருப்பார்கள். மழையில் நனைந்து ஊறி அடுத்து வீசும் காற்றில் உலர்ந்து மீண்டும் நனைந்து. அங்குள்ள மரங்களைப் போல. ஆனால் காசியில் சாப்பாடும் கஞ்சாவும் அடைமழையிலும் குறைவுபடுவதில்லை.

மழை அத்துமீறி கங்கைப் பெருக்கு கரைவிளிம்பு வரை எழுந்துவிட்டால் கூடாரங்களை மேலும் மேலும் மேலேற்றி கொண்டு செல்வோம். சாலையின் ஓரமாகவே கட்டிக்கொள்வோம். அங்கே தூங்குவது கடினம், தலைக்குமேல் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கும். காலாபாபா ஒருமுறை எழுந்து சென்று ஒரு போலீஸ் வேனின் கண்ணாடியை கல் எறிந்து உடைத்தார். அதிலிருந்த இன்ஸ்பெக்டர் கீழே வந்து வணங்கி அவருடைய ஆசியைப் பெற்றுக்கொண்டார்.

கங்கையில் மழைக்கால வெள்ளம் சுழித்துச் சுழித்துச் செல்லும். காரணம் கரையிலிருந்து வந்து சேரும் நீர்ப்பெருக்குகளால் மையப்பெருக்கு அலைக்கழிக்கப்படும். அதை கணிக்கவே முடியாது. தேர்ந்த குகர்கள்கூட படகுகளை இறக்க பயப்படுவார்கள். அதைவிட கூடுதலான வெள்ளம் கோடையில் இமையப்பனியுருகி வரும். ஆனால் அது நேர்த்தியான சீரான ஒழுக்கு.

நான் அன்று காலை கிளம்பி என்னுடைய படித்துறைக்குச் சென்றபோது கங்கையோரம் எவருமே இல்லை. படிக்கட்டுக்கள் ஒழிந்து கிடந்தன. பாண்டாக்கள் கூட குடைக்குள் ஒடுங்கி அமர்ந்திருந்தனர். நான் நன்றாகவே நனைந்திருந்தேன். குளிரில் என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. எப்படியாவது உணவும் பணமும் சேர்த்து திரும்பிச்சென்று தீயின்முன் அமர்ந்துவிட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

எனக்கு எதிராக ஒருவன் வந்து கொண்டிருந்தான். கையை வீசி வீசி எவரிடமோ பேசிக்கொண்டிருந்தான். நின்று தலையை ஆட்டி சிரித்தான். கந்தலாடை அவன் உடலில் நார் நாராக தொங்கியது. அழுக்கும் சேறும் படிந்த சடைமுடி.

காசியில் பைத்தியங்களுக்கு குறைவே இல்லை. பைத்தியங்கள் எப்போதுமே கூட்டமான இடங்களை நாடி வருகின்றன. சகமனிதர்களிடம் அவை கொண்ட நம்பிக்கை அது. சாமியார்கள் விலகிச் செல்வதற்கு நேர் எதிர். சில பைத்தியங்கள் காரணமில்லாமலேயே கொந்தளித்து விடுகின்றன. அவன் என்னை அணுகியதும் இந்தியில் ஏதோ சொன்னான். நான் அறிந்த இந்தி அல்ல அது. வேறேதோ வட்டார இந்தி.

ஓங்கி துப்பி கையோங்கி என்னை அச்சுறுத்தினான். நான் அவனை கவனித்தபடி ஆனால் அவனை பார்க்காமல் கடந்து சென்றேன். சட்டென்று அவன் திரும்பி கரையோரமாக நின்றிருந்த ஒரு படகில் ஏறுவதைக் கண்டேன். நீர்ப்பெருக்கில் படகு அலைபாய்ந்து கொண்டிருந்தது. இரவுபெய்த மழையில் அதன் பாதிப்பங்கு நீர் நிறைந்திருந்தது

கங்கையில் படகுகளை சேர்த்துச் சேர்த்து நிறுத்தியிருப்பார்கள். ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் கட்டப்பட்டு நீரில் நெடுந்தொலைவுக்கு படகுகள் நின்றிருக்கும். கரையொதுங்கிய காட்டுச்செத்தை மரங்களைப்போல. அல்லது மொய்க்கும் மீன்கூட்டங்களைப்போல. நீரின் அலைகளை நாம் படகுகளிலேயே காணமுடியும்.

அந்த பைத்தியம் படகுகள் வழியாக கைவீசியபடி தாவித்தாவி ஓடினான். என்ன செய்கிறான் என்று தெரியவில்லை. கடைசிப் படகை அடைந்ததும் அவன் நின்றான். கைவீசி கங்கையை வசைபாடுகிறான் என்று தெரிந்தது. ஓர் அலை எழ படகுகள் எழுந்தமைந்தன. அவன் நிலைதடுமாறி நீரில் விழுந்தான்.

அங்கே மிக வலுவான நீரோட்டம் இருந்தது. அது அவனை சுண்டி எடுத்து தூக்கிச் சென்றது. அவனுடைய உடல் சென்ற வேகம் எனக்கு திகைப்பை உருவாக்கியது. அவன் கைகால் வீசி நீரில் தத்தளித்தான்.

எனக்குப் பின்னாலிருந்து வெற்றுடல் கொண்ட ஓர் இளைஞன் ஓடிவந்தான். “என்ன? என்ன?” என்றான்.

“பைத்தியம்!” என்றேன்.

அவன் படகுகள் மேல் தாவி ஏறி ஆற்றுக்கு இணையாகவே ஓடினான். பின்னர் நீரில் பாய்ந்து காலால் உந்தி கைகளை வீசி தாவித்தாவி நீந்திச்சென்றான். பைத்தியத்தின் தலை நீரில் மறைந்துவிட்டது. மீண்டும் எழுந்தது. அந்த இளைஞன் ஒழுக்குடன் இணைந்துகொண்டு நீரில் பறந்துசெல்லும் விரைவில் சென்றான். அவன் பைத்தியத்தை பிடித்துவிட்டான்.

பைத்தியம் அவனை இருகைகளாலும் பற்றிக்கொண்டான். இருவரும் நீருக்குள் மறைந்தனர். நான் பதறியபடி படிகளில் வெறியுடன் ஓடினேன். அவர்கள் மேலெழுந்தனர். பைத்தியம் அவனை பற்றிக்கொண்டதனால் அவனால் நீந்தமுடியவில்லை என்று தெரிந்தது. மீண்டும் அவன் மூழ்கினான்.

நான் மூச்சிரைக்க கூச்சலிட்டபடி ஓடினேன், அவன் மீண்டும் மேலே வந்தான். இம்முறை பைத்தியத்தின் இரு கைகளையும் ஒற்றைக் கையால் பிடித்துவிட்டிருந்தான். அதை சேர்த்து பிடித்து பைத்தியத்தை தன் முதுகின்மேல் ஏந்திக்கொண்டு ஒற்றைக்கையை வீசி வீசி நீந்தினான்.

படித்துறை முழுக்க பலர் எழுந்து நின்று அங்கே நிகழ்வதை வேடிக்கை பார்த்தனர்.

“இரு பைத்தியங்கள்!” என்று ஒருவன் சொன்னான்.

“சேர்ந்து கல்கத்தா செல்கிறார்கள்” என்று எவரோ சொல்ல சிரிப்போசை.

ஆனால் அவன் பைத்தியத்தை இழுத்து இழுத்து ஓரமாகக் கொண்டுவந்து விட்டான். மீண்டும் இருவரும் மூழ்கினர். மிக அப்பால் எழுந்தனர். மீண்டும் மூழ்கினர். இறுதியாக அவன் ஒரு படகின் முனையை பற்றிக்கொள்வதை நான் கண்டேன்

நான் ஓடி அங்கே சென்றபோது அவன் பைத்தியத்தை படகுகள் வழியாக கரைக்கு கொண்டுவந்துவிட்டிருந்தான். படித்துறைகளைக் கடந்து மிக அப்பால் சென்றுவிட்டிருந்தான்.

நான் அருகே சென்றேன். அவன் பைத்தியத்தை தூக்கி கொண்டுவந்து இரு கால்களிலும் பிடித்து தலைகீழாக தூக்கி படிக்கட்டில் நின்றபடி கீழே தொங்கவிட்டு உதறினான். பைத்தியம் விக்கலோசை எடுத்து துடித்து பின்னர் நீரை உமிழ்ந்தது. தூக்கி குப்புற படுக்க வைத்தான். தலை கீழ்ப்படிகளில் இருந்தது. பைத்தியம் இருமி இருமி நீரை உமிழ்ந்தது

நான் அருகே சென்றேன். இளைஞன் என்னை நோக்கிச் சிரித்து “பிழைத்துக்கொள்வான்” என்றான்.

அவனை வெறுமே பார்த்தபடி நின்றேன்.

பைத்தியம் எழுந்து அமர்ந்து நீரை பார்த்துக்கொண்டிருந்தது.

“மிக அபாயமான விஷயம்” என்றேன்.

“ஓர் உயிர் அல்லவா?”என்றான் அவன்.

“ஆம்” என்று நான் சொன்னேன்.

சட்டென்று பைத்தியம் எழுந்து அவனை உதைத்தது. அருகே கிடந்த கற்களை எடுத்து அவனை அடித்தது. அவன் சிரித்தபடி திரும்பி அதை பிடித்து தள்ளினான். அது எழுந்து கூச்சலிட்டபடி ஓடியது.

“பைத்தியம்!” என்றான் என்னிடம். அவன் பற்கள் மிக நேர்த்தியானவை. சிவந்த உதடுகள். நீண்ட தலைமுடி தோளில் படிந்திருந்தது. மென்மையான தாடியும் மீசையும். செம்மண் நிறமான உடல். மெலிந்த உடல், ஆனால் மிக உறுதியானது.

நான் அவனிடம் மேலும் ஏதாவது பேசவிரும்பினேன். ஆனால் அவன் எழுந்து நடந்து சென்றான். இழுத்துக்கட்டிய வில் போல அவன் உடல் அதிர்ந்தது.

அன்று திரும்பிச் செல்லும்போது நான் மணிகர்ணிகா கட்டை அடைந்தேன். அங்கே சிதைகளைச் சூழ்ந்து அமர்ந்து சாமியார்கள் குளிர்காய்ந்துகொண்டிருந்தனர். தூறல்மழை இருந்தாலும் சிதை கனன்று கனன்று எரிந்தது. முதுகில் மழையையும் மார்பில் தீயையும் வாங்கி அமர்ந்திருந்தனர். அனைவருமே கஞ்சாச் சிலும்பிகளுடன் இருந்தார்கள்.

நான் ஒரு சிதையருகே அமர்ந்தேன். அது ஒரு கிழவி. அவள் வெண்ணிற ஆடையுடன் சிதைமேல் வைக்கப்பட்டாள். ஒடுங்கிய முகம், குறுகிய கூன் உடல். அவள் கால்கள் தசையாலான சுள்ளிகள் போலிருந்தன. வாயில் பற்கள் ஏறத்தாழ முழுமையாகவே இருந்தன.. கண்ணிமைகளும் கன்னங்களும் சாவுக்குப் பின் சற்றே உப்பி மெழுகுபோலிருந்தன.

காசியின் சிதைகள் விந்தையானவை. அவற்றில் ஓரளவே விறகு. ஒரு பிணம் எரிந்து முடிவதற்குள்ளாகவே அடுத்த பிணத்தை வைப்பார்கள். முதல் பிணம் நீரை இழந்து தன் உடல்நெய்யில் எரியும்போது அடுத்த பிணம். பிணமே பிணத்தை எரிக்கும்.

இக்கிழவியை எரிக்கும் அந்த முந்தைய மனிதர் வாழ்ந்த போது ஒருமுறையாவது இவளை சந்தித்திருப்பாரா? ஒருவேளை காசியின் தெருக்களில் இருவரும் எதிரெதிரே சென்றிருப்பார்கள். அப்போது கந்தர்வர்களோ தேவர்களோ சிரித்திருப்பார்கள்.

பிணம் எரியத்தொடங்கியது. வயிறு வெடித்து நீலநிறச் சுவாலையுடன் வாயு வெளியே போயிற்று. சலம் விழுந்து தீ கருகிச் சிவந்து குதித்தெழுந்தது. அதன் முகத்தில் தசை வெந்து உருகி பின்னகர எலும்புகள் புடைத்து எழுந்தன.

வெட்டியான் நீண்ட கழியால் அதன் வயிற்றை அறைந்து அதை மடித்தான். சட்டென்று உப் என்ற ஓசையுடன் பிணம் எழுந்து அமர்ந்தது. தலை என்னை நோக்கி திரும்பியது. எலும்புமுகத்தில் பற்களுடன் அது என்னை நோக்கிச் சிரித்தது.

நான் அலறிக்கொண்டு எழுந்துவிட்டேன். வெட்டியான் என்னை நோக்கி கேலியாக ஏதோ சொன்னபடி அதை தட்டி பக்கவாட்டில் விழச்செய்து இரண்டு விறகுக்கட்டைகளை அதன்மேல் வைத்தான்.

ஒரு சாமியார் “அவளுக்கு அடங்கவில்லை. காமமோ, பகையோ, ஆசையோ” என்றார்.

இன்னொரு சாமியார் “போல் சிவ்! போல் சிவ் சம்போ!” என்றார்.

நான் படிகளினூடாக ஓடினேன். என் கூடாரத்தை அணுகி உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டேன். எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது போல் இருந்தது. உடல் துள்ளித்துள்ளி விழுந்தது. கண்மூடினால் தூக்கமில்லை. விழிப்புகொண்டால் உடல் தன்னுணர்வு கொள்ளவுமில்லை.

சாமியார்கள் எவரையும் கவனிப்பதில்லை. நோயுற்றால் ஒருவரை ஒருவர் பராமரிப்பதுமில்லை. தானாக சரியாக வேண்டும், இல்லாவிட்டால் சாகவேண்டும். நான் மூன்றுநாட்கள் நினைவில்லாமல் படுத்திருந்தேன். எனக்கு எவரும் உணவோ நீரோ அளிக்கவில்லை. நானே தவழ்ந்து சென்று குடத்துநீரை குடித்தேன்.

என் கனவுக்குள் அந்தக் கிழவி வந்தாள். அவள் வங்காளக் கிழவி. பெரும்பாலும் விதவை. தன் சொத்துக்களை பிறருக்கு அளித்தபின் எஞ்சிய சிறு பணத்துடன் காசிக்கு வந்து அங்கே மடங்களில் பிறவிதவைகளுடன் சேர்ந்து சாவுக்காகக் காத்திருந்தவள். சிலசமயம் பத்துப் பதினைந்து ஆண்டுகள்கூட அந்தக் காத்திருப்பு நீள்வதுண்டு. அப்படி அந்த சிதையில் எரிந்து உருகி மறைவதற்கான தவம் அது. அது வென்றெடுக்கவேண்டிய ஒரு சிம்மாசனம். உருகித் தழல்விட்டு ஆடும் பொன்னாலானது.

நான் விரைவிலேயே மீண்டுவிட்டேன். உடல் நன்றாக மெலிந்துவிட்டது, ஆனால் அந்நினைவெல்லாம் மிகமிக பின்னால் எங்கோ சென்றுவிட்டது. எனக்கு ஒன்று அப்போது தெரிந்தது. உடல் காலத்தில் சென்றுகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் என. உள்ளம் அதில் இருந்தாக வேண்டும். ஓடும் படகில் அமரும் காகம்போல. ஆகவே அது எங்கும் தனியாக நின்றுவிடமுடியாது. எழுந்து எப்படிச் சுற்றினாலும் மீண்டும் வந்து அந்தப்படகில் அமர்ந்தாக வேண்டும். அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி உள்ளத்தை நாளும் புதிய சூழலில் ,புதிய வகையில் திகழச்செய்துகொண்டே இருப்பது உடல்தான். நில்லாக்காலம் நிகழும் உடல்.

கோடைகாலத்தில் கங்கையே கொந்தளித்துக் கொண்டிருந்தது. இந்தியாவெங்கிலும் இருந்து பல்லாயிரம்பேர் கங்கை நோக்கி வந்தனர். நீராடினர். பிரபஞ்சத்தை ஆளும் தலைவனையும் அவனுடைய காலவடிவான துணைவனையும் அவர்களை நோக்கி விழிமலர்ந்தவளையும் வணங்கினர். வாத்து நீரில் நீந்தியபடி தலையை ஆழத்தில் முக்கி சேற்றை அளைவதுபோல இந்தியா தன் கடந்த காலத்திற்குள் ஒரு முக்குளி இடும் காலகட்டம் அது.

ஆனால் அத்தனை சந்தடிக்கும் அப்பால் கங்கையின் தொலைதூரக் கரைகள் முற்றிலும் அடங்கியிருக்கும். அங்கே சாமியார்கள் தங்கள் ஒழுகாத காலத்தில் மலைத்த கண்களுடன் அமர்ந்திருப்பார்கள். நான் அவர்களுடன் இருந்தேன். கங்கைப் படித்துறைக்கும் வந்துசென்று கொண்டிருந்தேன்.

ஒருநாள் ஒரு வயதான சாமியார் எங்கள் முகாமுக்கு வந்தார். இடுப்பில் பழைய காவி உடை. சடைமுடித் திரிகளைச் சுற்றிக் கட்டி பெரிய சட்டிபோல தலையில் சூடியிருந்தார். தமிழகத்தில் சில சைவ மடங்களின் தலைவர்கள் அதேபோல சடாமகுடம் அணிவதுண்டு. காதுகளை வடித்து நீட்டி அதில் எலும்பை அணிந்திருந்தார். மூக்கிலும் ஒரு துளையில் சிறிய ஓர் எலும்புத் துண்டு. எருமையின் எலும்புகளால் செதுக்கப்பட்ட சிறிய மண்டையோடுகளை கோத்து உருவாக்கப்பட்ட நீண்ட மாலையை அணிந்திருந்தார்.

அவர் கையில் யோக தண்டு இருந்தது. கங்கையில் நெடுந்தொலைவு மிதந்து வந்து ஒதுங்கி சேற்றில் கிடந்து தசைப்பகுதி மட்கிப்போய் வைரம் மட்டுமே எஞ்சும் கழியை தேடி எடுத்து யோகதண்டமாக கொள்வார்கள். அதை பிரியவே மாட்டார்கள். அது மட்டுமே அவர்களின் துணை. அதை கைவிடும்போது அவர்கள் சமாதியாக வேண்டும். அத்தகைய கழிகள் கையில் எடுத்துப் பார்த்தால்தான் மரம் என்றே தெரியும். கையில் எடுத்த பின்னரும் கூட அவற்றின் எடை இரும்போ என்று தோன்றச் செய்யும்.

அவர் காலா அகாடா என்னும் சைவ மரபைச் சேர்ந்தவர். தொன்மையான காபாலிக, காளாமுக மரபில் இருந்து வந்த சிவவழிபாட்டு முறை அது. அகோரிகளைப் போலவும் நாகா துறவிகளைப் போலவும் நானேசிவம் என்று பொருள்படும் சிவோகம் என்பதே அவர்களுக்கும் முதற்சொல். ஆனால் இவர்கள் கரிய ஆடை அணிவதில்லை. அச்சத்தையும் அருவருப்பையும் கடப்பதற்கு அகோரிகள் மேற்கொள்ளும் கடுமையான நோன்புகள் இல்லை.

அகோரிகள் காலபைரவனை மட்டுமே வழிபடுவார்கள். இவர்களுக்குச் சிவலிங்க வழிபாடு உண்டு. ஒவ்வொரு நாளும் கங்கையில் மூழ்கி ஓர் உருளைக் கல்லை எடுத்து நீரின் அருகிலேயே வைத்து நீரை அள்ளி ஊற்றி அபிஷேகம் செய்து நீரில் ஒழுகிவரும் ஒரு மலரை எடுத்து அணிவித்து கையிலிருக்கும் ஒரு துண்டு சப்பாத்தியையோ பூரியையோ படைத்து தியானம் செய்தபின்பு எழுந்துவிடுவார்கள். அந்த கல்லை பெரும்பாலும் காலால் தட்டி நீருக்குள் போட்டுவிட்டு மேலேறிச் செல்வார்கள். பலமுறை அவர்களை சற்று வடக்காக கங்கையின் முற்றிலும் ஆளோய்ந்த கரையில் கண்டிருக்கிறேன்.

அவர் ஒவ்வொருவரையாக குனிந்து வணங்கி ஓரிரு சொற்கள் சொன்னார். அதன்பின் கடந்து சென்று அப்பாலிருந்த இன்னொரு முகாமை நோக்கிச் சென்றார். அவர் சொன்னதை கேட்டவர்கள் எந்த உணர்வையும் வெளிப்படுத்தவில்லை. வெறுமே தலையை மட்டும் அசைத்தனர்.

நான் “என்ன?” என்று கேட்டேன்.

சந்தித்து ஒன்றரை ஆண்டுகளாகியும் எனக்கு பெயர் தெரியாத என் உடனுறையும் சாமியார் “இன்று இரவு நமக்கெல்லாம் விருந்து” என்றார்.

“யார் தருகிறார்கள்?”

“இவர்தான்”.

“ஏன்?”

“அவர் தர விரும்புகிறார்” என்றார்.

நான் அவரை பார்த்தேன். கேலி செய்கிறார் என்று எரிச்சல் எழுந்தது. ஆனால் உண்மையில் அவர் அப்படித்தான் எப்போதுமே பேசிக்கொண்டிருந்தார். எந்த அணிகளும் இல்லாமல், எந்த ஊகங்களும் தொகுப்புகளும் பொதுமைப்படுத்தல்களும் இல்லாமல், எது நேரடிப்பொருளோ அதை மட்டுமே பேசுவார்.

ஆனால் அது அத்தனை எளிதல்ல. அப்படி பேச ஆரம்பித்தால் நாம் சென்று முட்டிக்கொள்வது மொழி என நாம் உருவாக்கி வைத்திருக்கும் மாபெரும் மலையுடன். அதை நகர்த்தி வழி கண்டுபிடிக்க வேண்டும்.ஏனென்றால் மொழி என நாம் இங்கே புழங்குவதெல்லாம் அணிகளுடன்தான்.

நம்முள் திகழும் மொழியை ரத்து செய்வதற்குத்தான் தியானம். கொஞ்சம் அதை அடங்கவைத்தாலே மாபெரும் வெற்றிதான். அது நெகிழ்ந்து வழிவிடுமென்றால், புகையாக மாறி மறையும் என்றால் அது வீடுபேறுக்கு நிகர்.

அன்று பின்னிரவில் குளிர் எழத்தொடங்கிய பின்னர் நாங்கள் கிளம்பினோம். எங்கள் குழுவின் குள்ளனான ஜாங்கிலிஃபையா என்ற பிரம்மசாரி சோடாமூடிகளை ஆணியில் கோத்து ஒரு மரத்துண்டின்மேல் அறைந்து உருவாக்கிய ஜாலரை எடுத்துக்கொண்டான். சௌம்ய பாபா என்று அழைக்கப்பட்ட இன்னொரு சாமியார் ஒரு காவிகொடியை ஏந்திக்கொண்டார். நான் சைக்கிள் டயர் ஒன்றை பந்தமாக கொளுத்தி கையில் ஏந்தி நடுவே சென்றேன்.

ஜாலரை சீராக தட்டியபடி நாங்கள் கங்கையின் கரையோரமாக சென்றோம். வேறுசிலரும் அவ்வாறு ஜாலர்கள் அல்லது சிறிய உடுக்குகளை முழக்கியபடி பந்தங்களின் வெளிச்சத்தில் வந்துகொண்டிருப்பதைக் கண்டோம். சிறிய துர்க்கை ஆலயத்தின் அருகே ஏற்கனவே இருநூறு பேருக்குமேல் கூடியிருந்தார்கள். சிறுசிறு குழுக்களாக அமர்ந்திருந்தனர்.

பெரும்பாலும் எவரும் பேசிக்கொள்ளவில்லை. சிலர் ஜாலரை அப்போதும் தட்டி மெல்ல பஜனைப் பாடல்களை பாடிக்  கொண்டிருந்தனர். சிலர் ஒருவரோடொருவர் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தனர். அதெல்லாம் அவர்கள் எந்த அகாடாவை சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்தது.

பஜனைச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபட்டது. தமிழ்! “நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா! சிவராஜா சிவராஜா சிவகாமிப் பிரிய சிவராஜா!” அல்லது மலையாளமா? அல்லது சம்ஸ்கிருதமேதானா? ஆனால் பாடியவர்கள் அனைவரும் வெள்ளைக்காரர்கள். ஹிப்பிகள், அல்லது துறவிகள். அவர்களின் மூக்கைப் பார்த்தேன். பெரும்பாலானவர்கள் பிரெஞ்சுக்காரர்கள் என்று தோன்றியது. அவர்கள் அந்த வரிகளை கிட்டத்தட்ட பிரெஞ்சு மொழி உச்சரிப்பாகவே மாற்றிவிட்டிருந்தனர்.

“ஹரஹர சிவ சிவ அம்பலவாணா! அம்பலவாணா பொன்னம்பலவாணா! ஆனந்த தாண்டவ நடராஜா!” தமிழேதான். பிரெஞ்சுக்குள் இருந்து தமிழ் பிதுங்கி நெளிந்து வெளிவந்து உடலை உதறிக்கொண்டு மயிர் சிலிர்த்து மெல்லமெல்ல தமிழாக ஆகியது. “சிவராஜா சிவராஜா சிவகாமிப் ப்ரிய சிவராஜா, சிதம்பரேசா சிவராஜா!”

அந்த மெட்டு அந்த இடத்தை கொஞ்சம் அணுக்கமாக ஆக்கியது. பந்தங்களை கொண்டு வந்தவர்கள் அவற்றை அணைத்து வைத்தனர். இரண்டுபேர் சின்ன அகல்விளக்குகளை ஏற்றி வைத்தனர். அவற்றில் கடுகெண்ணை எரியும் மணம் எழுந்தது.

எங்களை அழைக்க வந்த சாமியார் கைகூப்பியபடி வந்தார். ஒவ்வொருவரையாக அவர் வணங்கி வரவேற்றார். அனைவரிடமும் ஒரே முகமன் சொல்லைச் சொன்னார். “சுகிர்தம்”. அவரை மற்ற முதிய சாமியார்கள் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கைதூக்கி வாழ்த்துரைத்தனர்.

அங்கே ஒற்றைக் குதிரை இழுக்கும் வண்டிகளில் உணவு வந்திருந்தது. அவற்றை கொண்டு வந்தவர்களே இறக்கி வைத்தனர். பெரிய பித்தளைப் போணிகளில் பூரி, உருளைக் கிழங்கு. சப்பாத்தி டால். அதன்பின் காசியின் புகழ்பெற்ற ஐந்து வகை இனிப்புகள். பால்பேடா, புளிப்பு ஜாங்கிரி, குலாப்ஜாமூன், பாசந்தி, ரசகுல்லா.

நாங்கள் அனைவரும் வரிசையாக அமர்ந்தோம். கங்கையின் நீர்விளிம்புவரை அந்த வரிசைகள் சென்றன. அவர்கள் அனைவருக்கும் அலுமினிய தட்டுகளில் பூரி, சப்பாத்தி, இனிப்புகளை வைத்தனர். பொதுவாக சாமியார்கள் சாப்பாட்டில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் சாப்பிட்டால் திகைக்கவைக்கும் அளவுக்குச் சாப்பிடுவார்கள். கஞ்சாவுக்கும் மனிதர்களை அப்படி ஆக்கும் இயல்பு உண்டு.

சாப்பிட்டபோது சிலர் வேடிக்கையாக பேச தொடங்க சிரிப்பொலிகள் எழுந்தன. சிரிப்பின் ஓசை அனைவரையும் முகம் மலரச் செய்தது. சற்று நேரத்தில் அனைவருமே சிரித்துக் கொண்டிருந்தனர். சாப்பிட்டு முடித்ததும் எங்கள் எச்சில் தட்டுகளை அந்த முதிய சாமியார் எடுத்துச் சென்று அடுக்கினார். எங்கள் கைகளுக்கு நீர்விட்டு கழுவச் செய்தார்.

அதற்குள் விடியத் தொடங்கியது. உணவு வண்டிகள் திரும்பிச் செல்ல நாங்கள் மட்டுமே எஞ்சினோம். கங்கையின் மேல் ஆயிரக்கணக்கான பறவைகள் எழுந்தன. விடியலில் கங்கைதான் முதலில் துலங்கும். நீருக்குள் இருந்து வெளிச்சம் கசிந்து எழுவதுபோல தோன்றும். பறவைகள் நீரை அணுகிப் பறக்கும்போது அவற்றின் அடிப்பக்கம் மிளிரும். பறவைச் சிறகுகளை அத்தனை மென்பட்டுபோல வேறெப்போதும் பார்க்க முடியாது. பறவைகளின் அலகுகள் அப்போது தளிரின் ஒளி கொண்டிருக்கும்.

சின்னஞ்சிறு கோயில்களின் வடிவவிளிம்புகள் வான்பின்னணியில் துலங்கின. காவிநிறம் புலரியில் தீயென்றே தெரியும். தழலென கொடிகள் பறந்தன. தொலைவில் காசியின் நூற்றுக்கணக்கான ஆலயங்களில் மணியோசை எழுந்தது. அவை ஒருவகை பறவைக்கூட்டங்களின் ஒலிகள் போல கலைந்து வானை நிறைத்தன. சங்கொலிகள் உடனெழுந்தன. ஓங்கி எதையோ வானுக்குச் சொல்பவை. அறைகூவல்கள்போல. ”ஆம், இங்கிருக்கிறோம். அறிக தேவர்களே!”

கருவறைக்கு மேலேயே ஒற்றைக் கூம்புக் கோபுரம் கொண்ட சிறிய கோயிலின் முன் அந்த முதிய துறவி வந்து நின்றார். அது தென்னகத்துப் பாணியிலான கோபுரம். மகாபலிபுரம் கோயில்களை நினைவுறுத்துவது. மேலே ஒரு கல்லாலான கலத்தை கவிழ்த்து வைத்தது போன்ற முகடு. அலையலையாக கல் உருகி இறங்கிப் பரவுவது போன்ற கூம்புவடிவம். அப்பால் இன்னொரு கோயில் காலையின் மென்பனிப் படலத்தில் மறைந்து நின்றது.

அந்தச் சாமியார் கைகளை கூப்பி தலைவணங்கினார். அவருடைய மாணவன் ஒருவன் முன்னால் வந்து சங்கோசை எழுப்பினான். இன்னொருவன் ஒரு துணி மூட்டையுடன் அவருக்கு பின்னால் வந்தான். முகங்கள் தெளிவாக இல்லை. முதிய சாமியார் கையில் ஒரு காவிக்கொடியுடன் எங்கள் நடுவே நடந்தார்.புலரிவெளிச்சத்தில் காவிக்கொடி தழலென்றே துலங்குவது.

நாங்கள் கைகளை கூப்பியபடி ஓசையில்லாமல் நின்றிருந்தோம். கங்கை மேல் பறவைகள் பூசலிடும் ஓசை எழுந்து கொண்டிருந்தது. அப்பால் சாலையில் சில வண்டிகள் செல்லும் ஒலி.

முதிய சாமியார் காவிக் கொடியுடன் சென்று கங்கை கரையை அடைந்தார். அங்கே ஒற்றைப் படகு நிறுத்தப்பட்டிருந்தது. அவர் கொடியை படகின்முனையில் நட்டார்.படகின் குறுக்குச் சட்டங்கள் மேல் நெடுக்குவாட்டில் வைக்கப்பட்டிருந்த பலகைமேல் ஏறி படுத்துக்கொண்டு கண்களை மூடினார்

அவருடைய சீடன் அந்த துணிப்பொதியை அவர் காலடியில் வைத்தான். அவருடைய ஆடைகள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் என்று தோன்றியது. அவர்கள் இருவரும் கரை ஏறி நிற்க கோயிலில் இருந்து இன்னொருவன் கையில் ஒரு கயிற்றுச் சுருளுடன் வந்தான்

அவனை நான் அடையாளம் கண்டேன். அந்தப் பைத்தியத்தைக் காப்பாற்றிய இளைஞன். அவன் எவரையும் பார்க்காமல் நடந்து கங்கைக் கரையின் சிமிண்ட் போன்ற மென்மையான புழுதியாலான சரிவில் இறங்கி படகை அடைந்தான்.

படகில் ஏறி படுத்திருந்த முதியவரின் கால்களை தொட்டு வணங்கியபின் அவருடைய கால்களைச் சேர்த்து கயிறால் பிணைத்தான். பின்னர் கைகளை மடிமேல் வைத்து சேர்த்துக் கட்டி கைகளையும் கால்களையும் அந்தக் கயிற்றால் பிணைத்தான்

மிக நிதானமாக, சீராக அச்செயலை அவன் செய்தான். பின்னர் எழுந்து எங்களை நோக்கி தலைவணங்கினான். கரையில் நின்றிருந்தவர்கள். “ஹரஹர மகாதேவ்! ஹரஹரஹரஹர மகாதேவ்! சிவ் சம்போ!” என்று கூவி கைகளை நீட்டினர்.

அவன் படகில் ஏறிக்கொண்டு துடுப்பால் படகை உந்தி கங்கைக்குள் சென்றான். ஒழுக்கையும் பயன்படுத்திக்கொண்டு மிக விரைவாக கங்கைக்குள் சென்றுவிட்டான். அப்போது காலையொளி எழுந்துவிட்டிருந்தது. நீர்ப்பரப்பில் இருந்து ஆவி புகைபோல தயங்கி எழுந்து கொண்டிருந்தது. காலைச் செவ்வொளியில் அது சுடர்கொண்டது.அவன் அனலில் ஊடுருவிச் செல்வது போலிருந்தது. அந்தக் காவிக்கொடி அகல்சுடர் என படகின் முனையில் படபடத்தது.

அவன் கங்கையின் நடுவே சென்றதும் துடுப்பிடுவதை நிறுத்திவிட்டு அமர்ந்தபடியே அந்த பலகையை கவிழ்த்து அவரை நீருக்குள் போட்டான். அவர் கைகளை கூப்பி நெஞ்சில் வைத்தபடி புரண்டு சரிந்து நீரில் விழுந்தார். நீர்ப்பரப்பில் ஒரு வாய் திறந்து அவரை விழுங்கிக் கொண்டது. ஓரிரு கொப்புளங்கள் தெரிந்தன. அவை விலகிச் சென்றன.

கரையில் நின்ற சாமியார்கள் “ஹரஹர மகாதேவ்! ஹரஹரஹரஹர மகாதேவ்! சிவ் சம்போ!” என்று கூவிக்கொண்டே இருந்தனர்.

பின்னர் அவன் படகைத் திருப்பிக்கொண்டு கரைநோக்கி வந்தான். படகை நீர் விளிம்பில் நிறுத்திவிட்டு இறங்கித் திரும்பி கங்கையின் நீரை அள்ளி மும்முறை தன் தலைமேல் விட்டுக்கொண்டான். திரும்பி அனைவரையும் பார்த்து கைகூப்பினான்.

கரையிலிருந்த அத்தனை சாமியார்களும் “ஹரஹர மகாதேவ்! ஹரஹரஹரஹர மகாதேவ்!”  என்று கூவினார்கள். பிறகு வந்ததுபோலவே சிறுசிறு குழுக்களாக பிரிந்து சென்றனர். ஜாலர்களுடன் வந்தவர்கள் அதை முழக்கினர். பிரெஞ்சு சைவர்கள் ‘நேட்ரேழே நேட்ரேழே நேர்டேன் ஷூண்டே நேட்ரேழே!” என்று பாடிக்கொண்டு சென்றனர். சிலர் சிரித்துக்கொண்டும் தங்களுக்குள் பேசிக்கொண்டும் நடந்தனர்.

நான் எங்கள் முகாமை அடைந்தேன். காலபாபா அனல் மூட்ட ஆரம்பித்துவிட்டார். ஜாங்கிலி ஃபையா சிலும்பிகளை எடுத்துவந்தார். நான் கங்கைக் கரைக்குச் சென்று நீரள்ளி முகம் கழுவிவிட்டு வண்டல் விளிம்பு வழியாகவே நடந்தேன்.

மணிகர்ணிகா கட்டம் வரை என்ன நினைக்கிறேன் என்றே தெரியாமல் உடன் வந்துகொண்டிருந்த உள்ளத்துடன் சென்றேன். நான் சொன்னேனே, ஒழுகும்படகில் எழுந்து எழுந்து அமரும் பறவை.

மணிகர்ணிகா கட்டில் ஒரு கிழவர் சிதையின் அருகே தனக்கான வாய்ப்புக்காக காத்து படுத்திருந்தார். சிதையில் ஒரு கிழவி எரிந்து கொண்டிருந்தாள். தலை உள்ளே மடிக்கப்பட்டிருந்தது. அவளுடைய இரு கால்களும் வெளியே நீட்டியிருந்தன. கால் விரல்களில் வெள்ளி மெட்டிகள் அணிந்திருந்தாள்

சிதைகளைச் சுற்றி சாமியார்கள் அமர்ந்திருந்தனர். நான் சென்று அவர்களில் ஒரு சிறுகுழுவுடன் அமர்ந்திருந்தேன். சடைமுடிகள் தோளில் விழுந்துகிடந்த உயரமான சாமியார் என்னைப் பார்த்து கரிய பற்களைக் காட்டி புன்னகைத்தார்.

அவர் ஒரு சிறிய திருவோட்டில் சப்பாத்திமாவை பிசைத்து உருட்டி வைத்திருந்தார். அதை கையால் தட்டிப் பரப்பியபின் ஒரு குடைக்கம்பியில் குத்தி சிதையின் நெருப்பில் நீட்டி திருப்பித்திருப்பி காட்டி வாட்டினார். அது கருகி உப்பியதும் திரும்ப எடுத்து கையால் தட்டி கரியை நீக்கிவிட்டு இரண்டாக கிழித்து அப்பாலிருந்த இன்னொரு சாமியாருக்கு அளித்தார்.

இயல்பாக திரும்பி என்னைப் பார்த்தார். புன்னகையுடன் அந்த துண்டை மீண்டும் இரண்டாகக் கிழித்து என்னை நோக்கி நீட்டினார். அவ்வாறு நிகழ்வது முதல்முறை. ஆனால் நான் எந்த வியப்பும் இல்லாமல் அதை வாங்கிக்கொண்டேன். அதை பிய்த்து உண்டேன்.

நித்யா சொன்னார். “அந்த வெள்ளி மெட்டிகளை ஏன் வெட்டியான் கழற்றவில்லை என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். அது அவனுக்கு மதிப்பு மிக்கதாயிற்றே. ஆனால் கிழவியின் கால்கள் வெந்து உருகத் தொடங்கியதும் அந்த வெள்ளி மெட்டிகள் அப்படியே வழுக்கியவைபோல உருவி கீழே விழுந்தன, அவன் அதை குச்சியால் தள்ளி எடுத்து அங்கிருந்த குவளையின் நீருக்குள் போட்டான்”

அனைவரும் அசைந்து அமர்ந்தோம்.

“எங்கே தொடங்கினேன்?” என்றார் நித்யா.

“அன்பு பற்றி” என்று குஞ்ஞி கிருஷ்ணன் சொன்னார்.

“ஆமாம்” என்று சிரித்து “நீ ஊருக்கு போவதென்றால் போ…. அடுத்தவாரம் வருவாய்தானே?” என்றார் நித்யா.

***

தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–60

$
0
0

பகுதி ஆறு : படைப்புல் – 4

தந்தையே, எங்கு செல்வதென்று முடிவெடுக்க இயலாமல் துவாரகைக்கு வெளியே பாலைநிலத்தில் பதினைந்து நாட்களுக்கு மேல் தங்கியிருந்தோம். பல்வேறு ஓடைகளாக திரண்டு நகரிலிருந்து வெளிவந்தவர்கள் பாலைநிலத்தில் ஒருங்கிணைந்தோம். அங்கே மூத்தவர் ஃபானு அரண்மனைகளைக் கைவிட்டு தன் படையினருடனும் சுற்றத்துடனும் வந்து தங்கினார். அவரைத் தொடர்ந்து வந்த பிரத்யும்னனும் அனிருத்தனும் சற்று அப்பால் தங்கினார்கள். அரசி கிருஷ்ணையும் சாம்பனும் இறுதியாக வந்து தங்கினர். ஒவ்வொருநாளும் என அந்தக் கூட்டம் பெருகிக்கொண்டே சென்றது.

துவாரகையை கைவிடும் முடிவை எடுப்பதற்கே எங்களுக்கு மூன்று நாட்களுக்கு மேல் ஆயிற்று. நகரில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறதென்பதை நாங்கள் அறியவில்லை. எங்களிடம் வந்து சொல்லும் ஒற்றர் பேரமைப்பும் முற்றிலும் சிதறிவிட்டிருந்தது. நாங்கள் திகைத்து சொல்லிழந்து ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக்கொண்டிருந்தோம். எவரிடமும் எந்த விதமான திட்டங்களும் இருக்கவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் இன்னொருவரை தேடிச்சென்று உரையாட விரும்பினோம். ஏதேனும் ஒரு வழி இருக்கிறது என்று பிறிதொருவர் சொன்னால் அதை நாம் கேட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணமே எங்களை உந்தியது.

மூத்தவர் ஃபானு தன் அரண்மனை அறையில் முழு நேரமும் தாழ்வான பீடத்தில் கால்களைத் தூக்கி மேலே வைத்துக்கொண்டு உடல்குறுக்கி அமர்ந்திருந்தார். அதுதான் அவருடைய இயல்பான அமர்வு முறை. இளமையிலேயே எந்த பீடத்திலும் காலை மேலே தூக்கி உடல் குறுக்கி அமர்வதே அவர் வழக்கம். எங்களுக்கு அரசமுறைகளை கற்பித்த திரிவக்ரர் அவரை பலமுறை கண்டித்து திருத்தி கால் விரித்து கையமர்த்தி நிமிர்ந்து அமர்ந்திருக்கும் அரச தோரணையை கற்பித்தார். அதை ஒரு பயிற்சியாகவே அவர் நெடுங்காலம் மேற்கொண்டார். எனினும் அவைகளில் அமர்கையில் எதையோ ஒன்றை கூர்ந்து உளம்கொள்கையிலோ, உளம் தளர்ந்து தன்னுள் அமிழ்கையிலோ இயல்பாக அவரிடம் அந்தக் குறுகல் வரும். தனி அவைகளில் அவ்வப்போது அவர் கால்களைத் தூக்கி மேலே வைத்துக்கொள்வதுண்டு.

சிற்றவைகளில் மது அருந்திக் களித்திருந்தால் முதலில் அவருடைய இரு கால்களும் பீடத்திற்கு மேல் செல்லும். உடல் குறுகி தலை தாழும். கண்கள் பிறிதொன்றாக மாறும். தன் மேல் ஏற்றப்பட்டிருந்த அரசப்பொறுப்புகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு எளிய யாதவராக அவர் மாறுவார். அதன் பின்னரே அவர் குரல் மேலெழத் தொடங்கும். உடைந்த நீள்குரலில் பாடுவார். கைகளைத் தட்டி தாளமிடுவார். அரிதாக குழலெடுத்து மீட்டவும் செய்வார். அப்போது மட்டுமே அவர் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றும். அவரில் தொன்மையான யாதவ மூதாதையர் ஒவ்வொருவராக எழுந்து வருவதாக எண்ணிக்கொள்வேன்.

இரும்பாலான பிறிதொரு ஃபானுவை செய்து அவர் மேல் சுமத்தியிருந்தார்கள். தன் முழு விசையாலும் அதைச் சுமந்து அவர் அலைந்தார். அதற்குள் அவர் சிக்கிக்கொண்டு உடல் இறுகி இருந்தார். துவாரகை சரிந்த செய்தியிலிருந்தே மெல்ல மெல்ல அவரிடம் இருந்த இறுக்கம் அகன்றது. எவரும் எவரையும் நோக்காமல் ஆனபோது அவர் ஒரு விடுதலையை அடைந்தார். தனக்குத்தானே பேசிக்கொண்டும் மெல்ல சிரித்துக்கொண்டும் இருந்தார். பெரும்பாலான நேரங்களில் மது அருந்தி களியில் இருந்ததனால் தன்னுணர்வை முற்றாக இழந்திருந்தார். பீடங்கள் அனைத்திலும் அவர் கால் தூக்கி அமர்வதை எவரும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்பது மட்டும் அல்ல அது அப்போது சற்று உகந்ததாகவும் இருந்தது. யாதவக் குடியின் தொல்மூதாதை ஒருவர் வந்து தன்னுடன் அமர்ந்திருப்பதுபோல ஒவ்வொருவரும் உணரத்தலைப்பட்டனர்.

ஒவ்வொருவரும் அவரிடமே சென்று பேசினர். அவர் எவருக்கும் எந்தத் தீர்வும் சொல்லவில்லை. எந்த மறுமொழியும் நேரிடையாக இல்லை. எனினும் ஒவ்வொருவரும் அவர் அருகே இருக்கவும் அவரிடம் பேசவும் விழைந்தார்கள். அவருடைய சிற்றறை எப்போதும் உடன்பிறந்தாரால் நிறைந்து நெரிசல் கொண்டிருந்தது. சில தருணங்களில் சிலர் வெளியேறினாலே சிலர் உள்ளே செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. அவர் தன்னை தளர்த்திக்கொண்டு பெருந்தந்தை என்ற பாவனையை சென்றடைந்தார். அவர் அதை தன்னுள் நெடுங்காலமாக நடித்திருக்கக்கூடும். இயல்பாக அதில் சென்று அமைய அவரால் முடிந்தது.

யாதவ மைந்தர் எவருமே அரண்மனை விட்டு வெளியே செல்லவில்லை. வெளியே சென்றால் இடிந்துசரிந்த நகரைக் கண்டு நிலையழிய வேண்டியிருக்கும் என அவர்கள் அஞ்சினர். அரண்மனைக்குள் இருக்கையில் வெளியே நிகழ்வதென்ன என்று நன்றாகவே தெரிந்திருந்தாலும் மெல்லமெல்ல அனைத்தும் முன்பெனவே உள்ளன என்னும் பாவனைக்குள் செல்ல முடிந்தது. ஒன்றை உடல் நடிக்கையில் உள்ளம் அதை தொடர்கிறது. அரண்மனைக்குள் விருந்துகள் நடந்தன. அவைக்கூடல்கள் இடைவிடாது நிகழ்ந்தன. குடிக்களியாட்டு எப்போதுமிருந்தது. சூதர்களும் விறலியரும் பாடி ஆடினர். நாற்களமாடலும் நிகழ்ந்தது.

இளையவர் பத்ரன் மட்டும் வெளியே சென்று பார்த்துவிட்டு வந்து “நகரம் சரிந்துகொண்டிருக்கிறது, மூத்தவரே” என்றார். “மக்கள் அஞ்சி கிளம்பிவிட்டார்கள். விட்டுச்செல்ல முடியாதவர்கள் தெருக்களில் அலைமோதுகிறார்கள். எங்கும் இறந்த உடல்கள். உளம்பிறழ்ந்த மக்கள் எங்கும் கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறார்கள்… இந்நகரம் அழிந்துவிட்டது.” நக்னஜித்தி அன்னையின் மைந்தரான வீரா “சில மாளிகைகள் சரிந்ததனால் நகருக்கு ஒன்றும் ஆகபோவதில்லை” என்று சொன்னார். “இந்நகரம் ஆயிரக்கணக்கான மாளிகைகளால் ஆனது.” பத்ரன் எரிச்சலுடன் “சில மாளிகைகள் அல்ல. நகரில் பெரும்பாலான மாளிகைகள் சரிந்துகொண்டிருக்கின்றன” என்றார்.

“மாளிகைகள் சரிந்தாலும் கட்டிவிடலாம், நம்மிடம் கருவூலம் இருந்தால் போதும்” என்றார் மூத்தவர் சுருதன். பத்ரன் “துறைமேடை உடைந்ததும் கடல்நீர் உட்புகுந்திருக்கிறது. இந்நகரைத் தாங்கியிருந்த இரு அடித்தளப் பாறைகளும் விலகிவிட்டிருக்கின்றன. அவை மெல்ல உருண்டு கடலுக்குள் செல்வதுபோல் தோன்றுகிறது” என்றார். சுருதன் “நகர் உருண்டு கடலுக்குள் செல்வதா? நன்று! சீரிய கற்பனை” என்றார். “மெய்யாகவே கடலுக்குள் சென்றுகொண்டிருக்கிறது இந்நகர். மலைச்சரிவில் சில இல்லங்கள் இவ்வாறு வழுக்கி நகர்ந்து கீழிறங்குவதுண்டு” என்று பத்ரன் சொன்னார். “நான் விழிகளால் கண்டேன், இந்நகர் கடல்நோக்கி இறங்கிச் செல்கிறது.”

ஆனால் ஒவ்வொருவரும் அவரை நகையாடி சிறுமைசெய்யத் தொடங்கினர். அதனூடாக அத்தருணத்தில் தங்களுக்கிருந்த அனைத்து இறுக்கங்களையும் தளர்த்திக் கொண்டனர். நகையாட்டு பொறுக்க இயலாத பத்ரன் சீற்றத்துடன் “எனில் எவரேனும் வெளியே சென்று பாருங்கள். அருகிலிருக்கும் உயரமான காவல்மாடம் எதிலேனும் சென்று பாருங்கள். இப்போது கடல் எங்கே இருக்கிறது என்று பாருங்கள். முன்பு கடல் மிக ஆழத்திலிருந்தது. சாளரங்களினூடாக மரக்கலங்களின் உச்சிப்பாயையும் கொடியையும் நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது கடல் நமக்கு நேராக இருக்கிறது. கீழ்த்தளத்தில் ஒவ்வொரு சாளரத்தினூடாகவும் கடலலைகளை பார்க்க இயல்கிறது” என்றார்.

அது உண்மை என்பதனால் அனைவரும் அமைதியடைந்தனர். “கடலோரமாக அமைந்திருந்த சுங்கநிலைகளும் பண்டகநிலைகளும் முற்றிலும் மறைந்திருக்கின்றன. வணிகர்களுக்காக அமைக்கப்பட்ட பெருந்தெரு மீது கடல்அலைகள் வந்து அறைந்து கொண்டிருக்கின்றன. துவாரகையின் ஆறு தெருக்கள் இப்போதே கடலுக்குள் சென்றுவிட்டன. இங்கிருந்தே பார்க்க இயல்கிறது” என்றார். எவரும் எதுவும் சொல்லவில்லை. மித்ரவிந்தை அன்னையின் மைந்தரான விருகன் “நான் அதை நோக்கினேன். இந்நகர் கடலை நோக்கி கவிழ்ந்திருப்பதுபோல தோன்றியது… பெரும்பாலான மாளிகைகள் சரிந்துள்ளன” என்றார்.

அப்படியும் மூத்தவர் ஃபானு நிறைவடையவில்லை. உடன்பிறந்தார் புரவியில் சென்று நேரில் பார்த்துவரும்படி ஆணையிட்டார். அவர்கள் செல்லும்போதே ஒவ்வொருவருக்கும் நகரில் என்ன நிகழ்கிறது என்று தெரிந்திருந்தது. எனினும் எவரும் எதையும் சொல்லவில்லை. பத்ரன் எரிச்சலுடன் “நகருக்குள் நீர் புகுந்திருக்கிறது என்ற செய்தியை மட்டும் வந்து சொல்க! ஏனெனில் அதற்கு அப்பால் ஏதும் செய்தியில்லை” என்றார். “நகருக்குள் அனல் புகுந்திருக்கிறது என்று சொல். மேலும் சில நாள் சொல்லாடுவதற்கு உகந்ததாக இருக்கும்” என்றார் விருகன்.

அவர்கள் சென்ற பின்னர் சுருதன் “நாம் அஞ்சுவதற்கு ஏதுமில்லை. உண்மையில் இந்நகர் சற்று சிறுப்பது நன்று. இதன் குடிகளில் பாதி பேர் வெளியேறினால் இது இன்னும் உகந்த நகரமாகும். இதில் விரிசல்விட்டிருக்கும் அனைத்துக் கட்டடங்களையும் நாமே இடித்துத் தள்ளுவோம். அவ்விடிபாடுகளைக் கொண்டுசென்று கடலோரமாக அடுக்கினோமெனில் கடலையும் கட்டுப்படுத்த முடியும். நமக்கிருக்கும் கருவூலச் செல்வம் இங்கிருக்கும் குடிகள் பாதியாக குறைந்தால் இன்னும் ஒரு தலைமுறை இங்கு வாழ்வதற்கு போதுமானதாகும். ஆகவே எதைப்பற்றியும் நாம் கவலைகொள்ள வேண்டியதில்லை” என்றார்.

அந்த எண்ணம் மிகச் சிறிய ஓர் ஆறுதலாக இருந்தது. “ஆம், கருவூலம் இருக்கிறது. அது இன்னும் ஒரு தலைமுறைக்கு போதுமானதாக இருக்கும். ஆனால் நம் குடிகளில் ஒரு சாராரை கைவிடுவது போலாகுமல்லவா?” என்று பத்ரன் கேட்டார். “நாம் கைவிடவில்லை. அவர்கள் நம்மை கைவிட்டுச் செல்கிறார்கள். இந்நகரை இந்த இக்கட்டில் கைவிடாது இங்கு நின்றிருப்பவர்களுக்குரிய பரிசென்று நம்முடைய கருவூலச் செல்வம் அமையட்டும். விட்டுச் செல்பவர்கள் தங்கள் நிலத்தை தேடிக்கொள்ளட்டும். நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றார் சுருதன். கருவூலச் செல்வம் என்ற சொல் அனைவரையும் ஆறுதலடையச் செய்தது. அனைவரும் அச்சொல்லையே உள்ளத்துள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விழிகள் காட்டின.

“இப்போது நாம் என்னதான் செய்வது?” என்றார் பத்ரன். “இந்நகர் தன்னைத்தானே ஒருங்கமைத்துக்கொள்ளட்டும். இதிலிருந்து பறந்து செல்பவர்கள் அகன்று, இதிலேயே தங்குபவர்கள் நீடிக்கட்டும். நிலைகொண்ட மாளிகைகள் எஞ்சி நிலையற்ற மாளிகைகள் இடிந்து இது தன்னை புதுப்பித்துக்கொள்கிறது. அந்தப் புதிய நகரத்தை நாம் உகந்த முறையில் கட்டியமைப்போம்” என்றார் சுருதன். “ஆம், நாம் இந்நகரை மீட்டமைப்போம்” என்றார் விருகன். “இது நமது நிலம்… நாம் இங்கே வென்று காட்டுவோம்… கடல் அறியட்டும் யாதவ மைந்தரின் ஆற்றலை” என்றார் வீரா.

ஃபானு தலையை அசைத்து “எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான எண்ணங்கள் என்னை வந்து சேர்கின்றன. எல்லாமே சரி என்றும் பிழை என்றும் எனக்கு தோன்றுகிறது. இத்தருணத்தில் முற்றிலும் தனித்துவிடப்பட்டிருக்கிறேன்” என்றார். “அது நன்று, எல்லா தரப்பும் வரட்டும். நாம் ஆராய்ந்து முடிவெடுப்போம். எந்த முடிவையும் நாம் அஞ்சி எடுப்பதாக இருக்கவேண்டாம்” என்றார் சுருதன். “நாம் சாத்யகியிடமும் கிருதவர்மனிடமும் கலந்துகொள்வோம்” என்று வீரா சொன்னார். “பிரத்யும்னனும் அனிருத்தனும் இத்தருணத்தில் நம்முடன் நிலைகொள்ளவேண்டும்” என்று ஃபானுமான் சொன்னான். “நம்முடன் முரண்படுபவர் அஸ்தினபுரியின் அரசி மட்டுமே… அவர் சொல்லை சாம்பன் கேட்பார் என்றால் நன்றல்ல” என்றார் ஃபானு.

கொந்தளிப்பும் குழப்பமும் நிறைந்த பொழுதுகள் வீணே கடந்து சென்றன. வெளியே சென்றவர்கள் திரும்பி வந்தனர். அவர்கள் எண்ணியதைவிட திகைத்து வெளிறி சொல்லடங்கிப் போயிருந்தனர். ஃபானு “என்ன நிகழ்கிறது? நகரில் நீர் புகுந்திருக்கிறதா?” என்று கேட்டார். “நகருக்குள் படகுப் போக்குவரத்தை தொடங்க முடியுமா?” என்று சுருதன் நகையாட்டாகக் கேட்டார். ஆனால் மூத்தவரான பிரஃபானு ஃபானுவைப் பார்த்து “மூத்தவரே, இந்நகரை இனி நாம் காப்பாற்ற இயலாது. இங்கு இனி எவரும் தங்க இயலாது” என்றார். “என்ன சொல்கிறாய்?” என்றார் ஃபானு. “என் கண்ணெதிரில் மாளிகை ஒன்று இறங்கிs சென்று கடலுக்குள் மூழ்குவதை பார்த்தேன். இந்நகரைத் தாங்கியிருந்த பெருந்தாலம் சற்றே சாய்ந்ததுபோல இதிலுள்ள ஒவ்வொன்றும் நகர்ந்து கடலுக்குள் சென்றுகொண்டிருக்கிறது” என்றார் பிரஃபானு.

“நாம் இந்த அரண்மனையில் இருக்கிறோம். அவ்வாறு இங்கு எதையும் உணரவில்லையே” என்றார் ஃபானு. “இது உச்சியில் அமைந்த மாளிகை. இங்கும் அந்த அசைவு வரும். நிகழ்ந்துகொண்டிருக்கிறது, அது நமக்கு இன்னும் தெரியவில்லை” என்றார் பிரஃபானு. “வேளாண்குடித் தலைவர்களின் மாளிகைகளும், படைத்தலைவர் இல்லங்களும் கடலுக்குள் சென்றுவிட்டன. நகரின் பெரும்பாலான தெருக்கள் ஒழிந்து கிடக்கின்றன. தங்களுக்கு உகந்த பொருட்களையும் உறவினரையும் சேர்த்துக்கொண்டு மக்கள் நகரைவிட்டு வெளியேறி சிந்துவுக்குச் செல்லும் பாதையிலும் பாலைநிலத்துச் சோலைகளிலும் நிறைந்து செறிந்திருக்கிறார்கள்” என்றார் பிரஃபானு.

“கைவிடுவதா? இந்நகரையா? எங்கு செல்வது?” என்றார் ஃபானு. “மதுராவுக்கு செல்வோம், பிற யாதவ நிலங்களுக்கு செல்வோம். எங்கேனும் செல்வோம். ஆனால் இங்கு இனி நீடிக்கமுடியாது. ஐயமே வேண்டியதில்லை” என்றார் பிரஃபானு. “இனி நீரெழ வாய்ப்பில்லை என்றார்களே?” என்று ஃபானு மீண்டும் கேட்டார். “சரிந்துகொண்டிருக்கும் மரத்தில் இறுதி வரை தங்கியிருக்கும் பறவைகளைப்போல நாம் இந்த நகரை நம்பியிருக்கிறோம். ஆயினும் இது விழுந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை. மூத்தவரே, இனி பேரலை வரவில்லை என்றாலும், இனி ஒரு காற்று கூட அடிக்கவில்லையென்றாலும்கூட இந்நகர் விழுந்துவிடும்” என்றான் ஃபானுமான்.

“நகரின் கீழ் அடுக்குகள் அனைத்தும் கடலுக்குள் விழுகின்றன. அந்த இடத்தை நிரப்ப மேலுள்ள அமைப்புகள் மேலும் கீழிறங்கிச் செல்கின்றன. தாங்கள் அறிந்திருப்பீர்கள், துவாரகையின் கடல் மிக மிக ஆழமானது. இறங்கிச்செல்லும் அத்தனை கட்டடங்களும் மிகப் பாதாளத்தில் சென்று மறைந்து கொண்டிருக்கின்றன. துவாரகை என்பது கடலாழத்தில் உடல் மறைத்து தலைமட்டும் காட்டி அமைந்திருக்கும் மாபெரும் மலையொன்றின் உச்சியில் அமைக்கப்பட்ட நகர் என்பதை மறக்க வேண்டியதில்லை. நாம் உண்மையில் மலைச்சரிவில் இறங்கிக்கொண்டிருக்கிறோம்” என்றார் சந்திரஃபானு.

“என்னால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. இங்கிருந்து எப்படிச் செல்வது? நமது கருவூலம் மிகப் பெரியது. நம் கருவூல அறைகளை ஒழித்து கையிலெடுத்துக்கொண்டால் நம்மால் அதை பாதுகாத்து கொண்டுசெல்ல இயலாது. நமது படைவீரர்கள் சிதறிவிட்டிருக்கிறார்கள். மிகக் குறைவான படைவீரர்களுடன் நாம் இந்தக் கருவூலத்தை கொண்டு பாலைநிலத்தில் நிற்பதென்பது கள்வருக்கு முன் கதவை திறப்பதற்கு நிகர்” என்றார் ஃபானு. “மதுராவுக்குச் செல்லலாம். ஆனால் அது நெடுந்தொலைவில் இருக்கிறது. மதுவனம் அதைவிட நெடுந்தொலைவில் இருக்கிறது. கூர்ஜரமோ அவந்தியோ நம்மை இப்போது வெல்வதென்றால் சேற்றில் சிக்கிய விலங்கை வேட்டையாடுவதைப்போல. இந்நகரே நமக்கு பாதுகாப்பு. இதிலிருந்து வெளியேறுவதென்பதை பலமுறை எண்ணியே நாம் முடிவெடுக்க வேண்டும்.”

“வெளியேறாமல் இருக்க முடியாது. நெருப்பு என நீர் எரிந்தேறி வருகிறது. வெளியே சென்று ஒருமுறை பாருங்கள், தங்களுக்குத் தெரியும்” என்றான் ஃபானுமான். “என்ன முடிவெடுப்பது என்று தெரியவில்லையே! இந்நகரை நம்மால் உதற முடியாது” என்று ஃபானு சொன்னார். “எனில் ஒரு சிற்பியை அழைத்து வருவோம். இந்நகரை முற்றறிந்த சிற்பி ஒருவன் சொல்லட்டும் இது மீளுமா என்று” என்றார் பிரஃபானு. “ஆம், அப்படி செய்வோம். அது நன்று” என்றார் ஃபானு. அனைத்தையும் ஒத்திப்போட ஒரு வாய்ப்பு கிடைத்தது என்ற நிறைவு அவரில் தெரிந்தது. மதுக்கோப்பையை அவர் உள்ளம் நாடிவிட்டது என்று புரிந்தது.

 

மூன்று நாட்களுக்குப் பிறகுதான் துவாரகையின் சிற்ப அமைப்பை சற்றேனும் அறிந்த ஒருவர் ஒற்றர்களால் எங்களிடம் அழைத்து வரப்பட்டார். அவர் பெயர் சுப்ரதீபர். சிற்பிகளின் மரபைச் சார்ந்தவராயினும் சிற்பக்கலை முழுதறிந்தவர் அல்ல. நகரிலிருந்து பிற சிற்பிகள் ஒழிந்து சென்ற பிறகும் அவர் அங்கே தங்கியிருந்தது அவருடைய இரு கால்களும் பழுதடைந்தமையால் அவரால் சிற்ப பணியில் ஈடுபடமுடியாது என்பதால்தான். வணிகர்களுக்கு அவர்களின் குலமுத்திரைகளை பலகைகளில் வரைந்துகொடுத்து சிறுபொருள் ஈட்டி அவர் அங்கு வாழ்ந்தார்.

அவ்வாறு ஒருவர் அங்கிருப்பது எவருக்கும் தெரியவில்லை. நகரெங்கும் அலைந்த ஒற்றர்களிடம் ஒருவர் இவ்வாறு ஓவியம் வரையும் ஒருவர் இருப்பதாக சொன்னார். அங்கு சென்றபோது சிறிய இல்லத்தின் திண்ணையில் காலோய்ந்து அவர் அமர்ந்திருந்தார். அவருடைய மைந்தர்கள் அவரை அவ்வண்ணமே விட்டுவிட்டுச் சென்றுவிட்டிருந்தார்கள். அணுக்கத்து வீட்டில் இருந்து அவருக்கு அன்னமும் நீரும் அளிக்கப்பட்டிருந்தது. அவரை அந்நகரின் சிற்ப அமைப்பை தெரிந்த சிற்பி என்று பொய்யுரைத்து அவை முன் கொண்டு நிறுத்தலாம் என்று முடிவு செய்து வீரர்கள் அவரை அழைத்து வந்தனர். அவ்வாறு வருகையில் அவரிடம் பேச்சுக்கொடுத்தபோதுதான் அவர் மெய்யாகவே சிற்ப அமைப்பை நன்கு தெரிந்தவர் என்று தெரிந்தது.

ஆயினும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. “எவ்வாறு இந்நகரின் அமைப்பு உங்களுக்கு தெரிந்தது?” என்று அவரிடம் மீண்டும் மீண்டும் கேட்டனர். அவர் அங்கிருந்த ஒவ்வொரு மாளிகையையும் சுட்டி அவற்றை எவ்வாறு அவர் வரைபடமாக பார்த்திருக்கிறார் என்பதை விளக்கினார். அதன் பின்னரே அச்சிற்ப அமைப்பு அவருக்கு தெரியும் என்பதை உணர்ந்து அவரை ஃபானுவின் அவைக்கு கொண்டுவந்தனர். அப்போது நாங்கள் அங்கிருந்தோம். அவர் அத்தனை விரைவாக கண்டடையப்பட்டது மூத்தவர் ஃபானுவுக்கு பிடிக்கவில்லை என்பது அவருடைய அமைதியிலிருந்து தெரிந்தது.

முகமன்கள் முடிந்ததும் ஃபானு அவரிடம் முதல் வினாவை நேரடியாக எழுப்பினார். “சிற்பியே, கூறுக! இந்நகரை மீட்க இயலுமா? ஏதேனும் ஒரு பகுதியை தக்கவைத்துக்கொள்ள முடியுமா?” சுப்ரதீபர் “தக்கவைத்துக்கொள்வதா? என்ன சொல்கிறீர்கள்?” என்று திகைப்புடன் கேட்டார். ஃபானு எரிச்சலுடன் “தக்கவைத்துக்கொள்வதென்றால் இந்நகரம் மீண்டும் பழைய பொலிவுடன் எழ முடியுமா என்று பொருள்” என்றார். “பழைய பொலிவுடனா? அரசே, மெய்யாகவே நீங்கள் இதை கேட்கிறீர்களா?” என்றார். ஃபானு சினத்துடன் “உமது உளப்பதிவென்ன? அதை சொல்லுங்கள்” என்றார்.

அதன் பின்னரே சுப்ரதீபர் ஃபானுவின் உளநிலையை புரிந்துகொண்டார். “அரசே, இந்நகர் அழிந்துகொண்டிருக்கிறது. இனி எத்தனை நாட்கள் என்பதே வினா” என்றார். “நாட்கள் என்றால்?” என்றார் ஃபானு. “எனது கணிப்பின்படி இன்னும் மூன்று நாட்களில் பெரும்பாலான துவாரகையின் பகுதிகளுக்குள் நீர்புகும். பதினைந்து நாட்களுக்குள் துவாரகையின் அனைத்துக் கட்டடங்களும் நீருக்குள் மூழ்கிச் செல்லும். இன்னும் ஒரு மாதத்திற்குள் துவாரகையின் தோரண வாயில் வரைக்கும் கடல் நீர் சென்று அடிக்கும்” என்றார் சுப்ரதீபர்.

மூத்தவர் ஃபானு திகைப்புடன் எழுந்து “என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “தோரணவாயில் வரைக்குமா?” என்றார். “ஆம், தோரணவாயில் வரைக்கும் இந்நகரின் முழு நிலமும் நீருக்குள் சென்றுவிடும்” என்றார் சுப்ரதீபர். “ஏன்?” என்று ஃபானு கேட்டார். “இது அமைந்திருக்கும் பாறைகள் இரண்டு திசைகளிலாக விலகிவிட்டன. நிலையழிந்து அவை கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. இரண்டு யானைகளின் அம்பாரிகளாக இந்நகரம் அமைந்திருந்தது. யானைகள் இறங்கி ஆழத்தில் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. அம்பாரிகள் மட்டும் எவ்வாறு இங்கிருக்க முடியும்?”

ஃபானு உரக்க கூச்சலிட்டு அவரிடம் “எனில் எதை நம்பி இந்த நகரத்தை அமைத்தீர்கள்?” என்றார். “அந்த இரு பாறைகளும் தெய்வ ஆணைக்கு கட்டுப்பட்டவை” என்றார் சுப்ரதீபர். “இந்நகரை அமைக்கையில் நான் இளஞ்சிறுவன். எந்தை இதன் முதன்மைச் சிற்பிகளில் ஒருவர். பாரதவர்ஷத்தின் பெருஞ்சிற்பிகளை இங்கு அழைத்து இளைய யாதவர் பேரவை ஒன்றை கூட்டினார். அதில் இந்த நிலத்தை ஆராய்ந்து தங்கள் கருத்துக்களை கூறும்படி பணித்திருந்தார். எந்தை இந்நிலத்தின் இயல்பை அறிந்து இது இரண்டு யானைகளால் ஆனது என்று வகுத்துரைத்தார். அவை கீழே ஆழத்தில் உளைச்சேற்றில் கால்மிதித்து நின்றிருக்கின்றன. இங்கிருக்கும் இரண்டு மலைகளின் உச்சிகள் அவை. இங்கே ஒரு நகரம் உறுதிபட அமையும், கடல் அதை ஒன்றும் செய்யாது. ஆனால் அந்தப் பாறைகள் தங்களை அசைவில்லாமல் நிறுத்திக்கொள்ளவேண்டும். அவை எந்த நெறிகளின்படி இங்கு நின்றிருக்கின்றனவோ அந்த நெறிகள் நீடிக்கவேண்டும் என்றார் எந்தை.”

பிற சிற்பிகளும் அதையே சொன்னார்கள். “இந்நகரம் இங்கு இந்தப் பாறைகளில் ஏதேனும் ஒன்று அசைந்தாலும் சரிந்துவிடும்” என்றனர். ஆனால் அவையில் அமர்ந்து அவற்றை கேட்டுக்கொண்டிருந்த இளைய யாதவர் ஒரு கணத்திற்குப் பின் “இந்நகர் இங்கு அமையட்டும்” என்றார். “அரசே, எண்ணிதான் முடிவெடுக்கிறீர்களா?” என்று கேட்டபோது “நெறிகளின்மீது கட்டப்படும் நகரங்கள் மட்டுமே அறம் வளர்க்கும் தகுதிகொண்டவை. அறம் பிழைத்த கணமே அழியும் நகரையே விரும்புகிறேன்” என்றார். சிற்பிகள் “நிலையான பெருநகரை அமைக்கவே அரசர்கள் முயல்வார்கள்” என்றனர். இளைய யாதவர் “என் நகர் தன் பெருமை அழிந்தபின் ஒரு கணமும் நீடிக்கலாகாது, இடிபாடுகளென இதை எவரும் பார்க்க வாய்ப்பிருக்கக் கூடாது. இது அழியுமெனில் முற்றாக மூழ்கி மறையவேண்டும்” என்றார்.

எந்தை அந்த அவையில் உரக்க “யாதவரே, நாம் எழுப்பப்படாத ஒரு நகரத்தின் அழிவைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார். “இல்லங்களை கட்டுபவர்கள் ஒவ்வொருவரும் அதன் அழிவைப்பற்றித்தான் பேசுகிறார்கள் என்பதை எண்ணிக்கொள்ளுங்கள்” என்றார் இளைய யாதவர். “கால்கோளிடும்போது சொல்லும் நுண்சொற்களில் ஒன்று நூறாண்டுகாலம், ஏழு தலைமுறைக்காலம் இவ்வில்லம் வாழவேண்டும் என்பதல்லவா?” என்று மூத்த சிற்பி சாயர் கேட்டார். இளைய யாதவர் சிரித்து “நோக்குக, அதன் அழிவைப்பற்றி ஒரு குறிப்பு அதில் உள்ளது!” என்றார். “இந்தப் பெருநகர் நூறு ஆயிரம் ஆண்டுகாலம் வாழலாம். ஆனால் ஒவ்வொரு கணமும் இதன் நெறி பேணப்படவேண்டும். யானை மீதிருப்பவன் ஒன்று அறிவான், யானையுடனான அவனுடைய உறவு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் பேணப்படவேண்டும். இல்லையேல் அவனால் அங்கே அமர இயலாது. பாறையின் மேலல்ல, யானையின்மேல்தான் இந்நகரை கட்ட விரும்புகிறேன்” என்றார். “எனில் அவ்வாறே ஆகுக” என்று சிற்பிகள் உரைத்தனர்.

“அதன்பிறகுதான் இந்நகரம் கட்டப்பட்டது. இதோ யானைகள் நெறி பிறழ்ந்திருக்கின்றன. இனி அவற்றை ஆள நம்மால் இயலாது” என்றார் சுப்ரதீபர். உளம்தளர்ந்து “இனி என்ன செய்வது?” என்று மூத்தவர் கேட்டார். “எத்தனை விரைவாக இந்நகரை கைவிடுகிறீர்களோ அத்தனை நன்று” என்று அவர் சொன்னார். “எங்கு செல்வது?” என்று அவரிடமே மூத்தவர் கேட்டார். “அதை நான் அறியேன். அதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். முதலில் இந்நகரிலிருந்து வெளியேறுக! வெளியேறியபின் எங்கு செல்வது என்று முடிவு எடுக்கலாம். எங்கு செல்வது என்று முடிவெடுத்தபின் நகரத்திலிருந்து வெளியேறுவீர்கள் என்றால் ஒவ்வொரு கணமும் பெருகிவரும் இடர் ஒன்றை சந்திக்கிறீர்கள்” என்றார்.

“ஒருவேளை நான் உரைத்த கணக்கை மீறி ஒரே நாளில் துவாரகை நீருக்குள் செல்லுமெனில் நீங்கள் நீந்திக்கூட வெளியேறிட முடியும். துவாரகையின் கருவூலங்கள் முற்றாகவே நீருக்குள் சென்றுவிடும். அவற்றை நம்மால் மீட்க இயலாது” என்று சுப்ரதீபர் சொன்னார். அந்தச் சொல் பிறர் அனைவரையும் விட ஃபானுவை அசைத்தது. ஏனெனில் அவருடைய தன்னம்பிக்கையும் கனவும் முழுக்க துவாரகையின் கருவூலத்தின் மீது அவருக்கு இருந்த உரிமையினாலேயே நிறுவப்பட்டது. எங்கு சென்றாலும் தான் ஒரு அரசன் என்று நிலைநிறுத்துவது அந்தக் கருவூலம் என்று அவர் அறிந்திருந்தார். துவாரகையின் மாளிகைகள் இடிந்து கருவூலம் மீட்கப்படாது போகுமெனில் அதன் பின்னர் கன்றோட்டும் எளிய யாதவனாக தான் ஆகிவிடவேண்டும் என்பதை அவர் எண்ணியிருந்தார். தன்னை ஒவ்வொருமுறையும் உள்ளத்தால் யாதவனாக எண்ணியிருந்தவர் அப்போது அதை அஞ்சி அகம் நடுங்கினார். ஒரு கணத்தில் முடிவெடுத்து “நாம் வெளியேறுகிறோம், இன்றே” என்று அவர் கூறினார்.

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 16743 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>